எழுதழல் - 43

ஆறு : காற்றின் சுடர் – 4

fire-icon“நகரின் ஒவ்வொரு முகமும் சோர்ந்து தனிமை கொண்டிருக்கிறது. அரண்மனையில் எட்டு அரசியரும் ஒருவரோடொருவர் உறவே இன்றி தங்கள் மைந்தர்களுடன் தனித்து வாழ்கிறார்கள். இளைய யாதவர் எழுந்துவிட்டார் என்றும், களமெழுந்து அசுரமன்னர் பாணரை வென்றார் என்றும் இங்கு செய்தி வந்தது. எக்கணமும் அவர் துவாரகையில் நுழையக்கூடுமென்றார்கள். அவர் வருகையை எண்ணி நகரை அணி செய்யத்தொடங்கினார்கள். அப்போது நான் அங்கிருந்தேன். துவாரகை களிவெறி கொண்டு அனைத்து கட்டுகளையும் மீறும் என்று நான் எதிர்பார்த்தேன்” என்று சுபாலர் சொன்னார்.

அன்று காலை அரண்மனையிலும் கோட்டை முகப்பிலும் முரசுகள் முழங்கி படை வெற்றியை அறிவித்தன. முதலில் யாரை துவாரகை வென்றது என்று எவருக்கும் தெரியவில்லை. வெற்றி முரசு நகரில் ஒரு கார்வை முழக்கத்தையே உருவாக்கியது வெற்றிக்குரல்களும் களிப்போசைகளும் நிகழவில்லை. நான் சிற்றங்காடிக்குள் இருந்தேன். முரசொலி கேட்டதுமே போர்முரசா என்று கேட்டபடி வெளியே வந்தேன். பின்னர் மையத்தெருவிற்கு வந்து பார்த்தபோது படைவீரர்களும் துவாரகையின் குடிமக்களும் ஆங்காங்கே கூடிநின்றிருப்பதையே கண்டேன்.

நகரம் முழங்கிக்கொண்டிருந்ததென்றாலும் அதில் உவகையோ ஊக்கமோ இல்லை என்பதை நான் சற்று பிந்தியே அறிந்தேன். ஏனெனில் போர் வெற்றி முழங்கும் ஒரு நகரில் முன்பு நான் இருந்ததில்லை. கூடி நின்றிருந்த ஒவ்வொருவரும் தங்களுக்குள்தான் பேசிக்கொள்கிறார்கள் என்று உணர்ந்தபின்னர் இயல்பாக நடப்பவன்போல் ஒரு குழுவை கடந்துசென்றேன். எவர் மீது வெற்றி என்று அவர்கள் ஐயங்கொண்டிருந்தது புரிந்தது. மூன்று குழுக்களைக் கடந்து சென்றபோது இளைய யாதவர் வேறு யாதவ குலங்களில் எதையோ வென்றிருக்கிறாரோ என்று அவர்கள் ஐயங்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

ஒரு சிலர் அவரது படைகள் கிருதவர்மனை வென்றிருக்கக்கூடும் என்று எண்ணினார்கள். இரு இடங்களில் பிரிந்துசென்ற போஜர்களையும் அந்தகர்களையும் விருஷ்ணிகளின் படைகள் வென்றதுதான் அவ்வறிவிப்பென்று பேசிக்கொண்டார்கள். பின்னர் நகர் முகப்பில் முகபடாமணிந்த ஏழு யானைகளின்மேல் எழுந்த நிமித்திகன் முரசுகளை அறைந்து பாணர்மேல் இளைய யாதவர் கொண்ட பெருவெற்றியை அறிவித்தான். ஆனால் அச்செய்தி நாவிலிருந்து செவிக்கென பரவிச்சென்ற ஓசை எழுந்ததே அன்றி உவகை பொங்கவில்லை. படைவீரர்கள் கூவியபடி புரவிகளில் சுழன்றுவந்தனர். அவர்கள் நனைந்த முரசை முழக்க முயல்வதுபோல் தெரிந்தனர்.

அங்கிருந்த மதுச்சாலை ஒன்றுக்குள் சென்று அருந்திக்கொண்டிருப்பவர்களின் ஊடே நானும் அமர்ந்தேன். மூன்று செப்புக்காசுகளுக்கு சிறுகுடம் கள்ளை வாங்கிக்கொண்டேன். அனைவருமே படைவீரர்கள். அயலவன் ஒருவன் வந்து அமர்ந்ததைக்கண்டு அவர்கள் பேச்சை தணித்தனர். ஆனால் உள்ளே எழுந்த எண்ணத்தை அடக்க முடியாமல் சொல்லெண்ணிப் பேசுவதாகக்கருதி பேசலாயினர். பின்னர் சூழ் மறந்து மாறிமாறிக் கூவினர். அந்த வெற்றியை அவர்கள் கொண்டாடவில்லை என்பதுதான் முதலில் எனக்கு புரிந்தது. அவ்வெற்றியினூடாக இளைய யாதவர் மீண்டும் தான் ஆற்றல் மிக்கவர் என்று நிறுவிக்கொண்டுவிட்டார் என்று அவர்கள் எண்ணினர். ஆகவே தன் மூத்தவருக்கும் தந்தைக்கும் எதிராக நின்றிருப்பார் என்றனர்.

“யாதவ ஒற்றுமைக்கு இது ஒரு பெருந்தீங்கு. இதுவரை துவாரகையின் அரசர் செய்த பிழைகள் அனைத்தும் தான் வெல்லப்பட முடியாதவர் என்று அவர் எண்ணியதால்தான். சூதர்களின் பாடல்களை மெய்யென்று நம்பும் அரசர்களின் வீழ்ச்சி அவரைக் காத்திருக்கிறது. ஐங்குலத்து யாதவர்களும் மதுராவின் அரசர்களும் மீள மீளச் சொல்லியும் அவர் செவிகொள்ளவில்லை. இவ்வெற்றி அவரை மேலும் பொய் நம்பிக்கை கொண்டவராக்கும்” என்றார் முதிய வீரர் ஒருவர். “மீறி விரிவது விரிசலிட்டுச் சரியுமென்பது நெறி” என்றார் ஒருவர்.

“துவாரகை முற்றழிய வேண்டுமென்று தெய்வங்கள் எண்ணுகின்றன என்றால் நாம் ஒன்றும் செய்ய இயலாது. நம்மைச் சூழ்ந்து நாமறியாது புன்னகைக்கும் தெய்வங்களே அவரை அப்போரில் வெற்றி கொள்ளச் செய்தன” என்றார் ஒருவர். “பாணன் நம் இளவரசர் அநிருத்தரை கவர்ந்து சென்றான். தன் மகளுக்கு அவரை மணமுடிப்பதாக வஞ்சினம் உரைத்தான். அவனைக் கொன்று அப்பெண்ணைச் சிறையெடுத்து மீள்வதே அவர் செய்திருக்க வேண்டியது. ஆனால் வந்த செய்திகள் பிறிதொன்றை காட்டுகின்றன. பாணனின் மகளை துவாரகையின் இளவரசருக்குத் துணைவியாக்கி அழைத்துவரப்போகிறார் என்கிறார்கள்” என்றது ஒரு குரல்.

அவ்வாறு சொன்ன யாதவ வீரனைச் சுற்றி அனைவரும் கைகளில் மதுக்குவளைகளுடன் எழுந்து கூடினர். “மெய்யாகவா? பாணனின் மகளையா?” என்றனர். அவன் “ஆம், அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தன் துவாரகையை ஆள்வான் என்று சொல்லளிக்கப்பட்டுள்ளது” என்றான். “இங்கு எண்பது இளவரசர்கள் உள்ளனர். அவர்களில் மூவர் பிரத்யும்னரை விட மூத்தவர்கள். பிரத்யும்னரே இன்னமும் பட்டத்து இளவரசர் என முடிசூட்டப்படவில்லை” என்று ஒருவன் சொன்னான். “இது இளையவர் உருவாக்கிய அரசு. அதை எவருக்கு அளிக்கவேண்டுமென்று அவரே முடிவெடுக்க முடியும்” என்றான் இன்னொருவன். “ஆம், ஆனால் நாம் எவருக்கும் உடைமைகள் அல்ல. நம் குடித்தெய்வங்களுக்கே ஏவல்செய்பவர்கள்” என்றார் ஒருவர்.

“கேள்விப்படும் ஒவ்வொன்றும் நம்பிக்கை இழக்க வைக்கின்றன. இனி துவாரகை வளராது, நீணாள் வாழாது. இது வெறும் நுரை” என்றபடி முதிய வீரன் ஒருவன் கோப்பையை வீசிவிட்டு வெளியே சென்றான். நான் அவனுடன் நடந்து தெருவை அடைந்தேன். அங்கிருக்கும் ஒவ்வொருவரின் உள்ளமும் தெள்ளிதின் தெரியத்தொடங்கியது. அவர்கள் இளைய யாதவரை அஞ்சுகிறார்கள். அவர் ஒரு தோல்வியினூடாக தருக்கழிந்து தங்கள் அளவுக்கு சிறிதாகவேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர் எழுந்தோறும் போற்றி புகழ் சொல்லி பிள்ளைகளை வளர்த்த மக்கள் அவர்கள். மானுட உள்ளம் எங்கு அவ்வாறு எதிர் திரும்புகிறது? எங்கோ ஓரிடத்தில் தான் மிகச் சிறிதாகிவிட்டதாக ஒவ்வொருவரும் உணர்கின்றனர் போலும். உள்ளம் கொள்ளும் சிறுமைக்கு ஓர் அளவில்லை. வாழும் காலத்திற்குமேல் தலையெழுந்து நிற்பவர்களை எவரும் புரிந்துகொள்வதில்லை. எனில் அவர்கள் எவருக்கென வருகிறார்கள்?

நிலையழிந்தவனாக நான் இந்நகரத்தை சுற்றி வந்தேன். மேலும் மேலும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பாணனின் நகரத்தில் பெருவிருந்தொன்று நிகழ்வதாகவும் அங்கு அசுரருடன் இணைந்து இளைய யாதவரும் அவரது படைகளும் ஊனும் மதுவும் உண்டு உண்டாட்டு கொள்வதாகவும் சொன்னார்கள். “அசுரக் குருதி கலந்து மாசுற்றது யாதவ குலம். அக்குருதி கலக்காத மைந்தரிலிருந்து இந்நகரின் முடிவேந்தர் எழவேண்டுமென்றுதான் கோருகிறது” என்று முச்சந்தியில் ஒரு முதியவன் கோல்தூக்கி கூவக் கேட்டேன். “ஆனால் அங்கோ அசுர மகளுக்கு இந்நகரை சொல்லளித்துவிட்டு வருகிறார் இளைய யாதவர்.” கூடிநின்றவர்களில் எவரோ “ஊருணியில் கலக்கும் நஞ்சு அது” என்றனர். சினம்கொண்ட உறுமல்களும் கூச்சல்களும் எழுந்தன. கேலிச்சிரிப்பாகவும் ஏளனச்சொல்லாகவும் சூழ்ந்தது அவர்களின் கசப்பு.

மறுநாள் அரண்மனையிலிருந்து ஆணை வந்தது, நகர் அணிகொள்ளும்படி. இளைய யாதவர் ஓரிரு நாட்களுக்குள் நகர் நுழைவார் என்று அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாண்டுகளாக இங்கு சுவரில் சுண்ணம் பூசப்படவில்லை. தூண்களும் சட்டங்களும் வண்ணமிழந்தன. படிகள் உடைந்தும் பாதைகள் கல் சரிந்தும் மட்கின. உப்பரித்த சுவர்கள் தூய்மைப்படுத்தப்படாமல் இந்நகரம் ஒளியிழந்திருந்தது. ஆணைவந்த அன்றே செப்பனிடும் பணிகள் தொடங்கின. பலநூறு பணியாளர்கள் நகரெங்கும் பரவினர். கண்ணெதிரில் மங்கிய பழைய ஓவியம் வண்ணம் கொள்வதுபோல் நகர் புதியதாகி எழுந்துவந்தது. ஒவ்வொரு மாளிகையையும் முன்பிருந்த வடிவில் கண்டபோதுதான் அவ்வடிவில் நினைவிலிருந்ததையே நான் அறிந்தேன்.

மீளுருக்கொண்ட நகரினூடாக சுற்றிவருகையில் மக்கள் உவகையில் பங்கெடுக்கவில்லை என்பதை கண்டேன். அவர்கள் புத்தாடை அணிந்துகொண்டார்கள். இல்லங்களுக்கு முன் தோரணங்களும் அணித்தூண்களும் அமைத்தனர். கொடிகள் அனைத்தும் புதிதாக எழுந்து பறந்தன. ஆனால் இளைய யாதவர் வருகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது. நாள் என நாள் என அவர் வரவில்லை எனும் செய்தி வருந்தோறும் அவர்கள் ஆறுதல் கொள்கிறார்களோ என்று ஐயம் கொண்டேன்.

சென்ற இரண்டு மாதங்களாக அந்நகரம் அவ்வாறே இருக்கிறதென்றுதான் நான் அறிந்தேன். இப்போது நாம் செல்கையில் நகர் புதிதென மிளிரும். ஏனெனில் அதை ஒருக்கும் கலிங்கச் சிற்பிகள் முதுமகளை கன்னியாக்கும்படி தொழிலறிந்தவர்கள். தெருக்களில் சென்றால் முதல் நோக்கில் ஒவ்வொன்றும் சரியாக இருப்பதைப்போலத்தான் இருக்கும். ஒரு பிழையை கண்டுவிட்டால் ஒவ்வொன்றும் பிழையென தெரியத்தொடங்கும். இளைய ஷத்ரியர்களே, விட்டுச்சென்ற இடத்திற்கு இளைய யாதவர் திரும்பி வரப்போவதில்லை.

“பாண்டவர்கள் விராட இளவரசியின் மைந்தனை அரசனாக்குவதாக சொல்லளித்திருப்பதை இன்று கேள்விப்பட்டேன். துவாரகையைச் சோர்வுறச் செய்யும் செய்திகளில் ஒன்று அது. இங்கு அசுரன் மகள். அங்கு நிஷாதன் மகள். குலமென்பது பொருளிழந்து வருகிறதா என்று யாதவ மூத்தார் ஒருவர் சிறுமன்றொன்றில் கேட்டார். கூடியிருந்த எவரும் மறுமொழி சொல்லவில்லை. ஒருவர் மட்டும் நெடுநேரத்திற்குப் பிறகு மெல்லிய முனகலாக ஊழ் அதுவென்றால் நாம் செய்ய என்ன உள்ளது என்றார். ஆகவே தான் கேட்டேன் அங்கு அக்கடிமணம் நிகழ்ந்ததா என்று” என்றார் சுபாலர்.

பிரலம்பன் “ஊழ் உறுதியான காலடிகளுடன் முன்செல்கிறது. நாம் அதன்மேல் அமர்ந்திருக்கிறோம். அக்காலடிகளை நம்புவோம்” என்றான்.

fire-iconதொலைவிலேயே துவாரகையின் மாபெரும் தோரணவாயிலின் அணிமுகடு தெரிந்தது. பிரலம்பன் உள எழுச்சியுடன் “மலை மேல் கட்டப்பட்டிருக்கிறது” என்று கை நீட்டி கூவினான். அபிமன்யூ “இல்லை மணற்தரையில்தான்” என்றான். “மணல் மேலா?” என்று மேலும் வியப்புடன் பிரலம்பன் கூவ சுபாலர் புன்னகைத்து “இயற்கையான பாறையைக் கண்டடைந்து அதன் மேல் அடித்தளமிடப்பட்டுள்ளது அவ்வாயில். அதன் அந்தராளத்தின் சிற்பங்கள் அளவுக்கே நாம் இருப்போம். இன்னும் சற்று நேரத்திலேயே அது நம் நோக்கிலிருந்து மறைந்துவிடும்” என்றார்.

வெவ்வேறு சிறு பாதைகளிலிருந்து வண்டிகளும் அத்திரிகளும் ஒட்டகைகளும் புரவி நிரைகளும் கொண்ட வணிகர் குழுக்கள் வந்து மையப்பாதையில் இணைந்து அவ்வொழுக்கு பெருகிக்கொண்டே இருந்தது. எதிரில் தோரணவாயிலைக் கண்டதுமே அனைவரும் உரக்க கூச்சலிட்டனர். பின்னர் கலைந்த பேச்சொலி முழங்கியது. அணுகுந்தோறும் அமைதி எழுந்தது. அண்ணாந்து பார்த்தபடி கனவிலென அனைவரும் சென்றனர். சாலையிலிருந்து கல் அலைத்து ஒழுகும் காட்டாற்றின் ஓசை மட்டும் எழுந்துகொண்டிருந்தது.

பிரலம்பன் தோரணவாயிலின் முகப்பிலிருந்த கருடனின் சிலை வானிலிருந்து கீழ்நோக்கி பாய முயலும் கணத்தில் உறைந்திருப்பதை கண்டான். இருபுறமும் இருந்த ஆழியும் சங்கும். சிலைகளின் விழித்த நோக்கு. அவற்றின் உதடுகளில் சொல்லி நின்ற அழியாச்சொல். மீண்டும் பார்த்தபோது கருடன் சிறகு விரித்து வான் நோக்கி எழும் கணத்தில் அமைந்திருந்தது. வலப்பக்க அடித்தளத்தின் பெருஞ்சிலை ஒன்று அவனையே நோக்கிக்கொண்டிருந்தது. பின்னர் வெறும் கற்பரப்பாக அது ஆயிற்று. அவன் திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தபோது வானில் கல்லாலான மழைவில்லென மிக அப்பால் தெரிந்தது தோரணவாயில்.

துவாரகையின் சாலைகள் ஒன்றுடன் ஒன்று பிசிறின்றி பொருத்தப்பட்ட கற்பாளங்களால் ஆனவை. நெடுங்காலம் வண்டிச்சகடங்களும் குளம்புகளும் பதிந்து வழுவழுப்பாக்கப்பட்டு முதற்காலையின் ஒளியின் நீர் மெழுகியதுபோல் அவை மின்னின. அவற்றின்மேல் நீரில் ஒழுகிச்செல்வதுபோல் எளிதாகச்சென்றன எடை நிறைந்த வணிக வண்டிகள். கூரிய தாளம் கொண்டன புரவிக்குளம்புகள். அந்த சீரொழுக்கால் இருபுறமும் அமைந்த மாளிகைகள் பெருங்கலங்கள்போல மிதந்து பின்னகர்வதாகத் தோன்றியது.

இருமருங்கும் இருந்த உயர்ந்த ஏழடுக்குக் காவல்மாடங்களின் உப்பரிகையில் அமர்ந்து அவர்களை நோக்கிக்கொண்டிருந்தனர் யவனக் காவல்வீரர்கள். எவரும் வண்டிகளை நிறுத்தவோ ஐயம் ஏதும் உசாவவோ செய்யவில்லை. வண்டிகளின் அமைப்பையும் வணிகர்களின் முகங்களையும் கொண்டே கணித்துக்கொண்டிருந்தனர் என்று பிரலம்பன் கண்டான். ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கும் வணிகப்பெருக்கை நோக்கி நோக்கி அவர்கள் முற்றாக அடையாளம் கண்டு அணி பிரித்து வகுத்து அமைத்துக்கொண்டிருந்தனர் போலும்.

இருபுறமும் குவைமாடங்கள் கொண்ட புறக்கோட்டை மாளிகைகள் வரத்தொடங்கின. மாபெரும் வெண்மாவுக் குமிழிகள் என்று அவனுக்குத் தோன்றியது. விண்ணிலிருந்து விழுந்து குமிழிகளாகப் படிந்த வெண்பட்டு. பீதர் நாட்டு வெண்களிமண் ஓடுபோட்ட மாளிகைகள். பளிங்குப் படிக்கட்டுகளில் ஆடிகளில் என சாலையின் வணிக ஒழுக்கு நெளிந்து வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும் விந்தையை அவன் பார்த்து திரும்பி அபிமன்யூவை நோக்கினான். கனவெழுந்த விழிகள் சூடி இளமைந்தன்போல தோள் தொய்ந்து கை ஓய்ந்து அவன் அத்திரிமேல் அமர்ந்திருந்தான்.

கோட்டையை அணுகியபோது அதன் காவல்மாடங்கள் விண்ணில் மிதந்தவைபோல் தலைக்குமேல் மிக உயரத்தில் எழுந்து நிற்பதை பிரலம்பன் கண்டான். வழியெங்குமிருந்த காவல்மாடங்கள் அனைத்திலும் செந்துகில் உறைமூடிய பெருமுரசுகளும் இரவில் எரிந்து அணைக்கப்பட்ட மீனெண்ணைப் பந்தங்கள் பொருத்தப்பட்ட பித்தளை தாங்கிக்கொத்துகளும் இருந்தன. ஒவ்வொரு காவல்மாடத்திற்குக் கீழும் பத்து புரவிகளுக்கு அருகே தொடுத்த வில்லுடன் காவல் வீரர்கள் காத்திருந்தனர். மிகையான காவல் முற்றிலும் ஒருங்கமைக்கப்பட்டிருந்தமையால் அவர்கள் வெறுமனே விழிகளாலேயே பணி முடித்தனர்.

கோட்டையின் கீழ் சென்று நின்றபோது அதன் காவல்மாடங்களில் எழுந்து நின்ற கைவிடுபடைகளின் தொடுக்கப்பட்ட நாணில் இறுகி நின்றிருந்த பல்லாயிரம் அம்பு முனைகளின் கூர்களை தனது உடலெங்கும் பிரலம்பன் உணர்ந்தான். கண்ணுக்குத் தெரியாத வலை என அவனைக் கவ்வி காற்றில் நிறுத்தின அவை. நிமிர்ந்து நோக்கியபோது அத்தனை கூர்களும் தன்னையே நோக்குவதைக் கண்டு திடுக்கிட்டு விழிதாழ்த்திக்கொண்டான்.

சுங்க நிலைகளை நோக்கி வணிக அணிகள் பல திரிகளாக பிரிந்து சென்றன. அபிமன்யூ அவனுடன் வந்த குழுவின் பெருவணிகன் அருகே சென்று தலைவணங்கி “இனி நாங்கள் பிரிந்து செல்கிறோம், வணிகரே. தங்கள் கனிவிற்கு நன்றி” என்றான். அவர் மறுமொழி சொல்லாமல் தலைவணங்கினார். பிரலம்பனும் அபிமன்யூவும் வணிகநிரையிலிருந்து பிரிந்து உள்ளே செல்லும் குடிநிரையில் இணைந்துகொண்டபோது சுபாலரும் உடன் வந்தார். “நீங்கள் அக்குழுவைச் சேர்ந்தவரல்லவா?” என்றான் பிரலம்பன். “இல்லை. நான் ஈபோல, எங்கு வேண்டுமானாலும் சுற்றிப்பறந்து அமரலாம். அனைத்தும் உணவே” என்றார்.

கையை விரித்து “ஆனால் இப்போது உங்களுடன் வரவிரும்புகிறேன். நீங்கள் எவரென்று தெரியவில்லை. ஆனால் உங்களுடன் வந்தால் மறுமுறை இந்நகருக்குள் நுழையும்போது நான் சொல்வதற்குரிய கதைகள் சில இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார். பிரலம்பன் “மறுமுறை இந்நகருக்குள் நுழைய வாய்ப்பின்றியும் போகலாம், வணிகரே” என்றான். சுபாலர் “ஆம், அதுவும் நிகழக்கூடும். நெடுநாட்களாகவே இறப்பின் விளிம்புகளில்தான் அலைந்துகொண்டிருக்கிறேன். எத்தனையோ வழிப்பயணிகளுக்கு என் கண்ணெதிரில் மிருத்யூ தேவி கனிந்திருக்கிறாள். என்னை அவள் கடைக்கண் பார்க்கவே இல்லை” என்றார் சுபாலர்.

துவாரகையின் தெருக்களினூடாக அவர்கள் சென்றனர். அத்தனை மாளிகைகளும் அன்று கட்டப்பட்டவையென வண்ணம் மீண்டிருப்பதை பிரலம்பன் கண்டான். பட்டுத் தோரணங்கள், ஓவிய அணித்தூண்கள், காற்றில் சிறகடித்த பாவட்டாக்கள், செயற்கை மலர்களாலான மாலைநிரைகள். வண்ணம் பொலிய வசந்தம் எழுந்த காடென சாலைகள் மாறிவிட்டிருந்தன. “புத்தாடை அணியாத ஒருவர்கூட இந்நகரில் இல்லையா?” என்று பிரலம்பன் கேட்டான். “இங்கு ஒவ்வொரு கப்பலிலும் ஆடைகள் வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கிருந்து பழைய ஆடைகளை வாங்கி சீரமைத்து கொண்டுசென்று விற்பதற்காகவே நூறு வணிகர் குழுக்களுக்குமேல் உள்ளன” என்றார் சுபாலர்.

“ஒவ்வொன்றும் அவற்றின் எழில்நிலையிலுள்ள நகரம் என்று கேட்டிருக்கிறேன். காலணிகளிலும் குதிரைச்சேணங்களிலும்கூட அதை பார்க்க முடியுமென்று எண்ணியதில்லை” என்றான் பிரலம்பன். வணிகக் கூச்சல்களும், கெடுமணங்களும், பலநாட்டு இசையும் நறுமணங்களும் கலந்த காற்று அலையடித்த அங்காடித்தெருவில் கூலவகைகளும் உணவுகளும் அணிப்பொருட்களும் ஆடைகளும் படைக்கலங்களும் நோக்குதிசை எங்கும் குவிந்திருந்தன. பொருள்கொள்ளும் வண்ணங்கள் அனைத்தும் ஒருங்கு திரண்டு விழிகளை முற்றிலும் நிறைத்த தெருவினூடாக விழிமலைத்துச் சென்றனர்.

“ஒவ்வொன்றும் சித்தம் திகட்டும் மிகை. ஆளுயரத்திற்கு குங்குமத்தை குவித்து வைப்பார்கள் என்று சூதரும் சொன்னதில்லை” என்று பிரலம்பன் சொன்னான். ஒருவரோடொருவர் தோள் முட்டி உடல்கள் ததும்ப பொதிகளுடனும் பைகளுடனும் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக சென்றனர். ஒருநோக்கில் அங்கிருந்த அனைவருமே வளைவுக்குள் வந்தடிக்கும் கடலலையின் நுரையென நின்ற இடத்திலேயே சுழித்து ததும்புவதாகத் தோன்றியது. வண்ணத் தலைப்பாகைகளின், மின்னும் மேலாடைகளின், பறக்கும் ஆடைகளின் நுரைத்தெறிப்புகள்.

அங்குள்ள விலங்குகளும் நெரிக்கும் மக்களிடையே செல்வதற்கு பழகிவிட்டிருந்தன. புரவிகளும் அத்திரிகளும் மெல்ல செருக்கடித்தும், மூச்சு சீறியும், மக்களை விலக்கி எவரையும் மிதிக்காமல் காலெடுத்து வைத்து கூட்டத்தைக்கீறி வகுந்து அலைமேல் அசைவிலாத அன்னங்கள் என ஒழுகிச் சென்றன. எண்ணியிராக் கணம் ஒன்றில் பிரலம்பன் அரைவிழியால் வலப்பக்கம் ஆழத்தில் தெரிந்த மாபெரும் துறைமேடைகளை பார்த்தான். “ஆ!” என்று அலறியபடி கடிவாளத்தை விட்டுவிட்டு பின்னால் சரிந்தான். தொடர்ந்து வந்த சுபாலர் அவன் தோளைப்பற்றி நிறுத்தியதனால் அவன் புரவியிலிருந்து விழாமல் கடிவாளத்தைப் பற்றியபடி கைசுட்டி துறைமேடைகளைக் காட்டி வாயை அசைத்தான்.

சுபாலர் புன்னகையுடன் “ஆம், பாரதவர்ஷத்தின் மாபெரும் துறைமுகம் இதுவே. இப்பாரதப் பெருநிலத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் ஒன்றாக சேர்த்தால் இதனளவிற்கு அமையாது” என்றார். பன்னிரு துறைமேடைகளில் எடைத்துலாக்கள் சுழன்று பொதிகளை இறக்கி வைத்துக்கொண்டிருந்தன. கொடுக்கு அசைக்கும் நண்டுக்கூட்டம்போல என்று பிரலம்பன் எண்ணினான். துலாக்கோல் சூடிய பெருங்கலங்கள் முள்கொம்பசைக்கும் நத்தைகள். அதை எண்ணியது தன்னுள் வாழும் இளமைந்தன் என்று உணர்ந்தபோது புன்னகைத்தான்.

துறைமேடை அருகே நின்றிருந்தது மாபெரும் பீதர் கலம். அத்தனை உயரத்திலிருப்பதை நோக்கியபோது விழிநிறைக்கும் பேருருக் கொண்டிருந்தது. கீழிருந்து நோக்கு தொட்டு அவன் எண்ணியபோது பதினெட்டு அடுக்குகளாக அதன் சாளரநிரையின் கோடுகள் தெரிந்தன. அதன் கொடிமரம் உயர்ந்து எரியுமிழும் முதலைப்பாம்பின் உருவத்துடன் காற்றில் படபடத்தது. கீழே சிம்மநாகமும் முதலைநாகமும் ஆளிநாகமும் பொறிக்கப்பட்ட நூற்றெட்டு கொடிகள் பறந்தன. அதன் அருகே நின்ற பிறகலங்கள் யானையைச் சூழ்ந்து பன்றிகள் நிற்பதுபோல் மெல்ல அலைகளில் அசைந்துகொண்டிருந்தன.

துறைமேடைகளிலிருந்து வண்ண எறும்புநிரைகள்போல கிளம்பிய பொதிவண்டிகளின் பன்னிரு திரிகள் இரு திசைகளிலாக ஒழுகிச் சென்றுகொண்டிருந்தன. அந்நகரம் மாபெரும் திகிரியென மெல்ல திரும்பிக்கொண்டிருப்பதாக அவன் விழிமயக்கம் கொண்டான். “இங்கிருந்து துறைமேடை வரை செல்லும் சாலைகள் புரவிகள் விரைந்திறங்குவதற்கு உகந்தவை. ஆளொழிந்த பின்னிரவுகளில் வீரர்கள் அவற்றை பயில்வதுண்டு” என்றார் சுபாலர். முகம் மலர்ந்து நோக்கியபடி “விண்ணிலிருந்து இறகென சுழன்றிறங்குவது போலிருக்கும்” என்றான் பிரலம்பன்.

“இந்நகரமே ஒரு பெரும்சுழல்திகிரி. அனைத்துச் சாலைகளும் சுழன்று நகர் உச்சியில் அமைந்துள்ள மைய மாளிகை நோக்கி செல்கின்றன” என்று சுபாலர் சொன்னார். “அது இளைய யாதவரின் மாளிகை. இப்போது அங்கு எவருமில்லை.” திகைப்புடன் “ஏன்?” என்று பிரலம்பன் கேட்டான். “எட்டு அரசியரும் தங்கள் தனிமாளிகையில் விலகிச் சென்று தங்கியுள்ளனர். இந்நகரம் விழிக்கு ஒற்றைத்திகிரியெனத் தோன்றுகிறது. உண்மையில் இது எட்டாக பகுக்கப்பட்டுள்ளது. அறிந்திருப்பீர்கள், இளைய யாதவருக்கு எட்டு துணைவியரிலாக எண்பது முதன்மை மைந்தர். அவர்கள் இந்நகரை பிரித்து ஆள்கிறார்கள்” என்றார் சுபாலர்.

“நகரின் மையப்பகுதி சத்யபாமையாலும் ருக்மிணியாலும் இணையாக பகுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மைந்தர்கள் அங்கே ஆட்சி செலுத்துகிறார்கள். துறைமேடைகளை ஜாம்பவதியின் மைந்தர்களும் மித்ரவிந்தையின் மைந்தர்களும் ஆள்கிறார்கள். வணிகர் பகுதிகளை லக்ஷ்மணையின் மைந்தர்கள் ஆள்கிறார்கள். பத்ரையும் நக்னஜித்தியும் அங்காடிகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். காளிந்தியின் மைந்தர்கள் எல்லைப்புறக் காடுகளில் இருக்கிறார்கள்.”

“அவர்கள் ஒன்றுகூடுவதே இல்லையா?” என்று பிரலம்பன் கேட்டான். “இளைய மைந்தரினூடாக ஒருவருக்கொருவர் செய்திகள் பரிமாறிக்கொள்கிறார்கள் என்று கேட்டேன். பதின்மூன்று ஆண்டுகளாக எட்டு அரசியரும் ஓரிடத்தில் கூடி விழிபரிமாறி சொல்லாடியதாக எவரும் சொல்லிக் கேட்டதில்லை.” பிரலம்பன் “எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது இந்நகரம்?” என்று வியந்தான். “அமைச்சர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். இளைய யாதவரின் கோகுலத்துத் தோழர்கள் இன்றும் பிளவுபடாத உள்ளத்துடன் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.”

பிரலம்பன் சில கணங்களுக்குப்பின் “ஆம், இப்போது இந்நகரம் தனிப்பிரிவுகளாக தெரியத்தொடங்கிவிட்டது. அங்கே துறைமேடை இரண்டு பகுதிகளாக வெவ்வேறு வண்ணக்கொடிகளுடன் உள்ளது. துறைமேடையின் வலப்பக்கம் நன்கு ஆளப்படுகிறது. அங்கு வண்டிகள் முட்டிச் சரிந்து நிற்பதில்லை. இச்சிறுபொழுதிற்குள்ளாகவே இடப்பக்க ஒழுக்கு மூன்றுமூறை தயங்கி நிற்பதை காண்கிறேன்” என்றான். சுபாலர் நகைத்து “இனிமேல் இந்நகரில் வேறுபாடுகளை மட்டுமே உங்களால் பார்க்க முடியும்” என்றார்.

சுழன்று செல்லும் பாதையின் இருபுறமும் அமைந்த ஏழடுக்கு பெருமாளிகைகளின் முகப்பில் இருபுறமும் கொடிகள் பறந்தன. ஒவ்வொரு மாளிகையின் முன்பும் செம்பட்டுத் திரைசீலை நெளிந்த தேர்களும் பல்லக்குகளும் நின்றிருந்தன. “யவன பல்லக்குகள், பீதர் நாட்டு சகடங்கள் கொண்ட தேர்கள், கலிங்கத்து பட்டுத் திரைச்சீலைகள், திருவிடத்து பொலனணிச் செதுக்குகள். ஒவ்வொரு நிலத்திலிருந்தும் அவர்களின் மிகச் சிறந்த ஒன்று இங்கு வந்து சேர்ந்துள்ளது” என்று சுபாலர் சொன்னார்.

விழிகளை பறந்தலையவிட்டு முற்றிலும் உடலிலாதவனாக அச்சாலையினூடாகச் சென்ற பிரலம்பன் நெடும்பொழுதுக்குப்பின் தன்னுணர்வு கொண்டு “அத்தனை மக்களிடமும் ஓர் அயன்மை தெரிகிறது. தன்னை மறந்த உளப்பெருக்கு எவரிடமும் இல்லை” என்றான். “இளைய யாதவர் நகர்புகவிருக்கிறார் என்று அறிந்து எக்கணமும் காத்திருப்பவர்கள்போல் இல்லை. எதையோ உளம் கரந்திருக்கிறார்கள். பிறிதெதற்கோ காத்திருக்கிறார்கள்.”

முதன்முறையாக அபிமன்யூ திரும்பி அவனைப் பார்த்து “அயன்மை கொண்டவர்கள் ஆண்கள் மட்டும்தான், பிரலம்பரே. பெண்களை பாருங்கள். அவர்கள் அனைவரும் காத்திருக்கும் விரகோத்கண்டிதைகளாக இருக்கிறார்கள். இந்நகரம் மாபெரும் முல்லை நிலம் போலிருக்கிறது” என்றான். சுபாலர் உரக்க நகைத்து “ஆம், முல்லை மலர்ந்துள்ளது” என்றார். அவர் சுட்டிய இல்ல முகப்பில் சரமுல்லை பூத்து வெண்முத்துகளாகச் சூடியிருந்தது. பிரலம்பன் தலைதூக்கி மாளிகையின் கூரைவரை சென்ற அக்கொடிப்பெருக்கை பார்த்தான். உவகையுடன் “ ஆம், அவர்கள் அனைவரும் பிறிதொரு உலகில் வாழ்கிறார்கள்” என்றான்.

“அவ்வுலகுக்குள் நுழையும் ஆணென எவரும் இங்கில்லை. அங்கே ஆண் என ஒருவனன்றி பிறர் இல்லை. அவ்வுலகில் குழலோசையன்றி எதுவும் ஒலிப்பதில்லை” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் ஒவ்வொரு முகத்தையாக தொட்டுத் தொட்டு நோக்கிச் சென்றான். அக இனிமையில் மயங்கிய முகங்கள். பாதி சரிந்த விழிகள். உள்ளனலே ஈரம் என்றாக செவ்வண்ணம் பெற்ற உதடுகள். உளம் அறிந்த ஏதோ சொல்லை ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டிருப்பதுபோல. நிற்பவர்களும் நடப்பவர்களும்கூட உடலில் சிறு துள்ளல் கொண்டிருந்தனர். முகம் சுருங்கி விழிகுழிந்த முதுமகள்கள்கூட கன்னியரின் அசைவுகளை வெளிக்காட்டினர்.

“இது கோபியரின் நகரம். பிற அனைவரும் விருந்தினரே” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் புரவி திரும்ப விழிவளைத்தபோது நகருக்கு நிகராக எழுந்து நின்ற மாபெரும் வாயிலை பார்த்தான். அதன் சங்கு சக்கரங்களுக்கு நடுவே எழுந்த கருடன் அனல்விழி நோக்கு கொண்டிருந்தது. அவ்வாயிற் சதுரத்தினூடாக முகில் ஒளிர்ந்த வானம் தெரிந்தது.