எழுதழல் - 38
ஐந்து : துலாநிலையின் ஆடல் – 5
அறைக்குள் ஒரு சிறிய மூச்சொலியை சுருதகீர்த்தி கேட்டான். இடுங்கலான சிறிய அறை. மிக அருகே சுதசோமன் துயின்றுகொண்டிருந்தான். பேருடலன் ஆயினும் மூச்சு எழும் ஒலியே தெரியாமல் துயில்பவன் அவன். புரண்டு படுக்கையில்கூட ஓசையில்லாத அலை என்று அவன் அசைவு தோன்றும். முற்றிலும் சீர் கொண்ட உடல். காலிலிருந்து தலைவரை ஒவ்வொரு உறுப்பும் சீரென அமையுமென்றால் மிகையொலியோ பிழையசைவோ அதிலெழாது என்று அவனைப்பற்றி சிறிய தந்தை நகுலன் சொல்ல கேட்டிருந்தான்.
அந்த சிறுமூச்சு சுதசோமனுடையது அல்ல என்று அது ஒலித்த கணமே தெரிந்தது. நாகமா என உடல் விதிர்த்தது. மீண்டும் அது ஒலிக்கக்கேட்டபோது நாகமல்ல என்று தெரிந்தது. அவன் தன் மஞ்சத்தில் மல்லாந்து படுத்திருந்தான். ஆனால் எப்படியோ வெளியிலிருந்து பார்க்கும் கோணத்தில் அவ்வறையை பார்த்துக்கொண்டிருந்தான். துயின்றுகொண்டிருந்த அவனையே அவனால் முழுமையாக பார்க்க முடிந்தது. அறையைத் துழாவிய விழிக்கு அரையிருளில் இரு விழி மின்னொளிகள் தெரிந்தன.
தரையில் நெளிந்து வரும் நாகம் என முதலில் எண்ணினான். பின்னர் நான்கு கால்களையும் சற்றே விரித்து வைத்து தள்ளாடி நடந்து வந்த கழுதைப்புலிக்குட்டியை பார்த்தான். அறைக்குள் அது எப்படி வந்தது என்று வியந்தான். அதன் அன்னை உடனிருக்கவில்லை. அதன் பெயரை ஏதோ நூலில் படித்திருந்தான். அந்தச்சொல் மிக அண்மையில் நின்றது. ஆனால் முகம் மறைத்திருந்தது.
மஞ்சம் உயரமற்றது. அதன் காலருகே வந்து தன் முன்னங்கால்களை வைத்து எழுந்து மங் மங் என அது அவனை அழைத்தது. குனிந்து அதை தூக்க வேண்டுமென அவன் நினைத்தான். ஆனால் துயின்றுகொண்டிருந்த உடல் கனவென்று அவ்வெண்ணத்தை அடைந்தது. கழுதைப்புலி பின்னுக்குச் சென்று தாவிப் பற்றி ஏற முயன்றது. அதன் முள் நகங்கள் மஞ்சத்தின் பண்படாத மரப்பரப்பில் கீறிச்சென்றன. தரையில் விழுந்து மல்லாந்து புரண்டெழுந்து விலகிச்சென்று மீண்டும் பாய்ந்து வந்தது.
மும்முறை விழுந்தெழுந்தபின் மஞ்சத்தின் மரச்சட்டத்தில் கால்நகம் பற்றிக்கொள்ள தொங்கி ஆடியது. வால் சுழல பின்னங்கால்கள் பீடத்தின் காலை உரசி உரசி தவிக்க முனகியபடி தொங்கி ஊசலாடி தன்னை உந்தி மேலேற்றிக்கொண்டது. நாக்கை நீட்டி மூச்சிரைத்தபடி மஞ்சத்தின் விளிம்பில் பின்னங்கால் மடித்து முன்னங்கால் நீட்டி அவனை பார்த்தது. அவன் அதனிடம் “எப்படி இங்கு வந்தாய்?” என்றான். அதன் பெயர் குஹ்யசிரேயஸ் என உளம் தெளிந்தது.
“உன்னைப் பார்க்கத்தான்” என்றது குஹ்யசிரேயஸ். “ஏன்?” என்றான். “நீ என்னுடன் பேசினாய். நான் எண்ணுவது உனக்குப்புரிகிறது” என்றது. சுருதகீர்த்தி “இல்லை, நான் எங்கோ நூலில் படித்த அணி மட்டும்தான் நீ. ஒரு உருவகக்கதை. என்மூதாதையரைக் குறித்து ஏதோ புலவர் எழுதியது” என்றான். “குருவம்சப் பிரபாவம். கௌசிக சதுர்புஜர் எழுதிய காவியம், ஏழாவது சர்க்கம்” என்று குஹ்யசிரேயஸ் சொன்னது. “அங்குதான் நான் வாழ்கிறேன்.”
அது எழுந்து இரண்டடி எடுத்து அவனை நோக்கி வந்தபோது முகத்தில் ஒரு சிரிப்பு இருப்பதுபோல் தோன்றியது. “என் அன்னை மீண்டும் மீண்டும் என்னை பெற்றுக்கொண்டிருக்கிறாள். சிம்மக்குருதி குடித்து வளர்பவன். சென்றடைய ஒரு இலக்கு கொண்டவன்” என்றது. “எந்த இலக்கு?” என்று அவன் கேட்டான். அம்முகம் அவ்வறையில் இல்லாத ஏதோ ஓர் ஒளியைப் பெற்று அண்மையில் எனத்தெரிந்தது. “இலக்கு எவருக்கேனும் தெரிந்திருக்குமா? அத்தனை இலக்குகளும் சென்றடையும் ஒருவெளி. அங்கே நிகழவிருக்கிறது நாமறியாத பிறிதொன்று.”
“எந்த இலக்கு?” என்று அவன் மீண்டும் கேட்டான். “எந்த இடம் என்று சொல்கிறேன்… குருஷேத்ரம்.” அவன் உடல் நடுங்கத்தொடங்கியது. “உங்கள் கொடிவழிகள் சிறு ஊற்றென மூதாதையர் விந்துவிலிருந்து தொடங்கும்போதே மிக அருகில் குருஷேத்ரமும் துலங்கிக்கொண்டிருந்தது. ஐந்து குருதிக்குளங்கள். குருதியாலான ஐந்து விழிகள். அல்லது ஐந்து புண்களா?” அது தன் வாயை திறக்க நாக்கு வெளியே வந்து முகவாயைச் சுழற்றி நக்கிச் சென்றது.
“ஐந்து குளங்கள் நிறைய குருதி. நக்கிக்குடித்துக்கொண்டே இருக்கலாம். பல்லாயிரம் ஆண்டுகள் பல்லாயிரம் கழுதைப்புலிகள் குடித்தாலும் அதை ஓர் விரலிடைகூட குறைக்க முடியாது.” அவன் உரக்க “போ!” என்று கத்தினான். “போ… போய்விடு!” என்று கத்தியபடி தன் இடக்காலால் அதை உதைத்தான். பாய்ந்து அது கால் கட்டை விரலை கவ்விக்கொண்டது. காலை அவன் உதற கவ்வியபடியே காலில் ஒட்டியிருந்து சுழன்றது. விரைவாக காலை உதறினான். சிறிய சிணுங்கலோசை எழுப்பியபடி தரையில் சென்று விழுந்து புரண்டெழுந்தது.
அந்த உதறலசைவில் உடல் உலைய அவன் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்தான். மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். பின்னர் அறையை கூர்ந்து பார்த்தபோது அது இருட்டின் வெவ்வேறு வண்ணங்களால் வரையப்பட்டதுபோல் தெரிந்தது. சுதசோமன் சிலையென மல்லாந்து படுத்து மூச்சொலி மிக மென்மையாக எழுந்தமைய நெஞ்சும் வயிறும் அசைய தூங்கினான். சுருதகீர்த்தி தன் காலின் கட்டை விரலை தொட்டுப்பார்த்தான். அது மெல்லிய தினவுபோல வலித்துக்கொண்டிருந்தது. விரல்களால் சுற்றிப்பிடித்தபோது வெம்மை கொண்டிருந்தது.
எழுந்து சென்று மரக்குடைவுக் கலத்திலிருந்து குளிர்நீரை ஊற்றி அருந்தினான். சிறு சாளரத்தினூடாக வெளியே பார்த்தபோது விடிவெள்ளி முளைத்திருப்பது தெரிந்தது. இன்னும் பொழுதிருக்கிறது என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் மீண்டும் துயில முடியுமென்று தோன்றவில்லை. நெடுந்தொலைவு வந்த களைப்பு அவனை முந்தைய நாள் இரவு உடனடியாக துயில வைத்துவிட்டது. உண்மையில் அரண்மனையிலிருந்து தன் அறை நோக்கி வருகையில் துயில் கொள்ளவே முடியாதென்றே தோன்றியது. உள்ளம் அத்தனை எடைகொண்டு அவன் அறிந்ததே இல்லை.
அடுமனையிலிருந்து ஊன் மணத்துடன் வந்த சுதசோமன் “நல்ல உணவு இளையோனே, நீயும் உண்டுவரலாம். மானிறைச்சி மட்டும்தான். இஞ்சித்தழை போட்டு சமைத்திருக்கிறார்கள்” என்றான். “என்னால் உண்ண முடியுமென்று தோன்றவில்லை. பால்கஞ்சி மட்டும் அறைக்கு கொண்டுவரச்சொல்லியிருக்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி. “பால் கஞ்சியா? அது துயில்வதற்கு முன் அருந்தவேண்டியதல்லவா?” என்றான் சுதசோமன். “துயில முடியுமா பார்ப்போம்” என்றான் சுருதகீர்த்தி.
“என்ன சொன்னார்கள்? அவர்கள் இருவரும் எப்படி இங்கு வந்தார்கள்?” என்றான் சுதசோமன். “நம்மை சான்றென அமரவைக்க எண்ணியிருக்கிறார்கள்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “எதற்கு?” என்றான் சுதசோமன். “அவர்கள் நம் கண் முன்னால் வெல்லப்போகிறார்கள்” என்றான். “எவரை?” என்றான் சுதசோமன் “சல்யரை” என்று சுருதகீர்த்தி சொன்னான். “இங்குதான் இருக்கிறார் அல்லவா?” என்றான் சுதசோமன். “ஆம் அஸ்தினபுரியின் அரசர் இன்னும் அவரை சந்திக்கவில்லை. நாளை புலரியில் அவரை சந்திப்பார்” என்றான் சுருதகீர்த்தி.
சிறு அமைதியிலேயே நெடுந்தொலைவு பறந்து சென்று அந்தத் தருணத்தை அடைந்துவிட்ட சுதசோமன் “ஆம், இளையோனே. நாம் சல்யரை வெல்ல முடியாது, அவர்கள்தான் வெல்வார்கள்” என்றான். “ஏன்?” என்றான் சுருதகீர்த்தி. “இத்தனை தொலைவுக்கு அவர் ஏமாற்றி கொண்டுவரப்படவில்லை. உண்மையில் அறியாமல் வந்திருக்கலாம். ஆனால் அவருக்குள் அவரையும் அறியாமல் வாழும் மெய்யான ஒருவர் இங்கு வர விழைந்திருக்கிறார். இங்குவரை அவர் வந்ததே அவர் அவர்களுடன் சேரப்போகிறார் என்பதற்கான சான்று.”
அவன் சொல்வது முற்றிலும் உண்மையென்று சுருதகீர்த்திக்குத் தெரிந்தாலும் எரிச்சல் எழுந்தது. “அவர் நம் மூதாதையரில் ஒருவர்” என்றான். “நமது மூதாதையர்கள், பிதாமகர்கள் அனைவருமே அஸ்தினபுரியுடன்தான் சென்று சேர்கிறார்கள். பீஷ்ம பிதாமகர் அங்கிருப்பது பிற அனைவரையும் அங்கு சேர்ப்பதற்கான சிறந்த வழி. இதை நான் இப்போது உணர்கிறேன். நாளை மூத்த தந்தை பேச்சை தொடங்குகையிலேயே பீஷ்மரிடமிருந்துதான் தொடங்குவார். சில இடைவெளிகளில் பேச்சு பீஷ்மரிடம் தொட்டுத் தொட்டு வரும்” என்றான் சுதசோமன்.
சுருதகீர்த்தி “வேதம் காக்கும் பொறுப்பைப்பற்றி பேசுவார்கள் என்று எண்ணுகிறேன்” என்றான். “ஆம், அஸ்தினபுரியுடன் சேர்ந்தால் கிடைக்கும் உலகியல் நலன்களைப்பற்றிய ஒரு சொல்கூட நாளைய உரையாடலில் இருக்காது. ஷத்ரிய குலப்பெருமை, அதற்கு வேதங்கள் அளிக்கும் ஆதரவு, வேதகாவலன் என்று கோல்சூடும் பொறுப்பு, அதனூடாக மூதாதையருக்கு ஆற்றும் கடன், விண்ணுலகேகும் வழி ஆகியவற்றைப்பற்றி மட்டுமே பேசுவார்கள்.”
சுருதகீர்த்தி அவன் குரலில் இருந்த கசப்பை உணர்ந்தான். எப்போதும் உச்சநிலையில் அவனில் அவ்வுணர்வே எழும். சுதசோமன் “ஏனெனில் உலகியல் நலன்கள் இருவருக்குமே நன்றாகத் தெரிந்திருக்கும். அதை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. குருதி உறவுகளை உதறிவிட்டு மறுபக்கம் படையுடன் சேர்வதற்கு எவர் கேட்டாலும் ஒப்பும் பின்னணியையும் ஏதுவையும் சொல்ல முடியுமா என்பது மட்டும்தான் இப்போது வினா. அதை தெளிவாக முன்வைத்துவிட்டாரென்றால் சல்யர் கௌரவருடன் சேர்வார்” என்றான்.
“நீங்கள் அங்கிருந்திருக்க வேண்டும், மூத்தவரே” என்றான் சுருதகீர்த்தி. “நான் காணாதவற்றை நீங்கள் கண்டிருப்பீர்கள். என்னால் நஞ்சையும் கசப்பையும் அறிய முடிவதில்லை.” சிரித்தபடி “அங்குதான் இருந்தேன். உடல்தான் அடுமனையில் உணவுண்டுகொண்டிருந்தது” என்றான் சுதசோமன். “சரி, நீங்கள் இப்போது கூறுவதற்கு அடியில் மேலும் நுட்பமான ஏதாவது தளம் உண்டா, சல்யர் அவர்களுடன் இணைந்துகொள்வதற்கு?” என சுருதகீர்த்தி கேட்டான்.
“இப்போது நாம் சொல்வதுகூட நம்மால் ஏதேனும் வகையில் வகுத்து கூறிவிடக்கூடிய ஒன்றே. தெளிவாக வகுத்துக்கூற முடியாததும் ஒவ்வொரு முறையும் நமது ஆழம் சென்று தொடுவதுமான பிறிதொரு தளம் உண்டு, இளையோனே. வேதம் காப்பதும் குலம் பெருக்குவதுமெல்லாம். நம்முள் உறையும் நல்லியல்பால் நாம் அவர்களில் உணர்வன. நம்முள் வாழும் இருட்டால் நாம் சென்று தொடும் அவர்களின் இருளொன்று உண்டு. அங்கிருப்பவை வேறு தெய்வங்கள், வேறு படைக்கலங்கள்” என்றான் சுதசோமன்.
“இரு இயல்புகளால் அஸ்தினபுரியின் அரசர் இயக்கப்படுகிறார். ஆணவமும், மண்விருப்பும். ஆகவே ஆணவமும் மண்விருப்பும் கொண்ட அனைவருக்கும் இயல்பாகவே அவரை புரிந்துகொள்ள முடிகிறது. அவருடன் இணைவதே அவர்களுக்கு உகந்ததாகவும் இருக்கும். நம்முடன் வந்தால் இங்கிருக்கும் பிற இயல்புகள் அவர்களை உந்தி வெளியே தள்ளிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு அவையிலும் பேசி நகைத்து சினந்து நடித்து தங்களை அவர்கள் இவ்வகையில் நிறுவிக்கொள்ளவேண்டும்” என்றான் சுதசோமன்.
பின்னர் நகைத்து “அத்துடன் ஒன்று உண்டு. மானுடர் வாழ்க்கையை உள்ளூர நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த நூறுநடிப்புகளில் ஒன்றையே வெளியே நிகழ்த்துகிறார்கள். வெல்லப்பட்டோர், வென்றோர் நடுவே வெல்லப்பட்டோராக நின்று நடிப்பதையே மானுட ஆழம் விழைகிறது. ஏய்க்கப்பட்டோர் தோற்றவர் என்றும் ஏய்த்தவரே வென்றவர் என்றும் அது அறியும்.” சுருதகீர்த்தி திகைப்புடன் “இரக்கமின்றி சொல்கிறீர்கள், மூத்தவரே” என்றான். “இளையோனே, நான் கைக்கு சிக்கும் பொருட்களை மட்டுமே அறியவேண்டும் என எனக்கு ஆணையிட்டுக்கொண்டவன். என் படைக்கலங்கள்கூட கைவிட்டுச் செல்வதில்லை.”
“சல்யரை இயக்கும் முதன்மை விழைவென்ன?” என்றான் சுருதகீர்த்தி. சுதசோமன் உரக்க நகைத்து “இதிலென்ன ஐயம்? மூத்தகௌரவருடன் இணையும் அத்தனை அரசர்களையும் இயக்குவது ஒன்றே. ஒருநாள் அவர்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென்றாக முடியும் என்னும் கனவு” என்றான். சுருதகீர்த்தி திரும்பி “சல்யரா?” என்றான். சுதசோமன் “இளையோனே, பாரதவர்ஷத்தின் அவையில் மிகமிகக் கடையன் என அமர்ந்திருக்கும் மூஷிக நாட்டு சிற்றரசன் உதகன்கூட அந்தக்கனவுடன்தான் இருப்பான். என்றோ ஏதோ களத்தில் பிற அனைவரையும் தோற்கடித்து தான் பாரதவர்ஷத்தின் அரியணை அமர்ந்து மும்முடி சூட தன் கொடி வழிகள் பாரதவர்ஷத்தை ஒருங்காள்வதைப் பற்றி மட்டுமே அவன் உள்ளம் நுரைத்து குமிழியிட்டுக்கொண்டிருக்கும்” என்றான்.
சில கணங்கள் அவனை நோக்கியபின் சுருதகீர்த்தி புன்னகைத்தான். “என்ன?” என்றான் சுதசோமன். “குருதிச்செல்வமாக இதை பெற்றிருக்கிறீர்கள், மூத்தவரே. இக்கசப்பையும் மானுட மறுப்பையும்” என்றான் சுருதகீர்த்தி. “இது மானுட மறுப்பல்ல, பிறர் எளிய மானுட எண்ணங்களால் ஆனவர்கள் மட்டுமே என அறிந்துகொள்ளல். அன்னமே முதன்மை இருப்பென்று உணர்பவர்கள் எந்தையும் நானும். அன்னத்தினூடாகவே மானுடரை புரிந்துகொள்கிறோம்” என்று சுதசோமன் சொன்னான்.
அறைக்குள் சென்றதுமே மஞ்சத்தில் படுத்து உடலை நீட்டிக்கொண்டான் சுதசோமன். சுருதகீர்த்தி தன் மேலாடையை எடுத்து வைத்துவிட்டு அறைக்குள் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த பால்கஞ்சியை மூன்று மிடறுகளாக குடித்து முடித்து வாய்கொப்பளித்து அறைக்குள் திரும்பி வந்தபோது சுதசோமன் துயின்றுகொண்டிருந்தான். படுத்தபோது தன்னால் துயில முடியாது என்றெண்ணினான். ஆனால் உடல் தசைகள் அனைத்தும் ஓய்வையே நாடின.
இறுதியாக மூழ்கிச்செல்கையில் ஓர் எண்ணம் எழுந்தது. அதுவரை தன்னை நிலையழியச்செய்தது ஒரு காட்சி என்று அவனுக்குத் தோன்றியது. அவன் விரும்பாத ஒன்றைக் ண்டான். ஆனால் கண்ட அக்கணமே அவன் உள்ளம் அதை தள்ளி வேறெங்கோ செலுத்திவிட்டிருந்தது. அது என்ன என்று அப்போது அவன் உள்ளத்தின் அத்தனை விரல்முனைகளும் துழாவித்தேடின. அத்தேடலை நிறுத்திவிடவேண்டுமென்றும் முற்றிலும் விலகி வந்துவிடவேண்டுமென்றும் கூடவே உள்ளம் பதைத்துக்கொண்டிருந்தது.
மெல்ல துயில் உள்ளத்தை இழுத்தது. ஒவ்வொரு விரல்களாக ஓய்ந்தன. ஒற்றை இலைநெளிவென ஒருசொல் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. சேணம் என்ற சொல். இச்சொல் என் உள்ளத்தில் ஏன் ஓடுகிறது என்று வியந்தான். சேணம் சேணம் சேணம். கடிவாளம் என்று அதை மாற்றமுடியுமா? மாற்றியதுமே மீண்டும் சேணம் என்ற சொல்லாகியது. அதை அப்படியே விட்டான். அச்சொல் விரைவழிந்து புழு என நெளியத்தொடங்கியபோது அவன் அஸ்வத்தாமனை மிக அருகிலெனக்கண்டான்.
நீர்மை படிந்த கண்களுடன் இருகைகளையும் பற்றிக்கொண்டு “மைந்தா, இந்தப்போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், சென்று சொல் உன் தந்தையிடம்” என்று உதடுகள் நடுங்க குரல் பதற விழிகள் அலைபாய அவர் கூறிக்கொண்டிருந்தார். அவருக்குப்பின்னால் எழுந்து சுவரில் மடிந்து நின்ற பெருநிழல் படைக்கலங்களைக் கையிலேந்தி போருக்கெழுந்ததுபோல் தோற்றமளித்தது.
சல்யரின் அறையின் காவலன் “இளவரசர்கள் உள்ளே செல்க!” என்று உரைத்து வணங்கி கதவை திறந்தான். சுதசோமனும் சுருதகீர்த்தியும் அறைக்குள் சென்றபோது துரியோதனனும் அஸ்வத்தாமனும் அங்கிருப்பதைக் கண்டனர். அது மந்தண அறை என்பதனால் சுதசோமனும் சுருதகீர்த்தியும் இருவரையும் முகமனுரைக்காமல் தலைவணங்கிவிட்டு சுவர் ஓரமாக சென்று நின்றனர்.
அங்கிருந்த அமைதி எடைமிக்கதாக இருப்பினும் அங்கே சொல் எழுவதை சுருதகீர்த்தி விரும்பவில்லை. அந்த அமைதி திரைபோல தன்னை மூடிக்கொள்ள உள்ளே ஒளிந்துகொண்டு அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான். கதவு திறந்து ஏவலன் “மத்ர நாட்டு அரசர் சல்யர் எழுந்தருள்கை” என அறிவித்தான். வெளியே வலம்புரிச்சங்கோசை எழுந்தது. துரியோதனனும் அஸ்வத்தாமனும் எழுந்து நின்றனர்.
சிறைப்பட்ட சிற்றரண்மனைக்குள்ளும் முறைமை மீறாமலிருக்கிறார் சல்யர் என்ற எண்ணம் எழுந்ததுமே அவன் அவர் முகத்தை உளத்தில் பார்த்தான். செயற்கையாக தருக்கி நிமிர்ந்த தலை. பயின்று உருவாக்கிக்கொண்ட நீள்கால் நடை. பெருமிதம் தோன்ற சற்றே தூக்கிய முகவாய். அரைக்கண் மூடிய விழி. ஒரு மனிதன் தன்னை ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் அமைத்துக்கொண்டான் என்றாலே அனைத்தும் பொய்யென்றாகிவிடுகின்றன. அவன் அசைவுகள் அனைத்துமே ஒவ்வாமையை உருவாக்குகின்றன. அவன் சொற்கள் கேலிக்குரியவையாகின்றன.
சல்யர் அறைக்குள் நுழைந்ததும் துரியோதனனும் அஸ்வத்தாமனும் முறைமைப்படி முகமன் உரைத்து முன்னால் சென்றனர். அவர் அவர்கள் தன் காலடியைத்தொட்டு சென்னி சூடும் பொருட்டு அசையாமல் நின்றார். துரியோதனன் “மத்ரரே, தங்களை இவ்வண்ணம் சந்திக்கும் பேறு பெற்றேன். இத்தருணம் என் குலமூதாதையரால் எனக்கு அளிக்கப்பட்ட பரிசு. என் தந்தையரின் வடிவில் தங்களை பார்க்கிறேன். தங்கள் அருளால் நான் வெற்றியும் புகழும் நிறைவும் அடையவேண்டும். என் கொடிவழிகள் செழிக்க வேண்டும்” என்று சொல்லி அவரருகே சென்று நெஞ்சு நிலம்படிய விழுந்து வணங்கினான்.
சல்யர் குனிந்து அவன் தலையைத் தொட்டு “நலம் சூழ்க! முழுமை கொள்க!” என்று வாழ்த்தினார். அஸ்வத்தாமன் அவரை வணங்கியபோது “நலம் சூழ்க! வெற்றியும் புகழும் நிறைக!” என்று வாழ்த்திவிட்டு புருவங்கள் சுருங்க சுருதகீர்த்தியையும் சுதசோமனையும் பார்த்தார். அவர்கள் அருகே வந்து நிற்க துரியோதனன் “இவர்கள் பாண்டவர்களின் மைந்தர்கள். அர்ஜுனனின் மைந்தன் சுருதகீர்த்தியும் பீமசேனனின் மைந்தன் சுதசோமனும்” என்றான்.
“ஆம் சிறுமைந்தர்களாக பார்த்திருக்கிறேன். ஒருகணம் அவர்கள் இருவரும்தானோ என்று என் முதிய விழிகள் மயங்கிவிட்டன” என்றார் சல்யர். அவர்களிருவரும் அவர் கால்களைத்தொட்டு வணங்க “அனைத்து நலன்களும் பொலிக!” என்று தலை தொட்டு வாழ்த்தினார். “இவர்கள் இங்குதான் இருக்கிறார்களா?” என்றபடி அவருக்கு இடப்பட்ட முதன்மைப் பீடத்தில் அமர்ந்தார். அவரருகே தாழ்ந்த பீடத்தில் அமர்ந்த துரியோதனன் “ஆம், பதின்மூன்றாண்டுகளாக என் மைந்தர்களாகவே வளர்கிறார்கள்” என்றான். “அதை அறிவேன். தந்தையரின் கடமை அது. பூசல்கள் மைந்தர்களுடன் அல்ல. குருதி தன்வழியை தானே அறியும். நம் உடல்கள் அதற்கான கரைகள் மட்டுமே” என்றார் சல்யர்.
அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் இடத்திற்குச் சென்று நின்றுகொள்ள “தங்களிடம் நான் பேசும்போது அவர்களும் உடனிருக்க வேண்டுமென்று விரும்பினேன். ஏனெனில் நான் மந்தணமோ சூழ்ச்சியோ அறியாதவன். என் ஒவ்வொரு சொல்லையும் பாண்டவர்களும் அறியட்டும்” என்று துரியோதனன் சொன்னான். “ஆம், எனக்கும் மந்தணச் சொற்களில் விருப்பமில்லை. எண்ணிச் சொல்சூழ்வதே உளத்தில் தீமை கொண்டவர்களின் இயல்பென்று எண்ணுகிறேன்” என்றார் சல்யர்.
“மூத்தவரே, நேரடியாகவே தங்களை என் தரப்பில் நின்று என் மண்ணும் குடிகளும் பொலியவைக்க வேண்டும் என்று அழைக்கிறேன். தாங்கள் அறியாததல்ல, சென்ற பதின்மூன்றாண்டுகளாக என் நிலம் ஒருகணமும் அறம் வழுவாத செங்கோலால் ஆளப்படுகிறது. என் நாட்டில் வயல்களும் பசுக்களின் மடிகளும் கருவூலமும் நிறைந்துள்ளன. அந்தணருக்கும் புலவருக்கும் முனிவருக்கும் கொடையளிக்காது ஒருநாள்கூட கடந்து செல்லவில்லை. பாரதவர்ஷத்தில் அஸ்தினபுரியைப்போல் மக்களைப்புரக்கும் அரசு பிறிதொன்றில்லை என்கிறார்கள் கவிஞர்” என்றான் துரியோதனன்.
சல்யர் உரக்க நகைத்து “ஆம், ஆனால் உன் நாட்டு மக்கள் உன்னை கலிவடிவமாகவே பார்க்கிறார்கள் என்றும் அறிந்தேன்” என்றார். சுருதகீர்த்தி திடுக்கிட்டு துரியோதனனின் விழிகளைப் பார்க்க அவற்றில் எந்த மாறுபாடும் தெரியவில்லை. “உண்மை மூத்தவரே, இத்தனைக்குப் பிறகும் மக்கள் என்னை வெறுக்கிறார்கள். ஏனெனில் நான் பிறந்த தருணம் குறித்தும், என் பிறவி நூல் குறித்தும் அத்தனை கதைகள் இங்கு சூதர்கள் வழியாக பரப்பப்பட்டுள்ளன. அவற்றைப் பரப்பியவர்கள் யார் என்றும் தாங்கள் அறிவீர்கள்” என்றான்.
“அது அந்த யாதவ அரசியின் பணி. அவள் வஞ்சம் அழியா உள்ளம் கொண்டவள்” என்றார் சல்யர். துரியோதனன் “அதைவிட சரியாக சொல்லப்போனால் நன்று தீது அறியாதவர், தன்னலம் கருதி தகைமையாளரைத் தவிர்த்து சிறுமதி கொண்டோரை ஏற்றுக்கொள்பவர்” என்றான். சல்யரின் முகம் மாறுபடுவதை சுருதகீர்த்தி கண்டான். அவர் பீடத்தின் இருகைகளையும் பற்றிக்கொண்டு மெல்ல முன்னால் நகர்ந்தார். “அது பெண்களின் இயல்பு. அவர்களால் அவர்களுக்கு உகந்ததை அவர்களே தெரிவு செய்துகொள்ள முடியாது” என்றார்.
“மெய். எனக்கு இப்படி ஓர் பழி இருப்பது நான் நன்கு அறிந்ததே. தங்கள் உதவியை நான் கோருவது அதன் பொருட்டே. தங்களுக்கு பாரதவர்ஷத்தின் அத்தனை தொல்குடிகளிடமும் இருக்கும் நற்பெயர் எவரும் அறிந்தது. பிருதுவுக்கும் யயாதிக்கும் பரதருக்கும் தசரதருக்கும் ஜனகருக்கும் இருந்த புகழுக்கு நிகர் அது” என்றான். மெல்லிய தத்தளிப்பொன்று சல்யரின் முகத்தில் கூட அவர் அஸ்வத்தாமனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு இயல்பாக தலையசைத்தார்.
“தாங்கள் என் தரப்பில் நிற்பது என் மேல் மக்கள் கொண்ட உளவிலக்கை இல்லாமல் ஆக்கும். அவர்கள் காலப்போக்கில் என்னை தங்கள் தந்தை வடிவென ஏற்கவேண்டும். நான் தங்களிடம் முதன்மையாக விழைவது அதைத்தான்” என்றான் துரியோதனன். சல்யர் உள்ளத்துள் எண்ணங்கள் ஓட, பொதுவாக “ஆம், நாம் மக்களிடம் உளமாறுதலை உருவாக்க முடியும்” என்றார். “அதன் பொருட்டே நான் என் நிலத்தில் வேள்விப்பயிர் விளையச் செய்கிறேன். ஒவ்வொரு நாளும் வேதச்சொல் பொலிகிறது அங்கே. அந்தணர் பேணப்படுகிறார்கள். அனைத்து நலன்களும் என் நிலத்தில் சூழ்கின்றன என்றால் நிலைக்காதொலிக்கும் வேதச்சொல்லால்தான்” என்றார்.
“ஆம், வேதம் மாமங்கலம்” என்றான் துரியோதன்ன். “வேதம் இந்நாட்டில் முனிவரை அறத்தின் வடிவாகவும் அந்தணரை அறிவின் வடிவாகவும் ஷத்ரியரை அவர்களுக்குக் காவலனாகவும் அமைத்தது. இந்நிலத்தில் இன்றுவரை அறமும் அறிவும் பொலிகிறதென்றால் அதற்கு தங்களைப்போன்ற ஷத்ரிய மூதாதையர் ஏந்திய வாள் வழியமைத்ததென்றே நான் எண்ணுகிறேன். இந்த அவைக்குள் சற்று முன் தாங்கள் நுழைந்த காலடியோசையை கேட்டபோது இதோ எழுகிறது வேதம்புரந்த என் மூதாதையரின் நாடித்துடிப்பு என்றே உணர்ந்தேன்.”
“எத்தனை தலைமுறையினராக தங்கள்குடியினர் வேதம் காத்து நின்றிருப்பார்கள்? எத்தனை களங்களில் வேதத்தின் பொருட்டு குருதி சிந்தியிருப்பார்கள்?” என துரியோதனன் தொடர்ந்தான். சல்யர் மீண்டும் அஸ்வத்தாமனை பார்த்துவிட்டு விழிதிருப்பிக்கொண்டார். “அசுரர் குடிகள் தங்கள் இழிந்த வேதத்துடன் ஒவ்வொரு யுகந்தோறும் வேதத்தில் வந்து வந்து தலையறைந்து சிதறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அலைகளென வந்துகொண்டிருக்கும் கடலென நூல்கள் சொல்கின்றன. அதற்கெதிராக அழியாது நின்றிருக்கும் பெருங்கரையே ஷத்ரியர்கள்” என்று துரியோதனன் தொடர்ந்தான்.
“மூத்தவரே, இங்குள்ள அத்தனை ஷத்ரிய வீரர்களும் அப்பெரும் கரையில் மணற்பருக்களே. நான் அதிலொரு கூழாங்கல். பிருதுவும் பகீரதனும் துருவனும் யயாதியும் பரதனும் உபரிசிரவசுவும் ஜனகரும் தசதரும் ராகவராமனும் பரசுராமனும் குருவும் ஹஸ்தியும் பிரதீபனும் அதன் பாறைகள். அப்பெரும்பாறைகளிலொன்று தாங்கள். இங்கு நான் தங்களிடம் பேச வந்ததே அந்த நம்பிக்கையில்தான். என்னுடன் நில்லுங்கள் என கூற மாட்டேன். ஆம் அதுவும் என் விழைவுதான். ஆனால் நான் எதன் பொருட்டு நின்றிருக்கிறேனோ அதன் பொருட்டு நில்லுங்கள் என்று கோருவேன். அதன்பொருட்டே உங்களை சந்திக்க வந்தேன்.”
சுருதகீர்த்தி மெல்ல கால்மாற்றி நின்றான். அவன் கட்டைவிரலில் அந்தச்சிறு புண் தினவுபோல் உளைச்சல்போல் இருப்புணர்த்தியது. மறுகால் விரலால் அதை அழுத்தி எடுத்தான். அவ்வசைவைக்கண்டு சல்யர் திரும்பி நோக்கியபோது அவன் உள்ளம் மெல்லிய அசைவொன்றை அறிந்தது. அவ்விழிகள் மாறுபட்டிருந்தன. விழிகளே மானுடர் என ஆசிரியர் சொன்னதை நினைவுகூர்ந்தான். அவன் முற்றிலும் அறியாத ஒருவர் அங்கே சல்யர் என உடல்சூடி அமர்ந்திருந்தார்.