எழுதழல் - 35
ஐந்து : துலாநிலையின் ஆடல் – 2
நான்கு நாட்களுக்குப் பின்னர் சுருதகீர்த்தியும் சுதசோமனும் திரிகர்ணம் என்னும் ஊரிலிருந்த சாலையோர விடுதியை சென்றடைந்தனர். வணிகர்களின் பொதி வண்டிகளும் அத்திரிகளும் வெளியே நின்றிருந்தன. விடுதி உரிமையாளன் தன் துணைவியுடன் அடுமனையில் உணவு சமைத்துக்கொண்டிருந்தான். தொலைவிலேயே அடுமனைப்புகையை உணர்ந்த சுதசோமன் “அவனுக்கு சமைக்கத் தெரியவில்லை. நீரை கொதிக்க வைப்பதற்குள்ளாகவே அரிசியை போட்டுவிட்டான். அன்னம் ஊறி வெந்தால் சுவையிழக்கிறது” என்றான்.
சுருதகீர்த்தி தன் கட்டைவிரலில் மெல்லிய வலி ஒன்றை உணர்ந்தான். ஏதோ சிறு பூச்சி ஒன்று கடித்ததுபோல. பெரும்பாலான தருணங்களில் ஒருவகையான எளிய தொடுஉணர்வாகவே அதை அறிய முடிந்தது. குனிந்து பார்த்தபோது இரு பல் பட்ட தடங்களும் நீலம் பாரித்து ஊசியால் குத்திய வடுக்கள் போலிருந்தன. வீக்கமும் பொருக்கும் இல்லை. ஆனால் கட்டை விரலை கையால் தொட்டுப்பார்த்தபோது மெல்லிய வெம்மையை உணரமுடிந்தது. சுதசோமன் “புது ஊன் உண்ட வாய்கொண்டு கடித்திருக்கிறது. அக்குருதி உன் குருதியுடன் கலந்திருக்கலாம். ஓரிரு நாளில் சீர்படுவாய்” என்றான்.
அவன் தன் காலை பார்ப்பதைக் கண்ட சுதசோமன் “நாம் இவ்விடுதியில் மருத்துவம் அறிந்த எவரேனும் இருந்தால் காட்டலாம்” என்றான். சுருதகீர்த்தி “மருத்துவத்திற்கான தேவை ஏதுமில்லை. வலி என எதுவும் தெரியவில்லை” என்றான். விடுதி முற்றத்தில் புரவிகளை நிறுத்தி இறங்கி நீர்த்தொட்டியாக வைக்கப்பட்டிருந்த பழைய படகின் அருகே கொண்டு சென்று கடிவாளங்களை சேர்த்துக் கட்டியபின் பெரிய மரத்தொட்டியில் வைக்கப்பட்டிருந்த நீரை அள்ளி கைகால் முகம் கழுவியபின் விடுதிக்குள் நுழைந்தனர்.
மரப்பட்டைக் கூரையிட்ட கொட்டகைக்குள் தரையில் விரிக்கப்பட்ட ஈச்சம் பாய்களில் மூன்று குழுக்களாக வணிகர்கள் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த மூன்று குழுக்களில் ஒன்றுடன் அவர்களைக் காத்து சௌனகரின் ஒற்றன் பிரகாமன் வணிகன் தோற்றத்தில் தங்கியிருந்தான். அவனுடன் இருந்த பிற நான்கு வணிகர்களும் அவன் ஒற்றன் என்று அறியாத எளியவர்கள். மற்ற இரு குழுக்களும் தரையில் களம் வரைந்து ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. ஒரு குழு உரக்க சொல்லாடிக்கொண்டு “வை!” என்றும் “உன் முறை!” என்றும் “இந்த முறை பார்ப்போம்” என்றும் அறைகூவிக்கொண்டு விளையாட பிறிதொரு குழு ஆழ்ந்த அமைதியுடன் களத்தில் அமைந்த கருக்களை வெறித்துக்கொண்டு கனவிலென கைநீட்டி காய் நகர்த்திக்கொண்டிருந்தது.
ஒற்றனின் வணிகக் குழுவில் இருவர் மல்லாந்து படுத்து ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் தோல் மூட்டையை பிரித்து அதிலிருந்த பொருட்களை வெளியே எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார். இன்னொருவர் அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். ஒற்றன் சுருதகீர்த்தியைப் பார்த்து “வணங்குகிறேன், ஷத்ரியர்களே. தாங்கள் நெடுந்தொலைவு செல்கிறீர்கள் போலும்” என்றான். “வாரணவதம் செல்கிறோம். அங்கு படகுப்பணி ஒன்று உள்ளது” என்று சுருதகீர்த்தி சொன்னான். அந்த மந்தணச்சொல்லை புரிந்துகொண்டு ஒற்றன் “கங்கைக்கரை விரைவுப்படகுகள் இந்தக் கோடையில் விலையிறங்கக்கூடும்” என்றான். சுருதகீர்த்தி அம்மறுமொழியைப் பெற்று தலையசைத்தான். பொருட்களை அடுக்கியவர் தலைநிமிர்ந்து நோக்கி மீண்டும் பணியைத் தொடர வேடிக்கை பார்த்தவர் கொட்டாவியுடன் படுத்துக்கொண்டார்.
விடுதிக்காவலன் வந்து தலைவணங்கி “இருவருக்கும் உணவு அளிக்கலாம் அல்லவா?” என்றான். சுருதகீர்த்தி “ஆம், இருவர் உண்ணப்போகிறோம். ஆனால் இவருக்கு பன்னிருவருக்கான உணவு தேவைப்படும்” என்றான். திடுக்கிட்டு அவனைப் பார்த்த விடுதிக்காவலன் “மும்மடங்கு உணவு என்று நான் கணக்கிட்டேன்” என்றான். “இதுவரை அவரைப் பார்த்து இடப்பட்ட அத்தனை கணக்குகளும் பொய்யாகியே உள்ளன” என்றான் சுருதகீர்த்தி. விடுதிக்காவலன் “நன்று. நன்கு உணவு உண்ணுபவர்களைப்போல அடுமனையாளனுக்கு உகந்தவர் வேறில்லை. பேருடலரே, தங்களுக்கு அன்னமும் ஊனும் பருப்புக்கறியும் போதுமல்லவா?” என்றான். “எனக்கு உணவில் வேறுபாடில்லை. சுவை விரும்புவேன். சுவையற்றதையும் அதே அளவு விரும்பி உண்பேன்” என்றான் சுதசோமன்.
புன்னகையுடன் தலைவணங்கி விடுதிக்காவலன் சென்றான். சுதசோமன் “நானும் வந்து அடுமனையில் உதவுகிறேன்” என அவனுடன் செல்ல ஒற்றன் எழுந்து வெளியே சென்று விடுதியின் திண்ணையில் நின்றான். சுருதகீர்த்தி அவனுடன் சென்று அருகே நின்று “மழைவரக்கூடுமோ?” என்றான். “ஓரிரு நாட்களில் விழலாம். தென்மேற்கில் முகில்கள் வெம்மை கொண்டுள்ளன” என்று ஒற்றன் சொன்னான். “எங்கிருக்கிறார்?” என்று சுருதகீர்த்தி கேட்டான். “செய்திகளின்படி அவர்கள் எட்டு நாட்களுக்கு முன்னரே மத்ரபுரியின் தலைநகரிலிருந்து கிளம்பிவிட்டிருந்தனர். நான்கு நாட்களுக்கு முன்னரே உபப்பிலாவ்யத்தை சென்று அடைந்திருக்கவும் வேண்டும்.”
“அவைக்கு வரும் நோக்கம் சல்யருக்கு இருக்கவில்லை. அவை முடிந்து இளைய யாதவர் கிளம்பிச் சென்றபின் வந்தால் நன்று என்று எண்ணுவதாகக்கூட தோன்றியது. ஆனால் எண்ணியிராத பிறிதொன்று நிகழ்ந்தது. அவர் திசைமாறி செல்லத் தொடங்கினார். முதலில் அது அவருடைய முடிவென்றே நாங்கள் எண்ணினோம். திசைமாறிச் செல்வதை உபப்பிலாவ்யத்துக்கு தெரிவித்தபோதுகூட அங்கும் எந்த ஐயமும் எழவில்லை. மூன்று நாட்கள் அத்திசைமாற்றச் செலவு நிகழ்ந்த பின்னர்தான் அதிலேதோ சூதிருக்கிறதென்று தோன்றியது” என்றான் ஒற்றன். “என்ன சூது?” என்று சுருதகீர்த்தி கேட்டான். “நம்முடைய ஒற்றர்களின் மந்தணக்குறிகளையும் முத்திரைகளையும் அஸ்தினபுரி முன்னரே அறிந்துவிட்டிருந்தது. எவரோ சல்யரை அணுகி அஸ்தினபுரி விரும்பிய வழியில் கூட்டிச் சென்றுவிட்டார்கள். நான்கு நாட்கள் பயணம் செய்த பின்னர்தான் உபப்பிலாவ்யத்துக்கான வழியிலிருந்து பெரிதும் விலகிச் சென்றுவிட்டதை சல்யர் உணர்ந்தார்.”
“அவரிடமிருந்த படை பெரிது. உபப்பிலாவ்யத்திலும் விராட நாட்டிலும் தனக்கு உயர் மதிப்பு கிடைக்கவேண்டுமென்பதற்காக தன் நாட்டுக் காவலுக்கு தேவையான படைகளை மட்டும் நிறுத்தி எஞ்சிய அனைவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டிருந்தார். காலாள் ஆயிரத்தவர் மட்டும் எட்டு பிரிவுகளாக உடன் வந்தனர். பன்னிரு நூற்றுவர் புரவிப்படை, எண்பது யானைகள், நானூறு தேர்கள். இவர்கள் அனைவருக்கும் உணவு சமைக்கவும் உறைவிடம் அமைக்கவும் தேவையான ஏவலர்கள். அப்பொருட்களை கொண்டுவரும் வண்டிகள். திசை மாறியது உறுதியானதுமே சல்யர் உபப்பிலாவ்யத்துக்கு சென்று சேரப்போவதில்லை என்று அறிந்தோம். அதை சௌனகருக்கு தெரிவித்தோம்.”
“இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று சுருதகீர்த்தி கேட்டான். “தெற்கே அஸ்தினபுரியின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குக்குடபுரம் என்னும் கோட்டை சூழ்ந்த சிறுநகரில்” என்றான் ஒற்றன். சுருதகீர்த்தி “துரியோதனரின் விருந்தினராகவா?” என்றான். “ஆம்” என்றான் ஒற்றன். “படையுடன் அவர் எல்லைக்குள் நுழைந்துவிட்டதை உணர்ந்தபின் சல்யருக்கு வேறு வழியில்லை. அங்கிருந்து மீண்டும் அவர் உபப்பிலாவ்யத்துக்கு கிளம்பவேண்டுமென்றால் துரியோதனர் ஒப்புதல் அளிக்கவேண்டும். அஸ்தினபுரியின் பெரும்படை இப்போது மத்ரநாட்டின் படையை சூழ்ந்துள்ளது.”
“பிறிதொரு நாட்டின் எல்லைக்குள் நுழைவதைக்கூடவா அறியாதிருந்தார்?” சுருதகீர்த்தி சலிப்புடன் கேட்டான். ஒற்றன் புன்னகைத்து “மத்ரர்களும் சௌவீரர்களும் பால்ஹிகர்களும் மலைநாட்டினர். அங்கு அவர்களின் பாதைகளும் எல்லைகளும் முற்றிலும் வேறுபட்டவை. எவருக்கும் உரித்தல்லாத நிலங்களே அங்கு மிகுதி. தாழ்நிலத்தில் அத்தனை நிலமும் எவருக்கோ உரியது என்பதை எத்தனை எடுத்துச் சொன்னாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. வெறும் காடுகளினூடாகச் செல்வதாகவே சல்யர் எண்ணியிருந்தார். அஸ்தினபுரியின் கொடியுடன் அவர்களின் படைத்தலைவன் படைகொண்டு எதிர்வந்த பின்னர்தான் எல்லை கடந்திருப்பதை உணர்ந்தார். போர் கூவவா முடியும்? நட்பு காட்டி உடன் செல்வதன்றி வேறு வழியில்லை” என்றான்.
“இப்போது நாம் என்ன செய்வது?” என்று சுருதகீர்த்தி கேட்டான். “அங்கு என்ன நிகழ்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அஸ்தினபுரியிலிருந்து துரியோதனர் சல்யரைப் பார்க்க வந்துகொண்டிருப்பதாக ஒரு செய்தி. உறுதிப்படுத்தப்படாத உளவுத் தகவல் அது. ஆனால் அதற்கு வாய்ப்புள்ளது” என்றான் ஒற்றன். “சல்யரை மகிழவைத்து அவர் தன்னிடம் சேர்வதற்கான சொல்லொப்புதலைப் பெற துரியோதனர் முயல்வார் என எண்ணுகிறேன்.” சுருதகீர்த்தி நகைத்து “சல்யரா? அவர் பாண்டவர்களின் சமந்தர். இரு வகையில்” என்றான். “ஆம், அதனால்தான் எந்த ஐயமும் இல்லாமல் இருந்தோம். ஆனால் மறுபக்கம் இருப்பவர் கணிகர். அவருடைய சூழ்ச்சி என்ன என்று நாமறிய முடியாது. சல்யர் அவர்களால் வெல்லப்படவும் கூடும்.”
சுருதகீர்த்தி சிலகணங்களுக்குப்பின் “ஆம், மானுட உள்ளத்தை எவரும் நம்பமுடியாது என்பார்கள்” என்றான். “துரியோதனர் நாளை மறுநாள் குக்குடபுரியை அடைவார். அதற்குள் நீங்கள் இருவரும் சென்று சல்யரை சந்திக்கவேண்டும் என்பது ஆணை. நீங்கள் அரசகுடியினர் என்பதனால் உங்களுக்கு அளிக்கும் சொல் அவரை கட்டுப்படுத்தும். அஸ்தினபுரிக்கு எதிராக இந்திரப்பிரஸ்தத்தின் படைகளுடன் நிற்பதாக அவர் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றான் ஒற்றன். “அந்தச் சொல்லை முன்னரே அளித்துவிட்டாரே?” என்றான் சுருதகீர்த்தி. “இல்லை, சௌனகரிடம் அவர் வரவிருப்பதாக மட்டுமே சொன்னார். அரசுமுறைப்படி அறிவிக்கவோ குலமூதாதை என சொல்லளிக்கவோ இல்லை” என்றான் பிரகாமன்.
“ஷத்ரிய மரபுகளின்படி அரசக்குருதியினர் ஒருவரிடம் நேரில் சொல்லும் சொல் தெய்வங்களுக்குமுன் வாள்தொட்டு அளித்த வாக்கைப்போல. ஆகவேதான் உங்கள் இருவரையும் இளைய யாதவர் அனுப்பியிருக்கிறார்” பிரகாமன் சொன்னான். சுருதகீர்த்தி மலைப்புடன் “நாங்களா இதை செய்யவேண்டும்? நாங்கள் இதுவரை எந்த அரச நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. இச்சூழ்ச்சிகள் ஒவ்வொன்றுமே புதிதாக உள்ளன. இத்தனை பெரிய பொறுப்பை எப்படி நாங்கள் ஏற்க முடியும்?” என்றான். “எவரேனும் இதை செய்ய முடியுமென்றால் அது நீங்கள்தான். நீங்கள் வருவதற்குள் சல்யர் அஸ்தினபுரியின் எல்லையைக் கடந்து சென்றிருப்பார் என்று இளைய யாதவர் உய்த்தறிந்திருப்பார். அஸ்தினபுரியின் எல்லைக்குள் பாண்டவர்கள் நுழையமுடியாது. அவர்களின் குருதி வழியில் நீங்கள் மட்டுமே நுழைய முடியும். இளவரசர்களாகிய உங்களை அஸ்தினபுரி சிறைப்படுத்த போவதில்லை” என்றான் பிரகாமன்.
சுருதகீர்த்தி “அவ்வாறெனில்கூட சதானீகனையும் சுருதவர்மனையும் அல்லவா அனுப்பியிருக்க வேண்டும்? நகுலசகதேவரின் சிற்றுருக்கள் அவர்கள். எளிதில் அவரிடமிருந்து சொல் பெற முடியும்” என்றான். “அதை நான் அறியேன். எண்ணி நோக்குகையில் எனக்கும் அது புரிபடாததாகவே உள்ளது. ஆனால் அவர் உள்ளத்தை நாம் சென்றடைய முடியாது” என்ற பிரகாமன் “இன்று ஓய்வெடுங்கள். நாளை புலரியில் கிளம்பி இருட்டுவதற்குள் குக்குடபுரியை அடையலாம். வென்று மீள்க!” என்றான். சுருதகீர்த்தி “ஆம், இறையருள் கூட வேண்டும்” என்றான்.
அஸ்தினபுரி நாட்டின் எல்லையை சுருதகீர்த்தியும் சுதசோமனும் சென்றடையும்போது அந்தி சிவக்கத்தொடங்கியிருந்தது. அவர்களின் வருகையை தொலைவிலேயே முதற்காவல் மாடத்தின் உச்சியிலிருந்த நோக்குவீரன் பார்த்துவிட்டிருந்தான். அவனுடைய முழவோசை கேட்டு கீழிருந்த காவலர்கள் அம்பேற்றிய விற்களுடனும் ஈட்டிகளுடனும் எழுந்து வந்து காட்டுப்பாதையின் தொடக்கத்தில் காத்து நின்றிருந்தனர். அஸ்தினபுரியின் எல்லையென அமைந்த சரளைக்கல் நிறைந்த சிற்றோடைக்குள் இறங்கி நீரோட்டத்தைக் கடந்து மெல்ல மேலேறி இருவரும் வந்தபோது காவலர் தலைவன் “தங்கள் அடையாளம், வீரர்களே?” என்றான்.
அவர்கள் புரவிகளை இழுத்து நிற்க இருவரையும் அறிந்துகொண்ட முதிய வீரன் ஒருவன் பின்னாலிருந்து எழுந்து வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர்கள் அல்லவா?” என்றான். “ஆம், குக்குடபுரிக்குச் செல்கிறோம், அரச அழைப்பு” என்று சுருதகீர்த்தி சொன்னான். “இங்கிருந்து எட்டு காவல்நிலைகளுக்கு அப்பால் உள்ளது குக்குடபுரியின் கோட்டை. வழிநெடுகிலும் அஸ்தினபுரியின் படைகள் உள்ளன. எத்தனை பேருக்கு தங்களை தெரியுமென்று தெரியவில்லை. எவரேனும் குக்குடபுரியின் கோட்டைக்குள் செல்ல ஒப்புதல் அளிக்கிறார்களா என்றும் தெரியவில்லை” என்றான் முதிய காவலன்.
“நாங்கள் என்ன செய்வது?” என்று சுருதகீர்த்தி கேட்டான். காவலர்தலைவன் “தாங்கள் இங்குள்ள கொட்டகையில் ஓரிரு நாழிகைப்பொழுது தங்கலாம். பறவைச்செய்தி அனுப்புகிறேன், கோட்டையிலிருந்து ஒப்புதல் வந்த பின்னர் தாங்கள் செல்லலாம். அந்த ஒப்புதல் ஓலையே அங்கு வரை தங்களை இட்டுச்செல்லும்” என்றான். சுருதகீர்த்தி “இல்லை. இரவு முழுக்க இங்கு நான் தங்க எண்ணவில்லை, எங்கள் பணி காத்திருக்கக் கூடியதல்ல” என்றான். “நான் தாங்கள் செல்ல ஒப்ப முடியாது” என்று காவலர்தலைவன் சொன்னான்.
“அப்படியென்றால் என்னை சிறைபிடியுங்கள்” என்றபின் சுதசோமனிடம் செல்வோம் என்று கைகாட்டிவிட்டு புரவியை தட்டினான் சுருதகீர்த்தி. புரவி விரைவு கொள்ள “பிடியுங்கள்! தடுத்து நிறுத்துங்கள்” என்று காவலர்தலைவன் கூவினான். இரு வீரர்கள் புரவியிலெழுந்து பாய்ந்து சுதசோமனை நெருங்கினர். அவன் கடிவாளத்தை வாயில் கவ்வியபடி அவ்விருவரையும் பற்றித்தூக்கி இரு பக்கங்களிலாக வீசினான். அப்புரவிகள் நிலையழிந்து சுற்றி நிற்க அவர்கள் இருவரும் காட்டிற்குள் ஊடுருவிச் சென்றனர்.
சுருதகீர்த்தி திரும்பாமலேயே “வருகிறார்களா?” என்றான். “இல்லை. மேலும் இருவர் வந்தால் தூக்கி வீசலாமென்று பார்த்தேன். நின்றுவிட்டார்கள்” என்றான் சுதசோமன். “இவர்கள் நம்மை சிறைப்பிடிக்கத் துணியமாட்டார்கள். ஆயிரத்தலைவன் அங்கிருந்தால் சிறைப்படுத்த ஆணையிட்டிருப்பான்” என்றான் சுருதகீர்த்தி. சுதசோமன் “முதல் ஆயிரத்தவனை நாம் பார்க்கும் வரை அஞ்சவேண்டியதில்லை அல்லவா?” என்றான். “இல்லை, அவனுடைய புறா சென்று மீள்வதுவரை மட்டுமே நமக்கு பொழுதிருக்கிறது” என்று சுருதகீர்த்தி சொன்னான்.
அடுத்த காவலரணை அவர்கள் அடைவதற்குள்ளாகவே விற்களும் வேல்களுமாக வீரர்கள் பாதை நோக்கி ஓடிவந்தனர். புரவியை இழுத்து விரைவைக் குறைத்த சுருதகீர்த்தி “நான் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசன். அரசாணையின்படி சென்று கொண்டிருக்கிறேன்” என்றான். “தங்கள் ஓலை அடையாளங்கள்…?” என்று ஒருவன் கேட்க “அதை முதல் காவல்கோட்டத்திலேயே அளித்துவிட்டேன்” என்றபடியே புரவியைத் தட்டி விரைவெழச்செய்து அவர்களைத் தடுத்திருந்த இரு வேல்களை அகற்றியபடி சுருதகீர்த்தி காட்டுக்குள் சென்றான். மேலும் இரு வேல்களைப்பற்றி அவற்றைப் பிடித்திருந்தவர்களை பற்றித் தூக்கி சுழற்றி அப்பால் வீசிவிட்டு சிரித்தபடி சுதசோமன் உடன் வந்தான்.
“இந்த ஆடல் எனக்குப் பிடித்திருக்கிறது, இளையோனே” என்று திரும்பி நோக்கி சுதசோமன் நகைத்தான். “அவர்கள் இன்னும் சிலர் நம்மை எதிர்கொண்டிருந்தால் நாம் என்னென்ன செய்யமுடியும் என அறிந்திருப்போம்” என்றான். “விளையாடவேண்டாம், மூத்தவரே. எத்தனை விரைவில் இயலுமோ அத்தனை விரைவில் நாம் குக்குடபுரியை அடைந்தாக வேண்டும்” என்றான் சுருதகீர்த்தி. “ஒற்றர் சொன்ன கணிப்பை பார்த்தால் நாளை புலரியில் அங்கே துரியோதனர் வந்திருப்பார். அவர் வருவதற்குள் நாம் சல்யரை சந்தித்தாகவேண்டும்” என்றான்.
சுதசோமன் “சல்யர் என்னைப்போன்றவர் என்று எண்ணுகிறேன். துரியோதனரின் தூதன் வந்து சந்தித்து உயரிய மதுவை காணிக்கை அளித்திருப்பான். இன்னொரு மதுப்புட்டியை அவருக்கு முன்னால் காட்டி அவருக்கு முன்னால் சென்றுகொண்டே இருந்திருப்பான். அவர் அதற்குப் பின்னால் செல்ல மொத்த படையும் தொடர்ந்து சென்றிருக்கும்” என்றான். சுருதகீர்த்தி “இன்னொரு காவலரண்” என்றான்.
அவர்கள் அதை அணுகி புரவியை இழுத்துப் பற்றியபோதே எழுந்து வந்த காவல்தலைவன் “தாங்கள்?” என்றான். சுருதகீர்த்தி “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வருகிறேன். அஸ்தினபுரியின் அரசரின் ஆணைப்படி சல்யரை சந்திக்கச் செல்கிறேன்” என்றான். குழப்பத்துடன் அவன் நோக்கி நிற்க புரவியைச் செலுத்தி முன்னால் சென்றான். “ஒன்றுமே நிகழவில்லையே?” என்று சுதசோமன் கேட்க சுருதகீர்த்தி “இனி எவரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இத்தனை எல்லைகளை கடந்து வந்தபின் நம்மிடம் அடையாளம் கோரவேண்டிய தேவையில்லை” என்றான்.
சுதசோமன் “முதற்காவல்கோட்டத்திலிருந்து குக்குடபுரிக்கு புறா இப்பொழுது சென்று சேர்ந்திருக்கும்” என்றான். “ஆம், வழியிலேயே நம்மை எதிர்கொள்ள அஸ்தினபுரியின் படைகள் வரும்” என்றான் சுருதகீர்த்தி. சுதசோமன் “இத்தனை படைநிலைகள் எதற்கு? ஒவ்வொரு காவலரணுக்கு அருகிலும் நூறு புரவிகள் கொண்ட படை ஒன்றுள்ளது” என்றான். “சல்யரை அவர்கள் சிறையிலா வைத்திருக்கிறார்கள்?” சுருதகீர்த்தி “சிலந்திவலையில் சிறுபூச்சி என சென்று சிக்கிக்கொண்டிருக்கிறார்” என்றான். புரவியைத் தட்டி ஊக்கி காட்டினூடாகப் பாய்ந்தபடி “சிறையேதான். இப்போது அவர் விடுபட முயலவில்லை. திமிறுந்தோறும் மேலும் ஆழமாக சிக்கிக்கொள்வார்” என்றான்.
குக்குடபுரியின் முதல் அரண் உயிர்மரங்களை நெருக்கமாக நட்டு உருவாக்கப்பட்டிருந்தது. அதுவரை காவல்மாடங்கள் தொடர்ச்சியாக இருந்தன. “சல்யர் உள்ளே வரும்போது இத்தனை காவலரண்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. பிறர் அறியாத பிறிதொரு வழியில் அழைத்து வந்திருக்கிறார்கள்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “இங்கே காவல்படைகள் காத்து நின்றிருக்கின்றன. மிகத் தெளிவாக முன்னரே திட்டமிட்டிருக்கிறார்கள்.”
குக்குடபுரத்தின் கோட்டையைச் சூழ்ந்து ஏழு அடுக்குகளாக அஸ்தினபுரியின் காவல்படை நின்றிருந்தது. இறுதிக் காவல்மாடத்தைக் கடந்ததுமே அந்தப் படையின் மெல்லிய கார்வையை சுருதகீர்த்தி கேட்டான். புரவியில் அவனை அணுகிவந்த சுதசோமன் “அணுகிவிட்டோம் என்றே எண்ணுகிறேன். இது இறுதிக் காவலரண் என்றால் இரண்டு நாழிகை தொலைவிலிருக்கிறது குக்குடபுரியின் சிறிய கோட்டை” என்றான். “ஆம், ஆனால் அணுகுவது அவ்வளவு எளிதல்ல” என்று சுருதகீர்த்தி சொன்னான். “ஏன்?” என்று சுதசோமன் கேட்டான். சுருதகீர்த்தி மறுமொழி சொல்லாமல் புரவியை சீர்நடையில் செல்லவிட்டான்.
உடன் வந்த சுதசோமன் “காவலிருக்கும். ஆனால் அங்கும் நம்மை விட்டுவிடுவார்கள் என்றே எண்ணுகின்றேன்” என்றான். சுருதகீர்த்தி புரவியை கடிவாளத்தை இழுத்து நிறுத்தி “பாருங்கள்” என்றான். சுதசோமன் அரையிருளுக்குள் கூர்ந்து நோக்கி “படை” என்றான். “நத்தைச்சூழ்கை. ஸம்பூகவலயத்தின் முகப்பில் நீள்வேல் கொண்ட புரவியெதிர்வுப் படைகள் முள்சிலிர்த்து நிற்கும். பின்னர் குதிரைப்படைகள். இறுதியாக கோட்டையை ஒட்டி வில்லவர் படைகள். ஏழு அடுக்குகளில் இறுதியிலுள்ளவை மூன்றும் நத்தையின் ஓடு. படைகள் உள்ளே பதுங்கிக்கொள்ள முடியும்” என்றான் சுருதகீர்த்தி.
“எனக்கு அத்தனை தெளிவாகத் தெரியவில்லை” என்று சுதசோமன் சொன்னான். “சற்று நேரத்தில் விண்ணில் நிலவெழுந்து விழி தெளியும்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “எந்த வாய்ப்புக்கும் இடம் வைக்கவில்லை அஸ்தினபுரியின் அரசர். இதன் அளவைப் பார்த்தால் இப்படைகள் அஸ்தினபுரியிலிருந்து நெடுநாட்களுக்கு முன்னரே கிளம்பியிருக்கவேண்டும். இரு அணிகளாக எல்லையை ஒட்டி வந்துகொண்டிருந்திருக்கும். சல்யரின் படை உள்ளே நுழைந்ததும் நண்டுக் கொடுக்கென இரு படைகளும் இணைந்து அவர்களை உள்ளே சிறை கொண்டுவிட்டனர்” என்றான். “இத்தனை பெரும்படை எதற்கு? இங்கென்ன படையெழுச்சியா நிகழ்கிறது?” என்று சுதசோமன் கேட்டான்.
“அஸ்தினபுரியின் எல்லைக்குள் சல்யர் கொண்டு செல்லப்பட்டுவிட்டார் என்று அறிந்த நாம் ஒரு துணைப்படையை அழைத்துக்கொண்டு சல்யரை வணங்கும்பொருட்டு செல்வதுபோல அஸ்தினபுரியின் எல்லையைக் கடந்து வந்து அவரைச் சந்தித்து மீட்டுவிட முடியும்” என்றான் சுருதகீர்த்தி. “அதெப்படி?” என்று சுதசோமன் கேட்டான். “இளைய யாதவரைப்போல தன் எல்லைகளை மீறிக்கொண்டே இருப்பவர் அதை இயற்றக்கூடும். அதையும் உணர்ந்து அதற்கப்பால் செல்லும் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார்கள். ஆகவேதான் இத்தனை பெரிய படை சூழ்கை” என்றான் சுருதகீர்த்தி.
“சல்யர் சினம்கொண்டு தாக்கமாட்டார் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்?” என்றான் சுதசோமன். “அவர் முன்பின் நோக்கா சினம் கொண்டவர் என்பார்கள்.” சுருதகீர்த்தி “இது தன்னை சிறை வைக்கும் படையென்று அறியாவண்ணம் குலமூத்தாருக்கு நிகராக வணங்கி வழுத்தி மகிழ்வித்திருப்பார்கள். அஸ்தினபுரியின் அரசகுடியைச் சேர்ந்த எவரோ அங்கு இருக்கிறார்கள். சல்யரை மத்ரநாட்டில் கண்டு சென்று அழைத்துவந்தவர் வெறும் ஒற்றர் அல்ல. அவரை அத்தனை எளிதில் சல்யர் நம்பியிருக்கமாட்டார். இப்படை தன்னை சூழ்ந்திருப்பதை எளிய காவல் பயிற்சி என்று எண்ணியிருப்பார்” என்றான்.
சுதசோமன் “அத்தனை எளிய உள்ளம் கொண்டவரா அவர்?” என்றான். “மூத்தவரே, மலையில் வஞ்சம் குறைவு. ஏனெனில் அவர்கள் மானுடர் வாழாத வெற்று நிலங்களை ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்புவி பெரிதென்றும் இங்கு நிலத்திற்கென கொள்ளும் பூசல்கள் பொருளற்றவை என்றும் அவர்களால் எப்படியோ உணரமுடிகிறது. இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் சூது எவருக்கேனும் முற்றிலும் தெரியாதிருக்கும் என்றால் அது சல்யருக்குத்தான் என்று எண்ணுகின்றேன்” என்றான் சுருதகீர்த்தி. “மத்ரநாடு மலைநாடுகளில் முதன்மையானது என்று எண்ணுவார். அதற்கான அத்தனை சூழ்ச்சிகளும் அவரிடமிருக்கும். பாரதவர்ஷமென்னும் கனவு அவர் உள்ளத்தில் எழுந்திருக்காது.”
சுதசோமன் நகைத்து “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் விழவுக்கு அவர் வந்தபோது என்னிடம் உரையாடியிருக்கிறார். பயிலா உள்ளம் கொண்டவர்களின் இரு இயல்புகள் அவரிடமிருப்பதை அன்றே உணர்ந்தேன். தன்னைப்பற்றியும் தன் குலத்தைப்பற்றியும் எப்போதும் பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறர் அதை விரும்புவதில்லை என்பதை அவர் உணரவில்லை. அத்துடன் பிறரிடம் அவர்கள் கூறாத செய்திகளை முகத்திற்கு நேர் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தார். அரசர்கள் அவரை அணுகவே அஞ்சி விலகிக்கொண்டிருந்தனர்” என்றான்.
சுருதகீர்த்தி நகைக்க சுதசோமன் மேலும் குரல் எழ “மாளவ மன்னரிடம் அவரது இளைய மகளை தூயகுருதி இல்லாத மல்லநாட்டு மன்னருக்கு ஏன் அளித்தார் என்று கேட்டார். மாளவர் முகம் சிவக்க மறுமொழி கூறாது திரும்பிச் சென்றார். அவர் மறுமொழி கூறாமையே ஒரு சிறுமையென்று எண்ணாமல் அவர் தோளை தொட்டுத்திருப்பி நான் உன்னிடம்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றார். இதை நாம் பிறகு பேசுவோம் மூத்தவரே என்று சொல்லி மாளவர் சென்றபிறகு இதைப்பற்றி விரிவாக சொல்வானென்றே நினைக்கிறேன் என்று அருகே நின்ற கூர்ஜர மன்னரிடம் சொன்னார்” என்றான்.
சுருதகீர்த்தி நகைத்தபடி புரவியை இழுத்து நிறுத்திவிட்டான். சுதசோமன் “அன்று கூர்ஜரரும் சைப்யரும் விழி பரிமாறிக்கொண்டு புன்னகைத்ததைக் கண்டு ஆம் மிக இனிமையானவன், என் மீது பெருமதிப்பு கொண்டவன், ஒருமுறை என்னிடம் தாங்கள் மட்டும் என் படைத்தலைவனாக அமைவீர்கள் என்றால் பாரதவர்ஷத்தையே வெல்வேன் என்று சொன்னான். அந்த வாய்ப்பு உனக்கில்லையே என்று சொன்னேன் என்றுரைத்து உரக்க நகைத்தார்” என்றான். சுருதகீர்த்தி “படைத்தலைவனாக அழைத்தானா மாளவன்?” என்றான். “ஆம், அதை தன் வீரத்திற்கு அளித்த பாராட்டுரை என்று அவையில் சொன்னார்.”
சுருதகீர்த்தி சிரித்தபடி “இப்போதும் அதைப்போன்ற உரையாடலில் அங்கு ஈடுபட்டுக்கொண்டிருப்பார்” என்றான். “அன்று நான் அவருடனேயே இருந்தேன். எண்ணி எண்ணிச் சிரிக்க பல நிகழ்வுகள். ஒவ்வொரு ஷத்ரிய அரசனையும் நோக்கி அவன் குடிப்பெருமையையும் படைவலிமையையும் நேரடியாகவே கேட்டுத்தெரிந்துகொண்டார். அவன் சொன்னதுமே அதை மறுத்து என்னிடம் பேசத்தொடங்கினார்” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி “ஆனால் அவர் இளமையில் இப்படி இருக்கவில்லை. கூர்மையும் நச்சும் கொண்டிருந்தார் என்கிறார்கள். முதுமைகொள்ளும்தோறும் மானுடரில் கேலிக்குரியதாக சில முகம் கொள்கின்றன. அவை எப்போதுமே அவர்களிடம் இருந்துகொண்டிருக்கும், முதுமை அவற்றை முதிரச் செய்கிறது” என்றான்.
“மானுடரின் உடலே அப்படித்தான், இளையோனே. முதுமையில் அவர்களின் உடலில் கோணலும் வளைவும் உருவாகின்றன. அவர்களின் முதுமையின் அடையாளமே அவைதான். ஆனால் இளமையிலேயே அவை உருவாகத் தொடங்கிவிட்டிருக்கும்” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி “இளம்பெண்டிரில் அவை அழகென்றே வெளிப்படும்” என்றான். இருவரும் நகைத்தபடி புரவியை ஓட்டிச்சென்றனர். சுருதகீர்த்தி “நாம் ஏன் சல்யரை எளிமைப்படுத்திக்கொள்கிறோம்?” என்றான். சுதசோமன் திரும்பிப் பார்த்து “நாம் இளைஞர் அவர் முதியவர், அதனால்தான்” என்றான். சுருதகீர்த்தி “நாம் அஞ்சுகிறோம்” என்றான். சுதசோமன் “நான் பெரிதாக அஞ்சவில்லை, ஏனென்றால் எது எப்படி நிகழந்தாலும் எனக்குக் கவலையில்லை” என்றான்.