எழுதழல் - 34

ஐந்து : துலாநிலையின் ஆடல் – 1

fire-iconகடிவாளத்தைப் பிடித்திழுத்து புரவியை இருமுறை நிலம்மிதித்துச் சுழலச்செய்து நிறுத்தி கையைத்தூக்கி உரத்த குரலில் சுதசோமன் சொன்னான் “நான் நின்றுவிட்டேன். இளையோனே, நான் நின்றுவிட்டேன்” என்றான். முழுவிரைவில் அவன் குரல் கேட்காத தொலைவுக்குச் சென்றுவிட்டிருந்த சுருதகீர்த்தி புரவிக்குளம்படி ஓசை தன்னைத் தொடராததை உணர்ந்து கடிவாளத்தை இழுத்து நிறுத்திச் சுழன்று திரும்பிப்பார்த்தபோது சாலையோரத்து மகிழமரத்தினடியில் சுதசோமன் நின்றிருப்பதைக்கண்டான். “மூத்தவரே, என்ன செய்கிறீர்?” என்று உரக்க கேட்டான். “நான் நின்றுவிட்டேன்” என்று சுதசோமன் மறுமொழி சொன்னான்.

“என்ன?” என்றபின் புரவியைத்தட்டி திரும்ப வந்து “ஏன் நின்றுவிட்டீர்கள்?” என்றான் சுருதகீர்த்தி. “நாம் உணவுண்டுவிட்டுச் செல்லலாம்” என்று சுதசோமன் சொன்னான். “உணவா? காலையில்தானே உணவுண்டுவிட்டு கிளம்பினோம்? விடுதிக்காவலனே திகைக்கும்படி உண்டீர்கள்” என்றான் சுருதகீர்த்தி. “ஆம், ஆனால் அது புலரிக்கு முன்பு இப்போது வெயில் வெம்மை கொண்டுவிட்டது. மேலும் காலையில் நான் உண்ட உணவில் ஊன் மிகவும் குறைவு. இத்தனை தொலைவு புரவியில் வந்திருக்கிறேன்” என்றான் சுதசோமன்.

சுருதகீர்த்தி எரிச்சலுடன் “வரும் வழியெல்லாம் பேசிக்கொண்டு வந்தீர்கள். அத்துடன் எண்ணங்களை உள்ளத்தில் ஓட்டிக்கொண்டும் வருவீர்கள். இவையனைத்தும் சேர்ந்து உணவை எரித்துவிட்டது புரிகிறது. ஆனால் இங்கு எங்கே உணவு கிடைக்கும்?” என்றான். சுதசோமன் “இப்பகுதியில் மான்கள் உள்ளன. நான் குளம்புச் சுவடுகளை பார்த்தேன்” என்றான். “அதையே பார்த்துக்கொண்டு வந்திருப்பீர்கள்” என்ற சுருதகீர்த்தி சுற்றுமுற்றும் நோக்கி “எங்கே? “என்று கேட்டான்.

“இதோ” என்று அப்பால் காட்டுக்குள் சென்ற குளம்புத்தடங்களை சுட்டிக்காட்டிய சுதசோமன் புரவியைவிட்டு பாய்ந்திறங்கி “மிக எளிது. நீ இங்கிரு, இளையோனே. நீ ஏதேனும் ஓரிரண்டை எண்ணி முடிப்பதற்குள் கொழுத்த மானுடன் வருகிறேன். மானிறைச்சி நல்லது. புரவிப்பயணம் செய்பவர்கள் மானிறைச்சி உண்பது இன்றியமையாதது என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.” சுருதகீர்த்தி “எந்த நூல்களில்?” என்றான். “ஏதேனும் நூல்களில் சொல்லியிருப்பார்கள். இதுவரை நான் உழைத்து எண்ணி உருவாக்கிய அத்தனை கருத்துக்களையும் ஏற்கனவே எவரேனும் நூல்களில் சொல்லியிருக்கிறார்கள்” என்றபின் சுதசோமன் காட்டுக்குள் சென்றான்.

சுருதகீர்த்தி அவன் புரவியையும் பற்றி இழுத்துச்சென்று இரண்டு புரவிகளின் கடிவாளங்களையும் சேர்த்துக்கட்டி அவற்றை மேயவிட்டான். அவை உடல் சிலிர்த்து தலை தூக்கி பெரிய மூக்குகளை சுருக்கி விரித்து மணம் பிடித்தன. கரிய புரவி மெல்ல இருமலோசை எழுப்பியது. அவை நீர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டன என்று சுருதகீர்த்தி உணர்ந்தான். இருபுரவிகளும் பிடரித் தசையை விதிர்க்க வைத்தபடி சாமரவால் சுழல இணையாக காலெடுத்து வைத்து சாலையோரத்து குறுங்காட்டிற்குள் நுழைந்தன.

கச்சையை அவிழ்த்து உடலை எளிதாக்கியபடி சுருதகீர்த்தி அவற்றைத் தொடர்ந்து சென்றான். உயரமற்ற மரங்களும் சிறிய இலைகள் கொண்ட புதர்களும் மண்டிய அக்குறுங்காட்டின் சிறிய சரிவுக்கு அப்பால் பாறைகளை அலைத்தபடி நீரோடை சென்று கொண்டிருந்தது. புரவிகள் இறங்கிச் சென்று குனிந்து நீரருந்தத் தொடங்கின. குளிர்ந்த நீர் உள்ளே செல்லச் செல்ல அவற்றின் உடல் சிலிர்ப்பதை சுருதகீர்த்தி கண்டான். நீர் அருந்தி முடித்து தோல் வார் சுழற்றும் ஒலியுடன் மூச்சு சீறியபடி அவை சரிவேறிச்சென்று தழைகளை உண்ணத்தொடங்கின. அவன் கணுக்கால் வரை நீரிலிறங்கி நீரை அள்ளி முகத்திலும் தோள்களிலும் விட்டுக்கொண்டான். நீரில் வேப்பந்தழை மணம் இருந்தது.

நீரள்ளிக்குடித்து மேலே வந்தபோது அதுவரை உடலில் இருந்த வெப்பம் முழுக்க ஆவியாகி மறைய மெல்லிய களைப்பு ஒன்று எழுந்து அத்தனை தசைகளையும் நாண் தளரச்செய்தது. மகிழமரத்தடிக்கு வந்து கால்களை நீட்டி கைகளை தலைக்குப்பின் கோத்தபடி படுத்துக்கொண்டான். இனிய காற்று அவனைச் சூழ்ந்து சென்றது. கண்கள் மெல்ல இமைசரிய சித்தம் கால இடத்தை மழுங்க வைத்து மெல்ல விரிந்து எல்லை அழியத்தொடங்கியது. அவன் அபிமன்யூவை கண்டான். “இளையோனே, ஏன்?” என்றான். அபிமன்யூ துயரத்துடன் பார்வையை தழைத்துக்கொண்டான்.

பின்னர் மீண்டு வந்தபோது தன்னைச் சூழ்ந்து பறவைகளின் ஓசை நிறைந்திருப்பதை கேட்டான். காட்டுக்குள் அத்தனை பறவைகளின் ஓசை எழுமென்பதை அப்போதுதான் உணர்ந்தான். எழுந்தமர்ந்து கைகளைக் கட்டியபடி அவ்வோசையை உளம்கூர்ந்தான். ஏற்ற இறக்கமில்லாமல் அது பேரொழுக்கென காலத்தில் சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே அவ்வோசை சூழ்ந்திருக்கிறது. அத்தனை பேரோசையை முற்றிலும் தவிர்க்கும்படி சித்தம் பழகியிருக்கிறது. தனக்குத் தேவையானவற்றை மட்டும் கொண்டு அது புறவுலகை அமைத்துக்கொள்கிறது. புறவுலகைக்காண உள்ளே இருக்கும் கட்டுமானங்கள் அனைத்தும் அழியவேண்டியிருக்கிறது.

தன் கனவுகளில் அபிமன்யூவை எப்போதுமே அன்புக்குரிய இளையோனாகவே காண்பதை அவன் எண்ணிக்கொண்டான். நேரில் அவனிடம் ஒரு சொல்லும் கனிந்து பேசியதில்லை. அவனைக் காண்கையிலேயே எழும் கசப்பு ஒன்று விழிகளை விலகச்செய்ய வேறெங்கோ நோக்கி ஓரிரு சொற்களால் பேசி அகல்வதே வழக்கம். பாண்டவர் ஒன்பதுபேரில் அவன் மட்டும் தனியன். பிரதிவிந்தியன் அவனிடம் கட்டளைகளை மட்டுமே போடுவான், சுதசோமன் மட்டுமே சற்றேனும் அணுகிப் பேசுவான்.

கழுதைப்புலியின் மணத்துடன் புதர்கள் சலசலக்கும் ஓசை கேட்க இயல்பாக கை நீண்டு வில்லைத் தொட சுருதகீர்த்தி திரும்பிப் பார்த்தான். பெரிய மான் ஒன்றை தோளிலிட்டு அதன் நான்கு கால்களையும் கைகளால் பற்றி சிரித்தபடி புதர்களுக்கிடையே சுதசோமன் தோன்றினான். அவனுக்குப் பின்னால் கழுதைப்புலியின் ஓசைகள் கேட்டன. மூன்று குட்டிகள், ஒருவாரம் கடந்து விழிதிறந்தவை.

சுதசோமன் “பெரிய மான்” என்றான். “முட்டன். அதன் இரு முன்கால்களுக்கு முன் இருக்கும் கொழுப்புப் பொதியே சொல்கிறது சுவையானது என்று. இப்புவியில் தன் கொடிவழியை வேண்டிய அளவு பிறப்பித்துவிட்ட மூத்ததந்தை. கனிந்த பழம் ல முன்னரே சற்று காம்பு இற்று போய்தான் இருந்தது. என்னைக்கண்டதும் மற்ற மான்கள் ஓடத்தொடங்கியதும் இதுமட்டும் இருமுறை துள்ளியபின் மூச்சிரைக்க நின்றுவிட்டது. பரிமாறி வைக்கப்பட்டதை கைநீட்டி எடுப்பதுபோல் பிடித்துவிட்டேன்” என்றான்.

மானை மணல் மூட்டை என ஓசையெழ தரையிலிட்டான். அதன் மூச்சுக்குழாயை முன்னரே வெட்டியிருந்தான். குருதி அவன் வந்த வழியெங்கும் சொட்டி இலைகளில் வழிந்தது. வெட்டுப்புண் திறந்த வாய் என உறையத்தொடங்கியிருந்தது. கழுதைப்புலி அதன் மணத்தை அறிந்து தொடர்ந்து வந்திருக்கவேண்டும். “இளையோனே, நீயும் கைகொடுத்தால் இதன் ஆடையை கழற்றிவிடுவேன்” என்று சுதசோமன் சொன்னான். சுருதகீர்த்தி அருகே சென்று “என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். “நான் வெட்டித் தரும் தோல்முனைகளை மட்டும் கையால் பற்றி இழுத்துக்கொண்டிரு” என்றபின் தன் குறுங்கத்தியால் மானின் அடிவயிற்றை நீள்பிறை வடிவில் கிழித்து உணவுப்பையையும் குடலையும் நனைந்த துணிச்சுருள்போல பற்றிப் பிடுங்கி வெளியே எடுத்தான்.

அவற்றை கையில் அள்ளி கொண்டுசென்று அப்பால் காட்டுக்குள் வீசினான். கழுதைப்புலி தன் குட்டிகளுடன் உணவுக்குப்பின்னால் பாய்ந்த ஓசை கேட்டது. “பின்னால் பசித்த கழுதைப்புலி ஒன்று மூன்று குழவிகளுடன் வந்திருக்கிறது அவை பசி மிகுந்துள்ளன” என்றான். கழுதைப்புலிக்குட்டிகளின் மெல்லிய மங் மங் என்னும் ஒலியைக்கேட்டு “ஆம் கேட்டேன். மிகச்சிறியவை” என்று சுருதகீர்த்தி சொன்னான். சுதசோமன் “இந்தக்காட்டில் அவற்றுக்கு உணவுக்குக் குறைவேயில்லை. மூன்று குட்டிகளும் பிழைத்தெழுந்துவிடுமென்றுதான் எண்ணுகிறேன்” என்றபடி அடிவயிற்றை நேர்கோடாகக் கிழித்து இருபுறமுமென தோலைக்கிழித்து பிரித்தகற்றினான்.

சுருதகீர்த்தி தோலைப்பிடித்திழுக்க அது அடியிலிருந்த ஊனுடன் வெண்சவ்வால் ஒட்டியிருந்த இடங்களை மட்டும் கத்தியால் வெட்டி விலக்கினான். தோலை முழுமையாக இழுத்து எடுத்து சேற்றுக் குவையென அப்பால் இட்டான். மண்ணால் செய்ததுபோலக் கிடந்த தோலுரிக்கப்பட்ட மானின் தலையையும் குளம்புகளையும் வாலையும் வெட்டினான். அவற்றையும் கொண்டு சென்று காட்டுக்குள் இட்டு மீண்டுவந்தான். அங்கே புதர்களுக்குள் அன்னை கழுதைப்புலியின் தலை எழுந்து தெரிந்தது. அதன் இருகாதுகளும் மடிந்து அவர்களை பார்த்தன. சுதசோமனை உற்று நோக்கி ஐயம் தெளிந்தபின் மெல்லிய குரலில் எக்களிப்போசையெழுப்பி குட்டிகளிடம் அவ்வூனை உண்ணலாம் என்று அது ஆணையிட்டது. ஒன்றையொன்று முந்திச் சென்ற குட்டிகள் இரண்டு அத்தலையை கவ்விக்கொண்டன. இன்னொன்று தோலைக் கவ்வி தன் நான்கு சிறுகால்களையும் ஊன்றி இழுத்து வால்சுழற்றியது.

தொலைவிலிருந்து அதைப்பார்த்த சுருதகீர்த்தி புன்னகையுடன் “அவற்றின் ஊக்கம் வியக்க வைக்கிறது, மூத்தவரே” என்றான். “சுவையளவுக்கு ஊக்கத்தை அளிக்கும் விசை பிறிதில்லை. பசியின் அழகுருவமே சுவை” என்றபடி மானை தூக்கிக்கொண்டு ஓடைக்குச் சென்றான். “குருதியை கழுவிவிட்டு வருகிறேன். இந்த மரக்கிளையிலேயே கட்டித் தொங்கவிட்டு சுடலாம் என்று தோன்றுகிறது. முடிந்தால் சிறிது சருகுகளையும் சுள்ளி விறகுகளையும் சேர்த்து வை” என்றான். “சுட்டமானின் ஒரு துணுக்கை படையலாக அளித்தால் நம் குலதெய்வமாக அமர்ந்திருக்கும் ஹஸ்தி நா சுழற்றியபடி உடன்வருவார். கேட்டிருப்பாய், அவர் என்னைப்போலவே ஊனுணவில் வெறிகொண்டவர்.”

சுதசோமன் ஓடையில் ஊனை கழுவிக்கொண்டு வரும்போது சுருதகீர்த்தி பச்சைக்கொடிகளை வெட்டி நீட்டி வடம்போல முறுக்கி கிளையிலிருந்து தொங்கவிட்டிருந்தான். நேர் கீழே சுள்ளிகளையும் பொறுக்கி அடுக்கி வைத்தான். சுதசோமன் மானை அந்த வடத்தில் கட்டித் தொங்கவிட்டபின் இருகற்களை உரசி மென்சருகைப் பற்றவைத்து சுள்ளிகளை தீ மூட்டினான். தீ கொழுந்துவிட்டெழுந்து மேலேறியது. அதன் செந்நிற நாவுகள் துடிதுடித்து தொங்கிய மான் உடலை தொட்டன. ஊன் கொழுப்பு உருகிச் சொட்டியதும் நீலச்சுடர் வெடித்தெழ தழல் பொங்கி மேலெழுந்தது.

சுருதகீர்த்தி ஓடைக்குச் சென்று கைகால்களை கழுவிவிட்டு பெரிய இலைகள் நான்கை வெட்டி எடுத்துக்கொண்டு மீண்டு வந்தான். மானின் ஊனை மெல்ல திருப்பித் திருப்பி அனல்காட்டி வேகவைத்துக்கொண்டிருந்த சுதசோமன் முழுசித்தமும் அச்செயலில் ஒன்றியிருக்க வேள்வித்தீ வளர்க்கும் வைதிகன்போல் தோன்றினான். சுருதகீர்த்தி அருகே வந்து இலைகளை விரித்துவிட்டு “இதன் பொருட்டு தேவர்கள் இறங்கி வந்துவிடப்போகிறார்கள், மூத்தவரே. எந்த வைதிகரும் இத்தனை உளம்அளித்து வேள்விச்செயல் புரிந்திருக்க மாட்டார்கள்” என்றான்.

சுதசோமன் “நான் அனலோனைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இப்புவியை ஆட்டுவிக்கும் அவன் பெருவிளையாடலை. இதோ இவ்விரு கற்களும் நெடுங்காலமாக இங்கு கிடந்திருக்க வேண்டும். ஒருவேளை இப்புவி தோன்றிய காலத்திலிருந்தே. இரண்டுக்குள்ளும் அனல் நிறைந்திருக்கிறது. அவற்றை ஒன்றை ஒன்று உரசி அனல் எழுப்பச் செய்தது அனலோனின் விழைவு மட்டுமே. என்னை அவன் இங்கே ஆணையிட்டு நிறுத்தியிருக்கிறான். இந்த ஊன், இதை உண்ணும் நான் அனைத்தும் அவன் திட்டங்களின் படி நிகழ்பவை” என்றான். ஆம், இந்தச் சொற்களும் அவ்வாறு எழுபவையே” என்று சுருதகீர்த்தி சொன்னான். சுதசோமன் உரக்க நகைத்து “ஐயமென்ன? அத்தனை சொற்களும் அனலில் எழும் பொறிகள் மட்டுமே. பிறிதொன்றுமல்ல” என்றான்.

மானை மெல்ல எடுத்து வாழையிலையில் கிடத்தி வாளால் ஊனைப் போழ்ந்து கீற்றுகளாக எடுத்து இலைகளில் பரிமாறினான் சுதசோமன். ஒவ்வொரு அசைவிலும் அத்தனை உளக்குவிவு தெரிந்தது. மானிறைச்சி சுவையாக இருந்தது. சுருதகீர்த்தி “உப்புகூட இல்லாத ஊன் இத்தனை சுவையாக சமைக்கமுடியும் என்று பிறிதெவரும் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன்” என்றான். “சரியாக சமைப்பதென்பது தவம். அனல் அன்னத்தை கனியச்செய்து உணவை ஆக்குகிறது, கன்று அகிடிலிருந்து பாலை உண்ணுவதுபோல. கன்றுக்கும் சிறிதளித்து எஞ்சியதை நாம் அருந்த வேண்டும். சற்று நோக்கு குறைந்தால் பால் அனைத்தையும் கன்று உண்டுவிடும். கன்று உண்ணாவிட்டால் பால் ஊறிஎழாது” என்றான்.

“அரிய கருத்து! சில தருணங்களில் உங்களைப்பார்த்தால் மூத்தவருக்கு உகந்த தம்பி என்றே தோன்றுகிறது” என்றான் சுருதகீர்த்தி. ஊன் துண்டுகளை இருகைகளிலும் ஏந்தி கடித்து இழுத்து பெரிய கீற்றுகளாக மென்று கொண்டிருந்த சுதசோமன் விழுங்கிவிட்டு “அவர் சொல்லும் ஒப்புமைகளிலும் நான் சொல்லும் ஒப்புமைகளிலும் மிகப்பெரிய வேறுபாடுள்ளது, இளையோனே” என்றான். மீண்டும் பெரிய வாய் அளவுக்கு ஊனைக்கவ்வி இழுத்து மென்று விழுங்கியபின் “அவர் சொல்வன அனைத்தும் தன்னை ஒளித்துக்கொள்ளூம் பொருட்டு. நான் சொல்வன என்னை வெளிப்படுத்தும் பொருட்டு. அவர் அறிவையும் நான் பசியையும் சொல்லென முன்வைக்கிறோம்” என்றான். “அவர் பசியையும் நீங்கள் அறிவையும் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் என்கிறீர்களா?” என்றான் சுருதகீர்த்தி. மறுமொழியாக சுதசோமன் வெடித்து நகைத்தான்.

fire-iconஉண்டு முடித்து அங்கே எஞ்சிய ஊன்எலும்புகளைப் பொறுக்கி காட்டிற்குள் முண்டியடித்துக்கொண்டிருந்த கழுதைப்புலிக்குட்டிகளின் அருகே வீசிவிட்டு கையையும் வாயையும் கழுவிவிட்டு வந்தான் சுதசோமன். சுருதகீர்த்தி கைகளை கழுவிவிட்டு குட்டிகள் முட்டி மோதி உண்பதை பார்த்துக்கொண்டிருந்தான். “இவற்றின் அளவுக்கு இவை உண்பது பலமடங்கு மிகை” என்றான். அவனுக்குப் பின்னால் வந்து நின்ற சுதசோமன் “அவை மிக விரைவாக வளர்ந்துவிடும், இளையோனே. அனலின் விலங்குவடிவங்கள் அவை. சூழ்ந்திருக்கும் அனைத்தையும் உண்டு சிவந்து உறுமி எழுந்து பெருகுபவை” என்றான்.

குட்டியொன்று திரும்பி சுருதகீர்த்தியை பார்த்தது. அதன் கண்களை சந்தித்தபோது அவன் மெல்லிய மெய்ப்பு கொண்டான். சிறிய மூக்கை நீட்டி, இருகால்களையும் பரப்பியபடி தள்ளாடி நடந்து வந்து மெல்ல அவனை அணுகி நின்று அண்ணாந்து மெல்லிய முனகலோசையை எழுப்பியது. அவன் கால்மடித்தமர்ந்து அதை கூர்ந்து பார்த்தான். மேலும் அருகே வந்து குருதிப்பிசிர்கள் எஞ்சியிருந்த மீசைமுட்கள் கொண்ட சிறுவாயைத் திறந்து வெண்புழுக்கள் போன்ற பற்கள் தெரிய உறுமியது. கால்பரப்பி தலையைத்தாழ்த்தி உடலை மண்ணுடன் ஒட்டி பதுங்கி அவனை பார்த்துக்கொண்டிருந்தது. சிறுவிழிகள் இரு தும்பைமலரிதழ்கள் போலிருந்தன.

“தாக்க விழைகிறது” என்று சுருதகீர்த்தி சொன்னான். சுதசோமன் அவனுக்குப் பின்னால் இடையில் கையூன்றியபடி புன்னகையுடன் பார்த்து நின்றான். உறுமியபடி பாய்ந்து வந்த குட்டி சுருதகீர்த்தியின் அருகே வந்து இருமுறை காற்றைக் கவ்வியது. பின்பு வாய்திறந்து உறுமலோசை எழுப்பியது. அவன் அதை கூர்ந்து பார்த்தான். சிறிய மணிவிழிகள் இரு அம்பு நுனிகள்போல் சினம்கொண்டு ஒளிவிட்டன. அவன் விழிகளை சந்தித்ததும் அது ஐயங்கொண்டதுபோல திடுக்கிட்டு பின்னகர்ந்தது. இரு பின்னங்கால்களில் அமர்ந்து முன்னங்கால்களை ஊன்றியபடி அவனை கூர்ந்து பார்த்தது. செந்நிற நாவு வந்து முகவாயை நக்கி உள்ளே சென்றது.

அதன் நோக்கை சந்தித்தபோது சுருதகீர்த்தியின் உள்ளே ஓர் அதிர்வெழுந்தது. மேலும் குனிந்து அதன் கண்களைப் பார்த்து “உன் பெயரென்ன?” என்றான். அவன் கேள்வியை அது புரிந்துகொண்டது என்பது அதன் உடல் முதல் மழை எழுப்பிய புல்தளிர்ப் பரப்பென மெல்லிய மயிர் சிலிர்த்து காற்றில் அசைந்ததிலிருந்து தெரிந்தது. பிடரி மயிர் விதிர்க்க அணுவடிவச் சிம்மமென அது தோன்றியது. அவன் மேலும் குனிந்து அதன் விழிகளை பார்த்தான். அதற்குப்பின்னால் புதர்களுக்குமேல் எழுந்த அன்னை மூச்சு சீறியது.

அவன் அதன் விழிகளை பார்த்தான். பசுங்குருதி வழிந்த வாயோரங்களை நாவால் நக்கி மீண்டும் மூச்சொலிக்க அது அவனை விழிகளுக்குள் ஆழ்ந்து நோக்கியது. “உங்களை நான் அறிவேன். என்மொழி உங்களை வந்தடைகிறது” என்றான் சுருதகீர்த்தி. “ஆம், உன்னை நாங்களும் அறிவோம்” என்றது அன்னை கழுதைப்புலி. “என் பெயர் குஹ்யஜாதை. இவன் என் மைந்தன். எங்கள் குலத்தில் நிகரிலா வீரன். குஹ்யசிரேயஸ் என்று இவனை அழைக்கிறேன்.” குனிந்து அந்த சிம்மத்துளியை அவன் பார்த்தான். பின்னர் திடுக்கிட்டு அன்னை விழிகளைப் பார்த்து “தொல்நூல் ஒன்றில் படித்த பெயர்” என்றான்.

தலையை அசைத்து “ஆம், நினைவுறுகிறேன். குஹ்யஜாதைதான் அப்பெயர். அவள் மைந்தன் பெயர் குஹ்யசிரேயஸ். அவர்கள் ஒரு சிம்மத்தை வேட்டையாடினார்கள். அதன் துடிக்கும் இதயத்தை அது உண்டது” என்றான் சுருதகீர்த்தி. “இவன்தான்” என்று அன்னை சொன்னது. சுருதகீர்த்தி “அஞ்சாதவன். சிம்மத்தின் நெஞ்சுண்டு தன்னை உணர்ந்தவன். ஆனால் அது நெடுங்காலம் முன்பு” என்றான். “வில்லவனே, நீ ஒரு இலக்கை நோக்கி அம்பெய்து அது சென்று தைக்காவிட்டால் என்ன செய்வாய்?” என்றது குஹ்யஜாதை. “மீண்டும் எய்வேன்” என்றான் சுருதகீர்த்தி. “எத்தனை முறை?” என்றது அன்னை. “இலக்கை எட்டுவது வரை” என்றான் சுருதகீர்த்தி.

குஹ்யஜாதை மைந்தனை நோக்கியபின் “அவன் இலக்கை அணுகிக்கொண்டிருக்கிறான்” என்றது. “அன்னையே, அந்த இலக்கு எது?” என்றான் சுருதகீர்த்தி. “அதை நாங்கள் அறியோம். நாங்கள் அம்புகள். வில்லும் ஒரு வேளை அறிந்திருக்காது. அதை ஏந்தும் கைகள் அறிந்திருக்கலாம். அக்கைகளை இயக்கும் சித்தம் அறிந்திருக்கலாம் அச்சித்தமென துளித்த பெருவெளி மட்டுமே அறிந்ததாகவும் அது இருக்கலாம்.” சுருககீர்த்தி “ஆம்” என்றான். “நாம் மீண்டும் சந்திக்கக்கூடும்” என்றது குஹ்யஜாதை. “நான் இவனை உண்பேன்” என குஹ்யசிரேயஸ் அன்னையிடம் சொன்னது. அன்னை புன்னகைத்தாள்.

சுதசோமன் சுருதகீர்த்தியின் தோளைத்தொட்டு “கிளம்புவோம், பொழுதாகிறது” என்றான். விழித்தெழுந்ததுபோல் உடல் சற்று அதிர சுருதகீர்த்தி அண்ணாந்து பார்த்துவிட்டு “ஆம், பொழுதாகிறது” என்றான். அவன் எழுந்தபோது சிறிய குரைப்போசை எழுப்பியபடி குஹ்யசிரேயஸ் அவனை நோக்கி பாய்ந்தது. அவன் உளம்விழித்து கால்விலக்குவதற்குள் வலக்காலின் கட்டை விரலை கவ்வியது. அவன் தூக்கி உதற முழு உடலும் காற்றில் சுழல கவ்வித்தொங்கியது. அவன் அதை ஒரு புதரில் தட்டியபோது பற்பிடியை விட்டு அப்பால் விழுந்து அவ்விசையிலேயே புரண்டு எழுந்து நான்கு கால்களையும் பரப்பி தலைதூக்கி அவனை நோக்கி குரைத்தது.

சுருதகீர்த்தி காலை உதறிக்கொண்டான். குஹ்யசிரேயஸ் வால் சுழற்றியபடி மீண்டும் பாய்ந்து வந்தது. “விலகிக்கொள்ளுங்கள்” என்று சொல்லி அவனைப்பற்றி விலக்கிய சுதசோமன் தன் பெரிய காலை ஓங்கி தரையில் மிதித்தான். நின்று அச்சமின்றி அவனை நோக்கி மீண்டும் எச்சரிக்கை ஓசை எழுப்பியது குஹ்யசிரேயஸ். “அவன் அச்சமற்றவன்” என்ற சுருதகீர்த்தி “வருக!” என்றான். “கடித்துவிட்டதா?” என்றான் சுதசோமன். “சிறியபற்கள். ஆனால் தேயாதகூர்மை கொண்டவை” என்றான் சுருதகீர்த்தி.

அவர்கள் மேடேறி மேலே செல்லும்போது தள்ளாடிய நடையுடன் அவர்களுக்குப் பின்னால் வந்து விழுந்துகிடந்த மரம் ஒன்றின்மேல் தொற்றி ஏறி பீடத்தின்மேல் என அதன் மேல் நின்று, சிறிய தலையை சொடுக்கி மேல் தூக்கி, மொட்டு போன்ற மூக்கை காற்றில் நீட்டி மணம் பிடித்து அவர்களை நோக்கி அறைகூவியது குஹ்யசிரேயஸ். சுருதகீர்த்தி திரும்பி அதன் கண்களை பார்த்தான். நோக்கு மட்டுமேயான கண்கள். ஒருதுளி எண்ணம் கூட அற்றவை. எண்ணங்கள் இருந்தால்கூட அவை ஒருபோதும் மானுடரால் அறியப்பட முடியாதவை. இரு சிறு மணிகள். ஒளிரும் இரு சிறு பூச்சிகள்.

சுதசோமன் குனிந்து அவன் கால்களை பார்த்தான். குட்டியின் இரு கோரைப்பற்களும் பதிந்து சிறிய செம்பொட்டுகளாக இருந்தன. “குருதி வரும்வரை கடித்திருக்கிறது. பிறந்து ஒரு வாரம்கூட ஆகியிருக்காது” என்றான். சுற்றிலும் நோக்கி “இது ஹஸ்ததலம். இப்பச்சிலை புண்களை விரைவில் ஆற்றுவது” என்றபின் அதைப்பறித்து உள்ளங்கையில் வைத்து கசக்கிப் பிழிந்து அக்காயத்தின் மேல் விட்டான்.

மேய்ந்துகொண்டிருந்த புரவிகளை சீழ்க்கை ஒலித்து அழைத்து ஏறிக்கொண்டு அவர்கள் மீண்டும் பாதை தேர்ந்தனர். இரு குளம்படிகளும் சீரான ஓசையுடன் சாலையை கடந்துசென்றன. நெடுந்தொலைவு சென்றபின் “மூத்தவரே, அவன் பெயர் குஹ்யசிரேயஸ்” என்றான் சுருதகீர்த்தி. “யார்?” என்று சுதசோமன் திரும்பிப்பார்த்து கேட்டான். “நாம் கண்ட அந்தச் சிறிய கழுதைப்புலி” என்றான் சுருதகீர்த்தி. புருவம் சுருங்க “அந்தக் குட்டியா? அதற்கு யார் பெயரிட்டது?” என்று சுதசோமன் கேட்டான். “அதற்கு எப்போதும் அப்பெயர் இருந்தது. தன் இலக்கை அணுகிவிட்டது” என்றான் சுருதகீர்த்தி.