எழுதழல் - 33
நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 11
பிரலம்பன் அனைத்தும் பிழையாக சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தான். அந்த உரையாடல் எப்படியாவது நின்றுவிடவேண்டும் என அவன் உள்ளம் பதைபதைத்தது. ஆனால் பிழையாகி சரியத் தொடங்கும் உரையாடல்கள்மேல் மானுடருக்கு பெரும் ஈடுபாடு இருக்கிறதென்று அப்போது தெரிந்தது. அதுவரை பேசாமலிருந்த அனைவருக்கும் அப்போது சொல்வதற்கு ஏதோ ஒன்று இருந்தது. வத்சநாட்டரசர் சுவாங்கதர் “நீங்கள் சொல்லும்படி அரசை வேட்பதென்றால் அதை அரசென்று சொல்லலாகாது. அது வேள்விக்கொடை. ஆனால் யுதிஷ்டிரர் அந்தணர் அல்ல” என்றார். பலராமர் கடும்சினத்துடன் “நீர் எதற்காக இங்கே வந்துள்ளீர்? போரைத்தூண்டவா?” என்றார்.
“ஆம், போரென்றால் போர். எனக்கு அச்சமில்லை. அஞ்சி நடுங்கி வல்லவன் காலடியில் அடைக்கலம்புகும் சிறுமதி எங்கள் குடிக்கு இல்லை” என்றார் சுவாங்கதர். பலராமர் “வாயை மூடு… எவரிடம் பேசுகிறாய் என எண்ணிச்சொல்லெடு” என கூவினார். “யாதவர்களில் மூத்தவரிடம். இளையவன் வென்றநாட்டைக் கொண்டு அரசரென முடிசூட்டி பின் அவனைத்துறந்து அவன் எதிரியிடம் சென்று சேர்ந்துகொண்டு முடிகாத்துக்கொள்ள விழையும் வீரரிடம்…” என்றார் சுவாங்கதர். பலராமர் வெடிப்போசையுடன் தன் தோள்களை ஓங்கி அறைந்தபடி சுவாங்கதரை நோக்கி பாய்ந்தார். வசுதேவர் “மைந்தா, இது அவை” என்று கூவ அப்படியே நின்று “மூடா, இச்சொல்லின்பொருட்டு என்றேனும் உன் தலையை கதையால் சிதறடிப்பேன்” என்று கூவினார்.
துஷார மன்னர் வீரசேனர் “மூத்த யாதவரே, நீங்கள் துரியோதனர் மீது கொண்டுள்ள பற்று என்பது அவர் உங்கள் மாணவர் என்பதனால் மட்டும்தான் என நம்ப நான் சித்தமாக உள்ளேன். ஆனால் யாதவ ஐங்குடியும் உங்களைத் துணைப்பதும் அதனாலேயே என்று நம்ப என்னால் இயலவில்லை. அவர்கள் ஷத்ரியக்கூட்டின் ஒருபகுதியென்று ஆக விழைகிறார்கள். கார்த்தவீரியனின் முடிவை எண்ணி அஞ்சி எடுத்த முடிவு அது. இல்லை என்று சொல்வீர்களா?” என்றார். “நான் எதையும் விளக்க இங்கு வரவில்லை. இங்கு நலம் பயக்கும் ஒரு செயலையே முன்வைத்தேன்” என்றார் பலராமர். அவர் குரல் தழைந்துவிட்டது என்பதை பிரலம்பன் கண்டான்.
பீமன் “நாம் இதை இங்கே நிறுத்திக்கொள்வோம். அவையோரே, மூத்த யாதவர் என் ஆசிரியர். நான் அவருக்கு கட்டுப்பட்டவன்” என்றாம். “மூடா, இந்த அவையில் அவர் தன் மாணவன் துரியோதனன் மட்டுமே என அறிவித்துவிட்டார்” என்றார் குந்திபோஜர்.
திரிகர்த்தமன்னர் சுசர்மர் “நான் வீரசேனர் கேட்டதை மீண்டும் கேட்க விழைகிறேன். யாதவ ஐங்குடியும் இளையவரை துறந்தது எதனால்? ஏன் அவர்கள் துரியோதனரின் பக்கம் நின்றிருக்கிறார்கள்? அதை மட்டும் விளக்குக!” பலராமர் “நாம் அதை உசாவ இங்கே அமர்ந்திருக்கவில்லை. இந்த அவையில் அதைப்பற்றி நான் பேசவேண்டியதுமில்லை” என்றார். “பேசியாகவேண்டும். ஏனென்றால் இந்த அவையின் நோக்கத்தையே சற்றுமுன் நீங்கள் மறுத்தீர்கள். அது ஏன் என்பதை இந்த அவை புரிந்துகொண்டாகவேண்டும்.”
“விளக்க எனக்கு உளமில்லை. விரும்பாவிட்டால் நான் இந்தப்பூசலில் தலையிடவுமில்லை” என்றபின் பலராமர் அமர்ந்தார். கேகய மன்னர் திருஷ்டகேது “அவ்வாறு அமர்ந்தால் இதை விட்டுவிடமுடியாது, பலராமரே. ஏனென்றால் இங்கே பேசப்படுவது பாரதவர்ஷத்தின் அரசியல். நேரடியாகவே சொல்லுங்கள். இத்தருணம் போர் எழுந்தால் நீங்கள் எந்தப்பக்கம்?” பலராமர் “நான் துரியோதனின் பக்கமே. ஐயமே வேண்டியதில்லை” என அமர்ந்திருந்தவாறே சொன்னார். அவர்முகத்தில் ஆழ்ந்த கசப்பு நகைப்பாக வெளிவந்தது. “எதிர்ப்பக்கம் உங்கள் இளையவர் படையாழியுடன் நின்றால்?”
பலராமர் சற்று திகைத்து “அது இங்கே பேசப்படவேண்டியதல்ல” என்றார். மல்லநாட்டரசர் ஆகுகர் உரக்க “இங்கே பேசப்படுவதே அதுதான்” என்றார். காரூஷ நாட்டு க்ஷேமதூர்த்தி “நீங்கள் இங்கே பேசிய உடன்பிறந்தார் குருதி தவிர்த்தல் என்பது உங்கள் குலங்களுக்குள் உள்ள பூசல்தான் அல்லவா?” என்றார். “வாயைமூடு…” என்றபடி பலராமர் பாய்ந்து எழுந்தார். பல்லவநாட்டரசர் நதீஜர் “சினம் உண்மையை வெளிக்காட்டுகிறது. நீங்கள் போரை தவிர்க்கமுடியாது, யாதவரே. ஏனென்றால் போருக்கு முதன்மை ஏதுக்களில் நீங்களும் ஒருவர். இளைய யாதவரின் நேர் தமையனாகிய நீரே அப்பக்கம் சென்றுவிட்டமையால்தான் துரியோதனன் துணிவுகொள்கிறான்” என்றார்.
பீமன் “நாம் இதைப் பேசவேண்டியதில்லை… இந்த அவையின் நோக்கம் இதுவல்ல” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், நாம் பேசவேண்டியதே வேறு. மூத்த யாதவர் நம் விருந்தினர்” என்றார். பலராமர் “யுதிஷ்டிரா, அவ்வாறு உன் அளி எனக்குத் தேவையில்லை. இந்த மூடர்கள் உன்னிடம் கலந்துகொள்ளாமல் அவையில் இப்படி பேசுகிறார்கள் என நான் நினைக்கவில்லை. பேசட்டும். இவர்களின் அறிவிலாப்பிதற்றல்களுக்கு அஞ்சுபவன் அல்ல நான்” என்றார். தரதர்களின் அரசராகிய கர்ணவேஷ்டர் “அறிவிலாப்பிதற்றலுக்கு மறுமொழி சொல்லுங்கள். முடிந்தவரை அறிவு அதில் அமையட்டும். துரியோதனனை நீங்கள் ஆதரிப்பது எதனால்? முடிவிருப்பா? குடிபேணலா? உடன்பிறந்த தம்பியைத் துறந்து சென்று நீங்கள் அவனிடம் அடைவது எதை?” என்றார்.
பலராமர் “இழிமகனே, இதோ நீ எழுந்து நின்று என்னிடம் கைநீட்டி பேசுகிறாய் அல்லவா? இந்நிலையை தவிர்ப்பதற்குத்தான். நீ யார்? தரதர்களின் மரபென்ன? அசுரநிலமான கஜமதனத்தை அவர்களிடம் இரந்துபெற்று அரசமைத்தவர் உன் மூதாதை. நத்தை ஒன்று நாளுக்குள் தவழ்ந்து கடக்கும் நிலத்தை வைத்துக்கொண்டு அரசன் என வந்து அமர்ந்திருக்கிறாய்” இழிவுதோன்ற இதழ்வளையச் சிரித்து பலராமர் அவையை சுட்டிக்காட்டினார். “இந்த அவையையே பார்! இங்கே தொல்குடியினர் எவர்? மீன்முடை வீசும் மச்சர்கள். ஊன் நெடி கொண்ட நிஷாதர்கள். இருளை வணங்கும் அசுரர்கள். இங்கு வந்தமர்ந்தால் நானும் என் குடியும் இழிவுகொள்வோம்.”
அவர் குரல் ஓங்கியது “ஆம், நாங்கள் கன்றோட்டும் குலம். ஆனால் நாங்கள் நிலம் வென்று அரசமைத்து ஆயிரமாண்டுகளாகின்றன. கார்த்தவீரியர் இந்த பாரதவர்ஷத்தை முழுதாண்டதை ஷத்ரியரும் மறுக்கவியலாது. யாதவர் இனிமேலும் கன்றோட்டும் குடிகள் அல்ல. அவர்கள் ஷத்ரியர் அவையில் நிகர்பீடம்கொண்டு அமர்ந்தாகவேண்டும். இந்தத் தலைமுறையில் அமர்ந்தால் இனிவரும் தலைமுறைகளின் இடம் அதுவாக அமையும். இது ஒரு நல்வாய்ப்பென்றால் அதை ஏன் துறக்கவேண்டும்?”
“யாதவப்பெருநிலம் விரிந்து பரவிவிட்டது. அதன் நகரங்கள் செல்வக்குவைகளாகிவிட்டன. இனி குடிப்பெருமை மட்டுமே வென்றெடுக்கப்படவேண்டியது. இந்த இழிகுலத்தாரவையில் வந்தமர்ந்து அதை நான் ஈட்டவியலாது. அஸ்தினபுரியில் அங்கனும் வங்கனும் கலிங்கனும் கூர்ஜரனும் சைந்தவனும் விதர்ப்பனும் மாளவனும் அமர்ந்திருக்கும் அவையில் நிகரென்றமர்ந்து அதை நான் அடைவேன்…”
அந்த வெளிப்படையான பேச்சை அவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. அவை சற்றுநேரம் அமைதியாக இருந்தது. ஏதோ ஒருவகையில் அவர்கள் அனைவரும் அதை ஆழத்தில் புரிந்துகொண்டார்கள் என பிரலம்பன் எண்ணினான். அது அவர்கள் அனைவரும் கொண்டுள்ள கனவு. அந்த அவைக்கு அழைப்பு வந்தால் செல்லமாட்டேன் என்று சொல்பவர்களாக எவர் இங்கே உள்ளனர் என அவன் நோக்கினான். ஒவ்வொருவரும் தங்கள் எதிரி அப்பக்கம் சென்றிருப்பதனால் இங்கு வந்தவர்கள்.
அமைதி பலராமரை ஊக்கியது. ஏளனச்சிரிப்புடன் “ஏன் என் இளையோனை துறக்கிறேன் என்று கேட்டீர்கள் அல்லவா? இதனால்தான். இவனைத் தொடர்ந்துசென்றால் யாதவர்கள் ஷத்ரியர்களின் பகைமையையே சேர்த்துக்கொள்வார்கள். அது காட்டெரியால் சூழப்படுவதுபோல. இவன் ஆற்றிய ஒவ்வொரு வினையும் யாதவர்களின் குடிப்பெருமையை அழிப்பதாகவே அமைந்தது. நேற்று முன்நாள் இவன் எங்கிருந்தான்? சொல்லட்டும்… இந்த அவையில் எழுந்து அதை உரைக்கட்டும்”
அனைவரும் திரும்பி இளைய யாதவரை நோக்கினர். அசைவற்ற உடலும் சரிந்த விழிகளுமாக அவர் அமர்ந்திருந்தார். பீலி இளங்காற்றில் அசைந்துகொண்டிருந்தது. “நான் சொல்கிறேன். ஏனென்றால் அவன் சொல்லமாட்டான்” என்றார் பலராமர். “நேற்று முன்நாள் அசுர மன்னன் சம்பரனின் சம்பரபுரியில் அசுரகுடியினரின் பேரவை ஒன்று கூடியது. பதினெட்டு அசுரமன்னர்களும் நூற்றெட்டு அசுரகுடித்தலைவர்களும் அதில் பங்குகொண்டனர். வஜ்ரபுரியின் அசுர மன்னனாகிய வஜ்ரநாபன் தன் குடித்தலைவர்களுடன் வந்திருந்தான். பாணாசுரனின் மருகன் மாருதன் அவர் சார்பில் பங்குகொண்டான். அதில் இவன் முதன்மை விருந்தினன். அங்கே இவன் பேசிய அனைத்தையும் சொல்லெண்ணி இங்கே என்னால் சொல்லமுடியும்.”
“பிறருக்காக அல்ல, இதை தூய ஷத்ரியராகிய துருபதருக்காக சொல்கிறேன். அங்கே ஷத்ரியர்களுக்கு எதிராக பெரும்சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பாரதவர்ஷம் வேதப்பயிர் விளையும் நிலம். அந்தணர் இதில் நீர்பாய்ச்சுவோர். ஷத்ரியர் இதன் வேலி. அந்த வேலியை அழிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டன” என்று பலராமர் தொடர்ந்தார். “இவன் ஏன் அங்குசென்றான்? அங்கிருந்த அசுரர்கள் இவனுக்கு மணவுறவுள்ளவர்கள். வஜ்ரநாபனின் மகள் பிரபாவதியும் சம்பரனின் மகள் மாயாவதியும் இவன் மைந்தன் பிரத்யும்னனின் மனைவியர். அவர்களில் பிறந்தவர்களே இவன் கொடிவழியினர். இவன் பெயர்மைந்தன் அநிருத்தன் இப்போது பாணனின் மகள் உஷையை மணம்புரிந்துகொண்டிருக்கிறான். இவன் தன்னை ஒவ்வொரு நாளும் அசுரனென்றாக்கிக் கொண்டிருக்கிறான். அசுரவேதத்தை தலைக்கொள்கிறான்.”
“இல்லையென்று சொல்லட்டும்… இந்த அவையில் எழுந்து இவன் ஏற்கும் வேதம் அசுரர்களுக்கு எதிரானதென்று ஒரு சொல் உறுதியளிக்கட்டும். ஆணையிடுகிறேன், நான் இந்த அவையிலேயே இவன் காலடியை பணிகிறேன். இவன் கூறுவதை தலைக்கொள்கிறேன்…” என்றார் பலராமர். அனைவரும் இளைய யாதவரையே நோக்க அவர் அசைவிலாது அமர்ந்திருந்தார். அவர் எக்கணமும் எழுவார் என பிரலம்பன் எதிர்பார்த்தான். பின்னர் அவர் எழமாட்டார் என்பதை உணர்ந்தான். அவர் அங்கே இல்லை என.
பலராமர் மேலும் குரலெழுப்புவதற்குள் சாத்யகி கையை நீட்டியபடி எழுந்தான். “மூத்தவரே, அவையிலெழுந்து சொல்லாடக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். பேரவைகளில் ஒவ்வொரு சொல்லிலும் அறிவிலாதவர் என்று காட்டிக்கொண்டிருந்த நிலையிலிருந்து இந்த வளர்ச்சி வியப்பூட்டுவதே” என்றான். பலராமர் “வாயை மூடு, மூடா… இக்கணமே உன் தலையை அறைந்து உடைப்பேன்” என்றார். “செருகளத்தில் என்னைக் கொல்வது உங்களுக்கு எளிது, மூத்தவரே. இது அறத்தின் களம். இங்கு உங்கள் அகச்சான்று எழுந்து வரவேண்டும்” என்றான் சாத்யகி. “எங்கு அகம் கட்டுண்டிருக்கிறதோ அங்குதான் நா கூத்தாடுகிறது.”
“உன்னிடம் பேச எனக்கு ஒன்றுமில்லை” என்றார் பலராமர். “இனி இந்த அவையில் நின்று சொல்லாடவும் நான் சித்தமாக இல்லை.” சாத்யகி “அந்த அச்சமே இங்கு நீங்கள் உரைத்தவை உங்கள் அகமுணர்ந்தவை அல்ல என்பதற்குச் சான்று” என்றான். “அச்சமா? எனக்கா? உன்னிடமா…?” என பலராமர் சினத்துடன் நகைத்தார். “எனில் நின்று நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் செல்லுங்கள்” என்றான் சாத்யகி. “நீங்கள் யார்? இன்று யாதவப்படை என உங்களுடன் ஒரு திரள் நின்றுள்ளதே அது இல்லையேல் உங்களை எந்த ஷத்ரியன் அவையிலமரச்செய்வான்? நீங்கள் இன்று பேசும் இந்தக் குடிப்பெருமைகளை எல்லாம் உங்கள் ஆபுரக்கும் கொட்டிலின் கீழ் நின்று காட்டுக்காய் சுட்டுத்தின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்திருப்பீர்கள்.”
“நீங்கள் தொடங்கிய இடம் ஏதென்று எவரும் அறிவர். துரியோதனனுக்கு கதைப்பயிற்சி அளித்த ஆசிரியர் நீங்கள். குடிமரபுகளில் ஊன்றியவர் என்பதனால் உங்கள் அடிபணியத் தவறாதவர் அவர். ஆனால் நிலவிழைவால் தெய்வங்களை தூக்கிவீசத்தயங்காதவர் கௌரவமூத்தார். ஆர்வமிருந்தால் சென்று அவர் கொண்ட நிலத்தை உதறிவிடவேண்டுமென்று கோரிப்பாருங்கள். கூழாங்கல் என உங்களைத் தூக்கி வீசிவிட்டுச் செல்வார். மூத்தவரே, நீங்கள் வெறும் அணிகலன் அவருக்கு. நோய்கொண்டவனும் அஞ்சியவனும் அக்கணமே கழற்றி வீசுவது அணிகலன்களையே. தன்னந்தனிமையில் தன்னை நோக்க விழைபவன் அணிகலன்களை அகற்றியபின்னரே தானென்று உணர்வான்.”
பலராமர் அச்சொற்பெருக்கின் முன் செயலற்றவர்போல நின்றபின் மெல்ல தன் பீடத்தில் அமர்ந்துகொண்டார். “யாதவரே, சொல்லுங்கள்! எது குலம்? குருதித்தொடரா? மலையிறங்கும் கங்கை பல்லாயிரம் ஓடைகளை இணைத்துக்கொண்டு பெருகி வங்கத்தை அடைகிறது. அதில் முதலோடை எதுவென்று தேடிச்செல்ல எவரால் இயலும்? இதோ அமர்ந்திருக்கிறார்கள் பாண்டவர்கள். அவர்களின் குருகுலம் என்பது என்ன? சர்மிஷ்டையின் அசுரக்குருதியா? சத்யவதியின் மச்சர்குருதியா? குந்தியின் யாதவக்குருதியா? அல்லது வேடர்களான காந்தாரர்களின் குருதியா? குரு என்னும் மாமன்னரின் நினைவன்றி அக்குலத்திற்கு அடையாளம் ஏது? வென்ற களங்களால் மட்டும் அல்ல, ஆற்றிய அறத்தால் நிறைவேற்றிய வேள்விகளால் அமைந்தது அவர் புகழ்”.
“கன்றோட்டும் குடியை தேரோட்ட வைத்தவரைத் துறந்து தன்னலம் கருதி அனைத்து அறங்களையும் கடந்த கலிமைந்தரின் காலடியில் அமர்ந்தால் நீங்கள் யாதவகுலத்திற்கு அளிப்பது என்ன? எண்ணி எண்ணிப் பெருமிதம்கொள்ளும் புகழ்கொண்டவர்களே குலமூத்தார் என விண்ணிலும் சொல்லிலும் அமைகிறார்கள். யயாதியின், பரதரின், ஹஸ்தியின், குருவின், பிரதீபரின் பெயர் அவ்வண்ணம் வாழ்வதே. நீங்கள் உங்கள் கொடிவழியினரால் பழிக்கப்படுவீர்கள். அவையில் உங்கள் பெயர் சொல்ல அவர்கள் நாணம் கொள்வார்கள். மூத்தவரே, நாயும் நரியும் மைந்தரைப்பெற்று குருதியூன் ஊட்டி வளர்த்து கொடிவழி சமைக்கின்றன. அக்குலங்கள் நினைக்கப்படுவதில்லை. நீடிப்பதுமில்லை.”
“வாழும் குலங்கள் புகழை கைவிளக்கெனக் கொண்டு அறத்தின் திசைதேர்பவை. உங்கள் கொடிவழியினருக்கு அறம்பேணி அமைந்தவர் நீங்கள் என்ற புகழை விட்டுச்செல்லுங்கள். அதன்பொருட்டு அழிந்தாலும் அது அவர்கள் கொண்டாடும் வெற்றியே. வென்றதனால் அல்ல, நீங்கள் கார்த்தவீரியனின் பெயரை இங்கு சொன்னீர்கள், வளையாது களம்பட்டமையால். சிம்மம் என எழுந்தவர்களே தங்கள் குருளைகளுக்கு சிம்மவாழ்க்கையை அளித்துச் செல்லமுடியும். நாய் என காலடியில் உடல்வளைத்தபின்னர் திரும்பி குருளைகளை நோக்கி உறுமிக்காட்டினால்…”
“அடேய்!” என்று கூவியபடி பலராமர் எழுந்து கைகளை விரித்தபடி சாத்யகியை நோக்கி சென்றார். பீமன் பீடத்திலிருந்து எழுந்து அவர்களை நோக்கி ஓடினான். சாத்யகி அசையாமல் நின்று உரத்தகுரலில் “சிம்மக்குருளைகளால் நெஞ்சு கிழித்து கொல்லப்படுவீர், யாதவரே” என்றான். பலராமர் தன் இருகைகளையும் சேர்த்து அறைந்து “உன்னை கொல்வேன்… இரக்கமே இல்லாமல் உன்னைகொல்வேன். கீழ்மகனே…” என்று கூவினார். ஆனால் முன்னகரவில்லை. வசுதேவர் “பலதேவா, பின்னால் வா…!” என மெல்லிய குரலில் சொல்லி இருமினார். பலராமர் நெஞ்சு எழுந்தமைய பின்னால் வந்தார். அவர்களை நோக்கியபடி பீமன் இரு கைகளையும் மற்போருக்கென விரித்து நின்றான்.
“வெற்றிதோல்வியின் கணக்குகளால் அல்ல, வேதமெய்மையின் கணக்குகளாலும் அல்ல, அந்தக் காலடிப்புழுதி என் மூதாதையர் சிதைச்சாம்பலுக்கு நிகர் என்பதனால், அச்சொல் ஒவ்வொன்றும் நூறுவேதங்களுக்கு மேல் என்பதனால் நான் அவர் ஆணைக்கு அடிபணிபவன். அதுவன்றி பிறிதறியாதோர் இம்மண்ணில் உள்ளனர் என்பதனால் அச்சொல் வாழும்” என்று சாத்யகி அதே ஓசையுடன் சொன்னான். பிரலம்பன் கண்ணீர் வழிய கைகளைக் கூப்பியபடி அமர்ந்திருந்தான். “வேதம் புரப்பவர் எவர்? வேதம் எவரைப் புரக்கிறதோ அவர். உங்கள் வெற்றுப்படைக்கலங்களின் வல்லமையால் வாழ்வது வேதமல்ல. உங்களையும் என்னையும் அவரையும் மூன்று முதல்தெய்வங்களையும் அன்னையென கையிலேந்தி அமர்ந்திருக்கும் முழுமுதன்மையே வேதம்.”
“அந்தணர் அதற்கு தங்கள் அனலை அளிக்கிறார்கள். ஷத்ரியர் அதற்கு குருதியை அளிக்கிறார்கள். மேழிபற்றுவோர் ஆபுரப்போர் அதற்கு அவியும் நெய்யும் அளிக்கிறார்கள். அசுரரும் நிஷாதரும் நாகரும் பிறரும் அதற்கு தங்கள் ஆத்மாவை அளிக்கட்டும். நேற்றுவரை மலையை கிழக்குநின்றும் மேற்குநின்றும் நோக்கி பூசலிட்டோம். மலைமுடிகண்டவன் இறங்கிவந்து உரைக்கும் மெய்வழி நம்மை ஒன்றாக்குமென்றால் அவ்வாறே ஆகட்டும்.”
“என்றும் தன்னலத்திற்கு குரல்துணை மிகுதி. படைகண்டு தருக்கவேண்டாம், மூத்தவரே. மெய்மை வெல்லமுடியாத வாள். அதற்கு எதிர்நிலை கொள்ளவேண்டாம். நொறுக்கி வீசப்படுவீர்கள். யாதவகுலம் எதிர்ப்படை என நின்றிருக்குமென்றால் அழிவதே அதன் ஊழ். இது உங்கள் குருதிவழிகொண்டவனின் சொல், தந்தைசொல் கேட்காதவன் மைந்தன் சொல் கேட்டு சிறுமைகொள்வான். இது அச்சிறுமை உங்களுக்கு. நேர்வழிக்கு மீள்க! அழிவை தேடிக்கொள்ளவேண்டியதில்லை.”
கைகூப்பியபடியே நிலத்தில் விழுந்து எட்டுறுப்பும் நிலம்தொட வணங்கி எழுந்த சாத்யகி சொன்னான் “மூப்பு முறை மீறிச் சொல்லெடுத்த என்னை என் மூதாதையர் பொறுத்தருள்க! இதன்பொருட்டு அமையும் பழி என் மைந்தருக்கு மேல் சேராதமைக! இது முழுமையும் என் தலைமேல் குவிக!” திரும்பி நோக்காமல் அவன் நடந்து வெளியே செல்ல பலராமர் அவன் சென்ற திசையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்.
நெடுநேரமெனத் தோன்றிய அமைதிக்குப்பின் யுதிஷ்டிரர் “எண்ணாதன நிகழ்ந்தன. எண்ணிக்கொள்ளவேண்டாதவை உரைக்கப்பட்டன. இந்த அவை கலையட்டும். நாம் சொல்சூழ்வது பிறகென்றமையட்டும்” என்றார். சௌனகர் வணங்கியபடி அவைமேடைமேல் ஏறினார்.
இடைநாழியைக் கடந்து அபிமன்யூவுடன் படியிறங்கும்போது சுருதகீர்த்தியும் சுதசோமனும் எதிரே வருவதை பிரலம்பன் கண்டான். சுருதகீர்த்தி அபிமன்யூவிடம் “தந்தையர் எங்குள்ளனர்?” என்றான். அபிமன்யூ “சிற்றவையில். இளையதந்தை சினம்கொண்டிருக்கிறார்” என்றான். “ஏன்?” என்றான் சுதசோமன். “மூத்த யாதவர் அவையிலிருந்தே கிளம்பிச் சென்றார். எவரிடமும் விடைகொள்ளவில்லை. அவைமுறைமைகளை ஏற்றுக்கொள்ளவுமில்லை.” சுருதகீர்த்தி தலையசைத்தபின் “இளைய யாதவர் உடனிருக்கிறாரா?” என்றான். “இல்லை, அவரும் சாத்யகியும் அவர்களின் மாளிகைக்கு சென்றுவிட்டனர்.”
சுருதகீர்த்தி “என்னை வந்து பார்க்கச்சொன்னார்கள் தந்தையர். நான் அவைபுகவிருக்கிறேன்” என்றான். “செல்க!” என்றான் அபிமன்யூ. “இந்த அரண்மனை சிறிதாக இருந்தாலும் எந்த முறைமைப்படியும் இல்லை. உன் அணுக்கன் வந்து வழிகாட்டட்டும்.” அபிமன்யூ திரும்பி பிரலம்பனை நோக்கி விழிகாட்ட “அவ்வாறே” என்று பிரலம்பன் தலைவணங்கினான். சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் மேலும் ஏதோ பேசிக்கொண்டார்கள் என அவனுக்குத் தோன்றியது. செவியசைவுகள் மீசைவிடைப்புகள் விழியுருட்டல்கள் வழியாக புலிக்குருளைகள் பேசிக்கொள்வதுபோல. முதலில் அவர்கள் சந்தித்த கணம் முதல் அவன் அதை பார்த்துக்கொண்டு வந்தான். அவர்களுக்கு நடுவே பிறிதொரு அறியாப்பாதை இருந்தது.
அபிமன்யூ விடைகொண்டு படியிறங்க அவர்கள் படி ஏறினர். சுதசோமன் “தந்தை பசித்திருப்பார். அவை நீண்டநேரம் நடந்தது” என்றான். கூரம்புகள் நடுவே கொசு பறப்பதுபோல அத்தனை அரசுசூழ்தல்களுக்கும் நடுவே சுதசோமனும் சர்வதனும் தங்கள் இயல்புடன் வாழ்ந்துகொண்டிருப்பதையும் அவன் கண்டிருந்தான். புன்னகைத்து “அவர் நடுநடுவே சிற்றுணவு உண்டார்” என்றான். “அது அவருக்கு எப்படி போதுமானதாக ஆகும்? பேருண்டிக்காரர்” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி “நீ அவன் அணுக்கன் அல்லவா?” என்றான். “ஆம், இளவரசே” என்றான் பிரலம்பன். “அவர்கள் நடுவே உறவு எப்படி?” என சுருதகீர்த்தி கேட்டான்.
அதை புரிந்துகொண்டு “அதை நான் அறியேன். அவர்கள் ஒருமுறைதான் சந்தித்துக்கொண்டனர்” என்றான் பிரலம்பன். “அதன்பின் அவன் முகம் எப்படி இருந்தது?” பிரலம்பன் ஒன்றும் சொல்லவில்லை. “அவன் மகிழ்ந்திருந்தானா?” என்று சுருதகீர்த்தி மீண்டும் கேட்டான். “இல்லை” என்றான் பிரலம்பன். அவனை ஒருகணம் திரும்பி நோக்கியபின் சுருதகீர்த்தி பேசாமல் நடந்தான். அவர்கள் சிற்றறையை அடைந்ததும் பிரலம்பன் காவலனிடம் அவர்களை அறிவிக்கும்படி சொன்னான். காவலன் உள்ளே சென்று வரவறிவித்து அவர்களை உள்ளே செல்லும்படி சொன்னான். சுருதகீர்த்தி “வருக, நீர் அவன் ஒற்றன் அல்லவா?” என புன்னகைத்தபின் உள்ளே சென்றான். பிரலம்பன் தொடர்ந்தான்.
அறைக்குள் யுதிஷ்டிரர் பீடத்தில் அமர்ந்திருக்க அருகே நகுலனும் சகதேவனும் சிறுபீடங்களில் அமர்ந்திருந்தனர். சாளரத்தருகே பீமன் கைகட்டி நின்றிருந்தான். சுருதகீர்த்தினும் சுதசோமனும் முறைப்படி வணங்கி நின்றனர். சுவர் அருகே பிரலம்பன் நின்றான். அவர்கள் எவருக்கோ காத்திருப்பது போலத்தெரிந்தது. யுதிஷ்டிரர் அமைதியின்மையுடன் “என்ன செய்கிறான்?” என்றார். நகுலன் “இளைய யாதவருடன் அமர்ந்தால் அவர் வருவார் என்று கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே” என்றாரன்.
“அப்படியென்றால் நாம் முடிவை எடுப்போம்… தௌம்யரும் துருபதரின் அமைச்சர் கருணரும் சௌனகரும் நம் செய்தியுடன் அஸ்தினபுரிக்கு செல்லட்டும்” என்றார் யுதிஷ்டிரர். “ஷத்ரியர் துணைசெல்லவேண்டும் என்பது மரபு” என்றான் சகதேவன். “ஆம், அரசகுடிப்பிறந்தவர் செல்லவேண்டும்” என்ற யுதிஷ்டிரர் சுருதகீர்த்தியை நோக்கி “இவன் சென்றால் என்ன?” என்றார். நகுலன் “ஆம், இவன் உகந்தவனே” என்றான். “இவர்கள் இருவரும் உடன்செல்லட்டும், நன்று” என்றார் யுதிஷ்டிரர். “அவர்களுக்கான ஓலைச்சொற்களை நானே குறித்துக்கொடுக்கிறேன். அவர்கள் எவ்வகையிலேனும் நால்வரை தனித்தனியாக சந்திக்கவேண்டும். பீஷ்மரையும் துரோணரையும் திருதராஷ்டிரரையும் காந்தாரியையும்.”
“அதனால் என்ன பயன்?” என்றான் பீமன். “மந்தா, மீண்டும் தொடங்கிவிடாதே. களைத்திருக்கிறேன். நான் அவர்களின் அகச்சான்றை நம்புகிறேன்” என்ற யுதிஷ்டிரர் “ஆகவே இதுவே என் ஆணை. இவர்கள் உடன்செல்வதாக இருந்தால் இவர்களுக்குரிய ஆணைகளை பிறப்பித்து அனுப்புக!” என்றார்.நகுலன் “நான் அதை கற்பிக்கிறேன்” என்றான். அப்போது ஏவலன் வந்து தலைவணங்கி “பேரரசி” என்றான். யுதிஷ்டிரர் எதிர்நோக்கியிருந்தது அவளைத்தான் எனத் தெரிந்தது. அவர் ஆணையிட்டதும் ஏவலன் சென்று குந்தியை உள்ளே அனுப்பினான்.
குந்தி நுழைந்ததும் அனைவரும் எழுந்து வணங்கினர். அவள் அமர்ந்ததும் அமர்ந்தனர். குந்தி பேசவேண்டும் என பிறர் எதிர்பார்த்திருந்தமையால் அமைதி நிலவியது. அவள் மெல்லிய குரலில் “சல்யர் அஸ்தினபுரி நோக்கி செல்கிறார்” என்றாள். “ஏன்?” என்றபடி பீமன் அருகே வந்தான். “யாரோ தூதர் அவரைச் சந்தித்து இட்டுச்செல்கிறார். முதலில் அவர்கள் வழிதவறிவிட்டனர் என்று நம் ஒற்றர் எண்ணினர். ஆனால் அவர் தெளிவாக வழிகாட்டப்பட்டே செல்கிறார் எனத் தெரிகிறது. இன்னும் ஒருநாளில் அவர் அஸ்தினபுரி எல்லைக்குள் செல்வார்.”
சலிப்புடன் தலையசைத்து “கணிகரின் சூழ்ச்சிதான்” என்றார் யுதிஷ்டிரர். “நாம் என்ன செய்வது?” என்று பீமன் கேட்டான். “அர்ஜுனனின் மைந்தனையும் பீமனின் மைந்தனையும் சல்யரைச் சந்திக்க அனுப்பும்படி இளையவன் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றாள் குந்தி. “இவர்களா?” என்று பீமன் கேட்டான். “இவர்கள்தான் அஸ்தினபுரியின் எல்லைக்குள் தயக்கமில்லாது நுழையமுடியும், இளையோனே. இவர்கள் இன்றும் கௌரவரின் மைந்தர்களும் குடிகளும்தான்” என்றார் யுதிஷ்டிரர்.
“இவர்கள் சென்று அச்சூழ்ச்சியை எப்படி எதிர்கொள்வார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவர்களிடம் அனைத்தையும் சாத்யகியே சொல்வான் என்பது இளையவன் செய்தி. அவன் எண்ணுவதென்ன என்று அறியேன். அதுவே நிகழட்டும்” என்றாள் குந்தி. யுதிஷ்டிரர் “அப்படியென்றால் சதானீகனும் சுருதவர்மனும் அஸ்தினபுரியின் தூதருக்கு துணைசெல்லட்டும்” என்றார். நகுலன் “ஆம், அவர்கள் செல்லட்டும்” என்றான். சுருதகீர்த்தியும் சுதசோமனும் தலைவணங்கினர்.
மீண்டும் அமைதி நிலவியது. “முறைப்படி அபிமன்யூவின் திருமணம் நிகழட்டும் என்று இளையவன் ஆணை” என்றாள் குந்தி. “ஆம், அதையும் சிறப்புறச் செய்வோம். நடப்பது நன்மைதரும் என்று நம்புவோம்” என்றார் யுதிஷ்டிரர்.