எழுதழல் - 31
நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 9
பிரலம்பன் அபிமன்யூவின் அவையணுக்கனாக அவன் அமர்ந்திருந்த பீடத்திற்கு சற்று பின்னால் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து அவையை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரும் முதல் அரசப்பேரவை அது என்பதனால் காலையிலிருந்தே நிலைகொள்ளாதவனாக சுற்றிவந்தான். சௌனகரும் தௌம்யரும் சுரேசரும் மாறி மாறி அவனிடம் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஏன் செய்கிறோமென்றறியாமல் அவன் சுண்டப்பட்ட சிறுகாய் என திசைகளில் தெறித்துக்கொண்டிருந்தான்.
அவையின் ஒருக்கங்கள் அத்தனை முறையாக செய்யப்படும் என்றும் அத்தனை முறை அவை சீர்நோக்கப்படுமென்றும் அவனறிந்திருக்கவே இல்லை. இருக்கைகள் அமைப்பதை சௌனகர் ஒரு சதுரங்கக் களம் அமைக்கும் அளவுக்கு எண்ணித் தேர்ந்து இயற்றினார். மீண்டும் மீண்டும் இருக்கைகளை மாற்றி எவர் எவருடன், எவருக்கு எவர் எதிர்முகம், எவர் குரல் எங்கிருந்து கேட்கும் என்று வகுத்துக்கொண்டே சென்றார். சுரேசர் அவனிடம் “எவரது குரல் கேட்கவேண்டுமென்னும் அளவுக்கு எவர் குரல் கேட்கலாகாது என்பதும் முதன்மையானது” என்று சொல்லி கண்சிமிட்டினார்.
இரு ஆசுரநாட்டு அரசர்களை யுதிஷ்டிரரின் பீடத்திற்கு அருகில் அமைத்தபோது “இது மாற்றப்படுமா?” என்று அவன் சுரேசரிடம் கேட்டான். “நீர் கற்றுக்கொள்ள இன்னும் ஏராளமாக இருக்கிறது, பிரலம்பரே. இவர்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தத்தக்கவர்கள் அல்ல. ஆனால் பின்னிருக்கையில் அமரச்செய்தால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக எண்ணக்கூடும். அவ்வுணர்வாலேயே மிகையாக அவையில் வெளிப்பாடு கொள்வார்கள். பின்னிருக்கையில் இருப்பதனாலேயே எழுந்து உரக்க கூச்சலிடுவார்கள். முன்னிருக்கையில் அமரச்செய்தால் அரசருக்கு அருகிருக்கிறோம் என்பதனாலேயே அரசரை ஆதரிக்கும் பொறுப்பை அறியாமல் ஏற்றுக்கொள்வார்கள். பெரும்பாலும் அவையெழுந்து பேசமாட்டார்கள். பேசினால் அது வெறும் ஒப்புதலாகவே இருக்கும். தாழ்ந்த குரலிலேயே ஒலிக்கும்” என்றார்.
பிரலம்பன் அவரது புன்னகையைப் பார்த்து கேலியாகச் சொல்கிறார் என்று எண்ணினான். பின்னர் அவையில் இருக்கைகள் அமைந்திருக்கும் முறைமையை பார்த்தபோது அது மெய்யென்றும் உணர்ந்தான். சௌனகர் அவனிடம் “இளைய யாதவர் தங்கியிருக்கும் இல்லத்திற்கு அருகில் செல். அங்கிருந்து அவர்கள் கிளம்பும்போது எனக்கு செய்தி வந்திருக்கவேண்டும்” என்றார். தலைவணங்கி அவன் மாளிகையிலிருந்து முகமுற்றத்திற்கு வந்து புரவியிலேறி வெளியேறி முதல் வளையத்தில் பெருவணிகர் ஒருவரின் இல்லமாக இருந்த மாளிகையை நோக்கி சென்றான்.
பழைய மாளிகை அது. அதன் முகப்பில் வண்ண மூங்கிலின்மேல் துவாரகையின் கருடக்கொடி பறந்தது. முற்றத்தில் ஏழு கரிய புரவிகள் அணிகொண்டு நின்றிருந்தன. வெண்புரவி பூட்டப்பட்ட அணித்தேரின் பீடத்தில் தேரோட்டி அமர்ந்திருந்தான். கடிவாளத்தை மென்றபடி முன்காலால் மண் தரையை சுரண்டிக்கொண்டிருந்தது புரவி. மாளிகை முற்றத்தை நோக்கியபடி முதல் காவலரணருகில் அவன் நின்றான். அங்கிருந்த காவலன் “கிளம்புவதற்கான ஒருக்கங்கள் தொடங்கி நெடுநேரமாகின்றன, பிரலம்பரே” என்றான். “சொல்லப்போனால் கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றான் இன்னொரு காவலன்.
அவர்கள் கிளம்பியதுமே காவலரணில் இருந்து முழவோசை எழப்போகிறது, தன்னை எதற்காக அங்கே அனுப்பினார்கள் என்று பிரலம்பன் ஐயுற்றான். ஆனால் வாய்கவிந்து ஒரு சொல்லும் சௌனகர் உரைப்பதில்லை என்பதை எண்ணிக்கொண்டான். முதிய காவலன் “நேற்று காலையில் இளைய யாதவர் வந்தார். மாலையில் மூத்த யாதவர் வந்தார். மூத்தவருடன் அவர் தந்தை வசுதேவரும் வந்தார். அவர்கள் மறுபக்கம் பெருவணிகர் பூர்ணரின் இல்லத்தில் தங்கியிருக்கிறார்கள். இளைய யாதவர் இன்னும் சென்று தந்தையையும் தமையனையும் பார்க்கவில்லை. அவர்கள் அவையில்தான் சந்தித்துக்கொள்ளவிருக்கிறார்கள்” என்றான். “நமக்கெதற்கு அரண்மனை வம்பு?” என்றான் இளங்காவலன் ஒருவன்.
முதியவன் “நான் என்ன வம்பா சொல்கிறேன்? நடந்ததை சொல்கிறேன்” என்றான். “எனக்குத் தேவையில்லாத எதையும் நான் காண்பதுமில்லை, கேட்பதுமில்லை. இந்த காவலரணில் நான் அமரத்தொடங்கி எட்டாண்டுகளாகின்றன. இவர்களெல்லாம் இன்று வந்தவர்கள்.” பிரலம்பன் “ஆம், நீங்கள் மூத்தவர் என அறிவேன்” என்றான். “யாதவ அரசர்கள் வருவார்கள் என்பதை இங்கே பலரும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிந்தது. காலையில் இளைய யாதவர் வந்தபோது அரசரும் அர்ஜுனரும் பீமசேனரும் கோட்டைமுகப்பிற்குச் சென்று வரவேற்றனர். அர்ஜுனர் மட்டும் நேற்று இரவு வரை இளைய யாதவருடன் இருந்தார். ஆனால் மூத்தவரும் தந்தையும் வந்ததும் அரண்மனை பரபரப்படைந்தது. விராடரும் துருபதரும் யுதிஷ்டிரரும் கோட்டைமுகப்புக்குச் சென்று வரவேற்றனர்.”
“இளவரசர் உத்தரகுமாரரும் நகுலரும் சகதேவரும் உடன் நின்று அவர்களை தங்கவைத்தனர். சௌனகரும் விராடரும் துணை வர அரசர் யுதிஷ்டிரர் மாலையில் மீண்டும் அவர்களை சந்திக்கச் சென்றார். பின்னர் துருபதரும் மைந்தரும் சென்றார்கள். முதியவரான குந்திபோஜர் நேற்று காலையில்தான் வந்தார். அவரும் பேரரசி குந்தியும் இரவில் சென்று அவர்களிடம் உரையாடினர்” என முதுகாவலன் தொடர்ந்தான். “நேற்றோ இன்று புலர்காலையோ இளையவர் சென்று மூத்தவரை பார்ப்பார் என்றார்கள். இறுதியாக அவர்கள் தனித்தனியாகவே அவைபுகவிருக்கிறார்கள். அதைப்பற்றித்தான் இன்று ஊர் முழுக்க பேச்சு.” பிரலம்பன் வெறுமனே தலையசைத்தான்.
“உண்மையில் இன்று யாதவபுரியின் அரசர் மூத்தவரே. ஐங்குடிகளும் படைகளும் குலமூத்தோரும் அவருடனேயே இருக்கிறார்கள். இளையவர் துவாரகையை மட்டுமே ஆள்கிறார் என்கிறார்கள்” என்று இளைய காவலன் ஆர்வமாக பேசலானான். “துவாரகையிலிருந்து ஐங்குலத்துப் படைகளும் சென்ற பல ஆண்டுகளாக வெளியேறிவிட்டமையால் அது கைவிடப்பட்ட நகரென மேலைக்கடலோரம் கிடக்கிறது. கூர்ஜரனோ மாளவனோ கைநீட்டினால் அதைப்பற்றி எடுத்துவிடமுடியும். ஆனால் மூத்த யாதவர் பெருஞ்சினம் கொண்டவர். அவருக்கு அஸ்தினபுரியின் படை பின்துணை உள்ளது. ஒரு சொல்லெடுத்தால் அத்தனை ஆற்றல்களுடனும் குருகுலத்து மூத்தவர் அவருக்கென வந்து நிற்பார். அதனால்தான் துவாரகை இன்னும் எஞ்கிறது.”
“அரசியல் நமக்கெதற்கு?” என்றான் முதுகாவலன். “துவாரகையின் தலைவரை எவரும் வெல்லமுடியாது.” இளங்காவலன் “இவர் எங்கு துவாரகைக்குச் சென்றார்? சப்தஃபலத்தில் பதின்மூன்றாண்டு இருள் தவம் மேற்கொண்டார் என்கிறார்கள். அங்கிருந்து எழுந்ததுமே துவாரகைக்குச் செல்வார் என்று யாதவர்கள் எதிர்பார்த்தபோது நேராக அசுர குடிகள் அளித்த விருந்துகளில் கலந்துகொண்டுவிட்டு இங்கு வருகிறார். திரும்பிச் செல்கையில் அங்கு துவாரகை இருக்குமா என்பதே ஐயத்திற்குரியது” என்றான்.
யாதவ மாளிகையின் முகப்பிலிருந்த அறிவிப்புமுரசு முழங்கத்தொடங்கியது. காவல்மாடத்திலிருந்த வீரன் “எழுகிறார்… கிளம்பிவருகிறார்” என்று கூவியபடி சுழல் படிகளிலேறி ஓடினான். காவல்மாடத்தின் உச்சியில் முரசு மேடையில் இருந்த முரசு “அரசெழுகை அரசெழுகை அரசெழுகை” என ஒலிக்கத்தொடங்கியது. அவ்வோசை அரண்மனையை அடைந்துவிட்டதென்று அங்கு எழுந்த கொம்பு ஒலி அறிவித்தது. தான் என்ன செய்ய வேண்டுமென்று பிரலம்பனுக்கு புரியவில்லை. மரக்கிளையில் எக்கணமும் பறந்தெழக்கூடுமென தவிப்பசைவுடன் அமர்ந்திருக்கும் சிறுபுள்ளென அவன் காவல்மாடத்தின் முன்னால் நின்றான்.
யாதவ மாளிகைக்குள்ளிருந்து கருடக்கொடியேந்திய கவசவீரன் வெளியே வந்தான். தொடர்ந்து கொம்பும் முழவும் குறுமுரசும் சங்கும் ஒலிக்க சூதர்கள் இருநிரையென வந்தனர். மங்கலத்தாலங்கள் ஏந்திய மூன்று சேடியருக்குப் பின்னால் இளைய யாதவர் சீர்நடையில் வந்தார். பிரலம்பன் உள்ளத்தின் ஓசையால் விழிக்காட்சி அலைவுற்று மறைவதுபோல் உணர்ந்தான். தன் உள்ளத்தை, அகத்தை நிலைநிறுத்தும்பொருட்டென அருகிருந்த தூணை இறுகப் பற்றிக்கொண்டான். நீர்ப்பாவைமேல் காற்றென அவன் பதற்றம் அக்காட்சியை அலைவுறச் செய்தது. குருதி தலையிலிருந்து மெல்ல இறங்க உடல் ஓய்வு கொண்டமைந்தபோது மிக அருகிலென இளைய யாதவரை கண்டான்.
அவருக்கு வலப்பக்கம் மார்பில் பொற்கவசம் அணிந்த சாத்யகியும் இடப்பக்கம் அரச அணிக்கோலத்தில் பிரத்யும்னனும் வந்தனர். சில கணங்களுக்குப்பின் அங்கிருந்த அனைவரும் மறைய இளைய யாதவர் மட்டுமே தோன்றினார். பொற்பூச்சுள்ள வெள்ளி குறடணிந்திருந்தார். பொன்மலரணி கரைவைத்த மஞ்சள் பட்டாடை. அதற்கு மேல் கட்டிய செம்பட்டுக் கச்சை. அதில் செருகப்பட்ட புல்லாங்குழல். மார்பில் மணியாரமும் சரப்பொளி மாலையும் தழைந்தன. இருபுறமும் எழுந்த தோளிலைகள், புயவளைகள். கங்கணம் அணிந்த மணிக்கட்டு. கணையாழிகள் மின்னும் விரல்கள். கன்னங்களில் வண்ண ஒளி மின்னிய குழைகள். இனிய நினைவொன்றில் மயங்கியவை போன்ற விழிகள். இன்சொல் ஒன்று எழுவதற்கு முந்தைய குறுநகை. தலையிலணிந்த வெண்பட்டுத் தலைப்பாகையில் விழி திறந்த மயிற்பீலி.
முதற்கணம் அவரைப் பார்த்ததை எண்ணியதுமே அவன் மெய்ப்பு கொண்டான். பாணாசுரரின் கையைத் துணித்து ஒரு துளிக்குருதிகூட ஒட்டாத தூய ஒளியென வானில் எழுந்து மண் அறியாப் பறவையெனச் சுழன்றுசென்று தூக்கிய சுட்டுவிரலில் அமைந்து மீண்டும் எழுந்த படையாழியின் ஒளித்துளி மின்னலென தொட்டுச் சென்ற அழகிய கரிய முகம். கன்னியரின் கண்கள். மழலையின் உதடுகள். புயல் எழுந்த கடல்அலையென வெண்நுரை பறக்கப் பாய்ந்து வந்த புரவியின்மேல் இளங்காற்றில் ஒரு நீலத் தூவலென பறந்தணைந்த உருவம். கைதளர்ந்து படைக்கலம் நழுவ கால்மடித்து அமர்ந்து கைகூப்பி வணங்கி அவன் அசைவற்றிருந்தான்.
போர் முடிந்து சிதறிய அசுரப்படைகளுக்குப் பின்னால் யாதவப்படையினர் துரத்திச்செல்ல சிருங்கபிந்துவை நோக்கி புரவியில் செல்கையில் அவருக்கிணையாக சென்ற அபிமன்யூ “மாதுலரே, இக்கணம் நான் எத்தனை அறிவிலி என்றே உணர்கிறேன். இப்படி இவ்வாறு நீங்கள் எழுவதே முறை. அன்று வந்து நான் உங்கள் காலடியில் தலையறைந்தபோது நீங்கள் விழித்து எழுந்திருந்தால் அதை எந்தக் காவியம் பொருட்படுத்தியிருக்கும்? உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அழியா வேதமொன்றின் சொல்” என்றான். ஒவ்வொரு எண்ணத்திற்கும் மெய்ப்பு கொண்டு உடல் விதிர்த்தபடி அபிமன்யூவுக்குப் பின்னால் புரவியில் அமர்ந்திருந்த பிரலம்பன் அறியாமல் பிறசெவியறியா சிறுவிம்மலொன்றை எழுப்பினான்.
புரவிச்சரடை இழுத்து திரும்பிப்பார்த்து இளைய யாதவர் “இவர் யார்?” என்றார். அபிமன்யூ “இவர் பிரலம்பன், எனது தோழர்” என்றான். புன்னகைத்து “இளைஞர், பார்க்க உன்னைப்போல் இருக்கிறார்” என்ற இளைய யாதவர் “அன்று நீ வந்திருந்தாய் என்பதை இன்று காலைதான் நான் அறிந்தேன். வேறெங்கோ இருந்தேன்” என்றார். பிரலம்பன் அவர் கால்களை நோக்கி கண்களை தாழ்த்திக்கொண்டான். ஆம், இதுவே உகந்தது. இதுவே எனக்குப் போதுமானது. கால்கள் இத்தனை அழகுகொள்ளுமா? இவை மண்ணை மிதிக்கவும்கூடுமா? ஆனால் இவை மண்ணை அறிந்தவை. ஆகவே எனக்கு அணுக்கமானவை. இவைகொண்ட எழில் நான் வாழும் மண்ணால் அளிக்கப்பட்டது. விண்ணெழில் கொண்ட பீலியை அறிய நான் மீண்டும் பிறந்தெழுவேன். அவன் உள்ளம் கண்ணீர் வார்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு சொல்லும் ஒளிகொண்ட துளிகளென எங்கோ சொட்டின.
சிருங்கபிந்துவின் கோட்டைவாயிலில் இளைய யாதவர் நுழைந்தபோது அச்சிற்றூரின் பெண்டிர் அனைவரும் இல்லங்களின் திண்ணை முகப்புகளில் தோளொடு தோள் நெருக்கி நின்று ஒருவர் மீது ஒருவர் எட்டி அவரைப் பார்த்தனர். புன்னகையுடன் அவர்களை நோக்கியும் சிறுகுழவிகளிடம் கை நீட்டி கன்னம் தொட்டு ஓரிரு இன்சொல் உரைத்தும் அவர் மையமாளிகை நோக்கி சென்றார். குழந்தைகள் அவரிடம் கண்டதென்ன என அவன் வியந்தான். கன்னியர் கண்டது பிறிதொன்று. அன்னையர் அறிந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்கள் விழிகளால் அவரை அள்ளி வண்ணங்களாக்கி பெருந்திரை ஒன்றில் வரைந்துகொண்டிருந்தனர்.
இயல்பான நடையும் அசைவுகளுமாக அவர் இழந்த நகருக்கு மீண்டுவரும் அரசன் போலிருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரையும் முன்னரே அறிந்தவர் எனத் தோன்றினார். அங்கிருந்த ஒவ்வொருவரும் அவரை ஒவ்வொரு நாளும் காண்பவர்போல் விழிமலர்ந்திருந்தனர். அரண்மனையின் படிகளில் அவர் ஏறும்போது அசுர குடியின் மூதாட்டியர் மூவர் மங்கலக் குருதி நிரப்பிய மூன்று சிறு கலங்களுடன் எதிர்வர கன்னியர் மூவர் மலரும் மஞ்சளரிசியும் மண்ணும் கொண்ட தாலங்களை ஏந்தி உடன்வந்தனர். ஒரு சொட்டுச் செங்குருதியை ஆலிலையால் தொட்டு அவர் நெற்றியிலிட்டு மூதன்னை வாழ்த்தினாள். “வெற்றியும் புகழும் தொடர்க! எண்ணியது இயல்க!”
அரிமலரிட்டு வாழ்த்திய அன்னையரை குனிந்து கால் தொட்டு சென்னி சூடி வணங்கினார். “என் இளைய மருகன் பிழையென்று எது செய்திருந்தாலும் என் பொருட்டு பொறுத்தருளுங்கள், அன்னையரே” என்றார். மூதாட்டி ஒருத்தி “உங்களைப்போன்றவன், உங்கள் இனிமையும் கூர்மையும் கொண்டவன்” என்றாள். அபிமன்யூவை நோக்கி புன்னகைத்து அவன் தோளைத்தொட்டு அருகணைத்து “புல்லாங்குழல் இசைபோல் கூரியது பிறிதொன்றில்லை என்றொரு கூற்றுண்டு, அன்னையே” என்றார்.
பின்பு படிகளில் ஏறிச்செல்கையில் அபிமன்யூவிடம் “சென்று பாணரை மருத்துவ சாலைக்கு கொண்டு செல்க! அவர் அருகே இருந்து வேண்டிய அனைத்தையும் இயற்றுக! நலமடைவார் என்னும் செய்தியுடன் என்னை வந்து பார்” என்றார். தலைவணங்கிய அபிமன்யூ திரும்பிச்செல்ல அங்கிருந்த வேட்டுவக் காவலர்களிடம் ஓரிரு சொற்கள் பேசி புன்னகைத்தபின் பீடத்தில் அமர்ந்து திரும்பி பிரலம்பனைப் பார்த்து “என் கால்களைக் கழுவு” என்றார்.
முதற்கணம் அச்சொற்கள் அவனுக்குப் புரியவில்லை. அவர் கூறாமலேயே அவனுள் அவை மீண்டும் ஒலிக்க உடல் மெய்ப்புகொண்டு கைகூப்பி கண்ணீர் மல்கி “ஆணை” என்றான். ஓடிச்சென்று ஏவலரிடம் “வெந்நீர்… மஞ்சளிட்ட வேப்பெண்ணை கலந்த வெந்நீர்” எனக் கூவினான். இருவர் ஓடிச்சென்று இரு அகல்யானங்களில் ஆவியெழுந்த நீருடன் வந்தனர். அவற்றை அருகே வைத்து முழந்தாளிட்டு தரையில் அமர்ந்து நடுங்கும் கைகளால் கால்களை தொட்டன். விரல்கள் நடுவே குருதி உலர்ந்து கரிய பசையாகி இருந்தது. இரு வாழைக்கூம்புகள். இரு குவளைமலர் அடுக்குகள். இரு புன்னகைகள்.
அவன் உள்ளம் நெகிழ்ந்து கண்களில் நீர் நிறைந்திருந்தது. உடல் நடுங்கிக்கொண்டிருக்க அண்ணாந்து அவர் முகத்தை பார்க்க வேண்டுமென்ற விருப்பை தவிர்த்தான். அக்கால்களைத் தொட்டு விழியொற்ற வேண்டுமென்று எடுத்த கைகளை பிறிதொன்று தடுத்தது. அதைவிடப் பெரிதொன்று வந்து அதை அறைந்து வீழ்த்தியது. இனியொரு தருணம் இல்லை உனக்கு என்றது. தன் இரு கைகளையும் அக்கால்களில் வைத்து தொட்டு கண்களில் ஒற்றினான். இளைய யாதவரின் கைகள் அவன் தலைமேல் பட்டன. அவன் விழிநீர் அக்கால்களின்மேல் உதிர்ந்தது.
அரண்மனை முகப்பில் இளைய யாதவரை வரவேற்கும்பொருட்டு முரசுகள் முழங்கின. முற்றத்தில் தேர் சென்று நின்றதும் அவர் இறங்குவதற்கு முன்னரே மரப்படிகளுடன் இரு ஏவலர் ஓடிவந்தனர். இறங்கி அவர்களின் தோள்களைத்தொட்டு புன்னகையுடன் ஓரிரு சொற்களை பேசியபின் இருபுறமும் வேல் தாழ்த்தி நின்றிருந்த வீரர்களை நோக்கி கைகூப்பியபடி நடந்து மாளிகையின் படிகளில் ஏறினார். பிரலம்பன் அவரிடம் சென்று “அமைச்சுமாளிகை வழியாக செல்லலாம், அரசே” என்றான். ஒருகணம் அவன் கண்களை தொட்டபின் “ஆம், சௌனகரைப் பார்த்து நெடுநாட்களாகிறது” என்றார்.
அவர்கள் படியேறி இடைநாழியில் திரும்பி அமைச்சு அமைந்திருந்த அறைக்குள் நுழைந்ததும் சௌனகர் எதிர்கொண்டு வந்து தலைவணங்கி “இளைய யாதவருக்கு வணக்கம். பதின்மூன்றாண்டுகளுக்குப் பின்னர் முந்தைய கணத்தில் இருந்து தொடங்கிவருபவர்போல் எழுந்திருக்கிறீர்கள்” என்றார். “நீங்கள் முதிர்ந்துவிட்டீர்கள், சௌனகரே” என்றார் இளைய யாதவர். “இந்திரப்பிரஸ்தத்தின் இந்தப் பதின்மூன்றாண்டுகளும் மும்முடங்கு காலமெனச் சென்றன. ஒவ்வொரு நாளும் சோர்ந்து தனித்து துயர்கொண்டுதான் மஞ்சத்திற்கு சென்றேன். இளைய யாதவரே, அன்றாட நெறிப்பிறழ்வுகளின்றி அரசாள எந்த மன்னனாலும் இயலாது. ஆகவே அரசப்பொறுப்பை அந்தணர் ஒருபோதும் ஏற்கலாகாதென்று அறிந்தேன்” என்றார் சௌனகர்..
“அதையே நானும் சொல்ல முடியும். ஒவ்வொரு நாளும் மாற்றமின்றி ஒன்றையே செய்ய ஷத்ரியனால் இயலாது. அச்சலிப்பை வெல்ல நாளுக்கு ஒரு நெறிபிறழல் நன்று” என்றார் இளைய யாதவர். சௌனகர் நகைக்க வெளியே முழவோசையும் கொம்போசையும் எழுந்தது. பிரலம்பன் மெல்ல காலடி எடுத்து வைத்து திறந்த வாயிலினூடாக பார்க்க வெளியே முகமுற்றத்தில் பலராமர் தேரில் வந்திறங்குவதை கண்டான். அவருடன் இருந்த முதியவர் அக்ரூரர் என உணர்ந்தான். தொடர்ந்து வந்த தேரில் வசுதேவர் இருந்தார். நகுலனும் சகதேவனும் அவர்களை எதிர்கொண்டு தலைவணங்கி முகமன் சொல்லி அவைக்கு அழைத்துச் சென்றார்கள்.
தொலைவிலென வாழ்த்தொலிகளும் உலோகக்குறடுகள் மரத்தரையில் எழுப்பும் ஓசைகளும் கேட்டு அடங்கின. சௌனகர் “தாங்கள் அவை நுழையலாம், அரசே” என்றார். இளைய யாதவர் “ஆம், மூத்தவர் நுழைந்துவிட்டார்” என்றார். அப்போதுதான் தனக்கிடப்பட்ட பணி என்ன என்று உணர்ந்த பிரலம்பன் திடுக்கிட்டு திரும்பி நோக்க இளைய யாதவர் புன்னகையுடன் அவன் தோள்களைத் தொட்டு “வழிநடத்திச் செல்லுங்கள், வீரரே” என்றார். சௌனகர் “தங்களை அவையமர்த்த நானே வருகிறேன்” என்றார். “நன்று! மேலும் அரசர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றபின் இளைய யாதவர் இடைநாழியில் நடக்க பிரலம்பன் அவரை அழைத்துச் சென்றான்.
அவைக்குள் நுழைவதற்கு முன்பு இளைய யாதவர் நின்று பிரலம்பனிடம் “என் இருப்பிடம் என்னவென்று ஒருகணம் முன்னரே தாங்கள் பார்த்து அதன் அருகே நின்றுகொள்ளுங்கள்” என்றார். “ஆணை!” என்றபின் பிரலம்பன் உள்ளே சென்றான். அரசர்களுக்குரிய இருக்கைகள் ஒன்றையொன்று நோக்கும் இரு குறுவாள்களின் வடிவில் வளைவாக அமைந்திருந்தன. முதன்மை அரசர்களுக்குரிய நிரைக்கு நேர் எதிரில் இளைய யாதவருக்கான இடம் இருப்பதை அவன் பார்த்தான். அதிலிருந்த இலச்சினையை பார்த்தபின் திகைத்து பின்னர் திரும்பி வாயிலில் எட்டிப்பார்த்த சாத்யகியிடம் தலைவணங்கினான்.
நிமித்திகர் மேடையேறி “யாதவ அரசர், துவாரகையின் தலைவர், கிருஷ்ணர் நுழைவு” என அறிவித்தார். அவையிலிருந்த குடிகளும் படைத்தலைவர்களும் உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். கைகூப்பியபடி நடந்து வந்த இளைய யாதவர் தன் இருக்கையில் அமர்ந்துகொள்ள அவருக்குப் பின்னால் சிற்றிருக்கையில் பிரத்யும்னனும் சாத்யகியும் அமர்ந்தனர். பிரலம்பன் வெளியே செல்ல சௌனகர் அவனிடம் “இளவரசர்கள் அவைபுகவிருக்கிறார்கள். அவை ஒருங்கிவிட்டதென்ற செய்தியை அபிமன்யூவிடம் சென்று சொல்க!” என்றார்.
அவன் கிளம்புவதற்குள் சுரேசர் “இளவரசரை தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கு சென்றார்?” என்றார். “அணி செய்வதற்காக தன் அறைக்கு சென்றார்” என்றான் பிரலம்பன். “அறையில் அவர் இல்லை. எங்கிருந்தாலும் உடனடியாக அவைக்குள் நுழையவேண்டும் என்று சொல்க! அரசர் அரியணை அமர்வதற்குள் தன் பீடத்தில் அவர் அமர்ந்தாகவேண்டும்” என்றார் சுரேசர். பிரலம்பன் வெளியே சென்றபோது பீமனும் நகுலனும் சகதேவனும் உரையாடியபடி வந்துகொண்டிருப்பதை கண்டான். அரசர்கள் அனைவரும் அவைபுகுந்துவிட்டிருந்தமையால் அவர்கள் சற்று எளிதாகிவிட்டிருந்தனர்.
பீமன் அவனை அணுகி தன் பெரிய கையை அவன் தோளில் வைத்து “எங்கே உன் இளவரசன்?” என்றான். “மாடிக்கு சென்றார்” என்றான் பிரலம்பன். கையின் எடையால் அவன் முதுகு வளைந்தது. அவன் தோளில் தட்டி “அழைத்து வா!” என்றபின் பீமன் “இளைய யாதவர் அவைபுகுந்துவிட்டாரா?” என்றான். “ஆம்” என்று பிரலம்பன் சொன்னான். நகுலன் அவனிடம் “மற்ற இளவரசர்கள் எங்கே?” என்றான். “அவைபுகும்பொருட்டு மறுபக்க அணியறையில் அமர்ந்திருக்கிறார்கள்.” நகுலன் தலையசைத்து நடந்தான்.
பீமன் அவை புகுந்த ஓசை உரக்க ஒலித்தது. கூடத்திற்குச் சென்றபோது அங்கு இருந்த காவலர்கள் அனைவரும் அவை நோக்கி வந்துவிட்டிருப்பதை கண்டான். ஒழிந்த கூடம் வழியாக இடைநாழியினூடாகச் சுற்றி திரும்பி வந்தபோது அர்ஜுனன் அவனை கண்டான். “இங்கென்ன செய்கிறாய்?” என்றான் அர்ஜுனன். பிரலம்பன் திகைத்து “இளவரசர்…” என்று இழுக்க “அந்த மூடன் மாடிப்படியில் கனவு கண்டபடி அமர்ந்திருக்கிறான். உரிய ஆடைகளுடன் அவனை அவைபுகும்படி சொல்!” என்றபடி அர்ஜுனன் அவை நோக்கி சென்றான். திரௌபதியும் யுதிஷ்டிரரும் அவை புகும் வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் கேட்டன.
அவன் உள்ளறையினூடாகச் சென்று இடைநாழிக்கு வந்தபோது குந்தி சேடியர் சூழ அவைக்கு சென்று கொண்டிருந்ததைக் கண்டு ஒதுங்கி நின்றான். பிரலம்பன் அவைக்குள் நுழைந்து அமைச்சரிடம் “எங்கும் தேடிப்பார்த்துவிட்டேன். இளவரசரை காணவில்லை” என்றான். “காணவில்லையா? இச்செய்தியைச் சொல்ல உமக்கு நாணமில்லையா?” என்றார் சுரேசர். பிரலம்பன் பேசாமல் நின்றான். “அவர் இருக்கைக்கு பின்புறம் அமர்ந்துகொள்க. நான் அவரை அழைத்துவர ஒற்றர்களை அனுப்புகிறேன்” என்றபடி சுரேசர் வெளியே சென்றார்.
பிரலம்பன் அபிமன்யூவின் இருக்கைக்கு பின்னால் சென்று அமர்ந்தபோது அபிமன்யூ மறுபக்க வாயிலினூடாக விரைந்து வந்து அவனுடைய இருக்கையில் அமர்ந்து அவனை நோக்கி புன்னகை செய்தான். பிரலம்பன் பெருமூச்சுவிட்டான்.