எழுதழல் - 25
நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 3
துருபதரின் சிற்றவைக்குள் நுழைவதற்காக அணுக்கனின் அழைப்பைக் காத்து அபிமன்யூ நின்றிருந்தபோது படிக்கட்டுகளில் காலடியோசை கேட்டது. அவன் பதைப்புடன் தன்னுடன் நின்ற சிற்றமைச்சர் ஜலஜரிடம் “நான் சென்று சற்றுநேரம் கழித்து மீள்கிறேன்” என்றான். “தங்கள் வரவு உள்ளே அறிவிக்கப்பட்டுவிட்டது, இளவரசே…” என்றார் ஜலஜர். “நான் என் எண்ணங்களை கோத்துக்கொள்ளவில்லை. இப்போது நான் சென்றால் என் சொற்களை முறையாக சொல்ல முடியாமல் போகலாம்” என்றபின் “தேவையான ஓலை ஒன்றையும் மறந்து வைத்துவிட்டேன்” என்றான்.
ஜலஜர் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க “ஜலஜரே, நாம் பிறகு சந்திப்போம். நான் ஓலை எடுக்கச் செல்வதாக அரசரிடம் சொல்லும்படி ஏவலனிடம் தெரிவித்துவிடுங்கள்” என்று சொல்லி அபிமன்யூ திரும்பியபோது மறு எல்லையில் திருஷ்டத்யும்னனும் அர்ஜுனனும் தோன்றினார்கள். அபிமன்யூ புடைப்புச்சிலைபோல அசைவழிந்து சுவர் சாய்ந்து நின்றான். அவர்கள் அணுகிவரும் காலடியோசை மட்டும் அவன் உடல்விதிர்ப்பாக தெரிந்தது. அவன் அங்கிருப்பதை அறியாதவன்போல விழி தாழ்த்தி தாடியை இடக்கையால் அளைந்தபடி அர்ஜுனன் வாயிலருகே வந்தான். திருஷ்டத்யும்னன் தொலைவிலேயே அவனைக் கண்டு புன்னகைத்தபடி அணுகி தோளில் கை வளைத்து மறுகையால் அவன் கைகளை பற்றிக்கொண்டு “நீ வந்ததை அறிந்தேன். என்ன செய்கிறாய் இங்கே?” என்றான்.
அபிமன்யூ சிறுவர்களுக்குரிய திக்கலுடன் “அரசரைப் பார்க்க வந்தேன். ஓர் ஓலையை மறந்துவிட்டேன். ஆகவே உடனே சென்று…” என்றான். அர்ஜுனன் அவனை நோக்காமல் உறுமலோசையுடன் “அவைச்சந்திப்புக்கு வரும்போது தேவையான ஓலையை எடுத்துவரவேண்டுமென்றுகூட அறியாத மூடனா நீ?” என்றான். அபிமன்யூ இடையை பதற்றத்துடன் தடவி “இல்லை, ஓலையை எடுத்துவிட்டேன். இங்கிருக்கிறது” என்றான். “அப்படியென்றால்…” என்று விழிகளைத் தூக்கினான் அர்ஜுனன். “முதலில் ஓலை இல்லையென்று நினைத்தேன்” என்று அபிமன்யூ சொன்னான். “எங்கே, ஓலையைக் காட்டு!” அபிமன்யூ மீண்டும் துழாவி “நான் தொட்டுநோக்கியது ஓலையை அல்ல. ஆடை மடிப்பை… ஓலை இல்லை” என்றான்.
“மூடன்” என்று சொல்லி திருஷ்டத்யும்னனிடம் “செல்லும்போதிருந்தவனாகவே இருக்கிறான். எருதென வளர்ந்தாலும் இளமைந்தர்களுக்குரிய உள்ளமும் அறிவும்தான் இவனுக்கு” என்றான். அபிமன்யூ அதை ஏற்பதுபோல முகம் காட்டி பின்னகர திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான். “அது என்ன உன் கையில்?” என்றான் அர்ஜுனன். “இது குங்குமம். நான் அன்னையை அகத்தறையில் சந்தித்துவிட்டு அப்படியே வந்துகொண்டிருப்பதனால்…” அர்ஜுனன் “அரண்மனைப்பெண்டிர் வளர்த்த மைந்தன் என்று அண்மையில் வருவதற்குள்ளேயே தெரிந்துவிடும்” என்றான். “அது தங்கள் பிழை மைத்துனரே, மனைவியரை அரண்மனையில் விட்டுவிட்டு மகளிர் தேடி பாரதவர்ஷம் முழுவதும் அலைந்தீர்கள். அவர்கள்மேல் உங்கள் சொல்லென ஏதுமில்லை” என்றான் திருஷ்டத்யும்னன்.
அபிமன்யூ தாழ்ந்த குரலில் “நான் போய்விட்டு வருகிறேன்” என்று பொதுவாகச் சொல்லி பின்னால் காலடி வைக்க கதவு திறந்து “பாண்டவ இளவரசரை பாஞ்சாலப் பெருமன்னர் அழைக்கிறார்” என்று அணுக்கன் சொன்னான். “செல்லுங்கள்” என்று வாயசைவால் சிற்றமைச்சரிடம் சொல்லி அபிமன்யூ கைகாட்டினான். “பாண்டவ இளவரசன் நீதான். எங்கள் வருகை இன்னும் அறிவிக்கப்படவே இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன் சிரித்தபடி. “ஆம், மறந்துவிட்டேன்” என்று சொல்லி அபிமன்யூ உள்ளே செல்லத்தொடங்க அவன் தோளைப்பற்றி இழுத்து தன் தோள்களுடன் சேர்த்துக்கொண்டு “தந்தையை அஞ்சுகிறாயோ இல்லையோ அச்சத்தை நன்றாக வெளிப்படுத்துகிறாய். அவ்வகையில் நன்று” என்று திருஷ்டத்யும்னன் உரக்க சிரித்தான்.
அபிமன்யூ தலைகுனிந்து நிற்க அர்ஜுனன் “நீங்களுமா, மைத்துனரே? அவனிடம் அத்தனைபேரும் கொஞ்சுவதனால்தான் பெண்ணா பைதலா என்றறியவொண்ணாமல் இருக்கிறான் அறிவிலி” என்றான். “ஆம், அனைவருக்கும் இவன் சிறுவனாகவே தெரிகிறான். நாமெல்லாம் இவனை அப்படி பார்க்கிறோமா, தன்னை அப்படி பார்க்கும்படி இவன் செய்கிறானா என்று தெரியவில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். அர்ஜுனன் “வளர்ந்தபின் மழலையை நடிப்பவர்கள் ஒளிந்திருந்து நம்மை வேவு பார்ப்பவர்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் விழிகாட்ட அபிமன்யூ உள்ளே சென்றான்.
திருஷ்டத்யும்னன் தங்கள் வரவை அறிவிக்கும்படி கைகாட்டிவிட்டு சிற்றமைச்சர் ஜலஜரிடம் “கீழே சென்று இறுதியாக அஸ்தினபுரியிலிருந்து வந்த அத்தனை செய்திகளையும் தொகுத்து அரசவைக்கு கொண்டுவாருங்கள்” என்றான். அவர் தலைவணங்கி திரும்பிச் சென்றார். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனிடம் “சிற்றமைச்சர் அபிமன்யூவைவிட சற்றே மூத்தவர். அவனுடைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடம் அபிமன்யூவைப்பற்றி குறை சொல்வது முறையல்ல என்று தந்தையென உங்களுக்குத் தெரியாதா?” என்றான். அர்ஜுனன் “அதனால் என்ன ஆகிவிடப்போகிறது? இவன் நாணப்போகிறானா என்ன? அல்லது பிறர் ஏளனம் செய்வதை பொருட்படுத்தப்போகிறானா?” என்றான்.
திருஷ்டத்யும்னன் “நாம் நம் சொற்களால் மைந்தருக்கு இழிவை அளிக்கலாகாது” என்றான். “மைத்துனரே, உங்களுக்குத் தெரியாததல்ல. எங்கும் இவனைப் பாராட்டி கொண்டாடி உச்சிமுகரவே ஆளிருக்கிறார்கள். அஸ்தினபுரிக்குச் சென்றவன் கௌரவ அவைக்குச் சென்று துரியோதனனின் மடிமீதமர்ந்து வந்திருக்கிறான். துச்சாதனன் இவனை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டதாக சொல்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “நல்லதுதானே? அவர்களுக்கும் இவன் மைந்தனல்லவா?” என்றான் திருஷ்டத்யும்னன். “தொல்குடிகளை குருதியே ஆள்கிறது, பார்த்தரே.”
“துச்சாதனனின் நெஞ்சு பிளந்து குருதியுண்ணுவதாக இவன் மூத்த தந்தை வஞ்சினம் உரைத்திருக்கிறார்” என்றான் அர்ஜுனன். “அது நம்மைப்போன்றவர்களின் வஞ்சம். அதை ஏன் நம் குழந்தைகளிடம் ஏற்றி வைக்கவேண்டும்?” என்றான் திருஷ்டத்யும்னன். “இவன் குழந்தையல்ல. ஏற்கெனவே இந்திரப்பிரஸ்தத்தில் இவன் குழந்தைகள் வளரத் தொடங்கிவிட்டன” என்றான் அர்ஜுனன். திருஷ்டத்யும்னன் “பாண்டவரே, பதின்மூன்றாண்டுகாலம் நம் மைந்தரை தந்தையென இருந்து பேணி வளர்த்தவர்கள் கௌரவர்களே. அவர்கள் இங்கு வரலாமே என நான் பலமுறை அழைத்ததுண்டு. அது முறையல்ல என்று துரியோதனர் மறுத்துவிட்டார். ஆயிரம் கைவிரித்து குலம்புரக்கும் பெருந்தந்தை அவர்” என்றான். அர்ஜுனன் “ஆம், திருதராஷ்டிரரின் மைந்தன் அவ்வாறே இருக்கவியலும்” என்றான்.
பின்னர் பெருமூச்சுடன் “நான் உணர்ந்தது ஒன்று, உரைப்பது பிறிதொன்று” என்றான். “இவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஏற்படும் ஒவ்வாமை ஏன் என்று என் அகம் எப்போதுமே அலைக்கழிகிறது. மைத்துனரே, இவனிடம் மிகப் பிழையாக ஒன்றுள்ளது. இந்த குழந்தைத்தன்மை இவன் பயின்று தேர்ந்திருக்கும் நடிப்பு. இந்திரப்பிரஸ்தத்தில் இவன் ஏவலரிடமும் சூதரிடமும் களியாடுவதை பார்த்திருக்கிறேன். தங்களில் ஒருவர் என இவனை அவர்கள் நம்பச் செய்கிறான். ஆனால் இவன் அவர்களில் ஒருவன் அல்ல. அதை இவன் மிக நன்றாகவே அறிவான்.”
அர்ஜுனன் பல்லைக் கடித்து “இவன் பிறவிநூலைப் பார்த்த நிமித்திகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?” என்றான். திருஷ்டத்யும்னன் மெதுவாக தலையசைத்தான். “இவன் நமது குடியில் தோன்றிய பெருங்கொலையாளன். உடன்பிறந்தார் குருதியில் நீராடி இப்பிறவிப் பணி தீர்த்து விண்ணகம் செல்லவிருப்பவன்” என்றான் அர்ஜுனன். “நிமித்திகர்கள் சொல்வதற்கெல்லாம் என்ன பொருள்? நிமித்திகர்கள் எதையேனும் சொல்லி நம்மை அவ்வாறு எண்ண வைத்துவிடுகிறார்கள். அவர்கள் சொன்னதன்படி இங்கெதுவும் நிகழ்வதில்லை. நாம் அவர்கள் சொன்னவற்றை நிகழ்த்திக்காட்டுகிறோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.
கதவு திறந்த ஏவலன் “உள்ளே வருக!” என்றான். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனின் தோளைத் தட்டி “கவலை ஒழியுங்கள், பாண்டவரே. உங்களுக்குள் மைந்தரைக் குறித்த பெரும்பற்று இருக்கிறது. இந்த சினத்தாலும் வெறுப்பாலும் அதை மூடிக்கொள்கிறீர்கள்” என்றான். “இவன் மீதா? எனக்கா?” என்று அர்ஜுனன் கேட்டான். “உண்மையில் நான் இவனை அஞ்சுகிறேன்.” திருஷ்டத்யும்னன் “வருக!” என அவன் தோளைப்பற்றி உள்ளே இட்டுச்சென்றான்.
சொல்சூழ் சிற்றறையில் மையத்தில் உயர்பீடத்தில் அமர்ந்திருந்த துருபதரை அணுகி தலைவணங்கி சூழ்ந்திருந்த அனைவருக்கும் பொதுவாக பிறிதொரு வணக்கத்தை அளித்துவிட்டு திருஷ்டத்யும்னன் தன் இடத்தில் அமர்ந்தான். சொல்சூழவையில் முறைமைச்சொற்கள் மரபல்ல என்பதனால் துருபதருக்கும் குந்திக்கும் யுதிஷ்டிரருக்கும் தலைவணங்கிவிட்டு பீமனின் அருகே இருந்த பீடத்தில் அர்ஜுனன் சென்று அமர்ந்தான். “நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை சுருக்கமாக அமைச்சர் உரைப்பார்” என்றார் துருபதர். பேரமைச்சர் கருணர் ஆமென தலைவணங்கி “அஸ்தினபுரியிலிருந்து வந்திருப்பது மறுசொல்லோ மாற்றுச்சூழ்கையோ இல்லாத இறுதிக்கூற்று. எதன்பொருட்டும் எந்நிலையிலும் மண்ணை பகுப்பதற்கு துரியோதனருக்கு எண்ணமில்லை. ஆகவே அது குறித்த எந்த பேரத்துடனும் எவரும் அங்கு செல்லவேண்டியதில்லை” என்றார்.
அர்ஜுனன் தாடியை கையால் சுருட்டி அதன் நுனியை முடிச்சிட்டபடி நோக்கியிருந்தான். “அரச முறைப்படி திருதராஷ்டிரர் முத்திரையிட்டு அனுப்பிய ஓலை பாண்டவர்கள் தங்கள் தேவியுடன் அஸ்தினபுரிக்குத் திரும்பவேண்டும் என்றும் நெறிப்படியும் குலமுறைப்படியும் ஆவன செய்யப்படும் என்றும் மட்டுமே சொல்கிறது. தேவைக்கு குறைந்த சொற்களும் தேவைக்கு மிகுந்த சொற்களும் சூது கரந்தவை” என்றார் கருணர். “நெறிப்படி அவர்கள் செய்யவேண்டியதொன்றே. பாண்டவர்கள் விட்டுச்சென்ற இந்திரப்பிரஸ்தநகரியையும் குடிகளையும் கருவூலத்தையும் முழுமையாக திரும்ப ஒப்படைப்பது. பிற அனைத்தும் வீண்மொழிபுகளே.”
“நெறிகளை மேலும் கூர்ந்து சொல்வோமென்றால் அச்செல்வத்தைக் கொண்டும் படைகளைக் கொண்டும் நகரின் சந்தைகளைக் கொண்டும் அவர்கள் ஈட்டிய அனைத்தும் பாண்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட வேண்டும். அந்தச் சொல்லுறுதி அளிக்காமல் நெறி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதே வஞ்சம். நெறிக்குப்பின் குலமுறை என்னும் சொல்வருவது மேலும் நுண்வஞ்சம்” என்று கருணர் தொடர்ந்தார். “முதன்மைநெறியென்பது மானுடம் எங்கும் நிறைந்து வாழும் பொதுநெறிதான். அந்நெறிகளை மீறாமலேயே குலமுறைகள் அமைய வேண்டும், குலமுறைகள் அனைத்தும் பெருநெறியில் இருந்து பெற்றுக்கொண்ட சிறு ஒழுக்கங்கள் மட்டுமே.”
“இந்த ஓலையில் குலநெறி என்னும் சொல் கையாளப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது. குலம் இன்று அவர்களால் ஆளப்படுகிறது. குலத்தலைவர்களில் பெரும்பாலானோர் அவர்கள் ஆணையிடுவதை செய்யவும் கூடும். இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் அங்குள்ள குடியவைகளில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன என்று நாம் அறியோம்” என்றார் துருபதர். அர்ஜுனன் தாடியைத் துழாவிய கைகளுடன் “துரியோதனனின் ஓலை நேரடியாக வந்ததா?” என்றான். “ஆம், நான் அரச முறைப்படி துரியோதனனுக்கு ஓர் ஓலை அனுப்பினேன், எனது மகளின் முடியுரிமையைக் குறித்து அவர் தனிப்பட்ட முறையில் என்ன சொல்கிறார் என்று. அதற்கான மறுமொழி இது” என்றார் துருபதர்.
“ஆக, எந்நிலையிலும் கௌரவர் கொண்டுள்ள நிலம் பிரிக்கப்படமாட்டாது” என்றாள் குந்தி. “பிறகென்ன செய்வது?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “வேறென்ன? நேரடியாகவே ஒரு போர் அறிவிப்புதான் இது” என்றான் பீமன். அவனை கையமர்த்திவிட்டு யுதிஷ்டிரர் “இந்த கொள்விளையாடலில் எங்கும் உளம்மறந்தும் நாபுரண்டும்கூட போர் எனும் சொல் எழவேண்டியதில்லை. சொற்களுக்கு விண்ணிலிருந்து நிகழ்வுகளை கறந்தெடுக்கும் திறனுண்டு. போர் என்று சொல்லுந்தோறும் போரை நோக்கி நகர்கிறோம். ஆகவே இது உடன்பிறந்தார் நிலத்தின் பொருட்டு நிகழ்த்தும் சொல்லாடலே ஒழிய பிறிதொன்றும் அல்ல” என்றார்.
உரத்த குரலில் பீமன் “அஸ்தினபுரியை ஆள்பவனின் தொடையறைந்து கொல்வேன் என்றும் அவன் உடன்பிறந்தானின் நெஞ்சு பிளந்து குருதி குடிப்பேன் என்றும் வஞ்சினம் சொல்லி அந்நகர்விட்டு இறங்கியிருக்கிறேன், மூத்தவரே. அவ்வாறு மட்டுமே நான் இனி அந்நகருக்குள் நுழைவேன். பிறிதெவ்வகையிலும் அல்ல” என்றான். “மந்தா, அவை பதின்மூன்று ஆண்டுகள் பழைய கதைகள். இங்கு அவற்றை பெரிதாக நாம் பேசவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “மூத்தவர் அவையில் நீ சற்று நாமடித்து அமர்ந்துகொள். அரசே, நாம் முடிந்த வரை பேசுவோம். எந்த எல்லைவரைக்கும் பேச முடியுமோ அந்த அளவுக்கு தணிவோம். இத்தருணத்தில் நாம் செய்யக்கூடியது அது ஒன்றே” என்றார்.
பீமன் “ஆம், இன்னும் பதினைந்தாண்டுகள் பேசுவோம். அதற்குள் நாம் மண் மறைவோம். நமது குலமைந்தர் சென்று கேட்பதற்கு நில உரிமை என்று எதுவும் எவர் நினைவிலும் எஞ்சாது” என்றான். திருஷ்டத்யும்னன் “நானும் இளைய பாண்டவர் சொல்வதையே எண்ணுகிறேன். முற்றுமுடிவாக சொல்லப்பட்ட மொழிக்கு முன்னால் நின்று மீண்டும் சொல்லெடுப்பதில் ஒரு பொருளுமில்லை. அது இரப்பதாகவே பொருள் கொள்ளப்படும். நிலத்தை இரந்து பெறுவது ஷத்ரிய அறமல்ல” என்றான். உரத்த குரலில் யுதிஷ்டிரர் “உடன்பிறந்தான் சங்கை அறுத்துக் கொல்வதுதான் ஷத்ரிய முறையா?” என்றார். திருஷ்டத்யும்னன் “ஆம், அமைந்த குடியறத்தின்பொருட்டும் தலைக்கொண்ட தன்னறத்தின்பொருட்டும் இயற்றப்படுமென்றால் அது ஷத்ரிய முறைதான். அதிலென்ன ஐயம்?” என்றான்.
துருபதர் “நாம் நமக்குள் பூசலிட்டுக்கொள்வதில் பொருளில்லை. அங்கிருக்கும் எனது ஒற்றர்கள் கூறுவதைக்கொண்டு பார்த்தால் என் உள்ளம் ஆழத்தில் எதை ஐயுறுகிறதோ அதுவே உண்மை என்று தெரிகிறது. அந்நிலத்தை எந்நிலையிலும் துரியோதனன் விட்டுத்தரப்போவதில்லை” என்றார். “பிறகென்ன? படைகள் எழட்டும்” என்றான் பீமன். “மூத்தவரே, நான் வெல்வேன் என்பதில் எனக்கு ஐயமில்லை. இச்சொல்லாடல்கள் ஒவ்வொன்றும் என் வீரம் மீது முன்வைக்கப்படும் ஐயங்களென்றே கொள்கிறேன்.”
“பொறு, மந்தா” என்றபின் யுதிஷ்டிரர் “அங்கே இருப்பவன் என் உடன்பிறந்தான். அறம் அறிந்த அவன் தந்தை அவனுக்கு நிழலென்றிருக்கிறார். அவருடைய உளச்சான்றென அகத்தளத்தில் மூத்த அன்னை இருக்கிறார். குருவின் குடிமரபின் நீட்சியென பிதாமகர் பீஷ்மரும் நம்மனைவருக்கும் நெறி கற்பித்த ஆசிரியர் துரோணரும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கடந்து அங்கு நெறிமீறல் ஏதும் நிகழப்போவதில்லை. நம் சொற்கள் அவர்கள் முன்சென்று சேரட்டும். தௌம்யரை அனுப்புவோம். அவர் அந்தணர். குருவின் குடியை அறுபது தலைமுறைக்காலமாக பேணிவரும் குலத்தை சார்ந்தவர். அவர் சென்று பேசட்டும்” என்றார்.
துருபதர் “மீண்டும் அதே சொற்களைத்தானே சொல்லவிருக்கிறோம்?” என்றார். தருமன் “உடன் சௌனகரும் செல்லட்டும். அவை அமர்ந்து அளித்த சொல்பாட்டை அவர்கள் மீறுவார்கள் என்றால் அவர்கள் எதை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று எடுத்துரைப்போம்” என்றார். பீமன் “எதை எதிர்கொள்ளப்போகிறான் முதல் கௌரவன்? போரையா? அச்சொல்லை உரைக்காமல் சௌனகர் பேசப்போகிறாரா?” என்றான்.
யுதிஷ்டிரர் “போரல்ல, எந்த அரசனும் தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் என்னும் பெயரையே முதலில் ஈட்டவேண்டும். தன் சொல்லை தானே துறந்தவன் என்றால் அப்பழியிலிருந்து துரியோதனன் மீளமுடியாது. நாளை அவன் குடிகளும் படைகளும் அவனை முழுஉள்ளத்துடன் ஏற்க மாட்டார்கள். எண்ணிநோக்குக, வருங்காலத்தில் பிறிதொரு மன்னனுக்கு அவனொரு சொல்லளிக்க முடியுமா? எதிரியிடம் அமர்ந்து பேச ஓர் அமைச்சனை அனுப்ப முடியுமா? அரசனின் சொல் அவனுடைய நுண்வடிவேதான். நாவிலிருந்து செவிக்கென பறப்பது. நினைவுகளில் புதைந்து முளைத்தெழுவது. அவன் இறந்தாலும் அழியாது எஞ்சுவது. அதை மறுப்பவன் தன்னை அழித்துக்கொள்கிறான். தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று அவனிடம் சௌனகர் சொல்லட்டும்” என்றார்.
திருஷ்டத்யும்னன் “மூத்தவரே, இதெல்லாம் தெரியாதவராக இருக்கிறார் துரியோதனர் என்று எண்ணுகிறீர்களா?” என்றான். யுதிஷ்டிரர் “மனிதர்கள் கற்தூண்கள் அல்ல. தருணங்கள் ஆடும் ஆடிப்பரப்புகள் அவர்கள். மானுடரின் நிலையின்மையை புரிந்துகொள்ளாதவன் அவர்களை வெறுப்பவனாகவே ஆவான். அந்த அவையில் அத்தருணத்தில் அப்படி அவன் வெளிப்பட்டிருக்கலாம். பிறிதொரு தருணத்தில் மேலும் பெரியவனாக அவன் எழக்கூடும். அதற்கான வாய்ப்பை நாம் அவனுக்கு அளிப்போம். அதை அளித்தோம் என்று நாளை நாம் நம்மை எண்ணி நிறைவு கொள்ளவேண்டும்” என்றார்.
“இளையோரே, இதோ அன்னைமுன் அமர்ந்து சொல்கிறேன், என்னிடம் வஞ்சம் என ஏதுமில்லை. என் இளையோன் என முதற்கௌரவனை தோள்தழுவவே விழைகிறேன். எந்நிலையிலும் போர் தவிர்க்கப்படவேண்டும். பதின்மூன்று ஆண்டுகள் காட்டில் அலைந்தும் கந்தமாதன மலையுச்சியின் கனல்வடிவ முதல்முழுமையைக் கண்டும் நான் அறிந்த மெய்மை ஒன்றே, கனிவதனூடாகவே அடையவும் அறியவும் கடக்கவும் முடியும். கனியாதவன் வாழாதவனே” என்றார் தருமன்.
அவை அமைதியாக இருந்தது. திரௌபதி உடல் மெல்ல அசையும் ஓசை கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர். பெரிய இமைகள் சரிந்தமையால் விழிகள் மூடியிருப்பதுபோல் தோன்ற தாழ்ந்த குரலில் “தௌம்யரின் தூதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்தணர் தூது செல்வதென்பது எவ்வகையிலும் அவர்களின் உள்ளங்களை மாற்றப்போவதில்லை. அவையில் ஒலிக்கும் வழக்கமான அறவுரைகளாகவே அது மறையும். அங்கு சென்று ஒலிக்கவேண்டிய குரல் நம்மில் ஒருவருடையது. நாமோ நமது நிலம் கொள்ளாது அங்கு நுழையமாட்டோம் என்று வஞ்சினம் உரைத்திருக்கிறோம். நமது குரலென அங்கு ஒலிக்கும் பிறிதொரு குரல் இளைய யாதவருடையது மட்டுமே” என்றாள்.
அர்ஜுனன் “ஆனால் அவர்…” என்று தொடங்க குந்தி “அவன் விழித்தெழுந்துவிட்டான். பேருருக்கொண்டு பாணாசுரனை வென்று அங்கிருந்து இங்கு வந்துகொண்டிருக்கிறான்” என்றாள். “இங்கா? எப்போது கிளம்பினார்?” என்றபடி அர்ஜுனன் எழுந்தான். “இங்கு வரும்படி செய்தி அனுப்பினேன். அவன் வந்தபின் முடிவெடுப்போம்” என்று குந்தி சொன்னாள். துருபதர் “அவர் என்ன சொல்லப்போகிறார்? அவர்களை அவர் எங்கே சந்திப்பார்?” என்றார். “அவர்களை இளைய யாதவர் சந்திக்க ஓர் அவையை நாம் அமைப்போம். அவர் சொல்லெடுக்கட்டும். நம்பொருட்டு நம் மூதாதையரும் குலதெய்வங்களும் ஒருங்கிணைந்து பேசுவதற்கு நிகர் அது” என்றாள் திரௌபதி.
திருஷ்டத்யும்னன் “இன்று அவர் இருக்கும் நிலை என்னவென்று யாதவப் பேரரசிக்கு தெரியுமா? அவரது மூத்தவர் தலைமையில் யாதவர்களின் ஐங்குலங்களும் அவரை கைவிட்டிருக்கின்றன. அவர் மைந்தன் பிரத்யும்னனும் உற்ற துணைவர் சாத்யகியுமன்றி படைத்தலைவர்கள் எவரும் அவருடனில்லை” என்றான். “அவர் துவாரகையை தக்கவைத்துக்கொள்ளவே புதிய படைகளை திரட்டியாகவேண்டிய நிலையில் இருக்கிறார்.”
“நாமும் படையற்று தனித்திருக்கிறோம்” என்றார் தருமன். திருஷ்டத்யும்னன் ”மூத்தவரே, பாஞ்சாலத்தின் படைகள் என் தமக்கைக்கு உரியவை. அஸ்தினபுரியை களத்தில் எதிர்கொள்வதற்கு நமது படையே போதுமானது” என்றான். “அதை நீர் சொல்வீர் என அறிவேன், மைத்துனரே. ஆனால் சென்ற பதின்மூன்று ஆண்டுகள் அவர்கள் வீணே கழிக்கவில்லை. படைபலத்தை பெருக்கியிருக்கிறார்கள். கருவூலத்தை நிறைத்திருக்கிறார்கள். அதற்கும் அப்பால் சென்று கங்கைப் பெருநிலத்து ஷத்ரியர் அனைவருக்கும் அவர்களே தலைவர்கள் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இன்று ஒரு போர்முரசு கொட்டினால் அவர்களுடன் சென்று சேர்ந்துகொள்ள ஆரியவர்த்தத்தின் அரசுகள் ஒருங்கியிருக்கின்றன” என்றார் யுதிஷ்டிரர்.
“அவர்கள் அனைவருக்கும் பொது எதிரி நாமல்ல, இளைய யாதவர் மட்டுமே. நம்பொருட்டு துரியோதனரிடம் இளைய யாதவர் மன்றுபேசச் செல்வாரென்றால் அது ஒன்றே போதும், அவர்களுக்கு நாம் இளைய யாதவரின் படை என்று காட்ட. அரசுசூழ்தலின் முறைப்படி நாம் இன்று நம்மிடம் இருந்து இளைய யாதவரை முற்றிலும் விலக்கி வைத்தாகவேண்டும். இளைய யாதவர் பேசிக்கொண்டிருக்கும் வேதப்பூசல்களிலோ யாதவ குலச் சண்டைகளிலோ நமக்கு பங்கேதும் இல்லை என்று தெளிவுபடுத்த வேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இன்று ஷத்ரியராகிய துரியோதனர் அளித்த சொல் மதிப்புள்ளதா இல்லையா என்ற வினா மட்டுமே எழவேண்டும். பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அதற்கு என்ன மறுமொழி சொல்கிறார்கள் என்பது மட்டுமே நமது தரப்பாக இருக்க வேண்டும்.”
“இளைய யாதவர் நம்பொருட்டு முன்னிற்க வேண்டியதில்லை என்றே நானும் எண்ணுகிறேன். அவர் மீது ஷத்ரியர்களுக்கு இருக்கும் பெருஞ்சினத்தை பாண்டவர்கள்மேல் நாம் இழுத்துவிட வேண்டியதில்லை” என்றார் துருபதர். அர்ஜுனன் “இளைய யாதவர் நமக்கெனப் பேசுவதா வேண்டாமா என்பதை இந்த அவை முடிவு செய்யட்டும், அதில் எனக்கு சொல்லில்லை. ஆனால் இளைய யாதவரிடமிருந்து நான் என்னை பிரித்துக்கொள்ள வேண்டும் என்று மண்ணில் எவரும் எனக்கு சொல்ல வேண்டியதில்லை. தந்தை வடிவமாக இங்கிருக்கும் மூத்தவரும் ஈன்ற அன்னையும் என் குருதியினரும்கூட அதற்கு உரிமைகொண்டவர்கள் அல்ல. நான் இப்பிறவியை அவருக்கு அளித்தவன்” என்றான். பீமன் “எனக்கும் பிறிதொரு சொல்லில்லை. வாழ்வதும் இறப்பதும் அவர்பொருட்டே” என்றான்.
யுதிஷ்டிரர் “அவர்கள் இருவரும் இளைய யாதவருக்கு தன்படையலிட்டவர்கள் என்பது தங்களுக்கும் பாரதவர்ஷத்தவர் அனைவருக்கும் தெரியும். எனக்கு அவன் இளைய யாதவன் மட்டுமே. ஆனால் பாஞ்சாலரே, அவன் முன்வைக்கும் அந்த மெய்மையின்பொருட்டு என் அரசையும் துணைவியையும் இளையோர் அனைவரையும் மைந்தர்நிரையையும் கொடிவழிகளையும் புகழையும் விண்ணுலகையும்கூட துறக்க சித்தமாக இருக்கிறேன்” என்றார். “ஏனென்றால் கந்தமாதன மலையிலேறி நான் கண்டது அனலுருக்கொண்டெழுந்த அவன் சொற்களையே.”
விழிகள் சரிந்திருக்க தன் அருகே நின்றிருந்த எவரிடமோ சொல்வதுபோல தாழ்ந்த குரலில் யுதிஷ்டிரர்“இங்கு இத்தனை பொழுது என் குலம் குருதிப் பூசலில் இறங்கலாகாது என்று விழைந்தேன். போர் நிகழ்ந்து மண் சிவக்கக்கூடாதென்று அஞ்சியே சொல்லெடுத்தேன். ஆனால் அவன் சொல்லும் அம்மெய்மைக்காக இப்பாரதவர்ஷமே முற்றழியுமென்றால் அதுவே ஆகட்டும் என்றே எனது மறுமொழி இருக்கும்” என்றார்.
குந்தி பதைப்புடன் அவர்களை மாறிமாறி நோக்கினாள். திரௌபதி தழைந்த விழிகளுடன் ஊழ்கச்சிலையென அமர்ந்திருந்தாள். துருபதர் சில கணங்களுக்குப்பின் மெல்ல பீடத்தில் சாய்ந்து “இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். உளம் விம்மியெழ அபிமன்யூ இதழ்களை இறுக்கி விம்மலை வென்றான்.