எழுதழல் - 22
மூன்று : முகில்திரை – 15
பிரத்யும்னன் தன் படையை முதலைச் சூழ்கையென அமைத்திருந்தான். முதலையின் கூரிய வாயென புரவி நிரையொன்று ஆசுர நிலத்தை குறுகத்தறித்து ஊடுருவியது. அதன் இரு கால்களென வில்லவர் படை இருபுறமும் காத்துச் சென்றது. முதலையின் நீண்ட எலும்புவால் என யாதவக் காலாள்படை பின்னால் நெடுந்தூரம் நெளிந்து வந்துகொண்டிருந்தது. குளம்படியோசைகளும் போர்கூச்சல்களும் கொம்புகளின் பிளிறல்களும் கலந்த முழக்கம் காட்டுக்குள் கார்வையை நிறைத்தது.
ஆசுர நிலத்தின் அனைத்துக் காவல்மாடங்களிலும் எச்சரிக்கை முரசுகள் முழங்கத்தொடங்கின ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு ஒலிதொடுத்து அவை நெடுந்தொலைவுக்கு விரிய கரட்டுப்பாறைகளைக் கவ்வி உயர்ந்த மரங்களாலான கான்விரிவில் ஆங்காங்கே பரவியிருந்த பன்னிரண்டு படைநிலைகளிலிருந்தும் அத்தனை படைகளும் போர்முரசுகள் முழங்க ஒலியால் தங்களை தொகுத்துக்கொண்டபடி சூழ்ந்து அணைந்தன. அவை ஒன்றுடன் ஒன்று உடல்கோத்துக்கொள்வதற்குள்ளாகவே ஓசைகளால் வானில் அவற்றின் உளவிசைகள் ஒன்றாகி எழுந்து பொழியத்தொடங்கின.
பிரத்யும்னனுடன் இணைந்துகொண்ட அபிமன்யூ இரு காவலர்களால் பின்நிரைக்கு இட்டுச் செல்லப்பட்டான். கால்களில் பாய்ந்த அம்புகளை அகற்றி மெழுகுக்கட்டு போட்டுக்கொண்டு புதிய புரவியிலேறி மீண்டும் முதலையின் மூக்குக்கு வந்தான். பிரத்யும்னன் முதலையின் வாலின் நுனியில் இருந்தான். கால்களென அமைந்த வில்லவர் படைகளை யாதவப் படைத்தலைவர்களான பத்மனும் சக்ரனும் நடத்தினர். “சென்றுகொண்டே இருங்கள். எத்தனை தொலைவுக்கு ஆசுர நிலத்தை இரண்டாக பிரிக்கிறோமோ அத்தனை தொலைவுக்கு அவர்கள் ஆற்றல் குறைகிறார்கள். ஒருங்கிணைந்து போரிடும்பொருட்டு வகுக்கப்பட்டது அவற்றின் சூழ்கை… நெடுகப் பிளக்கப்பட்ட அவை உதிரித் திரள்களாக எஞ்சும்” என்று அபிமன்யூ கூவினான். “செல்க! செல்க! செல்க!” என முழவுகள் ஆணையிட்டன.
ஆசுரப் படைநிலைகள் அனைத்தும் இரு அலைகளென இருபுறமும் முதலைமூக்கை தாக்கின. அவர்களை பின்னிருந்து தாக்கின முதலையின் கால்கள். மிக விரைவிலேயே உச்சகட்ட போர் தொடங்கிவிட்டது. காடுகளுக்குள் இரு படைகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி பேரொலியெழுப்பின. மரங்கள் உலைய, பறவைக்குலங்கள் எழுந்து வெருண்டு வானில் சுழல, விலங்குகளின் ஓலங்கள் கலந்து முழங்க போர் ஒவ்வொரு கணமும் என உச்சம் கொண்டது. இருபுறமும் நிகராக வீரர்கள் விழுந்துபடுவதை அபிமன்யூ கண்டான். எண்ணிக்கையாலேயே அசுரர்கள் மேலும் எழுந்து கொண்டிருந்தனர். முதலைமுகம் பிளவுமரப் பொறியில் என சிக்கிக்கொண்டது. அசுரர்களின் அம்புகள் நெடியவையாகவும் அவர்களின் தோள்கள் விசைமிக்கவையாகவும் இருந்தன. அம்பு பட்ட எவரும் உயிர் எஞ்ச மீளவில்லை. பல இடங்களில் யாதவர் மண்ணில் ஆழப்பதிந்த அம்பில் கழுவேற்றப்பட்டதுபோல கோக்கப்பட்டிருப்பதை அபிமன்யூ கண்டான். யாதவப்படை நீரை அணுகிய நெருப்பென நுனிவளைவுகள் கருகி அணைந்துகொண்டிருந்தது.
முதலையின் வால் வளைந்து வந்து அறைந்து தாக்குகையில் அசுரப்படைகள் சிதறுமென அவன் எதிர்பார்த்திருந்தான். மேலும் மேலும் அசுரப்படைகளின் தாக்குதல் கூடிக்கொண்டே சென்றது. முதலை தன் முன்னங்கால்களால் தன் முகத்தைப்பற்றிய பொறியின் பிடியை அறைந்து உடைக்க முயன்றது. மேலும் மேலும் திமிறித்திமிறி சிக்கிக்கொண்டது முதலை. அதன் முன்கால்களின் விரைவு குறைந்தது. பின்னர் அது நிலைத்து பின்னகரத் தொடங்கியது. “பின்னகரலாகாது. பின்னகர்வது கொலைக்குரிய குற்றம். பின்னகர்பவர்களை பின்னாலிருப்பவர்கள் வெட்டிச்சாய்க்கவேண்டும்… ஆணை” என்று அபிமன்யூ கூவினான். “இளவரசே, பின்னகர்வதும் போரே… உயிரோடிருப்பதே போரில் முதல் முறைமை” என்றான் அவனுடன் வந்த படைத்தலைவனாகிய பீதாம்பரன்.
“பின்னகரும் படை உள்ளத்தால் மேலும் விரைவாக பின்னகர்ந்து கொண்டிருக்கிறது” என்றான் அபிமன்யூ. “பின்னகரத் தொடங்கிய படை நில்லாது. பின்னகருந்தோறும் எதிரி ஒன்றுகூடுவது வலுப்பெறும்” என்றான். “நின்று பொருதுக! அத்தனை மரங்களிலும் அத்தனை பாறைகளிலும் ஒளிந்துகொள்க! பிரத்யும்னரின் முதலைவால் வந்து அறையும் வரை இப்போரை இங்கு நிலைகொள்ளச் செய்வது நம் கடமை…” அவர்களைச் சூழ்ந்து சிட்டுத்திரள் என அம்புகள் மூச்சுசீறச் சென்று மரங்களில் தைத்து அதிர்ந்தன. புரவிக்குளம்புகள் மிதித்து தழைத்த புதர்களில் ஊன்றின. மண்ணில் தைத்து புதைந்தன.
யாதவர் மிகத் திறமையாக மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து போரிட்டாலும்கூட அசுரப் படைகள் வளைந்து சூழ்ந்துகொண்டதனால் புரவிகளின் விலாக்களைக் கண்டு அம்பு தொடுக்க முடிந்தது. புரவிகளைத் தாக்குவதற்கென்று பெரிய உலோக நாக்குகொண்டு நீண்ட அம்புகளை அசுரர் வைத்திருந்தனர். அவற்றில் கந்தகம் பூசப்பட்டிருந்தமையால் அம்பு தைத்ததுமே வலியுடன் அலறி துள்ளிக்குதித்துச் சுழன்ற புரவிகள் சூழ்ந்திருந்த அனைவரையும் நிலைகலக்கி காட்டிக்கொடுத்தன. நச்சு அம்புகள் பட்ட யாதவ வீரர்கள் மெல்லிய மூச்சொலியுடன் மண்ணில் உதிர்ந்தனர்.
பீதாம்பரன் “இன்னும் கால் நாழிகைப்பொழுதுகூட நம் படை நிற்காது. படைகளின் ஒலியிலேயே வீழ்ச்சி தெரிகிறது” என்றான் . “கொல்லுங்கள்! தாக்குங்கள்! வெல்லுங்கள்!” என்ற ஒலிகள் நின்றுவிட “வலத்தே ஒளியுங்கள்! பாறைகளுக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள்! மரங்களுக்குப் பின்னால் முற்றிலும் புரவிகளை ஒதுக்குங்கள்!” என்று தற்காப்பு ஒலிகளே சூழவும் கேட்டுக்கொண்டிருந்தன. அபிமன்யூ “தாக்குக! முன்னேறுக!” என்று வில்லைத் தூக்கியபடி கூவினான். அவன் குரலை வாங்கி முரசொலியாக மாற்றி படைகளுக்கு அளித்துக்கொண்டிருந்தான் அப்பால் இருந்த முரசுக்காவலன். அவ்வொலியே அசுரரின் அம்பை ஈர்க்க முரசுடன் உருண்டு அவன் கீழே விழுந்தான். “எங்கு சென்றிருக்கிறார்? இங்கு நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்று அவருக்கு அறிவிக்கலாமா?” என்றான் பத்மன். “அசுரப் படைகளில் ஒரு சிலருக்கேனும் நமது முழவுச்சொல் தெரியும் என்றால் நாம் உதவிகோருகிறோம் என்பதே பணிகிறோம் என்ற சொல்லுக்கு நிகராக மாறும். அவர்கள் நமது சரியும் விசையை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதனால்தான் இன்னும் போர் நிகழ்கிறது. இங்கே எழுச்சி ஒலியன்றி எதுவும் ஒலிக்கலாகாது” என்றான் அபிமன்யூ.
ஒவ்வொரு சொல்லுக்கும் அவனிடமிருந்து அம்புகள் சென்று அசுரர்களை வீழ்த்திக்கொண்டிருந்தன. “ஆணையிடுங்கள், இளவரசே! இன்னும் சிறுபொழுதிலேயே நாம் முற்றிலும் வீழ்த்தப்பட்டுவிடுவோம். நமது படைகள் பாதியாக குறைந்துவிட்டன. முதலையின் கால்கள் சிதறி பின்னகர்ந்துவிட்டன. தனிமைப்பட்டுவிட்டிருக்கிறோம்” என்றான் பீதாம்பரன். “இல்லை, பின்வாங்குதல் என்னும் எண்ணத்திற்கே இடமில்லை. போரிடுக! எஞ்சியவர்களை ஒருங்கிணைத்துக்கொள்க! முழு விசையுடன் தாக்குக!” என்றான் அபிமன்யூ. “எத்தனை பொழுது? இன்னும் எத்தனை பொழுது?” என்றான் பீதாம்பரன்.
“போரில் உச்சகணம் என்று ஒன்று உண்டு. அங்கு எவ்வளவு நேரம் நிற்க முடிகிறது என்பதே வீரம் எனப்படுகிறது” என்று அபிமன்யூ சொன்னான். “இன்னும்! இன்னும் முன்னேறுங்கள்! புதுவிசையுடன் சேர்ந்து முன்னெழுக! இத்தருணத்தில் நாம் ஒரு காலடியை முன்வைத்தால் நம் உள்ளத்தில் பல காதம் முன்னகர்ந்தவர்களாவோம். இழந்த விசையை ஏழு மடங்கு திரும்பப் பெறுவோம்” என்றான். “இனி சொற்கள் நம் படைகளிடம் சென்று சேராது, இளவரசே” என்றான் பீதாம்பரன். அபிமன்யூ திரும்பிப் பார்த்தபின் தன் புரவியை சவுக்கால் அறைந்து குதிமுள்ளால் குத்தி கூச்சலிட்டு எழச்செய்து குளம்பொலி முழங்க பாய்ந்து அருகே நின்ற பாறைக்குமேல் சென்றான். தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து மும்முறை ஊதினான். “முன்னேறுக! முன்னேறுக! முன்னேறுக!” என்று அது ஓசையிட்டது.
“இளவரசே, தாங்கள் எதிரிகளுக்கு கொலைமேடையிலென காட்சி கொடுக்கிறீர்கள்!” என்று சக்ரன் கூவினான். அபிமன்யூவை நோக்கி அம்புகள் பாய்ந்து வந்தன. அவன் வில் அனல்பட்ட நாகமென நெளிந்து துடிக்க அம்புகள் நீர்பட்டு வெடிக்கும் பந்தத்திலிருந்து பொறிகளென அவனிடமிருந்து கிளம்பின. அவன் புரவி இரு கால்களையும் தூக்கி கனைத்தபடி பாய்ந்து இறங்கி மரக்கிளைகளை ஒடித்து வளைத்தபடி முன்னால் சென்றது. அவன் அம்புகள் பட்டு அசுரர்கள் அலறிவிழும் ஒலி கேட்டது. அவனுக்குப் பின்னால் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த யாதவ வில்லவர்கள் அத்தருணத்தில் எழுந்த வெறியுடன் “வெற்றிவேல்! வீரவேல்! ஆழி வாழ்க! வெண்சங்கு வாழ்க!” என்று கூவியபடி புரவிகளில் எழுந்து அம்புகள் பெய்து அபிமன்யூவைத் தொடர்ந்து சென்றனர்.
யாதவப் படைகளின் அவ்வெழுச்சி அசுரப்படைகளுக்கு மேலும் புதிய பெரும்படையொன்று அங்கு வந்துவிட்டதோ என்ற உணர்வை அளிக்க அவர்கள் ஒருவரோடொருவர் படைக்கலங்களும் கவசங்களும் முட்டி ஒலிக்க பின்னகர்ந்தனர். மேலும் மேலுமென வந்த அம்புகள் அவ்வச்சத்தை பெருக்க கணம் கணமாக அவர்கள் அச்சமும் குழப்பமும் கொண்டு பெருகிப் பின்னகர்ந்தனர். அவ்வச்சமே அவர்களை வெறும் அம்புக்கான இலக்குகளாக ஆக்கி நிலத்தில் சரித்தது. தோழர்கள் விழும்தோறும் அவர்கள் அச்சம் பெருகியது. போர் வெறி யாதவர் புலன்களை உச்சத்திற்கு கொண்டுசென்றது. ஒவ்வொரு அம்பையும் தனித்தனியாக பார்த்து விலக்கும் ஊழ்க நிலையை உள்ளம் அடைந்தது.
அச்சம் அசுரரின் அனைத்துப் புலன்களையும் மூடி பின்னகர்வதொன்றே குறி என்றாகியது. அவர்கள் கொண்ட பயிற்சிகளையும் படைக்கலன்களையும் கேடயங்களையும் அகற்றி வெற்றுடம்பென யாதவர்களுக்கு முன் நிறுத்தியது. அம்புகளுக்கு முன் ஊழால் செலுத்தப்பட்டு பணிபவர்கள்போல நிரை நிரையாக வந்து விழுந்து மடிந்துகொண்டிருந்தார்கள். அப்போரை ஒருகணம் உளவிலக்கத்துடன் நோக்கியபோது அபிமன்யூ அசுரர்கள் ஓடிவந்து தங்கள் நெஞ்சைக்காட்டி அம்பை வாங்கி பலிக்கொடை அளிப்பதுபோல் உணர்ந்தான். பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டு அதன்படி நிகழும் ஒரு தொல்சடங்கு என்றே அது தோன்றியது. ஒவ்வொரு விழியையும் நோக்கி மிருத்யூதேவி ஓசையிலாது ஆணையிட்டாள். “பணிக… படையலாகுக!”
யாதவப் புரவிகள் விழுந்த அசுரர்கள் உடல்களின்மேல் மிதித்து மேலே சென்றன. அசுரப் படைகள் குவிந்து அணுகியதற்கு எதிர்திசையாக விரிந்து அகன்றன. படைகள் விலகுவதை தடுக்கும்பொருட்டு கூச்சலிட்டுக்கொண்டே இருந்த அசுரப் படைத்தலைவர்கள் அதை தவிர்க்கமுடியாதென்று உணர்ந்து திரும்பியபோது யாதவர்களுக்கு மேலும் படைகள் வரவில்லையென்று புரிந்துகொண்டனர். படைத்தலைவன் சிம்ஹன் தன் சங்கை ஒலித்து படைகளை இரு பிரிவாகப் பிரித்து மேலும் விரைவாக பின்னகர வைத்தான். அப்போர்முகத்திலிருந்து எத்தனை விரைவாக அவர்கள் அகன்று செல்கிறார்களோ அத்தனை விரைவாக அங்கிருக்கும் மாயமொன்றிலிருந்து விடுபடுவார்கள் என்று அவன் அறிந்திருந்தான்.
அங்கே மிருத்யூதேவி யாதவர்களிடம் எழுந்தபின் அவர்கள் கொல்பவர்களாகவும் அசுரர்கள் வீழ்பவர்களாகவும் மட்டுமே திகழ முடியும். அதிலிருந்து விலகியதுமே அம்மாய வளையத்திற்குள் என்ன நிகழ்ந்தது என்பதை அவர்கள் உள்ளம் பிரித்தறியத் தொடங்கும். நாணமும் அதிலிருந்து சினமும் எழ வெறியென அவற்றை மாற்றிக்கொண்டு அவர்கள் நின்றுவிடுவார்கள். அத்தருணத்தில் மிகச் சரியாக எழும் அறைகூவல் அவர்களை பற்றிக்கொள்ளச் செய்யும். எரியென எழுந்து முன்னேறுவார்கள். காடுகளுக்குள் பின்னகர்ந்த அசுரர்கள் ஒருவரை ஒருவர் தோள்முட்டி ஒருங்கிணைந்தனர். ஒவ்வொருவரும் பிறரை உணர உணர அதுவரை அச்சத்தால் முற்றிலும் தனித்தவர்களாக இருந்தவர்கள் மீண்டும் திரள் என ஆயினர்.
படை என்ற தொகைவிசையில் இருந்து தனித்தவர்களாகி, எங்கிருக்கிறோம் என்றும் எதை ஆற்றுகிறோம் என்றும் அறியாது விழியும்செவியும் இழந்தவர்களாக மாறியவர்கள் திரளென்றானதும் அப்பெருக்கின் ஒற்றை விழியும் ஒற்றை செவியும் கொண்டு பேருருவமாயினர். ஒரு சொல்லும் உரைக்கப்படாமலேயே யாதவர்கள் தங்களைவிட சிறியபடை என்றும் விசையால் மட்டுமே வல்லமைகொண்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் புரிந்துகொண்டனர். அவ்வெண்ணத்தாலேயே மிக உறுதியாக தொகுக்கப்பட்டு வலுவான படையென்றாகி சீரான விரைவுடன் மீண்டும் அணுகி வந்தனர்.
அசுரப் படைகள் தங்கள் முன்னிலிருந்து சிதறி அகன்று செல்லும்தோறும் மேலும் விசை கொண்டு முன்னேறி வந்த யாதவர் மெல்ல எங்கோ ஒருபுள்ளியில் விசை இழந்து தளரத்தொடங்கினர். அவ்விசை அணையத்தொடங்கிய அத்தருணம் அனைவரிலும் ஒரே கணத்தில் நிகழ்ந்தது. அத்தனைபேரும் தாங்கள் சிறியபடை என்னும் எண்ணத்தை அடைந்தனர். வெற்றி என்பது கொலையும்தான் என்பதனால், கொலை மானுடருக்குள் ஆழத்தில் உறையும் ஒன்றை சலிப்பும் துயரும் கொள்ளச் செய்கிறது என்பதால், கணம் தோறும் அவர்களின் உள்ளம் தளர்வுற்றது. உடல் நாண் தொய்ந்தது. அதை அறிந்த புரவிகள் நடைதளர்ந்தன. அவர்களின் படை ஒவ்வொருவரும் கொண்ட முன்னெழு விசையாலேயே அவ்வடிவத்தை அடைந்திருந்தது. அம்புவடிவம் என்பது பாயும்விசையின் விழித்தோற்றம். விசை தளரத்தொடங்கியதுமே அம்பு வடிவு நெகிழ்ந்து பிறை என்றாகியது. மேலும் பரந்து கொடியென நெகிழ்ந்தாடியது.
வடிவு தளர்ந்த படைசூழ்கை ஒவ்வொரு கணமும் அதன் வீரர்களை வெறும் திரளென்று ஆக்குகிறது. கோக்கும் சரடறுந்த மாலையென அதன் உறுப்புகள் ஒவ்வொன்றும் சிதறத்தொடங்குகின்றன. மிக விரைவிலேயே ஒவ்வொரு யாதவப் படைவீரனும் தனியன் என்றானான். அக்கணம் வரை அவனை ஏந்தி வந்த பேரலையிலிருந்து விலகி பொருளிழந்து உதிர்ந்தான். விழியிழந்து செவியிழந்து காட்டுக்குள் முட்டி மோதத்தொடங்கினான் அசுரர்களின் அம்புகள் அவர்களை வீழ்த்தலாயின. தன்னைச் சுற்றிலும் யாதவர்கள் புரவியிலிருந்து அலறி விழுந்துகொண்டிருப்பதை அபிமன்யூ பார்த்தான். மீண்டுமொரு பாய்ச்சலென்பது கடலலையின் உச்சிவளைவில் காலூன்றி மீண்டும் பாய முயல்வது போல. ஆனால் மீண்டும் பாய்ந்தாக வேண்டும். தன் உளவிசை ஒன்றினாலேயே இவர்களை முன்தூக்க முடியும்.
அவன் எண்ணியதை உணர்ந்தவன்போல “இளவரசே, மீண்டும் பாயவேண்டாம். அது தற்கொலை என்றாகும்” என்றான் பீதாம்பரன். “நாம் போராடியாக வேண்டும்… முன்னகர்ந்தாக வேண்டும்” என்றான் அபிமன்யூ. தன்புரவியை சவுக்கால் அடித்து “முன்னேறுக!” என கூவினான். அத்தருணத்தில் அவர்களுக்குப்பின்னால் முழவுகளும் கொம்புகளும் போர்க்கூச்சல்களும் இணைந்த பெருமுழக்கம் எழுந்தது. சக்ரன் “முதலை வால் சுழற்றி அறைகிறது!” என்று கூவினான். பத்மன் “ஆம். இப்போர் முடிந்துவிட்டது” என்றான்.
காட்டை தன் காலடியில் பரப்பியிருக்கும்படி ஓங்கி வான் தாங்கி நின்றிருக்கும் வேங்கைப்பெருமரம் கடை புழங்கி பிற மரங்களை சுள்ளிகளென ஒடித்தபடி நிலம் அறைந்து விழுவதுபோல பிரத்யும்னனின் படை அசுரப்படைகளை சிதறடித்தபடி ஆசுரத்திற்குள் புகுந்தது. முதலையின் முகத்தையும் முன்கால்களையும் கவ்வி உதறிக் கிழித்துக்கொண்டிருந்த அசுரப்படைகளின் முதுகை முதலை வால் சுழற்றி அடித்தது. எலும்புவாலின் அடியால் நொறுங்கிச் சிதறி காடெங்கும் பரவினர் அசுரர். யாதவப்படைகளின் படைப்பயிற்சியும் செய்தித்திறனும் எண்ணிக்கையும் அசுரர்களைவிட மிகுதியாக இருந்தன. அசுரர்களோ தங்கள் எண்ணிக்கையாலும் குருதிவெறியாலுமே போரில் ஆற்றல் கொள்பவர்கள். அவையிரண்டும் பொருளற்றவையென்றாக அவர்கள் சிறுகுழுக்களாகப் பிரிந்து காடுகளுக்குள் ஓலமிட்டபடி ஓடிப்பரவினர்.
யாதவப்படைகளில் ஒரு சாரார் நூலேணிகளினூடாக மரங்களுக்கு மேல் ஏறி அங்கு இருந்துகொண்டு அம்புகளை விடுத்து அசுரர்களை கொன்று வீழ்த்தினர். காட்டுக்குள் யானைப்போர் நிகழ்வதுபோல மரங்கள் உலைய, பறவைகள் எழுந்து வானில்பரவ, அந்நிலமெங்கும் ஒவ்வொரு புள்ளியிலும் போர் நிகழ்ந்தது. மிக விரைவிலேயே அசுரப்படைகள் முற்றிலும் எதிர்ப்பை கைவிட்டுவிட்டு பின்வாங்கத்தொடங்கின. பின்வாங்கும்தோறும் அவை மேலும் நம்பிக்கையிழந்தன. எதிர்ப்பு இலாதபோது விரைவு ஒவ்வொரு கணமும் மிக யாதவப்படைகள் ஆசுர நிலத்திற்குள் கடந்து சென்றுகொண்டே இருந்தன.
உரக்க நகைத்தபடி சக்ரன் அபிமன்யூவிடம் “மிஞ்சிப்போனால் இன்று மாலை… மெல்ல சென்றால்கூட இன்றிரவு சோணிதபுரியை அடைந்துவிடுவோம். நாளை காலை பாணரின் அரண்மனை முகப்பில் யாதவக்கொடி பறக்கும்” என்றான். பீதாம்பரன் “செல்வதற்குள் நாம் அசுரர்களில் பாதியை கொன்றழித்துவிடவேண்டும்” என்றான். “முன்னேறுங்கள் முன்னேறுங்கள்” என்று கூவியபடி அபிமன்யூ கொற்றவையின் வெறியாட்டெழுந்த பூசகி என வில் நின்று துள்ள முன்னால் சென்றான். “விரைக! மேலும் விரைக!” என்று யாதவப்படைகளுக்கு ஆணையிட்டுக்கொண்டும் வெறியுடன் நகைத்துக்கொண்டும் பொருளின்றி கூச்சலிட்டுக்கொண்டும் சென்றான். அவன் விழிகள் தெய்வங்களுக்குரிய வெறிப்பு கொண்டிருந்தன. அத்தருணத்திற்காக மண் பிளந்து எழுந்த பாதாளதெய்வம்போலிருந்தான்.
அசுரப்படைகள் ஒவ்வொரு நிலைகளாக கைவிட்டு பின்னகர்ந்தன. பின்னகரும்படி ஒலித்துக்கொண்டிருந்த முழவுகளும் ஓயவே பிறிதொன்றும் செய்வதற்கிலாதவர்களென அவர்கள் சென்றபடி இருந்தனர். “வென்று விட்டோம்! போர் முடிந்துவிட்டது, இளவரசே!” என்றான் சக்ரன். அபிமன்யூ அம்புதொடும் இலக்குகளை கணம் முன் தொட்டுச்சென்ற விழிகளுடன் “அசுரர்கள் என்றும் இங்கிருந்தார்கள். ஒருபோதும் அவர்கள் தாங்களே எழுந்ததில்லை. அவர்களை பேரரசாக ஆக்கியவர் ஒருவர். அவர் இன்னும் படைமுகம்வரவில்லை” என்றான். அதைக்கேட்டதுமே அது மெய்யென்றுணர்ந்த சக்ரன் முகம் மாறினான். படைகளை நோக்கி திரும்பி வாளைச்சுழற்றி “முன் செல்லுங்கள்! முன்னேறுங்கள்” என்று கூவியபடி விரைந்தான்.
எதிர்க்காற்று பட்டுத்துணித்திரள் போல முகத்திலறைய புரவியில் விரைந்து சென்றுகொண்டிருந்தபோது அபிமன்யூ பாணாசுரரைப் பற்றி எண்ணிக்கொண்டான். பிரத்யும்னனின் படைகள் அங்கு வந்துள்ளன என்பதற்கு அவை யாதவ மையநிலத்திலிருந்து திரண்டு வந்து கொண்டிருக்கின்றன என்றுதான் பொருள். அதை அறியும் அளவுக்கு ஒற்றர்படை அவருக்கு இருக்கும். கோகுலத்திலிருந்து அநிருத்தனை கவர்ந்துகொண்டு வந்து சிறை வைக்க முடிந்தவருக்கு விழியறியா ஒற்றர்வலை ஒன்று இருந்தாகவேண்டும். அவர் பிரத்யும்னனின் படை தன் எல்லை கடப்பதுவரை வாளாவிருக்க மாட்டார். இச்செய்தி சென்றபின்னர்தான் அவர் சோணிதபுரியிலிருந்து எழுவார் என்பது மடமை. எண்ண எண்ண “ஆம், அதுவே உண்மை!” என்று அவன் உள்ளத்தின் ஆழத்தில் பிறிதொருவன் குரலெழுப்பினான். இது மேலும் மேலும் தங்களை உள்ளே கொண்டு வந்து சூழ்ந்துகொள்வதற்கான வழிமுறையா என்ன? அதை சொல்லாக்கியதுமே மெய்யென்றாகி தொட்டுவிடும் பாறையென கண்முன் நின்றது.
அபிமன்யூ கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தியதைக்கண்ட சக்ரன் திரும்பி வந்து “இளவரசே” என்றான். “நாம் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கிறோம்” என்றான் அபிமன்யூ. “எங்கே?எவரால்?” என்றபின் சக்ரன் நகைத்து “அசுரர்களாலா? காற்றில் பறக்கும் பஞ்சுகள். இனி அவர்களை ஒன்று திரட்ட பாணாசுரரால் அல்ல அவரது தந்தை மாவலியாலோ மூதாதை வைரோசனராலோ ஏன் விண்ணளந்தோனை எதிர்த்த ஹிரண்யகசிபுவாலோகூட இயலாது” என்றான். அபிமன்யூ “அல்ல, நான் அவரது நோக்கை உணர்கிறேன்” என்றான். “இது உளமயக்கு” என்றான் சக்ரன். “நாகம் நோக்கிவிட்டபின் தவளை அதை அறிந்துவிடும் என்பார்கள்” என்ற அபிமன்யூ புரவியிலிருந்து பாய்ந்திறங்கி அருகே நின்ற வேங்கை மரத்தின் கொடிகளிலும் கிளைகளிலும் தொற்றி மேலேறத்தொடங்கினான்.
“இளவரசே, எங்கு செல்கிறீர்கள்?” என்று கீழிருந்து சக்ரன் கேட்டான். உச்சிக்கிளையை அடைந்து கவர் ஒன்றில் கால்வைத்து அமர்ந்துகொண்டு நாற்புறமும் நோக்கிய அபிமன்யூ “நான் எண்ணியதேதான்” என்றான். “என்ன?” என்றான் சக்ரன். “நாம் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். முற்றிலுமாக” என்றான் அபிமன்யூ. சக்ரன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். அபிமன்யூ கீழிறங்கி வந்து “எப்போதும் நாம் செய்யும் பிழைதான். நாமறியாத நிலங்களுக்குச் செல்லும்போது நாமறிந்த நிலமாக அதை கற்பனை செய்து கொள்கிறோம். அது நம்மை இடர்களுக்கு கொண்டு செல்லும் பொறியாகிவிடுகிறது” என்றான். “நாம் ஆசுரத்திற்குள் முழுமையாக அகப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் சோணிதபுரியிலிருந்து மலை இடைவெளிகளினூடாக படைகளை கொண்டுவந்து நம்மை சூழ்ந்துவிட்டார். இனியொன்றும் செய்வதற்கில்லை.”
சக்ரன் தன் உள்ளத்தை அப்படி ருப்பிக்கொண்டதுமே அனைத்தையும் அவனும் கண்டு சொல்லிழந்தான். “நாம் சூழ்கைக்கான படை அமைக்கவில்லை. நமது பின் பக்கம் திறந்து கிடக்கிறது. இன்னும் அரை நாழிகைப்பொழுது அமைந்தாலே போதும், போராடி நிலைகொள்ளமுடியும். உடனடியாக பிரத்யும்னருக்கு செய்தி செல்லட்டும். நமது படைகள் மலரமைவில் அமையட்டும். எட்டு இதழ்கள், திசைக்கு இரண்டு” என்றான் அபிமன்யூ. சக்ரன் ஆணைகளைக் கூவியபடி ஓடினான். முழவுகள் அச்செய்தியை ஒலிக்கத்தொடங்கின. ஒலியிலிருந்து ஒலி தொடுத்துச் சென்று பிரத்யும்னனை அடைந்தது அச்செய்தி. “ஆம், நானும் பார்த்துவிட்டேன். மலரமைவிற்கு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறேன்” என்று அவன் பதிலிறுத்தான்.
யாதவப்படைகள் எட்டு பிரிவுகளாக உருமாறத்தொடங்கின அவற்றின் முகப்பில் நீண்ட ஈட்டி ஏந்திய படைவீரர்களும் அவற்றுக்கு இணையாக புரவிப்படைகளும் அமைந்தன. ஆனால் எட்டு இதழ்கள் விரிந்துகொண்டிருக்கையிலேயே பெருமழை சூழ்ந்து ஓங்கி அறைவதுபோல பாணாசுரரின் படை யாதவர்களை தாக்கத் தொடங்கியது. “முந்திக்கொண்டுவிட்டார், நம் முழவொலியை கேட்க ஆள்வைத்திருந்திருக்கிறார்” என்று அபிமன்யூ சொன்னான். அசுரப்படை இதழ்களின் இடைவெளிகளுக்குள் நுழைந்தது. “சிலந்திவடிவ படைசூழ்கை. நாம் எட்டிதழ்சூழ்கை எடுப்போம் என்றுகூட அறிந்திருக்கிறார்.”
“இளவரசே…” என்று பதறியபடி பத்மன் அவன் அருகே வந்தான். “என்ன செய்வோம்? நாம் இயற்றக்கூடுவதென்ன?” அபிமன்யூ “போரிடுவதுதான். அதற்குத்தானே வந்தோம்?” என்றபடி உரக்க நகைத்தான். “குருதிகுளித்து தூய்மைகொள்வோம். தூயபலிவிலங்கை அவள் விரும்புவாள்.” அவன் முகத்திலிருந்த வெறியைக்கண்டு “ஆம் போரிடுவோம்…” என்றான் பத்மன். “ஆனால் வெல்ல முடியுமா?” என்றான் பீதாம்பரன். “வெல்வேன் என்று எண்ணாமல் நான் ஒருமுறையும் வில்லெடுப்பதில்லை” என்று சொல்லி அபிமன்யூ நாண் தெறித்து முழங்க முன்னால் சென்றான். “என் இருபுறமும் வீரர்கள் வரட்டும், என் அம்பறாத்தூளி ஒருபோதும் ஒழியாதிருக்க வேண்டும்.”
“எங்கு செல்கிறீர்கள், இளவரசே?” என்றபடி சக்ரன் பின்னால் வந்தான். “பிரலம்பன் என்னைத் தொடரட்டும். உங்களுக்கு இடப்பட்ட ஆணை எதுவோ அதை நிறைவேற்றுங்கள். நான் பாணரை எதிர்கொள்ளச்செல்கிறேன்” என்று கூவினான் அபிமன்யூ. பிரலம்பன் “தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறேன் இளவரசே” என்றபடி தன் புரவியின் இருபுறமும் அம்பறாத்தூளிகளை தொங்கவிட்டுக்கொண்டு அபிமன்யூவுக்கு வலப்பக்கமாக விரைந்து சென்றான். தொலைவில் அசுரப்படைகளின் முரசு முழக்கத்தை அவர்கள் கேட்டனர். “பாணர் இங்கிருக்கிறார். முழவுகள் அதைத்தான் கூறுகின்றன” என்றான் பிரலம்பன். “ஆம், நான் அவரை பார்த்துவிட்டேன்” என்று அபிமன்யூ கூறினான். நீண்ட அம்புகள் காட்டுக்குள் இருந்து எழுந்து வந்து யாதவர்களை வீழ்த்தின. பிரலம்பன் “பீதாம்பரர் வீழ்ந்துவிட்டார்” என்றான். அபிமன்யூ அதை கேட்கவில்லை. அவன் புரவியின் முன்விசை ஒருகணமும் தளரவில்லை.
காட்டின் விளிம்புக்கு அப்பால் விரிந்த புல்வெளியில் புரவிப்படையொன்று எழுந்து வெயிலில் தோன்றியது. அதன் முகப்பில் கரிய இரும்புக்கவசம் அணிந்த பெரிய புரவியின்மேல் பாணாசுரர் அமர்ந்திருந்தார். காட்டுள்ளிருந்து வெளிவந்த அபிமன்யூவும் பிரலம்பனும் அவரை நேர்முன்னால் என கண்டனர். பாணர் புரவியிலிருந்தபடியே கைதூக்கி தன் வீரர்களை இருபக்கமும் விலகிச்செல்லும்படி சொன்னபிறகு உரக்க நகைத்து வில்லெடுத்தார். “பிரலம்பரே, உம் உடலை காத்துக்கொள்க! புரவியின் கவசத்திற்கு பின்னிருக்க வேண்டும் தலையும் தோளும்” என்றபடி அபிமன்யூ பாய்ந்து முன்னால் சென்றான்.
பாணரின் அம்புகளும் அபிமன்யூவின் அம்புகளும் காற்றில் சந்தித்துக்கொள்வதை பிரலம்பன் கண்டான். பறவைகள் முத்தமிட்டு விளையாடுவதுபோல ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதுபோல. அம்புகளால் ஆன வேலி ஒன்றுக்குள் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி கைவீசி நடனமிடுவதுபோல. அம்புகள் பெருநீர்ச்சுழியென ஆகி அவர்கள் இருவரையும் சுழற்றியடிப்பதுபோல. இருபக்கமும் அசுரரும் யாதவரும் போர் நிறுத்தி அவர்கள் இருவரும் போரிடுவதை நோக்கிக்கொண்டிருந்தனர். இருவரின் கவசங்களும் உடைந்து தெறித்தன. தலைப்பாகைகளும் குண்டலங்களும் அறுந்தன. பாணரின் தோளில் அபிமன்யூவின் அம்பு பாய்ந்தது. அபிமன்யூவின் தொடையில் அவர் அம்பு அறைய அவன் புரவியிலிருந்து விழப்போனான். தொற்றி மேலேறி கோணலாக அமர்ந்து அம்பெய்தான்.
மேலும் மேலுமென அம்புகள் எழுந்து பறந்து அமைந்துகொண்டே இருக்க எங்கோ ஒரு புள்ளியில் அபிமன்யூ தோற்கத் தொடங்குவதை பிரலம்பன் கண்டான். விழிகளுக்கு அவர்கள் இருவரும் நிகர் வல்லமையுடன் போரிட்டுக்கொண்டிருப்பதாகவே தோன்றியது. ஆனால் உள்ளுணர்வு சொல்லிவிட்டிருந்தது, துலாவின் ஒரு பக்கம் தாழத்தொடங்கியதை. எப்படி என்று வியந்து அவன் அபிமன்யூவின் முகத்தை பார்த்தான். கனவொன்றில் வெறித்திருப்பவைபோல விழிகளும் புன்னகை செறிந்த உதடுகளும் மட்டும்தான் தெரிந்தன. தோள்கள் முற்றிலும் சீரமைக்கப்பட்ட போர்ப்பொறிகளென இயங்கிக்கொண்டிருந்தன. புரவியும் அவனும் ஓருடலென்றாகி சுழன்று பாய்ந்து ஒதுங்கி போரிட்டனர்.
அம்புகளை கைகள் எடுத்துக்கொடுக்க தன்னைச்சூழ்ந்து பறந்த அம்புகளுக்கு உடல் ஒதுங்கி தன்னை காத்துக்கொள்ள அம்பு தொடா வெளியொன்றில் உயிரச்சமும் விழைவும் அற்ற ஆழம் ஒன்று பிரலம்பனுக்குள் கூர்கொண்டு அப்போரை நுண்ணிய கணக்காட்சிகளின் அடுக்குகள் என நோக்கிக்கொண்டிருந்தது. எக்கணம் அது நிகழப்போகிறது? இந்த அம்பில் இது தவிர்க்கப்பட்டுவிட்டது. இந்த அம்பு இது ஒடிக்கப்பட்டுவிட்டது. இக்கணம் இது கடந்துவிட்டது. மறுகணம், மறுகணம், இதோ, இதோ என கடந்து சென்ற பின் ஒருகணம் திகைத்து திரும்பிப்பார்த்தபோது அபிமன்யூ புரவியிலிருந்து தெறித்து தரையில் விழுந்துகிடப்பதை பிரலம்பன் கண்டான்.
தன் நெஞ்சில் குளிர்ந்த பெரிய பாறையொன்று வந்து அறைந்ததுபோல் உணர்ந்து செயலற்றபோது அவன் தோள்மேல் அம்பு ஒன்று பாய்ந்து உருட்டி கீழே தள்ளியது. மண்ணில் அறைந்த முகத்தில் குருதிவெம்மை படிந்தது. குருதியுப்பை துப்பியபடி உருண்டு எழுந்து புதரொன்றுக்குள் நுழைந்து எழுந்தபோது அபிமன்யூ கையூன்றி புரண்டு எழுவதற்குள் பிறைஅம்பு ஒன்றை எடுத்து வில்லில் பொருத்தி அவன் தலைக்கு குறிவைத்த பாணரின் கைகளின் விரைவை கண்டான். அம்பு எழும் கணத்திற்குள் வில் முறிந்து தெறித்தது. சினத்துடன் அவர் திரும்பி நோக்க படையாழி ஒளியுடன் சுழன்று மீண்டும் அவரை நோக்கி வந்தது. புரவியிலிருந்து பாய்ந்து பாணர் தரையில் விழுந்து புரள்வதற்குள் அவரது வலக்கையை வெட்டி அகற்றியது அது.
பாணர் குருதியுடன் சேற்றில் விழுந்து இடக்கையை ஊன்றி உருண்டு புதர்களுக்குள் மறைந்தார். அசுரர்கள் போர்க்குரல்களுடன் திரும்பி நோக்கி திகைத்து விலகினர். காட்டுக்கு அப்பாலிருந்து பாய்ந்து வந்த புரவிப்படையொன்றின் முகப்பில் புரவியின் தோள்மேல் காலூன்றி எழுந்து நின்று அணுகும் பறவை என பெருகிவந்த இளைய யாதவரை பிரலம்பன் கண்டான். இரும்புக்கவசமணிந்த மார்பும் தலையும் நீரலை போல் ஒளிவிட்டன. படையாழி சுழற்சியில் உருமறைய ஒளியென்றாகியபடி அவர் கைகளில் சென்று தொட்டு எழுந்து சுழன்று வந்தது.