எழுதழல் - 19
மூன்று : முகில்திரை – 12
சோணிதபுரியின் கோட்டை தொலைவிலேயே தெரியலாயிற்று. அவர்களை அழைத்துச்சென்ற அசுரக் காவல்படைத் தலைவன் சங்காரகன் பெருமிதத்துடனும் உவகையுடனும் திரும்பி சுட்டிக்காட்டி “சோணிதபுரி! உலகிலேயே மிகப் பெரிய நகரம்” என்றான். அபிமன்யூ புன்னகையுடன் அக்கோட்டையை பார்த்தபடி புரவியில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பின்னால் புரவியில் வந்த பிரலம்பன் இரண்டடி முன்னால் வந்து “மிகப் பெரிய கோட்டை! இத்தனை தொலைவிலேயே அதன் கற்கள் தனித்தனியாக தெரிகின்றன. ஒவ்வொரு கல்லும் யானை அளவுக்கு இருக்கும் போலும்” என்றான்.
அவன் மெல்ல சொன்னதே சங்காரகனுக்கு கேட்டது. அவன் “சில கற்கள் ஐந்து யானை அளவுக்குப் பெரியவை, ஷத்ரியரே. தரையிலிருந்து இருபது ஆள் உயரத்திற்கு அவை அடுக்கப்பட்டுள்ளன” என்றான். பிரலம்பன் “ஆம், மாபெரும் கற்கள். அத்தனை உயரத்திற்கு அவை எப்படி சென்றன?” என்றான். “செல்லவில்லை, கொண்டு செல்லப்பட்டன. அசுரர்களைக் காக்கும் ஆயிரம் தெய்வங்கள் வந்து நின்று கட்டிய கோட்டை இது. அத்தெய்வங்கள் அசுரர்களின் தோள்களிலும் அவர்களின் யானைகளின் துதிக்கைகளிலும் சென்றமர்ந்தன. பஞ்சுப்பொதிகளைத் தூக்கி வைப்பதுபோல் அவர்கள் இப்பாறைகளைத் தூக்கி மேலே அடுக்கினார்கள்” என்றான் சங்காரகன்.
“சங்காரகர் அத்தெய்வங்களின் அருளால் நம்மை தூக்கிச் சென்றால் நன்று” என்றான் அபிமன்யூ. “வண்டிகள் அணுகமுடியாத அரசத் தலைநகரை இப்போதுதான் பார்க்கிறேன். புரவிகள் செல்வதற்கே கடினமாக உள்ளது.” சங்காரகன் “எங்கள் எதிரிகள் அணுகமுடியாதல்லவா?” என்றான். “நன்று, அவர்களை நீங்களும் அணுகமுடியாது” என்றான் அபிமன்யூ. சங்காரகன் புரியாமல் “ஆம், உண்மை” என்றான். தரையில் பண்படுத்தப்படாத கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றின்மேல் குதிரைக்குளம்புகள் தாளமிட்டன. சாலையின் இருபுறமும் நின்றிருந்த வேங்கையும் செண்பகமும் கொன்றையும் பூத்து பொன்மஞ்சளும் குருதிச்செம்மையும் கலந்த பெருக்கு இரு பக்கமும் உடன்வந்தது.
மேலும் அணுகுந்தோறும் அக்கோட்டை விழிகளை நிறைப்பதாக எழுந்து வந்தது. பொதுவாக சுவர்களைக் கட்டும் முறைப்படி அது அமைக்கப்பட்டிருக்கவில்லை. அதை நீளமாக குவிக்கப்பட்ட கற்களின் நிரை என்று சொல்லவேண்டும் என பிரலம்பன் நினைத்துக்கொண்டான்.. எடைமிக்க கற்கள் ஒன்றன்மேல் ஒன்று தூக்கி வைக்கப்பட்டு தங்கள் எடையாலேயே ஒன்றையொன்று அழுத்திக்கொண்டு அச்சுவரை அமைத்திருந்தன. பாதை அணுகிச் செல்லுந்தோறும் ஒவ்வொரு கல்லும் பெருகி விழிகளை நிறைப்பதாக அணுகி வந்தது. நடுவே புரவிகள் செல்லத்தக்க பாதை உருளைக்கற்களை அடுக்கி உருவாக்கப்பட்டிருந்தது.
அரசப்பாதைக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் காடுகளுக்குள் கால்களுக்கு மட்டும் உரிய இரு வணிகப்பாதைகள் சோணிதபுரிக்குள் சென்றன. அங்கு ஒழுக்கு முறியாது சென்றுகொண்டிருக்கும் அத்திரிகளும் புரவிகளும் காளைகளும் கழுதைகளும் உருவாக்கிய குளம்படியோசை பாறைகளினூடாகச் செல்லும் ஆறுபோல ஒலித்துக்கொண்டிருந்தது. கோட்டையின் முகப்பில் அசுரகுடியின் சிம்மக்கொடி பறந்தது. கிளைகளை வெட்டி வெட்டி செங்குத்தான தடியாக வளர்க்கப்பட்ட அசோகமரம் கொடிசூடி எழுந்து நின்றிருந்தது. அந்த மரத்தின் உச்சியில் மட்டும் பசுந்தழைக்குவை ஒன்று தூரிகைமுனை என வானை வருடியது.
கோட்டைவாயிலை அணுகியபோது பிரலம்பன் தலைதூக்கி மேல் விளிம்பை பார்க்க முயன்றான். அங்கே கோட்டைச்சுவர் இருபது ஆள் உயரம் கொண்டிருந்தது. ஒவ்வொரு பாறையும் ஒன்றின்மேல் ஒன்று அமர்ந்திருக்க மேலிருக்கும் பேரெடையினால் அடித்தளப்பாறைகள் சற்று அழுந்தியும் குழிந்தும் இருப்பதை அவன் கண்டான். “பாறை நெகிழ்வதை இப்போதுதான் பார்க்கிறேன், இளவரசே” என்று அபிமன்யூவிடம் சொன்னான். “பேரெடையும் காலமும் பாறைகளையும் வளைய வைக்கும் என்று சிற்பநூல் சொல்கிறது” என்றான் அபிமன்யூ. “அதை அவர்கள் ஒரு நீதியாகவும் சொல்வார்கள். நாம் போதும் என்று கதறுவதுவரை.”
“இதை உண்மையில் எப்படி கட்டியிருப்பார்கள், இளவரசே?” என்று பிரலம்பன் செம்மொழியில் கேட்டான். சங்காரகன் கோட்டை வாயிலில் நின்ற காவலர்களிடம் கணையாழியைக் காட்டி அபிமன்யூ பற்றி சொல்லிக்கொண்டிருந்தான். அபிமன்யூ குரல் தாழ்த்தி “இக்கற்கள் தூக்கி வைக்கப்பட்டவை அல்ல, பிரலம்பரே. இறக்கி வைக்கப்பட்டவை” என்றான். பிரலம்பன் கோட்டையை நோக்கிவிட்டு புரியாத விழிகளுடன் திரும்பி “எப்படி?” என்றான். “இக்கற்கள் அனைத்தும் இந்த மலைகளின்மேல் இருந்தவை. அங்கிருந்து நெம்புகோல் வழியாக நிலைபெயர்க்கப்பட்டு யானைகளைக்கொண்டு மெல்ல உருட்டி கொண்டுவரப்பட்டிருக்கவேண்டும். மலைச்சரிவிலிருந்து நேராக இறக்கி ஒன்றன்மேல் ஒன்றென இங்கு அடுக்கப்பட்டன. இறங்குவிசையை நெறிப்படுத்தமட்டுமே யானைகள் பயன்படுத்தப்பட்டன” என்றான்.
பிரலம்பன் மீண்டும் மலைச்சரிவையும் கோட்டையையும் பார்த்தபின் “ஆம், அது இயல்வதுதான்” என்றான். “அடுக்கிய பின்னர் கோட்டைக்கும் மலைக்கும் இடையேயான தொடர்பை அகழ்ந்து அகற்றி இதை தனிக்கட்டுமானமாக நிறுத்தியிருக்கிறார்கள்” என்றான் அபிமன்யூ. கோட்டைக்காவலர் தலைவனுடன் சங்காரகன் அருகே வந்து “செல்வோம், ஆணைபெற்றுவிட்டேன்” என்றான். கோட்டைக்காவலர் தலைவன் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரை வணங்குகிறேன். என் பெயர் கிருங்கன். நான் இந்திரப்பிரஸ்தத்தை கதைகளில் கேட்டிருக்கிறேன். அங்கே கோட்டையின் காவல்மாடங்கள் முகில்களில் ஊடுருவியிருக்கும் என்றும், ஆகவே அவை எப்போதும் மழையில் நனைந்திருக்கும் என்றும் அறிவேன். ஒருநாள் பார்த்தாகவேண்டும் என எண்ணிக்கொள்வேன்” என்றான்.
தேவதாரு மரங்களை செங்குத்தாக வளர்ந்தெழச் செய்து அவற்றை இணைத்துக் கட்டப்பட்டிருந்த காவல்மாடங்களை நெற்றியில் கைவைத்து அண்ணாந்து நோக்கிக்கொண்டிருந்த பிரலம்பன் திகைப்புடன் அபிமன்யூவைப் பார்த்தபின் சிரிப்பை மறைக்க முகம் திருப்பிக்கொண்டான். “ஆம், ஆனால் அத்தனை உயரமாக கட்டக்கூடாதென இப்போது உணர்ந்துள்ளோம். இதைப்போல கட்டுவதே உகந்தது” என்றான் அபிமன்யூ. “ஏன்?” என்றான். “கோட்டைக்குமேல் காவல்நிற்பவர்கள் முகத்தில் பருந்துகள் வந்து மோதிக்கொண்டிருக்கின்றன” என்றான் அபிமன்யூ. “ஆனால் ஒரு நன்மை. அவர்கள் குடிநீரை நேரடியாக முகில்களில் இருந்தே எடுத்துக்கொள்வார்கள்.” கிருங்கன் சொல்லடைத்த நெஞ்சுடன் “ஆம், அது தூயநீர்தான்” என்றான். “மின்னல்களைக்கொண்டு விளக்குகளை பற்றவைக்கக் கூடாதென்பது அவர்களுக்கு இடப்பட்ட கூரிய ஆணை. ஏனென்றால் சில தருணங்களில் அவை விளக்கேற்றுபவனையும் எரித்துவிடுகின்றன” என்றான் அபிமன்யூ.
காய்ச்சல் படிந்ததுபோன்ற கண்களுடன் கிருங்கன் தலைவணங்கினான். சங்காரகன் திறந்த வாயும் வெறித்த கண்களுமாக அவர்களுடன் வந்தான். கோட்டையின் காவல் மாடங்களிலிருந்த அத்தனை பேரும் எழுந்து அவர்களை பார்த்தார்கள். அபிமன்யூவை கைசுட்டி வியப்புடன் பேசிக்கொண்டார்கள். “சிருங்கரே, சென்று அரசரைப் பா’ர்த்துவிட்டு வருகிறேன்” என அபிமன்யூ அக்கூட்டத்தைப் பார்த்து சொன்னான். அவர்களில் ஒருவர் ”சென்று வருக இளவரசே, நான் இங்கேதான் இருப்பேன்” என்றார். அபிமன்யூ பிரலம்பனிடம் “பிருங்கர், மிருங்கர், திருங்கர் என பலர் இங்கிருப்பார்கள். மானுடர் பெயர்களை பெரும்பாலும் ஒலிகளைக்கொண்டே இடுகிறார்கள்…” என்றான். அங்கே நின்ற ஒரு காவலரிடம் “நிருங்கரிடம் நான் ஆணையிட்டதாகச் சொல்லுங்கள். உடனடியாக அவர் அரண்மனைக்கு வந்தாகவேண்டும்” என்றான். அவர் “ஆணை, இளவரசே” என தலைவணங்கினார்.
பிரலம்பன் “என்ன செய்கிறீர்கள், இளவரசே?” என்றான் சலிப்பும் எரிச்சலுமாக. “நான் பொத்தை மீன். வாலால் பின்பக்கச் சேற்றை கலக்கிக்கொண்டே செல்வேன்” என்ற அபிமன்யூ “விருங்கர் எப்போது போனார்?” என ஒரு காவலரிடம் கேட்க அவர் “காலையிலேயே கிளம்புவதாக நேற்று சொன்னார்…” என்றபின் பதைப்புடன் “ஆனால்…” என்றார். “நீங்கள் செய்வதனைத்தையும் நான் அறிவேன். இப்போது உங்கள் உள்ளத்தில் எழும் எண்ணத்தைக்கூட நான் அறிவேன்” என்று அபிமன்யூ சிரித்துக்கொண்டே சொன்னான். “ஆம், நான் இளைய யாதவரிடமிருந்து மாயத்தொழில் கற்றுக்கொண்டவனே.”
அங்கிருந்த ஒவ்வொரு விழியும் அச்சமோ வியப்போ கொண்டு விழித்தன. “அசுரர் அல்லாத மானுடனை முதல் முறையாக பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றான் அபிமன்யூ. “ஆம், நம் வால்களை கழுவிக்கொள்ள சுனைகள் உண்டா இங்கே என்று கேட்டுப்பார்க்கவேண்டும்.” பிரலம்பன் “இளவரசே, நீங்கள் கேட்டுவிடுவீர்கள். இவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள்” என்றான். “நாளை இவர்களின் புராணங்களில் நம்மை அப்படியே எழுதி வைத்துவிடப்போகிறார்கள்.” அபிமன்யூ “நமது புராணங்களில் இவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எருமைக்கொம்புகள், பன்றிப்பற்கள், குருதிவிழிகள். நமக்கும் ஓர் அச்சமூட்டும் கூறு இருக்கட்டுமே…” என்றான். “புராணம் பொய்யாகாது என்பார்கள். ஆகவே காலப்போக்கில் நமக்கு நல்ல வால்கள் முளைக்கும். அவற்றில் வாளேந்தி நாம் மேலும் வீரத்துடன் ஒருவரை ஒருவர் கொல்லமுடியும்…”
கோட்டைக்குள் சீரிலாக் கற்கள் பரப்பிய பெரிய சாலை அரண்மனை முற்றம் வரை சென்றது. பிற சாலைகள் அனைத்தும் அதிலிருந்து கிளைபிரிந்து வளைந்து சென்றன. “மீன்முள் அமைப்பு” என்றான் பிரலம்பன். கோட்டைக்குப் பின்னால் மலையிலிருந்து ஒழுகி வரும் சிற்றோடைகளால் நீர் நிறைக்கப்படும் ஏரியொன்று இருப்பது கட்டடங்களின் இடைவெளிகளினூடாக அலையும் ஒளியெனத் தெரிந்தது. “அங்கேதான் அசுரகுலத்து இளவரசியும் யாதவ இளவரசரும் காதலாடிக்கொண்டிருக்கிறார்கள். துவாரகையின் வருங்கால அரசர் நுண்வடிவில் அங்கே இருக்கிறார்” என்றான் அபிமன்யூ. “என்ன பேச்சு இது?” என்று பிரலம்பன் சொன்னான். “சில தருணங்களில் உங்களை ஒரு காட்டானாகவே உணர்கிறேன்.” அபிமன்யூ “என் அன்னை அவ்வாறு சொல்வதுண்டு” என்றான்.
சோணிதபுரியின் அனைத்து மாளிகைகளும் மலையிலிருந்து உருட்டிக் கொண்டுவரப்பட்ட பெரிய கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட தடித்த சுவர்களால் ஆனவை. அவற்றுக்கு மேல் பண்படுத்தப்படாத மரத்தடிகளை அடுக்கி முதற்தளமிட்டு மேலே மூங்கிலையும் காட்டு மரத்தடிகளையும் கொண்டு இரண்டாம் தளம் அமைத்திருந்தனர். முதற்தளம் அனைத்திற்கும் ஒற்றை வாயிலே இருப்பதை பிரலம்பன் கண்டான். சற்று கழித்துதான் அந்த முதற்தளங்கள் அனைத்துமே கன்றுகளுக்கான தொழுவங்கள் என்று தெரிந்தது. பக்கவாட்டில் ஏறிச்சென்ற மரப்படிகள் இரண்டாம் தளத்தில் இருந்த இல்லங்களை அடைந்தன. மூன்று தளங்கள் கொண்டவை அரசகுடியினருக்கும் படைத்தலைவர்களுக்கும் உரிய மாளிகைகள் என்று புரிந்தது. அவற்றில் மட்டுமே பாணர் குடியின் சிம்மக் கொடி பறந்தது.
“அத்தனை மாளிகைகளையும் கட்டிமுடித்தபின் கோட்டை கட்டப்பட்டுள்ளது” என்றான் அபிமன்யூ. மாளிகையைச் சூழ்ந்து வேங்கை மரங்களை நட்டிருந்தனர். அவை வளர்ந்து மாளிகையின் பாறைத்தளத்தை தங்கள் வேர்களாலும் கிளைகளாலும் கவ்விப் பிடித்திருந்தன. வீடுகளுக்குள்ளிருந்தே மரங்கள் எழுந்து கூரைக்குமேல் கூரைகளென நின்றிருந்தன. “விந்தையான இல்லங்கள்” என்றான் பிரலம்பன். “நாம் காட்டை விலக்கி இல்லங்கள் அமைக்கிறோம். இவர்கள் காட்டை இல்லங்களுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்…” என்றான் அபிமன்யூ. “காடுகளில் வாழ்ந்து பழகியவர்கள். இவ்வில்லங்கள் மலைக்குகைகளாகவும் தோன்றும்.”
அவர்களின் புரவிகள் குளம்போசையுடன் செல்ல அத்தனை இல்லங்களிலிருந்தும் பெண்டிரும் முதியோரும் எட்டிப்பார்த்தனர். சாலைகளில் புரவிகளிலும் அத்திரிகளிலும் சென்றுகொண்டிருந்தவர்கள் கடிவாளத்தை இழுத்து ஒதுங்கி விழிசுருக்கி அவர்களை கூர்ந்து நோக்கினர். “நாம் வருவது இங்கு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது” என்றான் பிரலம்பன். “அரண்மனை மந்தணம் அங்காடியில் பேசப்படுவதில் மட்டும் மானுடரும் அசுரரும் நிகர். இந்திரனின் அமராவதியில்கூட இந்திராணியைப்பற்றித்தான் தேவர்கள் கூடிநின்று அலர் உரைத்துக்கொண்டிருப்பார்கள்” என்றான் அபிமன்யூ.
“நாம் எல்லை கடந்ததை அவர்கள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. அவர்களால் வெல்லப்பட முடியாதபடி அவர்களின் நிலம் ஒன்றை ஒருவார காலமாக கட்டுக்குள் வைத்திருக்கிறோம். அவர்கள் நம்மை அறியாதிருக்க முடியாது” என்றான் பிரலம்பன். “ஆம், இனி அவர்களின் குலக்கதைகளில் நமது பெயர் இடம் பெறாமலும் இருக்க முடியாது” என்றான் அபிமன்யூ. “என் விழைவு நாம் வாலுடன் இடம்பெறவேண்டும் என்பது.”
அங்கு அங்காடித்தெரு வணிகர்தெரு சூதர்தெரு என்னும் வேறுபாடுகள் இருக்கவில்லை. அரண்மனைகளுக்கு அருகிலேயே தோல்கூரைகளை இழுத்துக்கட்டி தரையில் அமர்ந்து உலர்ந்த ஊனையும், இரும்புக் கலங்களையும், உப்புப் பாறைகளையும் விற்றுக்கொண்டிருந்தனர். அரக்கும் தேனும் விற்கும் மலைவேடர்கள் நீண்ட நிரைகளாக அமர்ந்து பொருட்களை வாங்க வந்த நகர்மக்களை நோக்கி உரக்க கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். கூடவே சிலர் பெரிய முழவில் கையோட்டி புலியுறுமலை எழுப்பினர். மரவுரிகள், பருத்தியாடைகள், கொம்புப்பிடி கொண்ட குத்துவாட்கள், ஓவியச்செதுக்கு கொண்ட எருமைக்கொம்பாலான வாளுறைகள், யானைத்தந்தங்களிலும் சந்தனத்திலும் செதுக்கப்பட்ட மூக்குத்தூள் சிமிழ்கள்.
“பீதர்கள்!” என்றான் பிரலம்பன். “அவர்கள் இங்கும் வந்துவிட்டனர்!” பூனைக்குரலில் கூவியபடி அவர்கள் வண்ணப் பட்டுகளையும் வெண்களிமண் கலங்களையும் விற்றுக்கொண்டிருந்தனர். தடித்த மரவுரிகளை அணிந்து தோளில் தோலாடை போர்த்திய முதிய பெண்கள் சுருங்கிய கண்களுடன் அவர்களை நோக்கினர். புலித்தோல் போர்த்தி பெரிய தலைப்பாகைகளின்மேல் செம்பருந்து இறகுகளைச் சூடிய அசுரகுடி மூத்தோர்கள், கரடித்தோல் போர்த்திய காவலர்கள் என நகரம் அவ்வேளையில் வண்ணஅசைவுகள் நிறைந்து கொப்பளித்துக்கொண்டிருந்தது. “பழக்கப்பட்ட குரங்குகள்… இங்கே அவை இல்லப்பணி செய்கின்றன” என்றான் அபிமன்யூ. “ஆம், பார்த்தேன். அவற்றை போருக்கும் இவர்கள் கொண்டுவரலாம்” என்றான் பிரலம்பன்.
தொல்மொழியில் “இங்கு செல்வ வளத்திற்கு குறைவில்லை என்று நினைக்கிறேன்” என்றான் பிரலம்பன். “அசுரர்கள் மலைகளிலிருந்து அருமணிகளை சேர்க்கிறார்கள். தேனும் அகிலும் சந்தனமும் இங்கிருந்துதான் விரிநிலங்கள் முழுக்க செல்கின்றன” என்று சங்காரகன் சொன்னான். “ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் வணிகர்கள் இந்நகருக்குள் நுழைகிறர்கள். தேன் கொண்டு செல்லும் தேனீக்களைப்போல இங்கிருந்து கிளம்பிச்செல்கிறார்கள்… ஒரு மாதம் வணிகர்கள் இங்கே வரவில்லை என்றால் எங்கள் மகளிர் வெறிகொண்டு எங்களை தாக்கத் தொடங்கிவிடுவார்கள்” என்றான். “ஒவ்வொரு வேனிற்காலத்திலும் ஒரு பொருள் புகழ்பெறுகிறது. அதை வாங்கிச்சூடுவதே அழகென்றும் குடிப்பிறப்பென்றும் நம்புகிறார்கள். ஒருமாத காலம் உழைத்த பணத்தைக் கொடுத்து அதை வாங்குகிறார்கள். இக்கோடையில் வெறியாகப் பரவுவது அது.”
அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் அசுரகுடிப் பெண்கள் முட்டிமோதி கூச்சலிட்டு வாங்கிக்கொண்டும் நெற்றியில் வைத்து பிறரிடம் அழகுகாட்டிக்கொண்டும் இருந்தனர். “என்ன அது, அருமணியா?” என்றான் பிரலம்பன். “வெறும் கூழாங்கல். இங்கே காலில் மிதிபடும் கூழாங்கல். இது கூர்ஜரத்தின் தொன்மையான மணிச்செதுக்குநிலைகளில் இருந்து வந்தது என்று கூவிக்கூவி நிறுவிவிட்டார்கள். என் மனைவி நேற்றே எட்டு பொன்பணத்திற்கு ஒன்றை வாங்கிக்கொண்டுவந்து நெற்றியில் தொங்கவிட்டு ஆடியில் திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறாள். எத்தனை பார்த்தாலும் அது கூழாங்கல்தான். ஆகவே அதை நோக்கி பேருவகையை நடிக்கிறாள்…” என்றான் சங்காரகன். பிரலம்பன் “இங்குமா?” என நகைக்க “நகைப்புக்குரியதல்ல, வீரரே. எட்டு பொன் என்றால் ஒரு மாட்டுவண்டி நிறைய அரக்கு. ஒரு கழுதைச்சுமை நிறைய தேன்…” என்றான் சங்காரகன். “நெஞ்சு ஆறவில்லை… ஆனால் என்ன சொல்ல?”
ஏழு குடித்தலைவர்கள் புலிமுகம் தொங்கும் வரித்தோலைப்போர்த்தியபடி தலையில் செங்கழுகின் இறகுநிரை உலைய நடந்துசென்றனர். அவர்களுக்கு முன்னால் அவர்கள் வருகையை அறிவித்தபடி முழவு முழக்கி மூவர் சென்றனர். அதற்கும் முன்னால் அவர்களின் குலக்கொடியை ஏந்தியபடி இளைய வீரன் ஒருவன் சென்றான். ஒவ்வொருவரும் தங்கள் குல முத்திரையாகிய ஓநாய் முகம் பொறிக்கப்பட்ட நீண்ட கோல்களை ஏந்தியிருந்தனர். பிரலம்பன் “அரண்மனைக்குச் செல்கிறார்களா, இக்குலத்தலைவர்கள்?” என்றான். சங்காரகன் “எங்கள் அரசர் ஆயிரம் குலங்களை கைகளாகக்கொண்டவர், சகஸ்ரஹஸ்தர்” என்றான். “இவர்கள் சிறிய குடி என நினைக்கிறேன். மூக்கை வருடுவது முதுகு சொறிவதுபோன்ற பணிகளுக்கு… இல்லையா?” என்றான் அபிமன்யூ. “ஆம்” என தலையசைத்த சங்காரகன் புரிந்துகொண்டு வெடித்துச் சிரித்தான்.
நகர்நடுவே இருந்த அரண்மனை வளாகம் ஆசுர சிற்பக்கலை முறைப்படி கட்டப்பட்ட மாபெரும் மாளிகைத்தொகை. வேங்கை மரங்களை நெருக்கமாக நட்டு ஒன்றுடன் ஒன்று மூங்கிலால் சேர்த்துக்கட்டி உருவாக்கப்பட்ட அரண்மனைக்கோட்டை எட்டு ஆள் உயரமிருந்தது. மேலே இலைத்தழைப்பே ஒரு கோட்டையென செறிந்திருக்க அவற்றுக்குமேல் அசோகமரங்கள் எழுந்து நின்று காவல்மாடங்களை சூடியிருந்தன. பெரிய உருளைப்பாறைகளாலான சுவர்களுக்குமேல் எழுந்த ஏழு மரக்கட்டட அடுக்குகள் உச்சியில் கூர்கொண்டு நின்ற முக்கோண வடிவ கூரையைச் சென்றடைந்தன. அதன் முனையில் எழுந்த கொடிமரத்தில் பாணர் குடியின் சிம்மக்கொடி பறந்தது.
மாளிக்கைகளின் அடித்தளப் பாறைகளிலிருந்து எழுந்த வேங்கையும் அசோகமும் சுவர்களைக் கவ்வி மேலேறிச் சென்று தடித்த அடிமரங்களாகி மேலே தழைப்பரப்பாக இணைந்திருந்தன. அவை பூத்து மலர்களை உதிர்த்து அத்தனை கூரைகளையும் மூட மேலே ஓயாது பறவைக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. “மலர்நிழலால் மூடப்பட்ட நகரம்…” என்றான் அபிமன்யூ. “அந்த குலப்பாடகன் அப்படிப் பாடினான்.” பிரலம்பன் “எங்கு நோக்கினாலும் தேனீக்கள். புரவியில் கருதிச் செல்லாவிட்டால் கண்களில் மோதிவிடக்கூடும்” என்றான். “காட்டின் ஒரு பகுதியை முடைந்து ஒரு நகரமாக ஆக்கிவிட்டார்கள்” என்றான் அபிமன்யூ.
பின்காலையில் அரண்மனையின் நிழல் நீண்டு முற்றத்தை நோக்கி விழுந்திருந்தது. “மேற்குமுகம்” என்றான் பிரலம்பன். “ஆம், அவர்களின் முதல் தெய்வம் வருணன். மங்கலத்திசை மேற்கு. நாம் கிழக்குதிசையின் இந்திரனை முகம் கொண்டு இல்லமும் நகரும் அமைக்கிறோம்” என்றான் அபிமன்யூ. செந்நிறப் பாறைகளால் ஆன பெரும்முற்றத்தில் இருபது யானைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட புரவிகளும் இரு நிரையாக நின்றன. ஏழு வெள்ளிப் பல்லக்குகளும் ஏராளமான மஞ்சல்களும் இறக்கிவைக்கப்பட்டிருந்தன.
அரண்மனை முகப்பின் காவல் மாடத்தில் நின்று சங்காரகன் மீண்டும் முத்திரைகளை காட்டிக்கொண்டிருந்தபோது பிரலம்பன் “அவனுக்கு பெருமிதம் சொல்லித் தீரவில்லை” என்றான். அபிமன்யூ “இயல்புதான். நெடுங்காலமாக அசுரர் தோற்று ஒளிந்து வாழ்ந்திருக்கிறார்கள். இப்பெருமிதத்தை அவர்களிடம் ஊட்டுவதனூடாகவே பாணர் அவர்களை ஒருங்கிணைத்திருக்கிறார்” என்றான். சங்காரகன் வந்து “வருக!” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
முற்றத்தில் நின்றிருந்த புரவிகள் அவர்களின் புரவிகளைக் கண்டதும் கனைத்தன. ஒரு புரவி கழுத்தைத் திருப்பி கயிற்றை இழுத்து அபிமன்யூவின் புரவியை நோக்கி குரலெழுப்ப அபிமன்யூவின் புரவி அதை திரும்பி நோக்கி ஓசையிட்டது. “கணநேரத்தில் ஒரு காதல்” என்று அபிமன்யூ சொன்னான். அவன் புன்னகையைப் பார்த்ததும் ஓர் அச்சம் பிரலம்பனைக் கவ்வியது. அதுவரை விழிக்காட்சிகள் பரவியிருந்த உள்ளம் நிலைமீண்டது. எங்கு வந்திருக்கிறோம் என்ற எண்ணம் அபிமன்யூவுக்கு இருக்கிறதா என அவன் ஐயம்கொண்டான். தயங்காக் காலடிகளுடன் பற்பொறி நோக்கிச் செல்லும் வேங்கை என அவன் விழைந்து உள்ளே நுழைந்திருக்கிறான்.
மூன்று நாட்களுக்கு முன்னர் பாணாசுரரிடமிருந்து அபிமன்யூவை நேரில் பார்க்க விழைவதாக ஓலை வந்தது. “நேரில் சென்று பார்ப்பதா, இளவரசே?” என பிரலம்பன் சொல்ல “இரு பணயங்கள் அவரவர் கையிலிருக்க அஞ்சவேண்டியது ஏதுமில்லை” என்று அபிமன்யூ சொன்னான். “இது ஒரு சூழ்ச்சி. ஐயமே இல்லை” என்றான் பிரலம்பன். “அசுரர்களுக்கு சூழ்ச்சி தெரியாது. நாம் மீண்டும் மீண்டும் அவர்களை சூழ்ச்சியால் வென்றுகொண்டிருந்தபோதிலும்கூட அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை” என்றான் அபிமன்யூ. தன் தோழனுடன் தனியாக சந்திக்க வருவதாக அபிமன்யூ மறு ஓலை அனுப்பினான்.
ஆசுரத்தின் முதல் காவல் மாடத்தில் அவனும் பிரலம்பனும் சென்று நின்றபோது அங்கிருந்த காவலர் தலைவர் அவர்கள் இருவரையும் தொட்டு நோக்கி அனைத்துப் படைக்கலங்களையும் எடுத்துக்கொண்டு சங்காரகனை உடன் சேர்த்து சோணிதபுரிக்கு அனுப்பிவைத்தார். அப்போதே பிரலம்பன் “எதை நம்பி இங்கு தன்னந்தனியாக நுழைகிறோம்? எப்படி இங்கிருந்து மீள்வோம் என்று ஏதேனும் எண்ணமிருக்கிறதா?” என்றான். “எப்போதுமே நுழைவதற்குமுன் மீள்வதைப்பற்றி நான் எண்ணுவதில்லை. நுழைந்த பின்னர்தான் நம்மைச் சூழ்ந்துள்ளதென்ன, நாம் எதிர்கொள்வதென்ன என்று தெரியும். அதன் பின்னரே எதையும் திட்டமிடவும் முடியும். நுழைவதற்குமுன் நாம் போடும் திட்டங்கள் எதற்கும் நடைமுறைப்பயன்கள் ஏதுமில்லை” என்று அபிமன்யூ சொன்னான்.
அரண்மனை வாயிலில் ஏவலர்கள் அவர்களின் புரவிகளை பற்றிக்கொள்ள இருவரும் இறங்கினர். சங்காரகன் அரண்மனை முகப்பில் அவர்களை எதிர்கொண்ட முதிய அமைச்சரிடம் சென்று தலைவணங்கி அவர்களைப் பற்றி கூறினான். அமைச்சர் அருகே வந்து வணங்கி “வருக, குருகுலத்தோன்றலே! என் பெயர் சுபூதன். இளைய பாண்டவரைப்பற்றி கதைகளினூடாக அறிந்திருக்கிறோம். அவரது சிறுவடிவாகிய மைந்தரை நேரில் காண்பது நிறைவளிக்கிறது. இந்நாள் எங்கள் வரலாற்றிலும் ஒளியுடன் எப்போதும் எழுதப்படட்டும்” என்றார்.
அபிமன்யூ “அசுரர்களும் அதே முகமனைத்தான் சொல்கிறீர்கள்” என்றான். அவர் புன்னகைத்து “அதே அரசியல், அதே படைக்கலங்கள். ஆகவே அதே சொற்கள்தானே முறை?” என்றார். அபிமன்யூ உரக்க நகைத்து “ஆம், மெய்தான்” என்றான். “நானும் உங்களிடம் அதே முகமன்களைச் சொன்னதாக எடுத்துக்கொள்ளுங்கள்… தூய நிலமான ஆசுரத்தில் கால் வைப்பதென்பது…” சுபூதர் “போதும், எடுத்துக்கொண்டேன். வருக! தாங்கள் இளைப்பாறி ஆடை மாற்றி அவை புகலாம்” என்றார்.
அரண்மனையின் ஒவ்வொரு அறையும் அவர்களின் உடலளவு பெரிய மரத்தூண்களால் தாங்கப்பட்டு அதே அளவு பெரிய மரச்சட்டங்களால் கூரையிடப்பட்டவை என்பதை பிரலம்பன் கண்டான். அவை செதுக்கிச் சீரமைக்கப்படவில்லை. ஆகவே அடிமரங்கள் செறிந்த காடொன்றுக்குள் செல்லும் உணர்வையே அவை உருவாக்கின. தரை என அமைந்த மரங்களும் தடித்தவை என்பதனால் மரத்தரைகள் எழுப்பும் ஓசை எதுவும் எழவில்லை. ஓசையின்மை அது கல்லால் ஆனது என்ற எண்ணத்தை உள்ளத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தது. “எங்கும் மரம் சீரமைக்கப்படவில்லை… இவர்கள் தச்சியல் கற்கவே இல்லையா?” என்றான் பிரலம்பன். “மாறாக இவ்வாறு கட்டத்தான் தச்சியல்தேர்ச்சி தேவை” என்றான் அபிமன்யூ.
“ஏன் மரம் செம்மை செய்யப்படுகிறது? செம்மை என்பது என்ன? ஒவ்வொரு மரமும் தனக்கான வடிவம் கொண்டது. அனைத்தையும் ஒரே வடிவில் ஆக்குவதையே நாம் செம்மையாக்கம் என்கிறோம். ஒரே வடிவில் ஆக்கப்பட்ட மரங்கள் உறுதியாக இணைந்துகொள்ளமுடியும். பண்படா தனிவடிவ அடிமரங்களை இணைத்து அதேபோன்ற வடிவங்களை அமைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு மரங்களின் எடையும் அமைப்பும் மிக நன்றாகத் தெரிந்திருக்கின்றன என்று பொருள்… அதோடு அவர்கள் மரங்களை பெரும்பாலும் கொல்வதில்லை. நோக்குக, இந்தத் தூண்மரங்கள் உயிருள்ளவை.” பிரலம்பன் “ஆம்” என்று வியப்புடன் தொட்டுப்பார்த்தான். “நாம் வாழ்வது நமக்கேற்ப செதுக்கப்பட்ட உயிரற்ற மரங்களின் காட்டில்” என்றான் அபிமன்யூ.
அவர்களுக்கு அளிக்கப்பட்ட அறையில் மாற்று ஆடைகளும் நீராட்டுப் பொருட்களுமாக ஏவலர் காத்திருந்தனர். அவர்கள் அரசமுறைப்பணிவு எதையும் காட்டவில்லை. “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரை வணங்குகிறேன். நான் மரீசன். இவன் குமுதன்…” என அறிமுகம் செய்துகொண்டார்கள். மரீசனின் தோள்களில் கையிட்டு வளைத்த அபிமன்யூ “நீராடத்தான் வேண்டுமா, மரீசரே? நறுஞ்சுண்ணம் மட்டும் போட்டால் போதாதா?” என்றான். “நெடுந்தொலைவு வந்துள்ளீர்கள். வியர்வை இருக்கும்” என்றார் மரீசர். “ஆம், அதற்கு கஸ்தூரி, கோரோசனை எதையாவது பூசலாமே?” மரீசர் “இளவரசே, குளிக்கத் தயங்கும் இளம்அகவையரை நாங்கள் பார்க்கத் தொடங்கி நெடுநாட்களாகின்றன…” என்றார். “ஆனாலும் ஒரு நல்வழியை கண்டடையவில்லை அல்லவா?” என்றான் அபிமன்யூ. “ஒரே வழிதான், நீராடிவிடுவது” என்றார் மரீசர். “சரி, என்ன செய்வது?” என்றான் அபிமன்யூ.