எழுதழல் - 16

மூன்று : முகில்திரை – 9

fire-iconஆயர்பாடியில் அநிருத்தனுக்கு எப்போதும் களித்து உடனிருக்கும் பன்னிரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களின் முதுதந்தையர் தாங்கள் அவ்வாறு அங்கு இளைய யாதவருடன் கானாடியும் காளிந்தியில் ஆடியும் வளர்ந்தவர்கள் என்றனர். “இன்றிருக்கும் அத்தனை பசுக்களும் காளைகளும் அன்றும் இதே தோற்றத்துடன் இருந்தன. வேறு உடல்களில்” என்றார் ஸ்தோக கிருஷ்ணர். அம்சுவும் பத்ரசேனரும் விலாசியும் புண்டரிகரும் விடங்கரும் காலவிங்கரும் எப்போதும் இணைந்தே இருந்தனர்.

“அவரை பிரியமுடியாது என்றுசொல்லி ஸ்ரீதமரும் சுதமரும் வசுதமரும் உடன்சென்று துவாரகையில் அமர்ந்தனர். அவர்கள் அறிந்த இளைய யாதவர் அகவைமுதிர்ந்துகொண்டே இருக்கிறார். இங்கே நாங்கள் அதே கன்றுகளுக்குப்பின் அதே வளைதடியுடன் குழலூதிச்செல்லும் அதே யாதவனைக் கண்டு உடனிருக்கிறோம்” என்றார் விலாசி. “இங்கு அவர் இல்லாத இடமே இல்லை. இங்கு அவர் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருப்பார். புல்லென வெளித்தெரிவது மண்ணின் கனிவுதான். எத்தனை உண்டாலும் அது முளைத்தெழுமென பசுக்கள் அறியும்.”

அநிருத்தனைக் கண்டதுமே விழிகளில் கனிவும் கனவும் நிறைய ஓடிவந்து கைகளையோ தோளையோ தொட்டுக்கொண்டு நெகிழ்ந்த குரலில் “என் அரசே” என்றும் “அழகனே” அழைத்து பேசும் பெண்டிர் அனைவரும் அங்கு வளர்ந்த அவன் மூதாதையைக் கண்டு உடனாடியவர்கள். லலிதையின் இல்லம் யசோதையின் இல்லத்தின் அருகிலேயே இருந்தது. யமுனையின் கடம்பமரத்தடிக்குச் செல்லும் வழியில் இருந்தது விசாகையின் இல்லம். செம்பகலதையும் சுசித்ரையும் காட்டருகில் குடியிருந்தனர். துங்கவித்யையும் இந்துலேகையும் அருகே மதுவனம் செல்லும் பாதையில் கோபுச்சம் என்னும் ஊரில் இருந்தனர். ரங்கதேவியும் சுதேவியும் மலையடிவாரத்தில் பீதபாகம் என்னும் ஆயர்குடியில் இருந்தனர்.

அங்கிருந்த ஆயர்பெண்கள் அனைவருமே பிறர் அறியாத ஒன்றை தங்கள் பொதுமந்தணமாக உளம் கரந்திருந்தனர். விழிகளாலேயே அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி ஒன்றிருந்தது. குரங்கசியும் மண்டலியும் மணிகுண்டலையும் மாதலியும் சந்திரலலிதையும் மாதவியும் மதனலசையும் மஞ்சுமேதையும் சசிகலையும் சுமத்யையும் மதுரகேசையும் கமலையும் காமலதிகையும் குணசூடையும் மாதுரியும் சந்திரிகையும் பிரேமமஞ்சரியும் மஞ்சுவும் ஒருவர் முகத்தையே பிறரும் கொண்டிருந்தனர். ஒன்றின் நூறு ஆடிப்பாவைகள் அவர்கள் என்றனர் ஆயர்குடிப் பாடகர்.

எங்கிருந்தாலும் அவர்கள் கோகுலத்திலேயே வாழ்ந்தனர். இருநாளுக்கொருமுறையாவது அவர்கள் யமுனையிலோ பைம்புல்வெளிகளிலோ கூடினர். மந்தரமலையை வழிபடும் ஆவணக்கநன்னாளிலோ சித்திரை முழுநிலவிலோ ஆயர்கூடும் திருவிழாக்களில் அவர்கள் பத்துநாட்களுக்கு முன்னரே கோகுலத்திற்கு வந்து அங்கே ஒருவர் இல்லத்தில் பிறர் என, ஒவ்வொருவர் இல்லத்திலும் அனைவரும் என தங்கியிருந்தார்கள். ஒற்றைத்திரளென நிலவெழுந்த மலைச்சாரலில் கூடி விளையாடினர். அவர்கள் மட்டுமே கேட்கும் ஒரு குழலோசை அங்கே தளிர்மறையா காட்டில் என்றுமிருந்தது.

மூதன்னை ருக்மிணி தன் இரு மருமகள்களான பிரபாவதியையும் மாயாவதியையும் அழைத்துக்கொண்டு முதுதந்தை நந்தகோபரைப் பார்க்க கோகுலத்திற்கு வந்தபோது மாயாவதியின் மடியில் பன்னிரண்டுமாதமான அநிருத்தன் இருந்தான். படகுகள் கோகுலத்தின் துறைமேடையை அணுகியபோது அப்பகுதியெங்கும் யாதவர் நிறைந்திருந்தார்கள். பெண்கள் ஆடைவண்ணங்களின் செறிவாக கரைவளைவை சூழ்ந்திருக்க அவர்களுக்குப்பின்னால் ஆண்கள் தலைப்பாகைகளாக அரணிட்டிருந்தனர். மெல்லிய பேச்சொலிகளும் கிளர்ச்சியின் இளநகைப்போசைகளும் கலந்தெழுந்துகொண்டிருந்தன. காளிந்தியின் சிற்றலைகள் கரைச்சேற்றை அலைக்கும் நாவோசை உடன்கலந்தது.

துவாரகையின் கருடக்கொடி பறக்கும் முதன்மைக்காவல்படகு கரையணைந்து அதிலிருந்து காவலர் பாய்ந்திறங்கி துறைமேடையை உறுதிசெய்தனர். சூழ்ந்திருந்த யாதவர்களிடம் “விலகிச்செல்க… எவரும் படைக்கலம் கொண்டிருக்கலாகாது!” என ஆணையிட்டனர். “இங்கே எவரிடமும் படைக்கலம் இருந்ததே இல்லை” என்று ஒரு பெண் சொன்னாள். ஓர் ஆயர்குலத்து இளைஞன் “பெண்களின் விழிகளே பெரும்படைக்கலங்கள் இங்கே” என்றான். சிரிப்புகள் சூழ்ந்தொலிக்க படைத்தலைவன் “அமைதி!” என ஓசையிட்டான்.

தொடர்ந்து வந்த படகுகளில் முதற்படகில் துவாரகையின் அமைச்சர்களும் இரண்டாவது படகில் ருக்மிணியும் இருந்தனர். ருக்மிணி இறங்கியதும் யாதவர்கள் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் வாழ்த்தி நிறுத்தியபின்னரும் படைவீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி அவர்களிடம் வாழ்த்தொலிகூவும்படி கைகளால் ஊக்கினர். ஆனால் யாதவர்கள் ருக்மிணியை நோக்கி விழிமலைத்து நின்றனர். முதுஆய்ச்சி ஒருத்தி “இளைத்துவிட்டாள்” என்றாள். “முதுமை அவளுக்கும் வந்துவிட்டதே?” என்றாள் பிறிதொருத்தி. “ஏன், ஷத்ரியப்பெண்களுக்கு முதுமையே வராதா என்ன? அவர்கள் என்ன தங்கத்தைப் பொடியாக்கி அன்னமென உண்கிறார்களா?”

ருக்மிணி வலக்கால் வைத்து மேடையில் ஏறி சூழ்ந்து நின்றவர்களை நோக்கி கைகூப்பி வணங்கினாள். அவள்மேல் மலர் தூவி வாழ்த்தினர் அவளுடன் வந்த படைவீரர்கள். “மலர்களையும் முன்னரே கொண்டுவந்துவிடுகிறாளா?” என்றாள் ஓர் ஆய்ச்சி. ஆய்ச்சியர் ஆடைமுனைகளை வாயால் கவ்வியபடி சிரித்தனர். இன்னொரு படகு மெல்ல அருகணைய அதில் அசுரமாமன்னர் வஜ்ரநாபரின் அன்னக்கொடி பறந்தது. அதிலிருந்து பிரத்யும்னரின் முதலரசி பிரபாவதி தன் மகள் சதானந்தையுடன் இறங்கினாள். இளவரசி கூடி நின்றவர்களை வியந்த விழிகளுடன் நோக்கி அன்னையின் ஆடைபற்றி முகம் மூடிக்கொண்டாள்.

அசுரப்பேரரசர் சம்பரனின் சிம்மக்கொடி பறக்கும் படகு தொடர்ந்து வந்து கரையணைய அதில் பிரத்யும்னரின் இரண்டாம் அரசியரான மாயாவதி இடையில் அநிருத்தனுடன் இறங்கினாள். குழவியைக் கண்டதும் யாதவப்பெண்கள் உரக்க ஓசையிட்டனர். “இளையவன்! இளையவனே தான்!” என்று ஒரு முதுமகள் கூவினாள். அத்தனை தடைகளையும் உடைத்தபடி யாதவப்பெண்கள் பாய்ந்து படகுத்துறையை நிரப்பினர். நூறுகைகளால் அநிருத்தன் அரசியிடமிருந்து பிடுங்கப்பட்டான். அலைகளில் என அவன் மிதந்து சென்றான். மாயாவதி பதறிக்கூச்சலிட “அவர்களுக்குரியவன் அவன்… நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றாள் ருக்மிணி.

கோபியர் எவரும் ருக்மிணியை காண யமுனைக்கரைக்கு வரவில்லை. முன்னர் சத்யபாமையுடன் எண்துணைவியர் பலமுறை கோகுலத்திற்கு வந்ததுண்டு. ஒருமுறைகூட அவர்களைக் காண கோபியர் வரவில்லை. முதல்முறை வந்தபோது சத்யபாமை புலரியில் யமுனையில் மீன்களென நீராடிக்களித்த பெண்களைப் பார்த்துவிட்டு “அனைவருமே அழகியர். இவர்கள் ஏன் அவைக்கும் மகளிர்க்கூட்டத்திற்கும் வரவில்லை?” என்றாள். “அதெல்லாம் எதற்கு? அவர்கள் பிச்சியர்” என்றாள் யசோதை. ஆனால் அவள் விழிகள் சத்யபாமையை எச்சரிக்கை கொள்ளச்செய்தன.

அன்றுமாலை அவள் முதிய ஆய்ச்சியிடம் அவர்களைப்பற்றி கேட்டாள். “அவர்கள் இங்கிருந்த ராதை என்னும் பிச்சியின் தோழிகள். பிச்சியிடம் பழகி அவர்களும் பிச்சியென்றாகிவிட்டனர்” என்றாள் முதுமகள். “முழுநிலவுநாளில் ஆடையில்லாமல் யமுனையில் ஆடுவார்கள். தனியாக மலையேறிச்சென்று பாறைமுகடில் நின்றிருப்பார்கள். அவர்கள் அஞ்சுவதேதுமில்லை. கணவனோ குழந்தைகளோ சென்றடைய முடியாத ஆழம் கொண்டவர்கள். அவர்களுடன் எப்போதும் வேறெவரோ இருந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் பூசகர்.”

அதன் பின்னர் சத்யபாமை அவர்களைப்பற்றி ஒரு சொல்லும் பேசவில்லை. அவர்களை அறிந்ததையே அவள் உள்ளம் உள்ளேசெலுத்தி மூடிவிட்டது. எட்டு துணைவியரும் அந்த உளநிலையையே கொண்டனர். பின்னர் வருகையில் ஒருவருக்கொருவர் நோக்கமுடியாத இருவேறு உலகங்களில் வாழ்பவர்களாகவே அவர்கள் இலங்கினர்.   எட்டு அரசியரும் முதல்மைந்தர்களை ஈன்றபோது முதுதாதையும் மூதன்னையும் கண்டு வாழ்த்தும்பொருட்டு அங்குவந்திருந்தனர். பானுவுடன் சத்யபாமை வந்தபோது ஆயர்பாடியே விழாக்கோலம் கொண்டது. பிரத்யும்னனுடன் ருக்மிணி வந்தபோது மதுராவிலிருந்து தேவகியும் ரேவதியும் உடன்வந்தனர். அன்று ஆயர்களின் பெருமன்று கூடியது.

தொடர்ந்து ஜாம்பவதியின் மைந்தன் சம்பனும் நக்னஜித்தியின் மைந்தன் வீரனும் லக்‌ஷ்மணையின் மைந்தன் பிரகோஷனும் மித்ரவிந்தையின் மைந்தன் விருகனும் பத்ரையின் மைந்தன் சங்க்ரமஜித்தும் வந்தபோதும் ஆயர்பாடி அதை விழாவெனக் கொண்டாடியது. எந்த மைந்தனைப்பார்க்கவும் கோபியர் எவரும் வரவில்லை. காளிந்தி தன் மைந்தன் ஸ்ருதனுடன் வந்தபோதுமட்டும் அவர்கள் ஒருநாள் மழை ஓய்ந்து மென்தூறல் எஞ்சியிருந்த முதற்புலரியில் கையில் இளநீலக் காட்டுமலர்களுடன் வந்து யசோதையின் இல்லத்தின்முன் முற்றத்தில் நின்றனர்.

அவர்களை கண்டதும் யசோதை முகம் மலர்ந்து “வருக, கோபியரே!” என வெளியே சென்றாள். அவர்கள் அந்த மலர்களைக்கொண்டுவந்து இளவரசனின் காலடியில் வைத்து தலைதொட்டு வாழ்த்தி திரும்பிச்சென்றார்கள். காளிந்தி அவர்களை பின் தொடர்ந்துசென்று அவர்கள் ஈரமண்ணில் பதித்திட்டுச்சென்ற காலடிச்சுவடுகளை நெடுநேரம் நோக்கி நின்றாள். யசோதை அருகணைந்து “அவர்கள் பிச்சிகள்” என்றாள். “ஆம், அன்னையே. வேய்குழலிசையை கேட்டவர்கள்” என்றாள். பின்னர் “அதைமட்டுமே கேட்டுவாழ்வதென்பது பெரும்பேறு” என்று நீள்மூச்செறிந்து மீண்டாள்.

ஆனால் அநிருத்தன் தெருவினூடாக ஆய்ச்சியர் கைகளில் ஏறிப் பறந்து சென்றபோது கூச்சலிட்டபடி அவர்கள் பாய்ந்து வந்து அவனைப்பற்றிப் பிடுங்கிக்கொண்டனர். அவர்களின் கூச்சல்கேட்டு கோபியர் அனைவரும் கூடி அவனை கொண்டுசென்றனர். பின்னர் ஆயர்குடிப்பெண்கள் அவனை தொட்டதே இல்லை. அங்கிருந்து அவனை கொண்டுசெல்ல மாயாவதியால் இயலவில்லை. “அவன் இங்கிருக்கட்டும்… இன்னொரு பீலிவிழியனாக உருவாகி எழட்டும்” என்று ருக்மிணி ஆணையிட்டாள்.

fire-iconஒவ்வொரு நாளும் தன் மூதாதையர் நந்தகோபரின் இல்லத்திலிருந்து புலரிக்கு முன்னரே கன்றுகளை ஓட்டியபடி அநிருத்தன் காடுகளுக்குச் செல்வான். அவன் மூதன்னை யசோதை அவனுக்கு முன்னரே எழுந்து வறுத்த நெல்மணியை அம்மியில் பொடித்து பாலில் கொதிக்கவைத்து கஞ்சியாக்கி கனிகளுடன் வெல்லம் சேர்த்து மாவைக்குழைத்து ஆவியில் வேகவைத்த இனிப்பும் சமைத்து வைத்துக்கொண்டு காத்திருப்பாள். அவன் விழித்தெழுந்து மெல்லிய ஓசையுடன் சோம்பல்முறிப்பதைக் கேட்டதுமே பாய்ந்து வந்து அவன் மஞ்சத்தருகே நின்று குனிந்து முகத்தை நோக்கி “எந்தையே! என் அரசே! எழுக!” என்பாள்.

விழிதிறந்து அவன் நோக்கும் முதல்முகம் தன்னுடையதென்றிருக்கவேண்டும் என யசோதை எண்ணினாள். அவன் கன்னங்களில் சிறுகுழியுடன் புன்னகை புரிகையில் தன் விரல்களை நொடித்து கண்ணேறுகழிப்பாள். அவன் எழுந்து கைகளையும் கால்களையும் விரித்து உடல் சொடுக்கிக் கொள்ளும்போது அவன் கரிய தோள்களின் அழகையும் நெஞ்சில் சுருண்ட மென்மயிர்நிரை கீழ்வயிறு வரை நுரையெனச் சென்று மறைவதையும் நீண்ட கைகளில் கிளை விரித்தோடிய நரம்பையும் மாளா விடாயுடன் நோக்குவாள். அவன் முகத்தில் பூமயிர் தாடியும் மென்மீசையும் படிந்திருப்பதை உள்ளத்தின் விரல்களால் தொட்டுத்தொட்டு வருடுவாள்.

அவன் கேட்கும் வினாவுக்கெல்லாம் தன் கனவிலிருந்து அறுத்துக்கொண்டு வந்துதான் அவளால் விடையளிக்க முடியும். ஆகவே எப்போதும் பொருத்தமில்லாத சொற்களையே அவள் சொன்னாள். “உணவு ஒருங்கிவிட்டதா?” என்றால் “ஆம், பசுக்கள் இன்று நன்கு கறந்தன” என்பாள். “ஸ்ரீமுதன் வந்தானா?” என்று கேட்டால் “சஃப்யை இப்போதுதான் சென்றாள்” என்பாள். அவன் நகைத்து அவள் தோளைப்பற்றி குலுக்கி “எங்கிருக்கிறாய் கன்னியே? காதலனைக் கனவு கண்டுகொண்டிருக்கிறாயா?” என்பான். அவள் காதில் உரக்க “விழித்தெழுக, ஆயர்குலத்து அழகியே!” என்பான்.

சினமும் நாணமும் கொண்டு அவன் கையை விலக்கி, தோளில் அடித்து “என்ன பேச்சு பேசுகிறாய்? நான் உன் தந்தைக்குத் தந்தையைப் பெற்ற அன்னை” என்று யசோதை சொல்வாள். “அறுபதாண்டுகளுக்கு முன்பு இந்த இல்லத்தை அவன் ஒளிபெறச்செய்த கதையை பாரத வர்ஷத்தின் எந்தச் சூதனிடம் கேட்டாலும் பாடுவான்” என்று சொல்லி “வருக!” என கைபற்றி இழுத்துச்செல்வாள். “ஆம், நானும் கேட்டிருக்கிறேன். ஆயர்பாடியில் குறைந்தது ஆயிரம் கிருஷ்ணன்களாவது அன்று வளர்ந்திருக்க வேண்டும். காளியனைக் கொன்றவன். பூதனையை வென்றவன். ஒவ்வொரு நாளும் அவன் இங்கு ஆற்றியவை பெருகிக்கொண்டிருக்கின்றன” என்றபடி அவன் பின்தொடர்வான்.

“இப்போது அவன் வடிவாகவே நீ இங்கு வந்துள்ளாய். நீ ஆற்றுபவையும் அவன் விளையாட்டே” என்றாள் மூதன்னை. “அங்கே துவாரகையில் எந்தை அவருடைய இளைய வடிவாக வாழ்வதில் சலிப்புற்று காட்டில் அலைகிறார். நல்ல வேளையாக இங்குள்ள காட்டுவிலங்குகளும் கன்றுகளும் பசுக்களும் என்னை அநிருத்தனாகவே எண்ணுகின்றன” என்றான். “யார் சொன்னது அப்படி? அவை அன்றிருந்த அதே கன்றுகள் என்கிறார்கள்” என்றபடி அவள் உணவை எடுத்துக்கொண்டு வந்தாள். “கேள் மைந்தா! பாரதவர்ஷத்தில் அனைத்து ஆறுகளும் கங்கையே. அனைத்து மலைகளும் இமயமே”

“இல்லை, ஒவ்வொரு குன்றுக்கும் அது தலையிலேந்தும் வானம் தனித்ததே” என்றான் அநிருத்தன். அவள் அவனை அடுமனையில் அமரச்செய்து இன்கஞ்சியும் பால்கஞ்சியும் பரிமாறினாள். அவன் உண்ணுகையில் கையையும் வாயையுமே பார்த்தாள். “என்ன நோக்கு இது? உன் முன் அமர்ந்திருக்கையில் சிலை என்றாகி கோயிலில் வீற்றிருப்பதுபோல் உணருகிறேன்” என்றான் அநிருத்தன். ஒவ்வொரு முறையும் தன் நோக்கை எவரேனும் சொல்லும்போது அவள் நாணம்கொண்டு விழி விலக்கி உடனே சீற்றம் கொள்வது வழக்கம்.

“ஆம், நோக்கினேன். நோக்காமல் எப்படி இருக்க இயலும்? நீ என்ன கன்று மேய்த்து அலையவேண்டிய யாதவனா என்ன? பாரதவர்ஷத்தின் பேரரசு ஒன்றின் இளவரசன். உன் தந்தையை எண்ணி அரசர்கள் மஞ்சங்களில் துயிலின்றி புரள்கிறார்கள். உன் மூதாதையை பாரதவர்ஷமெங்கும் ஆழிசங்கேந்திய அண்ணலின் மண்நிகழ் வடிவம் என்று வணங்குகிறார்கள். இங்கு வெயிலிலும் கானகக்காற்றிலும் அலைந்து மெலிந்து கருமைகொண்டு வேடன் போலிருக்கிறாய். அவர்கள் வந்து உன்னைப்பார்த்தால் என்ன எண்ணுவார்கள் என்று ஒவ்வொரு முறையும் உன்னைப்பார்க்கையில் அஞ்சுகிறேன்.”

“நீ நிறைய உணவு சமைத்து வை. உண்டுவிட்டு நான் இவ்வறைகளுக்குள்ளேயே வாழ்கிறேன். நிழலில் பூத்த மலர்போல் இருப்பேன்” என்றுவிட்டு எழுந்த அநிருத்தன் கைகளைக் கழுவியபின்பு அவளிடம் “வேண்டுமென்றால் கைகளையும் கால்களையும் ஊன்றி இல்லம் முழுக்க தவழ்கிறேன்…” என்றான். சிரித்து “போடா” என்று அவள் கையை அடிக்க அவள் இரு கன்னங்களையும் பற்றி இழுத்து தலையைக்குலுக்கி “சிரிக்கையில் நீ பெரிய அழகி, அறிவாயா யசோதை?’ என்றான். “நீ என்னை ஏளனம் செய்ய வேண்டாம். என் சிறு வயதில் மெய்யாகவே ஆயர் குடியில் பெரிய அழகியாகத்தான் இருந்தேன்” என்றாள்.

“ஏளனமில்லை, யசோதை. உன்னைப்போல் அழகியை நான் பார்த்ததே இல்லை” என்று சொல்லி அவள் தோளைப்பிடித்து உலுக்கி மும்முறை சுழற்றி நிறுத்தினான். “அய்யோ! அய்யோ!” என்று அலறி அவனை பற்றிக்கொண்டாள். “என்ன செய்கிறாய்? என் அகவையென்ன? தலைசுற்றி விழுந்தால் பிறகு எழவே மாட்டேன்” என்றாள். “அதெல்லாம் எழுவாய்” என்றபின் “எழவில்லை என்றால்தான் என்ன? எண்பத்தைந்தாண்டுகளுக்குப்பின் இப்புவியில் என்ன எஞ்சப்போகிறது?” என்றான்.

“மூடா, இப்போதுதான் உலகமே இனிமைகொண்டு கனிந்துள்ளது” என்றாள் யசோதை. “இன்றுபோல உன் மூதாதையிடம் நான் விளையாடவே இல்லை, தெரியுமா? ஒன்று நோக்குகையில் நூறு செய்யும் பிள்ளையை எண்ணி ஒருநாளும் மெய்மறந்து துயின்றதில்லை… இன்று எண்ணி எண்ணி அந்நாட்களை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறேன்.” “இன்று நீ என் களித்தோழி அல்லவா? வருகிறாயா விளையாட?” என அவன்  குனிந்து அவளை தன் இருகைகளில் தூக்கிக்கொண்டாள். கால்களை உதைத்தபடி “விடு விடு… கீழே போட்டுவிடுவாய். கீழே விழுந்தால் அதன் பின் என் எலும்புகள் கூடாது” என்றாள்.

“அதெல்லாம் போடமாட்டேன்… வா” என்று சொல்லி அவளை தூக்கிக்கொண்டு சென்று திண்ணையில் அமரவைத்து “இங்கே அமர்ந்து வெளியே பார்க்கையில் நீ உலகத்தை ஆளும் சக்ரவர்த்தினி போலிருக்கிறாய். நீதான் தேவயானி அல்லது தமயந்தி என்றால் எவரும் நம்புவார்கள்” என்றான். “போடா! கன்றோட்டும் ஆயர்குடிப்பெண் நான். சக்ரவர்த்தினி என்றால் யாரென்று கதைகளினூடாக நானும் கேட்டிருக்கிறேன்” என்றாள். “நான் சொல்கிறேன், நீ சக்ரவர்த்தினி. உனக்கு ஆள்வதற்கு நிலமும் அடிபணிவதற்கு மக்களும் வேண்டுமென்றால் ஒரு சொல் உரை. இங்கிருந்தே வில்லும் அம்புமாக கிளம்பி உனக்கொரு பேரரசை உருவாக்கித்தருகிறேன்” என்றான்.

அவள் புன்னகை நிறைந்த கண்களுடன் “பேரரசா?” என்றபின் விழிகள் மேலும் ஒளிகொள்ள “இங்கே என் கரியவன் கைக்குழந்தை என வந்த அன்றே நான் மூவுலகையும் வென்றுவிட்டேன். இனி எனக்கு அவனே எண்ணினாலும் அளிப்பதற்கேதுமில்லை” என்றாள்.

அவன் கன்றுகளுடன் செல்கையில் தன் இல்லத்துத் திண்ணையில் நின்றபடி அவன் இறுதி அசைவு மறைவது வரை விழியோட்டி நோக்கினாள். அத்தனை இல்லத்திண்ணைகளிலும் முதுபெண்டிரும் அடுமனைச்சாளரங்களில் இளம்பெண்டிரும் அவன் மேல் விழி நட்டு முகம் மலர்ந்து நின்றிருப்பதை அவள் கண்டாள். “இவ்வண்ணம் ஓர் அருளை மீண்டும் ஆயர்பாடிக்களித்தாய் இளையவனே” என்று நெஞ்சில் கைவைத்து சொல்லிக்கொண்டாள்.

அவன் சென்றபின் அவனுருவம் தன் விழிகளில் மேலும் தெளிவதை உணர்ந்தபின் இளைய யாதவன் சிறுவனாக அவள் கையில் இருக்கையில் அன்னைக்குரிய அச்சமும் அதற்கும் ஆழத்தில் பெண்மைக்குரிய நாணமும் கொண்டு அவன் உடலை அவள் நன்கு விழியோட்டி நோக்கியதே இல்லை என்று எண்ணிக்கொண்டாள். இன்று தளர்ந்த முதுமையில் பெண்ணென்று அவள் கொண்ட உளச்சுருக்கங்கள் அனைத்தும் விலக அன்னையென்று மட்டுமே ஆகி நின்றிருக்கையில் எந்த்த தடையுமிலாது அவனை நோக்க முடிந்தது.

அவன் அங்கு இருக்கையில் அவன் கால்களிலிருந்து தலை வரை சலிக்காது அவள் விழிகள் ஓடிக்கொண்டிருந்தன. வரைந்த ஓவியத்தை உளநிறைவு கூடாது மீண்டும் மீண்டும் தூரிகையால் தொட்டு செம்மைப்படுத்திக்கொண்டிருக்கும் பித்தான ஓவியனைப்போல. அவன் கொல்லையில் உடல் கழுவிக்கொள்கையில் கல நீருடன் சென்று நின்று அவனை நாணமின்றி நோக்குவாள். முதுகை நன்கு தேய்க்கவில்லை என்று கண்டித்தபடி மென்சுருள் மரவுரியால் அவனை தொடுவாள். தலை துவட்டிவிட்டு அவன் அமர்ந்திருந்தாலும் பிறிதொரு துணியை எடுத்து வந்து அவன் தலையை தானே துவட்டுவாள். அவன் தலையை மெல்ல நெஞ்சுடன் சேர்த்து அணைத்துக்கொள்வாள். அவன் தோள்களில் விரலோட்டுவாள்.

அவன் துயில்கையில் அருகமர்ந்து மெல்ல விசிறியபடி நோக்கியிருப்பாள். வெளிக்காற்று அனைத்துச் சாளரங்களினூடாகவும் பீரிட்டு வந்து அறை நிறைத்துச் சுழன்றுசெல்லும் ஆடிமாதத்தில்கூட அவள் அவ்வாறு விசிறுவதைக்கண்டு வாயிலில் நந்தகோபன் நின்று “காற்றை விசிறி விரட்டுகிறாயா என்ன?” என்று ஏளனம் செய்வதுண்டு. “இங்கென்ன பார்வை? உங்கள் விழி பட்டு குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடப்போகிறது செல்க!” என்பாள்.

இரவில் மறலி வந்து தன்னை அழைக்கையில், கைகளும் கால்களும் ஒவ்வொன்றாக உயிர் நீக்கையில் ,விழிகள் மட்டும் இங்கு எஞ்சியிருக்க விழைந்து அவனை வந்து பற்றிக்கொள்ளும் என்று அவள் எண்ணுவதுண்டு. அவள் உயிரையும் உடலையும் கனவுகளையும் பாசக்கயிறுகொண்டு பற்றி எடுத்தபின் மாமயிடன் செல்ல இரு சிறு நீலப்பறவைகள்போல தப்பிப்பறந்து ஆயர்ப்பாடியிலும் அருகிலிருக்கும் புல்வெளியிலும் அவனைச் சூழ்ந்து பறக்கும் அவள் கண்களை கோபியர் மட்டுமே அறிவார்கள்.

அவ்விழிகளின்றி எஞ்சியவை அவளேயல்ல என்று உணர்ந்த காலன் சினந்து வந்து வலைவீசிப்பற்ற முயல நழுவிச் சென்று காளிந்தியில் பாய்ந்து இருகரிய மீன்களென நீந்தும். இறுதியில் அவன் வலைப்பட்டு விண்ணிலேறிச் செல்கையில் இமைச்சிறகு விரித்து கருவிழி ஓரங்களில் புதையும்படி நோக்கு திருப்பி அவனுடலின் இறுதித்துளி காட்சியையும் சேர்த்துக்கொள்ளும். பின்னர் இமைமூடி விழிச்செப்பில் சேர்த்த அந்த இறுதித்தோற்றத்தையே தெய்வமென்று நிறுத்தி காலமுடிவின்மைவரை தவம் செய்யும். ஒரு போதும் இந்நெஞ்சின் மென்மயிர்ப்பரவலில் இருந்து, இத்தோள்களிலிருந்து, இந்த நீண்ட கைகளிலிருந்து, இச்சுரிகுழலில் சூடிய பீலியில் இருந்து, இக்குறுஞ்சிரிப்பில் இருந்து விடுதலை இல்லை.

தவம் முதிர்ந்தால் அங்கிருக்கும் பிரம்மனிடம் மீண்டும் இங்கு திகழவே நற்சொல் கேட்பேன். இங்கு ஆயர்பாடியில் ஏதோ வடிவில் அவன் நின்றிருப்பான். இளமைந்தனென ஆடி நிறைவு கொள்ள அவனால் இயலாது. ஒவ்வொரு முறையும் உடல் வளர்ந்து செல்கையில் அவனுள் எஞ்சும் குழந்தையொன்று மைந்தனாக மீண்டும் பிறக்கும். ஆயர்பாடியில் கண்ணன் இல்லாமல் ஆவதே இல்லை. ஆயர்பாடிகளிலெங்கும் கண்ணன் இருந்துகொண்டேதான் இருக்கிறான். ஆயர்பாடிகளில் ஒன்றில் ஓர் அன்னையாக நானுமிருப்பேன்.

உளம் உருகி அவள் விழிநீர் உகுப்பாள். சுவரில் தலைசாய்த்து நின்று தோள்களைக்குறுக்கி மார்பின்மேல் விழிநீர் துளிகள் சொட்ட விம்மி அழுவாள். அவ்வழுகையின் இன்பத்திலிருந்து விலக இயலாதவளாய் நெடுநேரம் அதிலேயே திளைப்பாள். மீண்டும் கன்றுபுரக்கும் தயிர்கடையும் பணிகளுக்கு மீள்கையில் அவன் திரும்பி வரும்வரை அவ்வினிமையே தன்னுள் இருப்பதை உணர்வாள். இருக்கும் இளைய யாதவனைவிட நினைவில் விரியும் இளையவன் இன்னும் பெரியவன்.  ஒவ்வொரு கணமும் ஒரு ஊழி என தன்னை பெருக்கக் கற்றவன். அவனால் இல்லாமல் இருக்க இயலாது.

இங்கிருக்கும் அனைத்தும் அவனே. அவன் விளையாடிச்சென்ற செப்புகள். அவன் அணிந்த ஆடைகள். அவனுக்கு அணிவித்த சிறுநகைகள். அனைத்தையும் அவள் அங்கு வைத்திருந்தாள். அவன் வெண்ணை உண்டு உடைத்த கலத்தின் சில்லுகளைக்கூட மரப்பேழையொன்றில் போட்டு கரந்திருந்தாள். ஒவ்வொன்றையும் ஓர் இனிய திடுக்கிடலுடனேயே அவள் தொட்டு எடுத்தாள். தித்திக்கும் நீள்மூச்சுடன் திரும்ப வைத்தாள். ஒவ்வொன்றும் ஓர் உலகு. பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன். புதிதாகப்பிறந்தெழுந்த பிறிதொரு இளைய யாதவன். முடிவிலாதவன். இங்கு என் மைந்தனென நிகழ்ந்தது ஓர் அலை. எண்ணி முடியாத அலைகளின் திசையின்மையே அவன்.