எழுதழல் - 15
மூன்று : முகில்திரை – 8
ஒவ்வொரு நாளும் உஷையிடம் அவள் உள்ளத்தில் உள்ளதென்ன என்று செவிலியரும் சேடியரும் வெவ்வேறு சொற்களில் கேட்டனர். ஒவ்வொரு கேள்வியும் அவளை சினம்கொள்ள வைத்தது. சிலதருணங்களில் சீறி அவர்களை அகற்றினாள். பிற தருணங்களில் துயருற்று கண்ணீர் மல்கி தலைகுனிந்தாள். பின்னர் எவர் எதை கேட்டாலும் அச்சொற்கள் செவிகொள்ளப்படாதாயின. வாயில்களை ஒவ்வொன்றாக மூடி மேலும் மேலும் தனக்குள் சென்று முற்றாகவே அகன்று போனாள்.
கைக்குழவி நாளிலிருந்து அவர்கள் அறிந்த உஷை அவ்வுடலுக்குள் இல்லையென்று அவர்கள் உணர்ந்தனர். அவளுக்கு தலைவாரி கொண்டையிடுபவர்கள், மேனிநறுஞ்சுண்ணம் பூசுபவர்கள், நகங்களை சீரமைப்பவர்கள், ஆடையணிவிப்பவர்கள் தாங்கள் தொட்டறிந்த உஷை அவளல்ல என்று அறிந்து அதை பிறரிடம் சொல்லாது கரந்தனர். ஆனால் ஒவ்வொரு கணமும் ஓரவிழியால் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர். அதை “முளைப்பதற்கு முந்தையநாள் விதைகள் கொண்டுள்ள அமைதி” என்று முதுசேடி ஒருத்தி சொன்னாள்.
சித்ரலேகை அவளிடம் “ஆடியில் நீ கண்டதென்ன என்று நான் அறிவேன்” என்றாள். காய்ச்சல் படிந்த கண்களுடன் அவள் திரும்பி சித்ரலேகையை பார்த்து “என்ன?” என்றாள். “அதை நீயே என்னிடம் வந்து சொல்வது வரை காத்திருப்பேன்” என்று சொல்லி புன்னகையுடன் சித்ரலேகை எழுந்து சென்றாள். எண்ணியிராத சீற்றத்துடன் எழுந்து பின்னால் வந்து சித்ரலேகையின் ஆடைநுனியை பிடித்திழுத்து “நில், நீ மாயக்காரி. என்னை பித்தியாக்கும் பொருட்டு வந்தவள். இருண்ட ஆழங்களிலிருந்து எழுந்து வந்த கொடுந்தெய்வம். நான் தந்தையிடம் இன்றே சொல்வேன். நீ எனக்குக் காட்டியதென்ன என்று சொல்வேன். உன்னை நகர் முற்றத்தில் கழுவேற்றச் செய்வேன். உன்னிலுள்ள தெய்வங்களை காஞ்சிர மரத்தில் ஆணி அறைந்து நிறுத்துவேன்” என்று கூவினாள்.
புன்னகை மாறாமல் திரும்பி நோக்கிய சித்ரலேகை “தங்கள் உடலுக்கு மட்டுமே நோய் இருப்பதாக இங்கு எண்ணுகிறார்கள். உள்ளமும் நோய் கொண்டதென்று அவர்களுக்கு காட்ட வேண்டாம்” என்றாள். உளம் உடைந்து விம்மி அழுதபடி பின்னடைந்த உஷை “நான் அஞ்சுகிறேன். இவையெதுவுமே எனக்கு உகக்கவில்லை. நான் அறிந்த சிறுமி வாழ்க்கைக்கு மீளவே விரும்புகிறேன். என்னை விட்டுவிடு! அளிகூர்ந்து என்னை விட்டுவிடு!” என்றாள். கைகளால் முகம் பொத்தியபடி விசும்பிக்கொண்டு அமர்ந்தாள்.
அவளருகே வந்து குனிந்த சித்ரலேகை “முன்னரே நான் இதை சொன்னேன், இளவரசி. இதை வலியென்றும் துயரென்றும் எண்ணுவது பெரும் மாயை. இது தெய்வங்களின் அருட்கொடை. இனிமையின் மிகையால்தான் துயருறுகிறீர்கள். தேனின் எடைகொண்டு தழையும் மலர்போல. பிறிதொரு தருணத்தில் இதன்ஒரு துளிக்காக ஏங்கி நெஞ்சுலைவீர்கள்” என்றாள். வீம்புடன் தலையசைத்து “வேண்டாம், இது எனக்கு தேவையில்லை. மீளும் வழியென்ன என்று மட்டும் சொல். இது உன் விளையாட்டென்று நான் அறிவேன்” என்றாள் உஷை.
“நான் இங்கு வெளியிலிருந்து வந்த ஒரு அழைப்பு மட்டுமே. அனைத்தையும் மூடி தன்னை சிறைவைத்துக்கொள்ளலாம் என்று மானுடர் எண்ணும்போதெல்லாம் ஊசிமுனை வழிகளினூடாக புகுந்து வருபவள் நான். சிலபோது காற்றாக, சிலபோதும் ஒளியாக, சிலபோது நறுமணமாக” என்றாள் சித்ரலேகை. “வேண்டாம், எனக்கெதுவும் வேண்டாம்” என்று விதும்பியபடி முழங்கால்களை கட்டிக்கொண்டு முட்டில் முகம் புதைத்து தோள் குலுங்கி உஷை அழுதாள்.
அவள் அருகே மண்டியிட்டமர்ந்து தலையைத் தொட்டு “இவ்வழுகையும் ஓர் தேன்சுவையே. இதையும் வாழ்நாளெல்லாம் மீண்டும் மீண்டும் எண்ணி ஏங்குவீர்கள். இது மானுடரைப் படைத்த தெய்வத்தின் விளையாட்டு. காமத்தின் அத்தனை உவகைகளையும் ஒன்றென திரட்டி இளமைந்தர் மேல்செலுத்துகிறார்கள். திகட்டித்திகட்டித் துடித்து விழிநீர் உகுத்து அக்கணத்தைக் கடந்து மீள்கிறார்கள். எளியோர். பின்னர் அதன் நினைவுகளிலேயே வாழ்ந்து முடியவேண்டியவர்கள்” என்றாள்.
அன்று மாலை தீவின் மலர்த்தோட்டத்தில் கடம்ப மரத்தடியில் மலர்ப் படுக்கையில் கைகளை கால்களுக்கிடையே செருகி உடலொடுக்கி விழிமூடி படுத்திருந்த உஷையைத் தேடி அரசி பிந்துமாலினி வந்தாள். அரண்மனையெங்கும் மகளைத் தேடியபோது சித்ரலேகைதான் “இளவரசி அணித்தோட்டத்தில் இருக்கக்கூடும். பகலில் பெரும்பாலான தருணங்களில் அக்கடம்ப மரத்தடியிலேயே அமர்ந்திருக்கிறாள். அரிதாக இரவிலும் சென்று நிற்பதுண்டு” என்றாள். “தோட்டத்திலா? இப்பொழுதிலா? இது அவள் இசைகற்கும் வேளையல்லவா?” என்றபடி அரசி வெளியே சென்றாள்.
தொலைவில் சருகுப்பரப்பின்மேல் வானில் இருந்து உதிர்ந்த செந்நிறத் தூவல் எனக் கிடந்த உஷையைப் பார்த்த அரசி இருகைகளையும் கோத்து நெஞ்சில் அமர்த்தி நின்று ஏங்கினாள். கசையடிபடுபவளின் முகமென உஷையின் முகம் நெளிந்துகொண்டிருந்தது. உடல் மெய்ப்புகொண்டு அதிர்ந்து மீண்டது. மெல்ல அருகணைந்து “உஷை” என்று அன்னை அழைத்தாள். அக்குரல் கேட்காத பிறிதெங்கோ அவளிருந்தாள். மேலிருந்து கடம்ப மலர்கள் அவள் மேல் உதிர்ந்து சுனை நீரை என அவள் தோல்பரப்பை விதிர்க்கச் செய்தன.
அவளருகே அமர்ந்து தோளை மெல்ல தொட்டு “உஷை, விழித்தெழு! அன்னை வந்துளேன்” என்றாள் அரசி. விழிகள் விரிந்து திறக்க அன்னையின் கைமேல் கைவைத்து “அன்னையே…” என்றாள் உஷை. “என்னம்மா, ஏன் இங்கு படுத்திருக்கிறாய்?” என்றாள். “அன்னையே” என்று மீண்டும் அழைத்தபின் அவள் விசும்பி அழத்தொடங்கினாள். அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்து குழல் கோதியபடி “ஏனடி? ஏன் அழுகிறாய்? அன்னையிடம் சொல், உன்னுள்ளத்தில் எழுந்த குறை என்ன? நீ விழைவதென்ன?” என்றாள் அரசி.
மறுசொல்லில்லாமல் உஷை அவள் மடியில் முகம்புதைத்து மூச்சொலிகளும் விம்மல்களுமாக அழுது மெல்ல ஓய்ந்தாள். குனிந்து அவள் கன்னத்து நீரை துடைத்து “அன்னை உன் நெஞ்சை அறிவேன். நீ விழையும் வாழ்வு உனக்கு அமையும். இன்று உன் மூதன்னையும் முதுதந்தையும் சிருங்கபிந்துவில் இருந்து சோணிதபுரிக்கு வந்து சேர்கிறார்கள். நாளை மறுநாள் காலை அவையில் உன் மணநிகழ்வை அரசர் அறிவிப்பார்” என்றாள். சற்றும் சொல்விளங்காதவள்போல வெற்றுவிழிகளுடன் உஷை நோக்கினாள்.
அரசி புன்னகைத்து “மணம் என்பதேகூட உனக்கு புரியவில்லை. உன் தோழனாக என் இளையோன் நிருகனை அரசர் அறிவிக்கவிருக்கிறார். நீ அவனுக்கு மாலையிடுவாய். மங்கலம் சூடுவாய்” என்றாள். “மணமங்கலம் ஒளியின் தெய்வங்களுக்கு உகந்தது. இன்று உன்னை பற்றியிருக்கும் இருள்தெய்வங்கள் அஞ்சி விலகும். உள்ளம் தெளியும்.” உஷை பெருமூச்சுவிட்டு விழிசரித்தாள்.
அவள் முகவாயைப் பற்றித் தூக்கி “அதன்பின்பு இச்சிறிய தீவுக்குள் நீ வாழவேண்டியதில்லை. ஆசுர நாடு முழுமையும் உன்னுடையதே ஆகும். தெய்வங்கள் அருளினால் பாரத வர்ஷத்தையே உன் கணவன் உன் காலடியில் கொண்டு வைப்பான். இத்தனை நாள் இச்சிறு உலகில் நீ வாழ்ந்ததை எண்ணியே உன் உள்ளம் துயருற்றதென்று அறிந்தேன். சிறகு முளைக்கும்வரை பறவை முட்டைக்குள்தான் இருந்தாகவேண்டும் என்பார்கள். உன் வானம் திறந்துவிட்டது. உன் துயர்கள் அனைத்தும் முடிவுற்றன” என்றாள்.
நிலைத்த விழிகளும் சற்றே திறந்த வாயுமாக கேட்டிருந்த உஷையிடம் “என்னடி, நான் சொல்வது புரியவில்லையா உனக்கு?” என்றாள். “ஆம்” என்று அவள் சொன்னாள் “முதலில் திகைப்பாகத்தான் இருக்கும். பெண்ணென்று எண்ணி இதுவரை அடைந்து, சூடி, இலங்கிய அனைத்தையும் கலைத்து மாற்றுருவாக்கம் செய்ய வேண்டியிருக்கும். உடலை, உள்ளத்தை, கனவுகளை. அது கடினமானது. ஒவ்வொரு கணமும் திகைப்பூட்டுவது. ஆனால் அத்தருணத்தைத் தாண்டினால் இனிய நினைவாக என்றும் உடனிருப்பது” என்று அரசி சொன்னாள்.
மேலும் சொல்கனிந்து “ஒவ்வொன்றும் புதிதாக இருக்கையில் அச்சமும் துயரமும் அளிப்பதே வழக்கம். இனிமை என்பது நாம் கொள்ளும் இசைவிலிருந்து எழுவதே. அதற்கு நாம் சற்று பழகவேண்டும்” என்றாள். “அஞ்சாதே! இது யானைத்தலையளவு இனிப்பு என்று கொள். நுனி நாக்கால் தொட்டு அதை உணர். மெல்ல மெல்ல சுவையென்றாக்கிக் கொள்!” அவள் சொன்னவை எவையும் உஷையின் நெஞ்சை சென்றடையவில்லை. அவள் தோளைப்பற்றி எழுப்பி “வாடி! இவ்வினிய செய்தியை சொன்னதன் பொருட்டு இனிப்பு கொள்! புத்தாடை அணிந்து நறுமணமும் புதுமலர்களும் சூடு!” என்றாள் அன்னை.
அரசி மகளை கைபிடித்து கூட்டிவந்து அரண்மனைக்குள் அமரவைத்து சேடியரையும் செவிலியரையும் அழைத்து அரசரின் முடிவை சொன்னாள். ஆனால் அவர்கள் கூடாச்செய்தியை கேட்டவர்கள்போல் திகைத்து சொல் மறந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். முதுசெவிலி “இப்போதேவா?” என்றாள். சினம் கொண்ட அரசி “இப்போதேவா என்றால் என்ன பொருள்? அவளுக்கு பதினைந்து அகவை நிறைகிறது. அவள் உள்ளம் தனிமையை உணர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதன்பொருட்டு காத்திருப்பது?” என்றாள்.
தலைதாழ்த்தி மெல்லியகுரலில் “ஆம், உண்மை” என்றாள் செவிலி. அவர்கள் எவரும் முகம் மலரவில்லை என்பதைக் கண்டு மேலும் சினம் கொண்டு அரசி “நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்? அவள் வளர்ந்து உங்கள் கைகளில் இருந்து சென்றுவிடுவாள் என்றா? உங்கள் கையில் களிப்பாவையென்று அவள் என்றும் இங்கு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள் போலும்” என்றாள். “இல்லை அரசி, இளவரசியை பிறிதொரு வடிவில் காண உடனடியாக எங்களால் இயலவில்லை. பொறுத்தருள்க!” என்றாள் முதுசெவிலி.
“புறவுலகு அறியாமல் இளவரசி இங்கு வாழ்ந்தாள். நாங்களோ இளவரசியின் பொருட்டு புறவுலகை முற்றும் உதிர்த்துவிட்டு இங்கு வாழ்கிறோம். இங்கிருந்து இளவரசி அவ்வுலகுக்கு பறந்துசெல்ல முடியும். நாங்கள் இங்கிருந்து செல்ல முடியாது. இங்கு இளவரசி இருந்த நாட்களின் நினைவோடு அவர்கள் புழங்கிய பொருட்களில் ஆடியபடி இங்குதான் வாழ்ந்து மறைய முடியும்” என்றாள் இன்னொரு செவிலி. அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணியதை அவள் சரியாக சொல்லிவிட்டதை மெல்லிய உடலசைவுகள் அணியோசைகள் வழியாக பிறர் வெளிக்காட்டினர்.
முதுமகள் “நாங்கள் விட்டுவந்த அவ்வுலகில் எங்களுக்கு சென்று அடைவதற்கு எதுவுமில்லை. எங்களை உருமாற்றி நாங்கள் அடைந்த அனைத்தும் இங்குதான் உள்ளன” என்றாள். உளம் நெகிழ்ந்த அரசி “அஞ்சவேண்டாம். இளவரசியின் சிறுகளிவீடென இத்தீவும் மாளிகையும் இப்படியே எஞ்சட்டும். பெண்கள் எங்கு பறந்தெழுந்தாலும் தங்கள் களிவீட்டை மறப்பதில்லை. பிறந்த வீட்டின் சிற்றறைகளுக்குள் ஒவ்வொரு நாளும் தங்கள் உள்ளத்தால் அவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். துயரிலும் களிப்பிலும். இச்சிறு உலகுக்குள் ஒடுங்கிக்கொள்ளும்போது மட்டும் அவர்கள் அடையும் தனிமையும் பாதுகாப்பும் வேறெங்குமில்லாதது” என்றாள்.
சித்ரலேகை “ஆம் அரசி, பெண் தன் உள்ளத்தையும் உடலையும் பிறருக்கு அளிக்கவேண்டியவள். கொழுநரும் மைந்தரும் அவற்றை உரிமைகொள்கையில் தங்களுடையவை என ஆள்கையில் அவளுக்குள் இருந்து திகைத்து நோக்கும் ஒரு சிறுமி உண்டு. அச்சிறுமி திரும்பி வந்தமையும் இடம் இச்சிறுகூடு. இது இவ்வண்ணமே இங்கிருக்கட்டும். அவளை சிறுமியென்று மட்டுமே நோக்கும் அன்னையர், அவள் சிற்றுடலை கையாண்டு பழகிய அணிச்சேடியர், அவளுடன் ஆடிய களிப்பாவைகள் இங்கே காத்திருக்கட்டும்” என்றாள்.
அரசி புன்னகையுடன் எழுந்து “நற்கொடை கொண்டவள் இவள். திரும்பி வருவதற்கு பிறந்த வீட்டில் ஓர் இடம் எஞ்ச மணம்புரிந்து செல்பவள். தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவள்” என்றாள்.
அன்றிரவு சித்ரலேகை தன் அறையில் துயில் கொண்டிருக்கையில் மெல்லிய காலடிகளுடன் உஷை அவள் வாயிலில் நின்றாள். கதவை கைவிரலால் சுண்டி “சித்ரலேகை! சித்ரலேகை!” என்று அழைத்தாள். சித்ரலேகை எழுந்து திகைப்புடன் “இளவரசி, தங்களை கனவுக்குள் கண்டுகொண்டிருந்தேன்” என்றாள். “நான் உன்னிடம் பேச வந்தேன்” என்றாள் உஷை. சித்ரலேகை அருகே வந்து அவள் கைபற்றி அழைத்துச்சென்று தன் மஞ்சத்தில் அமர்த்தி “தங்கள் வருகைக்காக காத்திருந்தேன்” என்றாள். “இன்று அன்னை நான் மணம் கொள்ள வேண்டும் என்றார்” என்றாள் உஷை. “ஆம், மணமகளாகவே தங்களை உலகுக்கு அறிவிக்க இருக்கிறார்கள். ஊழுக்கு எதிராக நாற்களமாடிக்கொண்டிருக்கிறார்கள், பதினைந்து ஆண்டுகளாக” என்றாள் சித்ரலேகை.
“அன்னையையும் தந்தையையும் துயருறச்செய்ய நான் விழையவில்லை. என் ஆழத்தில் இருக்கும் ஏக்கத்தை சொன்னால் அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் சொன்னபடியே செய்யலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இரவெழுந்ததும் நான் மட்டுமே ஆனபின் என்னுள்ளிருந்து குரல் எழத்தொடங்கியது. என்னால் அன்னை சொல்லும் இளைஞனுடன் வாழ இயலாது அதை எண்ணுகையிலேயே அருவருப்பு கொள்கிறேன். என் உள்ளம் வெகுதூரம் சென்றுவிட்டது” என்றாள் உஷை. “ஆம், அதை அறிவேன்” என்றாள் சித்ரலேகை.
“ஆடியில் நான் ஒருவனை பார்த்தேன். கரியவன், குழலூதுபவன். பீலி விழிதிறந்த கருங்குழல் கொண்டவன்” என்றாள். “அவனுடன் அவள் காதலாடுவதை கண்டேன். பின்னர் அவளை வெளியே இழுத்துவிட்டு நான் உள்ளே சென்றேன். இத்தனை நான் இவர்கள் கண்டதெல்லாம் அவளைத்தான். நான் அவனுடன் வாடாமலர்கொண்ட சோலைகளில் வேய்ங்குழல் இசையுடன் தேயாநிலவின் ஒளியில் வாழ்ந்தேன். அவ்வினிமையை இப்பெண்கள் எவருக்கும் என்னால் சொல்லி விளக்கிவிட முடியாது.”
அவள் கைமேல் தன் கையை வைத்து புன்னகையுடன் சித்ரலேகை சொன்னாள் “பெண்ணென்று முகிழ்த்த அத்தனை பேரிடமும் இதை சொல்லிவிட முடியும், இளவரசி.” உஷை “அனைவரிடமுமா?” என்றாள். “ஆம், அனைவரிடமும்” என்றாள் சித்ரலேகை. மேலும் சிரிப்பு விரிய “அந்த வேய்குழலிசையை கேட்காமல் எந்தக் கன்னியும் அன்னையென்றாவதில்லை” என்றாள். நீண்ட பெருமூச்சுக்குப்பின் “அவ்வண்ணமெனில் நன்று. அன்னையும் புரிந்துகொள்ளக்கூடும். அவனையன்றி பிறிதொருவனை என்னால் ஏற்க முடியாது” என்றாள் உஷை.
“அதை மட்டும்தான் அன்னையும் செவிலியரும் சேடியரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்றாள் சித்ரலேகை. “அவனை ஆடிக்குள் கரந்து வெளியே பிறிதொருவனுடன் வாழ்வதில் என்ன பிழையிருக்க இயலும் என்பார்கள். ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டது அந்த வாழ்க்கைதானே என வியப்பார்கள். ஆடிக்குள்ளும் புறமும் ஒருவனே இருக்க வேண்டும் என்று விரும்புவது தெய்வங்கள் அருளாத ஒன்றைக்கோரி அடம்பிடிப்பது அல்லவா என்று அச்சுறுத்துவார்கள்.” உஷை “அத்தனை பெண்டிருமா?” என்றாள். சித்ரலேகை “ஆம், அத்தனை பெண்டிருமே” என்றாள்.
உஷை மீண்டும் அமைதியில் ஆழ்ந்து நீண்ட பெருமூச்சுடன் மீண்டாள். “எவர் புரிந்துகொள்ளாவிட்டாலும் என்னால் பிறிதொன்றில் பொருந்த இயலாது அவனையன்றி வேறெவரையும் என்னுள்ளம் ஏற்காது” என தன் கைநகங்களை நோக்கியபடி தனக்கேபோல சொல்லிக்கொண்டாள். சித்ரலேகை எழுந்துசென்று அந்த ஆடியை எடுத்துவந்தாள். “அவன் யாரென்று காட்டுங்கள், இளவரசி” என்றாள். உஷை “அவ்வாடியை நோக்கவே என்னுள்ளம் அஞ்சுகிறது. எப்போதும் அவன் அங்கேயே இருக்கிறான் என்பது போல” என்றாள்.
சித்ரலேகை அதற்குள் நோக்கி “ஒளி நிறைந்த காடு. நிலவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றாள். “ஆம், அன்று முதல் இன்று வரை எப்போதும் ஆடிக்குள் அக்காட்டில் நிலவு முழுமையாகவே இருக்கிறது” என்றாள் உஷை. “யாரவன் காட்டுங்கள்?” என்றாள் சித்ரலேகை. “நீயே பார்” என்று உஷை சொன்னாள். ஆடிக்குள் தெரிந்த காட்டை நோக்கிக்கொண்டிருந்த சித்ரலேகை “அந்நிழலுருவா?” என்றாள். “கையில் கன்றுக்கோல் வைத்துள்ளானா?” என்றாள் முகம் திருப்பாத உஷை.
“இல்லை” என்றாள் சித்ரலேகை. “வேய்ங்குழல்?” என்றாள். “இல்லையே…” என்றாள் அவள். “பீலிக்குழல்…” என்று தளர்ந்த குரலில் உஷை கேட்டாள். “அதுவுமில்லை” என்றாள் சித்ரலேகை. உஷை குழப்பத்துடன் சிலகணங்கள் கண்களை கைகளால் அழுத்தி குனிந்தமர்ந்து “பின் அவன் தோன்றுவது எவ்வாறு? சொல்க!” என்றாள். “வில்இட்ட தோள். முனிவர்போல் கட்டிய குழல். அளி நிறைந்த அன்னையின் விழி. கரிய முகத்தில் கனிந்த புன்னகை.” உஷை “அரசமைந்தனா?” என்றாள். பின்னர் “அல்ல! அவனல்ல!” என்றாள்.
சித்ரலேகை ஆடியை மெல்ல திருப்பி “பிறிதொருவன் தோன்றுகிறான். படையாழி ஏந்திய கையன். பொன்னொளிர் பட்டு சுற்றிய உடல்” என்றாள். “இல்லை, அவனுமல்ல” என்றாள் உஷை. சித்ரலேகையின் மூச்சசைவில் ஆடி மெல்ல திரும்ப அவள் விழிநோக்கிக்கொண்டிருக்கவே அந்த ஆடிப்பாவை நெளிந்து உருமாறியது. “இவனா?” என்றாள். “இளையோன். நீங்கள் சொன்னதைப்போலவே கைக்கோலும் வேய்ங்குழலும் பீலிமுடியும் புன்னகையும் கொண்டவன்.” “ஆ” எனும் மூச்சொலியுடன் திரும்பி நோக்கிய உஷை “ஆம்” என்று கூவியபடி எழுந்தாள். “இவரேதான்… இவரேதான்” என்றாள்.
சித்ரலேகை அவனை சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “இவர் மதுராவை ஆளும் இளைய யாதவர் கிருஷ்ணனின் மைந்தர் பிரத்யும்னனின் மைந்தர் அனிருத்தர். பதினேழாண்டு அகவை முதிரா இளைஞர். தந்தையும் முதுதந்தையும் பெருநகரை கோல்கொண்டு ஆள்கையில் கன்றோட்டும் ஆயர்ச்சிறுவனாக கோகுலத்தில் வாழ்கிறார். மதுவனத்தில் தன் முதுதந்தை சூரசேனரிடம் சென்று குலவுகிறார். அங்கும் கோகுலத்தில் அன்னையர் அனைவருக்கும் அவர்கள் முன்பெப்போதோ கண்டு மறந்த ஒரு கனவை நினைவூட்டும் மைந்தனாகத் திகழ்கிறார்” என்றாள்.
“அவர் வேண்டும்… பிறிதொருவரிடம் தோள் சேரமாட்டேன். அவ்வண்ணம் நிகழ்வதற்கு முன்பே உயிர் மாய்ப்பேன்” என்றாள் உஷை. “இளவரசி, அவரை கவர்ந்து இங்கு கொண்டு வருகிறேன். இது தங்களுக்கு என் சொல்” என்றாள் சித்ரலேகை. “இந்த ஆடிக்குள் புகுந்துகொள்ளுங்கள். தங்களை அங்கு கொண்டு சென்று அவரிடம் காட்டுகிறேன்” என்றபின் உஷையிடம் ஆடியைக்காட்டி “ஆடியிலிருந்து விலகிச்செல்வதே அதனுள் புகும் வழி” என்றாள். அதை நோக்கியபடி காலெடுத்து வைத்து அகன்று சென்ற உஷை ஒரு சிறுபுள்ளியென மாறி ஆடிப்பரப்புக்குள் மறைந்தாள்.
அவ்வாடியை எடுத்து ஆடைக்குள் மறைத்தபடி ஓசையின்றி நடந்து, ஏரிப்படித்துறையில் இறங்கி, நீரில் ஆடி நின்ற கைப்படகை எடுத்துக்கொண்டு நீர் உலையாது துழாவி மறுகரைக்குச் சென்று, மரங்களின் நிழல்களினூடாக எவர் விழிக்கும் படாது நடந்து, பெருநகரின் கோட்டையை அடைந்து, அதன் கரவறையை வழியாக வெளிப்போந்து மறைந்தாள் சித்ரலேகை. அவளைக் கண்டு குரைத்தபடி அணுகிய காவல்நாய் தரையை முகர்ந்து அங்கே ஏதும் தெரியாமல் கூர்ந்து நோக்கியது. அவள் காலடிகளும் மண்ணில் இல்லாதிருப்பதைக் கண்டு வால் அடிவயிற்றில் படிய அஞ்சி ஊளையிட்டபடி விரைந்தோடி மறைந்தது.
மறுநாள் உஷையின் மஞ்சத்தறைக்குச் சென்ற சேடியர் அங்கே கடும் காய்ச்சலில் நினைவிழந்து உடல் தொய்ந்து முகம் சிவந்து விழி செருகி படுத்திருந்த இளவரசியை கண்டனர். “இளவரசி! இளவரசி!” என்று அழைத்த முதுசேடியை நோக்கி குருதி படிந்த விழிகளைத் திறந்த உஷை “யார் நீங்கள்?” என்றாள். “இளவரசி, தங்களுக்கு என்ன செய்கிறது?” என்றாள் முதுசேடி. “நீங்களெல்லாம் யார்? இது எவ்விடம்?” என்று அவள் கேட்டாள். செவிலியரும் சேடியரும் கூடி அவளை உலுக்கினர். முற்றும் விழித்தெழுந்த பின்னரும் “நான் இளவரசியல்ல. என் பெயர் சந்தியை நான் எப்படி இங்கு வந்தேன்?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
செய்தி சென்று அரசி தன் மகளை பார்க்க வந்தாள். அன்னையை நோக்கி “யார் நீங்கள்?” என்று அவள் கேட்டாள். அரசி “உஷை, இதோ பார். நான் உன் அன்னை” என்று சொல்ல “நான் உஷை அல்ல, என்பெயர் சந்தியை” என்றாள் அவள். உளம் உடைந்து அரசி அழுதாள். முதுசெவிலி “அரசி இளவரசியுடனிருந்த சித்ரலேகையை நேற்றிரவுமுதல் காணவில்லை. இங்கிருந்த படகொன்றை எடுத்துச் சென்று மறுகரை அடைந்திருக்கிறாள்” என்றாள். அரசி “காணவில்லையா? காவல்நிறைந்த நகரைவிட்டு எப்படி அவள் மறைந்தாள்?” என்றாள். “அறியோம், அரசி. ஆனால் இவையனைத்தும் அவள் செய்த மாயங்களே” என்றாள்.
அருகே நின்ற சேடி ஒருத்தி ஏதோ முனக “என்ன?” என்றாள் அரசி. “ஒன்றுமில்லை… அவள் பிச்சி… “ என்றாள் முதுமகள். “என்ன சொல்கிறாள்?” என அரசி கேட்டாள். இன்னொரு செவிலி “சித்ரலேகை உள்ளறைக்குள் செல்வதை இவள் கண்டாளாம். கையில் இளவரசி வைத்திருந்த ஆடியை ஒளித்திருந்தாள். ஐயுற்று பின்தொடர்ந்து சென்று நோக்கியபோது அவள் சுவரோவியத்தில் புகுந்து மறைந்ததை நோக்கினாளாம்” என்றாள். அரசி “சுவரிலா?” என்றாள். “ஆம், நீரில் மூழ்கி மறைவதைப்போல” என்றாள் அந்தச் சேடி. அவள் விழிகள் பித்தில் வெறிப்பு கொண்டிருந்தன.
மருத்துவச்சிகள் வந்து நோக்கி “அனல்காய்ச்சலில் இளவரசியின் சித்தம் பிறழ்ந்திருக்கிறது. கடும்மருந்துகள் சில அளிக்கவேண்டும். காய்ச்சல் இறங்கி உடல் கொண்ட நஞ்சு அகன்றால் இளவரசி நிலைமீள முடியும்” என்றனர். பாணாசுரரிடம் அரசி அச்செய்தியை சொன்னாள். “பிறிதொன்றும் செய்வதற்கில்லை, அரசே. நம் மகள் நோய் மீள்வது வரை காத்திருந்தாகவேண்டும்” என்றாள். பாணர் “ஆம், காத்திருந்தாகவேண்டும்” என்றார்.
களைப்புடன் மஞ்சத்தில் அமர்ந்து தலையசைத்தபடி “நாமறியாத கையொன்று ஆடற்களத்திற்குள் நுழைகிறது என்று தோன்றுகிறது” என்றார் பாணர். “என்ன பேச்சு இது? நம் மகள் நம்முடன்தான் இருக்கிறாள்… நோயுற்றிருக்கிறாள். ஓரிரு நாட்களில் நிலைமீள்வாள் என்கிறார்கள் மருத்துவர்கள்” என்றாள் அரசி. ஆனால் அவர் வாயிலிருந்து அச்சொற்களை கேட்டபோது ஆடல் முடிந்துவிட்டது, அவ்வறியாத கை வென்றுவிட்டதென்றே உள்ளூர அவள் எண்ணினாள்.