எழுதழல் - 14
மூன்று : முகில்திரை – 7
நிலவு எழுந்த முன்னிரவில் உள்ளிருந்து எழுந்த அழைப்பால் விழித்துக்கொண்ட உஷை தன்னருகே ஆடிக்குள் அசைவைக்கண்டு புரண்டு கையூன்றி எழுந்து அதன் ஒளிர்பரப்பை பார்த்தாள். அங்கு நிலவில் ஒளிகொண்ட இளங்காற்றுவெளியில் சந்தியை தனக்குள் மெல்லப் பாடியபடி, சிறகெனக் கைவீசி, சிற்றாடை சுழல துள்ளி ஓடுவதை கண்டாள். முகம் மலர்ந்து ஆடியை எடுத்து தன் மடியில் வைத்தபடி அதை நோக்கி அமர்ந்திருந்தாள். எவரையோ கண்டு சந்தியை நாணி நிற்பதைக் கண்டு மேலும் உற்றுநோக்கினாள். நிலவில் சிற்றோடைகளும் சுனைசுழிகளும் தண்ணொளி கொண்டிருந்தன. இலைநுனிகள் அனைத்திலும் நிலவொளி ஒளிர்ந்து ததும்பியது.
நெஞ்சு படபடக்க உஷை ஆடியை நோக்கிக்கொண்டிருந்தாள். சந்தியை தயங்கிய காலடிகள் எடுத்து வைத்து நடந்து, அஞ்சி முலைகளை கைகளால் அழுத்திக்கொண்டு, தலைகுனிந்து நின்று, ஆவல் உந்த காலெடுத்து வைத்து முன்சென்றாள். பூத்து நின்ற கடம்பமரம் ஒன்றின் கீழ் சென்று அதன் தாழ்கிளை ஒன்றைப் பற்றியபடி தலைகுனிந்து நின்றாள். இளங்காற்றில் அவள் அணிந்திருந்த மெல்லிய சிற்றாடை அலைவு கொண்டது. நெளிந்திறங்கிய கூந்தல் இடைவரை வழிந்தது. பெருமூச்சில் சிறுமுலைக்குவைகள் எழுந்தமைந்தன. மெல்ல விழிதூக்கி உதடுகளை பற்களால் கவ்வியபடி கடம்பமரத்திற்கு அப்பால் நிழல் செறிந்திருந்த பகுதியை நோக்கினாள். அக்கணமே உஷையும் அவனை கண்டுவிட்டாள்.
நிழலுக்குள்ளிருந்து மெல்ல உருத்திரட்டி அவன் முன்வந்தான். பூவரசுப் பூவின் வண்ணத்தில் இடையாடை அணிந்து, இளஞ்செந்நிற கச்சை கட்டி, வெண்புகைக்கீற்றென பட்டு மேலாடை அணிந்திருந்தான். இடப்பக்கம் ஒதுக்கிய சுரிகுழலில் மயில்பீலி விழிதிறந்திருந்தது. கரிய வட்ட முகத்தில் பெண்மைதோன்றிய விழிகள் நிலவொளி கொண்டிருந்தன. சிறுமகவென மேலுதடு சற்றே எழுந்து குவிந்த வாயில் ஏளனம் என்று தோன்றும் மென்னகை. கரிய கருங்கற்சிலைத் தோள்கள். நரம்புகள் புடைத்த புயத்தசை. இடைக் குழைவு, மார்பின் இருபால் அகன்ற விரிவு அனைத்திலும் மென்மையின் மெருகு.
வலக்கையில் புல்லாங்குழலும் இடக்கையில் கன்றோட்டும் வளைகோலும் வைத்திருந்தான். சந்தியை அவனைக் கண்டதும் அறியாது இரண்டடி பின்னால் வந்தாள். இளமுலைகளின் மேல் இருகை சேர்த்து மூச்சிழுத்து ஏங்கி சுற்றிலும் நோக்கினாள். கால் தளர மரத்தின் கரிய அடித்தடியை பற்றிக்கொண்டாள். அதன் பட்டை பொருக்கில் அவள் நடுங்கும் விரல்கள் பதிந்து வருடி இறங்கின. அவன் அவள் அருகே வந்தான். வளைதடியை மரத்தடியில் சாய்த்து, வேய்குழலை இடையில் செருகி அவளை அணுகி குனிந்து நோக்கினான். அவள் உடல் மெய்ப்பு கொள்வதை காணமுடிந்தது. அவன் மூச்சுக்காற்றில் அவள் முன் நெற்றியின் மென்மயிர் அசைந்தது.
மெல்ல அசைந்து, அவ்வசைவால் தோள்கள் விலக இடை அணுக, அவனருகே சென்றாள். முகம் தூக்கி அவனைப் பார்த்தபோது அவள் விழிகள் நீர் நிரம்பி இருமுனைகளிலும் துளித்து வழிந்து கன்னத்திலோடி செவியிலாடிய குழையை தொட்டன. ஏதோ சொல் நின்று தவிப்பது போலவும், விண்ணுதிர்த்த இன்துளி ஒன்றை சுவைப்பது போலவும் அவள் உதடுகள் ததும்பின. அவன் கைகள் அவள் இடையைத்தொட்டு வளைத்து தன் உடலுடன் இணைத்துக்கொண்டன. தளர்ந்த கால்களுடன் அவள் அவன் உடலில் தன்னை சாய்த்துக்கொண்டாள். தலையை அவன் மார்பில் பொருத்தி, கண்களை மூடி, தோள்கள் தொய்ந்து நின்றாள். அவன் அவளை உடலுடன் இறுக்கிக்கொண்டு குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவள் விதிர்த்த உடலுடன் அவன் நெஞ்சில் கைவைத்து உந்தி விலக முயல மேலும் இறுக்கி அவள் பிறிதொரு கன்னத்தை முத்தமிட்டான். பின்னர் இருகைகளாலும் அவளைப் பற்றி தன் உடலுடன் இறுக அணைத்து உதடுகளால் அவள் உதடுகளை கவ்விக்கொண்டான். உருகிக் கொதிக்கும் உலோகச்சிலை போலிருந்தது அவள் முகம். மெல்லிய முனகலுடன் அவன் தோள்சுற்றி அணைத்து அவன் நெஞ்சில் முலை பொருத்தி முகம் தூக்கி அவன் உதடுகளுக்கு தன் உதடுகளை முற்றளித்து பிறிதொன்றிலாது அவனுடன் கலந்தாள்.
உஷை தன் உடல் நடுக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். மூச்சை இழுத்துவிட்டு மீண்டும் மீண்டும் தன்னுள்ளத்தை ஆற்றிக்கொண்டாள். ஆடியிலிருந்து எழுந்த ஓர் இசையை அவள் தன் விழிகளால் கேட்டுக்கொண்டிருந்தாள். அதில் மரங்களனைத்தும் இளநீல ஒளிகொண்டன. நீர் நிலைகள் முத்துச்சிப்பியின் உள்வளைவுபோல் மின்னத்தொடங்கின. நிலவு மாபெரும் மலரென இதழிதழாக விரிந்தது. அந்தக்காடு இசையால் ஒன்றென கோக்கப்பட்டது. அவர்களின் உடல்கள் ஒன்றாயின. கைகள் கைகளை கவ்விக்கொண்டன. உடல் உடலை நிறைத்துக்கொண்டது. விடாய் கொண்டு உடல் விம்ம தன்னுணர்வடைந்து நாணி விழி புதைத்தாள். மூடிய விழிக்குள் எழுந்த அவர்களின் உடல் பிணைவுகளைக்கண்டு நெஞ்சு பதற உடல் விதிர்த்தாள். அங்கு நிகழ்வன கண்டு காலத்தை மறந்து நெடுந்தொலைவு சென்று மீண்டும் இடம் காலம் மீண்டு தலைகுனிந்தாள்.
பின்னர் அவன் மடியில் தலை வைத்து விழி மூடிஓய்ந்து சந்தியை துயில்வதை நோக்கிக்கொண்டிருந்தாள். கடம்ப மரத்தில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து அவன் தன் புல்லாங்குழலை இசைத்தான். அதுவரை அது அவன் உடலில் இருந்தே எழுந்ததுபோலும். மலர்ந்த முகத்துடன் துயில்கொண்டிருந்த அவள் கால்கட்டை விரல் மட்டும் அவ்விசைக்கேற்ப அசைவதை உஷை கண்டாள். இசை அனைத்தையும் வெறும் ஒளியென்றாக்கியது. நிழலில்லாத ஒளிப்பெருக்கு. அவனும் கரைந்து மறைய மயிற்பீலி மட்டும் விழி என வெறும் நோக்கென அவளருகே நின்றிருந்தது.
ஆடியை கவிழ்த்துவிட்டு உஷை மஞ்சத்தில் குப்புறப் படுத்தாள். அறியா ஏக்கம் ஒன்று எழுந்து உள்ளத்தை எடை கொண்டதாக்க தலையணையில் முகம் புதைத்து விம்மி அழுதாள். நெடுநேரம் அழுது ஓய்ந்தபோது இனிய துயரொன்றால் முற்றிலும் நிரப்பப்பட்டவளாக ஓய்ந்தாள். மீண்டும் ஆடியை எடுத்து சந்தியையை நோக்கவேண்டுமென்று விரும்பினாள். கை நீண்டபோது தயங்கி பின்னிழுத்து பலமுறை ஆடியைத் தொட்டபின் வாளொன்றை எடுத்து அடிவயிற்றில் குத்தி இறக்கும் தன்வலி வெறியுடன் எழுந்தமர்ந்து அதை எடுத்து நோக்கினாள். கடம்ப மரத்தினடியில் உதிர்ந்த மலர்களின் மெத்தையில் அவிழ்ந்து பரவிய குழல்மீது வெற்றுடலில் நிலவொளி பரவி மிளிர இசையில் உளம்மயங்கி இருப்பவள் போன்று சந்தியை தெரிந்தாள். அவள் இருமுலைகளின் குவைமீது அம்மயில்பீலி விழுந்து கிடந்தது.
ஆடியைத்தூக்கி அறைமூலையில் வீசிவிட்டு உஷை திரும்பிப்படுத்தாள். உடல் மிக உயரத்திலிருந்து விழுந்துகொண்டே இருப்பதுபோல் தோன்றியது. உள்ளத்துச் சொற்களெல்லாம் சிறகு நனைந்து ஒட்டியும் ரீங்கரித்து தன்னைத்தானே சுற்றியும் தடுமாறின. எழுந்து சென்று சாளரத்தினூடாக ஏரியின் நீரில் மெல்ல நெளிந்தபடி கிடந்த நிலவின் பொன்னிற வட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். அதைச்சூழ்ந்திருந்த முகில்கள் வெண்நெருப்பென எரிந்தன. மிக அப்பாலிருந்து வந்த காற்றில் ஏரியின் நீராவி இருந்தது.
மீண்டும் வந்து மஞ்சத்தில் படுத்தபோது அவள் உடலெங்கும் மெல்லிய சிலிர்ப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. மூச்சில் முலைக்குவைகள் எழுந்தமைந்தன. கழுத்திலும் கன்னத்திலும் வியர்வை துளிர்த்திருந்தது. இருகால்களையும் பின்னியபடி மஞ்சத்தில் உடலொடுக்கி படுத்திருந்தாள். பின் புரண்டு மஞ்சத்தை உடலால் அணைப்பவள்போல அழுத்திக்கொண்டாள். மெல்ல மயங்கிய கனவுக்குள் விண்ணிலிருந்து நாகத்தின் நாக்கென துடித்த சிறுமின்னலால் தீண்டப்பட்டாள். சுடர்ந்தெரிந்து ஒளிர்ந்து துடித்து மெல்ல அணைந்து இருண்டு குளிர்ந்து எடைகொண்டு மஞ்சத்தில் கிடந்தாள். காற்றில் அவள் உடல் வியர்வை குளிர்வதை அவள் உணர்ந்தாள்.
புகையென பரவி ஆடையென செறிந்து நீரென சூழ்ந்து பளிங்கென இறுகி அவளை அழுத்திக்கொண்ட துயிலின் ஆழத்தில் தன் மேல் படிந்த மயில்பீலியை உணர்ந்தாள். அது உள்ளங்கையென எடை பெற்றது. உடலென எடை பெருகி அவளை அழுத்தி மஞ்சத்தில் சேர்த்தது. மஞ்சத்துப் பட்டில் வரையப்பட்ட ஓவியமென அவள் பரவிக் கிடந்தாள்.
காலையில் சித்ரலேகை வந்து உஷையின் மஞ்சத்தறையின் கதவை மெல்ல தட்டியபோது அவள் திடுக்கிட்டு விழித்து உடல் அதிர விழிகள் காய்ச்சல் கண்டவைபோல் ஒளி இழந்து வெறிக்க மஞ்சத்தில் கிடந்தாள். சித்ரலேகை அருகே வந்து அவள் கால்களைத் தட்டி “இளவரசி, இளவரசி” என்று அழைத்தபோது ஓர் ஆடிப்பரப்புக்கு அப்பாலிருந்து அனைத்து காட்சிகளையும் தான் கண்டு கொண்டிருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. அறை சாளரங்களின் திறந்த கதவுகளூடாகத் தெரிந்த இடைநாழியும் சற்றே சாய்ந்து அறைக்குள் விழுந்திருந்த இளவெயிலும் ஆடிப்பாவைகளெனத் தெரிந்தன. அங்கே ஆடிக்குள் இருந்து இளமங்கையாகிய சித்ரலேகை அவளை அழைத்துக்கொண்டிருந்தாள்.
சித்ரலேகை மீண்டும் “இளவரசி” என உலுக்க அவள் மெல்லிய முனகலுடன் தன் உடலில் உள்ளத்தை பொருத்திக்கொண்டாள். “கனவு கண்டீர்களா?” என்றபடி சித்ரலேகை அவள் காலடியில் மஞ்சத்தில் அமர்ந்தாள். எழுந்து அமர்ந்து வாயைத்துடைத்து அவிழ்ந்துலைந்த கூந்தலை சுற்றி முடிந்தாள். “கூந்தல் எப்படி அவிழ்ந்தது? நேற்று முப்புரியாகப் பின்னி சுழற்றிக் கொண்டையிட்டுவிட்டுத்தானே நான் சென்றேன்?” என்றாள் சித்ரலேகை. “ஆம்” என்றபடி அவள் மீண்டும் தன் கூந்தலை தொட்டாள். “ஆடைகள் கலைந்துள்ளன. எழுந்து வேறெங்கும் சென்றீர்களா?” என்றாள்.
“இல்லை” என்றபின் அவள் கால்களை மடித்து முழங்காலை கட்டிக்கொண்டு முகத்தை கால்மடிப்புகளில் பதித்து ஒடுங்கி அமர்ந்தாள். அவள் நெற்றி வகிடைத்தொட்டு மெல்ல நீவி “நேற்றிரவு ஏதோ கனவு கண்டிருக்கிறீர்கள்” என்றாள் சித்ரலேகை. “ஆம்” என்று அவள் சொன்னாள். “இப்பருவத்தில் கனவுகள் இயல்பானவை. இப்போது அவை அலைக்கழிக்கும் துயர்களெனத்தெரியும். பின்னர் எண்ணிப்பார்க்கையில் பிறிதொருபோதும் நாம் அடையாத இன்கொடைகள் அவை என்று புரியும். அதன் சுவையில் திளைத்து மகிழுங்கள். அஞ்சியும் நாணியும் ஒதுக்க வேண்டியதில்லை” என்றாள் சித்ரலேகை.
உஷை ஒரு கணம் நிமிர்ந்துநோக்கிவிட்டு விழிகளை தாழ்த்திக்கொண்டாள். “இளமையில் உள்ளத்துள் எத்தனை தொலைவுக்கு உலவவும் மானுடர்க்கு உரிமையுண்டு. அங்கு எதுவும் பிழையோ இழிவோ அல்ல. விளையாடும் குழந்தைகளை பெற்றோரென இளமைந்தரை தெய்வங்கள் நோக்கி நின்று மகிழ்கின்றன” என்றாள் சித்ரலேகை. “எல்லைகளை நாம் அங்கு மட்டுமே தொடமுடியும், இளவரசி. எல்லைவரை செல்ல உடலிலும் உள்ளத்தில் ஆற்றல் வேண்டும். இளமையிலன்றி அது இயல்வதல்ல.”
அவள் பெருமூச்சுவிட்டு பின்னர் தன் முகத்தை மறைப்பதற்கென சாளரத்தை நோக்கினாள். “எழுந்து சென்று ஆடைமாற்றிக்கொள்ளுங்கள். இன்று புதிய ஒரு கதையுடன் தென்னகத்து விறலியொருத்தி நம் அவைக்கு வந்திருக்கிறாள்” என்றாள் சித்ரலேகை. “அவள் காம்பில்யத்தின் இளவரசி திரௌபதியின் கதையை சொல்லப்போகிறாள் என்கிறார்கள். அவள் உடல் ஒன்று, உள்ளம் ஐந்து, கனவுகள் ஆறு.” உஷை அதை கேட்டவளாகத் தெரியவில்லை.
அவள் எழுந்து தளர்ந்த நடையுடன் வெளியே செல்ல சித்ரலேகை அவளுடன் சென்றாள். எதிரே வந்த இளம் செவிலி ஒருத்தி உஷையைக் கண்டு வியந்து பின் புன்னகைத்து “என்னாயிற்று இளவரசிக்கு? நடை தளர்ந்திருந்திருக்கிறார்கள்” என்றாள். “நேற்றிரவு துயிலில் கனவுகளில் அலைந்திருக்கிறார்” என்றாள் சித்ரலேகை. செவிலி புன்னகைத்து “முதல்தேன்” என்றாள். சித்ரலேகை புன்னகைத்தாள். “என்ன சொல்கிறாய்?” என்றாள் உஷை. “ஒன்றுமில்லை, வருக இளவரசி” என்று கைபற்றி நீராட்டறைக்கு அழைத்துச் சென்றாள் செவிலி.
நீராட்டறைச் சேடி அவளைக் கண்டதுமே நகைத்தபடி “முதற்கனவு” என்றாள். சினத்துடன் “என்ன சொல்கிறாய்?” என்றாள் உஷை. “முதற்சுவை” என்று அவள் சொன்னாள். “விளையாடாதே” என்று சினத்தால் முகம் சிவந்து உடல் பதற்றம் கொள்ள உஷை சொன்னாள். “எவரும் அறிவர், தாங்கள் நாணுவது இயல்பானது. அக்கனவுடன் இந்நாணமும் இணைந்ததே. வருக!” என்று கைகளை நீராட்டறைச் சேடி பற்றினாள். அதை உதறி “செல்! என்னை தொடவேண்டாம்” என்றாள். “இத்தொடுகை விதிர்ப்பூட்டுகிறதா?” என்றாள் நீராட்டறைச் சேடி. “அவ்வாறெனில் நான் எண்ணியது மேலும் உறுதியாகிறது.”
“நான் செல்கிறேன். உன்னுடன் பேச எனக்கு பொழுதில்லை” என்று அவள் திரும்ப “இவ்வரண்மனையில் இது ஒன்றுதான் நீராட்டறை, இளவரசி” என்றாள் அவள். பற்கள் ஒளிவிடச் சிரித்தபடி “வருக! அமர்க!” என்று தோள்பற்றி அழைத்துச் சென்று பீடத்தில் அமர்த்தினாள். “காய்ச்சலில் மென்மையாகிவிட்ட உடலில் தொடுகை அளிக்கும் விதிர்ப்புபோலிருக்கும். உடல் நாவென்றாகி இனிப்பில் திளைக்கும்.” அவள் தலையசைக்க சித்ரலேகை புன்னகையுடன் வெளியே சென்றாள்.
நீராட்டறைச் சேடி உஷையின் ஆடைகளைக் களைய கைவைத்தபோது அவள் அதைப்பற்றி தன் உடலோடு சேர்த்து “வேண்டாம்” என்றாள். “ஏன்! தாங்கள் பிறந்த நாளிலிருந்து நான்தானே நீராட்டுகிறேன்?” என்றாள். “வேண்டாம்” என்றாள் உஷை. “ஏன்?” என்றாள் நீராட்டறைச்செவிலி. “நானே நீராடுகிறேன்” என்றாள் உஷை. “சரி நீங்கள் நீராடுங்கள்” என்றாள் சேடி. “நீ விலகிச்செல்! இங்கு எவரும் இருக்கலாகாது” என்றாள் உஷை. சேடி நகைத்தபின் “நன்று” என்று நீராட்டறைப்பொருட்களை எடுத்து வைத்து வெளியே சென்றாள்.
வெளியே நின்றிருந்த செவிலி “இப்போதுதான் எண்ணினேன், முதற்காமம் முடிந்து வருபவள் போலிருக்கிறாள் இளவரசி” என்றாள். நீராட்டறைச் சேடி சிரித்து “முதற்காமம் முடிந்து வருகையில் உடல் குறித்த இந்தக் கூச்சம் அகன்றிருக்கும்” என்றாள்.
உஷை ஒவ்வொரு நாளுமென உடல் தளர்ந்தாள். அவள் சிரிப்பது குறைந்தது. விறலியர் ஆடும் களிக்கூத்து கண்டு வளைகள் உடைய கைகொட்டி நகைத்து வயிற்றைப்பற்றி குலுங்குபவள் இதழ் கோடும் மென்நகையுடன் அமைந்தாள். துள்ளி ஓடி படிகளிலும் உப்பரிகையிலும் தொற்றி ஏறி குதித்தாடுபவள் தளர்நடை கொண்டாள். கருவுற்றவள்போல பீடங்களிலிருந்து கையூன்றி மெல்ல எழுந்தாள். எப்போதும் சேடியருடன் நகையாடி இருக்க விழைபவள் தனிமையை தேடினாள். பிறர் விழிபடாது அமர்ந்திருப்பதற்கான இடங்கள் அனைத்தையும் முன்னரே தன் உள்ளம் தெரிவு செய்து வைத்திருப்பதை அப்போதுதான் அறிந்தாள்.
அவள் தோல்நிறம் வெளிறி இளம்பாளை போலாயிற்று. கழுத்திலும் தோள்களிலும் தோல்வரிகள் வெண்மணலில் நீர்வண்டுகள் ஊர்ந்து சென்ற தடம்போல விழுந்தன. இதழ் வெளுத்து, கண்கள் வறண்டு, கழுத்தில் எலும்புவளையங்கள் எழுந்து, ஒவ்வொரு நாளும் உடலுருகி பிறவுரு கொண்டாள். அவளைக்காண வந்த அரசி திகைத்து முதுசேடியிடம் “என்ன ஆயிற்று? ஏன் இப்படி இருக்கிறாள்?” என்றாள். “கன்னியருக்குரிய உடல்மாற்றம் அரசி. உரிய கணவனை பார்க்க வேண்டிய பொழுது அணைந்துவிட்டது” என்றாள் முதுசேடி.
இளவரசியை அகலே நின்று சாளரத்தினூடாக நோக்கிய அரசி அவள் விழிகள் தொலைவானில் நிலைத்திருக்க இமையசைவிலாது பிறிதிலா தனிமையில் அவள் சமைந்திருப்பதை கண்டாள். மெல்ல கலைந்து நீள் மூச்செறிந்து உடலொசித்து அமர்ந்து மீண்டும் தன்னுள் அவள் புகுந்து மறைந்தாள். அவள் உதிர்த்துச் சென்ற உடல் மட்டும் அங்கிருந்தது. “ஆம், இதுவே பொழுது. நான் அரசரிடம் சொல்கிறேன்” என்றாள்.
குடியவவை முடித்து தன் மஞ்சத்தறைக்குச் சென்ற பாணாசுரரிடம் உடன்நடந்தபடி தாழ்ந்தகுரலில் “தங்களிடம் நம் மகளைப்பற்றி பேசவேண்டும், அரசே” என்றாள். திரும்பி நோக்கி உரக்க “உஷையைப் பற்றியா? என்ன புதிய விளையாட்டெதையும் கோருகிறாளா? அளிப்போம்” என்றார் பாணர். வாயை இறுக்கி உடன்வந்த அமைச்சரை நோக்கியபடி “அதுவல்ல” என்று மூச்சொலியாக அரசி சொன்னாள். “சொல்! அவள் விழைவதெது என்றாலும் அது நிறைவேறியதென்றே கொள்” என்றார் அரசர். அமைச்சர் “அரசே, அரசி தங்களிடம் மட்டும் பேச விரும்புகிறார்” என்றபின் தலைவணங்கி விலகிச் சென்றார்.
பாணர் “என்னிடம் மட்டுமா? இளவரசியைப்பற்றிதானே?” என்றார். “அவளைப்பற்றித்தான்” என்றாள் அரசி. “அதிலென்ன மந்தணம்?” என்றார் பாணர். “நமது மகள் ஓர் இளம்பெண். அவளைப்பற்றிய பேச்சு மந்தணமாகவே இருக்கவேண்டும்” என்றாள் அரசி. “யார் இளம்பெண்? அவள் இன்னும் கைவளையல் போடத்தெரியாத குழந்தை. சென்றமுறை பார்த்தபோது வளையல்களை போட்டுத்தரும்படி என்னிடம் சொன்னாள்” என்றார் பாணர். “நானும் நேற்றுவரை அவ்வாறுதான் எண்ணினேன். பெற்றோர் குழந்தையை அவ்வாறு காணவே விழைகிறார்கள். அது மெய்யல்ல. அவள் உள்ளத்தில் கன்னிமையின் ஏக்கம் வந்து படிந்துவிட்டது.”
பாணர் தடுமாறினார். பின்னர் பீரிட்ட சினத்துடன் “ஏக்கமா? அது எப்படி வந்தது? அங்கு அவளிடம் அதைப்பற்றி எவர் பேசியது?” என்றார். “எவரும் பேசவேண்டியதில்லை. மரங்கள் பூப்பது மண்ணுக்கும் விதைக்கும் தெரிந்திருப்பதுபோல” என்றாள் அரசி. “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குப் புரியவில்லை. என்னதான் சொல்ல வருகிறாய்?” என்று உரக்க கேட்டார் பாணர். “சற்று ஓசை குறைத்து பேசுங்கள்” என்று கடிந்துகொண்ட அரசி “அவளுக்கு நாம் உடனே மணமகனை பார்க்க வேண்டும். இப்போதே” என்றாள்.
“உடனே என்றால்… அவள் சிறுகுழந்தை. இப்போதே மணமா?” என்றார் பாணர். “அவளுடைய எதிர்காலம் குறித்து நிமித்திகர் சொன்னவற்றை மறந்துவிட்டீர்களா? இங்கிருந்து அவள் வேறுகுலத்தவரால் கவர்ந்து செல்லப்படலாம். அதற்குள் நம் குலத்திலேயே தகுந்த மணமகனை கண்டடைவது நன்று” என்றாள் பிந்துமாலினி. பாணர் “ஆம், மெய்தான்…” என்றபடி எழுந்து நிலைகொள்ளாமல் தன் அறைக்குள் சுற்றிவந்தார். பின்னர் திரும்பி “ஆம், உடனே அவளுக்கு உரிய மகனை தேடவேண்டும். அவன் நம் குடியின் நிகரற்ற இளைஞனாக இருக்கவேண்டும். முதன்மையானவன் மட்டுமே அவளுக்குத் தகுதியானவன்” என்றார்.
முகம் மலர்ந்து அவளருகே வந்து ““ஒரு போட்டி வைப்போம்… ஏறுதழுவுதல்” என்றபின் “வேண்டாம், கதைப்போர். அல்லது நம் குடிமரபின்படி மற்போர். அல்லது விற்போர். அல்லது இவையனைத்தையும் பயன்படுத்தி மிக அரியதொன்றை கொண்டு வரும் போட்டி” என்றார் பாணர். “எண்ணித்தான் பேசுகிறீர்களா? நமக்கு ஓர் இளவரசி இருப்பது நம் குடிகளுக்குக்கூட தெரியாது. மணமகனுக்காக போட்டி வைப்பது என்பது தகுதி வாய்ந்த இளவரசி ஒருத்தி இங்கிருக்கிறாள் என்பதை நாமே உலகுக்கு அறிவிப்பது. அதன் பிறகு ஒவ்வொரு கணமும் இவளை நாம் காக்க வேண்டும்” என்றாள்.
“காப்போம். நம் மகளைக் காக்க இயலாதவனா நான்? நமது அரணைக்கடந்து வந்து எவர் அவளை கவர்வார் என்று பார்ப்போம்” என்றார் பாணர். “அனைத்து அரண்களையும் கடப்பது ஒன்றுண்டு, ஊழ். நாம் அஞ்சுவது அதையே. நிமித்திகர் சொன்ன சொல் மாறாது நிற்கிறது பதினைந்தாண்டுகளாக. நாம் விளையாடிக்கொண்டிருப்பது தெய்வங்களிடம். அதை மறக்கவேண்டாம்” என்றாள் அரசி. “ நீ என்னை அஞ்சச் சொல்கிறாயா?” என்றார் பாணர். “அஞ்சும் இடத்தில் அஞ்சியே ஆகவேண்டும் இளவரசி இங்கு பூத்திருக்கிறாள் என்று அறிவித்த பின்னர் ஒருவேளை நம்மால் அவளை காக்க முடியாமல் போனால் என்ன செய்வது?” என்று பிந்துமாலினி கேட்டாள்.
மெல்ல பீடத்தில் அமர்ந்து கைகளை மடியில் கோத்தபின் எரிச்சலுற்றவர்போல் தலையசைத்து “என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறாய்?” என்றார் பாணர். “என் இளையவன் மாருதன் இருக்கிறான். தாங்கள் தோளில் தூக்கி வளர்த்த வீரன். குடிப்பிறப்பு கொண்டவன். அனைத்து நிலைகளிலும் அவளுக்குத் தகுதியானவன்” என்றாள் அரசி. “அவனா?” என்று பாணர் கையசைத்தார். “அவன் வெறும்…” என்று அவர் மேலும் சொல்லப்போக அவள் தடுத்து “இப்படித்தான் தங்களால் சொல்லமுடியும். எந்த தந்தைக்கும் இதுவே தோன்றும். தன் மகளுக்கு மணமாக வருபவனிடம் தகுதியின்மையைத் தேடிக் கண்டடையத் துடிப்பதே தந்தையரின் இயல்பு. என் இளையவனுக்கு என்ன குறை?” என்றாள்.
ஏளனமாக “ஐந்து சுற்றுப் பொழுதுக்கு என்னுடன் அவனால் கதை பயில முடியுமா?” என்றார் பாணர். “எதற்கு கதை பயில வேண்டும்? அசுர குடியை ஆள்வதற்கு கதைப் பயிற்சியா தகுதி?” என்றாள் அரசி. பாணர் “அவனுக்கு அரசு சூழ்தலும் தெரியாது” என்றார். “அவனுக்கு அதை நீங்கள் கற்றுக்கொடுங்கள். அவன் இன்னும் இளைஞன்தானே?” என அரசி தணிந்த குரலில் சொன்னாள். பாணர் இருகைகளாலும் பீடத்தின் கைப்பிடியை அடித்தபடி எழுந்து “இருந்தாலும் அவனை என்னால் எண்ணிப்பாக்கவே முடியவில்லை” என்றார். “முதலில் அப்படி தோன்றும். ஓரிரு நாட்கள் மீளமீள இதையே எண்ணினால் அவனே பொருத்தமானவன் என்பதை காண்பீர்கள்” என்றாள்.
“மேலும் அவன் நாம் அறிந்த மைந்தன். நாம் அறியாத ஒருவனுக்கு இளவரசியை மணம் செய்து கொடுத்தால் நாம் கணக்கிட முடியாத இடர்களையும் எதிர்கொள்வோம். நாம் அளிப்பது இளவரசியை மட்டுமல்ல, தாங்கள் உருவாக்கிய பேரரசையும்தான். என் இளையவன் இவ்வரண்மனையிலே வளர்ந்தவன். நம் மைந்தன் போல இங்கிருப்பவன். இளவரசியை மணந்தபின் இருவரும் இங்கேயே இருப்பார்கள். அவர்கள் தகுதி கொண்டு முதிர்வதுவரை தாங்களே அரசராக கோல் கொண்டமரவும் இயலும்” என்றாள் அரசி. பாணர் மீசையை நீவிக்கொண்டிருக்க “இது ஒன்றன்றி வேறு வழியில்லை” என்றாள்.
பாணர் நெடுநேரம் கடந்து “ஆம், என்னாலும் பிறிதொன்றை எண்ணமுடியவில்லை. இதையே உறுதி செய்வோம்” என்றார். அரசி முகமலர்ச்சியுடன் எழுந்து “நான் என் அன்னையிடமும் தந்தையிடமும் உடனே கிளம்பி இங்கு வரச்சொல்கிறேன் அவைகூடி இம்முடிவை அறிவிப்போம். அறிவித்த அன்றே மணம் நிகழவேண்டும். மணம் நிகழ்ந்த பின்னரே இளவரசி என்று ஒருத்தி இங்கிருப்பதை நமது குடிகள் அறியவேண்டும்” என்றாள். பாணர் தலையசைத்தார்.