எழுதழல் - 12
மூன்று : முகில்திரை – 5
சிருங்கபிந்துவின் மூங்கில் புதர்க்கோட்டைக்கு உள்ளே நெஞ்சளவு ஆழமும் மூன்றுமுழ அகலமும் உள்ள நீள்குழி ஒன்று வெட்டப்பட்டு ஊரை முழுமையாக வளைத்துச் சென்றது. சிறைபிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட அசுரகுடியினர் மண்ணை வெட்டி அள்ளி வெளியே இட்டனர். அத்திரிகளும் காளைகளும் சகடங்களினூடாக இழுத்த கூடைகளில் எழுந்து வந்த மண்ணை பெண்டிர் பற்றி எடுத்து அப்பால் குவித்து பிறிதொரு மண்குவைவேலியை உருவாக்கினர். அதன் மீது காட்டிலிருந்து வெட்டிக்கொண்டுவரப்பட்ட முள்மரங்கள் நடப்பட்டன. அபிமன்யூ சிருங்கபிந்துவை வென்ற அன்றே தொடங்கியபணி ஒருகணமும் ஓயாது தொடர்ந்துகொண்டிருந்தது.
இரு வேலிகளுக்கும் நடுவே இருந்த குதிரைப்பாதையில் பணியை நோக்கியபடி அபிமன்யூ செல்ல அவனுக்குப் பின்னால் பிரலம்பன் தொடர்ந்தான். முதலில் அப்பணி ஆணையிடப்பட்டபோது அவன் ஐயத்துடன் “கோட்டைக்கு உள்ளே அகழியா, இளவரசே?” என்றான். அப்போதுதான் அவர்கள் சிருங்கபிந்துவை வென்று அதன் ஊர்த்தலைவரின் மாளிகையை கைப்பற்றியிருந்தனர். அதன் முதன்மைக்கூடத்தில் இடப்பட்ட பீடத்தில் அமர்ந்து உடைவாளைக் கழற்றி அப்பால் வைத்த அபிமன்யூ “ஆம், மூங்கில்கோட்டையில் இருந்து ஐந்தடி தொலைவில் அது வெட்டப்பட வேண்டும். ஏழு நாட்களில் பணி முடியவேண்டும். இரண்டாவது வேலியின் முட்புதர்கள் வேர் ஊன்றி மண்பிடிக்க பத்து நாட்களாகும். அதன்பின் இக்கோட்டையை அசுரர்கள் புரவியில் கடக்க முடியாது” என்றான்.
மேலும் கேட்கக்கூடாதென்று இருமுறை உள்ளத்தை தடுத்தாலும் பிரலம்பன் கேட்டுவிட்டான். “கோட்டைக்கு வெளியே அகழி சூழ்ந்திருப்பதைத்தான் நான் இதற்கு முன்பு கண்டிருக்கிறேன்…” அபிமன்யூ “அவை புரவிகள் தாவிக்கடக்க முடியாத பெரிய அகழிகள். அப்படி ஓர் அகழியை இந்த ஊரைச்சுற்றி அமைப்பதற்கு ஓராண்டாகும். இது உண்மையில் அகழி அல்ல. சிறிய தடைக்குழிதான். மூங்கில்கோட்டையை எங்கேனும் வெட்டி வழியமைத்து அசுரப்படைகள் ஊடுருவ முயன்றால் புரவிகள் ஓடிவந்து தாவிக் கடந்து இப்புறம் வந்து காலூன்றும் இடத்தில் இருக்கிறது இப்படுகுழி.”
அக்கணமே அக்காட்சியை உள்ளத்தால் கண்டுவிட்ட பிரலம்பன் திகைப்புடன் “ஆம், புரவியில் தாவிக் கடக்க முயன்றால் குழியில் விழ வேண்டியதுதான்” என்றான். “புரவிகள் காலொடிந்துவிடும். ஆனால் கவச உடையணிந்த வேலவரை மூங்கில் கோட்டையை ஊடுருவச்செய்ய முடியும்” என்று அபிமன்யூ சொன்னான். “இரண்டாவது முட்புதர் வேலிக்குப்பின்னால் நமது வில்லவர்கள் ஒளிந்து நின்று அவர்களை தாக்குவார்கள் என்றால் அவர்களை மிக எளிதில் கொன்று குவிக்கமுடியும். மூங்கில் வேலியைக்கடந்து வருபவர்கள் விழிகளிலும் கைகளிலும் பாதி அவ்வேலியின் முட்கள்தான் இருக்கும். சிக்கிக்கொண்டு நெஞ்சைத்திறந்து காட்டும் இலக்குகள்“ என்றான் அபிமன்யூ. “மேலும் முதலில் வரும் சிலரை கொன்றால் போதும். அந்த உடல்களே தொடர்ந்து வருபவர்களின் கால்களைத் தடுக்கும். அஞ்சிச் செயலிழக்கவும் செய்யும்.”
அந்தப்போர்க்காட்சியை அகத்தால் கண்டவன்போல பிரலம்பன் பெருமூச்சுவிட்டான். “உயிர்கள் அனைத்தும் இறப்பை அஞ்சி முழு உயிர்விசையாலும் தப்பி ஓடவும் எதிர்த்துப்போரிடவும் முயல்கின்றன. அப்போது அவை மிருத்யூதேவியின் ஓசைகளையும் நிழலாட்டத்தையும் மட்டுமே கண்டிருக்கும். ஒரு தருணத்தில் அவள் விழிகளை அவை கண்டதுமே முழுமையாக தன்னை ஒப்படைத்து அசைவிழந்து நின்றுவிடும். மெய்சிலிர்க்க தலைதாழ்த்தி அவை பணிவதைக் காண்கையில் கொலைவிலங்கின் மீது மிருத்யூதேவி தோன்றுகிறாள். அவளுக்கு இரக்கமோ முறைமைகளோ இல்லை. உண்ணுந்தோறும் விடாய்கொள்கிறாள்” என்றான் அபிமன்யூ.
அவன் முகத்தில் கனவுகாணும் சிறுவன்போல ஒரு புன்னகை விரிந்தது. “பிரலம்பரே, மிருத்யூதேவியின் பீடமென நாம் ஆவது ஒரு பெருநிலை. அதை உணர்ந்தபின்னர் வேறெதிலும் இன்பம் அடையமாட்டீர். நான் என் முதல்போர்முனையை பன்னிரு அகவையில் கண்டேன். அன்று என்னில் நிகழ்ந்த ஒன்றை ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும் மெய்ப்புடன் எண்ணிக்கொள்கிறேன். இங்கு நாம் இருக்கலாம், வாழ்வது சிலகணங்கள் மட்டுமே.”
அவன் விழிகளை நோக்க அஞ்சி பிரலம்பன் கண்களை தாழ்த்திக்கொண்டான். சில கணங்களுக்குப்பின் “இப்படைசூழ்கைகளை நீங்கள் எங்கு கற்றீர்கள், இளவரசே? உங்கள் தந்தையிடம் விற்போர் கற்றீர்கள் என்று அறிந்திருக்கிறேன்” என்றான். அபிமன்யூ “நான் என் தந்தையை எட்டு முறை மட்டுமே கண்டிருக்கிறேன். இதுவரை மொத்தமாக நாற்பத்திஏழு நாட்களை மட்டுமே அவருடன் செலவிட்டிருக்கிறேன். நான் கற்றவை அனைத்தும் நானே உணர்ந்துகொண்டவை. என்னைச் சூழ்ந்திருப்பனவற்றிலிருந்து” என்றான். பிரலம்பன் “அனைவரையும்தான் இவை சூழ்ந்துள்ளன. அவற்றை அறிவென உருமாற்றுவது எது?” என்றான்.
அபிமன்யூ அன்று உடல்சோர்வால் உருவாகும் உளநெகிழ்வு கொண்டிருந்தான். பிரலம்பனின் வினாவால் அகம் தூண்டப்பட்டு “அறியேன். என் தாய் என்னை கருவுற்றிருக்கையில் எட்டுமாதகாலம் துவாரகையில் இருந்தாள் என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இளைய யாதவர் தன் தங்கையை பார்க்க வருவாரென்றும் போர்க்கலை குறித்தும் படைசூழ்கை குறித்தும் அவளிடம் பேசிக்கொண்டிருப்பாரென்றும் அன்னை சொல்லியிருக்கிறாள்.” அக்கதையை பிரலம்பனும் கேட்டிருந்தான்.
“என் அன்னை என்னை கருக்கொண்டதே எந்தையைவிட பெரிய வீரன் ஒருவனை மைந்தனாக அடையவேண்டுமென்றுதான். அதை நான் ஆணென உணர்ந்தபின் இன்று புரிந்துகொள்ள முடிகிறது. எந்தை அன்னையை அடைந்தது அவள் மேல் அவர்கொண்ட வெற்றி. அவளே விரும்பி ஈட்டியது அவ்வுறவு. அவளுள் வாழ்ந்த திருமகள் அதில் மகிழ்வுற்றாள், கொற்றவை சினம்கொண்டாள். கருவுற்று என்னை அடைந்தது அக்கொற்றவையின் வஞ்சம். அவர் மேல் எழுந்து நின்று ஒரு சொல், ஒரு நோக்கு, ஒரு நிமிர்வு கொள்ளவேண்டுமென அத்தெய்வம் விழைந்தது. அவ்விழைவையே அவள் கருவாகச் சுமந்து துவாரகைக்கு சென்றாள். எனவே போர்க்கலை அன்றி பிறிதொன்றையும் கேட்கவோ எண்ணவோ அவள் சித்தமாக இருக்கவில்லை. எந்தையைவிடப் பெரிய வீரன் என்று அவள் அறிந்தது தன் தமையனைத்தான். ஆகவே ஒவ்வொரு நாளும் பொழுதும் அவருடன் இருக்கவே விழைந்தாள்” என்றான் அபிமன்யூ.
“கரு ஆறுமாதம் இருக்கையில் பெண்கள் அன்னையில்லம் செல்வதுதான் ஷத்ரிய குடிப்பழக்கம். அவளோ மூன்றுமாதக் கருவுடன் கிளம்பிச் சென்றாள். அத்தனை நெடுந்தொலைவை தேரிலும் புரவியிலும் கடப்பது கருவுக்கு நன்றல்ல என்று மருத்துவர் சொன்னபோது அவ்வண்ணம் ஆற்றல் அற்ற கரு எனில் அது புவியில் பிறக்க தான் விரும்பவில்லை என்று அவள் மறுமொழி சொன்னாள். அவள் எண்ணத்தை அறிந்தவர்போல் தமையனும் போர்க்கலைகளைக் குறித்து மட்டுமே அவளிடம் பேசிக்கொண்டிருந்தார். வன்பாலை நிலம் மழைத்துளியை என அவரது ஒவ்வொரு சொல்லையும் அவள் வாங்கிக்கொண்டாள் என்று சூதர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன்.”
இந்திரப்பிரஸ்தத்தை எண்ணி முகம் மலர்வுகொள்ள அபிமன்யூ தொடர்ந்தான். “தான் கற்றவற்றை தன் சித்தத்தில் நிறைத்து குருதியில் கலந்து கருவில் எழுந்த எனக்கு அளித்தாள். நினைவறிந்த முதற்சொல்லென அன்னை என்னிடம் உரைத்தது வில் என்பதுதான். கையூன்றி எழுவதற்குள்ளே களிவில் ஏந்தியவன் நான். விளையாடியதெல்லாம் போர்க்கலைகளை மட்டுமே. விற்கலையுடன் நான் களம் புகுந்தபோது நான்கு அகவையே ஆகியிருந்தது.” இயல்பாக நினைவுகள் மேலெழுந்து சொல்லோட்டத்தை அணைக்க அபிமன்யூ பெருமூச்சுடன் சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பிரலம்பன் அப்பேச்சினூடாக அவனருகே மிக நெருங்கிச்செல்வதை உணர்ந்து நிறைவுகொண்டான்.
“நான் மண்ணுக்கு வரும்போதே அனைத்தையும் கற்றிருந்தேன் என ஒவ்வொரு முறையும் புதிய ஒன்றை அணுகுகையில் உணர்கிறேன். இங்கு கற்கும் ஒவ்வொன்றையும் உண்மையில் நான் அறிவதில்லை, நினைவு கூர்கிறேன். என் சித்தமறியாதவற்றைக்கூட கை அறிந்திருக்கிறது.” பிரலம்பன் “மானுடர் கற்பவை அனைத்துமே முன்பெப்போதோ கற்றவற்றின் நீட்சிதான் என்று என் ஆசிரியர் சொல்வதுண்டு. நீங்கள் கற்று முழுமை கொண்டபின் மண் நிகழ்ந்திருக்கிறீர்கள், இளவரசே” என்றான். அதிலிருந்த புகழ்ச்சியால் சீண்டப்பட்டு நாணி உளம் மீண்ட அபிமன்யூ “ஆனால் இங்கு நான் செய்பவையெல்லாம் எளிய சிறுவர்சூழ்ச்சிகளே. பாணரைப்போன்ற அசுரர் மிக எளிதாக மீறும்வழிகளை கண்டடையக்கூடும்” என்றான்.
கோட்டையின் மேற்கு எல்லையில் மட்டும் அகழிப்பணி எஞ்சியிருந்தது. அபிமன்யூ புரவியை இழுத்து நிறுத்தி பிரலம்பனிடம் மாறுபட்ட குரலில் “இன்று மாலைக்குள் இப்பணியும் முடிந்திருக்க வேண்டும் அல்லவா?” என்றான். பிரலம்பன் “ஆணை அவ்வாறுதான்… “ என இழுத்தான். “இரவும் பணி நிகழ்கிறதல்லவா?” என்றான். “ஆம், இளவரசே” என்றான் பிரலம்பன். “அவர்களிடம் சொல்லுங்கள், இது முடிவதுவரை எவருக்கும் துயிலுக்கு ஒப்புதல் இல்லை, அடிமைகளுக்கும் ஆள்வோருக்கும்” என்றபின் புரவியைத்திருப்பி சிறிய வேட்டுவர் தெருவுக்குள் நுழைந்து ஊர்மையத்தில் அமைந்த மாளிகை நோக்கி சென்றான் அபிமன்யூ.
அவனைத் தொடர்ந்து வந்த பிரலம்பன் “இங்கு நாம் பதினெட்டு நாட்கள் வரை தங்குமளவுக்கே உணவுள்ளது, இளவரசே” என்றான். அபிமன்யூ திரும்பி நோக்கி “நேற்று இருபத்தைந்து நாட்கள் நாம் இங்கிருக்க முடியும் என்றல்லவா சொல்லப்பட்டது?” என்றான். பிரலம்பன் “ஆம், இங்குள்ளோர் உணவுண்ணும் அளவை இப்போதுதான் புரிந்து கொண்டோம். நிலம்குழிக்கும் கடும் உழைப்பு அவர்களை நிறைய உண்ணச்செய்கிறது” என்றான். “இங்குள்ள ஆநிரைகளும் நமது உணவே” என்ற அபிமன்யூ “அவர்கள் உண்பதில் பாதி அளவுக்கே நாளை முதல் அளிக்கப்பட்டால் போதும்” என்றான். பிரலம்பன் “ஆணை” என்றான். “அவர்களுக்கு நாம் உணவளிப்பதில்லை என்னும் செய்தி பரவுவதும் நன்றே” என்றான் அபிமன்யூ. அவன் பிறிதொருவனாக மாறிவிட்டிருப்பதை விழிவிலக்கிய பிரலம்பன் ஓரவிழி அறிந்த அவன் உடலசைவுகளில் இருந்தே உய்த்தறிந்தான்.
சிருங்கபிந்துவை அலையென வந்தறைந்து அரணுடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த ஐம்பதுக்கும் குறைவான அசுரவீரர்களைக் கொன்று குடிகள் அனைவரையும் தன் காவலுக்குள் கொண்டு வந்தபோதுதான் அபிமன்யூவின் அவ்வுருவை பிரலம்பன் கண்டான். கதவை உடைத்து கோட்டைக்குள் புகுந்து புரவியிலிருந்து இறங்கி நீண்ட அம்புமுனை ஒன்றால் கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்த புண்பட்ட அசுரவீரர்களின் கழுத்து நரம்பை வெட்டியபடி அவன் நடந்தான். குட்டிநாகத்தின் முத்தம் என மிகச்சிறிய கூரிய தொடுகையில் குருதி பீரிட்டெழ அவர்கள் சரிந்து துடித்து இறந்தனர். அபிமன்யூ கீழே நோக்கவேயில்லை. “இளவரசே! இளவரசே!” என்று கூவியவர்கள், கால்களைத் தொட கைநீட்டியவர்கள் அனைவரும் நீலநரம்புச்சரடென்று மட்டுமே அவன் விழிகளுக்குத் தெரிந்தனர்.
அவன் அருகே சென்றுகொண்டிருந்த பிரலம்பன் அவனில் எழுந்த அப்பிறனைக் கண்டு கால்நடுங்கி பின்னடைந்தான். தீராத களிப்பிள்ளை போரையும் அவ்வாறே கொள்வதைத்தான் அதற்குமுன்பு கண்டிருந்தான். அப்போது எழுந்தது இரையை முற்றாகக் கவ்வியபின் வேங்கையில் எழும் அமைதி. பலிக்குருதியைக் காண்கையில் கொலைத்தெய்வம் கொள்ளும் விழியொளி. இது அதை போர்த்தியிருந்ததா? அது இதை நிகர்செய்கிறதா? பஞ்சுப்பொதியென விளையாடும் புலிக்குட்டிக்குள் குருதிவிடாய் கொண்ட காடு குடியிருக்கிறது.
சிருங்கபிந்துவில் ஊர்த்தலைவர் தீர்க்கரின் மாளிகைக்கு அருகிலேயே காவலர்தலைவர் ஜிஹ்வரின் இல்லம் அமைந்திருந்தது. அதையொட்டி இருந்த ஐந்து இல்லங்களில் அரசகுடியினர் வாழ்ந்தனர். பாணரின் பட்டத்தரசி பிந்துமாலினியின் தந்தை பிந்துமாலரும் அவருடைய இரு மனைவியரும் நான்கு மைந்தர்களும் ஓர் இல்லத்தில் வாழ்ந்தனர். ஊருக்குள் நுழைந்ததுமே அபிமன்யூ அவர்களின் இல்லங்களை நோக்கித்தான் படையுடன் சென்றான். தங்கள் காவலர்கள் விழக்கண்டதும் அவர்கள் இல்லமுற்றங்களில் குழவியரும் மைந்தரும் பெண்டிருமாக வந்து உடல்தொகைகளாக நின்றனர். அவனைக் கண்டதும் கைகூப்பி முகமனுரைத்த குடித்தலைவருக்கு செவியோ விழியோ அளிக்காமல் கடம்பரிடம் அனைவரையும் சிறைபிடித்து கைகள் பிணைத்து காவலர்தலைவரின் மாளிகையில் அடைக்க ஆணையிட்டான்.
நெடுங்காலமாக போரையும் சிறையையும் அறிந்திராத அவர்கள் அஞ்சி உடல்நடுங்கி ஒருவரோடொருவர் சேர்த்தணைத்துக்கொண்டு ஒண்டியிருந்தனர். அன்றுமாலை அவர்களைப் பார்க்கவந்தபோது “சிறையமர்ந்தோருக்கு மூன்றிலொரு பங்கு உணவு போதும்” என்று அபிமன்யூ ஆணையிட்டான். அவர்களை நோக்கியபோது அவன் விழிகளில் மானுடரைச் சந்திக்கும் ஒளியெழவில்லை. ஒவ்வொரு உடலாகத் தொட்டுச்சென்ற விழிகள் பிந்துமாலரிடம் வந்து நிலைத்தன. அவ்விழிகளைக் கண்டு அஞ்சி மெய்ப்புகொண்ட அவர் சற்று உடல்குறுக்கினார். “இவர் நம்மிடமிருந்து இவர்களுக்கான ஆணைகளை பெற்றுக்கொள்ளட்டும்” என்றபின் திரும்பி நடந்தான்.
ஊர்மக்களை உழைப்பவர்கள் முதியவர்கள் என பிரித்து அவர்களை ஆண்வேறு பெண்வேறு என மீண்டும் பிரித்தான். முதியவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு மற்றவர்களை இருபது பேர்கள் கொண்ட பதினேழு சிறுகுழுக்களாக ஆக்கி ஒவ்வொன்றுக்கும் ஒருவனை தலைவனாக்கினான். ஒவ்வொரு குழுவுக்கும் மூன்று படைவீரர்களை பொறுப்பாக்கிவிட்டு எஞ்சியவர்களை ஊரைச்சூழ்ந்திருந்த மரங்களின்மேல் கட்டப்பட்ட காவல்மாடங்களில் விற்களும் அம்புகளுமாக அமரச்செய்தான். முன்னரே எண்ணி எழுதிவைக்கப்பட்டவற்றை நோக்கி படிப்பதுபோல அவன் விடுத்த தொடர் ஆணைகளினூடாக அவ்வூரில் முற்றிலும் புதிய ஓர் அரசு உருவாகிவந்தது. ஊர்த்தலைவர் மாளிகை அதன் மையமாகியது. செய்தித்தொடர்புகள் ஒற்றர்வலைகள் ஏவலர் அடுக்குகள் உருவாயின.
சிருங்கபிந்துவின் கோட்டையைப் பிடித்ததுமே பாதிப்படையை மட்டும் அங்கே நிறுத்திவிட்டு எஞ்சியவர்களை எட்டு பிரிவுகளாகப்பிரித்து மேலும் அசுர நிலத்திற்குள் ஊடுருவச்செய்து சூழ்ந்திருந்த காவல் மாடங்கள் அனைத்தையும் வென்றான். அவையனைத்திலும் அவன் படைவீரர்கள் முழவுகளும் எரியம்புகளுமாக காவலிருந்தனர். சிருங்கபிந்துவைச் சூழ்ந்திருந்த அசுரநிலம் முழுமையாக அவன் ஆட்சிக்குள் வந்தது. மறுநாள் காலையில் நாற்பத்தியேழு காவலரண்களிலிருந்தும் முழவொலிகளினூடாக வந்த செய்திகளைத் தொகுத்து அபிமன்யூவுக்கு கொண்டு சென்று அளித்த பிரலம்பன் அவ்வூர் அவ்வண்ணம் அவன் ஆளுகைக்குள் பல தலைமுறைகளாக இருந்துவருவதுபோல் உணர்ந்தான். அரசன் ஆயிரம் கண்ணுடையவன் என்று வகுத்த தொல்நூல்களை எண்ணி வியந்துகொண்டான்.
அந்நகரின் ஒவ்வொரு செயலுக்கும் அவன் சொல் முன்னரே ஆணையென எழுந்திருந்தது. சூரியன்போல் வானிலிருந்தபடி அங்கிருந்த ஒவ்வொன்றையும் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். பிரலம்பன் செய்திகளை தொகுத்துக் குறித்து அளித்த ஓலைகளை ஒவ்வொன்றாக வாங்கிப் புரட்டியபின் அவற்றை கீழே வைத்துவிட்டு “இனி நாம் செய்வதற்கொன்றுமில்லை. பாணரிடம் இருந்து செய்தி வரவேண்டும், காத்திருப்போம்” என்றான். “நாம் அவரிடம் தூது செல்வதற்காக வந்தோம்” என்றான் பிரலம்பன். “எனது தூதை அவரிடம் முறைப்படி உரைப்பேன். அதற்கான தருணத்தையும் முறைமையையும் அவரே உருவாக்கவேண்டும். இங்கு அவரது பட்டத்தரசியின் அன்னையும் தந்தையும் தம்பியர் தங்கையர் உறவினர்களும் என்னிடம் பணயமென இருக்கிறார்கள். இதற்கு நிகரான பணயப்பொருள்தான் அவரிடம் இருக்கிறதா என்பதை அவர்தான் நமக்கு சொல்லவேண்டும்” என்றான்.
பிரலம்பன் “பாணர் முந்துசினத்திற்கு புகழ் பெற்றவர் என்கிறார்கள்” என்றான். “அரசர் அனைவரும் அவ்வாறுதான், சினமே அவர்களை தலைவர்களாக்குகிறது” என்றான் அபிமன்யூ. “ஆனால் காக்கும்சினமே ஆற்றல்கொண்டதாகிறது.” பிரலம்பன் அவனையே அயலவன் என நோக்கிக்கொண்டிருந்தான். “இப்போது ஒன்றை அவர் அறிந்திருப்பார், நிகரென அவர் முன் நின்று பேசும் ஒருவன் நான். என் சொற்கள் ஒவ்வொன்றையும் மும்முறை குருதி முழுக்காட்டியிருக்கிறேன். ஏழு முறை அனல் முழுக்காட்டியிருக்கிறேன். அவர் எவரோ அதுவே நானும். இங்கு நிகழ்ந்த ஒவ்வொன்றையும் அங்கு சொல்லும் அவரது ஒற்றர்கள் எதைச் சொன்னாலும் உண்மையில் இவ்வொரு வரியையே சொல்கிறார்கள்.”
பிரலம்பன் சிருங்கபிந்துவின் தெருக்களினூடாக சீரான நடையில் புரவியில் அபிமன்யூவை நோக்கியபடி தொடர்ந்தான். சூழ்ந்திருக்கும் இல்லங்களின் சாளரங்கள் எதிலிருந்தாவது ஓர் அம்பு எழுந்து அவன்மேல் பாயக்கூடும். அசுரர்கள் நச்சுஅம்புகளை தொடுப்பதில் திறன் கொண்டவர்கள் என்று அறிந்திருந்தான். அவற்றில் ஒன்று எங்கோ காத்திருக்கக்கூடும். ஆம், ஓர் அம்பு எஞ்சாமல் முற்றாகப் பணியமாட்டார்கள். ஆனால் அவ்வாறு ஓர் கரவம்பால் இறப்பவன் அல்ல அவன் என்றும் தோன்றியது. மாமனிதர்களுக்கு பிறவிநோக்கம் உண்டு. இத்தனை பேராற்றல்களை இவ்விளமையிலேயே அவனில் கூடச்செய்த தெய்வங்களின் எண்ணம் ஒன்று உண்டு.
பிறவிப்பேராற்றல்களின் பொருளையோ பொருளின்மையையோ இப்புவிக்கு காட்டிச் செல்பவன் போலும் இவன். பிரலம்பன் தன்னுள் இயல்பாக எழுந்த சொற்களைக்கண்டு தானே திகைத்தான் பொருளோ பொருளின்மையோ—எத்தகைய சொல்லாட்சி! அது எப்படி தன்னுள் வந்தது? மீண்டும் சூழுணர்வை அடைந்தான். குனிந்து தரையில் விழுந்து கூழாங்கற்களிலும் குளம்படிகள் படிந்த சேற்றிலும் நெளிந்து சென்ற அபிமன்யூவின் நிழலை நோக்கிக்கொண்டு சென்றான். மிகத்தொலைவில் ஒரு கலம் முட்டும் ஒலி எழுந்தது. அதை கேட்டபின்னர்தான் அவ்வொலியை அபிமன்யூவின் நிழலில் அசைவென்றும் அவன் நோக்கியதை உணர்ந்தான். அது தன் உளமயக்கா என்ற ஐயம் வர மீண்டும் கூர்ந்து நோக்கிக்கொண்டு சென்றான். கதவொன்று மெல்லத்திறந்து மூடும் ஒலியை அந்நிழல் அசைவில் கண்டான். விழிதூக்கி அபிமன்யூவின் உடலை பார்த்தான். அவன் தன் எண்ணங்களில் முற்றிலும் மூழ்கி சூழ்மறந்து சென்று கொண்டிருந்தான். அவன் உடல் அங்கிருக்கும் ஒவ்வொரு ஓசையையும் அசைவையும் அறிந்து எதிர்வினை கொண்டிருந்தது.
மெய் கண்ணாகுதல் என்னும் சொல் அவனில் எழுந்தது. போர்க்கலை பயிலச் சென்ற முதல் நாள் ஆசிரியர் அவனிடம் சொன்னது அது. அதுவல்ல படைக்கலப்பயிற்சியின் உச்சம். ஆயிரம் கண்களல்ல. ஒற்றைக்கண்தான். கண்ணன்றி பிறிதிலாதாதலே அது. அச்சிற்றூரே ஒரு விழி. அதன் மணியென்று அவன். அது ஆசுரநிலத்தை நோக்கிக்கொண்டிருக்கிறது.
குடித்தலைவர் இல்லத்தை அடைந்து முற்றத்தில் புரவியில் இருந்து இறங்கி அணுகிய காவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு தனக்குப்பின்னால் புரவியிலிருந்து இறங்கி வந்த பிரலம்பனிடம் “காவல் மாடங்களில் இருந்து வரும் செய்திகளை தொகுத்து கொண்டு வருக!” என்று ஆணையிட்டுவிட்டு அபிமன்யூ படிகளில் ஏறி உள்ளே நுழைந்தான். பிரலம்பன் தலைவணங்கி பின்னால் சென்றான். கூடத்தில் வந்து அங்கிருந்த சிறுபீடத்தில் அவன் அமர்ந்துகொண்டதும் காவலனொருவன் கீழே அமர்ந்து அவனுடைய காலணிகளை கழற்றினான். அவன் எழுந்து கைகளை விரித்தபோது பிறிதொருவன் இடைக்கச்சையை அவிழ்த்தான்.
உள்ளிருந்து கடம்பர் வந்து தலைவணங்கி நின்றார். அவரை நோக்காமலேயே “என்ன?” என்று அவன் கேட்டான். ”அரசகுடியினர் தங்களுக்கு உரிய முறைமையும் வரிசையும் அளிக்கப்படாவிட்டால் உணவு துறப்பதாக அறிவித்திருக்கிறார்கள்” என்றான். “அதை இத்தனை பிந்தி உணர்ந்தார்களா என்ன?” என்று அவன் புன்னகைத்தான். எழுந்து மேலாடையை எடுத்துப்போட்டுக்கொண்டு “அவர்கள் இறப்பதனால் ஒருகணமும் நான் வருந்தப்போவதில்லை” என்றான்.
கடம்பர் “ஆனால் அவர்கள் நம் பணயமாக இருக்கிறார்கள். அவர்களை நலமாகப் பேணுவது நம் பொறுப்பு” என்றார். “ஆம், ஆனால் ஒருகணம் நெகிழ்வதென்பது இந்த பேரத்தில் அவர்களின் தரப்பு ஓங்குவதே ஆகும். பணயமென எனக்கு அவர்களில் ஒரு சிலர் உயிருடன் இருந்தாலே போதும். இந்தப் பேரம் இன்னும் ஐந்தாறு நாட்களில் முடிந்துவிடும். அதற்குள் உணவை முற்றொழித்தாலும் எவரும் சாகப்போவதில்லை. ஓரிருவர் இறப்பது பேரத்தை வலுவுடையதென்றே ஆக்கும்” என்றபின் அபிமன்யூ படிகளிலேறி மேலே சென்றான்.
மூங்கில் கால்களின் மேல் மரத்தட்டிகளால் கட்டப்பட்ட அந்த இல்லத்தின் அறைகளனைத்தும் மிகச்சிறியவை. கைதூக்கினால் தொடும் அளவுக்கே உயரம் கொண்ட கூரையும் அதில் செதுக்கப்படாத மரத்தாலான உத்தரங்களும் திரைச்சீலைகளில்லாது திறந்த சாளரங்களுமாக ஒரு காட்டுக்குடிலென்றும் தோற்றமளித்தது அம்மாளிகை. அளவுகள் ஒழுங்கமையாதமையால் தானாகவே முளைத்து உருவானவை போன்ற உயரமற்ற பீடங்கள். விளிம்புவட்டங்கள் நெளிந்தும் குழைந்தும் அமைந்த நீர்க்கலங்கள். மஞ்சத்தறையில் காத்திருந்த ஏவலர்கள் இருவர் வந்து தலைவணங்கினர். “சிறிது மது” என்று அவர்களில் ஒருவனிடம் சொல்லிவிட்டு மரவுரி விரிக்கப்பட்ட நீள்மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.
நாள் முழுக்க நான்குநாழிகைக்கு அரைநாழிகை வீதம் சிறுதுயில்கள் மட்டுமே அவன் கொண்டிருந்தான். எனவே அவன் துயில்வதே இல்லை என்று படைவீரரும் பிணைச்சிறை கொண்டிருந்த குடிகளும் எண்ணினர். ஒவ்வொரு நாளும் இருபது முறைக்கு மேல் கோட்டையையும் தெருக்களையும் அவன் புரவியில் சுற்றிவந்தான். அங்கிருந்த ஒவ்வொரு படைவீரனிடமும் நாளில் ஒருமுறையேனும் பேசினான். ஒவ்வொருவரும் தாங்கள் அவனிடம் நேரடியாக ஆணைத்தொடர்பு கொண்டிருப்பதாக நம்பினர். ஒவ்வொருவரும் அவனுடைய அணுக்கத்தோழர்களாக தங்கள் பகற்கனவுகளில் நடித்தனர். பல்லாயிரம் கைகளுடன் பேருருக்கொண்டு அந்தப்படையென அவனே மாறிவிட்டிருந்தான். அவன் தன் கனவுகளில் பெருநகர் ஒன்றில் பல்லாயிரம்பேரை ஆட்சிசெய்துகொண்டிருந்தான்.
அவன் பெருஞ்சுழி ஒன்றை நோக்கி சென்றுகொண்டிருந்தான். வாழ்த்தொலிகளும் போர்முரசோசையும் கலந்து எழுந்து அலையலையெனச் சூழ்ந்தன. மானுட உடல்களாலான வெள்ளம். மானுடக்கைகளாலான அலைகள். அவர்கள் அவனை நோக்கி கைநீட்டினர். அவனை பற்றிக்கொண்டனர். அதன் சுழிவிழிக்குள் அவன் சென்றதும் தன்னைச்சுற்றி அப்பெருக்கு சுற்றுவதை கண்டான். உள்ளே செல்லமட்டுமே முடிவது. அலைகள் இதழ்களாகி பெருந்தாமரை மலர் என அவனை மூடிக்கொண்டன.
அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். அவனை எழுப்பியது ஏவலனின் காலடியோசை. பிரலம்பன் வந்து அறைவாயிலில் நிற்பதை ஏவலன் அறிவித்தபோது எழுந்து நனைந்த மரவுரியால் முகத்தை துடைத்தபின் பீடத்தில் அமர்ந்தான். பிரலம்பன் உள்ளே வந்து தலைவணங்கி “பாணாசுரரிடமிருந்து தூதர் வந்திருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது” என்றான். “நம் எல்லைக்குள் நுழைந்துவிட்டாரா?” என்றான் அபிமன்யூ. “ஆம்” என்றான் பிரலம்பன். “அவரை அழைத்துவரும்பொருட்டு இங்கிருந்து மூன்று பேரை அனுப்பியிருக்கிறேன்.”
அபிமன்யூ விழிசுருங்க “தனிமனிதரா?” என்று கேட்டான். “ஆம். ஒருவர் மட்டும் நடந்து வந்து முதல்காவல் மாடத்தினருகே நின்று பேரரசர் பாணரின் தூதரென்று அறிவித்துக்கொண்டதாகவும் அசுர சக்ரவர்த்தியின் முத்திரை பொறிக்கப்பட்ட ஓலையொன்றை சான்றாகக் காட்டியதாகவும் சொல்கிறார்கள்” என்றான் பிரலம்பன். “அந்தணரா?” என்றான் அபிமன்யூ. “இல்லை, குடிப்பாடகர்போல் தோன்றுகிறார். முழவும்துடியும் மூங்கில்குழாயும் கைக்கொண்டு புலித்தோலாடை அணிந்திருக்கிறார்.” அபிமன்யூ சிலகணங்கள் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தபின் ஒன்றும் சொல்லாமல் எழுந்து கைதூக்கி உடலை சோம்பல் முறித்தான். சாளரத்தருகே சென்று வெளியே பார்த்தான்.
“அகழிப்பணி முடிந்துவிட்டதா?” என்றான். அவ்வினாவால் வியப்புகொண்ட பிரலம்பன் “நடந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் முடிய இன்று இரவு கடக்க வேண்டியிருக்கும்” என்றான். “மேலும் விரைவு… எவருக்கும் ஓய்வு தேவையில்லை என்று அவர்களிடம் சொல்லுங்கள். ஓய்வு தேடும் உடல்களை அக்கணமே கொன்று வீசும்படி அரசனின் ஆணை என்று அறிவியுங்கள்” என்றான் அபிமன்யூ. “ஓய்வில்லாது அவர்கள் பணி செய்யத்தொடங்கி மூன்று நாட்களாகின்றன” என்றான் பிரலம்பன். “ஐந்து நாட்கள் வரை மானுட உடல் உயிருடன் அப்பணியை செய்ய முடியும்” என்று அபிமன்யூ சொன்னான். பிரலம்பன் ஏதோ சொல்ல வாய் எடுத்தபின் உளம் விலக்கிக்கொண்டான்.
அபிமன்யூ “கடம்பரை அழைத்து வருக!” என்றான். பிரலம்பன் தலைவணங்கி வெளியே சென்று சற்று நேரத்தில் கடம்பருடன் வந்தான். “என்ன செய்கிறார்கள்?” என்று அபிமன்யூ கேட்டான். “தங்கள் சொல்லை அவர்களிடம் சொன்னேன். குடித்தலைவர் சில கணங்கள் சொல்லிழந்து கைகளால் வாயைப்பொத்தி அமர்ந்திருந்தார். அவர் துணைவி இந்தக் கொடியவனுக்காக நமது குழந்தைகள் பட்டினி கிடப்பதில் பொருளேதுமில்லை. இவனை நமது அரசுசூழ்ந்துள்ளது. இவனுக்கு உரியதை அளிக்கும் பொறுப்பு நம் குலத்தோன்றல்களுக்கு உள்ளது. நாம் பணிவதன்றி வேறு வழியில்லை என்றார்.”
அபிமன்யூ “நன்று” என்று புன்னகைத்தான். “படைக்கலங்கள் அனைத்தும் கூர் கொள்ளட்டும். அம்புகள் ஒருபோதும் குறைவடையாமல் நாம் இங்கிருந்து மேலும் கிளம்ப சோணிதபுரம் நோக்கிச் செல்லவும் வாய்ப்புண்டு. நமது வீரர்களிடம் சொல்லுங்கள்” என்றான். கடம்பர் சென்றதும் பிரலம்பன் “நாம் இங்கிருந்து செல்லவிருக்கிறோமா? அப்படியென்றால் ஏன் இந்நகரை அவ்வளவு ஆற்றல் கொண்டதாக்குகிறோம்?” என்றான். “எங்கும் தேங்கியிருத்தலென்பது படைகளின் ஆற்றலை குறைக்கும். எக்கணமும் எழுவோம் எனும் எண்ணம் வேண்டும். போருக்கு சித்தமாகிக்கொண்டிருக்கிறோம் என்னும் உணர்வு இருந்தால் மட்டுமே போருக்கு எழமுடியும்” என்றான்.
கடம்பர் சற்று தயங்கி “பிறிதொரு செய்தி..” என்றார். அபிமன்யூ விழிதூக்க்க “நம் பிணைச்சிறையாளர் பேசுவதை ஒட்டுக் கேட்க இருவரை சுவர்களுக்கு வெளியே நிறுத்தியிருந்தேன், இளவரசே. அவர்கள் சொன்ன ஒரு செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. அது மெய்யென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் குடித்தலைவரிடம் அவர் துணைவி பேச்சுவாக்கில் அதைச் சொல்ல உடனே அவர் அவளை விலக்கிவிட்டு எழுந்துவந்து எவரேனும் ஒட்டுக்கேட்கிறார்களா என்று செவிகூர்ந்தார். ஆகவே என்னால் புறக்கணிக்கவும் இயலவில்லை” என்றார்.
“ம்?” என்றான் அபிமன்யூ “பாணாசுரர் பிணையென வைத்திருப்பது இளையயாதவரின் மைந்தர் பிரத்யும்னரின் மைந்தராகிய அனிருத்தரை” என்றார் கடம்பர். அபிமன்யூ சிலகணங்கள் நோக்கிவிட்டு “அது மெய்” என்றான். “ஆனால்…” என்று கடம்பர் சொல்லத் தொடங்க “அச்செய்தியைக் கேட்டதுமே அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்துவிட்டன. குடிப்பாடகர் ஏன் வருகிறார் என்பது உட்பட” என்று சொன்ன அபிமன்யூ புன்னகையுடன் எழுந்துகொண்டு “நன்று, தெளிவுறுதல் எப்போதுமே நலம்பயப்பதுதான்” என்றான்.