ஆசிரியர்

தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெய்துகொண்டர்.

நான் , ஜெயமோகன், பிறந்தது 1962 ஏப்ரல் 22 ஆம்தேதி. சித்திரை மாதம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஜாதகம் முதலியவற்றில் நம்பிக்கை இல்லை. ஆகவே நட்சத்திரம் தெரியவில்லை. பிறந்தது அருமனை அரசு மருத்துவமனையில். அதன் பின் ஒன்றாம் வகுப்புவரை பத்மநாபபுரத்தில் குடியிருந்தோம். இரண்டாம் வகுப்பு முடிய கன்யாகுமரி அருகே கொட்டாரம் ஊரில். படிப்பு கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளியில். பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது அப்பள்ளி. அதன் பின் முழுக்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அப்போது ராஜு சார் அங்கே தலைமையசிரியராக இருந்தார். என் அப்பாவின் நண்பர். நான் பள்ளிக்கு வெளியே அதிகம் படிக்க காரணமாக அமைந்தவர். முழுக்கோடு பள்ளி அருகே குடியிருந்தோம். ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றுவரை அருமனை [நெடியசாலை] அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கே சத்தியநேசன் சார் என் இலக்கிய ஆர்வத்துக்கு பெரிதும் காரணமாக அமைந்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடிந்தது

சிறுவயதில் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகம், அருமனை அரசு நூலகம் ஆகியவை நான் அதிகம் பயன்படுத்திய நூலகங்களாக இருந்தன. அதன்பின்னர் திருவட்டாறு ஸ்ரீ சித்ரா நூலகம். அங்குதான் மலையாள நாவல்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. பள்ளிநாட்களிலேயே எழுத ஆரம்பித்தேன். முதல்கதை ரத்னபாலா என்ற சிறுவர் இதழில் வெளிவந்ததாக நினைவு. இக்காலகட்டத்தில் குமுதம் விகடன் கல்கி இதழ்களில் பலபெயர்களில் கதைகள் வெளிவந்தன. ‘பாரிவள்ளல்’ என்ற குமுதம் உதவியாசிரியர் எனக்கு ஊக்கமூட்டி கடிதங்கள் எழுதினார்.

புகுமுக வகுப்பு மார்த்தாண்டம் [இப்போது நேசமணி நினைவு] கிறித்தவக் கல்லூரியில். வணிகவியல் துறை. 1979ல். ஆர்தர் ஜெ ஹாரீஸ் முதல்வராக இருந்தார். ஐசக் அருமை ராசன் தமிழ்த்துறையில் இருந்தார். இருவரும் அக்கால ஆதர்சங்கள். 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்தேன். அப்போது ஆர்தர் டேவிஸ் முதல்வராக இருந்த காலம். டாக்டர் மனோகரன் வணிகவியல் துறைத்தலைவர். 1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.

என் உயிர் நண்பனாக இருந்த ராதாகிருஷ்ணனின் தற்கொலை என்னை அமைதியிழக்கச் செய்தது. இக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மீக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது. ஆகவே துறவியாக வேண்டுமென்ற கனவு உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்திருக்கிறேன். திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறேன். பல சில்லறைவேலைகள் செய்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் தொடர்பும் இக்காலகட்டத்தில் அவ்வப்போது இருந்தது.

1984ல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தேன். இடதுசாரி இயக்கங்களில் ஆர்வமும் பங்களிப்பும் ஏற்பட்ட காலம். அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் பெற்றோரின் தற்கொலையால் நிம்மதியிழந்து தீவிரமாக அலைச்சலுக்கு ஆளானேன்.

1985ல் சுந்தர ராமசாமி அறிமுகமானார். என்னை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். எழுதலாம் என்று சொல்லி ஊக்கமூட்டினார். எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே அனுப்பபட்டன. ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன்.’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த ‘கொல்லிப்பாவை’ இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் ‘நதி’ அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் ‘படுகை’ ‘போதி’ முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியோர் இக்கதைகளைப்பறி குறிப்பிட்டிருந்தார்கள்

1987ல் காஸர்கோடு வந்து என்னைச் சந்தித்து என்னுடன் தங்கியிருந்த கோணங்கி தமிழில் முதன்மையான செவ்வியல் தன்மை கொண்ட படைப்பாளியாக நான் வருவேன் என என்னிடம் சொன்னது அப்போது வெறும் மனக்குழப்பங்களுடன் மட்டுமே இருந்த எனக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. இக்காலகட்டத்தில் கோவை ‘ஞானி’யுடன் தொடர்பு ஏற்பட்டது. இலக்கியத்தின் சமூகப்பொறுப்பு பற்றிய பிரக்ஞையை அவரிடமிருந்தே பெற்றேன்.

1987ல்தான் ஆற்றூர் ரவிவர்மாவும் அறிமுகமானார். சுந்தர ராமசாமியின் இல்லத்தில். அது நீண்ட நட்பாக மாறி தொடர்கிறது. சுந்தர ராமசாமி, ஆற்றூர் இருவரும் வழிகாட்டிகளாகவும் நலம்விரும்பிகளாகவும் இருந்தார்கள். 1988 ல் குற்றாலம் இலக்கியப் பட்டறையில் யுவன் சந்திரசேகர் அறிமுகமானான். ஒரு நெடுங்கால நட்பாக அது அக்கனமே உருவாகியது. 1993ல்தான் நித்ய சைதன்ய யதியுடன் உறவு ஏற்பட்டது. அது 1997ல் அவர் மறைவதுவரை தீவிரமாக நீடித்தது.

1988ல் எழுதிய ரப்பர் நாவலை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பினேன். அதற்கு விருது கிடைத்தது. தாகம் [தமிழ் புத்தகாலயம்] அதை வெளியிட்டது. அகிலன் கண்ணன் அதன் பதிப்பாசிரியர். அந்த வெளியீட்டு விழாவில் தமிழ் நாவல்களின் வடிவம் [தமிழ் நாவல்கள் தொடர்கதைகள் அல்லது குறுநாவல்களாக உள்ளன. நாவல்களுக்கு சிக்கலான ஊடுபிரதித்தன்மையும் தரிசன தளமும் தேவை] பற்றிய என் பேச்சு பல வருடம் நீண்ட விவாதங்களை உருவாக்கியது. அதன் நீட்சியாகவே 1992ல் நாவல் என்ற நூலை எழுதினேன்.

1988 நவம்பரில் பணி நிரந்தரம். 1989ல் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊரில் தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தேன். 1990 வரை பாலக்கோடு. அதன் பின்னர் தருமபுரி தொலைபேசி நிலையம். 1997ல் நாகர்கோயிலுக்கு மாற்றலாகி வந்தேன். 1998 முதல் தக்கலை தொலைபேசி நிலைய ஊழியர். அலுவலக உதவியாளர் பணி. 2000 வரை பத்மநாப புரத்தில் குடியிருந்தேன். 2000த்தில் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் சொந்த வீடு கட்டி குடிவந்தேன்.

1990ல் அருண்மொழி நங்கையை வாசகியாக அறிமுகம் செய்துகொண்டேன். அவள் அப்போது மதுரை வேளாண்மைக் கல்லூரியில் வேளாண்மை இளங்கலை படித்துக் கொண்டிருந்தாள். காதலித்து 1991 ஆகஸ்ட் எட்டாம் தேதி மணம் புரிந்துகொண்டேன். அருண்மொழி நங்கையின் அப்பா பெயர் ஆர்.சற்குணம் பிள்ளை. புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை வழியில் உள்ள திருவோணம் ஊரைச் சேர்ந்தவர். அவரது தந்தைபெயர் எஸ்.ராமச்சந்திரம்பிள்ளை. ராமச்சந்திரம்பிள்ளை ஆசிரியராக இருந்தவர், நல்லாசிரியர் விருது பெற்றவர். அருண்மொழி நங்கையின் அப்பாவும் ஆசிரியர். முதுகலைப்பட்டம் பெற்றவர். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். திராவிட இயக்கத்திலும் ஜெயகாந்தன் எழுத்துக்களிலும் ஒரேசமயம் ஈடுபாடு கொண்டவர். என் ‘சங்க சித்திரங்கள்’ நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்

அருண்மொழிநங்கையின் அம்மா பெயர் சரோஜா. அவரது சொந்த ஊர் திருவாரூர் அருகே புள்ளமங்கலம். அருண்மொழியின் தாய்வழித்தாதா கார்த்திகேயம் பிள்ளை. பாட்டி, லட்சுமி அம்மாள். அருண்மொழியின் அம்மா ஆரம்பபள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்றார். இப்போது திருவாரூரில் வசிக்கிறார்கள். அருண்மொழி நங்கைக்கு ஒரு சகோதரர், லெனின் கண்ணன்.

என் உடன்பிறந்தார் இருவர். அண்ணா பி.பாலசங்கர் என்னை விட ஒருவயது மூத்தவர். நேசமணி போக்குவரத்துக் கழகம் கன்யாகுமரியில் பணியாற்றுகிறார். திருவட்டாறில் சொந்த வீட்டில் குடியிருந்தவர் இப்போது நாகர்கோயிலில் இருக்கிறார். அவருக்கு இரு குழந்தைகள். 15 வயதான சரத் மற்றும் பத்துவயதான சரண்யா

என் தங்கை பி.விஜயலட்சுமி என்னைவிட இருவயது இளையவள். அவள் கணவர் எஸ்.சுகுமாரன் நாயர் திருவனந்தபுரம் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இரு குழந்தைகள். 20 வயதான சுஜிதா 18 வயதான கண்ணன். எனக்கு இரு பிள்ளைகள். 15 வயதான ஜெ. அஜிதன். 11 வயதான ஜெ. சைதன்யா.

1998 முதல் 2004 வரை ‘சொல் புதிது’ என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறேன். முதலில் சூத்ரதாரி [எம்.கோபால கிருஷ்ணன்] ஆசிரியராக இருந்தார். பின்னர் சரவணன் 1978 ஆசிரியராக இருந்தார். இறுதி இதழ்களில் நண்பர் சதக்கத்துல்லா ஹஸனீ ஆசிரியராக இருந்தார்.

1994 முதல் தொடர்ச்சியாக ஊட்டி நாராயண குருகுலத்தில் இலக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறேன். குற்றாலம் ஒகேனேக்கல் ஆகிய இடங்களிலும் ஊட்டியிலுமாக நிகழ்ந்த தமிழ்-மலையாள இலக்கிய சந்திப்புகள் விரிவான இலக்கிய உரையாடல்களுக்கு அடித்தளமிட்டன.

எப்போதும் இலக்கியத்துக்கு வெளியே நட்பும் தொடர்புகளும் உண்டு. பேராசிரியர் அ.கா.பெருமாள், எம்.வேத சகாயகுமார், தெ.வெ.ஜெகதீசன் போன்றவர்கள் அடிக்கடி சந்திக்கும் தமிழறிஞர்கள். வரலாற்றாய்விலும் பழந்தமிழாய்விலும் தொடர்ச்சியான ஆர்வம் உண்டு.

2009 இல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்ற அமைப்பு வாசகர்களால் உருவாக்கபப்ட்டது. இலக்கியக்கூட்டங்கள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது, வருடம்தோறும் இலக்கியவிருது வழங்குவது ஆகியவை இதன் செயல்பாடுகள். கெ அரங்கசாமி பொறுப்பேற்று நடத்துகிறார்

2006 ம் ஆண்டில் எழுதப்பட்டது