முதற்கனல் - 43

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்

[ 1 ]

“சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார் அக்னிவேசர். கங்கையின் கரையில் அரசமரத்தடியில் அமர்ந்து அவர் பாடம்சொல்லிக்கொண்டிருக்க எதிரே மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இடது பக்கம் மாணவர்களுடன் சேராமல் தனியாக சிகண்டி அமர்ந்திருந்தான். மாணவர்களின் விழிகள் ஆசிரியரைநோக்கி விரிந்திருந்தன. மெல்லிய அகக்குரல்போல அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

“சினத்தை வெல்லவே அனைத்துப்போர்க்கலைகளும் கற்றுக்கொடுக்கின்றன. சினம் என்பது அகத்தின் கொந்தளிப்பு. அகத்தின் கண்முன் தோற்றமே புறம். ஆகவே புறத்தை வெல்லுதல் அகத்தை வெல்லுதலேயாகும். புறத்தை வெல்ல புறத்தில் உள்ள ஏதேனும் ஒன்றைப் பற்றுக. அதில் புறவுலகம் அனைத்தையும் கொண்டுவந்து ஏற்றுக. கைக்குச் சிக்கும் ஒன்றில் அனைத்தையும் காண்பவன் மெல்ல அதுவே உலகமென்றாகிறான். அது அவன் கையில் நிற்கையில் மொத்தப்பருப்பிரபஞ்சமும் அவன் கையில் நிற்கிறது. அது வில்லாகலாம் வாளாகலாம். உளியாகலாம் முரசுக்கோலாகலாம்…”

“செயல்மூலம் தன்னை வென்றவன் யோகி. அவன் உலகையும் வெல்வான். யோகியின் கையில் இருப்பது எதுவோ அதுவே இறுதியான ஆயுதம். அதுவே அவன் மந்திரம், அதை ஆள்வதே அவன் சாதகம். சொல் மூலம் அடையப்பெறும் எதையும் வில்மூலமும் அடையலாமென்றுணர்க. பரசுராமனும் பீஷ்மரும் வில்யோகிகள். இந்தத்தருணத்தில் அவர்களை வணங்குவோம்” கூடிநின்ற அனைவரும் ‘ஆம்! ஆம்! ஆம்!’ என்று சொல்லி குருவந்தன மந்திரம் சொன்னார்கள். சிகண்டியும் சொல்வதை அக்னிவேசர் கவனித்தார்.

“புறத்தை கட்டுப்படுத்தியவன் அதன் அகப்பிம்பமான அகத்தையும் கட்டுப்படுத்தியவனாவான். இருபுடை வல்லமைகொண்ட அவனையே ஸவ்யசாச்சி என்று தனுர்வேதம் போற்றுகிறது” என்றார் அக்னிவேசர். “ஒருகையால் உள்ளத்தையும் மறுகையால் உடலையும் கையாள்பவன் அவன். ஒருமுனையில் அம்பும் மறுமுனையில் இலக்கும் கொண்டவன். அவன் ஒருமுனையில் பிரபஞ்சமும் மறுமுனையில் பிரம்மமும் நிற்கக்காண்பான்.”

அக்னிவேசர் எழுந்து தன் மாணவர்களுடன் காட்டுக்குள் சென்றார். அங்கே பாறை ஒன்றின் நடுவே சிறிய நீலநிறமான சுனை ஒன்று மான்விழி போலக் கிடந்தது. அதனருகே மரங்கள் ஏதுமில்லாததனால் அது அசைவற்ற நீலம் மட்டுமேயாக இருந்தது. அக்னிவேசர் அதனருகே சென்றார். “உங்கள் விற்களையும் அம்புகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்!” என ஆணையிட்டார். அந்தச் சுனையைச்சுற்றி அவர்கள் நின்றுகொண்டார்கள். அக்னிவேசர் “இளைஞர்களே, எவன் ஆயுதத்தை கையில் எடுக்கிறானோ அவன் அக்கணமே தன் காமத்தையும் குரோதத்தையும் ஆசையையும் ஏந்திவிட்டான். இப்போது உங்கள் கையிலிருப்பது நீங்கள் யாரோ அதுதான். சிந்தனைகளாலும் பாவனைகளாலும் மறைக்கப்படாத உங்கள் ஆன்மாதான் உங்கள் வில். அந்த வில்லால் இந்த சுனையைத் தொடுங்கள்!”

முதல் சீடன் சுனையைத் தொட்டதும் அதிரும் பறையருகே வைக்கப்பட்ட யானத்து நீர்போல அதன் நீர்ப்பரப்பு அதிர்ந்தது. ’அஸ்வசேனா, உன்னுள் நிறைந்திருக்கும் அலைகளை உணர்ந்தாயல்லவா?” என்றார் அக்னிவேசர். “உன் ஒவ்வொரு அம்பின்மீதும் வந்து மோதி அவற்றை குறிதவறச்செய்வது இந்த அலைகளே.” அவர்கள் ஒவ்வொருவரும் தீண்டியபோது தடாகம் அதிர்ந்து அலைகிளப்பியது.

யக்ஞசேனன் தொட்டபோது வந்த அலைகளை நோக்கியபடி அக்னிவேசர் சொன்னார் “அவர்களுக்குள் இருப்பது ஆசை. உன்னுள் இருப்பது அச்சம். யாரை அஞ்சுகிறாய்?” யக்ஞசேனன் கண்களைத் தூக்கி “நீங்களறியாதது அல்ல ஆசிரியரே, என் தந்தை என்னையே நம்பியிருக்கிறார்” என்றான். அக்னிவேசர் புன்னகைத்து “பொறுப்புகள் அச்சமாகக் கனிகின்றன. அச்சம் வஞ்சகமாகிறது. வஞ்சகம் அனைத்து ஞானத்தையும் விஷமாக்கிவிடுகிறது” என்றார்.

துரோணரை அழைத்ததும் அவர் புன்னகை விரிந்த முகத்துடன் வந்து குனிந்து தன் வில்லால் அந்தச்சுனையைத் தொட்டார். அது அசைவற்று ஆடிப்பரப்பு போலவே இருந்தது. வியப்பொலியுடன் அனைவரும் எட்டி அதைப்பார்த்தனர். அக்னிவேசர் முகம் மலர்ந்து “நன்று” என்றார். துரோணர் வில்லை எடுத்துக்கொண்டார். “உன் அகம் சலனமற்றிருக்கிறது. இவ்வித்தையால் நீ வெல்லவேண்டியதென வித்தை மட்டுமே உள்ளது” என்றார் அக்னிவேசர். “அந்த மரத்திலிருக்கும் காயை வீழ்த்து” என்று சுட்டிக்காட்டினார்.

துரோணர் வில்லை எடுத்து நிறுத்தி நாணை இழுத்தபோது அவரது பின்பக்கம் சுனை அதிரத்தொடங்கியது. அரைக்கணத்தில் அதை திரும்பிப்பார்த்தபின் துரோணர் அம்பை விட்டார். அந்தக்காயுடன் மரக்கிளை கீழே விழுந்தது. வில் தாழ்த்தி அவர் திரும்பி சுனையைப்பார்த்தார். பெருமூச்சுடன் அக்னிவேசரைப் பார்த்தார். “புரிகிறதல்லவா?” என்றார் அவர். துரோணர் தலைகுனிந்தார். “உன் ஆசை உன் வித்தைமேல் இருக்கிறது. மண்ணில் பிறந்த மாபெரும் வில்லாளிகளில் ஒருவனாக ஆகவேண்டுமென்ற கனவுடன் இருக்கிறாய். அக்கனவு உன்னுள் பதற்றத்தை நிறைக்கிறது. நீ நாணை இழுக்கையில் இங்குள்ள அத்தனை மாவீரர்களையும் போட்டியாளர்களாக நினைத்துக்கொள்கிறாய். உன்னுள் அலை எழுகிறது.”

அக்னிவேசர் சொன்னார் “துரோணா, வித்தையின் பொருட்டு மட்டுமான வித்தையே ஞானமாகக் கனியும். ஞானத்தை வெல்வதற்கான ஆசையே கூட வித்தைக்கு தடையே. வித்தையின் இன்பம், அதன் முழுமைக்கான தேடல், வித்தையாக நாமே ஆவதன் எளிமை மூன்றுமே வித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள். வேறெதுவும் கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது.” துரோணர் வணங்கினார். “நீ வெல்ல வேண்டிய எதிரி அதுவே. அதற்கென்றே வில்லை ஆள்வாயாக!”

கடைசியாக அக்னிவேசர் சிகண்டியை நோக்கித் திரும்பினார். வருக என மெல்லத்தலையசைத்தார். அவன் கனத்த காலடிகளுடன் வந்து நின்றான். அவர் சுனையை நோக்கி கைகாட்டியதும் வில்நுனியால் தடாகத்தை தொடப்போனான். தீக்கோல் படுவதற்கு முன்னரே சருமம் கூசிக்கொள்வதுபோல நீர்ப்பரப்பு அதிரத் தொடங்கியது. வில் அதைத்தொட்டதும் உள்ளிருந்து ஊற்று குமிழியிடுவதுபோல சுனை கொப்பளிக்க ஆரம்பித்தது. சிகண்டி வில்லை எடுத்துக்கொண்டான்.

“உன்னுடைய பணி என்ன தெரியுமா?” என்றார் அக்னிவேசர். அருகே இருந்த பெரும் பாறை ஒன்றைச் சுட்டி “அந்தப்பாறையைத் தூளாக்கி நெற்றியில் விபூதியாக அணிந்துகொள் என்று சொல்வதைப்போல.” சிகண்டி அசைவில்லாத விழிகளுடன் நின்றான். “உன்னுள் மாபெரும் எதிரி ஒருவர் இருக்கிறார். நீ கற்பவை எல்லாம் அவருக்காகவே. உன்னுள் காமமும் மோகமும் இல்லை, குரோதம் கடலென நிறைந்திருக்கிறது. அந்தக் குரோதத்தை நீ வெல்லாமல் உன்னால் மாபெரும் வில்லாளியாக முடியாது. மாபெரும் வில்லாளியாக ஆகாமல் உன்னால் அந்த எதிரியை கொல்லவும் முடியாது.”

சிகண்டி ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய மதம்பரவிய பன்றிக்கண்களில் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அக்னிவேசர் பிறரிடம் “நீங்கள் செல்லலாம்” என்றார். அவர்கள் வணங்கி விடைபெற்றதும் சிகண்டியின் பெரிய தோளில் தன் மெலிந்த கைகளை வைத்து “வா” என்றார். இருவரும் காட்டுக்குள் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். காற்று காட்டுக்குள் மழையொலியுடன் சென்றுகொண்டிருந்தது. அக்னிவேசர் சிகண்டியின் தோள்களை அழுந்தப்பற்றியிருந்தார்.

காடு திறந்து ஒரு மலைச்சரிவின் முனை வந்தது. வானம் வெகுதொலைவுக்குக் கீழிறங்கியது. கீழே பாறைகள் நடுவே கங்கையின் ஓடை ஒன்று சிறிய வெண்ணிறச் சால்வைபோல கிடந்தது. அதனருகே நான்கு யானைகள் நின்றிருந்தன. அவற்றில் ஒன்று அவர்களின் வாசனையைப் பெற்றது. அது எழுப்பிய அதிர்வொலி மேலே கேட்டது. காட்டுக்குள் அதன் கூட்டத்தில் இன்னொரு யானை எதிர்க்குரல் எழுப்பியது.

“பீஷ்மரை நீ வெல்லவேண்டும் என்றால் நீ உன்னை வென்றாகவேண்டும் குழந்தை” என்றார் அக்னிவேசர். “நீ அவரை அஞ்சவில்லை. ஏனென்றால் நீ இறப்பையும் பழியையும் அஞ்சுபவனல்ல. ஆனால்…” அவன் கண்களை நோக்கி அக்னிவேசர் கேட்டார் “நீ நேற்று என்ன கனவு கண்டாய்?”

சிகண்டி கண்களைத் திருப்பியபடி “ஒரு சிறிய கிராமம். நீரோடைகளால் சூழப்பட்டது. மென்மழை அங்கு பெய்துகொண்டிருந்தது. நான் ஒரு சிறிய கூட்டுக்குள் இருப்பதாக உணர்ந்தேன். அங்கிருந்தபோது ஒருவனைப் பார்த்தேன். அவன் என் எதிரி என்று தெரிந்தது…”

“அவன் முகம் தெரிந்ததா?” என்றார் அக்னிவேசர். “இல்லை. நான் பார்த்தது அவனுடைய மார்பை மட்டுமே. அப்போதுதான் நான் ஒரு கரிய பன்றியாக இருப்பதை உணர்ந்தேன். உறுமியபடி பாய்ந்து சென்றேன். மலையிலிருந்து இறங்கும் கரும்பாறைபோல. அவன் மார்பை முட்டி அந்தவேகத்திலேயே தோலையும் தசையையும் கிழித்து எலும்புகளை உடைத்து சிதைந்த மாமிசத்தில் இருந்து அவன் இதயத்தை கவ்வி பிய்த்து எடுத்தேன். செந்தாமரை மொட்டு போலிருந்தது. மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. வெம்மையான குருதி அதிலிருந்து வழிந்தது. அதை என் வாயிலிட்டு மென்று உண்டேன். அப்போது ஒரு மூச்சொலி கேட்டுத் திரும்பிப்பார்த்தேன். சங்குவளையல்களும் கிளிஞ்சல்மாலையும் அணிந்த கரிய பெண் ஒருத்தி என்னை நோக்கிக் கொண்டு நின்றிருந்தாள். அக்கணமே நான் விழித்துக்கொண்டேன்.”

“எவ்வளவு வெறி… இந்த வெறி ஒவ்வொரு கணமும் உன் விரல்களில் இருக்கையில் உன் அம்புகள் எப்படி இலக்கை அடையும்?” என்றார் அக்னிவேசர். “இவ்வுலக வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதை அறிந்தவன் சிறந்த ஆட்டத்தை ஆடுகிறான்.” சிகண்டி “நான் என்ன செய்யவேண்டும் ஆசிரியரே?” என்றான். “ஒரே வழிதான் உள்ளது. நீ இன்னும் பீஷ்மரை அறியவில்லை. ஒருவன் நன்கறிந்திருக்கவேண்டியது தன் எதிரியைப்பற்றித்தான். எதிரி நம்முடைய ஆடிப்பிம்பம் போல.”

சிகண்டி கவனித்து அமைதியாக நின்றான். “நீ கிளம்பிச்செல். பீஷ்மரை முழுமையாகத் தெரிந்துகொள். அவரது நண்பர்களிடமும் எதிரிகளிடமும் பேசு. சூதர்களிடமும் நிமித்திகர்களிடமும் கேட்டுத்தெரிந்துகொள். அவரது உள்ளும் புறமும் உனக்குத் தெரியவேண்டும். அவரது அகத்தில் ஓடும் எண்ணங்கள் அப்படியே உன் அகத்திலும் ஓடவேண்டும். களத்தில் அவருக்கு முன் நீ நிற்கும்போது அவரது ஆடிப்பாவை போலவே தெரியவேண்டும். இளைஞனே, தன் ஆடிப்பாவையிடம் மட்டுமே மனிதர்கள் தோற்கிறார்கள்.”

VENMURASU_EPI_43

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“ஆம், அதைச்செய்கிறேன்” என்றான் சிகண்டி. “அவ்வாறு தெரிந்துகொள்ளும்போது உன் சினம் ஆறும். சினம் ஆறியபின் நீ அவரைக் கொல்லவேண்டாமென்று முடிவெடுக்கக் கூடும். அவரை உன் தந்தையாகக்கூட ஏற்கக்கூடும்.” சிகண்டியின் கண்களில் மிகச்சிறிதாக ஓர் அதிர்வு வந்துசென்றது. “நீ அவர் மகன்” என்றார் அக்னிவேசர். சிகண்டி திகைத்து நோக்கினான். அக்னிவேசர் தனக்குள் ஆழ்ந்தவராகச் சொன்னார் “கருவுறுதல் என்றால் என்ன? காமத்தால்தான் கருவுறவேண்டுமா, கடும் சினத்தால் கருவுறலாகாதா? உடலால்தான் கருவுறவேண்டுமா, உள்ளத்தால் கருவுறலாகாதா?”

சிகண்டி நின்றுவிட்டான். சற்று முன்னே சென்ற அக்னிவேசர் அவன் தன்னைத் தொடரவில்லை என்பதை உணர்ந்து நின்று திரும்பிப்பார்த்தார். “நீ உன் அன்னையின் அடங்காப்பெரும்சினம் உடலெனப்பிறந்தவன். அவள் மைந்தன். அம்மைந்தனைப் பிறப்பித்தவர் பீஷ்மர் என்பதனால் அவர் உன் தந்தையேதான்.” புன்னகையுடன் “தந்தையைக் கொல்ல விழையும் கணம் ஒன்று எல்லா மைந்தர் நெஞ்சுக்குள்ளும் ஓடிச்செல்லும். நீ அக்கணமே காலமாக ஆகிய மைந்தன், அவ்வளவுதான்” என்றார்.

“அவரை முழுதறியும்போது நீ அவர் பாதங்களைத் தொட்டு ஆசிபெறக்கூடும்.” சிகண்டியிடமிருந்து பன்றியின் உறுமல் வெளிப்பட்டது. அக்னிவேசர் புன்னகையுடன் “தந்தையர் அனைவருக்கும் இருமுகம். ஒன்று கொலை இன்னொன்று ஆசி. நீ கொலைமுகத்தை மட்டும் கண்டிருக்கிறாய். பெரும்பாலான அன்னையர் அதையே மைந்தருக்கு அளிக்கிறார்கள். தானும் தந்தையாக ஆகி தந்தையை இழந்தபின்பு மட்டுமே மைந்தர்கள் தந்தையின் ஆசியை உணர்கிறார்கள்” என்றார்.

சிகண்டியின் மதவிழிகளை நோக்கி மேலும் விரிந்த சிரிப்புடன் “மைந்தரிலும் இருமுகங்கள் உண்டு. தந்தையைக் கொல்லவும் தந்தையாக வாழவும் வருபவன் மைந்தன். தன்னைக் கொன்று தன் காட்டை கைப்பற்ற வந்தது மகவு என்று அறியாத வேங்கை இல்லை” என்றார் அக்னிவேசர். “சிகண்டியே, தந்தை மைந்தன் விளையாட்டுதான் இப்புவியில் நிகழும் உயிர்நடனங்களிலேயே அழகியது, மகத்தானது. அதைப்புரிந்துகொள்பவன் அனைத்தையும் புரிந்துகொள்கிறான். ஏனென்றால் பிரம்மமும் பிரபஞ்சமும் ஆடும் லீலையும் அதைப்போன்றதே. பரமாத்மனும் ஜீவாத்மனும் கொண்டுள்ள உறவும் அதற்கு நிகரானதே.”

அக்னிவேசர் நடந்தபோது சிகண்டி பின்னால் நடந்தான். “கேள் இளைஞனே, முன்பு கௌதம குலத்தில் உதித்த ஆருணி என்னும் முனிவர் இருந்தார். கடும்தவத்தால் அவர் ஞானமடைந்து உத்தாலகர் என்று பெயர் பெற்றார். அவருடைய மைந்தன் ஸ்வேதகேது. தந்தையிடமிருந்து நூல்களைக் கற்றபின் ஏழு குருகுலங்களுக்குச் சென்று வேதவேதாங்கங்களையும் ஆறுதரிசனங்களையும் ஆறுமதங்களையும் மூன்று தத்துவங்களையும் கற்றபின் திரும்பிவந்தான். தந்தையைக் கண்டு தந்தையே உங்களுக்கு மெய்ஞானத்தில் எந்த ஐயமிருப்பினும் என்னிடம் கேட்டு தெளிவுகொள்ளுங்கள் என்று சொன்னான்.”

“மைந்தனின் ஆணவத்தைக் கண்டு உத்தாலகர் வருந்தினார். அவன் ஆணவத்தை அடக்கினாலன்றி அவனால் ஞானத்தைக் கடந்து விவேகத்தை அடையமுடியாதென்பதை உணர்ந்து பிரம்மஞானத்தைக் கொண்டு மட்டுமே விளக்கிவிடக்கூடிய வினாவைக் கேட்டார். எவற்றை அறியமுடியுமோ அவற்றையெல்லாம் அறிந்துவிட்டாய். எதை அறியமுடியாதோ அதை அறிந்துவிட்டாயா? ஸ்வேதகேது பதிலின்றி திகைத்துவிட்டான். தந்தையின் காலடியைப் பணிந்து தன் ஆணவத்தைப் பொறுத்தருள வேண்டினான். அவர் அந்த மெய்ஞானத்தை ஒரு அகச்சொற்றொடராக அவனுக்கு அளித்தார்.” அக்னிவேசர் மிகமெல்ல அந்த மந்திரத்தை சொன்னார் “அது நீயே.”

அக்னிவேசர் புன்னகையுடன் “சிகண்டியே, அந்தப் பதிலை ஆருணியாகிய உத்தாலகர் தன் மைந்தன் ஸ்வேதகேதுவை மடியில் வைத்து முன்பொருமுறை சொன்னதுண்டு. அது நீயே என. அன்று மைந்தன் என்ன கேட்டிருப்பான்? அவன் சுட்டிக்காட்டி வினவிய முதல்வினா தந்தையை நோக்கி நீ யாரென்பதாகத்தானே இருக்கமுடியும்? அதற்கான பதில் ‘மைந்தா நானே நீ’ என்பதன்றி வேறெப்படி இருக்கமுடியும்?”

சிகண்டி சிறிய கண்களால் பார்த்து நின்றான். அக்னிவேசர் சொன்னார் “ஆனால் தந்தையர் அதை உணர்வதற்கு ஞானம் கனியும் ஒரு புள்ளி தேவையாகிறது. நான் நான் என்றெழுந்த மனமும் எனது எனது என விரிந்த கைகளும் குறுகிச்சுருங்கும் ஒரு பருவம்…குருதிகுளிர்ந்தபின் தன் வற்றிய கைகளால் மைந்தனைப்பற்றும்போது அந்த மாபெரும் திரை அறுந்துவிழக் காண்கிறான் மனிதன். மகனே நானே நீ என்கிறான். அனேகமாக அவன் அதைச்சொல்லி முடிப்பதற்குள் எமன் அவன் உயிரை கைப்பற்றியிருப்பான்.”

மீண்டும் கங்கையின் விளிம்பை அடைந்ததும் அக்னிவேசர் சொன்னார் “செல். உன் தந்தையை அறி. அதன்பின் உன் இலக்கை முழுமைசெய்!” அவன் தலையில் கைவைத்து “சாந்தோக்கிய உபநிடதத்தின் அழியாத அறிவின் ஒளியே உனக்கும் அகச்சொற்றொடராகட்டும். நீ வாழ்நாளெல்லாம் உன் அகத்தில் ஏற்றி தவம் செய்யவேண்டிய ஆப்தமந்திரம் அது.” மெல்ல உறுதியாக அக்னிவேசர் உபநிடத மந்திரத்தைச் சொன்னார் “அது நீயே!

சிகண்டி அதை கைகூப்பி ஏற்றுக்கொண்டான். திரும்பிப்பார்க்காமல் அக்னிவேசர் காட்டுக்குள் சென்று மறைந்தார். சிகண்டி கங்கையை நோக்கியபடி நெடுநேரம் நின்றுகொண்டிருந்தான். கூந்தலிழைகள் மட்டும் பறக்க, ஒரு தசைகூட அசையாமல் பகலும் இரவும் நிற்கும் வல்லமை அவனுக்கிருந்தது. அவனுள் அகம் ஆயிரம்கோடிக் காதம் விரைவதன் விளைவு அது. அவன் மிரண்ட காட்டுக் குதிரைமேல் ஏறமுயல்பவன் போல அந்தச் சொல்லில் ஏற முயன்றான் “அது நீயே!”

இருள் படர்ந்து விழிக்காடு மறைந்து செவிக்காடாகியது. “தத்வமசி” என்ற சொல் அவனைச் சூழ்ந்திருந்தது. இருளாக, மின்மினிகளாக, விழியொளிகளாக, காற்றாக, இலையோசையாக, விண்மீன்களாக, பால்வழியாக, முடிவின்மையாக.

மறுநாள் காலைவரை அங்கேயே அவன் நின்றிருந்தான். கங்கைநோக்கிச் சென்றுகொண்டிருந்த காற்று கங்கையில் இருந்து இனிய நீராவி வாசனையுடன் எழத்தொடங்கியது. அவனைத்தாண்டி எட்டு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் சென்றது. அதன் தலைவி அவனை பகலில் முகர்ந்ததை அடையாளம் கண்டுகொண்டு தன் தோழிகளுக்குச் சொன்னது. நடுவே சென்ற சிறிய குட்டி ஆர்வத்துடன் தன் சிறிய துதிக்கையைத் தூக்கியபடி சிகண்டியை நோக்கி வர அதன் அன்னை அதன் பின்பக்கம் துதிக்கையால் தட்டி முன்னால் செலுத்தியது.

புதருக்குள் இருந்த பன்றிக்கூட்டம் ஒன்று அவனைநோக்கி வந்தது. அவற்றின் மணிக்கண்கள் இருளில் ஒளிவிட்டன. மூச்சொலிகளும் வாயின் ஆவிவாசனையும் காற்றில் வந்தன. அவை சென்றபின் ஒரு முதுபன்றி மட்டும் அவனை நோக்கி வந்து அவன் முன் நின்றது. இருட்டில் கரைந்து நின்ற அது தன் சிறிய கண்களால் அவனை நோக்கியது. முன்னங்காலால் தரையை இருமுறை சுரண்டிவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டு அவனைக் கவனித்தது. விடியலின் முதல் வெளிச்சம் கீழ்வானில் தெரியத் தொடங்கியதும் எழுந்து குறியவாலைச் சுழற்றியபடி புதருக்குள் மறைந்தது.

சிகண்டி காலையில் கங்கையில் நீராடியபின் தன் குடிலை அடைந்தான். புலித்தோலில் தன் ஆடைகளை சுருட்டிக் கட்டிக்கொண்டு வில்லையும் அம்புகளையும் தோளில் அணிந்துகொண்டு குனிந்த தலையுடன் இறங்கி நடந்தான். அப்பால் அதிகாலை வகுப்புக்காக அக்னிவேசரின் குடிலுக்கு முன்னால் மாணவர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அவனைப் பார்த்தனர். எவரும் அவனை நோக்கி வரவில்லை. அவர்கள் அவனை நோக்கிய பார்வை மனிதனை நோக்கியதாக எப்போதுமே இருந்ததில்லை. மிருகமொன்றைப் பார்க்கும் பார்வை பின்பு தீயதேவதை ஒன்றைப் பார்ப்பதாக மாறியிருந்தது. சிகண்டி அவரது குடிலை வணங்கிவிட்டு ரதசாலை நோக்கிச் சென்றான்.

மரப்பட்டைக்கதவைத் திறந்து அக்னிவேசர் வெளியே வந்தார். சிகண்டி செல்வதைப் பார்த்து “அவனை அழையுங்கள்” என்றார். அடுத்தகணம் துரோணரின் அம்பு பறந்து வந்து சிகண்டியின் முன் விழுந்து தைத்து ஆடியது. அவன் திரும்பிப்பார்த்ததும் அக்னிவேசர் அவனை நோக்கி வந்தார். அவன் திரும்பி அவரை நோக்கிச் சென்றான். அவர்கள் இருவரும் ஓங்கி நின்றிருந்த வகுள மரத்தடியில் சந்தித்தனர். நரம்பு புடைத்த கைபோல விரல்களால் மண்ணைப்பற்றி மேலே அடர்ந்த இலைக்குவையுடன் நின்ற மரம் காற்றில் சலசலத்தது.

அக்னிவேசர் “நான் நேற்றிரவு துயிலவில்லை” என்றார். “அதிகாலையில்தான் நான் உன்னிடம் ஒன்றை கேட்டிருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது.” சிகண்டி வெறும் பார்வையாக நின்றான். “சொல், நீ கண்ட அந்தக் கனவில் வந்த கிளிஞ்சல்மாலையணிந்த கிராமத்துப்பெண் எப்படி இருந்தாள்?” சிகண்டி பார்வையை விலக்கி சில கணங்கள் நின்றான். அவன் கை நாணை நெருட சிறு ஒலி எழுந்தது. பின்பு “என் அன்னை அம்பாதேவியைப்போல” என்றான்.

“நினைத்தேன்” என்றபின் அக்னிவேசர் “உன் தேடல் முழுமையடையட்டும்!” என்று வாழ்த்திவிட்டு திரும்பிச்சென்றார். சிறிய பறவை காற்றில் தாவிச்செல்வது போலச் சென்ற அவரைப் பார்த்தபின் சிகண்டி திரும்பிநடந்தான்.