நாள்: ஜனவரி 2, 2014

நூல் ஒன்று – முதற்கனல் – 2

பகுதி ஒன்று : வேள்விமுகம்

[ 2 ]

வேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எடுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில் நீர் நிறைத்துவைத்து, நெற்றியில் குலதெய்வங்களின் மஞ்சள் குறியை அணிவித்து ”நீண்ட ஆயுளுடன் இரு. உன் வழிகளெல்லாம் சென்றுசேர்வதாக” என்று வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினாள். அப்போது அவளுடைய குலத்தின் அத்தனை பெண்களும் அவள் வீட்டின் முன் கூடியிருந்தனர். ஆலமரத்தடியில் அவர்களின் குலதெய்வங்களான நாகங்கள் கல்லாலான பத்திகளை விரித்து, கல்லுடல் பின்னி, கல்விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தன.

ஆறு வயதான ஆஸ்திகன் குனிந்து தன் அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு தன் சிறுகால்களை எடுத்து வைத்து பசும்சாணி பூசிய படிகளில் இறங்கி நீலச்செண்பகமலர்கள் பாரித்துக்கிடந்த முற்றத்தைத் தாண்டி நடந்து ஊர்முனையில் மறைந்தபோது விம்மும் நெஞ்சுடன் அவள் பின்னால் ஓடிவந்து ஊர்மன்றின் அரசமரத்தடியில் நின்று கண்ணெட்டும் தூரம் வரை பார்த்திருந்தாள். மண்நிறமான மரவுரியும், கரிய குடுமியும் கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.

(மேலும்…)