நூல் ஏழு – காண்டவம் – 6

அவன் புன்னகை பொன்னிறம்
அவன் சினம் செம்மின்னல்
அவன் காமம் இளஞ்சிவப்பு
அவன் கருணையின் நிறம் பச்சை
பச்சைக்குள் வாழ்கின்றன
அனைத்து நிறங்களும்
தேவர்க்கரசே
அழகிய நாகங்களால்
படமெழுப்பி வணங்கப்படுபவனே
உன்னை வணங்குகிறேன்

அவையீரே அறிக, முட்டைக்குள் இருப்பதுவரை தன்னை நாகமென்றே அறியாத பெருநாகமொன்றிருந்தது. அதையே முதல்நாகமென்பது நாகர்குலக்கதை மரபு. மிகச்சிறிய முட்டை அது. ஈயின்விழியும் எறும்பின் விழியும் தொடமுடியாத அளவுசிறியது. எண்ணமும் அறியமுடியா நுண்மை கொண்டது. இன்மையின் துளியென்றே எஞ்சும் அணிமை. தன்னை சுருளென உணர்ந்த கணமே அது விரியத்தொடங்கி முட்டையை அசைத்தது. அதன் நாவென எழுந்த செந்தழல் வெண்முட்டை ஓட்டை உடைக்க அது சொடுக்கித் தலையெடுத்தது. அதன் மூச்சு சீறி எழுந்தது. அதன் மணிவிழிகள் ஒளிகொண்டன. முச்சுருளென அமைந்த அதன் கரிய உடல் எதிரெதிர் ஒழுக்கென ஓட அதன் உடலின் தண்மையில் நீர்த்துளிகளெழுந்தன. வானவானவானென விரிந்த வானில் அது தானெனும்தானாக பேருருக்கொண்டது. சான்றோரே, அதன் நாவை அனலோன் என்றனர். அதன் மூச்சை காற்று என்றனர். அதன் விழிகளே ஆதித்யர்கள். அதன் உடலின் குளிரலைகளே வருணன். அதன் ஒழுக்கே காலன். அறிக, அதன் விரிந்த பெரும்படத்தில் எழுந்த வஜ்ராயுதமே இந்திரன்.

வெண்முட்டை ஓடை உடைத்து முதலில் எழுந்தவன் அனலோன். எங்கும் முதல்வணக்கம் அவனுக்குரியது. ஆக்குபவன், அழிப்பவன், சமைப்பவன், உண்பவன், தூயன், பொன்னன், ஒளியன்,கனலன். அவனை வழுத்தினர் வேதநூலோர். அவனை துதித்தன உயிர்க்குலங்கள். தங்கள் உடலால் அவனை நடித்தன நாகங்கள். ஐங்குலநாகர்களில் வாசுகியின் மரபு காலனை வணங்கியது. ஐராவதத்தவர் காற்றை வணங்கினர். கௌரவ்யர் வருணனை வணங்கினர். திருதராஷ்டிரர் ஆதித்யர்களை தலைமைகொண்டனர். தட்சர்களுக்கோ இந்திரனே முதல்வனானான். ஐவருக்கும் முதன்மைத் தெய்வமென அனலோன் அவர்கள் இல்லங்களில் சுடராகவும் முற்றங்களில் எரியாகவும் வீற்றிருந்தான். காற்றுடன் அவன் விளையாடினான். காலனுக்கு பணிசெய்தான். வருணனின் மேல் ஏறிவிளையாடினான். ஆதித்யர்களை நோக்கி கைநீட்டினான். ஆனால் இந்திரனுடன் ஓயாப்பெரும்போரில் இருந்தான்.

தன் வஜ்ராயுதத்தால் மலைகளை உருகி எரியச்செய்பவன் இந்திரன். மூண்டெழுந்த தழல்பெருக்கை குளிர்முகிலால் மூடி கரியாக்கினான். அவன் முன் கூரகல் கோட்டுகிர் பறவையின் முன் பட்ட சிறு புழுவென ஆனான் எரியன். மண்ணில் அவியுண்டு உடல்கொண்டதும் மாளாபெருஞ்சினத்துடன் ஆயிரம் பல்லாயிரம் கைகளை விரித்து உறுமியும் சீறியும் வெடித்தும் வான்நோக்கி எழுந்தாடினான். அவன் சினந்தெழும் கரும்புகை அடிமரம் தடித்து கிளைவிரித்து வானைத்தொட்டதுமே அங்கே இந்திரவில் தோன்றியது. இளநகையுடன் முகில்கணங்கள் தோளொடு தோள்தொட்டு வந்து குழுமின. முகில்யானைகள் நடுவே செங்கோடென இந்திரனின் படைக்கலம் மின்னியது. வான்வளைவுகளில் அவன் பெருநகைப்பு எதிரொலித்தது. அவன் குளிரொளியம்புகள் பளிங்குநாணல் பெருங்காடென அனல் மேல் கவிந்து மூடிக்கொண்டன.

நூறு களங்களில் இந்திரனுடன் பொருதித் தோற்று மீண்டவன் கனலோன். முப்புரம் எரித்த முதல்வியின் மும்முனைப் படைக்கலத்திலும் அவள் தலைவனின் நுதலிலும் அமர்ந்து போர்புரிந்தான் என்றாலும் தெய்வங்கள் ஒருபோதும் அனலோன் முழுவெற்றி பெறுவதை ஒப்பவில்லை. ஒருமுறை ஒரு களத்தில் இந்திரனை வென்றெழுந்தால் அதன்பின் காலமெல்லாம் தன்உள்ளம் அமைதிகொள்ளும் என்று எரியன் எண்ணினான். யுகங்கள் மடிந்து மகாயுகங்களாயின. மன்வந்தரங்களாகி மேலும் மடிந்தன. அவன் விழைவு கைகூடவில்லை. ‘நீரால் அணைக்கப்படாத நெருப்பு எழும் தருணம் ஒன்றே, ஆலகாலகண்டனின் அங்கை நெருப்பு எழும் ஊழிப்பெருந்தருணம். அதுவரைக்கும் காத்திரு’ என்றனர் முனிவர். ‘என்று? அது என்று?’ என எழுந்தெழுந்து தவித்தான் அனலோன். ‘என்றோ ஒருநாள். முழுமையின் நாள் அது. பரிமுக எரியெழுந்து புரமழியும் நாள் அது’ என்றது கேளாஒலி.

இந்திரப்பிரஸ்தத்தின் அவையில் சூதரான சம்யோகர் கதை சொல்லி முடிக்க அவர் விறலியான மாதாலி யாழ்மீட்டி அமைந்தாள். விபாகன் தன் யாழில் கைதொட்டு கண் சரித்து சுதி முனகி பின் பாடலாலான்.

அவையீரே, கேளுங்கள். எவரும் வெல்லாத போர்களை மட்டுமே மானுடம் நினைவில் வைத்திருக்கிறது. அப்போர்கள் முடிந்தபின்னர் தெய்வங்கள் களம் நின்று அமலையாடுகின்றன. பேய்கள் உண்டாடுகின்றன. பெரும்போர்கள் வழியாகவே இந்த நதி தன்னை திசைதிருப்பிக்கொள்கிறது. இந்த ஆமை விழிதிறந்து மெல்ல அசைந்து மீண்டும் துயில்கொள்கிறது. போர்களை வாழ்த்துக! போரில் எழுகின்றன தெய்வங்கள். போரில் மறைகின்றன, மீண்டும் பிறந்தெழுகின்றன.

ஐங்குலநாகர்களும் தங்களுள் சினந்தபோது தேவர்கள் போர்முரசொலியை கேட்டனர். தெய்வங்களின் கால்களில் மெல்லிய நடுக்கம் கடந்துசென்றது. போர்நிகழவிருக்கும் நிலத்தில் கூழாங்கற்களின் ஒளியில் விழிதிறந்து அவர்கள் காத்திருந்தனர். மண்ணின் சிறு சுழிகளாக வாய்திறந்து நாதுழாவி குருதிவிடாய் கொண்டனர். சிறுபூச்சிகளின் சிறகுகளில் ஏறி காற்றில் களியாட்டமிட்டனர். ஐராவத,கௌரவ்ய, திருதராஷ்டிர குலங்கள் வாசுகி குலத்து அரசர் நந்தவாசுகியை முதனிறுத்தி போர்வேள்வி ஒன்றை மூட்டின. தங்கள் குலமூத்தாரை கூட்டி மூதன்னையரை வணங்கி முதற்தெய்வங்களை துணைகூட்டி சொல் நாடினர். நீர்ப்பாவையென எழுந்து வந்த மூதன்னையர் ‘அனலவனை துணைகொள்க’ என்று ஆற்றுப்படுத்தினர். ‘நம் நாக்கு அவன் தழல். நம் விழி அவன் கனல். நம் உடல் அவன் நடனம். அவன் நாமே என்றறிக.’

அசிக்னியின் கரையில் அமைந்த தசபிலக்ஷம் என்னும் அடர்காட்டில் மாபெரும் எரிகுளம் அமைத்து அத்தி, ஆல், அரசு, பலா, முள்முருக்கு என ஐவகை விறகு அடுக்கி மீன், ஊன், எள், எனும் மூவகை நெய்படைத்து மலரும் அரிசியும் அவியாக்கியபோது அங்கே பேராவலுடன் ஆயிரம் நாநீட்டி துடித்து கனலவன் எழுந்தான். ‘எந்தையே, எங்கள் எதிரியின் கோட்டைகளை அழி. அவன் படைக்கலங்களை உருக்கு. அவன் ஊர்திகளை சிறகற்றுவிழச்செய். அவன் களஞ்சியங்களை கருக்கு. அவன் விழிகளில் அச்சமாக சென்று நிறை’ என்று வேண்டினர். எரிகுளத்தில் எழுந்தாடிய சுடரோன் மும்முறை தலை வணங்கி அவ்வேண்டுகோளை ஏற்று எரியில் சமித் வெடிக்கும் ஒலியில் ‘ஆம் ஆம் ஆம்’ என்று முழங்கினான்.

தட்சநாகர்கள் எரியை வணங்குவதில்லை. அவர்களின் குகைகளை சிவக்கச்செய்யும் எரி இந்திர வஜ்ரம் நேரடியாக வந்து தொட்டு எழுப்புவது. அதை இந்திர ரேதஸ் என்றனர். இந்திரனின் வீரியத்தை காவல்காக்கும் தந்தையென்றும் சமைத்தளிக்கும் அன்னை என்றும் அடைக்கலமருளும் அரசன் என்றும் அவர்கள் எண்ணினர். நாகசிலையின் உச்சியில் எழுந்த கொடியில் இந்திரனின் வஜ்ராயுதமே சின்னமாக இருந்தது. அவர்கள் இந்திரனுக்கு செம்மணிச்சரம் போல் குருதியை அவியாக்கி எரிகொடை நிகழ்த்தினர். ‘வீரியனே, வைரனே, வெல்பவனே எங்கள் குலத்தை காத்தருள். எங்கள் புரத்தை ஆண்டருள். எங்கள் நெற்றிமேல் உன் கொடியை ஏற்று. எங்கள் விழிகளில் உன் வஜ்ரத்தை ஒளிவிடச்செய்’ என்று அவர்கள் பாடியபோது விண்ணிலெழுந்த இடியோசை ‘ஆம் ஆம் ஆம்’ என்றது.

தட்சகுலத்தின் மேல் நான்குநாகர்குடிகளும் தொடுத்த பெரும்போரை நாகசூதர் சொல் கேட்ட இசைச்சூதர் மட்டுமே அறிவர். மானுட விழிசெல்லா மலையுச்சிகளில் நிகழ்ந்தது அப்போர். ஆயிரமாண்டுகால சினம்கொண்டெழுந்த அனலவன் மலைவெள்ளம் இறங்கிச்சூழ்வது போல தட்சநாகர்கள் உணவுகொள்ளும் காடுகளில் பரவினான். அவர்கள் திறைகொள்ளும் ஊர்களை உண்டான். மீன்கூட்டத்தைச் சூழும் வலையென அவன் செந்தழல் கோட்டை தட்சர்களின் நிலத்தை வளைத்து அணுகி வந்தது. தங்கள் நிலங்களையும் கோட்டைகளையும் காவலரண்களையும் கைவிட்டு பின்வாங்கிய தட்சநாகர்கள் விண்ணமர்ந்த தங்கள் வெண்முகில்நகரில் நுழைந்து அனைத்து வாயில்களையும் மூடிக்கொண்டனர். பறக்கும் கொக்குக்கூட்டத்தின் கால்களென நகருக்குச் செல்லும் வழிகளனைத்தும் மேலே தூக்கப்பட்டு மறைந்தன.

நாற்குலத்து நாகர்களின் படைத்திரள்கள் நச்சுநுனி வாளிகள் செறிந்த விற்களுடன் சூழ்ந்துகொள்ள தட்சநாகர்கள் புதருக்குள் ஒடுங்கும் முயல்களைப்போல முகில்களுக்குள் புகுந்து தங்கள் குகைக்கோட்ட வாயில்களை மூடிக்கொண்டு மைந்தரைத் தழுவி அமர்ந்து உடல்நடுங்கினர். மேலேற முடியாத நாகங்களும் கீழிறங்க மறுக்கும் நாகங்களும் மூன்றுமாதகாலம் துலாவின் இரு தட்டுகளிலும் நின்றாடி போரிட்டன. வான்நகர்மேல் வாழ்ந்த தட்சநாகர்களின் களஞ்சியங்கள் ஒழிந்தபோது அவர்கள் முகில்களை நோக்கி கைநீட்டி இறைஞ்சினர். முகில்களை இதழ்களாக்கி இந்திரன் புன்னகைத்தான். அவர்கள் மேல் தவளைகளை மழையென பெய்யச்செய்தான். அள்ளி அள்ளிச் சேர்த்து அனல்சேர்த்து உண்டு களியாடினர் தட்சர்.

நந்தவாசுகி தலைமைநடத்த நாகர்படைகள் காட்டுவிறகையும் தேன்மெழுகையும் அரக்கையும் ஊன்நெய்யையும் கொண்டுவந்து குவித்து அவியூட்டி அனலவனை வளர்த்தனர். நெய்யும் அரியும் மலரும் ஊனும் தேனும் அவியாக்கி காற்றை வாழ்த்தினர். ஷ்ராவண மாதத்தில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி வாயுதேவன் கீழ்த்திசையிலிருந்து பல்லாயிரம்கோடி பெருஞ்சிறகுகளை அசைத்து மரங்களைப் பதறச்செய்து நீர்நிலைகளை கொந்தளிக்கவைத்து மலைச்சரிவுகளில் முழங்கியபடி எழுந்து வந்தான். அக்காற்றை ஊர்தியாக்கி எழுந்து முன் நெருப்பை படியாக்கி பின்நெருப்பு ஏறிக்கொள்ள, மலைச்சரிவில் ஊர்ந்தேறியது எரி. செந்நிற நாகங்களென மாறி பாறைகளில் தாவிச்சென்று நாகசிலையின் அடிப்பாறைகளை நக்கியது. ‘இதோ இதோ’ என்று நாக்குகள் படபடத்தன.

மேலே தட்சர்கள் உடல்தழுவி விழிநீர் உகுத்து கூவியழுதனர். அக்குரல்கேட்ட இந்திரன் தன் முகிற்படையை ஏவினான். வானம் மூடி இருள்பெருகி குளிர்பரவி காற்று நீர்த்துளிகளாகி பெருமழையென எழுந்தது. அனலோன் சுருங்கி அவிந்து விறகுக்குவைகள் மேல் படிந்தான். சினம் கொண்ட காற்று பாறைகளில் மோத்தி சிதறிச்சீறி குகைகள் தோறும் புகுந்து விம்மியது. மீண்டும் எரிமூட்டி காற்றிலேற்றினர் நாகர். இந்திரன் அவ்வனல் கீற்றுகளை நீர்க்கரங்களை நீட்டி செம்மலர் எனக் கொய்து விண்ணுக்குக் கொண்டு சென்றான்.

பன்னிருமுறை தீயை வென்றது மழை. பன்னிரண்டு முறை நிகர்நிலையில் நின்றபோர் தெய்வங்களுக்குரியது என்பது நெறி. தேவர்களும் விண்வாழும் முனிவர்களும் இறங்கி வந்தனர். நந்தவாசுகி காலையில் குலதெய்வங்களை வணங்கி வெளியே வந்தபோது மெலிந்து உடலொட்டிய ஒரு கிழநாயாக அவர் முன் வந்து நின்றது தெய்வம். அவர் அதன் கண்களை நோக்கினார். நெடுங்காலத்து நீள்பசியால் ஈரமற்று கூழாங்கல் உடைவு என மின்னிக்கொண்டிருந்தன அதன் விழிகள். அவர் அமர்ந்து அதன் கழுத்தை தொட்டார். அதன் உலர்ந்த நா நீண்டு அவர் கைகளை ஈரமில்லாது நக்கித் துவண்டது. உள்ளே சென்று ஊனுணவு எடுத்துக்கொண்டு அவர் வெளிவருகையில் அது விழிமூடி இறந்திருந்தது.

விழிநீருடன் ஒரு கணம் நின்றுவிட்டு தன் கோலுடன் சென்று குலதெய்வப் பதிட்டைப்பெருங்கல் மேல் ஏறி நின்று உரக்க குலத்தோரைக் கூவியழைத்து ‘உடையோரே, உற்ற்றோரே, இனி போரில்லை. இனி எவ்வுயிரும் இதன்பொருட்டு மடியலாகாது’ என நந்தவாசுகி அறிவித்தார். ‘முதல்போர் என்றும் அறத்திற்காக. இரண்டாம்போர் வஞ்சத்துக்காக. மூன்றாம்போர் அச்சத்துக்காக. நான்காம்போர் விழைவுக்காக. ஐந்தாம் போர் ஆணவத்துக்காக. ஆறாம் போர் வெறும் பிடிநிலை மட்டுமே. நாமோ ஈராறு முறை போரிட்டு விட்டோம். இப்போர் இன்று ஒரு வெற்றுச்சடங்கு. அறத்துக்காக மடிவது மேன்மை. வஞ்சத்துக்காக மடிவது இயல்பு. அச்சத்துக்கும் விழைவுக்கும் ஆணவத்துக்குமென மடிவது கீழ்மை. பிடிநிலைகொண்டு மடிவது மடமை. போதும் இப்போர்’ அவர் குலம் தங்கள் கைத்தடிகளை தூக்கி ‘அவ்வாறே ஆகுக’ என்றது.

துடிமுழக்கி பலியிட்டு அன்னையரை எழுப்பி அவர்களின் சொல் விழைந்தனர். முதுபூசகர் உடலில் எழுந்த மூதன்னையர் எழுவர் மெய்ப்பும் விதிர்ப்பும் மேவிய உடலின் ஆழத்திலிருந்து சொல்லென எழுந்து வந்தனர். ‘வஞ்சங்கள் மண்ணுக்கு. விண்ணோ வெறுமை வெளி. அங்குள்ள மலைகளெல்லாம் இங்கு அணுக்களென்றறிக மைந்தரே. அங்குள்ள இன்பங்களோ இங்கிருந்து கனிந்து சொட்டியவை. விண்ணமுதை உண்க. வஞ்சங்களை உதறிவிட்டுச் செல்க’ என்றனர். ‘ஆணை அன்னையரே’ என்று சொல்லி தலைவணங்கினார் நந்தவாசுகி.

அவர் கோல்தாழ்த்திய கணம் இன்னொரு சிறுநெருப்புக்குமிழென வெடித்தெழுந்த அன்னை திரியை ‘என் வஞ்சம் என்றுமுரியது. என் மைந்தரை அணைத்தபடி நான் நின்றிருக்கும் இந்த வெளி வானுமல்ல மண்ணுமல்ல!’ என்று கூவினாள். ‘அன்னையே!’ என்று நந்தவாசுகி குரலெழுப்ப ‘உங்கள் அம்பிலும் வேலிலும் இல்லை நான். என் விற்களையும் தோள்களையும் நானே தெரிவுசெய்கிறேன்’ என்று கூவினாள். துள்ளித்திமிர்த்தாடி வெடித்து அணைந்து கரிகனல சீறினாள்.

நந்தவாசுகியும் நாகர்படைகளும் திரும்பிச்சென்றனர். எரியுண்ட பெருங்காடு வெறுமை தாங்கி விரிந்துகிடந்தது. மேலிருந்து அதை நோக்கி தட்சர்கள் விழியலைத்து ஏங்கினர். தட்சர்குலத்தலைவர்கள் ரிஷபசேனரும் பிருஹத்பாலரும் விஸ்வபாலரும் காலநேமியும் கிருதசேனரும் பூர்ணரும் இறங்கி வந்து அந்த வனத்தில் உலவினர். அவர்கள் கண்டதெல்லாம் கரி மட்டுமே. நீள்மூச்சுடன் ரிஷபசேனர் தன் தோழர்களிடம் சொன்னார் ‘நாம் இங்கினி வாழ்வதில் பொருளில்லை. எப்பெரும்போரிலும் வென்றவனும் தோற்றவனே. நமக்கு எஞ்சியது ஏதுமில்லை. எங்குசெல்வதென்று இந்திரனிடமே கேட்போம்.’

மலைநகர்மேல் எரி எழுப்பி இந்திரனை வாழ்த்தினர். இளமழை வடிவாக வந்து அவர்களை தழுவினான். அந்த மழைத்தூறல் காட்டிய வழியில் அவர்கள் மைந்தரையும் செல்வங்களையும் தோளிலேற்றிக்கொண்டு நடந்தனர். மழைநனைத்த வழியே சென்று யமுனோத்ரியை அடைந்து அந்த நதிப்பெருக்கில் ஆயிரம் தெப்பங்களில் ஏறி கீழ்நிலம்நோக்கி சென்றனர். அவர்களைச் சூழ்ந்து பெய்த மழையின் வெண்திரைமூடலால் அருகே சென்ற வணிகப்படகுகள் கூட அவர்களை காணமுடியவில்லை. வழிந்து வழிந்தோடி சென்றுகொண்டிருந்தபோது யமுனையின் வடபுலத்தில் விண்வில் வளைந்தெழுந்த காடு ஒன்றைக் கண்டு ரிஷபசேனர் கைசுட்டி ‘அதோ’ என்று கூவினார். அவர்களனைவரும் படகில் எழுந்து நின்று பசுமை குவிந்த அச்சோலையைக் கண்டு கைகூப்பி கண்ணீருடன் வணங்கினர்.

முதுதட்சர் அகவிழி திறந்து அனைத்தும் கணித்து அதைப்பற்றி சொன்னார்கள். யமுனைக்கரையில் இருந்த அக்காடு இந்திரனுக்குரியது. தன் நூறாயிரம்கோடி தேவியருடன் அவன் வந்து கானாடலும் நீராடலும் ஆற்றி காமம் கொண்டாடும் மகிழ்சோலை. ஒவ்வொரு இரவும் மழைபெய்யும் அக்காட்டில் மண்ணிலுள்ள அத்தனை உயிர்களையும் அவன் கொண்டு சேர்த்திருந்தான். அணுகமுடியாத சதுப்புகளாலும் நச்சுச்செடிகளாலும் வேலியிடப்பட்ட அந்தச் சிறிய காட்டை அணுவடிவப் பேருலகு என்றனர் முதுதட்சர். ‘இது விழைவின் பெருங்காடு. நாம் வாழவேண்டிய இடம் இதுவே’ என்றனர். யமுனைக் கரையொதுங்கி இருள் சூழ்வது போல ஓசையின்றி நிரைவகுத்து அக்காட்டுக்குள் புகுந்து நிறைந்துகொண்டனர். அவர்களுக்குமேல் இந்திரவீரியம் குளிர்ந்து குளிர்ந்து பொழிந்துகொண்டிருந்தது.

யமுனைக்கும் கங்கைக்கும் நடுவே குளிர்ந்த பசுமையென தேங்கிக்கிடந்த காண்டவம் நூறு நாழிகை நீளமும் ஐம்பது நாழிகை அகலமும் கொண்டது. ஆயிரம்கோடி உயிர்வகைகளால் ஒற்றைப்பேருயிர் என இயங்குவது. குளிரோடைகள் நரம்புகளாக மென்சதுப்புகள் தசைகளாக பாறைகள் எலும்புகளாக காட்டுமரங்கள் மயிர்க்கால்களாக மெய்சிலிர்த்து நின்றிருப்பது. அதை இந்திரனின் காதலி என்றனர் கவிஞர். ஒருகணமும் ஓயாத அவன் முத்தத்தால் காமநிறைவின் கணமே காலமென்றாகி பிறிதொன்றறியா பெருமயல் நிலையில் எப்போதுமிருப்பது. ஒவ்வொருகணமும் பல்லாயிரம் உயிர்கள் பிறப்பதனால் ஜனிதவனம் என்று அழைக்கப்பட்டது. காண்டவத்தை கையில் எடுத்து முகத்தருகே வைத்து நோக்கி பிரம்மன் புன்னகைசெய்தார். அவர் ஆக்கியவற்றில் அழகியது அதுவே. அது வாழ்க!

நூல் ஏழு – காண்டவம் – 5

மின்னலில் காலத்தை
முகில்களில் வடிவத்தை
இடியோசையில் உடலை
மழைத்தாரைகளில் கால்களை
கொண்டவனை
வணங்குக!
அவன் அறியாத விழைவுகள்
இப்புவியில் ஏதுமில்லை
இளையோரே
விழைவன்றி இப்புவியில் ஏதுமில்லை

முதுநாகராகிய ஆருணி நாகபடம் செதுக்கப்பட்ட நீண்ட அத்திமரக்கிளையும் ஆடையற்ற உடலில் வெண்சாம்பலும் அணிந்து மலையேறி நாகோத்ஃபேத மலையை அடைந்து காட்டுமரங்களின் வேர்களால் ஆன படிகள் சுழன்று சுழன்று ஏறிச்சென்ற மலையுச்சியில் ஒலித்துக்கொண்டிருந்த நாகர்களின் குறுமுழவுக்கு கூகையென மறுஒலி எழுப்பி தன்னை அறிவித்துக்கொண்டார். பெரும்பாறைகள் இதழ்விரித்து அளித்த மலைப்பாதைக்குள் அவர் நுழைந்தபோது இருபக்கங்களிலிருந்தும் கூரிய நுதி கொண்ட அம்புகளுடன் எழுந்துவந்த நாகர்கள் அவர் விழிகளையும் உடலில் உள்ள தீக்குறிகளையும் உன்னியும் உறுத்தும் மதிப்பிட்டு அவரை உள்ளே செல்லவிட்டனர். வினசனதீர்த்தத்தின் கரையில் அமைந்த கபிலவாஸ்து என்னும் ஆலயத்தின் பெருங்கூடத்தில் நிறைந்திருந்த ஆடையற்ற முதுநாகர்கள் அறுநூற்றுவர் அவர் நுழைந்ததும் தங்கள் நாகபட யோகக்கழியைத் தூக்கி வாழ்த்துரைத்தனர். அவரை அறிந்த நாகசூதர்கள் குறுமுழவிசைத்து அவர் குலப்பெருமையைப் பாடி வரவேற்று அவையமரச்செய்தனர்.

மேலும் வரவேண்டியவர்கள் வந்து அவைநிறைவுகொள்வது வரை ஆருணி ஒருசொல்லும் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். வாசுகிகுலத்து மூதரசர் நந்தவாசுகி வந்து அத்திமரத்தடியில் அமைந்த கல்லிருக்கையில் அமர்ந்து செம்மணிக்கற்கள் பதிக்கப்பட்ட நாகபட மணிமுடியைச் சூடி அத்திக்கோல் கையிலேந்தி வாழ்த்துகொண்டதும் பிறர் பேசுவதற்குள் ஆருணி எழுந்து தன் கோலைத்தூக்கி உரத்த பெருங்குரலில் “நாகரே, அவையீரே, கூறுக, எவர் எலும்புகள் இவை?” என்றார். அவரது கையிலிருந்த எலும்புக்குவையை நோக்கி அவை திகைத்து நின்றது. ‘என் குலமே, குருதியே, எவருடைய அழுகையொலி நிறைகிறது இந்த அவையில்? எந்த அன்னையை பலிகொடுத்து நாம் நம் அடையாளங்களை அணிந்திருக்கிறோம்?” என்றார் ஆருணி. அங்கிருந்த அத்தனை குலமூத்தாரும் தங்கள் காலம் கவிந்து மீச்செல்லும் இமையா விழிகளால் அவை எவருடையவை என்றறிந்தனர். அவைமுதல்வராகிய நந்தவாசுகி ”உரகமரபில் வந்த அன்னை திரியை, எரிபட்டு இறக்கும் இறுதிக்கணத்தில் அவள் நாகமென்றானாள். அவள் மைந்தரும் நாகமானார்கள்” என்றார். ‘ஆகவே அவர்கள் இங்கு நம்மால் நீர்க்கடன் செய்து நிலையேற்றப்பட வேண்டியவர்கள்.”

கல்வடிவில் கனிந்து நின்ற குலகுருவாகிய கபிலருக்குமுன் நந்தவாசுகி முடிதாழ்த்தி நிற்க மூத்தோர் குலவரிசைப்படி வந்து முறைமை வழிபாடுகள் செய்து முடித்தபின் அவர்கள் நிரைவகுத்துச் சென்று வினசனதீர்த்தத்தின் கபிலகேதார படிக்கட்டில் இறங்கி இடைநீரில் நின்று சிந்தையில் மறையாமலிருக்க பாடலாக யாத்து ஒவ்வொருநாளும் ஓதி நிலைநிறுத்திய நீத்தார் பெயர்வரிசையைச் சொல்லி பன்னிருமுறை நீர்வார்த்து கும்பத்தை நீரிலிட்டனர். ஒவ்வொருவராக கரையேறியபின்னர் இறுதியில் நந்தவாசுகி திரியையின் எலும்பையும் மைந்தர் ஐவரின் எலும்புகளையும் எடுத்துக்கொண்டு நீரிலிறங்கியபோது சுனையின் ஆழத்திலிருந்த ஆயிரம் ஊற்றுக்கண்கள் திறந்துகொண்டன. நீர் பெருகிப்பெருகி வந்து நந்தவாசுகியை மூழ்கடித்தது. அவர் கரையேறி வருவதற்குள் படிக்கட்டில் நின்றவர்களின் கால்களைத் தொட்டது, பெருகி எழுந்து நாகோத்ஃபேத மலைக்காட்டை நிறைத்தது. செறிந்து எழுந்த அடிமரங்கள் நாகங்களென உடல்நெளித்து நீருக்குள் தொங்கி ஆடின. ஓசையின்றி நிறைந்து ததும்பிக் குளிர்ந்தது நாகர்களின் தொல்பெருங்காடு.

கபிலவாஸ்துவின் பெருங்கூடத்தில் ஊனும் மீனும் தேனும் தினையும் கள்ளும் சேர்ந்து உண்டாட்டு முடிந்து ஓய்வுக்குப்பின் அந்தியில் மீன்நெய்ப்பந்தங்கள் எரிந்த செவ்வொளியில் நாகர்குலத்து மூத்தோர் கூடி அமர்ந்து சொல்லாடுகையில் நந்தவாசுகி எழுந்து “நாகசூதரகளே, உங்கள் யாழ்தேரும் விரல்நுனிகளில் நம் குலத்து மூதன்னையர் எழட்டும். நம் குடிவணங்கும் தெய்வங்கள் எழட்டும்.குலமூத்தார் அருள்புரியட்டும். நம்மை அவர் ஆற்றுப்படுத்தட்டும்” என்றார். நூற்றெட்டு நாகசூதர்கள் யாழ்மேல் விரலோட்டி கண்மூடி மெல்ல அசைந்தனர். இசையெழுந்து பெருகப்பெருக அவர்களின் உடல்களை யாழாக்கி ஒரு கண்காணாப்பெருவிரல் யாழ்மீட்டலாயிற்று. இசை பொருந்திய உச்சகணத்தில் அவரிலொருவர் வெடித்தெழுந்து இரு கைகளையும் தூக்கி நாகபடமாக்கி கால்கட்டைவிரல்களில் நின்று நெளிந்தாடலானார். அவரது விழிகள் நாகவெறிப்பு கொள்ள மெய்த்தசைகளிலெல்லாம் நாகநெளிவு கூட மூச்சு அனலுடன் சீற சிற்கணங்களில் அங்கொரு நாகமே நின்றிருந்தது.

“தெய்வங்களே, மூதன்னையரே, குலமூத்தாரே, இங்கெழுந்தருளினீர். எங்கள் குலம்வாழ வாழ்த்துக!” என்றார் நந்தவாசுகி. ஆனால் அன்னை அருள்சொல் உரைக்காமல் தழலென நின்றாடிக்கொண்டிருந்தாள். “அன்னையே நீ யார்?” என்றார்கள் நாகமூத்தோர். மும்முறை கோரியபின் “நான் திரியை” என்றாள் அன்னை. ‘கங்கைக்கரையில் எரியுண்ட அன்னை நீ என அறிவோம். அன்னையே உன் நீர்க்கடன் செய்து விடாய் தீர்த்தோம். உனக்கு பலிவேண்டுமென்றால் அதையும் அளிப்போம். இங்கு அமைந்த எங்கள் குருதிவேண்டுமென்றால் இட்டெண்ணித் தலைகொடுப்போம்” என்றார் நந்தவாசுகி. “எரிபுகுந்தேன். அதற்கு முன் நூறாயிரம் முறை நீர் புகுந்தேன் என் மக்களே. அடங்காப்பழிகொண்டு இந்த அத்திமரத்தடியில் அமர்ந்துள்ளேன்.”

அன்னையின் குரல் காலத்தின் ஆயிரம்கோடி இருளடுக்குகளைக் கடந்து வந்து ஒலித்தது. ”கேளுங்கள்! நான் திரியைகளில் முதல்வி. கிருதயுகத்தில் இந்த நாகோத்ஃபேதப் பெருங்காட்டில் என் மைந்தருடன் வாழ்ந்திருந்தேன். என் குலமும் குழவியரும் மூங்கிலில் கோக்கப்பட்டு துடித்தழிந்தனர். நீர்மறைந்து இருள்புகுந்து மீள்பிறப்பு கொண்டேன். அந்நீர்ச்சுனையில் ஒவ்வொரு நாளும் விழிநீரால் பலிகொடுத்தேன். ஆயிரம்காலம் அழுதழுது கடந்தபின்னரும் அவியவில்லை என் அழல்.” தழல் எழுந்து வண்ணம் மாறியதுபோல அவளில் இன்னொரு அன்னை எழுந்தாள். “ஆம், நூறு நூறுதலைமுறைக்காலம் என் மூதன்னையர் விழிநீரை நான் சிந்தினேன். இந்த வினசனதீர்த்தத்தின் கரையில் கண்ணீருடன் கல்நின்றவர்கள் நாங்கள்.” மீண்டும் ஒரு அதிர்வென இன்னொரு அன்னை எழுந்தாள். “எரியுற்ற மாளிகையில் ஊனுருகும்கணத்தில் நான் அறிந்தது இதுவே. இது அழியா பெருவஞ்சம்.”

அவிநெய் அழிந்து அன்னை மண்சேர்ந்தபின் நெடுநேரம் நாகர்குலமூத்தார் அவை ஓசையழிந்து அமைந்திருந்தது. பாவை உயிர்கொண்டதுபோல ஆருணி அசைந்து “இதற்கு கழுவாய் என்ன குலமூத்தவரே?” என்றார். ஓர் உடலசைவால் அங்கிருந்தோர் அனைவரும் அது அவர்களின் உள்ளோசையே என காட்டினர். நந்தவாசுகி விழிமூடி தன் நெற்றிக்குநடுவே எழுந்த நாகமணிச்சுடரை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் உடல் அனல்பட்டதுபோல சொடுக்க எழுந்து கைவிரித்து சொல்லின்றி சிலகணங்கள் நின்றபின் “ஒருசெயலால் இரு பழி முடிப்போம் நாகக்கூட்டரே. உரகர்குலத்தை வேருடனழித்த பன்னகர்கள் தாங்களும் பழிகொண்டு குலமழிந்தனர். அக்குலத்திலும் எஞ்சியவள் ஓர் அன்னையும் ஐந்து மைந்தருமே. துலாவில் ஒரு மணியிடை அளவுக்கு மேல் நிற்பவர் அக்க்குருதிவழி வந்த தட்சர்கள். அவர்கள் பழிதீர்க்கட்டும்” என்றார். ஒரே கணத்தில் அங்கிருந்த நாகர்குடியினர் அனைவரும் எழுந்து தங்கள் நாகக்கோல்களைத் தூக்கி “ஆம் ஆம் ஆம்” என்று கூவினர்.

ஆனால் தட்சகுலத்து மூத்தோர் எழுபதுபேரும் திகைத்தவர்கள் போல் நின்று ஒருவரை ஒருவர் நோக்கி தலைகவிழ்ந்தனர். அவர்கள் உடன்படாமை கண்டு திரும்பி நோக்கிய நாகரவையினர் உடல்களில் சினம் அலையென எழுந்து விரிந்தது. நந்தவாசுகி உரத்த குரலில் “தட்சர்கள் தங்கள் உடம்பாட்டை இங்கு அறிவிக்கவேண்டும்” என்றார். “மூத்தாரே, நீங்கள் பாரதவர்ஷத்தை ஆளும் நாகர்குடிகளின் முதல் தலைவர். கிருதயுகத்தின் தொடக்கத்தில் உங்கள் முதல்மூதாதை வாசுகியை நாகர்குடிமுதல்வர்கள் கல்லிருக்கை அமர்த்தி அத்திமரக்கிளை அளித்து முடிசூட்டினர். அம்முடியை இன்றும் மண்மறைந்த அன்னையர் அருள் வாழ்த்துகிறது. உங்கள் சொல் நாகர்களுக்கெல்லாம் ஆணையேயாகும்” என்றார்.

மும்முறை தலைவணங்கி தட்சகுலத்து மூத்தவர் சொன்னார் “ஆனால் எங்கள் குலமே இந்திரனுக்கு கடன்பட்டுள்ளது என்பதை அறிவீர். எங்கள் மூதன்னை ஐந்துமைந்தருடன் மலையேறிச்சென்றபோது மின்னல்படையால் காத்து முகிற்கலத்தால் அமுதூட்டி மலையுச்சியில் நகர் அமைத்து அளித்துக் காத்தவன் அவன். எங்கள் நகரை சாம்பலில் இருந்து முளைத்தெழச்செய்தவன். இந்திரனையே எங்கள் முதற்குலதெய்வமாக வழிபடுகிறோம். அன்று அரக்குமாளிகையை எரித்தவன் இந்திரனின் மைந்தனாகிய பார்த்தன். ஒருநாளும் இந்திரனுக்கு எதிராக எங்கள் குலத்தின் நாவும் நஞ்சும் எழாது. குடிமுழுமையும் அழியினும் பெரும்பழி சேரினும் நாங்கள் இந்திரனுக்கு கடன்பட்டவரே.” அவர் குலத்தவர் கோல்தூக்கி “ஆம் ஆம் அம்” என தங்கள் உடம்பாட்டை சொன்னார்கள்

சினந்து சீறி எழுந்த நந்தவாசுகி தன் இருகைகளையும் விரித்து “சொல் தேர்ந்து அவை நில்லுங்கள் தட்சநாகரே. நாகர் குடியே இம்மண்ணின் முதல்குடி. இங்குள்ள தெய்வங்களுக்கெல்லாம் அரசி நம் மூன்று பேரன்னையர். தொல்நாகர் ஒருபோதும் பிறருக்கு கடன்பட்டவரல்ல. ஒருபோதும் பிறருக்கு தலைவணங்குபவரும் அல்ல. இங்குள்ள மானுடர் எவருக்கும் அவர் எந்நிலையிலும் பிணையும் அல்ல. நாகரென குலக்குறி அணிந்த எவரும் இப்பேரவையின் ஆணைக்கு அடிபணிந்தவரே” என்றார். தட்சநாகர் தலைகுனிந்து அசையாமல் நின்றனர். “சொல்லுங்கள், உங்கள் உடம்பாட்டை இந்த அவை எதிர்நோக்குகிறது.” முதல்தட்சநாகர் தன் கோலைத் தாழ்த்தி மும்முறை ஆட்டிவிட்டு அவையிலிருந்து வெளியேறினார். அவருக்குப்பின்னால் பிறரும் நிரை சென்றனர்.

சினந்து பின்னால் சென்று கைவிரித்த நந்தவாசுகி “நில்லுங்கள் தட்சரே. இந்த அவைவிட்டு விலகிச்செல்கையில் நீங்கள் நாகர்குலத்தை விட்டு நீங்குகிறீர்கள். நாகர்குலத்திற்கே எதிரிகளாகிறீர்கள்” என்றார். முதுதட்சர் திரும்பாமல் “எங்கள் நன்றிக்கென நாங்கள் அழிவதே அன்னையர் விழைவு என்றால் ஆகுக!” என்றார். “நாகர் குலம் இங்கே உங்கள் மேல் போரை அறிவிக்கிறது” என்று நந்தவாசுகி மேலும் கூவினார். “போருக்கு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள். மண்ணில் வாழும் நாகங்கள் விண்ணேறி வந்து பறக்கும் நாகங்களுடன் போர்புரிவதையும் தெய்வங்கள் கண்டு மகிழட்டும்” என்றார் முதுதட்சர். பிற தட்சநாகர் மெல்லிய புன்னகை பூத்தனர். “இதோ இங்கேயே இப்போதே நாகர்குலம் நான்கும் உங்கள் மேல் போர்தொடுக்கிறது. இறுதி தட்சனும் எஞ்சுவது வரை அல்லது தட்சர்குலம் பணிவது வரை இப்போர் தொடரும்” என்றார். நான்கு நாகர்குலத்தவரும் கோலேந்தி போர்க்குரல் எழுப்பினர். திரும்பிநோக்காமல் தட்சநாகர்கள் நாகோத்ஃபேத மலையிலிருந்து நீங்கினர்.

இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி திரௌபதியின் இசையவையில் பிரதக்த்வர் தன் கதையைச் சொல்லி முடித்து தலைவணங்கி யாழ்தொட்டு வணங்கி மீண்டதும் மறுபக்கம் எரிசுடர் அகல் அருகே அமர்ந்திருந்த சம்யோகர் மென்முலை மாதாலி துணையமர்ந்து யாழ்மீட்ட தலைவணங்கி தன் கதையை தொடங்கினார்.

இமயமலையுச்சியில் இருந்தது ஒரு நாகநகரம். அதன்பெயர் நாகசிலை. பறக்கும்நாகர்களான தட்சர்களின் அத்தலைநகரத்தை அதைச்சுற்றியிருந்த பன்னிரண்டு மலைமுடிகளையும் ஏழு அடர்காட்டுச்சமவெளிகளையும் அவர்கள் ஆட்சிசெய்தனர். முகில்குவைகளிலிருந்து ஒளிநூலில் இறங்கி அவர்கள் காடுமேல் பரவி ஊனும் அரக்கும் காயும் கனிகளும் கொண்டு மலைபுகுந்தனர். சமவெளிகளில் வாழ்ந்த எட்டு மலைக்குடிகளின் நூற்றெழுபது சிற்றூர்களில் திறைகொண்டனர். தேஜோவதியின் கரையில் அமைந்த பீதசிலை என்ற சிறுதுறைமுகத்தில் அவர்களிடம் வணிகம் செய்ய கங்கைவணிகரும் சிந்துவணிகரும் கீழ்நிலங்களில் இருந்து வந்து மலைச்சரிவில் தேவதாருக்களின் அடியில் கட்டப்பட்ட யானைத்தோல் கூடாரங்களில் காத்துக்கிடந்தனர். பொன்னும் பட்டும் படைக்கலங்களும் மதுவும் கொண்டுவந்து நிகராக வைரக்கற்களை வாங்கிச்சென்றனர். தட்சநாகர்களின் மலைநகரை மானுடர் எவரும் கண்டதில்லை. அங்கே பல்லாயிரம் குகைகளில் வானகநாகர் பலகோடிவருடம் வாழ்ந்திருந்தனர் என்றனர் பழங்குலப்பாடகர். அவர்கள் அங்கே தங்கள் ஒளிரும் விழிகளையும் நச்சுமூத்து இறுகிய நாகமணிகளையும் விட்டுவிட்டு மறைந்தனர். அக்குகைகளுக்குள் கரியமண்ணில் சுடர்ந்து செறிந்திருந்த அவற்றையே தட்சநாகர் கொண்டுவந்தனர் என்றனர். சிறிய சந்தனப்பேழைகளுக்குள் செம்பஞ்சுக்கதுப்பில் வைத்து தட்சர் கொண்டு வரும் அக்ஷமணிகளையும் அமிர்தமணிகளையும் விழிவிரித்து நெடுநேரம் பார்ப்பவர்கள் நாகவிழியை நேர்கண்ட மயக்குக்கு ஆளானார்கள். அவர்களின் கனவுகளில் சுருள்சுருளென நாகங்கள் எழுந்தன. மையச்சுருளில் ஒற்றைவிழியென அமைந்திருந்தது நஞ்சென தன்னைக்காட்டும் அமுது.

தட்சநாகன் அஜமுகனுக்கு மகளெனப் பிறந்தாள் கிரிஜை. தாட்சாயணியாகிய கிரிஜையை நிலமக்கள் எவருமே கண்டதில்லை என்றாலும் எல்லா குலப்பாடகர்களும் அவள் பேரழகை மட்டுமே பாடிக்கொண்டிருந்தனர். உச்சிமரக்கிளையில் கனிந்த கனி தேவர்களுக்குரியது என்றார் முதுபாடகரான கலிகர். அதை மண்நிற்போர் கண்கொள்ளமுடியாது. மரங்களை மண்கூரைக்குக் கீழே தொங்கிக்கிடக்கும் தோரணமெனக் காணும் வானவரோ அதை மட்டுமே காண்பர். மண்ணிலுதிரும் கனிகள் நடுவே சில விண்ணோக்கி எழுவதுண்டு. அவையே மண்ணின் சுவையனைத்தும் கனிந்தவை. விண்ணறியும் மண்ணென அவற்றை சிந்தைசூடினர் மூத்தோர் என்றன பாடல்கள். நாகர்குலத்து இளவரசி கற்பதெல்லாம் கற்று உறுவதெல்லாம் உற்று கன்னியெனக் கனிந்து அவ்விண்நகரில் இருந்தாள். அவள் விழிகள் மண்ணை நோக்கியதே இல்லை. விண்ணோக்கி எழுந்த விழிகள் வெறுமையென ஒருகணமும் வேண்டுவன எல்லாம் என மறுகணமும் தன்னைக்காட்டும் ஒன்றையே நாள்தொறும் அறிந்தன.

இந்திரகீலத்திற்கு வடக்கே ரஜதசிரஸ் சுவர்ணசிரஸ் என்னும் இருமலைமுடிகளுக்கு அப்பால் மின்னொளியோ தண்ணொளியோ மண்ணுக்கு விண்சூட்டும் மணிமுடியோ என மயக்கும் மலையொன்றிருந்தது. அதை கைலாயமலை என்று முன்னோர் சொற்கள் சொல்லின. உருகும் பொன்னாலானது என்றனர் வேடர். குளிரனலால் ஆனது என்றனர் குறவர். முகிலிறங்கி பருவான மாயம் என்றனர் கவிஞர். மலைவணிகரோ மண்ணில் விழுந்த விண்ணகத்து அணிநகை என அதை எண்ணினர். அங்கு செல்ல பாதை இல்லை. ஏழுலகங்கள் கவிந்த வான்வெளிக்கு அப்பால் இங்குள்ளதா என்றே எண்ணச்செய்யும் எழிலுடன் நின்றிருந்தது அது. ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் செவ்வொளி எழும்போதெல்லாம் தன் அரண்மனை முகப்பில் இருந்த அத்திமரத்தின் அடியில் கல்லிருக்கையில் வந்தமர்ந்து அதை நோக்கியிருக்கும் தவம்கொண்ட தாட்சாயணி ஒருநாள் அது விண்ணிறைந்த எவரோ வந்தமர்ந்து செல்ல புலித்தோல் விரித்து காத்திருக்கும் பீடம் என அறிந்தாள். அன்று அவள் கன்னியென உணர்ந்து பெருங்காமம் கொண்டாள். என்னநிகழ்ந்தது தனக்கு என அறியா இளஞ்சிறுமி அங்கு அமர்ந்து நெஞ்சு நெகிழ்ந்து கண்ணீர்விட்டு அழுதாள்.

எரிநீர் என இழியும் விழிநீர்த் துளிகளை கணங்களென கோத்தணிந்த மாலையாக நாட்கள் நெகிழ்ந்து நெகிழ்ந்து மடிந்துருவான காலத்தில் அக்காமம் வளர்ந்தது. அவையீரே சூழ்பெருங்காமம் போல் விண்ணவர் மகிழும் தவமென ஏதுள்ளது? குளிர்முகில் சூழ்ந்த விண்நகரில் ஐந்திசையும் திறந்த வானம் அனல்கொண்டெரிய முள்மேல் அமர்ந்து அவள் கணம் கணமென காலத்தை அறிந்தாள். ஒவ்வொரு கணத்தையும் காலமென்றறிந்தாள். அவள் தவம் முதிர்ந்த நாள் ஒன்றில் கைலாய மலையிலிருந்து வெண்பனியால் ஆன படிக்கட்டு என சரிந்த பாதை வழியாக வெண்ணிற பனியெருதுமீது ஒருவன் இறங்கிவரக்கண்டாள். அது கனவோ என எண்ணி மயங்கும்போதே தவநிறைவு என அவள் ஆழம் அறிந்து உடல் சிலிர்த்தது, ஏனென்றறியாமல் பிச்சியென அங்கமர்ந்து பெருநகைபுரிந்தாள். பன்னிருநாட்களுக்குப்பின் அவன் அவள் அருகே மலைப்பாதையில் மீண்டும் தோன்றினான். பனிமலை வாழும் மலைமகன். ஏதோ தொல்குடி மேவிய இளவரசன். விண்ணை உரசும் மண்ணில் வாழ்பவர்களுக்கு மட்டுமே அப்பேரழகை வழங்கியிருந்தனர் தெய்வங்கள் என தொல்குடிப்பாடல்கள் பாடின. பனிமலை மக்கள் மும்மடங்கு வாழ்வும் நால்மடங்கு உடல்வலுவும் ஐம்மடங்கு மெய்யறிவும் ஆறுமடங்கு அமைதியும் கொண்டவர்கள் என்றன.

அவர்கள் குலவழக்கப்படி தழல்கதிர் நெளிந்த புலித்தோல் அணிந்திருந்தான். குளிர்தொடாதிருக்க வெண்சாம்பல் பொடிபூசி இடக்கையில் வேட்டைச்சூலமும் வலக்கையில் மலைகளுடன் பேசும் உடுக்கும் கொண்டிருந்தான். இருளில் ஒளிகொண்டெழும் வெண்கதிரின் இளம்பிறைபோன்ற கல்லை தன் விரிசடைக் கொத்தின் மேல் சூடியிருந்தான். கயிலை என சுடரும் பொன்னார்மேனியன். பிறந்தபின் முதல்முறையாக கிரிஜை தன் நகர்விட்டு எழுந்து ஒளிச்சரடில் பறந்து அடர்காட்டில் இறங்கி ஓர் ஒளிசோரும் மலையோடையில் அள்ளி நீர் அருந்தி எழுந்த அவன் முன் பூத்தாள். அவையோரே, பெருங்காதலை எவரேனும் சொல்லித்தெரியவைக்கவேண்டுமா என்ன? அங்கு சூழ்ந்த பாறைகள் ஆடிய மரங்கள் பாடிய குயில்கள் அனைத்தையும் தானாகக் காட்டி தனித்து நிற்க தெய்வங்களிடமிருந்து வரம்பெற்று வந்தததல்லவா அது? நோயை துயரை இறப்பை மறதியை வென்று மீச்செல்லும் காதலே உன் காலடியில் யாழ்வைத்து தலைதொழும் இப்பாணன் தலைமேல் அமர்க உன் கால்கள்.

மலைமகனுக்கு மகள்கொடையளிக்க தட்சன் ஒப்பவில்லை. தொல்குடி நாகருக்கு மண்வாழ்பவர்கள் எல்லாம் இழிந்தவரே . அஜமுக தட்சன் விண் தொட்டுப்பறக்கும் நாகர்களில் ஒருவனே உனக்குரியவன், உன் உள்ளம் தொடுபவனை தெரிவுசெய்க என்றான். இனியொரு சொல் இல்லை எந்தையே, நான் உள்ளம் கொடுத்துவிட்டேன் என்றாள் தாட்சாயணி. அவனை நஞ்சூட்டிக்கொன்றுவருக என நாநூறு நாகர்களை அனுப்பினான் தட்சன். அவர்களில் தலைவன் மட்டுமே மீண்டுவந்தான். ‘அரசே, நாகமிடறாகிய நஞ்சுகளனைத்தும் சென்றுசேரும் நச்சுப்பெருங்கடல் அவன். நாநூறு பற்களால் அவனைத்தீண்டியவர் அனைவரும் நினைவழிந்து அப்பெருங்காட்டுக்குள் பித்தெடுத்து சுற்றிக்கொண்டிருக்கின்றனர். உங்களிடம் செய்திசொல்ல நான் மட்டுமே வந்தேன்’ என்றான். ‘அவன் பித்தன், பித்துருவாகிய பிறைநிலா எழுந்த தலையன்.’ கீழே எருது ஒலியெழுப்பியதைக்கண்டு தட்சன் நோக்கினான். தன் இளமகள் ஓர் இறகு என அவனருகே இறங்கி அணைவதையும் அவன் அவளைச் சூடி விடையேறி விண்தொட்ட கைலாயம் நோக்கி செல்வதையும் கண்டான். ஏதும் செய்வதற்கில்லாமல் நின்று கொதித்து பின் சீறி உடல் நெளிந்து தன் மாளிகைச்சுவர்களைத் தீண்டி தன் நச்சுப்பல்லில் எழுந்த வஞ்சத்தை தீர்த்தான்.

ஏழுநாட்கள் இரவும் பகலும் தீயென நெளிந்து கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தான். அவன் சினம் கொண்டு எரிந்த மலைநகர் சீழ்கொண்டு சிவந்த கட்டி போல மலைமுனைமேல் விம்மி விம்மி நின்றது. அவன் துயர்கண்டு ஆற்றாத நாகர் இந்திரனுக்கு வேள்விசூழ்ந்தனர். வெண்புகை விரல் எழுந்து விண்ணைத்தீண்ட அங்கே தன் வண்ணவில் வைத்து இந்திரன் எழுந்தான். அரசனின் துயர்கண்டு ஆற்றாத அவன் ஒரு முதுநாகன் குரலில் எழுந்தான். ”மகள் விழிமுன் ஆயிரம் படம் விரித்து நின்று அவள் கரம்கொண்டவனை வெல்லாது உன் நெஞ்சு அடங்காது தோழா. மலைமக்களை வெல்ல நிலமக்களை துணைகொள்க! நிலமாளும் தெய்வங்கள் நாகர்குலத்துக்கு அருள்க!’ என்றான். அச்சொல்லை தலைகொண்டு தட்சன் முதற்பெரு வேள்வியை மலைநகரில் எடுத்தான். தட்சநாட்டைச் சூழ்ந்த பதினெட்டு மலைநாட்டரசர் வணங்கிய அத்தனை தெய்வங்களையும் வேள்விச்சாலையில் நிறுவி அனைவருக்கும் மங்கலமும் பரிசிலும் கொடுத்து வேள்விக்கு அழைப்புவிடுத்தான். வேள்விமுடிவில் படைக்கலம் தொழுது மலைமக்கள் மேல் போர்தொடுக்க மதிசூழ்ந்தான். மணிவிளைந்த நிலம் என மலைமுடிகளை அறிந்த நிலமாளும் அரசர் அவனுடன் படைகோக்க உளம் கொண்டிருந்தனர்.

செய்தியறிந்த கிரிஜை மலைநாட்டு அணிப்படைகள் சூழ வெண்குதிரைகள் இழுத்த முகில்வடிவத்தேரில் தன் தந்தையைத்தேடிவந்தாள். தந்தைக்கென மலைவிளைந்த மணிகளையும் கனிகளையும் கொண்டுவந்து மலைநகர் வாயிலில் நின்றாள். அன்று வேள்விமுடித்து போர்க்கங்கணம் கட்டும் நாள் என்பதால் அவள் வரவறிந்து சினந்த தட்சன் அவள் நகர்நுழைய ஒப்பாது வாயிலிலேயே மறித்தான். “தந்தையே, மலைப்பாறைகள் கடலடியின் பேரழுத்தத்தில் கூழாங்கற்களாகும் என்பார்கள் கவிஞர். இங்கே நீங்கள் கொண்ட அனைத்தும் கடுகென அணுவெனச் சிறுக்கும் மலையுச்சி அது. மலைமக்களை வெல்ல மானுடரால் இயலாது. வீண் சினம் தேவையில்லை” என்றாள். அவளை இழித்துரைத்து வாயில் மூடி திரும்பிச்சென்றான் தட்சன், விழிநீர் சிந்தி அவள் திரும்பி மலைநாடு சென்றாள். வேள்விமுடித்து போர்குறித்து உண்டாட்டு நிகழ்ந்துகொண்டிருக்கையில் இருபெரும் படைகளாக மலைமக்கள் நாகசிலையைத் தாக்கினர். வீரபத்ரன் தலைமையில் வந்த வலப்படை நகரின் கோட்டைகளை நொறுக்கியது. பத்ரகாளி தலைமையில் வந்த இடப்படை நகர்நுழைந்து அனல்மூட்டியது.

பன்னிரண்டு மாதம் நின்றெரிந்து முழுமையாக அணைந்தது நாகசிலை. நாகர்களில் ஆண்களெல்லாம் போரில் மடிய அவர்களின் உடல்கள் வெந்து உருகி ஊன்பற்றி எரிந்து குன்றிலிட்ட செந்தூரமென அவ்வனல் தெரிந்தது. மைந்தரை அணைத்தபடி அன்னையர் தப்பி காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தனர். நாகசிலை பின்னர் பன்னிரண்டு வருடம் கருகிய வடுவாக மலையில் எழுந்து நின்றது. அம்மலைநகரிலிருந்து பறந்து எழும் கலையறிந்த அனைவரும் போரில் மடிந்தமையால் கருவுண்ட மகவுக்காக காடுபுகுந்த மகளிர் மீண்டும் அந்நகரை அடையவே முடியவில்லை. அவர்கள் காயும் கனியும் தேனும் அரக்கும் பொறுக்கி பீதசிலையின் காட்டில் விற்று வாழ்ந்தனர். பின்னர் மூத்தோர் சொல்படி மறைந்த தட்சனின் மூன்றாவது மைந்தனின் மகன் கஜமுகன் அவன் வாழ்ந்த சாரஸோத்ஃபேதம் என்ற காட்டில் இந்திரனுக்கு நாற்பத்தெட்டுநாள் மலர்நீர் கொண்டு வழிபாடொன்றை செய்தான். அப்பூசனையால் மகிழ்ந்த இந்திரன் முகில்திரட்டி வானில்எழுந்தான். நாற்பத்தொருநாள் துளிமுறியாது பெய்த பெருமழையின் முடிவில் நாகசிலையின் இடப்பக்கத்திலிருந்த உச்சிமலைப் பெரும்பாறை ஒன்று உடைந்து சரிந்தோடி கீழே வந்து நின்றது. அது வந்த வழி ஒரு படிக்கட்டாக தெரிந்தது. தட்சநாகர் அவ்வழியாக மலையேறிச்சென்று மீண்டும் தங்கள் மலைநகரை அடைந்தனர். நீர்கழுவிய நகரில் எஞ்சிய எலும்புகளுக்கு கடன்முடித்து நகரை வெள்ளைபூசி புதுப்பித்தனர். மழைவெளிக்க எழுந்த தெளிவானில் பூத்த வெண்குடைக்காளான் போல் தெரிந்த மலைமேல் இந்திரனின் ஏழுவண்ண வில் வளைந்திருந்தது.

நூல் ஏழு – காண்டவம் – 4

சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இக் குண்டமும்
ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்

பாரதவர்ஷத்தின் நான்கு திசைகளிலும் பரவி அடர்காடுகளை ஆண்ட தொல்குடி நாகர்கள் மையப்பெருங்குலமாகிய வாசுகி குலத்திலிருந்து நான்காகப் பிரிந்துசென்றவர் என்பது வரிப்பாடல்களின் சொல். ஓசையற்ற காலடிகளும், இமையாவிழிகளும், நாநுனி நஞ்சுமே நாகர்களின் இயல்பெனப் பாடின மலைப்பாடல்கள். பசுமையே இருளென ஆன காடுகள் அவர்களால் ஆளப்பட்டன. அங்கே அவர்களுக்காக ஏழுதலை பாம்புகளின் வடிவில் குலதெய்வங்கள் எல்லைகாத்தன. அக்காடுகளில் அவர்களின் மூச்சின் நஞ்சு நிறைந்த காற்று வீசியது. அவர்களின் பார்வை இலைநுனி பனித்துளிகளுடன் கலந்திருந்தது. அழிவற்றவர்கள் என்றும் வெல்லப்படாதவர்களென்றும் அவர்களைப்பற்றிப் பாடின தொல்கதைகள்.

கங்காவர்த்தத்திலும் ஏழுசிந்துக்களின் படுகைகளிலும் செறிந்த பெருங்காடுகளை ஆண்டது வாசுகியை மூதாதையாகக் கொண்ட வாசுகி குலம். மண்மறைந்த சரஸ்வதியின் ஊற்றுமுகத்தில் இருந்த நாகர்களின் தொல்நிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அத்திமரக்கிளையை நட்டு அதனடியில் போடப்பட்ட கருங்கல் பீடத்தில் வாசுகியை நாகர்குலத்து மூத்தோர் பன்னிருவர் சேர்த்து அரசமரச்செய்து ஈச்சையோலையால் ஆன நாகபட மணிமுடியைச் சூடி நாகர்குலத்தின் முதல் அரசராக ஆக்கினர். அவர் மைந்தன் நந்தனிலிருந்து எழுந்து வாசுகிப்பெருங்குலம் தழைத்தது. பேரரசர் வாசுகியின் நான்கு மகள்களான சுப்ரமை, மாலினி, பத்மினி, மண்டனை ஆகியோரின் வயிற்றில் நாகர்களின் நான்கு குலங்கள் பிறந்தன. சுப்ரமையின் மைந்தரிலிருந்து தட்சனை முதல்தெய்வமாகக் கொண்ட தட்ச குலம் தோன்றியது. மாலினியில் இருந்து ஐராவதகுலமும் பத்மினியில் இருந்து கௌரவ்ய குலமும் மண்டனையில் இருந்து திருதராஷ்டிரகுலமும் உருவாயின.

நந்தனின் கொடிவழி கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாகு, சரணன், கக்ஷகன், காலந்தகன் ஆகிய மாமன்னர்களின் நிரைகொண்டது. காடுகளில் அவர்களின் சொல் நின்றது. மண்சென்றபின் மலையுச்சிகளில் அவர் கல் நின்றது. கங்கையின் கரையில் அமைந்த கான்நகரான பிலக்ஷசிலை கங்கையின் கரையில் நாகபேரம் என்னும் மலைமேல் ஏழு அடுக்குகளாக அமைந்திருந்தது. முதல் அடுக்கைச்சுற்றி தேவதாருமரங்களை இணைத்துக்கட்டிய உயிர்மரக்கோட்டை இருந்தது. அம்மரங்களின் கீழே செறிந்த புதர்களில் நச்சுப்பல் கொண்ட நாகங்கள் வாழ்ந்தன. இரண்டாவது அடுக்கில் நாகர்குலத்து படைவீரர்களும் மூன்றாவது அடுக்கில் வேடர்களும் நான்காவது அடுக்கில் படைத்தலைவர்களும் ஐந்தாவது அடுக்கில் குலப்பாடகர்களும் ஆறாவது அடுக்கில் குலமூத்தார் இல்லங்களும் ஏழாவது அடுக்கில் அரண்மனையும் அமைந்திருந்தன.

செந்நிறமும் பச்சைநிற விழிகளும் கொண்ட வாசுகிகுலத்தவர் நாகர்களில் உயரமானவர்கள். வில்லுடன் சென்று நதிகளில்செல்லும் படகுகளில் திறைகொண்டு அரசுக்கருவூலத்தை நிறைத்தனர். நீரோடும் தேனோடும் இணையும் நாகநஞ்சு ஏழு கொலைநோய்களுக்குரிய சிறந்த மருந்து என்றனர் மருத்துவர். பொன்கொடுத்து நஞ்சுபெற்றுச்செல்ல மருந்துவணிகர்கள் தக்கைப்படகுகளில் பிலக்ஷசிலையின் எல்லைவரை வந்தனர். செந்நாகர் இமையாவிழிகளால் பிறர் நெஞ்சுள் சென்று அவர்களின் மொழியைக் கற்று அக்கணமே மறுமொழிசொல்லும் மாயம் அறிந்தவர்கள். தங்களுக்குள் நாவாலும் தங்கள் குடிகளுக்குள் முழவாலும் விலங்குகளிடம் கொம்பாலும் விண்ணாளும் தெய்வங்களிடம் இடியோசைகளாலும் உரையாடுபவர்கள்.

முடிசூடி மூதாதையர் அமர்ந்த கற்பீடத்தில் அமரும் அரசன் வாசுகி என்றே அழைக்கப்பட்டான். குலமாளும் வாசுகியின் பெருஞ்சிலை மரத்தாலும் அரக்காலும் மெழுகாலும் அமைக்கப்பட்டு குன்றின்மேல் அமைந்த பெரும்பாறை உச்சியில் நிறுவப்பட்டிருந்தது. பன்னிரு படம் விரித்து வாய்திறந்து நாபறக்க நிமிர்ந்திருந்த வாசுகியின் விழிகளுக்குள் எந்நேரமும் செந்தழல்கள் எரிந்தன. நாகச்சுருளுடலுக்குள் அமைந்த படிகள் வழியாக ஏறிச்சென்ற வீரர்கள் அவ்விழிகளுக்குள் அமைந்த எரிகலன்களில் ஊன்நெய் ஊற்றி எரியவிட்டனர். எரியெழுந்த புகை மேலிருந்த காற்றால் சுழற்றப்பட்டு திறந்த வாய்களினூடாக வெளிவந்தது. அனல்கக்கி விழி எரிய நோக்கும் வாசுகியை பிலக்ஷவனத்தின் உள்ளே நுழையும்போதே காணமுடிந்தது. அவ்விழிகள் தெரியாத எல்லைக்கு நாகர்கள் செல்லலாகாது என குலமுறைமை இருந்தது. கங்கைநீரலைப்பரப்பில் தெரியும் வாசுகியின் பெருஞ்சிலை விழிசுடர நெளிந்தாடுவதைக் கண்டு படகில்செல்லும் வணிகர்கள் கைகூப்பி வணங்கினர்.

வடக்கே இமையமலைச்சாரலில் இருந்தது தட்சகுலத்தின் தலைநகரமான நாகசிலை. மலையின் கரடிமூக்கென வானில் எழுந்த கூர்முனையின் மேல் மென்பாறைகளைக் குடைந்து ஒன்றன்மேல் ஒன்றாக அமைக்கப்பட்ட ஆயிரம் குகைவீடுகளாலும் அவற்றின் மேல் அமைந்த நூறு அறைகள் கொண்ட அரண்மனையாலும் ஆனது அந்நகர். மலைக்கழுகுகள் அன்றி பிற உயிர்கள் அணுகமுடியாத அந்நகரைச் சென்றடையவதற்கு மேலிருந்து இறக்கப்படும் நூலேணிகளன்றி வேறுவழியில்லை. தட்சநாகர்கள் மெல்லிய பட்டுச்சரடுகளை இரும்புக்கொக்கிகளில் கட்டி வீசி அதனூடாக சென்று காடுகளுக்குமேல் இறங்கும் கலையறிந்தவர்கள். அங்கே வாழும் நாகர்களை பறக்கும் நாகங்களின் வழிவந்தவர் என்றனர். அவர்கள் வெண்பளிங்கு நிறமானவர்கள். விரிந்த நீல விழிகள் கொண்டவர்கள்.

தட்சகுலத்தின் முதல் அரசர் சுப்ரமை தேவியின் மைந்தரான உபநந்தனின் கொடிவழியில் வந்த புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசோக்தன், ரபேணகன், உச்சிகன், சுரபன், பங்கன், பில்லதேஜஸ், விரோகணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமன், சுரோமா, மகாஹனு என்னும் அரசர்கள் நாகசிலையை ஆண்டனர். மூதாதையருக்கான படையல்களிடும் பன்னிரு குகைகளுக்குள் மலைச்சுண்ணம் பூசப்பட்ட சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் ஒளிரும் செவ்வைரங்கள் பதிக்கப்பட்ட விழிகளுடன் நாகபட மணிமுடி சூடி இடைக்குக் கீழே வளைந்து சுழித்த அரவுடலுடன் தேவியரை அணைத்தபடி அவர்கள் நின்று அருள்புரிந்தனர். எப்போதும் வெண்முகில் சூழ்ந்த மழைவில் சூடி அமைந்திருக்கும் நாகசிலையை இந்திரகீலம் என்று அழைத்தனர் பிற குலத்தவர். முகில்நகருக்கு இந்திரன் வான்வழியாக இறங்கிவந்து பலிகொண்டு செல்வதாக சூதர் பாடினர். வெண்நாகர்கள் இந்திரன் மைந்தர் என்று அறியப்பட்டனர்.

ஐராவத குலம் கிழக்கை ஆண்டது. பிரம்மபுத்ரையின் கரையிலும் அப்பால் மணிபூரக நாட்டிலும் செறிந்திருந்த நீலக்காடுகள் அவர்களின் நிலம். மாலினிதேவியின் குருதியில் வந்த சகரரின் மைந்தர்களால் ஆனது அம்மரபு. பாராவதன், பாரியாத்ரன், பாண்டரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மோதன், பிரமோதன், சம்ஹாதாபனன் என்னும் அரசர்களால் அவர்கள் தலைமுறைகள் தோறும் காக்கப்பட்டனர். அந்த மூதாதை அரசர்களின் பெயர்களை தங்கள் மைந்தர்களுக்கு இட்டு அவர்கள் இறப்பை வெல்லச்செய்தனர். கிழக்குநாகர்கள் குறுகிய மஞ்சள்நிற உடலும் மின்னும் மணிக்கண்களும் முழங்கும் குரலும் கொண்டவர்கள். வெண்ணிற நாகத்தை துதிக்கை எனக் கொண்ட வெள்ளையானை அவர்களின் நகரமான மணிபுரத்தின் முகப்பில் பெரும்பாறை ஒன்றின்மேல் வெண்சுண்ணச்சிலையாக முகக்கை தூக்கி நின்றிருந்தது. தங்கள் எல்லைக்குள் பிறர் எவரையும் கடத்தாத நெறிகொண்டவர்களான மஞ்சள் நாகர்களை பிறர் கண்டதே இல்லை. அவர்கள் சூதர்களின் கதைகளில் இறப்பற்றவர்களாக வாழ்ந்தனர்.

வேசரத்தில் கோதை முதல் கிருஷ்ணை வரையிலான காடுகளில் வாழ்ந்த நாகர்கள் மண்நிறத்தவர். கூர்மூக்கும் சிறுவிழிகளும் விரைவுகூடிய சிற்றுடலும் கொண்டவர்கள். கொப்பரைக்குடுவைகள் மேலேறி நீர்மேல் சறுக்கிச்செல்லவும் குழல்கொடிகளை வாயிலிட்டு மூச்சிழுத்தபடி நாளெல்லாம் நீருள் மூழ்கியிருக்கவும் பயின்றவர்கள். மென்மரம் குடைந்த சிறுபடகுகளில் அவர்கள் காடுகளுக்குள் சென்று வேட்டையாடி மீண்டனர். நாணல்களில் தங்கள் நச்சைத் தொட்டு தொடுக்கும் அம்புக்கலையால் அவர்கள் அனைவராலும் அச்சத்துடன் எண்ணப்பட்டனர். அசைவற்ற நீருள்ளும் நாகன் இருக்கலாம் என்று அஞ்சினர் நதிசெல்லும் வணிகர். தங்கள் திறைகளை நதிக்கரைப் பாறைகளில் வைத்து வணங்கிச்சென்றனர். கோதையிலும் கிருஷ்ணையிலும் செங்குழம்பு பூசிய ஐந்தலை நாகங்கள் அமர்ந்த திறைகொள்ளும் நாகநிலைகள் கொண்ட நூற்றெட்டு பாறைகள் இருந்தன. அவற்றை கொள்ளும் பதினெட்டு நாகர்குடிகள் நிலத்திலும் நீரிலுமாக வாழ்ந்தனர்.

நீர்நாகர் நதிக்கரைச்சேற்றுநிலங்களில் மூங்கில்கால்களில் எழுந்த சிற்றில்லங்களில் வாழ்ந்தனர். வாசுகியின் மகள் பத்மினியின் மைந்தரான பலவானின் குருதியில் பிறந்த ஏரகன், குண்டலன், வேணி, வேணீஸ்கந்தன், குமாரகன், பாகுகன், ஸ்ருங்கபேரன், துர்த்தகன், பிராதன், ராதகன் என்னும் அரசர்களால் செழித்தது அக்குலம். அவர்களின் தலைநகரமான நாகபுரம் கோதை சுழித்துச்சென்ற தீவொன்றில் அலையடிக்கும் நாணல்புல்லின் நுரைக்கு நடுவே சேற்றில் மிதக்கும் மூங்கில்தெப்பங்களின்மேல் அமைந்திருந்தது. கோதையின் பெருக்கில் எழுந்தும் அமிழ்ந்தும் அசையும் மூங்கில்மாளிகைகள் ஒன்றோடொன்று வடங்களால் பிணைக்கப்பட்டு ஒருநகராயின. அவ்வடங்கள் வழியாக நடந்து செல்ல அவர்களின் கால்கள் பயின்றிருந்தன. அவர்களின் மாளிகை நடுவே தனித்து மிதந்த தெப்பமாளிகையில் குலமூதாதை வாசுகியின் சிலை நாணல்பின்னி செய்யப்பட்டு நிறுவப்பட்டிருந்தது. அதைச்சூழ்ந்து அவர்களின் குலமன்னர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மூங்கில் என நடப்பட்டு அவற்றின் முனைகளில் அந்திதோறும் மீன்நெய் ஊற்றிய சிற்றகல் ஏற்றப்பட்டது.

தென்னாகர்கள் என்றழைக்கப்பட்ட திருதராஷ்டிரகுலத்தவர் இரண்டு சிறுகுலங்களாக பிரிந்திருந்தனர். தென்தமிழ் நிலத்தின் மலைக்காடுகளில் வாழ்ந்த மலைநாகர் ஓயாது மழைபொழியும் இருண்டகாடுகளுக்குள் ஆடையற்ற உடலெங்கும் தேன்மெழுகும் அரக்கும் பூசி நச்சுநா கொண்ட அம்புகளுடன் தழைப்புக்குள் இலைப்பூச்சிகள் போல மறைந்து வாழ்ந்தனர். அவர்கள் வாழும் காடுகளில் புக முடிகொண்ட மூவேந்தரின் திறல்கொண்ட படைகளும் அஞ்சின. அவர்களுக்கு மூன்றுயுக காலம் மூவேந்தரும் வேளிரும் குறவர்குலங்களும் திறைகொடுத்தனர். திறைகொண்ட செல்வத்தால் அவர்கள் அமைத்த முடிநாகம், அரவுக்கோடு, நாகநிரை ஆகிய மூன்றுநகர்களும் ஓங்கி வளர்ந்தன. அவற்றை ஆண்ட அரசர்கள் பொன்னணிந்து பட்டுசுற்றி மணிபதித்த முடிசூடி அரியணை அமரத்தலைப்பட்டனர். மூவேந்தரும் சிற்றரசர்களும் அவர்களிடம் மகற்கொடை கொள்ள மலையிறங்கி வந்து தொல்தமிழ்க்குடிகளுடன் இணைந்தனர். அவர்கள் பதினெட்டு குடிகளாகவும் நூற்றியெட்டு கூட்டங்களாகவும் பிரிந்து வளர்ந்து தொல்தமிழ் நிலமெங்கும் பரவினர். குலங்கள் இணைந்து குடிகள் பிரிந்து புதிய குலங்கள் என்றாகி பரவ நாகன் என்னும் பெயர் மட்டுமே அவர்களிடம் பின்னர் எஞ்சியது. வில்லுக்கு நிகராக சொல்லும் பயின்று பாணரும் புலவரும் ஆயினர்.

பிறர் அறியாமல் வாழ்ந்தவர்கள் கடல்நாகர்கள். குமரிநிலத்திற்கும் தெற்கே கடலுக்குள் சிதறிக்கிடந்த நூற்றெட்டு சிறுதீவுகளில் அவர்களின் நாகநாடெனும் அலையரசு அமைந்திருந்தது. ஓங்கிய கரிய உடலும் ஒளிவிடும் பற்களும் வெண்சோழி விழிகளும் கொண்டவர்கள். நாணல்களைச் சேர்த்து செய்த படகுகளில் ஏறி ஆர்த்தடிக்கும் அலைகளில் தாவி தீவுகள் தோறும் சென்றனர். கடல்களில் மீன்பிடிக்கவும் தென்னக விரிநிலத்தில் இறங்கி கதிர்கொய்து கொண்டுவந்து தரவும் கடற்பறவைகளை பழக்கியிருந்தனர். அவர்களின் தலைநகரம் நாகநகரி மணிபல்லவத் தீவில் அமைந்திருந்தது. நாவலந்தீவிலும் சாவகத்தீவிலும் சம்புத்தீவிலும் அவர்களின் துணைநகர்கள் அமைந்திருந்தன. அவற்றில் நாகபடம் பொறிக்கப்பட்ட அரவுநாபோல நுனிபிளந்து பறக்கும் நீண்ட கொடிகள் உயர்ந்த குன்றுகள் மேல் எழுந்த கொடிமரங்களில் எழுந்திருந்தன. அவற்றைக் கண்டதுமே பாய்தாழ்த்தி வெண்கொடி ஏற்றிய படகுகள் கரையணைந்து திறையளித்துச் சென்றன.

திருதராஷ்டிர குலத்து மலைநாகர்கள் சங்குகர்ணன், பிடாரகன், குடாரமுகன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரகாசகன் ,சகுனி, தரி, அமாகடன், காமடகன், சுஷேணன், மானசன், அவ்யயன், அஷ்டவக்ரன், கோமலகன், ஸ்வஸனன், மௌனவேபகன், பைரவன், முண்டவேங்காங்கன், பிசங்கன் என்னும் பேரரசர்களால் ஆளப்பட்ட புகழ்கொண்டவர்கள். கடல்நாகர்கள் உதபாராசன், ரிஷபன், வேகவான், பிண்டாரகன், மகாஹனு, ரக்தாங்கன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாஸகன், வராஹகன், விரணகன், சுசித்ரன், சித்ரவேகிகன், பராசரன், தருணகன், மணிகந்தன், ஸ்கந்தன், ஆருணி என்னும் மாமன்னர்களின் நினைவைப்போற்றினர்.

நாகர்குலமே தொல்மக்கள் என்பதனால் பாரதவர்ஷம் முன்பு நாகநாடென்றே அழைக்கப்பட்டது. அத்திமரம் எங்குள்ளதோ அங்கெல்லாம் நாகமூதாதையரை அரவுடலும் எழுபடமும் கொண்டவர்களாக நிறுவி வழிபட்டனர். ஏழும் ஐந்தும் மூன்றும் ஒன்றுமென தலையெழுந்த நாகமூதாதையர் அத்தி, ஆல், அரசமரத்தடிகளில் அமர்ந்து ஆள்வதனால் அழியா வளம்கொண்டதாகிறது இந்தமண். வாழ்த்தி எழுந்த கைபோன்ற அவர்களின் படங்களால் பொன்றா பேரருள் பெறுகிறது இது. இந்நிலமும் நிலம் வாழும் மானுடரும் மானுடர் கொண்ட நெறிகளும் நெறிகளை ஆளும் தெய்வங்களும் வாழ்க!

இந்திரப்பிரஸ்தத்தின் இசைக்கூடத்தில் பரிணாமர் எனும் சூதர் பாடிமுடித்ததும் அவரது விழிகளைத் தொட்டு பிரதக்த்வர் என்னும் சூதர் சொல்லெடுத்து மொழிதொடுத்து மேலே பாடலானார். “அவையீரே கேளுங்கள். அன்னையே, ஆளும் தெய்வங்களே உங்களுக்காக இச்சொற்கள். என் வீணையைத் தொட்டு வாழ்த்துங்கள். பாரதவர்ஷத்தின் நூற்றெட்டு நாகர்குலத்துத் தலைவர்களும் ஒருங்கு கூடும் பெருவிழவு பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை கபிலகேதாரம் என்னும் மலைநகரில் நடந்து வந்தது. காடுகளைக் கடந்து மலைகளில் ஏறி அவ்விழவுக்குச் சென்ற நூற்றெட்டு நாகசூதர்களில் ஒருவனின் சொல்லில் இருந்து சொல்கொண்டு நான் சொல்லும் இக்கதையை அறிக இப்பேரவை!”

ஆயிரமாண்டுகளுக்கு முன்பு நாகர்களின் குலகுருவான கபில மாமுனிவர் ஊழ்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது தன் கையில் ஒரு மணல்பரு இருப்பதைக் கண்டார். அக்கணம் தெய்வங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதால் அவர் உள்ளம் திறந்துகொண்டது. அப்பரு பிறிதொரு பருவின் பாதி என்று உணர்ந்தார். தன் விழிகளில் கூடிய தவவல்லமையால் மறுபாதியை கண்டடைந்தார். அவை ஒன்றையொன்று முழுமையாக்குவதை அறிந்தபோது அவையிணைந்த பருவோ பிறிதொன்றின் பாதியாக இருந்தது. மேலும் இரு பருக்களை எடுத்து அவற்றுடன் பொருத்தியபோது அவை பிழையின்றி இணைந்துகொண்டன. மீண்டும் மின்னிய அறிதல்பெருங்கணத்தில் அவர் அங்கே மணலாகக் கிடந்த பெரும்பாறையை கண்டார். அடுத்த ஒளிக்கணத்தில் அப்பாறை அமைந்த மலையை கண்டார். அம்மலை அமைந்த புடவியை அப்புடவி சென்றமைந்த ஒருமையைக் கண்டு அறிதலே ஆகி அங்கு அமர்ந்திருந்தார்.

பின்னர் எழுந்து விண்ணை நோக்கி ஒன்றான பரு பலவான வெளியென ஆனதன் வழி எது என வினவினார். அவ்வினவை ஏந்தி இரு மாணவர்களுடன் மலையேறிச்சென்றார். சிந்தியும் சிதறியும் பரவியும் பொங்கியும் எங்குமென இருக்கும் அனைத்திலும் அமைந்த ஒருமையை தன் ஊழ்கமறிந்த உள்ளக்குவைக்குள் நிறுத்தி நோக்க விழைந்தார். விழியறியும் பன்மையை இமைமூடி அகற்றினார். நாக்கும் மூக்கும் தோலும் அறிந்த பன்மைகளை உள்ளத்தை விலக்கி அகற்றினார். செவியறியும் ஒலிகளோ அவரைச் சூழ்ந்து அதிர்ந்தன. விண்ணென புவியென நிறைந்த பருவெளி ஒலியென தன்னை ஆக்கி மொழியெனக் கனிந்து எண்ணமென மாறி உள்ளும் நிறைந்திருப்பதை கண்டார். ஒலியின்மைக்கென தேடித்தேடி சென்றார்.

மலைமுகட்டு அடர்காட்டில் அவர் கண்ட வேடன் ஒருவன் ஒலியே அற்ற குளிர்காடு ஒன்று மலைக்குமேல் இருப்பதாகச் சொன்னான். அவன் அதைக் கண்டதில்லை. அவன் மூதாதையரும் கண்டதில்லை. அன்னையர் சொன்ன கதைகளின் வழியாக சொல்லில் வாழ்ந்தது அந்த இடம். திரியர் குலத்தவனாகிய அவ்வேடன் முனிவரை வணங்கி தன் மூதன்னையிடம் அழைத்துச்சென்றான். விழியும் செவியும் மங்கி உடல்சூம்பிப் போயிருந்த அன்னை என்றோ ஒலித்த சொற்களால் ஆன சித்தம் கொண்டிருந்தாள். அவளிருந்த சிறுகுடில் சமஸோத்ஃபேதம் என்னும் வட்டமான குளத்தின் அருகே நின்றிருந்த அத்திமரக்கூட்டத்தின் நிழலில் இருந்தது. அத்திமரத்தடியில் திரியர் குலத்து நூற்றெட்டு மன்னர்களின் நடுகற்கள் நின்றிருந்தன. மரங்களின் வேர்கள் கவ்விய கற்பீடத்தில் மூதன்னை திரியை ஐந்து மைந்தரை மடியில் ஏந்தி அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பின்னால் குலதெய்வமான குரோதவஸை ஏழுதலை படம் எடுத்து கல்லில் எழுந்த அலையென நின்றிருந்தாள்.

சமஸோத்ஃபேதம் என்பது விண்ணுலகிலிருக்கும் முதலன்னை திரியையையும் அவளைப்பெற்ற பெருநாகமான குரோதவஸையையும் சென்றடையும் வாயில் என்றாள் மூதன்னை. நீர்த்திரையால் போர்த்தப்பட்டு ஆழத்தில் பனிக்கதவால் மூடப்பட்டிருக்கும் அப்பெருவாயிலைக் கடந்து சென்றவர்கள் உண்டு என்றாள். அவள் சொற்கள் உண்மைக்கும் பொய்மைக்கும் அப்பாலிருக்கும் முழுமையிலிருந்து எழுந்தவை என்று உணர்ந்த கபிலர் தன் இருமாணவர்களிடம் தன்னைத் தொடரும்படி சொல்லிவிட்டு சமஸோத்ஃபேதத்தில் குதித்தார். அவரது இருமாணவர்களில் மகாநாகன் என்பவன் மட்டுமே உடன் குதித்தான். கோவு என்பவன் கரையிலேயே நின்றுவிட்டான்.

நீருள் புகுந்த கபிலர் யோகவல்லமையால் மூச்சை அடக்கி உள்ளே வெண்ணிறப்பெருங்கதவாக மூடியிருந்த பனியை உடைத்து நூறு நாழிகை தூரம் இருண்ட கரிய பிலம் வழியாக சென்றார். அதன் பதினெட்டு வளைவுகளிலும் அவர் இளமையை அடைந்தபடியே சென்றார். மறுபக்கம் நீரின் திரைவிலக்கி குழவியாகப் பிறந்து வந்தார். அவருடன் வந்த மகாநாகன் ஒரு கருநாகக்குழவியானான். அங்கே அவர்கள் சேற்றுக்கரையில் உழன்று வளர்ந்து எழுந்தமர்ந்தனர். கால்கள் கொண்டு காட்டை அறிந்தனர். அந்த கருநீர்ச்சுனையின் கரையில் நூற்றெட்டு முதிய அத்திமரங்கள் நின்றன. அதனருகே முதலன்னை குரோதவஸையின் கற்சிலை படம்விரித்து ஈரப்பாசி மூடி நின்றிருந்தது. அதைச்சுற்றி கைவிடப்பட்ட மூதாதையரின் நூற்றெட்டு நடுகற்கள் மண்ணில் புதைந்து நின்றிருந்தன.

முற்றிலும் ஓசையற்றிருந்தது அந்தக் காடு. பாறைகளை தாவிக்கடந்த நீரோடைகள் நாகங்களைப்போல் ஓசையற்றிருந்தன. மரக்கூட்டங்களைக் கடந்து சென்ற காற்று வெறுமொரு எண்ணம்போலிருந்தது. அங்கே பறவைகள் விழிகளால் பேசிக்கொண்டன. புழுக்கள் உடலசைவுகளால் உரையாடின. முற்றமைதியில் அமர்ந்த கபிலர் அங்கே நூறாண்டுகாலம் தவம் செய்தார். முடிவிலாப்பேரிருள் இதழிதழாக விரிய அதன் மையத்தில் எழுந்த சுழியில் சென்று சென்று சென்று சென்று தன்னை இன்மையென்றாக அறிவதற்கு முந்தைய கணத்தில் அவர் அவ்விருளின் சுழி என்பது மூன்று மாபெரும் நாகங்கள் ஒன்றை ஒன்று வால்விழுங்கி வளைந்து சுழல்வதேயாகும் என்றறிந்தார். ஒருகணம் சுழல்நின்று அவை வெண்மை சிவப்பு கருமை என தெரிந்தன. மீண்டும் சுழன்று விரைவில் உருக்கரைந்து கரியசுழியென்றாயின.

நூறாண்டுகளுக்குப்பின் விழித்தெழுந்த கபிலர் தன்னருகே நாகவடிவமாக காவல் நின்றிருந்த மகாநாகனிடம் சாங்கியத்தின் முதல் தத்துவத்தை சொன்னார். தான் கண்ட விண்நாகங்கள் வினதையும் கத்ருவும் குரோதவஸையும் என அறிந்தார். சத்வமும் ராஜஸமும் தமஸும் ஒன்றை ஒன்று நிறைக்கும் பெருஞ்சுழல்விரைவை அவர் மூலப்பிரகிருதி என்றழைத்தார். காலமின்மையில் தங்களைத் தாங்களே முழுமையாக்கி நிறைந்திருந்த பேரன்னையர் விலகி விரிந்து பரவி ஒருவரை ஒருவர் விழுங்கமுயலும் லீலையே புடவிநிகழ்வு என்றார். சாங்கியஞானத்தின் முதல்நூலை மகாநாகன் தன் நினைவில் ஒவ்வொரு சொல்லாக இருத்திக்கொண்டான். பின்னாளில் அவன் அதை கபிலபஞ்சராத்ரம் என்னும் நூலாக யாத்தான். அவன் மாணவநிரையினர் அதைக்கற்று மேலெடுத்தனர்.

நூல் சொல்லி முடித்தெழுந்த கபிலர் இறங்கி நீராடிய அச்சுனைக்கு வினசனதீர்த்தம் என்று பெயர் என மாநாகன் தன் ஊழ்கத்திறத்தால் அறிந்தான். அதைச்சூழ்ந்த காடு நாகோத்ஃபேதம் என்று பெயர் கொண்டது. முன்னாளில் அங்கே இருவகை நாகங்கள் வாழ்ந்தன. நிலத்துக்குமேல் வேட்டையாடி வாழ்ந்த படமெடுக்கும் கருநாகங்கள் ஒருகணத்துச் சினத்தால் வளைகளுக்குள் சேற்றுயிர் உண்டுவாழ்ந்த படமிலிப் பாம்புகளை முற்றிலும் கொன்றொழித்தன. படமிலிப்பாம்புகள் இறக்கையில் தரையை மும்முறை முத்தமிட்டு தீச்சொல்லிட்டன. அவர்கள் நாதொட்ட மண்ணிலிருந்து நீலநிற இறகுகள் கொண்ட ஈக்களும் பொன்னிறச்சிறகுகள் கொண்ட கொசுக்களும் வெள்ளிச்சிறகுகள் கொண்ட வண்டுகளும் எழுந்து பல்லாயிரம் கோடியென பெருகி காட்டை நிறைத்தன. காட்டிலிருந்த அத்தனை உயிர்களையும் அவை அழித்து தாமுமழிந்தன.

அக்கருநாகங்களில் தக்‌ஷை என்னும் அன்னை தன் ஐந்து மைந்தர்களையும் ஐந்து முட்டைகளாக வாயில் கவ்வியபடி நடுங்கிக்கொண்டிருந்தாள். அவளைக்கண்ட மலைக்கழுகு ஒன்று கீழிறங்கி தன் உகிர்களால் கவ்வி வானில் எழுந்தது. முகில்களில் சுழன்று தன் கூட்டை நோக்கிச் செல்லும்போது விண்ணில் வெண்ணிறயானைமேல் ஏறி உலாவந்த இந்திரன் அதைக் கண்டான். உயிர்வலியுடன் நெளிந்த தக்‌ஷை ‘எந்தையே நீயே காப்பு’ என்று கூவினாள்.

அடைக்கலக் குரல்கேட்ட இந்திரன் தன் வஜ்ராயுதத்தைச் சுழற்றி அக்கழுகின் கால்களை துண்டித்தான். மின்னலில் கருகிய கழுகு காட்டை நோக்கி விழ நெளிந்தபடி இறங்கிய தக்‌ஷை தன் ஐந்து முட்டைகளுடன் மலையுச்சியில் நீட்டி நின்ற கரடிமூக்கு என்றழைக்கப்பட்ட பெரும்பாறைமேல் விழுந்தாள். அங்கிருந்த பொந்து ஒன்றில் புகுந்துகொண்டு அவள் உயிர்தப்பினாள். அம்மலைமுடியை இந்திரன் தன் வெண்முகில்கூட்டங்களால் மூடினான். தன் ஏழுவண்ண வில்லை காவலுக்கென ஊன்றிவைத்தான். இடைவிடாது பொழிந்த மழையில் மீன்களும் சிற்றுயிர்களும் ஒழுகிவந்து அன்னைக்கு உணவாயின.

அவளுடைய ஐந்து முட்டைகளில் இருந்து ஐந்து மைந்தர்கள் வெளிவந்தனர். தக்‌ஷன், தர்மன், காமன், காலன், வாசு என்னும் ஐந்து மைந்தர்கள் அந்தப்பாறையின் குகைகளில் ஆடி வளர்ந்தனர். மலைமுடிகளில் கூடுகட்டவந்த செங்கழுகுகளின் சிறகுகள்மேல் ஏறிக்கொண்டு அவர்கள் காடுகள் மேல் பறக்கக் கற்றனர். காடுகளிலிருந்து தங்கள் துணைவியரைக் கொண்டுவந்து மலைமுடிமேல் குடிவைத்தனர். விண்ணவர்கோன் புரந்த வெண்முகில்நகரத்தின் பறக்கும் நாகங்களை தேவர்களும் கின்னரர்களும் கந்தர்வர்களும் தங்களவர் என்றே எண்ணினர்.

கபிலர் அமர்ந்த அந்த வேர்ப்படித்துறையை கபிலகேதாரம் என்று நூற்றெட்டு குடி நாகர்களும் அழைத்தனர். அந்த தீர்த்தத்தில் அப்படித்துறையில் இறங்கி நீராடுபவர்களுக்கு அணிமா என்னும் வித்தை வயப்படும் என்று நாகசூதர் பாடினர். ஐந்து நாகர்குல பெருமன்னர்களும் இணைந்து அங்கே பிலக்ஷவனத்தில் குரோதவஸையின் ஆலயத்தருகே கபிலருக்கு ஒரு கல்லாலயம் அமைத்தனர். அங்கே செல்வதற்கான மலைவழிப்பாதை பிறந்தது. நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நூற்றெட்டு நாகர்குடிகளில் இருந்தும் தலைமூத்த நாகர்கள் அங்கே கூடி தங்கள் குலகுருவான கபிலருக்கு நீரளித்து மலரளித்து சொல்லளித்து முறைமைசெய்யும் மரபு உருவாகியது. கபிலகேதாரப் படிக்கட்டில் நாகர்குலமூத்தார் தங்கள் மூதாதையரின் எலும்புகள் கொண்ட குடங்களுடன் இறங்கி மூழ்கி எழும் சடங்கை கும்பமேளா என்றனர் நாகசூதர்.

துறவுபூண்டு ஆறாண்டுகாலம் ஆடை அகற்றி கடுநோன்பிருந்தபின் தங்கள் குடிகளிடமும் குலத்திடமும் விடைபெற்று தோளிலேந்திய மண்குடங்களுடன் வடக்குநோக்கி நடந்து ஆவணிமாதம் ஐந்தாம் வளர்பிறைநாளில் கபிலகேதாரத்தில் கூடினர். வாசுகியும், தட்சனும், அனந்தனும், கார்க்கோடகனும், காளியனும் இணைந்து சென்று கோரியதற்கேற்ப தேவசிற்பி மயன் அங்கே எழுப்பிய மாபெரும் கல்லாலயம் கபிலவாஸ்து என்றழைக்கப்பட்டது. அதன் விரிந்த பெருங்கூடத்தில் உடலெங்கும் சாம்பல்பூசி முப்பிரி சூலமும் சடைமுடியும் இமையாவிழியும் நச்செழும் நாவுமாக வந்து குழுமும் நாகர்குலத் தந்தையர் கூடி கபிலமாமுனிவரை வாழ்த்தினர். அங்கிருந்து படியிறங்கிச்சென்று நீராடி வந்து இன்விருந்து உண்டு மகிழ்ந்தனர்.

இறுதியாக நிகழ்ந்த கபிலவாழ்த்து நாளுக்காக திருதராஷ்டிரகுலத்தைச் சேர்ந்த ஆருணி என்னும் முதுமூதாதை கங்கையின் கரைநகர் ஒன்றுக்கு படகில் வந்திறங்கி குனிந்து நீர்தொட்டு தலையில் வைக்கையில் நீலநீர்த்தெளிவின் அடியில் கிடந்த ஆறு எலும்புத்துண்டுகளை கண்டார். நீரில் குதித்து மூழ்கி அவற்றை அள்ளி எடுத்து கரைசேர்ந்தார். அவை எரிமாளிகையில் உயிர்துறந்த நாகர்குலத்து அன்னையும் ஐந்து மைந்தருமென உணர்ந்தார். அவர் கையில் வெள்ளெலும்பாக இருந்த அன்னை விம்மியழுது ‘வஞ்சம் என்றுமுள்ளது மைந்தா’ என்றாள்.

நூல் ஏழு – காண்டவம் – 3

ஏழுலகங்களையும் தாங்கும் தலையை
இருள் வடிவாகிய உடலை
விண்மீன்களென மின்னும் விழிகளை
முடிவிலியின் கை மோதிரத்தை
இன்மையின் செவிக்குண்டலத்தை
அண்டம் படைத்த அன்னையின்
சிலம்புவளையத்தை
வணங்குக!

வாசுகி துதி

அருவின் அனல்கொண்டு பருவெளியை சமைத்த பிரம்மனின் நான்கு கரங்களெனத் திகழ்பவர்கள் மரீசி, அங்கிரஸ், அத்ரி, கிருது ஆகிய பிரஜாபதிகள். பிரம்மன் கால்களே புலகனும் புலஸ்தியனும். நாக்கு சரஸ்வதி. பிரம்மனின் சொல்லமைந்த மூச்சே கசியப பிரஜாபதி. விண்ணில் நிறைந்து மண்ணில் பொழிந்து உயிர் என விளைந்த கசியபர் முதற் பிரஜாபதி தட்சனின் பதின்மூன்று மகள்களை மணந்தார். அதிதி, திதி, தனு, அரிஷ்டிரை, சுரசை, கசை, சுரபி, வினதை, தாம்ரை, குரோதவஸை, இரா, கத்ரு, முனி என்னும் அப்பெண்களிலிருந்து மண்ணிலும் விண்ணிலும் உள்ள அத்தனை உயிர்க்குலங்களும் பிறந்தன.

அதிதியில் இருந்து ஒளிரும் உடல்கள் கொண்ட ஆதித்யர்கள் பிறந்தனர். விஷ்ணு, சுக்ரன், ஆரியமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், சவிதா, மித்ரன், வருணன், அம்சன், பகன் என்னும் பன்னிரு ஆதித்யர்களில் இருந்து ஆதித்யகோடிகள் எழுந்து விண்ணை நிறைத்தனர். அவள் இட்ட இரண்டாவது முட்டையில் இருந்து அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், பிரத்தியூடன், பிரபாசன் என்னும் எட்டு வசுக்கள் பிறந்தனர். திதியில் இருந்து தைத்யர்கள் பிறந்தனர். ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் பிறந்த தைத்யகுலம் ஏழுலகங்களையும் ஆண்ட புகழ்கொண்டது. தனுவிலிருந்து தானவர்கள் பிறந்தனர். சுரபியிலிருந்து பதினொரு ருத்ரர்கள் பிறந்தனர். வினதை கருடனைப் பெற்றாள். கத்ரு பெற்றவையே உலகங்களைத் தாங்கும் உலகத்தை ஆளும் பெருநாகங்கள்.

கத்ருவின் இளையவள் பெயர் குரோதவஸை. பன்னிரண்டாயிரம் கோடி இருட்சுருள்களாக விண்ணை நிறைத்துக்கிடந்த நாகம் அவள். அவளுடைய செவ்விழிகள் மேலைவானில் இரு எரிவிண்மீன்களாக நின்றன. அவளுடைய மூச்சில் எழுந்த அனலின் புகை பல்லாயிரம்கோடி செம்முகில்களாக வானில் படர்ந்திருந்தது. அவளுடைய சீறல் இடித்தொடர்களாக மேற்குத்திசையிலிருந்து எழுந்து வெளியில் பரவிச்சென்றது. அணையாத பெருஞ்சினமே அவள். அன்னையின் முட்டையிலிருந்து எழுந்ததுமே தன் உடல்சுருளை தான் நோக்கி சினம்கொண்டு சீறி அதைத்தீண்டி கருகியமையால் அப்பெயர் அவளுக்கு இடப்பட்டது. பிறந்தநாள்முதல் தன்னை எவரும் தொட அவள் ஒப்பியதில்லை. அவள் பத்திகள் எங்கும் தாழ்ந்ததில்லை.

அவள் தமக்கையரிடமிருந்து கசியபர் அவளைப்பற்றி அறிந்தார். நஞ்சு ஒழுகும் நதி என்று அவளை சொன்னார்கள். தன்னை தான் நோக்கினாலே சினம்கொள்பவள். தனக்குமேல் வெட்டவெளியன்றி பிறிதைச் சூடாத தருக்கு கொண்டவள். அவளை அணுகாதொழிக என்றனர். அவரோ அவளுடைய அப்பெருஞ்சினம் கண்டே காதல்கொண்டார். அவரைக் கண்டதும் வெருண்டு புயலில் கடல் அலைகளெழுவதுபோல தன் ஆயிரம் பத்திகளை விரித்து நாக்குகள் பறக்க விழிகள் கனல அவள் சீறியபோது சிரித்தபடி கைநீட்டினார். பாய்ந்து அவள் அவர் கைகளைக் கொத்தி தன் நஞ்சை அவருக்குள் செலுத்தினாள். அதன் வெம்மையில் எரியுற்ற இரும்பென அனலுருவாகி உருகி வழிந்தோடிய கசியபர் தானுமொரு நாகமானார். அவள் அடங்கா சினத்துடன் அவர் உடலை வளைத்து இறுக்கி சீறி கொத்தக்கொத்த அம்முத்தங்களை ஏற்று கூசிச்சிரித்து உடல்நெளித்து வளைந்தெழுந்து அவர் மகிழ்ந்தார். கொத்திக்கொத்திச் சலித்து நாவிலிருந்த நஞ்சனைத்தையும் இழந்து அவள் தளர்ந்தபோது அவளுடைய பத்திகளை ஒன்றன்மேல் ஒன்றாக அழுத்தி அதை தன் உடற்சுருளால் கவ்விச் சுற்றி இறுக்கிக்கொண்டார். அவளை முகம்சேர்த்து அவள் எரிநாக்குகளை தன் நாக்குகளால் பிணைத்தார்.

அவள் ஆயிரம் வாய்களால் சீறி அவருள் திமிறி நெளிந்தாள். அவரைத் தழுவி வழுக்கி இறங்கி அவர் வாலைக்கவ்வி விழுங்கலானாள். அவர் நகைத்தபடி அவள் வாலைக்கவ்வி தான் விழுங்கினார். ஒருவரை ஒருவர் விழுங்கியபடி அவர்கள் கோடானுகோடி காலம் காமம் கொண்டாடினர். இருளும் ஒளியுமென ஒருவரை ஒருவர் நிறைத்தபடி விண்நிறைத்துக்கிடந்தனர். அவளுக்குள் அவரது கனவுகள் இறங்கிச்சென்றன. உயிர்துடிக்கும் விதைகள் சேற்றுப்பரப்பை என அவள் அடிவயிற்றை கண்டுகொண்டன. சினம் எரிந்தணைந்து தனிமையாகி பின் வஞ்சமென்றாகி அவளுக்குள் நிறைந்தது. ஆயிரம் யுகங்கள் தன் வஞ்சத்தின் அனல் தாளாமல் விண்வெளியில் நிலையழிந்து புரண்டுகொண்டிருந்தாள். உடல்திறந்து அவள் இட்ட முட்டைகளில் இருந்து பத்து கரியமகள்கள் எழுந்தனர். மிருகி, மிருகமந்தை, ஹரி, பத்ரமதை, மாதங்கி, சார்த்தூலி, ஸ்வேதை, சுரபி, சுரசை, கத்ரு என்னும் பதின்மரும் வளர்ந்து கன்னியரானார்கள். அன்னையின் வஞ்சம் அவர்களில் மைந்தராக முளைத்தெழுந்தது. அவர்களிடமிருந்து பறப்பவையும் நடப்பவையும் தாவுபவையும் என அனைத்து உயிர்களும் பிறந்தன.

குரோதவஸையின் உள்ளே கூடியெழுந்த சினம் பறவைகளில் அலகுகளும் உகிர்களும் ஆகியது. விலங்குகளில் கொம்புகளும் கோரைப்பற்களும் என எழுந்தது. தேள்களில் கொடுக்குகளும் பூச்சிகளில் முடிகளுமாகியது. அள்ள அள்ளக் குறையாத நச்சுக்கலமென அவள் உள்ளத்திலிருந்து அவை எழுந்துகொண்டே இருந்தன. ஆயிரம்யுகங்கள் கடந்து தன் வஞ்சம் முளைத்துப்பெருகிய உயிர்க்குலங்களை குனிந்து நோக்கிய குரோதவஸை பெருமூச்சுடன் கண்மூடி சற்றே புரண்டுபடுத்தாள். அப்போது தன்னுள் அதேயளவுக்கு நஞ்சு எஞ்சியிருப்பதை கண்டாள். மீண்டும் சினந்தெழுந்து வால் சுழற்றி ஓங்கியறைந்து இடியோசை எழுப்பினாள். அவளுடைய எஞ்சிய சினமனைத்தும் அவள் இறுதிமகள்களில் குழவிகளாகியது. சுரசை நாகங்களை ஈன்றாள். கத்ரு பத்திவிரிக்காத பாம்புகளை ஈன்றாள். இருள் விழுதுகளென நெளிந்த அவற்றைக் கண்டு குரோதவஸை தனக்குள் புன்னகைத்து “என்றுமிருங்கள்” என்று சொன்னாள். அவள் வாழ்த்தொலி நான்கு திசைகளிலும் இடியென எழுந்தது. அவள் புன்னகை மின்னலென ஒளிவிட்டு அமைந்தது.

மண்ணில் பெருகிய பாம்புகளில் சுரசையின் மைந்தர் தருக்கி எழும் ஆணவம் கொண்டிருந்தனர். அவ்வாணவத்தையே நஞ்செனத் திரட்டி நாவு என கொண்டிருந்தனர். உடல்சுருட்டி எரிகுளமாக்கி நடுவே தழலெனத் தலைதூக்கி நாபறக்க நின்று எதிரியை நேருக்குநேர் நோக்கினர். சீறி மும்முறை தலைதிருப்பி மண்ணில் கொத்தி எச்சரித்தபின் சவுக்கின் சொடுக்கென சுழன்று வந்து நஞ்சூறிய நெடும்பல்லால் கொத்தி யானைகளையும் கருகச்செய்தனர். அவர்களில் ஊறியிருந்தது ரஜோகுணம். கத்ரு பெற்றவர்கள் தமோகுணம் நிறைந்தவர்கள். உதிர்ந்த கொடிபோல மண்ணில் புதைந்த வேர்போல அவர்கள் சருகுகளுக்குள் அசைவழிந்து காலமிழந்து படுத்திருந்தனர். அவர்களின் தாடைகள் மண்ணிலிருந்து எழுவதேயில்லை. ஆனால் மண்ணில் நடப்பவற்றை எல்லாம் தங்கள் கட்செவியாலேயே அறிந்திருந்தனர். காத்திருத்தலையே கடுநஞ்சாக்கி கரந்திருந்தனர். குழந்தையின் விரல்போல தொட்டு நஞ்சு செலுத்தினர். கொத்துவது தெரியாமல் கொத்தி தொடர்வது அறியாமல் தொடர்ந்து விழுந்தபின் வந்து கவ்விக்கொண்டனர். ஓசையின்றி விழுங்கி மீண்டும் புதருக்குள் சுருண்டு காத்திருந்தனர். குரோதவஸையின் சினமே நாகங்கள். அவள் வஞ்சமே பாம்புகள்.

ஆணவ வடிவான நாகங்களே பாம்புலகை ஆண்டன. அவற்றால் தீண்டப்பட்டாலும் உயிர்கள் அவற்றை வணங்கின. ஒளிரும் சிற்றோடையென அவை நெளிந்தோடும் அழகை குரங்குகள் மரங்களில் அமர்ந்து நோக்கி மகிழ்ந்தன. சுருள்நடுவே எழுந்த அவற்றின் படத்தை தங்களை வாழ்த்த எழுந்த கை என எண்ணின யானைகள். கால்களில்லாமல் விரையும் அவற்றை தொடுவானத்தின் வில்லால் ஏவப்பட்ட அம்புகள் என மதித்தன மான்கள். பாம்புகளோ அனைவராலும் வெறுக்கப்பட்டன. மண்ணின் புண்களில் ஊறிய சீழ். ஈரச்சருகுக்குள் காடு கரந்துவைத்திருக்கும் கொலைவாள். உதடுகளுக்குள் உறைந்திருக்கும் ஓர் இழிசொல். ஆணவம் மண்மீதெழ முடியும். வஞ்சமே மண்ணுக்குள் ஊறிப்பரவி நிறையும் வல்லமைகொண்டது. நாகங்கள் நூறென்றால் பாம்புகள் பல்லாயிரமெனப்பெருகின. அவை காட்டின் நரம்புகள் என எங்கும் பரவி ஒலிகாத்து உடல் கூர்ந்து கிடந்தன.

நாகங்கள் பாம்புகளை வெறுத்தன. தங்கள் வடிவிலேயே அவையும் உடல்கொண்டிருப்பதனாலேயே அவை தங்களை அவமதிப்பதாக எண்ணின. அவற்றை வேர்களென்றும் தங்களை விழுதுகளென்றும் வகுத்தன. மண்ணுள் இறங்கிய பாம்புகளை விண்ணிலிருந்து இழிந்த நாகங்கள் தேடித்தேடிச்சென்று கொன்றன. தங்கள் கூர்நஞ்சால் கொன்று விழுங்கி உணவாக்கின. நஞ்சாலோ விரைவாலோ உடல்நிறைவாலோ நாகங்களை வெல்லமுடியாத பாம்புகள் கரந்திருத்தலால் காத்திருத்தலால் எதிர்கொண்டன. நாகங்களைக் கண்டதும் தன் உடலை வளைத்துச் சுருட்டி உயிர்துறக்கச் சித்தமாகும் பாம்பு ‘பெருகுக என் குலம்’ என்று தன்னுள் சொல்லிக்கொண்டது. காடுகள் தோறும் பொந்துகளிலும் புதர்களிலும் சருகுக்குவைகளிலும் பாறையிடுக்குகளிலும் அவற்றின் முட்டைகள் பெருகின. அவை திறந்து புழுக்கூட்டங்கள் போல பாம்புகள் வெளிவந்தன. சினந்து எழுந்து விழி ஒளிர நின்றிருக்கும் ஒவ்வொரு நாகத்தைச் சூழ்ந்தும் ஓராயிரம் பாம்புகள் புதர்களுக்குள் சுருண்டிருந்தன.

சீறுவதும் சுருளுவதுமென இங்குவந்த அன்னையின் சீற்றத்துக்கு வணக்கம். முகமற்ற உடலற்ற நாக்கு மட்டுமேயென இங்கிருக்கும் விண்ணகத்து வஞ்சத்துக்கு வணக்கம். வேரும் விழுதுமென இம்மரத்திலெழுந்த தேடலுக்கு வணக்கம். ஓம்! ஓம்! ஓம்!

இந்திரப்பிரஸ்தத்தின் இசையரங்கில் சூதனாகிய சங்கியன் நாகங்களின் கதையை சொல்லிமுடித்து தன் இலைத்தாளத்தைத் தாழ்த்தி “மண்ணழியும் விண்ணழியும். மானுடமும் தேவரும் அழிவர். அவையீரே, அழியாது வஞ்சம். ஏனென்றால் பிரம்மமே ஒரு பெருநாகம். அதன் நஞ்சல்லவா அது?” என்றான். திரௌபதி பெருமூச்சு விட்டபின் பரிமாணனை நோக்க அவர் தலைவணங்கி தன் விறலியாகிய மலையகந்தினியை திரும்பி நோக்கியபின் “வஞ்சத்தை வேறேதும் அவிக்காதென்பதாலேயே வஞ்சத்தை மேலும் படைத்தது பிரம்மம். அனல் அனலால் அவியும். சினம் சினத்தால். பகை பகையால். வஞ்சம் வஞ்சத்தால்” என்று தொடங்கினார்.

ஊழ்கத்தில் விழிமூடி அமர்ந்திருக்கும் இமயனின் மடியில் பிறந்தவள் சரஸ்வதி. இன்று அவள் மண்ணுக்குள் இறங்கி ஊழ்கத்திலோடும் நுண்சொல் என வழிந்து கடல்தேடுகிறாள். கிருதயுகத்தில் அவள் நீலஅலைபுரளும் பெருநதியாக மலைகளை அணைத்து சரிந்திறங்கி நிலவிரிவில் கிளைவிரித்துப்பரவி பல்லாயிரம் குளங்களை நிறைத்து நீலமணிமாலையென பூதேவிக்கு அணிவித்துச் சென்றிருந்தாள். இமயத்தின் பிரம்மமானச ஏரியின் கரையில் நின்றிருக்கும் அத்திமரத்தின் அடியில் இருந்து பிறந்த அவள் வினசனதீர்த்தம் என்ற இடத்தில் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்த வட்டவடிவப் பெரும்பிலம் ஒன்றில் புகுந்து மண்ணுக்குள் சென்று மறைந்தாள். மலையின் உந்தியென நீர் சுழித்த அந்தப்பிலத்தைச் சூழ்ந்திருந்த அடர்காடு நாகோத்ஃபேதம் என்று அழைக்கப்பட்டது. நாகர்குலம் தோன்றிய மண் என அதை மூதாதையரின் பாடல்கள் குறிப்பிட்டன. நாகர்களன்றி எவரும் செல்லமுடியாத நாகோத்ஃபேதத்தின் நடுவே ஓசையின்றி சுழன்றுகொண்டிருக்கும் வினசனதீர்த்தச் சுழியில் பாய்ந்து அதன் மையத்தை அடைபவர் அவ்வழியாக நாகதேவர்களின் உலகை சென்றடையமுடியும் என்றன கதைகள்.

நாகோத்ஃபேதத்தில் வாழ்ந்த நாகர்குலம் இருபெரும்பிரிவுகளாக இருந்தது. கரியநிறமான பேரன்னை குரோதவஸையை இருசாராரும் வணங்கினர். ஆனால் ஒளிவிடும் பொன்னிறநாகமான சுரசையை வணங்கியவர்கள் பன்னகர்கள் என்றழைக்கப்பட்டனர். நீலநிறம் கொண்ட அன்னை கத்ருவை வணங்கியவர்களை அவர்கள் உரகர்கள் என்றழைத்தனர். கிருதயுகத்தில் இருகுலங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து அங்கே வாழ்ந்தன என்றனர் குலப்பாடகர். மண்ணுக்குமேல் வாழும் உயிர்களையும் விளையும் காய்கனிகளையும் பன்னகர்கள் உண்டனர். மண்ணுக்குள் வாழும் உயிர்களையும் கிழங்குகளையும் உரகர்கள் உண்டனர். மலைப்பாறைகளுக்கு மேல் பன்னகர்கள் வாழ்ந்தனர். அவர்களுக்கு முகில்கள் கூரையிட்டன. மண்வளைகளுக்குள் உரகர்கள் வாழ்ந்தனர்.

பன்னகர்கள் சாட்டையென நீண்ட கைகால்களும் சொடுக்கி நிமிர்ந்த தலையும் கரியநிறமும் வெண்சிப்பி போன்ற பெரியவிழிகளும் சுருண்ட குழலும் குறுமுழவென முழங்கும் குரலும் கொண்டவர்கள். அவர்களின் உடலில் நஞ்சே குருதியென ஓடியது. பன்னகர்களின் விற்திறனை விண்ணவரும் அஞ்சினர். நாகோத்ஃபேதத்தில் விளைந்த ஒருவகை பிரம்பால் அமைந்த மெல்லிய சிறு வில்லை அவர்கள் தங்கள் இடையில் கச்சையென சுற்றிக் கட்டிக்கொண்டிருப்பார்கள். எதிரியையோ இரையையோ கண்டதும் அருகிருக்கும் நாணலைப் பறித்து நாவில் தொட்டு அதில் பொருத்தித் தொடுப்பார்கள். நாகசரம் படுவது நாகம் தீண்டுவதேயாகும். அக்கணமே நரம்புகள் அதிர்ந்து எண்ணங்கள் குழம்பி தாக்குண்ட உயிர் விழுந்து உயிர்துறக்கும். நாகர்கள் வாழ்ந்த நாகோத்ஃபேதம் என்னும் காட்டை எவருமே கண்டதில்லை. ஊழ்கத்தில் அதை அறிந்த படிவர்கள் சொல்ல சூதர்கள் கதைகளென பாரதவர்ஷமெங்கும் அவர்களைப்பற்றி பாடிச்சென்றனர். அவர்களின் கதைகளைக் கேட்ட பேரரசர்களும் அஞ்சினர்.

உரகர்கள் மஞ்சள் நிறமான சிற்றுடல்கொண்டிருந்தனர். பெரிய பற்களும் பதிந்த சிறுமூக்கும் கூழாங்கல்விழிகளும் வளைந்தகால்களுமாக ஒவ்வொரு ஒலிக்கும் அஞ்சி ஒவ்வொரு மணத்தையும் வாங்கி நடந்தனர். நாகோத்ஃபேதத்தில் வாழ்ந்த பன்னகர்களேகூட அவர்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது. விழிதொட்ட உடனே அவர்களின் தோல் அதை அறிந்து சிலிர்த்தது. அக்கணமே அவர்கள் புதருக்குள் மறைந்து பிலங்களுக்குள் சென்று ஒடுங்கிக்கொண்டனர். நாளெல்லாம் மிக அருகே அவர்கள் இருந்தாலும் அறியமுடியாது. பன்னகர்கள் பகலொளியில் வாழ்ந்தனர். உரகர்களின் நாள் என்பது இரவே. ஒரு வாழ்க்கையின் இருபக்கங்களிலாக அவர்கள் நிகழ்ந்துகொண்டிருந்தனர்.

அந்நாளில் ஒருமுறை உரகர் குலத்து உதித்த சம்பன் என்னும் மைந்தன் தன் பிலத்திலிருந்து மேலே எழுந்த சூரியனை நோக்கி அது என்ன என்று தன் அன்னையிடம் கேட்டான். ’மைந்தா அது உன் மூதன்னை திதியின் மைந்தர்களாகிய ஆதித்யர்களில் முதல்வன், அவன் பெயர் சூரியன்’ என்று சொன்ன அன்னை அவனை அழைத்துச்சென்று பிலத்தின் நீர்வழியும் சுவரில் மூதாதையர் வரைந்து வைத்திருந்த இளஞ்செந்நிற ஓவியங்களை காட்டினாள். பச்சைமரங்களுக்கும் நீலநதிக்கும் மேல் சுடர்விட்டுக்கொண்டிருந்த சூரியனை நோக்கிய சம்பன் ‘அன்னையே, இதைப்பார்த்தால் எனக்கு கண்கள் கூசவில்லையே. ஆனால் வெளியே விண்ணில் எழுந்த சூரியன் என் கண்களை ஒளியால் நிறைத்துவிட்டானே’ என்றான். ‘நம் விழிகள் இருளுக்கானவை குழந்தை. சூரியனை நாம் நோக்கலாமென நம் முன்னோர் குறிக்கவில்லை’ என்றாள்.

ஒவ்வொருநாளும் சம்பன் தன் பிலத்தின் வாயிலில் வந்தமர்ந்து சூரியன் கடந்துசெல்வதை கண்டான். செம்பொன் உருகி வெள்ளிப்பெருக்காகும் விந்தையை அன்றி பிறிதை எண்ணாதவனாக ஆனான். அவன் விழிகள் விரிந்து விரிந்து சூரியனை நோக்கும் வல்லமை பெற்றன. ஒருநாள் காலையில் அவன் எவருமறியாமல் வெளியே சென்று சூரியனுக்குக் கீழே நின்றான். தன் குருதியில் நிறைந்த இளவெம்மையை கண்மூடி அறிந்தான். விழிகளை விரித்து தன்னைச்சூழ்ந்திருந்த முகில்குவைகளும் மலையடுக்குகளும் அருவிகளும் நதியும் பசுங்காடும் ஒளிகொண்டிருப்பதை கண்டான். அவையனைத்தும் அங்கே சூரியனுடன் தோன்றி சூரியன் மறைந்ததும் அமிழ்ந்தழிபவை என அறிந்தான். சூரியனே அவையாகி மாயம் காட்டி அருள்கிறது என்று உணர்ந்தான். ‘எங்கோ வாழ்!’ என்று அவன் கைதூக்கி சூரியனை வணங்கினான்.

அப்போது மரங்களினூடாக அவ்வழி சென்ற பன்னகர் குலத்தின் நான்கு மைந்தர்கள் அவனை கண்டனர். பத்ரன், பலபத்ரன், கண்டன், ஜலகண்டன் என்னும் அந்நால்வரும் அதற்குமுன் உரகர்களை கண்டதில்லை. ‘நம்மைப்போலவே இருக்கிறான். ஆனால் அவன் நாகன் அல்ல’ என்றான் பத்ரன். ‘அவன் உரகன். உரகர்கள் நம்மைப்போலவே நடிப்பவர்கள் என்று என் அன்னை சொன்னாள்’ என்றான் பலபத்ரன். ‘இவனை நாம் விளையாடுவதற்கு எடுத்துக்கொள்வோம்’ என்றான் கண்டன். ‘இவன் நம்மைப்போல் இருப்பதனாலேயே நகைப்புக்குரியவன்’ என்றான் ஜலகண்டன்.  அவன் அஞ்சி தன் பிலம் நோக்கி செல்வதற்குள் அவர்கள் கீழிறங்கி சம்பனை பற்றிக்கொண்டனர். அவன் அலறியபடி உடல்சுருட்டி கண்மூடிக்கொண்டான். அவனை அவர்கள் காளகூட மலைச்சரிவுக்குக் கொண்டுசென்று உருட்டி விட்டு விளையாடினர். மரங்கள் நடுவே விழுதுகளில் கட்டித்தொங்கவிட்டு ஊசலாட்டினர். தூக்கி மேலே வீசி கீழே வருகையில் ஓடிச்சென்று பிடித்தனர். மிரண்டுநின்ற காட்டெருமையின் வாலில் அவன் கைகால்களை கொடியால் கட்டி அதை விரட்டினர். அவன் கைகூப்பி கண்ணீருடன் மன்றாடிக்கொண்டே இருந்ததைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து நகைத்தனர்.

அவனை அவர்கள் வினசனதீர்த்தத்தை நோக்கி கொண்டுசென்றனர். தன் முன் எழுந்த நீரின் பெருஞ்சுழியைக் கண்டு அவர்களின் கைகளில் தலைகீழாகத் தொங்கிய சம்பன் அஞ்சி அலறித் துடித்தான். அவர்கள் அவனை அதில் வீசுவதுபோல ஆட்டியபின் மீட்டு எள்ளிச் சிரித்தனர். மீண்டும் அவர்கள் அவனை ஆட்டியபோது சம்பன் தன் பற்களால் ஜலகண்டனை கடித்தான். அவன் சம்பனை விட்டுவிட்டு அலறியபடி பின்னால் செல்ல சம்பன் கண்டனையும் கடித்தான். பலபத்ரன் ஓங்கி அவனை கால்களால் மிதித்தான். அக்கால்களைப் பற்றிக் கடித்த சம்பன் பத்ரன் தன் வில்லை எடுப்பதைக் கண்டதும் பாய்ந்து வினசனதீர்த்தத்தின் சுழிக்குள் பாய்ந்து நீர்க்கரத்தால் அள்ளிச் சுழற்றப்பட்டு அதன் ஒற்றைவிழிக்குள் சென்று மறைந்தான். பத்ரன் ஓடிச்சென்று பன்னகர்களை அழைத்துவந்தான். ஆனால் பலபத்ரனும் கண்டனும் ஜலகண்டனும் நஞ்சு ஏறி உடல் வீங்கி உயிர்விட்டிருந்தனர்.

அந்நிகழ்வு பன்னகர்களை சினம் கொள்ளச்செய்தது. இனிமேல் உரகர்கள் நாகோத்ஃபேதத்தில் வாழலாகாது என்று குலமூத்தார் அவைகூடி முடிவுசெய்தனர். முழுநிலவுநாளுக்குள் உரகர்கள் அனைவரும் காட்டை விட்டு நீங்கவேண்டும் என்றும் அதன்பின் அங்கிருப்பவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் முரசறைந்தனர். பிலங்களுக்குள் மைந்தரையும் மனைவியரையும் உடல்சேர்த்து அணைத்துக்கொண்டு நடுங்கி அமர்ந்திருந்த உரகர்கள் அக்காட்டுக்கு அப்பால் நிலமிருப்பதையே அறிந்திருக்கவில்லை. அவர்கள் இரவிலும் வெளியே வராமல் நீர்வழியே வந்த மீன்களை மட்டும் உண்டபடி ஒரு சொல்லும் பேசாமல் பிலங்களுக்குள் அமர்ந்திருந்தனர். நிலவு முழுமைகொள்ளக்கொள்ள அவர்கள் வானோக்கி ஏங்கி கண்ணீர் விட்டனர்.

முழுநிலவுக்கு மறுநாள் நச்சுமுனைகொண்ட அம்புகளுடன் எழுந்த பன்னகர்கள் பிலங்கள்தோறும் வந்து முரசறைந்து உரகர்களை வெளியே வரும் படி கூவினர். அவர்கள் எவரும் வெளிவரவில்லை. ஆகவே விறகுமூட்டி அனலிட்டு அதில் காரப்புகை எழுப்பி பிலங்களுக்குள் செலுத்தி உரகர்களை வெளியே வரச்செய்தனர். கைகளைக்கூப்பியபடி தவழ்ந்து வெளிவந்த உரகர்களை நீண்ட கூரிய மூங்கிலால் குத்தி மேலே தூக்கி ஆட்டி கீழிறக்கினர். ஒருமூங்கிலுக்கு பத்து உரகர்கள் வீதம் கோத்தெடுத்து அப்படியே கொண்டுசென்று சரஸ்வதியில் வீசினர். உள்ளே பதுங்கி நடுங்கியவர்களை கொடிகளால் சுருக்கிட்டு எடுத்தனர். இழுத்து வெளியே போடப்பட்டபோது அச்சத்தால் செயலிழந்திருந்த உரகர்கள் மலமும் சிறுநீறும் கழித்து உடலை சுருட்டிக்கொண்டனர். மேலும் மேலும் மூங்கில்களை வெட்டி கூராக்கிக்கொண்டே இருந்தனர் பன்னகர்கள். தங்கள் மண்ணுக்கடியில் அத்தனை உரகர்கள் இருப்பது அவர்களுக்கு வியப்பளித்தது.

உரகர் குலத்தில் அத்தனைபேரும் இறந்தனர். சம்பனின் அன்னை மட்டும் தன் எஞ்சிய ஐந்து மைந்தரை நெஞ்சோடணைத்தபடி பிலத்தின் வளைவொன்றுக்குள் ஒடுங்கியிருந்தாள். அவள் அங்கிருப்பதை மணத்தால் அறிந்த பன்னகர்கள் அனலைப்பெருக்கினர். பின்னர் இறந்த உரகர்களின் உடலை இழுத்து வந்து அந்த அனலில் இட்டனர். உடற்கொழுப்பு உருகி தழலுக்கு அவியாகி நிறைய வெம்மை எழுந்து பிலத்தை மூடியது. மைந்தர் அழுதபடி அன்னையை பற்றிக்கொண்டனர். எரியை நோக்கிக்கொண்டிருந்த அன்னை அதில் ஐவரையும் அணைத்தபடி தன் உடல் கொழுப்புருக நின்றெரியும் ஒரு காட்சியை கனவுருவென கண்டாள். அடுத்த கணத்தில் அவர்களை அள்ளி எடுத்தபடி பிலத்தின் சிறுவாயில் வழியாக வெளியே வந்தாள். அங்கே அவளுக்காகக் காத்து நின்றிருந்த இரு மாநாகர்களையும் ஒரே கணத்தில் மாறிமாறி கடித்தாள். அவர்கள் அலறியபடி பின்னால் செல்ல மைந்தருடன் அவள் சரஸ்வதி நோக்கி ஓடினாள். அவர்கள் அம்புகளுடன் துரத்திவந்தனர். எதிரே தன்னைத்தடுத்த மேலும் இருவரைக் கடித்து விலக்கிவிட்டு, ஐவரையும் அள்ளி அணைத்தபடி நீர்ப்பெருக்கில் பாய்ந்தாள்.

சரஸ்வதியின் குளிர்நீர்ப்பெருக்கில் விழுந்த அவள் அச்சுழியின் விளிம்பில் கடுவிசையுடன் சுழன்று அதனால் வெளியே வீசப்பட்டாள். அங்கே வாய்திறந்து நீருண்ட பிலத்தினுள் சென்று சுழித்தமிழ்ந்த நீர்ப்பெருக்கில் ஒழுகி நினைவழிந்தாள். சரஸ்வதி பன்னிரண்டு யோஜனை தொலைவுக்கு அப்பால் இன்னொரு பெரும்பிலம் வழியாக ஆயிரம் இதழ்கொண்ட தாமரைபோல விரிந்து மேலே எழுந்தது. சமஸோத்ஃபேதம் என முனிவர் அழைத்த அந்த சுனையில் அவள் மேலெழுந்து வந்தாள். மைந்தரை இழுத்துக்கொண்டு வந்து கரை சேர்ந்தாள். அங்கே விளைந்து எவரும் தீண்டாமல் குவிந்துகிடந்த காய்களையும் கனிகளையும் அள்ளி தன் மைந்தருக்களித்து அவர்களை உயிர்ப்பித்தாள்.

அவள் பெயர் திரியை. அவளுடைய ஐந்து மைந்தர்களான கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன் ஆகியோர் அங்கே வளர்ந்தனர். அந்தக் காட்டிலிருந்த மலைமக்களில் இருந்து அவர்கள் மணம் கொண்டனர். உரகர்குலம் அங்கே பெருகியது. நூறு ஊர்களில் ஆயிரம் குடிகளாகப் பரவி அந்தமலைக்காட்டை அவர்கள் ஆண்டனர். அன்னை திரியையை நீர்மகள் என்று சரஸ்வதியின் கரையில் ஓர் அத்திமரத்தடியில் நிறுவி வழிபட்டனர். ஐந்துமைந்தரை உடலோடு சேர்த்துக்கொண்டு நின்ற அன்னையின் விழிகளில் ’அறியேன்’ என்ற சொல்லே கல்வடிவத் தழலாக நின்றிருந்தது. அவளை குரோதவஸை என்றும் அழைத்தது அக்குலம்.

அன்னைக்கு அவர்கள் அவள் நீர்மலர் மேல் எழுந்துவந்த தேய்பிறை முதல்நாளில் நூற்றெட்டு கருநாகங்களை பலிகொடுத்து வழிபட்டனர். வளைகளைத் தோண்டி சீறிவரும் நாகங்களின் பத்திகளில் கூர்செதுக்கிய நீண்ட மூங்கில்களால் குத்திக் கோத்து ஒன்றன்மேல் ஒன்றெனச் சேர்த்து அடுக்கி தூக்கிவந்தனர். பதினொரு மூங்கில்களில் நெளிந்து சுழித்து உயிர் சொடுக்கும் நாகங்களுடன் ஆடியும் பாடியும் வந்து அன்னை முன் பணிந்தனர். பன்னிரு அனல்குழிகள் எழுப்பி விறகுடன் அரக்கும் தேன்மெழுகும் இட்டு தழலெழுப்பி அதில் அவற்றை உதிர்த்தனர். செவ்வொளியில் கருநிழல்கள் நெளிவதுபோல நாகங்கள் துடித்து தலையறைத்து நெளிந்து முடிச்சிட்டு அவிழ்த்துக்கொண்டு வெந்து கொழுப்பு உருகி அனலாயின. எரியும் நாகங்களை நோக்கியபடி அன்னை நின்றிருந்தாள்.

அவையீரே கேளுங்கள், அவையமர்ந்த அரசியே கேளுங்கள். இங்கே காணாஉடலுடன் கேட்கும் செவிகளுடன் அமர்ந்திருக்கும் அனைவரும் அறியக் கடவதாக! மூன்று யுகங்கள் அன்னையின் அமையா அசையா கல்விழிகளுக்கு முன் நிழலாட்டங்களென கடந்துசென்றன. அக்குலத்தில் குடியின் முதல்மூத்த மகளுக்கு திரியை என்று பெயரிடும் வழக்கமிருந்தது. பெண்களே குலமூத்தாராக அமையும் முறைமைகொண்ட உரகர்குலத்தை என்றும் திரியை என்னும் அன்னையே வழிநடத்தினாள். பின்னொருநாளில். அக்குடியின் திரியை என்னும் அன்னை தன் ஐந்து மைந்தருடன் அரக்கும் மெழுகும் விற்று உப்பும் உடையும் வாங்கிவருவதற்காக மலையிறங்கி நகர்புகுந்தாள். அவள் அங்கே ஒரு பெருமாளிகையில் வஞ்சகரால் அனலிடைப்பட்டாள். மைந்தரைத் தழுவியபடி வெந்தழிந்தாள். எரியுற்று தசையுருகிச்செல்லும்போது ஐந்து மைந்தரை மார்புறத்தழுவி இதழ்விரிக்கும் நீர்த்தாமரையின் குளிருக்குள் நுழைவதாக உணர்ந்தாள்.

நூல் ஏழு – காண்டவம் – 2

செல்காலமும் திகழ்காலமும் வருகாலமும் என
சுழல்காலம் மூன்றாக்கி நிறைந்தவனை
ஆயிரம் நாவால் சொல்லின்மை கொண்டவனை
ஈராயிரம் விழிகளால் ஊழ்கத்திலாழ்ந்திருப்பவனை
பாற்கடலில் நஞ்சை நஞ்செனும் அமுதை
கரியவனை காப்பவனை எஞ்சுபவனை
என்றுமிருப்பவனை வாழ்த்துக!

சேஷ துதி

இளவெயில் நிழலுதிர்க்கத் தொடங்கிய புலரிமுதல் மீளமீள தன் பழம்பாடலின் ஒற்றைச்சொல்லை பாடிக்கொண்டிருந்த ரத்னாக்ஷன் என்னும் ஆண்குயில் தன் அருகே வந்தமர்ந்த காதல்துணைவியாகிய சுசரிதையிடம் சொன்னது. அவர்கள் தென்னாட்டில் தண்பெருநீர் பொருநை நதிக்கரையில் ஒரு மூங்கில்காட்டின் உச்சிவெயிலை இருளாக்கிய இனியநிழலில் இலைத்தழைப்புக்குள் சிறுசில்லையில் அமர்ந்து ஊசலாடிக்கொண்டிருந்தனர். “அழகிய புள்ளிகள்கொண்ட இறகுகளையும் செம்மணிக்கண்களையும் கூரிய அலகையும் கொண்டவளே, காமம் என்பது துணையிருக்கையிலும் தனித்திருப்பது என்று அறியமாட்டாயா? என் அலகிலிருந்து எழுந்து நான் அறியும் இந்த இசையினூடாக நான் சென்றடைவது இங்கிருக்கும் உன்னை இளங்காற்றென வந்து தன் கையிலேந்தி விளையாடும் உன் மூதன்னையரின் முடிவிலாநிரையின் பெருங்காதலை அல்லவா? இசையினூடாக பெருங்காதலை அன்றி பிறிது எதை சொல்லமுடியும்? அது சொல்பவனும் கேட்பவளும் இன்றி இவ்வானமென மண்ணென இங்கு என்றுமிருப்பது. இக்காற்று சென்று தொடும் மலர்களனைத்தும் செவிகளாகி திரும்புக! அவை என் காமத்தின் துயரை அறிக! இலைகளனைத்தும் நாவாகுக! அவை என் மூதாதைநிரையின் அழியாப்பெருந்தனிமையை பாடுக!” அச்சொற்கள் நான் வந்தமர்ந்த பின்னரும் இசைப்பது ஏன் என்று சுசரிதை கேட்டதற்கு மறுமொழி.

சுசரிதை சொன்னது “அழியாச்சொல்லால் வாழ்த்தப்படுபவர்கள் விண்வாழும் தேவர்கள். மண்ணில் பெண்குயில் மட்டுமே. பாடகனே, ஒரு குயில்மொழி முழுவேதத்திற்கும் நிகராகும் என்பதே தொல்கதையாகும். இந்த மண்ணில் என் மூதன்னையர் பெருஞ்சொல் பருகிப் பொலிந்தனர். நிறைந்து விண்ணுயர்ந்து கந்தர்வர்களின் இசையுலகில் நீந்தி திளைக்கின்றனர். அவர்கள் வாழ்க!” அவளருகே வந்து அமர்ந்த ரத்னாக்ஷன் “இளையவளே, அழகிய சொற்கள் கொண்டவளே, அந்தத் தொல்கதையை சொல். கேட்க ஆவல்கொண்டேன்” என்றது. “இந்த இனியநிழல்களின் நடனம் இங்கு சூழ்ந்துள்ள அனைத்தும் இக்கணம் இக்கணம் என நிறைந்து முடிவிலி நோக்கி செல்வதாக என்னை உணரச்செய்கிறது. இது நிறைந்த தருணம். தொல்கதை காம்பு கனிந்து உதிரவதற்குரியது. அவ்வாறே ஆகுக!” என்றது சுசரிதை. அந்தக்கதையை அது தன் காதலனுக்கு சொன்னது.

முன்பு, துவாபரயுகத்தில் வடக்கே கருநீர்க் காளிந்தியின் கரையில் காண்டவம் என்றொரு பெருங்காடு இருந்தது. விண்சுடரின் ஒரு துளியேனும் மண்ணைத்தொடாத பசுஞ்செறிவுகொண்டது. அக்காட்டில் அன்று நான் ஜரிதை என்னும் அழகிய சிறுகுயிலென பிறந்தேன். கருமுகில்துளியென மென்சிறையும் கருமணிக்கூரலகும் சிறுசெவ்விழிகளும் கொண்டு அக்காட்டின் நிழல்வெளியில் நீந்திக்களித்தேன். பருவமடைந்ததும் என் உடல் மென்தூவியெங்கும் விழிகளென புள்ளிகள் பிறந்தன. விழிகள் செறிந்த உடலால் நான் அறிந்ததெல்லாம் என்னைச்சூழ்ந்திருந்த நோக்குகளில் நிறைந்திருந்த காதலை மட்டுமே. காதலின் பெருக்கில் சிறகடித்தேன். காதல்கிளைகளில் அமர்ந்தேன். காதல்கூட்டில் அந்தியொடுங்கினேன். இளங்காற்று மூங்கில்காட்டில் நுழைந்தது போல நான் செல்லுமிடமெல்லாம் இசையெழக்கேட்டேன். என் கனவுகளில் அந்த இசை பெருகி விண்வடிவாவதை அறிந்தேன். அக்காமத்தின் அனல் உருக்கி அழிக்குமென அஞ்சி என்னை இறுக்கிக்கொண்டேன்.

அன்றொருநாள் சிற்றோடை ஒன்றின் கரையில் இருந்த மூங்கில்சில்லை ஒன்றிலாடி கீழே என் நீர்ப்பாவையைக் கண்டு களித்தேன். என்னைச்சூழ்ந்து காதலால் நெஞ்சுவிம்மும் குயிற்சேவல்கள் இசையெழுப்பி வாழ்த்திக்கொண்டிருந்தன. என் நீர்ப்பாவை அதைக் கேட்டு விழிசரித்து தூவி சிலிர்த்தது. அதை நோக்கியபோதுதான் என்னை நான் இறுக்கிக்கொள்ளுவதெல்லாம் நடிப்பே என்றும் என் அகம் தணல்கொண்டிருக்கிறது என்றும் அறிந்தேன். அவ்வறிதலால் மேலும் காமம் கொண்டு விம்மி கழுத்தைத்திருப்பிய கணத்தில் அங்கிருந்த கல்லாலமரத்தின் பொந்துக்குள் இருந்து மெலிந்த வெண்ணிற உடலும் நீண்டதாடியும் சடைக்கற்றைகளும் கொண்ட முனிவர் ஒருவர் வெளிவரக்கண்டேன். அந்தப்பொந்துக்குள் அங்கே தவமிருந்து உடல்நீத்த முனிவர் ஒருவரின் வெள்ளெலும்புக்குவை உண்டென்பதை முன்னரே கண்டிருந்தேன். அவ்வெள்ளெலும்பு உடல்மீட்டு வந்தவர் போலிருந்தார்.

அவர் கண்ட முதல் வெளிநோக்கு என் விழிகளென அமைந்தது. என் காமத்தை அவர் அறிந்து தானும் காமம் கொண்டார். ’உன்பெயர் என்ன?’ என்றார். சிறகுகளைப் பிரித்து அடுக்கி விழிதாழ்த்தி நாணி ‘ஜரிதை’ என்று நான் சொன்னேன். புன்னகையுடன் ‘அழகியவளே, நான் உன்னை காதலால் கனிந்த நிலையில் காணும் பேறுபெற்றேன். நானும் காமம் எரியும் நெஞ்சுகொண்டிருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்’ என்றார். சருகு ஒன்று விழுந்து என் நீர்ப்பாவை கலைந்தது. சினம் கொண்டு சிறகடித்தெழுந்து நான் அவர் அருகே வந்தேன். ‘நீர் மானுடர். நான் மண்ணில் வேதத்தால் வாழ்த்தப்படும் ஒரே உயிரென தெய்வங்களால் ஆக்கப்பட்டவள். நீர் எப்படி என்னை வேட்க முடியும்?’ என்றேன். ‘இனியவளே, நான் ஒரு முனிவன். என்பெயர் மந்தபாலன். இந்த மரக்குகையில் நான் நூறாண்டுகாலம் தவம்செய்து அத்தனை தவப்பேறுகளையும் அடைந்தபின் உடல்நீத்து விண்ணேகினேன். அங்கே மண்நிகழ்ந்து மறைந்தோர் வாழும் மூச்சுலகில் வாழ்ந்தேன். என்னால் நான் விழையும் உருவெடுக்கமுடியும். உன் விழிக்கியைந்த ஆண்குயிலாவேன்’ என்றார்.

‘அங்கிருந்து இங்கு மீண்டது ஏன்?’ என்றேன். ‘ஏழுமண்டலகாலம் நான் மூச்சுலகில் வாழ்ந்தேன். அங்கிருந்து ஒளிமிக்க பொன்னுலகுக்கு நான் ஏற்றப்படவில்லை. விண்வழிகளைக் காக்கும் ஜயவிஜயர்களிடம் அதுகுறித்து கேட்டேன். மண்ணில் ஊனுடல்கொண்டு பிறந்து ஒரு கணமேனும் காமத்தை உணர்ந்த எவரும் மைந்தரால் நீர்க்கடன் செய்து விண்ணேற்றப்படவேண்டும் என்றனர். ‘மானுட உடலென்பது கணுதோறும் தளிர்க்கும் காட்டுமரக்கிளை. உங்கள் உடலில் கருக்கப்பட்ட முளைகளெல்லாம் காற்றுவெளியில் பசித்தும் தனித்தும் நின்றிருக்கின்றன. முனிவரே, மண்ணில் உடல்கொள்வதற்கு முன்னரே மானுடர் வாழத்தொடங்கிவிடுகிறார்கள். உடலழிந்தபின்னரும் இருந்துகொண்டிருக்கிறார்கள். உடலடையாது போனவர்களின் விழைவுகளும் உடல்நீத்தவரில் எஞ்சும் துயர்களும் விண்ணுக்கு சுமையாகக்கூடியவை என்றறிக. உங்களில் முளைத்த மைந்தன் ஒருவனால் உங்களுடன் அவர்களனைவரும் நதிநீருடன் விழிநீர் சிந்தி விண்ணேற்றம் செய்யப்படவேண்டும்.’ ஆகவே என் கடன் முடிப்பதற்காக நூற்றாண்டுகளுக்கு முன் நான் நீத்துச்சென்ற உடலெச்சங்களிலேயே மீண்டுவந்தேன். எழுந்த முதற்கணமே காமத்தில் கனிந்து நின்ற உன்னைக் காணும் பேறு பெற்றேன்’ என்றார்.

நான் ‘முனிவரே, நீர் உருவில் குயிலாகக்கூடும். ஆனால் குயிலென இசைக்கமுடியாது. இப்புவி கடுவெளியில் கண் பூத்து,இங்கே உயிர்க்குலங்கள் தோன்றிய காலத்தே நாங்கள் அடைந்தது எங்கள் இசை. எங்கள் குலத்தின் ஒவ்வொரு ஆண்குயிலின் அலகிலும் திகழ்ந்து அவர்களின் கோடானுகோடி உயிர்த்துளிகள் கலந்து வளர்ந்தெழுந்தது எங்கள் பாடல். மானுடம் பிறந்ததும் மொழி எழுந்ததும் அதற்குள் பொருள் செறிந்ததும் நெடுங்காலத்துக்குப் பின்னரே. உம் காதலுக்காக நான் என் குலமொழியால் வாழ்த்தப்படுவதை ஏன் இழக்கவேண்டும்?’ என்றேன். ‘நான் நால் வேதங்களையும் சொல்திகழக் கற்றவன். வேதமெய்ப்பொருளைக் கொண்டு உங்கள் முதல்மொழியை என்னால் அறியமுடியும்’ என்றார். ‘அவ்வண்ணமெனில் ஆகுக! எங்கள் குயிற்சேவல்களுக்கு நிகராக உமது இசை அமையும்போது நான் உம்மை ஏற்கிறேன்’ என்றேன்.

இளம்கருங்குயிலாக மாறி மரக்கிளையில் அமர்ந்து மந்தபாலர் இசைக்கத்தொடங்கினார். முதலில் நெருப்பில் நீர் முயங்கும் நிலம் போல் அமைந்த அதர்வத்தை அவர் இசைத்தார். பின்னர் அதில் மலையடுக்குகளாக ஊழ்கத்திலமர்ந்த, நீரலைவளைவுகளாகக் கொந்தளித்த, தழல்கொடிகளென நின்றாடிய யஜுர்வேதத்தை பாடினார். இன்மையும் உண்மையுமாக வான்வெளியென விரிந்த ரிக்வேதமுழுமையையும் இசைத்து முடித்தார். ஆனால் அவரது இசையை எந்தப்பறவையும் செவிகொள்ளவில்லை. அது பொருள்சுமந்து சலிக்கும் எளியமானுடச்சொல்லாகவே எஞ்சியது. மும்முறை மூன்று வேதத்தையும் இசைத்து அமைந்தபின் மண்ணையும் விண்ணையும் இசைக்கும் மழையெனப்பொழிந்த சாமத்தை இசைக்கலானார். நான் அவ்விசைக்கு மயங்கி அவர் முன் சென்றமர்ந்தேன். இளமான்களும் கன்றுகளும் செவிகூர்ந்து தலைதாழ்த்தி நின்றன. நாகங்கள் வளைந்து எழுந்து நா பறக்க ஆடின. என்னருகே வந்தமர்ந்த இளங்குயில் ஒன்று ‘மானுட இசையும் இனிதே’ என்றது.

பன்னிரண்டு ஆண்டுகாலம் மந்தபாலர் வேதச்சொல் ஓதி அக்காட்டில் என்னுடன் பறந்தார். நூற்றெட்டு முறை வேதம் நான்கையும் முற்றோதினார். எழுதாக்கிளவியிலிருந்து ஒவ்வொரு சொல்லாக உதிர்ந்தழிந்ததும் அது சந்தம் மட்டுமாக எஞ்சியது. மேலும் பன்னிரண்டு ஆண்டுகள் கடந்ததும் சந்தமும் மறைந்து நாதம் ஒன்றே எஞ்சியது. மேலும் பன்னிரண்டு ஆண்டுகளில் நாதம் சுருங்கி ஓர் ஒற்றை விம்மலென ஆகியது. மண்ணிலுள்ள எப்பொருளையும் தான் தொடாததும் மண்ணிலுள்ள எப்பொருளும் தான் என உணர்வதுமான ஓசையாகியது. ஒருநாள் புலரியில் என் முன் வந்தமர்ந்து அவர் அதைப் பாடியபோது எங்கள் குயில்குலங்கள் அனைத்தும் எப்போதும் பாடும் இசையென அது ஒலிக்கக் கேட்டேன். சிறகடித்து எழுந்து அவரை அணுகி அணைத்துக்கொண்டேன்.

எங்கள் காதலில் ஐந்து மைந்தர்கள் மண்ணில் பிறந்தனர். சத்வன், தமன், ரஜன், சாந்தன், உபசாந்தன் எனும் ஐவரும் முட்டை விரிந்து வான்நோக்கி ஈரச்சிறகை அசைத்தபடி எழுந்ததைக் கண்டு மந்தபாலர் விழிநீர் உகுத்தார். குனிந்து அவர்களை தன் அலகால் நீவி நீவி மகிழ்ந்தார். ‘பெருந்தவ முடிவிலும் நான் உணர்ந்த நிறைவின்மை எதுவென இப்போது அறிந்தேன். தவம்செய்து அடைந்த ஆணவமெல்லாம் அழிந்து எளிய உயிரென மகிழும் இக்கணமே என் முழுமை’ என்றார். என் மைந்தரை சிறகோடு அணைத்துக்கொண்டபோது என் காதலனும் அவன் மொழியில் அமைந்த அத்தனை மூதாதையரும் பாடிய பாடல்களனைத்தும் எனக்குள் இளவெம்மையென நிறைந்திருப்பதை உணர்ந்தேன். அந்த கேளா இசையில் என் குஞ்சுகள் அலகுபுதைத்து கால் ஒடுக்கி கண்சொக்கி உறங்கியபோது வான்நோக்கி அலகுதூக்கி ‘வாழ்த்தப்பட்டேன்’ என்று கூவினேன்.

சுசரிதை சொன்னதைக்கேட்ட ரத்னாக்ஷன் சிறகடித்தெழுந்து காற்றில் திளைத்துச் சுழன்று வந்தமர்ந்து “என் சொல்லில் வாழும் வேதமெய்ப்பொருளை அறியச்செய்தாய். அறிவுடையவளே, நீ என் நல்லாசிரியையும் ஆனாய்” என்றது. ”அச்சொல்லை உணர்ந்தால் நீ இங்குள்ள அத்தனை ஒலியிலும் வேதமொன்றே விளங்கக் காண்பாய்” என்றது சுசரிதை. அவர்களின் அறிவாடலால் குளிரலை பெருகிச்சென்ற பொருநை ஒளிகொண்டது. அதில் பல்லாயிரம் மீன்கள் விழிதிறந்தன. நாணல்களை நடமிடச்செய்த பொதிகையின் மகள் மூங்கில்களில் தன்னை இசையாக்கி கடந்துசென்றாள்.

தட்சிணகுருநாட்டின் தலைநகரமாகிய இந்திரப்பிரஸ்தத்தின் இசைக்கூடத்தில் பேரரசி திரௌபதியின் முன்னிலையில் அஸ்வினிமாதம் வளர்பிறை முதல்நாள் அந்தியில் கூடிய அரங்கில் இசைச்சூதன் பரன் பாடிய கதை இது. செங்கனல் பட்ட பொன்வளைவுகளில் தேவர்விழிதிறந்த நேரம். பரன், அபரன், சங்கியன், பரிமாணன், பிரதக்த்வன், சம்யோகன், விபாகன், வேகன் என்னும் எட்டு இசைச்சூதர்கள் மார்ஜ்ஜதி, திலகை, மலையகந்தினி, கௌமுதி, ஃபேருந்தை, மாதாலி, நாயகி, ஜயை, என்னும் எட்டு துணைவியருடன் அமர்ந்து எட்டுச் சரடுகளாக கோத்துப் பின்னிப் பெருக்கிச் சொன்ன கதைகளின் படலம் எட்டுமுனைகளிலும் எட்டாயிரம் தெய்வங்களால் விரித்து விரித்து முடிவிலிவரை கொண்டுசெல்லப்பட்டது. முடிவிலிகள் மட்டுமே சென்றுசேரும் முடிவில் அமர்ந்திருந்த இன்மையும் இருப்பும் உண்மையும் மாயையும் ஆன பிரம்மம் தன் காலடிகளில் வந்து அலையலையென அடித்த கதைகளை கண்டு குனிந்து புன்னகைசெய்தது. தன்முகம் கண்டு புன்னகைசெய்யாத குழந்தை எங்குள்ளது?

மழைத்திரையால் மூடப்பட்டிருந்த இந்திரப்பிரஸ்த நகரின் அரண்மனையின் நடுவே அமைந்த வட்டவடிவ அவைக்கூடத்தில் கனல் சீறும் கணப்புகளைச்சூழ்ந்து அமர்ந்திருந்த இசைச்சூதர்கள் மெல்விரல்களால் யாழும் முழவும் குழலும் துடியும் மீட்டி கண் கனல் துளிகள் மின்ன செவி தழைந்த குழைகள் ஆட ஆயிரம் வாயில்கள் திறந்து அடியிலி தெரியும் சொற்களால் மழைக்கதிர்கள் என மண்ணையும் விண்ணையும் இணைக்கும் குலக்கதைப்பெருக்கை எழுப்பினர். நீண்டவிழிகள் சரிய செவ்வெளிச்சம் எதிரொளித்த கரிய கன்னங்களுடன் சாமரக்காற்றில் அசைந்தொசிந்து நடமிடும் கருங்குழல்சுருள்களுடன் திரௌபதி அதைக் கேட்டு செம்பட்டுச் சேக்கையில் அமர்ந்திருந்தாள்.

பரன் அக்கதையை சொல்லிமுடித்ததும் தன் குறுமுழவை இருவிரலால் விரைந்தொலிக்க வைத்து முத்தாய்ப்பென நிறுத்தி “அன்னையிலிருந்து எழும் அழலை அறிந்து விழிதுயிலும் குஞ்சுகளை கண்டோம். அறிவணிந்த சூதரே, சொல்க! முலைப்பாலில் இன்சுவையாகும் அத்தழலுக்கு மறுபெயர் அல்லவா விண்ணவர் உண்ணும் அமுதம்?” என்றான். ஆம் ஆம் ஆம் என்றனர் சூதர்கள். சூழ்ந்து அமைந்திருந்த அவையும் ஆம் ஆம் ஆம் என ஒலியெழுப்பியது. அரியணை அமர்ந்திருந்த திரௌபதி புன்னகைத்து விழிதிருப்பி “அபரரே சொல்லெடுப்பது உமது முறை” என்றாள்.

அபரன் தன் மணிக்கோலை கையில் எடுத்து மெல்லத்தட்டி சீரான தாளத்தை அமைத்து விழிசரித்து வண்டு முரள்வதுபோல் முதல் சுதி எழுப்பி முதற்சொல்லை விடுத்தான். “கேளுங்கள் அவையீரே. இது உத்தரகங்கையில் கனகதீர்த்தம் என்னும் நீராழியில் வாழ்ந்த மகாபலை என்னும் மீனின் கதை. வெள்ளியென மின்னும் பேருடலும் இமையாத நீலமணிக்கண்களும் கொண்டவள் அவள். அவளிட்ட ஆயிரம் முட்டைகளை மீன்களும் ஆமைகளும் உண்டது போக ஐந்து மைந்தர் எஞ்சினர். அக்ஷன், நாசிகன், கர்ணன், ஜிஹ்வன், சர்மன் என அவர்களுக்கு அவள் பெயரிட்டாள். அவள் குலவழக்கப்படி தன் மைந்தரை வாய்க்குள் வைத்து குருதியின் வெம்மையால் மூடி பாதுகாத்தாள். அவள் நாவில் சுவையாக அவர்கள் இருந்தனர். அவள் மூச்சின் மணத்தில் அவர்கள் வளர்ந்தனர்.

ஒருநாள் இளவெயில் நீருள் கதிர்களை இறக்கி நின்ற இளங்காலையில் மைந்தரை வாயிலிருந்து வெளியே விட்டு ஒளிரும் அலைகளில் அவர்கள் நீந்திவிளையாடுவதைக் கண்டு மகிழ்ந்தபடி அவள் வால்திளைக்க நீந்திக்கொண்டிருக்கையில் சிறிய பூச்சி ஒன்று நீரில் அமிழ்ந்திறங்கி வரக்கண்டாள். அதன் இறகுகள் பொன்னென மின்னி அதிர்ந்துகொண்டிருந்தன. மைந்தரைச் சுமந்தமையால் எப்போதும் பசிகொண்ட விழிகளுடன் இருந்த அன்னை தன் முதல்மைந்தன் அக்ஷனிடம் அவ்வுணவை உண்ணுமாறு ஆணையிட்டாள். இளமையிலேயே அறிவு கொண்டிருந்த அக்ஷன் ’அன்னையே, நான் இளையோன். இந்நீரில் பிறந்து சிலநாட்களே ஆனவன். ஆயினும் இத்தகைய உயர்ந்த உணவு இத்தனை எளிதாகத் தேடிவருவதை முன்னர் கண்டதில்லை உயர்ந்ததை அரிதாக்குவது தெய்வங்களின் விதி என்பதனால் எளிதாக வரும் உயர்ந்தது தெய்வங்களால் விலக்கப்பட்டது என்றே பொருளாகும். இதை நாம் தவிர்ப்பதே முறை’ என்றான். ‘இவ்வுணவு என்னைத்தேடிவருவது நான் இதற்குத் தகுதிகொண்டவள் என்பதனால்தான். இதை தெய்வங்கள் எனக்களிக்கும் பரிசென்றே எண்ணுகிறேன். தகுதியுடையதை தன் திறனால் கொள்ளாது விடுவது கோழைத்தனம் என்றே கொள்ளப்படும். தெய்வங்கள் கோழையை விரும்புவதில்லை’ என்றாள் மகாபலை. மேலும் தயங்கிய அக்ஷனிடம் ‘இது என் ஆணை’ என்றாள்.

அக்ஷன் சென்று அந்த பொன்னிறப்பூச்சியை கவ்விக்கொண்டான். அதனுடன் இணைந்திருந்த தூண்டில்முள் அவன் தொண்டயில் குத்தி கவ்விக்கொண்டது. அதைக்கண்ட மகாபலை ‘இளையோரே, மூத்தவரை காப்பாற்றுங்கள்’ என்றாள். இளையவர் நால்வரும் தமையனை கவ்விக்கொண்டனர். ஐவருடன் தூண்டில் மேலெழெக்கண்ட அன்னை எழுந்து ஐவரையும் தான் விழுங்க தூண்டிலில் அவளும் சிக்கிக்கொண்டாள். கரையெழுந்து குளிர்ந்த சேற்றில் விழுந்தாள். மூச்சின்றி துடித்து வாலறைந்து வளைந்து துள்ளி விழுந்து விழுந்து அவள் இறந்தபோது அவள் வாய்க்குள் குழந்தைகள் ஐந்தும் முன்னரே இறந்திருந்தன.

விண்ணின் மூச்சுவெளியில் நின்று அழுத அவளைக் கண்டு பிரம்மன் உளமிரங்கினார். ‘பிழைசெய்துவிட்டேன் அண்ணலே. அறிவின்மையால் என் மைந்தரை அழித்தேன்’ என்று அவள் அழுதபோது ‘நீ அன்னையென எவ்வுயிரும் ஆற்றுவதையே செய்தாய். அது ஊழின் வழியாகும். துயரம் தவிர்’ என்றார் பிரம்மன். அவள் நெஞ்சு அடங்கவில்லை. ’நானறிந்த எதுவும் என்னுடன் வரவில்லையே. ஒருகணம் எண்ணியிருந்தேன் என்றால் அந்த நூலையல்லவா அறுத்திருப்பேன்’ என்றாள். ‘என் நெஞ்சிலிருந்த வெம்மையால் குளிர்ந்து உறைந்த என் மைந்தரை எழுப்பி வாழச்செய்திருப்பேன். எந்தையே, என்னுள் அவ்வனல் நின்றெரிகிறது. அதை நான் அணைக்காமல் விண்ணேற முடியாது’ என்றாள்.

புன்னகைபுரிந்த பிரம்மன் அவள் தலையில் கையை வைத்து வாழ்த்தினார். அவர் எண்ணத்தால் அவள் உத்தரவனத்தில் திரியை என்னும் பெயருடன் ஒரு காட்டுப்பெண்ணாகப்பிறந்தாள். ஐந்து மைந்தருக்கு அன்னையானாள். காலன், காலகேயன், காலகன், காலரூபன், காலசண்டன் என்னும் ஐந்து மைந்தரும் அவளைப்போலவே மஞ்சள் நிற உடலும் அரக்குநிறப் பற்களும் வெண்கல் விழிகளும் கொண்டிருந்தார்கள். காடுகளில் கிழங்கும்தேனும் அரக்கும்ஊனும் தேடிச்சேர்த்து நகர்ச்சந்தையில் விற்று வாழ்ந்தனர். தன் மலைக்குடில் வாயிலில் அமர்ந்து இளவெயிலில் விளையாடும் மைந்தரைக்கண்டு அவள் மகிழ்ந்தாள். அவர்கள் கங்கைநீரில் ஆடுகையில் கரைப்பாறையில் அமர்ந்து பெருங்கொடை பெற்றேன் என்று உளம்நிறைந்தாள்.

அந்நாளில் ஒருமுறை அவள் தன் ஐந்துமைந்தருடன் நகர்புகுந்து ஊனும் அரக்கும் விற்று அப்பணத்திற்கு கள்ளும் மீனும் வாங்கி உண்டு களித்தாள். களைத்த கால்களுடன் மலையேறமுடியாதென உணர்ந்து அவளறிந்த ஒருவன் வாழ்ந்த அரண்மனைப் புறக்கோட்டத்திற்குச்சென்றாள். அங்கே எஞ்சிய அரக்கையும் ஊனையும் அளித்தபின் அவர்கள் அளித்த இன்கடுங்கள்ளை மேலும் அருந்தி ஊனுணவு உண்டு புறக்கூடத்தில் மைந்தருடன் படுத்துக்கொண்டாள். அந்த உணவும் மதுவும் ஏன் அத்தனை சுவையாக இருக்கின்றன என்று அவள் நூறுமுறை தனக்குள் வினவிக்கொண்டாள். மீனுக்கு வைக்கப்பட்ட தூண்டில் இரை போன்றது அச்சுவை என்று தன்னுள் எழுந்த எச்சரிக்கையின் பதற்றமே அச்சுவையை அளிக்கிறது என்று உணர்ந்தபோது மேலும் அள்ளி உண்ணவும் குடித்து நிறையவுமே அவளுக்குத்தோன்றியது.

நள்ளிரவில் துயிலுக்குள் அவள் பொன்னாலான உடலும் செந்நிறத்தில் பறக்கும் குழலும் நீலநிறக்கால்களும் கொண்ட ஒருவனை கண்டாள். அவன் உடலில் எரியும் அரக்கின் மணமிருந்தது. நீர்ப்பாவை போல அலையடித்து நடனமிட்டபடி அவன் அவளை நோக்கி புன்னகைத்தபோது ஒளிவிட்ட வெண்ணிறப்பற்களுக்கிடையே இருந்து செந்தழல் அரவுநா வெளியே வந்து கிளைபிரிந்து பறந்தது. அவன் விழிகனலக் குனிந்து அவள் மைந்தரை கைவிரித்து அணைக்கப்போவதைக் கண்டு அவள் அலறியபடி விழித்துக்கொண்டாள். அந்தக்கூடத்தின் சுவர்கள் தழலெழுந்து உருகிவழிவதைக் கண்டதும் பாய்ந்து தன் ஐந்துமைந்தரையும் கைகளாலும் கால்களாலும் அள்ளி அணைத்து இறுக்கிக்கொண்டாள். அவர்கள் விழித்தெழுந்து அலறியபடி அவள் பிடியில் திணறித் தவித்தனர். அவள் கண்களைமூடி கூவியழுது உடல் துடிக்க தன் பிடியை மேலும் இறுக்கிக்கொண்டாள். அவர்கள்மேல் எரியும் அரக்கின் பெருந்தூண்கள் விழுந்தன. ஊன்கருகி உருகி வழிந்தோட வெள்ளெலும்புக்குவை என அங்கே எஞ்சினர். அரசமாளிகையில் எஞ்சியமையால் அவர்களின் எலும்புகள் முறைமைப்படி கங்கையில் இடப்பட்டன. மகாபலை பிடிபட்ட அந்தப் படித்துறையிலேயே அவை நீராழத்தை அடைந்தன.

மீண்டும் மூச்சுலகில் நின்று நெஞ்சில் அறைந்து அழுதுகொண்டிருந்தவள் முன் பிரம்மன் தோன்றினார். ‘துயருறவேண்டியதில்லை அன்னையே. அன்னையென நீ செய்தது தெய்வங்கள் விழைவதையே’ என்றார். ‘எந்தையே, என் நெஞ்சுக்குள் நிறைந்திருந்த குளிரால் கனன்றுருகிய என் மைந்தரை மூடியிருந்தேன் என்றால் அவர்கள் வாழ்ந்திருப்பார்கள். அக்குளிர் என்னுள் எஞ்சுகையில் நான் எப்படி விண்ணேகுவேன்… எனக்கு இன்னொரு மண்வாழ்வை அளியுங்கள்’ என்றாள். ‘நீ காண்டவம் என்றொரு காட்டில் ஐந்துமைந்தருடன் ஜரிதையெனும் பெண்ணாக ஆவாய்’ என்றார் படைப்புத்தெய்வம்.

மணிக்கோலை முத்தாய்ப்பாக அடித்து நிறுத்திய அபரன் “குளிரும் வெம்மையுமாக ஆன அமுதே, அன்னைமுலைப்பாலே, உனக்கு வணக்கம்” என்றார்.

நூல் ஏழு – காண்டவம் – 1

அனந்தனை வாசுகியை சேஷனை
பத்மநாபனை கம்பலனை
சங்குபலனை திருதராஷ்டிரனுடன்
தக்‌ஷனையும் காளியனையும்
வணங்குகிறேன்

[ஒன்பது நாகங்களுக்கான வாழ்த்து]

அனைத்தும் பின்னப்படுவதற்கு முன்பு இருந்தது ஒரு மாபெரும் சிலந்தி என்றறிக! எட்டுதிசைகளிலும் நடப்பதற்குரிய எட்டுகால்களும் பத்துதிசைகளிலும் நோக்குவதற்குரிய பல்லாயிரம் விழித்தொகைகளும் கொண்டது. இரு நச்சுக்கொடுக்குகளுக்குக் கீழே திறந்த வாயால் அது உண்ட அனைத்தும் அதனால் நஞ்சூட்டப்பட்டவையே. தன் நஞ்சை தானுண்டு நிறைந்து அழிவின்மையை அடைந்தது. அதன் விழிமூட இருளும் விழிவிரிய ஒளியுமென வெளி அதை சூழ்ந்திருந்தது. முதல்முழுமையான பெருஞ்சிலந்தியை வாழ்த்துக! அன்னையும் தந்தையும், அதுவும் பிறிதுமாகி அமைந்த ஒன்றை வாழ்த்துக! சூதரே, மாகதரே, இந்த மாலையில் அதன் விழிகளாகி விண்மீன்கள் ஒளிர்க!

தன் முடிவிலா பெருந்தனிமையில் சலித்துச் சோர்ந்து அது விம்மியது. கால அகால வெளியில் அது அள்ளியுண்ட வெறுமை எலாம் அதனுள் சேர்ந்து நிறைந்து பிசினாகியது. அப்பிசினைச் சுரந்து தன் எட்டுகால்களால் தொட்டெடுத்து ஒளிச்சரடுகளாக்கியது. இருபின்னங்கால்கள் பின்னிழுக்க, இரு முன்னங்கால்கள் முன்னெழுப்ப, நான்கு நடுக்கால்கள் நடுவே சமன்செய்தசைய, இருந்த இடத்திலிருந்தே அது செய்த நடனம் அச்சரடுகளை ஒரு வலையாக்கியது. அவ்வலை அதைச்சூழ்ந்து விரிந்து படர்ந்து சென்றபின் அதில் தான் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து அது புன்னகைசெய்தது. அவ்வலையின் சிடுக்குகளை அவிழ்க்க அது செய்த முயற்சிகளெல்லாம் நடனமாகி மேலும் வலையாகின. அவ்வலையை அவிழ்ப்பதும் கிழிப்பதும் அழிப்பதும் எல்லாம் வலைநெசவாகும் விந்தையை எண்ணி பெருஞ்சிலந்தி திகைத்து அமர்ந்துகொண்டது.

அந்தத் தவம் கனிந்து விழிதிறந்து எட்டு திசைக்கும் எட்டு சிறுசிலந்திகளை அது ஈன்றது. ஒளிவிடும் சிறுமுட்டைகளால் ஆன வெண்பையை தன் வயிற்றோடு அடக்கியபடி ‘நீங்கள் நெய்வீர்களாக!’ என வாழ்த்தியது. பையுடைந்து வரும்போதே ஒளிவடிவச் சிற்றுடல் கொண்டிருந்த சிலந்திக்குழவிகள் அன்னையின் வயிற்றுப்பிசினில் சிக்கி நெளிந்த எட்டு சிறுகால்களால் வலைபின்னத் தொடங்கின. அவற்றின் அசைவெல்லாம் வலையாகி விரிந்து திசைகளை மூடின. ஒவ்வொரு அசைவாலும் அவை அன்னையை விட்டு விலகிச்சென்றுகொண்டே இருந்தன. அதனூடாக அவை அன்னையை சென்றுசேரும் வலைவழிப்பாதை ஒன்றை பின்னியமைத்தன.

எட்டுமைந்தரும் கருக்கொண்டு எட்டெட்டு மைந்தர்களை பெற்றனர். அவர்களின் நடனங்கள் வலைகளாகி திசைதேர்ந்தன. எட்டெட்டாகப் பெருகிப் பெருகி முடிவிலிப்பெருங்காலப் பெருக்கென அவர்கள் நெய்தவலையின் எந்தக்கண்ணியை தொட்டாலும் அது அன்னைப்பெருஞ்சிலந்தியை தொடுவதாகவே ஆகியது. ஆனால் எண்ணத் தொலையாத பெரும்பின்னல் வெளிக்கு அப்பால் எங்கோ இருந்தது அது. கணம்தோறும் எட்டுமடங்காகிக்கொண்டிருக்கும் கணங்களின் முடிவிலிக்கு வணக்கம். இங்கிருந்து புன்னகையுடன் உன் கணக்கை அறிவேன் என்று சொல்லும் இச்சூதனை நோக்கி நீயும் புன்னகைக்கிறாய் அல்லவா? நீயும் வணங்குக என்னை!

சூதரே, மாகதரே, தத்துவமெய்ப்பொருள் கற்றவர்கள், வேதமுதற்சொல் உணர்ந்தவர்கள், ஊழ்கத்திலமர்ந்த உயர்ந்தோர் அந்த வலையை தங்கள் அஞ்சும் விரல்களால் தீண்டுகிறார்கள். தங்கள் அத்தனை கணக்குகளாலும் அதன் சிடுக்குகளை அவிழ்க்கிறார்கள். அதைப்பற்றிக்கொண்டு மையிருள்பிசினாலான பெருவெளியில் தொற்றி ஏறிக்கொள்கிறார்கள். அவிழ்த்தவிழ்த்துச் செல்கிறார்கள். அவர்களுக்குப்பின்னால் செல்பவர்களோ அவர்கள் உருவாக்கிய வலைப்பின்னலைக் கண்டு அதை அவிழ்க்கத் தொடங்குகிறார்கள். அவிழ்த்துச்செல்பவர்களெல்லாம் அந்த வலைப்பெருவெளியின் எல்லையின்மையைச் சென்றடைந்து திகைத்து நின்று வலை என்ற சொல்லாக சிலந்தியை அறிகிறார்கள்.

எளியசூதன் இனிய முயலிறைச்சியை உருகிவழியும் கொழுப்பு கடைவாயில் சொட்ட மென்று தின்கிறான். இன்கடும்கள்ளை மூங்கில்கோப்பையில் எடுத்து மாந்துகிறான். கையை யாழின் கம்பிகளிலேயே வழித்துத் துடைத்துவிட்டு கட்டைவிரலால் ஆணியைச் சுழற்றி சுட்டுவிரலால் படுநரம்பை மீட்டி அவன் வாயில் எழுவது எதுவோ அதை பாடுகிறான். எட்டுகைகளாலும் தன் உயிர்பசையை தானே நெய்து திசை சமைக்கும் சிலந்திக்கு அதிலேயே சிக்கிக்கொள்வதைப்போல இன்பம் பிறிதில்லை. தானெனும் சுனையில் சுழிக்கிறான். தன்னது என்னும் ஆற்றில் செல்கிறான். தன் இருளில் மறைந்து தன்னிலிருந்து ஒளிர்ந்தெழுகிறான். நெய்து நெய்து இருண்ட பெருவெளியை நிறைத்து மேலும் செல்ல இடமில்லாதாகும்போது எதிரே தன்னைக்கண்டு அதேபோலத் திகைத்து நிற்கும் அன்னைப்பெருஞ்சிலந்தியை காண்கிறான்.

‘இடம்கொடு… விலகு’ என தன் முன்கால்களால் அதை முட்டிவிலக்கி அவன் முன்செல்கிறான். முதலன்னைப் பெருஞ்சிலந்தி அவனுக்குப்பின்னால் புன்னகையுடன் நின்றிருக்கிறது. தன்னை மறந்து சற்றுநேரம் நின்றிருந்தபின் அது மீளும்போது சூதனின் வலைப்பின்னலில் சிக்கியிருப்பதை உணர்கிறது. குழவிச்சிலந்தியென மாறி சிறுகால்களை உதைத்து கொடுக்குகளை வாயிலிட்டு சுவைத்துக்கொண்டு அந்த வலைத்தொட்டிலில் படுத்து கண்வளர்கிறது. அது உண்ணும் அமுதுக்கு வணக்கம். அமுதாகி நிறையும் அதற்கு வணக்கம். அதுநுரைக்கும் கலமாக இங்கிருக்கும் இச்சிறு யாழுக்கு வணக்கம். அதன் நரம்புகளில் இறுகிநிற்கும் என் மூதாதையருக்கு வணக்கம்.

ஓம்! ஓம்! ஓம்!

நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 91

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 10

சுதுத்ரியின் கரைக்கு பூரிசிரவஸ் வந்துசேர்ந்தபோது மாலை சிவக்கத் தொடங்கியிருந்தது. அவனுடைய புரவி நன்கு களைத்திருந்தது. கோடையில் நீர் மேலும் பெருகுவது சிந்துவின் தங்கைகளின் இயல்பு என்பதனால் நீர்விளிம்பு மேலேறி வண்டிப்பாதை நேராகவே நீரில் சென்று மூழ்கி மறைந்தது. கரையோரத்து மரங்களெல்லாம் நீருக்குள் இறங்கி நின்றிருக்க நீருக்குள் ஒரு தலைகீழ்க்காடு தெரிந்தது. மழைக்கால நீர்ப்பெருக்கின் கலங்கலும் குப்பைகளும் சுழிப்புகளும் இன்றி மலையுச்சிப் பனி உருகி வந்த நீர் தெளிந்து வானுருகி வழிவதுபோல சென்றது. கரையோரங்களில் சேறுபடிந்திருக்கவில்லை.

அவனுடைய புரவி விடாய்கொண்டிருந்தது. நீரின் மணத்தைப்பெற்றதும் அதுவும் விரைவுகொண்டு தலையை ஆட்டியபடி முன்னால்சென்றது. அவன் நதியின் அருகே சென்றதும் குளிரை உணர்ந்தான். நெருங்க நெருங்க உடல் சிலிர்த்தது. புரவியை விட்டு இறங்கியதும் அது நேராக நீரை நோக்கி சென்றது. கரைமரத்தில் கட்டப்பட்ட படகில் இருந்த முதியகுகன் உரக்க “வீரரே, நீரை குதிரை அருந்தலாகாது. பிடியுங்கள்” என்றான். அவன் குதிரையைப் பிடித்து கடிவாளத்தை இழுத்தான். அது தலையைத் தூக்கி கழுத்தை வளைத்து பெரிய பற்கள் தெரிய வாய் திறந்து கனைத்தது. விழிகளை உருட்டியபடி சுற்றிவந்தது.

“நீர் மிகக் குளிர்ந்தது. மேலே ஆலகாலமுண்ட அண்ணலின் காலடியில் இருந்து வருகிறது. அது உயிர்களுக்கு நஞ்சு… அதன் கரிய நிறத்தை பார்த்தீர்களல்லவா?” என்றான் குகன். பூரிசிரவஸ் திரும்பி நோக்கினான். “அதோ, அந்த வயலில் தேங்கியிருக்கும் நீரை குதிரைக்கு அளியுங்கள். அது இளவெம்மையுடன் இருக்கும்” என்றான். அவன் குதிரையை இழுத்துக்கொண்டுசென்று வயலில் நிறுத்த அது ஆவலுடன் குனிந்து நீரை உறிஞ்சியது. “அதுவும் இந்நதிதான். ஆனால் அவள் அகம் கனிந்து முலைசுரந்தது அது.”

குதிரையுடன் அணுகி “நான் மறுகரை செல்லவேண்டும்” என்றான். “நீர்ப்பெருக்கு வல்லமையுடன் இருக்கிறது. நான் துழாவிக்கொண்டுசெல்லமுடியாது. என் கைகள் தளர்ந்துவிட்டன” என்றான் குகன். “என் மைந்தர்கள் அதோ மறுகரையில் இருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கச் சொல்கிறேன்.”

பூரிசிரவஸ் படகில் அமர்ந்தபடி “இங்கு பெரிய படகுகள் உண்டல்லவா?” என்றான். “ஆம், ஆனால் பார்த்தீர்களல்லவா? படகுத்துறை நீருள் உள்ளது. கோடைநீர் பெருக்கில் துறையை பன்னிருநாழிகை தெற்காக கொண்டுசென்றுவிடுவார்கள்.” பூரிசிரவஸ் “அதுதான் சாலையெங்கும் பொதிவண்டிகளையே காணமுடியவில்லை” என்றான். “வழியில் நீங்கள் கேட்டிருக்கலாம்” என்றான் குகன். “எங்கு செல்கிறீர்கள்?”

பூரிசிரவஸ் “பால்ஹிகநாட்டுக்கு…” என்றான். “அப்படியென்றால் நீங்கள் ஆறு சிந்துக்களை கடக்கவேண்டுமே. நீங்கள் தெற்காகச் சென்று கடந்துசெல்வதே நன்று… பிற ஆறுகள் இன்னும் விரைவுள்ளவை.” பூரிசிரவஸ் “ஆம். அதைத்தான் செய்யவேண்டும்” என்றான்.

நீரில் படகு அணுகுவதை பார்த்தான். அதில் ஒரே ஒரு வீரன் மட்டும்தான் இருந்தான். அவனுடைய குதிரை அசையாமல் தலைதாழ்த்தி நின்றது. அதன் கடிவாளத்தை பிடித்தபடி அவன் குறுக்குப்பட்டைப்பலகையில் தலைதூக்கி நீரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். அதனாலேயே அவனுக்கு அவனை பிடித்திருந்தது. பெரும்பாலான பயணிகள் படகிலிருக்கையில் கரைகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீரை நோக்குபவர்கள் இன்னும் ஆழமானவர்கள். கலைந்து பறக்கும் அவனுடைய குழல்கற்றையை நோக்கிக்கொண்டிருந்தான்.

அவன் பறந்து அணுகுவதுபோல தோன்றியது. அல்லது எதுவுமே நிகழாமல் நடுவே இருக்கும் காலமும் வெளியும் சுருங்கிச்சுருங்கி அவர்களை அணுகச்செய்வது போல. அவனுடைய விழிகள் தெரிந்தன. மேலும் அணுகியபோது அவன் யாதவன் என்பதை ஆடைகட்டப்பட்டிருந்ததில் இருந்தும் கழுத்தின் இலச்சினையிலிருந்தும் உணர்ந்தான்.

படகு மரங்களுக்குள் புகுந்தது. அதை ஓட்டிய இளம் குகர்கள் துடுப்பால் அடிமரங்களை உந்தி உந்தி அதை விலக்கியும் செலுத்தியும் நெருங்கி வந்தனர். படகு சரிந்துகிடந்த பெரிய மரத்தை அணுகியதும் அதைத் திருப்பி விலா உரச நிறுத்தினர். இளைஞன் எழுந்து தன் குதிரையின் கழுத்தை தட்டினான். அது நீரை நோக்கி தயங்கி உடலை பின்னால் இழுத்தது. அவன் நீரில் குதித்து முழங்காலளவு நீரில் நின்று அதை இழுத்தான். குதிரை விழிகளை உருட்டி பெருமூச்சுவிட்டபின் மெல்ல நீரில் இறங்கியது.

அதன் உடல் குளிரில் சிலிர்க்க வால் தூக்கி பச்சை நிறமாக சிறுநீர் கழித்தது. அந்த மணமறிந்த பூரிசிரவஸ்ஸின் குதிரை தொலைவில் தலைதூக்கி கனைத்தது. இளைஞனின் குதிரை ஏறிட்டு நோக்கி விழியுருட்டி மறுமொழி சொன்னது. அவன் அதன் கடிவாளத்தைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்று வயலருகே மரத்தில் கட்டினான். பூரிசிரவஸ் அவனை நோக்க அவன் புன்னகை செய்தான். தோள்களில் சூடு போட்டது போன்ற தழும்புகள். அவன் தொழும்பனா என்ற வியப்பும் தொழும்பர்கள் புரவியேற முடியாதே என்ற எண்ணமும் ஏற்பட்டது.

“நான் மறுகரை செல்லவேண்டும் குகர்களே” என்றான் பூரிசிரவஸ். “வீரரே, நீரின் விசை மிகையாக உள்ளது. இக்கரை வருவதற்குள் கைசோர்ந்துவிட்டோம்” என்றான் ஒருவன். “தாங்கள் இங்கு தங்கி நாளை செல்லலாமே!” பூரிசிரவஸ் “இல்லை, நான் சென்றாகவேண்டும்…” என்றான். மூத்தவன் “ஒருவரே செல்வதாக இருந்தால்…” என்று சொல்ல “பொன் அளிக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் சற்று இளைப்பாறிக்கொள்கிறோம்” என்று இளையவன் சொன்னான். முதுகுகன் “நான் இன்கடுநீர் காய்ச்சுகிறேன். அருந்திவிட்டு கிளம்பினால் சரியாக இருக்கும் என்றபின் திரும்பி “வீரரே, இன்கடுநீர் அருந்துகிறீர்களா?” என்றான். “ஆம்” என்றான் அவன்.

வீரன் அருகே வந்து வணங்கி “நான் யாதவனாகிய சாத்யகி. தாங்கள்?” என்றான். “நான் பால்ஹிகன், பூரிசிரவஸ் என்று பெயர்.” அவன் முகம் மலர்ந்து “ஆம், கேட்டிருக்கிறேன். உண்மையில் இருமுறை சேய்மையில் பார்த்துமிருக்கிறேன். சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் “நினைவில் நிற்காத முகம்தான்” என்றான். சாத்யகி “அதுவும் நன்றே… எங்கு செல்கிறீர்கள்?” என்றான். “தமையன் உடனே வரும்படி செய்தி அனுப்பியிருந்தார். ஆகவே நாடு திரும்புகிறேன்.”

சாத்யகி “தனியாகவா?” என்றான். “ஆம், நான் எப்போதுமே தனியாக புரவியில் செல்வதை விரும்புகிறவன்.” “நானும்தான்” என்றபடி சிரித்தான் சாத்யகி. “அமருங்கள்” என்றதும் படகின் விளிம்பில் அமர்ந்தான். இரு இளம் குகர்களும் சற்று விலகி அமர்ந்து வெற்றிலைமெல்லத் தொடங்கினர். முதியவன் அடுப்பு மூட்டி கலத்தை வைத்தான். “நீங்கள் இளையயாதவரின் அணுக்கர் என அறிவேன்” என்றான் பூரிசிரவஸ். சாத்யகி சிரித்தபடி “நான் இளைய யாதவரின் தொழும்பன். என் தோள்குறிகளை நீங்கள் பார்ப்பதைக் கண்டேன்” என்றான். “தொழும்பர் என்றால்…?” சாத்யகி “அவருக்கு அடிமைசெய்வேன்” என்றான்.

பூரிசிரவஸ் அவன் விழிகளை சற்று நேரம் நோக்கியபின் “அவ்வாறு அடிமையாக என்னால் முடியுமென்றால் அது என் பிறவிப்பேறென்றே எண்ணுவேன்” என்றான். “அவ்விழைவு உண்மையானதென்றால் நீங்கள் இதற்குள் அடிமையாகியிருப்பீர்கள். நீங்கள் உள்ளூர எதுவோ அதுவாகவே ஆகிறீர்கள்.” பூரிசிரவஸ் புன்னகைத்து ”உண்மைதான். நான் காற்றில் பறக்கும் முகில். வடிவமோ திசையோ அற்றவன்” என்றான்.

“அஸ்தினபுரியில் மணிமுடிசூட்டுவிழா சிறப்புற நிகழ்ந்ததை அறிந்தேன். என்னை இளைய யாதவர் துவாரகையில் இருக்கச்செய்துவிட்டார். இப்போது அவர் துவாரகைக்கு கிளம்புகிறார். என்னை அர்ஜுனருடன் இருக்கச் சொன்னார். நான் அவரிடம் வில்வித்தை கற்கிறேன்.”

பார்த்ததுமே அவன் வெளிப்படையாகப் பேசத்தொடங்கியது பூரிசிரவஸ்ஸுக்கு பிடித்திருந்தது. “மிகச்சிறப்பான விழா. நீங்கள் இருந்திருந்தால் அழியா நினைவாக இருந்திருக்கும்” என்றான். “பாஞ்சால இளவரசியும் மூத்த பாண்டவரும் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்தனர். துரியோதனரும் துச்சாதனரும் இருபுறமும் நின்று அவர்களை அழைத்துச்சென்று அமரச்செய்தனர். அதன்பின் துரியோதனருக்கே அஸ்தினபுரியின் மணிமுடியை மூத்தபாண்டவர் அளித்தார். அவர் தட்சிணகுருநாட்டை மூத்தபாண்டவருக்கு அளித்தார்.”

சாத்யகி “நாடு இரண்டாகியது இல்லையா?” என்றான். “ஆம், ஆனால் குடி ஒன்றாகியது. ஒவ்வொருவரும் மாறிமாறி தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டனர். எங்கும் உவகையும் சிரிப்பும்தான் நிறைந்திருந்தது. அரசகுடியினரிலிருந்து அது அவையினருக்கும் நகருக்கும் பரவியது… நகரமே சிரித்துக் களித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.”

சாத்யகி “பால்ஹிகரே, உள்ளங்கள் ஒன்றாயின என்றால் ஏன் நாடுகள் பிரியவேண்டும்?” என்றான். பூரிசிரவஸ் அந்த நேரடிவினாவின் முன் திகைத்து சொல்லிழந்தான். ”நாடுகள் பிரிகின்றன என்பது மட்டுமே உண்மை. பிற அனைத்தும் அவர்கள் அறியாமல் செய்யும் நடிப்புகள். அந்த உண்மையை தங்களிடமே மறைத்துக்கொள்வதற்காக மிகையுணர்ச்சி கொள்கிறார்கள். தெய்வங்கள் மானுடரை கண்கட்டி விளையாடச்செய்யும் தருணம் இது.”

பூரிசிரவஸ் சீண்டப்பட்டு “அப்படி உடனே சொல்லிவிடவேண்டியதில்லை… உண்மையில்…” என தொடங்க “அப்படியென்றால் நாட்டை பிரிக்கவேண்டியதில்லை என்று சொல்லியிருந்தால் அத்தனை உணர்வெழுச்சியும் தலைகீழாக ஆகியிருக்கும். சிந்தித்துப்பாருங்கள். அப்படி எவரேனும் சொன்னார்களா? இளைய யாதவர் சொல்லமாட்டார். விதுரரோ மாமன்னரோ சொல்லியிருக்கலாம் அல்லவா?” என்றான் சாத்யகி.

பூரிசிரவஸ் “சொல்லவில்லை” என்றான். “அத்தனைபேருக்கும் தெரியும். ஆகவேதான் அவர்கள் சொல்லவில்லை.” பூரிசிரவஸ் சிலகணங்களுக்குப்பின் “ஆம், உண்மைதான்” என்றான்.

அவர்களிடையே அமைதி நிலவியது. சாத்யகி அதை குலைத்து ”எப்போது இந்திரப்பிரஸ்தத்தின் பணிகள் தொடங்குகின்றன?” என்றான். “அவர்கள் இன்னும் சிலநாட்களில் தட்சிணகுருவுக்கே செல்லப்போகிறார்கள். பாண்டவர்களும் அவர்களின் அரசிகளும். அங்கே அவர்கள் தங்குவதற்கான பாடிவீடுகளை கட்டத்தொடங்கிவிட்டனர். வளர்பிறை முதல்நாளில் இந்திரப்பிரஸ்தத்திற்கான கால்கோள்விழா என்றார்கள். பாஞ்சாலத்திலிருந்து சிற்பிகள் வருகிறார்கள்.”

சாத்யகி “படகுகளை எடைதூக்கப் பயன்படுத்தும் கலையை துவாரகையின் சிற்பிகள் கற்பிப்பார்கள். விரைவிலேயே முடித்துவிடமுடியும்…” என்றான். “இந்திரனுக்குரிய நகரம் என்றார்கள். துவாரகையை விடப்பெரியது என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்.” சாத்யகி புன்னகைசெய்தான். “இந்திரப்பிரஸ்தம் எழுவதைப்பற்றி கௌரவர்கள் கவலைகொள்ளவில்லை. ஜயத்ரதர்தான் சினமும் எரிச்சலுமாக பேசிக்கொண்டிருந்தார்” என்றான் பூரிசிரவஸ்.

சாத்யகி “அவருக்கென்ன?” என்றான். “அவருக்கு திரௌபதியின் மீது தீராத வஞ்சம் இருக்கிறது” என்றான் பூரிசிரவஸ். “ஏன்?” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. “காம்பில்ய மணநிகழ்வில் தோற்றதை எண்ணிக்கொண்டிருக்கிறாரா?” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் “போரிலும் தோற்றிருக்கிறார்” என்றான். “போரில் அவமதிப்புக்குள்ளானவர் அங்கநாட்டரசர் அல்லவா?” பூரிசிரவஸ் “அவரும் வஞ்சம் கொண்டிருக்கலாம்” என்றான்.

சாத்யகி புன்னகையுடன் “நீர் வஞ்சம் கொண்டிருக்கிறீரா?” என்றான். “நானா? எவரிடம்?” என்று பூரிசிரவஸ் திகைப்புடன் கேட்டான். சாத்யகி சிரிப்பு தெரிந்த விழிகளுடன் “நீர் இழந்த பெண்ணிடம். அவளை மணந்தவரிடம்” என்றான். அவ்வேளையில் முதியகுகன் இன்கடுநீர் கொண்டுவந்தான். மூங்கில்குவளைகளில் அதை எடுத்துக்கொண்ட அசைவில் பூரிசிரவஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டான். “நீர் விரும்பவில்லையேல் சொல்லவேண்டியதில்லை” என்றான் சாத்யகி.

“யாதவரே, உம்மிடம் நான் கொள்ளும் அணுக்கம் எவரிடமும் அறிந்திராதது” என்றான் பூரிசிரவஸ். “நான் இழந்தேன். துயர்கொண்டிருக்கிறேன். வஞ்சம் கொள்ளவில்லை.” சாத்யகி “அது நன்று” என்றான். “அந்த வஞ்சத்தால் எஞ்சியவாழ்நாள் முழுக்க நீர் அனைத்து இன்பங்களையும் இழந்துவிடக்கூடும்.” பூரிசிரவஸ் “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் அதை இவ்வேளையில் சொற்களாக கேட்கையில் அகம் உறுதிகொள்கிறது” என்றான்.

சாத்யகி “சில வேளைகளில் இழப்புகூட நமக்கு உகந்ததாக இருக்கலாம் பால்ஹிகரே. நாகத்தை பற்றித் தூக்கிப் பறக்கும் பருந்து எடைமிகுந்தால் உகிர்தளர்த்தி அதை விட்டுவிடும். ஆனால் சிலநேரங்களில் நாகம் அதன் கால்களைச்சுற்றிவிடும். சிறகு தளர்ந்து இரண்டும் சேர்ந்து மண்ணில் விழுந்து இறக்கும். யாதவர்களின் ஒரு கதை இது” என்றான். பூரிசிரவஸ் திகைப்பு நிறைந்த கண்களுடன் சாத்யகியை பார்த்தான். அவன் அனைத்தும் அறிந்து சொல்வதுபோல தோன்றியது. ஆனால் எப்படி அறிந்தான்?

சாத்யகி சிரித்து “அஞ்சவேண்டாம். நான் எதையும் அறிந்து சொல்லவில்லை” என்றான். பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். சாத்யகி மேலும் சிரித்து “ஆனால் ஜயத்ரதரைப் பற்றி சொன்ன உங்கள் விழிகளில் அறியவேண்டிய அனைத்தும் இருந்தன” என்றான். பூரிசிரவஸ்ஸால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சாத்யகி “நாம் இளைஞர்கள் ஏன் இத்தனை எளியவர்களாக இருக்கிறோம்?” என்றான். பூரிசிரவஸ் “நம்முடைய இடரே நம்மை சிக்கலானவர்கள் என்று மதிப்பிட்டு நம்மிடம் பழகும் பெரியவர்களால்தான்” என்றான். சாத்யகி தேவைக்குமேல் உரக்கச்சிரித்து “ஆம், அது உண்மை” என்றான்.

குகர்கள் எழுந்தனர். “கிளம்பலாம் வீரரே. இருட்டுவதற்குள் மறுகரை சென்றுவிடவேண்டும்” என்றான் ஒருவன். “நான் வருகிறேன் யாதவரே. நாம் மீண்டும் சந்திக்கவேண்டும்.” சாத்யகி “நாம் சந்தித்துக்கொண்டேதான் இருப்போம் என நினைக்கிறேன் பால்ஹிகரே. நீங்கள் எனக்கு மிக அண்மையானவர் என்று என் அகம் சொல்கிறது” என்றான். பூரிசிரவஸ் கைவிரிக்க சாத்யகி அவனை தழுவிக்கொண்டான். “வருகிறேன்” என மீண்டும் சொல்லிவிட்டு பூரிசிரவஸ் சென்று படகில் ஏறினான். முதியகுகன் அவன் புரவியை அவிழ்த்து வந்தான்.

“இதே சிரிப்புடன் செல்லுங்கள்” என்று சாத்யகி கூவினான். பூரிசிரவஸ் “ஆம், இனி சிரிப்புதான்” என்றான். புரவி நீரில் நடந்து நின்று சிலிர்த்து சிறுநீர் கழித்தது. சாத்யகியின் புரவி திரும்பி கனைத்தது. குகன் புரவியின் புட்டத்தை அடிக்க அது பாய்ந்து படகில் ஏறி அதன் ஆட்டத்திற்கு ஏற்ப எளிதாக உடலை சமன் செய்துகொண்டு நின்றது. குகர்கள் இருவரும் ஏறி துடுப்புகளால் மரங்களை உந்தினார்கள். அந்திச்செவ்வெயிலில் சாத்யகியின் முகத்தை நோக்கி பூரிசிரவஸ் கையை தூக்கினான். “சென்றுவருக!” என்றான் சாத்யகி உரக்க. “இத்தருணம் வாழ்க!” என்றான் பூரிசிரவஸ்.

[வெண்முகில்நகரம் நிறைவு]