நூல் இருபது – கார்கடல் – 45

ele1குருக்ஷேத்ரப் பெருநிலத்தில் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் மேற்கு எல்லையில் ஆளுயரச் சிதல்புற்றுகள்போல் ஒன்றன்மேல் ஒன்று ஏறிச் செறிந்து நின்ற செம்மண் மேட்டின் இடுக்குகளில் தசைக் கதுப்பெனத் தெரிந்த சேற்றில் ஈரக்கசிவாகத் தோன்றி சொட்டி சிறு வழிவுகளாகி திரண்டு ஓடையாகி இறங்கி செம்மண் சேறு கரைவகுத்த சிறு சுனையொன்றில் தேங்கி கவிந்து ஒழுகி சிற்றோடையாகி காட்டிற்குள் சென்று இலை செறிந்த ஆழத்திற்குள் மறைந்து அங்கிருந்த நிலப்பிளவொன்றுக்குள் நுழைந்த தூநீர் ரக்தவாஹா என்று அழைக்கப்பட்டது. அது வஞ்சத்தின் ஒழுக்கு என்றனர் தொல்குடிப் பூசகர். அது ஆறாத புண். உறையாத குருதி. எவரும் அறியாத ஒழுக்கு.

அங்கு செல்வது நன்கு வழி தெரிந்த பூசகரின் துணையோடன்றி இயல்வதல்ல. பல்லாயிரம் கோடி அம்புகளும் வேல்களும் கூர்த்து நின்றிருக்கும் பெரும்படைபோல் முட்புதர்கள் அதை வேலியிட்டுச் சூழ்ந்திருந்தன. அவற்றை வெட்டி வழி தெளித்துச் செல்வது இயலாது. மண்ணுக்கு அடியில் செல்லும் பிலம் ஒன்று மட்டுமே பாதை. அதன் வாய்திறப்பு காட்டில் பிறிதொரு இடத்தில் இருந்தது. அதற்குள் குருக்ஷேத்ரக் காட்டில் வாழும் ஓநாய்களும் கழுதைப்புலிகளும் குடியிருந்தன. பற்பல தலைமுறைகளாக அவை கொன்று இழுத்துக்கொண்டுவந்து வைத்து உண்ட விலங்குகளின் எலும்புகளும் மண்டையோடுகளும் வெண்கூழாங்கற்களென செறிந்துகிடந்த அந்தச் செம்மண் வளைக்குள் காலூன்றி கை மடித்து பதித்து குழவியென இழைந்தும் மகவென தவழ்ந்தும் மட்டுமே செல்ல இயலும்.

வெளியிலிருந்து பச்சை இலைகொளுத்தில் புகையிட்டு உள்ளே இருளுக்குள் ஒளிந்திருக்கும் விலங்குகளையும் நாகங்களையும் அகற்றிவிட்டு உள்ளே செல்பவர் ஒரு காதம் அவ்வாறு எலியென்றும் அரவென்றும் சென்று பின்னர் மேலிருந்து ஒளி தெரியும் பொந்தினூடாக எழுந்து வெளிவந்தால் ரக்தவாஹாவை பார்க்க முடியும். அதை முதலில் பார்ப்பவர்கள் பேருடல்கொண்ட விலங்கொன்றின் புண் என்ற எண்ணத்தை அடைந்து நெஞ்சுலைவார்கள் என்றனர் சூதர். அதன் சேற்றுக்கு நாட்பட்ட புண்ணின் சீழ்வாடை இருந்தது. அதில் மீன்களோ சிற்றுயிர்களோ வாழ்வதில்லை. ஆறா வஞ்சினங்கள் கொள்ளவும், கொண்ட வஞ்சினங்களை நிலைநிறுத்தவும் வஞ்சினங்களிலிருந்து தப்பவும் அங்கே சொல்லேற்புகளை நிகழ்த்துவதுண்டு.

முற்புலரியில் பிருஹத்காயர் அதைப்பற்றி சொல்லும்வரை ஜயத்ரதன் அவ்விடத்தைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அவன் துயின்றுகொண்டிருக்கையில் அவர் அவன் அருகே வந்து தன் யோகக்கழியால் தரையை நான்கு முறை தட்டி “விழித்தெழு” என்றார். அவன் எழுந்து அமர்ந்து “என்ன?” என்றான். “முற்காலை. நாம் கிளம்பவேண்டும்…” என்றார். அவர் தன் கனவில் தோன்றியிருப்பதாகவே அவன் முதலில் நினைத்தான். மீண்டும் அவர் சொன்ன பின்னர்தான் முழு உளம் எழுந்து “ஆணை, தந்தையே” என்றான். அவர் “நாம் உடனே கிளம்புகிறோம். எவரும் அறியலாகாது” என்றார். அவன் மறுசொல்லின்றி கிளம்பினான்.

அவரைக் காத்து நான்கு பூசகர்கள் நின்றிருந்தனர். ஒருவன் அவருடைய மாணவன். அவனும் அவரைப்போலவே ஆடை அணிந்து பெருந்தோள்களுடன் நின்றிருந்தான். அவர்களுடன் செல்லும்போதுதான் பூசகர் ஒருவர் தாழ்ந்த குரலில் அந்த இடத்தைப்பற்றி சொன்னார். கதைகளில்கூட அவன் அதை அறிந்திருக்கவில்லை. “அங்கு சொல்லும் ஒவ்வொரு வஞ்சினச் சொல்லையும் ஆயிரத்தெட்டு மாநாகங்கள் அறிகின்றன. அவை அவற்றை தங்கள் சொல்நிறைந்த விழிகளால் கேட்கின்றன” என்று சூதர் சொன்னபோது அவன் மெய்ப்பு கொண்டான்.

அவன் அங்கே செல்ல விரும்பவில்லை. ஆனால் எடைமிக்க காலடிகளை வைத்து சென்றுகொண்டிருந்த தந்தையை மறுத்து எண்ணும் துணிவு அவனுக்கு இருக்கவில்லை. அன்றுவரை அவன் தந்தை சொல்லை மீறுவதையே தனக்கு உகந்தது என எண்ணியிருந்தான். அவரை சிறுமைசெய்வதனூடாக தான் மேலெழுவதாக கருதினான். முடிசூட்டிக்கொண்டதும் சிந்துநாட்டில் அவர் உருவாக்கிய அனைத்து நெறிகளையும் அவன் மாற்றியமைத்தான். அவருடனிருந்த அனைத்து அமைச்சர்களையும் அவன் விலக்கினான். அவர் நட்புகொண்ட நாடுகளை பகைத்தான், பகைத்தவர்களை அணுகினான். ஆனால் ஒவ்வொன்றையும் ஆயிரம் முறை நெஞ்சுக்குள் சொல்லிக்கொண்ட வஞ்சினத்தின் வல்லமையுடன் இயற்றியமையால் மீளமீள வெற்றியையே அடைந்தான்.

அத்தனைக்குப் பின்னரும் அவன் பிருஹத்காயரின் மைந்தன் என்றே அறியப்பட்டான். கொல்லப்பட இயலாதவன் என தெய்வச்சொல் பெற்றவன் என அவனைப் பணிந்த மாற்றார் உண்மையில் அஞ்சியது தன் தந்தையையே என எண்ணுந்தோறும் அவன் மேலும் கசப்புகொண்டான். சிந்துநாடெங்கும் அவருடைய தடங்களே இல்லாமல் ஆக்கினான். அதன் பின்னரும் அவர் அவ்வண்ணமே எஞ்சினார். “மண்ணில் மறைந்திருப்பதனால் வேர் இல்லாமலாவதில்லை. ஒவ்வொரு இலையின் நீரும் வேரின் கொடையே” என ஒரு சூதன் அவன் முன் அவையமர்ந்து பாடியபோது சினம்பொங்கும் உள்ளத்துடன் அவன் கேட்டுக்கொண்டிருந்தான். “எங்கோ காட்டின் ஆழத்தில் பிருஹத்காய முனிவர் இயற்றும் தவம் இங்கு அன்னமும் நீரும் பொன்னும் பட்டுமென ஆகிறது. பகைவர் நெஞ்சில் அச்சமும் அன்னையர் மார்பில் அமுதும் ஆகிறது. அவரை வாழ்த்துக!”

அவன் கைகளால் அரியணையை அறைந்தபின் எழுந்து விலகினான். அமைதியிழந்து அரண்மனையில் உலவிக்கொண்டிருந்த அவனிடம் முதிய அமைச்சர் கனகசீர்ஷர் “எந்த அரசும் குடிகளின் எண்ணங்களுக்கு தளையிட இயலாது, அரசே” என்றார். “அவ்வண்ணமென்றால் என் வெற்றிகளுக்கு என்ன பொருள்? நான் வாழ்வதற்கு என்ன பொருள்?” என்று அவன் கேட்டான். அவர் பேசாமல் நின்றார். தொண்டைநரம்புகள் புடைக்க “சொல்க!” என்று அவன் கூவினான். “கொல்லப்படவே இயலாதவர் என்னும் சொல் இல்லையேல் நீங்கள் இத்தனை வென்றிருக்க இயலாது” என்றார் கனகசீர்ஷர். அவன் மீண்டும் பீடத்தில் அமர்ந்தான். பின்னர் வெறியுடன் தலையை ஓங்கி ஓங்கி அறைந்தான். “சாவு! சாவு ஒன்றே நான் இத்தருணத்தில் விழைவது. இன்னொருவரின் அளிக்கொடையென அமையும்போது உயிரும் எத்தனை கசக்கிறது…” என்றான்.

அமைச்சர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “அமைச்சரே, அவர் எனக்கு கொடையளிக்காத ஏதேனும் என்னிடம் உள்ளதா?” என்றான். அமைச்சர் புன்னகையுடன் “இக்கசப்பு” என்றார். அவன் அவரை இமைக்காமல் நோக்கிக்கொண்டிருந்தான். “தந்தையரிடமிருந்து எந்த மைந்தருக்கும் மீட்பில்லை, அரசே. அவ்வாறு புடவியை சமைத்துள்ளது பிரம்மம்” என்றபின் மீண்டும் தலைவணங்கி அவர் வெளியே சென்றார். அவன் அங்கே அந்திவரை அமர்ந்திருந்தான். எங்கேனும் எழுந்து சென்று உயிரை மாய்த்துக்கொண்டாலென்ன என்று எண்ணினான். தன் தலையை நிலத்தில் விழ வைப்பவர் தலைவெடித்து இறப்பார். தானே தன் தலையை வெட்டி உகுத்தால் அந்தத் தலையே வெடிக்குமா என்ன? அவனுடைய வெற்றுச் சிரிப்போசை கேட்டு ஏவலன் வந்து தலைவணங்கினான். அவன் செல்க என்று கைகாட்டினான்.

ஆனால் முந்தைய ஓர் இரவுக்குப் பின் அனைத்தும் மாறிவிட்டிருந்தது. காலையில் கண்விழித்து தந்தையைப் பார்த்தபோது அவன் அகம் நிறைவடைந்தது. எங்கோ காட்டுச் சிறுகுடிலில் தந்தையுடன் இளமைந்தனாக வாழ்வதுபோல என எண்ணிக்கொண்டான். அதன் பின்னரே அக்கனவை சற்றுமுன் அவன் அடைந்ததை நினைவுகூர்ந்தான். அவர் அவனிடம் “காலைத்தூய்மை செய்துகொள்” என்றார். அவரால் அவனை நேருக்குநேர் நோக்கி பேச முடியவில்லை. முந்தையநாள் இரவு விழிகளை நட்டுப்பேசியவர்தான். அவன் விழிகள் மைந்தன் விழிகளென மாறிவிட்டிருக்கின்றனபோலும். அவன் புன்னகையுடன் எழுந்து முகம்கழுவி வந்தபோது அவர் “கிளம்புக!” என்று சொல்லி தன் யோகக்கழியுடன் முன்னால் சென்றார்.

பந்தத்துடன் சென்ற இரு பூசகர்கள் குகைவாயிலில் நின்று குந்திரிக்கத்தை எரித்து புகை உருவாக்கினர். குகைக்குள் புகை புகுந்து மறுபக்கத் திறப்பு வழியாக அது வெளியேறும்வரை அங்கே காத்திருந்தனர். முழவுகளை முழக்கி குகைக்குள் எதிரொலி எழுப்பும்படி செய்தனர். உள்ளிருந்து பன்னிரு நரிகள் கொண்ட ஒரு கூட்டம் ஊளையிட்டபடி எழுந்து அவர்களைக் கடந்து வெளியே ஓடியது. பூசகர் “நன்று, நரிகள் இருப்பதனால் பிற விலங்குகளோ பாம்புகளோ உள்ளே இல்லை என்றாகிறது. செல்வோம், முனிவரே” என்றார். பந்தங்களை அணைத்துவிட்டு பூசைக்குரிய பொருட்களை தோல் உறைகளில் கட்டி முதுகில் சேர்த்து தொங்கவிட்டபடி முதல் பூசகர் பிலத்திற்குள் நுழைந்தார். பிருஹத்காயர் திரும்பி ஜயத்ரதனிடம் “நீ செல்லலாம். நன்றே நிகழ்க!” என்றார்.

ஜயத்ரதன் “அஞ்சும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றே எனக்கு இப்போது தோன்றுகிறது, தந்தையே. இன்று போரில் கௌரவர்களின் அனைத்து வீரர்களும் இணைந்து அர்ஜுனனை வளைத்துக்கொண்டு பாண்டவப் படைகளின் முகப்பிலிருந்து அவரை அசையாமல் நிறுத்தப்போகிறார்கள். துரோணர், கிருபர், சல்யர், அங்கர், அஸ்வத்தாமர், பூரிசிரவஸ், கிருதவர்மர், அரசர் எனும் எட்டு கந்துகளில் இழுத்துக்கட்டப்பட்ட யானைபோல் அவர் இன்று நின்றிருப்பார்” என்றான். “நானோ கௌரவப் படைகளுக்கு நடுவே ஒன்றுடன் ஒன்றென சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் சிறுகுடிலுக்குள் இருக்கப்போகிறேன். எந்த அம்பும் என்னைத் தேடி அங்கு வரப்போவதில்லை.”

பிருஹத்காயர் “இன்னமும் நான் கொள்ளும் அச்சத்தை நீ புரிந்துகொள்ளவில்லை. உண்மையில் அதை புரிந்துகொள்வதும் எளிதல்ல. மைந்தா, இப்பருவெளியில் பொருளெனத் தென்படுபவை அனைத்தும் தோற்றம் கொள்வதற்கு முன்பு நுண்வடிவென, எண்ணமென, இயல்கை என அதற்கும் அப்பால் இப்புடவியின் தகவு என இருப்பு கொண்டவை. இங்கு ஒன்றுமே அழிவதில்லை. ஒன்று பிறிதொன்றென மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது என்னில் அச்சமென்றிருப்பது சில காலத்திற்கு முன்பு உன்மேல் நான் கொண்ட பற்றென இருந்தது. அதற்கு முன்பு மண்மேல் கொண்ட விழைவென்றிருந்தது. அதற்கு முன்பு என்மேல் கொண்ட வெறுப்பென்றிருந்தது. அதற்கு முன்பு நான் என்ற எண்ணமாக இருந்தது” என்றார். “எச்செயலும் அதற்கான மறுசெயலை உருவாக்குகிறது. செய்கை மேல் நமக்கு சற்றேனும் கட்டுப்பாடுள்ளது. அதை நாம் செய்யாமல் இருந்துவிடமுடியும். மறுசெய்கை மேல் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதை தெய்வங்களிடம் நாம் கொடுத்துவிட்டோம்.”

அவன் அவர் சொல்வனவற்றை புரிந்துகொள்ளாமல் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தான். “நான் போரிட்டுக்கொண்டிருப்பது தெய்வங்களிடம். ஆகவே மானுட இயல்கைகளைப்பற்றி நான் கணக்கிடவே இல்லை. தெய்வங்களால் இயலாதன ஏதுமில்லை. தெய்வங்களை வெல்ல தெய்வங்களாலேயே இயலும். நான் என் தெய்வங்களை துணைகொள்ள எண்ணுகிறேன்.” அவர் தன் கைகளை விரித்தார். “நன்கு கேள், அவன் அத்தனை எளிதில் உன்னை கொல்லமுடியாது. நீ படைகளுக்குள் ஒளிந்திருப்பாய் என்றால் அவன் அம்புகள் எவையும் உன்னை அணுகாது. ஆனால் ஓர் அம்பு உன்னை நாடிவரும். அதன் பெயர் பாசுபதம்” என்றார்.

“இளைய பாண்டவன் அதை வெள்ளிப் பனிமலை மேல் சென்று விடையூரும் தெய்வத்திடமிருந்து நேரில் பெற்றான் என்கிறார்கள். அது மூவுலகிலும் அலைவது. நீ எங்கு ஒளிந்திருந்தாலும் உன்னை வந்து தொட்டு அழிக்கும் ஆற்றல் கொண்டது. அதிலிருந்து நீ தப்ப வேண்டுமெனில் ஒன்றே வழி. உனக்கு நிகரான தெய்வக்காப்பு தேவை. நீடுதவம் செய்து அதே மூவிழித் தெய்வத்திடமிருந்து நான் பெற்றது பன்னகம் என்னும் காப்பு. அவன் கழுத்தில் அணிந்த அரவு அது. நான் மாநாகர்களின் அருள் பெற்றிருக்கிறேன். அவர்கள் உன்னைச் சூழ்ந்து காப்பார்கள். பாசுபதம் உன்னை துரத்தி வந்தால் நீ நாகர்களால் ஏழாம் உலகுக்கு எடுத்துச் செல்லப்படுவாய். அங்கு ஆழிருளில் புதைக்கப்பட்டு உயிர்காக்கப்படுவாய்.”

“ஆம், பாசுபதம் அங்கும் செல்லும் ஆற்றல் கொண்டது. ஆனால் அங்குள்ள ஒரு கணம் இங்குள்ள நாள். உன்னை பாசுபதம் தேடி வந்து அழிப்பதற்குள் இங்கு அந்தி எழுந்துவிடும். உன்னை கொல்ல எழுந்தவன் தன்னைக் கொன்று பழி விலக்கவேண்டியிருக்கும்” என்றார் பிருஹத்காயர். “இது வஞ்சநிலம். இங்கு அமர்ந்து என் உள்ளத்தை மேலும் மேலுமென கூர்கொள்ளச் செய்கிறேன். அதன் முனையொளியில் வந்தமைக இருள்வடிவ மாநாகங்கள்! என் சொல் உன்னுடன் இருக்கும். நலம் சூழ்க!”

ஜயத்ரதன் குனிந்து அவர் கால்களை சென்னிசூடினான். வழக்கம்போல் அவன் கை தன்மேல் பட்டுவிடலாகாது என்பதற்காக அவர் சற்று பின்னடைந்தார். அவன் அவ்வசைவால் உளம்கலங்கி விழிநீர் கோத்தான். “அருள்க, தந்தையே!” என்றான். அவர் தொண்டை இறுக “ம்” என்றார். “நீங்கள் இப்போதேனும் என்னை தொடலாகாதா?” என்றான் ஜயத்ரதன். “வேண்டாம்…” என அவர் தாழ்ந்த குரலில் சொல்லி தலையசைத்தார்.

“என்றும் உங்கள் எண்ணத்திற்கு மாறாக நின்றிருக்கவே விழைந்தேன். நீங்கள் நான் வாழவேண்டுமென்று விழைந்தமையாலேயே நான் சாக விழைந்தேன். இன்று நான் வாழ விழைகிறேன்… இதற்குப் பின்னரேனும் நான் உங்கள் அருகே வரவேண்டும். உங்கள் கைகளில் என் தலையை வைத்து விழிநீர் உகுக்கவேண்டும்.” பிருஹத்காயர் அவனை நோக்காமல் “செல்க!” என்றபின் திரும்பி பூசகர்கள் சென்று மறைந்த பிலத்திற்குள் நுழைந்தார்.

ele1ஜயத்ரதன் அங்கே நின்று அந்த இருண்ட துளைக்குள் அவர் சென்று மறைவதை பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவர்கள் அங்கு இருந்தார்களா என்றே தோன்றும்படி அவ்விடம் வெறுமை கொண்டது. அவன் தானும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே சென்றுவிட வேண்டும் என்று ஒருகணம் உளமெழுந்தான். குனிந்து தந்தையே என்று அழைக்கவேண்டுமென்று நா வரை வந்த அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டான். மேலும் சற்றுநேரம் அங்கே நின்றபின் திரும்ப நடந்து புரவி நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்தான். அவன் ஓசைகேட்டு அது மூச்சொலி எழுப்பியது.

புரவியிலேயே குருக்ஷேத்ரத்தின் குறுங்காட்டினூடாக தனித்து மெல்ல சென்றான். புரவியின் காலடி ஓசை எங்கெங்கோ எழுந்து அவனை வந்து சூழ்ந்துகொண்டிருந்தது. இருள் ஒரு சுவரென்று மாறி அவ்வோசை எதிரொலித்ததுபோல் தோன்றியது. அவர்கள் சென்று சேரும் அந்த இடம் எவ்விதம் இருக்குமென்று எண்ணிக்கொண்டான். முட்புதர் சூழ்ந்த ஒரு வெட்டவெளி. அங்கு பந்தங்கள் கொளுத்தி வைத்து அவர்கள் பூசை ஒன்றை இயற்றவிருக்கிறார்கள். இந்திரனின் மின்படை ஏற்று விருத்திரனின் உடலிலிருந்து விழுந்த முதற்குருதித்துளி ஊறி பெருகத் தொடங்கியதே ரக்தவாஹா என்று பூசகர் சொன்னார். விருத்திரன் அச்செந்நிலமென மாறி விழுந்து விரிந்த பின்னரும் அந்த முதற்குழி ஈரம் உலராத புண்ணென்று எஞ்சி குருதி வடிக்கிறது. இந்திரன் பிறந்து பிறந்தெழுந்து அந்த குருதிநிலத்தில் போரிட்டுக்கொண்டே இருக்கிறான்.

வெறுமை வளைந்து அமைந்த வான்வெளிக்குக் கீழ் மண் ஒவ்வொரு பருத்துளியும் வஞ்சங்களால் விழிநீரால் ஆனதாக விரிந்திருக்கிறது. வஞ்சின ஈடேற்றத்திற்காக, வஞ்சினத்திலிருந்து தப்புவதற்காக நோன்பிருக்கிறார்கள். நோன்புகளை கேட்கும் தெய்வங்கள் அவ்விண்ணில் வாழ்கின்றன. இப்புவியில் வாழும் கோடானுகோடி மானுடர், பல்லாயிரம்கோடி உயிர்கள், அளவிறந்தகோடி சிற்றுயிர்கள் அனைவரும் கொள்ளும் வேண்டுதல்களை செவிகொள்வதற்கென்று எத்தனை கோடி தெய்வங்கள் விண்ணிலும் மண்ணின் ஆழத்திலும் இருக்கும்!

அத்தருணத்திலும் ஏன் அத்தனை நம்பிக்கையிழப்பு தனக்கேற்படுகிறதென்று அவன் வியந்தான். தந்தையிடம் கூறும்போதே அவனுக்குள் அந்த நம்பிக்கையிழப்பு தோன்றியது. ஒன்றை முழுமையாக வகுத்துரைக்கையிலேயே உள்ளம் அதிலெங்கோ ஒரு பிழை இருக்கக்கூடுமென்று எண்ணுகிறது. அத்தனை உறுதியாக ஒன்று கட்டப்படுகையிலேயே அதை இடிக்கும் பொறுப்பை தெய்வங்கள் ஏற்றுக்கொள்கின்றன. குருக்ஷேத்ரத்தை அவன் அணுகும்போது முற்றிலும் உளம் தளர்ந்திருந்தான். அதற்கேற்ப உடலும் தளர்ந்து புரவிமேல் துயின்று தலை தாழ்த்தி அமர்ந்திருந்தான். அப்பால் கேட்ட படைகளின் ஓசை அவனை விழிப்புகொள்ளச் செய்தது. குறுங்காட்டின் எல்லையை அடைந்து பந்தங்களுடன் துயிலெழத் தொடங்கியிருந்த கௌரவப் படைவிரிவை பார்த்தபோது எந்த முறைமையும் இன்றி அவனுக்குள் ஓர் உறுதி தோன்றியது, அன்றுடன் அவன் கொல்லப்படுவான் என்று.

அவன் அவ்வெண்ணத்தால் ஒரே கணத்தில் முழுமையான விடுதலையை அடைந்தான். முகத்தில் புன்னகையும் எழுந்தது. காவல்மாடத்தை அவன் கடந்துசென்றபோது எதிரே சிந்துநாட்டின் ஒற்றர்தலைவன் மூகன் நின்றிருந்தான். ஓசையில்லாமல் புரவியில் அணுகி அவனுடன் இணையாக வந்தபடி “பாண்டவர் தரப்பிலிருந்து செய்திகள்” என்றான். “சொல்க!” என்றான் ஜயத்ரதன். “பின்னிரவு கடந்தபின் அங்கே சொல்சூழவை நிகழவில்லை. அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இளைய பாண்டவர் தன் மைந்தன் சுருதகீர்த்தி உடனிருக்க குடிலில் உறங்கினார்.” ஜயத்ரதன் “மைந்தனுடனா?” என்றான். “ஆம், அரசே” என்றான் மூகன். “அவ்வாறா வழக்கம்?” என்றான் ஜயத்ரதன். “இல்லை. வழக்கமாக அவர் மைந்தருடன் பேசுவதே இல்லை. விழிநோக்குவதும் அரிது” என்றான் மூகன். “சொல்” என்றான் ஜயத்ரதன்.

“துயிலச் செல்லும்போது இளைய யாதவரும் சகதேவரும் அவருடன் சென்றனர். அவர்கள் விடைகொள்கையில் அப்பால் நின்றிருந்த சுருதகீர்த்தியை நோக்கி மைந்தா, என்னுடன் இரு என்று அர்ஜுனர் சொன்னார். சுருதகீர்த்தி திகைப்படைந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் தலைவணங்கினார். அர்ஜுனர் உள்ளே சென்றதும் ஏவலர் மதுவும் அகிபீனாவும் கொண்டுசென்றனர். அதை அவர் அருந்தி புகைத்துக்கொண்டு படுத்துக்கொண்டார். சுருதகீர்த்தி வாயிலில் வந்து காவலென நிற்க மைந்தா உள்ளே வந்து என்னருகே அமர்ந்துகொள்க என்றார். சுருதகீர்த்தி உள்ளே சென்று அவருடைய காலடியில் தரையில் அமர்ந்தார். அவர் அவரிடம் ஏதும் சொல்லவில்லை. குடிலின் கூரைச்சரிவை நோக்கி விழிநட்டிருந்தார். வலிகொண்டவர்போல மெல்ல உடலை நெளித்து கைவிரல்களை நெரித்துக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தார்.”

“அப்போது மீண்டும் புகையிடச் சென்ற ஏவலன், அவனே நம் ஒற்றன், அவர் கால்களை தொடுக என்று செய்கையால் சுருதகீர்த்தியிடம் சொன்னான். அவர் தயங்கியபடி கைநீட்டி அர்ஜுனரின் கால்களை தொட்டார். அவர் உடலில் இருந்த அந்த இறுகிய அசைவு நின்றது. சுருதகீர்த்தி கைகளை கால்மீதே வைத்திருந்தார். அவர் உடல் மெல்ல மெல்ல நெகிழ்ந்து மஞ்சத்தில் படிந்தது. மூச்சொலி சீராக எழலாயிற்று. அவர் கால்களைத் தொட்டபடி அமர்ந்திருந்த சுருதகீர்த்தி விழிநீர் வழிய தலையை மஞ்சத்தின் சட்டத்தின்மேல் சாய்த்துக்கொண்டார். அரசே, அபிமன்யுவுக்காக அப்போதுதான் அவர் விழிநீர் உகுத்தார்.”

ஜயத்ரதன் “அபிமன்யுவுக்காக என எப்படி தெரியும்?” என்றான். “ஆனால்…” என மூகன் சொல்லத் தொடங்க கைவீசி அவனை மேலே பேச ஆணையிட்டான் ஜயத்ரதன். “அரசே, அதன் பின் முன்கருக்கு வேளையில் நம் மூத்த அரசர் இளைய யாதவரை சந்திக்க அங்கே சென்றிருக்கிறார்.” ஜயத்ரதன் புரவியின் கடிவாளத்தை அறியாமல் இழுத்துவிட்டான். “யார்?” என்றான். “தங்கள் தந்தை…” என்றான் மூகன். “இன்றா?” என்றான் ஜயத்ரதன். “ஆம், இன்று பின்னிரவில்” என்று மூகன் சொன்னான். “இரவு முழுக்க என்னருகே அவர் இருந்தார்” என்றான் ஜயத்ரதன். “ஆனால் நம் ஒற்றன் தன் விழிகளால் நோக்கியிருக்கிறான். செவிகளால் கேட்டுமிருக்கிறான்” என்று மூகன் திகைப்புடன் சொன்னான். “அவர் அங்கே சென்று மீள பொழுதே இல்லை” என்றான் ஜயத்ரதன் உறுதியுடன். “அவர் அங்கே சென்றார் என்றே ஒற்றன் சொல்கிறான். அவன் சொல் பொய்யாவதில்லை” என்றான் மூகன்.

“அவருடைய மாணவர்கள் சிலரும் அவரைப்போலவே தோற்றம் கொண்டவர்கள்” என்று ஜயத்ரதன் சொன்னான். மூகன் ஒன்றும் சொல்லவில்லை. “நாமறியா வழிகள் அவர்களுக்குண்டு” என்றான் ஜயத்ரதன். “சொல்க, என்ன நிகழ்ந்தது அங்கு?” “அவர் இளைய யாதவரைப் பணிந்து உங்கள் உயிருக்காக இறைஞ்சினார்” என்றான் மூகன். “உரையாடல் முழுமையாக செவிகளில் விழவில்லை. ஆனால் இளைய யாதவர் தங்கள் தந்தையிடம் கேட்டார், நீங்கள் அஞ்சுவது எதை என. என் தமையன்மனைவியின் தீச்சொல்லை. அவள் எனக்கென வகுத்த மைந்தர்துயரை என பிருஹத்காயர் மறுமொழி சொன்னார். அது நிகழாது என இளைய யாதவர் சொல்லளித்தார்” என்றான் மூகன்.

ஜயத்ரதன் வியப்புடன் “அது நிகழாது என்றாரா?” என்றான். “ஆம் அரசே, அதை நம் ஒற்றன் தெளிவுறக் கேட்டான். அது நிகழாது என்றார்” என்றான் மூகன். “நீங்கள் இருவரும் விழைவதே நிகழும் என்றார்.” ஜயத்ரதன் சில கணங்களுக்குப் பின் அவனை செல்க என கையசைத்து விலக்கி, புரவியை கால்களால் ஊக்கி, முன்னால் சென்றான். அவன் முகத்தில் மறைந்திருந்த புன்னகை மீண்டும் உருவானது.

நூல் இருபது – கார்கடல் – 44

ele1குடில் வாயிலில் தோன்றிய மூத்த காவலரான தப்தர் தலைவணங்கி “மூத்த சைந்தவ அரசர்” என்றார். ஜயத்ரதன் தன்னுணர்வு கொண்டு எழுந்து “யாதவர் சென்றுவிட்டாரா?” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா?” என்றான். தப்தர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “அவரை நான் பார்க்க விரும்பவில்லை என்று சொல்க! நான் துயின்றுவிட்டேன் என்று சொல்க!” என்றான். “அவரிடம் எவரும் எதையும் சொல்லமுடியாது, அரசே” என்றார் தப்தர். “அத்துடன் நீங்கள் அவரை பார்ப்பதே முறை” என்று தணிந்த குரலில் சொன்னார்.

ஜயத்ரதன் திகைத்து நோக்க காவலர் மேலும் குரல் தழைய “ஒருவேளை…” என்றார். அவர் சொல்வதை உணர்ந்து ஜயத்ரதன் உளம் நடுங்கினான். ஜயத்ரதனை இளமையிலிருந்து தூக்கி வளர்த்த தப்தர் அவன் உளப்போக்கை நன்கு அறிந்திருந்தார். “ஒருவேளை இது உங்கள் இறுதி இரவாக இருக்கலாம். பிறிதொரு முறை உங்கள் தந்தையுடன் சொல்லாட முடியாமல் போகலாம். சொல்லப்படாத சொற்களுடன் அவரோ நீங்களோ இங்கிருந்து செல்லலாகாது. ஆகவே அவரை எதிர்கொள்க!” என்றார். ஜயத்ரதன் தளர்ந்த கால்களுடன் அமர்ந்தான்.

“ஒருவேளை அச்சொற்கள்தான் நீங்கள் இதுநாள்வரை எதிர்பார்த்ததாக இருக்கக்கூடும். அதனூடாக உங்கள் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து நீங்கள் விடுபடவும் கூடும்” என்றார் தப்தர். “ஆம்” என அவன் சொன்னான். “அவர் வரட்டும்… நான் பிறிதொன்று எண்ண இயலாது.” தப்தர் “ஆணை” என்றார். அவர் திரும்புவதற்குள் கதவைத் தள்ளி அகற்றித் திறந்து குடிலுக்குள் நுழைந்த பிருஹத்காயர் “தப்தரே, விலகுக! என் மைந்தனிடம் தனியாக பேச வந்துள்ளேன்” என்றார். “ஆம், அரசே” என்று தலைவணங்கி தப்தர் வெளியே சென்றார். ஜயத்ரதன் உடல் நடுங்க எழுந்து நின்றான். பின்னர் நினைவுகூர்ந்து அருகணைந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.

பிருஹத்காயர் இரு கைகளையும் இடையில் வைத்து நிமிர்ந்து நின்றார். அவர் முன் தன் சிறிய உடலை குறுக்கியவனாக ஜயத்ரதன் நின்றான். தன் வலக்கையிலிருந்த யோகக்கழியை அறை மூலையில் சாய்த்து வைத்தபின் பிருஹத்காயர் சென்று பீடத்தில் அமர்ந்தார். “அமர்ந்துகொள்” என்று உரத்த குரலில் சொன்னார். ஜயத்ரதன் நின்றுகொண்டிருந்தான். “அமர்க!” என்று மேலும் உரக்க ஆணையிட அவன் நடுங்கி சென்று அமர்ந்துகொண்டான். அவர் முழங்கும் குரலில் “அஞ்சவேண்டியதில்லை. உன்னை நான் பார்க்க வந்தது எதையும் மன்றாடிப் பெறுவதற்காக அல்ல. இப்புவியில் நீ உயிரோடிருப்பதை அன்றி வேறெதையும் உன்னிடமிருந்து நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை” என்றார்.

அந்த உரத்த ஓசையாலேயே சீற்றம் கொண்டு ஜயத்ரதன் “உயிரோடிருப்பதையே ஒரு பெரும் பொறுப்பாக எனக்களித்துவிட்டீர்கள். எனக்கு உயிரளித்ததையே நீங்கள் உங்கள் வாழ்நாளில் இழைத்த பெரும்பிழை என்று சொல்வேன்” என்றான். அவர் ஏளனத்துடன் “உனக்கு உயிரளித்தது என் விழைவால் அல்ல. அது ஓர் இன்றியமையாமை. என் ஆழத்துவெளியில் எங்கோ நான் எனக்காக ஒளித்து வைத்திருந்த கூரிய நச்சுப்படைக்கலம் நீ. இருளுலகில் பேருருக்கொண்டு எழுந்த கருங்கனல் ஒன்றின் தீச்சொல்” என்றார். வெற்றுச் சிரிப்பொன்றை உரக்க எழுப்பிய பின் “தனக்கே ஒவ்வாத ஒன்றை இயற்றுபவன் தனக்கென ஒரு படைக்கலத்தை சமைத்துக்கொள்கிறான் என்கின்றன நூல்கள்” என்றார்.

ஜயத்ரதன் சலிப்புடன் கைகளை கோத்துக்கொண்டு தலையை அசைத்தான். “ஐங்களம் அறியாத இருளாற்றல் ஒன்று நீ பிறந்த கணம் முதல் உன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருக்கிறது என்றனர் நிமித்திகர். அன்று தொடங்கிய அழல் இது. உன் உயிரைப் பேணுவது மட்டுமே என் இவ்வுலகப் பொறுப்பு. ஏனென்றால் நான் உன் வழியாகவே மீள இயலும்” என்ற பிருஹத்காயர் தன் கைகளை விரித்துப் பார்த்தார். “உன்னை ஈன்றிராவிடில் என் தமையனின் குருதி என் கைகளில் இப்படி எரிந்திருக்காது” என்றபடி இரு கைகளையும் விரித்து அவனுக்குக் காட்டினார். “நான் பிறந்தபோது என் இந்த கைகளைக் கண்டு வயற்றாட்டியே அஞ்சினாள். எனக்கு எந்தை பிருஹத்காயர் என்று பெயரிட்டார். என் பிறவிச்செல்வமென்று இதை எனக்குச் சொல்லி புகுத்தினர். என் குடியின் காவல்தெய்வமே என் கைகளாக எழுந்தது என்றனர்.”

“எப்போதும் இரு தோழர்கள் என என்னுடன் இருந்தன இவை” என்றார் பிருஹத்காயர். விழிகள் சரிய அவர் ஏதோ தெய்வம் ஒன்றிடம் சொல்பவர்போல பேசினார். “இவற்றுக்கு ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான திறன்வாய்ந்த போர்ப்பயிற்சியாளர்களை பாரதவர்ஷம் முழுக்க தூதர்களை அனுப்பித் திரட்டினார் எந்தை. என் பெருங்கைகள் புகழ்பெற்றபோது ஒவ்வொரு நாளும் பாகுபலியினர் விருஷதர்புரத்திற்கு தேடிவந்தனர். அவர்கள் அனைவரையும் அறைந்து வீழ்த்தி வென்றேன். பின்னர் அவர்களை வெல்வதையே பயிற்சியாகக் கொண்டேன். என்னை வெல்ல ஷத்ரியர்களில் பீஷ்மராலும் பால்ஹிகராலும் முனிவர்களில் பலாஹாஸ்வராலும் பரசுராமராலும் மட்டுமே இயலும் என்று நிறுவப்பட்டது.”

“மெல்ல மெல்ல என் கைகள் பொருள்மாறிக்கொண்டிருந்ததை நான் உணரவில்லை. அவை ஒவ்வொரு நாளும் புகழ்மொழிகள் கேட்டு திமிர்த்தன. ஒருநாள் அவையில் வடபுலத்துச் சூதன் ஒருவன் அவற்றைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தபோது நான் கைகளை இறுக்கியும் தளர்த்தியும் தசைகளை துள்ளச்செய்துகொண்டிருப்பதை நானே உணர்ந்து திடுக்கிட்டேன். மேடையில் தசைத்திறன் காட்டும் மல்லனைப்போல. அரசனுக்குரிய செய்கை அல்ல அது. அவையிலிருந்தோர் விழிகளை பார்த்தேன். எவருக்கும் அது விந்தை என்றும் தெரியவில்லை. அவ்வாறென்றால் அவர்கள் நோக்க நான் அதை தொடர்ந்து செய்துவந்திருக்கிறேன். ஆனால் என்ன உணர்ச்சியை வெளிப்படுத்தவேண்டும் என்று அறியாதவர்களாக அவர்கள் தங்கள் விழிகளை என்மேல் நிலைக்கச் செய்திருந்தனர்.”

“நான் என் கைகளை அசைவற்று நிறுத்த முயன்றேன். என் முழு உளவிசையாலும் அவற்றை இழுத்தேன். அப்போது அறிந்தேன், அவை என் கட்டுப்பாட்டில் இல்லை என்று” என்று பிருஹத்காயர் தொடர்ந்தார். “அவை என் உடலை தங்கள் பீடமெனக் கொண்ட ஆழுலகத்து நாகதெய்வங்கள். அவை தங்கள் களியாட்டை தாங்களே இயற்றிக்கொண்டன. தங்கள் பலிக்கொடைகளை தாங்களே எடுத்துக்கொண்டன. மற்போர்களில் நான் எதிரிகளை பெரும்பாலும் தலையில் ஓங்கி அறைந்து கொல்வேன். அது என் விழைவல்ல என கண்டுகொண்டேன். அதன்பின் போரில் எதிரியை கொல்லவேண்டாம் என முடிவெடுத்தேன். ஒவ்வொரு கணமும் உளம்நட்டிருந்தேன். ஆனால் மற்போர் தொடங்கியதுமே சீறி நெளிந்த என் கைகள் அந்த திரிகர்த்த நாட்டு மல்லனை அறைந்து பலிகொண்டன.”

“தலை உடைந்து மூக்கில் குருதி வழிய அவன் விழுந்து கிடந்து நெளிவதை நோக்கிக்கொண்டிருந்தேன். என் கைகள் இரை விழுங்கிய மாநாகங்கள்போல நிறைவுடன் மெல்ல ஒன்றையொன்று தழுவிக்கொண்டு நெளிந்தன” என்றார் பிருஹத்காயர். “அதன்பின் அவற்றை அஞ்சத்தொடங்கினேன். அவற்றை தவிர்க்க முயன்று இறுதியில் கண்டடைந்தேன், அவை என் பிறப்புக்கு முன்னரே என்னை கண்டடைந்தவை என்று. அவற்றை என்னால் எவ்வகையிலும் வெல்லவோ தவிர்க்கவோ இயலாது. பின்னர் அவற்றுக்கு என்னை அளித்தேன். அவை என்னை கொண்டுசெல்ல ஒப்புக்கொண்டேன். பாரதவர்ஷத்தின் பெருவீரனாக என்னை நிலைநிறுத்தின அவை. என் குடியை களங்களில் வாகைமலர் சூடச் செய்தன. சிந்துநாடு அகன்றது. விருஷதர்புரம் பொலிந்தது.”

“ஆனால் அவற்றுக்கு நான் பலிக்கொடை அளித்துக்கொண்டே இருந்தேன். ஒருநாள் கனவில் வால்தழுவி தலைவிரித்து நின்ற இரட்டை நாகங்களாக அவை என் முன் தோன்றின. நான் அஞ்சி கைகூப்பி நின்றேன். உன் தமையனை பலிகொள்ள விழைகிறோம் என்றன. எந்தையரே, தெய்வங்களே என நான் கூவினேன். ஆம், அந்த பலியால்தான் நாங்கள் இனி நிறைவுறுவோம் என்றன. தெய்வங்களே, தெய்வங்களே என நான் கதறி அழுதேன். நாங்கள் உனக்கு அளிப்பவை அரியவை. நீ இன்று பேரரசு ஒன்றின் இணையரசன். அக்கொடைக்கு நிகரான பலியையே நாங்கள் விழைகிறோம் என்றது ஒரு நாகம். இனி இணையரசனுக்குரிய அரியணையில் அமரமாட்டோம் என்றது இன்னொரு நாகம். நான் கண்ணீர்விட்டு கைகூப்பினேன். நிகரென்று பிறிதொருவனை ஒப்போம். விஞ்சும் எவரையும் வெல்வோம் என்றன அவை.”

“விழித்துக்கொண்ட பின் நான் பித்தனைப்போல ஏங்கி அழுதேன். ஆனால் எவரிடமும் சொல்லவில்லை. என் மூத்தவர் முன் செல்வதையே ஒழிந்தேன். அவர் இல்லை என்றே எண்ணிக்கொண்டேன். விருஷதர்புரத்திலேயே பெரும்பாலும் இருக்காமலானேன். ஆனால் என் நாகங்கள் தங்கள் வழியை தாங்களே சமைத்து இலக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தன. அவை சீறி எழுந்தபோது, வலது நாகம் அவரை அறைந்து கொன்றபோது நான் உளம் உறைந்து நோக்கிக்கொண்டிருந்தேன். அந்த கணத்தில் அறிந்தேன், பெரும்தீச்சொற்கள் ஆணவத்தை இனிக்கச் செய்யும் நற்கொடைகள் என மாற்றுருக்கொண்டே வந்தமையும் என. அந்நாகங்களின் முதன்மைப் பலி நானே என.”

ஜயத்ரதன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் விழிகள் வெறித்திருந்தன. “காட்டில் இத்தனை நாள் நான் என்ன செய்தேன் என்று அறிவாயா?” தன் ஏளனத்தை திரட்டிக்கொண்டு “தவம் செய்தீர்கள் என்றார்கள். தவம் செய்து எதை ஈட்டப்போகிறீர்கள் என்று நான் எண்ணிக்கொண்டேன்” என்றான் ஜயத்ரதன். “ஈட்டவில்லை, இழந்துகொண்டிருந்தேன். விழைவை, ஆணவத்தை. எஞ்சுவது உன்மேல் நான் கொண்ட இந்தப் பற்று ஒன்றே. இதை என்னால் இழக்க இயலாதென்று கண்டேன். அவ்வறிதலும் ஒரு பேறுதான். ஒருவன் தன் எல்லைகளை உணர்வதுகூட ஒருவகை ஞானம்தான்.”

ஜயத்ரதன் அவர்மேல் எழும் அந்த வெறுப்பை அவனே வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். “நான் உயிருடனிருந்து தங்களுக்கு அளிப்பதென்ன?” என்று கேட்டான். அவரிடம் மீண்டும் அந்த வெற்றுச்சிரிப்பு எழுந்தது. “நான் விழியிழந்தவன் என ஓர் அந்தணன் சொன்ன சொல்லை நினைவுறுகிறாயா?” என்றார். ஜயத்ரதன் “ஆம்” என்றான். “உன்னால் கூன்முதுகில் அறையப்பட்ட அந்தணனின் சொல் அது… உன்னை நோக்கமுடியாதவனாகவே அன்றும் இன்றும் இருக்கிறேன். விழியிழந்தோன் மைந்தர்கள் எல்லை வகுக்கப்படாத உலகு கொண்டவர்கள். அவர்கள் சிதறியழியக்கூடும், கடந்துசென்று மீளவும் ஆகும்” என்றார் பிருஹத்காயர்.

“என் விழியின்மையால் உன்னை சூழ்ந்திருந்தேன்” என பிருஹத்காயர் தொடர்ந்தார். “உன் தலையை மண்தொடச் செய்பவன் தலைசிதறி அழிவான் என்னும் சொற்பேற்றை நான் மாருத்ரனிடமிருந்து பெற்றேன். அச்சொல்லால் அரணமைக்கப்பட்டு நீ இதுவரை வாழ்ந்தாய். எண்ணுவன அனைத்தையும் இயற்றி ஆணவத்தை பெருக்கிக்கொண்டாய். அனைத்துக் கீழ்மைகளிலும் திளைத்தாய்.” ஜயத்ரதன் கசப்புடன் புன்னகைத்து “ஆம், எனக்காக நீங்கள் இயற்றும் தவத்திற்கு ஈடுசெய்யவேண்டாமா?” என்றான். “அறிவிலி!” என்று அவர் கையை ஓங்கினார். எழுந்த கை நாகபடம் என நின்று ஆடி பின்னர் தாழ்ந்தது. இரு கைகளும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டன. நெளிந்து விலகின.

மூச்சிறுக விரல்களை சுருட்டிகொண்டு குரல் தாழ்த்தி பிருஹத்காயர் “அறிவிலி!” என்று முனகிக்கொண்டார். தலையை அசைத்த பின் “என் தமையன் துணைவியின் தீச்சொல் என் பின் உள்ளது. நான் மைந்தர்துயரால் உயிர்விடுவேன் என. நான் தப்பி ஓடிக்கொண்டிருப்பது அச்சொல்லில் இருந்தே. என் தவம் அதற்காகவே” என்றார். அவன் விழிகளை நோக்கி நிலைத்த விழிகளுடன் “நான் விண்புகும் பொருட்டு நீ இங்கிருக்கவேண்டும். எனது நீர்க்கடனை நீ இயற்ற வேண்டும். மூச்சுலகில் நீ அளிக்கும் ஒரு கைப்பிடி நீர் எனக்கு வந்து சேரவேண்டும். இப்பிறவியில் தெய்வங்களிடம் நான் கோருவது இது ஒன்றே” என்றார்.

ஜயத்ரதன் “அத்தனை மைந்தரையும் தந்தையர் இக்கடனால் கட்டி இப்புவியில் நிறுத்தியிருக்கிறார்கள்” என்றான். “அது தெய்வங்கள் மைந்தனுக்கும் தந்தைக்குமிடையே போடும் பிணைப்பு” என்று பிருஹத்காயர் சொன்னார். “இந்தக் கைகளால் உன்னை நான் தொட்டதில்லை. ஒவ்வொரு நாளும் கணமும் உன்னையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். நூறுநூறாயிரம் முறை சித்தத்தால் உன்னைத் தழுவி உச்சிமுகர்கிறேன். இப்புவியில் நாம் மிக விரும்பியவற்றை துறப்பதே தெய்வங்களுக்கு நாம் அளிக்கும் மிகச் சிறந்த பலிக்கொடை என்பார்கள். நான் உன்னைத் தொடும் விழைவையே மாருத்ரனுக்கு அவியென அளித்தேன்.”

“உன்னை பார்க்கையில் எல்லாம் என் கை என்னை மீறி எழுந்து உன்னை தொட வருவதை கண்டேன். ஆகவேதான் உன்னை முற்றாகவே தவிர்த்தேன். நாட்டையும் நகரையும் விடுத்து காடேகினேன்” என்றார் பிருஹத்காயர். “இக்கணம்கூட என் உடலும் உள்ளமும் ஏங்கும் ஒரே இன்பம் உன்னை தொடுவதுதான். அதை உள்ளத்தால் ஒறுக்கும்தோறும் வளர்ந்து என்னை சூழ்ந்திருக்கிறது. இக்கைகளை பார், இவை உன்னைத் தொடுவதற்காக துடிக்கின்றன.” ஜயத்ரதன் சிரித்தபடி எழுந்துகொண்டு “இல்லை தந்தையே, அவை என்னை அறைவதற்காகவே எழுந்தன” என்றான். அவர் “அறிவிலி!” என்றார். “இன்று அவையில் எழுந்தது முதல் பலமுறை நீங்கள் என்னை நோக்கி கையோங்கிவிட்டீர்கள்” என்றான் ஜயத்ரதன்.

“இப்பிறப்பில் உனைத் தொடும் பேறு எனக்கில்லை” என்றார் பிருஹத்காயர். அவர் குரல் உடைந்தது. “நான் மண் நீங்கும்போது இறுதியாகக்கூட உன்னை தொடலாகாதென்று நோன்பு கொண்டிருக்கிறேன். விண்ணில் நீ வந்து சேர்கையில் அங்கு நின்று இரு கைகளாலும் உன்னை அள்ளி நெஞ்சோடணைத்து உன் குழல் மணத்தை முகர்வேன். இங்கு நான் எஞ்சவிட்டுச் செல்லும் அனைத்தையும் அங்கு பெறுவேன்.” அவர் உதடுகள் நெளிய முகத்தை இறுக்கியபடி தலைகுனிந்தார். உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது.

“நீ அங்கு வரவேண்டுமெனில் நான் உன்னால் விண்ணேற்றப்படவேண்டும். நீ என்  மைந்தனென அங்கு வந்து சேரவேண்டும்…” என்றபோது அவர் இரப்பதுபோல தன் கைகளை நீட்டினார். தன் அகம் நெகிழ்வதைக் கண்டு அஞ்சி அதை நோக்கி தன்னிழிவுகொண்டு ஜயத்ரதன் உளம்பின்னடைந்தான். சலிப்புடன் “உங்கள் மேல் நம்பிக்கை கொள்க! உங்கள் கடுந்தவத்தால் சூழப்பட்டவன் அல்லவா நான்?” என்றான். “ஆம், உன்னை அவர்கள் அணுகவே முடியாது. அவ்வாறு படைசூழ்கைகளை உடைத்து அணுகிவந்து உன்னை அவன் கொன்றால் அவன் தலைவெடித்துச் சாவான். அதை அவனை ஆளும் இளைய யாதவன் அறிவான். நீ இரு நிலைகளில் காக்கப்பட்டவன்” என்றார். “ஆனால் இன்று அவையில் நிகழ்ந்தது என்ன என்று பின்னர்தான் உணர்ந்தேன். அது என்னை அச்சுறுத்துகிறது.”

முதல்முறையாக ஜயத்ரதன் உளக்கூர்மை அடைந்தான். “இன்று கொல்லப்பட்ட மைந்தன் அபிமன்யு மட்டும் அல்ல” என்றார் பிருஹத்காயர். “கௌரவப் பேரரசின் பட்டத்து இளவரசன் லக்ஷ்மணன் களம்பட்டிருக்கிறான். அதைப்பற்றி ஒரு சொல்கூட அவையாடலில் எழவில்லை. துரியோதனனும் துச்சாதனனும்கூட அதைப்பற்றி பேசவில்லை.” அதை அப்போதுதான் உணர்ந்து ஜயத்ரதன் “ஆம்” என்றான். “ஏன்?” என்றார் பிருஹத்காயர். ஜயத்ரதன் வெறுமனே நோக்கினான். “அபிமன்யு அறம்கடந்து கொல்லப்பட்டமை அவர்கள் அனைவரையும் துன்புறச் செய்கிறது. அதை கடந்துசெல்ல முயல்கிறார்கள்” என்றார் பிருஹத்காயர்.

“ஆம், அது இயல்பே” என்றான் ஜயத்ரதன். “இந்தப் போரில் இதுவரை நாம் அறம் மீறவில்லை. அவர்கள் அறம் மீறும்போதுகூட கௌரவ அரசர் நெறிநின்றே போரிடுகிறார்.” பிருஹத்காயர் “அபிமன்யுவின் இறப்புக்கு கௌரவப் படை துயர்கொண்டது. அவனை வாழ்த்திக் கூவியது” என்றார். “அபிமன்யு துரியோதனரால் வளர்க்கப்பட்ட மைந்தன்” என்றான் ஜயத்ரதன். “எண்ணுக மூடா, உடனிறந்தவன் பட்டத்து இளவரசன் லக்ஷ்மணன்! பேரியல்பும் கனிவும் கொண்டவன். நிறையுளத்தான் என குடிகளால் கொண்டாடப்பட்டவன்” என்றார் பிருஹத்காயர். “ஆயினும் கௌரவப் படை அபிமன்யுவுக்காகவே துயருறுகிறது.” ஜயத்ரதன் “அவர்களுக்கும் பிழையுணர்வு இருக்கலாம்” என்றான்.

“அறிவிலி!” என்றார் பிருஹத்காயர். “அந்தப் பிழையுணர்வு எங்கு சென்று நிற்கும் என உணர்கிறாயா? அவர்களின் ஆழுளம் பிழைநிகர் செய்ய விழையும். அதன்பொருட்டு உன்னை அவர்கள் பலியிடவும் கூடும்.” ஜயத்ரதன் சிரித்துவிட்டான். “சிரிப்பதற்குரியதல்ல இது. மானுட உள்ளங்களின் ஆடல் தெய்வங்களுக்கு நிகரான அறியமுடியாமையை சூடியது. அவர்கள் அறிந்து செய்யமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒன்று நிகழ்ந்து இப்பிழையுணர்வின் பெருந்துன்பத்திலிருந்து விடுதலைகொள்ள முடியுமென்றால் நன்றே என்று எண்ணுவார்கள்” என்றார் பிருஹத்காயர்.

“தனித்தனியாக அவர்கள் உன்னை இழக்க எண்ணம் கொள்ளமாட்டார்கள். உன்மேல் பேரன்புகூட கொண்டிருக்கலாம். ஆனால் கூட்டாக உள்ளங்களை ஆள்வது பிறிதொரு தெய்வம். அது தனிமானுடரின் நெறிகளுக்கும் அறவுணர்வுக்கும் அப்பாற்பட்டது. தனிமானுடர்களாக அவர்கள் கொள்ளும் விழைவுகளையும் உணர்வுகளையும்கூட அது பொருட்படுத்துவதில்லை. வஞ்சினம் உரைத்து வெற்றி விழைந்து எழும் தனியர்களின் தொகைகளான பெரும்படை கூட்டாக தோல்வியையும் முற்றழிவையும் விரும்பி அடையக்கூடும் என்பதை நூல்கள் சொல்கின்றன” என்றார் பிருஹத்காயர். “அவர்களின் அந்தக் கூட்டு எண்ணம் உன்னை கொல்ல வழியமைக்கக்கூடும் என்று தோன்றியது. அவர்களை நம்பி உன்னை விட்டுவிடுவது மடமை என எண்ணினேன். ஆகவேதான் இங்கே வந்தேன்.”

“பிறிதொரு சொல்லில் இதையே கிருதவர்மரும் சொன்னார்” என்றான் ஜயத்ரதன். “என்ன?” என்றார் பிருஹத்காயர். “ஒன்றுமில்லை” என்றான் ஜயத்ரதன். பிருஹத்காயர் “நான் அஞ்சுவது இளைய யாதவனை. உனக்குக் காப்பென்று ஆகும் என் தவப்பேறை வெல்லும் வழி ஒன்றை அவன் கண்டுகொள்ளக்கூடும். அது என்ன என்று அறியேன். ஆனால் அவனால் அதுவும் இயலும்” என்றார். எழுந்து நிலையின்மையுடன் அறைக்குள் சுற்றி வந்தார். “என்னால் நான் செய்யவேண்டியதென்ன என்று முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் உன்னுடன் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அனைத்து திசைகளில் இருந்தும் உனக்கு உயிரிடர் வரக்கூடும்.”

ஜயத்ரதன் “நான் சலித்துவிட்டேன். நான் அஞ்சவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அஞ்சி அஞ்சிப் பதுங்குவது என் இயல்பல்ல” என்றான். “ஒருநாள்தான்… நாளை பகலந்தி முடிய ஒருநாள். அதன்பின் நீ வாழ்வாய். நான் வெல்வேன். இப்பிறப்பிலேயே என் தீச்சொல்முடிச்சை அவிழ்த்துவிட்டு விண்ணேகுவேன்” என்றார் பிருஹத்காயர். “நான் துயில்கொள்ளவேண்டும்” என்றான் ஜயத்ரதன். “துயில்க! நானும் உன்னுடன் இக்குடிலிலேயே இருக்கிறேன்.” ஜயத்ரதன் “இங்கா?” என்றான். “ஆம், உன்னை நான் தனியாக விடக்கூடாது…” என்றார் பிருஹத்காயர். ஜயத்ரதன் பெருமூச்சுவிட்டான்.

குரல் கனிய பிருஹத்காயர் சொன்னார் “படுத்துக்கொள். அனைத்தையும் மறந்து துயில்கொள்… தந்தை இருக்கிறேன். என் அனைத்து ஆற்றல்களும் உனக்காகவே.” ஜயத்ரதன் உளம் உடைந்தான். மஞ்சத்தில் ஓசையுடன் அமர்ந்து கைகளால் முகம்பொத்தி விசும்பி அழத்தொடங்கினான். அவர் “அஞ்சாதே, மைந்தா. உன்னுடன் தவம் நிறைந்த நான் இருக்கிறேன். என்னுடன் மாருத்ரனின் அருள் உள்ளது. நீ வாழ்ந்து நிறைவுறுவாய்” என்றார். “தந்தையே…” என்றான் ஜயத்ரதன். “நீங்கள் என்னை தொட்டிருந்தால் நான் பிறிதொருவனாக ஆகியிருப்பேனா? இவ்விருளும் அலைக்கழிப்பும் அற்றவனாக சிறப்புற்றிருப்பேனா?”

அவன் சொற்கள் பிருஹத்காயரை நடுக்குகொள்ளச் செய்தன. “என்னை தொடுக… என்னை தழுவுக! குழவிப்பருவத்திலிருந்தே நான் விழைந்த ஒன்றை இன்றேனும் நான் அடைகிறேன்…” அவர் அறியாது எழுந்தபின் அமர்ந்துகொண்டு “வேண்டாம்” என்றார். “அவள் விழிகள் என் கண்முன் என தெரிகின்றன. வஞ்சம் ஒன்றே கதிரோன் என நாளும் விடியும் உலகில் வாழ்பவள். சிதையில் எரியும் வலியை கணம் கணமென அறியும் காலமுடிவிலியில் இருப்பவள். அவளுடைய தீச்சொல்” என்றார். ஜயத்ரதன் விழிகளில் நீருடன் அவரை நோக்கி அமர்ந்திருந்தான். “வேண்டாம், மைந்தா… இப்பிறவியில் வேண்டாம். என் கைகள்…” என்றார்.

“ஆம்” என அவன் பெருமூச்சுவிட்டான். கண்களை துடைத்துக்கொண்டான். அவர் “நாம் விண்ணுலகில் தழுவிக்கொள்வோம்” என்றார். அவன் இகழ்ச்சியுடன் உதடுகள் வளைய “விண்ணுலகு ஏகுவதற்கு முன் இங்கேயே உங்கள் கண்முன் நான் இறந்தால் என்னை தழுவிக்கொள்க! என் தலையை நெஞ்சோடணைத்துக்கொள்க! நான் அதை உணரப்போவதில்லை என்றாலும் இப்புவியில் நான் கொண்ட விழைவு நிறைவேறட்டும்” என்றான். துயர்மிக்க குரலில் “மைந்தா…” என்றார் பிருஹத்காயர். அவன் நோக்கை திருப்பிக்கொண்டான். அவர் சுவரில் விழுந்திருந்த அவன் நிழலை நோக்கினார். அதை தொடுவதற்காக கைநீட்டி பின்னர் தவிர்த்துக்கொண்டார். அவன் அதை உணர்ந்து மெய்ப்புகொண்டான். ஆனால் திரும்பி அவரை நோக்கவில்லை.

அவருடைய நீள்மூச்சொலி கேட்டு அவன் எண்ணம் கலைந்தான். திரும்பி அவரை நோக்கியபோது அவருடைய வலக்கையின் நிழல் தன் தலையை தொட்டுக்கொண்டிருப்பதை கண்டான். மரவுரி அணிந்து கல்மாலையும் உருத்திரவிழிமணிக் குண்டலங்களும் சடைமுடிப்பரவலுமாக அவர் மூவிழியன் என்று தோன்றினார். விழியிமைக்கும் ஒரு கணத்தில் முகத்தோற்றம் மாற விழியிழந்தவராகத் தெரிந்தார். அவன் நெஞ்சு துடிக்க கூர்ந்து நோக்கினான். விழியின்மையே அவர் முகமெங்கும் நிறைந்திருந்தது. தலையை திருப்பியிருந்தமையும், வாய் சற்று திறந்திருந்ததும் எல்லாம் திருதராஷ்டிர மாமன்னரையே நினைவுறுத்தின. இறுதியாக அவரை அஸ்தினபுரியின் அரண்மனையில் கனவுருத் தோற்றமாகக் கண்டதை அவன் நினைவுகூர்ந்தான். அப்போதும் அவர் விழியிழந்தவராகவே தோன்றினார்.

சிலகணங்கள் நோக்கியபின் மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டிக்கொண்டான். அவர் பீடத்தில் அசைந்து அமர்ந்தார். அவன் நோக்காமல் “தாங்கள் படுத்துக்கொள்வதென்றால்…” என்றான். “தேவையில்லை, நான் துயிலப்போவதில்லை” என்றார் பிருஹத்காயர். அவன் கண்களை மூடிக்கொண்டான். கைகளை மஞ்சத்தில் படியவைத்து உடலை தளர்த்திக்கொண்டே இருந்தான். உடலில் களைப்பு நிறைந்து எடையுடன் பரவியிருந்தாலும் துயில் வரவில்லை. உடல் களைப்பை துறந்த பின்னர்தான் உள்ளம் துயிலை நாடும் போலும். ஏனென்றால் அது துயிலுக்குள் பிறிதொரு விழிப்பை அடைகிறது. அந்தக் கனவுள்ளத்திற்கு ஊக்கம்கொண்ட உடல் தேவையாகிறது.

அந்த ஒருநாளில் நிகழ்ந்தவை பற்றிய நினைவு அவனை திகைப்படையச் செய்தது. பற்பல காலஅடுக்குகளாக ஒரு முழு வாழ்க்கையே நிகழ்ந்துமுடிந்ததுபோல. திரும்பச் சென்று ஒவ்வொன்றையும் மீட்டு எடுக்கமுடியும் என ஏன் தோன்றுகிறது? அபிமன்யு எழுந்து வரலாம். லக்ஷ்மணன் தோன்றலாம். இழக்கப்பட்டவை அனைத்தும் மீளலாம். அதற்கான வாய்ப்பு இப்புடவியில் எங்கோ இருக்கக்கூடும். அருந்தவத்தால் அதை அடையமுடியும். ஆனால் அருந்தவம் இப்புவியின் எளிய துயர்களை வெல்லவும் இன்பங்களை அடையவும்தான் என்றால் எத்தனை சிறுமைகொண்டது அது! ஆயினும் கேட்ட கதைகளில் அனைவருமே இப்புவியில் பொருள்கொள்ளும் ஒன்றுக்காகவே புவிதுறந்து தவம் இயற்றியிருக்கிறார்கள். இதோ, இவர்கூட அவ்வாறுதான்.

பின்னர் விழித்துக்கொண்டபோது உடல்நடுங்கிக்கொண்டிருந்தது. எழுந்தமர்ந்து அறைமூலையில் பீடத்தில் அமர்ந்து திறந்த கதவினூடாக வெளியே நிறைந்திருந்த இருளை நோக்கிக்கொண்டிருந்த பிருஹத்காயரை பார்த்தான். அவருடைய பெரிய கைகள் ஒன்றையொன்று முத்தமிட்டுத் தழுவி பின்னி நெளிந்துகொண்டிருந்தன. அவனை அஞ்சி விழித்துக்கொள்ளச் செய்த கனவில் அவை இரு கரிய நாகங்களாக மாறி அவர் உடலில் இருந்து வழிந்திறங்கி அவனை நோக்கி வந்து உடலைச் சுற்றிக் கவ்வி இறுக்கி தலையை விழுங்கும்பொருட்டு வாய் திறந்து அணுகின என்பதை நினைவுகூர்ந்தான்.

நூல் இருபது – கார்கடல் – 43

ele1குடிலுக்குள் சிறு பெட்டியில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த ஜயத்ரதனுக்கு முன்னால் அவனை பார்த்தபடி கிருதவர்மன் அமர்ந்திருந்தான். பதுங்கி இருக்கும் குழிமுயல்போல் ஜயத்ரதன் தோன்றினான். கிருதவர்மன் எழுந்து சென்றுவிடவேண்டுமென்று எண்ணினான். அவ்வெண்ணம் பலமுறை உருவானபோதும்கூட அவனால் உடலை அசைத்து எழ முடியவில்லை. பெருந்துயரிலிருக்கும் ஒருவரை விட்டுச்செல்வது எளிதல்ல. உடனிருப்பது அதைவிட கடினம். அங்கே உரிய சொற்கள் என ஏதுமில்லை. அப்போது எச்சொல்லும் பொருத்தமற்றவையே. ஆனால் நா மீறி எழும் சொற்கள் இயல்பாகவே அத்தருணத்தில் அமைந்து உரிய பொருள் கொள்வதும் உண்டு.

அவன் எழுந்துவிடலாம் என்று எண்ணி தன் முழு உடல் ஆற்றலையும் கூட்டி கைகளை ஊன்றி உடலை அசைத்தான். அவ்வசைவு ஜயத்ரதன் உடலை விதிர்க்கச் செய்தது. கிருதவர்மன் சிறு கனைப்பொலி ஒன்றை எழுப்பியபோது அவன் நிமிர்ந்து பார்த்தான். “நான் கிளம்புகிறேன். தனிமையில் இருப்பதே உங்களுக்கு நன்றென்று தோன்றுகிறது” என்று கிருதவர்மன் சொன்னான். ஜயத்ரதன் எழுந்து அவன் கையை பற்றிக்கொண்டு “இல்லை, நீங்கள் உடனிருங்கள். யாதவரே, எவ்வகையிலோ நீங்கள் மட்டும் இப்போது உடனிருக்க இயலுமென்று தோன்றுகிறது” என்றான். கிருதவர்மன் மீண்டும் தன் உடலை தளர்த்தி அமர்ந்தான்.

ஜயத்ரதனின் விரல்கள் கடுங்குளிரில் என நடுங்கின. அவன் அவற்றை கோத்தும் பிரித்தும் ஒன்றோடொன்று நெரித்தும் நிலையழிந்துகொண்டிருந்தான். அவன் கைவிரல் என நாகக்குழவிகள் குடியேறிவிட்டன என்று பட்டது. அவை அவன் அறியாத பிறிதொரு நடனத்தை ஆடிக்கொண்டிருந்தன. “என் உணர்வுகள் என்ன என்று எனக்கே தெரியவில்லை. உண்மையைச் சொன்னால் இப்போது இறந்துவிடவேண்டுமென்ற பெருவிழைவன்றி வேறெதுவும் என் உள்ளத்தில் இல்லை. விதவிதமாக இறப்பதைப்பற்றி மட்டுமே என் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன” என்று அவன் சொன்னான். அவன் விரல்கள் பின்னி பின் விரிந்தன. கட்டைவிரலை இரு விரல்கள் பற்றி ஒடித்தன.

“மாறி மாறி எண்ணக் காட்சிகள். இந்த வாளை எடுத்து என் கழுத்தில் செலுத்திக் கொள்வதைப்பற்றி, இப்படியே இறங்கிச்சென்று அடர்காட்டில் நின்று சங்கறுத்து விழுவதைப்பற்றி, அங்கே தெற்கில் சிதைகளில் எரிபவருடன் பாய்ந்து சேர்ந்துவிடவேண்டும் என்று… ஒன்று சலிக்கையில் பிறிதொன்று. மாறி மாறி முடிவே இல்லாமல். சாவதைப் பற்றிய எண்ணம் இனிக்கிறது. ஆனால் முழுமையாக சாவை கற்பனையில் நிகழ்த்தி முடித்ததும் வெறுமையும் சலிப்பும் உருவாகிறது. ஆகவே இன்னொரு வகையில் சாவை கற்பனை செய்யத் தொடங்குகிறேன். நூறுநூறு முறை செத்துக்கொண்டே இருக்கும் இந்தத் தருணத்தில் எத்தனை பிறவிகள் எடுத்திருப்பேன்!”

கிருதவர்மன் “இறப்பைப்பற்றி மிகைவிழைவு கொள்வதும் உளச்சோர்வின் இயல்பே” என்றான். “சாவை கற்பனையில் நிகழ்த்தியதும் சலிப்பு உருவாவது சாவு தீர்வல்ல என்பதை காட்டுகிறது.” ஜயத்ரதன் “ஆம்” என்றான். “ஏன் நீங்கள் உடனிருப்பது எனக்கு இத்தனை உவப்பாக இருக்கிறது? சற்று முன் பிற மானுடருடன் இருக்கையில் அவர்களை ஏன் அவ்வளவு வெறுத்தேன்? வாளெடுத்து அவர்கள் ஒவ்வொருவரையும் கொன்று வீழ்த்திவிடவேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் என் அருகே வந்து தோளை தொட்டபோது அன்னையின் தொடுகைபோல் உணர்ந்தேன். யாதவரே, உங்களிடம் வருகையில் மிக பாதுகாப்பாக எண்ணினேன். இந்தச் சிறு குடிலுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதே இவ்வாழ்வுடன் எனக்கான ஒரே தொடர்பாக இருக்கிறது” என்றான்.

அந்த அணுக்கச் சொற்கள் கிருதவர்மனை கூச்சம் கொள்ளச் செய்தன. அவன் குனிந்து தன் நகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். ஜயத்ரதன் அந்த அண்மையை அச்சொற்களால் தனக்கே சொல்லிக்கொண்டமையால் மேலும் தெளிவாக உணர்ந்தவனாக “நாம் அதிகம் நெருங்கியதில்லை. நம்மிடையே உளம்பரிமாறும் உரையாடலும் நிகழ்ந்ததில்லை. உங்களைப் பற்றி நான் மிகுதியாக ஏதும் அறியேன். இந்தப் போர்க்களத்தில்தான் நாம் இத்தனை அணுக்கமாக சந்தித்துக்கொள்வதே நிகழ்கிறது. இருந்தும் ஏதோ ஒன்று உங்களுடன் என்னை கொண்டுவந்து சேர்க்கிறது” என்றான். அந்த அணுக்கத்தை ஒரு காவல் என, ஒளிவிடம் என அவன் உருவாக்கிக்கொள்கிறான் எனத் தோன்ற கிருதவர்மன் அதிலிருந்து எழுந்து விலக எண்ணினான். ஆனால் தன் நா பேசத் தொடங்கியபோதுதான் தான் எழவில்லை என்பதையே உணர்ந்தான்.

கிருதவர்மன் “நீங்கள் இப்போதிருக்கும் இந்த நிலையில் நான் இருந்திருக்கிறேன்” என்றான். ஜயத்ரதன் திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தான். “கைகள் பின்னால் கட்டப்பட்டு தேர்த்தூணில் என்னை நிறுத்தியிருந்தார்கள். துவாரகையின் தெருக்களினூடாக என்னை இழுத்துச்சென்றார்கள். இருபுறமும் கூடியிருந்த மக்கள் என்மேல் காறி உமிழ்ந்தார்கள். இழிசொல் கூவினார்கள். அச்சொற்களை மறந்துவிட்டேன். அவ்வுணர்வுகள் விழிகள் மட்டும் நஞ்சு பரவிய வேல்களென என்னைச் சூழ்ந்து செறிந்துள்ளன. எஞ்சிய இவ்வாழ்நாளில் ஒருநாளேனும் அவற்றை எண்ணாமல் நான் கடந்து வந்ததில்லை. ஒருகணமேனும் அவை இல்லாமல் வாழ்ந்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை” என்று கிருதவர்மன் சொன்னான்.

“ஆம், அவ்வாறு ஒரு கதை கேட்டிருக்கிறேன். ஆனால் நிகழ்ந்ததென்ன என்று தெரியாது” என்று ஜயத்ரதன் சொன்னான். “அக்கதை இளைய யாதவர் உங்களுக்கு உயிர்க்கொடை அளித்த பெருஞ்செயல் என்று சூதர்களால் பாடப்படுகிறது.” கிருதவர்மன் “ஆம், உயிர்க்கொடை அளித்தான்” என்றான். நீள்மூச்சுடன் “ஆலகாலம்போல் கசக்கும் நெஞ்சுடன், அதை ஓயாது கடையும் மத்து என சித்தத்துடன் வாழ்வதற்கு உயிர் தேவை அல்லவா? சில தருணங்களில் கொலை பெருங்கொடையாக அமையக்கூடும். எனக்கு அதை அவன் மறுத்தான்” என்றான். வாயில் கசப்பு ஊற, அதை துப்ப விழைபவன்போல உதடுகுவித்து பின் இறுக்கிக்கொண்டான்.

“என்னை பின் கை கட்டி இழுத்துவந்த இளைய பாஞ்சாலனிடம் மன்றாடினேன். பொன் விழைவதும், பெண் விழைவதும், மண் விழைவதும், மணி விழைவதும் வீரர்க்கு உரியதுதான். ஆனால் வஞ்சகனாகவும் இழிமகனாகவும் என் நெஞ்சுறைந்த திருமகள் முன் சென்று நிற்பதென்பது இறப்பினும் கொடிது எனக்கு என்றேன். அவனிடம் அதை சொல்லியிருக்கலாகாது என இப்போது உணர்கிறேன். என் சொற்கள் வழியாக அவன் தன் தந்தைக்கு அர்ஜுனன் இழைத்த சிறுமையை நினைவுகூர்ந்திருப்பான். அதை நிகர் செய்ய என்மேல் அதை செலுத்தினான்.” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “அறிவின்மை எனத் தோன்றும். ஆனால் மானுடர் அவ்வாறுதான் செயல்படுகிறார்கள். எவரிடமோ அடைந்த புண்ணை வேறெவரையோ புண்படுத்தி தீர்த்துகொள்கிறார்கள்” என்றான் கிருதவர்மன்.

“அன்று என்னை இயக்கியது ஒரு சிறு விழைவு. அது என்னை கடந்த ஒரு விசை. அனைத்து மானுடரையும் ஆட்டுவிக்கும் பெருவிசைகளில் ஒரு சரடு” என கிருதவர்மன் தொடர்ந்தான். “அந்த அருமணி, ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள். எனக்கு அது என் உளம்கவர்ந்த திருமகளின் விழி. ஆனால் அதன் பொருட்டு நான் ஏற்றது என் ஏழு பிறவிகளுக்கும் கசக்கும் நஞ்சு… திருமகள் கொலைகாளியாகி நின்றிருக்கும் கருவறை என என் உள்ளம்.” மேலும் பேச முயன்று பின் கைவீசி விலக்கி “அதை ஏன் பேச வேண்டும்? விடுவோம்” என்றான்.

ஜயத்ரதன் கை நீட்டி கிருதவர்மனின் கால்களில் தன் கையை வைத்தான். “என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று நானிருக்கும் நிலை அதுவே. தற்சிறுமை கொண்டு, புழுவென அணுவெனச் சிறுத்து, இருத்தலென்பதே கணந்தோறும் வலிபெருகும் வதையென ஆதல்” என்றான். கிருதவர்மன் “ஆம்” என்றான். ஜயத்ரதன் “அவர்கள் இத்துயரை அறியமாட்டார்களா?” என்றான். “அவர்கள் இழப்பின் துயரை அறிந்திருப்பார்கள். இழப்பு நமது ஆளுமைக்கு அப்பாற்பட்டது. முழுப் பொறுப்பையும் நாம் தெய்வங்களிடம் அளித்துவிட இயலும். ஆனால் சிறுமை நம்மிலிருந்தே தொடங்குகிறது. ஆகவேதான் நாம் அவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம்” என்றான்.

“நம்மிடம் இல்லாத சிறுமையை எவரும் நம் மீது ஏற்றிவிட இயலாது” என கிருதவர்மன் தொடர்ந்தான். “நான் எண்ணிப் பார்த்ததுண்டு. அன்று துவாரகையில் ஒரு யோகியை அவ்வண்ணம் கைகள் கட்டி தெருவில் இழுத்துக்கொண்டு சென்றிருந்தால், அவர்மேல் அம்மக்கள் காறி உமிழ்ந்திருந்தால், அவர் சிறுமை கொண்டிருப்பாரா என. அவர்கள்மேல் அவர் ஏளனமோ இரக்கமோதான் கொண்டிருப்பார். சிறுமை இருந்தது என்னுள்ளேதான். அதை பல்லாயிரமென பெருக்கி எனக்கே காட்டும் ஆடியே அத்தருணம். சைந்தவரே, நான் வெறுப்பது என்னை இழிவு செய்தவர்களை அல்ல. என்னை இழிந்தோனாக ஆக்கிக்கொண்ட அத்தருணத்தைத்தான்.”

“அது ஓர் அணு சற்றே திரும்பும் அளவுக்கு சிறிய நிகழ்வு. ஆனால் அதன்பின் அனைத்தும் மாறிவிட்டது. அவன் மேல் எனக்குள்ள வெறுப்பென்பது அவன் அத்தருணத்தை தான் காணாமல் கடந்து சென்றிருக்கலாம் என்பதனால். அதை நான் காணாமல் ஆக்கியிருக்கலாம் என்பதனால். மானுடரை அவர்களுக்குள் உறையும் சிறுமையை காணச்செய்வதுபோல் பெரும் வன்முறை பிறிதில்லை. என்னை அறைந்து கூழாக்கி நிலத்திலிட்டு மிதித்து அரைப்பதற்கு நிகர் அது” என்றான் கிருதவர்மன். அத்தனை விரிவாக அதை பேசியதை எண்ணி அவன் அகம் வியந்தது. ஆகவே அத்தருணத்தை விலக்கி எழுந்து செல்ல விரும்பியது. அகம் எழுந்து அகல அவன் உடல் அங்கேயே இருந்தது. எத்தருணத்திலும் ஜயத்ரதன்மேல் கடும் காழ்ப்பென அவ்வுணர்வு உருமாறக்கூடும் என அவனுக்கே தெரிந்திருந்தது.

ஜயத்ரதன் “என் நிலையும் மற்றொன்றல்ல, யாதவரே” என்றான். “நான் பாண்டவ அரசியை சிறைபிடிக்க முயன்றேன். அது கௌரவ மூத்தவருக்கு ஓர் அரும்பரிசென அவளை அளிக்கவேண்டும் என்பதற்காகவே என்று நானே என்னிடமும் பிறரிடமும் நூறுநூறு முறை சொல்லி நிறுவிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது மெய்யல்ல என்று பிற எவரையும்விட எனக்குத் தெரியும். எவரும் பொய்யென்று ஒன்றைள சொல்லி தனக்குத்தானே நிறுவிக்கொள்ள முடியாது. நான் அவளை கவர்ந்துசெல்ல முயன்றது என் விழைவின் பொருட்டே” என்றான்.

“பாஞ்சால நாட்டில் அவளுடைய மணத்தன்னேற்புக்குச் செல்லும்போது பட்டுத்திரைச்சீலையில் அவளது உருவத்தை பார்த்தேன். அப்போது எழுந்த விழைவு அது. உண்மையில் அதை அப்போது எளிதில் கடந்து சென்றேன். ஆனால் அவள் என்னால் அடையப்பட முடியாதவள் என்று அந்த அவையில் நிறுவப்பட்டபோது அது ஆணவத்துடன் இணைந்து பலமடங்காகியது. அதை என்னிடமிருந்தே அழுத்தி எங்கோ மறைத்தேன். பிறகு ஒருபோதும் என்னுள்ளிலிருந்து அதை எடுத்து நோக்கியதே இல்லை” என ஜயத்ரதன் தொடர்ந்தான்.

“ஆனால் அழுத்தும்தோறும் அது ஆழத்தில் சென்று வளர்ந்தது. இப்புவியில் நாம் மண்ணுக்குள் அழுத்திச் செலுத்தும் அனைத்தும் ஏழாம் உலகத்து நாகங்களுக்கு சென்று சேர்கின்றன. இங்கு ஒரு துளியென இருப்பவை அங்கு கடலாகின்றன. நாகங்களின் நச்சு அனைத்தையும் பெருக வைப்பது. நீர்படுபவை ஊறி பெரிதாகின்றன, நெருப்புபடுபவை வானளாவ எழுகின்றன என்று தொல்லசுரர் வேதச்சொல் ஒன்று உண்டு.” ஜயத்ரதன் விழிகள் நிலைத்திருக்க உதடுகளால் புன்னகைத்து “ஏன் இவ்வாறு நம்மை நாமே கூறுபோட்டுக்கொள்கிறோம்? இது போர்க்களம் என்பதனாலா? இங்கே இறப்பு நிறைந்துள்ளது என்பதனாலா?” என்றான்.

கிருதவர்மன் நகைத்து “ஆம், இங்கே எளிய போர்வீரன் உட்பட அனைவருமே தங்களை வெட்டி கீறி கூறிட்டு ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். வெறுமையைள சென்றடைந்து திரும்பி வெற்றுக்களியாட்டுக்குச் செல்கிறார்கள்” என்றான். “நான் என் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே என் எண்ணங்களை நானே திரும்பி நோக்கியிருக்கிறேன். என் வாழ்க்கையை மதிப்பிட்டிருக்கிறேன். முதல்முறையாக என்னை அங்கநாட்டரசரின் முன்வைத்தபோது” என்றான் ஜயத்ரதன். “யாதவரே, நாம் ஏன் அந்தப் பெருவிழைவை அடைந்தோம்? வாழ்க்கையையே அதற்கு நிகராக வைத்து ஆடிக்கொண்டிருக்கிறோம்?” என்றான்.

கிருதவர்மன் திடுக்கிட்டான். பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு நீள்மூச்செறிந்து “மகிஷாசுரன் ஏன் தூவெண்ணிறப் பேரெழில்கொண்டவள் மேல் பித்துகொண்டான்?” என்றான். பின்னர் “இருள் ஏன் ஒளிக்காக தவம் செய்கிறது?” என்றான். ஜயத்ரதன் “ஆம்” என்றான். “நாம் நம்மிடமிருந்து மீள, நம்மிலிருந்து மேலெழ விழைகிறோம். ஆனால் அதையும் கைப்பற்றலாகவே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றான் கிருதவர்மன். “நாம் அன்றாடம் வாழ்வது வஞ்சத்தின்பொருட்டே என்றாலும் ஆழத்தில் அந்தப் பெருந்திருமேல் கொண்ட காதலை கரந்துறைச் செல்வமாக கொண்டிருக்கிறோம். அதை நாம் இழந்தால்தான் முற்றிலும் பொருளிழந்தவர்களாவோம்” என்றான்.

அவ்வெண்ணத்தை வந்தடைந்ததுமே இருவரும் நிறைவடைந்தனர். சொல்லமைந்து தங்களுக்குள் மூழ்கி அமர்ந்திருந்தனர். பின்னர் நீள்மூச்சுடன் மீண்ட ஜயத்ரதன் “எல்லாம் பழைய கதைகள். இத்தருணத்தில் எளிய சிறுமைகளை தோண்டி எடுத்து மீண்டும் நிறுவிக்கொள்ளவேண்டிய தேவையில்லை” என்றான். “போர்க்களம் என்றால் என்ன என்று இங்கு வந்தபோதுதான் அறிந்தேன். ஒவ்வொன்றையும் அடியாழம் வரை கலக்கி சேறும் குப்பையும் கிளர்ந்தெழச் செய்யும் கொந்தளிப்பு இது. இந்தப் பதின்மூன்று நாட்களில் இக்களத்தில் வாழும் அனைவருமே உளம் கலங்கி அனைத்தும் மேலெழுந்து மேலெழுந்தவை கீழமைந்து பிறிதொருவராக உருமாறியிருப்பார்கள். ஒவ்வொரு கணமும் இங்கு ஒருவர் உளமிறந்து பிறிதொரு உளம் கொண்டு எழுந்துகொண்டிருக்கிறார்கள்.”

கிருதவர்மன் அச்சொற்களை செவிகொள்ளவில்லை. அவன் உள்ளம் மேலெழுந்துகொண்டே இருக்க ஜயத்ரதன் எழுந்த உச்சத்திலிருந்து சரிந்துகொண்டே இருந்தான். கழிவிரக்கமும் தனிமையும் கொண்டு அவன் சொன்னான் “இந்தக் களத்திற்கு வந்த கணம் முதல் நான் எண்ணிக்கொண்டிருப்பது இதைத்தான். இப்போர் கௌரவர்கள் அவையில் பாண்டவ அரசியை இழிவு செய்ததன் பொருட்டு தொடுக்கப்பட்டது என்கிறார்கள். எனில் அதைவிடப் பெரிய இழிவை நான் அவளுக்கு இழைத்தேன். அவள் கூந்தலைப் பற்றி இழுத்துச்செல்ல முற்பட்டேன். அதன்பொருட்டு பிறிதொரு போர் தொடங்க வேண்டும். ஆனால் என் இழிசெயலைப் பொறுத்து என்னை வாழ்த்தி திரும்ப அனுப்பினார் பாண்டவ மூத்தவர். அன்று பிறிதொரு மானுடனாக, இணைவீரனாக நின்று என் பொருட்டு சொல்லெடுத்தவர் இளைய பாண்டவர்.”

“அன்று அவருக்கு நான் எந்தச் சொல்லையும் அளிக்கவில்லை. ஆனால் அத்தனை சொற்களையும் அளித்துவிட்டேன் என்றே பொருள். இப்புவியில் அவர்கள் இருவருக்கும் நிகராக பிறிதெவருக்கும் நான் கடன்பட்டிருக்கவில்லை” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “ஆனால் இன்று போர்க்களத்தில் நான் கீழ்மகனாக நடந்துகொண்டேன். கீழ்மையிலும் கீழ்மை நான் இயற்றியது.” தன் ஆழ்நிலை கலைந்தமையால் எரிச்சல்கொண்ட கிருதவர்மன் “நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும் என்கிறீர்கள்?” என்றான். மேலும் சீற்றம்கொண்டு “மைந்தனை காக்கவந்த இளைய பாண்டவரை செல்க என்று கௌரவப் படைகளுக்குள் செலுத்தியிருக்க வேண்டுமா? அவர் முன்னிருந்து வாள் தாழ்த்தி விலகியிருக்க வேண்டுமா? எனில் எதன் பொருட்டு இங்கே வாள் கொண்டு எழுந்திருக்கிறீர்கள்? உங்கள் முழுக் கடன் கௌரவ அரசரிடமே. கௌரவர்களின் வெற்றியே உங்கள் பொறுப்பு. எதன் பொருட்டும் அதை நீங்கள் துறந்தாகவேண்டும் என்பதில்லை” என்றான்.

“ஆம், நான் அவரை உள்ளே விட்டிருக்க வேண்டியதில்லை” என்றான் ஜயத்ரதன். “ஆனால் நான் உள்ளே சென்றிருக்கலாம். அனைவராலும் சூழப்பட்டு நிலத்தில் நின்றிருந்த அபிமன்யுவை நான் நினைத்திருந்தால் காத்திருக்கலாம்.” கிருதவர்மன் சினத்துடன் எழுந்து “என்ன செய்திருப்பீர்கள்? துரோணரும் கர்ணனும் அம்புகளால் சூழ்ந்து தாக்கிக்கொண்டிருக்கையில் ஊடு புகுந்து அவர்கள் அனைவரையும் வென்று இளவரசன் உயிரை பேணியிருப்பீர்களா? அல்லது கௌரவர்களின் அம்புகள் பட்டு அங்கு இறந்து விழுந்திருப்பீர்களா?” என்றான்.

“இவ்வண்ணம் சொல்லடுக்கி நான் என்னை காத்துக்கொள்ள முயன்றேன். ஆனால் உடனே என் அகம் அதற்கான மறுமொழியை சொல்லிவிட்டது” என்று ஜயத்ரதன் சொன்னான். “யாதவரே, அங்கே பாண்டவ மைந்தனைச் சூழ்ந்து தாக்கிய ஒவ்வொருவரும் கை நடுங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். மீறி எழுந்த சீற்றத்துடனோ அசையா உளஉறுதியுடனோ எவரும் அப்போது போரிட்டிருக்க மாட்டார்கள். நான் சென்று ஒரு சொல் உரைத்திருந்தால் ஒருவேளை அவர்களின் அம்புகள் தாழ்ந்திருக்கலாம். அவன் உயிர் மீண்டிருப்பானா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் அனைவராலும் சூழ்ந்து கொல்லப்பட்டான் எனும் பழியிலிருந்து நாம் தப்பியிருக்கலாம். அத்தருணத்தில் எனக்கு அது தோன்றவில்லை.”

“போர் எழுந்த பின்னர் நம் ஒவ்வொருவரிலும் பிறிதொரு தெய்வம் குடியேறிவிட்டது. அது குருதி குருதி என்று கூவுகிறது. வெற்றிகூட அதற்கு ஒரு பொருட்டல்ல. நெறிகளையோ முறைகளையோ அது அறிவதேயில்லை” என்றான் ஜயத்ரதன். “இப்போதுகூட இளைய பாண்டவரின் இறைஞ்சும் விழிகளை காண்கிறேன். சைந்தவனே இது நம் நட்பின் பொருட்டு என அவர் கூவியது மலையடுக்குகள் சூழ்ந்து எதிரொலி எழுப்புவதுபோல நூறுநூறு முறை என் செவிகளில் ஒலிக்கிறது. ஆனால் நான் அவரை என் அம்புகளால் மேலும் மேலும் அறைந்து தடுத்து நிறுத்தினேன். ஒரு நாழிகை பொழுது அவரை தடுத்து நிறுத்த என்னால் இயலும் என்று அறிந்திருந்தேன். ஒரு நாழிகைப் பொழுதுக்குள் அபிமன்யு கொல்லப்படுவான் என்பதையும் அறிந்திருந்தேன். குலநெறியும், மூத்தாரும், தெய்வங்களும் வாழும் ஆழுள்ளத்திற்கு அந்த அறிதல் சென்றுசேராமல் நானே தடுத்துக்கொண்டேன்.”

கிருதவர்மன் “இவ்விரவில் இதை எண்ணி பொழுதை மீட்டிக்கொள்வதில் எப்பொருளுமில்லை. துயில்க! இது ஒவ்வொரு கணத்திலும் நம்மை மீறி சென்றுகொண்டிருக்கும் பெருநிகழ்வென்பதை உணர்ந்தால் இதில் எதன் பொருட்டும் நாம் துயருற மாட்டோம். எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளவும் மாட்டோம்” என்றான். பின்னர் “நான் வருகிறேன், இத்தருணத்தில் உங்களுடன் இருக்க விழையவில்லை” என்றான். “யாதவரே!” என்று கையை பற்றினான் ஜயத்ரதன். கிருதவர்மன் “இத்தருணத்தில் நான் உடனிருக்கலாகாது. அதை நீங்கள் இவ்வளவு சொற்களை பேசும்போது உணர்ந்தேன். நான் இங்கிருக்கையில் ஆடி போல உங்கள் துயரை உங்களுக்கே எதிரொளித்துக் காட்டுகிறேன். அதை நீங்கள் பெருக்கிக்கொள்ள கருவியாக அமைகிறேன்” என்றான்.

ஜயத்ரதனின் கையை விடுவித்துக்கொண்டு “தனிமையில் உங்கள் எண்ணப் பெருக்கு உங்களுக்கே ஒருகணத்தில் சலிக்கும். ஏனெனில் தனியனின் எண்ணங்கள் மிக விரைவில் அதன் உச்சத்தை அடைந்துவிடுகின்றன. அங்கிருந்து நேர் எதிர்த்திசையில் திரும்பியாகவேண்டும். அதற்கான சொல்முறைகளையும் உணர்வுகளையும் உருவாக்கிக்கொண்டாக வேண்டும். மிக விரைவில் நிகழ்ந்தவை அனைத்தையும் துறந்து பிறிதொரு இடத்திற்கு சென்று சேர்வீர்கள். அது ஓர் இனிய இளமைப்பொழுதாக இருக்கலாம். அன்றி காதலின் களிப்பாக இருக்கலாம். ஆனால் துயரழிந்த தூய தருணம் ஒன்றை உள்ளம் சென்று சேரும். துயரை உள்ளம் உதறிக்கொள்ளும் வழி அது ஒன்றே” என்றபின் கிருதவர்மன் அவன் தோளில் தட்டிவிட்டு குடில் வாயிலை நோக்கி சென்றான்.

ஜயத்ரதன் அவன் பின்னால் வந்து “என்னை கொல்வேன் என இளைய பாண்டவர் வஞ்சினம் உரைத்திருக்கிறார். நம் திட்டத்தை வைத்து நோக்கினால் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஒரே நாளில் அங்கர், துரோணர், கிருபர், சல்யர், பால்ஹிகர், அரசர் என அனைவரையும் வென்று நம் படையை முழுமையாக தோற்கடித்தாலொழிய அது நிகழாது. ஆனாலும் என் உள்ளம் அச்சம் கொள்கிறது. ஒருகணம்கூட நிலைகொள்ளவில்லை. இந்த நிலைகொள்ளாமையே என்னை அச்சுறுத்துகிறது. இது இறப்புக்கு முன் மானுடரிடம் எழும் நிலைகொள்ளாமையா என என் அகம் தவிக்கிறது” என்றான். கிருதவர்மன் பேசாமல் நோக்கி நின்றான். “சொல்க யாதவரே, என்ன நிகழும்? நான் கொல்லப்படுவேனா?”

“இப்போது நீங்கள் பேசிய அனைத்தும் காட்டுவது ஒன்றுதான். நீங்களே உங்கள் சாவை விரும்பி சென்றுகொண்டிருக்கிறீர்கள்” என்றான் கிருதவர்மன். “என்ன சொல்கிறீர்கள்?” என்றான் ஜயத்ரதன் சீற்றத்துடன். “நீங்கள் உங்கள் பிழைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். அதற்கான தண்டனையை விழைகிறீர்கள். அந்தக் களப்பலி உங்கள் வாழ்க்கையை எப்படி நிறைவுகொண்டதாக ஆக்கும் என உருவகித்துக் கொள்கிறீர்கள். அது பெருந்திருமேல் கொண்ட விழைவுக்கு அளிக்கும் பலிக்கொடை என விரித்துக்கொள்கிறீர்கள். சைந்தவரே, சாவு சாவு என உங்கள் அகம் தாவிக்கொண்டிருக்கிறது” என்றான் கிருதவர்மன். ஜயத்ரதன் தளர்ந்து “ஆம்” என்றான். பின்னர் கலங்கிய கண்களுடன் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான்.

“அந்த உளத்தளர்வை உதறுக! உங்களை இறுக்கி கல்லென்றாக்கிக் கொள்க!” என்றான் கிருதவர்மன். “இந்நிலையில் அதற்கு ஒரே வழி வஞ்சம் கொள்வதே. இளைய பாண்டவர் மேல் கசப்பை திரட்டிக் கொள்க! வஞ்சத்தைப் பெருக்கி நிலைநிறுத்துக! அதன்பொருட்டு பொய்யை சமைத்து குவித்துக் கொண்டாலும் அது முறையே. வஞ்சமே நம்மை தலைதாழ்த்தாமல் களத்தில் நிற்கச்செய்யும் என்று உணர்க!” ஜயத்ரதன் “என்னால் இயலாது” என்றான். “நான் கண்ட வழி அதுவே. இந்தக் களத்தில் இறுதிவரை என் நஞ்சுடன் நான் நிலைகொள்வேன். மூன்று தெய்வங்களும் அமுதை கொண்டுவந்து பொழிந்தாலும் அதை கரைத்தழிக்க இயலாது” என்றான் கிருதவர்மன்.

“என்னால் இயலாது, யாதவரே” என்று ஜயத்ரதன் உடைந்த குரலில் சொன்னான். “எத்தனை சொல்லிக்கொண்டாலும் நான் செய்த கீழ்மையை என்னால் ஏற்க இயலாது.” கிருதவர்மன் “அது ஒன்றே வழி. வேறொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றபின் வெளியே சென்றான். ஜயத்ரதன் அவன் உருவம் மறைவதை, வெளியே புரவிக்குளம்போசை எழுவதை கேட்டுக்கொண்டு நின்றான். வெளியே ஓடி உரத்த குரலில் “அக்கீழ்மையை நான் ஏன் இயற்றினேன் என்று தெரியுமா?” என்று கூவினான். “எல்லா பெருங்கீழ்மைகளும் உளம்தாளா பேருணர்வு ஒன்றால்தான் இயற்றப்படுகின்றன!” ஆனால் அவன் குரல் ஒலிக்கவே இல்லை. அவன் உடல் உயிரற்றதுபோல் தளர்ந்தது. மெல்ல நகர்ந்து மீண்டும் தன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

நூல் இருபது – கார்கடல் – 42

ele1அவையில் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். அந்த ஓசை ஒரு மந்தணப்பேச்சுபோல ஒலித்துக்கொண்டிருக்க அஸ்வத்தாமன் தன் படைசூழ்கையை தோல்சுருளில் இறுதியாக வரைந்துகொண்டிருந்தான். பூரிசிரவஸ் அவனருகே வந்து குனிந்து “பணிமுடியவில்லையா?” என்றான். “இல்லை, நான் இன்று எட்டு வெவ்வேறு சூழ்கைகளை வகுத்துவிட்டேன். எதுவுமே சரியாக அமையவில்லை. திரும்பத் திரும்ப பிழைகளையே காண்கிறேன்” என்றான் அஸ்வத்தாமன். “வழக்கமாக ஒரே கணத்தில் ஒரு சூழ்கையை முடிவுசெய்வீர்களே?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நான் எண்ணிப்பார்ப்பதே இல்லை. படையிலிருந்தே அதை பெறுவேன். இன்று ஒன்றுமே தோன்றவில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

பூரிசிரவஸ் “வழக்கமாக படைகளைப் பார்த்தபடி காவல்மாடத்தில் நின்றிருப்பீர்கள்” என்றான். “ஆம்” என்று மட்டும் அஸ்வத்தாமன் சொன்னான். “இன்று நானும் படைகளை பார்க்க விரும்பவில்லை. படைகள் மாபெரும் குவியாடிபோல என் உணர்ச்சிகளை பல்லாயிரம் மடங்காக பெருக்கிக் காட்டுபவை. உவகையை, சோர்வை, சலிப்பை. இன்று நான் என் உணர்ச்சிகளை பெருக்கிக்கொள்ள விழையவில்லை.” அஸ்வத்தாமன் அதற்கு மறுமொழி ஏதும் சொல்லாமல் தோல்சுருளில் வரைந்தான். “உச்” என ஓசையிட்டபடி தோல்சுருளைச் சுருட்டி அப்பால் வைத்தபின் “அனைவரும் வந்துவிட்டார்களா?” என்றான்.

பூரிசிரவஸ் “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். அவன் மேலும் பேச விழைந்தான். “நான் உணர்வதென்ன என்று தெரியவில்லை, பாஞ்சாலரே. எனக்கு எந்தக் குற்றவுணர்ச்சியுமில்லை. என் மைந்தரின் இறப்புக்குப் பின்னர் நான் எதையும் பொருட்டெனக் கருதவில்லை. சொல்லப்போனால் என் அகம் விந்தையான நிறைவையே அடைகிறது” என்றான். “ஆனால் படைகள் சோர்வும் சலிப்பும் கொண்டிருக்கின்றன. போர்முடிவை அறிவித்து முரசொலித்ததும் எந்த வெற்றிக்குரலும் எழவில்லை. என் செவிகள் அடைத்துக்கொண்டதுபோல் உணர்ந்தேன். அத்தனை அமைதியாக நம் படைகள் இதுவரை கலைந்ததில்லை.”

“சிலர் வேண்டுமென்றே வாழ்த்தொலிகளை எழுப்ப முயன்றனர். ஆனால் படை எதிரொலிக்கவில்லை. அவை தேய்ந்து மறைந்தன. அவ்வொலியை எழுப்பியவர்கள் உடல்களுக்குள் மூழ்கி தங்களை ஒளித்துக்கொண்டார்கள். இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று நான் திகைத்தேன். வரும் வழியெங்கும் பார்த்தேன். அத்தனைபேரும் துயர்கொண்டிருக்கிறார்கள். பலர் விம்மி அழுகிறார்கள். அனைவரும் நேராக குடி நோக்கியே செல்கிறார்கள்.” அஸ்வத்தாமன் “அவர்களின் இளவரசன் அல்லவா?” என்றான். “ஆம், ஆனால் இங்கே நூற்றுக்கணக்கில் இளவரசர்கள் இறந்திருக்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். அஸ்வத்தாமன் ஒன்றும் சொல்லவில்லை. “அத்தனைபேருக்கும் கணக்குகள் இருக்கின்றன” என்று பூரிசிரவஸ் தலையை அசைத்துக்கொண்டான்.

துச்சகன் உள்ளே வந்து தலைவணங்கினான். “அரசர் எழவில்லையா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவர் அவையெழப்போவதில்லை. நேராக பாடிவீட்டுக்குச் சென்றார். மதுவருந்தத் தொடங்கினார். தன்னினைவே இல்லாது படுத்திருக்கிறார்” என்றான் துச்சகன். “அங்கர்?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “அவர் தன் பாடிவீட்டுக்குச் சென்றார். அவரும் மூக்குவார மதுதான் அருந்திக்கொண்டிருக்கிறார்.” அஸ்வத்தாமன் “என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை” என்றபின் சலிப்புடன் அவையை நோக்கிவிட்டு “எங்கே காந்தாரர்?” என்றான். “வந்துகொண்டிருக்கிறார்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

சகுனியும் சலனும் சேர்ந்தே வந்தார்கள். சுபலர் சல்யர் தொடர வந்தார். கிருபரும் சோமதத்தரும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே வந்தார்கள். அரசர்கள் பெரும்பாலும் வந்துவிட்டிருப்பதை அஸ்வத்தாமன் கண்டான். “இனி எவருமில்லை. அவையை தொடங்கிவிடலாம்” என்றான். “ஆசிரியர் துரோணர் வரவில்லையே” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அவர் வரமாட்டார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “எனில் எதற்கு அவை?” என்றான் பூரிசிரவஸ். “நாம் நாளைய படைசூழ்கைக்கு அவையொப்புதல் கொள்ளவேண்டியிருக்கிறது” என்றான் அஸ்வத்தாமன். “அதை சுருக்கமாக முடித்து அவையை கலைப்போம். வேறென்ன செய்வது?”

ஜயத்ரதன் கிருதவர்மனுடன் தலையை ஆட்டி விசைகொண்டு பேசியபடி வந்தான். அத்திரளில் அவன் மட்டுமே மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தோன்றியது. கிருதவர்மன் அவன் பேச்சை உளம்கொள்ளாமல் சூழ்ந்திருந்த அரசர்களை நோக்கிக்கொண்டு வந்தான். அவர்கள் பிற அரசர்களுக்கு வணக்கம் தெரிவித்து முகமனுரைத்தபடி இருக்கைகளில் அமர்ந்தனர். அரசர்களில் ஒருவர் எழுந்து சென்று இன்னொருவரிடம் குனிந்து பேசிக்கொண்டிருந்தார். ஏவலர்கள் இன்னீரும் வாய்மணமும் பரிமாறியபடி சுற்றிவந்தனர். வெளியே படைகள் துயில்கொள்ள அறிவுறுத்தியபடி கொம்புகள் ஒன்றுதொட்டு இன்னொன்று என முழக்கமிட்டன.

சல்யர் கைகளை நீட்டி உடலை நெளித்து கோட்டாவி விட்டபின் திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி உரத்த குரலில் “அரசர் வரவில்லையா என்ன?” என்றார். துச்சகன் அவர் அருகே ஓடிச்சென்று மண்டியிட்டு விளக்கத் தொடங்கினான். அஸ்வத்தாமன் சகுனியை அணுகி நிலைமையை விளக்கினான். சகுனி “அவை தொடங்கட்டும்… அரசர் தேவையில்லை” என்றார். அஸ்வத்தாமன் பூரிசிரவஸிடன் தலையசைக்க அவன் மேடையிலேறி அவைத் தொடக்கத்துக்கான முறைமைச் சொற்களை உரைத்தான். அவையில் எந்த ஆர்வமும் எழவில்லை. பூரிசிரவஸ் “நாம் அறிந்தவரை பாண்டவப் படைகள் சோர்ந்துவிட்டிருக்கின்றன. யுதிஷ்டிரர் சோர்ந்து விழுந்துவிட்டார் என்கிறார்கள். உடல்நலிந்திருக்கும் பார்த்தர் உள்ளமும் ஒடுங்கிவிட்டார். நாளை போர்நிகழுமா என்பதே ஐயத்திற்குரியது” என்றான்.

அவையில் எதிர்வினை என ஏதும் எழவில்லை. “மெய், நமக்கும் சற்று சலிப்பு உள்ளது. நம் படைகள் விழையாத சிலவற்றை நாம் போர்சூழ்கையின் பொருட்டு செய்ய நேர்ந்துள்ளது. ஆனால் நாம் வென்றுகொண்டிருக்கிறோம். பெரும்பாலும் நாளையே போர் முடிந்துவிடும். நம் படைகள் இல்லம் திரும்பும். நாம் நம் நிலங்களை அடைவோம்… நாம் எண்ணிவந்தவை எல்லாம் நிறைவேறும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அவர்களின் உளச்சோர்வுதான் நாம் இலக்காக்கியது. அது நிகழ்ந்துள்ளது.”

“நாம் மேலும் உளச்சோர்வடைந்துள்ளோம்” என்று கிருதவர்மன் சொன்னான். “எங்கே அரசர்? எங்கே அங்கரும் துரோணரும்?” பூரிசிரவஸ் “அவர்களும் உளச்சோர்வடைந்துள்ளனர் என்பது மெய். அபிமன்யு நம் அரசரால் வளர்க்கப்பட்ட மைந்தன். அவரால் அத்துயரிலிருந்து எளிதில் வெளிவர இயலாது. ஆனால் அவர் நாளை புதிய விசையுடன் எழுவார். நாளை நாம் அடையப்போகும் வெற்றியை வகுக்கும் சூழ்கை அமைக்கப்பட்டுள்ளது. அதை அஸ்வத்தாமர் அவைமுன் வைப்பார்” என்றான். கிருதவர்மன் “அரசர் என்று அமர்ந்து அச்சூழ்கையை ஒப்பவிருப்பவர் யார்?” என்றான். “காந்தாரர் சகுனி அரசரின் மாதுலர். அவர் ஒப்புக்கொண்டால் போதும்” என்றான் பூரிசிரவஸ்.

“சூழ்கை என்ன?” என்று சல்யர் கேட்டார். அங்கிருந்த எவரும் அதில் எவ்வகையிலும் ஆர்வம் கொள்ளவில்லை என்று தெரிந்தது. அஸ்வத்தாமன் “சகடச்சூழ்கை…” என்றான். “அதுவே உகந்தது என்று படுகிறது. நம் தரப்பின் வீரர்கள் அனைவருக்கும் இணையான இடமளிப்பது. மேலும் நாளை பாண்டவர்களின் தரப்பில் எந்த எழுச்சியும் இருக்காது. நாம் எழுந்துசென்று தாக்கி அவர்களை சூழ்ந்துகொள்ள முடியும். அவர்களின் முகப்புவீரர்கள் அனைவரையுமே வண்டிக்குள் இழுத்து சிறைப்படுத்தலாம்…” சகுனி “முன்னரே வகுத்த சூழ்கையை அப்படியே மீண்டும் அமைத்திருக்கிறீர்கள்” என்றார். அஸ்வத்தாமன் “ஆம், நம்மிடம் பெரிய இழப்புகளேதுமில்லை. சூழ்கை அவ்வண்னமே அமையலாம்” என்றான்.

துச்சலன் அவைக்கு வெளியே வந்து நின்றான். “என்ன?” என்று வினவியபடி அஸ்வத்தாமன் திரும்பி நோக்கினான். “ஒரு முனிவர்… அவைக்குள் வந்து அரசரிடம் பேசவேண்டும் என்கிறார். எச்சொல்லும் செவிகொள்ள மறுக்கிறார்” என்றான் துச்சலன். “முனிவரா? இது போரவை. நாம் சூழ்கை வகுத்துக்கொண்டிருக்கிறோம்” என்றான் அஸ்வத்தாமன். கிருபர் “முனிவர்கள் போர்க்களத்திற்கு வருவதில்லையே. யார்?” என்றபடி எழுந்தார். துச்சலனை உந்திக் கடந்து ஓங்கிய உருவம் கொண்ட முதிய முனிவர் உள்ளே வந்தார். நரைத்த தாடியும் குழல்கற்றைகளும் சடைத்திரிகள் கலந்து தொங்கின. புலித்தோலை தோளுக்குக் குறுக்காக அணிந்திருந்தார். உரத்த குரலில் அவையை நோக்கி “இங்கே அஸ்தினபுரியின் அரசன் இல்லையா? என் பெயர் பிருஹத்காயன்… நான் சிந்துவின் முன்னாள் அரசன். ஜயத்ரதனின் தந்தை” என்றார்.

அதுவரை அப்பால் திரும்பி ஏதோ பேசிக்கொண்டிருந்த ஜயத்ரதன் திகைப்புடன் எழுந்து “தந்தையே!” என்றான். ஓடிவந்து அவர் அருகே குனிந்து கால்களைத் தொட்டு வணங்கி “தந்தையே, தாங்களா?” என்றான். அவர் அவன் தலையைத் தொட்ட பின் “நானே என்னை முறைப்படி அறிமுகம் செய்துகொள்கிறேன். ஏழு நதிகளால் பேணப்படும் சிந்துநிலத்தின் அரசகுடியில் பிறந்தவன் நான். எங்கள் தொல்மூதாதை பிரகதிஷு. அவர் மைந்தர் பிரகத்ரதர். அவருக்குப் பிறந்தவர் உபபிரகதிஷு. அவர் புதல்வர் பிரகத்தனு. அவருடைய மூத்த மைந்தர் பிருகத்பாகு. அவருக்குப் பின் அரியணை அமர்ந்த என் பெயர் பிருஹத்காயன். மைந்தனுக்கு அரியணையை அளித்துவிட்டு கானேகினேன்” என்றார்.

சகுனி எழுந்து “அரசர் இங்கே அவையில் இல்லை. அரசரின் மாதுலனாகிய நான் காந்தாரநாட்டினன். சுபலரின் மைந்தன். என் பெயர் சகுனி. தங்களை அவையமர்ந்து எங்களை வாழ்த்தும்படி தலைவணங்கி கோருகிறேன்” என்றார். “நான் வாழ்த்துகூற இங்கே வரவில்லை. இங்கே போர் நிகழும் செய்தியை நான் அறிந்திருந்தேன். மிக அருகிலேதான் என் தவச்சாலை. இன்று சற்றுமுன் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது, என் மைந்தனைக் கொல்ல அர்ஜுனன் வஞ்சினம் உரைத்திருப்பதாக… அக்கணமே கிளம்பி இங்கே வந்தேன்…” என்றார்.

“இத்தனை விரைந்தா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். கைவீசி அவனைத் தவிர்த்து “அதற்குரிய வழிகள் எங்களுக்குள்ளன” என்று சொன்ன பிருஹத்காயர் “என் மைந்தனை நாளை அந்திக்குள் கொல்வேன் என்றும் இல்லையேல் அந்தியில் தன் அம்பால் தன் கழுத்தை வெட்டிக்கொண்டு களத்திலேயே வீழ்வேன் என்றும் அர்ஜுனன் வஞ்சினம் உரைத்திருக்கிறான்” என்றார். ஜயத்ரதன் “தந்தையே!” என்று கூவினான். “அது உண்மை. அதை அறியும் வழி எனக்குண்டு…” என்றார். சகுனி “முனிவரே, போர்க்களத்தில் வஞ்சினங்கள் இயல்பானவை” என்று சொல்லத் தொடங்க “ஆம், ஆனால் பாரதவர்ஷத்தின் முதன்மை வில்லவன் எடுத்த வஞ்சம் எளிதான ஒன்றல்ல. அவனுடன் இருப்பவன் இந்த யுகத்தின் தலைவன்” என்றார்.

சுபலர் “முனிவரே…” என சொல்லெடுக்க பிருஹத்காயர் அவரை கைநீட்டி நிறுத்தி “நான் முனிவன் அல்ல. தவம்புரியவே கானேகினேன். இவ்வுலகில் அனைத்தையும் கட்டவும் கடக்கவும் திறன்பெற்றேன். மாமுனிவர் செல்லாத இடங்களுக்கும் செல்லும் சொல்லும் பெற்றேன். ஆனால் மெய்மை என்னை அணுகவேயில்லை. ஏனென்றால் என்னை இப்புவியுடன் சேர்த்துக் கட்டியிருப்பது இவன்மேல் நான் கொண்டுள்ள பற்று. பத்தாண்டுகள் அதை அறுக்கப் போராடினேன். பின்னர் அறிந்தேன், நான் அதை இப்பிறவியில் அறுக்கவியலாது என்று. எனில் என்னை ஆளும் தெய்வம் அதுவே என உணர்ந்தேன். இத்தனை ஆண்டுகள் அதையே தவமெனக் கொண்டேன்” என்றார்.

“அர்ஜுனன் அல்ல, புடவியை சமைத்து காத்து அழித்தருளும் மூவருமே ஆயினும் என் மைந்தனைக் கொல்ல எவரையும் விடமாட்டேன். அச்செய்தியை அறிந்ததுமே கிளம்பி வந்தேன்” என்று பிருஹத்காயர் சொன்னார். “ஆம், அவன் நாளை சைந்தவரை கொல்லப்போவதில்லை” என்று சகுனி உரக்கச் சொன்னார். “அவரை கொல்வேன் என்றுதான் வஞ்சினம் உரைத்திருக்கிறான். அவர் போருக்கெழுந்தால் கொல்வேன் என்று அல்ல. நாளை சைந்தவர் போர்முனைக்கே செல்லப் போவதில்லை. கௌரவப் பெரும்படைக்கு நடுவே போர்முனையிலிருந்து மிகமிக விலகி கவசப்படைகள் சூழ்ந்த இடத்தில் இரும்புக்கூண்டுக்குள் கொடியோ அடையாளமோ இன்றி அமர்ந்திருக்கப் போகிறார். நாளை புலரி எழுந்து அந்தி அணைவதுவரை வெளியே வரப்போவதில்லை. அவரை எப்படி கொல்லப்போகிறான் என்று பார்ப்போம்.”

அவையினர் ஒருகணம் கழித்தே அதை முழுமையாக புரிந்துகொண்டார்கள். உரக்கக் கூச்சலிட்டபடி தங்கள் கைகளைத் தூக்கி வீசினர். சலன் எழுந்து “ஆம், இது அவனே வந்து சிக்கிக்கொண்ட பொறி. ஒருநாள், ஒருநாளை நாம் கடக்கமுடிந்தால் அம்பில்லாமல் அவனைக் கொல்லலாம். அவர்களை முழுமையாகவே வீழ்த்திவிடலாம்” என்றான். கிருதவர்மன் “வண்டிச்சூழ்கை அதற்கு மிக உகந்தது. அவர் அதற்கு நடுவே இருக்கட்டும். வண்டியின் முகப்பில் மட்டுமல்ல, நான்கு முனைகளிலும் முதன்மை வில்லவர் நிலைகொள்ளட்டும். எப்படி உள்ளே வருகிறான் என்று பார்ப்போம்…” என்றான். அவை களிவெறிகொண்டு ஆர்ப்பரித்தது.

அவர்கள் உளம்சோர்ந்திருந்தனர். உளச்சோர்வு கொண்டவர்களின் ஆழம் விடுபட விழைகிறது. ஆகவே அதற்குரிய சிறிய வாய்ப்பையும் அது தவறவிடுவதில்லை என்று அஸ்வத்தாமன் எண்ணிக்கொண்டான். அலையலையாக அவை எழுந்தமைந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்தது. அஸ்வத்தாமன் எழுந்து கைவிரித்து அவர்களை அமரச்செய்ய முயன்றான். சகுனி எழுந்து கைவீசியதும் அவை மெல்ல அடங்கியது. சகுனி “சலன் சொன்னது மெய். அவன் சிக்கிக்கொண்ட பொறி இது. அவன் ஆணவம் மிக்கவன். அவனை அவன் ஆணவத்தாலேயே அழிக்கவேண்டும் என தெய்வங்கள் எண்ணியிருக்கின்றன போலும்” என்றார்.

அஸ்வத்தாமன் “அவரால் நம் படைகளைக் கடந்துவந்து ஒருபோதும் சைந்தவரை அணுகமுடியாது. ஐயமே தேவையில்லை” என்றான். கிருதவர்மன் “பெருந்திறலும் அதற்கிணையான ஆணவமும் கொண்டவர்கள் தங்கள் ஆழத்திலிருக்கும் பற்று ஒன்றால்தான் அழியவேண்டும் என்பது ஊழ்நெறி. அவன் அழியவேண்டியது இவ்வண்ணமே” என்றான். அவையினர் கூச்சலிட்டுக் கொந்தளித்தனர். சல்யர் “அவன் உள்ளம் மைந்தன் மீதான பற்றால் பேதலித்திருக்கிறது… இல்லையேல் இப்படி ஒரு வஞ்சினத்தை உரைத்திருக்க மாட்டான். போரில் குறிப்பிட்ட ஒருவரைக் கொல்லாமல் மீளமாட்டேன் என அறிவிலியே வஞ்சினம் உரைப்பான். ஏனென்றால் போர்க்களத்தில் தனியொருவனைத் தேடுவது புல்வெளியில் தானியமணியைத் தேடுவதுபோல…” என்றார்.

“ஆம். போர் ஒரு நாற்களம். அங்கே எவர் எவரை சந்திக்கிறார் என்பதை எல்லா கணிப்புகளுக்கும் அப்பால் தெய்வங்களே முடிவெடுக்கின்றன” என்றார் கிருபர். “ஆகவேதான் ஐயுறுகிறேன், மெய்யாகவே அந்த வஞ்சினத்தை அவன் உரைத்தானா? அவை நடுவே உரைத்தால் மட்டுமே அது வஞ்சினம். உற்றார் நடுவே, மருத்துவநிலையில் சொல்லும் உணர்ச்சிச் சொற்களை அவ்வாறு சொல்லமுடியாது” என்றார் சல்யர். சகுனி “மத்ரரே, அவனைச் சூழ்ந்து எப்போதும் தெய்வங்கள் உள்ளன என்பார்கள். ஆகவே அவன் கனவில் உளறினாலும் அச்சொற்களுக்கு பொறுப்பேற்றாகவேண்டும்” என்றார். “அவன் பெருந்துயரில் இருந்திருக்கவேண்டும். முற்றாகவே உளமழிந்திருக்கவேண்டும். அவ்வஞ்சினம் வழியாக அவன் விசைமீண்டு வருவதென்றால் அதுவும் நன்றே என அவர்கள் எண்ணியிருக்கலாம்.”

அவையினர் கலைந்து பெருங்குரலில் பேசிக்கொண்டிருக்க ஜயத்ரதன் எழுந்து “அவையினர் பொறுத்தருள்க! தந்தை என்மேல் முனியாதொழிக!” என்றபோது திரையை இழுத்துச் சுருக்கியதுபோல் ஓசைகளடங்கி அவை அமைதிகொண்டது. “நான் போர்க்களத்திலிருந்து ஒளிந்துகொள்ள விழையவில்லை” என்று ஜயத்ரதன் சொன்னான். “நான் மறைந்திருக்கப் போவதில்லை. அவ்வாறு உயிர்பிழைத்து இழிபுகழ்பெற்று வாழ்வதைவிட மடிவதே மேல் என்றே என் அகம் சொல்கிறது. என்னை விட்டுவிடுங்கள். நான் அவன் முன் களத்தில் நிற்கிறேன்…” பிருஹத்காயர் “என்ன சொல்கிறாய், மூடா!” என்றபடி எழுந்து கையை ஓங்கியபடி அவனை நோக்கி வந்தார்.

சகுனி “சைந்தவரே!” எனக் கூவி அவரை நிலைகொள்ளச் செய்தார். “உங்கள் அரண்மனை அல்ல இது. கௌரவப் பேரவை!” என்றார். பிருஹத்காயர் சீற்றத்துடன் தலையசைத்தபடி “அறிவிலி! வீணன்!” என்று பற்களைக் கடித்தார். “தந்தையே, ஒருபோதும் உங்கள் விழிமுன் வீரனாகவோ ஆண்மகனாகவோ நின்றிருந்ததில்லை நான். என்னை உங்கள் கைகளுக்குள் பொத்திப்பொத்தி வளர்த்தீர்கள். நோயாளியாக மட்டுமே என்னை கருதினீர்கள். ஒருவேளை என் இளமைக்கால வேண்டுதலை செவிகொண்டே தெய்வங்கள் இவ்வண்ணம் ஒரு சூழலை அமைத்தன போலும். நான் உங்கள் கண்முன் ஆண்மகன் என நின்றுகாட்டுகிறேன். வெல்லாதொழியலாம், களம்படலாம். ஆனால் பாரதவர்ஷத்தின் பெருவில்லவன் முன் இரு நாழிகைப் பொழுதேனும் நின்றுபொருதுவேன்” என்றான்.

“அறிவிலி! அறிவிலி!” என்று கூவியபடி பிருஹத்காயர் எழுந்து கையை ஓங்கியபடி ஜயத்ரதனை நோக்கி பாய்ந்தார். அவரை தடுக்க முயன்ற பூரிசிரவஸை தள்ளி வீழ்த்திவிட்டு மைந்தனை அணுகி அவனை அறையும்பொருட்டு கைதூக்கி பின் தளர்ந்து கைதாழ்த்திக்கொண்டார். சல்யர் எழுந்து அவரைப் பிடித்து அப்பால் விலக்கிச் சென்றார். ஜயத்ரதன் “நான் ஒளிந்துகொள்ள மாட்டேன். இவர்முன் சிறுமைகொள்ள மாட்டேன். நான் நின்றுபோரிடுவேன்… ஐயமே வேண்டியதில்லை…” என்றான். “எனில் உன்னை இங்கேயே நானே கொன்றுவீசுகிறேன். கிழ்மகனே, சிறுமையனே” என்று பிருஹத்காயர் கூச்சலிட்டார். அவரை பிடித்திருந்த சல்யரை உதறிவிட்டு தன் கையிலிருந்த பெரிய யோகக்கழியை தூக்கினார். அது ஒரு நாகமென்றாகியது. அதன் நாபறக்க விழிகள் ஒளிர்ந்தன.

சகுனி “முனிவரே, அமர்க!” என்று ஆணையிடும் குரலில் சொன்னார். “இவன் என் சொல்லை மீறுகிறான். என்னை இழிவுசெய்கிறான். என் சுட்டுவிரல் இவன். என் ஒரு துளி…” என்று பிருஹத்காயர் கூச்சலிட்டார். அவர் தலை நடுங்கிக்கொண்டிருக்க ஒரு கண்ணிலிருந்து நீர் வழிந்தது. “எனில் சென்று கொல்க…” என்றார் சகுனி. “மத்ரரே, அவரை விட்டுவிடுங்கள்… அவர் மைந்தனை கொல்லட்டும். ஏனென்றால் அவர் தன் கைகளால் மைந்தனைக் கொல்வார் என்றுதான் நிமித்தக்கூற்று எழுந்துள்ளது.” பிருஹத்காயர் தளர்ந்து பின்னடைந்து பீடத்தின் சாய்வுப்பரப்பை பற்றிக்கொண்டார். அவர் கையிலிருந்த யோகக்கழி கீழே விழுந்தது. அவர் முனகல்போல ஒலியெழுப்பினார். பின்னர் மெல்ல தளர்ந்து அமர்ந்தார்.

“சைந்தவரே, இங்கே எவர் போரிடவேண்டும், எங்கே களம்நிற்கவேண்டும் என முடிவெடுக்க வேண்டியவன் நான்” என்று சகுனி சொன்னார். “போரில் மறைந்துகொள்ளுதலும் உத்தியே. போரிலிருந்து ஒளிந்தோடும்படி உங்களிடம் சொல்லவில்லை. கவசங்களுக்குள் மறைந்துகொள்ளவே ஆணையிடப்படுகிறது. நீங்கள் அஞ்சி மறைந்திருக்கவில்லை. உங்கள் படையின் தலைவனின் ஆணையைத்தான் தலைக்கொள்கிறீர்கள்.” ஜயத்ரதன் “ஆனால்…” என சொல்லெடுக்க “நீங்கள் அர்ஜுனன் மறைவுக்குப் பின் களமெழுக! உங்கள் கைகளால் பாண்டவர்களின் படைகளை கொன்று கூட்டுக! அதுவே வெற்றியென்றாகும். அறிக, அறுதிவெற்றியை அடைந்தவர்களே பேசப்படுகிறார்கள்” என்றார்.

“இல்லை, இது வெறும்பசப்பு… நான் இதற்கு உடன்படமாட்டேன்” என்றான் ஜயத்ரதன். “நான் களம்நிற்பேன். பொருதுவேன்.” சகுனி “நீங்கள் களம்நின்றால் உறுதியாகவே உயிர்விடுவீர். சூதர்பாடலில் எவ்வண்ணம் வாழ்வீர் என எண்ணுக! நட்புக்கு வஞ்சமிழைத்தமையால், சொல்திறம்பியமையால் கொல்லப்பட்டவர் என… மெய்யல்லவா?” என்றார். ஜயத்ரதன் “நான் என்ன செய்ய முடியும்? நான் அபிமன்யு கொல்லப்பட்டதை இப்போதுகூட ஏற்கவில்லை. நான் அப்போது அதை அறியவே இல்லை. ஆனால் என் படைத்தலைவரின் ஆணைக்கு களத்தில் நான் கட்டுப்பட்டாக வேண்டும்” என்றான். சகுனி “ஆம், ஆனால் அதை எவர் எதிர்காலத்திடம் சொல்வது? அவன் இறந்து நீங்கள் இருந்தாகவேண்டும். அவன் கையால் கொல்லப்பட்டால் அவன் எண்ணுவதே உண்மையென நிலைகொள்ளும்” என்றார்.

ஜயத்ரதன் சோர்ந்தவனாக அமர்ந்தான். “நான் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல” என்றபோது அவன் குரல் உடைந்தது. “நான் அபிமன்யுவை கொல்லத் துணைபோகவில்லை. உள்ளே நிகழ்ந்த எதுவும் எனக்குத் தெரியாது. தெரிந்ததும் உங்களிடம் கண்டித்தேன். அத்தனைபேரிடமும் என் எண்ணத்தை சொன்னேன்…” அவன் விழிகள் நீர் நிறைந்து வழிந்தன. “நான் என்னை வேண்டுமென்றே நகையாட்டும் சொற்பெருக்கும் கொண்டவனாக ஆக்கிக் ண்டேன். எப்படியேனும் இந்த நாளை கடந்துசென்றுவிட்டால் போதும் என எண்ணினேன். இன்றிரவு என்னால் துயில்கொள்ள முடியாதென்றே நம்பினேன்…” அவன் மேலும் சொல்லெடுக்க முயன்று பின் விழிநீர் பொழிய விசும்பி அழத்தொடங்கினான்.

பிருஹத்காயர் “நிறுத்து, கீழ்மகனே. நீ என்ன பேடியா? களிமகன்போல் அழுகிறாய்!” என்றார். வெறுப்பும் கசப்புமாக ஜயத்ரதனை நோக்கி “நீ பிரகதிஷுவின் குருதி… அதை மறக்காதே” என்றார். ஜயத்ரதன் விழிகளைத் துடைத்து “ஒருநோக்கில் அர்ஜுனன் சொல்வது சரியே. என்னை அரசன் என நடத்தவேண்டும் என்று சொன்னவன் அவன். அரசனுக்குரிய அனைத்து முறைமைகளையும் எனக்கு அளித்தவர் யுதிஷ்டிரர். அவர்களின் மைந்தனை நாம் வேட்டைவிலங்கைப்போல சூழ்ந்துகொண்டு கொன்றோம். அதற்காக நான் கொல்லப்படுவேன் என்றால் அது முறையே. அதுவே நிகழ்க!” என்றான். சகுனி “ஆனால் அவனைக் கொன்றது உங்கள் கீழ்மையால் என்பதே சொல்லில் நிலைகொள்ளும்” என்றார். ஜயத்ரதன் கைகளை விரித்து தலையை அசைத்தான்.

“ஒன்றே வழி… என் ஆணைப்படி பகலந்திவரை பாதுகாப்பில் இருந்துகொள்ளுங்கள். அந்தியில் அவன் தன் வஞ்சினத்தை நிறைவேற்றியபின் வெளியே வருக! அதன்பின் அவன் உடன்பிறந்தாரை அணுகி நிகழ்ந்ததை சொல்லவேண்டுமென்றால்கூட அதுவும் இயல்வதே” என்றார் சகுனி. “வென்றால் மட்டுமே உங்களுக்கு மீட்பு. வீழ்ந்தால் தலைமுறைகளாக தொடரும் இழிபெயர். பிரகதிஷுவின் குடிக்கு, பிருஹத்காயரின் குருதிக்கு கீழ்ச்சொல்லே எஞ்சும்… எண்ணுக!” ஜயத்ரதன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பிருஹத்காயர் “நான் சொல்கிறேன். அவன் ஆணையை நிறைவேற்றுவான்” என்றார். சகுனி “முனிவரே” என்று சொல்ல “அவன் என் ஆணையை மீறமாட்டான். அவன் மறைந்திருப்பான்” என்றார்.

சகுனி “ஆம், இதுவே நம் திட்டம். நாளை களத்தில் அர்ஜுனனிடமிருந்து சைந்தவரை காப்பாற்றுவதே நம் படைகளின் முழு இலக்கு” என்றார். பிருஹத்காயரிடம் “நிறைவுகொள்க, சைந்தவரே! உங்கள் மைந்தர் வெல்வார். உங்கள் ஊழையும் நீங்கள் கடந்துசெல்வீர்கள்” என்றார். பிருஹத்காயர் எழுந்து தன் யோகக்கழியை எடுத்துக்கொண்டு “என் மைந்தனுக்கு கௌரவக்கோல் காவல்… அப்பொறுப்பிலிருந்து அது விலகுமென்றால் நான் அதன் முதன்மை எதிரி. நான் அறங்கள் அற்றவன். தெய்வங்களும் அற்றவன். என் மைந்தனன்றி இப்புவியில் எனக்கு ஏதுமில்லை. அதை சொல்லிவிட்டுச் செல்லவே வந்தேன். சொல்க உங்கள் அரசனிடம்!” என்றபின் வாசலை அணுகி அங்கே நின்றார். திரும்பி உரத்த குரலில் சொன்னார்.

“நான் இங்குதான் இருப்பேன், என் மைந்தனின் அருகிலேயே. என் நோக்கிலேயே அவன் இருக்கவேண்டும். அந்திக்குப் பின்னர் அர்ஜுனனின் இறப்புச்செய்தி செவியை வந்தடைந்த பிறகுதான் நான் கிளம்புவேன். எனக்கு அவனருகே ஒரு பாடிவீடு அமையுங்கள்.” சகுனி “ஆணையிடுகிறேன்” என்றார். “அர்ஜுனனை நான் குறைத்து எண்ணவில்லை. இவ்வாறு நாம் செய்யக்கூடுமென எண்ணாதவன் அல்ல அவன். அவன் செய்யப்போவதென்ன என்று நான் அறிந்துகொண்டுதான் இருப்பேன். நாளைய ஆடல் எனக்கும் அவனுக்கும் நடுவிலேயே. ஒருவேளை இத்தனை ஆண்டுகளில் நான் தவம்செய்து ஈட்டிய அனைத்தும் இத்தருணத்திற்காகவேதான் போலும்.”

தலைவணங்கி அவர் செல்வதை அவையினர் பார்த்து அமர்ந்திருந்தார்கள். பூரிசிரவஸ் அஸ்வத்தாமனிடம் “ஒரு கொடுந்தெய்வம் நீங்கிச்செல்வதுபோல” என்றான். “இப்புடவி என்னும் வேலின் கூர் என தெய்வத்தை வணங்குகின்றது அசுரவேதம். ஒன்று கூர்கொள்கையில் அது தெய்வமாகிறது” என்றான் அஸ்வத்தாமன். “அவை நிறைவுகொள்க!” என்று சகுனி கைகாட்டினார். துச்சலன் அவைநிறைவை அறிவித்தான். சகுனி “நாளைய சூழ்கையை முழுதமையுங்கள், உத்தரபாஞ்சாலரே” என அஸ்வத்தாமனிடம் சொல்லிவிட்டு கிருபரையும் சல்யரையும் வணங்கிவிட்டு தானும் கிளம்பினார்.

அவைகூடும்போதிருந்த உணர்வுகள் முழுமையாகவே மாறி கொந்தளிக்கும் உணர்ச்சிகளுடன் அவை கலையத் தொடங்கியது. ஜயத்ரதன் அருகே சென்ற கிருதவர்மன் அவன் தோளைத் தொட்டு தூக்கி அழைத்துச்சென்றான். பூரிசிரவஸ் அஸ்வத்தாமன் அருகே வந்து “விந்தைதான்” என்றான். “இத்தனை ஆற்றலும் அறிவும் தவமும் கொண்டவர்களென்றாலும் அவர்கள் மைந்தர்பற்றால் முழுமையாக கட்டுண்டிருக்கிறார்கள்.”

“நீங்கள் விடுபட்டுவிட்டீர்களா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். விழிகளை விலக்கிக்கொண்டு பூரிசிரவஸ் “இல்லை” என்றான். “விந்தை இருப்பது அங்குதான். ஒவ்வொருநாளும் இங்கே பிறருடைய மைந்தர் பல்லாயிரவர் செத்துக்குவிகிறார்கள். நெறியும் அறிவும் தவமும் இருந்தும் தங்கள் மைந்தரைப்பற்றி மட்டுமே தந்தையர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

நூல் இருபது – கார்கடல் – 41

ele1யுதிஷ்டிரர் அர்ஜுனனின் குடிலுக்குள் நுழைந்தபோது அங்கே இருந்த நகுலனும் சகதேவனும் எழுந்து வணங்கினர். “எப்படி இருக்கிறான்?” என்று அவர் கேட்டார். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் அவன் மஞ்சத்தின் அருகே அமர்ந்தார். காட்டுக்கொடிகளை இழுத்துக்கட்டி பின்னப்பட்டிருந்த அந்த மஞ்சம் அவருடைய உடல்பட்டு சற்று அசைந்தது. யுதிஷ்டிரர் “இளையோனே” என அழைத்தார். அர்ஜுனன் எதிர்வினை ஆற்றவில்லை. யுதிஷ்டிரர் “இளையோனே” என மீண்டும் அழைத்தார். பின்னர் சகதேவனிடம் “அகிபீனா கொடுக்கப்பட்டுள்ளதா?” என்றார். சகதேவன் “அவர் விழித்துத்தான் இருக்கிறார்” என்றான்.

யுதிஷ்டிரர் திரும்பி அர்ஜுனனிடம் “இளையோனே” என்றார். சகதேவன் “அவர் முற்றாகவே பேச்சு ஒடுங்கிவிட்டிருக்கிறார். நாங்கள் பலமுறை அவரை பேசவைக்க முயன்றோம். மேலும் மேலும் உள்ளொடுங்கிக்கொண்டே செல்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் “இளையோனே, என்ன இது? நீ அறியாததா? இறப்பும் பிறப்புமாகவே இப்புவியில் மானுட வாழ்க்கை நிகழ்கிறது. போர்க்களத்தில் வீழ்வது வீரனுக்கு விண்ணுலகுக்கான பாதை எனக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். நாளையே நம்மில் எவர் வீழ்வார்கள் என்றும் நமக்குத் தெரியாது” என்றார். அர்ஜுனன் அங்கிருப்பதாகவே தோன்றவில்லை.

யுதிஷ்டிரர் சகதேவனிடம் “இளைய யாதவன் வந்தானா?” என்றார். “இல்லை” என்றான் சகதேவன். “அவனை அழைத்து வருக! இவனை இறப்பில் இருந்து அவன்தான் மீட்டான். இந்த இருளிலிருந்தும் அவனால் மட்டுமே மீட்க முடியும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “மூத்தவரே” என்றான் சகதேவன். “செல்க, நான் அவனை அழைத்தேன் என்று சொல்” என்றார் யுதிஷ்டிரர். சகதேவன் வணங்கி வெளியே செல்ல நகுலனிடம் “மந்தனையும் அழைத்துவரச் சொல்” என்றார். “அவர் நேராக உணவுச்சாலைக்கு சென்றார். இப்பொழுதில் முழுமையான மதுமயக்கில் இருப்பார்.”

யுதிஷ்டிரர் எரிச்சலடைந்து “அனைவரும் இங்கு வரவேண்டும். அத்தனை மைந்தரும் வரட்டும். இது நம் குடியின் அவை. இவன் இப்படி இருக்கையில் நாம் என்ன செய்யமுடியும்? சென்று துயில்வோமா என்ன?” என்றார். பின்னர் தணிந்து “இங்கேயே இருப்போம். இவனைச் சூழ்ந்து அமர்ந்திருப்போம். நம்மால் வேறென்ன செய்யமுடியும்? நானும் எத்தனை வெற்றுச்சொற்களைத்தான் எடுப்பது?” என்றார். நகுலன் “நீங்களும் அகிபீனா உண்டு துயிலலாம், மூத்தவரே. மிகமிக உளம் தளர்ந்திருக்கிறீர்கள்” என்றான்.

“ஆம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “என்னால் எதையுமே தாளமுடியவில்லை. நான் விழைந்ததல்ல இந்த நிலமும் முடியும். இதோ அனைத்துக்கும் அடிகோலியவனாக அமர்ந்திருக்கிறேன். நூறு பிறவிகளில் ஈடுசெய்ய இயலாத பெரும்பழியை சூடியிருக்கிறேன். சென்று தந்தையின் முகத்தை நோக்கக்கூட தகுதியற்றவனானேன்.” குரல் உடைய அவர் விம்மி அழத் தொடங்கினார். கைகளால் முகத்தை பொத்திக்கொண்டு உடலை நன்கு ஒடுக்கி குனிந்து தோள்கள் குலுங்க அழுதார். நகுலன் என்ன சொல்வதென்று தெரியாமல் நோக்கி நின்றான். அவர் அழுதுகொண்டிருக்கையில் அங்கிருந்து செல்வதற்கும் தோன்றவில்லை. அவர் ஓய்வதற்காக அவன் காத்திருந்தான்.

மெல்ல விசும்பி ஓய்ந்து மீண்டும் துயர் எழ அவர் அழுதார். பின்னர் வெறுமனே உடல் மெய்ப்புகொண்டு அசைய வளைந்து அமர்ந்திருந்தார். எப்போதோ அங்கே நகுலன் இருப்பதை உணர்ந்து எரிச்சலுடன் “என்ன செய்கிறாய் இங்கே? செல்க! என் ஆணை நிறைவேறவேண்டும். அனைவரும் இங்கே வரவேண்டும்” என்றார். நகுலன் தலைவணங்கி வெளியே சென்றான். யுதிஷ்டிரர் “நில்!” என்று கூவினார். “நான் உன்னிடம் செல்லும்படி ஆணையிட்டேன். ஏன் இங்கே நின்றாய்? நான் அழுவதை பார்த்துநின்றாயா? அது உன்னை நிறைவுறச் செய்கிறது அல்லவா?” என்று கூச்சலிட்டார். அவர் கழுத்தில் நீள்நரம்பு புடைத்து அசைந்தது. “ஆம், நான் கோழை. வீணன். பொய்நடிப்பு நிகழ்த்துபவன். வீண்சொல் எடுக்கும் முதியவன்… ஆனால் இந்த நடிப்பால்தான் உயிர்வாழ்கிறேன்.” மூச்சிரைக்க அவனை நோக்கி வந்தபோது அவருடைய விழிகள் பித்துகொண்டு சிவந்திருந்தன.

அவர் அகிபீனா உண்டிருப்பாரோ என நகுலன் ஐயம்கொண்டான். அவன் அங்கே நிற்காமல் வெளியே செல்ல அவர் திரும்பி அந்த அறையை திகைப்படைந்தவர்போல நோக்கினார். அங்கு நிகழ்ந்த எதையுமே அறியாதவனாக அர்ஜுனன் கிடந்தான். ஆனால் விழிகள் வெறித்துத் திறந்திருந்தன. “இளையவனே, இளையவனே” என மெல்ல யுதிஷ்டிரர் அழைத்தார். அவன் விழிகளில் அசைவு தெரியவில்லை. “போதும்… இப்படியே இவையனைத்தையும் விட்டுவிட்டு கிளம்பிவிடுவோம். எங்கேனும் அடர்காட்டில் சென்று வாழ்வோம்… நம் வாணாள் முடியும் வரை இங்கே விலங்கென்றும் சிற்றுயிர் என்றும் இருப்போம். நாம் இருப்பதை நாமன்றி எவரும் அறியவேண்டியதில்லை.”

அதை சொல்லச் சொல்ல அவ்வெண்ணத்தால் உந்தப்பட்டு முகம் மலர்ந்தார். விழிகளில் பித்தின் வெறிப்புடன் அர்ஜுனன் தோளைப் பற்றி உலுக்கி “நாம் மகிழ்ந்திருந்த நாட்கள் காட்டின் மடியில்தான். முனிவர்களின் குடில்கள், தூநீர்வாவிகள், நதிக்கரைகள். நாம் வாழ்க்கையை அங்கேதான் அறிந்தோம். சென்றுவிடுவோம். ஐவரும் இப்படியே கிளம்புவோம். இங்கே என்ன நிகழவேண்டும் என இளைய யாதவனே முடிவெடுக்கட்டும். இது அவனுடைய போர். நம்முடையது அல்ல” என்றார்.

அவர் அர்ஜுனனின் தோளை வெறியுடன் உலுக்கினார். “நாம் சதசிருங்கத்திற்கே செல்வோம். அந்த ஏரி அங்குதான் இருக்கும். நினைவிருக்கிறதா? அதில் இரு நிலவுகளை நாம் கண்ட இரவை? நம் தந்தை அங்கே இருக்கக்கூடும். நாம் அங்கே மீண்டும் சிறுவர்களாகக்கூட மாறமுடியும்.” அவர் அவன் முகத்தை சிலகணங்கள் உற்று நோக்கினார். மெல்ல பித்து அகல உளம் சோர்ந்து பெருமூச்சுவிட்டார். “எதுவும் எஞ்சப்போவதில்லை. ஆம், எதுவுமே நமக்கு எஞ்சப்போவதில்லை. நாம் இந்தப் போரில் அனைத்தையுமே இழப்போம். இது இப்போர் தொடங்குவதற்கு முன்னரே எனக்குத் தெரியும். பலமுறை என் கனவில் வந்திருக்கிறது இது.”

“இந்தப் போருக்கு நாம் எழுவதற்கு முன்னர் கனவில் நான் இரு பெண்களை பார்த்தேன். அம்பாலிகையும் அம்பிகையும். நம் மூதன்னையர். இளையோனே, இது அவர்களின் வஞ்சம். அவர்கள் கிளம்பிச்செல்லும்போது அந்த வஞ்சத்தை மட்டும் நம் அரண்மனையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அது அங்கே நூறுமேனி பெருகியது…” அவர் மீண்டும் விம்மியழுதார். அழுகையை நிறுத்த முயலுந்தோறும் முடியாமல் மேலும் அழுதார். அழுகை கலந்த குரலில் அவனை உரக்கக் கூவி அழைத்தார். “எழுந்திரு, மூடா… கீழ்மகனே, எழுந்திரு. நீ இல்லாமல் நான் இங்கே என்ன செய்யப்போகிறேன்? கீழ்மகனே! கீழ்மகனே!”

அவனை ஓங்கி ஓங்கி அறைந்தார். பின்னர் எழுந்து நின்று கைவீசி பெருஞ்சினத்துடன் “இதெல்லாம் என்ன என்று தெரியாதா உனக்கு? இது பெண்பழி. அம்பையின் தீச்சொல். அவளுக்கும் முன்னால் மைந்தரை ஈன்று குருதிவார்ந்து வெளிறி இறந்த சுனந்தை இட்ட தீச்சொல். தபதியும் அதற்கு முன் சர்மிஷ்டையும் விடுத்த விழிநீர். இது நம் குடியை வாழவே விடாது… நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. நாம் வெறும் பலிகள்…” என்றார்.

வெளியே காலடியோசை கேட்டதும் அவர் திடுக்கிட்டார். அதுவரை பேசிக்கொண்டிருந்தோமா எண்ணிக்கொண்டிருந்தோமா என குழம்பி அர்ஜுனனை நோக்கினார். எடைமிக்க காலடிகளுடன் பீமன் உள்ளே வந்தான். வெறுமனே தலைவணங்கி அப்பால் சென்று பெட்டி ஒன்றை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான். நகுலன் உள்ளே வந்தான். “மைந்தர் எங்கே?” என்றார் யுதிஷ்டிரர். “அவர்களை எழுப்பவேண்டாம், துயிலட்டும் என நான் ஆணையிட்டேன்” என்றான் பீமன்.

இளைய யாதவரும் சகதேவனும் வந்தார்கள். இளைய யாதவர் அமர சகதேவன் ஒரு பெட்டியை எடுத்துப்போட்டான். அவர் அமர்ந்து கைகளைக் கோத்து மடியில் வைத்தபடி ஒன்றும் சொல்லாமல் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தார். பீமன் “இளைய யாதவரே, அவன் உள்ளம் எந்நிலையில் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவன் இருக்கும் நிலை அஞ்ச வைக்கிறது. அவனை மீட்டாக வேண்டும்” என்றான். இளைய யாதவர் “நாம் என்ன செய்ய முடியும்? அவன் செல்லும் தொலைவுவரை சென்றுவிட்டு மீளட்டும்” என்றார்.

சகதேவன் “துரோணரும் கர்ணனும் இவ்வாறு செய்வார்கள் என்று எண்ணியிருக்கவேயில்லை” என்றான். பீமன் “அவர்களால் இயன்றாலும் துரியோதனன் இதை செய்ததை என்னால் எத்தனை எண்ணியும் உளம்கொள்ள இயலவில்லை” என்றான். யுதிஷ்டிரர் “நாம் பிதாமகர் பீஷ்மரைக் கொன்றபோது அவர்களும் இதையே சொல்லியிருக்கக் கூடும்” என்றார். சீற்றம்கொண்டு எழுந்து “இதோ சோர்ந்து கிடக்கும் இவனிடம்தான் இதை சொல்கிறேன். சிகண்டியை முன்னிறுத்தி பிதாமகரை வீழ்த்தியவன் இவன். அதற்கு ஒப்புதல் அளித்தவன் நான். நாங்கள் இருவரும் இத்துயருக்கு முற்றிலும் தகுதி கொண்டவர்கள்தான்” என்றார்.

“எதற்கு வீண்பேச்சு?” என்று சகதேவன் சொன்னான். “வீண்பேச்சுதான். நாம் பேசும் அனைத்துமே வீண்பேச்சுதான். இந்தப் பேச்சுகளுக்கு அப்பால் நாம் மிகமிக எளியவர்களாகவே இருக்கிறோம். அரக்கரையும் அசுரரையும்போல கண்மூடித்தனமான விசைகொண்டவர்களாக. கிராதர்களையும் நிஷாதர்களையும்போல தங்களை மட்டுமே நோக்கக்கூடியவர்களாக” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அருந்தவம் இயற்றி அறியவேன்டும் ஞானத்தை. அதன் பின் மேலும் தவம் இயற்றி அந்த ஞானத்தில் அமையவேன்டும். நாம் அறிந்தவற்றை வெற்று ஆணவமாக ஆக்கிக்கொண்டவர்கள். நாம் அடைந்தவை அனைத்தும் பொய்யே. இப்போது அதை அறிகிறேன்.”

“எண்ணி நோக்குக, நாம் எத்தனை கௌரவ மைந்தர்களை கொன்றோம்! எத்தனை கௌரவர்களை தலையறைந்து சிதைத்து வீசினோம்! துரியோதனன் அதை எப்படி உணர்ந்திருப்பான்? அவர்களும் நம் மைந்தர்கள், நம் உடன்பிறந்தார். நாம் அதை ஒருகணமேனும் எண்ணினோமா? இத்துயரால் நாம் தெய்வங்களிடம் உரைப்பது என்ன? நாம் வெறும் விலங்குகள். குருதியால் மட்டுமே ஆளப்படுபவர்கள். குருதியின் பிடியிலிருந்து எழுவதற்கே ஞானம் தேவை. நாம் அதை அடையவே இல்லை.” யுதிஷ்டிரர் சலிப்புடன் தலையசைத்து அமர்ந்துகொண்டு “நம் குருதியில் ஓடுவது சர்மிஷ்டையின் அசுரக்குருதி. சத்யவதியின் நிஷாதக்குருதி” என்றார்.

“என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்?” என்று சீற்றத்துடன் பீமன் கேட்டான். “பேசவேண்டும் என நீங்கள் அழைத்தமையால்தான் வந்தேன். உங்கள் வீண்பசப்புகளைக் கேட்டு பொழுது கழிக்க என்னால் இயலாது.” யுதிஷ்டிரர் “நான் என் அறுதிமுடிவை சொல்லவே அழைத்தேன். அதற்காகவே இளைய யாதவனை வரச்சொன்னேன். நான் போரை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறேன். போதும். இனி இப்போர் தொடர்வதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. எனக்கு அரசும் முடியும் தேவை இல்லை. என் குலக்கொடி சிறுமைசெய்யப்பட்டதைப்பற்றி எந்த உளக்குறையும் எனக்கில்லை. எனக்கு இந்தப் புவியில் எந்த வருகணக்கும் செல்கணக்கும் இல்லை. நான் கிளம்பவிருக்கிறேன். எனக்கான இடம் முனிவர் வாழும் காடுதான். போரை விழைவோர் நிகழ்த்தட்டும்” என்றார்.

சகதேவன் “நாம் இதை நாளை பேசுவோம்” என்றான். யுதிஷ்டிரர் சொன்னார் “இது வெறும் உணர்ச்சிவெறி என நினைக்கிறாய் போலும். அல்ல, நான் எண்ணி எண்ணி எடுத்த முடிவுதான் இது. இனி அதிலிருந்து விலக நான் சித்தமாக இல்லை. நாளை என்றல்ல என்றும் இதுவே என் சொல். இனி நான் போரிட விரும்பவில்லை. இளைய யாதவன் அவனுடைய போரை நிகழ்த்துக… நான் இனி அதில் இல்லை.”

இளைய யாதவர் “எனது போர் அல்ல இது” என்றார். “என் போர் எந்த மானுடருடனும் இல்லை” என்றபடி எழுந்துகொண்டு “அரசருக்கு ஆர்வமில்லை என்றால் இந்தப் போரை நிறுத்திவிடுவோம்” என்றார். யுதிஷ்டிரர் “ஆம், இன்றே தூதர் செல்லட்டும். கௌரவரிடம் சென்று நாம் போரை நிறுத்திவிட்டு விலகிக்கொள்கிறோம் என அறிவிக்கட்டும். அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் துரியோதனனுக்கே உரிமையாகட்டும். அவனும் அவன் கொடிவழியினரும் இந்நிலவிரிவை முழுதாளட்டும். என் குடியினர் இங்கிருந்து கிளம்பி தெற்குக்கோ கிழக்குக்கோ செல்வார்கள். அங்கே இன்னமும் மேழிபடாத, கன்றுக்குளம்பு தொடாத மண் உண்டு. அவர்களின் குருதியில் யாதவ மரபு உறைகிறது. தங்கள் வாழ்நிலத்தை அவர்கள் கண்டுகொள்வார்கள்” என்றார்.

“பிறகென்ன, தூதன் கிளம்பட்டும்” என்றார் யுதிஷ்டிரர். இளைய யாதவர் “இம்முறை நான் தூதுசெல்ல முடியாது, அரசே. நான் என் கால்பொடியை தட்டிவிட்டுவிட்டு அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியவன்” என்றார். “சகதேவன் செல்லட்டும். வேண்டுமென்றால் நானே செல்கிறேன்” என்றார் யுதிஷ்டிரர். பீமன் உறுதியான குரலில் “மூத்தவரே, ஒன்று கேட்டுக்கொள்க! நான் இளைய யாதவருக்கு சொல்லளித்து இக்களத்திற்கு வந்தவன். அனைத்தையும் இழந்தாலும் சரி இந்தக் களத்தில் இருந்து வெற்றியுடன் அன்றி மீளமாட்டேன். நீங்கள் விழைந்தால் இப்போதே கிளம்பிச்செல்லலாம்” என்றான். யுதிஷ்டிரர் “என்ன சொல்கிறாய்? நான் உன் தமையன். என் ஆணையை மீறுகிறாயா?” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டார். அவருடைய உடல் நடுங்கியது. “மூத்தவரே, உங்கள் ஒப்புதலுடன் நான் என் வாழ்வு, மீட்பு இரண்டையுமே இளைய யாதவருக்கு அளித்துவிட்டவன்” என்றான் பீமன்.

“நீ நடத்து இப்படையை. நான் கிளம்புகிறேன். என் தம்பியர் பிறர் உடன்வருவார்கள். என் மைந்தர் வருவார்கள்” என்று யுதிஷ்டிரர் கூவினார். “சகதேவா, நாம் கிளம்புவோம். நகுலா, நீ வருகிறாய் அல்லவா?” சகதேவன் “நாங்கள் உங்களுக்கு எங்களை அளித்துக்கொண்டவர்கள், மூத்தவரே” என்றான். “அது போதும். நான் கிளம்புகிறேன். நீயே இப்போரை நிகழ்த்துக! வென்றால் இந்திரப்பிரஸ்தத்திற்கும் அஸ்தினபுரிக்கும் நீயே அரசனாகுக! ஆம், ஒருவகையில் அது சரியே. உன் கைகளால் நீ அவர்களை கொல்கிறாய். விலங்குநெறிப்படி நீயே அரசனாகவேண்டும். விலங்குகளின் உலகு இது. இங்கே எனக்கு இடமில்லை” என்றார் யுதிஷ்டிரர். “முடிவு எடுத்துவிட்டபின் நாம் ஏன் பிந்தவேண்டும்… கிளம்புவோம். அதற்குமுன் இவனிடம் நான் கேட்கவேண்டும். என்னுடன் வருகிறானா அல்லது இங்கே இருந்து உங்கள் போரை நிகழ்த்தவிருக்கிறானா என்று. யாதவனே, இவனை எழுப்புக! நீயே அதை கேட்டுச் சொல்க!”

இளைய யாதவர் “பீமசேனரே, நான் உங்களை உங்கள் தமையனிடமே திரும்ப அளிக்கிறேன். நீங்கள் எனக்களித்த சொல் இனி உங்களை கட்டுப்படுத்தாது” என்றார். “என் பாதை தெளிவாகவே உள்ளது. நீங்கள் நூறுமுறை என் சொல்லை திரும்ப அளித்தாலும் மீள மீள உங்கள் காலடியில் அதை வைப்பேன்” என்று பீமன் சொன்னான். “ஒவ்வொருமுறை இறைமுன் மலர் இடுகையிலும் உள்ளத்தை ஒருமுறை வைக்கிறோம் என்பார்கள். பல்லாயிரம் முறை உள்ளத்தை வைப்பதே முழுதளிப்பு.”

இளைய யாதவர் “நீங்களும் இழக்க நேரலாம். பெருந்துயர்கள் வழியாக செல்ல நேரலாம்” என்றார். “ஆம், அறிவேன். முழுதளிப்பு என்பது அதையும் சேர்த்துத்தான்” என்றான் பீமன். “அத்துடன் இது என் குலமகளுக்காக நான் கொண்டுள்ள வஞ்சமும் கூட. எந்தத் தெய்வம் சொன்னாலும், எந்தப் பெருந்துயர் எதிர்பட்டாலும் அதிலிருந்து நான் விலகப்போவதில்லை. இங்கே ஒரு பெண்ணின் விழிநீரும் வஞ்சினமும் எந்நிலையிலும் கைவிடப்படவில்லை என்பதை உலகம் அறிக!” இளைய யாதவர் புன்னகைத்து “அச்சொல் நிலைகொள்ளவேண்டும், இளைய பாண்டவரே. எந்நிலையிலும் அது நிலைகொண்டாகவேண்டும்” என்றார்.

யுதிஷ்டிரர் சோர்ந்தவராக திரும்பச் சென்று தன் பீடத்தில் அமர்ந்தார். “என்னை கீழ்மகனாக உணரச் செய்கிறீர்கள். இங்கிருந்து நான் சென்றால் அவள் என்னை நம்பிச் சொன்ன வஞ்சினத்தை துறந்தவன் ஆவேன். மானுடன் என வாழும் தகுதியை இழந்துவிடுவேன்” என்றார். பீமன் “அச்சொல் வென்று இக்களத்தில் குருதியாடி நின்றிருக்கும். ஐயமே தேவையில்லை, மூத்தவரே. நீங்கள் அப்பொறுப்பை என்னிடம் அளித்துவிட்டுச் செல்லலாம்” என்றான். யுதிஷ்டிரர் கைகளால் முகத்தைப் பொத்தி குனிந்து அமர்ந்திருந்தார்.

இளைய யாதவர் அர்ஜுனனைத் தொட்டு “பாண்டவனே, எழுக…” என்றார். அவன் உடல் விதிர்த்தது. “பாண்டவனே, எழுக…” என்று மீண்டும் இளைய யாதவர் சொன்னார். மூன்றாம் முறை “எழுக, பார்த்தா!” என்றதும் அர்ஜுனன் விதிர்த்து இமைகள் சுருங்கி அதிர விழிப்படைந்தான். “எழுக…” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் எழுந்தமர்ந்து அவர்களை மாறிமாறி நோக்கினான். “எங்கிருந்தாய்?” என்று பீமன் கேட்டான். “பிறிதொரு இடம்… வேறெங்கோ” என அவன் சொன்னான். பின்னர் திடுக்கிட்டவன்போல சகதேவனிடம் “அபிமன்யு எங்கே?” என்றான். சகதேவன் முகத்தில் திகைப்புடன் இளைய யாதவரை நோக்கினான். அவர் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே அர்ஜுனனை நோக்கி அமர்ந்திருந்தார்.

அர்ஜுனன் ஒரே கணத்தில் அனைத்தையும் இழுத்து எடுத்துக்கொண்டு எழுந்து நின்றான். அவன் உடல் நடுங்கியது. அவன் விழப்போகிறான் என பீமன் பிடிக்க எழுவதுபோல அசைந்தான். அர்ஜுனன் தளர்ந்த கால்களுடன் அமர்ந்துகொண்டு “ஆம்” என்றான். அவன் இருமுறை தொண்டையைக் கமறிய ஓசை ஒரு பெருங்கதறலின் துணுக்கு எனத் தோன்றி அவர்கள் அனைவரின் உடல்களையும் துணுக்குறச் செய்தது. ஆனால் அர்ஜுனனின் உடல் மேலும் ஒடுங்கியது. அவன் விழிகளில் இருந்து நீர் ஓசையின்றி சொட்டத் தொடங்கியது. அதை அவர்கள் நோக்கி நின்றனர். விழிநீர் பெருகி தாடியை நனைத்து மார்பில் சொட்டிக்கொண்டே இருந்தது.

பின்னர் மெல்லிய குரலில் “யாதவரே” என அவன் அழைத்தான். “சொல்லுங்கள், இதற்கு என்ன பொருள்?” இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்லுங்கள், என்ன பொருள் இதற்கு?” என அவன் கைநீட்டி இளைய யாதவரின் கையை பிடித்தான். “சொல்லுங்கள்… இழப்பல்ல என்னை வதைப்பது. இதிலுள்ள மாபெரும் பொருளின்மைதான். என் உள்ளத்தை விரித்து விரித்து இப்புடவியளவுக்கே அகற்றி அள்ள முயன்றேன். ஒன்றும் சிக்கவில்லை. இப்பொருளின்மை… பெரும்பூதமென எழுந்து என்னை கொல்ல நின்றிருக்கிறது இது.” இளைய யாதவர் “ஒவ்வொரு இறப்பின்போதும் அனைத்து மானுடரும் அதையே உணர்கிறார்கள். அதற்கு மாற்றுவழி என ஏதுமில்லை” என்றார்.

“பொருள் இருந்தாகவேண்டும். யாதவரே, உம்மை நான் அறிவேன். உம் பேருருவை என் கனவுகளில் கண்டிருக்கிறேன். பொருள் உண்டு, அதை நீர் அறிவீர். சொல்லுங்கள்” என்று அர்ஜுனன் உரக்கக் கூவினான். “பொருளென இங்கே சொல்லப்படும் அத்தனை சொற்களும் வீண் என அறிவேன். நீர் சொல்லமுடியும்… சொல்க! என்ன பொருள் இதற்கு? என் மைந்தன் இவ்வண்ணம் இங்கே ஏன் சாகவேண்டும்?” இளைய யாதவர் “அதை நீ உணரமுடியாது. நான் சொன்னாலும் நீ அறிந்த ஒன்றாகவே அதை விளங்கிக் கொள்வாய். பாண்டவனே, நீ காண்பது முடிவிலாப் பெருக்கென வானத் திசைகளைத் தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் சரடு ஒன்றின் ஒரு மணியை. அத்தனை மணியையும் உணராமல் ஒன்றை நீ அறியமுடியாது. அந்த ஒரு மணியோ புடவியின் ஓர் அணுத்துளி. அண்டமே அணுவென்பதால் அதுவும் முடிவிலியே” என்றார்.

அர்ஜுனன் எழுந்து நின்று கைநீட்டி கூச்சலிட்டான். “சொல்க… சொல்க… நீங்கள் எனக்கு அதன் பொருளை சொல்லியாகவேண்டும். இல்லையேல் இனி என்னால் வில்லேந்த இயலாது. ஒன்றின் பொருளின்மை அனைத்தையும் பொருளற்றதாக ஆக்கிவிடுகிறது. சொல்க! என் மைந்தனின் இறப்புக்கு என்ன பொருள்?” இளைய யாதவர் “சொல்கிறேன்” என்றபடி கைநீட்டி அவன் கையை பற்றினார். அவன் உடல் நடுக்குகொள்ள கால்மடிந்து மஞ்சத்திலேயே மீண்டும் அமர்ந்தான். அவன் விழிகள் அதிர்ந்துகொண்டே இருந்தன. அவர்கள் எங்கோ ஓர் அரண்மனையின் கூடத்தில் அமர்ந்திருந்தனர். இளைய யாதவர் சூதன்வடிவில் இருந்தார். கையிலிருந்த சிறுயாழை மீட்டியபடி பாடலும் உரையுமாக அவர் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

“பின்னர் எப்போதோ நான் சொல்லவேண்டிய கதை இது, பாண்டவனே” என்றார் இளைய யாதவர். “முன்பொரு காலத்தில் கனகை என்னும் பொன்னிற நாகம் ஒரு தாழைப் புதருக்குள் நூறு முட்டைகளை இட்டது. முட்டைகளை இட்டுவிட்டு மும்முறை மண்ணைக் கொத்தி பூமாதேவியை காவலுக்கு நிறுத்திவிட்டு திரும்பிப்பாராமல் செல்லும் வழக்கம் கொண்டவை நாகங்கள். சூரிய ஒளியில் அந்த முட்டைகள் விரிந்து சின்னஞ்சிறு புழுக்களைப் போன்ற நாகக் குழந்தைகள் வெளிவந்தன. நாகங்களின் வழக்கப்படி அவை வாசனையை உணர்ந்து, நெளிந்து அருகே இருந்த தாழைமலர்களில் ஏறி அதன் சிறகுகளின் நறுமணம் மிக்க வெம்மைக்குள் அமர்ந்துகொண்டன. அதன்பின் அந்த மலரையே அவை அன்னை என உணர்ந்தன.”

“அன்னை தன் நறுமணத்தால் வண்டுகளை அருகே அழைத்து அக்குழந்தைகளுக்கு உணவூட்டினாள். இரவில் தன் இறகுகளைக்கொண்டு மூடி அவற்றை பாதுகாத்தாள். அவை தங்கள் வழிகளையும் நெறிகளையும் கண்டுகொள்ளும்வரை அவற்றை அவளே பேணினாள்” என அவர் தொடர்ந்தார். “அந்த நூறு பாம்புக் குழந்தைகளில் ஒருவன் பெயர் உசகன். சந்திரகுலத்தைச் சேர்ந்த அரசநாகமாகிய உக்ரோதனின் மகன் அவன். தன் உடன்பிறந்தார் அனைவரும் செம்பொன் நிறத்தில் ஒளிவிட்ட தாழை மடல்களில் புகுந்துகொண்டதைக் கண்ட உசகன் மேலும் ஒளிகொண்ட ஒரு தாழை மடலை நோக்கி சென்று அதன் இதழ்களுக்குள் புகுந்தான். அது அங்கே எரிந்த காட்டுநெருப்பு.”

“தன்னில் புகுந்த உசகனை அக்னிதேவன் உண்டான். அக்னிதேவனின் வயிற்றுக்குள் சென்ற உசகன் அனலோனே, உன்னை என் அன்னை என்று எண்ணி இங்கே வந்தேன். என்னை உணவாக்கியது அறமல்ல என்றான். அக்னிதேவன் என்னை அடைந்த எதையும் உண்ணுவதே என் அறமாகும். ஆனால் நீ அன்னையைத் தேடிவந்த குழந்தை என்பதனால் உனக்கு ஒரு சொற்கொடை அளிக்கிறேன். நீ மானுடனாக மேலும் மும்முறை பிறப்பாய். மும்முறையும் இப்பிழையை நீ ஆற்றுவாய். மூன்று மெய்மைகளை அடைந்து விடுபடுவாய் என்றான்.”

அர்ஜுனன் உரத்த குரலில் “ஆம்!” என்றான். இளைய யாதவர் அவனிடம் “நீ விழைந்தால் அச்சரடின் அடுத்த மணிகளை காட்டுகிறேன்” என்றார். “வேண்டாம்” என்றபடி அவன் தன் கைகளால் முகத்தை பொத்திக்கொண்டான். “போதும்… பொருளின்மை எங்கிருந்து எழுகிறது என்று புரிந்துகொண்டேன்.” தலையை அசைத்தபடி “போதும்” என்றான். இளைய யாதவர் புன்னகையுடன் யுதிஷ்டிரரை நோக்கி “நீங்கள் உங்கள் வினாவை எழுப்பலாம், அரசே. அவன் வருவான் என்றால் அழைத்துச்செல்லலாம்” என்றார். யுதிஷ்டிரர் “நான் செல்லவில்லை. அவன் உணர்ந்த அப்பொருளின்மையையே நானும் உணர்ந்தேன். அதை இன்னொரு பொருளின்மையால் நிகர் செய்யலாமென விழைந்தேன்” என்றார்.

அர்ஜுனன் நிமிர்ந்து “அவனை கொன்றவன் எவன்?” என்றான். அவன் முகமும் குரலும் மாறிவிட்டிருந்தன. “அவர்கள் அனைவருமே பழிகொண்டவர்கள்தான்” என்றான் பீமன். “அவன் யார் கையால் இறுதியாக உயிர்துறந்தான்?” என்று அர்ஜுனன் உரக்கக் கூவினான்.

“இளையோனே, அவ்வண்ணம் ஒரு தனி வஞ்சம் தேவையில்லை. இது போர்” என்றார் யுதிஷ்டிரர். “அவன் அதனூடாக இங்கு மீண்டுவருகிறான் போலும்” என்றான் பீமன். “இளையோனே, கர்ணனும் துரோணரும் சேர்ந்து அவனை வீழ்த்தினர். அவன் தலையை உடைத்தவன் துச்சாதனனின் மைந்தனாகிய துருமசேனன். அவனை நாளையே நான் கொன்று களத்தில் இடுவேன்.”

அர்ஜுனன் வலிகொண்டவன்போல தலையை அசைத்துக்கொண்டே இருந்தான். “அரை நாழிகை… அரை நாழிகைப் பொழுது” என்று தன்னுணர்வற்றவனாக புலம்பினான். “அரை நாழிகைப் பொழுதை ஈட்டியிருந்தால் என் மைந்தனை மீட்டிருப்பேன், யாதவரே.”

பீமன் “அதை இனிமேல் சொல்லி பயனில்லை…” என்றான். “அவனிடம் இறுதியாக நான் கைகூப்பி இரந்தேன்… வீரத்தையும் தன்மானத்தையும் கைவிட்டு மன்றாடினேன்…” அவன் நிமிர்ந்தபோது மீண்டும் விழிகள் நிறைந்திருந்தன. “யாதவரே, ஒருவன் ஒரு களத்தில் எத்தனை முறைதான் சாவது?” இளைய யாதவர் “அவன் அங்கே போர்வீரனாக மட்டுமே இருந்தான்” என்றார். “ஆனால் நாங்கள் அப்படி இருக்கவில்லை. கோதவனத்தில் அவனை மூத்தவர் சிதைத்துச் சிறுமைசெய்தபோது நான் வீரனென்று நின்று பேசினேன். மூத்தவர் அரசன் என்றும் அவனுடைய குடிமூத்தவர் என்றும் நின்றிருந்தார். அன்று எங்கள் அளிக்கொடையாக தன் உயிரை மீட்டுச்சென்றவன் அவன்” என்றான் அர்ஜுனன்.

சொல்லச் சொல்ல சீற்றம் வளர அர்ஜுனன் எழுந்து நின்றான். “பின்னரும் எனக்கு செய்தியனுப்பினான். என் நட்பை தெய்வக்கொடை என கருதுவேன் என்று. என்றும் என்னிடம் நன்றியுடன் இருப்பேன் என்று. கீழ்மகன்…” அவன் அதுவரை கொண்டிருந்த அத்தனை சோர்விலும் துயரிலுமிருந்து கிழித்தெழுந்து பெருகி நின்று “அக்கீழ்மகனை நாளை கொல்வேன். அந்திக்குள் அவனை கொல்லாவிடில் களத்திலேயே என் சங்கறுத்து செத்துவிழுவேன். இது என் வஞ்சம். அறிக முன்னோர், அறிக தெய்வங்கள். இது என் வஞ்சினம். நாளை அந்திக்குள் அவனை கொன்று வீழ்த்துவேன். ஆணை! ஆணை !ஆணை!” என்றான்.

யுதிஷ்டிரர் திகைப்புடன் அவனை தடுக்கும்பொருட்டு கைநீட்டி “இளையோனே” என்றார். பீமன் அவரை தடுத்தான். அர்ஜுனன் “இனி ஒரு சொல்லும் எச்சமில்லை, யாதவரே” என்றான். இளைய யாதவர் “இனி உன்னால் துயிலமுடியும், பாண்டவனே. நாளை களத்தில் நிற்போம்” என்றபடி எழுந்தார். சகதேவனிடம் “அவனுக்கு அகிபீனா அளியுங்கள். துயிலட்டும்” என்றார். சகதேவன் தலையசைத்தான். இளைய யாதவர் வெளியே செல்ல பீமனும் நகுலனும் உடன்சென்றனர். அர்ஜுனனை மீண்டுமொருமுறை நோக்கியபின் யுதிஷ்டிரரும் வெளியே சென்றார்.

நூல் இருபது – கார்கடல் – 40

ele1அஸ்தினபுரியின் புஷ்பகோஷ்டத்தில் ஏகாக்ஷரின் கதை கேட்டு அமர்ந்திருந்த காந்தாரி மெல்லிய சீறல் ஒலியுடன் தலை குனிந்து விழிநீர் பெருக்கினாள். அவள் கண்களைக் கட்டியிருந்த நீலப் பட்டுத் துணியை நனைத்து அவ்விழிநீர் ஊறிப்பரவியது. காந்தாரியின் அருகே நின்றிருந்த சத்யசேனை குனிந்து அவள் தோளைப் பற்றி மெல்ல தட்டி “அரசி! அரசி!” என்றாள். காந்தாரி இரு கைகளாலும் கன்னத்தை அழுந்தத் துடைத்து மூச்சை இழுத்து சீராகி “ம்” என்று முனகினாள். போதும் என்பதுபோல் சத்யசேனை கைகாட்டினாள். அதை நோக்காமலேயே உணர்ந்து மேலும் சொல்லும்படி காந்தாரி கையசைவால் ஏகாக்ஷருக்கு ஆணையிட்டாள். ஏகாக்ஷர் மீண்டும் சொல்லத் தொடங்கினார்.

பேரரசி, அபிமன்யு கொல்லப்பட்டதை அறிவித்து காந்தாரரின் முரசுகள் முழங்கத் தொடங்கின. அச்செய்தியை நம்ப இயலாததுபோல் பிற முரசுகள் நெடுநேரம் அமைதி காத்தன. பின்னர் ஈர விறகு பற்றிக்கொள்வதுபோல் அச்செய்தி பிற முரசுகளிலும் எழத்தொடங்கியது. முரசொலிகள் இணைந்து “இளைய பாண்டவ மைந்தர் களம்பட்டார்! வீழ்ந்தார் அபிமன்யு. விண்ணுலகேகினார் இந்திரனின் பெயர்மைந்தர்” என்று முழங்க அதற்குள் அச்செய்தி பாண்டவப் படைகள் முழுக்க சென்றடைந்துவிட்டிருந்தது. பிற ஒலிகளோ வாழ்த்தொலிகளோ இன்றி பாண்டவப் படை குளிர்ந்து உறைந்து ஓசைகள் நின்றிருந்தது.

யுதிஷ்டிரர்தான் முதலில் நிலை மீண்டார். தன் உடலில் குடியேறிய துடிப்புடன் பாய்ந்திறங்கி நிலத்தில் நின்று “இளையோனே!” என்றார். “இளையோரே! எங்கே நகுலன்? சகதேவன் எங்கே? உடனே அழைத்து வருக அவர்களை!” என்று தன் ஏவலருக்கு ஆணையிட்டார். அவர்கள் அங்குமிங்கும் ததும்பி விலக “அழைத்து வருக இளையோரை! இப்போதே… உடனே” என்று கூச்சலிட்டு என்ன செய்வதென்று அறியாமல் காலில் தடுக்கிய வில் ஒன்றை எடுத்து அப்பால் வீசினார். அவரை நக்க வந்த புரவியின் தலையை அறைந்தார். அதற்குள்ளாகவே இருபுறத்திலிருந்தும் நகுலனும் சகதேவனும் அவரை நோக்கி பாய்ந்துவந்து இறங்கினர்.

சகதேவன் அவரை அணுகி தலைகுனிந்தான். “செல்க! சென்று இளையோன் அருகே நின்றுகொள்க!” என்று யுதிஷ்டிரர் ஆணையிட்டார். பதற்றத்துடன் தேரில் ஏறி உடனே மீண்டும் இறங்கி “இன்னும் சற்று நேரத்தில் நான் அங்கு வருகிறேன். இங்கு சில ஆணைகள் எஞ்சியிருக்கின்றன. அதுவரை அங்கு நிலைகொள்க!” என்றார். மூச்சு இரைக்க நகுலனை நோக்கி “நமது படைகள் உளம் சோர்ந்திருக்கின்றன. இத்தருணத்தில் அவர்கள் முழு விசையுடன் தாக்கினால் நாம் முற்றழிவோம். திருஷ்டத்யும்னனிடமும் சாத்யகியிடமும் படைத்தலைமை கொள்ளும்படி எனது ஆணையை அறிவியுங்கள். இளையோர் எவரும் இத்தருணத்தில் படைநடத்த இயலாதென்று அவரிடம் சொல்லுங்கள்” என்றார்.

நகுலன் தலைவணங்கி கிளம்பிச்செல்ல யுதிஷ்டிரர் தன் ஏவலருக்கு தன்னை தொடரும்படி கைகாட்டிவிட்டு விரைந்து சென்று புரவியிலேறிக்கொண்டார். அருகிலிருந்த காவல்மாடத்தின் மீதேறி நின்று பாண்டவப் படைகளை பார்த்தார். அவர் எண்ணியது போலவே பாண்டவப் படைகள் அனைத்து ஒழுங்குகளையும் இழந்து வெறும் திரளென்று மாறியிருந்தன. அதுவரை நிகழ்ந்துகொண்டிருந்த போர்முடிச்சுகள் அவிழ்ந்து நீண்ட தையல் பிரிவதுபோல இரு படைகளும் அகன்றன. இரண்டுக்கும் நடுவே ஓர் இடைவெளி உருவாகி அகன்று வருவதை அவர் பார்த்தார். “அவர்கள் பின்னடைகிறார்கள். தம்மை தொகுத்துக்கொண்டு முழு விசையுடன் நம்மை தாக்கவிருக்கிறார்கள்” என்று கூவினார். “திருஷ்டத்யும்னனிடம் சென்று சொல்க! நமது படைகள் அனைத்து ஒழுங்குகளையும் இழந்துவிட்டன. இனி ஐவிரல்சூழ்கை பயனற்றது. நாம் இன்று அந்தி வரை களத்தில் நம்மை காத்துக்கொள்வதொன்றே செய்யக்கூடுவது. அதற்குரிய புதிய சூழ்கை ஒன்றை அமைக்கச் சொல்க! அது வெறும் கவசக்கோட்டையாக இருந்தாலும் சரி” என்று ஆணையிட்டார்.

அவருடைய ஆணைகளை ஏற்று ஏவலர்கள் காவல்மாடத்திலிருந்து விரைந்திறங்கினார்கள். மெல்ல நகர்ந்துகொண்டிருந்த காவல்மாடத்தில் நின்றபடி அவர் அந்தப் படைவிரிசலை பார்த்துக்கொண்டிருந்தார். அது எதையோ சொல்ல விரிந்த உதடுகள்போல் அவருக்கு தோன்றியது. பின்னர் வெட்டுண்ட தசைப் பிளவுபோல. அதை நோக்குவதை தவிர்த்து விழி திருப்பிக்கொண்டார். பெருமூச்சுடன் அவர் காவல்மாடத்தின் படிகளில் இறங்கியபோது திருஷ்டத்யும்னனின் முரசொலிகள் எழுந்துகொண்டிருப்பதை கேட்டார். “அணி திரள்க! அணி திரள்க! படையினர் ஒருவரோடொருவர் தொடுத்துக்கொள்க! நீள்சரடென்று ஆகுக! நூற்றுவர் நூற்றுவர்களுடன் பொருந்துக! ஆயிரத்தவர் தொகுத்துக்கொள்க!” என்று முரசுகள் ஒலித்தன.

திருஷ்டத்யும்னன் ஒரு கேடயப் பெருஞ்சுவரை அமைக்கவிருக்கிறான் என்று யுதிஷ்டிரர் புரிந்துகொண்டார். கீழே நின்ற புரவியிலேறிக்கொண்டு “செல்க!” என்றார். அதற்கு முன்னால் நின்றிருந்த படைவீரன் அவர் எண்ணுவதை புரிந்துகொண்டு தன் புரவியிலேறிக்கொண்டு வழிவிலக்கி முன்னால் சென்றான். அவருடைய புரவி எப்போதுமே வழிவிலக்குபவனை தொடரும் பயிற்சி கொண்டது. குழம்பி ஒருவரோடொருவர் முட்டி வெற்றொலிகள் எழுப்பியபடி மீண்டும் அணி திரண்டுகொண்டிருந்த பாண்டவப் படைகளின் நடுவினூடாக அவரது புரவி சென்றது. பாஞ்சாலப் படைப்பிரிவுகளின் உள்ளே தொலைவில் அவர் அர்ஜுனனின் குரங்குக்கொடி பறப்பதை பார்த்தார். அதைக் கண்டதும் அவர் நெஞ்சு பதைப்பு கொண்டது. புரவியிலேயே தோள்தொய்ந்து தலைகுனிந்து அமர்ந்தார்.

புரவியிலிருந்து இறங்கி மெல்ல நடந்தபோது தரையிலமர்ந்திருந்த அர்ஜுனனை கண்டார். நடையை சீராக்கியபடி அவனை நோக்கி சென்றார். அவனருகே இளைய யாதவர் நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும் அங்குதான் இருந்தார்கள். யுதிஷ்டிரர் புரவியிலிருந்து இறங்கி அர்ஜுனனை அணுகினார். அத்தருணத்தில் சொல்ல வேண்டிய சொற்களை தன்னுள்ளிருந்து எடுத்து கோத்துக்கொள்ள முயன்றார். ஒவ்வொரு சொல்லும் பிசின் பரவிய பளிங்குருளைகளைப்போல வழுக்கிச்சென்றது. அர்ஜுனன் தரையில் விழுந்து எழுந்தவன்போல் இரு கைகளையும் கால்களையும் பரப்பி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். கட்டவிழ்ந்த குழல்கற்றைகள் அவன் முகத்தை மறைத்தபடி தொங்கின. அவன் விக்கலெடுப்பதுபோல் அவருக்குத் தோன்றியது.

அவர் அணுகியதும் சகதேவன் அவரை நிமிர்ந்து பார்த்தான். அதிலிருந்த பகைமை அவரை ஒருகணம் திகைக்கச் செய்தது. பின்னர் சீற்றம் எழுந்தது. எதன் பொருட்டு அப்பகைமை என அவர் உள்ளம் வினாவியது. ஆனால் அதைக் கண்ட முதற்கணம் ஏன் என் உள்ளம் ஏற்றுக்கொண்டது என்று உடனே அது குழம்பியது. முழந்தாளிட்டு அர்ஜுனன் அருகே அமர்ந்து அவன் தோளில் கைவைத்து “இளையோனே, ஊழ் அனைத்தையும்விட வலிது” என்றார். அர்ஜுனன் தன் கையால் தோளில் வைக்கப்பட்ட அவர் கையை விலக்கினான். அச்செயலிலிருந்த கசப்பு மெல்லிய தொடுகையிலேயே அவரை வந்தடைந்தது. அவர் உள்ளம் மேலும் இறுக “இப்போரில் நாம் அனைவருமே உயிரை முன்வைத்துதான் ஆடிக்கொண்டிருக்கிறோம். நம் உயிரை மட்டுமல்ல நம் மைந்தரின் உயிர்களையும்” என்றார்.

“நாம் எவரும் மறுகணமே இறப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆகவே இருந்தவர்க்கோ இறப்பவர்க்கோ நாம் துயர்கொள்ள வேண்டியதில்லை” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். அர்ஜுனன் அவர் சொற்களை கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கூரிய ஊசியால் குத்தப்பட்டதுபோல் ஓர் விதிர்ப்பு அவன் உடலில் கடந்து சென்றது. யுதிஷ்டிரர் மேலும் எதையேனும் சொல்ல வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அங்கு நின்ற அத்தனை பேருமே அவருடைய சொற்களுக்கெதிராக உளமறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்லோ உடலசைவோ எழாமலேயே அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் மேலும் தத்தளித்த பின் எழுந்துகொண்டார்.

அருகே நின்ற இளைய யாதவர் அவரிடம் “தாங்கள் தங்கள் படைக்கு திரும்பலாம், அரசே. இளைய பாண்டவன் இனி படைமுகப்பிற்கு எழ இயலாது” என்றார். யுதிஷ்டிரர் “ஆம், இன்னும் ஒரு நாழிகைக்குள் அந்தி முரசுகள் முழங்கத்தொடங்கிவிடும். அதுவரை நாம் தாக்குப்பிடிக்கவேண்டும்” என்றார். பின்னர் திரும்பி நகுலனிடம் “மந்தன் எங்கே?” என்றார். “அவர் இன்னும் களத்தில்தான் இருக்கிறார், மூத்தவரே” என்றான். “அவனுக்கு செய்தி தெரியாதா என்ன?” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் சற்று பொறுமையிழந்து, பின்னர் மீண்டு “செய்தியறியாத எவரும் இப்போது படையிலில்லை” என்றான். யுதிஷ்டிரர் “எனில் ஏன் அவன் இங்கு வரவில்லை? அவனுடைய இளையோன் மைந்தன் அல்லவா அபிமன்யு? இங்கு வந்து அவன் நின்றிருக்கவேண்டாமா?” என்றார்.

“அவர் படைமுகப்பில் நிற்பதே நன்று. அவரது உளநிலைக்கும் உகந்தது” என்று இளைய யாதவர் சொன்னார். “செல்லுங்கள், அரசே. தாங்களும் படைகளுக்குள்ளேயே நின்றுகொள்ளுங்கள். நான் தங்கள் இளையோனை பார்த்துக்கொள்கிறேன்.” யுதிஷ்டிரர் நகுலனையும் சகதேவனையும் நோக்கி “பார்த்துக்கொள்ளுங்கள். அவன் உள்ளம் எந்நிலையில் இருக்கிறதென்று நாம் அறிவோம். உடனிருப்பது நமது கடன்” என்றார். அவர்களிருவர் விழிகளிலும் தெரிந்த ஒன்று அவரை அச்சுறுத்த தன் விழிகளை விலக்கிக்கொண்டு இளைய யாதவரிடம் “நான் படைகளுக்குள் செல்கிறேன். அவர்கள் நம்மை பெருகிவந்து அறைந்தால் இன்றே போர் முடிந்துவிடும். நாம் முற்றழிவோம்” என்றார்.

இளைய யாதவர் “அவர்கள் நம்மை தாக்கவில்லை” என்றார். “ஏன்?” என்று யுதிஷ்டிரர் திகைப்புடன் கேட்டார். “அவர்களே தயங்கிவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. அவர்கள் தாக்குவதென்றால் இதற்குள் தாக்கியிருக்கவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம், நான் மேலிருந்து பார்த்தபோது இரு படைகளும் விலகி குருக்ஷேத்ரம் மீண்டும் தெளிவதையே கண்டேன்” என்றார் யுதிஷ்டிரர். “ஆனால் நான் அவர்கள் நம்மை தாக்குவார்கள் என்றே எண்ணினேன். ஏன் தயங்கினார்கள் என தெரியவில்லை. மைந்தனின் இறப்பால் நாம் சீற்றம்கொண்டிருப்போம் என அஞ்சியிருக்கலாம்.”

திரும்பி தன் புரவியிலேறிக்கொண்டு “செல்க!” என்றார். மீண்டும் அவருடைய இந்திரப்பிரஸ்த வில்லவர்படை நடுவே வந்து சேர்ந்தார். அங்கே ஆணைகளை இட்டபடி நின்றிருந்த சாத்யகியிடம் “என்ன நிகழ்கிறது?” என்றார். “அவர்களின் படை விலகி ஒருங்கமைவு கொள்கிறது” என்றான் சாத்யகி. “அவர்கள் பெருகிவரக்கூடும்” என்றார் யுதிஷ்டிரர். “பெருகி வந்து பிறிதொரு தாக்குதலை நடத்த இன்னும் பொழுதில்லை. அந்தி மங்கிக்கொண்டிருக்கிறது” என்று சாத்யகி சொன்னான். “என்ன நிகழ்கிறது? ஏன் அவர்கள் தயங்குகிறார்கள்? நாம் சீற்றம் கொண்டு போரிடுவோம் என்று அஞ்சிவிட்டார்களா?” சாத்யகி “அவர்களும் துயருற்றிருக்கலாம்” என்றான். “ஏன்?” என்றார் யுதிஷ்டிரர். “அரசே, அபிமன்யு துரியோதனரால் தோளிலிட்டு வளர்க்கப்பட்ட மைந்தன்.” யுதிஷ்டிரர் அவனை ஒருகணம் நோக்கிவிட்டு மீண்டும் தன் புரவியிலேறிக்கொண்டு “செல்க!” என்றார். காவலன் அவரை தெற்குக் காவல்மாடத்தருகே கொண்டு சென்றான். அதன் மேல் ஏறிக்கொண்டிருக்கையில் அன்றைய போர் முடிந்துவிட்டது என்று அவருக்குத் தோன்றியது.

காவல்மாடத்தில் நின்று படைகளை பார்த்தபோது இரு படைகளும் முற்றாக சூழ்கை அமைத்து மீண்டு ஒன்றை ஒன்று நோக்கி நின்றிருக்க நடுவே குருக்ஷேத்ரம் வெறித்திருப்பதை யுதிஷ்டிரர் கண்டார். அதில் கொல்லப்பட்டவர்களும் புண்பட்டவர்களும் உடைந்த தேர்களும் புரவிகளுமாக உடல்கள் நெளிய சிற்றலையெழும் ஏரிப்பரப்புபோல தோன்றியது அந்நிலம். இடையில் கைவைத்தபடி அவர் அதை பார்த்துக்கொண்டிருந்தார். அவரருகே நின்ற ஏவலனிடம் “மந்தன் என்ன செய்கிறான்?” என்றார். “சற்று முன்பு வரை அவர் போர்புரிந்துகொண்டிருந்தார். அவரால் பால்ஹிகரை கடக்க இயலவில்லை. நமது முழுப் படையும் பின்னடைந்தபோது கதை தாழ்த்தி மையச்சூழ்கையுடன் வந்து இணைந்துகொண்டார்” என்றான். “ஆம், இன்றைய போர் இத்துடன் முடிந்தது” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.

தொலைவில் அந்தியை அறிவிக்கும் முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. யுதிஷ்டிரர் சற்று ஆறுதல் கொண்டு நீள்மூச்செறிந்தார். “இன்று பேரழிவில்லாமல் நாம் தப்பியது நல்லூழ் என்றே சொல்லவேண்டும்” என்றார். அந்திமுரசுக்குப் பின்னரும் இரு தரப்புப் படையினரும் கலையாது அசையாது அவ்வாறே நின்றிருந்தனர். படைகள் பின்னடையலாம் என்பதை அறிவிக்கும் முரசுகள் முழங்கத் தொடங்கிய பின்னரும் இரு படைகளும் கலையவில்லை. பின்னர் கௌரவப் படை உருகி மடிந்து உருவழிந்து வற்றி மறைவதுபோல் திரும்பத் தொடங்கியது. அவ்வசைவைக் கண்ட பின்னர் பாண்டவப் படைகளும் பின்னகரலாயின.

ele1யுதிஷ்டிரர் அவைக்குள் நுழைந்தபோது வாழ்த்தொலிகள் எழவில்லை. அவையோர் எழுந்து நின்ற உடையசைவுகளும் அணியசைவுகளும் மட்டுமே எழுந்தன. அவர் எவரையும் நோக்காது கைகூப்பி வணங்கிவிட்டு தன் பீடத்தில் அமர்ந்தார். இளைய யாதவரும் அர்ஜுனனும் வரவில்லை என்பதை பார்த்த பின் திரும்பி சகதேவனிடம் அவை தொடங்கலாம் என்பதை அறிவுறுத்த கையை காட்டினார். சகதேவன் அவைமுறைமையை அறிவித்ததும் குந்திபோஜர் எழுந்து “அரசே, இன்று நாம் இப்போர் தொடங்கிய நாளிலிருந்து நமக்கு நிகழ்ந்த பேரிழப்பொன்றை அடைந்திருக்கிறோம். நம் படைகள் அனைவருமே உளம் தளர்ந்திருக்கிறார்கள். பீஷ்மரை வென்றபோது நாம் அடைந்த அனைத்து ஊக்கங்களையும் இழந்து இப்போர் இனி தொடரத்தான் வேண்டுமா என்ற எண்ணத்தை அடைந்திருக்கிறோம்” என்றார்.

அவையில் பெருமூச்சுகள் எழுந்தன. குந்திபோஜர் “நம் இளையோன் அபிமன்யு அர்ஜுனனின் மைந்தன் மட்டுமல்ல. இந்தக் குலத்தின் மாபெரும் வீரன் அவனே என்பதை நாமனைவரும் அறிவோம். என்றேனும் நம் வேள்விப்புரவிக்கு முன்னால் தனியாக வில்லுடன் அவன் செல்வான் என்று கனவு கண்டிருந்தோம். அவனது கால்படும் நிலமெல்லாம் நம் நிலமாகும் என்றும் அவனது குருதியில் குடி பெருகி பாரதவர்ஷத்தை நிறைக்கும் என்றும் எண்ணியிருந்தோம். அனைத்தையும்விட இந்தப் போர் வெல்ல நாம் நம்பியிருந்த முதன்மை பெருவீரர் மூவரில் ஒருவன் அவன். இவ்விழப்பை எதிர்கொள்ள நாம் என்ன செய்யவிருக்கிறோம் என்பதே இந்த அவையில் பேசவேண்டியது” என்றார்.

பீமன் கையைத் தட்டியபடி எழுந்து “அதற்கு முன் இந்த அவையில் பேச வேண்டிய ஒன்றுண்டு” என்றான். “இளையோனும் தனித்தோனுமாகிய அவனை மலர்ச்சூழ்கைக்கு உள்ளே செல்ல ஆணையிட்டது யார்? எந்தப் போர்நெறிகளைக் கொண்டு அவர் அதை செய்தார்?” யுதிஷ்டிரர் சினத்துடன் “ஆம், நான் அதை செய்தேன். அக்கணத்தில் அதை செய்தாகவேண்டுமென்று எனக்குத் தோன்றியது. அவர்களின் படைசூழ்கை திறந்து கிடந்தது. அதை மேலும் உடைத்து உள்புகுந்து வெல்ல இயலுமென்று கண்டேன். ஆகவே அவனை முதல் படைவீரன் என்று உள்ளே அனுப்பினேன். நீயும் அர்ஜுனனும் உடன் தொடர்வீர்கள் என்று நம்பினேன். நீங்கள் இவ்வாறு அங்கெங்கோ இருப்பீர்கள் என்று எண்ணவில்லை” என்றார்.

“உங்கள் மைந்தனை பின்தொடர முடியாத அளவிற்கு உங்களை தடுத்து நிறுத்துபவர்களை எதிரில் கொண்டிருக்கிறீர்கள் என்று சற்றும் கருதவில்லை. ஏனெனில் உங்களை மாவீரர்களென்றும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாதவர்களென்றும் கற்பனை செய்தேன். உங்களை நம்பினேன். மைந்தனை காக்கமுடியாதவர்கள் என அறிந்திருந்தால் அவ்வாறு செய்திருக்கமாட்டேன்” என்றார். “மூத்தவரே, படைசூழ்கை குறித்து எதுவும் அறியாதவர் நீங்கள். மலர்ச்சூழ்கை என்பது அதன் மையத்தில் இருக்கும் ஒன்றை நோக்கி எதிரியை ஈர்த்து உள்ளழைத்து மூடிக்கொள்வது. நீங்கள் கண்ட அந்த விரிசல் என்பது உண்மையில் பொறியின் வாய்திறப்பு. அதற்குள் பயிலா இளைஞனாகிய அபிமன்யுவை எப்படி அனுப்பினீர்கள்? அவனுக்கு அப்படைசூழ்கையை உடைத்து வெளிவரத் தெரியுமா என்பதை அறிந்தீர்களா? முதலில் அப்படைசூழ்கை என்றால் என்னவென்று அறிந்தீர்களா?” என்றான் பீமன்.

யுதிஷ்டிரர் “படைசூழ்கைகளை அறிந்தவர்கள்தான் இங்கு போரிடுகிறார்களா? நான் போர்க்கலை அறியேன். நான் நெறியறிந்தவன் மட்டுமே. போர்க்கலை அறிந்தவன் அவன் என்று சூதர்கள் பாடுகிறார்கள். நான் அவனை சூதர் சொல் வழியாக மட்டுமே அறிவேன். அவனுக்கு வெளிவரத் தெரியாதென்று எனக்கு எப்படி தெரியும்?” என்றார். குந்திபோஜர் “சூழ்கைகளிலிருந்து வெளிவருவது முற்றிலும் வேறு கலை. அதை பொதுவாக இளையோர் ஆழ்ந்து கற்று நினைவில் கொள்வதில்லை. எங்கும் வென்றுமீளமுடியும் என்று மட்டுமே அவர்கள் எண்ணுகிறார்கள். வெளிவரும் முறையை கற்ற இளைஞர் எவருமில்லை. ஐயமிருந்தால் இந்த அவையிலேயே கேட்டுப்பாருங்கள்” என்றார். துருபதர் “ஆம், வெளிவரும் முறையை முதலிலேயே எண்ணிச்சூழ்ந்துவிட்டு உள்ளே செல்ல எண்ணுவது நடுஅகவை கடந்தவர்கள் மட்டுமே” என்றார்.

“அதை நான் அறியேன், அவனை மாவீரன் என எண்ணினேன்” என்றார் யுதிஷ்டிரர். பீமன் “அவனைக் கொன்றது நீங்கள். அப்பொறுப்பை நீங்கள் இந்த அவையில் ஏற்றுத்தான் ஆகவேண்டும்” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று சீற்றத்துடன் எழுந்த யுதிஷ்டிரர் உடனே உளம்தளர்ந்து அமர்ந்து “ஆம், அவனை மட்டுமல்ல, அஸ்தினபுரியின் படைகளுக்கு முன்னால் நெஞ்சு உடைந்தும் தலை சிதைந்தும் விழுந்த அத்தனை இளைஞர்களையும் கொன்றவன் நான்தான். அப்பொறுப்பை நான் ஏற்றாகவேண்டும். விண்ணவர் முன்னும் மூதாதையர் முன்னும் அதற்கான மறுமொழியை நான் உரைக்கவேண்டும். அப்பொறுப்பிலிருந்து நான் எவ்வகையிலும் விலகவில்லை” என்றார்.

“மழுப்பும் சொற்கள் தேவையில்லை. அரசரென்று நீங்கள் ஆணையிடுவது வேறு, படைத்தலைவன் என்று தாளா பொறுப்பை ஏற்று நீங்கள் ஆணையிட்டது பிறிதொன்று” என்று பீமன் சொன்னான். சகதேவன் “மூத்தவரே, இனி அப்பேச்சை வளர்ப்பதில் பொருளில்லை. பிழை நிகழ்ந்துவிட்டது. இழப்பு நம் குடிக்கே என்பதனால் நாம் அதை பொறுத்துக்கொள்வோம்” என்றான். “நம் அனைவருக்கும் அப்பிழையில் பொறுப்புண்டு. அரைநாழிகைப் பொழுது நீங்கள் முந்தி வந்திருந்தாலும் அபிமன்யுவை காத்திருக்க இயலும். இளையவரும் நீங்களும் தனித்தனியாக மலர்ச்சூழ்கையின் இதழ்களை தாக்கியதற்கு மாறாக ஒற்றைப்படையென்றாகி ஒரு புள்ளியில் தாக்கியிருந்தால் உடைத்து உட்புகுந்து அவனுக்கு துணை சென்றிருக்க இயலும். அதுவும் அத்தருணத்தில் உங்களுக்குத் தோன்றவில்லை.”

“போர் என்பது அரசர் சொன்னதுபோல் ஊழின் விளையாட்டே” என அவன் தொடர்ந்தான். “அனைத்தும் எண்ணி சூழ்ந்து இயற்றப்படுவதாகவே தோன்றும். எண்ணம் சூழ்ந்து இயற்றப்படுவதற்கு அப்பால் பிறிதொன்றே முடிவுகளை சமைக்கிறது என்பது பின்னர்தான் தெரியும்.” பீமன் “நான் சொல்விளையாட இங்கு வரவில்லை. இளையோன் எங்கும் தன்னை மறந்து பாய்ந்து நுழைபவன் என்பதை நாமனைவரும் அறிவோம். இந்தப் படைக்கு வந்தபோதே ஒவ்வொரு கணமும் உயிர்கொடுக்கத் துடிப்பவன் போலிருந்தான் அவன். அவனை முன்னிறுத்தலாகாதென்று நான் பலமுறை எண்ணினேன். ஒவ்வொரு முறையும் அவனுடன் இருபுறமும் சதானீகனும் சுருதசேனனும் நின்றிருக்க வேண்டுமென்று அறிவுறுத்தினேன். சுருதகீர்த்தியிடம் எப்போதும் அபிமன்யுவுடன் அமையவேண்டுமென்று ஆணையிட்டிருந்தேன்” என்று சொன்னான்.

அவன் குரல் இடறியது. “இன்று நாம் அவனை இழந்துவிட்டு நிற்கிறோம். நாம் மறுமொழி சொல்லவேண்டியது அர்ஜுனனிடமல்ல, பாண்டுவிடம், விசித்திரவீரியனிடம், சந்தனுவிடம் பிரதீபனிடம்.” அவன் குரல் குன்றி விம்மல் போலாகியது. “படைத்திறன் கொண்ட தந்தையரும் உடன்பிறந்தாரும் பெரும்படைத்திரளும் இருந்தும் தன்னந்தனியாக நின்று போரிட்டு தலையுடைந்து விழுந்தான் என் மைந்தன். ஆம், அதற்கு முதற்பொறுப்பை நானே ஏற்கிறேன். முதற்பொறுப்பை நானே ஏற்கிறேன்!” என்று அவன் ஓங்கி நெஞ்சில் அறைந்தான். முழங்கிய குரலில் வஞ்சினம் உரைத்தான்.

“இந்த அவையிலிருக்கும் அனைவரும் அறிக! என் மூதாதை அறிக! தெய்வங்கள் அறிக! இதற்குப் பிழைநிகராக நான் ஒரு பொழுதும் அரசஇன்பங்கள், களியாட்டுகள் எதிலும் இனிமேல் கலந்துகொள்வதில்லை. அரசனாகவோ அஸ்தினபுரியின் குடியாகவோ எந்தச் சிறப்பையும் சூடமாட்டேன். இனி என் வாழ்க்கையில் இன்னுணவையோ நல்லாடையையோ கொள்ளமாட்டேன். நான் இக்கணத்திலிருந்து வெறும் காட்டாளன் மட்டுமே. இது என் நோன்பு. இங்கிருந்து சென்ற பின் விண்புகுந்து என் மைந்தனிடம் சொல்கிறேன், பொறுத்தருள்க என்று. அவன் பொறுத்தருள்செய்த பின்னரே என் மூதாதையரிடம் சென்று நிற்பேன்.” உடல் நடுங்க சில கணங்கள் நின்றுவிட்டு பீமன் எடையுடன் பீடத்தில் அமர்ந்தான்.

அவை முழுக்க மெல்லிய அழுகை நிறைந்திருந்தது. யுதிஷ்டிரர் நிலைகுலைந்தவர்போல தன் பீடத்தின் கைகளை தடவிக்கொண்டிருந்தார். தலையை அசைத்தபடி தனக்குள் பேசியபடி எக்கணமும் எழுந்து அகன்றுவிடுவார் என்று உடல் கூடியபடியும் இருந்தார். சகதேவன் “நாம் இங்கு துயரை பரிமாறுவதற்காக கூடியிருக்கவில்லை. இழப்பு பெரிதே. அதை நாமனைவருமே நன்குணர்ந்துமிருக்கிறோம். இனி படைசூழ்கை அமைத்து இப்போரை வெல்வதொன்றே நம் இலக்கு. இறந்த மைந்தனுக்கு நாம் ஆற்றும் கடன் இப்போரை வென்று முன்னெழுவதே” என்றான்.

திருஷ்டத்யும்னன் “ஆம், இந்த இழப்பிலிருந்து இரு மடங்கு விசையுடன் நாம் எழுந்தாகவேண்டும். நாளை நாம் சோர்ந்து தளர்ந்து இருப்போம் என்று எண்ணி அவர்கள் வருகையில் ஏழு முறை தீட்டப்பட்ட வாள் போல் நமது படை எழுந்து நின்றாகவேண்டும். அது ஒன்றே நாம் இயற்றவேண்டியது. விண்ணில் நின்று அவன் நம்மை நோக்குகிறான் என்றால் அவன் உளம் மகிழ்வது அதன்பொருட்டாகவே இருக்கும்” என்றான். அவையினர் “ஆம்! ஆம்!” என்றனர். சாத்யகி “நாம் வென்றாகவேண்டும். அவர்களின் நெஞ்சை மிதித்து நின்று இளவரசனை நினைவுகூர்ந்தாகவேண்டும்” என்றான். “ஆம்! ஆணை! பழிநிகர் செய்யவேண்டும்!” என அவை முழக்கமிட்டது.

யுதிஷ்டிரர் சகதேவனை நோக்கி “இளையோனே, அபிமன்யு களம்படுதலை இங்கு அறிவித்தபோது இயல்பாக உன் நாவில் எழுந்தது பீஷ்மர் படுகளத்திற்குப் பின் இது நிகழ்ந்துள்ளது என்று. உன்னை அறியாமலேயே இணைவைத்துவிட்டாய். ஏனென்றால் அதுவே மெய். அவர்கள் தரப்பில் பிதாமகர் அவ்வாறு களம் விழுவாரெனில் நம் தரப்பில் ஒரு மைந்தன் ஏன் இவ்வண்ணம் விழலாகாது? துலாவின் தட்டில் நாமும் ஈடுவைத்துவிட்டோம். இப்போது இருதரப்பும் நிகராகிவிடும். புதிதென நாளை போரை தொடங்குவோம்” என்றார்.

பீமன் பெருத்த ஓசையுடன் பீடம் நகர்ந்து பின்னால் சரிந்து விழ எழுந்து கையை வீசியபடி அவையிலிருந்து வெளியே சென்றான். அவன் நடந்து அகல்வதை யுதிஷ்டிரர் அடக்கப்பட்ட சீற்றத்துடன் பார்த்திருந்தார். பின்னர் எதுவும் நிகழாததுபோல் திரும்பி அவையினரிடம் “நாம் இயற்றவேண்டுவதென்ன என்பதை சூழ்க!” என்றார்.

நூல் இருபது – கார்கடல் – 39

ele1நாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை பார்க்கிறேன். உறுதியான ஓர் எண்ணம் மலரை உலோகமென்றாக்கும் என்பதை அறிந்தேன். மலர்ச்சூழ்கைக்குள் பாண்டவ இளையோனாகிய அபிமன்யு முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்து கௌரவர்களின் பெருவீரர்கள் அனைவரும் குலைத்த வில்லுடன் நிறைந்த ஆவநாழியுடன் வந்து வளையமென்றானார்கள்.

நெடுநேரம் என்ன நிகழ்கிறதென்று அபிமன்யுவுக்கு புரியவில்லை. வெறிகொண்டு அம்பு தொடுத்து அவன் துரோணரை பின்னடையச் செய்துகொண்டிருந்தான். துரோணருக்கு உதவ வந்த கர்ணனையும் அவன் தன் அம்புகளால் எதிர்கொண்டான். கர்ணனின் தேரிலறைந்து அதன் பொற்பூச்சுத் தகடுகளை நெளியவைத்த தன் அம்புகள் அவனை மேலும் மேலும் வெறி கொள்ளச் செய்தன. கர்ணனின் தேர் நீரில் மூழ்கும் கலம் என கௌரவப் படைக்குள் பின்னடைவதை அவன் தன் வில்திறனின் வெற்றியென்றே கருதினான். சூதர்களின் சொற்கள் அவனுள் எழுந்தன. என்றும் வாழும் காவியங்களை அவன் இளைய உள்ளம் நேர்முன் எனக் கண்டது.

கர்ணனை மறு எல்லை வரை கொண்டு சென்று வீழ்த்தும்பொருட்டு பேரம்பொன்றை எடுத்தபோதுதான் தன்னைச் சூழ்ந்து கௌரவர்களின் அனைத்து முதன்மை வில்லவர்களும் நாணேற்றிய வில்லுடன், சினமெழுந்த கண்களுடன் நின்றிருப்பதை பார்த்தான். சிக்கிக்கொண்டுவிட்டோம் என்று உணர்ந்ததும் அவனுள் முதலிலெழுந்தது ஒரு களிப்புதான். பிற எவருக்கும் நிகழாத ஒன்று தனக்கு நிகழ்ந்துள்ளது. ஆயிரம் பல்லாயிரம் வருடங்கள் சூதரும் புலவரும் சொல்லி விரிக்கும் தகைமை கொண்ட ஒன்று. அக்களத்தில் பொருதி வீழ்ந்த பல்லாயிரவரில் ஒருவனாக அன்றி எப்போதும் தனித்தவனாக அவனை ஆக்கும் ஒன்று. உரக்க நகைத்தபடி அவன் கூவினான் “வருக! கௌரவ வில்லவர் அனைவரும் வருக! வில்லென்றால் என்னவென்று நோக்கி அறிக!”

அவன் தன் அம்புகளால் அவர்கள் அனைவரையும் மாறி மாறி எதிர்த்தான். நூறு கைகள் எழுந்து வந்ததுபோல். தன் மூதாதையைப்போல் உடல் முழுக்க விழி பெருகியவன்போல். நூறு அம்புகள் ஒரே தருணம் எழுந்து அவன்மேல் பாய சூழ்ந்து அணுகிய ஒவ்வொரு அம்பையும் தனித்தனியாக நோக்கினான். ஒரே கணத்தில் பல அம்புகளை அறைந்து வீழ்த்தினான். அவன் திறனின் உச்சத்தைக் கண்டு சூழ்ந்திருந்த கௌரவப் பெருவீரர்கள் திகைப்பும் பின் அச்சமும் அடைந்தனர். அர்ஜுனனுக்கு வைத்த பொறியில் அவன் வந்து சிக்கிக்கொண்டது அவர்களுக்கு முதலில் அளித்த ஏமாற்றத்தை அந்த அச்சம் போக்கியது. அத்தருணத்தில் அவனை அவ்வாறு வீழ்த்தாவிடில் அந்தப் போர் ஒருபோதும் முடிவடையப்போவதில்லை எனும் உணர்வை அங்கிருந்த அனைவருமே அடைந்தனர்.

அபிமன்யு சல்யரின் வில்லை உடைத்தான். பூரிசிரவஸின் தலைக்கவசமும் உடல்கவசமும் உடைந்து தெறித்தது. அவன் தன் தேரை பின்னிழுத்து கவசவீரர்களுக்கிடையே மறைந்துகொண்டான். துரியோதனன் வெறிக்கூச்சல் இட்டபடி எழுந்து வர அவன் கவசத்தை உடைத்து தோளில் மூன்று அம்புகளால் அறைந்து தேர்த்தட்டில் நினைவிழந்து விழச்செய்தான். கௌரவ மைந்தராகிய குபந்தனும் கேரகனும் கேதுவும் கௌசலனும் க்ஷமகனும் க்ஷுபனும் குரோதகனும் கும்பனும் கந்தகனும் கணகனும் கஜகர்ணனும் கர்பனும் காத்ரனும் அவன் அம்புகள் பட்டு தேர்த்தட்டுகளிலிருந்து அலறி வீழ்ந்தனர். மைந்தர்கள் இறப்பதைக் கண்டு துரியோதனன் “அங்கரே, இவனை வீழ்த்த உங்களால் மட்டுமே இயலும்” என்று கூச்சலிட்டான். கர்ணன் தன் வில்லின் நாணை இழுத்து முரலல் ஒலியெழுப்பியபடி அபிமன்யுவை நேர்நின்று எதிர்த்தான். நாகபாசனின் தேருக்குப் பின் ஆயிரம் தலையுடன் சேடன் எழுந்ததுபோல் நாகர்படை பொங்கி வளைந்து அலைநிலைத்ததுபோல் நின்று, நா பறக்க, விழி ஒளிர ததும்புவதை நான் கண்டேன். ஆனால் அபிமன்யு எதையுமே காணவில்லை. அவன் நோக்கியதெல்லாம் துள்ளும் விஜயத்தை, அதிலேறி காற்றிலெழும் அம்புகளை மட்டுமே.

கர்ணன் அபிமன்யுவை சூழ்கைக்கு உள்ளிழுக்கையில் ஊமைச்சீற்றம் கொண்டிருந்தான். அது அபிமன்யு மீதான சினமல்ல, தன் மீதான சினமும் அல்ல, இலக்கின்றி ஒவ்வொரு கணமும் உருமாறும் கசப்பு. எங்கு விழி படுகிறதோ அதன்மீது முழு நஞ்சையும் உமிழும் பொருமல். அபிமன்யு அவனை அறைந்து அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருக்கையில் ஒருகணம் அவன் அம்பினால் தன் நெஞ்சக்கவசம் உடைந்து உயிர் அகலக்கூடுமெனில் நன்றே எனும் எண்ணம் அவனில் வந்துசென்றது. பின் எங்கெங்கோ இருந்து முகங்கள் எழுந்து அவனை சூழ்ந்தன. இளிவரல்கள், அறைகூவல்கள், பின்னர் துளித்த ஒரு துளி விழிநீர். தன் சீற்றத்தை திரட்டிக்கொள்ள அவன் முயன்றான். ஆனால் நெஞ்சிலெழுந்த விசை விஜயத்தை சென்றடையவில்லை.

முற்றிலும் அபிமன்யு சூழ்ந்துகொள்ளப்பட்டதும் கர்ணன் திகைத்தவன்போல் வில்லைத் தாழ்த்தி தேர்த்தட்டில் வெறுமனே நின்றான். பூரிசிரவஸும் சல்யரும் கிருபரும் துரோணரும் இணைந்து அவனைத் தாக்க மலர்சூழ்கை ஒரு பெரும் நீர்ச்சுழியென சுழல அதன் மையத்தில் விசைகொண்டு தன்னைத்தான் சுற்றியபடி அவன் போரிடுவதை வெறித்து நோக்கியபடி அவன் நின்றான். “தாக்குக! நம் மைந்தருக்கு பழிநிகர் செய்க! அவன் மானுடனே அல்ல! குருதிப்பலி ஆடும் கொடுந்தெய்வம்” என துரியோதனனின் ஆணையை அவன் கேட்டான். ஆயினும் அவனால் கை தூக்க இயலவில்லை.

அவனுக்கு வலப்பக்கம் தேர்த்தூணில் உடல் சுழற்றி எழுந்தது கார்க்கோடகன் எனும் நாகம். “எழுக உன் நஞ்சு! எழுக உன் கூர்வாளி!” என்று அது கர்ணனிடம் சொன்னது. “மாநாகனே, அறிக! உமிழப்படாத நஞ்சு மணியென்றாகும். மணி வெறும் ஒளி மட்டுமே. உமிழப்படுகையிலேயே நஞ்சு பொருள்கொள்கிறது” என்று அது கூறியது. இடப்பக்கம் எழுந்தது அஸ்வமுகன் எனும் பெருநாகம். “கொல் அவனை! ஒவ்வொரு கணமும் நீ இழந்தவை அனைத்திற்கும் நிகரென இப்பழியை கொள்! இங்கு ஒருமுறையேனும் முழுமையாக வெல்! கொல் அவனை! கொல்!” என்று அறைகூவியது. நாகங்கள் அவனைச் சூழ்ந்து திளைத்து “கொல்! கொல்! கொல்!” என்றன. “ஆயிரம் பாறைகளில் அறைந்து சிதறிய அலை பின்வாங்குகையிலேனும் விசைகொண்டாக வேண்டும். நாகனே, கதிரவன் மைந்தனே, இத்தருணத்தில் எழுக உன் விசை! இப்போதெழுக உன் சீற்றம்!” என்றது அஜமுகன் என்னும் மாநாகம்.

கர்ணனின் கையிலிருந்து விஜயம் தயங்கியது. அத்தருணம் தேர் திரும்ப உரக்க நகைத்தபடி ஒருகணம் அவனை நோக்கிய அபிமன்யுவில் இளைய அர்ஜுனன் தோன்றி மறைந்தான். சீற்றம்கொண்டு தன் நாணை இழுத்து அம்புகளால் அபிமன்யுவை அறைந்தான். மேலும் மேலுமென அறைந்து அபிமன்யுவின் தோள்கவசங்களை உடைத்தெறிந்தான். அவன் நெஞ்சக்கவசம் உடைந்து தெறித்தது. வில் அறுந்தது. தேரிலிருந்து அவன் பாய்ந்திறங்கிய கணம் புரவிகள் கழுத்தறுபட்டு சரிந்தன. கவிழ்ந்த தேருக்குப் பின்னால் பாய்ந்திறங்கி விழுந்து கிடந்த வீரனொருவனின் வில்லை எடுத்து அபிமன்யு அவர்களை எதிர்கொண்டான்.

ele1இடும்பர்களின் மலையில் வெறியாட்டெழுந்து நெஞ்சில் அறைந்து துள்ளிச் சுழன்றெழுந்து பார்பாரிகன் சொன்னான். இதோ நான் மலர்ச்சூழ்கையின் நடுவே நின்று அந்த இளையவனை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவன் கைகளில் எழுவது தன்னை மட்டுமே எண்ணி முழுவாழ்வையும் நிகழ்த்திய ஒருவனில் மட்டுமே எழும் பேராற்றல். ஆணவம் கூர்த்து முனை கொண்டு சூடிய ஒளி. எவ்வுணர்வும் உச்சமடைகையில் அது தெய்வங்களுக்குரியதாக ஆகிறது. அவன் போரிடுவதைக் காண வெண்ணிற முகில்களிற்றின்மேல் இந்திரன் வந்திறங்கினான். தேவர்கள் முகில்கள் தோறும் பெருகினர். முகில்கள் செறிந்து வான் இருண்டது. கீழ்ச்சரிவில் இடியோசையும் மின்னலுடன் எழுந்தது.

கை பெருகி சித்தம் ஒன்றென்றாகி நின்று அவன் போரிடுகையில் சூழ்ந்திருந்த கௌரவ வீரர்கள் ஒவ்வொருவரும் காற்றெரியில் சுழன்று பதறி பறக்கும் பறவைகள்போல் அலைமோதினார்கள். உடன்வந்த பாஞ்சால வீரர்கள் அனைவரும் கொன்றொழிக்கப்பட அபிமன்யு தன்னந்தனியனாக நின்று போரிட்டான். அவன் அம்புகள் பட்டு சுபலரின் ஏழு படைத்தலைவர்கள் தேர்த்தட்டுகளில் விழுந்தனர். துரியோதனன் தன்னெதிரே தழலென ஆடி நின்றிருந்த அர்ஜுனனை பார்த்தான். நடுங்கும் கைகளுடன் தேரில் அமர்ந்திருந்தான். அவனுக்கு இருபுறமும் துச்சகனும் துச்சாதனனும் வில் சோர தேரில் பின்னடைந்துகொண்டிருந்தனர்.

கோசலமன்னன் பிருஹத்பலன் தன் தேரிலிருந்து வில்லுடன் பாய்ந்திறங்கி “இந்தக் கணத்திற்கென்றே வாழ்ந்தேன், பாண்டவனே” என்று கூவியபடி அபிமன்யுவை நோக்கி சென்றான். உடைந்த அம்புகளில் சிலவற்றை பொறுக்கியபடி எழுந்த அபிமன்யு நாண் தளர்ந்த வில்லுடன் அவனை எதிர்த்தான். அவர்களிடையே போர் தொடங்கியதுமே அது நிகர்நிலையில் இல்லை எனத் தெரிந்தது. “செல்க, கோசலனை காத்துநில்லுங்கள்!” என்று துரியோதனன் கூவினான். பிருஹத்பலன் அபிமன்யுவின் வில்லை உடைத்தான். எஞ்சிய ஒற்றை அம்புடன் அவன் தேர்ச்சகடம் ஒன்றுக்கு அடியில் பதுங்கினான். கர்ணன் நாண்குலைத்தபடி தேரில் அபிமன்யுவை நோக்கி வருவதற்குள் அருகில் உடைந்து கிடந்த தேர் ஒன்றின் மேல் பாய்ந்தேறிய அபிமன்யு அந்த ஒற்றை அம்பை வீசி பிருஹத்பலனின் கழுத்துநரம்பை வெட்டினான். பொத்திய விரல்களின் நடுவே குருதி கொப்பளித்து எழ, வாய் கோணலாகி, கால்கள் குழைய பிருஹத்பலன் களத்தில் விழுந்தான்.

“அவன் மானுடனல்ல. ஏதோ போர்த்தெய்வம் அவன் உடலில் இறங்கியிருக்கின்றது” என்று துச்சகன் கூவினான். “மூத்தவரே, இளைய பாண்டவனில் குடியிருக்கும் ஒன்று ஏழு மடங்கு விசையுடன் இவனில் எழுந்துள்ளது. நம்மால் இவனை வீழ்த்த இயலாது” என்று துச்சாதனன் சொன்னான். தன் வில்லை எடுத்து அம்பால் அவனை அறைவதற்கான ஆற்றலை முற்றாக இழந்து அமர்ந்திருந்தான் துர்மதன். கர்ணனின் அம்புகளால் தேரிழந்து வெறுந்தரையில் நின்றிருந்த அபிமன்யு வீழ்ந்துகிடந்த ஒருவனின் வில்லை தரையிலிருந்து எடுத்து கீழே உதிர்ந்திருந்த அம்புகளை பொறுக்கி எய்தான். அவ்வில்லை அஸ்வத்தாமனின் அம்பு உடைக்க பாய்ந்து தேருக்கடியினூடாக மறுபக்கம் சென்று பிறிதொரு வில்லை மண்ணிலிருந்து எடுத்து போரிட்டான். தன்னைச் சூழ்ந்து பறக்கும் ஒவ்வொரு அம்புக்கும் நெளிந்தும் ஒளிந்தும் தப்பி மேலும் மேலும் விழுந்த அவர்களின் அம்புகளைப் பொறுக்கி அவன் போரிட்டான்.

துரியோதனன் ஒருகணத்தில் “நிறுத்துங்கள்! போதும் இப்போர்!” என்று கூவினான். “மூத்தவரே…” என்று துச்சாதனன் கூவினான். துரியோதனன் கைகளை வீசி “போதும்… அவனை போகவிடுங்கள்… வேண்டாம்!” என ஆணையிட்டான். அவன் குரல் எழுந்த அக்கணத்திலேயே அபிமன்யுவை நோக்கி உருவிய வாளுடன் லக்ஷ்மணன் பாய்ந்தான். “நில்! வேண்டாம், நில்!” என்று துரியோதனன் கூவினான். லக்ஷ்மணன் அபிமன்யுவுடன் வாள் முட்டி போரிடத் தொடங்கியபோது எழுந்த ஓசையில் அந்தக் குரல் மறைந்தது. அவர்கள் இருவரும் வெறிகொண்ட உச்சத்திலிருந்து உச்சத்திற்கு எழுந்து போரிட்டனர். அபிமன்யுவின் வாள் விசையும் சுழற்சியும் கொண்டிருந்தது. லக்ஷ்மணனின் வாள் எடையும் நீளமும் கொண்டிருந்தது. அபிமன்யுவின் வாளை லக்ஷ்மணனின் வாள் உடைத்தது. அக்கணமே நிலத்தில் விழுந்து அதே விசையில் உடைந்த வாளை வீசி லக்ஷ்மணனின் கழுத்தை அறுத்தான் அபிமன்யு. தலை அறுபட்டு பக்கவாட்டில் தொங்க நிலத்தில் தோள் அறைந்து விழுந்து கால்களை உதைத்துக்கொண்டு துள்ளியது லக்ஷ்மணனின் உடல்.

துரியோதனன் ஓசையற்ற, காட்சிகள் ஏதுமற்ற வெட்டவெளி ஒன்றின் சுழிமையத்தில் என தன்னை உணர்ந்தான். எண்ணங்களும் சுழித்து ஒற்றைச் சொல்லென்றாயின. அவன் விழிகளும் வாயும் திறந்திருக்க தலை நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் உடல் பக்கவாட்டில் சரிய அருகிருந்த ஆவக்காவலன் அவனை பற்றிக்கொண்டான். துச்சாதனன் நெஞ்சில் ஓங்கி அறைந்துகொண்டு “கொல்லுங்கள்! விடாதீர்கள்! ஒவ்வொருவரும் களமிறங்குங்கள். இன்று இவன் குருதி கொள்ளாது இப்போர் முடிவுறாது” என்று கூவினான். கிருபரும் துரோணரும் கர்ணனும் அஸ்வத்தாமனும் பூரிசிரவஸும் சல்யரும் சேர்ந்து அபிமன்யுவின் மேல் அம்புகளால் அறைந்து அறைந்து அவனை நிலத்தில் புரட்டினர். உடலெங்கும் அம்புகளுடன் முள்ளம்பன்றிபோல அவன் பாய்ந்து தேருக்கு அடியில் பதுங்கிக்கொண்டு அங்கிருந்து அம்புகளை எடுத்து வீசி காந்தாரத்து போர்வீரர்களை கொன்றான். துரியோதனனின் அணுக்கனான பிருந்தாரகன் கழுத்தின் நரம்பை வெட்டிய அம்பினால் வீழ்த்தப்பட்டு தேர்த்தட்டிலிருந்து சரிந்தான்.

அப்பால் மலர்ச்சூழ்கைக்கு வெளியே பீமன் தலைமைகொண்ட பாண்டவர்களின் படையின் கட்டைவிரல் அர்ஜுனன் நடத்திய சுட்டுவிரலுடன் இணைந்து தாமரையின் பின்பக்கம் பெரும் விசையுடன் அறைந்து சிதறடித்துக்கொண்டிருந்தது. அங்கு நின்றிருந்த காலாட்படையினர் பீமனின் கதையாலும் அர்ஜுனனின் அம்புகளாலும் செத்து உதிர்ந்துகொண்டிருந்தனர். ஆனால் ஒழியாது மேலும் மேலும் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருந்த அவர்களின் எண்ணிக்கை அவர்களிருவரையும் தடுத்து நிறுத்தியது. வைக்கோற்போரில் முட்டும் யானை என பீமன் ஆற்றலிழந்தான். உதிரும் இலைகளை, சருகுகளை சலிக்காது அம்புகளால் வீழ்த்துவதுபோல் உணர்ந்து அர்ஜுனன் சீற்றம் கொண்டான்.

“கணம் ஒழுகிக்கொண்டிருக்கிறது. இன்னும் சற்று பொழுது. நாம் இதை உடைத்து அவனை மீட்டாக வேண்டும்” என்று திருஷ்டத்யும்னனின் ஆணை ஒலித்தது. “இன்னும் சில பொழுது! இந்தப் படைக்கோட்டையை உடைத்தாகவேண்டும்! இன்னும் சற்றே பொழுது!” என்று முரசுகள் பதறி ஓலமிட்டன. “ஜயத்ரதனும் கிருதவர்மனும் மலர்ச்சூழ்கையை காத்துக்கொள்க! செல்க! மலர்ச்சூழ்கையை காத்து நிலைகொள்க!” என சகுனியின் ஆணை எழுந்தது. சிந்துநாட்டுப் படைகளின் இதழின் முகப்பிலிருந்து பின்னணிக்குச் சென்று ஜயத்ரதனும் கிருதவர்மனும் அர்ஜுனனை எதிர்த்து நின்றனர். இருபுறத்திலிருந்தும் எழுந்த அம்புகளை அர்ஜுனன் தடுத்து போர்புரிந்தான். சகுனியின் ஆணைப்படி பால்ஹிகர் தன் யானையில் ஏறிவந்து பீமனை தடுத்தார். அவனுடைய படைகளை அறைந்து சிதறடித்தார்.

அபிமன்யு அனைத்துப் படைக்கலங்களையும் இழந்து தரையில் நிற்பதை துரியோதனன் கண்டான். “இது நற்போரல்ல! நான் படைக்கலமில்லாதிருக்கிறேன்! ஒரு வில்லும் அம்பும் எனக்கு கொடுங்கள்! ஒரு தேரை எனக்கு அளியுங்கள்! வீரனாகப் பொருதி உயிர்விட எனக்கு வாய்ப்பளியுங்கள்” என்று அபிமன்யு கூவினான். துரியோதனனை நோக்கி “தந்தையே, மைந்தனென உங்களிடம் நான் கோருவது ஒன்றுதான். ஒரு தேர்! ஒரு வில்! ஓர் ஆவநாழி” என்றான். துரியோதனன் மறுமொழி சொல்வதற்குள் துரோணர் தன் அம்பால் அவன் நெஞ்சை அறைந்தார். குருதி வழிய அவன் தெறித்து மண்ணில் விழுந்து உருண்டு எழுந்து நின்றான். “சொற்களை கேளாதீர்கள். அவனை கொல்லுங்கள்!” என்று துரோணர் கூவினார். “அவன் வில்லில் எழுந்தது தொல்லசுரர்களின் ஆற்றலென்பதை மறக்கவேண்டியதில்லை. கொல்லுங்கள் அவனை” என்றார்.

ele1காந்தாரியின் முன் அமர்ந்து தன் கைகளால் களத்தை அளைந்து சோழிகளை அகற்றியபடி ஒற்றை விழி உறுத்து நோக்கியிருக்க ஏகாக்ஷர் சொன்னார். துரோணரின் சொற்களை நான் கேட்கிறேன். அவரும் அதை பெரும் திகைப்புடன் கேட்கிறார். எங்கிருந்து அது எழுந்ததென்று அவரும் வியக்கிறார். ஆனால் சீற்றத்துடன் அம்புகளை ஏவியபடி தன்னந்தனியனாக அப்படை முன் நின்றிருந்த சிறுவனை அவர் தாக்கினார். பிற கௌரவ வீரர்கள் அனைவரும் வில் தாழ்த்தி திகைப்புடன் அவரைப் பார்த்து நின்றனர். துரியோதனன் தன் வில்லை மடிமேல் வைத்து இரு கைகளாலும் தலையைத் தாங்கி உடல் குறுக்கி அமர்ந்துவிட்டான். கண்களில் கண்ணீர் வழிய துச்சாதனனும், நோக்கை திருப்பி உடல் நடுக்குற துச்சகனும் நின்றிருந்தனர். கர்ணன் தன் வில்லில் கோத்திருந்த அம்புடன் வெறுப்பு நிறைந்த முகத்துடன் அந்நிகழ்வை பார்த்தான். எவரும் ஒரு சொல்லும் உதிர்க்கவில்லை.

மேலும் மேலும் வெறிகொண்டு வசைச்சொற்களை உதிர்த்தபடி துரோணர் அபிமன்யுவை அம்புகளால் அறைந்தார். அவன் தேருக்கு அடியில் ஒளிய அம்புகளால் அதன் சகடத்தை உடைத்து தெறிக்க வைத்து அவனை அடித்தார். அவன் புரண்டு தேர்த்தட்டுக்கு அடியில் சென்று மறைய அவருடைய அம்புகள் தேரையே உடைத்து தெறிக்க வைத்து அவனை வெளிக்கொணர்ந்து தாக்கின. உடலெங்கும் அம்புடன் அவன் மண்ணில் புரண்டு குருதி வழியும் முகத்துடன் கையூன்றி எழ முயன்றான்.

“நீ யார் அர்ஜுனனா? கீழ்மகனே, நீ அர்ஜுனனா என்ன?” என்று துரோணர் பற்களைக் கடித்தபடி கூவிக்கொண்டிருந்தார். “ஆசிரியனுக்கே கற்பிக்கிறாயா? நீ அசுரன். நீ அரக்கன்!” பின்னர் தன் வில்லை ஓங்கி தேர்த்தட்டில் வீசிவிட்டு இரு கைகளையும் விரித்து பீடத்தில் அமர்ந்தார். அபிமன்யு எழுந்து விழுந்துகிடந்த தேர்ச்சகடம் ஒன்றை எடுத்துக்கொண்டு துரோணரை தாக்கச் சென்றான். அதைக் கண்டு துரோணரின் முகம் வெறுப்பில் வலிப்பு கொண்டது. கைகள் நடுங்கின. ஆனால் அவர் வில்லை எடுக்கவில்லை. அஸ்வத்தாமன் பற்களைக் கடித்தபடி தன் வில்லில் அம்பு பொருத்தி நாணை இழுத்தான். அக்கணம் துரியோதனன் “வேண்டாம்… போதும்… நிறுத்துங்கள்… நிறுத்துங்கள் இதை!” என்று கூவினான்.

துச்சாதனன் “மூத்தவரே, நம் மைந்தனைக் கொன்றவன் இவன்” என்று கூச்சலிட்டான். “இவன் தலையை என் கைகளால் உடைக்கிறேன்” என்று அவன் பாய்ந்தபோது அவன் மைந்தன் துருமசேனன் “நில்லுங்கள் தந்தையே, மூத்தவருக்காக நான் முடிக்கவேண்டிய கணக்கு இது” என கதையுடன் அபிமன்யு மீது பாய்ந்தான். அபிமன்யு உடலெங்கும் தைத்து நின்று குருதிவீழ்த்திய அம்புகளுடன் தேர்ச்சக்கரத்தால் துருமசேனனை எதிர்த்தான். துருமசேனனின் அறைகள் பட்டு அந்த தேர்ச்சகடம் உடைந்தது. அறைபட்டு அபிமன்யு மண்ணில் விழுந்தான். துள்ளி அகன்றும் புரண்டும் அவன் கதையின் அறைகளை ஒழிந்தான்.

மலர்ச்சூழ்கைக்கு வெளியே ஜயத்ரதனின் வில்லை முறித்தபின் அர்ஜுனன் காண்டீபம் தாழ்த்தி உரத்த குரலில் “சைந்தவரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளுக்காக உளம்கொள்க! நீங்கள் சொன்ன சொற்களுக்காக என்னை விடுக!” என்றான். பின்னணியில் சகுனியின் முரசு “பொருதுக… பொருதுக!” என்று முழங்கியது. அர்ஜுனனை நோக்கி ஒருகணம் தயங்கிய ஜயத்ரதன் மாற்றுவில்லை வாங்கி அவன் மேல் மேலும் அம்புகளை தொடுத்தபடி முன்னேறி வந்தான். அவனை அறைந்து அறைந்து பின்னகரச் செய்துகொண்டிருந்த அர்ஜுனனின் கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்தது.

அபிமன்யு குருதிவழிய நிலைதடுமாறி கால்தளர்ந்து விழுந்தான். அவன் விழிகள் தளர்ந்து மூட கைகள் குழைந்தன. துருமசேனன் அவன் நெஞ்சின் மேல் கால் வைத்து “என் மூத்தவரின் குருதிக்காக இது” என்று கூவியபடி கதையால் அவன் தலையை ஓங்கி அறைந்து உடைத்தான். தலைகோப்பை உடைந்து அகல, வெண்கூழென தலைக்குள்ளிருந்து மூளை வெளிப்பட, கைகால்கள் விதிர்த்து இழுத்துக்கொள்ள அபிமன்யு தன் குருதியால் சேறான மண்ணில் கிடந்து புளைந்தான். அவன் வாயிலிருந்து ஏதோ சொல் எழுவதை கர்ணன் கூர்ந்து நோக்கினான். துருமசேனனும் குருதியும் நிணமும் வழிந்த தன் கதையைத் தாழ்த்தி முழந்தாளிட்டுக் குனிந்து அவ்வுதடுகளை பார்த்தான். ஒரு பெயர் சொல்லப்படுவதுபோல் தோன்றியது. அது என்னவென்று அவர்களால் உய்த்துணரக் கூடவில்லை.