முதற்கனல்

நூல் ஒன்று – முதற்கனல் – 50

பகுதி பத்து : வாழிருள்

[ 2 ]

வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து படமெடுத்தது. ஆயிரம் படங்களின் விசையால் அவன் உடல் முறுகி நெளிந்தது.

அவனருகே சென்று நின்ற தட்சகியான பிரசூதி ‘நானும்’ என்றாள். அவளுடைய உடலிலும் ஆயிரம் தலைகள் படமெடுத்தெழுந்தன. அவனுடன் அவள் இருளும் இருளும் முயங்குவதுபோல இணைந்துகொண்டாள். இருத்தல் என்னும் தட்சனும் பிறப்பு என்னும் பிரசூதியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது. திசையழிந்து பரந்த கருமையின் வல்லமைகள் முழுக்க அவர்களிடம் வந்து குவிந்தன. அடியின்மையின் மேலின்மையின் வலமின்மையின் இடமின்மையின் முன்பின்மையின் பின்பின்மையின் இன்மையின் மையத்தில் ஒன்பது யோகங்களாக அவர்கள் ஒன்றாயினர்.

முதல் யோகம் திருஷ்டம் எனப்பட்டது. தட்சனின் ஈராயிரம் விழிகள் தட்சகியின் ஈராயிரம் விழிகளை இமைக்காமல் நோக்கின. கண்மணிகளில் கண்மணிகள் பிரதிபலித்த ஈராயிரம் முடிவின்மைகளில் அவர்கள் பிறந்து இறந்து பிறந்து தங்களை கண்டறிந்துகொண்டே இருந்தனர். ஒருவர் இன்னொருவருக்கு மறைத்துவைத்தவற்றை பேருவகையுடன் முதலில் கண்டுகொண்டனர். தாங்கள் தங்களிடமே மறைத்துக்கொண்டதை பின்னர் கண்டுகொண்டனர். கண்டுகொள்வதற்கேதுமில்லை என்று அறிந்தபின் காண்பவர்கள் இல்லாமல், காணப்படுபவரும் இல்லாமல், கண்களும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தனர்.

இரண்டாம் யோகம் சுவாசம். தட்சனின் மூச்சுக்காற்று சீறி அவள் மேல் பட்டது. அதில் அவன் உயிரின் வெம்மையும் வாசனையும் இருந்தது. உடலுக்குள் அடைபட்ட உயிரின் தனிமையும் வேட்கையும் நிறைந்திருந்தது. அவளுடைய மூச்சு அந்த மூச்சுக்காற்றை சந்தித்தது. மூச்சுகள் இணைந்த இருவரும் விம்மி படம் அசைத்து எழுந்தனர். மூச்சிலிருந்து மூச்சுக்கு அவர்களின் உயிர்கள் தங்களை பரிமாறிக்கொண்டன.

மூன்றாம் யோகம் சும்பனம். தட்சன் முதலில் தன் பிளவுண்ட நாக்கின் நுனியால் தட்சகியின் நாக்கின் நுனியைத் தீண்டினான். பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் நீண்ட பெரும் சிலிர்ப்பு ஒன்று அவளுடைய உடலில் ஓடியது. இருளுக்குள் அவள் நீளுடல் இருளுடன் இறுகி நெகிழ்ந்து வளைந்து சுழித்து அலைகளாகியது. பின்பு ஆயிரம் நாவுகள் ஆயிரம் நாவுகளைத் தீண்டின. ஈராயிரம் நாவுகள் ஒன்றை ஒன்று தழுவித்தழுவி இறுக்கி கரைத்தழிக்க முயன்றன. இரண்டு பெருநாகங்கள் ஈராயிரம் சிறுசெந்நாக்குகளாக மட்டும் இருந்தன.

நான்காம் யோகம் தம்ஸம். தட்சன் தன் விஷப்பல்லால் மெல்ல தட்சகியின் உடலைக் கவ்வினான். விஷமேறிய அவள் உடல் வெறிகொண்டு எழுந்து உடனே தளர்ந்து வளைவுகளை இழந்து இருளில் துவண்டது. அவள் உடலின் முடிவில்லாத வளைவுகளில் அவன் பற்கள் பதிந்துசென்றன. பின்பு அவள் திரும்பி வளைந்து அவனுடலில் தன் பற்களைப் பதித்தாள். உண்பதும் உண்ணப்படுவதுமாக இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று அறிந்தன.

ஐந்தாம் யோகம் ஸ்பர்சம். அடியின்மையின் கடைசி நுனியில் தட்சனின் நுனிவால் துடிதுடித்து வளைந்தது. பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் அது நெளிந்து வளைந்து இருள்வானில் ஊசலாடியது. பின்பு அதன் நுனியின்நுனி தட்சகியின் வாலின் நுனியின் நுனியை மெல்லத் தொட்டது. அந்தத்தொடுகையில் அது தன்னை அறிந்தது. இரு நுனிகளும் முத்தமிட்டு முத்தமிட்டு விளையாடின. தழுவிக்கொண்டன விலகிக்கொண்டன. விலகும்போது தழுவலையும் தழுவும்போது விலகலையும் அறிந்தன.

ஆறாம் யோகம் ஆலிங்கனம். இரு பேருடல்களும் புயலைப் புயல் சந்தித்ததுபோல ஒன்றோடொன்று மோதின. இரு பாதாள இருள்நதிகள் முயங்கியது போலத் தழுவின. சுற்றிவளைத்து இறுகியபோது இருவர் உடலுக்குள்ளும் எலும்புகள் இறுகி நொறுங்கின. தசைகள் சுருங்கி அதிர்ந்தன. இறுக்கத்தின் உச்சியில் வெறியுடன் விலகி இரு உடல்களும் பேரொலியுடன் அடித்துக்கொண்டன. தலைகள் கவ்வியிருக்க இரு உடல்களும் இரு திசைகளில் நகர்ந்து கோடானுகோடி இடிகள் சேர்ந்தொலித்ததுபோல அறைந்துகொண்டன. அந்த அதிர்வில் மேலே மண்ணுலகில் பூமி பிளந்து சுவாலை எழுந்தது. மலையுச்சியின் பெரும்பாறைகள் சரிந்திறங்கின.

ஏழாம் யோகம் மந்திரணம். தழுவலின் உச்சியில் இருவரும் அசைவிழந்தபோது தட்சகன் அவள் காதில் மெல்லிய காதல்சொற்களை சொல்லத்தொடங்கினான். அக்கணத்தில் பிறந்துவந்த மொழியாலான சொற்கள் அவை. அவன் சொல்லி அவள் கேட்டதுமே அம்மொழி இறந்து காற்றில் மறைந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு மொழி அவ்வாறு உருவாகி மறைந்துகொண்டிருந்தது. தன் அனைத்துச் சொற்களையும் சொல்லிமுடித்தபின்பு சொல்லில்லாமல் நின்ற தட்சன் சொல்லாக மாறாத தன் அகத்தை முடிவிலியென உணர்ந்து பெருமூச்சுவிட்டான். அவளோ அவனுடைய இறுதிச் சொற்களையும் கேட்டவளாக அப்பெருமூச்சை எதிரொலித்தாள்.

எட்டாம் யோகம் போகம். பாதாளத்தின் இருளில் இரு பெருநாகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. தட்சன் தட்சகிக்குள்ளும் தட்சகி தட்சனுக்குள்ளும் புகுந்துகொண்டனர். அக்கணத்தில் பதினான்குலகங்களிலும் இணைந்த ஆண்களும் பெண்களுமான அனைத்துயிர்களிலும் அவர்களின் ஆசி வந்து நிறைந்தது. தட்சகிக்குள் வாழ்ந்த கோடானுகோடி நாகக்குழந்தைகள் மகிழ்ந்தெழுந்து அவள் உடலெங்கும் புளகமாக நிறைந்து குதூகலித்தன.

ஒன்பதாம் யோகம் லயம். இருவரும் தங்கள் முழுமைக்குத் திரும்பியபோது முழுமையான அசைவின்மை உருவாகியது. பாதாள இருளில் அவர்கள் இருப்பதை அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். இருவரின் வால்நுனிகளும் மெல்லத்தொட்டுக்கொண்டிருக்க தட்சகனின் தலைகள் கிழக்கிலும் தட்சகியின் தலைகள் மேற்கிலும் கிடந்தன. அவர்கள் இரு முழுமைகளாக இருந்தனர். முழுமைக்குள் முழுமை நிறைந்திருந்தது.

VENMURASU_EPI_50
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பின்பு அவர்கள் கண்விழித்தபோது தங்களைச் சுற்றி பாதாளம் மீண்டும் முளைத்திருப்பதைக் கண்டனர். வாசுகியின் குலத்தில் பிறந்த கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாஹு, சரணன், சக்‌ஷகன், காலதந்தகன் ஆகிய பெருநாகங்கள் பிறந்து வானுக்கு அப்பால் நின்ற பேராலமரத்தின் விழுதுகள் போல ஆடின. தட்சனின் குலத்தைச் சேர்ந்த புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சிகன், சரபன், பங்கன், பில்லதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமான், சுரோமன், மஹாகனு போன்ற மாநாகங்கள் காட்டுக்கு அடியில் நிறைந்த வேர்பரப்பு போல செறிந்தாடின.

ஐராவத குலத்தில் உதித்த பாராவதன், பாரியாத்ரன், பாண்டாரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மோதன், பிரமோதன், ஸம்ஹதாபனன் போன்ற பொன்னிறநாகங்கள் விராடவடிவம்கொண்ட சிவனின் சடைக்கற்றைகள் என நெளிந்தாடின. கௌரவ்ய குலத்தில் அவதரித்த ஏரகன், குண்டலன், வேணி, வேணீஸ்கந்தன், குமாரகன், காகுகன், ஸ்ருங்கபேரன், துர்த்தகன், பிராதன், ராதகன் போன்ற நாகங்கள் விண்வெளி நீர்வெளிமேல் ஏவிய கோடிஅம்புகள் போல எழுந்தன.

திருதராஷ்டிர குலத்தில் பிறந்த சங்குகர்ணன், பிடாரகன், குடாரமுகன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், காமடகன், சுசேஷணன், மானசன், அவ்யபன், அஷ்டாவக்ரன், கோமலகன், ஸ்வசனன், மௌனவேபகன், பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உதபாரான், இஷபன், வேகவான், பிண்டாரகன், மகாரஹனு, ரக்தாங்கதன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாசகன், வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேகிகன், பராசரன், தருணகன், மணி, ஸ்கந்தன், ஆருணி ஆகிய நாகங்கள் முடிவிலியைத் துழாவும் இருளின் விரல்கள் என வானில் நெளிந்தன.

பாதாளத்தில் இருந்து இருள் பெருநதிகளாகக் கிளம்பியது. விண்ணின் ஒளியுடன் கலந்து பின்னி பெருவெளியை நெய்தது. நிழல்களாக உயிர்களைத் தொடர்ந்தது. கனவுகளாக உயிரில் கனத்தது. இச்சையாக எண்ணங்களில் நிறைந்தது. செயல்களாக உடலில் ததும்பியது. சிருஷ்டியாக எங்கும் பரவியது. ஒளியை சிறுமகவாக தன் மடியில் அள்ளிவைத்து கூந்தல் சரியக் குனிந்து முத்தமிட்டுப் புன்னகைசெய்தது.

[ முதற்கனல் நாவல் நிறைவு ]

நூல் ஒன்று – முதற்கனல் – 49

பகுதி பத்து : வாழிருள்

[ 1 ]

ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே நெருப்பில் கண்டிருந்த மானசாதேவி குடில்முற்றத்தில் நாகபடக்கோலம் அமைத்து அதன்நடுவே நீலநிறமான பூக்களால் தளமிட்டு ஏழுதிரியிட்ட விளக்கேற்றி வைத்து அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குலத்தைச் சேர்ந்த அன்னையரும் முதியவரும் அவனைக்காத்து ஊர்மன்றில் கூடியிருந்தனர். ஓங்கிய ஆலமரத்தின் மீதேறி அமர்ந்து சில சிறுவர்கள் கிருஷ்ணையின் நீர்ப்பரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கிருஷ்ணையின் மறுபக்கம் நகருக்குச் செல்லும் பாதை தொடங்கியது. அதற்கு இப்பால் புஷ்கரவனத்துக்குள் நாகர்களின் பன்னிரண்டு ஊர்கள் மட்டுமே இருந்தன. நாகர்குலத்தவர் மட்டுமே அந்தத்துறையில் படகோட்ட ஒப்புதல் இருந்தது. நாகர்களல்லாத எவரும் அங்கே நதியைத் தாண்டுவதில்லை. பாறைகள் நிறைந்த அப்பகுதியில் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட நாகர்களின் படகுகளன்றி பிற நீரிலிறங்கவும் முடியாது.

சாலையின் மறுபக்கம் நான்குநாகர்களின் படகுகளும் காத்திருந்தன. காலையில் சந்தைக்குச் சென்ற நாகர்கள் மாலையில் திரும்புவது வரை பொதுவாக அப்பகுதியில் படகுகள் கிருஷ்ணையில் இறங்குவதில்லை. பயணிகளும் இருப்பதில்லை. கரையில் நின்றிருந்த மருதமரத்தின் அடியில் படகுகளை நீரிலிறங்கிய வேரில் கட்டிவிட்டு நாகர்கள் அமர்ந்திருந்தனர். வெண்கல்கோபுரம் போல எழுந்து நின்றிருந்த மருதத்தின் வேர்கள் மேல் அமர்ந்திருந்த முதியவர் இருவர் கண்கள் சுருக்கி தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கியிருந்தனர். இருவர் இளைஞர்கள். தூரத்தில் தெரியும் அசைவுகளை நோக்கிக்கொண்டு அவர்கள் அமைதியாக நின்றனர்.

சற்றுநேரத்தில் புதர்களுக்கு அப்பால் ஆஸ்திகன் தெரிந்தான். இளைஞர்கள் இருவரும் எழுச்சிக் கூச்சலிட்டபோது முதியவர்கள் எழுந்துகொண்டனர். ஓர் இளைஞன் நேராக தன் படகைநோக்கி ஓடி அதை இழுத்து வழியருகே வைத்து “இதுதான்…இந்தப் படகுதான்” என்றான். முதியவர் புன்னகையுடன் “ஒரு படகே போதும். ஒருவர் நான்கு படகுகளில் ஏறமுடியாது” என்றார்.

ஆஸ்திகன் சடைமுடிகள் இருபக்கமும் தோள்வரை தொங்க செம்மண்போல வெயில்பட்டுப் பழுத்த முகமும் புழுதிபடிந்த உடலுமாக வந்தான். அவன் சென்றபோது இருந்தவையில் அந்த விழிகள் மட்டுமே அப்படியே மீண்டன. அவனைக் கண்டதும் நான்கு படகோட்டிகளும் கைகூப்பி வணங்கி நின்றனர். ஆஸ்திகன் நெருங்கி வந்ததும் முதியவர் இருவரும் அவன் காலடியில் விழுந்து வணங்கினர். அதைக்கண்டபின் இளைஞர்கள் ஓடிவந்து அவனைப் பணிந்தனர். அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய முனிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான்.

முதியவர் “எங்கள் குடில்களுக்கு மீண்டு வரும் ஆஸ்திகமுனிவரை நாகர்குலம் வணங்குகிறது” என்று முகமன் சொல்லி படகுக்குக் கொண்டுசென்றான். ஆஸ்திகன் ஏறியபடகு கிருஷ்ணையில் மிதந்ததும் அப்பால் ஆலமரத்து உச்சியில் இருந்த சிறுவர்கள் உரக்கக் கூச்சலிட்டனர். சிலர் இறங்கி கிருஷ்ணைநதிக்கரை நோக்கி ஓடத்தொடங்கினர்.

கிருஷ்ணை அங்கே மலையிடுக்கு போல மண் குழிந்து உருவான பள்ளத்துக்குள் நீலப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சரிவில் வேர்களையே படிகளாகக் கொண்டு அவர்கள் மேலேறி வந்தனர். அவர்கள் வரும் வழியெங்கும் கொன்றைமலர்கள் பொன் விரித்திருந்தன. அரசமரத்தின் இலைகள் கேளா மந்திரத்தில் துடித்தன.

முதுபெண்டிர் ஊர்மன்றிலும் வேலிமுகப்பிலும் கூடி நின்றனர். சிலர் மானசாதேவி வெளியே வருகிறாளா என்று பார்த்தனர். அவள் இல்லமுகப்பில் ஏழுதிரியிட்ட மண்ணகல் விளக்குகள் சுடருடன் நின்றன. ஆஸ்திகன் சிறுவர்களும் நாகர்குலத்து மூத்தாரும் புடைசூழ வேலிமுகப்பை அடைந்ததும் பெண்கள் குலவையிட்டனர். முதுநாகினி கமுகுப்பாளைத் தாலத்தில் நிறைத்த புதுமுயலின் குருதியால் அவனுக்கு ஆரத்தி எடுத்தபின் அந்தக்குருதியை தென்மேற்குநோக்கி மரணத்தின் தேவர்களுக்கு பலியாக வீசினாள். அவன் நெற்றியில் புதுமஞ்சள் சாந்து தொட்டு திலகமிட்டு அழைத்துவந்தார்கள்.

குடில்முன்னால் ஆஸ்திகன் வந்தபோது உள்ளிருந்து கையில் ஒரு மண்பானையுடன் மானசாதேவி வெளியே வந்தாள். ஆஸ்திகன் அவளைப்பார்த்தபடி வாயிலில் நின்றான். “மகனே, இதற்குள் உனக்காக நான் வைத்திருந்த அப்பங்கள் உள்ளன. இவற்றை உண்டுவிட்டு உள்ளே வா” என்று அவள் சொன்னாள். அந்தக்கலத்தை தன் கையில் வாங்கிய ஆஸ்திகன் அதைத்திறந்து உள்ளே இருந்து கரிய தழல்போல கணத்தில் எழுந்த ராஜநாகத்தின் குழவியை அதே கணத்தில் கழுத்தைப்பற்றித் தூக்கினான். அதை தன் கழுத்தில் ஆரமாகப் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த ஊமைத்தைப்பூவின் சாறும் நாகவிஷமும் கலந்து சுடப்பட்ட மூன்று அப்பங்களையும் உண்டான்.

“அன்னையே, உங்கள் மைந்தன் இன்னும் விஷமிழக்காத நாகனே” என்று அவன் சொன்னதும் மானசாதேவி முகம் மலர்ந்து “இது உன் இல்லம். உள்ளே வருக” என்றாள். ஆஸ்திகன் குடிலுக்குள் நுழைந்ததும் அவன் குலம் ஆனந்தக்கூச்சலிட்டது. மூதன்னையர் குலவையிட்டனர். ஆஸ்திகன் அன்று கிருஷ்ணையில் நீராடி தன் சடையையும் மரவுரியையும் களைந்தபின் முயல்தோலால் ஆன ஆடையையும் ஜாதிக்காய் குண்டலத்தையும் அணிந்து தலையில் நீலச்செண்பக மலர்களையும் சூடிக்கொண்டான்.

ஆஸ்திகன் தன் இல்லத்தில் சாணிமெழுகிய தரையில் அமர்ந்து அன்னை அளித்த புல்லரிசிக்கூழையும் சுட்ட மீனையும் உண்டான். அதன்பின் அன்னை விரித்த கோரைப்பாயில் படுத்து அவள் மடியில் தலைவைத்துத் துயின்றான். அவன் அன்னை அவனுடைய மெல்லிய கரங்களையும் வெயிலில் வெந்திருந்த காதுகளையும் கன்னங்களையும் வருடியபடி மயிலிறகு விசிறியால் மெல்ல வீசிக்கொண்டு அவனையே நோக்கியிருந்தாள்.

அன்றுமாலை ஊர்மன்றில் நாகர் குலத்தின் பன்னிரண்டு ஊர்களில் வாழும் மக்களும் கூடினர். பசுஞ்சாணி மெழுகிய மன்றுமேடையில் புலித்தோலாடையும் நெற்றியில் நாகபட முத்திரையிட்ட முடியுமாக அமர்ந்த முதியநாகர்கள் முதுநாகினிகள் பரிமாறிய தேன்சேர்த்து புளிக்கவைக்கப்பட்ட கடுங்கள்ளை குடுவைகளில் இருந்து அருந்தினர். கூடியிருந்த சிறுவர்கள் பூசலிட்டு பேசிச் சிரித்துக்கொண்டு கிழங்குகளை சுட்டமீன் சேர்த்து தின்றனர். ஆஸ்திகன் தன் அன்னையுடன் வந்து மன்றமர்ந்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன.

முதுநாகர் எழுந்து அனைவரையும் வணங்கினார். “‘விண்ணகமாக விரிந்த ஆதிநாகத்தை வணங்குகிறேன். அழியாத நாகங்களையும் அவர்களை ஆக்கிய முதல் அன்னை கத்ருவையும் வணங்குகிறேன். ஒருவருடம் முன்பு இத்தினத்தில் அஸ்தினபுரியின் வேள்விக்கூடத்தில் நம் குலத்தின் இறுதிவெற்றியை நிகழ்த்தியவர் நம் குலத்தோன்றல் ஆஸ்திக முனிவர். இது ஆடிமாத ஐந்தாம் வளர்பிறைநாள். இனி இந்நாள் நாகர்குலத்தின் விழவுநாளாக இனிமேல் அமைவதாக. இதை நாகபஞ்சமி என்று நாகர்களின் வழித்தோன்றல்கள் கொண்டாடுவதாக” என்றார்.

VENMURASU_EPI_49_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அங்கிருந்த அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி அதை ஆதரித்தனர். நாகர்குலத்தலைவர்கள் தங்கள் கோல்களை தூக்கி மும்முறை ‘ஆம் ஆம் ஆம்’ என்றனர். முதுநாகர் “ஆதிப்பெருநாகங்கள் மண்ணில் வாழ்ந்த மனிதர்களை கூடிப்பெற்ற ஆயிரத்து எட்டு பெருங்குலங்கள் பாரதவர்ஷத்தில் உள்ளன. அவற்றில் முதுபெருங்குலமான நம்மை செஞ்சு குடியினர் என்றழைக்கிறார்கள். நாம் வாழும் இந்த மலை புனிதமானது. தவம்செய்யாதவர் இங்கே காலடிவைக்கமுடியாது. ஆகவே இது முனிவர்களால் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது.”

“பெருந்தவத்தாரான ஜரத்காரு முனிவர் தனக்குகந்த துணைவியைத் தேடி இங்கு வந்தார். இந்த ஸ்ரீசைலத்தின் கரையில், கிருஷ்ணை நதிக்கரையில் அவர் நம் குலத்துப்பெண்ணை மணந்து ஆஸ்திக முனிவரின் பிறப்புக்குக் காரணமாக ஆனார். அப்பிறவிக்கான நோக்கமென்ன என்பது இன்று நமக்குத் தெளிவாகியிருக்கிறது. நாகர்களே நம் குலம் பெருமைகொண்டது. இம்மண்ணில் நாகர்குலம் வாழும்வரை நம் பெருமை வாழும்.” அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர்.

“ஜரத்காருவின் துணைவியாகிய நம் குலத்து தவப்பெண் மானசாதேவி நாகங்களின் தலைவனான நாகபூஷணனை எண்ணி தவம்செய்து அவன் வரம் பெற்றவள். அவன் வாழும் கைலாசத்துக்குச் சென்று மீண்டவள். அவளை பாதாளநாகமான வாசுகி தன் சோதரியாக ஏற்றுக்கொண்டார். ஜனமேஜயமன்னரின் வேள்வியில் பாதாளநாகங்கள் அழியத்தொடங்கியபோது இங்கே அவரே வந்து தன் தங்கையிடம் அவள் மகனை அனுப்பும்படி ஆணையிட்டார். மண்ணைப்பிளந்து மாபெரும் கரும்பனை போல வாசுகி எழுந்த வழி இன்னும் நம் வனத்தில் திறந்திருக்கிறது. அந்த அஹோபிலத்தை நாம் இன்று நம் ஆலயமாக வணங்குகிறோம். அதனுள் செல்லும் கரிய இருள் நிறைந்த பாதைவழியாக பாதாளநாகங்களுக்கு நம் பலிகளை அளிக்கிறோம்.”

“நாகர்களே ஜனமேஜயன் என்னும் எளிய மன்னர் ஏன் பாதாளவல்லமைகளாகிய நாகங்களை அழிக்கமுடிந்தது?” என்று முதுநாகர் கேட்டார். “நாகங்கள் மீது அவர்கள் மூதன்னை கத்ருவின் தீச்சொல் ஒன்றிருக்கிறது நாகர்களே. நாககுலத்தவராகிய நம்மனைவர்மீதும் அந்தத் தீச்சொல் உள்ளது.” முதுநாகர் சொல்லத்தொடங்கினார்.

முதற்றாதை தட்சகரின் மகளும் பெருந்தாதை கஸ்யபரின் மனைவியுமான அன்னை கத்ரு விண்ணையும் மண்ணையும் ஆயிரத்தெட்டு முறை சுற்றிக்கிடக்கும் மாபெரும் கருநாகம். அவள் கண்கள் தண்ணொளியும் குளிரொளியும் ஆயின. அவள் நாக்கு நெருப்பாக மாறியது. அவள் மூச்சு வானை நிறைக்கும் பெரும் புயல்களாகியது. அவள் தோலின் செதில்களே விண்ணகத்தின் மேகத்திரள்களாயின. அவள் சருமத்தின் ஒளிப்புள்ளிகளே முடிவற்ற விண்மீன் தொகைகளாக ஆயின. அவள் அசைவே புடவியின் செயலாக இருந்தது. அவளுடைய எண்ணங்களே இறைவல்லமை என இங்கு அறியப்படலாயிற்று. அவள் வாழ்க!

ஊழிமுதல்காலத்தில் அன்னை ஆயிரம் மகவுகளை முட்டையிட்டுப் பெற்றாள். அவை அழியாத நாகங்களாக மாறி மூவுலகையும் நிறைத்தன. அந்நாளில் ஒருமுறை மூதன்னை கத்ரு விண்ணில் நெடுந்தொலைவில் ஒரு சின்னஞ்சிறிய ஒளிப்புள்ளி போல நகர்ந்து சென்ற இந்திரனின் புரவியான உச்சைசிரவஸின் பேரொலியைக் கேட்டாள். அவளுடைய சோதரியும் வெண்ணிறம் கொண்ட நாகமும் ஆகிய அன்னை வினதையிடம் அது என்ன என்று வினவினாள். பேரொலி எழுப்பும் அதன் பெயர் உச்சைசிரவஸ். இந்திரனின் வாகனமாகிய அது இந்திரநீலம், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன், சிவப்பு நிறங்களில் அமைந்த தலைகளுடன் விண்ணில் பறந்துசெல்கிறது” என்று வினதை பதில் சொன்னாள்.

“அதன் வால் என்ன நிறம்?” என்று அன்னை கத்ரு கேட்டாள். “அதன் வால் வெண்ணிற ஒளியாலானது” என்று வினதை பதில் சொன்னாள். ‘ஒளியில் இருந்து வண்ணங்கள் எப்படி வரமுடியும்? இருட்டே முழுமுதன்மையானது. வண்ணங்களை உருவாக்கும் முடிவற்ற ஆழம் கொண்டது. அங்கிருந்தே புவிசமைக்கும் ஏழு வண்ணங்களும் வருகின்றன” என்றாள் மூதன்னை கத்ரு. அதை பார்த்துவிடுவோம் என அவர்கள் இருவரும் முடிவெடுத்தனர். அப்போட்டியில் வென்றவருக்கு தோற்றவர் அடிமையாக இருக்கவேண்டுமென வஞ்சினம் கூறினர்.

உச்சைசிரவஸ் விண்ணாளும் பேரொளிக்கதிர். அதன் ஏழுவண்ணங்களும் இன்மையில் இருந்தே எழுந்தன. அதை ஒளியாகக் காணும் கண்கள் வினதைக்கும் இருளாகக் காணும் கண்கள் அன்னை கத்ருவுக்கும் முடிவிலா புடவிகளை வைத்து விளையாடும் முதற்றாதையால் அளிக்கப்பட்டிருந்தன. அங்கே வாலென ஏதுமில்லை என உணர்ந்த அன்னை தன் ஆயிரம் மைந்தர்களிடமும் அங்கே சென்று வாலாகத் தொங்கும்படி ஆணையிட்டாள். அவர்களில் விண்ணில் வாழ்ந்த நாகங்கள் அன்றி பிற அனைத்தும் அதைச்செய்ய மறுத்துவிட்டன. “அன்னையே நாங்கள் மும்முறை மண்ணைக்கொத்தி உண்மைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று ஆணையிட்டிருக்கிறோம். நாங்கள் பொய்யைச் சொல்லமுடியாது” என்றன.

விண்ணக நாகங்கள் கார்க்கோடகன் என்னும் நாகத்தின் தலைமையில் அன்னையிடம் “அன்னையே நன்றுதீது உண்மைபொய் என்னும் இருமைகளுக்கு அப்பால் உள்ளது அன்னையின் சொல். உன் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றன. அவ்வண்ணமே அவை பறந்துசென்று விண்ணில் நீந்தி உச்சைசிரவஸின் வாலாக மாறி பல்லாயிரம் கோடி யோஜனை தொலைவுக்கு இருள்தீற்றலாக நீண்டு கிடந்தன.

உச்சைசிரவஸைப் பார்ப்பதற்காக மூதன்னையர் இருவரும் அது செல்லும் வானகத்தின் மூலைக்குப் பறந்து சென்றனர். விண்மீன்கொப்புளங்கள் சிதறும் பால்திரைகளால் ஆன விண்கடலைத் தாண்டிச்சென்றனர். விண்நதிகள் பிறந்து சென்றுமடியும் அந்தப் பெருங்கடலுக்குள்தான் ஊழிமுடிவில் அனைத்தையும் அழித்து தானும் எஞ்சாது சிவன் கைகளுக்குள் மறையும் வடவைத்தீ உறைகிறது. அதன் அலைகளையே தெய்வங்களும் இன்றுவரை கண்டிருக்கிறார்கள். அதை அசைவிலாது கண்டது ஆதிநாகம் மட்டுமே. அது வாழ்க!

அப்பெருங்கடல்மேல் பறந்தபடி மூதன்னையர் கத்ருவும் வினதையும் உச்சைசிரவஸ் வான்திரையைக் கிழிக்கும் பேரொலியுடன் செல்வதைக் கண்டனர். அதன் வால் கருமையாக இருப்பதைக் கண்ட வினதை கண்ணீருடன் பந்தயத்தில் தோற்றதாக ஒப்புக்கொண்டாள். ஆயிரம்கோடி வருடம் தமக்கைக்கு அடிமையாக இருப்பதாக அவள் உறுதி சொன்னாள். அன்னையரின் அலகிலா விளையாட்டின் இன்னொரு ஆடல் தொடங்கியது.

நாகர்களே, தன் சொல்லைக் கேட்காத பிள்ளைகளை கத்ரு சினந்து நோக்கினாள். “நன்றும் தீதுமென இங்குள அனைத்துமே அன்னையின் மாயங்களே என்றறியாத மூடர்கள் நீங்கள். நன்றைத் தேர்வுசெய்ததன் வழியாக நீங்கள் உங்கள் ஆணவத்தையே முன்வைத்தீர்கள். நான் என நீங்கள் உணரும்போதெல்லாம் அந்த ஆணவம் உங்களில் படமாக விரிவதாக. ஆணவத்தின் முகங்களாகிய காமமும் குரோதமும் மோகமும் உங்கள் இயல்புகளாகுக. பறக்கும் திறனை நீங்கள் இழப்பீர்கள். தவழ்ந்துசெல்லும் வேகம் மட்டுமே கொண்டவர்களாவீர்கள். உங்களுக்குரியதென நீங்கள் கொண்டுள்ள அறத்தால் என்றென்றும் கட்டுண்டவர்களாவீர்கள். எவனொருவன் காமகுரோதமோகங்களை முற்றழிக்க முயல்கிறானோ அவன் முன் உங்கள் ஆற்றல்களையெல்லாம் இழப்பீர்கள். உங்கள் தனியறத்தால் இழுக்கப்பட்டவர்களாக நீங்களே சென்று அவன் வளர்க்கும் வேள்விநெருப்பில் வெந்து அழிவீர்கள்” என்று அன்னை தீச்சொல்லிட்டாள்.

“நாகர்குலமக்களே, நாமும் நம் காமகுரோதமோகங்களால் கட்டுண்டவர்களாக இருக்கிறோம். நாமும் நமது அறத்தின் அடிமைகளாக வாழ்கிறோம். மூதன்னையின் தீச்சொல் நம்மையும் யுகங்கள்தோறும் தொடர்கிறது” முதுநாகர் சொன்னார். “அன்று அந்தத் தீச்சொல் கேட்டு நடுங்கி நின்ற மைந்தர்களை நோக்கி முதற்றாதை காசியபர் சொன்னார். மைந்தர்களே நீங்கள் அழியமாட்டீர்கள். புடவி என ஒன்று உள்ளவரை நீங்களும் இருப்பீர்கள். எந்தப்பேரழிவிலும் எஞ்சியிருக்கும் ஒருதுளியில் இருந்து நீங்கள் முழுமையாகவே மீண்டும் பிறந்தெழுவீர்கள்.”

“அவ்வாறே இன்று ஜனமேஜயன் வேள்வியில் பெருநாகங்கள் எரிந்தழிந்தன. நம்குலத்தின் சொல்லால் அவர்களில் மண்ணாளும் பெருநாகமான தட்சன் மீட்கப்பட்டார். அவரிலிருந்து அழியாநாகங்களின் தோன்றல்கள் பிறப்பர். நிழலில் இருந்து நிழல் உருவாவது போல அவர்கள் பெருகி மண்ணையும் பாதாளத்தையும் நிறைப்பர். ஆம் அவ்வாறே ஆகுக!” முதுநாகர் சொல்லி முடித்ததும் நாகர்கள் தங்கள் நாகபடம் எழுந்த யோகதண்டுகளைத் தூக்கி ‘ஆம்! ஆம்! ஆம்’ என ஒலியெழுப்பினர்.

நாகங்களுக்கான பூசனை தொடங்கியது. மன்றுமேடையில் பதிட்டை செய்யப்பட்டிருந்த நாகச்சிலைகளுக்கு மஞ்சள்பூசி நீலமலர்மாலைகள் அணிவித்து கமுகுப்பூ சாமரம் அமைத்து பூசகர் பூசை செய்தனர். இரண்டு பெரிய யானங்களில் நீலநீர் நிறைத்து விலக்கிவைத்து அவற்றை நாகவிழிகள் என்று உருவகித்து பூசையிட்டனர். நாகசூதர் இருவர் முன்வந்து நந்துனியை மீட்டி நாகங்களின் கதைகளைப் பாடத்தொடங்கினர். பாடல் விசையேறியபோது அவர்கள் நடுவே அமர்ந்திருந்த மானசாதேவியின் உடலில் நாகநெளிவு உருவாகியது. அவள் கண்கள் இமையாவிழிகளாக ஆயின. அவள் மூச்சு சர்ப்பச்சீறலாகியது.

“காலகனின் மகளாகிய நான் மானசாதேவி. ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி. எந்தை தட்சன் உயிர் பெற்றான். வளர்கின்றன நாகங்கள். செழிக்கின்றது கீழுலகம்” என அவள் சீறும் குரலில் சொன்னாள். இரு தாலங்களிலும் இருந்த நீலநீர் பாம்புவிழிகளாக மாறுவதை நாகர்கள் கண்டனர். நந்துனியும் துடியும் முழங்க அவர்கள் கைகூப்பினர்.

நூல் ஒன்று – முதற்கனல் – 48

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்

[ 6 ]

பாலையில் இரவில் வானம் மட்டுமே இருந்தது. இருளில் நடக்கையில் வானில் நீந்தும் உணர்வெழுந்தது. ஆனால் மண்ணை மட்டுமே பார்த்து சிறிது நடந்தால் மண்ணில் ஓர் ஒளி இருப்பதை காணமுடிந்தது. புதர்க்கூட்டங்களெல்லாம் இருள்குவைகளாக ஆகி பாதை மங்கித்தெரிந்தது. பீஷ்மர் அனிச்சையாக நின்றார். மெல்லிய ஒளியுடன் ஒரு நாகம் நெளிந்து சென்றது. பெருமூச்சுடன் பொருளில்லாது ஓடிய எண்ணங்களில் இருந்து விடுபட்டு இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தார்.

நீர்வளம் மிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த எவருக்கும் பாலையைப் பார்க்கையில் வரும் எண்ணங்கள்தான் முதல்முறையாக அந்த வெற்றுநிலவிரிவைப் பார்க்கையில் அவருக்கும் எழுந்தன. கல்லில் செதுக்கப்பட்ட பறைவாத்தியத்தை பார்ப்பதுபோல. ஓவியத்தில் வரையப்பட்ட உணவைப்போல. பயனற்றது, உரையாட மறுப்பது, அணுகமுடியாதது. பிறிதொரு குலம் வணங்கும் கனியாத தெய்வம்.

அலையலையாக காற்று மண்ணில் படிந்திருக்க வெந்த வாசனையை எழுப்பியபடி பொன்னிறத்தில் பரவி தொடுவான்கோட்டில் வளைந்துகிடந்த நிலத்தைப் பார்த்தபோது ஏன் மனதை துயரம் வந்து மூடுகிறதென்று அவருக்குத் தெரியவில்லை. அறிந்தவை எல்லாம் பொருளிழந்து நம்பியவை எல்லாம் சாரமிழந்து அகம் வெறுமைகொண்டது. மண் மட்டுமே எஞ்ச அவர் இல்லாததுபோலத் தோன்றியது. வணிகக்கூட்டத்துடன் நடந்தபோது மெல்ல எதிர்ப்பக்கமாகச் சுழன்ற மண் பெரும்சுழி ஒன்று என மயங்கச்செய்தது.

பின்பு அவர் களைத்து ஒரு பிலு மரத்தடியில் அமர்ந்து ஏதோ எண்ணங்களுடன் கையில் அந்த மண்ணை அள்ளி மெதுவாக உதிர்த்தபின் கைவெள்ளையைப் பார்த்தபோது சிறிய விதைகள் ஒட்டியிருப்பதைக் கண்டார். குனிந்து அந்த மண்ணை அள்ளி அது முழுக்க விதைகள் நிறைந்திருப்பதை அறிந்து வியந்தார். நிமிர்ந்து கண் தொடும் தொலைவுவரை பரந்திருந்த மண்ணைப்பார்த்தபோது அது ஒரு பெரும் விதைக்களஞ்சியம் என்ற எண்ணம் வந்தது. என்றேனும் வடவை நெருப்பு சினந்து மண்ணிலுள்ள அனைத்துத் தாவரங்களும் அழிந்துபோய்விட்டால் பிரஜாபதியான பிருது வருணனின் அருளுடன் அந்தப் பாலைமண்ணில் இருந்தே புவியை மீட்டுவிடமுடியும்.

ஆனால் அது வேறு புவியாக இருக்கும். முற்றிலும் வேறு மரங்கள் வேறு செடிகள் வேறு உயிர்கள் வேறு விதிகள் கொண்ட புவி. பாலைநிலம் என்பது ஒரு மாபெரும் நிகழ்தகவு. இன்னும் நிகழாத கனவு. யுகங்களின் அமைதியுடன் காத்திருக்கும் ஒரு புதிய வாழ்வு. எழுந்து நின்று அந்தமண்ணைப் பார்த்தபோது திகைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. உறங்கும் காடுகள். நுண்வடிவத் தாவரப்பெருவெளி. மண்மகளின் சுஷுப்தி. அந்தப் பொன்னிறமண் மீது கால்களை வைத்தபோது உள்ளங்கால் பதறியது.

ஐம்பதுநாட்களுக்குள் பாலைநிலத்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு மிருகம் ஆகிவிட்டார். காற்றுவீசும் திசையில் இருந்து வரப்போகும் மணல்புயலை உய்த்தறிய முடிந்தது. வாசனையைக் கொண்டு நீர் இருக்குமிடத்துக்குச் செல்ல முடிந்தது. அவரை அணுகிய பாலைவன உடும்பு தன் சிறு கண்களை நீர்நிரம்பும் பளிங்குமணிக் குடுவைகள் போல இமைத்து கூர்ந்து நோக்கியபின் அவசரமில்லாமல் கடந்து சென்றது. அவர் உடலிலும் தலையிலும் பாலைவனத்து மென்மணல் படிந்து அவர் அம்மண்ணில் படுத்தால் பத்து காலடி தொலைவில் அவரை எவருமே பார்க்கமுடியாதென்று ஆனது.

இருளில் பாலைநிலம் மெல்ல மறைந்து ஒலிகளாகவும் வாசனையாகவும் மாறிவிட்டிருந்தது. அது பின்வாங்கிப்பின்வாங்கி சுற்றிலும் வளைந்து சூழ்ந்திருந்த தொடுவானில் மறைகிறது என்று அவர் முதலில் நினைத்தார். அந்தியில் தொடுவானம் ஒரு செந்நிறமான கோடாக நெடுநேரம் அலையடித்துக்கொண்டிருக்கும். பின்பு பாலை இருளுக்கும் இருளுக்குமான வேறுபாடாக ஆகும். மெல்ல கண்பழகியதும் தொலைவு என ஏதுமில்லாமல் செங்குத்தாக சூழ்ந்திருக்கும் சாம்பல்நிறப் பரப்பாக பாலைநிலம் உருமாறும்.

பின்னர் அவர் அறிந்தார், பாலைநிலம் அவருக்குள்தான் சுருண்டு சுருங்கி அடர்ந்து ஒரு ரசப்புள்ளியாக மாறிச் சென்று அமைகிறது என்று. எந்த இருளில் கண்களை மூடினாலும் பொன்னுருகிப் பரந்த பெருவெளியை பார்த்துவிடமுடியும். அங்கே துயிலும் விதைகளில் ஒரு விதைபோல சென்றுகொண்டிருக்கும் மண்மூடிய நெடியமனிதனை பார்த்துவிடமுடியும். தனிமையில் அவன் அடையும் சுதந்திரத்தை. அவன் முகத்தில் நிறைந்திருக்கும் புன்னகையை.

பீஷ்மர் கால் ஓய்ந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தார். இடையில் இருந்த நீர்க்கொப்பரையை எடுத்து உதடுகளையும் வாயையும் மட்டும் நனைத்துக்கொண்டார். மணலில் மெல்லப் படுத்து கைகால்களை நீட்டிக்கொண்டார். இரு தோள்களில் இருந்தும் எடை மண்ணுக்கு இறங்குவதை உணர்ந்தார். சூதர் சொன்னது நினைவுக்கு வந்தது ‘அகலமான தோள்கள் கொண்டவர் நீங்கள், வீரரே. இருபத்தைந்தாண்டுகாலமாக அவற்றில் தம்பியரைச் சுமந்து வருகிறீர்கள்.’ பீஷ்மர் புன்னகைசெய்தபோது சூதர் சிரித்துக்கொண்டு ‘சுமைகளால் வடிவமைக்கப்பட்ட உடல்கொண்டவர்கள் பின்பு சுமைகளை இறக்கவே முடியாது’ என்றார்.

அவர் என்ன சொல்லப்போகிறார் என உணர்ந்தவர்போல பீஷ்மர் போதும் என்று கைகாட்டினார். ஆனால் அவர் எவராலும் கட்டுப்படுத்தப்படக்கூடியவர் அல்ல என்று தெரிந்தது. ‘உங்கள் இருதோள்களும் ஒழிவதே இல்லை வீரரே. விழியற்றவனையும் நிறமற்றவனையும் தூக்கிக்கொள்ளலாம்…’ அவரே அதில் மகிழ்ந்து ‘ஆகா என்ன ஒரு அரிய நகைச்சுவை. விழியற்றவனுக்கு கண்களில் நிறங்கள் இல்லை. விழியிருப்பவனுக்கு உடலில் நிறங்கள் இல்லை… ஆகாகாகா!’ இருகைகளையும் ஒன்றுடன் ஒன்று ஓங்கி அறைந்தபடி பீஷ்மர் எழுந்துவிட்டார்.

‘என்னை கொல்லப்போகிறீர்களா?’ என்று இமையாவிழிகளுடன் நாகசூதர் கேட்டார். பீஷ்மர் திகைப்புடன் கைகளை தொங்கவிட்டார். ‘எத்தனை காலமாக நாகங்களைக் கொல்ல ஷத்ரியர் முயன்று வருகிறார்கள் வீரரே? ஷத்ரியகுலத்தின் கடைசிக்கனவே அதுதானோ?’ பீஷ்மர் ‘உங்களுடைய தட்சிணையை நான் அளித்துவிட்டேன்’ என்று சொல்லி திரும்பி நடந்தார்.

முதுநாகர் பின்னால் ஓசையிட்டுச் சிரித்தார் ‘நாகவிஷத்தில் தன்னை அறிய என்னைத் தேடிவந்தவன் நீயல்லவா? நாகங்கள் உன்னைத்தேடிவரும்…உங்கள் குலத்தையே தேடிவருவோம்….ஷத்ரிய இனத்தையே நாங்கள் சுருட்டிக்கவ்வி விழுங்குவோம்…’ அப்பால் நடந்துசென்ற பீஷ்மர் கால்கள் தளர்ந்தவர் போல நின்றார். திரும்பி நாகரின் மின்னும் கண்மணிகளைப் பார்த்தார். நாகருக்குப்பின்னால் இருண்ட சர்ப்பங்களின் நெளிவைப் பார்க்கமுடிந்தது. அது விழிமயக்கா என எண்ணியகணம் அங்கே இருள் மட்டும் தொங்கிக்கிடந்தது.

‘நல்லூழினால் நீயும் அப்போது வாழ்வாய். நானோ அழியாதவன். அங்கே வந்து உன்னை சந்திக்கிறேன்’ என்றார் நாகர். பீஷ்மர் மிக அடங்கி அவருக்குள் என ஒலித்த குரலில் ‘எங்கே?’ என்றார். ‘படுகளத்தில்…வேறெங்கே?’ நாகரின் சிரிப்பு ஊன் கிழித்து உண்ணும் கழுதைப்புலிகளின் எக்காளம் போல ஒலித்தது. பீஷ்மரின் கைகள் செயலிழந்து தொங்கின. தலைகுனிந்தவராக நடந்துவிலகினார்.

அவர் எழப்போனபோது தொலைவில் ஒரு காலடி ஓசை கேட்டது. காதுக்குக் கேட்பதற்குள்ளாகவே நிலத்தில் படிந்திருந்த உடலுக்கு அது கேட்டது. அவர் எழுந்து அமர்ந்து தன் கையை நீட்டி அருகே நின்றிருந்த முட்புதரில் இருந்து ஒரே ஒரு நீளமான முள்ளை ஒடித்துக்கொண்டு பார்த்தார். பாலையின் மீது மெல்லிய தடம்போலக் கிடந்த காலடிப்பாதையில் அப்பால் ஒருவன் வருவது தெரிந்தது. அவனுடைய காலடிஓசை கனத்ததாகவும் சீராகவும் இருந்ததிலிருந்து அவன் போர்வீரன் என்பதும் எடைமிக்கவன் என்பதும் தெரிந்தது.

நெருங்கி வந்தவன் அவரைக் கண்டுகொண்டான். ஆனால் ஒருகணம்கூட அவனுடைய காலடிகள் தயங்கவில்லை. அவன் கைகள் வில்லைநோக்கிச் செல்லவுமில்லை. அதே வேகத்தில் அவரைநோக்கி வந்தவனின் கண்கள் மட்டும் ஒளிகொண்டு அருகே நெருங்கின. கூந்தல் காற்றில் பறந்துகொண்டிருந்தது. காதுகளில் மெல்ல ஒளிமின்னும் குண்டலங்கள் அவன் ஷத்ரியன் என்று காட்டின. அருகே வந்ததும் அவன் முலைகளையும் இடையையும் பார்த்த பீஷ்மர் அவன் யார் என்று புரிந்துகொண்டார். புன்னகையுடன் தன் கையில் இருந்த முள்ளை கீழே வீசினார்.

“வணங்குகிறேன் வீரரே” என்றபடி சிகண்டி அருகே வந்தான். “உத்தரபாஞ்சாலத்தைச் சேர்ந்த என் பெயர் சிகண்டி. நான் மூலத்தான நகரிக்கு சென்று கொண்டிருக்கிறேன்.” பீஷ்மர் “நலம்பெறுவாயாக!” என்றார். “என் பெயர் வாகுகன். நான் திருவிடநாட்டைச் சேர்ந்த ஷத்ரியன். கான்புகுந்தபின் புறநாட்டுப் பயணத்தில் இருக்கிறேன்.” சிகண்டி “நான் தங்களுடன் பயணம் செய்யலாமல்லவா?” என்றான். “ஆம், பாலைவனம் போல அன்னியர்களை நண்பர்களாக ஆக்கும் இடம் வேறில்லை” என்றார் பீஷ்மர்.

VENMURASU_EPI_48
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவர்கள் நடக்கத் தொடங்கினர். “தாங்கள் துறவுபூண்டுவிட்டீர்களா?” என்றான் சிகண்டி . “ஆம், எது மெய்யான நாடோ அதைத் தேடுகிறேன். எது நிலையான அரியணையோ அதை அடையவிரும்புகிறேன்” என்றார் பீஷ்மர். சிகண்டி சிரித்து “தாங்களும் ரிஷியாக அறியப்படப்போகிறீர்கள்” என்றான். “பாரதவர்ஷத்தில் ரிஷியாக ஆசைப்படாத எவருமே இல்லை என நினைக்கிறேன்.”

பீஷ்மர் சிரித்துக்கொண்டு “நீயும்தான் இல்லையா?” என்றார். “இல்லை வீரரே. ஒருவேளை இந்த பாரதவர்ஷத்திலேயே ரிஷியாக விரும்பாத முதல் மனிதன் நான் என நினைக்கிறேன்” என்றபின் இருளில் ஆவிநாற்றம் வீச வாய்திறந்து “என்னை நீங்கள் மனிதன் என ஒப்புக்கொள்வீர்கள் என்றால்” என்றான். பீஷ்மர் பதில் சொல்லாமல் நடந்தார். சிகண்டி “வீரரே, நீங்கள் அஸ்தினபுரியின் பிதாமகரான பீஷ்மரை அறிவீர்களா?” என்றான்.

“பாரதவர்ஷத்தில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்ததை மட்டுமே நானும் அறிவேன்” என்றார் பீஷ்மர் . “அப்படியென்றால் நீங்கள் அவரால் கவர்ந்துவரப்பட்டு புறக்கணிக்கப்பட்டு கொற்றவைக்கோலம் கொண்டு மறைந்த அம்பாதேவியை அறிந்திருப்பீர்கள்.” பீஷ்மர் “ஆம்” என்றார். சிகண்டி “அவர் என் அன்னை. ஆகவே நான் அவரேதான்” என்றான். “என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்துக்கும் ஒன்றே இலக்கு.” சிகண்டியின் குரல் இருளில் மிக அருகே மிக மெல்லியதாக ஒலித்தது. “பீஷ்மரின் நெஞ்சைப் பிளந்து அவர் இதயத்தைப் பிய்த்து என் கையில் எடுப்பது. அது என் அன்னை எனக்கிட்ட ஆணை!” அவன் மூச்சுக்கும் மட்கிய மாமிசத்தின் வெம்மையான வாசனை இருந்தது.

“நீ அதற்கு அனைத்து தனுர்வேதத்தைக் கற்று கரைகடக்க வேண்டுமே..” என்றார் பீஷ்மர். “ஆம், ஆகவேதான் நான் பாரத்வாஜரின் மாணவரான அக்னிவேசரிடம் மாணவனாகச் சேர்ந்தேன்” என்றான் சிகண்டி. “அவரிடம் நான் தொடககப் பாடங்களை கற்றுக்கொண்டேன். பயிற்சியின்போது என்னுள் பீஷ்மர் மீதான சினம் நிறைந்திருப்பதைக் கண்டு அவர் என்னை பீஷ்மரை நன்கறிந்துவரும்படி ஆணையிட்டு அனுப்பினார். ஆகவேதான் நான் இப்பயணத்தைத் தொடங்கினேன்.”

பீஷ்மர் “இங்கே எதற்காக வந்தாய்?” என்றார். “நான் தண்டகர் என்னும் நாகசூதரைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன்” சிகண்டி சொன்னான். பீஷ்மர் வெறுமனே திரும்பிப்பார்த்தார். “நான் யாரென அவர் சொல்வார் என்று கேள்விப்பட்டேன். நான் யாரென அறிவது என் எதிரியை அறிவதன் முதல் படி என்றார்கள். ஆகவே சைப்ய நாட்டுக்குச் சென்று அங்கிருந்து இங்கே வந்தேன்.”

“நாகசூதர் நீதான் சிகண்டி என்று சொல்லியிருப்பார் இல்லையா?” என்றார் பீஷ்மர் . சிகண்டி அந்தச்சிரிப்பை உணராமல் தலையை அசைத்தான். தனக்குள் சொல்லிக்கொள்பவன் போல “நான் அவரது யானத்தில் நெளிந்த கருநீல நீரைப் பார்த்தேன். அலையடங்கியதும் அதில் தெரிந்த என் முகம் மறைந்து அஸ்தினபுரியின் பீஷ்மரின் முகம் தெரிந்தது” என்றான்.

காற்றில் பறந்த மேலாடையை அள்ளி உடலுடன் சுற்றியபடி “அவர்தான் உன் எதிரியா?” என்றார் பீஷ்மர். அச்செயல்மூலம் அவர் தன்னை முழுமையாகவே மறைத்துக்கொண்டார். “கனவிலும் விழிப்பிலும் எதிரியை எண்ணுபவன் அவனாகவே ஆகிவிடுவதில் என்ன வியப்பு?” என்றார் பீஷ்மர். “நான் அவராக ஆகவில்லை வீரரே. அவரும் நானும் ஒன்றே என உணர்ந்தேன்” என்றான் சிகண்டி.

பீஷ்மர் “அதுவும் முற்றெதிரிகள் உணரும் ஞானமே” என்றார். சிகண்டி அதை கவனிக்காமல் “நான் கண்டது பீஷ்மரின் இளவயது முகம்” என்றான். “நான் கூர்ந்து பார்ப்பதற்குள் அது மறைந்தது. பீஷ்மரின் வயது பதினேழு. அப்போதுதான் தந்தைக்குச் செய்த ஆணையால் தன்னையும் என்னைப்போல உள்ளத்தால் அவர் ஆக்கிக்கொண்டார்.” பீஷ்மர் நின்று “உன்னைப்போலவா?” என்றார்.

“ஆம். நானும் அவரும் உருவும் நிழலும்போல என்று நாகர் சொன்னார். அல்லது ஒன்றின் இரு நிழல்கள் போல. அவர் செய்ததைத்தான் நானும் செய்தேன்” என்றான் சிகண்டி . “அவரில்லாமல் நான் இல்லை. அவர் ஒரு நதி என்றால் அதில் இருந்து அள்ளி எடுக்கப்பட்ட ஒரு கை நீர்தான் நான்.” சிகண்டி சிலகணங்கள் சிந்தித்தபின் “வீரரே, ஒரு பெரும்பத்தினி கங்கையில் ஒரு பிடி நீரை அள்ளி வீசி கங்கைமேல் தீச்சொல்லிட்டால் என்ன ஆகும்? கங்கைநீர் கங்கையை அழிக்குமா?”

பீஷ்மர் புன்னகையுடன் “தெய்வங்களும் தேவரும் முனிவரும் மூவேதியரும் பத்தினியரும் பழிசுமந்தோரும் தீச்சொல்லிடும் உரிமைகொண்டவர்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றார். சிகண்டி அவர் சொற்களை கவனித்ததாகத் தெரியவில்லை. “அழித்தாகவேண்டும். இல்லையேல் புல்லும்புழுவும் நம்பிவாழும் பேரறம் ஒன்று வழுவுகிறது. அதன்பின் இவ்வுலகமில்லை. இவ்வுலகின் அவியேற்றுவாழும் விண்ணகங்களும் இல்லை” என தனக்குள் போல சொல்லிக்கொண்டான்.

“பீஷ்மரைப் பார்த்ததும் உன் சினம் தணிந்துவிட்டதா?” என்று பீஷ்மர் கேட்டார். “ஆம், என் முகமாக அவரைப் பார்த்த அக்கணத்திலேயே நான் அவர்மேல் பேரன்புகொண்டுவிட்டேன். அவர் உடலில் ஒரு கரம் அல்லது விரல் மட்டுமே நான்” என்றான். “நாகர் என்னிடம் சொன்னார், அவரைச் சந்திக்கும் முதற்கணம் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவேன் என்று. அவருக்கும் எனக்குமிடையே இருப்பது என் அன்னையின் பெருங்காதல் என்று அவர் சொன்னார்.”

பீஷ்மர் ஒன்றும் சொல்லாமல் இருளில் நடந்தார். “ஆனால், அவரைக் கொல்லவேண்டுமென்ற என் இலக்கு இன்னும் துல்லியமாகியிருக்கிறது. சினத்தால் அல்ல, வேகத்தாலும் அல்ல. நான் இருக்கிறேன் என்பதனாலேயே நான் அவரைக் கொல்வதும் இருக்கிறது. அந்த இச்சை மட்டுமே நான். பிறிதொன்றில்லை.”

பீஷ்மர் பெருமூச்சுவிட்டார். “ஆம், அதுவே முறையாகும்” என்றார். சிகண்டி “வீரரே, நான் உங்களிடம் இவற்றையெல்லாம் சொன்னதற்குக் காரணம் ஒன்றே. தாங்கள் அகத்தியரின் மாணவர் என்று நினைக்கிறேன்” என்றான். பீஷ்மர் “எப்படி அறிந்தாய்?” என்றார். “தாங்கள் தனுர்வித்தையில் தேறியவர் என நான் தொலைவிலேயே கண்டுகொண்டேன்.”

பீஷ்மர் “ம்?” என்றார். “என் விழிகள் இருளில் பகலைப்போலவே தெளிவாகப் பார்க்கக்கூடியவை. நான் வரும் ஒலியைக் கேட்டதுமே நீங்கள் கைநீட்டி அருகே இருந்த முள் ஒன்றைப் பிடுங்கிக் கொண்டீர்கள் என்பதைக் கண்டேன். உங்களிடம் வேறு ஆயுதமே இல்லை” என்றான் சிகண்டி.

பீஷ்மர் “நன்கு கவனிக்கிறாய்” என்று சொன்னார். “வருவது வழிதவறி பாலைக்குவந்த மதம்கொண்ட வேழமாக இருக்கலாம். விஷவில் ஏந்திய மலைக்கள்வனாக இருக்கலாம். உங்கள் முதல் எதிரியாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முள்ளைமட்டும்தான் எடுத்துக்கொண்டீர்கள். அப்படியென்றால் நீங்கள் வல்கிதாஸ்திர வித்தை கற்றவர். ஒரு சிறுமுள்ளையே அம்பாகப் பயன்படுத்தக்கூடியவர். ஒரு முள்தைத்தாலே மனிதனைச் செயலிழக்கச்செய்யும் ஆயிரத்தெட்டு சக்திபிந்துக்களைப்பற்றி அறிந்தவர்.”

பீஷ்மர் “ஆம்” என்றார். சிகண்டி நின்று கைகூப்பி “நான் அதை உங்களிடமிருந்து கற்க விழைகிறேன் குருநாதரே. என்னை தங்கள் மாணவராக ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். “அதன்பொருட்டே தங்களிடம் என்னைப்பற்றி அனைத்தையும் சொன்னேன்.” பீஷ்மர் “இளைஞனே, நான் எவரையும் மாணவனாக ஏற்கும் நிலையில் இல்லை. அனைத்தையும் துறந்து காட்டுக்கு வந்துவிட்டவன் நான்” என்றார்.

“வனம்புகுந்தபின் சீடர்களை ஏற்கக்கூடாது என்று நெறிநூல்கள் சொல்கின்றன என நானும் அறிவேன் குருநாதரே. ஆனால் அந்நெறிகளை மீறி தாங்கள் எனக்கு தங்கள் ஞானத்தை அருளவேண்டும். வல்கிதாஸ்திரம் அகத்தியரின் குருமரபினருக்கு மட்டுமே தெரியும். தாங்கள் திருவிடத்தவர் என்பதனால் அதைக் கற்றிருக்கிறீர்கள். இப்புவியிலுள்ள அனைத்து போர்வித்தைகளையும் நான் கற்றாகவேண்டும். ஏனென்றால் நான் கொல்லப்போகும் வீரர் எவற்றையெல்லாம் அறிவாரென எவருக்குமே தெரியாது.”

“நான் எதன்பொருட்டு உன்னை மாணவனாக ஏற்கவேண்டும்?” என்றார் பீஷ்மர். சிகண்டி உளவேகத்தால் சற்று கழுத்தை முன்னால் நீட்டி பன்றி உறுமும் ஒலியில் “என் அன்னைக்காக. அவள் நெஞ்சின் அழலுக்கு நீதி வேண்டுமென நீங்கள் நினைத்தால்…” என்றான். “உங்கள் நெஞ்சத்தைத் தொட்டு அங்கே வாழும் நீதிதேவனிடம் கேட்டு முடிவெடுங்கள் குருநாதரே!”

பீஷ்மர் இருளுக்குள் இருள் போல நின்ற அவனைப் பார்த்துக்கொண்டு சில கணங்கள் நின்றார். தலையை அசைத்துக்கொண்டு “ஆம், நீ சொல்வதில் சாரமுள்ளது” என்றார். வானத்தை அண்ணாந்து நோக்கி துருவனைப் பார்த்தபின் “காசிநாட்டரசி அம்பையின் மைந்தனும் பாஞ்சால இளவரசனும் வழுவா நெறிகொண்டவனுமாகிய சிகண்டி எனும் உனக்கு நானறிந்தவற்றிலேயே நுண்ணிய போர்வித்தைகள் அனைத்தையும் இன்று கற்பிக்கிறேன். அவை மந்திரவடிவில் உள்ளன. உன் கற்பனையாலும் பயிற்சியாலும் அவற்றை கைவித்தையாக ஆக்கிக்கொள்ளமுடியும்” என்றார். சிகண்டி தலைவணங்கினான்.

“என்னை வணங்கி வடமீன் நோக்கி அமர்வாயாக!” என்றார் பீஷ்மர். சிகண்டி அவர் பாதங்களை வணங்கியபோது அவனுடைய புழுதிபடிந்த தலையில் கைவைத்து “வீரனே நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய்” என்று வாழ்த்தினார்.

நூல் ஒன்று – முதற்கனல் – 47

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்

[ 5 ]

தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர்.

“வீரரே, முடிவின்மையை உணராத எவரும் இப்பூமியில் இல்லை. மண்ணிலும் விண்ணிலும் மனிதனின் அறிதல் வழியாக ஒவ்வொரு கணமும் முடிவின்மையே ஓடிச்செல்கிறது. முடிவின்மையை தேவைக்கேற்பவும் வசதிக்கேற்பவும் வெட்டி எடுத்த காலத்திலும் மண்ணிலும்தான் மானுடர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முடிவின்மையின் எளிமையை உணர்ந்தவனே விடுதலை பெறுகிறான். அந்த அறிவைத் தாளமுடியாதவன் பேதலிக்கிறான்…” தண்டகர் சொன்னார். “அதை நீங்கள் இந்த யானத்து நீரில் பார்க்கவேண்டியதில்லை. ஒரு கைப்பிடி கூழாங்கற்களில் காணலாம். ஒரு மரத்தின் இலைகளில் பார்க்கலாம். பார்க்கத்தெரிந்தவன் உள்ளங்கையை விரித்தே உணர்ந்துகொள்ளலாம்.”

“அனந்தம் என்று பெயருள்ள இந்த யானம் நாகர்களின் முழுமுதல்தெய்வமான அனந்தனின் விஷம் என்று என் முன்னோர் சொல்வதுண்டு. முடிவின்மையின் ஒருதுளிச்சுழி இது. இதற்கு முப்பிரிக்காலம் இல்லை. மூன்றுகாலம் என்பது அனந்தன் எளியவர்களாகிய நமக்களிக்கும் ஒரு தோற்றமேயாகும். இந்தத் துளியில் நேற்றும் நாளையும் இன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒன்றை ஒன்று நிரப்பி ஒன்றேயாகி நின்றிருக்கின்றன. ஜாக்ரத்தும் ஸ்வப்னமும் சுஷுப்தியும் ஒன்றேயாகிய புள்ளி இது. இதைக்கேளுங்கள் நீங்கள் யார் என்று இது சொல்லும்”

முதுநாகர் யானைத்தை மெல்லத்தட்டினார். அதன் விளிம்புகள் அதிர்ந்து கரியநிறமான தைலத்தில் அலைகளை எழுப்பின. அவர் அந்த அலைகளையே நோக்கியிருந்தபோது மெல்ல அவை அடங்கின. தைலத்தில் பீஷ்மர் தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். மெதுவாக அலைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்றுக்குள் ஒன்றென அமைந்து சுருங்கி வட்டத்தின் மையத்தில் புள்ளியாகி மறைந்தபோது அங்கே ஒரு முகம் தெரிந்தது. அவர் அறிந்திராத ஒரு மனிதர்.

தண்டகர் குனிந்து அந்த முகத்தைப் பார்த்தார். “இவர் யாரென்று நீங்கள் அறிவீர்களா?” என்று பீஷ்மர் கேட்டார். “அன்னை நாகங்கள் அறியாத எவரும் மண்ணில் இல்லை” என்றார் தண்டகர். “சந்திரவம்சத்தில் பிறந்தவரும் நகுஷனின் மைந்தனுமான யயாதி இவர்.” பீஷ்மர் திடுக்கிட்டபோது கருந்திரவம் அதிர்ந்து அந்த முகம் கலைந்தது. “யார்?” என்று அச்சத்துடன் கேட்டார். “உங்கள் குலமூதாதையான யயாதி.”

“நான் என்னையல்லவா பார்க்க விரும்பினேன்?” என்றார் பீஷ்மர். “ஆம், நீங்கள் கேட்டவினாவுக்கு நாகரசம் அளித்த பதில் அது.” பீஷ்மர் சினத்துடன் “இல்லை, இது ஏதோ மாயம்… இது ஏமாற்றுவித்தை” என்றார். “வீரரே, இது மாயை என்று நான் முன்னரே சொல்லிவிட்டேன். நீங்கள் உங்கள் கேள்வியைப்போலவே பதிலையும் உங்களுக்குள் இருந்துதான் எடுத்தீர்கள்…” என்றார் தண்டகர். பீஷ்மர் சினத்துடன் எழுந்து “இல்லை… இது வெறும் மாயம்…” என்று சொல்லிவிட்டு தன் மேலாடையை தோளில் சுற்றிக்கொண்டு நின்றார். “அவர் முகமா இது?” என நாகரிடம் கேட்டார்.

“ஆம். அப்படித்தான் நாகரசம் சொல்கிறது.” “என்னைப்போன்றே இருக்கிறார். அவருடைய அதே முகமா எனக்கு?” தண்டகர் புன்னகைசெய்தார். “அவரது கதையை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்… பரிதாபத்துக்குரிய மூதாதை. அவரா நான்?” தண்டகர் மேலும் புன்னகை செய்தார். பீஷ்மர் மீண்டும் அமர்ந்துகொண்டார். “நாகரே சொல்லுங்கள், அவரது வாழ்க்கையைப்பற்றி நாகம் சொல்லும் கதையைச் சொல்லுங்கள்!”

தண்டகர் புன்னகையுடன் கண்மூடி அமர்ந்தார். பிடரியில் வழிந்திருந்த அவரது கூந்தல் வழியாக இளங்காற்று வழிந்தோடி அதை பின்னுக்குத் தள்ளியது. கண்களைத் திறந்தபோது அவரது விழிவட்டம் மாறியிருப்பதை பீஷ்மர் கண்டார். நீலமணிக்கண்கள். இமைக்காதவை. “அத்ரி சந்திரன் புதன் புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் என வரும் குலவரிசையில் யயாதி பிறந்தார்” என தண்டகர் கனத்தகுரலில் நாகர்களுக்குரிய நீண்ட மெட்டில் பாடத் தொடங்கினார்.

நகுஷனுக்கும் அசோகசுந்தரிக்கும் பிறந்தவர்கள் அறுவர். யதி, யயாதி, சம்யாதி, யாயாதி, யயதி, துருவன். நகுஷனுக்குப்பின் சந்திரவம்சத்துக்கு மன்னனாக யார் வரவேண்டும் என்று ஜனபதங்களின் தலைவர்கள் மாமுனிவரான விசுவாமித்திரரிடம் கேட்டனர். தர்மதேவன் எவரை தேர்ந்தெடுக்கிறானோ அவனே சந்திரவம்சத்தின் மன்னனாகவேண்டும் என்றார் விசுவாமித்திரர். அதன்படி மக்கள் தலைவர்கள் ஆறு இளவரசர்களிடமும் சென்று அவர்களில் எவர் தர்மதேவனை தங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகக் கூட்டிவருகிறார்களோ அவனை அரசனாக ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள்.

ஆறு இளவரசர்களும் கடும் நோன்பு நோற்றனர். தவத்தால் அனைத்தையும் துறந்து எளிமையானார்கள். இலவம்பஞ்சு விதையைச் சுமந்து செல்வதுபோல அவர்களின் தவம் அவர்களைக் கொண்டுசென்றது. அவர்கள் தர்மதேவனைத் தேடி தெற்குநோக்கிச் சென்றனர். தர்மதேவனை நோக்கிச் சென்ற பாதையில் முதலில் நீராலான நதி ஒன்று ஓடியது. அது தன்னை தக்கையாக மாற்றிக்கொள்ளமுடியாதிருந்த துருவனை மூழ்கடித்தது. இரண்டாவதாக ஓடிய நதி நெருப்பாலானது. அங்கே தன்னை கல்லாக மாற்றிக்கொள்ளாமலிருந்த யயதி எரிந்துபோனான். மூன்றாவது நதி காற்றாலானது. அங்கே சருகாக இருந்த யாயாதி பறந்து போனான். நான்காவது நதி புதைசேறாலானது. அங்கே தன்னை சருகாக மாற்றிக்கொள்ளாமலிருந்த சம்யாதி புதைந்துபோனான். ஐந்தாவது நதி வானத்தாலானது. அங்கே மேகமாக தன்னை மாற்றிக்கொள்ளாமலிருந்த யதி கரைந்து போனான்.

யயாதி மட்டும் தர்மதேவனின் சன்னிதியை அடைந்து தனக்கு ஆதரவளிக்கும்படி கோரினான். தர்மதேவன் அவன் தவத்தைப் பாராட்டி நேரில்வருவதற்கு ஒப்புக்கொண்டார். குடிமக்கள்சபையில் ஆறு இளவரசர்களின் பெயர்கள் ஆறு ஓலைகளில் எழுதப்பட்டு ஆறு தூண்களில் தொங்கவிடப்பட்டன. அங்கே அவிழ்த்துவிடப்பட்ட காரான் எருமை யயாதியின் பெயர் எழுதிய ஓலையை தன் வாயால் கவ்வியது. யயாதி சந்திரவம்சத்தின் அரசனாக ஆனான்.

நாற்பத்தொன்பதாண்டுகாலம் சந்திரபுரியை ஆட்சிசெய்த யயாதி அறச்செல்வனென்று விண்ணிலும் மண்ணிலும் அறியப்பட்டிருந்தான். அணுவிடை பிறழா நெறிகொண்ட அவன் இந்திரனுக்கு நிகரானவனாக ஆனமையால் தன் அரியணை ஆடியதை அறிந்த இந்திரன் தன் சாரதியான மாதலியிடம் யயாதியை தன் சபைக்கு கொண்டுவரும்படி சொன்னான். ஆட்சியை முடித்துக்கொண்டு இந்திரபோகங்கள் அனைத்தையும் துய்த்து மகிழும்படி மாதலி யயாதியை ஆசைகாட்டினான். அறமே என் பேரின்பம் என்று யயாதி பதில் சொன்னான்.

இந்திரனின் ஆணைப்படி ஏழு கந்தர்வர்களும் ஏழு கந்தர்வகன்னியரும் சூதரும் விறலியருமாக மாறி யயாதியின் அவைக்கு வந்தனர். விஷ்ணுவின் வராகாவதாரம் என்னும் நாட்டியநாடகத்தை அவர்கள் அவன் சபையில் ஆடினர். எல்லையில்லாத வெண்மேகமாகிய காசியப பிரஜாபதியில் பொன்னிறப்பேரொளியை கண்களாகக் கொண்டு பிறந்த ஹிரண்யாக்‌ஷன் என்னும் அரக்கன் விண்வெளியில் வெண்பசுவெனச் சென்றுகொண்டிருந்த பூமாதேவியை ஒரு சிறு பந்தெனக் கைப்பற்றி விண்ணகநீர்ப்பெருவெளியின் அடியில் எங்கோ கொண்டு ஒளித்துவைத்ததை அவர்கள் நடித்தனர்.

எங்கும் நீரொளியலைகள் ததும்ப பூமியன்னையைத் தேடிய தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். விஷ்ணு மதம்திகழ் சிறுகண்ணும் கொம்புப்பல்லும் நீள்காதுமாக பன்றியுருக் கொண்டு பிறந்தார். பன்றிமுகமூடியணிந்த கந்தர்வநடிகன் மேடையில் வெளியை அகழ்ந்து அகழ்ந்து செல்வதை நடிப்பதைக் கண்டு தன் அரியணையில் அமர்ந்திருந்த யயாதி தீவிரமான உள்ளக்கிளர்ச்சியை அடைந்தார். ககனநீர்வெளியை, பின் அதனடியின் இருள்வெளியை பன்றி துழாவித்துழாவிச்சென்றது. இருளுக்கு அடியில் திகழ்ந்த இன்மையையும் தன் பற்கொம்பால் கிழித்தது.

தன்னையறியாமலேயே இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து மெல்ல அதிர்ந்தபடி யயாதி அமர்ந்திருந்தார். மேடையில் விரிக்கப்பட்டிருந்த ஏழுவண்ண கம்பளங்களை ஒவ்வொன்றாக விலக்கி அகழ்ந்துசென்றான் சூதன். நீலம், பசுமை, பொன்மஞ்சள், செம்மை, செம்பழுப்பு, வெண்மை, கருமை. கருமையின் திரையைக் கிழித்து உள்ளிருந்து செம்பொன்னிறமான பூமியை அவன் அள்ளி எடுத்தான். அந்த இளம் விறலி பொன்னிறம் பொலிந்த வெற்றுடல் கொண்டிருந்தாள். கருவறை திறந்து வரும் குழந்தை போல, உறையிலிருந்து எழும் வாள்போல அவள் மெல்ல எழுந்துவந்தபோது முதியமன்னர் காமத்தின் உச்சிநுனியில் அவர் நின்றிருப்பதை உணர்ந்தார்.

இருகைகளிலும் வெண்தாமரைகளுடன் எழுந்து வந்த விறலியை வராகமுகம் கொண்ட நடனசூதன் அள்ளி தன் இடதுதொடைமேல் ஏற்றி தோள்மேல் அமரச்செய்துகொண்டான். மறுபக்கம் இடக்கை அவள் இடையைச் சுற்றியிருக்க வலக்கை தொடைமேல் படிந்திருக்க பேருருத்தோற்றம் காட்டி நின்றான். அவன் பின் வந்து நின்ற பாணன் இருதோள்களிலும் சங்குசக்கரமேந்திய மேலிருகைகளை காட்டினான். தண்ணுமையும் முழவும் உச்சவேகம் கொண்டன. பெருமுரசும் சங்கமும் முழங்கி அமைந்தன. அவையோர் கைகூப்பி ’நாராயணா’ என்று கூவக்கேட்டபின்புதான் யயாதி தன்னிலை அறிந்தான்.

அன்றுமுதல் யயாதி அகழ்ந்தெடுக்கப்பட்ட காமம் கொண்டவனானான். வெல்லப்பட்டவையும் விலக்கப்பட்டவையும் புதைக்கப்பட்டவையும் அழிக்கப்பட்டவையும் அனைத்தும் புதிதென எழுந்துவந்தன. பெண்ணில் பெண்ணுக்கு அப்பாலுள்ளவற்றைத் தேடுபவனின் காமம் நிறைவையே அறியாதது. நிறைவின்மையோ முடிவயற்றது. மண்ணில் முளைத்தவற்றையெல்லாம் உண்டுமுடித்த யானை முளைக்காது புதைந்துகிடக்கும் கோடானுகோடி விதைகளை உள்ளத்தால் உண்ணத் தொடங்கியது. உண்ண உண்ணப்பசிக்கும் தீராவிருந்து என்பர் காமத்தை.

வீரரே, காமம் பெண்ணுடலில் இல்லை. பெண்ணுடலில் காமத்தைக் கண்டடையும் ஆண்விழிகளிலும் அது இல்லை. விழிகளை இயக்கும் நெஞ்சகத்திலும் காமம் இல்லை. காமம் பூமிக்குள் ஆழத்தில் நெருப்பாக உள்ளது. அதன் பெயர் வைஸ்வாநரன். ‘நான் பெருகுவதாக’ என்னும் அதன் விழைவே காமம். தன் வாலை தானே சுவைத்துண்ணும் பெருநாகமே காமம்.

எரிதலே காமம், அதன் கரிநிழலே மூப்பு. ஒளியோ அதன் கனவு. யயாதியின் காமத்தை அறிந்து ஜரை என்னும் அரக்கியும் மதனன் என்னும் தேவனும் அவனுக்கு இருபுறமும் அறியாமல் பின் தொடர்ந்துகொண்டிருந்தனர். காமத்தின் காய்ச்சலில் அன்றாடச் செயல்களெல்லாம் பிறழ்ந்த யயாதி குளித்துவருகையில் கால்நுனியில் ஈரம் பட்டிருக்கவில்லை. அதன் வழியாக ஜரை அவர் மேல் படர்ந்து அவர் கூந்தலையும் தாடியையும் நரைக்கச் செய்தாள். அவர் முகமெங்கும் சுருக்கங்களை நிரப்பினாள். அவர் முதுகை வளைத்து கைகால்களை கோணலாக்கி பற்களை உதிரச்செய்தாள். அவர் கண்கள் பஞ்சடைந்தன. நாக்கு தளர்ந்தது. தசைகள் தொய்ந்தன.

நோய்கொண்டுதளர்ந்த அவர் விட்ட பெருமூச்சு வழியாக மதனன் அவருள் குடியேறினான். அவன் அவருக்குள் கனவுகளை நிறைத்தான். அவரைச்சுற்றிய உலகை நிறமும் வாசனையும் அற்றதாக ஆக்கினான். இசையை ஓசையாகவும் உணவை ஜடமாகவும் மாற்றினான். அனைத்து சொற்களில் இருந்தும் பொருளை நழுவச்செய்தான். அவன் கவர்ந்துகொண்ட அனைத்தையும் அவரது கனவுகளில் அள்ளிப்பரப்பி அங்கே அவரை வாழச்செய்தான். ஒவ்வொரு நாளும் யயாதி மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

VENMURASU_EPI_47
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அந்நாளில் ஒரு மருத்துவனைப் பார்ப்பதற்காக யயாதி காட்டுக்குச் சென்றபோது அங்கே அழகிய நீரோடைக்கரையில் பேரழகி ஒருத்தியைக் கண்டார். முன்பொருநாள் தன்னுள் இருந்து அகழ்ந்தெடுத்த பெண் அவளே என்றறிந்தார். அவளையே ஆயிரம் உடல்கள் வழியாகத் தேடினார் என உணர்ந்தார். அவள்பெயர் அஸ்ருபிந்துமதி என்று அவளருகே நின்றிருந்த விசாலை என்னும் தோழி சொன்னாள்.

காமனின் துணைவியான ரதியின் மகள் அவள் என்றாள் விசாலை. முன்பு காமனை சிவன் நெற்றிக்கண் திறந்து எரித்தழித்தபோது கணவனை இழந்த ரதி கண்ணீர்விட்டழுதாள். அக்கண்ணீர்த்துளியில் இருந்து பிறந்தவள் அவள். அதுவரை தான் இழந்தது என்ன என்று யயாதிக்குத் தெரிந்தது. பெருந்துயர் கலவா பேரழகென்பது இல்லை. அவள் முன் சென்று கைகூப்பி தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கோரினார் யயாதி.

அஸ்ருபிந்துமதி அவரை ஏற்கச் சித்தமானாள். ஆனால் அவர் தன் முதுமையை வேறு எவருக்கேனும் அளித்து இளமையை மீட்டுக்கொண்டு வந்தால்மட்டுமே அவரை ஏற்கமுடியும் என்றாள். யயாதி தன் அரண்மனைக்குத் திரும்பி தன்னுடைய நான்கு மைந்தர்களையும் அழைத்து ஐம்பதாண்டுகாலம் தன்முதுமையை ஏற்றுக்கொள்ளும்படி கோரினார். யதுவும் துர்வசுவும் திருஹ்யூவும் அதை ஏற்கமறுத்துவிட்டனர். மண்ணாசையால் தன்னை மறுத்த யதுவுக்கு அரசு அமையாதென்று யயாதி தீச்சொல் விடுத்தார். பிள்ளைகள்மேல் கொண்ட அன்பால் மறுத்த துர்வசுவின் குலம் அறுபடுமெனச் சொன்னார். செல்வத்தின் மீதான ஆசையால் மறுத்த திருஹ்யூ அனைத்தையும் இழந்து ஆற்றுநீரில் செல்வான் என்றார்.

நான்காவது மைந்தன் புரு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொண்டான். காமத்தை முழுதுணர்ந்து மீண்டுவருக என்று தந்தைக்கு கனிந்து ஆசியளித்து தான் முதியவனாக ஆனான்.இளமையை அடைந்த யயாதி காடுசென்று அஸ்ருபிந்துமதியைக் கண்டு அவளை தன் நாயகியாக ஏற்றுக்கொண்டார். வீரரே, ஆயிரம் பெண்களை ஒரு பெண்ணில் அடைபவனே காமத்தை அறிகிறான்.

ஐம்பதாண்டு காலத்துக்குப்பின் அஸ்ருபிந்துமதி தன் இயல்புருக்கொண்டு விண்ணகம் சென்றபின் யயாதி சந்திரபுரிக்குத் திரும்பிவந்தார். தன் முதுமையை ஏந்தியிருந்த மைந்தனிடம் சென்றார். “மகனே, நீ அனைத்து நிறைவையும் அடைவாய். நான் காமத்தை முழுதுணர்ந்து மீண்டுவிட்டேன். என் முதுமையை பெற்றுக்கொள்கிறேன்” என்றார். புரு தன்னில் திகழ்ந்த முதுமையை தந்தைக்கு திருப்பிக்கொடுத்து தன் இளமையை பெற்றுக்கொண்டான்.

“மகனே, நீ உன் இளமையைக்கொண்டு உன் காமத்தை நிறைவுகொள்ளச்செய்’ என்று யயாதி சொன்னபோது புரு கைகூப்பி “தந்தையே, அந்த முதுமைக்குள் இருந்தபடி நான் காமத்தின் முழுமையை அறிந்துகொண்டேன். இளமையைக்கொண்டு வெற்றியையும் புகழையும் அகவிடுதலையையும் மட்டுமே இனி நாடுவேன்” என்று சொன்னான். அக்கணமே தன் முதுமைக்குள் இருந்த யயாதி காமத்தின் நிறைவின்மையை மீண்டும் அறியத் தொடங்கினார்.

தண்டகரின் இமையாவிழிகளை நோக்கி அமர்ந்திருந்த பீஷ்மர் பெருமூச்சுடன் அசைந்தார். அவர் பாட்டை நிறுத்திவிட்டு தன்னுடைய சிறு முழவை மெல்ல மீட்டிக்கொண்டிருந்தார். பீஷ்மர் நெடுநேரம் கழித்து “தண்டகரே, யயாதி நிறைவை எப்படி அடைந்தார்?” என்றார். தண்டகர் “யயாதி மனித உடல்நீங்கி விண்ணகம் சென்றார். அவர் செய்த அறத்தால் அங்கு அவர் தேவருலகில் அமர்த்தப்பட்டார். ஆனால் மண்ணில் அறிந்த நிறைவின்மையை அவர் விண்ணிலும் அறிந்தார். வீரரே, உள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்” என்றார்.

விண்ணுலகில் யயாதியின் அகந்தையைக் கண்டு பொறுமையிழந்த பிரம்மன் அவரைப் பழித்து மண்ணுக்குத்தள்ளினார். விண்ணில் இருந்து தலைகீழாக மண்ணுக்குச் சரிந்து விழுந்த யயாதி நைமிசாரண்ய வனத்தில் பிரதர்தனர், வசுமனஸ், சிபி, அஷ்டகர் என்னும் நான்கு மன்னர்கள் செய்துகொண்டிருந்த பூதயாகத்தின் நெருப்பில் வந்து விழுந்தார். நெருப்பில் தோன்றிய யயாதியிடம் அவர்கள் அவர் யாரென்று கேட்டனர். அவர் தன் துயரத்தைச் சொன்னபோது யாகத்தின் அவிபாகத்தை அவருக்கு அளிப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

யயாதி “மன்னர்களே, தேவனாக ஆகாத நான் அவி பெறமுடியாது. தந்தையர் தங்கள் தோன்றல்களின் மூலம் மட்டுமே விண்ணேற முடியும்” என்றார். யயாதியை மீட்கக்கூடியவர் யாரென்று அம்மன்னர்கள் வேள்விநெருப்பில் பார்த்தனர். அவர்கள் யயாதிக்கு அஸ்ருபிந்துமதியில் பிறந்த மாதவி என்ற மகள் இருப்பதை அறிந்து அவளை அழைத்துவந்தனர். மாதவி வனத்தில் விசாலையால் வளர்க்கப்பட்டுவந்தாள்.

வேள்விநெருப்பில் நின்று தழலாடிக்கொண்டிருந்த யயாதி அஸ்ருபிந்துமதியின் பேரழகுத்தோற்றமென நடந்து வந்த மாதவியைக் கண்டார். விழியே ஆன்மாவாக மாற அவளைப் பார்த்து நின்றார். அவள் நெருங்கி வர வர அவர் கண்ணீருடன் கைகூப்பினார். அவரது ஆன்மா நிறைவடைந்து மீண்டும் விண்ணகம் சென்று மறைந்தது.

பீஷ்மர் தலைகுனிந்து சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தார். சிறுமுழவை மெல்ல விரலால் வருடிக்கொண்டிருந்த தண்டகர் “அறியவேண்டுவனவெல்லாம் நான் சொன்னவற்றில் உள்ளன வீரரே” என்றார். “ஆம்” என்றபடி பீஷ்மர் எழுந்துகொண்டார். “தந்தையின் முதுமையை பெற்றுக்கொண்ட புருவின் முகமாக என் முகமிருக்கும் என நினைத்திருந்தேன்” என்றபின் சிரித்துக்கொண்டு “அந்த முகம் எவருடையது என்று இப்போது எண்ணிக்கொண்டேன்” என்றார்.

“இன்று பிரம்மமுகூர்த்தம் ஆகிவிட்டது. நாளை வாருங்கள்’”என்றார் தண்டகர். “தேவையில்லை, எனக்கு அது தெரியும்” என்றபின் பீஷ்மர் மெல்லச் சிரித்தார். கைகூப்பி தண்டகரை வணங்கிவிட்டு “வருகிறேன் தண்டகரே. அஸ்தினபுரியில் உங்களைப்பற்றி சூதர்கள் சொன்னார்கள். சப்தசிந்துவையும் கடந்து நான் உங்களைப் பார்க்கவந்தது என்னை அறிவதற்காகவே” என்றார்.

நூல் ஒன்று – முதற்கனல் – 46

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்

[ 4 ]

சிகண்டி பால்ஹிகரின் அருகே சென்று அவர் காலடியில் தரையில் அமர்ந்துகொண்டான். “பிதாமகரே, தாங்கள் சொன்னது சரியே. நான் பீஷ்மரைக் கொல்வதற்காக வஞ்சினம் உரைத்தவன். என் பிறப்பே அதற்காகத்தான்” என்றான். “சூதர்களிடம் நான் பீஷ்மரின் முழுக்கதையையும் கேட்டுத்தெரிந்துகொண்டேன். சித்ராவதியில் கல்லோலர் என்னும் சூதர் நீங்கள் பீஷ்மரை வென்றகதையைச் சொன்னார். பீஷ்மரை பரசுராமர்கூட வென்றதில்லை. அவரை வென்றவர் நீங்கள் மட்டுமே என்று கல்லோலர் சொன்னார். ஆகவேதான் உங்களைத் தேடிவந்தேன்.”

பால்ஹிகர் இரு கைகளையும் தூக்கி எதையோ சொல்ல முனைந்தார். சொற்களைத் தேடுபவர்போல தலையை அசைத்தார். முதுமையால் தளர்ந்த கீழ்த்தாடை பசு அசைபோடுவதுபோல அசைந்தது. அவரது வாய்க்குள் இருந்த நாலைந்து மஞ்சள்நிறமான பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு அவர் வாயைமூடியபோது உதடுகளை அழுத்தின. அவரது கண்விழிகள் மீன்கள் திளைக்கும் மலைச்சுனை போல சலனம் கொண்டது. “ஆம்” என்றார். “நெடுநாட்களாகின்றன… நான் அவனை வென்றேன். அல்லது நாங்கள் இருவரும் வெல்லவில்லை. அல்லது இருவருமே தோற்றோம்.. என்ன நடந்தது என்று என்னால் இப்போது சொல்லமுடியவில்லை” என்றார்.

“பிதாமகரே, நீங்கள் பீஷ்மரைத் தேடி அஸ்தினபுரிக்கு வந்தீர்கள். நீங்களிருவரும் ஒருவரையொருவர் போருக்கு அழைத்தீர்கள். குருஷேத்ரத்தில் உங்கள் போர் நிகழ்ந்தது. போர் குறித்த செய்தியைக் கேட்டு எட்டு சூதர்கள் குருஷேத்ரத்துக்கு வந்திருந்தனர். அவர்களில் திரிபகன் என்னும் சூதரின் மைந்தர்தான் என்னிடம் அதைச் சொன்ன கல்லோலர்” என்றான் சிகண்டி. பால்ஹிகர் ஆம் என்பது போலத் தலையை அசைத்தார். உதடுகள் துருத்த கழுத்தின் தசைத்தொங்கல்கள் அதிர்ந்து இழுபட தன் நினைவுகளை மீட்டு எடுக்க முயன்றார்.

அவர் முகம் மலர்ந்தது. அவனிடம் ஏதோ மந்தணம் பகிர்பவர் போல புன்னகை புரிந்தார். “உன் பெயர் என்ன?” சிகண்டி “உத்தரபாஞ்சாலத்தைச் சேர்ந்த சோமகசேனரின் மைந்தனான என்பெயர் சிகண்டி” என்றான். “ஆம், நான் உன்னை பார்த்திருக்கிறேன். நேரில் அல்ல. வேறு எங்கோ” என்றார் அவர். “நீ பீஷ்மனைக் கொல்பவன்…தெரிந்துகொள்.” சிகண்டி “பிதாமகரே, நீங்கள் முன்பு பீஷ்மரைக் கொல்வதற்காக அஸ்தினபுரிக்கு வந்தீர்கள்” என்றான்.

“ஆம், நான் பீஷ்மனைக் கொல்வதற்காக அஸ்தினபுரிக்கு வந்தேன்…” என்றார். அவருக்குள் தன்னிச்சையாக நினைவுகள் பெருகத்தொடங்கின. “இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இங்கே ஒரு சூதன் வந்தான். இங்கு கங்கைக்கரையிலிருந்து சூதர்கள் அதிகமாக வருவதில்லை. இது வறண்டநாடு. மதிக்கப்படாத மக்கள் வாழும் பகுதி. இங்கே நாரி என்ற ஒரே ஆறுதான் ஓடுகிறது. அதைக்கொண்டு நாங்கள் கொஞ்சம் கோதுமையை விளைவிக்கிறோம். மாடுகளை மேய்க்கிறோம். எங்கள் குடிமக்கள் பெரும்பாலும் வறண்டமலைகளில் வேட்டையாடுபவர்கள். ஆயிரமாண்டுகளாக நாங்கள் மலைக்குடிகளான லாஷ்கரர்களுடன் போரிட்டுக்கொண்டே இருக்கிறோம்.”

வெண்கற்கள் போன்ற கண்களால் பால்ஹிகர் அவனைப் பார்த்தார். “எங்களுக்கு வரலாறே இல்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு என் தாய் சுனந்தையை அஸ்தினபுரியின் பிரதீபர் படைகொண்டுவந்து மணந்துசென்றதனால் மட்டுமே நாங்கள் சூதர்களின் பாடல்களில் ஒற்றைவரியாக இடம்பெறுகிறோம். எங்கள் வரலாறு அதுதான். வியப்புதான் இல்லையா? அங்கே ஆரியவர்த்தத்தின் நடுவில் கங்கையின் மடியில் பாரதவர்ஷத்தின் தலைமைநகரமான அஸ்தினபுரியை ஆள்வது எங்கள் ரத்தம்… உடும்பையும் எலியையும் பச்சைமாமிசமாகவே உண்ணக்கூடிய மலைவேடர்களின் தோன்றல்கள்… அஹ்ஹஹ்ஹா!”

அந்தச் சிரிப்பு முதல்முறையாக அவர் மனச்சமநிலையுடன் இல்லை என்ற மனப்பதிவை உருவாக்கியது. “பாவம் சுனந்தை….என்னால் அவளைப் பார்க்கமுடிகிறது. இங்கே எங்கள் பெண்களுக்கு அந்தப்புரமும் இற்செறிப்பும் இல்லை. பொட்டல்வெளியில் மாடுமேய்ப்பார்கள். நாரி ஆற்றில் மீன்பிடிப்பார்கள். மலைகளில் வேட்டைக்குச் செல்பவர்களும் உண்டு. மண்ணும் புழுதியும் வெயிலும் சேர்ந்துதான் எங்கள் பெண்களை அழகிகளாக ஆக்குகின்றன. நான் அஸ்தினபுரியின் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காளான் போலிருக்கிறார்கள். மெலிந்து வெளுத்து. வீரர்கள் ஒருபோதும் அந்த அந்தப்புரத்து குழிமுயல்களை காதலிக்க முடியாது.”

“கடைசியில் பிரதீபர் அவளை அடைந்தார். காத்திருந்து அடைந்த மனைவி என்பதனாலேயே அவள் காலடியில் கிடந்தார். அஸ்தினபுரியின் களஞ்சியத்தின் நவமணிக்குவியலே அவள் காலடியில் கிடந்தது என்றனர். புரூரவஸின் செங்கோலையும் ஹஸ்தியின் வெண்குடையையும் குருவின் மணிமுடியையும் அவள் நினைத்தால் காலால் எற்றி விளையாடலாம் என்று சூதர்கள் பாடினர்.” பற்களைக் காட்டி சிரித்தபடி பால்ஹிகர் சொன்னார் “ஆனால் அவள் இந்தப்பாலைவெளியின் வெயிலுக்காக ஏங்கியிருப்பாள். எந்த ரத்தினத்தின் ஒளியும் இதற்கு நிகரல்ல என்று உணர்ந்திருப்பாள். ஆம். அதனால்தான் அவள் ஏங்கி மெலிந்து அழிந்தாள். கோடைகால நதிபோல அவள் மெலிந்து வற்றி மறைந்தாள் என்று அஸ்தினபுரியின் சூதர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன்.”

“இங்கே ஒரு சூதன் வந்தான் என்றேன்… இல்லையா?” என்றார் பால்ஹிகர். நிலையற்ற வெள்விழிகள் தன்னைப்பார்ப்பவையாகத் தெரியவில்லை சிகண்டிக்கு. “அந்தச் சூதன் ஏன் வந்தான்? தெரியவில்லை. ஆனால் எப்படியோ அவர்கள் வந்துவிடுகிறார்கள். நான் அவன் பாடுவதை இந்த நகர்மன்றில் பார்த்தேன். அவன் அஸ்தினபுரியில் இருந்து வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் பெருங்கூட்டம் அவனைச் சுற்றி நின்றது. நான் அருகே சென்று கூட்டத்துக்குப்பின்னால் நின்று அவன் பாட்டைக் கேட்டேன். அவன் பிரதீபரைப்பற்றி பாடினான். என்னையும் என் தமையன் தேவாபியையும் பற்றி பாடினான். சந்தனுவின் வெற்றிகளையும் கொடைத்திறனையும் அவன் ஆட்சியில் அறம்பொலியும் மகத்துவத்தையும் புகழ்ந்தான். சந்தனு கங்காதேவியிடம் பெற்ற தேவவிரதனைப்பற்றிச் சொன்னான். அப்போது மட்டும் அவன் குரல் மேலெழுந்தது. கிணையை மீட்டியபடி எழுந்து நின்று பாரதவர்ஷத்தின் ஈடிணையற்ற வீரன் அவன் என்றான்.”

பால்ஹிகர் புன்னகையுடன் “அப்போது நான் வந்து நாற்பதாண்டுகாலம் தாண்டிவிட்டிருந்தது. என் தமையன் தேவாபி அரசிழந்து துறவு பூண்டு காடு சென்றபின் அஸ்தினபுரியில் இருந்து தன்னந்தனியாகக் கிளம்பி வணிகர்களுடன் நடந்து இங்கே வந்துசேர்ந்தேன். அதற்கு முன் நான் இங்கே வந்ததேயில்லை. அரசி சுனந்தை  எப்போதும் அஸ்தினபுரம் விட்டு இவ்வளவு தொலைவுக்கு வரும் நிலையில் இருக்கவில்லை. நாங்களும் வந்ததில்லை. என் தமையனின் உடல்நிலையும் பயணத்துக்கு உகந்தது அல்ல. பிரதீபர் என் தாயைக் கவர்ந்துசென்றபின் அஸ்தினபுரிக்கு என் நாடு கப்பம் கட்டிவந்தது. சந்தனு ஆட்சிக்குவந்ததும் அதை நிறுத்திக்கொண்டார்கள். அதன்பின் எங்களுக்கும் கங்கைக்கரைக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.

இங்கே என் மாமன் சைலபாகு ஆட்சி செய்துவந்தார்.நான் வந்ததும் என்னை என் தாயின்குலம் அள்ளி அணைத்துக்கொண்டது. இங்கே அதிகாரம் இல்லை. ஆகவே அரசியல் இல்லை. அரசமரியாதைகளும் சபைமுறைமைகளும் இல்லை. நான் இங்கே காட்டுமிருகத்தின் கட்டற்ற சுதந்திரத்துடன் வாழ்ந்தேன். வேட்டையும் குடியும். இரவும் பகலும் மலைகளில் அம்பும் வில்லுமாக தனித்து அலைந்துகொண்டிருந்தேன். ஸென்யாத்ரியும், போம்போனமும், துங்கானமும் எனக்கு என் உள்ளங்கைகளைப்போல தெரிந்தவை. நான் மெதுவாக என் இளமைப்பருவத்தை, என் தமையனை, அவன் வழியாக நான் அடைந்த அவமதிப்பை அனைத்தையும் மறந்துவிட்டேன். நான் அஸ்தினபுரியின் பிரதீபரின் மைந்தன் என்று சொல்லிக்கொள்வதில்லை. எங்கள் குலமரபுப்படி தாயின் பெயரையே சொல்வேன்.

ஆனால் அன்று ஊர்மன்றின் விழவுக்கூட்டத்தில் தேவவிரதன் பெயரை அந்தச் சூதன் சொன்னதும் என்னுள் ஏனோ கடும் குரோதம் எழுந்தது. அப்படியே அந்தச் சூதனை தூக்கி சுவரோடு சேர்த்துப்பிடித்து தேவவிரதன் என்னைவிட வலிமையானவனா என்று கேட்டேன். அவன் ஆம் என்று சொன்னான். அங்கிருந்த அனைவருமே திகைத்து என்னை நோக்கினர். அவனை அப்படியே போட்டுவிட்டு அந்த சதுக்கத்தில் இருந்து நேராக அஸ்தினபுரிக்குக் கிளம்பிவிட்டேன். ஐம்பதுநாட்கள் கழித்து அஸ்தினபுரிக்குச் சென்று சேர்ந்தேன். செல்லும் வழியெல்லாம் அஸ்தினபுரியின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அணுகும்தோறும் காட்சி தெளிவாவதுபோல கதைகளும் தெளிவடைந்துகொண்டிருந்தன. எங்களூருக்கு வந்த சூதன் பல ஆண்டுகளுக்கு முன்னரே அஸ்தினபுரியைவிட்டுக் கிளம்பியவன்.

அஸ்தினபுரிக்கு நான் வந்தபோது சந்தனு முதுமையின் நோய்ப்படுக்கையில் இருந்தான். நான் அவனைப்பார்க்கச் செல்லவில்லை. குருஷேத்ரத்திற்குச் சென்று தங்கி ஒரு சூதனை அழைத்து தேவவிரதனிடம் நான் யாரென்று சொல்லி அவனை நான் துவந்தயுத்தத்துக்கு அழைப்பதாகத் தெரிவிக்கும்படி ஆணையிட்டு அனுப்பினேன். அறைகூவல் என்னுடையதாகையால் ஆயுதத்தை அவனே தேர்ந்தெடுக்கும்படி சொன்னேன். அவன் என்னிடம் ஆயுதத்தை தேர்ந்தெடுக்கும்படி சொல்லி அனுப்பினான். நான் கதாயுதத்தை தேர்ந்தெடுத்தேன். என்னுடைய தோள்வலிமைக்கு நிகராக நான் இன்னொருவனைப் பார்த்ததில்லை.

தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் குருஷேத்ரத்தில் நாங்கள் சந்தித்தோம். அவன் தன் கதையுடன் அணிகள் ஏதுமின்றி தனியாக வந்திருந்தான். சூதர்களை வரச்சொன்னது நான்தான். அவனை நான் கொல்வதை அவர்கள் பாடவேண்டுமென நினைத்தேன். களத்தில்தான் நான் முதன்முறையாக பீஷ்மனைப்பார்த்தேன். என்னைவிட உயரமான ஒருவனை அப்போதுதான் நான் பார்க்கிறேன். ஆனால் அவன் தோள்களும் கைகளும் என்னைப்போல பெரியவை அல்ல. அவன் இடை மிகச்சிறியது. அவனால் என் கதைவீச்சை அதிகநேரம் தாங்கமுடியாதென்று நினைத்தேன். அவனுக்கு முப்பது வயதிருக்கும் அப்போது. ஆனால் தாடியில் நரையிழைகள் தெரியத் தொடங்கியிருந்தன. கண்கள் முதியவர்களுக்குரியவை.

VENMURASU_EPI_46y
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவன் என்னை நோக்கி வந்து என் முன் பணிந்து வணங்கினான். சிறியதந்தையே என்னை வாழ்த்துங்கள். உங்கள் பாதம் பணிகிறேன் என்றான். என் வாழ்த்து உன்னைக் கொன்றபின்னர்தான். அதற்காகவே நான் சிபிநாட்டிலிருந்து வந்திருக்கிறேன், உன் கதையை எடு என்றேன். அவன் மீண்டும் வணங்கிவிட்டு தன் கதையை என் காலைநோக்கித் தாழ்த்தினான். நான் என் கதையுடன் கால்விரல்களையும் பாதங்களையும் சேர்த்து சமபத நிலையில் நின்று கதையை மட்டும் முன்னால் நீட்டினேன். அதன் பொருளை அவன் புரிந்துகொண்டான். அவனால் என்னை அசைக்கக்கூட முடியாதென்று நான் அவனுக்குச் சொல்கிறேன் என்று.

பதிலுக்கு அவன் முழங்கால்களை நான்கு கை அகலத்துக்கு விரித்து அன்னம்போல மடக்கி இடை தாழ்த்தி வைசாக நிலையில் நின்றான். என் விசையை அவன் முழு எடையாலும்தான் எதிர்கொள்ளவேண்டும் என்று புரிந்துகொண்டவன்போல. அவன் கண்கள் என் கண்களை மட்டுமே பார்த்தன. ஒருகணமாவது என் கதையை அல்லது தோள்களை அவன் பார்க்கிறானா என்று நான் கவனித்தேன். மிருகங்கள் மட்டுமே போரில் அவ்வளவு முழுமையான கவனம் கொண்ட கண்களுடன் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

நான் மிக எளிதாக அவனை வீழ்த்தலாமென நினைத்து கதையைச் சுழற்றி கடல் அலை எழுந்து விழுவதுபோன்ற ஆஹதவீச்சில் அடித்தேன். ஆனால் முதல் அடியை அவன் தடுத்தபோதே தெரிந்துவிட்டது அவனை என்னால் எளிதில் வெல்லமுடியாதென்று. வழக்கமாக கதைவீரர்கள் செய்வது போல அவன் என் அடியை கீழிருந்து தடுத்து அதன் விசையை தன் கதையிலோ தோளிலோ ஏற்றுக்கொள்ளவில்லை. கதையின் குமிழுக்கு மிகக்கீழே என் கைப்பிடிக்கு அருகில் அவன் கதையின் குமிழ் என்னை தடுத்தது. ஹம்ஸமர்த்த முறைப்படி அன்னங்கள் கழுத்தை பின்னிக்கொள்வதுபோல எங்கள் கதைகள் இணைந்தன. அவன் மெல்ல அவ்விசையை திசைமாற்றி என்னை தடுமாறச்செய்தான்.

இளைஞனே, உன்னைப்பார்த்தால் கதை உன் ஆயுதமல்ல என்று தெரிகிறது. சுழலும் கதையின் ஆற்றல் உச்சகட்டமாக வெளிப்படும் இடமும் உண்டு. மிகக்குறைவாக வெளிப்படும் இடமும் உண்டு என்பதைத் தெரிந்துகொள். அவன் கதை என் வீச்சை எப்போதும் மிகக்குறைந்த விசைகொண்ட முனையில்தான் சந்தித்தது. ஒவ்வொருமுறையும் அவன் கதை என் கதையை திசைமாற்ற மட்டுமே செய்தது. அதற்கு என் விசையையே அது பயன்படுத்தியது. எங்கள் போரை வலிமைக்கும் திறமைக்குமான மோதல் என்று சொல்லலாம். போர் விரைவில் முடியாதென்று தெரிந்துவிட்டது. அவனை களைப்படையச் செய்யாமல் நான் வெல்லமுடியாது. நான் களைப்படைந்த நினைவே எனக்கில்லை.

நாங்கள் பகல் முழுக்க போர்செய்தோம். மாலை மயங்கியபின் போரிடும் வழக்கமில்லை. ஆனால் நான் அவனை ஓய்வெடுக்கச் செய்ய விரும்பவில்லை. ஆகவே விடாமல் போரைத்தொடர்ந்தோம். மறுநாள் காலையிலும் போர் நடந்தது. இருவரும் துலாக்கோல்தட்டுகள் போலிருந்தோம். நடுமுள் அசையாமல் நிலைத்து நின்றது. இடப்பக்கம் குனிந்து வாமனமிதமாகவும் வலப்பக்கம் குனிந்து தட்சிணமிதமாகவும் மாறி மாறி முடிவில்லாது தாக்கிக் கொண்டிருந்தோம். ஒரு போரல்ல அது நடனம் என்று எனக்கு உள்ளூரத் தோன்றியது.

நான் உள்ளுக்குள் திகைத்திருந்தேன். அந்தப்போர் ஒருபோதும் முடியாதெனத் தோன்றியது. சமவல்லமைகொண்ட போர் என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் அப்படி ஒன்றில்லை. எந்தப்போரிலும் ஒரு தரப்பு சற்றேனும் விஞ்சியிருக்கும். காலம் நீளநீள அந்த வேறுபாடு வளரும். இறுதியில் வெற்றியை நிகழ்த்துவது அந்த வேறுபாடுதான். முதல்முறையாக அந்த வேறுபாடு அணுவேனும் இல்லாத போரை உணர்ந்தேன். அதற்கேற்றதுபோல எங்கள் இருவர் கதைகளும் ஒரேசமயம் உடைந்தன. நான் வெறும் கையால் அவனை அடித்தேன். அவன் என் அடியைத் தடுத்து என் கைகளைப் பற்றிக்கொண்டான்.

நான்குதோள்களும் பின்னிக்கொண்டு கால்கள் ஒன்றையொன்று மறித்து நாங்கள் அசைவிழந்து நின்ற கணத்தில் நான் ஒரு விசித்திரமான உணர்வை அடைந்து மெய்சிலிர்த்தேன். அறியாமல் என் பிடியை நான் விடப்போகும் கணத்தில் அவனும் என்னை திகைப்புடன் பார்ப்பதைக் கண்டேன். அவன் கண்கள் விரிந்த கணத்தில் கையின் விசை சற்று நெகிழக்கண்டு அப்படியே அவனை நான் தூக்கி அடித்தேன். மண்ணில் விழுந்த அவன் மேல் குனிந்து அவன் கண்களைப் பார்த்துக்கொண்டு நின்றேன். விதிப்படி நான் அவனைக் கொல்லவேண்டும். ஆனால், என்னால் கையை அசைக்கமுடியவில்லை. நானும் அவனும் ஒன்றையே உணர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றோம்.”

சிகண்டி மெல்ல அசைந்து “எதை?” என்றான். பால்ஹிகர் உரக்க “எனக்கு அவனும் அவனுக்கு நானும் ஆடிப்பிம்பங்கள் என்பதை” என்றார். “ஒருவயதுவரை குழந்தைகளுக்கு ஆடியைக் காட்டலாகாது என்று சொல்வார்கள்….மனிதர்கள் எப்போதுமே ஆடியை பார்க்காமலிருக்கலாம். ஆடியின் ஆழம் அறிந்தவனின் செயல்கள் நின்றுவிடுகின்றன. அனைத்தும் கேலிக்கூத்தாகிவிடுகின்றன. அன்று அவன் கண்களைப்பார்த்த நான் இதோ இருபதாண்டுகாலமாக இந்தச் சிறு அறையில் அமர்ந்திருக்கிறேன்.”

சிகண்டி அவரையே வெறித்தபடி அமர்ந்திருந்தான். பால்ஹிகர் எழுந்து தன் கனத்த கைகளை கூட்டிப்பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தார். “அங்கிருந்து நான் திரும்பி நடந்தேன். அவன் திகைப்பு மாறாத கண்களுடன் என் பின்னால் நிற்பதை உணர்ந்தேன். திரும்பி அவனை நோக்கி மூடா உன் தோளில் இருந்து உன் சகோதரர்களை இறக்கி வை என்று கூவ வேண்டுமென நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. ஏனென்றால்…” அவர் முகத்தில் வெறுப்புநிறைந்த சிரிப்பு ஒன்று வந்தது. “…ஏனென்றால் நான் அப்போதும் என் தமையனை இறக்கி வைத்திருக்கவில்லை.” தன் தோளில் ஓங்கித் தட்டி பால்ஹிகர் சொன்னார் “இப்போதும் இறக்கிவைக்கவில்லை… இதோ இங்கே அவன் இருக்கிறான். மிக மெலிந்தவன். உயிர்பிரிந்து கொண்டிருப்பவன் போல அதிர்ந்துகொண்டிருப்பவன்.”

சிரித்துக்கொண்டு அவர் எழுந்தார். “தேவாபிகள், பால்ஹிகன்கள்… ஆடி தன் பிம்பங்களை பெருக்கிக் கொண்டே செல்கிறது… நான் என்ன செய்யமுடியும்? நான் அவனை ஏன் இறக்கிவைக்கவில்லை தெரியுமா?” கண்களில் பித்தின் ஒளியுடன் பால்ஹிகர் சொன்னார். “ஏனென்றால் நான் ஓர் ஆடிப்பிம்பம். எனக்கு முன்னாலிருந்த ஒரு ஆடிப்பிம்பத்தின் நிழல்தான் நான். அது இன்னும் இறக்கி வைக்கவில்லை…அது ஏன் இறக்கிவைக்கவில்லை என்றால் அதற்கு முன் இருந்த ஆடிப்பிம்பம் இறக்கி வைக்கவில்லை. ஆடிப்பிம்பங்களால் கோடிகோடியாக பெருகத்தான் முடியும். அவை தாங்களாக எதையும் செய்துகொள்ளமுடியாது. எவ்வளவு பரிதாபம். எத்தனை பெரிய பொறி…”

சொற்கள் அவரில் இருந்து கட்டில்லாமல் வந்தன. “ஆடிப்பிம்பங்கள்… பரிதாபத்துக்குரியவை அவை. ஆடிப்பிம்பங்களுக்கு வண்ணங்களும் வடிவங்களும் உண்டு. அசைவும் உயிரும் உண்டு. கண்களில் ஒளியுண்டு, குரலுண்டு. அனைத்தும் உண்டு. ஆனால் அவற்றால் தங்களைத் தாங்களே நடத்திக்கொள்ளமுடியாது…அவற்றை நிகழ்த்துபவன் அவற்றுக்கு முன்னால் நிற்கிறான். அவனை அவை ஒன்றும் செய்யமுடியாது. ஆடிக்கு அப்பால் நின்று வெறித்துப் பார்க்கத்தான் முடியும். நான் அவனை ஒன்றும் செய்யவில்லை தெரியுமா? அவன் என் பிம்பமா இல்லை என் மூலமா என எப்படித் தெரிந்துகொள்வேன்? அவன் என் மூலமென்றால் அவன் அழியும்போது நானும் அழிந்துவிடுவேன் அல்லவா?” அவர் கண்களில் பித்து ஏறி ஏறி வந்தது. “நீ பீஷ்மனிடம் சொல், அவன் வெறும் பிம்பம் என்று.”

சிகண்டி “பிதாமகரே, நீங்கள் எங்கே என்னைப் பார்த்தீர்கள்?” என்றான். அவன் குரலை அவர் கேட்கவில்லை. அவன் அங்கிருப்பதே அவருக்குத் தெரியவில்லை என்று தோன்றியது. “ஆடிப்பிம்பங்களுக்குள் சிக்கிக்கொண்டவனைப்போல மூடன் யார்? மூடனல்ல, இழிபிறவி. பித்தன். முடிவற்றது ஆடியின் ஆழம். ஆடியின் சுழலில் இருந்து அவன் தப்பமுடியாது, ஏனென்றால் நான் தப்பவில்லை. இந்த கல்குகைக்குள் நான் என் தனிமையை தின்றுகொண்டிருக்கிறேன். அவன் தன் கல்குகைக்குள் இருக்கிறான். அவனிடம் சொல், அவனுக்கு விடுதலை இல்லை என்று. அவன் ஆடிப்பிம்பம் என்று…” அவர் தரையை கையால் அறைந்து சிரித்தார். “ஆடிகளின் மாயம்! அஹஹ்ஹஹா! ஆடிகளை நாம் உடைக்கமுடியாது. ஏனென்றால் நம்மை நாம் உடைக்கமுடியாது.”

வாசலில் தோன்றிய நூற்றுவர்தலைவன் சிகண்டியிடம் விலகி வந்துவிடும்படி சைகை காட்டினான். சிகண்டி பொறு என்று கண்களைக் காட்டி “பிதாமகரே, என்னை எங்கே பார்த்தீர்கள்?” என்றான். “நாகசூதனிடம். அவன்பெயர் தண்டகன். அவன் யானநீரின் ஆடியில் உன்னை எனக்குக் காட்டினான். நான் தேவவிரதனை கொல்லமுடியாது என்றான். ஏனென்றால் அவன் என் ஆடிப்பிம்பம். ஆடி எவர் கைக்கும் சிக்காதது. ஆனால் நீ அவனைக் கொல்வாய் என்றான். ஏன் தெரியுமா?” அவர் தாக்கவருபவர் போல இரு கைகளையும் விரித்துக்கொண்டு அருகே வந்தார். “ஏன் தெரியுமா? நீ அவன் நிழல்.” முற்றிலும் சித்தம் பிறழ்ந்தவர்களால் மட்டுமே முடியக்கூடிய வகையில் அவர் சிரிக்கத்தொடங்கினார். இரைவிழுங்கும் பாம்புபோல கண்கள் பிதுங்கி வாய் திறந்து பற்கள் தெரிய அதிர்ந்து கூவி நகைத்தார்.

நூற்றுவன் “வீரரே, இனி அவரை கட்டுப்படுத்துவது கடினம்” என்றான். “வந்துவிடுங்கள்…” சிகண்டி பின்பக்கமாக நடந்து மெல்ல வெளியே வந்தான். “அவர் அந்த அறைக்குள் இருந்து வெளியே வரமாட்டார்” என்றான் நூற்றுவன். பின்பக்கம் பால்ஹிகர் வந்து அறைவாசலில் இருகைகளையும் விரித்து ஊன்றியபடி நின்றார். அவரது மாபெரும் மார்பும் தோள்களும் அந்த வாயிலை முழுமையாகவே தசையால் நிறைத்து மூடின.

“ஆடிப்பிம்பத்திற்குள் என்னை கட்டிப்போட்டவனை நான் அறிவேன். அவன் பெயர் பீமசேனன்…நான் அவனுடைய ஆடிப்பிம்பம். அவனும் என்னைப்போன்றே பெரிய தோள்களில் சகோதரனை தூக்கிக்கொண்டு செல்வதைக் கண்டேன். அவன் செய்ய இயலாததை இங்கே நான் செய்யமுடியாது. மூடன், முழுமூடன்…” எண்ணியிருக்காமல் எழுந்த பெரும்சினத்துடன் “அவன் என்னை ஆடியில் தள்ளிவிட்டிருக்கிறான்… என்னை அவனுடைய வெற்றுப் பிம்பமாக ஆக்கிவிட்டான்….” என்று கூவியபடி ஓங்கி பாறைச் சுவரை அறைந்தார்.

சிகண்டியும் நூற்றுவனும் படிகளை அடைந்தனர். அவர் அங்கே நின்றபடி “அவனிடம் சொல்…அவன் பெயர் பீமசேனன். அவனிடம் சொல்” என்று கூவினார். “நிழலும் ஆடிபோலவே முடிவில்லாதது. ஆடியை விட்டு விலகுபவன் ஆடிக்குள் மூழ்கி மறைகிறான். ஆடியை அணுகுபவன் தன்னுடன் தான் மோதிக்கொள்கிறான்…” சிரிப்பொலியுடன் “நிழலை வெல்ல ஒரே வழி நிழலுக்குள் புகுந்துவிடுவதுதான்… நில்… அங்கேயே நில்!”

படிகளில் ஏறும்போதும் அவரது குரல் கேட்டுக்கொண்டிருந்தது. “அவர் பொதுவாக எவரையும் தாக்குவதில்லை. ஆனால் இருமுறை இருவரை அடித்திருக்கிறார். அக்கணமே அவர்கள் தலையுடைந்து இறந்தார்கள்” என்றான்.

சிகண்டி அரண்மனையை விட்டு வெளிவந்து நின்றான். மொட்டைக்குன்றுகள் போன்ற கட்டடங்கள் சாளரங்களில் விளக்கொளிகள் சிவந்த கண்கள் போல திறந்திருக்க அவனைச்சூழ்ந்திருந்தன. நகரம் முழுமையாகவே அடங்கிவிட்டிருந்தது. வணிகர்கள் கட்டிய கூடாரங்களில் தோல்கூரைகளை மூச்சுவிடும் மிருகங்களின் வயிறுபோல எழுந்தமரச் செய்தபடி காற்று கடந்துசென்றது.

நூல் ஒன்று – முதற்கனல் – 45

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்

[ 3 ]

ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று வறண்ட பாறைச்சிகரங்களுக்குள் இருந்த சின்னஞ்சிறு சிபிநாடு தகிக்கும் வெயிலுக்காகவே அறியப்பட்டிருந்தது. ஆகவே அங்கே அனைத்து வணிகர்களும் செல்வதில்லை. சிபிநாட்டுக்கும் அதற்கு அப்பாலிருந்த காந்தாரத்தின் பாலைநிலத்துக்கும் செல்பவர்கள் பாலைவணிகர்கள் மட்டுமே. அவர்கள் பிற வணிகர்களுடன் இணைவதில்லை. அவர்களின் மொழியும் உடையும் உணவும் அனைத்தும் வேறுபட்டவை. வெயிலில் வெந்து சுட்டசட்டிபோன்ற செந்நிறமாக ஆகிவிட்ட முகமும் அடர்ந்த கரிய தாடியும் கொண்ட அவர்கள் கனத்த தாழ்குரலில் பேசினர். அனைவருமே இடுப்பில் வைத்திருந்த கூரிய வாள்களை எப்போதும் எடுக்க சித்தமானவர்களாக இருந்தனர்.

ஹம்சபுரியில் இருந்து கிளம்பிய ஒரு வணிகக்குழுவுடன் சிகண்டி இணைந்துகொண்டான். அவனுடைய வில்திறனுக்காக நாள் ஒன்றுக்கு பத்துவெள்ளி கூலிக்கு அவர்கள் அமர்த்திக்கொண்டனர். நூறு அத்திரிகளில் தானியங்கள், துணிகள், ஆயுதங்கள், வெண்கலப் பாத்திரங்கள், உலர்ந்த மீன் போன்ற பொருட்கள் பெரிய எருமைத் தோல்மூட்டைகளில் கட்டி ஏற்றப்பட்டிருந்தன. அவர்கள் மாலையில்தான் ஹம்ஸபுரியைவிட்டு கிளம்பினர். கிளம்புவதற்கு முன் இருபது எருமைத்தோல் பைகளில் நீர் நிறைத்து அவற்றை கழுதைகள் மேல் ஏற்றிக்கொண்டனர். உலர்ந்த பழங்களும் மரப்பலகைபோன்றிருந்த அப்பங்களும் தூளாக்கப்பட்ட கோதுமைமாவும் நான்கு கழுதைகள்மேல் ஏற்றப்பட்டன. பொதிகள் ஏற்றிய மிருகங்கள் நடுவே செல்ல அவற்றைச் சூழ்ந்து வில்களும் வாள்களுமாக அவர்கள் சென்றனர்.

மொத்தம் நூறுபேர் இருந்தனர். ஐம்பது அத்திரிகள் அவர்கள் பயணம் செய்வதற்கானவை. ஐம்பதுபேர் நடக்கவேண்டும். களைத்தபின் நடப்பவர்கள் அத்திரிகளுக்கு மாறிக்கொள்ளலாம். இருளில் விளக்குகள் ஏதுமில்லாமல் அவர்கள் நடந்தபோது எருமைத்தோல்களாலான அவர்களின் காலணிகள் தரையில் பரவியிருந்த சரளைக்கற்கள் மேல் பட்டு ஒலியெழுப்பின. பின்னிரவுக்குள் அவர்கள் ஹம்சபுரியின் நீர் நிறைந்த வயல்வெளிகளை தாண்டிவிட்டிருந்தனர். மண்ணில் நீர் குறைந்ததை காதுமடல்களில் மோதிய காற்று காட்டியது. சற்றுநேரத்தில் மூக்குத்துளைகள் வறண்டு எரியத்தொடங்கின. காதுமடல்களும் உதடுகளும் உலர்ந்து காந்தலெடுத்தன. விரிந்த மண்ணில் ஓடும் காற்றின் ஓசை கயிற்றை காற்றில் சுழற்றுவதுபோலக் கேட்டது.

மிகவிடியற்காலையிலேயே நிலத்தின்மேல் வானின் வெளிச்சம் பரவத்தொடங்கியது. புழுதியாலானதுபோன்ற வானில் சாம்பலால் மூடப்பட்ட கனல் போல சூரியன் தெரியத்தொடங்கியதும் மண் செம்பொன்னிறமாக திறந்துகொண்டது. ஏற்ற இறக்கமே இல்லாமல் வானம்வரை சென்று தொடுவான்கோட்டில் முடிந்த சமநிலத்தில் பச்சைநிறமான கோழிகள் சமமான இடைவெளிகளில் தூவல் குறுக்கி அடைகாத்து அமர்ந்திருப்பதுபோல நீரற்ற சிறிய இலைகள் கொண்ட முட்புதர்ச்செடிகள் நின்றன. சூரியன் வலிமைபெற்று மேகங்களை எரிக்கத் தொடங்கியபோது பாலைநிலம் மேலும் பொன்னிறம் கொண்டது. அப்பால் மேற்கே செந்நிறவிதானமாக கீழிறங்கிய வானின் நுனியில் நான்கு அடுக்குகளாக மலைச்சிகரங்கள் தெரிந்தன.

வணிகர்களில் ஒருவன் “ஸென்” என்று அதைச் சுட்டிக்காட்டிச் சொன்னான். “அந்த மூன்று சிகரங்களுக்கு நடுவே உள்ளது சிபிநாடு.” சிகண்டி நிமிர்ந்து அந்த மலைகளைப் பார்த்தான். அவை ஒன்றுக்குப்பின் ஒன்றாக வெவ்வேறு வண்ண அழுத்தங்களில் பளிங்குப்புட்டிக்கு அப்பால் பளிங்குப்புட்டியை வைத்ததுபோலத் தெரிந்தன. மேலும் செல்லச்செல்ல அவற்றின் வடிவம் தெளிவடைந்தபடியே வந்தது. மரங்கள் அற்ற மொட்டைப்பாறைகளை அள்ளிக்குவித்தது போன்ற மலைகள். அவற்றின் மடம்புகளும் வளைவுகளும் காற்றில் கரைந்து எஞ்சியவை போலிருந்தன.

விடியற்காலையில் புதர்ச்செடிகள் மேல் பனியின் ஈரம் துளித்து நின்றிருந்தது. முட்களில் ஒளிரும் நீர்மணிகள் தெரிந்தன. தூரத்தில் நான்கு பிங்கலநிற பாலைவனக்கழுதைகள் குஞ்சிவால்களைச் சுழற்றியபடி அந்த முட்செடிகளை மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றுக்கருகே பறவைக்கூட்டம் ஒன்று சிறுகாற்றில் சுழன்று படியும் சருகுக்குவியல் போல பறந்தது. புதர்ச்செடிகளை நெருங்கும்போதெல்லாம் அவற்றுக்குள் இருந்து சிறிய பறவைகள் சிறகடித்தெழுந்தன.

முதல்பார்வையில் உயிரற்று விரிந்துகிடந்த பாலைநிலம் கூர்ந்துபார்க்கும்தோறும் உயிர்களைக் காட்டியது. தரையின் பொன்னிறமான புழுதியில் சிறிய குழிகளுக்குள் இருந்து பலவகையான பூச்சிகள் எட்டிப்பார்த்து காலடிகேட்டு உள்ளே தலையை இழுத்துக்கொண்டன. புழுதியில் சிறிய வட்டக்குவியங்களை அமைத்திருந்த பூச்சிகளும் பாறையிடுக்குகளில் மென்புழுதியைத் திரட்டிவைத்திருந்த பூச்சிகளும் அங்கே ஒரு பெரிய வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருப்பதைக் காட்டின. பெரிய கற்களின் அடியில் சிறிய எலிகளின் மணிக்கண்கள் தெரிந்து மறைந்தன. ஒரு பாம்பு புழுதியை அளைந்தபடி வால் சுழற்றி கல்லிடுக்கில் சென்ற பின்பும் கண்களில் நெளிவை எஞ்சச்செய்தது.

பாறை இடுக்கு ஒன்றில் உடும்பு ஒன்றை ஒருவன் சுட்டிக்காட்டினான். கல்லால் ஆன உடல்கொண்டதுபோலிருந்த அது அவன் அருகே நெருங்கியதும் செதில்களை விரித்து தீ எரிவதுபோல ஒலியெழுப்பி நடுங்கியது. சிறிய கண்களை கீழிருந்து மேலாக மூடித்திறந்தபடி கால்களை விரைத்துத் தூக்கி வாலை வளைத்து அவனைநோக்கி ஓடிவந்தது. அதன் நாக்கு வெளிவந்து பறந்தது. அவன் தன் கையில் இருந்த கவைக்கோலால் அதைப் பிடித்து தரையுடன் அழுத்திக்கொண்டு வாளால் அதன் தலையை வெட்டிவீழ்த்தினான். பின்பு அதை எடுத்து அப்படியே வாயில் வைத்து குருதியை குடிக்கத்தொடங்கினான்.

வாயில் குருதியைத் துடைத்தபடி கையில் தொங்கிய உடும்புடன் அருகே வந்த அவன் “இந்தப்பாலையில் வயிற்றில் புண் ஏற்பட்டுவிடுகிறது. உடும்பின் சாறு புண்ணை ஆற்றும்” என்றான். சிகண்டி ஒன்றும் சொல்லாமல் பார்வையை திருப்பிக்கொண்டான். “இங்கே லாஷ்கரர்களும் லிந்தர்களும் வெறும் பாறைகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பெரும்பாலும் இந்த உடும்புதான் உணவு… உடும்புநீர் குடித்தால் இரண்டுநாட்கள் வரை உணவில்லாமல் வாழ்ந்துவிடமுடியும்.” அவன் அதை உரித்து வாளால் சிறு துண்டுகளாக வெட்டினான். அனைவருக்கும் ஒருதுண்டு வீதம் அளித்தான். அவர்கள் அந்தத் துண்டுகளை வாயிலிட்டு மெல்லத் தொடங்கினர்.

மிகவிரைவிலேயே வெயில் வெளுத்து பாலைநிலம் கண்கூசும்படி மின்னத்தொடங்கியது. புழுதியை அள்ளிவந்த காற்று அவர்கள் கண்கள் மேலும் உதடுமேலும் அதை வீசியபடி கடந்து சென்றது. செம்புழுதி தூண் போல எழுந்து மெல்லச்சுழன்றபடி சாய்ந்து சென்றது. தொலைதூரத்தில் புழுதிக்காற்று புகைபோல எழுந்து செல்ல அந்த மண் கொதிக்கும் நீர்ப்பரப்பு என்று தோன்றியது.

பசிய குறுமரங்கள் அடர்ந்த ஒரு குறுங்காடு தெரிந்ததும் அவர்கள் தங்கள் மலைதெய்வத்தை துதித்து குரலெழுப்பினர். தொலைவிலிருந்து பார்க்கையில் யாரோ விட்டுச்சென்ற கம்பளி ஆடை போலத்தெரிந்த காடு நெருங்கியதும் குட்டை மரங்களான ஸாமியும் பிலுவும் கரிரும் அடர்ந்த சிறிய சோலையாக ஆகியது. அந்த மரங்களின் இலைகளுக்கு நிகராகவே பறவைகளும் இருப்பதுபோல ஒலி எழுந்தது. உள்ளே நுழைந்தபோது தலைக்குமேல் ஒரு நகரமே ஒலியெழுப்புவதுபோல பறவைகள் எழுந்து கலைந்தன.

மரங்கள் நடுவே ஒரு ஆழமான சிறிய குட்டையில் கலங்கிய நீர் இருந்தது. பெரிய யானம் போலிருந்த வட்டமான குட்டையில் நீரைச்சுற்றி சந்தனக்களிம்பு போல சேறு படிந்திருக்க நீரும் சந்தனநிறமாகவே இருந்தது. சேற்றில் பலவகையான மிருகங்களும் பறவைகளும் நீர் அருந்தியதன் காலடித்தடங்கள் படிந்திருந்தன. அத்திரிகளும் கழுதைகளும் சுமைகளை இறக்கிக் கொண்டதும் முட்டிமோதி குட்டையில் இறங்கி நீர் குடிக்கத்தொடங்கின. வைத்த வாயை எடுக்காமல் உறிஞ்சிவிட்டு பெருமூச்சுடன் நிமிர்ந்து மீசைமுடிகளில் இருந்து நீர் சொட்ட காதுகளை அடித்துக்கொண்டன. கழுத்தைத் திருப்பி நீரை வாயிலிருந்து முதுகிலும் விலாவிலும் தெளித்துக்கொண்டன.

ஒவ்வொருவருக்கும் உணவும் தோல்பையில் நீரும் வழங்கப்பட்டது. சிகண்டி அப்பத்தை நீரில் நனைத்து உண்டுவிட்டு தோல்பையை வாயில்வைத்து நீரை துளித்துளியாகக் குடித்தான். தோல்பையுடன் சென்று சோலையின் விளிம்பில் அடர்ந்து நின்ற ஸாமிமரத்தின் அடியில் மென்மணலில் படுத்துக்கொண்டான். அண்ணாந்து நோக்கியபோது மேலே மரக்கிளைகள் முழுக்க பாக்குக்குலைகள் போல சிறிய சாம்பல்நிறச் சிட்டுகள் கிளைதாழச் செறிந்திருக்கக் கண்டான். அவை ஓயாது இடம்மாறியபடி ஒலியெழுப்பி சிறகடித்துக்கொண்டே இருந்தன. அப்பால் பாலைநிலம் வெயிலில் நனைந்து வெந்து ஆவியெழுப்பிக்கொண்டிருந்தது. மேலே மேகத்துளிகூட இல்லாத வானம் ஒளிப்பரப்பாக இருந்தது.

பகல் முழுக்க அங்கே தங்கி மாலையில் வெயில்தாழ்ந்தபின் அவர்கள் கிளம்பினர். காற்றில் மண்ணின் வாசனை காய்ச்சப்பட்ட உலோகத்தின் மணம்போல எழுந்துவந்து வறுத்த உணவுகளின் நினைவை எழுப்பியது. சூரியன் மேகமே இல்லாத புழுதிவண்ண வானில் மூழ்கி மறைந்த பின்னரும் மண்ணில் நல்ல ஒளி மிச்சமிருந்தது. அத்திரிகள் கால்களில் பாதையை வைத்திருந்தன. அவை வரிசையாகச் சென்றுகொண்டிருந்தன. ஓடையில் நீர் ஓடுவதுபோல அவற்றை மீறியே அவை செல்வதாகத் தோன்றியது.

செங்குத்தாக மண்ணாலான மலைவிளிம்பு ஒன்று வந்தது. கையால் வழித்து விட்டதுபோன்ற அதன் மடிப்புகளில் செந்நிறமான மண்பாளங்கள் பிளந்து விழப்போகின்றவை போல நின்றன. மாமிசத்தாலான மலை. கீழே முன்பு எப்போதோ விழுந்தவை செவ்வோட்டுத் தகடுகளாக உடைந்து கிடந்தன. மலைவிளிம்பை நெருங்கியபோதுதான் அந்தத் தகடுகள் ஒவ்வொன்றும் இடுப்புயரம் கனமானவை என்று தெரிந்தது.

செம்மண்மலை விளிம்பில் இருந்த சிறிய வடுபோன்ற பாதையில் ஏறி மேலே செல்லும்போதுதான் அங்கு ஏன் வண்டிகளில் எவரும் வருவதில்லை என சிகண்டி புரிந்துகொண்டான். மேலே ஏறியதும் திரும்பிப்பார்த்தபோது கண்ணுக்கெட்டும் தொலைவுவரை பாலைநிலம் மிதமான வெளிச்சத்தில் பச்சைநிறத்தில் நூல்வேலைப்பாடுகள் செய்த பொன்னிறப் பட்டுபோல விரிந்து கிடப்பதைக் காணமுடிந்தது. ஸென்யாத்ரியும் போம்போனமும் துங்கானமும் தெளிவாக மேற்கை முழுமையாக வளைத்து நின்றன. அவற்றின் மடம்புகளில் மணல் பொழிந்து உருவான கூம்புகளைக் காணமுடிந்தது.

இரவு எழுந்தபோது வானம் பல்லாயிரம்கோடி விண்மீன்களுடன் கரும்பட்டுக்கூரையாக மிக அருகே வந்து விரிந்துகிடந்தது. கையை வீசி விண்மீன்களை அள்ளிவிடலாமென்று தோன்றியது. விண்மீன்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய கனல் உருளைகளாக இருளில் மிதந்து நின்றன. அவர்களின் காலடி ஓசைகள் இருட்டுக்குள் நின்ற பாறைகளில் எங்கெங்கோ எதிரொலித்து அவர்களிடமே திரும்பி வந்தன. அருகே சோலைகள் சற்று அதிகரித்திருப்பது ஓசைகளில் தெரிந்தது. பல இடங்களில் ஓநாய்களின் ஊளைகள் கேட்டன.

நான்காம் நாள் அதிகாலையில் அவர்களின் குழு சைப்யபுரியைச் சென்றடைந்தது. அகன்ற நிலத்தின் நடுவே நாரி ஆறு வெளிறிய மணல்படுகையாகக் கிடந்தது. சிறியஓடை போல நீர் ஓடியது. ஆற்றின் இருபக்கங்களிலும் மேய்ச்சல் நிலங்கள் வந்தன. கொம்புகளற்ற வெண்ணிறமான பசுக்களை மேய்ப்பவர்களும் குள்ளமான கொம்புசுருண்ட ஆடுகளை மேய்ப்பவர்களும் களிமண்ணை அள்ளிப்போர்த்தியதுபோல தோளைச்சுற்றிய மரவுரியாடையும் தலையில் முண்டாசுச்சுற்றுமாக செம்புழுதி படிந்து திரித்திரியாக தொங்கிய தாடியுடன் சுருங்கிய கண்களால் நோக்கி நின்றனர்.

தொலைவிலேயே சைப்யர்களின் உயரமான கோட்டை தெரிந்தது. செங்குத்தாக எழுந்த ஒரு பெரிய மண்பாறை மீது அந்நகரம் எழுப்பப்பட்டிருந்தது. பாறையின் விளிம்பிலேயே எழுந்த அதே நிறமான உயரமற்ற கோட்டையின் மேல் காவலரண்களில் வீரர்கள் இருந்தனர். அவர்கள் நெருங்கியதும் கோட்டைமேல் எரியம்பு எழுந்தது. பாறைக்குக் கீழே இருந்த காவல்குகையில் இருந்து ஐந்து குதிரைவீரர்கள் அவர்களை நோக்கி செம்புழுதியைக் கிளப்பியபடி வந்தனர். அவர்கள் தங்கள் இலச்சினைகளைக் காட்டியதும் திரும்ப கோட்டையை நோக்கி எரியம்பு ஒன்றை அனுப்பினர்.

VENMURASU_EPI_45
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சிகண்டி அந்தக்கோட்டையை பார்த்துக்கொண்டே சென்றான். அருகே செல்லச்செல்லத்தான் அந்தக்கோட்டையின் அமைப்பு அவனுக்குப் புரிந்தது. முதலில் அதை ஒரு மாபெரும் மண்கோட்டை என்றுதான் அவன் புரிந்துகொண்டான். நெருங்கியபோதுதான் இரண்டுயானைகளின் உயரம்கொண்ட மண்பாறைமேடு மீது கோட்டை இருப்பதை உணர்ந்தான். அந்தப்பாறை கண்பார்வைக்கு களிமண்ணாகவும் கையால் தொட்டபோது பாறையாகவும் இருந்தது. அதைக் குடைந்து அதனுள் நுழைவதற்கான பாதையை அமைத்திருந்தனர். சரிந்து சென்ற குதிரைப்பாதையும் இருபக்கமும் படிகளும் பாறைக்குள்ளேயே நுழைந்து மேலே சென்று எழுந்தன. அப்பாதைகளின் இருபக்கமும் காவல்வீரர்கள் அமர்ந்திருக்கும் சதுரவடிவ அறைகள் செதுக்கப்பட்டிருந்தன.

மேலே ஏறியதுமே சிகண்டி அந்நகரின் அமைப்பைக் கண்டு வியந்து நின்றுவிட்டான். பெரிய மண்பானைகளைக் கவிழ்த்து வைத்ததுபோலவோ மண்குவியல்கள் போலவோ தெரிந்தன அந்நகரின் அனைத்துக் கட்டடங்களும். அவற்றின் உருளைக்கூம்பு முகடுகளின் மண்குழைவுச்சரிவில் காற்று பட்டு உருவான வடுக்கள் பரவியிருந்தன. அவை பல அடுக்குகள் கொண்டவை என்பது அவற்றின் கீழ்த்தளத்துப் பெருவாயில்களுக்கு மேல் அடுக்கடுக்காக எழுந்த சாளரங்களில் இருந்து தெரிந்தது. இருபத்தெட்டு பெரிய கட்டடங்கள் தவிர கவிழ்ந்தகோப்பைகள் போல நூற்றுக்கணக்கான சிறிய கட்டடங்கள் இருந்தன. கட்டடங்களுக்கு முன்னால் சில இடங்களில் காட்டுமரங்களால் தூண்கள் அமைத்து தோல்கூரைகளை இழுத்துக்கட்டி பந்தலிட்டிருந்தனர்.

மாலை வேளையில் நகரம் முழுக்க மனிதர்களின் அசைவுகள் நிறைந்திருந்தன. அனைத்துச்சாளரங்களிலும் மனிதர்கள் தெரிந்தனர். கீழே வீதிகளில் வணிகர்கள் பொருட்களைக் குவித்துப்போட்டு விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றிலும் இருக்கும் மலையடுக்குகளில் இருந்து வேட்டைப்பொருட்களுடன் வந்த வேடர்கள். தோள்களில் சிறிய விற்களும் அம்பறாத்தூணிகளும் அணிந்து தலையில் மரவுரித்தலைப்பாகை சுற்றி தங்கள் முன் பந்தல்கால்கள் போல நடப்பட்ட குச்சிகளில் கொன்ற கீரிகள், முயல்கள், உடும்புகள் போன்றவற்றை கட்டித் தொங்கவிட்டு அமர்ந்திருந்தனர். பொறிவைத்துப்பிடிக்கப்பட்ட மலைஎலி அணில் போன்ற சிறிய உயிரினங்கள் மூக்குவழியாக கோர்க்கப்பட்ட நார்களால் கட்டப்பட்டு உயிருடன் எம்பி எம்பி விழுந்துகொண்டிருந்தன.

செம்மண்நிறமான கனத்த ஆடைகளை பல சுற்றுகளாக அணிந்து கூந்தலையும் மறைத்திருந்த சைப்யபுரியின் பெண்கள் குனிந்து அவற்றை பேரம்பேசி வாங்கினர். உலரவைக்கப்பட்ட காய்கறிகளும் பழங்களும், பலவகையான கொட்டைகளும், உலர்ந்த மீன்களும், புகையிடப்பட்டு கறுத்த மாமிசமும், வெல்லக்கட்டிகளும்தான் அதிகமாக விற்கப்பட்டன. அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் சந்தைநடுவிலேயே மனிதர்களை மண்டையால் முட்டி விலக்கி வழி உண்டுபண்ணிக்கொண்டு சென்றன.

ஒரு வணிகனுக்கு முன் பெரிய வெண்கற்களாக குவிக்கப்பட்டிருந்த உப்பை சிகண்டி கண்டான். காந்தாரத்தின் பாலையில் அவை தோண்டி எடுக்கப்படுகின்றன என்றான் வணிகன். சிலர் அவற்றை கோடரிகளால் வெட்டி சிறு துண்டுகளாக ஆக்கிக்கொண்டிருந்தனர். மண்பானைகளும் யானங்களும் மரத்தாலான கரண்டிகளும் விற்குமிடங்களில் எல்லாம் பெண்களே வாங்கிக்கொண்டிருந்தனர். ஆயுதங்கள் விற்கும் இடங்களில் மட்டும்தான் பெரிய மரவுரித் தலைப்பாகை அணிந்து பெரிய மீசைகளும் கனத்த தாடிகளும் கொண்ட ஆண்கள் தென்பட்டனர். கத்திகளை வீசிநோக்கியும் அம்புகளை கூர்நோக்கியும் வாங்கிக்கொண்டிருந்தனர். எண்ணியிராமல் இருவர் சிரித்துக்கொண்டு வாள்களை வீசி போர்செய்யத் தொடங்கினர்.

வணிகர்களிடம் விடைபெற்று சிகண்டி அரண்மனை நோக்கிச் சென்றான். அரண்மனை அருகே சென்றதும்தான் அது மண்ணால் கட்டப்பட்டதல்ல, மண்நிறமான மென்பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கட்டடம் என அவனுக்குப் புரிந்தது. வாயிற்காவலனிடம் அவன் தன் கச்சையில் இருந்து உத்தரபாஞ்சாலத்தின் அரச இலச்சினையை எடுத்துக் காட்டியதும் அவன் தலைவணங்கினான். பால்ஹிகரைப் பார்க்கவேண்டும் என்று சிகண்டி சொன்னான். காவலர்கள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டு “அவரையா?”’ என்றனர். ஒருவீரன் “அவரை எப்படி தங்களுக்குத்தெரியும்?” என்றான். “சூதர்கதைகளில் அவரைப்பற்றி கேட்டிருக்கிறேன்.” அவர்களில் ஒருவன் “அவரைச் சந்திக்க எவரும் செல்வதில்லை” என்றான்.

“நான் அவரைப் பார்ப்பதற்காகவே வந்தேன்” என்றான் சிகண்டி. காவல்வீரன் “மன்னிக்கவும் வீரரே, அவர் எவரையும் சந்திக்க விரும்புவதில்லை” என்றான். “நான் அவரைப்பார்க்க பாஞ்சாலத்தில் இருந்து வந்திருப்பதாகச் சொல்லுங்கள்!” என்றான் சிகண்டி . வீரன் தலைவணங்கிவிட்டு உள்ளே சென்றான். சற்றுநேரம் கழித்து திரும்பி வந்து “மன்னிக்கவும். அவர் உகந்த நிலையில் இல்லை. அவர் தங்களை சந்தித்தால்கூட ஏதும் பேசமுடியாது” என்றான்.

சிகண்டி “என்னை அவரிடம் இட்டுச்செல்லமுடியுமா? நான் அவரிடம் ஓரிரு சொற்கள் பேசுகிறேன். என்னைச் சந்திக்க அவர் விரும்பவில்லை என்றால் திரும்பிவிடுகிறேன்” என்றான். காவல்வீரன் தயங்கிவிட்டு தன் தலைவனிடம் சென்று சொன்னான். நூற்றுவர்த் தலைவன் எழுந்து சிகண்டியிடம் வந்து மீண்டும் அனைத்தையும் விசாரித்தபின்பு “வீரரே சைப்யபுரியின் பிதாமகர் பால்ஹிகர் எவரையும் சந்திப்பதில்லை. ஆனால் நீங்கள் நெடுந்தொலைவில் இருந்து வந்திருக்கிறீர்கள். ஆகவே அனுமதிக்கிறேன்” என்றான்.

அவன் பின்னால் சிகண்டி நடந்தான். அந்தக் கட்டடம் படிகள் வழியாக மேலே எந்த அளவுக்குச் செல்கிறதோ அதேயளவுக்கு அடியிலும் இறங்குவதை அவன் வியப்புடன் கவனித்தான். களிமண்பாறையில் குடைந்த படிக்கட்டுகள் மடிந்து மடிந்து இறங்கிச் சென்றன. சுவரில் வெட்டப்பட்ட பிறைகளில் நெய்விளக்குகள் சுடரசையாமல் எரிந்துகொண்டிருந்தன. அவர்களின் காலடிஓசை கீழே எங்கோ எதிரொலித்து வேறு எவரோ இறங்கிச்செல்வதுபோலக் கேட்டது.

முதல் அடுக்கில் நிறைய அறைகள் ஒன்றில் இருந்து இன்னொன்றாகப் பிரிந்து சென்றன. அவற்றில் எல்லாம் வெளிச்சமும் மனிதர்களின் குரலும் இருந்தன. இரண்டாவது அடுக்கிலும் அதன் கீழே மூன்றாவது அடுக்கிலும் வெளிக்காற்று உள்ளே வரும் சாளரங்கள் இருப்பதை உணரமுடிந்தது. நான்காவது அடுக்கில் காற்று மூன்றாவது அடுக்கிலிருந்து இறங்கித்தான் வரவேண்டியிருந்தது. மெல்லிய தூசியின் வாசனை காற்றில் இருந்தது. அசையாத காற்றில் மட்டுமே படியும் மென்புழுதி சுவர்களின் ஓரங்களில் படிந்திருந்ததை சிகண்டி கண்டான்.

முதல் மூன்று அடுக்கிலும் இருந்த செய்நேர்த்தி இல்லாமல் வளைபோல வட்டமாகவே அந்த இடைநாழி குடையப்பட்டிருந்தது. அறைகளின் வாயில்களும் வட்டமாக இருந்தன. அங்கே பாறையாலான சுவர்கள் கரடுமுரடாக கையில் தட்டுப்பட்டன. குறுகலான, ஒழுங்கற்ற படிகளில் சரியாக கால்வைக்கவில்லை என்றால் தவறிவிடும் என்று தோன்றியது. இடைநாழியில் ஓர் இடத்தில் மேலிருந்து கரும்பாறை நீட்டிக்கொண்டிருந்தது.

சிகண்டி மண்ணுக்குள் புதைந்துவிட்ட உணர்வை அடைந்தான். ஒருநகரமே தலைக்குமேல் இருப்பது எப்போதும் நினைவில் இருந்துகொண்டிருந்தது. நான்காம் அடுக்கில் அதிக அறைகள் இருக்கவில்லை. இடைநாழியில் இருந்து பிரிந்த உள்ளறை ஒன்றில் மட்டுமே விளக்கொளி தெரிந்தது. வீரன் சற்றுப் பின்னடைந்து “உள்ளே இருக்கிறார்” என்றான். “இங்கா?” என்றான் சிகண்டி. “ஆம், பிதாமகர் சென்ற இருபதாண்டுகாலமாக இந்த அறைக்குள்தான் வாழ்கிறார்” என்றான் தலைவன். “அவர் வெளியே செல்வதேயில்லை…”

“ஏன்?” என்றான் சிகண்டி. “அவருக்கு சூரிய ஒளி உகக்கவில்லை…” சிகண்டியின் கண்களைப் பார்த்துவிட்டு “அவர் உடல்நிலையில் சிக்கலேதும் இல்லை. அவருக்கு சூரிய ஒளி பிடிப்பதில்லை. இங்கே இருக்கும்போது மட்டுமே அமைதியை உணர்கிறார்” என்றான். “உள்ளே சென்று பேசுங்கள். அவரிடம் அதிகமாக எவரும் பேசுவதில்லை. அவர் எவரிடமும் பேசவிரும்புவதுமில்லை.”

சிகண்டி அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தான். சாளரங்களே இல்லாத அறை. நான்கு மூலைகளும் மழுங்கி வட்டமாக ஆன நீள்சதுர வடிவில் மண்நிறத்தில் இருந்த அவ்வறை தன் வெம்மையால் ஓர் இரைப்பைக்குள் இருப்பதுபோல உணரச்செய்தது. சுவருடன் சேர்த்து செதுக்கப்பட்டிருந்த கல்லால் ஆன மஞ்சத்தில் இரு கைமுட்டுகளையும் முழங்கால்மேல் வைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்த முதியவர் பேருடலுடன் பூதம்போலிருந்தார். அக்கணமே எழப்போகிறவர் போல இருந்தாலும் அவர் நெடுநேரமாக அமர்ந்திருப்பதுபோலவும் தோன்றியது.

சிகண்டி தொண்டையைக் கனைத்து ஒலி எழுப்பினான். அவர் அதைக் கேட்கவில்லை போலத் தெரிந்தது. மீண்டும் ஒலி எழுப்பியபின்பு “பிதாமகருக்கு வணக்கம்” என்றான். அவர் திரும்பி அவனைப்பார்த்தார். மனிதனைப் பார்க்கும் பாவனையே இல்லாத கண்கள். பின்பு எழுந்து கைகளை விரித்து தொங்கவிட்டுக்கொண்டு நின்றார். சிகண்டியின் தலைக்குமேல் அவரது தோள்கள் இருந்தன. இடையில் அணிந்திருந்த பழைய தோலாடை தவிர உடைகள் இல்லாத உடல். தலையிலும் முகத்திலும் எங்கும் முடியே இருக்கவில்லை. சுடாத களிமண்ணால் செய்யப்பட்ட வாயிற்பூதம் போலிருந்தார். செம்மண்நிறச் சருமம் முழுக்க உலர்ந்த களிமண்ணின் விரிசல்கள் போல தோல் சுருங்கிப்படர்ந்திருந்தது. கன்றுக்குட்டிபோல கழுத்தின் தசைகள் சுருங்கி தொங்கின.

அவனை குனிந்துபார்த்து “யார் நீ?” என்றார். அவன் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அவனை தன் பெரிய விரல்களால் சுட்டி “உன்னை நான் முன்னரே பார்த்திருக்கிறேன்” என்றார். அவரது மிகப்பெரிய கைகள்தான் அவரது அனைத்து அசைவுகளையும் விசித்திரமானவையாக ஆக்கி அவரை மனிதரல்ல என நினைக்கச்செய்தன என்று சிகண்டி உணர்ந்தான். அக்கைகளை என்ன செய்வதென்றறியாதவர் போலிருந்தார். யானையின் துதிக்கை போல அவை துழாவிக்கொண்டே இருந்தன. ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டன. புஜங்களில் ஓடிய பெரிய நரம்பு காட்டுமரத்தில் சுற்றிப்படிந்து கனத்த கொடிபோலத் தெரிந்தது.

சிகண்டி வணங்கி “பிதாமகரே, என் பெயர் சிகண்டி. நீங்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நான் இந்நகருக்கு இப்போதுதான் வருகிறேன்” என்றான். “இல்லை, நான் உன்னை பார்த்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார். அவரது குரல் யானையின் உறுமல்போல முழக்கம் கொண்டதாக இருந்தது. “எங்கே என்று சொல்லத் தெரியவில்லை… ஆனால் நான் உன்னைப் பார்த்திருக்கிறேன்.” சிகண்டி “நான் உத்தரபாஞ்சாலத்தில் இருந்து வருகிறேன்” என்றான்.

சிந்தனை முள்முனையில் தவிப்பதன் வலியை அவரது கண்களில் காணமுடிந்தது. “இல்லை… நீ… உன்னை எனக்குத்தெரியும்” என்றார். அவரது இமைகள் விரிந்தன. இமைகளிலும் முடியே இல்லை என்பதை சிகண்டி கவனித்தான். “ஆம், நான் உன்னை நேரில் பார்த்ததில்லை. ஆனால் வேறு எங்கோ பார்த்தேன். நீ…” பெரிய சுட்டுவிரலைக் காட்டி “உன் பெயர் என்ன சொன்னாய்?” என்றார். “சிகண்டி.” அவர் தலையை அசைத்து “கேள்விப்படாத பெயர்” என்றார். திரும்பி தன் மஞ்சத்துக்குச் செல்ல இரண்டடி வைத்தவர் நிலையற்றவராக திரும்பிவந்தார்.

கனத்த பெரிய கையால் வெற்றுத் தலையை நீவியபடி “ஆம்… நான் உன்னைப் பார்த்தேன்… ஒரு மாயக்காட்சியில் பார்த்தேன். நீ பீஷ்மனை கொல்லப்போகிறாய்” என்றார். மனக்கிளர்ச்சியுடன் கைகளை விரித்தபின் திரும்பிச் சென்று அந்த மஞ்சத்தில் போடப்பட்ட புலித்தோலில் அமர்ந்தபடி “ஆம்…நீதான்…என்னால் தெளிவாகவே உன்னை நினைவுகூரமுடிகிறது. இருபதாண்டுகளுக்கு முன் நான் உன்னைப்பார்த்தேன்” என்றார். “நீ பீஷ்மனின் கொலைகாரன்.”

நூல் ஒன்று – முதற்கனல் – 44

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்

[ 2 ]

சித்ராவதியில் இருந்து கிளம்பிய சிகண்டி ஐம்பதுநாட்கள் நதிகளையும் கோதுமைவயல்களையும் தாண்டி திரிகர்த்தர்கள் ஆண்ட ஹம்ஸபுரம் வந்துசேர்ந்தான். பசுங்கடல்வயல்கள், நீலமொழுகிய நதிகள், மக்கள் செறிந்த கிராமங்களைத்தாண்டி வந்துகொண்டிருந்த நாட்களில் ஒருமுறைகூட அவன் எவரிடமும் பேசவில்லை. அவனைக் கண்டதுமே கிராமங்களில் தலைமக்கள் எழுந்துவந்து வணங்கி ஊருக்குள் அழைத்துச்சென்றனர். அவனை வராஹியின் ஆலயமுகப்பில் அமரச்செய்து ஊனுணவளித்தனர். அவன் கைகாட்டியதும் படகுக்காரர்கள் வந்து பணிந்து அவனை ஏற்றிக்கொண்டனர். உடம்பெங்கும் சேறுபடிந்திருக்க, தலை புழுதியில் காய்ந்த புல்லாக ஆகியிருக்க அவன் நகர்ந்துசெல்லும் சிறு மண்குன்றுபோலிருந்தான். உறுமலே அவன் மொழியாக இருந்தது.

அஷிக்னி நதிக்கரையில் இருந்த காசியபபுரத்தைச்சுற்றி வண்டல்படிந்த வயல்வெளி பரவியிருந்தது. முற்றத்தொடங்கிய கோதுமைக்கதிர்கள் அடர்நீலநிறத் தாள்களுடன் செறிந்து நின்றன. வயல்வெளிகளை ஊடுபாவாக வெட்டிச்சென்ற வாய்க்கால்களின் நீரின் ஒலியும் சதுப்புகளில் படுத்திருந்த எருமைகளின் முகரியொலியும் நீர்ப்பறவைகளின் சிறகோசைகளும் அந்நிலத்தின் மொழியாக ஒலித்துக்கொண்டிருந்தன. வெயில்பரவிய வயல்வெளிக்கு நடுவே வணிகப்பாதையில் அஷிக்னி நோக்கிச் சென்ற பொதிவண்டிகள் நீரில் மிதப்பவை போலத் தெரிந்தன. அவற்றைத்தொடர்ந்து சென்ற சிகண்டி அஷ்கினியின் கரையை அடைந்தான்.

அஷிக்னியில் பாய்விரித்த படகுகள் சிறகசையாமல் மிதக்கும் பருந்துகள் போல அசையாத பாய்களுடன் தெற்குநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. மீன்பிடிப்பவர்களின் தோணிகள் மெல்ல அலைகளில் எழுந்தமர்ந்து நிற்க அவ்வப்போது அவற்றிலிருந்து தவளை நாக்குநீட்டுவதுபோல வலைகள் எழுந்து நீரில் பரவி விழுந்தன. அலைகள் மோதிக்கொண்டிருந்த அஷிக்னியின் கரையை உறுதியாக கல்லடுக்கிக் கட்டியிருந்தனர். கல்லடுக்குகளின் பொந்துகளுக்குள் புகுந்த நீர் எண்ணிஎண்ணிச் சிரிப்பதுபோல ஒலியெழுப்பியது.

நதிக்கரைமேலேயே வண்டிப்பாதை அமைந்திருந்தது. வண்டிகளின் பின்னால்சென்ற சிகண்டி தூரத்தில் ஹம்ஸபுரத்தின் கோட்டையைக் கண்டான். மலைப்பாறைகளை நீர்வழியாகவே உருட்டிவந்து ஏற்றி யானைகளைக்கொண்டு அடுக்கி உருவாக்கப்பட்ட உயரமான அடித்தளம் மீது சிறிய உருளைக்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட அந்தக்கோட்டை மழையில் கறுக்காத மஞ்சள்நிறமான கல்லடுக்குகளுடன் செதில்கள் நிறைந்த சாரைப்பாம்பு போலத் தோற்றமளித்தது. அதன்மேல் மரத்தாலான காவல்கோபுரங்களில் வெண்பட்டில் செந்நிறமாகத் தீட்டப்பட்ட சூரியனின் சின்னம் இருந்தது.

கோட்டைக்கு முன்பக்கம் மிகப்பெரிய படகுத்துறை இருந்தது. அதன் இருபக்கமும் வண்டிப்பாதைகள் வந்து இணைந்தன. நதியில் வடக்கில் இருந்தும் தெற்கில் இருந்தும் வந்த படகுகளும் இருபக்கச் சாலைகளும் சந்திக்கும் நான்மையமாக இருந்தது அந்தத் துறை. நதியில் அலைகளில் எழுந்து விழுந்து நெருங்கி வந்த படகுகள் பாய்களைச் சுருட்டியபடி அணுகி பெரிய துறையைச் சேர்ந்தபோது கரையிலிருந்து கூச்சல் எழுந்தது. கயிறுகளை வீசி படகுகளை பிடித்துக்கட்டுபவர்களும் படகிலிருந்த துடுப்புக்காரர்களும் மாறி மாறி கூவிக்கொண்டனர். கயிற்றை பிடித்து இழுப்பவர்கள் உரக்கப்பாடினர். நெருங்கி வந்த படகு கரையில் இருந்த பெரிய மூங்கில்சுருள்களில் மோதி அதிர்வை இழந்து மெல்ல அமைதியடைந்தது.

படகுத்துறைக்கு அருகிலேயே மரக்கூரை போடப்பட்ட பண்டகசாலைகள் வரிசையாக நின்றன. நூற்றுக்கணக்கான வண்டிகள் அங்கே சுமைகளை ஏற்றிக்கொண்டும் இறக்கிக்கொண்டும் நின்றன. உயரமற்ற பெருங்களர்வா மரங்கள் பரவிநின்ற கோட்டைமுற்றம் முழுக்க வண்டிமாடுகள் நின்று கோதுமைவைக்கோலை மென்றுகொண்டிருக்க அவற்றின் கழுத்துமணிகள் சேர்ந்து ஒற்றை முழக்கமாகக் கேட்டன. மீன்மெழுகு பூசப்பட்ட கரியகூரைகொண்ட கூண்டுவண்டிகள் வெயிலில் வளைவுகள் மின்ன நுகம் ஊன்றி நின்றிருந்தன. தலைப்பாகைகளை அவிழ்த்துவிட்ட வணிகர்கள் மரத்தடிகளில் பாய்கள் விரித்து படுத்தபடியும் கழஞ்சும் தாயமும் விளையாடியபடியும் இருந்தனர்.

வெயிலுக்குக் கண்கள்கூச சிகண்டி கோட்டையை ஏறிட்டுப் பார்த்தான். பின்பு உள்ளே நுழைந்த அவனை நோக்கி வந்த வீரன் ஒருவன் முகத்தில் இழிவுச்சிரிப்புடன் “நீ எப்படி ஆயுதம் ஏந்தியிருக்கிறாய்? யார் உனக்கு ஆயுதமளித்தது?” என்றபடி சிகண்டியின் வில்லை பிடிக்கவந்தான். அவனுடைய இருகால்கள் நடுவே தன் காலைக்கொடுத்து ஒற்றைக்கையால் தூக்கிச் சுழற்றி வீசிவிட்டு சிகண்டி முன்னால் நடந்தான். புழுதியில் விழுந்தவன் எழுந்து ஆவேசமாக தன் வேலை எடுக்க மேலே இருந்த தலைவன் அவர்களின் மொழியில் ஏதோ சொல்ல அவன் வேலைத்தாழ்த்தினான்.

சிகண்டியை நோக்கி வந்த தலைவன் “வீரரே, இந்நகரில் எவருக்கும் அனுமதி உண்டு. ஆனால் ஷத்ரியர்கள் அல்லாதவர்கள் ஆயுதமேந்த அனுமதி இல்லை” என்றான். சிகண்டி “எந்த ஷத்ரியனுக்காவது என் ஆயுதத்தை பிடுங்க முடிந்தால் அதைச்செய்யலாம்” என்றான். தலைவன் சிகண்டியின் கண்களைக் கூர்ந்து சில கணங்கள் நோக்கினான். “வீரரே, இனி இந்நகருக்குள் செல்வது தங்கள் விருப்பம். தங்களை எந்த ஷத்ரியன் கொன்றாலும் இந்நகரம் அதை அனுமதிக்கும்” என்றான். சிகண்டி ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றான்.

மொத்தநகரமும் களிமண் நிறத்தில் இருந்ததை சிகண்டி கண்டான். உயரமில்லாத சிறிய சதுரவடிவ கட்டடங்கள். அஷிக்னியின் களிமண்ணை குழைத்துக் கட்டப்பட்டவை. கூரைகள் சாய்வாக இல்லாமல் சதுரமாக இருந்ததனால் அவை விதவிதமாக அடுக்கப்பட்ட பெட்டிகள் என்ற பிரமையை அளித்தன. சீரான நேர்கோடுபோலச் சென்ற அகன்றசாலைகளில் பெரும்பாலும் கோவேறு கழுதைகளில்தான் மக்கள் பயணம் செய்தனர். கழுதைகள் சிறிய பொதிகளுடன் சென்றன. அவையும் புழுதி நிறமாகவே இருந்தன. ஆனால் அதற்கு மாறாக மக்கள் சிவப்பு நீலம் பச்சை மஞ்சள் நிறங்களில் உடையணிந்து பெரிய பூக்கள் போல நடமாடினர். ஆண்கள் வண்ண உடைகள் அணிவதை சிகண்டி அங்குதான் முதல்முறையாக பார்த்தான்.

பல பகுதிகளாக பிரிந்துபிரிந்து சென்ற நகரமெங்கும் மக்கள் நெரிசலிட்டுக்கொண்டு நடமாடினர். நகரில் ஏன் அந்த நெரிசல் என்று சிகண்டி சற்று நேரம் கழித்து உணர்ந்தான். ஹம்ஸநகரம் அப்பகுதியில் இருந்த முக்கியமான வணிக மையம். அஷிக்னி நதியின் கரையில் இருந்த அத்தனை விவசாய கிராமங்களுக்கும் அப்பால் வறண்ட மலையடுக்குகளுக்குள் அமைந்திருந்த பல்லாயிரம் சிற்றூர்களுக்கும் அது ஒன்றே வெளியுலகம். அங்கே வாய்திறந்து விழிவிரிய நோக்கியபடி முண்டிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு வாழ்பவர்கள் அல்ல என்று தெரிந்தது.

நகரின் நடுவே வலப்பக்கம் அஷிக்னிக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட உருளைக்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட சிறிய உள்கோட்டை இருந்தது. அதற்கப்பால் ஏழடுக்கு அரண்மனையும் சமதளக் கூரையுடன் ஒரு மண்திட்டு போல எழுந்து தெரிந்தது. அதன் சாளரங்களில் மட்டும் செம்பட்டுத்திரைச்சீலைகள் ஆடின. கோட்டைக்கு முன்னால் ரதங்கள் சில நின்றன. காவல்வீரர்கள் மேலே ஒளிரும் ஈட்டியுடன் நின்றிருந்தனர். பெரிய முரசின் தோல்பரப்பில் பட்ட வெயில் கண்ணை அரைக்கணம் கூசச்செய்தது. இடப்பக்கம் சென்ற சாலை உயர்குடிகளின் சிறிய அரண்மனைகள் இருந்த பகுதியை நோக்கிச் சென்றது. நேர் முன்னால் உயர்ந்த முகடுடன் தெரிந்தது சூரியதேவனின் ஆலயம்.

சிகண்டி அந்தக் கோயிலைப்பார்த்தபடி சாலையில் நின்றான். பெரிய பாறைகளைக் குவித்து உருவாக்கப்பட்ட செயற்கைக் குன்றுக்குமேல் இருந்தது அந்த ஆலயம். குன்றின் மேல் ஏறிச்சென்ற பெரிய படிக்கட்டுகளால் மேலிருந்த கட்டடத்தின் காலடியில் கொண்டுசென்று சேர்க்கப்பட்ட மனிதர்கள் கைவிரல்கள் அளவேயுள்ள சிறிய பாவைகளாக அசைந்தனர். அவர்களின் தலைக்குமேல் பேருருவமாக எழுந்து நின்றன சுதையாலான ஏழு வெண்குதிரைகள். பெருங்கடல் அலை ஒன்று அறைவதற்கு முந்தைய கணத்தில் உறைந்ததுபோல, மலைச்சரிவில் இறங்கிய நதி நிலைத்தது போல அவை வேகமே அசைவின்மைகொண்டது போல விழித்த கண்களும் திறந்த வாயும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டு விதவிதமாகத் திரும்பிய நீள்கழுத்துகளுமாக துள்ளி நின்றன. அவற்றின் கனத்த குளம்புகள் அங்கிருந்த மனிதர்களின் தலைக்குமேல் நீட்டி நின்றன.

அவற்றின் பிடரிமயிரின் வண்ணங்கள் வேறுபட்டன. ஊதா, செந்நீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன்னிறம், சிவப்பு நிறங்களில் தழல்போல நீண்டு நெடுந்தூரம் பின்பக்கம் பறந்த பிடரிமயிரை மட்டும் மரத்தால் செய்திருந்தனர். குதிரைகளுக்குப்பின்னால் சுதையாலான பெரிய ஆலயத்தின் கூரை வெண்கலத்தகடுகளாலானது. மதியவெயிலில் பொன்னிறமாக அது ஒளிர்ந்தது. அதன் கீழே சுதைச்சுவர் இளஞ்சிவப்பு நிறமாகவும் வட்டமாகத் திறந்திருந்த வாயில் செந்நிறமாகவும் இருந்தது. சாலையிலிருந்து பார்த்தபோது பொன்னிறமான மேகங்களை மணிமுடியாக அணிந்து சூரியவட்டம் ஏழுகுதிரைகளில் வருவதுபோலிருந்தது அக்கோயில்.

சிகண்டி படிகளில் ஏறி மேலே சென்றான். அவனுடைய மண்படிந்த உடலைக்கண்ட மக்கள் அஞ்சி விலகி சுருங்கிய கண்களால் பார்த்தனர். தங்களுக்குள் கிசுகிசுவென பேசி பிறருக்கு சுட்டிக்காட்டினர். கோயிலைச்சுற்றி இருந்த பெரிய வட்டப்பாதையில் அண்ணாந்து சிலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவனைக்கண்டதும் அஞ்சி சிறிய கூச்சலுடன் விலகினர். கோயிலின் சுவர்களிலும் கூரைச்சரிவிலும் சுதையாலும் மரத்தாலும் செய்யப்பட்ட சிலைகள் நிறைந்திருந்தன. இதமான வண்ணங்கள் பூசப்பட்ட அழகிய சிலைகளின் கண்கள் நீலநிறமான சிப்பிகளால் அமைக்கப்பட்டு மெல்லிய ஒளியுடன் பார்ப்பவர்களின் கண்களைச் சந்தித்தன. உதடுகள் உயிரசைவு கொண்டு எக்கணமும் பேசமுற்படுபவை போலிருந்தன.

வலப்பக்கச் சுவரில் இருந்த பெரிய சிற்பத்தொகை காசியப பிரஜாபதிக்கு அதிதிதேவியில் சூரியன் பிறப்பதைக் காட்டியது. காசியபரின் வெண்ணிறத் தலைமயிர் விரிந்து மேகங்களாகப் பரவியிருந்தது. அந்த மேகங்களில் முனிவர்களும் தேவர்களும் அமர்ந்திருந்தனர். அவரது தலைக்குமேல் குனிந்துநோக்கி அருள்புரிந்தபடி பிரம்மனும் விஷ்ணுவும் பறந்துகொண்டிருந்தனர். காசியபரின் தாடி அருவிபோல வெண்ணிறமாகக் கொட்டி கீழே வழிந்து இரண்டு பக்கமும் அலைகளாக ஓடிக்கொண்டிருக்க அதில் நாகங்களும் மீன்களும் நீந்தின. அவரது உடல் பொன்னிறமானதாக இருந்தது.

அவர் அருகே இருந்த தட்சனின் மகளாகிய அதிதிதேவி பெண்ணின் தலையும் தோள்களும் மார்பகங்களும் கொண்டிருந்தாள். இடைக்குக் கீழே கரிய சுருள்களாக அவளுடைய பாம்புடல் விரிந்திருக்க அதன்மேல்தான் காசியபர் அமர்ந்திருந்தார். ஒரு கையால் அவள் இடையைத் தழுவி மறுகையை விரித்து அதில் நீர்க்குடம் வைத்திருந்தார். அதிதியின் ஒரு கையில் தழல் இருந்தது. மறுகையில் அவள் குழந்தையான சூரியனை வைத்திருந்தாள். செந்தழல்மகுடம் அணிந்த பொன்னிற உடலுடன் சூரியக்குழந்தை ஒருகையால் ஒளிச்சின்னமும் மறு கையால் அருள்சின்னமும் காட்டி புன்னகை செய்தது.

VENMURASU_EPI_44
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அதிதியின் மைந்தர்களான பன்னிரண்டு ஆதித்யர்களும் அவர்களுக்கு இருபக்கமும் ஒளிமுத்திரையும் தழல்முடியுமாக நின்றனர். அவர்கள் காலடியில் அதிதிபெற்ற பன்னிரு ருத்ரர்களும் நீலநிறமான உடலும் பறக்கும் செந்தழல் உடல்களுமாக வீற்றிருக்க மேலே எட்டு வசுக்களும் வெண்ணிற உடலும் நீலநிறமான கூந்தலுமாக பறந்துகொண்டிருந்தனர்.

ஆலயத்தின் பின்பக்கச் சுவரில் சூரியன் பன்னிரு கைகளுடன் அர்க்க வடிவில் செதுக்கப்பட்டிருந்தான். ஏழுவண்ணம் கொண்ட ஏழு குதிரைகள் அவன் ரதத்தை இழுத்தன. அது செந்தழல்வடிவமாக இருந்தது. தேர்முனையில் தேரோட்டியான மாதலி அமர்ந்திருந்தான். சூரியனின் பன்னிரண்டு கரங்களில் கீழ் வலக்கை அஞ்சல் முத்திரையும் கீழ் இடக்கை அருளல் முத்திரையும் கொண்டிருந்தது. மேல் இருகைகளில் மலர்ந்த தாமரைகள் இருந்தன. மற்ற கைகளில் வஜ்ரம், பாசம், அங்குசம், கதை, தனு, சக்கரம், கட்கம், மழு ஆகிய ஆயுதங்கள் இருந்தன.

இடப்பக்கச் சுவரில் சூரியனின் மித்ர வடிவச் சிலை இருந்தது. ஒளிவிடும் பொற்தாமரை மீது பச்சைநிறமான உடலுடன் வலது மடியில் பொன்னிறமான சம்ஞாதேவியும்  இடது மடியில் நீலநிறமான சாயாதேவியுமாக செந்தழல் முடி சூடி மித்ரன் அமர்ந்திருந்தான். ஒளிதேவி பெற்ற மைந்தர்களான மனு, யமன், யமி ஆகிய குழந்தைகள் அவளுடைய காலடியில் அமர்ந்திருந்தனர். நிழல்தேவி பெற்ற சனைஞ்சரன், மனு, தபதி என்னும் மூன்று குழந்தைகள் அவள் காலடியில் அமர்ந்திருந்தனர்.

கருவறை முன்னால் வந்து சிகண்டி நின்றான். உள்ளே பழமையான ஒரு பட்டைக்கல் நாட்டப்பட்டிருந்தது. அதில் மிகமழுங்கலான புடைப்புச்சிற்பமாக சூரியனின் சிலை இருந்தது. இரு கைகளிலும் தாமரைகளுடன் அவன் பன்றிமீது அமர்ந்திருந்தான். இருபக்கமும் தொங்கிய வெண்கல விளக்குகளில் நெய்ச்சுடர்கள் மலர்க்கொத்துக்கள் போல அடர்ந்திருக்க கருமையாக ஒளிவிட்ட அச்சிலைக்கு செந்நிற, பொன்னிற, வெண்ணிற மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. பூசகர்கள் மூவர் உள்ளே அமர்ந்து வேதமந்திரங்களால் சூரியனை துதித்துக்கொண்டிருந்தனர்.

சிகண்டி அங்கே சிலகணங்கள் மட்டும் நின்றான். அவன் கண்கள் வராகத்தைத்தான் பார்த்தன. கல்லின் இருட்டுக்குள் இருந்து அது எழுவதுபோலிருந்தது. இருளுக்குள் சூரியன் அதை மிதித்துத் தாழ்த்துவது போலவும் அதன்மேல் பீடம்கொண்டு அமர்ந்திருப்பதுபோலவும் ஒரேசமயம் எண்ணச்செய்தது.

சிகண்டி திரும்பி படிகளில் இறங்கி கீழே வந்தான். விரிந்த சாலை இருபக்கமும் பெரியமுற்றங்களை நோக்கிச் சென்றது. அம்முற்றங்கள் சந்தையாகவும் கேளிக்கையிடங்களாகவும் ஒரேசமயம் திகழ்ந்தன. தோளோடு தோள்முட்டியபடி மக்கள் அங்கே கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். விதவிதமான பொருட்களைக் குவித்துப்போட்டு சிறுவணிகர்கள் விற்றுக்கொண்டிருந்தனர். கனத்த கட்டிகளாக அடுப்புக்கரிதான் அதிகமும் விற்கப்பட்டது. அவர்கள் அங்கே அதிகமும் நுகரும் அப்பொருள் வெளியே மலைகளில் இருந்துதான் வரவேண்டும் என சிகண்டி நினைத்தான்.

விதவிதமான தோல்கள் ஆடைகளாக மாற்றப்படாதவை. மரவுரிநார்கள், புல்நார்கள், கையால்பின்னப்பட்ட ஆடைகள், மீனிறகுகள், உலோக ஆயுதங்கள், சுறாமீன்பற்களாலான கத்திகள், பலவகையான மூலிகைவேர்கள், வண்ணப்பொருட்கள், மரத்தில் செதுக்கப்பட்ட பாவைகள். கூவியும் சிரித்தும் வசைபாடியும் அவற்றை வாங்கிக்கொண்டிருந்தவர்கள் நடுவே குரங்குகளை கயிற்றிலும் கோலிலும் தாவச்செய்து வித்தைகாட்டினர் சிலர். ஒரு வட்டத்துக்குள் வெண்குதிரை ஒன்று வாலைச்சுழற்றியபடி தலைப்பாகைக்காரனின் மத்தளத்தின் தாளத்துக்கு ஏற்ப நடனமிட்டது.

பெரிய கூட்டம் கூடிநின்ற இடத்தில் சிறிய கண்களும் வெண்களிமண் குடம் போன்ற முகமும் கொண்ட பீதர் இனத்து வீரன் ஒருவன் அம்புகளால் வித்தை காட்டிக்கொண்டிருந்தான். மேலே ஒரு கயிற்றில் கட்டப்பட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த பனையோலையால் ஆன கிளிகளை சிறிய அம்புகளால் சிதறடித்தான். “அறைகூவல்….அறைகூவல்…அந்த நீலக்கிளியை ஏழு அம்புகளுக்குள் சிதறடிப்பேன். என்னால் முடியாதென்பவர்கள் பந்தயம் வைக்கலாம்….” என்றான். அவன் தாடி பாறையின் தொங்கும் வேர்கொத்து போல நீளமாகத் தொங்கியது.

இருபது வெள்ளி நாணயங்கள் பந்தயமாக கீழே விரிக்கப்பட்டிருந்த மான் தோலில் விழுந்தன. சிகண்டி தன் வில்லின் நாணை மெல்லச் சுண்டினான். அனைவரும் திரும்பிப்பார்த்தனர். “ஒரே அம்பால் அந்தக் கிளியை நான் வீழ்த்துகிறேன். இந்த நாணயத்தை நான் எடுத்துக்கொள்ளலாமா?’ என்றான். கூட்டம் கூக்குரலெழுப்பி அவனை ஆதரித்தது. சிகண்டி முன்னால் சென்று அவர்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குள் அந்தக்கிளியை தன் அம்பால் சிதறடித்தான். கூட்டம் களிவெறிகொண்டு கூச்சலிட்டது. இருகைகளையும் வீசி எம்பிக்குதித்தது. வெள்ளிநாணயங்கள் மீன்கள் துள்ளுவதுபோல வந்து மான்தோலில் விழுந்தன.

சிகண்டி அந்த பீதர் இன வீரனிடம் “இருபது நாணயங்கள் எனக்குப்போதும்” என்றபின் குனிந்து எடுத்துக்கொண்டான். எஞ்சிய நாணயங்களைப் பொறுக்கியபடி அவன் “வீரரே நீர் பரசுராமரின் மாணவரா?” என்றான். சிகண்டி பேசாமாலிருந்தான். “அல்லது பீஷ்மரின் மாணவர், இல்லையா?” சிகண்டி பதில் சொல்லாமல் சென்றான். பீதன் பின்னால் வந்து “அக்னிவேசரின் மாணவர், ஐயமே இல்லை” என்றான். சிகண்டி திரும்பிப்பார்க்காமல் நடந்தான். “வீரரே, என் பெயர் ஜிங் சாங். ஷாங் மன்னர்களின் குடிமகன். யாங் பள்ளியிலும் த்ஸு பள்ளியிலும் வில்வித்தை பயின்றவன். நான் அக்னிவேசரை வணங்கியதாகச் சொல்லுங்கள்.”

தெருவில் சிகண்டி நடந்தபோது ஒரு ஒல்லியான பிராமணன் பின்னால் ஓடி வந்தான். “நான் கஸ்யப கோத்திரத்தவனான அக்னிவர்ணன் வீரரே. இங்கே வரும் மலைமக்களுக்கு நான் இந்நகரத்தைப்பற்றிச் சொல்கிறேன்… நான் உங்களுக்கு அரிய தகவல்களைச் சொல்லமுடியும்.” சிகண்டி திரும்பிப்பார்க்காமல் சென்றான். “நீங்கள் ஆண் என்றால் நான் சிறந்த பரத்தையரின் வீடுகளைப்பற்றிக்கூடச் சொல்வேன். பிராமணனை மதிப்பவர்கள் அவர்கள். அவர்களைப்பற்றி நான் கவிதைகள்கூட எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இப்போதே பாடிக்காட்டுகிறேன்.”

விடாது சிகண்டியைப் பின்தொடர்ந்தபடி “திரிகர்த்தர்கள் ஆளும் இந்த நாடு திரிகர்த்தம் என்றழைக்கப்படுகிறது. காசியபவம்சத்தில் பிறந்தவர்கள் எங்கள் அரசர்கள். இவர்களின் வம்சம் வடக்கே மலைகளுக்குள் சைத்ரபீடம் என்னும் கிராமத்தை ஆண்டுவந்தது. அதைச்சேர்ந்த விராடன் என்ற அரசர் அஷிக்னி நதியில் படகில் வரும்போது இந்தக் கரையில் ஆயிரக்கணக்கான அன்னப்பறவைகளைக் கண்டார். இது புனிதமான மண் என்று உணர்ந்து இங்கே அவரது நகரத்தை அமைத்தார். அன்றுமுதல் இது ஹம்சநகரம் என அழைக்கப்பட்டது” என்றான்.

தலையை அசைத்தபடி சிகண்டி நடந்தான். “ஸமுகியும் ஜனமுகியும் பேசும் மக்கள் இங்கே வாழ்கிறார்கள். தேவமொழியின் அபபிரம்சமான மூலத்வனி என்னும் மொழியை இங்குள்ள உயர்குடியினர் பேசுகிறார்கள். இது காசியபர் திரேதாயுகத்தில் உருவாக்கிய நகரத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டிருப்பதனால் இதை காசியபநகரம் என்கிறார்கள். இதற்கு சம்பாபுரி என்றும் வேகபுரி என்றும் பெயர்கள் உண்டு. இங்குள்ள சூரியகோயில் எங்கள் முதல் மன்னராகிய விராடரால் அமைக்கப்பட்டது. ஏனென்றால் இது சூரியன் தன் உக்கிரமான செங்கோலை ஊன்றி சற்றே இளைப்பாறிச்செல்லும் இடம். ஆகவே இதை மூலஸ்தானநகரி என்றும் அழைப்பதுண்டு…மேலும்…”

சிகண்டி கையை அசைத்து அவனிடம் செல்லும்படி சொன்னான். “இருபது வெள்ளியை வைத்திருக்கும் கொடைவள்ளலான நீங்கள் அப்படிச் சொல்வது அழகல்ல. நான் மனைவிகளும் குழந்தைகளும் உடைய பிராமணன். அதேசமயம் பசுக்களும் வேதஅதிகாரமும் இல்லாதவன்.” சிகண்டி அவனைப் பார்த்தபோது அவன் பார்வையை விலக்கி சற்றே நெளிந்து “அத்துடன் மது அருந்துபவனும்கூட” என்றான். சிகண்டி மெல்லிய உறுமலால் அவனை தன்னைத் தொடரும்படிச் சொல்லி நடந்தான்.

“என் பெயர் ஸுக்திகன். நாங்கள் மீன் உண்ணும் பிராமணர் என்பதனால் எங்களுக்கு வைதிக அதிகாரம் இல்லை. வைதிகபிராமணர்கள் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் சண்டிபூசை செய்யும்போது மீன் உண்கிறார்கள். நாங்கள் அனைவருமே தெற்கே கூர்ஜரத்தில் கடலோரமாக வாழ்ந்தவர்கள். அங்கே மீன் மட்டும்தான் கிடைக்கும். என்பெயரேகூட சிப்பி என்றுதான் பொருள்படுகிறது…” என்றபடி அவன் பின்னால் வந்தான்.

“சிறந்த மதுவை உங்களுக்கு வாங்கித்தருவது என் பொறுப்பு வீரரே” என்றான் ஸுக்திகன். “இங்கே மலையோரத்து மக்கள் ஹந்தா என்ற மதுவை காய்ச்சுகிறார்கள். அரிசிக்கஞ்சியில் பதினேழுவகையான மூலிகைகள் அடங்கிய மாத்திரைகளைப்போட்டு ஏழுநாட்கள் புதைத்துவைத்து எடுக்கிறார்கள்” என்றான். “உண்மையில் இதிலுள்ள முக்கியமான மூலிகையை அஹிஃபீனா என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பாம்பின்எச்சில் என்று பொருள். சிறிய குட்டையான செடி. அதை வறண்ட மலைச்சரிவுகளில் வளர்க்கிறார்கள். அதன் இலைகள் பூ கனி எல்லாமே விஷம். நினைவை மறக்கச்செய்யும். அதை உடலில் செலுத்தியபின் நம் கையை நாமே வாளால் அறுத்துக்கொள்ளலாம். வலியே இருக்காது. அதன் இலைகளைத்தான் இந்த மதுவிலே போடுகிறார்கள்.”

பெரிய பாதையில் இருந்து இறங்கிச்சென்ற இடுங்கிய படிகள் ஓர் ஓடைக்குள் சென்று சேர்ந்தன. அதன் வழியாகத்தான் நகரின் கழிவுநீர் முழுக்க நதியைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நகருக்குள் புதைக்கப்பட்ட மண்குழாய்கள் வழியாகச் சேர்ந்த நீர் கருமையாக நாற்றத்துடன் சரிவுகளில் நுரைத்தபடி சென்றது. அந்த நீர்வழி நடமாடும் வழியாகவும் இருந்தது. அதன் கிளை ஒன்று ஒரு மரவீட்டுக்குள் சென்றது. அதை நெருங்கும்போதே உரத்த பேச்சொலிகளும் குழறல்களும் சிரிப்புகளும் கேட்டன.

மரவீட்டுக்கு முன்பு கற்களிலும் தரையிலுமாக பலர் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். சிகண்டியைக் கண்டதும் நாலைந்துபேர் எழுந்துவந்தனர். அவனுடைய உடலைக் கூர்ந்து நோக்கிய ஒருவன் “நீ நபும்சகம்தானே?” என்றான். சிகண்டி உறுமல் ஒலி எழுப்பி அவனைத் தள்ளிவிட்டு அங்கே சென்று அமர்ந்தான். ஸுக்திகன் அங்கு பெரிய மரக்குடுவையில் புளித்து நுரைத்துக்கொண்டிருந்த வெண் திரவத்தை சுரைக்கொப்பரை அகப்பையால் அள்ளி விதவிதமான கொப்பரைக்குவளைகளில் பரிமாறிக்கொண்டிருந்தவனிடம் “அண்ணா இவர் நம்மில் ஒருவர். ஆனால் இருபது வெள்ளி நாணயங்களுக்கு சொந்தக்காரர். இவரை மகிழ்விக்கவேண்டியது நம் பொறுப்பு” என்றான்.

ஒற்றைக்கண் கொண்டிருந்த அந்தக் கரிய பேருடல் மனிதன் மஞ்சள்நிறப் பற்களைக் காட்டி நகைத்துக்கொண்டு “முதலில் ஒருகுவளை அருந்தச்சொல் பிராமணனே, அதன்பின் இருபது வெள்ளிக்கும் குடிப்பார். வெளியே சென்று மேலும் இருபது வெள்ளிக்காக கொள்ளை அடிப்பார்” என்றான். கூடி நின்ற அனைவரும் சிரித்தனர். இருவர் எழுந்து சிகண்டியை நெருங்கி ஆவலுடன் நின்றனர். சிகண்டி மொத்த நாணயத்தையும் எடுத்து அவன் முன் வைத்து “மது” என்றான். கூட்டம் உரக்கக் கூச்சலிட்டது. அனைவருமே குவளைகளுடன் நெருங்கி வந்தனர்.

கடும்புளிப்புடனும் மூலிகைநெடியுடனும் இருந்தது அது. “வீரரே, இதற்கு கொலைகாரன் என்ற பெயர் வந்தது ஏன் தெரியுமா?” என்றான் ஸுக்திகன். சிகண்டி தலைகுனிந்தபடி குடித்தபடியே இருந்தான். அவனைச்சுற்றி பேச்சொலிகளும் சிரிப்பொலியும் முழங்கின. சற்றுநேரத்தில் அத்தனை குரல்களும் நீருக்குமேலே ஒலிப்பதுபோலவும் அழுத்தம் மிக்க ஆழத்தில் அவன் மூழ்கி அமர்ந்திருப்பதாகவும் தோன்றியது.

ஸுக்திகன் அவனை குனிந்து நோக்கி ஏதோ கேட்டான். சிகண்டி உறுமினான். அவன் மீண்டும் இருமுறை கேட்டபின்புதான் அவனுக்கு அச்சொற்கள் புரிந்தன. “நீங்கள் உங்கள் எதிரியைத் தேடிச்செல்கிறீர்கள். அவனைக் கொல்வதாக வஞ்சினம் உரைத்திருக்கிறீர்கள் என்று சொன்னேன்… நான் சொல்வது உண்மையா இல்லையா?” என்றான் ஸுக்திகன். சிகண்டி உறுமலுடன் மீண்டும் குடித்தான். “ஆம் என்கிறார்!” என்றான் ஸுக்திகன்.

“வீரரே, நீங்கள் எங்கு செல்லவேண்டும்?” என்று ஒருவன் குனிந்து கேட்டான். சிவந்து எரிந்த கண்களால் சிகண்டி நிமிர்ந்து நோக்கி “என் எதிரி பாரதவர்ஷத்தின் மாபெரும் வீரர். அவரை ஒருவர் ஒரே ஒருமுறை வென்றிருக்கிறார். அவரைத் தேடிச்செல்கிறேன். என் எதிரியைப்பற்றி அவர்தான் எனக்குச் சொல்லமுடியும்” என்றான். “யார் அவர்?” என்று நாலைந்துபேர் குனிந்தனர். “சிபிநாட்டின் பிதாமகராகிய அவர் பெயர் பால்ஹிகர்” என்றான் சிகண்டி.