மாமலர்

நூல் பதின்மூன்று – மாமலர் – 95

95. மழைமணம்

குரங்குகள்தான் முதலில் பீமனை அடையாளம் கண்டுகொண்டன. அவன் காட்டின் எல்லைக்கு நெடுந்தொலைவில் ஒரு பாறையைக் கடந்து வந்தபோது காலையின் நீள்ஒளியில் அவன் நிழல் எழுந்து விரிந்திருந்தது. உச்சிக்கிளையிலிருந்த காவல்குரங்கு அவன் உருவைக் காண்பதற்கு முன் அந்நிழலைக் கண்டது. அதன் அசைவிலிருந்தே அது பீமன் எனத் தெளிந்தது. கிளையை உலுக்கியபடி எம்பி எம்பிக் குதித்து உப் உப் உப் உப் என்று கூச்சலிட்டது.

அவ்வொலியைக் கேட்டதுமே பெருங்குரங்குகள் அனைத்தும் பீமன் வந்துவிட்டதை உணர்ந்தன. மரங்களிலிருந்து பலாக்காய்கள் உதிர்வதுபோல நிலத்தில் குதித்து நான்கு கால்களில் பாய்ந்து விழுந்த மரங்களிலும் புதர்களிலும் தாவி ஏறி முன்னால் சென்றன. சிறியவை கிளைகளில் கைகளாலும் வாலாலும் பற்றி ஆடித் தாவி காற்றில் பறந்தன. அவை சென்ற அசைவால் காட்டுக்குள் கூரிய காற்று புகுந்து ஓடையென வழிவதைப்போல பசுமையின் அலை எழுந்தது.

கோதவனத்தின் எல்லையாக அமைந்த ஓடையின் கரையில் அவை ஒன்றன்பின் ஒன்றென நிரைவகுத்தன. அப்பகுதியே அவற்றின் உடல் கருமையால் பாறைக்கூட்டங்கள் மண்டியதுபோல ஆயிற்று. குட்டிகள் இரு கால்களில் எழுந்து நின்று வாய்மேல் கைவைத்து கண்களைச் சிமிட்டியபடி பொறுமையிழந்து நோக்கின. முதிய குரங்குகள் உடலைக்குவித்து அமர்ந்து தலைமேல் கைகளை வைத்தபடி காத்திருந்தன.

கோமதி இடப்பக்கம் ஒளியலைகளாக பெருகிச் சென்றுகொண்டிருந்தது. அதன் கரைச்சேற்றில் முதலைகள் ஒதுங்கியிருக்க அவற்றின் மேல் சிறுகுருவிகள் எழுந்தும் அமர்ந்தும் கொத்திக்கொண்டிருந்தன. வெண்சால்வை பறந்தமைவதுபோல கொக்குக்கூட்டம் ஒன்று சேற்றுப்படுகைமேல் வந்து அமர்ந்தது. அவற்றின் வெண்ணிழல் நீருள் வந்து அவற்றை அணுகியது. நீர்ப்பரப்பில் மீன்கள் எழுந்து ஒளிவிட்டு விழுந்தமைந்துகொண்டிருந்தன. பீமன் முன்னரே குரங்குகளை கண்டுவிட்டான். அவன் உள்ளம் பாய்ந்து அவற்றுடன் சேர்ந்துவிட்டிருந்தது. உள எழுச்சியை ஒத்திப்போட அவன் பார்வையை ஆற்றைநோக்கி திருப்பிக்கொண்டு நடந்துவந்தான். ஆகவே நடை இயல்பற்றதாக இருந்தது.

அவன் அணுகியதும் இளங்குரங்கு ஒன்று எழுந்து நின்று ஹுஹுஹு என கூச்சலிட்டது. இளையவர்கள் கூச்சலிடத்தொடங்க அது பரவி அனைத்துக் குரங்குகளும் எழுந்தும் நின்றும் குரலெழுப்பின. முதிய குரங்குகள் தலைதாழ்த்தி பற்களைக் காட்டி ர்ர்ர்ர்ர் என ஒலித்தன. குட்டிகள் உவகைதாளாமல் துள்ளிக்குதித்து திரும்பி ஓடித்தாவி அன்னையை கட்டிக்கொண்டு மீண்டும் பாய்ந்து நிலத்தில் விழுந்து தலைகீழாகச் சுழன்று வாலைச் சொடுக்கித் தூக்கி எழுந்து நின்று உதட்டை நீட்டி ஈஈஈ என ஓசையிட்டன.

அவன் தங்கள் எல்லைக்கு அருகே வந்ததும் ஒரு சிறுகுட்டி பாய்ந்து சென்று அவன்மேல் தொற்றி தோளிலேறிக்கொண்டது. அவன் தலைமயிரைப்பிடித்து உலுக்கி காதைக் கடித்தது. தோளிலிருந்து தலைமேல் ஏறி நின்று கைவிரித்து ஹுஹுஹு என கூச்சலிட்டது. பிற குட்டிகளும் சற்று தயங்கியபின் பாய்ந்து அவன் மேல் ஏறிக்கொண்டன. உடலெங்கும் குரங்குகளுடன் அவன் தள்ளாடியபடி நடந்தான். தோளில் தொங்கியவற்றை கைகளைச் சுழற்றி காற்றில் பறக்கவைத்தான். குரங்குகளின் ஒலியுடன் அவன் சிரிப்பொலியும் சேர்ந்து எழுந்தது.

கோதவனத்திற்குள் அவன் நுழைந்ததும் அத்தனை குரங்குகளும் சேர்ந்து கூச்சலிட்டு அவனைச் சூழ்ந்தன. ஒன்றன்மேல் ஒன்றென ஏறி அவனை தொட்டுத்தாவின. அவன் உடையைப்பிடித்து இழுத்தும் கால்களில் முத்தமிட்டும் கொண்டாடின. அவன் கூவியபடி ஓடிச்சென்று மரத்தில் தொற்றிக்கொண்டு கிளைகள் வழியாகவே சென்றான். அவனுடன் குரங்குப்படையும் ஓசையிட்டபடி சென்றது. கிளைகள் உலைந்து எழுந்தமைந்தன. கனிகள் உதிர்ந்தன. மான்கள் திகைத்து துள்ளிப்பாய பறவைகள் ஓசையுடன் இலைக்கூரைக்குமேல் எழுந்தன.

முனிவர்கள் குரங்குகளின் ஓசையை முன்னரே கேட்டிருந்தார்கள். என்ன என்று வந்து நோக்கியவர்கள் கடந்துசென்ற கிளையுலைவைக் கண்டனர். “காற்றுபோல செல்கிறார்கள்…” என்றார் சௌரபர். ஒரு முனிவர்மைந்தன் “பீமர்! பீமசேனர்” என கைசுட்டி கூச்சலிட்டான். அக்கணமே அத்தனை இளையோரும் அவனை கண்டுவிட்டனர். “மாவலர்! விருகோதரர்|!” என கூச்சல்கள் எழுந்தன. “எங்கே? எங்கே?” என பெண்கள் ஓடிவருவதற்குள் அவர்கள் கடந்துசென்றுவிட்டிருந்தார்கள்.

காட்டுக்குள் குரங்குகளின் ஓசையைக் கேட்டு தன் அறைக்குள் இருந்து தருமன் வெளியே வந்தபோது நகுலனும் சகதேவனும் வெளியே சென்று நோக்கிக்கொண்டிருந்தார்கள். திரௌபதி அடுமனையில் இருந்து கையைத் துடைத்தபடி ஓடிவந்து “அவர்தானா?” என்றாள். அவள் முகம் வியர்வையில் பளபளத்தது. தலைமயிர் கலைந்து நெற்றியிலும் காதுகள்மீதும் சரிந்திருந்தது. நகுலன் “அவரேதான்… ஐயமில்லை. குரங்குகள் தெளிவாகவே சொல்கின்றன” என்றான்.

தருமன் “பலமுறை அவன் என நினைத்து ஓடிவந்திருக்கிறோம்” என்றார். “அப்போது அவர்தானா என்ற ஐயமும் எதிர்பார்ப்பும்தான் இருந்தது, மூத்தவரே. அவராக இருக்கலாகாதா என எண்ணினோம். இது அவரேதான்… உறுதியாகத் தெரிகிறது” என்றான் சகதேவன். திரௌபதி மெல்ல உடல் தளர்ந்து இடை ஒசிய மூங்கில் தூணைப் பற்றியபடி அதில் முகம் சாய்த்து நின்றாள். குடில்விளிம்புக்குச் சென்று நோக்கி நின்ற சகதேவன் “அதோ மூத்தவர்” என்றான். “தன் கூட்டத்துடன் கிளைகளினூடாக வருகிறார்.” நகுலன் எட்டிப்பார்த்துச் சிரித்து “அவர் உடல்மேல் ஏழு குட்டிகள் அமர்ந்திருக்கின்றன” என்றான். திரௌபதி புன்னகை புரிந்தாள்.

பீமன் குடில் முற்றத்தில் குரங்குகளுடன் குதித்தான். அவனைச் சூழ்ந்து குரங்குகள் விழுந்தபடியே இருந்தன. அவன் கொடிஏணியை அடைந்து இரண்டே தாவலில் மேலே வந்தான். அவன் தலைமேல் இருந்த குட்டிக்குரங்கு துள்ளி வந்து குடில்கூடத்தில் விழுந்து வாலைத்தூக்கியபடி ஈஈஈஈ என ஓசையிட்டு தன்னைத்தானே சுழன்றது. என்ன செய்வதென்றறியாமல் எம்பிக்குதிக்க அதன் வால் பலகையில் மாட்டிக்கொண்டது. அதை இழுத்தபின் அந்த வலி தருமனால்தான் என்பதுபோல அவரைப் பார்த்து ர்ர்ர்ர்ர் என சீறி பற்களைக் காட்டியது.

குட்டிகள் உடல்விட்டு உதிர பீமன் வந்து நின்றான். கீழே விழுந்த குட்டிகள் திகைத்து பாய்ந்துசென்று நகுலன் மேல் ஏறிக்கொண்டன. உடனே அவனல்ல என உணர்ந்து அவனிடமிருந்து தாவி மீண்டும் பீமனை அணுகி அவன்மேல் தொற்றின. ஒரு குட்டிக்குரங்கு நகுலனை நோக்கி சீறியது. பீமன் தருமனின் கால்களைத் தொட்டு சென்னிசூடி “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். “நன்று! நீயும் ஒரு நிலம்காணலுக்குச் சென்று மீண்டுவிட்டாய்” என்றார் தருமன். பீமன் புன்னகைத்து “ஆம், நல்ல பயணம்” என்றான். குரங்குகள் கூரைவிளிம்பிலும் உத்தரங்களிலும் சாளரங்களிலும் தரையிலுமாக செறிந்திருந்தன.

“என்ன அடைந்தாய்?” என்று தருமன் கேட்டார். “அறியேன், ஆனால் சிலவற்றைத் துறந்தேன்” என்றான் பீமன். தருமன் ஒருகணம் கூர்ந்து நோக்கியபின் “நலம் விளைக!” என்று கைதூக்கி வாழ்த்தினார். “உன்னை மீண்டும் கண்டது உவகை அளிக்கிறது, இளையவனே. உன் இளையோன் இங்கே அருகிலுள்ள வேள்விச்சாலை ஒன்றுக்கு சென்றுள்ளான். சிலநாட்களில் அவன் மீள்வான். அதன்பின் நாம் இங்கிருந்து கிளம்பலாமென எண்ணுகிறேன். இங்கு வந்து நெடுநாட்களாகின்றன” என்றார். பீமன் மீண்டும் தலைவணங்கினான்.

தருமன் திரும்பி அறைக்குள் சென்றபின்னரே அவன் தம்பியரை நோக்கி திரும்பினான். குரங்குகள் அவன் காட்டுக்கு திரும்பப்போகிறான் என எண்ணி திரும்பிப் பாய சித்தமாயின. அவன் தம்பியரிடம் பேசக்கண்டு ஏமாற்றம் கொண்டு சலிப்புடன் முகம் வலித்தபடி அமர்ந்தன. நகுலனும் சகதேவனும் பீமன் கால்களைத் தொட்டு தலைசூடினர். அவன் அவர்களின் குழல்தொட்டு வாழ்த்தினான். நகுலனின் தோள்களை வளைத்து “பெருத்துவிட்டாய். இங்கே நல்லுணவு என நினைக்கிறேன்” என்றான். சகதேவன் “அடுமனை எப்போதும் புகைந்துகொண்டே இருக்கிறது, மூத்தவரே” என்றான்.

பீமன் அப்போதுதான் திரௌபதியை பார்த்தான். அவள் விழிகள் விரிந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தன. இடமும் தருணமும் மறந்தவை. விருப்பு நீர்மையாக ஒளியாக நிறைந்தவை. நகுலன் “இன்று முனிவர்களின் இல்லங்களுக்குச் செல்வதாக ஒப்புக்கொண்டிருக்கிறோம், மூத்தவரே” என்றான். இருவரும் தலைவணங்கியபின் வெளியே சென்றனர். அவர்கள் செல்வதை நோக்கியபின் ஒரு முதுகுரங்கு அதேபோல ஏணி வழியாக கீழிறங்கிச் செல்ல குரங்குகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சென்றன.

பீமன் திரௌபதியின் அருகே அணுகி “நீ கேட்ட மலரை கொண்டுவந்துள்ளேன்…” என்றான். அவள் “கல்யாணசௌகந்திகமா?” என்றாள். “உண்மையில் நான் அதை மறந்தேபோனேன்… எங்கே?” பீமன் தன் இடைக்கச்சையிலிருந்த மூங்கில்குழாயை திறந்தான். அதற்குள் இருந்து அந்த மலரை வெளியே எடுத்தான். அப்போது கொய்யப்பட்டதுபோலிருந்தது அது. ஆனால் காம்பில் பால் உறைந்துவிட்டிருந்தது. அறையை நறுமணம் நிறைத்தது. அசோகமா நீலமா பாரிஜாதமா செண்பகமா? அல்ல, பிறிதொன்று. அவன் அதுவரை அறியாத மணம்.

வரும்வழியெங்கும் அந்த மணம் மாறிக்கொண்டே இருந்தது. அவன் தலைக்குமேல் அந்த மலர்மரம் நின்றுகொண்டிருப்பதுபோல எப்போதும் உடனிருந்தது. எண்ணங்களிலும் மணம் சேர்த்தது. துயில்கையில் புதிய மணமாக எழுந்து கனவுகளுக்குள் புகுந்தது. விழித்தெழுகையில் வந்த முதலெண்ணத்துடன் அந்த மணமும் கலந்திருந்தது. ஒவ்வொருநாளும் அதை எடுத்து நோக்கி அந்த மலர்தானா என ஐயுற்றான். அத்தனை ஐயங்களுக்கும் சொல்லில் இடமிருந்தது, உள்ளத்தை அவை அடையவில்லை.

அவள் அதை குனிந்து நோக்கியபோது பெரிய இமைகள் சரிந்திருப்பதன் அழகையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். இமைகள் எழ அவள் அவனை நோக்கி புன்னகைத்து “பாரிஜாதம்போல” என்றாள். அவன் புன்னகை செய்தான். “அந்த நறுமணம் உண்மையில் எப்படி இருந்தது என்று என்னால் நினைவுகூரவே இயலவில்லை. அன்று இரவு ஏதோ பொருளற்ற அக எழுச்சி ஒன்றை அடைந்தேன். இரவில் தனிமையில் கடந்தகால ஏக்கம் பெருகியெழுந்து ஆட்கொள்வது இந்த அகவையில் இயல்புதானே? அதுதான் அந்த மணம்போலும் என பின்னர் எண்ணிக்கொண்டேன். மாயமணம் ஒன்றுக்காக உங்களை ஏன் அனுப்பினேன் என எண்ணி வருந்திக்கொண்டே இருந்தேன்” என்றாள் திரௌபதி.

“அந்த மணத்தை நானும் உணர்ந்த ஒரு தருணம் அமைந்தது” என்றான் பீமன். “ஆம், அது நீங்கள் என் மீதுகொண்ட காதலால் அடைந்த ஓர் உச்சம். நம் இருவர் உள்ளங்களும் ஒன்றையே உணர்ந்தன.” பீமன் புன்னகையுடன் “அதுவல்ல இந்த மணம் என்கிறாயா?” என்றான். அவள் தத்தளிப்புடன் “அறியேன். அந்த மணம் என்ன என்று நினைவுகூரவே என்னால் இயலவில்லை. இது அந்த மணம் என உங்களால் உறுதியாக உணரமுடிகிறதா?” என்றாள். பீமன் சிரித்து “ஆம் என்று இதுவரை நம்பியிருந்தேன். இப்போது நானும் ஐயம் கொள்கிறேன்” என்றான். “இந்த மணத்தை நோக்கி செல்லும் வழியில் பலவகையான மணங்களினூடாக என் அகமும் மூக்கும் கடந்துசென்றன.”

“இதை அடைந்த உளநிலையே இதுவே என எண்ணவைத்ததா? அப்போது அடைந்த மணத்தைத்தான் இப்போது இந்த மலரில் அறிகிறேனா? உண்மையில் இந்த மலரை உன்னிடம் கொடுப்பதற்கு முந்தைய மணம் கொடுத்தபின்னர் மாறிவிட்டது என்று தோன்றுகிறது. பாரிஜாதம் என நீ சொன்னதுமே இது அவ்வாறு ஆகிவிட்டது.” அவள் மீண்டும் அதை முகர்ந்து பெருமூச்சுடன் “நெஞ்சம் அறியா ஏக்கத்தால் நிறைகிறது. மணங்களாக இங்கே நிறைந்திருப்பவை நாம் ஒருபோதும் அறியாத ஏதோ சில போலும். நாம் உணர்வுகளையும் நினைவுகளையும் அவற்றின்மேல் ஏற்றி அந்தப் பொருளையே அவை என உணர்கிறோமா?” என்றாள்.

பீமன் “சரி, இதை பேசிப்பேசி நாம் கீழிறங்கவேண்டியதில்லை. நான் உன்னிடம் சொன்னது அந்த மணமெழும் மலரை கொண்டுவருவேன் என. இது அடைகையிலோ கொய்கையிலோ கொணர்கையிலோ கொடுக்கையிலோ ஒரு கணமேனும் அந்த மலரென இருந்திருக்கிறது. நாம் மானுடர் செய்யக்கூடுவது இதுமட்டுமே” என்றான். அவள் புன்னகையுடன் “ஆம்” என்றபின் அதை மீண்டும் முகர்ந்து “செண்பகம்” என்றாள். “தலையில் சூடிக்கொள்” என்றான் பீமன். “ஒருநாள் சூடவா?” என்று திரௌபதி கேட்டாள். “வேண்டாம், இச்சிமிழுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன்.”

பீமன் “இது வாடாமலர் அல்ல. பால்கொண்ட மலர் என்பதனால் இத்தனைநாள் வாடாமலிருக்கிறது” என்றான். அவள் “இதன் மணம் சற்றேனும் உள்ளே எஞ்சியிருக்கும்” என்றபடி அதை அக்குழாய்க்குள் போட்டு மூடினாள். “நான் அடுமனைக்குச் செல்கிறேன். உங்களுக்காக சமைக்கவேண்டும். இளையவரே, இவர்களுக்காக சமைப்பதைப்போல ஏமாற்றமூட்டும் விளையாட்டு பிறிதொன்றில்லை. இன்றுதான் என் கையும் உள்ளமும் நிறையும்படி சமைக்கவிருக்கிறேன்” என்றாள். பீமன் “நான் நீராடிவிட்டு வருகிறேன்” என்றான்.

tigerபீமன் சோலைக்கு வந்தபோது நகுலன் அமைத்த பாத்தியில் சகதேவன் விதைகளைப்போட்டு மூடிக்கொண்டிருந்தான். கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி வந்த பீமன் “நீராடவேண்டும்” என்றான். “ஆம், உங்கள் உடலெங்கும் குரங்குமணம்” என்றான் நகுலன். பீமன் அருகே குந்தி அமர்ந்தபடி “நாம் உடனே கிளம்புகிறோம் அல்லவா?” என்றான். “ஆம், விதை சேர்த்துவைத்திருந்தேன். இன்று விதைத்தால் கிளம்புவதற்குள் எட்டிலை கிளம்பியிருக்கும். அதற்குள் மழையும் தொடங்கிவிடும்” என்றான் நகுலன்.

பீமன் புன்னகைத்தான். “நாம் இங்கு கொய்து உண்டிருக்கிறோம், மூத்தவரே. ஆகவே விதைத்துச்செல்லும் கடன்கொண்டிருக்கிறோம்” என்றான் சகதேவன். “ஆம்” என்றபடி பீமன் எழுந்தான். “உங்கள் குலத்தார்தான் உண்ணப்போகிறார்கள்” என்று நகுலன் சிரித்துக்கொண்டே சுட்டிக்காட்டினான். அப்பால் சில குரங்குகள் மிகுந்த ஆர்வத்துடன் நோக்கி அமர்ந்திருந்தன. “விதைக்க சொல்லிக்கொடுத்துவிடாதே. உரிமைகொள்ளவும் கற்றுக்கொள்ளப் போகின்றன” என்றான் பீமன். அவன் சென்றபோது சகதேவன் “நானும் வருகிறேன், மூத்தவரே” என்று மண்வெட்டியுடன் எழுந்தான்.

பீமன் சுற்றிலுமிருந்த மரங்களை நோக்கிக்கொண்டு சென்றான். உடன் நடந்தபடி “மழைப்பறவை வந்திறங்கிவிட்டது, மூத்தவரே” என்றான் சகதேவன். காற்றில் தாவித்தாவி சுழன்று அமைந்துகொண்டிருந்த சிறு குருவிகளை அண்ணாந்து நோக்கிய பீமன் “ஆம்” என்றான். “நாலைந்து நாட்களாகவே வேழாம்பல் மழைகேருகிறது” என்றான் சகதேவன். “பிற்பகல்களில் புழுக்கம் தாளமுடிவதில்லை. இருண்டு இறுகி கிழிந்துவிடும்போலிருக்கிறது வானம்.” காற்றில் நீரின் மணம் எழுந்தது. நீரோசையும் அலையொளியும் இலைத்தழைப்புக்கு அப்பால் கேட்டன.

அவர்கள் ஓடைக்கரையை அடைந்தனர். பீமன் தன் புலித்தோலாடையை கழற்றிவிட்டு உள்ளே அணிந்த தோல்கோவணத்துடன் ஓடை சுழித்துச்சென்ற குழியில் இறங்கினான். கரையில் அமர்ந்து முழங்கால்கள்மேல் கைகளை வைத்துக்கொண்ட சகதேவன் “நீங்கள் தேடிச்சென்றதை அடைந்துவிட்டீர்களா, மூத்தவரே?” என்றான். பீமன் “என் வரையில்” என்றான். “அதுபோதும்” என்று சகதேவன் சொன்னான். “ஒருவர் அறிந்த மெய்மை பிறருக்கல்ல என்றுதான் பிரம்மம் மானுடருடன் விளையாடுகிறது.” பீமன் “ஆம்” என சிரித்தபடி மூழ்கி எழுந்தான். குழல்கற்றைகளை அவிழ்த்துவிட்டு மீண்டும் நீரில் மூழ்கி எழுந்து விரலால் அவற்றை நீவி அலசினான்.

மீண்டும் நெடுநேரம் நீரில் முழ்கிக்கிடந்தபின் எழுந்து “இளையோனே, நீர் சித்தத்தைக் குளிர்விக்கும்போது மேலும் தெளிவாகிறது. அந்த மணம்தான் நான் அறிந்தது, தேடிச்சென்றது, அவளுக்காக நான் ஏந்தியிருப்பது” என்றான். “அவளுக்கு அதை அளிக்கமுடியாதென்று இப்போது தோன்றுகிறது. எவளுக்கு எதை அளிப்பது? ஊர்வசி, அசோகசுந்தரி, தேவயானி, சர்மிஷ்டை…” அவன் நீரில் மீண்டும் மூழ்கி எழுந்தபோது அதே முகத்துடன் சகதேவன் காத்திருந்தான். “உளறுகிறேனா?” என்றான் பீமன். “நான் மிகச்சரியாக புரிந்துகொள்கிறேன்” என்றான் சகதேவன்.

பீமன் கரையோர மென்மணலை அள்ளி உடலை தேய்த்துக்கழுவத் தொடங்கினான். “ஐந்தாவதாக நீங்கள் எவரைக் கண்டீர்கள், மூத்தவரே?” என்றான் சகதேவன். பீமன் ஒன்றும் சொல்லாமல் உடலை தேய்த்துக்கொண்டிருந்தான். அவன் மீண்டும் மூழ்கி எழுந்தபோது சகதேவன் சிரித்து “நன்று, நான் கேட்கப்போவதில்லை” என்றான். “ஆனால் நம் ஐவருக்கும் ஒருவருக்கு மட்டுமென ஓர் உள்ளமில்லை, மூத்தவரே” என்றான். பீமன் சிரித்தபடி “உண்மை” என்றான்.

“நான் நிமித்தநூல் கற்கச்சென்றபோது ஆசிரியர் ஒருநாள் என் கைகளை பற்றிக்கொண்டு நேற்று புலரியில் வந்த கனவில் நீ ஒரு குரங்கு என்றும் உனக்கு நான் நூல்சொல்வதாகவும் தெரிந்தது. அந்த நிமித்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீ புரிந்துகொள்கிறாயா என்றார். ஆம் என்றேன்” என்றான் சகதேவன். பீமன் சிரித்து “மூத்தவரிலேயே குரங்கை கண்டுகொள்ள முடியும்போலும்” என்றான். “ஆம், அவர் நூல்விட்டு நூல்தாவுகையில்” என்று சகதேவன் சிரித்தான். பீமன் உடன் சேர்ந்து பெருநகைப்பெடுத்தான்.

கைகளால் தலையைக் கோதி நீரை உதிர்த்தபடி “அது மாமலர் என நான் அறிவேன். அதுபோதும் என நினைக்கிறேன்” என்றான் பீமன். “அந்த மணம் தேவியின் ஒரு தருணம். அந்தத் தருணத்தின் மலைமுனையிலிருந்து நீங்கள் எழுந்தீர்கள். மீண்டு வரும்போது அத்தருணம் அங்கில்லை” என்றான் சகதேவன். “ஆம்” என்று பீமன் சிரித்தபடி சொன்னான். “காலம் அப்படியே நிலைக்குமென்றால்தான் உணர்வுகளுக்கு மதிப்பு போலும்.”

சகதேவன் சிரித்த முகம் மாறுபட்டு தாழ்ந்த குரலில் “அவள் அந்த மலரை ஒருநாள் அறிவாள், மூத்தவரே” என்றான். பீமன் தன் மரவுரியை எடுத்து நீரில் முக்கியபடி நிமிர்ந்து நோக்கினான். “அதற்கு இன்னும் நெடுநாள் இருக்கிறது. பெருந்துயர்களை, வெறுமைவெளிகளைக் கடந்துசென்று அதை தொடுவாள். தெய்வத்தை நேர்முன் காணுதல்போல. உடல்திறந்து உயிர் எழுந்து பெருகி வான்நிறைப்பதுபோல” என்றான் சகதேவன். “அத்தருணத்தை அவளுக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.”

tigerதருமனின் அறைக்குள் நுழைந்த திரௌபதி பீமனிடம் “உணவு ஒருங்கிவிட்டது, இளையவரே” என்றாள். தருமன் “அனைவருக்கும்தானே?” என்றார். திரௌபதி “யானைக்கவளம் குருவிகளுக்கும்தான்” என்றபின் வளையல் ஒலிக்க சிரித்துக்கொண்டு “வருக!” என திரும்பிச்சென்றாள். தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பீமன் எழுந்து “அச்சொல் அரக்குக்காட்டை பற்றவைப்பதுபோல பசியெழுப்பிவிட்டது” என்றான். “ஆம், நான் உண்ணும் பொழுது கடந்துவிட்டது. இன்று உனக்கான ஊன் சமையல். வா…” என தருமன் எழுந்தார்.

அடுமனையில் பெரிய ஈச்சம்பாயில் பீமனுக்கான அன்னம் குவிக்கப்பட்டிருந்தது. மரத்தொட்டியில் பன்றியின் ஊன்கறியும் இரு மண்தாலங்களில் எட்டு சுட்ட பன்றித்தொடைகளும் நெய்யுருகி குமிழிவெடித்து ஆவியெழ காத்திருந்தன. கைகளை உரசிக்கொண்ட பீமன் “நல்லுணவு என்பதை மறந்து நெடுநாளாயிற்று” என்றபடி அமர்ந்தான். தருமன் “மூடா, முறைப்படி நான் அமர்ந்தபின்னரே நீ அமரவேண்டும்” என்று சிரித்தார். “அதை இந்திரப்பிரஸ்தத்தில் பார்த்துக்கொள்வோம். பசிக்குமுன் முறையெது நெறியெது” என்றபடி அவன் பன்றித்தொடையை எடுத்து கடித்தான்.

“கேட்கவேண்டும் என எண்ணினேன். உன் பேச்சில் அது தவறித்தவறிச் சென்றது. உன்னுடன் வந்த முண்டன் எங்கே? வழியிலேயே கிளம்பிச்சென்றுவிட்டானா?” என்றார் தருமன். “ஆம், அவர் காற்றுபோல கட்டற்றவர்” என்றான் பீமன். “எனக்கு இறுதிவரை வழிகாட்டிவிட்டு விலகி காட்டுக்குள் சென்று மறைந்தார்.” தருமன் உணவை உண்டபடி “அவன் ஒரு குரங்கு என எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. அசைவுகளால் மட்டும் அல்ல. அவன் விழிகளில் குரங்குகளுக்கு மட்டுமே உரிய கூரிய ஒளி இருந்தது” என்றார்.

“அவன் எளிய மானுடன் அல்ல, இளையோனே. அவன் ஏதோ தெய்வம் உருமாறிவந்த வடிவு. அவனுக்கு நிகரான ஆற்றல் பிறிதில்லை என்று தோன்றியது. எனக்கு ஒரு கனவு. அதில் அவன் மாமலைபோல எழுந்து நிற்க அவன் காலடியில் ஒரு எறும்புபோல நான் நின்றிருக்கிறேன். சுற்றிலும் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் கூழாங்கல்பரப்புபோல… அஞ்சி நடுங்கி விழித்துக்கொண்டு கைகூப்பி வணங்கினேன்” என்றார் தருமன். சகதேவன் “ஆம், அவர் காட்டுத்தெய்வம்தான்” என்றபின் பீமனை நோக்கி புன்னகை செய்தான்.

மீண்டும் மீண்டுமென கேட்டு பீமன் உண்டான். அவர்கள் உண்டு எழுந்தபின் எஞ்சிய எலும்புகளையும் எடுத்து உண்டான். “போதவில்லையா?” என்றாள் திரௌபதி. “எஞ்சியிருக்கிறதா?” என்று அவன் எழுந்து பெருங்கலத்தை நோக்கினான். அருகே சிறுகலத்தில் உணவு இருந்தது. “அது எனக்கு என எடுத்து வைத்தது” என்று அவள் சொன்னாள். “நீ உண், எனக்குப் போதும்” என்று பீமன் கையை நக்கினான். “உண்ணுங்கள், இளையவரே” என அவள் அதை எடுத்து அளித்தாள். “உனக்கு வேண்டாமா?” என அவன் தயங்க அவள் சிரித்து “நான் எனக்கென சற்று புல்லரிசிச்சோறு சமைக்கிறேன். எவ்வளவு நேரமாகிவிடப்போகிறது?” என்றாள்.

“சரி, கொடு” என்று அதையும் வாங்கி பருக்கையில்லாமல் நக்கி உண்டபின் ஏப்பம் விட்டபடி “நல்லுணவு” என்றான் பீமன். “நல்லுணவில் அது விளைந்த மண்ணின் மணம் இருக்கும்… நான் மண்ணில் புதைந்தவனாக உணர்கிறேன்.” கைகளை நீட்டி சோம்பல் முறித்தபின் “நான் நீட்டிப் படுத்து உறங்கியும் நெடுநாட்களாகின்றன. சூழுணர்வுள்ள துயில் இதுவரை” என்றான். படியிறங்கிச்சென்று கைகளைக் கழுவும்போதே அவன் கால்கள் துயிலில் தள்ளாடத் தொடங்கிவிட்டிருந்தன.

“துயில்கிறீர்களா?” என்றாள் திரௌபதி. “என்ன?” என்று அவன் கோட்டுவாயிட்டபடி கேட்டான். “உள்ளறையில் துயில்க!” என்றாள். “என்ன?” என்றான் பீமன். “ஒன்றுமில்லை” என அவள் சிரித்தாள். அவன் சுவரில் முட்டி கதவிலும் தோள் தட்டி நடந்து உள்ளறைக்குச் சென்றான். மூங்கில்மஞ்சத்தில் மரவுரி விரிக்கப்பட்டிருந்தது. தலையணைகள் இரண்டை எடுத்துப்போட்டுக்கொண்டு மஞ்சம் முனக எடையுடன் விழுந்து அக்கணமே துயிலத் தொடங்கினான். சாளரக்காற்றில் தன் தலைமுடி முகத்தின்மேல் அசைவதை இறுதியாக உணர்ந்தான்.

tigerநிலம் முழுக்க நிறைந்திருந்தது அந்த மலர்மணம். அதன்மேல் அவன் நின்று துள்ளி சுழன்றமைந்து கூச்சலிட்டு கொந்தளித்துக்கொண்டிருந்தான். விழித்துக்கொண்டபோது அறைக்குள் இருள் நிறைந்திருந்தது. சாளரம் வழியாக குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. அறைக்குள் கொடியிலும் கொக்கிகளிலும் தொங்கிய அத்தனை ஆடைகளும் பறந்து துடித்தன. காற்றில் மழைமண்ணின் மணம். ஊன்மணமா? உப்புமணமா? இளம்பாசியின் மணமா? கருக்குழவியின் புதிய குருதியின் மணமா? எங்கிருக்கிறோம் என எண்ணியபடி அசையாமல் படுத்திருந்தான். உடல் அப்போதும் துயின்றுகொண்டிருந்ததனால் கைகால்களில் இனிய உளைச்சல்போல ஓர் எடை ததும்பியது.

மூங்கில் இடைவெளிகளினூடாக வந்த அகல்சுடரின் செவ்வொளிச் சட்டங்கள் அவன் மேல் விழுந்து வகுந்து சுழன்றன. கையால் சுடரைப் பொத்தியபடி திரௌபதி உள்ளே வந்தாள். அவள் முகம் செவ்வொளியில் உருகுவதுபோலத் தெரிந்தது. அவள் உள்ளே வந்து கதவை மூடியதும் காற்றில் அகல் சுடர் எழுந்து படபடத்து அணைந்தது. அவள் மேலாடை பறந்து படபடத்தது. அவள் அவனை நோக்கி “விழித்துக்கொண்டாயிற்றா?” என்றாள். அவன் “ஆம்” என்றான். சிறிய மின்னலுக்குப்பின் மிகத் தொலைவில் வானத்தின் செருமலோசை.

“பேய்க்காற்று… மரக்கிளைகள் முறியும் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது” என்றபடி அவள் அவனருகே வந்து மஞ்சத்தின் விளிம்பில் அமர்ந்து “விலகிக்கொள்ளுங்கள்” என்றாள். அவன் விலக அதில் நன்றாக அமர்ந்தபடி தன் இடையிலிருந்து அந்த மூங்கில் குழாயை எடுத்தாள். “பிச்சிபோல இதை முகர்ந்தபடியே இருக்கிறேன். இது எந்த மணம் என நினைவுகூர்ந்துவிட்டேன்” என்றாள். “ம்?” என்றான் பீமன். “இது எங்கள் காம்பில்யத்தின் இளவேனில்மாளிகையில் தென்கிழக்கு மூலையில் நின்ற நிசாகந்தி…” என்றாள். அவன் “ம்” என்றான்.

அவள் அவனருகே படுத்து அவன் தோள்களை கைகளால் வளைத்துத் தழுவியபடி துள்ளும் குரலில் “சிறுமியாக இருக்கையில் இளவேனில்நாட்களில் அங்கே சென்று தங்குவோம். இங்குபோலில்லை, அங்கே வேனிலில் புழுக்கம் மிகுதி. எல்லா சாளரங்களையும் திறந்து வைப்போம். இரவில் வெவ்வேறு மலர்மணங்களுடன் காற்று இரு திசைகளிலிருந்தும் சுற்றிக்கொண்டிருக்கும். இரண்டுவயதுவரை நான் தந்தையின் மஞ்சத்தில்தான் படுப்பது வழக்கம். அவர் மதுவுண்ட மயக்கில் முன்னரே துயின்றுவிடுவார். நானும் துயின்று கனவுக்குள் மலர்மணங்களை அறிந்துகொண்டிருப்பேன்” என்றாள்.

“இரவு செறிந்தபின்னர்தான் நிசாகந்தி மலரும்” என்றாள் திரௌபதி. அவள் குரல் இருட்டுக்குள் ஆழ்ந்து ஒலித்தது. அதன் சொற்களை காற்று அள்ளி அறைக்குள் தெளித்து விளையாடியது. “அதன் மணம் உயிருள்ளது. ஒரு யக்ஷி போல. நீண்ட குளிர்ந்த கைகளுடன் வந்து சூழ்ந்து பற்றிக்கொள்ளும். அச்சமும் உவகையுமாக உள்ளம் கொந்தளிக்கும். நான் கண்களை மூடிக்கொண்டு அதற்கு என்னை ஒப்புக்கொடுப்பேன். உடல் சிலிர்த்துக்கொண்டே இருக்கும்.”

பீமன் வெறுமனே “ம்” என்றான். “அதைப்பற்றி நான் மாயையிடம் அன்றி எவரிடமும் சொன்னதில்லை” என்றாள். பின்னர் அவன் முகத்தில் முத்தமிட்டாள். அவள் கைகள் அவன் உடல்மேல் இரு நாகங்கள் என நெளிந்தன. “நான் இப்போது எப்படி உணர்கிறேன் தெரியுமா?” மெல்லிய மின்னல் ஒன்று வெட்ட அவன் அவள் விழிகளை கண்டான். இரு கைகளாலும் அவளை அள்ளி எடுத்துக்கொண்டான். இடியோசை தொடராக முழங்கி அமைந்தது.

வெறியுடன் முயங்கும்போது அவள் உதிரிச்சொற்களில் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தாள். தன் உதடுகளால் அவள் அவன் முகத்தை அழுத்தி வருடியமையால் அச்சொற்கள் கசங்கிய மலர்களின் மணம் கொண்டிருந்தன. உடல்கள் அதிர்ந்து அதிர்ந்து ஒன்றையொன்று நிறைத்து அமைய வேறெங்கோ இருந்து மீண்டபோது அவன்மேல் தன் மென்குளிர் வியர்வை படிந்த உடலை அழுத்தியபடி அவள் சொன்னாள் “இழந்துகொண்டே செல்கிறேன், இளையவரே. இளமையை இழப்பதே பெண்ணின் பெருந்துயர்.” பீமன் அவள் தோள்களை தடவினான். புறங்கழுத்தின் மென்மயிர்ப்பிசிறுகளை பிடித்து சுருட்டினான்.

“ஏக்கம் தாளாமல் நெஞ்சு தவிக்கிறது… நான் கற்ற காவியங்கள் எதைக்கொண்டும் இதை சொல்லிவிட முடியாது” என்று அவள் அவன் மார்பில் முகம்புதைத்து சொன்னாள். அவன் “ம்” என்றான். “இங்கிருந்து அனைத்தையும் அளித்துவிட்டால் அங்கு மீளமுடியும் என்றால் மாற்றெதையும் எண்ணமாட்டேன்.” அவன் மீண்டும் “ம்” என்றான். “பிச்சிபோலப் பேசுகிறேன்…” என்றபின் அவள் அவன்மேல் தன் பெருமுலைகள் அழுந்த கை நீட்டி மறுபக்கம் மஞ்சத்தில் கிடந்த மூங்கில் குழாயை எடுத்து அப்படியே முகர்ந்தாள்.

“அதே மணம்தான்… திறக்கவே வேண்டாம்” என்றாள். குரல் மிகத் தாழ்ந்திருந்தது. “எண்ணிக்கொண்டாலே போதும்போல” என்றாள். அதை தன் மூக்குடன் உருட்டியபடி “ஏன் சென்றுகொண்டே இருக்கிறோம்?” என்றாள். அவள் விழிகள் மூடுவதை அவனால் இருளுக்குள் காணமுடிந்தது. மூச்சு சீரடைந்தது. “தனிமையில்” என்றாள். உதடுகள் மெல்ல விரிசலிட்டன. மூச்சு வலுக்க முலைக்குவைகள் எழுந்தமைந்தன. விரல்கள் விரிந்து மூங்கில் குழாயை நழுவவிட்டன. அவன் அதை எடுத்து அப்பால் வைத்து அவளை மெல்ல தன் உடலில் இருந்து சரித்து மஞ்சத்தில் படுக்கச்செய்தான்.

அவன் அவளை நோக்கிக்கொண்டே இருந்தான். காற்று சுழன்று வீச தொலைவில் காட்டுமரங்களின் ஓலம் அலையலையென கேட்டது. மெல்லிய மின்னல். அவள் தன் குழல்விரிந்த கருநிழல்மேல் கிடந்தாள். மேலுதடு சற்றே வளைய அகவைகளை இழந்து குழவியென்றாகிவிட்டிருந்தாள். அனைத்தையும் வெள்ளிப்பரப்பென ஆக்கியபடி பெருமின்னல் ஒன்று அறையை அதிரச்செய்தது. பின் மிக அருகே பாறை ஒன்று வெடித்ததுபோல ஒலித்தது. அதன் எதிரொலி வானெங்கும் பரவியது.

அவள் உடல் அதிர்ந்தது. கண்கள் அதிர கைதுழாவி “இளையவரே…” என்றாள். அவன் குனிந்து “சொல்” என்றான். “என் தந்தையை உங்களால் மற்போரில் வெல்லமுடியுமா?” என்றாள். அக்குரல் சிறுமியின் உச்சரிப்புடன் இருந்தது. “ஆம்” என்றான். “களிப்போர் போதும்” என்றாள். “ஆம்” என்றான் பீமன். அவள் விழித்துக்கொள்ளவே இல்லை எனத் தெரிந்தது. மூச்சு சீராக ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு மின்னல். இடியோசைக்காக அவன் செவிக்கூர் காத்தது. இடியோசை எழுந்தபோது ஆம் ஆம் என்றது உள்ளம்.

எழுந்து சென்று காற்று பீரிட்ட சாளரத்தருகே நின்றான். தொலைவில் மரக்கூட்டங்கள்மேல் மழை அறைவதைக் கேட்டான். பெருகிப்பெருகி வந்து தழுவிமூடிக்கொண்டது முதல்மழை.

[மாமலர் நிறைவு]

நூல் பதின்மூன்று – மாமலர் – 94

94. இறுதிமலர்

பீமன் தன் எண்ணங்களை ஒருங்கமைக்க முயன்றான். எண்ணங்களை நினைவுகள் ஊடறுத்தன. கலையக் கலைய தன்னை திரட்டிக்கொண்டு முன்சென்ற எண்ணங்கள் மேல் நினைவுகள் தொற்றிக்கொண்டன. அச்செயலை அறிந்தபோது அவற்றை அறியும் ஒரு சித்தம் பிரிந்து நின்றது. வெறும்நினைவுகள் என எவையேனும் உண்டா? வெறும் எண்ண ஓட்டமென்பது எவருக்கேனும் நிகழ்வதுண்டா? முகங்களின் குரல்களின் பெருக்கென சென்றுகொண்டே இருந்தது சித்தம். இதைக் கொண்டா கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்? இதனூடாகவா உறுதியான முடிவுகளை சென்றடைகிறார்கள்?

அறுத்து வெளிவந்தபோது அவன் உடல் சற்று அசைந்தது. நான் எண்ணித்தேரவோ சூழ்ந்து முடிவுகாணவோ உகந்த உள்ளம் கொண்டவன் அல்ல. அக்கணத்திலெழும் உணர்வுகளே என்னை நடத்தட்டும். அதன்பொருட்டு அழிவதென்றால் அவ்வண்ணமே ஆகட்டும். என்னை அவ்வண்ணம் படைத்த தெய்வங்கள் அதன் பொறுப்பை ஏற்கட்டும். அவன் அசைவால் முண்டன் கலைந்து திரும்பி நோக்கினான்.

“மூத்தவரே, காமவிலக்கு நோன்பு கொண்ட தாங்கள் எப்படி இந்த மாமலர்ப் பயணத்தில் வழிகாட்டியானீர்கள் என்றுதான் எண்ணிக்கொள்கிறேன்” என்றான் பீமன். இயல்பான தொடக்கமாக சொல்லவிழைவதற்கு முந்தைய வரி அமைந்துவிட்டதை எண்ணி அவன் உளம் மலர்ந்தபோது அனைத்தும் தெளிவுகொண்டன. “வழிகாட்டவில்லை, குறுக்கே விழுந்து வழிமறிக்கிறேன்” என்றான் முண்டன். “உன்னை திருப்பி அனுப்புவதே என் நோக்கம். இந்த அறியா மணம் அலைக்கழித்து அழித்த உன் முன்னோர்களின் வாழ்க்கையினூடாக இங்கு கொண்டுவந்தேன். அந்த மணம் உண்மையில் என்ன என்று உன்னை உணரச்செய்தேன். இளையவனே, அது துன்பமன்றி வேறல்ல.”

பீமன் “ஆம், அதை நானும் முற்றுணர்ந்திருக்கிறேன் இப்போது” என்றான். “ஆனால் என் உள்ளம் அங்கே சென்று அந்த மலரை அடையும்படி சொல்கிறது. அடைந்தபின் அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யவே எண்ணுகிறேன். என்னை வாழ்த்துங்கள்!” முண்டன் சினத்துடன் “மூடா, நான் சொன்னவை உன் சித்தத்தில் படியவில்லையா என்ன? பெருந்துயர் உறுவாய். தணியா விழைவையும், அழியா வஞ்சத்தையும், மாற்றிலா தனிமையையும், எஞ்சும் வெறுமையையும் அன்றி எதையும் காமத்தால் அளிக்கவியலாது” என்றான்.

“அதற்கு மாற்று சொல்ல என்னிடம் ஒரு சொல்லும் இல்லை, மூத்தவரே” என்றான் பீமன். “ஆனால் செல்க என்றே என் உள்ளம் சொல்கிறது.” முண்டன் தரையை தன் கையால் ஓங்கி அறைந்தான். பீமனின் உடல் அதிர்ந்தது. “அறிவிலி… நீ வெற்றுணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் சிறுதுரும்பு. சொல்வதை கேள்! இதைவிட பிறிதொரு நற்சொல் உனக்கு எவரும் சொல்லப்போவதில்லை.” பீமன் “ஆம், இத்தருணத்தில் என் தெய்வமும் மூதாதையரும் நீங்களே. ஆயினும் என் உள்ளம் மாற்று சொல்லவில்லை” என்றான். தன் மார்பை ஓங்கி அறைந்து வெடிப்பொலி எழ முண்டன் உறுமினான். சினம் கொள்கையில் அவன் உடல் கனல்கொண்டு தலைமயிர் தழல்போலத் தெரிந்தது.

கைகளைக் கூப்பி நிலையமைந்த விழிகளுடன் பீமன் சொன்னான் “மூத்தவரே, என் உள்ளம் அமைந்திருப்பது நாவில். சித்தம் வாழ்வது வயிற்றில். என் புலன்களில் முதன்மையானது மூக்கு. அன்னைமுலைப்பாலின் மணம் கொண்டது அந்த இனிய மலர். அச்சுவையில் ஊறும் என் நா முடிவெடுத்துவிட்டது. ஆம் ஆம் என முழங்குகிறது என் வயிறு. என்னால் பிறிதொன்று எண்ண இயலாது.” எழுந்து முண்டனின் கால்களைத் தொடுவதற்காக குனிந்தான்.

முண்டன் அவன் தலையை ஓங்கி உதைத்தான். தெறித்து மல்லாந்து மண் அறைந்து விழுந்து பீமன் மேலே நோக்க பேருருவம் கொண்டு எழுந்தான் முண்டன். “சித்தமற்றவன் நீ. உன்னிடம் சொல்லாடியது என் பிழை… என்னைக் கடந்து செல், முடிந்தால்!” அவன் காலடி எடுத்துவைத்து அணுகிய அதிர்வை மண்ணிலேயே பீமன் உணர்ந்தான். கால்களை உதைத்து பின்னுக்கு நகர்ந்தபடி அவன் முகத்தை அண்ணாந்து நோக்கினான். விண்சூடிய தலை உயரத்திலெங்கோ தெரிந்தது. ஆனால் சிறுதுளியும் அச்சம் எழவில்லை. எழுந்து தாள்பணியவே உள்ளம் விழைந்தது. அலையழிந்திருந்த உள்ளத்தில் செய்யவேண்டியதென்ன என்று தெளிந்தது.

பீமன் கைகளக் கூப்பியபடி அச்சொல்லை சொன்னான். திகைத்தவன்போல முண்டன் அசைவிழந்து நின்றான். தொலைவின் ஒலிக்கு என அவன் செவிமுனைகள் மெல்ல மடிந்தன. விழிகள் இருபக்கமும் விலகின. பீமன் நுண்சொல்லென அப்பெயரை உதடுக்குள் சொல்லிக்கொண்டே எழுந்தான். அஞ்சியவன்போல முண்டன் பின்னகர்ந்தான். பீமன் கைகூப்பியபடி அவனை நோக்கி சென்றான்.

“என் நாவிலெழுந்த இச்சொல்மேல் ஆணை, மூத்தவரே. விலகி வழிவிடுங்கள்” என்றான் பீமன். உடைந்த குரலில் முண்டன் “என்ன சொல்கிறாய்… என்ன சொல்கிறாய் என அறிவாயா?” என்று கூவினான். பீமன். “மூத்தவரே, நீங்களும் நானும் ஒற்றைப்பெருங்கரத்தால் ஆடப்படும் நாற்களத்தின் எளிய காய்கள்… நம் வழிகள் வேறு. ஏனென்றால் நம் தலைவர்கள் வேறு” என்றான்.

முண்டன் சீற்றமும் துயருமாக “என் தலைவனின் பெயரை சொல்கிறாய்… அச்சொல்லால் என்னை கட்டி நிறுத்துகிறாய்” என்றான். “மூத்தவரே, நான் சொன்னது என் தலைவனின் பெயரை” என்றான் பீமன். “யார்?” என்று முண்டன் மூச்சொலியாக கேட்டான். “துவாரகையின் இளைய யாதவன். இந்த யுகத்தை சமைக்க எழுந்தவன்” என்றான் பீமன். விழி மலைக்க அசைவிழந்தபின் “உண்மையாகவா?” என்றான் முண்டன். “ஆம், கிருஷ்ணா என்றே நான் சொன்னேன்” என்றான் பீமன்.

முண்டன் தவிப்புடன் கைசுட்டி “இப்போது உன் உதடுகள் சொன்னது என் தலைவனின் பெயரை” என்றான். “ஆம், அப்பெயரை நீங்கள் அவ்வண்ணமே கேட்கமுடியும்” என்றான் பீமன். “மூத்தவரே, ஒன்றுபற்றி அதில் நின்ற நேர்வழியனின் அடியவர் நீங்கள். நீங்கள் புலன்வென்று அமையமுடியும். நானோ ஊழிச்சுழியென வளையும் நெறிகொண்டவனின் கைக்கருவி. கோதண்டம் அல்ல சுதர்சனம். என் இறைவனின் கையில் வேய்குழல் இருக்கையில் நான் எப்படி மணங்களில் இருந்து விடுபட இயலும்?”

முண்டன் தத்தளிப்புடன் தலையை அசைத்தான். “நான் உங்கள் இளையோன் அல்லவா? நீங்கள் முழுமெய் என அறிந்ததும் பேரன்பைத்தானே?” என்றான் பீமன். முண்டன் கண்கள் கனிய நோக்கி “ஆம், அதனாலேயே நான் இப்புவி விட்டு விலகமுடியாதவனானேன்” என்றான். “மூத்தவரே, அன்பில் கனிந்திருக்கையில் இப்புவியைவிட இனியது பிறிதேது?” என்றான் பீமன். முண்டன் மெல்ல நகைத்து “உண்மை, கனிகளும் தளிர்களும் இனிக்கும் ஒரு காட்டில் வாழும் குரங்கு நான்” என்றான்.

பீமன் சிரித்து “நானும்” என்றான். “என் நாவுக்கு இன்றுவரை சுவையற்ற ஒன்று தட்டுப்பட்டதே இல்லை, மூத்தவரே.” முண்டன் “நீ அந்த புளித்த மண்டியை சுவைப்பதைக் கண்டு நானே திகைத்துவிட்டேன்” என்றான். முண்டன் பீமனின் தோளில் அறைய இருவரும் வெடித்து நகைத்தனர். விழி கசிய உடல் உலைய சிரித்து தளர்ந்து மூச்சிரைத்து ஓய்ந்தனர். “நாம் சற்று தேறல் அருந்தி மகிழ்ந்து விடைகொள்வோம், மூத்தவரே. இது வானோர் நோக்கித் திகைக்க விலங்குகள் முற்றுவகையில் திளைக்கும் தருணம் அல்லவா?” என்றான் பீமன். “அருகிலேயே இன்னொரு தேறல்குழி உள்ளது… வா” என்றான் முண்டன்.

tiger
இருவரும் ஊஊஊஉ என ஊளையிட்டபடி கிளைகள் வழியாக காட்டுக்குள் ஊடுருவிச் சென்றனர். முண்டன் கிளைமேல் அமர்ந்து எம்பி எம்பி அமைந்து ஹுஹுஹுஹு என கூச்சலிட்டான். பீமன் நெஞ்சில் அறைந்து வானை நோக்கி குரல் தொடுத்தான். காட்டுக்குள் எழுந்து நின்ற கரிய பாறைக்குழியில் தேங்கியிருந்த பழத்தேறலை முன்னரே குரங்குகள் சில உண்டுகொண்டிருந்தன. முண்டனைக் கண்டதும் அவை இரு கால்களில் எழுந்து ஹுஹுஹு என குரலெழுப்பி எம்பி குதித்தன. வாய்குவித்து நீட்டி ஹிஹிஹி என்றன. அவற்றின் முகங்கள் தேறல் மயக்கில் சிவந்திருந்தன. வானிலிருந்து உதிர்ந்ததுபோல பாறைப் பரப்பெங்கும் குரங்குகள் மல்லாந்து அரைக்கண்மூடி கிடந்தன.

முண்டன் தேறல்குழியருகே சென்று “அருந்து… இது அமுதுக்கு நிகர்” என்றான். ஒரு குரங்கு “இவன் பெரியவன்” என்றது. இன்னொரு குரங்கு அவனை நோக்கி விரல்சுட்டி ஏதோ சொல்ல முயன்று விரல்தளர அப்படியே மயங்கியது. பீமன் அந்த மென்குழம்பை அங்கே கிடந்த இலையால் அள்ளி குடித்தான். முண்டன் பிறிதொரு காய்க்குடுவையால் அள்ளி அவனிடம் நீட்டி “அருந்துக!” என்றான். பின் குப்புற விழுந்து வாயாலேயே அதை இழுத்துக் குடித்தான். பீமன் இலையையும் குடுவையையும் வீசிவிட்டு தானும் குப்புற விழுந்து குடித்தான். கையை ஊன்றிக்குடிக்கத் தொடங்க வழுக்கி உள்ளே சென்றுவிழுந்தான்.

முண்டன் தரையை கையால் அறைந்தபடி உரக்க நகைத்தான். எழுந்து நின்று இரு கைகளாலும் விலாவைச் சுரண்டியபடி எம்பிஎம்பிக் குதித்து சிரித்தான். அத்தனை குரங்குகளும் சூழ நின்றபடி எம்பிக்குதித்து ஹுஹுஹு என கூச்சலிட்டன. முண்டன் முன்னால் வந்து பீமனை நோக்கி கைநீட்ட அவன் அந்தக் கையை பற்ற முயன்றான். அவனைப் பிடித்து மீண்டும் தேறல்குழம்புக்குள் தள்ளிவிட்டு முண்டன் எம்பிக்குதித்து சுழன்று அமைந்தான். மீண்டும் மீண்டும் அவன் பீமனை தள்ளிவிட்டு சிரிக்க அவனுக்குப் பின்னால் வந்த குரங்கு அவனை தள்ளிவிட்டது. அவனும் சறுக்கிச் சென்று தேறலில் விழுந்தான். தள்ளிவிட்ட குரங்கை பிறிதொன்று தள்ளிவிட்டது. பின்னர் இரு குரங்குகள் தேறலில் குதித்தன. மேலும் குரங்குகள் தேறலில் பாய்ந்தன.

அவை கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தும் மூழ்கியும் வாயால் அள்ளிக் குடித்தும் கொப்பளித்து துப்பியும் களியாட்டமிட்டன. ஓசைகேட்டு துயின்றுகொண்டிருந்த முதுகுரங்கு ஒன்று திரும்பி நோக்கி பற்களைக் காட்டி இளித்தபின் தலையைத் தூக்கமுயன்று முடியாமல் நாக்கை மட்டும் நீட்டி அருகே தெறித்த தேறல்துளியை நக்கியது. தேறல் கலங்கி சேறாகி தலைசுழலச்செய்யும் கெடுமணம் எழுப்பியது. அதில் விழுந்தும் வழுக்கித் தழுவியும் எழுந்தும் சறுக்கி மீண்டு விழுந்தும் அவை குழைந்தாடின.

பீமன் பாறைக்கரையைப் பற்றிக்கொண்டு மேலேற முயன்றான். வழுக்கி வழுக்கி விழுந்து மெல்ல தொற்றி ஏறி கரையிலிருந்த பாறையில் அமர்ந்தான். அவன் உடலில் இருந்து கொழுவிய தேறல் வழிந்தோடியது. முண்டன் ஒரே தாவலில் தேறலில் இருந்து எழுந்து அவனருகே வந்து நின்று உடலை உதறி துளிகளை சிதறடித்தான். பீமன் குரங்குகளை திரும்பி நோக்கி “புழுக்களைப்போல” என்றான். முண்டன் சிரித்து “புவியின் இன்பத்தை முற்றறியும் பேறுபெற்றவை புழுக்களே. அவற்றுக்கு வாயன்றி புலன் இல்லை. உண்பவையே உலகென்றும் ஆகிச் சூழ்ந்துள்ளன. அன்னையின் கருவிலும் முலையிலும் மட்டுமே வாழும் மகவுகள் போன்றவை” என்றான்.

“உள்ளும் புறமும் சுவை” என்றான் பீமன் தன் கைகளை நக்கியபடி. “ஆம், குருதிபோல. கொழுங்குருதியும் இதைப்போலவே சுவைகொண்டது என்பார்கள்” என்றான் முண்டன். பீமன் தலைதூக்கி நோக்கினான். “அச்சுவையும் அறிந்து மீள்க!” என்றான் முண்டன் அவன் விழிகளை நோக்கியபடி.

tiger“நான் கிளைகளில் வாழ்கிறேன்” என்று முண்டன் சொன்னான். “என் தலைவன் முடிசூடி கோல்கொண்டு ஆளத் தொடங்கியபோதே நான் காட்டுக்குள் வந்துவிட்டேன். என் முன் தலைமுறைகள் இறந்தழிய எப்போதும் மாறாத இளமையுடன் என் குலம் இருந்துகொண்டிருந்தது. அவன் சரயுவில் உடலுதிர்த்தான் என நெடுங்காலம் கழித்து எவரோ சொல்லி அறிந்தேன். நான் துயர்கொள்ளாததைக் கண்டு அக்குரங்கு வியந்தது. என் கையிலிருந்த மாங்கனியை எடுத்துக்காட்டி நான் சொன்னேன், இவ்வினிமையில் அவன் இருக்கிறான் என்று. என்னுடன் அவன் என்றுமிருப்பான்.”

பீமனும் அவனும் கதலிவனம் செல்லும் மலைச்சரிவுப் பாதையின் தொடக்கத்தில் ஒரு மரத்தடியில் நின்றிருந்தனர். பொழுது விடியத் தொடங்கியிருந்தது. முந்தையநாள் மாலையொளி சிவப்பதற்குள்ளாகவே கள்மயக்கில் அவன் துயின்றிருந்தான். இரவில் பலமுறை விழித்துக்கொண்டபோது போர்வை என மிக அருகே விண்மீன்கள் செறிந்த வானம் தெரிந்தது. அரைத்துயிலில் விண்மீன்களை அள்ள அவன் கைகளை நீட்டி துழாவினான். மிக அருகே நின்றிருந்த ஒளிப்புள்ளியை தொட்டுவிட்டான். அதன் தண்மையை உணர்ந்து சிலிர்த்து விழித்துக்கொண்டான்.

அருகே குரங்குகள் ஒவ்வொன்றாக எழுந்து நான்கு கால்களில் நடந்து மரங்களை நோக்கி சென்றுகொண்டிருந்தன. சில குரங்குகள் சிற்றோடையில் இறங்கி புரண்டு உடலை கழுவிக்கொண்டன. குனிந்து நீர் அருந்தி முகமயிரில் சிலிர்த்த நீர்த்துளிகளுடன் குளிருக்கு மெய் விதிர்த்தன. அவன் ஓடையில் இறங்கி உடலைக் கழுவி தூய்மை செய்துகொண்டான். கனிமது விடாயை பெருக்குவது. இரவில் பலமுறை விடாய் தாளாமல் அவன் எழுந்து தலை தூக்கமுடியாமல் விழுந்துகொண்டிருந்தான். நீரை குடிக்கக் குடிக்க உடலுக்குள் அனல் அவிந்துகொண்டிருந்தது.

அப்பால் முண்டன் நீராடி ஈரத்துடன் கரையில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு அருகே சென்றான். குரங்குகள் கிளைகளில் தாவித்தொற்றி மேலேறி உச்சிக்கிளைகளில் கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டன. வானம் இருண்டு விண்மீன்கள் மேலும் கூர்மைகொண்டிருந்தன. “செல்வோம்” என்றபின் முண்டன் நடக்க பீமன் தொடர்ந்தான். பாதையின் தொடக்கத்தை அடைந்ததும் அவன் நின்றான்.

“ராமன். ரமிப்பவன். ரமிக்கவைப்பவன். மனோரம்யன். சொல்லச்சொல்ல வளரும் சொல். தளிர்த்து தழைக்கிறது. பூத்து நிறைகிறது. கனிந்து இனிக்கிறது. பரவி முளைக்கிறது. அவன் எனச் சூழ்ந்திருக்கின்றன அனைத்தும். நான் எளிய சிறுபுழு” முண்டன் சொன்னான். “களிப்பூட்டும் வெறியூட்டும் மயக்கி கனவிலாழ்த்தும் இன்கடுந்தேறல் எனக்கு அவன் பெயர். அவன் தன் கதைகளை சூதருக்கும் குருதியை கொடிவழியினருக்கும் அளித்துச்சென்றான். எனக்கு அவன் பெயரே பெருங்கொடை. ஒழுகும் அலைக்கும் காலம் தொடாது எழுந்த மலைமுடி அச்சொல்.”

முண்டன் சிலகணங்கள் விழிதாழ்த்தி நின்றபின் “நீ பிறிதொரு யுகத்தவன். உன் தலைவன் அளியனல்ல, ஆட்டுவிப்பவன்” என்றான். “செல்க, மைந்தா! ஆனால் அனைத்தையும் அறிந்துவிட்டுச் செல்க! வீடுபேறென்று யோகியர் அடைந்ததும் மெய்மையென்று ஞானியர் அறிந்ததும் உண்மை என்று நூலோர் சொல்வதும் உனக்கு ஒருபோதும் கைப்படப்போவதில்லை. உன்னிடம் இந்த மாமலர் மட்டும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். நறுமணமும் கெடுமணமும் கொண்டிருக்கும். அனலென எரியும், நிலவெனக் குளிரும். பிறிதெவரும் எந்நிலையிலும் அறியாத ஒருவனாக உன் உடலுக்குள் ஒளிந்து அந்த மலரை நெஞ்சில் சூடியிருப்பாய்.”

“அது போதும் எனக்கு” என்று பீமன் சொன்னான். “செல்க, நீ வெல்வாய்!” என்றான் முண்டன். பீமன் குனிந்து அவன் கால்களில் எண்பொறியும் நிலம்நீள விழுந்து வணங்கினான். “எப்போதும் எளியவனாக இருக்கும் பேறுபெற்றவன் நீ, இளையோனே. உன்னுடன் தெய்வங்கள் இருக்கும்” என்றான் முண்டன். அங்கே இளஞ்சேற்றை காலால் கிண்டி புதைந்துகிடந்த கதாயுதம் ஒன்றை எடுத்தான். “இதை கொள்க… என் கையிலமைந்த படைக்கலம் இது.” பீமன் அந்த கதாயுதத்தை நோக்கி ஒருகணம் திகைத்தான். அது அவன் வழக்கமாக வைத்திருக்கும் பெருங்கதாயுதத்தைவிட இருமடங்கு பெரியது.

திரும்பி முண்டனை நோக்கிவிட்டு அதை சென்று எடுத்துக்கொண்டான். எடை தோள்களை தெறிக்கச்செய்தபோதும் அவனால் அதை தூக்கி தோளிலேற்ற முடிந்தது. “உங்கள் கைகள் இவை, மூத்தவரே” என்றான். கதையுடன் உடல் வளைத்து மீண்டும் முண்டனை வணங்கியபின் நடக்கத் தொடங்கினான்.

tigerசரிந்து மேலேறிய பாதையில் யானைகள் சற்றுமுன்னர்கூட சென்றிருப்பதை மிதிபட்ட சாணிக்குழம்பலில் இருந்து உணரமுடிந்தது. அவன் காலடிகள் எங்கெங்கோ எதிரொலித்து திரும்பிவந்துகொண்டிருந்தன. கருக்கிருட்டின் பரப்பே அவற்றை எதிரொலிக்கிறதோ என்று தோன்றியது. தன் உடலில் எஞ்சியிருந்த கடுந்தேறலின் மணத்தை காற்று மெல்ல கரைத்தழிப்பதை உணர்ந்தான். உடல் உலர்ந்து குழல் பறக்கத் தொடங்கியதும் அந்த மணம் முழுமையாக மறைந்தது. பின்பு அவன் அந்த மலரின் மணத்தை அறியத் தொடங்கினான்.

இம்முறை அது செண்பகம் எனத் தோன்றியது. எத்தனை தொலைவுக்கு அது அவ்வண்ணம் தோன்றுகிறது என்று நோக்கியபடி நடந்தான். திரௌபதி செண்பகத்தை அர்ஜுனனுக்காக சூடுவதுண்டு. அனலென மூக்கில் எரிவது, பித்தெழுப்புவது. தருமனுக்கு அசோகம். தண்மை என மணத்தாலும் சொல்வது. அவனுக்குரியது எது? அந்த மணத்தை அவன் உணர்ந்தான். மந்தாரம். மிகமிக மென்மையானது. மணக்கிறதா என்றே ஐயமெழுப்புவது. மந்தாரமா? இது பாரிஜாதம் அல்லவா? பாரிஜாதத்தை எவர்பொருட்டு அவள் சூடுகிறாள்? அனைவரின்பொருட்டும். அல்லது அவளுக்காகவே.

விடிவெளிச்சம் துலங்கத் தொடங்கும்போது அவன் தொலைவில் கதலிவனத்தை பார்த்துவிட்டிருந்தான். நான்குபக்கமும் மலைகள் சூழ நடுவே ஒரு பெரிய ஏரிச்சதுப்பென விரிந்திருந்தது அந்த வட்டத்தாழ்நிலம். வாழைக்கூட்டங்கள் இலைசெறிந்து காற்றில் பச்சை நீர்ப்பரப்பென அலையடித்துக்கொண்டிருந்தன. மலைமடிப்புகளில் இருந்து இறங்கிய சிறிய ஓடைகள் வெண்வழிவென அதற்குள் சென்று மறைந்தன. நூற்றுக்கணக்கான பறவைகள் எழுந்து காலையொளியில் தண்பரப்பென துலங்கிய வானில் சுழன்றுகொண்டிருந்தன. மேலும் நடந்தபோது அவற்றின் கலைவொலி அலையை கேட்கவும் முடிந்தது.

அவன் புலன்கள் கூர்கொண்டிருந்தன. அங்கே காவலுக்கு குரோதவசர்கள் என்னும் கந்தர்வர்கள் அமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று முண்டன் சொல்லியிருந்தான். “அவர்கள் உன்னுள் இருந்தே எழுபவர்கள் என்பதனால் உனக்கு அணுக்கமானவர்கள், இளையோனே. உன் ஆழ்ந்த வஞ்சங்களின் வடிவங்கள்.” அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்தான். விழிகள் துழாவிக்கொண்டே இருந்தன. ஓசைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அறிந்தது செவி. அந்த மலர்மணம் ஆழம்கொண்டிருந்தது. மெல்லிய குருதிமணம் ஒன்றையும் சேர்த்துக்கொண்டு. குருதியில் நனைந்த செண்பகம். நிணம் மணக்கும் நிசாகந்தி. இதோ, ஊன் மணக்கும் அசோகம். சீழ்மணக்கும் பாரிஜாதம்.

நிழலசைவென ஓசையின்றி தோன்றி அவன் முன் நின்றவனை உடனே அவன் அடையாளம் கண்டுகொண்டான். அவன் தன் கதாயுதத்தால் தாக்குவதற்கு முன்னதாகவே தன் கதாயுதத்தை தலைக்குமேல் தூக்கிவிட்டான். அறைபடும் உலோகத்தின் உறுமலெழுந்ததும் களிவெறி அவனில் ஊறியது. புதைந்து மறைந்திருந்தவை அனைத்தும் முளைத்து பெருகியெழுந்தன. உரக்க நகைத்துக்கொண்டும் உறுமிக்கொண்டும் அவன் அந்தப் பேருருவனுடன் போரிட்டான்.

அவனை நுணுகி நோக்கமுடியவில்லை. நிழலென புகையென கரைந்து உருக்கொண்டு கரைந்துகொண்டிருந்தான். அவன் கதை மட்டும் வானிலிருந்து பாறை உதிர்வதுபோல அவனைத் தாக்கியது. அடிபட்டு வலிமுனகலுடன் பீமன் பின்னால் விழுந்தான். மீண்டும் மீண்டும் வந்து விழுந்த அடிகளை உடலைப்புரட்டி மண்ணில் விழச்செய்து தாவி எழுந்து திரும்ப அறைந்தான். மீண்டும் ஓர் அடி விழ அலறியபடி மண்ணில் விழுந்தான். முகமெங்கும் சேறு அப்பியிருக்க அக்கணமே புரண்டமையால் அடுத்த அடிக்கு தலை சிதறாமல் தப்பினான்.

எழுந்து கால்பரப்பி நின்று கதைசுழற்றி அருகணைபவனை நோக்கினான். ஒவ்வொரு அசைவும் முன்பே அறிந்ததாக இருந்தது. அவன் கதைச் சுழற்சியைத் தடுக்க தலையைத் திருப்பியபோது பாரிஜாதத்தின் மணத்தை அகம் உணர்ந்தது. அப்போது ஒன்றை அறிந்தான், ஒரு நறுமணத்தை உள்ளம் அமைதியாகவே உள்வாங்கிக்கொள்ளமுடியும். அதை முகர்ந்தபடி கதையைச் சுழற்றியபோது அவனுடைய காலம் விரிந்து விரிந்து கணங்கள் ஒவ்வொன்றும் பலமடங்கு அகலம் கொண்டன. அவன் தலையை நோக்கி வந்த கதையின் ஒவ்வொரு சுழற்சியையும் துளித்துளியெனக் கண்டான்.

தன் தலையை விலக்கிக்கொண்டு கதையால் அவன் தோளை அடித்தான். அடிபட்டு அவன் விலகித்தெறிக்க அவன் தொடையை அறைந்து பிளக்கவைத்தான். தரையில் கிடந்து துடித்து கொந்தளித்த உடலை தாவிக்கடந்து எதிரே வந்தவனை சந்தித்தான். அதே பேருடல். ஆனால் அந்த விரைவுக்கு மாற்றாக வெறிகொண்டிருந்தான். எழுந்த மந்தாரத்தில் மயங்கி நிலைத்த உள்ளத்துடன் அவன் நெஞ்சை அறைந்து பிளந்தான். அவன் நிழல்பெருகியதுபோல குரோதவசர்கள் வந்தபடியே இருந்தனர். அவன் உள்ளம் அசோகத்தின் மணமாக அசைவற்றிருந்தது.

விழுந்தவர்கள் கருநிழல்களென மண்ணில் பதிந்து கிடக்க எதிரே வந்து நின்றிருந்தவனைக் கண்டு அவன் அகம் கொந்தளித்தது. “இளையோனே…” என அவன் கை நீட்டினான். “மூத்தவரே, தாங்கள்…” என பீமன் திகைப்பதற்குள் அடி விழுந்தது. அவனுடைய பயின்ற தலை தன்னை ஒழிந்தமையால் தோளில் பட்டது அது. விழுந்து எழுந்ததும் மாமலர் மணத்தை மீண்டும் அடைந்தான். அதுவே இவையனைத்தும். அது அளிக்கும் மாயம் இது. அதுவன்றி பிறவற்றில் அமையலாகாது என் உள்ளம். அவன் எழுந்து தாவிச்சென்று அவன் தலையை அறைந்து உடைத்தான்.

தொடர்ந்து எழுந்தனர் மூவர். அவர்களை வென்றுகடந்ததும் வந்தவனைக் கண்டு மீண்டும் அவன் நிலையழிந்தான். வஞ்சம் பெருகி எழ கதைசுழற்றிச் சென்று ஓங்கி அறைந்தான். அறைகளை தன் கதையால் எளிதில் தடுத்து அவனை வீழ்த்தினான். ஒவ்வொரு அறையும் அவன் தசைகளை உடையச்செய்தது. தொடையிலும் இடக்கையிலும் எலும்புகள் முறிந்தன. அவன் மூக்கிலும் வாயிலும் குருதி பெருகியது. கையால் அதை வழித்து வீசியபடி எழுந்தான். பிடரித்துலா நிலையழிய தடுமாறி பக்கவாட்டில் விழுந்தான். அவன் விலாவில் விழுந்தது அடி.

உருண்டு எழுந்து நின்றபோது அறிந்தான் அவன் அந்த மலர்மணத்தில் விழி சொக்கியிருந்தான் என்று. நிலை, நிலைகொள் உள்ளமே, நிலைநிறுத்துக மூக்கே, நுனியில் குவிக என் விழைவே. அது நீலம். இனியது, ஆட்கொள்வது. பீமன் வேறெங்கோ இருந்தான். இது கனவு. கனவில் எவரும் இறப்பதில்லை. உதடுகளில் புன்னகையுடன் அவன் தன் கதையை வீசினான். மீண்டும் மீண்டும் கதையால் அறைந்தபடி முன்னேறினான். உன்னுடையது பாரிஜாதம். அறிவேன் அது பாரிஜாதம். இரு மலர்களின் போர் இது. தன் அடி அவன் தலைமேல் விழுவதை பீமன் கையின் பின்னடியால் உணர்ந்தான். குருதி சிதறி அவன் கைகளையும் தோளையும் வெம்மையாகத் தழுவி வழிந்தது. வாயில் உப்புகரித்தது. அவன் தலைசிதறி பேருடல் விரிந்து நிலத்தில் கிடந்தான். நெடுங்கைகள், பெருந்தொடைகள், விரிந்த நெஞ்சு.

துயருடன் மூச்செறிந்து அவன் ஏறிட்டபோது எதிரே ஆடிப்பாவை என வந்தவனைக் கண்டான். மறு எண்ணமில்லாமல் பாய்ந்து அவன் நெஞ்சை அறைந்து வீழ்த்தினான். அவன் உடல்மேல் கால்வைத்து தலையை அடித்து சிதைத்தெறிந்தான். துடித்துத் துடித்தழியும் அவ்வுடலின் அதிர்வை தன் கால்களால் அறிந்தபடி நின்றான். அவன் உடல் அணைந்துகொண்டிருந்தது. கைகளிலும் கால்களிலும் இருந்து உயிர் வழிந்தோடுவதைப்போல் உணர்ந்தான். மீண்டும் ஓர் அடி எடுத்து வைத்தபோது கால்கள் வாழைத்தண்டுகள் போல் குளிர்ந்திருப்பதைக் கண்டான். மறுகாலை எடுப்பதற்குள் நிலையழிந்து மண்ணில் விழுந்தான்.

அவன் விழித்துக்கொண்டபோது உச்சிவெயில் ஏறியிருந்தது. எழுந்து தன் கதையை எடுத்தான். அதில் குருதியேதும் இருக்கவில்லை என்று உணர்ந்து தன் உடலை நோக்கினான். புண்களும் சிதைவுகளும் இல்லை என்று கண்டபின் திரும்பியபோது சடலங்களும் இல்லை என்று கண்டான். நீள்மூச்சுடன் கதையைத் தூக்கியபடி நடந்து வாழைச்செறிவுக்குள் நுழைந்தான். அங்கிருந்த வாழைகள் அனைத்தும் மிகப் பெரியவை. குளிர்ந்த வெண்ணிற அடித்தூர்கள் அவனால் கைசுற்றிப் பிடிக்கமுடியாத பருமன் கொண்டிருந்தன. காய்ந்த இலைகள் சடைகளெனத் தொங்கி காற்றில் ஓசையிட்டன. கிழிபட்ட இலைகள் தோரணங்கள்போல துடித்தன. புறாக்கூட்டம் காற்றிலேறும் ஒலி என அது கேட்டுக்கொண்டே இருந்தது.

உள்ளே செல்லுந்தோறும் இருட்டாக பசுமை அவனை மூடிக்கொண்டது. முழங்கால் புதையும் அச்சதுப்பு யானைச்செவி அசையும் காட்டுச்சேம்பும் உள்ளங்கைகள் விரித்த கூவையும் நீலமலர்க் கூவளமும் செறிந்து சிறுபூச்சிகளும் பச்சைத்தவளைகளும் காலடியசைவில் அஞ்சித் தெறிக்க சேற்றாவியின் வெம்மைமணத்துடன் அவனைச் சூழ்ந்தது. எடுத்த கால்குழிகள் வாய் என திறந்தன. அவற்றில் மண்புழுக்கள் நரம்புகளாக நெளிந்தன. சேற்றுநீர் ஊறி அக்குழிகள் விழிகளென்றாயின. இளஞ்செம்மை வரிபடர்ந்த வாழைகளின் தளிர்க்குழாய்களில் ஒளி தேங்கியிருந்தது. அன்னையருகே சிற்றிலை விரித்து நின்ற குழவிவாழைகள் செவியாட்டின.

அவனை இட்டுவந்த மணம் உருமாறி ஆழ்ந்த கெடுமணமாகியது. சேற்றுக்கெடுமணம். மட்கும் இலைகளின் கெடுமணம். நீர்ப்பாசியின் வழுக்கல் கெடுமணம். அனைத்தையும் தொடாமல் ஊடுருவி நெளிந்தது அந்தக் கூரிய கெடுமணம். ஊன்மணமா, தேங்கிய பால்மணமா? அவன் அந்தச் சிற்றாலயத்தை பார்த்துவிட்டான். அவன் இடையளவுக்கே உயரமிருந்தது. முன்பு அவன் கண்ட நான்கு ஆலயங்களின் அதே வடிவம். அதேபோல நீர்ப்பாசி படர்ந்த பச்சைக்கருமை. அதனருகே கிளைதாழ்த்தி மலர்செறிந்து நின்ற மரத்தையும் கண்டான்.

அருகணையும்தோறும் அந்த மரமே அவனை ஈர்த்தது. வேறெதையும் அறியாதவனாக அதன் கீழே சென்று நின்றான். தரையில் மலர்களேதும் உதிர்ந்திருக்கவில்லை. ஆனால் கிளைகள் முழுக்க மலர்கள் அடர்ந்திருந்தன. வழக்கமாக கிளைநுனிகளில் செண்டுகளென பூக்கும் மலர்களைப்போலன்றி கிளைகளின் கணுக்களில் கொத்துகளாகச் செறிந்திருந்தன அந்த மலர்கள். பூவரசம்பூ போல இளமஞ்சள் நிறமானவை. ஆனால் முட்தோல் உதிர எஞ்சிய பலாச்சுளைகள்போல தோன்றின. சிறு மஞ்சள் குருவிகள் சிறகுகள் கூட்டி மொய்த்து தேனருந்துவதுபோல.

மூக்கை நிறைத்து சித்தத்தை செயலிழக்கச் செய்த அந்த மணத்தால் அவன் இயக்கப்பட்டான். அந்த மரத்தின் உடல் வாழைபோலவே நீருண்டு மென்மை கொண்டிருந்தது. அவன் எடையை அது தாளாமல் மெல்ல தழைந்தது. மெல்ல மெல்ல நகர்ந்து அவன் முதல் கணுவிலிருந்த கொத்தில் ஒரு மலரை தொட்டான். அக்கிளை முறிந்து சரிய நிலையழிந்து கீழே விழுந்தான். சேறு அவனை கைவிரித்து பற்றிக்கொண்டது. எழுந்து நின்றபோது அவன் கையில் ஒரு மலர் இருந்தது. அதன் உடைந்த காம்பில் இருந்து முலைக்கண்ணிலிருந்து என நான்கு சிறு வெண்நூல்களாக பால் பீரிட்டது.

அவன் அதை மூக்கருகே கொண்டுவந்தான். வாயூறச் செய்யும் மணம். சித்தம் பேதலிக்கச்செய்வது. உடல்தளர்ந்து அங்கேயே படுத்துவிடவேண்டுமென எண்ணவைப்பது. விழிகளைக் கொட்டி தன்னை நிலைப்படுத்தி திரும்பி நோக்கியபோது அந்தச் சிற்றாலயத்திற்குள் நின்றிருந்த சிறுசிலையின் விழிகளை சந்தித்தான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 93

93. முதல்மணம்

திசை தெளிவானதுமே பீமன் இயல்பாக நடக்கத் தொடங்கினான். எச்சரிக்கையில் கூரடைந்த புலன்கள் தளர்வுற்றதும் பசி தெரியலாயிற்று. பசி உணவுக்கான புலன்களை எழுப்பியது. மூக்கும் விழிகளும் தேடல்கொள்ள சற்று தொலைவிலேயே அவன் கனிமரங்களை கண்டான். மரங்களுக்கு நடுவே வாழைமரத்தொகைகள் யானைக்கூட்டங்களின் கால்கள்போல நின்றிருக்க உள்ளே குட்டிகள் என சிறு கன்றுகள் செவியாட்டின. பெரிய காய்களுடன் வாழைக்குலைகள் மத்தகத்திலிருந்து துதிக்கை என வளைந்து நின்றன. அவன் வாழைகளை உதைத்துச் சரித்து கனிகளை உரித்துத் தின்றான். உண்ணும்தோறும் பசிபெருக மேலும் மேலும் வாழைகளை சரித்தான்.

பின்னர் எழுந்து நீர் எங்கு கிடைக்கும் என சுற்றும் நோக்கினான். நீரோசை கேட்டு நடந்துசென்று வாழைக்கூட்டங்களுக்கு அப்பால் ஓடிய சிறிய ஓடையை கண்டடைந்தான். அதை நோக்கி நடக்கையில் ஏன் தனக்கு மதுநினைவு எழுகிறது என எண்ணியபின்னரே தன் வயிற்றிலிருந்து எழுந்த பழங்களின் மணத்தால் என உணர்ந்தான். உண்ட பழங்கள் தன்னுள் மதுவாகின்றன என எண்ணியதும் புன்னகை எழுந்தது. அவற்றை உள்ளுறைந்த வெப்பம் நொதிக்கச்செய்கிறது. மதுவை சமைத்து அதை உண்டு களிகொள்கிறது உடல்.

குனிந்து நீரை அள்ளி அருந்தியபோது உண்மையாகவே அவன் புதியமதுவின் நறுமணத்தை உணர்ந்தான். அவன் நா சுரந்து கடைவாய் வழியாக வழிந்தும் விட்டது. எழுந்து நின்று மூக்கைத்தூக்கி நான்குபக்கமும் காற்றை ஏற்று கூர்ந்தபோது அந்த மணம் வரும் திசையை அடையாளம் கண்டான். அங்கே எவரேனும் இருக்கக்கூடும் என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே கால்களை மிகமெல்ல எடுத்துவைத்து பாறைகள் மேல் மட்டும் மிதித்து கிளைகள் அசையாமல் நடந்து சென்றான். ஆனால் ஓசைகள் ஏதும் எழவில்லை. மணம் மட்டும் மிகுந்தபடியே வந்தது.

அங்கே யானைக்கூட்டம் ஒன்று உடலொட்டிப் படுத்திருப்பதுபோல பாறைத்தொகை ஒன்றிருந்தது. மதுவின் மணம் அதன்மேல்தான் எழுகிறது என உணர்ந்தபின் அவன் மேலே தொற்றி ஏறினான். பாறைமேல் ஏறியபோது அங்கே உருட்டி கொண்டுசென்று வைத்ததுபோல முட்டைவடிவமான பெரிய பாறை ஒன்று மற்றபாறைகள் மேல் அமைந்திருக்கக் கண்டான். அதன் மேலிருந்தே மதுவின் மணம் எழுகிறது என அறிந்தான். அதை சுற்றிவந்து நோக்கியபோது எவராலும் ஏறமுடியாதபடி அது மிகச்செங்குத்தாக இருப்பது தெரிந்தது. அதன் வளைந்த பரப்பு நீர்வழிந்த தடங்களுடன் மென்மையாக இருந்தது.

அவன் அதை சுற்றி வந்தான். மேலே பாறையின் விளிம்பில் ஒரு சிறிய வெடிப்பு இருப்பதைக் கண்டதும் ஓர் எண்ணம் தோன்றி கீழே சென்று காட்டுக்கொடிகளைப் பறித்து இணைத்துக்கட்டி வடம் ஒன்றை செய்தான். நீண்ட கல் ஒன்றை அதன் முனையில் கட்டி எடுத்துக்கொண்டு மேலே வந்து அதை அந்த வெடிப்பை நோக்கி வீசினான். அது நான்கு ஆள் உயரத்திலிருந்தமையால் பன்னிரண்டுமுறை வீசியபின்னரே அந்த வெடிப்பில் அமர்ந்தது. இழுத்து நோக்கியபோது கல் வெடிப்பினுள் நன்றாக இறுகிக்கொண்டதை உணரமுடிந்தது. வடத்தின் வழியாகத் தொற்றி மேலேறத் தொடங்கினான்.

பாறைவிளிம்பில் தொற்றி மேலேறி அமர்ந்து நோக்கினான். இயற்கையாக உருவான நீள்வட்டக்குழி ஒன்று அங்கே இருந்தது. அதற்குள் கலங்கலாக அழுகிய வாழைப்பழங்கள் நொதித்துக்கொண்டிருந்தன. அவற்றின் கெடுமணம் குமட்டி உடலை உலுக்கியது. அவன் அப்பாறையை அணுகிக்கொண்டிருக்கையிலேயே மதுவின் இன்மணம் வலுத்து செறிந்து கெடுமணமாக ஆகிக்கொண்டிருந்தது. அருகே குனிந்தபோது அழுகிய சடலமென அதன் கெடுமணம் குடல்களைப் புரட்டியது. கண்களை மூடி அந்தக் கெடுமணத்தை தன் உடலெங்கும் நிறைத்தான். அறிந்த கெடுமணங்கள் அனைத்தும் அதனுடன் தொடர்புகொண்டிருந்தன. நறுமணங்கள் மென்மையாகவும் கெடுமணங்கள் வன்மையாகவும் இருப்பது ஏன்? வன்மையாகும் அனைத்தும் கெடுமணங்களாக ஆகிவிடுமா என்ன? கெடுமணங்களெல்லாம் வாயூறவைப்பது என்ன விந்தை?

ஒரு கணத்தில் தன்னை கிழித்துப் பிரித்து முன்னால் உடலை உந்திக்குனிந்து அதன் மேல்பரப்பில் கனிந்து நின்றிருந்த கொழுங்கதுப்பை கைகளால் அள்ளிக் குடித்தான். வாய் குமட்ட உடல் உலுக்கியது. ஒருகணம் உதடுகளை இறுக மூடி அந்தத் தைலம் உடலுக்குள் நிலைக்க விட்டான். அதை உள்ளே எழுந்த வாய்கள் வாங்கிக்கொண்டன. அடுத்த கை அள்ளி குடித்தபோது எளிதாக இருந்தது. பின்னர் நிறுத்தமுடியவில்லை. மீண்டும் மீண்டும் குடித்துக்கொண்டிருந்தான். அது உள்ளே உருகி அனலாகி குருதிப்பாதைகளில் ஊறிப்படர்ந்து கைவிரல் நுனிகளையும் காதுவிளிம்புகளையும் மூக்குமுனையையும் சென்றடைந்தது. கண்களில் வெம்மையாகப் பரவியது.

தசைகள் களிமண்பாவை நீரில் ஊறுவதுபோல தளரத் தொடங்கின. நாக்கு இரையுண்ட பாம்பென தடித்துத் தளர்ந்தது. தன் விரல்கள் ஒவ்வொன்றும் விடுபட்டு விலகுவதை உணர்ந்தான். அங்கிருந்து இறங்கமுயல்வது வீண்முயற்சி எனத் தோன்றியது. அக்குழியில் இருந்து கைகளை ஊன்றி உடலைப் பெயர்த்தெடுத்து விலக்கி மல்லாந்து படுத்துக்கொண்டான். கைகளையும் கால்களையும் விரித்து வானை நோக்கினான். வானை நோக்கி நெடுங்காலமாயிற்று என்று தோன்றியது. கண்கள் கலங்கி வழிந்துகொண்டே இருந்தன.

tigerஅவன் துயின்றுவிட்டிருந்தான் என கனவுகள் கிளம்பியபோதுதான் அறிந்தான். அவனைச்சூழ்ந்து நால்வர் அமர்ந்திருந்தார்கள். அந்திச்சாயொளியில் நால்வரின் நிழல்களும் பின்பக்கம் நீண்டு விழுந்திருந்தன. அல்லது புலரியா? பறவையொலிகள் எழவில்லை. நெடுந்தொலைவுக்கு அப்பால் ஏதோ அருவி ஒன்று பொழிந்துகொண்டிருந்தது. மலையுச்சியில் இருந்து நேராக அடியிலி நோக்கி. அதன் ஓசை சூழ்ந்திருந்த இலைகளில் இருந்து மட்டும் எழுந்தது. அவர்கள் ஒன்றும் பேசாமல் விழிகள் சூழ அமர்ந்திருந்தனர். அவன் இறந்துவிட்டிருந்தான் என எண்ணினார்களா? நான்கு நிழல்களும் மெல்ல எழுந்தாடிக்கொண்டிருந்தன. அவர்களின் உருவங்களிலிருந்து பிரிந்து வானில் பறக்க விழைபவை போல. அல்லது அவர்களையும் கவ்விக்கொண்டு எழமுனைபவை போல.

அவன் எழுந்தமர்ந்தான். எதிரே அமர்ந்திருந்தவளின் விழிகளை நோக்கி “நீ யார் என அறிவேன்” என்றான். “ஆம், நானும் உன்னை பார்த்திருக்கிறேன். நீங்கள் ஒருவர் பிறரென நடிப்பவர்கள். எனவே ஒருவர் விழியில் பிறர் தோன்றுவதுண்டு” என்றாள் அவள். “கலைமகள் என நின்று சொல்லாடுவாய். மழலையென விலகி அதையே களியாடுவாய். அறிந்தவள் என்றும் பேதையென்றும் இருமுகம் காட்டி நிழலாடுவாய்” என்றான் பீமன். அவள் சிரித்து “ஆம், காமத்தில் ஆடலெல்லாம் எதிராடலே” என்றாள். “சொல்விழையும்போது பேதமையையும் பேதமையை நாடுகையில் சொல்கூரையும் காட்டி நீ அலைக்கழிப்பதன் வலியையும் நான் அறிவேன்” என்றான் பீமன். அவள் சிரிக்க அவளுக்குமேல் எழுந்த நிழல் “அது என் களம்” என்றது.

அருகிருந்தவள் அவனிடம் “நான் உன்னுடனும் களமாடியுள்ளேன்” என்றாள். “நீ விழைந்தது கூர். வஞ்சமொன்றே கூரின் கூர் என்பதனால் நான் நஞ்சுகொண்டேன்.” பீமன் “ஆம், நஞ்சனைத்தும் மதுவே” என்றான். “கூர்முனைகளில் அனல் வாழ்கிறது. மின்னல் வானின் கூர்” என்றாள் அவள். “உன்னை ஒழியாது பற்றிக்கொள்ள உன்னில் அழியா வெறுப்பொன்றை நட்டுவைப்பதே மேல் என அறிந்தேன்.” பீமன் “ஆம், நான் கட்டுவிரியன் தீண்ட தப்பியோடும் சிற்றெலி” என்றான்.

அவள் விழிகள் ஒளிர புன்னகை சூடி “உன் ஆணவத்துடன் ஆடினேன். உனக்கு அப்பால் ஒருவன் இருக்கிறான் என ஒவ்வொரு சொல்லிடையாலும் விழியசைவாலும் காட்டிக்கொண்டே இருந்தேன்” என்றாள். பீமன் தவிப்புடன் “போதும்” என்றான். அவள் நிழல் “நான் அவனுடன் ஆடுபவள். உன் மஞ்சத்திற்குமேல் எழுந்து நின்று வெறியாடுவேன்” என்றது. பீமன் தன்னை உலுக்கிக்கொண்டு அக்கனவிலிருந்து எழ முயன்றான். “உன்னுள் புகுந்தும் அவன் ஆடினான் என்பதை அறிவாயா?” பீமன் உறுமியபடி எழுந்தான்.

அவன் மார்பில் கையை வைத்து அழுத்தி படுக்கவைத்த மூன்றாமவள் இளமைநகைப்புடன் “நான் வெறும் சிறுமி. முதுவேனிலின் முதல்தளிர் என மழலை சூடியவள்” என்றாள். “ஆம், நீ என் களித்தோழி. நான் கழற்றவிழைந்த அனைத்தையும் சூடாதவள்” என்றான் பீமன். “மென்மை என்பதனால் ஒளிகொண்டது. நிலையற்றதென்பதனால் கை படாதது. எளியவைபோல் அலைக்கழிப்பவை பிறிதெவை?” அவள் நகைத்து சற்றே நாண அவளுக்குமேல் எழுந்த நிழல் வற்றி ஒடுங்கிய முதுமகள் போலிருந்தது. முறியும் கிளையின் ஒலி என வலியும் துயருமாக மெல்ல முனகியது.

நான்காவது பெண் அவனை நோக்கி புன்னகைத்து “நான் அன்னை” என்றாள். “அமுதுமணத்துடன் அணைத்துக்கொள்பவள்.” பீமன் “ஆம், உன் கைகளில் நான் உறங்கியிருக்கிறேன்” என்றான். “என்றுமிருந்தன என் விழிகள் உன்னோடு. நான் உன்னை ஒருபோதும் விலக்கியதில்லை” என்றாள். அவள்மேல் எழுந்த நிழல் எட்டுபெருங்கைகள் விரிய வாயில் கடித்த சிறுமகவுடன் கொலைக்காளி என நின்றாடி பின் அடங்கி கிளைவிரித்த தாய்மரம் போலாகியது.

அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். தொலைவில் நின்றிருந்த மரம் ஒன்றின் கிளைநிழல் அவனைச்சூழ்ந்து ஆடிக்கொண்டிருந்தது. நோக்குணர்வு பெற்று எழுந்தபோது தன்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்த பெரிய பெண்குரங்கை கண்டான். கையூன்றி எழுந்தான். “அஞ்சாதே” என்று அது சொன்னது. “நான் என் மைந்தருக்காக அமைத்த மதுக்களம் இது.” பீமன் வாயைத் துடைத்தபடி “ஆம், எனக்கு மிக உகந்த மது இதுவே என உணர்ந்தேன்” என்றான். “நீயும் மரமானுடரில் ஒருவனே” என்றது அன்னைக்குரங்கு. “உன் வியர்வையில் உன் அன்னையின் முலைப்பாலின் மணம் உள்ளது.”

“ஆம், நான் என்றும் என்னை அவ்வாறே உணர்ந்திருக்கிறேன்” என்றான் பீமன். “அன்னை என நான் உணர்வது அந்த முலைப்பாலையே என அறிவது கனவுகளில்தான்.” அன்னைக்குரங்கு அவனருகே வந்து எழுந்து அவன் தலைமுடியைப் பற்றி குனித்து குழல்கற்றைகளைப் பிரித்து கைகளால் அளாவியது. காதுகளைப்பற்றி மேலே தூக்கி அவன் கண்களை நோக்கி “நீ மிகப்பெரியவன்” என்றது. “ஆம் அன்னையே, ஆகவேதான் என்னால் என் குருதியினரைப்போல மரம்தாவ இயலவில்லை” என்றான் பீமன்.

அன்னை அவன் உடலை வருடிக்கொண்டே இருந்தாள். அவள் எழுந்துநின்றபோது மென்மயிர் படர்ந்த நெஞ்சில் முலைக்கண்கள் தெரிந்தன. “நான் முற்றிலும் உதறி வந்துவிடுகிறேன். எதுவும் எஞ்சாமல் இங்கே இருந்துகொள்கிறேன்” என்றான். “உன்னால் வேறு மொழி பேசமுடிகிறது. வேறு கனவுகளை நீ காண்கிறாய்” என்றாள் அன்னை. “ஆம்” என அவன் சொன்னான். “அவற்றை உதறமுடியாது. அவை உதிரவேண்டும்.” பீமன் “அது நிகழுமா?” என்றான். “நிகழக்கூடும்” என்றாள். பீமன் “வாழ்த்துக, அன்னையே!” என்றான்.

“உனக்கும் அமைக!” என்றாள் அன்னை. “உன் மூத்தவனுக்கு நிகழ்ந்துள்ளது. அவன் ராகவ ராமனுக்காக கடல்தாவினான். அவன் அரியணை தாங்கி அமர்ந்தான். தன் கடன் முடிந்ததும் திரும்பி தன் உலகுக்கு வந்தான். நேற்றின்றி இருந்தான். காற்றென காடுலாவ அவனால் இயன்றது.” பீமன் பெருமூச்சுவிட்டான். காட்டுக்குள் குரங்கு ஒன்றின் ஓசை கேட்டது. இருகுட்டிகள் கிளைகளில் ஆடி ஒற்றைக்கையில் தொங்கி வால் முறுகி வளைய அன்னையை நோக்கி அழைத்தன.

அன்னை தாவி எழுந்து செங்குத்தான பாறையை வெறுங்கைகளால் பற்றி நீர்த்துளியென இறங்கிச்சென்று தாவி அவர்களுடன் சேர்ந்துகொண்டது. அவை கிளைகளுக்குள் மறைந்தன. பீமன் அப்போது அந்த மணத்தை உணர்ந்தான். கல்யாணசௌகந்திகத்தின் மணம். அவள் முலைப்பாலின் மணமா அது? பாய்ந்து எழுந்து “அன்னையே!” என்று கூவி அழைத்தான். ஓடிச்சென்று தன் வடத்தை பற்றிக்கொண்டு கீழிறங்கி பாறையிலிருந்து காட்டுக்குள் தாவி கிளைகளையும் புதர்களையும் ஊடுருவி ஓடினான். “அன்னையே… அன்னையே…” என்று கூவினான். கிளைகளில் அக்குரங்குகள் சென்ற பாதை அசைவென தெரிந்தது. செல்லும்தோறும் குரங்குகள் பெருகின எனத் தோன்றியது.

tigerகாட்டை வகுந்துசென்ற யானைத்தடம் வழியாக மூக்குணர்வாலேயே வழிகாட்டப்பட்டு அவன் சென்றான். மேலும் நுண்மையும் கூர்மையும் கொண்டு அணுக்கத்திலிருந்தது அந்த மணம். இதோ, அருகே என அதுவே அவனை அழைத்துச்சென்றது. செல்லும்தோறும் விரைவுகொண்டான். மேலும் மேலும் என்று உள்ளம் தூண்டியது. கால்களில் பட்டு கூழாங்கற்கள் தெறித்தன. தொலைவிலேயே வழியில் ஒரு பட்டமரக்கிளை குறுக்கே விழுந்துகிடப்பதை கண்டான். அருகணைந்தபோதுதான் அது ஒரு குரங்கு எனத்தெரிந்தது.

மரத்திலிருந்து விழுந்திருக்கவேண்டும். முதுமை எய்தி உடம்பெங்கும் முடி உதிர்ந்து பொருக்கும் குருதியும் சீழுமாக புண்கள் செறிந்து அரைக்கண் மூடி ஒருக்களித்துக் கிடந்தது. அதனருகே சென்றபோதுதான் அது மானுடன் அளவுக்கே பெரியதென்று தெரிந்தது. நீட்டிய கைகளில் ஒன்று பாதையின் ஒருமுனையைத் தொட வால்முனை இன்னொரு முனையை எட்டியிருந்தது. கால்தூக்கி கடந்து சென்றுவிடலாமென்று எண்ணியதுமே எரிச்சல் எழ காலால் தரையை மிதித்து அதிர்வெழுப்பினான். அதன் தாழ்ந்த இமைகள் விரிசலிட்டன. மயக்கம் நிறைந்த விழிகளுடன் கரிய சிறுபல்நிரை காட்டி மெல்ல உறுமியது. “எழுந்து விலகும், முதியவரே” என்றான் பீமன். “இது யானைப்பாதை. மிதிபட்டு கூழாகிவிடுவீர்.”

“எழமுடிந்தால் நான் இங்கு கிடப்பேனா என்ன?” என்றது குரங்கு. “கிளையிலிருந்து பிடிதவறி நான்குநாட்களாகின்றன. உணவும்நீருமின்றி உயிர்பிரியக் காத்திருக்கிறேன். எனக்கென்றே நீ வந்திருக்கக் கூடும். என்னை இழுத்து அப்பாலிடு.” பீமன் அதன் உடலில் இருந்த புண்களைப்பார்த்தபின் சுற்றுமுற்றும் நோக்கி அப்பால் கிடந்த மரத்தடி ஒன்றை எடுத்துவந்தான். குரங்கு பற்கள் விரிய உறுமி பிடரி சிலிர்த்தது. அவன் முதலில் இடக்கையில் இருந்த தடியால் அதை மெல்ல அசைத்தான். அதில் சிறிய அசைவுகூட ஏற்படவில்லை என்று கண்டதும் அழுத்தி உந்தினான். பாறை என்று தோள்கள் உணர்ந்தன.

அவ்விந்தையை முழுதுணராமல் அச்செயலின் ஒழுக்கால் இழுக்கப்பட்டவனாக இருகைகளாலும் முழுவிசையையும் செலுத்தி அதை தள்ளினான். தடி முறிந்து நிலைதடுமாறி விழப்போய் காலூன்றி நின்றான். அதன்பின்னர்தான் அதன் விந்தை அவனை முழுமையாக வந்தடைந்தது. “யார் நீ?” என்றான். “குரங்கு…” என்றது அது. “என்னை மாருதன் என்பார்கள். என் உடலின் எடையே எனக்கும் பெருந்துயராக உள்ளது. சரி என் வாலையாவது விலக்கு. யானைகள் அவ்வழியாக செல்லட்டும்.” பீமன் தயங்கி நின்றான். “எடுத்து அகற்றுக, இளையோனே! நீ மாமல்லன் அல்லவா?”

அதிலிருந்த இளிவரலால் சீண்டப்பட்டு அவன் அருகே சென்று குனிந்து அந்த வாலை இருகைகளாலும் பற்றி பெருமரத்தடி என எண்ணி விசைசெலுத்தி தூக்க முயன்றான். மெல்ல அசைந்து மேலெழுந்தபின் திரும்ப அழுந்தி அவன் கையை நிலத்துடன் பிடித்துக்கொண்டது. அவன் நிலத்தில் காலை ஊன்றி முழு ஆற்றலுடன் இழுத்தான். தசைகள் இழுபட்டுத் தெறிக்க பற்கள் உரசி அனலெழ இழுத்து விடுபட்டு ஓசையுடன் மண்ணில் மல்லாந்து விழுந்தான். கையூன்றி புரண்டு எழுந்து “யார் நீ? சொல்! யார் நீ? கந்தர்வனா? பாதாள மாநாகமா?” என்று கூவினான்.

“ஏன், இளையபாண்டவனை மானுடர் வெல்லமுடியாதோ? எளிய விலங்கால் இயலாதோ?” என்றது குரங்கு. “என்னை நீ அறிந்திருக்கிறாய்” என்றான் பீமன். “நான் காற்றுபோல அலைந்தவன்… உன்னை இளவயதிலேயே கண்டிருக்கிறேன். நீ கூடு உடைத்து வெளிவந்த புழு போன்ற சிற்றுடலுடன் பாலுக்கழுதபடி நிலத்தில் கிடந்து நெளிந்தபோதே…” பீமன் “நீ யார்?” என்றான். “சரி, என் முடியில் ஒன்றை மட்டும் பிழுதெடு… நீ வென்றாய் என ஒப்புகிறேன்.” பீமன் வெறிக்கூச்சலுடன் பாய்ந்து சென்று அக்குரங்கை உதைக்கத் தொடங்கினான். பாறையிலென விழுந்து அவன் கால் தெறித்தது. வலியுடன் ஊன்றி மூச்சிரைத்து நின்றான்.

குரங்கின் கண்களில் மெல்லிய சிரிப்பு மின்னியது. அது துள்ளி எழுந்து நின்று நெஞ்சில் இருகைகளாலும் மாறிமாறி நெஞ்சில் அறைந்துகொண்டு நீண்ட ஒலியொன்றை எழுப்பியது. பற்களனைத்தும் தெரிய இளித்தபடி இரு கைகளையும் விரித்தது. அதன் முகம் சிவந்திருக்க கன்னமயிர்க்கற்றைகள் சிலிர்த்து நீண்டிருந்தன. “நீ அஞ்சி திரும்பி ஓடுவாய் என்றால் உன்னை துரத்திவரும் இன்பத்தை அடைவேன்” என்றது. “நான் இதுவரை அஞ்சியதில்லை” என்றான் பீமன். “இறப்புக்கு அஞ்சாமலிருக்கலாம். இழிவுக்கு?” என்றபின் இருகைகளாலும் விலாவைச் சொறிந்தபடி இளித்துக்கொண்டு எம்பி எம்பி குதித்தது குரங்கு.

பிளிறலோசையுடன் பீமன் பாய்ந்து சென்று அதை ஓங்கி அறைந்தான். அடி அதன்மேல் பட்டபோது அவன் கை தெறித்தது. மரப்பட்டை போலிருந்தது அதன் உடல். ஊளையிட்டபடி அது குதித்து அவனை அறைந்தது. அவன் யானையால் முட்டப்பட்டதுபோல தெறித்துவிழுந்தான். பாய்ந்து வந்து அவன்மேல் கவிந்து அவன் உருண்டு தப்ப முயல்வதற்குள் தூக்கி வீசியது. விழுந்த இடத்திலிருந்து அவன் எழுவதற்குள் மீண்டும் தூக்கி வீசியது. சிறுபூனைக்குட்டியை என அவனைத் தூக்கி வீசியும் காலால் தட்டிச் சுழற்றியும் விளையாடியது. அவன் கைகளைப்பற்றியபடி மரங்கள் மேல் தாவி ஏறி பாய்ந்து சென்றது. அவனை தூக்கி வீசிவிட்டு அவன் அசைவதற்காக குந்தி காத்திருந்தது. அவன் மெல்ல எழமுயன்றதும் ஓடிவந்து மீண்டும் எடுத்துக்கொண்டது.

உடலெங்கும் சிராய்ப்புகளுடன் பீமன் கைகளை விரித்து மல்லாந்து படுத்தான். கண்களை மூடிக்கொண்டு தன் உள்ளத்தை அடக்கி உள்ளுக்குள் உள்ளுக்குள் என மடித்து சுருட்டிக்கொண்டான். குரங்கு அவனை அணுகி வருவதை அவன் கேட்டான். அதன் நிழல் அவன்மேல் கவிவதை இமைகள் அறிவித்தன. “கொல்… கொன்றுவிடுக என்னை!” என்றான். “மாமல்லரே…” என முண்டனின் குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டு விழிதிறந்தான். “என்ன சொல்கிறீர்?” அவன் எழுந்து அமர்ந்தான். “நீரா? நீர் எப்போது வந்தீர்?”

முண்டன் பெரிய பற்களைக்காட்டிச் சிரித்து இருகைகளாலும் விலாவை சொறிந்தான். ரீக் என்னும் ஒலியுடன் நின்ற இடத்திலேயே எழுந்து சுழன்று நின்றான். “நீர்தானா?” என்றான் பீமன். “நான் அப்போதே ஐயம்கொண்டிருந்தேன்.” முண்டன் அவன் அருகே குந்தி அமர்ந்து “ஆம் நானேதான்” என்றான். “உமது உளமயக்கா அவையனைத்தும்? நான் தோற்றது பருவுலகில் அல்லவா?” என்றான் பீமன். முண்டன் சிரித்து “நீ தோற்கவில்லை, இளையோனே” என்றான். பீமன் அந்த மாறிய குரலைக் கேட்டு திகைத்து அவன் விழிகளை நோக்கினான். ஒருகணத்தில் அவன் அனைத்தையும் கண்டுவிட்டான்.

tigerமலைப்பாறை ஒன்றின் மேல் இருவரும் அமர்ந்திருந்தார்கள். எரிந்தணைந்துகொண்டிருந்தது மாலைச்சூரியன். முண்டனின் முகம் அனல்கொண்டிருந்தது. அவனருகே அமர்ந்து திரும்பி நோக்கிய பீமன் உடல்கொள்ளா உளஎழுச்சிக்கு ஆளானான். “வாழ்வில் நான் இனியெதையும் அடையவேண்டியதில்லை, மூத்தவரே” என்றான். அவன் குரல் உடைந்து தழுதழுத்தது. “எத்தனை கதைகளில் கேட்டிருக்கிறேன்! எத்தனை கனவுகளில் விளையாடியிருக்கிறேன்!” கட்டுகள் கடந்து அவன் விம்மிவிட்டான். தன்னை இறுக்கி தலைகுனிந்து அதை அடக்கினான். விழிநீர் அவன் மடியில் சிந்தியது.

“என்னுடன் இருந்திருக்கிறீர்கள். வழிகாட்டியாக, ஆசிரியனாக, களித்தோழனாக. நான் உளம்நிறைந்து கால்தொட்டு வணங்கவில்லை இன்னும். அப்பேறை மட்டும் எனக்களியுங்கள்.” முண்டன் “நீ என்றும் எனக்கு இனியன்… எண்ணும்போதெல்லாம் உன்னருகே வந்து நோக்கியிருந்திருக்கிறேன். சிற்றுடல்கொண்டு உன்னுடன் விளையாடியிருக்கிறேன்” என்றான். “இது நீ உன்னை கண்டுகொள்ளும் பயணம். இங்கு நீ உன்னை தேர்ந்தெடுக்கிறாய். எஞ்சுவதென்ன என்று அறிகிறாய். எனவே உடனிருக்கவேண்டுமென்று முடிவெடுத்தேன்.”

பீமன் மெல்ல தலைதாழ்த்தினான். “உன் உடல் ஆண்மைகொண்டது. உள்ளம் எளிய காமத்தால் ஆனது, இளையோனே” என்றான் முண்டன். “நீ இதுவரை வென்றவை அனைத்தும் நீ கடக்கவேண்டியவையால் வெல்லப்பட்டவை. ஆகவேதான் உன்னை முற்றாகத் தோற்கடிக்க விழைந்தேன். உன்னைவிட நான் ஆற்றல்கொண்டவன் ஆவது நான் துறந்தவற்றால்தான். நீ உன்னைக் கடந்து அடையவேண்டிய ஆற்றல்களை சந்திக்கும் தருணத்தில் இருக்கிறாய்.”

தொலைவில் மலைச்சரிவில் ஏறிச்சென்ற யானைப்பாதையைக் காட்டி முண்டன் சொன்னான் “அது மேலிருக்கும் கதலிவனம் என்னும் காட்டை சென்றடைகிறது. தேன்வாழைகள் மண்டிய அக்குளிர்காட்டின் மையத்திலுள்ளது சிற்றாலயம் ஒன்று. அதன் வலப்பக்கத்தில் நின்றிருக்கிறது உனது கல்யாணசௌகந்திகம்.” பீமன் உளக்கிளர்ச்சியுடன் எழப்போவதுபோன்ற மெல்லிய அசைவொன்றை காட்டினான். “உன்முன் மூன்று வழிகள் உள்ளன. அதைச் சென்றடைந்து அங்கிருந்து திரும்பாமல் அந்தமலருடன் மேலும் செல்லலாம். நீ சென்றடைவதற்கு நீ எழுந்துவந்த வேர்நிலம் காத்திருக்கிறது” என்றான் முண்டன்.

“ஆனால் அது எளிதல்ல. மெய்மையும் பேரின்பமும் பலநூறு மயக்குகளால் சூழப்பட்டவை. நீ அறியா விசைகளால் அலைக்கழிக்கப்படலாம். அங்கே நீ திசையழிந்து சரியக்கூடும். இளையோன் என்பதனால் நீ அதை முற்றிலும் மறந்து இங்கிருந்தே திரும்பிவிடவேண்டும் என்றே சொல்வேன்” என்றான் முண்டன். பீமன் தலையசைத்தான். “மூன்றாவது வழியையே நீ எண்ணிவந்தாய். அந்த மலருடன் நீ திரும்பி இறங்கி வந்தால் இங்கு வந்தவழியை முழுக்க திரும்பக் கடப்பாய். ஒவ்வொரு காலடியிலும் அந்த மலர் தன் மெய்மணத்தை இழந்துகொண்டிருக்கும். நீ அங்கே கொண்டுசென்று அவளிடம் கொடுப்பது பிறிதொரு மணமாகவே இருக்கும்.”

“இளையோனே, இது வானத்து மாமலர். இது மண்ணில் விரியாது, இதன் மணம் ஊன்புலனால் உணரவும்படாது. உன் உள்ளத்தில் என்றும் இந்தமலர் தன் இறைமணத்துடன் மலர்ந்திருக்கும். பருவுலகால் ஆன சொற்களால் அதை எவருக்கும் சொல்ல முடியாது. உடலென வெளிப்பட்டாகவேண்டிய  மானுடக்காமத்தால் அதை உணர்த்திவிடவும் இயலாது” என்றான் முண்டன். “நீ உளம்சூடிய மலர் எவராலும் அறியப்படாது வாடுவதன் பெருந்துயரையே நீ அங்கு அடைவாய். ஆகவே நீ எண்ணி வந்ததை ஒழிக!”

பீமன் கைகளைக் கூப்பியபடி தலைகுனிந்து அதைக் கேட்டு அமர்ந்திருந்தான். முண்டன் சொல்லி நிறுத்தியபின்னர் காற்றோசை ஒலிக்கும் அமைதி நிலவியது. “நீ கண்டவை அனைத்தையும் கருதுக! அது பெரும்பகடை” என்று முண்டன் அவன் செவிகள் மட்டுமே கேட்கும் குரலில் சொன்னான். “விழைவும் பித்துமே சந்திரன் என்றாகியது. அக்குலத்தவன் நீ. உன் முன்னோர் அக்களத்தில் அறியாத கைகளால் புரட்டப்பட்டார்கள். காமத்தின் நூறுமுகங்கள். அத்தனை முகங்களும் ஒன்றின் புரள்வே. இளையோனே, சந்திரன் முதல் உன் தந்தை பாண்டுவரை எவரும் எதையும் அடையவில்லை என்று அறிக!”

முண்டன் தன் வலக்கையை பீமனின் வலத்தோளின்மேல் வைத்தான். அதன் எடையால் பீமன் தோள் சரிய வலக்கையை ஊன்றிக்கொண்டான். “நீ என் மைந்தன் அல்லவா? விலகுக! இங்கிருந்தே திரும்பிச்செல்க! உன் தமையனுக்கு நீ அளித்த சொல் உன்னை கட்டியிருக்கிறது. உன் செயல்வெளி அங்கு காத்திருக்கிறது. ஆற்றுக, அறுத்து விடுபடுக! நீ எழுந்துவரும் இடத்தில் விரிந்த கைகளுடன் நான் உனக்காகக் காத்திருப்பேன்.” பீமனை பெருங்கரம் அள்ளி தன் தோளுடன் சாய்த்துக்கொண்டது. “இத்தருணத்தில் உன் மெய்தொடல் என தித்திப்பது அவன் பெயர் ஒன்றுதான், குழந்தை” என்றது அவன் குரல்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 92

92. கெடுமணச்சோலை

“எத்துணை அரிதானதென்றாலும் எவ்வளவு அணுக்கமானதென்றாலும் நம்மால் எளிதில் கைவிட்டு விலகமுடிகிறதே, ஏன்?” என்றபடி முண்டன் பின்னால் வந்தான். “எங்கிருந்தானாலும் விலகிச்செல்கையில் நாம் அடையும் உள்ளுறை உவகையின் பொருள்தான் என்ன?” பீமன் அவனை நோக்கி “நான் உவகை அடையவில்லை. சோர்வு கொண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அது உள்ளத்தில். ஆனால் உங்கள் நடையிலெழும் விரைவு பிறிதொன்றின் உவகையை காட்டுகிறது” என்றான் முண்டன்.

பீமன் ஒன்றும் சொல்லாமல் முன்னால் நடக்க முண்டன் “அமர்ந்திருக்கும் பறவை முந்தைய கணத்திலோ அடுத்த கணத்திலோ பறந்துகொண்டுமிருக்கிறது” என்றான். எரிச்சலுடன் திரும்பிய பீமன் “அனைத்தையும் அக்கணமே சொல்லென்றாக்கிவிட வேண்டுமா என்ன?” என்றான். “உங்கள் சொல்லின்மையை எண்ணி அஞ்சித்தானே என்னுடன் வருகிறீர்கள், பெருந்தோளரே?” என்றான் முண்டன். “சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் குழந்தையால் விளையாடிக் கடக்கப்பட்ட களிப்பாவைகள்.” பீமன் நடந்துகொண்டே இருக்க அவன் துள்ளி தலைகீழாக காற்றில் சுழன்று அவனருகே வந்து நின்று “சொல்லுக, அதுவே அடுத்ததைப் பற்றும் வழி” என்றான்.

பீமன் “வெறுஞ்சொற்களில் எனக்கு ஆர்வமில்லை” என்று சொல்லி முன்னால் நடந்தான். முண்டன் பின்னால் வந்தபடி “ஒரு பெண் ஒரு சொல்லுக்கு அப்பால் வேறென்ன?” என்றான். “வீண்பேச்சு” என்றான் பீமன் எரிச்சலுடன். “புரூரவஸும் யயாதியும் அறிந்த மெய்மை அதுவே” என்றான் முண்டன். “ஒரு சொல் மட்டுமே. ஆனால் இங்குள்ள அனைத்தும் சொற்களே. இவையனைத்துமான ஒன்று உண்டென்றால் அதுவும் ஒரு சொல்லே.”

பீமன் “இத்தகைய சொல்விளையாட்டுக்களை என் மூத்தவரிடம் கேட்டு சலித்துவிட்டேன்” என்றான். முண்டன் “ஆம், அவர் சொல்லில் இருந்து சொல்லை மட்டுமே கற்றுக்கொள்பவர். எளியவர், ஆகவே அருளாளர்” என்றான். “சொல்லில் அனைத்தையும் பெய்கிறோம். விழைவை, ஆணவத்தை, இழிவுணர்வை, இனிமையை, தனிமையை. மாவலரே, பெண்ணும் நாம் பெய்து நிறைத்து எடுக்கும் வெறுங்கலம் அல்லவா?”

பீமன் அப்பேச்சை விலக்கி “நாம் இனி எங்கே செல்கிறோம்?” என்றான். முண்டன் “நீங்கள் கனவில் கண்ட ஐந்து பெண்களில் நால்வரை கண்டுவிட்டீர்கள். ஐந்தாம் முகம் எது என எண்ணிநோக்குங்கள்” என்றான். “ஐந்தும் திரௌபதிதான்…” என்றான் பீமன். “ஆனால் இங்கே ஆலயச்சிலைகளாகக் காண்கையில் இவர்கள்தானா என்றும் ஐயம் கொள்கிறேன்.” முண்டன் “ஐந்தும் அவரே” என்றான். “அவ்வண்ணமென்றால் ஐந்தாம் முகம் எங்கோ உள்ளது” என்றான் பீமன். “அங்கிருக்கிறது கல்யாணசௌகந்திகம். முண்டரே, இந்நான்கு ஆலயங்களையும் நீங்கள் முன்னரே அறிந்திருக்கிறீர். ஆகவே அதையும் அறிந்திருப்பீர்” என்றான்.

“நான் அறிந்திருக்கவில்லை… மெய்யாகவே” என்றான் முண்டன். “நான் உமது காலத்தை திரைதிரையென கிழித்தகற்றினேன். கண்டது நீர்.” பீமன் “அவை என் உளமயக்குகள் அல்ல. கண்டு தொட்டு அறியும்படி அன்னையரின் ஆலயங்களை சென்றடைந்தேன்” என்றான். “அவற்றுக்கு நான் சென்றதைப்போல அடுத்த ஆலயத்திற்கும் என்னை அழைத்துச்செல்க!” முண்டன் நகைத்து “அவற்றை நீரே கண்டடைந்தீர்… உமது மூக்குணர்வால்” என்றான்.

“அந்த மணத்தை நான் முற்றிலும் மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஒவ்வொரு முறை ஓர் இடத்திலிருந்து கிளம்பும்போதும் அதுவரை அறியாத ஒரு நறுமணத்துக்காக என் மூக்கு தேடத் தொடங்கிவிடும். கடந்தவை பின் தங்கி அகன்று மறையும். இம்முறை மீண்டும் மீண்டும் சென்ற நறுமணங்களையே முகர்புலன் தேடுகிறது” என்றான் பீமன். “ஒருவேளை அந்த மலர் நாம் விட்டுவந்த இடங்களில் எங்கேனும் இருந்ததோ என ஐயம் எழுகிறது. பிறிதொன்று மற்றொன்று என தேடிய சித்தத்தால் அவற்றை தவறவிட்டுவிட்டேனா?”

முண்டன் சிரித்துக்கொண்டு “உண்மையில் அவ்வாறும் ஆகலாம்” என்றான். பீமன் திரும்பி “என்ன சொல்கிறீர்?” என்றான். “விட்டுவந்த ஒவ்வொரு மலரும் கல்யாணசௌகந்திகம் ஆகலாம், மாமல்லரே… அந்த மணம் உங்கள் உள்ளத்தின் எண்ணநுண்கூர் அல்லவா?” பெருமூச்சுடன் பீமன் “ஆம்” என்றான். “எண்ணிநோக்குக! நினைவில் அந்த மணங்களை மீட்டெடுக்கையில் என்ன தோன்றுகிறது?” பீமன் “முயல்கையில் மீள்வன அந்த வினாக்கள் மட்டுமே” என்றான். “அந்தக் கதைகள் அனைத்தையும் மறந்துவிட்டேன். சில தருணங்களாக அவை சுருங்கி விட்டன என்னுள்.”

முண்டன் “அவ்வினாக்களால் அவை கல்யாணசௌகந்திகம் அல்லாதாயின” என்றான். பீமன் திடுக்கிட்டு நின்று “ஆம்” என்றான். ஏளனச் சிரிப்புடன் “வினாவற்றதே மெய்க்காதல் என்பார்கள்” என்றான் முண்டன். “அது வெறுங்காமம் அளவுக்கே தூயது.” பீமன் அவனை நோக்கியபடி நின்றான். “அத்தனை வினாக்களுக்கும் விடைதேடி அடைந்துவிட்டால் மலர்களனைத்தும் நறுமணம் கொள்ளும்.” பீமன் இடையில் கைவைத்து சினம் எழுந்த முகத்துடன் நோக்கி நின்றான். “ஞானிகளும் அறிஞர்களும் கவிஞர்களும் காதலர்களும் கண்டடையாத விடைகள் அவை.” பீமன் பற்களைக் கடித்தபோது கழுத்துநரம்புகள் இறுகி இழுபட்டன. “காமத்தை அறிந்தவர் பிற அனைத்தையும் தெளிந்தவர்” என்றான் முண்டன்.

பீமன் வெறியுடன் கூச்சலிட்டபடி பாய்ந்து முண்டனை ஓங்கி அறைந்தான். ஆனால் அவன் பூனைபோல இயல்பாகத் திரும்பி அவனை ஒழிந்து துள்ளி அப்பால் சென்று கைகொட்டிச் சிரித்தான். நிலைதடுமாறி விழப்போய் காலூன்றி நின்று திரும்பி மீண்டும் பாய்ந்தான் பீமன். அறை விழுந்த மரம் உலுக்கல்கொண்டு இலைகளை உதிர்த்தது. மீண்டுமொரு அறையில் சிறிய மரம் ஒன்று ஒடிந்தது. கூச்சலிட்டபடி அவன் மாறிமாறி முண்டனை தாக்கினான். அவன் சிரிப்பை நிறுத்தாமலேயே துள்ளித்துள்ளி விலகினான். சூழ்ந்திருந்த காற்றெல்லாம் பஞ்சு பறப்பதுபோல அவன் பல்வெண்மை தெரிவதாக பீமன் விழிமயங்கினான்.

பின் மூச்சிரைக்க இரு கைகளையும் தேள்கொடுக்கென நீட்டி நின்றான். முண்டன் வா வா என கைகாட்டி சிரித்தான். நின்ற இடத்திலேயே துள்ளிச்சுழன்று நின்று “ஹிஹிஹி” என சிரித்தான். “உன்னை கொல்வேன்… எங்கு சென்றாலும் தேடிவந்து கொல்வேன்” என்று பீமன் கூவினான். “இதோ, கொல்லும்” என முண்டன் மிக அருகே வந்தான். இரு கைகளுக்கு நடுவே நுழைந்தான். பீமன் ‘ஆ!’ என வெறிக்கூச்சலிட்டபடி அவனை இறுக்க முயல புகைபோல மறைந்தான். அவன் தரையில் பரவிச்செல்வதைக் கண்ட பீமன் கால்களால் மாறி மாறி உதைத்தான். ஒவ்வொரு உதையிலும் உருளைப்பாறைகள் கிளம்பி மலைச்சரிவில் உருண்டு சென்றன.

அவன் மூச்சிரைக்க நின்றபோது அப்பால் மரக்கிளையில் தொங்கியபடி ஆடி வந்த முண்டன் அவனை தொட்டுவிட்டு சிரித்துக்கொண்டே பாய்ந்து விலகினான். பீமன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து கீழே கிடந்த கற்களை எடுத்து அவனை நோக்கி வீசினான். கற்கள் அவனை ஒளியை என கடந்துசெல்வதுபோலத் தெரிந்தது. சோர்ந்து சலித்து குனிந்து முழங்கால்களில் கைகளை ஊன்றி அவன் நின்றபோது முண்டன் இறங்கி வந்து தரையில் அவன் முன் குந்தி அமர்ந்தான். அவன் கண்கள் குரங்குகளைப்போல மின்னி இமைத்தன. அவர்கள் இருவரும் நோக்கு தொட்டு அசையாமல் நின்றனர்.

“நீர் யார்?” என்றான் பீமன். “முண்டன்” என்றான் முண்டன். “அது நாங்களிட்ட பெயர். நீர் உண்மையில் யார்?” முண்டன் சிரித்துக்கொண்டு “முதலில் நீ யார் என்று சொல்” என்றான். “நான் பாண்டவன், கௌந்தேயன், சந்திரகுலத்தவன், குருவின் கொடிவழியினன், பீமன்.” அவன் திரும்பி நோக்கி “நான் இந்தக் காற்றுபோல… எங்கிருக்கிறேனோ அங்குள்ளவன்” என்றான்.  எதிர்பாராத கணத்தில் பீமன் பாய்ந்து அவனை பிடிக்க முயல அவன் விலகி கிளையொன்றில் ஏறிக்கொண்டான். மண்ணில் முகம் அறைய விழுந்த பீமன் புரண்டு எழுந்தான். அவன் பல் பட்டு உதடுகிழிந்து குருதி வழிந்தது.

“மண் சுவையுடையது” என்றான் முண்டன். கெக்கலியிட்டுச் சிரித்தபடி “குருதி மேலும் சுவைகொண்டது. தன் குருதியோ அமுது” என்றான். பீமன் பாய்ந்து சென்று கற்களைப் பொறுக்கி அவன் மேல் எறிந்தான். கற்களிலிருந்து தப்பும்பொருட்டு கிளைதோறும் பாய்ந்து சென்று அமர்ந்த முண்டன் “மண்ணும் குருதியும் நீரும் நெருப்பும் போல” என்றான். பீமன் “நீ யார் என அறிவேன். என்னை மயக்கி இறப்புக்குக் கொண்டுசெல்லும் தீயதெய்வம்…“ என்று கூவினான். “ஆனால் அஞ்சாதவனை அழிக்க இருட்தெய்வங்களால் இயலாது… நான் எதன்பொருட்டும் அஞ்சுபவன் அல்ல.”

‘நான் இப்போது உன் வேட்டைப்பொருள், அவ்வளவுதான்” என்றான் முண்டன். “நீ தோற்ற வேட்டைக்காரன், வேறெதுவும் அல்ல.” பீமன் மீண்டும் கற்களை எடுத்து எறிந்தான். முண்டன் காட்டுக்குள் சென்றுவிட அவன் கற்களையும் தடிகளையும் எடுத்து எறிந்தபடி பின்னால் ஓடினான். அவனை முண்டன் மரக்கிளைகளுக்கு நடுவே தோன்றியும் மறைந்தும் அலைக்கழித்தான். அவன் ஓய்ந்து நின்றிருக்கையில் தலைக்குமேல் தோன்றி கிளையை உலுக்கினான். சினந்து கிளைகளில் ஏறி அவனுக்கு இணையாக பாய்ந்து துரத்தினான் பீமன். கிளையுடைந்து கீழே விழுந்தான். அவனுக்குமேல் தோன்றி அவன் தலைமேல் ஒருதுளி சிறுநீர் பாய்ச்சினான் முண்டன்.

பீமன் நெஞ்சில் ஓங்கி அறைந்து கண்ணீருடன் “உன்னை கொல்வேன்… உன்னை கொல்லாமல் அமையமாட்டேன்” என்று வீரிட்டான். கிளைகளில் முட்டி விழுந்தும் எழுந்தும் முண்டனை துரத்தினான். தலைக்குமேல் முண்டனின் சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. மிக அருகே, மிக அப்பால், பின்னால், முன்னால், கையருகே, காலுக்குக் கீழே. அவன் அனைத்து சித்தப்பெருக்கும் நின்றுவிட பிறிதொன்றிலாது உளம்குவிய அவ்வொலியை பற்றிவிட வெறிகொண்டு சென்றுகொண்டே இருந்தான்.

tigerமுட்கள் அவன் உடலை கீறின. கிளைகள் தலையை தட்டி விழச்செய்தன. பாம்புகள் அவன் கால்களில் மிதிபட்டு சீறி நெளிந்து துடித்தன. எதிர்ப்பட்ட காட்டுயானை ஒன்று அஞ்சி பிளிறியபடி பின்னால் சென்றது. மான்கூட்டங்கள் எறிபடையிலிருந்து அம்புகளென நாற்புறமும் தெறித்தன. விழியும் செவியும் மூக்கும் அழிய திசைகள் மறைய இருப்பும் மயங்க அவன் காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான்.

பின்னர் சூழ்ந்திருந்த காட்டில் எதையோ உணர்ந்து அவன் திகைத்து நின்றான். மூச்சிரைக்க இடையில் கைவைத்து நின்று சுற்றுமுற்றும் நோக்கினான். அக்காடு இருண்டிருந்தது. இலைக்கூரைக்குக் கீழே ஒரு ஓளித்துளிகூட இறங்கவில்லை. பின்னர் உணர்ந்தான், அக்காட்டின் விந்தையை. அங்கே ஒலியே இல்லை. ஒரு பறவையோசைகூட. காட்டின் அமைதியின் ஒலியாகிய சீவிடின் மீட்டல்கூட. ஆனால் காற்று? அப்போதுதான் அக்காட்டின் ஓர் இலைநுனிகூட அசையவில்லை என்று உணர்ந்தான். காற்றுவந்து காடு உயிர்கொள்வதற்காக அவன் காத்து நின்றான்.

காலம் ஓடிக்கொண்டிருந்ததை அவன் உள்ளம் மட்டுமே உணர்ந்தது. நெடுந்தொலைவு சென்ற உள்ளம் சூழ்ந்திருந்த எவையும் காலத்தில் உடன்வராமை கண்டு திரும்பி வந்தது. ஒவ்வொரு இலையாக கொடியாக மரமாக தொட்டுத்தொட்டுத் தவித்து அங்கேயே தேங்கி நின்றது. தவிப்பு மட்டுமேயாக அனைத்து எண்ணங்களும் உருமாறின. அசைவிழந்திருந்த காட்டின் ஒவ்வொன்றிலும் எழுமத்தகங்கள் கொண்டு முட்டி மீண்டது சித்தம். தலையை அறைந்து திறந்துவிடவேண்டுமென பொங்கியது அகம்.

அவன் அருகே நின்ற மரத்தை ஓங்கி மிதித்தான். நடுங்கி மீண்டும் அமைந்த கிளை ஒன்றைப் பிடித்து உலுக்கினான். அது தாழ்ந்து மீண்டது. அதை அசைக்கலாம், உலுக்கலாம். ஆனால் தன் முடிவிலா அசைவின்மைக்கு அது மறுகணமே மீளும் என உணர்ந்தான். அசைவின்மையின் கடல். அதில் வெறும் குமிழிகள் அவ்வசைவுகள். சோர்ந்து தலையை பற்றிக்கொண்டான். திரும்பிவிடலாமென்று எண்ணியகணமே திசை தொலைந்துவிட்டிருப்பதை உணர்ந்தான்.

திசைகள் அசைவுகளாலும் ஒளியாலும் ஆனவை என்று தெரிந்தது. அவை உயிர்களால் அறியப்படுபவை மட்டுமே. விழிகளால் சமைக்கப்படுபவை. அங்கே ஒரு பறவைகூட இல்லை. ஒரு பூச்சிகூட இல்லை. தேனீக்களோ வண்டுகளோ பறக்கவில்லை. இலைகளில் புழுக்கள் இல்லை. மரங்களைக் கடந்து செடிகளை விலக்கி சென்றுகொண்டே இருந்தான். சலித்து நின்று மறுதிசை நோக்கி சென்றான். மீண்டும் இருமுறை திசைசுழன்றபோது முந்தைய இடத்திற்கே வந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். “முண்டா” என்று உரக்க கூவினான். “முண்டா!”

அக்குரலுக்கு எதிரொலி எழவில்லை என்பதை அச்சத்துடன் உணர்ந்தான். நெஞ்சுடையும்படி கூவினான். எதிரொலி எழாத குரல் எத்தனை அச்சமூட்டுவதென்று அறிந்தான். திரும்பிவரும் ஒலி நாற்புறமும் ஏதோ ஒன்று சூழ்ந்திருப்பதை உணர்த்துகிறது. சூழ்ந்திருப்பது ஏதுமின்மை என்னும் உணர்வு உள்ளுறைந்த துளி ஒன்றை நடுநடுங்க வைத்தது. மீண்டும் ஓசையிடத் துணியாமல் அவன் நடந்தான். அது கனவா என்னும் எண்ணம் வந்தது. ஆனால் மரங்களை தொடமுடிந்தது. அத்தனை கனவுகளிலும் அந்த ஐயமும் பருத்தொடுகையும் நிகழ்ந்திருக்கிறது.

ஒன்றே செய்யக்கூடுவது. இந்த விந்தைக்காடு நெடுந்தொலைவுக்கு இருக்கவியலாது. ஏதேனும் ஒரு திசை நோக்கி சென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான். முடிவிலாது செல்லமுடியாது. எங்கோ ஓர் இடத்தில் ஒரு சாயொளி, ஒரு பறவைக்குரல், ஒரு நுண்ணுயிர், ஒரு பாறைப்பாசி கண்ணில் படும். திசையை அறிய அறிந்தவற்றின் ஏதேனும் ஒரு துளி போதும். திசை என்பது அறிந்த பொருட்களை உள்ளம் அடுக்கி வைக்கும் ஒழுங்கு.

அவன் அதற்குள் நுழைந்ததுமுதல் காதைப்போலவே மூக்கும் இல்லாமலிருந்தது என்பதை ஒரு கெடுமணத்தை உணர்ந்ததும் அறிந்தான். முதலில் அது ஓர் உளமழிவு என்றே தோன்றியது. பின்னர் அது மெய்யாகவே எழுவதை உணர்ந்தான். அந்தக் கெடுமணம் அவனை முற்றாக சூழ்ந்துகொண்டது. கண்மூடி நின்றபோது வலக்கைப்பக்கம் அதன் விசை தெரிந்தது. உறுதிசெய்துகொண்டபின் அதை நோக்கி சென்றான். அந்த இருட்பசுமை வெளியில் முதல்முறையாக திசை என ஒன்று உருவாகியிருப்பதை உணர்ந்ததும் ஆறுதல் கொண்டான்.

அணுக அணுக கெடுமணம் அழுத்தம் கொண்டு வந்தது. அழுகும்இலைபோலத் தெரிந்தது. பின் நொதித்த சேறு. புதிய மலம். விந்தையானதோர் பாசியா? பிணம் மட்குகிறதா? கெடுமணம் ஒரு பருவிசையாக ஆகி உடலை பின்னுக்கு தள்ளமுடியுமா? அதை கையால் தொட்டு கிழித்து முன்செல்ல வேண்டியிருக்குமா? உடல் முழுக்க நிறைந்து வாயில் கசப்பாகவும் கண்களில் மங்கலாகவும் கைகால்களில் எடையாகவும் ஆகியது அந்தக் கெடுமணம். அழுகும் தசைமணம் என அதை பின்னர் உணர்ந்தான். உயிருள்ள தசை. நாட்பட்ட புண்.

அப்படி எண்ணியதுமே அது பிறிதொன்றென ஆகியது. எண்ணிய கெடுமணம் எல்லாம் அதுவென்று அறிந்தது அகம். அறியாத ஒரு கணத்தில் உடல் அதிர குமட்டி வாயுமிழ்ந்தான். கண்களில் நீர்வழிய தலையைப் பற்றியபடி குனிந்து நின்று முழு வயிற்றையும் ஒழித்தான். பின்னரும் வயிற்றுத்தசைகள் அதிர்ந்துகொண்டே இருந்தன. வாயிலூறிய கோழையை நாக்கால் வழித்து வழித்து துப்பினான். பின்னர் முன்னால் செல்வதா வேண்டாமா என ஐயம் கொண்டு நின்றான். அப்போதுதான் அந்தச் சிற்றாலயத்தை பார்த்தான்.

இடைவரை உயரம்கொண்ட கல் ஆலயம். புதர்சூழ்ந்து நீர்வழிந்து பாசிபடர்ந்திருந்தது. அவன் அருகே செல்ல காலடி வைத்ததும் அடுத்த ஆலயத்தை கண்டான். மேலும் நெருங்கியதும் நான்கு ஆலயங்கள் அரைவட்டமாக அமைந்திருப்பது தெளிவாகியது. ஒரே அளவும் அமைப்பும் கொண்டவை. அவன் அவற்றை அணுகி கூம்பிலைப் புதர் நிறைந்த சிறிய முற்றத்தை அடைந்தான். அங்கே நொதித்த சேறு கணுக்கால் வரை அழுந்தியது. அச்சேற்றின் கெடுமணம்தான் அது. கிளறப்பட்டபோது மலம் என சீழ் என கெடுமணம் எழுந்து அவன் உடலை காற்றுபோல அறைந்தது.

அத்தனை ஆலயங்களிலும் ஒரே அளவான சிலைகள் இருந்தன. முழங்கை உயரமானவை. கரிய கல்லில் செதுக்கப்பட்டு சிறிய பீடங்களில் நிறுத்தப்பட்டவை. இருளில் மையிருளால் ஆனவை போல நின்றிருந்த அவற்றை அவன் குனிந்து கூர்ந்து நோக்கினான். அனைத்துச் சிலைகளும் ஒருகையால் அறிவுறுத்தல் குறியும் மறுகையால் ஆற்றுப்படுத்தல் குறியும் காட்டின. பிற அடையாளங்கள் எவையுமில்லை. அங்கே எவரும் வந்து பூசெய்கை செய்தமைக்கான எந்தத் தடயமும் தெரியவில்லை. சூழ்ந்திருந்த காட்டின் காதுகளை உடைக்கும் அமைதியின் மையமென அவை குளிரிருள் குவிந்து நின்றன.

அவன் நோக்கிக்கொண்டிருக்கையில் அவனுக்குப் பின்னால் ஓசையில்லாமல் முண்டன் வந்திறங்கினான். அவன் இறகுபோல விழுவதை ஓரவிழியால் கண்டாலும் பீமன் திரும்பவில்லை. “அழகிய மகளிர்” என்று முண்டன் சொன்னான். பீமன் விழிவிலக்காமல் நின்றிருந்தான். முண்டன் மெல்லியகுரலில் அவன் காதுக்குள் மட்டும் ஒலிக்கும்படியாக “பெண்களை இருவகையில் அறிகிறோம். உறைந்தும் உருகியும்” என்றான். அவன் சொற்களை ஒரு வருடலென பீமன் உணர்ந்தான். “உருகும்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுக்கென்று ஒரு கெடுமணம் உண்டு. அதைத் தேடும் ஆண்புலன் ஒன்று அதை கண்டடைகிறது. மதமெழுந்து வெறிகொண்டாடுகிறது.”

பீமன் சிலிர்த்துக்கொண்டே இருந்தான். “மானுடருக்கு அணுக்கமானவை நறுமணங்கள் என்கின்றனர். அத்தனை மானுடருக்குள்ளும் அவர்களை பித்தாக்கும் கெடுமணங்கள் சில உண்டு. அவர்களை ஆட்டுவிப்பவை அவையே” என்றான் முண்டன். “நறுமணங்களினூடாக பெண்ணை நினைவுறுத்திக்கொள்பவன் எவன் இப்புவியில்?” பீமன் சீற்றத்துடன் திரும்பி “விலகிச்செல்… விலகு… நீ கீழ்மையை என்னுள் நிறைக்கிறாய்” என்றான். “நீ மெய்மையை அல்லவா தேடிவந்தாய்? மேன்மையை என ஏன் எண்ணிக்கொள்கிறாய்?” என்றான் முண்டன்.

பீமன் தலையை அசைத்தான். தன்னுள் ஒன்றுடன் ஒன்றென முட்டிச் செயலிழந்து நின்றிருந்த சொற்களை அசைத்து சிதறடிக்க விழைபவன்போல. என்னால் மட்டும் ஏன் எண்ணிக்கோத்து எதையும் அமைக்க முடியவில்லை? நான் மட்டும் ஏன் என் அகத்தை எய்து இலக்கடையச்செய்ய இயலாதவனாக இருக்கிறேன்? “அவர்களை எழச்செய்ய என்னால் முடியும்” என்றான் முண்டன். “வேண்டாம்” என்றான் பீமன் தாழ்ந்த குரலில். “நீ அவர்களிடம் கேட்கலாம் உன் வினாக்களை. அவர்கள் அறிவார்கள்.” பீமன் தழுதழுக்க “வேண்டாம்” என்றான்.

“அது அவர்களின் சிலம்பொலி” என்றான் முண்டன். பீமன் எதையும் கேட்கவில்லை. “அணுகிவருவது. சிலம்புகளால் கால்களை சிரிக்கவைக்கிறார்கள் பெண்கள். அவர்கள் சிரிக்காதபோது அவை சிரிக்கின்றன.” பீமன் அறியாது செவிகூர்ந்தான். “ஏனென்றால் எண்ணியபோது சிரிக்க அவர்களை விடுவதில்லை இவ்வுலகு” என்றான் முண்டன். “சிலம்பை கேட்கத் தெரிந்தவன் பெண்ணின் அகச்சிரிப்பை கேட்கிறான்.” பீமனின் உடல் குளிர்கொள்வதுபோல விதிர்த்தது அவன் அச்சிலம்போசையை கேட்டான். அவன் நன்கறிந்திருந்த ஒலி அது.

அவன் கண்களை மூடிக்கொண்டான். அவன் முன் ஒருத்தி வந்து நிற்பதை உணரமுடிந்தது. சினத்துடன் முண்டன் “மூடா, திற உன் விழியை… உனக்கென்ன சித்தச்சிதைவா?” என்றான். உடல் மெய்ப்புகொண்டு கூசிநிற்க முழுப்புலன்தொகையும் முன்னால் கூர்த்துநிற்க பீமன் விழிமூடியே நின்றிருந்தான். “நோக்கு, நேர்விழி தொடு. கேள், உன் வினாக்களை…” என்றான் முண்டன். “அணுகுகையில் உருமாறுவதேன் என்று கேள். ஆட்கொண்டு உதிர்த்துச் செல்வதேன் என்று கேள்!” அவன் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன.

மீண்டுமொரு சிலம்பின் ஒலி. அதே அழுத்தமும் கார்வையும் கொண்டதென்றாலும் முற்றிலும் வேறுபட்ட நடை கொண்டது. “இருவரும் உன் முன் நின்றிருக்கிறார்கள்… நீ அறிவதற்குரியவை உன்னில் எழுக!” மீண்டும் ஒரு சிலம்படி. பின்னர் மீண்டும் ஒரு சிலம்பொலிச் சரடு. “கேள், இனி நீ அறிய பிறிதொன்றுமில்லை!” பீமன் பெருமூச்சுவிட்டான். கண்கள் அசைந்து அசைந்து துடித்தன. அறியாது அவை திறந்துவிடக்கூடும் என்னும் எண்ணம் எழுந்ததும் முகத்தைச் சுருக்கி இமைகளை இறுக்கிக்கொண்டான்.

“கேள்” என்றான் முண்டன். “வெறும் நிலம்தானா என்று. விளையாட்டை அறிவார்களா என்று. கேள், எஞ்சுவது தாமே என்றறிந்தவர்களா? எங்குமிருப்பதனால் இல்லாமலாகக் கற்றிருக்கிறார்களா?” பீமன் அவனே உணராத ஒரு கணத்தில் எழுந்து திரும்பி பாய்ந்தோடினான். அவனுக்குப் பின்னால் நான்கு பெண்களின் சிரிப்பொலி கேட்டது. அவன் மூச்சிரைக்க உடல்பதைக்க ஓடும்தோறும் அச்சிரிப்பொலி அகலாது அவனுடன் வந்தது. அவன் மேலும் மேலும் உயிர்திரட்டி ஓடிக்கொண்டிருந்தான்.

அச்சிரிப்பொலி தேய்ந்தமைந்தபோது அவன் மண்ணில் விழுந்துவிட்டிருந்தான். சேற்றில் முகம் அமைத்து அசையாமல் கிடந்தான். அவன்மேல் கால்வைத்து கடந்துசெல்வதுபோல சிரிப்பொலிகள் செல்வதை உணர்ந்தான். சிலம்பின் சிரிப்பொலி. மூச்சு ஓய்ந்து உடல் குளிரத் தொடங்கியது. அலையோசைபோல தொலைவில் காற்று ஓடுவதை அவன் கேட்டான். தன் உடலுக்குள் அவ்வோசை எழுவதாகத் தோன்றியபின் அது செவிப்பெறுகைதான் எனத் தெளிந்தான். கையூன்றி எழுந்து அமர்ந்தான். மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருப்பதை கண்டான்.

எழுந்து ஒரு சிறிய மரத்தைப் பிடித்தபடி நின்று நிகர்நிலை மீண்டபின் நடக்கத் தொடங்கினான். அது மேற்குத்திசை என ஒளிச்சரிவு காட்டியது. அங்கே மலை வளைந்து ஏற சரிவெங்கும் தேவதாருக்கள் ஓங்கி எழுந்திருந்தன. பறவைகளின் ஓசையை, சிறுபூச்சிகளின் ஒலிப்பெருக்கை கேட்கத் தொடங்கினான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 91

91. இருமுகத்தாள்

தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும் முயல் என அமர்ந்திருந்தான். தேரின் சகடங்கள் கல்லிலும் குழியிலும் விழும் ஓசை ஒவ்வொன்றும் அவன் தலைமேல் உருளைக்கற்கள்போல விழுந்தன. பற்கள் கிட்டித்திருப்பதை செவிகளில் எழுந்த உரசல் ஓசை வழியாக அறிந்ததும் தலையை அசைத்து தன்னை விடுவித்துக்கொண்டான். மூச்சை இழுத்து இழுத்து விட்டு உள்ளத்தை குளிர்வித்தான்.

தேர் நின்றதும் முன்சென்ற தேரில் இருந்து இறங்கி அருகே வந்த சுபகன் “இன்னும் சற்றுதொலைவில் காட்டின் தொடக்கம் வந்துவிடும். அங்கிருந்து ஒற்றையடிப்பாதைதான். அன்னையும் நீங்களும் மட்டும் செல்வதே முறை” என்றான். “அன்னை எப்படி இருக்கிறார்?” என்றான் புரு “தேரிலேறிய கணம் முதல் உறைந்து சிலையென்றிருக்கிறார். இந்த ஒன்பதுநாட்களிலும் அவர்கள் துயிலவே இல்லை.” புரு திகைப்புடன் “முற்றிலுமா?” என்றான். “ஆம் அரசே. அவர்கள் பல ஆண்டுகளாகவே துயிலின்மை நோய் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அந்த மெலிவும் உலர்வும் அதனால்தான். தேரில் அமர்ந்திருக்கிறார்கள். இரவில் குடில்களில் வெறுமனே விழிமூடி படுத்திருக்கிறார்கள் என உடன் வரும் சேடி சொல்கிறாள்.”

புரு தலையசைத்தான். சுபகன் சென்று தன் தேரில் ஏறிக்கொண்டான். காட்டின் எல்லையில் தேர்கள் நின்றதும் புரு தயங்கி உள்ளேயே அமர்ந்துகொண்டான். அன்னையை மட்டும் அனுப்பினால் என்ன என ஓர் எண்ணம் ஓடியதும் அதை கடிந்து விரட்டினான். சுபகன் வந்து “அரசே…” என அழைத்ததும் திரையை விலக்கி இறங்கியபோது உடல் களைப்பில் தளர்ந்திருந்ததை உணர்ந்தான். விரைவில் அனைத்தும் முடிந்தால் போதும், நன்றோ தீதோ அழிவோ எதுவாயினும் எனத் தோன்றியது.

சர்மிஷ்டை தேரிலிருந்து இறங்கி நின்றிருந்தாள். அவள் அணிந்திருந்த மரவுரியாடையின் நிறத்தால் அங்கே ஒரு பட்டமரம் நின்றிருப்பதாகவே முதலில் தோன்றியது. அருகே சென்றபோது ‘அல்லது சிதல்புற்று’ என நினைத்துக்கொண்டான். அது என்ன வீண் சொல் என பிறிதொரு உள்ளம் வியந்தது. ‘ஆடை என்பது ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உடல்.’ இத்தருணத்தை இப்படி பொருத்தமில்லா சொற்களைக்கொண்டு திசைதிருப்பி எளிதாக்கிக் கொள்கிறேனா? இடர்நிறைந்த தருணங்களில் எளிய செயல்களில் ஈடுபடுவது நல்லது என்று சுகிர்தர் சொல்லி கேட்டிருக்கிறான்.

அவளருகே சென்று “செல்வோம், அன்னையே” என்றான். அவள் தலையசைத்து உடன்நடந்தாள். அவன் சுபகனிடம் தலையசைவால் விடைபெற்று புதர்கள் மண்டிய காட்டுக்குள் சென்ற கால்தொடர் பாதையில் நடந்தான். அவள் பின்னால் வருவது ஒலியாக எழவில்லை. அவள் உடல் தக்கைபோல எடையற்றிருக்கிறது போலும். நிழல்போல் ஆகிவிட்டிருக்கிறாள். அவன் வாழ்ந்த காடு நினைவில் எழுந்தது. அங்கே ஒவ்வொரு புதரையும் கூர்ந்துநோக்கி கையிலிருக்கும் குச்சியால் விலக்கி விலக்கித்தான் அவனால் நடக்கமுடியும். ஒரு சிறு கல் காலடியில் புரண்டால்கூட நிலையழிந்து உடலுக்குள் நீர்க்குமிழி பதறும். இப்போது புதர்களை கால்களாலேயே சாய்த்து செல்லமுடிகிறது. உடல் வலுக்கொண்டிருக்கிறது. இதோ இருந்துகொண்டிருக்கிறேன், வலுவான கால்களால் விரைவான கைகளால் ஓளிரும் விழிகளால். இங்கே. இக்கணம். இதுவன்றி எதுவும் பெரிதல்ல.

அந்த எண்ணம் அவனை மலரச்செய்தது. இருக்கிறேன் என்னும் சொல்லாக அவன் சித்தம் உருமாறியது.  உடல்வலு உள்ளத்திற்கு அளிக்கும் செய்தியே அதுதான், இருத்தல். மண்ணை விசையுடன் அழுத்தி எடைகொண்டு அழுத்தும் காற்றை தோள்களில் தாங்கி. இந்த மரங்கள் போல. வெயிலொளி மஞ்சளாகவும் நிழல் பசுமையாகவும் ஆகி அமைந்திருந்த ஓவியப் பரப்பை விழிகளால் தொட்டுத் தொட்டு நோக்கியபடி அவன் நடந்தான்.

எத்தனை நோக்கினாலும் தீராதது. எத்தனை அள்ளிச்சேர்த்தாலும் தொடப்படாமல் எஞ்சுவது. இக்கணம் அன்றி எதுவும் பெரிதல்ல. இது நழுவிக்கொண்டிருக்கிறது. சென்றுகொண்டே இருக்கிறது. இவற்றில் ஓரிரு துளிகள் மட்டுமே மிஞ்சவிருக்கின்றன. பிறிதெல்லாம் வெறும் உளமயக்குகள், உணர்வுநாடகங்கள். கடந்து திரும்பி நோக்கினால் எளிய இளிவரல்கள். அந்தத் தருணத்தை ஐம்பது ஆண்டுகள் கடந்து சென்று திரும்பி நோக்கினான். சுகிர்தவனத்தில் தன் குடிலின் சொல்லவிந்த தனிமையில் அமைந்து. இதழ்கோடும் ஒரு புன்னகைக்கு அப்பால் பொருள்கொள்பவை எவையுமில்லை.

தேவயானியின் குடில்வாயிலை அடைந்தபோது அவன் திரும்பி சர்மிஷ்டையிடம் “இதுதான்” என்றான். அவள் தலையசைத்து முன்னால் சென்றாள். அவன் அவளுக்குப் பின்னால் கூப்பிய கைகளுடன் தொடர்ந்தான். வழியென அமைந்தது மழைக்காலத்தில் நீரோடும் ஓடை. அதிலிருந்து குடிலமைந்த மேட்டுக்கு ஏற கல்லடுக்கி படிகள் சமைக்கப்பட்டிருந்தன. முதல்படியில் கால்வைத்ததும் அவன் மிக அருகே வேங்கை ஒன்றின் உறுமலை கேட்டான். இடையில் படைக்கலமேதுமில்லாமல் வந்ததை அப்போதுதான் உணர்ந்தான். அன்னையை திரும்பும்படி அழைக்கலாமா என அவன் எண்ணுவதற்குள் அவள் மேல்படிக்கு சென்றுவிட்டிருந்தாள்.

மேலே முற்றத்தில் மிகப்பெரிய அன்னைவேங்கை ஒன்றின் சீறும் முகம் தெரிந்தது. விடைத்து நீண்ட கன்னமயிர்களும், பளிங்குருளை விழிகளும், திறந்த செந்நிறவாய்க்குள் வளைந்தெழுந்த பற்களுமாக அது மூக்கை நீட்டியபடி மெல்ல காலெடுத்து வைத்து அணுகியது. சிறுகாதுகளில் ஒன்று சொடுக்கிக்கொண்டது. அதற்கு அப்பால் அதன் ஆடிப்பாவை என பிறிதொரு வேங்கை. சர்மிஷ்டை தயங்காமல் மேலேறிச்செல்ல வேங்கைகள் கால் மடித்து பின்வாங்கி உரக்க உறுமின.

பிறிதொன்று எண்ணாமல் புரு அன்னையைத் தொடர்ந்து சென்றான். மேலே பல உறுமல்கள் ஒலித்தன. அங்கே மேலும் பல வேங்கைகள் இருப்பதை புரு கண்டான். அவை சீறியபடி உடல்தாழ்த்தி அவர்களை சூழ்ந்துகொண்டன. அவன் உடல் மெய்ப்புகொண்டிருந்தது. தசைகள் இழுபட்டு இடத்தொடை அதிர்ந்தது. சர்மிஷ்டை நேராகச் சென்று முற்றத்தின் நடுவே நின்றாள். அவள் அவற்றை கண்டதாகவே தோன்றவில்லை.

நான்கு வேங்கைகள் குடிலின் திண்ணையில் படுத்திருந்தன. ஒன்று நான்கு கால்களையும் மேலே தூக்கி மல்லாந்து கிடந்தது. குடிலுக்குப் பின்னாலிருந்து இரு வேங்கைகள் மெல்ல காலடி எடுத்துவைத்து வந்து அங்கேயே நின்று உறுமின. அப்பகுதியே அவற்றின் வண்ணக்கோடுகளால் அனல்பற்றி எரிவதுபோலிருந்தது. சர்மிஷ்டை மெல்ல அசைய முற்றத்தில் நின்ற இரு வேங்கைகள் தாவி திண்ணைமேல் ஏறிக்கொண்டன. ஒரு வேங்கை உரக்க உறுமியபோது அனைத்தும் இணைந்து பெருமுரசுகள்போல கார்வையுடன் ஒலியெழுப்பின.

குடிலுக்குள் இருந்து நிழல் நீண்டு வெளியே விழுந்தது. தேவயானியின் மரமிதியடி அணிந்த கால்களும் பின்பு மரவுரியணிந்த இடைவரை உடலும் தெரிந்தன. அவள் கூரைமூங்கிலைப் பற்றியபடி குனிந்து “யார்?” என்றாள். சர்மிஷ்டையை அடையாளம் கண்டுகொண்டதும் விழிநிலைக்க அமைதியடைந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அசைவிலாது நின்றனர். வேங்கைகள் உறுமியபடியும் முனகியபடியும் கோட்டுவாயிட்டபடியும் விலகிச்சென்று படுத்துக்கொண்டன. ஒரு வேங்கை மட்டும் மூக்குநீட்டி அணுகி சர்மிஷ்டையை முகர்ந்தபின் முகம் சுளித்து தும்மியபடி திரும்பிச்சென்றது. இரு வேங்கைகள் காதுகள் ஒலிக்க தலையை சிலுப்பிக்கொண்டன.

தேவயானி குருநகரியிலிருந்து கிளம்பியபோது இருந்ததைவிட பொலிவுகொண்டிருந்தாள். விழிகள் ஒளிர, இதழ்கள் மென்செம்மை கொண்டிருக்க, இளமைநிறைகொண்ட கன்னியெனத் தோன்றினாள். புரு தேவயானியை அடைந்து “அன்னையே, தங்களை பார்க்கவிழைந்தார்கள், ஆகவே கூட்டிவந்தேன். தங்கள் கால்தொட்டு சென்னி சூட எனக்கு ஒப்புதல் அளியுங்கள்” என்றான்.

அச்சொற்களைக் கேட்டு இருவரும் கலைந்தார்கள். தேவயானி “வருக!” என அவனை அழைத்தாள். பின்னர் சர்மிஷ்டையிடம் “உள்ளே வா” என்றாள். அவள் திரும்பிச்சென்றபோது நீண்ட குழல் ஐந்துபுரிகளாக முடைந்து கால்மடிப்பு வரை நீட்டப்பட்டிருப்பதை புரு கண்டான். ஐந்து இருளருவிகள் என அவை மின்னின.

tigerபீமன் “நான் அங்கு ஒருநாள் இருந்தேன். அன்னையை அங்கேயே விட்டுவிட்டு நான் மட்டும் மீண்டேன். அங்கேயே இருப்பதாக அவர்கள் சொன்னபோது நான் வியப்புறவில்லை. அதுவே நிகழுமென்று அறிந்திருந்தேன்” என்றான். “நகருக்குள் நுழைந்ததும் ஆறுதல்தான் அடைந்தேன். எனக்கு கோசல நாட்டில் மணம் கோரியிருப்பதாக சுகிர்தர் சொன்னார். அவர் மைந்தனை என் அமைச்சனாக்கிவிட்டு கானேகவிருப்பதை அறிவித்தார். அரசுச்செயல்களில் என்னை முற்றாக ஆழ்த்திக்கொண்டேன்.”

“மூன்று மாதங்களுக்குப்பின் கானுறைவாழ்விலிருந்த தந்தை யயாதி விண்புகுந்ததை அறிந்தேன். அவரை அங்கேயே உடன்வாழ்ந்த முனிவர்கள் சிதையேற்றிவிட்டிருந்தனர். துறவுபூண்டவர் என்பதனால் குடிநெறிகளின்படி எனக்கும் அவருக்கும் உறவேதுமில்லை. நான் நீரும் அன்னமும் அளிக்கவோ நோன்பிருந்து தூய்மைகொள்ளவோ வேண்டியதில்லை. அவருக்காக ஒரு விண்ணேற்றுவிளக்கை குடிமூத்தாரின் பள்ளிப்படைக்கோயில் முன் ஏற்றிவைத்தேன். அச்செய்தியை அறிவிக்கச் சொல்லி தூதனை காட்டுக்கு அனுப்பிவைத்தேன்.”

“என் கடன்கள் முடிந்ததும் மீண்டும் காட்டுக்குச் சென்று அன்னையரை கண்டேன். நான் சென்றபோது வேங்கைகள் முன்பு அறியாதவைபோலவே உறுமியபடி சூழ்ந்துகொண்டன. அவற்றை என் சித்தத்தைவிட என்னுள் ஓடிய குருதி நன்கறிந்திருந்தது. ஒரே குடிலை இரண்டாகப் பகுத்து முன்பகுதியில் மூத்த அன்னையும் பின்பகுதியில் அன்னையும் குடியிருந்தார்கள். என் குரல்கேட்டு மூத்த அன்னை வெளியே வந்தாள். மறுபக்கம் வழியாக அன்னை வந்து நோக்கினாள். அவர்கள் என்னை அறிந்ததாகவே தெரியவில்லை. அவர்களின் விழிகள் முன்னரே விண்சென்றுவிட்டிருந்தன.”

“அன்னை மேலும் மெலிந்து உருகியிருந்தாள். மூத்த அன்னை எரிதழல் என சுடர்ந்தாள். நான் அவர்களிடம் கேட்கவந்த எதையும் சொல்லாக்கவில்லை. அங்கு வரும்போது அக்கேள்வியின் விசையால் நான் அதிர்ந்துகொண்டிருந்தேன். அக்கணத்தில் அக்கேள்வி என்னுள் திரளவே இல்லை. பின்னர் சோர்ந்து திரும்பிவந்தபோது எனக்குள் அவ்வினா இயல்பாக எழுந்தது. யயாதி என்பவரை அவர்கள் அறிவார்களா? அவ்வினாவை ஒட்டி அடுத்த வினா எழுந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் அன்றி பிறரை அறிந்திருந்தார்களா?”

இறகு மெல்ல இறங்கி தரையை அடைந்து படிய பீமன் விழித்தெழுந்தான். இடமும் காலமும் துலங்கா விழிகளுடன் முண்டனை நோக்கினான். “வருக, நாம் வழிபடாத அன்னை ஒருத்தி இங்குள்ளாள்” என்றான் முண்டன். அவன் கையை ஊன்றி எழுந்து நின்றான். கால்கள் சற்று தள்ளாடுவதுபோல் உணர தலையை உலுக்கி நெற்றிமேல் ஓசையுடன் அடித்தான். “தலையில் அறைந்துகொண்டால் விழிதெளியும் என்பது ஒரு நல்ல கண்டுபிடிப்பு” என்றான் முண்டன். “என் சித்தத்தை சொற்கள் நிறைத்துவிட்டன. அவை எனக்கு முற்றிலும் பொருளாகவுமில்லை” என்றான் பீமன்.

“சொற்களால்தான் மானுடர் ஒருகணத்தையும் பிறிதொன்றையும் இணைத்துக்கொள்கிறார்கள்” என்றான் முண்டன். “நான் எப்போதுமே என்னைச் சூழ்ந்திருக்கும் நிலத்தால்தான் அதை செய்கிறேன். என் சொற்கள் ஒருபோதும் அறுபடா நதியென பெருகியதில்லை” என்றான் பீமன். “நீர் சொன்ன அத்தனை கதைகளையும் உதிரி வரிகளென்றே இப்போது நினைவுகூர்கிறேன். அவற்றிலிலிருந்து நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. என்னால் அவ்வாறு கற்கவும் இயலாது.”

“நாம் பேசுவதை யானைகளும் புரவிகளும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் அவற்றின் அகத்தை எவ்வண்ணமோ நம் மொழி சென்று நிறைப்பதை உணரமுடியும்” என்றான் முண்டன். “நான் பேசிக்கொண்டிருந்தது உங்கள் கனவுடன்.” பீமன் தலையை அசைத்தான். “வருக!” என முண்டன் புதர்களை விலக்கி முன்னால் சென்றான்.

அந்தச் சிற்றாலயம் முன்பக்கம் இருந்த அதேவடிவில் பின்பக்கத்திலும் வாயிலுடன் இருப்பதை அப்போதுதான் பீமன் கண்டான். “இரட்டை ஆலயங்களா?” என்றான். “ஆம், இத்தகைய ஆலயங்களை நாம் தென்னகத்தில் காணலாம்… வருக!” என முண்டன் புதர்களை தாவிக்கடந்தான். அங்கே செண்பகமரம் கிளைகள் முழுக்க மலர்களை மட்டுமே சூடி நின்றிருந்தது. வெண்ணிறமலர்கள் நீளக்கிளிஞ்சல்கள்போல தரையில் சருகுகள் மேல் பரவியிருந்தன. செண்பகமணம் எழவில்லை என எண்ணியதுமே சுழன்றுவந்த காற்று மூக்குச்சவ்வை எரிக்கும் அந்த மணத்தை மென்பட்டு போல அவனைச்சுற்றி போர்த்தியது.

வாயில் முன் சென்று நின்ற முண்டன் “இவள் சர்மிஷ்டை. இவர்கள் இரட்டையன்னையர் என்று குருநகரியின் அரசகுடிகளால் வழிபடப்பட்டனர். குருநகரி சிறுநாடுகளாக உடைந்தழிந்தபோது அதன் கொடிவழியினரான தீர்க்கர்களும் அஷ்டபலரும் காம்யகரும் இங்கு வந்துகொண்டிருந்தனர். காலப்போக்கில் அவர்களாலும் இது கைவிடப்பட்டது. இன்று அசுரத்தொல்குடியின் கொடிவழியினர் மட்டுமே இங்கு வருகிறார்கள்” என்றான். பீமன் அவனருகே சென்று நின்று உள்ளே பார்த்தான்.

உள்ளிருந்த சிலை மறுபக்கமிருந்த சிலையைப்போலவே இருந்தது. ஒருகணம் மறுபக்கத்திற்கே சுற்றிவந்துவிட்டோமா என பீமன் எண்ணினான். “இரு தேவியரும் ஒரே உருவில்தான் செதுக்கப்பட்டுள்ளனர்” என்றான் முண்டன். “சிறிய வேறுபாடு சர்மிஷ்டை வலக்கையில் அமுதகலம் வைத்திருக்கிறாள்.” “ஆம்” என்றான் பீமன். “புருவின் குலச்சரடிலெழுந்தது அஸ்தினபுரி. உங்கள் நகர்மேல் அமைந்திருக்கிறது அன்னையின் கையிலிருக்கும் இந்த அமுதகலம்.”

பீமன் நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் “ஆம், இவளும் ஐந்தில் ஒரு முகம்தான்” என்றான். “வணங்குக!” என்றான் முண்டன். பீமன் உடல் நிலம்படிய விழுந்து வணங்கினான். எழுந்து அன்னையின் விழிகளை நோக்கியபோது அவன் நன்கறிந்தவை அவை என்று தோன்றியது. அப்போது வீசிய மலர்மணமும் நன்கறிந்ததென்றே இருந்தது. ஆனால் அந்த மணம் கல்யாணசௌகந்திகம் அல்ல என்று தெளிவாகத் தெரிந்தது.

tigerபுருவும் அரசியும் மைந்தரும் சாயாவனத்தின் அருகே இருந்த உத்தரதுர்க்கம் என்னும் சிற்றூருக்கு சென்று சேர்ந்தபோது அந்தியாகிவிட்டிருந்தது. அங்கே இருந்த காவலர்மாளிகை அவர்களுக்காக ஒருக்கப்பட்டிருந்தது. அதன் அசுரகுடிக் காவலர்தலைவனான சந்தன் அவர்களை ஊர் எல்லையிலேயே வரவேற்றான். உடன் மங்கலத்தாலத்துடன் மூன்றுசேடியரும் முழவும் சங்கும் கொம்பும் மணியுமாக ஐந்து இசைச்சூதரும் இருந்தனர். குரவையொலிகளுடன் அவர்களை வரவேற்று முகமன் உரைத்து வணங்கி அழைத்துச்சென்றான்.

ஊருக்கு நடுவே அமைந்திருந்த காவலர்தலைவனின் மாளிகை பழையதாக இருந்தாலும் தூய்மையாக இருந்தது. அவர்களுக்காக புதியமரவுரிகளும் இறகுத்தலையணைகளும் ஒருக்கப்பட்டிருந்தன. ரௌத்ராஸ்வன் முன்னரே துயின்றுவிட்டிருந்தான். ஈஸ்வரன் நின்றுகொண்டே துயிலில் ஆடினான். ரௌத்ராஸ்வன் தேரோசை ஓய்ந்ததை அறிந்ததும் விழித்தெழுந்து “தந்தையே…” என்று கைநீட்டினான். “துயில்க” என்றான் புரு. ரௌத்ராஸ்வன் “நான் துயிலமாட்டேன்…” என்றான். ஈஸ்வரன் வந்து புருவின் மேலாடையை பற்றிக்கொண்டான். புரு கைகாட்ட ஏவலர் அவர்களை தூக்கிக்கொண்டு சென்றனர்.

நீராடி உணவுண்டதும் மைந்தர் புத்துணர்வு கொண்டனர். அவர்களின் குரல்கள் உள்ளே ஒலித்தன. புரு நறுவெற்றிலை மென்றபடி திண்ணையில் கட்டப்பட்டிருந்த பெரிய ஆட்டுகட்டிலில் அமர்ந்திருந்தபோது ரௌத்ராஸ்வன் ஓடிவந்து அவன் கால்களை கட்டிக்கொண்டு “நான் துயிலமாட்டேன்… நான் கதை கேட்பேன்” என்றான். புருவின் முன் பீடத்தில் அமர்ந்திருந்த சுபகன் “யார் சொல்லப்போகிறார்கள் கதை?” என்றான். “சூதர் வருகிறார்… குடத்தையும் முழவையும் நந்துனியையும் நானே பார்த்தேன்.” ஈஸ்வரன் “அன்னையும் விறலியும் பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே கதைசொல்லப் போகிறார்கள். நானே கேட்டேன்” என்றான்.

“மல்லநாட்டுச் சூதனும் விறலியும் வந்துள்ளனர், அரசே” என்றான் அருகே நின்ற முதுஏவலன். உள்ளிருந்து கல்லணிகளும் புலித்தோலாடையும் அணிந்த கரியநிற விறலியும் பௌஷ்டையும் பேசிச்சிரித்தபடி நடந்துவந்தார்கள். விறலி பெரியவிழிகளைத் திருப்பி புருவை நோக்கி பின் ரௌத்ராஸ்வனைப் பார்த்து புன்னகைத்தாள். அவன் தந்தையின் ஆடையை அள்ளிப்பற்றிக்கொண்டு முகம்புதைத்தான்.

முன்வாயிலினூடாக காவலர்தலைவனுடன் முதுசூதரும் அவர் மைந்தன் எனத்தோன்றிய இளையவனும் வந்தனர். அவர்களை சுபகன் எதிர்கொண்டு அழைத்துச்சென்று அமரவைத்தான். விறலி தன் கணவனுக்குப்பின்னால் அமர்ந்தாள். முதியவர் நந்துனியை மெல்ல மீட்டியபோது அந்த அறையே இசைகேட்பதற்காக செவிகள் கொண்டது. முதிய சூதர் “அரசருக்கும் அரசிக்கும் அமைச்சருக்கும் வணக்கம். அவர்களின் அழியாக்குலவழியில் எழுந்த மாமன்னர்களுக்கும் எழவிருக்கும் மாமன்னர்களுக்கும் வணக்கம். பேரன்னையருக்கு தாள்பணிந்த வணக்கம்” என்றார்.

அரசி புருவின் அருகே அமர்ந்தாள். ரௌத்ராஸ்வன் அவன் மடியில் தொற்றி ஏறி அமர ஈஸ்வரன் உடலை அவன் மேல் ஒட்டிவைத்தபடி அருகே அமர்ந்தான். பிரவீரன் அமைச்சரின் அருகே சிறுபீடத்தில் அமர்ந்தான். ஏவலர் கைகட்டி சுவர் சாய்ந்து நின்றனர். “எங்களிடம் மாமன்னர் யயாதி மெய்யுலகு எய்திய கதையைப் பாடும்படி சொன்னார்கள்” என்றார் முதியசூதர். “நாங்கள் அக்கதையை நுறுமுறை பாடியுள்ளோம். அவர்களின் கொடிவழியினர் செவிக்கென பாடுகையில் எங்கள் சொற்கள் தேனுடன் கூடுதிரும்பும் தேனீக்களாகின்றன” என்றார்.

அவர் திரும்பி பிரவீரனைப் பார்த்து “இவரே முடிசூடவிருப்பவர். வெற்றிமேல் வெற்றிகொள்பவர் என்பதனால் இவரை ஜனமேஜயர் என வாழ்த்துகின்றன நூல்கள்” என்றார். சற்று திகைத்து “எந்த நூல்கள்?” என்றான் புரு. “அரசே, நடந்தவற்றை எழுதும் நூல்களுண்டு. நடக்கவிருப்பனவற்றை எழுதும் நூல்களும் உண்டு” என்றார் சூதர். புரு ஒருகணம் கழித்து புன்னகைத்து கைகூப்பினான். இளம்சூதன் எங்கோ என வெறித்த விழிகளுடன் “கதைகள் அழியாத பெரும்வலை. மானுடர் அவற்றின்மேல் சென்றமரும் சிற்றுயிர்கள். நடுவே அமைந்த சிலந்திக்கு வணக்கம்” என்றான்.

“பாடுக!” என்றான் புரு. நந்துனி அதுவே எண்ணிக்கொண்டதுபோல இசை துள்ள ஒலிக்கத் தொடங்கியது. ஓர் உச்சியில் முழவு வந்து இணைந்துகொண்டது. “இது மாமன்னர் யயாதி விண்ணேகியதைப்பற்றி சாலபஞ்சிகர் எழுதிய சலஃபஸல்லாபம் என்னும் காவியம். ஏழு பாதங்கள் கொண்டது. குளிர்ச்சுனை திரைகிழித்து விழிநீர்மகள் எழுந்து யயாதியை ஆட்கொள்ளும் இடத்தில் இது தொடங்குகிறது. அவர்களின் ஆடலை எழுபது பாடல்களால் விளக்குகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் வனைந்தனர். கலைத்து மீண்டும் வடித்தனர். முற்றாகக் கலைத்து முகிலென மறைந்தனர்” என்றார் சூதர். விறலியின் குரல் எழுந்து அவர்களை தழுவியதுபோல ஒலிக்கத் தொடங்கியது.

tigerபுலரியில் எழுந்து கிளம்பிபபோது ரௌத்ராஸ்வனும் ஈஸ்வரனும் துயிலில் இருந்தனர். அரைத்துயிலிலேயே அவர்களை நீராட்டி நோன்புக்கான அணிகளை பூட்டியிருந்தனர் சேடியர். பிரவீரன் புருவுடன் தேரில் ஏறிக்கொண்டான். பௌஷ்டையும் சேடியும் பின்னால் வந்த தேரில் ஏறினர். சுபகன் முன்னால் சென்ற தேரில் ஏறியதும் புரவிகள் காலெடுத்து வைத்தன. தேர் ஓடத்தொடங்கியதும் காலைக்குளிர்காற்றில் அன்று பிறந்ததுபோன்ற ஓர் உணர்வை புரு அடைந்தான்.

பிரவீரன் அவனிடம் “நான் ஜனமேஜயன் என்றார் சூதர்” என்றார். “ஆம், அந்தப்பெயரில் நீ முடிசூடக்கூடும். அல்லது உன் களவெற்றிக்குப்பென் அப்பெயர் தேடிவரக்கூடும்” என்றான் புரு. பிரவீரன் “தந்தையே, அது பிறிதொருவனின் பெயர் என நினைக்கிறேன். எனக்குள் அவன் நிகழ்வதே நான் என்று தோன்றுகிறது.” புரு புன்னகையுடன் “யார்?” என்றான்.

“நான் என் கனவில் இருகைகளாலும் அம்பெய்யும் சவ்யசாசியான வில்லவனாக தோன்றுகிறேன்” என்றான். “ஆம், அது இயல்பான எண்ணம்தானே?” என்றான் புரு. “அல்ல, அது நான் அல்ல. பிறிதொருவன். கரியநிறமும் ஒளிவிடும் விழிகளும் கொண்டவன். கிளிகளைப்போல தாவி காற்றிலெழும் சிற்றுடல் கொண்டவன்” என்றான் பிரவீரன். “அவனாக நான் இருக்கையில் முன்பு எப்போதோ இருந்தவன் என இப்பிரவீரனை எண்ணிக்கொள்கிறேன்.” புரு சிரித்தபடி மைந்தனின் குழலை வெறுமனே வருடினான்.

தேர்கள் காட்டின் விளிம்பை சென்றடைந்தன. வீரர்கள் படைக்கலங்களுடன் இறங்கி நின்றனர். புரு இறங்கியதும் பிரவீரனும் உடனிறங்கினான். அரசியும் சேடியும் இறங்கி ஆடை திருத்திக்கொண்டார்கள். ரௌத்ராஸ்வனை ஓர் ஏவலன் தூக்கி இறக்கியபோது அவன் விழித்துக்கொண்டு “நான் நடப்பேன்… நான் நடப்பேன்” என்றான். ஏவலன் அவனை கீழே இறக்க அவன் ஓடிவந்து புருவின் ஆடையை பற்றிக்கொண்டு “நான் நடப்பேன்” என்றான். “வருக” என்றான் புரு. ஈஸ்வரன் ஏவலன் ஒருவனின் கைபற்றி அரைத்துயிலில் என நடந்தான்.

அவர்கள் கால்நிரைப் பாதை வழியாக நடந்தனர். இருபுறமும் காடு அப்போதும் எஞ்சியிருந்த இருளுடன் இரவின் ஒலியுடன் சூழ்ந்திருந்தது. ஒரு கீரி குறுக்காக புல்கதிர்வாலை விடைத்து கடந்துசென்றது. அவர்களின் வரவை ஆட்காட்டிக்குருவி ஒன்று கூவியறிவித்தபடி தலைக்குமேல் தாவித்தாவி சுழன்றது. பின்னர் உச்சிக்கிளைக் குரங்கு ஒன்று குமுறத்தொடங்கியது. தொலைவில் குரங்குக்கூட்டம் காற்று கிளைகளை உலைத்துச் செல்வதுபோல பாய்ந்து அகன்றது.

அவர்கள் ஆலயத்தைச் சென்றடைந்தபோது அரசியும் சேடியும் மூச்சுவாங்கிக்கொண்டிருந்தனர். இலைநுனிஅரங்களும் முட்களும் கிழித்த கையை அரசி தூக்கி மெல்ல ஊதினாள். சேடி ஒரு மலரைப்பறித்துக் கசக்கி சாறை அக்கீறல்கள் மேல் பூசினாள். “செல்வோம்” என்றான் புரு. “அதுதான் ஆலயம்.” அது ஒரு பசும்பாசி படர்ந்த சிறிய பாறைபோலத்தான் தோன்றியது. அதன்மேல் வெற்றிலைபோல இலைகள் விரித்த கொடிகள் அடர்ந்திருந்தன. நூற்றுக்கணக்கான தலையாட்டல்கள்போல இலைகள் காற்றில் ஆடின.

முன்னரே வந்திருந்த ஏவலர் ஆலயத்தின் முற்றத்தை புல்செதுக்கி தூய்மை செய்திருந்தார்கள். விரிக்கப்பட்ட பாளைகளிலும் வாழையிலைகளிலும் பூசெய்கைப் பொருட்கள் பரப்பப்பட்டிருந்தன. முழவும் கொம்பும் குழலுமாக இசைச்சூதர்கள் வலப்பக்கம் காத்து நின்றிருந்தனர். ஈச்சையோலையாலும் மலர்களாலும் தோரணங்கள் கட்டப்பட்டு முகப்பு அணிசெய்யப்பட்டிருந்தது.

அவர்களைக் கண்டதும் முழவுகளும் கொம்புகளும் ஒலிக்கத் தொடங்கின. பறவைகள் கிளைகளுக்குமேலே பறந்து எழுந்து கலைந்தன. “கீரி… ஒரு கீரி ஓடுகிறது” என்றான் ரௌத்ராஸ்வன். “பேசாதே” என ஈஸ்வரன் அவனை அதட்டினான். பிரவீரன் “இது பூசெய்கை. ஒலி எழக்கூடாது” என இளையோரிடம் மெல்லியகுரலில் சொன்னான். கைசுட்டியபடி அதே குரலில் “கீரி” என்றான் ரௌத்ராஸ்வன்.

கோயில் முற்றத்தில் அவர்கள் சென்று நின்றதும் பூசகர் உள்ளிருந்து வந்து மரத்தாலத்தில் இருந்து நீறு அள்ளி அவர்கள் மேல் வீசி “அன்னையருள் பொழிக… நலம்சூழ்க!” என வாழ்த்தினார். முழவோசை அதிர்ந்துகொண்டே இருக்க சூழ்ந்திருந்த இலைகளெல்லாம் அதற்கேற்ப அசைவதாகத் தோன்றியது. குனிந்து அமர்ந்து நுழையவேண்டிய சிறிய கருவறை. அதற்குள் இரண்டுமுழ உயரத்தில் கரிய கற்சிலை நின்றுகொண்டிருந்தது. ஒவ்வொருமுறையில் என முதல்நோக்கில் அது நான்கு கைகள் கொண்ட அன்னை என்று தோன்றியது. பின்னர்தான் இரண்டு உடல்கள் இருபாதிகளென இணைந்த தோற்றம் அது என தெரிந்தது.

சுபகன் “அஸ்ருபிந்துமதி… இரட்டையன்னை என்றும் சொல்லப்படுவதுண்டு” என்றான். பூசகர் “வலக்கையில் அமுதகலம். இடக்கையில் கதிர்ப்படைக்கலம். விழிநீர்மணிமாலை சூடியிருக்கிறாள்” என்றார்.

புரு கைகூப்பி தொழுதான். பூசகர் உள்ளே சென்று தாலத்தில் ஏழு அகல்விளக்குகளை சுடருடன் எடுத்து வைத்து மணியோசையுடன் சுடராட்டு காட்டினார். அவன் செவ்வொளியில் எழுந்த இரட்டைமுகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். சுடர்த்தாலம் சுழன்றுவருவதற்கு ஏற்ப இரு முகங்களும் மாறிமாறி ஒளிகொண்டு அணைந்தன.

நூல் பதின்மூன்று – மாமலர் – 90

90. துலாநடனம்

புரு அரசகோலத்தில் வெளியே வந்தபோது சுபகன் வணங்கியபடி அணுகி “அனைவரும் சித்தமாக இருக்கிறார்கள், அரசே” என்றான். அவன் கைகூப்பியபடி வெளியே சென்றான். சுகிர்தரின் மைந்தரும் பேரமைச்சருமான பிரபாகரரும் பட்டத்தரசியும் மைந்தர்களும் அங்கே காத்து நின்றிருந்தனர். அவன் வருகையை நிமித்திகன் வெள்ளிக்கோல் தூக்கி அறிவித்ததும் பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. அவனைக் கண்டதும் மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. அவன் சென்று பிரபாகரரின் கால்களை பணிந்தான். “வெற்றியும் புகழும் பெருஞ்செல்வமும் குடிநிறைவும் அமைக!” என அவர் வாழ்த்தினார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அந்தணர் கங்கைநீர் தெளித்து வேதச்சொல் உரைத்து அவன்மேல் வாழ்த்து பொழிந்தனர்.

அவன் மைந்தரை நோக்கி கைநீட்ட போர்க்கூச்சலிட்டபடி ரௌத்ராஸ்வன் பாய்ந்து வந்து அவன் கைகளில் விழுந்தான். அவனை வாளால் வெட்டுவதுபோல நடித்தபடி துள்ளினான். புரு சிரித்தபடி மைந்தனை தூக்கிச் சுழற்றி அருகே நிறுத்திக்கொண்டான். ஈஸ்வரன் நாணச்சிரிப்புடன் அருகே வர அவனைப் பிடித்து மறுபக்கம் நிறுத்திக்கொண்டு அரசியை நோக்கி புன்னகைத்தான். அவள் “போதும், அரசணிகள் கலைகின்றன” என்றாள். சூழ்ந்து நின்றிருந்த காவலர்களும் பணியாளர்களும் பற்கள் மின்ன சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

ரௌத்ராஸ்வன் “நாம் கானாடவா செல்கிறோம், தந்தையே?” என்றான். “ஆம், கானாடுதலும் உண்டு” என்றான் புரு. பிரவீரன் இளையவர்களிடம் “உங்கள் தேர்கள் அப்பால் நின்றுள்ளன. வருக!” என்றான். ரௌத்ராஸ்வன் “இல்லை, நான் தந்தையிடம்தான் இருப்பேன்” என்றான். மூத்தவன் ஏதோ சினந்து சொல்ல வாயெடுக்க “இருக்கட்டும்… நாம் ஒரே தேரில் செல்வோம்…” என்றான் புரு. “நகர்விட்டு நீங்கியதும் தனித்தனி தேர்களில் ஏறிக்கொள்வோம்.” சுபகன் நகைத்து “இன்று சோமாஸ்கந்தரை நோக்கும் நல்லூழ் அமைந்துள்ளது நம் குடிகளுக்கு” என்றான்.

அவர்கள் தேரில் ஏறிக்கொண்டனர். ரௌத்ராஸ்வன் அன்னையின் மடியில் அமர புருவின் மடியில் ஈஸ்வரன் அமர்ந்தான். பிரவீரன் அவர்களுக்குப் பின்னால் நின்றான். தேர் அரண்மனை முற்றத்திலிருந்து எழுந்து அரசப்பெருஞ்சாலையை அடைந்ததும் அதை காத்து நின்றிருந்த குடிகளின் வாழ்த்தொலிகளும் மலர்ப்பொழிவும் அவர்களை சூழ்ந்துகொண்டன. மைந்தர்களுடன் அவன் தோன்றியது கண்டு பெண்கள் உவகையுடன் கூச்சலிட்டனர். ரௌத்ராஸ்வன் நாணி கைகளால் முகத்தை மறைத்துக்கொள்ள புரு அவன் கைகளைப் பற்றி விலக்கினான். அவன் திரும்பி அன்னையின் மார்புக்குள் முகம் புதைத்தான்.

கோட்டைவாயிலைக் கடந்ததும் ஈஸ்வரன் “நாம் எங்கு செல்கிறோம், தந்தையே?” என்றான். “அன்னையின் சோலைக்கு. இது அன்னைக்கு நாம் மலர்க்கொடை அளிக்கும் நாள்” என்றாள் பௌஷ்டை. “நாம் இதுவரை அங்கு சென்றதில்லையா?” என்றான் ஈஸ்வரன். “நீங்கள் இருவரும் சென்றதில்லை. நான் சென்றிருக்கிறேன்” என்றான் பிரவீரன். ஈஸ்வரன் “அங்குதான் நம் பேரன்னை உறைகிறாரா?” என்றான். புரு “ஆம்” என்றான்.

tigerகுருநகரியைவிட்டு விலகிச்சென்ற புரு சுகிர்தவனம் என்னும் காட்டில் மாணவர்களுடன் வாழ்ந்த யதாவாசர் என்னும் முனிவருடன் தங்கினான். அவனுக்கென அமைந்த சிறுகுடிலில் நெறிநூல்களையும் மெய்நூல்களையும் கற்றும் காட்டில் காய்கனி தேடி அலைந்தும் வாழ்ந்தான். அங்கிருந்த ஏழாண்டுகளும் அவன் சொல்லொறுப்பு நோன்பு கொண்டிருந்தான். அங்கே அவன் எவரென பிற மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. உடல்தளர்ந்த ஷத்ரிய முதியவர் ஒருவர் இறுதிக் கான்கடனுக்காக வந்திருப்பதாகவே எண்ணினர். பேசாதவனை பிறர் காணாமலுமாகிறார்கள். ஓரிரு ஆண்டுகளுக்குள் அங்கே ஒருவர் வாழ்வதையே அங்குள்ள மாணவர்கள் மறந்தனர்.

ஏழாண்டுகளுக்குப்பின் அவனைத் தேடி சுகிர்தரின் ஒற்றன் வந்தான். “இளவரசே, அரசர் அரண்மனைக்கு வரப்போகிறார். உங்களுக்கு இளமையை மீட்டளிக்கவிருக்கிறார். உங்களை அழைத்துவரும்படி அமைச்சரின் ஆணை” என்றான். அரசஒற்றனையும் அவன் சொல்லையும் முதலில் அவனால் அறியமுடியவில்லை. அவன் இறந்தகாலம் அவனால் புனையப்பட்ட ஒளிமிக்க கனவுகளாக உள்ளே இருந்தது. அதில் அளிநிறைந்த விழிகளுடன் அவன் அன்னையும், பருவங்களை மாறிமாறி அணிந்துபொலியும் அசோகவனியின் மரங்களும், இளவெயிலும் நிலவொளியும் முழுக்காட்டிய அதன் சிறுதெருக்களும், முள்மரக்கோட்டையும், புழுதிச்சாலையும், அசோகச்சோலையின் குளிரும் மட்டுமே இருந்தன. அங்கே இன்பங்களனைத்தும் துளிபெருகி ஆறாகியிருந்தன. துன்பங்கள் அவ்வின்பங்களுக்கு எதிர்ச்சுவை அமைக்கும் தலைகீழ் இன்பங்களென உருமாறிவிட்டிருந்தன.

முதுமைக்கு உகந்தவகையில் மாற்றமில்லாத எளிய அன்றாடச் செயல்களை அவன் அமைத்துக்கொண்டிருந்தான். காலைநீராட்டு முதல் இரவின் நூல்நோக்குதலும் துயிலுதலும் வரை ஒவ்வொன்றும் இயல்பாகவே நிகழ்ந்தன. அந்த அன்றாடத்தின் மாறா ஒழுக்கு அவன் எண்ணங்களையும் பிறழா வழிவென்றாக்கியது. புதியன எதுவும் நிகழாதபோது பழையன புதியவையாகி வந்து நடித்தன. ஆகவே ஒவ்வொரு நினைவுக்கும் பலநூறு வடிவங்கள் எழுந்து மெய்யென்ன மயக்கென்ன என்னும் எல்லைகள் முற்றழிந்தன. அங்கே அவனை யயாதி தன் வலிய கைகளால் தழுவினார். கானாடவும் நீர்விளையாடவும் கொண்டுசென்றார். புரவியும் களிறும் பயிற்றுவித்தார். படைக்கலம் ஏந்தி அவன் அவருடன் களிப்போராடி சிரித்தான். உடன்பிறந்தாருடன் கூடி விளையாடினான். நிலவொளியில் சோலைமுற்றத்தில் அமர்ந்து உணவுண்டான். சொல்லாடி மகிழ்ந்தபின் குளிரில் அன்னையின் உடலுடன் ஒட்டிக்கொண்டு விழிமயங்கினான்.

அவ்வுலகில் ஒற்றனின் வருகை அலைகளை கிளப்பி நிலைகுலையச் செய்தது. புறச்சொற்களுக்கு அவன் உலகில் பொருளேதும் இருக்கவில்லை.  புரிந்துகொள்ளாமலேயே ஆம் ஆம் என்று தலையசைத்தான். அவன் நெஞ்சிலிருந்து எண்ணம் சொல்லாக மாற மிகவும் பிந்தியது. மூச்சை வந்து தயங்கியபடி தொட்ட எண்ணம் ‘இதுவா? இதைக்கொண்டா?’ என திகைத்தது. பின் மெல்ல மூச்சை அளைத்து பிடி அள்ளி அதை வனைந்து சொல்லாக்கி நாவில் அமைத்தது . “யார் நீங்கள்?” என்றான் புரு. அச்சொல்லைக் கேட்டு அவன் செவி திடுக்கிட்டது. முதியகுரல், அவன் கேட்டறியாதது. “நான் குருநகரியின் ஒற்றன் மந்தன். சுகிர்தரின் செய்தியுடன் வந்தவன்” என்றான் ஒற்றன். “ஆம்” என்றான் புரு.

மீண்டும் புரியாமல் “என்ன?” என்றான். மிக மெல்லத்தான் அவனால் உளம்குவிந்து அச்செய்தியை அடையமுடிந்தது. ஒற்றன் ஒலிமங்கிய அவன் செவியில் மீண்டும் மீண்டும் அச்செய்தியை கூவினான். “என்ன?” என்று அவன் கேட்டுக்கொண்டே இருந்தான். செய்தியை புரிந்துகொண்டதும் அவன் தலை ஆடத்தொடங்கியது. கைகளை நெஞ்சோடு சேர்த்து நரைத்த தாடிமேல் விழிநீர் வழிய விம்மி அழத்தொடங்கினான். யதாவாசரின் மாணவர்கள் அவன் தோளைப்பற்றி தேற்றினர். அனைத்துக்கும் இறுதியில் எஞ்சுவது அழுகையாகவே இருந்தது. துயரற்ற அழுகை. அல்லது அறியாப் பெருந்துயர் ஒன்றின் அழுகை.

ஏழாண்டுகளில் இளமையை அவன் மறந்துவிட்டிருந்தான். உடல் உணர்ந்த முதுமை உள்ளத்தையும் அவ்வாறே ஆக்கிவிட்டிருந்தது. நடையில் அமர்வில் துயிலில் விழிப்பில் உடல் கொண்ட முதுமை எண்ணங்களாக உணர்வுகளாக தன்னிலையாக மாறியிருந்தது. “உள்ளமென்பது உடலின் நுண்வடிவு” என்று யதாவாசர் அவனிடம் சொன்னார். “உன் உள்ளம் முதுமைகொள்கையில் புதிய ஓர் உலகை அறியத் தொடங்குவாய். அங்கு நீ அறிவதை மீண்டு சென்று இளமையில் செயலாக்க முடியுமென்பதே உன் பேறு.” அவன் தலையசைத்தான். “அவ்வாறு முதுமையின் உலகொன்றை நீ உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் உன் தளர்ந்த உடல் அதில் வாழவும் இயலாது” என்றார் யதாவாசர்.

tigerகுருநகரியை அவன் அதற்கு முன் பார்த்திருக்கவில்லை. எனவே புழுதியலை படிந்த பெருஞ்சாலைக்கு அப்பாலெழுந்த கரிய கோட்டைவாயிலும் பெருமுற்றமும் பிரிந்து சென்ற சாலைகளில் ஒழுகிய வண்டிகளும் விலங்குகளும் மக்களும் மாடநிரையும் காவல்கோட்டங்களும் அவனுக்கு பெருந்திகைப்பை அளித்தன. அவ்வுணர்வெழுச்சியை அவன் உள்ளத்தால் தாளமுடியாமலானபோது முதுமைக்குரிய வகையில் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு உளமொதுக்கி உடல்சுருக்கி தேர்த்தட்டில் துயிலத் தொடங்கினான்.

அரண்மனை முற்றத்தில் தேர் நின்றபோது விழித்துக்கொண்டான். அமைச்சர் சுகிர்தர் தேர் அருகே வந்து “வருக இளவரசே, அரண்மனை தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றார். “யார்?” என்று அவன் பதறியபடி கேட்டான். இளமையின் கனவில் அலைவது அறுபட்டமையால் இடம் துலங்காமல் “யார்? என்ன?” என்றான். சுகிர்தர் “நான் அமைச்சர் சுகிர்தர். தங்களை வரவேற்க இங்கு நின்றுள்ளோம்… வருக!” என்றார்.

அமைச்சரின் கைபற்றி நடந்து படியேறுகையில் அவன் கால்கள் நடுங்கின. ஒவ்வொரு படியிலும் இரு கால்களையும் ஊன்றி நின்று மேலேறிச்சென்று பெருங்கூடத்தில் நின்று அண்ணாந்து அதன் குடைவுக்கூரையை நோக்கினான். நீர்மருதமரங்கள்போல திரண்டு காலூன்றி நின்ற தூண்களின் வலிமையை மெல்ல கைகளால் தொட்டுத்தொட்டு உணர்ந்தான். ஊன்றி நிலைத்தவற்றை உறுதியுடன் அசைவனவற்றை இளமைநிறைந்தவற்றைத் தொட அவன் எப்போதும் விழைந்தான். “தந்தை வந்திருக்கிறார், அரசே” என்றார் சுகிர்தர். “தங்களுக்காக காத்திருக்கிறார்.” அவன் பழுத்த விழிகளால் நோக்கி “யார்?” என்றான். அவர் மீண்டும் சொன்னபோதுதான் புரிந்துகொண்டான்.

“என்னால் படி ஏறமுடியாது” என்றபடி அவன் பீடத்தை நோக்கிச் செல்ல கைகாட்டினான். பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டதும் உடலுக்குள் எலும்புகள் இறுக்கமழிந்து மெல்லிய உளைச்சல்கொண்டன. நிமிர்ந்த கூன்முதுகை மீண்டும் தளர்த்தி நிலம்நோக்க முகம் குனித்து “நான் சற்று படுக்கவேண்டும்” என்றான். அமைச்சர் சொன்னவை மறந்துவிட்டிருக்க அவர் முகத்தை நோக்கி அங்கிருந்த உணர்ச்சிகளைக் கண்டு அவர் என்ன சொல்லியிருக்கக் கூடும் என உய்த்துணர முயன்று தோற்று பொதுவாக புன்னகை செய்தான்.

ஏவலர் இன்னீர் கொண்டுவந்தனர். அதை கண்டதும்தான் விடாய் எழுந்திருப்பது நினைவுக்கு வந்தது. உடலெங்கும் எரிந்த வெம்மை அதனால்தானா என வியந்தபடி எடுத்து ஆவலுடன் அருந்தினான். கைநடுங்க வாய் கோணலாக மூச்சு தடுக்க அதை குடித்தபோது ததும்பி தாடியிலும் ஆடையிலும் சிந்தியது. கோப்பையை ஏவலன் வாங்கிக்கொண்டபோது அவனை நோக்கி புன்னகை செய்தபின் “அஷ்டகர் சமித்துக்கு சென்றுவிட்டாரா?” என்றான். அவன் வியப்புடன் நோக்க “நானும் செல்லவேண்டும். வெயிலெழுந்துவிட்டது” என்றான்.

சுகிர்தர் திகைத்து நின்ற ஏவலனிடம் விலகிச் செல்லும்படி விழிகாட்டினார். அவன் அகன்றபின் “சற்றுநேரம்… இதோ சேக்கறைக்குச் செல்லலாம்” என்றார். காலடியோசை ஒலிக்க பார்க்கவன் படிகளில் இறங்கி வந்தார். அமைச்சர் “தங்கள் தந்தையின் அணுக்கர் பார்க்கவர். அரசர் கானேகியபோது அவர் மீண்டுவருவதற்காகக் காத்து காட்டின் விளிம்பிலேயே ஏழு ஆண்டுகள் தானும் தங்கியிருந்தார். தந்தை வந்தபோது உடன் வந்தார்” என்றார். அவன் திரும்பி நோக்கியபோது நினைவின் ஆழத்திலிருந்து மங்கலாக பார்க்கவனின் முகம் எழுந்துவந்தது. “ஆம்” என்றான்.

அது அவன் எதையும் உணராதபோது பொதுவாகச் சொல்வது. அவன் உள்ளம் மீண்டும் பின்னால் செல்லத் தொடங்கியிருந்தது. நிகழ்காலம் சிடுக்காக இசைவற்றதாகத் தோன்றியது. அதில் உழலும் துயரை விலக்கி மீண்டும் தன் இனிய இறந்தகாலக் கனவுகளுக்குள் புகுந்துவிட உள்ளம் ஏங்கியது. “நான் சற்று ஓய்வெடுக்கவேண்டும்” என்றான். சுகிர்தர் பார்க்கவனிடம் “மேலே ஏறமுடியாது என நினைக்கிறேன். தளர்ந்திருக்கிறார். அரசர் கீழே வந்து இவரை சந்திப்பதே நன்று” என்றார். பார்க்கவன் அவனை நோக்கியபின் விழிதிருப்பிக்கொண்டு “நான் சென்று சொல்கிறேன்” என்றார்.

அவன் பார்க்கவனிடம் “உச்சிவெயில்போல் வெம்மைகொண்டிருக்கிறது இந்த பின்காலை” என்றான். அவரால் அவனை விழிநாட்டி நோக்க இயலவில்லை. அவர் சென்றதும் அவன் ஏப்பம் விட்டு கால்களை நீட்டி கைகளை கைப்பிடிகள்மேல் தளரவைத்து அமர்ந்தான். வெளியே காற்று ஓடும் ஓசை கேட்டது. அது இனிமை ஒன்றை நினைவிலெழுப்பியது. இனிமையே நினைவை கொண்டுவந்தது. அவன் அன்னையுடன் சோலைக்குள் சென்றுகொண்டிருந்தான். தொலைவில் ஓர் அசைவு. மான் ஒன்று சிலிர்த்து செவிகோட்டியது. எங்கோ ஒரு குயிலின் ஓசை. மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சொல்லச்சொல்ல அதன் மன்றாட்டின் அழுத்தம் ஏறிவந்தது.

தலை நெஞ்சில் படிய அவன் துயின்றுவிட்டிருந்தான். படிகளில் குறடணிந்த இருவர் இறங்கிவரும் ஓசை கேட்டது. “இளவரசே!” என்று சுகிர்தர் அழைத்தார். அவன் திடுக்கிட்டு விழித்து ஓரம்வழிந்த வாயைத் துடைத்தபின் நிமிர்ந்து நோக்கி “யார்?” என்றான். “தங்கள் தந்தை” என்றார் சுகிர்தர். “யார்? என்ன?” என்றான். “தந்தை… அரசர்… எழுந்து நில்லுங்கள்!” அவனால் எழமுடியவில்லை. கால்கள் செயலற்று உறைந்திருந்தன. வெளியே குயில் மன்றாடிக்கொண்டிருந்தது. அவன் “ஆம், ஆம்” என எழ முயன்றாலும் உடல் விசைகொள்ளவில்லை.

யயாதி அப்போதுதான் அவனை பார்த்தார். விழிகளில் திகைப்பு தோன்ற இரு கைகளும் பொருத்தமில்லாமல் எழுந்து எதையோ விலக்குவனபோல முன்னால் வந்தன. பின் உடையில் உரசி ஒலியுடன் தளர்ந்து இரு பக்கமும் விழுந்தன. சுகிர்தர் “களைத்திருக்கிறார்” என்றபின் “எழுக, இளவரசே!” என்றார். “வேண்டாம், அவர் இப்போது முதியவர்” என்ற யயாதி அருகே வந்து நிலம்படிய விழுந்து வணங்கி “வாழ்த்துங்கள், மூதாதையே!” என்றார். அவன் திகைத்தபின் “யார்? என்ன?” என்று சுகிர்தரிடம் கேட்டான். “வாழ்த்துங்கள்… வாழ்த்துங்கள்” என்றார் சுகிர்தர். “யார்?” என்றான் புரு. “வாழ்த்துங்கள்… வாழ்த்து வாழ்த்து” என சுகிர்தர் கூவினார்.

அந்தக் குரலின் விசையால் உளமழிந்து புரு தலை ஆட தாடை தொங்கி வாய் திறந்திருக்க உறைந்தான். சுகிர்தர் குனிந்து கைகளை கீழே கிடந்த யயாதியின் தலைமேல் வைத்து “வாழ்த்துக!” என்றார். புரு “நெடுவாழ்வும் வாழ்புகழும் அமைக!” என வாழ்த்தினான். யயாதி எழுந்து கைகூப்பி “என் பிழைகளனைத்தையும் பொறுத்தருள்க… பிறிதெவரிடமும் நான் இதை கேட்கவியலாது” என்றார். அவர் முகத்தை நோக்கியபின் எவரென்று புரிந்துகொள்ளாமல் புரு அந்தப் பொதுவான புன்னகையை அளித்தான். யயாதி விழிநீர் மல்கி பின் கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பி பார்க்கவனிடம் “பைதல்களுக்குரிய சிரிப்பு” என்றார். பார்க்கவனும் விழியீரத்துடன் புன்னகைத்தார்.

மீண்டும் புருவை நோக்கியபின் “நான் கொள்ளவிருக்கும் உடல்… இவ்வுடலுக்குள் நிறைக்கவேண்டிய நிறைவை நான் எய்தியிருக்கிறேன். துறவையும் மெய்மையையும் பணிவையும் இதில் அமர்ந்து அடைவேன்” என்றார். “ஏதேனும் முறைமையோ சடங்கோ செய்யவேண்டும் என்றால்…” என பார்க்கவன் சொல்ல “ஏதுமில்லை. இதோ, இங்கிருந்தே என் முதுமையை பெற்றபின் படியிறங்கவேண்டியதுதான்” என்றார் யயாதி. அமைச்சரிடம் அவர் “நீர்” என்று சொல்ல அமைச்சர் திரும்பி ஏவலனிடம் கைகாட்டினார். அவன் வால்குடுவையில் நீருடன் வந்தான்.

யயாதி அதை வாங்கிக்கொண்டு புருவிடம் “எழுந்து தங்கள் கைகளை காட்டுக, தந்தையே!” என்றார். அதற்குள் அங்கிருந்து உளம்விலகிவிட்டிருந்த புரு “என் உடல் வலிக்கிறது. நெடுநேரம் அமர்ந்திருக்க என்னால் இயலாது” என்றான். “கைகளை நீட்டுங்கள்” என்றார் யயாதி. “என்ன?” என்று புரு சுகிர்தரிடம் கேட்டான். அமைச்சர் குனிந்து அவன் கைகளைப்பற்றி ஏந்துவதுபோல காட்டினார். யயாதி நுண்சொல்லை உதடசைவால் சொன்னபடி நீரூற்றினார். மீண்டும் குனிந்து புருவின் கால்களை வணங்கினார். நிலத்திலிருந்து எழும்போதே அவர் உடல் தளரத் தொடங்கியிருந்தது. பார்க்கவன் அவரை பிடித்து மெல்ல தூக்கியபோது முனகியபடி “மெல்ல…” என்றார். எலும்புகள் இணைப்பு தளர்ந்து உடல் நடுக்கம் கொண்டிருந்தது. கழுத்தில் தசைகள் நீர்நனைந்த சேற்றுச் சிற்பமென ஊறி நெகிழ்ந்து தொய்ந்து வளையத் தொடங்கின.

பார்க்கவன் அவரை பீடத்தில் அமரச்செய்தார். காலநாழியிலிருந்து மணல் ஒழிவதுபோல புருவின் உடலில் இருந்து முதுமை வழிந்து யயாதியை நிறைத்துக்கொண்டிருந்தது. யயாதி மெல்ல தளர்ந்து கைகளைக் கோத்தபடி சிறுதுயிலில் ஆழ்ந்தார். நரைதாடியும் முடியும் நீண்டன. தசைகள் வற்றிச் சுருங்கி நரம்புகள் புழுக்களைப்போல எழுந்து உடல் முதுமைகொண்டபடியே இருந்தது. அனலில் விழுந்த இலையெனச் சுருங்கி கருகி அவர் உருமாறுவதையே அனைவரும் நோக்கிக்கொண்டிருந்தனர்.

பீடத்தில் இருந்து எழுந்த புரு “தந்தையல்லவா அவர்?” என்று கூவியபோது அனைவரும் திரும்பி நோக்கினர். அவன் இளைஞனாக மாறிவிட்டிருந்தான். “ஆம், தங்களிடமிருந்து முதுமையை பெற்றுக்கொண்டுவிட்டிருக்கிறார்” என்றார் சுகிர்தர். “நான் அதை அவருக்கு அளிக்கலாகாதென்று எண்ணியிருந்தேன்… அது நான் எந்தைக்கு அளிக்கும் கொடை” என்றான் புரு. “இளவரசே, உங்களுக்காக நாடும் குடியும் காத்திருக்கின்றன. தந்தை உங்கள் பொறுப்பையும் நெறியையும் ஆணையிட்டிருக்கிறார்” என்றார் பார்க்கவன்.

புரு யயாதியை நோக்கிக்கொண்டிருந்தபின் திரும்பி சுகிர்தரிடம் “நான் இப்படித்தான் இருந்தேனா?” என்றான். “ஆம், சற்றுமுன்புவரை” என்றார் சுகிர்தர். “காலம் அவரை இத்தோற்றம் நோக்கி தள்ளிக்கொண்டு செல்கிறது, இளவரசே.” அவன் கைகூப்பி “என் மூதாதையரின் வடிவம்” என்றான். நிலம்படிய விழுந்து அவரை வணங்க அவர் விழித்து “யார்?” என்றார். “தங்கள் மைந்தர், வாழ்த்துக அரசே!” என்றார் சுகிர்தர். யயாதி “யார்? என்ன?” என்றார். “வாழ்த்துக… வாழ்த்துக!” என்று கூவினார் சுகிர்தர். பார்க்கவன் அவர் கையை எடுத்து புருவின் தலையில் வைக்க அவர் “நெடுவாழ்வும் அழியாப் புகழும் குன்றாச் செல்வமும் பெருகும் குடியும் எஞ்சும் உவகையும் அமைக!” என்றார்.

புரு எழுந்து கைகூப்பியபடி நின்றான். “அரசே, நாம் கிளம்பவேண்டும்” என்றார் பார்க்கவன். “ஆம், இங்கிருந்தே கிளம்பவேண்டும் என்று சொன்னேன் அல்லவா?” என்றார் யயாதி. புரு “தேர் சித்தமாகியிருக்கிறதா?” என்று சுகிர்தரிடம் கேட்டான். “முற்றத்தில் நின்றுள்ளது. அவர்கள் வந்த தேர்தான் அது” என்றார் சுகிர்தர். “திரும்பி நோக்காமல், ஒரு சொல்லும் எஞ்சாமல்” என்ற யயாதி புன்னகைத்து “நன்று, என்னால் அவ்வண்ணம் இறங்கிச்செல்ல இயலும் என்பது அளிக்கும் உவகை பெரிது” என்றார்.

பார்க்கவன் அவர் கைகளை பற்றிக்கொள்ள முனகியபடி மெல்ல எழுந்து நடந்தார். அமைச்சரும் பிறரும் தொழுதபடி உடன் செல்ல முற்றத்திற்குச் சென்று பார்க்கவனின் தோளைப்பற்றியபடி படிகளில் மெல்ல ஏறி மூச்சிரைத்து ஒருகணம் நின்று நெஞ்சத்துடிப்பை ஆற்றிய பின்னர் மெல்ல ஏறி பீடத்தில் அமர்ந்தார். திரைமூடியதும் அவர் முகம் மறைந்தது. பாகன் சவுக்கால் தொட புரவிகள் விழித்தெழுந்து கால்தூக்கின.

tigerபுருவின் முடிசூட்டுவிழவை உடனே நிகழ்த்திவிடவேண்டும் என்று சுகிர்தர் சொன்னார். “ஏழாண்டுகாலம் இங்கிருந்து முடியையும் கோலையும் புரந்திருக்கிறேன், இளவரசே. என் நாவால் எவருக்கும் எத்தண்டனையும் அளிக்கவில்லை. ஆயினும் இக்கோலின்பொருட்டு நிகழ்ந்தவை அனைத்துக்கும் சொல்முடிவே அடிப்படை என்பதனால் இதன் பழியிலிருந்து என்னால் தப்பமுடியாது. அந்தணர் ஆட்சியும் போரும் வணிகமும் வேளாண்மையும் செய்யலாகாது. ஏனென்றால் கொலையும் கரவும் பிறர்விழிநீரும் இன்றி அவற்றை ஆற்ற இயலாது. நான் எனக்கும் என் மூதாதையருக்கும் பழியை ஈட்டியிருக்கிறேன். எஞ்சிய நாட்கள் காட்டில் தவமியற்றி அதை நிகர்செய்தபின்னரே நான் விண்ணேகவேண்டும்.”

“நான் என் அன்னையை பார்க்கவேண்டும்” என்றான் புரு. “அவர்கள் எனக்கிடும் ஆணை என்ன என்று அறிந்தபின்னர் மட்டுமே நான் முடிசூட முடியும்.” சுகிர்தர் “அவர்கள் நீங்கள் அகன்ற அன்றே அசோகநகரியிலிருந்து வெளியேறி கோட்டைக்கு வெளியே காட்டுக்குள் குடில் ஒன்றைக் கட்டி அங்கே தனித்து குடியிருக்கிறார்கள். எவரும் சென்று நோக்க ஒப்புதலில்லை என்றார்கள்” என்றார். “நான் சென்று பார்க்கிறேன்” என்று புரு கிளம்பிச் சென்றான்.

அசோகவனியின் கோட்டைமுகப்புக்குச் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து வளைந்து காட்டுக்குள் நுழைந்த தொடர்கால் பாதையின் எல்லையில் இருந்தது அச்சிறியகுடில். புரு தன்னுடன் வந்தவர்களை காட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு கை கூப்பியபடி தனியாக சென்றான். குடிலை அணுகி அதன் வாயிலில் கைகள் கூப்பியபடியே இருக்க நின்றிருந்தான். குரலெழுப்பவில்லை. இரண்டுநாழிகைக்குப் பின்னர் வெளியே வந்த கோழி ஒன்று அவனைக் கண்டு குரலெழுப்ப உள்ளிருந்து எட்டிப்பார்த்த முதியவளை முதலில் அவனால் அடையாளம் காணமுடியவில்லை. அறிந்ததும் உளம் அதிர “அன்னையே…” என்றான்.

சர்மிஷ்டையின் முடி முற்றாக நரைத்திருந்தது. கடும் நோன்பால் உடல் வற்றி உலர்ந்து மட்கும் மரம்போலிருந்தது. இருகுழிகளுக்குள் விழிகள். கன்னங்களின் ஆழ்ந்த குழிகள் பற்களுடன் வாயை முன்னுந்தச் செய்திருந்தன. அவள் உடனே அவனை அடையாளம் கண்டுகொண்டதை விழிகள் காட்டின. அவனை நிலைத்த விழிகளால் நோக்கி சிலகணங்கள் நின்றபின் “உள்ளே வா” என்றாள். அவன் கைகள் கூப்பியிருக்க குடிலுக்குள் சென்றான்.

ஒருவர் மட்டும் படுக்குமளவுக்கு இடம்கொண்ட அக்குடில் ஒரு கூடை போலிருந்தது. ஈச்சையோலைக் கூரையினூடாக வந்த ஒளிச்சரடுகள் சருகுமெத்தையிடப்பட்ட மண்தரையில் ஊன்றி வெள்ளிவட்டங்களாக சுடர்ந்தன. அவள் அமர்ந்ததும் அவன் அவள் கால்களில் விழுந்து வணங்கினான். “புகழ் சூடுக! வெற்றியும் குடிப்பெருக்கும் அமைக!” என அவள் வாழ்த்தினாள். “நான் உங்கள் சொல்பெற்றுச் செல்ல வந்துள்ளேன், அன்னையே” என்றான். “நான் எவருக்கும் அன்னை அல்ல” என்றாள் சர்மிஷ்டை. ‘நெடுந்தொலைவு வந்துவிட்டேன். எஞ்சியிருப்பது ஒன்றே. அதை உன்னிடம் கோருகிறேன், குருநகரியின் அரசனாக.”

“ஆணையிடுங்கள்” என்றான் புரு. “என்னை சுக்ரரின் மகள் வாழும் தவச்சாலைக்கு அழைத்துச்செல்க!” என்றாள். அவன் உள்ளம் நடுங்கியது. அவன் ஒன்றும் சொல்லாததை உணர்ந்து அவள் “ம்?” என்றாள். “ஆணை! நாளையே அனைத்தையும் ஒருக்குகிறேன்” என்றான். “நீயன்றி எவரும் உடன்வரவேண்டியதில்லை. எந்த முறைமையும் நிகழலாகாது” என்றாள் சர்மிஷ்டை. “ஆம்” என்றான் புரு. மூத்த அன்னையிடம் ஒப்புதல் கோரவேண்டாமா என்று கேட்க நாவெடுத்து அடக்கினான். ஒப்புதல்கோரி செல்வது ஒருவேளை நிகழாமலேயே நின்றுவிடும் என்று தோன்றியது.

நூல் பதின்மூன்று – மாமலர் – 89

89. வேர்விளையாடல்

முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே சுரண்டி உண்ணத்தொடங்கினான். அவன் கிளைதாவிய அசைவில் விழிப்புகொண்ட பீமன் முதற்கணம் அவனை குரங்கென்றே உணர்ந்தான். எழுந்து கொண்டு “கனிந்துள்ளனவா?” என்றான். “ஆம், பசிக்கிறது” என்றபின் அவன் தாவி நிலத்தில் விழுந்து அணுகி கையிலிருந்த கனிகளை அளித்தான்.

பீமன் அவற்றை வாங்கி உண்டபின் “அஸ்ருபிந்துமதியின் கதையை நான் கேட்டுள்ளேன்” என்றான். “விழிநீர்மகள். ஒவ்வொருவருக்கும் அவ்வண்ணம் ஒருத்தி உண்டு என்பார்கள் கவிஞர். அவளையே பிற பெண்களிடம் மானுடர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடைகிறார்கள். பின்னர் சொல்லிச் சொல்லி தங்களை தேற்றிக்கொண்டு இவளே என்றும் இவ்வளவே என்றும் நிறைவுகொள்கிறார்கள். அது நிறைவல்ல என பின்னர் அறிகிறார்கள். அப்போது வாழ்க்கை சென்றுவிட்டிருக்கும். முன்னோக்கிச் செல்லும் உள்ளமும் இல்லாமலாகிவிட்டிருக்கும். பின்னால் நோக்கவும் அடைந்தவற்றையும் இழந்தவற்றையும் எண்ணி எண்ணி ஏங்கவுமே பொழுதிருக்கும்” என்றான் முண்டன்.

“யயாதி என்னவானார்?” என்றான் பீமன். “கதைகளின்படி அவர் ஆயிரமாண்டுகாலம் காட்டில் அஸ்ருபிந்துமதியுடன் காமத்திலாடினார். காமநிறைவடைந்தபின்னர் குருநகரிக்கு மீண்டு தன் இளைய மைந்தன் புருவை அழைத்து அவன் இளமையை திருப்பியளித்து அவனை அரசனாக ஆக்கினார். முதுமைசூடியபின் மீண்டும் காடேகினார். பிருகுதுங்கம் என்னும் மலையை அடைந்து அங்கே ஏழு குகைகளில் வாழ்ந்த சப்தசிருங்கர்கள் என்னும் முனிவர்களுடன் வாழ்ந்து மெய்யுணர்ந்து உடல் உதிர்த்து விண்புகுந்தார்.”

“பிருகுதுங்கத்தில் தன்னைத் தேடிவந்த முனிவர்களுக்கு மாமன்னர் யயாதி உரைத்த நெறிகளும் மெய்யறிவுகளும் யயாதிசூக்தங்கள் என்னும் பேரில் மூன்று தொகுதிகளாக முனிவர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. இன்றும் அவை அரசுசூழ்தலுக்கான நூல்களாக பயிலப்படுகின்றன” என்றான் முண்டன். பீமன் நிறைவில்லாதவனாக கைகளை நக்கியபின் “நான் விழைவது பிறிதொன்று” என்றான். “அவர் அறிந்த மெய்யறிதல்களால் என்ன பயன்? அதைப்போன்ற பலநூறு மெய்யறிதல்கள் சேர்ந்து பெரும் சொற்குவையாக நம் தலைக்குமேல் உள்ளன. மூத்தவர் அவற்றை நாள்தோறும் பயின்று தன்னை எடைமிக்கவராக ஆக்கிக்கொள்கிறார்.”

“நீங்கள் அறியவிழைவதுதான் என்ன?” என்றான் முண்டன். “அவர் மீண்டும் தன் தேவியரை சந்தித்தாரா?” என்றான் பீமன். “அவர்களுடனான உறவை அவர் எப்படி அறுத்துக்கொண்டார்?” முண்டன் “அதை நான் சொல்லமுடியாது. தொடக்கம் முதலே இக்கதைப்பெருக்கில் வினாக்களே திரண்டெழுகின்றன” என்றான். “ஆம், அன்னையர் அவரை எப்படி ஒரே கணத்தில் அறுத்துக்கொண்டார்கள்? அவர்களில் அவர் எவ்வண்ணமேனும் எஞ்சினாரா?” என்றான் பீமன். “அவ்வாறு முற்றிலும் தன்னிலிருந்து தன் ஆண்மகனை அகற்றிவிட பெண்களால் இயலுமா?”

முண்டன் புன்னகை புரிந்து பேசாமலிருந்தான். பீமன் ஆற்றாமையுடன் கைகளை விரித்து “தனக்கு மட்டுமே என்றும் தனக்கில்லையென்றால் முற்றழியவேண்டும் என்றும் எண்ணுவது எப்படி மெய்யன்பாக இருக்கவியலும்? தம் மைந்தன் என்றால் இவ்வண்ணம் நடந்துகொண்டிருப்பார்களா?” என்றான். முண்டன் “இத்தகைய பலநூறு வினாக்களின் தொகையை சுமையெனக்கொண்டே ஒவ்வொருவரும் வாழ்க்கையை முடிக்கிறார்கள்” என்றான். பீமன் தன்னுள் மூழ்கி நெடுநேரம் அமர்ந்தபின் “தாயின் உறவன்றி உறவென்று வேறேதும் உண்டா இப்புவியில்?” என்றான். முண்டன் சிரித்து “அது ஒன்று எஞ்சியுள்ளது உங்களுக்கு, நன்று” என்றான்.

“என் வினாக்களுடன் நான் இங்கிருந்து எழமுடியாது” என்றான் பீமன். திரும்பி கருவறைக்குள் அமர்ந்திருந்த தேவயானியை நோக்கியபின் “அவரிடம் நான் அனைத்தையும் உசாவியாகவேண்டும்” என்றான். “நீங்கள் சென்றகாலத்திற்குள் செல்லவேண்டுமா?” என்று முண்டன் கேட்டான். “ஆம், அங்கே நான் யார் என்று அறிந்தாகவேண்டும்.” முண்டன் தன் முகத்தருகே பறந்த ஒரு இறகுப்பிசிறை நோக்கியபின் “இதை நோக்குக, இளவரசே” என்றான். “இதன் நிலையழிதலை. இதை அலைக்கழிக்கும் காற்றுகளை விழிகளால் காணமுயல்க!”

பீமன் அதை நோக்கி விழிநாட்டினான். அதன் ஒவ்வொரு பீலியையும் அணுக்கமாக பார்க்கமுடிந்தது. அது மிகச்சிறிய சிட்டுக்குருவி ஒன்றின் கழுத்தில் இருந்த இறகு. பருப்பொருள் வடிவை உதறி ஒளியாக மாறும் முதல்படியிலிருந்தது. அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தொட்டு அசைத்தது காற்று. அல்லது ஒவ்வொரு பீலிக்கும் தனிக்காற்றா? காற்றென்பது ஒரு பெரும் படையெழுச்சியா? அவ்வசைவுகளினூடாக உயிர்கொண்டதுபோல சிறகுப்பிசிறு எண்ணியது, குழம்பியது, முடிவெடுத்து திரும்பியது, வேண்டாம் என்றது, ஆம் என்று மீண்டும் நிலைத்தது, அடடா என எழுந்தது, ஆ எனத் திகைத்துத் திரும்பியது, போதும் என விழுந்தது, இதை மட்டும் என மீண்டும் எழுந்தது.

முண்டன் தன் கைகளை அதைச்சுற்றி மெல்ல அசைக்கலானான். அந்தக் காற்றால் இறகு அலைவுற்றது. அவன் கையை விலக்கியபோது முகர விரும்பும் நாய்க்குட்டி என தேடிச்சென்றது. கைகளை நீட்டியபோது அஞ்சிய பறவை என விலகியது. காற்றலைகளை அவன் காணத் தொடங்கினான். மிக மென்மையான நீல ஒளியாக அவை இருந்தன. குளிர்ந்திருந்தன. அவற்றில் கோடிக்கணக்கான மென்துகள்கள். ஒவ்வொன்றும் ஒளிகொண்டிருந்தது. ஊடே பறந்தன நுண்ணுயிர்கள். மிகச்சிறிய சிறகுத்துளியை அணிந்தவை. அவற்றை அளைந்துகொண்டே இருந்தது சிறகுப்பிசிர்.

“எங்கிருக்கிறீர்கள், இளவரசே?” என மிகத் தொலைவில் எங்கோ இருந்து முண்டன் கேட்டான். “ஓர் அரண்மனையில்… மஞ்சத்தில்” என்றான் பீமன். “என்ன செய்கிறீர்கள்?” என்று மீண்டும் முண்டன் கேட்டான். “படுத்திருக்கிறேன், துயில்கிறேன்… நீங்கள் என் கனவில் வந்து இக்கேள்வியை எழுப்புகிறீர்கள்.” முண்டன் மெல்ல நகைத்து “ஆம்” என்றான். “எங்கிருக்கிறீர்கள்?” என்றான் பீமன். “நெடுந்தொலைவில்… எதிர்காலமெனும் பெருக்கின் மறுகரையில்” என்றான் முண்டன். பீமன் “ஆம், என்னால் உணரமுடிகிறது” என்றான். “நீங்கள் கனவுகாண்பது எதை?” என்றான் முண்டன். “என் கனவில் எப்போதும் நான் ஒரு பேருருவன். திரண்ட தோள்களும் திமிர்க்கும் தசைகளும் கொண்டவன். காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கிறேன்.”

“எங்கே?” என்றான் முண்டன். “ஓர் இனிய சோலைக்காடு. அறியா மணம் ஒன்றால் அழைக்கப்படுகிறேன். எண்ணிய மலர் என தன்னை உருமாற்றிக் காட்டும் மாயமணம் அது. உடன் ஒரு குரங்கு வருகிறது.” முண்டன் சிரித்து “குரங்கா?” என்றான். “ஆம், தாவியும் சுழன்றும் எழுந்தும் அது கையூன்றி முன் செல்கிறது. நிழல் என. வழிகாட்டும் நிழல். அந்நிழலை நான் தொடர்கிறேன். அதன் அசைவுகளை நிகழ்த்துகிறேன். அப்படியென்றால் நான்தான் நிழலா? நிழலுக்கு வண்ணமும் வடிவமும் எண்ணமும் இருப்பும் உண்டா?”

“அங்கு ஒரு சிற்றாலயத்தை காண்கிறேன். அதற்குள் ஓர் அன்னைத்தெய்வம் ஐம்புரிக்குழலை அவிழ்த்திட்டு வெறிமின்னும் கண்களும் அருள்நிறை இளநகை சூடிய இதழ்களுமாக நின்றிருக்கிறது. அதன் முன் நின்றிருக்கிறேன்” என்றான் பீமன். “அவள் யார்?” என்றான் முண்டன். “அறியேன். அவள் என் அன்னையை நினைவுறுத்துகிறாள்.” முண்டன் “உங்கள் பெயர் என்ன?” என்றான். “என் பெயர் புரு. சந்திரகுலத்தின் பேரரசர் நகுஷரின் மைந்தர் யயாதியின் கடைமைந்தன். அவர் கொடியையும் குடியையும் கொடையெனப் பெற்று அரசாள்கிறேன்.”

tigerவிழித்தபோது அக்கனவை சேற்றில்படிந்து மட்கிய இலையின் வடிவப்பதிவுபோல நினைவுகளில்தான் புரு அறிந்தான். அப்பதிவிலிருந்து கனவை மீட்டெடுக்க விழைவதுபோல இருண்ட அறையின் கூரைச்சரிவில் நெய்விளக்கின் தாழ்திரியின் சிற்றொளியில் அலையடித்த நிழல்களை நோக்கியபடி படுத்திருந்தான். பின்னர் எழுந்து தன் கைகளை நோக்கியபடி “சிவம்யாம்!” என முழுமைச்சொல் உரைத்தான். எழுந்து மிதியடியை அணிந்துகொண்டபோது கதவைத் திறந்த ஏவலன் வணங்கினான்.

நீராட்டறைக்கு அவனுடன் செல்கையில் இடைநாழியில் காத்து நின்றிருந்த அமைச்சன் சுபகன் வணங்கி உடன் சேர்ந்துகொண்டான். தந்தை பார்க்கவனின் நீத்தார்கடனுக்காக அவன் கங்கைக்கரைக்குச் சென்று பதினைந்துநாட்களுக்குப் பின்னரே மீண்டிருந்தான். இருவரும் சொல்லில்லாமல் நடந்தனர். அவர்களின் காலடிகள் உரையாடல்போல் ஒலித்தன. இடைநாழியின் வளைவுகளில் நிழல்கள் இணைந்து ஒன்றாயின.

நீராட்டறைக்குள் நுழைந்ததும் ஏவலர் வந்து புருவை வணங்கி அவன் மேலாடையை கழற்றினர். இனிய தைலமணத்துடன் ஆவியெழ கலத்தில் நிறைந்திருந்த நீரின் அருகே வெண்கலச் சிற்றிருக்கையில் அவன் அமர அவர்கள் அவன் இடையாடையைக் கழற்றிவிட்டு எண்ணை பூசத்தொடங்கினர். நறுமணம்கலந்து காய்ச்சப்பட்ட எள்ளெண்ணையின் மணத்தை நீராவி அள்ளி அறைமுழுக்க கொண்டுசென்று சுவர்களில் துளியாக்கி வழியச்செய்தது.

“மீண்டும் அதே கனவு” என்று புரு சொன்னான். அவன் குரலை எதிர்பாராத சுபகன் சுவரில் வழிந்த நீர்த்துளியிலிருந்து விழிவிலக்கி “எண்ணினேன்” என்றான். “யார் அவன்? எதற்காக அவ்வுருவை கனவுகாண்கிறேன்?” என்றான். “நீங்கள் திண்தோள்கொண்டவர் அல்ல. உங்கள் விழைவுதான் அவ்வாறு கனவிலெழுகிறது” என்றான் சுபகன். “நாம் அறியாத மூதாதையரைப்போலவே நாம் அறியவும் இயலாத வழித்தோன்றல்களும் நம் கனவிலுறைகிறார்கள் என்று நிமித்திகர் சொன்னார். அது மெய்யென்றே எனக்கும் தோன்றுகிறது” என்றான் புரு. “ஒவ்வொரு மரத்திலும் விதைகள் உறைகின்றன. விதைகளுக்குள் விதைகள் வாழ்கின்றன என்று ஒரு சொல்லாட்சி உண்டு.”

சுபகன் “அவ்வண்ணம் எண்ணிக்கொள்வதனால் நிறைவு கொள்கிறீர்கள் என்றால் அதுவே ஆகுக!” என்றான். “எவ்வாறு எண்ணினாலும் எந்த வேறுபாடும் உருவாகப்போவதில்லை. அவன் கொடிவழியினன் என்றால் அவனை காணப்போகிறீர்களா என்ன?” புரு “அவன் உருவை ஓவியர்களைக்கொண்டு வரைந்து வைக்கவேண்டுமென எண்ணினேன். எங்காவது அது இருக்கவேண்டும். வண்ணங்களில் அல்ல, கல்லில். ஆயிரமாண்டுகளானாலும் அங்கே அது காத்திருக்கவேண்டும். என்றோ ஒருநாள் அவன் வந்து அதன்முன் நிற்பான்” என்றான்.

சுபகன் நகைத்து “அதை நீங்கள் என அவன் பிழையாக எண்ணிக்கொள்ளக்கூடும். அவன் கனவில் வந்த உருவம்” என்றான். “இந்த நுண்ணிய வலைப்பின்னலை நெய்துகொண்டிருக்கும் கைகளிடம் எங்களுக்கும் இதை ஆடத்தெரியும் என்று காட்டவேண்டாமா?” என்றான் புரு. “அவனை நான் அத்தனை நீர்ப்பரப்பிலும் முகமெனக் காண்பேன். மஞ்சள் நிறமும் பெரிய தாடையும் கொண்ட முகம். விழிகள் சிறியவை, ஆனால் அழியா நகைப்பு சூடியவை. அவன் பேருடலுக்குள் இருக்கும் அறியாச் சிறுவன் ஒருவன் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவான்.”

சுபகன் “அரசே, நீங்கள் இளமையை முற்றிழந்தவர். அக்கனவு அதனால்தான் என நினைக்கிறேன்” என்றான். “நீயே சொன்னாய், இப்படி எண்ணிக்கொள்வதில் பயன் ஏதுமில்லை என. அப்படியென்றால் ஏன் குறைத்து அறியவேண்டும், பெருக்கியறிவது உவகையையாவது அளிக்கிறதே?” என்றான் புரு. “அவ்வாறெனினும் ஆகுக!” என்று சுபகன் சிரித்தான். “சூதர்களைக்கொண்டு அதை பாடச்செய்வோம். நுரையெனப் பெருக்குவார்கள். பின் கவிஞர்களைக்கொண்டு எழுதச்செய்வோம். நுரையை பளிங்குப்பாறையாக்கும் சொற்றிறன் அவர்களிடமுண்டு” என்று புரு நகைத்தான்.

நீராட்டுக்குப்பின் அவர்கள் இயல்படைந்து பேசியபடி நடந்தனர். “சற்றுநேரத்தில் கிளம்பிவிடலாம், அரசே. இளவரசர்களும் அரசியும் முன்னரே ஒருங்கிவிட்டனர். தேர்களும் வண்டிகளும் காவலர்படைகளும் காத்திருக்கின்றன” என்றான் சுபகன். புரு “ஆம், கிளம்பவேண்டியதுதான். ஒவ்வொருநாளாக இந்நாளை நோக்கி எண்ணி எதிர்பார்த்து அணுகினேன். கிளம்பும் தருணத்தில் ஒரு தயக்கம் இக்கணங்களை நீட்டித்து அதை ஒத்திப்போடச் சொல்கிறது. இப்போது நானே நம்பும் ஒரு செயல்மாற்று அளிக்கப்படுமென்றால் தவிர்த்துவிடுவேன்” என்றான்.

சுபகன் புன்னகைத்து ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கி வெளியேறினான். அவனிடம் சொன்னவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டு அணிச்சேவகரிடம் தன் உடலை அளித்தான். அவர்கள் நறுஞ்சுண்ணம் பூசி, அரச உடையும் அணிகளும் பூட்டி அதை ஒருக்குவதை ஆடியில் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் பிறிதொன்றாகி எழுந்துகொண்டிருந்தது, சிறகுபூண்டு கூடுதிறந்தெழும் பட்டாம்பூச்சி என. ஏவலர் இருவர் அரசமுத்திரை கொண்ட பட்டுத்தலைப்பாகையை அவனுக்கு சூட்டியபோது அவன் மெல்லிய திடுக்கிடலை உணர்ந்தான். ஒவ்வொரு முறை முடிசூடும்போதும் எழும் எண்ணம்தான். அன்று அடிபட்டுக் கன்றிய தோல்மேல் என அத்தொடுகை மேலும் அழுத்தம் கொண்டிருந்தது.

tigerஅவன் முடிசூட்டிக்கொண்டபோது குருநகரியில் அவன் உடன்பிறந்தார் எவரும் இருக்கவில்லை. யயாதி அவனை கொடிவழியினன் என அறிவித்து முதுமையை அளித்துவிட்டு கானேகிய மூன்றுநாட்களில் அவன் உடன்பிறந்தார் நால்வரும் நகர் நீங்கினர். யது நகர்நீங்கப்போவதாக தன் அணுக்கரைக்கொண்டு நகரில் முரசறைவித்தான். தெருமுனைகளில் அவ்வறிவிப்பு முழங்கியபோது மக்கள் திகைத்து நின்றுகேட்டனர். உணர்வெழுச்சியுடன் சினத்துடன் வஞ்சத்துடன் சொல்லாடிக்கொண்டனர். “குருதிவழி என்பது தெய்வங்களால் அருளப்படுவது. அதை மாற்ற மானுடருக்கு ஆணையில்லை” என்றார் முதிய அந்தணர்.

“இம்முடிவை தெய்வங்கள் விரும்பியிருந்தால் முதல் நால்வரை பலிகொள்ள தெய்வங்களால் இயலாதா என்ன?” என்றார் பூசகர் ஒருவர். “மூதாதையர் மூச்சுவெளியில் நின்று பதைக்கிறார்கள். அரசன் தன்னலம் கருதி எடுத்த முடிவு இது” என்றார் அங்காடிமுனையில் கூடியிருந்த கூட்டத்தில் நின்றிருந்த பெருவணிகர். “இதோ, அசுரக்குருதி நம் மேல் கோல் ஏந்தி அமரவிருக்கிறது… தோழரே, இவையனைத்தும் இதன்பொருட்டே நிகழ்த்தப்பட்டன. இது சுக்ரரின் சூழ்ச்சி. விருஷபர்வனின் அரசாடல்” என்றார் சூதர் ஒருவர். ஒவ்வொருநாளுமென ஒற்றர்கள் ஓலையனுப்பிக்கொண்டிருந்தனர். மீண்டுவந்து ஒருமுறை அவன் அத்தனை ஓலைகளையும் படித்தான். தான் அமர்ந்திருப்பது எதன்மேல் என அறிந்துகொண்டான்.

குலமூத்தார் பன்னிருவர் திரண்டு அரண்மனைக்கு வந்து அமைச்சர்களுடன் சொல்லாடினர். பேரமைச்சர் சுகிர்தர் “நான் இதில் சொல்வதற்கேதுமில்லை. அமைச்சன் என என் கடமையை செய்யவேண்டும்” என்றார். “நீர் அமைச்சர் மட்டுமல்ல, அந்தணர். அறமுரைக்கக் கடமைகொண்டவர்” என்றார் குலத்தலைவரான குர்மிதர். “அந்தணர் உரைக்கும் அறம் முன்னோரால் சொல்லப்பட்டதாகவே இருக்கவேண்டும். தன் விழைவை அறமாக்க அந்தணருக்கு உரிமை இல்லை” என்றார் சுகிர்தர். “நூல்நெறிகளின்படி தன் குருதிவழி எது என முடிவெடுக்கவேண்டியவர் அரசர் மட்டுமே. பிற எவரும் அல்ல.”

“அவ்வண்ணமென்றால் மூத்தவர் நாடாளவேண்டுமென்னும் நெறி எதற்கு? நூல்கள் ஏன் அமைத்தன இதை?” என்றார் குலமூத்தாரான பிரகிருதர். “மூத்தாரே, தந்தையே தன் மைந்தன் எவன் என முடிவெடுக்க முடியும்…” என்றார் சுகிர்தர். “நூல்கள் முடிவெடுக்கும் உரிமையை அரசனுக்கு அளித்தது இதனால்தான். தன் மைந்தரை அரசர் துறந்துவிட்டார். அதன்பின் அவர்கள் எப்படி மைந்தர் என சொல்லி முடிகோர முடியும்?” குலத்தலைவர்கள் சினந்து “இது பெரும்பழி… பாரதவர்ஷத்தின் பேரரசியை அவர் துறந்திருக்கிறார்… நாங்கள் ஏற்கமுடியாது. அசுரக்குருதியை ஒருபோதும் எங்கள் குடிகள் தலைமையெனக் கொள்ளாது” என்றனர்.

அவர்கள் திரண்டுசென்று அரண்மனைக்கு வெளியே சோலையில் ஒரு ஸாமி மரத்தடியில் தங்கியிருந்த யதுவை கண்டனர். “அரசே, பேரரசியின் குருதியே எங்கள் நாட்டை ஆளவேண்டும். அசுரக்குருதியிலிருந்து நீங்களே எங்களுக்குக் காப்பு” என்றனர். “உங்களை எங்கள் இளவரசர் எனச்சொல்லி பதினாறுமுறை மூதாத்துள்ளோம். இனி அவர்களிடம் சொல்மாற்ற எங்களால் இயலாது” என்றார் குலமூத்தாரான சம்பவர்.

யது கைகூப்பி “என் சொல்லை பொறுத்தருள்க, குலத்தலைவர்களே. தந்தையை நாங்கள் கைவிட்டோம், அவர் எங்களை கைவிட்டார். இரண்டும் அத்தருணத்தில் அவ்வாறு நிகழவேண்டுமென்றிருந்தது. ஒருநாள் கழித்து ஒருமுறை அமைச்சர்களுடன் சொல்லாடிவிட்டு அவர் முன் நின்றிருந்தால் நான் அவர் முதுமையை ஏற்றுக்கொண்டிருப்பேன். அவருடைய முதுமைநலிவை நேரில்கண்டு என் உள்ளம் அஞ்சித்திகைத்திருந்த தருணத்தில் அதை நான் கொள்வதைப்பற்றி எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. அத்தருணத்தை அமைத்த தெய்வங்களின் வழிப்பட்டு நான் கிளம்பவிருக்கிறேன். அவர் அளித்த சொற்கொடை இருக்கிறது. அதுவே நிகழ்க!” என்றான்.

உரத்த குரலில் அழுகையும் விம்மலுமாக “நாங்களும் வருகிறோம்… எங்கள் குடிகளனைத்தும் உங்களைத் தொடரும்… இங்கே வெற்றுநிலமும் கட்டடங்களும் எஞ்சட்டும். அதை கோல்கொண்டு ஆளட்டும் அசுரகுடியினன்” என்றார் பிரகிருதர். “என்னுடன் வருபவர்கள் வரலாம். ஆனால் எந்தையின் சொல்லென்ன என்று அவர்கள் அறிந்திருக்கவேண்டும். காட்டெரியென பரவும் வாழ்க்கை. நீர்நிழலென நிலைகொள்ளா இருப்பு. ஆபுரக்கும் எளியதொழில்” என்றான் யது. “ஆம், ஆனால் உங்கள் குடி பெருகிக் கிளைகொண்டு பாரதத்தை மூடுமென்றும் சொல் உள்ளது. அதுபோதும். வருகிறோம். இது எங்கள் சொல்” என்றார் குர்மிதர்.

ஆனால் மறுநாள் ஐந்து குலங்கள் மட்டுமே அவர்களுடன் கிளம்பின. அக்குடிகளிலும் ஒரு பகுதியினர் பின்எஞ்சினர். சினக்கொதிப்புடன் நாடுநீங்குவதாக வஞ்சினமுரைத்து ஆடவர் இல்லம் திரும்பி மகளிரிடம் சொன்னபோது அவர்கள் விழிகள் மாற முதலில் அதற்கு உடன்பட்டனர். பின்னர் நிலத்தையும் குடியையும் விட்டுச்செல்வதன் இடர்களைப்பற்றி உரைக்கலாயினர். நிலம்நீங்குபவன் குடியை இழக்கிறான். அந்நிலத்தில் நடுகற்களென நின்றிருக்கும் மூதாதையரையும் துறக்கிறான். சென்றடையும் நிலத்தில் அவன் ஈட்டுவதே குலமென்றாகும். “குலமும் நிலமும் நம் மூதாதையர் நம் மைந்தருக்களிப்பவை. அவற்றை மறுக்க நமக்கு உரிமையுண்டா?” என்றாள் மூதன்னை ஒருத்தி.

மறுநாள் முதற்புலரியில் யது நகர்நீங்கினான். முந்தையநாள் இரவு சிற்றமைச்சரான லோமரூஹர் வந்து சுகிர்தர் முன் பணிந்து மறுநாள் தான் யதுவுடன் செல்லவிருப்பதாகச் சொல்லி ஆணைகோரினார். “நானும் என் குலத்து இளைய அந்தணர் நூற்றெண்மரும் இளவரசருடன் செல்ல முடிவெடுத்துள்ளோம், உத்தமரே. உங்கள் நற்சொல்லை நாடுகிறோம்” என்றார் லோமரூஹர். “ஆம், எந்நிலையிலும் அரசனை அந்தணன் கைவிடலாகாது என்பது நூல்நெறி. அந்தணர் உடனிருந்து வேதச்சொல்கொண்டு மூவெரி ஓம்பும்வரைதான் இளவரசர் அரசர் எனப்படுவார். நம் கடன் இது. நன்று சூழ்க!” என்றார் சுகிர்தர். லோமரூஹர் அவரை வணங்க “செல்லுமிடம் ஏதென்று அறியோம். அங்கு சூழ்வதென்ன என்பதும் ஊழின் கைகளில். ஆனால் அந்தணரால் அரசர் கைவிடப்பட்டார் என்னும் சொல் எழலாகாது” என்றார் சுகிர்தர்.

யது அரண்மனையிலிருந்து கிளம்பும்போது சுகிர்தரை தாள்பணிந்து வணங்கினான். “இளவரசே, அந்தணர் சொல் துணைகொள்க! படைவீரர்களை உடன்பிறந்தார் என எண்ணுக! துணியவேண்டிய இடத்தில் துணிக! பொறைகொள்ள வேண்டிய இடங்களில் பொறுப்பதே அத்துணிவை எய்துவதற்கான வழி. எந்த வெற்றியும் எத்தோல்வியும் அத்தருணத்தால் அச்சூழலால் முடிவாவதல்ல என்று உணர்க! நீண்டகால வெற்றியே வெற்றி. மீண்டெழ முடியாது போவதொன்றே தோல்வி” என்று சுகிர்தர் வாழ்த்தினார். “நலம் சூழ்க! தெய்வங்களும் மூதாதையரும் உடன்எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என வாழ்த்தி வேதச்சொல் உரைத்து நீர் தெளித்தார்.

யது திரும்பிப்பார்க்காமல் நடந்துசென்றான். எத்தனைபேர் தொடர்கிறார்கள், அவர்கள் கொண்டுவருவன என்ன என்று அவன் நோக்கவில்லை. நூறு வண்டிகளிலும் இருநூறு அத்திரிகளிலும் பொருட்களையும் குழந்தைகளையும் பெண்டிரையும் ஏற்றிக்கொண்டு படைக்கலங்களை ஏந்தியபடி ஐந்துகுலத்தவர் உடன் சென்றனர். குருநகரியின் ஆயிரம் படைவீரர்கள் படைத்தலைவன் சத்ரசேனனால் வழிநடத்தப்பட்டு உடன் சென்றனர்.

குருநகரியின் கோட்டையைக் கடந்ததும் அவனுடன் சென்ற குடிமக்கள் உளம் ஆற்றாது திரும்பிநோக்கி விம்மினர். சிலர் மண்ணில் அமர்ந்து தாங்கள் செல்லப்போவதில்லை என கைகளால் அறைந்தபடி அழுதனர். குலமூத்தார் சினந்து ஆணையிட அவர்களை பிறர் தேற்றி தூக்கிச்சென்றனர். சிலர் தங்கள் மைந்தருடனும் பெண்டிருடனும் மீண்டும் நகர்நோக்கி ஓடிவந்தனர். கோட்டைக்குள் பெருமுற்றத்தில் கூடிநின்று செல்பவர்களை நோக்கி விழிநீர் வடித்தவர்கள் ஓடிமீண்டவர்களை நோக்கி கைவிரித்துப் பாய்ந்து சென்று அணைத்துக்கொண்டனர். சூழ்ந்துநின்று கதறியழுதனர்.

செல்பவர்கள் விழிமறைந்தனர். புழுதியடங்கியது. ஒன்றும் நிகழாததுபோல் ஆயிற்று ஒளியெழுந்துகொண்டிருந்த தொடுவானம். “தொடுவானை எதுவும் கலைக்கமுடியாது, இளையோரே. அது காலமெனும் கூர்வாள். எத்தனை கொன்றாலும் குருதிபடியா ஒளிகொண்டது” என்றார் சூதர் ஒருவர். அவர்கள் துயருடன் இல்லம் மீண்டும் சென்றவர்களுடன் சென்ற கற்பனையில் அலைந்தபடியும் ஆங்காங்கே அமர்ந்தனர்.

ஆனால் அவர்கள் சென்றது நீர்ச்சிறைவிளிம்பு கிழிந்தது என அடுத்த அணி துர்வசுவுடன் கிளம்பிச்செல்ல வழியமைத்தது. யது கிளம்பிய மறுநாள் கரும்புலரியில் துர்வசு சுகிர்தரை கால்தொட்டு வணங்கி சொல்பெற்று தன்னந்தனியே கிளம்பினான். அவன் கோட்டையைக் கடந்து நின்று மூன்று திசைகளையும் நோக்கியபின் மேற்கு நோக்கி திரும்பியபோது அவன் சாலைத்தோழனாகிய ரணசிம்மன் தன்னைத் தொடர்ந்த சிறு படைப்பிரிவுடன் பின்னால் சென்று அடிபணிந்தான். அவன் செல்வதைக் கண்டதும் மூன்றுகுலங்கள் கிளம்பி துர்வசுவுடன் சேர்ந்துகொண்டன.

அவர்கள் கிளம்பிச் சென்றபோது முந்தையநாளின் எழுச்சியும் துயரும் இருக்கவில்லை. வெறுமைகொண்ட விழிகளுடன் மக்கள் நோக்கிநின்றனர். ஒருவேளை செல்லுமிடத்தில் மேலும் சிறந்த வாழ்க்கை அமையக்கூடுமோ என்னும் ஐயம் அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. ஒருநாள் கழித்து அதை எவரோ சொன்னார்கள். சொல்லானதுமே அது பெருகலாயிற்று. நகர்நீங்கியவர்கள் செல்வம் செழித்த புதுநிலங்களில் சென்று குடியேறும் கதைகள் தோன்றலாயின. பின்னர் ஒவ்வொருவரும் அந்நகரைவிட்டு வெளியேறும் ஆழ்கனவு ஒன்றை தங்களுக்குள் பேணிவளர்க்கத் தொடங்கினர்.

திருஹ்யூவும் அனுதிருஹ்யூவும் திரும்பி ஹிரண்யபுரிக்கே செல்லக்கூடுமென அமைச்சர்கள் எதிர்பார்த்தனர். விருஷபர்வனின் அழைப்புடன் பறவைத்தூதும் வந்தது. ஆனால் அவர்கள் கிளம்பி தெற்கும் கிழக்குமாகச் சென்றனர். அவர்களுடன் அசுரப்படைகளிலிருந்த வீரர்களின் சிறுகுழுக்களும் ஓரிருகுடியினரும் உடன்சென்றனர். நகரை ஆளும்பொறுப்பு பேரமைச்சர் சுகிர்தரின் கைக்கு வந்தது. அவர் அமைச்சர்களின் சிறுகுழு ஒன்றை அமைத்தார். அரியணைமேல் யயாதியின் கோலும் முடியும் வைக்கப்பட்டு அவர் பெயரில் முத்திரையிடப்பட்ட ஓலைகளால் ஆட்சி நடந்தது.

முடிசூடிய பின்னர் அமைச்சர்களை அழைத்து அவர்கள் சென்ற இடத்தைப்பற்றி அறிந்துவர ஒற்றர்களை அனுப்பும்படி புரு சொன்னான். உறுதியான குரலில் “அது கூடாது, அரசே. இனி அவர்களை நாம் தொடரக்கூடாது” என்றார் அவர். “அவர்கள் எவ்வண்ணம் எங்கிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளலாம் அல்லவா?” என்றான் புரு. “அறிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அவர்கள் பெருமரங்கள் என கிளைவிரித்து விழுதுபரப்புவார்கள் என்பது உங்கள் தந்தையின் சொல். இது வேர் தாழ்த்தும் பருவம். இப்போது அவர்களை தோண்டி எடுப்பது வீண்வேலை” என்றார் சுகிர்தர்.

“இன்று அவர்கள் செல்லுமிடமெங்கும் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளாவார்கள். தங்கள் ஆற்றலையெல்லாம் திரட்டி போரிடவேண்டும். அவர்களின் உள்ளமும் எண்ணிக்கையும் ஒற்றுமையும் வலுப்பெறவேண்டும். எதிர்கொள்ளும் மாற்றுவிசைகளே அவர்களை வளர்க்கவேண்டும். அப்போதுமட்டுமே அவர்கள் வென்று வாழமுடியும்” என்றார். புரு தலைகுனிந்து அமர்ந்திருக்க மூத்த ஒற்றனான சந்திரபாலன் “தாங்கள் நிலைகொள்ளும் வழிகளை அவர்கள் கண்டடையவேண்டும், அரசே” என்றான்.

“இப்போது அவர்கள் இருக்குமிடத்தை நாம் அறிந்துகொண்டோம் என்றால் என்ன செய்வோம்? ஒவ்வொரு நாளுமென அவர்களை பின் தொடர்வோம். அவர்களுக்கு எதிரிகள் எழுகையில் நாமும் அவர்களை எதிரிகளெனக் கொள்வோம். போர் நிகழுமென்றால் உதவிக்கு படை கொண்டுசெல்ல விழைவோம். அரசே, அவர்கள் நால்வரும் நான்கு திசைகளுக்கு சென்றிருக்கிறார்கள். நான்கு திசைகளுக்கும் படையனுப்பிக் காக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. நம்மால் இயலாதவற்றை எண்ணி ஏங்கிச் சலிப்பதே அதன் விளைவென்று ஆகும்” என்றார் அமைச்சர்.

“மேலும் அவ்வாறு அவர்களுக்கு உதவுதல் உங்கள் தந்தையின் ஆணையை மீறுவதே. அவர்கள் நம் குருதியினர் அல்ல. நம் சமந்தரோ நமக்கு கப்பம் அளிப்பவரோ அல்ல. குருநகரியின் மக்களின் செல்வத்தையும் வீரர்களின் உயிரையும் எந்நெறியின்பொருட்டு அவர்களுக்காக செலவிடுவீர்கள்?” என்றார் சுகிர்தர். “அத்துடன் மறுநாள் படைவீரர்கள் எவரையும் உடன் அழைக்காமல் கருவூலத்தில் ஒரு பொன்னைக்கூட கேட்காமல் நாடுநீங்கிய உங்கள் உடன்பிறந்தார் நம் உதவியை ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகிறீர்களா?”

அவர்களில் யது தனக்குரிய நிலம்தேடி தன் படைகளுடன் தென்றிசை நோக்கி சென்றான். கங்கையையும் யமுனையையும் கடந்து, மாளவத்தையும், கிகடர்களின் தேவபுரியையும் தாண்டி தென்மேற்காக தன்குடிகளை அழைத்துச்சென்றான். நிஷாதர்களின் நாட்டில் தோலூறிய கழிவுநீர் ஓடிய சர்மாவதி நதியைக் கடந்து யதுவும் அவன் படையினரும் மேலும் சென்று மனிதர்கள் வாழாது வெயில் பரவி வீண்நிலமாகக் கிடந்த பர்ணஸா என்னும் ஆற்றின் படுகையை அடைந்து அங்கே தங்கள் குடியை நிறுத்தினர். யதுவின் அமைச்சரான லோமரூஹர் அங்கே சிற்றூர் ஒன்றை அமைத்தார். அவர்களின் முதல் ஊர் அங்கே அமைந்தது.

துர்வசு தன் தோழன் ரணசிம்மனுடன் நகர்நீங்கிச் செல்கையில் காட்டு எல்லையில் சந்திரகுலத்தின் அனைத்து அடையாளங்களையும் துறந்தான். குருநகரியின் கடைசிப் புழுதியையும் தன் காலடியிலிருந்து அகற்றும்பொருட்டு ஓடையில் கால்கழுவிவிட்டு மேற்காக சென்றான். சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் கடந்து சென்றபோது நாடுகளே இல்லாத பெரும்பாலைநிலம் அவர்களை எதிர்கொண்டது. அணையாத அனல்காற்றுகள் வீசும் கந்தவதி என்னும் நிலம் அவர்களுக்கென அமைந்தது.

தன் உடன்பிறந்தவனாகிய திருஹ்யூ யமுனைக்கு அப்பால் சென்று மச்சர்களுடன் இணைந்துகொண்டதையும் அனுதிருஹ்யூ மேலும் கடந்து சென்று தண்டகாரண்யத்தின் தொல்குடிகளுடன் இணைந்து தனிக்குடி கண்டதையும் சூதர்களும் தென்னகப் பாணர்களும் வந்துபாடிய பாடல்களினூடகவே புரு அறிந்துகொண்டான். அந்தச் செய்திகள் குருநகரியில் பரவுவதற்கு அவன் ஆணையிட்டான். சூதர்சொல் பெருகுவதென்பதை அவன் அறிந்திருந்தான். யயாதியின் மைந்தர் நான்கு நகர்களை அமைத்து அரசமுடி சூடிவிட்டனர் என்னும் செய்தி குருநகரியின் குடிகளை உளம் அமையச் செய்தது. அதன்பின்னரே அவர்கள் புருவை தங்கள் அரசன் என ஏற்றுக்கொண்டனர்.

புரு சுகிர்தரை தூதனுப்பி குருநகரியின் செல்வத்தில் பெரும்பகுதியை கன்னிச்செல்வமெனக் கொடுத்து குருநகரிக்கு கப்பம்கட்டும் சிற்றரசெனத் திகழ்ந்த கோசல நாட்டின் அரசன் புஷ்டியின் மகள் பௌஷ்டையை மணந்து பட்டத்தரசியாக்கினான். அந்த மணவிழா பன்னிருநாட்கள் குருநகரியில் கொண்டாடப்பட்டது. பாரதவர்ஷத்தின் அரசர்கள் திரண்டுவந்து அந்த மணவிழாவை அணிசெய்தனர். ஷத்ரியப் பேரரசி அமைந்ததுமே குருநகரியின் மக்களின் உள்ளம் மாறத்தொடங்கியது. முதல் இளவரசன் பிரவீரனின் இடையணிவிழா நடந்தபோது குடிகள் நடந்தவை அனைத்தையும் மறந்து பெருமிதமும் களிவெறியும் கொண்டு கொண்டாடினர்.

சுகிர்தரின் சொல்படி நகரின் கோட்டையை மேலும் ஒரு சுற்று விரிவாக்கி அதற்கு சந்திரபுரி என்று பெயரிட்டான். சந்திரகுலத்துக் குருதிவழியால் ஆளப்படுவது அந்நகர் என அப்பெயர் ஒவ்வொரு முறை உச்சரிக்கப்படுகையிலும் உறுதியாயிற்று. விருஷபர்வனின் கொடிவழி வந்தவன் அவன் என்பதை விரைவிலேயே அனைவரும் மறந்தனர். ஆனால் நகரின் முத்திரையாக ஹிரண்யபுரியின் அமுதகலசம் அமைந்தது. அதைக் குறித்து அந்தணரும் ஷத்ரியர் சிலரும் உளக்குறை கொண்டிருந்தாலும் அவ்வடையாளத்தை பெண்டிர் விரும்பியமையால் விரைவிலேயே அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முடிசூடி எழுந்து தன்னை புரு ஆடியில் பார்த்துக்கொண்டான். முதிய அணிச்சேவகர் “தங்கள் தந்தை பேரரசர் யயாதியை நான் பார்த்திருக்கிறேன், அரசே. அவரைப்போலவே தோன்றுகிறீர்கள்” என்றார். புரு புன்னகையுடன் “ஆம், ஒரே முகங்கள்தான்” என்றான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 88

88. விழிநீர்மகள்

படுக்கையறை வாயிலில் பார்க்கவன் “ஓய்வெடுங்கள், அரசே!” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா? “தேவையில்லை என்று எண்ணுகிறேன். களைப்பாக இல்லை” என்று யயாதி சொன்னான். “பொழுது வீணடிப்பதற்குரியதல்ல என்று தோன்றுகிறது. நாழிகைக் கலத்திலிருந்து இறங்கும் ஒவ்வொரு மணல்பருவும் இழப்பதற்கு அரிய காலத்துளி என நினைக்கிறேன்” என்றவன் புன்னகைத்து “இளமை எனும் இன்மது” என்றான்.

பார்க்கவனும் உடன் புன்னகைத்து “ஆம், மானுட உடலின் இளமை மிக அரிதானது. நோக்கியிருக்கையிலேயே ஒழிந்து மறைவது. ஆனால் இளைஞர்கள்தான் காலத்தை வீணடிப்பவர்கள். அளவற்றது இளமை என மயங்குபவர்கள். முதுமையிலிருந்து இளமைக்கு மீண்டிருப்பதனால் அதன் அருமையை அறிந்திருக்கிறீர்கள்” என்றான். “எனக்கு இன்மது கொண்டுவரச்சொல். என் காவியநூல்கள் உள்ளே இருக்கின்றன அல்லவா?” பார்க்கவன் “பாணர்களையும் விறலியரையும் வரச்சொல்கிறேன். பரத்தையர் வேண்டுமென்றாலும் ஆணையிடுகிறேன்” என்றான்.

“வரச்சொல்” என்றபின் யயாதி பீடத்தில் அமர்ந்தான். பார்க்கவன் தலைவணங்கி வெளியேறினான். அவன் சுவடிகளை படிக்கத் தொடங்கினான். உத்பவரின் ரிதுபரிணயம் என்னும் அகச்சுவைக் காவியம். கையில் எடுத்ததுமே சுவடிகளை புரட்டிப்புரட்டி அதிலிருந்த காமவிவரிப்புகளை தேடிச்சென்றான். அந்த நூல் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அத்தகைய நூல்களின் அமைப்பும் சிக்கலும் ஊடுவழிகளும் உள்ளறிந்தவையாக இருந்தன. குருதித்தடம் முகர்ந்துசெல்லும் ஊனுண்ணி விலங்குபோல. சௌம்யன் என்னும் கந்தர்வன் சரிதை சுசரிதை என்னும் இரு காட்டுதேவதைகளைப் புணரும் இடத்தை சென்றடைந்தான். முதல் வரியே படபடப்பை ஊட்டியது. எவரோ தன்னை நோக்கும் உணர்வை அடைந்தான். நிமிர்ந்து அறையின் தனிமையை உறுதிசெய்தபின் மீண்டும் படித்தான்.

உடல்கள் இணைவதன் சொற்காட்சி. வெறும் உடல். உயிர்விசையால் நிலையழிந்து விலங்காகி புழுவாகி நெளியும் நுண்மொழிதல். பதினெட்டு பாடல்களைக் கடந்ததும் அவன் புரவி கால்தளரலாயிற்று. சலிப்புடன் மேலும் எத்தனை பாடல்கள் என்று நோக்கினான். அறுபது பாடல்கள் கொண்ட ஒரு பாதம் அது. சுவடியை மூடி கட்டிவைத்துவிட்டு சலிப்புடன் எழுந்து சாளரம் வழியாக நோக்கினான். இலைகள் சுடர உச்சிவெயில் இறங்கிய சோலைக்குள் பறவைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. ஒளிச்சிதறல் வட்டங்களாகி நிழல்கள் கண்ணிகள் எனத் தெரிந்தன.

அந்த அமைதியும் அசைவின்மையும் உள்ளத்தை அமையச்செய்ய அவன் சலிப்புற்றான். உள்ளிருந்து ஒரு விசை எழுக, விரைக, பறந்தலைக என்றது. அச்சுவரை உடைத்து வெளியேறவேண்டும் என. தசைகளெங்கும் தினவென அந்த வேட்கை எழுந்ததும் ஒருகணம்கூட அறைக்குள் அமர்ந்திருக்க இயலாதென்று தோன்றியது. மது கொண்டுவர இத்தனை நேரமா? என்ன செய்கிறார்கள்? அத்தனைபேரும் நீருக்குள் உடல்கள் என மெல்ல அசைகிறார்கள். கிளைகள் தாலாட்டுகின்றன. உதிரும் இலைகள் மிதந்திறங்குகின்றன. எங்கும் விரைவென்பதே இல்லை. புரவி ஒன்றில் ஏறி மலைச்சரிவில் பீரிட்டிறங்கவேண்டும். கற்கள் தெறித்து உடன் உருண்டு வர. காற்று கிழிபட்டு இரு காதுகளிலும் ஊளையிட்டுப் பறந்தலைய.

மீண்டும் சுவடியை எடுத்து புரட்டினான். சாரங்கரின் ‘கிரௌஞ்ச சந்தேசம்’. சுவடிகளை புரட்டிச்சென்றபோது ஒரு வரியால் நிறுத்தப்பட்டான். புன்னகையில் நீண்டும் பேசுகையில் குவிந்தும் செவ்வுதடுகள் அழகிய மீன்கள் என நீந்திக்கொண்டிருக்கின்றன. புன்னகையுடன் விழிசரித்து அவன் அக்காட்சியை நிகழ்கனவில் கண்டான். சுருங்கியும் நீண்டும் செல்லும் செக்கச்சிவந்த மென்மையான மீன். அவன் உடல் தித்திப்படைந்தது. சூழ்ந்திருந்த காற்று தேன்விழுதென மாறியதுபோல. மீண்டும் ஒரு வரியை படித்தான். ‘உன் எண்ணங்களின் இனியமதுவில் கால்சிக்கிக்கொண்டன இரு கருவண்டுகள். சிறகடித்து சிறகடித்து தவிக்கின்றன’. ஆனால் அந்த ஒப்புமைக்குள் செல்லமுடியவில்லை. மீண்டும் அந்த முதல் ஒப்புமைக்கே சென்றான். அதை அன்றி பிறிதை அன்று எண்ணமுடியாதென்று தோன்றியது.

இன்மதுவுடன் சேடியர் வந்தனர். பெண்களின் காலடியோசையை தன் செவிகள் தெளிவாக தனித்தறிவதை உணர்ந்தான். நெஞ்சு படபடத்தது. அவர்களின் உருவை ஒருகணம் முன்னரே உள்ளம் வரைந்துகொண்டது. அவர்களில் ஒருத்தி சற்று பருத்த மூத்த வயதினள் என்றும் இருவர் இளையவர்கள் என்றும் அவன் அகம் நோக்கிக்கொண்டிருந்தபோதே அவர்கள் கதவைத் திறந்து மதுக்கோப்பைகளும் நுரைசூடிய குடுவையில் மதுவுமாக உள்ளே வந்தனர். அவர்களை ஒருகணம் நோக்கியதுமே நெஞ்சு படபடக்க அவன் விழிகளை தாழ்த்திக்கொண்டான்.

கண்முன் அவர்களின் சிலம்பணிந்த கால்கள் நடமாடின. கோப்பைகள் உரசும் ஒலி, மது தளும்பும் சிரிப்பு. மூச்சொலி, அணிகளின் குலுங்கல். உடை கசங்கலின் நுண்ணொலி. வியர்வையும் மலரும் சாந்தும் குங்குமமும் நறுஞ்சுண்ணமும் கலந்த மணம். ஏன் என்னால் விழிதூக்கி அவர்களை நோக்கமுடியவில்லை? ஏன் உடல் பதறிக்கொண்டிருக்கிறது? நெஞ்சின் ஓசையே காதுகளில் நிறைந்திருந்தது. “அரசே, இன்மது பரிமாறலாமா?” அவன் நிமிராமல் “ஆம்” என்றான். அவ்வொலி மேலெழவில்லை. வியர்வை பூத்த உடல்மேல் சாளரக்காற்று மென்பட்டுபோல வருடிச்சென்றது. அவர்கள் சென்றுவிட்டால் போதும் என விழைந்தான்.

மது ஊற்றப்படும் ஓசை. ஒருத்தி மெல்லிய குரலில் ஏதோ சொன்னாள். பிறிதொருத்தி சிரித்தாள். மூத்தவள் அதை அடக்கினாள். முதலிருவரும் குயிலும் குருவியும். இவள் மயில். கோப்பையை வாங்கியபோது அவன் அப்பெண்ணின் விரல்களை நோக்கினான். நிமிர்ந்து அவர்களின் கண்களைக் கண்டதுமே திடுக்கிட்டு நோக்கு தாழ்த்திக்கொண்டான். அவள் சிரிப்பு படர்ந்த குரலில் “ஏதேனும் தேவையா?” என்றாள். “இல்லை” என்றான். அவர்கள் அவனுக்காக காத்திருக்க அவன் ஒரு மிடறு அருந்திவிட்டு கோப்பையை பீடத்தின் மேல் வைத்தான். “இவள் இங்கே நின்று தங்களுக்கு பரிமாறுவாள்” என்றாள் மூத்தவள். “வேண்டாம்” என்று அவன் பதறிய குரலில் சொன்னான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இல்லை… வேண்டாம்” என்றான்.

பக்கவாட்டில் எவரோ நின்றிருக்கும் உணர்வு எழ திடுக்கிட்டு நோக்கியபோது அங்கே ஆடியில் அம்மூவரும் தெரிந்தனர். ஒருத்தி மாநிறமான மெல்லிய உடலும் நெளியும் கூந்தல் கரைவகுத்த நீள்முகமும் கனவுதேங்கியவை போன்ற பெரிய விழிகளும் சிறிய மூக்கும் குமிழுதடுகளும் நரம்போடிய மெல்லிய கைகளும் கொண்டவள். இன்னொருத்தி நுரைபோன்ற கூந்தலும் உருண்ட முகமும் சிரிப்புஒளிரும் சிறிய விழிகளும் பெரிய சிவந்த உதடுகளும் தடித்த கழுத்தும் கொண்டவள். நீலநரம்புகள் படர்ந்த வெண்ணிறத் தோல். உயரமற்ற உடல்.

மூத்தவள் அவர்களைவிட உயரமானவள். பெரிய கொண்டையும் வலுவான கழுத்தும் திரண்ட தோள்களும் இறுகிய இடைக்குமேல் பெரிய குவைகளென முலைகளும் உருண்ட பெரிய கைகளும் கொண்டவள். உறுதியான நோக்குள்ள கண்கள். செதுக்கப்பட்டவை போன்ற உதடுகள். அக்குழலை அவிழ்த்திட்டால் தொடைவரை அலையிறங்கக்கூடும். இளஞ்செந்நிறமான அவள் கைகளில் நரம்புகளே இல்லை. வளையல்கள் சற்று இறுக்கமாக இருந்தன. வளையல் படிந்த தடம் உருண்ட மணிக்கட்டில் தெரிந்தது. விரல்களில் செம்பாலான நாகமோதிரம் ஒன்றை அணிந்திருந்தாள்.

அவன் நோக்கை விலக்கிக்கொண்டான். “இல்லை… நீங்கள் செல்லலாம்… எனக்கு ஒரு குவளை போதும்” என்றான். “ஒரு குவளையா?” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபின் அவன் நிமிர்ந்து அவளை நோக்கி “நான் மயங்கி காலத்தை வீணாக்க விழையவில்லை” என்றான். அவள் மெல்ல சிரித்து உதடுகளை மடித்து “ஆம், அது நன்று. மதுவருந்துவது அதன் நெகிழ்வை அறிந்து மகிழ்வுகொள்வதற்காக. துயில்வதென்றால் மது எதற்கு?” என்றாள். பின்னர் திரும்பி குவளைகளை எடுத்துச்செல்லும்படி விழிகளால் ஆணையிட்டாள். அவர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு செல்கையில் முகங்கள் சற்று கூம்பியிருப்பதை பக்கவாட்டுத் தோற்றத்திலேயே கண்டான்.

அவர்கள் கதவை மூடியதும் அவள் அவனருகே வந்து “நீங்கள் விரும்பியது என்னை. ஆகவே நானே இங்கிருந்தேன்” என்றாள். அவன் பதறி “யார் சொன்னது?” என்றான். “ஆடியில் உங்கள் நோக்கை கண்டேன். நிலைத்ததும் தேடியதும் என்னுடலையே.” அவன் “இல்லை” என்றான். “ஆம்” என்று சொல்லி அவள் அவன் தோளை தொட்டாள். அவன் உடல் துடிக்கத் தொடங்கியது. “இன்று நான் உங்களுடன் இருக்கிறேன்.” அவன் பேசாமலிருந்தான். ஆனால் உடல் அனல்கொண்டது. காதுகளும் கண்களும் எரியத்தொடங்கின. அவள் அவன் தலைமேல் கையை வைத்து “நான் இருக்கட்டுமா?” என்று தாழ்ந்த குரலில் கொஞ்சலாக கேட்டாள்.

அக்குரல்மாற்றம் அவனை பின்னாலிருந்து உதைக்கப்பட்டதுபோல திடுக்கிடச் செய்தது. எழுந்து நின்று “வேண்டாம். செல்க!” என்றான். அவள் “ஏன்?” என்றாள். எழுந்ததுமே அவன் உடலின் அதிர்வுகளும் அடங்கிவிட்டிருந்தன “செல்க… செல்க!” என்று கைநீட்டி சொன்னான். குரல் உடைந்து பிற எவருடையதோ என ஒலித்தது. “செல்… செல்!” என்று அவன் உரக்க சொன்னான். அக்குரல்மாற்றத்தால் அவள் திகைத்து “ஆணை” என தலைவணங்கி வெளியே சென்றாள்.

கதவு மூடும் ஒலியில் அவன் இழுத்த கையால் விடப்பட்டவன் போல தளர்ந்தான். திரும்பவும் அமர்ந்துகொண்டு மூச்சிரைத்தபடி கண்களை மூடினான். உடலெங்கும் குருதி நுரையழிவதை உணர்ந்தான். மீண்டும் கதவு திறக்கும் ஒலி எழுந்தபோது அவன் உடல் குளிர்ந்திருந்தது. “யார்?” என்றான். “அரசே, நான்தான்” என்றான் பார்க்கவன். அவனருகே வந்து வணங்கி “மாலினியை திருப்பி அனுப்பினீர்கள் என்றாள்” என்றான். “யார்?” என்றான். “இப்போது வந்தவள்… சேடி.” யயாதி “ஆம், அவள் என்னிடம்…” என்றபின் “என்னால் இது இயலாது” என்றான். “ஆம், நான் அதை எண்ணினேன். மற்ற இருவரும் என்னிடம் சொன்னபோதே நீங்கள் இருக்கும் நிலை புரிந்தது.”

யயாதி சீற்றத்துடன் “என்ன நிலை?” என்றான். “முதிரா இளைஞனின் உளநிலை…” என்று பார்க்கவன் புன்னகைத்தான். “காமம் எண்ணங்களிலேயே நிகழமுடியும். உடல் அச்சமும் அருவருப்பும் ஊட்டும்” என்றான். யயாதி “இல்லை…” என்றபின் தயங்கி “ஆம், உண்மை” என்றான். “முதிரா இளமையின் இடரே எதையும் எதிர்கொள்ளமுடியாதென்பதுதான். உடலை எதிர்கொள்ள அஞ்சியே காமத்தை தூய்மைப்படுத்திக்கொள்கிறீர்கள். புகையோவியமென அது நிலம்தொடாது ஒளிகொண்டு நிற்கிறது. அதை மண்ணுக்கிழுப்பது உடல் என நினைக்கிறீர்கள்” என்றான். வாய்விட்டுச் சிரித்தபடி “நாளெல்லாம் எண்ணுவது பெண்ணை. ஆனால் பெண்ணுடல்மேல் வெறுப்பு. அந்த இரு நிலையைக் கடப்பதன் பெயரே அகவை எய்துதல்” என்றான்.

யயாதி நாணத்துடன் சிரித்து “ஆம்” என்றான். அச்சிரிப்பினூடாக அவர்கள் அத்தருணத்தின் இறுக்கத்தை கடந்தனர். “உங்களிடம் குற்றவுணர்ச்சி ஏதேனும் உள்ளதா?” என்றான் பார்க்கவன். “அதை நானே கேட்டுக்கொண்டேன். இல்லை, உடை களைந்து நீரில் குதித்தவனின் விடுதலையையே உணர்கிறேன்” என்றான் யயாதி. பார்க்கவன் “ஒருவேளை இனி அது எழக்கூடும். அவ்வாறு எழவேண்டியதில்லை” என்றான். “அரசே, மைந்தனுக்கு தந்தை அளிக்கும் கொடைகளில் முதன்மையானது முதுமை அல்லவா? அத்தனை தந்தையரும் கைக்குழவியாக மைந்தர் இருக்கும்நாள் முதல் துளியாக மிடறாக அளிப்பது தானடைந்த முதுமையைத்தானே?” என்றான்.

யயாதி மெல்லிய உளக்கிளர்ச்சியுடன் “ஆம்” என்றான். “அதேபோல மைந்தர் தந்தைக்கு அளிக்கவேண்டியதும் இளமையை அல்லவா? தங்கள் இளமையின் மகிழ்வையும் விடுதலையையும்தானே இளஞ்சிறுவர்களாக அவர்கள் தந்தையருக்கு பரிசளிக்கிறார்கள்? தந்தையரின் முதுமையை அதனூடாக அவர்கள் தொடர்ந்து விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தந்தையர் முதிர்ந்து உடலோய்ந்தமைகையில் மைந்தரின் தோளிலும் காலிலும் சொல்லிலும் விழியிலும் உள்ள இளமையைத்தானே துணைகொள்கிறார்கள்?”

“ஆம்” என்று யயாதி சொன்னான். மீண்டும் மீண்டும் ஒரே சொல்லையே சொல்கிறோம் என உணர்ந்து “உண்மை” என்றான். உள எழுச்சி தாளாமல் எழுந்துகொண்டு “மெய். நான் இதை எண்ணியதே இல்லை” என்றான். “அரசே, அத்தந்தையர் இறந்து மூச்சுலகெய்திய பின்னர் மைந்தர் அளிக்கும் உணவும் நீரும் நுண்சொல்லுமே அவர்களை என்றுமழியா இளமையுடன் விண்ணில் நிறுத்துகிறது” என்றான் பார்க்கவன். “ஆம்” என்றபடி யயாதி அமர்ந்தான். “ஆகவே எங்கும் நிகழ்வது இங்கு அதன் முழுமையுடன் அமைந்தது என்றே கொள்க!” என்றபின் பார்க்கவன் எழுந்தான். “நீங்கள் விழைந்தால் வேட்டைக்கு செல்லலாம். மாலையில் கூத்தர் நிகழ்த்தும் அவைநிகழ்வுகளுக்கு ஒருங்கு செய்துள்ளேன்” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றான்.

tigerகதவுக்கு அப்பால் ஓசை கேட்டபோது யயாதி சுவடியை மூடிவிட்டு நிமிர்ந்தான். கதவு மெல்ல திறந்தது. அதனூடாக ஆடைவண்ணம் தெரிந்தது. அதிலேயே அவன் சர்மிஷ்டையை அடையாளம் கண்டான். உள்ளம் கிளர எழுந்து நின்றான். அவள் உள்ளே வந்து விழிதிகைத்து நின்று அறியாமல் திரும்பிச்செல்பவள் போல கதவை பற்றினாள். “சர்மிஷ்டை” என அவன் அழைத்தான். “இளமை மீண்டுவிட்டேன். நான் என்றும் விழைந்தது இது.” அவள் உதடுகளை மடித்துக் கவ்வி கண்களில் பதைப்புடன் அவனை நோக்கினாள். “என்ன நோக்குகிறாய்? இது என் இளமையுருவம்… நீ அதை பலமுறை கனவில் கண்டிருப்பதாக சொல்லியிருக்கிறாய்” என்றான். “இல்லை, இது புருவின் உருவம்” என்று பட்டு கசங்கும் ஒலியில் சர்மிஷ்டை சொன்னாள்.

அவனுக்கு அது கேட்கவில்லை. மேலும் உளம் பெருக “பார்! முதிரா இளமையையே அடைந்திருக்கிறேன். என் இளமையைச் சூடியபோதே உன்னைத்தான் எண்ணினேன். உன்னுடனிருக்கையில் நான் இளையவனாக இருக்கலாகாதா என ஏங்கியிருக்கிறேன். அவ்வெண்ணத்தால் அத்தனை தருணங்களிலும் குறையுணர்ந்திருக்கிறேன்” என்றான். களிப்புடன் நகைத்து “உன்னை அத்தனை அகவைநிலைகளிலும் அடைவேன். எச்சமில்லாது காமத்தை அடைந்து ஒழிந்து எழவேண்டும் நான்” என்றபடி அவளை நோக்கி கைவிரித்தபடி சென்றான்.

அவள் “விலகு… அணுகாதே!” என கூவினாள். முகம் சுளித்து கைகள் உதறிக்கொண்டன. “அணுகாதே என்னை…” என்று உடைந்த உரத்த குரலில் கூச்சலிட்டு கதவுடன் முதுகு ஒட்டிநின்று நடுங்கினாள். முன்வளைந்த தோள்கள் இறுக கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர “போ… அணுகாதே…” என்றாள். “ஏன்?” என்று அவன் நின்றான். “நீ என் மைந்தனின் இளமையை சூடியிருக்கிறாய்… நீ கொண்டிருப்பது என் மகனை.” அப்போதுதான் அவள் எண்ணுவதை அவன் அறிந்துகொண்டான். தலையை கல் தாக்கியதுபோல அவ்வுணர்வு அவனை சென்றடைந்தது. இருமுறை உதடுகளை திறந்துமூடினான். பின்னர் சென்று தன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

அவள் “மூடா, அதைக்கொண்டு நீ எதை அடையப்போகிறாய்? எந்தப் பெண்ணை?” என்றாள். வெறுப்பில் அவள் கண்கள் சுருங்கி உறுமும் ஓநாய் என பற்கள் தெரிந்தன. “அப்பெண்ணை எந்த விழிகளால் நோக்குவாய்? எந்த உடலால் அடைவாய்? நீ நோக்கியமையால் இந்த உடலை நான் உதறவேண்டும். நோன்பிருந்து இதை உலரச்செய்யாமல் இனி ஆடிநோக்க என்னால் இயலுமா?” அவன் கைவீசி “போ!” என்று கூவினான். அவள் மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தபின் கதவைத் திறந்து வெளியே சென்றாள். கதவு மூடிய ஒலி அவனை அறைந்தது. வியர்வையுடன் நெற்றியைத் தட்டியபடி அவன் அமர்ந்திருந்தான். அனைத்து திகிரிகளும் மணலில் சிக்கி இறுகி அசைவிழக்க எண்ணங்கள் வெம்மைகொண்டன.

பின்னர் விடுபட்டு எழுந்தான். அனைத்தையும் அள்ளி ஓரு மூலையில் குவித்து தன் அகத்தை தூய்மை செய்தான். அப்போது அத்தனை முடிச்சுகளையும் தனித்தனியாகக் காணமுடிந்தது. ஒவ்வொன்றாகத் தொட்டு அவிழ்க்கமுடிந்தது. ஒவ்வொரு விரிதலும் அவனை எளிதாக்கின. எழுந்து இடைநாழியில் நடந்தபோது அவன் முகம் தெளிவுகொண்டிருந்தது. அவனை நோக்கி வந்த பார்க்கவனிடம் “நான் நாளைப்புலரியில் இங்கிருந்து கிளம்புகிறேன். காட்டுக்குச் செல்கிறேன்” என்றான். “எங்கே?” என்று பார்க்கவன் கேட்க “என்னை காட்டு எல்லைக்குக் கொண்டுசென்று இறக்கிவிடுங்கள், போதும்!” என்று அவன் சொன்னான்.

tigerஇளவேனிலில் மலர்பெருகி வண்ணம்பொலிந்திருந்த காட்டினூடாக யயாதி நடந்தான். பின்னர் அறிந்தான் அந்தக் காட்டிற்கு அவன் முன்னரும் வந்திருப்பதை. எப்போது என உள்ளம் வியந்தது. நினைவில் அக்காடு எவ்வகையிலும் எஞ்சியிருக்கவில்லை. மேலும் மேலுமெனச் சென்று முதிரா இளமையைக் கடந்து மீண்டுவந்தான். கனவிலா? ஆனால் அந்நிலத்தை எப்போதேனும் நோக்கியிருக்கவேண்டுமே! அவனால் அதை உணரவே முடியவில்லை. சலித்தபின் அதை அப்படியே உதறிவிட்டு அக்காட்டின் காட்சிகளில் உளம் திளைக்க மெல்ல நடந்தான்.

அன்று காலையில்தான் புரு கருக்கிருட்டிலேயே காட்டுக்குச் சென்றுவிட்டிருப்பதை அரண்மனை ஏவலர் உணர்ந்தனர். அவன் சென்ற தடமே எஞ்சியிருக்கவில்லை. “நீரில் மீன் என சென்று மறைவதே துறவு” என்று அமைச்சர் சொன்னார். “அவ்வாறு சென்றவர் மீள்வதில்லை. நாம் அவரை தொடரவேண்டியதில்லை.” அவன் பார்க்கவனிடம் “ஏன் அவன் சென்றான்?” என்றான். “முதுமை கொண்டவர்கள் கானேகவேண்டும் அல்லவா?” என்றான் பார்க்கவன். “அவள் அவனை நேற்று சந்தித்தாளா?” என விழிவிலக்கி யயாதி கேட்டான். “ஆம், அங்கிருந்துதான் உங்கள் அறைக்கு வந்தார்கள்” என்றான் பார்க்கவன். யயாதி திகைப்பு கொண்டவன்போல ஏறிட்டு நோக்கிவிட்டு “நான் உடனே கிளம்பவேண்டும்” என்றான். “நீங்கள் நம் எல்லைக்குட்பட்ட சுமவனத்திற்கே செல்லலாம், அரசே. உங்கள் உளநிலைக்கு உகந்தது அம்மலர்க்காடு” என்றான் பார்க்கவன்.

அவனை காட்டின் எல்லையில் இறக்கிவிட்டபின் பார்க்கவன் விழிகள் நீர்மை மின்ன விடைகொண்டான். நகரம் அகன்றதுமே அவன் விடுதலைகொள்ளத் தொடங்கியிருந்தான். காட்டில் நடந்ததுமே உடல் விசைகொண்டது. காண்பவை எல்லாம் துலக்கமடைந்தன. அங்கு வரும்வரை ஒவ்வொன்றும் எத்தனை சிடுக்கானவை என்றே உள்ளம் திகைப்பு கொண்டிருந்தது. முந்தைய நாள் இரவில் அவன் துயிலவில்லை. ஒவ்வொன்றையாக அணுகி நோக்கி வியந்து விலகிக்கொண்டிருந்தான். ஆனால் காட்டில் இலைப் பசுமைக்குள் நிழலொளி நடனத்திற்குள் அறுபடா சீவிடின் சுதியின்மேல் எழுந்த காற்றோசையின் அலைகளுக்குள் மூழ்கியபோது அவையெல்லாம் மிகமிக எளியவை என்று தோன்றின.

அங்கிருப்பது சலிப்பு மட்டுமே. அச்சலிப்பை வெல்லும்பொருட்டு உள்ளத்தை கலக்கி அலையெழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அதனூடாக அடையும் உணர்வுகளை அக்கணங்களில் உண்மை என நம்பி அதில் திளைக்கிறார்கள். விழிநீரும் குருதியும். புனலும் அனலும். அவை மட்டுமே அவர்களின் நாட்களை பொருள்கொண்டவையாக ஆக்குகின்றன. அவ்வெடையின்மையை அடைந்தபோது அவ்வாறு அக்காட்டில் சென்றது நினைவில் எழுந்தது. அவன் தந்தையின் வலிமையான கைகளில் சிறு குழவியாக இருந்தான் அப்போது. மிதந்து ஒழுகியபடி அக்காட்டை நோக்கிக்கொண்டு சென்றான்.

நகுஷனின் தொடுகையை தாடியின் வருடலை வியர்வை மணத்தை அவனால் உணரமுடிந்தது. அச்சிறுவயதுக்குப்பின் அங்கே வந்ததே இல்லை. ஆனால் கனவில் அந்த இடம் அச்செனப் பதிந்திருக்கிறது. அங்கிருக்கும் அத்தனை கரவுகளையும் சரிவுகளையும் காணமுடியுமெனத் தோன்றியது. நீர்தெளிந்து வான் விரிந்த சுனை ஒன்றை நினைவுகூர்ந்தான். உடனே அதற்குத் திரும்பும் வழியும் உள்ளத்தில் எழுந்தது. செல்லச் செல்ல மேலும் துலங்கியபடி வந்த திசையில் இலைகள் நீரலையொளி சூடி நின்றிருப்பதைக் கண்டான். நீலச்சுனை காலை வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.

அதன் சேற்றுக்கதுப்பில் பறவைகளின் காலடிகள் மட்டுமே இருந்தன. நாணல்கள் காற்றில் குழைந்தாடின. மெல்லிய அலைகளால் சேறு கலைவுறவில்லை. சேற்றில் நீர்வரிகளைக் கண்டபோது இனிய உணர்வொன்றால் அகம் சிலிர்ப்புகொண்டபின் அது ஏன் என சென்று துழாவிய சித்தம் எதையோ தொட்டுவிட அவன் நின்றுவிட்டான். மென்மையான முலைமேல் எழுந்த தோல்வரிகள். எவர் முலைகள் அவை? மூச்சுத் திணறியது. தலையை அசைத்து அவ்வெண்ணத்தை விரட்டியபின் சுனையை அணுகினான். பேற்றுவரிகள் படிந்த அடிவயிறு. யார் அது?

அங்கே நின்று தன் முகத்தை நீரில் நோக்கியதை நினைவுகூர்ந்தான். தந்தையின் குரல் கரையில் கேட்டுக்கொண்டிருந்தது. கையிலிருந்த மலர்க்கிளையால் நீர்ப்பரப்பை அடிக்க ஓங்கியவன் தன் விழிகளை தான் சந்தித்து திடுக்கிட்டான். உடல் சிலிர்க்க பின்னால் செல்வதுபோல ஓர் அசைவெழுந்தது. குளிர்கொண்டதுபோல உடல் உலுக்கிக்கொண்டது. விழிவிலக்காமல் அவன் நோக்கிக்கொண்டே இருந்தான். பின்னர் அதை நோக்கி கைசுட்டினான். அது அவனை நோக்கி கை சுட்டியது. அவன் புன்னகை செய்தபோது அதுவும் நாணிச்சிரித்தது.

அவன் குனிந்து நீரை நோக்கினான். இது எவர் முகம்? இளமையின் தயக்கமும் நாணமும் இனிய நகையும் கொண்டது. என் முகம். என்னில் நிகழ்ந்துகொண்டே இருப்பது. என்னில் வந்தமர்ந்த பறவை, அஞ்சி எழுந்து சிறகடித்துச் செல்வது. அவன் நீரை அள்ளி முகம் கழுவி சிறிது அருந்தினான். திரும்பியபோது பின்னால் அசைவெழுந்தது. திடுக்கிட்டு நோக்க நீருக்குள் இருந்து அவன் பாவை எழுவதுபோல ஒரு பெண் எழுந்தாள். “யார்?” என்றான் யயாதி. அவள் முகவாயிலிருந்து நீர் உருண்டு சொட்டியது. இளமுலைக் குவைகளில் வாழைத்தண்டில் என வழிந்தது. தோள்களில் முத்துசூடி நின்றது.

“யார்?” என அவன் மீண்டும் உரக்க கேட்டான். அவள் கைதூக்கி தன் குழலை நீவி நீரை வழித்தபின் இடை நீர் விளிம்பிலிருந்து மேலெழ ஒளிகொண்ட மெல்லுடலுடன் எழுந்து அணுகினாள். “யார் நீ?” என்றான் யயாதி. “என் பெயர் அஸ்ருபிந்துமதி” என்று அவள் சொன்னாள்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 87

87. நீர்க்கொடை

யயாதி தன் அகம்படியினருடன் குருநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின் பெருக்காகவுமே அவன் இருந்தான். அவன் கண்ட ஒவ்வொரு இடமும் உருமாறியிருந்தன. அண்மையில் உள்ளவை உருவழிந்து கலங்கித் தெரிந்தன. சேய்மையிலிருந்தவை ஒளிப்பெருக்கெனத் தெரிந்த தொடுவான் வட்டத்தில் கரைந்தவைபோல மிதந்தன. கலவிளிம்பில் ததும்பிச் சொட்டுவதுபோல அங்கிருந்து ஒவ்வொரு பொருளும் எழுந்து உருக்கொண்டு அணுகி அவன் முன் வந்து காற்றில் அலையும் நீர்ப்பாவைபோல் நின்றன.

ஓசைகளின் மீது அழுத்தமான எதையோ கொண்டு மூடியதுபோலிருந்தது. ஆனால் குரல்கள் சில மிக அண்மையில் எழுந்து உடலை துணுக்குறச் செய்தன. பெரும்பாலான நுண்ணிய மணங்கள் நினைவிலிருந்தே அகன்றுவிட்டிருக்க கூரிய நாற்றங்களால் ஆனதாக இருந்தது நிலம். மங்காதிருந்த புலன் மெய்தான். மரத்தடிகளில் படுத்ததும் வந்து தழுவும் குளிர்காற்று மணமும் ஒலியும் அசைவொளியும் அற்று தான்மட்டுமாக இருந்தது. குழல் கலைத்து ஆடை உலைத்து சூழ்ந்துகொண்டது. காற்று பட்டதுமே மெல்ல அவன் துயிலத் தொடங்கினான். விழித்தபோது முந்தையவை அனைத்தும் கரைந்து பரவி மறைய முற்றிலும் புதியவனாக விழித்தெழுந்தான். அவனுக்கு அணுக்கனாக வந்த காவலனை ஒவ்வொரு முறையும் “யார்?” என திகைத்து கேட்டான்.

பார்க்கவனின் குரலும் முகமும் தெளிவாக இருந்தமையால் எப்போதும் அவன் உடனிருக்க வேண்டுமென விழைந்தான். விழித்தெழுந்து அவனைக் காணவில்லை என்றால் பதைத்து “அவன் எங்கே? பார்க்கவன் எங்கே?” என்றான். அவன் தசைகள் நொய்ந்து நீர்மிகுந்த சேற்றுக்கதுப்பென ஆகிவிட்டிருந்தன. செதிலாகச் சுருங்கிய தோலுடன் அவை கன்னங்களிலும் தாடைக்குக்கீழும் புயங்களிலும் தொங்கின. உதடு முற்றாக மடிந்து உள்ளே சென்றிருக்க மூக்கு வளைந்து உதட்டைத் தொடுவதுபோல புடைத்திருந்தது. நினைத்தெடுத்துச் சொல்லாக்கி உரைக்க இயலாமையால் அவன் உதிரிச்சொற்றொடர்களால் பேசினான். ஒரு சொற்றொடர் துலங்கியதும் அதன் வெளிச்சத்தில் தடுமாறி முன்னகர்ந்து அடுத்த சொற்றொடர்களை உருவாக்கினான். தொடர்ந்து பேசினால் மூச்சுபோதாமல் திணறி அத்திணறலே குரலை தழுதழுக்கச்செய்ய கண்கள் கலங்கி விம்மினான். அந்த விம்மல் வழியாகவே துயர் எழ அவன் பேசியதெல்லாமே கண்ணீரில் சென்று முடிந்தது. சற்றே தாழ்ந்திருந்த இடக்கண்ணிலிருந்து மட்டும் நீர் வழிய முகம் இடப்பக்கமாக கோணலாகி இழுபட விசும்பி விசும்பி அழுதான். முகச்சுருக்கங்களின் மேல் கண்ணீர் தயங்கித்தயங்கி வழிந்தது.

சுற்றிலும் இருந்தவர்களின் விழிகளை நோக்கமுடியாதானமையால் விரைவிலேயே அவன் அவர்களை எண்ணவும் முடியாதவனானான். ஆகவே தன் உணர்வுகளை மறைக்க அவனால் இயலவில்லை. இனிய எளிய உணவுகள் அவனுக்கு பிடித்திருந்தன. அக்காரம் சேர்த்த கஞ்சியை ஏவலன் நீட்டும்போது இருகைகளாலும் வாங்கி முகம் மலர தலையசைத்து மகிழ்ந்து ஆவலுடன் அள்ளிக்குடித்தான். இனிய உணவை கையில் கொடுத்தால் சிறுகுழந்தையைப்போல மகிழ்ந்து சிரித்துக்கொண்டே இருந்தான். எண்ணியிராதபடி ஏதேனும் இன்னுணவு நினைவில் எழுந்தால் அதை உடனே அருகிருந்தவர்களிடம் சொல்லி கொண்டுவரும்படி ஆணையிட்டான். “எனக்கு அக்காரச்சாற்றிலிட்டு வேகவைத்த கிழங்கு வேண்டும்” என்று அவன் கேட்டபோது ஏவலன் “அரசே, நாம் பயணத்திலிருக்கிறோம்” என்றான். “எனக்கு வேண்டும்… வேண்டும்” என்று அவன் கேட்டான். “அரசே” என்று ஏவலன் சொல்ல “வேண்டும்…” என்று அவன் அழுவதுபோன்ற முகநெளிவுடன் சொன்னான். பார்க்கவன் அவனை விலகும்படி தலையசைத்து “கொண்டுவருகிறோம் அரசே… இதோ” என்றான். “எப்போது?” என்றான் யயாதி. “இதோ” என்றான் பார்க்கவன். பின்னர் ஒரு பெரிய மலரைக் கொண்டுவந்து காட்டி “பார்த்தீர்களா? மலர்” என்றான். அதை வாங்கிப் பார்த்து முகம் மலர்ந்து “மலர்” என்றான். நிமிர்ந்து பார்க்கவனிடம் “பெரிய மலர்” என்றான். அவன் கேட்டதை பின்னர் நினைவுறவே இல்லை.

அவர்கள் இரவில் எவருமறியாமல் மூடப்பட்ட தேரில் குருநகரிக்கு வந்து சேர்ந்தார்கள். யயாதியின் உருமாற்றத்தைப்பற்றி குருநகரியின் தலைமை அமைச்சருக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே செய்தியனுப்பப்பட்டிருந்தது. கோட்டை வாயிலிலேயே தலைமையமைச்சர் சுகிர்தர் காத்திருந்தார். கூண்டுத்தேர் வந்து நின்றதும் பார்க்கவன் இறங்கிச்சென்று தலைவணங்கி அரசனின் வருகையை சொன்னான். சுகிர்தர் வந்து தேர் அருகே பணிந்தார். பார்க்கவன் “அரசே… அரசே…” என்று அழைக்க திரையை விலக்கி எட்டிப்பார்த்த யயாதி “யார்? யார்?” என்று பதறினான். “அரசே, நான் பார்க்கவன்… இவர் தலைமையமைச்சர் சுகிர்தர்” என்றான் பார்க்கவன். “ஆம், தெரிகிறது” என்றபின் யயாதி “என் இடை வலிக்கிறது. நாம் எப்போது செல்வோம்?” என்றான். “வந்துவிட்டோம், அரசே.” யயாதி “என் இடையில் வலி” என்றான்.

சுகிர்தர் திகைத்துப்போய் “என்ன இது?” என்றார். பார்க்கவன் திரைச்சீலையை மூடி “செல்லலாம்” என பாகனுக்கு ஆணையிட்டுவிட்டு “சுக்ரரின் தீச்சொல். ஆனால் சொல்முறிவு உள்ளது. அரசர் தன் முதுமையை சிலகாலத்திற்கு மைந்தர் எவருக்கேனும் அளிக்க விழைகிறார்.” சுகிர்தர் “மைந்தரா? இளமையை எவர் அளிப்பார்?” என்றார். “திரும்பப் பெற்றுக்கொள்ளலாமே?” என்றான் பார்க்கவன். “ஆம், ஆனால் இப்புவியில் மானுடர் விழையாதவை அது. நோயும் மூப்பும் இறப்பும்தான். ஜரைதேவியும் வியாதிதேவியும் மிருத்யூதேவியின் புதல்விகள்.” பார்க்கவன் “ஆனால் அவர் அரசர்…” என்றான். அவன் என்னபொருளில் அதை சொன்னான் என சுகிர்தரால் உணரமுடியவில்லை.

அவர்கள் அரண்மனைக்குச் சென்றபோது அங்கே இரு இளவரசர்களும் காத்து நின்றிருந்தனர். யது ஐயத்துடனும் தயக்கத்துடனும் பின்னால் நின்றிருக்க துர்வசு எதுவும் புரியாமல் புருவங்களைச் சுருக்கியபடி முன்னால் நின்றான். தேர் நின்றதும் சுகிர்தர் இறங்கி அவர்களிடம் சென்று மெல்லிய குரலில் பேச இருவரும் தயங்கியபின் மெதுவாக அருகணைந்தனர். பார்க்கவன் திரையை விலக்கி “அரசே, அரண்மனை” என்றான். “எங்கே?” என்றான் யயாதி. “அரண்மனை, குருநகரி.”

யயாதி “ஆம்” என்றபின் பார்க்கவனின் தோளைப் பற்றியபடி இறங்கினான். நிலையான தரையில் விசை எஞ்சியிருந்த உடல் தள்ளாடியது. பார்க்கவன் அவனை பற்றிக்கொண்டு “வருக” என்றான். யதுவும் துர்வசுவும் அருகே வந்து அவனைப் பணிந்து “நல்வரவு, தந்தையே. அரண்மனை தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றனர். யயாதி “ஆம், நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்… நான் உங்களிடம் ஒன்று கோரவேண்டும்” என்றான். பார்க்கவன் “அரசே, இது இரவு… நாம் ஓய்வெடுக்கவேண்டும். நாளை காலை முறைப்படி சான்றோர் முன் அதை கோருவோம்” என்றான். “ஆம், அதுவே முறை” என்றான் யயாதி.

அவன் பார்க்கவனை பற்றிக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறி குருநகரியின் அரண்மனையின் முகப்பை அடைந்து பெருங்கூடத்திற்குள் நுழைந்தான். மூச்சுவாங்கியபடி நின்று “நான் முதுமை கொண்டுவிட்டேன்…” என்றான். “அரசே, அனைத்தையும் நாம் நாளை பேசுவோம்” என்றான் பார்க்கவன். “ஆம், முறைமைப்படி நான் கோரவேண்டும்” என்றான் யயாதி. அவர்கள் பெருங்கூடத்தில் இருந்த பீடங்களை அடைந்ததும் யயாதி “நான் சற்று அமர்கிறேன்… மூச்சுவாங்குகிறது” என்றான். பார்க்கவன் “ஆம், வருக!” என அழைத்துச்சென்றான். பீடத்தில் அமர்ந்ததும் யயாதி நிமிர்ந்து புதியவர்கள் என மைந்தர்களை நோக்கி “இவர்களிடம் நான் ஒன்று கோரவேண்டும்… என்னிடம் சுக்ரர் சொன்னது. இல்லை… அவர் இல்லை. அவருடைய மாணவர். அவர் பெயரை மறந்துவிட்டேன்” என்றான்.

பார்க்கவன் “அரசே… நாளை…” என தொடங்க யயாதி சினந்து “வாயை மூடு, மூடா! நீ என்ன என்னை பேசவே விடமாட்டாயா?” என்றபின் அதே சினச்சிவப்பு முகத்தில் எஞ்சியிருக்க “எனக்கு முதுமையை தீச்சொல்லிட்டார் சுக்ரர்… அதுதான் நீங்கள் காண்பது” என்றான் யயாதி. “ஆனால் சொல்முறிவும் அளித்துள்ளார். என் முதுமையை உவந்துபெறும் ஒருவருக்கு நான் அளிக்கமுடியும்…” யது திரும்பி சுகிர்தரை பார்க்க அவர் “ஆம், அதை நாம் நாளையே பேசிமுடிப்போம். நான் இளவரசரிடம் அதைப்பற்றி விளக்கி…” என்று சொல்லத் தொடங்கினார். யயாதி கைதூக்கி அவரைத் தடுத்து “நான் கேட்பது என் மைந்தனிடம். என் அரசுக்கும் குருதிவழிக்கும் நீட்சியாக அமையவிருப்பவன் அவன். நீ என் முதுமையை பெற்றுக்கொள்ளவேண்டும். நான் விரும்பும்வரை அதை கொண்டிருக்கவேண்டும்.”

யது அதை எதிர்பார்க்காமையால் மலைத்துப்போய் நின்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான் யயாதி. “நீ முதுமைகொள்வது உனக்கும் நன்று…” என்றபின் “நீர்க்கலம் வருக! சொல்லோதி பொழிவுக்கொடை அளிக்கிறேன்” என்றான். யது புரிந்துகொண்டு சினம் மேலிட நிலையழிந்து உரத்தகுரலில் “நீங்கள் அடைந்தது உங்கள் இழிசெயலின் விளைவை. அதை பிறர் ஏன் சுமக்கவேண்டும்?” என்றான். “மூடா…” என்றபடி யயாதி எழப்போக பார்க்கவன் அவனைப் பிடித்து “அரசே…” என்றான். “விடு என்னை… நீ என் அரசை கொள்ளப்போகிறாய். என் மூன்று வினைகளுக்கும் நீயே தொடர்ச்சி…” என்றான். “ஆம், ஆனால் ஊழெனில் அதை தெய்வங்கள் அளிக்கவேண்டும். மானுடர் அளிக்கக்கூடாது. அவ்வாறு அளிக்கக்கூடும் என்றால் அத்தனை தந்தையரும் தங்கள் பிணிகளை மைந்தர்மேல் ஏற்றிவைப்பார்கள்… நான் உடன்படமுடியாது” என்றான்.

யயாதி “தந்தையரின் பிணிகளும் மைந்தருக்கு வருகின்றன” என்றான். “நான் அளிப்பதையே நீ கொள்ளமுடியும்…” யது “நீங்கள் எங்களுக்கு அளித்தவை எவையும் நீங்கள் ஈட்டியவை அல்ல. சந்திரகுலத்து மூதாதையரின் செல்வங்கள் இவை. எங்களை இக்குலத்தில் பிறக்கச்செய்த தெய்வங்களால் இவை அளிக்கப்பட்டுவிட்டன. உங்களிடம் இரவலராக நாங்கள் வந்து நிற்கவில்லை” என்றான். யயாதியின் தலை நடுங்கியது. கைகள் நடுக்கத்தில் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. பீடத்தில் மீண்டும் அமர்ந்து கைகளை தொடைக்குக்கீழே வைத்து நடுக்கத்தை அடக்கியபடி “இளையவனே…” என்றான். துர்வசு “நீங்கள் எவர்பொருட்டு இத்தீச்சொல்லை பெற்றீர்கள் என அறிவோம். அவர்களுக்காக எம் அன்னையை ஏமாற்றினீர்கள். அவர்களே இந்த மூப்புப்பிணியையும் ஏற்கக் கடமைப்பட்டவர்கள். செல்க!” என்றான்.

பார்க்கவன் “இளவரசே, இதையெல்லாம் இந்நள்ளிரவில் பேசவேண்டியதில்லை. நாம் நாளை அமர்ந்து பேசுவோம்” என்றான். “நீர் எத்தனை பேசினாலும் எங்கள் முடிவு இதுதான். இவரை நம்பி மூப்பை ஏற்பதன் மடமையை நான் அறிவேன். இவர் எதன்பொருட்டு இளமையைக் கோருகிறார்? அடைந்த பெண்கள் போதவில்லை அல்லவா? மேலும் காமத்தில் திளைக்க உடல் தேவை அல்லவா? இவருக்கு காமம் எப்போது திகட்டும்? அமைச்சரே, காமம் திகட்டிய எவரேனும் உள்ளனரா? இவர் திரும்பிவந்து முதுமையை பெற்றுக்கொள்வார் என நீங்கள் எண்ணுகிறீர்களா? சொல்லுங்கள்…” என்றான் யது.

பார்க்கவன் “அதை நாம் பேசுவோம்” என்று சொல்ல யது “விலகுங்கள்! இது எங்களுக்குள் பேசி முடிக்கவேண்டிய சிக்கல். தந்தையே, உங்கள் காமத்தை நான் நம்பவில்லை. உங்கள் நேர்மையையும் நான் நம்பவில்லை. என் தாயை ஏமாற்றியவர் நீங்கள். உங்கள் இழிவைக்கண்டு உளம்வெறுத்துச்சென்று அவர்கள் முடிமழித்து துவராடை அணிந்து தனிச்சோலையில் தவமிருக்கிறார்கள். நீங்கள் அதன்பின்னரும் காமம் நிறையாமல் வந்து இளமைக்காக இரக்கிறீர்கள். இப்படி இரந்து நிற்பதனூடாகவே மேலும் இழிவுகொள்கிறீர்கள். உங்களை நம்பி இளமையை அளிக்க நான் மூடன் அல்ல” என்றான். துர்வசு “அவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள்! அவர்கள் உங்களுக்கு அளித்தது இந்த முதுமை. அவர்களே பெற்றுக்கொள்ளட்டும்” என்றான்.

யயாதி வாயை இறுக மூடியபோது அது சுருங்கி ஒரு துணிமுடிச்சென ஆயிற்று. அவன் விழிகளில் வெறுப்பு தெரிந்தது. அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. “அரசே, நாம் இப்போது இதைப் பேசியது பிழை. எவர் உள்ளமும் நிலைகொண்டிருக்கவில்லை. வெறும் உணர்வாடல் இது. நாளை ஆவதை எண்ணி சொல்லெடுத்துப் பேசுவோம்” என்றான். யயாதி “இனி எனக்குப் பேச ஏதுமில்லை. இவர்கள் என் கொடிக்கும் குருதிக்கும் வழித்தோன்றல்கள் அல்ல” என்றான்

சுகிர்தர் “அரசே…” என கைநீட்ட “விலகு… இது என் சொல். மூதாதையர் அறிக! என் குலதெய்வங்கள் அறிக! நான் கொண்ட படைக்கலங்கள் கொன்றவர்களின் உயிர்கள் அறிக! இன்றுவரை நான் அவையமர்ந்து அளித்த தீர்ப்புகளால் இறந்தவர்கள் அறிக! இது என் சொல்! இவர்கள் என் மைந்தர்கள் அல்ல. இவர்களின் பிறவிநூல்களை நோக்கிய அன்றே இவர்களின் ஊழை உணர்ந்தேன். அது ஏன் என இன்று புரிந்துகொள்கிறேன்.”

அவன் குரல் நடுக்கமிழந்து உரக்க ஒலித்தது. “மூத்தவனே, நீ ஒருபோதும் நிலைகொள்ளமாட்டாய். குடியுடனும் கன்றுகளுடனும் நிலத்திலிருந்து நிலம் நோக்கி சென்றுகொண்டே இருப்பாய். உன் செல்வம் ஒருபோதும் மண்ணில் நிலைக்காது, அது கால்கொண்டு அலைவதாகவே அமையும். உன் குடிகளுக்கும் அதுவே ஊழென்றமையும். நீங்கள் அந்தணராலும் ஷத்ரியர்களாலும் வேட்டையாடப்படுவீர்கள். எரித்து அழிக்கப்படுவீர்கள். கொன்றுகுவிக்கப்படுவீர்கள். நீங்கள் வெல்பவை அனைத்தும் கணம்கணமென கைநழுவும். நீங்கள் கட்டி எழுப்பிய அனைத்தும் உங்கள் கண்ணெதிரே நுரையெனப் பொலியும். ஆம், அவ்வாறே ஆகுக!”

யது நடுங்கி பின்னடைந்து அறியாது கைகூப்பிவிட்டான். யயாதி துர்வசுவை நோக்கி திரும்பி “நீ ஒருபோதும் பசுநிலத்தை காணமாட்டாய். பாறைகள் வெடித்த பாலைகளில் அனல்காற்றுகளால் அலைக்கழிக்கப்படும் சருகென்றமையும் உன் வாழ்வு. உன் கொடிவழிகளுக்கும் அவ்வாறே. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் தன்னை தூக்கும்படி கை நீட்டினான். யது பாய்ந்து வந்து ஓசையுடன் நிலத்தில் விழுந்து யயாதியின் கால்களை பற்றிக்கொண்டு “பொறுத்தருள்க தந்தையே… என் அச்சமும் ஐயமும் என்னை ஆட்கொண்டுவிட்டன. நான் சொன்னவற்றின் பொருளை நான் உணர்கிறேன். அவையனைத்தும் என்னுள் உறையும் உங்கள் மேல் கொண்ட வெறுப்பிலிருந்து எழுந்தவை. தந்தையே நான் நீங்களேதான்” என்றான்.

யயாதி “ஆம், நான் உன்மேல்கொண்ட வெறுப்பும் என்மேல் நான் கொண்டதே” என்றான். யது கண்ணீருடன் தலைதூக்கி “அளிகூர்ந்து சொல்முறிவளியுங்கள்… நான் மீளும் வழி உரையுங்கள், தந்தையே” என்றான். யயாதி நீள்மூச்செறிந்து “ஆம், நான் அதையும் அளித்தாகவேண்டும். உன் குருதி நூறுமேனி விளையும். மைந்தா, நிலம் பெருகுவதல்ல, கால்நடைகளோ ஆண்டுதோறும் இருமடங்காகும். எனவே உன்குலம் ஆபுரந்து வாழட்டும். பாரதவர்ஷமெங்கும் பரவி கிளையிலிருந்து கிளைபிரிந்து என்றும் அழியாது நிலைகொள்ளட்டும்”என்றான்

மேலும் உளம் எழ அவன் குரல் ஆணை என ஒலித்தது “உன்குடியில் மாவீரர் எழுவர். பேரன்னையர் பிறப்பர். சிப்பிகளனைத்தும் முத்து நிகழும் வாய்ப்புகளே என்பதுபோல குலங்களெல்லாம் தெய்வம் வந்து பிறப்பதற்கானவை. உன் குடியில் விண்நிறைந்த பரம்பொருள் கனிந்து துளித்துச் சொட்டி நிறைக! அவன் பெயரின் பொருட்டே உன்குருதியை மானுடக்குலம் போற்றும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

கண்ணீர் வழிய அருகே வந்து மண்டியிட்ட துர்வசுவின் தலையைத் தொட்டு “தந்தை என உன் குலத்தை நான் வாழ்த்துகிறேன். கல்கரையும் வறுதியிலும் பசுந்தளிர்விடும் பாலைமுட்கள் போலாகட்டும் உன் குடி. என்றும் அழியாது. உன் கொடிவழியில் பிறந்தவர்கள் மலைநாடுகளை ஆள்வார்கள். அவர்களில் எழுந்த அரசி ஒருத்தியின் குருதியில் பேரரசர்கள் பிறந்து கங்கைக்கரைகளில் கொடிதிகழ்வார்கள். ஆம், அவ்வாறே ஆகுக!” நெஞ்சு விம்மி விம்மித் தணிய யயாதி பார்க்கவனிடம் “நாம் உடனே அசோகவனிக்கு செல்லவேண்டும்” என்றான். “அரசே, தாங்கள் களைத்திருக்கிறீர்கள். ஓய்வெடுங்கள்” என்றான் பார்க்கவன். “இல்லை. இனி ஒருகணம்கூட என்னால் பிந்த இயலாது… எழுக தேர்!” என்றான் யயாதி.

tigerமறுநாள் புலரிச்சுடர் எழுந்தபோது அவர்கள் அசோகவனியை சென்றடைந்தனர். அவர்கள் வருவது சொல்லப்படாததனால் கூண்டுத்தேரைக் கண்டு கோட்டைக்காவலர் தலைவன் திகைத்து அருகே ஓடிவந்தான். பார்க்கவன் சுருக்கமாக செய்தியைச் சொல்ல அவனும் இருகாவலரும் புரவிகளில் முன்னே சென்றார்கள். காலையில் அசோகவனியின் தெருக்களில் வணிகம் தொடங்கிவிட்டிருந்தது. சாலைநெரிசலுக்கு அப்போதும் பழகாத மக்கள் வந்து குறுக்கே விழுந்துகொண்டே இருந்தனர். அரண்மனை முகப்பை அடைந்ததும் தேர் விரைவழிய யயாதி விழித்துக்கொண்டு “எங்கு வந்துள்ளோம்?” என்றான். “வந்துவிட்டோம், அரசே” என்றான் பார்க்கவன்.

அரண்மனை முற்றத்திலேயே காவலர்தலைவனுடன் மூன்று மைந்தரும் காத்து நின்றிருந்தார்கள். திருஹ்யூயும் அனுதிருஹ்யூயும் முன்னால் நின்றிருந்தனர். அவர்களின் முகங்கள் குழப்பம்கொண்டவர்களைப்போல தெரிந்தன. புரு அவர்களுக்குப்பின்னால் அவர்களால் பாதிமறைக்கப்பட்டு நின்றான். பார்க்கவன் “இறங்கலாம், அரசே” என்றான். யயாதி கைநீட்ட அதைப் பற்றி மெல்ல அவனை இறக்கினான். படிகளில் கால் வைத்து நடுங்கியபடி இறங்கி கூனிட்டு நின்ற யயாதி நெற்றிமேல் கை வைத்து அவர்களை நோக்கினான்.

மைந்தர் மூவரும் அருகே வந்து கால்தொட்டு வணங்கினர். “நலம் சூழ்க!” என வாழ்த்திய யயாதி “நான் உங்களிடம் ஒரு கோரிக்கைக்காகவே வந்தேன்” என்றான். “உள்ளே சென்று பேசுவோம்” என்றான் பார்க்கவன். “இல்லை, நான் இனிமேல் முறைமைகளுக்கு நேரத்தை வீணடிப்பதாக இல்லை. நிகழ்ந்தவை இவர்களுக்குத் தெரியும் என எண்ணுகிறேன்.” பார்க்கவன் “ஆம், அனைத்தும் ஒற்றர்களின் வழியாக முன்னரே தெரிந்திருக்கின்றன. நீங்கள் வருவதை நான் பறவையோலையினூடாகத் தெரிவித்தேன்” என்றான். “அப்படியென்றால் நான் சொல்விளையாட விழையவில்லை. என் மைந்தரில் ஒருவர் இம்முதுமையை பெற்றுக்கொண்டு தன் இளமையை எனக்கு அளிக்கவேண்டும். நான் விழைவதுவரை அதை கொண்டிருக்கவேண்டும்” என்றான் யயாதி.

அனுதிருஹ்யூ புருவங்களைச் சுருக்கியபடி அசையாமல் நின்றான். “முதல்மைந்தர் இருவரும் மறுத்துவிட்டனர். ஆகவே இங்கே உங்களிடம் வந்துள்ளேன்” என்றான் யயாதி. “பொறுத்தருள்க, தந்தையே. நேற்றே என்னிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டது. இரவெல்லாம் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். உவந்து உங்கள் முதுமையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் என் உள்ளம் அதை ஏற்கவில்லை. நான் என்னை கட்டாயப்படுத்தி மட்டுமே அதை பெற்றுக்கொள்ளமுடியும்” என்றான் திருஹ்யூ.

யயாதி “ஆம், இதை நான் எதிர்பார்த்தேன்” என்றான். அனுதிருஹ்யூ “நானும் அதையே சொல்ல விழைகிறேன், தந்தையே” என்றான். “நீங்கள் என் தந்தையென்றாகி இன்னமும் ஒருமாதம்கூட ஆகவில்லை. நான் ஏற்றுக்கொண்டாலும் உள்ளம் அவ்வண்ணம் எண்ணவில்லை. எவரோ ஒருவருக்கு என் இளமையை ஏன் அளிக்கவேண்டும் என்னும் குரலை என்னால் அடக்கவே முடியவில்லை” என்றான்.

யயாதி புருவை நோக்கி திரும்பாமல் “மூன்றாமவனும் சொல்லட்டும்” என்றான். புரு “நான் பெற்றுக்கொள்கிறேன், தந்தையே” என்றான். யயாதி திகைத்துத் திரும்பி நோக்கி “எண்ணித்தான் சொல்கிறாயா?” என்றான். “ஆம், நான் முன்னரே உடன்பிறந்தார் எவரேனும் ஏற்றுக்கொண்டு எனக்கு வாய்ப்பு வராதமையுமோ என ஐயம் கொண்டிருந்தேன்… இது என் நல்லூழ் என்றே எண்ணுகிறேன்.” யயாதி அவனையே நோக்கிக்கொண்டு சிலகணங்கள் நின்றான். தலை நடுங்க உதடுகள் எதையோ சொல்வனபோல் அசைந்தன. “ஏன்?” என்று பின்னர் கேட்டான். “நான் உங்களை எப்போதும் என் தந்தையென்றே எண்ணிவந்திருக்கிறேன்” என்றான் புரு.

“உன் அன்னை எப்போது அதை சொன்னாள்?” என்றான் யயாதி. “தந்தையே. இப்போதுவரைக்கும்கூட அன்னை அதை சொல்லவில்லை. ஏனென்றால் நீங்கள் சொல்லும்படி அவருக்கு ஆணையிடவில்லை. பேரரசியின் ஆணையால் நாங்கள் இளவரசர்கள் என அறிவிக்கப்பட்டோம். இவ்வரண்மனைக்கு அரசமுறையாக குடிவந்தோம். அரசகுடியினருக்குரிய அணிகளும் ஆடைகளும் முத்திரைகளும் கொடிகளும் முறைமைகளும் எங்களுக்கு அளிக்கப்பட்டன. அன்னை இன்னமும் சேடியருக்குரிய இல்லத்தில் சேடியாகவே இருக்கிறார். அவரை அரசியாக ஆக்கவேண்டியவர் நீங்கள் என்றார்” என்றான் புரு.

“ஆனால் நான் என் மொழிதிருந்தா நாளிலேயே உங்களை என் தந்தை என உணர்ந்திருந்தேன். என் நினைவறிந்த உங்கள் முதல் தொடுகையே அதை சொல்லிவிட்டது. என் தோள்களை வருடி புயங்களைப் பற்றி அழுத்திப் பார்த்தீர்கள். என்னை மடியிலமர்த்தி என் குழலை ஆழ மூச்சிழுத்து முகர்ந்தீர்கள். அன்று அறிந்த உங்கள் மணம் என் நினைவில் இன்றுமுள்ளது. என் கனவில் தந்தையாக எப்போதும் அத்தொடுகையுடனும் மணத்துடனும் வந்துகொண்டிருக்கிறீர்கள்” என புரு தொடர்ந்தான். “பேரரசி என்னிடம் உன் தந்தை யார் என்று கேட்டபோது நெஞ்சறிந்த ஒன்றை மறைக்க என்னால் இயலவில்லை. அன்று நான் சொன்ன சொல்லால்தான் நீங்கள் இம்முதுமையை கொண்டீர்கள். நான் இதை ஏற்றுக்கொள்வதே அறம்.”

யயாதி தொழுவதுபோல நெஞ்சில் கைகுவிய “வேண்டியதில்லை, மைந்தா. நீ எனக்களித்தது என்ன என்று அறியமாட்டாய். மைந்தன் என இப்புவியில் உறவேதுமில்லை என்று என் உள்ளம் எண்ணத்தொடங்கியிருந்தது. குருதியின் நேர்நீட்சியான மைந்தரும் பொய்யுறவே என்றால் இப்புவியில் உறவு என்பதே இல்லை. நீ நான் நம்பிவாழ்ந்த ஓர் உலகம் இடிந்து நொறுங்கி மண்ணில் விழாமல் காத்திருக்கிறாய்” என்றான். “புத் என்னும் நரகம் ஏதென்று வரும் வழியில் எண்ணிக்கொண்டேன். உறவென ஏதுமில்லாமல் வாழ்தலும், இறந்தபின் நினைக்கப்படாமல் மறைதலுமே புத். அதிலிருந்து மீட்பவனே புத்ரன். எனக்கு நீ ஒருவனே மைந்தன். என் முடியும் கொடியும் குடிமரபும் உனக்குரியவை.”

“தந்தையே, நான் அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் உங்கள் முதுமையையும் ஏற்றாகவேண்டும்” என்றான் புரு. “அதனூடாகவே நீங்கள் உங்கள் மைந்தன் என என்னை உலகோர் முன் நிறுவுகிறீர்கள். உங்கள் துயரையும் நோயையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உங்கள் கொடையையும் பெற்றுக்கொள்ளும் தகுதியை அடைகிறேன்” என்றான் புரு. அருகே வந்து மண்டியிட்டு யயாதியின் கால்களைத் தொட்டு “எனக்கு உங்கள் முதுமையை அளியுங்கள், தந்தையே” என முறைமைப்படி செம்மொழிச் சொல்லால் கேட்டான்.

யயாதி பெருமூச்சுடன் திரும்பி நோக்க சுகிர்தர் “நீர்…” என்றார். ஏவலன் ஒருவன் பித்தளை வால்குடுவையில் நீருடன் ஓடிவந்தான். சுகிர்தர் அதை வாங்கி “கங்கையே, செல்லுமிடம் கனிந்து அடையுமிடத்தை முற்றிலும் நிரப்பும் நீயே கொடைகளுக்குச் சான்று. உன் ஒழுகுதலென இக்கொடை வளர்ந்து செல்க!” என்று உரைத்து நீட்டினார். யயாதி அதை வாங்கிக்கொண்டபோது கைநடுக்கத்தால் நீர் ததும்பிச் சிந்தியது.

புரு இரு கைகளையும் ஏந்த அதில் நீரூற்றி “என் முதுமையை உனக்களிக்கிறேன். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் யயாதி. வால்குடுவையை பார்க்கவன் பெற்றுக்கொண்டான். புரு எழுந்துகொள்ள சுகிர்தர் “நீங்கள் இளமையை அளிக்கவேண்டும், இளவரசே” என்றார். புரு வால்குடுவையை வாங்கிக்கொண்டான். யயாதி கையேந்த புரு நீரூற்றி “என் இளமையை கொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

அனைவரும் மெல்ல உடல்தளர்ந்தனர். எவரிடமிருந்தென்றில்லாமல் ஓரிரு பெருமூச்சொலிகள் எழுந்தன. யயாதி திருஹ்யூவையும் அனுதிருஹ்யூவையும் நோக்கி “உங்கள்மேல் எனக்கு இப்போது சினமில்லை, மைந்தர்களே. ஆனால் நிகர்முறை செய்வதற்காக நான் உங்களுக்கும் தீச்சொல்லிட்டாகவேண்டும்” என்றான். அவர்கள் கைகூப்பி நின்றனர். திருஹ்யூயை நோக்கி “நீயும் உன் இரு உடன்பிறப்புகளைப்போல நிலையற்று அலையும் ஊழ்கொள்க! நீரில் அமைக உன் வாழ்வும் உன் குருதிவழியினரின் வாழ்வுத்தொடரும். தோணியோட்டுக, மீன்கொள்க! ஒருபோதும் நீரிலிருந்து எழாதமைக!” என்றான்.

திருஹ்யூ தலைவணங்கினான். “ஆனால் உன் கொடிவழியினர் அரசுகள் அமைப்பார்கள். மீன் உங்கள் கொடியாகும். மச்சர்கள் என குலப்பெயர் கொள்வீர்கள். உங்கள் குடிப்பிறந்த பெண் ஒருநாள் பாரதவர்ஷத்தில் அழியாப் புகழ்கொண்ட பேரரசியென்றமைவாள். அவள் குருதியில் எழும் அரசர்களால் இப்பெருநிலம் ஆளப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் யயாதி.

அனுதிருஹ்யூவிடம் “தென்னகக் காடுகளில் நீ அலைவாய். அரக்கருக்கும் அசுரருக்கும் உரிய வாழ்க்கையே உனக்கும் உன் குடிமுறைகளுக்கும் அமையும்” என்றான். அனுதிருஹ்யூ தலைவணங்கினான். “ஆனால் அனல்குடிபிறந்த அந்தணன் ஒருவனால் உன் குடி அரசகுலமாக ஆக்கப்படும். தென்னகத்து நிலங்களை நீங்கள் ஆள்வீர்கள். முற்றிலும் புதுப் பெயரும் புது முத்திரையும் கொள்வீர்கள். உன் குருதி வாழும். உன் பெயர் முற்றிலும் மறைந்துபோகும். ஆம், அவ்வாறே ஆகுக!”

யயாதி பார்க்கவனிடம் கையை நீட்டி “செல்வோம், இனி என்னால் இங்கு நின்றிருக்கமுடியாது” என்றான். அவன் கைகளை பற்றிக்கொள்ள மெல்ல நடந்து படிகளில் ஏறினான். ஒவ்வொரு அடிக்கும் உடல் ஆற்றல்கொண்டுவருவதை உணரமுடிந்தது. இறுதிப்படியில் கால்வைத்தபோது பார்க்கவனே பிடியை விட்டுவிட்டான். விழிகள் தெளிய ஓசைகள் துலங்க நிமிர்ந்த உடலுடன் சுற்றும்நோக்கிய கணத்தில் புருவின் நினைவு எழுந்தது. பின்பக்கம் வியப்பொலிகளும் மெல்லிய பேச்சுக்கசங்கலும் கேட்டன. திரும்பிப் பார்க்கலாகாது என தனக்கே ஆணையிட்டுக்கொண்டு அவன் முன்னால் சென்றான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 86

86. சூழ்மண்

காலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம் நிலத்தில் பதித்து அவ்வாறே கிடந்தான். அவன் எழுவதற்காக சற்றுநேரம் காத்தபின் நிலைமாறாக்குரலில் “இவையனைத்தையும் நான் நன்றாக அறிந்திருந்தேன். பெருஞ்சினத்துடன் இவள் இங்கு வருவதற்காக பதினாறாண்டுகளாக காத்திருந்தேன்” என்றார் சுக்ரர். தலைதூக்காமலேயே யயாதி “நான் எதையும் விளக்க வரவில்லை. இரக்கவோ மன்றாடவோ முயலவில்லை. என் பிழை எனக்குத் தெரியும். ஆசிரியர் என்பதனால் எளியமனிதர்களை உங்களால் அறியவும் முடியும்” என்றான்.

“உன் பிழை புலன்களைத் தொடர்ந்தது” என்றார் சுக்ரர். “அறியேன் என நடிப்பவனுக்குப் பின்னால் காமம் நிழலெனப் பெருகிப் பேருரு கொள்கின்றது.” யயாதி “ஆம் ஆசிரியரே, எனக்கு உகந்த தண்டனையை அளியுங்கள். எதுவாக இருப்பினும் அது தங்கள் அருளே என தலைமேல் தாங்கி இங்கிருந்து மீள்கிறேன்” என்றான். சுக்ரர் விழிதூக்கி இரு கைகளையும் முறுக்கி நீட்டி தோள்களை இறுக்கி முலைகள் விம்ம நின்றிருந்த தேவயானியிடம் “இவனை என்ன செய்வதென்று நீ சொல், மகளே!” என்றார்.

அவள் உதடுகள் கோணலாயின. பற்களைக் கடித்து முறுக்கிய கைகளை தொடைமேல் அடித்த பின் அங்கிருந்து செல்வதற்கு திரும்பினாள். அவ்வசைவு அவள் உடலில் கூடிய அக்கணமே காற்றிலிருந்து பிறிதொரு தெய்வம் அவள்மேல் ஏறியதுபோல கழுத்துத்தசைகள் இழுத்துக்கொள்ள வலிப்பெழுந்த அசைவுகள் உடலில் கூட திரும்பினாள். தன் இடக்காலால் யயாதியின் தலையில் ஓங்கி மிதித்தாள். இறந்த உடலென அவன் தலை அந்த உதையை ஏற்று அசைந்தது. முகத்தை தரையிலிருந்து அகற்றாமல் அவன் அவ்வாறே கிடந்தான். முதல் உதையால் வெறிகொண்டு நிலையழிந்த அவள் அவன் தலையை எட்டி எட்டி உதைத்தாள். “இழிமகனே! இழிமகனே!” என்று மூச்சென்றே ஒலித்தபடி உதைத்து பின்பு நிலைத்தாள்.

கைகளை இடையில் ஊன்றி இடைதளர்ந்து உலைவாய் என மூச்சு சீற நின்றாள். சீறும் ஓநாய் என வெண்பற்கள் தெரிய “இழிமகனே…” என கூவினாள். அவன் தலைமேல் எச்சிலை காறி உமிழ்ந்து “உன்மேல் தீச்சொல்லிட்டு என் மீட்பை அழிக்க நான் விரும்பவில்லை. இனி உன் எண்ணத்தில் என் முகமோ பெயரோ எழாதொழியட்டும். என் குருதியில் பிறந்த கொடிவழிகள் தந்தையென உன் பெயரை ஒருபோதும் சொல்லாது அமையட்டும். இப்பிறப்பிலேயே என் ஊழ்ச்சுழலை அழிப்பேன். எனவே இனி ஒரு பிறவியிலும் உன் துணையென அமரமாட்டேன். நீ என்னை தொட்டாய் எனும் நினைவை தவத்தால் வெட்டி அறுப்பேன். இனி மறுகணம் முதல் நீ இருந்ததும் மறைவதும் எனக்கொரு பொருட்டில்லை” என்றபின் திரும்பி குழலை இடக்கையால் சுற்றிச் சுழற்றி பற்றினாள். விழிகள் அலைய குடிலோரத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த உடைவாளை நோக்கி சென்று அதை எடுத்து தன் நீள் குழலை அறுத்தாள். அந்தக் கரகரப்பு ஓசை யயாதியின் உடலை உலுக்கவைத்தது. குழல்தொகையை ஓங்கி நிலத்திட்டு மூச்சு வாங்கி ஒருகணம் நின்றபின் கதவை இழுத்துத் திறந்து காலடிகள் மிதியோசை கொள்ள வெளியே சென்றாள்.

எவ்வுணர்ச்சியும் இல்லாமல் அவளுடைய கொந்தளிப்புகளை நோக்கிய சுக்ரர் “எழுக!” என்றார். யயாதி எழுந்து கண்ணில் நீர்வழிய கைகளைக் கூப்பியபடி அமர்ந்தான். “நீ செய்தது வஞ்சம்” என்றார் சுக்ரர். யயாதி “அல்ல, அதை நான் எந்த தெய்வத்தின் முன்னும் சொல்வேன். வஞ்சனை செய்பவன் அதை தன் திறனென எண்ணிக்கொள்வான். அதன்பொருட்டு அவன் ஆழத்தில் ஒரு துளி மகிழ்ந்துகொண்டிருக்கும். நான் இதை பிழையென அறிந்திருந்தேன். ஒவ்வொரு கணமும் அதன்பொருட்டு இவளிடம் பொறுத்தருளக் கோரிக்கொண்டிருந்தேன். இன்று இவள் கால்களால் என் தலை மிதிபட்டபோது என் பிழையனைத்தும் விலகிச் சென்றுவிட்டது. இன்று உங்கள் முன் அமர்ந்திருப்பவன் தூயன். இவனுக்கு என்ன தண்டனையோ அதை அளியுங்கள்” என்றான்.

“ஆம், உணர்ந்து நீ மீளவேண்டும். இக்கணம்வரை உனை ஆட்டிவைத்தது உன் காமம். தசைகளிலெரியும் அனல் அது. அதை காதல் என்றும் கவிதை என்றும் கலை என்றும் பெருக்கிக் கொண்டாய்” என்றார் சுக்ரர். “ஏனென்றால் நீ அணுகிவரும் முதுமையை அஞ்சினாய். காமத்தினூடாக உயிர்பெருக்கி இளமையை மீட்க முயன்றாய். தவத்தார் தவறுவது தாங்கள் விட்டு விலகுவதை முற்றறிந்துள்ளோமா என்னும் ஐயத்தால். உலகத்தோர் தவறுவது அடைந்ததை முற்றும் அடைந்தோமா என்னும் கலக்கத்தால்.”

“முதுமை எய்தி குருதி வற்றி தசை சுருங்கி எலும்புகள் தளர்ந்தபின்னரே நீ உன்னை கடப்பாய். எண்ணமென்றால் இறந்தவையே என்று மாற, இருப்பென்றால் எஞ்சுதலென்றாக, ஒவ்வொன்றும் அசையும் அமையும் காலமென்றே தெரியும் ஒரு நிலையிலேயே காமம் என்றால் என்னவென்று நீ அறியலாகும். இது என் தீச்சொல். நீ முதுமை அடைக!” என்றார் சுக்ரர். யயாதி தன் தலை அவர் காலடியில் பட வணங்கி கூப்பிய கைகளுடன் எழுந்து செல்வதற்காக திரும்பினான். “நீ இத்தீச்சொல்லுக்கு மாற்று கேட்கவில்லை” என்றார் அவர். “ஆம், மாணவனாகிய எனக்கு எது தேவை என்று நீங்கள் அறிவீர்கள்” என்றான் யயாதி. “நீ விழைந்தால் இம்முதுமையை பிறருக்கு அளிக்கலாம். ஆனால் உன் பொருட்டு அதை அவர் விரும்பி பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் சுக்ரர். யயாதி மீண்டும் தலைவணங்கி வெளியேறினான்.

tigerயயாதி வெளியே வந்துகொண்டிருந்தபோதே முதுமை எய்தத் தொடங்கியிருந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் வலுவிழந்து கால்கள் நடுங்கின. நோக்கு இரண்டாக பிளவுபட்டு அண்மையும் சேய்மையும் பிழைகொண்டதாயின. கைகளில் நடுக்கமிருப்பதை உணர்ந்தபின் தூண்களை பற்றிக்கொண்டு படிகளில் இறங்கினான். இறுதிப்படியை அடைந்தபோது அவன் உடல் கூன் விழுந்து முகம் நிலம் நோக்கியிருந்தது.

கழுத்தைத் தூக்கி முற்றத்தை பார்த்தபோது கிருதரும் சத்வரும் சுஷமரும் திகைப்புடன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். கிருதர் “அரசே…” என்றழைக்க கைநீட்டி “இது என் ஆசிரியரின் கொடை” என்றான். “எதுவாயினும் நான் அதை ஈட்டியிருக்கிறேன் என்றே பொருள்.” கிருதர் அவன் கைகளை பிடித்துக்கொண்டார். சத்வர் “அரசி இப்போதுதான் அறுந்த கூந்தலுடன் இறங்கிச் சென்றார். இங்கு தங்கும்படி கேட்டபோது மூச்சொலியால் எங்களை உதறி நடந்து சென்றார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை” என்றார். “இனி அவள் பாதை அவளுக்கு” என்றான் யயாதி. “என்னால் புரவியில் இனி திரும்பமுடியாது. இன்றொருநாள் இங்கிருக்கிறேன். தேர் கொண்டுவரும்படி விருஷபர்வனிடம் கூறுக!”

கிருதர் “தீச்சொல்லுக்கு மாற்றுச்சொல்லுண்டு. ஆசிரியர் என்ன சொன்னார்?” என்றார். “இம்முதுமையை நான் விழைந்தால் பிறிதொருவருக்கு அளிக்கலாம் என்றார். பெறுபவரும் கொடுப்பவரும் உவந்தால் அது நிகழும் என்றார்” என்றான் யயாதி. கிருதர் “இளமையும் முதுமையும் எனக்கு ஒன்றுதான். முற்றிலும் மனமுவந்து இதை இக்கணமே நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் கொடை என்பது கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் நலன் விளைப்பது. இம்முதுமை உங்களுக்கு எதை கற்றுத் தரவேண்டுமோ அது நிகழவேண்டும்” என்றார்.

“உங்கள் காமம் உடலில் விளைந்தது என்று ஆசிரியரிடம் சொன்னீர்களா? என்றார் சத்வர். “ஆம், நான் வெறும் உடல் மட்டுமே என்றேன்” என்றான் யயாதி. “ஆகவேதான் இதை உங்களுக்கு அளித்திருக்கிறார். உங்கள் காமம் முற்றிலும் உடல் சார்ந்ததே எனில் இப்போது முற்றிலும் வற்றி அடங்கியிருக்க வேண்டும். உள்ளத்திலோ கனவிலோ ஆழத்திலோ ஒரு துளியேனும் காமம் எஞ்சினால் அது உங்கள் உடலின் விழைவல்ல என்றே பொருள்” என்றார் சத்வர். “நீங்கள் அறிவதனைத்தையும் தடுத்துக்கொண்டிருந்தது உடலென்று நடித்துக்கொண்டிருந்த அகம். உடலெனும் திரை விலகினால் இன்று அது தான் எவர் என்று அறியும்.”

யயாதி “களைப்புற்றிருக்கிறேன்” என்றான். அச்சொல்லாடல் அவன் உள்ளத்தை தளரச் செய்தது. கிருதர் “அரசே, உங்களுக்குள் ஒரு துளியேனும் காமம் எஞ்சுவதை நீங்கள் எங்ஙனமேனும் கண்டால் இவ்வுடலை எவருக்கேனும் அளித்து இளமையைப் பெற்று அக்காமத்தை நிறைவு செய்யுங்கள். அதன் பின்பு உங்கள் உடலை மீட்டுக்கொள்ளுங்கள். துளியென எஞ்சும் காமம் கல்லுக்குள் புகுந்த தேரையின் முட்டை.” என்றார். யயாதி “என்னுள் நோக்கவும் என்னால் இயலவில்லை. உள்ளம் திகைத்துள்ளது” என்றான்.

“இம்முதுமையை உங்களிடமிருந்து எவர் பெறுகிறாரோ அவர் நல்லூழ் கொண்டவர்” என்றார் கிருதர். “இடருற்று துயருற்று வாழ்ந்து முதிர்ந்து அறிவதனைத்தையும் இமைக்கணத்தில் அவர் அறிகிறார். இளமையிலேயே முதுமை கொண்டவனே மெய்மையின் பாதையில் முந்திச் செல்கிறான். நாமறிந்த மெய்ஞானியர் அனைவரும் நூறுமடங்கு விசைகொண்ட ஆனால் நூறுமடங்கு குறைவான இளமைக்காலம் கொண்டவர்கள். விரைவிலேயே முதுமைக்கு வந்தவர்கள். பின்னர் என்றும் முதுமையில் அமைபவர்கள்.”

யயாதி “என்னை நானே கூர்ந்து நோக்குவதற்கான தருணம் இது என உணர்கிறேன்” என்றான். சுஷமர் “வருக! எனது குடிலில் தாங்கள் இளைப்பாறலாம்” என்றார். சுஷமரின் கைபற்றி செல்லுகையில் யயாதி தனது கால்களும் தளர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். ஆகவே தொலைவுகள் பெருகிவிட்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒளிகுன்றி பிறிதென்றாகி சூழ்ந்திருந்தன. கண்கள் வண்ணங்களையும் கூர்மைகளையும் இழந்துவிட்டிருக்க அதை ஒரு கரையென்றாக்கி அலையடித்து நிறைந்திருந்தது அவன் அகம். நினைவுகளும் உருமாறிவிட்டிருந்தன. வஞ்சங்களும் விழைவுகளும் மங்கி ஒவ்வொன்றும் ஒரு நூலில் இருந்து படித்தறிந்தவைபோல் ஐயமின்மையின் தெளிவு பெற்றிருந்தன. சுவடிகளைப்போல தொட்டுத் தொட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எடுத்து நோக்க முடியும் என்பதுபோல.

புன்னகைத்து “என் வாழ்வை ஒரு சுவடிச்சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். எப்பகுதியையும் கைநீட்டி எடுத்துவிட முடியும். எல்லாமே என்னிடமிருந்து பிரிந்து பிறிதொன்றாகிவிட்டிருக்கின்றன” என்றான். சுஷமர் “மொழியில் அமைவதெல்லாமே நம்மிடம் இருந்து விலகிவிடுகின்றன. முதுமையென்பது நம் அறிதல்களையும் உறுதல்களையும் சொல்லாக்கி, மீண்டும் மீண்டும் சொல்லி பிறிதொன்றாக்கி, நம்மிடமிருந்து விலக்கிக் கொள்வதே. இளமையில் உறுதல்களின் முன் மாணவனாக இருக்கிறோம். முதிர்கையில்  அறிதல்களின் மாணாக்கனாகிறோம்” என்றார்.

அவரது குடிலின் படிகளை ஏறி மஞ்சத்தை அடைந்தபோது யயாதி மூச்சுத் திணறத் தொடங்கியிருந்தான். “அமருங்கள். நான் நீர் கொண்டு வருகிறேன்” என்றார் சுஷமர். “ஆம், உடன் பல்லுக்கு மென்மையான உணவு எதுவும் இருந்தால் கொண்டு வருக!” என்றான் யயாதி. பின்னர் மெல்ல மஞ்சத்தில் அமர்ந்து தன் மூட்டுகளையும் கால்களையும் அழுத்திப் பற்றியபடி “விந்தைதான். இத்தனை காலம் எனது மூட்டுகளைப்பற்றி நான் எண்ணியதே இல்லை. இன்று ஒவ்வொரு எண்ணமும் மூட்டுகளைப்பற்றிய தன்னுணர்வுடன் உள்ளது” என்றான். “ஓய்ந்து சலித்த இரு புரவிகள் போலிருக்கின்றன. இக்கணம் படுத்து இனி எழ முடியாது என அறிவிக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.”

“நான் தங்களுக்கு இன்நீரும் உணவும் கொண்டுவருகிறேன், அரசே” என்றபின் சுஷமர் வெளியே சென்றார். யயாதி தன் குழலைத் தொட்டு விரலால் நீவி தலைக்குப்பின் தோல்வாரால் கட்டியபடி திரும்பிப் பார்த்தபோது அவ்வறையின் ஒரு மூலையில் பட்டுச் சால்வையொன்று கிடப்பதை கண்டான். எவரோ அளித்த கொடை. அதனை சுஷமர் தூக்கிவீசியிருந்தார். அதைக் கண்டதுமே சித்தம் உணராது உளம் எழுச்சிகொண்டது.

மஞ்சள்பட்டில் வெள்ளிநூல்களால் நுண்ணிதின் பின்னப்பட்ட அணிமலர்கள். அதை நோக்கிக்கொண்டிருக்கையில் அலையலையென நினைவுகள் வந்து உடலை அதிர வைத்தன. ஒரு தனியறையில் அறையிருளில் படுத்திருக்கையில் சுவரில் சாளரம் வழியாக வந்த இரவின் ஒளியில் கொக்கியில் நெளிந்துகொண்டிருந்த கலிங்கத்துச் சால்வை. அருகிருந்தவள் அவன் முதல் பெண். முதல் காமத்தின் களைப்பு. அருவருப்பும், இனிமையும், இழப்புணர்வும், தனிமையும் கலந்த தத்தளிப்பு.

பொன்னூல் பின்னிய பட்டின் வேலைப்பாட்டை அவன் தனியாக அதுவரைக்கும் நோக்கியதில்லை. எத்தனை வளைவுகள், கரவுகள், குழைவுகள். இத்தனை குழைவென்றால் அவன் நெஞ்சம் எத்தனை நெகிழ்ந்திருக்கவேண்டும்! ஓவியக்கோடுகள் நெளிகின்றன. இசை வளைகிறது. நடனத்தில் உடல் குழைகிறது. நீரும் நெருப்பும் வளைந்தாடுகின்றன. காற்று தொடும் அனைத்தும் அலைவுகொள்கின்றன. நெஞ்சின் நெகிழ்வை தாளாமல் அவன் விம்மினான். இருளில் அவ்வோசை அங்கு உடனிருந்த அறியாத் தெய்வமொன்றின் குரலென ஒலித்தது.

ஏன் அதை படைத்தான்? மலர் அவனுக்கு போதவில்லை. கடல்நுரையும் காற்றலை படிந்த மணல்மென்மையும் நிறைவளிக்கவில்லை. அவை கொண்ட பொருண்மையிலிருந்து அவற்றின் அழகைமட்டும் பிரித்தெடுக்க விழைகிறான். பட்டிலும் பொன்னிலும் சாந்திலும் கல்லிலும் எழும்போது அது அக்குழைவின் எழில் மட்டுமே. மலர் தொட்டு தளிர் தொட்டு நகை செய்யும் கைகளுக்கு தெய்வங்களின் அருளிருக்கிறது. தந்தையின் காலடியை தான் நடிக்கும் மைந்தர் அவர். அணி சூடுவோரை நோக்கித் திருமகளும் அணி செய்பவரை நோக்கி பிரம்மனும் குனிந்து புன்னகை செய்கிறார்கள். காமம் கொண்டவரை நோக்கி புன்னகைக்கின்றது பிரம்மம். ஒன்றிலிருந்து ஒன்றென தான் பெருகுவதை அது உணரும் தருணம் அது.

முதல் பெண்… அவள் யார்? நினைவில் படிந்த மென்மணலை அள்ளி ஒதுக்க ஒதுக்க ஆழம்தான் தெரிந்தது. ஆனால் மிக அருகே இருந்தது அவள் மணம். அதைத் தொட்டு தொடர்ந்து சென்றபோது அவள் முலைகளின் மென்மை. அதற்கப்பால் இருளென மங்கிய வெளியில் அவளது கூச்சம் கலந்த புன்னகை. செவியினூடாக நினைவுக்கு நேரடியாகச் சென்ற மென்சிரிப்புக் குரல். இருளில் பேசும் பெண்கள் பிறிதொருவர். காமம் கிளர்ந்தபின் பேசுவது முற்றிலும் புதிய ஒருவர். உச்சத்தில் விலங்காகுபவர். அக்கணம் அவளில் வந்து கூடி பின் விலகி மீண்டும் மலைகளென முகில்களென காற்றென பெருநதியென ஆகிறது என்றுமுள தெய்வம் ஒன்று.

சுஷமர் உள்ளே வந்ததும் யயாதி “எனக்கு ஓர் ஆடி கிடைக்குமா?” என்றான். சுஷமர் “கொண்டுவருகிறேன்” என்றபின் இன்நீர் கலத்தையும் உணவுத் தாலத்தையும் அருகே தாழ்பீடத்தில் வைத்தார். “ஆடி நோக்குக! ஆனால் நாளையே கிளம்பிச்சென்று உங்கள் முதுமையை பிறிதொருவருக்கு அளியுங்கள்” என்றார். யயாதி குழப்பத்துடன் “ஏன்?” என்றான். “ஆடி நோக்க விழைந்த கணம் உங்கள் காமத்தை கண்டுவிட்டிருக்கிறீர்கள். அது ஒழிந்து உளம் அமையாது நீங்கள் எழவியலாது.”

யயாதி “நான் காமம் கொள்ளவில்லை. வெறுனே எண்ணிப்பார்த்தேன்” என்று சொன்னான். “உங்கள் உடல் காமம் கொள்ளாது. உடலிலிருந்து மறைந்தபின் உள்ளம் கொள்ளும் காமம் மேலும் தெளிவும் கூர்மையும் கொண்டிருக்கும்” என்றார் சுஷமர். விழிதாழ்த்தி “ஆம்” என்று யயாதி சொன்னான். “இளமையான பிறிதொருவன் அங்கிருந்து அனைத்தையும் நடிப்பான். அவனை இங்கிருந்து நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அது வெற்று ஏக்கம், எஞ்சுவது வெறுமை.” யயாதி “உண்மைதான்” என்றான்.

“முதியவர் உள்ளங்கள் அனைத்திலும் அவர்களின் இளமைத் தோற்றமே திகழ்கிறது. உள்ளுறைபவனுக்கு முதுமை வந்தமையவேண்டும்” என்றார் சுஷமர். யயாதி தனக்கே என மெல்லிய குரலில் “ஆனால் இத்தனை இனிதான ஒன்றை முன்னர் நான் அறிந்ததில்லையென்று தோன்றுகிறது. அழகியது, நிறைவூட்டுவது, ஏனென்றால் புறமென ஒன்றில்லாமையால் மிகத் தூயது. பகிர்தலுக்கிடமில்லாதது என்பதனால் மிகமிகத் தனியானது” என்றான். சுஷமர் சிரித்து “நான் நூல்களில் அறிந்ததே. முதிரா இளமையில் புலனின்பங்களைப்பற்றிய கற்பனையாலும் இளமையில் புலனின்பங்களாலும் முதுமையில் புலனின்பங்களின் நினைவுகளாலும் சூழப்பட்டு மனிதன் மெய்மையின் பாதையிலிருந்து விலக்கப்படுகிறான். தேனே தேனீயின் சிறை” என்றார்.

யயாதி நீள்மூச்சுடன் இன்நீரை கையில் எடுத்தபின் “ஆம், இதை நான் துறந்தாக வேண்டும். எஞ்சியிருக்கும் துளி மிக ஆற்றல் கொண்டது. ஒன்று நூறுமேனியென விளைந்து பெருகுவது” என்றான். சுஷமர் “நீங்கள் ஆடியை நோக்க வேண்டாம் என்றே சொல்வேன்” என்றார். யயாதி “ஏன்?” என்றான். “இன்றொரு நாள் உங்கள் முகம் உங்கள் நினைவில் இல்லாமலிருக்கட்டும். இன்றிரவு உடலிலாது வாழ்ந்திருக்கலாம். நாளை காலை நீங்கள் ஆடி நோக்கலாம். அம்முகத்தை சுமந்தபடி செல்லும்போது உங்களுக்கு பிறிதொரு உலகம் தென்படக்கூடும்” என்றார்.

“உடல் எண்ணங்களை இப்படி அழுத்தும் என்று எண்ணியிருக்கவேயில்லை” என்றான் யயாதி. “இதுவரை நீரையும் அனலையும் இழுக்கும் விண் என்னை இழுத்துக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தேன். மண்ணில் கால் பதித்து நிற்கவே உளம் இருத்தி முயல வேண்டியிருந்தது. இன்று விண்ணுடன் பிணைத்த அனைத்துச் சரடுகளும் அறுந்துவிட்டன. மண் என்னை இழுக்கிறது. இங்கு எங்காவது படுத்தால் நீரிலென புதைந்து மண்ணுக்குள் சென்றுவிடுவேன். அங்கு பின்னி நிறைந்திருக்கும் பலகோடி வேர்களால் கவ்வி உண்ணப்பட்டுவிடுவேன்.” சுஷமர் “அதுவும் நன்றே. உப்பென்றாகி இந்த மரங்களனைத்திலும் தளிரென எழுந்து மீண்டும் வானில் திளைக்கலாம்” என்றபின் வெளியே சென்றார்.

அன்றிரவு தன்னால் துயில்கொள்ள முடியாதென்றே யயாதி எண்ணியிருந்தான். படுக்கையில் படுத்து உடலை நீட்டிக்கொண்டு இருட்டையே நோக்கிக்கொண்டிருக்கையில் உள்ளே ஓடும் குருதியலைகள் இருட்டுக்குள் நெளிவதுபோலத் தெரிந்தது. ஊருலாவின்போது ஓர் உழவர் ஒவ்வொரு விதையையும் எத்தனை ஆழத்தில் புதைக்கவேண்டும் என்று சொன்னதை நினைவுகூர்ந்தான். “முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வெளிவருகிறது. கருப்பையை கிழித்து குழவி எழுகிறது. விதை மண்ணைப் பிளந்து எழவேண்டும். ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு ஆற்றல். அந்த முதல்முளை எத்தனை மண்ணின் எடையை தாங்கமுடியும் என்பதை பார்க்கவேண்டும்” என்றவர் “எங்கே விழுந்தாலும் முளைப்பது ஆலமரம் மட்டுமே” என்றார்.

மண்ணுக்கும் உயிருக்குமான போர். எழுவதுமுதல் நின்றிருக்கும் ஒவ்வொரு கணமும். மண்ணை நினைத்துக்கொண்டிருந்தது விழித்த பின்னர்தான் தெரிந்தது. எழுந்து வெளியே வந்தபோது அனைத்தும் தெளிவாகியிருந்தது உள்ளத்தில். வெறும் நல்லுறக்கத்தால் தீர்வன என்றால் உளச்சிடுக்குகளுக்கு உண்மையிலேயே என்னதான் பொருள்? அவன் வெளியே வந்தபோது முற்றத்திலிருந்து சுஷமர் மேலேறி வந்தார். “இளவெயில் எழுந்துவிட்டது. நீராடி வருக! ஆவன அனைத்துக்கும் சொல்லியிருக்கிறேன்” என்றார். “தாங்கள் குருநகரி செல்வதற்கு விருஷபர்வன் அனுப்பும் தேர்கள் உச்சிப்பொழுதில் வந்துசேரும்.”

யயாதி நீராடி மாற்றுடை அணிந்து வந்து இளவெயிலில் அமர்ந்துகொண்டான். சுனைநீர் அத்தனை தண்மைகொண்டிருப்பதை முன்னர் உணர்ந்ததில்லை. தண்மையால் அது உலோகம்போல் எடைகொண்டிருந்தது. துவட்டி ஆடை அணிந்தபின்னரும் உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. குளிர் உடலுக்குள் இருந்து எழுந்து வந்துகொண்டிருந்ததுபோல் தோன்றியது. எலும்புகள் உலோகத்தாலானவைபோல தண்மையுடன் இருந்தன. இளவெயில் பட்டபோது தோல் மெல்ல சூடாகி சுருக்கங்கள் விரியத் தொடங்கின. குருதியில் வெம்மை படர்ந்தது. பின் தசைகள் உருகுவதுபோல் நெகிழ்ந்தன. அன்னைப்பறவை குஞ்சை என வெயிலின் சிறகுகள் அவனை சூழ்ந்துகொண்டன. கண்கள் மெல்ல மூட இமைகளுக்குள் குருதிச்செம்மை ஓடியது. உள்ளம் மெல்ல சொக்கி செயலிழந்து சிறுதுயில் ஒன்றில் இளமையில் விளையாடிய காலையொளி பரவிய சோலை ஒன்று மின்னும் இலைகளும் நீரலை வளைவுகளுமாக வந்தது.

விழித்துக்கொண்டபோது கிருதர் அவனை நோக்கி வந்தார். விழி தெளியாமையால் யயாதி அவரை அடையாளம் காண சற்று பிந்தியது. பொதுவான புன்னகையுடன் “வருக!” என்றான். அவர் அருகணைந்து “வணங்குகிறேன், அரசே” என்றபோதுதான் அது கிருதர் என தெரிந்தது. “கிருதரா… என்ன செய்தி?” என்றான். “இரு செய்திகள். பேரரசி அரசு துறந்து இங்கே அருகிலிருக்கும் ஜலசாயை என்னும் சோலையில் தங்க முடிவெடுத்திருக்கிறார். அங்கு அவருக்காக ஒரு குடில் கட்டப்பட்டுள்ளது. தனிமையில் தவமியற்றவிருக்கிறார்.” எவரைப்பற்றியோ என அதை யயாதி கேட்டான். அச்செய்தியுடன் நினைவுகளையும் எண்ணங்களையும் கொண்டுசென்று இணைக்கமுடியவில்லை. அவை வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தன.

“அரசியின் அணுக்கத்தோழி சாயையை எட்டு நாட்களுக்கு முன்னர் காட்டில் புலிகள் தின்றுவிட்டிருக்கின்றன. அவரைத் தேடியலைந்த ஹிரண்யபுரியின் ஒற்றர்கள் அவர் அணிந்திருந்த நகை ஒன்றை கண்டடைந்தனர். தேடிச்சென்றபோது எலும்புகளும் குழலும் மட்டும் எஞ்சியிருப்பதை அறிந்தனர்.” சில கணங்களுக்குப் பின்னரே அதுவும் அவனுள் பதிந்தது. ஆனால் அதற்குள் மீண்டும் அடைக்கோழிபோல அவன் இமைகள் சரிந்துவந்தன. தாடை தளர்ந்து வாய் திறந்தது. மெல்லிய குறட்டை ஒலி எழக்கேட்டு கிருதர் புன்னகையுடன் திரும்பி காலடி எடுத்துவைத்தார்.

காலடியோசை கேட்டு விழித்துக்கொண்ட யயாதி முன்னர் நிகழ்ந்தவற்றுடன் இணைந்துகொள்ளமுடியாமல் திகைத்து “யார், கிருதரா?” என்றான். அவன் ஆழ்மண்ணில் புதைந்திருக்க எவரோ தலையை மாறி மாறி உதைத்து “முளைத்தெழுக… முளைத்தெழுக” என்று சொல்லிக்கொண்டிருந்த கனவை நினைத்து கசிந்த வாயைத் துடைத்தபடி “என் முதுமையை கொடுத்துவிட முடிவெடுத்துள்ளேன்” என்றான். “தங்கள் மைந்தருக்கு அளிப்பதே முறை. தந்தையின் மூன்றுவகை ஊழுக்கும் மைந்தரே உரிமையும் கடமையும் கொண்டவர்கள்” என்றார் கிருதர்.