பொது

நூல் பதினேழு – இமைக்கணம் – 39

wild-west-clipart-rodeo-31திரௌபதி வியர்வையில் நனைந்தவளாக மீண்டு வந்தாள். சதோதரி அவளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். இடமுணர்ந்ததும் அவள் திகைத்தவள்போல எழுந்தாள். பின்பு மீண்டும் அமர்ந்தாள். தலையை அசைத்தபடி “இது வெறும் உளமயக்கு. என்னைப்பற்றிய சூதர்கதைகளை என் உள்ளத்திலேற்றுகிறாய்” என்றாள். “இவை உங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை அல்லவா?” என்றாள் சதோதரி. “ஆம், ஆனால் இவ்வகையில் அல்ல” என்றாள் திரௌபதி. அழுத்தமான குரலில் “இவ்வகையிலும்தான்” என்றாள் சதோதரி.

அதனால் எரிச்சல்கொண்டு “சரி, இப்போது என்ன? நான் காமம் கொண்டவள். பிறவிகளின் பெருங்காமத்தை சுமந்தலைகிறேன், அல்லவா? அதன்பொருட்டு என் குலத்தை முற்றழிக்கவிருக்கிறேன், வெறுமையை சென்றடைவேன். அவ்வெறுமையிலிருந்து மீண்டும் இந்த ஊழை அடைவேன்… அதைச் சொல்லவா வந்தாய்?” என்றாள். “நான் என்ன செய்யவேண்டும்? காமத்தை முழுதும் துறக்கவேண்டுமா? என் உள்ளத்தை எரித்தழித்து பாலையாக்க வேண்டுமா? அதை செய்தால் என் குலம் வாழுமா? இவையனைத்தும் சீரடையுமா?”

அவள் குரல் மேலெழுந்தது. “ஆயிரமாண்டுகளாக இவர்களின் நெறி ஒன்றே. பெண்காமத்தைப் பழித்தல். இவர்கள் அடைந்த வீடுபேறெல்லாம் பெண்ணை வென்று கடந்து எய்துவது. ஒவ்வொரு வீடுபேறுக்குப் பின்னாலும் ஒரு பெண் தீச்சொல் கொண்டு நின்றிருக்கிறாள்.” மூச்சிரைக்க “அவர்களின் வீடுபேறு எனக்கொரு பொருட்டே அல்ல என்று சொல்வேன். என்னிலெழும் பெருங்காமம் இல்லையேல் இப்புவி எனக்கென்ன பொருட்டு? அவர்கள் சென்றடையும் அவ்வீட்டின்பொருட்டு நான் ஏன் இதை கைவிடவேண்டும்?” என்றாள்.

சதோதரி “ஆம், பெண்கள் காமத்தை கைவிட இயலாது” என்றாள். “பெண்காமம் உடல்முழுமைக்கும். காமத்தின் பொருட்டு திரண்டது பெண் உடல். காமம் உணர்வென்றாகி அவள் உள்ளமென விரிவது. காமத்தை அழித்தவர் உலகம் மீதான பற்றை அழிக்கிறார். அன்பற்றவராகி உலர்கிறார். அது அன்னையரின் வழி அல்ல. பேரன்னையர் பெருகிவிரியும் அன்புகொண்டவர். முலைநிறைந்தவர். மடிவிரிந்தவர். அன்னையரை ஆக்குவது காமமே” என்றாள் சதோதரி. திரௌபதி “நான் காமம் கொண்டிருக்கிறேன் என அறிவேன். ஆனால் அதன்பொருட்டு ஒரு கணமும் குன்றியதில்லை” என்றாள். “மண் என அனைத்தையும் அள்ளி என்னுள் அடக்கும் விழைவு அது என்றே உணர்ந்திருக்கிறேன்.”

“ஆம், மண்ணில் புதைந்த கருக்களெல்லாம் உயிர்கொண்டெழுகின்றன” என்றாள் சதோதரி. “குழவியரைப் பெற்று உணவூட்டி வளர்த்தெடுக்கும் பெண்கள் ஒவ்வொரு கணமும் நாற்றிசையும் வளர்பவர்கள். மூவியல்பு கொண்டு பின்னி விரிந்துகொண்டிருக்கும் முதலியற்கை. மாயையை துணைகொண்டு புடவிசமைக்கும் சக்தி. நிலம், கடல், நதி, காடு, நாடு, நகர்கள். குலமகள் இல்லம் அமைத்துக் காப்பதுபோல் ஆற்றுவோள் ககனத்தை அமைத்து காக்கிறாள். முதல்முழுமை அவளுக்குள் இன்மையென திகழமுடியாது. எழுக எனும் ஆணைகொண்ட கருவென்றே அமையமுடியும்.”

தன் குருதியில் ஒரு குமிழி பிறிதொரு உயிரெனப் பிறந்து புதிய புடவியென எழுமென அறிந்த பெண் தன்னை தனிமையில் உணரமுடியாது. ஒடுக்கிக் குவிய இயலாது. அரசி, பெண்ணுக்குள் பிறக்கவிருக்கும் குழந்தை அழியாது வாழ்கிறது. பெருகிச் சூழ்ந்திருக்கும் புறவுலகு அவளுக்கு அக்குழவியின் களிப்பாவைத் திரள் மட்டுமே. தன் உடல் அவளுக்கு அக்குழவிக்கு ஊர்தியாகும் பாவைத்தேர். அணிகொள்ளல், மங்கலம்பொலிதல், இனிமையாதல் என்றே அவள் உள்ளம் விரியலாகும். சுவையிலாமல், அழகில்லாமல் பெண் இல்லை.

ஆனால் உங்கள் வேதங்கள் முதல்முழுமையின் இன்மையின்மையின்மையெனப் பெருகும் இன்மைப்பெருக்கின் மேல் சொல்லெழுந்து அமைந்தவை. அவை இங்குள அனைத்தும் மெய்மயக்கு என்று சொல்கின்றன. காமத்தைத் தொடர்ந்தால் அழிவு. அழகைத் தொடர்ந்தால் துயர். வளர்தல் அழிவு. விரிதல் ஆணவம். வேதமெய்மை பெண்ணுக்குரியதல்ல. அதில் எந்நிலையிலும் பெண் பழிக்கப்பட்டவளே. கருப்பை கொண்டிருப்பதனால், முலையூறுவதனால், விழிமலர்ந்திருப்பதனால். எல்லா தீச்சொற்களையும் பிறவியிலேயே பெற்று எழுபவள் அவள்.

நீ பெண் என்று கைசுட்டிச் சொல்லாத நூல்கள் உள்ளனவா உங்களுக்கு? பெண்ணெனும் விழைவு. பெண்ணெனும் பொறி. பெண்ணிலூடாக உலகை அடைந்து பெண்ணை விலக்கி உலகைக் கடந்து அடைவதே வேதநெறியின் வீடு. எனில் பெண்ணுக்கு எது வீடுபேறு? பெண்ணென்று கொண்டுள்ள எவ்வியல்பும் சிறையே என்கின்றன உங்கள் நெறிகள். பெண்மையை உதறிய பின்னரே பெண் முழுமைகொள்ள இயலுமென்றால் அது பெண் கொள்ளும் முழுமை அல்ல. முழுமுதல் இன்மையிலிருந்து எழும் இவையனைத்தும் பொய்யென்றால் பொய்யிலாடுவதையே தன்னியல்பெனக் கொண்டவள் பெண். அவளுக்குரியதல்ல இப்புடவிநெறி என்கின்றது வேதமுடிபு.

மனைதுறந்து செல்பவருக்குரிய மெய்மை மனைமகளிருக்கு எதை அளிக்கவியலும்? மனையமர்ந்து உண்டு புணர்ந்து மைந்தரை ஈன்று இவ்வுலகக் கடன் நிறைத்து துறந்து சென்று முழுமையடைவர் முனிவர். அவர்களுக்கு மனைபடைத்து சமைத்தளித்து காதல்கொடுத்து குடிபெருக்கிய பின் அடுமனையிருளில் சுருங்கி மறையவேண்டும் இல்லாள். எழு விசை ஆண். அமையும் பீடம் பெண். அது எழுபவர்களுக்கு மட்டுமே உரிய நெறி என்றால் மானுடரில் பாதிக்கு அதன் மறுமொழி என்ன? பிறவிநோற்று ஆணெனப் பிறவிபெற்று அடையவேண்டுமா வீட்டை?

நான் உடலல்ல என்று எந்தப் பெண் சொல்லமுடியும்? தன் மைந்தர் தானல்ல என்று சொல்லும் அன்னை எவள்? நானென்பது இல்லை என்று உணர்ந்த பெண்ணின் உடலில் முதலில் வற்றுவது முலை. அதன்பின் அவள் ஊற்றிலாத பாறைமலை. வறண்டுசென்று அடையும் மெய்மை வளம்கொண்டு பெருகும் பெண்ணுக்குரியதல்ல.

அரசி, முனிவரொருவர் இல்லத் திண்ணையில் வேள்வி இயற்றினார். வேதமுடிபு உசாவி நூல்தவமிருந்தார். பின் நுண்சொல் பெற்று ஊழ்கத்திலமர்ந்தார். வெறுமையில் ஏறி இன்மையிலமர்ந்து அதுவானார். அவர் இல்லத்து அகத்தளத்தில் அவரை நோக்கிக்கொண்டிருந்தாள் மனைவி. கோடி மலர்களில் ஒரு மலரை மட்டும் அறிந்த தேனீயின் முனகலென அவள் வேதத்தை கேட்டாள். தேனை கசப்பென உணர்ந்தமையின் சலிப்பென ஊழ்கத்தை வகுத்தாள். அவர்மேல் இரங்கி மேலும் அன்னம் சமைத்து அருகிருந்து ஊட்டினாள். துயிலச்செய்து விழித்திருந்தாள்.

அடுமனைகளில் எழும் ஆயிரம் சுவைகளை அவள் அறிவாள். மலர்களில், அணிகளில், ஆடைகளில் விரியும் பல்லாயிரம் வண்ணங்களை அவள் அறிவாள். இசையில், மணத்தில் அவள் புவிகொள்ளும் நுண்பருவங்களை உணர்ந்தாள். நேற்று வந்த கீரை இன்று வந்த கீரையில் எங்ஙனம் மாறுபடுகிறதென அறிந்தவளுக்கு பிரம்மம் ஒருமையல்ல. ஓர் இலைபோல் இல்லை பிறிதொன்று என நோக்குபவளுக்கு புடவி சுருங்கி ஒற்றைப்புள்ளியாவதில்லை.

மைந்தர் பேசும் மழலையில் மொழிகொள்ளும் அழகுகளின் முடிவிலியை அறிந்தவளுக்கு வேதச்சொல் வெறும் பேதைமொழியே. நஞ்சென்றும் அமுதென்றுமான ஒன்று, நன்றென்றும் தீதென்றும் ஒருங்கமையும் ஒன்று, இன்மையென்றும் இருப்பென்றும் சமையும் ஒன்று அவள் சித்தத்திற்கு சிக்குவதில்லை. தன் குழவிக்கு உணவென்றும், மருந்தென்றும், அணியென்றும், பாவையென்றும் கைநீட்டுபவள் அமுதை, நன்றை, இருப்பை மட்டுமே நாடுவாள். அவளுக்குரிய மெய்மை எங்கே உங்கள் வேதப்பெருநெறியில்?

விண்நோக்கி விரிந்தவை உங்கள் வேதங்கள். மண்நோக்கி இறங்குபவை நாகவேதங்கள். அழகென்றும் வளமென்றும் முழுமையை உணர்பவை. கைவிடும் முடிவிலிப்பெருக்கல்ல, தாங்கிக்கொள்ளும் நிலமே எங்கள் தெய்வங்களின் இடம். எங்கள் முழுமுதல் தெய்வங்கள் பெண்களே. இப்புவியில் புழுவும் விலங்கும் இயல்பாகக் கண்டடைந்த தெய்வம் அன்னையே. அன்னையைத் துறந்து சென்று ஆண்கள் கண்டடைந்த வெறுமையே வேதமுடிபு.

“அரசி, இவன் என் மைந்தன். இவனை தொடுக!” என்று சதோதரி சொன்னாள். திரௌபதி குனிந்து குழந்தையை நோக்கினாள். நாக விழிகளுடன் அவளை நோக்கி கையையும் கால்களையும் அசைத்து எம்பியது. கரிய முகம் காராமணிப் பயறு என மிளிர்ந்தது. மேல்வாய் ஈறில் இரு வெண்பல் துளிகள். திறந்த வாயில் ஊறிச் சொட்டியது வாய்நீர். “இவன் பெயர் கவிஜாதன். ஓயாது அசைந்துகொண்டிருந்தமையால் குரங்குவால் என இவனுக்கு நான் பெயரிட்டேன். வளர்ந்த பின் மரங்களிலாடுவான்” என்றாள் சதோதரி.

திரௌபதி தன் கையை நீட்டினாள். கவிஜாதன் தன் பின்குவைகளை தரையிலிருந்து எழுப்பி கால்களை உதைத்து எம்பினான். அவள் குனிந்து அவனை எடுத்து தன் மடியில் வைத்தாள். அவன் விழிகளை அருகே நோக்கியபோது நெஞ்சில் ஓர் அதிர்வெழுந்தது. சதோதரி மெல்லிய குரலில் “உங்கள் நூல்கள் கண்டது நீங்கள் விரும்புவதை. அரசி, அது விரும்பும் வண்ணம் தன்னைக் காட்டும் முடிவிலா மாயம் கொண்டது. நான் கண்டதுண்டு. கடலில் ஒரு சிறுகுமிழி என. இருண்டவெளியில் நின்று உடைந்தழிவதற்கு முந்தைய கணத்தில்…”

“கருமைப்பெருக்கில் கோடிகோடி சிறு மின்பொறிகள். விண்மீன்கள் என. விண்மீன்களின் இடைவெளியின் இருளிலும் விண்மீன்கள். அவற்றினூடாக மேலும் விண்மீன்கள். விண்மீன்கள் செறிந்த பெருந்திரை. பின்னர் உணர்ந்தேன், அவை ஒரு செதில்பரப்பின் மினுப்புகள். அது அசைந்துகொண்டிருந்தது. கடல் நதியென்றாகி பெருகியோடுவதுபோல. பின் அது சுழல்கிறதென்று தோன்றியது. ஒரு கணத்தில் மின் என உளம் அமைய அறிந்தேன் ஒரு நாகம் என.”

கவிஜாதன் அவள் கழுத்தை கைகளால் சுற்றிக்கொண்டான். நாகத்தின் உடலென வழுக்கி அவளை வளைத்துக்கொண்டன அவை. அவன் அவள் கழுத்தில் முகம் பதித்தான். “முடிவிலாச் சுழி, சுழிப்பெருக்கு ஒருகணத்தில் புரண்டது. வெண்ணிறப் பெருநாகம். மீண்டும் புரண்டு கருமைச்சுழல். வெண்சுழலெழுந்தது மறுகணத்தில்.” கால்களை உதைத்துத் துள்ளிய மைந்தனைப் பிடிக்க திரௌபதி முற்பட்டபோது அவன் அவள் கழுத்தை மெல்ல கவ்வினான். முள் குத்தியதுபோல் அவன் பல்பட்ட உணர்வை அடைந்தாள். அவனை விலக்கி கழுத்தை தொட்டாள். சிறு காயம் ஒன்று இருந்ததுபோல் தோன்றியது.

“அந்நாகங்களைப் பற்றி கதைகளில் அறிந்துள்ளேன்” என்றாள். “ஆம், கத்ருவும் வினதையும். அவர்கள் முடிவிலாது ஒருவரை ஒருவர் நிரப்புவதன் சுழிப்பே ககனம். அன்னையரான கத்ருவும் வினதையும் கணம் கோடி முட்டைகள் இட்டு கணம் கோடி கத்ருக்களாகிக்கொண்டிருக்கிறார்கள். கணம் கோடிகோடியெனப் பெருகும் அன்னையரின் ஒரு கணத்தையே நான் கண்டேன். அவர்கள் முடிவிலாதவர்கள்.” திரௌபதி தனக்குள் அவன் பல்நச்சு ஊறிவிட்டிருப்பதாக உணர்ந்தாள். விழிகள் சொக்கிக்கொண்டிருந்தன. சொற்கள் எங்கோ செல்ல வேறெங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருந்தாள்.

“இப்புவியில் இரு வேதங்களிருந்தன, அரசி. அன்னையின் வேதமே நாகவேதமெனப்படுகிறது. தந்தையருக்குரியது அசுரவேதம். விண்ணிலிருந்து இறங்கிய மூன்றாம் வேதமே உங்களுடையது. பெண்ணென நின்று வீடுபேறடைய வழிகோலுவது நாகவேதமே. அதை உங்களிடம் சொல்லவே நான் வந்தேன்.” அவள் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள். “நாகவேதம் காக்க பொறுப்பேற்றுக்கொண்டிருப்பவர் அங்கநாட்டரசர் வசுஷேணர். அவர் வில்லே இனி எங்கள் படைக்கலம்.”

திரௌபதி ஏனென்றறியாமல் மெய்ப்பு கொண்டாள். அவள் மடியில் அக்குழவி நாகமென சுருண்டு நழுவி கீழிறங்கியது. கால்களை சுற்றிப் பிணைத்தது. “ஆம், அதை அறிந்துள்ளேன்” என்றபோது தன் நா சற்று குழறியிருப்பதை அவள் கேட்டாள். “அரசி, உங்கள் முன் ஒரு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு உகந்ததை தெரிவு செய்க!” என்றாள் சதோதரி. “நாகவேதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மணிமுடியும் கணையாழியும் மங்கலநாணும் தளைகள் என்று அறிக! அவற்றைக் கடந்து வாருங்கள். ஒரு காலடி, ஒரு கணம். நீங்கள் உங்கள் ஆயிரம் தலைமுறைப் பெண்கள் அஞ்சி அகன்ற எல்லையை கடந்துவிடுவீர்கள்.”

“அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடிக்கும், உங்களை உளம்தொடரும் இப்பெருநிலத்துப் பெண்டிர் அனைவருக்கும் வழிதிறப்பு. நீர் ததும்பும் ஏரியில் விழும் முதல் விரிசல். அவ்வண்ணம் நிகழாமல்போனால்கூட ஒருவர் தன் எல்லையைக் கடந்தார் என்பதே பெரிதுதான். தெய்வங்கள் அதை அறியட்டும், மானுடர் மறந்தாலும் தெய்வங்கள் மறப்பதில்லை” என்றாள் சதோதரி. “நாகர்குலப் பெண்ணுக்கு உங்கள் குடியின் ஒழுக்கநெறிகள் இல்லை. உங்கள் நூல்கள் சொல்லும் மரபுகளின் பொறுப்பு ஏதுமில்லை. அவள் விழைவுநிறைந்த கலமென தன் கருப்பையை கொண்டிருப்பவள். பெருநாகங்களைப்போல ஈன்றுபெருக்கிப் பேரன்னையாகி அமைபவள். இப்புவியின் அனைத்து அழகுகளும் அவளுக்குரியவை. எதற்கும் அஞ்சவேண்டியதில்லை, எதன்பொருட்டும் நாணவேண்டியதில்லை.”

“ஆம், நான் தளையுண்டிருக்கிறேன். என் தளைகளை நானே எண்ணி எண்ணி பூட்டிக்கொள்கிறேன்” என்றாள் திரௌபதி. “அறுத்தெறிந்து மீள்க! அரசி, நீங்கள் மீள்வீர்களென்றால் இப்போர் இன்றே நின்றுவிடும். பாரதவர்ஷம் ஒரு குடைக்கீழ் உங்களால் ஆளப்படும். உங்களருகே வில்லேந்தி அங்கர் நின்றிருப்பார்” என்று சதோதரி சொன்னாள். “அவருக்கு எதிர்நிற்க இன்று புவியில் எவருமில்லை. அவரில் குறைவது அவருக்கு இடத்துஇணை என அமையவேண்டிய நீங்கள் மட்டுமே.”

“பாஞ்சாலத்தின் படைகள் உங்களுடன் வந்தால், அரக்கரும் அசுரரும் நிஷாதரும் கிராதரும் இணைந்துகொண்டால், பாரதவர்ஷத்தில் புதிய யுகம் பிறக்கும். மண்ணுக்குள் நீர்காத்துக் கிடக்கும் கோடிகோடி விதைகள் முளைக்கும். மண்மறைந்துபோன காடுகள் எழும்” என்றாள் சதோதரி. “அரசி, பிறிதொரு வகையிலும் உங்கள் காமம் நிறையாது. மண்ணென விரிந்து வளம்கொண்டு பெருகி முழுமைகொள்ளமாட்டீர்கள். இவையனைத்தும் இங்குள்ளன, கைநீட்டி எடுங்கள். இவற்றைத் துறந்தால் நீங்கள் அடைவன எதுவும் மண்ணில் இல்லை. விண்ணிலுள்ளன என்னும் பொய், சொல்லில் உள்ளன என்னும் மாயை. இத்தருணம் கடந்தால் மீண்டும் ஒரு வாய்ப்பில்லை. ஒவ்வொரு கணமும் என ஊழின் தருணங்கள் அணுகிவருகின்றன.”

“ஆனால் என் கொழுநர்? என் மைந்தர்?” என்றாள் திரௌபதி. என்ன கேட்டுக்கொண்டிருக்கிறோம் என அவள் அகம் வியந்தது. “அவர்கள் அங்கரை ஏற்பார்கள். அது ஏன் என அனைவருக்கும் தெரியும். நீங்கள் முடிவெடுத்தால் பேரரசி குந்தி முடிவெடுக்க முடியும். அவருடைய சொல்லே இளையோர் அனைவரையும் அங்கர் காலடியில் நிறுத்தும்” என்று சதோதரி சொன்னாள். “அறுவரென்றாலும் அறுநூற்றுவர் என்றாலும் நாகர்குலத்துப் பெண்ணுக்கு ஒன்றே. அவள் தன் குழவிப்பெருக்கால் பொலிவுறுபவள்.”

திரௌபதி “நான் செய்யவேண்டியது என்ன?” என்றாள். “ஆம் எனும் சொல். அதை ஒப்பும்படி உங்கள் அரசக் கணையாழி” என்றாள் சதோதரி. திரௌபதி தன்னுள் பிறிதொருத்தி வந்து அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். புதிய அனல்களும் அறிந்திராத ஊற்றுகளுமாக. “எண்ணும்பொழுதல்ல இது, அரசி. நான் இன்றிரவுக்குள் அங்கநாட்டை அடைவேன்” என்றாள் சதோதரி. “ஆம்” என்றாள் திரௌபதி. ஆனால் மேலும் சொல்லெழாமல் உள்ளம் நிலைக்க அமர்ந்திருந்தாள். “சொல்லளியுங்கள், அரசி” என்றாள் சதோதரி. “என் சொல்” என்று திரௌபதி சொன்னாள். பின்னர் தன் கணையாழியைக் கழற்றி அவளிடம் அளித்தாள்.

“உங்கள் செய்தியை அங்கருக்கு அறிவிக்கிறேன், அரசி. பாரதவர்ஷத்தின் காற்று திசைமாறட்டும்” என்றபடி அவள் அந்தக் கணையாழியை வாங்கிக்கொண்டாள். குழந்தையை திரௌபதியின் காலிலிருந்து தூக்கிக்கொண்டு தலைவணங்கி வெளியே சென்றாள். அவள் செல்லும் காட்சி நீர்ப்பாவை என அலைகொண்டது. தொலைவிலெங்கோ காற்றிலாடும் மரக்கிளையின் ஊசலோசை கேட்டுக்கொண்டிருந்தது. அவளுக்கு பின்னந்தலையில் எடைமிக்க வலியொன்று எழத்தொடங்கியது.

“யாதவரே, அவள் சென்ற சற்றுநேரத்திலேயே நான் மீண்டேன். முதற்கணம் என் காலில் அரவுச்சுற்றலை உணர்ந்து விதிர்த்து கீழே நோக்கினேன். பின்னர் பெருமூச்சுவிட்டபடி எழுந்தேன். இயல்பாக என என் கையை நோக்கி அங்கே கணையாழி இல்லை என்று கண்டேன். திகைப்புடன் தரையிலெங்கேனும் விழுந்திருக்கிறதா என்று தேடியபோது என் கழுத்தில் மெல்லிய வலி எழுந்தது. அங்கு ஏதோ கடித்திருக்கிறது என உணர்ந்த கணம் அனைத்தும் கனவுமீள்வதென நினைவிலெழுந்தன” என்று திரௌபதி சொன்னாள்.

இளைய யாதவர் புன்னகையுடன் “அது கனவென்றே கொள்க!” என்றார். “யாதவரே, சென்ற பல மாதங்களாகவே நான் இங்கிருக்கும் மெய்மையில் இல்லை. ஒன்றிலிருந்து ஒன்றென கனவுகளுக்குள் சென்றுகொண்டிருக்கிறேன். இடையூடும் பாதையென நிகழ்வுகளிருப்பதனால் அவையும் கனவுகளின் பகுதியாகிவிட்டன” என்றாள் திரௌபதி. “கனவுகளுக்கும் நனவுகளுக்கும் வேறுபாடு ஒன்றே. நனவுகள் ஒன்றுடன் ஒன்று புறத்தே தொடுத்துக்கொண்டிருக்கின்றன. கனவுகள் தொடுத்துக்கொண்டிருப்பதை நாம் பிறிதொரு கனவில் மட்டுமே அறியமுடிகிறது.”

“தொடர்ச்சியால்தான் நாம் நிகழ்வுகளை வாழ்வென உணர்கிறோம். தொடர்பிலா நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுவாழ்வே. நான் நூறாயிரம் வாழ்க்கைகளினூடாக தன்னுணர்வு மட்டுமே என கடந்துசெல்கிறேன். நிகழ்ந்த ஒவ்வொன்றும் நுரை என இத்தனை கனவுகளை பெருக்கி வைத்திருக்குமென இதுவரை எண்ணியதே இல்லை. நூறுநூறு காம்பில்யங்கள். விண்ணிலும் மண்ணிலும் ஆழத்திலும் இந்திரப்பிரஸ்தங்கள். ஒன்றிலிருந்து ஒன்றென எழுந்துகொண்டே இருக்கும் மனிதர்கள். சொற்களின் அலை. சித்தமென்று ஒன்றில்லை. அது சொற்களைக் கட்டி எழுப்பும் கோட்டை. என் உள்ளே அலை மட்டுமே.”

“எங்கோ நான் சென்றுகொண்டிருக்கிறேன். பேரொழுக்கில் ஒழுகி. திசைகள் கரைந்து மயங்கும் விசை. விசை அனைத்தையும் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. நாம் கொண்டுள்ள ஒவ்வொன்றையும் அது பின்னால் பிடுங்கி வீசுகிறது. ஒவ்வொன்றும் இறந்தகாலமாகின்றன. கணங்கள் அக்கணமே இறந்தகாலமாகும் விசையில் காலமில்லாமலாகிறது. சென்றடைய இடமில்லாத விசை அசைவற்ற ஓர் உச்சம் மட்டுமே. அல்லது வெறுமொரு பித்துநிலை. தசைகளுருகி அழிய உடல் நீராக மாறி விரிந்து அலைகொள்ள இருத்தலென்பது விரிதலென்றாவது.”

அவள் மேலும் சொல்ல முயன்று பின் கையை அசைத்தாள். “எத்தனை சொல்லெடுத்தாலும் நான் அதை சொல்லிவிட முடியாது” என்றாள். “அது பெண்கள் மட்டுமே செல்லும் ஒரு நிலையாக இருக்கலாம். முதல் குழந்தைப்பேற்றின் பின் அந்தக் களைப்பில் அவ்வண்ணம் ஒரு நிலையில் சற்றுநேரம் இருந்திருக்கிறேன். அரிதாக இசையில். அதனினும் அரிதாக காமத்தில். அப்போதிருக்கும் நான் இந்த உடலின் வடிவாலும் எடையாலும் வகுக்கப்பட்டவள் அல்ல. என் அகம் மரபால், சொல்லால் ஆனதுமல்ல.”

“உணர்கிறேன்” என்று இளைய யாதவர் சுருக்கமாக சொன்னார். “ஆம், நீங்கள் உணரவியலும்” என்று திரௌபதி சொன்னாள். அமைதியில் வெளியே பனித்துளிகள் சொட்டிக்கொண்டிருக்கும் ஒலி கேட்டது. “உடன் எவர் வந்திருக்கிறார்கள்?” என்று இளைய யாதவர் கேட்டார். “என் அணுக்கச்சேடி” என்றாள் திரௌபதி. “அவள் பெயர் சலஃபை அல்லவா?” என்றார் இளைய யாதவர். திரௌபதி சிரித்துவிட்டாள். பின் செல்லச்சினத்துடன் “சேடியர் குலமுறையையும் விடுவதில்லை” என்றாள். இளைய யாதவர் சிரித்து “இனியவள், அழகி” என்றார். திரௌபதி சினம்காட்ட “ஏனென்றால் அவள் உங்கள் சேடி” என்றார்.

திரௌபதி கையசைத்து “எந்நிலையிலும் உங்களிடம் மாறாமலிருப்பது ஒன்றே” என்றாள். பின்னர் “அரண்மனையிலிருந்து எவருமறியாமல் கரவுப்பாதை வழியாக கோட்டையைக் கடந்தேன்” என்றாள். “உபப்பிலாவ்யத்தில் இன்று கௌரவப்படையே நுழைந்தாலும் எவரும் அறியப்போவதில்லை. நாழிகைக்கு ஒருமுறை நகரம் கலங்கிக்கொண்டிருக்கிறது” என்றார் இளைய யாதவர். அந்த உரையாடல் வழியாக அவள் இயல்படைந்தாள். பெருமூச்சுடன் தன் குழலை சீரமைத்தாள்.

“இங்கு வர ஏன் முடிவெடுத்தீர்கள், அரசி?” என்றார் இளைய யாதவர். “என் செய்தியும் கணையாழியும் சென்றுவிட்டன. அளித்த சொல்லை நான் மீறமுடியாது. யாதவரே, அனைத்தும் பிறிதொரு திசையில் உடைப்பெடுத்து பெருகவிருக்கின்றன. எண்ணுகையில் ஓர் ஆழ்நிறைவை அடைகிறேன். இனியேதும் செய்வதற்கில்லை என்றுணரும் ஓய்வுநிலையில் இருக்கிறது என் அகம். விடிவதற்குள் அங்கர் அச்செய்தியை பெறுவார்.” இளைய யாதவர் அவள் மேலும் சொல்வதற்காக காத்திருந்தார். அவள் தன் சுட்டுவிரலை கட்டைவிரலால் நெளித்தபடி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தாள்.

“அரசி, அந்நிலையை உங்கள் உள்ளம் ஏற்கிறதா?” என்றார் இளைய யாதவர். “ஆம், அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் என்னுடையதே. மெய் சொல்வதென்றால் அவற்றை அவள் சொன்னாளா, நான் எண்ணினேனா அன்றி இங்கே நானே தொகுத்துக்கொள்கிறேனா என்றே எனக்கு ஐயமாக உள்ளது” என்றாள் திரௌபதி. “வேதத்தை துறக்கவிருக்கிறீர்கள். வேதமுடிபு பிறிதென்று விலக்குகிறீர்கள், அல்லவா?” என்றார் இளைய யாதவர். “அல்ல. அன்னையென நின்று அடையும் விடுதலையை நாடுகிறேன். அழகுருவாக எழும் ஒரு வெளியில் நின்று எனக்குரிய தவத்தை செய்யவிருக்கிறேன். என்னை தளைக்கும் அனைத்திலிருந்தும் கிளம்பப்போகிறேன்” என்றாள் திரௌபதி.

“பிறகென்ன? பொழுதுவிடியக் காத்திருப்பதுதானே?” என்றார் இளைய யாதவர். “யாதவரே, நான் சொல்லாமலே அறிந்திருப்பீர்கள், நான் துறக்கவியலாதவர் நீங்களே” என்று திரௌபதி சொன்னாள். “அதை எண்ணிய கணமே என்னால் அங்கே இருக்க இயலாதென்றாயிற்று. ஒவ்வொரு கணமும் ஒரு சவுக்கடி என விழுந்தது. தாளாமல் கிளம்பி இங்கு வந்தேன்.” இளைய யாதவர் புன்னகைத்தார். நெகிழ்ந்த குரலில் “கிருஷ்ணா, நான் உன்னை துறந்தால் என் உள்ளம் இதுவரை போற்றிய அனைத்து அழகுகளையும் துறந்தவளாவேன். அதை என்னால் எப்படி செய்யவியலும்?” என்றாள் திரௌபதி.

நூல் பதினைந்து – எழுதழல் – 61

ஏழு : துளியிருள் – 15

fire-iconஅஸ்தினபுரியின் எல்லையை அவர்கள் அணுகுவதை முகப்பில் நின்றிருந்த தலைமைக் குகன் கொம்பூதி அறிவித்தான். யௌதேயன் எழுந்து சென்று வெளியே நோக்கினான். அஸ்தினபுரியின் எல்லை என அமைந்த காவல்மாடத்தின் மரமுகடு சோலைத்தழைப்புக்குமேல் எழுந்து தெரிந்தது. அங்கிருந்தவர்கள் அவர்களை பார்த்துவிட்டார்கள் என்பதை மெல்ல எழுந்தடங்கிய கொம்போசையிலிருந்து உணரமுடிந்தது. பலராமர் சலிப்புடன் எழுந்து கைகளை விரித்து சோம்பல்முறித்தபின் “அணுகிவிட்டோம்” என்றார்.

அப்பால் அஸ்தினபுரிக்குரிய நீர்ப்பரப்பில் ஏராளமான காவல்படகுகள் பாய்விரித்து சுற்றிவருவதை யௌதேயன் கண்டான். “நாம் நுழைகையிலேயே நம்மை வளைத்துக்கொள்வார்கள். ஒருவேளை சிறைபிடித்து அஸ்தினபுரிக்கு அழைத்துச் செல்லவும் கூடும்” என்றார் பலராமர். “இல்லை மாதுலரே, அரசமுறைமைகளை அவர்கள் ஒருபோதும் மீறமாட்டார்கள். முறைமைகளின்மேல் முழு நம்பிக்கை கொண்ட இருவரே இன்று பாரதவர்ஷத்தில் உள்ளனர். எந்தைக்குப்பின் அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர்” என்று யௌதேயன் சொன்னான். பலராமர் அவனை நோக்க புன்னகையுடன் “நெறிகளில் முழுமையாக நிற்பவர்கள் நிகர்செய்ய ஒரு பிறழ்வை மறுதட்டில் கொண்டிருப்பார்கள்” என்றான் யௌதேயன்.

“உன் தந்தையின் பிறழ்வு என்ன?” என்றார் பலராமர். யௌதேயன் புன்னகைத்தான். “சொல்!” என்றார். “இன்று அது விதைக்குள் மரம். தருணங்களின் அழுத்தமே அதை வெளிநிகழ்வு கொள்ளச்செய்யும்” என்று யௌதேயன் சொன்னான். ஒருகணம் திகைத்த பின்னர், “உண்மையில் தந்தையர் மைந்தர்முன் ஆடையின்றி நிற்கின்றனர்” என்று பலராமர் சிரித்தார். யௌதேயன் “மைந்தரும் தந்தைமுன் அவ்வாறே நிற்கின்றனர், மாதுலரே” என்றான். “என் மைந்தர்களை நான் மதுராவுக்கு கொண்டுவந்ததே இல்லை. அவர்கள் முதுதந்தை சூரசேனருடன் மதுவனத்தில் வாழ்கிறார்கள். கன்றோட்டும் ஆயர்களாகவே அவர்கள் வளரவேண்டும் என எண்ணினேன்” என்று பலராமர் சொன்னார். “அவர்கள் என்னைப் பார்ப்பதே அரிது” என்றார்.

யௌதேயன் “சென்று பாருங்கள், உங்களைப்போலவே இலையும் கிளையுமாக எழுந்து வந்திருப்பார்கள்” என்றான். பலராமர் விழிகனிய “ஆம், அவ்வாறே இருப்பார்கள். அதை என்னால் உணரமுடிகிறது” என்றார். “நிஷதனும் உல்முகனும் எங்களுக்குக்கூட வெறும் பெயர்களாகவே இருக்கிறார்கள்” என்றான் யௌதேயன். “அவர்கள் வளைதடி அன்றி எந்தப் படைக்கலமும் பயிலவேண்டியதில்லை, கன்றுதேர்தலன்றி சூழ்கை எதுவும் கற்கவேண்டியதில்லை என இளமையிலேயே முடிவு செய்தேன். மெய்யான மகிழ்வு என்றால் என்ன என்று நான் அறிந்ததை அவர்களுக்கு அளிக்கவேண்டும் என விழைந்தேன்” என்றார் பலராமர். யௌதேயன் புன்னகை புரிந்தான்.

அவர்கள் படகு அணுகியதுமே அஸ்தினபுரியின் காவல்படகுகள் அனைத்திலும் கொம்புகள் முழங்கத் தொடங்கின. விரைவுப்படகுகள் பாய்விரித்து நாரைநிரைகள்போல ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி வந்தன. அஸ்தினபுரியின் எல்லையை அவர்களின் படகு கடந்ததும் அவை அதை முழுமையாக வளைத்துக்கொண்டன.

முதற்படகின் அமரத்தில் எழுந்த வீரன் “படகில் யார் என்று அறிவிக்கும்படி அஸ்தினபுரியின் நீர்க்காவலர் தலைவனின் ஆணை” என்றான். அமரமுனையில் எழுந்த படகின் காவலன் “மதுராவின் அரசர், யதுகுலத் தலைவர் பலராமர் எழுந்தருள்கிறார். அவர் அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரை காணும்பொருட்டு சென்றுகொண்டிருக்கிறார்” என்றான். “படகு அசையாமல் அங்கு நிற்கட்டும். ஆணை பெற்று அறிவிக்கிறோம்” என்றான் அவன். அவர்கள் வந்த விரைவுப்படகுகளுக்கு அப்பால் பெரும்படகுகள் இரண்டு வந்து நிலைகொண்டன.

முதற்படகிலிருந்து எழுந்த கொம்போசை ஒன்றிலிருந்து ஒன்றென படகுகள்தோறும் சென்று தொலைவிலிருந்த அஸ்தினபுரியின் துறைமேடையை அடைந்தது. அங்கிருந்து அது முரசோசைகள் வழியாக அஸ்தினபுரியின் அரண்மனையை அடைவதை உள்ளத்தால் கேட்க முடிந்தது. சற்றுநேரத்தில் தொலைவிலிருந்து கொம்போசையாக அஸ்தினபுரியின் ஆணை வந்தது. காவல்படகின் வீரன் “தங்களை அழைத்து வரும்படி ஆணை, அரசே” என்றான். படகிலிருந்த பலராமர் கையசைத்து “செல்வோம்” என்றார்.

கரையோரப்படகுகள் சூழ குஞ்சுகள் உடன் செல்லும் அன்னமென மதுராவின் அரசப் படகு அஸ்தினபுரி துறை நோக்கி சென்றது. தொலைவிலிருந்து அலைகள்மேல் விழுந்து எழுந்தேறி வந்த அஸ்தினபுரியின் படகொன்று அமுதகலக்கொடி படபடக்க அருகணைந்தது. அதன் அமர மேடையில் நின்றவனை யௌதேயன் சிறிய உளத்திடுக்கிடலுடன் பார்த்தான். பலராமர் கண்களுக்கு மேல் கைவைத்து உற்று நோக்கி “யாரந்த நெடியோன்? அங்கநாட்டான் வசுஷேணன் போலிருக்கிறான்” என்றபின் முகம் மலர்ந்து உரத்த குரலில் “கர்ணனின் மைந்தன்!” என்றார். “மூத்தவன் விருஷசேனன் என நினைக்கிறேன். சிறுவனாக முன்னெப்போதோ பார்த்திருக்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்த விழாவிலா அல்லது அஸ்தினபுரியின் படைகளியாட்டுகளிலா என நினைவில்லை” என்றார்.

யௌதேயன் “ஆம், விருஷசேனர்தான். அவர் இருந்தார் என்றால் படகில் அவருடைய இளையோர் சித்ரசேனனும் சத்யசேனனும் இருப்பார்கள்” என்றான். “இருமுறை அவர்களை அஸ்தினபுரியின் விழவுகளில் கண்டிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன்பு.” பலராமர் “ஆம், அவர்களையும் பார்த்திருக்கிறேன். அனைவருமே தந்தையைப்போல நெடியவர்கள். அதனாலேயே அத்தனை திரளிலும் தனித்துத் தெரிபவர்கள்” என்றார். “நெடியவர்கள் பெரும்பாலும் மெலிந்து கூன்கொண்டிருப்பார்கள். கர்ணனும் மைந்தரும் பெருந்தோளர்கள், சீருடலர்கள். கலிங்கச் சிற்பிகள் வடித்த கற்சிலைபோல கரியவர்கள்.”

உவகையுடன் அவர் படகின் விளிம்பில் கால்வைத்து வடத்தைப் பற்றியபடி விழப்போகிறவர்போல ஆடிக்கொண்டு எட்டிப்பார்த்தார். “இனியவர்கள்… நம் மைந்தர்களிலேயே இந்தப் பத்துபேரும்தான் அழகர்கள்” என்றார். திரும்பி “என் இளையோன் அழகன் என நான் எப்போதும் பெருமிதம் கொள்வதுண்டு. ஆனால் அது அவன் இனியோன் என்பதனால் எழும் அழகு. கல்வியால் அவ்வழகை அவன் பெருக்கிக்கொண்டான். மைந்தா, அங்கனின் அழகுதான் மானுடப் பேரழகு. அவன் ஒவ்வொரு அசைவும் அழகியவை. அவைகளில் அவனிடமிருந்து நான் விழிவிலக்குவதேயில்லை” என்றார்.

படகு அணுகிவர விருஷசேனன் கையசைத்து இரு படகுகளையும் ஒன்றையொன்று அணுக வைத்தான். இரு படகுகளிலும் இருந்த படகோட்டிகள் ஒருவரை ஒருவர் நோக்கி கைவீசி செய்கை பரிமாறிக்கொண்டனர். அரசப்படகிலிருந்து படகோட்டிகள் நால்வரால் வீசப்பட்ட வடம் பறந்து வளைந்துசென்று அஸ்தினபுரியின் படகின் முகப்பில் பெரும்பாம்பு என விழுந்தது. அதை அங்கிருந்த படகோட்டி தறியில் சுற்றிக்கட்டியதும் இரு படகுகளும் மெல்ல அணுகி ஒன்றையொன்று நெற்றிமுட்டி முத்தமிட்டுக்கொண்டன.

பலராமர் கைகளை விரித்து உரக்க நகைத்துக் கூச்சலிட்டபடி வடத்தை நோக்கி ஓடினார். அந்த வடத்தைப் பற்றி அதன்மேல் சிலந்திபோல எளிதாகத் தொற்றி ஏறி படகுக்குள் வந்த விருஷசேனன் பலராமரை அணுகி கால்தொட்டு வணங்கி “அருள்புரிக, அரசே” என்றான். குனிந்தபோதே அவன் தோள் பலராமரின் நெஞ்சளவு இருந்தது. தோள்களின் கரிய தோல் எண்ணைப்பூச்சு பெற்ற கற்சிலைபோல பளபளத்தது. அவன் தோளைத் தொட்டு அணைத்து நெஞ்சோடு இறுக்கிக்கொண்ட பலராமர் “தந்தையைப்போலவே இருக்கிறாய்! பெருந்தோளன்! இத்தனை உயரமான பிறிதொரு இளைஞன் நம் அரசகுடிகள் எதிலும் இல்லை!” என்றார்.

கீழிருந்து சத்யசேனனும் சித்ரசேனனும் மேலேறி வந்தனர். அவர்களை நோக்கி கைவிரித்து நகைத்த பலராமர் “கங்கையில் அலைபெருகி வருவதுபோல அல்லவா வருகிறீர்கள்… கரிய பேரலைகள்… ஒளிகொண்டவை…” என்றார். அவர்கள் அவர் கால்தொட்டு வணங்க இரு கைகளாலும் இருவரையும் அணைத்துக்கொண்டு “இனியவர்கள்… வசுஷேணன் நல்லூழ் கொண்டவன். மூதாதையரால் உளம்கனிந்து கொடையளிக்கப் பெற்றவன்…” என்றார். திரும்பி “பேரழகர்கள்… வசுஷேணனின் இளமையழகு முழுக்க இவர்களிடமுள்ளது அல்லவா?” என்று யௌதேயனிடம் கேட்டார்.

யௌதேயன் அருகணைந்து “என்னை வாழ்த்துக, மூத்தவரே” என்று விருஷசேனனின் கால்களை குனிந்து தொடப்போனான் அவன் பதறி விலகி “பொறுங்கள் இளவரசே, இது முறைமை அல்ல. தாங்கள் ஷத்ரிய குடியினர்” என்றான். “நான் இளவரசே என்று அழைக்கவில்லை, மூத்தவரே என்றுதான் அழைத்தேன்” என்றான் யௌதேயன். திகைப்புடன் “ஏன்?” என்று விருஷசேனன் கேட்டான். “அதை தாங்கள் உணரும் தருணம் ஒன்று வருக!” என்றபின் யௌதேயன் குனிந்து அவன் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வாழ்த்துங்கள்” என்றான். குழப்பத்துடன் பலராமரை ஒருதரம் நோக்கிவிட்டு “புகழும் நிறைவும் கொள்க!” என்று அவன் வாழ்த்தினான்.

பலராமர் உரக்க நகைத்து “ஆம், உள்ளங்கள் அறியும் உண்மைகளை நாவு அறிவதில்லை” என்றார். பின்னர் “வருக!” என்று அவர்கள் தோளை அணைத்து உள்ளே அழைத்துச்சென்று அமரவைத்தார். விருஷசேனன் அமர இளையோர் இருபக்கமும் நின்றனர். “நான் அங்கே துறைக்காவலில் இருந்தேன். தாங்கள் வரும் செய்தி வந்தது. தங்களை நேரில் கண்டு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்களிக்கப்பட்டது” என்றான் விருஷசேனன். “நீ வந்தது, சூரியமைந்தனாகிய வசுஷேணனே நேரில் வந்ததுபோல” என்றார் பலராமர். “நீங்கள் பதின்மர் அல்லவா?” என்று கேட்டார்.

“ஆம் மூத்தவரே, சுதமன், விருஷகேது, சுஷேணன், சத்ருஞ்ஜயன், திவிபதன், பாணசேனன், பிரசேனன் என்று மேலும் எழுவர்” என்றான் விருஷசேனன். யௌதேயன் “அனைவருமே அங்கநாட்டரசரின் மாற்றுருக்கள் எனத் தோன்றுவார்கள்” என்றான். பலராமர் தொடையில் அடித்துச் சிரித்து “சூரியன் தன்னைச் சூடும் அனைத்தையும் தான் என ஆக்கும் குன்றாஒளி கொண்டவன்” என்றார். மீண்டும் உரக்க நகைத்து “இளைஞன் ஒருவனிடம் அண்ணாந்து பார்த்து பேசவேண்டுமென்றிருப்பதே என்னுள் திகைப்பை உருவாக்குகிறது. இதோ மூவர் மலைமுடிகளைப்போல சூழ்ந்து நிற்கிறார்கள்” என்றார். விருஷசேனன் தோளை அறைந்து “இவனை ஒருமுறையாவது களத்தில் தோள் பொருதி தோற்கடித்தாலொழிய என்னுள் வாழும் மல்லன் நிறைவு கொள்ளமுடியாது” என்றார்.

விருஷசேனன் சிரித்து “அதற்கென்ன அரசே, அஸ்தினபுரியிலேயே களிக்களம் காண்போம்” என்றான். “உன் தந்தையுடன் இருமுறை களம் கண்டிருக்கிறேன். மற்போரில் அவன் என்னை ஒவ்வொரு முறையும் எட்டாவது சுற்றில் சுழற்றி அடிப்பான். கதைப்போரில் நான்கு முறை நான் அவனை வென்றுள்ளேன்” என்று பலராமர் சொன்னார். “ஒவ்வொருவரையாக பத்து வசுஷேணர்களையும் வெல்வேன். சூரியன் என ஒவ்வொரு நாளும் அவன் நீர்ப்பாவைகளை அள்ளி அல்லவா நாம் நீத்தாருக்கு நீரளிக்கிறோம்?” விருஷசேனன் “இத்தருணத்தில் எந்தையர் மகிழ்கிறார்கள்” என்றான்.

fire-iconயௌதேயன் “மூத்தவரே, அங்கு நகரில் என்ன நிகழ்கிறது?” என்றான். அக்கேள்வி அதுவரை இருந்த உளநிலையை தணியச்செய்ய பலராமர் சலிப்புடன் தன் பெரிய கைகளை உரசிக்கொண்டார். விருஷசேனன் “அங்கு என்ன நிகழுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களோ அதுதான். இளவரசி கவர்ந்து செல்லப்பட்டாள் என்ற செய்தியே அஸ்தினபுரியை நிலைகுலையச் செய்துவிட்டது. அஸ்தினபுரியின் ஐநூறாண்டுகால வரலாற்றில் இப்படி ஒன்று நிகழ்ந்ததில்லை. அதிலும் ஷத்ரிய குடியைச் சாராத யாதவர் ஒருவர் அதைச் செய்தது அங்கே எழுப்பிய சினத்தைச் சொல்ல கிருஷ்ண துவைபாயனரின் நாவுதான் வேண்டும்” என்றான்.

சித்ரசேனன் “இன்று காலை அரண்மனையிலிருந்து துறைமேடைக்கு புரவியில் வந்துகொண்டிருந்தேன். அத்தனை நாவுகளிலும் உச்சநிலை வசைச்சொற்கள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தன” என்றான். பலராமர் “ஆம், அதை உணரமுடிகிறது” என்றார். “சகுனி என்ன சொல்கிறார்?” என்று யௌதேயன் கேட்டான். சத்யசேனன் “அவருடைய குருதி அனலாகியிருக்கிறது என்றார்கள். அது எதிர்பார்த்ததுதான். ஆனால் கணிகரும் அதே அளவு சினம் கொண்டிருக்கிறார். முதல்முறையாக அவர் தோற்கடிக்கப்பட்டதாக உணர்ந்தார்” என்றான்.

“நேற்று இச்செய்தியை ஒற்றர்கள் அறிவிக்கும்போது சகுனியின் அறைக்குள் கணிகர் இருந்தார். செய்தியைக் கேட்டதும் சகுனி சினம் கொண்டெழுந்து வாளை எடுத்ததாகவும் கணிகர் பெருமூச்சுடன் கைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து முறுக்கியபடி அமர்ந்திருந்ததாகவும் ஏவலன் சொன்னான். அதை அரசரிடம் அவன் சொல்லும்போது நான் உடன் இருந்தேன். கணிகர் சினம் கொண்டு எவரும் பார்த்ததேயில்லை” என்றான் விருஷசேனன். பலராமர் “நான் இப்புவியில் அஞ்சுவது அவரை மட்டுமே” என்றார்.

யௌதேயன் “பிறிதெவரைப்பற்றியும் கேட்க வேண்டியதில்லை. பிதாமகர் பீஷ்மரும் துரோணரும் என்ன எண்ணுவார்களென்பதை எழுத்து எண்ணி என்னால் சொல்லிவிடமுடியும்” என்றான். “ஆகவேதான் உங்கள் வரவு நகரை கொந்தளிக்க வைக்குமென்று நான் எதிர்பார்க்கிறேன். ஒருவேளை அஸ்தினபுரியின் படை திரண்டு துறைமுகப்புக்கே வரக்கூடும். உங்களை சிறையிடக்கூட ஆணை எழக்கூடும். இங்கு வரும் வழியில் காவலர்கள் அனைவருமே சினங்கொண்டு எரிந்துகொண்டிருப்பதைத்தான் கண்டேன். நானே வந்து தங்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று விதுரர் எனக்கு ஆணையிட்டது ஏன் என்று புரிந்தது.”

பலராமர் “சாம்பன் செய்தது பிழைதான்… நாங்கள் அறியாதது அது” என்றான். “ஆம், அது இளையோர் விளையாட்டு. கணிகரை அறிந்த எவரும் இரு இளையோரை அதற்கு அனுப்பமாட்டார்கள்.” யௌதேயன் புன்னகைத்து “ஆனால் அவர்கள் வென்றுவிட்டார்கள், மூத்தவரே” என்றான். விருஷசேனன் அவனை நோக்கி திரும்பி “நீங்கள் இன்னமும் செய்தியை அறியவில்லையா?” என்றான். யௌதேயன் திகைப்புடன் நோக்கினான். “அவர்களை சிறைப்பிடித்துவிட்டோம். சாம்பர் அஸ்தினபுரியின் சிறையில் இருக்கிறார்.”

யௌதேயன் “அவர்கள் அஸ்தினபுரியின் எல்லையை கடந்துவிட்டனர்” என்றான். “ஆம், ஆகவே அஸ்தினபுரியினர் அவர்களைத் தொடரமுடியாதென்பது பெண்கோள்முறைமை. ஆனால் பிறநாட்டு அரசகுடியினர் அவர்களை தொடரலாம், வெல்லமுடிந்தால் அப்பெண்ணை கொள்ளலாம். அவர்களின் மணம்நிகழும் வரை அதற்கு ஒப்புதல் உண்டு” என்றான் விருஷசேனன். “கங்கைக்கரை மாளிகையில் நீர்விளையாட்டில் இருந்தபோது எங்களுக்கு கணிகரின் ஆணை வந்தது. நாங்கள் விரைவுப்படகில் தொடர்ந்து சென்று அவர்களை சூழ்ந்துகொண்டோம்.”

யௌதேயன் பெருமூச்சுடன் “ஆம், சர்வதனால் உங்களை எதிர்கொள்ள முடியாது” என்றான். “உங்களை அனுப்பியதில்தான் கணிகரின் நுண்திறன் உள்ளது.” சித்ரசேனன் “மூத்தவர் நெடுந்தொலைவுக்கு அம்புசெலுத்துவதில் பெருந்திறன்கொண்டவர். தந்தையிடமிருந்து அதை கற்றுக்கொண்டார். அதில் இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவரும் அபிமன்யூவும் மட்டுமே அவருக்கு நிகர்நிற்க முடியும். தமோதிருஷ்டம் என்னும் கலையைத் தேர்ந்த அவரால் முற்றிருளிலும் பூச்சிகளின் சிறகைக்கூட நோக்கமுடியும். அவர்களைத் தொடர்வது எங்களால் மட்டுமே முடிவது” என்றான்.

சத்யசேனன் “எங்களிடம் தொலையம்பு செலுத்தும் பெருவில் இருந்தது. ஆனால் அன்று மூத்தவர் ஒரு அருந்திறனை காட்டினார். எங்கள் விரைவுப்படகின் கொடிக்கம்பத்தை நாங்கள் இருவரும் வடம்பற்றி இழுக்கும்படி சொன்னார். அது வளைந்ததும் அதை வில்லாக்கி முதல் வடத்தை நாணாக்கி எரியுருளை ஏற்றப்பட்ட பேரம்பு ஒன்றை விண்ணில் எழுப்பினார். அது பறந்து விழிமறைந்து வளைந்து இறங்கி சர்வதரின் விரைவுப்படகின் பாய்மீது விழுந்தது. அதன் எரியரக்கு பாயை கொளுத்தியது. பட்டு மிக விரைவிலேயே பொசுங்கும் என்பதனால் சிலகணங்களிலேயே அவர்களின் படகு விரைவழிந்தது.”

“ஆயினும் சர்வதர் தன் தோள்வல்லமையால் துடுப்பிட்டு படகை செலுத்தினார். நாங்கள் அம்புகளால் படகைச் சூழ்ந்து நிறுத்தினோம். சாம்பரின் இடத்தோளையும் அம்பு எய்து செயலிழக்கச் செய்தோம். சர்வதரிடம் இளவரசியை கையளிக்கும்படி கோரினோம். அவர் மறுத்தார். ஆகவே முறைப்படி அவரை மற்போருக்கு அழைத்தோம். படகிலேயே அவருடன் மூத்தவர் தோள்கோத்தார். ஒன்றரை நாழிகையில் மூத்தவர் அவரை தூக்கி அடித்து வீழ்த்தினார். அவர் தன்னை கொல்லும்படி கோரினார். ஆனால் மூத்தவர் அவரை குப்புறவீழ்த்தி கைகளைப் பிணைத்துக் கட்டினார்” என்றான்.

யௌதேயன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். விருஷசேனன் “இருவரையும் சிறைப்படுத்தி காலையிருளிலேயே எவருமறியாமல் அழைத்துச்சென்று அஸ்தினபுரியின் அரசர் முன் நிறுத்தினோம். அவர்களைக் கண்டதுமே அரியணையிலிருந்து கடுஞ்சினத்துடன் பிளிறலோசை எழுப்பியபடி கைகளை ஓங்கி அறையவந்தார் அரசர். சகுனி மருகனே நில் என ஆணையிட்டதனால் அமைந்தார். மூச்சிரைக்க என்ன செய்வதென்று அறியாமல் ததும்பினார். அருகே நின்ற வீரனின் வேலைப்பிடுங்கி வளைத்து வீசினார். பின்னர் அவர்களை சிறையிலடைத்துவிட்டு மதுராவுக்கு செய்தி அனுப்ப அவர் ஆணையிட்டார்” என்றான்.

சித்ரசேனன் “அச்செய்தியைக் கேட்டுத்தான் நீங்கள் வருகிறீர்கள் என எண்ணினோம்” என்றான். துடுப்புகள் நீரளாவும் ஒலி மட்டும் கேட்கும் அமைதி நிலவியது. பலராமர் அமைதியிழந்து எழுந்து நின்றார். மீண்டும் அமர்ந்தபின் “சாம்பன் அடைக்கப்பட்ட சிறை எது?” என்றார். “அரசகுடியினருக்குரிய சிறைதான்” என்றான் விருஷசேனன். பலராமர் சற்று அமைதியடைந்து “ஆம், துரியோதனனின் சினத்தை புரிந்துகொள்ள முடிகிறது. இது பெண்கவரப்பட்ட தந்தையின் சினம் மட்டும் அல்ல. வெல்லமுடியாத அஸ்தினபுரி யாதவர்முன் தோற்றதாகவே ஷத்ரியர் எண்ணுவார்கள். ஷத்ரிய அவைகளில் இனி அவன் நுழைகையில் மெல்லிய இளிவரல்நகை எழுந்து சூழும்” என்றார்.

யௌதேயன் “இளவரசி என்ன சொன்னாள்?” என்றான். “இளவரசியை அவைக்குக் கொண்டுவந்தபோது அனைவரும் திகைப்புடன் அவளை நோக்கினார்கள். தயக்கமற்ற கண்களுடன் அவள் வந்து அவைநடுவே நின்றாள். நீங்கள் கவர்ந்துசெல்லப்பட்டீர்களா இளவரசி என விதுரர் கேட்டார். அவள் இல்லை என்றாள். துச்சாதனர் உரக்க என்ன சொல்கிறாய் என்று கூவினார். அவள் அவர் விழிகளை நோக்கி நான் விரும்பாமல் என்னை எவரும் கவரமுடியாது என்று அறியமாட்டீர்களா தந்தையே என்றாள். அவர் வாயடைத்து நின்றுவிட்டார். அவள் அவைநோக்கி சாம்பரை உளஏற்பு கொண்டுவிட்டதாவும் பிறிதொருவரை இப்பிறவியில் ஏற்கவியலாதென்றும் சொன்னாள்” என்றான் விருஷசேனன்.

மீண்டும் அமைதி நீள பலராமர் “துரியோதனன் எவ்வாறு இருந்தான்?” என்றார். “அரசர் பெருந்துயருடன் ஏன் இதை செய்தாய் கிருஷ்ணை, உன் கைபற்றும் தகுதி கொண்டவன் அவன் என எப்படி எண்ணினாய் என்று கேட்டார். இளவரசி அவர் விழிகளை நோக்கி அவர் என் உள்ளம்கொண்டவரின் உருக்கொண்டவர் என்றாள். அரசர் திடுக்கிட்டு அவளை நோக்கியபின் தலைகவிழ்ந்து உடல் எடைமிகுந்து அரியணையில் அமர்ந்தார். விதுரர் இளவரசியை மீண்டும் கன்னியர்மாளிகைக்கு அனுப்ப ஆணையிட்டார்” என்றான் விருஷசேனன்.

“ஆனால் இளவரசி அவை நீங்கியதும் அரசர் மீண்டும் சினவெறிகொண்டு இரு கைகளாலும் தொடையை ஓங்கியறைந்தபடி எழுந்து கூச்சலிட்டார். யாதவகுலத்தையே கருவறுப்பேன், மதுராவை எரியூட்டுவேன், சாம்பனை கழுவேற்றுவேன் என்று கூவினார். விதுரர் சொன்ன நற்சொற்கள் அவர் செவிகளை எட்டவில்லை. சகுனி எழுந்து ஏதோ சொல்லெடுக்க அவரை நோக்கிச் சீறியபடி கையோங்கி சென்றார். மதம்கொண்ட வேழம்போல எதிர்நின்ற அனைத்தையும் முட்டிமோதி தள்ளினார். அவையினர் அஞ்சி நடுங்கி அமர்ந்திருந்தனர்.”

“விதுரர் விழிகாட்ட கனகர் அவை நீங்கி பேரரசரை அவைக்கு அழைத்துவந்தார். அவர் அவைநுழைந்து என்ன நடக்கிறது இங்கே, அரியணை அமர்ந்தவன் நிலையழியலாமா மூடா என்று கூவினார். உடற்தசைகள் சினத்தால் ததும்ப தந்தையை நோக்கி நின்றபின் அரசர் திரும்பி மறுபக்கம் வழியாக வெளியேறினார். பேரரசரை அரியணை அமர்த்தி அவைநிறைவு செய்தனர். அரசர் சினம் தலைக்கேற பித்தனைப்போல் இருப்பதாக கனகர் சொன்னார். விதுரர் என்னிடம் நீங்கள் இருவரும் அஸ்தினபுரி நோக்கி வருவதாகச் சொல்லி உங்களை காத்து அழைத்துவரவேண்டும் என்று ஆணையிட்டபோது அவர் முகத்தில் கவலையை கண்டேன்.”

அச்சொற்களைக் கேட்டபடி யௌதேயன் இரு கைகளையும் மார்புடன் கட்டியபடி கண்மூடி அமர்ந்திருந்தான். விழிதிறந்து “முற்றாகத் தோற்கடிக்கப்பட்டேன், மூத்தவரே. எந்தையரை வெல்ல உங்கள் தந்தையால் இயலும். எனவே எங்களை வெல்ல உங்களால் மட்டுமே இயலும் என்று உணர்ந்த கணிகர் இளைய யாதவரைக்கூட ஒருநாள் வெல்லக்கூடும்” என்றான். பின்னர் “இனி என்ன நிகழும்? நாங்கள் செய்யவேண்டியது என்ன? தாங்கள் கூறுவதை செய்கிறோம்” என்றான். பலராமர் “ஆம், இனி நீ கூறுவதையே நாங்கள் கடைப்பிடிக்கவேண்டும்” என்றார்.

விருஷசேனன் “இனி ஆகக்கூடுவது விண்ணப்பித்தல் மட்டுமே” என்றான். “இன்றைய சூழலில் யாதவர் எவ்வகையிலும் அஸ்தினபுரியிடம் பூசலிட இயலாது. அஸ்தினபுரிக்கு யாதவர் தேவை, ஆனால் தவிர்க்கமுடியாதவர்கள் அல்ல. பூசலிட்டுப் பிரிந்து நின்றிருக்கும் யாதவர்கள் இன்று பெருவல்லமையும் அல்ல. அவர்கள்பொருட்டு அரசர் ஷத்ரியர்களின் பகையை ஈட்டிக்கொள்ள மாட்டார்.” பலராமர் “ஆம், உண்மையில் அஸ்தினபுரிக்கும் யாதவருக்குமான கூட்டு முறிந்துவிட்டது” என்றபின் திரும்பி யௌதேயனிடம் கசப்புடன் சிரித்தபடி “அவ்வகையில் உன் பணி நிறைவுற்றுவிட்டது, மைந்தா” என்றார்.

யௌதேயன் “மூத்தவரே, உங்களை நான் அணுகியறியேன். ஆனால் உங்கள் தந்தை எவரென்று அறிவேன். அவரிடம் நான் கோருவதை உங்களிடமும் கோரமுடியும் என்று உணர்கிறேன். உங்கள் உள்ளத்துள் நீங்களும் அவ்வாறு உணர்ந்தால் எனக்கு உதவுங்கள். இது என் திட்டம். இது பிழையாகி மூத்தவரும் இளையோனும் சிறைப்பட்டதற்கு நானே பொறுப்பு. அவர்கள் மீளவும் இவையனைத்தும் எளிதென முடியவும் என்ன வழி உள்ளது?” என்றான். விருஷசேனன் சிலகணங்கள் அவனை கூர்ந்து நோக்கினான். விழிநோக்கியிருக்கவே அவன் உருவம் கர்ணனாக மாறுவதை உணர்ந்து யௌதேயன் அகம் திகைத்தான்

பெருமூச்சுடன் கையை காற்றில் வீசி எதையோ கலைத்தபின் விருஷசேனன் “நீ கோருவதை நான் மறுக்கமுடியாது, இளையோனே” என்றான். “ஏனென்றால் எந்தை அதை செய்யமாட்டார்” என்றபின் எழுந்து கொண்டான். பெரிய கருந்தோள்கள் தசைபுடைத்து நிற்க கைகளைக் கட்டிக்கொண்டு நீரலைகளை நோக்கி திரும்பி நின்றான். பின்னர் “பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு சூதில் வென்று நம் தந்தையர் சென்று நின்றபோது வென்றவற்றை முழுக்க திருப்பி அளித்த பேரரசரை நினைவுறுகிறாய் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் யௌதேயன். “மீளமீள சூதர் பாடும் கதை அது.”

விருஷசேனன் “எந்தை அறிந்த அரசர் துரியோதனரை நானும் அறிவேன். அவருள் வாழ்பவர் பேரரசர் திருதராஷ்டிரர்தான்” என்றான். “களிற்றின் உடல்கொண்ட முழு வலிமையையும் அதன் மதமூறும் சிறுதுளை ஈடுசெய்கிறது என்று ஒரு சொல் உண்டு. அவர்களுக்கு அது குருதிப்பற்று” என்று விருஷசேனன் சொன்னான். பின்னர் “இதற்குமேல் நான் சொல்லலாகாது, இளையோனே” என்றான். யௌதேயன் முகம் மலர்ந்து “இதுபோதும் மூத்தவரே…” என்றான். பலராமர் “என்ன சொல்கிறான்?” என்றார். “எந்நிலையிலும் தன்குருதியினன் ஆகிய சர்வதனை அரசர் தண்டிக்கப்போவதில்லை. தன் மகள் கிருஷ்ணையின் விருப்பை மீறி எதையும் செய்யவும் அவரால் இயலாது” என்றான் யௌதேயன்.

“ஆனால் அவள்…” என்று பலராமர் சொல்லி தயங்க “அவள் அவையிலேயே சொல்லிவிட்டாள். அதை அவரால் மீறமுடியாது. அவர் தன் மகளை சாம்பருக்கு கையளித்தே ஆகவேண்டும்” என்று யௌதேயன் சொன்னான். சித்ரசேனன் “தந்தை உன்னை சந்திக்க விரும்புவார், இளையோனே” என்றான். சத்யசேனன் “இந்திரப்பிரஸ்தத்தின் இளையோர் என அவர் நாவில் அடிக்கடி சொல்லெழுவதை நான் கேட்டுள்ளேன். உங்கள் ஒன்பதின்மர் மேலும் அவர் கொண்டுள்ள அன்பு எங்கள் அனைவருக்கும் பொறாமையை உருவாக்குவது” என்றான்.

“எங்களில் அவருக்கு மிக உகந்த மைந்தன் யார்?” என்றான் யௌதேயன். “அதை நீயே அறிவாய்” என விருஷசேனன் சிரித்தான். “அபிமன்யூ… வேறு யார்?” என்றான் யௌதேயன். விருஷசேனன் உரக்க சிரித்து “அனைவரையும் தந்தையென்றாக்கும் நடிப்பு ஒன்று அவனிடமுள்ளது. அவனை நேரில் கண்டால் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைக்கவேண்டும்” என்றான். அவர்கள் சேர்ந்து சிரிக்க அதில் கலந்துகொள்ளாமல் பலராமர் “நான் அவனை எப்படி முகம்கொண்டு சந்திப்பேன்? எண்ண எண்ண பெருகி வருகிறது அந்த தயக்கம்” என்றார்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 19

19. மண்ணுறு அமுது

ஏழாண்டுகாலம் அமராவதி காத்திருந்தது. ஊர்வசியே அமரகணிகையரில் தலைக்கோலி என்பதனால் அவளை மையமாக்கியே அங்குள்ள ஆடல்கள் அதுவரை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அவள் முன்னின்று ஆடியதை தொடர்ந்தாடியமையால் ஒவ்வொருவரும் அவளைப்போலவே ஆகிவிட்டிருந்தனர். அனைவரிலும் வெளிப்பட்டமையாலேயே அவள் அங்கில்லாமை மேலும் துலக்குற்றது. அவள் இடத்தில் ரம்பையோ திலோத்தமையோ நின்று நிகழ்த்தப்பட்ட ஆடல்கள் அனைத்திலும் அவள் எழுந்து வந்து மறைந்துகொண்டே இருந்தாள். ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் அவளைப்பற்றி பேசிக்கொண்டு கலைந்து சென்றனர் முனிவரும் தேவர்களும். அப்பேச்சை எடுக்கவேண்டாமென இந்திரனின் ஆணை எழுந்தபிறகு அவளைப்பற்றி எண்ணியபடி கலைந்து சென்றனர்.

“அவை நடனங்கள் உயிரிழந்துள்ளன, அரசே. கலை முழுமை கொள்வதில்லை. ஆனால் நிகழ்கையில் இதோ முழுமை என முகம் காட்டியாகவேண்டும். இங்கு ஆடலனைத்தும் அவள் இன்மையையே காட்டி எழில் சிதைந்துள்ளன” என்றார் அவையில் எழுந்த தும்புரு முனிவர். “சொல்க, ஊர்வசி எப்போது மீள்வாள்?” என்றார் சௌரவ முனிவர். அவையே அவ்வினாவுடன் இந்திரனை நோக்க அவன் தத்தளித்த விழிகளுடன் நாரதரை நோக்கினான். “மானுடக் காதலின் எல்லை என்ன என்றுணர்ந்து தன் எல்லையின்மையை கண்டடையும் வரை அவள் அங்கிருப்பாள்” என்றார் நாரதர். “அதற்கு எத்தனை காலமாகும்?” என்றான் விஸ்வவசு என்னும் தேவன். “அது அவள் ஆழத்தையும் நுண்மையையும் பொறுத்தது” என்று நாரதர் மறுமொழி சொன்னார்.

அன்று அவை நீங்குகையில் இந்திரன் நாரதரிடம் தாழ்ந்த குரலில் கேட்டான் “இசை முனிவரே! மெய்மையை அறிய அவள் விழையவில்லை என்றால் என்ன செய்வது?” நாரதர் திடுக்கிட்டுத் திரும்பி நோக்கி “ஏன்?” என்றார். “அவள் தன் அறிவை ஒத்தி வைத்திருந்தால்…?” என்று மீண்டும் இந்திரன் சொன்னான். “அறிவை விழையாத எவரேனும் உளரா? அதைத் தடுக்க எவருக்காயினும் இயலுமா?” என்றார் நாரதர். இந்திரன் புன்னகைத்து “நீங்கள் காமத்தையும் காதலையும் அறிந்ததில்லை, முனிவரே” என்றபின் அகன்று சென்றான்.

அன்றே விஸ்வவசுவையும் ஏழு கந்தர்வர்களையும் அழைத்து “நீங்கள் குருநாட்டுக்கு செல்லுங்கள். புரூரவஸின் அரண்மனையில் எப்போதும் இருந்துகொண்டிருங்கள். அங்கு என்ன நிகழ்கிறதென்பதை எனக்கு அறிவியுங்கள்” என்றான். ஒரு கருவண்டென யாழிசை மீட்டியபடி விஸ்வவசு எழுந்தான். உடன் சிறுபொன்வண்டுகளென கந்தர்வர்கள் சென்றனர். அவர்கள் சியாமைக்காக புரூரவஸ் அமைத்த சந்தனமரத்தாலான தூண்கள் கொண்ட அணிமண்டபத்தில் உத்தரங்களைத் துளையிட்டு உள்ளே புகுந்து அமைந்தனர். அங்கு இருந்தபடி நிகழ்வதனைத்தையும் நோக்கினர். சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் கேட்டு உணர்ந்தனர்.

சியாமை காதலில் ஏழு மைந்தரின் அன்னையென ஆகி கனிந்துவிட்டிருந்தாள். தன் மைந்தரினூடாக கணவனை ஏழு மடங்கு பெருக்கிக்கொண்டாள். அவன் கொண்ட அறத்தூய்மை ஜாதவேதஸில் வெளிப்பட்டது. அவன் உடலழகை கொண்டிருந்தான் ஆயுஸ். அவன் கூர்மொழியென ஒலித்தான் ஸ்ருதாயுஸ். சத்யாயுஸ் அவன் நடையை தான் கொண்டிருந்தான். ரயனும் விஜயனும் அவன் சிரிப்பின் அழியா இளமையை வெளிப்படுத்தினர். ஜயன் அவளுக்கு மட்டுமே அறிந்த அவன் நோக்கொன்றை எப்போதேனும் தன் இளவிழிகளில் மின்னச் செய்தான். ஒவ்வொன்றிலும் புதியதொரு புரூரவஸை கண்டடைந்தாள். அக்கண்டடைதலினூடாக தன் கணவனை ஒவ்வொரு நாளும் புதியவனாக மீண்டும் மீண்டும் அடைந்து கொண்டிருந்தாள்.

செவிலியின் கை உதறி ஓடிய ஜயனை துரத்திப்பிடித்து இரு குட்டிக்கைகளையும் பற்றி இழுத்துச்சென்று தானே வெந்நீர் தொட்டிக்குள் ஏற்றி அமரச்செய்து சிகைக்காய் பசை இட்டு குழல் அலம்பியபின் நெஞ்சோடு சேர்த்து மரவுரியால் தலைதுவட்டிக்கொண்டிருக்கும் ஊர்வசியை விஸ்வவசு பார்த்தான். அப்பால் முற்றத்தில் ஓசையெழக்கேட்டு அவனைத் தூக்கி இடையில் வைத்தபடி “என்ன அங்கே ஓசை?” என்று கூவிக்கொண்டு அவள் வெளியே சென்றாள். மைந்தனின் எடையால் மெல்ல தள்ளாடினாள். அங்கு பூசலிட்டு ஆடிக்கொண்டிருந்த ரயனையும் விஜயனையும் தாழ்ந்த மரக்கிளையொன்றை ஒடித்து தளிருடனும் மலருடனும் வீசியபடி துரத்தினாள்.

தேன்கூடொன்றைப் பிய்த்து மாறி மாறி வீசி விளையாடிக் கொண்டிருந்த இருவரும் துள்ளிக் குதித்து அவளுக்கு வாய் வலித்துக்காட்டிச் சிரித்தபடி ஓடி அகன்றனர். பொய்யாக அவர்களை வசைபாடியபடி மூச்சிரைக்க படியேறி வந்தாள். இடையில் இருந்த ஜயன் இரு விரல்களை வாயிலிட்டு அவள் தோளில் தலைசரித்து விழிகள் மேலெழுந்து செருக துயிலத் தொடங்கியிருந்தான். எச்சில்குழாய் அவள் ஆடைமேல் படிந்தது. மெல்ல அவனை கொண்டுசென்று சிற்றறைக்குள் வெண்ணிற விரிப்பிட்ட படுக்கையில் சாய்த்தாள்.

சேடி வந்து ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் ஆசிரியர் இல்லத்திலிருந்து வந்துகொண்டிருப்பதை சொன்னாள். “எப்போது? வந்துவிட்டார்களா?” என ஆடை திருத்தாமல் அவள் எழ “தாங்கள் முறைப்படி ஆடை அணியவில்லை, அரசி” என்றாள் சேடி. ‘விடு’ என கையை அசைத்தபடி அவள் உடல் குலுங்க விரைந்து நடந்துசென்று படிகளிறங்கி பெருங்கூடத்திற்குள் புகுந்தாள். அரண்மனை முற்றத்தில் குளம்படிகள் ஒலிக்க இரு சிறுபுரவிகளில் வந்து இறங்கிய ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் அவளை நோக்கி சிரித்தபடி ஓடிவந்து இருகைகளையும் பற்றிக்கொண்டனர்.

“இப்புரவிகளில் அங்கிருந்து நாங்களே வந்தோம்” என்று சொன்னான் ஸ்ருதாயுஸ். “நான் ஒருமுறை கூட நிலைபிறழவில்லை” என்றான் சத்யாயுஸ். இருவர் தலைகளையும் கையால் வருடி “ஆம் நான் அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் ஸ்ருதாயுஸ். “உங்கள் தந்தையும் ஒருபோதும் புரவியில் நிலை தடுமாறியதில்லை என்று அறிந்திருக்கிறேன்” என்றாள் அவள். “இன்னும் சிலநாட்களில் நான் மலைமேலிருந்து பாய்ந்திறங்குவேன்” என்றான் ஸ்ருதாயுஸ். அவன் பேசவிடாமல் மறித்து கைவீசி “எங்கள் ஆசிரியர் பலதேவர் குதிரையில் அமர்ந்து விரைந்தபடியே தரையில் கிடக்கும் குறுவாளை எடுக்கிறார்…” என்றான் சத்யாயுஸ். “நான் எடுப்பேன்… நான் அடுத்த மாதம் எடுப்பேன்” என்று மற்றவன் இடைமறித்தான்.

அரசவைக் களத்தில் இருந்து புரூரவஸ் முதல் மைந்தன் ஆயுஸுடன் பேசியபடி நடந்துவந்தான். தந்தையின் முகத்திலிருந்த எண்ணச்சுமையையும் கையசைவுகளையும் அவன் சொற்களைக் கேட்டபடி நடந்துவந்த மைந்தனின் விழிக்கூரையும் தொலைவிலிருந்தே நோக்கிநின்றாள். அருகே வந்த புரூரவஸ் “நாளை முதல் இவனுக்கு தென்மொழிகளில் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். உகந்த ஆசிரியர் ஒருவர் வந்திருக்கிறார்” என்றான். அவள் ஆயுஸைப் பார்த்து புன்னகைக்க அவன் இளையோர்களை நோக்கி “இவர்கள் எப்போது வந்தார்கள்?” என்றான். “புரவியில் நாங்களே வந்தோம்” என்றான் ஸ்ருதாயுஸ். “நிலைபிறழவே இல்லை… விரைந்து வந்தோம்” என்றான் சத்யாயுஸ்.

ஆயுஸ் அன்னையை நோக்கி புன்னகைத்தான். குழந்தை நகை அல்ல, முதியவனின் குழந்தை நகைப்பென தோன்றியது அவளுக்கு. இரு கை நீட்டி அவனை அள்ளி நெஞ்சோடணைக்க உளம் எழுந்தாலும் அது இனி முறையன்று என்று அறிந்தவளாக “முழுப்பொழுதும் அவையமர வேண்டுமா? இளமைந்தர் சற்று விளையாடுவதும் வேண்டாமா?” என்று அவனிடம் கேட்டாள். “முற்றிலும் கேட்காமல் எதையும் அறிய முடியாது, அன்னையே” என்றான் ஆயுஸ். “அறிய அறிய அதைவிட்டு அகலமுடியாது. அரசனின் அவை என்பது வாழ்க்கையின் மையம் நடிக்கப்படும் நாடகமேடை.”

மறுபக்கம் உள்ளறை வாயிலில் வந்து நின்ற முதுசெவிலி “மைந்தர் உணவருந்தும் பொழுது” என்று மெல்ல சொன்னாள். “நன்று, நானே விளம்புகிறேன்” என்றபின் “வருக இளவரசே, உணவருந்திவிட்டுச் செல்லலாம்” என முறைப்படி தன் முதல் மைந்தனை அழைத்தாள். இளையவர்கள் “நாங்கள் உணவருந்தவில்லை… இப்போது உணவருந்தவே வந்தோம்” என்று கூவினர். புரூரவஸ் தன் எண்ணங்களிலாழ்ந்தவனாக மெல்ல திரும்ப “எங்கு செல்கிறீர்கள்? மைந்தருடன் அமர்ந்து இன்று உணவருந்துங்கள்” என்றாள். “எனக்காக அங்கே குடித்தலைவர் காத்திருக்கிறார்” என்று புரூரவஸ் சொல்ல, இயல்பாக விழிதிருப்பி அவள் இரு மைந்தரையும் பார்த்தாள். ரயனும் விஜயனும் பாய்ந்து சென்று புரூரவஸின் இரு கைகளையும் பற்றிக்கொண்டனர். “வாருங்கள் தந்தையே, எங்களுடன் உணவருந்துங்கள்” என்று துள்ளினர். “சரி சரி, கூச்சலிடவேண்டாம். வருகிறேன்” என்றான் புரூரவஸ்.

இரு கைகளையும் பற்றி அவனை அவர்கள் அழைத்துச் சென்றனர். புன்னகையுடன் அன்னையைப் பார்த்த ஆயுஸ் “உங்கள் தலைமைந்தன் குறைகிறான் அல்லவா?” என்றான். “ஆம். ஆனால் அவன் வேதம் பயில்கிறான். இல்லறத்தாருடன் அமர்ந்துண்ண வேதக்கல்வியின் நெறி ஒப்புவதில்லை. இங்கு நாமனைவரும் கூடியிருக்கையில் நமக்கு மேலிருந்து நம்மை வாழ்த்தும் பீடத்தில் அவன் அமர்ந்திருக்கிறான். அது எனக்குப் போதும்” என்று அவள் சொன்னாள்.

ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் கைகளை பற்றிக்கொண்டு ஒருவரோடொருவர் ஊக்கத்துடனும் சொற்திணறலுடனும் கைவீச்சுகளுடன் ஏதோ பேசியபடி முன்னால் சென்றனர். உணவறைக்கூடத்தில் கால்குறுகிய நீள்பீடத்தில் அவர்களுக்காக இலைத்தாலங்கள் போடப்பட்டிருந்தன. கிழக்கு நோக்கி புரூரவஸ் அமர்ந்ததும் அவனுக்கு இருபுறமும் ரயனும் விஜயனும் அமர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் இடைமறித்து குரல் எழுப்பியும், மீறிச்சொல்லத் துடித்து மெல்ல தோள்பிடித்து தள்ளியும், கழுத்தில் நீலநரம்புகள் புடைக்க உடல் துடிக்க பேசிக்கொண்டு வந்த ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் உணவறை வாயிலிலேயே நின்று சொல்தொடர புரூரவஸ் “போதும் பேச்சு, வந்தமருங்கள்” என்று உரத்த குரலில் சொன்னான்.

அவர்கள் பாய்ந்து வந்தமர சியாமை “என்ன இது? முடி அள்ளித்திருத்துங்கள். முறைமை மறந்துவிட்டீர்களா?” என்றாள். ஆயுஸ் “அங்கு ஆசிரியர் இல்லத்தில் அனைத்துக்கும் முறை உண்டு. அதை மீறி தாங்களென்றிருக்கவே இங்கு வருகிறார்கள், அன்னையே” என்றான். சியாமை புன்னகைத்து “நீ கொடுக்குமிடம் அவர்களை வீணர்களாகிய இளவரசர்களாக ஆக்காமல் இருந்தால் போதும்” என்றாள். “அவர்கள் சந்திரகுலத்து இளவரசர்கள். ஒவ்வொருவருக்கும் தனிநாடும் குடியும் கொடிவழியும் அமையுமென்பது நிமித்திகர் கூற்று” என்றான் புரூரவஸ்.

முடியள்ளி தோல்நாரிட்டுக் கட்டியபடி ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் பீடங்களில் அமர்ந்து உடனே விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்கினர். ஆயுஸ் கண்களில் சிரிப்புடன் சியாமையைப் பார்த்து “இனி சில நாட்களுக்கு புரவிகளன்றி வேறேதும் அவர்கள் உள்ளத்தில் இருக்காது, அன்னையே” என்றான். புரூரவஸ் நகைத்து “ஆம், அதன் பின்னர் புரவிகள் முற்றிலுமாக சித்தத்திலிருந்து மறைந்து போகும். கால்களென்றே ஆகும். எண்ணுவதை இயற்றும். அப்போது மட்டுமே ஒருவன் புரவியேற்றம் கற்றுமுடித்தான் என்று பொருள்” என்றான்.

சேடியர் உணவுக்கலங்களுடன் வந்தனர். “இருவர் குறைகிறார்கள்” என்று இரு விரலைக்காட்டி ரயன் சொன்னான். விஜயன் “ஆம், இருவர்” என்றான். சியாமை திரும்பி சேடியிடம் “குழந்தையை எடுத்துக்கொண்டு வா” என்றாள். புரூரவஸ் “அவன் எதற்கு? துயின்றுகொண்டிருக்கும் நேரம்” என்றான். “இல்லை, அரிதாக அமையும் ஒரு நேரம். அது முழுமையடையட்டும்” என்றாள். “உனக்கு சித்தம் குழம்பிவிட்டது போலும்” என்று புரூரவஸ் சொன்னான். சியாமை புன்னகைத்தாள்.

செவிலி துயின்று கடைவாய் வழிந்த ஜயனை தோளில் தூக்கிக்கொண்டு வந்தாள். “நீயும் அமர்ந்துகொள்” என்றான் புரூரவஸ். அவனுக்கு எதிர்ப்பக்கம் முகம் நோக்கியபடி சியாமை அமர்ந்தாள். செவிலி ஜயனை அவள் மடியில் அமர்த்தினாள். உணவுக்கலங்கள் நிரந்ததும் “இன்னும் ஒருவர்” என்றான் ரயன். “அவன் இங்கில்லை. அவனுக்கு இனி பதினெட்டாண்டுகள் அன்னையும் தந்தையும் மூதாதையரும் தெய்வமும் ஆசிரியர் ஒருவரே. அனைத்தையும் அளித்தாலன்றி வேதம் ஒரு சொல்லையும் அளிப்பதில்லை” என்றான் புரூரவஸ்.

“நாங்கள் கற்பதும் வேதம்தான் என்றாரே?” என்றான் சத்யாயுஸ். “வேதங்கள் பல. நீ கற்கும் தனுர்வேதம் அதிலொன்று. அவை எல்லாம் வேதமெனும் கதிரவனின் ஒளிகொள்ளும் ஆடிகளும் சுனைநீர்ப்பரப்புகளும் மட்டுமே” என்று புரூரவஸ் சொன்னான். “அறுவர் நீங்கள். ஆறு கலைகளுக்கும் தலைவராக அமையப்போகிறவர்கள். புவியாள்வீர்கள், படைகொண்டு வெல்வீர்கள், அறம் நாட்டுவீர்கள். அவற்றினூடாக பெரும்புகழ் கொள்வீர்கள். அவையனைத்தும் பிழையற நிகழ வேண்டுமென்றால் அங்கே அடர்காட்டில் எவர் விழியும் தொடாத ஆற்றங்கரையொன்றில் எளிய குடிலில் அவன் வேதமொன்றே சித்தம் என்று தவம் இயற்றியாக வேண்டும்.”

புரூரவஸின் முகத்தில் எழுந்த உணர்வெழுச்சியைக் கண்டு சிறுவர்கள் முகம் கூர்த்து அவனை நோக்கினர். அத்தனை விழிகளிலும் இளமையின் நகைப்பு சற்றே மறைந்ததைக் கண்டு அவள் “போதும், இது அரசுசூழ்தலுக்கான மேடையல்ல. உணவு அருந்துவதற்கானது” என்றாள். தன்னருகே இடப்பட்ட இலைத்தாலமொன்றில் ஒரு கரண்டி அன்னத்தையும் நெய்யையும் பழங்களையும் தேன்கலந்த இனிப்பையும் அள்ளி வைத்தாள். சிறுகிண்ணத்தில் நுரைத்த மதுவை ஊற்றி அருகே வைத்தாள். ரயன் “அது அவனுக்கா?” என்று கை சுட்டி கேட்டான். அப்படி கேட்கலாகாதென்று புரூரவஸ் விழியசைத்து தடுப்பதற்குள் விஜயன் “அவன் அங்கு அதையெல்லாம் உண்ணலாகாதே?” என்றான். “ஆம், ஆகவேதான் இங்கு அவை பரிமாறப்படுகின்றன” என்றபின் சியாமை “உணவருந்துங்கள்” என்று கூற செவிலியர் இன்மதுவும் உணவும் அவர்களுக்கு பரிமாறினர். பேசிச் சிரித்தபடி நடுவே சிறுபூசலிட்டுக் கூச்சலிட்டபடி அவர்கள் உண்ணலாயினர்.

imagesவிஸ்வவசுவும் தோழர்களும் குருநகரிலிருந்து கிளம்பி அமராவதியை அடைந்து இந்திரனின் அரண்மனைக்குள் புகுந்து அவன் மஞ்சத்தறையில் சென்று சந்தித்தனர். நிகழ்ந்ததைக் கூறி “ஊர்வசி ஒருபோதும் மீளப்போவதில்லை, அரசே” என்றனர். விழிசுருக்கி எழுந்த இந்திரன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “அன்னையென கனிந்திருக்கிறாள். மூதன்னை என முழுமைகொள்ளும் பாதையிலிருக்கிறாள். அவ்வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் அவள் மீளமாட்டாள்” என்றான் விஸ்வவசு.

“என்னால் புரிந்துகொள்ளக் கூடவில்லை. இங்கு அவள் முழுமையிலிருந்தாள், மெய்மையிலாடினாள், முடிவின்மையில் திளைத்தாள். அங்கிருப்பதோ துளித்துச் சொட்டும் கணமென சிறுவாழ்வு. தேவர்கள் உண்டு எஞ்சிய மிச்சில். அசுரர்களின் கால்பொடி படிந்த குப்பை. அதிலெப்படி அவள் அமைய முடியும்?” என்றான் இந்திரன். விஸ்வவசு “அதை புரிந்துகொள்ளவே இத்தனை நாள் நானும் அங்கு இருந்தேன். இங்கிலாத பேருவகை ஒன்று அங்குள்ளது, அரசே. வாழும் அக்கணம் மீளாதென்று, பிறிதொருமுறை எதுவும் அமையாதென்று ஒவ்வொரு மானுடரும் உள்ளுணர்ந்திருக்கிறார்கள். எனவே அக்கணங்களில் பொங்கி முற்றிலும் நிறைகிறார்கள்” என்றான்.

புரியாமல் நோக்கி அமர்ந்திருந்த இந்திரனின் விழிகளை நோக்கி “அதைவிட இனிது சென்றவை நினைவில் மீளும் துயரம். மானுடர் ஒவ்வொருவருக்கும் சென்றகாலம் எனும் பெருஞ்செல்வம் கருவூலம் நிறைய உள்ளது. அரசே, அறியாத ஆயிரம் பண்கள் நிறைந்த ஒரு பேரியாழ் அது. இங்கு தேவர்களுக்கு அதில்லை” என்றான் உடன் சென்ற சந்திரஹாசன் என்னும் கந்தர்வன்.

பிரபாஹாசன் என்னும் பிறிதொரு கந்தர்வன் அருகில் வந்து “அதைவிடவும் இனிது எதிர்காலம் முற்றிலும் அறியவொண்ணாதது என்பது. ஒவ்வொரு படியாக கால் வைத்தேறி முடிவிலா விண்ணுக்குச் செல்வதுபோல. கண்ணுக்குத் தெரியாத மறுதரப்புடன் காய் நீக்கி பகடையாடுவதுபோல. மானுடர் கொள்ளும் இன்பங்களில் முதன்மையானது நாளை நாளை என அவர்கள் மீட்டும் பெருங்கனவு. ஒவ்வொரு நாளும் அவர்களின் வீட்டு முற்றங்கள் வரப்போகும் விருந்தினருக்காக பதுங்கிய முயலின் தோலென விதிர்த்து நிற்கின்றன. அவர்கள் இல்லக்கதவு புன்னகைக்கும் வாயென திறந்திருக்கிறது. அவர்களின் அடுமனைகளில் அனல்நீர் காத்து அன்னம் தவமிருக்கிறது” என்றான்.

சூரியஹாசன் என்னும் கந்தர்வன் “நேற்றுக்கும் இன்றுக்கும் நடுவே கணமும் அமையாத துலாமுள்ளென அவர்கள் நின்றாடும் பேரின்பத்தைக் கண்டு நானே சற்று பொறாமை கொண்டேன், அரசே” என்றான். ஜ்வாலாக்‌ஷன் என்னும் கந்தர்வன் “முதன்மையாக அறிதல் என்னும் பேரின்பம் அவர்களுக்குள்ளது. முற்றறிதலுக்குப் பின் அறிதல் என்னும் செயல் நிகழ்வதில்லை. இங்கு என்றும் இருக்கும் பெருமலைகளைப்போல் மெய்மை நிறைந்துள்ளது. அதில் திகழ்வதனாலேயே இங்கு எவரும் அதை அறிவதில்லை. அங்கோ ஒரு சிறுகூழாங்கல்லென கண்முன் வந்து நிற்கிறது மெய்மையின் துளி. சிற்றெறும்பென அதைக் கண்டு திகைத்து அணுகிக்கடந்து ஏறிக்கொள்ளும் உவகை அவர்களை ஆட்டிப்படைக்கிறது” என்றான்.

“ஆம் அரசே, அறிதலுக்கு நிகரான விடுதலை ஒன்றில்லை. அறியும்பொருட்டு அமர்வதே தவம். அங்கு எவ்வகையிலேனும் ஒரு தவத்தில் அமையாத ஒருவனை நான் கண்டதில்லை. உழுபவனும், வேல்தாங்கி எழுபவனும், துலாபற்றுபவனும், கன்று பெருக்கி காட்டில் வாழ்பவனும், மைந்தரை மார்போடணைத்து உணவூட்டும் அன்னையும், தவத்தில் உளம் கனியும் கணங்களை அறிந்திருக்கிறார்கள். மானுடராகச் சென்ற எவரும் மீள்வதில்லை” என்றான் சுவர்ணஜிஹ்வன் எனும் கந்தர்வன்.

சுஃப்ரஹாசன் என்னும் கந்தர்வன் சொன்னான் “அரசே, அறிந்த அனைத்தையும் சுருக்கி ஓர் அழகுப்படிமமென்று ஆக்க அவர்களால் முடிகிறது. விண்நிறைத்துப் பறந்திருக்கும் பறவைக்குலம் அனைத்தையும் ஒற்றை இறகென ஆக்குகிறார்கள். புவி மூடியிருக்கும் பசுமைக்கடலை ஒரு தளிரில் உணர்கிறார்கள். ஒற்றைச் சொல்லில் வேதமெழுகிறது. ஒரு சொல்லணியில் காவியம் விரிகிறது. கற்பனையை மூன்றாம் விழியெனச் சூடியவன் அழிவற்ற பேரின்பத்தின் அடியில் அமர்ந்த தேவன். மானுட உருக்கொண்டு சென்ற எவனும் மீள வழியே இல்லை.”

“அரசே, படிமங்களென குறுக்கி ஒளிமணி என்றாக்கி தங்கள் கருவூலங்களில் சேர்த்த பெருஞ்செல்வத்தின் மேல் அமர்ந்திருக்கிறார்கள். தங்கள் உளச்சிற்றில்களில் அவர்கள் ஒளிச்சுடரென வைத்திருப்பது அவற்றையே. அவ்வொளியில் அனைத்தையும் கண்டு பெருக்கிக்கொண்டு அவர்கள் அமைத்துள்ள உலகு நாம் அறியாதது” என்றான் ரத்னஹாசன் என்னும் கந்தர்வன். “ஒரு மலரால், தளிரால் அவர்கள் தங்கள் மைந்தருடலை அறிகிறார்கள். தழல்நெளிவால், நீர்வளைவால் மலரையும் தளிரையும் அறிகிறார்கள். சினத்தால், நகைப்பால் எரியையும் நீரையும் அறிகிறார்கள். அவர்கள் முடிவிலியில் திளைக்கும் முடிவிலி என உள்ளம் கொண்டமைந்தவர்கள்.”

அவர்களின் விழிகொண்ட திளைப்பிலிருந்தும் சொல்கொண்ட விசையிலிருந்துமே அவர்கள் உணர்ந்தது மெய்மையென்று இந்திரன் அறிந்துகொண்டான். “என்ன செய்வதென்று அறியேன், அக்கனி பழுத்து உதிரக் காத்திருப்பது ஒன்றே வழியென்று என்னிடம் சொன்னார் நாரதர்” என்றான். “கனி உதிரலாகும் அரசே, அவளோ அங்கு ஆணிவேர் அல்லவா?” என்றான் விஸ்வவசு. சினந்து திரும்பி “எனில் அந்த மரம் கடைபுழங்கி நிலம்பதிக! வேருடன் பிடுங்கி இங்கு கொண்டு வாருங்கள்” என்றான் இந்திரன். அவர்கள் விழிகளில் துயருடன் நிற்க “என்ன செய்வீர்கள் என்று அறியேன். அக்கனவிலிருந்து உலுக்கி எழுப்புங்கள் அவளை. விழித்து விலகினால், விழிப்புற்றால் அவள் அறிவாள் என்னவென்றும் ஏதென்றும். அவள் இங்கு மீள அது ஒன்றே வழி. செல்க!” என்றான்.

ஒவ்வொருவராக தயங்கி சொல்லெடுக்க முனைந்து பின் அதை விலக்கி விழிகளால் ஒருவருடன் ஒருவர் உரையாடி வெளியே சென்றனர். கந்தர்வர்கள் விஸ்வவசுவைச் சூழ்ந்து “என்ன சொல்கிறார்? எண்ணிச் சொல்கிறாரா? அறிந்து அவள் மீளவேண்டுமென்பதல்லவா இசை முனிவரின் ஆணை? கனியாத காயை பால் சொட்ட முறித்து வீசுவதால் என்ன பயன்? இங்கு வந்து எண்ணி எண்ணி துயருற்றிருப்பாளென்றால் அவள் அங்கு சென்றதே வீணென்றாகுமல்லவா?” என்றார்கள். “நாம் அதை எண்ணும் கடமை கொண்டவர்களல்ல. ஆணைகளை நிறைவேற்றுபவர். அதை செய்வோம்” என்றபின் விஸ்வவசு மீண்டும் புரூரவஸின் அரண்மனைக்கே மீண்டான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 13

13. எண்கற்களம்

“தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே கொள்க!” என்றான் முண்டன். உச்சிப்பொழுது எட்டியதும் அவர்கள் கோமதி வளைவுதிரும்பும் முனை ஒன்றை அடைந்து அங்கிருந்த அன்னசாலையில் உணவுண்டபின் அருகிருந்த ஆலமரத்தடியில் படுத்திருந்தனர். மரத்திற்குமேல் பறவைகள் ஓசையிட்டுக்கொண்டிருந்தன. அவ்வப்போது ஓர் எண்ணத்துளி என இலையொன்று சுழன்றிறங்கியது.

“முற்றிலும் அறியப்படாமலிருக்கவும் மானுடரால் இயல்வதில்லை. சொல்லியும் உணர்த்தியும் அறிவிக்கிறார்கள். அவ்வாறு அறியப்பட்ட ஒன்று நிலைக்கவும் நீடிக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. சொன்னதை வரைந்ததை உடனே கலைத்து நீ அறிந்ததல்ல நான் என்கிறார்கள். தன்னை முன்வைத்து பிறருடன் பகடையாடுவதே மானுடர் தொழில். உடனுறைவோரை அறிய எண்ணுபவன் நீரில் அலையெண்ணுபவன்.” வேர்க்குவை ஒன்றுக்குள் உடலை ஒடுக்கிப் படுத்து கால்மேல் கால் வைத்து ஆட்டியபடி முண்டன் சொன்னான்.

“அதைவிட தற்செயலாக சந்தித்து உடனே பிரியும் வழிப்போக்கனை அறியமுயல்வது எளிது. குறைந்தது, அவன் அமைத்துச் செல்லும் பொய்க்காட்சியை அழித்தெழுத அவனுக்கு நாம் வாய்ப்பளிப்பதில்லை” என்று அவன் தொடர்ந்தான். “ஆகவே அவ்விரவில் அரசி உங்களிடம் சொன்னதென்ன, நீங்கள் அறிந்ததென்ன, இருவரும் சேர்ந்து சமைத்ததென்ன, அவ்விடம் விட்டு நீங்கிய பின்னர் எஞ்சியதென்ன என்பது எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கதல்ல.” பீமன் சலிப்புடன் “அவ்வாறென்றால் எதுதான் பொருட்படுத்தத் தக்கது?” என்றான். “அக்கணம், அதை சரிவர கையாள்கிறோமா இல்லையா என்பது மட்டும்” என்றான் முண்டன். “ஏனென்றால் மானுடர் வாழ்வது நிகழ்காலத்தில் மட்டுமே.”

“எதிர்காலத்தை அறிய முடியாதென்கிறோம். பாண்டவரே, மானுடரால் இறந்தகாலத்தை மட்டும் அறிந்துவிடமுடியுமா என்ன?” என்று முண்டன் சொன்னான். “இறந்தகாலம் என மானுடர் சொல்வதெல்லாம் அவர்கள் நினைவுகூர்வதை மட்டும்தானே? நினைவுகூரச் செய்வது எது? விழைவும் ஏக்கமும் ஆணவமும் தாழ்வுணர்வும் என அவனாகி அவளாகி நின்றிருக்கும் உணர்வுநிலை மட்டும்தானே? இறந்தகாலமென்பது புனையப்படுவதே. பகற்கனவுகளில் ஒவ்வொருவரும் புனைவதை பாடகரும் நூலோரும் சேர்ந்து பின்னி ஒன்றாக்குகிறார்கள். நீங்களிருவரும் சேர்ந்து ஒன்றை முடைந்து மகிழ்ந்தீர்கள். அவ்வாடல் முடிந்தது, அதன் உவகை மட்டுமே அதன் கொள்பொருள்.”

“மணத்தை தேடிச்செல்பவர் நீங்கள். ஒன்று உணர்க, காட்சிகளை நினைவுகூரலாம். ஒலிகளை மேலும் குறைவாக நினைவுகூரலாம். தொடுகையை இன்னும் மெலிதாக. சுவையை அதனினும் சிறிதாக. மாமல்லரே, எவரேனும் மணத்தை நினைவுகூர முடியுமா?” என்றான் முண்டன். “மணத்தை அடையாளம் காணமட்டுமே முடியும். விழியும் நாவும் இணைந்து அளிக்கும் அகப்பதிவுக்கேற்ப மணம் உருவாவதை அறிந்திருக்கிறீர்களா? முல்லைமணம் கொண்ட தாமரையை உங்கள் கையில் அளித்தால் என்ன மணத்தை முகர்வீர்கள் என்று தெரியுமா?”

“அறிக, ஐம்புலன்களில் புறத்திற்கு மிகஅருகே அகம் பூசி நின்றிருக்கிறது விழி. அகத்திற்கு மிக அருகே புறம் நோக்கி திகைத்து அமைந்துள்ளது மூக்கு. மணம் என்பது மணமெனும் தன்னுணர்வு எழுந்து பருப்பொருளைத் தொடுவதன்றி வேறல்ல” என அவன் தொடர்ந்தான். “நீங்கள் தேடிச்செல்லும் மலர்மீது உங்கள் அகம் அந்த மணத்தைப் பூசி அதை தான் அறிந்துகொள்ளவேண்டும். ஆடிக்குள் புகுவதற்கு உகந்த வழி விலகுவதே. அகம்புக உகந்த வழி அணுகுவதே.” பீமன் நீள்மூச்சுடன் “ஆம். ஆனால் நான் தேடிச்சென்றாகவேண்டும். அதை அறிகையில் நான் என்னை உணர்வேன்” என்றான்.

“தான் என்று உணர்வோர் அறிவதெல்லாம் தான் நிகழும் தளங்களை மட்டுமே” என்றான் முண்டன். “ஆட்டக்களமும்  சூழ்கையும் அன்றி காய்களுக்குப் பொருளென்ன இருக்கக்கூடும்? இரண்டாமவரே, ஐவரையும் அறியாமல், ஐவருக்கு நடுவே அமைந்தவளை அறியலாகுமா? அவளை அறியாமல் அவள்நோக்கி உளம் மலர்ந்த உங்களை அறியக்கூடுமா?”

முண்டன் எழுந்தமர்ந்து சுற்றிலும் நோக்கி ஒரு சிறுகல்லை எடுத்து வைத்தான். “இது பெண்” என்றபின் அதைச் சூழ்ந்து இரு சிறுகற்களை வைத்தான். “இது தந்தை. அரசுசூழ்பவன், நூலாய்பவன், முதியவன். இது உடன்பிறந்தான், பெருவீரன், களித்தோழன், இணையுள்ளம் கொண்டவன்.” அவன் அந்த இரு கற்களையும் எடுத்து கையிலிட்டு குலுக்கினான். “இரண்டு ஐந்தாகுக! ஆம், அவ்வாறே ஆகுக!” அவன் கைகளை விரித்தபோது அங்கே ஐந்து கற்களிருந்தன. “ஆ, ஐந்து!” என்றான். பீமன் கைகளைக் கட்டியபடி சிறிய கண்கள் கூர்கொள்ள நோக்கி அமர்ந்திருந்தான்.

முண்டன் முதல்கல்லை வைத்து “இது தந்தையெனும் கல்லில் உடைந்த பெருந்துண்டா?” என்றான். பிறிதொன்றை வைத்து “இது உடன்பிறந்தானிலிருந்து எழுந்த பெருந்துண்டுபோலும். இரு சிறுசில்லுகள் இவை. முதற்சில்லில் உடைந்தது இறுதிக்கல். இரண்டாவதில் உடைந்தது முந்தைய சிறுகல்” என்றான். ஒரு பெரிய கல்லை எடுத்துக்காட்டி “அவ்வாறென்றால் இது எங்கிருந்து வந்தது? மூடிய கைக்குள் எங்கிருந்து முளைத்தது இது?” என்றான். அவன் கைகளை புரட்டியும் திருப்பியும் காட்டினான். “காற்றில் திரண்டு கைக்குள் எழுந்துள்ளது. சூழ்ந்துள்ள காற்றில் அருவமாக இருப்பது போலும். விழைவு முதிர்கையில் திரண்டு உருக்கொள்கிறது போலும்… எத்தனை பெரிது…! ஆம், பெரிதாக மட்டுமே இருக்கமுடியும். கரந்திருப்பவை அறியாது வளரும் வல்லமை கொண்டவை அல்லவா?”

அவன் முதற்கல்லை சுட்டுவிரலால் முன்னோக்கி நகர்த்தினான். “அறிவுளோனை பெண் விழைகிறாள். அவனுடன் இருத்தலால் தானும் அறிவுடையள் ஆவதை அறிகிறாள். விழித்திருக்கையில், மேலே சூரியன் கதிர்விரிக்கையில், எளிய விழிகளால் சூழப்பட்டிருக்கையில் அதையே அணியென சூடிக்கொள்கிறாள். ஆனால் அவள் கொண்ட படைக்கலங்கள் எவையும் பயன்தராக் களம் அது. கூர்கொண்டவை அனைத்தும் குருதிசூட விழைகின்றன. வலிமை கொண்டவை வெற்றியை வேண்டித் தவிக்கின்றன. தனிமையில் சலிக்கிறாள். எங்கு தொடங்குகிறது சலிப்பு? எங்கு எழுகிறது விருப்பு? சலிப்பென்பதே அடித்தளம். எழுச்சிகளெல்லாம் விழுந்தமைந்தாகவேண்டும் அதில்.”

இயல்பாக அந்தக் கல்லை பின்னுக்கு நகர்த்தியபடி “சலிப்பே தெய்வங்கள் விரும்பும் உணர்வு. பாண்டவரே, நோக்குக! தேவர்களும் தெய்வங்களும் சலிப்பில் உறைந்து அமைந்திருக்கின்றனர். முடிவிலியைப்போல் சலிப்பூட்டுவது பிறிதேது?” என்றான் முண்டன். “அதை வெல்லவே ஆடல். இதோ!” என அவன் அந்த மூன்றாம் கல்லை முன்னகர்த்தினான். “ஆடல் இனிது. இடர்மிக்க ஆடல் மேலும் இனிது. பேரிடரோ பேரின்பமே ஆகும். கூருடன் ஆடல். நஞ்சுடன் ஆடல். எரியுடன் ஆடல். பெண்வலனை பெண்விழைகிறாள். அவனை முற்றிலும் வெல்ல கனவுகாண்கிறாள். முயன்று முயன்று தோற்கிறாள். வெல்லப்பட்ட பெண்வலன் வெறும் சருகு. வெல்லப்படாதவனோ புற்றுறை நாகம்.”

அக்கல்லை முன்னும் பின்னும் நகர்த்தி விரல்கள் ஆட சொற்கள் அவனையறியாமல் எழுந்து இலைநாவுகளிலிருந்து ஒலித்து அப்பகுதியைச் சூழ்வதுபோலிருந்தன. “வென்றாடல், கொன்றாடல், நின்று தருக்கல், ஐயுற்றுச் சரிதல்… எத்தனை தருணங்கள்! தருணங்களை மானுடர் விரும்புகிறார்கள். வெற்றிருப்பு என அல்லாதிருக்கும் கணங்கள் அல்லவா அவை?” மூன்றாம் கல்லை பின்னிழுத்து நான்காம் கல்லை முன் செலுத்தினான். “மின்னை வெல்லாதபோது வெல்கிறார்கள் ஒரு செம்மணியை. உறைந்த ஒளி, கைக்குள் அடங்கும் எரி. பொன்னில் பதிந்து அணியென்றாகி அழகு கூட்டி அமையும் சிறுகல். ஆனால் அவளறிவாள், அது மின்னல்ல என. மின்னிச் செல்லும் தொலைவு அருமணிக்குள் சுழன்று துளியாகியிருக்கிறதென்றாலும் மின்னறியும் வெளியின் முடிவிலி வேறென்று.”

ஐந்தாம் கல்லை நீக்கி அருகே கொண்டுசென்று அவன் சொன்னான் “நிகரிகள் எளியவை. அவை நாம் விரும்பும்படி நடிப்பவை. நமக்குரியவை என்பதனாலேயே அன்புக்குரியவை. அறிக, வெல்லப்படாத காட்டுவிலங்கை வேட்டையாடுகிறார்கள். காலடியில் அமைந்த வீட்டுவிலங்கை வருடி மகிழ்கிறார்கள்.” இரு சிறுகற்களையும் இரு பக்கமும் நிறுத்தியபடி அவன் நிமிர்ந்து புன்னகை செய்தான். “இணையர். அரியணையின் காலென அமைந்த சிம்மங்கள். செம்மணிவிழிகள். வெண்கல் பற்கள். குருதியுகிர்கள். அவையும் சிம்மங்களே!” அவன் விரல்கள் சுழல எல்லையில் இரு பெரிய கற்களும் அண்மையில் இரு சிறிய கற்களும் அமைய மையமென முதல்கல் நின்று ஒரு வட்டமாகி சுழலத் தொடங்கியது.

“ஆனால் உள்ளமறியாதா என்ன, அருமணி எத்தனை எரிந்தாலும் ஒரு பஞ்சையும் பற்றவைக்காதென்று?” என்றான் முண்டன். “வெல்லப்படாதவை இரண்டு. எட்டப்படாதது ஒன்று. எட்டியும் அடங்காத உருக்கொண்ட பிறிதொன்று.” பெரிய கல்லை அவன் முன்னால் நகர்த்தினான். “வெறும்பாறை. மலைப்பாறையை நோக்குந்தோறும் மலைக்கிறது மானுட உள்ளம். அதன் வடிவின்மையும் அமைதியும் நம்முள் உறையும் எதையோ கொந்தளிக்கச் செய்கின்றன. உடைத்தும் செதுக்கியும் அதை வடிவங்களாக்க வெம்புகிறோம். அதை முரசுத்தோல் என அறைந்து பிளிறச்செய்ய முயல்கிறோம். பாறையை அணுகுபவர்கள் அனைவரும் கைகளால் அதை அறைகிறார்கள். உள்ளத்தால் அதன்மேல் மோதுகிறார்கள்.”

“பாறை நம் உலகுக்கு அப்பால் உள்ளது” என்று முண்டன் தொடர்ந்தான். “அதன் மேல் எப்போதும் மோதிக்கொண்டே இருக்கிறாள்” என மையத்தை அதை நோக்கி செலுத்தினான். மையக்கல் பெரிய பாறைக்கல்லை சுற்றிவரத்தொடங்கியது. “உள்நுழையமுடியாத மண்டபமா கரும்பாறை? மழையோ வெயிலோ மணலோ சருகோ அதன்மேல் நிலைப்பதில்லை. எதையும் சூடாது எதுவுமென ஆகாது இங்கு நின்றிருக்கும் பெரும்பொருளின்மை அது.” அவன் அதை மேலும் சுழற்றிக்கொண்டே இருந்தான். “ஆற்றல் என உணரப்படுபவை பல. அறிவும் திறனும் விரிவும் கூரும். இளமையும் எழிலும் விரைவும் துள்ளலும். அவையனைத்தும் பிறிதொரு அலகால் மதிப்பிடப்படுபவை மட்டுமே. மாமல்லரே, வெறும் ஆற்றல் என்பது உடலே. சொல்மாயங்களால் உளமயக்குகளால் கடக்கப்பட ஒண்ணாதது. ஐம்புலன்களும் அறிவதனால் அறிவாலோ உணர்வாலோ கனவாலோ மாற்றொன்று கருத முடியாதது.”

“ஆற்றலை எதிர்கொள்ளும் பெண் அஞ்சுகிறாள். ஏனென்றால் ஒருபோதும் தன் உடலோ அறிவோ உள்ளமோ உரையாட முடியாத ஊமை அது என எண்ணுகிறாள். ஆகவே தவிர்க்க முயல்கிறாள். தவிர்த்தால் மறைவதல்ல அது என்று உள்ளாழம் அறிகிறது. எனவே எப்போதும் ஓரவிழியால் நோக்கிக்கொண்டும் இருக்கிறாள். அதைவிட்டு விலகியே அத்தனை திசைகளுக்கும் செல்கிறாள். அனைத்திலும் முட்டிமுட்டி அங்குதான் திரும்பிவருகிறாள். பருப்பொருளில் எழும் ஆற்றலே பிறிதில்லாதது என்று இறுதியில் உணர்கிறாள். அதன் முன் அடிபணிவதனூடாக வெல்லமுடியுமா என முயல்கிறாள்” என்றான் முண்டன்.

அந்தப் பாறையை அசையாது நிறுத்திவிட்டு தன் கைகளை எடுத்தான். மையக்கல் சுழலத் தொடங்கியது. “உங்கள் கையை அந்தப் பாறைக்கல் மேல் வையுங்கள், பெருந்தோளரே” என மிகத்தாழ்ந்த குரலில் சொன்னான். பீமன் தயங்க “வையுங்கள்” என்றான். “வையுங்கள்” என்று அவன் காதுக்குள் மட்டும் ஒலித்தான். பீமன் அதை மெல்ல தொட்டான். மையக்கல் சுவரில் முட்டி கீழே விழுந்த வண்டென ரீங்கரித்தபடி சுழன்றுகொண்டே இருந்தது. “நீங்கள் விழைவதை கேளுங்கள்” என்றான் முண்டன்.

பீமன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “கேளுங்கள்” என்றான். “வாயால் அல்ல. உள்ளத்தால், எண்ணத்தால்.” பீமன் கண்களை மூடினான். அவன் கை அதிர்ந்தது. உடல் காய்ச்சலென நடுங்கியது. அவன் பிறிதொருவனாக ஆனதுபோல உடலின் நிமிர்வும் வளைவும் மாறின. அவன் மெல்ல முனகினான். இமைகள் தட்டாரப்பூச்சியின் இறகுகள் போல அதிர்ந்தன.

பின் அவன் விழித்தபோது அவன் முன் கற்கள் இருக்கவில்லை. கைகளை மார்பில் கட்டியபடி முண்டன் நோக்கி அமர்ந்திருந்தான். “என்ன நடந்தது?” என்றான் பீமன். “நாம் செல்லவேண்டிய திசை தெளிவாகியுள்ளது. கிளம்புவோம்” என்றபடி முண்டன் தன் மூட்டையையும் கோலையும் எடுத்துக்கொண்டான்.

imagesமூன்றுநாட்கள் மானுடச்சுவடே இல்லாத அடர்காட்டில் பன்றித்தடம் வழியாக நடந்து அவர்கள் சிறுசுனையைச் சுற்றிய சோலையை வந்தடைந்தனர். தொலைவில் புதர்வெளிக்கு நடுவே அடர்ந்த மரங்களின் பசுங்குவை ஒன்று தெரிவதைக்கண்டு பீமன் நின்று நோக்கினான். “அங்கு ஒரு சிறு சுனையுள்ளது. பிரீதம் என அது அழைக்கப்படுகிறது. அதைச் சூழ்ந்துள்ள இச்சுனைக்கு சம்மோகனம் என்று பெயர்” என்று முண்டன் சொன்னான். “நீங்கள் கனவில் கண்ட சோலை இதுதானா என்று பாருங்கள், பாண்டவரே!”

திகைப்புடன் “இவ்வளவு அருகிலா?” என்றான் பீமன். “அரியவை அருகிலிருக்காது என்பது ஒரு நம்பிக்கை. நாம் வாழ்வது எளிமையில் என்ற எண்ணத்திலிருந்து எழுவது அது” என்றான் முண்டன். “வருக!” என முன்னால் சென்றான். புதர்கள் நடுவே பாதைபோல விலங்குகள் சென்ற வகிடு இருந்தது. அணுகுந்தோறும் பீமன் பரபரப்படைந்தான். “இதுதான்… இங்குதான்!” என்றான். “நோக்குக!” என்றான் முண்டன். மேலும் அணுகியபோது சோலைக்குள் உயரம் குறைவான ஒரு கற்கோயில் இருப்பது தெரிந்தது. “இதே சிற்றாலயம்தான்… உள்ளே கரிய தேவி சிலை ஒன்று. முகப்பில் எண்ணைக் கசடுபடிந்த கல்விளக்கு” என்று பீமன் சொன்னான்.

பதற்றமான காலடிகளுடன் நடந்து முண்டனுக்கு முன்னதாகவே பீமன் சோலையைச் சென்றடைந்தான். இலைஎடையால் வளைந்த கிளைகள்கொண்ட உயரமற்ற சோலைமரங்கள் கிளைகள் பின்னிச் செறிந்த சோலைக்குள் பரவியிருந்த சருகுமெத்தைமேல் சிற்றுயிர்கள் சலசலத்தோடின. உதிர்ந்த மலர்கள் பலவண்ணக் கம்பளம்போல பரவியிருக்க அவற்றின் மட்கும் மணம் கிளைகளில் குலைகளாகவும் கொத்துகளாகவும் அடர்ந்திருந்த மலர்களின் மணத்துடன் கலந்து மூக்கை நிறைத்தது. நெஞ்சில் நிறைந்த சொற்களிலும் அந்த மணம் பரவிவிட்டதென்று தோன்றியது. “இதே இடம்தான்” என்றான் பீமன்.

மரங்கள் சுற்றி வளைத்திருந்த நீள்வட்டச் சிறுசுனை நீர்நிறைந்து குளிர்ந்த சிற்றலைகள் கரைதொட்டு நெளிய குழந்தையின் விழிபோல  தெளிந்து கிடந்தது. அதன் கரையோரச் சேற்றில் மான்களும் செந்நாய்களும் எருதுகளும் புலியும் சென்ற காலடித்தடங்கள் பதிந்திருந்தன. மென்நாணல்காற்றில் சாமரம் சிலிர்த்துச் சூழ்ந்த கரைகளில் வகிடென வழிந்த ஊற்றுநீரோடைகள் மெல்லிய வழிவோசையுடன் நீரொளி நலுங்காது இணைந்துகொண்டிருந்தன.

எங்கு எதை நோக்குவதென்றறியாமல் அவன் கண்கள் பதைத்து சுற்றிவந்தன. நெடுங்காலம் முன்பு விட்டுச்சென்றவற்றை தொட்டுத்தொட்டு அறிந்து இது இது இதுவே என துள்ளுவதுபோல பரபரப்பு கொண்டது உள்ளம். பின் அவன் விரைந்து அச்சிற்றாலயத்தின் முகப்புக்குச் சென்று குனிந்து நோக்கினான். உள்ளே இடக்கையில் மலரும் வலக்கையில் மின்படையும் கொண்டு அமர்ந்திருந்த தேவியின் கரியமுகத்தில் வாயிலினூடாக வந்த ஒளி மெல்லிய ஒளிர்நீர்மை என வழிந்திருந்தது. அவளுக்கு அணிவிக்கப்பட்ட மலர்மாலை சருகாகி நார்தெரிய முலைமேல் கிடந்தது. காலடியில் பூசனைப்பொருட்கள் வைக்கப்பட்ட தொன்னைகளும் தாலங்களும் உலர்ந்து காற்றில் சிதறியிருந்தன.

“இவளேதான்… நான் அன்று கண்டது இவளையே!” என்று பீமன் திரும்பி காற்று இலையுலைக்கும் ஒலியில் முண்டனிடம் சொன்னான். முண்டன் புன்னகையுடன் கைகளைக் கட்டியபடி அங்கேயே நின்றான். பீமன் திரும்பி மரங்களை நோக்கினான். “அதே மரங்கள்… அதே மலர்க்கொத்துகள். ஐயமே இல்லை. தென்மேற்கு மூலையில் உள்ளது அந்த மலர்மரம்.” அவன் ஆலயத்தை சுற்றிக்கொண்டு அங்கே சென்றான். அவன் காலடியோசை கேட்டு ஒரு நாகம் புதருக்குள் இருந்து தலைதூக்கியது. எழுந்த அதன் தலைக்குப் பின்னால் உடல் வளைந்தது. அவன் அதை பொருட்படுத்தாமல் நடந்தான். தலையைப் பின்னிழுத்து அது வளைந்து ஒழுகியோடி புதருக்குள் இருந்த வளைக்குள் புகுந்தது.

தென்மேற்கு மூலையில் அந்த மரம் நின்றது. பீமன் “இதோ நின்றிருக்கிறது” என்று கூவினான். அல்லிபோல வெண்ணிற இதழ்கள் கொண்ட மலர்கள் கிளைதோறும் விரிந்து கிளைதொய்ந்து நின்றிருந்தது அந்த மரம். “இதுதான்… இதே மணம்தான்” என்றான் பீமன். “நோக்குக, இதன் கீழே ஒரு மலர்கூட உதிர்ந்திருக்கவில்லை!” முண்டன் வந்து அப்பால் நின்று “இதுவென்றால் நன்று” என்றான். பீமன் பாய்ந்து அதில் தாழ்ந்திருந்த ஒரு கிளையைப் பற்றி இழுத்து ஒரு மலரை பறித்தான். அதன் சிவந்த நெட்டுமுனையிலிருந்து நாய்முலைக்காம்பு போல பாலூறியது. பீமன் அதை மெல்ல வருடி “அழுத்தமான இதழ்கள் கொண்டது. ஆகவேதான் வாடாமலிருக்கிறது. புல்லிசெறிந்து பூம்பொடிநிறைந்துள்ளது. நெடுந்தொலைவு செல்லும் மணம் அவ்வாறு வருவதே” என்றான்.

அதை முகர்ந்து விழிசொக்கி முகம் மலர்ந்து மீண்டு “அரிய மணம்… ஒவ்வொரு கணமும் ஒருமலர் என மாயம் காட்டும் ஆடல்” என்றான். “பாரிஜாதம் அல்லது செண்பகம்.” மீண்டும் முகர்ந்தபடி முண்டனிடம் வந்து “இந்த மலர்தான். அன்னை காலடியில் வைத்து வணங்கி எடுத்துச்செல்வோம்” என்றான். அவனுடைய பரபரப்பை முண்டன் பகிர்ந்துகொள்ளவில்லை. “அவ்வாறே செய்க!” என்றான். “எளிதிலமையாது என்றே எண்ணினேன்” என்றான் பீமன். “ஏதோ காவியமலர் என்று உளம் சொன்னது. இப்படி எளிதில் கையகப்படுமென எண்ணவே இல்லை.”

அவன் அதை கொண்டுசென்று ஆலயத்தின் படியில் வைத்தான். கைகூப்பி வணங்கியபடி கண்மூடியவன் திடுக்கிட்டு விழிதிறந்தான். திரும்பி முண்டனை நோக்கியபின் கோயிலுக்குள் உற்றுநோக்கி நின்றான். “என்ன?” என்றான் முண்டன். “தேவி என்னை நோக்குவதுபோல் ஓர் உணர்வு… உளமயக்கல்ல, அங்கே உண்மையில் எவரோ அமர்ந்திருப்பதுபோல” என்றான் பீமன். “அவள் ஊர்வசி” என்றான் முண்டன். “இது உங்கள் குலமூதாதை புரூரவஸ் அவளுக்காகக் கட்டிய சிற்றாலயம்.” அவன் திகைப்புடன் நோக்கி “இதுவா?” என்றான். “ஊர்வசிக்கு ஆலயமா? நான் கேள்விப்பட்டதே இல்லை.”

“இங்குமட்டுமே உள்ளது. ஹஸ்தியின் காலம்வரைகூட இங்கு ஆண்டுக்கொருமுறை குருகுலத்தோர் வந்து வணங்கிச்செல்லும் முறையிருந்தது. பின்னர் முற்றிலும் மறந்துவிட்டனர். அருகிருக்கும் சிற்றூரிலிருந்து முதல் மகவு பெண்ணாகப் பிறந்தால் தந்தையும் துணையரும் மட்டும் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு” என்றான் முண்டன். பீமன் குழப்பத்துடன் குனிந்து அந்த மலரை எடுத்தான். சிறு ஐயம் ஏற்பட நெற்றி சுருக்கியபடி அதை முகர்ந்தான். திகைப்புடன் திரும்பி முண்டனை நோக்கிவிட்டு மீண்டும் முகர்ந்தான். “இல்லை, இது அந்த மலர் அல்ல” என்றான். “இந்த மணம் வேறு. இது வெறும் பாரிஜாதம்… அந்த பித்தெழச்செய்யும் கூர்மை இதில் இல்லை.” மீண்டும் முகர்ந்து “ஆனால்…” என்றான்.

“இது அதே மரம்தான்” என்றான் முண்டன். “ஆனால் நீங்கள் முகர்ந்த மலர் இந்த மரத்திலிருந்து எழுந்தது அல்ல.” பீமன் வினாவுடன் நோக்க “இளவரசே, இந்த மரத்தின் ஒவ்வொரு மலரும் தனிமணம் கொண்டது. நீங்கள் தேடிய மலர் இதுபோன்றதே, இது அல்ல” என்றான். பீமன் சோர்வுடன் அந்தப் படிகளில் அமர்ந்தான். “துயருற வேண்டியதில்லை. இது மலரிலிருந்து முளைக்கும் மரம். மலர்களை பறவைகள் கொண்டுசென்று வீழ்த்தி முளைக்கச் செய்கின்றன. இங்கு அந்த மலர் வந்து விழுந்துள்ளதென்றால் அருகே தாய்மரம் உள்ளது என்றே பொருள்…” என்றான் முண்டன்.

“அதை தேடிக்கண்டடைவோம்” என்றபடி பீமன் எழுந்தான். “அதற்கு முன் இந்த மலரை கூர்ந்தறிக! இந்த தேவியிடம் அதை உசாவுக!” என்று முண்டன் சொன்னான். பீமன் மீண்டும் அமர்ந்தான். “மாமல்லரே, உங்கள் மூதாதை புரூரவஸ் ஊர்வசியை மணந்த கதையை அறிந்திருக்கிறீர்களா?” என்றான். பீமன் “சூதர்பாடல்களை கேட்டுள்ளேன்” என்றான். “தேவருலகின் கன்னியர்களில் ஊர்வசியே பேரழகி என்பது கதைஞர் கூற்று. மேனகை, சகஜன்யை, கர்ணிகை, புஞ்சிகஸ்தலை, ரிதுஸ்தலை, ஹ்ருதாசி, பூர்வசித்தி, உல்லோஜை, பிரம்ளோஜை ஆகியோர் தேவர்குலப் பாடகியர். அனூசானை, அத்ரிகை, சோமகேசி, மிஸ்ரை, அலம்புஷை, மரீசி, சூசிகை, வித்யுல்பர்ணை, திலோத்தமை, அம்பிகை, க்ஷேமை, ரம்பை, சுபாகு, அஸிதை, சுப்ரியை, புண்டரீகை, சுகந்தை, சுரஸை, பிரமாதினி, காம்யை, சாரத்யுதி என்போர் நடன மங்கையர். அவர்களில் கலையாலும் ஊர்வசியே முதன்மையானவள்.”

“அழிவற்றவர்கள். ஒவ்வொரு கணமும் தங்கள் விழிதொடும் எதிர்பாவையிலிருந்து புதிதென பிறந்துவருபவர்கள். எனவே நேற்றிலாதவர்கள். காண்பவன் உளமெழுந்த விழைவிலிருந்தே அழகு திரட்டி எழுபவர்கள். எனவே தனக்கென உருவமொன்றில்லாதவர்கள். காமம் என்னும் தழலுடன் ஆடும் காற்று என அவர்களை சொல்கின்றன தொல்கதைகள்” என்றான் முண்டன். “முன்பொரு காலத்தில் நரர், நாராயணர் என்னும் இரு முனிவர்கள் கடுந்தவம் இயற்றினார்கள். வழுக்குப்பாறையில் இருவர் மாறிமாறி கையுதவி மேலேறிச் செல்வதுபோல் அமைந்திருந்தது அவர்களின் தவம். மூன்று உள்ளிருள்களையும் நரருக்கு அளித்துவிட்டு தன் தவவல்லமையால் மேலேறிச் செல்லும் நாராயணர் அங்கு நின்றபடி நரர் கொண்ட இருள்களை தான் பெற்றுக்கொள்வார். அவருடைய தவத்தில் அவை சிறுத்து சிறு மருவென்றாகிவிட்டிருக்கும். மேலும் ஏறிச்சென்ற நரர் நாராயணரை தன்னுடன் அழைத்துக்கொள்வார்.”

“அவர்களின் தவம் முழுமைகொள்வதைத் தடுக்கும்பொருட்டு விழைவின் இறைவனாகிய இந்திரன் தன் தேவர்களை அனுப்பி உலகின்பங்களை அளிப்பதாக மயக்குகாட்டினான். அவர்கள் இளகாமை கண்டு தேவர்குலப் பாடகிகளையும் நடனமங்கையரையும் அனுப்பினான். தங்கள் இசையாலும் அசைவாலும் அவர்கள் அவ்விரு முனிவர்களையும் சூழ்ந்து ஒரு களியுலகை சமைத்தனர்” என்று முண்டன் சொன்னான். “இசை அசைவுக்கு அழகு கூட்டியது. அழகு இசைக்கு பொருள் சேர்த்தது. இவ்வுலகு இன்பப்பெருக்கு. மண்ணின் இனிமை கனியென்றும் தேனென்றும் மரத்தில் ஊறுவதுபோல அவ்வின்பங்களை மட்டும் தொட்டுச்சேர்த்து ஒற்றைநிகழ்வென்றாக்குவது கலை. கூர்கொண்ட உலகின்பமே கலை.”

“அழகின் அழைப்பால் நரர் விழிதிறந்தார். முதற்கணம் தன் முழுவிசையால் சூழ்ந்த இன்பப்பெருக்கை விலக்க முயன்றார். அதை அஞ்சியமையால் விலக்கம் கொண்டார். விலக்கத்தை அருவருப்பென ஆக்கிக்கொண்டார். ஆனால் உயர்கலைக்கு அருவருப்பு அணியென்றே ஆகுமென அவர் அறிந்திருக்கவில்லை. அது மானுடப்புலன்களைச் சீண்டி சிலிர்க்கவைக்கிறது. எழுந்து கூர்ந்த புலன்நுனிகளில் கலை அமுதென படிகிறது. விழிகசிந்து மெய்சிலிர்த்து தன்னை இழந்த நரர் ‘இதுவே, இதுவொன்றே, இனியேதுமில்லை’ என உளமுருகினார். தன்னை உதறி உதறி அதிலாழ்ந்து சென்றார்.”

“அவர் விட்ட நீள்மூச்சால் நாராயணர் விழிதிறந்தார். தன் தவவல்லமையில் பாதி அழிந்துவிட்டதை உடனே உணர்ந்தார். அக்கணம் மீளவில்லையேல் பிறிதொரு வாய்ப்பில்லை என்று கண்டார். நரர் சென்றவழியின் இடரை அறிந்ததுமே பிறிதொரு நெறி தெளிந்தது அவருள். ஒரு விழிச்சுழற்சியால் அங்குள்ள அத்தனை அழகியரையும் நோக்கினார். அவர்களின் பேரழகின் உச்சகணங்களை மட்டும் தொட்டெடுத்தார். அவர் சூடிய இசையின் நுண்மைகளை மட்டும் கூட்டிச்சேர்த்தார். ‘எழுக என் மகள்’ என்று கூவி தன் தொடைமேல் அறைந்தார்.”

“அங்கிருந்து எழுந்து வந்தவள் பேரழகுக்கன்னியாக இருந்தாள். அவள் உடலில் இசைகூடி அசைவுகள் அனைத்தும் ஆடலென்றே நிகழ்ந்தன. விழிமலர்ந்து தன் மகளின் ஆடலை நோக்கி அமர்ந்திருந்த நாராயணரின் உளம் கலைக்க அங்கு வந்த தேவகன்னியரால் இயலவில்லை. தோற்று சலித்து வணங்கி அவர்கள் அமராவதிக்கு மீண்டனர். காமத்தைக் கடந்த நாராயணர் தன் மறுபாதியை கைபற்றி தன்னருகே எடுத்துக்கொண்டார். அறிவது அறிந்து அமைந்து அவர்கள் விடுதலைகொண்டனர்” என்றான் முண்டன்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 5

5. இனிதினிது

குரங்குகள்தான் முதலில் அறிவித்தன. அவற்றின் ஓசை நூறு முழவுகளின் தாளம்போல கேட்டது. நகுலன் அதைக் கேட்டு ஒருகணம் திகைத்து உடனே புரிந்துகொண்டு எழுந்துசென்று குடில்முகப்பில் நின்று “வந்துவிட்டார்!” என்று கூவினான். அவன் கைகள் பதறின. என்ன செய்வதென்று அறியாமல் “வந்துவிட்டார்” என்று கூவியபடி அடுமனை நோக்கி ஓடி வழியிலேயே நின்று திரும்பி ஓடிவந்து கயிறேணியைத் தவிர்த்து கழுக்கோலில் தொங்கி கீழே பாய்ந்து வாயில்படல் நோக்கி ஓடி அதைத் திறந்தான். உடனே அதை மூடி, ஏன் அதைச் செய்கிறோம் என வியந்து மீண்டும் திறந்து காட்டுக்குள் ஓடினான்.

சகதேவன் உள்ளறையிலிருந்து கையில் ஒரு சிறு கோடரியுடன் ஓடிவந்து குடில்முகப்பில் நின்று “நெடுந்தொலைவில் வந்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்” என்றான். கோடரியை கொக்கியில் மாட்டிவிட்டு அறையிலிருந்து எழுந்துவந்து நின்ற தருமனிடம் “வந்துசேர ஒரு நாழிகையாவது ஆகும்” என்றான். “இவன் எங்கே?” என்றார் தருமன் புருவங்களைச் சுளித்தபடி. “யார்?” என்றான் சகதேவன். “மந்தன்தான்…” என்றார் தருமன். “காலையில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டுச் சென்றார்” என்றான் சகதேவன். “அவனிடம் இருநாட்கள் எங்கும் செல்லாமல் இங்கே இருக்கும்படி சொல்லியிருந்தேனே?” என்றார் தருமன்.

சகதேவன் நூலேணி வழியாக இறங்கிச்செல்வதை ஆர்வமில்லாமல் நோக்கியபடி நின்றபின் தருமன் பெருமூச்சுவிட்டார். பின் நிலையழிந்து அறைக்குள் சென்று அங்கே அமரமுடியாமல் மீண்டும் வந்து குடில் விளிம்பில் கைகளைக் கட்டியபடி நின்று வெளியே நோக்கினார். மூங்கில் நடைபாதை முனக அடுமனையிலிருந்து ஓடிவந்த திரௌபதி “வந்துவிட்டாரா?” என்றாள். “வருகிறான் என்கிறார்கள்” என தருமன் திரும்பிநோக்காமலேயே சொன்னார். “நடந்தா வருகிறார்?” என்றாள் திரௌபதி.

தருமன் திரும்பிநோக்கி ஏளனத்துடன் “இல்லை, தேர்யானைபுரவிகாலாள் படைசூழ வருகிறான். அவன் எங்கு சென்றான் என நினைக்கிறாய்?” என்றார். திரௌபதி “அவர் அரசணிக்கோலத்தில் வருவதாக நான் கனவுகண்டேன்” என்றாள். தருமன் “கனவு நன்று. இந்தக் காட்டில் வேறேது உள்ளது?” என்றபடி திரும்பிக்கொண்டார். அவள் ஆடைகள் மந்தணமூச்சுபோல ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டார். அவள் மூச்சொலி உடன் இணைந்தது. கையிலணிந்திருந்த சங்குவளையல்கள் அடிக்கடி குலுங்கின. அவளைத் திரும்பிப்பார்க்க விழைவு எழுந்தாலும் அடக்கிக்கொண்டார். அது முறையல்ல, ஒருவகை அத்துமீறல் எனத் தோன்றியது.

முண்டன் பின்னால் வந்துநின்று “அடுமனையில் அத்தனை சமையலும் பாதியில் நிற்கிறது. இங்கே என்ன செய்கிறீர்கள், அரசி?” என்றான். “போ, நீயே சமைத்து வை. அள்ளிக்குழைத்து தின்கிறாய் அல்லவா?” என்றாள் திரௌபதி. “நான் என்ன அரசியா சமைப்பதற்கு?” என்றபடி அவன் உள்ளே சென்றான். “நானெல்லாம் சந்தையில் நின்றாலே பொன்னாகக் கொட்டும். வணிகர்கள் சிரிப்புக்கெல்லாம் பணம் கொடுப்பார்கள்” என்றான்.

“ஆமாம், எழுத்துக்கு லட்சம் அளித்தார்கள்… பேசாமல் போ” என்று அவள் சொன்னாள். “வணிகர்கள் பொய்யாகச் சிரித்துச் சிரித்து முகமே சிரிப்புக்கோடுகளுடன் இருக்கும். நான் என்ன சொன்னாலும் அறியாமல் சிரிப்பு வந்துவிடும் அவர்களுக்கு” என்றான் முண்டன். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் என ஒருமுறை சொன்னேன். நூறுபேர் விழுந்துவிழுந்து சிரித்தனர்.” திரௌபதி “போகிறாயா இல்லையா?” என்றாள். “நான் சென்று நெடுநேரமாகிறது” என்றான் முண்டன்.

“நல்ல துணை உனக்கு” என்றார் தருமன். “உண்மையிலேயே நல்ல துணை. ஓர் இனிய வீட்டுவிலங்கு போல.” தருமன் “அவ்வப்போது பிராண்டும்” என்றார். “அதுவும் தேவையாக உள்ளது…” என்றாள் திரௌபதி. கீழே நின்ற நகுலன் “சரிவில் ஏறிவருகிறார். கோமதியின் கரையில் குரங்குகளின் ஒலிகள் கேட்கின்றன” என்றான். சகதேவன் “சென்று அழைத்து வருவோம்” என்றான். நகுலன் “நான் செல்கிறேன். நீ இங்கு இரு… அவர் வரும்போது மூத்தவருடன் நில்” என்றபடி வெளியே சென்றான்.

“நான் அவனை ஒவ்வொருநாளும் எண்ணிக்கொண்டிருந்தேன்… அவன் வருவதை ஆயிரம் முறை நெஞ்சில் நிகழ்த்தி நோக்கிவிட்டேன். ஆகவேதான்போலும் அவன் நேரில் வருகையில் அதுவும் ஓர் உளநாடகமாக ஆகி இயல்பாகத் தெரிகிறது” என்றார் தருமன். அவள் ஒன்றும் சொல்லாமல் தூணைப்பற்றியபடி நோக்கி நின்றிருந்தாள். அவளை விழி சரித்து நோக்கி “இந்நாட்களில் நீ மிகவும் மாறிவிட்டாய்” என்றார் தருமன். “அங்கிருக்கையிலும் அவர் ஒவ்வொருமுறையும் எங்கிருந்தாவது திரும்பிவருவது இனிதாகவே இருந்தது” என அவள் சொன்னாள்.

அவள் கன்னங்களில் முற்றத்தின் ஒளி மின்னுவதை தருமன் நோக்கினார். விழிகள் பெரிய நீர்த்துளிகள்போல நீர்மைகொண்டிருந்தன. “ஆனால் இங்கிருக்கையில் எளிய பெண்ணாக ஆகிவிட்டதுபோலத் தோன்றுகிறாய்” என்றார். “இக்காட்டில் அப்படி ஆகாமலிருக்க முடியுமா என்ன?” என்றாள் திரௌபதி. “ஆம், லோமசர் இங்கு வந்தபோது அதை என்னிடம் சொன்னார். காடு ஒவ்வொன்றாக உதிர்க்கவேண்டிய இடம் என்று.” அவர் பெருமூச்சுவிட்டு “இங்கிருந்து மீண்டும் நகர்களுக்குச் செல்ல என்னால் இயலுமா என்றே ஐயமாக இருக்கிறது. நேற்றெல்லாம் நான் எண்ணிக்கொண்டிருந்தது அன்னையை மட்டும் இங்கு கொண்டுவந்துவிடலாம் என்று. இதுவே நம் வாழ்வென நிறையலாகும் என தோன்றியது” என்றார்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. சற்றுநேரத்தில் தருமன் மெல்ல உடல்நெடுக்கு தொய்ந்து “நான் சென்று எதையாவது படிக்கிறேன். இங்கு வெறுமனே நிற்பது சோர்வளிக்கிறது” என்று அறைக்குள் சென்றார். அவர் செல்வதை திரும்பி நோக்கி வெறுமனே புன்னகைத்த பின் அவள் காட்டுப்பாதையை நோக்கியபடி ஆடையை விரலால் சுழற்றிக்கொண்டு தூணில் உடல்சாய்த்து நின்றாள். தருமன் உள்ளே சென்று பீடத்திலமர்ந்து ஒரு சுவடியை எடுத்து விழியோட்டினார். உள்ளம் எழுத்துக்களில் நிலைக்கவில்லை என உணர்ந்ததும் பிறிதொரு சுவடியை எடுத்து அதில் எழுதத் தொடங்கினார். எழுத்து அவரை ஈர்த்துக்கொண்டது. ஏட்டை எழுத்தாணி கீறிச்செல்லும் ஒலி தெளிவாகக் கேட்டது.

பலாப்பழம் விழுவதுபோல கிளைகளை ஊடுருவியபடி ஒரு குரங்கு பாய்ந்து வந்து திரௌபதி முன் விழுந்து எழுந்து இரு கைகளாலும் விலாவை வருடியபடி ஹுஹுஹு என்றது. எம்பி எம்பி குதித்து தன்னைத்தானே சுற்றி வாலைத்தூக்கி வளைத்தபடி “ர்ர்ர்ர்” என்றது. “வருகிறாரா? பார்த்தாயா?” என்றாள் திரௌபதி உவகைப்பதற்றத்துடன். மேலும் குரங்குகள் வந்து அவள் முன் நின்று எம்பி எம்பி கூச்சலிட்டன. சற்றுநேரத்தில் முற்றம் முழுக்க குரங்குகள் நிறைந்தன. மரக்கிளைகளில் அவற்றின் ஓசையும் அசைவும் கொந்தளித்தன. அவள் உதடுகளை அழுத்தியபடி மூச்சடக்கி நோக்கிநின்றாள்.

தொலைவில் அசைவு தெரிந்தது. திரும்பி “வருகிறார்கள்” என்றாள். “நன்று” என்றபடி தருமன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். “தெரிகிறார்கள்” என்று அவள் மீண்டும் சொன்னாள். “வரட்டும்…” என்றபடி தருமன் தொடர்ந்து எழுதினார். அவள் நகுலனைத்தான் முதலில் கண்டாள். அவன் அணிந்திருந்த மான்தோல் மேலாடையின் மஞ்சள் நிறம் பச்சையிலைகள் நடுவே தெரிந்து தெரிந்து மறைந்தது. அவள் திரும்பி தருமனிடம் “வாருங்கள், தெரிகிறார்” என்றாள். பின் இயல்பாகத் திரும்பியபோது அவனை கண்டுவிட்டாள். “இங்கேதானே வருகிறான்?” என தருமன் சொன்னதை அவள் கேட்கவில்லை.

அவர்கள் நடைவழியில் தோன்றியபோது திரௌபதி உரக்க “வந்துவிட்டார்கள்” என்று கூவியபடி மெல்ல குதித்தாள். ஆடைநெகிழ ஓடி தொங்குபடிகளில் இறங்கி தோட்டத்தினூடாக விரைந்தாள். வாயிலில் நின்றிருந்த சகதேவனும் அவளுக்கு முன்னால் சென்று நின்றான். அர்ஜுனன் மெலிந்து களைத்து நரைகலந்த நீண்ட தாடியும் குடுமியாகக் கட்டிவைத்த குழலுமாக இளமுனிவன் போலிருந்தான். அவள் வேலிமரத்தைப் பற்றியபடி நின்றாள். சிரிப்பும் அழுகையுமாக உடல் ததும்பியது. நகுலனின் கைகளைக் கோத்து பற்றியிருந்த அர்ஜுனன் “நலமா, இளையோனே?” என்று சகதேவனிடம் கேட்டான். சகதேவன் வெறுமனே விம்மினான். அருகே வந்த அர்ஜுனன் அவன் தோளைத் தொட்டதும் தளர்ந்து அவன் தோளில் முகம்சேர்த்துகொண்டான். அர்ஜுனன் அவன் இடைவளைத்து அணைத்து மெல்ல தோளில் தட்டியபடி திரௌபதியை நோக்கினான்.

நகுலன் “தொலைவில் வருவதைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. பிற எவருக்குமில்லை இந்த நடை” என்றான். இரு தம்பியரையும் இரு கைகளால் அணைத்தபடி அர்ஜுனன் அணுகி அவளை நோக்கி புன்னகைத்தான். விழியொளிரும் அப்புன்னகையின் வழியாக அவன் முதன்முதலாக அவள் கண்ட அந்த இளைஞனாக மாறினான். “நலமா, தேவி?” என்ற குரலில் மேலும் இளமை இருந்தது. “நலம்” என அவள் சொன்னாள். ஆனால் குரல் எழவில்லை. விழிகளில் நீர் நிறைய தலைகுனிந்தாள். “மூத்தவர் மேலே இருக்கிறாரா?” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்று அவள் தலையை அசைத்தாள்.

அவன் அவளைக் கடந்துசெல்ல அவள் நகுலனை நோக்கி புன்னகை செய்தாள். சகதேவன் “இரண்டாமவர் காட்டுக்குள் சென்றார். நீங்கள் வரும் செய்தி அவருக்கு சென்றிருக்கும். இக்காடு முழுக்க அவரது குடிகளால்தான் ஆளப்படுகிறது” என்றான். அர்ஜுனன் கயிற்றேணியில் ஏறினான். அவனைத் தொடர்ந்து ஏறியபடி நகுலன் “மூன்றாண்டுகளாக இங்கு வாழ்கிறோம், மூத்தவரே. மூத்தவருக்கு இவ்விடம் சலித்துவிட்டது. நாங்கள் இங்கு இருந்தது இவ்விடம் முனிவரனைவருக்கும் தெரியும் என்பதனால்தான். எந்த குருநிலையில் கேட்டாலும் அவர்கள் உங்களை இங்கே ஆற்றுப்படுத்திவிடுவார்கள் என எண்ணினோம்” என்றான்.

சற்றே பின்தங்கி நின்ற திரௌபதியிடம் “அருகே செல்வதுதானே?” என்றான். அவள் நெற்றியும் மேலுதடும் வியர்த்திருந்தன. கழுத்துக்குழியில் மூச்சு துடித்தது. “விழிகளும் குரலும் மட்டுமே அறிந்தவைபோலுள்ளன” என்றாள் அவள். “அவைதான் பார்த்தர். வில்லறிந்த கைகளும்” என்றான் நகுலன். அவள் “ஆம்” என மூச்சுத்திணறுவதுபோல சொன்னாள். அவன் அண்ணாந்து நோக்கி “மூத்தவர் அறைக்குள்ளேயே இருக்கிறார் போலும்” என்றான். “ஆம், அவர் தன்னை காட்டிக்கொள்ளக்கூடாதென்று எண்ணுகிறார்” என்றாள். “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசர்…” என்று நகுலன் சொல்ல “அதை அவர் கடந்து நீணாளாகிறது. இன்று விண்விளிம்பில் மண்ணில் நின்றிருக்கும் மூதாதை மட்டுமே” என்றாள்.

imagesஅவர்கள் மேலே ஏறிச்சென்றபோது அர்ஜுனன் தன் தோல்மூட்டையையும் அம்புத்தூளியையும் வில்லையும் வைத்துவிட்டு கைகளைக் கூப்பியபடி தருமனின் அறைக்குள் நுழைவதைக் கண்டார்கள். உடன்சென்ற சகதேவன் “மூத்தவரே” என்று தருமனை அழைத்தான். கையில் எழுத்தாணியுடன் சுவடியை நோக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்த தருமனின் தோளில் மெல்லிய அதிர்வு ஏற்பட்டது. அர்ஜுனன் ஓசையில்லாது நடந்து உள்ளேசென்று குனிந்து தமையனின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் தலைதிருப்பாமல் இடக்கையை அவன் தலைமேல் வைத்து “நீள்வாழ்வும் புகழும் நெடுங்குலமும் திகழ்க!” என்றார். வலக்கையில் எழுத்தாணியை கட்டாரிபோல பற்றியிருந்தார். கழுத்தில் நரம்பு ஒன்று இறுகி அசைந்தது.

அர்ஜுனன் மெல்லிய மூச்சொன்றை விட்டபின் கைகூப்பி இன்னொருமுறை வணங்கிவிட்டு பின்காலடி எடுத்துவைத்து வெளியே வந்தான். தருமன் மெல்ல விசும்பிய ஒலி அனைவரையும் கூர்வாள்முனை என தொட்டது. நகுலன் மெல்லிய சிலிர்ப்பை அடைந்து கைநீட்டி திரௌபதியின் தோளை தொட்டான். அவள் நோக்கியபோது ஏட்டுச்சுவடிகளின்மேல் விழிநீர்த்துளிகள் உதிர்வதைக் கண்டாள். அந்த மெல்லிய ஒலிகூட அனைவருக்கும் கேட்டது. தருமன் உதடுகளை மடித்து அழுகையை அடக்கிக்கொண்டார். நகுலன் ஏதோ சொல்லமுயல திரௌபதி வேண்டாம் என தலையசைத்துக்காட்டி விழிகளால் பின்னுக்கு அழைத்தாள்.

 MAMALAR_EPI_05

அவர்கள் நுனிக்கால்களால் நடந்து பேரறைக்கு வந்தனர். அங்கே இரு குரங்குகள் உள்ளேவந்து அர்ஜுனனின் மூட்டையைப் பிரித்து ஆராய்ந்துகொண்டிருந்தன. உள்ளே இரு பழைய மரவுரிகளும் ஒரு சுரைநீர்க்குடுவையும் மட்டும் இருந்தன. ஒரு குரங்கு மரவுரியை நீட்டி நோக்கி கீழுதட்டைப் பிதுக்க இன்னொன்று ஒழிந்த குடுவையை வாயில் கவிழ்த்து நீர் அருந்துவதுபோல நடித்தது. அப்பால் ஒரு பெரிய குரங்கு ‘பாவம், சிறுவர்கள்’ என்னும் முகக்குறியுடன் அமர்ந்து தன் வால்நுனியை தானே பேன் பார்த்துக்கொண்டிருந்தது.

“மூத்தவரின் குலத்தார்” என்று சகதேவன் சிரித்தபடி சொன்னான். “இங்கே அவர் ஒரு பேரரசை உருவாக்கிவிடுவார் என்றே அஞ்சுகிறார்கள் அரசர்கள்.” அர்ஜுனன் புன்னகைத்து “விலங்குகளில் குரங்குகளிடமிருக்கும் அச்சமின்மை வியப்பூட்டுவது. அறிவின் துணிவு அது” என்றான். குரங்கு அவனை நோக்கி குடுவையை நீட்டியது. “வேண்டாம்” என்றான் அர்ஜுனன். அது குடுவையை தலைமேல் கவிழ்த்துக்கொண்டு எழுந்து நின்றது. “அறிவிலிருந்து கேலியும் ஐயமும் எழுகின்றன” என்றான் நகுலன். சகதேவன் “குரங்குகளின் நினைவாற்றலும் வஞ்சமும் அச்சமூட்டுபவை” என்றான்.

திரௌபதி “இன்னீர் அருந்துகிறீர்களா?” என்றாள். அவள் தொண்டை சற்று அடைத்ததுபோலிருந்தது. “ஆம்” என்றான் அவன். அவள் ஆடையைச் செருகியபடி திரும்ப “இங்கு அடுமனைச்சேடியர் இல்லையா?” என்றான். “இல்லை. இங்கு நாங்கள் மட்டிலுமே” என்றான் சகதேவன். “அதனால்தான் தேவி மாறிவிட்டாளா?” என்று அர்ஜுனன் சிரித்தான். திரௌபதி “உண்மையிலேயே சமைப்பதும் விளம்புவதும் உள்ளத்தை மாற்றிவிடுகின்றன” என்றாள். அச்சிரிப்பினூடாக அவள் இயல்பானாள். “நீங்கள் விழைவதை எல்லாம் சமைக்கிறேன். என் கைச்சுவை அரிது என்கிறார்கள் முனிவர்” என்றாள். அர்ஜுனன் “ஆம், உண்பதற்காகவே வந்துள்ளேன்” என்றான். அவள் சட்டென்று நாணி முகம்சிவக்க “நன்று” என உள்ளே சென்றாள். அர்ஜுனன் முகத்திலும் அந்நாணத்தின் எதிரொளி இருந்தது. சகதேவனும் நகுலனும் அவன் முகத்தை நோக்குவதை தவிர்த்தனர்.

முண்டன் வந்து வாயிலில் நின்று தலைவணங்கி “நான் முண்டன். இங்கு வளர்க்கப்படுகிறேன்” என்றான். அர்ஜுனன் சிரித்துவிட்டான். “எதன்பொருட்டு?” என்றான். “வளர்ப்பவர்களின் ஆணவத்தின் பொருட்டுதான். எல்லா வளர்ப்புவிலங்குகளையும்போல. விஜயரே, உங்களுக்கு இன்னீரும் சுட்டகிழங்கும் சித்தமாக உள்ளது. உச்சிப்பொழுதுக்கு ஊனுணவு சமைக்கவேண்டும்… அதற்குமுன் பெருவயிறர் வருவாரா என உறுதிசெய்யவேண்டும்” என்றான்.

“இவன் அடுமனையாளனா?” என்றான் அர்ஜுனன். “இல்லை. அடிப்படையில் நான் பகடிக்கலைஞன். சமையலில் மட்டும்தான் பகடிக்கு இடமே இல்லை.” அர்ஜுனன் “வில்வித்தையில் உள்ளதோ?” என்றான். “மூத்த அரசர் அம்புவிடுவது வேறென்ன?” என்றான் முண்டன். “அய்யோ” என்றான் அர்ஜுனன் பதறி திரும்பிநோக்கியபடி. “தேன் கலந்த பழக்கூழ் இனிது. நான் சற்று முன்னர்தான் முதற்சுவை நோக்கினேன்” என்றபின் அவன் திரும்பிச்சென்றான்.

அர்ஜுனன் “எளியவன் அல்ல, ஆனால் நேர்மையானவன்” என்றான். “ஆம், அதை நானும் கணித்தேன்” என்றான் சகதேவன். மூங்கில்கூடையை கவிழ்த்திட்டு அர்ஜுனன் அமர்ந்தான். அவன் அருகே நகுலனும் சகதேவனும் அமர திரௌபதி அடுமனைக்குள் சென்றாள். “அனைவருமே மாறிவிட்டிருக்கிறீர்கள். தோற்றத்தில் மட்டுமல்ல. உள்ளேயும்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் மாறிவிட்டிருக்கிறீர்கள். அதைத்தான் பார்க்கிறீர்கள்” என்று நகுலன் சொன்னான்.

திரௌபதி உள்ளிருந்து கனித்தாலத்துடன் வந்து அவனருகே வைத்தாள். அர்ஜுனன் “தேவி நூறு பெயர்மைந்தர்களின் பேரன்னைபோல கனிந்திருக்கிறாள்” என்றான். திரௌபதி கண்கள் பொங்க சிரித்து “குருகுலத்தவரின் குருதியையும் சேர்த்தால் நூறென்ன, ஆயிரங்கள் கூட அமையும்” என்றாள். முண்டன் இரு கைகளிலும் இன்னீரும் அப்பத்தட்டுமாக ஓடிவந்தான். அவ்விரைவிலேயே இருமுறை தலைகீழாகச் சுழன்று நின்று “நெடுந்தொலைவு சென்றுவிட்டேன். மீண்டு வரவேண்டியிருந்தது” என்றான். அவன் கையிலிருந்தவை துளியும் சிந்தவில்லை.

அர்ஜுனன் “நீ நிகருடல் திறனுடையவன், ஒப்புகிறேன்” என்றான். “திறன் வளர்த்து ஒருநாள் உங்கள் அம்பொன்றை கையால் பற்றுவேன்” என்றான் முண்டன். “சற்றுமுன் நான் சென்ற தொலைவில் ஒரு மலைவேடன் உங்கள் அம்புகளை கையால் பற்றுவதைக் கண்டேன்.” அதை அவன் உள்ளே சென்றபடி சொன்னதனால் அர்ஜுனன் கேட்கவில்லை. அவன் தேன்பழநீரை அருந்தியபின் கிழங்கை உண்ணத் தொடங்கினான். முண்டன் மீண்டும் பலமுறை சுழன்று வந்து அவர்கள் முன் தேன்பழநீர் குடுவையையும் குவளைகளையும் வைத்தான்.

திரௌபதி குவளைகளில் ஊற்றி அவர்களுக்கு அளித்தாள். அதைச் சுவைத்தபடி “எங்கெல்லாம் சென்றீர்கள், மூத்தவரே?” என்றான் சகதேவன். “நான்கு திசைகளிலும் நெடுந்தொலைவு” என்றான் அர்ஜுனன். “மேற்கே நிலைக்கடல் முதல் கிழக்கே பறக்கும் மலைகள் வரை. திசைத்தேவர்களை வென்று நிகரற்ற படைக்கலங்களுடன் வந்துள்ளேன்.” அறைவாயிலில் தோன்றிய தருமன் “உன்னை வென்றாயா?” என்றார். அர்ஜுனன் தெளிந்த விழிகளுடன் அவரை ஏறிட்டுநோக்கி “ஆம்” என்றான். அவர் “நன்று” என்றார். கைகளைக் கட்டியபடி நின்று அர்ஜுனனை கூர்ந்து நோக்கினார். “நன்கு மெலிந்துள்ளாய்.”

“கொழுப்பதற்கு இங்கு நிறைய நாட்கள் உள்ளன, மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், இவள் இப்போது நன்கு சமைக்கிறாள்” என்று தருமன் சொன்னார். முகத்தை கடுமையாக வைத்துக்கொள்ளும்பொருட்டு பற்களைக் கடித்து வாயை இறுக்கியிருந்தார். “நீ கற்றவற்றில் சிலவற்றை இவர்களுக்கு சொல்லிக்கொடு. இங்கே தோட்டக்காரர்களாகவே ஆகிவிட்டிருக்கிறார்கள்” என்றார். அர்ஜுனன் “ஆணை” என்று சொல்லி நகுலனை நோக்கி சற்றே புன்னகைத்தான். அவர் உடல் விழியாகி அவனை பார்ப்பதுபோலிருந்தது. நோக்கு வேறெங்கோ இருந்தது. காற்று செடிகளில் என அவர் வருகை அங்கிருந்த அனைவர் உடலிலும் நிலைமாறுபாட்டையும் மெல்லசைவையும் உருவாக்கியது.

“உன் தமையன் இன்னும் வரவில்லையா?” என்றார் தருமன் வெளியே நோக்கியபடி. “வந்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்” என்றான் நகுலன். “எங்கு சென்றான்? மூடன்! இங்கேயே இருக்கும்படி நான்குமுறை நானே சொன்னேன்” என்றபடி மேலும் ஏதோ சொல்லவந்தார். பின்பு “சரி சரி, உண்ணுக!” என்றபின் மீண்டும் உள்ளே சென்றார். அவர்கள் இயல்புநிலைமீளும் அசைவுகள் ஏற்பட்டன.

முண்டன் வந்து “உரியநடிப்புகள் முடிந்துவிட்டன என்றால் இருவர் வந்து அடுமனையில் உதவவேண்டும். பெருவயிறருக்கு சமைக்க தனியாக என்னால் இயலாது” என்றான். நகுலன் “இவன் தலைகீழாகக் குதித்து காலத்தின் ஏடுகளை புரட்டத்தெரிந்தவன். நீங்கள் வரவிருப்பதை சரியாகச் சொன்னான்” என்றான். “இப்போது சற்றுமுன் தலைகீழாகப் பாய்ந்து வந்தானே?” என்றான் அர்ஜுனன். “நான் பலநாட்களுக்கு முன்னால் சென்றுவிட்டிருந்தேன்” என்றான் முண்டன். “எங்கே? என்ன கண்டாய்?” என்றான் அர்ஜுனன். “விஜயரின் வில்லுக்கு வேலை வந்துவிட்டிருப்பதைக் கண்டேன்” என்றான் முண்டன் கைதூக்கி. “அம்புகள் பறக்கும் ஒரு பெரும்போர்!” என்று கூவினான்.

அவன் குரல் மறையும்படி தடதடவென கூரைமேல் குரங்குகள் விழும் ஓசை கேட்டது. “இந்த இல்லத்தையே ஒருநாள் இழுத்து கீழே போட்டுவிடுவான் அறிவிலி!” என்றார் தருமன் அறைக்குள். பீமன் உள்ளே வந்தபோது கூடவே ஏழெட்டுக் குரங்குகளும் வந்தன. அனைத்துமே கைகளில் தேன்தட்டுகளை வைத்திருந்தன. பீமன் பாளையால் முடையப்பட்ட பெருங்கூடையில் தேன்கூடுகளை நிறைத்து எடுத்துவந்திருந்தான். அவன் உடலெங்கும் தேன் வழிந்தது. “இளையோனே” என்று கூவியபடி தன் பெரிய கைகளை நீட்டிக்கொண்டு ஓடிவந்து அர்ஜுனனை பற்றிக்கொண்டான். அர்ஜுனன் “எங்கு சென்றீர்கள்?” என்று சொல்லி அவன் தோள்களைத் தழுவினான்.

உரக்க நகைத்தபடி பீமன் அர்ஜுனனை அணைத்து தூக்கிச்சுழற்றினான். அவனை காற்றில் எறிந்து பிடித்தான். வெறிகொண்டவன்போல ஓங்கி ஓங்கி அறைந்தான். தேன் ததும்பி தரையில் விழ அதில் இருவரும் வழுக்கி நிலையழிந்து சிரித்தபடியே நின்றனர். அறைவாயிலில் வந்துநின்ற தருமன் “போதும், குடிலை சரித்துப்போடவேண்டியதில்லை” என்றார். பீமன் அர்ஜுனனை கீழே விட்டுவிட்டு “மலைத்தேனும் கனிகளும் எடுத்துவரச் சென்றேன், மூத்தவரே” என்றான். “ஏற்கெனவே அவனுக்கு மதுபர்க்கம் அளித்தாகிவிட்டது. நீ முதலில் குளி” என்றார் தருமன்.

அவன் தலையசைக்க “குரங்கு” என்றபின் பிற குரங்குகளை நோக்கி “இவை இவனைவிட பண்பறிந்தவை” என்றார். நகுலன் சிரிப்பை அடக்க அவர் திரும்பி உள்ளே சென்றார். ஒரு குரங்கும் அவரைப்போலவே தளர்நடையிட்டு உடன்சென்றது. அவர் கதவை மூடிக்கொண்டார். “என்ன செய்வதென்றே தெரியவில்லை அவருக்கு” என்றான் நகுலன். “அள்ளி மடியிலிட்டு சற்றுநேரம் அழுது பின் கொஞ்சி உணவூட்டினால் நெஞ்சமைவார். அதைச் செய்ய முடியாமையால் நிலையழிகிறார்” என்றான் சகதேவன்.

பீமன் தேன்கூட்டை எடுத்து “மலைத்தேன்! இனிய தேனிருக்கும் இடம் குரங்குகளுக்கு மட்டுமே தெரியும். இனிய கனிகளை அவைதான் தெரிவுசெய்யமுடியும்… இவற்றை உண்டு பார்” என்றபடி தேன்தட்டு ஒன்றை எடுத்து அர்ஜுனன் வாயில் ஊட்டப்போனான். “நான் பிழிந்து கொண்டுவருகிறேன்” என்றாள் திரௌபதி. “இதை இப்படியே உண்ணலாம்” என பீமன் தூக்கிக் காட்ட சொட்டிய தேனை அர்ஜுனன் நக்கிக்குடித்தான். “நன்று… இத்தனை இனிய தேனை உண்டதே இல்லை” என்றபடி இன்னொரு தட்டை எடுத்து திரௌபதியிடம் நீட்டினான். அவள் விழிகளில் பதற்றம் எழ வேண்டாம் என தலையசைத்தாள்.

“அருந்துக! இது அரிய மலைத்தேன்” என்றான் பீமன். அவள் தலையசைக்க சகதேவன் எழுந்து “நான் விறகு கொண்டுவரச் செல்லவேண்டும்… மூத்தவரே, வருகிறீர்களா?” என்றான். பீமன் “விறகு கொண்டுவருவதெல்லாம் ஒரு வேலையா? என் படையிடம் சொன்னால் போதுமே” என எழுந்துசென்றான். நகுலன் “முண்டன் என்ன செய்கிறான் என பார்க்கிறேன்” என்று எழுந்து உள்ளே சென்றான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விழிதொடுத்து நோக்கினர்.

திரௌபதி நோக்கில் எழுந்த கூரொளியுடன் “சென்ற இடங்களில் எத்தனை துணைவியர்?” என்றாள். “ஏன்? அதைத்தான் முதலில் கேட்கவேண்டுமா?” என்றான். “சொல்லுங்கள்!” அர்ஜுனன் “பலர்” என்றான். “ஆனால் அனைவரும் உன் வடிவங்களே.” அவள் சிரித்து “ஆம், பேசுவதை மட்டும் நன்கு பயின்று வைத்திருக்கிறீர்கள்” என்றாள். தாழ்ந்த குரலில் “அனைத்துக் கலைகளையும் கற்றவன் என்கிறார்கள் என்னை” என்று சொன்னபடி அவள் கையை அவன் பற்ற “அய்யோ, இது நடுஅறை” என்றாள் அவள். “அப்படியென்றால் உள்ளறைக்குச் செல்வோம்” என்றான் அர்ஜுனன். “இப்போதா?” என்றாள். “அதை உணர்ந்துதான் அனைவரும் சென்றுவிட்டார்கள்” என்றான். “அய்யோ, எண்ணவே கூச்சமாக இருக்கிறது” என்றாள். “இதென்ன, அச்சமும் நாணமும் மடமும் பயிர்ப்பும் எப்போது வந்தன?” அவள் “வந்தன… அவ்வளவுதான்” என்றாள்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 4

4. ஏட்டுப்புறங்கள்

அடுமனையின் தரையில் அமர்ந்து முண்டன் உணவுண்டான். அப்போதுதான் உலையிலிருந்து இறக்கிய புல்லரிசிச்சோற்றை அவன் முன் இலையில் கொட்டி புளிக்காயிட்டு செய்த கீரைக்குழம்பை அதன்மேல் திரௌபதி ஊற்றினாள். அவன் அள்ளுவதைக்கண்டு “மெல்ல, சூடாக இருக்கிறது” என்றாள். “உள்ளே அதைவிடப் பெரிய அனல் எரிகிறது, அரசி” என்றான் முண்டன். “சிற்றனலை நீர் அணைக்கும். காட்டனலை காட்டனலே அணைக்குமென்று கண்டிருப்பீர்கள்.” அவன் பெரிய கவளங்களாக உருட்டி உண்பதைக்கண்டு “உன் உடல் இப்படி கொழுப்பது ஏன் எனத் தெரிகிறது” என்றாள்.

“நான் அதைத் தடுக்க முயல்வதில்லை” என்று முண்டன் சொன்னான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “அரசி, நான் குள்ளன் என்பதே என் படைக்கலம். கொழுத்திருக்கையில் நான் குழந்தையுடல் கொள்கிறேன். கொழுவிய கன்னங்களும் பதிந்த மூக்குமே என்னை நோக்கி புன்னகையுடன் அன்னமிடுகையில் உங்கள் நெஞ்சு நெகிழச்செய்கிறது” என்றான். அறைவாயிலில் வந்துநின்ற தருமன் “மெய்தான்… நீ குழவியென்றே விழிக்கு தோன்றுகிறாய்” என்றார். “நீங்கள் மட்டும் முதியவராகவே தோன்றுகிறீர்களே. உங்களை வெளியே எடுத்ததுமே வயற்றாட்டி மூத்தவரே என்றழைத்திருப்பாள்” என்றான் முண்டன்.

சிரித்தபடி நகுலனும் சகதேவனும் வந்து அடுமனைக்குள் அவனைச் சூழ்ந்து நின்றனர். “மந்தன் எங்கே?” என்றார் தருமன். நகுலன் “துயில்கிறார். குரங்குகளும் காட்டுக்குள் சென்றுவிட்டன” என்றான். “உணவுக்குப்பின் துயில்வது நன்று, உணவல்லாதவற்றை கனவுகாணமுடியும்” என்றான் முண்டன். “உன் குடியும் குலமும் பதியும் எது?” என்றார் தருமன். “நான் மிதிலைநாட்டான். அங்கே போர்மறவர் குடியில் பிறந்தேன். எந்தை நான் பிறந்தபோது ஒருமுறை குனிந்து நோக்கி முகம் சுளித்தார். மூதாதையர் செய்த பழி என்றார். அக்கணமே என் அன்னையைக் கைவிட்டு அகன்றார்” என்றான் முண்டன்.

“என் கால்கள் வளைந்திருந்தன. இரட்டைப்பெருமண்டை. பிறக்கையிலேயே பற்களுமிருந்தன. பிறந்த அன்றே முண்டன் எனப் பெயர்கொண்டேன்” என அவன் தொடர்ந்தான். “உயரமற்றவர்களை தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணுவதிலிருந்து மானுடர் ஒழியவே முடியாது. குள்ளர்களின் பெருந்துன்பம் அவர்கள் எப்போதும் மேலிருந்தே பார்க்கப்படுகிறார்கள் என்பதுதான். அவர்கள் அதன்பொருட்டே உரத்தகுரலில் பேசத் தொடங்குகிறார்கள். தங்களை அறியாமலேயே நுனிக்கால்களில் எம்பி நின்றுகொள்கிறார்கள். வெற்றியினூடாக பிறரைவிட மேலெழ முனைகிறார்கள்.”

“ஆகவே சூழ்ச்சிக்காரர்களாக சீண்டுபவர்களாக இரக்கமற்றவர்களாக இருப்பதற்கும் அஞ்சாமலாகிறார்கள். தன் தலைக்குமேல் நிகழும் உலகை தன்னை நோக்கி இழுக்க ஒவ்வொரு கணமும் முயன்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான் முண்டன். “ஆனால் அவர்கள் தொடர்ந்து கனிவுடன் பார்க்கப்படுகிறார்கள். பொறுத்தருளப்படுகிறார்கள். அரசி, ஒரு குள்ளனை குழந்தைபோல கொஞ்சுவதைப்போல அவனை சினம்கொள்ளச்செய்யும் செயல் பிறிதில்லை.”

கைகளை நக்கியபடி முண்டன் தொடர்ந்தான் “ஆனால் மானுடரால் அதைச் செய்யாமலிருக்க முடியாது. ஏனென்றால் குள்ளர்களை அவர்களின் ஆழுள்ளம் குழந்தைகளுடன் ஒப்பிட்டுக்கொள்கிறது.” திரௌபதி “ஆம், உன்னையும் அவ்வாறே எண்ணிக்கொண்டேன்” என்றாள். “அதனால்தான் என் சொற்களிலிருந்த நஞ்சுக்கு நீங்கள் நகைத்தீர்கள்” என்றான் அவன். அவள் சிரித்து “ஆம். மட்டுமல்ல, நான் இங்கு அவ்வாறு பிறிதொருவகை பேச்சைக் கேட்டே நெடுநாட்களாகின்றன” என்றாள்.

“இளமையில் நெடுநாட்கள் நான் அன்னையரின் குழவியாகவே இருந்தேன். என்னை இடையிலேயே வைத்திருந்தாள் என் அன்னை. அவள் தோழியரும் என்னை இடையிலெடுத்துக்கொள்வார்கள். பெண்கள் நடுவே அமர்ந்துகொண்டு அவர்களின் சழக்குப் பேச்சை கேட்பேன். என்னை செவியென்றும் விழியென்றுமுணராமல் வெறும் பைதலென எண்ணி பேசிக்களிப்பார்கள். ஆடைகளைந்து நீராடுவார்கள். பூசலிட்டு மந்தணங்களை அள்ளி இறைப்பார்கள். ஒரு கைப்பொருளென என்னை எங்கேனும் வைப்பார்கள். மறந்து சென்றுவிடுவதுமுண்டு.”

“நான் முதிரத் தொடங்கியபோது அவர்கள் என்னை சற்றே விலக்கலாயினர். கொஞ்சல்கள் குறைந்தபோது அவர்களுடனேயே நீடிக்கும்பொருட்டு நானும் சழக்கு பேசலானேன். அவர்களை சிரிக்கச்செய்வதெப்படி என்று கண்டுகொண்டேன். அரசி, பெண்கள் விரும்புவது காமச் சொல்லாடலே. ஆனால் அச்சொல்லாடலை முன்னெடுப்பவள் விடுநா கொண்டவள் என்று பெயர் பெறுவாள். நாணிலாதவள் என அவள் தோழிகளாலேயே பழிக்கப்படுவாள். ஆகவே அதை எவரேனும் சொல்ல தான் கேட்டு மகிழ்ந்து பின் நாணி பொய்ச்சீற்றம் காட்டுவதே பெண்கள் விழையும் ஆடல். நான் அவ்விடத்தை ஆடலானேன்.”

“ஒவ்வொருநாளும் துளித்துளியாக எல்லை மீறுதலே அவர்களை நகையுவகை கொள்ளச்செய்கிறதென்று கண்டேன். ஒருகட்டத்தில் அவர்கள் நடுவே எதையும் சொல்பவனாக அமர்ந்திருந்தேன். என்னை மானுடனென அவர்கள் எண்ணவில்லை. பேசும் கிளியென்றும் ஆடும் குரங்கென்றும் கண்டனர். எனவே எதுவும் பிழையெனப் படவில்லை. அவர்களின் கொழுநரும் அவ்வாறே எண்ணினர். அவர்களின் கொழுநர்களைக் கண்டு என்னுள் வாழ்ந்த ஆண் அஞ்சினான். எனவே அவர்களை நான் அணுகியதே இல்லை.”

“என் வயதுக்கு மிக இளையவர்களாகிய சிறுமைந்தருடன்தான் நான் விளையாடி வந்தேன். பெண்கள் நடுவே என் உள்ளம் வளர்ந்தபோது அவர்களுடன் ஆடுவது இயலாதாயிற்று. ஆண்களின் உலகில் நுழைய விழைந்தேன். மிகத் தற்செயலாக அதற்கான வழியை கண்டடைந்தேன். ஒருநாள் நூற்றுவர்தலைவன் ஒருவனைப்பற்றி அவன் புறக்காதலி சொன்ன சீண்டும் சொல்லை அவனிருந்த மன்றில் சொன்னேன். சொல்லிவிட்டதுமே அஞ்சி உடல்குளிர்ந்தேன். அவன் தோழர் வெடித்து நகைத்தனர். அவனும் உடன் நகைத்து என் மண்டையைத் தட்டினான். அன்று அறிந்தேன், நான் என்ன சொன்னாலும் எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்று.”

“அதன்பின் அதுவே என் வழியென்றாகியது. நான் பகடிபேசுபவனாக ஆனேன். நச்சுநாவை கூர்தீட்டிக்கொண்டேன். ஆனால் அதைக் குறித்த தன்னிழிவும் என்னுள் திரண்டுகொண்டே இருந்தது. என் அன்னை இறந்தபோது அவ்வூரில் இருக்க விரும்பாமல் கிளம்பினேன். ஊர்தோறும் அலைந்து ஒரு சந்தையில் நின்றிருக்கையில் கழைக்கூத்தாடிகளைக் கண்டேன். அவர்களுடன் என்னை சேர்த்துக்கொண்டார்கள். அவர்களின் மூத்தாசிரியன் எனக்கு தாவுகலையையும் உடல்நிகர்கலையையும் கற்பித்தான். கைமாயங்களையும் விழிமாயங்களையும் மூதன்னை ஒருத்தி பயிற்றுவித்தாள்.”

“அன்று அம்மூத்தவள் என்னிடம் நீ என்ன செய்தாலும் நகைப்பர். ஏனென்றால் உன் உடல்வழியாக படைப்போன் ஓர் இளிவரலை முன்னரே செய்துவிட்டிருக்கிறான் என எண்ணுகிறார்கள் என்றாள். இப்புவியில் பிறிதொரு மானுடரைக் காண்கையில் மானுடர் முகம் இயல்பாக மலர்வதில்லை. ஒருகணம், கணத்திலொரு துளி, அது சுருங்குகிறது. ஐயுறுகிறது, அளவிடுகிறது, முடிவெடுக்கிறது. அதன் பின்னரே இன்சொல்லும் புன்சிரிப்பும் எழுகின்றன. உன்னைக்கண்ட கணமே முகங்கள் விரிகின்றன. இளங்குழவியரை காண்பதுபோல. துள்ளும் குருளைகளையும் பூஞ்சிறகுக் குஞ்சுகளையும் காண்பதுபோல. வளர்ந்த பின்னரும் அப்புன்னகையைப் பெறுபவை குரங்கும் யானையும் மட்டிலுமே என்றாள்.”

“அன்றறிந்தேன், எனக்களிக்கப்பட்ட நற்கொடை இவ்வுடல் என. அன்றுமுதல் இதைக் கொண்டாடலானேன். இதைக்கொண்டு என் சூழலைக் கொண்டாடினேன். அரசி, இவ்வுடல் ஒரு அகப்பை. இதைக்கொண்டு நானிருக்குமிடத்தை கலக்குகிறேன். இது ஒரு முழைதடி. இதைக்கொண்டு இம்முரசுகளை ஒலிக்கச்செய்கிறேன்” என்றான் முண்டன். “கண்ணறிவதை கருத்தறியாது செய்வேன். கருத்தறிவதை களவென்றாக்குவேன். களவனைத்தும் நிகழச்செய்வேன். காலத்தை கலைத்தடுக்குவேன்.”

சொல்லிமுடிவதற்குள்ளாகவே நின்றிருந்த இடத்திலேயே ஒருமுறை தலைகீழாகச் சுழன்று நின்று “இப்படி எப்போதுவேண்டுமென்றாலும் இப்புவியின் ஒரு ஏட்டை என்னால் புரட்டிவிடமுடியும்…” என்றான். “இது நாளை. அரசி இன்று தலையில் குழல்சுருட்டிக் கொண்டையிட்டு செண்பகப்பூ சூடியிருக்கிறார். அங்கே அஸ்தினபுரியில் கங்கைக்கரைக் கன்னிமாடத்தில் வாழும் மாயை குழல்நீட்டி குருதிகாத்திருக்கிறாள் என எண்ணியபடி அம்மலரை சூட்டிக்கொண்டார்.”

மீண்டுமொருமுறை பின்னோக்கிச் சுழன்றுநின்று “நான் எங்கே விட்டேன்?” என்றான். நகுலன் “கால ஏட்டைப் புரட்டுகிறாய்” என்றான். “ஆம், கொடிது அது. மொத்தமும் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள்” என்றான் முண்டன். “முன்பு அதை ஏதோ கைதிருந்தா குழந்தை எடுத்து விளையாடியிருக்கிறது போலும். அரசே, நடுநூல் அறுந்துள்ளது. அடுக்குகுலைந்த ஏடுகளிடையே ஆயிரம் ஏடுகள் விடுபட்டுள்ளன என்று தோன்றும்.”

நகுலன் சிரித்து “காவியமும் கற்றுள்ளாய் போலும்” என்றான். அவன் கைகளை நக்கிக்கொண்டு “நற்செயல்கள் காவியமாக ஆவதுபோல் இன்னுணவு நறுமணமாக ஆகிறது என்பார்கள்” என்றான். உடனே ஏப்பம் விட்டபடி “ஆனால் சற்று மிகையானால் கீழ்க்காற்றாக ஆவதும் உண்டு” என்றான். தருமன் “சீ… இவனுடன் சொல்லாடுவதே இழிவென்றுபடுகிறது” என்றார். “ஆகாதா?” என்றான் முண்டன். தருமன் திரும்பி தன் அறைக்கு சென்றார். நகுலன் “வருக, மூத்தவரை மகிழ்விக்கும் சிலவற்றை சொல்க!” என்றான். “நான் என்னை மகிழ்விப்பதை மட்டுமே சொல்லும் வழக்கம் கொண்டவன்” என்றான் முண்டன். “சரி, அதைச் சொல்!” என அவன் தலைமேல் கைவைத்து தள்ளிக்கொண்டு சென்றான் நகுலன்.

imagesருமனின் அறைக்குள் சென்றதும் நகுலன் “சினம் கொள்ளவேண்டாம், மூத்தவரே. அவனே சொன்னபடி அவன்  அனைத்துக்கும் கீழிருப்பவன். அங்கிருந்து நம்மை நோக்க அவனுக்கு உரிமை உண்டு” என்றான். “நான் பாதாளத்திற்குக்கூட சென்று நோக்குவேன்” என்றான் முண்டன். “அரசர் இப்போது நோக்கும் நூல் என்னவென்று நான் அறிவேன்.” தருமன் “என்ன நூல்? சொல்!” என்றார். “சௌரவேதம்” என்றான் முண்டன். தருமன் வியந்து “எப்படி தெரியும்?” என்றார். “உங்கள் உளம்பயின்று அறிந்தேன்” என்றான் முண்டன்.

“மேலுமென்ன பயின்றறிந்தாய்?” என்று தருமன் கேட்டார். “இதை சூரியமைந்தரான அங்கரின் வேதமாக நீங்கள் எண்ணுகிறீர்கள்” என்றான் முண்டன். “விளையாடுகிறாயா?” என தருமன் சீறினார். முண்டன் அஞ்சி நகுலனுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டான். “பொருட்படுத்தவேண்டாம், மூத்தவரே. இவனை ஒரு இனிய விளையாட்டுப்பொருளாக மட்டுமே எண்ணுக!” என்றான். தருமன் “அவன் அத்துமீறுகிறான்” என்றார்.

முண்டன் அஞ்சிநடுங்கி நகுலனுக்குப் பின்னால் பாதிமறைந்து ஒரு கண் மட்டும் காட்டி “இனிமேல் இல்லை” என்றான். “என்ன இல்லை?” என்றார் தருமன். “இனிமேல் உண்மையை சொல்லமாட்டேன்” என்று முண்டன் சொன்னான். தருமன் சிரித்துவிட்டார். “இவனை என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார். “உண்மைகளை நான் வேண்டுமென்றால் பொய்யாக்கிவிடுகிறேன்” என்றான் முண்டன். “அய்யோ” என தருமன் தலையில் அடித்துக்கொண்டார். “காவியமாக்குவதைவிட இது எளிது…” என்றான் முண்டன்.

“இவன் கால ஏட்டைப் புரட்டுவான் என்கிறான்” என்றான் நகுலன். சகதேவன் பின்னால் வந்து நின்று “அதை நாம் கண்களாலேயே காணமுடியும்” என்றான். திரௌபதியும் வந்து கதவருகே நின்று “என்ன இருந்தாலும் நாம் அவனை மட்டுமே நோக்கும்படி செய்துவிடுகிறான்” என்றாள். “காலத்தைப் புரட்டுவாயா?” என்றார் தருமன். “தெரியாமல் செய்துவிட்டேன்” என்றான் முண்டன். “எங்கே, புரட்டு பார்ப்போம்” என்றார் தருமன். “எவருடைய காலத்தை?” என்றான் முண்டன். “மூடா, உன்னுடைய காலத்தைத்தான்…” என்றார் தருமன். “நீ என் கையால் அறைவாங்குவாயா இல்லையா என்று சொல்!”

“முன்னோக்கிச் செல்… நாளை என்ன நடக்கப்போகிறது என்று பார்த்துச் சொல்” என்றான் நகுலன். “ஆம்” என்று சொல்லி அவன் நான்குமுறை சுழன்று நின்று “ஆ!” என்றான். “என்ன?” என்றான் நகுலன். “என்ன?” என்றார் தருமன் திகைப்புடன். “எனக்கு பன்றிக்கறியிட்ட ஊன்சோறு அளிக்கப்படுகிறது.” நகுலன் சிரித்து “அதைவிட சற்றே முதன்மைகொண்ட சிலவற்றைச் சொல்லலாம்” என்றான். “அரசி தேன்சேர்த்த கனிக்கூழை எனக்கு அளிக்கிறார்கள்.” நகுலன் “சரி, வேறு?” என்றான். “காட்டுக்குள் ஒரு யானை வந்து அகழிக்கு அப்பால் நின்று துதிதூக்கி நுண்மணம் கொள்கிறது. இரண்டு குரங்குகள் அதன் மேலே கிளையிலமர்ந்து அதை அச்சுறுத்தி துரத்துகின்றன. அதன் மேல் காக்கை எச்சம் வெண்சுண்ணமாக வழிந்துள்ளது.”

நகுலன் சலிப்புடன் “நன்று, அனைத்தையும் பொதுவாகவே உன்னால் சொல்லமுடியும் போலும். நீ விழைவது நிகழ்க!” என்றான். “தேன்பழக்கூழை தாடியும் முடியும் நீண்ட ஒரு விருந்தினருக்கு அளிக்கிறார்கள் அரசி” என்று முண்டன் சொன்னான். “அரசரை எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து கால்தொட்டு வணங்கிவிட்டு பீடத்திலமர்ந்திருக்கும் அவர் ஓர் இளமுனிவர் என எண்ணுகிறேன். இன்சுவையை அவர் அருந்துகிறார். அவர் கண்கள் வண்டுகள்போல ஒளிகொண்டிருக்கின்றன. கரிய சிறு உடல் குதிரைக்குட்டியின் இறுக்கம் கொண்டது.”

“அப்போது பெருங்குரல் எழுகிறது. பேருடலர் முன்னரே செய்தியறிந்து வந்திருக்கிறார். வந்த விரைவிலேயே இளமுனிவரை அவர் அள்ளிஎடுத்துச் சுழற்றி தன் தோளிலேற்றிக்கொண்டு நடனமிடுகிறார். இருவரும் குடிலே அதிரும்படி நகைக்கிறார்கள். குரங்குகள் அதைக் கண்டு திகைக்கின்றன. ஓரிரு குட்டிகள் மட்டும் கிளையிறங்கி வந்து சுவர்விளிம்பில் அமர்ந்து அவர்களின் நடனத்தை விரும்பி நோக்குகின்றன.” தருமனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கைகளை கோத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார்.

“மற்ற குரங்குகள்?” என்றான் சகதேவன். “அவை இளமுனிவரை அஞ்சுகின்றன. அவர் தோள்களெல்லாம் தழும்பாக இருக்கின்றன. அவர் மாவில்லவராக இருக்கவேண்டும்.” தருமன் “என்ன சொல்கிறாய்?” என்று கூச்சலிட்டபடி ஓடிவந்து குள்ளனைப் பிடித்து உலுக்கினார். “என்ன சொல்கிறாய்? பார்த்தன் வரப்போகிறானா? நாளை மறுநாளா? உண்மையாகவா?” நகுலன் “நம் உள்ளத்தின் விழைவைத் தெரிந்துகொண்டு விளையாடுகிறான், மூத்தவரே” என்றான். “நான் விளையாடித் தெரிந்துகொள்பவன், அரசே” என்றான் முண்டன். “நீங்கள் அழுவதை காண்கிறேன். அரசி வாயிலருகே சாய்ந்து நின்று கண்ணீர் ஒளிவிட நோக்குகிறார். இவர்கள் இருவரும் அழுகையும் சிரிப்புமாக நின்றிருக்கிறார்கள்.”

“எப்படி அறிந்தாய்? சொல்?” என்றார் தருமன். “நான் நாட்களைப் புரட்டுகிறேன். முன்னால் சென்றால்தானே நீங்கள் அஞ்சுகிறீர்கள். இதோ, பின்னால் வருகிறேன்” என்றபடி அவன் எதிர்த்திசையில் சிலமுறை குதித்து “ஆ!” என்றான். “என்ன?” என்றான் நகுலன் எரிச்சலுடன். “அடுமனையில் புல்லரிசிக்கஞ்சி கொதிக்கிறது. புளிக்காய்த் துவையல் அரைக்கிறார் அரசி.” நகுலன் “சரி” என்றான். “புலி ஒன்று வருகிறது. குடிலை தொலைவில் நின்று நோக்கியபின் கோட்டுவாய் விரித்து தலையை உலுக்கி உடுக்கோசையாக காதடித்து திரும்பி பொத்துக்கால் வைத்து நடந்தகல்கிறது. அதன்மேல் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூடி கூச்சலிட்டு எம்பிக் குதிக்கின்றன. அதன்மேல் சுழலும் ஈக்கள் இளவெயிலில் ஒளிவிட்டு அனல்துளிகளாகின்றன.”

“உண்மை” என்றார் தருமன். நகுலன் அவனை கண்களைச் சுருக்கி நோக்கினான். “அரசர் சலிப்புடன் பேசிக்கொண்டிருக்கிறார். பின்னர் கீழிறங்கி தோட்டத்திற்குச் செல்கிறார். வெறும் கைகளுடன் புலியை தேடிச்செல்கிறார். புலிக்கால்தடத்தைத் தேர்ந்து சென்று கோமதிக்கரை நாணல்வெளியில் அப்புலியை காண்கிறார். ஏராளமான குரங்குக்குட்டிகள் புலியைச் சூழ்ந்து சீண்டி விளையாடுகின்றன. அவர்களுடன் சேர்ந்து பேருடலரும் ஆடிக்கொண்டிருப்பதை அரசமரத்திற்குப் பின்னால் நின்று நோக்குகிறார்.”

திகைப்புடன் “ஆம், இது நடந்தது!” என்றார் தருமன். “உண்மை! அப்படியென்றால் இளையோன் வரப்போவதும் உண்மை!” என்று கூவியபடி மீண்டும் அருகே சென்று “உண்மையிலேயே வந்துகொண்டிருக்கிறானா? எங்குள்ளான்?” என்றார். சகதேவன் “நான் முன்னரே அதைக் கணித்து அரசியிடம் சொல்லியிருந்தேன், மூத்தவரே. இந்த மழைக்காலம் அணுகுவதற்குள் விஜயர் திரும்பிவருவார்” என்றான். தருமன் நெஞ்சைப்பற்றியபடி மெல்ல பின்னடைந்து பீடத்திலமர்ந்தார். விழிகள் சுரந்து வழியலாயின. “வரப்போகிறானா? நலமாகத்தான் இருப்பான். எப்படி மாறியிருப்பான்?” என்றார். தலையை அசைத்து “என் இளையோன்… என் மைந்தன்! விஜயன்!” என்றார்.

விழிநீரை சுட்டுவிரலால் துடைத்தபடி மூக்கை துடைத்தார். “எவ்வண்ணம் ஆகியிருந்தாலும் அவன் பார்த்தன். எப்படி இருந்தாலும் நம் உடன்குருதியன்” என்றார். “ஆம் மூத்தவரே, அவர் என்றும் நம் காவலர்” என்றான் நகுலன். “சற்றுமுன் சேர்ந்து உணவுண்ணும்போது ஒரு கணம் சவுக்குச் சுண்டுதல்போல அவ்வெண்ணம் வந்தது என்னுள். ஒரு கை குறைகிறது என்று. ஒன்று குறைந்தாலும் நாம் முழுமையர் அல்லர் என்று. தெய்வங்களே, மூதாதையரே, என் நெஞ்சக் கனலை நீர் கண்டீர்.” பெருமூச்சுடன் மலர்ந்து “தேவி, இளையவன் வரப்போகிறான்…. நம்முடனிருக்கப்போகிறான்!” என்றார். திரௌபதி புன்னகையும் கண்ணீருமாக “ஆம்” என்றாள்.

முண்டன் மீண்டும் இருமுறை சுழன்று நின்று நிலைகொள்ளமுடியாமல் மீண்டும் மீண்டும் சுழன்றான். “என்னால் நிறுத்தமுடியவில்லை. ஏடுகள் புரள்கின்றன, அரசே” என்று கூவினான். மிக விரைவாகச் சுழன்றபோது அவன் ஒரு காற்றாடிபோல கண்ணுக்குத் தெரியாதவனானான். அப்படியே எம்பி சாளரம் வழியாக வெளியே தெறித்து அலறியபடி கீழே சென்றான். அவர்கள் ஓடிச்சென்று நோக்க கீழே சாலமரத்திலிருந்து சென்ற கொடி ஒன்றில் தொற்றி ஆடி மீண்டும் சுழன்று கீழே விழுந்து “ஆ!” என்றான்.

“என்ன?” என்றார் தருமன். “நான் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். இங்கே எல்லாமே வேறுவகையில் உள்ளன. மிகப்பெரிய அரண்மனைகள் செறிந்த தெருக்கள். வணிகர்களின் பெருவண்டிகள். இது ஒரு நகரம்…” நகுலன் “அதன் பெயரென்ன?” என்றான். அவன் “கேட்டுச்சொல்கிறேன்” என்றபின் “இது பாடலிபுத்திரம் என்கிறான்” என்றான்.

“பாடலிபுத்திரமா? எங்குள்ளது அது?” என்றான் சகதேவன். “கங்கைக்கரையில். கங்கையில் பெருநாவாய்கள் பாய்த்தொகை புடைக்க சென்றுகொண்டிருக்கின்றன. இது மகதர்களின் தலைநகர்.” நகுலன் “மகதர்களின் தலைநகர் ராஜகிருஹம் அல்லவா?” என்றான். “அப்படியா?” என்றான் முண்டன். சகதேவன் “ராஜகிருஹத்தைப்பற்றி கேட்டுச் சொல்” என்றான். “ராஜகிருஹம் கைவிடப்பட்டது. தாம்ரலிப்தி மண்மூடி அழிந்ததுமே அதுவும் பொருளிழந்தது” என்றான். சகதேவன் பெருமூச்சுவிட்டு “நன்று” என்றான்.

“இந்திரப்பிரஸ்தம் பற்றி கேள்” என்றார் தருமன். “வேண்டாம்” என்று சகதேவன் உரக்க சொன்னான். “ஏன்?” என தருமன் திரும்ப “வேண்டியதில்லை” என்று சகதேவன் உறுதியுடன் சொன்னான். தருமன் “அஸ்தினபுரி பற்றி…” என கேட்கத் தொடங்கியதும் சகதேவன் “அதுவும் வேண்டியதில்லை” என்றான். திரௌபதி “ஆம், வேண்டியதில்லை” என்றாள். தருமன் அவளை புரியாமல் திரும்பி நோக்கினார். “துவாரகை குறித்து…” என சொல்லெடுத்த பின் தருமன் அடக்கிக்கொண்டார்.

“அய்யய்யோ அய்யய்யோ” என்று முண்டன் அலறினான். “என்ன ஆயிற்று எனக்கு? பித்தனாக ஆகிவிட்டேன் போலும்…” நகுலன் “என்ன?” என்றான். “நான் ஏட்டுச்சுவடிகளை நோக்கி பேசிக்கொண்டிருக்கிறேன். ஆ, ஏட்டுச்சுவடியில் இருப்பவர்கள் என்னிடம் பேசுகிறார்கள்.” கைதூக்கி அனலில் நிற்பவன்போல துள்ளி “காப்பாற்றுங்கள். எனக்கு என்னவோ ஆகிவிட்டது. மருத்துவர்கள் எங்கே?” என்று கூச்சலிட்டான். நகுலன் “யார் உன்னிடம் பேசுகிறார்கள்?” என்றான். “நீங்களெல்லாம்தான்… இவையெல்லாம் ஜயசேனர் எழுதிய கல்யாணசௌகந்திகம் என்னும் நூலில் உள்ளவை!” என்றான் முண்டன். “எவை?” என்றான் நகுலன். “இதோ, நான் பேசுவது உட்பட அனைத்தும்” என்றான் முண்டன்.

முண்டன் விம்மியழுதபடி “என்ன செய்வேன்…? நான் இந்நூலில் இருந்து வெளியே தெறித்து வந்துவிட்டேன்… என்னை உள்ளே இழுங்கள்” என்றான். தருமன் “பித்தனைப்போல் பேசுகிறான்” என்றார். முண்டன் “உயிருடன் நூலுக்குள் புகமுடியுமா? பாண்டவர்கள் காவியத்திற்குள் பிறந்தார்கள் என்கிறார்களே… நேரடியாகவே நூலுக்குள் ஐந்து குட்டிகள் போடப்பட்டிருக்கின்றன” என்றபடி தவித்துப் பரிதவித்து காற்றிலேயே முட்டிமோதி “அய்யய்யோ, வழியே இல்லையே. எல்லா பக்கங்களையும் உரையெழுதி மூடிவைத்திருக்கிறார்களே மூடர்கள்” என்றான்.

அவனுக்குப் பின்னால் ஒரு பெருங்குரங்கு வந்து இறங்கியது. “யார் நீர்?” என அவன் திடுக்கிட்டுத் திரும்பி கேட்டான். அது “ர்ர்ர்” என்றது. அவன் அலறியபடி மீண்டும் பல சுழற்சிகளாக எழுந்து சென்றதுபோலவே மீண்டு அறைக்குள் வந்தான். “அனுமன்! அனுமன்!” என்றபின் கண்களைத் திறந்து “ராமகதைக்குள் விழுந்துவிட்டேனா? என்ன இது? இங்கிருந்து ஏதாவது வேதத்திற்குள் சென்றுவிழுந்தால் வாய் ஓயாத பெருந்தவளையாக ஆகிவிடுவேனே?” என்றான். நகுலன் அவனை உலுக்கி “விழித்துக்கொள்” என்றான்.

முண்டன் தலையைத் தட்டியபடி “என்ன ஆயிற்று?” என்றான். “நீ எங்கோ சென்றாய்” என்றான் நகுலன். “ஆம், ஒரு நூலுக்குள்… அல்லது நூலில் இருந்து வெளியே வந்தேனா?” சகதேவன் “அந்த நூல் எது?” என்றான். “அது ஒரு இன்பச்சுவைக் காவியம்… ஜயசேனர் அதை உக்ரசிரவஸ் சௌதி பாடிய பாரதப்பெரும்பாடல் என்னும் நாவுரை காவியத்திலிருந்து எடுத்து விரிவாக்கியிருக்கிறார். உக்ரசிரவஸ் சௌதி தன் பாடல்களை வைசம்பாயனரும் பைலரும் சுமந்துவும் ஜைமினியும் எழுதியவற்றைக் கொண்டு அமைத்தார். அவர்கள் மகாவியாசராகிய கிருஷ்ண துவைபாயனரின் மாணவர்கள். அவர் எழுதிய வெற்றிக்காவியத்தை அவர்கள் விரித்தெழுதினார்கள்.”

“வியாசர் உண்மையில் சூதர்கள் பாடியதைக் கேட்டுத்தான் எழுதினார். சூதர்கள் வேறு சூதர்கள் பாடியதைக் கேட்டு பாடினர். வேறு சூதர்கள் மக்கள் சொன்னதைக் கேட்டு பாடினார்கள். மக்கள் பிறர் சொன்னதைக் கேட்டு சொன்னார்கள். அந்தப் பிறர் மேலும் பிறர் சொன்னதைக் கேட்டு சொன்னார்கள். அந்த மேலும் பிறர் பொதுவாக சொல்லப்பட்டதைக் கேட்டு சொன்னார்கள். உண்மையில் அவர்கள்…” என்று அவன் சொல்ல இடைமறித்த சகதேவன் “நன்று. நீ சென்று ஓய்வெடுக்கலாம்” என்றான். முண்டன் கைதூக்கி சோம்பல் முறித்து “உணவருந்திவிட்டு ஓய்வெடுப்பதே என் வழக்கம்” என்றான்.

திகைப்புடன் “இப்போதுதானே உணவருந்தினாய்?” என்றான் நகுலன். “நான் அப்படி முறைமைகளை கைக்கொள்வதில்லை” என்றபின் முண்டன் திரௌபதியிடம் “அரசி, மீண்டும் அன்னமிட உங்கள் உள்ளம் எண்ணுவதை அறிகிறேன்” என்றான். திரௌபதி சிரித்து “வா” என்றாள். “உணவிடச்செல்லும் பெண்கள் பேரழகிகள். உணவுடன் வருகையில் அவர்கள் மேலும் அழகியராகிறார்கள்” என்றபடி முண்டன் அவளைத் தொடர்ந்து சென்றான். கீழே கிடந்த தாலமொன்றை காலால் தட்டி மேலெழுப்பி கையிலேற்றி சுட்டுவிரல்முனையில் சுழற்றியபடி “பாண்டவனே கேளாய்… அறநிலையாகிய குருநிலையில்…” என்று சொன்னபடி போனான்.

“பெருநடிகன்” என்றான் நகுலன். “நடிக்கும்போது நடிக்கப்படுவதாக மாறிவிடுகிறான். மானுடன் எப்படியும் தன்னை ஆக்கிக்கொள்ளமுடியும்” என்றான் சகதேவன். தருமன் “அவன் சொல் பொய்க்காதென்று என் உள்ளம் சொல்கிறது. இளையோன் வரவிருக்கிறான்” என்றார்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 57

[ 19 ]

மாளிகைகள் செறிந்த அமராவதியின் அகன்ற வீதிகளின் வலைப்பின்னலில் இளங்காற்றில் அலைவுறும் கருநீலக் குருவியின் மெல்லிறகென அர்ஜுனன் திரிந்தான். ஒவ்வொரு மாளிகையும் முதற்கணம் விழிவிரிய நெஞ்சுகிளர வியப்பூட்டியது. ஒவ்வொரு தூணாக, உப்பரிகையாக, வாயிலாக, சாளரமாக விழிகள் தொட்டுச்சென்றபோது முன்பே அறிந்திருந்த அது முகம் தெளிந்தது. எங்கு எங்கு என நெஞ்சு தவித்து அடையாளம் கண்டுகொண்டு அவன் அகம் துள்ளியெழுந்தது. அவனறிந்தவை அனைத்தும் முழுக்க மலர்ந்திருந்தன அங்கு. இங்கிருக்கும் ஒவ்வொன்றும் அங்கு தன்னில் ஒரு அணுவைத்தான் சொட்டிவைத்துள்ளன என்று ஒருமுறையும் அங்குள்ளவை எல்லாம்  இங்குள்ளவையென பெருகும் வாய்ப்புள்ளவை அல்லவா என்று மறுமுறையும் தோன்றிக்கொண்டிருந்தது.

அத்தனை மாளிகைகளும் அவனை அறிந்திருந்தன. புன்னகையுடன் இதழ் விரித்தவை, சொல்லெடுக்க சற்றே வாய் திறந்தவை, மகிழ்ந்து அழைக்கும்பொருட்டு வாய் குவிந்தவை, தன்னுள் ஆழ்ந்து கண் மயங்கியவை, கனவில் விழிமூடி புன்னகை கொண்டவை. பால்நுரையென வெண்மாளிகைகள், மலரிதழென இளஞ்சிவப்பு மாளிகைகள், மீன்கொத்தியின் இறகுப்பிசிறு என நீலமாளிகைகள். முகில்கீற்றென கருமை கொண்டவை, இளந்தளிரென பச்சை ஒளி கொண்டவை, காலைப்பனி என பொன்னிறம் கொண்டவை. அனைத்து வண்ணங்களும் ஒளியே என்று அங்கு உணர்ந்தான்.

மண்ணில் அவன் அறிந்த அனைத்து மாளிகைகளும் எடையென்றே தங்கள் இருப்பை காட்டியவை. அமராவதியின் மாளிகைகள் அனைத்தும் அறியமுடியாத கையொன்றால் தாங்கப்பட்டவை என மிதந்து நின்றன. மூச்சுக்காற்றில் அவை மெல்ல அலைவுறுமென்றும் கைநீட்டி தொடச்சென்றால் புகைக்காட்சியென உருவழியுமென்றும் மயல் காட்டின.

நகரில் அனைத்து முகங்களும் பேருவகையொன்றின் உச்சியில் திளைத்து நிறைந்தமைந்த பாவனை கொண்டிருந்தன. நாவே உடலாகித் திளைக்கும் இன்சுவை, நெஞ்சு கவிந்தெழும் இசைத்தருணம், சித்தம் திகைக்கும் கவிப்பொருளவிழ்வு, தான் கரைந்து ஊழ்கவெளியில் அமைதல். இவர்களை இம்முனையில் நிறுத்துவதேது? இருப்பே தவமென்றான நிலையில் எய்துவதுதான் என்ன?

தேவர் முகங்களை கூர்ந்து நோக்கியபடி சென்றான். அவையனைத்தும் அவன் முன்பறிந்த முகங்கள். இதோ இவர் முகம்! காமரூபத்தின் கடைத்தெரு ஒன்றில் உடலெங்கும் சொறியுடன் தன் கடைமுன் வந்து நின்று வாலாட்டிய நாய்க்கு குனிந்து ஒரு அப்பத்தைப் போட்டு புன்னகைத்த சுமைவணிகன். அக்கணத்தில் சூடியிருந்த முகம் இது. காசியில் வேள்விச்சாலைவிட்டு வெளிவந்து கையிலிருந்த அவிப்பொருளை அங்கு நின்றிருந்த கரிய உடலும் புழுதி படிந்த கூந்தலும் கொண்டிருந்த பிச்சிக்கு தாமரை இலைபரப்பி நீர்தெளித்து வலக்கையால் அள்ளிவைத்து அன்னம் ஸ்வாகா என உரைத்து கைகூப்பி அளிக்கையில் முதிய அந்தணர் கொண்டிருந்த முகம் அது.

இந்த முகத்தை எங்கோ ஓர் இசைநிகழ்வின் திரளில் பார்த்திருக்கிறேன். அந்த முகம் மிக அப்பால் ஒலித்த ஆலயமணி ஓசையைக் கேட்டு அசைவிழந்து நின்று கைகூப்பியவர் மேல் கனிந்திருந்தது. அது இல்லத்திலிருந்து நடை திருந்தா சிறுமகன் இரு கைகளை விரித்து ஓடிவரக்கண்டு குனிந்து கைவிரித்து கண்பனிக்க அணுகிய தந்தைக்குரியது. முலையூட்டி உடல்சிலிர்த்து இமைசரிந்து முற்றிலும் உளம் உருகிச்சொட்ட அமர்ந்திருந்த அன்னையல்லவா அது! இது நோயுற்றுக் கிடந்த இரவலன் அருகே துயிலாது விழித்திருந்து பணிவிடை செய்த பிறிதொரு இரவலனின் முகம். மாளவத்துப் பெருஞ்சாலையில் அவன் முகம் சோர்ந்திருந்தது. இங்கு அவ்விழிகளின் அளிமட்டும் விரிந்து எழுந்திருக்கிறது.

அந்தக் கணங்களின் முகங்கள். அவை எழுந்து திரண்டு அலை கொண்டிருந்தது அப்பெருவெளி. நடப்பது களைப்பை உருவாக்கவில்லை. எண்ணினால் எழுந்து பறக்க முடிந்தது. எண்ணுமிடத்திற்கு அக்கணமே செல்ல முடிந்தது. எண்ணம் எண்ணியாங்கு சென்றடையுமென்றால் இடமென்பதே ஓர் எண்ணம் மட்டும்தான். இடமிலாதானால் காலமும் மறைகிறது. காலமில்லாதபோது எங்கு நிகழ்கின்றன எண்ணங்கள்? அவை எண்ணங்களே அல்ல, எண்ணமென எழாத கருக்கள். இவையனைத்தும் ஒற்றைக்கணத்தில் நிகழ்ந்து மறையும் ஒரு கனவு.

குளிர்ச்சுனைகளில் நோக்கிய அவன் முகம் எப்போதோ  ஊசிமுனையென கூர் கொண்டிருந்த இலக்கொன்றை தன் அம்பு சென்று அடைந்தபோது அவன் சூடியிருந்தது. அலை எழுந்த ஏரியில் அவனுடன் வந்த அவன் உருவம்  இளைய யாதவரின் கை தன் தோள் மேல் அமர்ந்திருக்கையில் அவன் கொண்டிருந்தது. மாளிகைப் பரப்பொன்றில் அவன் கண்ட முகம் அபிமன்யூவை கையிலெடுத்தபோது அவனில் பூத்தது.  அந்த முகம் எது? அவன் நின்று அதை நோக்கினான். கைகள் ஏதுமில்லை என விரிந்திருக்க அவன் ஒரு மலைப்பாதையில் விழுந்து இறந்துகொண்டிருந்தான். அருகே எவருமில்லை. அவன் விழிகளில் வானம் நிறைந்துகொண்டிருந்தது. புன்னகையில்லாத மலர்வுகொண்டிருந்தது அம்முகம்.

தளிர்களும் மலர்களும் மட்டுமேயான சோலைகள். வண்ணம் மட்டுமே கொண்ட மலர்களுக்கு பருவுடலென ஒன்று உண்டா என்றே ஐயுற்றான். நிழல்களும் மெல்லிய ஒளி கொண்டிருந்தன. இசை சூடிச்சுழன்று பறந்த கந்தர்வ வண்டுகள் பொன்னென வெள்ளியென அனலென நீர்த்துளியென தங்களை ஒளி மாற்றிக்கொண்டன. இவ்வுலகு ஒவ்வொன்றிலிருந்தும் எடுத்த உச்சங்களால் ஆனது. வேதம் ஒன்றே மொழியென்றானது. புன்னகை ஒன்றே முகங்கள் என்றானது. புன்னகையே கண்ணீராகவும் இங்கு சொட்டமுடியும்.

தனிமை எப்போதும் அத்தனை முழுமை கொண்டிருந்ததில்லை என்றுணர்ந்தான். தான் என்னும் உணர்தல் ஒருபோதும் அத்தனை நிறைவளித்ததில்லை. சென்று சேர இலக்கின்றி வந்த வழியின் நினைவின்றி ஒருபோதும் கணங்களில் அப்படி பொருந்தியதில்லை. ஏனெனில் இப்பேருலகு உணரும் அக்கணத்தால் மட்டுமே ஆனது. கணமென்று மட்டுமே காலம் வெளிப்படும் வெளி. இதற்கு நீளமில்லை, அகலம் மட்டுமே என்று அவன் எண்ணிக்கொண்டான். உறைவிடமும் உணவும் உணவுக்கலமும் அன்னைமடியும் ஒன்றென்றே ஆன எளிய தேன்புழு. உலகென்று தேனன்றி பிறிதொன்றை உணராதது.

அலைகளில் தானும் உலைந்தாடும் நீர்ப்பாசியின் பொடிபோல அப்பேருலகின் நிகழ்வுகளில் அவனுமிருந்தான். ஆனால் அவன் நீர் அல்லாதுமிருந்தான். நீர் சூழ்ந்த வெளியில் அணுவெனச் சிறுத்து, எவரும் நோக்காதிருந்தும் தானெனும் உணர்வுகொண்டு தனித்திருக்கும் உயிர்த்துளி.

அங்கு மிதந்தலைந்த முகங்கள் அவனை நோக்கி புன்னகைத்தன. விழிகள் அவன் விழிதொட்டு அன்பு காட்டி கடந்து சென்றன. இதழ்கள் குவிந்து விரிந்து இன்சொல் உரைத்தன. உள்ளங்கள் அவன் உள்ளத்தைத் தழுவி அகன்றன. ஆயினும் அவனுள் இருந்து கூர்கொண்டிருந்த முள்ளின் முனை ஒன்று தினவு கொண்டிருந்தது. முள்முனை அளவிற்கே அணுவளவுத் தினவு. சிறியதென்பதனாலேயே முழுச்சித்தத்தையும் அறைகூவுவது. இன்பம் மட்டுமே பெருகி நிறைந்திருக்கும் இப்பெருவெளியில் அது துழாவிக்கொண்டே இருக்கிறது. கூர்முனையின் கூர்மையென ஒரு துளி.

எங்கேனும் தொட்டு குருதி உண்ணத் தவிக்கிறது போலும் அந்த முள். ஏதேனும் விரல் வந்து தன்மேல் அமர விழைந்தது. வந்தமர்வது ஓர் அணுவென்றாலும். முள் அறியும் முள்முனை. முள் என்றுமிருந்தது. எப்பெருக்கிலும் தான் கரையாதிருந்தது. இங்கு அப்படியொன்று தன்னுள் இருப்பதை உணர்ந்த எவரேனும் இருக்கக்கூடுமா? இப்பேருலகம் முற்றிலும் அதற்கு அப்பாற்பட்டது. ஒவ்வொன்றும் மலரும் இங்கு முள்ளென்று ஒன்று மலர்த்தண்டில்கூட இருக்க வழியில்லை. முள்ளை உணர்வதில் விழிகளுக்கு தனித்திறனுள்ளது. ஏனென்றால் நோக்கு என்பது ஒரு முள்.

முள்ளை உணர்ந்த ஒரு விழியும் அங்கு தென்படவில்லை. விழி பார்த்துக்கொண்டிருந்தபோதே அவன் சித்தம் சென்று தொட்டது. நின்று  ‘ஆம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டது. அவள் அம்முள்ளை முதல் நோக்கிலேயே தொட்டறிந்திருந்தாள். அவன் அவளை எண்ணியதுமே மெல்லிய சிரிப்பொலி அவன் காதில் விழுந்தது. திரும்பிப் பார்க்கையில் கடந்து சென்ற யானை ஒன்றின்மேல் முழுதணிக் கோலத்தில் ஊர்வசி அமர்ந்திருந்தாள் அவளைச் சூழ்ந்து வெண்புரவிகளில் அப்சரகன்னிகைகள் அணிகுலுங்க ஆடைநலுங்க அசைந்து சென்றனர்.

[ 20 ]

புரவிகளை பின்னிருந்து காலவெளி உந்தி உந்தி முன்னோக்கி தத்திச் செல்ல செய்தது. யானையை அது கையிலெடுத்து பக்கவாட்டில் ஊசலாட்டியது. புரவி ஒரு சொட்டுதல். யானை ஒரு ததும்புதல். அவன் நின்று அவர்களை நோக்கினான். முன்னால் வந்த களிறு அவனைக் கண்டதும் துதி நீட்டி மணம் கொண்டது. தன் உடலுக்குள் தானே அசைவொன்று உருண்டு அமைய கால்மாற்றி நின்று மூச்சு சீறியது. நின்றுகூர்ந்த செவிகள் மீண்டும் அசையத் தொடங்கின. சிறிய விழிகளை கம்பிமயிர்கொண்ட இமைகள் மூடித் திறந்தன.

மேலிருந்து குனிந்து “இளைய பாண்டவரே, நகர் நோக்குகிறீர்கள் போலும்” என்றாள் ஊர்வசி. “ஆம்” என்று அவன் சொன்னான். வளையல்கள் அணிந்த கையை நீட்டி “வருக! யானை மேலிருந்து நோக்கலாமே?” என்று சொன்ன அவள் விழிகளில் இருந்த சிரிப்பை அவன் சந்தித்தான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “யானை மேலிருந்து நோக்கும் உலகம் பிறிதொன்று” என்று அவள் சொன்னாள். “கரியை காலாக்கியவன் என்று இந்திரனை ஏன் சொல்கிறார்கள் என்று அறிவீர்களா?’’

அவன் அருகே சென்று யானையின் கால்களைத் தொட்டபடி தலைதூக்கி நோக்கி “நீயே சொல்!” என்றான். “பதறாத கால்கள் கொண்டது யானை. ஏனென்றால் அது தன் கால்களை நோக்கமுடியாது. கரியூர்ந்தவன் பிறகொரு ஊர்தியிலும் தன்னை பெரிதென்று உணரமாட்டான்.” அர்ஜுனன் சிரித்தான். அவள் கைநீட்டி “ஏறிக்கொள்க! கரிகாலனின் யானை இது, அவர் மைந்தனை அது நன்கறியும்” என்றாள். “நன்று” என்றபடி அவன் யானையின் முன்கால் மடிப்பில் மெல்லத்தட்ட அது காலைத்தூக்கி படியென்றாக்கியது. அதில் மிதித்து கால் தூக்கிச்சுழற்றி ஏறி அவளுக்குப் பின் அமர்ந்துகொண்டான்.

“செல்க!” அவள் யானையின் மத்தகத்தை மெல்ல தட்டினாள். அது துதிநுனி நீட்டி மண்ணை முகர்ந்து அவ்வழியே காலெடுத்து வைத்து சென்றது. அலைபாயும் படகிலென அவளுடன் அவன் அமர்ந்திருந்தான். அவள் குழல்புரி ஒன்று பறந்து அவன் முகத்தின் மேல் பட்டது. அதை புன்னகையுடன் பற்றி காதருகே செருகிக்கொண்டாள். அது மீண்டும் பறந்து அவனை வருடியது. அவன் அதைப் பிடித்து சுட்டுவிரலில் சுழற்றி சுருளாக்கி கொண்டைக்குள் செருகினான். கழுத்தை நொடித்துத் திரும்பிநோக்கி அவள் புன்னகை செய்தாள்.

சாலையின் இருபுறமும் மாளிகைகள் மிதந்தமிழ்ந்து அலைகொண்டு கடந்து சென்றன. “அமராவதியை நோக்கி நிறைந்தவர் எவரும் இல்லை” என்றாள் ஊர்வசி. “ஏனென்றால் நோக்குபவரின் கற்பனை இது. கற்பனை என்பது ஆணவம். தான் எவரென்று தான் கண்டு முடித்தவர் எவர்?” அர்ஜுனன் “நோக்குகிறேன் என்றுணர்ந்து நோக்கும் எவரும் நிறைவடைவதில்லை” என்றான். “இங்கிருப்பவர் எவரும் இதை நோக்குவதில்லை என்பதைக் கண்டேன். அவர்கள் இதற்குள் இருக்கிறார்கள்.”

“இதற்குள் அமைய உங்களைத் தடுப்பது எது?” என்று அவள் கேட்டாள். அவள் கொண்டை அவன் மார்பைத் தொட்டு அசைந்தது. அவன் “ஒரு முள்” என்றான். “எங்குள்ளது?” என்று அவள் கேட்டாள். “நீ அதை அறிந்ததில்லையா?” என்று அவன் கேட்டான். அவள் சிரித்து “ஆம், அறிவேன்” என்றாள். “முதல் நோக்கிலேயே அதைத்தான் கண்டேன்.” பின்னர் மீண்டும் சிரித்து “முள்ளை முள்ளால்தான் அகற்ற முடியும். அறிவீரல்லவா?” என்றாள்.

“எப்படி?” என்று அவன் கேட்டான். அவள் தலைதூக்கி அவனை நோக்கி “காமத்தை காமத்தால் வெல்வதுபோல” என்றாள். அவள் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. நோக்குணர்ந்ததும் மொட்டு விரிவதுபோல மிக மெல்லிய ஓசையுடன் அவள் இதழ்கள் பிரிந்தன. வெண்பற்களின் ஈரம் படிந்த ஒளிநிரை தெரிந்தது. மென் கழுத்து மலர்வரிகளுடன் விழிக்கு அண்மையில் இருந்தது. அப்பால் தோள்களின் தாமரைநூல் போன்ற வளையக்கோடுகள். பொற்சங்கிலி ஒன்றின் ஒளிமட்டும் விழுந்ததுபோல. கச்சின் வலுக்குள் இறுகிய இளமுலைகள் நடுவே மென்மையென்றும் இளமையென்றும் துடித்தது நெஞ்சு.

அவள் இடையை தன் கைகள் வளைத்திருப்பதை அவன் உணர்ந்தான். அதை பின்னிழுக்க விழைந்தான். ஆனால் உடனே அதைச் செய்தால் அவள் அவ்வச்சத்தை உணர்ந்துவிடக்கூடும் என எண்ணி தயங்கினான். அந்தத் தயக்கத்தை அவள் உணர்ந்துகொண்டு அவன் கைமேல் தன் கையை வைத்துக்கொண்டாள்.  விழிகளை திருப்பிக்கொண்டு “ஆம்” என்று அவன் சொன்னான்.  அவன் கையை அழுத்தியபடி  “இருக்கிறேன் என்று. பின் நான் என்று. நானே என்னும்போது ஒரு துளியேனும் குருதியின்றி அது அமைய முடியாது” என்று அவள் சொன்னாள்.

“நன்கு அறிந்திருக்கிறாய்” என்று அர்ஜுனன் மெல்லிய கசப்புடன் சொன்னான். “ஆண்களின் பொருட்டே உருவாகி வந்தவள் நான். என் உடல் ஆண்களின் காமத்தால் வடிவமைக்கப்பட்டது. என் உள்ளம் அவர்களின் ஆணவத்தால் சமைக்கப்பட்டது” என்றாள் ஊர்வசி. இடக்கு தெரியாத இயல்பான குரலில் “ஆணுக்கு முற்றிலும் இசைவதன் மூலம் அவனை மூடனாக்குவீர்கள். மூடனுடன் முற்றிலும் இசைய உங்களால் இயலும்” என்றான் அர்ஜுனன்.

அவள் அதைப் புரிந்துகொண்டு சிரித்து “ஆண்களிடம் குன்றா பெருவிழைவை உருவாக்கும் பெண் அவர்களுக்கு முற்றிலும் அடிபணியும் இயல்பு கொண்டவளல்ல. தன் அச்சை வாங்கி உருக்கொண்டு எதிர்நிற்கும் பெண்ணிடம் ஆண் முழுமையாக பொருந்தக்கூடும். ஆனால் அவளை அக்கணமே மறந்தும் விடுவான். அவனை ஒவ்வொரு கணமும் சீண்டி உயிர்ப்பிக்கும் ஆணவத்தின் துளியொன்றை தானும் கொண்டிருப்பவளே நீங்கா விருப்பை அவனில் உருவாக்குகிறாள். அவன் அவள் ஊரும் வன்புரவி. பசும்புல்வெளியென்றும் பின்தொடையில் எப்போதுமிருக்கும் சவுக்கின் தொடுகையென்றும் தன்னை உணரச்செய்பவள்” என்றாள்.

மறுகணமே விழிகளில் ஏளனம் வெளிப்பட முகவாய் தூக்கி உடல் குலுங்க நகைத்து “ஆனால் கொழுந்தாடுபவை விரைந்தணைய வேண்டுமென்பதே நெறி” என்றாள். “அனல் ஈரத்தை முற்றும் உண்டபின் விலகி வானில் எழுகிறது. பின்பு ஒருபோதும் எரிந்த கரியை அது திரும்பிப்பார்ப்பதில்லை.” அவளுடைய நேரடியான பேச்சால் சீண்டப்பட்ட அர்ஜுனனை அந்த விளையாட்டுச்சிரிப்பு எளிதாக்கியது. அவள் இடையை அழுத்தி தன்னுடன் அவளை சேர்த்துக்கொண்டு  “நீ எரியென படர்பவளா?” என்றான். அவன் விழிகளை சிறுகுழந்தையின்  தெளிந்த நோக்குடன் ஏறிட்டு “ஆம், நான் அதற்கென்றே படைக்கப்பட்டவள்” என்றாள்.

அவன் நோக்கை விலக்காமல் “அதன்பொருட்டே என்னையும் அணுகுகிறாயா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “இங்கு நீங்கள் எழுந்தருளியபோது உங்கள் ஆழத்தில் கூர்ந்திருந்த அந்த முள்ளை உணர்ந்தவள் நான். முள்முனை உணரும் முள்முனை ஒன்றுண்டு.” அர்ஜுனன் முகத்திலிருந்த நகைப்பு அணைய “ஆம், உண்மை” என்றான். “இங்கு இப்பெருநகரின் வீதியில் மகிழ்ந்து திளைத்து நீங்கள் அலைந்து கொண்டிருப்பதாகவே இங்குள்ள பிறர் எண்ணக்கூடும். ஒவ்வொரு கணமும் அந்த முள் முனையில் நஞ்சு செறிவதை நான் உணர்கிறேன்” என்றாள்.

“நானும் அதை இப்போதுதான் உணர்ந்தேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “அந்நஞ்சு ஏன் என்றே என் உள்ளம் வியந்துகொள்கிறது.” அவள் “இவை அமுதென்பதனால் அது நஞ்சு, அவ்வளவுதான்” என்றாள். “இருக்கிறேன் என்றுணர்கையில் அது துளி, நானென்று எழுகையில் அது கூர்மை. எவர் என்று தேடுகையில் அது நஞ்சு. இளைய பாண்டவரென நீங்கள் இருக்கையில் ஆம் நீங்கள் இளைய பாண்டவரென சூழ்ந்திருக்கும் அனைத்தும் திருப்பிச் சொல்லியாக வேண்டும்.” அவள் அவன் கையைப்பற்றி “அவ்வண்ணம் திருப்பிச் சொல்ல இங்கிருப்பவள் நானொருத்தியே” என்றாள்.

“அந்நஞ்சு உன்னை அச்சுறுத்தவில்லையா?” என்றான் அர்ஜுனன். “ஆண்களின் அந்நச்சு முனையே பெண்களைக் கவர்கிறது” என்று அவள் விழிகளில் சிரிப்புடன் சொன்னாள். “நச்சுப்பல் கொண்ட நாகங்களையே நல்ல பாம்பாட்டிகள் விரும்புவார்கள்.” அர்ஜுனன் அச்சொற்களைக் கேட்காதவன் போல தன்னுள் ஆழ்ந்திருந்தான். “பெண்ணுக்குள் உள்ள முள்முனையால் அம்முள்முனையை தொட்டறிவதைப்போல காதலை நுண்மையாக்கும் பிறிதொன்றில்லை” என்று அவள் மீண்டும் சொன்னாள்.

“இது மேலும் தனிமையையே அளிக்கிறது” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் நகைத்து “அத்தனிமையை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்” என்றாள். அர்ஜுனன் “வேட்டையாடி காமம் கொண்டாடிய நாட்களிலிருந்து நான் நெடுந்தொலைவு விலகி வந்துவிட்டேன்” என்றபின் “உன்னுடன் நான் காமம் கொண்டால் அது என் ஆடிப்பாவையைப் புணர்வதுபோல பொருளற்றது. நீ கொண்டுள்ள இத்தோற்றம் இந்நகைப்பு இந்தச் சீண்டல் அனைத்துமே என் விழைவுகளிலிருந்து எழுந்து வெளியே திரண்டு நிற்பவை என்று நானறிவேன். எதிரொலியுடன் உரையாடுவதுபோல் அறிவின்மை பிறிதொன்றில்லை” என்றான்.

“ஆணவத்தின் உச்சத்தில் நிற்பவர்கள் காமம் கொள்வது தன்னுடன் மட்டுமேதான்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் “எனது ஆணவம் அத்தனை முதிரவில்லை போலும்” என்று சொல்லி புன்னகைத்தான். இயல்பாகவே அவர்களுக்குள் சொல்லாடல் அடங்கியது. இருபுறமும் நிரைவகுத்த மாளிகைகளின் நடுவே அவர்களின் களிறு முகில் பொதியென சென்றுகொண்டிருந்தது.

ஏன் உரையாடல் நிலைத்தது என அவன் எண்ணிக்கொண்டான். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே உரையாடல் தேய்ந்திறுவது எதனால்? சொல்லித்தீர்வதல்ல காமம். காமத்தை முகமாக்கி அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் வகுத்துக்கொள்கிறார்கள். அவ்வரையறைமேல் ஐயம்கொண்டு அதன் எல்லைகளை சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கோ ஓரிடத்தில் உள்ளிருக்கும் உண்மையைச் சென்று தொட்டுவிடுகிறார்கள். அது இருவரும் சேர்ந்து தொடும் உண்மை. ஆகவே இருவரும் சொல்லிழந்துவிடுகிறார்கள்.

அவள் “தங்களை இன்று அவையில் அரசர் சந்திக்கக்கூடும்” என்றாள். அவ்வாறு முற்றிலும் புதிய இடத்தில் அவள் தொடங்கியது அவன் எண்ணியது உண்மை என உணரச்செய்தது. “ஆம், எனக்கு செய்தி வந்தது” என்று அர்ஜுனன் சொன்னான். “அதற்குள் உங்களிடம் அவர் உரைக்கவேண்டிய அனைத்தையும் அவர்பொருட்டு பிறர் உரைத்திருப்பார்கள்” என்றாள் ஊர்வசி. இயல்பாக சந்தித்த நான்கு மைந்தர்களும் கணாதரும் பேசியவை அவன் நினைவில் எழுந்தன. அவை ஒரு திட்டத்துடன் சொல்லப்பட்டவை என்பதை அப்போதுதான் உணர்ந்து “ஆம்” என்றான்.

“உங்களை சந்திப்பதற்கு முன் நீங்கள் சிலவற்றை உணர்ந்திருக்க வேண்டுமென்று அவர் விழைகிறார்” என்றாள் ஊர்வசி. “நீயும் அதற்கென அனுப்பப்பட்டாயா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆமென்றே கொள்ளுங்கள்” என்று அவள் சொன்னாள். “சொல்” என்று அர்ஜுனன் சற்று எரிச்சலுடன் சொன்னான். “உங்களை நேற்று தோளணைத்து அழைத்துச் சென்ற மூத்தவர் பிறந்ததெப்படி என்றொரு கதை உண்டு, அறிந்திருக்கிறீர்களா?” என்றாள் ஊர்வசி. அவ்வினாவின் பொருளென்ன என்று உணரமுடியாமல் விழிசுருக்கி அவன் நோக்கினான்.

“விண்ணவர்க்கரசர் ஒருமுறை கிழக்கே இந்திரகீலமலைமேல் தன் தேவமகளிருடன் சோலையாடச் சென்றிருந்தார். அவ்வழியாகச் சென்ற சூரியனின் மாற்றுருவான தேர்ப்பாகன் அருணன் அக்களியாடலைக் கண்டான். அவர்களுடன் சேர்ந்து கொள்ளும்பொருட்டு தன் மாயத்தால் பெண்ணுருவம்கொண்டு அருணி என்னும் பெயருடன் அம்மலையில் இறங்கினான்.  கன்னியருடன் ஆடிய முதல் தேவர் அவர்களில் அருணியே அழகு நிறைந்தவள் என்று கண்டார். அவள் உளம்கவர்ந்தார். மின்படையோனின் மாயத்தால் காதல்நிறைந்தவளாக மாறிய அருணியும் அவருடன் காமத்திலாடினாள். அவ்வுறவில் பிறந்தவரே கிஷ்கிந்தையின் அரசனென வந்த பாலி” என்று ஊர்வசி சொன்னாள்.

“தொல்கவியின் காவியத்தில் அச்செய்தி உள்ளது” என்றான் அர்ஜுனன். “அக்கதை சுட்டும் செய்தி என்ன என்று பாருங்கள்” என்று ஊர்வசி சொன்னாள். “மாகேந்திர வேதம் திகழ்ந்த நாளில் கிழக்கின் தலைவனெனத் திகழ்ந்தவர் சூரியன். மகாவஜ்ரவேதம் எழுந்தபோது அவிகொள்ளும் உரிமைகளை பகிர்ந்தளித்த பிரம்மன் திசைகளை தேவர்களுக்குரியதாக்கினார். தெற்கு எமனுக்கும் வடக்கு குபேரனுக்கும் மேற்கு வருணனுக்கும் வடகிழக்கு ஈசானருக்கும் தென்கிழக்கு அனலவனுக்கும் வடமேற்கு வளிதேவனுக்கும் தென்மேற்கு நிருதிக்கும் அளிக்கப்பட்டது. கிழக்குத்திசை இந்திரனுக்குரியதாகியது.”

“கிழக்கின் தேவனாகிய சூரியனை அது சினம்கொள்ளச் செய்தது. இந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூசல் எழுந்தது. திசை தேவன் எவன் என்பதில் தேவர்களும் முனிவர்களும் குழம்பினர். இந்திரனுக்கு அளிக்கும் அவி தனக்குரியது என்று சூரியன் எண்ணினார். சூரியனுக்கு அவியளிக்கலாகாதென்று இந்திரன் ஆணையிட்டார். ஆயிரமாண்டுகாலம் அப்பூசல் நிகழ்ந்தது” என்றாள் ஊர்வசி.

“மகாநாராயண வேதம் எழுந்தபோது எட்டுத்திசைகளும் அதன் மையமும் விஷ்ணுவுக்குரியதே என்று அது கூறியது. அவியனைத்தும் முதலில் விஷ்ணுவுக்குச் சென்று அவர் அளிக்கும் முறைமையிலேயே பிறருக்கு அளிக்கவேண்டுமென அவ்வேதவேள்வியில் வகுக்கப்பட்டது. அது இந்திரனையும் சூரியனையும் சினம்கொள்ளச் செய்தது. அச்சினம் அவர்கள் இருவரையும் ஒன்றென இணைத்தது” என்றாள் ஊர்வசி. “அவ்விணைப்பின் விளைவாக இந்திரகுலத்திற்கும் சூரியகுலத்திற்கும் இடையே உருவான உறவே பாலியை உருவாக்கியது.”

அவள் சொல்லவருவதென்ன என அவன் எதிர்நோக்கி அமர்ந்திருந்தான். “இளைய பாண்டவரே, இந்திரன் மைந்தர் நீங்கள். உங்கள் மூத்தவராகிய கர்ணன் சூரியனின் மைந்தர். நீங்கள் இருவரும் ஒன்றாகவேண்டும் என்று உங்கள் தந்தை விழைகிறார். அதுவே அவர் உங்களுக்கிடும் ஆணை என்றும் சொல்வேன்” என்றாள். அர்ஜுனன் பேசாமல் கூர்ந்த விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தான். “உங்கள் பொது எதிரி மகாநாராயண வேதமே. அதன் விழுப்பொருளாகத் திரண்டு வரும் மெய்மையையே இளைய யாதவர் முன்னிறுத்துகிறார்.”

அர்ஜுனன் மெல்லிய பொறுமையின்மையை உடலசைவில் காட்டினான். அவன் கைமேல் கையை வைத்து “ஆம், உங்களுக்கு அவருடன் இருக்கும் உறவை நான் அறிவேன். உங்கள் தந்தை மேலும் அறிவார்” என்றாள். “ஆனால் மைந்தருக்கு தந்தையுடனான கடன் என்பது ஊழால் வகுக்கப்பட்டது. பிரம்மத்தின் விழைவையே ஊழென்கிறோம். அக்கடனிலிருந்து நீங்கள் விலகமுடியாது.”

அர்ஜுனன் “களிறு நிற்கட்டும்” என்றான். “பொறுங்கள், நான் சொல்வதை கேளுங்கள்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் களிறின் பிடரியில் தட்ட அது நின்று முன்வலக்காலைத் தூக்கியது. “அங்கு நிகழ்வது வேதங்களின் போர். நீங்கள் நின்றிருக்கவேண்டிய இடம் உங்கள் தந்தையின் தரப்பே” என்று அவள் சொன்னாள். அவன் யானையின் கால்களினூடாக இறங்கி திரும்பி நோக்காமல் நடந்தான்.