பிரயாகை

நூல் ஐந்து – பிரயாகை – 92

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 5

நள்ளிரவில் மூன்றாம் சாமத்தின் தொடக்கத்துக்காக பெருமுரசு ஒலித்தது. மிதுனராசிக்கு இடம்பெயர்ந்த வியாழன் ஊதப்பட்ட அனல்துண்டு போல சந்திரன் சூடிய மணிமுடியில் ஒட்டியிருந்து ஒளிவிட்டது. காலடியில் ரோகிணி ஊசி முனை போல சுடர்ந்து அமர்ந்திருந்தாள். சந்திர வட்டம் முகிலில் முழுமையாக மறைந்து பின்னர் மறுபக்கம் வெளிப்பட படபடத்தபடி காகம் ஒன்று மரத்தில் இருந்து எழுந்து வானில் சுழன்று பின் அமைந்தது.

காம்பில்யத்தின் தெற்குக்கோட்டை வாயிலின் அருகே பெருவீதியின் மும்முனையில் இருபக்கமும் நிரைவகுத்த எரிபந்தங்களின் நடுவே படைக்கலங்களுடன் அணிகொண்ட வீரர்களின் முகப்பில் நின்றிருந்த ரிஷபர் நிலைகொள்ளாமல் கிழக்கை நோக்கிக் கொண்டிருந்தார். இருண்ட வானில் எரியம்பு எழுந்தமைவதைக் கண்டதும் அவர் திரும்பி கைகாட்ட, அறிவிப்பாளன் குழற்சங்கை எடுத்து ஊதினான். கோட்டைமேடைமேல் இருந்த பெருமுரசம் சினமெழுந்த யானையின் வயிறு போல உறுமத் தொடங்கியது. கூட்டமாக யானைக்கன்றுகள் பிளிறுவதுபோல கொம்புகள் முழங்கின.

ஒற்றைக்குதிரை இழுத்த திறந்த பந்தத்தேர் நாற்புறமும் பன்னிரு எண்ணைப்பந்தங்கள் எரிய முதலில் வந்தது. காற்றில் நெருப்புகள் கிழிந்து பறந்துகொண்டிருக்க நடுவே நின்றிருந்த எண்ணைச்சேவகன் கலத்திலிருந்து நீண்ட அகப்பையால் அள்ளி அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தான். துடிதாளமென குளம்புகள் ஒலிக்க, உருவிய வாளுடன் அமர்ந்த வீரர்களுடன் நான்கு படைக்குதிரைகள் அதைத் தொடர்ந்து வந்தன. அதன்பின் செந்தழலென படபடத்துப் பறந்த பாஞ்சாலத்தின் விற்கொடியுடன் கொடிச்சேவகன் வெண்குதிரையில் வந்தான். பந்தங்களின் வெளிச்சத்தில் வெள்ளிச்சிற்பங்களில் பொன்மின்ன, செந்நிறத் திரைச்சீலைகளில் தழல்நெளிய, இரட்டைக்குதிரைகள் இழுத்த அரசரதம் வந்து சகட ஒலியுடன் நின்றது. கடிவாளம் இழுபட்ட குதிரைகள் பற்கள் தெரிய தலைதிருப்பி விழித்த கருங்கண்களில் பந்தச்சுடர்களை காட்டின.

கூடிநின்ற வீரர்களும் ஐங்குலத்துப் பூசகர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். ரிஷபர் ஒடிச்சென்று தலைவணங்கி நின்றார். ரதவாயில் திறந்து வெள்ளிப்படிகளில் காலெடுத்து வைத்து கையில் பூசைத்தாலத்துடன் மாயை இறங்கிவந்தாள். தொடர்ந்து திரௌபதியின் கரிய வெற்றுக்கால்கள் திரைவிலக்கி வந்து படிகளில் மெல்ல அமைந்தன. செந்நிறமான மரவுரி ஆடையின் மடிப்புகள் உலைய அவள் இறங்கி தரையில் நின்றதும் வாழ்த்தொலிகள் உரத்தன. ரதத்தின் பின்னால் வந்த வண்டியில் இருந்து இறங்கிய தலைமைச் சேடி அழைக்க ரிஷபர் அருகே சென்றார். அவள் சொன்னதைக் கேட்டு அவர் கையசைத்ததும் முரசுகளும் கொம்புகளும் நின்று மங்கல வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின.

திரௌபதியும் மாயையும் காதிலும் முலைகள் மேலும் அணிகளேதுமின்றி இடைசுற்றி எடுத்து மார்பில் போடப்பட்ட செந்நிற மரவுரி ஆடை மட்டும் அணிந்திருந்தனர். தாலங்களில் மங்கலப் பொருட்களுடன் நின்ற ஐந்துகுலப் பூசகர்களும் அருகே வந்தனர். கிருவிகுலப் பூசகர் மண், கல், வேர், கனி, பொன் என ஐந்து மண்மங்கலங்களை தாலத்தில் ஏந்தி வந்து திரௌபதியின் முகத்தை மும்முறை உழிந்து வாழ்த்தினார். சிருஞ்சய குலப்பூசகர் நீர்ச்சிமிழ், பரல்மீன், முத்து, சங்கு எனும் நான்கு நீர்மங்கலங்களையும் சோமக குலப்பூசகர் சுடர், நெய், வைரம் என்னும் மூன்று எரிமங்கலங்களையும் துர்வாசகுலப் பூசகர் வெண்கொக்கின் இறகு, தளிரிலை என இரண்டு வளிமங்கலங்களையும் கேசினி குலப்பூசகர் விண்மங்கலமான ஆடியையும் தாலத்தில் ஏந்திவந்து அவளை வாழ்த்தினர்.

ஐந்து பருக்களின் மங்கலங்களையும் ஒன்றாக்கி ஒரு பெரியதாலத்தில் பரப்பி அதன் நடுவே மண் அகலில் சுடரை ஏற்றி அவளிடம் அளித்த சோமக குலத்து மூத்தபூசகர் “தேவி, இப்பூசனைப்பொருட்களை உக்ரசண்டிகைக்குப் படைத்து வழிபடுங்கள். ஐந்து பருக்களும் அன்னையின் அடிப்பொடியே ஆகுக. கொல்வேல் தொல்பாவை வாழ்த்துடன் மீளுங்கள். ஓன்று நினைவுகூர்க. இச்சுடர் இங்கிருந்து அன்னையின் ஆலயம் செல்வது வரை அணையலாகாது. மீண்டும் இதை கொளுத்திக்கொள்ளும் எப்பொருளும் தங்களுக்கோ தோழிக்கோ அளிக்கப்படாது. இச்சுடரைக் கொண்டு அன்னையின் ஆலயவிளக்குகளை ஏற்றுங்கள். அவ்விளக்கிலிருந்து மீண்டும் ஒரு சுடர்பொருத்திக்கொண்டு மீளுங்கள்” என்றார்.

கிருவிகுலத்து முதுபூசகர் ”நீங்கள் கொண்டுவரும் அச்சுடரால் ஐந்து அன்னையர் ஆலயங்களிலும் நெய்விளக்குகள் ஏற்றப்படும். இரவெல்லாம் பூசனைகளும் விடியலில் பலியும் முடிந்தபின் ஐந்து அன்னையரின் சுடர்களில் இருந்தும் ஐந்து சுடர்கள் கொண்டுசெல்லப்படும். முதல்சுடர் தென்திசை ஆளும் மூதன்னையரின் நினைவுக்கற்களுக்கு முன் ஏற்றப்படும். இரண்டாவது சுடர் கன்னித்தெய்வங்களுக்கும் மூன்றாம் சுடர் கருநிறைத் தெய்வங்களுக்கும் நான்காம் சுடர் முலையெழு பசுக்களுக்கும் ஏற்றப்படும். ஐந்தாம் சுடர் அந்தப்புரத்தின் தென்மேற்கு மூலையை ஆளும் கன்னிகை யட்சிக்கு முன் ஏற்றப்படும். அத்துடன் இந்த மணச்சடங்குகள் முடிவடைகின்றன. இந்நகரில் அனைத்துக் கடன்களையும் நிறைத்து கனி மரத்தை என நீங்கள் விடுதலை கொள்வீர்கள். அன்னையர் வாழ்த்துக்களும் பெண்ணை தொடரும் தெய்வங்களும் மட்டுமே உங்களுடனிருக்கும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

திரௌபதி அந்தத் தாலத்தில் எரிந்த சிறிய நெய்ச்சுடரை விழிகளுக்குள் அனல்துளிகள் தெரிய நோக்கிக்கொண்டிருந்தாள். மாயை “தாலத்தை வாங்கிக்கொள்ளுங்கள் அரசி” என்றாள். திரௌபதி பாவை என கைநீட்டி அதை வாங்கிக்கொண்டதும் சோமகபூசகர் மாயையிடம் “தேவிக்குத் துணைசெல்க! அன்னையின் பூசனைக்கான முறைமைகளை நீ அறிவாய்” என்றார். “ஆம்” என்றாள் மாயை. ”அவ்வாறே ஆகுக!” என்றார் பூசகர்.

பூசகர் கைகாட்ட மீண்டும் பெருமுரசுகளும் கொம்புகளும் ஒலிக்கத் தொடங்கின. அவர்கள் இருவரும் பெருஞ்சாலையின் கை என பிரிந்த சிறுவழியில் நடந்து கோட்டையின் தென்வாயிலை கடந்தனர். அவர்கள் வெளியேறியதும் சிறுவாயில் மூடப்பட்டது. ஒலிகளும் ஒளிகளும் மெல்ல பின்னிட அவர்களுக்கு முன் எண்ணை ஊறி நிறைந்தது போல மங்கிய ஒளியுடன் வானும் கரிய கறைவடிவங்களென காடும் விரிந்தன. நிலவு முழுமையாகவே முகில்திரைக்கு அப்பாலிருந்தது. கண்முன் வளைந்த வடக்கு வான்சரிவில் விண்மீன்கள் தோன்றிக்கொண்டிருந்தன. தாலத்திலிருந்த சிறிய சுடர் நாற்புறமும் நெருக்கிய இருளால் எற்றப்பட்டு அலைப்புற்றுத் தவித்தது. அசைகையில் சிறிய நாக்கு போலவும் அமைகையில் கூர்வேல் ஒன்றின் தங்கமுனைபோலவும் அது உருமாறிக்கொண்டிருந்தது.

திரௌபதியின் நீண்ட குழல் அவள் நடையில் அலையிளகியது. உடலில் உரசிய மரவுரி பிறிதொரு மூச்சொலி என கேட்டது. திரௌபதியின் உடலின் வெம்மையை மாயையால் உணர முடிந்தது. செல்லச்செல்ல அவ்வெம்மை ஏறிஏறி வருவதைப்போல் தோன்றியது. அது அவளை மேலும் அவளருகே இழுத்தது. சுடரொளியில் இருவர் நிழல்களும் பொங்கி அவர்களுக்குப்பின்னால் வானோக்கி எழுந்து அசைந்தன. பேருருவக் கைகளை காடுகளுக்கு மேல் வீசி மரங்களுக்கு மேல் காலெடுத்து வைத்து நடந்தனர்.

புதர்களுக்குள் இரு அனல்துளிகளை மாயை கண்டாள். உடனே மேலும் இரு புள்ளிகள் தெரிந்தன. முதல்நரி அசையாமல் தலைதூக்கி நோக்கிக்கொண்டிருக்க இன்னொன்று தலையைத் தாழ்த்தி மெல்ல முனகியது. சுடரிலிருந்து விலகியதுமே விழிகள் கூர்மைகொண்டமையால் நரியின் அசைவை காணமுடிந்தது. நின்றிருந்த நரியின் கழுத்துமயிரின் சிலிர்ப்பு கூட தெரிந்தது. மாயை திரௌபதியை நோக்கினாள். அவள் நிமிர்ந்த தலையுடன் வானொளி தெரிந்த விழிகளுடன் நடந்துகொண்டிருந்தாள். சற்றே தூக்கிய முகவாயின் கீழ் கழுத்தின் வளைவில் வழியும் எண்ணையின் மென்னொளி. கன்னத்து புன்மயிர்க்கோவையை நனைத்திருந்தது எந்த முகிலில் கரந்த நிலவொளி என்று தெரியவில்லை.

நிலவில்லாத வானுக்கு எங்கிருந்து ஒளிவருகிறது என மாயை எண்ணிக்கொண்டாள். வானம் ஒரு திரை என்பார்கள் சூதர்கள். அதற்கப்பால் உள்ளன மூதாதையர் வாழும் உயிர்ப்புலகு. அவ்வுலகின் ஒளி திரைவழியாக கசிகிறதா? அங்கிருந்து இறங்குவதா கோரைப்புல் சூடி நின்ற செண்டுகளை சிலிர்த்து அசையச்செய்து செல்லும் இளங்குளிர்காற்று? மூதன்னையரே காற்றென வந்து மரங்களில் அசைகிறார்களா? அப்பால் மரக்கூட்டங்கள் இருளாக அலையடித்தன. அலையசைவு கூடியிருக்கிறதா?

அப்போதுதான் தன் குழல்கற்றை எழுந்து முன்னால் பறந்துகொண்டிருப்பதை மாயை உணர்ந்தாள். உதிரி மயிர்க்கற்றைகள் கன்னங்களில் படிந்து இதழ்களில் உரசின. கனத்த மரவுரி ஆடை உடலைக்கவ்வியபடி துடித்தது. அகல்சுடர் கைபட்டு அழிந்த குங்குமத்தீற்றல் போல சரிந்து பறந்தது. குறுகி அணையப்போய் மீண்டும் எழுந்தது. அவர்களைச் சூழ்ந்து பல்லாயிரம் செண்டுகளை ஏந்திய கோரைப்புல்வெளி அலையடித்தது. மாலையிளவெயிலில் அவை தழலென ஒளிவிடும். அவை விழையும் தழல். அவற்றின் வேர் உறிஞ்சும் நீரின் உயிர். காய்ந்த புல்லும் சதுப்புச்சேறும் பாசியும் கலந்த மணம். மிகத்தொலைவில் இருளில் கிடக்கும் தீட்டப்பட்ட வாள் என, கரிய தோலின் வடு என சிற்றாறின் நீரொளி. அதற்கு அப்பால் காடு கொந்தளிப்பதை கேட்க முடிந்தது. வளியருவி ஒசை வேறெங்கோ இருந்து கேட்டது.

மாயை அச்சத்துடன் திரௌபதியின் தாலத்தில் எரிந்த சுடரை நோக்கினாள். வண்டின் சிறகு போல சுடர் அதிர்ந்துகொண்டிருந்தது. திரௌபதி நின்று குனிந்து தன் தாலத்திலிருந்து முன்னாலெழுந்து பறந்த சுடரை நோக்கி ஒரு கணம் நின்றாள். அவள் கூந்தல் எழுந்து தாலம் மேல் விழுந்தது. இடக் கையால் தாலத்தை தோள்மேல் ஏந்திக்கொண்டு கூந்தலை அள்ளிச் சுழற்றி பெரிய கொண்டையாக்கி கட்டினாள். அகல்சுடரை வலக்கையால் எடுத்துகொண்டு குனியாமல் உடல்தாழ்த்தி அமர்ந்து அகல்நெய்யை புல்லின் காய்ந்த கூளத்தில் ஊற்றி அதன் மேல் சுடரை வைத்து பற்றவைத்தாள். அவள் என்ன செய்கிறாள் என ஒரு கணம் கடந்தே மாயை உணர்ந்தாள். அச்சத்துடன் “அரசி!” என்று அவள் அழைத்தாள்.

திரௌபதி அவளைக் கேளாதவள் போல ஒற்றைக்கையாலேயே தன் ஆடையை களையத் தொடங்கினாள். இடையில் செருகியிருந்த கொசுவத்தை எடுத்து சுழற்றி தோளிலிருந்து விடுவித்து காற்றில் வீசி கையில் சுருட்டி பந்தாக்கி வலக்கையில் எடுத்துக்கொண்டு நின்றாள். அவள் செய்வதன் பொருளை உணர்ந்த மாயையும் தன் தாலத்தை நிலத்தில் வைக்காமலேயே ஆடையைக் கழற்றி வலக்கையில் எடுத்துக்கொண்டு அசையாமல் நின்றாள்.

கோரையில் பற்றிய நெருப்பிலிருந்து பச்சைத்தழை கருகும் புகைமணம் எழுந்தது. தைலமெரியும் மணமாக அது மாறியது. மஞ்சளாகவும் பின் சற்றே நீலமாகவும் கலைந்து பரவிய காற்றால் ஊதப்பட்டு சுடர் சடசடவென்ற ஒலியுடன் சிதறி எழுந்து கோரைத் தாள்களில் பற்றி ஏறியது. பக்கவாட்டில் இருந்து வீசியகாற்று கோட்டையில் மோதிச்சுழன்று அவர்களுக்குப்பின்னாலிருந்து விசையுடன் வீசியது. காற்றில் ஏறி திளைத்தாடிய தழல் ஒன்றிலிருந்து ஒன்றென எழுந்து கோரைத்தாள்களை கவ்விக்கொண்டு விரிந்தது. ஒளிமிக்க திரவம் கலத்திலிருந்து கொட்டப்பட்டு சிதறிப்பரவுவது போல தழல் நாற்புறமும் வடிவற்ற பரப்பாக விரிவதை மாயை கண்டாள்.

அப்பால் புதர்களில் இருந்து நரிகள் ஊளையிட்டன. கோரைகளை வகுந்தபடி அவை ஓடுவது தெரிந்தது. புகையும் கரிச்சுருள்களுமாக வெங்காற்று மேலெழுந்து சென்றது. நெருப்பு அணையுடைத்துப் பரவும் நீரென நான்கு பக்கமும் பெருகி விரிந்தது. அது எரித்துச்சென்ற பின் கிடந்த சாம்பல் படிந்த சதுப்பின் மேல் காலெடுத்து வைத்து திரௌபதி நடந்தாள். பொசுங்கித் தீராத புற்குற்றிகள் கால்பட்டு கனல்பொறிகளாகி சிதறின. உடைந்த கற்சில்லுகளில் அனல் பளபளத்தது. சதுப்பில் வெந்த தவளைகள் மல்லாந்து கால் நீட்டி துடித்துத் துடித்து விழுந்துகொண்டிருந்தன. வெந்து உரிந்த பாம்புகள் வளைந்து அதிர்ந்து சொடுக்கி நீண்டன.

அருகே தேங்கிய நெருப்பு என ஒளிவிட்டது நீர்ப்படலம் என்று மாயை கண்டாள். திரௌபதி தன் மரவுரியாடையை அந்த நீரை நோக்கி வீசியபின் அதற்கு வந்து சேர்ந்த அகன்ற நீரோடை வழியாக நடக்கத் தொடங்கினாள். மாயையும் ஆடையை நீரில் போட்டுவிட்டு அவளை பின்தொடர்ந்தாள். சதுப்பு நீரோடையில் முழங்கால் வரை அழுந்தும் சேறுதான் இருந்தது. கலங்கி எழுந்த சேற்றில் புளித்த மாவின் வாசனை எழுந்தது. சிறுதவளைகள் புல்வெளியில் இருந்து நீர் நோக்கி தாவின. அவர்களைச் சூழ்ந்து செந்தழலால் ஆன ஏரி அலையடித்தது. ஓடிக்களைத்த புரவிக்கூட்டம் போல மூச்சிரைத்து, செம்பொறிகள் வெடித்துச் சிதறி கொப்பளித்தது கானெரி.

நீரும் நெருப்பாகி ஒளிவிட நெருப்பில் நீந்திச்சென்றுகொண்டிருப்பது போல மாயை உணர்ந்தாள். திரௌபதியின் உடலில் வியர்வை பரவி கரிய வளைவுகளில் எல்லாம் செவ்வொளி தெரிந்தது. நெருப்பேந்திய முலைகள். உருகிக்கொண்டிருக்கும் இரும்புச்சிலை என தோள்கள். ஊதிக் கனலும் கரி என விழிகள். எக்கணமும் தழலாக வெடித்து எரிந்து நின்றாடக்கூடும் என்றிருந்தாள்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

நெருப்பலைப்பெருக்கு நடுவே உக்ரசண்டிகையின் ஆலயம் மிதந்து அலைவுறுவது தெரிந்தது. அதன் கருவறைக்கு முன்னாலிருந்த பாறைப்பரப்பைச் சூழ்ந்து அனலின் அலைகள் அறைந்து சுழித்தெழுந்தன. அருகே நின்றிருந்த பாலைமரம் இலை பொசுங்கி தழைந்து அசைந்தது. அதிலிருந்த பறவைக்கூட்டம் கலைந்து வானிலெழுந்து புகைவெளியில் திசையழிந்து கூவி சிறகடித்து மோதிச்சுழித்தது. தொலைவில் இன்னொரு மரம் பற்றிக்கொண்டது. தீநாக்கு வானிருளை நக்க நீண்டு நெளிந்தது. அப்பால் சிற்றாறின் சதுப்பில் ஓடிய நீர்த்தடங்கள் செந்நெருப்பு வரிகளாக இருந்தன. குளம்புத்தடங்கள் செவ்விழிகளாகத் தெரிந்தன. ஆறு எரிப்பெருக்கென வழிந்து வளைந்தோடியது.

பாறையை அடைந்ததும் திரௌபதி குனிந்து எரியும் கோரைத்தாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நடந்தாள். காலடியால் நடைபாதையென ஆகியிருந்த சதுப்புத்தடத்தின் இருபக்கமும் தீ நின்றெரிந்தது. அவள் ஆலயத்திற்குள் சென்று பூசைத்தாலத்தை தேவியின் முன் வைத்தாள். அன்னை காலடியில் இருந்த கல்லகலில் நெய் ஊற்றி தன் கையில் எரிந்த கோரையால் அதன் திரியை ஏற்றினாள். மாயை தனது தாலத்தை கொண்டு சென்று சண்டிகையின் ஆலயப்படிகளில் வைக்க அதை திரௌபதி எடுத்துக்கொண்டாள்.

சூழ்ந்து கொந்தளித்த செந்தழல் ஒளியில் சுவரோவியமாக எழுந்தருளிய சண்டிகையும் கனலுருவாக தெரிந்தாள். செம்மை, மஞ்சள், வெண்மை நிறங்களால் ஆன அன்னையின் இருபது கைகளில் இருந்த படைக்கலங்களும் விழித்த வட்டவிழிகளில் பதிக்கப்பட்ட செம்பளிங்குக் கற்களும் சுடர்ந்தன. வெறிநகையில் விரிந்த வாயின் இருபக்கங்களிலும் வளைந்த பன்றித்தந்தங்களில் குருதி என அனலொளி வழிந்தது. குருதி வழிய பிளந்த அல்குல் வாயிலுக்குள் இருந்த மும்மூர்த்திகளின் விழிகளும் எரிந்தன.

நெருப்பு நாய்க்குட்டிகளென வந்து காலை முத்தமிட்டது. மாயை துள்ளி விலகி ஓடி பாறைமேல் ஏறிக்கொள்ள உவகைகொண்ட நாய்க்குட்டிகள் துள்ளிக்குதித்து துரத்திவந்தன. அவள் ஓடிச்சென்று பாறைப்பரப்பில் ஏறிக்கொண்டாள். அதன் மேல் வெள்ளெலும்புகள் சிதறிக்கிடந்தன. ஊன் எஞ்சிய தடித்த தொடை எலும்புகள். வளைந்த விலாவெலும்புகள். அவள் கால்களால் அவற்றைத் தட்டி விலக்கியபின் நின்று கொண்டு ஆலயத்திற்குள் பூசை செய்துகொண்டிருந்த திரௌபதியை நோக்கினாள். எதிர்த்திசையிலிருந்து எழுந்து வந்த காற்று கோரைப்புல்வெளிமேல் எழுந்து பரவ மொத்தப்புல்வெளியும் கருகி ஒளியிழந்து குப்பென்று மீண்டும் செந்தழல்பரப்பாகியது. தெற்குக்கோட்டை வாயில் வரை நின்ற பல மரங்கள் எரிந்து எழுந்தன.

மாயை கைகளை நெஞ்சில் சேர்த்துக் குவித்தபடி காற்றுவரும் வடக்கு திசையை திரும்பி நோக்கினாள். காற்று புகைத்திரையை அள்ளி விலக்க வானில் ஊறிக்கனிந்து சொட்ட எழுந்து நிறைந்திருந்த விண்மீன்கள் தெரிந்தன. சிலகணங்களிலேயே அவள் அசையாத விழியாக குனிந்து அத்தழலாட்டத்தை நோக்கிக்கொண்டிருந்த துருவனை கண்டுகொண்டாள். மயக்குற்றவள் போல அண்ணாந்து அதையே நோக்கி நின்றிருந்தாள்.

[பிரயாகை முழுமை]

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

நூல் ஐந்து – பிரயாகை – 91

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 4

பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட சிறிய சோலைக்குள் அமைந்திருந்த துர்வாசரின் கானில்லத்தை அடைந்தார். மரப்பட்டைகளாலும் கங்கைக்கரைக் களிமண்ணாலும் கட்டப்பட்டு ஈச்சஓலையாலும் புல்லாலும் கூரையிடப்பட்ட பன்னிரண்டு சிறிய குடில்கள் பிறைவடிவில் அங்கே அமைந்திருந்தன. காலைக்காற்றில் அவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பறவைச்சிறகடிப்பு போல படபடத்தன. குடில்களின் நடுவே இருந்த முற்றத்தில் விடியலின் எரிசெயல் நிகழ்ந்துகொண்டிருந்தது.

சோலைக்கு வெளியே தன் அகம்படியினருடன் கருணர் எரிசெயல் முடிவதற்காக காத்திருந்தார். மிக இளமையில் அவர் முந்தைய துர்வாசரை பாஞ்சாலத்தின் பேரவைக்கூட்டம் ஒன்றில் கண்டிருந்தார். முதிய ஆலமரம்போல சடைகள் தொங்க உடல்குறுகிய முதியவர். அவர் நூற்றுப்பன்னிரண்டாவது துர்வாசர் என்று சூதர்கள் சொன்னார்கள். நூற்றுப் பதின்மூன்றாவது துர்வாசரே முதியவர்தான் என்று கேட்டிருந்தார். எரிகுளத்தின் செந்தழலின் அலைப்புறும் ஒளியில் அமர்ந்திருந்த துர்வாசரை அப்பால் நின்று நோக்கியபோது அவரே ஒரு தழல் என்று தோன்றியது.

வேள்விமுடிந்து துர்வாசர் எழுந்து தன் குடிலுக்குள் சென்றபின் கருணர் அருகே அணுகி பிறவைதிகர்களையும் துர்வாசரின் மாணவர்களையும் வணங்கினார். அவர்கள் அளித்த வேள்வியன்னத்தை உண்டபின் காத்திருந்தார். துர்வாசர் அழைப்பதாக ஆணைவந்ததும் குடிலுக்குள் சென்று புலித்தோல் மேல் மலரமர்வில் இருந்த துர்வாசரின் முன் எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினார். அவர் வாழ்த்துரை சொல்லி எழுந்தமர ஆணையிட்டார். அணைந்துகொண்டிருக்கும் அனல் என செந்நிறம் கலந்த கருஞ்சடைக்கற்றைகளும் மெலிந்து இறுகிய செந்நிற உடலும் புலிக்கண்களும் கொண்டிருந்த துர்வாசர் அவரை நோக்கி “சொல்” என்றார்.

“அடியேன் பெயர் கருணன். பாஞ்சாலத்தின் பேரமைச்சன். தங்களை இன்று காம்பில்யத்தில் நிகழும் இளவரசியின் மணநிகழ்வுக்கு அழைத்துச்செல்ல ஆணையிடப்பட்டிருக்கிறேன். எழுந்தருளல் வேண்டும்” என்றார் கருணர். அவரை கூர்ந்து நோக்கி “உன் தந்தை பெயர் என்ன?” என்றார் துர்வாசர். “சௌனக வைதிக மரபைச்சேர்ந்தவர் அவர். ரிக்வைதி. பன்னிரு ஆண்டுகளுக்கு முன் காலம்சென்ற அவரை தேவசன்மர் என்று அழைத்தனர்” என்றார் கருணர். “எனக்கு முன் அவர் பாஞ்சாலத்தின் பேரமைச்சராக இருந்தார்.”

துர்வாசர் தலையசைத்து “ஆம், அறிவேன். அவனுடைய இருபத்தெட்டாவது நாள் முதல்மயிர் கழித்தல் என் முன் நிகழ்ந்தது” என்றார். கருணர் உடல் சிலிர்த்தது என்றாலும் அவரது சித்தம் வினாக்களாக பெருகி எழுந்தது. ஆனால் துர்வாசர் தொடர்ந்து “உங்கள் குலத்தையே நான் அறிவேன். தேவசன்மனின் தந்தை திருணதூமன் என்னிடம் சிலகாலம் வேதம் பயின்றிருக்கிறான். அவனுக்கு இருந்த இழுவை நோய் என்னுடன் தொடரமுடியாது செய்தது. அவன் தந்தை சுதாமனை சௌனகவனத்தில் வசிட்ட குருமரபில் ஒருவனாக கண்டிருக்கிறேன். அவன் தந்தை சுகாசர் பிரீதை என்னும் வனமகளை மணந்தது என் முன்னிலையில்தான்” என்றார். கருணரின் அனைத்து வினாக்களும் நீர் பட்டவை போல அணைந்தன. சித்தம் குளிர்ந்து கல்லாகிக் கிடந்தது.

துர்வாசர் பெருமூச்சுடன் “ஆம், இதுவும் என் கடனே. இவை என்னிலிருந்து தொடங்கவேண்டுமென்பது ஊழ் எனக்கொள்கிறேன். கிளம்புவோம்” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று கருணர் வியந்துகொண்டாலும் எதுவும் கேட்கவில்லை. துர்வாசரையும் அவரது ஏழு மாணவர்களையும் அழைத்துச்சென்று அணிப்படகில் கங்கையைக் கடந்து காம்பில்யத்தை அடைந்தார். துறவுக்கொள்கைப்படி துர்வாசர் உயிர்களின் மேல் ஏறுவதில்லை என்பதனால் நகரின் சாலைகளில் தன் மாணவர்களுடன் நடந்தே சென்றார். இருமருங்கும் கூடிய நகர் மக்கள் மண்டியிட்டு நிலத்தில் நெற்றிதொட வணங்கினர். அவர் கால்கள் பட்ட மண்ணை குனிந்து அள்ளி நெற்றியில் அணிந்தனர்.

எதிரே புரவியில் வந்த ஒற்றர்தலைவர் சிம்மர் விலகி துர்வாசர் செல்ல வழிவிட்டு வணங்கி நின்றபின் கருணரிடம் வந்து “அங்கே மணமேடை ஒருங்கி விட்டது அமைச்சரே. மணமக்கள் ஐவரும் மேடைக்கு வந்துவிட்டனர். அஸ்தினபுரியின் அமைச்சர் விதுரர் வந்து அவையமர்ந்திருக்கிறார். அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றார். எரிச்சலுடன் “நான் நேரத்தை வகுக்கவில்லை சிம்மரே. இது முனிவரின் பாதை. நான் தொடர்கிறேன்” என்றார் கருணர்.

சிம்மர் கைகாட்ட அவரது ஒற்றன் ஒருவன் புரவியில் திரும்பி விரைந்தான். அவன் சென்று சற்று நேரத்தில் அரண்மனையின் முரசுகள் முழங்கத் தொடங்கின. துர்வாசர் அரண்மனையின் கிழக்கு முற்றத்தை அடைந்தபோது அரண்மனைக்கு மேல் இருந்த நான்கு காவல்மாடங்களிலும் பெருமுரசுகள் அதிர்ந்தன. அரண்மனைக்குள் இருந்து சத்யஜித்தும் சித்ரகேதுவும் முழுதணிக்கோலத்தில் வந்து துர்வாசரை உடல் மண்படிய வணங்கி உள்ளே அழைத்துச்சென்றனர்.

சுயம்வரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஏழடுக்குப் பந்தல் மீண்டும் சீரமைக்கப்பட்டு வண்ணப் பட்டுத்திரைச்சீலைகளும் பாவட்டாக்களும் மலர்மாலைகளும் கொண்டு அணிசெய்யப்பட்டிருந்தது. குடிகளவையிலும் வைதிகர் அவையிலும் மக்கள் நிறைந்து செறிந்திருந்தனர். அரசரவையில் மட்டும் உசிநார மன்னர் சுசேனர், திரிகர்த்த மன்னர் உத்தவன், குலிந்த மன்னர் சுபாங்கதன், லோமச நாட்டரசர்களான விதண்டர் தண்டர், பால்ஹிக நாட்டு சித்ரரதன், கின்னரநாட்டின் அரசர் சோமசேனர் என அன்னைவழி முறைமைகொண்ட அண்டை நாடுகளின் அரசர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் தனித்தனியாக தங்கள் அமைச்சர்களும் தளபதிகளும் சேவகர்களும் சூழ அமர்ந்திருந்தனர்.

மங்கலவாத்தியங்கள் நின்று நிமித்திகர் துர்வாசரின் வரவறிவிக்க அவை எழுந்து கைகூப்பி நின்றது. கைகூப்பியபடி துர்வாசர் உள்ளே நுழைந்ததும் மூன்று அவைகளிலும் இருந்தவர்கள் அனைவரும் அவரை வாழ்த்திய ஒலி எழுந்தது. பொன்பட்டுத் தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்த நீளமான மணமேடையில் இடப்பக்கமாகப் போடப்பட்டிருந்த அரியணையில் அமர்ந்திருந்த துருபதன் தன் தேவியருடன் எழுந்து நின்று கைகூப்பி தலைவணங்கினான். ஏழு வலம்புரிச்சங்குகள் ஒன்று நின்ற முனையிலிருந்து ஒன்று தொடங்க சுழல் சுழலாக ஒலித்து நீண்டு அவரை வாழ்த்தின.

பாஞ்சாலத்தின் ஐந்து பெருங்குலங்களில் இருந்தும் குலத்தலைவர்கள் கைகளில் தங்கள் குலங்களுக்குரிய இலச்சினைக்கோல்களுடன் இணைந்து வந்து துர்வாசரை கால்தொட்டு வணங்கி அவை நோக்கி கொண்டு சென்றனர். அவரை புலித்தோலிட்ட வெள்ளிப்பீடத்தில் அமரச்செய்து வணங்கி வாழ்த்துகொண்டு பின்னகர்ந்தனர். அகலிகையும் பிருஷதியும் மணிமுடி கொண்ட முழுதணிக்கோலத்தில் தொடர, பாஞ்சாலத்தின் தொன்மையான மணிகள் பொறித்த ஆடகப்பசும்பொன் முடி சூடி செங்கோல் ஏந்திய துருபதன் வந்து துர்வாசரின் பாதங்களை பணிந்தார். மூவரும் அவரது கால்களை பொற்தாலத்தில் வைத்து நறுமணநீரூற்றிக் கழுவி ஏழு வகை மலரிட்டு பூசை செய்தார்கள்.

தொடர்ந்து துருபதனின் இளையோனாகிய சத்யஜித்தும் அவர் துணைவி கிருதையும் துர்வாசருக்கு பாதபூசனை செய்தனர். அதன்பின் துருபதனின் மைந்தர்களான சுமித்ரன். ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன், திருஷ்டத்யும்னன் ஆகியோர் ஒவ்வொருவராக வந்து அடிவழிபாடு செய்தனர். துர்வாசர் அவர்களின் தலைமேல் மலர் போட்டு வாழ்த்தினார். அவர்கள் மும்முறை வணங்கி புறம்காட்டாது பின்சென்றனர்.

மணமேடையில் இடப்பக்கம் போடப்பட்ட மாமன்னர் புரு அமர்ந்திருந்த பாஞ்சாலத்தின் அரியணயில் துருபதன் செங்கோல் ஏந்தி மணிமுடி சூடி அமர அவர் இருபக்கமும் அகலிகையும் பிருஷதியும் அமர்ந்தனர். இரு சேவகர்கள் பிடித்த வெண்கொற்றக்குடை அவர் மேல் கவிந்திருந்தது. அவர்களுக்குப் பின்னால் போடப்பட்ட பீடங்களில் சத்யஜித்தும் கிருதையும் துருபதனின் மைந்தர்களும் அவர்களின் துணைவியரும் அமர்ந்தனர். அவர்களைச் சூழ்ந்து தாலங்கள் ஏந்திய சேடியரும் சேவகரும் நின்றனர்.

துர்வாசர் திரும்பி கருணரிடம் “சிகண்டி எங்கே?” என்றார். அவர் பதறி நான்குபக்கமும் நோக்கியபின் ஓடிச்சென்று ஒற்றர்தலைவர் சிம்மரிடம் “சிம்மரே, சிகண்டி எங்கே?” என்றார். “ஏன்?” என்றார் சிம்மர். “முனிவர் கேட்கிறார்” சிம்மர் “உங்களுக்குத் தெரியாததா அமைச்சரே? அவர் மங்கல நிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை” என்றார். “அவரை அழைத்துவாருங்கள். உடனே” என்றபின் கருணர் திரும்பிச்சென்று “அவர் மடைப்பள்ளியை நடத்துகிறார். இதோ வந்துகொண்டிருக்கிறார்” என்றார். துர்வாசர் தலையசைத்துவிட்டு கைகளைக் கட்டியபடி கண்மூடி காத்திருந்தார்.

அவையில் சலசலப்பு ஒலிக்க சத்யஜித் வந்து கருணரிடம் என்ன நிகழ்கிறது என்று கேட்டார். அவர் மெல்லிய குரலில் விடை சொன்னார். ஆனால் அதற்குள் எப்படியோ அவையெங்கும் துர்வாசர் சிகண்டிக்காக காத்திருப்பது தெரிந்துவிட்டது. பேச்சொலிகள் எழுந்து முழக்கமாக நிறைந்தன. அனைவர் விழிகளும் சிம்மர் உள்ளே சென்ற மணமேடை வாயிலை நோக்கிக்கொண்டிருந்தன. தௌம்யரின் மாணவர்களின் வேதமுழக்கம் மட்டும் அவ்வுணர்ச்சிகளுடன் தொடர்பற்றதுபோல கேட்டுக்கொண்டிருந்தது. அவையில் எழுந்த ஒலியே சிகண்டி வருவதை காட்டியது. சிம்மர் தொடர சிகண்டி அவையின் உள்வாயில் வழியாக வந்தார்.

சிகண்டி வெண்ணிற மேலாடையும் கீழாடையும் உடுத்து காதுகளில் மணிக்குண்டலம் ஒளிர திடமான காலடிகளுடன் நடந்து வந்தார். அவரது கொழுத்த கரிய உடலில் மேலாடைக்குள் முலைகள் அசைந்தன. தோளில் சரிந்த கூந்தலிழைகளில் நரைக்கற்றைகள் கலந்திருந்தன. அவரது முகவாயில் கரிபடிந்த சிலந்திவலை என இருந்த மெல்லிய தாடியிலும் வாயோரங்களில் மட்டும் எழுந்து கத்திமுனை என சுருட்டிவிடப்பட்டிருந்த மீசையிலும் நரை இருக்கவில்லை. மதம்படிந்த சிறிய பன்றி விழிகளுடன் துர்வாசரை அணுகி சற்று விலகி நின்றார். கருணர் மெல்ல “முனிவருக்கு அடிவழிபாடு செய்க இளவரசே” என்றார்.

சிகண்டி உறுதியான குரலில் “அடிபூசனை செய்வதென்பது முழுமையாக என்னை படைப்பதாகும். நெறிகளின்படி அதன்பின் அவரது ஆணைக்கு நான் முற்றிலும் கட்டுப்பட்டவன் ஆவேன். இம்மண்ணில் எவருடைய ஆணைக்கும் நான் பணியமுடியாது” என்றார். துர்வாசர் சிரித்தபடி “உனக்கான ஆணைகள் உன் அன்னையால் அளிக்கப்பட்டுவிட்டன என நான் அறிவேன் மைந்தா. நீ என்னை பணியவேண்டியதில்லை. ஆனால் என் வாழ்த்துக்களை நான் வழங்கியாகவேண்டும்… வருக!” என்றார். சிகண்டி அருகே சென்று தலைகுனிந்து வணங்க அவர் பிறரை வாழ்த்தியதுபோல மலர் எடுத்து அவர் தலையிலிட்டு “எண்ணியது ஈடேறட்டும். வெற்றியும் புகழும் சிறக்கட்டும்” என வாழ்த்தினார். சிகண்டி வணங்கி துருபதனின் பின்னால் சென்று அமர்ந்துகொண்டார்.

மணமேடைக்கு வலப்பக்கமாக தொல்வேதம் பருகி பொன்னொளி கொண்ட மூன்று நெருப்புகளும் வைதிகரால் பேணப்பட்டு தழலாடிக்கொண்டிருந்தன. பாஞ்சாலத்தின் தலைமை வைதிகரான தௌம்யர் அவியன்னத்தை கொண்டுவந்து துர்வாசருக்கு வழங்கினார். அவர் அதை உண்டதும் பிறருக்கும் அவியன்னம் பகிர்ந்தளிக்கப்பட்டது. துருபதன் அதை பகிர்ந்து தன் துணைவியருக்கு அளித்து உண்டார். அவரது மைந்தரும் அவ்வண்ணமே செய்தனர். மீண்டும் நெய்யூற்றப்பட்டு வேள்வித்தீ மேலெழுந்தது.

முதுநிமித்திகரான பத்ரர் தங்கள் குலத்தின் ஏழு இளநிமித்திகர்களுடன் முன்னால் வந்து துர்வாசரை வணங்கி மணநிகழ்வு எழுதிய ஓலையை அவரிடம் அளித்து பணிந்து நின்றார். துர்வாசர் அதைத் தொட்டு வாழ்த்தி திருப்பியளித்ததும் அவர் அதை தலைக்குமேல் தூக்கி அவைக்குக் காட்ட அவை வாழ்த்தொலி எழுப்பி முழங்கியது. கோல்காரன் அதை அவரிடமிருந்து வாங்கி மேடைமேல் நின்று உரக்க வாசித்தான். அவையில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் நின்றிருந்த ஒன்பது நிமித்திகர்கள் அதை கேட்டு மீண்டும் கூவினர்.

நிமித்திகன் முழுமுதல் அன்னை உக்கிரசண்டியையும் அவளுடைய ஐந்து தோற்றங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, சாவித்ரி, ராதை ஆகியோரையும் துதித்தான். ஐந்துகுலத்தையும் பாஞ்சாலமன்னனின் குலமுறையையும் வாழ்த்தினான். அதன்பின் முறையாக மண அறிவிப்பு செய்தான். “அவையீரே, ஐங்குலத்தீரே, மூதாதையரே, தெய்வங்களே! அனைவரும் அறிக! சந்திரன் நலம்நிறைந்த புஷ்யவிண்மீனை அணுகும் இந்நன்னாளில் பாஞ்சால நிலமாளும் துருபத மன்னரின் மகளான இளவரசி கிருஷ்ணையை அஸ்தினபுரியின் பாண்டுமன்னரின் மைந்தர்களாகிய இளவரசர் ஐவருக்கும் முறைப்படி கைப்பிடித்தளிக்க முடிவெடுத்திருக்கிறோம். விண்ணை ஆளும் மும்மூர்த்திகளும் பெண்ணை ஆளும் தேவர்களும் வந்து இம்மணத்தை வாழ்த்துக! ஓம்!ஓம்! ஓம்!”

அவை அதனுடன் இணைந்துகொண்டு ஓங்கார ஒலியெழுப்பியது. சத்யஜித்தும் சித்ரகேதுவும் பத்ரரும் கருணரும் அவையின் மறுபக்கம் தனியறையில் இருந்த பாண்டவர்கள் ஐவரையும் அழைத்து வரச்சென்றனர். பாண்டவர்கள் அவர்களுக்கு யாதவ கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட அணிகளையும் ஆடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களில் பீமனிடம் மட்டுமே திருமணம் கொள்வதற்குரிய களிப்பு இருப்பதாகத் தோன்றியது. நகுலனும் சகதேவனும் நாணிக்கூசியவர்கள் போல எவர் விழிகளையும் நோக்குவதை தவிர்த்தனர். அர்ஜுனன் முகம் இறுகியிருக்க இடக்கையால் கூரிய மீசையை முறுக்கிவிட்டபடி விழிசரித்திருந்தான். தருமன் துயர் கொண்டவனைப்போல தலையை குனிந்திருந்தான்.

சத்யஜித் தருமனை வணங்கி “பாண்டவ இளவரசர்களே, கடிமணம் கொள்ள மணமேடைக்கு வருக” என்றார். தருமன் பெருமூச்சுடன் பீடத்தில் இருந்து எழுந்தான். “மணமகன்களுக்கு துணைவர்கள் எவர்?” என்றார் பத்ரர். தருமன் வெறும் விழிகளால் அவரை நோக்க பத்ரர் “யாதவர்கள் உங்கள் துணைவர்கள் அல்லவா? அவர்கள் இருந்திருக்கலாமே” என்றார். தருமன் “நிமித்திகரே, அவர்கள் அஸ்தினபுரியின் துணைநாட்டுக்கு அரசர்கள். அஸ்தினபுரியின் இளவரசர்கள் சென்றபின் அவர்கள் இங்கிருக்க முடியாது” என்றான். “ஆம், அது முறையே” என்றார் கருணர்.

பத்ரர் அவரை நோக்கிவிட்டு “அவ்வாறென்றால் பாஞ்சாலத்தின் சேவகர்களே பாங்கர்களாக வரட்டும். மாலையை வாங்கவும் அணிகளை அளிக்கவும் ஒவ்வொருவருக்கும் அருகே ஒரு துணைவன் நின்றாகவேண்டும்” என்றார். கருணர் வெளியே சென்று அவையமைச்சரை அழைத்து ஆணையிட பட்டாடை அணிந்த ஐந்து பாங்கர்கள் விரைந்து வந்தனர். “செல்வோம்” என்றார் பத்ரர். தருமன் தளர்ந்த காலடிகளுடன் முன்னால் நடக்க பாங்கன் அவனுக்கு வலப்பக்கம் நடந்தான். தொடர்ந்து தலையைத் தூக்கி பெரிய கைகளை ஆட்டியபடி பீமன் சென்றான். அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் மணப்பேரவையில் நுழைந்ததும் மக்களின் வாழ்த்தொலி எழுந்து சூழ, மங்கலப்பேரிசை அதனுடன் இணைந்துகொண்டது. மக்களின் வாழ்த்துச் சொற்களையே முழவுகளும் கொம்புகளும் முரசுகளும் சொல்லிக் கொண்டிருப்பதாக தோன்றியது கருணருக்கு. இசையின் தாளம் அனைத்து அசைவுகளுடனும் இணைந்துகொண்டது. பாண்டவர்களின் நடையில் அது மிடுக்கை அளித்தது. சேவகர்களின் செயல்களில் ஒழுங்கை அமைத்தது. பாண்டவர்கள் ஐவரும் சென்று துர்வாசரை வணங்கி மலர்வாழ்த்துகொண்டது நடனம்போலிருந்தது. அவர்கள் திரும்பி மணமேடையில் ஏறி பாங்கர் பின்னால் நிற்க நிரை வகுத்து நின்றனர்.

மண அரங்கின் வலப்பக்க வாயில் வழியாக இரு சேடிகளால் நடத்தப்பட்டு குந்தி வந்தாள். அவள் வெள்ளை மேலாடையால் முகத்தை முழுமையாக மறைத்திருந்தாலும் நிமிர்ந்த தலையுடன் சீரான நடையுடன் அவைக்கு வந்து வணங்கினாள். நிமித்திகன் தன் அணிக்கோலைத் தூக்கி “விருஷ்ணிகுலத்து யாதவமன்னர் சூரசேனரின் புதல்வியும் மார்த்திகாவதியின் குந்திபோஜனின் அறப்புதல்வியும் அஸ்தினபுரியின் பாண்டு மன்னரின் பேரரசியும் மணமக்கள் ஐவரின் அன்னையுமாகிய பிருதைதேவியை வாழ்த்துகிறது இப்பேரவை” என்று அறிவித்தான்.

குந்தி வந்து துர்வாசரை வணங்கி மலர்வாழ்த்து பெற்றாள். அவளை சேடியர் கொண்டுசென்று மணஅரங்கின் வலப்பக்கமாகப் போடப்பட்ட பீடத்தில் அமரச்செய்தனர். அவள் அமர்ந்ததும் இடப்பக்க வாயில் வழியாக விதுரரும் குண்டாசியும் நிமித்திகனின் வாழ்த்துடன் உள்ளே வந்து துர்வாசரை வணங்கி அவளருகே பீடத்தில் அமர்ந்தனர். இரு குடியினரும் இருபக்கமும் அமர நடுவே மணமகன்கள் நின்றனர்.

பத்ரர் சென்று வணங்கி தௌம்யரிடம் மணநிகழ்வுக்கான ஒப்புதலை கோரினார். அவர் தர்ப்பை மோதிரம் அணிந்த கைதூக்கி வாழ்த்தி ஒப்புதலளித்ததும் பத்ரர் அதை நிமித்திகனிடம் சொல்ல நிமித்திகன் கோல்தூக்கி அவையை அமைதிகொள்ளச்செய்து “அவையோர் அறிக! பாஞ்சாலப் பெருங்குடிகள் ஐந்தின் குலமுறைப்படி ஏழு மணச்சடங்குகளினூடாக இங்கு பாஞ்சாலத்தின் சிறுமகள் அஸ்தினபுரியின் மறுமகளாவாள். மூதாதையரும் ஐம்பருக்களும் தெய்வங்களும் துணைநிற்கட்டும்” என்று வாழ்த்தினான். வலம்புரிச்சங்குகள் ஓங்காரமிட்டு அமைய பெருமுரசும் கொம்புகளும் ஒலித்தெழுந்தன. மங்கலப்பேரிசை மீண்டும் தொடங்கியது.

பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களைச் சேர்ந்த மூத்தார் ஐவரும் அவர்களின் குலங்களுக்குரிய ஐந்து மரங்களின் மலர்க் கிளைகளை இடக்கையில் ஏந்தி மணமுற்றத்துக்கு வந்தனர். துர்வாசகுலத்திற்கு வேங்கையும், சிருஞ்சயருக்கு மருதமும், கிருவிகளுக்கு கொன்றையும், சோமகர்களுக்கு செண்பகமும், கேசினிகளுக்கு பாலையும். மருத மரக்கிளையை அர்ஜுனனும், வேங்கையை பீமனும், கொன்றையை நகுலனும், செண்பகத்தை சகதேவனும் பெற்றுக்கொண்டனர். தருமன் பாலைக்கிளையை வாங்கிக்கொண்டான்.

பாண்டவர்களின் குலமூதாதையர் சார்பில் விதுரர் குண்டாசியுடன் சென்று ஐங்குலத்தலைவர்களிடம் அவர்களின் பெண்ணை மகற்கொடையாக கேட்டார். அவ்வினாவும் விடையும் பாஞ்சாலத்தவரின் தொன்மையான பைசாசிக மொழியிலமைந்த மந்திரங்களாக இருந்தன. பத்ரர் அவற்றைச் சொல்ல இருசாராரும் திருப்பிச் சொன்னார்கள். கிருவிகுலத்தலைவர் பத்துபொன் கன்யாசுல்கமாக கேட்டார். சோமகர் இருபது பொன் கேட்டார். சிருஞ்சயர் முந்நூறு பொன் என்றார். துர்வாசர் நாநூறு என்று சொல்ல கேசினிகுலத்தலைவர் ஐநூறு பொன் என்றார். விதுரர் “ஆம் !ஆம் !ஆம்!’ என மும்முறை சொன்னபின் ஐநூறு பொன் அடங்கிய பட்டுக்கிழியை அவர்களிடம் அளிக்க அவர்கள் “ஆம் !ஆம் !ஆம்!” என்று சொல்லி மகற்கொடைக்கு ஒப்புக்கொண்டனர்.

குடிமூத்தார் ஐவரும் பாண்டவர்களை அழைத்துச்சென்று துருபதன் முன்னால் நிறுத்தி அவரது மகளை பாண்டவர்களுக்கு அளிக்கும்படி கோரினர். அவர் அவர்களைப் பணிந்து குலமூத்தாரின் ஆணையை ஏற்பதாக அறிவித்தார். அவர் திரும்பி தன் தேவியர் இருவரிடமும் அதைச் சொல்ல அவர்களும் தாமரை மலரிதழ் போல கைகளை முத்திரை காட்டி “அவ்வாறே ஆகுக!” என்றனர். அரசர் தன் அமைச்சரிடம் வலக்கையால் வேல் முத்திரை காட்டி “ஆவன செய்க!” என்று ஆணையிட சங்குகள் முழங்கின. அவையெங்கும் உடலசைவும் பேச்சொலியும் நிறைந்தன.

வலது வாயிலில் இருந்து எண்மங்கலத் தாலமேந்திய பன்னிரு அணிப்பரத்தையர் இடையொசிய முலையசைய நடந்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து உருவிய வாளேந்தி முன்னால் வந்த திருஷ்டத்யும்னனால் வழிநடத்தப்பட்டு இருபக்கமும் இரு சேடியரால் துணைக்கப்பட்டு திரௌபதி நீரில் வரும் அன்னம் என ஒழுகி மணமேடை நோக்கி வந்தாள். அவளைக் கண்டதும் அவையெங்கும் வாழ்த்தொலிகள் எழுந்தன. பாஞ்சால முறைப்படி செந்நிற மரவுரியாடை அணிந்து நகைகளேதும் இல்லாமல் கூந்தலையும் தோள்களையும் இடையையும் மலர்களைக் கொண்டு மட்டுமே அணிசெய்திருந்தாள். கையில் ஒரு நிறைநாழியில் வஜ்ரதானியமும் தினையும் கோதுமையும் கலந்து அதன்மேல் ஒரு அத்திப்பழத்தை வைத்திருந்தாள்.

நிறைநாழியை மணமேடைநடுவே வைத்துவிட்டு துர்வாசரை அணுகி வாழ்த்து பெற்றாள். ஐந்து குலமூதாதையரை வணங்கியபின் தன் தந்தையையும் அன்னையரையும் சிறியதந்தையையும் தமையனையும் வணங்கிவிட்டு மேடையில் வந்து நின்றாள். ஐந்து குலத்தில் இருந்தும் ஐந்து முதிய மாமங்கலையினர் மணமேடைக்கு வந்து அவளை மஞ்சளரிசியும் மலரும் இட்டு வாழ்த்தினர். ஒவ்வொருவரும் தங்கள் குலத்திற்குரிய மலர்க்கிளைகளால் அவள் நெற்றியைத் தொட்டு மாமங்கலையாக வாழ்கவென்று வாழும் சொல்லளித்தனர்.

நிமித்திகன் கோல் ஏந்தி “வளம் நிறைத்தல்!” என அறிவித்ததும் மூதன்னையர் மேடையில் விரிக்கப்பட்ட மரவுரியில் அவளை கிழக்கு நோக்கி அமரச்செய்தனர். மரத்தாலத்தில் உமியும் மண்ணும் கலந்து பரப்பி அவள் முன் வைத்தனர். திரௌபதி தொன்மையான வளமூட்டும் மந்திரங்களை அவர்கள் சொல்லக் கேட்டு திருப்பிச் சொன்னபடி அதில் நிறைநாழியில் இருந்த மூன்று தானியங்களை ஐந்துமுறை அள்ளி விதைத்தபோது சேடியரும் அரண்மனைப்பெண்டிரும் குரவையிட்டனர். இடக்கையை கதிர்முத்திரையுடன் வைத்துக்கொண்டு வலக்கையால் அள்ளி ஏழுமுறை நீரூற்றிவிட்டு அவள் வணங்கினாள். முளைநிலம் சேடியரால் எடுத்துக்கொண்டுசெல்லப்பட்டது.

பின்னர் ஐந்துகுலங்களையும் சேர்ந்த ஐந்து இளம் அன்னையர் மணமேடைக்கு வந்தனர். கிருவிகுலத்தவள் கன்றுமேய்க்கும் வளைதடியையும், சோமககுலத்தவள் கட்டுக்கயிற்றுச் சுருளையும், சிருஞ்சயகுலத்தவள் பால்கறக்கும் சுரைக்குடுவையையும், துர்வாச குலத்தவள் தயிர்கடையும் மத்தையும், கேசினி குலத்தவள் நெய்க்குடத்தையும் அளித்தாள். மேடையில் கொண்டுவைக்கப்பட்ட மரத்தாலான பசுவின் சிலையருகே வைக்கப்பட்ட சிறிய மரச்சம்புடத்தில் தேன், தயிர், நெய் மூன்றையும் கலந்து செய்யப்பட்ட மூவமுதை இடக்கையால் கன்று முத்திரை காட்டியபடி வலக்கையால் எடுத்து கொண்டுசென்று தன் தந்தைக்கும் அன்னையருக்கும் அளித்தாள்.

ஐந்து குலங்களையும் சேர்ந்த ஐந்து கன்னியர் மணமேடைக்கு வந்து திரௌபதிக்கு சிறிய தூண்டிலையும், மீன்வலையையும், மீன்அரிப்பையும், மீன்கூடையையும், மண்குடுவையையும் அளித்தனர். அவள் இடக்கையால் மீன்முத்திரை காட்டியபடி மேடையில் வைக்கப்பட்ட மரத்தொட்டியில் போடப்பட்ட மரத்தாலான சிறிய மீனைப் பிடித்து எடுத்துச்சென்று தன் தந்தையின் இளையோனிடம் அளித்தாள்.

நிமித்திகர் கைகாட்ட முரசு தாளம் மாறுபட்டு ஒலிக்கத் தொடங்கியது. விதுரரை அணுகிய பத்ரர் வணங்கி மகள்கொடை நிகழவிருப்பதாக அறிவித்தார். விதுரர் எழுந்து கைகளைக் கூப்பியபடி நடந்து சென்று பாண்டவர்களை அணுகி அவர்களை அழைத்துக்கொண்டு துருபதன் அருகே சென்றார். துருபதன் தன் அரசியருடனும் இளையோருடனும் எழுந்து நின்றார். திருஷ்டத்யும்னனால் அழைத்துவரப்பட்ட திரௌபதி அவரது வலப்பக்கம் வந்து நின்றாள். நிமித்திகன் கோலைத் தூக்கி வீசி “நீரூற்றல்!” என அறிவித்தான்.

பத்ரர் அருகே நின்று மணச்சடங்குகளை செய்வித்தார். மங்கல இசையும் குரவையொலிகளும் எழுந்து சூழ விதுரர் தன் கையை நீட்ட துருபதன் தன் மகளின் வலது கையைப் பற்றி அவரது கைமேல் வைத்தார். அக்கைமேல் தருமன் தன் கையை வைத்து பற்றிக்கொண்டான். பிறநால்வரும் தங்கள் கைகளை அக்கைகள்மேல் வைத்தனர். மஞ்சள்நிறச் சரடால் அக்கைகளை சேர்த்துக் கட்டினார் பத்ரர். ஐந்துகுலத்தலைவர்களும் வந்து மணமக்களை அரிசியும் மலருமிட்டு வாழ்த்தினர்.

சேவகர் ஊற்றிய மஞ்சள்நீரில் தன் கைகளை மும்முறை கழுவிக்கொண்டபோது துருபதன் கண்கலங்கி உதடுகளை இறுக்கிக் கொண்டார். விழிநீர் வழியக்கூடாது என அவர் முயன்றாலும் மூன்றாவது முறை நீர்விட்டபின் மஞ்சள்பட்டால் கைகளைத் துடைத்தபோது விம்மி அழுதுவிட்டார். அதுவரை தலைகுனிந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த பிருஷதியும் அழுதபடி மேலாடையால் முகம் மறைத்தாள்.

திரௌபதியை கைப்பிடித்தபடி திரும்பிச்சென்ற தருமனின் மறுகையை பற்றியபடி பீமன் செல்ல அவன் கைகளைப்பற்றியபடி அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் சென்று துர்வாச முனிவரை ஒரேசமயம் கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றனர். திரும்பி குந்தியை அணுகி வாழ்த்து பெற்றனர். அவள் முகத்தை மறைத்த திரையுடன் இருகைகளையும் தூக்கி வாழ்த்தினாள். விதுரரை வணங்கி வாழ்த்து பெற்றபின் அவர்கள் மேடையில் வந்து நின்றனர்.

நிமித்திகன் “குறைவெல்லல்!” என அறிவிக்க தௌம்யர் வேள்விக்கு இருக்கையாக போடப்பட்டிருந்த தர்ப்பைகளில் இருந்து ஐந்து கீற்றுகளை எடுத்து வந்து அவர்கள் ஐவருக்கும் அளித்தார். அவர்கள் வரிசையாகச் சென்று திரௌபதியின் நெற்றியையும் புருவத்தையும் தர்ப்பையால் மும்முறை வருடினர். மஞ்சள்நீரை அள்ளி அவள் தலைமேல் மும்முறை தூவினர். தருமன் அவளை கைபற்றி அழைக்க அவள் தன் உடலில் இருந்து மூன்று மலர்களைப் பறித்து திரும்பிப்பாராமல் பின்பக்கம் போட்டுவிட்டு அவனை நோக்கி மூன்று அடி எடுத்துவைத்தாள்.

நிமித்திகன் “ஆகொடை” என்று அறிவிக்க ஐவரும் அவள் கைபற்றி மணமேடைவிட்டு கீழிறங்கினர். பொற்பூணிட்ட கொம்புகள்கொண்ட வெண்ணிறப்பசுக்கள் ஐந்தை சேவகர் கொண்டு வந்து நிறுத்தினர். தௌம்யர் அருகே வந்து நின்று வேதமந்திரங்களை சொல்லிக்கொடுக்க அவர்கள் அதை உச்சரித்தபடி கட்டுக்கயிற்றைப் பற்றி ஐந்து வைதிகர்களுக்கு அப்பசுக்களை அளித்தனர். வைதிகர் அவர்களை வாழ்த்தி திரும்பிச் சென்றனர்.

நிமித்திகன் “திருவளித்தல்!” என அறிவிக்க மீண்டும் மேடையேறி அஸ்தினபுரியின் முறைமைப்படி மஞ்சள்பட்டாடை, மணிகள் பதிக்கப்பட்ட அணிகள், மலர்மாலைகள், குங்குமம், மஞ்சள் என ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலத்தை ஐவரும் கைசேர்த்து திரௌபதிக்கு அளித்தனர். அவள் அதை தலைவணங்கி வாங்கியபின் சேடிகளால் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டாள். அவள் செல்வதும் கண்ணுக்குத்தெரியாத நீரோடை ஒன்றில் ஒழுகிச்செல்லும் அன்னம்போலவே இருந்தது.

“எரிதொழுதல்” என்று நிமித்திகன் அறிவிக்க தௌம்யர் வந்து தருமனை அழைத்துச்சென்று அரங்கில் எரிந்துகொண்டிருந்த மூன்று எரிகுளங்களில் தென்னெரியின்முன் தர்ப்பையாலான வேள்விப் பீடத்தில் அமர்த்தினார். பிறபாண்டவர்கள் அவனுடன் இணையாக அமர்ந்துகொண்டனர். வைதிகர் வேதமோத அதைக்கேட்டு இதழ்மட்டும் அசைய திருப்பிச் சொன்னபடி அவர்கள் தென்னெருப்பில் நெய்யும் சமித்தும் அவியும் இட்டு வணங்கினார்கள்.

நிமித்திகன் “மலர்மாற்றல்” என்று அறிவித்தான். மங்கல நீராடி பாண்டவர்கள் அளித்த பட்டாடையையும் நகைகளையும் அணிந்து, மலர்சூடி, குங்குமமும் மஞ்சளும் நெற்றியில் தொட்டு, திரௌபதி மீண்டும் மேடைக்கு வந்தாள். தருமன் அவளுக்கு செண்பகம், பாரிஜாதம், நீலம், முல்லை, அல்லி எனும் ஐந்து மங்கலமலர்களால் ஆன மாலையை அணிவிக்க அதை அவள் அவனுக்கு திரும்ப அணிவித்தாள். மும்முறை மாலைமாற்றியபின் தருமன் பின்னால் செல்ல பீமன் முன்வந்து மாலைமாற்றினான். ஐவரும் மாலைமாற்றிக்கொண்டபின் பத்ரர் கைகாட்ட முரசின் தாளம் விரைவு கொண்டது. அலையெழுவதுபோல சூழ்ந்திருந்த அரங்கினர் முழுவதும் எழுந்து நின்றனர்.

நிமித்திகன் “நாண்பூட்டல்” என அறிவித்தான். சோமக குலத்தின் மூத்தார் இல்லத்தில் கரவறையில் தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வந்த தொன்மையான மரத்தாலத்தில் கூழாங்கல், ஒருபிடி மண், சிறுகுவளையில் கங்கைநீர், செண்பக மலர், அத்திக்கனி, புலிநகம், கஸ்தூரி, மயிற்பீலி ஆகிய எட்டு மலைமங்கலங்களுடன் தாலியை வைத்து ஐந்து மூதன்னையர் எடுத்துச்சென்று துர்வாசரிடம் நீட்டினர். அவர் எழுந்து அதை மும்முறை தொட்டு வாழ்த்தினார். குலமூத்தார் வரிசையாக அதைத் தொட்டு வாழ்த்த துருபதனின் சோமககுலத்தின் மூத்தவர் தாலத்தை வாங்கிக் கொண்டுசென்று முதுவைதிகர் தௌம்யரிடம் அளித்தார். அவர் அதை வேள்வித்தீ முன் வைத்து வேள்விச்சாம்பலைத் தூவி வாழ்த்தி கொண்டுசென்று பத்ரரிடம் கொடுத்தார்.

மரவுரிநூலை திரித்து மஞ்சள் பூசி செய்யப்பட்ட சரடில் குலமுறையும் காப்பும் எழுதப்பட்ட பனையோலையை இறுகச்சுருட்டிக் கட்டி உருவாக்கப்பட்ட தாலியை துருபதனும் அவன் துணைவியரும் இளையோனும் மைந்தரும் தொட்டு வாழ்த்தினர். பின் குந்தியும் விதுரரும் தொட்டு வாழ்த்தினர். துருபதனும் குடியினரும் ஒருபுறம் நிற்க குந்தியும் விதுரரும் மறுபுறம் நிற்க பத்ரர் வழிகாட்ட தருமன் அதை தன் நடுங்கும் கரங்களால் எடுத்து திரௌபதியின் கழுத்தில் கட்டி முதல்முடிச்சை போட்டான். அதன்பின் பாண்டவர் நால்வரும் மேலும் நான்கு முடிச்சுகளை போட்டனர்.

மேளமும் குரவையும் கண்ணுக்குத்தெரியாத விண்ணவரின் களியாட்டு என அவையைச் சூழ்ந்திருந்தன. அவையினர் வாழ்த்துக்களைக் கூவியபடி வீசிய மஞ்சளரிசியும் மஞ்சள் மலர்களும் அவர்களைச் சுற்றி மழையாகப் பெய்தன. சற்று நேரத்தில் வசந்தகாலக் கொன்றைமரத்தடி போல பொன்விரிப்பு கொண்டது மணமுற்றம். ஐந்து முறை முடியப்பட்ட தாலியுடன் திரும்பிய திரௌபதி அவை நோக்கி வணங்கினாள்.

நிமித்திகன் “ஏழடிவைத்தல்” என்று அறிவித்தான். தருமன் பாஞ்சாலியின் கைகளை பற்றிக்கொள்ள பாண்டவர்கள் அவன் கைதொட்டு கைகோர்த்தனர். அறுவரும் கைபற்றியபடி அவியேற்று எழுந்தாடிய மூவெரியை சுற்றி ஏழு காலடிகளை எடுத்து வைத்தனர். ஒவ்வொரு காலடிக்கும் தௌம்யர் அதற்குரிய வேதமந்திரங்களை சொன்னார். ஏழாவது அடியை வைத்ததும் அவர்கள் அமர்ந்து வேள்வித்தீயை வணங்கி அதன் சாம்பலை நெற்றியிலணிந்துகொண்டனர்.

‘சொல்கொளல்’ என அறிவிக்கப்பட்டதும் அறுவரும் கைபற்றியபடி சென்று குந்தியை வணங்கினர். அவள் அரிமலரிட்டு வாழ்த்தியதும் விதுரரை வணங்கினர். பின்னர் துருபதனையும் துணைவியரையும் வணங்கினர். துருபதன் எங்கிருக்கிறோமென்று அறியாதவர் என மயக்குற்ற முகத்துடன் பாவையென அவர்களை வாழ்த்தினார். பிருஷதி திரௌபதியை வாழ்த்தியபோது மீண்டும் மேலாடையால் முகம் துடைத்து அழத்தொடங்கினாள்.

நிமித்திகன் கோலைத்தூக்கி ”அவையீரே, சான்றோரே, மூதாதையரே, தெய்வங்களே கேளுங்கள். இனிய மயக்குறும் நீரால் இவள் வளர்க்கப்பட்டாள். இசைநிறைந்த கனவுகளுக்கு நீர் இவளை கையளித்தது. பின்னர் ஒளிவிடும் தூய நெருப்பால் இவள் நிறைந்தாள். நீரும் இசையும் நெருப்பும் இவளை விட்டு விலகட்டும். அம்மூன்றும் ஆன கணவனால் இவள் நிறைவடைவாளாக! இங்கு இக்கடிமணம் மங்கலமுழுமை கொண்டது” என்று வாழ்த்தி தலைவணங்கி பின்னகர்ந்தான்.

”ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருதீயோ அக்நிஷ்டே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா!” என்று வைதிகர் வேதமந்திரத்துடன் நெருப்பை எழுப்பினர். பிரபஞ்சவடிவம் கொண்ட காதலனே இவள் படுக்கையை விட்டு அகல்க. இனி இவள் மானுடக்காதலனுடன் அமைக என்றது வேதம். “உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!”

ஒற்றர்தலைவர் சிம்மர் வந்து கருணர் அருகே குனிந்து “அமைச்சரே, இங்கே மணச்சடங்குகள் முடிகின்றன. வேள்வி மட்டும் மாலை வரை தொடரும். இளவரசியின் அடுத்த சடங்கு உக்ரசாமுண்டி ஆலயத்திற்குச் சென்று சுடராட்டு செய்தல்” என்றார். “இளவரசியுடன் ஒரே ஒரு பெண் மட்டுமே செல்லவேண்டுமென்பது நெறி. சேடியர் எவர் செல்லலாம் என்று சொல்லுங்கள். அவளுக்கு பூசனைநெறி தெரிந்திருக்கவேண்டும்.” கருணர் “இளவரசியின் அணுக்கத்தோழி மாயை எங்குமே தென்படவில்லையே. அவள் உடன் செல்லட்டுமே” என்றார்.

சற்று தயங்கியபின் “அவள் சூல்மங்கலம் கொண்டிருக்கிறாள். அவள் மங்கலமன்றில் நிற்கக் கூடாது என்று அரசி சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவள் அழகியல்ல. ஆகவே அவைச்சடங்குகள் எதிலும் அவளை சேர்க்கவேண்டாமென்பது அரசியின் எண்ணம்” என்றார் சிம்மர். “இது அவைச்சடங்கு அல்ல. இதற்கு பார்வையாளர்கள் இல்லை. மாயை உடன்செல்லட்டும். அவளுக்குத்தான் முறைமைகளும் இளவரசியின் உள்ளமும் தெரியும்” என்றார் கருணர். சற்றே சிரித்து “சூல்மங்கலம் கொள்வது சண்டிக்கு உகந்தது என்று நான் சொன்னதாக சொல்க!” என்றார். சிம்மர் தலையசைத்து “ஆணை” என்றபின் விலகிச்சென்றார்.

பாண்டவர்கள் திரௌபதியை கரம்பற்றியபடி சென்று அவைமன்றில் நின்றதும் தௌம்யர் அமர்ந்து திரும்பி மங்கல அவியளிப்புக்கு ஆணையிட்டார். வைதிகர் வேதமந்திரங்களை சொன்னபடி நெய்யூற்ற எரிகுளங்களில் தழல் எழுந்தது. வாழ்த்தியவர்கள் மீண்டும் தங்கள் பீடங்களில் அமர்ந்து கால்களை நீட்டி உடல் தளர்த்திக்கொண்டனர். தொடர்ந்து நிகழும் மூன்றுவகை அவியூட்டலுக்குப்பின் மணமங்கலம் நிறைவடையும் என்று அறிந்திருந்த மக்கள் இசையின் அதிர்வால் தடுக்கப்பட்டு தங்களுக்குள் தேங்கியிருந்த சொற்களை உணர்ந்து மெல்லிய குரலில் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். அவர்களின் பேச்சொலி எழுந்து அவைப்பந்தலின் மேல் வியர்வைவெம்மையும் வேள்விப்புகையும் மலர்மணமும் கலந்த படலமாக நிறைந்திருந்த காற்றில் ரீங்கரித்தது.

மெல்லிய குரலோசையாக கேட்டாலும் கிழக்கு வாயிலருகே நிகழ்ந்தது ஏதோ பூசலென உடனே அனைவரும் அறிந்தனர். அச்சோர்வில் ஒரு பரபரப்பு இனிதாக இருந்ததனால் பெரும்பாலானவர்கள் எழுந்து நின்று எட்டிப்பார்த்தனர். எழுந்து நோக்கிய கருணர் வாயிற்காவல்வீரர்கள் பின்தொடர கோலேந்திய ஒருவர் உள்ளே வந்துவிட்டதையும் அவரை தொடத்தயங்கிய காவலர்கள் கூவியபடி படைக்கலங்களுடன் பின்னால் ஓடிவருவதையும் கண்டார்.

அரங்கில் இளநீலத்திரையென படர்ந்திருந்த புகைத்திரைக்கு அப்பால் தெரிந்த அம்மனிதரை முதலில் தெருவிலிருந்து காவலர் அயர்ந்தவேளையில் உட்புகுந்த களிமகனோ பித்தனோ என்றுதான் கருணர் எண்ணினார். வெளியேற்றும்படி காவலனை நோக்கிக் கைநீட்டி ஆணையிடப்போனபோதுதான் அவர் உக்ரகாபாலிகன் என்று தெரிந்தது. திகைத்து ஒரு கணம் நின்றபின் அவர் காவலர்களை நோக்கி “நில்லுங்கள்! அப்பால் செல்லுங்கள்!” என்று கூவியபடி அரங்கின் இடைபாதை வழியாக அவரை நோக்கி ஓடினார். வீரர்கள் திகைத்து நின்றுவிட காபாலிகர் மட்டும் நிமிர்ந்த உடலுடன் காட்டெருது போல உடல் குலுங்க, தரையதிர நடந்து வருவதைக் கண்டு திகைத்து சற்று பின்னடைந்தார்.

காபாலிகரின் கையில் இருந்த கருகிய காட்டுமரத்தின் உச்சியில் புதிய மண்டையோடு ஒன்று இருந்தது. சுண்ணமாக மாறாது இன்னமும் உயிர்ச்செம்மை எஞ்சியிருந்த புதிய மண்டை. வலக்கையில் அதேபோன்ற இன்னொரு மண்டையோட்டை ஏற்புக்கலமாக வைத்திருந்தார். சடைக்கற்றைகள் பரவிய இறுகிய தோள்களிலும் காட்டுவேங்கையின் தூரெனத் திரண்ட மார்பிலும் சாம்பல் பூசப்பட்டிருந்தது. காது மடல்களில் எலும்புகளை அணிந்திருந்தார். விழிகள் அனல்துளிகள் போலிருந்தன.

படைத்தலைவர் ரிஷபர் துருபதனின் அருகிருந்து உருவிய வாளுடன் தாவி “யார் இவரை உள்ளே விட்டது மங்கல நிகழ்வில்?” என்று கடும் சினத்துடன் கூவியபடி ஓடிவந்தார். துர்வாசர் எழுந்து கைநீட்டி “படைத்தலைவரே, அவர் வரவேண்டியவரே” என்றார். உக்ரகாபாலிகர் மேடையை நோக்கி திரௌபதியை தன் ஊழ்கத்தடியால் சுட்டி “நான் அவள் கையால் இரவல் கொள்ள வந்தேன்” என்றார். அவை முழுக்க அசைவற்று விழியுறைந்து அவரை நோக்கி நின்றது. துர்வாசர் “காபாலிகரே, இங்கு நீர் கொள்ளும் ஏற்பு இக்குடியை நலம்பெறச் செய்யட்டும்” என்றார்.

திகைப்பை உதறிய துருபதன் அருகே வந்து கைகூப்பி “காபாலிகரை வணங்குகிறேன். தங்கள் அடிகள் இந்நகரிலும் அரண்மனையிலும் பட்டது என் நல்லூழ். தாங்கள் நாடுவதென்ன என்று அருள்புரியவேண்டும்” என்றார். காபாலிகர் “நான் அவள் கையில் இருந்து இடுகை ஏற்க வந்தேன்” என்றார். அவர் குரல் குறுமுழவின் உறுமலென ஒலித்தது.

துருபதன் திரும்பி நோக்க திரௌபதி கைகூப்பியபடி முன்னால் வந்தாள். அவளைக் கண்டதும் மண்டையோடு தொங்கிய ஊழ்கத்தடியை தலைக்குமேல் தூக்கிய காபாலிகர் “அன்னை வாழ்க! அவள் கொள்ளப்போகும் பலிகளால் இப்புவி நலம் கொள்க!” என்றார். அவர் தன் மண்டையோட்டை நீட்டியபோது அதில் என்ன போடுவது என்பது போல திரௌபதி இருபக்கமும் நோக்கினாள்.

அவளருகே நின்ற சேடியர் ஓடிவந்து தாலத்தை நீட்டினர். அவள் அவற்றை விழிகளாலேயே விலக்கினாள். துருபதன் திரும்பி பத்ரரை நோக்க அவர் பின்வரிசை நோக்கி கைவீசியபடி ஓடினார். அதற்குள் திரௌபதி அவர் விழிகளை கூர்ந்து நோக்கியபடி தன் கூந்தலில் சூடியிருந்த செங்காந்தள் மலரை எடுத்து அவரது மண்டையோட்டு ஏற்புக்கலத்தில் போட்டாள். அவர் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கியபின் மீண்டும் தன் ஊழ்கத்தடியை தூக்கி “அன்னையே வாழ்க!” என்றபின் திரும்பி நடந்தார்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

என்ன நடந்தது என்றே கூட்டத்தினருக்கு புரியவில்லை. அனைவரிடமும் இருந்து எழுந்த ஒலி பெரும் முழக்கமாக ஒலித்தது. துர்வாசர் கைதூக்கி மணநிகழ்வுகள் தொடரட்டும் என ஆணையிட மங்கல இசை பெருகி எழுந்தது. அந்த இசை பதற்றமடைந்திருந்த அவையினரை ஆறுதல்படுத்தியது. கனத்த குளிர்மழை போல அவர்கள் மேல் அது பெய்து நிறைய அவர்கள் மெல்ல மெல்ல அமைந்தனர். தௌம்யர் கைகாட்ட வைதிகர் மீண்டும் வேதம் முழங்கத் தொடங்கினர்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

நூல் ஐந்து – பிரயாகை – 90

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 3

விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள். நீண்டபயணத்தால் களைத்துவிட்டிருந்த படகோட்டிகள் படகுகளைக் கட்டியதுமே ஆங்காங்கே படுத்து துயிலத் தொடங்கினர். இரவுக்காவல் வீரர்கள் மட்டும் நீண்ட வேல்களும் வாள்களுமாக படகுகளின் அமரங்களில் காவலிருக்க விண்மீன்கள் முழுதாக எழுவதற்குள்ளாகவே அனைவரும் துயின்று விட்டிருந்தனர்.

விதுரர் தன் பெரும்படகின் மூன்றாம் அடுக்கின் கூரைமேல் அமர்ந்து அப்பால் பற்றி எரியும் காடு போல் தெரிந்த காம்பில்ய நகரையே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் அருகே நின்றிருந்த கொடிமரத்தின் மேல் அஸ்தினபுரியின் கொடி படபடத்துக்கொண்டிருந்தது. கொடிமரத்தின்மேல் ஏதோ பெரிய பறவை ஒன்று வந்து அமர்வதுபோலவும் எழுந்து விலகுவதுபோலவும் தோன்றிக்கொண்டிருந்தது. முதலில் சற்று வேடிக்கையாக இருந்த அது நேரம் செல்லச்செல்ல வதையாக மாறியது. அதை நிறுத்தமுடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்தபோது காற்று மேலும் வலுக்க சிறகடிப்பொலி துடிப்பொலியாகியது. அங்கே ஒரு பறவை கட்டிப்போடப்பட்டிருப்பது போல. அது உச்ச விசையுடன் விடுபடத் துடிப்பதுபோல.

கீழிருந்து படிகள் வழியாக குண்டாசி மேலே ஏறிவந்தான். தலைவணங்கி கொடிமரத்தூணுக்கு அப்பால் பாதிமறைந்து தயங்கி நின்ற அவனை நோக்கி அருகே வரும்படி விதுரர் கையசைத்தார். அவன் அருகே வந்து அவர் காலடியில் அமர்ந்துகொண்டான். “துயிலவில்லையா?” என்றார் விதுரர். அவன் பெருமூச்சுவிட்டபின் சிலகணங்கள் கடந்து “இரவுகளில் துயில்வது கடினம் தந்தையே” என்றான். கௌரவர்களில் அவன் மட்டுமே அவரை தந்தையே என்று அழைத்தான். அவர் அவன் தலையைத் தொட்டு “மருத்துவர்கள் அளித்த மருந்துகளை அருந்துகிறாய் அல்லவா?” என்றார்.

குண்டாசி “ஆம், அவை பெரும்பாலும் என்னை துயிலச் செய்கின்றன. துயில் விட்டு எழுவது என்பது ஒவ்வொருநாளும் நான் அடையும் பெரும் வதை” என்றான். விதுரர் “சோமன் இரக்கமற்றவன் என்பது மூத்தோர் சொல். மிக இனியவன். இனிமையாலேயே கொல்பவன். சோமனுக்குப் பிடித்த உணவு சோமரசத்தில் ஊறவைத்த மானுட இதயங்கள். அவற்றை அவன் எளிதில் தவறவிடுவதில்லை. அவன் கையிலிருந்து அவற்றை மீட்பது கண்ணீராலும் தவத்தாலும்தான் முடியும். நீ மீண்டுவிட்டாய். அதை உன் முகத்தைப் பார்க்கும் எவரும் அறியமுடியும்” என்றார்.

குண்டாசி “எனக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நான் அறிவேன் தந்தையே” என்றான். மெல்ல சிரித்தபோது பக்கவாட்டில் அவன் கண்களில் தீப்பந்தத்தின் செவ்வொளி மின்னியது. “ஆனால் குடி இனியது என்று மட்டும் சொல்லாதீர்கள். மூடர்களுக்கு மட்டுமே அது இனியது. அறிந்தவனுக்கு அது காலடியில் அதலம் வாய்திறந்த மலைவிளிம்பில் அறுந்துகொண்டே வரும் வேரில் பற்றியபடி தொங்கிக்கொண்டிருப்பது போன்றது… ஒவ்வொரு கணமும் அச்சம், துயரம். நினைவழிவது ஒன்றைத்தவிர அதிலிருந்து தப்ப வழி இல்லை. ஆகவே மீண்டும் குடிக்கிறோம்…” என்றான்.

பற்களைக் கடித்தபடி குண்டாசி சொன்னான் “குடிகூட பெரிய நோயல்ல தந்தையே. அது உருவாக்கும் அகநிலைகள்தான் சித்தச்சிதறல். மீளவே முடியாது சுழற்றியடிக்கும் பெருநரகம். என்னென்ன பாவனைகள்! எத்தனை விதமான அகநடிப்புகள்!” தலையை கையால் மெல்ல அறைந்துகொண்டான். “ஏன் குடிகாரன் ஆனேன் என்று எதையேனும் கற்பித்துக்கொள்ளாமல் அறிவுடையோன் வாழமுடியாது. அது அவனுடைய பிழைதான் என எண்ணிக்கொண்டால் அவன் தன்னிரக்கத்தால் செத்துவிடுவான். ஆகவே பிறரை குற்றம் சாட்டுகிறான். குலத்தை, குடும்பத்தை, உறவினரை, உயிர்கொடுத்த தந்தையை. அனைவரும்தான் அவனை குடிகாரனாக்கியவர்கள். ஒவ்வொருநாளும் ஒரு புதிய எதிரியை கண்டடைகிறான். அவர்கள் மேல் வெறுப்பும் கசப்பும் கொள்கிறான். வசைபாடுகிறான். காறி உமிழ்கிறான், ஏளனம் செய்கிறான். அந்தக்கசப்பு வழியாக அவன் அந்தநாளை ஓட்டுகிறான். கள்மயக்கின் இடைவெளிகள் வழியாகத் தெரியும் தன்னுணர்வை கடந்துசெல்கிறான்.”

“உச்சகட்ட வெறுப்பும் சினமும் மூண்டு எழுகையிலேயே முற்றிலும் இயலாமையையும் அறியும் ஒருவனைப்போல இரக்கத்திற்குரியவன் யார்?” அவன் தொடர்ந்தான். “அவன் தன்னை கோமாளியாக்கிக் கொள்கிறான். அல்லது ஆணவம் மிக்கவனாக காட்டுகிறான். தன்னந்தனித்து நின்று உலகின் முன் அறமுரைப்பவனாகவும், ஊழால் பழிவாங்கப்பட்டவனாகவும், அநீதியாகப் புறக்கணிக்கப்பட்டவனாகவும் சித்தரித்துக்கொள்கிறான். தீமையே உருக்கொண்டவனாக தோற்றம் தருகிறான். அன்பு கொண்டு உருகி அழுகிறான். உலகை நோக்கி இறைஞ்சுகிறான். ஒவ்வொரு நாளும் ஒரு வேடம். ஒவ்வொன்றும் கடும் தன்னிரக்கத்திலேயே சென்று முடியும் என்பதை அவன் நன்கறிவான். அழுது கண்ணீர்வடிய அவன் துயில்கிறான். அதே தன்னிரக்கம் ஊறித்தேங்கிய உள்ளத்துடன் விழித்தெழுகிறான்.” குண்டாசி உடனே சிரித்தான். “தந்தையே, நான் அடிவாங்கி அழுது துயின்றேன் என்றால் விழித்தெழுகையில் ஒரு மெல்லிய நிறைவை உணர்வேன். நான் செய்தவற்றுக்குரிய தண்டனையையும் முன்னரே பெற்றுவிட்டேன் அல்ல்வா?”

“நான் குடிப்பவர்களை எப்போதும் பார்த்துவருகிறேன்” என்றார் விதுரர். “ஒவ்வொரு போருக்குப்பின்னரும் குடிவெறியர்கள் கூடிவிடுவார்கள். போரற்ற வெறுமை நிலையிலும் குடிவெறியர்கள் உருவாகிறார்கள். பாரதவர்ஷம் அவர்களிடம் கருணை காட்டுவதில்லை. குடி மீறிப்போன வீரர்கள் உடனடியாக படைக்கலங்கள் பிடுங்கப்பட்டு துரத்தப்படுகிறார்கள். வைசியர்களும் சூத்திரர்களும் தொழில்களில் இருந்து அகற்றப்படுகிறார்கள். அவர்கள் பின்னர் தனிச்சமூகமாக மாறுகிறார்கள். நகரின் மானுடக்குப்பைகளாக வாழ்ந்து விரைவிலேயே செத்துவிடுகிறார்கள். பாரதவர்ஷத்தின் அத்தனை நகரங்களிலும் அடித்தளங்களில் குடிகாரர்கள் நிறைந்திருக்கிறார்கள். நகரம் விரிவாகும்தோறும் அவர்களும் பெருகுகிறார்கள். ஆம், குப்பைகள், கழிவுப்பொருட்கள்… வேறுவழியே இல்லை.”

குண்டாசி “குடிகாரர்கள் சமூகம் அல்ல தந்தையே, அவர்கள் ஒவ்வொருவரும் தனியர்கள். ஏனென்றால் குடிக்காதவர்களுக்கு குடிகாரர்களின் உலகம் தெரியாது. குடிப்பவர்கள் பிறரைப்பற்றி நினைப்பதில்லை” என்றான். விதுரர் சிரித்து “நமது சமூகங்கள் போரையும் உழைப்பையும் மையமாக்கியவை மைந்தா. அவற்றில் இருந்து விலகியவனை அழித்தபடிதான் அவை மேலே செல்லமுடியும்” என்றார். குண்டாசி மீண்டும் பெருமூச்சு விட்டபடி அமைதியானான்.

விதுரர் அவனை ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டிருந்தார். அவன் உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்துகொண்டிருந்தது. உலர்ந்த உதடுகளை அடிக்கடி நாவால் நக்கியபடி முகத்தில் ஏதோ ஊர்ந்து செல்வதுபோல கன்னங்களையும் மூக்கையும் காதுகளையும் நடுங்கும் விரல்களால் வருடியபடி மறுகணம் எழுந்து செல்லப்போகிறவன் போல அமர்ந்திருந்தான். அவன் உண்மையிலேயே மீண்டுவிட்டானா? மீளமுடியுமா?

குண்டாசி “தந்தையே, நான் உண்மையிலேயே மீண்டுவிட்டேனா?” என்றான். விதுரர் திடுக்கிட்டு “இது என்ன வினா? ஐயமிருந்தால் ஆடியில் பார். உன் முகமும் கண்களும் எல்லாம் மாறியிருக்கின்றன. மட்கிய மரம் முளைவிட்டெழுவதைப்போல நீ உயிர்கொண்டுவிட்டாய் என்கிறார்கள் அரண்மனையிலுள்ள அனைவரும். இன்னும் சில நாட்களில் நீ முழுமையாகவே மீண்டு விடுவாய்” என்றார். குண்டாசி சிரித்து “நீங்கள் திடுக்கிடுவதைக் கண்டேன் தந்தையே” என்றான்.

விதுரர் அவன் தலைமேல் கை வைத்து “ஆம், என் அகம் ஏங்குகிறது. ஏனென்றால் உன்னை மண்ணில் வந்த தேவருலகக் குழந்தைபோல பார்த்தவன் நான். கௌரவர்களிலும் பாண்டவர்களிலும் நான் உனக்களித்த முத்தங்களை எவருக்குமே அளித்ததில்லை” என்றார். அவர் கண்களில் கண்ணீர் நிறைந்தது. “உனக்காக தனிமையில் நான் விட்ட கண்ணீரை உன் அன்னையும் விட்டிருக்க மாட்டார்.” குண்டாசி கைநீட்டி அவரது பாதத்தை தொட்டான். “தந்தையே, இது தங்களுக்காக. இனி இல்லை…”

விதுரர் ”ஆனால் இன்றும் நீ குடித்தாய்” என்றார். “ஆம், குடிக்காமலிருக்க முடியவில்லை. சற்று குடித்தேன். ஓரிரு மிடறு. அவ்வளவுதான். மீண்டுவிடுவேன் தந்தையே. உறுதியாக மீண்டுவிடுவேன்” என்றான் குண்டாசி. “நான் மீள்வதும் வாழ்வதும் என்னிடமில்லை. அது அங்கே காம்பில்யத்தில் நாளை நடப்பதில் இருக்கிறது. அவர்களுக்குத் தெரியும் என்ன நிகழ்ந்தது என்று. நாளை அவர்கள் என்னைக் கண்டதும்…” குண்டாசி தொழுவது போல மார்பில் கைகளை வைத்துக்கொண்டான். “நான் சென்று அவர்களின் காலடியில் விழுந்துவிடுவேன். எந்த அவையாக இருந்தாலும். இந்நகரே சூழ்ந்திருந்தாலும்… ஆம். அது மட்டுமே நான் செய்யக்கூடுவது.”

“தருமனின் ஓலையைப்பற்றி சொன்னேனே?” என்றார் விதுரர். “உன்னை அவன் அள்ளி தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்வான்… ஐயமே இல்லை.” குண்டாசி, “அது எனக்கு வியப்பூட்டவில்லை தந்தையே. அவர் அவ்வாறுதான் செய்யமுடியும். அர்ஜுனரும் நகுல சகதேவர்களும்கூட என்னை ஏற்பார்கள். நான்…” அவனால் பேசமுடியவில்லை. மூச்சு அடைக்க சிலகணங்கள் தவித்தபின் “மூத்தவர் பீமன் என்னை ஏற்கவேண்டும்… அவர் ஏற்காவிட்டால் என்னை நான் ஏற்கமுடியாது” என்றான்.

“அவன் ஏற்காமலிருக்க மாட்டான். அவர்கள் நால்வருமே மூத்தவனின் குரல் அன்றி வேறு சிந்தை அற்றவர்கள்” என்றார் விதுரர். “ஏற்பார். அவரது சொல்லும் சித்தமும் ஏற்கும். ஏனென்றால் அது மூத்தவரின் ஆணை. தந்தையே, அவரது தோள்களும் கரங்களும் ஏற்கவேண்டும். அவரது உடல் என்னை ஏற்கவேண்டும். அதை அவர் என்னை தொடும்போதே நான் உணர்ந்துகொள்வேன்… அதன்பின்னர்தான் நான் கள்மயக்கில்லாமல் துயில்வேன்.”

“மைந்தர் உள்ளங்களில் மூதாதையர் வந்தமரும் கணங்கள் உண்டு மைந்தா. மூதாதையரை வேண்டிக்கொள். நாம் அவர்களின் குருதி. அவர்களின் கனவுகளின் நுனி. அவர்கள் விண்ணுலகில் இருந்து நம்மை கனிந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அவர்கள் கைவிட மாட்டார்கள்” என்றார் விதுரர். “விசித்திரவீரியரைப் பற்றி இன்னும் சொல்கிறார்கள் சூதர்கள். பெருங்கருணை கொண்ட மாமனிதர். மானுடரின் சிறுமையை முழுதறிந்தபின்னரும் சிரித்துக்கொண்டு கடந்து சென்றவர். அவரது வாழ்த்து உன்னுடனும் என்னுடனும் இருக்கட்டும்…”

குண்டாசி மீண்டும் பெருமூச்சு விட்டான். ”தந்தையே, இந்நாட்களில் ஒருமுறை விசித்திரவீரியரை எண்ணிக்கொண்டேன். அங்கே குஹ்யமானசம் என்னும் குளத்தின் அருகே குடிலில் வாழும் ஸ்தானகமுனிவர் விசித்திரவீரியரின் தோழர் என்றார்கள். அவரைக் காண்பதற்காக சென்றேன். கூரை விலகிப் பறந்த சிறுகுடிலில் சுள்ளிக்கட்டு போல ஒட்டிச்சுருங்கிய உடலுடன் அமர்ந்திருந்தார். எரியும் விழிகள் மட்டும் இல்லையேல் இறந்த உடலென்றே சொல்லிவிடலாம். அவரை வணங்கி காலடியில் அமர்ந்தேன். அவர் என்னிடம் ஏதோ சொல்லவிருக்கிறார் என்று எதிர்பார்த்தேன்.”

“அவர் விசித்திரவீரியரிடம் இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். அதன்பின் பேசவே இல்லை. இப்போது இரண்டு தலைமுறைக் காலமாகிறது” என்று விதுரர் சொன்னார். குண்டாசி “ஆனால் அவர் என் கனவில் வந்தார். சிரித்துக்கொண்டே இருந்தார். கண்களில் நீர் வழிய உடல் அதிர சிரித்துக்கொண்டிருந்த அவரைக் கண்டதும் நான் விழித்துக்கொண்டேன். நானும் சிரித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். அதன்பின் நானும் சிரிக்கத் தொடங்கினேன்” என்றான். விதுரர் மீண்டும் அவன் தலையைத் தொட்டு “அது விசித்திரவீரியரின் நகைப்பு. அது உனக்கு என்றும் ஒளியாக உடனிருக்கட்டும் மைந்தா” என்றார்.

காம்பில்யத்தின் கோட்டைவாயிலில் முதற்சாமத்தின் சங்கு ஒலித்தது. பெருமுரசம் ஒருமுறை முழங்கி அமைந்தது. “இந்நகரம் இன்று துயிலாது” என்றான் குண்டாசி. “அதன் நினைவில் என்றும் வாழப்போகும் நாள் அல்லவா?” விதுரர் “மைந்தா, நகரங்கள் மானுடரைவிட நீண்ட வாழ்நாள் கொண்டவை. அவற்றுக்கு சக்ரவர்த்திகள்கூட கங்கைக்கு குமிழிகளைப் போலத்தான்” என்றார். பந்த வெளிச்சத்தில் நிழல்கள் நீண்டு வானிலெழுந்து ஆடிக்கொண்டிருந்தன.

“தந்தையே, நீங்கள் பாண்டவர்களை நகருக்கு அழைத்துவந்தபின் என்ன நிகழும்?” என்றான் குண்டாசி. ”உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை மைந்தா. மணிமுடியை துறப்பதாக தருமன் எழுதியிருக்கிறான். ஆனால் அது அவன் அன்னையின் முடிவென்று தோன்றவில்லை. அவ்வாறு அவன் மணிமுடிதுறந்தாலும் அரசர் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அஸ்தினபுரிக்கு தருமனே அரசன் என்றே அவர் சொல்கிறார். நாட்டை அளிக்க துரியோதனன் ஒப்பமாட்டான். சகுனியும் கணிகரும் ஒப்பமாட்டார்கள்.”

சிலகணங்களுக்குப்பின் “நாட்டை இரு பகுதிகளாகப் பிரிப்பது அன்றி வேறு வழியே தெரியவில்லை. அதை அரசர் ஏற்றுக் கொண்டாரென்றால் அனைத்தும் சின்னாட்களில் முறையமைந்துவிடும் என நினைக்கிறேன்” என்றார் விதுரர். குண்டாசி “இளையோனாகப் பிறந்தமை பெரும் வரம் என உணர்கிறேன் தந்தையே. சுமைகள் இல்லை. கடமைகள் மட்டுமே உள்ளன. ஏதேனும் ஒரு போரில் மூத்தவருக்காக தலையுடைந்து மூளைசிதறி செத்து விழுந்தால்போதும். வீரசொர்க்கம். முழுமை…” அவன் சிரித்ததை சினத்துடன் திரும்பிப்பார்த்த விதுரர் “என்ன பேச்சு இது… மூடு வாயை” என்றார்.

குண்டாசி மேலும் சிரித்தபடி எழுந்து கீழே செல்ல திரும்பினான். “மீண்டும் குடிப்பதற்கா?” என்றார் விதுரர். “என்னை பொறுத்தருளுங்கள் தந்தையே. என் உடலுக்குள் இருக்கும் பேய் இனியும் காத்திருக்காது…” என்றபின் அவன் படிகளில் இறங்கினான். “வேண்டாம் மைந்தா” என்றார் விதுரர். “ஒரு மிடறு. சற்றே துயிலும் வரை… ஒரே ஒரு மிடறு” என்றான் குண்டாசி படிகளில் இறங்கியபடி. விதுரர் பெருமூச்சுடன் உடலை தளர்த்திகொண்டார்.

அவர் சற்றுநேரம் அமர்ந்தபடியே துயின்றிருக்கவேண்டும். போர்முரசின் ஒலியும் படைக்கூச்சல்களும் கேட்டு விழித்துக்கொண்டார். கொலைதிகழ் பெருங்களத்தில் குருதியாடியபடி சென்றுகொண்டே இருந்த கனவை நினைத்து வாயைத் துடைத்துக்கொண்டு எழுந்தார். வாய்திறந்து நீர்க்காற்றில் துயின்றிருந்தமையால் தொண்டை உலர்ந்து தோலால் ஆனதுபோலிருந்தது. அவர் படிகளின் வழியாக இறங்கிய ஒலி கேட்டு ஓடிவந்த சேவகன் “விடியலுக்கான முரசு அது அமைச்சரே. முதற்கதிர் எழும்போது நமது அணிப்படகுகள் நகரணையவேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். இளைய அரசர் சத்யஜித்தும் பட்டத்து இளவரசர் சித்ரகேதுவும் துறைக்கு வந்து நம்மை வரவேற்கிறார்கள்” என்றான்.

விதுரர் “குண்டாசியை எழுப்பு” என்றபடி நீராடச்சென்றார். நீராடி புதுப்பட்டாடையும் வைரஅணிகளும் பொற்பிடி வைத்த உடைவாளுமாக அவர் படகுமுகப்புக்கு வந்தபோது முழுதணிக்கோலத்தில் குண்டாசியும் வந்துவிட்டிருந்தான். அவன் காதுகளில் இரு விண்மீன்கள் என நீலநிற வைரத்துளிகள் ஒளிதிரும்ப அசைந்தன. விதுரர் கைகாட்ட படகிலிருந்து எரியம்பு ஒன்று எழுந்தது. காம்பில்யத்தில் இருந்து எரியம்பு எழுந்ததும் படகுகள் பாய்களை விரித்தன. முகில்சூடிய மலைமுடிகள் போல அவை நீரில் எழுந்து துறைமேடை நோக்கி சென்றன.

படகுகள் அணுகியபோது காம்பில்யத்தின் கோட்டையின் ஏழு காவல்மாடங்களிலும் நின்றிருந்த வீரர்கள் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியையும் பாஞ்சாலத்தின் விற்கொடியையும் பறக்கவிட்டனர். துறைமேடை முழுக்க நூற்றுக்கணக்கான மூங்கில்கள் நடப்பட்டு அவை தளிரிலைகளாலும் மலர்களாலும் மூடி அணிசெய்யப்பட்டிருந்தன. தளிரும் மலரும் கலந்த தோரணங்கள் செறிவாகக் கட்டப்பட்டு துறைமேடையே பூத்த காடாக மாறிவிட்டிருந்தது. நான்கு வரிசைகளாக மங்கலவாத்தியங்கள் ஏந்திய சூதர்கள் நின்றனர். அவர்களின் நடுவே எண்மங்கலத் தாலங்களுடன் அணிப்பரத்தையர் நிற்க அவர்களைச் சூழ்ந்து மின்னும் கவசங்கள் அணிந்த படைவீரர்கள் ஒளிவிட்ட வாள்களும் வேல்களுமாக நின்றனர்.

துறைமுகப்பில் வேறு கலங்களேதும் நிற்கலாகாதென்று ஆணையிருந்தமையால் அஸ்தினபுரியின் முதற்கலம் கரையணைந்தபோது அது நீராடும் யானையின் அடிவயிற்றை முட்டும் பரல்மீன் எனத் தோன்றியது. துறையில் இருந்து பசுவின் நாக்கு போல நீண்டு வந்த மரப்பாதை மரக்கலத்தை தொட்டதும் கலத்திலிருந்த மங்கலவாத்தியமேந்திய சூதர்கள் இசைத்தபடி நிரைவகுத்து இறங்கிவந்தனர். கரையில் நின்றிருந்த சூதர்களும் இசைக்கத் தொடங்க துறைமேடையே பெரும் இசைக்கருவி என முழங்கியது. இரண்டாவது படகிலிருந்து அஸ்தினபுரியின் அணிப்பரத்தையர் இறங்க அவர்களை காம்பில்யத்தின் அணிப்பரத்தையர் எதிர்கொண்டு மங்கலம் காட்டி வரவேற்றனர்.

விதுரரின் பெரும்படகு கரையணைந்தபோது கோட்டைமேல் பெருமுரசு முழங்கியது. கோட்டைவாயிலைக் கடந்து உள்ளிருந்து அரசகுலத்து அணிநிரை துறைமுகப்பு நோக்கி வந்தது. முகப்பில் ஏழு சூதர்கள் மங்கலம் முழக்கி வர தொடர்ந்து தாலங்களுடன் ஏழு அணிப்பரத்தையர் வந்தனர். முகபடாமிட்ட பட்டத்துயானையும் செவிகளில் வைரங்கள் சுடரும் அரசப்புரவியும் பொற்கவசமிட்ட கொம்புகள் கொண்ட வெள்ளெருதும் வந்தன. அவற்றுக்குப்பின்னால் இளையமன்னர் சத்யஜித்தும் இளவரசர் சித்ரகேதுவும் உருவிய உடைவாளுடன் நடந்து வந்தனர். பாஞ்சாலத்தின் விற்கொடி துவண்ட நான்கு அணித்தேர்கள் அவர்களை தொடர்ந்து வந்தன.

விதுரர் படகிலிருந்து மரப்பாதை வழியாக இறங்கி வந்தபோது அணிப்பரத்தையர் அவர்மேல் மலர்களையும் மஞ்சளரிசியையும் தூவி வாழ்த்துக்கூவினர். மங்கல இசையின் ஒலியில் காட்சிகளே அதிர்ந்தன. சத்யஜித்தும் சித்ரகேதுவும் அருகே வந்து அவர்முன் வாள்களைத் தாழ்த்தி தலைவணங்கி முகமன் கூறி வரவேற்றனர். அவர் தலைவணங்கி அஸ்தினபுரியின் அரசரின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர்கள் முன்னால் வந்து குண்டாசியை வாழ்த்தி வரவேற்றனர்.

சத்யஜித்தும் சித்ரகேதுவும் விதுரரை வரவேற்று கொண்டு சென்று ரதங்களில் ஏறச்செய்தனர். அவற்றில் அஸ்தினபுரியின் கொடியும் ஏற்றப்பட்டது. அவர்கள் நின்றுகொண்டு கைகூப்பி வாழ்த்துக்களை ஏற்றபடி நகரத்தெருக்கள் வழியாக சென்றனர். முன்னால் பட்டத்துயானையும் அணிப்புரவியும் களிற்றெருதும் சென்றன. பின்னால் இளைய அரசரும் இளவரசரும் வந்தனர். மலர்மாலைகளும் தளிர்த் தோரணங்களும் கொடிகளும் பாவட்டாக்களும் மலர்வளைவுகளுமாக அணிக்கோலம் பூண்டிருந்த நகரின் இரு மருங்கிலும் மாளிகைகளின் உப்பரிகைகளிலும் நின்றிருந்த மக்கள் வாழ்த்துரை கூவி மலர்களை அள்ளி அவர்கள் மேல் வீசினர்.

VENMURASU_PIRAYAGAI_EPI_90

ஓவியம்: ஷண்முகவேல்

மலர்மழை மஞ்சளரிசிமழை வழியாக விதுரர் சென்றார். அவர் சென்ற வழியெங்கும் காவல்மாடங்களில் இருந்து அணிமுரசுகள் ஒலித்தன. அஸ்தினபுரியின் சீர்வரிசைகளை கொண்டுவந்த பன்னிரு வண்டிகள் அவர்களைத் தொடர்ந்து வந்தன. அரண்மனைக் கோட்டை வாயிலை அடைந்தபோது அகம்படியினரும் அணிநிரையினரும் சூழ துருபதனே வந்து அவரை அழைத்து உள்ளே கொண்டு சென்றார். அரண்மனையின் பெருமுற்றத்தை அடைந்ததும் அரசகுலத்துப்பெண்டிர் நால்வர் வந்து விதுரரை மஞ்சள் திலகமிட்டு வரவேற்றனர்.

அரண்மனைக்குள் சென்றதும் துருபதன் வணங்கி “தங்கள் வருகை அஸ்தினபுரியின் அரசரே நேரில் வந்ததற்கு நிகர் அமைச்சரே. சற்று ஓய்வெடுத்து உடைமாற்றி வருக. சுடரொளி நிறம்மாறும் நேரத்தில் மணநிகழ்வு என நிமித்திகர் நேரம் வகுத்தளித்திருக்கிறார்கள்” என்றார். விதுரர் ”அவ்வண்ணமே ஆகுக” என்றார்.

“இம்மணநிகழ்வில் அரசர்கள் எவரும் பங்கெடுக்கவில்லை அமைச்சரே” என்றார் துருபதன். “அனைவரும் நேற்று முன்தினமே அகன்றுவிட்டனர். அவர்களுக்கு இம்மணநிகழ்வு உகந்ததாக இல்லை என்றனர்” என்றபின் புன்னகைத்து “ஆனால் அதுவல்ல உண்மை. மகதமன்னர் ஜராசந்தர் சென்றபின் அவரது சமந்தர்களும் துணைமன்னர்களும் இருக்க விரும்பவில்லை. அஸ்தினபுரியின் இளவரசர் சென்றபின் அவர்களின் மன்னர்குழாமும் சென்றுவிட்டனர். இங்கிருப்பவர்கள் எங்கள் அருகமைந்த சில சில சிறு மன்னர்கள்மட்டுமே. உசிநாரர்களுக்கும் காளகூடர்களுக்கும் குலிந்தர்களுக்கும் வேறு வழியில்லை. என் எல்லைப்புறத்து அரசர்கள்…” என்றார்.

“அஸ்தினபுரி பாண்டவர்களை ஏற்கிறதா என்ற ஐயம் அரசர்களுக்கு இருப்பது இயல்பே. எந்த அரசகுலத்து மணநிகழ்வும் அரசியல்கூட்டுதான் என அரசர்கள் அறிவார்கள்” என்றார் விதுரர். “இந்நிகழ்வுக்குப்பின் பாண்டவர்கள் அஸ்தினபுரியில் நகர்நுழைகையில் அந்த அச்சம் விலகும்.” துருபதனின் விழிகள் மாறுபட்டன. “இங்கிருந்து அவர்களை தாங்கள் அஸ்தினபுரிக்கு அழைத்துச்செல்லவிருப்பதாக செய்தி வந்தது. அது எனக்கு உவகை அளித்தது. ஆனால் தருமன் அங்கே பட்டத்து இளவரசராகத்தான் நகர்நுழைகிறாரா என அறிய விரும்பினேன்” என்றார்.

“ஆம், பட்டத்து இளவரசராகத்தான். அதுவே அரசரின் ஆணை” என்றார் விதுரர். துருபதன் முகம் மலர்ந்து “அப்படித்தான் நானும் எண்ணினேன். அஸ்தினபுரியின் அரசர் மதவேழமென அகம் விரிந்த மாமனிதர் என்றனர். சில ஐயங்கள் நிலவின. அவை வெறும் வீண்சொற்கள் என நான் அறிவேன். ஆயினும் நான் வினவ எண்ணினேன், அது என் கடமை என்பதனால்…” என்றார். விதுரர் புன்னகைத்து “ஐயங்கள் இயல்பே. அவர்கள் காடுறைந்தமை எழுப்பிய வினாக்கள் அவை. அவற்றை அவர்களின் நகர்நுழைவு முழுமையாகவே அகற்றிவிடும்” என்றார்.

“அவ்வாறே ஆகுக” என்றபின் துருபதன் விடைபெற்றார். அவர் செல்வதை நோக்கியபின் அறைக்கதவை சாற்றிய குண்டாசி “அவர் ஒன்றிலேயே உறுதிகொண்டுவிட்டார் தந்தையே. தன் மகள் பேரரசியாகவேண்டும் என்பதையன்றி எதையும் அவர் எண்ணவில்லை” என்றான். விதுரர் பெருமூச்சுவிட்டு “அவரைப்பற்றி சூதர்கள் சொல்லும் கதைகள் அச்சமூட்டுகின்றன. ஒன்றுக்காக மறுபிறப்பு கொள்ளும் மானுடர் அதற்காக மட்டுமே வாழ்கிறார்கள். அவர்கள் வில்லில் இருந்து கிளம்பிவிட்ட அம்புகள்” என்றார்.

கதவை மெல்லத்திறந்த சேவகன் “பாண்டவர்கள்” என்று அறிவித்தான். குண்டாசி தீபட்டவனைப்போல எழுந்து பின்னால் விலகி சுவர் அருகே சென்று இரு கைகளையும் சுவரில் ஒட்டிக்கொண்டு நின்றான். வலிப்பு கொள்ளப்போகிறவனைப்போல முகமும் உடலும் இழுபட்டு கழுத்துத்தசைகள் இறுகின. அவனை திரும்பி நோக்கியபின் விதுரர் வாயிலை நோக்க தருமன் வந்து கதவைப்பற்றியபடி நின்றான். உணர்ச்சிகளை வெல்ல உதடுகளை கடித்திருந்தான்.

விதுரர் அவனைக் கண்டதும் அனைத்தையும் மறந்தார். அவன் இளமையை கடந்து விட்டிருப்பதாகத் தோன்றியது. நெற்றி மேலேறி மூக்கு சற்று புடைத்து கழுத்துத் தசைகள் மெல்லத் தளர்ந்து இன்னொருவன் எனத் தோன்றினான். அவன் விழிகள் மேலும் கனிந்து விட்டிருந்தன. அவனை நோக்கி கைநீட்டினார். அவனை அள்ளி மார்போடணைக்க எண்ணிய உள்ளம் மறுகணமே தழைந்து அவன் மடியில் தலைவைத்துக்கொள்ள விழைந்தது. ஏன் என மறுகணமே வியந்தது. அவனுடையவை அன்னையின் விழிகள். ஆம், அதனால்தான். ஆனால் ஆண்மகனில் எப்படி வந்தது அன்னைநோக்கு?

தருமன் அருகே வந்து குனிந்து விதுரரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவனை அள்ளி தன் தோளுடன் அணைத்துக்கொண்டார். அத்தனை தடைகளையும் கடந்து அவரிடமிருந்து அழுகை எழுந்தது. தருமனின் தோள்களில் தன் முகத்தை புதைத்தபடி அவர் கண்ணீர் விட்டார். வெம்மையுடன் துளிகள் அவன் தோளில் விழுந்து வழிந்தன. கால்கள் தளர்ந்து அவன் மேலேயே தன் எடையை முழுக்க சுமத்திக்கொண்டார்.

அவன் தோலின் மணத்தை அறிந்தார். மடியில் தூக்கிவைத்து அவர் கொஞ்சிய அந்த இளமைந்தனின் வாசனை. இத்தனை வளர்ந்தபின்னரும் அது எஞ்சியிருக்கிறதா என்ன? உடலில் அல்ல. உள்ளத்திலும் அல்ல. அவையெல்லாம் மாறிவிட்டன. இது ஆழத்தின் வாசனை. கருவறைவிட்டு மானுடன் கொண்டுவருவது. இறந்தபின் விண்ணுலகு சென்றால் மூதாதையர் இப்படித்தான் தம் மைந்தர்களை அறிந்துகொள்வார்கள். அவனை இறுக அணைக்கவே அவர் நெஞ்சு எழுந்தது. ஆனால் உடல் துவண்டு அவன் மேல் ஆடையென கிடந்தது.

தருமன் அவரை மெல்ல விலக்கி திரும்பிப்பார்த்தான். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் வாயிலில் நின்றிருந்தார்கள். தருமன் அவர்களைப் பார்த்து தலையசைக்க அவர்கள் வந்து விதுரரை வணங்கினர். விதுரர் கண்ணீர் தாடியில் வழிந்து சொட்ட அவர்களை நோக்கி கைவிரித்தார். ஒவ்வொருவரும் வளர்ந்து மாறியிருந்தனர். தனித்து வேரூன்றி கிளைவிரித்த மரங்களாகிவிட்டிருந்தனர். மைந்தர் வளர்ந்திருப்பது ஏன் அத்தனை உவகையை அளிக்கிறது! ஏன் அத்தனை துயரத்தையும் உடன் சேர்த்துக்கொள்கிறது!

விதுரர் அவர்களை சேர்த்து அணைத்துக்கொண்டார். அர்ஜுனனின் தோள்களை மாறி மாறி முத்தமிட்டார். நகுலனையும் சகதேவனையும் இரு கைகளாலும் தலையைப்பற்றி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு குழல்கற்றைகளை முகர்ந்தார். அவர்களின் கன்னங்களை வருடினார். இளமைந்தர் முகங்களுக்கே உரிய எண்ணைப்பிசுக்கு. சிறிய பருக்கள். கையை உறுத்தும் மென்மயிர் பரவல். அவர்களின் தோள்தசைகள் இறுகி விட்டிருந்தன. அவர்களின் கையிடுக்கில் இருந்து புதுப்புனுகின் வாசனை எழுந்தது. அந்த வாசனை அவர்கள் தலைமுடியில் இருந்தது. தோளிலும் விலாவிலும் இருந்தது.

அவர்களின் உடல்கள் மட்டுமே அவர் முன் இருந்தன. நறுமணம் மிக்க நீரோடையென அவரை அவை சுழித்துச்சென்றன. ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு வாசனை. தருமனின் உடலில் மாவுவாசனை. அர்ஜுனன் உடலில் கந்தகமண்ணின் வாசனை. நகுலனில் வாழைமட்டையின் வாசனை. சகதேவனில் தாழைமடல் வாசனை. முகர்ந்து முகர்ந்து தீராத வாசனைகள். வாசனைகள் வழியாக அவர்களை அவர் கைக்குழந்தைகளாக மீட்டுக்கொண்டார். சிந்தனையில்லாமல் நேற்றும் நாளையும் இல்லாமல் அவர்களுடனிருந்தார். எளிய விலங்கு போல.

பீமன் வந்து வாயிலில் நின்ற ஓசைகேட்டு அவர் மீண்டு வந்து நோக்கினார். அவன் குண்டாசியை கண்களைச் சுருக்கிப் பார்த்தான். பிறர் அவனை அடையாளம் காணவேயில்லை என்று விதுரர் உணர்ந்தார். ”இவன்…” என அவர் சொல்ல முற்படுவதற்குள்ளேயே பீமன் அடையாளம் கண்டு கொண்டு இரண்டு காலடிகளில் அவனை நெருங்கி கன்னத்தில் ஓங்கி அறைந்தான். குண்டாசி அலறியபடி சுவர்மூலை நோக்கி விழுந்தபோது அவன் கழுத்தைப்பற்றித் தூக்கி சுவரோடு சாய்த்து “குடிக்கிறாயா? குடிக்கிறாய் அல்லவா? மூடா” என்று கிட்டித்தபற்களுடன் கூவினான். “சொல்… குடிக்கிறாயா?”

குண்டாசி திணறியபடி இருகைகளாலும் அவன் கையை பற்றியபடி “இல்லை மூத்தவரே… இல்லை மூத்தவரே!” என்றான். பீமன் பற்களை இறுக்கி “இனி ஒரு சொட்டு உன் வாயில் விழுந்ததென்றால் அன்றே உன்னைக் கொன்று கங்கையில் வீசுவேன்” என்றான். “இல்லை மூத்தவரே… இனி குடிக்கமாட்டேன்” என்றான் குண்டாசி. பீமனின் கை தளர அவன் துவண்டு விழப்போனான். பீமன் அவனை அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொண்டு “மூடா, மூடா” என்றான். தன் பெரிய கைகளால் அவன் தோள்களை மாறி மாறி அடித்தபின் மார்புடன் இறுக்கிக்கொண்டான்.

வாயிலில் வந்து நின்ற சேவகன் “மணநிகழ்வுகளுக்கான நேரம் நெருங்குகிறது. அணிச்சேவகர்கள் காத்திருக்கிறார்கள்” என்றான். விதுரர் புன்னகையுடன் நகுலனை விலக்கி “செல்க. அணிசெய்து மணமகன்களாக மேடைக்கு வருக” என்றார். அவன் புன்னகையுடன் பார்வையை விலக்கிக் கொண்டான். தருமன் இதழ் கோணலாக புன்னகை செய்து “அனைத்தும் ஒரு நடிப்பு என ஆயிரம் முறை படித்திருக்கிறோம் அமைச்சரே. அதை அறியும் கணங்கள் இப்போதுதான் தொடங்குகின்றன” என்றான்.

அவர்கள் விடைபெற்று கிளம்பினர். பீமன் குண்டாசியை அதுவரை தன் கைகளுக்குள்தான் வைத்திருந்தான். அவனை விலக்கி இரு தோள்களையும் பற்றி குனிந்து நோக்கி “மூடா, இனி குடித்தாயென்றால்…“ என்று சொல்லத் தொடங்க “இல்லை மூத்தவரே” என்றான் குண்டாசி. பீமன் அவன் தோள்களைப் பற்றி மும்முறை உலுக்கிவிட்டு பிடியை விட்டான். திரும்பி விதுரரை வணங்கிவிட்டு வெளியே சென்றான்.

விதுரர் பெருமூச்சுடன் குண்டாசியிடம் “நிறைவடைந்தாய் அல்லவா?” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “இதற்குமேல் என்ன?” என்றார் விதுரர் மீண்டும். “தந்தையே, அவரது உள்ளம் என்னை ஒருபோதும் விலக்கவில்லை என அறிந்தேன். அவரது ஆன்மா என்னை முழுமையாக ஏற்றுத்தழுவியது இப்போது… ஆனால்” அவன் விழிகள் சஞ்சலத்துடன் அசைந்தன. “அவர் உடலால் ஆனவர் தந்தையே. அவர் உடல் என்னை ஏற்கவில்லை. அது இனி ஒருபோதும் எங்களை ஏற்காது.”

“என்ன சொல்கிறாய்?” என்று மூச்சடைக்கும் குரலில் கேட்கும்போதே விதுரர் அந்த வெறும்கூற்று உண்மை என எப்படி தன் அகம் எண்ணுகிறதென்றும் வியந்துகொண்டார். “ஆம், அதுதான் உண்மை. அதை என் உடல் அறிந்தது. வெறும் சதைதான். ஆனால் அது அன்னம் அல்லவா? தெய்வம் அல்லவா? அதற்குத்தெரியும்” என்றான் குண்டாசி. பின்பு சிரித்துக்கொண்டு “ஒருநாள் அவர் கையால் என் தலை உடைந்து தெறிக்கும் தந்தையே. சற்று முன் அதை அத்தனை அருகே உணர்ந்தேன்” என்றான்.

“வாயை மூடு…” என்று விதுரர் சீறினார். “மீண்டும் குடிப்பதற்காக இதையெல்லாம் சொல்கிறாய்…” குண்டாசி “இல்லை தந்தையே. இது உண்மை என நீங்களும் அறிவீர்கள்” என்றான். “இந்தக் கணத்தை நோக்கி சிரிக்கக் கற்றுத்தந்த ஸ்தானக முனிவரைத்தான் இப்போது எண்ணிக்கொள்கிறேன்.”

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

நூல் ஐந்து – பிரயாகை – 89

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 2

விதுரர் இடைநாழியில் நடக்கையில் கனகன் பின்னால் வந்து “அரசர் சினம் கொண்டிருக்கிறார்” என்றான். விதுரர் என்ன என்பது போல திரும்பி நோக்க “தாங்கள் அவரை மூன்றுநாட்களாக சந்திக்கவில்லை என்பதே முதன்மையானது” என்றபின் ஒருகணம் தயங்க விதுரர் தலையசைத்தார். கனகன் “நேற்றுமுன்னாள் இரவில் அவரே ஒற்றர்தலைவர் சத்யசேனரை அழைத்து பேசியிருக்கிறார்” என்றார்.

விதுரர் நின்று “என்ன?” என்றார். கனகன் “என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நேற்றுகாலை சத்யசேனரின் ஓலைகள் பறவைகளில் சென்றிருக்கின்றன. ஓலைகளில் ஒன்றை உத்தர கங்காபதத்தில் வைத்து கைப்பற்றி அதன் மந்தணமொழியை வாசித்தோம். அச்செய்தி சற்றுமுன்னர்தான் எனக்கு வந்தது. காம்பில்யத்தில் இருந்து கிளம்பும் அஸ்தினபுரியின் படைகளில் துரியோதனருடன் கணிகரும் சகுனியும் இருந்தாகவேண்டும் என்பது அரசரின் ஆணை.”

விதுரர் படபடப்புடன் “சிறைப்படுத்தவா?” என்றார். கனகன் “ஆணை அவ்வாறல்ல. ஆனால் சிறைதான் அது. அவர்களுக்கு அது தெரியாது என்பதே வேறுபாடு” என்றான். விதுரர் இதழ்களைக் கோட்டி “தெரியாமலிருக்குமா என்ன?” என்றார். “ஆம், அதையும் சத்யசேனர் சொல்லியிருப்பார். அரசரின் ஆணைகள் தெளிவான திட்டமொன்றை காட்டுகின்றன. நேற்றே வட எல்லை தளபதியான சுருதவர்மருக்கும் ஆணைசென்றிருக்கிறது.”

சொல் என்பதுபோல விதுரர் நோக்க கனகன் “நமதுபடைகள் எட்டு பிரிவுகளாகப் பிரிந்து காம்பில்யத்தில் இருந்து இளவரசரும் காந்தாரரும் வரும் நீர்வழியை முழுமையாக காவல் காக்கவேண்டும் என்று” என்றபின் “எவ்வகையிலும் காந்தாரர் தப்பிச்செல்லக்கூடாதென்று அரசர் எண்ணுகிறார் என்றே தோன்றுகிறது.” விதுரர் விழிகளைத் தாழ்த்த “அரசர் என்னை அழைத்தும் சில பணிகளை சொன்னார். அவை எவ்வகையிலும் எண்ணக்கூடியவை அல்ல. நான் உங்கள் ஒற்றன் என்பதனால் என்னை அனைத்தில் இருந்தும் விலக்குகிறார். அது உங்களையும் விலக்குவதே.”

விதுரர் ”வேறென்ன ஆணை?” என்றார். “நேற்றிரவு மனோதரரும் கைடபரும் அரசரை சந்தித்திருக்கிறார்கள். இன்று விடியற்காலையில் அஸ்தினபுரியின் படைகள் அன்றாடப்பயிற்சி போல இடம்பெயர்ந்தன. நான் கோட்டை மேல் ஏறி நோக்கியதுமே என்ன நிகழ்கிறதென்று புரிந்துகொண்டேன். அஸ்தினபுரியின் படைகள் காந்தாரப்படைகளை பல சிறிய துண்டுகளாக பிரித்துவிட்டன. காந்தாரப்படைகளும் சிறையிடப்பட்டுவிட்டன.”

விதுரர் புன்னகைத்து “விழியறியாதவர் என்கிறார்கள். அரசரால் பாரதவர்ஷம் முழுக்க அமர்ந்த இடத்திலிருந்தே படைகளை அனுப்பமுடியும்” என்றார். “ஆம், காந்தாரருக்கும் கணிகருக்கும் கழுவை செதுக்கவும் ஆணையிட்டிருப்பாரோ என ஐயமாக இருக்கிறது.” திடுக்கிட்டு நிமிர்ந்து அவன் விழிகளை நோக்கிய விதுரர் “இது நகைப்புக்குரியதல்ல. அவர் முதலில் கழுவேற்றப்போவது தன் நூறு மைந்தரைத்தான்” என்றார்.

கனகன் திகைத்தபடி “ஆம், நேற்றுமுதல் இங்குள்ள அத்தனை கௌரவர்களுக்கும் காவலர்கள் மாறிவிட்டனர். இயல்பான மாற்றம் என்று எண்ணினேன்” என்றான். விதுரர் “அனைவரையும் சிறையிட்டுவிட்டு அரசர் காத்திருக்கிறார்” என்றார். “அவருக்குத்தேவை பாண்டவர்களை எரிக்க முனைந்தவர் எவர் என்ற சான்று. மறுகணமே ஆணையிட்டுவிடுவார். நான் அவரை அறிவேன். இமையசைக்காமல் பல்லாயிரம்பேரை கொலைக்களத்துக்கு அனுப்ப ஆணையிடும் ஷத்ரியர் அவர்…”

கனகன் திகைத்து சொல்லிழந்து அச்சொல்லின்மை உடலெங்கும் ததும்ப நின்றான். விதுரர் “இன்று என்னுடன் அஸ்தினபுரியின் மூதாதையர் துணைநிற்கவேண்டும்… வேறெதையும் நான் நம்பியிருக்கவில்லை” என்றபின் திரும்பி நடந்தார். சில எட்டுகள் சென்றபின் திரும்பிய விதுரர் “என் மேல் இன்னமும் அரசருக்கு நம்பிக்கை இருக்கிறது. என் சேவகர்கள் எவரும் மாறவில்லை” என்றார். கனகன் ஒளியின்றி புன்னகைத்தான்.

விப்ரர் எழுந்து விதுரரை வணங்கினார். “அரசர் என்ன செய்கிறார்?” என்றார் விதுரர். “இசை கேட்கிறார்” என்று விப்ரர் சொன்னதும் விதுரரின் அகம் அதிர்ந்தது. விப்ரரின் விழிகளைத் தொட்டு விலக்கிக்கொண்டார். உள்ளே செல்லும்போதே இசை கேட்டது. யாழிசை அத்தனை கூர்மையாக இருக்கும் என்று, அதன் ஒவ்வொரு அதிர்வும் செவிகளைத் துளைத்து விழிகளை அதிரச்செய்து பார்வையை அலையடிக்கவைக்கும் என்று விதுரர் அப்போதுதான் உணர்ந்தார்.

இசைக்கூடத்தில் முதியசூதர் யாழிசைக்க அருகே இளம்சூதன் ஒருவன் முழவுடன் அமர்ந்திருந்தான். அப்பால் கைகட்டி இசைகேட்டு நின்றிருந்த சஞ்சயன் அவர்களின் வருகையைச் சொல்ல திருதராஷ்டிரர் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. விதுரர் வந்திருப்பதை அவர் அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. இசை தொடர்ந்துகொண்டிருக்க விதுரர் பீடத்தில் ஓசையின்றி அமர்ந்தார். அமரும்போதே அனைத்தையும் அரசரே தொடங்கட்டும் என்று எண்ணிக்கொண்டார்.

இசை முடிந்ததும் திருதராஷ்டிரர் கையசைத்து அவர்களை அருகழைத்து பரிசில்களை அளித்தார். இளைஞனிடம் அவன் தாளமிட்டதில் உள்ள சில நுட்பமான பிழைகளை சுட்டிக்காட்டியபின் அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார். அவர்கள் குனிந்து பணிந்து வெளியேறியபின் அவர் விதுரனுக்கு எதிர்த்திசையில் முகத்தைத் திருப்பியபடி அமர்ந்திருந்தார். விதுரர் தலைகுனிந்து காத்திருந்தார். விப்ரர் வணங்கி வெளியேறினார். சற்றுக்கழித்து சஞ்சயனும் வெளியேறினான்.

நேரம் சென்றுகொண்டிருந்தது. அந்த அறை புற ஒலிகள் கேளாமல் அமைக்கப்பட்டிருந்தமையால் காதுகளே இல்லாமலாகிவிட்டது போல விதுரர் உணர்ந்தார். அது இருட்டு போலவே ஒரு பருப்பொருள் நிலையாக இருந்தது. அவர் விட்ட மூச்சின் ஒலி அவருக்கே கேட்டது. அரசரின் உடலுக்குள் குருதி ஓடும் குமிழியோசையைக்கூட கேட்கமுடியும் என்று தோன்றியது.

ஓசையின் வழியாகவே காலம் ஓடுகிறதென்று விதுரர் உணர்ந்தார். எண்ணங்களுக்கு காலமில்லை. பல்லாயிரம் காதம் பலநூறு பாதைகள் வழியாகப் பிரிந்து பிரிந்து ஓடியபின்னரும் காலம் அப்படியே நின்றது. அல்லது சித்தம் அறியாமல் அது வெளியே நிகழ்ந்துகொண்டிருக்கிறதா? இப்போது எழுந்து வெளியே சென்றால் ஆண்டுகள் கடந்திருக்குமா? மூடத்தனம். வெற்றுச்சொற்களின் வரிசை. ஆனால் சிந்தைகளை அளவிடவேண்டியிருக்கிறது. அள்ளவேண்டியிருக்கிறது.

சற்று அப்பால் தரையில் விழுந்திருந்த ஒளிக்கீற்றை விதுரர் நோக்கினார். வெளியே எங்கோ அசைந்த ஒரு செந்நிறத் திரைச்சீலையின் அசைவில் அது நிறம் மாறி கொண்டிருந்தது. அந்தத் தாளத்தை நோக்கினார். அது காலமாகியது. கணங்களாகியது. கடந்தது, நிகழ்ந்தது, வரவிருந்தது. காலமென நீண்டது. அதுவரை அறுபட்ட கொடிச்சரடு என துடிதுடித்த சித்தம் அமைதிகொண்டது. காலத்தின் மேல் கால் நீட்டிப் படுத்து கண்ணயர்ந்தது அகம்.

நெடுநேரம் கடந்து விதுரர் அசைந்து அமர்ந்தார். திரும்பி திருதராஷ்டிரரை நோக்கினார். விழியிழந்த மனிதர் அங்கே இல்லை என்று தோன்றியது. ஓர் இருட்டு மூலைபோல அவர் அமர்ந்திருந்தார். விழிக்கோளங்கள் ததும்பிக்கொண்டே இருந்தன. அவரது உள்ளமா அவை? உள்ளத்தை இப்படி காணமுடியும் என்றால் நல்லதுதான். ஆனால் அவை அவர் அறிந்த எந்த மொழியிலும் பொருள்கொள்ளாத சொற்கள். இரு குருதிக்குமிழிகள். ஒருபோதும் உலராதவை.

விதுரர் தொண்டையைக் கனைத்து “அழைத்ததாகச் சொன்னார்கள்” என்றார். திருதராஷ்டிரர் “இல்லை” என்றார். விதுரர் “இளவரசர்கள் காம்பில்யத்தில் இருந்து கிளம்பிவிட்டார்கள். இன்று மாலை அவர்கள் வந்துசேரக்கூடும்” என்றார். திருதராஷ்டிரர் தலையை அசைத்தார். “அங்கே காம்பில்யத்தில் மணமுற்றத்தில் தோன்றி பாஞ்சாலியை வென்றவன் அர்ஜுனன் என்றார்கள். அது உண்மையா என்று பார்க்க ஆளனுப்பியிருந்தேன்.” விதுரர் திருதராஷ்டிரர் தலையாட்டுவதை கண்டபின் “அச்செய்தி உண்மை. அவர்கள்தான் வென்றிருக்கிறார்கள். உறுதிசெய்தபின் தங்களை வந்து பார்க்கலாமென்றிருந்தேன்” என்றார்.

“சொல்” என்றார் திருதராஷ்டிரர். “இன்று காலை ஒற்றுச்செய்திகள் முழுமையாக வந்தடைந்தன. பாஞ்சாலக் குலவழக்கப்படி பாண்டவர் ஐவரையுமே பாஞ்சாலி மணக்கவேண்டும் என்று குந்திதேவி ஆணையிட்டிருக்கிறார். அதை தருமன் எதிர்த்திருக்கிறான். பீமனும் அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் அதை மூத்தவரின் முடிவுக்கே விட்டுவிட்டனர். அன்னையின் ஆணை உறுதியாக இருந்தமையால் தருமன் அம்முடிவை ஏற்றிருக்கிறான். அதை திருஷ்டத்யும்னன் வழியாக முறையாக துருபதனுக்கும் அறிவித்துவிட்டார்கள்.”

திருதராஷ்டிரர் முகத்தில் எந்த மாறுதலும் நிகழவில்லை. ”துருபதனுக்கும் குந்திக்கும் துர்வாசகுலத்து மூத்தவரான துர்வாச முனிவரின் ஆணை சென்றிருக்கிறது. துருபதன் பாண்டவர்களை தன் அரண்மனைக்கு அழைத்திருக்கிறார். இரண்டுநாட்களுக்குப்பின் முழுநிலவு நாளில் அரண்மனையிலேயே அவர்களுக்கு அவர்களின் குலமுறைப்படி மணநிகழ்வுகள் நடைபெறும் என்று செய்தி வந்திருக்கிறது” என்றபின் மீண்டும் நோக்கிவிட்டு “நாம் அதற்கு முறைப்படி வாழ்த்தும் பரிசில்களும் அளிக்கவேண்டும். நானே அஸ்தினபுரியின் சார்பாக சென்று மணநிகழ்வில் கலந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன். நான் செல்வது தாங்கள் செல்வதாகவே ஆகும்” என்றார்.

திருதராஷ்டிரர் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. “அவர்களை முறைப்படி அஸ்தினபுரிக்கு அழைக்கிறேன். அவர்களுக்கு ஏதேனும் மனத்தாங்கல்கள் இருக்குமென்றாலும் அவற்றை பேசி தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.” திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் திரும்பி “விதுரா, அவர்கள் எரிநிகழ்வில் இறந்ததாக ஏன் என்னிடம் சொன்னாய்? அவர்கள் வாழ்வதை நீ அறிந்திருந்தாய் அல்லவா” என்றார்.

“இல்லை அரசே, நான் அறிந்தது அதுவே. அவர்கள் எரிநிகழ்வில் இறந்ததாகவே எனக்கு செய்திவந்தது…” என்றார் விதுரர். “என் முகத்தை நோக்கி சொல்…. நான் உண்மையை மட்டுமே அறியவிழைகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “நான் சொல்வதெல்லாம் உண்மை” என்றார் விதுரர். திருதராஷ்டிரர். “நம் மூதாதையர் மேல், வியாசரின் சொல்லின் மேல் ஆணையிடு” என்றார். “மூதாதையர் மேல் ஆணையாக, வியாசகவிமேல் ஆணையாக நான் உண்மையை மட்டுமே சொல்கிறேன்” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரர் சற்று திகைத்ததுபோல அவரது பெரிய கைகள் தசை இறுகி வந்து மடிமீது இணைந்துகொண்டன. உடலுக்குள்ளேயே அவர் உடல் புரண்டு அமைந்தது. பெருமூச்சுடன் “சொல், என்ன நடந்தது?” என்றார். விதுரர் ”கேளுங்கள் அரசே” என்றார். திருதராஷ்டிரர் தணிந்த குரலில் “இளையோனே!” என்று அழைத்தார். அவரால் மேலும் பேசமுடியவில்லை. “விதுரா” என மீண்டும் அழைத்தபின் கைகளை விரித்தார். “சொல்லுங்கள் மூத்தவரே” என்றார் விதுரர்.

“என் மேல் கருணை காட்டு… இத்தனை நாட்களாக என்னுள் எரிந்துகொண்டிருந்த வினாவுக்கு விடையளி. அந்த எரிநிகழ்வில் ஏதேனும் சூது உண்டா? அவர்கள் அதில் தப்பியபின் ஏன் இங்கே வராது ஒளிந்தனர்?” திருதராஷ்டிரரின் எழுந்தமர்ந்த நெஞ்சை நோக்கியபோது ஒரு கணத்தில் கரையழிந்து அனைத்தையும் சொல்லிவிடுவோம் என்று விதுரர் எண்ணினார். உடனேயே இறுக்கிக்கொண்டு அக்கணத்தைக் கடந்தார். “சொல்” என்று திருதராஷ்டிரர் சொன்னபோது அவரது தொண்டை அடைத்திருந்தது. ”சொல் இளையவனே. நான் பிழை செய்தேனா?”

“நீங்கள் ஒருபோதும் பிழைசெய்ய இயலாதவர் மூத்தவரே” என்றார் விதுரர். “அப்படியென்றால் பிழை செய்தவர்கள் யார்? என் மைந்தர்களா? அந்த எரிநிகழ்வு அவர்களால் செய்யப்பட்டதா?” விதுரர் “இல்லை அரசே, அவர்கள் தங்கள் மைந்தர்கள்” என்றார், “அப்படியென்றால் யார்? சகுனியா? கணிகனா? யார்? அதைச்சொல்!”

விதுரர் “அரசே, அது வெறும் தற்செயல். அதிலிருந்து அவர்கள் தப்பியதும் தற்செயலாக இருக்கலாம். நாம் வீண் உளச்சித்திரங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை” என்றார். திருதராஷ்டிரர் “அவர்கள் ஏன் இங்கே மீண்டுவரவில்லை? ஏன் ஒளிந்தனர்?” என்றார். “அரசே, அவர்கள் அதை சதி என ஐயுற்றிருக்கலாம்.” திருதராஷ்டிரர் “அப்படியென்றால் அவர்கள் என்னிடமல்லவா வந்து சொல்லியிருக்கவேண்டும்? அவர்களுக்கு ஏன் என் மேல் நம்பிக்கை இல்லாமலாயிற்று?” என்றார்.

“அவர்கள் என்னிடமும் சொல்லவில்லையே” என்றார் விதுரர். முதல்முறையாக அந்தச் சொற்றொடரில் திருதராஷ்டிரரின் உள்ளம் அமைந்தது. “ஆம், உன்னை விட அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இல்லை. ஏன் உன்னிடமும் அவர்கள் வரவில்லை?” விதுரர் “அவர்களுக்கு ஏன் அவ்வண்ணம் தோன்றியது என்று தெரியவில்லை?” என்று சொல்லி நீள்மூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டார்.

“அரசே, அவர்களே அதற்குரிய மறுமொழியை சொல்லட்டும். நானே நேரில் சென்று அவர்களை அழைத்து வருகிறேன். அவர்கள் தங்கள் முன் நின்று என்ன நிகழ்ந்தது, ஏன் ஒளிந்துவாழ்ந்தனர் என்று சொல்லட்டும். அவர்களின் சொற்களன்றி எதற்கும் பொருளில்லை” அதை சொல்லி முடிக்கும்போதே விதுரரின் அகம் பதறத் தொடங்கியது. குந்தியின் சினமெழுந்த விழிகள் எண்ணத்தில் வந்தன.

அதற்கு இப்போதே ஒரு அணைபோட்டு வைத்தாலென்ன என்ற சிந்தை எழுந்ததுமே திருதராஷ்டிரர் ”ஆம், விதுரா. அவர்கள் இங்கே வரும்வரை நீ அவர்களிடம் தொடர்புகொள்ள வேண்டியதில்லை. அவர்களை அழைத்துவர நான் காந்தாரியை அனுப்புகிறேன். அவள் குந்தியிடம் பேசி அழைத்து வரட்டும்” என்றார். விதுரர் “அதற்கு அரசி…” என்று சொல்ல “என் ஆணைக்கு அப்பால் எண்ண அவளால் இயலாது. ஆணையிட்டுவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர்.

விதுரர் பெருமூச்சு விட்டார். அவரது உடல் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டே இருந்தது. ஒருகணம் அனைத்திலிருந்தும் விடுவித்துக்கொண்டு காடேகினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. மறுகணத்திலேயே அது மறைந்தபின்னர்தான் அதற்குள் இனிய காட்டுக்குடிலை, குளிர்ந்த காலையை, சூரிய ஒளியை, பறவைகளின் ஒலியை அது தன் எண்ணத்தில் எழுப்பியிருக்கிறது என்று புரிந்தது. அவ்வெண்ணம் தன் உடலையே எளிதாக ஆக்கிவிட்டதை உணர்ந்தார். பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டார்.

விப்ரர் வந்து வணங்கி நின்றார். அவரது காலடியோசையை அறிந்த திருதராஷ்டிரர் “ம்?” என்றார். “காம்பில்யத்திலிருந்து ஒரு சூதன் வந்துள்ளான்” என்றார் விப்ரர். “முந்திவருவதற்காக கங்கையை சிறுபடகில் கடந்திருக்கிறான். நேராக அரண்மனை முன் வந்து நின்று பாட விழைகிறான்.” திருதராஷ்டிரர் புன்னகையுடன் “அவர்களுக்கு கதைகள் விளைந்து கொண்டே இருக்கின்றன” என்றார்.

விப்ரர் புன்னகை செய்தார். “வரச்சொல்… உண்மையை அவன் பாடுவான் என்று உனக்குத் தோன்றுகிறதா?” என்றார். “அரசே, மெய்விளைவது நெல்விளைவதுபோல. கதைவிளைவது புல்விளைவதுபோல….” என்ற விப்ரர் சிரித்து “நெல்லும் ஒரு புல்லே” என்றார். திருதராஷ்டிரர் சிரித்துவிட்டு “மூடா, நீயும் மதிசூழக் கற்றுவிட்டாய்” என்றார்.

திருதராஷ்டிரரின் அமைதிதான் தன்னை நிலையழியச் செய்திருக்கிறது என்று விதுரர் உணர்ந்தார். சூதர்பாடலைக் கேட்க தன் அகம் குவியாதென்று தெரிந்தது. இளைய சூதன் உள்ளே வந்ததுமே அவன் சற்று மூடன் என்பதும், மூடத்தனத்தின் விளைவான தன்னம்பிக்கையும் மிகையார்வமும் கொண்டவன் என்பதும் தெரிந்தது. மங்கலான கண்களும் பளிச்சிடும் சிரிப்புமாக அவன் மிடுக்குடன் உள்ளே வந்து “அஸ்தினபுரியின் அரசரை ஸ்வேதகுலத்துச் சூதன் சிம்ஹிகன் வாழ்த்துகிறேன்” என்றான்.

அச்சொற்களைக்கொண்டே அனைத்தையும் புரிந்துகொண்ட திருதராஷ்டிரர் புன்னகைத்து “தங்கள் வாழ்த்து இந்நாளின் பெரும் பரிசு சூதரே. அமர்க!” என்றார். சூதன் அமர்ந்துகொண்டு தன் குறுமுழவை மடியில் வைத்தபின் விதுரரை யாரிவர் என்பது போல நோக்கினான். “காம்பில்யத்தில் இருந்தீர்களோ?” என்றார் திருதராஷ்டிரர். “இல்லை, நான் காம்பில்யம் செல்வதற்குள் விழவு முடிந்துவிட்டது. அனல் தொட்டு அனல் பற்றுவதுபோல நாதொட்டு நா அறிந்த கதைகளைக் கற்றுக்கொண்டு சொல்லவந்தேன்” என்றான் சிம்ஹிகன்.

“சொல்லும்!” என்றார் திருதராஷ்டிரர். அவன் தன் முழவை இருவிரலால் ஒலிக்கவைத்து பாடத்தொடங்கினான். இறை வாழ்த்துக்கள், அவன்பிறந்த குருமரபுக்கான வணக்கங்கள், அவன் பிறந்த பாஞ்சாலநாட்டின் குலமுறை கிளத்தல்கள், அஸ்தினபுரியின் அரசனுக்கும் அவன் குலத்துக்குமான வாழ்த்துக்கள்… முழவின் ஒலி தன் புறந்தலையிலேயே விழுவதாகத் தோன்றியது. பின்னர் அவன் விரல்கள் அடிப்பதே தன் தலையைத்தான் என்று பட்டது. விதுரர் கண்களை மூடிக்கொண்டார்.

சிம்ஹிகன் காம்பில்யத்தின் மணத்தன்னேற்புக் கதைக்குள் சென்றான். துருபதமன்னர் துர்வாசரை வணங்கி அருளுரை கேட்டு மணத்தன்னேற்பை அறிவித்ததையும் அதைக்கேட்டு நூற்றெட்டு ஷத்ரிய அரசர்களும் அணிக்கோலத்தில் நகர்புகுந்ததையும் விவரித்தான். கிந்தூரத்தின் கதையைச் சொன்னபின் பாஞ்சாலியின் நீராட்டையும் அணிபூணுதலையும் பாடினான். திருஷ்டத்யும்னன் துணையுடன் பிடியானையில் அவள் அவை வந்து இறங்கியதையும் அவளைக்கண்ட ஒவ்வொரு அரசரும் அடைந்த விழைவையும் விவரித்தான்.

திருதராஷ்டிரர் சிரித்து “கழுவேற்றும் காட்சியில்கூட சிருங்காரத்தை கொண்டுவருபவர்கள் இவர்கள்” என முனகிக்கொள்ள சிம்ஹிகன் அதை தனக்கான பாராட்டாகக் கொண்டு தலைவணங்கி புன்னகைத்துக்கொண்டு தொடர்ந்து பாடினான். ஒவ்வொரு மன்னராக வந்து கிந்தூரத்தை எடுக்க முயன்று தூக்கி வீசப்பட்டார்கள். இறுதியில் அர்ஜுனன் அதை எடுத்து மேலே தெரிந்த இலக்கை அடித்து கன்னியை கரம்பற்றினான். “பார்த்தன்! அஸ்தினபுரியின் வில்வீரன். விஜயன். இந்திரனின் மைந்தன். கிரீடி, சவ்யசாசி, அனகன், பாரதன்! தன்னிகரற்ற தனஞ்சயன்!” சூதன் விரைவுத்தாளமிட்டு குரலெழுப்பினான்.

திருதராஷ்டிரர் முகம் நெகிழ்ந்தது. தொடைகளில் கையை ஊன்றி “ஆம், இன்று பாரதவர்ஷத்தில் அவனுக்கு நிகரென எவருமில்லை” என்றார். சூதன் பாண்டவர்கள் வைதிகவேடத்தில் பாஞ்சாலியுடன் சென்று குயவனின் இல்லத்தில் தங்கியிருந்த குந்தியைக் கண்ட காட்சியை சொன்னான். “அன்னையே, எங்களுக்கு ஒரு அறப்பொருள் கிடைத்துள்ளது” என்றான் அர்ஜுனன். “அதை நிகராக பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று குந்தி சொன்னாள். தருமன் “அன்னையே, என்ன வாக்கு இது!” என்று திகைத்தான்.

குந்தி வெளியே வந்தாள். தான் சொன்ன சொல்லின் பொருளென்ன என்று அறிந்ததும் திகைத்து நின்றாள். ஆனால் “மண் பிழைத்தாலும் மாதர் சொல்பிழைக்கலாகாது மைந்தா” என்றாள். சூதன் பாடிக்கொண்டிருக்கையிலேயே தொடையைத் தட்டியபடி திருதராஷ்டிரர் சிரித்தார். “விதுரா மூடா, நம்மவர் மண்ணாலான ஒரு பாரதவர்ஷத்தின் மேல் சொல்லால் ஆன நூறாயிரம் பாரதவர்ஷங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.”

சூதன் பாடி முடித்ததும் திருதராஷ்டிரர் அவனுக்கு பரிசில் அளித்தார். “நல்லது சூதரே. நிறைய புதியகதைகள். நீங்கள் தெற்கே மாளவத்திற்கோ கலிங்கத்திற்கோ செல்வதற்குள் மும்மடங்கு பெரிய கதை உம்மிடமிருக்குமென நினைக்கிறேன்” சூதன் அதையும் பாராட்டென்று கொண்டு “ஆம் அரசே, தங்கள் அருள்” என்று தலைவணங்கினான். “பாஞ்சாலியின் நீள்குழலை நீர் விவரித்ததை விரும்பினேன். அக்குழல் மேலும் நீண்டு வளர்க!” என்றார் திருதராஷ்டிரர். சூதன் மீண்டும் தலைவணங்கினான்.

அப்போது விதுரர் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. அனைத்தும் நலமாகவே முடியப்போகின்றன. அதை திருதராஷ்டிரரின் ஆழம் எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறது. ஆகவேதான் அவர் சினத்தையும் துயரையும் கடந்து உவகையுடன் இருக்கிறார். அந்த உவகை வெறும் பாவனை அல்ல. அகத்திலெழுந்த அனலை கட்டுப்படுத்தும் முயற்சி அல்ல. அது உண்மையான உவகை. உள்ளே எங்கோ சுடர் இல்லாமல் சிரிப்பில் அந்த ஒளி எழாது. ஆம், அனைத்தும் சிறப்பாகவே முடியவிருக்கின்றன.

இன்னும் சற்றுநேரத்தில் அனைத்தும் சீரடைந்துவிடும். இன்னும் சிலநாழிகைகளுக்குள். அப்போது அதை அத்தனை உறுதியாக விதுரர் உணர்ந்தார். ஆம், இன்னும் சற்றுநேரத்தில். இதோ, நெஞ்சு படபடக்கத் தொடங்கிவிட்டது. ஏதோ செய்தி வரப்போகிறது. எல்லாவற்றையும் சீராக்கிவிடுவது. அந்த உள்ளுணர்வை அவரது சித்தம் ஏளனத்துடன் நோக்கிக்கொண்டிருந்தது. ஆனால் உள்ளூர அது வலுவடைந்தபடியே இருந்தது.

திருதராஷ்டிரர் தன் இருக்கையில் கைகளால் தட்டியதும் சஞ்சயன் வந்து நின்றான். அவர் கைநீட்ட அதை அவன் வந்து பற்றிக்கொண்டான். திருதராஷ்டிரர் “மாலையில் பார்ப்போம். பாண்டவர்களின் மணநிகழ்வில் பங்கெடுத்து அவர்களை அழைத்துவர காந்தாரியை நாளைக்காலை அரசமுறைப்படி காம்பில்யத்துக்கு அனுப்பலாமென எண்ணுகிறேன். அச்செய்தியை அவர்களுக்கு பறவைத்தூதாக அனுப்பிவிட்டேன். மாலைக்குள் காம்பில்யத்திலிருந்து மறுஓலை வரக்கூடும்” என்றார் திருதராஷ்டிரர் “அனைத்து முறைமைகளும் செய்யப்படவேண்டும். செல்பவள் தேவயானியின் மணிமுடியைச் சூடிய பட்டத்தரசி…”

விதுரர் தலைவணங்கினார். திருதராஷ்டிரர் உள்ளே சென்றதும் அவர் நெஞ்சு ஏமாற்றத்தில் சுருங்கியது. வெறும் விருப்பக்கற்பனைதானா அது? அதற்குள் என்னென்ன பாவனைகள். எத்தனை அகநாடகங்கள். கசப்பான புன்னகையுடன் அவர் எழுந்து வெளியே சென்றார். விப்ரரின் வணக்கத்தை ஏற்றபின் இடைநாழியில் நின்ற கனகனை நோக்கி சென்றார். கனகன் அவரை நோக்கி வந்தபோதே அவன் விழிகளில் அவர் ஒரு செய்தியைக் கண்டார்.

“சொல்” என்றார் விதுரர். “அரசருக்கு சற்றுமுன் ஓலை ஒன்று வந்துள்ளது…” என்றான் கனகன். விதுரர் படபடப்புடன் “காம்பில்யத்தில் இருந்தா?” என்றார். “ஆம்…” என்றான் கனகன். ”செம்பருந்து அதைக் கொண்டுவந்தது. அதை கைடபர் அரசரின் மந்தண அறைக்கு கொண்டுசென்றார்.” விதுரர் சலிப்புடன் “அது துருபதரின் ஓலை. பேரரசி காந்தாரி பாண்டவர்களின் மணநிகழ்வுக்குச் செல்கிறார். அதற்கான ஒருக்கங்கள் நிகழ்த்துவதற்கான ஒப்புதல் கடிதம் அது.”

கனகன் விழிகளை சற்று அசைத்து “அவ்வாறல்ல அமைச்சரே. கைடபரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அந்த ஓலையுடன் அவர் அரசரின் மந்தண அறைநோக்கிச் சென்றபோது மேலாடை ஒரு கதவின் தாழில் சிக்கியது. அவர் அதை சலித்தபடி இழுத்து கிழித்துவிட்டார்”. விதுரர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபின் “ஆனால் அரசர் மந்தண அவைக்குச் சென்றுவிட்டாரே” என்றார். “தாங்கள் இப்போது அவருடன் இருக்கவேண்டும்”

விதுரர் முடிவெடுத்து திரும்பி நடந்தார். கனகன் பின்னால் வந்தபடி “நான் ஒரு ஓலையை கொண்டுவரச்சொன்னேன். நாடுதிரும்பும் கௌரவர்களை ஓர் இடத்தில் மகதத்தின் படைகள் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கின்றன. அச்செய்தியை கொண்டுவந்த பறவை ஓலை அது. அதை மிகைப்படுத்தி அரசரிடம் சொல்லி அதற்கெனத்தான் சந்திக்கவந்ததாக தாங்கள் சொல்லிக்கொள்ளலாம்”என்றான். விதுரர் கைநீட்ட அவன் அந்த ஓலையை அளித்தான்.

விதுரர் இசைச்சாலையை சுற்றிக்கொண்டு திருதராஷ்டிரரின் மந்தண அறையை அடைந்தார். அங்கே விப்ரர் வாயிலில் நின்றிருந்தார். அவரைக் கண்டதும் விப்ரர் தலைவணங்கியதிலிருந்தே உள்ளே கைடபர் இருப்பதை விதுரர் அறிந்தார். “என் வருகையை அறிவியுங்கள் விப்ரரே” என்றார் விதுரர். விப்ரர் உள்ளே சென்று மீண்டு வந்து அவரை உள்ளே செல்லும்படி தலைவணங்கி கைகாட்டினார்.

காலடிகள் பஞ்சாலானவைபோல, மண்ணைத் தொடாமல் நடப்பதுபோல ஓர் உணர்வை விதுரர் அடைந்தார். ஆனால் அத்தகைய உச்சகணங்களில் உடலை உள்ளத்தால் உந்தி நிமிர்த்திக்கொள்வது உதவுமென கற்றிருந்தார். உடல் நிமிர்ந்ததும் உள்ளமும் அதை நடிக்கத் தொடங்கிவிடும். முகவாயை சற்றே தூக்கி கண்களை நிலைக்கச்செய்து சீராக நடந்து அறைக்குள் சென்று திருதராஷ்டிரர் முன் நின்று தலைவணங்கி “ஓரு முதன்மைச்செய்தி. அதை சொல்லிவிட்டுச் செல்ல விழைந்தேன்…” என்றார்.

“நீ இந்த ஓலைக்காகத்தான் வந்தாய் இளையவனே” என்று சொல்லி அந்த ஓலையை திருதராஷ்டிரர் நீட்டினார். அவரது முகத்தை நோக்கிய விதுரர் அதில் புன்னகை இருப்பதைக் கண்டதும் அகம் தெளிந்தார். ஓலையை வாங்கி சுருள் நீட்டி வாசித்தார். அது தருமனால் திருதராஷ்டிரருக்கு எழுதப்பட்டிருந்தது. அவர் முதலில் அதை ஒரே விழியோட்டலில் வாசித்து முடித்தார். அதன் உள்ளடக்கத்தை அவரது அகம் வாங்கிக்கொண்டு அனைத்துச்சுமைகளையும் இழந்து சிறகடித்து எழுந்தது. அதன்பின் சொல் சொல்லாக விழிதொட்டுச் சென்றார்.

முறைமைசார்ந்த முகமன்களுக்குப்பின்னர் தருமன் காம்பில்யத்தில் நிகழும் மணநிகழவை முறைப்படி அறிவித்திருந்தான். பாஞ்சால குலமுறைமையின் படி அந்த மணவிழா நிகழ்வதாகவும் பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியை மணப்பதாகவும் ஓரிரு வரிகளில் எழுதியிருந்தான். “எந்தையே, இப்புவியில் பாண்டவர்களாகிய எங்களுக்கு இன்றிருக்கும் வாழும் மூதாதை நீங்கள் மட்டுமே. தங்கள் நல்வாழ்த்துக்கள் இன்றி நாங்கள் முழுமானுடராக வாழமுடியாது. தேவர்களுக்கும் விண்ணவர்க்கும் நீத்தாருக்கும் அறத்திற்கும் எங்களை கொண்டுசென்று சேர்க்கவேண்டியவர் தாங்களே. பாண்டவர்களாகிய நாங்கள் தங்கள் பாதங்களில் சிரம் வைத்து வாழ்த்துக்களை நாடுகிறோம்.”

வாரணவத மலையடிவாரத்தின் எரிநிகழ்வுக்குப்பின் நாங்கள் காடுபுகுந்தோம். புறவுலகு எங்களை அறியாமல் ஏழுவருடங்கள் வாழ்ந்தோம். நாங்கள் இறந்துவிட்டதாக அஸ்தினபுரியிலும், பாரதவர்ஷம் முழுவதும் எண்ணப்பட்டது. அது அப்படியே தொடரட்டுமென முடிவெடுத்தவன் நானே. எந்தையே, அது தங்களுக்காக நான் எடுத்த முடிவு. நாங்கள் உயிருடனிருப்பது வரை தாங்கள் தங்கள் மைந்தன் துரியோதனன் அஸ்தினபுரியின் முடியைச் சூட ஒப்ப மாட்டீர்கள் என்று அறிந்திருந்தேன். ஷத்ரியர் பகைக்க, உடன்பிறந்தோர் அகம்சுருங்க அம்மணிமுடியை ஏற்க நான் விழையவில்லை.

நாங்கள் தங்கியிருந்த வாரணவதத்தின் மாளிகை மகதத்தின் ஒற்றர்களால் கட்டப்பட்டது. நாங்கள் துயில்கையில் எங்களை எரித்தழிக்க அவர்களின் ஒற்றனாகிய புரோசனன் திட்டமிட்டான். அதை அறிந்ததும் அவனையும் அவனுடனிருந்தவர்களையும் எரித்துவிட்டு நாங்கள் குகைப்பாதை வழியாக தப்பிச்சென்றோம். மறுபக்கம் இடும்பவனம் புகுந்ததும்தான் அது பாரதவர்ஷத்தின் மானுடர் எவரும் நுழைந்திராத அரக்கர்களின் காடு என்றறிந்தோம். அங்கேயே நாங்கள் இருந்துகொண்டால் நாங்கள் இறந்துவிட்டதாக நீங்கள் எண்ணுவீர்கள் என்று நான் கருதினேன். நீங்கள் என் இளையோன் துரியோதனனுக்கு மணிமுடிசூட்டவேண்டுமென்பதற்ககாவே இதைச் செய்தேன்.

அது பெரும்பிழை என நான் அறிவேன். தங்களுக்கு பெருந்துயரை அளித்துவிட்டேன். ஆனால் அஸ்தினபுரி சென்று முட்டிய இக்கட்டுநிலையில் இருந்து வெளிவர பிறிதொரு வழியை நான் அறிந்திருக்கவில்லை. தாங்கள் என் மேல் சினம் கொள்வீர்கள் என நன்கறிவேன். தங்கள் சினமும் எனக்கு பேரன்பின் தொடுகையே. தங்கள் பாதங்களில் என் தலையை வைக்கிறேன். என் சிறுமைகளெல்லாம் அகலட்டும்.

எந்தையே, இடும்பவனத்திற்குள் நாங்கள் வாழ்ந்ததும் நல்லூழே. தங்களுக்கு நிகரான தோள்வல்லமை கொண்ட மைந்தன் ஒருவனை அங்கே பீமன் பெற்றான். கடோத்கஜன் என அவனுக்கு நாங்கள் பெயரிட்டோம். பெருமை மிக்க ஹஸ்தியின் தோள்கள் அடுத்த தலைமுறையிலும் நீள்கின்றன. தங்கள் நல்வாழ்த்துக்களை என் கரிய குழந்தையரக்கனுக்காகவும் நான் கோருகிறேன். ஒருநாள் தாங்கள் அவனுடன் தோள்தழுவிப்போரிடும் காட்சியை காணும் பேறை என் விழிகள் அடையவேண்டும்.

அஸ்தினபுரிக்கு அரசே, என்றும் எங்கள் பெருமை உங்கள் உதிரத்துக்குரியவர்கள் என்பதே. வேழம் மானுடனாக வந்து அமர்ந்திருந்த பெருமையை ஹஸ்தி வழியாக பெற்றது நம்குலம். இன்றும் அது நீடிக்கிறது. என்றும் அது நீடிக்கும். வேழங்கள் கடந்துசெல்லும் எளிய பாதையே நான் என்று அறிகிறேன். என் பிழைபொறுத்து என்னையும் என் இளையோரையும் வாழ்த்துங்கள்! மூத்தபாண்டவன் யுதிஷ்டிரன்.

கண்ணீர் மறைத்த கண்களை பலமுறை கொட்டி உதடுகளை இறுக்கி விதுரர் தன்னை தொகுத்துக்கொண்டார். கண்ணீர் உலர்ந்தபோது மூக்குக்குள் நீர் நிறைந்திருந்தது. அதைமேலிழுத்து மூச்சில் கரைத்தார். வெள்ளுப்பை அள்ளித் தின்றதுபோலிருந்தது தொண்டை. திருதராஷ்டிரர் கம்மிய குரலில் “என் மைந்தன்!” என்று கைகளை விரித்தார். “விதுரா, மூடா, அவன் இம்மண்ணில் வாழும் பாண்டு அல்லவா?”

அடைத்த குரலில் “ஆம் மூத்தவரே” என்றார் விதுரர். “மூடன், என்ன சொல்கிறான் பார்த்தாயா? மூடா, மூடா, நீயும் நானும் யார்? வெறும் மனிதர்கள். இக்குடியில் பிறந்தமையால் மட்டுமே சொல்லிலும் நினைவிலும் வாழப்போகும் பதர்கள்… அவனோ காலங்களைக் கடந்து காலடி எடுத்துவைத்து நடந்துசெல்லும் பேரறத்தான்… அவன் என் மைந்தன் என்பதற்கு அப்பால் நான் எதை விழைய முடியும்! தெய்வங்களே, விண்நிறைந்த மூதாதையரே, என்னை வாழ்த்தினீர்கள். என் மேல் பேரருள் சொரிந்தீர்க்ள்!”

விதுரர் பார்வையை சாளரம் நோக்கி திருப்பிக்கொண்டார். கண்ணீரில் ஒளிமிக்க சதுரம் மங்கலடைந்தது. உடனே உணர்வு மாறி திருதராஷ்டிரர் சிரித்தார். ”மூடன், சிறுமூடன். என்னை வேழம் என்கிறான். ஹஸ்தி என்கிறான். விதுரா, நீ அறியமாட்டாயா என்ன? இவன் குலமுறைமை அறிந்த யயாதி. நீதியறிந்த புரு. அவர்கள் ஒரு பெரும் தொடர். இப்பேரறத்தார் நடந்துசெல்லும் பாதையை செப்பனிடும்பொருட்டே அறிவற்ற நாங்கள் பெரியபாதங்களுடன் வேழவடிவம் கொண்டிருக்கிறோம்…”

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

விதுரர் பெருமூச்சுகள் வழியாக தன்னை எடையிழக்கச் செய்தார். திருதராஷ்டிரர் எழுந்து இரு கைகளையும் விரித்தபடி சொன்னார் “விதுரா. நீ இன்றே புறப்படு. காம்பில்யத்திற்குச் சென்று ஐவரையும் அள்ளி நெஞ்சோடு சேர்த்துக்கொள். என் தோள்வல்லமை முழுக்க உன் கைகளுக்கு வரட்டும். அவர்களை இறுக்கிக்கொள்… அவர்களிடம் சொல், என் நாடும் கோலும் முடியும் அவர்களுக்குரியவை என்று.”

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

நூல் ஐந்து – பிரயாகை – 88

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 1

புலரியின் முதல் முரசொலி கேட்டு எழுந்தபோது விதுரர் அதுவரைக்கும் இரவு முழுக்க தனக்குள் முரசொலி கேட்டுக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தார். எழுந்து மஞ்சத்திலேயே சப்பணமிட்டு அமர்ந்து கைகளை சின் முத்திரை பிடித்து வைத்துக்கொண்டு கண்களை மூடி எண்ணங்களின் ஒழுக்கை நோக்கி அமர்ந்திருந்தார். முரசொலி அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. வரும் வரும் வரும் என அது சொல்வதுபோல. உடைந்து சிதறிப்பெருகும் எண்ணங்கள். அவை மீளமீள ஒன்றையே சென்று தொட்டுக்கொண்டிருந்தன.

அவர் தன்னை கலைத்துக்கொண்டு கண்களைத் திறந்தபோது முரசொலி இது இது இது என சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டார். காவல்மாட முரசுகள் எப்போதோ ஒலித்து ஓய்ந்துவிட்டிருந்தன. அஸ்தினபுரியின் வெவ்வேறு முனைகளில் ஆலயங்களில் மணிகள் முழங்கிக்கொண்டிருந்தன. அரண்மனையின் பல இடங்களில் திரைச்சீலைகள் விடிகாலைக் காற்றில் அலையடித்தன. ஓரிரு சாளரக்கதவுகள் முனகியபடி அசைந்தன. எங்கோ எவரோ ஏதோ கூவ குதிரைக்குளம்பொலி ஒன்று துடிதாளமென கடந்துசென்றது.

அவர் எழுந்துகொண்டு ஓலைப்பெட்டியைத் திறந்து முந்தையநாள் வரை பறவைகள் வழியாக வந்திருந்த ஓலைகளை சீர்ப்படுத்தி வாசித்தார். எட்டு வெவ்வேறு ஒற்றர்கள் அளித்த செய்திகள். பின்னர் அவற்றை அடுக்கிக் கட்டி பெட்டிக்குள் வைத்து பூட்டியபின் எழுந்து வெளியேவந்தார். அவரது காலடிகளுக்காக காத்து வெளியே நின்றிருந்த சேவகன் தலைவணங்கினான். “நீராட்டறை சித்தமாகிவிட்டதா?” என்று அவர் கேட்டார். அவன் தலையசைத்தான்.

அவர் இடைநாழியில் நடக்கையில் சேவகன் “சிசிரர் தங்களைச் சந்திக்க விழைகிறார்” என்றான். பாஞ்சாலத்தின் தலைமை ஒற்றன். விதுரர் தலையசைத்து சில அடிகள் வைத்தபின் ”நீராட்டறைக்கு வரச்சொல்” என்றார். சேவகன் முகத்தில் சற்று தயக்கமும் பின் ஒப்புதலும் தெரிந்தன. அவர் பெருமூச்சுடன் இடைநாழியில் அறைவாயில்கள் வழியாக விழுந்துகிடந்த செவ்வொளிப்பட்டைகள் வழியாக கனன்று கனன்று நடந்தார். அவரது காலடியோசைகளை அரண்மனையின் தொலைதூரச்சுவர்கள் திருப்பி உச்சரித்தன.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

நீராட்டறைச்சேவகன் அவரை வணங்கி வரவேற்று அழைத்துச்சென்றான். வெந்நீர்க்கலங்கள் ஆவி எழ ஒருங்கியிருந்தன. மரத்தாலத்தில் லேபனங்களும் தைலங்களும் நறுமணப்பொடிகளும் சித்தமாக இருந்தன. நீராட்டறைச்சேவகன் அவர் ஆடைகளைக் களைந்தான். அவர் பீடத்தில் அமர்ந்ததும் தலையில் சிரோசூர்ணத்தைப் பரப்பி விரல்களால் பிசைந்து ஒரு மெல்லிய துணியால் சுருட்டிக் கட்டி கொண்டை போல ஆக்கினான்.

அவன் அவரது காலடியில் அமர்ந்து தைலத்தை உடலெங்கும் பூசத்தொடங்கியபோது வாசலில் சிசிரன் வந்து நின்றான். சேவகன் தலைவணங்கி வெளியேறினான். நீராட்டறைச் சேவகன் தைலத்தை தேய்த்துக்கொண்டு குனிந்திருக்க சிசிரன் அருகே வந்து நின்று “அனைத்துச்செய்திகளையும் தொகுத்து அறிந்துவந்திருக்கிறேன் அமைச்சரே” என்றான். விதுரர் தலையசைத்தார்.

“அவையில் நிகழ்ந்ததை முன்னரே கனகரே வந்து சொல்லியிருப்பார்” என்று சிசிரன் சொன்னான். “அவையில் யாதவகிருஷ்ணன் ஒரு சிறிய நாடகத்தை நிகழ்த்தினார். மணமண்டபப் பூசல் வழியாக அவர்கள் பாண்டவர்கள் என்பது அனைத்து ஷத்ரியர்களுக்கும் ஐயமில்லாமல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே அது ஜராசந்தருக்கும் சல்லியருக்கும் தெரிந்திருந்தது. அவையிலிருந்த தொலைதூர தேசத்து அரசர்கள் பாண்டவர்களை பார்த்தவர்கள் அல்ல. அவையில் அர்ஜுனனின் வில்திறத்தையும் பீமனின் தோள்திறத்தையும் அவர்கள் நேரில் கண்டனர். பாண்டவர்களின் ஒற்றுமையும் அங்கே வெளிப்பட்டது.”

“அது பாரதவர்ஷத்தின் அரசர்களனைவருக்கும் தெளிவான செய்தியாக வெளிப்பட்டது. அஸ்தினபுரியின் மாவீரர்களான பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியை மணந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது கங்காவர்த்தத்தின் பழைமையான ஷத்ரியகுலத்தின் உறவினர். அவர்களுடன் பன்னிரு தளபதிகள் தலைமை ஏற்கும் பெரும்படை இன்று உள்ளது. ஷத்ரியர் உண்மையிலேயே திகைப்பும் அச்சமும் அடைந்துவிட்டனர். அவைக்களம் நீங்கியபோது அவர்கள் கூச்சலிட்டு பேசிக்கொண்டும் கிளர்ச்சிகொண்ட உடலசைவுகளுடனும் சென்றார்கள்” சிசிரன் தொடர்ந்தான்.

வைதிகர்கள் பாண்டவர்களை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் பாண்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தங்களில் ஒருவனின் வெற்றி என்றே அதை கருதினர். திரௌபதியை கைபற்றி அழைத்துக்கொண்டு பாண்டவர்கள் அவர்கள் நடுவே நின்றபோது முதியவைதிகர் மஞ்சளரிசியும் மலருமிட்டு வாழ்த்தினர். வேள்வியன்னம் கொண்டுவந்து ஊட்டினர். அவர்கள் வைதிகர்களின் வாயில் வழியாக வெளியேறி அகன்றனர்.

துருபதனின் ஒற்றர்கள் அவர்களை தொடர்ந்தனர். அவர்கள் ஐவரும் வைதிகர் சூழ காம்பில்யத்தின் எல்லைக்கு அப்பால் கங்கைக் கரையோரமாக இருந்த அவர்களின் குடிலுக்கு சென்றனர். அது புறவைதிகர்களின் சேரி. சேரியின் எல்லையில் இருந்து குயவர்களின் குடில்கள் தொடங்கி கங்கைக்கரைச் சதுப்பை நோக்கி இறங்குகின்றன. குயவர் வரிசையில்தான் அவர்கள் தங்களுக்கென கட்டிக்கொண்ட சிறிய குடில் இருந்தது.

வைதிகர்களின் மூன்று சிற்றாலயங்களில் பூசனை முடித்து அவர்கள் அளித்த அன்னவிருந்தை அருந்தி அவர்கள் சேரியை அணுகும்போது இருட்டிவிட்டது. தேர்ப்பெருஞ்சாலையிலேயே வைதிகரிடமிருந்து பிரிந்து அவர்கள் கிளைச்சாலைக்குள் நுழைந்துவிட்டனர். அந்நேரம் வைதிகர்தெருவில் எவருமில்லை. கங்கைக்கரையின் வேள்விச்சடங்குகளுக்கும் ஆலயப்பூசனைகளுக்கும் கொடைபெறுவதற்கும் சென்றிருந்தனர். குயவர் தெருக்களில் மாலையில் எவரும் மதுமயக்கில்லாமல் இருப்பதில்லை.

அவர்கள் வருவதை முன்னரே குந்திதேவி அறிந்திருந்தாள் என்று தோன்றுகிறது. குடிலை அவர்கள் நெருங்கியதுமே கையில் ஐந்து மங்கலங்கள் கொண்ட மண்தாலத்துடன் அவள் வெளியே வந்து திரௌபதியை எதிர்கொண்டாள். அகல்சுடர் கங்கைக்காற்றில் அணையாமலிருக்க தன்னை நிறுத்தி மறைத்துக்கொண்டு உடலை கோணலாக்கி அருகே வந்து அவள் நின்றபோது அர்ஜுனனிடம் திரௌபதியின் கையைப்பற்றிக்கொண்டு முன்னால் சென்று அன்னையை வணங்கும்படி தருமன் சொன்னான்.

”ஆனால் குந்திதேவி அவர்கள் ஐவரும் சேர்ந்து நின்று நடுவே திரௌபதியை நிறுத்தி தன்னை வணங்கும்படி சொன்னார்கள்” என்று சிசிரன் சொன்னதும் தலைகுனிந்து லேபனப் பூச்சை ஏற்றுக்கொண்டிருந்த விதுரர் நிமிர்ந்தார். “ஆம், அமைச்சரே. அது தருமனை திகைக்கச்செய்தது. அவர் ஏதோ சொல்ல முயல குந்திதேவி ஒற்றைச் சொல்லால் அடக்கினார். நடுவே திரௌபதி நின்றுகொள்ள அவரது வலப்பக்கம் தருமனும் இடப்பக்கம் அர்ஜுனனும் நின்றனர்.”

விதுரர் ”தருமனுக்கு இடப்பக்கம் திரௌபதி நின்றாளா?” என்றார். “ஆம், அமைச்சரே” என்றான் சிசிரன். “ம்ம்” என விதுரர் தலையை அசைத்தார். “திரௌபதியின் இருபக்கங்களிலாக பீமனும் நகுலனும் சகதேவனும் நின்றனர். ஐவருக்கும் சேர்த்து குந்திதேவி சுடராட்டு செய்து மங்கலம் தந்து வரவேற்றார்கள். அறுவரிடமும் தன்னை ஒருமித்து கால்தொட்டு வணங்கும்படி ஆணையிட்டார்கள். அவர்கள் அவ்வண்னமே செய்தபோது மஞ்சள்நீரையும் அவர்கள் சென்னியில் தெளித்து மஞ்சளரிசியும் மலரும் தூவி வாழ்த்தினார்கள்.”

“அவர்கள் உள்ளே சென்றனர். சற்று நேரம் கழித்து நமது ஒற்றர்களால் அமர்த்தப்பட்டிருந்த முதுபார்ப்பனியை குடிலுக்குள் அனுப்பினோம். ஆனால் அப்போது அவர்கள் பேசிமுடித்துவிட்டிருந்தனர். அவளைக் கண்டதும் குந்திதேவி உணவை சற்று கழித்து கொண்டுவந்தால் போதும் என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்” என்றான் சிசிரன். “தருமனின் முகம் சிவந்து கண்கள் கலங்கி குரல் உடைந்திருந்ததாக முதுபார்ப்பனி சொன்னாள். பீமன் தலைகுனிந்து அப்பால் அமர்ந்திருக்க அர்ஜுனன் கைகளை கட்டிக்கொண்டு கூரியவிழிகளால் நோக்கியபடி சுவரில் சாய்ந்து நின்றிருந்தார். சகதேவனும் நகுலனும் சற்று அப்பால் தரையில் அமர்ந்திருந்தனர்.”

“அவள்?” என்றார் விதுரர். “பாஞ்சால இளவரசி அங்கே நிகழ்வனவற்றுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாதது போல் நின்றிருந்தார்கள். அவரது முகத்திலோ இதழ்களிலோ இல்லாவிட்டாலும் விழிகளுக்குள் ஒரு மென்புன்னகை இருந்தது என்று முதுபார்ப்பனி சொன்னாள்.” விதுரர் தலையசைத்து பின் பெருமூச்சுடன் எழுந்துகொண்டார். அவர் உடலை நீவிக்கொண்டிருந்த நீராட்டறைச் சேவகன் எழுந்து சென்று வெந்நீரை அளாவினான்.

வெந்நீராட்டுக்கான வெண்கல இருக்கையில் அமர்ந்தபடி விதுரர் “அவள் ஏதேனும் சொன்னாளா?” என்று கேட்டார். சிசிரன் “அதை முதுபார்ப்பனி கேட்க முடியவில்லை” என்றான். ‘நான் அதை கேட்கவில்லை. அவள் பேசிய ஒலியாவது காதில் விழுந்ததா என்றேன்” என்றார் விதுரர். சிசிரன் “இல்லை, அவர் ஒரு சொல்லும் சொல்லவில்லை, அவர் உதடுகள் பிரிந்ததாகவே தெரியவில்லை என்றே முதுபார்ப்பனி சொன்னாள்” என்றான்.

விதுரரின் உள்ளங்கால் மேல் வெந்நீரை மெல்ல ஊற்றி அவரது கால்விரல்களை மெல்ல நீவி இழுத்தான் நீராட்டறைச் சேவகன். உள்ளங்கால் குழிவில் கைகளால் அழுத்தினான். குதிகாலுக்குப்பின் அழுத்திக்குவித்தான். விதுரர் நினைத்துக்கொண்டு நகைத்தார். நீராட்டறைச் சேவகன் அவரது குதிகால்களில் வெந்நீரை விட்டுக் கொண்டிருப்பதை கூர்ந்து நோக்குபவர் போல விழியசையாமலிருந்தார். பின்னர் திரும்பாமலேயே “குந்தி முன்னதாக எவரையேனும் சந்தித்தார்களா?” என்றார்.

“ஆம், பாண்டவர்கள் காம்பில்யத்தின் அரண்மனைக்குச் சென்றபோது அவர்கள் அருகே இருந்த சப்தவனம் என்னும் சோலைக்கு சென்றார்கள். அது பாஞ்சாலத்தின் ஐங்குலங்களில் ஒன்றான துர்வாசகுலத்திற்கு உரியது. அங்கே மாமுனிவர் துர்வாசர் வந்து தங்கியிருந்தார். துர்வாசரிடம் குந்திதேவி நீண்ட உரையாடலில் ஈடுபட்டார். பேசியதென்ன என்று அறிய முடியவில்லை. ஆனால் அப்பேச்சு மைந்தர்களைப்பற்றியதாக இருக்கலாமென்று அவரது விழிகளில் இருந்து தெரிந்தது என நம் ஒற்றன் சொன்னான்.”

விதுரர் அவன் மேலே சொல்வதற்காக காத்திருந்தார். “அன்றிரவு முழுக்க அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்தச் சிறுகுடிலில் மரவுரிப்படுக்கையில் திரௌபதி நன்றாகத் துயின்றார். நகுலனும் சகதேவனும் வெளியே சென்று அருகே இருந்த இன்னொரு வைதிகனின் இல்லத்துத் திண்ணையில் படுத்துக்கொண்டனர். பீமன் சற்று நேரத்தில் வெளியே வந்து கங்கைக்கரையில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த அன்னசாலைக்குச் சென்று எஞ்சிய உணவை முழுக்க கேட்டு வாங்கி உண்டுவிட்டு அங்கேயே படுத்துத் துயின்றார்” சிசிரன் தொடர்ந்தான்.

அர்ஜுனன் வெளியே வந்து குடிலின் திண்ணையில் துயிலாது இரவெல்லாம் காவலிருக்க உள்ளே அகல்விளக்கொளியில் தருமனும் குந்திதேவியும் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். இரவெல்லாம் அப்பேச்சு நீண்டது. அவ்வப்போது தருமனின் குரல் துயரத்துடனும் சினத்துடனும் எழுந்தும் உடைந்தும் வெளிப்பட்டது. குந்திதேவி மெல்லிய குரலில் பேசினாலும் சிலசமயங்களில் அவர்களின் குரலும் மேலெழுந்து ஒலித்தது. இடையே நீண்ட சொல்லின்மை இருவரிலும் குடியேற அவர்கள் சுடரையோ இருளையோ நோக்கியபடி அசைவழிந்து அமர்ந்திருந்தனர். மெல்லிய இயல்பான உடலசைவு ஒருவரில் நிகழ்கையில் மற்றவர் கலைந்து ஏறிட்டு நோக்க அந்நோக்கில் இருந்து சொல்பிறக்க மீண்டும் பேசத் தொடங்கினர்.

காலையில் குந்தியும் திரௌபதியும் அர்ஜுனன் துணையுடன் கங்கையில் நீராடி மீண்டனர். நகுலனும் சகதேவனும் பீமனும் நீராடிவிட்டு தனித்தனியாக வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. நன்கு விடிந்ததும் தனிப்புரவியில் திருஷ்டத்யும்னன் குடில்முற்றத்தில் வந்திறங்கினார். அர்ஜுனன் எழுந்து அவரை வரவேற்றார். அவர் அர்ஜுனனுக்கு முகமன் சொன்னபின் திண்ணையில் அமர்ந்துகொள்ள உள்ளிருந்து திரௌபதி வந்து திருஷ்டத்யும்னனுக்கு முகமன் சொன்னார். அவர் ஓரிரு சொற்களில் ஏதோ கேட்க திரௌபதி புன்னகையுடன் மறுமொழி சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

உள்ளிருந்து குந்திதேவி வந்தபோது திருஷ்டத்யும்னன் எழுந்து வணங்கினார். அவர்கள் முறையான முகமனுக்கும் வணக்கத்திற்கும்பின் திண்ணையின் வலதுமேட்டில் ஈச்சம்பாய் மேல் அமர்ந்துகொண்டார்கள். அவர்களுக்குப் பின்னால் தருமன் அமர அர்ஜுனன் சுவரில் சாய்ந்து நின்றார். பிற மூவரும் ஓரிரு சொற்களில் விடைபெற்று விலகிச் சென்றனர். பீமன் தலைகுனிந்து கங்கைக் கரையோரமாகச் செல்ல இளையோர் இருவரும் தங்களுக்குள் பேசியபடி சென்று ஒரு ஆலமரத்தடியில் நின்றுகொண்டனர். ஆலமரத்தின் உலர்ந்த பிசினை எடுத்து இருவரும் வாயிலிட்டு மென்றனர்.

விதுரர் புன்னகைசெய்தார். சிசிரன் அதை நோக்கி தானும் புன்னகைசெய்து “அவர்களின் பேச்சை கேட்க முடியவில்லை. அங்கே நானே ஒரு குயவனாக தொலைவில் நின்று நோக்கினேன். அவர்கள் பேசிக்கொண்டதை வைத்துப் பார்த்தால் அவர்கள் பேசிக்கொண்டவை திருஷ்டத்யும்னனுக்கு முன்னரே தெரியும் என்று தோன்றியது. அவர் முகவாயை கையால் வருடியபடி தலையை அசைத்து கேட்டுக்கொண்டிருந்தார். மாற்றுச் சொல் எதையும் கேட்க விழையாத உறுதியுடன் குந்திதேவி பேச அப்பால் தருமன் தன் தலையை கையால் ஏந்தியபடி குனிந்து அமர்ந்திருந்தார்” என்று தொடர்ந்தான்.

திருஷ்டத்யும்னன் நெடுநேரம் கழித்து எழுந்து தலைவணங்கினார். குந்திதேவி எழுந்து மீண்டும் இறுதியாக ஏதோ சொன்னபடி உள்ளே செல்ல திருஷ்டத்யும்னன் திரும்ப அமர்ந்துகொண்டு தருமனை நோக்கினார். அவர் தலைதிருப்பவில்லை. திருஷ்டத்யும்னன் அர்ஜுனனை நோக்கி ஏதோ கேட்க அவர் தமையனை நோக்கி கைசுட்டினார். திருஷ்டத்யும்னன் தருமனிடம் ஏதோ கேட்க தருமன் தன் தலையை கைகளால் வருடிக்கொண்டு எழுந்து நடந்து விலகினார். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனிடம் திரௌபதியை சந்திக்க விழைவதாக சொல்லியிருக்கலாம். அர்ஜுனன் உள்ளே சென்றதும் திரௌபதி வந்து குந்தி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்துகொண்டார்.

இருவரும் முகத்தோடு முகம் நோக்காமல் பேசிக்கொண்டனர். திருஷ்டத்யும்னன் தயக்கத்துடன் விழிகளை அப்பால் இருந்த குடிலையும் அதனருகே நின்ற சாலமரத்தையும் நோக்கியபடி பேச தலைகுனிந்து திரௌபதி மறுமொழி சொன்னார். ஏதோ சொன்னபோது திருஷ்டத்யும்னன் விரைந்து திரும்ப இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டன. திரௌபதி புன்னகைத்தார். திருஷ்டத்யும்னன் திரும்பிக்கொண்டு ஓரிரு சொற்களை சொன்னபின் எழுந்துகொண்டார். விடைபெற்றுச்செல்ல விழைவதாக சொல்லியிருக்கலாம். அர்ஜுனன் வெளியே வந்து கைதட்டி தன் உடன்பிறந்தவர்களை அழைத்தார். அவர்கள் வந்தபோது குந்திதேவியும் உள்ளிருந்து வந்தார்கள். அவர் அவர்களை வணங்கி விடைபெற்று குதிரையில் ஏறிக்கொண்டார்.

அவர் சென்றதும் மீண்டும் பாண்டவர்கள் கலைந்து நான்குபக்கமும் செல்லத் திரும்பியபோது திரௌபதி இளையபாண்டவர்களிடம் அவர்கள் வாயிலிட்டு மென்றுகொண்டிருந்ததை சுட்டிக்காட்டி துப்பும்படி ஆணையிட்டாள். இருவரும் துப்பிவிட்டு நாணி தலைகுனிந்தார்கள். அவள் புன்னகையுடன் அவர்களிடம் உள்ளே செல்லும்படி சொல்லிவிட்டு அவர்களுடன் தானும் சென்றாள். குந்தி தேவி புன்னகையுடன் அவள் சென்ற திசையை நோக்கினாள். தருமனும் அவள் சென்றதை நோக்கிவிட்டு அன்னையை நோக்காமல் திரும்பி அகன்றார். பீமன் அர்ஜுனனை நோக்கி புன்னகைசெய்வதையும் அர்ஜுனன் திரும்ப புன்னகைசெய்வதையும் கண்டேன்.

விதுரர் சிரித்துக்கொண்டு தன் தலைமேல் இருந்து முகத்தில் வழிந்த நீரை கையால் துடைத்தபின் “பாஞ்சால இளவரசர் எங்கே சென்றார்?” என்றார். “அவர் நேராக சென்றதே துர்வாசரை காண்பதற்குத்தான்.” விதுரர் தலையசைத்தார். நீராட்டறைச் சேவகன் அவர் மேல் வெந்நீரை ஊற்றி தலையை விரல்விட்டு நீவி கழுவினான். சிசிரன் காத்திருந்தான். விதுரர் போதும் என்று கைகாட்டினார். அவர் குழலை நீராட்டறைச் சேவகன் மரவுரியால் துடைக்கத் தொடங்கியதும் சிசிரன் “அரண்மனை ஒற்றர்கள் அளித்த செய்திகள் நேராகவே வந்திருக்கும்” என்றான். ஆம் என தலையசைத்து அவன் செல்லலாம் என்று விதுரர் கைகாட்டினார்.

உடல் துவட்டி நறுமணத்தைலப்பூச்சும் சுண்ணப்பூச்சும் முடித்து வெளிவரும் வரை அவர் ஏதும் பேசவில்லை. ஆடைமாற்றிக் கொண்டிருக்கையில் அறைக்குள் வந்த சுருதை கதவருகே நின்று “உணவருந்திவிட்டுத்தானே?” என்றாள். “ஆம்” என்றார் விதுரர். அவள் ஓரிரு கணங்கள் தயங்கிவிட்டு “அரசரை சந்திக்கவிருக்கிறீர்களா?” என்றாள். விதுரர் “ஆம்” என்றார். அவள் ஒரு அடி முன்னால் வந்து “இளவரசர்கள் இன்று மீள்கிறார்களோ?” என்றாள்.

விதுரர் தன்னை அறியாமலேயே “எந்த இளவரசர்கள்?” என்று கேட்டுவிட்டு சிரித்துவிட்டார். “பேசவைத்துவிடுவாய்… நான் தவறிவிட்டேன்” என்றார். “நான் ஏதும் கேட்கவில்லை. வெறுமனே பேசலாமே என்று கேட்டேன். எனக்கென்ன?” என்று அவள் திரும்ப அவர் பாய்ந்து அவள் கைகளை பிடித்துக்கொண்டார். “என்ன இது? நான் உன்னிடம் கெஞ்சவேண்டுமா என்ன?” சுருதை “பின் என்ன? நான் உங்களிடம் அரசியல் பேசவா வந்தேன்?” என்றாள்.

விதுரர் அவளை இடைவளைத்து அணைத்து முகத்தை நோக்கி “அரசியல் பேசத்தான் வந்தாய்… இல்லை என்று சொல்!” என்றார். அவள் தன் விழிகளைச் சரித்து புன்னகையில் கன்னங்கள் ஒளிபெற “ஆமாம், அதற்குத்தான் வந்தேன்… என்ன அதற்கு?” என்றாள். “ஒன்றும் இல்லை யாதவ அரசி. தாங்கள் அரசியல் செய்திகளை அறியாமலிருந்தால்தான் வியப்பேன்” என்றார். “கேலி தேவையில்லை. விருப்பமிருந்தால் சொல்லுங்கள்” என அவள் திமிற அவர் அவளை இறுக்கி அவள் கன்னங்களில் முத்தமிட்டார்.

அவள் மெல்ல அவருடன் இயைந்தபடி “பாண்டவர்கள் இறக்கவில்லை என்பது இப்போது அரசருக்கு தெரிந்திருக்கும் அல்லவா?” என்றாள். “ஆம், அது நேற்றே தெரிந்துவிட்டது. அவர் ஐயங்களில் தவிக்கிறார் என்று சொன்னார்கள். நான் செய்திகளை முழுதறிந்தபின் சென்று சந்திக்கலாமென்று எண்ணினேன்” என்றார் விதுரர். “எப்படியென்றாலும் எதிர்கொள்ளவேண்டிய நிலை அல்லவா அது?” என்றாள் சுருதை. ”அரக்குமாளிகையை கௌரவர்கள் அமைத்ததை இனிமேல் எப்படி மறைக்கமுடியும்?”

“மறைத்தாகவேண்டும்” என்றார் விதுரர். “முடிந்தவரை மறைக்காமல் எனக்கு வேறுவழி இல்லை. அரசர் அது எரிநிகழ்வு என்றே எண்ணியிருக்கிறார். அதில் அவர்கள் எப்படியோ பிழைத்து இத்தனைநாள் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள் என நினைக்கிறார். அப்படி அவர்கள் ஒளிந்து வாழ்ந்தமைக்கு கௌரவர் வழிவகுத்திருப்பார்களோ என்றே ஐயப்படுகிறார். அதற்கே அவர் கொதித்துக்கொண்டிருக்கிறார் என்றார்கள்.”

சுருதை அவரை தழுவி இறுக்கி உடனே விலகி “உணவருந்த வாருங்கள்” என்றாள். அவர் சால்வையை எடுத்து தோளிலிட்டபடி “அவர் அறிந்ததைக்கூட காந்தாரி அறிந்திருக்க மாட்டார். அவர் அறிந்தால் குருகுலத்தையே தீச்சொல்லால் பொசுக்குவார்” என்றபடி அவள் பின் நடந்தார். சுருதை சில கணங்கள் சிந்தனைசெய்துவிட்டு “அவர்கள் இருவரும் அறிவதே நல்லது” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று விதுரர் சினந்தார்.

சுருதை “ஆம், இது எளியசெய்தி அல்ல. அஸ்தினபுரியில் இப்படி ஒரு வஞ்சம் இதுவரை நிகழ்ந்ததில்லை. நீங்கள் அதைச் சொன்ன நாள் முதல் ஒருநாள்கூட அதை எண்ணாமல் நான் துயின்றதில்லை. ஒவ்வொரு முறை அதை எண்ணும் போதும் என் உடல் துடிக்கிறது. சூதில் உடன்பிறந்தவரைக் கொல்வதென்பது கீழ்மை. அதிலும் அன்னையைக் கொல்ல அனல் ஏந்துவதென்பது கீழோர் நாணும் கீழ்மை. அதைச்செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது” என்றாள்.

“எளிய முறையில் நீ சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் அது எளிதாக முடியாது. மைந்தர் நூற்றுவரையும் சகுனியையும் கணிகரையும் கழுவிலேற்றவே அரசர் முடிவெடுப்பார். ஐயமே இல்லை. அவரது பெருஞ்சினத்தையும் நான் அறிவேன். அதற்குப்பின் அவரும் காந்தார அரசியரும் உயிர்சுமக்க மாட்டார்கள். உறுதி” என்றார் விதுரர். சுருதை “ஆம், அதையும் நான் சிந்தித்தேன். ஆனால் அப்படி நிகழுமென்றால் அதுவும் இயல்பென்றே கொள்ளவேண்டும். இங்கே நீதி திகழ்கிறது என பாரதவர்ஷம் உணரட்டுமே” என்றாள்.

விதுரர் “இல்லை, நான் மக்களை அறிவேன். மக்கள் கருத்து என்பது காற்றுக்கேற்ப திசைமாறும் மழை. அரக்குமாளிகைச் செய்தி அறியவருமென்றால் பாண்டவர்கள் மேல் கனிவும் கௌரவர்மேல் பெரும்சினமும் கொள்ளும் இந்நாட்டு மக்கள் கௌரவர்கள் கழுவேற்றப்பட்டால் உளம் மாறிவிடுவார்கள். சிலநாட்களிலேயே கௌரவர்கள் மூதாதைதெய்வங்களாக பலிபெற்று கங்கைக்கரையோரம் கோயில் கொள்வார்கள். அவர்களைக் கொன்ற பழி பாண்டவர்களை வந்தடையும். இழிசொல் படிந்த நாடும் முடியும்தான் பாண்டவர்களிடம் வந்துசேரும்” என்றார்.

“அதற்காக அவர்களை விட்டுவிடுவதா?” என்றாள் சுருதை சினத்தில் சிவந்த முகத்துடன். “வேறு வழியே இல்லை” என்றார் விதுரர். “என்ன செய்யவிருக்கிறீர்கள்?” விதுரர் பெருமூச்சு விட்டு “அறியேன். இரவெல்லாம் என் நெஞ்சு அதை எண்ணியே உழன்றது. இன்னும் எந்த வழியும் திறக்கவில்லை” என்றார். சுருதை “பாவத்தை ஒளிப்பவர்களும் பாவமே செய்கிறார்கள்” என சீறும் குரலில் சொன்னாள்.

அவர் உணவருந்த அமர்ந்தபோது பணிப்பெண்ணிடமிருந்து உணவைப் பெற்று அவளே பரிமாற வந்தாள். அவர் அவளை நிமிர்ந்து நோக்கி “சரி, என்ன சினம்? போதும்” என்றார். அவள் உதட்டை இறுக்கியபடி அக்காரமிட்டு அவித்த கிழங்குகளையும் தேன்கலந்த தினையுருண்டைகளையும் எடுத்து வைத்தாள். “சரி, விடு அதை” என்றார் விதுரர். அவள் சற்றே புன்னகை செய்து “சரி” என்றாள்.

விதுரர் “இனி உன் நெஞ்சில் துடித்துக்கொண்டிருக்கும் அடுத்த வினாவை எழுப்பு” என்றார். “என்ன வினா?” என்றாள் சுருதை. “திரௌபதியைப் பற்றி” என்று அவள் கண்களை நோக்கி புன்னகைத்தபடி அவர் சொன்னார். அவள் பார்வையை விலக்கியபடி “அவளைப்பற்றி எனக்கென்ன?” என்றாள். “ஒன்றுமில்லையா?” என்றார் விதுரர். சுருதை “ஏன்? நான் என்ன கேட்பேன்?” என்றாள். “நீ கேட்க விழைகிறாய்” என்றார் விதுரர். அவள் சினத்துடன் “இல்லை” என்றாள். “சரி, கேட்கமாட்டாய் அல்லவா? உறுதியாக கேட்கமாட்டாய் அல்லவா?”

சுருதை மேலும் சினத்துடன் “கேட்பேன். ஏன் கேட்டால் என்ன?” என்றாள். விதுரர் சிரித்து, ‘சரி கேள்” என்றார். அவளும் அடக்கமாட்டாமல் சிரித்து வாயை கைகளால் பொத்திக்கொண்டு அருகே பீடத்தில் அமர்ந்துவிட்டாள். “ஆம், கேட்கவேண்டும். நேற்றுதான் எனக்கு செய்தி வந்தது. அதுமுதல் உள்ளம் நிலைகொள்ளவில்லை.” விதுரர் நகைத்து “இந்த அரண்மனையில் செய்தியறிந்த எந்தப்பெண்ணுக்கும் அகம் நிலைகொள்ளப்போவதில்லை” என்றார்.

“ஏன்?” என்று அவள் முகத்தில் சிரிப்பு இருக்க கண்களைச் சுருக்கியபடி கேட்டாள். ”தாங்கள் தவறவிட்ட எஞ்சிய நால்வர் எவரென எல்லா பெண்களும் பட்டியலிடுகிறார்கள் என்று அறிந்தேன்.” சுருதை சினந்து “என்ன பேச்சு இது… மூடர்களைப்போல” என்று சொல்ல விதுரர் உரக்கச்சிரித்தார். “போதும்… மூடத்தனமாகப் பேசி கீழிறங்கவேண்டாம்” என்றாள் சுருதை. “சரி,சொல்” என்றார் விதுரர்.

“ஐவரையும் மணக்க விரும்புவதாக அவளே சொன்னாளாமே” என்றாள் சுருதை. விதுரர் சிரித்தபடி “சரிதான் அதற்குள் பெண்கள் இப்படி வந்துவிட்டீர்களா?” என்றாள். சுருதை சற்றே சினந்து “நான் சொல்லவில்லை. செய்திகள் அப்படி சொல்கின்றன. அவர்களின் பாஞ்சாலக்குடிகளில் அரசியர் ஐந்துகுலங்களில் இருந்து ஐந்து கணவரை மணக்கும் முறை இருந்ததாமே?” என்றாள். ”ஆம், ஆனால் உனது யாதவர்குடிகளிலும் அவ்வழக்கம் இருந்ததே!”

சுருதை சீற்றத்துடன் “யார் சொன்னது? ஐந்துபேரை எல்லாம் மணப்பதில்லை” என்றாள். “ஆம், ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவரை மணப்பதுண்டு…” என்றார் விதுரர். சுருதை “அது இப்போது எதற்கு? இப்போது எவரும் அதை செய்வதில்லை. நெடுங்காலம் முன்பு நடந்தவை அவை. இவர்களின் நிலத்தில் இப்போதும் பெண்கள் பல ஆடவரை மணக்கிறார்கள். உடன்பிறந்தார் அனைவருக்கும் ஒரே மனைவி என்பது அங்கே எல்லா முறைமைகளாலும் ஏற்கப்பட்டிருக்கிறது” என்றாள்.

“சரி” என்றார் விதுரர் சுருதையின் சினத்தை சற்று வியப்புடன் நோக்கியபடி. “ஆகவே அவளே கோரியிருக்கிறாள் என்கிறார்கள். ஏனென்றால் அவள் விரும்புவது தேவயானியின் மணிமுடியை, அஸ்தினபுரியின் அரியணையை. வென்றவன் இளையோன். அவன் மனைவியாக இங்கே வந்தால் அவள் அரசி அல்ல. தருமனின் துணைவியே அஸ்தினபுரிக்கு பட்டத்தரசியாக ஆகமுடியும். அதை அறிந்துதான் இதை செய்திருக்கிறாள்.” விதுரர் மெல்லிய புன்னகையுடன் “சரி, அப்படியென்றால்கூட அவள் தருமனையும் அர்ஜுனனையும் மட்டும் மணந்தால் போதுமே. எதற்கு ஐவர்?” என்றார்.

“அங்கேதான் அவளுடைய மதியூகம் உள்ளது. மூத்தவரையும் மூன்றாமவரையும் மட்டும் எப்படி மணக்க முடியும்? நடுவே இருப்பவர் பீமசேனர். அவரது பெருவல்லமை இல்லாமல் பாண்டவர்கள் எங்கும் வெல்லமுடியாது. மேலும் அவளுக்கு பீமசேனரை முன்னதாகவே தெரியும். அவர்கள் நடுவே உறவும் இருந்திருக்கிறது.”

விதுரர் கண்களில் சிரிப்புடன் “அப்படியா?” என்றார். “சிரிக்கவேண்டாம். உங்கள் ஒற்றர்கள்தான் என்னிடமும் சொன்னார்கள். மணநிகழ்வுக்கு முந்தையநாள் காம்பில்யத்தின் தெருக்களில் அவளை வைத்து அவர் ரதத்தை தன் கைகளாலேயே இழுத்துச் சென்றிருக்கிறார். அதை நகரமே கண்டிருக்கிறது.” விதுரர் “சரி அப்படியென்றால்கூட ஏன் ஐந்துபேர்?” என்றார். ”இதென்ன மூடக்கேள்வி. மூன்றுபேரை எப்படி அவள் மணக்க முடியும்? ஐந்துபேரை மணக்க அவளுடைய குலமுறை வழிகாட்டல் உள்ளது. ஆகவே அதை சொல்லியிருப்பாள்.”

“அவள் சொல்வதை இவர்கள் ஏன் ஏற்கவேண்டும்?” என்றார் விதுரர் எழுந்தபடி. சுருதை பின்னால் வந்துகொண்டே “வேறுவழி இருக்கிறதா இவர்களுக்கு? அவளிடமல்லவா படையும் நாடும் இருக்கிறது இன்று? அவளை அழைத்துக்கொண்டு நகர்புகுந்தால் மட்டுமே அவர்கள் இங்கே ஆற்றல் கொண்டவர்களாக ஆகமுடியும்…” விதுரர் கைகளைத் துடைத்தபடி “அனைத்தையும் சிந்தித்துவிட்டாய்” என்றார்.

“அப்படியென்றால் உண்மையில் நடந்ததுதான் என்ன?” என்றாள் சுருதை. “சற்றுமுன் சிசிரன் அனைத்தையும் விரிவாக சொன்னான். பாண்டவர்கள் மணநிகழ்வுக்குச் சென்றபோது குந்தி துர்வாசரைச் சென்று பார்த்திருக்கிறார். பாஞ்சாலத்தின் ஐங்குலங்களில் மூத்தது துர்வாசபெருங்குலம். அதன் மூத்தஞானி இன்று அவர்தான். அவர் அந்த வழிமுறையைச் சொல்லியிருக்கிறார். குந்தி அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.”

“ஏன், அதனால் என்ன நன்மை?” என்றாள் சுருதை. “தன் மகள் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும் என்பதே துருபதனின் கனவு. ஐவரையும் அவள் மணக்கும்போது அது உறுதிப்படுகிறது. ஒரு போர் நிகழாமல் அஸ்தினபுரியின் மணிமுடியை அடையமுடியாதென்று துருபதன் எண்ணுகிறார். அப்படி மணிமுடி எய்தப்படும்போது பாண்டவர் ஐவரில் எவர் எஞ்சியிருந்தாலும் திரௌபதியே பேரரசி. இந்த ஐந்துமணம் மூலம் அந்த முழுமுற்றான வாக்குறுதி அவருக்கு அளிக்கப்படுகிறது.”

சுருதை “ஆம்” என்றாள். விதுரர் “நாளையே மேலும் ஷத்ரிய அரசர்களிடமிருந்து பாண்டவர்கள் அரசிகளை கொள்வார்கள். வலுவான புதிய உறவுகள் உருவாகும். அப்படி எது உருவானாலும் திரௌபதியின் இடம் மாறாது என்று உறுதியாகிவிட்டது” என்றார். ”அந்த ஐயம் துருபதனுக்கு மட்டுமல்லாது பாஞ்சாலப்பெருங்குடிகளுக்கும் இருப்பது இயல்பே. ஏனென்றால் ஐந்து மைந்தர்களில் சிலருக்கு தன் யாதவகுலத்திலேயே குந்தி பெண் கொள்வாள். அவ்வரசியே குந்திக்கு அண்மையானவளாகவும் இருப்பாள். அது நிகழும்போது திரௌபதி இரண்டாமிடத்திற்கு செல்லக்கூடும். அவ்வாறு நிகழமுடியாதென்பதற்கான வெளிப்படையான ஒப்புதலே இந்த மணம்.”

”இதன்மூலம் குந்தி பாஞ்சாலத்தின் அனைத்துக்குடிகளுக்கும் ஓர் அறிவிப்பை அளிக்கிறார். பாண்டவர்களின் குலமே திரௌபதியின் காலடியில் வைக்கப்பட்டிருக்கிறது என்று. அவளே இனி அஸ்தினபுரி என்று. பாரதவர்ஷத்தின் அரசர்களுக்கும் அது ஒரு பெரும் செய்தியே” என்றார் விதுரர். “குந்தியின் இச்செய்தி பெரும் வெற்றியையே அளித்திருக்கிறது. துருபதனும் பாஞ்சாலத்தின் ஐம்பெருங்குலங்களும் அதை தங்கள் வெற்றி என்று கொள்கிறார்கள். அங்கே காம்பில்யத்தில் கொண்டாட்டமும் களியாட்டமும்தான் நிகழ்கின்றன. ஐந்து மாவீரர்கள் தங்கள் அரசுடன் அவள் காலடியில் கிடக்கிறார்கள்!”

சுருதை பெருமூச்சுடன் “ஆனால் இங்கே அஸ்தினபுரியில் அது அதிர்ச்சியையும் ஒவ்வாமையையும்தான் உருவாக்கும்” என்றாள். விதுரர் நகைத்து “இல்லை… எளியமக்களின் அகம் முதலில் அதிர்ச்சிகொள்ளும். பின்னர் அவளை அவர்கள் வியப்புடன்தான் நோக்குவார்கள். அவள் செய்கைக்கான பின்புலத்தை தேடி அடைவார்கள். பேசிப்பேசி நிறுவிக்கொள்வார்கள். தாங்கள் செய்யமுடியாத ஒன்றை செய்தவள் என்றே பெண்கள் எண்ணுவார்கள். தங்கள் இல்லத்துப் பெண்களைப்போன்றவள் அல்ல அவள், பேருருவம் கொண்டவள் என்று ஆண்கள் எண்ணுவார்கள் ” என்றார்.

“இந்த ஒரு செயலாலேயே திரௌபதி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினிகள் எவரைவிடவும் உயர்ந்தவளாக எண்ணப்படுவாள். வரலாறெங்கும் அவள் பெயர் சக்ரவர்த்திகளும் பணிவுடன் உச்சரிக்கும் ஒன்றாகத் திகழும். அவளை காவியங்கள் வாழ்த்தும். தலைமுறைகள் வணங்கும்” என்றார் விதுரர். “ஏனென்றால் இது நிகரற்ற அதிகாரத்தை ஐயத்திற்கிடமில்லாமல் வெளிக்காட்டுகிறது. வரலாற்றுநாயகர்களும் நாயகிகளும் அதிகாரத்தால் உருவாக்கப்படுபவர்கள்.”

சுருதை உதட்டை இழுத்துக் கடித்து பார்வையைத் தழைத்தபின் “அவள் வென்றிருக்கலாம், ஆனால்…” என்றாள். சிரித்துக்கொண்டு “விடமாட்டீர்களே” என்றபடி விதுரர் திரும்பி “நான் இன்று அரசரை சந்திக்கவிருக்கிறேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நிகழுமென உள்ளம் சொல்கிறது” என்றபின் அவள் முன்நெற்றியின் நரை கலந்த மயிர்ச்சுருளை வருடிவிட்டு “வருகிறேன்” என்றார்.

அவர் பின்னால் வந்த சுருதை “அவள் எப்படி இதை ஏற்றுக்கொண்டாள் என்றுதான் என் நெஞ்சு வினவிக்கொள்கிறது” என்றாள். விதுரர் “ஆகவேதான் அவளை கொற்றவையின் வடிவம் என்கிறார்கள்” என்றபடி வெளியே சென்றார்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

 

நூல் ஐந்து – பிரயாகை – 87

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 7

சற்றுநேரம் கழித்துத்தான் என்ன நிகழ்ந்தது என்று வைதிகர்களின் அவை புரிந்துகொண்டது. எங்கிருந்தோ “வென்றான் பிராமணன்” என்று ஒரு தனிக்குரல் பீறிட்டது. இளம் வைதிகர்கள் எழுந்து கைகளைத் தூக்கி உரக்கக் கூச்சலிட்டு நடனமிட்டனர். அலையலையாக மேலாடைகளைத் தூக்கி வீசினர். யாரோ “அவர்கள் வைதிகர்கள் அல்ல. அவர்கள் பாண்டவர்கள்” என்று கூவியதை எவரும் செவிகொள்ளவில்லை. அப்பால் குடிகளவையிலும் பெருங்கூச்சலும் கொண்டாட்டமும் திகழ்ந்தது.

எதுவோ ஒன்று அனைவரையும் கொண்டாட வைத்தது.எளியோன் ஒருவன் வல்லமை கொண்ட அனைவரையும் வென்றுவிட்டான் என்பது. என்றும் அவர்களின் அகம் காத்திருந்த தொன்மம். அப்படி வெல்பவன் பெரும் வில்திறன் கொண்டவன், எளியோன் அல்ல என்பதை அவர்களின் அகம் அறிந்திருந்தாலும் அகமே அதை ஏற்க விழையவில்லை. அந்த நிகழ்வை அங்கேயே புராணம் ஆக்கிவிட விழைந்தனர். ஒரு புராணத்தின் உள்ளே நின்றிருக்கும் உணர்வில் துள்ளிக்குதித்து மெய்மறந்து கூச்சலிட்டனர்.

திருஷ்டத்யும்னன் திரௌபதியின் அருகே குனிந்து “அவையில் வென்றவர்களை இளவரசி ஏற்றாகவேண்டும் என்று நெறி ஏதும் இல்லை. இளவரசியின் தேர்வுக்கு அவர்கள் வருகிறார்கள் அவ்வளவுதான். அவள் மாலை அவள் உள்ளமே என்கின்றன நூல்கள்” என்றான். அவனை நோக்கி இதழ்மடிய புன்னகைத்துவிட்டு திரௌபதி திரும்பி அருகே நின்றிருந்த தோழியரை நோக்கினாள். அவர்கள் தங்களுக்குப் பின்னால் வந்த சேடியர் ஏந்திய தாலத்தில் இருந்து ஐவகை மலர்களால் பின்னப்பட்ட மாலையை எடுத்து அவள் கைகளில் அளித்தனர். திருஷ்டத்யும்னன் திரும்பி சூதரையும் மாகதரையும் நோக்கி கைகாட்ட மங்கல இசை எழுந்தது.

இதழ்கள் புன்னகையில் விரிந்து பல்முனைகள் சரமென தெரிய அவள் தன் கைகளில் மாலையை எடுத்துக்கொண்டபோது நினைத்திராதபடி அவை முழுதடங்கியது. அனைவரும் அப்போதுதான் அந்நிகழ்வின் முழுப்பொருளை அறிந்தது போல. அங்கிருந்த ஒவ்வொரு ஆணுள்ளமும் அர்ஜுனன் மேல் அழுக்காறு கொண்டதுபோல. அவள் மாலையுடன் சில எட்டுகள் வைப்பதற்குள் அவையில் மங்கல இசை மட்டும் ஒலித்தது. மக்களின் ஆரவாரம் துணையின்றி திகைத்தது போல பொருளற்று பந்தலின் காற்றில் சுழன்று பரவியது.

திரௌபதி அர்ஜுனனின் முகத்தை நோக்கினாள். அவன் அவள் நடந்து வருவதைக் கண்டு திகைத்தவன் போலவோ அதன் பொருள் விளங்காதவன் போலவோ நின்றான். அவன் முகத்தில் சற்றும் உவகை இல்லாததை அவள் கண்டாள். ஒருகணம் அவளும் திருஷ்டத்யும்னனும் விழி தொட்டுக்கொண்டனர். அவள் அணுகிவந்த ஒவ்வொரு ஓசையையும் அவன் உடல் அறிந்ததுபோல் தெரிந்தது. அவள் வைத்த ஒவ்வொரு அடியையும் அவன் தன் உள்ளத்தால் பின்னெடுத்துவைக்க உடல் உறைந்து நின்று தவித்தது.

அவள் தன் அணியோசைகள் அவனுக்குக் கேட்கும் தொலைவை அடைந்ததும் அர்ஜுனன் விரல் தொட்ட நீர்ப்பாவை என கலைந்து திரும்பி அவை நோக்கி கைகூப்பினான். திரௌபதி இடையின் உலோகம் போன்ற இறுகிய வளைவு நடையின் அசைவில் ஒசிய, முலைகள் மேல் சரப்பொளியின் இதழ்கள் நலுங்க, மேகலை மணிகள் குலுங்கி ஒளிர, நூபுரம் ஒலிக்க அவனருகே வந்து சற்றே முகவாய் தூக்கி அவனை விரிந்த கருவிழிகளால் நோக்கினாள்.

அவள் விழிகளைத் தொட்டதும் அவன் நோக்கு பதறி விலகியது. தொடிவளைகள் ஒலியுடன் பின்னகர்ந்து ஒன்றன் மேல் ஒன்றாக இணைந்துவிழ, அவள் கைதூக்கி மாலையை அவன் தோளிலணிவிக்க முனைந்ததும் அரசர் அவையில் இருந்து கிருஷ்ணன் எழுந்து கை நீட்ட மங்கல இசை அணைந்தது. இறுதியாக முழங்கிய முழவு விம்ம்ம்ம் என ஒலித்து மெல்ல அடங்கியது. யாதவன் ஒலி மிகாத குரலில் திருஷ்டத்யும்னனிடம் “இளவரசே, வைதிகமுறைப்படி இளவரசி அந்த பிராமணனுக்கு மாலையிடுவதற்கு முன் காலைத் தொட்டு வணங்கவேண்டும்” என்றான். “வைதிகச்செயல்களில் அவனுக்கு அவள் அறத்துணைவி. ஒரு சொல்லும் மிகாது வாழ்பவள் என்பதற்கான அறிவிப்பும் தொடக்கமும் அதுவே.”

திருஷ்டத்யும்னன் அந்தக் கூற்றில் இருந்த ஏதோ ஒரு பொருந்தாமையை உணர்ந்து மறுகணமே அதில் ஒளிந்திருந்த பொறியை தொட்டறிவதற்குள்ளே சத்யஜித் “அவள் பாஞ்சால இளவரசி. ஷத்ரியப்பெண்” என்றார். ”இங்கே ஷத்ரிய முறைப்படிதான் தன்னேற்பு நிகழ்கிறது.” திருஷ்டத்யும்னன் அனைத்தையும் உடனே கண்முன் கண்டுவிட்டான். திகைப்புடன் திரும்பி நோக்கி திரௌபதியின் கண்களைச் சந்தித்து விலகினான்.

ஷத்ரிய அவையில் அச்சொற்கள் விழுந்ததுமே விழிகளெல்லாம் மாறுபட்டன. கிருஷ்ணன் “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்று சொல்லி அமர்ந்ததுமே தன் தொடையை அறைந்து ஒலி எழுப்பியபடி எழுந்த ஜராசந்தன் உரத்தகுரலில் “நிறுத்துங்கள்… இதற்கு ஷத்ரியர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது!” என்று கூவினான். துருபதன் கைதூக்கி ஏதோ சொல்ல முயல அவை ஓசையடங்கி செவிகூர்ந்தது. பாஞ்சாலி திரும்பி ஜராசந்தனை நோக்க கூந்தலை முடிந்திருந்த முத்துமாலை சரிந்து இடக்கன்னத்தை தொட்டுத் தொட்டு அசைந்தது. அவள் புன்னகையுடன் அவனை நோக்கி அதை எடுத்து கூந்தலில் செருகினாள்.

திருஷ்டத்யும்னன் கைதூக்கி உரத்த குரலில் “இங்கே மணத்தன்னேற்பு நிகழ்ந்திருக்கிறது மகதரே. நெறிகளின்படி வென்றவனை இளவரசி ஏற்கிறாள்… இது எங்கள் குலமுறை. அதை ஏற்றே இங்கே நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றான். ஜராசந்தன் கைகளைத் தூக்கி முன்னால் வந்தபடி “ஷத்ரியர் அவையில் பிராமணர்கள் பங்கெடுக்கும் முறை எங்குள்ளது?” என்றான். அவனைக் சூழ்ந்து எழுந்து நின்ற கலிங்கனும் மாளவனும் ”ஆம், நாங்கள் அதை அறிய விழைகிறோம்” என்றனர்.

திருஷ்டத்யும்னன் “இந்த அவைக்கூடலின் நெறியை நான் உங்களனைவருக்கும் அனுப்பிய ஓலையிலேயே சொல்லியிருந்தேன். பிராமணர் ஷத்ரியர் மட்டுமல்ல வைசியரோ சூத்திரரோ கூட இந்த வில்லேந்தலில் பங்குகொள்ளலாம். வென்றவரில் தனக்குகந்தவரை பாஞ்சால இளவரசி தேர்வு செய்வாள்” என்றான். ”பாஞ்சாலம் தன் நெறிகளை உங்கள் குலங்கள் முதிர்ந்து ஷத்ரியர்களாக ஆவதற்கு நெடுங்காலம் முன்னரே வேத நெருப்பிலும் வாளின் ஒளியிலும் எழுதிவைத்துவிட்டது ஷத்ரியர்களே. இங்கே நீங்கள் எதிர்ப்பது பாஞ்சாலத்தின் நெறிகளை என்றால் எழுங்கள். வில்லேந்துங்கள். அதை முடிவு செய்வோம்” என தன் உடைவாளில் கைகளை வைத்தான்.

பின் இருக்கையில் இருந்து எழுந்த சல்லியன் கைகளைத்தூக்கி ஷத்ரியர்களை அடக்கிவிட்டு “பாஞ்சால இளவரசே, நாங்கள் இங்கே பாஞ்சாலத்தின் நெறிகளைப்பற்றி பேசவில்லை. துருபதனின் கோலுக்கு எதிராக எழவும் இல்லை. இங்கே ஷத்ரியர் நடுவே எழும் வினா இதுவே. பாஞ்சாலத்தின் இளவரசியை இந்த பிராமணனுக்கு நீங்கள் அளிக்கவிருக்கிறீர்கள் என்றால் இக்கடிமணத்திற்குப்பின் அவள் யார்? அவ்வைதிகனுடன் சென்று அவர்களுக்கு வேள்விப் பணிவிடைகள் செய்து பிராமண பத்தினியாக வாழவிருக்கிறாளா?” என்றார்.

திருஷ்டத்யும்னன் சற்று தடுமாறி திரும்பி துருபதனை நோக்க அவர் வணங்கி “அவையோரே, அவளை நான் பாரதத்தின் சக்ரவர்த்தினியாகவே பெற்றேன். அவ்வண்ணமே வளர்த்தேன். அதற்காகவே அவள் மணமுடிக்கிறாள். அதில் ஏதும் மறுசொல் மறுசிந்தை இல்லை” என்றார். ஷத்ரியர்கள் சிலர் கைகளைத் தூக்கி சினத்துடன் ஏதோ சொல்ல எழுந்தனர். சல்லியன் அவர்களை கைகளைக் காட்டி அடக்கினார். ஒருகணம் அவர் பார்வை திரௌபதியின் விழிகளைத் தொட்டு மீண்டது. அவள் அவர் கண்களை நோக்கி புன்னகை செய்தாள்.

சல்லியன் தடுமாறி விழிகளை விலக்கிக்கொண்டு உடனே சினத்துடன் தன்னை மீட்டு வஞ்சத்துடன் புன்னகைத்து மீசையை நீவியபடி “நன்று. தந்தையர் இத்தகைய பெருங்கனவுகளுடன் வாழ்வது உகந்ததுதான். ஆனால் இனி அவள் நாடு எது? இந்த இளம்பிராமணன் அவளை எங்கே கொண்டுசெல்லவிருக்கிறான்? அவளுக்கு பாஞ்சாலநாட்டு மணிமுடி அளிக்கப்படுமா? இல்லை, பாதிநாட்டை அளிக்கவிருக்கிறீர்களா?” என்றார். திருஷ்டத்யும்னன் “அது பாஞ்சாலநாட்டின் முடியுரிமை பேச்சு. அதை பேசவேண்டிய அவையல்ல இது” என்றான்.

“ஒப்புகிறேன்” என்றார் சல்லியன். அவர் விழிகளில் புன்னகை மேலும் விரிந்தது. “நாங்கள் அறியவிழைவது ஷத்ரியப்பெண்ணாகவே வாழவிழையும் இவளை மணக்கும் இப்பிராமணன் இனிமேல் ஷத்ரியனாக ஆகப்போகிறானா என்றுதான்.” திருஷ்டத்யும்னன் அச்சொற்களின் தொலைபொருளை தொட்டு எடுப்பதற்குள்ளாகவே துருபதன் “ஆம், இவர் இனிமேல் ஷத்ரியரே” என்றார்.

”அவ்வண்ணமென்றால் இங்குள்ள ஷத்ரிய அரசர்களில் எவருடைய நிலத்தையோ இவர் ஏற்கவிருக்கிறார் இல்லையா?” என்றார் சல்லியன். “நாங்கள் எதிர்ப்பது அதையே. யமஸ்மிருதியின்படி தன் நிலத்தின் ஒரு துண்டைக்கூட இழக்காமலிருக்கும் பொறுப்புள்ளவன் ஷத்ரியன். ஆகவே ஒருதருணத்திலும் ஷத்ரியன் புதிய ஷத்ரிய குலங்கள் உருவாக ஒப்புக்கொள்ளக்கூடாது. அவன் தன் அனைத்து வல்லமைகளாலும் ஷத்ரியனாகி எழும் பிறனை வெல்லவும் கொல்லவும் கடமைப்பட்டவன்.”

கிருஷ்ணன் அப்பால் தன் இருக்கையில் அமர்ந்தபடியே “ஒருவேளை அவர் மாறுவேடமிட்ட ஷத்ரியராக இருக்கலாமே” என்றான். சல்லியன் திரும்பி அவனை நோக்கிவிட்டு “அவ்வண்ணமென்றால் இந்த அவையில் அவன் சொல்லட்டும், எந்தகுலம் எந்தக் கொடிவழி எந்த நாடு என்று. சான்று வைக்கட்டும்” என்றார். கிருஷ்ணன் புன்னகையுடன் பேசாமலிருந்தான். கூட்டத்தின் விழிகள் அர்ஜுனனை நோக்கின. அவன் கூரிய விழிகளால் அவையை நோக்கியபடி நின்றான்.

துரியோதனன் சற்று அசைந்ததும் அவன் தொடையில் கை வைத்துத் தடுத்துவிட்டு சகுனி எழுந்து கையைத்தூக்கி மெல்லிய குரலில் “அவன் ஷத்ரியன் என்பதற்கு ஒரே சான்றுதான் அளிக்கப்படமுடியும். இச்சபையில் ஷத்ரியர்களை எதிர்த்து அவன் வெல்லட்டும்” என்றார். ஷத்ரியர்கள் “ஆம், ஆம்” என்றனர். ஜராசந்தன் தன் வில்லை எடுத்தபடி முன்னால் பாய கலிங்கனும் வங்கனும் மாளவனும் விற்களை எடுத்துக்கொண்டு கைகளுக்கு தோலுறை போட்டபடி நாணொலி எழுப்பினர். அவர்களுக்குப்பின்னால் ஷத்ரியர்கள் அனைவரும் விற்களையும் வாள்களையும் உருவியபடி எழ அவர்களின் காவலர்கள் துணைவீரர்களுக்காக கூச்சலிட்டபடி பின்னால் ஓடினர். உலோகங்கள் உரசிச் சீறும் ஒலிகளாலும் காலடியோசைகளாலும் அவை நிறைந்தது.

துருபதன் கைகளை விரித்து “அமைதி! அமைதி” என்று கூவியபடி முன்னால் வந்து ஷத்ரியர்களை தடுக்க முற்பட்டார். சத்யஜித் பாஞ்சால வீரர்களை அழைத்தபடி அரங்கின் பின்னால் ஓட துருபத புத்திரர்கள் வாள்களை உருவியபடி முன்னால் ஓடிவந்தனர். ”அரசியரை உள்ளே கொண்டுசெல்லுங்கள்” என்று துருபதன் கூவினார். சிலகணங்களிலேயே மணமுற்றம் போர்க்களமாக ஆகியது. முதல் அம்பு எழுந்து அர்ஜுனன் தோளருகே செல்ல அவன் மிக எளிதாக உடலை வளைத்து அதை தவிர்த்தான். மேலும் அம்புகள் அவனைத் தொடாமல் கடந்து பின்னால் சென்றன. ஓர் அம்பு நெஞ்சில் பாய்ந்திறங்க அணிச்சேடி ஒருத்தி அலறியபடி மேடையில் குப்புறவிழுந்தாள். பிறர் அலறியபடி ஓடி திரைகளுக்கு அப்பால் சென்றனர். அரசியரை சேடிகள் இழுத்துக்கொண்டு செல்ல பிருஷதி “ திரௌபதி… இளவரசி” என்று கைநீட்டி கூவினாள்.

திரௌபதி புதுக்குருதியின் வாசனையை உணர்ந்தாள். அர்ஜுனன் அசையாமல் நிற்கக் கண்டு முன்னோக்கி ஓடிவந்த ஷத்ரியர் திகைத்து ஒரு கணம் நின்றனர். முதலில் சிந்தை மீண்ட கலிங்கன் “கொல்… கொல் அவனை” என்று கூவியபடி வில்லை வளைத்து விட்ட அம்பு சற்றே குனிந்த அர்ஜுனனின் தலைக்குமேல் கடந்துசென்றது. வெறும் கையுடன் நின்ற அர்ஜுனனை நோக்கி வாளைச் சுழற்றியபடி காமரூப இளவரசர்களான சித்ராங்கதனும் தனுர்த்தரனும் ஓடிவந்தனர்.

திருஷ்டத்யும்னன் மேடைக்குக் குறுக்காக ஓடி வந்து திரௌபதியை அணுகி “இளவரசி, போர் முனையிலிருந்து விலகுங்கள்” என்றான். அவனுக்குப் பின்னால் வாளும் கேடயங்களுமாக ஓடிவந்த வீரர்களை நோக்கி “எதிர்கொள்ளுங்கள்… அரசமேடையில் ஏறும் எவரும் நம் எதிரியே” என்றான். திரௌபதி கையசைவால் திருஷ்டத்யும்னனை விலக்கிவிட்டு சென்று தன் இருக்கையில் முன்பு அமர்ந்ததுபோல நிமிர்ந்த தலையுடன் அமர்ந்துகொண்டாள். விழிகள் மட்டும் அங்கு நிகழ்வனவற்றை நோக்கி அசைய, இதழ்களில் புன்னகை விரிந்தது.

குடிகளவையெங்கும் மக்கள் கூச்சலிட்டபடி கலைந்து ஒருவரை ஒருவர் தள்ளியபடி ஓடி பின்னால் ஒதுங்கினர். கீழே விழுந்தவர்கள் மிதிபட்ட பீடங்களுடன் உருண்டு அலறியபடி எழுந்து இறுதியாக ஓடினர். பின்னால் நின்றவர்களை முன்வரிசையாளர்கள் முட்டி பின்னால் தள்ள அவர்கள் நான்கு பெருவாயில்களையும் நோக்கிச்செல்ல முயன்று அவ்வழியாக வாள்களுடன் உள்ளே வந்த பாஞ்சால வீரர்களால் தடுக்கப்பட்டு தேங்கி பதறி கூவினர். சற்றுநேரத்திலேயே குடிமக்கள் அவைகளின் முன்பகுதி முழுமையாகவே ஒழிந்து அங்கே கைவிடப்பட்ட மேலாடைகளும் மிதிபட்டுச் சரிந்த பீடங்களும் தாம்பூலத்தாலங்களும் கவிழ்ந்த நீர்த்தொன்னைகளும் உடைந்த குடுக்கைகளும் சிதறிப்பரவியிருந்தன.

பன்னிரு பாஞ்சாலவீரர்கள் அம்புபட்டு சரிய அவர்களின் சடலங்களை தாவிக்கடந்து ஷத்ரியர்கள் மணமேடை நோக்கி வந்ததை பார்த்து  நின்ற அர்ஜுனன் இடக்கையை நீட்டி ஒரு வீரனின் வாளைப்பிடுங்கி அதே அசைவில் அதை வீசி முன்னால் வந்த சித்ராங்கதனின் தலையை வெட்டி வீழ்த்தினான். பின்னால் வந்தவர்கள் சித்ராங்கதனின் உடல் குப்புறக்கவிழ்வதையும் அவன் தலை மறுபக்கம் பார்ப்பதுபோல திரும்பி பின் துவண்டு செஞ்சேற்றுக்கற்றைகள் நீள தனியாக விழுவதையும் கண்டனர். அவன் கால்களும் கைகளும் தரையை அள்ளத்துடிப்பவை போல இழுத்துக்கொள்ள அவன் மேல் கால் தடுக்கி திகைத்த தனுர்த்தரன் மறுகணமே விலகிக் சுழன்று தலையில்லாமல் அவன் மேலேயே விழுந்தான். அவன் தலை அவன் முதுகின்மேலேயே விழுந்து அப்பால் உருண்டது.

சுழன்று வந்த அர்ஜுனனின் வாளில் இருந்து தெறித்த பசுங்குருதி திரௌபதியின் மேல் செம்மணியாரம் போல முகத்திலும் இடத்தோளிலுமாக சாய்வாக நீண்டு விழுந்தது. மூக்கிலும் மேலுதட்டிலும் கன்னத்திலும் வழிந்து கழுத்திலும் தோளிலும் சொட்டிய குருதியை துடைக்கக் கூட அவள் கைகளை தூக்கவில்லை. குருதி இதழ்களில் படாமலிருக்க வாயை சற்று உள்ளிழுத்துக்கொண்டாள்.

வைதிகர்கள் அலறியபடி மறு எல்லைக்கு ஓடி பந்தல்சுவரின் விளிம்புகளில் ஒட்டி அஞ்சிய வெள்ளாடுகளென கூச்சலிட்டுக் கொண்டிருக்க பீமன் பீடங்களை மிதித்து பாய்ந்து வந்தான். வந்தவழியிலேயே பந்தல்காலாக நின்றிருந்த பெருமரம் ஒன்றை காலால் ஓங்கி உதைக்க அது முனகல் ஒலியுடன் முறிந்து பக்கவாட்டில் சாய்ந்தது. அதை இருகைகளாலும் தூக்கி சுழற்றியபடி யானை போல பிளிறிக்கொண்டு அவன் வந்து அர்ஜுனன் முன்னால் நின்றான்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

அவன் கையில் இருந்த தூணின் பருமனைக்கண்டதுமே முன்வரிசை ஷத்ரியர் அஞ்சித் தயங்கினர். அவர்கள் பின்னடைவதற்கு இடமளிக்காமல் பின்னாலிருந்து ஷத்ரியர்கள் கூச்சலிட்டபடி வந்தனர். முன்னால் வந்த மணிபூரக மன்னன் சித்ரரதனும் அவன் தளபதியும் மண்டை உடைந்து பின்னால் சரிய அவர்களின் மூளைக்குழம்பு சிதறி பிற ஷத்ரியர் மேல் தெறித்தது. அர்ஜுனன் சுமித்திரன் கொண்டுவந்த வில்லை வாங்கி அம்புகளை தொடுக்கத் தொடங்கினான். முன்னால் வந்த பிருதுவும் விப்ருதுவும் அம்பு பட்டு வீழ்ந்தனர்.

பிருஹத்ஷத்ரன் தோளில் பட்ட அம்புடன் ஓலமிட்டு பின்னடைய ஜயசிம்மனின் வெட்டுண்ட தலை அவன் முன் வந்து விழுந்தது. அதன் இதழ்கள் ஏதோ சொல்ல வந்தவை போல அசையக் கண்டு பிருஹத்ஷத்ரன் அலறியபடி பின்னடைந்தபோது அவன் தலை வெட்டுண்டு பின்னால் சென்றது. ஜயசிம்மனின் உடல்மேலேயே அவன் கைகளை விரித்தபடி விழுந்தான். பீமன் தன் கையில் இருந்த பெருந்தூணைச்சுழற்றிக்கொண்டு ஷத்ரியர் நடுவே செல்ல கிருதபாலனும் சுதர்மனும் அவர்களின் பன்னிரு படைவீரர்களும் தலையுடைந்து விழுந்து துடித்தனர். மேகநாதனின் மண்டையோட்டின் மேல் பகுதி குருதிசிதற தெறித்து நெடுந்தொலைவில் சென்று விழுந்தது. பீமனின் கையில் இருந்த மரத்தூண் குருதி வழிந்து செந்நிணத்தால் ஆனதுபோல மாறியது. அதை சுழற்றியபோது மூளைநிணமும் குருதியும் செந்நிற மேலாடைகள் போல வளைந்து வளைந்து தெறித்தன.

தருமனும் நகுலசகதேவர்களும் வாள்களுடன் அரங்க முகப்புக்கு வந்தனர். நகுலனும் சகதேவனும் பீமனின் பின் புலத்தை பாதுகாத்தபடி வாள் சுழற்றிச் செல்ல அர்ஜுனனின் இடப்பக்கத்தை காத்தபடி தருமன் வில்லுடன் நின்றான். சல்லியனின் வில்லை பீமன் அடித்து உடைத்தான். அவர் பின்னடைந்து ஒரு பீடத்தில் ஏறிக்கொள்ள அவர் தோளை கதையால் அடித்து அலறியபடி தெறிக்கச்செய்தான்.

அவைக்களங்களில் நான்குபக்கமும் மக்கள் அலறிக்கொண்டிருந்தனர். துருபதன் கண்ணீர் வழிய “நிறுத்துங்கள்! போரை நிறுத்துங்கள்…” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். சத்யஜித்தின் தலைமையில் பாஞ்சாலப்படைகள் இருதரப்பினர் நடுவே புகுந்தபோது அவர்களை அடித்துப்பிளந்தபடி வந்த ஜராசந்தன் பீமனுடன் தன் கதையால் மோதினான். இருவரும் உறுமல்களுடனும் போர்க்கூச்சல்களுடனும் மாறி மாறி அறைந்த ஒலியில் அவையின் திரைச்சீலைகள் அதிர்ந்தன. ஜராசந்தனின் அறைபட்டு ஒரு தூண் உடைந்து அதன் மேலிருந்த கூரை இறங்கியது.

பீமனின் அடியில் ஜராசந்தனின் இரும்புக் கதை நசுங்கியது. அவன் சினக்கூச்சலுடன் பாய்ந்து பீமனை தோளில் அடிக்க கீழே விழுந்த பீமன் புரண்டு எழுந்து மீண்டும் தன் தூண்தடியை கையிலெடுத்துக்கொண்டு அலறியபடி ஓங்கி அடித்தான். அவர்களின் போர் ஒலி மெல்ல மெல்ல போரிட்டுக்கொண்டிருந்த பிறரை நிலைக்கச்செய்தது. படைக்கலங்களை தாழ்த்தியபடி விழிகள் அச்சத்துடன் வெறிக்க அவர்கள் இருவரையும் நோக்கிக்கொண்டிருந்தனர். கீழே வெட்டுண்டும் தலையுடைந்தும் கிடந்த பிணங்களை மிதித்து குருதிக்கூழாக்கியபடி மூச்சொலிகள் எழ இருவரும் சுழன்று சுழன்று போர் புரிந்தனர். தன் பீடத்தில் திரௌபதி தன் பாதி மூடிய விழிகளுடன் இருவரையும் நோக்கியபடி அசைவற்று அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் வழிந்த குருதி துளித்து கனத்து உலர்ந்து பொட்டுகளாக மாறிவிட்டிருந்தது.

கிருஷ்ணன் பலராமரிடம் ஏதோ சொல்ல பின்னிருக்கையில் இருந்து அவர் கூச்சலிட்டபடி எழுந்து இருகைகளையும் தூக்கியபடி ஓடிவந்து பீமனின் கையில் இருந்த மரத்தைப் பற்றித் தடுத்து அதே விரைவில் திரும்பி ஜராசந்தனின் இடையில் உதைத்து அவனை பின்னால் சரியச்செய்தார். “போதும்!” என அவர் கூவ பீமன் கடும் சினத்துடன் மார்பில் ஓங்கி அறைந்து கூவியபடி கைகளை ஓங்கி முன்னால் சென்றான். பலராமர் எடையற்றவர் என காற்றில் எழுந்து பீமனை ஓங்கி அறைந்தார். கன்னத்தில் விழுந்த அந்த அடியின் விசையால் நிலைகுலைந்து பீமன் பின்னால் சரிந்து ஒரு மரப்பீடத்தை முறித்தபடி விழுந்தான். அதே விரைவில் திரும்பி எழமுயன்ற ஜராசந்தனை மீண்டும் மிதித்து ஒரு தூணை நோக்கி தெறிக்கச் செய்தார் பலராமர். தூண் உடைய அதன் மேலிருந்த பாவட்டா அவன் மேல் விழுந்தது.

இரு கைகளையும் விரித்து தலையை சற்றுத் தாழ்த்தி இருவரையும் ஒரே சமயம் எதிர்க்க சித்தமானவராக அசைவற்று நின்று மிகமெல்ல ஓர் உறுமலை பலராமர் எழுப்பினார். அந்த ஒலி இருவருக்குமே ஐயத்திற்கிடமற்ற செய்தியை சொன்னது. பீமன் தன் தோள்களைத் தளர்த்தி தலைதாழ்த்தி மெல்ல பின்வாங்கினான். ஜராசந்தன் எழுந்து கைநீட்டி ஏதோ சொல்ல முயல பலராமர் மீண்டும் உறுமினார். அவன் தனக்குப்பின்னால் நின்றவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு பின்னகர்ந்தான்.

கிருஷ்ணன் பின்னாலிருந்து கைகளைத் தூக்கியபடி முன்னால் வந்தான். “ஷத்ரியர்களே, இந்த அவையில் இந்தப்பிராமணன் ஷத்ரியர்களை எதிர்க்கும் வல்லமை கொண்டவன் என்பது நிறுவப்பட்டுள்ளது. இதுவே இப்போதைக்கு போதுமானது. இவன் இனிமேல் நாட்டை வெல்வான் என்றால் அந்நாட்டுக்குரியவனே அதை எதிர்க்கவேண்டும். அதுவே நூல்முறையாகும்” என்றான்.

“இந்தப்பிராமணன் எப்படி பாஞ்சால இளவரசியை கொள்ள முடியும்? இவன்…” என்று கலிங்கன் கூச்சலிட்டான். “கலிங்கரே, உங்களுக்காகவே நான் போரை நிறுத்தினேன். இவன் இந்த அவையில் இத்தனை ஷத்ரியர்களையும் வென்று செல்வான் என்றால் அதன்பின் பாரதவர்ஷத்தையே வென்றவன் என்றல்லவா அறியப்படுவான்?” என்றான் கிருஷ்ணன் புன்னகையுடன். ஜராசந்தன் “ஆம், அவனை நான் களத்தில் சந்திக்கிறேன்” என்றான்.

கிருஷ்ணன் வாய்விட்டு நகைத்து “இறந்தவர்கள் மறுபடியும் எழுவார்கள் மகதரே. அப்போது உங்கள் படைகளும் எழட்டும்” என்றான். ஜராசந்தன் ஒருகணம் கிருஷ்ணனை நோக்கிவிட்டு திரும்பி “ஆம், ஒரு இரும்புக்கதை அவனுக்காகக் காத்திருக்கிறது யாதவரே. உமது நண்பனின் தமையனிடம் சொல்லும்” என்று சொன்னபின் இரு கைகளையும் ஓங்கி அறைந்து ஒலியெழுப்பியபடி திரும்பி சென்றான். அவனைத் தொடர்ந்து சில ஷத்ரியர்களும் சென்றனர்.

ஷத்ரியர்களின் நடுவே நின்ற தாம்ரலிப்தன் ஏதோ சொல்ல முயல ஜாம்பவதியின் மைந்தனான சாம்பன் “அவர்கள் யாரென்று இன்னுமா தெரியவில்லை? விலகிச்செல்லுங்கள்…. “ என்றான். ஷத்ரியர்களில் பலர் திகைத்து திரும்பி அவர்களை நோக்கினர். அவர்கள் திரும்பி கௌரவர்களை நோக்க அவர்கள் பார்வைகளை விலக்கி திரும்பிச்சென்றனர்.

கிருஷ்ணன் புன்னகை செய்தபடி “இனி மணத்தன்னேற்புக்கு எத்தடையும் இல்லை இளவரசி” என்றான். திரௌபதி சீற்றத்துடன் அவனை நோக்கி தலைதிருப்பி அவன் சிரிப்பைக்கண்டதும் விழிமுனைகள் சற்று சுருங்க திரும்பிக்கொண்டாள். கிருஷ்ணன் “துருபதரே, உமது மகள் தகுதியானவர்களை அடைந்திருக்கிறாள்” என்றான். துருபதன் என்ன சொல்வதென்று அறியாமல் பதைப்புடன் தன் மைந்தர்களை நோக்கினார்.

திருஷ்டத்யும்னன் கைகாட்ட சூதர்கள் இசை எழுப்பினர். சுற்றிலும் விழுந்து கிடந்த பிணங்கள் நடுவே மங்கல இசை ஒலிக்க அர்ஜுனன் கிருஷ்ணனையும் திரௌபதியையும் மாறி மாறி பார்த்தான். கிருஷ்ணன் அவை நோக்கி திரும்பி “பாஞ்சாலப்பெருங்குடிகள் வருக. இளவரசி மணம் கொள்ளும் நேரம் இது” என்றான். அவர்கள் தயங்கியபடி உடைந்த பீடங்களையும் உதிர்ந்த அம்புகளையும் கடந்து அருகே வந்தனர். எவரோ ஒரு முதியவர் உரத்த குரலில் வாழ்த்தொலிக்க சிலர் திருப்பிக்கூவினர்.

திரௌபதி எழுந்து கிருஷ்ணனை ஒருகணம் திரும்பி நோக்கியபின் அர்ஜுனனை அணுகி தன் கையில் இருந்த மாலையை அர்ஜுனன் கழுத்தில் போட்டாள். அவன் அதை தலைகுனிந்து ஏற்றுக்கொள்ள தன்னை மீட்டுக்கொண்ட துருபதன் திரும்பி அணிச்சேடிகளை அருகே வரச்சொல்லி கைகாட்டினார். நடுக்கம் விலகாமல் அணுகிய அவர்களின் கைத்தாலங்களில் இருந்து மலர்களை அள்ளி திரௌபதியின் மேல் போட்டார்.

சத்யஜித்தும் துருபதன் மைந்தர்களும் மலர்களை அள்ளி அவள் மேல் போட்டனர். வீரர்களால் உள்ளே கொண்டுசெல்லப்பட்ட அரசியர் இருவரும் திரும்ப வந்தனர். பிருஷதி கண்ணீருடன் ஓடிவந்து மலர்களை அள்ளி மகள் மேல் போட்டு இடறிய குரலில் “நிறைமங்கலம் கொள்க! வெற்றியும் புகழும் பெறுக! விண்ணில் ஒளிமீனாக அமைக!” என்று வாழ்த்தினாள். அதுவரை கலைந்து ஒலியெழுப்பிக்கொண்டிருந்த மக்கள் முன்வந்து வாழ்த்துக்களை கூவினர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வெளியே முரசொலிகளும் சேர்ந்து செவி நிறைத்தன.

ஆனால் அவர்கள் அனைவரும் ஊக்கமிழந்திருந்தனர். அங்கு நிகழ்பவை தங்களுக்கு முற்றிலும் அயலானவை என அறிந்தவர்கள் போல. அவற்றில் தாங்கள் ஒரு பொருட்டெனவே இல்லை என உணர்ந்தவர்கள் போல. ஒவ்வொருவரும் வீடு திரும்பவே விழைந்தனர். அவர்கள் நன்கறிந்த வீடு. அவர்களை அறிந்து அணைத்து உள்ளே புதைத்துக்கொள்ளும் வீடு. அவர்களுக்கென இருக்கும் இடம்.

தருமனும் பீமனும் அர்ஜுனனின் இருபக்கமும் நிற்க பின்னால் நகுலனும் சகதேவனும் நின்றனர். கழுத்தில் விழுந்த மாலையை எடுத்து மீண்டும் திரௌபதியின் கழுத்தில் போட்டான் அர்ஜுனன். அது அவள் கொண்டையில் சிக்க பிருஷதி முடியை எடுத்து சரிசெய்தாள். கலைந்த சரப்பொளியை சீர் செய்தபடி திரௌபதி அர்ஜுனன் முகத்தை நோக்கினாள். அவன் முகம் ஏதோ ஐயம் கொண்டதுபோல, எவ்வண்ணமேனும் அங்கிருந்து செல்ல விழைபவன் போல் தோன்றியது.

திரௌபதி குருதியும் மலரிதழ்களும் ஒட்டிய முகத்துடன் திரும்பி கிருஷ்ணனை நோக்க அவன் புன்னகை செய்து “இளவரசி, இன்றுடன் அரசியாகிறீர்கள். எட்டு மங்கலங்களும் திகழ்க!” என்று வாழ்த்தினான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

நூல் ஐந்து – பிரயாகை – 86

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 6

வில்சூடும் போட்டி முடிந்துவிட்டது என்ற எண்ணம் அவையில் பெரும்பாலானவர்களுக்கு உருவாகிவிட்டிருந்தது என்பது பல இடங்களிலும் எழுந்த கலைந்த ஒலிகளில் இருந்து தெரிந்தது. ஏராளமானவர்கள் தாம்பூலம் போடத் தொடங்கியதை அர்ஜுனன் கண்டான். ஆனால் பாண்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை பாதிக்கும் மேற்பட்டவர்கள் அறிந்திருந்தனர். அங்கே வரும்போது அவர்களிடம் எதிர்பார்ப்பும் இருந்தது.

பாண்டவர்கள் இறப்பில் இருந்து மீண்டு பாஞ்சாலியை வெல்ல வந்துள்ளார்கள் என்பது ஒரு கதையாகவே அவர்களிடமிருந்தது. அதுவரை அர்ஜுனன் வரவில்லை என்பதனால் கதையில் இருந்து உண்மையென உருக்கொண்டு வந்துகொண்டே இருந்த அச்செய்தி மீண்டும் கதையாக மாறிவிட்டது. அர்ஜுனனின் அருகே அமர்ந்திருந்த கிழவர் “நான் சொன்னேனே, அவர்கள் வரவில்லை. என் நரைத்தகுடுமியின் அனுபவத்தில் எத்தனை கதைகளை பார்த்திருப்பேன்…” என்றார்.

குடிச்சபையிலிருந்த அனைவரும் அரசரவைகளுக்கு அப்பால் பல திசைகளில் விழியோட்டிக்கொண்டிருந்தனர். துருபதனும் மைந்தரும் வேதியர் அவையை நோக்கக் கூடாது என முடிவெடுத்தவர்கள் போல இறுகிய கழுத்துக்களுடன் மறுபக்கம் நோக்கினர். மகத மன்னன் ஜராசந்தன் வந்து அவன் பீடத்தில் அமர்ந்ததும் அரசர் அவையில் அனைவரும் மீண்டும் தங்கள் இடங்களில் அமைந்தனர். கர்ணன் தன் இருக்கைக்குச் சென்று நிமிர்ந்து அமர்ந்துகொண்டான். துரியோதனன் கைகளை மார்பில் கட்டி கிந்தூரத்தில் விழிநாட்டி இருந்தான்.

இரு சேவகர்கள் நீள்கயிறு ஒன்றைப்பற்றி இழுக்க மேலிருந்த கிளிக்கூடு கீழிறங்கியது. அதன் பொறிக்குள் மீண்டும் ஐந்து கிளிகளை வைத்து கயிற்றைப்பற்றி மேலேற்றினர். அது அவையெங்கும் புது நம்பிக்கையை உருவாக்கியது. கிழவரே “அர்ஜுனன் வந்திருக்கிறான். அவனுக்காகத்தான்…” என்றார். இன்னொருவன் “இல்லை, எவராலும் கிளிகள் வீழ்த்தப்படவில்லை என்றால் தெய்வங்களுக்கு முறையாக பூசனைகள் செய்யவேண்டும் அல்லவா?” என்றான்.

அர்ஜுனன் கிருஷ்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான். யாதவனின் விழிகள் அவனை நோக்கி திரும்பவேயில்லை என்றாலும் அவன் தன் நோக்கை முழுமையாகவே உணர்ந்திருக்கிறான் என்பதை அர்ஜுனன் அறிந்தான். இரையை நோக்கி பாய்வதற்கு முந்தைய கணத்தில் முற்றிலுமாக செயலற்று உறைந்த வேங்கை. பீமன் குனிந்து “பார்த்தா…” என்றான். அர்ஜுனன் “இன்னும் முடிவாகவில்லை மூத்தவரே” என்றான். பீமன் “ஆம், நானும் அவனைத்தான் பார்க்கிறேன்” என்றான்.

அச்சொற்களை சொன்னபடியே அவன் எழுந்து தன் கைகளை பேரொலியுடன் தட்டினான். வைதிகர் அவை திடுக்கிட்டு பலர் எழுந்துவிட்டனர். துருபதனும் மைந்தர்களும் திரும்பி பீமனை நோக்க பீமன் “பாஞ்சால அரசே, பால்ஹிக நாட்டு வைதிகன் நான். ஷத்ரியரை வென்ற அந்த வில்லை இம்மணவரங்கில் நாணேற்ற விழைகிறேன்” என்றான். அவனை நோக்குவதற்காக குடிகளவையில் பலர் எழுந்துகொள்ள பிறர் அவர்களை கூச்சலிட்டு இழுத்து அமரச்செய்தனர். இடம் பெயர்ந்து அமர முயன்றவர்களை நோக்கி சேவகர்கள் கூச்சலிட்டனர். புலிபுகுந்த காட்டுக்குள் குரங்குக்கூட்டம் பதற்றம் கொள்வதுபோலிருந்தது அவையின் ஒலி.

ஜராசந்தன் இருகைகளாலும் பீடத்தின் கைப்பிடியைப் பற்றியபடி, பெரும் எடையை தூக்குபவன் போல அசைந்த தோள்தசைகளுடன் சற்று தலையை முன்னால் தாழ்த்தி, சிறிய முதலைவிழிகளால் கூர்ந்து நோக்கினான். அவனுக்கு அப்பால் அமர்ந்திருந்த துரியோதனனும் அதே பாவனை கொண்டிருந்தான். அவன் தொடை துடித்துக்கொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். இரு பெருங்கைகளையும் தூக்கி அசைத்தபடி பீமன் மணமுற்றம் நோக்கி சென்றான். அவன் கைகள் மிகப்பெரிதாக இருந்தமையால் உள்ளங்கையும் மணிக்கட்டும் சிறியவையாக தோன்றின. மலைப்பாம்பின் தலை போல.

அரைக்கண்ணால் அரசகுலத்தின் ஆணையை எதிர்நோக்கியபடி ஒரு வீரன் பீமனை நோக்கி வர அவனை மிகஎளிதாகத் தூக்கி தலைக்குமேல் சுழற்றி நெடுந்தூரத்திற்கு வீசிவிட்டு பீமன் தடையை தாண்டி மணமுற்றத்தை அடைந்தான். காற்றில் கைகால்கள் சுழல எழுந்து கீழே விழுந்தவனுக்கு எந்த காயமும் படவில்லை. அமர்பவன் போல விழுந்து திகைத்து உடனே கை ஊன்றி அவன் எழுந்துவிட்டான். அவையினர் முழுக்க அவனை நோக்கி சிரித்தனர். சிரிப்பைக் கண்டு அவன் தன்னை நிமிர்த்திக்கொள்ள அது மேலும் சிரிப்பை உருவாக்கியது.

தருமன் “இவன் பீதர்நாட்டு கழைக்கூத்தாடிகளுடன் இருக்கவேண்டியவன் பார்த்தா. பெருங்கூட்டத்தை மகிழ்விக்க இவனால் முடிகிறது” என்றான். அர்ஜுனன் சிரித்தபடி “ஆம், மூத்தவரே. அவர் போர்க்களத்தில்கூட பார்வையாளர்களை மகிழ்விக்க விழைபவர்” என்றான். பீமன் மணமுற்றத்திற்குச் சென்று தன் கைகளை விரித்து தசைகளை அலையிளகச்செய்தான். அவன் வயிறு பல துண்டுகளாக மாறி இறுகியது. அப்படியே கைகளை வீசி குனிந்து இரு உள்ளங்கைகளையும் ஊன்றி அவற்றை பாதங்களாக எளிதாக எடுத்துவைத்து நடந்தான். அவையெங்கும் சிரிப்பும் கூச்சல்களும் எழுந்தன.

தலைகீழாக கிந்தூரத்தை அடைந்து நின்றபின் ஒரே பாய்ச்சலில் மீண்டும் நிமிர்ந்தான். கைகளால் தன் உடலில் படபடவென அடித்துக்கொண்டான். அவன் எதைச்செய்தாலும் சிரிக்கும் நிலைக்கு அவை வந்திருந்தது. ஜராசந்தன்கூட சற்றே சாய்ந்து கைகளால் முகவாயைத் தாங்கி சிரித்துக்கொண்டிருந்தான். துருபதன் வாயை கைகளால் பொத்திக்கொண்டு தோள்கள் குலுங்க நகைத்தார். கர்ணனின் முகம் மட்டும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிலையெனத் தெரிந்தது.

பீமன் சிரித்தபடியே குனிந்து மிக இயல்பாக இரு கைகளாலும் கிந்தூரத்தைப்பற்றி எளிதாகத் தூக்க முயன்று திகைத்து அதிர்ந்து மேலும் முயன்று பரிதவித்து முழு வல்லமையுடன் அதைத் தூக்க முயன்று கால்கள் தரையில் வழுக்கி அதன் அடியிலேயே விழுந்தான். அவன் மேல் பீடத்துடன் வில் சரிய அடியில் சிக்கி அவன் தத்தளித்தபின் முழு மூச்சுடன் அதை தள்ளி உருட்டிவிட்டு எழுந்து துள்ளி விலகினான். அவையின் சிரிப்பு நின்று அனைவரும் அவனை நோக்கி வியந்து நின்றனர்.

அவன் அது மிகச்சூடாக இருப்பது போல தொட்டு நோக்கிவிட்டு உடல்நடுங்கி பின்னகர்ந்தான். மீண்டும் மிகமிக கூர்ந்த உடலசைவுகளுடன் அதை அணுகி மெல்ல கையால் தொட்டு நோக்கி விட்டு திடுக்கிட்டு பின்னால் வந்தான். நாலைந்துமுறை உடலைச் சொறிந்துகொண்டு நான்குபக்கமும் நோக்கி இளித்தபின் மீண்டும் அதை நோக்கினான். சினத்துடன் பர்ர் என சீறினான். அவை ஒரேபெருஞ்சிரிப்பில் வெடித்தது. ஒருவரை ஒருவர் அறைந்தும் தழுவியும் அனைவரும் சிரித்துக் கொந்தளித்தனர். பீமன் மெல்ல காலெடுத்து வைத்து கிந்தூரத்தை அணுகி தரையில் கிடந்த அம்பு ஒன்றை கண்டு அஞ்சி உடல் நடுங்கி துள்ளி விலகினான்.

சிரிப்பலைகள் நடுவே மெல்ல மீண்டும் அணுகி நின்று கால்களாலும் கைகளாலும் தரையை பிறாண்டி பர்ர் என ஒலியெழுப்பி பற்களைக் காட்டி இளித்தான். நாலைந்து முறை பொய்யாக பாய முயன்றபின் ஒரே பாய்ச்சலாக கிந்தூரம் மேல் குதித்து அதை கட்டித்தழுவி தரையில் புரண்டு அதன் அடியில் சென்று மறு பக்கம் வந்து எழுந்து நின்று ஆறுதல் கொண்டு சிரித்தபடி அவையை நோக்கினான். தப்பிவிட்டேன் என்பதுபோல கையை அசைத்தான். அவையில் சிலர் சிரிப்பு தாளமுடியாமல் நெஞ்சைப்பற்றிக்கொண்டு குனிந்துவிட்டனர்.

அர்ஜுனன் திரௌபதியை நோக்கினான். முதல்முறையாக அவள் விழிகள் இமை எழுந்து பார்வை கொண்டிருந்தன. கண்கள் ஒளிவிட்ட நகைப்பு இதழ்களிலும் திகழ சிறிய உதடுகள் மெல்ல திறந்து இரு வெண்பற்களின் நுனி தெரிந்தது. அவளுடைய நீண்ட கை எழுந்து நெற்றிக்கூந்தலை நீவி காதருகே செருகியது. கடகங்கள் சரிந்து ஒன்று மேல் ஒன்றென விழுந்தன. கழுத்தில் ஒரு மெல்லிய சொடுக்கல் நிகழ இதழ்கள் மேலும் விரிந்து இருபக்கமும் மடிந்து புன்னகை சிரிப்பாக ஆனது. பீமன் அவள் ஒருத்தியை மகிழ்விக்கவே அனைத்தையும் செய்கிறான் என்று அவன் உணர்ந்தான்.

“மூத்தவர் இளவரசியை முன்னரே எங்கோ பார்த்திருக்கிறார்” என்றான் அர்ஜுனன். ”ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றான் தருமன். பீமன் அவ்வளவுதான், முடியாது என்ற பாவனையுடன் திரும்பி நாலைந்து அடிகள் தூக்கி வைத்து உடனே திரும்பி ஒற்றைக்கையால் அந்த வில்லை தூக்கி நிறுத்தி இடது காலால் அதன் நாணை தூக்கி இடக்கையால் பற்றி மேலே எடுத்து மேல்கொக்கி நோக்கி வீசினான். ஒற்றைக்கையால் கிந்தூரத்தை வளைத்து நாணேற்றினான்.

ஒரு சிலகணங்களுக்குப்பின்னரே அவன் என்ன செய்தான் என்பதை அவை அறிந்தது. அவனைச்சூழ்ந்து உடல்களின் அசைவுகளும் கூச்சல்களும் அலையடித்தன. பீமன் கிந்தூரத்தை தூக்கி தலைக்குமேல் வீசிப்பிடித்து சுழற்றி அதன் நாணால் தன் முதுகைச் சொறிந்துக்கொண்டான். திரௌபதி வெடித்துச்சிரித்தாள். முகவாயை சற்றே மேலேற்றி கழுத்து நீளம் கொள்ள தோள்கள் அதிர அவள் சிரிப்பதைக் கண்டபோது ஒரு கணம் அர்ஜுனன் பொறாமையின் வெம்மையை உணர்ந்தான்.

மேலே தொங்கிய கிளிகளை நோக்கி தலையை தாழ்த்தி உடலைக் குறுக்கியபின் கிந்தூரத்தை தூக்கி வீசிவிட்டு பீமன் ஓடிவந்து வைதிகர் அவையை நோக்கித் தாவி மறுபக்கம் வந்தான். நகுலனும் சகதேவனும் பாய்ந்துசென்று அவனை தழுவிக்கொண்டனர். தருமன் “மந்தா, நீ குரங்குப்பாலை சற்று மிகையாகவே அருந்திவிட்டாய் என நினைக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். பீமன் அர்ஜுனனிடம் “பார்த்தா, அதற்குள் சில சுருள்விற்கள் இருக்கின்றன. உருளும் எடைக்குண்டுகள் போடப்பட்டுள்ளன” என்றான். “அந்தப்பொறி நெகிழ்ந்துவிட்டது மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

”யாதவன் எழுந்து வரக்கூடும்” என்றான் தருமன். ”அவன் உடலில் ஓர் அசைவைக் காண்கிறேன்.” அர்ஜுனன் திரௌபதியையும் கிருஷ்ணனையும் நோக்கிக்கொண்டிருந்தான். பீமன் ”அவள் காத்திருப்பது அவனுக்காகவே” என்றான். அர்ஜுனனை திரும்பி நோக்கிய தருமன் திகைப்புடன் திரௌபதியை நோக்கினான். அர்ஜுனன் பெருமூச்சுடன் உடல் தளர சற்று பின்னகர்ந்த கணம் அவையில் யாதவக்கிருஷ்ணன் எழுந்தான். தன் சால்வையை சரித்து அருகே நின்றிருந்த சேவகனிடம் அளித்துவிட்டு அப்பால் இருந்த பலராமரிடம் மெல்லிய கையசைவால் வணக்கம் சொல்லிவிட்டு நடந்து வந்தான்.

“ஒரு மயிலிறகு பறந்து வருவது போல” என்றான் தருமன். கிழவர் திரும்பி நோக்கி “அவன் யாதவனல்லவா? அவர்கள் சுயம்வரத்தில் பங்கெடுக்க நூல் ஒப்புதல் உண்டா?” என்றார். தருமன் “மணத்தன்னேற்பு என்பதே பலவகை மன்னர்களும் பங்குகொள்ளும் மணநிகழ்வுக்காக அமைக்கப்பட்டதுதான் வைதிகரே” என்றான். “இங்கே குடி அல்ல, வீரமே கணக்கிடப்படுகிறது. இது மிகத் தொன்மையான ஒரு மணமுறை. வீரத்தின் அடிப்படையில் அரசகுலங்களிணையவேண்டுமென விழைந்தனர் மூதாதையர்.”

நகுலன் “மூத்தவர் நூல்கற்றவர் என எப்படி அறிகிறார்கள்?” என்றான். “ஒருமுறை கூட கிந்தூரத்தை வெல்வது பற்றி எண்ணாமலிருக்கிறார் அல்லவா?” என்றான் பீமன். நகுலனும் சகதேவனும் சீறும் ஒலியுடன் எழுந்த சிரிப்பை கைகளால் பொத்தி அழுத்திக்கொண்டனர். தருமன் திரும்பி “நகைப்பு வேண்டாம். நம்மை அனைவரும் பார்த்துவிட்டனர்” என்றான். அவையினர் அனைவருக்குமே அவர்கள் யாரென தெரியும் என்பது கண்களில் இருந்து தெரிந்தது.

அர்ஜுனன் வில்லை நோக்கிச் சென்ற கிருஷ்ணனை விட்டு விழிகளை விலக்கவில்லை. அவன் அணுக அணுக திரௌபதியின் உடல் பாறை களிமண் பாகாவது போல நெகிழ்வதை கண்டான். அவளுடைய வலக்கை எழுந்து நாகம் படமெடுத்தது போல வளைந்து காதில் தொங்கிய குழையை தொட்டுத் திருகி கழுத்தை வருடி கீழிறங்கி முலைக்குவையில் இருந்த பதக்கத்தைத் தொட்டு திருப்பி விளையாடத் தொடங்கியது. இடக்கையால் ஆடையின் மடிப்புகளை அழுத்திக்கொண்டு கால்களை அசைத்து ஒன்று சேர்த்துக்கொண்டாள்.

அவன் கிந்தூரத்தை அணுகியதும் அவை அமைதியடைந்தது. காற்றில் ஒரு அணிப்படாம் திரும்பும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. முள்காட்டில் காற்று செல்வது போல மூச்சொலிகள் சீறின. ஒரு கயிறு அவிழ்ந்து முரசுப்பரப்பு ஒன்றை தொட அது விம்மிய ஒலியில் அவையில் பெரும்பாலானவர்கள் திடுக்கிட்டனர். கிருஷ்ணன் துருபதனை நோக்கி தலைவணங்கி அவையையும் வணங்கியபின் கிந்தூரத்தை எதிர்கொண்டு கைகளை இடையில் வைத்து நின்றான். அவன் கருங்குழலில் சூடிய மயிற்பீலியின் விழி அண்மையில் எவரோ வந்தது போல் வியந்து வானை நோக்கியது.

ஒருகணம் கூட அவன் திரௌபதியைத் திரும்பி நோக்கவில்லை. அவள் மார்பிலிருந்த பதக்கத்தை விட்டுவிட்டு கைகளை மடிமேல் சேர்த்து பிணைத்துவைத்துக்கொண்டாள். மெல்லிய இதழ்கள் சற்றே பிரிந்திருக்க மூக்குத்துளையை விரியச்செய்து முலைகளை அசைத்து மூச்சு எழுவதை அர்ஜுனனால் காணமுடிந்தது. அவள் இடக்கால் அனிச்சையாக சற்று நீள நூபுரத்தின் மெல்லிய ஒலியை கேட்க முடிந்தது. அவளிடமிருந்து எழும் மெல்லிய வாசத்தைக்கூட உணரமுடியும் என்று தோன்றியது.

கிருஷ்ணன் குனிந்து கிந்தூரத்தை தொட்டான். அதன் இடமுனையை தன் வலக்காலால் அழுத்தியதும் பாம்பு நெளிந்து படமெடுப்பது போல அது எழுந்தது. இயல்பாக நீண்ட இடக்கையால் அதன் நடுவளைவை தொட்டு தன் முன் நிறுத்தினான். வலக்கையால் அதன் நாணைத் தொட்டு மெல்ல எடுத்து அதை கொக்கியில் மாட்டி விழிதொட முடியாத ஒரு கணத்தில் இறுக்கிவிட்டான். மணமாலை ஏற்கும் நாணத்துடன் வளைந்து நாண் பூண்ட வில் இனியதொரு முனகலுடன் மெல்ல நெளிய அதன் கரிய வளைவை நீவி நிறுத்தினான். முலைநடுவே முத்தாரத்தை அணிவிக்கும் கையழகுடன் நாணை சீரமைத்தான்.

அவன் நடந்து சென்றபோது இடைவளைத்த இணைத்தோழி என அது உடன் சென்றது. மதுமயக்கில் தலை கனத்த பரத்தை என அவன் தோளில் சாய்ந்து தளர்ந்தது. கிளிக்கூண்டின் முன் அவன் நின்று அதை தன் முன் நிறுத்தி அதன் வளைவை இடக்கையால் பற்றிக்கொண்டபோது அதன் உடல் சற்றும் அதிரவில்லை. அதன் நாண் மட்டும் யாழ்நரம்பு போல மீட்டிக் கொண்டிருந்தது. பேரவை விழிகளாக மாறி அவனைச் சூழ்ந்திருந்தது. அர்ஜுனன் கர்ணனை நோக்கினான். அவன் அங்கில்லை என்பதுபோல இருந்தான்.

கிருஷ்ணனின் நெஞ்சை அறிந்து அதற்கேற்ப இயைந்து கொண்டது கிந்தூரம். அவன் தோளில் கோதையென குழைந்து விழவிரும்பியது. அவன் காலடியில் சிற்றோடையென தழுவிச் சுழன்று செல்ல ஏங்கியது. கழுத்தை சுற்றிக்கொள்ளும் கைகளாக அவன் முகத்தை மூடிக்கொள்ளும் கருங்குழலாக அவனுடன் இருக்க விம்மியது. அது ஒரு வில்சூடலாக தெரியவில்லை. அங்கே வில்லும் அவனுமன்றி எவருமிருக்கவில்லை.

மெல்லிய சொடுக்கலாக கிந்தூரத்தில் ஓர் அசைவு நிகழ்ந்தது. அம்பு அதுவே சிறகடித்தெழுவது போல மேலே சென்று முதல் கிளியின் ஒரே ஒரு இறகை மட்டும் கொய்து கீழிறங்கியது. காற்றில் அந்த வெள்ளை இறகு புகைக்கீற்று போல மிக மெல்ல சுழன்று தவித்து திசைமாறி மீண்டும் சுழன்று கீழிறங்கிக்கொண்டிருக்கையில் அடுத்த கிளியின் ஒற்றை இறகை அம்பு கொய்து காற்றின் அலைகளில் ஏற்றி வைத்தது. படாம் ஒன்று அசைந்ததை உணர்ந்து அவ்விறகு திடுக்கிட்டு விலகியது.

நான்கு இறகுகள் ஒளிநிறைந்த வான்மேடையில் ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ள விழைபவை என சுழன்றன. ஐந்தாவது கிளி கூண்டிலிருந்து எட்டிப்பார்த்து தலையசைத்தது. விழிமூடி ஒரு கணம் நின்ற கிருஷ்ணன் கிந்தூரத்தை நிலத்தில் வைத்துவிட்டு அவையை வணங்கினான். திரும்பிப்பாராமல் அரசர் அவை நோக்கி மீண்டு சென்றான்.

அவனை தொடர்ந்த விழிகள் ஒரு கணத்தில் நிகழ்ந்ததை உணர்ந்தன. அனைத்து உடல்களும் அவற்றை இழுத்துக்கட்டியிருந்த அகச்சரடுகளில் இருந்து விடுபட்டு மூச்சொலிகளுடன் முனகல்களுடன் தளர்ந்து மீண்டன. துருபதன் முகவாயை வருடியபடி சத்யஜித்தை நோக்க அவர் குனிந்து ஏதோ சொன்னார். ஜராசந்தன் கிருஷ்ணனை ஓரவிழியால் தொடர்ந்தான். சகுனி குனிந்து துரியோதனனிடம் ஏதோ சொல்ல அவன் தலையசைத்தான்.

கிருஷ்ணன் அவைப்பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டதும் பலராமர் கடும் சினத்துடன் கைகளை அசைத்தபடி அவனிடம் பேசத்தொடங்கினார். அவனருகே இருந்த தேவாலனும் உடல் முழுக்க எழுந்த அக விரைவு தெரிய பேசினான். கிருஷ்ணன் மைந்தர்களின் பேச்சை புன்னகையுடன் பார்க்கும் தந்தையை போல அவர்களிடம் ஓரிரு சொற்கள் சொன்னான். அவன் விழிகள் வந்து அர்ஜுனனைத் தொட்டதும் அர்ஜுனன் எழுந்து தன் கைகளை தட்டினான்.

அவை திரும்பி நோக்கியது. எந்த ஒலியும் எழவில்லை. அனைவரும் அவனை அறிந்திருந்தனர். அவர்கள் எண்ணி விழைந்த கணம் அப்படி நிகழுமென எதிர்பாராதவர்கள் போல அவர்களின் முகங்கள் சொல்லற்றிருந்தன. அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடி அவை முற்றம் நோக்கிச் சென்றான். ”அவையீரே, அரசே, நான் சாமவைதிகன். என்பெயர் புஷ்பகன். முறையாக வில் தேர்ந்தவன். இந்த அவையில் சிவதனுசை குலைக்க எனக்கு ஒப்புதலளிக்கவேண்டும்.” துருபதன் கையசைக்க சூதர்களின் இசை எழுந்து அடங்கி அவனை வரவேற்றது.

சீரான காலடிகளுடன் அர்ஜுனன் மணமுற்றத்தை அடைந்து நின்றான். வீரர்கள் கிந்தூரத்தை சீர்ப்படுத்தி வைத்துக்கொண்டிருக்க அவன் திரும்பி திரௌபதியை நோக்கினான். அவள் விழிகளை அவன் விழிகள் தொட்டன. சிலகணங்களுக்குப்பின் விலகிக்கொண்டபோது அவன் நெஞ்சு ஒலிப்பதை அவன் கேட்டான். திரும்பி அவையை வணங்கிவிட்டு கிந்தூரத்தை நோக்கிச் சென்றான். கீழே மரப்பீடத்தில் வில் அவனை நோக்கி ஒரு மாபெரும் புருவம் போல வளைந்திருக்க அதன் கீழே அந்த பார்வை அவன் மேல் நிலைத்திருந்தது. அவன் அதை நோக்கியபடி சிலகணங்கள் நின்றான்.

யாதவன் வில்லை எடுத்ததை மீண்டும் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு கணமும் நீண்டு ஒரு தனிச்செயலாக மாறி செயல்களின் தொடராக அது தெரிந்தது. அந்த வில்லின் அத்தனை மந்தணப்பொறிகளையும் அமைப்பின் சூதையும் அவனால் காணமுடிந்தது. இத்தனை எளிதாக அறியும்படியா அதை அமைப்பார்கள் என அவன் ஒரு கணம் வியந்தான். அது ஒரு பொறி என்பதனாலேயே எத்தனை மகத்தானதாக இருப்பினும் எல்லைக்குட்பட்ட இயக்கம் கொண்டது. அதை புரிந்துகொண்ட கணமே தோற்றுவிட்டது. அவன் புன்னகை செய்தான்.

அதனுள் இருந்த மூன்று இரும்பு சுருள்வில்கள் எடைமிக்க பன்னிரு இரும்புக்குண்டுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்திருந்தன. வில்லைத் தூக்கியதுமே பன்னிரு இரும்புக்குண்டுகளும் கீழே வந்து வில்லின் எடைச் சமநிலையை அழித்தன. மேல் நுனியை கீழ்பகுதியின் எடை பக்கவாட்டில் தள்ளி அதை ஏந்தியவனை நிலையழியச் செய்தது. நாணைப்பற்றி இழுத்ததும் அதனுடன் இணைந்த சுருள்வில் இழுபட பன்னிரு குண்டுகளும் மேலே தூக்கப்பட்டு வில்லின் சமநிலை தலைகீழாக மேலிருக்கும் பகுதி எடைகொண்டு கீழே வந்து அதை ஏந்தியவனை தூக்கி வீசியது.

கிந்தூரத்தின் அனைத்து விசைகளும் அதை ஏந்துபவனின் தோளில் இருந்தே பெறப்பட்டன. அவன் கைகள் இழுப்பதற்கு நேர் எதிர்திசையில் சுருள்விற்கள் முறுகின. அவன் விட்டதும் அவன் நினைத்திருக்காதபடி குண்டுகளை பகிர்ந்து வில்லின் எடைச்சமநிலையை மாற்றியமைத்தன. அதன் இணைவுகளின் கணித முடிவின்மையே அதன் சூது. ஒவ்வொரு கணமும் அது மாறிக்கொண்டிருந்தது. முன்பிலாத ஒரு அமைப்பை அடைந்தது.

அர்ஜுனன் தன் கைகளை நீட்டி நோக்கியபின் கிந்தூரத்தின் கீழ்முனையை காலால் அழுத்தி அதை தூக்கி உடனே நடுப்பக்கத்தைப்பற்றி யாதவன் ஏந்தியது போல சற்றே சாய்த்து தோள்மேல் வைத்துக்கொண்டான். அதன் உருளைகள் கீழிறங்குவதற்குள் நாணை இழுத்து அதே விரைவில் மேலே கொண்டு சென்று பூட்டினான். வில்லின் உருளைகளின் மேலே எழுந்து வில் சமநிலை இழக்கப்போவதை ஒரு கணம் முன்னதாகவே அறிந்து தன் தோளால் மேலிருந்த எடையைத் தாங்கிக்கொண்டான்.

வில்லுடன் அவன் சென்று கூண்டின் கீழே நின்றபோது அவை அமைதியுடன் சூழ்ந்திருந்தது. போட்டி முடிவுற்றுவிட்டதை அனைவருமே அறிந்திருந்தனர். அர்ஜுனன் இடக்கையில் ஏந்திய வில்லின் கீழ் முனையை ஊன்றி குனிந்து தெளிந்த நீர்ப்பரப்பை நோக்கினான். அழுக்கற்ற ஆடி போல மேலே தொங்கிய கிளிக்கூண்டை காட்டியது. முதல்கிளி தலைநீட்டி சிறுவிழிகளை உருட்டி நோக்கியது. அவன் அதை நோக்கிக்கொண்டிருக்கையிலேயே அக்கிளி நீண்டு பிரிந்து ஒன்றாகியது.

அர்ஜுனன் தன் கால்கட்டைவிரலை உணர்ந்தான். அங்கே முழு உள்ளத்தையும் செலுத்தி அசைவிழக்க வைத்தான். கணுக்கால்களை கெண்டைக்கால் தசைகளை தொடைகளை இடையை முழுமையாக அவிழ்த்து விட்டு அசைவிழக்கச் செய்தான். அத்தனை தசைகளும் கட்டவிழ்ந்தன. அத்தனை நரம்புகளும் தொய்வடைந்தன. மார்பு, தோள், புயங்கள், முதுகு, கழுத்து என ஒவ்வொரு உறுப்பும் முற்றிலும் அடங்கியது. இமைகள் அடங்கின. விழிகள் அசைவற்றன. சித்தம் அசைவற்றது. ஒற்றைச் சொல்லாகியது. அச்சொல் அசைவற்றது. தனக்கு புவியில் முதன்மையான சொல் எது என அவன் அறிந்தான்.

கீழே மிக அண்மையில் தெளிவாக கிருவிகுலத்துக் கிளியின் விழி தெரிந்தது. மறுகணம் அது உடைந்து நீர்ப்பரப்பை நோக்கி வந்தது. கூண்டிலிருந்து சோமகக்கிளி வெளியே தலைநீட்டியதுமே சிதறிப் பொழியத் தொடங்கியது. சிருஞ்சயக்கிளியை அடித்தபோது அவ்வாறு ஆயிரக்கணக்கான கிளிகளை அவன் அடித்திருப்பதாகத் தோன்றியது. துர்வாசக்கிளியை அவன் அடித்ததை அறியவேயில்லை. அவையில் இருந்து ஒற்றைப்பெருமூச்சு கிளம்பியது.

கேசினிக்கிளி தலைநீட்டியதும் அம்புடன் எழுந்த அவன் கை அசைவழிந்தது. அவன் எண்ணங்கள் அக்கைக்குச் சென்று சேரவில்லை. என்ன என்ன என்ன என்று சித்தம் தவித்தது. செய் செய் செய் என ஆணையிட்டது. ஆனால் அவன் கை அப்பால் தனித்து நின்றிருந்தது. அவனைச்சூழ்ந்து உச்சநிலையின் அமைதியில் இறுகியிருந்தது அவை. அவன் நாற்புறமும் சூழ்ந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தான்.

எச்சரிக்கையுடன் புற்றிலிருந்து தலைநீட்டும் பாம்பென அவ்வெண்ணம் அவனில் எழுந்தது. வேண்டாம், திரும்பிவிடு. அதை அவனே திகைப்புடன் நோக்கி ஏன் என்றான். விலகிவிடு. ஆம், அதைத்தான் விவேகி செய்வான். விலகு. அகன்றுசெல். அதுவே உனக்களிக்கப்பட்ட அறைகூவல். உன் ஆணவத்தை வெல். உன் தனிமையை வெல். இக்கணம் இனி உனக்கு அளிக்கப்படாது. விலகு. வில் தாழ்த்து. ஒருகணம். ஒருகணத்திலேயே அனைத்தும் முடிவாகின்றன. மூடா, இப்புடவியே ஒரு கணத்தில் உருவானது. விலகு. இக்கணம். இக்கணம்….

அவன் உடலெங்கும் பற்றி எழுந்து கண்களைக் கனலச்செய்தது வெம்மை. விரல்நுனிகள் நடுங்கின. கீழே கேசினி நீண்டு நெளிந்து சுருங்கி வளைந்து நடமிட்டது. அர்ஜுனன் கிருஷ்ணனை நோக்கி விழிதூக்கினான். இமைப்புக்கணத்தின் தொடக்கம் முதல் பாதிவரை சென்று சினம்கொண்டு விலகிக்கொண்டான். பற்களைக் கிட்டித்தபடி கண்களை மூடி பின் திறந்து திரும்பி திரௌபதியை நோக்கினான். துடித்து விலகிக் கீழே நோக்கினான். பளிங்கில் வரைந்த ஓவியம் போன்றிருந்தது கேசினி. அவன் கை சிமிட்டியது. கேசினி சிதறி இறகுமழையாக விழுந்தது.

ஒருசில கணங்கள் அவை அசைவற்று ஒலியற்று இருந்தது. பின்னர் வெடித்தெழுந்து ஆர்ப்பரித்தது. வில்லை தாழ்த்தி நிமிர்ந்தபோது தன் உடலெங்கும் சினம் அதிர்வதைத்தான் அர்ஜுனன் உணர்ந்தான். பற்கள் இறுக கடிபட்டிருப்பதை தாடையுடன் கழுத்து நரம்புகள் இழுபட்டிருப்பதை உணர்ந்து வாயைத்திறந்து எளிதாக்கினான். அப்போதுதான் கைகள் நகங்களுடன் இறுகப்பற்றப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

உடலெங்கும் வியர்வை பூத்து குளிர் உணர்வாக தெரிந்தது. மூச்சை இழுத்து விட்டான். ஆம் ஆம் ஆம் ஆம் என அவன் சித்தம் இருந்தது. ஆம் என நீளொலி எழுப்பி மீட்டி முடிக்கப்பட்ட யாழ் என அவிந்தது. அவன் விழிதூக்கி யாதவனை நோக்கினான். அங்கே புன்னகை இருந்தது. அறிந்த புன்னகை, கடந்த புன்னகை, இனிய எள்ளல் கொண்ட முதுதந்தையின் புன்னகை.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்