பன்னிரு படைக்களம்

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 89

பகுதி பன்னிரண்டு : பங்குனி

இருளோரும் ஒளியரும் இழுத்த நச்சுவடத்தின் நடுவே சுழன்ற திகிரி நுரைத்து நுரைத்துத் தயங்க எழுந்தது முதல் அமுதத்துளி. அதன் நேர்கீழே விரிந்திருந்தது பன்னிரு படைக்களம். நிறைந்து கவிந்தது கலம். இமையாவிழிகள் கனிந்து திறந்திருந்தது அன்னைப்பெருமீன். அதிலெழுந்தனர் ஐந்து அன்னையர். துர்க்கையும் லட்சுமியும் சரஸ்வதியும் சாவித்ரியும் ராதையும் இதழ்களில் மென்நகை ஒளிவிட அஞ்சலும் அருளலும் காட்டி நின்றனர்.

ஒழியா ஊற்றின் விழிதிறந்து வந்து நிறைத்தபடியே இருந்தனர். கங்கை, துளசி, மானசை, தேவசேனை, மங்களசண்டிகை, பூமி, ஸ்வாகை, தட்சிணை, தீக்‌ஷை, ஸ்வாதை, ஸ்வஸ்தி, புஷ்டி, துஷ்டி, ஸம்பத்தி, திருதி, ஸதி, யோதேவி, பிரதிஷ்டை, ஸித்தை, கீர்த்தி, கிரியை, மித்யை, சாந்தி, லஜ்ஜை, புத்தி,  மேதா, திருதி, மூர்த்தி, ஸ்ரீ, நித்ரை, ராத்ரி, சந்த்யை, திவா, ஜடரை, ஆகுலை, பிரபை, தாஹிகை, ஜரை, ருத்ரி, ப்ரீதி, சிரத்தா,  பக்தி என ஒன்றிலிருந்து நூறென ஆயிரமென பல்லாயிரமென கோடியென முடிவிலியென பெருகினர்.

பன்னிரு படைக்களத்தில் களம்தோறும் நின்றிருந்தனர் தெய்வங்கள். மூதேவர். முப்பத்துமுக்கோடியர். முனிவர். மூதாதையர். ஒன்றென நின்றனர். இரண்டாகிப் பிரிந்து இணைந்தாடினர். இருள்கள் ஒளிகள். சொற்கள் பொருள்கள். இன்மைகள் இருப்புகள். மையங்கள் முடிவிலிகள். இரண்டிலியென்றானாள். இருளொளி. இங்கங்கு. இவளவள். இன்மையிருப்பு.

பன்னிரு ஆதித்யர்கள் எழுந்த பெருங்களம். ஆடும் காளையும் இணையும் நண்டும் சிம்மமும் கன்னியும் துலாவும் தேளும் வில்லும் மீனும் கலமும் விழிமீனும் நிரந்த வெளி. அத்தனை அசுரர்களும் அரக்கர்களும் படைக்கலமேந்தி களம்நின்றனர். தெய்வங்கள் களம் வந்தன.நடுவே நின்றிருந்தாள். தன்னைத்தான் சூழ்ந்திருந்தாள். தன்னை வென்றாள். தன்னைக் கடந்தாள். தான் மட்டுமே இருந்தாள்.

“ஐந்தென எழுந்தவள் வாழ்க! அன்னை எழுந்த களம் வாழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” இந்திரப்பிரஸ்தத்தின் கொற்றவைக் கோயில் முன் வெறியாட்டெழுந்து கூவினான் பூசகன். “குன்றா ஒளியே. குறையா கதிரே. இருண்டவளே. கதிராயிரம் மூழ்கும் கசடே. அன்னையே. அணைக! அணைக! இங்கணைக தேவி!”

“ஆக்கும் அல்குல். ஊட்டும் இணைமுலைகள். எரித்தழிக்கும் விழிகள். இணைக்கும் ஈரடிகள். இருத்தும் இன்மையின் பீடம்.  பிறப்பு, செல்வம், தந்தை, நட்பு, மைந்தன், எதிரி, துணைவி, இறப்பு, நல்லூழ், தீயூழ், வருவினை, செல்வினை என பன்னிரு கொடைகளென உடன் சூழ்ந்துள்ளவள். நீ இங்கமைக! இப்பன்னிரு படைக்களத்தில் அமைக!”

முப்புரி வேலேந்தி வெறிநடனமிட்டான் பூசகன். அவன் தொண்டையிலிருந்து எழுந்தது ஆயிரம் தலைமுறைகண்ட மூதாதையரின் குரல் “குருதி எழுக! குருதியின்றமையாது அறமென்றறிக மானுடரே! வெங்குருதி எழுக! நீரென்றும் நெருப்பென்றுமான அமுதமே குருதி! அன்னையே குருதிசூடுக! செங்குருதி சூடுக! இதோ எழுகிறது பலிபீடம். இதோ தன்னை தான் வைத்து காத்திருக்கிறது பலிவிலங்கு. அவிகொள்க! ஐந்து குழல்களில் நிணம் நீவி முடித்து அமர்க! அன்னையே, அடியவர் தலைமேல் கால்வைத்து அமைக! மண் வென்றமைக! அன்னையே, விண்சூடி அமர்க!”

பலிபீடத்தின் மேல் கால்கள் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது எருமை. அங்கிருந்த புகையின், எழுந்துசூழ்ந்த முரசொலியின், பந்தச்செவ்வொளியின் அலையில் அது விழி அயர்ந்து சித்தமென்றே ஆகி அமைந்திருந்தது. முகில்மடிப்புகளுக்கு அப்பால் எழும் கோடையின் முதல் இடியோசை என சிம்மக்குரல் இருளில் எழுந்தது.

[பன்னிரு படைக்களம் நிறைவு]

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 88

[ 21 ]

மரத்தரையில் காலடிகள் உரசி ஒலிக்க மாயை பன்னிரு பகடைக்களத்திற்குள் புகுந்தாள். அரசியை நோக்கி கைவிரித்தபடி ஓடிவந்து அவளருகே நின்ற அசலையை பிடித்துத்தள்ளிவிட்டு அள்ளி அணைத்துக்கொண்டாள். அவள் ஆடையை திருத்திய பின்பு நெய்பட்ட நெருப்பெனச்  சீறி எழுந்து கூந்தலைச் சுழற்றிமுடிந்து துரியோதனனை நோக்கி “இங்கே அரசன் என அமர்ந்த சிறியோன் எவன்?  நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன்? அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள்! உங்கள் குலங்களின் வேரில் நச்சுபெய்துவிட்டீர்கள்” என்றாள்.

துரியோதனன் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது பெருவஞ்சம் நீர் என நிறைந்த கிருஷ்ணையின் விழிகளை சந்தித்தான். அஞ்சி அதிர்ந்து தலைதிருப்பினான். அவன் கண்களை நோக்கிய கர்ணனும் பதற்றமாக கைகளை கோத்தான். அவையமர்ந்த கௌரவர் துரியோதனனின் நிலையழிவைக் கண்டு ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். அவை நிறைத்திருந்த அஸ்தினபுரியின் குடிகள் மெல்ல மண்ணில் வந்து விழுந்தனர். அதுவரை இருந்த கனவுநிலையின் அத்தனை கீழ்மைகளையும் உளநடுக்குடன் உணர்ந்தனர். தங்கள் உள்ளத்தை எண்ணி நாணி பிறிதெவரையும் நோக்காது விழிசரித்தனர்.

சினந்த நாகங்கள் விழியொளிரச் சுருண்டு அமைந்தன. தெய்வங்கள் படைக்கலங்களுடன் வண்ணங்களில் படிந்து மறைந்தன. விழிகளில் இளிப்புடன் அசுரர் கைகள் பெருக நிறைந்தனர். படைக்களத்தைச் சூழ்ந்த அவை மெல்ல இயல்படைந்தது. எங்கும் நீள்மூச்சுக்கள் எழுந்தன. பலர் மாயையை நோக்காது விழிதிருப்பிக்கொண்டனர். சிலர் கண்களை ஆடைகளால் மூடிக்கொண்டனர். சிலர் விழிநீர் வார நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்தனர்.

பெருங்குரலில் மாயை சொன்னாள் “என்னவென்று எண்ணினீர்கள், இழிதிரளே? அன்னையின் கனிவே அவள் பணிவு. அன்பினால் ஆற்றலிழப்பவள் அவள். நீங்கள் வென்றுதருக்கியது உங்களுக்கு ஊட்டப்பட்ட முலைப்பாலை. கொன்று உண்டது கொல்லையில் நின்றிருந்த காமதேனுவை… நன்று, இனி நிகழ்பவை யாவும் நீங்கள் இயற்றியதே. அவ்வாறே ஆகுக!”

துரியோதனன் மீண்டும் கையெடுத்து ஏதோ சொல்ல முயல அவன் இதழ்கள் மட்டும் அசைந்தன. கிருஷ்ணை திரௌபதியை தோள்பற்றிச் சரிந்து கண்ணீருடன் அவள் மடியில் தலைசாய்த்தாள். அசலை அரசியின் கைகளைப்பிடித்து தூக்கி உள்ளே கொண்டுசெல்ல முயன்றாள். திரௌபதி இரும்புச்சிலை என எடைகொண்டிருந்தாள். கௌரவர்களின் பிற அரசியர் அவளைத் தூக்கி எடுத்து அழைத்துச்சென்றனர். அவர்கள் நடுவே பலவண்ண ஆடைகளால் உடல் மூடி திரௌபதி தலைநிமிர்ந்து நடந்துசென்றாள். அவள் நீள்குழல் அவிழ்ந்து அலையலையென இறங்கி நெளிந்தது.

அவையில் மங்கலஇசைக்கென நின்ற சூதன் ஒருவன் வெறியாட்டெழுந்தவன்போல “நகருலா செல்லும் கொற்றவை! ஆலயம் அமைந்த கரியதிருமுகம். அனல்நாவென செம்பஞ்சுப் பாதங்கள். அழல் உண்ட கரியென நீள்குழல் அலை.  அன்னையே, இதோ அடிபணிந்து நின்றிருக்கின்றன ஆயிரம் தலைகள்” என்று கூவினான். தன் நெஞ்சையே முழவாக்கி அறைந்து “தலைமேல் நடந்து செல்கின்றாய்! தாயே, ஆணவங்கள் மேல் நடக்கின்றாய்! ஆறாவஞ்சங்கள் மேல் நடக்கின்றாய்! காளீ, கருங்காளீ, கூளீ, கூத்திடும் தேவீ, எங்கள் விழைவுகள் மேல் நடக்கின்றாய்! வினைப்பெருக்குமேல் நடக்கின்றாய்!”  என்றான். உடல் சிலிர்க்க அங்கிருந்தோர் கைகூப்பினர். விகர்ணன் கண்ணீர் உதிர “அன்னையே!” என்றான்.

பன்னிரு பகடைக்களம் திடுக்கிட்டு அதிர பீமன் தன் பெருங்கைகளை ஓங்கியறைந்தபடி முன்வந்தான். “வீணர்களே, வெற்றுசோல்லில் ஆடித்திளைக்கும் கீழ்மைக்களமே!” என்று கூவினான் “என் மூதாதையர் அமர்ந்த அரியணை இது என்று இக்கணம் வரை பணிந்தேன். அரசென்றும் நெறியென்றும் குலமென்றும் எண்ணித்தயங்கி வீண்தசைக்குவை என இங்கு நின்றிருந்தேன்.  இனியும் என்னால் இயலாது” என்று ஓசையிட்டபடி அவைநடுவே வந்தான்.

“நான் எவருக்கும் குடியல்ல. எந்தக் குலத்திற்கும் மைந்தனல்ல. எவருக்கும் குருதிமுறையும் அல்ல. நான் காட்டாளன். பிடியன்னை ஆளும் பெருங்காட்டிலிருந்து என் நெறிகளை கற்றவன்… ஆம், இங்குள்ள ஒவ்வொருவரைவிடவும் அறமும் அளியும் கொண்டவன் நான்…”

“இது தொல்புகழ் அஸ்தினபுரி. யயாதியின் ஹஸ்தியின் குருவின் நகரம்…” என அவன் குரலெழுப்பினான். “எங்கே உங்கள் குலம்? தேவர்களுக்கு அவியளிக்கிறீர்கள். மூடர்களே, மூதாதையருக்கு அன்னமும் நீரும் அளிக்கிறீர்கள். உங்களில் எளியோருக்கு அளிக்க உங்களிடம் ஒன்றுமில்லையா? உங்கள் முன் விழிநீருடன் நின்றிருப்பவர்களுக்குச் சொல்ல அறம் ஒன்றும் இல்லையா? உங்கள் தெய்வங்களை கல்லில் இருந்து எழுப்பும் கனல் எங்கே?”

கைசுருட்டி தூக்கி ஓங்கி துப்பினான். “இதோ, காறி உமிழ்கிறேன். இங்கு அமர்ந்த அரசனை, இந்த அவையை, இங்கு சூழ்ந்த மூத்தோரை, இயலாது அமர்ந்திருந்த சான்றோரை,  இக்காற்றில் நிறைந்த மூதாதையரை, இவ்வானில் எழுந்த தெய்வங்களை என் இடக்காலால் உதைத்துத் தள்ளுகிறேன். இவர்கள் பேணும் அவ்வேதத்தின் முதல் எதிரி நான்!”

“இதோ, பீஷ்மபிதாமகர் முகத்தில், துரோணரின் கிருபரின் விதுரரின் முகத்தில், வழியட்டும் என் மிச்சில்!”  ஓங்கி நாற்புறமும் உமிழ்ந்தான். காலால் நிலத்தை ஓங்கி மிதித்தான். அவையிலிருந்து ஊமைமுழக்கமென ஓர் ஒலி எழுந்தது. “ஆம், இதோ நின்றிருக்கிறேன். ஆண்மையிருந்தால் ஆணையிட்டு என் தலைகொய்யுங்கள். உங்கள் கீழ்மைமண்டிய அரசவையில் சொல்லறியா காட்டாளனாக குருதிபெருக்கி மடிந்துவிழுகிறேன். அதுவே என் மீட்பு” என்றான் பீமன்.

துரியோதனனை நோக்கி திரும்பி “அரியணை அமர்ந்த சிறுமதியனே, உன் அவைக்கு வந்த ஒற்றை ஒருபெண்ணின் மதிப்பைக் காக்க உன்னால் முடியாதென்றால் உன் கோலுக்கு என்ன பொருள்? அதற்கும் இடுகாடு காப்பவனின் தடிக்கும் என்ன வேறுபாடு?” என்றான். “இவ்வவையில் இழிவுகொண்டு நின்றவள் உன் குடியின் ஒவ்வொரு பெண்ணும்தான். அவள் சிறுமைசூடி நின்றது உன் குடியின் ஒவ்வொரு ஆணும்தான். இழிந்தாய். மண்கிழித்து இருள் கடந்து சென்று அழிந்தாய். இதற்குமேல் என மானுடன் அடைவதற்கொன்றுமில்லை கீழ்மகனே!”

“அறனே தெய்வமென்கின்றன உங்கள் வேதங்கள் என்றால் இன்று இத்தருணத்தில் அவை பொருளழிந்தன” என்றான். “இது தெய்வத்தருணம். பெருங்கதவமொன்றின் தாழ்குடுமி உரசி அனல்பறக்கக் கண்டோம். திறந்தது புதுயுகம்!”

இருகைகளும் தசைதிமிறி அசைய விரித்து ஆட்டி வெறிகொண்ட முகத்தில் நரம்புகள் புடைத்து நெளிய அவன் முழங்கினான் “இதோ அறைகூவுகிறேன்! இனி நீங்கள் சொல்லும் எச்சொல்லின்பொருட்டும் நான் கட்டுப்படப்போவதில்லை. உங்கள் எந்த நூலும் எவ்வறமும் எனக்கொரு பொருட்டல்ல. எங்கும் காட்டாளனாக குருதிசூடி நின்றிருக்கவே முனைவேன். ஊன்கிழித்துண்ணும் விலங்கென ஆனாலும் உங்கள் ஒவ்வொருவரை விடவும் மேலானவன் நான்.”

அவை நோக்கி திரும்பி பீமன் சொன்னான் “அவை கூடியமர்ந்து நீங்கள் கொண்ட கீழ்மைக்காக எரிக இந்நகரம்! உங்கள் உட்கரந்த இருளுக்காக இதன் குலக்கொழுந்துகள் குருதி பெருகி மண்தழுவுக! உங்களைப் பெற்றமைக்காக இதன் குலமகள்களும் அன்னையரும் மங்கலமிழந்து சுருள்க! இழிசினரே, இப்பெரும்பழியை நூறாண்டுகாலம் விழிவெந்நீர் கொண்டு அழிப்பீர்கள் நீங்கள்!” தெய்வக்குரல் என அவன் ஓசை அவைசூழ்ந்தது. “அறிக, மானுடனின் பிழைகளை பொறுக்கின்றன காட்டுதெய்வங்கள். அவன் சிறுமையை அவை ஏற்பதேயில்லை.”

நெஞ்சு விம்ம அவன் குரல்தளர்ந்தான். “ஆம், நெட்டைமரங்களென நின்றோம் நானும் என் உடன்குருதியினரும். அதன்பொருட்டு நாங்களும் சிறுமைகொள்க. பெண்ணுக்குப் பிழைஇழைத்தோர் பிள்ளைத்துயர் கொண்டழியவேண்டும் என்பதே முறை. விண்ணமர்ந்த தெய்வங்களே, இதோ எளிய காட்டாளனின் ஆணை! எங்கள் தலைமேல் பொழியட்டும் இத்தருணத்தின் பழி! கண்ணீர் அனலென எரிய எஞ்சும் நாளெல்லாம் நீறிப்புகைந்து நாங்கள் இதை ஈடுகட்டுகிறோம். எங்கள் குலம் இதன்பொருட்டு விழிநீர்பெய்து வீணென்றாகி அழிக!” நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்தான் பீமன். அவ்வோசையில் அவைச்சுவர்கள் அதிர்ந்தன. “ஆணை! இது ஆணை! அழிக! அழிக! அழிக!”

நடுங்கிய குரலில் “மூத்தவரே…” என்று நகுலன் அழைத்தான். அக்குரல் கேட்டு வெறியுடன் தருமனை நோக்கி திரும்பினான் பீமன். “எங்கே இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் என்றாகி நின்ற அப்பேதை? சொல்லாய்ந்து பொருளாய்ந்து அவன் கற்ற நெறிநூல்கள் அளித்தது இதுதானா? இருளில் விளக்கும், போரில் வாளும், தனிமையில் காவலும் என்றாகவில்லை என்றால் கற்றவற்றுக்கு என்ன பொருள்? அது உணவென உட்புகுந்து வெளியேறாது தங்கிய மலம் அன்றி வேறென்ன?”

அர்ஜுனன் “மூத்தவரே, நாம் அவருக்கு முற்றிலும் கட்டுப்பட்ட இளையோர். நம் வாழ்க்கைப்பொருள் அது” என்றான். “மூடா! மண்ணிலெழுந்த எந்தச் சொல் விண்ணை தளையிடும்? இங்கு நிகழும் வாழ்க்கையின் நெறிகளனைத்தும் விண்ணில் உறைகின்றன என்றறியாதவனா நீ? குலம், வஞ்சம்,  விழைவு, தெய்வம் என எதன்பொருட்டும் மாறுவதில்லை இவ்வனைத்தின் மையமென நின்றிருக்கும் பெருநெறி என்று உணராததா உன் மெய்மை? வாழ்வையும் விழைவையும் சொல்லிச்சொல்லி வேதம் சென்றடைந்த உச்சம் அது என்றறியாமலா நூல்கற்றாய்?”

நரம்புகள் புடைத்து அதிர கொடிபின்னிய அடிமரம் போன்ற உடல் நின்று துடிக்க பீமன் கூவினான் “எப்படி என் குலமகளை சூதில் வைத்தாடினான்? இழிமகன். கல்லாக் களிமகனும் இழைக்கத் துணியாத கீழ்மைசெய்த வீணன்!” அவன் பற்கள் அரவையாழியில் சிக்கிய கூழாங்கற்கள் என உரசி ஓசையிட்டன. “சூதர்மனைகளில் தொண்டு மகளிருண்டு. சூதில் பணயமென்று அவர்களை வைப்பதில்லை . எப்படி குலமகளை வைத்தாடினான் முழுமூடன்?”

அவனில் இருந்து தெய்வங்கள் என சொற்களெழுந்தன. “இங்குள அனைத்தும் ஒன்றே என்றறியாது எதைக் கற்றான்? அனைத்திலும் கரந்துள்ள ஒன்றே தான் என்று அறியாது எதைத் தெளிந்தான்? எனவே மண்ணில் எவ்வுயிரும் எதற்கும் அடிமையல்ல என்று உணராது எதைச் சென்றடைந்தான்? ஒவ்வொன்றின் நெறியையும், மீளும் வழியையும் வகுத்தளித்து நின்றாடுவதை நோக்கி நீயே நான் என்று சொல்லத்தெரியாதவன் அறிந்ததுதான் என்ன?”

தருணங்களைத் தொட்டு தான் கனிந்து மொழியென்றாகிச் சொட்டும் முடிவிலியை அவன் சொற்களில் கேட்டனர் அவையோர். “மானுடர் எவருக்கும் மானுடர் உரிமையல்ல என்றறியாதவன் தன்னுள் நிறைந்துள்ள  ஒன்றின் கட்டின்மையை எப்போதேனும் உணர்ந்திருப்பானா? விடுதலை விடுதலை என ஏங்கும் அதன் குரலை ஒருகணமேனும் கேட்டிருப்பானா?”

பீமன் தன் உடலில் இருந்து எழுந்து வளர்ந்தபடியே செல்வதுபோல் தெரிந்தது. அவன் உடலில் இருந்து நூறுநூறு கைகள் எழுந்து விரிந்தன. அவன் மேல் தழலென ஒளி சிவந்து எழுந்தது. “பெண்ணை உரிமைகொள்ள ஆணுக்கென்ன தகுதி? அறிவிலியே, அவள் கருவில் உறைகின்றது எதிர்காலம். எவரைப் பணயம் வைத்தான் இவன்? அவள் கருவில் பிருதுவும் பரதனும் யயாதியும் ராகவராமனும் மீண்டும் எழவிருக்கிறார்கள் என்றால் அவர்களும் கருவிலேயே அடிமைகள்தானா? அவர்களை இந்தப் பகடைக்களத்தில் வைத்தாட இவனுக்கு உரிமையளித்தது எந்த தெய்வம்? பிரம்மனிடம் படைப்பாடும் பெருந்தெய்வமா இவன்? பேதை! பெரும்பேதை!”  கைகளை ஓங்கி அறைந்தான். “அட, காட்டுப்புலி அறியும் இதை. கன்னிவிலங்கையும் அன்னைவிலங்கையும் அது அணுகாது அகலும். எந்த அறிவின்மை மேலெழுந்து தருக்கி நின்றிருக்கிறான் இவன்?”

கொந்தளிப்புடன் கைசுருட்டி அவன் கூவினான் “அவன் ஆடியது எதை என்று நான் நன்கறிவேன். தன் ஆணவத்தை வைத்தாடினான். தன் ஆழத்து நஞ்சைத் திரட்டி அவைமுன் வைத்து ஆடினான்.” மூச்சிரைக்க பீமன் தருமனை நோக்கி சென்றான். “உள்ளம் கரந்த நஞ்சை வெல்லவில்லை சித்தம் சுரந்த அமுது என்றால் இவன் எவ்வகையில் அறமறிந்தவன்? எந்தக் கையால் என் குலமகளை அவைமுன் வைத்தான்? அந்தக் கையை வந்து பற்றவில்லையா இவன் அறிந்த நூலோரும் நெறியோரும் முனிவரும் தவத்தோரும்?”

அனைத்துக் கட்டுகளையும் அறுத்து மதவேழமென உடல் ஆட தருமனை நோக்கி கைநீட்டியபடி பீமன் சென்றான். “அவியிட்டு அனல்புரக்கும் கை தூயதென்றால் அதே நெறிப்படி இந்தக்கை  இழிந்ததிலும் இழிந்தது. இதை இன்றே எரித்தழிப்பதே முறை. இளையோனே, அனல்கொண்டு வா! இது என் ஆணை!”

தருமன் அச்சொற்கள் எதையும் அறியாதவர்போல நின்றார். அறியாது நகுலனும் சகதேவனும் வந்து அவன் இருபக்கமும் நிற்க அர்ஜுனனின் கை நீண்டு பீமனை தடுத்தது. “மூத்தவரே…” என அவன் கண்ணீருடன் அழைத்தான். “வேண்டாம்! சிறுமைக்குமுன் என்றும் எழுந்து பேருருக்கொள்பவராகவே உங்களை அறிந்துள்ளேன்.   என் நெஞ்சில் நிகரிலா மாவீரனாக அமர்ந்த தெய்வம் நீங்கள். நீங்களும் பீடம் விட்டிறங்கிவிடாதீர்கள்! தந்தையே, உங்கள் காலடியில் சிறுவனாக நின்று கோருகிறேன். அருளுங்கள்!”

பீமனின் உடற்தசைகள் தளர்ந்தன. உறுமியபடி அவன் திரும்பிக்கொண்டான். “உங்கள் பெருமையால் அனைத்தையும் அளவிடுகிறீர்கள், மூத்தவரே. நானோ என் சிறுமையால் இவற்றை புரிந்துகொள்கிறேன்” என்றான் அர்ஜுனன். “இங்கு அவைநின்று இழிவுகொண்டவள் நம் குலக்கொடி மட்டுமல்ல. முலைசூடி கருவறைசுமந்து வந்து நின்றிருக்கும் பெண்ணெனும் தெய்வமும்தான்… சிறுமைசெய்து சிறுமைசூடியவர்கள் அவனோ இந்த அவையோ மட்டுமல்ல. நானும்தான். மூத்தவரே, எத்தனை மஞ்சங்களில் இழிமகன் என தருக்கி நின்றிருப்பேன்! எத்தனை பெண்டிரின் விழிநீரைக் கடந்து வந்திருப்பேன்! எத்தனை சொற்கள்! எத்தனை இழிபாவனைகள்! ஆணென்று உணர்வதே ஓர் இழிவு, மூத்தவரே. அமுதமுலைசூடும் பெற்றி இல்லாத கீழ்பிறப்பின் வஞ்சம் அது.”

அர்ஜுனன் ஒருகண் கலங்கி வழிய தலையை அசைத்தான். “இச்சிறுமை அனைத்தையும் சூடி நின்றிருக்கும் பழி படைத்தவன் நான். இன்று சிறுத்தது காண்டீபம். இழிந்தன என் தோள்கள். இனி நூறு களங்களில் நான் வெல்லலாம். ஆயிரம் நாடுகளில் என் வேள்விப்புரவி கடந்துசெல்லலாம். ஆயினும் நான் கோழையே. அறம் காத்து நின்றிருக்கும்  ஆண்மை அற்ற பேடியே. ஆம், இச்சொல் நிற்கட்டும் என் தலைமுறைகளில். வென்று வென்று இனி நான் செல்வதெல்லாம் வெல்லமுடியாத இத்தோல்வியையே என சூதர் பாடட்டும்!”

“ஆம்” என்றான் பீமன். தலையசைத்து “இன்று ஆணென நின்ற அனைவரும் பழிசூடியுள்ளோம்” என்றான். அர்ஜுனன் பெண்டிர் நின்றிருந்த உப்பரிகைகளை நிமிர்ந்து நோக்கினான். “இன்றறிந்தேன், புதுவேதம் வகுக்கவந்த யாதவன் யார் என்று. அவன் சொல்லில் எழும் வேதமுடிவின் பொருள் என்ன என்று. இனி நான் மண்ணுக்கென எழும் ஷத்ரியன் அல்ல. அவன் சொல்காக்க வில்லெடுக்கும் எளிய வீரன் மட்டுமே. எய்தவும் ஆகவும் அமையவும் இனி ஏதுமில்லை எனக்கு” என்றான்.

தன் கையைத் தூக்கி அர்ஜுனன் உரத்த குரலில் சொன்னான் “அன்னையின் மைந்தர் என நாம் ஆற்றுவதொன்றுள்ளது, உடன்பிறந்தோரே. இனியொரு முறை இப்புவியில் இது நிகழலாகாது. நூறாயிரம் முறை குருதியால் ஆணையிடப்படட்டும் இச்சொல்! நூறுநூறாயிரம் தலைகள் உருள நிலைநிறுத்தப்படட்டும் இத்தருணம்!” என்றான். “இத்தருணத்தை அறிக அஸ்தினபுரியின் துறைமுகப்பில் கொற்றவை என நின்றிருக்கும் அன்னை அம்பை. மூண்டெழுக முதற்கனல்! ஆற்றாது அழுத ஒருதுளி கண்ணீர் ஒருநூறுமுறை உலகழிக்க வல்லமை கொள்ளட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!”

தன் கையைத் தூக்கியபடி அவன் அவைமுன் வந்து நின்றான். “அறிக! அவையும் ஆன்றோரும் மூதாதையரும் மூன்றுதெய்வங்களும் சான்றாகுக! எவனில் இருந்து இச்சிறுமையின் முதல்விதை முளைத்ததோ அவனை, இச்சூதன்மகன் கர்ணனை, நெஞ்சுபிளந்து செருகளத்தில் கொல்வேன். அறம் மறந்து இந்த அவையிலமர்ந்த மூத்தோர் ஒவ்வொருவரையும் குருதிக்களத்தில் சாய்ப்பேன். பீஷ்மரை, துரோணரை கொன்று நின்று விழிநீருடன் என் வில்தூக்கி கடன்முடிப்பேன்… ஆணை! ஆணை! ஆணை!”

“ஆம்!” என்று தன் தோளைத் தட்டியபடி பீமன் கூவினான். “இதோ என் வஞ்சினம்! பெண்பழிகொண்ட இச்சிறுமகனை, அஸ்தினபுரியின் அரசனென அமர்ந்த துரியோதனனை கதையால் அடித்து சிதைப்பேன். அவன் திமிர்கொண்ட நெஞ்சைப் பிளந்து குருதியள்ளி என் தோளிலும் முகத்திலும் அணிவேன். என் குலமகள் ஆடைதொட்ட அவன் தம்பியை, துச்சாதனன் என்னும் இழிபிறவியை, நெஞ்சுபிளந்து அங்கே நின்று துடிக்கும் செங்குலையை என் காலால் மிதிப்பேன். அவன் குருதி அள்ளிக்குடித்து என் நெஞ்சக்கனல் அவிப்பேன்.”

கடுங்குளிரில் நின்றிருக்கும்  காளை போல அவ்வப்போது உடல் சிலிர்த்து விழியுருட்டி அசைவற்றிருந்தது பன்னிரு பகடைக்களம். அதன் மூச்சு சீறியது. “கௌரவர் அனைவரையும் களத்தில் கொல்வேன். அவர் மைந்தர் அனைவரையும் கொன்றழிப்பேன். என்னை ஆளும் காட்டுத்தெய்வங்கள் என் தோளில் எழுக! அறமென்றும் உறவென்றும் அளியென்றும் ஒருகணமும் அவை தயக்கம் கொள்ளாதிருக்கட்டும்! எரிந்தழிந்து தளிர்க்கும் இக்காட்டின்மேல் இளமழை என வந்தமையும்  பேரறத்தின் பொருட்டு அவை புடைத்தெழட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!”

உடல்நடுங்கி குறுகி நின்றிருந்த தருமன் கால்தளர்ந்து விழப்போக நகுலனும் சகதேவனும் அவரை பற்றிக்கொண்டனர். துரியோதனன் உயிரற்றவன் போல அரியணையில் அமர்ந்திருந்தான். கிருபர் எழுந்து ஏதோ சொல்லப்போனபோது அணியறைவாயிலில்  புலிக்குரல் என ஓசை எழுந்தது. அவிழ்த்த கூந்தல் உடலெங்கும் விழுந்திருக்க விழிநீர் நிறைந்த கண்களுடன் மாயை தோன்றினாள். “அவையோர் அறிக! இது பாஞ்சாலமண்ணை ஆளும் ஐங்குழல்கொற்றவையின் வஞ்சினம்! ஐந்து தேவியரின் அழியாச்சொல் இது.”

“இன்று அவிழ்ந்தது அன்னையின் ஐங்குழல். இனி அது அவையமர்ந்த அரசன் துரியோதனனின் ஆக்கைக்குருதியும் அவன் இளையோன் துச்சாதனனின் நெஞ்சத்து நிணமும் கலந்து பூசப்பட்டபின்னரே அது சுருள்முடியப்படும். பாஞ்சாலத்து ஐந்தன்னையர் ஆலயத்து மூதன்னையர் வந்து குருதிதொட்டு எடுத்துக்கொடுக்க பின்னி அமைக்கப்படும். கௌரவ நூற்றுவரும் மண்மறைந்தபின்னரே அதில் மலர்சூட்டப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!”

அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். அச்சொற்களை அவளே அறியவில்லை என்று தோன்றியது. சொல்லி முடித்ததும் விழப்போனவள்போல கதவை பற்றிக்கொண்டாள். உள்ளிருந்து அசலையும் லட்சுமணையும் வந்து அவளை பிடித்துக்கொண்டனர். மெல்ல அவை புயல்காற்று நின்றபின் குறுங்காடு போல நிலைமீண்டது.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 87

[ 20 ]

அனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருளாகிச் செறிந்ததுபோல. இரைகாத்து வயிறுபடிய அமர்ந்திருக்கும் ஓநாய்களைப்போல விழிமின்ன வாய்திறந்து மூச்சு எழுந்தமைய  அனைவரும் காத்திருந்தனர். சுனைமையச் சுழி போல அவர்களுக்கு நடுவே காத்திருந்தது பன்னிரு பகடைக்களம் எழுந்த  மேடை.

வாயிலைக் கடந்து துச்சாதனன் வந்ததை அவை ஒற்றைக்குரலில் எதிர்கொண்டது. “ஆ!” என எழுந்த ஒலியைக் கேட்டதும் அறியாமல் விழி தாழ்த்திக்கொண்டான். அவள் அவைக்குள் வருவதை ஓசைகளாகவே அறிந்தான். ஆடை சரசரப்பு. மூச்சொலிகள். எங்கோ எவரோ சற்று விம்முவதுபோல. ஓர் இருமல். ஒரு மெல்லிய முணுமுணுப்பு. அவன் காதில் எவரோ சீறல் ஒலியாக “விழி எழு! அரிய காட்சி. நீ உன் இருண்ட ஆழத்தில் என்றும் அழியாது சேர்த்துவைக்கப்போவது” என்றார்கள். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. “அன்னையின் உடல்நோக்க விழையாத மைந்தர் எவர்? பிழையல்ல…” என்றது அக்குரல்.

கடும்சீற்றத்துடன் “விலகு!” என அவன் சொன்னான். உதடுகள் நெளிய கைவிரல்களை சுருட்டிப்பற்றி “விலகிச்செல்!” என்றான். “நான் எவரிடமிருந்தும் விலகமுடியாது, மைந்தா. கருப்பைக்குள் நுழைந்து வந்து உன்னைத் தொட்டவன் நான்.” விகர்ணன் மூச்சிரைத்தான். தலையை இல்லை இல்லை என்பதுபோல அசைத்தான். கடும் வலி உள்ளே எழுந்தது போல அவன் உடல் இறுகி நெளிந்தது. அருகிருந்த ஒருவனின் கன்னம் ஒளிகொண்டிருப்பதை கண்டான். அவன் விழிகளுக்குள் ஒளிப்புள்ளிகள். அவ்வொளி அவன் புன்னகைப்பதுபோல காட்டியது.

அப்பால் இன்னொருவனும் ஒளியை முகம் என கொண்டிருந்தான். அதற்கப்பால் இன்னொருவனும். அங்கிருந்தவர் அனைவரும் ஒளிஏற்றிருந்தனர். தூண்வளைவுகளில் திரைநெளிவுகளில் பீடங்களின் செதுக்கல்களில் எல்லாம் ஒளி எழுந்திருந்தது. “ஒளி!” என்றது குரல். “இப்போது நீ நோக்கலாம்… இது ஒளிதான்!” அவன் விழிதிருப்பி பார்த்தான். துச்சாதனன் திரௌபதியின் குழலைப்பற்றி இழுத்து அவைநடுவே வருவதை கண்டான். கனவிலிருப்பவள்போல் அவள் முகம் அமைதிகொண்டிருந்தது. விழிகள் நீள்மலரிதழென அரைப்பங்கு மூடியிருக்க கைகள் குழைந்து கிடந்தன. கால்கள் தளர்ந்து அவன் தூக்கியதனால் மட்டுமே முன்னகர்ந்தாள். அவள் அணிகளேதும் பூண்டிருக்கவில்லை. இடைக்குக் கீழே வெண்ணிற ஒற்றையாடையை முழங்கால்வரை அணிந்திருந்தாள். அதன் நீள்நுனியைச் சுற்றி முலைகளை மறைத்து தோள்சுற்றி செருகியிருந்தாள். அவள் வலத்தோளும் புயங்களும் கால்களும் வெளியே தெரிந்தன.

கரிய உடல். ஆனால் அது நிலவென ஒளிவிடுவதாக தோன்றியது. அவளில் இருந்தே அவ்வொளி எழுந்து பன்னிரு பகடைக்களக்கூடத்தை நிறைப்பது போல. அவள் மட்டுமே அங்கே இருப்பதுபோல. சூழ்ந்திருந்தவை நிழல்கள். இருளின் அலைகள். துச்சாதனன் கையை தளர்த்தியதும் அவள் துணிச்சுருள்போல உடல் தழைய விழப்போனாள். ஆனால் கால்களை ஊன்றி எழுந்து நின்று தன் மேலாடையை கைகளால் பற்றிக்கொண்டாள். நீள்குழல் அலைகளாகச் சரிந்து தோள்களைத் தழுவி நிலம்தொடுவதுபோல விழுந்தது.

அவள் வரவைக் கண்டதும் அதுவரை அரியணைமேடையில் கைகளை முட்டிக்கொண்டும் பற்களைநெரித்தும் ஓசையற்ற சொற்களை உமிழ்ந்தும் பித்தன்போல் நகைத்தும் நிலையழிந்து சுற்றிவந்துகொண்டிருந்த துரியோதனன் அசைவற்று நின்றான். இணைந்த இருகைகளும் இயல்பாக எழுந்து கூப்புபவைபோல் நெஞ்சில் படிந்தன.  விகர்ணன் திகைப்புடன் நோக்கினான். கர்ணனும் கைகூப்பியிருப்பதாகத் தோன்றியது. விதுரர் கண்களை மூடி இமைப்பொருத்தில் நீர் ஊறிவழிய நெளியும் முகத்துடன் அமர்ந்திருந்தார். பீஷ்மர் விழிமூடி ஊழ்கத்தில் மறைந்தவர் போலிருந்தார்.

துரியோதனன் முகம் கனிந்து உருகிக்கொண்டிருந்தது. அன்னையிடம் மன்றாட்டொன்றுடன் அணுகும் மைந்தனைப்போல. தணிந்தகுரலில் அவன் எதையோ கேட்கப்போவதுபோல விகர்ணன் எண்ணினான். அவன் இடத்தோள் சிலிர்ப்பதை அங்கிருந்தே காணமுடிந்தது. இடப்பக்கம் நின்றிருந்த ஏவலன் ஏதோ சொல்ல அவன் அதற்கு செவிகொடுப்பதுபோல் தோன்றியது. ஆனால் ஏவலன் திரௌபதியைத்தான் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன.

துரியோதனன் தன்னிடம் பேசிய எவரையோ புறந்தள்ளுவதுபோல வலக்கையை வீசினான். அச்சொற்களை மறுப்பவன்போல முகம் சுளித்து தலையசைத்தான். இடப்பக்கம் பேசியவரின் சொற்களை ஏற்று சுட்டுவிரல்தூக்கி ஆம் என்று தலையசைத்தான். இருபக்கமும் காற்றடிக்கையில் புல்நுனியில் நின்று ததும்பும் நீர்த்துளி போல  தத்தளித்தான்.

விகர்ணன் உடல் குளிரிலென சிலிர்த்தது. உண்மையிலேயே அக்களத்தில் அறியாத்தெய்வங்கள் நிறைந்துள்ளனவா? அவைதாம் அனைத்தையும் ஆட்டிவைக்கின்றனவா?  அவன் தன் காதருகே ஏதேனும் குரலெழுகின்றதா என்று உளம்கூர்ந்தான். மூச்சொலிகள், ஆடை சரசரப்புகள். விழிதூக்கி மேலே நிறைந்திருந்த தேவர்களையும் தெய்வங்களையும் அசுரர்களையும் நாகங்களையும் நோக்கினான். தூரிகை தொட்டிழுத்த வெற்று வண்ணங்களாகவே அவை தெரிந்தன.

உரத்த குரலில் துச்சாதனன் “அஸ்தினபுரியின் அரசே, தங்கள் ஆணைப்படி இதோ இத்தொழும்பியை அவைக்கு கொண்டுவந்திருக்கிறேன்” என்றான்.  அவள் இருபக்கமும் நிகர்கொண்டமைந்த கற்சிலை போல் நின்றாள். துரியோதனன் “நன்று!” என்றான். அவன் குரல் இடறியது. கயிறுமேல் நின்றிருக்கும் கழைக்கூத்தாடிபோல் அவன் உடல் தத்தளித்தது. “நன்று, இளையோனே” என அவன் மீண்டும் சொன்னான். என்ன சொல்வதென்றறியாமல் கர்ணனை பார்த்தான். கர்ணன் அவன் நிழலென அதே தத்தளிப்பை தானும் கொண்டிருந்தான்.

“நம் அரசவைத் தொழும்பி இவள். அதை இவளுக்கு உணர்த்தவேண்டும் என்றீர்கள், அரசே” என்றான் துச்சாதனன். “ஆம், அதை சொல்லவேண்டும்” என்றான் துரியோதனன். அவள் விழிகளை நோக்கி “பெண்ணே, உன் கொழுநன் உன்னை பணயம் வைத்து தோற்றிருக்கிறான். அவன் தொழும்பன் என உடன்பிறந்தாருடன்  இதோ நின்றிருக்கிறான். நீ என் அவைத் தொழும்பி என்றானாய். அறிந்துகொள்!” என்றான்.

அவள் தலையைச் சொடுக்கி நிமிர்ந்தாள். தணிந்த குரலில் அவள் சொன்னது அவையினர் அனைவருக்கும் கேட்டது. “எப்பெண்ணும் தொழும்பி அல்ல.” புரியாதவனாக கர்ணனை நோக்கியபின் “ஏன்?” என்றான். உடனே சினமெழுந்து “என்ன உளறுகிறாய்? சித்தம் அழிந்துவிட்டாயா?” என்று கூவினான். “அலைகள் கடலை ஆள்கின்றன என்றுரைப்பவன் அறிவிலி” என்றாள் திரௌபதி. “நுண்சொல் பேசி விளையாட நீ அரசி அல்ல. நீ இழிகுலத்தாள். என் அவைத்தொழும்பி” என்று துரியோதனன் கைகளை நீட்டியபடி எவருடையதோ என்னும் குரலில் கூச்சலிட்டான். “நீ என் உடைமை. என் அடிமை நீ!”

“எவருக்கும் எவரும் முற்றுரிமைகொண்டவர்கள் அல்ல. இங்குள்ள அனைத்தும் தன் தனிவழிப்பயணத்தில் இருக்கின்றன. அஸ்தினபுரியின் அரசே, ஊர்ந்துசெல்லும் எறும்பைக்கூட நாம் உரிமைகொண்டாட முடியாதென்றறிக! வைத்தாடுவதற்கும் இழப்பதற்கும் தன் வாழ்வன்றி ஏதும் மானுடருக்கில்லை.” அவள் புன்னகையுடன் “நீ இன்று  வைத்தாடி இழந்துகொண்டிருப்பதும் அதுவே” என்றாள்.

அச்சிரிப்பால் அவன் அனைத்து தளைகளையும் கடந்து எழுந்து பற்றிக்கொண்டான். “வாயை மூடு, இழிமகளே! என்னவென்று எண்ணினாய்? இது அஸ்தினபுரியின்  சூதுமாளிகை. நீ என் அரியணைக்கருகே கால்மடித்து நெற்றியால் நிலம்தொட்டு வணங்கவேண்டிய அடிமை… வணங்கு!” அவள் மெல்ல சிரித்தது அவையெங்கும் கேட்டது. “வணங்கு! இல்லையேல் இப்போதே உன் தலையைச் சீவி எறிய ஆணையிடுவேன். வணங்கு கீழ்மகளே!” என துரியோதனன் பெருங்குரல் எழுப்பி தன் கைகளை ஓங்கி அறைந்தான்.

அவள் “பெண் என நான் எந்த ஆண் முன்னும் இன்றுவரை தலைவணங்கியதில்லை” என்றாள். “முலையூட்டுகையில் உளம்கனிந்து குனிந்து நோக்கியிருக்கிறேன். மைந்தருடன் ஆடும்போது அவர்களின் கால்களை சென்னிசூடியிருக்கிறேன். அவர்களை நெஞ்சில் ஏற்றி அணைத்திருக்கிறேன். ஒருபோதும் பணிந்ததில்லை.” அவள் அதை சொல்கிறாளா அல்லது பிறிதொரு தெய்வம் தன் செவிகளை அச்சொல்லால் நிறைக்கிறதா? அவள் உதடுகள் அசையவில்லை என்றே தோன்றியது. அம்முகம் தன் கனவிலிருந்து எழவுமில்லை.

“பணிந்தாகவேண்டும்! என்முன் நீ பணிந்தாகவேண்டும்…” என்றான் துரியோதனன். “இல்லையேல் உன் தலையை வெட்டி என் கால்களில் வைக்க ஆணையிடுவேன்.” அவள் ஏளனத்துடன் சிரிப்பது தோளசைவிலேயே தெரிந்தது. துரியோதனன் மேலும் வெறிகொண்டு “உன் ஐந்து கணவர்கள் தலைகளையும் வெட்டி என் காலடியில் வைப்பேன். அவர்களின் குருதியால் உன்னை நீராட்டுவேன்… பார்க்கிறாயா? தயங்குவேன் என எண்ணுகிறாயா?” என்றான்.

“அவர்கள் எனக்கு யார்?” என்று அவள் மேலும் விரிந்த சிரிப்புடன் சொன்னாள்.  “நீயும் எனக்கு என்ன பொருட்டு?” துரியோதனன் இரு கைகளும் செயலற்று விரிய, அஞ்சிய எருதுபோல உடல் சிலிர்க்க அசைவற்று நின்றான். விழிகள் உருள தலைதாழ்த்தினான். அவன் உடலில் தசைகள் இறுகி அலைநெளிந்தன. அவன் திருதராஷ்டிரர் போல  விழியின்மை கொண்டுவிட்டதாக விகர்ணன் எண்ணினான். அவன் தலையை சற்று சரித்து மெல்ல உருட்டினான். இரு கைகளையும் பொருளின்றி தூக்கியசைத்தான். உதடுகளை மெல்வதுபோல அசைத்தான். தாடை இறுகி நெகிழ்ந்தது.

எவராலோ உந்தித்தள்ளப்பட்டதுபோல துரியோதனன் இரு அடி முன்னெடுத்து வைத்தான். தொண்டை நரம்புகள் புடைக்க விரல்சுட்டி துச்சாதனனை நோக்கி கூவினான். “அடேய், மூடா! அறிவில்லையா உனக்கு? அடேய், தொழும்பிக்கு ஏது மேலாடை? அகற்று அதை…!” விகர்ணன் “மூத்தவரே…” என்று கூவியபடி பாய்ந்து எழுந்தான். ஆனால் தன் உடலுக்குள் மட்டுமே தான் எழுந்ததை, உடல் உயிரிலாதது என குளிர்ந்து பீடத்தில் கிடப்பதை அவன் உணர்ந்தான். அவன் காதருகே ஒரு குரல் “நீ செய்வதற்கென்ன இதில்? நீ இங்கு இல்லை” என்றது.

அவன் மயிர்ப்பு கொண்ட உடலுடன் நெஞ்சைப்பற்றி “யார்?” என்றான். “உன் ஆழ்மனைத்தையும் அறிந்த தேவன்… நீ இங்கில்லை. நீ மறைந்துவிட்டாய்.” விகர்ணன் “இல்லை! இல்லை!” என திமிறி எழமுயன்றான். அரக்கில் முழுமையாகவே உடல்சிக்கியிருப்பது போலிருந்தது. அல்லது துயிலிலா? இது கனவா? அவ்வெண்ணமே இனிதாக இருந்தது. ஆம் கனவுதான். “ஆம், கனவே. கனவுமட்டுமே… துயில்க!” என்றது அக்குரல். அவன் நாகம் போல  குளிர்ந்த வழவழப்புடன் காற்று தன்னை தழுவி மூடுவதை உணர்ந்தான். “துயில்க! இது கனவே. கனவைக் கண்டு விழித்துக்கொள்ள இன்னும் பொழுதுள்ளது. துயில்கொள்க!”

திரௌபதி தன் ஆடையைப் பற்றியபடி “சீ! விலகு, இழிமகனே. என்ன செய்யப்போகிறாய்? உன் அன்னையின் ஆடையையா களைகிறாய்?” என்றாள். துரியோதனன் தன் அரியணையில் சென்றமர்ந்து  “அன்னையா? நீயா? நீ விலைமகள். ஆணொருவனின் குருதியை மட்டும் அறிந்தவளே  குலப்பெண். நீ  ஐவரை அணைந்தவள். ஐநூறுபேரை உளமறிந்திருப்பாய்…” என்று சிரித்தான். ஓங்கி தன் தொடையை அறைந்து “வா, வந்து அமர்ந்துகொள்… நீ தழுவிய ஆண்களில் ஒருவன் கூடுவதனால் இழுக்கென ஒன்றுமில்லை உனக்கு” என்றான்.

கர்ணன் “ஆம், ஐவருக்கும் துணைவி என்றால் ஒருவனுடன் உடலிருக்கையில் பிற நால்வருடனும் உளமிருக்குமா?” என்றான். துரியோதனன் வெறியுடன் சிரித்து “ஆம், எங்களுடனிருக்கையில் நீ அவர்களை நினைக்கலாம்…” என்றான். மேலும் சிரித்துக்கொந்தளித்து “இப்போது நான் சிரிக்கிறேன்… இழிமகளே. இதோ நான் சிரிக்கிறேன். பார்…! நான் சிரிக்கிறேன்” என்றான். சித்தமழிந்தவனைப்போல கண்ணீர்வார சிரித்து மேலாடையால் விழி துடைத்தான். “செல்…! அறிவிலியே, அவள் ஆடையை இழுத்துக்களை…!”

துச்சாதனன் நடுங்கும் உடலுடன் காலெடுத்துவைத்து அவளை நோக்கி கைநீட்ட ஆடைபற்றி அவள் விலகி அதே விரைவில் சுழன்று அவையை நோக்கி  “இங்குள்ளோர் எவரும் இதற்கு மறுகுரல் எழுப்பவில்லையா? உங்கள் நெறிகளும் முறைகளும் பொய்யா? உங்கள் நூல்களெல்லாம் மொழியழிந்தனவா? உங்கள் அன்னையரும் தேவியரும் மகளிரும் நெறிமறந்தனரா?” என்றாள். “எங்கே உங்கள் மூதாதையர்? எங்கே உங்கள் அறவுருக்கொண்ட தெய்வங்கள்?”

கர்ணன் சினத்துடன் “இது அஸ்தினபுரியின் அரசனின் அவை, கீழ்மகளே. இங்கு அவன் ஆணைக்கு அப்பால் தெய்வமும் இல்லை” என்றான். “அரசாணையை அவையோர் அவைமுறைப்படி சொல்சூழலாம். அடிமை  அதை ஆராயலாகாது. அவ்வுரிமையை நீ இழந்துவிட்டாய். செல், அவன் காலடியில் தலைவைத்து வணங்கு! அவன் ஆணையைச்சூடி அவையில் நில்! அதுவே உன் கடமை.”

“அரசியல் பிழைத்தால் கூற்றென அறம் எழுந்து வந்தாகவேண்டும் என்கின்றன உங்கள் நூல்கள். எங்கே அவை?” என்றாள் திரௌபதி. “நன்றென்றும் தீதென்றும் வகுத்து அமைந்த உங்கள் ஸ்மிருதிகள் எங்கே? ஒருவனுக்கு இழைக்கப்படும் மறம் உலகுக்கே என்று கூவிய உங்கள் சுருதிகள் எங்கே? மண்ணையும் மழையையும் ஆற்றையும் காட்டையும் புலரியையும் அந்தியையும்  அன்னையென வழுத்திய உங்கள் வேதங்கள் எங்கே?” துரோணரை நோக்கி திரும்பி “அறநூல் கற்று அமைந்த ஆசிரியர்களே, சொல்க!” என்றாள்.

துரோணர் “தேவி, நால்வேதங்களும் வேந்தனை வழுத்துபவையே” என்றார். “அறங்கள் வாழவேண்டுமென்றால் அரசன் ஆற்றல்கொண்டு அரியணையில் அமர்ந்திருக்கவேண்டும். கோலில்லா குடி மேய்ப்பனில்லா மந்தை. தனியொரு பிழைக்கென அரசன் ஏந்திய கோலை பழித்தால் இறுதியில் அவன் குடிகளுக்கே அது பேரிழப்பாகும்” என்றார். “அப்படியென்றால் இப்பிழை செய்ய அரசனுக்கு உரிமை உண்டு என்கிறீர்களா?” என்றாள். “உயிர்க்கொலை இன்றி வேளாண்மை நிகழவியலாது. மறம் இழக்காது கோல்கொண்டமைய அரசர் எவராலும் இயலாது” என்றார் துரோணர்.

கிருபர் “நான்கு வேதங்களையும் பேணி அவையமர்ந்த ஷத்ரியன் மண்ணுக்கு வந்த தெய்வத்திருவுருவே என்பதுதான் வேதநெறி என்றறிக!” என்றார். “அவனுக்கு சொல்லளிக்க கடமைகொண்டிருக்கிறோம், அவன் கோலை மறுக்க உரிமைகொண்டவர்கள் எவருமிருக்க இயலாது. தனியொருவருக்கு இழைக்கப்படும் தீயறத்தின்மேல் அரசின் வெற்றியும் அதன் குடிகளின் பெருநலனும் வாழும் என்றால் அதுவும் அரசனுக்கு அறமே.”

“சொல்லுங்கள், பீஷ்மரே! இந்த அவையில் உங்கள் சொல்லும் எழுந்தாகவேண்டும்…” என்று திரௌபதி கூவினாள். “பெண்ணே, ஆசிரியர்கள் முறைமையேதென்று சொல்லிவிட்டனர். பல்லாயிரமாண்டுகாலம் அரசின்மை நின்றாடிய மண் இது. உன்னைப்போல் பல்லாயிரம் பெண்டிர் இழிவடைந்தனர். பற்பல பல்லாயிரம் மைந்தர் அன்னையர்முன் தலையறுந்து விழுந்தனர். குருதிகாயாமல் மண் கீழ்மைகொண்டது. அறமென்று எங்கும் ஏதுமிருக்கவில்லை. அவ்விருளில் இருந்து எழுந்து வந்த ஒளியை வேதமென்றனர். அதைத்திரட்டி நான்கென்று வகுத்தனர் தொல்வியாசர் முதலான முனிவர். இங்கு அனல்சூடி நின்றெரியும் அதை வாளேந்தி தலைகொடுத்து காத்து நிற்பதற்கென எழுந்ததே ஷத்ரியர் என்னும் குடி” என்றார் பீஷ்மர்.

“அரசெனும் அமைப்பு மானுடருக்கு இறைவல்லமைகள் அளித்த பெருங்கொடை” என்று பீஷ்மர் தொடர்ந்தார். “மணிமுடியும் செங்கோலும் அரியணையும் உருவாகி வந்தபின்னரே இங்கே அறமும் நெறியும் முறையும் உருவாயின. கன்னியர் கற்புடனும், வேதியர் சொல்லுடனும், கவிஞர் கனவுடனும், கைத்தொழிலோர் திறனுடனும்  வாழத் தொடங்கினர். எதன்பொருட்டும் வேதக்கொடி இறங்கலாகாது. அதை விண்ணில் நிறுத்தும்  அரசு என்னும் அமைப்பு அழிய நான் எந்நிலையிலும் ஒப்பமாட்டேன். இங்கெழுந்தது அரசாணை. அவையில் அதை குடிகள் மீறலாகாது. நானும் குடியே.”

“இங்கு நீங்கள் பிதாமகர் அல்லவா? குலமூத்தார் அல்லவா?” என்றாள் திரௌபதி. “இல்லை, அவையில் நான் அஸ்தினபுரியின் குடி மட்டுமே. அதற்கென வில்லெடுத்த போர்வீரன். தலைகொடுக்க சொல்லளித்தவன்.  அவன் என்னை வாளால் வெட்டி வேதநெருப்புக்கு அவியென்றாக்குவான் என்றால் அதுவே என் முழுமை என்று எண்ணவேண்டியவன்” என்றார் பீஷ்மர். “அரசனின் மந்தணஅறைக்குச் சென்று அவனுக்கு மூதாதையாகிறேன். அவன் கன்னத்தில் அறைந்து குழல்பற்றிச் சுழற்றி என் கால்களை மண்டியிட்டு வணங்கச்செய்கிறேன். அவன் ஆற்றியவற்றில் எவை பிழை, எவை பழி என அறிவுறுத்துகிறேன். ஆனால் ஒருநாளும் அவையில் அமர்ந்து அரசனை ஆளமுயலமாட்டேன்” என்றார் பீஷ்மர்.

“இதோ எழுந்து ஒரு சொல்லுரைத்து இவ்வரியணையை நான் மறுக்கலாகும். அதன்பின் அஸ்தினபுரிக்காக நான் வில்லேந்த முடியாது. இன்று அஸ்தினபுரி சிம்மங்களின் காட்டில் கன்றை ஈன்ற பசு என சூழப்பட்டுள்ளது. அசுரர்களும், நிஷாதர்களும், புத்தரசுகளும் அதன் குருதியை விழையும் தருணம் இது” என்று பீஷ்மர் சொன்னார். “இது வேதம்புரந்த வேந்தர் அமர்ந்தாண்ட அரியணை. வேதம் காக்க வாளேந்தி எழுந்த அரசு இது. பெண்ணே, வாழ்நாள் முழுக்க இந்நகரையும் இதன் அரசகுடியையும் காப்பேன் என்று என் தந்தைக்கு சொல்லளித்தவன் நான். இக்கணம் வரை அதன்பொருட்டே உயிர்தரித்தவன். எந்நிலையிலும் அதை கைவிடவும் மாட்டேன்.”

துச்சாதனனை நோக்கி கைசுட்டி “இதுவா அரசன் சூடும் அறம்? பிதாமகரே, இதுவா நால்வேதம் ஈன்ற குழவி?” என்றாள்  திரௌபதி. “ஆம், இதுவும்தான். ரஜோகுணம் எழுந்தவனே ராஜன் எனப்படுகிறான். வெல்வதும் கொள்வதும் அவனுக்குரிய நெறியே. விழைவே அவனை ஆளும் விசை. காமமும் குரோதமும் மோகமும் அவனுக்கு இழுக்கல்ல. புவியை பசுவென ஓட்டிய பிருதுவையே பேரரசன் என்கிறோம். வான்கங்கையை ஆடைபற்றி இழுத்துக் கொண்டுவந்த பகீரதனையே வேந்தர்முதலோன் என்கிறோம். பெருவிழைவால் உருவாகிறார்கள் பேரரசர்கள்” என்று பீஷ்மர் சொன்னார். “அரசன் கொள்ளும் விழைவுகளுக்காகவே பூதவேள்விகளில் அனலோன் எழுகிறான். மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் அவனுக்களிக்கவே அதர்வவேதச் சொல்லுடன் வைதிகர் அவியளிக்கிறார்கள்.”

உணர்வெழுச்சியுடன் பீஷ்மர் தொடர்ந்தார் “ஆம், இங்கு நிகழ்ந்தது குலநெறி அழியும் தருணம். ஆனால் குட்டிகளுடன் மான்கணத்தைக் கொன்றுதின்றே சிம்மம் காட்டில் முடிசூடி ஆள்கிறது.  பலநூறு குலநெறிகளின் மேல்தான் அரியணையின் கால்கள் அமைந்துள்ளன.” அவர் குரல் சற்றே நடுக்கத்துடன் ஒலித்தது. “பெருந்தந்தையென என் உள்ளம் சொல்கிறது, இது அறப்பிழை. ஆனால் ஷத்ரியன் என நின்றிருக்கையில் என் நாட்டின் எந்த ஒரு பெண்ணும் எனக்கு நிகரே.  என் கடன் இங்குள்ள குடிகள் அனைவருக்கும்தான். அரசகுடிப்பிறந்தாள்  என்பதற்காக உனக்கென எழுந்து அவர்களை நான் கைவிடலாகாது.”

“ஆம், இது பெரும்பழியே.  ஆனால் இதன்பொருட்டு நான் தந்தைக்களித்த சொல்லைத் துறந்தால் அஸ்தினபுரி அழியும். பாரதவர்ஷத்தில் வேதப்பெருநெருப்பு அழியும். வேதம் மறந்த கீழோர், புறவேதம் கொண்ட  பகைவர், வேதம் மறுக்கும் விலங்கோர் வேல்கொண்டெழுவர். எங்கும் இருள்சூழும். என் குடிக்கு நூறுமடங்கு பழிசூழும்” என்றார் பீஷ்மர். தன் நெஞ்சைத்தொட்டு உரத்தகுரலில்  “இதன்பொருட்டு எனக்குப் பழிசூழ்வதென்றால் ஆகுக! இந்நகருக்கும் குடிகளுக்குமென களத்தில் தலை அளிப்பதற்கு சொல்கொடுத்தவன் நான். என் புகழையும் மறுமையையும் உடனளிக்கிறேன். ஆம், இதோ அளிக்கிறேன்” என்று கைதூக்கினார்.

பெருமூச்சுடன் “அரசாணையை மீற எவருக்கும் உரிமையில்ல, பெண்ணே” என்றார் துரோணர். “ஆற்றலுள்ளோர் அதை மீறலாம். அவ்வழியே அனைவரும் மீறுவர். அதன் பின் அரசென்பதே இருக்காது. நெறியிலமைகிறது அரசு என்று உணர்க!”  கிருபர் “ஆம், அதனால்தான் அங்கே உன் கொழுநர் ஐவரும் வெறுமனே நின்றிருக்கிறார்கள்” என்றார்.

“அவர்களும் உங்களவரே” என்று பாஞ்சாலி சொன்னாள். “நான் அவர்களில் ஒருத்தி அல்ல. உங்கள் அரசும் கொடியும் முடியும் எனக்குரியவையும் அல்ல. நான் எவருக்கும் குடியல்ல.” உரத்த குரலெழுப்பியபோது அவள் பேருருக்கொண்டதுபோல் தோன்றியது. அவள் நின்றிருந்த மையம் அவள் குரலைப்பெருக்கி அவைமேல் பொழிந்தது. “நான் குலமகள் அல்ல. துணைவியல்ல. மகளும் அல்ல. நான் அன்னை. என்னை தளைக்க உங்களிடம் நெறிகளில்லை.”

அச்சொல்கேட்டு சீறி எழுந்து கூவினான் துரியோதனன் “என்ன செய்கிறாய் அங்கே? அறிவிலியே, அவள் மேலாடையைக் களைந்து இழுத்துவந்து என் அவைமுன் அமர்த்து!” துச்சாதனன் விலங்கென உறுமி தன் சினத்தைப் பெருக்கி கைகளை ஓங்கி அறைந்துகொண்டு அவளை நெருங்க “அப்பால் செல்…! அணுகாதே!” என அவள் தன் ஆடையைப்பற்றியபடி கூவினாள். “உன் அன்னையின் பெயரால் சொல்கிறேன், அணுகாதே!” துரியோதனன் தொடையைத் தட்டி நகைத்து “ஆம், அன்னைதான். முதல்விடியலில் அன்னை துர்க்கையின் அணியிலாக்கோலம் காண்பதும் வழக்கமல்லவா?” என்றான்.

“இனி ஒருபோதும் உனக்கு அன்னை மடி என ஒன்று எஞ்சாது, மூடா!” என்றாள் திரௌபதி விலகிச்சென்றபடி. துச்சாதனன் “வாயை மூடு. தொழும்பியர் பேச அவை கூடிக் கேட்கும் இழிநிலை இன்னும் அஸ்தினபுரிக்கு வரவில்லை” என்று கூவியபடி அவள் மேலாடையைப்பற்றி இழுத்தான். அவள் விலகிச்சுழல அவள் ஆடை தோளிலிருந்து சரிந்தது. முலைகள் மேல் அதை அள்ளிப்பற்றி உடல்குறுக்கினாள்.

துரியோதனன் தன் தொடையிலறைந்து உரக்க நகைத்தான். விழிகள் நீரணிந்து முகம் கடும் வலியிலென சுளிக்க அச்சிரிப்பு கெடுதெய்வம் வெறிகொண்டு வந்தேறியதுபோல் தோன்றியது. கர்ணனும் அச்சிரிப்பில் இணைந்தான். கௌரவர்கள் உடன்எழுந்து நகைத்தனர். அந்த பகடைக்கூடமே பெருங்குரல் எடுத்து சிரித்து முழங்கியது. எதிரொலியின் அலைகளாக தெய்வங்களின் சிரிப்பொலி எழுந்து இணைந்துகொண்டது.

அனைத்துச் சாளரங்களும் மூடிக்கொண்டதுபோல அவை இருளத் தொடங்கியது. கரிய காகங்கள் நிழலசைவென உள்ளே நுழைந்து அவைமூடிப்பறப்பதுபோல ஓசை கேட்டது. அவற்றின் சிறகசைவின் காற்று காதுகளை தொட்டது. குளிர் ஏறிவந்தது. தூண்கள் சிலிர்த்தன. விண்நிறைத்திருந்த அத்தனை தேவர்களும் விழிகொண்டனர். அசுரர்களின் இளிப்புகள் பெரிதாயின. அவர்களின் கைகளில் உகிர்கள் எழுந்தன. கோரைப்பற்கள் கூர்கொண்டு வளர்ந்தன.  இருளில் அவையமர்ந்த எவர் முகமும் தெரியாமலாயிற்று. உப்பென மின்னும் விழிகள் மட்டுமே சூழ்ந்த வட்டமென்றாயிற்று பன்னிரு பகடைக்களம்.

சினந்து திரும்பும் பிடியானையின் உறுமல் போல ஒலியெழுப்பியபடி திரௌபதியின் தலை எழுந்ததை விகர்ணன் கண்டான். அவள் குரல் எழுந்து எரிகுளத்து அவி என தழலாடியது.  “எழுக புதியவேதம்! ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல்! ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக! ஆம், எழுக!” என்று கூவியபடி  இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி கண்மூடி நின்றாள்.

அவள் மேலாடை அவிழ்ந்து துச்சாதனனின் கைக்குவர அவிழ்ந்த முடிப்பெருக்கால் பாதிமறைந்த  தோளும் முலைகளும் தெரியத் தொடங்கிய கணத்தில் உப்பரிகைமேடையில் வெண்பட்டுத் திரையை விலக்கியபடி லட்சுமணை தோன்றினாள். “அன்னையே!” என்று கூவியபடி படிகளில் இறங்கி ஓடிவந்தாள். துச்சாதனன் மேலே நோக்கி திகைத்தான்.

லட்சுமணையின் அருகே எழுந்த அசலை  “யாதவா! இறையோனே!” என்று கூவியபடி  தன் மேலாடையை எடுத்துச் சுருட்டி திரௌபதியின் மேல் வீசினாள். அவள்தோள்மேல் வெண்பறவைபோல வந்தமைந்து நழுவி அலையலையாகவிரிந்து உடல்மூடியது அவ்வாடை. இரு உப்பரிகைவட்டங்களும் முகிலுக்குள் இடியென முழங்கின.  “யாதவனே! இளையோனே!  கரியோனே! கார்வண்ணனே!” என்று அலறியபடியும் அரற்றியபடியும் பெண்கள் தங்கள் மேலாடைகளை எடுத்து திரௌபதியின் மேல் வீசினர். ஒன்றன் மேல் ஒன்றென மரத்தில் வந்து கூடும் வண்ணப்பறவைக்கூட்டம்போல  ஆடைகள் அவள் மேல் பொழிந்து மூடின. அனைத்து ஆடைகளையும் சூடியவளாக அவள் கைகளை விரித்து நின்றாள்.

துரியோதனன் அரியணை விட்டெழுந்து ஓடிச்சென்று இரு கைகளையும் விரித்து தன் புதல்வியை மறித்து “கிருஷ்ணை, நில்! எங்கே செல்கிறாய்?” என்றான். அன்னைப்பன்றி என எரியும் விழிகளுடன் அவள் உறுமினாள் “விலகி நில்! மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன்!” அவன் கால்தளர்ந்து நடுங்கும் கைகளுடன் விலக அவள் ஓடிச்சென்று திரௌபதியை தழுவிக்கொண்டாள்.

அசலை ஓடிவந்து அவர்கள் இருவரையும் தழுவினாள். பானுமதியும் துச்சளையும் கௌரவர்களின் துணைவியர் அனைவரும் ஓடிவந்து ஒருவரை ஒருவர் தழுவி ஒற்றை உடற்சுழிப்பென்றாயினர். பன்னிரு பகடைக்களத்தின் நடுவே அச்சுழி மெல்ல சுழன்றது. அவள் அதன் மையமென்று தெரிந்தாள். விகர்ணன் விழிநீர் சோர கைகூப்பினான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 86

[ 17 ]

சகுனி கைநீட்ட  ஓர் ஏவலன் அருகே வந்து அவர் தோளை பற்றினான். வலிகொண்ட காலை மெல்லத்தூக்கி எழுந்து அவன் தோள்பிடித்து நடந்து கணிகரின் அருகே தன் பீடத்தில் அமர்ந்தார். அவர் அணுகியதையே கணிகர் அறிந்ததுபோல் தெரியவில்லை. ஏவலர்கள் இருவர் வந்து பன்னிரு பகடைக்களத்தில் பொருளிழந்து வெற்றுப்பொருட்களென்றாகி பரவியிருந்த காய்களைப் பொறுக்கி தந்தப்பேழைகளில் சேர்த்தனர். பகடைக்களம் வரையப்பட்ட பலகையை ஒருவன் அகற்ற முயல துரியோதனன் உரக்க “அது அங்கிருக்கட்டும்! அங்குதான் அவ்விழிமகளை கொண்டு வந்து நிறுத்தப்போகிறேன். பாரதவர்ஷத்துடன் அவள் பகடையாட விழைந்தாள். எனது பகடைக்களத்தில் அவளும் ஒரு காயென்று வந்து நிற்கட்டும் இங்கே” என்றான்.

கர்ணன் புன்னகைத்தான். துரியோதனன் சிற்றமைச்சரைப் பார்த்து “அந்தப் பகடைகளை எடுத்து இங்கே அளியுங்கள்” என்றான். பகடைகளை பொற்பேழையிலிட்டு அவனிடம் அளித்தான் ஏவலன். அதை தலைமேல் தூக்கி “நூறாயிரம் நூல்களை, சூதர்பாடல்களை, வேதம் மறுத்தெழுந்த படைப்பெருக்கை வென்றவை இவை” என்றான் துரியோதனன். சூழ்ந்திருந்த அவையினர்  நகைத்தனர். துர்மதன் “கௌரவரின் வழிபடுதெய்வம் வாழ்கிறது அதில்” என்றான். துச்சலன் “எழுத்துக்களை வென்றன எண்கள்” என்றான். சிரிப்பொலிகள் அலையலையாக எழுந்தன.

விகர்ணன் அவர்களை திரும்பித்திரும்பி பார்த்தான். ஒவ்வொருவரிலிருந்தும் அவர்கள் அக்கணம் வரை வென்றுவென்று கடந்து வந்த பிறிதொருவர் எழுந்து நின்றது போல் வெறி கொண்டிருந்தன விழிகள். கள்மயக்கைவிட, காமமயக்கைவிட, வெற்றிமயக்கைவிட வல்லமை கொண்டது கீழ்மையின் பெருமயக்கு என்று விகர்ணன் எண்ணிக்கொண்டான். கைகளைக் கூப்பியபடி கண்ணீர் வழிய தன் இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான்.

ஏவலனை அழைத்து மேலும் மேலும் மது கொணரச்சொல்லி உண்டு மூக்கிலும் இதழோரத்திலும் கோழை வழிய வலப்பக்கமாகச் சரிந்து இறந்த உடலென கிடந்தான் குண்டாசி. பெருந்தசைகள் புடைத்தெழ கௌரவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டனர். சிலர் கைவீசி மெல்ல நடனமிட்டனர். சிலர் ஆடைகளைத் தூக்கி மேலே வீசிப்பற்றினர். அவன் திரும்பி பீஷ்மரை பார்த்தான். இருகைகளையும் கோத்தபடி கண்கள்மூடி அங்கில்லையென அவர் அமர்ந்திருந்தார். துரோணரும் கிருபரும் உதடுகளை இறுக்கி விழிகள் பொருளற்ற ஏதோ ஒன்றை வெறிக்க சரிந்திருந்தனர். பற்றற்றவர் போல் தாடியை நீவியபடி விதுரர் இருந்தார்.

அவர்கள் எதை நோக்கி ஆழ்ந்திருக்கிறார்கள்? எப்போதும் அறிந்த ஒன்றையா? என்றும் உடனிருக்கும் ஒன்றையா? அவர்கள் எதிர்கொண்டிராத தருணம். கற்றவையும் கனிந்தவையும் கேள்விக்குள்ளாகும் தருணம். அரசும் குடியும் வெறிகொண்டு எழுந்த அவையில் அவர்கள் செய்வதற்கொன்றுமில்லை போலும். ஆனால் எழுந்து உடைவாளெடுத்து தங்கள் கழுத்தில் பாய்ச்சிக் கொள்ளலாம். அவைமுன் செத்துவிழலாம். ஆனால் கற்பாறை எனக் குளிர்ந்து காத்திருக்கிறார்கள். ஒருகணத்தில் உள்நடுக்கமென அவன் ஒன்றை உணர்ந்தான். அத்தனை பேரிலும் தோன்றி பேருருக்கொண்டு நின்றிருப்பது ஒன்றே. அது பெண்முன் தன்னைத் தருக்கி எழும் ஆண்மையின் சிறுமை.

“ஆம்!” என்றது ஒரு குரல். திடுக்கிட்டவன் போல் அவன் திரும்பிப்பார்க்க தன்னருகே எருமைத்தலையும் கல்லுடைந்த துண்டுபோன்ற விழிகளும் குளம்புகள் கொண்ட கால்களுமாக ஒருவன் நின்றிருப்பதை கண்டான். “யார்?” என்று அவன் கேட்டான் “எருமையன்” என்றான் அவன். அவன் சொல்லுடன் ஊனின் ஆவியெழுந்த மூச்சு கலந்திருந்தது. “எனது குலமூத்தார் முன்பு ஒரு படைக்களத்தில் இவளால் கொல்லப்பட்டார். நெஞ்சுபிளந்து இவள் காலடியில் விழுகையில் இப்புவி வாழும் அனைத்து ஆண்களும் என் குருதியில் ஒரு துளியேனும் கொள்க என்று அவர் சொன்னார்.  புடவியைப் பகடையாக்கி ஆடும் பிரம்மம் ஆம் என்றது அப்போது.”

நிரைவகுத்த வெண்பற்கள் தெரிய அவன் நகைத்தான். “இங்குள அனைவருக்கும் இடது செவியருகே நான் நின்றிருக்கிறேன். வலதுசெவியருகே அவர்களின் வழிபடுதெய்வங்களும் முன்னோரும் அவர்கள் கற்ற நூல்களின் உரையும் நால் வேதங்களும் ஆறு அறங்களும் நின்றுள்ளன. அத்தனை குரலுக்கும் என் குரல் நிகர். அணுகுகையில் அவற்றைவிட ஓர் அணுவிடை மிகுதி. எதிர்த்துப் போரிடுகையில் ஆயிரம் முறை பெரிது.”

“இல்லை! இல்லை!” என்று விகர்ணன் சொன்னான். “விலகு! இது ஏதோ உளமயக்கு. என் சித்தம் கொள்ளும் வெற்றுக்காட்சி.” அவன் நகைத்து  “மாயமில்லை இளையோனே, இவ்வவையில் இறுதியாக நான் எழுந்தது உன்னருகேதான். அங்கு பார், பீஷ்மரின் அருகே செவியாட்டி நான் நின்றிருக்கிறேன். துரோணரின், கிருபரின், ஏன் விதுரரின் அருகிலே கூட” என்றான்.

விகர்ணன் அச்சத்துடன் நெஞ்சை அழுத்தியபடி நோக்கினான். அங்கிருந்த ஒவ்வொருவர் அருகேயும் கரிய நிழலென அரைக்கணம் தோன்றி, விழிமயக்கோ என விளையாடி, மீண்டும் விழிமின்ன எழுந்து பல்துலங்க உறுமி மறைந்த எருமையனை கண்டான். “காலம்தோறும் பெண்மை வென்று கொண்டிருக்கிறது. மண் என விரிந்து இங்கெழுந்தவை அனைத்தையும் அவள் உண்கிறாள். மழையெனப் பொழிந்து இங்குள்ள அனைத்தையும் புரக்கிறாள். முலையெனக்கனிந்து இங்குள அனைத்தையும் ஊட்டுகிறாள். வெல்பவள், கடக்க முடியாதவள், ஆக்கி அளித்து ஆடி அழிப்பவள். அவளுக்கு எதிராக நின்றிருக்க கல்வியோ வீரமோ தவமோ உதவுவதில்லை. மதவிழியும் இருளுடலும் கொம்பும் கொண்ட நானே அதற்கு உதவுபவன். என்னைத் தவிர்க்க இயலாது எவரும்.”

உரக்க நகைத்து “தவிர்த்தவன் ஆணெனப்படுவதில்லை. அவனை பேடி என்கின்றனர். கோழை என்கின்றனர். பெண்ணன் என்று பழிக்கின்றனர்” என்றான். “உண்மையில் அருகில் நானில்லாத ஆணை பெண்ணும் விரும்புவதில்லை. ஏனெனில் அவள் அவனிடம் நிகர் நின்று போரிலாடி வெல்ல வேண்டும். அவன் நெஞ்சில் கால்வைத்து தருக்கி எழவேண்டும். அவளுக்கு எதிர்நிலை நானே. நோக்குக!”

அவன் கைசுட்ட விகர்ணன் துரியோதனனின் அருகே பேருருக்கொண்டு நின்ற மகிஷனை கண்டான். அவ்வளவே உயரத்துடன் கர்ணனருகே நின்றிருந்தான் பிறிதொருவன். துச்சாதனனிடம் துர்மதனிடம் துச்சலனிடம் சுபாகுவிடம் சுஜாதனிடம். கௌரவர் ஒவ்வொருவர் அருகிலும். அவன் உரக்க நகைத்து அவன் தோளைத்தொட்டு “பார்! மூடா, இந்த அவையிலேயே நான் நிழல்பேருரு என  அருகணைய அமர்ந்திருப்பவன் பீஷ்மன்!” என்றான். வளைந்த பெருங்கூரை முட்ட கரியமுகில்குவை போல் எழுந்து நின்றிருந்தான் பீஷ்மரின் துணைவனாகிய மாமகிடன்.

அவரது இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டிருப்பதை, உதடுகள் அழுந்தி அழுந்தி மீள்வதை, தாடை அசைவதை விகர்ணன் கண்டான். “ஆயிரம் நூல்கள், பல்லாயிரம் நெறிகள், வாழ்ந்த கணமெலாம் வழுத்திய மூதாதையரின் கனிந்த சொற்கள்… அங்கே துலாவில் அவர் அள்ளி அள்ளி வைப்பவை இப்புடவிக்கு நிகரானவை. அனைத்தையும் வென்று வென்று மேற்சென்று எழுந்து நின்றிருக்கிறேன்” என்றான் மகிஷன். வெறிகொண்டு அக்கனவை உதறி திமிறி “விலகு! விலகு!” என்றான் விகர்ணன்.

“எளிதில் அவ்வண்ணம் விலக இயலாது. ஏனெனில் நீயும் ஒரு ஆண்மகனே” என்றான் மாமயிடன். “எவ்வண்ணம் நான் வெல்வேன்? எந்தையே, உன்னைக்கடந்து எப்படி செல்வேன்?” என்றான் விகர்ணன். “என்னைக் கடப்பதற்கு வழி ஒன்றே. என்னிடம் போரிடாதே. துளிக்குருதி சொட்டினாலும் ஒன்று நூறெனப் பெருகும் ஆற்றல் கொண்டவன் நான். என்னை வென்றவன் பெண்ணில் நல்லாளுடன் இருந்த பெருந்தகை ஒருவனே. தன்னைப் பகுத்து பெண்ணென்றான தாயுமானவன் அவன். உன்னை இரண்டெனப் பகுத்து என்னை எதிர்கொள்!”

“பெண்ணென்றா?” என்று அவன் கேட்டான். “ஆம். உன் முலைகள் ஊறவேண்டும். கருப்பை கனியவேண்டும். அன்னையென கன்னியென மகளென என்னை நீ தொடவேண்டும். என்னை வென்று கடக்க வழி என்பது ஒன்றே. ஆணென நின்று நீ கைக்கொள்ளும் அத்தனை படைக்கலத்திலும் எழுவது உனது கீழ்மை. கீழ்மைக்கு முன் ஆடிப்பாவையென பெருகி நிற்பது எனது வலிமை.”

“நான் அடிபணிகிறேன். உன் மைந்தனென்றாகிறேன்” என்றான் விகர்ணன். “மைந்தன் என்பதனால்தான் இக்கணம் வரை நீ சொல்லெடுக்கிறாய், மூடா” என்றான் மகிடன். விகர்ணனை சூழ்ந்து நிழல் அலைக்கொந்தளிப்பென சுழித்தது பன்னிரு பகடைக்களம். ஒவ்வொரு நிழலும் தன் கையில் ஒருவனை வைத்திருந்தது, களிப்பாவையென. அவனை கைமாற்றி வீசி விளையாடியது. அவன் தலையைச் சுண்டி தெறிக்கவைத்தது. கால்களைச் சுழற்றி வீசிப்பிடித்தது. “இரண்டென்றாகுக! ஆம், இரண்டென்றாகாது வெல்வதில்லை எவரும்” என்றான் மாமயிடன்.

[ 18 ]

அவை வாயிலில் வீரர்களின் குரல்கள் எழுந்தன. இரு காவலரை விலக்கி காமிகன் அங்கே தோன்றினான். துரியோதனன் உரத்த குரலில் “வருக! எங்கே அவள்?” என்றான். “அரசே, அரசி என்னுடன் வரவில்லை” என்றான் காமிகன். சினந்து “என்ன நிகழ்ந்ததென்று சொல், மூடா” என்றான் துரியோதனன். அஞ்சி துரத்தப்பட்டவன் போல் மூச்சிரைக்க  அருகணைந்த காமிகன் “அரசே!” என்றான். சினத்துடன் பீடம் விட்டெழுந்து அவனை அணுகி “என்ன நிகழ்ந்தது? சொல்!” என்றான் துரியோதனன்.

“அரசே, அரசி இல்விலக்கி அமர்ந்திருக்கும் புறமாளிகையை என் படைவீரருடன் அணுகினேன்” என்றான் காமிகன். “அங்கே எதிர்ப்பிருக்கக்கூடும் என்றெண்ணி நூற்றுவரை என்னுடன் அழைத்துக்கொண்டேன். போரென்றால் அவ்வண்ணமே என்று உறுதிகொண்டே அங்கே சென்றேன்.”

வாயிலில் நின்றிருந்த செவிலியரிடம் “விலகுங்கள்! தடுத்து ஒரு சொல் சொல்பவர்கள் அக்கணமே வெட்டி வீழ்த்தப்படுவார்கள்” என்றேன். அவர்கள் அஞ்சி வழிவிட முதற்சுற்று வாயிலைக் கடந்து உள்ளே சென்றேன். என்னை நோக்கி கன்னங்கரிய பெண்ணொருத்தி வந்தாள். “யார் நீ?” என்று அவளை கேட்டேன். பற்கள் ஒளிர புன்னகைத்து அவள் “நான் ஐங்குழல்கொண்ட அரசி திரௌபதியின் அணுக்கத்தோழி மாயை” என்றாள். “எங்கே உன் தலைவி? அவளை அவைக்கு இழுத்துவரும்படி அரசாணை” என்றேன்.

மெல்ல இதழ்கோடச் சிரித்து “முடிந்தால் இழுத்துச் செல், மூடா!” என்றபோது அவளது விழிகள் சிம்மத்தின் விழிகள்போல் முத்துவெண்மை கொண்டன. நான் என் வாளை உருவி அவளை அணுகியபோது தரையிலிருந்து அவள் நிழல் எழுந்து பிறிதொரு மாயையாகியது. சுவரிலிருந்த நிழல் எழுந்து மற்றொரு மாயையாகியது. பறக்கும் கருங்குழலும் அனலென எரியும் விழிகளுமாக அவள் பெருகினாள். அவ்வறையின் அனைத்து வாயில்களிலிருந்தும் ஐம்புரிக்குழலும் திறந்த வாய்க்குள் எழுந்த கோரைப்பற்களும் சிம்மவிழிகளுமாக பெண்கள் வந்தனர். அறியாத பிடாரிகள். குருதி வேட்கை கொண்டு நெளியும் செவ்விதழ் பேய்கள். காளிகள். கூளிகள். சுவர்கள் கருமைகொண்டன. கன்னங்கரிய தூண்கள். கருமை நெளியும் தரை. இருள் இறுகி எழுந்த மாளிகை அது.

அரசே, அப்பெண்களைக் கடந்து செல்ல அஞ்சி நின்றேன். என்னை குளிர் சூழ்ந்தது. என் கையிலிருந்த படைக்கலங்கள் நழுவின. ஒருத்தி என் அருகே வந்து கைபற்றி “வருக!” என்றாள். என் படைவீரர்கள் அஞ்சி நின்றுவிட்டனர். நான் மட்டும் இருளுக்குள் கருமைக்குள் இன்மைக்குள்ளென புதைந்து புதைந்து உள்ளே சென்றேன். இருள் அள்ளி உருவாக்கிய மாளிகை இருளிலாடி நின்றது. இருளினாலான தூண்களுக்கு மேல் இருள் குவிந்த குவை மாடம். அங்கு இருண்ட அவைக்கூடம். அதன் நடுவே இருளுருகி எழுந்த பீடமொன்றில் அமர்ந்திருந்தாள் ஒருத்தி.

பதினாறு தடக்கைகளில் படைக்கலங்கள். ஐம்புரிக் குழற்பெருக்கு. அனல்விழிகள். இடியெனச் சூழ்ந்த குரலில் “எங்கு வந்தாய்?” என்றாள். “உன்னை இழுத்துச்சென்று என் அரசன் அவை முன் நிறுத்த வந்துள்ளேன். நான் அரசகாவலன்!” என்றேன். “சென்று சொல்க! தன் நெஞ்சு பிளந்து என் காலடியில் குருதி கொடுக்க உறுதிகொண்டவன் எவனோ அவன் எழுக என்று. ஒருதுளியேனும் எஞ்சாமல் மாமயிடனுக்கு தன்னை அளித்தவன் எவனோ அவன் வருக என்று” என்றாள். “ஆம், அன்னையே” என்றேன். தலைவணங்கி இங்கு மீண்டேன்.

துரியோதனன் “அவளது மாயங்கள் அளவிறந்தவை. அத்தனை உளமயக்குகளுக்கு முன்பும் நின்றிருப்பது விழிமூடாமை ஒன்றே. அஞ்சாதவனை ஆட்கொள்ளும் மாயமென்பது தேவரும் கந்தர்வரும் அறியாதது. தம்பியரே, உங்களில் எவர் சென்று அவளை இழுத்துவர முடியும்?” என்றான். அக்கணமே துச்சாதனன் கைகளைத் தூக்கி “நான் சென்று இழுத்துவருகிறேன், மூத்தவரே. அதற்குரியவன் நானே” என்றான்.

“ஆம், மாமயிடன் பேருருக்கொண்ட வடிவன் அவன்” என்றான் விகர்ணனை நெருங்கி நின்ற மகிடன். “அவன் என்னைக் கண்டதுமே ஆடியில் நோக்குபவன்போல் உணர்ந்து முகம் மலர்ந்தான். அரசனும் அவனுக்கு ஒரு படி கீழேதான்.” விகர்ணன் “ஏன்?” என்றான். “நூறுமுறை அணுகியே அரசனை வென்றேன். அவன் மடியிலிருந்து அக்கரிய மகளை எளிதில் அகற்ற என்னால் முடியவில்லை” என்றான் மகிடன். “வலத்தொடையில் அமர்ந்திருந்தாள். தாமரைநூல் அது. ஆனால் விண்ணவரும் அசுரரும் இழுத்த வாசுகி போன்றது.”

அவைநிறைத்த பல்லாயிரவர் “ஆம், செல்க! செல்க! இழுத்துவருக அவளை” என்று கூவி ஆர்த்தனர். இருகைகளையும் விரித்து அலையலையென நடனமிட்டபடி “சென்று வருக! அவளை கொண்டு வருக!” என்றனர். புடைத்த தோள்களுடன் திமிறெழுந்த நடையுடன் துச்சாதனன் அவை விட்டு வெளியே சென்றான்.

[ 19 ]

துச்சாதனன் புறமாளிகையின் வாயிலுக்கு வந்தபோது அங்கு மாயை அவனுக்காக காத்து நின்றிருந்தாள். உடலெங்கும் தசைகள் எழுந்து இறுகி அமைந்து அலைபாய, மதம் நிறைந்த விழிகள் சேற்றில் குமிழிகளென உருள, அறியாத ஒழுக்கொன்றால் அடித்துவரப்பட்டவன் போல அணுகிய அவன் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்து “எங்கே அவள்? எங்கே இந்திரப்பிரஸ்தத்தின் இழிமகள்? அவளை அவைக்கு இழுத்துவரும்படி அரசரின் ஆணை” என்றான்.

மாயை தலைவணங்கி புன்னகைத்து “தங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்கள், இளவரசே” என்றாள். “ஆம், அந்தத் தன்னுணர்வு அவளுக்கிருந்தால் நன்று. தொழும்பி இருக்கவேண்டிய இடம் அரண்மனையல்ல, புறக்கூடம். அவள் ஆற்றவேண்டியது அடிமைப்பணி. அவையில் அதை அரசர் அவளுக்கு அறிவுறுத்துவார். எங்கே அவள்?” என்றான்.

“வருக!” என்று மாயை தலைவணங்கி அவனை அழைத்துச் சென்றாள். அவள் வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள். வெண்மலர்களை தலையில் சூடி, சங்குவளையும் பாண்டிய நாட்டு வெண்முத்து கோத்த ஆரமும் அணிந்திருந்தாள். இனிய புன்னகையுடன் “இது நீங்கள் அரைமணிக்கிண்கிணி ஒலிப்ப ஆடிவளர்ந்த அரண்மனை என்றே கொள்க என்று அன்னை சொன்னாள். அங்கிருப்பவளும் தங்கள் அன்னையென்றே எண்ணுக!” என்றாள்.

துச்சாதனன் “விலகு! உனது மாயத்திற்கு அடிமைப்படுபவனல்ல நான். எந்த வலையையும் கிழித்துச் செல்லும் வண்டு. நூறு கைகளை தட்டி விலக்கியே என்னை இவ்வண்ணம் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். எங்கே அவள்?” என்றான்.

வெண்சுவர்களும் பால்விழுதென எழுந்த தரையும் வெண்ணெய்த்திரள் போன்ற தூண்களும் நுரையென அலையடித்த திரைகளும் கொண்ட அந்த மாளிகை அஸ்தினபுரியில் அதற்குமுன் இருந்ததா என்று அவன் ஐயம் கொண்டான். பெண்கள் குருதிவிலக்குக்கு சென்றமைவது தாழ்ந்த கூரையும் கரிய தூண்களும் கொண்ட புறச்சாய்ப்புகளில்தான் என்று அறிந்திருந்தான். இது இவள் அளிக்கும் விழிமயக்கு. இதை வெல்லும் ஒரே வழி என் ஊன்விழிகளுக்கு அப்பால் உளவிழி இல்லாமல் ஆக்கிக் கொள்வதே. ஆம், என் ஊன் விழியால் மட்டுமே இதை பார்ப்பேன். எனது வெறுங்கால்களால் மட்டுமே இதன் மேல் நடப்பேன். வெறும் உயிரென்றும் உடலென்றும் மட்டுமே இங்கே நிறுத்துவேன். நான் விழியிழந்த தந்தையின் மைந்தன்.

தன்னை தான்வகுத்து தன்மேல் சுமத்தியபடி அவன் நடந்தான். இனிய இசை சூழ்ந்த அறை. அதன் முதல்வாயிலை திறந்தபோது அங்கு வெள்ளியலையென கீழாடையும் வெண்பட்டு மேலாடையும் அணிந்து தரையில் விரிக்கப்பட்ட ஈச்சை மரப்பாயில் அமர்ந்து தன்முன் சுண்ணத்தால் வரையப்பட்ட நாற்களத்தில் மலர்மொட்டுகளை வைத்து தன்னுடன் தான் ஆடிக்கொண்டிருந்தாள் திரௌபதி. காலடிகேட்டு அவள் விழிதிருப்பி அவனை நோக்கி இனிய புன்னகையுடன் “வருக மைந்தா, உனக்கென்றே காத்திருந்தேன்” என்றாள்.

உரத்த குரலில் “எழுக! இழிமகளே, உன்னை என் தமையன் அரசவைக்கு இழுத்து வர ஆணையிட்டிருக்கிறார்” என்றான். “இழுத்துச்செல்ல வேண்டியதில்லை. உன் விழைவுப்படி உடன் வரவே இருந்தேன்” என்றாள். எழுந்து தன் ஆடை திருத்தி “இந்த நாற்களத்தில் நீல நிற மொட்டாக உன்னை வைத்திருந்தேன். இதனுள் நீ நுழையும் வாயில் எப்போதும் திறந்திருந்தது” என்றாள்.

“நீ மாயம் காட்டுகிறாய். இவ்வுளமயக்குக்கு ஒருகணமும் ஆட்படேன். எழுக! இல்லையேல் உன் கூந்தல் பற்றிச் சுழற்றி இழுத்துச்சென்று அவை நிறுத்துவேன்” என்றான் துச்சாதனன். அவள் தன் குழலை அள்ளிச் சுழற்றி முடிந்து “அதற்குத் தேவையில்லை. உன்னுடன் வருவதற்கு விழைவு கொண்டிருக்கிறேன்” என்றாள் கனிந்த புன்னகையுடன். “ஏனெனில் இது உனது களம். இங்கு நின்றாடுவதற்காகவே என் உடலில் இருந்து பிரிந்தவன் நீ” என்றாள்.

நடுக்கு ஓடிய குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றான். “நெடுநாட்களுக்கு முன் கன்னியென காந்தாரத்தில் நான் இருந்தேன். அன்று என்னை கீழ்குலத்தாள் என்று துறந்து சென்றான் மகதத்து மன்னன். அச்செய்தி என்னை வந்தடைந்த கணம் என்னுள் ஊறிய ஒரு துளி நச்சின் கசப்பை அடிநாவில் உணர்ந்தேன். கற்றவற்றால் தேர்ந்தவற்றால் மூதன்னையர் கொடுத்தவற்றால் அதை இனிதென ஆக்கி உண்டு செரித்தேன். கடந்து கடந்து வந்து மறந்தபின் கண்ணிழந்தவனை கணவன் என்று அடைந்தபின் கருநிலவெழுந்த இரவொன்றில் என் கனவில் நீ முதல் முறையாக எழுந்தாய். கரிய உடல். கையில் கதாயுதம். கண்களில் மதமும் மூச்சில் ஊன்வாடையும். உன் கால்களில் குளம்புகளும் தலையில் நீண்டு வளைந்த கரிய கொம்புகளும் இருந்தன. அதன் பின் என்றும் என் உடலுக்குள் நீ வாழ்ந்தாய். உடல் விட்டு பிரிந்து இளமைந்தனாக எழுந்தாய். நீ காத்திருக்கிறாய் என்றறிந்தேன். உனக்கென மறுமுனையில் நானும் காத்திருந்தேன்.”

“போதும்! இனி ஒரு சொல் எடுக்காதே! என்னை பித்தனாக்க எண்ணுகிறாய்” என்றான் துச்சாதனன். “கும்பக்களத்தில் நின்று நீ ஆடிச் சோர்ந்து வீழும் அப்பன்னிரு பகடைக்களத்தில் சிம்மக்களத்தில் நின்றிருக்க நான் வந்தாக வேண்டும்” என்றபடி அவள் அவன் அருகே வந்தாள். சினந்து உரக்க “பித்தெழுந்துவிட்டதா உனக்கு? நீ பேசுவது என்னவென்றறிவாயா?” என்றான் துச்சாதனன். உரக்க நகைத்து “அச்சத்தில் அறிவிழந்துவிட்டாய். அல்லது இங்கு மதுவருந்தி களிகொண்டிருக்கிறாய். கீழ்மகளே, இவ்வண்ணமே நீ வந்து என் தமையனின் பகடைக்களத்தில் நிற்கவேண்டும்” என்று கூவியபடி  பாய்ந்து குழலைப்பற்றினான்.

அவள் அன்னத்தின் இறகென முகில்கீற்றென நிலவொளியென எடையற்றிருந்தாள். தன் ஒற்றைக்கையால் நிலம் தொடாது தூக்கி இழுத்தபடி அவன் நடந்தான். ஏழு அடிவைத்து அம்மாளிகை விட்டு வெளிவந்ததுமே சித்தம் குழம்பி கொந்தளித்து கனவிலிருந்து விழித்துக்கொண்டான். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்ததுமே நிலையுறுதிகொண்டான். எளிய சாய்ப்புமாளிகையின் வாயிலுக்கு வெளியே சேடியரும் செவிலியரும் அஞ்சி உடல் நடுங்கி விதிர்த்து நோக்கி நின்றிருந்தனர். சிலர் நெஞ்சறைந்து கூவி அழுதனர். சிலர் கால்தளர்ந்து விழுந்தனர். காவலர் விறைத்த உடலோடும் இறுகப்பற்றிய படைக்கலங்களோடும் சிலைத்து நின்றிருந்தனர்.

அவள் மெல்லிய உதடசைவுகளுடன், பாதி சரிந்த விழிகளுடன், மெய்ப்பு கொண்டு மெல்ல அதிர்ந்த கரிய உடலுடன் அவன் கையில் இருந்தாள். அவள் குழல் பற்றி இழுத்து இடைநாழியினூடாக அவை நோக்கி நடந்தான். கால் தளர்ந்து அவன் கைவிசையால் விரல் இழுபட வந்தாள்.  உறுமியபடியும் உரக்க நகைத்தும் தரையில் காறித்துப்பியும் எடைஒலிக்கும் காலடிகளை எதிரொலி தொடர அவன் நடந்தான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 85

[ 16 ]

கோல் விழுந்துகொண்டிருந்த முரசின் உட்பக்கமென முழங்கிக்கொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்திற்குள் கூப்பிய கைகளுடன் காளிகன் நுழைந்தான். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “அமைதி! இதோ வருகிறான் சூதன்! கேட்போம் அவனை!” என்றான். “அமைதி! அமைதி!” என்றனர் அவை முழுக்க நிறைந்திருந்த அவனுடைய மாற்றுருக்கள். மெல்ல அவை அடங்கியது. காளிகன் கூப்பிய கைகளை விலக்காமலேயே படிகளில் ஏறி துரியோதனன் அருகே வந்து நின்றான்.

“எங்கே அவள்? அஸ்தினபுரியின் முதற்தொழும்பி…” என்றான் துரியோதனன். காளிகன் முகம் சிறுகுழந்தையென உவகையில் மலர்ந்திருந்தது. சொல்லெடுக்க இயலாமல் உதடுகளை அசைத்தான். கர்ணன் துரியோதனனை நோக்கி கைகாட்டிவிட்டு “சொல்! நீ அங்கு என்ன பார்த்தாய்?” என்றான். அவன் மேலும் சொல்லுரைக்க  இயலாமல் உதடுகளை அசைத்தான். கர்ணன் சினத்துடன் “சொல், மூடா! என்ன கண்டாய் அங்கு?” என்றான்.

காளிகன் “நான் மகளிர் மாளிகைக்கு சென்றேன்” என்றான். “ஆம், அதை அறிவோம். அங்கு என்ன கண்டாய்? அவள் என்ன உரைத்தாள்? சொல் இந்த அவைக்கு!” என்றான் கர்ணன். “அரசே, அவையீரே, இங்கிருந்து கிளம்புகையில் அரசரின் ஆணையை சென்னி சூடிச் செல்லும் எளிய ஏவலன் என்றே என்னை உணர்ந்தேன். நன்றோ தீதோ அறமோ மறமோ ஒன்று தேரும் உரிமை என்போல் ஏவலருக்கில்லை. ஏழு தலைமுறையாக எங்கள் தலையை அஸ்தினபுரி அரசரின் காலடியில் வைத்தவர்கள் நாங்கள். ஆணையிடப்பட்டதை அவ்வண்ணமே செய்யும் எண்ணம் ஒன்றே என்னுள் இருந்தது. என்னுடன் ஏழு படைவீரர்களை அழைத்துக்கொண்டு உருவிய வாளுடன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி இருந்த மகளிர் மாளிகைக்கு சென்றேன். என் எதிர்வந்த செவிலியிடம் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி எங்கே என்று கேட்டேன்.”

அரசி குருதிவிலக்காகி இருப்பதாகவும் வடக்குத் துணைமாளிகையில் ஒதுக்கத்தில் அமர்ந்திருப்பதாகவும் சொன்னார்கள். அங்கு ஆண்களுக்கு நுழைவொப்புதல் இல்லை என்றார் காவலர்தலைவர். “நான் அரசரின் ஏவலன், ஆணை பெற்று வந்தவன், அஸ்தினபுரியின் எப்பகுதியிலும் நுழைவேன், எனக்கு ஒப்புதல் தேவையில்லை. விலகுக!” என்றபடி வீரர்களை விலக்கி முன்னால் சென்றேன். “என்ன இது? இது எவ்வண்ணம்?” எதிரே கைவிரித்து வந்த முதுசெவிலியை “விலகு…! அரசாணை” என  ஆணையிட்டு பிடித்து ஒதுக்கிவிட்டு முன்னால் நடந்தேன்.

எனக்குப்பின்னால் பதறியபடி அவள் வந்தாள். “நில்லுங்கள்! நான் சொல்வதை கேளுங்கள்! இது முறையல்ல. பெண்களின் ஒதுக்கமென்பது ஏழு தெய்வங்களால் காக்கப்படும் இடம். அங்கு மங்கையர் அன்னையராக மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். அங்கு ஆண்கள் நுழையலாகாது என்பது ஆன்றோர் வகுத்த விதி” என்று அவள் கூவினாள்.

“வாயை மூடு, இழிபிறவியே! பிறிதொரு சொல் உரைத்தால் உன் நாவை வெட்டி இங்கு வீசுவேன்” என்று கூவியபடி நான் மேலே நடந்தேன். அங்கிருந்த காவலர்கள் வாளுடன் என்னை எதிர்கொள்ள அஸ்தினபுரியின் ஆணைக் கணையாழியை தூக்கிக்காட்டி “இது அரசரின் ஆணை” என்றேன். படைக்கலம் தாழ்த்தி அவர்கள் வழிவிட்டனர். ஒதுக்கமாளிகையை நோக்கிச் சென்று அதன் வாயிலில் இருந்த செவிலியிடம் “வரச்சொல் உன் அரசியை!” என்றேன். இருகைகளையும் விரித்து அவள் என்னை தடுத்தாள். “இதற்கப்பால் ஆண்களுக்கு ஒப்புதல் இல்லை. இங்கு உங்களை தடுத்து நிறுத்த வேண்டியது என் பொறுப்பு” என்றாள்.

“விலகு! இல்லையேல் உன் தலை இங்கு உருளும்” என்றேன். “அவ்வண்ணமே ஆகுக! என்றேனும் ஒருநாள் அரசியின்பொருட்டு உயிர் துறக்க உறுதிகொண்டவள் நான். இழிமகனே! இங்கு நாங்கள் எழுவர் இருக்கிறோம். ஏழு பெண்டிரின் தலைகொய்த குருதியில் நடந்தே நீ இதற்கப்பால் அரசியை அணுக முடியும்” என்றாள்.

முதல் நின்றவள் நெஞ்சில் பாய்ச்சுவதற்காக எனது உடைவாளை உருவினேன். அப்போது உள்ளிருந்து அரசியின் பெருந்தோழி மாயை வந்தாள். “அவனை உள்ளே அனுப்பும்படி அரசியின் ஆணை” என்றாள். என்னைத் தடுத்த செவிலி திகைப்புடன் திரும்பி “உள்ளே அனுப்புவதா? அவ்வண்ணம் ஒரு முறைமையில்லையே…!” என்றாள். மாயை “அவன் வருக என்றார் அரசி” என்றாள். செவிலி “குருதிவிலக்கான பெண்ணை அவள் இளமைந்தரன்றி பிற ஆண்கள் நோக்கலாகாது” என்றாள்.

பெருந்தோழி புன்னகைத்து “வந்திருப்பது தன் மைந்தனே என்றார் அரசி” என்றாள். விழிகளில் குழப்பத்துடன் அவர்கள் வழிவிட்டனர். பெருந்தோழி மெல்லடி வைத்து என்னை அணுகி “வருக, மைந்தா!” என்றாள். நான் என் கையில் இருந்த கத்தியை பார்த்தேன். அது ஒரு தாழைமலர் இதழாக மாறிவிட்டதுபோல் விழிமயக்கேற்பட்டது.

அவளை நோக்கி “நீ ஏதோ மாயம் செய்கிறாய்” என்றேன். என் குரல் சிறுமைந்தனின் குரல் போன்றிருப்பதாக தோன்றியது. அவள் இனிதாக புன்னகைத்து “என்னை மாயை என்பார்கள். வருக!” என்று என் கைகளை பற்றினாள். பிறிதொரு கையால் என் தோளை அணைத்து “வா!” என்றாள். மறைந்த என் அன்னையின் குரலென்றே அதை கேட்டேன்.

அரசே, சிற்றடி எடுத்து வைத்து சிறுவன் போலவே அவளுடன் சென்றேன். நான் சென்றது எவ்விடம் என்று இந்த அவையில் என்னால் சொல்ல முடியாது. அப்பெண் மாயம் கற்றவளா? மகேந்திர வித்தையால் என் உள்ளத்தைக் குழைத்து காட்சிகளையும் ஒலிகளையும் தானே அமைத்து எனக்களித்தாளா? நான் நுழைந்தது ஒதுக்கறையின் முதல் வாயிலை என்று உறுதிபடச் சொல்வேன். சென்ற வழியோ நான் இதுவரை அறிந்திலாதது.

அரசே, அங்கே மெல்லிய இசையொன்று சூழ்ந்திருக்க கேட்டேன். பீதர் நாட்டு வெண்பட்டாலானவை போன்று சுவர்கள் ஒளிவிட்டன. மலைவாழை அடிபோல வெண்பளிங்குத் தூண்கள். பால்நுரை போன்ற திரைச்சீலைகள். என் ஆடிப்பாவை என்னை நோக்கிய வெண்தரை. என் விழிகள் பாலென பட்டென பளிங்கென விரிந்த வெண்மையால் முற்றிலும் நிறைந்திருந்தன. அவ்வினிய இசை என்னை வழிகாட்டி அழைத்துச் சென்றது.

என் கைபற்றி உடன்வந்தவள் அந்த இசையின் பருவடிவமென்று அதிர்ந்து கொண்டிருந்தாள். “வருக!” அருகே என் செவிக்குள் ஒரு குரல் ஒலித்தது. நான் சென்று நின்ற அவையில் ஓர் அரியணையில் வெண்ணிறப் பட்டாடையும் ஒளிவிடும் நீர்த்துளி வைரங்களும் இளநீலமோ வெண்மையோ என்று விழிதிகைக்கும் மணிமுடியும் அணிந்தவளாக அன்னை அமர்ந்திருக்கக் கண்டேன். நானறிந்த அத்தனை பெண்முகங்களும் ஒரு முகமானது போல். திருமகளா? தெற்கு ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள ராதையா? மகாகௌரியா? புலரி ஒளிகொண்ட சாவித்ரியா? அல்லது என் மறைந்த அன்னையா? மூதன்னையரா? என் மடிக்கு கன்னிமுகம் சூடி வந்த மனைவியா? கருக்குழந்தையென என் கையில் தவழ்ந்த என் மகளா? அல்லது இந்திரப்பிரஸ்தத்தின் அரசியேதானா? அறியேன்.

அவ்விழிகள் மிக கனிந்திருந்தன. முலையூட்டிக் கொண்டிருக்கும் அன்னையின் விழிகள் மட்டுமே அத்தனை கனிந்திருக்கும். இவ்வுலகில் நிகழ்பவை அனைத்தையும் பொறுத்தருளும் பேரருள் கொண்டவை அவை. “எதற்கென வந்தாய், மைந்தா?” என்று அவள் கேட்டாள். அவளைச் சூழ்ந்து நின்றிருந்தனர் நூற்றெட்டு வெண்ணிறக் கன்னியர். என் உள்ளத்தை உணர்ந்தபின் என்னால் அவள் கால்களைத்தான் நோக்க முடிந்தது. குளிர்ந்தவை. மீன்விழிகள் என மின்னும் வைரங்கள் பதித்த கணையாழிகளை அணிந்திருந்தாள். மண்டியிட்டு அக்கால்களை நோக்கினேன். அவ்வைரங்கள் ஒவ்வொன்றும் விழிகளென மாறி என்னைப்பார்த்து கனிந்து புன்னகைத்தன. “சொல்!” என்றாள்.

“அன்னையே, அங்கு அவையில் மாமன்னர் துரியோதனர் தன்னிலிருந்து தான் ஊறிப்பெருகி பேருருக் கொண்டு எழுந்து நின்றிருக்கிறார். உங்களை அவைக்கு இழுத்துவரும்படி ஆணையிட்டார்” என்றேன். உரக்க நகைத்து “அவ்வாடலில் நான் மகிழ்ந்தேன் என்று அவனிடம் சொல். மைந்தரின் மடமையும் ஆணவமும் அன்னைக்கு உவப்பளிப்பதே. அவனிடம் மூன்று வினாக்களை மட்டுமே நான் எழுப்பினேன் என்று சொல்” என்றாள். “அருள்க, அன்னையே!” என்றேன்.

“தொழும்பியராக ஒரு குலப்பெண்ணை அவன் அவைக்கு கொண்டு செல்லும்போது என்றேனும் ஒருநாள் தன் அன்னையும் உடன்பிறந்தாளும் துணைவியரும் அவ்வண்ணம் கொண்டு செல்லப்படுவதும் அரசமுறையே என்று உணர்கிறானா? இத்தருணத்தில் அவன் வென்று தருக்க எண்ணுவது இந்திரப்பிரஸ்தத்தின் அரசியையா அல்லது தான் தன்னுள் விழையும் முதற்பெண்ணையா? பெண்ணை எவ்வழியிலேனும் ஆண் முற்றிலும் வெல்லமுடியுமென்று அவன் எண்ணுகிறானா? கேட்டுவா!” என்றாள்.

“ஆம், இறைவியே! அவரிடம் அவ்வினவைக் கேட்டு மீள்கிறேன்” என்றேன். “என் துணைவனென அங்கிருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் அரசனிடம் கேள். அவன் தன் நாட்டை வைத்திழந்தான். பின்னர் தம்பியரை வைத்திழந்தான். தன்னையே வைத்திழந்தானா? தன்னையிழந்தவன் எவ்வண்ணம் என்னை வைத்திழக்க முடியும்? தன் உடல்மேலும் உயிர்மேலும் உரிமை இல்லாதவன் பிறிதொருவள் மேல் எவ்வுரிமையை கொண்டான்? எங்ஙனம் என்னை களப்பணயமென வைத்தான்?” என்றாள். “ஆணை அன்னையே, அவ்வண்ணமே கேட்கிறேன்” என்றேன். தலைவணங்கி திரும்பி வந்தேன்.

“அரசே, பல்லாயிரம் வெண்தாமரை மலர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி பூத்துச் சொரிந்த தடாகம் ஒன்றின்மேல் கால்படாது நடந்து வரும் உணர்வை அடைந்தேன். அரண்மனை முற்றத்திற்கு வந்து விழுந்தேன். விண்ணிலிருந்து உதிர்ந்த கந்தர்வன் போல் இருந்தேன். எங்கிருக்கிறேன் என்றறியவே நெடுநேரமாகியது. அங்கு நின்றிருந்த காவலர் என்னை இருகைகளையும் பற்றித்தூக்கி “என்ன நிகழ்ந்தது?” என்றனர். “அறியேன். என்னை அரசரிடம் கொண்டு செல்லுங்கள்” என்றேன்.

இரு கண்களிலும் கண்ணீர் வார தலைக்கு மேல் கைகூப்பி காளிகன் சொன்னான் “அன்னையை கண்டுவிட்டேன். இப்பிறவியில் இனி விழிகள் காண ஏதுமில்லை.” துரியோதனன் இதழ்கள் வளைய சிரித்து “நான் எண்ணினேன். அவளிடம் இருப்பது ஆட்சித்திறனும் சூழ்ச்சித்திறனும் மட்டுமல்ல, நாமறியா மாயத்திறன் ஒன்றும் கூட” என்றான். கர்ணன் “ஆம் அரசே, தொன்று தொட்டே பாஞ்சாலம் இந்திரமாயத்திற்கும் மகேந்திர மாயத்திற்கும் புகழ் பெற்றது” என்றான்.

சினம் எழ “மாயத்தால் வெல்லப்படுவதல்ல அஸ்தினபுரியின் அரசவை” என்றான் துரியோதனன். “அனைத்து மாயங்களையும் அறுக்கும் விசை மறுத்துத் தருக்கி நிற்கும் ஆண்மைதான். அவளுக்கு ஆண்மை என்றால் என்னவென்று காட்டுகிறேன்.” திரும்பி பாண்டவரை நோக்கி இளிவரலாக நகைத்து நிலத்தில் துப்பி “இப்பேடிகளை மட்டுமே அறிந்திருக்கிறாள். ஆகவேதான் என் அவைக்களத்துடன் சொல்லாடுகிறாள்” என்றான்.

“காமிகா!” என்று துரியோதனன் அழைத்தான். “அவன் படைத்தலைவன். ஷத்ரியன்!” என்றான். காளிகனை நோக்கி “வெற்று உளமயக்குக்கு விழியளிக்கும் சூதன் நீ. இச்செயலுக்கு நீ உகந்தவனே அல்ல. வீரர்களே, இவனை அகற்றுக! இனி அவளிடம் செல்ல உளம் வைரம்பாய்ந்த ஷத்ரியன் எழுக!” என்றான்.

விகர்ணன் அவன் உடல் அறியாக் காற்றால் கொந்தளிக்கும் காட்டுப்புதர்மரம் போல அவை நின்று ஆடுவதை நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை மானுடருக்குள்ளும்  அவைநடிகன் ஒருவன் வாழ்கிறான். தன் அகத்தை அசைவென குரலென உணர்வென மிச்சமின்றி கொட்டி நிரப்ப விரும்புபவன். அகமே புறமென மாறி நின்று கனல்பவன். அவனை கட்டுப்படுத்தும் சித்தச்சரடொன்று அறுந்துவிட்டால் எழுகிறான். ஆடத்தொடங்கிவிட்டால் சூழ்ந்திருக்கும் அனைத்தையும் இணைத்து அவையொன்றை அமைக்கிறான். அதில் தன் வெளிப்பாட்டை தானே உணர்ந்து சுவைகண்டபின் அவன் அடங்குவதில்லை.

காமிகன் வந்து தலைவணங்கி “ஆணை அளியுங்கள், அரசே!” என்றான். துரியோதனன் “என்ன கேட்டாள்? தன்னை வைத்திழந்தபின் அவளை வைத்திழக்க அரசனுக்கேது உரிமை என்றா? அதோ நின்றிருக்கிறான் அவளை வைத்தாடிய கீழ்மகன். அவனிடமே கேள்!” என்றான். தருமனை நோக்கி “சொல், அடிமையே! உன் மறுமொழி என்ன?” என்றான். தருமன் தலைகுனிந்து உடல் மட்டும் சிலிர்த்துக்கொண்டிருக்க அசையாது நின்றார். “நன்று! அடிமை அரசுசூழ்தலில் பங்கு கொள்ளக்கூடாது. அடிமையின் நாவில் அமையவேண்டும் முதற் தளை” என்று துரியோதனன் சிரித்தான்.

காமிகனை நோக்கி “அவள் அவை நின்று சொல்சூழ விழைகிறாளா? நெறிநூல் கேட்க விரும்புகிறாளா? சொல் அவளிடம், தன்னை வைத்து அவன் இழந்தான் என்றால் பராசர ஸ்மிருதியின்படி அப்போதே அவளும் அடிமையாகிவிட்டாள். லகிமாதேவியின் ஸ்மிருதியின்படி எப்போதும் பெண்ணென்று எஞ்சும் அவள் தன் கைபிடித்து உரிமைகொண்ட கணவன்  சூதில் வைத்திழந்தபோது அடிமையானாள்” என்றான். “அதை மீறவேண்டுமென்றால் இங்கு வந்து சொல்லட்டும், இவர்கள் ஐவரும் அவள் கொழுநர்கள் அல்ல என்று… ஆம், ஐந்துமுகத்தாலியை கழற்றி அவைமுன் வீசி சொல்லட்டும்!”

கர்ணன் “நாங்கள் ஏற்று ஒழுகுவது நாரதஸ்மிருதியை என்று சொல். எந்த நெறியின்படி ஐவருக்கும் துணைவியாகி அவள் மைந்தரைப் பெற்றாள் என்று சென்று கேள். ஒருவனைப்பற்றி ஓரகத்திருப்பவளே கற்புள்ள பெண் என்கின்றன எங்கள் நெறிகள். எங்கு எதன்பொருட்டு ஒரு காலடி எடுத்து வெளியே வைத்தவளாயினும் அவள் பரத்தையே. இங்கு அவள் பரத்தையென்றே அழைத்துவரப்படுகிறாள். பலர்பார்க்கும் அவைமுன் பரத்தை வந்து நிற்பதில் முறைமீறலென ஏதுமில்லை” என்றான்.

துரியோதனன் “ஆம்! அதுவே எங்கள் மறுமொழி” என்றான். அரியணையில் சென்றமர்ந்து “சென்று சொல் அச்சிறுக்கியிடம்! அவள் என்னிடம் கேட்டவற்றுக்கு என் மறுமொழி இது. என் அன்னையர், உடன்பிறந்தோர், துணைவியர், மகளிர்  ஆண்மை கொண்ட பெருங்குடிப்பிறந்த பெண்கள். பெண் சிம்மம் நாய்முன் தலைவணங்கி நிற்காது. நின்றதென்றால் அது சிம்மமே அல்ல. அது வாலாட்டி கால்நக்கி குழைவதே நெறி.  இதோ, குடிப்பெண்ணை பகடைப்பணயம் வைத்து ஆடி நின்றிருக்கும் இழிமகனின் துணைவியென ஆனதினாலேயே குலத்தையும் குடிப்பெருமையையும் பெண்ணெனும் தகைமையையும் அவள் இழந்துவிட்டாள்” என்றான்.

“ஆம், என் குடிப்பெண்டிர் எவரேனும் இத்தகைய ஓர் இழிமகனை கைபிடித்து இல்லறம் கொள்வார்களென்றால் இதைவிட பன்னிருமடங்கு இழிவை அவர்கள் சூடுவார்களாக!” என்று அவன் கூவினான். மூச்சிரைக்க கைகளை தட்டிக்கொண்டு துரியோதனன் சொன்னான் “என்ன சொன்னாள்? இவ்வவையில் நான் இழுத்து வரப்போவது எவளை என்றா? ஆம். இங்கு சூழ்ந்துள்ள அத்தனை பேரும் அறியட்டும். அவளை என் நெஞ்சுக்குள்ளிருந்துதான் இழுத்து இங்கு கொண்டுவந்து அவைமுன் விடவிருக்கிறேன். குருதி சிதற ஈரல்குலையை பிழிந்தெடுத்து வைப்பதுபோல அதை செய்கிறேன்.”

குரல் உடைய நெஞ்சை அறைந்து அவன் கூவினான் “எங்கோ அன்று அவளிருந்த அரியணை ஏதென்று அறிந்திருந்தால் இவ்வண்ணம் இழிந்திருக்கமாட்டாள். சென்று சொல், அந்தப் பொதுமகளிடம். அவள் கால்களில் பணிந்த முதல் தலை என்னுடையதென்று. கன்னியென அவள் காலடிகள் பதிந்த மண்ணனைத்தும் என் நெஞ்சம் மலர்ந்து விரிந்ததே என்று!” அவன் உதடுகள் இறுக கழுத்துத் தசைகள் அதிர சொல் அடைத்து திணறினான்.

பின்னர் மூச்சை மீட்டு “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை அல்ல.  பாஞ்சாலத்துக் குலமகளை  அல்ல. பாண்டவர்களின் தேவியையும் அல்ல. பெண்ணென்று வந்து என் முன் பெருகி எழுந்து முழுமை காட்டிய ஒன்று. கட்டைவிரல் முனையாலேயே முழுதும் தன்னைக் காட்டும் பெரிது. எதன் பொருட்டு ஆண் முழுதமைந்து வாழமுடியுமோ, எதற்காக சிரமறுத்து வீழமுடியுமோ, எதன் பொருட்டு விண்ணையும் மண்ணையும் புல்லெனக் கருதமுடியுமோ அதுவாக அமைந்த ஒன்று. பெரும்பெண்மை. பேரன்னை. அறுத்து குருதி பெருக நான் என்றோ வீசிய ஒன்றை கடக்கிறேன். ஆம், அதையே இழுத்து வந்து இங்கு நிறுத்த விரும்புகிறேன். அவள் முகத்தை நோக்கி நீ என் அடிமை என்று சொல்ல விரும்புகிறேன். அவள் தலைமேல் கால் வைத்து மிதித்தேறியே நான் நான் என்று கூவ விரும்புகிறேன்” என்றான்.

“சென்று சொல், அழைப்பது அஸ்தினபுரியின் அரசன் என்று. காலவடிவன். கலி எழுந்தவன். கொதிக்கும் குருதிக்கலமென தன் தலையை சுமந்தலையும் வெறியன்” என்றான் துரியோதனன். ஒருகணம் தளர்ந்து மேலும்  வெறிகொண்டு இருகைகளையும் விரித்து தூதனை நெறித்துக் கொல்ல விழைபவன் போல அருகே சென்று தொண்டை நரம்புகள் புடைக்க இரு கண்களும் நீர் கொண்டு கசிந்து வழிய கூவினான் “என்ன கேட்டாள்? பெண்ணை வெல்ல ஆணால் முடியுமா என்றா? முடியாதென்றே ஆகட்டும். ஆம், ஒருபோதும் இயலாதென்றே ஆகட்டும். ஆனால் இப்புவியில் பெண்ணென்றும் ஆணென்றும் பிரிந்து வந்த நாள் முதல் அவ்வெல்லமுடியாமைக்கு முன் நெஞ்சறுத்து குருதி பெருக்கி விழுந்த பல்லாயிரம் ஆண்களில் ஒருவனாக நான் இருக்கிறேன். சென்று சொல்! ஆம், நான் மகிஷன், நான் நரகன், நான் ராவணப்பிரபு!” அவன் நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்து நகைத்தான். “ஆம்! ஆம்! சென்று சொல், மூடா!”

காமிகன் “ஆம் அரசே, ஆணை!” என்று தலைவணங்கி வெளியேறினான். தளர்ந்தவன் போல அரியணையில் விழுந்து தன் தலையை கையால் பற்றிக்கொண்டான் துரியோதனன்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 84

[ 14 ] 

தென்மேற்கு மூலையிலிருந்து ஒளிரும் விழிகளுடன் கரிய கன்னியொருத்தி எழுவதை வடமேற்கு மூலையில் அமர்ந்த அனலோன் முதலில் பார்த்தான். வெருண்டு அவன் சீறியபோது தேவர்கள் அனைவரும் அத்திசை நோக்கி திரும்பினர். நாகங்கள் சினந்து உடல் சுருட்டி பத்தி விரித்து விழி கனன்றன. ஐம்புரிக்குழலும் வலக்கையில் தாமரையும் இடக்கையில் மின்கதிர்படையும் கொண்டிருந்தாள். அவள் குழல் நீரலையென பறந்தது. கால்களில் செந்தழல் வளையங்களென கழல்கள் ஒளிவிட்டன.

அவள் இடப்பக்கத்திலிருந்து கோரைப்பற்களும் உகிரெழுந்த பதினெட்டு கைகளும் கொண்ட பெருந்தெய்வமொன்று தோன்றியது. வலப்பக்கம் செந்தழல் உடலுடன் புகைச்சுருள்குவை என குழல்பறக்கும் தெய்வம் எழுந்தது. ஒன்று பலவாக அவர்கள் பெருகிக்கொண்டே இருந்தார்கள். தேவர்கள் ஒருவரை ஒருவர் கைபற்றிக் கொண்டனர். அரக்கர்கள் மெல்ல ஒருவரை ஒருவர் அணுகி ஒற்றை கரிய படலமென மாறினர். நாகங்கள் ஒன்றுடன் ஒன்று உடல் சுருங்கி ஒரு வடமென்றாகி வளைந்து இறுகி வட்டாயின. நீர்ப்பரப்பில் ஊறிக்கலக்கும் வண்ணப்பெருக்கு போல அத்தேவியர் முழுவானின் வளைவையும் நிரப்பினர். முகிலென மாறி கீழிறங்கி சூழ்ந்தமைந்தனர். அவர்களின் விழிகள் விண்மீன்களென மின்னிக்கொண்டிருந்தன.

சகுனி “ஆடலை இங்கு முடிக்கலாம் என்று எண்ணுகிறேன், அரசே. இனி ஆட தங்களிடம் எதுவுமில்லை” என்றார். தருமன் தன் இருகைகளிலும் நகங்கள் உள்ளே பதிந்து இறுக, இதழ்களை கிழிக்கும்படி பற்களைக் கடித்து அசைவிழந்து அமர்ந்திருந்தார். பன்னிரு பகடைக்களம் கடுங்குளிரால் இறுகியதுபோல் இருந்தது. “இனியொன்றும் இயற்றுவதற்கில்லை. இங்கு முடியட்டும் இந்த ஆடல்” என்று விதுரர் உரக்க கூறினார். சீற்றத்துடன் திரும்பி அவரைப் பார்த்த தருமன் “நிறுத்துங்கள்! ஆட வந்தவன் நான். எதுவரை ஆடுவேன் என்று முடிவு செய்யவும் நானறிவேன்” என்றார். விதுரர் “மைந்தா…” என்று உரக்க அழைத்தார்.

குருதி படிந்த விழிகளுடன் “விலகிச் செல்லுங்கள்! எவர் சொற்களும் எனக்குத் தேவையில்லை. இனியும் ஆட விழைகிறேன்” என்றார் தருமன். சகுனி இதழ்கோட நகைத்து “எதை வைத்து ஆடுவீர்? எஞ்சுவதென்ன? நீங்கள் உட்பட பாண்டவர் ஐவரும் தங்கள் மைந்தர்களுடன் அஸ்தினபுரிக்கு தொழும்பர்களென்று ஆகிவீட்டீர். தொழும்பர்களிடம் செல்வமென ஏதும் எஞ்சமுடியாது” என்றார். உரத்த குரலில் “தொழும்பர்களுக்கும் துணைவியர் உண்டு, மூடா” என்று தருமன் கூவினார். “என் துணைவியை இங்கு பந்தயம் வைக்கிறேன்.”

“துருபதன் மகளை, அனலில் எழுந்த அணங்கை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை பந்தயம் வைக்கிறேன்” என்றார் தருமன். உளவிசை உந்த எழுந்தார். கைகளை விரித்து “ஆம், இதோ என் தேவியை வைத்து ஆடுகிறேன்” என்றார். பித்தனைப்போல சிரித்து கைகளை ஆட்டியபடி அரங்கை சுற்றிநோக்கினார். “இனி ஒன்றும் இல்லை. இறுதியை பந்தயம் வைக்கிறேன். அவ்வுலகை பந்தயம் வைக்கிறேன். மூதாதையர் ஈட்டிய அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன்.” சிரித்துக்கொண்டே திரும்பி “சொல்லும்! எதிர் பந்தயம் என எதை வைக்கிறீர்?” என்றார்.

சகுனி ஆழ்ந்த மென்குரலில் “அரசே, நீங்கள் இழந்த அனைத்தையும் பந்தயமென வைக்கிறோம். உடன் அஸ்தினபுரி நகரை, அரசை, அதிலமைந்த அரியணையை, அதிலமர்ந்த அரசரை, அவ்வரசரின் உடன்பிறந்தோர் அனைவரை, அவர்களின் மைந்தர்கள் ஆயிரவரை, அக்குலத்து மகளிர் அனைவரை, மூதாதையர் ஈட்டிய புகழை, நல்லூழை, தெய்வங்கள் அருளிய அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.

தருமன் பால்நுரை குளிர்நீர் பட்டதென அடங்கினார். கண்களில் நீர்மை மின்ன பெருமூச்செறிந்தார். “ஆம், அனைத்தும் தேவை. இவ்வுலகே தேவை, என் தேவிக்கு நிகராக. இங்கு எழுக மானுடரை எண்ணி நகைக்கும் தெய்வங்கள் அனைத்தும். இவ்வாடல் எங்கு சென்று முடிகிறதென்று பார்ப்போம். வென்றால் இப்பீடத்திலிருந்து தேவனென எழுவேன். வீழ்ந்தால் நெளியும் இழிபுழுவென ஏழுபிறவிக்காலம் கீழ்மைகொள்வேன். அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.

சகுனி தன் பகடைகளை எடுத்து நெஞ்சோடு சேர்த்து  ஒருகணம் ஒருங்கமைந்து பின் உருட்டினார். “ஒன்று!” என அறிவித்தான் நிமித்திகன். அங்கிருந்தோர் விழிகளால் செவிகளால் அவ்வாடலை காணவில்லை. அப்பகடைக்களத்திற்குள் தாங்களும் வீரர்களென அமர்ந்து அதில் ஆடிக்கொண்டிருந்தனர். “பன்னிரண்டு!” என்று தருமனுக்கு அறிவித்தான் நிமித்திகன். “ஏழு!” என்றது சகுனியின் பகடை.

இருபடைகளும் பெருவஞ்சத்தின் மாளா ஆற்றலுடன் களம்நின்றன. மழைமுகில் சூல் கொண்டு ததும்புவதுபோல் விண்ணில் உருபெருத்து பழுத்தனர் பெருந்தேவியர். பகடை உருளும் ஓசையன்றி பிறிதொன்றும் எழவில்லை.

பன்னிரண்டு என விழுந்தது சகுனியின் தெய்வம். தன் படைகளை விரித்து நாகமொன்றை அமைத்தார். நடுவே பதுங்கி பின்னகர்ந்தது தருமனின் படை. பன்னிரண்டுகள் என உருண்டு விழ விழ நாகங்கள் சீறிப்பெருத்தன. நச்சுப்பற்கள் முனைகொள்ள சினத்துடன் வால்வளைத்து உடல் சொடுக்கி எழுந்தன. சிம்மம் அஞ்சி காலெடுத்து வைத்து தன் அளைக்குள் சென்று உடல் வளைத்தொடுங்கியது. அணுகி வந்த நாகங்கள் அதைச்சூழ்ந்து வலையென்றாயின. வெருண்டு உறுமிய சிம்மத்தின் உடலில் மயிர்க்கால்கள் சிலிர்த்தெழுந்தன. எங்கோ எண்ணித் தொட்டளிக்கப்பட்ட கணம் ஒன்றில் முதல் நாகம் சிம்மத்தின் காலை கவ்வியது. மறுகணம் நாகங்களால் முற்றிலும் பொதியப்பட்டு சிம்மம் மறைந்தது.

அவையோர் ஒவ்வொருவராக விண்ணில் இருந்து உதிர்வதுபோல பகடைக்களத்தில் பீடங்களில் வந்தமைந்தனர். பல்லாயிரம் நாகச் சீறல்களென மூச்சுகள் எழுந்தன. பின்பு தொலைதூரத்துத் திரையசைவொன்று பெருநெருப்பின் ஒலியென கேட்கும் அளவுக்கு பன்னிரு பகடைக்களத்தில் முற்றமைதி சூழ்ந்திருந்தது.

தருமன் ஒவ்வொரு மயிர்க்காலும் குத்திட்டு நிற்க இரு சுட்டுவிரல்களால் நெற்றிப்பொட்டை அழுத்தி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவையமர்ந்த முதற்கணத்திலிருந்த அதே போன்று சகுனி அமர்ந்திருந்தார். கணிகர் அங்கிலாதவர் போல் கண்மூடி கனவு நிறைந்த முகத்துடன் கிடந்தார். பீஷ்மர் துயிலிலென அப்பால் இருக்க துரோணரும் கிருபரும் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கி அவை நிரையை விழிசுழற்றி சொல் எழாது நின்றனர்.

பெண்டிரவையில் வளைகள் உதிர கைகள் தாழும் ஒலி கேட்டது. மெல்லிய விம்மலொன்று வாள்வீச்சென கூடத்தை கடந்துசென்றது. இடியோசையென அங்கிருந்த அனைத்து உடல்களையும் விதிர்க்கச் செய்தபடி தன் தொடையை ஓங்கி அறைந்து துரியோதனன் எழுந்தான். “ஆம், இனியொன்றும் எஞ்சுவதற்கில்லை. இதோ, இந்திரப்பிரஸ்தத்தின் இறுதித்துளியும் அஸ்தினபுரிக்கு அடிமையென்று ஆயிற்று. ஆ!” என்று கூவினான். “எங்கே ஏவலர்கள்? எங்கே படைவீரர்கள்?” என்றான்.

படைவீரர்கள் நால்வர் அவனை நோக்கி ஓடிவந்து வணங்கினர். “சென்று இழுத்து வாருங்கள் அந்தத் தொழும்பியை. இவ்வவை முன் நிறுத்துங்கள் அவளை! இனி அவள் ஆற்றவேண்டிய பணி என்ன என்று அறிவிக்கிறேன்” என்றான் துரியோதனன்.

மாபெரும் நீர்ச்சுழியென பன்னிரு பகடைக்களத்தைச் சூழ்ந்திருந்த அனைவரும் துரியோதனனின் ஆணையை கேட்டனர். தங்கள் ஆழத்தில் எப்போதும் திறந்திருக்கும் பிறிதொரு செவியால் அதை சொல்எழாது உள்வாங்கினர். தீயவை எதையும் தவறவிடாத செவி, மலரிதழ் மேல் ஊசி விழுவதை தவறவிடாத பேராற்றல் கொண்டது அது. விழியும் செவியும் நாசியும் ஒன்றேயான நாகத்தின் புலன்.

அசைவிழந்து அமர்ந்திருந்த அவை நோக்கி இருகைகளையும் ஓங்கித் தட்டி வெடிப்பொலி எழுப்பி எழுந்து நின்று ஆர்ப்பரித்தான் துரியோதனன். “சென்று அழைத்துவாருங்கள். இன்று அவள் அரசியல்ல. அஸ்தினபுரியின் தொழும்பியென்று அவள் அறியட்டும்.”

தருமன் தன் கால்கள் உடலுடன் தொடர்பின்றி துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அவர் உடலிலிருந்து சீற்றத்துடன் எழுந்த ஓர் ஆண்மகன் உடைவாளை உருவி துரியோதனனை நோக்கி பாய்ந்தான். திகைத்து நின்று அவ்வுடைவாளைத் திருப்பி தன் கழுத்தை வெட்டிக்கொண்டு குருதி கொப்பளிக்க அக்களமேடையில் விழுந்து துடித்தான். பிறிதொருவன் குளிர்ந்த குருதியுடன் எடைமிக்க பாதங்களை எடுத்து வைத்து பின்னோக்கி நடந்து அவனுக்குள்ளேயே புகுந்து இருண்ட அறைகளுக்குள் நுழைந்து ஒவ்வொரு வாயிலாக மூடிக்கொண்டே போனான்.

குளிர்ந்துறைந்த பனித்துளிகள் போன்ற கண்களுடன் சகுனி கைகளை கட்டிக்கொண்டு தன் பீடத்தில் சாய்ந்து அசைவற்றிருந்தார். பாண்டவர் நால்வரும் ஒருவர் கைகளை ஒருவர் பற்றியபடி கடுங்குளிரில் நின்றிருக்கும் கன்றுகளைப்போல உடல் விதிர்த்துச் சிலிர்க்க நின்றிருந்தனர். துரியோதனன் தருமனை நோக்கி கைசுட்டி “அடேய்! இந்தத் தொழும்பனை அவனுக்குரிய இடத்தில் நிற்க வை!” என்றான். தலைவணங்கி இருவீரர் யுதிஷ்டிரரை அணுகி குனிந்து நோக்கினர். அதன் பொருள் உணர்ந்தவர் போல தன் தலையணியைக் கழற்றி கீழே வைத்தார். அணிகலன்களை உருவி அதனருகே போட்டார். காலணிகளையும் மேலாடையையும் கழற்றிவிட்டு இடையாடையுடனும் வெற்றுமார்புடனும் நடந்து சென்று பீமனின் அருகே நின்றார்.

அவையிலிருந்து துரோணர் எழுந்து தயங்கிய குரலில் “அரசே, இது ஒரு குலக்களியாட்டு. இவ்வுணர்வுகள் அவ்வெல்லையை கடக்கின்றன என்று சொல்ல விழைகிறேன்” என்றார். “தாங்கள் உத்தரபாஞ்சாலத்தின் அரசனின் தந்தை. அஸ்தினபுரியின் அரசியலுக்குள் தங்கள் சொல் நுழையவேண்டியதில்லை” என்று துரியோதனன் கூரியகுரலில் சொன்னான். “ஆம், ஆனால்…” என்று அவர் சொல்லத்தொடங்க “இதற்குமேல் ஒருசொல்லும் இங்கு தாங்கள் சொல்ல வேண்டியதில்லை, ஆசிரியரே. எல்லை கடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்!” என்றான்.

கிருபர் “பெண்களை அவைமுகப்புக்குக் கொண்டுவரும் வழக்கமே இங்கில்லை, சுயோதனா” என்றார். “அந்தணர் வில்லேந்தும் வழக்கம் மட்டும் இங்கு உண்டா? உங்கள் சொல் இங்கு விழையப்படவில்லை” என்றான் துரியோதனன். “அடே சூதா, காளிகா!” என்றான். மூத்த பணியாள் “அரசே” என்றான். “சென்று அழைத்துவா அவளை” என்றான் துரியோதனன். “இங்கு நிகழ்ந்தவற்றை அவளிடம் சொல். எனது சொற்களை சொல். தொழும்பியை பணி செய்ய அரசன் அழைக்கிறான் என்று கூறி கூட்டிவா!”

[ 15 ]

பீடம் உரசி ஒலிக்க விகர்ணன் எழுந்தான். “நில்லுங்கள்!” என்றான். அவை திகைத்து யாரென நோக்கியது. அனைவரும் அது கர்ணனின் குரலென எண்ணினர். பின்னர்தான் விகர்ணனை அடையாளம் கண்டனர். “யாரவன்?” என்றது ஒரு குரல். “கௌரவர்களில் ஒருவன்” என்றது பிறிதொரு குரல். திகைப்புடன் அவனை நோக்கிய துரியோதனன் “அடேய்! அமர்! ஒருசொல் சொன்னால் இக்கணமே உன் தலையை வெட்டி இந்த அவையில் வைப்பேன்” என்றான்.

பணிவுமாறாத குரலில் “தலைக்கென அஞ்சவில்லை. நான் தங்கள் இளையோன்” என்றான் விகர்ணன். “மூத்தவரே, இதுநாள்வரை நானறிந்த அஸ்தினபுரியின் அரசரின் இயல்பல்ல இது. தாங்கள் பெருவிழைவு கொண்டவர். அணையா சினம் கொண்டவர். ஆனால் ஒருபோதும் சிறுமை வந்து ஒட்டியதில்லை என்றே உணர்ந்திருக்கிறேன். குருவின் கொடிவழி வந்தவருக்கு, தார்த்தராஷ்டிரருக்கு ஏற்புடையதல்ல இது. குலப்பெண்ணை அவைக்குக் கொண்டுவருவதென்பது நம் குடிக்கும் மூத்தாருக்கும் அழியாப்பழி என அமைவது” என்றான்.

“அவள் குலப்பெண்ணல்ல, மூடா! சற்றுமுன் இப்பகடைக்களத்தில் பணயமென வைக்கப்பட்ட தொழும்பி” என்றான் துரியோதனன். “ஆம், ஆனால்  அது வெறும் ஒரு குலக்களியாட்டென்றே இங்கு சொல்லப்பட்டது. எக்களியாட்டின் பொருட்டும் குலநெறிகள் இல்லாமல் ஆவதில்லை” என்றான் விகர்ணன். வெறுப்புடன் முகம் சுளித்து “அக்குலநெறியை அறியாமலா அவள் கணவன் இங்கே அவளை வைத்து ஆடினான்?” என்றான் துரியோதனன். “கேட்பதென்றால் அவனை கேள், மூடா!”

“அது அவரது பிழை. அஸ்தினபுரியின் அரசன் என அப்பிழைக்கு அவரை தண்டியுங்கள். அதை வைத்து மேலும் சிறுமையை நீங்கள் சூடிக்கொள்ள வேண்டியதில்லை. உயர்ந்த பெண்ணின் கருவில் உதித்தோர் ஒவ்வொரு பெண்ணையும் மதிக்கக் கற்றிருப்பார்கள் என்பது நூல்கூற்று. இங்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசி இழிவு செய்யப்படுவார்கள் என்றால் இழிவடைபவர் நூற்றுவரைப் பெற்று பேரன்னையென அரியணை அமர்ந்திருக்கும் நமது அன்னை, பாரதவர்ஷத்தின் பேரரசி காந்தாரி. இங்கு நான் குரல் எழுப்புவது என் அன்னையின் பொருட்டே” என்றான்.

கர்ணன் சினத்தை அடக்கி எழுந்து அவனிடம் கைநீட்டி “இளையவனே, அரசு சூழ்தலில் குரலெழுப்புமளவுக்கு இன்றுவரை நீ முதிர்ந்ததில்லை. உன் குரலை இன்று எவரும் கேட்கப்போவதுமில்லை” என்றான். பணிவுடன் “நூற்றுவரில் ஒரு குரலேனும் எழுந்தாக வேண்டும், அங்கரே. இல்லையேல் எந்தையும் தாயும் பழிசூடுவார்கள். இறப்பென்றாலும் சரி, நான் இதை ஒப்பமாட்டேன்” என்றான் விகர்ணன். அப்பாலிருந்து குண்டாசி எழுந்து “ஆம், இது அறமல்ல. அன்னை வயிற்றில் பிறந்தோர் ஏற்கும் செயலுமல்ல” என்றான்.

துச்சாதனன் தன் இரு கைகளை ஒங்கித்தட்டி ஓசையெழுப்பியபடி எழுந்து அவர்களை நோக்கி உரத்தகுரலில் “அவையோர் அறிக! இதோ என் சொல்!” என்று கூவினான். “அஸ்தினபுரியின் அரசர்! குருகுலமூத்தவர்! கௌரவர்களின் முதல்வர்!  அவரது சொல்லுக்கும் எண்ணத்திற்கும் மாற்றென நூற்றுவரில் ஒரு மூச்சேனும் இதுவரை எழுந்ததில்லை. அவ்வண்ணம் ஒன்று எழுமாயின் அதற்கு கொலைப்படைக்கருவி என எழுவது என் கைகள். விகர்ணா, உனது சொற்கள் என் தமையனுக்கெதிரானவை. பிறிதொரு சொல் நீ எடுப்பாயென்றால் இந்த அவையிலேயே உன் தலை உடைந்து இறந்து விழுவாய். குண்டாசி, உன்னை ஒரு நீர்த்துளியை சுண்டி எறிவதுபோல உடைத்து இங்கு வீசத்தயங்க மாட்டேன்.”

விகர்ணன் தலைகுனிந்து “பொறுத்தருள்க, மூத்தவரே! இச்சொல்லை இங்கு சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை” என்றான். “நூற்றுவருக்கெதிராக உன் குரல் எழுகிறதா? அதை மட்டும் சொல்! மூத்தவரை அவையில் அறைகூவுகிறாயா?” என்றான் துச்சாதனன். “நான் அறைகூவவில்லை. அவரது கால்களில் என் தலையை வைத்து மன்றாடுகிறேன். இன்று நிலைமறந்து செய்யும் இச்செயல் வழியாக என்றும் சான்றோர் நாவில் இழிமகனென அவர் குடியேற வேண்டாம் என்று கோருகிறேன்” என்றான் விகர்ணன். குண்டாசி கசப்புடன் உரக்க நகைத்து “ஆம், அவர் ஏற்கெனவே பெற்றுள்ள இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றே நானும் கூறுகிறேன்” என்றான்.

கர்ணன் சினம் எல்லைகடக்க கைகளைத் தட்டி ஓசையிட்டு “இரு கௌரவரும் தங்கள் பீடத்தில் இக்கணமே அமரவேண்டுமென்று நான் ஆணையிடுகிறேன். இனி ஒரு சொல்லும் அவர்கள் உரைக்கலாகாது” என்றான். விகர்ணன் தலைதாழ்த்தி “ஆம், என் சொற்கள் முற்றிலும் பொருளிழந்து போவதை நான் உணர்கிறேன்” என்றான். இருகைகளையும் விரித்து தன் உடன்பிறந்தோரை நோக்கி திரும்பி “தமையர்களே, இளையோரே, நீங்கள் கேளுங்கள். உங்கள் உள்ளங்களுக்குள் என் சொற்களில் ஒன்றேனும் ஒளியேற்றட்டும். இப்பெரும்பழி நம் குலத்தின்மேல் படிய நாம் ஒப்பலாமா? நம் அன்னையின் பொருட்டு உங்கள் அகம் எழுக! தொல்புகழ் யயாதியின் அவையில் தேவயானி சூடியிருந்த மணிமுடியின் பேரால் கேட்கிறேன். இப்பழியை நாம் ஏற்கலாமா?” என்றான்.

பெரும் சினத்துடன் சுபாகு எழுந்து “வாயை மூடு, அறிவிலியே! என்னவென்று எண்ணினாய்? மூத்தவருக்கும் அங்கருக்கும் மேலாக நெறியறிந்தவனா நீ? இனி இந்நாட்டை அறமுரைத்து வழிநடத்தப்போகிறாயா? அல்லது செங்கோலேந்தி அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்து ஆளலாம் என்று எண்ணுகிறாயா?” என்றான். துர்மதன் “நீயுரைத்த ஒவ்வொரு சொல்லுக்காகவும் மும்முறை உன்னை கொல்லவேண்டும். குக்கல் சொல் கேட்டு களிறு வழிநடக்க வேண்டுமென்று விழைகிறாயா? அமர்ந்துகொள்! இல்லையேல் உன்னை இக்கணமே கிழித்துப்போடுவேன்” என்றான். துச்சலன் குண்டாசியிடம் “உடன்பிறந்தார் என்பதற்காக மட்டுமே இச்சொல் வரை உன்னை பொறுத்தேன். இனி இல்லை” என்றபடி வெறியுடன் அருகே வந்தான்.

ஒவ்வொருவராக கௌரவ நூற்றுவர் எழுந்து விகர்ணனையும் குண்டாசியையும் நோக்கி கைநீட்டி கூச்சலிடத்தொடங்கினர். “கொல்! அவனை இக்கணமே கொல்!” என்றான் சுபாகு. “வெறும் கைகளால் அவனை கிழித்துப்போடுவேன்” என்றான் துர்மதன். துரியோதனனின் உடலிலிருந்து உதிர்ந்து நூறு துரியோதனர்களாக எழுந்து அவனைச் சூழ்ந்தவர்கள் போலிருந்தனர். மேலும் மேலும் பெருகிக்கொண்டிருந்தனர்.

விகர்ணன் திகைப்புடன் திரும்பி நோக்க அங்கிருந்த ஒவ்வொருவரும் துரியோதனனென உருமாறுவதை கண்டான். ஒவ்வொரு படைவீரனும் ஒவ்வொரு குடித்தலைவரும் ஒவ்வொரு பெருவணிகரும் துரியோதனனின் விழியும் முகமும் கொண்டனர். அஸ்தினபுரியின் குடிமக்கள் அனைவரும் துரியோதனன் என்றே ஆயினர். ஊற்றுக்கண்  உடைந்து வழிந்து பெருகி சுழித்து சுழன்று சுழலென்றாகி பெரும் வட்டமென தன்னைச் சூழ்ந்த துரியோதனனின் பல்லாயிரம் முகங்களைக் கண்டு விகர்ணன் திகைத்தான்.

“மூத்தவரே, என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பொறுத்தருளுங்கள்” என்றான். யார் கர்ணன், யார் துச்சாதனன், யார் துர்மதன், யார் துச்சலன், யார் சுபாகு, யார் சுஜாதன் என்றே அவனால் கண்டறிய முடியவில்லை. கால்தளர விழிமயங்க வறண்ட இதழ்களை நாவால் தீட்டியபடி துரோணரையும் விதுரரையும் பார்த்தான். அவர்கள் விழிகளும் துரியோதனன் விழிகளென ஆகிவிட்டனவா என்று தோன்றியது. பீஷ்மரை நோக்கினான். விழிமூடி உடல் குறுக்கி அவர் அமர்ந்திருந்தார்.

அச்சுழியிலிருந்து இரு கைகள் நீண்டெழுந்து வந்து அவனை பற்றின. “இல்லை! நானில்லை!” என்று அவன் கூவினான். ஒலி எழாது உதடுகள் அசைய “விட்டுவிடுங்கள்! என்னை விட்டுவிடுங்கள்!” என்று அலறினான். சுழியின் விசை அவனை இழுத்தது. பேருருக்கொண்ட கருநாகத்தின் ஆற்றல் எழுந்த சுழற்சி. அவன் அதில் விழுந்தான். கணத்திற்குள் மூழ்கி உள்கரைந்தான். பெருவிசையுடன் சுழற்றிச் செல்லப்பட்டான். அவனைச் சூழ்ந்து அவன் உடலே நின்றிருந்தது. கரிய பேருடல். அதன் பரப்பெங்கும் ஒளிவிடும் நாகமணிக்கண்கள் நிறைந்திருந்தன. அவை வஞ்சத்துடன் விழைவுடன் புன்னகைத்து சிமிட்டிக் கொண்டிருந்தன.

தோள் தட்டி ஆர்ப்பரித்தனர் துரியோதனர்கள். கைநீட்டிக் கூச்சலிட்டனர். வெடித்து நகைத்து கொப்பளித்தனர். வெறிகொண்டு ஒருவரை ஒருவர் நோக்கி நகையாடினர். சிலர் பெருந்தோள் புடைக்க கைதூக்கி போர்க்குரல் எழுப்பினர். சிலர் நெஞ்சில் ஓங்கி அறைந்து மல்லுக்கு அழைத்தனர். பன்னிரு பகடைக்கள மாளிகைக்குள் நுரைவிளிம்பை மீறும் மதுக்கிண்ணம் போல் துரியோதனனே நுரைத்து குமிழியிட்டுக் கொண்டிருந்தான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 83

[ 13 ]

அஸ்தினபுரியின் விரித்த கைகளில் வைத்த தாமரைபோல் வடிவுகொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்தின்மீது வானமென கவிந்திருந்த குவைக்கூரைப் பரப்பை பின்னிநிறைந்த உடல்களாக மாற்றிப் பரவியிருந்த தேவர்களும் அசுரர்களும் நாகங்களும் இருட்தெய்வங்களும் பூதங்களும் கின்னரரும் கிம்புருடரும் கந்தர்வர்களும் எண்திசைக்காவலரும் ஏழுமீன் முனிவரும் அருந்தவத்தோரும்  விழிதிறந்து கீழே நோக்கிக்கொண்டிருந்தனர். பெருமூச்சுடன் வசிஷ்டர் “முதற்பிழை” என்றார். விஸ்வாமித்திரர் “எப்போதும் முதலில் எழுவது அமுதே” என்றார்.

கரியநாகம் ஒன்று நெய்யருவிபோல வழிந்திறங்கி தருமனுக்குப் பின்னால் சென்று வளைந்து அவன் இடத்தோளுக்கு மேலாக எழுந்து ஏழுதலைப்படம் விரித்து ஆடியது. இந்திரன் சலிப்புடன் “எவர் வெல்லவேண்டுமென்பதை பகடைக்களம் தன் கோடுகளில் முன்னரே எழுதி வைத்திருக்கிறது. அவனுக்கு முதல் வெற்றியை அளித்து உள்ளத்தில் மாயையின் களிப்பை நிரப்புகிறது. ஊழென தன்முன் விரிந்துள்ள பகடைக்களத்தை ஆளும் தெய்வமென அவன் தன்னை எண்ணத்தொடங்குகிறான்… மூடன்” என்றான்.

சோமன் “அவனுள் இன்னும் வாழும் பேரறத்தானைச் சூழ்ந்துள்ளன அவன் மூதாதையர் அளித்த நெய்யும் சோமமும் உண்ட தெய்வங்கள். எளிதில் அவன் தோற்கமாட்டான்” என்றான். “பார்ப்போம்” என்றபடி கரிய உடல் வளைவுகளைச் சுழித்துச் சீறியது வாசுகி. அருகணைந்த அனலோன் “அவன் அகச்செவிகள் மூடியபடியே வருகின்றன. இத்தனை அருகே சூழ்ந்தும் அவன் தெய்வங்களை உணரவில்லை” என்றான். “ஆனால் அவன் உணர்ந்துகொண்டிருக்கிறான் என்னை!” என்றபடி கார்க்கோடகன் சகுனியின் மேல் எழுந்து மலைவாழையிலை போல படம் திருப்பினான். “அவன் காதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மெல்ல மெல்ல என்று.”

சகுனி தன் கையை தூக்கி “இந்திரப்பிரஸ்தத்திற்கரசே, இவ்விரண்டாவது ஆடலில் அஸ்தினபுரியின் சார்பாக அமர்ந்துள்ள நான் இந்நகரத்தில் ஓடும் மூன்று பேராறுகளை தங்களுக்கு பந்தயமென வைக்கிறேன்” என்றார். தருமன் புன்னகையுடன் “அதற்கு நிகரென இந்திரப்பிரஸ்தத்தின் பன்னிரு துறைமேடைகளையும் நான் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.  சகுனி “ஏற்றேன்” என்றார். “அஸ்தினபுரியின் ஆறுகள் வழியாக இந்திரப்பிரஸ்தத்தின் வணிகர்கள் ஒழுகுவார்கள்” என்று தருமன் சிரித்தபடி பகடைகளை சகுனியிடம் அளித்தார். எவ்வுணர்ச்சியுமில்லாமல் “நன்று” என்றபடி சகுனி பகடைகளை உருட்டினார்.

“ஆறு” என்று அறிவித்தான் நிமித்திகன். அவரது படைமுகப்பில் ஆறு வில்லவர்கள் எழுந்து முன்நின்றனர். தருமன் பகடைகளை வாங்கி நடனமென கைநெகிழ  உருட்டி  குனிந்து பார்த்தார். “பன்னிரண்டு” என்று அறிவித்தான் நிமித்திகன். தருமன் தாடியை நீவியபடி திரும்பி அர்ஜுனனை பார்த்தார். பின்பு இருவிரல்களால் காய்களை நகர்த்தி கவசப்படை ஒன்றை தன் களத்தில் அமைத்தார். “மூடன்! மூடன்!” என்றார் வசிஷ்டர். “வெல்லும்போதே அச்சம் கொள்ளாதவன் சூதில் கடந்து செல்வதில்லை” என்றார். விஸ்வாமித்திரர் “அவன் ஊழ் அவனைச் சூழ்ந்துள்ளது” என்று நகைத்தார்.

கூரையிலிருந்து வழிந்திறங்கிய பிறிதொரு நாகம் தருமனின் அருகே தலைதூக்கி வலத்தோள் வழியாக நோக்கி நின்றது. சகுனி தன் வில்லோர் படையை அம்பென குவித்து முன் கொண்டுவர அகல்விளக்கின் சுடரைப் பொத்தும் கைகளைப்போல் தன் படையை மாற்றி அதை சூழ்ந்தார் தருமன். இருமுறை ஒன்பதும் ஒருமுறை எட்டும் பிறிதொருமுறை பன்னிரண்டும் அவருக்கு விழுந்தன. தன் முழுப்படையுடனும் அலைபோல் அறைந்து சகுனியின் படையை சிதறடித்தார். இறுதிக்காயும் களம் விட்டுச் சென்றபோது வில்லேந்திய அவர் படைத்தலைவன் சகுனியின் அரியணையில் ஏறி அமர்ந்தான்.

கைகளை கட்டிக்கொண்டு தன் பீடத்தில் சாய்ந்து “இவ்வாடலும் முடிந்தது, மாதுலரே” என்றார் தருமன். சகுனி நீள்மூச்சுடன் “ஆம்” என்று தலையசைத்தார். துரியோதனன் எழுந்து இறுகிய முகத்துடன் கையில் நீர்விட்டு தன் நதிகளை தருமனுக்கு அளித்தான். சூழ்ந்திருந்த அவை உடலசைவில்கூட உளம் எஞ்சாமல் சிலைத்திருந்தது. தருமன் “மூன்றாவது ஆடலை தாங்கள் தொடங்கலாம், மாதுலரே” என்றார். “அல்லது ஆடலை முடிப்பதென்றாலும் ஆகும்.” சகுனி “எளிதில் முடியாது இப்போர்” என்றார். “ஆம்” என தருமன் புன்னகைத்தார்.

வசிஷ்டர் கைகளை நீட்டி “மூடா! நிறுத்து! போதும்!” என்றார். இரு நாகங்களும் பத்தி புடைக்க அவர் இருபக்கங்களிலும் விரிந்து மெல்ல அசைய அவர் செவியசையும் வேழமுகம் கொண்டவராகத் தோன்றினார். சகுனி “இந்திரபுரிக்கரசே! இதோ அஸ்தினபுரியின் தலைவர் தனது மணிமுடியையும் செங்கோலையும் பந்தயமென வைக்கிறார்” என்றார். தருமன் புன்னகையுடன் துரியோதனனை பார்த்தபின் “ஒப்புகிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் அரியணையை நான் பந்தயமென வைக்கிறேன்” என்றார்.

“என்ன செய்கிறான்…!” என்று கூவியபடி தெற்குமூலையிலிருந்து முப்புரிவேலை சுழற்றியபடி யமன் எழுந்தான். “விதுரா, நீ என்ன செய்கிறாய் அங்கு? சொல் அவனிடம்!” அக்குரலைக் கேட்டவர் போல விதுரர் உடல் அதிர சற்று எழுந்து பின் அமர்ந்தார். “நிறுத்து அவனை…!” என்று யமன் கூவ விதுரர் நிலையழிந்தார். ஆனால் அக்குரல் தருமனை சென்றடையவில்லை.

சகுனிக்கு மூன்று விழுந்தது. அவரது குதிரைப்படைத்தலைவன் இருகுதிரை வீரர்களுடன் களத்தில் எழுந்தான். பகடையை கையில் தருமன் வாங்கியதும் யமன் அவனை அணுகி அவன் நெற்றியை ஓங்கி அறைந்து “நிறுத்து, மூடா! நீ எல்லை கடக்கத் தொடங்கிவிட்டாய்” என்றான். கைகளும் தலையும் அதிர தருமன் ஒருகணம் பின்னகர்ந்தார். தலையை கையால் மெல்ல தட்டிக்கொண்டார். நீள் மூச்சு விட்டு அதை கடந்து சென்றார்.

அவர் பகடைநோக்கி கைகளை நீட்ட அக்கையைத் தொட்டு அதில் வால் சுழற்றி பின்னி மேலேறி அவன் கைவிரல்களுக்கு நிகராக தன் பெரும் பத்தியை விரித்தது நாகம். பிறிதொன்று அவன் காதில் மெல்லிய சீறலாக “ஆடு, வெற்றி அணுகுகிறது. இவ்வாடலுடன் இக்களம் விட்டெழுந்து வெல்லற்கரிய பாரதவர்ஷத்தின் சத்ரபதி நான் என்று கூவு! இதுவே அத்தருணம்” என்றது.

வருணன் “பகடைப்புரளல் என்பது தெய்வங்களும் அஞ்சும் முடிவிலி. அவனோ தன் விரல்களில் அது ஆற்றப்படுவதாக எண்ணுகிறான். வீணன்!” என்றான். “சூது கண்டு மகிழ்பவர்களும் வீணர்கள்தான். மூடர்கள்தான்” என்று திரும்பி அவனை நோக்கி சீறினான் யமன்.  “அறத்தான் நான் என்பதே ஆணவங்களில் தலையாயது. அவன் வீங்கியவன். அழுகுபவன்” என்று சலிப்புடன் விஸ்வாமித்திரர் சொன்னார்.

ஒன்பது விழுந்ததும் புன்னகையுடன் மீசையை மேல் நோக்கி நீவியபடி தருமன் தன் படையை முன்னெடுத்தார். எட்டும் ஆறும் பன்னிரண்டும் ஒன்பதுமென பகடை அவருக்கு அள்ளித்தர அவர் தரப்பிலிருந்து களங்களுக்குள் வில்லம்புவேல்யானைபுரவி கொண்டு எழுந்த படைவீரர்கள் இரு கைகளையும் விரித்த நண்டு போலாகி சகுனியின் படை நோக்கி சென்றார்கள்.

சகுனி தன் பகடையை உருட்டியபோது பன்னிரண்டு விழுந்தது. அவரது முகம் மெழுகுப்பொம்மையென ஆயிற்று. வலசைப்பறவைகளென கூர்முனை கொண்ட அவரது படை இருபுறமும் வீரர்களை திரட்டிக்கொண்டு தருமனை நோக்கி வந்தது. மீண்டுமொரு பன்னிரண்டு. தருமன் இருமுறை மூன்று விழுவதைக் கண்டு முதல்முறையாக உள்ளம் நடுங்கினார். ஆனால் அவர் செவியருகே என ஒரு குரல் “பன்னிரண்டு வருகிறது… இதோ” என்றது. சகுனியின் ஒன்பதுக்குப் பின் அவருக்கு இரண்டு விழுந்தது. கைகள் நடுங்க காய் நகர்த்தினார்.

மீண்டும் சகுனிக்கு பன்னிரண்டு விழுந்தது. தனக்கு நான்கு என்பதை காண்கையில் விழிமுன் நீராவியென காட்சி அலையடிப்பதை தருமன் உணர்ந்தார். “அஞ்சாதே… எண் எத்தனை விழுந்தாலும் ஆடுபவனே களம் அறிந்தோன்” என்றது நாகம். “நீ ஊழையும் வென்றுகடப்பதைக் காணட்டும் இந்த அவைக்களம்.” அவர் நெஞ்சை நிறைத்த பெருமூச்சை ஊதி வெளிவிட்டார். “உன் முன் விரிந்திருப்பது நீ எண்ணி ஆடி வென்று கடக்கும் களம்… எண்ணல்ல, உன் எண்ணத்திறன் வெல்லட்டும்.”

மீண்டும் ஒரு முறை பன்னிரண்டு விழ தருமனின் படையைச் சூழ்ந்து சிதறடித்து அவர் அரியணையைச் சூழ்ந்து நின்றது சகுனியின் படை. அவர் மணிமுடியைச் சூடினான் சகுனியின் படைத்தலைவன். சகுனி பெருமூச்சுடன் மெல்ல உடல் தளர்ந்து தன் காலை கையால் தூக்கி அசைத்து அமர்த்தினார். ஏவலன் ஒருவன் பொற்கிண்ணத்தில் அவருக்கு இன்நீர் கொண்டு வந்தான். அதை அருந்தி மரவுரியால் தாடியில் நீர்த்துளிகளை துடைத்தபின் புன்னகைத்தார்.

சிதறிய தன் களத்தை நோக்கி தாடையை கையில் தாங்கி தருமன் அமர்ந்திருந்தார். “அரசே…” என்றான் ஏவலன். விழித்தெழுந்து “ஆம்” என்றார். அவன் சொன்னதை புரிந்துகொண்டு தருமன் எழுந்து பொற்கிண்டியின் நீரை கையிலிட்டு மும்முறை சொட்டி “இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியை அஸ்தினபுரியின் அரசருக்கு கொடையென இதோ அளித்தேன். ஆம். அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்றார். பீமனின் உடலில் நிகழ்ந்த அசைவை ஓரவிழி காண உடல் துணுக்குற்று திரும்பி நோக்கினார். பின்னர் தோள்கள் தளர விழியோரம் ஈரம்கொள்ள தலையை இல்லை என்பதுபோல் அசைத்தார்.

“விதுரா, இத்தருணம் உன்னுடையது. எழுக!” என்றான் யமன். விதுரர் எழுந்து உரத்த குரலில் “மணிமுடியும் கோலும் வைத்து சூதாடுவதற்கு மரபுள்ளதா, மூத்தவரே?” என்றார். துரியோதனன் “அதை ஆடுவோர் முடிவு செய்யட்டும். மரபென்று ஒன்றும் இதிலில்லை” என்றான். கணிகர் “அமைச்சரே, தெய்வங்களைக்கூட வைத்து ஆடியிருக்கிறார்கள் முன்னோர். நூல்களை நோக்குக!” என்றார். விதுரர் தருமனிடம் “அரசே, இது குடிவிளையாட்டென்றே சொல்லப்பட்டது. முடிவைத்து ஆடுதல் முறையல்ல” என்றார்.

தருமன் தவிப்புடன் வாயசைக்க “போதும்… முடிவைத்ததும் நீங்கள் முழுக்க தோற்றுவிட்டீர்கள். இனி அஸ்தினபுரியில் ராஜசூயம் நிகழலாம். அஸ்வமேதப்புரவி உங்கள் மண்ணை மிதித்துக் கடக்கலாம்…. இதற்காகத்தானே இந்த ஆடல்!” என்றார் விதுரர். “போதும், அரசே. கைகூப்பி களம் விட்டு எழுங்கள்!” என்று குரல் உடைய விதுரர் கூவினார். “இப்போதெழுந்தால் உங்கள் குடி எஞ்சும். சொல் மிஞ்சும்…”

தருமன் நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் முன் நின்று யமன் கூவினான் “நீ முற்றிலும் தோற்பாய். மூடா, இன்னுமா அதை உணரவில்லை நீ? விலகு!” அவர் செவியருகே அசைந்த நாகம் காற்றென சொன்னது “அடுத்த களத்தில் நின்றிருப்பதென்ன? அதை அறியாமல் விலகுவாயா? அது நீ இதுவரை காணாத பெருங்கொடை என்றால் நீ இழப்பதென்ன என்று அறிவாயா?” இன்னொரு நாகம் “அஞ்சி எழுகிறாயா? எக்களமாயினும் அஞ்சாமையே வீரமெனப்படுகிறது” என்றது.

“இல்லை. நான் ஆடவே விழைகிறேன்” என்றார் தருமன். அதை அவர் வாய் சொல்ல செவிகள் கேட்டன. உள்ளம் திடுக்கிட்டு நானா நானா சொன்னேன் என வெருண்டது. “போதும், அரசே… போதும்… நான் சொல்வதை கேளுங்கள்” என்றார் விதுரர். “இனி ஒரு களம். அங்கே நிறுத்திக் கொள்கிறேன்” என்று தருமன் சொன்னார். “அமைச்சரே, இனி ஒரு சொல் எடுக்க உங்களுக்கு ஒப்புதலில்லை… அமர்க!” என்றான் துரியோதனன். கைகள் பதைக்க கண்ணீர் ததும்ப விதுரர் அமர்ந்தார்.

சகுனி “தாங்கள் எப்போது விழைந்தாலும் நிறுத்திக் கொள்ளலாம், இந்திரபுரிக்கரசே” என்றார். தருமன் “நான் ஆடுகிறேன்” என்றார். “அச்சமிருந்தால் எளிய பந்தயங்களை வைக்கலாம். உங்கள் மேலாடையை, கச்சையை, கணையாழியை… எதை வேண்டுமென்றாலும்” என்றபின் நகைத்து “ஆனால் நான் வைப்பது அஸ்தினபுரியின் அரசையும் தலைநகரையும்… ஆம்” என்றார் சகுனி. தருமன் வெறிகொண்டவராக பகடைகளை கையிலெடுத்து உருட்டியபடி உரத்த குரலில் “இதோ இந்திரப்பிரஸ்தப் பெருநகரை, அதன் மேல் மின்கதிர் சூடி அமர்ந்த இந்திரன் பேராலயத்துடன் வெண்கொற்றக்குடையுடன் கோட்டைகளுடன் காவலருடன் நால்வகைப் பெரும்படையுடன் இப்பகடைக்களத்தில் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.

“நன்று” என்று புன்னகைத்த சகுனி துரியோதனனை நோக்கி திரும்ப துரியோதனன் எழுந்து கைகளைத் தூக்கி “இங்கு நிகழ்க இறுதிப்போர்!” என்றான். தருமன் பகடையை உருட்ட வசிஷ்டர் “அவன் முகம் ஏன் பெருவலி கொண்டவன் போலிருக்கிறது?” என்றார். “அது ஓர் உச்சம். உச்சங்களில் மானுடர் தங்கள் எல்லைகளை கண்டடைகிறார்கள். அதைக் கடந்து தங்களுள் உறையும் தெய்வங்களை முகம்கொள்கிறார்கள்” என்றார் விஸ்வாமித்திரர். “அதன்பொருட்டே வலியை துயரை சிறுமையை இறப்பை விரும்பி தேடிச்செல்கிறார்கள்.”

தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவர் கொண்டிருந்த மெல்லிய பதற்றம் அடங்க புன்னகையுடன் தன் படைகளை ஒருக்கினார். தனக்கு மூன்று விழுந்ததும் படைக்களத்தின் மூலையில் சகுனி ஒரு சிறு படையை அமைத்தார். மீண்டும் ஒரு பன்னிரண்டு விழுந்ததும் துணைப்படையை அமைத்தார் தருமன். அவர் கொண்டிருந்த கலக்கம் மறைய தாடியை நீவியபடி புன்னகையுடன் சகுனியை நோக்கினார்.  மறுமுறை சகுனிக்கு பன்னிரண்டு விழுந்தது. தருமனின் இடதுவிழி அனலில் விழுந்த வண்ணத்துப்பூச்சி என சுருங்கி அதிர்ந்தது.  மீண்டுமொரு பன்னிரண்டு விழுந்ததும்  சகுனியின்  படை பெருகி பிறிதொரு பன்னிரண்டில் மும்மடங்காகியது. பிறிதொரு பன்னிரண்டில் பேருருவம் கொண்டது.

செயலற்றுப் போய் நடுங்கும் கைகளுடன் தருமன் உருட்டிய பகடையில் ஒன்று விழ அவர் தன் நெற்றி மையத்தை இருவிரலால் அழுத்திக்கொண்டு தலைகுனிந்தார். பிறிதொருமுறை பன்னிரண்டு விழுந்தபோது சகுனியின் படை அவரை முழுமையாக சூழ்ந்துகொண்டது. மீண்டும் இருமுறை பன்னிரண்டு விழுந்தபோது தருமனின் படைகள் களத்திலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டன. அவர் அரியணை மீது ஏறி நின்ற சகுனியின் வேல்வீரன் “வெற்றி” என்றான். “சகுனிதேவரின் படை வெற்றிகொண்டது” என கிருபர் அறிவித்தார்.

கைகால்கள் உயிரை இழந்தவைபோல் தளர தன் பீடத்தில் மடிந்து விழுந்திருந்தார் தருமன். அவைக்கூடத்தில் சுழன்ற காற்றில் அவர் குழல் தவிப்புடன் பறந்துகொண்டிருந்தது. ஒன்றும் நிகழாதது போல் தன் காய்களை ஒருங்கமைத்து மீசையை நீவி முன் செலுத்தியபடி திரும்பி ஏவலனை பார்த்தார் சகுனி. அவன் கொண்டு வந்த இன்நீரை சில மிடறுகள் அருந்தியபின் குவளையை திருப்பி அளித்தார்.

“அவன் தன் தவக்குடிலுக்கு மீள்கிறான்” என்றான் சோமன். “அங்குள்ள அமைதியை, குளிர் தென்றலை, தளிர்ப்பச்சை ஒளியை அறியத் தொடங்கிவிட்டான். இங்கிருந்து இனி அவன் ஆடமுடியாது.” தருமன் அருகே சென்று அவர் தலை மீது கைவைத்து யமன் சொன்னான் “மைந்தா, எழுக! இங்கு நிறுத்திக்கொண்டாலும் நீ மீளலாகும். போதும்! உன் எல்லையை கண்டுவிட்டாய்.” “ஆம், தந்தையே! இதற்கப்பால் இல்லை” என்றார்.

“இதுவா உன் எல்லை? மூடா, இவ்வளவா நீ?” என சீறியது நாகம். “நான்கு முறை பன்னிரண்டென பகடை புரண்டால் உன் கல்வியும் திறமும் தவமும் அழியுமா? நான்கு பகடைக்கு நிகரல்லவா நீ?” மெல்ல உடலசைத்து அவர் மடியில் உடல் வளைத்தெழுந்து முகத்துக்கு முன் படம் தூக்கி நின்ற இன்னொரு நாகம் கேட்டது. “அஞ்சுகிறாயா? எதை அஞ்சுகிறாய்? ஊழையா? உனது ஆற்றலின்மையையா?”

“அறியேன்” என்றார் தருமன். “அறிவிலியே, ஓர் ஆடலில் தோற்றதற்காக களம் விட்டு விலகுகையில் நீ இயற்றுவதென்ன என்று அறிவாயா? ஒற்றைக் காலடிக்கு அப்பால் உனக்கென காத்து நிற்பது எதுவென்று நீ எப்படி அறிந்தாய்? இத்தோல்விக்கு ஒரு கணம் முன்பு இதை அறிந்திருக்கவில்லை. வரும் வெற்றிக்கு ஒருகணம் முன்பும் நீ அறியாதிருக்கக்கூடும் என்று ஏன் எண்ணவில்லை? இனி ஒரு களம். ஆம், ஒற்றைக்களம்.  வென்றால் நீ இழந்தவை அனைத்தையும் மீட்டெடுக்க முடியும் என்றால் இக்கணத்தின் எண்ணங்களுக்கு என்ன பொருள்?”

தருமன் “அறியேன்” என்றார். “நீ அஞ்சியவை அகன்றவை எத்தனை பொருளிழந்தன காலத்தில் என்று கண்டிருப்பாய். இத்தருணமும் அதுவே.  எடு பகடையை!” என்றது நாகம். தருமன் “ஆனால் நான் தோற்றால்…” என்றார். “ஏற்கெனவே தோற்றுவிட்டாய். முடியும் நாடும் இழந்த பின்னர் வெறும் தரையில் நின்றிருக்கிறாய். இழப்பதற்கு உன்னிடம் ஏதுமில்லை. எஞ்சுவதை வைத்து ஆடி வென்றால் அனைத்தையும் நீ அடையமுடியும் என்றால் அதைவிட்டு விலகுவாயா?” நாகம் விழியொளிரச் சீறியது. “அவ்வண்ணம் விலகியபின் அதை எண்ணி எண்ணி வாழ்நாளெல்லாம் வருந்துவாய்…”

சகுனி பகடையை தன் கைகளால் தொட்டபடி உரக்க “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே! இதோ, நான் மீண்டும் ஆட சித்தமாக இருக்கிறேன். இந்த பன்னிரு களமேடையில் தாங்கள் இழந்த அனைத்தையும் அஸ்தினபுரியின் அரசர் பந்தயம் வைக்கிறார். தன்னையும் உடன் பந்தயமென வைக்கிறார். தன் தம்பியரை சேர்க்கிறார். இதுவே அறைகூவல்களில் தலையாயது. ஆடுகிறீர்களா?” என்றார்.

தருமன் துலாமுள்ளென நின்று தடுமாற அவர் தோளைத்தொட்டு “மைந்தா, எழு! இது உன் களமல்ல. இங்கு நிகழ்வது என்னவென்று நீ அறியவில்லை” என்றான் யமன். மறுபுறம் தோன்றிய அனலோன் “உன் முன்னோர் எனக்கு அளித்த அவியின் பொருட்டு ஆணையிடுகிறேன்! இதற்கப்பால் செல்லாதே! இங்கு நிகழ்வது ஆடல் அல்ல. தன் விழைவே என கையை பயிற்றுவித்த ஒருவனின் பகடைகளுடன் நீ பொருதுகிறாய். நிறுத்து! எழுந்து விலகு!” என்றான்.

“அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை” என்றபடி எட்டு கைகளும் எரியும் விழிகளுமாக கரிய தெய்வமொன்று தோன்றியது. “ஏழு பாதாளங்களுக்கும் அடியில் இருக்கும் இன்மையெனும் கருவெளியின் தெய்வம் நான். பதினான்கு உலகங்களாலும் அழுத்தி உட்செலுத்தப்பட்டவை புதைந்துள்ள நிலம் அது. யுதிஷ்டிரா, இளமையிலிருந்து நீ வென்றுகடந்தவை அனைத்தும் இன்று என் கையில் உள்ளன. ஒவ்வொன்றாக பேருருக்கொண்டு அவை இப்போது உன்னிடம் வருகின்றன.” அதன் குழல் ஐந்து புரிகளாக தொங்கியது. கூந்தல் கரிமுனை அனலென பறந்து சீறியது.

தருமன் குளிர்கொண்டவராக நடுங்கினார். “காமமும் குரோதமும் மோகமும்” என்றது கரியதெய்வம். “ஆடுக! அறத்தோனாக அமர்ந்து நீ இழந்தவற்றை வெறும் களிமகனாக நின்று வெல்க!” தருமன் கைகள் நடுங்க “எங்கிருக்கிறீர், அன்னையே? இக்குரல் என்னுள் எழுவதா?” என்றார். “உன்முன் நின்று பேசுகிறேன். எத்தனை நாள்தான் அறத்தோனாக மேடை நடித்து சலிப்பாய்? கவசங்களையும் ஆடைகளையும் தசையையும் தோலையும் கழற்றி வீசு! நீயென இங்கு நில்! இருளென விழைவென வஞ்சமென தனிமையென ஓங்கு!”

“உண்மைக்கு பேராற்றல் உண்டென்று அறிக!” என்றது தெய்வம். “அறத்தோர் அனைவரும் ஒருகணமேனும் அமர்ந்து எழுந்த பீடம் ஒன்றுள்ளது, மைந்தா. அதுவே கீழ்மையின் உச்சம். நிகரற்ற வல்லமை கொண்டது அது. முற்றிருளுக்கு நிகரான படைக்கலம் பிறிதொன்றில்லை. ஒருபோதும் ஒளி அதை வெல்வதில்லை என்றுணர்க! எழுக!”

தருமன் பகடைக்காய்களைத் தொட்டு “என் நான்கு தம்பியரையும் அவர்களின் இளமைந்தர்களையும் இப்பன்னிரு பகடைக்களத்தில் பந்தயமென வைக்கிறேன்” என்றார். அவையில் அமர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் முதுகில் ஒரு சாட்டை அறைந்து சென்றதுபோல் அதை உணர்ந்தனர். சௌனகர் “அரசே..” என்றார். துரியோதனன் கைகளை தட்டிக்கொண்டு எழுந்து “சொல் எழுந்துவிட்டது. அவை கேட்டுவிட்டது. இனி அரசர் பின்சுவடு வைக்க மாட்டார் என்று நம்புகிறேன்” என்றான். “இல்லை” என்றார் தருமன். துரியோதனன் உரக்க சிரித்து “அஸ்தினபுரிக்கு தொழும்பர்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள். ஆட்டம் நிகழட்டும்” என்றான்.

சகுனி பகடையை நோக்கி எடுத்துக்கொள்ளும்படி விழிகாட்ட தருமன் அவற்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து தலைகுனிந்து வேண்டினார். “எந்தையரே! தெய்வங்களே! எனக்காக அல்ல, இங்கு பிழைத்தது என்ன என்று அறிவேன். நான் இழைப்பவை எவையென்றும் தெளிந்துள்ளேன். இத்தனை தொலைவு வந்துவிட்டேன். இழந்து மீண்டு இழிவுறுவதைவிட அறியாத இவ்விருட்பாதையில் ஒற்றை அடி முன்னெடுத்து வைத்தால் ஒருவேளை கைவிட்டுச் சென்ற அனைத்தையும் வெல்ல முடியுமென்று எண்ணியே இதை ஆற்றுகிறேன். என் பிழை பொறுத்தருளுக! எந்தையர் செய்த தவத்தின் பொருட்டும் என் தம்பியரின் பேரன்பின் பொருட்டும் எனக்கு அருள்க! நான் வென்றாக வேண்டும்” என்றபின் பகடையை உருட்டினார்.

அதில் ஒன்று விழுந்தது. அவரால் நம்பவே முடியவில்லை. “ஒன்று” என குரல் ஒலித்தபோது குளிர் காற்றொன்று அறைக்குள் வந்து சுழன்று சென்றதுபோல கூடத்தில் அமர்ந்தவர்கள் சிலிர்த்தனர். ஒற்றை வீரனாக தருமனின் வில்லவன் களம் நின்றான். பன்னிரண்டு பெற்ற சகுனியின் படை பரல்மீன் கூட்டமென கிளம்பியது. இரண்டும் மூன்றும் மீண்டும் ஒன்றும் விழுந்தது தருமனுக்கு. ஓரிரு துணைவருடன் தனித்து அவர் படைவீரன் சகுனியை நோக்கி சென்றான். நான்கு முறையும் பன்னிரண்டு விழ சகுனி அவரை வென்று களம் நிறைத்தார்.

தருமன் விழிகள் நோக்கிழக்க எங்கிருக்கிறோமென்றே அறியாமல் அமர்ந்திருந்தார். பின்னர் விழித்துக்கொண்டு தன்னுள் திரும்பி ஓடினார். தன் தவக்குடிலை அடைந்து அங்கே தனித்த பாறைமேல் விழிமூடி அமர்ந்தார். அவர் முகம் தெளிவடைந்தது. இயல்பாக உடல் நீட்டினார். அவரில் எழுந்த அமைதியை அவை திகைப்புடன் நோக்கியது. பெருமூச்சுடன் இருகைகளையும் தூக்கி சோம்பல்முறித்து கையால் புண்பட்ட காலை தூக்கி அசைத்தமர்த்தி முனகிக் கொண்டார் சகுனி. முகத்திலோ விழிகளிலோ எவ்வுணர்வும் எஞ்சியிருக்கவில்லை.  அவை ஓர் உயிர்கூட அங்கிலாததுபோல் முற்றிலும் அமைதியில் அமைந்திருந்தது. கண்களை மூடி குவித்த கைகளின் மேல் தாடியுடன் முகவாயை ஊன்றி ஆழ்துயிலிலென பீஷ்மர் அமர்ந்திருந்தார்.

தருமன் அருகே குனிந்து ஏவலன் “அரசே…” என்றான். அவர் திடுக்கிட்டு விழித்து “ஆம், ஆம்” என்றபடி கை நீட்ட பொற்குவளையிலிருந்து ஊற்றிய நீரை வாங்கி “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்று சொட்டினார். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் தங்கள் பீடங்களிலிருந்து எழுந்தனர். மேலாடைகளை சீரமைத்தபடி நிரைவகுத்து அவைமுன் வந்து நின்றனர். அர்ஜுனன் ஒருகணம் விழிதூக்கி அவையை நோக்கியபின் தலைகவிழ்ந்தான். பீமன் செருகளத்தில் எதிர்மல்லனை நோக்கி நிற்கும் தோரணையில் இருபெரும் கைகளை விரித்து நெஞ்சை நிமிர்த்தி தலை தூக்கி தருக்கி நின்றான். ஏதும் நிகழாதவர்கள் போலிருந்தனர் நகுலசகதேவர்கள்.

துரியோதனன் நகைத்தபடி “தேர்ந்த தொழும்பர்கள்! எந்த அரசனுக்கும் நல்ல தொழும்பர் அருஞ்செல்வங்களே” என்றான். பீமனிடம் “அடேய் மல்லா, தொழும்பர்கள் மேலாடை அணியலாகாது என்று அறியமாட்டாயா?” என்றான். துச்சாதனன் “ஆம், அவர்கள் அணிபூணுவதும் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை” என்றான்.

“ஆம் அரசே, அறிவோம்” என்றபடி பீமன் தன் மேலாடையை எடுத்து இடையில் இறுக கட்டிக்கொண்டான். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் தங்கள் மேலாடையை இடையில் சுற்றினர். காதணிகளையும் ஆரங்களையும் தோள்வளைகளையும் கங்கணங்களையும் கணையாழிகளையும் கழற்றி ஒரு வீரன் கொண்டுவந்து நீட்டிய தாலத்தில் வைத்தனர். துரியோதனன் “போர்க்களத்திலன்றி தொழும்பர்கள் காலணி அணிவதும் ஒப்புக்கொள்ளப்பட்டதல்ல” என்றான். பீமன் “ஆம், பொறுத்தருள்க!” என்றபடி தன் பாதக்குறடுகளை கழற்றினான். அவற்றை இரு ஏவலர்கள் இழுத்து அகற்றினர். திறந்த மார்புடன் நால்வரும் சென்று அவைமேடையின் இடப்பக்கமாக கைகட்டி நின்றனர்.