நீர்ச்சுடர்

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59

பகுதி ஒன்பது : சிறகெழுகை 1

யுயுத்ஸு சுகோத்ரன் செல்வதை விழிநிலைக்க நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சென்று மறைவதை கண்டபின் விழிவிலக்கி கங்கைச்சூழலை நோக்கினான். அங்கிருந்த அனைவருமே சுகோத்ரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். விட்டுச்செல்பவனுக்கு அமையும் அந்த நடை எவருக்கேனும் இயலுமா என்று யுயுத்ஸு எண்ணிக்கொண்டான். எடையின்மை. தளையின்மை. இறந்தகாலம் இன்மை. ஒருவகையில் எதிர்காலம் இன்மையும்கூட.

இறந்தகாலத்தை உதறிவிடமுடிகிறது. உலகியலாளன் எதிர்காலத்தை ஒருகணமும் அகற்ற முடிவதில்லை. நிகழ்காலத்தின்மேல் அது பேரெடையுடன் ஏறி அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு கணத்தையும் முடிவு செய்கிறது. நாளை என எண்ணாது செய்த ஒரு செயலேனும் தன் வாழ்வில் உண்டா என அவன் எண்ணிக்கொண்டான். திட்டங்கள் கணிப்புகள் சூழ்தல்கள். எதிர்காலமே அனைத்து இன்பங்களின் மேலும் கவியும் நிழல். ஏனென்றால் இன்பங்கள் அனைத்தும் நிகழ்காலத்திலேயே.

எதிர்காலத்தில் இருப்பது அறியமுடியாமை. அங்கிருக்கும் இன்பங்கள் அனைத்தும் வெறும் கற்பனை. அதன்பொருட்டு நிகழ்காலத்தை இழக்கிறார்கள். அறியா இன்பங்களுக்காக அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருகணத்தில் உள்ளம் மலைத்தது. எத்தனை பெரிய மாயையில் சிக்குண்டு உழல்கிறார்கள் மானுடர். அறிவின்மையில் திளைக்கிறார்கள். அறிவின்மையே துயரம். ஊழ் அல்ல. தெய்வங்கள் அல்ல. உடனுறைவோரும் அல்ல. அறியாமையே.

ஸ்ரீமுகர் வந்து “சடங்குகள் இன்னும் சில நாழிகையில் முடியும். நீராடி வருபவர்களுக்குரிய நோன்புணவு ஒருங்கிக்கொண்டிருக்கிறது. முதல் கடனாளர் நீர் விட்டு எழுந்ததும் ஓர் அறிவிப்பை அளிக்கும்படி சொன்னார்கள்” என்றார். “என்ன உணவு?” என்று யுயுத்ஸு கேட்டான். “கம்பரிசிச் சோறும் காட்டுக்கீரை கடைசலும் மட்டுமே” என்றார் ஸ்ரீமுகர். “இங்கிருந்து நீங்கும்வரை அதுவே உணவு. இங்கே நீர்க்கடன் முடிந்து ஓர் இரவுக்குமேல் தங்கலாகாதென்பது நெறி.”

“ஆம்” என்று யுயுத்ஸு பரபரப்படைந்தான். “எனில் இன்றேகூட பலர் கிளம்பக்கூடும். அமைச்சர்களுக்கு இனி இங்கே பணிகளேதுமில்லை. அவர்களில் இருவர் இங்கே நின்றால் போதும். எஞ்சியோரில் சந்திரசேனரும் ஹிரண்யரும் சென்று படகுகளை ஒருக்கட்டும்… படகுகள் எங்கே நின்றிருக்கின்றன?” ஸ்ரீமுகர் “இங்கே இடமில்லை என்பதனால் கங்கையின் மறுகரையில் நிறுத்தப்பட்டுள்ளன” என்றார்.

“அது நன்று, அங்கிருந்து ஒவ்வொன்றாக அழைப்பை ஏற்று இக்கரைக்கு வந்து உரியவர்களை ஏற்றிச்செல்லவேண்டும். படகோட்டிகள் ஒருங்கியிருக்கட்டும். அவர்கள் முன்னரே உணவுண்டு காத்திருக்கவேண்டும். பெண்டிர் சிலர் நீர்க்கடன் முடிந்ததுமே கிளம்ப விரும்பலாம்” என்றான் யுயுத்ஸு. “முரசொலி எழுப்ப ஆணையிடுக! நான் கையசைவு காட்டுவேன். உடனே முரசொலி எழவேண்டும்… நோக்குக, மங்கல முரசு அல்ல! சிறுமுரசு.” ஸ்ரீமுகர் தலைவணங்கினார்.

அவன் யுதிஷ்டிரனை நோக்கி சென்றான். யுதிஷ்டிரன் விழிகளிலிருந்து நீர் வடிய தலைமயிர் முகத்தில் சரிந்திருக்க குனிந்து அமர்ந்திருந்தார். முதுசூதர் “சடங்குகளை தொடங்கலாம் அல்லவா?” என்றார். யுதிஷ்டிரன் திடுக்கிட்டு விழித்து “ஆம்” என்றார். முதுசூதர் “இந்த நீர்க்கொடை சடங்கு நன்கு நிறைவுறுக! தடைநீக்கி நின்றருளும் கரிமுகன் அருள் எழுக!” என வணங்கி மஞ்சள் விழுதை உருட்டி வாழையிலைமேல் நிறுவி அதன்மேல் அருகம்புல்லை வைத்து மூத்தவனை பதிட்டை செய்தார். ஒரு துளி வெல்லமும் வெண்மலரும் படைத்து வணங்கினார்.

யுயுத்ஸு அனைத்துப் பூசனைப்பொருட்களும் அங்கே ஒருங்கியிருக்கின்றனவா என்று நோக்கினான். ஒன்றும் குறையவில்லை. ஆனால் ஒன்று குறையும். ஏதோ ஒன்று. அதை கண்டுபிடிக்கவே முடியாது. குறைவது தெரியும்போது இதை எப்படி மறந்தேன் என நெஞ்சு வியக்கும். அதை நிகழ்த்துபவை தெய்வங்கள். தோணிகளை கவிழ்ப்பவை. அணைகளை உடைப்பவை. பெரும்புயல்களை, எரிப்பெருக்கை நிகழ்த்துபவை. பொருட்களைக்கொண்டு மானுடரை வெல்பவை. படைக்கலங்களில் அவை வாழ்கின்றன. கூர்கொண்ட அனைத்திலும் திகழ்கின்றன.

யுயுத்ஸு அறியாது புன்னகைத்தான். அவன் அடைந்த அனைத்து துறவு விழைவுகளும் எங்கோ மறைந்துவிட்டிருந்தன. அவ்வெண்ணங்களை மீட்டெடுக்க முயன்றான். நினைவிலெழவில்லை. சுகோத்ரனின் நடையை எண்ணிக்கொண்டான். ஆனால் அதை நினைவில் தீட்டிக்கொள்ள முடியவில்லை. என் துறவெண்ணம் என்பது என் உலகியல் நோக்கை செறிவூட்டும்பொருட்டே. நான் இங்கே பிணைக்கப்பட்டிருக்கிறேன். இவையனைத்திலும். மீட்பிலாமல். இதோ இந்த ஐவரும்கூட மீளக்கூடும். நான் மீள இயலாது.

சடங்குகள் சீராக முறையாக நடந்துகொண்டிருந்தன. சடங்குகள் செய்துவைப்பவர்களுக்கு ஒரு சீர்நடை இருக்கிறது. ஒவ்வொன்றையும் ஒரே விசையில் ஒரே போக்கில் இயற்றுகிறார்கள். செய்துசெய்து பழகியதனாலாக இருக்கலாம். அல்லது இச்செயல்களுக்கு எதிர்விளைவுகள், உடனடிப் பயன்கள் இல்லை என்பதனாலாக இருக்கலாம். சடங்குகள் மட்டுமே இப்படி செய்யப்படுகின்றன. எவருக்கும் எந்தப் பதற்றமும் இல்லை. செய்விப்பவரின் விரைவின்மைக்கு செய்பவரும் தன்னை அளித்துவிடுகிறார்.

சூதர்கள் மெல்லிய குரலில் ஆணைகளை இட யுதிஷ்டிரன் அவற்றை செய்தார். அவர் செய்தபின் பிற நால்வரும் செய்தனர். அவர்கள் ஒன்றுபோல் செய்வதாகத் தோன்றியது. ஆனால் கூர்ந்து நோக்கினால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் அதை செய்தனர். யுதிஷ்டிரனிடம் முதியவரின் நடுக்கம் இருந்தது. பீமனிடம் அவன் கைக்குப் பொருந்தாத செயலின் தடுமாற்றம் இருந்தது. அவன் பெரிய விரல்களால் மெல்லிய மலர்களை எடுக்கமுடியவில்லை. கிண்ணங்களை தேவையற்ற வலிமையுடன் பற்றினான். அர்ஜுனனின் கையசைவுகள் நடனம் போலிருந்தன. புரவிபேணுபவனின் கைகள் என நகுலனின் செயல்கள் காட்டின. அடுமனையாளன் எனத் தெரிந்தான் சகதேவன்.

“மூதாதையரை நினைவுகொள்க!” என்றார் முதுசூதர். யுதிஷ்டிரன் கைகூப்பி கண்களை மூடினார். சூதர் வேகவைத்த சோற்றுருளைகளை கரிய எள்ளுடன் சேர்த்து பிசைந்தார். மெல்லிய குரலில் “வெண்ணிறமான அன்னம் என எழுக அன்னையே, திருமகளே! அன்னையுடன் இணைந்தருள்க, மைந்தனாகிய சனியே! ஒளியும் இருளும் என நீளுலகங்களை கடந்துசெல்க! எங்கள் மூதாதையரின் உலகை சென்றடைக! அவர்களின் பசியும் விடாயும் அணைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

குருகுலத்தின் அரசர்நிரையை அருகே நின்றிருந்த சூதர் உரக்கச் சொன்னார். “முதல்முடிவிலியாகிய விஷ்ணுவுக்கு வணக்கம். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன், புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தான்.” அவருடைய குரல் உணச்சியற்று ஒலித்தது. ஒரு முழவோசை போல. அந்தச் சொற்களை அவ்விருளே சொல்வது போல. “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி என்னும் மங்காப் புகழ்கொண்ட அரசர்களின் பெயர்கள் என்றும் வாழ்வதாக!”

“மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக! குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக!” என இன்னொரு சூதர் தொடர்ந்தார். “குலமூதாதை குருவின் பெயர் நிலைகொள்க! ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன் என மாமன்னர்களின் வரிசை வாழ்க! பிரதீபரும் சந்தனுவும் விசித்திரவீரியரும் நிறைவுறுக! பெருந்தந்தையர் பேரன்னையராகிய தங்கள் துணைவர்களுடன் விண்பொலிக! ஆம், அவ்வாறே ஆகுக!”

யுதிஷ்டிரனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “மண்நீத்த மைந்தர்கள் விண்வளர் மூதாதையருடன் நிலைகொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்க! இத்தொல்குடியின் மைந்தர் பெயர்கள் அனைத்தும் இங்கே எழவேண்டும்” என்று முதுசூதர் சொன்னார். “நீத்தாரின் பெயர்நிரையில் இப்போது சற்றுமுன் குடித்தெய்வத்தை நீத்துச் சென்ற இளவரசரின் பெயரும் மீனும் இணையட்டும்.” யுதிஷ்டிரன் திகைப்புடன் நோக்க “அதுவும் நீத்தலே. அவருக்கும் இங்கே அன்னமும் நீரும் அளித்து நிறைவுச்சடங்குகள் செய்வோம். அதன்பின் அவர் உங்களுக்கும் நீங்கள் அவருக்கும் எக்கடனும் இயற்றவேண்டியதில்லை” என்றார் முதுசூதர்.

“ஆம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அவருடைய உதடுகள் நடுங்கின. அவர் மீண்டும் நினைவழிந்து விழக்கூடும் என்று முதலில் தோன்றியது. ஆனால் அச்சடங்கை செய்யச் செய்ய அவர் மீண்டபடியே வந்தார். சகதேவன் உறைந்த முகத்துடன் எரியும் அகல்சுடரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். நகுலன் நிலம் நோக்கியிருந்தான். பீமன் தன் கையிலிருந்த அன்னத்தை சீற்றத்துடன் நோக்குபவன் போலிருந்தான்.

சூதர் “பேரரசரிடம் இட்டுச்செல்க எங்களை!” என்றார். யுயுத்ஸு தலைவணங்கி நடக்க ஏழு சூதர்களும் அவனுடன் நடந்தார்கள். அவர்கள் வருவதை திருதராஷ்டிரர் எவ்வண்ணமோ உணர்ந்திருந்தார். அவருடைய தலை நடுங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் அருகணைந்தபோது அவர் தொல்பெரும் பறவை ஒன்று சிறகுவிரிப்பதுபோல கைகளை இருபக்கமும் நீட்டினார். யுயுத்ஸு அருகணைந்து “தந்தையே, சடங்குகளுக்குரிய சூதர்கள்” என்றான். அவர் “ஆம்” என்றபடி எழுந்துகொண்டார்.

சூதர்களில் ஒருவர் கையில் சிறுசெப்புச்சிமிழில் களச்சாம்பலை வைத்திருந்தார். இன்னொருவர் தட்டில் பரப்பிய இலையில் பலியன்னத்தை. முதற்சூதர் “வருக!” என்று சொல்லி துழாவிக்கொண்டிருந்த திருதராஷ்டிரரின் கையில் அச்சிமிழை வைத்தார். அது என்ன என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இன்னொரு கையை பற்றி சஞ்சயன் அவரை அழைத்துச்செல்ல தடுமாறும் கால்களுடன் அவர் நடந்தார். தலையைச் சுழற்றியபடி வாயை மென்றபடி வேறெங்கோ நோக்கியவர்போல சென்று கங்கையின் படிக்கட்டை கால் தொட்டதும் நின்றார்.

“என்ன? என்ன?” என்றார். “வருக, அரசே!” என்றார் சூதர். “ஏன்? ஏன்?” என்றார் திருதராஷ்டிரர். “வருக, அரசே!” என்றான் சஞ்சயன். “இல்லை…” என அவர் தயங்கி காலை பின்னெட்டு எடுத்தார். “வருக!” என்றான் சஞ்சயன். அஞ்சும் யானையின் அசைவு என யுயுத்ஸு எண்ணினான். “இல்லை இல்லை” என்று சொல்லி அவர் மேலும் பின்னடைந்தார். “அரசே, இது நீர்க்கடன். நீங்கள் உங்கள் மைந்தர்களுக்கு இயற்றியாகவேண்டியது” என்றான் சஞ்சயன். “இல்லை இல்லை” என்றபடி திருதராஷ்டிரர் மேலும் பின்னடைந்தார்.

கரையில் நின்றிருந்த சங்குலன் இறங்கி அருகே வந்து அவர் தோளை தன் மாபெரும் கைகளால் பற்றி “இறங்குக!” என்றான். “என்ன?” என்றார் திருதராஷ்டிரர். “நீரிலிறங்குக!” என அவன் உறுமல்போன்ற மென்குரலில் சொன்னான். கூடவே அவரை பற்றித்தூக்கி கொண்டுசென்றான். அவர் உடலில் தசைகள் இளகி நெகிழ்ந்து அசைந்தன. அவருக்குள் இருந்து யானையின் உறுமலென ஓர் ஓசை எழுந்தபடியே இருந்தது. அவன் அவரை கங்கைநீருக்குள் கொண்டுசென்றான். குளிர்நீர் பட்டதும் அவர் விலங்குபோல அலறி அவன் பிடியிலிருந்து தப்ப முயன்றார்.

அவன் அவரை நீரில் நிறுத்தினான். சூதர்களிடம் “ம்” என்றான். முதிய சூதர் சற்று அப்பால் நின்றபடி “மூதாதையர்களை எண்ணிக்கொள்க! தந்தையரை எண்ணிக்கொள்க! மைந்தரையும் பெயர் மைந்தர்களையும் எண்ணிக்கொள்க! அவர்களின் எஞ்சிய அன்னத்தை இதோ இந்நீரில் கரைக்கிறோம். அவர்கள் விண்சென்று அமைக! அவர்களின் அன்னம் ஆழியை சென்றடைக! உப்புக்கள் உப்பை, அனல் அனலை, காற்று காற்றை, வெறுமை வெறுமையைச் சென்றடைக! ஆம், அவ்வாறே ஆகுக! “என்றார்.

திருதராஷ்டிரர் திமிறிக்கொண்டே இருந்தார். அச்சொற்களை அவர் கேட்டதாகத் தெரியவில்லை. சங்குலன் அவரை ஓங்கி உலுக்கி “ம்ம்” என்றான். அவர் திடுக்கிட்டு நின்றார். சங்குலன் சூதர்களிடம் மீண்டும் அவற்றை சொல்லச்சொன்னான். அவர்கள் அச்சொற்களை நடுங்கும் குரலில் சொன்னார்கள். “நீரில் நீர் கலக்கட்டும். அனலில் அனல் கரையட்டும். காற்றில் காற்று சென்றமையட்டும். வானம் வானமென்றே எஞ்சட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” அவருடைய குரல் முதுமையும் நடுக்குமாக குழறியது. அவர் விம்மி விழிநீர் வழிய அழுதார்.

“எரிமிச்சத்தை நீரில் ஒழுக்குக, அரசே!” என்றார் சூதர். திருதராஷ்டிரர் “மைந்தா மைந்தா மைந்தா” என விம்மினார். “அரசே…” என்றார் சூதர். சங்குலன் அவரைப் பிடித்து அழுத்த அவர் அச்சிமிழை மார்போடணைத்துக்கொண்டு “மைந்தா மைந்தா மைந்தா” என்று சொல்லிக்கொண்டிருந்தார். “அமிழ்க! அமிழ்க!” என்று சூதர் சொல்ல சங்குலன் அவரை அழுத்தினான். அவர் அவனுடைய விசையால் உடல் தசைகள் நெளிந்து இறுக நின்று பின் மெல்ல மூழ்கினார். “உதிர்த்துவிடுங்கள்… நீரில் விட்டுவிடுங்கள்” என்றார் சூதர். “ம்ம் ம்ம்ம்” என முனகியபடி திருதராஷ்டிரர் அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். சூதர் மீண்டும் சொன்னார். திருதராஷ்டிரர் “ம்ம் ம்ம்” என்றார்.

சூதர் கையால் அவர் கையிலிருந்த சிமிழை தட்டிவிட அது நீருள் விழுந்தது. திருதராஷ்டிரர் பதறி அதை பற்றப்போக அது அமிழ்ந்தது. அவர் “ஆ ஆ” என கூவியபடி நீரை துழாவினார். சங்குலன் அவரைப் பிடித்து நீரில் மூழ்கடித்தான். அவர் எழுந்து வாய் திறந்து மூச்செறிய முகத்தில் நீர் வழிந்தது. மீண்டும் அவன் அவரை முக்கி எடுத்தான். மூன்றாம் முறை முக்கி எடுத்தபோது அவர் விலங்கோசையுடன் கூவிக்கொண்டிருந்தார். அவரை மீண்டும் கரைக்கு கொண்டுவந்தனர். உடல் தளர்ந்து அவர் படிகளில் விழுந்தார். அவர் கையில் அன்னத்தை அளித்தனர். சங்குலன் அவர் கைகளைப் பற்றி அன்னத்தை தலையில் வைத்துக்கொள்ளச் செய்தான்.

அவர் அனைத்தையும் மறந்து கனவிலென திகழ்ந்தார். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சங்குலன் அவரை நீருக்குள் கொண்டுசென்று நிறுத்தினான். சூதர்கள் “அன்னம் அன்னத்தை நிறைவுறச்செய்க! மூச்சு மூச்சை நிறைவுறச் செய்க! அங்கிருக்கும் உலகை இந்த அன்னம் சென்றடைக! அங்கிருப்போர் விடாயை இந்நீர் தணிவிக்குமாறாகுக! அனைவர் பசியையும் போக்குக இந்தத் தூய அன்னம்! தொன்மையான நீரே எங்களை என்றுமழியாத உலகங்களுடன் பிணைத்து நிறுத்து. எளியவர்களாகிய எங்களை மாறாதவற்றுக்கு அருகே நிலைகொள்ளச் செய். உனக்கு வணக்கம்” என்று தொன்மையான சொற்களை சொன்னார்கள். அவர்களின் உதடுகள் ஒன்றென அசைந்து ஒரே குரலெனக் கேட்டன.

“உன்னில் என் மூதாதையரிட்ட அத்தனை அன்னப்பலிகளுக்கும் வணக்கம். என் மைந்தர்களும் கொடிவழியினரும் இடப்போகும் அனைத்து அன்னப்பலிகளுக்கும் மங்கலம். ஆம், அவ்வாறே ஆகுக!” சூதர் திருதராஷ்டிரரிடம் “விரும்பிய ஒன்றை கைவிடுக, அரசே!” என்றார். “ம்?” என்றார் திருதராஷ்டிரர். “விரும்பிய ஒன்றை நீத்தார் பொருட்டு கைவிடுக!” என்றார் சூதர். “விட்டேன் என்று கூறி மூழ்குக!” திருதராஷ்டிரர் கையை அசைத்தார். “விட்டேன் என்னும் சொல்” என்றார் சூதர். சங்குலன் அது தேவையில்லை என்று கைகாட்ட அவர் சரி என தலையசைத்தார். திருதராஷ்டிரர் கையை அசைத்துக்கொண்டே இருந்தார். பின்னர் திடுமென அஞ்சியவர்போல நடுங்கி கரைநோக்கி ஓட முயன்றார்.

அதை எதிர்நோக்கியிருந்தவன்போல அவரை சங்குலன் பிடித்து நீரில் மூழ்கி எழச்செய்தான். அன்னம் நீரில் விழுந்ததும் அங்கே மீன்கள் கொப்பளித்தன. அவர் மூழ்கி மூழ்கி எழுந்ததும் தாடி திரிகளாக நீர்ச்சரடுகளுடன் தெரிந்தது. அவரை அவன் குழவிபோல தூக்கி கரைக்கு கொண்டுவந்தான். படிகளில் அமரச்செய்தான். சஞ்சயன் கொண்டுவந்த மரவுரியை வாங்கி அவன் அவர் தலையை துவட்டத் தொடங்கினான். அவர் குழவி என அவன் கைகளுக்கு தன்னை அளித்தார். கைகளைக் கோத்து மடியில் வைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

யுயுத்ஸு உடல் தளர்ந்து பெருமூச்சுவிட்டான். அப்பாலிருந்து பாண்டவர்கள் ஐவரும் நிரையாக எரிசிமிழ்களுடன் கங்கையில் இறங்கினர். அவர்கள் அச்சடங்குகளைச் செய்வதை அவன் நோக்கி நின்றான். “நீருக்கு அளிக்கப்படுவது நீடுதொலைவு செல்கிறது. அழிவிலா ஆழியைச் சென்றடைகிறது. அனலுக்கு அளிக்கப்படுவது மேல்நோக்கி எழுகிறது. முடிவிலா விண்ணுக்குச் செல்கிறது. அன்னம் நீரில் அமைக! அன்னமென மீண்டு எழுக! ஆவி விண்ணுக்கு எழுக! அங்கே அழிவற்றோருடன் அமைக! என்றுமிருப்பவை என்றும் திகழ்க! இங்கெழுபவை இங்கு மீண்டும் எழுக! சுழல்பவை சுழல்க! மையம் அங்கனமே அமைக! ஆம், அவ்வண்ணமே ஆகுக!”

யுதிஷ்டிரன் நீரில் மூழ்கி எழுந்தார். கைகூப்பியபடி நின்றபோது அவர் அழுவதை காணமுடிந்தது. சூதர் அவர் தோளில் தொட்டு கரைநோக்கி செல்லும்படி சொன்னார். படித்துறைக்குச் சென்றபின் அவர் அன்னத்துடன் மீண்டும் நீரிலிறங்கினார். அன்னமும் நீரில் கரைக்கப்பட்டபின் ஐவரும் தொழுதபடி கங்கையிலிருந்து நீங்கினர். கரைப்படிகளில் நின்று கங்கையை மலரும் அரிசியும் இட்டு வணங்கினர். பின்னர் திரும்பி நோக்காமல் வேள்விநிலம் நோக்கி சென்றனர்.

முழவுகளும் கொம்புகளும் ஓசையிடத் தொடங்கின. சூதர்கள் கைகளைக் காட்ட நீர்ப்பலி இடும்பொருட்டு காத்து நின்றவர்கள் அனைவரும் நிரையாக கங்கை நோக்கி இறங்கினர். நீர்க்கரையெங்கும் உடல்கள் செறிந்தன. அவர்களின் மறுபக்கம் என மீன்கூட்டங்கள் நீர்ப்பரப்பில் நிறைந்திருந்தன. மீன்களும் மானுடரும் நீர்விளிம்புக்கோட்டின் இருபக்கமும் நின்று ஒருவர் கொடுக்க ஒருவர் பெற்றுக்கொண்டனர்.

அவன் அந்நீர்க்கடனை நோக்கி நின்றிருந்தான். நீரிலிருந்து எழுந்த விதுரர் யுயுத்ஸுவை நோக்கி வந்தார். “அனைத்தும் நிறைவுற்றன. இனி ஆகவேண்டியவற்றை முடிப்போம். நான் சொல்வதற்கு ஏதுமில்லை. இங்கே நின்றிருத்தலும் எனக்கு ஆகாது. குடில் மீள்கிறேன்” என்றார். யுயுத்ஸு “ஆம்” என்றான். விதுரர் கொஞ்சம் பதற்றம்கொள்வது போலிருந்தது. அவர் எதையோ சொல்ல விழைவதுபோல. அவர் அதை சொல்லாமல் திரும்ப முயன்று இறுதிக் கணத்தில் திரும்பிக்கொண்டு “நீ மாளிகைமேல் இருந்து விழுந்தவளுக்கு நீர்க்கடன்களைச் செய்வது உண்டல்லவா?” என்றார்.

அவன் திடுக்கிட்டான். அங்கே அதை எதிர்பார்த்திருக்கவில்லை. உடலுக்குள் உள்ளத்தின் அடியாழத்திலிருப்பது. மறந்துவிட்டிருந்தது. ஆனால் ஒரு சொல்லில் சென்று தொடும்படி மிக அண்மையிலும் இருந்திருக்கிறது. “என்ன?” என்றான். “அவள் மல்லநாட்டு இளவரசி அல்லவா?” என்றார் விதுரர். “ஆம், ஆம்” என்றான் யுயுத்ஸு. “அவளுக்கு நீர்க்கடன் செய்வதில்லையா?” என்றார். அவன் “இல்லை” என்றான். அவர் “ஏன்?” என்றார். “நான் அவளை மணம்புரியவே இல்லை. ஒரு சிறு சடங்குதான் நிகழ்ந்தது. முதல்நாளிலேயே அவள் என்னை சூதனென்று அறிந்தாள். மாளிகை மேலிருந்து பாய்ந்து காலொடிந்து கிடந்தாள். மல்லநாட்டுக்கே மீண்டு ஈராண்டில் உயிர்விட்டாள்…”

விதுரர் “ஆம், அவளை நானும் பார்த்ததில்லை. உன் மறுமணத்தின்போதுகூட எவரும் அவளை நினைவுகூரவில்லை” என்றார். “நான் அவளை மீண்டும் ஒருமுறைகூட சந்திக்கவில்லை. அவள் என்னை முற்றாக மறுத்து உயிர்விட்டாள். என் பலிநீரை எப்படி பெற்றுக்கொள்வாள்?” என்றான். அவர் மேலும் பேசுவதற்குள் “நான் சூதன்… அவள் மாய்ந்தது அதனால்தான். என் அன்னம்கொள்ள அவள் வரமாட்டாள்” என்றான்.

“என் அன்னை என்னிடமிருந்து இன்றுவரை அன்னம்கொண்டதில்லை” என்று விதுரர் சொன்னார். “ஆனால் அன்று முதல் ஆண்டுதோறும் நான் அவருக்கு நீர்ப்பலியும் அன்னமும் அளித்துவருகிறேன். என் மைந்தரும் அளிப்பார்கள். ஏழு தலைமுறை ஆகலாம். அல்லது எழுநூறு தலைமுறை ஆகலாம். அளித்தபடியே இருப்பது நம் கடமை.” யுயுத்ஸு “நான்…” என்றான். “இம்மண்ணில் இன்றிருப்போர் சிறுதுளி. நீத்தோர் முடிவிலா ஆழி” என்றார் விதுரர். யுயுத்ஸு தலைவணங்கினான்.

அவர் திரும்பிச்செல்ல அவன் அவரை நோக்கி நின்றான். பின்னர் பெருமூச்சுடன் நீர்ப்பரப்பை அடைந்தான். உடல்களின் நெரிசலே ஒரு பெரிய திரை என தோன்ற தனிமைகொண்டான். சடங்குகளைச் செய்விக்கும் சூதர் அவனிடம் “அருகே வருக, இளவரசே!” என்றார். அவன் ஆடை களைந்ததும் “எவருக்காக?” என்று கேட்டார். அவனுக்கு அவள் முகம் நினைவுக்கு வரவில்லை. சூதனுக்கு மனைவியாக விழையாமல் இறந்தவள். தன்னை ஷத்ரியப்பெண் என்று மட்டுமே அறிந்தவள். எங்கிருக்கிறாள்? அவன் அவள் பெயரை நினைவுறுத்திக்கொள்ள விழைந்தான். அதுவும் நினைவிலெழவில்லை.

“பெயர் இல்லை” என்றான். “நாள், கோள்?” என்றார் சூதர். “நினைவில் இல்லை” என்றான். “எவர்?” என்றார் சூதர். “அதுவும் நினைவில் இல்லை. எதுவுமே நினைவில் எழவில்லை.” அவர் புன்னகைத்து “அவ்வண்ணம் ஒருவர் இருந்தாரென்பதே போதும்” என்றார். “அவருடன் என்ன உறவு உங்களுக்கு?” அவன் நா தவித்தது. என் மனைவி. ஆனால் அவள் அதை ஏற்கவில்லை. நானும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வண்ணமென்றால் என்ன உறவு? ஆனால் அவள் கழுத்தில் நான் ஒரு கருகமணியை அணிவித்தேன். அது போதுமா? “என் மனைவி” என்றான்.

சூதர் வியப்பை வெளிப்படுத்தவில்லை. நுண்சொற்களை சொல்லத் தொடங்கினார். “பிழைகளைப் பொறுத்தருள்க, நீத்தோரே! இங்குளோர் அனைவரும் ஊழின் துளிகள். ஊழுக்கு அப்பாலெழுந்தவர்களே, இங்குள்ள அனைவரையும் பொறுத்தருள்க! கனிக! அருள்க! இங்குள்ளோரை வாழ்த்துக! உடனமைக! இந்த அன்னத்தை கொள்க! நீரை கொள்க! இங்கெழுக! இங்கமைக! இந்த அலைகளைப்போல. இந்தக் காற்றின் நெளிவென. இங்குள ஒளியென. ஆம், அவ்வாறே ஆகுக!”

அவன் விழிகள் நீர்கொண்டன. தொண்டை அடைப்பது போலிருந்தது. அவன் இடைவரை நீரில் நின்று அச்சொற்களைச் சொன்னபடி அவர் ஆணையிட்ட சடங்குகளை செய்யலானான். சூதர் “விரும்பிய ஒன்றை விடுக!” என்றார். “என்ன?” என்றான். “விரும்பிய ஒன்றை விடுக!” என்றார் சூதர். ‘பொருளையா?” என்றான். “பொருளையோ, பழக்கத்தையோ. பொருளனைத்தும் பழக்கங்களே” என்றார் சூதர். அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். அது உளநடுக்கு. ஆனால் வெளிக்குளிரென உள்ளே நுழைந்தது. “எதை?” என்றான். “எதையாயினும்… நாம் விரும்பா பொருள் இங்கு ஏதுமில்லை” என்றார் சூதர்.

யுயுத்ஸு தன் நினைவிலிருந்த பொருட்கள் அனைத்தையும் தொட்டுத் தொட்டு சென்றான். அத்தனை பொருட்களும் பொருளிழந்திருந்தன. அவன் தொட்டதும் அனைத்தும் பொருள்கொண்டன. அவன் “எந்தப் பொருள்?” என்றான். “உணவு, பயன்பொருள், கைப்பொருள், நினைவுப்பொருள் எதுவாயினும். தந்தையர் தந்ததோ ஈட்டியதோ ஆகலாம்.” அவன் “ஆம்” என்றான். “எண்ணிக்கொண்டுவிட்டீர்களா?” என்றார். “ஆம்” என்றான். இவளை கைவிடுகிறேன். இந்த மல்லநாட்டு இளவரசியை. இனி ஒருபோதும் அவள் என் நினைவில் எழாதொழிக! “எண்ணியதை கைவிடுக!” என்றார். “ஆம், விட்டேன்” என்றான். “மூழ்குக!” என்றார் சூதர். அவன் மூழ்கி எழுந்தான்.

நீரிலிருந்து மேலெழுந்தபோது அவன் உள்ளம் தெளிந்திருந்தது. முகத்தை கைகளால் துடைத்தபடி படிகளில் ஏறினான். திருதராஷ்டிரர் கிளம்பிக்கொண்டிருந்தார். சங்குலனின் கைகளைப் பற்றியபடி அவர் எழுந்தார். அவன் அவர் அருகே சென்றான். அவர் “உம் உம் உம்” என முனகிக்கொண்டிருந்தார். சஞ்சயன் அவர் அருகே சென்று நின்றான். சங்குலன் “செல்வோம்” என்றான். முக்தவனத்திலிருந்த அனைவரும் நீர்ப்பலி அளிப்பதற்காக வந்துகொண்டிருந்தனர். மழைநீரில் சிற்றோடைகள் அனைத்தும் ஆற்றுக்கு வருவதுபோல.

திருதராஷ்டிரர் திரும்பாமலேயே “சஞ்சயா…” என்றார். சஞ்சயன் “அரசே…” என்றான். “இனி நீ என்னுடன் வரவேண்டாம்…” என்றார். அவன் “ஆணை” என்றான். அவர் மேலும் ஏதும் சொல்லாமல் நடக்க சஞ்சயன் தலைவணங்கி கைகட்டி நோக்கியபடி நின்றான். யுயுத்ஸு அவனை பார்த்தான். அவன் ஏதாவது சொல்வான் என எண்ணினான். அல்லது முகத்தில் ஏதேனும் உணர்வு இருக்கும் என்று. ஆனால் எப்போதும்போல பொருளில்லா புன்னகை ஒன்றையே சஞ்சயன் கொண்டிருந்தான். யுயுத்ஸு அவனை நோக்கி ஏதேனும் சொல்ல விழைந்து அவனிடம் சொல்ல ஏதுமில்லை என உணர்ந்து முன்னால் சென்றான்.

சில அடிகள் எடுத்து வைத்ததும்தான் சஞ்சயனின் அந்த முகம் இளைய யாதவருடையது என அவன் எண்ணினான். அந்தப் புன்னகைதான் அவ்வண்ணம் காட்டுகிறது. அவன் திரும்பி சஞ்சயனை பார்த்தான். “ஆம்” என சொல்லிக்கொண்டான். மீண்டும் ஓர் அடி வைத்தபோது அவனுக்கு அவள் பெயர் நினைவிலெழுந்தது. தேவப்பிரபை. மல்லநாட்டாள். அவள் முகம் மிக அருகிலெனத் தெரிந்தது. விழிநீர் வஞ்சமென வழியும் அழகிய சிறுமுகம். அவன் மீண்டும் திரும்பி சஞ்சயனின் புன்னகையை பார்த்தான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 58

பகுதி எட்டு : விண்நோக்கு – 8

கங்கைக்கரை எங்கும் ஓசைகளும் உடலசைவுச்சுழல்களும் உருவாயின. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நிலையழிய அச்சூழலே கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீமுகர் அங்குமிங்கும் ஓடினார். தொலைவில் குந்தியின் தேர் கிளம்பிச் சென்றதை காணமுடிந்தது. ஸ்ரீமுகர் அங்கிருந்து உடல் குலுங்க ஓடி அருகணைந்தார். எதையோ மறந்தவர்போல திருதராஷ்டிரரை நோக்கி சென்றார். அவரிடம் ஓரிரு சொற்களைச் சொல்லிவிட்டு திரும்பிவந்தார்.

விதுரரின் கையசைவாலும் சிறுசொற்களாலும் விடுக்கப்பட்ட ஆணைகள் பரவ சற்றுநேரத்திலேயே அங்கிருந்த அத்தனை ஓசைகளும் கலைவுகளும் அடங்கி கூட்டம் இல்லையென்றாகியது. விதுரர் சென்று திருதராஷ்டிரரிடம் பணிந்து அனைத்தையும் விளக்கிவிட்டு திரும்ப வந்தார். அதற்குள் சூதர்கள் யுதிஷ்டிரனை எழுப்பி அமரச்செய்து முகத்தில் நீர் தெளித்தனர். நீர் அருந்தக்கூடாது என முதுசூதர் கையசைவால் தடுத்தார்.

யுதிஷ்டிரன் சற்றுநேரம் எங்கிருக்கிறோம் என்று தெரியாதவர்போல் விழிமலைத்திருந்தார். பின்னர் உணர்வுகொண்டு ஓசைமிக்க கேவல்களுடன் அழத்தொடங்கினார். பீமனும் நகுலனும் சகதேவனும் வெறுமனே நோக்கிக்கொண்டிருக்க அர்ஜுனன் தலைகுனிந்து அங்கே இல்லாதவன்போல் தோன்றினான்.

முதுசூதர் “அரசே, அழுவதற்கு இன்னமும் முழு வாழ்நாளும் உள்ளது. இது நீத்தாரின் தருணம். அவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்” என்றார். யுதிஷ்டிரன் அதை கேட்கவில்லை என்று பட்டது. முதுசூதர் உரக்க “அரசே, நீங்கள் எவருக்காக அழுகிறீர்களோ அவரும் இங்குள்ளார். உங்கள் மூத்தவர், அங்கநாட்டரசராகிய வசுஷேணன்” என்றார். யுதிஷ்டிரன் திடுக்குற்றவர்போல நிமிர்ந்து நோக்கினார். “ஆம், அவரும் இங்கிருப்பார். அது அவருடைய அன்னைக்கு அவர் அளித்த ஆணை… நீர்க்கடன்களை செய்க!” என்றார் முதுசூதர்.

யுதிஷ்டிரன் “என் மூத்தவர்…” என்றார். “சுடரை நோக்குக! அவர் உங்கள்மேல் அளிகொண்டு இங்கே வந்திருக்கிறாரா என உசாவுக!” என்றார் முதுசூதர். ஒரு மலரை அவரிடம் அளித்து அதை அந்தக் கலத்தின்மேல் இடும்படி கைகாட்டினார். யுதிஷ்டிரன் அதை சாம்பல்கலத்தின் மேல் இட்டார். இனிய தென்றல் ஒன்று அப்பகுதியைச் சூழ்ந்து ஆடைகளையும் குழல்களையும் அசையவைத்துக் கடந்துசென்றது. “ஆம்” என்றார் யுதிஷ்டிரன். “அவர் என்னை வாழ்த்துகிறார்.”

“அவ்வுலகில் அவர்கள் அனைவருமே தந்தையர்” என்று முதுசூதர் சொன்னார். “அங்கே வஞ்சங்கள் இல்லை. வஞ்சம்கொண்டோர் வாழும் உலகம் இன்னொன்று. இருண்டது, ஆழம் நிறைந்தது. அங்கிருந்து எழும் காற்றில் எரிமணம் இருக்கும்.” யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டார். “அன்னம் அளியுங்கள், அரசே. உங்கள் மூத்தாருக்கு நீங்கள் செய்ய இனி எஞ்சியிருப்பது அது ஒன்றே” என்றார் முதுசூதர்.

யுதிஷ்டிரன் நடுங்கும் கைகளுடன் மீண்டும் அன்னத்தை பகுத்தார். சூதர் ஆணையிட பாண்டவர்கள் அனைவரும் மூன்று உருளைகளை இலையில் எடுத்து தாலத்தின்மேல் வைத்து கொண்டுசென்று காட்டின் விளிம்பில் பாறைமேல் காகங்களுக்குப் படைத்தனர். ஐவரும் நின்று கைகளை தட்டியபோது காகங்கள் காட்டின் இருளே துளித்துச் சொட்டி நிற்பதுபோல் மரக்கிளைகளில் தோன்றின. அவை அணுகி வரவில்லை. அங்கேயே எழுந்து கலைந்துகொண்டிருந்தன.

முதுசூதர் “அவை வரும் தருணம் ஒன்று உண்டு” என்றார். யுதிஷ்டிரன் “அவர்களில் எவர்?” என்றார். “அதை நாமறிய இயலாது. ஆனால் சில தருணங்களில் நாம் அறியவும் கூடும். சிலபோது கனவுகளில்” என்றார் முதுசூதர். “அழையுங்கள், அழைத்தபடியே இருங்கள்.” யுதிஷ்டிரன் மீண்டும் மீண்டும் கைகளை தட்டினார். காகங்கள் அணுகி வரவில்லை. “முதலில் வரவேண்டியவர் உங்கள் குடிமூத்தவராகிய பால்ஹிகர்” என்றார் முதுசூதர். “வேண்டிக்கொள்க! அவர்கள் வராமல் இங்கிருந்து நீங்கள் செல்லமுடியாது என்று உணர்க!”

“ஆம், அவர்கள் வராவிட்டால் இங்கேயே உயிர்துறப்பதே செய்யக்கூடுவது” என்றார் யுதிஷ்டிரன். அவர்கள் கைகளை தட்டிக்கொண்டிருந்தனர். பொழுது சென்றுகொண்டிருந்தது. கங்கைக்கரையில் கூடி நின்றவர்கள் பொறுமையிழப்பது தெரிந்தது. திருதராஷ்டிரர் எழுந்து நிற்க விதுரர் அவரை நோக்கி சென்றார். யுதிஷ்டிரன் வெறிகொண்டவர்போல கைகளை தட்டிக்கொண்டிருந்தார். காகங்கள் எழுந்து எழுந்து அமைந்தன. பின்னர் ஒட்டுமொத்தமாக எழுந்து வானில் சுழன்று காட்டுக்குள் சென்று மறைந்தன.

யுதிஷ்டிரனின் விசை மேலும் கூடியது. நகுலனும் சகதேவனும் கைதட்டுவதை நிறுத்திவிட்டனர். மீண்டும் காகங்கள் வந்து கிளைகளில் அமர்ந்தன. அவர்களை நோக்கி கரிய அலகுகளைக் காட்டி கரைந்தபடியே இருந்தன. சலித்துச் சோர்ந்து தலைகுனிந்து யுதிஷ்டிரன் கைகளை தட்டிக்கொண்டே இருந்தார். பீமன் கைகளை ஓங்கி அறைந்தபடி முன்னால் சென்று “பிதாமகரே, வருக… இது என் அழைப்பு. உங்கள் மைந்தனின் ஆணை இது, வந்து எங்கள் அன்னத்தைக் கொள்க!” என்றான்.

கரிய காகம் ஒன்று எழுந்து நிலத்தில் அமர்ந்தது. பின்னர் நடந்து முன்னால் வந்து தயங்கி தலை சரித்து நோக்கியது. சிறகடித்து எழுந்து அன்னத்தின் அருகே வந்து அமர்ந்து கொத்தி அண்ணாந்து விழுங்கியது. கரைந்தபடி எழுந்தமர்ந்து மீண்டும் கொத்தியது. அர்ஜுனன் கைதட்டியபடி முன்னால் சென்று “மூத்தவரே, உங்கள் இளையோனுக்கு அருள்க! வருக!” என்றான். இன்னொரு காகம் பறந்து வந்து அமர்ந்தது. யுதிஷ்டிரன் கண்ணீருடன் புன்னகைத்தார்.

பீமன் “தார்த்தராஷ்டிரர்களே, உடன்பிறந்தவர்களே வருக. அன்னம் கொள்க… நிறைவுறுக!” என்றான். காகங்கள் ஒவ்வொன்றாக வந்து அன்னம் கொள்ளத்தொடங்கின. கூட்டத்திலிருந்து மூதாதையரை வாழ்த்தும் ஓசைகள் எழுந்தன. திருதராஷ்டிரர் கைகளை கூப்பிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தார். நூற்றுக்கணக்கான காகங்கள் வந்தன. அவை எழுப்பிய பூசல் ஓசை கங்கைக்கரைவரை கேட்டது. திருதராஷ்டிரர் திரும்பி செவிகூர்ந்தார். கைகளை விரித்து தலையை அசைத்து உறுமினார்.

திரும்பி வந்தபோது யுதிஷ்டிரன் தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தார். சூதர் ஒருவர் அவர் அருகே, அவர் தளர்ந்தால் ஏந்தும் பொருட்டு உடன்நடந்தார். “சற்றுநேரம்தான்… ஆனால் எத்தனை எண்ணங்கள். எவ்வளவு ஐயங்கள், தற்பழிகள்…” என்றார். சகதேவன் “அவர்கள் வந்துவிட்டார்கள்” என்றான். “ஆம், அவர்கள் வரும் வரை வராமல் ஒழிவார்களோ என்று எண்ணினோம் அல்லவா? அதுவே நம் கெடுநரகம்” என்றார் யுதிஷ்டிரன்.

அவர்கள் மீண்டும் வந்தமர்ந்ததும் யுதிஷ்டிரன் நிமிர்ந்து நோக்கினார். சுகோத்ரனிடம் அமர்க என்று கைகாட்டினார். சுகோத்ரன் “இல்லை, தந்தையே” என்றான். “நான் நீர்க்கடன்கள் செய்யப்போவதில்லை” என்றான். யுதிஷ்டிரன் திகைப்புடன் “நீ அதற்காகவே வந்தாய்” என்றார். “ஆம், ஆனால் இப்போது வேண்டாம் என முடிவெடுத்தேன். எனக்கான ஆணை இப்போது வந்தது. இந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டால் இப்பழிக்கும் இத்துயருக்கும் நான் பொறுப்பாகிறேன். இவற்றை நான் துளியும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவை எவையும் என்னுடையவை அல்ல” என்றான்.

யுதிஷ்டிரன் விழிகள் பளபளக்க அவனை ஏறிட்டு நோக்கிக்கொண்டிருந்தார். சகதேவனின் முகத்தில் எவ்வுணர்வும் வெளிப்படவில்லை. சுகோத்ரன் முதுசூதரிடம் “என் பெயர் இங்கே சொல்லப்படலாகாது, சூதரே. இக்குலத்தில் இருந்தும் இக்குருதியின் சரடில் இருந்தும் நான் என்னை முற்றாக விடுவித்துக்கொள்கிறேன்” என்றான். முதுசூதர் “இது உங்கள் குலதெய்வம், இளவரசே. நீங்கள் இவளை விட்டாலும் இவள் உங்களை விடாவிட்டால் அகன்றுசெல்ல முடியாது” என்றார்.

“நான் என்ன செய்யவேண்டும்?” என்று சுகோத்ரன் கேட்டான். “ஒரு மலரையும் ஒரு பிடி அரிசியையும் எடுத்து அவள் முன் வையுங்கள். அன்னையே உன்னை துறக்க அருள்செய்க என்று கோருங்கள். அன்னையின் ஆணை வரும்” என்றார் முதுசூதர். யுதிஷ்டிரன் “மைந்தா, வேண்டாம்” என்றார். அவன் அவரை திரும்பி நோக்கவில்லை. அங்கிருந்த எவரும் அங்கில்லை என்றே உணர்ந்தான். அவன் உள்ளம் அலையற்றிருந்தது.

சுகோத்ரன் முதுசூதர் அளித்த செம்மலரிதழையும் அரிசிமணிகளையும் எடுத்து தலைமேல் வைத்து வணங்கி கொற்றவைப் பதிட்டையின் மேல் போட்டு உதடுகளுக்குள் வேண்டிக்கொண்டான். “அன்னையே, பெற்றிடும் அன்னை மகவை என என்னை விடுதலை செய்க! என்னை வாழ்த்துக! இனி ஒரு போதும் உன்னை நினைக்காமலிருக்க எனக்கு அருள்செய்க!” எரிந்துகொண்டிருந்த நெய்விளக்கு நீர்த்துளி பட்டதுபோல சிறு வெடிப்போசையுடன் சுடர் துள்ளியது. முதுசூதர் “அன்னையின் ஆணை… நீங்கள் அன்னையை துறக்கலாம். வேறு தெய்வங்களுக்கு உங்களை கொடுக்கலாம்” என்றார்.

சுகோத்ரன் மீண்டும் ஒருமுறை கொற்றவையை வணங்கிவிட்டு பின்னடி வைத்தான். திரும்பி கங்கையையும் கூடியிருந்தவர்களையும் நிலம் தொடக் குனிந்து வணங்கினான். பின்னர் யுதிஷ்டிரனை நோக்கி திரும்பி தலைதாழ்த்தி வணங்கி “அரசே, எனக்கு விடைகொடுங்கள்” என்றான். யுதிஷ்டிரன் நடுங்கும் தலையுடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். “நான் இங்கிருந்து கிளம்புகையில் ஒரு பொடி மண்பருவோ ஒரு நினைவுத்துளியோ என்னிடம் எஞ்சலாகாதென்று அருள்க!” என்றான்.

“நீ நலம்வாழவேண்டும், இளைஞனே” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இத்துயரத்தின் துளிகூட உன்னிடம் எஞ்சாதொழிக! இவையனைத்திலும் இருந்து முழு விடுதலை நிகழ்க!” சுகோத்ரன் பாண்டவர் ஐவரையும் பொதுவாக வணங்கிவிட்டு பின்னால் நகர்ந்தான். உஜ்வலன் அவனை ஒட்டி தானும் வந்தான். அங்கே நிகழ்வன எவ்வாறோ அனைவருக்கும் தெரிந்திருந்தது. மெல்லிய சொல்முழக்கம் அவர்களை சூழ்ந்திருந்தது. விழிகள் அவர்கள் மேல் படிந்திருந்தன.

அவர்கள் கங்கைக்கரைக்கு வந்ததும் யுயுத்ஸு “ஷத்ரியரே, நீங்கள் குடிதுறப்பதென்றால் குலத்தையும் துறப்பதென்றே பொருள்” என்றான். “அதை இங்கே அறிவியுங்கள். உங்கள் குலத்தோர் உங்களுக்கு விடைகொடுக்கட்டும்.” சுகோத்ரன் “ஆம், நான் ஷத்ரிய குலத்தையும் துறக்கவே எண்ணுகிறேன்” என்றான். யுயுத்ஸு அங்கிருந்த முதிய காவலரை நோக்கி “ஷத்ரியன் தன் குலத்தை துறக்க என்ன நெறி, முதியவரே?” என்றான்.

“அது அரிதாகவே நிகழ்கிறது… தானே குலம்துறப்போர் இல்லை. குலம்துறப்புத் தண்டனை அளிக்கப்படுவதுண்டு. அப்போது சில நெறிகள் கடைப்பிடிக்கப்படும்” என்று அவர் சொன்னார். “குடிமூத்தவர் ஒருவரிடம் அவர் தன் வாளையும் குண்டலங்களையும் திருப்பி அளிக்கவேண்டும். தன் இடைக்கச்சையைக் கழற்றி இடப்பக்கமாக வீசவேண்டும். அவ்வாறு செய்கையில் ஷத்ரியக் குடியினர் அவருக்குச் செல்க செல்க எனச் சொல்லி விடை அளிக்கவும் வேண்டும்.”

“ஆம், அவ்வாறே” என்றான் சுகோத்ரன். தன் காதிலிருந்த குண்டலங்களைக் கழற்றினான். இடையிலிருந்த குறுவாளையும் எடுத்துக்கொண்டு திருதராஷ்டிரரை அணுகி “மூதாதையே, கொள்க என் குலத்து அடையாளங்களை! என்னை விடுவித்தருள்க!” என்றான். திருதராஷ்டிரர் கண்ணீரோடு நெஞ்சுடன் கைசேர்த்து அமர்ந்திருந்தார். அவன் அவற்றை அவர் காலடியில் வைத்தான். “நன்று, மைந்தா. இது உனக்கு நலமே பயக்கும். இனி உன் வழியில் ஒரு துளிக் குருதியும் இல்லாமலாகுக! ஒரு பழிச்சொல்லும் உன் செவியை அடையாமலாகுக! உன் நிறைவு நிகழ்க!” என்றார் திருதராஷ்டிரர்.

அவன் தன் இடையிலிருந்து கச்சையை உருவி இடப்பக்கமாக வீசி எறிந்தான். கூட்டத்தினர் ஓசையில்லாமல் நோக்கி நின்றனர். அவன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். ஓசை ஏதும் எழவில்லை. யுயுத்ஸு “ஷத்ரியர்களே, இக்குலத்தை உதறுவது அவருக்கு விடுதலை என்றால் குரலெழுப்புக!” என்றான். சற்றுநேரம் அமைதி நிலவியது. பின்னர் ஒரு முதியவர் “செல்க! செல்க!” என்றார். கூட்டம் “செல்க! செல்க!” என முழக்கமிட்டது.

 

சுகோத்ரன் நதிக்கரையின் மணல்சரிவில் ஏறிச்செல்ல உஜ்வலன் உடன் வந்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. சுகோத்ரன் தன் குடிலுக்கு வந்ததும் “நான் கிளம்புகிறேன்” என்றான். “எங்கு?” என்று உஜ்வலன் கேட்டான். “இங்கிருந்து கிளம்புகிறேன்… பெரும்பாலும் ஆசிரியரிடமேதான் சென்று சேர்வேன் என எண்ணுகிறேன். ஆனால் கிளம்புகையில் அம்முடிவை எடுக்கவில்லை” என்றான் சுகோத்ரன். “நானும் உடன் வருகிறேன்” என்றான் உஜ்வலன்.

அவர்கள் தங்கள் பொதிகளுடன் நடந்தனர். உஜ்வலன் பேசாமல் காட்டை விழி அலைத்து நோக்கியபடி நடந்தான். சுகோத்ரன் “நீர் எண்ணியது நிகழவில்லை அல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அதில் பிழையெல்லாம் இல்லை. மண்ணை கொள்வது நல்லது. மண்ணை விடுவது அதைவிட நல்லது” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் புன்னகையுடன் திரும்பி அவனை நோக்கினான். உஜ்வலன் “நான் என்றுமே புறம்சார்ந்தவன்” என்றான்.

“இது என் ஊழ் என உணர்ந்தேன்” என்றான் சுகோத்ரன். “ஊழ் என்று கொள்லலாம். இது உங்களுக்குரிய நல்முடிவு. உங்களை நீங்கள் கண்டுகொண்டீர்கள். ஆகவே இம்முடிவை எடுக்க இயன்றது” என்றான் உஜ்வலன். “ஒவ்வொருவரும் கவ்விக்கொண்டிருப்பது உடைமைகளை அல்ல, விழைவை அல்ல, பற்றை அல்ல, துயரத்தையே. அவர்களை அது கவ்விக்கொண்டிருப்பதாக எண்ணுகிறார்கள்” என்றான் சுகோத்ரன். “நூல்கள் மீளமீளச் சொல்வதுதான்…” என்றான் உஜ்வலன்.

அவர்கள் கங்கையை வந்தடைந்தனர். அங்கே அப்பொழுதில் எவருமில்லை. பந்தங்கள் அணையக்குறுகி கரி உமிழ்ந்து எரிந்துகொண்டிருந்தன. படகுகளில் துடுப்புகளும் இல்லை. சுகோத்ரன் படகோட்டிகள் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். அதன் பின்னரே படகுத்துறையின் பலகை அடுக்குகளுக்கு அப்பால் ஒருவன் கிடப்பதை கண்டான். “எழுப்புக அவனை!” என்றான். “பாவம் கிழவன்” என்றபடி உஜ்வலன் தயங்கினான். சுகோத்ரன் முன்னால் சென்று அவனை கைகளால் உலுக்கி “படகுத்துறைவரே, எழுக! எழுக!” என்றான்.

அவன் எழுந்து அமர்ந்தான். விழிகள் பித்தர்களுக்குரியவை போலிருந்தன. தாடி கிழிந்த ஆடைபோல நூல்களாகத் தொங்கியது. “படகை ஓட்டலாகுமா? நான் இங்கிருந்து செல்லவேண்டும்” என்றான் சுகோத்ரன். “ஆம்” என்றபடி அவன் எழுந்து வந்தான். தளர்ந்த முதியவன் என்று தோன்றிய கணமே அவன் பறவை என தாவி நீரில் ஆடிய படகில் நின்றான். சுகோத்ரன் படித்துறையில் ஏறி மெல்ல பலகைமேல் நடந்து படகில் சென்று அமர்ந்தான்.

உஜ்வலன் பலகைமேல் ஏறியபோது அது ஆடியது. அவன் கைவிரித்து நடனம்போல் ஆடி “ஊழ்நடனம்!” என்றான். சுகோத்ரன் நகைத்து “வருக!” என்றான். உஜ்வலன் அவன் அருகே வந்தமர்ந்தான். “விட்டுச்செல்லும் இடங்கள் அழகுகொள்கின்றன” என்றான் உஜ்வலன். “செல்லவிருக்கும் இடங்கள் பேரழகு கொள்கின்றன.” “எதிலேனும் நிலைகொள்வீரா நீர்?” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் “உங்கள் மொழியையே சற்று மாற்றிச் சொல்கிறேன், நிலைகொள்ளுதலே துயரம்” என்றான். சுகோத்ரன் நகைத்தான்.

“அரிய கருத்து… எனக்கே விந்தையாகத் தோன்றுகிறது. நிலைகொள்வதற்கு நிலமென்று இருப்பவை அனைத்தும் நேற்றின் தொடர்ச்சிகளே. ஆகவே அவை அனைத்தும் துயரங்களே” என்ற உஜ்வலன் “இதை ஏதேனும் நூலில் எழுதிச் சேர்த்துவிடலாமா?” என்றான். “ஏன் தனி நூலாக எழுதினால் என்ன?” என்று சுகோத்ரன் துடுப்பை நீரிலிட்டபடி கேட்டான். “நான் அறிந்தவரை நூல்களில் கொண்டாடப்படும் வரிகளெல்லாமே இடைச்செருகல்கள்தான்” என்றான் உஜ்வலன். “ஏன்?” என்றான் சுகோத்ரன். “நூல்கள் உருவாகி படிக்கப்பட்டு பல கோணங்களில் ஏற்றும் மறுத்தும் உசாவப்பட்டு தெளிந்தபின் அவற்றில் எஞ்சுமிடம் ஒன்று கண்டடையப்படுகிறது. அந்த இடமே அந்நூலின் மையம். அங்கே அந்நூலில் இருந்து கடைந்து திரட்டி எடுக்கப்பட்ட சொல் சேர்க்கப்படுகிறது. அந்நூலின் மெய்மை அதுவே” என்றான் உஜ்வலன்.

“என்ன சொல்கிறீர்? வெறுமனே பேச்சுக்கென பேசலாகாது. பல நூல்களில் வெற்றுவரிகளே இடைச்செருகல்களாக அமைந்துள்ளன” என்று சுகோத்ரன் சொன்னான். “ஆம், ஆனால் அந்த வெற்றுவரிகள்தான் அவற்றின் மையம் போலும்” என்றான் உஜ்வலன். “மாபெரும் மெய்நூல்களில் அமையும் பொருளிலா வரிகளுக்கு என்ன இலக்கு?” என்றான் சுகோத்ரன். “அந்த மாபெரும் மெய்மையின் நடுவே ஒரு அறிவின்மை திகழ்ந்தால்தான் அதற்கு பொருள் முழுமை கொள்கிறதோ என்னவோ” என்றான் உஜ்வலன். “உம்மிடம் பேச என்னால் இயலாது” என்று சுகோத்ரன் சொன்னான்.

படகோட்டி துடுப்புகளை துழாவிக்கொண்டிருந்தான். காலை நன்கு விடிந்திருந்தாலும் விண்மீன்கள் தெரிந்தன. உஜ்வலன் விண்மீன்களைப் பார்த்துக்கொண்டு “நெடுநாட்களாகின்றது பகலில் விண்மீன்களை நோக்கி” என்றான். சுகோத்ரன் மேலே நோக்கி “ஆம்” என்றான். படகு கங்கையின் அலைகளுக்கு மேல் எழுந்து சென்றது. ஊசல் என எழுந்தாடியது. படகோட்டி துடுப்பை வலிந்து செலுத்தவில்லை. பாய்கள் இல்லையென்றாலும் காற்றே படகை தள்ளிக்கொண்டு சென்றது.

“காற்று ஏன் இத்தனை எடைகொண்டிருக்கிறது? மூச்சுத் திணறுகிறது” என்றான் சுகோத்ரன். “காற்றில் உங்கள் உடன்பிறந்தார் நிறைந்திருக்கிறார்கள் போலும்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் அவனை திரும்பி நோக்கினான். அவனுடைய பற்கள் ஒளியுடன் தெரிந்தன. “ஆம், மெய்யாகவே அவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எனக்கு ஆணையிட்டனர்” என்று சுகோத்ரன் சொன்னான்.

உஜ்வலன் “நீங்கள் நிமித்தநூலை இன்னமும் நம்புகிறீர்களா? அது நாம் பிறருக்குச் சொல்லவேண்டியது அல்லவா?” என்றான். சுகோத்ரன் அதை கேளாதவனாக “செல்க என அவர்கள் ஆணையிட்டனர். உதறிச்செல்க என்றனர். ஒட்டியிருப்பதும் பற்றுகொண்டிருப்பதும் அல்ல. விட்டுச்செல்வதே உறவுகளின் நிறைவு என்றனர்” என்றான். “ஒற்றைக் கீச்சொலி… கூரியது. வாள் என வெட்டி என்னை அறுத்தது.”

“ஒரு சொல்லுக்கு அத்தனை பொருளா?” என்று உஜ்வலன் நகைத்தான். “ஒருசொல்… அதனூடாக நெடுந்தொலைவு செல்லமுடியும்” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் “செல்லுங்கள்… நான் அறிந்தது ஒன்றே. பற்றுக, பற்றமுடியாவிட்டால் விடுக! இரண்டுக்கும் பொருள் ஒன்றே” என்றபின் கால்நீட்டி படகில் படுத்துக்கொண்டான். “இனிய அசைவு. தொட்டில் போலிருக்கிறது” என்றான். சற்றுநேரத்திலேயே அவனுடைய மூச்சின் ஒலி எழுந்தது.

படகோட்டி மேலும் துழாவிக்கொண்டிருந்தான். பின்னர் நிறுத்திவிட்டான். சுகோத்ரன் “நீர் குகரா?” என்றான். “ஆம், என் பெயர் நிருதன்” என்று அவன் சொன்னான். அவன் கைகள் படகில் தாளமிட்டன. மெல்லிய குரலில் அவன் பாடத்தொடங்கினான். பாடவேண்டாம் என்று சொல்ல சுகோத்ரன் விழைந்தான். ஆனால் முதல் வரியே அவனை செவிகொடுக்கச் செய்தது.

அன்னையே என்ன நினைக்கிறாய்?

எதற்காக நீ மெல்ல சிரித்தாய்?

ஜனகன் மகளே, பூமியின் வடிவே,

பொன்றாப் பெரும்பொறையே என்ன நினைத்தாய்?

எதற்காக நீ மெல்ல சிரித்தாய்?’

எந்தப் பாடல் அது? எங்கோ கேட்ட பாடல். ஆனால் எங்கே? மிகத் தொன்மையானது. படகோட்டிகள் பாடுவது. அவர்கள் தங்கள் படகில் ஏறி கங்கையைக் கடந்து கானேகிய சீதையை அப்பாடல் வழியாக நினைவில் பொறித்திருக்கிறார்கள்.

அன்னையே சொல்

எதற்காக நீ புன்னகை செய்தாய்?

உன் செவ்வடி மலர்களை

என் குளிர்ந்த மெல்விரல்கள் தொடும்போது

எதற்காக நீ புன்னகை செய்தாய்?’

அவை கங்கையின் சொற்கள். படகை ஓட்டியவன் தொல்குகன். படகுத்துடுப்பை பிடித்த அனைவருக்கும் முதல் தந்தையானவன். அவர்களின் குடிமுகப்பில் தெய்வமென அமைந்தவன். ராகவராமனுக்கு உடன்பிறந்தான் என அமைந்தவன். தெய்வத்தின் தோழன். தேவியை அறிந்தவன். தேவியின் விழிகளால் தெய்வத்தைக் காணும் பேறுபெற்றவன்.

சொல் அன்னையே நீ சிரித்தது எதற்காக?

உன் செவ்வண்ணச் சிற்றடி எழுந்து

படகில் ஊன்றியபோது

மெல்ல பறந்த கருங்குழல் சுரிகளை

கையால் ஒதுக்கி நீ கண்மலர்ந்தது எதற்காக?’

 

‘அன்னையே சொல்லமாட்டாயா?

உன் துயர்முறுவல் எதற்காக?

உன் தோள்களில்

என் சிற்றலை முத்துக்களை சிதறியாடுகின்றேன்.

உடல் சிலிர்த்து உன் தலைவனருகே நகர்கிறாய்.

சொல், உன் துயரமுறுவல் எதற்காக?’

அவன் அந்தப் பாடல் வழியாக சென்றுகொண்டிருந்தான். இவன் பெயர் நிருதன். இப்பெயரிலும் ஒரு தெய்வம் இருக்கிறது. முன்பு அன்னை அம்பாதேவியை படகில் ஏற்றி சால்வநாட்டுக்கும் அஸ்தினபுரிக்கும் ஓட்டிச்சென்றவன். அவளுக்கு எரிதோழன் என்றானவன். அஸ்தினபுரியின் படகுத்துறை முகப்பில் கோயில்கொண்டவன். ஊரெல்லாம் குகர்களால் வணங்கப்பெறுபவன்.

‘சொல்லுக தாயே, இந்த மென்னகை எதற்காக?

எழுந்த பல்லாயிரம் மீன் விழிகளால் சூழ்ந்து

உன்னைப் பார்த்து திகைக்கின்றேன்.

உன் மென்னகை எதற்காக?

 

‘உலகீன்றவளே ஏன் நகைத்தாய்?

பெண்ணுடலை கணவனும் நானும் மட்டுமே காண்கிறோம்.

பெண் உள்ளத்தை காண்பவளோ நான் மட்டுமே.

சொல்லுக தேவி நீ நகைத்தது எதற்காக?

அவன் கங்கையின் கரையோரத்தை நோக்கியபடி படகில் அமர்ந்திருந்தான். கங்கைக்கரை மானுடத் தலைகளால் ஆனதாக இருந்தது. அது அசைவுகளால் அலைகொண்டது. பல்லாயிரம் கைகளால் நீரும் அன்னமும் அளிக்கப்படுகின்றன. பல்லாயிரம் பல்லாயிரம் நீங்குயிர்கள் வந்து அவற்றுக்காக காத்திருக்கின்றன. நீரின் அலைகளாக. காற்றின் தொடுகையாக. இலைநுனிகளாக. ஒளிரும் சிறகுகளும் இமையா விழிகளும் கொண்ட பூச்சிகளாக.

உன் பாதங்கள் தொட்டுச் செல்லும் பூமி அதையறியும்.

உன் மேனி வருடிச் செல்லும் காற்றும் அதையறியும்.

அன்னையே உன்மேல் ஒளி பொழிந்து விரியும் வானும் அதையறியும்.

 

நானுமறிவேன் பொற்பரசியே,

நீ அனல் கொண்ட சொல்லெறிந்து

நிலம் பிளந்து மறைகின்ற எரிவாயின்

தழல் தணிக்க போதாது

விண்பிளந்து நான் மண்நிறைக்கும் நீரெல்லாம்.

அலையடித்து அலையடித்து தவிப்பதன்றி

நான் என் செய்வேன் தாயே?

குகன் பாடிக்கொண்டிருக்க சுகோத்ரன் நீரையே நோக்கி அமர்ந்திருந்தான். கங்கையின் நீரில் அவன் ஒளிரும் சில விண்மீன்களைக் கண்டான். அவை விழிகள் என ஒளிவிட்டன. மீண்டும் கூர்ந்தபோது நீர்ப்பரப்பிற்கு அடியில் மீன்கள் செறிந்து அசைவிழந்திருப்பதைக் கண்டான். மீன்கூட்டங்களின் விழிகளை நோக்க முடிவது போலிருந்தது.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 57

பகுதி எட்டு : விண்நோக்கு – 7

சுகோத்ரன் கண்களை மூடி அந்தக் காலத்தையும் இடத்தையும் கடந்து வேறெங்கோ இருந்தான். உஜ்வலன் அசைந்து அசைந்து அமர்ந்தான். அவ்வப்போது சுகோத்ரனை நோக்கினான். வேள்வி தொடர்ந்து நடக்க வெளியே பறவைக்குரல்கள் மாறுபட்டன. கீழே கங்கையிலிருந்து எழுந்த காற்று மாறுபாடு கொண்டது. அதில் நீராவியின் வெம்மை கலந்திருப்பதை உடல் உணர்ந்தது. அதுவரை காட்டிலிருந்து கங்கை நோக்கிச் சென்று சுழன்று வந்த காற்று வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியது. புகையை அது முழுமையாக அள்ளிச்சென்றமையால் வேள்விச்சாலைக்குள் மூச்சுத்திணறல் குறைந்தது.

“சாவே,

தேவர்கள் அணுகாத தனிமைகொண்டதும்

உனக்கு மட்டுமே உரியதுமான

வழியினூடாக அகன்று செல்க!

கண்கள் கொண்ட உன்னிடம்

செவிகள் கொண்ட உன்னிடம்

நான் மன்றாடுகிறேன்

எங்கள் மைந்தர்களையும் வீரர்களையும் வருத்தாதே

 

சாவின் வழியிலிருந்து அகலுங்கள்

தேவர்கள் செல்லும் வழியில் செல்லுங்கள்

நீண்ட நலமான வாழ்நாளை கொள்ளுங்கள்

வேள்விசெய்பவர்களே

செல்வத்துடனும் மைந்தர்களுடனும் செழித்திருக்க

தூயவர்களாக இங்கே தோன்றுங்கள்”

 

கால்கள் மரத்துப்போகுமளவுக்குப் பொழுது கடந்துவிட்டிருந்தது. இறுதியாக எமனுக்குரிய தெற்குதிசையில் கரிய பட்டாடையை பரப்பி அதன்மேல் எருமைக்கொம்புகளை வைத்து எமனை அங்கே நிறுவினார்கள். காலவடிவனை அழைக்கும் வேதச்சொல் ஒலிக்கலாயிற்று.

எமனே

அங்கிரீசர்களான மூதாதையருடன்

இணைந்திருப்பவனாகிய நீ

இந்த வேள்வியிலே வந்து அமர்க!

கவிஞர்களால் பாடப்படும் இந்தச் சொற்கள்

உன்னை ஏந்தி இங்கே கொண்டுவருக!

அரசனே

உன்னை இந்தப் படையல்கள் மகிழ்வுறுத்துக!

 

எமனுக்குரிய அவி படைக்கப்பட்டது. பாண்டவர் ஐவரிடமிருந்தும் பெறப்பட்ட பொருட்கள் அனலில் இடப்பட்டன. வேள்விநிறைவு செய்து தௌம்யர் கைகளால் ஆணையிட வைதிகர் அனைவரும் இணைந்து வேதச்சொல் எழுப்பினர். கைகள் நாவுகள் என அசைந்து சொற்களாயின. அனல் எழுந்து குதித்து தலைசுழற்றியது.

வேதத்துணைவனே

நீ இந்த உலகில் இல்லாதவர்களும் இருப்பவர்களும்

அறியப்பட்டவர்களும் அறியப்படாதவர்களும் ஆகிய

எல்லா மூதாதையர்களையும் அறிந்தவன்

இங்கே முறையாகச் செய்யப்படும் வேள்வியை

ஏற்றருள்க!

 

அனலால் எரிக்கப்பட்டவர்களும்

அனலால் எரிக்கப்படாதவர்களும்

இச்சுடரின் அளிக்கப்படும் கொடையால்

விண்ணிலிருந்து மகிழ்வுகொள்க!

நீ அவர்களுடன் இணைந்து

மூச்சுலகை அடைக!

அங்கே நிறைவுகொள்க!

ஆம் அவ்வாறே ஆகுக!

ஆம்! ஆம்! ஆம்!

 

தௌம்யர் எழுந்துகொண்டு ஆணையிட யுதிஷ்டிரனும் இளையோரும் எழுந்து கைதொழுது நின்றனர். தௌம்யர் அவர்களின் தலைக்குமேல் அரிசியும் மலருமிட்டு வாழ்த்தினார். அவர்கள் அவரை அடிபணிந்து வணங்கினர். மும்முறை எரிகுளங்களைச் சுற்றிவந்து வணங்கி நிற்க தௌம்யர் அவர்கள் நெற்றியில் வேள்விக்கரியால் மங்கலக் குறியிட்டார்.

அவியன்னம் பகுக்கப்பட்டது. அதில் வேள்விக்காவலர்களுக்குரிய பங்கு தனியாக எடுக்கப்பட்டு ஐந்தாக பங்கிடப்பட்டது. தௌம்யர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அளித்த வேள்வியன்னத்தை புதிய சுடுமண் தாலங்களில் எடுத்து தலையில் வைத்துக்கொண்டனர். பச்சையிலை மேல் வைக்கப்பட்ட தாலங்களுடன் கங்கை நோக்கி அவர்கள் சென்றனர்.

அவர்களுக்கு முன்னால் வெண்சங்கு ஊதியபடி ஒரு காவலன் சென்றான். தொடர்ந்து இரு ஏவலர் தரையில் வெள்ளைத் துணியை விரித்துச்செல்ல அதன்மேல் முதலில் யுதிஷ்டிரனும் பின்னர் மூப்புமுறைப்படி பாண்டவர்களும் நடந்தனர். தொடர்ந்து அந்தணர் செல்ல இறுதியாக ஏவலர் சென்றனர். இருபுறமும் ஏவலர்களும் காவலர்களும் வாளும் வேலும் தாழ்த்தி தலைகுனிந்து நின்றனர்.

சுகோத்ரன் உஜ்வலனிடம் “வருக!” என கைகாட்டிவிட்டு முன்னால் சென்றான். அரசர்கள் சென்றபின் அந்த வழியில் அங்கே நீர்க்கடன் கொடுக்கும்பொருட்டு வந்துசேர்ந்திருந்தவர்கள் அனைவரும் நீண்ட நிரையாகச் சென்றனர். அவர்களுடன் சுகோத்ரனும் உஜ்வலனும் இணைந்து சென்றனர். சுகோத்ரனின் விழிகள் நிலைநட்டு நோக்கிழந்திருந்தன. உஜ்வலன் சூழ நோக்கிக்கொண்டு நடந்தான்.

கங்கைக்கரையில் விதுரரும் காவலர்தலைவர்களும் நின்றிருப்பதை சுகோத்ரன் கண்டான். விதுரர் கைகளை அசைக்க அதற்கேற்ப அங்கிருந்தவர்கள் செயலாற்றினர். அவருடைய முகம் கண்கள் சுருங்க, கடுமையான தோற்றத்துடனிருந்தது. சுகோத்ரன் அங்கே இளைய யாதவர் வரக்கூடுமா என எதிர்பார்த்தான். அவர் வரப்போவதில்லை என உணர்ந்திருந்தான். அவர் அங்கே என்ன செய்துகொண்டிருப்பார் என்று ஓர் எண்ணமெழுந்தது. அங்கிருப்பவர்கள் அனைவருமே ஒரு கணமேனும் அவரை நினைத்துக் கொள்ளாமலிருக்க மாட்டார்கள். அவன் பெருமூச்சுவிட்டான்.

அவர்கள் அணுகியபோது கூடிநின்றவர்களிடமிருந்து சொல்லில்லாத முழக்கம் ஒன்று எழுந்தது. சங்கொலி விம்மல் என எழுந்து ஓங்கி தேம்பி ஒலித்தது. வேதியர் எழுவர் அவர்களை எதிர்கொண்டு அழைத்துச்சென்று கங்கைநீரை அடைந்தனர். அவர்களுடன் பாண்டவர்கள் ஐவரும் நீரில் இறங்கி இடைவரை மூழ்கி நின்று வேள்வியன்னத்தை கங்கை நீரில் தலைக்குப் பின்புறம் சரித்துப் போட்டு ஏழுமுறை மூழ்கி எழுந்தார்கள். கரையில் நின்றிருந்த வேதியர் வேதச்சொல் உரைத்தனர். அவர்கள் படியேறி வந்தபோது சங்குகள் முழங்கின.

கரையேறி வந்த பாண்டவர்களை சூதப்பூசகர் எழுவர் வரவேற்று அழைத்துச்சென்றார்கள். வேதியர் எழுவரும் திரும்பிநோக்காமல் மேலேறிச்சென்று ஒற்றைத்திரளாக நடந்து விழிகளிலிருந்து மறைந்தனர். ஏழு சூதர்களும் வழிகாட்ட பாண்டவர்கள் நடந்துசென்று காட்டுவிளிம்பில் புதர்களை விலக்கி அமைக்கப்பட்டிருந்த சிறிய வெளியில் களிமண் குழைத்து உருவாக்கப்பட்டிருந்த மேடையை அடைந்தனர். அதன்மேல் ஐந்து சிறிய பசுமண் கலங்கள் செம்பட்டு கொண்டு வாய்மூடிக் கட்டப்பட்டு, செங்காந்தள் மலர்சூட்டி வைக்கப்பட்டிருந்தன.

யுதிஷ்டிரரும் இளையோரும் அதை கைகூப்பி வணங்கியபடி நின்றனர். “ஏழு பிடி சாம்பல்” என்று உஜ்வலன் மெல்லிய குரலில் சொன்னான். “குருக்ஷேத்ரத்தில் எரிந்த அனைவருக்காகவும். அது நன்று. தீ அனைவரையும் ஒன்றெனக் கருதுகிறது. ஒரே சாம்பலென ஆக்குகிறது.” சுகோத்ரன் திரும்பி நோக்கவில்லை. யுதிஷ்டிரனும் இளையோரும் அக்கலங்களை நிலம்படிய விழுந்து வணங்கினர். சூதர்கள் அவற்றை எடுத்து அளிக்க தலையில் ஏற்றிக்கொண்டனர்.

ஈமநிகழ்வுகளுக்குரிய தளர்தோல் குறுமுழவும் சிறுபறையும் எருதுக்கொம்புகளும் முழங்கின. வலிகொண்டு தேம்புவனபோல் இருந்தது அவற்றின் ஓசை. இசைக்கலன்களுடன் ஈமச்சூதர் பன்னிருவர் முன்னால் வர ஐவரும் சாம்பற்கலங்களை தலைக்குமேல் ஏற்றிக்கொண்டு தொடர்ந்து நடந்துவந்தனர். யுதிஷ்டிரன் நடை தள்ளாடினார். பிற நால்வரும் துயிலில் நடப்பவர் போலிருந்தார்கள்.

கங்கையின் படித்துறைக்கு அருகே காடு வெட்டி விலக்கி, நிரப்பாக்கப்பட்டு மணல் விரித்திருந்த நீள்வட்ட வடிவ நிலத்திற்கு அவர்களை அழைத்துச்சென்றனர் சூதர். ஐவரும் அமர்வதற்கான தர்ப்பைப்புல் விரிக்கப்பட்ட பீடங்கள் இருந்தன. செம்பாலான கலங்களும் நீர்க்குடங்களும் ஒருக்கப்பட்டிருந்தன. மண்ணாலான ஏழு திரி இடப்பட்ட விளக்கு நிறைந்த எண்ணையின்மேல் சுடரொளி பரவியிருக்க எரிந்துகொண்டிருந்தது. அவர்கள் அக்கலங்களை இறக்கி வைக்க அவை வரிசையாக மண்ணில் அமைக்கப்பட்டன.

பாண்டவர்கள் சூதர் வழிகாட்ட அமர்ந்ததும் சூதர்கள் எதிரே அமர்ந்தனர். மும்முறை சங்கு முழங்கி அமைந்தது. கலங்களுக்கு மலர்மாலை சூட்டி வணங்கினர். ஈமச்சடங்குக்குரிய இசைக்கலன்களின் ஓசை வயிற்றை அதிரச் செய்தது. யுதிஷ்டிரன் திரும்பி நோக்க ஸ்ரீமுகர் அருகே சென்று பணிந்தார். அவர் சொற்களைக் கேட்டு திரும்ப ஓடிவந்து சுகோத்ரனிடம் “நீங்கள் பலியன்னம் சமைக்க வரவேண்டும் என்று அரசர் கோருகிறார்” என்றார்.

சுகோத்ரன் விழித்தெழுந்து “என்ன?” என்றான். “பலியன்னம் சமைக்க வந்து அமர்க என்கிறார் அரசர்” என்றார் ஶ்ரீமுகர். “செல்க இளவரசே, இதுவே உகந்த தருணம்… இதைவிட ஓர் அடையாளச்செயல் பிறிதில்லை” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் மேலும் தயங்கிய பின் “இல்லை, நான் என் ஆணையைப் பெறவில்லை” என்றான். ஸ்ரீமுகர் “இது இரண்டாவது அழைப்பு. இம்முறையும் அரசர் அதை வேண்டுகோளாகவே முன்வைக்கிறார்” என்றார்.

“நீங்கள் எதை அஞ்சுகிறீர்கள்?” என்று உஜ்வலன் சீற்றத்துடன் கேட்டான். சுகோத்ரன் மறுமொழி சொல்லாமல் நிற்க ஸ்ரீமுகர் அவன் சொல்லுக்காகக் காத்தார். சுகோத்ரன் “என் சொல் எழுமெனில் நான் வருகிறேன்” என்றான். ஸ்ரீமுகர் தலைவணங்கி திரும்பிச்சென்றார். அவர் சென்று சொல்ல யுதிஷ்டிரன் சலிப்பு கொண்டவர்போல திரும்பி நோக்கினார். “இங்கே நீர்க்கடனுக்கு நீங்கள் அமரவில்லை என்றால் ஒருவேளை ஒருபோதும் நீங்கள் குடித்தொடர்பை கோரமுடியாமலாகலாம்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் பெருமூச்சுவிட்டு உடலை எளிதாக்கி கைகளை மார்பில் கட்டிக்கொண்டான்.

சூதர்கள் கொண்டுவந்த மண்கட்டிகளைக் கொண்டு, அவர்கள் வழிகாட்ட பாண்டவர்கள் அடுப்புகளை அமைத்தனர். அதன்மேல் புதிய கலங்களை அமைத்து எரிமூட்டினர். நீரூற்றி கொதிக்கவைத்து புல்லரிசியும் எள்ளும் நீரில் கழுவிக் களைந்து உள்ளே போட்டனர். அன்னம் கொதிக்கத் தொடங்கியதும் ஐந்துவகை காய்களை உள்ளே போட்டனர். பலியன்னங்களுக்கே உரிய கறைமணம் எழத்தொடங்கியது. புகையை காற்று வடக்காக அள்ளிக்கொண்டு சென்றது. காற்று நின்றபோது புகை சூழ யுதிஷ்டிரன் இருமினார்.

தொலைவில் கொம்பொலி கேட்டது. திரும்பி நோக்கிய உஜ்வலன் “மூதரசர்” என்றான். ஒரு இரட்டைக் குதிரைத்தேர் வந்து நின்றது. அதன் முன் கொம்பூதியபடி வந்தவர்கள் முன்னால் வந்து நிலைகொண்டனர். தேருடன் நடந்துவந்த யுயுத்ஸு பின்பக்கம் சென்று படிகளை பொருத்தினான். தேருக்குப் பின்னால் வந்த சங்குலன் திருதராஷ்டிரரின் தோள்களைப் பிடித்து மெல்ல இறக்கினான். அவர் நின்று உடலை நிமிர்த்தி தலையை உருட்டி ஏதோ சொன்னார். பின்னர் அவன் தோளைப்பற்றியபடி கால் வைத்து நடந்து வந்தார்.

அவனுடன் வந்த சஞ்சயன் திருதராஷ்டிரரின் இடப்பக்கம் நடந்தான். அவர்களுக்கு முன் யுயுத்ஸு நடக்க அவர் நின்று நின்று நடந்து வந்தார். கொம்புகளுடன் வந்தவர்கள் அங்கேயே நின்றுவிட சங்கு முழக்கியபடி ஒரு வீரன் மட்டும் முன்னால் வந்தான். திருதராஷ்டிரர் மூச்சிரைப்புடன் பல இடங்களில் நின்றார். அங்கிருந்த மணத்தை உணர விழைபவர்போல மூக்கைச் சுளித்தபடி சுற்றுமுற்றும் நோக்கியபின் மீண்டும் நடந்தார். கூடிநின்ற அனைவருமே அவரையே நோக்கிக்கொண்டிருந்தனர்.

கங்கைக்கரையை அடைந்ததும் அவரை படித்துறையில் அமரவைத்தனர். அவர் கைகளை மடியில் கோத்து தலைகுனிந்து அமர்ந்தார். சுகோத்ரன் அவருடைய உடலின் பெருந்தோற்றத்தை விழிமலைக்க நோக்கிக்கொண்டு நின்றான். பாதாளப் பெருநாகங்கள் பின்னிப்பிணைந்து ஓர் உடலென்றானதுபோல, அவை முறுகி நெளிந்து நெகிழ்ந்து மீண்டும் முறுகிக்கொள்வதுபோல. உள்ளே சிக்கிக்கொண்ட பாறை ஒன்றை அவை இறுகி உடைத்து தூளாக்கிவிட முயல்வதைப்போல. அல்லது அவை தங்களைத் தாங்களே நெரித்துக்கொள்கின்றன.

திருதராஷ்டிரர் மெல்ல முனக யுயுத்ஸு குனிந்து அவர் சொல்லை கேட்டான். பின்னர் ஓடிச்சென்று விதுரரிடம் கூற அவர் அருகே வந்து நின்றார். திருதராஷ்டிரர் கைநீட்டி விதுரரை தொட்டார். அவருடைய கைகள் விதுரரின் தலையையும் தோளையும் வருடின. விதுரர் அழுகையை அடக்கிக்கொண்டவராக கங்கையை நோக்கி முகம் திருப்பிக்கொண்டார். அமைச்சர் ஸ்ரீமுகர் ஓடி அருகணைய விதுரர் திருதராஷ்டிரரிடம் சொல்லிவிட்டு அப்பால் சென்று அவருக்கு ஆணைகளை இட்டார். அவர் பலிச்சோறு சமைக்கப்படும் இடம் நோக்கி சென்றார்.

சூதர்கள் அருகே நின்று மெல்லிய குரலில் வழிகாட்ட பாண்டவர்கள் அன்னத்தை சமைத்தனர். கலங்களிலிருந்து அன்னத்தை இறக்கி ஐந்து இலைகளில் படைத்தனர். அவற்றை ஏழு சிறு உருளைகளாக ஆக்கினர். அங்கே பேச்சென ஏதும் எழவில்லை. கங்கையின் அலைகளின் ஓசையும் அப்பாலிருந்து காட்டின் காற்றோசையும் எழுந்துகொண்டிருந்தன. எங்கோ முறுகக்கட்டியிருந்த எதுவோ அசைந்து அசைந்து முனகலோசை எழுப்பிக்கொண்டிருந்தது. நீரோட்டத்தில் இழுபட்ட படகா என சுகோத்ரன் திரும்பி நோக்கினான்.

கங்கைப்பரப்பில் ஒளி எழத் தொடங்கியிருந்தது. கரையோரக் காடு இருட்டுக்குள்தான் இருந்தது. கங்கையின் கரை முழுக்க மானுடர் செறிந்திருந்தனர். முதுசூதர் பாண்டவர்களின் குடித்தெய்வமான கொற்றவையை ஒரு கிடைக்கல் மேல் நீள்கல்லாக பதிட்டை செய்தார். அக்கல்லின்மேல் செந்நிறக் களபமும் குங்குமமும் பூசி செந்நிற பட்டுத்துணியை அணிவித்தார். செம்மலர்களைச் சூடி அவள் முன் சிறுநெய்விளக்கு ஒன்றை ஏற்றிவைத்தார். “குடித்தெய்வத்தை வணங்குக!” என்று சூதர் கூறியபோது யுதிஷ்டிரன் திரும்பி விழிகளால் துழாவி சுகோத்ரனை பார்த்தார். மெல்லிய குரலில் அவர் ஏதோ சொல்ல அங்கே நின்றிருந்த சிற்றமைச்சர் மாதவர் தலைவணங்கியபின் பதற்றத்துடன் ஓடி சுகோத்ரன் அருகே வந்தார். “அரசர் அழைக்கிறார், வருக!” என்றார்.

“செல்க!” என்று உஜ்வலன் சொன்னான். “சென்று அமர்க… நீர்க்கடன் செய்வதற்குத்தான் நாம் வந்துள்ளோம்.” சுகோத்ரன் தயங்கிய காலடிகளுடன் நடந்து மாதவருடன் சென்றான். அவனுடன் உஜ்வலன் உடன் சென்றான். சுகோத்ரன் அணுகுவதை முதுசூதர் ஓரவிழியால் நோக்கியபடியே தங்கள் சடங்குகளை தொடர்ந்தார்கள். சுகோத்ரன் யுதிஷ்டிரன் அருகே சென்று நின்றான். அவர் அவனிடம் அமரும்படி கைகாட்டினார். அவன் கைகூப்பியபடி நின்றான். அவர் அமர்க என மீண்டும் கைகாட்டினார். சகதேவன் அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரப்போகிறவன்போல கால்களை சற்றே மடித்தான்.

அக்கணத்தில் வாளை உரசி உருவும் ஓசையுடன் ஒரு சிறு பறவை ஊடாகச் சீறிப்பறந்தது. திடுக்கிட்டு சுகோத்ரன் திரும்பி நோக்கினான். அப்பறவையை நோக்க முடியவில்லை. அவன் திரும்பி நோக்கியபோது கரையில் ஒரு கலைவைக் கண்டான். அங்கே மீண்டும் ஒரு கொம்பின் ஒலி எழுந்தது. அனைவரும் திகைப்புடன் திரும்பி நோக்க ஒற்றைக்குதிரை பூட்டப்பட்ட தேர் வந்து நின்றது. கொம்பூதி மீண்டுமொருமுறை ஊதி நுனி தழைத்து உடல் வளைத்து அகன்றான். தேரின் திரையை விலக்கி பூர்ணை இறங்கினாள். தொடர்ந்து இன்னொரு இளம்சேடி இறங்கி நின்றாள். இருவரும் உள்ளே கைநீட்டிப் பற்றி மிக மெல்ல குந்தியை இறக்கினார்கள். கூட்டத்திலிருந்து திகைப்போசை எழுந்தது.

விதுரர் பரபரப்புடன் சூழநோக்க ஸ்ரீமுகர் அருகே ஓடிவந்தார். அவர் விரைந்த சொற்களில் ஆணையிட ஸ்ரீமுகர் உடல் குலுங்க குந்தியை நோக்கி ஓடினார். விதுரர் யுதிஷ்டிரனின் அருகே சென்றார். யுதிஷ்டிரன் எழமுயல முதுசூதர் “சடங்கின் நடுவே எதன்பொருட்டும் எழலாகாது, அரசே” என எச்சரித்தார். யுதிஷ்டிரன் தவிப்புடன் அமர்ந்துகொண்டார். விதுரர் “அவர்கள் இங்கே வரட்டும், அரசே” என்றார். “அவர்கள் இங்கே வரலாமா?” என்றார் யுதிஷ்டிரன். “வரலாகாது, ஆனால் வந்தபின் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார் விதுரர்.

குந்தி மிகமிக மெல்ல வந்துகொண்டிருந்தாள். “எதற்காக வருகிறார்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “எதன்பொருட்டென்றாலும் வந்துவிட்டார். அதை எதிர்கொள்வோம்” என்றார் விதுரர். “அவரால் இனி நன்றென ஏதும் நிகழ்வதற்கில்லை” என்றார் யுதிஷ்டிரன். “கடுஞ்சொல் உரைக்கும் இடமல்ல இது” என்றார் முதுசூதர். யுதிஷ்டிரன் சீற்றத்துடன் தலையை அசைத்தார். பின்னர் “நான் அவரை சென்று பார்க்கிறேன் என செய்தியனுப்புங்கள்” என்றார். பீமன் “மூத்தவரே, பொறுங்கள்” என்றான்.

ஸ்ரீமுகர் ஓடிவந்து “அமைச்சரே, இங்கே வரவேண்டியதில்லை, அரசரே அவரைப் பார்க்கவருவார் என்று அரசியிடம் சொன்னேன். அரசி என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த முதுசேடி அரசி இங்கே வரவே விழைகிறார் என்றாள்” என்றார். “வரட்டும்” என்றார் விதுரர். “என்ன இது, அமைச்சரே? என்ன நிகழ்கிறது இங்கே? நீர்க்கடன் என ஒன்று நிகழுமா இல்லையா?” என்றார் யுதிஷ்டிரன். சினத்தில் அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். பீமன் “மூத்தவரே, சொல் காக்க!” என்றான். யுதிஷ்டிரன் உறுமலோசையை எழுப்பினார்.

குந்தி நின்று விழப்போகிறவள் என சாய பூர்ணை பிடித்துக்கொண்டாள். “அவரால் நடக்க இயலாது. அவருடைய உடலில் உயிர் தொற்றி நிற்கிறது… ஏன் இத்தனை நீண்ட நடை? நான் எழுந்து செல்கிறேன்” என்றார் யுதிஷ்டிரன். “என்ன ஆகும்? அனைத்துச் சடங்குகளையும் மீண்டும் செய்யவேண்டும், அவ்வளவுதானே?” முதிய சூதர் “அல்ல, அது மட்டும் போதாது. இங்கே நீத்தோர் வந்து கூடியிருக்கிறார்கள். அவர்களின் கண்களும் செவிகளும் நாவுகளும் காத்திருக்கின்றன. அவர்களை உதறிவிட்டுச் செல்வதென்றால் அவர்கள் அதை ஏற்கவேண்டும். மீண்டும் அழைத்தால் அவர்கள் வரவேண்டும்” என்றார்.

“என் ஊழ் இது” என்று யுதிஷ்டிரன் உடைந்த குரலில் சொன்னார். “மூதாதையருக்கும் நீத்தார்க்கும் நீர்க்கடன் செய்யக்கூட தகுதியற்ற பழியன் ஆகிவிட்டிருக்கிறேன். இப்புவியில் என்னைப்போல் கீழோன் எவருமில்லை.” அவர் விம்மி முகம் தாழ்த்திக்கொள்ள எவரும் எதுவும் சொல்லவில்லை. சுகோத்ரன் நடுங்கிக்கொண்டு நின்றிருந்தான். அந்தப் பறவை எது என அவன் எண்ணம் தவித்தது. அது மெய்யாகவே பறவையா? பிறிதொரு பறவையும் அங்கே எங்கும் இல்லை. அது ஓர் ஒலி உடலென எழுந்தது.

குந்தி அணுகிவர அவர்கள் அவளை விழிமலைத்து நோக்கி நின்றனர். அவள் ஒற்றை அடிகளாக வந்துகொண்டிருந்தாள். வெண்ணிற புகைச்சுருள்போல எடையற்றிருந்தாள். சில தருணங்களில் அவள் காற்றிலாடுவது போலிருந்தது. சில தருணங்களில் அவள் உருவழிந்து வெளியில் கரைந்துகொண்டிருப்பது போலிருந்தது. வெண்ணிறக் கொடிபோல நின்ற இடத்திலேயே துவள்வது போலிருந்தது. நோக்கி நோக்கி சித்தம் எடைகொண்டது. அவன் நோக்கை விலக்கிக்கொண்டு கங்கையை பார்த்தான். மீண்டும் நோக்கியபோதும் அவள் வந்துகொண்டிருந்தாள்.

குந்தி அருகணைந்தபோது அவன் உளம்களைத்து சலிப்புற்றுவிட்டிருந்தான். அங்கிருந்த அனைவருமே அவ்வண்ணம் ஆகிவிட்டிருந்ததை உடல் தளர்வுகள் காட்டின. குந்தி நின்றபோது அவள் கால்கள் தரையில் தொடவில்லை. இரு சேடியரும் அவளை தோள்பற்றித் தாங்கியிருந்தார்கள். அவள் மயங்கி விழிமூடி அவர்களின் மேல் படிந்திருந்தாள். பின்னர் மெல்ல முனகினாள். அவர்கள் அவளை மேலும் சுமந்து முன்னால் கொண்டுவந்தனர். அவள் முனகிக்கொண்டே இருந்தாள். தீராப் பெருவலி கொண்டவள்போல.

அவள் உடலெங்கும் மெல்லிய தசைத்துடிப்பு இருந்தது. மெலிந்து நரம்புக்கொத்துபோல் ஆகிவிட்டிருந்த கைகள் முறுக்கிக் கொண்டிருந்தன. உள்ளங்கைகள் வாடிக்கூம்பிய மலர்கள்போல உள்நோக்கித் திரும்பி சுருண்டிருந்தன. கால்களும் அவ்வாறே முறுகியிருக்க இரு பாதங்களும் வெவ்வேறு திசைகளில் திரும்பியிருந்தன. அவள் முகத்தின்மேல் மேலாடை விழுந்து கிடந்தது. அவளை ஏந்தி வந்த பூர்ணையின் விழிகள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன.

பூர்ணை குந்தியை கால்களில் நிறுத்தி ஒற்றைக்கையால் பற்றிக்கொண்டாள். “அரசே, பேரரசி குந்தி உங்களிடமும் இங்கே கூடியிருக்கும் அனைவரிடமும் ஒன்று சொல்ல விரும்புகிறார்” என்றாள். கைகூப்பியபடி அமர்ந்திருந்த யுதிஷ்டிரன் அறியாமல் எழப்போக முதுசூதர் கையமர்த்தி அமரச்செய்தார். விதுரர் “கூறுக, அரசி!” என்றார். முதுசூதர் “இது ஈமநிலம். இங்கே நீத்தாருக்குரிய சொற்களன்றி எதுவும் சொல்லப்படலாகாது. இடுகாட்டிலும் ஈமநிலத்திலும் எடுக்கப்படும் வஞ்சினங்கள், விடுக்கப்படும் ஆணைகள் எவையும் நிலைகொள்ளவேண்டிய தேவையில்லை” என்றார்.

குந்தி மெல்லிய குரலில் ஏதோ சொன்னாள். பூர்ணை “அரசி ஈமநிலத்திற்குரிய சொற்களைச் சொல்லவே வந்திருக்கிறார்” என்றாள். பின்னர் அவள் கைகாட்ட ஏவலன் ஒருவன் நீர்க்குடுவையுடன் ஓடிவந்தான். அதை அவள் குந்தியின் வாயருகே நீட்டினாள். அவள் முலைக்காம்பை நாடும் கைக்குழவி என வாய் நீட்டி அதனைப் பற்றி உறிஞ்சினாள். நாலைந்து மிடறு உண்டதும் கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் முகத்திரை விலகி பின்னால் சரிந்தது. ஒடுங்கி வற்றிவிட்டிருந்த முகம் மிகமிகச் சிறிதாகத் தெரிந்தது. கன்னங்கள் குழிந்து வாய் முன்னால் நீட்டியிருந்தது. உதடுகள் இருப்பதாகவே தெரியவில்லை. சிறிய மூக்கு வெண்மெழுகாலானதுபோலத் தோன்றியது. அவள் கண்களை மூடி நின்றாள். நெற்றியின் இருபுறமும் நீலநரம்புகள் துடிப்பது தெரிந்தது. கழுத்தின் நரம்புகள் அசைந்தன. குரல்வளை பதைத்தது.

முனகலோசை எழுந்ததும் பூர்ணை அவளை நோக்கி குனிந்தாள். குந்தி எதிர்பாராதபடி தெளிவான குரலில் “யுதிஷ்டிரா, என் வயிற்றில் பிறந்த உன் தமையன் கர்ணனுக்கும் உரிய நீர்க்கடன்களைச் செய்க!” என்றாள். யுதிஷ்டிரன் கைகளைக் கூப்பியபடி, ஒடுங்கும் தோள்களுடன், நடுங்கும் உதடுகளுடன் கேட்டு அமர்ந்திருந்தார். “அனைவரும் அறிக… இதை இவ்வுலகே அறிக! நான் ஈன்ற மைந்தன் கர்ணன். கதிரவனை நோற்று என் வயிற்றில் அவனை ஏந்தி பெற்றெடுத்தேன்.”

அவள் குரல் நடுக்குடன் மேலும் ஓங்கியது. “அஸ்தினபுரியின் முதல் மைந்தன் அவனே. மணிமுடிக்குரியவனும் அவனே. அவன் அதை அறிந்திருந்தான். அவனிடம் நான் சென்று இரந்து பெற்ற இறுதிக்கொடையே பாண்டவர்களின் போர்வெற்றி. அவர்களின் உயிர் அனைத்தும் தமையன் தம்பியருக்கு அளித்த பரிசு மட்டுமே.” பீமன் எழுந்துவிட்டான். முதுசூதர் கைநீட்ட அவன் அவரை கையை அசைத்து விலக்கினான். அர்ஜுனன் தலைகுனிந்து நிலம்நோக்கி அமர்ந்திருந்தான். சகதேவனும் நகுலனும் கைகளை பற்றிக்கொண்டார்கள்.

“குடியச்சத்தால் அவனை நான் துறந்தேன். முடிவிழைவால் அவனை மறந்தேன். அவனுக்கு நான் முலையூட்டவில்லை. ஓர் இன்சொல்கூட கூறவுமில்லை. இன்று இந்த ஈமநிலையில் இந்தக் குடியவைமுன் சொல்லும் இச்சொற்களே என் மைந்தனுக்கு, என் மைந்தர்களில் தலைமகனுக்கு, நான் செய்யும் ஒரே கடன். அவன் இவ்வன்னையை பொறுத்தருளட்டும். தன் இளையோரை வாழ்த்தட்டும். விண்ணில் தன் மூதாதையருடன் அவன் நிறைவுற்று அமரட்டும்.” அவள் கைகூப்பினாள். விழிகள் வறண்டிருந்தன. செல்வோம் என தலையசைத்தாள். பூர்ணை அவளை பற்றிக்கொண்டாள். அவர்கள் திரும்ப நடந்தனர்.

யுதிஷ்டிரன் பெருமூச்சொலி எழுப்பினார். ஏதோ சொல்லவருபவர்போல விம்மி ஒரு விக்கலோசையுடன் இடப்பக்கமாகச் சரிந்து நினைவழிந்து விழுந்தார். சூதர்கள் அவரை நோக்கி கூடி குனிய “விலகுக… ஒன்றுமில்லை, விலகுக!” என்றார் விதுரர். அச்செய்தி ஒரு முழக்கமாக அங்கே கூடியிருந்தவர்கள் நடுவே பரவுவதை கேட்கமுடிந்தது. எதையும் உணராதவளாக இரு சேடியரால் தாங்கப்பட்டு குந்தி தன் தேர் நோக்கி சென்றாள்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 56

பகுதி எட்டு : விண்நோக்கு – 6

யுதிஷ்டிரனின் குடில் முன் இறங்குவதுவரை உஜ்வலன் ஒன்றும் சொல்லவில்லை. குடிலில் யுயுத்ஸு மட்டும் இருந்தான். அவர்களை அவன் எதிர்கொண்டு “அரசரும் உடன்பிறந்தாரும் கங்கைக்கரைக்குச் சென்றுவிட்டார்கள். வேள்வியில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்களும் அங்கே செல்லலாம் என ஆணை” என்றான். அவன் முகமும் குரலும் இறுக்கமாக இருந்தன. அவன் விழிகளிலிருந்த விலக்கத்தை சுகோத்ரன் உணர்ந்தான். “இளைய யாதவர் எங்கே?” என்றான். “அவர் தன் குடிலிலேயே இருக்கிறார்” என்றான் யுயுத்ஸு

“ஏன்?” என்று உஜ்வலன்கேட்டான். “ஏன் அவர் நீர்க்கடனுக்கு வரவேண்டும்? அவருக்கு அங்கே செய்வதற்கேதுமில்லை”என்றான் யுயுத்ஸு. அவர்களிடம் அவன் பேசவே விரும்பவில்லை என்று தோன்றியது. “மெய்தான். இத்தனை சாவுகளில் அவருக்கு அணுக்கமான எவரும் இல்லை…” என்றான் உஜ்வலன். யுயுத்ஸு சீற்றத்துடன் விழிதூக்க புன்னகையுடன் “அல்லது அனைவருமே அவருக்கு அணுக்கமானவர்கள்தான் என்றும் சொல்லலாம்” என்றான். யுயுத்ஸு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

சுகோத்ரன் “இளைய யாதவர் அழைத்துவர ஆணையிட்ட முனிவர் வந்தாரா?” என்றான். “ஆம்” என்று யுயுத்ஸு அவனை நோக்காமலேயே சொன்னான். “அவர் திரும்பிச் சென்றுவிட்டாரா?”என சுகோத்ரன் மீண்டும் கேட்டான். “ஆம், அவர் சொன்னதென்ன என்று அறியேன். எனக்குரிய செய்தி அல்ல அது” என்று யுயுத்ஸு சொன்னான். சுகோத்ரன் “எனக்குரிய செய்தி அது. நான் நிமித்தம் அறிந்தவன்” என்றான். யுயுத்ஸு விழிதூக்கி நோக்கி “அதை நான் உங்களிடம் சொல்வதற்கு எனக்கு ஆணையில்லை” என்றான்.

சுகோத்ரன் வெறுமனே தலைவணங்கினான். ஒருகணத்திற்குப் பின் யுயுத்ஸு “இளவரசே, நான் உங்களிடம் ஒன்று கூறவேண்டும்” என்றான். “கூறுக, தந்தையே” என்றான் சுகோத்ரன். “இந்த அந்தணர் சற்றே விலகி நிற்கட்டும்” என்றான் யுயுத்ஸு. சுகோத்ரன் உஜ்வலனை பார்க்க அவன் புன்னகையுடன் தலைவணங்கி விலகி வெளியே சென்றான். யுயுத்ஸு “நான் நேற்றிரவு விதுரர் உங்களிடம் பேசிக்கொண்டிருந்ததை அறிவேன்” என்றான். “நீங்கள் அறியாத எதுவும் இங்கே நிகழாது என்பது தெரியும்” என்றான் சுகோத்ரன்.

யுயுத்ஸு “அது என் கடமை” என்றான். “என்ன பேசிக்கொண்டீர்கள் என்றும் தெரியும். இன்று முற்புலரிக்கு முன் உங்கள் தந்தை சகதேவனிடம் அதைப்பற்றிப் பேச வாய்த்தது. அதை உங்களிடம் சொல்லியாகவேண்டும்.” சுகோத்ரன் பேசாமல் நின்றான். “விதுரர் உங்களிடம் பேசிக்கொண்டிருந்த அதேபொழுதில் நான் இக்குடிலுக்கு வந்தேன். வெளியே காட்டோரமாக இருளுக்குள் மெல்லிய வெண்ணிழல் என உங்கள் தந்தை நின்றிருப்பதைக் கண்டேன். அவருடைய உடல் என் விழிகளுக்கு அத்தனை அறிமுகமான ஒன்று என்பதனால்தான் அவரை என்னால் காணவே முடிந்தது.”

அருகணைந்து அவரை வணங்கினேன். என் வருகையை அவர் விரும்பவில்லை. தனிமையில் புதைந்திருந்தார். ஆனால் இந்த முக்தவனத்தில் எவருக்காயினும் தனிமை நோயும் நஞ்சும் மட்டுமே என நான் அறிந்திருந்தேன். ஆகவே அவர் கொண்ட அத்தனிமையை கலைக்க நான் தயங்கவில்லை. மீண்டும் முகமன் உரைத்தேன். எரிச்சலுடன் என்னை நோக்கி என்ன என்று வினவினார். நான் நீர்க்கொடைச் சடங்குகள் குறித்து பேசினேன். அவர் நான் ஏதாவது புதிதாகச் சொல்வேன் என்று எண்ணி செவியளித்தார். பின்னர் சலிப்புடன் சில வினாக்களை கேட்டார். இளைய யாதவர் அழைத்துவந்திருந்த முனிவரின் செய்தியை சொன்னேன். அது அவருக்கு சற்றே ஆர்வம் அளித்தது.

அதன்பின்னர் விதுரர் உங்களைச் சந்தித்ததைப் பற்றி சொன்னேன். அவர் துயர்கொண்டவர் போல் முகம் சுளித்தார். அவருடைய உணர்வுகள் என்ன என்று என்னால் கணிக்க முடியவில்லை. “விதுரர் இயல்பாகச் சென்று பார்க்கவில்லை. எதையோ சொல்கிறார் அல்லது கோருகிறார்” என்றேன். “ஆம், அவர் கோருவது ஒன்றாகவே இருக்கமுடியும், அவர் அவனிடம் அஸ்தினபுரியின் முடியைக் கோரும்படி சொல்வார்” என்றார் உங்கள் தந்தை. நான் அதை அறிந்திருந்தேன் என்றாலும் “ஏன்?” என்றேன்.

“பீஷ்ம பிதாமகர் இன்றிருந்தாலும் அதைத்தான் சொல்லியிருப்பார். அவர்களுக்கெல்லாம் குருதியின் இயல்பான வழி மட்டுமே ஊழின் வழி. பிற அனைத்தும் பிழைபடுதலே” என்றார். நான் “அவர் குருதித்தூய்மையை எண்ணுகிறாரா?” என்றேன். “அதையும் கருதுபவர்தான். ஆனால் அவர் இப்போது எண்ணுவது அதையும் கடந்த ஒன்றை” என்றார். ‘அதைப்பற்றி நாம் பேசவேண்டாம். அவர் மைந்தனிடம் கோருவது அஸ்தினபுரியின் முடியை அவன் சூடவேண்டும் என்று” என்றார்.

“ஆம்” என்றேன். “நான் அவனிடம் இன்று எதையும் சொல்ல முடியாது. அவன்மேல் எனக்கு சொல் உண்டா என்றே எனக்கு ஐயமாக உள்ளது. அவனை நேரில் காண்பது வரை அவ்வாறு தோன்றவில்லை. அவன் பருவுடலாக, விழிகளாக, நகைப்பாக என் முன் தோன்றியபோது என் அகம் திடுக்குற்றது. அவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டிருந்தேன். அவ்வாறு மறக்கும்பொருட்டே அவனை நிமித்தக்கல்விக்கு அனுப்பியிருக்கிறேன். அவன் மீண்டதைக் கண்ட கணம் நான் அடைந்தது ஆழ்ந்த குற்றவுணர்ச்சி மட்டுமே. என் மூத்தவரின் மைந்தர்கள் அனைவரும் மறைந்தபின் அவன் மட்டும் எஞ்சியிருப்பது பெரும்பிழை என்னும் எண்ணமே என்னுள் இருந்தது” என்றார் உங்கள் தந்தை.

“ஏனென்றால் நான் அதை திட்டமிட்டு இயற்றியிருக்கிறேன் என எனக்கே தெரிந்திருந்தது. அவ்வுண்மை எதனாலும் மழுப்ப முடியாத உண்மை என முன்னால் எழுந்து நின்றது. அவன் உயிருடன் இருப்பதே என் தமையன்களை நான் வஞ்சித்ததற்கான சான்று என்று தோன்றியது. ஆகவே அவனிடம் என்னால் பேசமுடியவில்லை” என்று அவர் சொன்னார். “அவன் முடிசூடினான் என்றால் அது மிகப்பெரிய சூழ்ச்சியாக ஆகிவிடுகிறது. நிமித்திகனாகிய நான் அனைத்தையும் முன்னரே கணித்து என் மைந்தனை இதன்பொருட்டு நான் காத்துகொண்டேன் என்றே பொருள்படும்” என்றார்.

நான் அவரைத் தடுத்து “அவ்வாறு எவர் எண்ண முடியும்? தங்களைப்பற்றி அறியாதோர் எவர்?” என்றேன். அவர் கசப்புடன் புன்னகைத்து “ஆட்சியாளர்களையும் அரசகுடியினரையும் சான்றோரையும் மக்கள் கூர்ந்து நோக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் குறைகள் காண விழைகிறார்கள். ஆகவே இல்லாக்குறையையும் உண்டுபண்ணி கண்டடைகிறார்கள். அதனூடாக தங்கள் அன்றாடச்சிறுமைகளை கடந்துசெல்கிறார்கள். மேலும் நம்மைப்பற்றி பேசவிருப்பவர்கள் நாமறிந்தவர்கள் அல்ல, நம்மை அறிந்தவர்களும் அல்ல. வழிவழியாக வந்துகொண்டே இருப்பவர்கள்” என்றார்.

என்னால் மறுமொழி சொல்ல இயலவில்லை. “இது என் அச்சம், இதை நான் அவனிடம் சொல்ல இயலாது. இன்று அழைக்கப்படாமலேயே இத்தனை தொலைவுக்கு அவன் கிளம்பி வந்துள்ளான் என்றால் அவனுள் விழைவு உள்ளது என்றே எண்ணுகிறேன். அவனுடன் வந்துள்ள அந்தணன் அதைத்தான் பேசுகிறான். அந்தணனை துணைகொண்ட ஷத்ரியன் அரசனாக விழைபவன்” என்றார். நான் “அவர் அவ்வாறு சொல்லவில்லை” என்றேன். “அவன் விழைவதில் பிழை ஏதுமில்லை. அவனுக்குரியதே இன்று இந்நிலமும் முடியும். அவனை விலக்க எனக்கு உரிமையில்லை. தகுதியுமில்லை” என்றார்.

அவர் சொல்லவருவதென்ன என்று நான் காத்திருந்தேன். “அவனிடம் நீ சொல்லலாம். அவனுடைய முடிவு முழுக்கமுழுக்க அவனுடைய தெரிவு என நான் எண்ணுவதாகச் சொல். அவன் எதைத் தெரிவுசெய்தாலும் நான் அவனை வாழ்த்துவேன். ஆனால் அரசை அவன் தெரிவுசெய்தால் வருந்துவேன்” என்றார். “ஆனால் என் வருத்தம் ஒரு பொருட்டல்ல. அதை ஒரு துளியென்றாக்கும் பெருங்கடல் போன்ற துயர்மேல் சென்றுகொண்டிருக்கிறேன்.” நான் தலைவணங்கினேன். அதற்குள் அவரை அரசர் அழைப்பதாக ஏவலன் வந்து அழைத்தான். என்னிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.

“நான் என் சொற்களை தொகுத்து இதை சொல்லியிருக்கிறேன். என் விழிமுன் இருப்பது பந்த வெளிச்சத்தில் தெரிந்த அவருடைய துயர்மிக்க முகம் மட்டுமே. அந்த முகம் அளித்ததே அச்சொற்களுக்கான மெய்ப்பொருள்” என்று யுயுத்ஸு சொன்னான். “நீங்கள் எனக்கு சொல்வதென்ன, தந்தையே?” என்றான் சுகோத்ரன். “நீங்களே முடிவெடுக்கலாம், இளவரசே. ஆனால் நெறிநூல்கள் மைந்தனின் முதற்கடமை தந்தையை நிறைவுறச்செய்வதே என்கின்றன” என்றான் யுயுத்ஸு.

“அன்னையின் ஆணையை மைந்தன் எவ்வண்ணம் தலைக்கொள்ளவேண்டும்?” என்றான் சுகோத்ரன். யுயுத்ஸு திகைப்புடன் அவனை நோக்கி “அரசியை சந்தித்தீர்களா?” என்றான். “ஆம்”என்றான் சுகோத்ரன். “நன்று, நான் நெறிநூல்கள் சொல்வதையே சொல்கிறேன். மைந்தன் அகவை நிறைந்துவிட்டபின் அவன்மேல் அன்னையருக்கு எந்த உரிமையும் இல்லை. மகள்களிடம் அவர்களுக்கு இணையுரிமை உள்ளது. அவர்கள் இளவரசியர் என்றால் அவ்வுரிமையும் இல்லை” என்று யுயுத்ஸு சொன்னான். சுகோத்ரன் புன்னகையுடன் “தங்கள் சொற்களை செவிகொண்டேன் தந்தையே”என்றான்.

தலைவணங்கி அவன் வெளியே வந்தான். உஜ்வலன் அவனுக்காகக் காத்திருந்தான். அவர்கள் நடக்கையில் உஜ்வலன் “அவர் சொன்னதென்ன என்று அறிவேன்” என்றான். “நீங்கள் அஸ்தினபுரியின் மணிமுடியை மறுக்கவேண்டும், அவ்வளவுதானே?”சுகோத்ரன் “எங்ஙனம் உணர்கிறாய்?” என்றான். “அவர் முகமும் விழிகளும் சொற்களும் மாறியிருக்கின்றன. இரவில் அவர் எவரையேனும் சந்தித்திருக்கலாம். பெரும்பாலும் அது உங்கள் தந்தை சகதேவர்.” “ஏன்?” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் “நேற்று அவர் பேச எண்ணிய எதையோ பேசாமல் கடந்துசென்றார் என்று பட்டது. உங்களை நேருக்குநேர் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.”

சுகோத்ரன் “மெய்தான்” என்றான். “அவருடைய நற்பெயரை அவர் எண்ணுகிறார். போரின் முற்றழிவை முன்னரே உணர்ந்து, நீங்கள் முடிசூடவேண்டுமென திட்டமிட்டு, உங்களை வெளியே அனுப்பினார் என்னும் பழி வருமென அஞ்சுகிறார்” என்றான் உஜ்வலன். “அவ்வண்ணம் பழி வராதா?” என்றான் சுகோத்ரன். “உறுதியாக வரும்” என்றான் உஜ்வலன். “ஆனால் நீங்கள் நல்லாட்சி கொடுக்கமுடிந்தால், வெற்றிகளை ஈட்டினால், வேள்விகளை நிகழ்த்தினால், அந்தணர்க்கும் அறவோர்க்கும் சூதருக்கும் புலவருக்கும் அள்ளி வழங்கினால் மிக விரைவிலேயே அப்பழி அகலும். சொல்லப்போனால் உங்களைக் காத்து அஸ்தினபுரியின் குருதிவழியை நிலைநிறுத்திய உங்கள் தந்தை மாபெரும் சூழ்திறன் கொண்டவர் என்றே புகழப்படுவார்.”

சுகோத்ரன் “ஆம், அவ்வாறே எப்போதும் நிகழ்கிறது” என்றான். “உங்கள் தந்தை இன்று முனியக்கூடும். ஆனால் அந்த முனிதல்கூட மேல்மட்டத்திலேயே. ஆழத்தில் அவருடைய உள்ளம் நாடுவது உங்கள் அன்னை ஆணையிட்டதைத்தான்” என்று உஜ்வலன் சொன்னான். “ஏன்?” என்று சுகோத்ரன் கேட்டான். “அன்னையர் தந்தையரின் ஆழுள்ளத்தையே வெளிப்படுத்துகிறார்கள்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் கண்சுருக்கி நோக்க “ஏனென்றால் அன்புள்ள தந்தையர் ஆழத்தில் அன்னையர்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் புன்னகைத்தான். “நகையாட்டல்ல, பழிசூழாமல் நீங்கள் முடிசூடலாகும் என்றால் சகதேவன் வேண்டாம் என்றா சொல்வார்?” என்று உஜ்வலன் கேட்டான்.

“இத்தகைய வினாக்களுக்கு எவர் மறுமொழி சொல்ல இயலும்?” என்றான் சுகோத்ரன். “அவருடைய நற்பெயரை அவர் காத்துக்கொள்ளவேண்டும், அவ்வளவுதான். ஆனால் நீங்கள் முடிசூடவும் வேண்டும். ஆகவேதான் உங்களிடம் சொல்லாமல் யுயுத்ஸுவிடம் சொல்கிறார். அவர் அவ்வாறு சொன்னது ஆவணமாகிறது அல்லவா?” சுகோத்ரன் சீற்றத்துடன் “நீ தந்தையை இழிவுசெய்கிறாய்” என்றான். “இல்லை, மானுட உள்ளம் செயல்படும் முறையை மட்டுமே சொன்னேன்” என்றான் உஜ்வலன்.

உஜ்வலன் தொலைவில் தெரிந்த யுயுத்ஸுவின் உருவை திரும்பி நோக்கிவிட்டு “அவர் அஞ்சுகிறார்” என்றான். “எதை?” என்றான் சுகோத்ரன். “உங்களை” என்றான் உஜ்வலன். “என்னையா?” என்று சுகோத்ரன் கேட்டான். “அல்லது நீங்கள் எடுக்கவிருக்கும் முடிவை” என்று உஜ்வலன் சொன்னான். சுகோத்ரன் “ஏன்?” என்றான். “அவர் எண்ணியிருக்கும் ஒன்றுக்கு மாறானது அது” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் எண்ணங்களில் ஆழ்ந்து அச்சொற்களை செவிகொள்ளாமல் வெறுமனே தலையசைத்தான்.

 

யுயுத்ஸு அனுப்பிய ஏவலன் வழிகாட்ட அவர்கள் வேள்விக்களம் நோக்கி சென்றனர். கங்கைக்கரை முழுக்க மீன்நெய்ப்பந்தங்களின் ஒளியில் செந்நிறமாகத் தெரிந்தது. பலநூறு ஏவலரும் காவலரும் அவர்களின் நிழல்களுடன் அசைய அப்பகுதியே கொந்தளிப்பதுபோல் இருந்தது. கலைந்து குழம்பிய ஓசைகளின் முழக்கம் காட்டின் மரச்செறிவுக்குள் எதிரொலித்துச் சூழ்ந்திருந்தது. அவர்கள் அவ்வோசையால், ஒளியால் ஈர்க்கப்பட்டு சொல்லற்று நடந்தார்கள்.

கங்கைக்கரையில் உயரமான உலர்ந்த இடத்தில் மண் நிரப்பாக்கப்பட்டு வட்டவடிவமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. நூற்றெட்டு மூங்கில்கள் நாட்டப்பட்டு ஈச்சையோலை முடைந்து கூரையிடப்பட்டிருந்த பந்தலின் உச்சியில் மூன்று முகடுகள் அமைக்கப்பட்டு அதன்மேல் அஸ்தினபுரியின் அமுகதகலக் கொடி பறந்தது. வேள்விப்பந்தலின் கூரைமேல் புகை ஊறிப்பெருகி எழுந்து திரண்டு நின்றிருந்தது. புகைச்சுருள்கள் மேல் பந்தங்களின் ஒளி பட நீர்த்துப்போன தழல் என அது தோன்றியது. அனலின் புகை பறவைகளை எச்சரிக்கையடையச்செய்ய காட்டுக்குள் கலைவோசை எழுந்தது. சிறகடிப்புகள் இருளில் சுழன்று சுழன்று தெரிந்தன.

“மங்கலம் என்று சொல்லப்படும் எதையுமே இங்கே கொண்டுவரலாகாது என்று நெறியுள்ளது” என்று உஜ்வலன் சொன்னான். “மலர்கள், கனிகள், பட்டு, ஆடி, பொன் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளன. ஆகவேதான் இங்கே பெண்களைக்கூட வரலாகாது என விலக்குகிறார்கள். மங்கலைகள் வரலாகாது. கைம்பெண்கள்கூட வருவது விலக்கப்பட்டுள்ளது. பெண்கள் எந்நிலையிலும் மங்கலைகளே என்பது வேதநெறி. இறப்பு எனும் மங்கலமின்மையின் இடம் இது. நீர்க்கடன் அளிக்குமிடத்தை இடுகாட்டின் தங்கை என்று சூதர் சொல்வதுண்டு.” கைசுட்டி வேள்விச்சாலையைக் காட்டி “ஆனால் அங்கே வேதச்சொல் முழங்கிக்கொண்டிருக்கிறது. முதல்மங்கலம் என்று வேதத்தைச் சொல்வதுண்டு” என்றான். சுகோத்ரன் அதை நோக்கியபின் “பருவடிவுகொண்ட நூற்றெட்டு மங்கலங்களில் முதன்மையானது தீ. அனலோன் செல்லாத இடமொன்று உண்டா?” என்றான். உஜ்வலன் “ஆம், மெய்” என்றான்.

“இங்கே அனலோன் எழவேண்டும். அவன் உண்டவை நம் குடியினரின் உடல்கள். விண்புகும்வரை அவர்களை அனலவனின் பொன்னிற நாக்கே ஏந்தி வைத்துள்ளது என்பதே நூல்கூற்று” என்றான் சுகோத்ரன். “அங்கே குருக்ஷேத்ரத்தில் நிகழ்ந்த்து ஒரு பெருவேள்வி என்கின்றனர் சூதர். எனில் இது மிகச்சிறிய வேள்வி. குருக்ஷேத்ரத்தில் விருந்துண்டு சலித்து மயங்கிக்கிடக்கும் அனலவனுக்கு வயிற்றை எளிதாக்கும் பொருட்டு அளிக்கும் இஞ்சிநீர்”என்றான் உஜ்வலன். சுகோத்ரன் வேள்விச்சாலையை நோக்கியபடி நடந்தான். “அங்கே களத்தில் ஒலித்த போர்க்கூச்சல்களும் சாவோலங்களும்கூட வேதச்சொற்களே என்று சூதன் ஒருவன் பாடினான்” என்றான் உஜ்வலன்.

சுகோத்ரன் “ஜாதவேதன்” என்னும் சொல்லை அக்கணம் செவிகொண்டு மெய்ப்படைந்தான். வேதங்களில் பிறந்தவன். வேதங்களுடன் பிறந்தவன். வேதமெனப் பிறந்தவன். வேதன். தன்னைப் படையலிட்டுக்கொண்டவன். உண்பவன், உண்ணப்படுபவன். அவன் அச்சொல்லையே தன்னுள் ஊழ்கநுண்சொல் என சொல்லிக்கொண்டு நடந்தான். வேள்விச்சாலையை அணுகுந்தோறும் எரிமணம் நிறைந்த காற்று எழுந்து வந்து மூச்சை நிறைத்தது. அவன் முன்பும் ஒருமுறை அவ்வண்ணம் அதே வேள்விச்சாலையில் அதே உணர்வுநிலைகளுடன் சென்றதுபோல் உணர்ந்தான். முற்பிறவியில் எங்கோ.

வேள்விச்சாலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மூங்கில்வேலியின் வாயிலில் நின்றிருந்த காவலர்கள் தலைவணங்கி அவர்களை செல்ல விட்டனர். அவர்கள் சுடர்காட்ட வேள்விச் சாலை முகப்பில் நின்றிருந்த காவலர்கள் அவர்களை எதிர்கொண்டு உள்ளே அழைத்துச்சென்றனர். உள்ளே வேள்விக்குளங்களில் எரிந்த தழலின் ஒளி சூழ்ந்திருந்த அனைவரின் உடல்ளையும் அனல்வடிவாகக் காட்டியது. அவர்களின் நிழல்கள் பெருகி எழுந்து கூரைமேல் அலைவுகொண்டன. பேருருவ தெய்வங்கள் எழுந்து குனிந்து அவர்கள் செய்யும் எரிசெய்கையை நோக்குவதுபோல.

வேள்விச்சாலைப் பொறுப்பாளரான சிற்றமைச்சர் ஸ்ரீமுகர் அவர்களை வணங்கி முகமன் உரைத்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அங்கே அமைக்கப்பட்டிருந்த மூன்று எரிகுளங்களைச் சுற்றி அந்தணர்கள் அமர்ந்து நெய்யூற்றி எரியோம்பி வேதம் உரைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னால் பாண்டவர்கள் ஐவரும் தர்ப்பை விரிப்பின்மேல் அமர்ந்திருந்தார்கள். யுதிஷ்டிரன் கைகூப்பி கண்மூடி அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தழலின் கொழுந்தாட்டத்தை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர். தௌம்யர் தாமரைபீடத்தில் அமர்ந்து வேள்வித்தலைவராக வேள்வியை நிகழ்த்தினார்.

சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்களை சுகோத்ரன் முன்னர் கண்டதில்லை. அவர்களில் பெரும்பாலாலானவர்கள் அந்தணர்கள். சிலர் படைத்தலைவர்களாக இருக்கலாமெனத் தோன்றியது. அவன் அவர்களுடன் அமர்ந்துகொள்ளப் போனபோது உஜ்வலன் “நீங்கள் அரசகுடியினருடன் சென்று அமரவேண்டும்… இங்கல்ல” என்றான். சுகோத்ரன் “அந்தணர் அழைக்காமல் செல்லக்கூடாது” என்றபடி அமர்ந்தான். தரையில் மூங்கில்பாய் போடப்பட்டிருந்தது. “நம்மை அங்கே கொண்டு அமரச்செய்ய யுயுத்ஸு கூறியிருக்கவேண்டும்… இது எவ்வகையிலும் முறையல்ல” என்றபடி உஜ்வலன் அமர்ந்தான்.

சுகோத்ரன் வேள்வித்தழலை நோக்கியபடி அமர்ந்திருந்தான். அது எழுந்து கிழிந்து துள்ளி பறந்தது. தயங்கி அமைந்து குளமாகியது. பக்கவாட்டில் சுழன்று எழுந்து மீண்டும் நெளிந்தாடியது. அதன் அசைவுகளை நோக்க நோக்க அது எதையோ சொல்லும் ஒரு நாக்கு என்ற எண்ணம் வந்தது. அந்த வேதப்பாடலுக்கும் அதற்கும் தொடர்பில்லை. அது வேறு எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. மிக மிகப் புதிரான ஒன்றை. மானுடன் இன்னமும் அறிந்திராத ஒன்றை. அது நடனம் அல்ல, அது உரையாடல்தான். உரையாடல் என்பது நாவின் நடனம்.

அனலவனே

முற்றிலும் எரிந்தமையா அவனை துயருறச்செய்யாதே

அவனுடைய உடலையோ தோலையோ சிதறடிக்காதே

வேதங்களுடன் பிறந்தவனே நீ அவனை தூய்மையாக்கு

அதன்பின் மூதாதையருக்கு அருகே அமர்த்து

 

வேதங்களின் துணைவனே

அவனை தூய்மையாக்கியபின் தந்தையரிடம் கொண்டுசெல்க

உயிர்கள் தோன்றும் இடத்திற்கே செல்கையில்

அவன் தேவர்களுக்குரியவன் ஆகிறான்

 

யுதிஷ்டிரன் விழிதிறந்து சூழ நோக்கியபோது அவனை கண்டார். அவருடைய உதடுகள் மட்டும் மெல்ல அசைந்தன. அதை உணர்ந்தவர் போல ஸ்ரீமுகர் ஓடி சுகோத்ரன் அருகே வந்தார். மெல்ல குனிந்து “அரசர் உங்களை அங்கே வரச்சொல்கிறார்” என்றார். “எங்கே?” என்றான் சுகோத்ரன். “வேள்வியை இயற்றுபவர்களுக்குரிய இடத்தில், உங்கள் தந்தையர் ஐவருடனும் அமரும்படி சொல்கிறார்.” உஜ்வலன் கூர்நோக்கை சுகோத்ரன் மேல் பதித்து அமர்ந்திருந்தான். சுகோத்ரன் “இல்லை, என் உளம்கூடவில்லை என்று அவரிடம் கூறுக!” என்றான். ஸ்ரீமுகர் தலைவணங்கி அகன்றார்.

“இளவரசே” என அடக்கியகுரலில் உஜ்வலன் அழைத்தான். “அங்கு சென்று அமர்வதென்பது நீங்கள் இந்த அரசகுடியில் நீடிக்கிறீர்கள் என்பதற்கான சான்று. இங்கிருந்தே தொடங்குகிறது அனைத்தும்.” சுகோத்ரன் “என் உளம் கூடவில்லை. இன்னமும் அது அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது” என்றான். ஸ்ரீமுகர் யுதிஷ்டிரனிடம் பேசிவிட்டு மீண்டு வந்து “அரசர் நீங்கள் வருவது கடமை என அறிவிக்கச்சொன்னார். இது நீங்களும் அமர்ந்திருக்கவேண்டிய வேள்வி என்றார்” என்று சொன்னார். சுகோத்ரன் “அரசரிடம் சொல்க! நான் முடிவெடுத்துவிட்டேன் என்றால் உடனே அங்கே வந்தமர்வேன் என்று” என்றான். ஸ்ரீமுகர் “ஆம்” என தலையசைத்து திரும்பிச்சென்றார்.

“இது என்ன அறிவின்மை…” என்று உஜ்வலன் கொதிப்புடன் சொன்னான். “ஐயமே இல்லை. இது அறிவின்மை அன்றி வேறல்ல.” சுகோத்ரன் “நான் இன்னும் மறுக்கவில்லை” என்றான். “எனக்கு இன்னும் உள்ளிருந்து ஆணை வரவில்லை.” உஜ்வலன் “அதை அவர் மறுப்பாகவே எடுத்துக்கொள்வார்” என்றான். “அதன்பொருட்டு என் உள்ளம் அறிவிக்காத ஒன்றை நான் செய்ய முடியாது” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் சலிப்புடன் தலையை அசைத்தான். “நான் சொன்ன சொற்களெல்லாம் வீண் என்று உணர்கிறேன்… இங்கே நான் வந்திருக்கவே கூடாது.” சுகோத்ரன் அவனை திரும்பியே நோக்கவில்லை.

வேதம் முழங்கிக்கொண்டிருந்தது. புகை வேள்விப்பந்தலை மூடியிருந்தது. நீத்தோர் பல்லாயிரம் நுண்விழிகளுடன் வந்து வேள்விச்சாலையை நிறைத்திருந்தனர். ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் தலையசைத்து ஏற்றனர். ஒவ்வொரு நெய்க்கொடையையும் பொன்னிற நாநீட்டி பெற்றுக்கொண்டனர்

விழிகள் கதிரவனைச் சென்றடைக!

காற்றைச் சென்றடைக மூச்சு!

நீ வாழ்ந்த வாழ்வுக்கு ஏற்ப

மண்ணுக்கோ சுடருக்கோ செல்க!

விண்ணின் தூய நீர்களில் திகழ்க!

அங்குள்ள தாவரங்களில்

நீ கொள்ளவிருக்கும் உடல்களுடன் நிலைகொள்க!

 

அனலோனே,

உடலில் பிறப்பில்லாத ஒன்று உறைகிறது

உன் வெம்மையால் அதை வெம்மைகொண்டு எழச்செய்க!

உன் தழலும் ஒளியும் அதை ஒளிகொள்ளச் செய்க

வேதங்களாகப் பிறந்தவனே

உன்னால் அழிக்கப்பட்ட அவனுடைய

மங்கலம்நிறைந்த உறுப்புகளுடன்

அவனை நல்லுலகுக்கு இட்டுச்செல்க!

கைகளக் கூப்பியபடி அமர்ந்திருந்த சுகோத்ரனின் விழிகளிலிருந்து நீர் வழிந்து கைகளிலும் மடியிலும் சொட்டிக்கொண்டிருந்த்து. அவன் விழிநட்டு அந்தச் செஞ்சுடர் அலைவையே நோக்கிக்கொண்டிருந்தான். எவர் சொன்ன சொற்கள் இவை. எத்தனை தொன்மையானவை. அழிவற்றவை. என்றோ எவரோ சென்று முட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்த மெய்மையில். அல்லது அன்னை குழவியை என அவர்களை மெய்மை அள்ளி எடுத்து நெஞ்சிலும் தலையிலும் சூடிக்கொண்டிருக்கிறது. முத்தமிட்டுச் சீராட்டியிருக்கிறது, மடியிலிட்டு முலையூட்டியிருக்கிறது

தழலோனே

நீ வெம்மையாக்கி எரித்த

அனைத்தையும் மீண்டும் தண்மையாக்க வருக!

இங்கே நீராம்பல் மலர்க!

இளம்புல் செறிக. செடிகள் தழைத்தெழுக

குளிர்ந்தவளே ஈரநிலமே

பசும்புற்கள் நிறைந்தவளே இனிமையளிப்பவளே

பெண்தவளைகளுடன் இணைந்து இங்கே எழுக!

இந்தச் சுடரோனை மகிழ்விப்பாயாக!

மெல்ல மெல்ல வேதமும் அனலும் ஒன்றாயின. ஓம்புபவரும் நோக்குபவரும் அதன் பகுதியென்றாயினர். ஒரு தழல்வு மட்டுமே அங்கிருந்தது. மிகமிகமிகத் தொன்மையானது. எரிபடுபொருள் இன்றி தன்னையே தழலென்றாக்கிக்கொண்டது. முதல்முடிவற்றது. அதன் நாசுழல எழுந்த பொறிகளிலிருந்து புடவிகள், விண்மீன்கள், கோள்கள் எழுந்து தெறித்துச் சுழன்று பறந்து இருளில் மறைந்துகொண்டிருந்தன.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 55

குதி எட்டு : விண்நோக்கு – 5

முற்புலரியில் சுகோத்ரன் கண்விழித்து எழுந்தான். அவன் திண்ணையில் அமர்ந்தபடியே துயில்கொண்டுவிட்டிருந்தான். எழுந்து நின்றபோதுதான் உடலின் வலி தெரிந்தது. சூழ்ந்திருந்த இருளில் நூற்றுக்கணக்கான செந்நிற ஒளித்துளிகள் அலைந்தன. பந்தங்கள், பளிங்குக்குழாய் போட்டு மூடப்பட்ட பீதர்விளக்குகள், சிற்றகல்கள். தொலைவில் கங்கையின் கரையோரமாக ஒளியாலான ஒரு நீண்ட வேலி தென்பட்டது. அவன் உள்ளே சென்று உஜ்வலனை தட்டி எழுப்பினான். அவன் தொட்டதுமே உஜ்வலன் எழுந்துகொண்டு வாயைத் துடைத்துவிட்டு “விடிந்துவிட்டதா?” என்றான். அப்போது இளஞ்சிறுவன் என்றே தோன்றினான்.

“ஆம்” என்று சுகோத்ரன் சொன்னான். “நீங்கள் துயில்கொள்ளவில்லையா?” என்று அவன் கேட்டான். “சற்று கண்ணயர்ந்தேன்” என்றான் சுகோத்ரன். “துயிலவில்லை என்பதுபோல் உள்ளன விழிகள்…” என்றான் உஜ்வலன். கைகளை விரித்துச் சோம்பல்முறித்துக்கொண்டு “நீங்கள் துயிலப்போவதில்லை என அறிந்திருந்தேன். ஏனென்றால் நீங்கள் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறீர்கள்” என்றபடி வெளியே சென்றான். சுகோத்ரன் அவனை நோக்கியபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றான். காலைக்காற்று குளிருடன் இருந்தது. கங்கையிலிருந்து சேற்றுமணம் கொண்ட காற்று வீசியது. ஆடிமாதம் மழைக்குப்பின் கங்கைநீரின் மணம் அது. உஜ்வலன் திரும்பி வந்து “முடிவெடுக்க தயங்குபவர்கள் தங்களைப்பற்றி தாங்களே புரிந்துகொண்டவர்கள் அல்ல. அல்லது பிழையாக வகுத்துக்கொண்டவர்கள்” என்றான். மறுமொழியாக “செல்வோம்” என்று மட்டும் சுகோத்ரன் சொன்னான்.

அவர்கள் மரவுரியுடன் கங்கைக்கு நீராடச் சென்றனர். செல்லும் வழியெங்கும் மூங்கில்தூண்களில் மீன்நெய்ப் பந்தங்கள் நடப்பட்டு ஒளிவிரிக்கப்பட்டிருந்தது. தரையில் பலகைகளைப் பரப்பி வழி அமைத்திருந்தனர். அவை நடந்தவர்களின் உடையிலிருந்து சொட்டிய ஈரத்தால் வழுக்கின. நீராடுவதற்கு கங்கையில் தண்டுகளை அறைந்து பலகைகளை பரப்பி படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டிருந்தன. நீராடி முடித்த ஏவலரும் சூதரும் குளிரில் தோள்களைக் குறுக்கியபடியும், பற்களை இறுக்கி மூச்சொலியில் பேசியபடியும் எதிரே வந்தனர். அந்தணர்கள் முந்தைய நாள் இரவே வேள்விப்பந்தலுக்குச் சென்றுவிட்டிருந்தனர் போலும் என சுகோத்ரன் எண்ணிக்கொண்டான். தொலைவில் வேள்விநிலையிலிருந்து வேதச்சொல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அது காலையின் காட்டொலியுடன் இயல்பாக இணைந்துகொண்டது. அவ்வொலியை பெரும்பாலும் அவன் காலையொலியுடன் இணைந்தே கேட்டிருந்தான்.

கங்கைநீர் குளிர்ந்திருந்தது. அதன்மேல் கரையிலிருந்த செவ்வொளி அலைகொண்டது. படிக்கட்டை அடைந்தபோதே அந்தக் குளிர் காற்றில் ஈரமெனக் கசிந்து பரவி வந்து தொட்டு சிலிர்ப்பை உருவாக்கியது. மரப்படிக்கட்டில் உடல் செறிந்து ஏராளமானவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். உஜ்வலன் அக்குளிரில் பேச்சிழந்தவன் போலிருந்தான். அவன் பேசாமலிருந்தபோது சுகோத்ரன் தன் உள்ளம் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப்போல உணர்ந்தான். உஜ்வலன் மரவுரியை உடுத்திக்கொண்டு படிகளின்மேல் கைகளை மார்பில் கட்டியபடி தோள்களைக் குறுக்கி நின்றான். அவ்வப்போது குளிர்நீர் உடலில் பட்டதுபோல மூச்சொலியுடன் உலுக்கிக்கொண்டான். சுகோத்ரன் சீரான அசைவுகளால் ஆடைகளைக் களைந்துவிட்டு படியில் நின்று இருண்ட பெருக்காகச் சென்ற கங்கையை நோக்கினான்.

விடிவெள்ளி எழவில்லை. வானமெங்கும் விண்மீன்கள் நிறைந்துகிடந்தன. பலநாட்கள் வானம் மழைமூடிக் கிடந்தமையால் விண்மீன்களைப் பார்த்தே நெடுநாட்களாகிவிட்டன என அவன் எண்ணிக்கொண்டான். கைகளைக் கூப்பி கண்மூடி கங்கையைப் போற்றும் பாடலை நாவசையாமல் சொன்னபடி அவன் நீரில் இறங்கினான். நீரின் குளிரில் உடல் மெய்ப்புகொள்ள கூப்பிய கைகள் நடுங்க தோள்கள் குறுக மணலில் கால் உழல இடைவரை சென்று நின்றான். நீரில் ஒழுகிச்சென்ற சிறிய சருகுகள் திடுக்கிடச்செய்தன. “அன்னையே!” என முனகியபடி நீரில் மூழ்கி எழுந்து குழலை அள்ளி பின்னாலிட்டான்.

உஜ்வலன் கரையிலேயே நீரை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். அவனை ஒருமுறை நோக்கியபின் சுகோத்ரன் மீண்டும் மூழ்கினான். பின்னர் கைவீசி நிந்தி நீருக்குள் சென்றான். அலைகளின் பக்கவாட்டு அசைவு மாறியது. மையப்பெருக்கு இளவெம்மையுடன் இருந்தது. அதில் கங்கையின் ஆழத்திலிருக்கும் மெல்லிய சாம்பல் கலந்த மணம் இருந்தது. அவன் மூழ்கி நீந்தி எழுந்து தலையை உதறிக்கொண்டு நோக்கியபோதும் உஜ்வலன் அங்கேயே நின்றிருந்தான். அவன் உஜ்வலனை அழைக்கலாமென எண்ணிய கணம் அவன் மீன்போல கைகளைக் குவித்து நீட்டி நீரில் பாய்ந்து அம்பென உள்ளே சென்றான்.

அவன் தன்னருகே எழுந்தபோது சுகோத்ரன் அவனுடைய சிரிக்கும் பற்களின் ஒளியைக் கண்டான். “இன்னும் அரைநாழிகையில் நாமகள்பொழுது… இதை இரவென்றுதான் சொல்லவேண்டும்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் “ஆம்” என்றான். “வேள்வியை நேற்று அந்தியிலேயே தொடங்கிவிட்டனர். நள்ளிரவில் நிறைவுசெய்து ஒரு நாழிகைக்குள் அடுத்த நாள் வேள்வியை தொடங்கியிருக்கிறார்கள்…” என்று அவன் சொன்னான். “தௌம்யர் அனைத்தையும் முறைப்படி செய்பவர்” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் மூழ்கி அப்பால் எழுந்தான். கைகளால் நீரை உந்தி எழுந்து மீண்டும் மூழ்கினான். அவன் தன் சிற்றிளமையியே நீடிப்பதுபோலத் தோன்றியது.

நீந்தி அருகே வந்து நீரை உமிழ்ந்தபின் “இளவரசே, நீங்கள் ஏதேனும் முடிவை எடுத்தீர்களா?” என்று உஜ்வலன் கேட்டான். “இல்லை” என்றான் சுகோத்ரன். “முடிவெடுக்காமல் அங்கே செல்வது நன்றல்ல… முடிவெடுக்க குழம்புகிறீர்கள் என்பதே நம்மை பிழையாக அவர்களுக்குக் காட்டும்” என்றான் உஜ்வலன். “என்னால் முடிவெடுக்க இயலவில்லை” என்றான் சுகோத்ரன். “ஏன்?” என்று உஜ்வலன் கேட்டான். “எனக்குத் தெரியவில்லை. என்னால் இன்னமும் முடிவெடுக்க இயலவில்லை” என்றான் சுகோத்ரன்.

“இதில் நீங்கள் ஒற்றை முடிவையே எடுக்க முடியும். அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசர். அல்லது முற்றாகக் குடிதுறத்தல்… குடிதுறப்பது என்பது ஒருவகை சாவு” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. “துறவு என்பது துறப்பனவற்றைவிட மேலான சிலவற்றைப் பற்றிக்கொண்டால் மட்டுமே பொருளுள்ளதாகிறது. துறந்தவை அனைத்தையும் மிகச் சிறியவை என ஆக்கும் ஒன்றைச் சென்றடையவில்லை என்றால் துறந்தவை பேருருக்கொள்ளும். சூழ்ந்துகொண்டு துயர் அளிக்கும். பல்லாயிரம் கைகள் கொண்டு பெருகி நம்மை அள்ளி திரும்ப இழுத்துக்கொள்ளும்” என்றான் உஜ்வலன்.

“நாம் துறக்கும்போது நலமும் அழகும் கொண்டவையாக இருப்பவை துறந்து தோல்வி கண்டு மீண்டு வருகையில் திரிந்து இருட்தெய்வங்களால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதையே காண்போம். துறந்து மீண்டவர் கவ்விக்கொண்டதில் இருந்து மீளவே முடியாது. ஆகவேதான் இயலாத் துறவு பழி சேர்க்கும் என்கிறார்கள் மூத்தோர்” என்று உஜ்வலன் சொன்னான். “ஏன் இயலாத் துறவை மேற்கொள்கிறோம்? நம்மை நாம் மிகையாக மதிப்பிட்டுக்கொள்கிறோம் என்பதனால். நம் ஆற்றலை, நம் தேடலை, நம் ஊழை. நாம் எந்நிலையில் நின்றிருக்கிறோம் என்று அறிவதே அறிவு அளிக்கும் முதற்பயன்.”

சுகோத்ரன் பெருமூச்சுவிட்டு நீரில் மூழ்கினான். நீருக்குள் இலைகள் அவனை வந்து தொட்டுத் தொட்டுச் சென்றன. குமிழிகள் வெடிக்கும் ஒலி காதில் விழுந்தது. எழுந்து மூச்சை அள்ளி உண்டபோது அருகே உஜ்வலன் அவனை நோக்கி நீந்தி வந்தான். “உங்களைப்பற்றி நீங்கள் அறிய முடியவில்லை என்றால் உங்களுக்கு அணுக்கமானவரிடம் கேளுங்கள் நீங்கள் எவர் என. அவர்கள் ஆடி என உங்களைக் காட்டுவார்கள். ஆம், ஆடி அழுக்கு கொண்டிருக்கும், வளைந்திருக்கலும் ஆகும். ஆயினும் அது ஆடி. அது கொள்வன அனைத்தையும் கொடுத்தாகவேண்டும்.”

“என்னிடம் கேளுங்கள், நான் சொல்கிறேன். நீங்கள் எவரென்று சொல்கிறேன்” என்றான் உஜ்வலன். “சொல்லுங்கள், நான் யார்?” என்று சுகோத்ரன் புன்னகையுடன் கேட்டான். “நீங்கள் ஷத்ரியர். அக்குடிக்குரிய அனைத்து குருதியியல்புகளும் கொண்டவர். உங்கள் தந்தை பெரும்போர் ஒன்றை நுண்ணிதின் கண்டார். குலமே அழியக்கூடும் என்று உணர்ந்தார். ஆகவே உங்களை அந்தச் சுழியிலிருந்து அகற்றினார். உங்கள் தற்தெரிவால் அல்ல தந்தையின் ஆணையால் நிமித்தநூல் கற்க வந்தீர்கள். வந்தபின் அதை ஏற்றுக்கொண்டீர்கள்.”

“ஆம், நான் ஏற்றுக்கொண்டேன். அது முழுக்கமுழுக்க என் தெரிவு. ஆசிரியர் என்னிடம் இருந்தே அம்முடிவு எழவேண்டும் என்று சொன்னார்” என்றான் சுகோத்ரன். “நானும் அதைக் கேட்டிருக்கிறேன்” என்றான் உஜ்வலன். “சொல்லுங்கள், அம்முடிவை எடுக்கையில் நீங்கள் அரண்மனை வாழ்க்கையின் இன்பங்கள் என்ன என்று அறிந்திருக்கிறீர்களா? ஒரு போர்வெற்றியின் கொண்டாட்டத்தையாவது அடைந்திருக்கிறீர்களா? குடிப்பெருக்கின் முன் முடிசூடி தலைமகன் என நின்றதுண்டா? சூதரும் புலவரும் புகழ்பாட காலமே நான் என தருக்கியதுண்டா?”

சுகோத்ரன் “இல்லை” என்றான். “எனில் எதை தெரிவுசெய்தீர்கள்? நீங்கள் அறிந்தது ஒன்றே ஒன்று. அதைத் தெரிவுசெய்வதற்குப் பெயர் முடிவெடுத்தலா என்ன?” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் நீரலைகளை நோக்கிக்கொண்டிருந்தான். “நீங்கள் தெரிவுசெய்யவில்லை, செலுத்தப்பட்டீர்கள்” என்று உஜ்வலன் தொடர்ந்தான். “ஐயமே தேவையில்லை. உங்களுக்குள் உறைபவன் ஷத்ரியன். அவன் நாடுவது முடியும் மண்ணும் வெற்றியும் புகழுமே. அதை அணுக்கனாகிய நான் அறிவதுபோல் எவரும் அறியமாட்டார்கள். பிறிதொன்றை எண்ணித் தயங்கவேண்டியதில்லை. முடிவெடுங்கள்…”

சுகோத்ரன் பெருமூச்சுடன் “நன்று, உங்கள் சொற்களும் என் முடிவுக்கு உதவட்டும். நான் இத்தருணத்தை ஊழ் எங்ஙனம் வகுக்கப்போகிறது என்று நோக்கி நின்றிருக்கிறேன். இது இவ்வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு எனக்கு உதவக்கூடியது” என்றான். மறுமொழி சொல்லாமல் உஜ்வலன் நீரில் மூழ்கி அப்பால் சென்று எழுந்து “மனிதர்கள் தங்களிடம் தாங்களே சொல்லிக்கொள்ளும் பொய்கள் அளவுக்கு வேறெங்கும் சொல்வதில்லை. தெய்வங்களிடம்கூட” என்றான். சிரித்தபடி மீண்டும் மூழ்கினான்.

 

அவர்கள் நீராடி குடில்மீளும்போது உஜ்வலன் அமைதியாக இருந்தான். உடைமாற்றி உணவுண்டு கிளம்புவதற்குச் சித்தமாகிக்கொண்டிருக்கையில் உஜ்வலன் மீண்டும் பேசத்தொடங்கியிருந்தான். “அவர்களுக்கு ஏன் உங்கள் நினைவே எழவில்லை? எப்படி அவர்கள் உங்களை மறக்கலாம்?” என்றான். “ஏனென்றால் நீங்கள் மலைமகள் மைந்தன். பால்ஹிகர்களை அவர்கள் இன்னமும் அஞ்சுகிறார்கள். நிகர்நிலத்து மைந்தன் ஒருவனை அவர்கள் தங்கள் அரசனாக நாடுகிறார்கள். அவன் நிஷாதக்குருதி கொண்டவன் என்றாலும் தாழ்வில்லை என எண்ணுகிறார்கள்.”

“அவர்கள் இன்று எண்ணுவதென்ன என்று மெய்யாகவே உங்களுக்குப் புரியவில்லையா? இன்று எஞ்சும் குருகுலத்துக் குருதி அபிமன்யுவின் மைந்தனுடையது என்று காட்டவும் அதை அரியணை நிறுத்தவும் முயல்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அபிமன்யுவின் பெயர் தேவை. விராடனின் மகள் வயிற்றிலெழுந்தவன் என்பதனால் அந்த மைந்தனுக்கு நிஷாதர்களின் ஆதரவு இருக்கும். அவன் யாதவ அன்னையின் பெயர்மைந்தன் என்பதனால் அவன் யாதவக்குருதியினன் என்றும் நிலைநாட்டமுடியும்…” என்று உஜ்வலன் தொடர்ந்தான். “உண்மையில் இந்தப் போரில் வெற்றியுடன் மீண்டிருப்பவர்கள் யாதவர்களே. அடுத்த மூன்று தலைமுறைக்காலம் யாதவர்களின் குருதியுறவு அஸ்தினபுரியின் ஆற்றலாக நிலைகொள்ளும்.”

“எண்ணி நோக்குக. அவர்களின் பெரும்பகுதியினர் இன்னமும் எஞ்சுகிறார்கள். அவர்களின் நகரம் எஞ்சுகிறது. அவர்களின் இரு அரசர்களும் அவ்வாறே ஆற்றலுடன் நீடிக்கிறார்கள். ஆகவே யாதவர்களே இனி பாரதவர்ஷத்தின் பேராற்றல் மையம். அவர்களின் ஆதரவு தேவை என்றால் சுபத்ரையின் மைந்தனின் குருதி இங்கே ஆளவேண்டும்… அத்துடன் நிஷாதர்களின் ஆதரவும் இருக்குமென்றால் ஐயமே தேவையில்லை, அவன் பாரதவர்ஷத்தை ஆள்வான். இது இயல்பான மறதி அல்ல. இது அரசியல் சூழ்ச்சி. எனக்கு அதில் ஐயமே இல்லை.”

அச்சொற்கள் சுகோத்ரனின் செவிகளின் வழியாக ஒழுகிச்சென்றபடியே இருந்தன. வெளியே வந்தபோது அவர்களுக்கான ஒற்றைப்புரவி வண்டி ஒருங்கி நின்றிருந்தது. அதில் ஏறிக்கொண்டு யுதிஷ்டிரனின் குடில் நோக்கிச் சென்றார்கள். “அங்கே அரசர் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் இயற்றவேண்டிய கடமை என்ன என்று அறிந்துகொள்ளலாம்” என்றான் சுகோத்ரன். செல்லும் வழியெங்கும் குடில்நிரைகளில் செந்நிறச் சுடர்களுடன் அகல்விளக்குகளும் பீதர்நாட்டு பளிங்குக்குழல் விளக்குகளும் எரிந்துகொண்டிருந்தன. குடில்களுக்குள் பெண்களின் பேச்சொலிகளும் கலங்கள் முட்டிக்கொள்ளும் ஓசையும் கேட்டன.

“அங்கே பெண்டிர் விழித்திருப்பார்கள்” என்று உஜ்வலன் சொன்னான். “அவர்கள் தங்கள் கணவர்களுக்கு சொல்லளித்திருப்பார்கள். தங்கள் மைந்தர்களை விண்ணுக்கு அனுப்பும்படி ஆணையிட்டிருப்பார்கள்.” சுகோத்ரன் வெறுமனே திரும்பி நோக்கினான். “அரசியர் நோன்பிருந்து தங்கள் மைந்தருக்காக வேண்டிக்கொண்டிருப்பார்கள்.” பேச்சினூடாக எண்ணிக்கொண்டு “உங்கள் அன்னையை நீங்கள் சந்திக்கவில்லை” என்றான் உஜ்வலன். “ஆம்” என்றான் சுகோத்ரன். “நீங்கள் சென்று சந்திக்கலாம். அவர்கள் உள்ளம் நிலைகுலைந்திருப்பதாகச் சொன்னார்கள்” என்றான் உஜ்வலன்.

சுகோத்ரன் எண்ணத்தை ஓட்டியபடி சற்று நேரம் நின்றான். “ஆம், பார்த்துவிடுவோம்” என்றான். உஜ்வலன் “அரசரின் ஆணையை நாம் கேட்பதற்குள் அன்னையின் சொல்லை கேட்பது நன்று” என்றான். அவர்கள் இருளுக்குள் நடந்து சென்றனர். எதிர்ப்பட்ட சேடி ஒருத்தியிடம் “மத்ரநாட்டு அரசி விஜயையின் குடில் எங்குள்ளது?” என்று சுகோத்ரன் கேட்டான். “அதோ அந்தக் குடில். குடில்வாயிலில் இருப்பவள் பூர்ணை. அவள் சிபிநாட்டு செவிலி… அவளுடைய அரசியும் அதே குடிலில்தான் இருக்கிறார்கள்” என்றாள் சேடி.

குடிலை நெருங்கியபோது உஜ்வலன் “அன்னை சொல்வதை ஆணை என்றே கொள்க” என்றான். “அன்னை என்ன சொன்னாலும் அது ஆணையா?” என்றான் சுகோத்ரன் புன்னகையுடன். “ஆம், அன்னை என்றால் அவர் பிறிதொன்று சொல்ல வாய்ப்பில்லை” என்றான் உஜ்வலன். “நான் அன்னையைக் கண்டு நெடுநாட்களாகின்றன” என்றான் சுகோத்ரன். “அன்னை உங்களை எண்ணிக்கொண்டிருப்பார். அவர் உங்களை எதிர்பார்த்திருப்பார். சொல்லவேண்டியவை அவருக்குள் கனிந்து கூர்கொண்டிருக்கும்” என்றான் உஜ்வலன்.

குடில் முன் வண்டி நின்றது. அவர்கள் இறங்கியதும் பூர்ணை அவனை அடையாளம் கண்டுகொண்டாள். கூப்பிய கைகளுடன் சொல்லின்றி எழுந்து நின்றாள். “நான் அன்னையை…” என்று அவன் சொன்னான். “வருக, இளவரசே” என அவள் உள்ளே அழைத்துச்சென்றாள். அவன் தலைகுனிந்து உள்ளே செல்ல உஜ்வலன் வெளியே நின்றான். சுகோத்ரன் இருமுறை திரும்பி உஜ்வலனை நோக்கிவிட்டு உள்ளே நுழைந்தான். பூர்ணை உஜ்வலனிடம் “நீங்களும் உடன் செல்லலாம்” என்றாள். “நான் செல்ல ஒப்புதல் உண்டா?” என்றான் உஜ்வலன். “செல்க, அவருக்கு துணை தேவை” என்று பூர்ணை சொன்னாள். உஜ்வலன் உடன் நுழைந்தான்.

குடிலுக்குள் இரு மஞ்சங்களில் மேலாடையால் முகத்தை மூடிக்கொண்ட இருவர் அமர்ந்திருந்தார்கள். அசைவில்லாதவர்களாக. அங்கே இரு பொருட்கள் இருப்பதாகவே சுகோத்ரனுக்குத் தோன்றியது. பூர்ணை முன்னால் சென்று ஒருத்தியின் மேலாடையை விலக்கினாள். சுகோத்ரன் தன் அன்னையை அடையாளம் கண்டான். நெடுநாட்களுக்கு முன் அவன் கண்ட முகம் அல்ல. அந்த முகம் முதிர்ந்து இறந்து மட்கிவிட்டது போலிருந்தது. அவன் உள்ளம் எந்த உணர்ச்சியும் இல்லாமலிருந்தது.

அவள் விழிகள் அவனை நிலைகுத்தி நோக்கின. எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. “அரசி, தங்கள் மைந்தன்” என்று பூர்ணை சொன்னாள். “தங்கள் மைந்தன் இதோ வந்திருக்கிறார். கண்முன் நிற்கிறார். அரசி… இதோ உங்கள் மைந்தன் சுகோத்ரன்” என்றாள். அவள் விழிகளில் மணிகள் நிலையற்று அலைந்தன. வறண்டு சுருங்கி உதடுகள் உலர்ந்து உள்ளிழுத்துக்கொண்டிருந்த முகம் மரத்தாலான பாவை போலிருந்தது. தீய சடங்குகளுக்காக அசுரகுடியினர் உருவாக்கும் பாவை.

பூர்ணை அவனிடம் “பேசுக, உங்கள் குரல் கேட்கட்டும்” என்றாள். அவன் “அன்னையே, நான்தான் சுகோத்ரன்… உங்கள் மைந்தன் சுகோத்ரன்… அன்னையே” என்றான். அவளிடம் எந்த மெய்ப்பாடும் ஏற்படவில்லை. “மைந்தர்களின் இறப்பை கேட்டு இப்படி ஆகிவிட்டார்கள்… தாங்கள் உயிருடனிருப்பதையே மறந்துவிட்டிருக்கிறார்கள்” என்றாள் பூர்ணை. அவன் அவள் விழிகளை நோக்கினான். அந்த வெற்று நோக்கு இரு கூரிய முனைகளாக அசையாது நின்றிருந்தது.

“நானும் இறந்துவிட்டேன் என்றா எண்ணுகிறார்கள்?” என்றான் சுகோத்ரன். “அவ்வாறல்ல… ஒவ்வொரு மைந்தனின் இறப்பும் அவர்களை கொந்தளிக்கச் செய்தது. கற்பனையில் சாவுகள் மேலும் பெருகின. ஒவ்வொரு நாளுமென நிலையழிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் மைந்தர்களிடம் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை” என்றாள் பூர்ணை. “எனில் அவர்களுக்கு தன் மைந்தன் உயிருடனிருப்பது தெரியாது. அவரை மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர் அழிந்துவிட்டார் என எண்ணுகிறார்கள்” என்றான் உஜ்வலன். பூர்ணை தயக்கத்துடன் “ஆம்” என்றாள்.

“அவர்களின் மைந்தன் உயிருடன் இருப்பதை அவர்கள் அறியவேண்டும். அறிவிக்கவேண்டியது நம் கடமை. அவர்கள் மீளக்கூடும்…” என்றான் உஜ்வலன். திரும்பி சுகோத்ரனிடம் “சொல்க, நீங்கள் சாகவில்லை என்று சொல்க…” என்று கைபற்றி உலுக்கினான். சுகோத்ரன் ஒருகணம் எண்ணியபின் “அவர்கள் அவ்வாறே இருக்கட்டும். துயர் மிக்கதென்றாலும் அவர்கள் இன்றிருக்கும் இந்நிலையில் பேருணர்வென ஒன்றுள்ளது. என் அன்னை மைந்தரிடம் வேறுபாடு காணாமலேயே இருக்கட்டும்” என்றான்.

“அறிவின்மை… அறிவின்மையின் உச்சம்” என்று உஜ்வலன் கூவினான். “அவர்கள் உயிர்மீள்வார்கள். முன்னிருந்த நிலையை அடையவும்கூடும்.” சுகோத்ரன் “ஆம், ஆனால் தன் மைந்தனையும் பிற மைந்தரையும் வேறுபடுத்தி நோக்குபவர்களாக ஆகிவிடுவார்கள். தன் மைந்தன் சாகவில்லை என மகிழ்வது பிற மைந்தர் இறந்தமைக்கு மகிழ்வதாகவே திரிபடையலும் ஆகும். அது மானுட இயல்பு… அது நிகழவேண்டியதில்லை” என்றபின் அன்னையை ஒருகணம் நோக்கினான். அருகணைந்து குனிந்து விஜயையின் கால்களை தொட்டு வணங்கினான்.

அவள் அவன் வணங்குவதை அறியவில்லை. அவன் எழுந்தபோது அவன் தலையின் அசைவைக் கண்டு திடுக்கிட்டு கையை எடுத்தாள். அக்கை அவன் தோளில் பட திகைப்புடன் அவன் தோளில் மீண்டும் கையை வைத்தாள். தவிப்புடன் அவள் கை அவன் தோளிலும் கைகளிலும் பரவி அலைந்தது. விரல்கள் நடுநடுங்கின. அவள் முகமெங்கும் தசைகள் நெளிந்தன. மெலிந்து நரம்பு முடிச்சுகள் பரவிய கழுத்து அதிர்ந்தது. உறுமல்போல ஓர் ஓசை அவளிடமிருந்து எழுந்தது. அவள் எழுந்து தன் இரு கைகளாலும் அவனை அள்ளி அணைத்து உடலுடன் இறுக்கிக்கொண்டாள்.

அவன் அவள் பிடியில் மூச்சுத்திணறினான். அவளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றான். அவள் அவனை வெறிகொண்டு முத்தமிட்டாள். விலங்குபோல அவனை மாறி மாறி கவ்வினாள். அவன் தோளில் அறைந்தாள். நெஞ்சில் குத்தினாள். பின்னர் உடல் தளர்ந்து அவன் கைகளிலேயே நினைவழிந்து விழுந்தாள். பூர்ணை அவளை ஏந்திக்கொள்ள அவளை மெல்ல பீடத்தில் அமர்த்தினார்கள். அவன் கையை விலக்கியதும் அவள் நினைவுமீண்டு பதற்றத்துடன் அவன் கையைப் பற்றிக்கொண்டாள். “போகாதே… போகாதே” என்றாள்.

“இல்லை அன்னையே, செல்வதில்லை. இங்குதான் இருப்பேன்” என்று அவன் சொன்னான். “இங்கேயே இரு… என்னுடன் இரு” என்றாள். உடனே விந்தையான ஒலியெழுப்பி நகைக்கத் தொடங்கினாள். அவ்வுணர்வுகள், அவ்வசைவுகள், அந்த ஓசைகள் அனைத்துமே விலங்குகளுக்குரியவை என்று தோன்றியது. நகைத்து நகைத்து உடல் குலுங்கினாள். அவன் உடலை கைகளால் சுற்றிக்கொண்டு அவன் இடையில் தலையைச் சாய்த்தாள். பெருமூச்சுடன், கண்ணீர் வழிய மீண்டாள். “நீ போகக்கூடாது. இங்கிருக்கவேண்டும்” என்றாள். “ஆம் அன்னையே, இங்கேதான் இருப்பேன்” என்றான் சுகோத்ரன்.

அவள் மெல்ல கண்களை மூடினாள். இமைகள் நீருலர்ந்து ஒட்டிக்கொண்டன. முகம் மலர்ந்திருந்தது. உதடுகள் எதையோ முணுமுணுப்பவைபோல அசைந்தன. நீள்மூச்சொலி எழுந்தது. அவன் ஆடையைப் பற்றிய கைகள் தளர்ந்தன. அவள் தலை துயிலில் தழைந்தது. கைகள் பிடிவிட்டு விழுந்தன. அவள் விழித்துக்கொண்டு “உம்” என்றாள். உடனே எழுந்துகொண்டு “நீ போகக்கூடாது. இங்கே உன்னை சிலர் சென்றுவிடும்படி சொல்வார்கள். அஸ்தினபுரியின் மணிமுடிக்குரியவன் நீ. அந்த நிஷாதகுலப் பெண்ணின் கருவிலிருப்பவனை இளவரசனாக ஆக்க எண்ணுகிறார்கள்… நீதான் குருகுலத்தின் குருதியின் எச்சம். மெய்யான இளவரசன் நீ. பட்டம் உனக்குரியது” என்றாள்.

சுகோத்ரன் மறுமொழி ஏதும் சொல்லவில்லை. “ஆம், இப்போது தெரிகிறது அது. இத்தனை சாவுகள் ஏன் என்று. இளவரசர் அனைவரும் மடிந்தது நீ முடிசூடவேண்டும் என்பதற்காகவே. நீ அரியணை அமரவேண்டும் என்பதே ஊழ். அதன்பொருட்டே இவையெல்லாம்…” அவள் அவன் தோள்களை நடுங்கும் கைகளால் பற்றிக்கொண்டாள். “நீ அரியணை அமர்வாய். மும்முடி சூடி பாரதவர்ஷத்தை ஆள்வாய். உன் குருதிவழி இங்கே நிலைகொள்ளும். என் வழியாக மலைவாழ் மத்ரர்கள் பாரதவர்ஷத்தை ஆளும் செங்கோலைச் சென்றடைவார்கள்… ஆம், அதுதான் ஊழ்.”

“நான் கிளம்புகிறேன், அன்னையே…” என்று சுகோத்ரன் சொன்னான். “நீர்க்கடனுக்கான வேள்வி தொடங்கிவிட்டது. நான் சென்றாகவேண்டும்.” விஜயை அவன் கையை பிடித்துக்கொண்டு “எனக்கு சொல் அளித்துவிட்டுச் செல்… இங்கிருப்பாய் என்று… மணிமுடிசூடுவாய் என்று… சொல்!” என்றாள். “நான் சொல் அளிப்பதில்லை, அன்னையே” என்றான் சுகோத்ரன். “இது நான் கோரும் சொல். உன் அன்னை கோரும் சொல்” என்றாள் விஜயை. “நான் நிமித்தநூல் கற்றவன். ஊழை அறியும் ஆற்றல்கொண்டவன். நிமித்திகர் வஞ்சினம் உரைக்கலாகாது, ஆணையிடவும் கூடாது” என்றான் சுகோத்ரன்.

“நிமித்தநூலை தூக்கி வீசு… அது உனக்கு இனி தேவை இல்லை. இதுவும் என் ஆணைதான். அடிபணிந்திருக்கும் ஊழ்கொண்டவர் தன்னை ஆள் என அமைத்துக்கொள்ளும்பொருட்டு அதைக் கற்றார். அதனாலேயே கோழை என்றானார். நிமித்தநூல் சூதர்களுக்குரியது. பாரதவர்ஷத்தின் பேரரசனுக்கு அது எதற்கு… நான் சொல்வதைக் கேள். இது என் ஆணை…” என்று விஜயை கூவினாள். சுகோத்ரன் தலைவணங்கி கைகூப்பிவிட்டு குடிலைவிட்டு வெளியே சென்றான்.

விஜயை “நில், நான் ஆணையிடுவதைச் செய்” என்று கூவியபடி அவனுக்குப் பின்னால் வந்தாள். அவன் திரும்பி நோக்காமல் நடக்க உஜ்வலனும் உடன் சென்றான். அவள் குடில்வாயிலைப் பற்றிக்கொண்டு நிற்க அவளை பூர்ணை ஏந்திக்கொண்டாள். “மைந்தா, சொல்வதை கேள். உன் அன்னையின் ஆணை இது” என விஜயை கூவிக்கொண்டே இருந்தாள். அவர்கள் தேரிலேறிக்கொண்டார்கள். சுகோத்ரன் “அரசரின் குடிலுக்குச் செல்க” என பாகனுக்கு ஆணையிட்டான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 54

பகுதி : எட்டு விண்நோக்கு – 4

விதுரர் சுகோத்ரனிடம் “அப்போது உன் அகவை என்ன?” என்றார். “ஆறு. நான் இலக்கணக் கல்வியை முடித்து நெறிநூல்களை கற்கத் தொடங்கியிருந்தேன்” என்றான் சுகோத்ரன். “அந்த அகவையில் அது பெரிய பொறுப்புதான்” என்றார் விதுரர். “ஆம், ஆனால் அந்த அகவையில் என்பதால்தான் என்னால் உறுதியான முடிவை எடுக்கமுடிந்தது” என்றான் சுகோத்ரன்.

நான் அந்த ஏட்டுச் சுவடியுடன் அங்கேயே அமர்ந்திருந்தேன். சிற்றறை அது. அதன் ஒவ்வொரு அணுவும் இன்று என என் காட்சியில் உள்ளது. நான்கு சாளரங்களினூடாகவும் ஒளி உள்ளே வந்தது. அந்தச் சுவடி நன்கு வெளிச்சம் படும் இடத்தில் இருந்ததனால் அது சுடர்விடுவது போலிருந்தது. அறைக்குள் வந்த காற்றில் திரைச்சீலைகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. என்னிடம் அது உசாவுவதுபோல தோன்றியது. எந்தக் கலையும் தன்னை முற்றளிக்கும்படி கோருகிறது. முற்றளிக்காதவனை அது ஏளனம் செய்கிறது. ஒரு கலையின் பொருட்டு பிற அனைத்தையும் இழப்பவனே அக்கலையை அடைகிறான். அக்கலையில் அவன் தேர்வான் என்றால் பிற அனைத்தையும் அக்கலையே அவனுக்கு அளிக்கும்.

ஆனால் பிற அனைத்தையும் விடுவதற்கான முடிவு எடுப்பது அத்தனை எளிதல்ல. முதிரா அகவையில் எடுத்த முடிவு அது. அதை எத்தனை நூறு முறை மீண்டும் எடுத்திருப்பேன். கனவுகளிலேயே வளர்க்கப்பட்ட ஷத்ரியனாகிய எனக்கு அளிக்கப்பட்டது. எழுக, விரிக என்னும் ஆணை. தாதையே கூறுக, உலகு நோக்கி விரிக என்ற ஆணையை ஒவ்வொரு ஷத்ரியனுக்கும் விதைப்பது அக்குலமா, அவனுக்கு அளிக்கப்படும் கல்வியா, அவன் குருதியா? அறியேன். ஆனால் ஷத்ரியனை நிலைகொள்ளாமலாக்குவது, அவன் ஒருகணமும் எங்கும் அமையாதவனாக ஆக்குவது அதுதான்.

இதோ குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் இத்தனை ஷத்ரியர்கள் முட்டி மோதி உயிர்துறந்திருப்பது அவர்களுக்குள் விதைக்கப்பட்ட அக்கனவினால்தான். அது பேரழிவை உருவாக்கும் தீச்சொல்போல. கனவெனினும் கடந்து போக முடியாத ஒன்று. ஷத்ரியர்கள் என்னும் குலம் ஏன் உலகில் உருவானது? ராஜஸமென்னும் இயல்நிலையின் மானுட வடிவங்கள் அவர்கள். இப்புடவியை நெய்திருக்கும் மூன்று விசைகளில் அதுவே முதன்மையானது. எழுவிசை அது. இக்களத்தில் படைப்பிறையால் வைக்கப்பட்ட கருக்கள் ஷத்ரியர். அழிப்பதும் அழிவதும் அவர்களின் இயல்பு. விலங்குகளில், பூச்சிகளில்கூட ஷத்ரியர்கள் உண்டு என்பார்கள்.

மண்மீதான பற்றை துறப்பது சூத்திரர்களுக்கு கடினம். பொன்மீதான பற்றை துறக்கும் வைசியர் அதனினும் அரியர். சொல்மீதான ஈர்ப்பை அறுக்க அந்தணன் அருந்தவம் செய்யவேண்டும். தாதையே, வெற்றிமேல் ஷத்ரியன் கொள்ளும் விழைவை அறுப்பது இயல்வதே அல்ல. அவன் ஷத்ரியன் அல்லாமல் ஆகவேண்டும் அதற்கு. விஸ்வாமித்திரரும் ஜனகரும் கடந்துசென்றனர். அதற்கு முன் அவர்கள் தங்களை படிகளாக்கி தாங்களே மிதித்தேறி அந்தணர் ஆயினர்.

நான் அன்று பகல் முழுக்க அங்கு அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு கணமாக அச்சுவடி நோக்கி செல்கிறேன் என்று தோன்றியது. ஒவ்வொரு கணத்திலும் அச்சுவடியிலிருந்து என்னைத் தடுக்கும் பெருவிசைகளை உணர்ந்திருந்தேன் என்று தோன்றியது. அச்சுவடி மட்டும் ஒளிவிட அறை இருண்டு அமைந்தது. சுவடியின் அருகே இருந்த சிற்றகலின் வெளிச்சத்தில் அதை பார்த்தபடி அந்தியில் அமர்ந்திருந்தேன். எண்ணெய் தீர்ந்து அகல் அணைய சுவடி இருளில் மறைந்தது. இருளுக்குள் அதன் இருப்பு இருந்தது. அருகே நான் அமர்ந்திருந்தேன். பின்னர் அது மட்டுமே இருந்தது, நான் இல்லாமலிருந்தேன். பின்னர் அது மறைந்தது நான் இருந்துகொண்டிருந்தேன். பிறகு வேறெங்கோ எங்கள் இருவரையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

முழு இரவும் அங்கு அமர்ந்திருந்தேன். மறுநாள் புலரி எழுவதை ஓசைகளினூடாக உணர்ந்தேன். புலரியா என்று எண்ணியபோது திகைப்பாக இருந்தது. அத்தனை பொழுது அங்கு அமர்ந்து எதை எண்ணினேன் என்று பின்னாட்களில் பலமுறை தொகுத்துப் பார்த்தேன். எதையுமே எண்ணவில்லை, வெற்றுச் சொற்களால் நெஞ்சை நிரப்பிக்கொண்டு அங்கு அமர்ந்திருந்தேன் என்று தோன்றியது. சலிப்புற்று எழுந்து ஓடிவிடவேண்டும் என்று எண்ணி, ஆனால் உடலை அங்கிருந்து எடுக்க இயலாமல்தான் அங்கேயே படிந்திருந்தேன். சாளரங்கள் ஒளி கொண்டன. ஒளி சரிந்து உள்ளே விழுந்தது. முதற்கதிர்! அதன் செம்பொன் நிறம்!

அச்சுவடி அவ்வொளியில் மீண்டும் பொலியத் தொடங்கியது. இப்போது முற்றிலும் புதிதாக இருந்தது. அவ்விரவில் அது எங்கோ கிளம்பிச்சென்று மீண்டதுபோல. புடவி முழுக்க நிறைந்திருக்கும் பேரிருள் ஒன்றில் கரைந்திருந்து மீண்டும் உயிர்கொண்டதுபோல. அவ்விருள்தான் புடவிகள் அனைத்தையும் இணைக்கும் சரடு. இருளே அனைத்துக்கும் பொருள் அளிக்கிறது. நிமித்திகனின் ஊடகம் இருள். அவன் மொழியிலெழுவது இருள். இருளின் அளவிடமுடியாமையையே அவன் ஊழென்று விளக்குகிறான். அளியென்று ஆக்கி ஆறுதலென சமைத்து அளிக்கிறான்.

நிமித்திகன் அறியக்கூடுவதில் ஒரு பகுதியை மட்டுமே நாம் நிமித்தநூலில் கற்கிறோம். மொழி தொடும் இடமே சிறிது. மொழியில் நாம் உளம் திறக்கும் இடம் அதைவிட சிறிது. உளம் திறக்கும் இடத்தை நாம் உலகியலுக்கு விளக்குவது அதைவிட சிறிது. ஏரியல்ல அது, கடல். ஆழி, பரவை, அலகிலி. அதை என் உள்ளத்தில் அள்ளிக்கொள்ளவேண்டும். ஆனால் நான் அதில் இறங்கிவிடவேண்டும். என் முன் அதன் கரை வளைந்திருந்தது. மாபெரும் நாவுகள் என அலைகள் கொந்தளித்தன.

அச்சம் ஏற்பட்டு நான் எழுந்தேன். என்னால் அது இயலாதென்று தோன்றியது. ஆழியில் குதிப்பவன் கரையை முற்றாக மறந்துவிடவேண்டும். ஆடை அனைத்தையும் முற்றாக களைந்துவிடவேண்டும். பெயரை, அடையாளங்களை, உறவை இழந்துவிட வேண்டும். ஆழியன்றி பிறிதொன்று இருக்கக் கூடாது. ஆழியாகவே மாறிவிடவேண்டும். ஆழியில் எதுவும் சிறு துளியே. பெருங்கலங்கள் கூட. தீவுகள் கூட துளிகளே.

நான் அவ்வறையிலிருந்து வெளியே செல்வதற்காக திரும்பிய கணம் சாளரத்தினூடாக வாள் வீச்சென ஒரு சிறு பறவை உள்ளே வந்து சுழன்று திரும்பிச் சென்றது. ஒருகணம் கூட இல்லை. அதை நான் பார்க்கவே இல்லை. அதன் வீச்சொலியை மட்டுமே கேட்டேன். அதன் காற்று அசைவென்று உடலைத் தொட உணர்ந்தேன். மெய்ப்பு கொண்டு அங்கேயே நின்றேன். சுவர் சாய்ந்து மெல்ல அமர்ந்தேன். என் உடல் துள்ளி நடுங்கிக்கொண்டிருந்தது. என் கண்களிலிருந்து நீர் வழிந்தது. இரு கைகளையும் கோத்து மடியில் வைத்து இறுக்கிக் கொண்டிருந்தேன்.

தௌம்ரர் உள்ளே வந்து “என்ன முடிவெடுத்திருக்கிறாய்?” என்றார். “ஆசிரியரே, நான் நிமித்தநூல் கற்கிறேன், நிமித்திகனாகிறேன்” என்றேன். “அறுதி முடிவா இது?” என்று அவர் கேட்டார். “ஆம், அறுதியாக” என்று நான் சொன்னேன். ஆசிரியர் மகிழ்ந்தாரா? முகம் மலர்ந்ததா? இன்றுகூட அதை என்னால் உணர முடியவில்லை. இத்தனை தொலைவுக்கு அந்த நாளை, அக்கணங்களை விரித்து விரித்து சொல்லாக்கிக் கொண்டபின்னரும் அவர் முகம் பொருளில்லாத சொல் எனவே நினைவில் நீடிக்கிறது.

ஆசிரியர் என்னை அருகே அமர்த்தி, ஏட்டுச் சுவடியை எடுத்து மடியில் வைத்து “நோக்கு” என்றார். அது பட்டு நூலால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. மிகத் தொன்மையான ஏடு. தாளியோலையில் எழுதப்பட்டது. பொன்னிற ஓலை காலத்தால் பழுப்பு நிறமாகி சாம்பல் நிறமாக மாறிவிட்டிருந்தது. “இது சூரியதேவரின் பிரஹதாங்க பிரதீபத்தின் பதினெட்டாவது அங்கம். இது ஊழ் குறித்தது. இதில் உன் கை திறக்கும் பகுதியை காட்டு” என்றார்.

நான் அதன் செம்பட்டுச் சரடை சுற்றி பிரித்து அதை செங்குத்தாக அடுக்கி ஏட்டு அடுக்கின் வரிகளின்மேல் விரலோட்டி “தெய்வங்களே!” என்று எண்ணியபடி ஒரு பக்கத்தில் விரலமிழ்த்தி அதை பிரித்து வைத்தேன். தாளியோலையின் அப்பக்கத்தில் எழுத்தாணியால் மிக மெலிதாகக் கீறி எழுதப்பட்ட எழுத்துக்களின் மீது மஞ்சளும் சுண்ணமும் கலந்த செஞ்சாந்து பூசப்பட்டிருந்தது. ஒருகாலத்தில் செவ்வண்ணத்தால் எழுதப்பட்ட எழுத்துக்கள். பின்னர் உலர்ந்த குருதியென்றாகி பின்னர் கருங்கோடுகளாக சமைந்து அதிலிருந்தன .

தௌம்ரர் “அதில் ஒரு சொல் மீது உன் கையை வை” என்றார். நான் விழி தழைக்க “நோக்காது வை” என்றார். நான் சுட்டுவிரலை அதன்மேல் நிறுத்தி ஒருகணம் காத்திருந்தேன். அவ்வேட்டில் ஒரு வார்த்தை எனக்காக காத்திருக்கிறது என்று தோன்றியது. அச்சொல் எது? அது முன்னரே எனக்காக காத்திருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக. சூரியதேவர் பிருஹதாங்க பிரதீபத்தை எழுதிய காலம் முதலே அது என்னுடையது. எனக்கு முன் பல்லாயிரம் கைகள் அதை தடவியிருக்கும். அவர்கள் அனைவரையும் என்னுடன் இணைக்கிறது. அது அச்சரடில் மேலும் மேலும் ஆளுமைகளை கோத்து ஒரு மாலையை அமைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு நோக்கம் இருக்கக்கூடும். அச்சொல் முதல்முறையாக அவர் உள்ளத்தில் எழுந்தபோது, கற்றுச்சொல்லியால் முதலில் சுவடியில் எழுதப்பட்டபோது நான் அங்கு நின்றிருப்பேன்.

“கையை வை” என்று தௌம்ரர் சொன்னார். பிறிது எண்ணாமல் நான் கையை வைத்தேன். அவர் அச்செய்தியை படித்தார். “எப்போதும் அலகு நிமிர்ந்திருக்கும் பறவை” என்ற வரியைப் படித்து முகம் மலர்ந்து “நன்று, அழகிய வரி” என்றார். “என்ன பொருள்?” என்று கேட்டேன். “அலகு நிமிர்ந்திருக்கும் பறவை என்பது ஓர் அழகிய நிமித்தம்” என்றார் தௌம்ரர். “ஆசிரியரே, அதன் பொருளென்ன?” என்றேன். உண்மையில் அப்போது என் கற்பனையில் அப்பறவையை கண்டுவிட்டிருந்தேன்.

“பறவைகளில் இருவகை உண்டு. அமர்ந்திருக்கையில் குனிந்து நிலம் நோக்கும் பறவை ஒன்று. எக்கிளையில் அமர்ந்தாலும் தலையை வான் நோக்கி நிமிர்த்தியிருக்கும் பறவை பிறிதொன்று. நோக்குக, பறவைகள் விண்ணையும் மண்ணையும் நோக்கும்! சிறகு விண்ணுக்கு கால் மண்ணுக்கு. விழி விண்ணுக்கு அலகு மண்ணுக்கு. ஆனால் பசித்து இரை தேடி அமர்ந்திருக்கையிலும் வான் நோக்கி அமர்ந்திருக்கும் பறவைகள் சில உண்டு. சிட்டுக்குருவி நிலம் நோக்குவது மிகவும் குறைவு.”

“ஆம், சிட்டுக்குருவி நிலம் நோக்கி நான் பார்த்ததில்லை” என்றேன். “மைந்தா, ஒவ்வொரு கணமும் மண்ணில் இரைநோக்கி வாழவேண்டிய ஊழ் அதற்கு இருக்கிறது. அது ஊழை அறியவும் செய்கிறது. ஆயினும் தன் கூரலகை வானை நோக்கியே நிமிர்த்தியிருக்கிறது. கிளையிலிருந்து எழும்போது எப்போதும் மேலே நோக்கியே எழுகிறது. சுழன்று கீழிறங்கினாலும் மேலே நோக்கி சென்றுவிடுகிறது. அலகு மேல் நோக்கிய பறவை… நன்று” என்றார். “சின்னஞ்சிறு பறவை… உலகோர் விழிகளுக்கு தென்படாமலேயே வாழவும்கூடும் அது… ஆற்றலற்றது. எளிதென்பதையே ஆற்றல் எனக்கொண்டது… நன்று.”

எழுந்து என்னை தன்னருகே நிறுத்தி “என் தாள் பணிந்து இச்சுவடியை பெற்றுக்கொள். உனக்கு அனைத்து நலன்களும் கூடும்” என்றார். நான் எழுந்து அவர் கால்களைத் தொட்டுச் சூடி வாழ்த்து பெற்றேன். “தெளிக! தெளிந்து அவற்றை கடந்து செல்க! நிறைவடைக!” என்று அவர் வாழ்த்தினார். பின்னர் பிரஹதாங்க பிரதீபத்தை பட்டு நூல் சுற்றி என் கையில் அளித்து “இது உன்னிடம் இருக்கட்டும். இதில் இல்லாத எதுவுமே இல்லை” என்றார். “இங்கு வெளியே விரிந்து கிடக்கும் ஒவ்வொன்றும் இதில் உள்ளது. வான்விரிவு அனைத்தையும் அள்ளி வைத்திருக்கும் நீர்த்துளியின் ஆடிப்பரப்பு போன்றது இது. இது ஒரு கடல். அழியாத பெருவிரிவு. என்றும் மானுடர் இதில் வந்து மூழ்கித்துழாவி உசாவிக்கொண்டேதான் இருப்பார்கள்.”

“அவர்களுக்கு உரியதை அவர்களுக்கு அளிக்கும். அவர்களுக்கு வழி காட்டும், ஆறுதல்படுத்தும், செயலூக்கத்தை அளிக்கும். உரிய தருணத்தில் செயலின்மையும் அவர்களுக்கு கூறும். அதன் நாவென்று நீ ஆகுக! கோடானுகோடி இலை முளைத்த மரம்போல நா முளைத்த சுவடி இது. ஒரு நாவு உன்னுடையதென்று ஆகுக! நிமித்திகன் நா ஆலயத்து மணியின் நாவுக்கு நிகரானது. அது தெய்வச்சொல் என்பார்கள். தன்னை தெய்வத்துக்கு ஒப்புக்கொடுத்தவனே அவ்வாறு ஆகமுடியும். ஒப்புக்கொடு. எச்சமிலாது அளிக்கையில் எஞ்சும் ஒன்று உண்டு. அதுவே நிறைவென்பது. ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவர் என்னை வாழ்த்தினார்.

“அவரை வணங்கி நான் பிரஹதாங்க பிரதீபத்தை பெற்றுக்கொண்டேன். என் கையில் எப்போதும் அச்சுவடியை வைத்திருப்பேன்” என்று சுகோத்ரன் கூறினான். “நான் அவரிடம் ஐந்தாண்டுகள் கற்றேன். அதன்பின் அவரிடம் விடைபெற்று மீண்டும் கற்கும்பொருட்டு ஆசிரியர்களை நாடிச் சென்றேன்” என்றான் சுகோத்ரன். “இங்கே நிகழ்ந்தவை எதையும் நான் முழுமையாக அறியவில்லை. என் கல்வியே தவமென சூழ்ந்திருந்தது. அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் அன்னையரைச் சந்திக்கும் பொருட்டு சிலமுறை வந்தேன். தந்தையர் கானேகியிருப்பதை அறிந்தேன். ஆனால் என் உள்ளம் விலக்கம் கொண்டிருந்தது.”

விதுரர் “அது நன்று. இக்களத்திலிருந்து அவ்வாறு ஒருவர் விலக்கப்பட்டது மிக நன்று” என்றார். “ஆனால் அவ்வாறு விலக்கப்பட்டதன் பழியை நான் அடைகிறேன். நான் பயிலும் அனைத்து கல்விநிலைகளிலும் கோழையென்றே கருதப்படுகிறேன். சாவுக்கு அஞ்சி நூலுக்குள் ஒளிந்துகொண்டவன் என்று என்னை சூதர்கள் எண்ணுகிறார்கள். இப்போர் முடிந்த செய்திகள் வரும்போது ஒருகணம் அது மெய்யோ என்று எனக்கும் தோன்றியது. அவ்வெண்ணத்திலிருந்து என்னால் தப்ப இயலவில்லை. ஆகவேதான் இங்கு கிளம்பி வந்தேன். இத்துயரின், அழிவின் நினைவுகளில் உழன்ற பின்னரும் என்னிடம் எஞ்சுவதென்ன என்று பார்க்கலாம் என்று தோன்றியது” என்று சுகோத்ரன் கூறினான்

“ஆம், வந்தது நன்றே” என்றார் விதுரர். அவர் பேசவந்ததை பேசவிரும்புவதுபோலத் தோன்றினார். சுகோத்ரன் அதற்காகக் காத்திருந்தான். அவர் சற்றுநேரம் இருளை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “உன் நிமித்தநூல் என்ன சொல்கிறது, அஸ்தினபுரியின் எதிர்காலம் பற்றி?” என்றார். “நான் கணிக்கவில்லை. நெறிகளின்படி நான் என் வாழ்க்கையையும் என் உற்றார் வாழ்க்கையையும் கணிக்கக் கூடாது” என்றான்.

விதுரர் “ஆம், அதை அறிவேன். ஆயினும் நீ உன்பொருட்டன்றி பிறர் பொருட்டு அதை செய்யலாம். அஸ்தினபுரியின் எதிர்காலமே இனி பாரதவர்ஷத்தின் எதிர்காலம். அதை கணிக்காமல் எவரும் பிற எதையும் கணித்துவிட முடியாது” என்றார். “மெய்தான். அஸ்தினபுரியின் எதிர்காலத்தை நான் கணித்தேன். அது குடிபெருகி வாழும். நீடித்த அமைதியை காணும். செல்வமும் சிறப்பும் அமையும்” என்றான். விதுரர் “வேறெந்த நாடுகள் சிறப்புறும்?” என்றார். “மாளவமும் கலிங்கமும் வங்கமும் வாழும். மகதம் பெருஞ்சிறப்புடன் எழும் ஒரு காலம் வரும்” என்றான் சுகோத்ரன்.

விதுரர் பெருமூச்சுவிட்டு “நெடுங்காலத்திற்கு முன் என் அன்னை சத்யவதியின் அவையில் ஒரு நிமித்திகன் அதை சொன்னான். அதன்பின் அதை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். அன்று மகதம் சிறுநாடு. அதன்பின் அதை விரித்து எடுத்தவன் அரக்க குடிப்பிறப்பு கொண்ட ஜராசந்தன்… எவ்வண்ணம் அது பாரதவர்ஷத்தை முழுதாளும்? சலித்து அதுவே ஊழ் போலும் என விட்டுவிடுவேன். இன்றும் அதே உளத்தயக்கத்தையே அடைகிறேன்” என்றார்.

மீண்டும் ஒரு சொல்லின்மை வந்தமைந்தது. விதுரர் சற்று கடந்துசென்று மீண்டும் சொல்லெடுத்தார். “நீ உன் மூதன்னை குந்தியை சந்திக்கவேண்டும். அவர் உன்னிடம் சிலவற்றை கோர விழையலாம்” என்றார். “நான் சிலமுறை அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் வந்துள்ளேன். அவரைச் சந்திக்கும் விழைவு இருந்தது. அவர் விரும்பவில்லை” என்றான் சுகோத்ரன். “அவர் என்னை அரண்மனைச்சூழலில் இருந்தே விலக்கிவிட்டிருந்தார். என் அன்னையிடம் அவன் முழு நிமித்திகனாக வரட்டும், முதிர்வுக்கு முன் அவன் உங்களையெல்லாம் சந்திப்பதே கூட நன்றல்ல என்றார். அதன் பின் நான் கல்விநிலையிலிருந்து வெளிவரவே இல்லை” என்றான் சுகோத்ரன்.

“அவர் இன்று பிறிதொருவராக ஆகிவிட்டிருக்கிறார்… இன்று அவர்…” என்று விதுரர் தொடங்க “உய்த்துணர முடிகிறது. ஆனால் இன்றைய நிலையில் எந்நிமித்திகரும் அவர்களை காணலாகாது. அவர்களால் மூதன்னைக்கு எப்பயனும் இல்லை” என்றான் சுகோத்ரன். விதுரர் “உன்னை இளங்குழவி என கானகம் அனுப்பியது உன் தந்தை எடுத்த முடிவு” என்றார். “இன்று நிகழ்ந்துவிட்ட அனைத்தையும் அவர் முன்னுணர்ந்திருக்கலாம். மூழ்கும் தோணியில் இருந்து கைமகவை கரை நோக்கி எறிவதுபோல உன்னை அவர் தௌம்ரருக்கு அளித்திருக்கலாம்.”

“அந்நாளில் அம்முடிவைப்பற்றி நான் அவரிடம் கேட்டேன். நிமித்தஞானம் மட்டும் மொழிக்கு முன்னரே கற்கப்படவேண்டும். சொற்களுக்கு உலகியல் அளிக்கும் பொருளே இயல்பாகக் கிடைப்பது. அதற்கு முன்னரே காலமும் வானமும் அளிக்கும் மெய்ப்பொருளை அறிந்தவனே நிமித்தவியலின் மெய்மையை தொடமுடியும். மொழியறிந்த பின் நிமித்தநூல் கற்பவன் நிமித்தஞானத்தை தானறிந்த உலகியல் மொழிக்குபெயர்த்து புரிந்துகொள்பவன். அவன் புரிந்துகொள்ளலாம், உணர்ந்துகொள்ளல் இயலாது. இது கல்லையும் மண்ணையும் அளக்கும் கணக்கு அல்ல, வான்முகிலையும் காற்றையும் அளக்கும் கணக்கு என்றார்.”

“நிமித்தநூல் ஆசிரியரிடமிருந்தே என் மைந்தன் மொழியையும் கற்கவேண்டும். அவன் வந்து நின்றிருக்கையில் அவனிடமிருந்து நான் மேலும் கற்கவேண்டும் என்றார். என்னால் அதை மறுக்கமுடியவில்லை” என்று விதுரர் தொடர்ந்தார். “உன் தாலிக்காப்பு விழவுக்கு மறுநாளே தௌம்ரர் தன் ஏழு மாணவர்களுடன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தார். மூதரசி குந்தி உன்னை ஒரு பொற்தாலத்தில் படுக்கவைத்து பொன்நாணயங்களால் மூடி இரு கைகளால் எடுத்து அவருக்கு அளிக்க அவர் வணங்கி பெற்றுக்கொண்டார். அரசியர் தேவிகையும் கரேணுமதியும் பலந்தரையும் விழிநீர் உகுத்ததை கண்டேன். உன் அன்னை வெற்றுவிழிகளுடன் நோக்கி நின்றார். நீ விழிமுன் இருந்து அகன்றதும் பெருமூச்சுடன் திரும்பினார். கால்தளர்ந்து மயங்கிவிழுந்தார்.”

“நான் அன்று உளம்கொந்தளித்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொந்தளிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. பின்னர் அனைத்தும் நலம் திகழ்வதற்கே என என்னை தேற்றிக்கொண்டேன். ஒருவன் அகன்றிருப்பது இன்றியமையாதது என உன் தந்தை நெஞ்சில் எழுந்த தெய்வம் ஆணையிடுகிறது போலும் என எண்ணிக்கொண்டேன். அது நன்று என இன்று உறுதிகொண்டிருக்கிறேன். நீ இவ்வண்ணம் வந்து அமர்ந்திருக்கையில் தெய்வங்களையும் மூதாதையரையும் மீள மீள அழைத்து நன்றி சொல்கிறேன். உன் மூதன்னையும் உன் வருகையை அறிந்தால் விழிநீர் சிந்துவார். ஒருவேளை அவர் இன்று கொண்டிருக்கும் அப்பெருந்துயர் சற்றே அகலவும்கூடும்.”

சுகோத்ரன் “இல்லை, அது மிகவே வாய்ப்பு” என்றான். விதுரர் “என்னை விட நீ அறிந்தவன்” என்றார். சுகோத்ரன் “என் அன்னையையும் சந்திக்கவேண்டும். புலரி எழட்டும்” என்றான். விதுரர் “ஆம், அவர் மகிழக்கூடும்” என்றார். “இல்லை, மேலும் துயருறுவார்” என்றான் சுகோத்ரன். “ஏன்?” என்று விதுரர் கேட்டார். சுகோத்ரன் புன்னகை செய்தான். “ஏன்?” என்று மீண்டும் விதுரர் கேட்டார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் அவனை கூர்ந்து நோக்கிவிட்டு சொல்லொழிந்தார். “நீ வந்தது ஒரு அருநிமித்தம். நம் குடிக்கே ஒரு பெருவாய்ப்பு. தெய்வங்களின் ஆணையே இதுவென இருக்கலாம்” என்றார். அவன் அதைச்செவிகொள்ளாமல் இருளை நோக்கி விழிநிலைக்கவிட்டு அமர்ந்திருந்தான்.

அவர் பேசவந்தது அப்போதும் அவர்களுக்கு நடுவே நின்று தத்தளித்தது. நேரடியாகவே அதை நோக்கி செல்லவேண்டும் என அவர் முடிவெடுப்பதை சிறு உடலசைவே காட்டியது. ஆனால் சொல்லுக்காக வாய் அசைவுகொண்டதுமே அவர் உள்ளம் பின்னடைய உதடுகள் திறந்தபடி நின்றன. ஒரு கணம் சிலை என ஆகி உறைந்து பின் எண்ணம் வேறெங்கோ முட்டிக்கொள்ள பெருமூச்சுவிட்டு திரும்பிக்கொண்டார். அவன் அவரை நோக்கி “அஞ்சவேண்டியதில்லை. அஸ்தினபுரிக்கு குருகுலத்தின் குருதித்தொடர்ச்சி உண்டு” என்றான்.

“ஆம், அதை வேறு நிமித்திகர்களும் கூறியிருக்கிறார்கள்” என்றார் விதுரர். “அது எவராக இருக்கக்கூடும் என நான் உன்னிடம் கேட்கப்போவதில்லை” என்றார். மீண்டும் அந்தத் தவிப்பு. பிறகு நீள்மூச்செறிந்து “உன்னால் விராடநாட்டரசி உத்தரையின் பிறவிநூலை கணிக்கமுடியுமா?” என்றார். அவன் புன்னகையுடன் “ஆம்” என்றான். விதுரர் மெல்லிய பரபரப்புடன் “அதை நானே வரைந்து கொண்டுவந்துள்ளேன்…” என்று இடையிலிருந்து ஓர் ஓலையை நீட்டினார். அவன் புன்னகையுடன் அதை வாங்கினான். அதை கூர்ந்து நோக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தான். பின்னர் கண்களை மூடி சற்றுநேரம் ஊழ்கத்திலமைந்தான்.

பின்னர் விழிகளைத் திறந்து அவரை நோக்கி “நன்று சொல்வதென்றால், விராடஅரசியின் மைந்தன் நாடாள்வான்” என்றான். “அவனுக்கு நாகத்தீங்கு உண்டு. ஆனால் அவன் கொடிவழியினர் இங்கே பல தலைமுறைக்காலம் நீடித்து வாழ்வார்கள்.” விதுரர் வெறும்விழிகளால் நோக்க “தீது என்றால் அவருக்கு நீடித்த வாழ்வு இல்லை. இந்த ஆண்டே ஒரு சாவிடரை காட்டுகிறது பிறவிநூல். வலுவானது” என்றான். “ஆனால் அது அவருக்கு விடுதலையே. எட்டு களங்களிலிருந்தும் கடுந்துயர் வந்து தாக்கும் நிலையில் இருக்கிறார். தன்னினைவு கொள்வதே பெருவலியை அளிக்கும் அளவுக்கு சூழ்துயர்.”

விதுரர் பெருமூச்சுவிட்டார். சுகோத்ரன் “மேலும் சொல்லலாம், ஆனால் நீங்கள் அறியவேண்டுவதென்ன?” என்றான். “அம்மைந்தனின் பிறவித்தருணத்தை கணிக்க முடியுமா? அதைக்கொண்டு அவன் வாழ்வை கணிக்கலாகுமா? எளிய நிமித்திகர்களால் இயலாது” என்றார் விதுரர். “அனைத்து நிமித்திகர்களாலும் இயலும். நீங்கள் கேட்கவிருப்பதை குடிக்கு வெளியே ஒரு நிமித்திகரிடம் கேட்க விழையவில்லை, அவ்வளவுதான்” என்றான் சுகோத்ரன். “ஆம்” என்று விதுரர் சொன்னார். “தாதையே, அவன் குருகுலத்துக் குருதியினன். அதற்கப்பால் அவன் பிறப்பு குறித்து ஆராய நமக்கு உரிமை இல்லை” என்றான் சுகோத்ரன்.

“ஆனால்…” என்று விதுரர் சொல்லெடுக்க சுகோத்ரன் ஊடே புகுந்து “எவருடைய பிறப்பையும் ஆராயும் உரிமை பிறருக்கில்லை. அன்னையரின் கருப்பைக்குள் விழிசெலுத்துவது தவமுனிவரின் ஊழ்கத்தைக் கலைக்கும் பழியைச் சேர்ப்பது” என்றான். விதுரர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் எழுந்துகொண்டு “நெறி எதுவாயினும் ஆகுக! இங்கே ஒரு சிறுபழி சேராமல் கடக்க இயலுமா என்பதே என் உசாவல். நன்று, நீயே அறிந்திருப்பாய். உன்னால் அதை தவிர்க்க முடியும். நீ குருகுலத்துக் குருதியினன். எஞ்சும் ஒரே மைந்தன். நீ உரிய முடிவை எடுத்தால் போதும்” என்றார்.

சுகோத்ரன் மறுமொழி சொல்வதற்குள் விதுரர் ஒன்றும் சொல்லாமல் எழுந்து இருளுக்குள் நடந்து அகன்றார். சுகோத்ரன் அவரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். பின்னர் மீண்டும் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு இருளை நோக்கி அமர்ந்திருந்தான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 53

பகுதி எட்டு : விண்நோக்கு – 3

சுகோத்ரன் இருளில் மெல்லிய அசைவொன்று தெரிவதைக்கண்டு விழி கூர்ந்தான். அசைவு உருவென மாறுவதற்கு உள்ளம் சென்று அதைத் தொடவேண்டியிருக்கிறது. உரு பொருள்கொள்வதற்கு மேலும் ஒரு சிறு தாவல். விதுரர் என்று உணர்ந்ததும் அவன் எழுந்து நின்றான். மெல்லிய கூனலுடன், விரைந்த சிற்றடிகளுடன் விதுரர் நடந்து வந்தார். அவருடைய கால்களில் ஏதோ சிறு குறைபாடு இருப்பதுபோல் நடை ஒருபக்கமாக இழுத்தது. அருகணைந்து, நடந்து வந்ததன் அலுப்புடன் நீள்மூச்செறிந்து “விழித்திருப்பீர்களா என்ற ஐயம் ஏற்பட்டது” என்றார். “துயில்கொள்ள இயலவில்லை” என்று சுகோத்ரன் சொன்னான்.

“ஆம், இன்று இந்த பகுதியில் எவரும் துயில்கொள்வார்கள் என்று தோன்றவில்லை. அனைவருமே பதற்றத்திலிருக்கிறார்கள்” என்றார் விதுரர். “ஏன்?” என்று கேட்டான் சுகோத்ரன். அவனுக்கு அவர் கூறப்போவதில் ஆர்வமிருக்கவில்லை. அவரிடம் பேசவே பிடிக்கவில்லை. எவரிடமும் பேசப் பிடிக்கவில்லை. “மிகையான ஆட்சியின் சிக்கல்” என்றார் விதுரர். “ஒரு செயல் சிறப்பாக நடக்கவேண்டுமென்றால் முதன்மைமேலிடத்திலிருந்து மிகக் குறைவான ஆணைகள் இடப்படவேண்டும். வழிகாட்டுதல்கள் மட்டுமே அந்த ஆணையில் இருக்கவேண்டும். செயல்முறையை அதைச் செய்பவர்களே முடிவெடுக்கவேண்டும். செய்பவர்களுக்குள் முரண்பாடுகள் வரும். அவற்றை அவர்களே தீர்த்துக்கொள்ளவேண்டும். அதனூடாகவே அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் நிரப்பி இசைந்து ஓர் செயல்படும் அமைப்பாக மாறுகிறார்கள்.”

“மேலிடத்தில் இருந்து மிகையாக ஆணைகள் அளிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் இறுக்கமான செயல்முறைகள் அமைந்துவிடுகின்றன. மீற முடியாதவை. அவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தருணத்தில் அளிக்கப்பட்டவை. எனவே அவை பிறிதொன்றுடன் இசைவு கொள்வதில்லை. ஆகவே ஒவ்வொரு செயல்தளமும் பிறிதொன்றுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்வதே அறுதியானதென்றும், முறையான ஆணைப்படி இயங்குவதாகவும் எண்ணிக்கொண்டு பிறரை முழுமையாகவே புறக்கணிப்பார்கள்” என்று விதுரர் சொன்னார்.

அவனுக்கு ஆர்வம் வந்தது. “இங்கு இதை தெரிந்தவர் எவருமில்லையா?” என்றான். “யுயுத்ஸுவுக்கு தெரியும். நெடுங்காலம் என்னுடன் பணியாற்றியவன். ஆனால் அவன் இங்கு பெரிதாக எதுவும் செய்ய இயலாது. யுதிஷ்டிரன் அனைத்தையும் தானே செய்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி புதிய ஆணைகளை அளிக்கிறார். அந்த ஆணைகளை அவரே மாற்றுகிறார். அனைவராகவும் நின்று அவரே எண்ணி அனைத்தையும் முற்றாக வடித்துவிடுகிறார். முற்றாகவே வடித்துவிட்ட ஒன்று எப்படி பிழையாகும் என அவர் சினம்கொள்கிறார். முற்றாக வடிக்கப்பட்ட பின் அது இயங்கமுடியாது, பிழை என்று மட்டுமே அதில் இயக்கம் இருக்கமுடியும் என்று அவருக்குச் சொல்ல முடியவில்லை” என்றபடி விதுரர் திண்ணையில் சாய்ந்து அமர்ந்தார்.

அவர் அருகே சுகோத்ரன் அமர்ந்தான். “நாளைக் காலை சடங்குகள் தொடங்கவிருக்கின்றன. உண்மையில் இது ஒரு பெரிய நிகழ்வே அல்ல. அரசர்கள் ஐவர் நீர்க்கடன் அளிக்கிறார்கள். அதன்பின் இங்குள்ள படைவீரர்களும் ஏவலர்களும் பிறரும் நீர்க்கடன் அளிக்கிறார்கள். இதைவிட பலநூறு மடங்கு பெரிய நீர்க்கடன் நிகழ்வுகள் அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் பாரதவர்ஷம் முழுக்கவும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றை எவரும் ஆணையிட்டு ஒருங்கிணைத்து நடத்துவதில்லை. தன்னியல்பாகவே அவை நிகழ்கின்றன, நன்றாகவே முடிகின்றன” என்று விதுரர் சொன்னார்.

“பிறகு இங்கு மட்டும் ஏன் ஒருங்கிணைப்பு?” என்று சுகோத்ரன் கேட்டான். “ஒருங்கிணைக்காவிட்டால் ஒவ்வொன்றும் தன்னியல்பாக நிகழும். மேல்கீழ் என்னும் அடுக்கு உண்மையில் எவ்வாறோ அப்படி அமையும். அங்கே முறைமைகள் நிகழாது” என்றார் விதுரர். “சிதைவுகள் இருக்குமா?” என்றான் சுகோத்ரன். “இருக்காது. ஏனெனில் என்ன செய்யவேண்டுமென்பதிலும் எவ்வாறு அதிலிருந்து மீள்வதென்பதிலும் அங்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு தெளிவிருக்கிறது. அதற்கு ஊறு விளைவிக்கும் எதையும் செய்யக்கூடாது என்று அவர்கள் அறிவார்கள். ஆகவே முட்டி மோதி ஒருவரை ஒருவர் நிகர் செய்துகொண்டு ஒரு அமைப்பாக மாறி அச்செயலை செய்து மீள்வார்கள். மிகக் குறைவான குழப்பங்களும் அரிதாக சில முரண்பாடுகளும் மட்டுமே எழும்.”

“நான் வரும் வழியில் கங்கைக்கரை முழுக்க அவ்வாறு நீர்க்கடன்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதை கண்டேன். பலர் கங்கையில் விழுந்து உயிர் துறக்கிறார்கள் என்று அறிந்தேன்” என்று சுகோத்ரன் சொன்னான். “ஆம், அது அவர்களின் முடிவு. அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதையும் இந்நீர்க்கடனின் ஒரு பகுதியாகக் கொள்வதே முறையாகும்” என்றார் விதுரர். அவர்கள் அப்பேச்சால் இயல்புநிலைக்கு மீண்டுவிட்டிருந்தனர். சுகோத்ரன் முன்பிருந்த உள இறுக்கத்தை இழந்து தானும் உடலை எளிதாக்கி இயல்பாக அமர்ந்தான். விதுரர் பெருமூச்சுவிட்டார். இயல்படைந்ததுமே சுகோத்ரன் சோர்வையும் அடைந்தான்.

“போருக்குப் பிந்தைய தற்கொலைகள்… அதைப்போல விந்தையான பிறிதில்லை” என்று சுகோத்ரன் சொன்னான். “போருக்குப் பின் எஞ்சுபவர்களில் ஒரு பகுதியினர் தங்களை அழித்துக்கொள்கிறார்கள். இரு வகையில்” என்று விதுரர் சொன்னார். “களத்திலேயே உடனடியாக வாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சிக்கொள்பவர்கள் சிலர் உண்டு. பின்னர் ஏதோ ஒரு கணத்தில் உடனடியாக முடிவெடுத்து நீரில் பாய்ந்து மறைபவர்கள், எரிபுகுபவர்கள் என பலர் உண்டு. அது ஒரு உள அழுத்தத்தின் உச்ச வெடிப்பு. ஆனால் கொடியது ஒன்றுண்டு, கணந்தோறும் அத்துயரத்தை ஒத்திப்போடுதல். அதன் பொருட்டு ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொள்ளுதல். அகிபீனாவை, மதுவை, சிவமூலியை.”

“அது வெளித்தெரிவது. வெளித்தெரியாதவை மேலும் சில உண்டு” என்றார் விதுரர். “பலர் ஏதேனும் செயல்களை அவ்வாறு பற்றிக்கொள்கிறார்கள். தெய்வங்களைப் பற்றிக்கொள்பவர்களும் உண்டு” என்றார். “அது நன்றல்லவா?” என்றான் சுகோத்ரன். “இல்லை, அவ்வாறு எதையேனும் ஒன்றை பற்றிக்கொண்டு ஒன்றையே மிகுதியாக செய்பவர்கள் தங்கள் ஆளுமையை ஒடுக்கிக்கொள்கிறார்கள். கையையோ காலையோ சேர்த்துக்கட்டி நெடுநாட்கள் வாழ்வதுபோல அது. விரைவிலேயே அவர்கள் ஆளுமை குறுகிவிடுகிறது. அதுவும் ஒருவகையான தற்கொலைதான். போருக்குப் பின் பெரும்பாலானவர்கள் எவ்வாறோ குறுகிச் சிறுத்துவிடுகிறார்கள்” என்றபின் “பாண்டவர்களும் அவ்வாறே ஆகிவிடுவதற்கான வாய்ப்புகளே மிகுதி” என்றார் விதுரர்.

“ஐவருமா?” என்று சுகோத்ரன் கேட்டான். “ஆம், அவர்களுக்கு வேறு வழியில்லை” என்று விதுரர் கூறினார். சுகோத்ரன் பெருமூச்சுவிட்டான். “யுதிஷ்டிரன் நிலையழிந்திருக்கிறார். அவர் பிறப்பிக்கும் ஆணைகளிடம் எந்த ஒத்திசைவும் இல்லை. அதைக் குறித்து என்னிடம் ஏவலர்கள் வந்து முறையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என் நாள் முழுக்க அவர் இடும் ஆணைகளுக்குள் எவ்வாறு ஒரு ஒத்திசைவைக் கண்டடைவது என்பதிலேயே செலவிடப்படுகிறது. அரசரின் ஆணையை தவிர்க்கும் ஆற்றல் எனக்கில்லை. அதை நான் இயற்றுவதும் கூடாது. ஆகவே அவருடைய ஆணைகளுக்குள் ஓர் இசைவு ஏற்படும்படி புதிய சில ஆணைகளை நான் இடவேண்டியிருக்கிறது. மிக எளிய ஒரு செயல் இவ்வாறு சில செயல்சார்ந்த முரண்பாடுகளினால் ஆற்றுவதற்கரிதாக மாறிவிட்டிருக்கிறது” என்றார்.

சுகோத்ரன் மெல்ல நகைத்து “இதை நான் தௌம்ரரின் கல்விநிலையத்தில் கற்றபோது சொல்வார்கள். எடையற்ற ஒரு பொருளை கீழே வைத்து ஐவர் அழுத்த ஐவர் தூக்கவேண்டும் என்பார்கள். எவராலும் அதை தூக்க இயலாது. அசைக்க கூட சில தருணங்களில் இயலாது” என்றான். “ஆம், அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று விதுரர் கூறினார். சுகோத்ரன் மேலும் சிரித்து “விந்தைதான். பல லட்சம் பேர் கூடி போரிட்டு வென்ற ஒரு பெருநிகழ்வு இங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு சின்னஞ்சிறு நிகழ்வை ஒருங்கிணைக்க தடுமாறிக் கொண்டிருக்கிறோம்” என்றான். “இன்றிருப்பவர்களே வேறு… போர் ஒரு சூளை… எரிந்து உருகி உருவழிந்தவர்கள் இங்கே இருப்பவர் அனைவரும்” என்றார் விதுரர்.

“இதற்குள் இப்போரின் பேருரு பற்றி முடிவிலாத கதைகளை சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டிருக்கிறார்கள். எங்கள் நிமித்திக நிலையில் அவ்வாறு பாடல்களை பாடுவதற்கும் போர்ப்பரணிகளை உருவாக்குவதற்கும் தடை உள்ளது. ஆயினும் ஒவ்வொருவரும் அதை கேட்க விழைகிறார்கள். எப்போதேனும் எவரேனும் சூதர் அவ்வழியாக வந்தால் அவரை இழுத்துக்கொண்டுவந்து அருகிலிருக்கும் காட்டில் அமர்ந்து இளைஞர்கள் கூடி சூழ்ந்து அதைக் கேட்டு மகிழ்கிறார்கள். உளம்கிளர்ந்து தங்களுக்குள் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றான் சுகோத்ரன்.

“ஏன் போர்ப்பரணிக்கு தடை?” என்று விதுரர் கேட்டார். “சூதர்களின் இரு பணிகள் இசைபாடுவதும் நிமித்திகம் நோக்குவதும். நிமித்தம் நோக்குபவனுடைய வழி வேறு, இசை பாடுபவனுடைய வழி வேறு. நிமித்தம் நோக்குபவன் புறத்தை முற்றாக மறுத்து உள்ளே குவியவேண்டும். இசைப்பாடகன் புறம் நோக்கி விரிந்துகொண்டே இருக்கவேண்டும். இசைப்பாடலுக்குச் செல்பவன் தன் நிமித்தத்தில் ஒரு பகுதியை இழந்தே அங்கு செல்கிறான் என்கிறார்கள். இங்கு என்ன நிகழ்கிறது என்பது ஒரு நிமித்திகனுக்கு எவ்வகையிலும் பொருட்டல்ல, இங்குள்ள அனைத்தும் கருக்கொள்ளும் அங்கு என்ன நிகழ்கிறது என்பதே அவனுடைய கணிப்பு. அங்கு நிகழ்வனவற்றின் நிழல்கள் தான் இங்கு ஆடுகின்றன என்று நிமித்தநூல்கள் கூறுகின்றன” என்று சுகோத்ரன் சொன்னான்.

சில கணங்கள் அவனை கூர்ந்து நோக்கிவிட்டு “மைந்தா, நீ நிமித்தநூல் கற்க செல்வதற்கு என்ன தேவை இருந்தது?” என்று விதுரர் கேட்டார். “அறியேன். அது நானறியா அகவையில் எந்தை எடுத்த முடிவு. நான் நினைவறிந்த நாள் முதலே தௌம்ரரின் கல்விச்சாலையிலேயே இருக்கிறேன்” என்றான் சுகோத்ரன். “அவருடன் அமர்ந்து நிமித்தநூலை பிறிதொன்றறியாமல் கற்றேன். இப்போது எண்ணுகையில் அவர் நிமித்தநூல்களை படித்துக் கொண்டிருக்கையில் அவர் முகத்திலிருக்கும் அந்தப் பெரும் உவகையை அருகிலிருந்து கண்டதுதான் எனக்கு அதில் ஆர்வத்தை உருவாக்கியது என்று தோன்றுகிறது. பிற தருணங்களில் எவரிடமும் அந்த பேருவகையை நான் கண்டதில்லை” என்றான் சுகோத்ரன்.

“மனிதர்கள் அறியும்தருணத்தில் அன்றி வேறு எப்போதும் அத்தனை மகிழ்ச்சியுடன் இருப்பதை நான் பார்த்ததில்லை” என சுகோத்ரன் தொடர்ந்தான். “உணவுண்கையில், விளையாடுகையில், போர் பயில்கையில், பெண்களுடன் விளையாடுகையில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்திருக்கிறேன். நான் என் தந்தையர் ஐவரையும் அரிதாகவே கண்டிருக்கிறேன். ஆகவே அவர்களை என் கற்பனையில் வரைந்துகொண்டேன். அம்பு தொடுக்கையில் வில்லவரிடம் கூடும் ஆழ்ந்த அமைதியே மூத்த தந்தை அர்ஜுனன். கதை சுழற்றுகையில் மூத்த தந்தை பீமசேனனின் உடலெங்கும் தசைகள் அலைகொள்வதை அத்தனை மல்லரிடமும் கண்டேன். அரசர் யுதிஷ்டிரன் நூல் நவில்கையில் அவர் முகத்தில் உவகையும் ஆவலும் திகைப்பும் மாறி மாறி எழுவதையும் குருநிலையிலேயே சிலரிடம் கண்டிருக்கிறேன். ஆனால் எந்தையின் உலகு தௌம்ரருடையது. அது நிமித்தநூல்களில் இருந்தது. ஒளியுடன் வெடித்து எரியத் தொடங்கிய ஒன்று அவ்வண்ணமே உறைந்து நின்றாற்போலிருக்கும் அவர் முகம்.”

“அது என் கற்பனைதான். நான் அந்நாட்களை எண்ணி எண்ணி வளர்த்து பெரிதாகப் புனைந்து கொண்டிருக்கிறேன் இன்று. சாளரங்களினூடாக ஆசிரியர் நூல்நவில்வதை நோக்கிக்கொண்டிருப்பேன். அது அவர் மட்டும் அடைவதா என்று முதலில் ஐயம் கொண்டிருந்தேன். அத்தனை நிமித்திகர்களிடமும் அது கூடுவதைக் கண்டேன். நிமித்திகன் நிமித்தம் உரைப்பதற்காக வரும்போது வெளிப்படுபவன் அல்ல. அது அவனுள் இருக்கும் ஏரியிலிருந்து ஒரு குடம் நீரை மொண்டு வெளியே அளிப்பதுதான். நிமித்திகனின் எல்லாச் சொற்களிலும் ஏரியின் அலையும் துமியும் திகழ்கிறது. அவன் விழிகளில் அதன் ஒளி வெளிப்படுகிறது.”

நிமித்திகர்கள் தங்கள் இல்லத்தில் ஒவ்வொரு நாளும் நிமித்தநூல் தேர்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை நூல்களில் செலவிடுகிறார்கள். தங்களை சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றுக்கும் நிமித்தமென்ன என்று எண்ணுகிறார்கள். இப்புடவி நிமித்தங்களால் ஒன்று சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறது என்று அவர்களின் நூல்கள் கூறுகின்றன. இங்குள்ள மேடையில் ஆடும் பாவைகளை அவற்றின் சரடுகளினூடாகவும், சரடுகள் வழியாக அவற்றை ஆளும் விரல்களையும் அறியமுயல்பவர்கள். அவர்களிடம் இருக்கும் அந்த பேருவகையை கண்டு அதற்குள் நுழைந்தேன். குருநிலைக்குச் சென்றபோது எனக்கு சொல்திருந்தவில்லை, மொழி படியவுமில்லை. ஆகவே சுவடிகளை படிப்பதுபோல் நடிப்பேன்.

குருநிலையில் நான் பிறருடைய விளையாட்டுக்குரிய குழவியாக வளர்ந்தேன். ஒவ்வொருநாளும் நூல்நவில்கை நிகழ்கையில் சென்று அமர்ந்துகொள்வேன். எண்ணும் எழுத்தும் பயிலும்போதே நாற்களக் கணக்குகளையும் கற்றேன். என்னை நிமித்திகனாகவே எண்ணத்தலைப்பட்டேன். ஒருநாள் நான் ஆசிரியர் தன் தனியறையில் அமர்ந்து நூலாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவர் எழுந்து சென்றபின் அவருடைய கையிலிருந்த நூலை எடுத்து பிரித்து அதன் சொற்களைப் படிக்கத் தொடங்கினேன். அது சூரியதேவரின் பிரஹதாங்கப் பிரதீபம். துருவநிமித்தநெறியின் முதல் நூல். துருவனின் கதையை நான் அறிந்திருந்தேன். அந்நூல் நிமித்திகர் மட்டுமே அறிந்த துருவம் என்னும் மொழியில் அமைந்தது. அதன் சில எழுத்துக்களே எனக்குத் தெரிந்திருந்தன.

உள்ளே பிறிதொரு சுவடி தேடச்சென்றிருந்த ஆசிரியர் திரும்பி வந்து என் பின்னால் நின்றிருந்தார். அவர் நிழலைக் கண்டு நான் திடுக்கிட்டு எழுந்தேன். ஆசிரியர் புன்னகையுடன் என் அருகணைந்து “மைந்தா, இவற்றில் உனக்கு மெய்யாகவே ஆர்வம் உள்ளதா?” என்றார். “ஆம்” என்றேன். “நிமித்தநூல் நோக்குபவன் ஒருபோதும் வாளெடுத்து போரிட இயலாது என்பார்கள்” என்றார். “எந்தை போரிடுகிறாரே” என்றேன். “ஆம், அவர் போரிடுகிறார். ஆனால் உண்மையான போராளி அல்ல. சூதர் பாடல்களில் அவரும் வீரர் என புனையப்பட்டுள்ளது. ஏனென்றால் அஸ்தினபுரியின் மணிமுடி அவர்களிடம் அமைந்துள்ளது. ஆனால் அவரால் போர்நடத்த இயலாது” என்றார்.

“ஏன்? அவருடைய தோள்கள் ஆற்றல் அற்றவையா?” என்று நான் கேட்டேன். “மைந்தா, நாம் கொல்லவிருப்பவனின் முற்பிறவியும் வருபிறவியும் நமக்குத் தெரியுமெனில் அந்த வாளை எப்படி ஏந்துவோம்? எப்படி அவன் தலைமேல் இறக்குவோம்?” என்றார். நான் திகைத்து அமர்ந்திருந்தேன். “நீ ஷத்ரியன். உன் ஷத்ரியப் பண்பில் பெரும்பகுதியை திரும்ப அளித்தே நீ நிமித்திகப் பண்பை பெறமுடியும். நிமித்திகன் ஆகுகையில் நீ அரசநிலையிலிருந்து எப்போதைக்குமென இறங்குகிறாய்” என்றார். “எனில் எந்தை ஏன் அதை கற்றார்?” என்று நான் கேட்டேன். “அவரை நீங்கள் ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்?” என்றேன். “அவர் பிற நால்வரிடமிருந்தும் விலகவிரும்பினார்” என்றார்.

“விலகவா? ஏன்?” என்று நான் கேட்டேன். “அவர்கள் நால்வரும் ஆள்வது ஷத்ரியர்களுக்குரிய நான்கு உலகங்களை. தொல்நெறி தேர்தலும், தோள்திறன் பேணுதலும், விற்கலையும், புரவிக்கலையும் ஷத்ரியர்களுக்கு வகுக்கப்பட்ட நான்கு தளங்கள். ஐந்தாவது ஒன்று இருந்தது, அது அரசுசூழ்தல். அதைக் கற்றுக்கொள்ளும்படி சகதேவனிடம் பீஷ்மர் கூறினார். ஆனால் உன் தந்தை பிறிதொரு முடிவை எடுத்தார். நிமித்தநூலை தெரிவுசெய்தார்…” என்றார் தௌம்ரர். “அத்தருணத்தில் எது அவ்வாறு ஆணையிட்டதென்று தெரியவில்லை. அவர்கள் நால்வரிடமிருந்தும் முரண்பட்டு பிறிதொருவனாக ஆகவேண்டும் என்று தோன்றியிருக்கலாம். நாம் வாழ்க்கையில் எடுக்கும் சிறிய முடிவுகளுக்கே காரியகாரண விளக்கம் உண்டு. பெரிய முடிவுகளை நம்முள் எழுந்து நம்மை ஆளும் நாமறியா விசைகளே எடுக்கின்றன.”

“ஷத்ரியக் குடியில் பிறந்தவனிடம் ஷத்ரியப் பண்பு இயல்பாகவே இருக்கும். இக்கலையினூடாக அது அகலும். அதன்பின் வென்றெடுக்கவோ, வெற்றியில் திளைக்கவோ, இயற்றியவை அனைத்தையும் எண்ணி எண்ணி நிகர் செய்துகொள்ளவோ, பிறர்மேல் உனக்கு இயல்பான கோன்மை உள்ளதென்று எண்ணிக்கொள்ளவோ இயலாது. நீ இந்நூலை தேர்வு செய்வாய் என்றால் உன் பதினான்கு தலைமுறை மூதாதையர்கள் தங்கள் வீரப்பண்புநலன்களால் சேர்த்தளித்த அனைத்தையும் கைவிடுகிறாய்” என்றார் தௌம்ரர்.

சுகோத்ரன் சிரித்து “அன்று என்னிடம் அவர் பேசிய ஒவ்வொரு சொல்லையும் நினைவுகூர்கிறேன்” என்றான். “எல்லைகடந்த நினைவாற்றல் கொண்டவர்களே நல்ல நிமித்திகர்” என்றார் விதுரர். “ஆம், நான் எதையுமே மறப்பதில்லை” என்றான் சுகோத்ரன். “அன்று நான் திகைத்து அமர்ந்திருந்தேன். அதனை நான் எண்ணியிருக்கவே இல்லை. என்னுள் அப்போது வீரக்கனவுகளே நிறைந்திருந்தன. என் தந்தையரின் போர்வெற்றிகளையும் புகழையும் ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டிருந்தேன். தாங்கள் அறிந்திருப்பீர்கள், அஸ்தினபுரியில் அத்தனை பேருமே அவர்களைப்பற்றி எண்ணிஎண்ணித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவ்வாறு எண்ணும்பொருட்டே இங்கு கதைகள் சொல்லப்பட்டன. நானும் அவ்வாறே வளர்ந்தேன்.”

நான் அஸ்தினபுரியின் இளவரசர்களில் ஒருவன் என்பதை அறிந்திருந்தேன். ஆகவே எனக்கு எந்நிலையிலும் மணிமுடியோ நிலமோ கிடைக்கப்போவதில்லை. ஒரு சிறு படையுடன் கிளம்பிச் செல்வதைப்பற்றி, கிழக்கிலோ தெற்கிலோ மேற்கிலோ விரிந்து கிடக்கும் ஆளில்லா நிலங்களில் அரசொன்றை அமைப்பதை பற்றி, என் குருதியிலிருந்து புகழ் பூத்த அரசகுலம் ஒன்று பெருகி வளர்வதைப்பற்றி, எனது பெயர் அவர்களின் குடிநினைவுகளில் நிலைகொள்வதைப்பற்றி, அவர்களின் இல்லமுற்றங்களில் தெய்வமாக நான் நின்றிருப்பதைப்பற்றி, எனக்கு அவர்கள் குருதி பலியும் அன்னமும் நீரும் அளித்து வணங்குவதைப்பற்றி, அந்த அகவையிலேயே நான் கற்பனை செய்துகொண்டிருந்தேன்.

நான் வெல்ல வேண்டிய எதிரிகளை உருவாக்கிக்கொண்டேன். அவர்களை வெவ்வேறு வகையில் களப்போர்களில் வென்றேன். அவர்களை கொன்று குவித்தேன். வென்று என் குலத்துடன் சேர்த்துக்கொண்டேன். அவர்களின் மேல் கோன்மை கொண்டேன். ஆகவே ஆசிரியரின் அக்கூற்று எனக்கு திகைப்பை அளித்தது. “தந்தை போரில் வெல்வதைப்பற்றி எண்ணியிருக்கவேயில்லையா? உடன்பிறந்தார் நால்வரையும் உதறிவிட்டு கிளம்பிச்சென்று வென்று தனக்கான அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு உருவானதே இல்லையா?” என்றேன்.

“அதை நான் கேட்கவில்லை. ஏனென்றால் நான் மானுட உள்ளத்தை நன்கறிவேன்” என்றார் ஆசிரியர். “உன்னிடம் இப்போதிருக்கும் கனவு அவரிடமும் இருந்திருக்கும். நிமித்தநூல் வழியாக அதை கடந்து சென்றிருப்பார். அதை கடந்து செல்லும்பொருட்டே நிமித்தநூலைக் கற்றிருப்பார்” என்றார். நான் அவரை வெறுமனே நோக்கியபடி அமர்ந்திருந்தேன். ஆசிரியர் புன்னகை செய்து “இளையோனாக இருப்பதென்பது சில தருணங்களில் துறவுக்கு நிகர்” என்றார். நான் மெல்லிய அதிர்ச்சியை அடைந்தேன். “நன்று. நீ ஒருநாளை எடுத்துக்கொள். உன் வாழ்வின் மிக முதன்மையான முடிவை எடுக்கப்போகிறாய். அதை நீயே எடுக்கவேண்டும்” என்றார்.

“நிமித்தநூல் கற்பதற்கு ஓர் அகவை உள்ளது. முதிரா இளமைக்குள் நிமித்தநூலை கற்றாகவேண்டும். அதன்பிறகு பழகும்போது சிந்தை பழகுமே ஒழிய ஆழம் பழகாது. இன்று நீ சிறுவன். உன் முடிவை இப்போதே வகுத்தாகவேண்டும்” என ஆசிரியர் சொன்னார். “சிறந்த கல்வி என்பது குழவிப்பருவத்திலேயே தொடங்குவது. ஆனால் அக்கல்வியை தெரிவுசெய்வதில் ஓர் இடர் உள்ளது. அம்முடிவை கற்பவனே எடுக்க இயலாது. இது ஒரு தீய கூறு. நிமித்திக குலத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சிக்கல்கள் இல்லை. அவர்கள் அக்குலத்தில் பிறந்ததனாலேயே இயல்பாக அம்முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு செல்கிறார்கள். அருங்கலைகள் அனைத்துமே அவ்வண்ணம்தான் கற்கப்படுகின்றன. அதன்பொருட்டே அவர்களுக்கான குலங்கள் வகுக்கப்பட்டுள்ளன.”

“ஷத்ரியன் அனைத்தையும் கைவிட்டு அதைப் பற்றிக்கொள்ளவேண்டும். அம்முடிவை அவனே எடுக்கவேண்டும். தந்தையோ ஆசிரியரோ அம்முடிவை எடுத்தால் அது பெரும்பழி என ஆகக்கூடும். ஆகவே உன் முடிவை நீயே எடு” என்றார் தௌம்ரர். நான் வெறும்விழிகளாக அமர்ந்திருந்தேன். “இந்த சிற்றகவையிலேயே நீ உன்னை வாழ்நாள் முழுக்க நடத்தும் முடிவை எடுக்கவிருக்கிறாய். எதை நீ உசாவுவாய், எவ்வண்ணம் நீ அங்கு சென்றுசேர்வாய் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீ அம்முடிவை எடுக்காமல் இருப்பதே உகந்ததென்று எண்ணுகிறேன். ஏனெனில் நீ ஷத்ரியன் என்பதனால் நீ அதற்குள் நுழைவதால் இழப்பதே மிகுதி” என்று அவர் தொடர்ந்தார்.

நான் அவரை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு என்ன எண்ணுவதென்றே புரியவில்லை. என் உள்ளத்தில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கலைந்துகொண்டிருந்தன. வாழ்க்கையின் பெருமுடிவுகளை எடுக்க நேர்கையில் மொத்தப் புடவியின் சிக்கலையும் ஒரே கணத்தில் எதிர்கொள்கிறோம். கடுவெளி திறந்துகொண்டதுபோல. உள்ளம் மலைத்து நின்றுவிடுகிறது.

“நீ என்ன முடிவை எடுத்தாலும் அது பெரும்பிழையாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதி” என தௌம்ரர் சொன்னார். “எடுத்த முடிவிலிருந்து ஒருவேளை நீ வெளியேற விழையவும் கூடும். அப்போது நீ வெளியேற முடியாமல் உன்னை அது கட்டுப்படுத்தலாம். அதன் பொருட்டு நீ இழந்த அனைத்தும் உன் முன் வந்து நின்று உனக்கு பெரும் சலிப்பையும் உருவாக்கலாம். ஆயினும் இப்போது எனக்கு வேறு வழியில்லை. அம்முடிவை நீயே எடுக்க வேண்டும். ஏனெனில் பிறிதொரு நாள் எண்ணும்போது அம்முடிவு உன்னால் எடுக்கப்பட்டதென்றே எண்ணம் உனக்கு இருக்கவேண்டும்” என்றபின் ஆசிரியர் அகன்று சென்றார்.

“நான் அச்சிற்றறையில் என் ஊழை எதிரே நோக்கியபடி அமர்ந்திருந்தேன்” என்று சுகோத்ரன் சொன்னான். “என் முடிவை அன்றுதான் எடுத்தேன். தாதையே, அது நான் எடுத்த முடிவு அல்ல.”