நீர்க்கோலம்

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 77

76. கைகளானவன்

flowerகாட்டின் கைகள் நீண்டு ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழற்றி எடுத்துக்கொண்டிருந்தன. ஆடைகளை முதலில். சென்றகால நினைவுகளை பின்னர். சூழுணர்வை, செல்திசையை. இறுதியாக தன்னுணர்வை. எத்தனை நாட்களாயின என அவன் உணரவில்லை. பசியும் துயிலும் இயல்பாக வந்துசென்றன. பசித்தபோது உணவு விழிகளுக்குத் தெரிந்தது. துயிலெழுந்தபோது நிரப்பை கண்டடைந்தான். துயின்றெழுந்ததுமே கால்கள் நடக்கத் தொடங்கின.

வன்னிமரத்தடியில் துயில்கையில் அவன் கனவில் ஒரு நாகக்குழவியை கண்டான். மிகச் சிறிது, மாந்தளிர் நிறத்தில் மண்ணகழ்ந்தெடுத்த தளிர்வேர்போல வளைந்து கிடந்தது. அவன் குனிந்து அதன் நெளியும் வாலை நோக்கினான். குனிந்து அதை மெல்ல தொட்டான். சீறி மேலெழுந்தது. சிறிய படம் மெல்ல ஆடியது. அது நாகமல்ல, சிறுதழலென அறிந்தான். அதன் உடல்பட்டு சுள்ளிகள் நொறுங்கிக் கருகி எரிந்தன. அனலெழுந்து பெருகி அவன் தலைக்குமேல் சென்றது. அவன் அத்தழல் காட்டை சூழ்வதை, பெருமரங்கள் அனலால் தழுவப்பட்டு துடித்துப் பொசுங்குவதை, தளிருடன் இலைத்தழைப்புகள் வெந்து சுருண்டு கருகி பொழிவதை கண்டான். அவன் உடல் அந்த வெக்கையை அறிந்தது. அவனை நோக்கி நான்குபுறமிருந்தும் தீ எழுந்து வந்தது. செந்நிறமும் பொன்னிறமும் நீலநிறமும் கொண்ட மூவனல். அவன் தலைமுடி பொசுங்கி கெடுமணம் எழுந்தது.

அவன் எழுந்துகொண்டபோது தன்னைச் சூழ்ந்து வரும் காட்டெரியை கண்டான். தீ உறுமும் என்றும் ஓலமிடும் என்றும் அன்றுதான் அறிந்தான். செந்தழல் அலைகளாக எழுந்து அறைந்து பெருகி வந்தது. அனலுக்கு நுரையுண்டு, துமியுண்டு என்று கண்டான். ஓடு ஓடு என்று உள்ளம் கூவியபோதிலும் அச்செந்நிறக் கொந்தளிப்பை விட்டு விழிவிலக்க இயலவில்லை. அதற்குள் சிறுசுழிகள். கரிய நிழலுருக்கள். வெடித்து வெடித்து எழும் வண்ணங்கள்.

அவன் காலடியை அனல் நெருங்கியபோதுதான் பின்னால் விலகினான். வெடித்த விதையொன்று அவன்மேல் தெறிக்க துள்ளி மேலும் விலகியபோது விழுந்து கிடந்த மரமொன்றின் பட்டைக்குள் இருந்து எழுந்து நெளிந்த சிறிய பாம்புக்குழவியை கண்டான். குழந்தையின் கைவிரல்போல சிவந்த மென்மையான உடல் அனல்வெம்மையில் நெளிந்து துடித்தது. அந்த மரம் ஈரம் மிக்கதாக இருந்தமையால் எளிதில் எரியவில்லை. ஆயினும் அதன் பட்டை கருகி புகையெழ எரிநோக்கி சென்றுகொண்டே இருந்தது. சுண்டிச் சுண்டி அவனை அழைத்தது அந்த விரல்.

எதுவும் எண்ணாமல் அவன் எரிக்குள் பாய்ந்தான். எரியாமல் கிடந்த மரங்கள் மேல் மிதித்துச்சென்று அந்த மரத்தடியை அடைந்து பட்டையை உதைத்துப் பிளந்தான். அதில் உடல் சிக்கியிருந்த நாகக்குழவி பாய்ந்து நெளிந்து ஓடிவந்து அவன் காலில் தொற்றிக்கொண்டது. அதை நோக்கி கையை நீட்டியதும் கையில் துள்ளி ஏறியது. அவன் அங்கிருந்து இரு மரத்தடிகள்மேல் மிதித்து தீயை விட்டு வெளியே வந்தான். ஓடி அகன்று அப்பால் தெரிந்த நீரோடை நோக்கி சென்றான். அவன் தோளிலேறிய நாகத்தைப் பிடித்து நீரில் வீச முயன்றான். அது அவன் விரலை உடலால் சுற்றிக்கொண்டு மறுத்தது. இன்னொரு கையால் பற்றி வீச முயன்றபோது அவன் கைவிரலைக் கவ்வியது.

எறும்பு கடித்ததுபோல் உணர்ந்தான். கையை உதறியபோது தெறித்து நீரில் விழுந்து நெளிந்து நீந்தி மறுபக்கம் சென்று தழைத்த புல்லுக்குள் நுழைந்தது. அதன் வால்நுனியின் இறுதித் துடிப்பை அவன் நோக்கினான். அவ்வசைவு விழிகளில் எஞ்சியிருக்க தன் கைவிரலை தூக்கிப்பார்த்தான். சிவந்த இரு புள்ளிகள். அதை வாயில் வைத்துக் கடித்து உறிஞ்சி வாயில் ஊறிவந்த சிலதுளிக் குருதியை துப்பிவிட்டு நடந்தான்.

இரு கைகளை விரித்ததுபோல எரிந்தெழுந்து வந்த தீயிலிருந்து தெறித்த காய்கள் விழுந்து வெடித்து பற்றிக்கொண்டு இஞ்சிப்புற்பரப்பு எரிகொண்டது. தன் முன் எரி எழுவதைக் கண்டு அவன் திகைத்து திரும்பிப்பார்த்தான். சுழித்தெழுந்து அணைந்தது தழல். முடிந்தது என்ற சொல்லாக தன் அகத்தை உணர்ந்தான். இத்தனை எளிதாகவா? இத்தனை பொருளில்லாமலா? எவரேனும் என்னை கண்டடைவார்களா? வெள்ளெலும்புகள் எஞ்சுமா? எந்தக் கதையில் இது சொல்லப்படும்? கதை முடிவு அங்கே நிஷதபுரியின் அரண்மனைமுற்றத்துடன் நின்றுவிடுமா? ஏன் அச்சமெழவில்லை? ஏன் இந்நிலையிலும் நான் நான் என துள்ளுகிறது என் உள்ளம்?

இஞ்சிப்புல் விரைவில் எரிந்தழிய அந்தக் கரிய பரப்பிலிருந்து நீரில் கரித்தூள் கரைவதுபோல நீலப் புகைச்சுருள்கள் எழுந்துகொண்டிருந்தன. அவன் அந்த சாம்பல்பரப்பில் சென்று நின்றான். அணுகிவந்த செந்தழல் தயங்கியது. மாபெரும் பசு ஒன்றின் வாய் மேய்ந்தபடி வந்து புல் தீர்ந்துவிடக்கண்டு நின்று மேலெழுந்தது. நுரை வற்றுவதுபோல தீ அணைவதை அவன் கண்டான். பின்னர் அவனைச் சூழ்ந்து கரியநிலம் புகைமூடி ஆங்காங்கே எரியும் உதிரி மரத்தடிகளுடன் விரிந்துகிடந்தது. மேலெழுந்த கரிச்சுருள்கள் மழையென பெய்யத் தொடங்கின. அவன் உடலில் வியர்வை வழிய அதில் கரி கரைந்து கோடுகளாக வழிந்தது.

அவன் பெருமூச்சுடன் சூழ நோக்கினான். சற்றுமுன் அங்கே பேருருக்கொண்டு நின்றிருந்த ஒன்று இல்லையென்றாகிவிட்டிருந்தது. சினம் ஒன்று பெருகி தணிந்ததுபோல. வெந்த காடு வேறொரு மணம் கொண்டிருந்தது. அந்த மணங்கள் அங்குதான் இருந்தன. காடு நீருக்கு ஒரு மணத்தை அளிக்கிறது. நெருப்புக்கு பிறிதொன்றை. ஓடையில் சுழித்துச்சென்ற நீரில் கரிப்பொடிகள் மிதந்தன. அள்ளி உண்டபோது புகைமணம் இருந்தது.

காட்டுக்குள் சென்றபோது அவன் உடலெங்கும் களைப்பை உணர்ந்தான். மரத்தடி ஒன்று தெரிய அங்கே சென்று இலைப்படுக்கை அமைக்க முயலாமல் அப்படியே படுத்துக்கொண்டான். பாலாடை படிவதுபோல் உடல் நிலத்தில் படிந்தது. ஒவ்வொரு கூழாங்கல் மேலும் உடல் உருகி வழிந்துவிட்டதாகத் தோன்றியது. கைகால்கள் எடைகொண்டன. சித்தம் எடைகொண்டு அசைவிழந்தது. அவன் தன் குறட்டையொலியை தானே கேட்டான்.

அவனருகே கரிய பேருருவன் ஒருவன் வந்து அமர்ந்தான். அவன் நடந்து வருவதை அவன் காணவில்லை. அருகே அமர்கையில் ஓசையும் எழவில்லை. உடலுணர்வால் அவனை அறிந்து எழ முயன்றான். “துயில்க… நான் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். “இக்காட்டில் வாழ்பவன் நான். நீங்கள் எவரென்று அறியலாமா?” என்றான். “நான் காட்டில் வாழ முயல்பவன்” என்றான் நளன். “நீங்கள் காட்டிலிருந்து வெளியேறியவர். மீளமுடியாதவர்” என்றான். “ஆம்” என்றான் நளன். “நீங்கள் நிஷதபுரியின் நளன் அல்லவா?” “என்னை அறிவீர்களா?” என்றான். “ஆம்” என்றான் அவன்.

சில கணங்களுக்குப் பின் “எங்கு செல்கிறீர்கள்?” என்றான். “அறியேன். சென்றுகொண்டே இருக்கிறேன்.” அவன் சிரித்து “இலக்கில்லாதவர்கள் எத்தனை விரைந்தாலும் எங்கும் செல்வதில்லை” என்றான். “ஆம்” என நளன் சொன்னான். “முற்றிலுமறியாத ஒருவனிடம் நீங்கள் அனைத்தையும் சொல்லலாம் என்று நூல்கூற்று உள்ளது, அரசே” என்றான் கரியவன். அவன் பெருந்தோள்களை நளன் நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை பெரிய தோள்கள் மானுடருக்கு அமையக்கூடுமா? அவன் கைகள் மிக நீளமானவை. இறுகிய தசைகளும் புடைத்த நரம்புகளுமாக முதுவேங்கைமரத்தடி போல.

“சொல்லுங்கள்” என்றான் கரியோன். “எனக்கு நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்களா?” என்றான் நளன். “கதைகளினூடாக” என்றான் அவன். “எல்லா கதைகளும் மெய்யென்றே கொள்க” என்றான் நளன். “நான் சூதாட்டத்தில் ஏன் தோற்றேன்? நான் அறிய விழைவது அதையே.” அவன் குனிந்து நளன் விழிகளை நோக்கியபடி “சூதாட்டத்தை நெடுநாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டீர்கள், நிஷாதரே” என்றான். நளன் “என்ன?” என்றான். “நெடுநாட்களுக்கு முன்” என்றான். “நாற்களத்திற்காக குதிரைகளை அமைத்தீர்கள். பின் முதல் காய்நகர்வு. அது கலியை நீக்கி இந்திரனை முன்வைத்தது.”

அவன் என்ன சொல்கிறான் என நளனுக்குப் புரியவில்லை. “பின் அரசியின் வரவு, பின்னர்…” நளன் எரிச்சலுடன் “போதும்” என்றான். “எல்லா சூதாட்டங்களும் பிறிதொரு பெருஞ்சூதாட்டத்திற்குள் நிகழ்கின்றன. ஒன்றின் நெறியை அது அமைந்திருக்கும் பிறிதின் நெறி கட்டுப்படுத்துகிறது. சூதிற்குள் சூதிற்குள் சூதென்று செல்லும் ஆயிரம் பல்லாயிரம் அடுக்குகள். நீங்கள் ஆடியது ஒன்றில். அதன் உச்சமென பிறிதொன்றில்.” நளன் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தான்.

“சூதில் வெல்வதற்கே அனைவரும் ஆடுகிறார்கள். ஆனால் அனைவரின் ஆழங்களும் வெல்லத்தான் விழைகின்றன என்று கூறமுடியாது” என்றான் கரியவன். “தோற்கவும் விழையக்கூடும் நாமென்றாகி நடிக்கும் நாமறியா அது.” நளன் எழப்போனான். “நான் விழைவதையே சொல்லவேண்டுமா என்ன?” நளன் “இல்லை, நீர் என்னுடன் விளையாடுகிறீர்” என்றான். “ஆம்” என அவன் நகைக்க அதிலிருந்த கேலி நளனை மீண்டும் படுக்க வைத்தது. “நான் துயில்கொள்ள விரும்புகிறேன்…” என்றான். “நன்று” என அவன் சொன்னான்.

நளன் கண்களை மூடிக்கொண்டான். ஆனால் அவன் அருகே இருக்கும் உணர்வு நோக்காதானதும் பெரிதாகியது. “எதை அஞ்சி தப்பி ஓடுகிறோமோ அதை வெல்ல எளிய வழி ஒன்றே. அதை நோக்கி திரும்புவது. அதுவாவது. அதில் திளைப்பது.” நளன் விழி திறந்து சினத்துடன் “என்ன உளறுகிறாய்?” என்றான். “எதிலும் முடிவிலாது திளைக்கவியலாது என்பதனால் அதை கடந்தாகவேண்டும். அதன்பின் அது இல்லை.” நளன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “இதோ, இது என்னவென்று தெரிகிறதா?” நளன் அதை பார்த்தான். வெண்ணிறப் பட்டாடை. பொன்னூல்களால் கரைப்பின்னல் செய்யப்பட்டிருந்தது. அன்னங்கள் ஒன்றுடன் ஒன்று கழுத்து பிணைத்து மாலையென்றாகியிருந்தது. மேலும் விழிகூர்ந்தபோது அன்னங்களின் தூவிகள் அனைத்துமே மிகச் சிறிய அன்னங்களால் ஆனதென்று தெரிந்தது.

அவன் அதை நினைவுகூர்ந்தான். “இது என்னுடையது. நான் மணிமுடி சூடிக்கொண்டபோது பீதர்நாட்டு வணிகக்குழுவொன்றால் அளிக்கப்பட்டது.” அவன் “ஆம், விலைமதிப்பற்றது. அன்று இதைக் கண்டு பெருவிழைவு கொண்டீர்கள். ஆனால் இதை அணியத் தோன்றவில்லை. உங்கள் கருவூலத்தில் கொண்டுவைக்க ஆணையிட்டீர்கள்” என்றான். நளன் “ஆம்” என்றான். “அதன்பின் இதை மறந்துவிட்டீர்கள்.” நளன் தலையசைத்தான். “ஆனால் ஒருமுறை இது கனவில் வந்தது.” நளன் “இதெல்லாம் எப்படி தெரியும் உங்களுக்கு?” என்றான். “இதோ, உங்கள் உள்ளத்திலிருந்தே படித்தறிகிறேன்.”

நளன் “நீர் மானுடரல்ல” என்றான். “கந்தர்வர், யட்சர், தேவர்… ஆம்.” கரியவன் நகைத்து “நாகனாக இருக்கக்கூடாதா?” என்றான். அவன் கண்களைப் பார்த்து நளன் திடுக்கிட்டான். “ஆம்!” என்றான். “இது உங்கள் கனவில் வந்த நாள் எது எனத் தெரிகிறதா?” அவன் விழிகள் நாகவிழிகளாக நிலைகொண்டிருந்தன. “ஆம்” என்றான். “அவள் சத்ராஜித் ஆக முடிசூட முடிவெடுத்த நாள். வெண்புரவி நகர்மீண்ட அன்றிரவு.” நளன் அவன் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தான்.

“இதை இந்தப் பொந்தில் வைக்கிறேன்” என்று அவன் அந்த வெண்பட்டை ஒரு தோல்பையால் பொதிந்து அவர்கள் படுத்திருந்த நெடுமரத்தின் பொந்தில் கொண்டுசென்று வைத்தான். “இங்கிருக்கிறது இது” என்றான். “இது எப்படி உங்கள் கையில் கிடைத்தது?” என்றான் நளன்.

திடுக்கிட்டவனாக விழிப்படைந்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. எழுந்து அமர்ந்தபோது தன் உடல் காந்துவதை உணர்ந்தான். உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. கண்கள் கனன்று நீர் வழிந்தது. எழுந்து நிற்க முயன்றபோது உடல் ஒரு பக்கமாக சரிந்தது. மரத்தைப் பற்றிக்கொண்டு நிலைகொண்டான். கண்களை மூடியபோது நிலம் நழுவ திசை சுழல காலமின்மையில் இருந்தான். மீண்டும் விழி திறந்தபோது வியர்வை பூத்திருந்தது. விடாயை உணர்ந்தான்.

ஓரவிழியில் ஏதோ தெரிய திகைத்து தன் கைகளை தூக்கிப் பார்த்தான். அவை குழந்தைக் கைகள்போல மெத்தென்று வீங்கியிருந்தன, விரல்கள் உருண்டு மேல்கையில் குழிகளுடன் மணிக்கட்டுகளில் மடிப்பு வளையங்களுடன். கால்களும் வீங்கி பன்றிக்குட்டிகள் போலிருந்தன. சுட்டுவிரலை தூக்கி நோக்கினான். அந்த நாகம் கடித்த தழும்பு இரு கரிய புள்ளிகளாகத் தெரிந்தது.

அருகே எங்காவது மானுடர் இருப்பார்களா என்ற எண்ணமே அவனுக்கு முதலில் வந்தது. அவ்வெண்ணம் வந்ததுமே விழிகள் அதற்கான தடயங்களை கண்டடைந்தன. அங்கே எங்கோ நீரோடையின் ஓசை கேட்டது. அது ஆற்றைத்தான் சென்றடையும். ஆற்றிலிருந்து கரையேறும் பாதைகள் இல்லாமலிருக்காது. அவன் திரும்பியபோது அந்த மரப்பொந்தை பார்த்தான். ஒரு கணம் அசையாமல் நின்றான். பின்னர் அதை அணுகி உள்ளே நோக்கினான். உள்ளே மான்தோல்பொதி ஒன்று கிடந்தது.

அதை உள்ளே போட்டு நெடுங்காலமாகியிருந்தமையால் சருகுகள் விழுந்து மட்கி மூடி சிலந்திவலை அடர்ந்து பரவி எளிதில் என்னவென்று தெரியவில்லை. கனவில் அதை பார்த்திருக்கவில்லை என்றால் அதை அடையாளம் கண்டிருக்க முடியாது. இல்லை, நான் முன்னரே கண்டுவிட்டேன், ஆகவேதான் கனவு. அவன் உள்ளே கைவிட்டு அதை எடுக்கப்போய் பின் ஒரு கணம் தயங்கி சுற்றிலும் பார்த்தான். அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்துக்கொண்டுவந்து உள்ளே விட்டு சுழற்றினான். சீறியபடி அரசநாகம் ஒன்று பத்தி விரித்தது. அவன் திடுக்கிட்டு பின்வாங்கி பின் குச்சியால் அதன் முன் தட்டினான். அது மூச்சொலிக்க சினந்து அக்குச்சியை இருமுறை கொத்தியது. பின்னர் உள்ளே உடலை இழுத்துக்கொண்டு மெல்ல மறைந்தது.

அவன் அந்தக் குச்சியாலேயே தோல்பொதியை மெல்ல சுழற்றி வெளியே எடுத்தான். அரசநாகம் உண்டு எஞ்சிய எலும்புகளும் மட்கிய இறகுகளும் பலவகையான சருகுச் செத்தைகளுமாக அந்தப் பொதி வந்து நிலத்தில் விழுந்தது. கழியால் அதை தட்டித்தட்டி அதிலிருந்த சிற்றுயிர்களை விலக்கினான். கழியாலேயே அதை எடுத்து அருகே கொண்டுவந்து பிரித்து நோக்கினான். வெண்பட்டு. விரித்துப் பார்த்தான். அன்னப்பறவை மாலை கொண்ட அணிக்கரை. அதை உதறி மடித்து மீண்டும் அந்தப் பொதியில் வைத்துக் கட்டி எடுத்துக்கொண்டான்.

ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் தள்ளாடியது. புற்களையும் புதர்களையும் கடந்து மரங்களை பற்றுகோடாகப் பிடித்துக்கொண்டு நின்று இளைப்பாறி ஓடையை சென்றடைந்தான். அங்கே சேற்றில் பாதி புதைந்தபடி மட்கிய ஆடை அணிந்த எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. கால்களில் இரும்புத் தண்டையும் கைகளில் இரும்பு வளையும் அணிந்திருந்தது. அருகே சேற்றில் அதன் தலைப்பாகை கிடந்தது. சேற்றில் மூழ்கிய வாளுறை.

அவன் அதை நோக்கியபின் நீருள் இறங்கி நீர்வழியாகவே சென்றான். நீரோடை மேலும் பெரிய ஓடை ஒன்றை சென்றடைந்தது. அன்று உச்சிப்பொழுதுக்குள் அவன் காட்டாறொன்றை அடைந்தான் அதன் கரைவழியாக நடந்து சென்றபோது குடைவுப்படகு ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருப்பதை கண்டான். அது வரைக்கும் செல்ல தன் உடலில் எஞ்சிய சித்தத்தை துளித்துளியாக செலவழித்தான். அது மிகத் தொலைவில் நீரிலாடிக்கொண்டே இருந்தது.

flowerகாட்டில் மூலிகை தேடிவந்த மருத்துவரான அர்ச்சர் நளனை கண்டடைந்தார். அவன் நஞ்சு முழுத்து உடல் வீங்கி கடும்காய்ச்சலில் நினைவிழந்திருந்தான். அவர் அவனை படகிலேற்றி காடோரம் அமைந்த தன் ஆய்வுக்குடிலுக்கு கொண்டுவந்தார். அங்கே நாற்பத்தெட்டு மாணவர்களும் நூறு நோயாளிகளும் அவருடன் இருந்தனர். பதினெட்டு நாள் நளன் அவருடைய ஆதுரசாலையில் நினைவில்லாமல் படுத்துக்கிடந்தான். அவன் சொன்ன ஓரிரு சொற்களிலிருந்தே அவர் அவன் யாரென்று புரிந்துகொண்டார். அவனை தனிக் குடிலில் எவருமறியாது வைத்து மருத்துவம் செய்தார்.

அர்ச்சர் தென்னகத்துக்குச் சென்று முக்கடல் முனையருகே ஓங்கி நின்றிருக்கும் மகேந்திர மலையில் அமர்ந்த அகத்தியர்மரபைச் சேர்ந்த சித்தரான குரகரிடம் மருத்துவமுறை கற்றவர். அவர் அவனுக்கு சாதிலிங்கம், மனோசிலை, ருத்ரகாந்தம், எரிகாரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டிப் பாஷாணம் ஆகியவை கலந்து புடமிட்டு எடுக்கப்பட்ட நவபாஷாண மருந்தை ஊசிமுனையால் தொட்டு நாவிலோடிய நரம்பில் குத்தி உடலில் செலுத்தினார்.

ஒன்பது நச்சுக்கள் பழகிய யானைகள் காட்டுயானையை என நாகநஞ்சை சூழ்ந்துகொண்டன. அவை அந்நச்சை அவன் உட்குலைகளில் இருந்தும் குடலில் இருந்தும் துரத்தி ஒதுக்கி தோலிலும் தசைகளிலும் கொண்டுசென்று ஒடுக்கி வைத்தன. அந்தப் போரில் அவன் உடல் கடும்சுரம் கொண்டது. ஆகவே அவனை ஆதுரசாலைக்கு அருகே ஓடிய சிற்றோடைக்குள் உடல் அமிழும்படி வைத்தனர். மலைத்தேன் மட்டுமே அவனுக்கு உணவென்று அளிக்கப்பட்டது.

நாளுமென அவன் உடல் வற்றி உலர்ந்தது. முகம் உருகி வடிவிழந்தது. தோல் வெந்து பின் உரிந்து உலர்ந்த சருகுபோல் ஆகியது. பதினெட்டு நாட்களுக்குப் பின் அவன் விழித்துக்கொண்டபோது அவனருகே அமர்ந்த அர்ச்சர் அவன் கைகளை பிடித்துக்கொண்டு விழிகளை நோக்கி தணிந்த குரலில் “நீங்கள் இதுவரை நீங்களென எண்ணிய உடலை இழந்துவிட்டீர்கள். இப்போதிருப்பது பிறிதொரு தோற்றம். உங்கள் உளம் அதை உணர்ந்து தெளிந்த பின் நீரில் உரு நோக்குங்கள். இனி இதுவே நான் என எண்ணிக்கொள்ளுங்கள். அதை உள்ளம் ஏற்கச் செய்யுங்கள்” என்றார்.

“மிக எளிது அது. மானுட உடல் ஒவ்வொருநாளும் உருமாறிக்கொண்டுதான் இருக்கிறது. அத்தனை மாற்றத்தையும் மானுடர் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஏனென்றால் அனைவருக்கும் அவரவர் உடல் இனிதானது. இவ்வுடலையும் நீங்கள் விரும்பத் தொடங்குவீர்கள். இன்னும் சிலகாலம் கடக்கையில் இம்முகத்தை ஆடியில் நோக்கி நோக்கி மகிழவும்கூடும்” என்றார் அர்ச்சர். “இது ஏன் இவ்வாறு அமைந்தது என்று எண்ணினேன். ஊழ் விடைகள் அற்றது. ஆனால் இதற்கென உங்கள் ஆழத்தில் நீங்கள் விழைந்திருக்கவும் கூடும் என்றும் பட்டது.”

“அவ்வண்ணமெனில் இந்த அரங்கிலும் ஆடுங்கள். இதைக் கடந்து எழுங்கள். இறை துணை நிற்கட்டும்” என்றார் அர்ச்சர். நளன் கைகூப்பி “எவ்வண்ணமாயினும் உயிருடன் எழுகிறேன். அதன்பொருட்டு நான் கடன்பட்டுள்ளேன், மருத்துவரே” என்றான். “நோய் வருவது உடலுக்கு மட்டும் அல்ல. அந்நஞ்சு உங்களுள் வாழும் கலியிருளையே பற்றியதென்றால் அது அருமருந்தென்றே பொருள்” என்றார் அர்ச்சர். “அவ்வாறே ஆகட்டும்” என்றான் நளன்.

நாற்பத்தோராம் நாள் பிறிதொருவனாக நளன் எழுந்தான். உடல் சிறுத்து சிறுவனைப்போல் ஆகிவிட்டிருந்தான். கால்கள் இரு பக்கமும் வளைந்திருந்தமையால் மேலும் உயரம் குறைந்தான். வளைந்த கைகளை வீசி நண்டுபோல நடந்தான். குறுகிய தொண்டையிலிருந்து கிளிக்குரல் எழுந்தது. முதலில் அவன் உணர்ந்தது தன் உடலின் எடையின்மையை. அதுவரை சுமந்திருந்த உடலின் எடைக்குப் பழகிவிட்டிருந்த உள்ளம் அதை பெரும்விடுதலையென கொண்டாடியது. விட்டில்போலத் தாவினான். தொற்றிக்கொண்டான். பற்றி மேலேறினான்.

அந்த விடுதலை அவன் விழிகளிலும் சிரிப்பிலும் வெளிப்பட்டது. எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் குள்ளனை அங்கிருந்தோர் அனைவரும் விரும்பினர். அவர்கள் அவன் சிற்றுருவால் அவனை சிறுவனென்று நடத்தினர். அவர்களால் அவனும் சிறுவனென்று தன்னை உருவகித்துக்கொண்டான். சிறுவர்களுக்குரிய ஓயா விளையாட்டும் புதியது நாடும் ஆர்வமும் கொப்பளிக்கும் உவகையும் கொண்டவனாக ஆனான்.

புதிய இடம் புதிய சுவை என தேடிக்கொண்டே இருந்தான். அவன் உடலுக்கு கைகள் பெரிதாக இருந்தன. அவற்றை காலென ஊன்றி அவனால் தலைகீழாக நடக்க முடிந்தது. மெல்லிய கொடிகளை பற்றிக்கொண்டு பூச்சிபோல மேலேறிச்செல்ல இயன்றது. கைகளால் ஆனவனை பாகுகன் என்று அழைத்தார் அர்ச்சர். அதுவே அவன் பெயரானது.

அருகிருந்த காட்டுக்குள் சென்று காட்டுப்புரவி ஒன்றைப் பிடித்து கொடிகளால் கட்டி அழைத்து வந்தான். பதினைந்து நாட்களில் அதைப் பழக்கி அதன்மேல் அமர்ந்து மலைச்சரிவில் பாய்ந்து சுழன்று வந்தான். அவன் காட்டுப்புரவியுடன் வந்தபோது அஞ்சி கூச்சலிட்ட மாணவர்கள் அவன் ஆணைக்கு அது பணிவதைக் கண்டு திகைத்தனர். அவன் அவர்களுக்கு புரவியேறக் கற்பித்தான். மேலும் மேலுமென புரவிகளை காட்டிலிருந்து கொண்டுவந்து புரவித்திரள் ஒன்றை அமைத்தான். ஆதுரசாலையின் பணிகள் அனைத்தும் எளிதாயின. தொலைவுகள் சுருங்கின.

அவ்வழி சென்ற மலைவணிகர் குழு ஒன்றுக்கு அவர்கள் ஏழு புரவிகளை விற்றனர். அவை அக்காட்டில் பிடித்துப் பழக்கப்பட்டவை என்பதை அறிந்த வணிகர்தலைவர் கனகர் அவனைப் பார்க்க விழைந்தார். அவனுடைய சிற்றுடலைக் கண்டதும் முதல் கணம் திகைத்த அவர் “ஆம், இப்படி ஏதோ ஒரு பிறிதின்மை இவரிடம் இருந்தாகவேண்டும். இல்லையேல் இது நிகழாது” என்றார். “வருகிறீரா, பாகுகரே? நகரில் நீங்கள் பார்ப்பதற்கும் ஆற்றுவதற்கும் ஏராளமாக உள்ளன” என்றார்.

“நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான் பாகுகன். “நாங்கள் அயோத்திக்குச் செல்கிறோம். அயோத்தி அரசர் ரிதுபர்ணரின் அன்னைக்கு மருத்துவம் நோக்குபவர்கள் கோரிய அரிய மலைப்பொருட்கள் சிலவற்றை வாங்கவே இங்கே வந்தோம்” என்றார் கனகர். “நான் வருகிறேன். இப்போதே செல்வோம்” என்று பாகுகன் சொன்னான். “அங்கே சென்று என்ன செய்யவிருக்கிறீர், பாகுகரே?” என முரண்பட்ட தன் மாணவனை நோக்கி அர்ச்சர் “அவர் செல்லட்டும். அங்கே அவருக்கான உலகம் காத்திருக்கிறது” என்றார்.

கனகரின் வணிகக் குழுவுடன் பாகுகன் கிளம்பியபோது அவனுடைய தோல்பொதியை அவனிடம் அளித்த அர்ச்சர் “உங்களுடையது இது, பாகுகரே” என்றார். அவர் விழிகளை விழிதொட்டபின் குனிந்து கால்தொட்டு தலைசூடி “வாழ்த்துங்கள், அர்ச்சரே“ என்றான் பாகுகன். “நோய்கள் விலகுக!” என அர்ச்சர் வாழ்த்தினார்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 76

75. காகத்தின் நகர்

flowerஅரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை மேலும் பதறச் செய்தது. “செண்டுவெளிக்கு கொண்டுசெல்ல வேண்டுமா என்ன?” என்றார். அவன் மறுமொழி சொல்லாமல் தன் அறைக்கு சென்றான். ஏவலன் அவன் ஆடையைக் களைந்து இரவுக்குரிய மெல்லிய ஆடையை அணிவித்தான்.

மஞ்சத்தில் அமர்ந்தபடி அவன் சேடியிடம் மது கொண்டுவரச் சொன்னான். மூன்று கோப்பை யவன மதுவை அருந்திவிட்டு தன்னை எளிதாக்கிக்கொண்டான். அப்போதுதான் குருதி உலர்ந்து கருத்த தன் உடைவாளை கண்டான். அதை எடுத்து கண்ணெதிரே தூக்கி பார்த்தான். நெஞ்சு படபடத்தது. அதன் செதுக்குகளுக்குள் உறைந்திருந்த கருங்குருதியை நகத்தால் நீவி எடுத்தான். எண்ணியிராக் கணத்தில் பெரும் உளக்கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டது. முதுகுத்தண்டு சிலிர்க்க கண்கள் மங்க தலைக்குள் குளிர் பரவ காலமில்லாதாகி மீண்டான். புன்னகையுடன் கண்களிலிருந்து வழிந்த நீரை துடைத்துக்கொண்டான்.

கையில் வாளுடன் படுக்கையில் படுத்து முகடுப்பலகையை நோக்கிக்கொண்டிருந்தான். மெல்ல அவன் துயில வாள் நழுவி கீழே விழுந்தது. அவ்வொலியை அவன் கனவில் ஒரு மணியோசையென கேட்டான். அந்த வாள் ஒரு பாம்பென்று மாறி உடலெங்கும் குருதி வழிய கட்டிலின் கால்மேல் சுழன்றேறி அவன் காலை அடைந்தது. உடல்வழிந்து மார்பின்மேல் சுருண்டு படம் எடுத்தது. கரிய நாகம். அவன் அதன் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் சுடரென அதன் படம் அசைந்தது.

“நீயா?” என்றான். பாம்பு சீறல் ஒலியெழுப்பியது. அவ்வொலியே சொல்லாக பேசத்தொடங்கியது. “இது கடன்தான்” என்றது. “என்ன சொல்கிறாய்?” அது “இது கடன்தான்” என்றது மீண்டும். “எதுவரை?” என்றான். அது சீறியது. “சொல், எதுவரை?” அதன் விழிகள் பொருளிலா மணிகள். “சொல், எதுவரை? எதுவரை?” அதன் ஆட்டம் பொருளிலா நெகிழ்வு. “சொல், எதுவரை? எதுவரை? சொல்!” அவன் அதைப் பிடித்து நெரித்தான். “நீ என்னுடனிருப்பாய்… நான் விடமாட்டேன்.” அது சுருங்கி அவன் பிடியிலிருந்து நழுவி தன்னை உருவிக்கொண்டது. “சொல், எதுவரை? எதுவரை உடனிருப்பாய்?”

தன் குரலைக் கேட்டே அவன் விழித்துக்கொண்டான். கையில் அவன் உடைவாள் இருந்தது. அதன் கூர்முனையை இறுகப்பற்றியிருந்தான். விரலிடுக்குகளில் செங்குருதி ஊறி படுக்கைமேல் சொட்டியது. கையை விடவேண்டுமென எண்ணினாலும் முடியாமல் இருளையே நோக்கிக்கொண்டிருந்தான். வெளியே நகரின் ஓசைகள் பெருகி அனைத்துச் சாளரங்களூடாகவும் அரண்மனைக்குள் நிறைந்து சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. யானைகளின் பிளிறல்கள், முரசொலிகள், மனிதக்குரல் திரண்டெழுந்த அலை முழக்கம்.

ஏன் இக்குரல்கள் இப்படி அலையடிக்கின்றன என்று எண்ணிக்கொண்டான். அது உளமயக்கா? இல்லை, அவை மெய்யாகவே அலையடித்துக் கொண்டிருந்தன. அத்தனை குரல்களும் இணைந்து மேலெழுந்து இறங்குகின்றனவா? காட்டில் சீவிடின் ஒலிபோல. அத்தனை உள்ளங்களும் ஒன்றென்று ஆகிவிட்டனவா? அவன் அறைக்குள் வந்து தலைவணங்கிய ஏவலன் “புலரி அணுகுகிறது, அரசே. விடிவெள்ளி எழுந்துவிட்டது” என்றான். “நன்று” என்றபின் அவன் எழுந்து நீராட்டறைக்குச் சென்றான்.

ஏவலர் இளவெந்நீரில் அவனை நீராட்டினர். குருதி உடலெங்கும் வெம்மைகொண்டு ஓட சித்தம் மெல்ல மயங்கியபோது நிறைவு மட்டுமே அளிக்கும் மயக்கத்தை உணர்ந்தான். இங்கிருக்கிறேன் என்று ஒற்றைச்சொல்லாக அவன் உள்ளம் இருந்தது. அதன் பொருளென்ன என்று அவன் உணர்ந்தபோது அத்தருணத்தை கடந்து வந்திருந்தான். எழுந்து ஈரம் வழிய ஆடி முன் நின்றான். ஏவலர் அவன் உடலைத் துடைத்து மலர்ச்சுண்ணப்பொடி பூசினர். ஆடியில் அவன் தன்னை நோக்கிக்கொண்டே நின்றான். அப்போது அவனுக்கு ஒன்று தெரிந்தது, அதுவே அவன் வாழ்வின் உச்சம். அந்த மலைமுடியிலிருந்து மறுபுறம் இறங்குவதே அதற்குமேல் எஞ்சியிருந்தது.

நிஷதபுரியில் பன்னிரண்டு நாட்கள் கலிப்பதிட்டைப் பெருவிழவு நடந்தது. நகரெங்கிலுமிருந்து மக்கள் பெருகி திரைதள்ளி ஒழுகி கலியின் சிற்றாலயம் அமைந்த காட்டை தலைகளென நிரப்பினர். வெறியாட்டெழுந்த நூற்றெட்டு நிஷதகுடிப் பூசகர்கள் வேல் சுழற்றி அலறி நடனமிட்டபடி நகரத்திலிருந்து கிளம்பி கலியின் ஆலயத்திற்கு வந்தனர். அவர்களைச் சூழ்ந்து கை முழவும் துடியும் கிணையும் பறையும் முழக்கியபடி நிஷாதர்கள் கட்டிலா நடனமிட்டு கூவி ஆர்ப்பரித்தபடி வந்தனர்.

ஒவ்வொருவராக அவர்கள் ஆலயத்தை வந்தணைய அவர்களை வாழ்த்தியும் கலிக்கு வெற்றி கூவியும் நிஷாதர்கள் ஆர்ப்பரித்தனர். “எழுக காகம்! எழுக கருமை! எழுக நிகரிலாதோன் நகர்! எழுக நிஷதக்குருதிப் பேரலை!” என எழுந்த கூவல்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து சொல்லிலா கார்வையென்றாயின. ஆனால் அக்கார்வை அச்சொற்களை செவிகேட்கவும் செய்தது.

நகரெங்கும் அமைந்த சிறிய கலிப்பதிட்டைகளுக்கு முன் எருமைகளை கழுத்தறுத்து பலி கொடுத்தனர். அந்தக் குருதியால் கலியை முழுக்காட்டினர். வழிந்து மடையில் கொட்டிய குருதியை கொப்பரைகளில் அள்ளி தெருக்களில் கொந்தளித்த மக்கள்திரள்மேல் வீசினர். அதை குடித்தனர், கொப்பளித்து துப்பினர். குழந்தைகளை அதில் முழுக்காட்டி தூக்கி காற்றில் வீசிப்பிடித்தனர். நிஷாதர் அனைவரும் குருதியாடினர். வியர்வை வழிந்து குருதியுடன் கலந்து அவர்களை போர்க்களத்திலிருந்து எழுந்துவந்த குறையுடல்களென மயங்கச் செய்தது.

கலிதேவனின் ஆலயப்பெருமுகப்பில் அரசனின் தேர் வந்தபோது “காளகக்குடி மைந்தர் புஷ்கரன் வெல்க! நிஷதக்குடி மன்னர் வெல்க! கலிமைந்தர் என்றென்றும் வெல்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. நாற்புறமும் திறந்த தேர்த்தட்டில் இரு கைகளையும் கூப்பியபடி நின்று மக்கள் வீசிய அரிமலர் மழையில் நனைந்து ஆலயத்தை வந்தடைந்தான் புஷ்கரன். வீரர் அமைத்த படிகளில் இறங்கி இருபுறமும் மனிதத்திரள் கொப்பளிக்க வேல்கொண்டு விலக்கி வீரர்கள் உருவாக்கிய சிறுபாதையினூடாக நடந்து ஆலயத்தை சென்றடைந்தான்.

அவன் வருகையை முரசுகள் முழங்கி அறிவித்தன. பூசகர்கள் எழுவர் வந்து அவனை வேல்தாழ்த்தி வரவேற்று கொண்டுசென்று கலிமுன் நிறுத்தினர். விழி கட்டப்பட்ட சிலையை நோக்கியபடி அவன் கைகூப்பி நின்றான். அவன் உடல் மெய்ப்புகொண்டபடியே இருந்தது. பூசகர் ஒருவர் வெறியாட்டு கொண்டு அலறி வேல்சுழற்றி ஆடினார். சூழநின்ற பூசகர்கள் ஒவ்வொருவராக வெறியாட்டு கொண்டனர். அது ஒருவரிலிருந்து ஒருவர் என கடந்து செல்ல அப்பகுதியில் நின்ற அனைவருமே வெறியாட்டெழ கூவி துள்ளியாடினர். நரம்புகள் புடைத்த கழுத்துகளும் துறித்த விழிகளும் தொங்கியாடிய நாக்குகளுமாக துள்ளுமீன் என கூட்டத்திலிருந்து எழுந்து காற்றில் பறந்தமைந்தனர்.

வெறிக்கூச்சலுடன் ஒருவன் ஓடிவந்து கலிமுன் நின்று தன் குழலை இடக்கையால் பற்றி வலக்கையில் ஏந்திய வாளால் தலை அரிந்து குருதி பெருக கீழே விழுந்தான். அவன்மேல் என இன்னொருவன் வந்து தலையரிந்து விழுந்தான். மேலும் மேலுமென ஏழு நிஷாதர் தலைகொடுத்து விழுந்தனர். பூசகர் அவர்களின் குருதியை மரக்குடைவுக் கலங்களில் பிடித்து சேர்த்தனர். கால்கள் பின்னித் துடிக்க கைகள் மண்ணள்ளி அதிர விழித்த கண்களும் இளித்த பற்களுமாக அவர்கள் உயிரடங்கினர்.

தற்பலி கொடுத்துக்கொண்ட நிஷாத வீரர்களின் உடல்களைத் தூக்கி அகற்றினர் பூசகர். பன்னிரு குடங்களில் பிடித்துச் சேர்க்கப்பட்ட அவர்களின் கொழுங்குருதியை கலியின் சிலைமேல் ஊற்றி முழுக்காட்டினர். முழவும் பறையும் உறுமியும் சங்கும் மணியும் கொண்ட ஐந்தொகைக் கருவிகள் முழங்கிக்கொண்டே இருந்தன. மலராட்டும் சுடராட்டும் முடிவது வரை அந்த இசையாலேயே அப்பகுதியின் அத்தனை காட்சிகளும் சமைக்கப்பட்டிருந்தன. “பஞ்சவாத்தியம் அமைக!” என பூசகர் கைகாட்டியதும் அவை ஓய்ந்து அமைதி எழுந்தது.

அமைதியும் பெருகி அகன்று சென்றது. சூழ்ந்திருந்த முற்றமும் காடும் ஓசையடங்கின. பூசகர் கலிக்கு படையலிட்டு அக்குருதி அன்னத்தை அவனுக்கு அளித்தார். அதில் ஒரு பருக்கையை எடுத்து உண்டு வணங்கி கலியின் காலில் இருந்த குருதிக்குழம்பை எடுத்து நெற்றியில் குறிதொட்டு அவன் வெளியே வந்தான். தேரில் ஏறி நாற்புறமும் நோக்கித் தொழுதபின் உரத்த குரலில் “இனி தடையேதும் இல்லை. நம் தெய்வம் அது வீற்றிருக்கும் இடம் என நமது முன்னோர் வகுத்த மலையுச்சிக்கே செல்லட்டும். நம் தெய்வத்தை நம் சென்னிமேல் அமர்த்துவது நமது கடன். அவ்வாறே ஆகுக!” என்றான்.

அவன் கூறியதை பல நூறு நிமித்திகர்கள் மீண்டும் மீண்டும் கூவ நிஷாதர்கள் வெறிக்கூச்சலிட்டனர். நெஞ்சிலும் தலையிலும் அறைந்தபடி சிலர் அழுதனர். கொம்பும் முரசும் முழங்க வாழ்த்தொலி கூவியபடி பூசகர்கள் கலியின் விழிக்கட்டை அவிழ்த்தனர். விழி திறந்த தெய்வத்தை கற்பீடத்திலிருந்து பெயர்த்தெடுத்து மரப்பீடத்தில் வைத்தனர். ஆறு மரச்சட்டங்களின்மேல் அமைந்த அந்தப் பீடத்தை கழிக்கு ஐவர் என முப்பது மல்லர்கள் தூக்கிக்கொண்டார்கள். ஆர்ப்பரிக்கும் நிஷாதர்களை நோக்கியபடி கலி வெளிவந்து பகலொளியில் நின்றது.

கொப்பளிக்கும் பெருவெள்ளத்தில் மிதப்பதுபோல கலியின் சிலை மக்கள்திரள்மேல் அலைபாய்ந்ததை புஷ்கரன் நோக்கி நின்றான். “மேலேறிச் செல்லும் வெள்ளம்” என்றார் பத்ரர். எறும்புப்பெருக்கு என அவன் எண்ணினான். அப்பால் நின்றிருந்த சுநீதர் “எரிந்தெழுந்து மலையை உண்ணும் தழல்” என்றார். ஒன்றை ஒன்று உந்தி மேலேற்றும் சிறிய அலைகளாக மக்கள்திரள் இந்திரகிரிக்கு மேலேறிச் சென்றது.

தேர்த்தட்டில் இடையில் கைவைத்து நின்று அவன் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்திரகிரி முற்றிலும் மனிதர்களால் ஆனதாக மாறியது. அவன் அருகே நின்ற சுநீதர் “மலையே மறைந்துவிட்டது, அரசே” என்றார். அவன் தலையசைத்தான். அமைச்சர் பத்ரர் “மானுட மலை” என்றார். அவனுக்கு மண்ணில் நிறைந்திருக்கும் மானுடப்பரப்பில் ஒரு குமிழி என்று தோன்றியது. மேலே இந்திரனின் சிலை அசைவதை அவன் கண்டான். அங்கிருந்து எழுந்த ஓலம் மிக மெல்லிய செவித்தீற்றலாகவே கேட்டது.

சிலை அசைவது அதற்குப் பின்னிருந்த முகில் நகர்வாலா என்று ஐயம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அது நடுங்கி அதிர்ந்து அசைந்தபோதுதான் உண்மை அது என்ற திண்ணம் வந்தது. சிலை வலப்பக்கமாக சரியத் தொடங்கியது. சுநீதர் “சிலை சரிகிறது. அங்கு நின்றவர்கள் விலகி ஓடவில்லை எனில் பலர் நசுங்குவது உறுதி” என்றார். அமைச்சர் பத்ரர் “அனைவரும் அவ்வாறு விலக்கிக்கொள்ள இயலாது. மலையில் எங்கும் இடமே இல்லையே” என்றார். சுநீதர் “ஆம், கலி விழி திறந்தால் திரள்பலி இன்றி அமையமாட்டான்” என்றார்.

காற்றில் கரிய இறகு ஒன்று விழுந்து நிலத்தில் அமைவதுபோல சிலை சென்று அறைந்தது. ஓசையே இல்லாது அது நிகழ்ந்தமை புஷ்கரனுக்குள் ஒரு துணுக்குறலை உருவாக்கியது. அங்கு எழுந்த அலறல்களும் கூச்சல்களும் தொலைவிலிருந்து பார்க்கையில் மிகச் சிறிய பறவைக்கலைவொலிபோல தோன்றியது. சற்று நேரத்தில் சிலைமேல் மனிதத்திரள் ஏறி முழுமையாகவே மூடியது. கூர்ந்து நோக்கியபோது மனித உடல்கள் போர்வையென மூடியிருக்க ஒரு முழுப்புருவாக சிலையை காணமுடிந்தது.

“கலிதேவனின் சிலையை இப்போதே அங்கு நிறுவிவிடுவார்கள். பதிட்டைப் பூசனைகள் பகல் முழுக்க நிகழும். அந்தியில் முழுக்காட்டும் விழிதிறப்பும்” என்றார் சுநீதர். “நாம் அரண்மனைக்கே மீண்டு ஓய்வெடுத்துவிட்டு அங்கே செல்வோம்.” புஷ்கரன் தலையசைத்து தேரைத் திருப்பும்படி ஆணையிட்டான். தேர் ஒழிந்த நகர்த்தெருக்களினூடாகச் செல்லும்போது “கலிங்க அரசியையும் அவள் காதலனையும் இக்குடிகளே தண்டிக்கட்டும் என்று நான் ஆணையிடுகிறேன்” என்றான்.

பத்ரர் திடுக்கிட்டு “அரசே, குடியவையில் அவர்களை நிறுத்தி நெறியுசாவ வேண்டியது நம் கடன்” என்றார். புஷ்கரன் “மேலும் ஒரு நாள் கடத்தினால் அவளை நம்மால் தொடமுடியாது. ஏனெனில் அவள் ஷத்ரியப் பெண். ஒருபோதும் ஷத்ரியர் நிஷாதர்முன் ஷத்ரியப் பெண் மன்றுநிற்க ஒப்பமாட்டார்கள். இத்தருணத்தில் இங்கேயே இவ்வலையிலேயே அது நிகழ்ந்தாக வேண்டும்” என்றான். பத்ரர் “ஆணை” என்றார்.

flower“நிஷதபுரியின் புஷ்கரன் ஒவ்வொன்றையும் எண்ணிஎண்ணிச் செய்து ஏணியில் ஏறிக்கொண்டே இருந்தான். அந்த ஏணி உண்மையில் கீழ்நோக்கிச் சரிந்து ஆழத்திற்கிறங்கியது என்பதை அவன் உணர்ந்தும் இருந்தான்” என்றார் ஆபர். விராடர் “ஆம், கண் மூடினாலும் எழுவதையும் விழுவதையும் உணரும் ஒரு புலன் நம்முள் உள்ளது” என்றார்.

“கலிக்கொண்டாட்டத்தின் நாளிலேயே பெருகிவந்து செண்டுவெளியைச் சூழ்ந்த நிஷாதர்கள் ரிஷபனையும் மாலினியையும் கல்லால் அடித்து கிழித்தெறிந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் குருதியிலாடியிருந்தனர். மேலும் மேலும் குருதி என அவர்களுள் வாழ்ந்த இருண்ட தெய்வம் விடாய் மிக்க நாவை நீட்டியது. ரிஷபனும் மாலினியும் எரிப்பெருக்கிலிட்ட வெண்ணைக்கட்டிகள்போல கண்ணெதிரிலேயே கணங்களுக்குள் உருவழிந்தனர். அவர்களின் ஊனில் ஒரு துண்டுக்காக நிஷாதர் முண்டியடித்தனர். ஒரு நகம் மட்டும் கிடைத்த ஒருவன் வெறிகொண்டு நகைத்தபடி எழுந்து குதிக்க அவன்மேல் பாய்ந்து பிறர் அவனையே கிழித்தெறிந்தனர்” என்றார் ஆபர்.

தண்டபுரத்தின் கலிங்க அரசன் பானுதேவன் செய்தியறிந்தபோது சினம்கொண்டு தொடையை அறைந்தபடி எழுந்தான். “எழுக நம் படைகள்” என அவன் ஆணையிட்டான். “அரசே, பொறுங்கள். நம்முடன் நின்றிருக்கும் படைகள் எவை என நாம் அறியவேண்டும். அவனுடன் நிற்பவர் எவரென்றும் தெளியவேண்டும்” என்றார் அமைச்சர் ஸ்ரீகரர். “நம்முடன் அத்தனை ஷத்ரியர்களும் நிற்பார்கள். உடனே நிகழ்ந்ததென்ன என்று அரசர்களுக்கு செய்தியறிவியுங்கள்” என்றான் பானுதேவன். “அதை அறிந்த பின்னர் போதும் நம் படைநீக்கம்” என்றார் அமைச்சர்.

அதற்குள்ளாகவே புஷ்கரன் படைகொண்டு தண்டபுரத்தின்மேல் எழுந்திருக்கும் செய்தி வந்தது. அவனுடன் சதகர்ணிகளின் படைகளும் வழியில் இணைந்துகொண்டன. “இப்பெருவஞ்சனையை நான் எதிர்பார்க்கவில்லை. வஞ்சனையாலேயே இந்த ஆடல் நிகழுமென நான் அறிந்திருந்தேன். ஆயினும் இது எண்ணற்கரியது” என்று பானுதேவன் குமுறினான். “சதகர்ணிகளை புஷ்கரனுடன் இணைத்ததே நான்தான்… என்னிடமே முதல் வஞ்சனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.”

“அதுவே நிகழும். ஏனென்றால் வஞ்சனைத்திறனால் நீங்கள் ஆற்றல்கொள்கிறீர்கள் என அவர்கள் அறிவார்கள். படைவல்லமை கண்ணுக்குத் தெரியும். சூழ்ச்சியை உய்த்தறிய இயலாது. சூழ்ச்சித்திறன் கொண்டவனை அவன் வளர்வதற்குள் அழிக்கவேண்டும் என்றுதான் அரசநூல்கள் சொல்கின்றன” என்றார் அமைச்சர் ஸ்ரீகரர். பானுதேவன் சினம்கொண்டு தொடைமேல் ஓங்கி அறைந்தான். “நம் சூழ்ச்சியின் வெற்றியை இவர்கள் அறுவடை செய்கிறார்கள். இதை ஒப்ப முடியாது. ஷத்ரியர் எவர் நம்முடன் திரள்வார்கள் என்று இன்றே அறிக!” என்றான்.

ஷத்ரிய நாடுகள் எதிலிருந்தும் மறுமொழி வரவில்லை. நான்கு நாட்கள் காத்திருந்த பின் பானுதேவன் பொறுமையிழந்தான். “அவர்களுடன் வேறேதோ உடன்படிக்கை நிகழ்ந்துள்ளது, அரசே” என்றார் ஸ்ரீகரர். “வேறுவழியில்லை. நாம் நம் பங்காளிகளிடம் சென்று சேரவேண்டியதுதான். நம் தூதர்கள் தாம்ரலிப்திக்கு செல்லட்டும். கலிங்கம் ஒன்றாக நம்முடன் நின்றாலே நாம் எளிதில் விழமாட்டோம்” என்றான் பானுதேவன். ஆனால் மறுநாள் செய்தி வந்தது. தாம்ரலிப்தியின் கலிங்க மன்னன் சூரியதேவனின் மகள் சாயாதேவியை புஷ்கரன் மணம் செய்துகொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று. அதற்கு ஈடாக தண்டபுரத்தை தாம்ரலிப்திக்கு அளித்து ஒருங்கிணைந்த கலிங்கம் உருவாக புஷ்கரன் உதவுவதாக சொல்லப்பட்டுள்ளது என்றான் ஒற்றன்.

உளமுடைந்து அரியணையில் அமர்ந்த பானுதேவன் உதடுகளை இறுகக் கடித்து கைகளை முறுக்கியபடி தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான். அவ்வெல்லை மீற வெடித்து அழத்தொடங்கினான். அவை அவன் அழுவதை திகைப்புடன் நோக்கி அமர்ந்திருந்தது. தன் அழுகையை உணர்ந்து சீற்றம் கொண்டு எழுந்த பானுதேவன் “நாம் கிளம்புவோம்… வடக்கே செல்வோம்” என்றான். “நகரை கைவிட்டுவிட்டா? அது அறமல்ல” என்றார் அமைச்சர் ஸ்ரீகரர். “அறம் பேசும் பொழுதல்ல இது. அவன் என்னை விட்டுவைக்கமாட்டான்” என்றான் பானுதேவன்.

“உயிர்தப்பி ஓடுவதை விட…” என அமைச்சர் சொல்லத் தொடங்க “நீர் காவல்படையுடன் இங்கிரும். புஷ்கரனிடம் பேசி நம் குடிகளின் உயிர்களை காத்துக்கொள்ளும். நான் கிளம்புகிறேன்” என்றான் அரசன். அவையினர் தயங்கியபடி எழுந்தனர். “படைகள் ஒருங்குக! நான் இன்று மாலையே கிளம்பவேண்டும்” என்று ஆணையிட்டபடி அவன் அவையிலிருந்து விலகிச் சென்றான்.

அன்று மாலையே பானுதேவன் தன் படையுடன் பின்வாங்கி வடக்கே சென்றான். ஆனால் அவன் சென்ற பாதையை முன்னரே புஷ்கரனின் படைகள் மறித்துவிட்டிருந்தன. தொலைவில் நிஷாதர்களின் காகக்கொடியை பார்த்ததுமே பானுதேவன் உளமுடைந்து மீண்டும் அழத்தொடங்கினான். அவனுடைய படைத்தலைவன் உக்ரவீரியன் புஷ்கரனுக்கு முழுப் படையும் அடிபணிவதாக செய்தி அனுப்பினான். அதற்கு மறுமொழி வரவில்லை. படைத்தலைவர்கள் அமர்ந்து சொல்சூழ்ந்தார்கள். “முழுப் பணிதலுக்கு செய்தியனுப்பியும் மறுமொழி இல்லை என்பதன் பொருள் ஒன்றே” என்றான் உக்ரவீரியன். அவன் துணைவர் அவன் விழிகளையே நோக்கினர். “என்னுடன் நில்லுங்கள்” என்று அவன் சொல்ல அவர்கள் விழிகளால் ஆம் என்றனர்.

அன்றிரவு தன் பாடிவீட்டில் மதுவுண்டு வாய்வழிய துயின்றுகொண்டிருந்த பானுதேவனை உள்ளே நுழைந்த உக்ரவீரியன் வெட்டிக் கொன்றான். அவன் பாடிவீட்டிற்குள் வாளுடன் புகுந்தபோது அரசனுடன் இருந்த சேடி அலறினாள். ஒலி கேட்டு விழித்துக்கொண்ட பானுதேவன் “உக்ரரே!” என கைநீட்டினான். அத்தருணத்தை வெல்ல தன் கீழ்மையை முழுமையாக திரட்டிக்கொள்ளவேண்டும் என உணர்ந்த உக்ரவீரியன் அவன் நெஞ்சில் ஓங்கி உதைத்தான். அவன் மல்லாந்து விழ குழல்பற்றி தலையைத் தூக்கி கழுத்தை வெட்டினான். துண்டான தலையுடன் அவன் வெளிவந்தபோது படைத்துணைவர்கள் அங்கே திரண்டு நின்றிருந்தனர். தலையை முடிபற்றி தூக்கிக் காட்டினான் உக்ரவீரியன். கைகளைத் தூக்கி “ஆம்” என்றனர்.

பானுதேவனின் தலையுடன் கலிங்கப்படை சென்று புஷ்கரனின் படைகளுடன் சேர்ந்துகொண்டது. அவர்கள் கலிங்கக்கொடியை கீழேயும் காகக்கொடியை மேலேயும் கட்டிய கம்பங்களுடன் புஷ்கரனை வாழ்த்தி ஒலியெழுப்பியபடி திரளாக நிஷதப்படை நோக்கி சென்றனர். அவர்களைக் கண்டதும் நிஷாதர்கள் உரக்கக் கூச்சலிட்டு வரவேற்றனர். புஷ்கரன் முன்னிலையில் அவர்கள் தலைமழித்து நெற்றியில் காகக்குறி பொறித்து நிஷதகுடியின் அடிமைகளாக ஆயினர்.

புஷ்கரன் தண்டபுரத்தை அடைந்தபோது கையில் கங்கைநீர் கொண்ட நிறைகுடத்துடன் நூற்றெட்டு அந்தணர் உடன்வர கோட்டைவாயிலுக்கே வந்து ஸ்ரீகரர் அவனை எதிர்கொண்டார். தண்டபுரத்தின் அவையைக் கூட்டி அரியணையில் அமர்ந்து முடிசூடிய புஷ்கரன் நகர்மையத்தில் இருந்த சூரியன் ஆலயத்தின் கிழக்குச் சுவரில் தன் வெற்றியை கல்வெட்டாகப் பொறித்தபின் நகர்மீண்டான். தண்டபுரத்தை கன்யாசுல்கமாக அளித்து தாம்ரலிப்தியின் அரசன் சூரியதேவனின் மகள் சாயாதேவியை மணந்துகொண்டான்.

ஆபர் கைகுவித்து வணங்கி “குருதியில் வேர்விட்டே அரசுகள் எழுகின்றன. ஆனால் ஷத்ரியக் குருதி சூரியன் சான்றாகவே விழவேண்டும் என்கின்றன நூல்கள். இருளில் சிந்தப்படும் குருதியை உண்ண வருபவை இருளை நிறைத்துள்ள தெய்வங்கள். அவை சுவைகண்ட பின் அடங்குவதில்லை. முழுக்க நக்கித் துவட்டிய பின்னரே அகல்கின்றன” என்றார்.

விராடர் பெருமூச்சுடன் “ஆம், ஒருமுறைகூட வரலாறு பிறிதொன்றை சொன்னதில்லை. ஆனால் இது நிகழாமலும் இருந்ததில்லை” என்றார். “மீண்டும் மீண்டும் இந்நிலத்தில் உடன்பிறந்தார் நிலத்திற்கென பூசலிட்டிருக்கிறார்கள். பின்னர் விண்ணேகி அங்கே ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டிருக்கிறார்கள். ஆயினும் குருதிப் பூசலும் அடங்கவில்லை” என்றார் ஆபர்.

குங்கன் எழுந்தமைந்து மெல்ல முனகிய பின் “போருக்கெழுபவர்கள் நூல் நோக்குவதில்லை” என்றான். விராடர் “எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு, குங்கரே. இப்போது நீங்கள் அசைந்து ஒலியெழுப்புகையில் உறுதிப்பட்டது. உங்கள் அசைவுகளை மட்டும் கண்டால் நீங்கள் புண்பட்டு உடற்குறை கொண்ட ஒருவர் எனத் தோன்றும்” என்றார். குங்கன் “என்ன?” என்றான் வியப்புடன். “ஆம், உங்கள் இடக்காலில் புண் எழுந்து முடமானதுபோல. அதை நீங்கள் மாளா வலியுடன் அசைத்து வைப்பதாகவே தோன்றும்” என்றார். குங்கன் புன்னகைத்து “நாம் அதை அறியவோ பகுக்கவோ இயலாது” என்றான்.

பின்னர் ஆபரிடம் “கானேகிய நளன் என்ன ஆனார்?” என்றான். “பல நூறு கதை வடிவுகள் இங்குள்ளன. நான் நாலைந்தை கேட்டுவிட்டேன். நான் கேட்க விழைவது அரசுசூழும் அந்தணர் எழுதி வைத்திருக்கும் வரலாற்றை.” ஆபர் “இதுவும் கதையே. சென்றவரைப் பற்றி இருப்பவர் கதையாக அன்றி எதையுமே சொல்லிவிட முடியாது” என்றார். விராடர் “மெய் வரலாறென்பதே இல்லையா?” என்றார். “இல்லை. மெய்வரலாறு ஒன்று இருந்தால் அது பாறைகளைப்போல. அதைக் கொண்டு நிகழ்காலத்தை விரும்பிய வண்ணம் புனைந்துகொள்ள முடியாது” என்றார் ஆபர்.

“சொல்க!” என்றான் குங்கன். ஆபர் நீள்மூச்சுவிட்டு “புஷ்கரனை பற்றிக்கொண்ட நாகம் நளனை கைவிட்டது என்கின்றன நூல்கள்” எனத் தொடங்கினார். “அன்றுதான் இந்திரகிரியின் உச்சியில் நளன் நிறுவிய பெருஞ்சிலை மண்ணறைந்து விழுந்து நாற்பத்தாறுபேரை பலி கொண்டது. கலி விழி திறந்து எழுந்து தன் குடிகளின்மேல் அனலெனப் பரவி ஆட்கொண்டது. குருதியிலாடி குருதியை உண்டு வெறிகொண்டாடியது நிஷதபுரி.”

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 75

74. நச்சாடல்

flowerஆபர் அறைக்குள் நுழைந்ததும் விராடர் பணிவுடன் எழுந்து வணங்கி “வருக அமைச்சரே, அமர்க!” என்றார். ஆபர் தலைவணங்கி முகமன் உரைத்து பீடத்தில் அமர்ந்தார். பின்னர் “அரசே, நீங்கள் இந்நாட்டின் அரசர். நான் உங்கள் ஊழியன். நான் உங்களை பணியவேண்டும். உங்களை வாழ்த்தவேண்டும். அதுவே இந்நாடகத்தின் நெறி. இனி இது மீறப்பட்டால் நான் துறவுகொண்டு கிளம்பிச்செல்வேன்” என்றார். “இல்லை…” என்றார் விராடர் பதற்றத்துடன். “என் தந்தை எனக்களித்த பொறுப்பு இது. இதை முழுமையாக ஆக்கிவிட்டே நான் என் மைந்தனுக்கு இத்தலைப்பாகையை அளிக்கவேண்டும். அதுவரை நான் உங்கள் அடி தொழுபவனே” என்றார் ஆபர். விராடர் தலைதாழ்த்தினார்.

சில கணங்கள் அமைதி நிலவியது. ஆபர் தன் கையிலிருந்த ஓலைகளை சீரமைத்துவிட்டு “செய்திகள் பல உள்ளன, அரசே. அவையில் அவற்றை முன்வைப்பதற்கு முன் தங்களிடம் சொல்லாட வேண்டுமென்று தோன்றியது” என்றார். விராடர் “குங்கரையும் வரச்சொன்னேன். அவரும் உடனிருப்பதில் தங்களுக்கு மறு எண்ணம் இல்லையல்லவா?” என்றார். “இல்லை, அவரை நான் இங்கு எதிர்பார்த்தேன்” என்றார் ஆபர். “அவர் இங்கிருப்பதே இந்நாட்டின் எதிர்காலம் மீது எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது.” விராடர் “அவர் சூதாடி, கெடுமதியர் என்கிறார்கள்” என்றார். “அதுவும் உண்மையே” என ஆபர் புன்னகை செய்தார்.

வாயிற்காவலன் உள்ளே வந்து தலைவணங்கி “குங்கன்” என்றான். “வரச்சொல்க!” என்று விராடர் சொன்னதும் அவன் வெளியே சென்று குங்கனை உள்ளே அனுப்பினான். குங்கன் உள்ளே வந்து தலைவணங்கி முகமன் உரைத்தபின் சுவரோரமாக இருந்த சிறிய பீடத்தில் அமர்ந்தான். கைகளால் தாடியை வருடியபடி இருவரையும் மாறி மாறி நோக்கிக்கொண்டிருந்தான். “அரசுசூழ்தலில் சில புதிய முடிச்சுகள் நிகழ்வதை ஆபர் சொன்னார். அவற்றை விளக்கும்பொருட்டு இங்கு வந்திருக்கிறார்” என்றார் விராடர். குங்கன் தலையசைத்தான்.

ஆபர் “கீசகரின் இறப்பு நமது படைகளின் தன்னம்பிக்கையை பெரிதும் தளர்த்தியிருக்கிறது. இங்குள்ள எவரும் இனி விராடபுரியின் படைகளை நடத்திச்செல்ல முடியாதென்று பரவலாகவே பேச்சிருக்கிறது. தாங்கள் அறிவீர்கள் அரசே, உத்தரரைப்பற்றி நமது குடியும் படையும் என்ன நினைக்கிறது என்று” என்றார். விராடர் தலையசைத்தார். “தங்களைப்பற்றியும் உயர்வான எண்ணமில்லை” என்றார் ஆபர். விராடர் அதற்கும் தலையசைத்தார்.

“நமது படைகளின் நம்பிக்கையிழப்பு ஓரிரு நாட்களுக்குள்ளேயே சூழ்ந்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவிட்டது. எல்லைப்புற ஊர்கள் பலவற்றில் விதர்ப்பமும் சதகர்ணிகளும் படைநகர்வு செய்திருக்கிறார்கள். நதிமுகங்களும் நீர்நிலைகளும் அவர்களிடம் சென்றுகொண்டிருக்கின்றன. பூசலைத் தவிர்க்கும்படி ஆணையிட்டிருக்கிறேன். அவர்கள் எவரேனும் நம்மீது படை கொண்டுவருவதற்கான வாய்ப்பும் உள்ளது. நீர்ப்பூசலை அதன்பொருட்டேகூட அவர்கள் உருவாக்கக்கூடும்” என்றார் ஆபர்.

“நான் அதை எதிர்பார்த்தேன்” என்றார் விராடர். “விதர்ப்பமும் சதகர்ணிகளும் தங்களுக்குள் படைக்கூட்டுக்கு ஏதேனும் கைச்சாத்திடுவார்கள் என்றால் நாம் தப்ப முடியாது” என்றார் ஆபர். “விதர்ப்பன் துவாரகையின் இளைய யாதவன்மேல் தீரா வஞ்சம் கொண்டிருக்கிறான். அவனை வெல்ல படைதிரட்டுகிறான். அவன் வடமேற்கே செல்லவேண்டும் என்றால் தென்பகுதி அமைதியாக இருக்கவேண்டும். ஆகவே அவன் சதகர்ணிகளுடன் உடன்சாத்திட்டு நம்மை வென்று நிலம் பகிர்ந்துகொண்டு மேலே செல்லக்கூடும்.”

விராடர் குங்கனை நோக்கி “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள், குங்கரே?” என்றார். “படைகள் தங்கள் நெறிகளில் மாறாது நின்றால் போதும். படைநடத்துவதற்குரியவர்கள் வந்தமைவார்கள்” என்றான் குங்கன். “நம்பிக்கையிழக்கும்போது படைகள் பயிற்சியை கைவிடுகின்றன. மானுடத்திரளை படையென நிறுத்துவது பயிற்சியே. நம்பிக்கையும் இழப்பும் அல்ல, பயிற்சியே போரில் ஆற்றலென்றாகிறது. போர் தொடங்கியபின் அங்கே செயல்படுவது பயின்ற உடல் மட்டுமே. உள்ளம் விழிநிலைக்கனவு ஒன்றுக்கு சென்றுவிடுகிறது.”

ஆபர் “யார் படைநடத்துவது, உத்தரரா?” என்றார். “உத்தரரேகூட படைநடத்த முடியும்” என்றான் குங்கன். “என்ன செய்யவேண்டுமென்கிறீர்கள்?” என்று விராடர் கேட்டார். “படைகள் உளத்தளர்வு அடையும்போது மும்மடங்கு பயிற்சி அளிக்கவேண்டும். கடுமையான பயிற்சிகள் படைகளின் ஊக்கத்தை மிகைப்படுத்துகின்றன. அமர்ந்திருந்து எண்ணவும் சொல்லாடவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாகாது” என்றான் குங்கன்.

விராடர் “பயிற்சி அளிப்பதென்றால்கூட யார் அவற்றை ஒருங்கிணைப்பது? போருக்குமட்டும் அல்ல பயிற்சிக்கும் படைத்தலைவர் தேவை” என்றார். குங்கன் “அதற்குரியவர்களை நான் சொல்கிறேன். உத்தரையும் உத்தரரும்கூட அப்பொறுப்பேற்கலாம்” என்றான். விராடர் “என்ன சொல்கிறீர்கள்?” என சொல்ல வர இடைபுகுந்த ஆபர் “அவர்களுக்கு எவரேனும் துணை புரியவேண்டும்” என்றார். “ஆம், உத்தரைக்கு பிருகந்நளையும் உத்தரருக்கு கிரந்திகனும் துணை புரியட்டும்.”

“என்ன துணையிருந்தாலும் அவர்கள் என்ன செய்ய இயலும்? இருவருக்குமே படைநகர்வுப் பயிற்சி இல்லையே?” என்று விராடர் கேட்டார். “அவர்களிருவருக்கும் வாய்ப்பளிப்போமே… என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்” என்று குங்கன் சொன்னான். விராடர் நம்பிக்கையின்றி தலையசைத்தபின் “நமக்கு வேறு வழியில்லை. எதையாவது ஒன்றை செய்துதான் ஆகவேண்டும்” என்றார்.

ஆபர் “நற்செய்தி ஒன்றுள்ளது” என்றார். “முன்பு கலிங்கர் உத்தரருக்கு நாம் மகட்கொடை கோரியபோது தயங்கிக்கொண்டிருந்தார். ஏனெனில் அப்போது உத்தரர் விராடபுரியின் மணிமுடியை ஏற்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்று எண்ணப்பட்டது. இப்போது கீசகரின் இறப்பு தடைகளை களைந்திருக்கிறது. கலிங்கம் நமது தூதிற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது” என்றார்.

விராடர் “இத்தருணத்தில் ஒரு மணநிகழ்வென்றால்…” என்றார். குங்கன் “அந்த மணம் நிகழட்டும். அது விராடபுரிக்கு நன்றே” என்றான். விராடர் “கலிங்கம் வலுவான நாடு. மணக்கூட்டு நமக்கு ஆற்றல் சேர்ப்பதே. ஆனால் என் மைந்தன்மேல் எனக்கு இப்போதும் நம்பிக்கையில்லை. அவர்கள் அவனை ஒரு கைப்பாவை என்றாக்கிக்கொண்டு விராடபுரியை எடுத்துக்கொள்ள முயலமாட்டார்கள் என்று எப்படி சொல்லமுடியும்?” என்றார்.

குங்கன் “உத்தரர் நாம் எண்ணுவதுபோல் எளியவர் அல்ல. தனக்குள்ளிருந்து பிறிதொன்றை முளைத்தெழ வைக்க அவரால் இயலும்” என்றான். விராடர் கசப்புடன் சிரித்து “உத்தரன்மேல் இத்தனை நம்பிக்கை கொண்டுள்ள பிறிதொருவர் விராடபுரியில் இருக்க வாய்ப்பில்லை, அவன் அன்னையேகூட” என்றார். “அவரை நான் கரவுக்காட்டில் பார்த்தேன்” என்றான் குங்கன். அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் நோக்கியபின் விராடர் போகட்டும் என்பதுபோல கையசைத்தார்.

ஆபர் “மூன்றாவது செய்தி இது. நன்றா தீதா என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. இன்றும் நேற்றுமாக ஏழு மணத்தூதுகள் வந்துள்ளன, உத்தரைக்கு” என்றார். விராடர் “எவரிடமிருந்து?” என்றார். “சேதி நாட்டிலிருந்து, மகதத்திலிருந்து, மாளவத்திலிருந்து. அவந்தி, கூர்ஜரம், வங்கத்திலிருந்தும். அங்கநாட்டரசன் கர்ணனிடமிருந்தும் ஒன்று வந்துள்ளது.” விராடர் “அத்தனை பேரரசர்களும் ஓலையனுப்பியிருக்கிறார்கள் என்றால் என்ன பொருள்?” என்றார்.

“எவரோ ஒருவர் அவரை மணமுடிக்க விரும்பி ஓலையனுப்புவதை பிறர் அறிந்துவிட்டனர். உடனே அவர்களும் இந்த ஓலைகளை அனுப்பியிருக்கிறார்கள்” என்றார் ஆபர். “இதில் நன்றென்ன, தீதென்ன?” என்றார் விராடர். “இளவரசி பேரரசர் ஒருவரை மணப்பது நன்று” என்றார் ஆபர். “ஆம், அவள் பிறவிநூல் அவ்வாறு சொல்கிறது” என்றார் விராடர். “தீதெனத் தோன்றுவது இப்பேரரசர்கள் கொள்ளும் விழைவு” என்றார் ஆபர். “ஏன்?” என்று விராடர் கேட்டார். “அது உத்தரர்மேல் கொண்ட எதிர்பார்ப்பு” என்றர் ஆபர்.

விராடர் மீசையை விரலால் சுழற்றியபடி “புரிகிறது” என்றார். “உத்தரர் இந்நாட்டை முழுதாள முடியாதென்றும் உத்தரையை மணக்கும் இளவரசன் எளிதில் இந்நாட்டை கைப்பற்றிவிட முடியும் என்றும் கணக்கிடுகிறார்கள். இப்பேரரசர்கள் அனைவரும் தங்கள் இரண்டாவது மைந்தனுக்கே உத்தரையை கோரியிருக்கிறார்கள். தங்கள் இரண்டாம் தலைநகராக விராடபுரி ஒருநாள் ஆகுமென எண்ணுகிறார்கள்.”

விராடர் நெற்றியை நீவியபடி “மகட்கொடை மறுப்பது அவ்வளவு எளிதல்ல. இன்று ஷத்ரியர்களின் நோக்கில் அது போருக்கான அறைகூவலேயாகும்” என்றார். ஆபர் “ஒருவரின் மணக்கோரிக்கையை ஏற்பதும் பிறிதுள்ளவர்களை பகைவர்களாக்குவதில் சென்று முடியும். நம்மைப்போன்ற தனியரசுகள் அனைத்தும் எப்போதும் எதிர்கொள்ளும் இடர் இது” என்றார். “என்ன செய்வது?” என்று விராடர் கேட்டார்.

குங்கன் மெல்ல அசைந்தமைந்து தாழ்ந்த குரலில் “மணத்தன்னேற்பு நிகழ்த்துவதுதான், வேறென்ன?” என்றான். ஆபர் “ஒரு பெண்கோளும் ஒரு மணத்தன்னேற்பும் ஒரே தருணத்தில்” என்றார். “ஏன், நிகழ்ந்தால் என்ன?” என்று குங்கன் கேட்டான். “அதை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான்…” என்றார் ஆபர். குங்கன் “பெண்கோள் முதலில் நிகழட்டும். உத்தரன் கலிங்க இளவரசியை மணந்து மணிமுடி சூடி அமரட்டும். உத்தரனின் ஆணைப்படி இங்கு மணத்தன்னேற்பு நிகழட்டும். அதற்கு வேண்டிய பொழுதை நாம் எடுத்துக்கொள்ளலாம்” என்றான்.

ஆபர் குங்கனையே நோக்கிக்கொண்டிருந்தார். “பொழுது கடத்துவதே இப்போது நமக்குத் தேவை. நடுவில் இரு மாதங்கள் மழைக்காலம் வருகிறது. வேனிலில் பெருவிழவுகளை வைப்பதே நமது வழக்கம். உத்தரையின் மணத்தன்னேற்பு வரும் இளவேனில் தொடக்கத்தில் நிகழுமென்று இப்போதே அறிவித்துவிடலாம். பெண்கேட்டு செய்தி அனுப்பிய அத்தனை அரசர்களுக்கும் முறைப்படி அழைப்பு அனுப்புவோம்” என்றான் குங்கன். விராடர் “ஆம், இது ஒன்றே வழி. பிறிதொன்றும் இப்போது எண்ணுவதற்கில்லை” என்றார்.

ஆபர் புன்னகையுடன் “அப்போது தாங்கள் இங்கு இருப்பீர்களா, குங்கரே?” என்றார். குங்கன் விழிகள் சுருங்க “ஏன்?” என்றான். “தாங்கள் வந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கும் அப்போது.” குங்கன் நகைத்து “ஆம், ஓராண்டுக்குப்பின் இங்கிருந்து கிளம்பவே என் எண்ணம்” என்றான். “எங்கே?” என்று விராடர் கேட்டார். “அதை பிறகு பார்ப்போம். ஓராண்டுக்கு மேல் ஓரிடத்தில் இருந்தால் உள்ளம் தேங்கிவிடுகிறது” என்றான்.

“நான் எழுகிறேன். வேறு ஏதும் இல்லை, அரசே. இவையே தங்களது ஆணையென்றால் இவற்றை ஓலைகளில் பொறித்தபடி இன்று அவைக்கு வருகிறேன்” என்றார் ஆபர். “அமருங்கள், ஆபரே” என்று விராடர் சொன்னார். “நான் தங்களிடம் கேட்க விரும்புவது பிறிதொன்று உள்ளது.” ஆபர் “சொல்லுங்கள்” என்றார். “எனது மூதாதை நளன் எப்படி நாற்களத்தில் தோற்று ஐந்தாம் குடியென்றாகி காடு புகுந்தார் என்று சொன்னீர்கள். அந்த அரசியற்களம் என்ன ஆகியது? இக்கதை சொல்லும் காவியங்கள் பாடல்கள் எதிலும் அது இல்லை. உங்கள் குடி வழக்கென புழங்கும் கதைகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?”

ஆபர் புன்னகைத்தபடி “ஆம், காவியங்களிலும் சூதர்பாடல்களிலும் இல்லாத அரசுசூழ்தல்கள் எங்கள் செவிவழிக் கதைகளில் உள்ளன. அதை அந்தணரன்றி பிறர் அறியலாகாதென்றும் தேவையென்றால் மட்டும் அரசகுடிப் பிறந்து கோல்கொண்டமைந்த ஷத்ரியரிடம் சொல்ல வேண்டுமென்றும் நெறியுள்ளது” என்றார். விராடர் குங்கனை திரும்பிப்பார்த்து “இவர் இருப்பதில் பிழையுள்ளதா?” என்றார். ஆபர் சிரித்து “அவரையும் அரசகுடியென்றே கொள்கிறேன்” என்றார். “சொல்லுங்கள்” என்று விராடர் சொல்லி கால்களை நீட்டிக்கொண்டார்.

flowerநளனும் தமயந்தியும் நிஷதபுரியைவிட்டு நீங்கிய அன்று மாலையிலேயே இந்திரகிரியின் உச்சியிலிருந்த ஆலயத்தில் நின்ற இந்திரன் சிலையை அகற்றவும் கலியின் சிலையை அங்கு கொண்டு நிறுவவும் புஷ்கரன் ஆணையிட்டான். அம்முடிவை அவன் தன் தனியறையில் வெளியிட்டபோது சுநீதர் “அரசே, முறையாக இவ்வறிவிப்பை அரசவையில் தாங்களே விடுப்பது நன்று. குலமூத்தார் கோல் தூக்கி அதை வாழ்த்தட்டும். நாளை சூதர்கள் பாடி காலத்தில் நிறுத்தப்போகும் செய்தி இது” என்றார்.

புஷ்கரன் புன்னகையுடன் “இது பிந்தவேண்டிய செயலல்ல” என்றான். “அத்துடன் இவ்வாணையை நான் பிறப்பித்தேன் என்றே இருக்கவேண்டும்.” சுநீதர் “ஆனால் நீங்கள் இன்னமும் நிஷதபுரியின் முடிபுனையவில்லை” என்றார். “ஆம், ஆகவேதான் நான் இதை செய்யவில்லை. மக்கள் செய்யலாமென ஆணையிடவிருக்கிறேன்” என்றான் புஷ்கரன். உரக்க நகைத்தபடி “சுநீதரே, இன்று நளன் தன் துணைவியுடன் நகர் நீங்கினான். இப்போது சிரித்துக் களியாடி கீழ்மையில் திளைக்கும் இதே மக்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்புவார்கள். தனிமையில் இருளில் துயிலுக்கு முந்தைய கணத்தில் அவர்களுக்குள் வாழும் குலதெய்வங்கள் எழுந்து வரும். குற்றவுணர்வை உருவாக்கி அவர்களின் துயில் களையும். ஓர் இரவு அவர்கள் விழித்துக்கொண்டிருந்தார்கள் என்றால் நாளை காலை என்மேல் பழி சுமத்தி சினம் கொள்வார்கள்” என்றான்.

அமைச்சர் பத்ரர் “ஆம், அது மெய்யே” என்றார். புஷ்கரன் “இன்று நிகழ்ந்தவற்றில் இங்குள்ள குடிகள் ஒவ்வொருவரும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். ஒரு சொல் இளிவரல் உரைக்காத, ஒரு கைப்பிடி மண்ணள்ளி வீசாத எவரேனும் இந்நகரில் உள்ளனரா என்பதே ஐயத்திற்குரியது. அக்குற்றவுணர்வினால் அவர்கள் மேலும் நெகிழ்வார்கள். அதிலிருந்து தப்ப அனைத்துப் பழியையும் என்மேல் சுமத்துவார்கள். இரண்டு நாள் நான் வீணே இருந்தேனென்றால் மூன்றாவது நாள் இப்புவியின் கீழ்மகன்களில் நானே தலைவன் என்று இங்குள்ள ஒவ்வொருவரும் சொல்லத் தொடங்குவார்கள்” என்றான்.

“நான் இவர்களை அறிவேன். கீழ்மையில் மகிழ்ச்சியை கண்டடைபவர்கள். ஏனென்றால் மேன்மையில் ஏறி மகிழ்ச்சிகொள்வது கடினமானது. உளப்பயிற்சியும் ஒழுங்கும் தேவையாவது. கீழ்மையின் உவகை அதுவே தேடிவந்து பற்றிக்கொள்ளும். அலையென அடித்துச்செல்லும். ஆனால் அது அளிக்கும் இழிவுணர்வால் எப்போதேனும் மேன்மையை கொடியென தாங்கி கூச்சலிடுவார்கள் இவர்கள்” என்றான். “ஆகவே அவர்களுக்கு கீழ்மையின் இன்பத்தையும் அதை மறைக்கும் மேன்மையின் திரையையும் ஒருங்கே அளிக்கவேண்டும். இன்றிரவே கலிபூசனை தொடங்கட்டும்.”

“நாளை விடியலில் கலிதேவன் ஆலயத்தில் கூட்டுப் பெரும்பூசனை நிகழவேண்டும். இன்றிரவு இவர்கள் துயில் நீப்பார்கள், குற்ற உணர்வால் அல்ல களியாட்டினால்” என புஷ்கரன் தொடர்ந்தான். “களியாட்டு நன்று. அது அனைத்தையும் மறக்க வைக்கிறது. நேற்றும் நாளையும் இல்லாதாக்கி இன்றில் திளைக்கச் செய்கிறது. மக்களை வெல்ல வேண்டுமென்றால் இடைவெளி இல்லாமல் அவர்களுக்கு களியாட்டை அளித்துக்கொண்டிருக்க வேண்டுமென்பது அரசியல் சூழ்ச்சி.”

சுநீதர் புன்னகையுடன் “இதையெல்லாம் எங்கு கற்றீர்கள், அரசே?” என்றார். “என்னால் படைமுகம் நிற்க முடியாதென்று எப்போது தோன்றியதோ அன்று முதல் அரசுசூழ்கையை கற்கத் தொடங்கினேன்” என்றான் புஷ்கரன். “அல்ல, தங்களுக்கு கலியின் பேரருள் வந்து சேர்ந்துள்ளது. கலியால் கையாளப்படும் படைக்கலம் நீங்கள்” என்றார் சுநீதர். புஷ்கரன் புன்னகைத்தான்.

அன்று மாலையே நகரின் பதினெட்டு மையங்களில் கொடிப்பட்டம் தாங்கிய யானைகள் வந்து நின்றன. அவற்றின்மேல் ஏற்றப்பட்ட பெருமுரசுகளை முழைக்கோலர் அறைந்து பேரொலி எழுப்பினர். அம்பாரிமேல் எழுந்து நின்ற நிமித்திகன் மறுநாள் காலை கலிபூசனை தொடங்குமென்றும் நிஷாதர்களின் அனைத்துக் குடிகளும் அங்கு வந்து கலியருள் கொள்ள வேண்டுமென்றும் அறிவித்தான்.

நிஷதகுடியின் மக்கள் தங்கள் கைகளாலேயே இந்திர மலைமேல் இருக்கும் இந்திரனை சரித்து உடைக்கவேண்டுமென்று அரசர் ஆணையிட்டதாக அவன் அறிவித்தபோது கூடிநின்ற நிஷதகுடிகள் வெறிக்கூச்சலிட்டபடி தலைப்பாகைகளையும் கைக்கோல்களையும் மேலாடைகளையும் எடுத்து வீசி துள்ளி ஆர்ப்பரித்தனர். ஒவ்வொரு கணமும் வெறியெழுந்துகொண்டே சென்றது. தெருக்களெங்கும் கள்வெறி கொண்டவர்கள்போல் நிஷாதர்கள் முட்டித் ததும்பினர், கூச்சலிட்டு குரல் இழந்தனர். கையில் சிக்கிய அனைத்தையும் எடுத்து வானில் வீசினர். ஓரிரு நாழிகைகளில் நகரமே குப்பைகளால் நிறைந்தது. சேற்றில் புழுக்களென மானுடர் அதில் கொப்பளித்தனர்.

பெண்டிர் பூசனைக்கான ஒருக்கங்களை தொடங்கினர். ஊர்மன்றுகளில் எழுந்த காளகக்குடித் தலைவர்களும் பூசகர்களும் நிமித்திகர்களும் கைக்கோல்களைத் தூக்கி கண்ணீருடன் கூவினர். “தோற்பதில்லை கலி! மானுடன் ஒருபோதும் வென்றதில்லை தெய்வங்களை என்று அறிக! இதோ எழுகிறது நம் குலதெய்வம்! இருண்ட காட்டிலிருந்து மலை உச்சி நோக்கி உயர்கிறது காகக் கருங்கொடி! நமது மாடங்களின்மேல் கலிக்கொடி ஏறுக! நமது நெற்றிகளில் கலிக்குறி விளங்குக! நமது குடிகளின்மேல் அவன் அருள் என்றும் நிலைக்கட்டும்! நமது கொடிவழிகள் அவன் பேர் சொல்லி வாழட்டும்!” “ஆம்! ஆம்! ஆம்!” என்று கூவினர் மக்கள்.

இரவெல்லாம் நகரம் ஓசையுடன் முழங்கிக்கொண்டிருந்தது. மக்கள் கொண்ட வெறியுடன் குதிரைகளும் யானைகளும் கூட இணைந்துகொள்ள அவற்றின் ஓசையும் முழங்கியது. புஷ்கரன் சுநீதரிடம் “நான் நாளை புலரியில்தான் கலியின் ஆலயத்திற்கு வருவேன். இன்றிரவு ஆற்றவேண்டிய பணி ஒன்றுள்ளது” என்றான். சுநீதர் “என்ன?” என்றார். “நான் காட்டிற்குச் சென்றிருக்கிறேன் என்று சொல்லுங்கள். எவரும் அறியவேண்டாம்” என்று ஆணையிட்டுவிட்டு ஏழு படைவீரர்களுடன் நகரைவிட்டுச் சென்றான்.

அவன் சென்ற செய்தியை சுநீதர் அமைச்சர் பத்ரருடன் மட்டும் பகிர்ந்துகொண்டார். “எங்கு செல்கிறார்?” என்றார் உடனிருந்த அவைச்செயலர் பிரவீரர். “தன் மூத்தவனை வேட்டையாடச் செல்கிறார், ஐயமே இல்லை. நஞ்சையும் நெருப்பையும் எதிரியையும் எஞ்சவிடலாகாதென்று அறிந்திருக்கிறார். இன்று நிஷதபுரிக்குத் தேவை இம்மியும் நெகிழாத இவரைப்போன்ற அரசர்தான். தொல்குடியை ஒருங்கிணைத்த மகாகீசகர் இவரைப் போன்றிருந்தார் என்கிறார்கள்” என்றார்.

நகரம் ஒருவர் பிறிதொருவரை அறியாதபடி கள்ளும் களிப்புமென சித்தம் புளித்து நுரைத்தெழ மயங்கித் திளைத்துக் கொண்டிருந்தபோது பின்னிரவில் புஷ்கரன் தன் வீரர்களுடன் அரண்மனைக்கு திரும்பி வந்தான். அரண்மனைக்கோட்டை வாயிலில் அவன் வந்து நின்றபோதுதான் காவலர் அவனை அறிந்தனர். அவன் இறங்கி புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு காவலர்களிடம் “சுநீதரை அரண்மனை அகத்தளத்திற்கு வரச்சொல்க! நமது அமைச்சர்களும் குலமூத்தார் அனைவரும் அகத்தளத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரவேண்டுமென்று ஆணையிடுகிறேன்” என்றான்.

செல்லும் வழியிலேயே படைத்தலைவர்களையும் சிற்றமைச்சர்களையும் தன்னுடன் வரும்படி கையசைத்து அழைத்துக்கொண்டான். பிரவீரர் “எங்கு செல்கிறோம், அரசே?” என்றபோது அவன் சிவந்த விழிகளால் வெறித்தான். மகளிர் மாளிகையின் வாயிலில் அவனைக் கண்டதும் திகைத்து தன் கையிலிருந்த சிறு கொம்பை எடுக்க முயன்ற காவலனை அக்கை உயர்வதற்கு முன்னரே வெட்டி வீழ்த்தினான். அவனைச் சூழ்ந்த திரள் விழிதெறிக்க உடல்பதறிக்கொண்டிருந்தது. உள்ளறைக்குச் சென்று அரசியின் அறைவாயிலை அடைந்தான். அங்கு நின்ற காவலன் அதற்குள் கூச்சலிடத் தொடங்கியிருந்தான். புஷ்கரனின் இரு வீரர்கள் அவனை உடல் போழ்ந்திட்டனர்.

அறைக்கதவைத் தட்டும்படி புஷ்கரன் ஆணையிட்டான். உள்ளே ஓசைகளும் பேச்சொலிகளும் கசங்கின. அகத்தளத்திலிருந்த சேடியரும் பெண்டிரும் வந்து அத்தனை சாளரங்களிலும் கூடிநின்று நோக்கினர். கதவு திறந்து ரிஷபன் வெளியே வந்தான். அவன் தன்னை தொகுத்துக்கொள்ளவும் நிலைபதறாதிருக்கவும் முயன்றாலும் கைகள் பதறிக்கொண்டிருந்தன. அவன் முதற்சொல்லெடுப்பதற்குள் “இவனைப் பிடித்துக் கட்டுங்கள்” என்று புஷ்கரன் ஆணையிட்டான்.

ரிஷபன் “பொறுங்கள், நான் விளக்குகிறேன். நான் ஒற்றன். முதன்மைச் செய்தியுடன்…” என்று சொல்வதற்குள் புஷ்கரன் கைநீட்டி அவன் நாவைப்பற்றி இழுத்து தன் வாளால் அறுத்து வெளியே வீசினான். இரு கைகளாலும் வாயைப் பொத்தி விரல்களிடையே குருதி வழிய முழந்தாளிட்டு அமர்ந்தான் ரிஷபன். அவன் தலைமயிரை பற்றித் தூக்கி இரு கைகளையும் முறுக்கி தன் மேலாடையாலேயே பின்னால் கட்டினான். ரிஷபன் முனகியபடி உடலதிர்ந்தான்.

உள்ளிருந்து கலைந்த ஆடையுடன் ஓடிவந்த மாலினிதேவி “யாரது? என்ன நிகழ்கிறது இங்கே?” என்று கூவினாள். அந்தக் குரலில் இருந்த மெய்யான சினம் புஷ்கரனையும் அவன் வீரர்களையும் ஒருகணம் தயங்கச் செய்தது. அவள் கைநீட்டி “நான் கலிங்க அரசனின் மகள். என் அகத்தளத்திற்குள் நுழைந்த எவரையும் விட்டுவைக்கப் போவதில்லை” என்றாள். அந்த நீண்ட சொற்றொடரில் அவள் அச்சமும் உளக்கரவும் வெளிப்பட புஷ்கரன் துணிவும் வஞ்சமும் கொண்டு மீண்டான். அவன் உடலில் வெளிப்பட்ட அந்த மாற்றம் அவன் வீரர்களையும் மீளச் செய்தது.

புஷ்கரன் இளிநகையுடன் “உன் தந்தைக்கு செய்தி சொல்லி அனுப்பிய பிறகுதான் உன்னை கழுவிலேற்றப் போகிறேன்” என்றான். “கழுவிலா? யாரிடம் பேசுகிறாய் என்று தெரியுமா? இழிமகனே, ஷத்ரிய பெண்ணின் முகம் நோக்கி இதைச் சொல்ல உனக்கென்ன ஆணவம், நிஷதப் பிறவியே!” என்று கூவியபடி அவள் வெளியே வந்தாள். அவள் ஆடை கலைந்து சரிந்தது. குழல்கற்றைகள் தோளிலும் மார்பிலும் விழுந்தாடின. அப்போது எழுந்த முகச்சுளிப்பால் அவள் மிக அழகற்றவளாகத் தோன்றினாள். வெளித்தெரிந்த ஓநாய்ப் பற்கள் அவள் விழிகளை மொழியற்ற விலங்கு என காட்டின.

அவன் அச்செயலை செய்யத் தேவையான சினம் தன்னுள் ஊறுவதற்காகவே முள்முனையில் தயங்கிக்கொண்டிருந்தான் என்பதை அவள் அறியவில்லை. முதற்கணத்தில் அவர்களிடம் எழுந்த தயக்கத்தை தன் சினத்தால் அச்சமென்றாக்கிவிடலாமென்ற அவள் எண்ணம் பிழையாகியது. அவள் உரைத்த இழிசொற்களால் அவனும் பிறரும் சித்தம் எரிந்தெழும் பெருஞ்சினத்தை அடைந்து எதையும் செய்யத் துணிபவர்களானார்கள். எப்போதும் அவர்களை கொதிக்கச் செய்வது குல வசையே. அவர்கள் நாடென, அரசென எழுந்ததே அச்சொற்களுக்கு எதிராகத்தான். அதை உள்ளூர அவள் அறிந்திருந்தமையால் அவளையறியாமலேயே அச்சொற்கள் அவள் நாவிலெழுந்தன.

புஷ்கரன் தன் வாளின் பின்பகுதியால் ஓங்கி அவளை அறைந்து வீழ்த்தினான். தலை உடைய இரு கைகளாலும் பற்றிக்கொண்டு பீறிட்ட குருதியுடன் தரையில் விழுந்து துடித்தாள். வெறும் முனகல் மட்டும் அவளிலிருந்து எழுந்தது. குருதிமணம் வீரர்களின் விழிகளை ஒளிரச் செய்தது. “எழுந்து நட, நாயே” என்றபடி படைத்தலைவன் அவள் தலைமேல் ஓங்கி மிதித்தான். ரிஷபன் சினத்துடன் ஏறிட அவன் முகத்தில் உமிழ்ந்த இன்னொருவன் “என்னடா பார்க்கிறாய், ஷத்ரியக் கீழ்மகனே?” என்றபடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

“இருவரையும் இழுத்து வந்து செண்டுவெளி முற்றத்தில் நிறுத்துங்கள்” என்று புஷ்கரன் ஆணையிட்டான். அதற்குள் சுநீதரும் குடிமூத்தார் பன்னிருவரும் பத்ரரும் பிற அமைச்சர்களும் அகத்தளத்திற்கு வந்துவிட்டிருந்தனர். சுநீதர் உரக்க “என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்ந்தது, அரசே?” என்றார். “காவலரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இங்கே நூறு விழிகளேனும் சான்று உள்ளன” என்றபின் அவன் குருதி படிந்த தன் வாளைத் தூக்கி அதை நோக்கினான். அவன் வாய் சிறிய புன்னகையில் கோணலாகியது.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 74

73. தெய்வமெழுதல்

flowerதருமன் வருவதற்குள்ளாகவே விராடர் கிளம்பிவிட்டிருந்தார். ஏவலன் “அரசர் சென்றுவிட்டார்” என்று சொன்னான். “தங்களுக்காக காத்திருந்தார். பொழுதாகிறது என்றதும் கிளம்பினார். சற்றுமுன்னர்தான்.” தருமன் விரைந்து முற்றத்தை அடைந்தபோது விராடர் தேர் அருகே நின்றிருந்தார். அருகே நின்ற உத்தரனிடம் ஏதோ கையசைத்து சொல்லிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் திரும்பி நோக்கியபின் பேச்சை தொடர்ந்தார். அவர் தனக்காகக் காத்திருக்கிறார் என உணர்ந்த தருமன் அருகே சென்று தலைவணங்கினார்.

“சூதர் சொல்லை நாம் ஒன்றும் செய்யமுடியாது. சூதர்சொல்லின் இயல்பு என்னவென்றால் அச்சொற்களை அவர்களின் பிற சொற்களே அழிக்கும் என்பதுதான். அதுவரை நாம் காத்திருப்போம்” என்றார் விராடர். பின்னர் தருமன்னை நோக்கியபின் தேரிலேறிக்கொண்டார். தருமன் ஏறி அவர் அருகே அமர்ந்ததும் தேர் கிளம்பியது. விராடர் இயல்பாக சாய்ந்துகொண்டு “நகரில் உலவும் கதைகளை வந்து சொல்கிறான் மூடன். நகரில் அப்படி எத்தனை கதைகள் அலையும்! நாம் அதை என்ன செய்யமுடியும்?” என்றார்.

உத்தரன் தன் தேரில் ஏறிக்கொள்வதை தருமன் நோக்கினார். விராடர் “கீசகனை நாம் நஞ்சூட்டி கொன்றுவிட்டோம் என்கிறார்கள். நாம் அமைத்த ஒற்றர்கள் அவனை ஒளிந்திருந்து தாக்கியதாக இன்னொரு கதை” என்றார். “அவனுக்கும் இங்கே அணுக்கப்படைகள் இருந்தன. இத்தனை ஆண்டுகள் இந்நகரை ஆண்டிருக்கிறான். அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.” தருமன் “அவர் வெல்லப்பட முடியாதவர் என இவர்கள் எண்ணியிருந்தனர். அவர்மேல் என்னென்ன காழ்ப்பும் கசப்பும் இருந்தாலும் அவர் நிஷாதர்களின் பெருமிதம். இத்தனை எளிதாக அவர் கொல்லப்பட்டது அவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை” என்றார்.

“ஆம், அதேதான். அவன் இறந்ததுமே வீரனென்றாகிவிட்டான். அவனை எரியூட்டியபோது எழுந்த துயரை நோக்கியிருப்பீர்கள். நகரமே நெஞ்சறைந்து கதறியபடி இடுகாட்டைச்சூழ்ந்து கூடியது.” தருமன் “ஆம், எரி ஏறியபோது வீரமுரசுகள் முழங்கவில்லையே என நான் எண்ணினேன். வாழ்த்தொலிகளில் அவ்வோசை மூழ்கிவிட்டதை சற்று கழித்தே உணர்ந்துகொண்டேன்” என்றார். “அவன் இறந்ததுமே மீண்டும் பிறந்தான். அவனைப்பற்றி நாளும் கதைகள் எழுந்துவந்தன. அவனுடைய வீரம், கொடைத்திறன், அளி, பெருமிதம். இவ்வழி சென்றால் இன்னும் சில மாதங்களில் அவன் இறைவடிவாகிவிடுவான்.”

“அக்கதைகளில் பெரும்பாலானவை உண்மையானவை” என்று தருமன் சொன்னார். விராடர் வியப்புடன் திரும்பி நோக்கினார். “நாம் உயிருடனிருப்பவரை நம் தேவைக்கும் உணர்வுகளுக்கும் ஏற்பவே நோக்குகிறோம். அதற்கப்பால் அவருக்கு என இயல்புகள் பல இருக்கலாம். கீசகன் மாபெரும் படைத்தலைவன். பெருமல்லன். படைவீரர்களை மைந்தர்களென நடத்தாதவன் களம்வெல்ல முடியாது. மல்லர்கள் மானுடரை உடலால் அறிபவர்கள். அன்னையரைப்போல.” விராடர் “எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் நல்லவன் என்றால் இங்கே தீயவர் எவர்? நானா?” என்றார்.

தருமன் “உயிரோடிருத்தல் குற்றவுணர்வை உருவாக்குகிறது. இறந்தவர்பால் உளநெகிழ்வுகள் பெருக அதுவே ஏதுவாகிறது” என்றார். விராடர் பெருமூச்சுவிட்டு “நடுகல்நாட்டி வீரவழிபாடு செய்தாகவேண்டும் என்றார்கள். அது தேவையில்லை என்பது அமைச்சர் ஆபரின் கூற்று. காலப்போக்கில் அதை ஒரு பள்ளிப்படை ஆக்குவார்கள். அரசுக்கு எதிரான உணர்வுகள் எப்போதும் எவ்வரசிலும் இருக்கும். அவை அடையாளம் தேடி அலையும். அவ்வாலயம் அவர்களுக்குரிய மையமாக ஆகிவிடக்கூடும் என்றார்கள்.”

தருமன் சிரித்து “அப்படி ஓர் அடையாளத்தை அவர்களுக்கு அளிப்பதே நல்லரசன் செய்யவேண்டியது” என்றார். விராடர் நோக்க “அவர்களின் உணர்வுகள் அவ்வழி வழிந்துசெல்லட்டும். அரசே, கீசகனின் குரல் உங்கள் குலத்திற்கிணையாகவே பெரிதென்றால் மட்டுமே நாம் பிறிது எண்ணவேண்டும்.” விராடர் “ஒவ்வொன்றுக்கும் ஒரு மாற்றுச்சொல் கொண்டிருக்கிறீர்” என்றார். “இதுவும் நாற்களமே” என்றார் தருமன் சிரித்தபடி. “அரசியின் மாற்றமே என்னை அச்சுறுத்துகிறது. அவள் தன் உடன்பிறந்தவனை தெய்வமாக ஆக்கிவிட்டாள். அரண்மனையில் அவனுக்கு ஒவ்வொருநாளும் பலிகொடையும் பூசனைகளும் நிகழ்கின்றன. சூதர்கள் வந்து அவன் புகழை பாடிக்கொண்டிருக்கிறார்கள். காவியங்களே பிறந்துவிடும் போலிருக்கிறது” என்றார்.

“நீங்கள் எதை அஞ்சுகிறீர்கள், அரசே?” என்றார் தருமன். “இந்தக் கதைகளுக்குப்பின்னால் உள்ள உண்மையை” என்றார் விராடர். “அவனை நான் கொல்லவில்லை. ஆனால் நான் கொல்லவிழைந்தேன். கொல்லப்பட்டது என்பொருட்டே” தருமன் “அதை அஞ்சவேண்டாம். கீசகன் கொல்லப்பட்டது குறித்த கதைகளில் நிலைக்கப்போவது ஒன்றே” என்றார். விராடர் நோக்க புன்னகையுடன் “அவனை கந்தர்வன் ஒருவன் கொன்றான் என்பது” என்றார் தருமன். “ஏன்?” என்றார் விராடர். “ஏனென்றால் அதுதான் முற்றிலும் நம்பமுடியாததாக உள்ளது” என தருமன் நகைத்தார்.

“விளையாடாதீர், குங்கரே” என்றார் விராடர். “ஆம், அதுவே உண்மை. எண்ணிப்பாருங்கள். கீசகரின் கதையை இன்னும் ஓராண்டுக்குப்பின் எண்ணிக்கொள்பவர்கள் யார்? எவர் எவரிடம் சொல்லப்போகிறார்கள்? சிறுவர்களுக்கு முதியோர் சொல்லும் கதைகளாக மட்டுமே அவர் நினைவு நீடிக்கும். அக்கதைகளில் அவரை வீரரில் வீரர் என சொல்லி பெருக்குவார்கள். அத்தகைய மாவீரனை வஞ்சமோ நஞ்சோ கொன்றதென்றால் அது சிறிதாகத் தெரியும். கந்தர்வன் கொன்றான் என்பதே கதையென முழுமைகொண்டிருக்கும்.”

“இப்புவிவில் வாழும் செய்திகளில் பெரும்பாலானவை அவை உண்மை என்பதனால் வாழவில்லை, அழகானவை என்பதனால் வாழ்கின்றன” என்று சொல்லி தாடியை நீவியபடி வெளியே நோக்கத் தொடங்கினார் தருமன். விராடர் அவரையே நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “நன்று, உம்மிடம் பேசிப்பேசி எது விந்தையானதோ அதுவே உண்மை என நம்புவதற்குப் பழகிவிட்டேன்” என்றார் விராடர். இருவரும் சேர்ந்து நகைத்தனர்.

கீசகனின் நடுகல்லிடத்தில் முன்னரே காவலர்கள் சூழ்ந்திருந்தனர். நிஷதகுடித்தலைவர்களும் குலமூத்தார்களும் அமைச்சர்களும் அகம்படியினரும் திரண்டிருந்தார்கள். அரசத்தேர் அணுகியதும் கொம்புகளும் முரசுகளும் முழங்கின. தேர் நின்றதும் விராடர் கைகளைக் கூப்பியபடி இறங்க வாழ்த்தொலிகள் எழுந்தன. தரையில் விரிக்கப்பட்ட நடைபாவாடையில் கூப்புகையுடன் நடந்த விராடருக்குப்பின்னால் தருமன் தலைகுனிந்து நடந்தார்.

சிற்றமைச்சர்கள் வந்து அரசரை எதிர்கொண்டு அழைத்துச்சென்றனர். இடுகாட்டின் நடுவே கீசகனின் ஆளுயர நடுகல் செம்பட்டு சுற்றப்பட்டு செங்காந்தள்மாலை சூடி நின்றிருந்தது. அவனருகே கிடைக்கல்லாக பிரீதையின் தாய்க்கல் மலருடன் அமைந்திருந்தது. குலப்பூசகர் எழுவர் அங்கே செம்பட்டுக் கச்சை சுற்றி மலர்மாலை அணிந்து நின்றிருந்தார்கள். அரசருக்குரிய மேடையில் விராடர் சென்று நின்றதும் வாழ்த்தொலிகள் அமைந்தன. அரசர் கைகாட்ட சடங்குகள் தொடங்கின.

உறுமி மட்டும் பொங்கிப்பொங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. நடுகல்லுக்கு மஞ்சள்குங்கும செவ்விழுதை அள்ளிப் பூசினர். மஞ்சள்பொடியும் அரிசிப்பொடியும் கொண்டு முழுக்காட்டினர். பெரிய உருளியில் ஆவிபறக்க கொண்டுவரப்பட்ட அன்னம் நடுகல்லின் முன்னால் விரிக்கப்பட்ட ஈச்சைப்பாயில் கொட்டப்பட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதன்மேல் செவ்வரளி தெச்சி செண்பகம் செந்தாமரை காந்தள் மலர்களைப் போட்டு கமுகுபூச்சரத்தை நட்டனர்.

கரிய ஆட்டுக்கிடாக்கள் மூன்றை பூசகர் இழுத்துவந்தனர். அவற்றின் கழுத்தை வளைத்து குருதிக்குழாயை சிறு கத்தியால் வெட்டி பீரிட்ட குருதியை அந்த அன்னத்தின் மேல் வீழ்த்தினர். விடப்பட்ட ஆடு கால்பதற ஓடிச் சுழன்று விழுந்து துள்ளத் தொடங்கியது. அடுத்த இரு ஆடுகளின் குருதியை பெரிய மரக்குடுவையில் பிடித்து நடுகல்லுக்கு முழுக்காட்டு செய்தனர். கூடிநின்றிருந்தவர்கள் “மாவீரர் வெல்க! வீரப்பலி நிறைவுறுக! மூதாதையர் மகிழ்க! குலதெய்வங்கள் அருள்க!” என வாழ்த்தொலி எழுப்பினர் அலையலையாக இறங்கிய செங்குருதி மாவையும் மஞ்சளையும் கரைத்து குழம்பென்றாகி மண்ணில் ஊறிப்பரவியது.

குருதியில் சில துளிகள் பிரீதையின் தாய்க்கல்மீதும் வீழ்த்தப்பட்டன. “திருமாபத்தினி வாழ்க! மூதன்னையர் அடிசேர்க!” என்று வாழ்த்தியது திரள். குருதியன்னத்தில் ஏழுபிடி எடுத்து பிரீதைக்கு படைத்தார் பூசகர். நெய்ப்பந்தம் ஏற்றப்பட்டு இரு நடுகற்களுக்கும் அனலாட்டு செய்யப்பட்டது. படைப்பன்னத்தின் ஏழு பகுதிகளில் ஒன்றை மட்டும் எடுத்து வாழையிலையில் பரப்பி அதில் முதல்பிடியை அள்ளி அரசருக்கு அளித்தார் முதுபூசகர். மற்றவர்களுக்கும் அன்னம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பூசனை முடிந்ததும் விராடர் திரும்பி நோக்காமல் நடந்தார். அவரைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் நடந்தனர். “திரும்பி நோக்கலாகாது’ என எவரோ சொல்லும் மெல்லொலி கேட்டது. உத்தரன் பின்னால் வந்து குனிந்து தருமனிடம் “குங்கரே, பிரீதையின் குடியினர் இங்கே அவளுக்கு பத்தினிவழிபாடு செய்ய ஒப்புதல்கோரினர்” என்றான். “அதிலென்ன?” என்றார் தருமன். “அவள் முறைப்படி மணம்புரியவில்லை. ஆகவே உடன்கட்டை ஏறினாலும் கீசகரின் துணைவியல்ல என்றார்கள் சிலர். பூசல் மிகுந்தபோது ஆபரிடம் சென்று கேட்டோம். இதில் அவர் சொல்ல ஏதுமில்லை என்றார்.”

தருமன் “ஆம், ஆணும்பெண்ணும் எவ்வகையில் இணைவதென்று எவர் சொல்வது? கீசகர் ஷத்ரியன், அவர் காந்தர்வ மணம் செய்வதற்கு நெறியொப்புதல் உண்டு” என்றார் தருமன். “ஆம், அதையே நானும் சொன்னேன்…” என்றான் உத்தரன். “இளவரசே, அவள் அவருடன் விண்ணேகுவாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவள் பத்தினி அல்ல என்றால் வேறு எவர்?” உத்தரன் “மிக எளிய அரசியல் கணக்குகள்தான். அவள் சூதப்பெண். சூதர்களில் இன்றுவரை எவரும் உடன்கட்டை ஏறி பத்தினித்தெய்வமாக ஆனதில்லை” என்றான்.

“ஆவதற்கு தடையுண்டா என்ன?” என்றார் தருமன். “இல்லை, ஆனால் வீரக்கல்லும் பத்தினிக்கல்லும் அமைவதென்பது அக்குலத்திற்கு பெருமையும் முதன்மையும் சேர்க்கிறது. அதை பிறர் விரும்புவதில்லை” என்றான் உத்தரன். தருமன் “அதை முடிவெடுக்கவேண்டியவர் அரசர்” என்றார். “ஆம், ஆனால் அவர் முடிவெடுப்பதற்கு முன்னரே நகர்மக்கள் முடிவெடுத்துவிட்டனர். நகரமெங்கும் பெண்கள் அவளைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் அவளைப்பற்றி பேசுவதை தவிர்க்கும்தோறும் அவர்கள் மேலும் பேசுகிறார்கள்.”

உத்தரன் பேசிக்கொண்டே சென்றான். நகரின் நிகழ்வுகள் அவனுடைய அன்றாடவாழ்க்கையின் அலுப்பை நீக்கி கிளர்ச்சிகொள்ளச் செய்திருப்பது தெரிந்தது. “கீசகரின் உடல் சிதையில் வைக்கப்பட்டபோது புதர்களுக்குள் இருந்து அவள் ஓடிவந்ததை நான்தான் முதலில் கண்டேன். முதலில் என்ன நிகழ்கிறதென்றே புரிந்துகொள்ளவில்லை. இடுகாட்டில் பெண்டிர் வரும் வழக்கமில்லை என்பதுகூட என் எண்ணத்தில் உறைக்கவில்லை. அமைச்சர்கள் இவள் எங்கே வந்தாள் என்று கூவினர். அப்போதுதான் நான் எல்லாவற்றையும் உணர்ந்தேன்.”

“அத்தனை காட்சிகளையும் பலமுறை கனவில் கண்டுவிட்டேன்” என உத்தரன் தொடர்ந்தான். “கீழே கிடந்த செவ்வரளி மாலையை எடுத்து கழுத்திலணிந்துகொண்டு எரிந்தெழுந்த சிதையில் ஏறி கீசகனை அணைத்தபடி அவள் படுத்துக்கொண்டபோது என் உடல் பதறியது. கண்பார்வையே மங்கலானது. அவள் உடன்கட்டை ஏறுவதற்காகவே வந்திருந்தாள். புத்தாடை அணிந்திருந்தாள். அது கீசகர் அவளுக்கு முன்பெப்போதோ அளித்த இளநீலப் பட்டாடை. அது அவரால் அவளுக்கு முதன்முதலாக அளிக்கப்பட்டது என்றும் அதை அவள் மணவுடை என கொண்டிருந்தாள் என்றும் சொல்கிறார்கள்.”

“அவள் நீராடி ஈரத்துடன் வந்திருந்தாள். ஆனால் பட்டாடை அன்னச்சிறகு போல பொசுங்குவதை கண்டேன். அவள் உடல் துள்ளித்துள்ளிப்புரண்டது. ஆனால் கீசகர் உடலை கைகளாலும் கால்களாலும் இறுகப்பற்றியிருந்தாள். அவள் தசைகள் வெந்து உருகுவதைக் கண்டேன். கூந்தல் பொசுங்கும் வாடையை இப்ப்போதுகூட உணர்கிறேன்.” உத்தரன் தலையை உலுக்கிக் கொண்டான். “அவள் உடன்கட்டை ஏறியதை யாரோ ஒருவன் எரியேறிய பத்தினி வெல்க என்று கூவியபோதுதான் புரிந்துகொண்டேன். அதற்குள் கூட்டம் வெறிகொண்டு கூச்சலிடத் தொடங்கியது. எரியூட்டல் முடிந்து நகருக்குள் நுழைகையில் நகரமே அதை முழங்கிக்கொண்டிருந்தது.”

“நான் அப்போதெல்லாம் உங்கள் அருகேதான் இருந்தேன். இவையனைத்தையும் நானும் கண்டேன்” என்றார் தருமன். “ஆம், ஆகவேதான் நான் இதை உங்களிடம் சொல்கிறேன். என்னால் இப்போது எண்ணினால்கூட…” என உத்தரன் தொடர்ந்தான். விராடர் தேர் அருகே நின்று “செல்வோம்” என்றார். உத்தரன் “நான் எஞ்சியதை நாளை நேரில் வந்து சொல்கிறேன், குங்கரே. அதற்குள் நகருக்குள் ஒரு சுற்று உலவி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று அறிந்துவிட்டு வருகிறேன்” என்றான்.

flowerஉத்தரை தன்னுடன் நடந்த பிருகந்நளையிடம் “நான் இப்பூசனையைத் தவிர்க்கவே எண்ணினேன். பலவாறாகச் சொன்னாலும் அன்னை ஏற்கவில்லை. கீசகர் எனக்கு குருதிமுறையில் தாய்மாமன். மச்சர்களில் அது தந்தைக்கு நிகரான உறவு. அவரும் எனக்கு அவ்வாறே இருந்திருக்கிறார். இப்போது எண்ணிப்பார்க்கையில் அவர் என்னை கனிந்த விழிகளால் அன்றி நோக்கியதில்லை என்றும் என் எண்ணம் எதையும் விலக்கியதில்லை என்றும் தோன்றுகிறது.” பிருகந்நளை “இறப்பு என்பது அனல். அதிலிட்டுத் துலக்கினால் துருவும் களிம்பும் அகன்று ஒளி மீள்கிறது” என்றாள்.

உத்தரை “எதையும் தத்துவமாக ஆக்கவேண்டியதில்லை” என்றாள். பிருகந்நளை சிரித்தாள். “இன்று நகரில் கீசகர் ஒரு வீரத்திருவாக ஆகிவிட்டிருக்கிறார். இந்த நாளில் இதே பொழுதில் நூறு இடங்களிலாவது அவருக்கு அன்னக்கொடையும் குருதிக்கொடையும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றாள். “அது அவரால் இயன்றது அல்ல. அந்தப்பெண், அவள் பெயரென்ன?” உத்தரை “பிரீதை” என்றாள். “ஆம், காதல்கொண்டவள் என்று பொருள். கீசகன் பொருட்டு அவள் உடன்கட்டை ஏறியதனால் உருவான உள எழுச்சி அது.”

“அவளை நான் அறிவேன். ஒருபோதும் நல்லியல்புள்ளவளாக அவள் எனக்குத்தெரிந்ததில்லை” என்றாள். “கணவனின் நல்லியல்பும் அல்லியல்பும் பெண்டிரில் ஆடியென எதிரொளிக்கின்றன” என்றாள் பிருகந்நளை. “நல்ல பெண்ணாக இருந்திருக்கலாம். அவளுக்குள் என்னென்ன உணர்வுகள் இருந்தன என்று எவரும் அறிந்திருக்கவில்லை. இனியும் அறியப்போவதில்லை. நேற்று வரை அவள் உடல் மறைத்தது அவளை. இனி அவள் புகழ்மறைக்கும்.”

அவர்கள் அரண்மனை முகப்புக்குச் சென்றதும் சுபாஷிணி ஓடிவந்து அவர்களை எதிர்கொண்டாள். “பேரரசி மூன்றுமுறை கேட்டார்கள், இளவரசி. வந்ததும் அழைத்துவரச்சொன்னார்கள்.” உத்தரை “பூசனை தொடங்கிவிட்டதா?” என்றாள். “நடந்துகொண்டிருக்கிறது. கொடைகள் காலையிலேயே தொடங்கிவிட்டன. இரவுதான் கொட்டிப்பாடல் நிகழ்வு. கீசகரைப்பற்றி விஸ்ருதர் எழுதிய பாடலை நான்கு சூதர்கள் பாடப்போகிறார்கள்.”

“சைரந்திரி எங்கே?” என்று உத்தரை கேட்டாள். “அவர்கள் உடல்நலமில்லாமல் தன் அறைக்குள் படுத்திருக்கிறார்கள். பூசெய்கைக்கு சேடியர் அனைவரும் வந்தாகவேண்டும் என்று அரசி ஆணையிட்டார். அதை நான் சென்று சொன்னபோது வரமறுத்துவிட்டார்கள்.” உத்தரை சிரித்து “அதை அன்னையிடம் சொன்னாயா?” என்றாள். “இல்லை. ஆனால் சொல்லாமலேயே அரசி அதை அறிந்துகொண்டார்கள். அவர் முகம் சினத்தால் சுருங்குவதை உணர்ந்தேன்” என்றாள் சுபாஷிணி.

அரண்மனைக்குள் மணியோசை கேட்டது. விரிந்த கூடத்தில் அரண்மனை மகளிர் அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் சுதேஷ்ணை திரும்பிப்பார்த்து முன்நிரைக்கு வரும்படி கைகாட்டினாள். உத்தரை முன்னால்சென்று அரசியின் அருகே அமர்ந்தாள். பிருகந்நளை பின்நிரையில் அமர்ந்தாள். அவளருகே இருந்த பெண்கள் சற்று விலகிக்கொண்டார்கள். சுதேஷ்ணை அவளிடம் “பூசெய்கைக்கு வருவதென்பது அரசகடமை. இது மகளிர் மட்டுமே கூடுமிடம்” என்றாள். “அவர் பெண்ணும்தானே?” என்றாள் உத்தரை. “நீ சொல் மிஞ்சிச் சென்றுகொண்டிருக்கிறாய்” என்றாள் சுதேஷ்ணை.

“சைரந்திரி எங்கே?” என்றாள் உத்தரை. “அவள் தன்னை அரசி என எண்ணிக்கொண்டிருக்கிறாள். இவை அனைத்தும் முடிந்தபின்னர் அவளுக்கு அவள் யாரென்று கற்பிக்கிறேன்” என்றாள் சுதேஷ்ணை. “வேண்டாம், அன்னையே. அவள் கந்தர்வர்களால் காக்கப்படுபவள்” என்றாள் உத்தரை. “நோக்குக, அவளைத் தொட்டதற்காக கழுத்தொடிக்கப்பட்டார் உங்கள் உடன்பிறந்தார்.” சுதேஷ்ணை “வாயை மூடு!” என்றாள். உத்தரை புன்னகையுடன் வேறுபக்கம் நோக்கை திருப்பினாள்.

அறைநடுவே செம்பட்டு விரிக்கப்பட்ட மேடையில் கீசகனின் உடைவாளும் பிரீதையின் வெண்கலச் சிலம்பும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு வெண்மலர் மாலைசூட்டி பொரியும் வெல்லமும் படைத்திருந்தனர். எண்மங்கலங்கள் கொண்ட ஏழு தாலங்கள் முன்னால் இருந்தன. ஒரு முதிய விறலி கைமுழவை முழக்கிக்கொண்டிருந்தாள். வெளியே சங்கொலி கேட்டது. அனைவரும் எழுந்து நின்றனர். சங்கு முழக்கியபடி சேடி ஒருத்தி முன்னால் வர ஏழு சேடியர் தொடர்ந்தனர். அனைவரும் தங்கள் கைகளில் சிறிய வெண்கலக் கலங்களில் வெண்பட்டு மூடிய அன்னத்தை வைத்திருந்தனர்.

பெண்கள் குரவையிட்டனர். பூசகியாக நின்ற முதியசேடி கையசைத்து அவர்களை அழைக்க அவர்கள் அந்த அன்னக்கலங்களை கொண்டுவந்து பீடத்தின் முன் வைத்து துணிகளை விலக்கினர். மங்கல இசை எழுந்தது. முதுபூசகி “விண்புகுந்தவளே, கொண்டவனைக் காத்து குலம்காத்து கொடிவழிகாத்து நில்! அங்குநின்று இங்குள்ளோருக்கு அருள்பொழி! உன் அடிபணிகிறோம், அன்னையே” என்று கூவினாள். பெண்கள் குரவையிட்டபடியே இருந்தனர். “விண்புகுந்த வீரனே, மண்ணில் உன்பெருமைகள் வாழ்க! விண்ணில் நீ ஒளிகொள்க!”

உத்தரை சூழ்ந்து நின்ற பெண்களை பார்த்தாள். அனைவர் விழிகளிலும் நீர் நிறைந்திருந்தது. சிலர் குனிந்து விசும்பினர். அது மெய்யான கண்ணீர் என்றே அவளுக்குத் தோன்றியது. அந்தச்சூழலா பிரீதையின் உயிர்க்கொடையா எது அந்த விழிநீரை உருவாக்குகிறது? உண்மையில் விழிநீர் பெரும்பாலும் ஒருவகை உளப்பயிற்சியின் விளைவு என அவள் அறிந்திருந்தாள். பெண்கள் விழிநீர் விடும் தருணம் அது என்றால் அதை அறியாமலேயே செய்துவிடுகிறார்கள். மீண்டும் அவர்களை பார்த்தாள். முகங்கள் அனைத்தும் உருகிக்கொண்டிருந்தன. அவர்கள் நடிக்கிறார்கள் என்று தோன்றியது.

எளிய பெண்கள் தமக்கென்று எண்ணமோ உள்ளமோ இல்லாதவர்கள். நீரோடையின் நிறம்போன்று அருகிருப்பவையே அவர்கள். அதைச் சொன்னது பிருகந்நளை. அவள் திரும்பி பின்நிரையில் நின்றிருந்த அவளை நோக்கினாள். கூரியவிழிகள் ஒவ்வொன்றையும் உட்புகுந்து அறிந்து ஆனால் சற்றும் பொருட்படுத்தாமல் கடந்துசெல்பவை. அமர்ந்தெழுந்துசெல்லும் கிளைகளை குனிந்து ஒருகணம் மட்டுமே நோக்கும் பறவை. இவர்கள் நடிக்கிறார்களா? ஆம், இப்போது இவர்கள் பிரீதையாக நடிக்கிறார்கள்.

முதுவிறலி சுடராட்டு காட்டினாள். மணிகளும் சங்குகளும் முழங்கின. குரவையோசைகள் உடனிழைந்து சூழ்ந்தன. ஊடே புகுந்த அலறலோசையைக் கேட்டு அவள் திரும்பி நோக்கினாள். அனைவரும் நோக்கும் திசைக்குத் திரும்பியபோது வாயிலில் நின்றிருந்த சுபாஷிணியை கண்டாள். அவள் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கி விரிந்த குழல் தோளில் இழைய வெறித்த விழிகளுடன் உள்ளே வந்தாள். மீண்டும் ஓர் அலறல். பெண்குரல் அல்ல. காட்டுவிலங்குபோல. நெருப்பு பற்றி எரிபவளின் இறப்பொலி போல.

அனைத்து ஓசைகளும் அடங்கின. முதுவிறலி “யார் நீ? சொல்! நீ யார்?” என்றாள். மீண்டும் ஒருமுறை அலறி கைகளைத் தூக்கினாள் சுபாஷிணி. மெல்லிய கைகள் மேலும் முறுகி வடம்போலாயின. எலும்புகள் நெரியும் ஒலிகேட்டது. பற்கள் உரசிக்கொள்வதைக்கூட கேட்க முடிந்தது. கழுத்திலும் கன்னங்களிலும் நெற்றியிலும் நீலநரம்புகள் எழுந்தன. “யார் நீ? இங்கே ஏன் எழுந்தாய்? சொல்! யார் நீ?” என்றாள் முதுவிறலி. அன்னை தன் தோளைப்பற்றியபடி நடுங்குவதை உத்தரை உணர்ந்தாள்.

சுபாஷிணி “என் பெயர் கன்யாகவசன். விண்வாழும் கந்தர்வன்” என்றாள். எடைமிக்க ஆண்மகன் ஒருவனின் கடுங்குரல். “இவ்விழிமகனை சங்குநெரித்துக் கொன்றேன். அவன் உயிரை என் வாயால் உறிஞ்சிக்கொண்டேன். என் நெஞ்சில் உள்ளது அவன் ஆவி…” சுபாஷிணி உடல் மெய்ப்பு கொள்ள இருகைகளையும் நெஞ்சில் சேர்த்துக்கொண்டாள். “ஏன் கொன்றாய்? சொல்! ஏன் கொன்றாய்?” என்றாள் முதுவிறலி. “நான் கன்னியருக்குக் காவலாக அமைபவன். இவ்விழிமகன் பெண்ணொருத்தியின் பொற்பை சிறுமைசெய்தான். அவைநடுவே அவளை மிதித்தான். அவள் என்னை அழைத்தாள். அவள் ஆணையை ஏற்று இவனை துயிலில் தூக்கிக்கொண்டு மலர்க்காட்டுக்குச் சென்றேன். மண்கலத்தை என இவன் நெஞ்சுடைத்துக் கொன்றேன்.”

சுபாஷிணியின் சொற்கள் நெரிபட்டு கல்லுரசுவதென ஒலித்த பற்களின் ஒலிக்கிடையே எழுந்தன. “எங்குமிருப்பேன். பொற்புடைப் பெண்டிர் நலன் காக்க நூறுகைகளுடன் எழுவேன். ஆயிரம் நச்சுக்கூருகிர் கொண்டிருப்பேன். ஆம்!” அவள் இருகால்களின் கட்டைவிரல்களை மட்டும் ஊன்றியிருந்தாள். சேடியரில் எவரோ “தேவா! எங்களை காத்தருள்க!” என்று கூவினாள். மறுகணமே அங்கிருந்த அனைவரும் “இறையே, விண்ணவனே, நூறுகரத்தனே, காத்தருள்க!” என்று கூவத் தொடங்கினர். சிலர் கதறியழுதபடி முன்னால் வர பிறர் அவர்களை பற்றிக்கொண்டனர். உளம்தளர்ந்து சிலர் நிலத்தில் விழுந்தனர். தரையுடன் முகம் பதித்து கைகளால் அறைந்தபடி அழுதனர்.

சிலகணங்களுக்குள் அந்த அறை ஒரு பித்தர்மாளிகை என ஆகிவிட்டதை உத்தரை கண்டாள். சுற்றிச்சுற்றி நோக்கி உடல்பதற நின்றாள். பின்னர்தான் தானும் கண்ணீர்வழிய அழுதுகொண்டிருப்பதை உணர்ந்தாள். “சொல், நாங்கள் என்ன செய்யவேண்டும்? எங்கள் குலத்தோன் விண்ணேற நாங்கள் ஆற்றவேண்டியதென்ன? பலியா? கொடையா? பிழைநிகர் பூசனைகளா? நீ வேண்டுவதென்ன?” என்று முதுபூசகி கேட்டாள். “இவனை நான் நூறாண்டுகள் என் வாய்க்குள் வைத்திருப்பேன். அதன்பின்னரே வெளியே விடுவேன். அதுவரை இவனுக்கு வீரவழிபாடு நிகழக்கூடாது. நீர்க்கொடையும் அன்னப்பலியும் நிகழலாகாது.”

“இவனை விண்ணேற்றுபவள் இப்பெரும்பத்தினி. இவனுக்குரியவை அனைத்தும் அவளுக்கே அளிக்கப்படவேண்டும் இக்குடியின் சேடியருக்குக் காப்பென அவள் நின்றிருப்பாள். நெறி மீறுபவர்களை கொன்று குருதியாடுவாள்… ஆணை! ஆணை! ஆணை!” சுபாஷிணி ஓங்கி தரையில் அறைந்தாள். அந்த மெல்லிய கைகளில் இருந்து அந்த ஓசை எப்படி வந்தது என உத்தரை எண்ணினாள். ஒருக்களித்து விழுந்து கைகால்கள் இழுபட துடித்தாள் சுபாஷிணி. வாயோரம் நுரைவழிந்தது.

முதுசெவிலி குங்குமத்தையும் மலர்களையும் எடுத்து “விலகுக… விலகுக… விலகுக!” என கூவி அவள்மேல் அறைந்தாள். மெல்ல அவள் கைவிரல்கள் விடுபட்டன. கைகள் வானோக்கி மலர்ந்தன. வாய்திறந்து பற்கள் தெரிந்தன. முதுசெவிலி அவள் கன்னத்தைத் தட்டி அழைத்தாள். கண்ணிமைகளை விரித்துப்பார்த்தாள். உள்ளே கருவிழிகள் மறைந்திருந்தன. “நீர்” என்றாள் முதுசெவிலி.

இரு சேடியர் ஓடிச்சென்று கொண்டுவந்த நீர்ச்செம்பை வாங்கி சுபாஷிணியின் வாயில் வைத்தாள். அவள் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்து இருகைகளாலும் நீரை வாங்கி ஓசையெழக் குடித்தாள். “நீர்” என்று மூச்சொலித்தாள். மூன்று நிறைசெம்பு நீரை அருந்தியபின் மீண்டும் படுத்து கண்களை மூடிக்கொண்டாள். மெல்ல நீள்மூச்சொலி எழுந்தது., சிறுமுலைக்குவைகள் அசைந்தன. அவள் இமைகள் சோழிகள் போல சற்றே விரிசலிட்டு வெள்விழிகாட்டின. ஆழ்ந்த துயிலுக்குள் செல்லச்செல்ல அவள் கைகால்கள் முற்றிலும் தளர்ந்து நிலத்தில் படிந்தன.

உத்தரை தன்னைச்சூழ்ந்து சேடியர் அழுதுகொண்டு படுத்திருப்பதை நெஞ்சைப்பற்றியபடி கண்ணீருடன் நின்றிருப்பதை பார்த்தாள். விழிகள் சென்று தொட்டபோது பிருகந்நளை புன்னகை செய்தாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 73

72. ஆடியிலெழுபவன்

flowerகீசகன் அணிபுனைந்துகொண்டிருந்தபோது பிரீதை வந்திருப்பதை காவலன் அறிவித்தான். அவன் கைகாட்ட அணியரும் ஏவலரும் தலைவணங்கி வெளியே சென்றனர். உள்ளே வந்து வணங்கிய பிரீதை “அவளும் அணிபுனைந்துகொண்டிருக்கிறாள்” என்றாள். கீசகன் புன்னகையுடன் “நன்று” என்றான். “அவள் கோரிய அனைத்தும் அளிக்கப்படும் என்று மீண்டும் நான் சொன்னதாக சொல்…” பிரீதை பேசாமல் நின்றாள். “என்ன?” என்றான் கீசகன். “அவள் கோருவன எளியவை அல்ல. தாங்கள் அவற்றை உய்த்துணர்ந்திருக்கிறீர்களா என ஐயுறுகிறேன்.”

கீசகன் உரக்க நகைத்து “அவள் அத்தனை எதிர்வு காட்டியபோதே நான் அவள் கோருவன பெரியவை என புரிந்துகொண்டேன். நான் எண்ணியதைவிடவும் நுண்மையும் ஆற்றலும் கொண்டவள். மிக எளிதாக என்னை அரசரவைக்கு கொண்டுசென்று குடிநெறிமுன் சிக்க வைத்துவிட்டாள். பொறியில் கால் சிக்கிய யானைபோல நான் நின்றிருக்கையில் என்னிடம் அவள் நிலைபேசத் தொடங்குகிறாள். இன்று எனக்கு வேறுவழியே இல்லை…” என்றான்.

“உண்மையில் நான் அவளையும் பிற பெண்டிரைப்போல நுகர்ந்து வீசவே எண்ணியிருந்தேன். இங்கு எவளையும் மணமுடிக்கும் எண்ணம் எனக்கில்லை. விராடத்தின் முடிசூடியபின் முதன்மை ஷத்ரியகுலம் ஒன்றில் இருந்து மகட்கோள் என்பதே என் திட்டம். அது கிழக்கே காமரூபமோ வடக்கே திரிகர்த்தர்களோ… ஷத்ரியக் குருதியாக இருக்கவேண்டும். இல்லையேல் என் கொடிவழியினர் இந்த அரியணையில் நீடிக்க முடியாது” என்றான் கீசகன். “ஆனால் இவள் இயற்றிய இந்தப் பெருஞ்சூழ்ச்சியை காண்கையில் இவளை நான் துறக்கமுடியாதென்று உணர்கிறேன்.”

“என்னிடமில்லாதது சூழ்ச்சித்திறனே. அதனால்தான் இத்தனை காலம் இங்கே அடங்கியிருக்கிறேன். இவள் என் அரசியானால் தோளாற்றலுடன் மதியாற்றலும் இணையும். ஆகவே அந்தக் கோரிக்கையை நான் உண்மையாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்று கீசகன் சொன்னான். பிரீதை “பட்டத்தரசியாகவா?” என்றாள். “அதை அவளிடமே பேசிக்கொள்கிறேன். அவளே இந்நகரை முழுதாளும் அரசியாக இருப்பாள். நான் ஷத்ரிய அரசகுலத்தில் பெண்கொண்டு அவளை பட்டத்தரசியாக்கினாலும் அவள் இவளுக்கு அடங்கியிருப்பாள். பட்டத்தரசி பெறும் மைந்தர் விராடபுரியை ஆள்வார்கள். ஆனால் இவள் பெறும் மைந்தருக்கும் நிலம் வென்று தனியரசு அமைத்துக்கொடுப்பேன். அவர்களும் கோல்கொண்டு அரியணை அமர்வார்கள்.”

பிரீதை “இது அவள் கோரியதை விட மிகுதி” என்றாள். “ஆம், இனி சைரந்திரியிடம் சொல்சூழ்வதில் பொருளில்லை. அவள் கழுகு என பறக்கையில் நான் நிலத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் அவளிடம் திறந்து வைத்து நிற்பேன். அவளே என்னையும் கொண்டுசெல்லட்டும். இந்நாட்டை நான் வெல்வது இனி அவளுடைய வெற்றி. அவளுக்குப் பிறக்கவிருக்கும் மைந்தரின் நலன்.”

பிரீதை சில கணங்கள் பேசாமல் நின்றுவிட்டு “ஆனால் அவளை முறைப்படி மணம்கொள்வதை நாளை குடியவையில் நீங்களே அறிவிக்கவேண்டும் என்பது…” என தொடர அவன் கையமர்த்தி “அதை அவள் கோராமலிருக்கமாட்டாள். அவளுடைய சூழ்ச்சியின் உச்சம் அது. அவள் என் தனிச்சொல்லை நம்பவில்லை. அரசியலறிந்தோர் ஒருபோதும் தனிச்சொற்களை ஏற்கமாட்டார்கள். குடியவையில் அறிவித்த பின்பு நான் பின்னடி வைக்கமுடியாது. குடியவையில் நான் முதலிலேயே எழுந்து அவளை நான் முறைப்படி மணந்துவிட்டதாக அறிவித்தால் அவள் அதை ஏற்று தன் சொல்லை உரைப்பாள். சற்று தயங்கினால்கூட நான் அவளை பெண்சிறுமை செய்ததாகச் சொல்லி என்னை குடிவிலக்கு நோக்கி கொண்டுசெல்வாள்” என்றான்.

பிரீதை பெருமூச்சுடன் “அவள் யார்? இத்தனை நுண்சூழ்ச்சிகளைச் செய்ய எங்கே பயின்றாள்?” என்றாள். “அவள் எவரென ஒருபோதும் நான் கேட்கக்கூடாது, அறிந்தாலும் அதை உளம் கொள்ளக்கூடாது. அதன்பொருட்டு அவள் முடிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பது அடுத்த கோரிக்கை. அதுவே அவள் யார் என்று காட்டுகிறது. அவள் உடன்கட்டை ஏறுவதைத் தவிர்த்து தப்பி வந்த அரசகுலமகள். சிதையேற ஒப்புக்கொண்டு சந்தனமும் மாலையும் அணிந்து சுடலைவரை சென்றபின் அஞ்சித்திரும்பும் பெண்ணை அக்குடி தேடிச்சென்று கொன்றொழிப்பது வழக்கம். ஏனென்றால் தெய்வங்கள் அவளை பலியாக ஏற்றுக்கொண்டுவிட்டன. பலிவிலங்கு தப்பிச்சென்றால் தெய்வங்கள் சினம் கொள்கின்றன. அவற்றின் பழியை அக்குடி தவிர்க்கவே முடியாது” என்றான் கீசகன்.

புன்னகையுடன் “அவள் தன் குழலை முடிவதோ மலர்சூடுவதோ இல்லை, அதை நீ நோக்கியிருப்பாய்” என்றான். பிரீதை “ஆம்” என்றாள். “அது கைம்பெண்களுக்கான நெறி. அவள் என்னை மணந்த பின்னரே முடிசுற்றிக்கட்டி மலர்சூடுவாள்” என்றான் கீசகன். “அவள் இங்கே முடிசூட்டிக்கொண்டாளென்றால் உடனே அவள் எவரெனத் தெரிந்து அந்த அரசகுடி அவளை ஒப்படைக்க வேண்டுமென நம்மிடம் கோரும். போருக்கும் எழக்கூடும். நம் குடிகளில் சிலரும் அவளுக்கு எதிராகத் திரும்பலாம். ஆகவேதான் முன்னரே அதற்கும் என்னிடம் சொல்லுறுதி கோருகிறாள்.”

பிரீதை மீண்டும் நீள்மூச்சுவிட்டு “நான் சென்று அவளை அழைத்துக்கொண்டு கொடிமண்டபத்திற்கு வருகிறேன்” என்றாள். “கொடிமண்டபத்தைச் சுற்றி நான் என் காவல்படையினரை நச்சு அம்புகளுடன் நிறுத்தியிருக்கிறேன். கால்தவறிக்கூட எவரும் அங்கே வந்துவிடக்கூடாது” என்று கீசகன் சொன்னான். “ஆம், நான் சேடியரிடம் இன்று கொடிமண்டபத்தில் கன்னிப்பூசனை நிகழவிருப்பதாகவும் அதிலீடுபடும் அரசகுடி ஆண்கள் அன்றி எவரும் அங்கே செல்லக்கூடாதென்றும் சொல்லிவிட்டேன்.”

கீசகன் அவள் தோளைத்தட்டி “நன்று” என்றான். அவள் விசும்பி அழும் ஒலிகேட்டு குனிந்து நோக்கி “என்ன? ஏன் அழுகிறாய்? என்ன நிகழ்ந்தது?” என்றான். “ஒன்றுமில்லை” என்றாள் பிரீதை. “சொல், என்ன நிகழ்ந்தது? ஏன்?” என்றான் கீசகன். “நான் உங்களுக்கு அடிமையானது பதினாறாண்டுகளுக்கு முன்பு… அன்றுமுதல்…” என்று விம்மி அவள் முகத்தை மூடிக்கொண்டாள். “அதனாலென்ன? நீ என்றும் என் அணுக்கியே.” அவள் “இனி அப்படி அல்ல. என்னை அவள் அணுகவிடமாட்டாள். அவள் என்னை நடத்தும்முறை…” என்று மீண்டும் சொல்முறிய விசும்பினாள்.

கீசகன் புன்னகைத்து “இவ்வளவுதானா? இதற்காகவா?” என்றான். “நீ விழைவதென்ன? உன் இடம், அவ்வளவுதானே? நான் முடிசூடிக்கொண்டால் எல்லைப்புற கோட்டைச்சிறுநகர் ஒன்றை உனக்கென்றே அளிக்கிறேன். அங்கே நீ என் அரசியரில் ஒருத்தியாக தலைமை கொண்டு அமரலாம். மைந்தரையும் பெற்றுக்கொள்ளலாம். உன் மைந்தர் அங்கே காவல்படைத் தலைவர்களாக ஆவார்கள்.” அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள். அவள் தலை நடுங்கியது. உதடுகள் அழுகையென நெளிந்தன. “மெய்யாகவா?” என்றாள்.

“ஆம், மெய்யாக. என் குலதெய்வங்கள்மேல் ஆணையாக!” அவள் நீர் நிறைந்த கண்களால் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “நம்பு, நான் அளிக்கும் அன்புக்கொடை இது. நீ அவள் முன் வரவே வேண்டாம். எல்லையில் நான் வரும்போது மட்டும் சந்திப்போம். விலகிச் சென்றால் அவள் உன்னை மறந்தும் விடுவாள்.” பிரீதை மெல்ல இளகி இதழ்கள் வளைய கசப்புடன் சிரித்து “அவளைப்போல நான் உங்கள் சொல்லுக்கு பிறிதொரு பூட்டும் போட்டுக்கொள்ளமுடியாது” என்றாள். “இது என் சொல்… அவளுக்கு என்னைத் தெரியாது” என்றான் கீசகன்.

“எனக்குத் தெரியும்” என்று அவள் சொன்னாள். “என்ன சொல்கிறாய்?” என்றான் கீசகன் சினத்துடன். “என்ன வேண்டுமென்றாலும் ஆகுக! நீங்கள் இதை எனக்கு சொன்னீர்கள் என்பதே எனக்குப் போதும். அறியா அகவையில் உங்களுக்கு ஆட்பட்டது என் நெஞ்சம். பிறிதொன்றில்லாமல் இதுவரை வந்துவிட்டேன். என் படையலுக்கு மாற்றாக இதுவரை எதுவும் பெற்றதில்லை. இச்சொல்லையே நீங்கள் அளிக்கும் அருள் எனக் கொள்கிறேன்” என்றாள். “இதோ பார்…” என அவன் பேசத்தொடங்க அவள் தலைவணங்கி விலகிச்சென்றாள்.

மீண்டும் அணியரும் ஏவலரும் வந்து அவனை ஒருக்கத் தொடங்கினார்கள். அவன் ஆடியில் தன் உருவம் மறைந்து அங்கு ஒரு அணிச்சிலை எழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். தன் பெருந்தோள்களை நோக்குவது எப்போதுமே அவனுக்கு பிடிக்கும். தசைகளை உருட்டி உருட்டி நாளெல்லாம் நோக்கிக்கொண்டிருப்பான். ஆனால் ஆடி நோக்குவது குறைந்து நெடுநாட்களாகின்றன என அப்போது அறிந்தான். ஏன் என்றும் அவன் அறிந்திருந்தான். ஆடியில் நோக்கும்போதெல்லாம் தன் உடலின் குறைகள் அவனுக்கு தெரியத் தொடங்கின. அவன் தோள்கள் பெருத்திருந்தாலும் கழுத்துடன் இணைக்கும் தசை பொங்கி மேலெழுந்திருக்கவில்லை. நெஞ்சுக்குழிக்குக் கீழே வயிறு புடைத்து மேலே எழுந்திருந்தது. தொடைத்தசைகள் இறுக்கத்தைவிட எடையே கொண்டிருந்தன.

அக்குறைகளெல்லாம் வலவனுடன் தன் உடலை ஒப்பிட்டுக் கொள்வதனால் தெரிபவை என அவன் அறிந்த பின்பு ஆடியே கசப்பை அளித்தது. வெறியுடன் உடல்பயிலத் தொடங்கினாலும் உணவை ஒழிக்கவும் அந்தியில் மதுவிலாடாமலிருக்கவும் அவனால் இயலவில்லை. “மதுவுடன் நீங்கள் உண்ணும் இனிப்புகளும் கொழுப்புகளுமே உங்களை எடைகொள்ளச் செய்கின்றன, படைத்தலைவரே” என்றார் படைப்பயிற்சியாளரான சிம்மர். “ஊனுணவை மட்டும் உண்ணுங்கள். வேகவைத்த ஊன் எத்தனை உண்டாலும் உடல் பெருக்காது.” அவன் ஆம் என தலையசைத்தாலும் ஒவ்வொருநாளும் அவன் ஆணையில் நிற்காமல் நழுவிச் சென்றுகொண்டிருந்தது.

ஆடிப்பாவையை திரும்பித் திரும்பி பார்த்தான். அருகே நின்றிருந்த சமையன் “யட்சர் போலிருக்கிறீர்கள், படைத்தலைவரே” என்றான். “அணி முடிந்தபின் முகமனும் உரைக்கவேண்டும்போலும்” என்றான் கீசகன் நச்சு கலந்த சிரிப்புடன். “இல்லை, மெய்யாகவே சொல்கிறேன். இத்தனை பேருடல் மானுடருக்கு அரிதாகவே அமைந்துள்ளது.” கீசகன் “அரிதாக என்றால்?” என்றான். சமையன் “மிகச் சிலருக்கு” என்றான். “எவருக்கு?” என்றான் கீசகன். “நான் நேரிலறிந்தவர்கள் மகதமன்னர் ஜராசந்தரும் வங்கரான பகதத்தரும் மட்டுமே.” கீசகன் “பிற எவரெல்லாம்?” என்றான். சமையன் தயங்கினான். “சொல்” என்றான் கீசகன்.

“நீங்கள் அறிந்தவர்கள்தான் அனைவரும். அஸ்தினபுரியின் பீமசேனர்.” கீசகன் தன் உள்ளே ஒரு முரசதிர்வை கேட்டான். “ம்” என்றான். “அவர் குடியில் முன்னுருவென இருப்பவர் சிபிநாட்டு பால்ஹிகர்” என்றான் சமையன். “சொல்” என்றான் கீசகன். “சூதமன்னர் கர்ணனும் பெருந்தோளன் என்கிறார்கள்.” கீசகன் “ம்” என்றான். நீண்ட அமைதி ஒலிக்கவே திரும்பி நோக்கி “சொல்” என்றான். சமையன் “இது சமையனின் நாவால் சொல்லப்படுவது. அடுமனையாளன் வலவன்” என்றான். “ம்” என்றான் கீசகன். பின்னர் அவன் செல்லலாம் என கைகாட்டினான். தனிமையில் தன் உருவை ஆடியில் நோக்கியபடி நின்றான். ஆடிப்பாவை அவனை நோக்கிக்கொண்டிருந்தது, குழப்பத்துடன் எவரிடமென்றில்லாத சினத்துடன். ஒருகணம் அவன் ஓர் அச்சத்தை உணர்ந்தான். அவன் அங்கே இல்லை, ஆடிப்பாவை மட்டுமே இருந்தது.

பிரீதை வந்து வாயிலில் நின்றாள். அவ்வசைவு அவனை மீண்டும் திடுக்கிடச் செய்தது. “அவள் கொடிமண்டபத்திற்கு சென்றுவிட்டாள்” என்றாள். “நான் சொன்னதுபோலவே வெண்நீலப் பட்டாடைதானே?” என்றான் கீசகன். “ஆம், படைத்தலைவரே” என்றாள் பிரீதை. “நான் கொடுத்தனுப்பிய முத்தாரமும் மணிக்குழையும்?” என்று அவன் கேட்டான். அவள் எரிச்சலை மறைக்காமல் “நீங்கள் அனுப்பிய அணிச்சேடியரே அவளை ஒருக்கினர். நான் கைபற்றி கொண்டுசென்று கொடிமண்டபத்தில் அமரவைத்துவிட்டு வந்தேன். ஆணைப்படி அகல்விளக்கை எடுத்துச் சுழற்றி காவலருக்கு குறியளித்தேன். இனி எவரும் சோலைக்குள் நுழைய முடியாது” என்றாள்.

“நன்று” என்றான் கீசகன். அவள் தோளைத் தட்டி “இதன்பொருட்டு நான் உன்னிடம் மேலும் கனிவு கொள்கிறேன்” என்றான். அவள் மிக மெல்லிய ஓர் அசைவால் அவன் கையை விலக்கினாள். உண்மையில் அவ்வசைவு அவள் உடலில் வெளிப்படவே இல்லை. அவளுக்குள் எண்ணமென்றே நிகழ்ந்தது. ஆனால் அவன் கையில் அது தெரிந்தது. அவள் முகம் கூட மாறவில்லை என்பதை அவன் விந்தையுடன் எண்ணிக்கொண்டான். “நீ இங்கிரு… நான் காலைக்குள் வருவேன்” என்றபின் வெளியே சென்றான். அவள் செல்வாழ்த்தென ஏதும் சொல்லவில்லை என்பதை இடைநாழியில் நடக்கையில் உணர்ந்தான்.

flowerஇடைநாழி மிக நீண்டு செல்வதாக அவனுக்குத் தோன்றியது. அவன் கால்குறடுகளின் ஒலி சுவர்களிலும் தூண்களிலும் எதிரொலித்தது. நகரமெங்கும் பந்தங்களின் செவ்வொளி எழுந்து புழுதியிலும் புகையிலும் பட்டு ஒளிமீள்வு கொள்ள அந்தியென மாயம் காட்டியது வானம். அவ்வப்போது கொம்புகளும் முரசுகளும் முழங்க கூடவே மக்களின் பெருந்திரள் கூச்சல் எழுந்து திசைகளை அறைந்து ஒலியெதிர்வுகளை திரட்டிக்கொண்டது. கூத்தம்பலங்கள் அனைத்திலுமிருந்து இசைச்சிதறல்கள் சாளரங்களினூடாக செவ்வொளியுடன் வெளிவந்து இருளில் நீண்டுநின்று அதிர்ந்தன.

அவன் மலர்க்காட்டுக்குச் செல்லும் வழியில் நின்றிருந்த கவச உடையணிந்த காவலனை நோக்கி மெல்ல தலையசைத்துவிட்டு கடந்து சென்றான். வேறெங்கும் காவலர் கண்களுக்குப் படவில்லை. ஆனால் தூண்களுக்குப் பின்னாலும் கூரைமடிப்புகளிலும் மரத்தழைப்புக்கு உள்ளேயும் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என அவன் நுண்புலன் காட்டியது. மலர்க்காட்டுக்குள் ஒளியேதும் இருக்கவில்லை. அதுவரை விழிகளை நிறைத்திருந்த ஒளி மறைந்தபோது அனைத்தும் உருவிலியிருளாகத் தெரிந்தன. கண்களை விழித்து காலடிகளை மட்டும் நோக்கியபடி நடந்தான்.

மெல்ல விழிகள் புறஒளியை மறந்து உள்ளிருந்து எண்ணங்களின் ஒளியை கொண்டுவந்து நிறைத்துக்கொண்டன. வெளியே இருள்வடிவெனத் தெரிந்த ஒவ்வொன்றின் மேலும் நினைவுகளிலிருந்து உருவங்களைத் தேடி எடுத்து கொண்டுவந்து பொருத்தி காட்சியுலகொன்றை உருவாக்கிக் கொண்டன. அதில் அவன் கனவிலென நடந்தான். அது கனவென்று தோன்றுவதற்கு அந்த இருள்தான் ஏதுவா என எண்ணிக்கொண்டான். கூர்ந்து நோக்கும்தோறும் காட்சிகள் மங்கலாயின. ஆனால் கால்களும் கைகளும் அனைத்தையும் அறிந்திருந்தன.

மரமல்லிகளின் வெண்மலர்கள் இருட்டு பூத்தது என செண்டாகத் தெரிந்தன. வானொளியின் விளிம்பென இலைக்கூர்மைகள். அருகிருந்த இலைகள் மறைந்திருக்க அவற்றின் ஒளிமிளிர்வுகள் மட்டும் தெரிந்தன. இந்த இரவை நான் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என எண்ணிக்கொண்டான். இவ்விரவுக்கென சற்றுமுன் எழுந்தவன் நான். ஒருபோதும் அறியாத ஒருவன். ஆயிரம் செவிகளும் ஆயிரம் கண்களும் ஆயிரம் மூக்குகளும் கொண்டவன். உடலே புலனென்றானவன். சிதறாத சீருளம் கொண்டவன். இது நான் அல்ல. ஆடியிலிருந்து எழுந்த யட்சன். அங்கே பாவை மறைந்த ஆடியை நோக்கியபடி நான் திகைத்து அமர்ந்திருக்கிறேன்.

அவன் தொலைவிலேயே கொடிமண்டபத்தில் அமர்ந்திருந்த சைரந்திரியை பார்த்துவிட்டான். தன் நெஞ்சின் ஓசையைக் கேட்டபடி அவன் அசைவிலாது நின்றான். ஒருகணத்தில் ஆவியாகி மறைந்து மீண்டும் படிந்து குளிர்ந்து ஈரமும் உயிர்ப்புமாக உடல்சூடியதுபோல் உணர்ந்தான். பெருமூச்சுவிட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். “பொறு, பொறு… இக்கணத்தில் இரு” என தன் உள்ளத்தை திரட்டிக்கொண்டான். ஏன் இப்படி பதறுகிறேன்? இவள்மேல் இத்தனை காமம் கொண்டிருக்கிறேனா? இது காமம்தானா? எனில் இதுவரை கொண்டது காமமே அல்ல. இது பிறிதொன்று. விடாய்போல பசிபோல உடல் தன்னை நிறைத்துக்கொள்வது. உடலென தன்னை உணரும் உள்ளம் கொள்ளும் எழுச்சி இது. இது நான் முழுமைகொள்வது. என் இடைவெளிகள் அனைத்தும் நிறைவது.

அவன் கீழே உதிர்ந்துகிடந்த மலர்களைக் கண்டான். அவற்றை குறடுகளால் மிதிக்கக் கூசி அவற்றை கழற்றிவிட்டு நுனிக்கால் எடுத்துவைத்து கொடிமண்டபம் நோக்கி சென்றான். மலர்கள் பட்டபோது உள்ளங்கால்கள் சிலிர்ப்படைந்தன. உடலைத் தொட்ட இலைநுனிகள் பூனைமூக்குகள்போல நாய்நாக்குகள்போல விதிர்ப்படையச் செய்தன. இத்தனை நுண்ணுணர்வு கொண்டுவிட்டேனா? இப்போது ஒரு சிறுதென்றல் என்னைத் தூக்கி கொண்டுசெல்லக்கூடும். முகிலென நான் உருவழிந்து கீற்றுகளென்றாகி இந்த மரங்களிடையே பரவக்கூடும். இலைகளில் தண்பனிப்பாக பரவிவிடக்கூடும்.

கொடிமண்டபத்தின் படிகளில் ஏறி அவன் அவளை நோக்கியபடி நின்றான். வெண்நீல ஆடையை இருளில் தெரிவதற்காகவே அவன் தெரிவு செய்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். வெண்முத்தாரமும் வைரக் குழைகளும் ஆடையுடன் இணைந்து இருளில் எழுந்து தெரிந்தன. ஆடையால் முகம் மறைத்து ஒருக்களித்து மரப்பீடத்தில் அமர்ந்திருந்தாள். கொடிமுல்லை அவளருகே நீண்டிருக்க ஒரு கிளையை கையால் பற்றியிருந்தாள். அவன் அதுவரை தன்னுள் பெருகிய சொற்கள் எங்கு சென்றன என்று திகைத்தான். மூச்சு மட்டும் குளிராக உடலை மெய்ப்புகொள்ளச் செய்தபடி வந்துகொண்டிருந்தது.

பேசவேண்டும், பேசியாகவேண்டும். பேசு பேசு பேசு. அவன் “தேவி” என்றான். ஒலி எழவில்லை என உணர்ந்து மீண்டும் அழைத்தான். அது தொண்டையொலியாக வெளிப்பட்டது. “தேவி” என அழைத்தபோது அவ்வொலி அவனை திடுக்கிடச் செய்தது. அவள் உடலும் மெல்லசைவு கொண்டது. குரல் தாழ “நான்…” என்றபின் “என் வாழ்க்கையில் முழுமை என ஒன்று உண்டெனில் அது இன்று நிகழும்” என்றான். “ஆம்” என்றாள் அவள். “உன்னை பார்ப்பதற்குள்ளாகவே நீ என்னவள் என உணர்ந்துவிட்டேன். நீ அரண்மனைக்குள் நுழைந்தபோதே உன்னைப்பற்றி கோட்டைக்காவலர் என்னிடம் சொன்னார்கள். நீ என்னைத் தேடி வருவதாக உன் அணுக்கன் ஒருவன் கோட்டைமுகப்பில் சொன்னான் என அறிந்தேன். அப்போதே உன் உள்ளத்தையும் அறிந்துகொண்டேன்.”

அவள் “ம்” என்றாள். “ஆனால் நாம் இணைய இத்தனை காலமாகியிருக்கிறது. இந்த விளையாட்டு சற்று கடுமையானதே. ஆனாலும் இது நன்று. நம் இருவரின் மதிப்பையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டது இதனால்தான். நான் நீயில்லாமல் ஓயமாட்டேன் என்றும் நீ உன் இடத்திலன்றி அமையமாட்டாய் என்றும் தெளிந்தது இப்போது” என்றான் கீசகன். “ஏன் பேசாமலிருக்கிறாய்?” அவள் நீள்மூச்செறிந்தாள். “உன்னை பிரீதை இங்கு கொண்டுவந்துவிட்டாள் என அறிந்த பின்னரே இது மெய்யாகவே நிகழ்கிறது என என் உள்ளம் ஏற்றுக்கொண்டது.”

அவள் ஒன்றும் சொல்லவில்லை. “அவளைப் பற்றிய பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை அல்லவா?” என்றான் கீசகன். “நான் உன்னை வென்றாகவேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தவள் அவள்தான். எளிய வீட்டுவிலங்கு போன்றவள். காலடியை சுற்றி வருபவள். அவளை நீ ஒரு பொருட்டாகவே எண்ணவேண்டியதில்லை. அவள் எனக்கு தன்னை படைத்திருக்கிறாள். அதனூடாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறாள். ஆகவே சற்று பொறாமை கொள்கிறாள். அவளை நீக்கிவிடுகிறேன். நீ ஆணையிட்டால் இவ்வுலகிலிருந்தே.” அவன் நகைத்து “மலைத்தெய்வங்கள் முதற்பலியென பூசகனையே கொள்கின்றன என்பார்கள்” என்றான். அவளும் மெல்ல நகைத்தாள்.

“பிறகென்ன?” என்றபடி கீசகன் அருகே சென்றான். “உன் கோரிக்கைகளுடன் பிரீதை வந்தபோது நான் ஒருகணம் வியந்தேன். அதை நம்பாமல் குழம்பினேன். அவற்றிலிருந்த உள்மடிப்புகளை விரிக்க விரிக்க அனைத்தும் தெளிவாகியது. நான் விரித்த வலையில் நீ சிக்கவில்லை. நீ விரித்த வலையில்தான் நான் சிக்கியிருக்கிறேன். ஆனால் மிக மகிழ்ச்சியுடன் இதில் இருக்கிறேன். இந்த வலையிலேயே என்னை வைத்திரு. இதுவே என் அரியணை, அரண்மனை” என்றான் கீசகன். “எனக்கே விந்தையாக இருக்கிறது. நான் இத்தனை அழகாகப் பேசுவேன் என எண்ணியதே இல்லை. உன் அறிவில் சில திவலைகள் எனக்கும் வந்துவிட்டனபோலும்.”

அவள் கூந்தல் தரைவரை வழிந்து கிடந்தது. அவன் மெல்ல அதை தொட்டான். “உன்னிடம் நான் பித்து கொண்டதே இக்கூந்தலழகைக் கண்டுதான். இதை கவிதையாக்குக என என் அவைச்சூதரிடம் சொன்னேன். தேவகன்னி ஏறிய கருமுகில் என்றான் ஒருவன். பொருந்தவில்லை என்றேன். எரிதழல் கொற்றவை ஏறிய மதகரி என்றான் இன்னொருவன். ஆம் என்று கூறி அவனுக்கு ஏழு கழஞ்சு பொன் கொடுத்தேன். நான் பொன் கொடுப்பதே அரிது. உனக்காகக் கொடுத்தது அது.”

அவன் அக்குழல்கற்றைகளை தன் முகத்தில் வைத்துக்கொண்டான். “செண்பக மணம்!” என்றான். “உன் குழலுக்கு வேறெந்த மலரும் பொருந்தாது. மற்ற மலர்மணங்களில் எல்லாம் மண்ணும் நீரும் காற்றுமே உள்ளன. செண்பகத்தில் மட்டும் அனல்” என்றான். “அல்லது நாகலிங்கம். அதிலுள்ளது நஞ்சு.” மெல்ல சிரித்து “என்ன பேசிக்கொண்டிருக்கிறேன்? பித்தன்போல. நீ ஒரு சொல்லும் சொல்லவில்லை” என்றான். அவள் நீள்மூச்செறிந்தாள்.

“உன் முன் என்னை முழுமையாகத் திறந்துவைக்கிறேன். உன் உடல்கண்டு காமம் கொண்டேன். பின் உன்னை வெல்லவேண்டும் என விழைந்தேன். உன் சூழ்திறன் கண்டபின் நீ உடனிருக்க வேண்டுமென கருதினேன். ஆனால் இந்த மலர்ச்சோலைக்குள் நுழைந்தபோது அவையெல்லாம் பொய் என உணர்ந்தேன். நான் உன்னால் மட்டுமே நிறைவடைய முடியும். அவ்வளவுதான்” என்றான் கீசகன். “என் கனவுகளில் நீயே நிறைந்திருக்கிறாய்.” அவள் “ம்?” என்றாள். அவன் ஒரு கணம் தயங்கி “ஆம், உன்னளவே அந்த அடுமனையாளனும் என்னுள் இருக்கிறான்” என்றான்.

அவ்வெண்ணத்தால் அதுவரை இருந்த அத்தனை உணர்வெழுச்சிகளையும் இழந்து எரிச்சல் கொண்டான். “ஏன் நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம்?” என்றபடி அவள் தோளில் கைவைத்தான். மீண்டும் அவன் உள்ளம் கிளர்ந்தெழுந்தது. “உன்னிடம் நான் வெறிகொள்வதே இப்பெருந்தோள்களினால்தான்” என்றபடி அவளை வளைத்துக்கொண்டான். அக்கணமே அவன் அனைத்தையும் உணர்ந்தான்.

flowerமுதல்புள் ஒலி எழுவதுவரை பிரீதை கீசகனின் அறையில் காத்திருந்தாள். புள்ளொலி மீண்டும் ஒலித்ததும் எழுந்து சென்று வெளியே பார்த்தாள். விடிவெள்ளியைக் கண்டதும் அவள் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அறியா உள்ளுணர்வால் அவள் கீசகன் உயிருடனில்லை என்பதை உணர்ந்தாள். அவ்வெண்ணத்தை அது எழுந்ததுமே தள்ளி விலக்கினாள். மீண்டும் அறைக்குள் வந்து கைகளால் முகவாயைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள்.

அவ்விரவில் பலமுறை விழித்து விழித்து அமர்ந்து அவள் கண்ட கனவுகளை எண்ணித் தொகுக்க முயன்றாள். எப்போதும் அவள் அடையும் கனவு மீண்டும் மீண்டும் வந்தது. கீசகனுடன் அவள் புணரும்போது அவன் கைகள் இரு பெரும்பாம்புகளென்றாகி அவளைச் சுற்றி இறுக்கி நெரிக்கத் தொடங்கும். நதிச்சுழியில் என அவள் மூழ்கி மூச்சுத்திணறி இறுதிக் கணத்தில் விழித்துக்கொள்வாள். அன்று அக்கனவில் அவள் கீசகனின் விழிகளை தெளிவாகக் கண்டாள். ஒருகணம், அல்லது அதற்கும் குறைவு. அவளை உடல்விதிர்க்கச் செய்தது அந்த நோக்கு.

அதை மீண்டும் நினைவிலோட்டியபோது அதுவரை இருந்த அத்தனை திரைகளையும் விலக்கி அவனை அவள் நன்கறிந்தாள். அவ்வறிதல் அவளை தளரச்செய்தது. நீள்மூச்சுடன் உடலை அசைத்து அசைத்து அமர்ந்தாள். பெரிய பொருளொன்றை மூட்டைக்குள் செலுத்துவதுபோல அவ்வசைவால் அந்த அறிதலை தன்னுள் அமைத்துக்கொள்ள முயன்றாள். பின்னர் மெல்லிய நிறைவும் அதன் விளைவான இன்மையுணர்வும் ஏற்பட்டது. அனைத்துப் பதற்றங்களும் மறைய உடல் எடையிழக்க அவள் ஆழ்ந்து துயிலத் தொடங்கினாள்.

பின்னர் விழித்துக்கொண்டபோது அறைக்குள் காலைவெயிலின் வெளிச்சம் நிறைந்திருப்பதை கண்டாள். திடுக்கிட்டு எழுந்து ஆடையை அள்ளிப்பற்றியபடி சாளரத்தை பார்த்தாள். வெளியே ஓடிச்சென்று காவலனிடம் “படைத்தலைவர் எங்கே?” என்றாள். அவன் “அறியேன்” என்றான். “இன்னும் அவர் வரவில்லையா?” என்றாள். அவனிடம் கேட்பதில் பொருளில்லை என உணர்ந்து இடைநாழி வழியாக ஓடினாள். கீசகனுக்கு அணுக்கமான எவரிடமாவது கேட்கவேண்டும். ஆனால் அவனுக்கு அணுக்கமாக எவரும் இல்லை என்று உடனே தெரிந்தது.

மலர்ச்சோலை முகப்பில் நின்றிருந்த காவலனிடம் “படைத்தலைவர் எப்போது வெளியே சென்றார்?” என்றாள். “வெளியே செல்லவில்லை” என்றான் அவன். “வேறு எவர் வெளியே சென்றார்கள்?” என்றாள். “எவரும் செல்லவில்லை” என்றான். அவள் உள்ளே சென்றபோது மரங்களுக்கிடையே இருந்து மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டது. அவள் தன் கணையாழியை காட்டியதும் புதருக்குள் இருந்து வெளிவந்த கரவுக்காவலன் தலைவணங்கினான். “படைத்தலைவர் எங்கே?” என்றாள். “உள்ளே இருக்கிறார்” என அவன் கையை காட்டினான்.

அவள் கால்கள் தடுமாற உள்ளே ஓடினாள். தொலைவிலேயே கொடிமண்டபத்தில் கீசகன் விழுந்து கிடப்பதை அவள் கண்டுவிட்டாள். அருகே செல்லச் செல்ல அவன் சடலமென்றாகிக்கொண்டே வந்தான். அருகணைந்து நின்றபோது அவள் நெஞ்சை பற்றிக்கொண்டாள். கீசகனின் கழுத்து முறிந்து தலை பின்பக்கமாகத் திரும்பியிருந்தது. நெஞ்சில் அறைந்து கதறியழுதபடி அவள் அவன் மேல் விழுந்தாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 72

71. அறக்கூற்று

flowerதிரௌபதி சுதேஷ்ணையின் அரண்மனை முகப்புக்கு வந்தபோது அவளை அதுவரை அழைத்து வந்த உத்தரையின் சேடி சாந்தை அவள் கைகளை பற்றிக்கொண்டு “அஞ்சவேண்டாம். இவ்வரண்மனையில் இளவரசி மட்டும் வேறானவள். என்றோ ஒருநாள் பாரதவர்ஷத்தை தழுவியமையும் பேரரசொன்றுக்கு தலைவியாக மணிமுடி சூடி அவள் அமர்வாள் என்று நிமித்திகர்கள் சொன்னது வீணல்ல. அவள் அருள் உன்னுடன் உள்ளபோது இங்கு உனக்கு எதிரிகள் எவருமில்லை” என்றாள்.

திரௌபதி ஆம் என தலையசைத்தாள். “அவள் அரசாற்றல் அற்றவள் என்று நீ எண்ணலாம். ஆனால் தான் நம்பும் அறத்தின்பொருட்டு பிற அனைத்தையும் இழக்க சித்தமானவர்கள்தான் பேரரசர்களும் பேரரசிகளும் ஆகிறார்கள். இளவரசி உத்தரை அத்தகையவள். அதை இங்குள்ளோர் அனைவரும் அறிவர். ஆகவே அவள் சொல்லுக்கு அப்பால் இந்நகரத்தில் மறுசொல் ஏதுமில்லை. அதை இங்கு அரசுசூழ்வோர் உணர்ந்துள்ளனர். அதை மறைக்கவே அவளை எளிய விளையாட்டுப்பெண் என்று தங்களுக்கும் பிறருக்கும் காட்டிக்கொள்கிறார்கள்” என்றாள் சாந்தை.

“கீசகர் இன்று அரசர் முன்னிருந்து அடிபட்ட நாகம் என தலைகுனிந்து சென்றது ஏன் என்று எண்ணுகிறாய்? இளவரசியின் சொல் என்று அறிந்தபின் விராடநகரியின் எந்தக் குடிமகனும் எப்படைவீரனும் மாற்று ஒன்றை எண்ணமாட்டான்” என்றாள் சாந்தை. “உனக்கு இந்த நகரின் காவல் தெய்வமே அடைக்கலம் அளித்ததென்று எண்ணிக்கொள். அஞ்சாதே.”

திரௌபதி புன்னகையுடன் “ஆம், அரசரின் அவையில் கொற்றவை சிம்மம் மேல் எழுந்ததுபோல இளவரசி வந்து நின்றபோது அதை நான் நன்குணர்ந்தேன். அவர் அப்போது நடனம் கற்று மலர்க்காடுகளில் விளையாடித் திரியும் எளிய பெண்ணல்ல, ஒரு சொல்லால் பெரும்படைகளை கிளர்ந்தெழ வைக்கும் பேரரசி” என்றாள்.

சாந்தை முகம் மலர்ந்து “ஆம், அவள் அனல்பற்றி கொழுந்தாடி எழுவதை முன்னரும் நான் கண்டிருக்கிறேன். தேவி, இளம்மகளாக அவளை என் தோள் சுமந்து அலைந்திருக்கிறேன். என் நெஞ்சின்மேல் குப்புறப் படுக்கவைத்து முதுகில் மெல்ல தட்டி உறக்குவேன். மெல்லிய காதை மெல்ல பற்றி இழுத்துக்கொண்டிருந்தால் அப்போதே விழி சொக்கி துயிலத் தொடங்கிவிடுவாள். இப்பிறவியில் நான் அடைந்த பெரும் பேறென்பது அவளுக்கு செவிலித் தாயாக அமைந்தது” என்றாள்.

திரௌபதி அவள் கைகளைப்பற்றி “என்றும் அவர் நினைவில் நீங்கள் வாழ்வீர்கள், செவிலியே” என்றாள். “ஆம், அவ்வப்போது நான் அதை எண்ணிக்கொள்கிறேன். பேரரசியரின் பெயர்கள் காலத்தில் அழியாமல் வாழும். எங்களைப்போன்ற எளிய சேடியரும் செவிலியரும் மறக்கப்படுவார்கள். ஆனால் தெய்வங்கள் அறியுமல்லவா, எங்கள் கனவுகளும் குருதியும்தான் அவர்களை உருவாக்கியதென்று” அவள் குரல் இடறியது. என்ன சொல்வதென்று அறியாமல் கைகளைப்பற்றி திரௌபதி அழுத்தினாள்.

“இனிமேல்தான் நீ உறுதி கொள்ளவேண்டும்” என்றாள் சாந்தை. “இந்த விராடபுரியைப்பற்றி நீ இன்னமும் நன்கு அறிந்திருக்க மாட்டாய். மகாகீசகரின் காலத்தில் நிஷாதர்கள் குடிமன்று கூடி அரசனைத் தேர்ந்தெடுத்து இக்கொடிவழியை அமைத்தனர். இத்தனை தலைமுறைகள் ஆகியும் கூட இவர்களின் குருதி இன்னமும் எளிய நிஷாதர்களுக்குரியதே. நிஷதகுடியின் குலநெறிகள் எவற்றையும் இவர்கள் எந்நிலையிலும் மீறமாட்டார்கள்.”

“நாளை பின்னுச்சிப் பொழுதில் குடியவை கூடும்போது கீசகர் அவை முன் வந்து நின்றாகவேண்டும். அரசமன்றில் பெண்ணை சிறுமை செய்ததும் காலால் எட்டி உதைத்ததும் குழல் பற்றி இழுத்ததும் பெரும்பிழை. ஒருபோதும் குடிக்கோல் கொண்டு மன்று நின்றிருக்கும் குலமூத்தார் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை கீசகர் நன்கறிவார். ஆகவே உன்னை அச்சுறுத்துவார். பொன்னும் பொருளும் அரசநிலையும் அளிப்பேன் என்று ஆசை காட்டலாம். சூழ்ந்திருப்போரின் விழிநீரை கொண்டுவந்து காட்டி உளம் உருகச் செய்யலாம். நீ இரங்கலாகாது.”

“விழைவையும் அச்சத்தையும் எதிர்நிற்பது மிகக் கடினம் என்றறிவேன். அனலை காத்துக்கொள்வது மேலும் கடினம். பெண்டிர் உள்ளியல்பிலேயே அன்னையர். அக்கணத்தில் எழுந்த பெரும் சினத்தால் எதைச்சொல்லியிருந்தாலும் மிக விரைவிலேயே நாம் பொறுத்தருளத் தொடங்குவோம். நேரில் வந்து நின்று மைந்தனைப்போல் நடித்தால் அக்கணமே கனிந்து அவனுக்கு நற்சொல் உரைப்போம். எப்பிழையையும் பொறுத்துக்கொள்ளும் பெண்களின் கனிவின் மேல்தான் ஆண்களின் ஆணவமும் அடங்காமையும் அறப்பிழையும் நின்று கொண்டிருக்கின்றன.”

“அறிக தேவி, இன்று நீ உனக்காக நெறி கோரவில்லை. இவ்வரண்மனையில் வாழும் அத்தனை சேடியர் பொருட்டும் உன் சொல் அங்கு எழுந்திருக்கிறது. எங்கள் அத்தனை பேரின் கண்ணீரையும் சினத்தையும் படைக்கலமென கைக்கொண்டு நீ நாளை அவையில் எழுந்து நிற்கவேண்டும். எத்தனை பெண்கள் இவ்வரண்மனையின் இருண்ட அகத்தளங்களில் ஒடுங்கி கண்ணீர் உகுத்தார்கள்! எத்தனை பெண்கள் மண்ணுக்குள் மடியும் புழுக்களைப்போல இருந்ததே அறியாமல் அழிந்தார்கள்!”

“அவர்களும் குரலெழுப்பியிருப்பார்கள். இந்த இருண்ட அறைகளில் அவை காற்றலைகளாக எழுந்ததுமே மறைந்திருக்கும். அவையில் எழுந்து நெறி கோருவதற்கான சொல்லோ துணிவோ அவர்களுக்கு இருந்ததில்லை. தேவி, நாளை குல அவையில் பெண்ணை சிறுமை செய்ததன்பொருட்டு கீசகர் தண்டிக்கப்படுவார் என்றால் விராடபுரியில் அல்ல பாரதவர்ஷத்திலேயே பல்லாயிரம் சேடியர் உன்னை குலதெய்வமெனக் கருதுவார்கள். உனது தழல் தாழாதிருக்கட்டும். எங்களுக்காக.”

திரௌபதி மேலும் ஏதோ சொல்வதற்குள் அவள் கைகளை இறுகப்பற்றிய பின் சாந்தை சென்று மறைந்தாள். அவள் கண்ணீரை முகம்பொத்தி அழுத்தியபடி தோள்குறுக்கிக்கொண்டு சிற்றடி வைத்து ஓடுவதை திரௌபதி நோக்கி நின்றாள்.

flowerஅரண்மனைக்குள் திரௌபதி நுழைந்ததுமே சுதேஷ்ணையின் சேடி பூர்ணை அவளைத் தேடி வந்தாள். “அரசி உங்களை பார்க்க வேண்டுமென்றார். உடனே வரும்படி ஆணையிட்டார்” என்றாள். திரௌபதி “நான் சற்று ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனக்கு உடல் நலமில்லையென்று அவர்களிடம் சொல்” என்று உள்ளே சென்றாள். பூர்ணை திகைப்புடன் பின்னால் வந்து “ஆனால் அரசியின் ஆணை…” என தொடங்க “இப்போது வரவியலாதென்று சென்று சொல்” என்றாள் திரௌபதி.

அறை நோக்கி அவள் நடக்கையில் அவளுக்குப் பின்னால் ஓடிவந்த சுபாஷிணி “என்ன நிகழ்ந்தது, தேவி? இங்கே அகத்தளத்தில் ஆளுக்கொன்றாக பேசிக்கொள்கிறார்கள். உங்களை கீசகர் குழல் பற்றி தன் மஞ்சத்தறைக்கு கொண்டு சென்றார் என்றார்கள்” என்றாள். திரௌபதி “கொண்டு செல்லவில்லை” என்று சொன்னாள். சுபாஷிணி மூச்சிரைக்க முகம் சிறுக்க “உங்கள் கந்தர்வர்களை அழைக்கவேண்டியதுதானே? அவ்விழிமகனின் நெஞ்சைப் பிளந்து குருதி பருகி அவர்கள் கூத்தாட வேண்டாமா?” என்றாள்.

திரௌபதி புன்னகையுடன் “அதுவே நிகழவிருக்கிறது” என்றாள். சுபாஷிணி அவள் தோளைத் தொட்டு “மெய்யாகவா? மெய்யாகவா?” என்றாள். “எப்போது?” என்று குரல் தாழ கேட்டாள். “இன்றிரவு” என்றாள் திரௌபதி. “இன்றிரவா?” என்று அவள் மலைத்து நின்றுவிட்டாள். “ஆம், இன்றிரவு” என்று சொல்லி திரௌபதி தன் அறைக்குள் சென்றாள்.

சுபாஷிணி அவள் பின்னால் ஓடிவந்து “உங்கள் உடலில் காயங்கள் இருக்கின்றன, தேவி. மருத்துவச்சியை அழைத்து வரவா?” என்றாள். “ஆம், நான் நீராடி மாற்றுடை அணியவும் வேண்டும்” என்றாள் திரௌபதி. சுபாஷிணி “மெய்யாகவா சொன்னீர்கள், தேவி? இன்றிரவு அவன் கொல்லப்படுவானா?” என்றாள். அவள் விழிகளை நோக்கி “ஐயமே வேண்டியதில்லை, அவன் நெஞ்சு பிளக்கப்படும்” என்றாள் திரௌபதி.

மாற்றாடையை எடுத்துக்கொண்டு அவள் நீராட்டறைக்குச் சென்றபோது சுபாஷிணியும் பின்னால் ஓடிவந்தாள். “என்னால் நிற்க முடியவில்லை. கால்கள் பதறிக்கொண்டே இருக்கின்றன” என்றாள். திரௌபதி அவள் தோளை தட்டினாள். “இது நிகழ்ந்தாகவேண்டும், தேவி. நிகழவில்லையென்றால் என்னைப்போன்றவர்கள் உயிர் வாழவே வேண்டியதில்லை என்று தோன்றிவிடும். உங்களாலேயே வெல்லமுடியாத இக்களத்தில் வெறும் புழுக்கள்போல நெளிவதே எங்கள் ஊழ் என்று எண்ண ஆரம்பிப்போம்” என்றாள்.

அவள் கண்கள் நீர்கொள்ள முகம் சிவந்திருந்தது. “எங்களில் ஒருத்தியாக அங்கே அவையில் நீங்கள் நின்றிருந்தீர்கள். ஒருவேளை ஒரு களத்திலும் நாங்கள் எதிர்த்து நிற்கமுடியாமல் போகலாம். ஆனால் உங்களைப்போல மாறி எங்கள் கற்பனையில் ஒரு வாழ்க்கையை நடித்துக் கொண்டிருக்கிறோம். இங்கிருக்கும் இத்தனை இழிவுக்கும் சிறுமைக்கும் மாற்றென்று அது எங்களுக்குள் ஒளியுடனிருக்கிறது. நீங்கள் தோற்றால் அதையும் இழந்துவிட்டிருப்போம். பிறகு இப்புவியில் பற்றுக்கோடென்று எதுவுமில்லை. பெண்ணென்று உயிர் வாழ்வதற்கு பொருளேதுமில்லை. வெறும் விலங்கு வாழ்க்கை” என்றாள்.

திரௌபதி அவளை நோக்கி புன்னகைத்து “என்னில் ஒரு துளியை உனக்குத் தருகிறேன். போதுமா?” என்றாள். “போதும். அது விண்ணில் இருந்து ஆகாய கங்கை என் மேல் இறங்குவதுபோல. என்னை அது அடித்துக்கொண்டு சென்றுவிடலாம். என்னை நொறுக்கி வீசலாம். ஆனால் எனக்கு அது வேண்டும்” என்றாள் சுபாஷிணி. “இன்று அதை நூறுமுறை எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இங்கிருப்பவர்கள் எப்படிப்பட்ட புழுக்கள் என்று இன்று அறிந்தேன்.”

ஆடைகளைக் களைந்தபடி “என்ன?” என்றாள் திரௌபதி. “பாருங்கள் தேவி, அவ்விழிமகனின் மஞ்சத்திற்குச் சென்று உடல் சிதைந்து உளம் சிறுமைப்பட்டு வராத பெண்கள் இங்கு மிகக் குறைவு. அவனை அவை முன் இழுத்து நிறுத்திய உங்களை அவர்கள் கொண்டாடத்தானே வேண்டும்? ஆனால் நீங்கள் எதிர்த்து வென்று மீண்டதை எண்ணி இவர்கள் பொறாமை கொள்கிறார்கள். நீங்களும் அவனிடம் சென்று சிறுமைகொண்டு சிதைந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இன்று அவர்களின் பேச்சுக்களைக் கேட்டு குருதிக்கொந்தளிப்படைந்தேன். ஒருத்தியின் சங்கையாவது கடித்து குருதியுண்டு கூத்தாடவேண்டுமென்று எண்ணினேன்.”

“கொற்றவை ஆக விழைகிறாயா?” என்றாள் திரௌபதி. “ஆம், பெண்ணெனப் பிறந்தவள் ஒரு முறையாவது கொற்றவை என்றாக வேண்டும்… இல்லையேல் அவள் வெறும் உடலீனும் உடல்” என்றாள் சுபாஷிணி. “இந்தப் பெண்கள் ஒவ்வொருவரின் முகத்தையாக பார்க்கையில் ஒன்றை உணர்ந்தேன். சிறுமை நோக்கி செல்வது வரைதான் அது சிறுமையென்று நமக்கு தெரிந்திருக்கும். அதில் விழுந்து அதை உண்டு அதில் திளைக்கத் தொடங்கும்போது அது அமுதென்றாகிவிடுகிறது. அதுவன்றி பிறிதேதும் தெரியாமல் ஆகிவிடுகிறது. இங்கிருக்கும் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டவர்கள். அதனூடாக தாங்களும் இழிந்தவர்களாக ஆகிவிட்டவர்கள்.”

திரௌபதி நீராட்டறைத் தொட்டிகளில் நிறைந்த குளிர்ந்த நீரை அள்ளி தன் உடல்மேல் விட்டுக்கொண்டாள். சுபாஷிணி “நான் உங்களுக்கு நீராட்டி விடவா? என்றாள். “வேண்டியதில்லை. என்பொருட்டு நீ ஒரு தூது செல்ல வேண்டும்” என்றாள் திரௌபதி. அவள் “எவரிடம்?” என்றாள். “அடுமனைக்குச் செல்” என்றாள் திரௌபதி. அவள் பாய்ந்து திரௌபதியின் கைகளை பற்றிக்கொண்டு “வலவரிடம்தானே ?” என்றாள். “எப்படி தெரியும் உனக்கு?” என்றாள் திரௌபதி. “நான் உய்த்தறிந்துவிட்டிருந்தேன். அவரேதான். ஏனெனில் அவரால் மட்டும்தான் இயலும்.”

திரௌபதி “அவர்தான்” என்றாள். சுபாஷிணி புன்னகைத்து “அவர்தான் கந்தர்வர்களில் முதன்மையானவரா?” என்றாள். திரௌபதி சிரித்தாள். “இன்றிரவு பெரிய மலர்த்தோட்டத்தின் கொடிமண்டபத்தில் நான் கீசகனை சந்திக்கவிருக்கிறேன். அதை மட்டும் வலவரிடம் சொல்” என்றாள். சுபாஷிணி முகம் சிவந்து “ஆம்” என்றாள். அவள் கண்களை கூர்ந்து நோக்கி “அடுமனையில்தான் சம்பவனும் இருப்பார். அவர் வலவர் ததும்பிச் சொட்டிய ஒரு துளி” என்றாள்.

சுபாஷிணி முகம் சிவந்து உடல் குறுகி இரு கைகளைக் கூப்பி அதன்மேல் மூக்கை வைத்து குனிந்தபடி அசையாமல் நின்றாள். அவள் கழுத்தும் தோள்களும் மயிர்ப்பு கொண்டன. “செல்க!” என்றபடி திரௌபதி நீராடத் தொடங்கினாள்.

flowerதன் அறையில் சிறிய ஆடியை நோக்கி திரௌபதி அணிபுனைந்துகொண்டிருக்கையில் சுதேஷ்ணை வந்து அவள் அறை வாயிலில் நின்றாள். யாரோ சேடி என்று எண்ணி இயல்பாகத் திரும்பிய திரௌபதி அரசியைக் கண்டதும் எழுந்து நின்றாள். “நான் அங்கு வந்திருப்பேனே, அரசி?” என்றாள். “நீ வரமாட்டாய் என்று எனக்குத் தெரியும். உன்னிடம் நான் ஓரிரு சொற்கள் சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவேதான் வந்தேன்” என்றாள். “உள்ளே வாருங்கள்” என்று திரௌபதி அழைத்தாள். உள்ளே வந்து கதவை சாத்தியபின் சிறு பீடத்தில் சுதேஷ்ணை அமர்ந்துகொண்டாள்.

“உன்னை கீசகனிடம் அனுப்பியவள் நான் என்று இவ்வரண்மனைச் சேடியர் அனைவரும் அறிந்துவிட்டனர். என் அறையிலிருந்து இங்கு நடந்து வருவதற்குள்ளேயே இங்குள்ள அத்தனை கண்களிலும் வெறுப்பையும் ஏளனத்தையுமே கண்டேன். மூன்று முறை அரசரின் அணுக்கன் வந்து என்னை அவர் சந்திக்க விரும்புவதாக சொன்னான். சென்று பார்த்தால் என் முகத்தை நோக்கி அவர் என்ன கேட்கப்போகிறார் என்று நான் நன்கறிவேன். அச்சொற்களை அஞ்சித்தான் என் அறைக்குள் சுருண்டு கொண்டிருக்கிறேன்” என்றாள்.

கைகளைக் கட்டி சுவரில் சாய்ந்து நின்றபடி திரௌபதி அவள் பேச்சை கேட்டாள். “நான் பேச விழைவது உண்மையில் உன்னிடமல்ல, உத்தரையிடம். இனி இப்பிறவியில் அவள் முகம் நோக்கி என்னால் உரையாட முடியாதோ என்று ஐயுறுகிறேன். அது என் இறப்பு, மீளா நரகம். உன்னிடம் பேசிவிட முடிந்தால் ஒருவேளை அவளிடம் பேசும் துணிவு எனக்கு கிடைக்கலாம். நீயேகூட என்னைப் பற்றி ஓரிரு சொற்கள் சொல்லவும் கூடும். அதன்பொருட்டே உன்னை சந்திக்க வந்தேன்.”

திரௌபதி ஒன்றும் சொல்லாமல் சற்றே தலைசாய்ந்து கேட்டு நின்றாள். “ஆம், உன்னை நான் அங்கு அனுப்பினேன். ஆனால் அவனுடைய மஞ்சத்திற்கு அல்ல. அவன் காமத்திற்கு நீ ஆட்பட மாட்டாய் என்று நன்கறிந்திருந்தேன். அவனிடம் அவன் எல்லை என்னவென்று நீ சொல்வாய் என்றும் அவனை அடக்கி மீள்வாய் என்றும்தான் எண்ணினேன். நீயே அறிவாய், நீ செல்கையில் அதை சொல்லித்தான் உன்னை அனுப்பினேன்” என்றாள் அரசி. “எனக்கு வேறு வழி தெரியவில்லை. உத்தரையின்பொருட்டே நான் இதை செய்தேன். நீ அதை உத்தரையிடம் சொல்ல வேண்டும்.”

திரௌபதி “நீங்களே அவரிடம் சென்று உளமிச்சமில்லாமல் திறந்து நிற்பதொன்றே வழி. எண்ணிச் சூழ்ந்து சொல்லப்படும் எச்சொற்களும் அவர் உள்ளத்தை கரைக்காதென்று தோன்றுகிறது” என்றாள். “நான் எண்ணிச் சூழவில்லை. என் உளம் திறந்தே சொல்கிறேன். எந்த சூழ்ச்சியும் இன்றித்தான் நான் உன்னை அனுப்பினேன். மதுவருந்தி தளர்ந்திருக்கும் அவனுக்கு உன்னை வெல்ல முடியாதென்று அறிந்திருந்தேன்” என்றாள் சுதேஷ்ணை.

திரௌபதி அவள் விழிகளை நோக்கி “அல்ல” என்றாள். அவள் முகம் மாறி “என்ன சொல்கிறாய்? என்னை பொய்யள் என்கிறாயா?” என்றாள். “இப்போது நீங்கள் சொல்வது உண்மையென்றால் இந்த அகத்தளத்தின் அத்தனை சேடியரும் அவன் மஞ்சத்திற்குச் சென்று அவ்விழிமகனின் பெருங்கைகளுக்குச் சிக்கி உடல் சிதைந்து, ஆன்மாவில் சிறுமை நிறைத்து மீண்டு வருவதை அறிந்தும் அறியாதவர்போல் இருந்திருக்க மாட்டீர்கள்” என்றாள் திரௌபதி.

முகம் இழுபட்டு, வாய் திறந்து, பற்கள் தெரிய “நான் என்ன செய்ய முடியும்? இந்த அரண்மனையே அவன் ஆட்சியில் இருக்கிறது” என்றாள் சுதேஷ்ணை. “அப்படியென்றால் இன்று ஏன் கீசகன் அவையிலிருந்து விலகிச் சென்றான்?” என்றாள் திரௌபதி. சுதேஷ்ணை “ஏனெனில் அங்கு உத்தரை வந்தாள். அவளை நம் குலதெய்வத்தின் உருவென்று நிஷதகுடிகள் எண்ணுகின்றன. அவள் அங்கு குருதி சிந்தியிருந்தால் நம் குடியினர் ஒருபோதும் கீசகனை விட்டுவைக்க மாட்டார்கள்” என்றாள்.

“அரசி, நான் கேட்பது இதைத்தான். ஏன் உத்தரைபோல் நீங்கள் எழுந்து நின்றிருக்கக்கூடாது?” அந்த வினாவை அத்தனை அருகே எதிர்கொள்ள முடியாமல் சுதேஷ்ணையின் வாய் மெல்ல திறந்தது. இருமுறை சொல்லெடுக்க முயன்று உதடுகள் வெறுமனே அசைந்தன. “அறமிலாதது என்று தான் உணர்ந்ததன் முன் அக்கணமே உயிர்கொடுக்கத் துணிந்து அவர் நின்றார். அத்துணிவு உங்களுக்கு இருந்திருந்தால் இத்தனை ஆண்டுகள் இவ்விழிவில் நீந்தியிருக்கமாட்டீர்கள்” என்றாள் திரௌபதி.

சுதேஷ்ணை வலிகொண்டவள்போல் பல்லை கடித்தாள். “சற்று முன் ஒரு சேடிச்சிறுமி சொன்னாள். இழிவில் திளைப்பவர்கள் அதில் மகிழத் தொடங்கிவிடுகிறார்கள் என்று” என்றாள் திரௌபதி. “நீ என்னை வேண்டுமென்றே சிறுமை செய்கிறாய். என்னை பழி வாங்க நினைக்கிறாய்” என்று மூச்சொலியுடன் சுதேஷ்ணை சொன்னாள்.

“இல்லை, உங்கள் முன் ஒரு சிறு ஆடியை காட்டுகிறேன்” என்றாள் திரௌபதி. “உங்கள் காவலுக்கென்று என்னை ஏற்றுக்கொண்டீர்கள். உங்கள் உயிரை என்னிடம் ஒப்படைத்தீர்கள். ஆனால் மெல்ல மெல்ல என்னைக் கண்டு பொறாமை கொள்ளத் தொடங்கினீர்கள்.” சுதேஷ்ணை மிகையான இளக்காரத்துடன் நகைத்து “உன்னைக் கண்டா? உன்னைக் கண்டு நான் ஏன் பொறாமை கொள்ளவேண்டும்? நான் கேகயனின் மகள். இத்தேசத்தின் பேரரசி” என்றாள்.

“இதை இப்படி உங்களுக்கே நீங்களே பல நூறுமுறை சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால்தான் இயல்பாக இவ்வரியணையில் அமர உங்களால் இயலவில்லை” என்று திரௌபதி சொன்னாள். “உங்கள் விழிகள் மாறிவருவதை நான் பார்த்தேன். அது இவ்வரண்மனையில் ஒவ்வொருவரும் என்மேல் தொடுக்கும் விழிகள் மாறுவதை நீங்கள் பார்த்தமையால் என அறிந்தேன். நாம் இருவரும் நடந்து செல்கையில் எதிர்வருபவர்கள் தலைவணங்கினால் அவர்கள் எனக்காகத்தான் வணங்குகிறார்களா என்ற கணநேர எண்ணம் உங்கள் உள்ளத்தில் ஓடிச்சென்றது.”

“மூடு வாயை” என்றபடி அரசி எழுந்தாள். “உங்கள் கனவுகளில் என்ன நடந்தது என்று நான் சொல்லவா?” என்றாள் திரௌபதி. “உன்னுடன் நான் பேச விரும்பவில்லை. என்னை இழிவுபடுத்துவது எப்படி என்று நன்கறிந்திருக்கிறாய். இத்தனை நாள் என்னுடன் இருந்து என் உப்பைத் தின்று நீ கற்றது இதுதான் போலும்” என்றபடி சுதேஷ்ணை எழுந்து வாயிலை நோக்கி சென்றாள்.

“என்னை வெறும் சேடியென்றாக்குவதற்கு எளிய வழி கீசகனின் மஞ்சத்திற்கு அனுப்புவதுதான் என்று முடிவெடுத்தீர்கள், அரசி. அது நீங்கள் என்மீது கொள்ளும் முழுமையான வெற்றியாக அமையும் என்று எண்ணினீர்கள். நாகசூதப் பெண் தமயந்தி சேதிநாட்டு அரண்மனையில் சேடியாக வாழ்வதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது நீங்கள் எண்ணியது என்னைப் பற்றித்தான். என்னை எளிய சேடியென்றாக்குவது எப்படி என்று மட்டும்தான்.”

“நீ யார்? பிறர் உள்ளம் அறிந்த மாயாவியா? நீ எண்ணுவதை எல்லாம் பிறர் மேல் சுமத்துகிறாய். அதனூடாக நீ தூயவள் என்றும் ஆற்றல் மிக்கவள் என்றும் ஆக முடியுமென்று எண்ணுகிறாய். இது வெறும் ஆணவம்” என்று சுதேஷ்ணை கூவினாள். “ஆம், உன்னை நான் வெறுத்தேன். உன்மேல் கசப்பு திரண்டது என்னுள். அது உன்மேல் நான் கொண்ட பொறாமையால் அல்ல. உன்னிடம் இருக்கும் இந்தக் கீழ்மை நிறைந்த ஆணவத்தால்தான்.”

“ஆணவம் அற்றோர் அறத்தில் நிற்பதில்லை. நான் அறத்தோள் என்று உணரும் ஆணவமே தெய்வங்களுக்கு உகந்த உணர்வு” என்றாள் திரௌபதி. “அரசி, தலை எழுந்து நிற்பதற்குத் தேவையானது முதுகெலும்பு. இந்த ஆணவத்தில் ஒரு துளியேனும் உங்களிடம் இருந்திருந்தால் இந்நகர்மேல் கீசகனின் நிழல் இப்படி கவிந்திருக்காது.”

கதவைப் பற்றியிருந்த சுதேஷ்ணையின் கைகள் நடுங்கின. அனலருகே நின்றவள் என அவள் முகம் சிவந்து வியர்த்திருக்க கண்களிலிருந்து நீர் வழிந்தது. “பேரரசி, ஒன்று அறிக! கீசகன் வேறு யாருமல்ல, உங்கள் மறுவடிவம்தான். அச்சத்தாலோ தன்னலத்தாலோ நீங்கள் அவனை இங்கு கொண்டு நிறுத்தவில்லை. அவன் வடிவாக இந்நகரை ஆளும்பொருட்டே அதை செய்தீர்கள்” என்றாள் திரௌபதி. “அவன் மீது நீங்கள் கொண்ட அச்சம் உங்கள்மேல் நீங்கள் கொண்ட அச்சமேதான்.”

சுதேஷ்ணை கதவைத் திறந்து வெளியேறிச்சென்று துரத்தப்பட்டவள்போல் இடைநாழியில் விரைந்தாள். திரௌபதி பின்னால் வந்து கதவைப் பற்றியபடி நின்று அவள் விரைந்து செல்வதை பார்த்தாள். அப்பால் நின்றிருந்த காவல் சேடி பேரரசியைத் தொடர்ந்து ஓடுவதா வேண்டாமா என்று திகைத்தாள். திரௌபதி அவளிடம் அருகே வரும்படி தலையசைத்தாள். அவள் அருகே வந்ததும் “பிரீதையை வரச்சொல்” என்றாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 71

70. நாற்கள அவை

flowerநிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள். புழுபோல அன்னத்தில் உடல் மூழ்கத் திளைத்தாள். அங்கேயே இடம் மறந்து படுத்துத் துயின்றாள். கனவில் எழுந்து நடந்து அரண்மனையின் அகத்தளத்திற்குள் நுழைந்தாள்.

பந்த ஒளியில் நிமிர்ந்த தலையுடன் வீசும் கைகளுடன் பேரரசியின் விழிகளுடன் சென்ற அவளை எதிர்கண்ட காவலன் ஒருவன் அரண்மனையெங்கும் கோயில்கொண்டிருக்கும் அறுகொலைத் தெய்வங்களில் ஒன்றென்றே எண்ணினான். அஞ்சி வேல் தழைத்து தலைவணங்கினான். பின்னர் அவள் மறைந்திருப்பதைக் கண்டான். நெஞ்சு அறைய கைகள் கூப்பியபடி இருக்க அவன் அங்கேயே நின்றான்.

சேதிநாட்டரசன் சுபாகுவின் அன்னை காந்திமதி அப்போது நோயுற்றிருந்தாள். அவளை அரண்மனை தரைத்தளத்தில் தனியறையில் வைத்து நோய்நோக்கினர் சேடியர். பின்னிரவில் அவர்கள் அனைவரும் களைத்து துயில மூச்சுக்கள் ஒலிக்கும் அறையில் காந்திமதி துயிலெழுந்தாள். கனவில் அவள் யானைமேல் அமர்ந்த கொற்றவையை கண்டாள். நீல வைரங்கள் ஒளிவிடும் குழலெடையும் குருதிமலர் மாலையும் அணிந்த அன்னையின் காதுகளில் பொன்னிற நாகங்கள் குண்டலங்களாக நெளிந்தன. “அன்னையே!” என அவள் தலைவணங்கினாள். அப்போது வெளியே பட்டத்து யானையின் உறுமலோசை கேட்டது.

மூதரசி எழுந்து சென்று வெளியே பார்த்தாள். அங்கே சடைத்திரியாக முடி தோளில் விழுந்திருக்க மிடுக்குடன் நடந்துவந்த பேய்வடிவினளைக் கண்டு உடல்நடுங்க தூணைப் பற்றிக்கொண்டாள். கால்கள் நடுங்கி விழப்போனாள். கனவா என்று உள்ளம் பதைக்க “யார்?” என்றாள். அவள் நிமிர்ந்து மூதரசியை நோக்கினாள். விழிகள் அவளை பாராமல் வெறிமிக்க கனவொன்றில் விழித்திருந்தன. அங்கே நின்ற பட்டத்து யானை மெல்ல பிளிறியது. “நான் தமயந்தி. மாமன்னர் நளனின் துணைவி” என்று அவள் சொன்னாள்.

நாகவிறலியின் கைகள் ஓய்ந்தன. பாடல் நின்றது. பெருமூச்சுடன் அவள் கைகூப்பினாள். அவள் பின்னால் அமர்ந்திருந்த முழவுக்காரி “நிஷதப் பேரரசி தமயந்தியை ஆண்ட பெருநாகத்தின் கதையாகிய கார்க்கோடகத்தின் முதல் பாதம் நிறைவுற்றது” என்றாள். விறலி “எஞ்சிய கதையை சுருக்கிச் சொல்கிறேன். சுபாகுவின் அன்னை காந்திமதியின் ஆணைப்படி தமயந்தி சேதிநாட்டு அரண்மனையில் ஈராண்டு காலம் தங்கினாள். அவளை தூய்மை செய்து புண்களுக்கு மருந்திட்டு நோய்மீட்டனர். காந்திமதி தன் மகளும் வேந்தனின் தங்கையுமான சுனந்தைக்கு அவளை அணுக்கியாக நிறுத்தினாள். மூதரசியன்றி எவரும் அவளை எவரென்று அறிந்திருக்கவில்லை. அவளும் தன்னை அறிந்திருக்கவில்லை.”

“அன்று விதர்ப்பநாட்டில் உடன்பிறந்தாரிடையே பூசல் எழுந்திருந்தது. விதர்ப்பத்தின் வடகிழக்கு எல்லையான மேக்கலகிரியின் மலைக்குடிகளான ஃபீலர்களின் குலத்தலைவர் மகளில் பீமகர் பெற்ற ஏழு மைந்தர்களில் மூத்தவனாகிய தண்டன் பீமத்துவஜன் என்ற பெயரில் போஜகடகத்தை ஆண்டான். சேதிநிலத்தைச் சேர்ந்த பைகர் குலத்தலைவரின் மகளில் பீமகர் பெற்ற பன்னிரு மைந்தரில் மூத்தவனாகிய தமன் பீமபலன் என்ற பெயரில் குண்டினபுரியை ஆண்டான். தமயந்தி நளனின் படைவல்லமையுடன் நிஷதபுரியில் ஆளும்வரை பீமத்துவஜன் இரண்டாமிடத்தில் போஜகடகத்தில் இருந்தான். அவள் அரசுநீங்கிய செய்தி வந்ததும் அவன் படைகொண்டுவந்து குண்டினபுரியை சூழ்ந்தான். இரண்டு வாரங்களில் பீமபலன் இளையவனிடம் தோற்று மாளவம் நோக்கி படைகளுடன் பின்வாங்கிச் சென்றான்.

பீமத்துவஜன் குண்டினபுரியில் முடிசூட்டிக்கொள்ள பைகர்களும் ஃபீலர்களும் நாடெங்கிலும் போரிட்டனர். ஒவ்வொரு சிற்றூரிலும் பூசல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. பீமகர் குண்டினபுரியின் அரண்மனையில் சிறையிலென மதுவுண்டு மீளாத சித்தத்துடன் வாழ்ந்தார். பீமத்துவஜனை வெல்ல தமயந்தி படைகொண்டெழுவாள் என பைகர் குடியினர் நம்பினர். ஆகவே தமயந்தியைக் கொன்றொழிப்பதே விதர்ப்பத்தின்மேல் முற்றரசு கொள்ள ஒரே வழி என எண்ணிய பீமத்துவஜன் நாடுகள்தோறும் ஒற்றர்களை அனுப்பி தமயந்தியைத் தேடிக்கொண்டிருந்தான். தமயந்தி உடல்மாறியதும் நன்றே என்று பேரரசி எண்ணினார்.

தன் மைந்தன் சுபாகுவை வென்ற அன்றே கொன்று சேதியின் மணிமுடியை தன் காலடியில் வைத்திருக்க முடியும் என்ற நிலையிலும் அவனை மைந்தனென்றே நடத்தி முடியளித்து வாழ்த்திச்சென்ற தமயந்திக்கு கடன்பட்டிருப்பதாகவே காந்திமதி எண்ணினார். தன் நோய்க்குறியும் வருகுறியும் ஆய்வதுபோல மருத்துவர்களையும் நிமித்திகர்களையும் வரச்செய்து எவருமறியாது தமயந்தியை நோக்கச் செய்தார்.

“இது உருமாற்றம் மட்டுமே. உடலில் ஏறிய நஞ்சு ஒவ்வொரு நாளுமென உருவழிந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது, பேரரசி. உடல் ஏழு அனல்கள் எரியும் எரிகுளம். காமமும் பசியும் மூச்சும் எண்ணமும் சொல்லும் ஞானமும் என வெம்மைகொண்ட ஆறனல்களும் மெய் எனும் தண்ணனலும் கொண்டது அது. உடல்புகுந்த அனைத்தையும் அவை எரிக்கும். உடலையும் எரிக்கும். அன்னை உடலில் இன்று நஞ்சை நெய்யென உண்டு அவை எரிகின்றன. நஞ்சு வற்றும்போது பிசுக்கு அகன்று ஆடிப்பாவை தெளிவதைப்போல அவர் மீள்வார்” என்றார் மருத்துவர்.

“குறிகள் தெளிவுறச் சொல்வது ஒன்றே. இது நிலவை நாகம் கவ்விய காலம் மட்டுமே. அரசி வெளியே வருகையில் முன்னிலும் ஒளிகொண்டிருப்பார்” என்றார் நிமித்திகர். “கலிசினம் கவ்வியிருக்கிறது அரசியையும் அவர் அரசையும். கலி தெய்வமல்ல. ஊழை வகுக்கும் ஆற்றல் அவனுக்கு அளிக்கப்படவில்லை. ஏழரை ஆண்டு காலம் மட்டுமே அவனால் மானுடரை ஆளமுடியும். இன்னும் ஏழாண்டு காலம் எஞ்சியிருக்கிறது… தன் காலம் முடிந்ததும் அவன் தலைவணங்கி நிலைமீளவேண்டும். அப்போது தான் கவர்ந்த அனைத்தையும் எண்ணிக் கணக்கு சொல்லி திருப்பியளிக்கவும் வேண்டும்.”

பேரரசி “அவ்வாறே ஆகுக” என்றார். “அதுவரை அவள் இங்கே இருக்கட்டும். அங்கே விதர்ப்பத்தில் ஒவ்வொன்றும் பிறிதுடன் மோதி தன் நிலைக்கு மீளட்டும்.”

flowerசுதேஷ்ணை எழ முயன்றபோது கால் மரத்திருந்தது. திரௌபதி அவள் தோள்களைப் பற்றிக்கொள்ள எழுந்து நின்று நீள்மூச்செறிந்து திரும்பிப் பார்த்தாள். இரு சேடியர் கொண்டுவந்த தாலத்தில் ஆடைகளும் பொன் நாணயங்களும் இனிப்புகளும் கனிகளும் மலர்களும் இருந்தன. நாகவிறலி அருகே வந்து வணங்கி நின்றாள். தாலத்தை அரசி நீட்ட அவள் அதை பெற்றுக்கொண்டாள். “சொல்லினூடாகச் சென்று எங்கோ வாழ்ந்து மீண்டேன்” என்றாள் சுதேஷ்ணை.

நாகவிறலி “எல்லா வாழ்வும் சொல்லிலேயே நிகழ்கிறது” என்றாள். “ஆம்” என்றாள் சுதேஷ்ணை. “எண்ணிப்பார்க்கவியலவில்லை, அவள் அடைந்த துயர்களை. சீதை அடைந்த துயருக்கு எவ்வகையிலும் இதுவும் நிகரே” என்றாள். “துயர்மிக்கவர்கள்தான் கதையில் இடம்பெறுகிறார்கள்” என்று சொல்லி நாகவிறலி புன்னகை செய்தாள். “நாளை எஞ்சிய கதையைக் கேட்கிறேன்” என்றாள் சுதேஷ்ணை. “நாளை அரசரின் அவையில் நளமாமன்னரின் கதையைச் சொல்லலாம் என்று எனக்கு ஆணை வந்துள்ளது, அரசி” என்றாள் விறலி.

அவர்கள் சென்றபின் சுதேஷ்ணை திரும்பி திரௌபதியிடம் இயல்பான குரலில் “நீ சென்று கீசகனிடம் நான் சொல்லும் ஒரு செய்தியை உரைத்து வா” என்றாள். திரௌபதி அவ்விழிகளில் வந்துசென்றதை உடனே உணர்ந்து “அவரிடமா?” என்றாள். “இது அரசமந்தணம். சேடியரை அனுப்பவியலாது” என்றாள். திரௌபதி “நேரடியாகவே சொல்லுங்கள், அரசி. சற்றுமுன் வந்த செய்தி அவரிடமிருந்துதானே?” என்றாள். சுதேஷ்ணை தலைகுனிந்து “ஆம்” என்றாள். “அவரை நான் எதற்குச் சந்திக்கவேண்டும்?” என்றாள்.

“அதை நீ அறிவாய்” என்றாள் சுதேஷ்ணை. “அதற்கு நீ உடன்பட்டாகவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். எளிதில் உடன்படுபவள் அல்ல நீ என்றும் அறிவேன். ஆனால் நான் இனி உன்னை அனுப்பாமலிருக்கவியலாது.” திரௌபதி ஒன்றும் சொல்லாமல் அரசியுடன் நடந்தாள். “நான் உன்னை அனுப்ப மறுக்கிறேன் என அவன் எண்ணுகிறான். பலமுறை உன்னை அனுப்பும்படி கோரிவிட்டான். நான் ஒவ்வொன்றாகச் சொல்லித் தட்டிக்கழித்தேன். இவ்விழாவில் எவரும் எவரையும் நோக்குவதில்லை. இது காமனுக்குரிய இரவு. இன்று அவன் நீ சென்றே ஆகவேண்டும் என்று சொல்கிறான்.”

“நான் மறுத்தால்?” என்றாள் திரௌபதி. “நீ மறுப்பாய் என நான் அறிவேன். எனக்கு வேறுவழி இல்லை. சற்றுமுன் அவள் கொண்டுவந்த செய்தி ஒன்றே. உத்தரனை எண்ணிக்கொள்க என்று கீசகன் சொல்லியனுப்பியிருக்கிறான். இன்று நான் இதற்கு ஒப்பவில்லை என்றால் அவன் என் மைந்தனைக் கொன்றுவிடுவான்.” திரௌபதி “வெறும் அச்சுறுத்தல்” என்றாள்.

“அல்ல, அவன் சீற்றம் கொண்டிருக்கிறான். இதுவரை அவனிடமிருந்த அத்தனை கணக்குகளும் நுட்பங்களும் விலகி வெறும் விலங்கென்று ஆகிவிட்டிருக்கிறான். ஜீமுதனின் இறப்பு அவனுள் அச்சத்தை நிறைத்துவிட்டிருக்கிறது. நேரடியாகவே அவன் அரசர்மேல் படைகொண்டெழக்கூடும் என நான் ஐயுறுகிறேன்… நீ செல்வதனால் கொதிகலம் குளிர்வதுபோல அவன் சற்று அமைவான் என்றால் என் வழி அது மட்டுமே.”

“அரசி, நீங்கள் அஞ்சுவதுபோல் ஒன்றும் நிகழப்போவதில்லை. ஜீமுதனைக் கொன்றவன் இங்குதான் உள்ளான்” என்றாள் திரௌபதி. “அவன் வெறும் அடுமனை அடிமை. இன்றிரவே அவனை கொன்றுவிடுவான் கீசகன். ஒளியம்போ நச்சுணவோ. பிடித்துக் கழுவேற்றவும்கூடும்… என் உள்ளம் சொல்கிறது, அனைத்தும் உச்சம்கொண்டுவிட்டன. இனி இந்த ஆடல் நீடிக்காது…” அவள் திரௌபதியின் கைகளைப் பற்றிக்கொண்டாள். “எனக்கு வேறுவழியில்லை. அவனிடம் செல். அவனை சற்று தணிவித்துவிட்டு வா. நீ எவரென்று நான் அறியேன். ஆனால் உன்னால் அதைச் செய்ய முடியும்.”

திரௌபதி சொல்லெடுப்பதற்குள் “நீ மறுத்தால் படைகளை அழைப்பேன். ஆம், எனக்கு என் மைந்தனே முதன்மை. வேறுவழியில்லை” என்று அரசி கூவினாள். திரௌபதி “செல்கிறேன்” என்றாள். “நான் சொல்வதைக் கேள்… நான்” என அரசி தொடர “நான் செல்கிறேன் என்றேனே” என்றாள். “என்னை முனியாதே. நான் வெறும் அன்னை” என்றாள் சுதேஷ்ணை. “ஆம், எல்லா அன்னையரும் வெறும் அன்னையரே” என்றாள் திரௌபதி.

flowerகையில் கொற்றவைக்கு படையலிட்ட அன்னம் கொண்ட தாலத்துடன் புத்தாடை அணிந்து நீள்குழல் அலையடிக்க திரௌபதி கீசகனின் அரண்மனைக்குச் சென்றாள். இடைநாழிகள் அனைத்தும் ஒழிந்துகிடந்தன. எதிர்பட்ட அத்தனை காவலர்களும் மதுமயக்கில் இருந்தனர். ஒருவன் அவளைப் பார்த்து “ஜீமுதனை நீயே கொன்றிருக்கலாமே, பெருந்தோளழகி?” என்றான். அருகே நின்ற ஒருவன் ஹிஹிஹி என இளித்தான். அவள் “விலகு” என கைகாட்ட “ஆணை” என அறியாது சொல்லி அவர்கள் விலகிக்கொண்டார்கள். அவள் கடந்து சென்றதும் பின்னால் “கீசகரை கொல்லப்போகிறாயா?” என்றான். மற்றவன் ஹிஹிஹிஹி என நகைத்தான்.

கீசகனின் அறைவாயிலில் காவலர் எவருமிருக்கவில்லை. உள்ளே அவன் குழறிய குரலில் எதையோ சொல்வது கேட்டது. எதிரே நின்றிருந்த ஏவலன் மழுங்கிய ஒலியில் அதற்கு மறுமொழி சொன்னான். வாயிலில் சென்று நின்றதுமே திரௌபதி அங்கு அவள் எண்ணி வந்தது நிறைவேறாது என்று புரிந்துகொண்டாள். ஏவலனின் விழி திரும்பியதைக் கண்டு கீசகன் திரும்பிப் பார்த்தான். “ஆ!” என வியப்பொலி எழுப்பியபடி எழுந்துநின்று கால் நிலைகொள்ளாமல் மீண்டும் பீடத்திலேயே சரிந்தான்.

ஏவலன் அப்படியே மறுபக்கம் விலகிச் சென்று கதவை மூடி வெளியேறினான். “நான் எதிர்பார்த்தேன்! ஆம், நான் எதிர்பார்த்தேன். எனக்குத் தெரியும் நீ என்னுடன் விளையாடுகிறாய் என்று!” என்றான் கீசகன். மீண்டும் எழ முயன்று தள்ளாடி ஏப்பம் விட்டான். “நான் உன்னை நினைத்து மதுவருந்தினேன். உன்னை நினைக்க நினைக்க அருந்தாமல் இருக்க முடியவில்லை.” அவள் பெருமூச்சுடன் “நான் அரசியின் ஆணைப்படி வந்தேன். இந்தத் தாலத்தை இங்கே அளித்துவிட்டுப் போக பணிக்கப்பட்டிருக்கிறேன்” என்றாள்.

“தாலமா? என்ன அது? கொற்றவை படையலுணவா? நான் கொற்றவையையே படையலாகக் கேட்கிறேன்.” அவன் அச்சொல்லாட்சியில் மகிழ்ந்து “ஆம், எனக்கு கொற்றவை… நான் என்ன சொன்னேன்?” என்றான். அவன் இமைகள் பாதி மூடியிருந்தன. அடிக்கடி விக்கல் வந்தது. அவனிடமிருந்து மதுவும் வியர்வையும் நாறின. திரௌபதி “நான் செல்லவேண்டும்” என்றபடி தாலத்தை பீடத்தில் வைக்கப்போனாள். அவன் எட்டி அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான். அவள் கைகளை உதற தாலம் நிலத்தில் விழுந்து உருண்டது. சிறிய கண்கள் இடுங்க நகைத்தபடி அவன் எழுந்து “நன்று… ஒரு நல்ல பூசலை நானும் எண்ணியிருந்தேன்” என்றான்.

“விடு என்னை… நான் சொல்வதைக் கேள்…” என்றாள் திரௌபதி. “நான் வந்தது உன்னிடம் இதைச் சொல்வதற்காகவே. ஜீமுதன் நெஞ்சுபிளந்த வலவன் யார் என அறிவாயா?” ஆனால் கீசகன் வேறெங்கோ இருந்தான். இதழ்கோண நகைத்தபடி “ஆம், ஏன் பிறரைப் பற்றிப் பேசவேண்டும்? நாம் பேசுவதற்கும் செய்வதற்கு பல உள்ளன” என்றான். அவள் அவன் தொடையில் எட்டி உதைத்தாள். அவன் நிலைதடுமாறி மல்லாந்து பீடத்தின்மேல் விழ அது அவன் எடையால் முறிந்தது.

அவனிலிருந்த மல்லன் விழித்துக்கொள்ள கீசகன் கையூன்றி கணத்தில் எழுந்து அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். “விடு என்னை… இதன்பொருட்டு நீ நெஞ்சுபிளந்து சாவாய்… நான் யாரென நினைத்தாய்?” என்று அவள் மூச்சிரைக்கச் சொன்னாள். அவன் பாய்ந்து அவள் மறுகையையும் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். “நிகர்வல்லமைகொண்ட தோள். பெண்டிரில் இத்தனை ஆற்றலை நான் கண்டதில்லை. நான் விழைந்தது இதையே” என்றான் கீசகன். அவள் அவன் பிடியை விலக்கி அவனை தூக்கி சுழற்றி அப்பால் வீசினாள். அவன் சுவரில் கையூன்றி திரும்பி மீண்டும் அவளைப் பற்றிக்கொண்டான்.

“நீ நகர்நுழைந்தபோதே எனக்குரிய இணை வந்துவிட்டதென காவலர் வந்து சொன்னார்கள்…” என்றபடி அவன் அவளை இறுக்கினான். “நீ அரசியாவாய்… என் தெய்வங்கள்மேல் ஆணை. உன்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி ஆக்குகிறேன். உன் காலடியில் என் மணிமுடியை வைக்கிறேன்.” அவள் அவன் மூக்கில் தன் தலையால் ஓங்கி முட்டினாள். அவன் அதை எதிர்பாராமல் தடுமாற அவன் காதில் பிறிதொருமுறை தலையால் முட்டி காலைத் தூக்கி அவன் இடையை உதைத்து விலக்கினாள். அவன் பாய்ந்து பிடிப்பதற்குள் வெளியே ஓடினாள்.

“சீ, இழிமகளே. நில்… பிடித்தால் உன் சங்கை நெரிப்பேன்… நில்” என்று கூவியபடி கீசகன் அவளைத் துரத்தி வந்தான். அவள் இடைநாழி வழியாக ஓட கீசகன் “பிடியுங்கள் அவளை… பிடியுங்கள்” என்று கூவியபடி எடைமிக்க கால்கள் ஓசையிட தொடர்ந்தோடினான். காவலர்கள் அதை விளையாட்டு என எண்ணி இளித்தபடி நின்றனர். திரௌபதி இடைநாழியிலிருந்து பாய்ந்து அப்பாலிருந்த சிறிய முற்றத்தை அடைந்து அதற்கும் அப்பால் விளக்கொளியில் செந்நிறத் திரைச்சீலைபோலத் தெரிந்த வாயிலை நோக்கி ஓடினாள்.

“நில்… அவளை பிடியுங்கள்… பிடியுங்கள்” என்று கூவியபடி இடைநாழியில் குதித்த கீசகன் கால்தடுக்கி விழுந்து கையூன்றி எழுந்தான். விழுந்த அதிர்வில் குமட்டல் எழ ஓங்கரித்து துப்பியபடி ஓடி வந்தான். அறைவாயிலில் நின்றிருந்த காவலன் உள்ளே நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தான். இன்னொருவன் கீழே அமர்ந்திருந்தான். திரௌபதி பாய்ந்து உள்ளே செல்ல அவன் “ஏய்! என்ன இது? யார்? இது அரசர் அவை” என கூவினான். தொடர்ந்து வந்த கீசகன் அவனைப் பிடித்து விலக்கிவிட்டு உள்ளே வந்தான்.

உள்ளே விராடரும் தருமனும் பகடையாடிக்கொண்டிருந்தனர். களத்தில் பரப்பப்பட்டிருந்த காய்களை முகவாயை கையால் தாங்கியபடி நோக்கிக்கொண்டிருந்த விராடர் திரும்பி நோக்கி “யாரது? சேடிப்பெண்ணா? அவளுக்கு என்ன வேலை இங்கே?” என்றார். திரௌபதி “அரசே, என்னை காப்பாற்றுங்கள். உங்கள் படைத்தலைவரால் நான் பெண்ணிழிவு செய்யப்படுகிறேன்” என்று கூவினாள். “யார்? கீசகா, என்ன இது?” என்றார் விராடர்.

கீசகன் “அரசே, என்ன நடந்ததென்று கேளுங்கள். இவ்விழிமகள் என் அரண்மனைக்குள் புகுந்து என் கணையாழியைத் திருடினாள். தாலத்துடன் இவள் அறைக்குள் நுழைவதைக் கண்டேன். கள்மயக்கில் இவளுக்கு விழிகொடுக்கவில்லை. திருடுவதை தற்செயலாகக் கண்டு இவள் கையைப் பற்றினேன். உதறிவிட்டு ஓடினாள். துரத்தி வந்தேன்…” என்றான். “பொய்… வேண்டுமென்றே சொல்லப்படும் பொய். அரசி அனுப்பியே நான் அங்கே சென்றேன்…” என்று திரௌபதி கூவினாள். “நான் திருடினேன் என்றால் அந்தக் கணையாழி எங்கே? சொல்லச் சொல்லுங்கள்!”

கீசகன் “அதை வீசிவிட்டு ஓடினாள், அரசே” என்றான். “அப்படியென்றால் அவர் கையில் இருக்கும் கணையாழி எது?” என்றாள் திரௌபதி. “வாயை மூடு, கீழ்மகளே. எதிர்த்தா பேசுகிறாய்?” என கீசகன் பாய்ந்து அவளை அறைந்தான். அவள் கீழே விழுந்ததும் எட்டி அவளை உதைத்தான். “உன்னை இழுத்துச்சென்று தலையை வெட்டியிருக்க வேண்டும். அரசர் முன்னிலை என்பதனால் சொல்லாட விட்டேன்…” அவள் குழலைப் பிடித்து தூக்கி “வா… உன்னை என்ன செய்வதென்று நான் முடிவெடுக்கிறேன்” என்றான்.

அவன் கையைப் பற்றியபடி திரௌபதி கூவினாள் “நான் அரசரிடம் அறம் கேட்கிறேன்… இங்கே நெறியென்று ஏதுமில்லையா? ஒரு பெண்ணை உதைப்பதற்கும் இழுத்துச் செல்வதற்கும் எக்குலமுறை ஒப்புகிறது? அரசரென அமர்ந்திருப்பவர் முன்னிலையில் நிகழலாமா இந்த கீழ்ச்செயல்?” விராடர் “என்ன இது, கீசகா? நாளை இது நமக்கு இழிவென்று ஆகுமல்லவா? விடு அவளை” என்றார். “அவள் கள்ளி. அவளுக்குரியது கைகால்மாறு தண்டனை. நெறியுசாவல் அல்ல” என்று அவளை கீசகன் தரையில் இழுத்தான்.

“குற்றம் சாட்டியவரே தண்டனையையும் அளிப்பதா? எந்த நெறி இது? இங்கு அறமுசாவ அவையென ஏதுமில்லையா?” என்றாள் திரௌபதி. “அது அவைநிற்கும் தகுதிகொண்டோருக்கு. அகத்தளப் பெண்ணுக்கல்ல…” என அவளை தூக்கினான் கீசகன். விராடர் “என்ன இது? கீசகா…” என்றார். “எதன்பொருட்டென்றாலும் பெண்ணை உதைக்க இவருக்கு என்ன உரிமை? இதை தெய்வங்கள் பொறுக்குமா?” என்று திரௌபதி கேட்டாள். “குங்கரே” என்றார் விராடர்.

“இருவர் சொல்வதும் பொய்யாகவும் உண்மையாகவும் இருக்கலாம். நாம் இரண்டையும் அறியோம்” என்று குங்கன் சொன்னான். “அதைப்பற்றி இப்போது நாம் சொல்வதற்கொன்றுமில்லை. நாம் உறுதியாக அறிந்தது ஒன்றே. இவள் சேடி, அவர் அரசகுடியினர். பொய்யும் மெய்யும் மறமும் அறமும் குடியால் இயல்வதேயாகும்.” விராடர் “ஆம், அது மெய். சேடியர் அவைநிற்க எங்கும் ஒப்புதலில்லை” என்றார். “ஆனால் பெண்டிர் நாளை நம்மை குறை சொல்லலாகாது. ஆகவே இதை இளவரசியே நோக்கி முடிவு சொல்லட்டும்… அடேய், மறுஅறையில் இளவரசி உத்தரை இருக்கிறாள். அவளை அவைபுகும்படி நான் ஆணையிட்டதாகச் சொல்” என்றார் விராடர்.

“அவள் இங்கெதற்கு?” என்ற கீசகன் திரௌபதியின் கூந்தலை விட்டுவிட்டான். அவள் ஆடையைத் திருத்தியபடி கண்ணீர் வழிய நின்றிருக்க ஏவலர் இருவரும் ஓடி உத்தரையை அழைத்துவரச் சென்றனர். அதற்குள் தன் மேலாடையை எடுத்தணிந்த விராடர் “இந்தப் பூசல் இப்போதே முடியட்டும். எவர் செய்தது பிழை என்பதை நாளை அவைகூடி முடிவெடுப்போம். நீ செல்க” என்று திரௌபதியிடம் சொன்னார். “இளவரசி வரட்டும். அவைநடுவே பெண்ணை இழுத்திட்டு உதைப்பதன் நெறியென்ன என அவர் சொல்லட்டும்” என்றாள் திரௌபதி.

“அவள் சிறுமி… அவள் இங்கே எதற்கு?” என்றார் விராடர். “அவளுக்கு நான் அஞ்சுவேன் என எண்ணுகிறீர்களா? அவள் வரட்டும். அவள் கண்முன் இழுத்துச் செல்கிறேன் இவளை. இதோ, நானே சொல்கிறேன். இவள் திருடவில்லை. என் மஞ்சத்திற்குத்தான் வந்தாள். என்னுடன் மஞ்சத்தில் இன்றிரவை கழிக்கப் போகிறாள். எவர் தடுக்கப் போகிறீர்கள்? சொல்லுங்கள் எவர்?” ஆனால் அவன் மீண்டும் திரௌபதியை பிடிக்கவில்லை.

ஏவலர் பின்னால் ஓடிவர உள்ளே வந்த உத்தரை “என்ன நடக்கிறது இங்கே? பெண்ணை அவையில் பற்றி இழுக்க இந்த கீழ்மகனுக்கு இடம்கொடுத்தவர் எவர்? தந்தையே, நீங்களா?” என்றாள். “எண்ணிப் பேசு சொற்களை” என்று கையோங்கியபடி கீசகன் அவளை அணுக அவள் தன் குறுவாளை எடுத்து தன் கழுத்தில் வைத்துக்கொண்டாள். “தந்தையே, நம் குடித்தெய்வம்மேல் ஆணை. இப்போதே இந்தச் சிறுமகன் அவை நீங்கவேண்டும். நாளை நம் குடியவையில் இவன் செய்தவற்றுக்கு ஈடு சொல்லவேண்டும். உங்கள் ஆணை இக்கணமே எழவேண்டும். இல்லையேல் இங்கேயே சங்கறுத்து விழுவேன்.”

விராடர் கைகால்கள் பதற எழுந்து நின்று “என்ன இது? வேண்டாம். கத்தியை தாழ்த்து… கீசகா, இது என் ஆணை. விலகிச்செல். நாளை காலை குடியவையில் வந்து நிற்பதுவரை நீ இந்தப் பெண்ணை அணுகலாகாது…” கீசகன் ஏதோ சொல்ல வாயெடுக்க “என் ஆணை இது. என் முழுப் படைகளையும் ஆளும் சொல். இதற்கு மாற்றில்லை…” என்று அவர் கூவினார். தொண்டை நரம்புகள் புடைக்க உடல் பதற நின்று உடல் உலைந்தார். “வெளியே செல்… மறுசொல் கேட்டால் உன் தலைகொய்ய ஆணையிடுவேன்.” கீசகன் மெல்ல தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான். பின்னர் “நன்று, நாளை பார்ப்போம்” என்றபின் வெளியே சென்றான். உத்தரை கத்தியை கீழே போட்டுவிட்டு வந்து திரௌபதியை தழுவிக்கொண்டாள்.

விராடர் “என்னம்மா இது? என்ன செய்யப் போனாய்? என் உடல் நடுக்கம் இன்னும் விலகவில்லை” என்றார். “அந்த நச்சுப்பாம்பை வளர்த்துவிட்டது உங்கள் சொல்விளங்காமையும் அன்னையின் மிகைவிழைவும். இனியாவது அதன் தலையை நசுக்காவிட்டால் இக்குடி அழியும்” என்றாள் உத்தரை. “மெல்லப் பேசு… நான் எப்படி அவனுக்கு ஆணையிட்டேன் என எனக்கே தெரியவில்லை. இப்போது அவனை நினைத்து அஞ்சுகிறேன். இந்நாடும் படைகளும் அவன் ஆணையிலேயே உள்ளன. அவன் ஒரு சொல் எடுத்தால் நம்மை கொன்றுகுவிக்க வாளுடன் வருவார்கள் விராடப் படையினர்” என்றார் விராடர்.

“நீங்கள் ஒரு சொல் உரையுங்கள், தந்தையே. விழிநோக்குவதை விட விரைவாக அவனை வீழ்த்திக் காட்டுகிறேன்” என்றாள் உத்தரை. “என்ன பேசுகிறாய்? உன்னிடம் என்ன கந்தர்வ வித்தையா இருக்கிறது?” என்றார் விராடர். “ஆம், கந்தர்வன் ஒருவன் என் சொல்லுக்கு கட்டுப்பட்டிருக்கிறான்” என்ற உத்தரை “வருக” என திரௌபதியின் கைகளைப் பற்றி அழைத்துச்சென்றாள். “அரசர் இருக்கும் இடமே அரசவை. அதை நம்பி நான் வந்தேன்” என்றாள் திரௌபதி.

தருமன் எரிச்சலுடன் “நாளை அவையில் வந்து உன் சொற்களை விரி. இப்போது எங்கள் ஆட்டம் பாதியில் நிற்கிறது. செல்” என்றார். திரௌபதி அவரை சில கணங்கள் நோக்கியபின் நீள்மூச்சுடன் உத்தரையுடன் சென்றாள். விராடர் பெருமூச்சுடன் அமர்ந்து “மெய்யாகவே அச்சத்தால் என் உள்ளம் உறைந்திருக்கிறது, குங்கரே. பார்த்தீர்களா விரல்கள் நடுங்குவதை. கீசகன் நாளை என் தலையை வெட்டக்கூடும் என்றே எண்ணுகிறேன்… உத்தரையை நான் அறிவேன். சொன்னதைச் செய்பவள் என்பதனால் நிலைமீறிவிட்டேன்” என்றார்.

தருமன் காய்களை நோக்கியபின் கைகளை உரசியபடி “இனி உங்கள் நகர்வு” என்றார். “கீசகன் என்ன செய்வான் என்கிறீர்?” என்றார் விராடர். “இந்த ஆட்டத்தை முதலில் முடிப்போம். அந்த ஆட்டத்தில் நாம் அறியாத பல காய்கள் களத்தில் உள்ளன” என்றார் தருமன்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 70

69. ஏழரை இருள்

flowerசிறு கூத்தம்பலத்தின் வாயிலில் பிரீதை வந்துநின்று மும்முறை தலைவணங்கினாள். அவள் நிழல் தன் முன் சுவரில் அசையக் கண்டு திரும்பிப் பார்த்த திரௌபதி விழியுயர்த்தி என்ன என்றாள். கைகளால் அரசியை சந்திக்கவேண்டும் என்றாள் பிரீதை. முழவும் தண்ணுமையும் யாழும் நிறைந்திருந்த அவையில் பிறிதொன்றை நோக்கி உள்ளத்தை கொண்டுசெல்வது எதிர்காற்றில் உந்திச்செல்வது போலிருந்தது. திரௌபதி விரலால் சுதேஷ்ணையை தொட்டாள். காய்ச்சல் கொண்டதுபோல் மயங்கியிருந்த விழிகளுடன் திரும்பிய சுதேஷ்ணை புருவங்களால் என்ன என்றாள்.

பிரீதையை அவள் சுட்டிக்காட்டியபோது உளம் மீண்டு அவளை அடையாளம் காண அரசிக்கு நெடுநேரமாயிற்று. பின்னர் அருகே வரும்படி கைகாட்டினாள். சுவரினூடாக ஒதுங்கி வந்து அரசியின் அருகே முழந்தாளிட்ட பிரீதை அவள் காதில் தான் கொண்டுவந்த செய்தியை ஓரிரு சொற்களில் சொன்னாள். வலி கொண்டவள்போல அரசியின் முகம் மாறியது. பின்னர் பிரீதையை செல்லும்படி கைகாட்டிவிட்டு உடலை அசைத்து அமர்ந்து நாகவிறலியின் சொற்களை மீண்டும் சென்றடைந்தாள். அவள் முகம் கனவில் நெகிழ்ந்தது.

செய்தி சொல்லப்பட்டவுடன் அரசியின் முகத்தில் ஒரு கணத்தில் வந்த மாறுதலிலிருந்தே அச்செய்தி தன்னைப் பற்றியது என்பதை திரௌபதி உணர்ந்தாள். உள்ளம் முள்முனையாகி அச்செய்தியின் முனையை சென்று தொட்டது. எதுவானாலும் ஆகட்டும் என்று பிறிதொரு உள்ளம் அதை உதறியது. நாகவிறலியின் கைவிரல்கள் குறுமுழவின் மீது நடமிட்டன. சூழ்ந்திருந்த சுடர்களின் ஒளியில் அவ்விரல்களின் நிழல்கள் தலைக்குமேல் எழுந்து சுவர்களிலும் கூரையிலுமாக அதே தாளத்தை காற்றில் மீட்டின. அக்கூத்தம்பலமே தாளத்துடன் கூத்திடுவதாகத் தோன்றியது.

நாகவிறலி தமயந்தி சேதிநாட்டுக்குப் போன கதையை சொல்லிக்கொண்டிருந்தாள். கலிங்கத்திலிருந்து சேதிக்கும் அவந்திக்கும் மாளவத்திற்கும் செல்லும் வணிகப்பாதைகள் நெடுங்காலமாகவே அரசர்களால் பேணப்பட்டன. ஐநூறாண்டுகளுக்கு முன் சேதிநாட்டரசர் உபரிசிரவசு சூழ்ந்திருந்த பிற நாடுகளின் அரசர்கள் அனைவரையும் தன் தலைநகர் சூக்திமதியில் கூட்டி அப்பாதைகளைப் பேணுவதற்கான பொதுக்காவல் அமைப்பொன்றை உருவாக்கினார். அது ஷோடசபத சம்யுக்தம் என்று அழைக்கப்பட்டது. அரசர்கள் அதற்கு ஒரு படையை அளித்து அப்படைக்குரிய செலவுகளையும் அளித்தனர்.

சேதி காலப்போக்கில் சிறு நாடாக ஆகியபோது அந்தக் காவல் அமைப்பு நிலமில்லாத நிகர்அரசாக நீடித்தது. அதற்கென்று பன்னிரு காவற்படைகளும் படைத்தலைவர்களும் அவர்களை ஆளும் மையக்குழுவும் அதற்குரிய நெறிகளும் உருவாயின. பதினாறு நெடும்பாதைகளில் நூற்றெட்டு இடங்களில் அவர்கள் வணிகரிடம் திரை கொண்டனர். காட்டு விலங்குகளும் கள்வரும் அணுகாது பாதைகளை அவர்கள் காத்தனர். அப்பாதைகளில் அமைந்த சிற்றூர்கள் சிறு புரவிப்படைகளை அதற்கென்று நிறுத்தி வைத்திருந்தன. அக்காவல் அமைப்பின் கொடி ஒருபுறம் கழுகும் மறுபுறம் நாகமும் கொண்டிருந்தது. அக்கொடி பறக்கும் பாதைகளூடாக மட்டுமே வணிகர்கள் செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.

விந்தியமலை கடந்து சேதியை அடைவதென்பது காட்டாறுபோல பள்ளத்தாக்குகளில் மலைகளை வளைத்து நெளிந்து செல்லும் பாதைகளில் நாளும் பொழுதுமென்றிலாது சென்றுகொண்டே இருப்பதுதான். முதற்கோடையிலேயே வணிகக் குழுக்கள் செல்லத் தொடங்கும். முதல் மழை வரை அப்பெருக்கு ஓயாது. சகடங்கள் சென்று சென்று சாலையின் மண் குங்கும விழுதென்றாகியது. அங்கு செல்பவர் அனைவரும் சுடுமண் சிலைகள் என்றானார்கள். உச்சிக்கோடையின் வெயிலில் செம்மை கரைந்து வழியும் வியர்வை குருதித்துளிகளென பூழிமண்ணில் சொட்டி சிறு முத்துகளென உருளும். தொலைவில் மலைச்சரிவில் செல்லும் வணிகக் குழுக்களை செம்முகில் ஒன்று ஏந்திச்செல்வதுபோலத் தோன்றும். காற்றில் காட்டெரி என செம்புழுதி எழுந்து சுழித்து மேலேறி அசையும்.

flowerதமயந்தி பூமிகரின் குழுவினருடன் சென்றபோது கோடை முதிர்ந்திருந்தது. பேரொலியுடன் வெடித்துவிடப்போவன போல அனல் கொண்டிருந்தன உச்சிப்பாறைகள். மலைச்சரிவெங்கும் புதர்கள் கருகி செம்மண் புழுதி மூடி அனல் எரிவது போன்ற ஓசையை எழுப்பியபடி காற்றில் அதிர்ந்து கொண்டிருந்தன. மரங்கள் இலைகளை உதிர்த்து கிளை முனைகளில் மட்டும் சற்றே தளிரிலை சூடி சோர்ந்து நின்றிருந்தன. உச்சிப்பொழுதணைந்து வெயில் நிறம் மாறத் தொடங்கிய பின்னரே பறவைகள் எழுந்தன. செல்லும் வழியெங்கும் பாறைகளில் முன்பு சென்றவர்கள் ஊற்றுகளும் விடுதிகளும் எத்தனை தொலைவில் என்று சுண்ணத்தால் எழுதி வைத்திருந்த குழூஉக்குறிகள் இருந்தன. ஒரு சுனையிலிருந்து மறுசுனை நோக்கி உயிரை துளித்துளியாகச் செலவிட்டுச் சென்றடைவதே பயணமென்று இருந்தது.

வியர்வை என குருதி உருமாறிச் சொட்டி ஒழிந்து உடல் வெறுமைகொள்ள முள்ளடர்ந்த சாமிமரத்தின் நிழலில் சற்றே இளைப்பாறியபோது முதுநிமித்திகர் வான்குறிகளை நோக்கினார். அவர் சொல்லச் சொல்ல அருகே நின்ற இளம்மாணவன் அதை தரையில் சிறு குச்சியால் எழுதினான். அவர் குனிந்து அதை கூட்டி நோக்கி பூமிகரிடம் “இன்னும் இரண்டு நாட்கள். அதற்குள் பெருமழை உறுதி” என்று சொன்னார். “இரண்டு நாட்கள் அல்லவா?” என்று பூமிகர் கேட்டார். “இரண்டு நாள் மிகுதி. நாளையே வானம் கிழிபட்டாலும் வியக்கமாட்டேன்” என்றார் நிமித்திகர்.

“மழையில் இச்செம்பூழிப் பாதையில் செல்வதென்பது களிச்சேறு நிறைந்த வயலில் உழுவதைவிடக் கடினமானது. காளைகளின் லாடங்களும் தேய்ந்துவிட்டன” என்றார் பூமிகரின் இளையோனும் பங்கினனுமாகிய சுசி. “கிளம்புங்கள். மழைக்கு முன் நாம் சூக்திமதியை சென்றடைந்தாக வேண்டும்” என்றார் பூமிகர். “ஒரு கணமும் வீணாக்கலாகாது. இனி துயிலில்லை அடுமனைத் தொழிலும் இல்லை. உலருணவும் நீரும் மட்டுமே. கணமும் கால் நிலைக்காது முன் செல்க!” சுசி ஆணைகளை பிறப்பித்தபடி கைமுழவை ஒலிக்க வைத்தார்.

ஆனால் அவர்கள் நெடுந்தூரம் வந்து களைத்துவிட்டிருந்தனர். சகடங்கள்கூட தேய்ந்து கனவிலென ஓசையற்று ஓடின. அவ்வப்போது உடலின் ஆற்றல் ஓய எருதுகள் தலை தாழ்த்தி நுரை கக்கி நின்றன. அவற்றின் வாயைத் திறந்து மூங்கில் குழாயால் வெல்லம் கலந்த நீரை ஊட்டியபின் சாட்டையால் அடித்து மீண்டும் கிளப்பினர். அந்தியிருண்டு வந்தபோது காவலன் ஒருவன் பூமிகரிடம் “நிலவிலாத இரவு, வணிகரே. இப்பாதையில் செல்வது பொருளுடையதல்ல” என்றான். “நாளை உச்சிக்குள் நாம் சேதிநாட்டின் எல்லை கடந்து தலைநகரை சென்றடைந்தாக வேண்டும். இன்றிரவு மட்டும்தான் நம்மிடமுள்ளது” என்றார் பூமிகர்.

“ஆனால் இது வறண்ட காட்டுப்பாதை. இருண்டது” என்றான் காவலன். “பந்தங்களேற்ற மீனெண்ணெய் இருக்கிறதல்லவா?” என்றார் பூமிகர். ஏவலன் “ஆம், அரக்கும் உள்ளது” என்றான். “பிறகென்ன? வண்டிகள் செல்லட்டும்” என்றார் பூமிகர். மறுமொழி கூறாமல் காவலர் தலைவணங்கி விலகினர்.

அந்தியிருளுக்குமுன் சற்றே அமர்ந்து நீரருந்தி இளைப்பாறிவிட்டு மீண்டும் அவர்கள் கிளம்பினர். வானை நோக்கிய நிமித்திகர் “தென்கிழக்குச் சரிவில் விண்மீன்கள் எழவில்லை, வணிகரே. முகில் நிரை அங்கு கூடுகிறதென்று தோன்றுகிறது. நாளை உச்சிக்குள் மழை உறுதி” என்றார். பூமிகர் “நாம் நாளை பின்காலையில் சூக்திமதியில் இருப்போம். கோட்டைப்புறத்திற்கு சென்றுவிட்டாலும்கூட பழுதில்லை. ஏன், அரசப் பெருஞ்சாலையை அடைந்துவிட்டாலேகூட அஞ்சுவதற்கேதுமில்லை” என்றார். “செல்க! செல்க!” என்று ஏவலர் ஒலியெழுப்பினர்.

சலஃபை “வழியில் எவரேனும் விழுந்து இறந்தால்கூட கவலைப்படப் போவதில்லை பெருவணிகர்” என்றாள். “வணிகர்களும் போர்வீரர்களே. வெற்றியன்றி பிறிதொன்றையும் அவர்கள் பொருட்டாக எடுப்பதில்லை” என்றார் மருத்துவர் சுதீரர். “இவர்களுக்கு எதிரி யார்?” என்று சலஃபை கேட்டாள். “வேறு எவர்? இவர்களிடம் பொருள் வாங்கிப் பிழைக்கும் எளிய மக்கள்தான்” என்று சுதீரர் சிரித்தார். “பேச்சு தேவையில்லை, விரைக!” என்று பூமிகர் சொன்னார்.

இருளுக்கு விழி பழக அவர்கள் குனிந்து தரையைப் பார்த்தபடி சீரான காலடியுடன் நடந்து கொண்டிருந்தனர். காளைகளுக்கும் புரவிகளுக்கும் நீருடன் சிறிது மதுவும் கலக்கி ஊட்டப்பட்டிருந்தமையால் அவை களைப்பு ஒழிந்து விசை கொண்டன. சகடங்களின் ஒலிகள் இருளெனச் சூழ்ந்திருந்த பாறைகளில் எதிரொலித்து எங்கெங்கோ சென்று மீண்டு வந்தன. வெந்த மண்ணின் மணம் காற்றில் வீசிக்கொண்டிருந்தது.

சாலையருகே பாறைப் பரப்புகளில் எழுதப்பட்டிருந்த குழூஉக்குறிகளை பந்த ஒளி காட்டிப் படித்தபடி வந்த ஏவலன் “இன்னும் அரைநாழிகைப் பொழுதில் ஊற்று ஒன்று இருக்கிறது” என்றான். “நம்மிடம் நீர் எஞ்சியுள்ளதா?” என்றார் பூமிகர். “சிறிதே உள்ளது. ஆனால் நீரை நிறைத்துக்கொண்டு புரவிகளுக்கும் காட்டியபின் செல்வதே நன்று. இனி வருவது மலைச்சரிவு. சகடக் கட்டையை மிதித்தபடியே வண்டிகள் செல்ல முடியும். காளைகள் விசையழிந்து நலியும்” என்று முதிய ஏவலன் சொன்னான்.

ஊற்றை அறிவிக்கும் குழூஉக்குறியொன்று சாலையோரத்துப் பெருமரமொன்றில் தொங்கிய மரப்பலகையில் இருந்தது. அதை நோக்கியபின் “அருகேதான்” என்று ஏவலன் சொன்னான். பந்தம் எழுந்து சுழன்று ஆணையிட்டதும் வண்டிகள் கடிவாளம் இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. புரவிகளிலிருந்து இறங்கிய காவலர் அவற்றை பிடித்துக்கொண்டு நீர்காட்ட கொண்டுசென்றனர். காளைகளை அவிழ்த்தபோது அவை களைப்புடன் கால்களை உதறி பெருமூச்சுவிட்டன. “மது அருந்தியதால் அவற்றுக்கு மேலும் நீர் தேவைப்படுகிறது” என்று சுதீரர் சொன்னார். “அப்படியே இங்கு அனைவருக்கும் சிறிது மது அளித்திருந்தால் இத்தனை நடை அலுப்பு தோன்றியிருக்காது” என்றாள் சலஃபை.

தமயந்தி சிற்றடி எடுத்துவைத்து சென்று வேர்க்குவையொன்றில் அமர்ந்து கால்களை நீட்டி விரல்களால் மூட்டுகளை நீவிவிடத் தொடங்கினாள். பின்னர் தன் இடையிலிருந்து பாக்கை எடுத்து வாயிலிட்டு மென்றபடி முடிந்த குழலை அவிழ்த்து விரித்து அலுப்பொலியுடன் கூன்முதுகை நிமிர்த்தி படுத்தாள். அக்கணமே துயில் வந்து மூட, வாய் திறந்து உதடுகள் அதிர நீள்மூச்சுவிடலானாள்.

தோல்பைகளில் ஊற்று நீரை ஏவலன் நிறைத்தான். புரவிகளும் காளைகளும் நீரருந்தி கால்களை உதறியபடியும் மூச்செறிந்தபடியும் மேலேறின. நீர் நிறைந்த வயிற்றின் எடை தாளாதவைபோல காளைகள் ஆங்காங்கே படுத்துவிட்டன. புரவிகள் மூன்று காலில் நின்று தலை தாழ்ந்து தொங்க அரைத்துயிலில் ஆழ்ந்தன. பூமிகர் நீரருந்தியபின் வெறும் தரையிலேயே கால்நீட்டி படுத்துக்கொண்டார். ஆங்காங்கே ஒவ்வொருவராக அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுக்கத் தொடங்கிய சற்று நேரத்திலேயே மூச்சொலிகள் கேட்கத்தொடங்கின.

முதிய ஏவலன் மூக்கைச்சுளித்து மணம் கொண்டபின் பூமிகரிடம் வந்து “இது உகந்த இடமல்ல என்று எண்ணுகிறேன், பெருவணிகரே” என்றான். “ஏன்?” என்றார் அவர். “யானைச்சாணியின் மணம். இந்தப் பகுதியில் பிறிதொரு ஊற்றே இல்லை. இங்கு காட்டு யானைகள் நீரருந்த வரக்கூடும்” என்றான். சுசி “காட்டு யானை இங்கு வாழமுடியுமா என்ன? கண்ணுக்கு எட்டிய தொலைவில் பச்சையே இல்லை” என்றார். “ஆம், அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். இலை இல்லாதபோது வறுநிலத்து யானை மரப்பட்டைகளை உண்ணும். அதனால் மிகுவிடாய் கொண்டிருக்கும். விடாய் மிகுந்த யானை பெருஞ்சினம் நிறைந்தது.”

பூமிகர் சில கணங்கள் அவனைப் பார்த்தபின் “இங்கே எங்காவது இது குறித்து எச்சரிக்கை பொறிக்கப்பட்டுள்ளதா?” என்றார். “இங்கு எவரும் இவ்வாறு இரவு தங்குவதுபோல் தெரியவில்லை” என்றான் ஏவலன். “நாமும் தங்கப்போவதில்லை, இதோ கிளம்புகிறோம்” என்றார் பூமிகர். பிறகு அமர்ந்தபடியே உடலை நிமிர்த்தி நிமித்திகரிடம் “சங்கு முழங்கட்டும். நாம் கிளம்பவிருக்கிறோம்” என்றார்.

நிமித்திகர் படுத்தபடியே தன் இளவலைப் பார்த்து கையசைத்தார். அவன் அரைத்துயிலில் தன் தோல் பையிலிருந்த சங்கை எடுத்து வாயில் வைத்தான். “எழுந்து நின்று ஒலியெழுப்பு, மூடா” என்றார் நிமித்திகர். அவன் எழுந்து நின்று சங்கை வாயில் வைத்தபின் சுற்றிலும் துயின்றுகொண்டிருந்தவர்களை பார்த்தான். பூமிகரும் அமர்ந்தபடியே சற்று துயின்றவர்போல் இருந்தார். அவன் சங்கை மீண்டும் பையில் வைத்தபின் கீழே அமர்ந்தான். சில கணங்களில் சங்கை முழக்கிக்கொண்டிருப்பது போன்ற கனவு உள்ளே நிகழ துயின்றுவிட்டான்.

பொழுதாகிவிட்டது என்று கனவுக்குள் அவன் துடித்தெழுந்து சங்கை எடுத்து வாயில் வைத்து மும்முறை ஓசையெழுப்பினான். அப்பகுதியின் அத்தனை பாறைகளும் எதிரொலிக்கும் பேரொலியாக மீண்டும் மீண்டும் அவன் சங்கு அதை முழக்கிக்கொண்டிருந்தது. துயின்றுகொண்டிருந்தவர்கள் எல்லாம் பாய்ந்து எழுந்தனர். அவர்களின் அலறல் குரல்களை அவன் கேட்டான். விழிதிறந்து பார்க்கையில் தன்னை மிதித்தபடி அங்குமிங்கும் ஓடுபவர்களின் நிழல் கொந்தளிப்பே அவனுக்குத் தெரிந்தது. பின்னர் யானைகளின் பிளிறலோசையே சங்கென ஒலித்தது என உணர்ந்தான்.

“யானைக் கூட்டம்! யானைக் கூட்டம்!” என்று யாரோ கத்தினர். யானைகள் அவர்களை சூழ்ந்துவிட்டிருந்தன. மூன்று திசைகளிலிருந்தும் இருளிலிருந்து ஊறிப்பெருகி உருவெடுத்தவைபோல் அவை வந்துகொண்டே இருந்தன. வண்டிகளை அவை அறைந்து சிதறடித்தன. புரவிகள் கனைத்தபடி காட்டுக்குள் சிதறி ஓட எருதுகளை அவை மிதித்து கீழே தள்ளின. கொம்புகளால் குத்தி தூக்கி அப்பாலிட்டன. அம்புகளும் வில்லுமாக எதிர்கொண்ட ஏவலர்களையும் காவலர்களையும் தூக்கி மண்ணில் அறைந்தும் கால்களால் மிதித்தும் கொன்றன. குருதிவீச்சம் எழுந்தது. பந்தங்கள் ஒவ்வொன்றாக மண்ணில் விழுந்து அணைய இருட்டு செறிந்தது.

எரிசுட்டதென எழுந்த வெறியில் அவன் ஓடிய விசை கண்டு அவனை அறிந்த கொம்பன் யானை ஒன்று அவனைத் துரத்தியது. அவன் கால்தடுக்கி கீழே விழுந்து புரண்டு எழுவதற்குள் அவனை இடைசுற்றி பிடித்தது. அவனைத் தூக்கி தன் வலக்காலில் ஓங்கி அறைந்தது. யானையின் துதிக்கையின் எடையையும் கல்லென நெஞ்சில் நிறையும் பேரச்சத்தையும் அவன் இறுதியாக உணர்ந்தான்.

தமயந்தி காலைஒளி நன்கு எழுந்த பிறகே விழித்துக்கொண்டாள். முந்தைய நாளிரவு வேர்க்குவை ஒன்றில் உடல்பொருத்தி படுத்தவள் பின் தன் உடல் வளைவிற்கேற்ப அதனுடன் ஒண்டிக்கொண்டாள். கனவில் அவள் கரிய நீள்உடலும் திரண்ட தோள்களும் கொண்ட அரசியென பட்டத்து யானைமேல் அமர்ந்து அரசப் பெருவீதியில் அணியூர்வலம் சென்று கொண்டிருந்தாள். அவளைச் சூழ்ந்து வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் மங்கலப் பேரிசையும் முழங்கின. வானிலிருந்து பெருமழை இறங்கியதுபோல் மலரும் மஞ்சள்அரிசியும் பொழிந்தன.

அவள் ஏறிச்சென்ற பட்டத்து யானை கரிய மாநாகம் ஒன்றின் படம் என்று அவள் பின்னர் உணர்ந்தாள். அதன் படவளைவு மட்டுமே யானை என மண்ணுக்கு மேலிருந்தது. மண்ணுக்கு அடியில் அதன் உடல் கரிய ஆழ்நதி என வளைந்து நெளிந்துகொண்டிருந்தது. ஒளிவிடும் கற்கள் பதிக்கப்பட்ட அரியணையில் அமர்ந்து அவை முழக்கத்தை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் அவளை நோக்கி முறையிட்டனர், மன்றாடினர், முகமன் உரைத்தனர். கோல் தாழ்த்தி தலைவணங்கினர். அவள் கையிலிருந்த செங்கோலை அவர்கள் அச்சத்துடன் நோக்கி பின் விழிவிலக்கிக் கொண்டிருந்தனர். அது பொன்னிறமான நாகம். அதன் படம் விரிந்து நாக்கு பறந்துகொண்டிருந்தது. தரையில் அதன் வால் நெளிந்து சுழித்தது.

பின்னர் அவள் காட்டுக்குள் வேர்க்குவையொன்றில் அமர்ந்திருந்தாள். அவள் அருகே பொந்துக்குள் நாகம் ஒன்றின் விழிகள் மின்னித் தெரிந்தன. நான்கு திசைகளிலும் பிளிறலோசைகள் எழுந்தன. இருளுக்குள் நெளிந்து பறந்தபடி கரிய நாகங்கள் வந்தன. அவை மண்ணில் விழுந்து எழுந்த அறைவோசையில் மரங்கள் அதிர்ந்தன. அலறியபடி அங்கிருந்த அனைவரும் சிதறி ஓடினர். வண்டிகள் நொறுங்கித் தெறித்தன. இறப்புக் கூச்சல்கள். பசுங்குருதியின் எரிமணம். அவள் நாகங்களின் கண்களை மிக அருகிலென பார்த்துக்கொண்டிருந்தாள். கருவண்டுகள்போல மின்னுபவை.

பின்னர் அவை மறைந்தன. முனகல்களும் அழுகைகளும் மட்டும் எஞ்சியிருந்தன. அவையும் கரைந்தபின் இருளுக்குள் அவளை மிக அருகே நின்று நோக்கிக்கொண்டிருக்கும் இரு நாகவிழிகள் மட்டும் எஞ்சின. ஓநாய் என அந்த நாகம் ஊளையிட்டது. பல ஊளைகள் சேர்ந்து ஒலித்தன. விழிகளுக்குள் வண்ணமாக வெயிலை உணர்ந்த பின்னர்தான் அவள் விழித்தெழுந்தாள். எழுந்தமர்ந்தபோது அது எந்த இடம் என்றே அவளுக்குத் தெரியவில்லை. வேர்ப்புடைப்பைப் பற்றியபடி எழுந்து நின்றாள். அதன் பின்னரே அக்காட்சி முப்புடைப்பு கொண்டது.

அவளைச் சூழ்ந்து அடுமனைப் பெண்டிரும் ஏவலரும் வணிகர்களும் இறந்து சிதறிக் கிடந்தனர். குருதி மண்ணில் வழிந்து வற்றி கருமைகொண்டு உலர்ந்திருந்தது. அப்பால் வெண்குவியல்களாக காளைகள் இறந்து கிடந்தன. அவற்றை செந்நாய்கள் சில கடித்து இழுத்துக்கொண்டிருந்தன. அவள் அசைவைக் கண்டு ஒரு செந்நாய் மெல்ல உறுமியது. பிற செந்நாய்கள் அவளை பொருட்படுத்தவில்லை. வண்டிகளில் இருந்த துணிகளும் படைக்கலங்களும் வெண்கல ஏனங்களும் செம்புக் கலங்களும் பாவைகளும் பீதர்நாட்டு வெண்களிமண் தட்டுகளும் அப்பகுதியெங்கும் சிதறிப்பறந்து கிடந்தன.

அவள் அப்பகுதியைச் சூழ நோக்கியபின் உரக்க “சலஃபை! சலஃபை! எங்கிருக்கிறாய்?” என்று கூவினாள். பின்னர்தான் தன் காலடியிலேயே சலஃபை மண்ணில் முகம் புதைத்து குருதி மூடி சிதைந்து கிடப்பதைக் கண்டாள். “பூமிகரே! பூமிகரே!” என்று அவள் கூவினாள். பின்னர் விழுந்துகிடந்த உடல்களினூடாக தென்னி பதறும் கால்களுடன் நடந்து பூமிகரின் உடலையும் கண்டடைந்தாள். அவரது தலை முழுமையாக முதுகு நோக்கித் திரும்பியிருந்தது. அவளுக்கு வேறு எவர் பெயரும் நினைவுக்கு வரவில்லை.

அவ்வுடல்களினூடாக அவள் சுற்றி வந்தாள். செந்நாய்கள் உடல்களின் குடல்களை கடித்து இழுத்துக்கொண்டிருந்தன. பற்களைக் காட்டி சீறி உடல் வெருண்டன. அவள் இறந்து கிடந்த ஒவ்வொருவரையாக உலுக்கி எழுப்ப முயன்றாள். பின்னர் தளர்ந்து அமர்ந்தாள். பசித்தபோது அடுமனை வண்டியின் உடைவுகளுக்குள் கிடந்த அரிசியையும் பருப்பையும் எடுத்து உண்டாள். ஓடையில் இறங்கி நீரள்ளிக் குடித்துவிட்டு மீண்டும் தானிருந்த வேர்க்குவைக்குள்ளேயே வந்து ஒண்டினாள்.

உடலெங்கும் இருந்த பரபரப்பு அவளை அமரமுடியாமல் செய்தது. மீண்டும் எழுந்து சுற்றிவந்தபோது பாக்குப் பொதி ஒன்றை கண்டாள். முகம் மலர்ந்து உவகைக்குரல் எழுப்பி ஓடிச்சென்று அதை எடுத்து திறந்தாள். பாக்கை அள்ளி வாயிலிட்டு குதப்பியபடி அப்பையை நெஞ்சோடணைத்துக்கொண்டு வந்து வேர்க்குவையில் மீண்டும் அமர்ந்தாள். வாயில் ஊறி நெஞ்சில் இறங்கி குருதியில் கலந்த பாக்கு அவள் தசைகள் அனைத்தையும் தளர வைத்தது. கண்கள் மூடிக்கொண்டபோது முகம் சற்று மலர்ந்தது. வேர்க்குவைக்குள்ளேயே நன்றாக உடலை ஒடுக்கிக்கொண்டு துயிலத் தொடங்கினாள்.

flowerஇரண்டு நாட்கள் அங்கேயே அவள் அமர்ந்திருந்தாள். விழிக்கும்போதெல்லாம் அப்பகுதியை புதிதாகவே கண்டடைந்தாள். உடல் மட்கத் தொடங்கியிருந்த பூமிகரையும் பிறரையும் கைகால்களைப் பற்றி அசைத்து அழைத்தாள். காட்டிலிருந்து கூட்டம் கூட்டமாக நரிகளும் செந்நாய்களும் வந்து அவ்வுடல்களை கடித்து உண்ணத்தொடங்கின. இரவெல்லாம் கனவுக்குள் அவள் எரிமின்னும் விழிகளுடன் ஊளையிடும் நாகங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் பகலில் அவ்வுடல்கள் கிழிக்கப்பட்டு குடலுருவப்பட்டு சிதறிப் பரந்திருப்பதை கண்டாள்.

மறுநாள் பின்னிரவில் அவளுடன் இருந்த நாகம் “வா, நாம் நீராடுவோம்” என்றது. அவர்களைச் சூழ்ந்து பல நூறு நாகங்கள் ஊளையிட்டுக்கொண்டிருந்தன. குரைத்தபடி சீறியபடி ஒன்றுடன் ஒன்று பூசலிட்டன. அவற்றின் வெண்ணிறப் பற்களையும் எழுந்து பரந்த நாவுகளையும் கண்டாள். “எங்கு?” என்றாள். “இதோ, அருகில்தான் மலையருவி உள்ளது” என்றான். மலையருவியின் ஓசையை அவள் கேட்கத் தொடங்கினாள். “ஆம், மிக அருகில்” என்றாள். மரங்களுக்குமேல் அருவி வானிலிருந்தென பொழியும் நீர் முழக்கத்தை கேட்டாள். “வா” என்று அவன் அவள் கையை பற்றினான். ஈரத்துளிப் பிசிறுகள் அவள்மேல் மென்மையாகப் படிந்து பளிங்குத் துருவல்கள் என ஒளியுடன் மயிர்முனைகளில் அமர்ந்தன. இலை நுனிகள் அனைத்திலிருந்தும் நீர் வியர்த்து வழிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

மரங்களின் தழைப்புக்கு அப்பால் வெண்ணுரைப் பொழிவென அப்பேரருவியை அவள் கண்டாள். அச்சம் கொண்டு காலெடுத்து பின்னடைய அவன் அவள் கைகளை பற்றிஇழுத்தபடி சென்றான். சிரித்தபடி அவள் அருகே செல்லாமல் பின் காலெடுத்து வைக்க அவன் அவளை அள்ளித்தூக்கிச் சுழற்றி எடுத்துக்கொண்டான். கைகளையும் கால்களையும் உதறியபடி அவள் சிரித்துக் கூவினாள். அவளை கொண்டுசென்று அருவிக்குக் கீழே நிறுத்தினான். நீர்ப்பெருக்கு அவளை அறைந்து மூடியது. உடல் குளிர்ந்து நடுங்கத் தொடங்கியது. “போதும்! போதும்!” என்று அவள் அவனிடம் சொன்னாள். அவனை அறைந்தாள். நீரிலிருந்து விலகி ஓட முயன்றாள். அவன் அவள் கைகளை இறுகப் பற்றியிருந்தான். பற்கள் நடுங்கி அடித்துக்கொண்டன. கைவிரல்கள் குளிரில் ஒன்றுடன் ஒன்று முறுகிக்கொள்ள தசைகள் உளையத் தொடங்கின. பின்னர் அவள் காட்டை மூடிப் பொழிந்துகொண்டிருந்த பெருமழைக்குள் கண்விழித்தாள்.

flowerதமயந்தி நான்கு நாட்கள் சேறுகுழம்பிய சாலையில் தன்னந்தனியாக நடந்தாள். மழைநீரை அருந்தினாள். சாலையோரத்தில் கிடைத்த காய்களை எல்லாம் பறித்துத் தின்றாள். சூக்திமதிக்குள் நுழைந்தபோது அவள் உடலில் நைந்த மரவுரிக் கந்தல் மட்டும் இருந்தது. கூந்தலில் சேறும் சருகுகளும் செறிந்திருந்தன. எங்கிருக்கிறோம் என்னும் உணர்வே இல்லாமல் அவள் நகரில் அலைந்தாள். எதிர்ப்படுபவர்கள் அனைவரிடமும் கையேந்தி உணவுக்கு இரந்தாள். கிடைத்தவை அனைத்தையும் உண்டுவிட்டு சாலையோரங்களின் சிறு கூரைநீட்சிகளுக்கு அடியில் ஒண்டிக்கொண்டு துயின்றாள்.

பூமிகரின் வணிகக் குழுவில் எஞ்சிய சுசி தன் மூன்று துணைவர்களுடன் தப்பி காட்டுக்குள் ஓடி சிற்றூர் ஒன்றில் நோயில்கிடந்து உயிர்தேறி உடைந்த கைகளுடன் சூக்திமதிக்கு வந்துசேர்ந்தார். வணிகர் குழுவினரை அணுகி இழப்பைச் சொல்லி உதவும்படி கோரினார். அங்காடி மையத்தில் அமைந்த குபேரனின் ஆலயத்தில் அவரை அவர்கள் தங்க வைத்திருந்தனர். அவருக்காக வணிகர்கள் ஆளுக்கொரு வெள்ளிநாணயம் ஈந்து ஈட்டுச்செல்வம் திரட்டினர். அதை அவருக்கு அளிப்பதற்காக அந்த ஆலயத்தில் கூடியிருந்தபோது சுசி வெளியே வந்துநின்ற தமயந்தியைக் கண்டார்.

பித்தேறிய வெறிச் சிரிப்புடன் “உணவு! உணவு!” என கூச்சலிட்டாள் தமயந்தி. மழை பெய்துகொண்டிருந்தமையால் அவள்மேல் நீர் சரிந்திறங்கிக்கொண்டிருந்தது. அஞ்சி நடுங்கி உடலொடுங்கி சற்றுநேரம் நின்ற சுசி பின்னர் வெறிகொண்டு அருகிருந்த பொருட்களை எடுத்து அவள்மேல் வீசியபடி கூச்சலிட்டார். “இவள்தான் எங்களை அழித்தவள். கூட்டரே, இவள் பெண்ணல்ல. அழகிய பெண்ணாக எங்களுடன் வந்துசேர்ந்தாள். ஒரே நாளில் முதுமகளென்றானாள். இவள் ஏதோ கொடுங்காட்டணங்கு… நோயையும் இறப்பையும் அளிக்கும் தீயோள்…”

அவரை அவர்கள் பிடித்து தடுத்தனர். இன்னொருவன் “ஆம், நானே அதை கண்டேன். தோழர்களே, இவள் இரவில் கனவிலென எழுந்து நடக்கிறாள். அப்போது உடலில் கூன் இல்லை. தன்னை அரசி என்கிறாள். அரண்மனையில் உலவும் நிமிர்வு கொண்டிருக்கிறாள். ஆணையிடும் குரலில் பேசுகிறாள். இவளில் வாழ்வது மானுடர்களுடன் விளையாடும் தீயணங்கு. ஐயமே இல்லை” என்றான். அவர்கள் அச்சத்தால் உறைந்து நின்றனர். பின்னர் அவளை கற்களால் அடித்து துரத்தினர். அவள் அச்சத்தால் நடுங்கினாள். ஆனால் நிலையழிந்த உள்ளம் கொண்டிருந்தமையால் முகத்தில் சிரிப்பே வெளிப்பட்டது.

அதன்பின் அவளை அங்காடியில் வாழ வணிகர்கள் விடவில்லை. நோக்குமிடமெல்லாம் கல்லால் அறைந்து துரத்தியடித்தனர். அங்காடிச் சிறுவர்கள் மண்ணையும் கற்களையும் அள்ளி வீசி நகையாடினர். நாய்கள் குரைத்தபடி அவளை தங்கள் எல்லைவரை விரட்டிச்சென்றன. தனக்குத்தானே பேசிக்கொள்பவளும் தானே உடைந்து அழுது பின் தேறி சிரிப்பவளுமாகி அவள் விலகிச்சென்றாள். சடையான குழலும் நோய்க்கிழவி முகமும் கொண்டிருந்த அவளை நோய் கொண்டுவரும் கொடுந்தெய்வம் என எண்ணிய சூதரும் ஆயரும் வேளிரும் தங்கள் தெருக்களில் நுழையவிடவில்லை.

அனைவராலும் தாக்கப்பட்டபோது அவள் எங்கும் பதுங்கிக் கொள்பவளானாள். மிகச் சிறிய இடுக்குகளிலேயே ஒடுங்கி விழிகளிலிருந்து மறையும் திறனை உள்ளம் அறியாமலேயே அவள் உடல் கற்றுக்கொண்டது. அவ்வாறு அவள் மறைவது அவர்களின் அச்சத்தை மேலும் பெருக்கியது. பகலில் எலிபோல எங்கேனும் முற்றிலும் பதுங்கியிருந்து இரவில் மட்டும் வெளியே வந்தாள். குப்பைகளிலிருந்து தன் உணவை தேடி உண்டாள். அவளை நாய்கள் தங்களவள் என ஏற்றுக்கொண்டன. ஆகவே ஒலியில்லாமல் நிழலுருவென நகரில் அலைந்தாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 69

68. நெளிநீர்ப்பாவை

flowerமுதலிருள் செறிவுகொள்ளத் தொடங்கியதுமே உணவு முடித்து அனைவரும் துயிலுக்கு படுத்துவிட்டிருந்தனர். ஷத்ரியக் காவலர்கள் நால்வர் மட்டும் விழித்திருந்தனர். அடுமனைப் பெண்டிர் விரித்த ஈச்சம்பாயில் தன் தோல்பொதியை தலையணையாக வைத்து தமயந்தி படுத்தாள். ஆலமரத்தின் மேலிருந்து சருகுகள் சுழன்று அவள்மேல் உதிர்ந்துகொண்டிருந்தன. காட்டின் கனவுக்குழறல் என ஒலித்த பறவைக் குரல்களையும் காற்றின் ஓசையையும் கேட்டுக்கொண்டு எதனுடனும் தொடுத்துக்கொள்ளாமல் சிதறிப் பரவிய எண்ணங்களை வேறெங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருந்தாள்.

பின்னர் அவள் விதர்ப்ப அரண்மனையிலிருந்தாள். இடைநாழியினூடாக சலங்கைகள் ஒலிக்க அரையில் கிண்கிணி குலுங்க ஓடிச்சென்றபோது குறுக்காக அவிழ்ந்த தலைப்பாகை என ஒன்று கிடப்பதை கண்டாள். மிக அருகே சென்றபோதுதான் அது உடல் மின்னும் நாகம் என்று அறிந்தாள். பின்னடி எடுத்து வைக்கவோ கூக்குரலிடவோ தோன்றவில்லை. விழிவிலக்க முடியாத ஈர்ப்புடன் நெஞ்சில் கை சேர்த்து அங்கேயே நின்றாள். நாகத்தின் உடலுக்குள் அதன் உள்ளம் என ஒன்று உருள்வது போலிருந்தது. நீர்ச்சுழியின் வளைவசைவின் மெல்லொளி. வால் மட்டும் வேறொரு உயிருடையதென அதன் உடலின் விரைவற்ற வழிவிற்கு மாற்றாக துடித்தது.

உடல் சுருட்டி  அதன் நடுவே தன்னை எழுப்பிக்கொண்டது. மேலிருந்து கண்காணா சரடொன்று அதை கட்டி மெல்ல ஆட்டுவதுபோல அவளுக்குத் தோன்றியது. அதன் இமையா விழிகளை நோக்கியபின் கை நீட்டி அதன் நாய்க்குட்டி மூக்கை தொடமுயன்றாள். பின்பக்கம் சேடி ஒருத்தியின் அலறல் கேட்டது. காலடி ஓசைகள் முழங்க அவள் ஓடிவந்து அவளைப் பற்றித் தூக்கி காற்றில் சுழற்றி இடையில் வைத்துக்கொண்டு அப்பால் விலகிச்சென்றாள். அவ்வோசையில்  விதிர்த்துச் சீறி எழுந்த நாகம் மறுகணமே வாழைத்தண்டு விழும் ஒலியில் நிலத்தில் படமறைய விழுந்து விரைந்தோடி சாளரத்தில் ஏறி மறுபுறம் சென்று மறைந்தது.

காவலர்கள் ஈட்டிகளும் வாள்களுமாக ஓடிவந்தபோது அவளைப் பற்றி உடலோடு அணைத்திருந்த சேடி சாளரத்தை சுட்டிக்காட்டி “அங்கே! அங்கே!” என்று கூவினாள். அவள் அச்சாளரத்தையே வெறித்து நோக்கியபடி அசைவின்றி இடையில் அமர்ந்திருந்தாள். பின்னர் அச்சாளரமே நாகவிழி நோக்கு கொண்டது. ஒளியுடன் கனவுகளில் அது திறந்துகொண்டது. அதன் அருகே சென்று வெளியே நோக்கி கனவிலாழ்ந்து நிற்பது அவள் வழக்கமாகியது.

தன்னருகே எவரோ அமர்ந்திருப்பதை உணர்ந்து விழித்தெழுந்தாள். கரிய பேருடலன் ஒருவன் மின்னும் கண்களுடன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். இரு பக்கமும் யானை மருப்பென திரண்டெழுந்து வளைந்து நரம்புக் கிளைபரவி தசையிறுகி நீண்டிருந்த கைகள் அவளை தொட்டுக்கொண்டிருந்தன. அவள் இருமுறை உதடுகளை அசைத்தபின் மூச்சை இழுத்து துடிக்கும் நெஞ்சை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு  “என்ன?” என்றாள். “உன்னை பார்க்க வந்தேன்” என்றான். “என்னையா? இங்கா?” என்று அவள் கேட்டு திரும்பி தன்னைச் சுற்றி துயின்றுகொண்டிருந்தவர்களை பார்த்தாள்.

“அவர்கள் விழிக்கமாட்டார்கள்” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இது வேறு இடம், வேறு வெளி, முற்றிலும் வேறு காலம்” என்றான். அவன் விழிகள் இரு பச்சைக் கற்கள்போல உள்ளொளியுடன் அவளை நோக்கி இமையாது நிலைத்திருந்தன. “ஏன் வந்தாய்?” என்று அவள் கேட்டாள். “இன்றோடு நீ காட்டின் எல்லை கடக்கிறாய். நான் ஆளும் சோலையைத் துறந்து நீ செல்லவிருக்கிறாய்” என்றான். “ஆம், நான் சென்றாக வேண்டும்” என்று அவள் சொன்னாள். “நான் அன்னை, துணைவி, அரசி.”

“என்னுடன் வா” என்றான்.  “எங்கே?” அவன் “அங்கே நாமிருந்த நிலத்திற்கு” என்றான். அவள் “இல்லை, நான் அறிவேன். அது நோய், நஞ்சு, இறப்பு” என்றாள். அவன் விழிகள் அவள் உள்ளத்தைப் பற்றி அசைவழித்து நிறுத்தின. செவிக்குள் அவன் சொற்கள் ஒலித்தன. “இல்லை தேவி, அது இன்பம், அமுது, அழிவின்மை.” அவள் இல்லை என தலையசைத்தாள். “இங்கிருந்து பார்க்கையில் பிறிதொன்றென தோன்றும், நீ அறிவாய். அங்கிருந்து பார்க்கையில் இவை நோயென்றும் நஞ்சென்றும் இறப்பென்றும் தோன்றவில்லையா?”

அவள் தலையசைத்து எடையுடன் எங்கோ கிடந்த சொற்களை மீட்டெடுத்து “என்னை விட்டுவிடு” என்றாள். “நான் எவரையும் பற்றிக்கொள்வதில்லை. விழையாதவரை அணுகும் ஆற்றல் மறுக்கப்பட்டவன் நான்” என்றான் அவன். “இக்கணம்கூட நீ விழைந்தால் என்னை விட்டுவிடலாம். ஆனால் துளி விருப்பு எஞ்சியிருக்குமென்றால்கூட நான் உன்னுடன்தான் இருப்பேன்.” அவள் தலைகுனிந்து “வேண்டாம், செல்க!” என்றாள். “எதை தெரிவு செய்யப்போகிறாய்? இருப்பெனும் நோய், விழைவெனும் நஞ்சு, அகவையெனும் சாகாடு கொண்ட இதையா? மெய்யிலாமையும் காமமும் முடிவின்மையும் கொண்டு திளைக்கும் அதையா?”

“இல்லை, சென்றுவிடு” என்றாள் அவள். “என் விழிகளை நோக்கி அதை நீ சொல்லவேண்டும். உன் விழிகளும் சான்றாகவேண்டும்”  என்றான். அவள் விழிகளைத் தூக்காமல் அழுகைநோக்கி தணிந்த குரலில் “சென்றுவிடு சென்றுவிடு” என்றாள். “நான் அறிந்ததுபோல் எவர் அறிந்திருக்கிறார்கள் உன்னை? உன்னுள் நுழைந்து நீயென்றாகி அனைத்தையும் நடித்திருக்கிறேன்.” அவள் விம்மியழுதபடி “சென்றுவிடு… அளிகூர்ந்து என்னை விட்டுவிடு” என்றாள்.

அவன் அவள் கைகளைப்பற்றி இறுக்கி பிறிதொரு கையால் அவள் கன்னத்தைத் தொட்டு முகத்தை திருப்பினான். அவன் கைகள் குளிர்ந்து ஈரம் கொண்டிருந்தன. “என்னை நோக்கு. பிறிது எதையேனும் நீ இத்தனை உளமகிழ்வுடன் கொண்டாடி இருக்கிறாயா? வேறெங்கும் பிளவுறாது இருந்திருக்கிறாயா?” அவள் “வேண்டாம்” என்று விம்மினாள். “ஏன்?” என்றான். “நான் அஞ்சுகிறேன்.” அவன் “எதை?” என்றான். அவள் விழிதூக்கி “பழியை” என்றாள்.  “எவர் மீதான பழி?” என்றான். “இது பிழை.” “என்ன பிழை? அறிவிழந்து சொல்லெடுக்காதே. இவை நிகழும் சூழ்வெளி பிறிதொன்று. இங்கு நாமிருவர் மட்டுமே.”

“இது வேட்கையின் வெளி, தேவி. ஆகவே இங்கே பிறன் என்றும் பிறிதென்றும் எதுவுமில்லை. இங்கு நான்கு திசைகளும் முற்றிலும் திறந்து முடிவிலாதுள்ளன. விண்ணில் தேவர்களோ மண்ணுக்கு அடியில் இருள் தெய்வங்களோ இங்கில்லை.” அவள் சினத்துடன் பற்களைக் கடித்தபடி “நான் என்ன செய்யவேண்டும்? சொல், நான் என்ன செய்யவேண்டும்?” என்று உரக்க கேட்டாள். “என் கணவரின் நெஞ்சில் நச்சு வாளை செலுத்தவேண்டுமா? என் மைந்தரை மறக்கவேண்டுமா? பாலூட்டிய முலைகளை அறுத்தெறியவேண்டுமா?”

“எதை நீ உண்மையிலேயே விரும்புகிறாயோ அதை செய்க! பிறிதொன்று எஞ்சாது எதில் முழுதமைவாயோ அதில் இறங்கு. மற்றொன்றை நான் சொல்வதற்கில்லை” என்றான். “விந்தை! ஏன் மானுடர் எப்போதும் ஒன்றின் பொருட்டு பிறிதை செய்கிறார்கள்? மகிழ்வதற்கு அஞ்சும் விலங்கு ஒன்றே இப்புவியில்.” அவள் “பிளவுண்ட நாக்கின் சொற்கள். விலகு” என்று கூவினாள். “நீ அறிந்த நிலம் அது. அங்கு நிலவு தேய்வதில்லை. மலர்கள் உதிர்வதில்லை விழியொளிர் விலங்குகளும் ஒளிச்சிறைப் புட்களும் கொண்ட பெருங்களியாட்டப் பரப்பு அது” என்றான்.

அவள் “வெறும் சொற்கள்!” என்று கூவினாள். “நானறிவேன், இச்சொற்களை எங்கெங்கோ கற்றிருக்கிறேன். நூல்களிலிருந்து இவற்றைத் தொகுத்து என்னுள் பூழ்த்தி வைத்திருக்கிறேன்.” அவன் சிரித்து “ஆம், இவையனைத்தும் நீ அறிந்தவையே. மண்ணில் வற்றும் நீர் ஆழ்பாறைக்குள் தேங்குவதுபோல, நீ எண்ணியவை, கேட்டவை, கற்றவை.” அவள் எழுந்த வெறியுடன் அவனை அறைந்தாள். பூனைக்கை என அவன் தோள்களிலும் நெஞ்சிலும் அவள் நகங்கள் கோடிழுத்தன. “சென்றுவிடு! சென்றுவிடு!” என்று அவள் கூச்சலிட்டாள்.

“இவ்வினாவுக்கு மட்டும் மறுமொழி சொல். ஏன் மானுடர் விடுதலையை கனவு கண்டபடி தளைகளை பூட்டிக்கொள்கிறார்கள்?” அவன் சொற்களை கேட்காதிருக்கும்பொருட்டு தலையை விசையுடன் ஆட்டியபடி “சென்றுவிடு! செல்! சென்றுவிடு!” என அவள் கூவியபடியே இருந்தாள். “இரு… பொறு” என அவன் அவள் கைகளைப் பற்ற அவனை பிடித்துத் தள்ளமுயன்றாள். மண்ணில் நிலைத்த பாறைபோல் இருந்தது. தசைகள் கரிய இரும்பென இறுகிய அவன் கைகள் நீண்டு வந்து அவள் இடையை வளைத்தன. “வேண்டாம்!” என்று அவள் கூவினாள். குரல் தழைய “வேண்டாம்” என்றாள்.

“உள்ளம் சொல்லவேண்டும் அவ்வாறு” என்றபடி அவன் அவளை தன்னுடன் சேர்த்துக்கொண்டான். விழிகள் சொக்கி மூட, இதழ்கள் மெல்ல அசைய, தனக்கே என  “வேண்டாம் வேண்டாம்” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். உடல் வெம்மைகொள்ள, உள்ளங்கால்கள் இழுத்துக்கொண்டு நீள உடல் இனிய தளர்வில் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்துக்கொண்டது. மேலுதட்டில் வியர்வைத் துளிகள் அரும்பின. மூச்சுலைவில் முலைக்குவைகள் எழுந்தமைந்தன. அவன் அவள் உதடுகளை தன் உதடுகளால் கவ்விக்கொண்டான். அவன் கைகள் அவள் உடலைச் சுற்றி வளைத்து இறுக்கி அவள் உடலென்றே ஆயின.

இருண்ட பெருமாளிகையின் உள்ளறை ஒன்றில் எஞ்சிய ஒற்றை அகல்சுடரென மிக ஆழத்திலெங்கோ நானென்னும் தன்னுணர்வு மட்டும் இருக்கக்கண்டாள். காற்றில் அது அசைந்தது. இதோ அணையப்போகிறதென்று தோன்ற மீண்டும் எழுந்து அமைந்தது. மீண்டும் அதை ஊதி அணைக்கத் துடித்தது காற்று. எழுந்து காற்றில் நின்று மீண்டும் திரியுடன் வந்து பொருந்திக்கொண்டது சுடர். மெல்ல குறுகி சிறுசெம்மணியென்றாகி இதோ மறையப்போகிறேன் என்று உணர்த்தி மீண்டும் நீண்டெழுந்தது.

அவள் தன் இடக்கையை மட்டும் தன்னால் இயக்க முடியுமென்று உணர்ந்தாள். கை நீட்டி தான் படுத்திருந்த தரையை துழாவினாள். வேறொன்று பற்றக் கிடைத்தது. ஐந்து விரல்களாலும் அதை இறுகப் பற்றிக்கொண்டாள். பெருவிசையுடன் இழுத்துச்செல்லும் ஆற்றில் இருந்து தப்ப விழைவதுபோல அதை பற்றிக்கொண்டாள். அவள் தசைகள் இறுகித் துடித்தன. கை அறுந்து உடல் அகன்றுவிடும்போல இருந்தது. மூச்சனைத்தையும் திரட்டி தன்னுணர்வு அனைத்தையும் குவித்து அந்தக் கையால் தன்னை உந்தி மேலெழுப்பிக்கொண்டாள்.

flowerவெளியே அலறலொன்று கேட்டது. திடுக்கிட்டு எழுந்து கையூன்றி உடல் குறுக்கி அமர்ந்து நடுங்கினாள். அவள் வலக்காலின் கட்டைவிரலை கவ்வியிருந்த நாகம் ஓடும் நீரில் வளைந்தாடும் சரப்பாசிபோல் உடல் நெளித்தது. “பாம்பு! பாம்பு!” என்று அடுமனைப் பெண்கள் கூவினர். ஒருத்தி சுற்றும்முற்றும் பார்த்து அருகிலிருந்த தடி ஒன்றை எடுத்து அதை அடித்தாள். அது உடலை விலக்கிக்கொள்ள நிலத்தில் விழுந்தது அடி. பாம்பு அவள் விரலை விட்டுவிட்டு பின்னகர்ந்து தலைசொடுக்கி எழுந்து படம் காட்டியது. பின்னர் வளைந்து விரைந்து அப்பரப்பெங்கும் நெளிந்துகொண்டிருந்த நிழல்களில் ஒன்றென ஆகியது.

ஓசை கேட்டு காவலர் பந்தங்களுடன் ஓடிவர அனல் நெளிவில் அங்கிருந்த அனைத்து விழுதுகளும் நாகங்களென நெளிந்தன. ஒருவன் குனிந்து அவள் காலை பார்த்தான். “கடித்துவிட்டது. ஆழமாக பல் பதிந்துவிட்டது” என்றாள் அடுமனைப் பெண். பூமிகர் தன் சிறுகுடிலில் இருந்து தவழ்ந்து வெளியே வந்து என்ன என்ன என்றார். “புதிய அடுமனைப் பெண்ணை பாம்பு கடித்துவிட்டது” என்று கூவினாள் அடுமனைப் பெண். “நச்சுமுறி இருக்கிறதல்லவா? சுதீரரை அழை…” என்று பூமிகர் கூவினார்.

இரு ஏவலர்கள் தலைவழியாக ஆடையைப் போர்த்து துயின்றுகொண்டிருந்த முதிய மருத்துவர் சுதீரரை தட்டி எழுப்பினர். “என்ன?” என்று அவர் கேட்டார். “பாம்பு கடித்துவிட்டது. எழுங்கள்… வந்து பாருங்கள்.” அவர் எழுந்து இடையாடையை முறுக்கி உடுத்து “எங்கே? யாரை?” என்றார். “வருக! புதிய அடுமனைப் பெண்ணை பாம்பு கடித்துவிட்டது, கட்டைவிரலில்…” அவர் கூன் விழுந்த உடல் நடுங்க கைகளை காற்றில் துழாவியபடி அருகணைந்தார். தொலைவிலேயே அவளை நோக்கிவிட்டார். “தெய்வங்களே, அரசநாகம் அல்லவா?” என்றார்.

தமயந்தி தன் உடலெங்கும் நஞ்சின் வெம்மை ஓடி பரவி நிறைவதை உணர்ந்தாள். காது மடல்களும் உதடுகளும் எரியத் தொடங்கின. கண்ணிமைகள், கழுத்து, முலை மொட்டுகள் என அந்த இனிய எரிச்சல் பரவியது. சுதீரர் குனிந்து அவள் கால்களை பார்த்தார். “ஆழக் கடித்திருக்கிறது” என்றபடி நிமிர்ந்து அவளைப் பார்த்து “நெடுநேரமாக கடித்துக்கொண்டிருந்திருக்கிறது. என்ன செய்தார்கள்? நாகத்தை மிதித்துவிட்டார்களா?” என்றார். “ஏதேனும் செய்யுங்கள்” என்றார் பூமிகர். “துயில்கையில் அதன் தலையை மிதித்து அழுத்தியிருக்கிறார்கள். நஞ்சு உடலில் நிறைந்துவிட்டது” என்றார். பூமிகர் “உடனே மருந்து அளியுங்கள், அவர் வெறும் அடுமனைப் பெண் அல்ல”  என்றார்.

“இத்தனை நஞ்சுக்கு என் மருந்து ஆற்றுமா என்றறியேன். அளித்துப் பார்க்கிறேன்” என்றார் சுதீரர். அவர் தன் மரப்பெட்டியைத் திறந்து அதற்குள்ளிருந்து ஒன்பது சிறிய சிமிழ்களை எடுத்து உள்ளிருந்த வெவ்வேறு நிறம்கொண்ட வேதிப்பொருட்களை எடுத்து சிறிய கலுவமொன்றில் போட்டு சிறிய குழவியால் கலக்கத் தொடங்கினார். “என்ன செய்கிறீர்கள்?” என்றார் பூமிகர். “இது பாஷாண மருத்துவம். இவை அனைத்தும் நஞ்சுகள். பெருநஞ்சை சிறுநஞ்சுகளின் தொகையால் எதிர்க்கும் பீதர்நாட்டு முறை. இந்நஞ்சுகள் சற்று அளவு மிகுந்தாலும் இவையே உயிர்குடிப்பவையாக ஆகிவிடும்” என்றார்.

தமயந்தியின் உடலில் தசைநார்கள் இழுபட்டு உடல் பிழையாக நாணேறிய வில்லென கிடந்தது. நவபாஷாணத்தை கலுவத்தில் எடுத்தபடி அருகணைந்த சுதீரர் சிறிய ஊசியால் அதைத் தொட்டு அவள் கழுத்துநரம்புகளிலும் கைநரம்புகளிலும் குத்தினார். அதன்பின் அவள் வாயை சிறிய மர ஆப்பால் நெம்பித் திறந்து நாவில் ஒரு துளியை விட்டார். கலுவத்தை தன்னருகே நின்ற இளைஞனிடம் அளித்து “ஏழு அடி குழிதோண்டி இப்படியே புதைத்துவிடு…” என்றார். அவன் அதை வாங்கிக்கொண்டு சென்றான். பூமிகரிடம் “எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. பார்ப்போம்” என்றார் சுதீரர்.

அன்று இரவு முழுக்க வணிகர் குழுவில் எவரும் துயிலவில்லை. அரைநாழிகைக்குப்பின் சுதீரர் தமயந்தியின் கைகளிலும் கால்களிலும் நீலநரம்புகளில் ஐந்து இடங்களில் கிழித்து குருதியை வெளியே பெருகச் செய்தார். அவள் உள்ளங்கையைப் போழ்ந்து குருதி எழுந்த காயத்தில் மேலும் சில மருந்துகளை வைத்து சேர்த்து கட்டினார். அவ்வப்போது வலிப்பு கொண்டு அதிர்ந்து பின் ஓய்ந்தது அன்றி அவள் உடலில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இமைகளை விரலால் திறந்து நோக்கியபோது கருவிழிகள் உள்ளே மறைந்திருக்கக் கண்டார். கண் பரப்பு குருதிப் புண்போல் சிவந்திருந்தது.

எவரும் படுக்கத் துணியவில்லை. “அந்த நாகம் இங்கெங்காவது பதுங்கியிருக்ககூடும்” என்றார் பூமிகர். காவலர்கள் பந்தங்களுடன் அனைத்து வேர்மடிப்புகளையும் கிளைப்பொந்துகளையும் நோக்கினர். இலைபறித்து புகையிட்டு தரையெங்கும் பரப்பினர். பூமிகர் மருத்துவரிடம் “கடந்துவிட்டார்களா?” என்றார். “இறப்பென்றால் எப்போதோ நிகழ்ந்திருக்கும். உடல் போரிடுகிறதென்பதனால்  இன்னும் நம்பிக்கை இருக்கிறது” என்று அவர் சொன்னார். அச்சமும் பரபரப்பும் அவர்களை நெடுநேரம் அமரவிடவில்லை. பின்னர் அதனாலேயே களைத்து ஆங்காங்கே குழு சேர்ந்தமர்ந்தனர். சொல்லில்லாமல் விழிவிரிய அமர்ந்திருந்தனர்.

பூமிகர் உடல் அதிர்ந்து இழுபட்டுக்கொண்டிருந்த தமயந்தியை நோக்கியபடி “விழிப்பதென்றாலும் இதற்குள் நடந்திருக்க வேண்டுமே?” என்றார். “ஆம், அதை எண்ணித்தான் நானும் அஞ்சிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் முழுக்க நலமடைவதற்கு வாய்ப்பில்லை” என்றார் சுதீரர். பெருமூச்சுடன் “நற்செய்தியை வந்து சொல்லுங்கள், மருத்துவரே” என்றபின் மீண்டும் உதறிக் கட்டப்பட்ட தன் சிறுகுடிலுக்குள் நுழைந்து தோல்படுக்கையில் படுத்துக்கொண்டார் பூமிகர்.

அவள் பிழைக்கமாட்டாளென்ற எண்ணம் ஒவ்வொருவரிலும் உருவாகியது.  சொல்லப்படாமலேயே அது பகிரப்பட்டது. எதிர்பார்க்க ஏதுமில்லை என்பது அத்தருணத்தின் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. அவர்கள் மெல்ல சரிந்து புரண்டு நீள்மூச்செறிந்து குறட்டையென்றாகி துயில்கொள்ளத் தொடங்கினர். மருத்துவர் தன் இளவலிடம் “நானும் சற்று ஓய்வெடுக்கிறேன். முதிர்ந்த உடல் எனக்கு” என்றார். சிறு சம்புடத்தை நீட்டி “ஒவ்வொரு முறையும் இவ்வலிப்பு வந்தவுடன் இம்மருந்தை இவர்கள் நாவுக்குள் விடு. பார்ப்போம்” என்றார். அவன் தலையசைத்து மருந்தை வாங்கிக்கொண்டான். அருகிலேயே தழைப் படுக்கை அமைத்து அதில் தன் கூன் உடலை நீட்டி அலுப்போசையுடன் படுத்துக்கொண்டார் சுதீரர்.

காலையில் கருங்குரங்கொன்றின் ஓலம் கேட்டு பூமிகர்தான் முதலில் விழித்துக்கொண்டார். சில கணங்களுக்குப்பின் முந்தைய இரவின் நிகழ்வுகள் அனைத்தும் நெஞ்சில் எழ குடில் விட்டு வெளிவந்து எழுந்து நின்றார். தொலைவில் நாணேற்றிய விற்களுடன் நான்கு காவலர்கள் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் அவரைப் பார்த்து தலைவணங்கினான். விடிவெளிச்சம் நன்கு எழுந்து மண் வெளுத்திருந்தது. அவர் தன்னைச் சுற்றி துயின்றுகொண்டிருந்த ஏவலர்களையும் அடுமனைப் பெண்களையும் பார்த்தபடி நடந்து தமயந்தி கிடந்த இடத்திற்கு வந்தார்.

அங்கெங்கும் தமயந்தியை காணவில்லை என்பதை உணர்ந்து எங்கு சென்றிருப்பாளென்று புதர்ப்பரப்பை பார்த்தார். பின்னர் குனிந்து துயின்றுகொண்டிருந்த மருத்துவரை காலைத் தட்டி அழைத்தார். சுதீரர் எழுந்து வாயைத் துடைத்தபின் “பூமிகரே?” என்றார். “நாகம் என் கனவில் வந்தது. புன்னகைத்தது. அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.” பூமிகர் “அவர்கள் எங்கே?” என்றார். சுதீரர் ஆடையை நன்கு கட்டியபடி எழுந்து “யார்?” என்றார். “பாம்பு தீண்டிய அடுமனைப் பெண். இங்குதானே இருந்தார்?” என்றார் பூமிகர்.

சுதீரர் நான்கு பக்கமும் நோக்கியபின் “எழுந்து சென்றுவிட்டார்களா?” என்று தனக்குத்தானே கேட்டபடி தலையை வருடினார். துயின்று கொண்டிருந்த அடுமனைப் பெண்ணொருத்தியை தட்டியெழுப்பி “நாகம் தீண்டியவள் எங்கே?” என்றார். அதற்குள் அமர்ந்தபடியே துயின்ற அவர் இளவல் எழுந்து “இங்குதானே இருந்தார்கள்? சற்று முன்புகூட…” என்று சொல்லி திரும்பினான். அக்கணமே உரக்க அலறியபடி எழுந்துவிட்டான். “என்னடா, மூடா?” என்றார் பூமிகர். “இதோ… இதோ” என அவன் கைநீட்டி கூச்சலிட்டான்.

அக்கணத்தில் அனைத்தும் புரிய பூமிகரும் வியப்பொலி எழுப்பினார். தமயந்தி இலைப்படுக்கையில் முற்றிலும் பிறிதொருத்தியாகி படுத்திருந்தாள். அவள் உடற்தசைகள் பலவாறாக இழுத்து இறுகிநிற்க கைகளும் கால்களும் கோணலாகி  நின்றிருந்தன. கைவிரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறி முறுகியிருந்தன. முகம் வலப்பக்கமாக இழுபட்டு கோணல் கொண்டிருந்தது. அது உடல் முழுக்க இருந்த கோணலின் விளைவு எனத் தெரிந்தது. கண்களும் மூக்கும் வாயும் வலப்பக்கமாக இழுபட்டு உருமாறியிருந்தன. தோல் பல்லாண்டு முதுமை கொண்டதுபோல் ஒளியிழந்து சுருக்கங்கள் அடர்ந்திருந்தது.

“முற்றிலும் மாறிவிட்டார்கள்” என்றார் பூமிகர். “மானுட முகத்தோற்றம் என்பதே வலப்பக்கமும் இடப்பக்கமும் கொள்ளும் பொருத்தம்தான். அது மாறினால் அனைத்தும் மாறிவிடும்” என்றார் சுதீரர். அவள் கைபற்றி நாடியை நோக்கியபின் “குதிரைநடை… இறப்பு அகன்றுவிட்டது என்பது உறுதி” என்றார்.

flowerமறுநாளே தமயந்தி எழுந்துவிட்டாள். ஒற்றைக்காளை வண்டியில் சென்றுகொண்டிருக்கையில் அவள் நினைவு மீண்டாள். முனகலோசை கேட்டு அருகணைந்த அடுமனைப் பெண்களிடம் முதுமகளின் தளர்குரலில் “என்ன ஆயிற்று?” என்றாள். “நாகம் பற்றியது. நச்சு ஏறி நோயிலிருந்தீர்கள். இப்போது மீண்டுவிட்டீர்கள்” என்றாள் சலஃபை. அவள் எழுந்தமர்ந்து “நான் முன்னரும் நஞ்சுப் பீடிப்பு கொண்டிருந்தேனே” என்றாள். அவளருகே வந்த சுதீரர் “ஆம், அதனால்தான் இந்த நச்சுப் பீடிப்பிலிருந்து தப்பினீர்கள். அது நட்பு நஞ்சு. இது பகை நஞ்சு” என்றார்.

அவள் விழிகளை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் அவர்கள். அவள் “என் குரல் ஏன் இப்படி இருக்கிறது?” என்றாள். அவர்கள் விழிகளில் வந்த மாறுபாட்டை அறிந்ததும் தன் கைகளை நோக்கி “என்ன?” என்றாள். சுதீரர் “தேவி, நாக நஞ்சால் நீங்கள் உருமாறு கொண்டுவிட்டீர்கள்” என்றார். “உருமாறு என்றால்…?” என்றாள் தமயந்தி. “பிறர் அறிய முடியாதபடி…” அவள் திகைப்புடன் சில கணங்கள் நோக்கிவிட்டு அருகிருந்த தாலம் ஒன்றை எடுத்து தன் முகத்தை நோக்கினாள். அவள் தலை நடுங்கியது. நீள்மூச்சுக்கள் எழுந்தமைந்தன. பின்னர் தலையசைத்து “நன்று” என்றாள்.

“நாளடைவில்…” என தொடங்கிய சுதீரரிடம் “இப்போதைக்கு இது நன்று, மருத்துவரே. நான் என் உடலுக்குள் ஒளிந்துகொண்டதைப்போல் உணர்கிறேன்” என்றாள் தமயந்தி. சுதீரர் தலைவணங்கினார். அவள் அத்தனை எளிதாக அதை ஏற்றுக்கொண்டது அடுமனைப் பெண்களுக்கு உகக்கவில்லை. சலஃபை “உங்கள் அழகிய முகம்…” என்று தொடங்க “ஆம், அதைத்தான் இன்றுவரை சுமந்துகொண்டிருந்தேன். இனி நோக்குகள் எனைச் சூழாது. இந்த விடுதலையை நான் எப்போதும் கனவு கண்டிருந்தேன்” என்றாள்.

மறுநாள் அவள் உடலின் நோய் முற்றிலும் அகன்றது. எழுந்து அடுமனைப் பணிகளில் ஈடுபடலானாள். அங்கிருந்த அனைவரும் அவளை நன்கறிந்திருந்தபோதிலும்கூட அவள் உடல் மீண்டும் மீண்டும் அவர்கள் விழிமுன் தோன்றி தானே அவள் என நிறுவிக்கொண்டது. சலஃபையும் பிற அடுமனைப் பெண்களும் அவளை அதட்டி வேலை வாங்கினர். பூமிகர் ஏவலரிடமென அவளிடம் எரிச்சல் காட்டினார். அவள் ஓரிரு நாட்களே உடலுக்குள் பொருந்தாமல் பிறிதென்றிருந்தாள். பின்னர் அவள் அகம் உடலை கற்றுக்கொள்ளத் தொடங்கியது. சிற்றடி வைத்து குனிந்து நடப்பதும், நிற்கும்போது இடையில் கைவைத்து அலுப்பொலி எழுப்புவதும் அமர்ந்ததும் கால்நீட்டி நீவிக்கொள்வதும் தானே என அவள் அகம் ஆகியது.

உடலறிந்த எல்லைகளும் உடலை நோக்கிய விழிகளும் அவளை முழுமையாக வரையறுத்தன. எழுபது நாட்களில் அவள் முற்றிலும் முதுமகளென்றானாள். எங்கோ கடந்த இளமை என அவள் அதை உணர்ந்தாள். அவள் இளமையுடனிருந்ததை பார்த்தவர்களே கூட அதை முற்றிலும் மறந்தனர். வணிகக் குழுவில் இடைவெளியில்லாத பணிகளிருந்தன. அமையுமிடம் சென்றதுமே அடுமனைப் பணி தொடங்கி அடுகலங்களை எடுத்து அடுக்குவதுவரை நீடித்தது. விட்டுவரும் இடத்துடன் அந்நாளையும் உதறிவிட்டு முன்சென்றமையால் காலமென்பது அந்நாள் மட்டுமே என நிகழ்ந்தது.

விழிநோக்கு மங்கலானமையால் வண்ணங்களை அவள் இழந்தாள். செவிக்கூர் மழுங்க ஓசைகளும் பொருளற்றதாயின. நினைவுகள் இணையாமையால் மணங்கள் வெறும் மூக்கறிவுகளாகவே வந்து சேர்ந்தன. உடலென அவள் உணர்ந்தது களைப்பையும் வலியையும் மட்டுமே. காமம் என்று ஒன்றை அவ்வுடல் அறிந்திருந்தது, உள்ளம் ஓயாது அளைந்திருந்தது என்பதே எப்போதேனும் வாள்வீச்சென அவளைப் போழ்ந்து அதிரச்செய்து மறையும் கூரிய குறுங்கனவுகள் வழியாகவே அவளுக்குத் தெரிந்தது.

எஞ்சியிருந்தது புலன் சுவை மட்டுமே என்பதனால் அவள் எப்போதும் நாவில் வாழ்ந்தாள். அனைத்துச் சுவைகளும் அவளை கிளரச்செய்தன. சுட்ட ஊன், எஞ்சிய அன்னம், ஆறிய அப்பம், காய்கள், கிழங்குகள். ஒன்றுமில்லையென்றால் புளிக்காயையும் உப்பையும் சேர்த்து வாயிலிட்டு எச்சிலுடன் மென்றாள். பருப்பையும் அரிசியையும் மடியில் கட்டிவைத்து வாயிலிட்டு குதப்பிக்கொண்டே இருந்தாள். அடுமனைப் பெண்டிர் விலக்கி அதட்டினால் அவர்களை நோக்கி மூக்கு வளைந்த சுருங்கிய முகம் இழுபட புன்னகைத்தாள். எந்த வசைக்கும் அவள் கூசவில்லை. எதையும் சிறுமையென்று எண்ணவில்லை.

முதலில் அவளை விலக்கி அதட்டியவர்கள் பின்னர் சிறுகுழவியென்று அவளை நடத்தலாயினர். அவளுடைய துடிக்கும் நாவே அவளை குழந்தையாக்கியது. அடுகலங்களை கழுவும்போது விளிம்புவட்டத்தில் படிந்திருந்தவற்றைச் சுரண்டி அவள் வாயிலிடுவதைக் கண்டு “என்ன அது? என்ன? துப்பு… துப்பு அதை” என்று சலஃபை கூவினாள். ஓடிவந்து கையை ஓங்கி “துப்பு… துப்பச் சொன்னேன்” என்றாள். அவள் துப்பிவிட்டு தலைகுனிந்து நின்றாள். “எது கிடைத்தாலும் வாயில் போடு. நோயுற்றால் எவர் பார்ப்பது?” என்றாள் சலஃபை. ஆனால் அன்று படுக்கும்போது அவள் கையால் மென்மண்ணை அள்ளி ஊதி வாயிலிடுவதைக் கண்டு தலையிலடித்துக்கொண்டாள்.

அப்பால் நின்ற சுதீரர் சிரித்தபடி “வாய்வெறுமை முதுமைக்குரிய இயல்பு. பாக்கு பழகச் சொல்” என்றார். வெற்றிலைச் சுருக்கை அவளிடம் அளித்து “இதோ வைத்துக்கொள்… இனி இதை வாயிலிடு” என்றாள். அவள் பாக்கை எடுத்து வாயிலிட்டு ஊறவைத்து அதன் துவர்ப்பை உணர்ந்து முகம் சுருங்கி விழி மூடினாள். பின்னர் எப்போதும் அவள் வாயில் பாக்கு இருந்தது. சற்று இடைநேரம் அமையும்போதெல்லாம் ஓரமாகச் சென்றமர்ந்து பாக்கை வாயிலிட்டு கண்மூடி அரைத்துயில் கொள்ளலானாள். “அசைபோடும்போது அனைவரும் விலங்குகளே” என்றார் சுதீரர்.

அவர்கள் சேதி நாட்டு எல்லையில் வணிகவிடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். தாழ்ந்த கூரையிட்ட கொட்டகையில் பெண்களுக்கான மூலையில் தரையில் இட்ட பாயில் அமர்ந்து அவள் பாக்குப் பொதியை அவிழ்த்தபோது அப்பால் ஒரு சூதர் நிஷதநாட்டு நளனும் தமயந்தியும் கலியின் சினத்தால் அழிந்த கதையை சொல்லிக்கொண்டிருந்தார். “தமயந்தியை காமுற்றான் கலி. அவளைக் கொள்ள நளனை வெல்லவேண்டுமென்று அவன் உணர்ந்தான். தக்கம் நோக்கி நிழலென நளனுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்தான். எப்போதும் அரசனுடன் இரு நிழல் இருந்ததை எவரும் நோக்கவில்லை.”

“வேள்விக்கு அந்தணர் அழைத்தபோது அவன் புரவியுடன் இருந்தான். மூன்றாம் முறை அமைச்சரே வந்து அழைத்தபோது விரைந்தெழுந்து கைகால்களை கழுவிக்கொண்டான். அமைச்சர் அவனிடம் அரசே வேள்விக்கு தூய உள்ளத்துடன் செல்லவேண்டும். கைகால் கழுவி புரவிமணம் களையுங்கள். உள்ளத்தில் புரவி விழைவை ஒழியுங்கள் என்றார். ஆம் ஒழிந்தேன் என்று சொல்லி அவன் கைகழுவி முடித்து அமைச்சருடன் சென்றான். அந்தப் பதற்றத்தில் அவன் தன் இடக்காலின் குதிமுனையை கழுவத் தவறிவிட்டிருந்தான். அதனூடாக கலி அவன் உடலுக்குள் புகுந்தான்.”

திகைத்தவளாக சலஃபை திரும்பி முதுமகளை நோக்கினாள். அவளுக்கு படபடப்பாக இருந்தது. இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். “அவனிலமர்ந்த கலி இளையோனை சூதுக்கு அறைகூவினான். சூதுமேடையில் இளையோன் அருகே காளை வடிவில் அமர்ந்த கலியின் தூதன் அவனுக்கு வழிகாட்டினான். பகடையில் புகுந்துகொண்டார்கள் கலியின் மூன்று துணைவர்கள்.” சலஃபை முதுமகளை மீண்டும் நோக்கினாள். அச்சொற்கள் அவள் காதில் விழுகின்றன என்று தெரிந்தது. ஆனால் அவை அவளுக்கு எவ்வகையிலும் பொருளாகவில்லை. பாக்கு ஊறத்தொடங்கிய சுவையே அவளை நிறைத்திருந்தது.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 68

67. வாழும்நஞ்சு

flowerதமயந்தியின் உடலிலிருந்து நாகநஞ்சு முற்றிலும் அகல பதினான்கு நாட்களாயின. பாஸ்கரரின் தவச்சாலையின் பின்பக்கம் சிறிய தனிக்குடிலில் மரப்பட்டைப் பலகையில் விரிக்கப்பட்ட கமுகுப்பாளைப் பாயில் அவள் கிடந்தாள். பாஸ்கரரின் மாணவர் பரர் அருகிருந்த சிற்றூருக்குச் சென்று அழைத்து வந்த நச்சுமுறி மருத்துவர் மூர்த்தர் காட்டிலிருந்து பறித்து வந்த நாகஹஸ்தி, விரலிமஞ்சள், காசித்தும்பை, அருகந்தளிர், சிரியாநங்கை ஆகிய பச்சிலைகளை கட்டிச் செந்நாரம், துரிசம் ஆகியவற்றுடன் கலந்து வாழைப்பட்டை பிழிந்து எடுத்த சாற்றில் கலந்து அவள் வாயிலும் மூக்கிலும் செவிகளிலும் ஊற்றினார்.

அவருடன் வந்த முதுசெவிலி காலகை தமயந்தியின் உடல் முழுக்க அச்சாற்றைப் பூசி மெல்லிய ஆடையால் மூடி ஒளிபடாது அரையிருள் நிறைந்த குடிலுக்குள் அவளை பேணி வந்தாள். மூலிகைச்சாறு கலந்த பாலுணவே அவளுக்கு அளிக்கப்பட்டது. முதல்நாள் பச்சிலைச்சாறு பூசப்பட்டதும் அமிலம் பட்டதுபோல அவள் உடல் சிவந்து கன்றியது. மறுநாள் தோல் சுருங்கி வழன்றது. வாயில் கெடுமணம் எழுந்தது. விழிவெள்ளையும் நகங்களும் நாவும் நீலம் பாரித்தன. பாஸ்கரர் அஞ்சி “என்ன நிகழ்கிறது, மூர்த்தரே?” என்று கேட்டார். “முந்தைய நிலையுடன் நோக்கினால் நன்றே நிகழ்கிறது. மூலிகைக்கு உடல் மறுவினை செய்கிறது. நாகநஞ்சை தசைகள் உமிழத் தொடங்குகின்றன” என்றார்.

ஓரிரு நாட்களில் அவள் உடல் நிலைமீளத் தொடங்கியது. தோல் மீண்டும் உயிரொளி கொண்டது. விழிகளிலும் நாவிலும் நகங்களிலும் இருந்து நீலம் கரைந்தகன்றது. ஆனால் எங்கிருக்கிறோம் என்றும் என்ன நிகழ்கிறதென்றும் அவள் அறிந்திருக்கவில்லை. உணவூட்டவும் மருந்து அளிக்கவும் காலகை அவளைத் தொடும்போதெல்லாம் திடுக்கிட்டு விழித்து சிவந்த விழிகளால் நோக்கி உதடுகள் மெல்ல அசைய “யார்?” என்றாள். காலகை “அன்னை” என்றாள். “ஆம்” என்று சொல்லி அவள் காலகையின் நரம்புகள் எழுந்து நெளிந்த முதிய கைகளை இறுகப் பற்றிக்கொண்டு மீண்டும் விழிமயங்கினாள்.

குடிலுக்குள் இருந்து வெளியேவந்து அங்கே காத்து நின்ற பாஸ்கரரிடம் “நலம் தெளிகிறது. விரைவில் தேற்றம் அடைந்துவிடுவார்” என்றார் மூர்த்தர். “இவர் யார் என்று நான் உங்களிடம் கேட்கவில்லை. நீங்கள் உரைப்பதுவரை அறிய முயலவும் மாட்டேன். ஆனால் ஷத்ரிய குலத்தில் பிறந்தவர் என்றும் அரசகுடியினராக இருக்கவும்கூடும் என்றும் உய்த்தறிகிறேன். இவர் உடல் முந்நிகர் கொள்ள இன்னும் நெடுநாளாகும். அரண்மனை மீண்டு முறையான மருத்துவம் செய்துகொள்வதே மேல்.” பாஸ்கரர் “அவள் யாரென்று நானறிவேன். இன்று அதை பிறர் அறிவது நலம் பயப்பதல்ல” என்றார். மூர்த்தர் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தார். “அவள் நினைவு மீளட்டும், விழைவதென்ன என்று அவளே முடிவெடுக்கட்டும்” என்றார் பாஸ்கரர்.

பதினான்காவது நாள் தமயந்தி முற்றிலும் மீண்டு வந்தாள். உச்சிப்பொழுதில் குடிலுக்கு வெளியே வெயில் நின்றிறங்கிக் கொண்டிருக்க பறவைகளின் ஒலிகள் அடங்கி காற்று இலைகளை உழக்கியபடி செல்லும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. நெடுந்தொலைவிலெங்கோ அணுவெனச் சுருங்கி இன்மைக்கு அருகிலிருந்த அவள் தான் என்று உணர்ந்து, ஆமென்று பெருகி, இங்கென்றும் இவையென்றும் இனியென்றும் பேருருக் கொண்டு அங்கு மீண்டாள். விழி திறந்து அருகே தரையில் மேலாடையை விரித்து துயின்றுகொண்டிருந்த காலகையை பார்த்தாள்.

மஞ்சத்தில் அவள் எழுந்தமர்ந்த ஒலிகேட்டு காலகை எழுந்து கைகூப்பி “தேவி” என்றாள். “எங்கிருக்கிறேன்? இது எந்த இடம்?” என்றாள் தமயந்தி. “இது வேத முனிவராகிய பாஸ்கரரின் குடில். தாங்கள் நாகநஞ்சு உடலில் ஏறி நோயுற்றிருந்தீர்கள். இன்றோடு பதினான்கு நாட்களாகின்றன. இவ்வினாவிலிருந்து நீங்கள் மீண்டுவிட்டீர்கள் என்று அறிகிறேன்” என்றாள் காலகை. “ஆம்” என்றபின் தமயந்தி தன் குழலை அள்ளி சுருட்டிக்கட்டினாள். கை தொட்டபோதே தன் குழல் நான்கிலொன்றாக குறைந்திருப்பதை உணர்ந்தாள். அதைக் கண்ட காலகை “கூந்தல் உதிர்ந்துகொண்டே இருக்கிறது, தேவி. நஞ்சு உடலைக் குறுகச் செய்கிறது” என்றாள்.

அவள் “என் உடலெங்கும் களைப்பு நிறைந்திருக்கிறது. எடை மிக்க நீருக்கு அடியில் இருப்பதுபோல் உணர்கிறேன்” என்றாள். “ஆம், உயிராற்றல் குறைந்துள்ளது. மண் விசைகொண்டு இழுக்கிறது. இறுதி விழைவையும் கொண்டு நஞ்சுடன் போராடியிருக்கிறீர்கள்” என்றாள் காலகை. “மூர்த்தர் தேர்ந்த மருத்துவர். அதனால் மட்டுமே மீண்டு வந்திருக்கிறீர்கள்.” தமயந்தி தன் கைகளை கண்முன் தூக்கி நோக்கினாள். “இத்தனை நஞ்சு எவ்வண்ணம் என் உடலில் ஏறியது? என்னை நாகம் கடித்ததா என்ன?” என்றாள். காலகை “நாகம் கடித்தால் நஞ்சு மிகுந்து அப்போதே உயிர் பிரியும், தேவி” என்றாள்.

அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் தமயந்தி வெறுமனே பார்த்தாள். “நாகம் சினந்து நஞ்சு செலுத்தப்படவில்லை. கனிந்து உங்கள் உடலால் உண்ணப்பட்டுள்ளது” என்றாள் காலகை. “எவ்வாறு? யார் அளித்தது?” என்று அவள் கேட்டாள். சில கணங்களுக்குப்பின் காலகை விழிகளை விலக்கி “தங்கள் கனவுகளில் நாகம் வந்திருக்கக்கூடும்” என்றாள். ஒருகணம் தமயந்தியின் விழிகள் மாறுபட்டன. “ஆம்” என்றாள். இருவரும் மேலும் சொல்லாடாது அமர்ந்திருந்தனர். வெளியே காற்று சுழிக்கும் ஓசை கேட்டது. தொலைவில் எங்கோ ஒரு காவல் நாய் குரைத்துக்கொண்டிருந்தது.

தமயந்தி பெருமூச்சுடன் கலைந்து “இங்கு நான் படுத்திருப்பதையும் கனவிலேயே அறிந்தேன்” என்றாள். “அலைக்கழிக்கும் கனவுகள். வெறும்பித்து. அவற்றில் நான் சூழ்ந்தெழுந்த மலைகளிடமும், மலர்களிடமும், புற்களிடமும், பூச்சிகளிடமும் மன்றாடி அழுதபடி காட்டுக்குள் சுற்றிவருகிறேன். தெய்வங்களை அழைத்து நெஞ்சில் அறைந்து கூவுகிறேன். என் அரசர் எங்கே சொல்லுங்கள், நீங்கள் அறிவீர்கள் என்று கதறுகிறேன்” என்றாள் தமயந்தி. “காவியத் தலைவியரைப்போல” என்றாள் காலகை. “ஆம், என்னை நான் சீதை என்றும் சாவித்ரி என்றும் உணர்ந்தேன்” என்றாள் தமயந்தி. காலகை புன்னகைத்தாள்.

“அறியாச் சிறுமியாக முற்றிலும் கைவிடப்பட்டவளாக அங்கே நின்றேன்” என்று தமயந்தி சொன்னாள். “இப்பிறவி முழுக்க சித்தத்தால் நான் அணைகட்டி உள்தேக்கி நிறுத்தியிருந்த கண்ணீர் அனைத்தையும் கொட்டி முடித்துவிட்டேன். இனி எண்ணி அழ ஏதுமில்லை எனக்கு.” காலகை “ஆம், நானும் பார்த்துக்கொண்டிருந்தேன். தேர்ச்சகடம் ஏறிச்சென்ற நாகம்போல் இரவும் பகலும் இந்த மஞ்சத்தில் நெளிந்துகொண்டிருந்தீர்கள். நீங்கள் உற்ற துயரென்ன என்று அறியக்கூடவில்லை. மொழியென எதுவும் உங்கள் இதழில் எழவில்லை. ஆனால் பெரும்பாறைகளை சுமப்பவர்போல, ஆறாப்புண் கொண்டவர்போல முனகினீர்கள்.  இந்தப் பதினான்கு நாட்களும் உங்கள் விழிகளிலிருந்து நீர் வழியாத தருணமே இல்லை” என்றாள்.

தமயந்தி “அன்னையே, பெண் என்றால் அழுது தீர்க்கத்தான் வேண்டுமா?” என்றாள். காலகை புன்னகைத்து “எங்கோ ஓரிடத்தில் அழுது முடிப்பது நன்றல்லவா?” என்றாள். தமயந்தி “அத்தனைக்கும் அடியில் பெண் ஆற்றலற்றவள்தானா? கைவிடப்பட்டவள்தானா?” என்றாள். காலகை நகைத்து “இதற்கு நான் என்ன மறுமொழி சொல்ல? உங்களுக்கும் எண்பது ஆண்டு அகவை நிறையட்டும் என்று வாழ்த்துவதன்றி” என்றாள்.

flowerபாஸ்கரரின் அழைப்புடன் பரர் வந்துநின்ற ஒலியை தமயந்தி கேட்கவில்லை. ஓடையின் ஓசையை உளஓட்டத்துடன் இணைத்தபடி அங்கிலாதவளாக இருந்தாள். இருமுறை அவர் தேவி என்றழைத்ததும் கலைந்து எழுந்து அவரை நோக்கி விழிகளால் என்ன என்றாள். அவர் செய்தியை அறிவித்ததும் கையசைவால் செல்க நான் வருகிறேன் என்றாள். அவர் செல்வதை பொருளின்றி சற்று நேரம் நோக்கியபின் ஓடையில் இறங்கி நீரை அள்ளி முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டாள்.

கிளம்பும் பொழுது வந்துவிட்டதென்பதை அவள் உள்ளம் உணர்ந்திருந்தது. குடிலுக்குள் சென்று முகத்தையும் கைகளையும் துடைத்து மரசீப்பால் குழல்கோதி முடிந்து ஆடை திருத்தினாள். குடிலுக்கு வெளியே சிறுதிண்ணையில் உடலொடுக்கி அமர்ந்து விழி சொக்கியிருந்த காலகையை நோக்கி “அன்னையே” என்றாள். அவள் திடுக்கிட்டு விழித்து வாயைத் துடைத்தபின் “எங்கு கிளம்பிவிட்டீர்கள்? நீங்கள் இவ்வெயிலில் நடமாடக்கூடாது” என்றாள். தமயந்தி புன்னகைத்து “நோய் புரக்கும் எல்லா செவிலியரும் உளம் கனிந்து அதில் ஈடுபட்டு அந்நோய் முற்றாக நீங்கலாகாதென்று விழையத்தொடங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அன்னையே” என்றாள்.

“நலம் கொண்டு நூறாண்டு வாழ்க… நான் பிறிதென்ன விழைவேன்?” என்றாள் காலகை. “ஆசிரியர் அழைக்கிறார். நான் இங்கிருந்து கிளம்புவதைப்பற்றி சொல்லப்போகிறார் என்று தோன்றுகிறது” என்றாள். “ஏன் கிளம்ப வேண்டும்? உங்கள் உடல்நிலை இன்னும் முற்றிலும் சீரமையவில்லை. இங்கே தங்கி உடல் தேற்றிக்கொள்ளலாமே?” என்றாள் காலகை. தமயந்தி புன்னகைத்து “இது காமஒறுப்பு நோன்புகொண்டவர்களின் குருநிலை. இங்கு பெண்கள் இருக்கவியலாது” என்றாள். காலகை பல்லில்லாத வாய் திறந்து சிரித்து “ஆம், இங்குள்ள அனைவரின் விழிகளும் மாறிவிட்டன. உங்களை இங்கு அழைத்து வந்ததன் பொறுப்பு எவருக்கென்பதில் பூசலும் தொடங்கிவிட்டது” என்றாள்.

மறுமொழி சொல்லாமல் புன்னகையுடன் தமயந்தி மையக்குடிலுக்கு சென்றாள். வெளியே பாஸ்கரரின் மாணவர்கள் நின்றிருந்தார்கள். முகப்பறைக்குள் தலைப்பாகையை அவிழ்த்து மடியில் வைத்தபடி வணிகர் மூவர் பாஸ்கரரின் முன் தடுக்குப் பாய்களில் அமர்ந்திருப்பதை வாயிலினூடாகக் கண்டாள். படிகளில் நின்று மெல்ல காலடியோசை எழுப்பினாள். பாஸ்கரர் அவளை நோக்கி உள்ளே வந்து அமரும்படி கைகாட்டினார். அவள் உள்ளே சென்று அக்குடிலறையின் மூலையில் நின்றுகொண்டாள்.

“அமரலாம், தேவி. உங்களைப்பற்றி இவர்களிடம் ஓரளவு சொல்லியுள்ளேன். நீங்கள் யாரென்றும் இந்நிலை எதனால் என்றும் அவர்களுக்குத் தெரியாது. அதை அவர்கள் கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள் நீங்கள் விழையுமிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்வார்கள்” என்றார் பாஸ்கரர். தமயந்தி விழிகளைத் தாழ்த்தியபடி கைகளைக் கோத்து மடியில் வைத்து அமர்ந்திருந்தாள். பாஸ்கரர் முதன்மை வணிகரைச் சுட்டி “இவர் பூமிகர். பிற இருவரும் இவருடைய துணைவர்கள், தாயாதிகள். சங்கரர், காலவர். கலிங்கத்திலிருந்து பொருள் கொண்டு அவந்திக்கும் மாளவத்திற்கும் செல்லும் வணிகர்கள். இவர்களுடன் நீங்கள் செல்வீர்கள் என்றால் எவ்வினாவும் எழாது. வணிகர்கள் எந்த ஊருக்கும் அயலவரே” என்றார்.

பூமிகர் “ஆசிரியரின் ஆணையை ஏற்றுக்கொள்ளும் நல்வாய்ப்பு எங்களுக்கு அமைந்துள்ளது, தேவி” என்றார். தமயந்தி அவரை நோக்கி “நான் எங்கு செல்வதென்று இப்போது உரைக்க இயலாது. இந்நாட்டின் எல்லையைக் கடந்ததும் அதை கூறுகிறேன்” என்றாள். “அவ்வாறே” என்றார் பூமிகர். பாஸ்கரர் அவளை நோக்கி “நன்று சூழ்க, தேவி. துயர்கள் அனைத்திலிருந்தும் ஒரு சொல்லேனும் மெய்மையென நாம் பெற்றுக்கொள்வோமென்றால் ஊழென்பது பொருளிலா விளையாட்டல்ல” என்றார்.

பூமிகர் எழுந்து “இன்று மாலையே நாங்கள் கிளம்பவிருக்கிறோம். எங்கள் குழுவினருடன் குறுங்காட்டுக்குள் சிறுகுடில்கள் அமைத்துத் தங்கியிருக்கிறோம். தாங்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு விடைபெற்று அங்கு வந்து சேருங்கள்” என்றார். அவர்கள் சென்றதும் பாஸ்கரரின் மாணவர்கள் உள்ளே வந்து அவளை சூழ்ந்துகொண்டனர். குசுமர் “தாங்கள் தங்கள் தந்தையிடமே திரும்பிச் செல்லவேண்டும், தேவி. படைகொண்டெழ வேண்டும். இழந்தவற்றை மீட்டெடுக்க வேண்டும். மீண்டும் பாரதவர்ஷத்தின்மேல் உங்கள் சிலம்பு அமையவேண்டும்” என்றார். அவள் புன்னகை செய்தாள்.

தன் சிறுமூட்டையுடன் வந்து அவள் பாஸ்கரரின் கால்தொட்டு தலைசூடினாள். “உங்கள் தந்தை உங்களை ஏற்க அஞ்சுவார். சூழ்ந்திருக்கும் நாடுகளின் பகை வந்து சேரும். நிஷதபுரியின் வீணன் படைகொண்டுவரவும் கூடும். அனைத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றலை இந்தக் காட்டுப் பயணத்தினூடாக அடைந்திருப்பீர்கள். அன்னையர் ஒருபோதும் தோற்கலாகாது” என்றார் பாஸ்கரர். “வென்றெழுங்கள். உங்களுக்காக மட்டுமல்ல. நன்று எந்நிலையிலும் வெல்லும் என்று கூறும் நூல்களுக்கு மானுடர் கடன்பட்டிருக்கிறார்கள். குருதியாலும் கண்ணீராலும் அவர்கள் அதை நிறுவிக்கொண்டே இருக்க வேண்டும்.”

“எளிய உயிர்வாழ்தலுக்கு அப்பால் இங்கிருந்து எதையேனும் பெற்றவர்களின் பொறுப்பு பிறர் நோக்கி தலைக்கொள்ளும்படி வாழ்வதே” என பாஸ்கரர் தொடர்ந்தார். “மாமனிதர்கள் நெறிநூல்களிலிருந்து தோன்றுகிறார்கள். மீண்டும் அங்கு சென்று சேர்கிறார்கள்.” தமயந்தி புன்னகையுடன் “நான் கற்றது ஒன்றே. ஊழின் பெருக்கில் கலம் கவிழாது சுக்கான் பிடிப்பதொன்றே மானுடர் செய்யக்கூடியது” என்றபின் பெருமூச்சுடன் “நான் வெல்வது நெறியின் விழைவென்றால் அவ்விசையில் ஏறிக்கொள்வதொன்றே செய்ய வேண்டியது” என்றாள்.

அவர்கள் அவளுக்கு உலர் உணவும் மான் தோலாடைகளும் பரிசாக அளித்தனர். காலகை தேனில் ஊறவைத்து வெயிலில் உலரவைத்த நெல்லிக்காய்களை பெரிய குடுவையொன்றில் நிரப்பி அவளிடம் அளித்தாள். “இந்தக் காட்டில் அரிதென்று அளிக்க இதுவே உள்ளது, தேவி. எளியவளுக்கு இனி இந்நாட்களின் நினைவே வாழ்வை நிறைவுசெய்யப் போதுமானது. இக்கொடைக்காக நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றாள். “கொடைபெற்றவள் நான், அன்னையே” என்றாள் தமயந்தி. “அத்தனை அன்னையரும் மைந்தருக்கு கடன்பட்டவர்கள். குழவியரிடமிருந்து அமுதுண்பவள் அன்னையே” என்றாள் காலகை.

காலகையின் கால்களைத் தொட்டு சென்னிசூடினாள் தமயந்தி. விழிகள் நிறைந்து வழிய உதடுகளை இறுக்கியபடி நடுங்கும் கைகளால் அவள் தலையைத் தொட்டு சொல்லின்றி வாழ்த்தினாள். குசுமர் துணை வர வணிகர்களின் தங்குமிடம் நோக்கி சென்றாள்.

flowerவணிகர் குழுவில் பூமிகரின் ஆணை அனைவருக்கும் அளிக்கப்பட்டிருந்தது. எனவே தமயந்தி அக்குழுவுடன் வந்து சேர்ந்தபோது எவரும் அவளை வெளிப்படையாக திரும்பிப் பார்க்கவில்லை. பூமிகர் அவளை நோக்கி “உங்கள் பொருட்களை அந்த ஒற்றைக்காளை வண்டியில் வைத்துக்கொள்ளுங்கள், தேவி” என்றார். உடன்வந்த குசுமரிடம் “நன்று. நான் தலைவணங்கினேன் என்று ஆசிரியரிடம் சொல்லுங்கள்” என்றாள் தமயந்தி.

ஒற்றைக்காளை வண்டியில் தனது தோல்மூட்டையை வைத்துவிட்டு அதன் அருகே அமர்ந்திருந்த மூன்று பெண்களுடன் சென்று அமர்ந்துகொண்டாள். மூவருமே அடுமனைப் பெண்டிர் என்பது அவர்களின் ஆடைகளிலிருந்தும் அணிகளிலிருந்தும் தெரிந்தது. நெடுந்தூரம் நடந்து களைத்து சற்றே ஓய்வுக்குப்பின் மீண்டிருந்தார்கள். வாழ்நாளெலாம் நடந்த களைப்பு அவர்களின் விழிகளில் இருந்தது. எதையும் விந்தையென நோக்காது வெறும் ஒளியென ஆனவை. எங்கும் வேர்கொள்ளாமல் சென்றுகொண்டே இருப்பவர்களை மண் கைவிடுகிறது என அவள் எண்ணிக்கொண்டாள். உதிர்ந்தவர்கள் சென்றடையும் அகத்தனிமையிலிருந்து எழும் எண்ணிக்கோத்த சொற்களும் எப்போதுமுள்ள முகமன்களும்.

தமயந்தி அவர்களிடம் தானும் அவர்களுடன் பயணம் செய்யவிருப்பதாக சொன்னாள். பாஸ்கரரின் அடுமனைப் பெண் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். அவர்களில் மூத்தவளாகிய சலஃபை “நன்று, நாம் சற்று நேரம் கடந்ததும் கிளம்பவேண்டும். நிமித்திகர் குறித்த நற்பொழுதுக்காக பூமிகர் காத்திருக்கிறார்” என்றாள். மருத்துவரான சுதீரர் அவளை வந்துநோக்கி “நஞ்சுகோள் கொண்டவர் என்றார்கள். நடக்கையில் மூச்சு சற்று எடை கொள்ளும். ஆனால் மூச்சு உட்சென்று மீள்வது நச்சை வெளித்தள்ளும்” என்றார்.

தமயந்தி அந்த வணிகக் குழுவை பார்த்தாள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர். பொதிகளை வண்டிகளில் அடுக்கி தேன்மெழுகு பூசப்பட்ட ஈச்சம்பாய்களால் மூடிக் கட்டினார்கள். அடுமனைக் கலங்களையும் பிறவற்றையும் வண்டிகளுக்குள் சீராக அடுக்கினார்கள். இலைகளைக்கொண்டு புரவிகளை தசை உரும்மிக் கொண்டிருந்தனர் நால்வர். மேயும்பொருட்டு விட்டிருந்த காளைகளை சிலர் அழைத்துக்கொண்டு வந்து நுகங்களில் கட்டினார்கள். பூமிகரின் தோழர்கள் ஆடைகளைத் திருத்தி கச்சைகளை இறுக்கிக்கொண்டிருந்தனர். உப்பு தொட்டு சூளுரைத்து கூலிக்காவலுக்கு வந்திருந்த ஷத்ரியர்கள் நீண்ட வேல்களை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தனர். சிலர் அம்புகளை கிளியோசை எழ கருங்கல்லில் கூர் தீட்டி தூளியில் அடுக்கி தோளில் மாட்டிக்கொண்டனர்.

மணற்கடிகையை நோக்கியபடி முதுநிமித்திகர் ஒருவர் அமர்ந்திருக்க அவர் அருகே அவருடைய மாணவன் கையில் சங்குடன் நின்றிருந்தான். பூமிகர் எரிச்சல் முகத் தசையின் அமைவாகவே பதிந்துவிட்ட முகத்துடன் உரத்த குரலில் ஒவ்வொருவருக்கும் ஆணைகளை பிறப்பித்தார். ஏவலரிடம் வசையின் மொழியில் பேசினார். தன் தோழர்களிடம் சலிப்புடன் ஓரிரு சொற்களில் ஆகவேண்டியதை உரைத்தார். ஷத்ரியக் காவலர்களிடம் மன்றாட்டென பணிந்த குரலில் பேசினார். அவர் நோக்கும்போது மட்டும் தெரியும் குறைகள் எங்குமிருந்தன. நுகம் ஒன்று கட்டப்படவில்லை. வண்டியில் மெழுகுப்பாயில் இடைவெளி இருந்தது. ஒரு சிறிய செம்புக் கலம் மறக்கப்பட்டிருந்தது.

நிமித்திகர் கையைத் தூக்கி அசைக்க அவர் மாணவன் வாயில் சங்கை வைத்து மும்முறை ஊதினான். ஷத்ரியர்கள் வேல்களுடன் எழுந்துகொண்டனர். ஏவலர்கள் புரவிகளைக் கொண்டுவந்து பூமிகருக்கும் அவர் தோழர்களுக்கும் அருகே நிறுத்தினர். நுகங்கள் அசைய, மணிகள் குலுங்க காளைகள் மூக்குக்கயிறு இழுபட தலைகுலுக்கின. பூமிகர் செல்வோம் என்று கையசைத்ததும் இடக்கையில் அவ்வணிகக் குழுவின் கொடியும் வலக்கையில் சங்குமாக காவலன் ஒருவன் முன்னால் நடந்தான். குபேரன் உரு ஒருபுறமும் கலிங்கத்தின் சிம்ம முத்திரை மறுபுறமும் பொறிக்கப்பட்ட கொடி காட்டிலிருந்து நிலச்சரிவு நோக்கி வீசிய காற்றில் படபடத்தது.

கொடிவீரனைத் தொடர்ந்து நான்கு காவலர் வேல்களுடன் சென்றனர். அவர்களுக்கு இருபுறமும் நால்வர் நாண் முறுக்கப்பட்ட வில்லும் தூளிகளில் குலுங்கும் அம்புகளுமாக சென்றனர். தோளில் தங்கள் தோல்பொதிகளுடன் பூமிகரும் அவரது தோழர்களும் தொடர பன்னிரண்டு பொதிவண்டிகள் சகட ஒலியும் காளைகளின் கழுத்தொலியும் இணைய தொடர்ந்து சென்றன. அவற்றுக்குப் பின்னால் அடுமனை வண்டிகளும் குடில் தட்டிகளை ஏற்றிய வண்டிகளும் சென்றன. அவ்வண்டிகளைப் பற்றியபடி பெண்களும் ஏவலரும் நடக்க அவர்களுக்குப் பின்னால் வில்லேந்திய காவலர்கள் சென்றனர். செம்மண் பரப்பில் வண்டித்தடங்கள் பதிந்து கிடந்த பாதையில் ஒலி ஒழுக்கென வணிகர்களின் நிரை ஊர்ந்தது.

flowerமாலைவெயில் மறையத் தொடங்கும்போதே அவர்கள் அன்றைய இரவுக்குறியை சென்றடைந்துவிட்டிருந்தனர். முன்னரே அவர்கள் நன்கறிந்திருந்த இடம் அது. முதலில் சென்று சேர்ந்த ஏவலர் நீண்ட வாட்களால் அப்பகுதியில் எழுந்து நின்றிருந்த புதர்களை வெட்டி நிலம் சீரமைத்தனர். வண்டிகளை ஒன்றுடன் ஒன்றெனச் சேர்த்து நிறுத்தி அவற்றின் சகட ஆரங்களுக்கிடையே மூங்கில்களைச் செலுத்தி சேர்த்துக் கட்டினர்.

நுகத்திலிருந்து அவிழ்க்கப்பட்ட காளைகளையும் வியர்த்து மூச்சுவிட்டுக் கொண்டிருந்த புரவிகளையும் ஏவலர் அருகே சரிந்து சென்ற நிலம் அணைந்த ஓடைக்கு அழைத்துச்சென்றனர். அங்கே நீர் தேங்கிச் சுழன்று செல்லும்பொருட்டு குழி ஒன்று வெட்டப்பட்டு கற்களால் கரையமைக்கப்பட்டிருந்தது. நீரைக் கண்டதும் குளம்புகள் சேற்றில் ஆழ விரைந்துசென்ற புரவிகள் மூக்கு மூழ்க நீர் அள்ளி உண்டு நிமிர்ந்து பிடரி சிலிர்க்க விலா விதிர்த்தன. காளைகள் மூச்சுக்காக நிமிர்ந்தபோது முகவாய் முடிமுட்களிலிருந்து நீர்ச்சரடுகள் நீண்டன.

சற்று அப்பால் ஓடை வளைந்து உருவான மணல்மேட்டில் சுனைதோண்டி முதல் சேற்றுநீரை இறைத்து பின்னர் ஊறிய நன்னீரை சுரைக்குடுவைகளில் மொண்டு கொண்டுவந்து அனைவருக்கும் குடிப்பதற்காக அளித்தனர். மரக்குடைவுக் கலங்களில் காவடி கட்டி கொண்டுவரப்பட்ட நீரை அடுதொழிலுக்காக வைத்தனர். விலங்குகள் கழுத்துக் கயிறுகள் ஒன்றுடனொன்று சேர்த்துப் பிணைக்கப்பட்டு தறிகளிலும் வேர்களிலுமாக கட்டப்பட்டன. அவற்றுக்கு உலர்புல்லுணவை பிரித்துக் குவித்தனர். அவை தலையாட்டி உண்ணும் மணியோசை எழுந்து சூழ்ந்தது. அப்பால் ஷத்ரியர்கள் எந்தப் பணியிலும் ஈடுபடாமல் தனியாக தங்களுக்குள் பேசியபடி அமர்ந்திருந்தார்கள்.

வண்டிகளிலிருந்து குடில் தட்டிகள் இறக்கி பிரிக்கப்பட்டன. குழி தோண்டி மையத்தூணை நாட்டி அதைச்சுற்றி தேன்மெழுகு பூசப்பட்ட ஈச்சையோலைத் தட்டிகளை சேர்த்து நிறுத்தி மேலே கூரைச்சரிவு கட்டி இடையளவே உயரம் கொண்ட துயில்குடில்களை எழுப்பினர். ஏழு குடில்கள் விழிவிலக்குவதற்குள்ளாகவே நுரைக்குமிழிகள்போல உருவாகி வந்தன. தறிகளிலும் வேர்களிலும் சரடுகளால் அவற்றை இழுத்துக்கட்டி காற்றுக்கு உறுதிப்படுத்தினர். உள்ளே மென்மரப்பட்டைகளை விரித்து அதன்மேல் மாட்டுத்தோல் சேக்கை பரப்பினர்.

அடுகலங்களும் துயில்கொள்வதற்கான மரவுரிகளும் இறக்கப்பட்டன. அடுமனைப் பெண்டிர் ஓடைக்குச் சென்று கைகால்களைக் கழுவியபின் வந்து பணி தொடங்கினர். தமயந்தி அவர்களுடன் வேலைகளை பகிர விழைந்தாள். ஆனால் அவர்கள் நன்குதேர்ந்த செயலோட்டம் ஒன்றை கொண்டிருந்தனர். அதற்குள் நுழைய இடைவெளியை அவளால் கண்டடைய முடியவில்லை.

அவர்கள் அவளிருப்பதை அறிந்திருப்பதாகவே காட்டவில்லை. மண்ணைக் குழித்து கல்லடுக்கி அடுப்பு கூட்டினர். ஏவலர் சுள்ளிகளையும் விறகுகளையும் கொண்டுவந்து போட அவற்றை எடுத்து அடுப்பில் அடுக்கி சிறிய அரக்குத்துண்டைப் போட்டு அனற்கற்களை உரசி எரிமூட்டினர். நீலச்சுடர் எழுந்ததும் “பொலிக! பொலிக!” என்று சொல்லி கைதொழுதபின் அதன்மேல் நீர் நிறைத்த கலங்களை வைத்தனர். வண்டிக்குள்ளிருந்து அரிசியும் கோதுமை மாவும் கொண்டுவரப்பட்டன. அடுமனைப் பெண்டிர் வெற்றிலையில் அடைக்காயும் மஞ்சள்துண்டும் வைத்து உலைமங்கலம் செய்து அரிசியிட்டனர்.

ஏவலர் காட்டுக்குள் சென்று காய்கறிகளையும் கிழங்குகளையும் சேர்த்துவந்தனர். தமயந்தி கோதுமை மாவை உருட்டிப்பரப்பி அப்பம் செய்ய தொடங்கியபோது அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். அவளுக்கு அடுமனைப் பணி கைபழகியிருக்கவில்லை. காய்கறிகளை நறுக்க அவள் கத்தியை எடுத்தபோது ஒருத்தி தலையசைத்து வேண்டாம் என்றாள். ஆணைகளிடாமலேயே ஒவ்வொருவரும் அவரவர் பணிகளை செய்துமுடிக்க நெடுங்காலமாகவே அங்கிருந்ததுபோல ஒரு சிறுகுடியிருப்பு அங்கு அமைந்தது.

பூமிகரும் தோழர்களும் மரக்குடைவுத் தோண்டிகளுடன் சென்று ஓடைநீரை அள்ளி நீராடிவிட்டு வந்தனர். ஈர உடையுடன் அவர்கள் தென்மேற்கு மூலையில் அமர்ந்தனர். வண்டிகளிலிருந்து செங்கற்களைக் கொண்டுவந்து எரிகுளம் அமைத்தனர். வேதச்சொற்களை சேர்ந்து முழக்கியபடி எரிகுளத்தில் வன்னி மரத்துண்டுகளை அடுக்கி அரணிக்கட்டை கடைந்து அனல் எழுப்பி பற்றவைத்தனர். குடிநிறையெரி இதழிலிருந்து இதழ்பெற்று மேலெழுந்தது. அதில் நெய்யும் உலர்ந்த பச்சரிசி அப்பங்களுமிட்டு வேதச்சொல் ஓதி வேள்விக்கொடை முடித்தனர்.

கைகூப்பி பூமிகர் எழுந்தபோது அவர் முகம் பிறிதொன்றாக இருந்தது. அவள் நோக்குவதைக் கண்ட சலஃபை “ஆண்டுக்கு இருமுறை ஐந்தாயிரம் பேருக்கு அன்னமிடுவார். அப்போதுதான் இந்த முகம் அவருக்கு அமையும்” என்றாள். இன்னொருத்தி “ஈட்டுவதில் பாதியை ஈவது வணிகர் கடன்” என்றாள். ஏவலர் பீதர்நாட்டு அணையா விளக்குகளை ஏற்றினர். எண்ணை எரியும் மணம் சூழ்ந்தது. அவர்களின் குடியிருப்புக்கு நான்கு முனைகளிலும் நடப்பட்ட தூண்களில் மீன்நெய்ப்பந்தங்களைக் கட்டி எரியவைத்தனர். ஒவ்வொரு பந்தத்தின் அருகிலும் அவ்வெளிச்சம் தன்மேல் படாதவாறு, ஆனால் அவ்வெளிச்சத்தால் நன்கு நோக்கும்படியாக இரு வில்லவர்கள் அமர்ந்துகொண்டார்கள்.

குடில்களுக்கு நடுவே கல்லால் கரை அமைத்த குழியில் காட்டுவிறகுகளை அடுக்கி அனல்மூட்டி அதைச் சூழ்ந்து பூமிகரும் தோழரும் அமர்ந்தனர். காளைகளின் கண்களில் அனல் தெரிந்தது. புரவியுடல்களின் வழவழப்பில் செந்தழல் நீர்மை கொண்டது. மணியோசை ஒலித்துக்கொண்டே இருக்க அவர்கள் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர்.

சலஃபை நீண்ட கம்பியில் அப்பங்களை குத்தி எடுத்து செவ்வனலில் காட்டிச் சுட்டு அருகிருந்த கூடைக்குள் போட்டாள். பிறிதொரு அடுமனைப் பெண் வழுதுணங்காய்களை கம்பியில் குத்தி அனலில் சுட்டு மரக்குடுவையிலிட்டு சிற்றுலக்கையால் நசுக்கிக் கூழாக்கி புளிச்சாறும் உப்பும் மிளகாயும் சேர்த்து தொடுகறி சமைத்தாள். மற்றொருத்தி உலர்ந்த ஊன்துண்டுகளை கம்பியால் இடுக்கி அனலில் காட்டி சுட்டாள். உப்புடன் உருகிய ஊன்நெய் சருகு எரியும் ஒலியுடன் குமிழிவிட்டு பொரிந்தது.

தொடுகறியையும் பொரியூனையும் அப்பங்களையும் அன்னத்தையும் வாழையிலைகளில் கொண்டுசென்று பூமிகருக்கும் தோழர்களுக்கும் படைத்தனர். பின்னர் அனைவரும் உண்ணத் தொடங்கினர். அவர்கள் உண்ண உண்ண அடுதொழிற் பெண்டிர் சூடு பறக்க சமைத்திட்டபடியே இருந்தனர். அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை என்பதை தமயந்தி நோக்கினாள். மெல்லும் ஒலிகள் மட்டும் எழுந்தன. பகல் முழுக்க பாதையில் குளம்புகளும் சகடங்களும் காலணிகளும் எழுப்பிய ஓசை மட்டுமே இருந்தது என்பதை அவள் நினைவுகூர்ந்தாள்.