திசைதேர் வெள்ளம்

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80

bowதுண்டிகன் விழித்துக்கொண்டபோது தன் ஊரில், கோதுமை வயல்களின் நடுவே கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தின் வைக்கோல் படுக்கையில் படுத்திருந்தான். முற்றத்தொடங்கியிருந்த கோதுமை மணிகளின் மணமும் சிலுசிலுவென்ற ஒலியும் காற்றில் கலந்து வந்தன. கூகையின் ஓசையும் மிக அப்பால் காட்டுக்குள் காற்று கடந்துசெல்லும் இரைச்சலும் கேட்டன. அவன் எழமுயன்றபோதுதான் தன்னிலை உணர்ந்தான். மருத்துவநிலையில் தரையிலிட்ட ஈச்சைப்பாயின்மேல் அவன் படுத்திருந்தான். அவன் கால்கள் இரண்டிலும் எடைமிக்க மரவுரிக் கட்டுகள் இருந்தன. வலதுதோளிலும் மரவுரிக்கட்டு மெழுகிட்டு இறுக்கப்பட்டிருந்தது. கழுத்து மரச்சிம்புகள் வைத்து கட்டப்பட்டு உரல்போலிருந்தது.

மெல்ல அவன் அந்த இடத்துக்கு திரும்பிவந்தான். பெருமூச்சுகள் விட்டுக்கொண்டு அசைந்தான். உடல் அசையவில்லை. எடைமிக்க கற்சிலைபோல் அது கிடந்தது. அதனுடன் அவனை இணைத்த தன்னிலையின் சரடுகள் மெல்லியவையாக இருந்தன. ஆனால் வலி இருக்கவில்லை. அது விந்தையாக இருந்தது. வலிமரப்புக்கான மருந்துகள் எதையேனும் அவனுக்கு அவர்கள் அளித்திருக்கக் கூடும். அவன் விழிகளைச் சுழற்றி சுற்றும் பார்த்தான். நிரைநிரையாக படுத்திருந்த புண்பட்டோர் ஆழ்துயிலில் இருந்தனர். அவர்களின் மூச்சுகள் நாகக்கூட்டங்களின் சீறல்கள் என சூழ்ந்து ஒலித்தன.

துண்டிகன் திடுக்கிடலுடன் பீஷ்மரின் நினைவை அடைந்தான். அவர் உயிருடனிருக்கிறாரா எனும் வினா எழுந்ததுமே ஒன்றன்மேல் ஒன்றென காட்சிகள் வந்து அவன்மேல் பொழிந்து மூடிக்கொண்டன. அவன் விழிகள் அதிர்ந்துகொண்டே இருந்தன. கைவிரல்களில் ஒன்று மட்டும் மெல்ல துடித்தது. அன்றைய அரைநாள் போரில்தான் அவன் முழுமையாக வாழ்ந்தான். கொண்டுவந்தனவும் சேர்த்தனவுமாகிய ஆற்றல்கள் அனைத்தும் திகழும் கணங்கள். கண்டடைதலும் திகழ்தலும் கடந்துசெல்லலும் ஒரே நேரத்தில் நிகழும் கணங்கள். பெருகி எழுந்து ஒரு கணத்தில் நுழைந்து மேலும் பெருகி அதைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தான். பலநூறாண்டுகள் வாழ்ந்தவன்போல, பல பிறவிகளினூடாகச் செல்பவன்போல.

போர்க்களத்தில் முரசுக்காகக் காத்திருக்கையில் அவன் கைகளில் பதற்றத்துடன்தான் கடிவாளத்தை பற்றியிருந்தான். எத்தனை நீர் அருந்தினாலும் தீராத விடாய் என நெஞ்சு தவித்தது. அவனுக்கு இருபுறமும் தேர்நுகத்தில் பதிக்கப்பட்டவையாக தீட்டிய இரும்பாலான குமிழியாடிகள் இருந்தன. அவற்றில் பீஷ்மரின் முகம் தெரிந்தது. அவர் ஆழ்ந்த அமைதியில், விழியிமைகள் பாதிசரிய உதடுகள் இறுகக்குவிந்து மூடியிருக்க, இடக்கையில் வில்லும் வலக்கையில் நீளம்புமாக நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் ஆவக்காவலர்கள் இருவர் அரைத்துயிலில் என அமர்ந்திருந்தனர். அவருடைய தேர்த்தூண்களின் வளைவில் படைகள் வண்ணத்தீற்றல்களாக படிந்திருந்தன.

படைகள் முதல்நாள் போரில் பல வண்ணங்களில் இருந்தன. நாள் செல்லச்செல்ல வண்ணங்கள் ஒளியிழந்தன. குருதியும் புழுதியும் படிந்து அனைத்து வண்ணங்களும் மறைய மண்நிறம் எஞ்சியது. யானைகள், புரவிகள், தேர்கள், மானுடர் அனைவரும் ஒரே நிறம். வானில் சற்று எழுந்து கீழே நோக்கினால் அங்கே மண் கொந்தளிப்பதாகவே தோன்றும். அவன் புழுக்களை நோக்கியிருக்கிறான். அவை தனி உயிர்களல்ல, ஒற்றைப்பொருளின் கொதிப்புதான் என்று தோன்றியிருக்கிறது.

அவனுடைய புரவிகளில் இரண்டு அப்போதும் அவனை புரிந்துகொள்ளவில்லை. இரண்டுமுறை அவன் ஆணையிட வேண்டியிருந்தது. தேரின் சகடங்களில் ஒன்று சற்றே வலப்பக்கமாக இழுபட்டது. அவனுக்கு பீஷ்மரின் ஆணைகளை தன்னால் புரிந்துகொள்ளமுடியுமென்று தோன்றவில்லை. இறுகிய முகம், எதையும் சொல்லாத விழிகள், தாடிக்குள் புதைந்த உதடுகள். அவருடைய ஆணைகளுக்காக விழிகொடுத்தால் களத்தை நோக்கமுடியாமலாகும். அவன் மூச்சுத்திணறுவதுபோல் உணர்ந்தான். போர் தொடங்கியதுமே அர்ஜுனனின் பேரம்பு தன் நெஞ்சு துளைத்ததென்றால் நன்று என எண்ணினான். புரவிகள் சிலிர்த்துக்கொண்டு கால்மாற்றின. எதை உணர்ந்தன என அவன் எண்ணிக்கொண்டிருக்கையிலேயே முரசுகள் முழங்கலாயின.

பீஷ்மர் இடையிலிருந்து தன் சங்கை எடுத்து ஓங்கி ஊதிவிட்டு ஏவலனிடம் அளித்தார். அவன் மெய்ப்புகொண்டான். அந்த வலம்புரியின் பெயர் சசாங்கம். முழுநிலவின் நிறம்கொண்டது. நிலவு நோக்கி துதிக்கை தூக்கி முழங்கும் இளங்களிறின் ஒலிகொண்டது. அன்றுதான் அவன் முதன்முறையாக அதை கேட்டான். அது சங்கொலி எனத் தோன்றவில்லை. அனைத்துச் சங்குகளும் கடலில் இருந்து தங்கள் ஒலியை பெற்றுக்கொள்கின்றன. கடல் அலைகளில் கணந்தோறும் எழுந்து மறைந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் கோடி சொற்களில் ஒன்று சங்குக்குள் நிலைகொண்டுவிடுகிறது. பீஷ்மரின் சங்கில் உறையும் சொல் என்ன? அது மானுடரை நோக்கி சொல்லப்படவில்லை.

தேர் கிளம்பிய கணமே அவன் முழுமையாக தன்னை இழந்தான். தேர் அவன் ஒரு பகுதியாயிற்று. அவன் பீஷ்மருடன் இரண்டறக் கலந்தான். அவர் எண்ணியவை அத்தேரில் நிகழ்ந்தன. அவர் எண்ணுவதற்கு முன்னரே அதற்காக ஒருங்கின அனைத்தும். பறவையின் சிறகுகளில் வந்தமைகிறது அதன் உள்ளம். பீஷ்மர் தேரை நிறுத்தி சிகண்டியின் முன் திகைத்து நின்றபோதுதான் அவன் மீண்டான். அவர் வில்லை கீழே வைத்துவிட்டு கைகளை விரித்து நின்றபோது அவன் திகைப்புடன் தலைதிருப்பி நோக்கினான்.

அவர் உடலில் முதல் அம்பு பாய்ந்தது. சிறிய நாகக்குழவி போன்ற புல்லம்பு. அது கீழிருந்து எழுந்து கவசத்தின் இடைவெளிக்குள் வால் புளைய நுழைந்தேறியது. நரம்பு முடிச்சு ஒன்று தாக்கப்பட்டது என தெரிந்தது. பீஷ்மர் நிலையழிந்ததை உணர்ந்ததும் அவன் தேரைத் திருப்பும்பொருட்டு கடிவாளத்தை சுண்டினான். ஆனால் புரவிகள் கால்நிலைத்து நின்றன. அதன் பின்னரே தன் கைகள் கடிவாளத்தை சுண்டவில்லை என உணர்ந்தான். அவருடைய எண்ணங்களை மட்டுமே அவனும் புரவிகளும் ஆற்றமுடிந்தது.

அர்ஜுனனின் நீளம்பு வந்து அவர் கவசத்தை உடைத்ததை அவன் அண்மையிலெனக் கண்டான். கவசத்துண்டு தேர்த்தட்டில் உலோக ஒலியுடன் விழுந்த கணம் அடுத்த அம்பு வந்து அவர்மேல் பாய்ந்தது. தசையில் அம்பு தைக்கும் ஓசையை கேட்க முடிந்தது. பின்னர் நேர்முன்னால் அம்புகள் எழுந்து வந்துகொண்டிருந்தன. அவர் உடலில் அம்புகள் தைத்துக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது, சேற்றுப்பரப்பில் புன்னைக் காய்கள் விழுவதுபோல. மழைத்துளிகள் போல அவருடைய குருதி அவன் மேல் தெறித்தது.

நீளம்பு ஒன்றால் சரிக்கப்பட்டபோது மட்டும் பீஷ்மர் சற்றே முனகினார். அவன் தன்னியல்பாக திரும்ப தன் கழுத்தில் குளிர்ந்த தொடுகையை உணர்ந்தான். இழுத்த மூச்சு இரண்டாக வெட்டுப்பட்டது. விசிறியால் வெட்டப்பட்ட புகை என மூச்சு இரு துண்டுகளாயிற்று. ஒன்று அவன் உடலுக்குள்ளேயே நின்றது. தேரிலிருந்து புரண்டு நிலத்தில் விழுந்தான். விழித்த கண்களால் நோக்கிக்கொண்டிருந்தான். பீஷ்மர்மேல் அம்புகள் வந்து தைத்துக்கொண்டே இருந்தன.

அவன் விழிதிருப்பி நோக்கியபோது அப்பால் சிகண்டியை கண்டான். வெறித்த கண்களும் வளைந்த புருவங்களும் சினத்தால் குவிந்த உதடுகளுமாக அவர் அம்புகளை தொடுத்தார். அவருக்குப் பின்னால் அதே முகத்துடன் அர்ஜுனன். அவருக்குப் பின்னால் பீமனும் சகதேவனும் நகுலனும் அதே வெறிப்புடன் அம்புகளை அவர்மேல் எய்துகொண்டிருந்தனர். திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் அம்புகளை தொடுத்தனர். அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் சதானீகனும் சுதசோமனும் சர்வதனும் சுருதசேனனும் நிர்மித்ரனும் அம்புகளை ஏவியபடி சூழ்ந்திருந்தனர். யௌதேயனும் பிரதிவிந்தியனும் அம்புகளை விடுத்தனர். பாண்டவப் படை மொத்தமாகத் திரண்டு அம்புகளால் வானை நிறைத்தது. புயல்காற்றில் சருகுகளும் புழுதியும் வருவதுபோல அங்கிருந்து அம்புகள் வந்துகொண்டிருந்தன.

பீஷ்மர் புழுதியில் விழுந்து அம்புகளால் உருட்டப்பட்டார். நீரில் விழுந்து மீன்களால் கொத்திப் புரட்டப்படும் ஊன் துண்டுபோல. அவன் எங்கோ ஓர் ஊளையை கேட்டான். அல்லது அழுகையோசை. தொலைவில் இடியோசை முழங்கி எதிரொலிகளாக மாறி நீண்டுசென்றது. கூரிய சிறு மின்னல்கள் இடைவெளியில்லாமல் வெட்டின. போரிடும் களிறுகளின் ஓசை என கொம்புகள் முழங்கின. அவ்வோசை வானிலிருந்து எழுந்து மழையென இழிந்தது. அம்புப்பெயல் நின்றது. பாண்டவப் படையினர் விலகிச்செல்ல கௌரவர்கள் திகைப்புடன் அகன்றனர். விரிந்து பரவி உருவான முற்றத்தில் பீஷ்மரின் உடல் நாற்றுவயல் என அம்புகள் மேவியதாக மல்லாந்து வான்நோக்கி கிடந்தது. அவர் வாயின் கடையோரம் குருதி வழிந்தது. விழிகள் திறந்து நிலைகொண்டிருந்தன.

அவன் எழுந்து அமர்ந்து சுற்றிலும் நோக்கினான். வானம் மாபெரும் யானைத்தோல் கொட்டகையின் உட்பகுதி என கருமைகொண்டிருந்தது. அப்பால் போரிட்டுக்கொண்டிருந்த படைவீரர்கள் அனைவரும் ஒளிமங்கி நிழலுருக்களாக ஆனார்கள். பாண்டவப் படைக்குள் இருந்து விரிந்த நீள்குழல் அலையலையாக எழுந்து பறக்க செம்பட்டாடை அணிந்த பெண் ஒருத்தி ஓடிவந்தாள். நெஞ்சிலும் வயிற்றிலும் அறைந்து கதறியபடி அவள் வந்த விசையில் முழங்கால் மடிந்து நிலத்தில் அறைய விழுந்து கைகளால் பீஷ்மரின் கால்களை பற்றிக்கொண்டாள். அவர் பாதங்களில் தன் தலையை அமைத்துக் கொண்டு கதறியழுதாள்.

கௌரவர்களின் பக்கமிருந்து இன்னொருத்தி நீல ஆடையும் நீள்குழலும் எழுந்து அலைபறக்க கைகளை வீசி கதறியழுதபடி ஓடிவருவதை அவன் கண்டான். அவளைச் சூழ்ந்து எட்டு இளைமைந்தர்கள் வந்தனர். அவள் பீஷ்மரின் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டாள். அவர் குழல்கற்றைகளை கோதியபடி குனிந்து நோக்கி அழுதாள். அவர் பெயரை அவள் சொல்லிச் சொல்லி அழைக்கிறாள் என்பது உதடுகளின் அசைவிலிருந்து தெரிந்தது. அவர்களைச் சூழ்ந்து எண்மரும் ஒளிகொண்ட உடல்களுடன் நின்றனர். அவர்கள் ஒற்றைக் கருவிலெழுந்ததுபோல் ஒரே முகமும் உடலும் கொண்டிருந்தார்கள். அவன் அந்த அழுகையை சொல்மறைந்த உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களின் அழுகை பெருகிப்பெருகி வந்தது. அப்படியோர் அழுகை பெண்களின் உடல்களிலேயே நிகழமுடியும். அன்னையரென அவர்கள் உணர்கையிலேயே எழ முடியும்.

bowதுண்டிகன் ஒரே உந்தலில் எழுந்துகொண்டான். எழுந்து நின்றபின்னர்தான் அத்தனை எளிதாக எழமுடியும் என்பதை அவன் வியப்புடன் உணர்ந்தான். குளிர்ந்த சேறாலானதுபோல குழைந்து எடைகொண்டு கிடந்த அந்த உடலை அவன் அதுவரை அஞ்சிக்கொண்டிருந்தான் போலும். கைகளையும் கால்களையும் விரித்தான். எடையின்மையை உணர்ந்தபின் அவன் வெளியே சென்றான். காவலன் பீடத்தில் அமர்ந்து வேலை ஊன்றிய கையில் தலையை வைத்து துயின்றுகொண்டிருந்தான். அவன் கடந்துசெல்கையில் திடுக்கிட்டு விழித்து அவனை பார்த்தான். ஆனால் காய்ச்சல் படிந்ததுபோலிருந்த அவன் விழிகளில் எந்த உணர்வும் உருவாகவில்லை. துண்டிகன் நின்று அவனை நோக்கினான். அவனும் வெறுமனே அவனை நோக்கிக்கொண்டிருந்தான். “இவ்வழிதானே?” என்று துண்டிகன் கேட்டான். “ஆம்” என்று காவலன் மறுமொழி சொன்னான்.

துண்டிகன் வெளியே சென்று பந்தங்களின் ஒளி அசைந்துகொண்டிருந்த மரப்பாதையினூடாக நடந்தான். அதில் வழிந்து உறைந்து மிதிபட்டுச் சேறாகி உலர்ந்த குருதி கால்களை வழுக்குமென எண்ணி மெல்ல நடந்தான். ஏழு பெண்கள் எதிரில் வந்தனர். அவர்கள் கரிய மேலாடையால் முகம் மறைத்திருந்தார்கள். அவன் நின்று அவர்களை நோக்கினான். அருகே வந்தபோது மேலாடைகள் விலக அவர்கள் தலைதூக்கி அவனை பார்த்தனர். எழுவருமே வெண்பல்நிரைகள் தெரிய புன்னகைத்தனர். துண்டிகன் அவர்கள் ஏதேனும் சொல்வார்கள் என எதிர்பார்த்தான். அவர்கள் மருத்துவநிலைக்குள் சென்று மறைவதை நோக்கி நின்றபின் அவன் மீண்டும் நடந்தான்.

படைகளுக்குள் இருந்து பல்லாயிரம்பேர் நிழலுருக்களாக எழுந்து செல்வதை அவன் பார்த்தான். ஏரியிலிருந்து புலரியில் நீராவி எழுவதைப்போல. அவன் அவர்கள் ஒவ்வொருவரையும் முகம்முகமாக நோக்கியபடி நின்றான். அவர்கள் முகங்கள் ஆழ்துயிலில் இருப்பவைபோல் அமைதிகொண்டிருந்தன. திறந்து இமைநிலைத்த விழிகளிலும் துயில் இருந்தது. அவர்கள் இயல்பாக இணைந்து ஊற்றுக்கள் ஓடையாவதுபோல நிரைகொண்டனர். நிரைகள் மேலும் இணைந்து ஒழுக்காயின. அந்தப் பெருக்கு படைமுகப்பு நோக்கி செல்கிறது என்று தெரிந்தது.

அவன் அவர்களுடன் நடந்தான். அவர்கள் அனைவருமே அவனை நோக்கினர், அடையாளம் கண்டனர், ஆனால் ஏதும் சொல்லவில்லை. அவர்கள் நடந்தபோது கால்கள் பட்ட சில வீரர்கள் முனகியபடி புரண்டு படுத்தனர். சிலர் விதிர்த்து எழுந்து அமர்ந்தபின் தலையை சொறிந்துகொண்டு மீண்டும் படுத்துக்கொண்டார்கள். எங்கோ மெல்லிய முரசொலி கேட்டது. கொம்போசை இணைந்துகொண்டது. வானில் மின்னல்கள் துடித்தணைந்தன. அவன் செல்லும் வழியில் உயர்ந்த மேடை ஒன்றில் அமர்ந்திருந்த பார்பாரிகனை பார்த்தான். மிகப் பெரிய உடல்மேல் அமைந்த பெருந்தலை. அவன் முன் இன்னொருவன் அமர்ந்திருந்தான்.

துண்டிகன் கூர்ந்து நோக்கி அவன் யார் என புரிந்துகொள்ள முயன்றான். எங்கோ பார்த்த முகம். அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து எதிரே நோக்கிக்கொண்டிருந்தார்கள். கூத்துமேடையில் திரை விலக காத்திருப்பவர்கள்போல. துண்டிகன் வடக்கே சென்றான். நெடுந்தொலைவுக்கு விலகிச்சென்றுவிட்டான். இருதரப்புப் படைகளும் ஆயிரக்கணக்கான பந்தங்களுடன் அப்பால் தெரிந்தன. பாவைநோன்பு நாளில் அகல்சுடர்கள் ஒழுகும் கங்கைபோல. அவன் பீஷ்மரின் படுகளம் நோக்கி சென்றான். சங்கொலி ஒன்றைக் கேட்டு இயல்பாக திரும்பி நோக்கியபோது பார்பாரிகனுடன் அமர்ந்திருந்தவன் அரவான் என உணர்ந்தான். மேலும் மேலுமென சங்கொலிகள் எழுந்தன. செவிநிறைக்கும் போர்முழக்கம் பெருகி அலைகொண்டது. பல்லாயிரம்பேர் ஒருவரோடொருவர் வெறிக்கூச்சலுடன் பாய்ந்து போரிடத் தொடங்கினர்.

அவன் படுகளத்தின் எல்லையை அடைந்தான். அவன் உள்ளே நுழைந்த அசைவைக் கண்டு அங்கிருந்த முதிய மருத்துவர் நிமிர்ந்து நோக்கிவிட்டு இயல்பாக கண்களை மூடிக்கொண்டு மீண்டும் துயிலத் தொடங்கினார். இரு இளைஞர்கள் அப்பால் கைகளைக் கட்டியபடி தரையில் போடப்பட்ட மரவுரிகளில் அமர்ந்து துயின்றுகொண்டிருந்தனர். பீஷ்மர் அம்புப்படுக்கைமேல் படுத்திருந்தார். அவர் இமைகள் அசைவற்றிருந்தன. உதடுகளில் மட்டும் ஏதோ சொல் நிகழ்ந்துகொண்டிருந்தது.

அவர் அருகே அவன் அந்த இரு பெண்களையும் பார்த்தான். நீலஆடை அணிந்த பெண் குழல்பெருக்கு நிலத்தில் விழுந்து ஓடையென ஒழுகி இருளில் சென்றிருக்க கையூன்றி அமர்ந்திருந்தாள். அவள் மடியில் முகம்புதைத்தவளாக செவ்வாடை அணிந்தவள் படுத்திருந்தாள். அன்னையும் மகளும் என துண்டிகன் எண்ணினான். மகளின் சுரிகுழலை அன்னை கைகளால் நீவிக்கொண்டிருந்தாள். மகள் மெல்லிய விசும்பலுடன் புரண்டு படுத்தபோது அவள் கன்னங்களில் நீரின் ஒளியை துண்டிகன் கண்டான். அன்னை குனிந்து ஆறுதல் சொன்னாள். அவன் அறியாத மொழி. நீரலைகள் மென்மணலில் எழுப்பும் ஓசைபோல மென்மையானது.

அவர்கள் இருவரின் முகங்களிலும் இருந்த ஒற்றுமை வியக்கவைப்பதாக இருந்தது. அன்னையின் விரல்கள் யாழ்விறலியர்களுக்குரியவைபோல மிக மெலிதாக நீண்டிருந்தன. விழிகள் நீலமணிகள். அவள் இமைப்பீலிகளும் பெரியவை. அவள் ஆடை குளிர்ந்திருந்தது. மகள் பற்றிஎரிந்துகொண்டிருப்பவள் போலிருந்தாள். அவள் விரல்கள் நாகக்குழவிகள்போல. எரித்துளிகள் போன்ற கண்கள். அவள் உதடுகளை இறுக்கிக்கொண்டு தன்னை அடக்கினாள். அன்னை அவளிடம் மென்மொழிகளை சொல்லிக்கொண்டே இருந்தாள்.

அவன் அவர்களை நோக்கிக்கொண்டிருந்தான். அப்போது போரின் ஓசை மிக அப்பாலென விலகிச்சென்றுவிட்டிருந்தது. அவன் நோக்குவதை அவர்கள் உணரவில்லை. நீள்மூச்சுடன் அவன் திரும்பியபோது இளைய மருத்துவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து திடுக்கிட்டான். ஏதோ சொல்லெழுந்த உதடுகளுடன் அவன் கைநீட்டினான். துண்டிகன் அவனை நோக்கியபடி நின்றான். அவன் கைதழைத்து தலையை அசைத்தான். துண்டிகன் வெளியே சென்றான். அப்பால் குருக்ஷேத்ரத்தில் இருளுக்குள் பல்லாயிரம் இருளலைகளாக போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அவன் சில கணங்கள் அதை நோக்கியபின் எதிர்த்திசையில் நடந்தான்.

குறுங்காடு இருண்ட குவைகளாலான கோட்டைபோல் வளைத்திருந்தது. வானின் பகைப்புலத்தில் இலைவடிவங்கள் கூர்கொண்டிருந்தன. குறுங்காட்டுக்கு அப்பால் வானில் சிதைவெளிச்சம் எழுந்து நின்றிருந்தது. சற்றே விழிகூர்ந்தபோது புகையின் அலைவையும் அதிலேறி மேலே செல்லும் சருகுக்கரித் திவலைகளையும் பார்க்க முடிந்தது. அங்கே நிழல்கள் வானிலெழுந்து ஆடின. காற்று ஓசையெழுப்பியபடி சென்றபோது புதர்களுக்குள் அசைவுகள் எழுந்தன. விலங்குகளா, நாகங்களா, பாதாளதெய்வங்களா?

அவன் அதை நோக்கி செல்கையில் ஒருவனை தொலைவிலேயே கண்டான். முள்மரத்தின் அடியில் அவன் தனித்து நின்றிருந்தான். அணுகும்தோறும் அவ்வுருவின் வடிவம் தெளிந்து சிகண்டியென்று காட்டியது. சிகண்டி அங்கே நின்று தொலைவில் தெரிந்த படுகளத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவன் அருகே சென்றதையும் அவர் அறியவில்லை. துண்டிகன் அவர் முன் சென்று நின்றான். அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அதிலிருந்தது என்ன உணர்வு என அறியமுடியவில்லை. அது கரிய சிலைபோல இருளில் தெரிந்தது.

அவன் குறுங்காட்டின் விளிம்பு வழியாக அந்தப் பெருஞ்சிதை நெருப்பை நோக்கி சென்றான். நீண்ட நிரையாக உடல்கள் கிடத்தப்பட்டிருந்தன. அவன் உடல்கள் ஒவ்வொன்றாக நோக்கிக்கொண்டு சென்றான். பின்னர் ஓர் உடலை நோக்கியபடி பெருமூச்சுடன் சற்றுநேரம் நின்றான். மிக அப்பால் தாழ்வான சகடங்கள் கொண்ட வண்டிகளில் உடல்களை அள்ளி அடுக்கிவைத்து கொண்டுசென்று சிதையேற்றிக்கொண்டிருந்தனர். வண்டி அந்த உடலை அணுக மேலும் சிலநாழிகைகள் ஆகும் என எண்ணிக்கொண்டான்.

[திசைதேர்வெள்ளம் நிறைவு]

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79

bowயுதிஷ்டிரர் நின்று பீஷ்மரின் படுகளத்தை நோக்கி “அது ஓர் விண்ணூர்திபோல் உள்ளது. அவரை அழைத்துச்செல்ல வந்தது” என்றார். சுபாகு “ஆம்” என்றான். அவர் பெருமூச்சுவிட்டு “குருகுலத்து மன்னர்கள் அனைவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என்பார்கள். யயாதியிலிருந்து இன்றுவரை அதுவே நிகழ்கிறது. இக்குலத்தில் இப்படி ஒருவர் பிறந்தமை விந்தைதான்” என்றார். பீமன் “அவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவரே” என்றான். “மந்தா!” என்றார் யுதிஷ்டிரர். “எதிர்த்திசையில் அலைக்கழிக்கப்பட்டார்” என்று பீமன் சொன்னான்.

யுதிஷ்டிரர் அவனை வெறுமனே நோக்கிவிட்டு முன்னால் நடந்தார். அவர்கள் பீஷ்மரின் படுகளத்திற்குள் நுழைந்தனர். அங்கே பீடத்தில் அமர்ந்து சாத்தனும் ஆதனும் மருந்தரைப்பதை நோக்கிக்கொண்டிருந்த வஜ்ரர் எழுந்து வணங்கினார். சுபாகு “எப்படி இருக்கிறார்?” என்றான். “அவ்வண்ணமே…” என்றார் வஜ்ரர். “இன்னும் பல நாட்கள் இப்படியே மாற்றமின்றி செல்லக்கூடும்” என்றான் சாத்தன். “மூச்சும் நெஞ்சுத்துடிப்பும் சீரடைந்துள்ளது.” யுதிஷ்டிரர் “அவரிடம் எங்கள் வரவை அறிவிப்பது இயலுமா?” என்றார். “ஆம், துயிலில் சொற்கள் சென்றுசேரும். எல்லா சொற்களுமல்ல, அந்த ஆழம் எவற்றை தெரிவுசெய்கிறதோ அவை மட்டும். செவிகளில் உங்கள் வரவை சொல்லுங்கள்” என்றான் சாத்தன்.

யுதிஷ்டிரர் கூப்பிய கைகளுடன் பீஷ்மரின் அருகே சென்றார். பீஷ்மரின் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. ஆனால் என்னும் சொல்லை சுபாகு கண்டான். யுதிஷ்டிரர் “என்ன சொல்கிறார்?” என்றார். “அது வெறும் உதட்டசைவு” என்றான் சுபாகு. யுதிஷ்டிரர் அவர் அருகே மண்டியிட்டு அமர்ந்து செவிகளில் “பிதாமகரே, நான் யுதிஷ்டிரன். பிதாமகரே, உங்கள் பெயர்மைந்தனாகிய யுதிஷ்டிரன். பிதாமகரே, உங்களைப் பார்க்க வந்துள்ளேன். என்னை வாழ்த்துக!” என்றார். பீஷ்மரின் விழியிமைகள் அதிர்ந்தன. “கேட்கிறார்” என்றார் வஜ்ரர். “பிதாமகரே, என்னை வாழ்த்துக! என் பணிவை ஏற்றுக்கொள்க, தந்தையே!” என்று உரத்த குரலில் யுதிஷ்டிரர் சொன்னார். குரல் அழுகையால் உடைய “என் தலை தங்கள் கால்களில் அமைகிறது. நான் ஆற்றிய அனைத்துப் பிழைகளையும் பொறுத்தருள்க!” என்றார்.

பீஷ்மரின் இமைகளுக்குள் விழிகள் ஓடுவது தெரிந்தது. யுதிஷ்டிரர் தளர்ந்தவராக பீஷ்மரின் அருகே அமர்ந்தார். அவர் தோள்கள் குலுங்கின. மூச்சொலியும் கேவல்களுமாக அழுதார். “அரசே!” என்றான் சுபாகு. “மூத்தவரே!” என்று பீமன் அழைத்தான். பின்னர் சகதேவனிடம் கண்காட்டினான். சகதேவனும் நகுலனும் விழிநீர் வார நின்றிருந்தனர். சகதேவன் குனிந்து யுதிஷ்டிரரின் தோளைத் தொட்டு “மூத்தவரே” என்றான். யுதிஷ்டிரர் உடல்குலுங்க அழுதபடி கையூன்றி எழுந்தார். மூச்சால் அலைக்கழிந்த உடலுடன் தோள்குறுக்கி நடந்துசென்று பீஷ்மரின் பாதங்களில் தன் தலையை மும்முறை வைத்து எடுத்தார்.

எழுந்து விலகியபோது அவருடைய ஒரு கால் இழுத்துக்கொண்டு விறைத்து நின்றது. கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர்ந்தன. பற்களைக் கடித்து தலையை குனிந்தபடி நடந்து தள்ளாடி விழப்போனார். சகதேவன் பாய்ந்து அவரை தோள்பற்றி பிடித்துக்கொண்டான். அவர் அவன் கையிலமையாது மேலும் சரிந்தபோது சாத்தன் ஒரு பெட்டியை எடுத்துப்போட்டான். அவர் அதில் அமர்ந்து இரு கைகளாலும் தலையை பற்றியபடி குனிந்துகொண்டார். பீமன் சென்று பிதாமகரின் செவிகளில் “நான் பீமன், பிதாமகரே. உங்கள் வாழ்த்துகொள்ள வந்தேன்” என்றான். இமைகள் மட்டும் அசைந்தன. உதடுகள் அச்சொல்லில் நிலைகொண்டிருந்தன. பீமன் அவர் பாதங்களை வணங்கி விலகினான்.

உரத்த விக்கல் ஓசை எழுந்ததைக் கேட்டு சுபாகு திரும்பிப் பார்த்தான். யுதிஷ்டிரர் மூச்சுத்திணற உடல்துள்ள அதிர்ந்துகொண்டிருந்தார். சாத்தனும் வஜ்ரரும் அவரை பிடித்தனர். சாத்தன் அவர் நெஞ்சை அழுத்தி தடவினான். கழுத்து இறுக்கப்பட்டவரைப்போல் யுதிஷ்டிரரின் உடல் துடித்தது. வாயின் ஓரத்தில் நுரைவழிய அவர் வலிப்பு கொண்டார். விழிகள் மேலேறியிருக்க வெண்பற்கள் உதடுகளை அழுந்தக் கவ்வியிருந்தன. கைகள் விரல்சுருட்டி இறுகியிருந்தன. வஜ்ரர் அவரைப் பற்றி மெல்ல நிலத்தில் ஒருக்களித்து படுக்கச்செய்தார். சகதேவன் நீர்க்குடுவையை எடுக்க “வேண்டாம்” என்றார் வஜ்ரர். வலிப்புடன் விசைகொண்ட இருமல்கள் யுதிஷ்டிரரின் உடலை உலுக்கின. கமறி மூச்சிளைத்து மெல்ல அவர் அடங்கியதும் உடைந்த தேர்ப்பீடம் ஒன்றை அவருக்கு தலைக்கு அணையாக வைத்தார் வஜ்ரர். மெல்லிய குரலில் “சற்றுநேரம் மூச்சு ஒழுங்கமையட்டும். அதன்பின் இன்னீர் கொடுப்போம்” என்றார்.

சகதேவன் அர்ஜுனனிடம் “மூத்தவரே” என்றான். அர்ஜுனன் பீஷ்மரை நோக்கவில்லை என்று தோன்றியது. யுதிஷ்டிரரின் துடிப்பையும் நோக்கவில்லை. எதையுமே நோக்காமல் விழிகள் இருளை வெறிக்க நின்றிருந்தான். “மூத்தவரே” என்றான் சகதேவன். “என்ன?” என்று அர்ஜுனன் கலைந்து திரும்பி நோக்கினான். “வணங்குக!” என்றான் சகதேவன். “ஆம்” என்றபின் அர்ஜுனன் சென்று பீஷ்மரின் காதருகே “நான் அர்ஜுனன். உங்கள் மைந்தன் வந்துள்ளேன்” என்றான். பீஷ்மரிடம் மெல்லிய இமையசைவன்றி ஏதும் வெளிப்படவில்லை. அவன் அவருடைய கால்களை தலைசூடிவிட்டு விலகினான்.

நகுலனும் சகதேவனும் பீஷ்மரை வணங்கினர். வஜ்ரர் “அவர் அறிந்துகொண்டிருக்கிறார்” என்றார். யுதிஷ்டிரர் முனகினார். சாத்தன் சென்று அவருக்கு சிறுகுவளையில் தேன் சேர்த்த நீரை அளித்தான். விடாய்கொண்ட உதடுகளுடன் அவர் அதை அருந்தினார். அவருக்குள் நீர் நுழையும் ஓசை அந்த அமைதியில் தெளிவாக கேட்டது. எவரோ எதுவோ சொல்வதுபோலிருந்தது. அங்கே உருவிலியாக எழுந்த தெய்வத்தின் குரல் என. சுபாகு மெய்ப்பு கொண்டான். “பார்த்தன்” என மீண்டும் அக்குரல் ஒலித்தபோது அது பீஷ்மரின் வாயிலிருந்து எனத் தெரிந்தது.

“செல்க! மூத்தவரே, அருகணைக!” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் கையூன்றி எழுந்தமர்ந்தார். தலை ஆடிக்கொண்டிருக்க அவர்களை நோக்கினார். அர்ஜுனன் தயங்கிய காலடிகளுடன் அருகே சென்று அவர் அருகே மண்டியிட்டான். “பிதாமகரே, நான் அர்ஜுனன். உங்கள் பெயர்மைந்தன்” என்றான். அம்புகள் மேல் அமைந்திருந்த பீஷ்மரின் வலக்கையில் நடுவிரல் துடித்தது. அதில் குருதி கருமையான பிசினாகப் படிந்திருந்தது. உள்ளங்கையிலும் முழங்கையிலும் மட்டும் நான்கு அம்புகளின் முனைகள் பதிந்திருந்தன. அவற்றைச் சுற்றி தசை சிவந்து நரம்புகள் புடைத்து எழுந்திருந்தன.

“கையருகே செல்க!” என்றான் சகதேவன். “நான் பார்த்தன், பிதாமகரே. உங்கள் சொல்லுக்காக வந்துள்ளேன். உங்கள் அடிபணிகிறேன்” என்றான் அர்ஜுனன். “ம்ம்” என்று பீஷ்மர் மிக ஆழத்தில் எங்கோ இருந்து முனகினார். “பார்த்தன்!” என ஒரு சொல் எழுந்தது. அவர் குரல்தானா என ஐயமெழுந்தது. “அவர் கையருகே செல்க!” என அர்ஜுனனின் தோளை தொட்டான் சகதேவன். அர்ஜுனன் அந்தக் கையின் அருகே சென்றான். பீஷ்மர் தன் கையை மேலே தூக்க முயன்றார். அது துடிப்பு கொண்டதே ஒழிய அசையவில்லை.

“அந்தக் கையை தூக்கி உங்கள் தலைமேல் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான் சாத்தன். அர்ஜுனன் தயங்கினான். “அவர் எண்ணுவது அதையே. செய்க!” என்றான் சாத்தன். அர்ஜுனன் தன் தலையை அந்தக் கையருகே கொண்டுசென்றான். மிக மெல்ல அதை தூக்கி தன் தலைமேல் வைத்தான். “பார்த்தன்!” என்று பீஷ்மர் சொன்னார். அவர் கை உயிரற்றதுபோல் அவன் தலைமேல் கிடந்தது. “பார்த்தன்!” என மீண்டும் தொண்டை கமறுவதுபோன்ற ஒலியுடன் சொன்னார். “வெல்க! மெய்மையை கண்டடைக!” என்றார். அவன் உடலில் மெல்லிய துடிப்பு ஒன்று நிகழ்ந்தது. அவன் தலையை அம்புமுனை ஒன்றின்மேல் சாய்த்துக்கொண்டான்.

வஜ்ரர் பீஷ்மரின் கையைத் தூக்கி மீண்டும் அம்புகள் மேல் வைத்தார். “செல்க… அவருக்கு மீண்டும் துயில்மருந்து அளிக்கவேண்டும்” என்றார். கையை நிலத்தில் ஊன்றி அர்ஜுனன் எழுந்துகொண்டான். இடையில் கையை வைத்துக்கொண்டு நின்று நீள்மூச்செறிந்தபடி வானை நோக்கினான். சுபாகு “செல்வோம்” என்றான். யுதிஷ்டிரர் சாத்தனின் கைகளை பற்றிக்கொண்டு எழுந்து நின்றார். அவர் முகம் தெளிந்திருந்தது. சகதேவன் “விடைகொள்கிறோம், மருத்துவர்களே” என்றான். வஜ்ரர் “நலம் சூழ்க!” என்றார்.

அவர்கள் வெளியே வந்ததும் புதுக் காற்றை ஏற்றவர்கள்போல் முகம்தெளிந்தனர். நீள்மூச்சுகள் ஒலித்தன. யுதிஷ்டிரர் “பிதாமகரின் வாழ்த்து நம்மனைவருக்கும்தான். நம் துயரை அவர் அறிந்திருக்கிறார்” என்றார். சகதேவன் “தந்தை அறியாத எதுவும் மைந்தருக்கில்லை” என்றான். அவர்கள் நடந்தபோது அந்தக் காலடியோசை உரக்க ஒலித்து உளநிலையை குலைத்தது. யுதிஷ்டிரர் அண்ணாந்து நோக்கி விண்மீன்களை பார்த்தார். பின்னர் நீள்மூச்சுடன் முன்னால் நடந்தார்.

சற்றே பின்னடைந்த பீமன் “இந்த மருத்துவரையா அபிமன்யூவைப் பார்க்க அனுப்புகிறேன் என்றாய்?” என்று சுபாகுவிடம் கேட்டான். “ஆம், அந்த இரு இளையோரும் உயிரின் நெறி அறிந்தவர்கள். உடலை ஆள்பவர்கள்” என்றான் சுபாகு. “உன் தமையனிடம் பேசிவிட்டு அவர்களில் ஒருவனை அனுப்பு. அபிமன்யூவுக்கு அவர்களின் மருந்துதவி தேவைப்படுகிறது. அவன் உடலில் இரண்டு புண்கள் ஆழமானவை” என்றான் பீமன். “ஆணை, மூத்தவரே” என்றான் சுபாகு. “பிதாமகர் தன் சிறுமைந்தனுக்களித்த கொடைகள் அவை. உயிர்குடிக்காதவை, உடல்வருத்துபவை” என்றான் பீமன்.

அவர்கள் மீண்டும் படைமுகப்பை வந்தடைந்தனர். காவல்நிலையில் முதிய சூதர் தன் முழவை மடியில் வைத்து தலை தொங்கிக்கொண்டிருக்க துயிலில் இருந்தார். சுபாகு நோக்குவதை பார்த்த காவலர்தலைவன் “மொந்தை நிறைய கள்ளை கொடுத்தேன். அதில் அகிபீனாவையும் சேர்த்தேன்… நாளை காலைவரை ஓசையெழாது” என்றான். யுதிஷ்டிரர் புன்னகைத்து “திறன்மிக்க சொல்லாளர். தென்னகத்து வேடர்கள் அம்புகளில் நஞ்சுபூசும் கலை தேர்ந்தவர்கள் என்பார்கள். வேட்டைவிலங்கு மயங்கிவிழவேண்டும், ஆனால் அதன் ஊனில் நஞ்சு ஏறிவிடக்கூடாது. அந்த அளவு அவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர் சொல்நஞ்சுக் கலைதேர்ந்தவர்” என்றார்.

அவர்கள் படைநடுவே உள்ள வெளியை அடைந்தனர். அங்கே தேர்கள் காத்து நின்றிருந்தன. யுதிஷ்டிரர் “மறவா உதவி இது இளையோனே, நன்று சூழ்க!” என அவனை வாழ்த்த சுபாகு அவருக்கு தலைவணங்கினான். பீமன் அவன் தலையைத் தொட்டு வாழ்த்திவிட்டு தேரிலேறிக்கொண்டான். நகுலனும் சகதேவனும் அவன் கால்களைத் தொட்டு வணங்கினர். அவன் வாழ்த்துச்சொற்களை முணுமுணுத்தான். அர்ஜுனன் தேரிலேறும் முன் அவனை நோக்கினான். அவன் ஏதோ சொல்ல விழைவதை விழிகளில் கண்டுவிட்டிருந்தான்.

சுபாகு “மூத்தவரே” என தாழ்ந்த குரலில் அழைத்தான். “என் மைந்தன் சுஜயன், உங்களுக்கு அவன் முகம்கூட நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவன் தந்தையென உங்களையே உளம்கொண்டிருந்தான்.” அர்ஜுனனின் முகம் உறைந்திருந்தது. “நீராடுகையில் அவனுக்காக ஒரு கைப்பிடி நீரள்ளி விடுங்கள், மூத்தவரே. சென்று நிறைக மைந்தா என ஒரு சொல் உரையுங்கள். இப்புவியில் இருந்து இனி அவன் எதிர்பார்க்க வேறேதுமில்லை.” கண்ணீர் கோக்க சுபாகு விழிகளை தாழ்த்திக்கொண்டான். அர்ஜுனன் வெறுமனே தலையசைத்துவிட்டு தேரிலேறிக்கொண்டான்.

bowசுபாகு தன் புரவியிலேறிக்கொண்டு திரும்பி கௌரவப் படைகளுக்குள் நுழைந்தான். புரவியை தளர்நடையில் விட்டு அதன் மேல் உடலை சற்று சரித்து அமர்ந்திருந்தான். அப்போது தேவைப்பட்டது துயில்தான். எங்கு படுத்தாலும் துயில்கொள்ள முடியும் என்று தோன்றியது. அவன் புரவி மேலேயே துயில்கொள்வதை அவனே நோக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தான். எதிரே பூரிசிரவஸ் வந்து “எங்கு செல்கிறீர்?” என்றான். “நான் பாண்டவர்களை பார்க்கச் சென்றிருந்தேன்” என்று சுபாகு சொன்னான். “நானும் அவர்களை பார்க்கத்தானே சென்றிருந்தேன்?” என்றான் பூரிசிரவஸ். “அதெப்படி?” என்று வியந்த சுபாகு உடனே விழித்துக்கொண்டான்.

அவனுக்குப் பின்னால் புரவிக்குளம்படி ஓசை கேட்டது. பந்தவெளிச்சத்தில் பூரிசிரவஸ் அணுகுவது தெரிந்தது. அவனருகே வந்த பூரிசிரவஸ் “வணங்குகிறேன், மூத்தவரே. நான் உங்களை அழைத்துக்கொண்டிருந்தேன்” என்றான். சுபாகு “அரசியரை பார்த்துவிட்டு வருகிறீரா?” என்றான். “ஆம், தூது முடிந்து இப்போதுதான் நம் படைகளுக்குள் நுழைந்தேன்” என்றான் பூரிசிரவஸ். சுபாகு ஏதும் கேட்கவில்லை. ஆனால் பூரிசிரவஸ் அவனே தொடர்ந்தான். “நான் செல்வதற்கு முன்னரே அவர்களுக்கு செய்தி சென்றடைந்துவிட்டிருந்தது. அவர்களுக்கு முறையாக விரிவான களச்செய்திகள் சென்றுகொண்டிருக்கின்றன. போர் நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே நாழிகைக்கு ஒருமுறையேனும் செய்திகள் அவர்களை சென்றடைகின்றன.”

“ஆம், அதற்காகத்தானே வந்திருக்கிறார்கள்?” என்றான் சுபாகு. “நான் சென்றபோது என் வருகையும் முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. என்னை சிறிய கூடமொன்றுக்குள் கொண்டுசென்றார்கள். அங்கே முன்னரே இரு அரசியரும் வந்து அமர்ந்திருந்தனர். இருவருமே இறுகிய முகத்துடன் இருந்தனர். யாதவப் பேரரசி முகத்திரை அணிந்திருந்தார். நான் செய்தியை முறைமைச் சொற்களில் உரைத்தேன். யாதவப் பேரரசி “எங்கள் குலத்து மூத்தவர் அவர். அவர் வீழ்ச்சிக்காக வருந்துகிறேன். பாண்டுவின் குருதியினர் அவருக்கு கடமைப்பட்டவர்கள்” என்று முறைமைச் சொல் உரைத்தார்” என்றான் பூரிசிரவஸ்.

“இது வெறும் சடங்கே” என்றான் சுபாகு. “ஆம், ஆனால் விந்தையான ஒன்று நிகழ்ந்தது. அதைத்தான் இதுவரை எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான் பூரிசிரவஸ். “மூத்தவரே, பாஞ்சாலத்து அரசி மறுமொழி எதையும் உரைக்கவில்லை. அவருடைய தலையாடை முகத்தின்மேல் சரிந்திருந்தது. மங்கிய விளக்கொளியில் முகம் தெளிவுறவில்லை. அவர் அங்கிருக்கவில்லை என்னும் உள்ளுணர்வை நான் அடைந்தபடியே இருந்தேன். அது அவரல்ல, வேறு எவரையோ அரசியென கொண்டுவந்திருக்கிறார்கள் என. ஆனால் சேடியோ தோழியோ அல்ல. அந்த நிமிர்வு அவர்களுக்கு அமையாது. நான் அவரை சிலமுறை பார்த்துள்ளேன். உடலால் அவரேதான். அந்த விந்தையுணர்ச்சியை என்னால் விளக்க இயலவில்லை.”

“யாதவப் பேரரசி பாஞ்சாலத்து அரசி மறுமொழி சொல்வார் என காத்திருந்தார். அவர் மறுமொழி சொல்லிவிட்டால் அந்தச் செய்திநிகழ்வு நிறைவுற்று நான் கிளம்ப முடியும். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. நான் மீண்டும் என் செய்தியை சொன்னேன். சற்று அழுத்தியே சொன்னேன். பிதாமகரான பீஷ்மர் பாஞ்சாலராகிய சிகண்டியாலும் அர்ஜுனராலும் களத்தில் வீழ்த்தப்பட்டார். இறப்புநிலையில் படுகளத்தில் படுத்திருக்கிறார். அவர் எழுவது அரிது என்றனர் மருத்துவர் என்றேன். அப்போதும் பாஞ்சாலத்தரசி ஒன்றும் சொல்லவில்லை. யாதவப் பேரரசி மெல்ல கனைத்தார். அது செவிகொள்ளப்படாதபோது மேலும் ஒருமுறை ஓசையுடன் கனைத்தார். பாஞ்சாலத்தரசி அசைவிலாது அமர்ந்திருந்தார். அவர் ஆடை மட்டும் இளங்காற்றில் சற்றே நெளிந்தது.”

சுபாகு புரவியை நிறுத்திவிட்டு நோக்கினான். பூரிசிரவஸ் சொன்னான் “பாஞ்சாலத்து அரசி, உன் மறுமொழிக்காக பால்ஹிகர் காத்திருக்கிறார் என்று யாதவப் பேரரசி சொன்னார். நான் பாஞ்சாலத்து அரசி அறிக, பீஷ்மர் களம்சரிந்தார். அவரை வீழ்த்தியவர்கள் பாஞ்சாலராகிய சிகண்டியும் இளைய பாண்டவர் அர்ஜுனனும். அவர் நூறு அம்புகள் உடல்துளைக்க களத்தில் கிடக்கிறார். அவர் எழுவதரிது என்றேன். அவர் புலி உறுமுவதுபோல் ஓசையெழுப்பினார். நான் எண்ணியிராத தருணத்தில் எழுந்தார். அவர் தலையிலிருந்து ஆடை நழுவி விழ அவர் முகத்தை விளக்கொளியில் நன்கு கண்டேன்.”

பதற்றமான சொற்களால் பூரிசிரவஸ் தொடர்ந்தான். “அவர் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. முகம் காய்ச்சல் கண்டது போலிருந்தது. ஆம் அவன் வீழ்ந்தான். என் மைந்தனின் கையால் வீழ்ந்தான். வென்றது என் வஞ்சம். பெண்பழி நின்றுகொல்லும் என்று அறிக இவ்வுலகு என்றார். நான் திகைப்புடன் யாதவப் பேரரசியை பார்த்தேன். அவரும் திகைத்ததுபோலிருந்தார். ஆனால் விரைவிலேயே தன்னை மீட்டுக்கொண்டு எழுந்துசென்று பாஞ்சாலத்து அரசியை தோள்பற்றி மெல்ல உலுக்கி பாஞ்சாலத்து அரசி, உன் சொற்கள் எதிர்நோக்கப்படுகின்றன என்றார். பாஞ்சாலத்து அரசி துயில்கலைந்து விழித்துக்கொண்டவர்போல சிறு அதிர்வுடன் மீண்டு என்னை நோக்கினார்.”

“உன் செய்தியை சொல்க பாஞ்சாலத்து அரசி என்று யாதவப் பேரரசி சொன்னார். பாஞ்சாலத்து அரசி என்னை நோக்கியபின் என்ன செய்தி என்றார். நான் யாதவப் பேரரசியை நோக்கினேன். சொல் என அவர் விழிகாட்டினார். நான் மீண்டும் சொன்னேன். பாஞ்சாலத்து அரசி ஆம், அவர் என் மைந்தரின் மூதாதை. என் குருதிவழி அவருக்கு நீர்க்கடன் பொறுப்புள்ளது. எங்கள் விழிநீர் அவரை சேர்க. அவர் விண்புகுந்தால் எங்கள் நீரும் அன்னமும் அவரை சென்றடைக என்றார். நான் தலைவணங்கி அவ்வண்ணமே அரசி என்றேன். இருவருக்கும் மீண்டும் தலைதாழ்த்தி பின்னடிவைத்து வெளியே வந்தேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

அவர்கள் இருவரும் புரவிகளில் இணையாக சென்றனர். “அவர் சிகண்டியை தன் மைந்தன் என்றார்!” என்று பூரிசிரவஸ் மீண்டும் சொன்னான். சுபாகு ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் நெடுநேரம் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. புரவிக்குளம்படிகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. தொலைவில் காவல்மாடம் ஒன்றில் விளக்கொளி தெரிந்தது. பூரிசிரவஸ் “அது பார்பாரிகனின் மாடம். அவன் அங்கிருந்துதான் போரை பார்க்கிறான்” என்றான். சுபாகு “ஆம், நான் பலமுறை அதை கடந்துசென்றுள்ளேன். மேலே கூர்ந்துநோக்கியதில்லை” என்றான். “இளவரசரின் ஆணைப்படி அவன் அங்கேயே இருக்கிறான். நீர் மட்டுமே அருந்துகிறான். அந்த மாடத்திலிருந்து கீழே இறங்குவதில்லை. துயில்கொள்வதுமில்லை” என்றான் பூரிசிரவஸ். சுபாகு அவனை அறியாமலேயே புரவியை அந்த மாடம் நோக்கி செலுத்தினான். அதை அணுகி புரவியை நிறுத்திவிட்டு இறங்கி மேலே பார்த்தான். பின்னர் நூலேணியில் ஏறி மேலே சென்றான். பூரிசிரவஸ் மேலே வரவில்லை.

சுபாகு பார்பாரிகனின் அருகே சென்று நின்றான். பார்பாரிகன் ஒரு மரப்பீடத்தில் அமர்ந்திருந்தான். அவன் உடல் மெலிந்திருக்கவில்லை. அமர்ந்திருக்கையிலேயே சுபாகுவின் உயரமிருந்தான். பெரிய விழிகளால் குருக்ஷேத்ரத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சுபாகு வந்ததை அறிந்ததாகத் தெரியவில்லை. “இடும்பரே, நான் சுபாகு, கௌரவன்” என்று அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். பார்பாரிகன் திரும்பி அவனை நோக்கினான். அவ்விழிகளின் கடந்த நோக்கு சுபாகுவை அச்சம்போன்ற ஒரு பதைப்பை அடையச்செய்தது. அல்லது மிக உயரத்திலிருந்து கீழே விழுவதைப்போல.

“இடும்பரே, இரவிலும் எதை பார்க்கிறீர்?” என்று சுபாகு கேட்டான். “இரவு இறந்தவர்களுக்குரியது” என்று பார்பாரிகன் சொன்னான். “இறந்தவர்களை பார்க்கிறீர்களா?” என்றான் சுபாகு. “ஆம்” என்றான் பார்பாரிகன். “அவர்கள் இங்குள்ளார்களா?” என்றான் சுபாகு. அதற்கு பார்பாரிகன் மறுமொழி சொல்லவில்லை. “அரக்கரே, சொல்க! என் உடன்பிறந்தார் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் துயருற்றிருக்கிறார்களா? அவர்கள் எங்களை எண்ணி வருந்துகிறார்களா?” பார்பாரிகன் “ஆம், துயருற்றிருக்கிறார்கள்” என்றான். “அவர்கள் பதற்றம் கொண்டிருக்கிறார்கள். ஆகவே எந்நேரமும் உங்கள் மூத்தவரை சூழ்ந்திருக்கிறார்கள்.”

“அனைவருமா? எவருமே விண்ணேறவில்லையா?” என்றான் சுபாகு. “மானுடர் விண்புகுவதற்கு இரண்டு நிறைவுகள் வேண்டும். இங்கு அவர்களின் பிறவிப்பணி முடியவேண்டும். இங்கிருந்து அவர்களை விண்ணேற்றும் அன்னமும் நீரும் செல்லவேண்டும்” என்றான் பார்பாரிகன். “அவர்களின் பிறவிப்பணி என்ன? அவர்களுக்கு எவர் நீரளிப்பார்கள்?” பார்பாரிகன் சில கணங்கள் அமைதியாக இருந்தான். பின்னர் “அவர்களிடம் உங்கள் வினாவை கேட்டேன். இக்குருக்ஷேத்ரம் நிறைவடைகையில் அவர்களின் பிறவிப்பணி முடியும் என்கிறார்கள். அவர்களுக்கு நீரளிப்பது எவர் என அப்போதே முடிவாகும்” என்றான்.

கடுமையான நீர்விடாயில் என நெஞ்சு பதைக்க சுபாகு அவனை நோக்கிக்கொண்டு சொல்லொழிந்து நின்றான். பின்னர் மூச்சைத் திரட்டி சொல்லென்றாக்கி “இடும்பரே” என அழைத்தான். “சொல்க, என் மைந்தன் சுஜயன் இங்குள்ளானா?” பார்பாரிகன் “இல்லை” என்றான். சுபாகு பதைப்புடன் “ஏன்?” என்றான். “அவன் நிறைவுற்றுவிட்டான். ஆகவே விண்புகுந்துவிட்டான்.” பார்பாரிகனின் பெரிய முகத்தை நோக்கி சுபாகு குனிந்தான். கொந்தளிப்பில் நெளிந்த உதடுகளுடன் “நிறைவென்பது என்ன?” என்றான்.

“கருபுகும் பார்த்திவப் பரமாணுவில் வந்தமையும் உயிர் ஒரு வினாவை கொண்டுள்ளது. வாழ்வென்பது அவ்வினாவின் வளர்ச்சி” என்றான் பார்பாரிகன். “அதன் விடையைக் கண்டடையும் உயிர் நிறைவடைகிறது. அவ்விடை எஞ்சியிருக்குமென்றால் மீண்டும் பிறக்கிறது.” சுபாகு “என் மைந்தன் அவன் விடையை கண்டடைந்துவிட்டானா?” என்றான். “ஆம், வினாக்கள் கோடிகோடி. விடை ஒன்றே. வினாக்களுக்கேற்ப உருக்கொள்வது அது” என்று பார்பாரிகன் சொன்னான். மேலும் என்ன கேட்பது என அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் கேட்பதற்கு ஏதோ எஞ்சியுமிருந்தது.

அவன் இறங்கிவிடலாமென எண்ணினான். உடல் திரும்புவதற்குள் உளம் திரும்பியது. அவ்வசைவில் அது வினாவை அடைந்தது. “இடும்பரே, என் மைந்தன் எப்போது விண்புகுந்தான்?” என்றான். “இன்று” என்றான் பார்பாரிகன். “எப்போது?” என்றான் சுபாகு. “அவன் களத்தில் அர்ஜுனனுடன் இருந்தான். பீஷ்மர் மேல் அர்ஜுனனின் முதல் அம்பு பட்ட கணமே மறைந்தான்” என்றான் பார்பாரிகன். கைகளை நெஞ்சுடன் சேர்த்துக் கூப்பியபடி சுபாகு அதை கேட்டுக்கொண்டு நின்றான். பின்னர் தன்னிலை உணர்ந்து வணங்கிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கினான். நூலேணியில் இறங்கும்போது அவன் கால்களும் கைகளும் நடுங்கிக்கொண்டிருந்தன.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78

bowசுபாகு பாண்டவப் படையின் எல்லையை அடைந்து முதற்காவலரணின் முன் நின்றான். காவலர்தலைவன் வந்து அவனுடைய கணையாழியை வெறுமனே நோக்கிவிட்டு செல்லும்படி தலைவணங்கினான். அவனுக்கு தன் வருகை முன்னரே தெரிந்திருக்கிறது என சுபாகு உணர்ந்தான். படைகளின் நடுவே சென்றபோது தன் மேல் மொய்த்த விழிகளிலிருந்து அங்கிருந்த அனைவருக்குமே தன் வருகை தெரிந்துள்ளது என்று தெளிந்தான். அவர்கள் அவனை வெறுப்புடன் நோக்குவது போலிருந்தது. பின்னர் அது வெறுப்பல்ல, ஒவ்வாமையும் அல்ல, வெறும் வெறிப்பே என தோன்றியது. தங்களை மீறியவற்றின் முன் மானுடர் கொள்ளும் செயலின்மையின் விழிவெளிப்பாடு அது.

நான்காவது காவலரணில் அவனை திருஷ்டத்யும்னனிடம் அழைத்துச்சென்றார்கள். அவன் விற்கொடி பறந்த பாடிவீட்டின் முன் காத்து நின்றான். உள்ளிருந்து வந்த காவலன் நுழைவொப்புதல் அளித்ததும் உள்ளே சென்று அங்கே மான்தோலிட்ட பீடத்தில் அமர்ந்திருந்த திருஷ்டத்யும்னனை வணங்கி முகமனுரைத்தான். திருஷ்டத்யும்னன் முகத்தில் எவ்வுணர்வும் இருக்கவில்லை. தன் அகத்தை புறச்செயல்களைக்கொண்டு நன்கு வகுத்துக் கொள்பவர்களுக்குரிய தற்கட்டுப்பாட்டுடன், அசைவின்மையுடன் இருந்தான். “நான் பாண்டவ அரசர் யுதிஷ்டிரரை பார்க்கும்பொருட்டு அனுப்பப்பட்ட தூதன்” என்றான் சுபாகு.

“அவருக்கு செய்தி அளிக்கப்பட்டுள்ளது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நீங்கள் அவரை சந்திக்கலாம். உங்கள் செய்தி எம் படைகளையோ அவரையோ உளச்சோர்வுறுத்தும் பொருட்டு திட்டமிட்டதாக இல்லை என நினைக்கிறேன். அவ்வாறு திட்டமிடப்பட்டதாகத் தெரிந்தால் உம்மை நான் சிறைப்படுத்த நேரும்” என்றான் திருஷ்டத்யும்னன். “நீங்கள் உளச்சோர்வடைவதோ ஊக்கம்கொள்வதோ எங்களிடம் இல்லையே” என்று சுபாகு சொன்னான். “நான் செய்தியை சொல்வதற்கு மட்டுமே பணிக்கப்பட்ட தூதன்.” திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப் பின் “நன்று” என்று சொல்லி எழுந்துகொண்டு “நானும் உம்முடன் வருகிறேன்” என்றான்.

அவர்கள் யுதிஷ்டிரரின் தலைமையிடத்தை நோக்கி புரவிகளில் சென்றனர். பாண்டவப் படையினர் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். திருஷ்டத்யும்னன் பீஷ்மரின் உடல்நிலைகுறித்து கேட்பான் என அவன் நினைத்தான். ஆனால் மீசையை நீவியபடி புரவியின்மேல் திருஷ்டத்யும்னன் வெறுமனே அமர்ந்திருந்தான். சுபாகுவின் வருகையை அறிவித்து முரசுகள் முழங்கின. சுபாகு ஏதோ எண்ணிக்கொண்டு திரும்பி வடமேற்கே பார்த்தான். பீஷ்மரின் படுகளம் தனியாக அனல்செம்மையால் சூழப்பட்டு தெரிந்தது. அவன் திரும்பிப் பார்த்ததைக்கூட திருஷ்டத்யும்னன் நோக்கவில்லை.

யுதிஷ்டிரரின் பாடிவீட்டின் முகப்பில் யௌதேயன் காவல்பொறுப்பில் இருந்தான். அவன் தன் கணையாழியை அளித்ததும் அதை வாங்காமல் தலைவணங்கி “பிதாமகர் எவ்வண்ணம் இருக்கிறார், தந்தையே?” என்றான். சுபாகு முகம் மலர்ந்து “எஞ்சியிருக்கிறார். தன் இறப்பை தானே முடிவெடுக்கும் நிலையில்” என்றான். யௌதேயன் தலைவணங்கி “அவர் யோகி” என்றான். அவனுக்குப் பின்னால் நின்றிருந்த சதானீகன் “அவர் எங்களுக்கான செய்தி எதையேனும் சொன்னாரா?” என்றான். “என்ன செய்தி?” என்று சுபாகு கேட்டான். சதானீகனின் விழிகள் தழைந்தன.

யௌதேயன் “நேரடியாகவே சொல்லலாம். அவர் எங்கள் குலத்தின்மேல் தீச்சொல் என எதையேனும் விடுத்தாரா?” என்றான். “அவர் பெருந்தந்தை… தந்தையர் எந்நிலையிலும் மைந்தரை வாழ்த்துவதை மட்டுமே அறிந்தவர்கள்” என்றான் சுபாகு. யௌதேயன் விழிகள் கனிய “ஆம்” என்றான். “இந்த ஆட்டத்தில் அவர் நமக்களித்த அனைத்துமே தந்தையின் கொடை எனக் கொள்க!” என்ற சுபாகு “மைந்தர்கள் அனைவரும் நலம் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் யௌதேயன். “அபிமன்யூவிற்கு இன்று சற்றே புண் மிகுதி என அறிந்தேன்” என்றான் சுபாகு. “ஆற்றும் தகைமை கொண்டவைதான்” என்றான் யௌதேயன். “நலம்பெறுக!” என்று வாழ்த்தியபின் சுபாகு யுதிஷ்டிரரின் குடிலை நோக்கி சென்றான்.

யுதிஷ்டிரரின் குடிலில் முன்னரே பீமனும் நகுலனும் சகதேவனும் வந்திருந்தார்கள் என்பது அவர்களின் கொடிகள் பறந்த தேர்கள் வெளியே நிற்பதிலிருந்து தெரிந்தது. சாத்யகி குடிலுக்கு வெளியே நின்றிருந்தான். சுபாகுவைக் கண்டதும் அருகே வந்து தலைவணங்கி “அரசர் தங்களுக்காக காத்திருக்கிறார், கௌரவரே” என்றான். “இளைய யாதவரும் இளைய பாண்டவர் அர்ஜுனரும் இருக்கிறார்களல்லவா?” என்றான் சுபாகு. “இல்லை, அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று சாத்யகி சொன்னான். “அவர்களும் வரட்டும். பாண்டவர்கள் ஐவரும் அடங்கிய அவைக்காகவே நான் தூது வந்திருக்கிறேன்.”

“இளைய பாண்டவர் அரசவைக்கு வருவதே இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், அறிவேன். ஆனால் என் தூது ஐவருக்குமாகத்தான்” என்றான் சுபாகு. “நான் வெளியே காத்திருக்கிறேன். அவைக்குள் நுழைகையில் அவர்கள் ஐவரும் இருந்தாகவேண்டும்.” சாத்யகி “நன்று” என்றபின் உள்ளே சென்றான். திருஷ்டத்யும்னன் “இளைய பாண்டவர் இன்றும் வருவது ஐயமே” என்றான். “செய்தியனுப்புக!” என்றான் சுபாகு. “செய்தி பலமுறை சென்றுவிட்டது, தூது ஐவருக்குமாக என்று சகுனியின் ஆணையும் சொல்லப்பட்டுள்ளது” என்றான்.

தேர் வந்துநின்ற ஓசை கேட்டு இருவரும் திரும்பி நோக்கினர். விரைவுச் சிறுதேரிலிருந்து இளைய யாதவர் முதலில் துள்ளி இறங்கினார். தொடர்ந்து தயங்கிய காலடிகளுடன் இளைய பாண்டவன் இறங்கினான். தேர்ப்பாகன் தேரை அப்பால் கொண்டு செல்ல அவர்கள் இருவரும் பாடிவீட்டை அணுகினர். சுபாகு தலைவணங்கி “துவாரகையின் அரசருக்கு வணக்கம்” என்றான். “நலம்திகழ்க!” என இளைய யாதவர் வாழ்த்தினார். அவன் அர்ஜுனனை வணங்கி “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். இளைய பாண்டவன் அவன் தலையைத் தொட்டு சொல்லின்றி வாழ்த்தினான்.

“நான் தங்களுக்காகவே காத்து நின்றுள்ளேன்” என்றான் சுபாகு. இளைய யாதவர் “அபிமன்யூவின் புண்கள் சற்று கடுமையானவை. மருத்துவநிலைக்கு சென்றிருந்தோம்” என்றார். சுபாகு “ஆம், சொன்னார்கள்” என்றபின் இளைய பாண்டவனிடம் “எங்களிடம் மிகச் சிறந்த தென்னக மருத்துவர் சிலர் இருக்கிறார்கள். சாத்தன், ஆதன் என இருவர். அகத்திய வழிவந்தவர்கள். தாங்கள் விழைந்தால் அவர்களை இங்கே அனுப்புகிறேன். மைந்தனின் உடலை அவர்கள் ஒருமுறை நோக்கட்டும்” என்றான். இளைய யாதவர் “ஆம், அது நன்று. அகத்திய மரபு நரம்புநிலை மருத்துவம் தேர்ந்தது” என்றார். இளைய பாண்டவன் நலிந்த குரலில் “நலம்பெறுவான் என்றனர் மருத்துவர்” என்றான்.

சாத்யகி உள்ளிருந்து வந்து தலைவணங்கினான். “முறைமைப்படி முழுதவையில் நான் என் செய்தியை உரைக்கவேண்டும். நீங்கள் அவைக்குச் சென்று அமர்ந்தபின் நான் உள்ளே நுழைகிறேன்” என்றான் சுபாகு. இளைய யாதவர் புன்னகைத்து “ஆம், அவை ஒருங்கவேண்டும் அல்லவா?” என்றபின் சுபாகுவின் தோளை மெல்ல தொட்டுவிட்டு உள்ளே சென்றார். இளைய பாண்டவன் தளர்ந்த காலடிகளுடன் தொடர்ந்தான். சாத்யகி அவர்களுடன் உள்ளே சென்றுவிட்டு மீண்டு வந்து தலைவணங்கினான். சுபாகு உள்ளே நுழைந்தான்.

அவையின் நடுவே பீடத்தில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரரை வணங்கி “அஸ்தினபுரியின் அரசரிடமிருந்து உபப்பிலாவ்யத்தின் அரசருக்கு நல்வணக்கம். நான் அரசரின் செய்தியுடன் வந்த தூதன்” என்றான் சுபாகு. “நலம் சூழ்க! தூதை சொல்க!” என்றார் யுதிஷ்டிரர். சுபாகு மீண்டுமொருமுறை தலைவணங்கி “குருகுலத்து மூத்தவருக்கு இளையவனின் வணக்கம்” என்றான். யுதிஷ்டிரர் சற்று முகம் மலர்ந்து “நன்று நிறைக, இளையோனே!” என்றார். “மூத்தவரே, நம் குலமூதாதையின் களவீழ்ச்சியை முறைப்படி அறிவிக்கும்பொருட்டு என் மூத்தவர் என்னை அனுப்பியிருக்கிறார்” என்றான் சுபாகு. அவையில் எழுந்த அசைவையும் மூச்சொலியையும் உடலால் உணர்ந்தான்.

சுபாகு “நம் முதுதந்தையும் சந்தனுவின் மைந்தருமாகிய தேவவிரதர் நேற்று போரில் நிலம்சரிந்தார். அவருடைய உடல்நிலை இறுதிக்கட்டத்தில் உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துகொண்டிருக்கிறார். அவரை இறுதியாகக் காணவும் வணங்கி நற்சொல் பெறவும் அவர்களின் மைந்தர்களாகிய தங்களுக்கும் தங்கள் இளையோருக்கும் பொறுப்பும் உரிமையும் உள்ளது. அதை அறிவுறுத்தவே வந்தேன்” என்றான். யுதிஷ்டிரர் கைகளால் தலையைத் தாங்கி அவனை நோக்கியபடி அமர்ந்திருந்தார்.

பீமன் “அவரிடமிருந்து தீச்சொல் எழுமெனில் நன்றே என எண்ணுகிறீர்கள் போலும்” என்றான். “தீச்சொல் எழுமென எண்ணுகிறீர்களா நீங்கள்?” என்றான் சுபாகு. பீமன் சொல்லிழந்தான். சுபாகு “மாறாக முழுதுளம் கனிந்த வாழ்த்தை அவர் அவர்மேல் அம்புகளைத் தொடுத்து களத்தில் வீழ்த்திய இளைய பாண்டவர் பார்த்தருக்கே அளிப்பார்” என்றான். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர். சுபாகு “இது வெறும் முறைமையறிவிப்பு. இதை நாங்கள் அறிவிக்கவில்லை என்று ஆகக்கூடாது. எங்களை எண்ணி நீங்கள் தயங்கவும் கூடாது. மூத்தவரே, பிதாமகர் வீழ்ந்துகிடக்கும் அந்நிலப்பகுதியை கௌரவ அரசர் இருவருக்கும் பொதுவான நிலமாக அறிவித்திருக்கிறார். அங்குள்ள காவலர்களுக்கும் அது அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றான்.

திருஷ்டத்யும்னன் “முறைமைகளின்படி அவர் மறைந்தால் நீர்க்கடன் பொறுப்பு கொண்ட அனைவரும் அவரைச் சென்று கண்டு தாள்பணிந்தாகவேண்டும்” என்றான். யுதிஷ்டிரர் “அதற்கான நெஞ்சுரம் நம்மிடம் உண்டா, பாஞ்சாலரே? அவர் முன் சென்று நின்றிருக்க நம்மால் இயலுமா?” என்றார். திருஷ்டத்யும்னன் “நாம் நாணும் எதையும் செய்யலாகாது. செய்தபின் எதன்பொருட்டும் நாணுதலும் ஆகாது” என்றான். “என்னால் இயலும். இங்கு எவரும் வரவில்லை என்றால் உங்கள் சார்பில் நான் செல்கிறேன்” என்றான் பீமன். சகதேவன் “நாம் ஐவருமே சென்றாகவேண்டும். குறிப்பாக மூத்தவர் பார்த்தர்” என்றான். “ஆம், செல்வதே முறை. ஆனால் எப்படி செல்வது? எண்ணுகையிலேயே என் கால்கள் தளர்கின்றன” என்றார் யுதிஷ்டிரர்.

“அத்தனை பிழையுணர்வு அளிக்கும் ஒன்றை நீங்கள் செய்திருக்கலாகாது” என்றான் பீமன். “இனி அதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்று இளைய யாதவர் கடுமையான குரலில் சொன்னார். “நாம் உடனே கிளம்புவோம். அவரைச் சென்று கண்டு அடிபணிந்து அவர் அளிப்பவை எவையாக இருப்பினும் பெறுவோம்.” யுதிஷ்டிரர் “ஆனால்…” என்று உடைந்த குரலில் சொன்னார். இளைய யாதவர் சற்றே எரிச்சல் கலந்த குரலில் “அரசே, அவரை நாம் வீழ்த்தியது அவருடைய சொல்லில் இருந்து ஆணைபெற்றுத்தான். ஆகவே நாம் அவர் எண்ணாத பிழை எதையும் செய்யவில்லை. அவரைச் சென்று கண்டு வாழ்த்துபெறுதல் நாம் அவரை வஞ்சகத்தால் வீழ்த்தினோம் என்னும் வீண்பழியிலிருந்து நம்மை காக்கும். அவருடைய ஆணையைத்தான் நாம் தலைக்கொண்டோம் என உலகம் அறியட்டும். செல்வோம்” என்றார்.

யுதிஷ்டிரர் “ஆம்” என்றபின் சுபாகுவிடம் “நாங்கள் இப்பொழுதே வந்து பிதாமகரின் தாள்பணிகிறோம் என்று சொல்க!” என்றார். “ஆணை” என சுபாகு தலைவணங்கினான். நகுலன் “நமது படைகள் இதைப்பற்றி என்ன எண்ணுமென்றும் நாம் கணிக்கவேண்டியிருக்கிறது” என்றான். “அதைப்பற்றி எனக்கு கவலையில்லை” என்று உரத்த குரலில் யுதிஷ்டிரர் சொன்னார். “கவலைகொள்ளவேண்டும்… நாம் பிதாமகரைச் சென்றுகண்டு சொல்பெற்றதே மிகப் பெரிய சோர்வை இங்கே உருவாக்கியதை நாம் அறிவோம். அரவானை களப்பலி கொடுத்தே நாம் அதை மீட்டோம்” என்றான் நகுலன்.

யுதிஷ்டிரர் “ஆம், ஆயினும் எனக்கு கவலை இல்லை. நான் அவரால் வாழ்த்தப்பட்டேன் என்றால் மகிழ்வேன். தீச்சொல்லிடப்பட்டேன் எனில் நிறைவடைவேன்” என்றார். இளைய யாதவர் “அரசே, தாங்கள் செல்வதே நன்று. இளையோர் உடன்வரட்டும். அவர் தங்கள் குலமூதாதை. நாளை அஸ்தினபுரியின் அரசர் என நீங்கள் முடிசூடி அமர்ந்திருக்கையில் சொல்லப்படும் மூதாதையர் பெயர்நிரையில் அவருடையதும் இருக்கும்” என்றார். “ஆம், நான் இப்போதே கிளம்புகிறேன்” என யுதிஷ்டிரர் எழுந்தார்.

நகுலன் “தங்கள் ஆணை அதுவெனில் அவ்வாறே ஆகுக!” என்றான். யுதிஷ்டிரர் அர்ஜுனனை நோக்கி “எழுக இளையோனே, இது நம் கடன்!” என்றார். அர்ஜுனன் அசையாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “வருக, நாம் கிளம்பியாகவேண்டும்!” என்றார் யுதிஷ்டிரர் மீண்டும். அர்ஜுனன் அசையவில்லை. அவன் இமைகளும் கீழே சரிந்து நிலைத்திருந்தன. “பார்த்தா, அவரைச் சென்று பார்ப்பது உன் கடன்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவர் அளிப்பது எதுவாக இருந்தாலும் பெற்றுமீள்க! அதை தவிர்ப்பது அஞ்சுவதென்றே பொருள்படும்.”

சீற்றத்துடன் அர்ஜுனன் “ஆம், நான் அஞ்சுகிறேன்” என்றான். விழிகளில் நீர் மின்ன “என் கீழ்மையை. அவர்முன் சென்று நின்றிருக்கையில் நான் சிறுத்து எறும்பென, அணுவென ஆகப்போவதை” என மூச்சிரைத்தான். புன்னகையுடன் இளைய யாதவர் “ஆம், அவ்வாறு நிகழலாம். ஆனால் நீ வான்வெளியில் தலைதூக்கி நின்று நான் என்று தருக்கிய தருணங்கள் உண்டு. அப்போது அறிந்தவற்றை அணுவென்றும் இன்மையென்று ஆகி நின்றிருக்கையில் மெய்யா என்று உசாவுக! இது ஒரு நல்வாய்ப்பு” என்றார். ஏதோ சொல்ல வந்த அர்ஜுனன் வலிகொண்டவனாக தலையை அசைத்தான்.

“பார்த்தா, உண்ணாநோன்பு கொண்டவன் பசியாலும் நோயாளன் வலியாலும் தவமியற்றுவோன் துயராலும் விடுதலையடைகிறார்கள் என்பது தொல்நூல் கூற்று” என்றார் இளைய யாதவர். “இவையனைத்தும் மெய்மையின் தருணங்களே என்று உணர்க! செல்க!” பீடத்தின் கைப்பிடிகளை இறுகப் பற்றியபடி அசையாமலிருந்த அர்ஜுனன் “ஆம்” என்றபடி எழுந்து யுதிஷ்டிரரை அணுகி “செல்வோம்” என்றான். சுபாகு “நீங்கள் வரும் செய்தியை நான் என் படைகளுக்கு அறிவிக்கிறேன், அரசே” என்றான்.

bowயுதிஷ்டிரர் தம்பியருடன் நான்கு தேர்களில் கௌரவப் படைமுகப்பை அணுகியதும் அரசருக்குரிய வரவேற்பை அளிக்க முரசுகள் முழங்கின. படையினர் பெரும்பாலும் துயில்கொண்டுவிட்டிருந்தமையால் அந்த அமைதியில் முரசொலி உரக்க எழுந்து இருளை நிறைத்தது. இரு படைகளுக்கும் நடுவே அமைந்திருந்த வெற்றுநிலத்தை அவர்களின் தேர்கள் கடந்தபோது எழுந்த ஓசையை இருபக்கமும் இருந்த படைவீரர்கள் அறிந்திருந்தனர். அன்று என்ன நிகழும் என்பதையும் ஒருவாறாக உய்த்துணர்ந்திருந்தனர்.

முரசொலி கேட்டு யானைகள் சில குரலெழுப்பின. அவர்களை வரவேற்க அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடன் துச்சாதனனே வந்திருந்தான். அவர்கள் அருகணைந்ததும் கொம்பு ஓசையிட்டமைந்தது. துச்சாதனன் இருபுறமும் துர்மதனும் துச்சலனும் துணைவர ஏழு அடி முன்னால் வந்து தலைவணங்கி “அஸ்தினபுரியின் படையெல்லைக்குள் உபப்பிலாவ்யத்தின் அரசருக்கு நல்வரவு. உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு அமைவதாக!” என முறைமைச் சொல் உரைத்தான். யுதிஷ்டிரர் சொல்லில்லாமல் கைதூக்கி வாழ்த்து அளித்தார்.

துச்சாதனன் “பாண்டவ இளையோர் நால்வருக்கும் நல்வரவு” என தலைவணங்கிய பின் “உங்களை இளையோன் சுபாகுவே அழைத்துச்செல்வான்” என்றான். யுதிஷ்டிரர் தலையசைத்தார். துச்சாதனன் மீண்டும் தலைவணங்கி புறம்காட்டாமல் விலகிச்சென்றான். யுதிஷ்டிரர் திரும்பி “செல்வோம்” என்று சுபாகுவிடம் சொன்னார். சுபாகு அவர்களை அழைத்துச்செல்ல ஐவரும் மெல்லிய காலடிகளுடன் தொடர்ந்து வந்தார்கள்.

படைகளின் முன்விளிம்பு வழியாக வடக்கு நோக்கி செல்கையில் பாண்டவர்கள் நால்வரும் நடுங்கிக்கொண்டிருப்பதை சுபாகு பார்த்தான். பீமன் மட்டும் பெரிய கைகளை வீசியபடி நிமிர்ந்த தலையுடன் தோளில் சரிந்த நீள்குழல்சுருள்கள் காற்றில் அலைபாய கால்களை தூக்கி வைத்து நடந்தான். அர்ஜுனன் எதையுமே பார்க்கவில்லை. நகுலனும் சகதேவனும் நிலம்நோக்கி நடந்தனர். யுதிஷ்டிரர் கைகளை கூப்புவதுபோல நெஞ்சோடு சேர்ந்திருந்தார்.

பந்தங்களால் சூழப்பட்ட பீஷ்மரின் படுகளம் இருளில் மிதப்பதுபோலத் தெரிந்தது. அங்கு நின்றிருந்த மருத்துவர்களின் நிழல்கள் செவ்வொளி எழுந்த கரிய வானில் பேருருக்கொண்டு அசைந்தன. யுதிஷ்டிரர் “அவர் இறந்துவிடவில்லை அல்லவா?” என்று கேட்டார். அவ்வினாவிலிருந்த பொருளின்மையை உணர்ந்த சுபாகு “அவ்வாறு முரசுகள் ஒலிக்கவில்லை, மூத்தவரே” என்றான். “ஆம், அவர் மறைந்தால் முரசொலி எழும்” என்றார் யுதிஷ்டிரர். பீமன் “அவர் இறந்துவிட்டதாகவே முரசொலி எழுந்தது. இறக்கவில்லை என இன்னொரு முரசொலி. மீண்டும் முரசொலித்தாலும் நம் வீரர்கள் நம்பப் போவதில்லை” என்றான்.

ஏன் இக்கட்டுப் பொழுதுகளில் மானுடர் பொருளிலாது பேசுகிறார்கள் என்று சுபாகு எண்ணிக்கொண்டான். ஆனால் பேசுவது அந்தத் தருணத்தின் இறுக்கத்தை எளிதாக்கியது. அப்போது எதை பேசினாலும் பொருளில்லாததாகவே இருக்கும். அப்போது பொருள்கொள்வது இளிவரல் மட்டுமே. பொருளில்லாமையையே பொருளெனக் கொள்ள இயல்வது இளிவரலில் மட்டும்தான். அப்படி எண்ணியதுமே அவன் முதிய சூதரை பார்த்துவிட்டான். அவர் காவல்மாடத்தில் அமர்ந்திருந்தார். அவர்களைக் கண்டதும் ஆவலுடன் முகம் மலர எழுந்து நின்றார். சுபாகு எரிச்சல் கொண்டான். ஆனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது என்று உணர்ந்தான். அதன்பின் அவர் அத்தருணத்தில் சொல்லப்போவதென்ன என்ற ஆர்வமும் எழுந்தது.

முதிய சூதர் கைகளை விரித்து அவர்களை தடுப்பதுபோல் அருகே வந்தார். முன்னால் சென்ற சுபாகுவிடம் “நில்லுங்கள், அரசே. தங்கள் ஆணையின்படி நான் உள்ளே சென்று அவரை பார்த்தேன். அவருடைய அம்புகள் எவை எனத் தெளிந்தேன். அவை அந்தக் களத்தில் இருந்து பொறுக்கப்பட்டவை. ஆம், அவர்மேல் படாமல் குறிதவறிய அம்புகளைக்கொண்டு அந்த மஞ்சம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார். கண்களைச் சிமிட்டியபடி “அந்த மஞ்சம் அமைக்கும் கலை எவ்வாறு உருவானது என கண்டுபிடித்தேன். இளமையில் அவர் அம்புகளால் கங்கைக்கு அணைகட்டினார் என்றார்கள். அந்த அணையமைக்கும் கலையே இங்கே மஞ்சமென்றாகியிருக்கிறது. கங்கைக்கு கரைகட்டுதல்!” என்றார்.

“ஆனால் அவர் பெருவீரர்!” என்று சூதர் கூவினார். “அவரால் நீருக்கு மட்டுமல்ல நெருப்புக்கும் காற்றுக்கும்கூட அணைகட்ட முடியும். ஏன் முயன்றால் வானுக்கே அணைகட்டுவார். அந்த அணை முழுமையடையாது, ஏனென்றால் அது முழுமையடைய இயலாது. முழுமையடையாத செயல்களை செய்பவர்களே பெரியவர்கள். ஏன் என்று சொல்கிறேன், அச்செயல்களை தொடங்கினாலே போதும், செய்ததாகவே பொருள்கொள்ளப்படும். இவர்கள் யார்? பாண்டவர்கள் போலிருக்கிறார்கள்… இந்த முதியவர் கௌதமகுலத்து முனிவர் அல்ல என்றால் யுதிஷ்டிரராக இருக்கலாம். இவர் பலாஹாஸ்வ முனிவர் அல்ல என்றால் பீமன். அவர் சரத்வான் அல்ல என்றால்…”

“போதும்” என்று பீமன் உறுமினான். யுதிஷ்டிரர் கைகூப்பி “சூதரே, நாங்கள் பாண்டவர்கள். எங்கள் பிதாமகரை பார்த்துவரச் செல்கிறோம். வழிவிடுங்கள்” என்றார். “ஆம், அது உகந்த செயல்தான். பெரிய தீங்குகள் இழைக்காத தருணங்களிலெல்லாம் நாம் முறைமைகளை கைவிடாது பேணவேண்டும்… அதுவே அரசநெறி” என்றார் முதிய சூதர். “தங்கள் வாழ்த்துக்கள் அமையட்டும்” என்று கைகூப்பியபின் யுதிஷ்டிரர் முன்னால் நடந்தார். முதிய சூதர் பின்னால் வந்தபடி “நானும் உடன்வந்தால் உங்கள் பெருமையை அவரிடம் சொல்வேன்” என்றான். சுபாகு “வேண்டாம்” என்றான்.

“வேண்டுமென்றால் உங்கள் பெருமையை உங்களிடமே சொல்கிறேன். அவர் உடலில் சிகண்டியின் அம்பையும் அர்ஜுனரின் அம்பையும் பிரித்தறியவே முடியவில்லை என்றார்கள்” என்றபடி அவர் தொடர்ந்து வந்தார். “அம்புகளில் வேறுபாடில்லை என்பதை அறியாமல்தான் பிதாமகர் உயிர்விடத் துணிந்திருக்கிறார்.” சீற்றத்துடன் பீமன் திரும்பினான். “மந்தா!” என்றார் யுதிஷ்டிரர். “களம்பட்டவர்கள் தங்கள் உயிரைக் குடித்த படைக்கலத்தை கையில் ஏந்திக்கொண்டுதான் விண்ணுலகு எய்துவார்கள் என்று கதைகள் சொல்கின்றன. பீஷ்ம பிதாமகர் கொண்டுசெல்லும் அம்பு எவருடையதாக இருக்கும் என்று ஆவலாக சூதர்குலமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. உண்மையில் அதற்காகவே நான் வந்தேன்.”

அவர் மேலும் ஊக்கம் கொண்டு கைதூக்கி “அந்த அம்பு ஒரு ஆணிலியுடையதாக இருக்கும் என்று நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள். நிமித்திகர் பொய்யுரைப்பதில்லை, உறுதியாக அது ஆணிலியின் அம்பே. ஆனால் எவருடைய அம்பு என்பது அப்போதும் ஐயத்திற்குரியதே” என்றார். சீற்றத்துடன் திரும்பிய பீமன் “போதும்” என்றான். “நான் சொல்லவருவது விராடநாட்டு பிருகந்நளை…” என்றார். “வாயை மூடு… இல்லையேல் தலையை அறைந்து உடைப்பேன்” என்றான் பீமன். “அதனால் பயனில்லை. நாங்கள் இளிவரல் சூதர், கீழ்வாயாலும் பாடுவோம்” என்றார் முதிய சூதர்.

“சூதரே, செல்க! இனி சொல்லெடுக்க வேண்டாம்” என்றபின் சுபாகு கண்காட்ட எல்லைக்காவலன் வந்து அவரைப் பார்த்து “உம்” என உறுமினான். அவர் அஞ்சி பின்னடைந்து “இவன் என்னை முன்னர் இருமுறை அறைந்தான். இவன் குடியில் சூதர்களை அறையும் வழக்கம் உள்ளது” என்றார். அவர்கள் முன்னால் செல்ல அவர் “கல்வியறிவில்லாதவர்கள் என்னைப்போன்ற காவிய ஆசிரியனை கையாளும்படி விட்டுச்செல்வதுதான் அரசர்களுக்கு அழகா?” என அப்பால் நின்று உரக்கக் கேட்டார்.

அவரை காவலன் வேலால் உந்தி கொண்டுசென்றான். அவர் அவனிடம் திமிறியபடி “இவர்கள் கல்லாக் களிமகன்கள். ஆண்கள் பெறும் கல்விஅறிவுதான் பெண்களை அழகிகளாக்குகிறது என்ற உண்மையை அறியாத வெற்று வேல்தாங்கிகள்!” என்று பின்னால் நின்று கூவினார். “நீங்கள் களம்படும்போது நான் புகழ்ந்து பாடுவேன். ஆயிரமாண்டுகளாக எங்கள் பாடலுக்காக நாங்கள் ஷத்ரியர்களை போர்க்களங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம்!” யுதிஷ்டிரர் திரும்பி நோக்கிவிட்டு தலைகுனிந்து நடந்தார். பீமன் உறுமியபடி தன் கைகளை உரசிக்கொண்டான்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77

bowநாள்நிறைவை அறிவிக்கும் முரசுகள் முழங்கிக்கொண்டிருக்க சுபாகு கௌரவப் படைகளின் நடுவிலூடாகச் சென்றான். கௌரவப் படைவீரர்கள் தொடர்ந்து பலநாட்களாக உளச்சோர்வுடன்தான் அந்தியில் பாடிவீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அன்று அச்சோர்வு மேலும் பலமடங்காக இருக்கும் என அவன் நினைத்திருந்தான். முதலில் பொதுவான நோக்குக்கு அப்படி தோன்றவும் செய்தது. ஆனால் உண்மையில் அவ்வாறல்ல என்று பின்னர் தெரியலாயிற்று. வீரர்கள் ஊக்கமும் மகிழ்வும் கொண்டிருக்கவில்லை. ஆனால் எதிலிருந்தோ போராடி விடுபட்டவர்கள்போல களைப்பும் தளர்வும் கலந்த ஆறுதலை உடலசைவுகளில் வெளிப்படுத்தினார்கள்.

அது தன் எண்ணம் மட்டும்தானா என ஐயம் கொண்டவனாக அவன் ஒவ்வொரு முகங்களாக நோக்கியபடி சென்றான். அவர்கள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். கைகளை நீட்டி சோம்பல் முறித்தனர். சிலர் வாய்திறந்து கோட்டுவாய் இடுவதுபோலத் தெரிந்தது. பின்னர் ஒட்டுமொத்தமாக படையை பார்த்தபோது உறுதியாயிற்று, அவர்கள் அதுவரை இருந்த இறுக்கம் ஒன்றை இழந்துகொண்டிருந்தனர். அன்று அவர்கள் விரைவிலேயே துயின்றுவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டான்.

அது ஏன் என அவன் உள்ளம் துழாவலாயிற்று. பிதாமகர் பீஷ்மர் இனி எழமாட்டார் என்பதில் எவருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. அவருடைய இறப்பு கணம்கணமாக அணுகிக்கொண்டிருக்கிறது. அது அவர்களுக்கு துயரளிக்க வேண்டும். குருகுலத்திற்கு மட்டுமல்லாது அஸ்தினபுரியின் குடிகளுக்கே அவர் தந்தைவடிவம். அவரை அவர்கள் வெறுத்திருக்கிறார்கள், பழித்திருக்கிறார்கள். ஆகவே குற்றவுணர்வு கொண்டு அத்துயரை பெருக்கிக்கொண்டிருக்கவேண்டும். அவர்தான் அன்றுவரை பாண்டவர்களால் ஒருகணம்கூட வெல்லமுடியாத அரணாக நின்றிருந்தவர். அவரை வென்றதுமே பாண்டவர்கள் வென்றுமேற்செல்வார்கள் என்று ஆகியிருக்கிறது. அவர்கள் அஞ்சியிருக்கவேண்டும். அந்த விடுதலையுணர்வை புரிந்துகொள்ள முடியவில்லை. எத்தனை எண்ணி எண்ணி நோக்கியும் அதை வகுத்துக்கொள்ள இயலவில்லை.

துரியோதனனின் பாடிவீட்டுக்கு அவன் சென்றபோது அங்கே துர்மதனும் துச்சகனும் துச்சலனும் துர்முகனும் நின்றிருந்தனர். அவர்கள் கவசத்தை கழற்றியிருக்கவில்லை. சுபாகுவைப் பார்த்ததும் துச்சகன் வெறுமனே தலையசைக்க மற்றவர்கள் வெற்றுவிழிகளுடன் நோக்கியபின் தலைகுனிந்தார்கள். அவன் அங்கே சென்று ஓரமாக நின்றான். அவனிடம் ஏதேனும் கேட்பார்கள் என எதிர்பார்த்தான். தேர்ச்சகடங்களின் ஓசை எழுந்தது. சகனும் விந்தனும் அனுவிந்தனும் சமனும் வந்தனர். அவர்களும் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் கழித்து சமன் மெல்ல அசைந்து “எங்கிருக்கிறார்?” என்றான்.

“துரோணரையும் கிருபரையும் பார்த்துவருவதாகச் சொல்லி சென்றுள்ளார்” என்றான் துச்சகன். “அவர்கள் பிதாமகரை பார்க்கச் செல்லவேண்டும் என விழைகிறார்கள்” என்றான் துச்சலன். ஆனால் அப்பேச்சு மேலும் நீடிக்கவில்லை. சற்று நேரத்தில் மீண்டும் சகட ஓசை எழுந்தது. அது எவருடையது என அனைவருக்குமே தெரிந்திருந்தது. மெல்லிய உடலசைவுகளாக அவர்கள் நிமிர்ந்து நின்றனர். தேர் அணுகி நின்று அதிலிருந்து துரியோதனன் மெல்ல இறங்கினான். நோயுற்றவன்போல் தேரின் கைப்பிடியைப் பற்றியபடி நிலத்தில் கால்வைத்து உடல் நிமிர்ந்தபின் திரும்பி பின்னால் இறங்கிவந்த துச்சாதனனை பார்த்தான். துச்சாதனன் முன்னால் வர அவனைத் தொடர்ந்து எடைமிக்க காலடிகளை எடுத்துவைத்து மெதுவாக வந்தான்.

துச்சாதனன் இருக்கையை எடுத்துப் போட்டான். துரியோதனன் நடந்து வந்து தம்பியரை நோக்கிவிட்டு கையை பீடத்தில் ஊன்றி முனகியபடி உடலை அதில் அமைத்தான். முழங்கால் மூட்டுகளில் கைமுட்டுகளை அமைத்து தலைகுனிந்து அமர்ந்தான். அவன் உடலில் நீர் வற்றிவிட்டிருக்கிறதோ என்று சுபாகு எண்ணினான். கண்களுக்குக் கீழே மென்தசைவளையங்கள். உதடுகளைச் சுற்றி ஆழ்ந்த மடிப்புகள். கழுத்துத்தசை சுருங்கி தொய்ந்திருந்தது. விரல்கள் நடுங்கிப்பதறி கோத்துக்கொண்டும் விலகிக்கொண்டுமிருந்தன. நிலம் நோக்கி விழிதாழ்த்தி அசையாச் சிலை என அமர்ந்திருந்தான்.

துச்சகனும் துச்சலனும் சென்று துரியோதனனின் கவசங்களை கழற்றத் தொடங்கினர். சமனும் விந்தனும் துச்சாதனனின் கவசங்களை கழற்றினர். உலோகங்கள் உரசிக்கொள்ளும் ஓசை மட்டும் கேட்டது. துச்சகன் மெல்ல தொண்டையை கமறிக்கொண்டது பேரொலியாக எழுந்தது. கவசங்களை கழற்றிவிட்டு மர யானத்தில் நீர் கொண்டுவந்து அதில் துரியோதனனின் கைகளை எடுத்துவைத்து சிறிய நார்ச்சுருளால் தேய்த்துக் கழுவினான் துச்சலன். துச்சகன் மரவுரியால் துரியோதனனின் உடலை துடைத்தான். சமனும் விந்தனும் துச்சாதனனின் கைகளை கழுவினர்.

துரியோதனன் “மாதுலர் எங்கே?” என்றான். அங்கிருந்த அனைவருமே திடுக்கிட்டனர். அது அவ்வினாவால் அல்ல, அக்குரலால் என்று தோன்றியது. நோயுற்று நலிந்த முதியவரின் குரல் போலிருந்தது. துச்சகன் “இங்கு வரக்கூடும்” என்றான். துரியோதனன் சுபாகுவை நோக்கி “எப்படி இருக்கிறார்?” என்றான். சுபாகு “இருமுறை தேனும் பழச்சாறும் அருந்தியிருக்கிறார். நீர் பிரிந்திருக்கிறது. பீதர்நாட்டு மருந்து மூக்கு வழியாக செலுத்தப்பட்டுள்ளது. துயில்கிறார்” என்றான். துச்சாதனன் “எழுந்துவிடுவாரா?” என்றான். அப்போது அவ்வினாவை கேட்குமளவுக்கு துச்சாதனன் அறியாமை கொண்டிருப்பது சுபாகுவை எரிச்சலடையச் செய்தது. அதை அங்கிருந்தோர் அனைவரும் உணர்ந்தனர். துச்சாதனன் அதை அறியாமல் “அவர் எழுந்துவிடுவார் என்றால் நாம் அஞ்சவேண்டியதில்லை” என்றான்.

என்ன சொல்வதென்று தெரியாமல் சுபாகு தலையை திருப்பிக்கொண்டான். அந்தப் பொழுதின் இக்கட்டான நிலையை அப்பால் கேட்ட சகட ஓசை கலைத்தது. சமன் “மாதுலர்” என்றான். சுபாகு பெருமூச்சுவிட்டான். தேர் வந்து நிற்க அதிலிருந்து கர்ணனும் துர்கர்ணனும் இறங்கினர். தொடர்ந்து சகுனி இறங்கி அவர்களின் தோளைப் பற்றியபடி புண்பட்ட காலை நீக்கி நீக்கி வைத்து நடந்துவந்தார். சுபாகு ஒரு மரப்பெட்டியை எடுத்து அவர் அமர்வதற்காக போட்டான். துரியோதனன் எழுந்து தலைவணங்க சகுனி முனகலுடன் அணுகி பெட்டியில் அமர்ந்தார். அவர் கைகாட்ட துரியோதனன் அமர்ந்தான். சகுனி “சென்றிருந்தேன்” என்றார். துரியோதனன் வெறுமனே முனகினான். “நாம் தோற்றுவிட்டோம் என அவர்கள் எண்ணுகிறார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

துச்சலன் “ஆனால் அங்கே வெற்றிக்கொண்டாட்டம் ஏதும் தென்படவில்லை” என்றான். “சற்றுநேரம் அப்படித்தான் இருக்கும். ஒருவகையான இழப்புணர்வும் குற்றவுணர்வும் அவர்களை கவ்விப்பற்றியிருக்கும். மதுவுண்டு உள்ளத்தை இளகச் செய்வார்கள். எங்கிருந்தோ எவரோ தொடங்குவார்கள். மெல்ல மெல்ல களிவெறி எழுந்து இரவெல்லாம் கொண்டாட்டமாக முழங்கிக்கொண்டிருக்கும்” என்றார். துரியோதனன் ஒன்றும் சொல்லவில்லை. துச்சலன் “அவர்களால் தங்கள் மூதாதையின் சாவை வெளிப்படையாக கொண்டாட முடியுமா?” என்றான்.

சகுனி “இத்தகைய தருணங்களுக்கு கைகொடுப்பது இளிவரல். இந்த இக்கட்டின் இரண்டுமற்ற நிலையை நகையாட்டு வழியாக கடந்துசெல்லலாம். பீஷ்ம பிதாமகரையும் யுதிஷ்டிரனையும் சேர்ந்தே இழிசொல்லாடத் தொடங்கினால் இதை கடந்துவிடலாம். மெல்ல மெல்ல பீஷ்ம பிதாமகரை வென்றதன் கொண்டாட்டமாக அதை உருமாற்றிக் கொள்ளலாம். இருள் செறிந்து இரவு சரியும்தோறும் தீமை வளர்கிறது. பின்னர் அது மட்டுமே எஞ்சியிருக்கும். பேருருக்கொண்டு அவர்கள் அனைவரையும் தன் இடையிலும் தோளிலும் சூடியிருக்கும்” என்றார்.

துரியோதனன் “ஆம். இனி என்ன செய்வது, மாதுலரே?” என்றான். அவன் குரல் உடைந்து ஒலித்தமை சுபாகுவை உளமுருகச் செய்தது. விழி கசிய அவன் முகம் திருப்பிக்கொண்டான். “ஒன்றும் ஆகவில்லை. நான் இப்போதுதான் துரோணரை சந்தித்துவிட்டு வருகிறேன். அவர் மேலும் உறுதிகொண்டிருக்கிறார். பிதாமகரின் இறப்புக்கு வஞ்சம் தீர்க்க எழுவதாக என்னிடம் சொன்னார்” என்றார் சகுனி. “நான் அவரை சந்திக்கவே சென்றேன். என்னால் இயலவில்லை. அஸ்வத்தாமரை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பிவிட்டேன்” என்றான் துரியோதனன். “அஸ்வத்தாமனிடம் நானும் பேசினேன். தந்தையைவிட வஞ்சம்கொண்டு அவன் எரிந்துகொண்டிருக்கிறான். தந்தையை தழல்கொள்ளச் செய்ய அவனே போதும்” என்றார் சகுனி.

துரியோதனன் “என்ன செய்வதென்றே தெரியவில்லை!” என்றான். “இந்த உளச்சோர்வே இப்போது நம்மை வீழ்த்துவது. இதுவரை நாம் வெல்லவேண்டுமென்றே விழைந்தோம். இனி வஞ்சம்கொள்ள வேண்டுமென்று எழுவோம். பிதாமகரின் களம்படுகை அதற்காகத்தான் போலும். துரோணர் இதுவரை முழு விசையுடன் போரிடவில்லை. தன் மாணவர்களை தன் கையால் கொல்ல தயங்கிக்கொண்டிருந்தார். இனி அவ்வாறல்ல, நாளைமுதல் களத்திலெழுபவர் பெருவஞ்சம்கொண்ட பிறிதொருவர்” என்றார் சகுனி.

“பிதாமகர் முழு விசையுடன் போரிடவில்லை என்பதே உண்மை. அவர் எண்ணி முடிவெடுத்து வில்சூடியிருந்தால் பாண்டவப் படை முதல் நாளிலேயே சிதறியிருக்கும். இப்படி களத்தில் தன்னை கொடுப்பதைத்தான் அவர் தொடக்கம் முதலே உள்ளூர விழைந்திருந்தார் என எண்ணுகிறேன். ஏனென்றால் இது அவருடைய போர் அல்ல. கடமைக்காகவே அவர் களம்வந்தார். அவருள் அரசவையில் திரௌபதி ஆற்றிய வஞ்சினம் குற்றவுணர்வை உருவாக்கியிருந்தது. அவருடைய கனவுக்குள் அம்பையின் வஞ்சத்துடன் அதுவும் கலந்துவிட்டிருக்கக்கூடும். பிதாமகர் பீஷ்மர் கொல்லப்படவில்லை, தற்கொலை செய்துகொண்டார். அதனூடாக அவர் தன்னுள் உணர்ந்த ஒரு பழியை நிகர் செய்துகொண்டார்.”

“அறிவின்மைதான்” என சகுனி தொடர்ந்தார். “ஆனால் இந்தப் போரில் இம்முதியவர்களுக்கு பெரிதாக எந்த ஈடுபாடும் இல்லை. போரும் வணிகமும் எப்போதுமே இளையோருக்குரியது. முதியவர்களுக்கு இவ்வுலகில் அடைவதற்கேதுமில்லை, தக்கவைப்பதற்கே சில உள்ளது. அவர்கள் எண்ணுவதனைத்தும் இங்கு நீத்து அங்கு சென்றபின் எய்துவன பற்றியே. பிதாமகரும் துரோணரும் கிருபரும் அவ்வாறே போரிட்டனர். இனி அவ்வாறல்ல, துரோணரும் கிருபரும் இங்கே தீர்த்தாகவேண்டிய கணக்கு ஒன்று உள்ளது. அதை தீர்க்காமல் அவர்கள் இங்கிருந்து செல்லமுடியாது. ஆகவே நடந்துள்ளது நன்றே.” துரியோதனன் முகத்தில் எந்த மாறுபாடும் தெரியவில்லை. துச்சாதனன் “ஆம்” என்றான்.

“உண்மையில் பிதாமகர் களம்பட்டது அவர் நமக்கிழைத்த பெருந்தீங்கு. நம்பிக்கைவஞ்சம்” என்றார் சகுனி. அவரை நோக்கியபடி கௌரவர் வெறும்முகங்களுடன் சூழ்ந்து நின்றிருந்தனர். “அவர் ஏன் வில்தாழ்த்தி நெஞ்சு காட்டினார்? புகழுக்காக. ஆணிலியிடம் பொருதினார் என்னும் பழி நிகழாதமைவதற்காக. நம்மைவிட, நாம் கொண்டுள்ள அறத்தைவிட அவருக்கு தன் புகழே பெரிதென்று தோன்றியிருக்கிறது.” துச்சாதனன் “அவர் அம்பையன்னைக்கு தன்னை கொடுத்தார் என்கிறார்கள்” என்றான். அதை அவன் சொல்லியிருக்கக் கூடாதென்பதுபோல் அனைவரும் முகம் சுளித்து நோக்கினர்.

அவ்வுணர்வுகளை உணராதவனாக துச்சாதனன் “ஆம், அவ்வாறுதான் சொல்லிக்கொள்கிறார்கள். அவர் இந்த வாக்குறுதியை சிகண்டிக்கு மிக நெடுங்காலம் முன்னரே அளித்திருக்கிறார், களத்தில் அவர் கையால் இறப்பேன் என்று” என்றான். சகுனி சில கணங்கள் துச்சாதனனை நோக்கிவிட்டு தன் உணர்ச்சிகளை கடந்துசென்று புன்னகைத்தார். அதை தனக்கான ஏற்பு என்று எண்ணி துச்சாதனன் “அவரிடம் எட்டு வசுக்கள் இருந்தமையால் அவரை அம்பையால் வெல்ல இயலவில்லை. எட்டு வசுக்களும் அவர் அன்னை கங்கையால் அவருக்கு அளிக்கப்பட்ட காப்பு. அவர்கள் எண்மரும் இங்கே களத்திலிருந்து விலகிச்சென்றனர். அதன்பின் அவர் தன்னை அம்பைக்கு பலியாக அளித்தார். அவ்வாறு தன்மேல் படிந்த தொல்பழியிலிருந்து விடுபட்டார். இனி அவர் தடையில்லாது விண்ணேகமுடியும். அம்பையன்னையும் விண்ணேகுவார்” என்றான்.

“யார் வாய்ச் சொற்கள் இவை?” என்றார் சகுனி. “இங்குள்ள அத்தனை சூதர்களும் இதைத்தானே பாடிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான் துச்சாதனன். “அதற்குள்ளாகவா?” என்றார் சகுனி. துச்சாதனன் ஊக்கம் பெற்று “ஆம், போர்முடிந்து செல்லும்போதே கைகளைக் கொட்டியபடி பாடத்தொடங்கிவிட்டனர். ஆவக்காவலராகவும் தேரோட்டிகளாகவும் வந்த பலர் உண்மையில் இசைச்சூதர்களும்கூட. அவர்களிடமிருந்தே அந்தியில் களம்பாடும் சூதர்கள் களமெய்யை அறிகிறார்கள். அதைச் சார்ந்தே அவர்கள் பாடல்களை புனைகிறார்கள்” என்றான். சகுனி வாய்விட்டு நகைத்து துரியோதனனிடம் “அரிய நுண்திறன் கொண்ட இளையோன். மருகனே, நீ விண்புகுந்தபின் இவன் அஸ்தினபுரிக்கு அரசன் ஆனால் பாரதவர்ஷமே வந்து பணிந்து திறையளிக்கும்” என்றார். துச்சாதனன் ஐயத்துடன் பிறரை நோக்கினான்.

“நாம் இனி என்ன செய்வது, மாதுலரே?” என்றான் துரியோதனன். “நாம் செய்யவேண்டியது சில உண்டு” என்றார் சகுனி. “அதை சற்றுமுன் துரோணர் சொன்னார். பூரிசிரவஸும் அதையே சொன்னான். எண்ணிக்கொண்டே வந்தேன்” என்றார். துரியோதனன் நிமிர்ந்து நோக்க “நாம் பிதாமகரின் உடல்நிலை குறித்து இந்திரப்பிரஸ்தத்தின் அரசனுக்கும் தம்பியருக்கும் முறைப்படி செய்தி அனுப்பவேண்டும். யாதவ மூதரசிக்கும் பாஞ்சாலத்து அரசிக்கும் முறைமைச்சொல்லுடன் தூது செல்லவேண்டும்” என்றார். துச்சாதனன் “என்ன பேசுகிறீர்கள்? கொன்றது அவர்கள்… அவர்களுக்கு நாமே செய்தி அறிவிப்பதா?” என்று கூவினான். “இளையோனே!” என்று தளர்ந்த குரலால் துச்சாதனனை அடக்கியபின் துரியோதனன் “அதன் பயன் என்ன?” என்றான்.

“அவர்கள் வெற்றிக்களிப்பு கொள்வதை அதனூடாக தடுக்கிறோம்” என்று சகுனி சொன்னார். “அவர்கள் முறைமைப்படி துயர்கொண்டாடியே தீரவேண்டுமென்ற நிலையை உருவாக்குகிறோம்.” துச்சாதனன் “அதனாலென்ன பயன்? வென்றோம் எனும் களிப்பை அவர்களின் உள்ளங்களில் இருந்து அகற்றமுடியுமா என்ன?” என்றான். சகுனி “முடியும்” என்றார். “படைகளின் உள்ளம் உள்ளிருந்து எழும் உணர்வுகளால் இயங்குவதல்ல, வெளியிலிருந்து உள்ளே செல்லும் ஆணைகளால் இயங்குவது. படை என்பதே ஆணைக்கேற்ப உணர்வுகளையும் எண்ணங்களையும் கொள்வதற்காக பயிற்றுவிக்கப்பட்ட மானுடத் திரள்தான்.”

“அவர்கள் வெற்றிகொண்டாடினார்கள் என்றால் அக்கொண்டாட்டத்தை ஒவ்வொருவரும் பெற்று பெருக்கிக்கொள்வார்கள். நாளை காலை பெரும் நம்பிக்கையும் ஊக்கமும் கொண்டு எழுவார்கள். மாறாக அரசாணைப்படி துயர்காத்தனர் என்றால் மேலும் சோர்ந்து தொய்வடைவார்கள்” என சகுனி தொடர்ந்தார். “அவர்களிடம் நாம் குற்றவுணர்ச்சியை நிலைநிறுத்தவேண்டும். அதற்கு அதை அவர்களின் அரசரிடமும் தலைவர்களிடமும் உருவாக்கவேண்டும். அதற்கான வழி அவர் நமக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் பிதாமகரே என அறிவிப்பதே. மூத்தாருக்கான எல்லா முறைமைகளிலும் சடங்குகளிலும் அவர்களுக்கும் பங்குள்ளது என்று சொல்வதே.”

“அவர்கள் அதை மறுக்கலாமே?” என்றான் துச்சலன். “யுதிஷ்டிரன் எந்தத் தொல்முறைமையையும் மறுக்கக்கூடியவனல்ல” என்றார் சகுனி. “யாதவர் மறுக்கலாம்” என்றான் துச்சலன். “அவர் இதன் அரசியலையே நோக்குவார். பீஷ்மருக்கு முறைமைத்துயர் காத்ததன் வழியாக அவரை நெறிமீறி களத்தில் வீழ்த்திய பழியிலிருந்து விலகிக்கொள்ள முடியும். நாளை ஒருவேளை அவர்கள் வென்று அஸ்தினபுரியில் அரசமைப்பார்கள் என்றால் பீஷ்ம பிதாமகருக்கு அங்கே மாபெரும் நடுகல் விழவை எடுக்கவும் பள்ளிப்படை அமைக்கவும் அது தொடக்கமாக அமையும். நாளடைவில் மக்களின் உள்ளங்களில் இருந்து பிதாமகரை விலக்கிவிடலாம். தெய்வமென மானுடரை ஆக்குவதே அவர்களை அகற்றுவதற்கான எளிய வழி.”

துரியோதனன் பெருமூச்சுடன் “இவை எவற்றையும் என்னால் எண்ணக் கூடவில்லை, மாதுலரே. நீங்களே வேண்டுவனவற்றை எண்ணி இயற்றுக!” என்றபின் எழுந்துகொண்டான். சகுனி “ஆம், நானே பார்த்துக்கொள்கிறேன். அரசியரிடம் செய்தி சொல்ல பூரிசிரவஸை அனுப்புவோம். கௌரவரிடமிருந்து யுதிஷ்டிரனுக்கான தூதுடன் அரசகுடியினன் ஒருவன் செல்வதே உகந்தது. சுபாகு செல்லட்டும்” என்றார். சுபாகு தலைவணங்கினான். “என்ன சொல்லவேண்டுமென நீ அறிவாய். அவர்களிடம் அவர்களுக்கிருக்கும் கடன்முறைமைகளை சொல்க! அவர்களுடன் இணைந்து அவற்றைச் செய்ய அஸ்தினபுரியின் அரசனுக்கு தயக்கமில்லை என்று உணர்த்துக!” சுபாகு “ஆம்” என்றான்.

சகுனி எழுந்துகொண்டு “நான் சற்று ஓய்வெடுக்கவேண்டும். படைநிலைகளைப் பற்றிய செய்திகளுடன் தூதர்கள் வந்திருப்பார்கள். அவர்களிடம் கலந்துரையாடவேண்டும். படைசூழ்கையை நாளை அஸ்வத்தாமன் வகுக்கட்டும்” என்றார். துரியோதனன் அப்பால் நின்று தலைவணங்கினான். சகுனி சுபாகுவிடம் “அங்கே செல்வதற்கான படையொப்புதல் கோரி முரசு முழங்கும். நீ படைமுகப்பை சென்றடைவதற்குள் அவர்களின் ஒப்புதல் வந்துவிடும் என எண்ணுகிறேன்” என்றார். சுபாகு தலைவணங்கிவிட்டு சென்று தன் புரவியில் ஏறிக்கொண்டான்.

bowபடைமுகப்புக்குச் செல்வதற்கு முன்பு மருத்துவர்களிடம் பேசிவிட்டுச் செல்லலாம் என்று அவனுக்கு தோன்றியது. அதைவிட மீண்டும் பீஷ்மரைப் பார்க்க அவன் உள்ளம் விழைந்தது. அவன் புரவியில் அமர்ந்து சூழ்ந்திருந்த படைகளைப் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தான். நாற்றுப்படுகையில் காற்றுபோல படைகளுக்குள் உணவுவண்டிகள் செல்லும் அசைவுகள் தெரிந்தன. அந்தி மங்கி வான் இருள்கொண்டிருந்தது. எங்கோ யானை ஒன்று உரக்க குரலெழுப்பியது. அவனைக் கடந்துசென்ற புரவிவீரர்கள் இருவர் தலைவணங்கி வாழ்த்துரைத்தனர்.

பீஷ்மர் கிடந்த பகுதி படையிலிருந்து மிக விலகி காட்டின் எல்லைக்கு அருகே இருப்பதை அவன் அப்போதுதான் வியப்புடன் உணர்ந்தான். மொத்தப் படைகளும் அங்கிருந்து தெற்கு நோக்கி மிகவும் இறங்கி வந்துவிட்டிருந்தன. படைகளின் வடக்கு எல்லையில் அமைந்த காவல்மாடத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்புதலைப் பெற்று அப்பால் கடந்து மேலும் புரவியில் சென்றடைய வேண்டியிருந்தது அங்கே. பீஷ்மர் அந்த இடத்தை தெரிவுசெய்தாரா? அது முழுக்க முழுக்க தற்செயல் என்பதை அவனே களத்தில் கண்டான். ஆனால் களத்திற்கு வெளியே அவர் களம்பட்டார் என்பது எப்படி தற்செயலாக அமைய முடியும்? அந்த இடம் இரு படைகளுக்கும் பொதுவான ஒன்றாக, இருசாராருக்கும் அயலானதாக இயல்பாகவே மாறிவிட்டிருந்தது.

அவன் தொலைவிலேயே புரவியை இழுத்து அந்தப் படுகளத்தை பார்த்துக்கொண்டு நின்றான். அதைச் சுற்றி தேர்களின் உடைந்த நுகங்களையும் நெடுவேல் கட்டைகளையும் காட்டிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்ட மரக்கிளைகளையும் ஊன்றி கழிகளாலும் மூங்கில்களாலும் பிணைத்து வட்டமாக வேலியிட்டிருந்தார்கள். வடக்கே அரைவட்டமாக அரணிட்டிருந்த காட்டின் உயர்ந்த மரங்களுக்கு மேல் பரண் அமைக்கப்பட்டு வில்லவர்கள் காவலுக்கு அமைக்கப்பட்டிருந்தனர். வேலிக்குள் மருத்துவ ஏவலரும் பணியாளர்களும் காவலர்களும் தெரிந்தனர்.

அவன் அணுகிச் சென்றபோது காட்டின் விளிம்பில் நடப்பட்டிருந்த கழிகளில் பந்தங்களைக் கட்டி மீன்நெய் ஊற்றி பற்றவைத்துக்கொண்டிருந்தனர் ஏவலர். பந்தங்கள் ஒவ்வொன்றாக எரியத் தொடங்கின. தழலாட்டத்தின் ஓசையில் காட்சி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. அவன் வேலிக்கு வெளியே புரவியை நிறுத்திவிட்டு இறங்கி வாயிலில் காவல் நின்ற வீரனிடம் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே வஜ்ரர் இருந்தார். சாத்தன் அவனைக் கண்டு தலைவணங்கினான். ஆதன் ஏவலருடன் இணைந்து மண்கலங்களில் அனல் நிறைத்து அவற்றில் மூலிகைகளை இட்டு புகைப்படலத்தை எழுப்பிக்கொண்டிருந்தான்.

வஜ்ரர் அவனை பார்த்தார். “விழித்துக்கொள்ளவில்லை” என்றார். சுபாகு தலையசைத்தான். “இறப்பு நிகழுமென்பதில் ஐயமே இல்லை. எப்போதென்று சொல்லவியலாது. ஒவ்வொரு கணமும் அதற்கான வாய்ப்புள்ளதே. ஆனால் நாடிகள் நிலையாக உள்ளன. உடலின் உள்ளனல் தணியாதிருக்கிறது. தன்னுணர்வால் உயிர் கவ்வி நிறுத்தப்பட்டுள்ளது. அது விடும்கணம் உயிர் அகலும்” என்றார். அவன் அனலாட்டத்தில் அதிர்ந்துகொண்டிருந்த பீஷ்மரின் உடலை பார்த்தான். நிலத்திலிருந்து எழுந்து காற்றில் மிதந்து நிற்பதுபோலத் தோன்றியது.

வேலிக்குள் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டன. “அவர் எதன்பொருட்டு காத்திருக்கிறார் என்று தெரியவில்லை. போர் முடிவை அறிந்துகொள்ளவா?” என்று வஜ்ரர் சொன்னார். அப்பால் நின்றிருந்த சாத்தன் “அதை அவர் அறியாரா என்ன?” என்றான். சுபாகு திடுக்கிட்டவன்போல திரும்பிப் பார்த்தான். சாத்தன் புன்னகைத்தான். ஒருகணத்துக்குப் பின் சுபாகுவும் புன்னகைத்தான். சாத்தன் “அவர் மேலும் பெரிய ஒன்றுக்காக காத்திருக்கக்கூடும்” என்றான். “எதற்காக?” என்றான் சுபாகு. “உரிய பொழுதுக்காக. விண்திறக்கும் நற்பொழுதுகள் சில உண்டு. அவர் அவற்றை கணித்திருக்கக் கூடும்.”

“அத்தகைய பொழுது அருகணைகிறதா?” என்றான் சுபாகு. “கதிரவனின் வடக்குமுகம் அணுகுகிறது. விண்புகுந்தோர் மீளாதமைவதற்குரியது அந்த நாள் என்பார்கள்” என்றான் சாத்தன். “உத்தராயணம் அணுக இன்னும் ஐம்பத்தெட்டு நாட்கள் உள்ளன” என்று ஆதன் சொன்னான். “ஆம், வடக்குமுகப் பொழுதில் உயிர்விடவேண்டுமென்றால் இவ்வுலகில் எஞ்சிய அனைத்தையும் முற்றாக கைவிட்டிருக்க வேண்டும். ஒரு விழைவோ ஒற்றைச் சொல்லோ எஞ்சலாகாது. முதல் ஒரு மண்டலப்பொழுது அவர் தன்னைக் கடக்க தவமிருக்கலாம். பின்னர் அரைமண்டலப்பொழுது அங்கு செல்லும் ஊழ்கத்தில் அமையலாம்.”

சுபாகு வஜ்ரரிடம் “அத்தனை காலம் அமையுமா இவ்வுடல்?” என்றான். “அவருடைய தன்னுணர்வுதான் அதை முடிவு செய்கிறது…” என்றார். ஆதன் “குருதிவழிவு முற்றிலும் நின்றுவிட்டிருக்கிறது” என்றான். அவனை நோக்கியபின் சுபாகு “பிதாமகர் விண்புகுக! அவர் விண்புகுந்தாரென்றால்தான் பெருநோன்புகளும் பயனுள்ளனவே என மானுடம் கற்கும்” என்றான். வஜ்ரர் “நோன்புகளால் மானுடர் தங்களை இறுக்கிக் கொள்கிறார்கள். ஊசிக்காதில் நுழையும்பொருட்டு நூல் முறுகி கூர் கொள்வதைப்போல” என்றார். “அவருடைய உடலின் இறுக்கம் நம்ப இயலாததாக உள்ளது. தசையால் ஆனதே அல்ல என்று ஐயம்கொண்டேன்” என்றான் ஆதன். “இத்தனை அம்புகளுக்குப் பின்னரும் தசைநார்கள் விசை தளரவில்லை.”

சுபாகு அவர்களிடம் விடைபெறாமல் கிளம்பினான். வேலியைவிட்டு வெளியே செல்லும்போதும் காலடியில் நாகங்கள் நெளிவதாக விழிமயக்கு ஏற்பட உடல் நடுங்கி நின்றுவிட்டான். அதன் பின்னரே பீஷ்மரை தாங்கிநின்றிருந்த அம்புகளின் நிழல்கள் அவை என உணர்ந்தான். மீண்டும் இளங்காற்றில் பந்தச்சுடர்கள் அசைய அம்புநிழல்கள் நாகக்கூட்டங்கள்போல் அசைந்தன. அவன் திரும்பி நோக்கியபோது நெளியும் நாகங்களின் மீது அவர் படுத்திருப்பதாக உணர்ந்தான். கண்களைக் கொட்டி நோக்கை கலைத்து மீட்டுக்கொண்டு புரவியில் ஏறிக்கொண்டான்.

மீண்டும் கௌரவப் படைகளுக்குள் நுழைந்தபோது மிக அப்பால் அவனுக்கான ஆணை ஒலிப்பதை கேட்டான். பாண்டவர்களிடம் அவன் நுழைவுக்கான ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. காவல்மாடத்தை அவன் கடந்தபோது அங்கே முழவுடன் நின்றிருந்த முதிய சூதர் சிரித்தபடி அவனை நோக்கி ஓடிவந்தார். “அரசே, அரசே, நில்லுங்கள்!” என்றார். காவலர்தலைவன் “இழிமகனே, உன்னிடம் இங்கிருந்து செல்லும்படி சொன்னேன். கசையடி வாங்குவாய்” என்று கூவியபடி பின்னால் வந்தான்.

சூதர் “அரசே, நான் அங்கே செல்ல ஒப்புதல் அளிக்க ஆணையிடுங்கள்… நான் பிதாமகரை உடனே பார்க்கவேண்டும்” என்றார். “ஏன்?” என்றான் சுபாகு. “அவன் மூக்குவழிவார குடித்திருக்கிறான், அரசே” என்றான் காவலன். “யார்தான் குடிக்கவில்லை? சூதர்கள் குடித்தேயாகவேண்டும் என்பது தெய்வங்களின் ஆணை. குடிக்காத சூதன் படைக்கலம் பயிலாத ஷத்ரியனைப்போல” என்றார் முதிய சூதர். “அனங்க குடியினனாகிய என் பெயர் சுப்ரஜன். நான் பாடிய காவியங்கள் பல!” கரிய பற்களைக் காட்டி சிரித்து “அவற்றை ஏற்கெனவே பலர் பாடிவிட்டிருந்தமையால் நான் சொல்லிக்கொள்வதில்லை” என்றார்.

எரிச்சலுடன் அவரை விலகிப் போகும்படி கையசைத்துவிட்டு சுபாகு முன்னால் சென்றான். அவர் பின்னால் ஓடிவந்தபடி “நான் பீஷ்ம பிதாமகரைப் பற்றி காவியங்கள் புனைபவன். எங்கள் காவியங்கள் வேறுவகையானவை. அவற்றை அவருடைய எதிரிகளும் கேட்டு மகிழலாம். எளியோர் வெடித்து நகைக்கலாம். பெரியோர் தனிமையில் எண்ணி புன்னகைக்கலாம். அரசே, பீஷ்மரின் புகழ்பாடுவது எங்கள் குடித்தொழில்போல” என்றார். “செல்க!” என்று சுபாகு சவுக்கை எடுத்தான்.

அவர் அஞ்சியதுபோல தெரியவில்லை. சிரித்தபடி “நாங்கள் எங்கள் புகழ்பாடலுக்காக பொன்னைப் போலவே சவுக்கடிகளையும் பெறுவதுண்டு. முன்பொருமுறை என் பாட்டனார் ஒரு விடுதியில் இரவு முழுக்க பீஷ்மரைப் பற்றி புகழ்பாடிக்கொண்டிருந்தார். அங்கே குடியிருந்த தெய்வம் ஒன்று அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்துகொண்டிருந்தது. அவர் துயின்றதும் அவர் காலடியில் பொன்னை குவித்துவிட்டுச் சென்றது. அவர் அந்தப் பொன்னைக் கொண்டு மேலும் வெறிகொண்டு குடித்து காசிப் படிக்கட்டில் இறந்தார். அவரைப் போலவே தெய்வங்களுக்கு உகக்கும்படி பாடி குடித்துச் சாவதையே நானும் இலக்காகக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

சுபாகு முன்னால் செல்ல அவர் பின்னால் வந்தபடி “அந்த தெய்வத்தின் பெயர் அவிரதை. அனைத்து நோன்புகளுக்கும் எதிரானது. நோன்புகொள்வோரை அணுகி அவர்களை கலைத்து வீழ்த்திவிட்டுச் செல்வது. கள்ளுண்ணா நோன்பு கொண்டவர்களிடம் அது விருப்பாக எழுகிறது. அரசே, காமஒறுப்பு நோன்பு கொண்டவர்களிடம் அது கடும் வெறுப்பாக திரள்கிறது. பீஷ்ம பிதாமகர் அரசவையில் தன் குலமகள் இழிவுசெய்யப்பட்டபோது தலைதாழ்த்தி ஏன் அமர்ந்திருந்தார்? அருகே அமர்ந்திருந்தாள் அவள். அவிரதை. சூழ்ச்சியும் வஞ்சமும் நிறைந்தவள். மானுட உள்ளங்களின் ஆழத்து இருளில் கரிய மீன் என நீந்திக்கொண்டிருப்பவள்” என்றார்.

அவன் புரவியை நிறுத்திவிட்டான். தன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். “அரசே, அவளுடைய அருளால்தான் நாங்கள் வாழ்கிறோம். எந்த நோன்பையும் எங்களால் மேற்கொள்ள முடியாது. கள்ளுண்டு சாவது என்னும் நோன்பை மேற்கொண்டால் கள்ளே வாய்க்கு சிக்குவதில்லை” என்றார். “செல்க!” என மூச்சொலியாக அவன் சொன்னான். “நான் அவரை பார்க்கவேண்டும். அவர் அம்புப்படுக்கையில் படுத்திருக்கிறார் என்றார்கள். ஆயிரத்தெட்டு அம்புமுனைகள் அவரை தாங்கியிருக்கின்றனவாம். அது உண்மைதானா என்று பார்க்கவேண்டும்.”

“ஏன்?” என்றான் சுபாகு. இது ஏதோ பாதாளத்து தெய்வம். இதன் சொற்களை செவிகொடுக்கலாகாது என அவன் அகத்தை விலக்கிக்கொண்டிருந்தாலும்கூட நா அதை கேட்டுவிட்டது. “அரசே, நீங்கள் அறிவீர்கள். அவருடைய அம்புகளில் பல்லாயிரத்திற்கு ஒன்றே இலக்கு பிழைக்கிறது. அவ்வாறு இலக்கு பிழைத்த அம்புகள்தான் இப்போது அவரை தாங்கிக்கொண்டிருக்கின்றன என்றார்கள்.” சுபாகு சீற்றத்துடன் “யார்?” என்றான். “அவிரதை… அவளுடைய தமக்கை ஒருத்தி இருக்கிறாள். அவள் பெயர் அதர்மை.”

சுபாகு அவரை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். பெருச்சாளிகளுக்குரிய சிறிய ஒளிகொண்ட கண்கள். அவர் உடலில், முகத்தில், உதடுகளில், நோக்கில் எங்கும் ஒரு கோணல் இருந்தது. அவன் புரவியிலிருந்து இறங்கி அவரை அணுகி கால்தொட்டு வணங்கி “அருள்க, மெய்ச்சொல்கொண்டவரே!” என்றான். “நிறைவுறுக! தெய்வங்கள் உடன் நிலைகொள்க!” என அவர் வாழ்த்தினார். சுபாகு திரும்பி அப்பால் நின்றிருந்த காவலர்தலைவனிடம் “இவரை பிதாமகர் பீஷ்மரிடம் கொண்டுசெல்க!” என ஆணையிட்டபின் புரவியில் ஏறிக்கொண்டான்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76

bowசுபாகு புரவியில் ஏறி முட்டித் ததும்பிக்கொண்டிருந்த படைகளினூடாக விரைந்து துரியோதனனின் படைப்பகுதியை அடைந்தான். அவன் புரவியிலிருந்து இறங்கியதுமே அவனை நோக்கி வந்த துச்சலன் “மூத்தவர் பிதாமகர் வீழ்ந்த இடத்திற்கு சென்றுள்ளார்” என்றான். அவன் திரும்பி நோக்க “வடக்கு எல்லையில்… படைகளின் விளிம்பில்” என்றான் துச்சலன். அவனுக்கு முன்னால் கௌரவப் படைகளை பாண்டவர்களின் படைகள் கடல்பாறையை அலைகள் என வந்து அறைந்துகொண்டிருந்தன. “வெறிகொண்டு தாக்குகிறார்கள். பீமசேனர் உக்ராயுதனையும் துர்விகாகனையும் பாசியையும் கொன்றுவிட்டார். நம் மைந்தர்கள் கீர்த்திமானும் கீர்த்திமுகனும் நீரஜனும் நிரலனும் களம்பட்டுள்ளனர்” என்றான் துச்சலன்.

“பிதாமகரைக் கொன்றதை கொண்டாடுகிறார்கள்!” என்றான் துர்மதன். “இல்லை, அனைத்து அறங்களையும் கடந்துவிட்டதை கொண்டாடுகிறார்கள்” என்ற சுபாகு “நான் மூத்தவரிடம் செல்கிறேன்” என்று புரவியில் ஏறிக்கொண்டான். காலபதனும் புசனும் கொல்லப்பட்ட செய்தியை முரசுகள் முழங்கின. அவன் புரவியை படைகள் நடுவே செலுத்தினான். “எதிர்கொள்க! பீமனையும் மைந்தரையும் இணைந்து எதிர்கொள்க!” என்று சகுனியின் முரசொலி எழுந்தது. தருணனும் தமனும் அதரியும் வீழ்ந்தனர். சுபாகு பெருமூச்சுவிட்டான். அவன் துரியோதனனின் அரவுக்கொடியை தொலைவில் நோக்கியபோது உக்ரசிரவஸும் உக்ரசேனனும் கொல்லப்பட்டதை முரசு கூறிக்கொண்டிருந்தது. பீஷ்மரின் படுகளம் கௌரவப் படைகளால் சூழப்பட்டிருந்தது. அங்கிருந்த பாண்டவப் படைகள் விலகி வேறு இடங்களில் குவிந்து தாக்கிக்கொண்டிருந்தனர். அர்ஜுனன் போர்முனையில் இல்லை என்று தெரிந்தது.

சுபாகு புரவியிலிருந்து இறங்கி பீஷ்மரின் படுகளம் நோக்கி சென்றான். விவித்சுவும் துர்விமோசனும் கொல்லப்பட்டதை முழங்கிக்கொண்டிருந்தது முரசு. அவனை எதிர்கொண்ட துச்சாதனன் “எங்கிருந்து வருகிறாய்? என்ன நடக்கிறது?” என்றான். “மூத்தவரே, பாண்டவப் படையும் பீமனும் களிவெறிக்கொண்டு எழுந்து வந்து நம்மை தாக்குகிறார்கள். நம் உடன்பிறந்தாரும் மைந்தரும் வீழ்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் சுபாகு. “கௌரவ மூத்தவர்கள் எழுக! பீமனை தடுத்து நிறுத்துக!” என்று சகுனியின் ஆணையை ஒலித்தது முரசு. துச்சாதனன் அங்கே பீஷ்மரின் உடலருகே குனிந்து நின்றிருந்த துரியோதனனை நோக்கி ஓடிச்சென்று “மூத்தவரே, நாம் களம் சென்றாகவேண்டும். இளையோர் மறைந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.

துரியோதனன் கைவீசி “நாம் இங்கிருந்தாக வேண்டும். பிதாமகரை கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. பகதத்தரும் பால்ஹிக பிதாமகரும் சென்று அவர்களை எதிர்கொள்ளட்டும்!” என்றான். கௌரவ மைந்தர்களான துராசதனும் வீரஜிஹ்வனும் வீரதன்வாவும் வீரபாகுவும் களம்பட்ட செய்தியை முழவுகள் கூறின. கௌரவர்கள் அலோலுபனும் அபயனும் பீமனால் கொல்லப்பட்டார்கள் என்று முரசு கூறியபோது துச்சாதனன் “மூத்தவரே, படுகொலை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பிதாமகரைக் கொன்ற களிவெறியில் அவர்கள் நம்மை அழிக்கிறார்கள்!” என்றான். கீழே பீஷ்மரை தொட்டுநோக்கிக்கொண்டிருந்த மருத்துவன் நிமிர்ந்து நோக்கி “உயிர் எஞ்சியிருக்கிறது” என்றான்.

துரியோதனன் திகைப்புடன் “உயிருடனிருக்கிறாரா? மெய்யாகவா?” என்றான். மண்ணில் முழந்தாளிட்டுக் குனிந்து பீஷ்மரின் செவிகளில் “பிதாமகரே! பிதாமகரே, நான் உங்கள் மைந்தன், துரியோதனன்!” என்றான். பீஷ்மர் “நீயா?” என மெல்ல முனகினார். “குருதியும் குடியும் காப்பவனே நல்லரசன்… மைந்தா, வஞ்சத்தைவிட, மண்ணைவிட, நெறிகளைவிட, அறத்தைவிட, தெய்வங்களைவிட குலம் வாழ்வதே முதன்மையானது” என்றார். அவர் சொல்வதை சரியாக புரிந்துகொள்ளாமல் துரியோதனன் “தந்தையே! மூதாதையே!” என்றான். சுபாகு “மூத்தவரே, நாம் பிதாமகரை மருத்துவநிலைக்கு கொண்டுசெல்லவேண்டும்” என்றான். “எப்படி அவரை தூக்குவது? அவர் உடலில் அம்பு தைத்திருக்காத இடமே இல்லை” என்றான் துச்சாதனன்.

சுபாகு “முதுமருத்துவர்களை கொண்டுவருவோம்… அவர்கள் ஏதேனும் சொல்வார்கள்!” என்றான். துரியோதனன் “செல்க, முதுமருத்துவர் வஜ்ரரை உடனே அழைத்து வருக!” என்றான். திரும்பி சுபாகுவிடம் “பிதாமகர் உயிருடனிருப்பது விந்தை. இத்தனை அம்புகளுக்குப் பின்னரும்!” என்றான். “அவர் இறக்க விழையவில்லை, மூத்தவரே. முதியவர்கள் சிலர் அவ்வாறு இறக்க விழையாமல் மண்ணில் தங்கியிருப்பதுண்டு” என்றான் சுபாகு. “எத்தனை அம்புகள்!” என துரியோதனன் மீண்டும் வியந்தான். “முழு விழைவுடன் தொடுக்கப்பட்ட அம்பு ஒன்றுகூட இல்லை என்பதே அவர் இறக்காமலிருப்பதன் பொருள்” என்றான் சுபாகு.

பீஷ்மர் மயக்கத்தில் “ஆனால்” என முனகினார். “என்ன சொல்கிறார்?” என்று துரியோதனன் கேட்டான். பீஷ்மர் மீண்டும் “ஆனால்…” என்றார். துரியோதனன் துச்சாதனனை நோக்க அவன் “புரியவில்லை… வேறேதோ எண்ணத்தின் நீட்சி” என்றான். “ஆனால்… ஆனால்” என்றார் பீஷ்மர். சுபாகு புன்னகைத்தான். “என்ன? என்ன?” என்றான் துரியோதனன். “ஒன்றுமில்லை” என்றான் சுபாகு. “சொல், மூடா… என்ன எண்ணினாய்?” என்றான் துரியோதனன். “ஒன்றுமில்லை, மூத்தவரே. ஒரு குறுக்கு எண்ணம்” என்றான் சுபாகு. “அவர் வாழ்க்கையை ஒற்றைச் சொல்லில் சுருக்கிக்கொண்டாரோ என…” துரியோதனன் “என்ன சொல்கிறாய்?” என்று முகம் சுளித்தான். “வெற்று எண்ணம், பொருளற்றது” என்றான் சுபாகு. “அறிவிலி” என்று துரியோதனன் முகம் திருப்பிக்கொண்டான். பீஷ்மர் மீண்டும் ஆழ்ந்த முனகலோசையை எழுப்பினார்.

அப்பால் ஆணைமாடங்களிலிருந்து முரசுகள் களநிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருந்தன. நிலைகுலைந்திருந்த துரியோதனன் “என்ன? என்ன அறிவிப்பு?” என்றான். “பகதத்தரும் பால்ஹிகரும் களம்செல்கிறார்கள். அபிமன்யூவை பூரிசிரவஸும் ஜயத்ரதரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள்” என்றான் சுபாகு. “நன்று. நம் இளையோர் பின்னகரட்டும்… இன்று அவர்கள் வெறியாடுவார்கள்” என்றான் துச்சாதனன். துரியோதனன் பொருளிலா விழிகளுடன் அவனை நோக்கினான். அவன் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். பற்களை இறுகக் கடித்துக்கொண்டிருந்தமையால் தாடை அசைந்தது. கழுத்துத் தசைகள் நெளிந்தன. துச்சாதனன் “இன்று அவர்கள் இருளில் வீழ்ந்துவிட்டனர். இனி அவர்கள் எதை வென்றாலும் இழுக்கே” என்றான். துரியோதனன் அவனை விளங்கா விழிகளுடன் நோக்க “ஆணிலியை முன்னிறுத்தி போரிடுதல். படைக்கலம் தாழ்த்தியவரை கொல்லுதல். கீழ்மை!” என்றான். துரியோதனன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் தலைமட்டும் ஆடியது.

சகட ஓசை கேட்டது. மருத்துவர் வஜ்ரர் விரைவுத்தேரில் வந்திறங்கினார். கூன்விழுந்த உடலுடன் அவர் விரைவடி எடுத்துவைத்து வர அவருக்குப் பின்னால் அவருடைய மாணவர்களான இரண்டு மருத்துவ உதவியாளர்கள் மூங்கில் பெட்டிகளுடன் வந்தனர். அவர் துரியோதனனுக்கு தலைவணங்கி “செய்தியை சற்று முன்னர் அறிவித்தனர். களம்பட்டார் என்றே முழவுகள் சொல்லின. ஆகவே நான் இங்கு எவரையும் அனுப்பவில்லை. பொறுத்தருளவேண்டும்” என்றார். “களம்பட்டார் என்றே எண்ணினோம். உயிர் எஞ்சியிருப்பது விந்தைதான்” என்றான் துச்சாதனன். பீஷ்மரை அதன் பின்னர்தான் வஜ்ரர் பார்த்தார். அதிர்ந்து ஓரடி பின்னகர்ந்த பின் “அவரா?” என கைசுட்டினார். “அவரேதான். தெய்வங்களே, உயிர் இருக்குமென்றால் அது இறையாடல் அன்றி வேறல்ல!”

சுபாகு “உயிர் இருக்கிறது, பேசுகிறார்” என்றான். வஜ்ரர் விரைந்து பீஷ்மரின் அருகே சென்று முழந்தாளிட்டு அமர்ந்து இடக்கை பற்றி நாடிநோக்கி “சீரடி… மூன்று நாடிகளும் முற்றிலும் ஒத்திசைந்துள்ளன. உயிர் பழுதின்றி உடலில் திகழ்கிறது!” என்றார். “ஆனால்…” என்றார் பீஷ்மர். வஜ்ரர் திடுக்கிட்டு அவர் உதடுகளை பார்த்துவிட்டு “உயிர் எப்படி தங்கியிருக்கிறது என்பது பெருவிந்தை!” என்றார். சுபாகு “அம்புகள் உயிர்நிலைகளை தொடவில்லை போலும்” என்றான். “இல்லை, அத்தனை உயிர்மையங்களிலும் அம்புகள் தைத்திருக்கின்றன” என்ற வஜ்ரர் “ஆனால் இங்கே குருக்ஷேத்ரத்திற்கு வந்த பின்னர் நான் வியப்படைவதை விட்டுவிட்டேன்…” என்றார்.

“இங்கிருந்து பிதாமகரை கொண்டுசெல்லவேண்டும். மருத்துவநிலைக்கு சென்ற பின் அத்தனை மருத்துவர்களும் வந்தமர்ந்து அவரை நோக்கட்டும். அவர் எழுந்துவரவும் கூடும்” என்றான் துரியோதனன். வஜ்ரர் மீண்டுமொருமுறை நாடியை நோக்கிவிட்டு “அரசே, அது இயல்வதல்ல. அவர் உடலில் அம்புகள் இடைவெளியில்லாமல் தைத்துள்ளன. உயிர் ஒரு மெல்லிய விந்தையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரிதான ஒரு சுடர் அது. விளக்கமுடியாத எதனாலோ எரிகிறது. விளக்கவே முடியாதபடி அணைந்துவிடவும் கூடும். நாம் இங்கிருந்து அவரை அகற்றவே முடியாது” என்றார். “பிறகு என்ன செய்வது? இந்தக் களத்தில்…” என்றான் துரியோதனன்.

“அரசே, இது முகக்களம் அல்ல. போர் இப்போதே தெற்கே நகர்ந்துவிட்டது. அவர்களிடம் சொல்க, இது பிதாமகரின் படுகளம் என! நாளை முதல் போர் தெற்கே நிகழட்டும். அவர் இங்கேயே இவ்வண்ணமே இருப்பதே நன்று. உண்மையில் அது ஒன்றே இயல்வது” என்றார் வஜ்ரர். துரியோதனன் துச்சாதனனை நோக்க “அது உகந்ததே, மூத்தவரே. இது களமல்ல” என்றான். துரியோதனன் “ஆணையிடுக!” என்று கைகாட்டினான். சுபாகு “இங்கேயே ஓர் மருத்துவநிலையை அமைக்கலாம்” என்றான். வஜ்ரர் சில கணங்கள் எண்ணிவிட்டு “அதை அவர் விழைவாரா என தெரியவில்லை. அவரிடமே கேட்கிறேன்” என்றார். “அவர் உளத்தெளிவுடன் இல்லை” என்றான் சுபாகு. “ஆம், ஆனால் ஆத்மன் இப்போதுதான் உள்ளத்தின் தடையில்லாமல் சொல்கூர்வான்” என்றார் வஜ்ரர்.

வஜ்ரர் பீஷ்மரின் செவியில் “பிதாமகரே, இங்கே தங்களுக்கு மேல் கூரை தேவையா?” என்றார். “பிதாமகரே, செவிகூர்க! இங்கே கூரை தேவையா?” அவர் மீண்டும் மீண்டும் கேட்க துரியோதனன் அதிலிருந்த பொருளின்மையைக் கண்டு பொறுமையிழந்தான். அவன் ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள் பீஷ்மர் “விண்மீன்கள்!” என்றார். “ஆம்” என்றபின் வஜ்ரர் எழுந்துகொண்டு “அவர் விண்மீன்களின் கீழ் படுக்க விழைகிறார்” என்றார். சுபாகு “எண்ணினேன்!” என்றான். துரியோதனன் “ஏன்?” என்று அவனிடம் கேட்டான். அவன் விழிகள் சிவந்து கலங்கியிருக்க உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. “மூத்தவரே, இறப்பவர்கள் விண்மீன்களுக்குக் கீழே படுத்திருக்கவே விழைகிறார்கள்” என்றான் சுபாகு. “அவர் இறக்கமாட்டார். அவர் இறப்பற்றவர்” என்று துரியோதனன் கூச்சலிட்டான். சுபாகு ஒன்றும் சொல்லாமல் வெறுமனே நோக்கினான். “அறிவிலிகள்!” என்று துரியோதனன் திரும்பிக்கொண்டான்.

வஜ்ரர் “அரசே, தாங்கள் இங்கே இருக்கவேண்டியதில்லை. நாங்கள் எங்கள் பணியை ஆற்றுகிறோம். தாங்கள் சென்று தங்கள் பணியை ஆற்றுக!” என்று கடுமையான குரலில் சொன்னார். “பிதாமகரின் உயிர் போக விழைந்தால் அதற்கான வாசலை திறந்து கொடுப்போம். தங்க விழைந்தால் இந்தப் பீடத்தை அதற்கென ஒருக்குவோம். எங்கள் தொல்மரபு துணைநிற்கட்டும்!” துரியோதனன் ஏதோ சொல்லவந்த பின் தலையசைத்தான். சுபாகு துச்சாதனனை நோக்கி விழியசைத்தான். துச்சாதனன் “மூத்தவரே, இங்கே நாம் இருந்து ஆவதொன்றுமில்லை. பிதாமகர் சாகவில்லை என்ற செய்தியை உங்கள் அறிவிப்பாக படையினர் அறியட்டும். அது இக்களத்தில் நம்மை வீழாமல் காக்கும். யானை மீதேறி நீங்கள் களம்புகுந்தால் இன்றும் நாமே வெல்வோம்” என்றான்.

துரியோதனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். திரும்பி சுபாகுவை நோக்கி “நீ இங்கேயே இரு. நாழிகைக்கொருமுறை பிதாமகர் எவ்வண்ணமிருக்கிறார் என்னும் செய்தி என்னை வந்தடைய வேண்டும்” என்றபடி கிளம்பினான். அவன் நடை தளர்ந்திருப்பதை சுபாகு வெறுமனே நோக்கிக்கொண்டு நின்றான். துரியோதனன் தேரிலேறிக்கொண்டான். துச்சாதனன் சுபாகுவிடம் “நற்செய்தி மட்டும்” என்றபின் தானும் சென்று தேரில் ஏறிக்கொண்டான். தேர் குலுங்கி அதிர்ந்து கிளம்பிச்சென்றது. சுபாகு திரும்பி மருத்துவரிடம் “அவரை தங்களிடம் ஒப்படைத்துள்ளோம், மருத்துவரே. இயன்றதை செய்க!” என்றான்.

வஜ்ரர் “இப்போது செய்யவேண்டியது பிதாமகரை சரியாக படுக்க வைப்பது. அவர் உடலில் எங்கென்றில்லாமல் அம்புகள். சிறிய புல்லம்புகளே பல உள்ளன” என்றார். “அம்புகளை பிழுதெடுக்க முடியுமா என்றுதான் பார்த்தேன். இத்தனை அம்புகளை பிடுங்கினால் புண்வாய்களிலிருந்து வழியும் குருதியே அவரை கொன்றுவிடும். அம்புமுனைகளையே குருதியை அடைக்கும் தடையாக நிறுத்திக்கொள்ளலாமென நினைக்கிறேன்” என்றார். கூர்ந்து நோக்கியபடி பீஷ்மரை சுற்றிவந்தார். “பெரும்பாலான அம்புகள் இரும்புக்கூர்களில் மரத்தண்டு பொருத்தப்பட்டவை. சற்றே உருகிய நெய்விட்டால் அவற்றை தனியாக பெயர்த்து எடுத்துவிட முடியும். ஆனால் எப்படி படுக்கவைப்பது? மென்மயிர்ச் சேக்கையிலானாலும் இந்த அம்புப்புண்கள் அழுந்துமே.”

அவருடைய மாணவர்களில் ஒருவன் தாழ்ந்த குரலில் “அதற்கொரு வழி உள்ளது” என்றான். “என்ன?” என அவர் விழிதூக்கினார். “முன்பு வத்ஸநாட்டு அரசர் சுவாங்கதருக்கு பெரிய கட்டிகள் உடலெங்கும் வந்து புண்ணாயின. அன்று எங்கள் நிலத்து மருத்துவர் ஒருவர் அவரை முட்படுக்கையில் படுக்க வைத்தார். நூற்றெட்டு நாட்கள் அப்படுக்கையில் கிடந்து அவர் நோய்நீங்கினார்” என்றான். வஜ்ரர் கேள்வியுடன் நோக்கிக்கொண்டிருக்க “முதுகில் புண்கள் இருந்த இடங்களை கணக்கிட்டு புண்களின் நடுவிலூடாக ஊன்றும்படி ஆயிரத்தெட்டு முட்களை நிறுத்தி அவற்றின்மேல் அவரை படுக்கச் செய்தார். முட்கள் மிகச்சரியான உயரம் கொண்டிருந்தால் உடலில் அவை தைப்பதில்லை. நாமும் அவ்வண்ணம் ஒன்றை இங்கே உருவாக்கலாம்” என்றான்.

வஜ்ரர் “ஆம், முயன்று பார்க்கலாம். முறையாக படுத்தாலே அவர் உடலின் வலி பெரும்பாலும் குறைந்துவிடும்” என்றார். “இங்கே களமெங்கும் மெல்லிய உறுதியான நீளம்புகள் சிதறிக்கிடக்கின்றன. இவற்றை நாட்டியே நாம் அவ்வண்ணம் ஒரு படுக்கையை உருவாக்கிக்கொள்ள முடியும். ஆணையிட்டால் நானே செய்கிறேன்” என்றான். வஜ்ரர் திரும்பி சுபாகுவிடம் “தென்றிசையில் தமிழ்நிலத்தைச் சேர்ந்தவன். அவர்கள் இசையிலும் மருத்துவத்திலும் தெய்வங்களால் தனித்து பயிற்றுவிக்கப்பட்டவர்கள்” என்றார்.

சுபாகு “ஆனால் அம்புகள் மேல்…” என்றான். “அரசே, நூற்றுக்கணக்கான அம்புமுனைகளாலான கண்ணுக்குத் தெரியாத வலை அது என்று உணர்க! அதன்மேல் உடல் அழுந்துகையில் பலநூறு இடங்களிலாக உடல் எடை பகிரப்படும். காற்றில் மிதக்கும் எடையின்மையை பிதாமகர் உணர்வார்” என்றான் மாணவன். வஜ்ரர் “முட்காலணியில் நின்றிருப்பீர்கள், அதைப்போல” என்றார். “ஆகுக!” என்றான் சுபாகு. மாணவன் தலைவணங்கினான். சுபாகு “உன் பெயர் என்ன?” என்று கேட்டான். “சாத்தன்” என்று அவன் மறுமொழி சொன்னான். வஜ்ரர் “அவன் பெயர் ஆதன். இருவருமே தென்றிசையினர். அகத்திய மரபினர்” என்றார். சுபாகு பெருமூச்சுவிட்டான். பின்னர் நினைத்துக்கொண்டு புன்னகைத்தான். வஜ்ரர் வினாவுடன் நோக்க “நெடுநாட்களுக்கு முன்பு எங்கள் குலமூதாதை விசித்திரவீரியரை நோக்க தென்றிசையிலிருந்து சாகா நிலைகொண்ட சித்தராகிய அகத்தியர் வந்தார் என ஒரு கதை உண்டு” என்றான்.

அவர்கள் இருவரும் மிக விரைவாக செயல்பட்டனர். வஜ்ரர் பீஷ்மரின் முதுகிலும் இடையிலும் கால்களிலும் இருந்த அம்புகளின் எண்ணிக்கையையும் இடங்களையும் கணக்கிட்டு அதை அருகே தரையில் ஓர் அம்புமுனையால் வரைந்தார். ஆதன் அங்கே சிதறிக்கிடந்த நீண்ட அம்புகளை பொறுக்கி சேர்த்தான். சாத்தன் நூற்றெட்டு நீண்ட அம்புகளை நிலத்தில் இறக்கி நாட்டினான். அருகே கிடந்த கதை ஒன்றால் அவற்றை அறைந்து இறுக்கி நிறுத்தியபின் பீஷ்மரின் முதுகுப்புண்களை கணக்கிட்டு அவற்றுக்கேற்ப மேலும் அம்புகளை நாட்டினான். அவற்றின் நீளம் மிகச் சரியாக அமையும்படி கண்களாலும் கைகளாலும் அளவிட்டான். தூக்கணாங்குருவி கூடுசெய்வதுபோல என்று சுபாகு எண்ணிக்கொண்டான்.

அம்புகள் நாணல்புதர்போல் நின்றிருந்தன. ஆனால் அவற்றின் மேற்தளம் கூர்களாலான மென்பரப்புபோல தெரிந்தது. சற்றே அகன்று நோக்கியபோது அக்கூர்புள்ளிகள் இணைந்து ஒரு படுக்கை போலாயின. நிலத்தில் கிடந்த பீஷ்மரின் காலையும் தலையையும் பற்றி அவர்கள் இருவரும் மெல்ல தூக்க வஜ்ரர் அவரை கிடத்தவேண்டிய வகையை முழந்தாளிட்டு அமர்ந்து நோக்கி ஆணையிட்டார். முனகலோசையில் “மெல்ல… வடக்கே! வடக்கேதான்! ஆம்! சற்று… ஆம், மேலும்… மேலும் சற்று” என அவர்கள் பேசிக்கொண்டார்கள். அவர் முதுகில் தைத்து நின்றிருந்த அம்புகள் அனைத்துமே எங்கும் முட்டாமல் நீட்டி நிற்க அவரை அம்புப்படுக்கைமேல் மெல்ல படுக்கவைத்தனர்.

உடல் அம்புப்பரப்பு மேல் அமைந்ததும் பீஷ்மர் மெல்ல முனகி நீள்மூச்செறிந்தார். அவர் உடல் இழுவிசை இழந்து தளர்வதையும் அதுவரை சுருங்கியிருந்த முகத்தசைகள் நெகிழ்வதையும் சுபாகு பார்த்தான். வஜ்ரர் “நலமாக உணர்கிறார்” என்றார். பீஷ்மர் புரண்டு எழ முயல்பவர்போல ஓர் அசைவை உருவாக்கினார். “அஞ்சவேண்டாம், அவர் நன்கமைந்து கொள்கிறார்” என்றான் சாத்தன். பீஷ்மர் மீண்டும் பெருமூச்சுவிட்டு “ஆனால்…” என்றார். வஜ்ரர் “என்ன சொல்கிறார்?” என்று சுபாகுவிடம் கேட்டார். “அவர் அடிக்கடி சொல்லும் சொல் அது” என்றான் சுபாகு. “ஆம், அப்படி ஒரு சொல் இருக்கும்” என்றார் வஜ்ரர். பீஷ்மர் மீண்டும் சற்று உடல்தளர்ந்தார். முட்கள்மேல் படிந்த ஆடை போலாயிற்று அவர் உடல்.

அந்த அம்புப்படுக்கையை அகன்று நின்று நோக்கியபோது சுபாகு விந்தையான ஒரு கூச்சத்தை அடைந்தான். அவன் உடலில் அந்த அம்புகள் குளிராக கூர்பாய்ந்து நிற்பதைப்போல. பீஷ்மரின் கரண்டைக்கால்கள் ஆறு கூரிய அம்புகளால் தாங்கப்பட்டிருந்தன. அவன் நோக்குவதைக் கண்ட வஜ்ரர் “கரண்டைக்காலின் எடை ஆறுமுறை பகிரப்பட்டுள்ளது. மென்மலர் தொடுகை போலிருக்கும்” என்றார். ஆயினும் அவனால் அந்த உடற்கூச்சத்தை வெல்ல முடியவில்லை. தசைகள் விதிர்த்து மெய்ப்பு கொண்டபடியே இருந்தன. “நூற்றெட்டு அம்புமுனைகளால் ஓரு யானையை காற்றில் மிதப்பதுபோல படுக்க வைக்க முடியும், அரசே. உரிய முறையில் எடை பகுக்கவேண்டும். இங்கே பிதாமகரின் உடலின் அம்புகளுக்கேற்ப படுக்கை அமைக்கப்பட்டுள்ளமையால்தான் இத்தனை அம்புகள்” என்றான் சாத்தன்.

சுபாகு பெருமூச்சுடன் அப்பால் சென்று உடைந்த தேர் ஒன்றின் மேல் அமர்ந்தான். போர்க்களம் மிக அப்பால் விலகிச்சென்றிருந்தது. அவனுடைய அணுக்கனாகிய காஞ்சனன் வந்து நின்றிருந்தான். சொல் என அவன் கைகாட்டினான். “அரசே, பால்ஹிகரும் பகதத்தரும் களமுகப்பிற்கு வந்தனர். அதற்குள் கௌரவ வில்லவர்களும் தேர்வலர்களும் பரிவீரர்களுமாக பெரும்பகுதியினர் களம்பட்டிருந்தனர். பால்ஹிகரின் அறைபட்டு இடும்பர்கள் சிதறி விழுந்தனர். கடோத்கஜன் அவருடைய பெருங்கதையை எதிர்கொண்டபடியே பின்னடைந்தார். பகதத்தரின் யானை விழுந்து கிடந்த கௌரவர்களின் மேல் எழுந்து வந்து பீமனை தாக்கியது” என்று காஞ்சனன் சொன்னான்.

“பூரிசிரவஸ், ஜயத்ரதர், அஸ்வத்தாமர் மூவரும் அம்முகப்பிற்கு வந்தனர். அபிமன்யூ அவர்களை எதிர்கொண்டபடி பின்னடைய சுருதகீர்த்தி முன்னால் சென்று அபிமன்யூவை அவர்களின் தாக்குதலிலிருந்து காத்தார். மெல்ல பின்னடைந்து அவர்கள் பாண்டவப் படை விரிவிற்குள் புகுந்துகொண்டனர். அதற்குள் கௌரவப் பேரரசர் களத்திற்கு வந்தார். பிதாமகர் கொல்லப்படவில்லை என்ற செய்தியை முரசுகள் அறிவித்தன. நம் படைகள் அதனால் ஊக்கம் பெற்று அவர்கள் மேல் பாய்ந்து தாக்கி பின்னடையச் செய்தன. வெல்ல முடியாதவர். எவராலும் கொல்ல முடியாதவர். மூதாதை வடிவர். எட்டு வசுக்களால் ஏந்தப்பட்டவர் என்று பீஷ்மரின் புகழைக் கூவியபடி நம்மவர் போரிட்டனர்.”

“மறுபக்கம் பாண்டவப் படையினர் பீஷ்மப் பிதாமகர் இறக்கவில்லை என்ற செய்தியால் உளச்சோர்வடைந்தனர். அவர்கள்தான் அவருடைய இறப்புக்காக கதறியழுதவர்கள். ஆனால் அவர் மீண்டும் எழுவார் என எண்ணியதுமே ஏமாற்றமும் அதன் விளைவான சீற்றமும் கொண்டு அர்ஜுனரையும் சிகண்டியையும் இளைய யாதவரையும் வசைபாடினர். அவர்களில் உருவான குலைவை பயன்படுத்திக்கொண்டு நமது படையினர் அறைந்து முன்சென்றனர். நமது படைகளால் பாண்டவப் படை தென்கிழக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. பொழுதணைந்து வருகிறது. இன்னும் சிறுபொழுதில் போர்நிறுத்தம் முழங்கும்.”

சுபாகு அவனிடம் போகலாம் என்று கையசைத்தான். வஜ்ரரும் சாத்தனும் ஆதனும் அமர்ந்து மருந்தெண்ணையை செம்புக்குடுவைகளிலிருந்து அம்புகள்மேல் சொட்டுகளாக ஊற்றினர். எண்ணை வழிந்து அம்புமுனை பதிந்திருந்த புண்வாயில் சென்று பொருத்தில் தேங்கி சற்று ஊறி உள்ளிறங்கியது. சிறிய தோல்பட்டையால் அம்புகளின் தண்டை சாத்தன் சுற்றி பிடித்துக் கொண்டான். ஆதன் அம்புமுனையை பிடித்தான். வஜ்ரர் பீஷ்மரின் உடலை பற்றிக்கொண்டார். அம்புத்தண்டுகளை அவர்கள் புல்லை பிடுங்குவதுபோல விசையுடன் இழுத்து உருவி எடுத்தனர். பீஷ்மர் மெல்ல முனகினார். அவர் உதடுகள் அசைந்தன. அவர் “ஆனால்” என்றுதான் சொல்கிறாரா?

அவன் அம்புகள் ஒவ்வொன்றாக அகல்வதை நோக்கி நின்றிருந்தான். எத்தனை அம்புகள் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. அவை அர்ஜுனனும் சிகண்டியும் மட்டும் தொடுத்தவைதானா? பாண்டவப் படையின் பிறரும் அவற்றை ஏவினார்களா? அங்கிருந்த படையினர் அனைவருமே அவர்மேல் அம்புகளை பெய்திருப்பார்கள். எட்டியவை அவர்கள் இருவரும் எய்தவை. அவர்கள் அப்படையிலிருந்து முழுத்தெழுந்தவர்கள். கலத்தில் ஊறிக் கனிந்த நீர்த்துளிகளைப்போல. அவன் பீஷ்மர்மேல் அம்புதொடுத்த அர்ஜுனனின் முகத்தை நினைவில் உருவாக்கிக்கொள்ள முயன்றான். அவன் அர்ஜுனனை காணவில்லை. ஆனால் பாண்டவப் படையினர் அனைவரிடமும் அந்த முகம்தான் இருந்திருக்கும். அவனெதிரே வில்லுடன் நின்றிருந்த கிராதப் படைத்தலைவன் சாகரனின் முகம்போலவே இருந்திருக்கும் அர்ஜுனனின் முகமும்.

சாத்தன் பீஷ்மரின் தலையை கையால் சற்றே தூக்கிப்பிடிக்க வஜ்ரர் அவர் வாயில் மருந்தை ஊற்றினார். பீஷ்மரின் நா வந்து துழாவிச்சென்றது. “உண்கிறார், சுவை தெரிகிறது. நன்று” என்றார் வஜ்ரர். மேலும் மருந்தை அளித்தபோது அவர் உதடுகளைக் குவித்து பெற்றுக்கொண்டு அருந்தினார். “இது உடலை ஆற்றும். சற்றுப்பொழுது கழித்து உணவை அளிக்கலாம்” என்றார் வஜ்ரர். “உணவா?” என்றான் சுபாகு. “தேனும் கனிச்சாறும் மட்டும். அவை உடலுக்குத் தேவையான அனைத்தையும் அளிக்கும்” என்றார் வஜ்ரர். சாத்தன் சிறிய புட்டியிலிருந்து ஒரு மருந்தை எடுத்து குலுக்கி அதில் ஒரு சிறுகுழாயை விட்டு மேல்திறப்பை விரலால் தொட்டு மூடிக்கொண்டான். அதை எடுத்து பீஷ்மரின் மூக்கில் இரு சொட்டுகள் விட்டு வாயால் ஊதி உள்ளே செலுத்தினான். அவர் தும்மப்போகிறவர்போல இருமுறை உடலை உலுக்கிய பின் மீண்டும் முகம் தளர்ந்தார்.

“அது பீதர்நாட்டு மருந்து. அவரை புலரும்வரை ஆழ்துயிலில் ஆழ்த்தும். காலையொளியில் அவர் உளம்மீண்டுவிட்டிருப்பார்” என்றார் வஜ்ரர். “இச்செய்தியை நான் மூத்தவருக்கு அனுப்பலாம் அல்லவா?” என்றான் சுபாகு. “ஆம், இப்போது நலமாக இருக்கிறார். மஞ்சம் அமைந்துள்ளது, மருந்துண்டார், உறங்குகிறார் என்று தெரிவியுங்கள்” என்றார் வஜ்ரர். சுபாகு திரும்பி அப்பால் நின்ற ஏவலனை அருகழைத்து அச்செய்தியை அறிவிக்கும்படி ஆணையிட்டான். ஏவலன் புரவியில் ஏறிச் சென்றான். வஜ்ரர் “இந்த இடம் காட்டுக்கு அருகே உள்ளது. இதைச் சூழ்ந்து காவல் அமையவேண்டும். பந்தங்கள் இரவெல்லாம் எரியவேண்டும். விலங்குகள் குருதிமணம் நாடி வந்துவிடக்கூடாது. சிற்றுயிர்களும் அணுகலாகாது. நுண்ணுயிர்கள் அணுகாமலிருக்க மூலிகைப்புகை எப்போதும் இருக்கவேண்டும்” என்றார்.  “ஆணையிடுகிறேன்” என்றான் சுபாகு.

முழவோசை அவன் சொற்களை வான்நிறைத்து சொல்லத் தொடங்கியது. அவன் அவற்றை ஏவலனிடம் சொல்லும்போது நம்பிக்கையின்மையுடன்தான் உரைத்தான். ஆனால் வானிலிருந்து அது இடியின் மொழியில் பொழிந்தபோது மறுப்பிலா மெய்யென்றும் தெய்வச்சொல்லென்றும் தோன்றியது. அவன் ஆறுதலுடன் பெருமூச்சுவிட்டான். வஜ்ரர் பீஷ்மரின் புண்களுக்கு மருந்திடுவதை நோக்கியபடி மீண்டும் உடைந்த தேர் ஒன்றின் தட்டில் அமர்ந்தான்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75

bowமேலும் மேலுமென பீஷ்மர் முன் உடல்கள் விழுந்து அவர் உருவாக்கிய வெறுங்களம் அகன்றது. அவர்கள் எவருமே அம்புகளால் தொட இயலாத தொலைவுக்கு அவர் விலகிச்சென்றிருந்தார். அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் ஒருகட்டத்தில் அம்பு செலுத்துவதன் பயனின்மையை உணர்ந்தனர். வில்லவர்கள் பலர் அம்புகள் தொடுப்பதை நிறுத்தி வில் தாழ்த்தி மலைத்த விழிகளுடன் அவரை பார்த்தனர். சீற்றத்துடன் வந்த அம்புகளால் அறைபட்டு அவர் முன் விழுந்துகொண்டிருந்தனர். பலி கோரி எழுந்த பெருந்தெய்வம் ஒன்றுக்கு முன்னால் தலைக்கொடை அளிப்பவர்கள்போல சென்று விழுந்து அக்களத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

“அவர் மிக அகன்று சென்றுவிட்டார். இன்று அவர்மேல் தொடுக்கும் தொலைவுக்கு அம்பு செலுத்தும் மானுடர் எவருமில்லை” என்று சுருதகீர்த்தி சொன்னான். “அவர் தன் நெடிய உடலால் என்றும் அகன்றுதான் இருந்திருக்கிறார். மானுடரை தொலைவில், வானிலிருந்து என நோக்கிக்கொண்டிருந்தார்” என்றான் பிரதிவிந்தியன். “ஆகவேதான் அவர் எவரையும் புரிந்துகொள்ளவில்லை போலும்” என்றான் சுதசோமன். “அவரையும் எவரும் புரிந்துகொள்ளவில்லை” என்றான் யௌதேயன். “ஆனால் அவரால் நம்மை கொல்லமுடிகிறது. சொல்லொழிந்துவிட்டு அம்புகளை ஏவுக! அவருடைய அம்புகளையாவது தடுத்து நிறுத்துங்கள்” என்று அபிமன்யூ கூவினான். “ஒன்றே இயல்வது.  இக்களம் மேலும் மேலும் விரிந்து அவருடைய அம்புகளும் வந்தடையாதபடி ஆகும்போது தன் களத்தாலேயே அவர் தனிமைப்படுவார்” என்றான் சுருதகீர்த்தி.

சுருதகீர்த்தி அந்தப் போரை செயலற்ற உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தான். பாண்டவ வில்லவர் படையில் பெரும்பாலானவர்கள் பீஷ்மரின் அம்புகளை ஏற்று களம்பட்டனர். அவர்களின் விழிகள் சொல்லற்றிருந்தன. விழுந்து துடித்த உடல்களும் சொல்லற்றிருந்தன என்று தோன்றியது. தசையை உடலாக்கும் சொற்களை இழந்திருந்தன. ஐம்பெரும்பருக்களும் தங்களை இணைத்த நோக்கத்தை இழந்து விலகத் துடித்தன. பேரம்புகள் வந்து அறைந்து தேர்கள் சரிய, புரவிகள் கழுத்து குழைந்து முகம்பதித்து விழ, புண்பட்டு அவற்றின்மேல் விழுந்து துடித்து நெளியும் உடல்களும் உடைசல்களும் கொண்ட பெரிய வட்டக்களமொன்றுக்கு நடுவே பீஷ்மர் நின்று வில் தாழ்த்தினார். அவரைச் சூழ்ந்து வந்த துணைவில்லவர்களும் வில்லை தாழ்த்தினர்.

ஒருகணம் ஆழ்ந்த அமைதி ஒன்று களத்தில் எழுந்தது. முற்றிலும் புதிய தெய்வமொன்று தோன்றியதுபோல. கடுங்குளிர் என அந்த அமைதியை உடல்களால் உணர முடிந்தது. பீஷ்மர் சூழ்ந்திருந்தவர்களை பார்க்கவில்லை என்று தோன்றியது. பல்லாயிரம் விழிகளால் பார்க்கப்படுவதை உணர்ந்தது போலவும் தெரியவில்லை. எவ்வாறு அப்படி தனிமைப்பட்டோம் என்பதை திகைப்புடன் பார்ப்பவர்போல் தனக்குச் சுற்றும் விழுந்து கிடந்த உடல்களை விழியோட்டி பார்த்தார். சுருதகீர்த்திக்குப் பின்னால் நின்ற யௌதேயன் “ஏற்கெனவே இறந்துவிட்டவர் போலிருக்கிறார். மூச்சுவெளியில் நின்று நம்மை பார்க்கிறார். நமது சொற்களும் அங்கு சென்று சேராது” என்றான். ஆம், இனி அனலுக்கு உடலை அளிப்போம். நீருக்கு அன்னத்தை அளிப்போம். எங்கிருந்தோ அவர் அவற்றை பெற்றுக்கொள்வார் என்று சுருதகீர்த்தி எண்ணினான்.

பீஷ்மர் தன் தேரை பின்னுக்கிழுக்க ஆணையிட்டார். அவருடைய தேர் விழுந்துகிடந்த உடல்களினூடாக ஏறி, அங்கே கிடந்த உடைந்த தேர்களை நொறுக்கியபடி எழுந்து அலைபாய்ந்து மெல்ல பின்னடைந்துகொண்டிருந்தது. அவர் அகன்று செல்வதை வெற்றுவிழிகளுடன் நோக்கியபடி பாண்டவ வில்லவர்கள் நின்றிருந்தனர். மேலும் மேலும் அகன்று மீண்டும் தன் பின்னணிப் படையுடன் அவர் இணைந்துகொண்டார். அவர்கள் அந்தப் பெருவெற்றியை கொண்டாடும் பொருட்டு விற்களையும் வாள்களையும் தூக்கி போர்க்குரல் எழுப்புவார்கள் என்று சுருதகீர்த்தி எண்ணினான். ஆனால் அவர்களும் மலைத்துப் போயிருந்தார்கள். அங்கு வெற்றி தோல்வியே இல்லை. ஏனெனில் அங்கு எதிரி என்பதே இல்லை என்று எண்ணிக்கொண்டான்.

விரிந்து கூர் அழிந்து மேலும் அகன்று பீஷ்மரின் அணுக்கப்படை பின்னகர்ந்து கௌரவப் படை விளிம்பை சென்றடைந்தது. அதன் பின்னரே சுருதகீர்த்தி போர்க்களத்தின் முழுமையை பற்றிய உணர்வை அடைந்தான். பார்த்தரை கிருபரும் துரோணரும் சேர்ந்து இருபுறமும் அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்தனர். பார்த்தர் தன்னை பாதுகாத்தபடி தேரை பின்னிழுத்து மேலும் பின்னடைந்து தன் படையின் விளிம்பை வந்தடைந்தார். விரிந்து சுழன்ற வட்டம் சற்றே கலைந்து மீண்டும் வடிவுகொள்ளத் தொடங்கியது. பீஷ்மர் கௌரவப் படைகளின் வடக்குதிசை நோக்கி சென்றுகொண்டிருந்தார். கௌரவப் படைகளின் சுழற்சிக்கேற்ப தங்கள் அமைப்பை உருவாக்கிக்கொண்டே இருந்த பாண்டவப் படையின் நுனியில் அமைந்த பார்த்தரும் வடக்கு நோக்கி சென்றார். இரு அம்புகள் சரிந்து ஒன்றை ஒன்று சந்திக்கும்பொருட்டு முனைகொண்டு செல்வதுபோல. என்ன நிகழப்போகிறது என அவன் உணர்ந்தான். அவன் உள்ளம் அதிரத்தொடங்கியது.

வடக்கு எல்லை நோக்கி அவர்கள் செல்வதை தடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. அக்கணமே அது இயல்வதேயல்ல என்ற எண்ணமும் உருவானது. இரண்டு படைகளும் அவர்களிருவரையும் அந்த முனைநோக்கி செலுத்தும்பொருட்டே விசையும் அதற்கேற்ற வடிவும் கொண்டவை போலிருந்தன. அவர்கள் தங்களுக்கு எதிரே நின்ற படைகளுடன் முழு வீச்சுடன் போரிட்டபடியே அங்கே சென்றனர். குருக்ஷேத்ரத்தின் வடக்கு எல்லை, குறுங்காட்டின் விளிம்பு. அந்த இடம்தானா? அது முன்னரே தெரிவுசெய்யப்பட்டதா? அங்கே முன்னர் சென்றிருக்கிறார்களா? எவ்வகையிலேனும் அறிந்திருக்கிறார்களா? விழவுக்கூட்டத்தின் நெரிசலில் ஒருவரோடொருவர் உடல் முட்டிக்கொள்வதுபோல் பீஷ்மரும் பார்த்தரும் அருகருகே வந்தனர். இரு தேர்களும் இயல்பாக திரும்பி ஒன்றையொன்று எதிர்கொண்டன.

நோக்குக்கு அது முற்றிலும் எதிர்பாராத கணம். தெய்வ கணங்களனைத்துமே எதிர்பாராதவை. எதிர்பாராத கணங்கள் அனைத்துமே தெய்வங்களால் அமைக்கப்படுபவை. அந்தப் போரின் பல்லாயிரம் விசைகள், பல லட்சம் மானுடர், அவர்களிலெழுந்த எண்ணிலா நிகழ்வுகள் ஒன்றெனக் குவிந்து அதை அமைத்தன போலும். நீர்த்துளிகளை நதிப்பெருக்கென்றாக்கும் நெறி. புழுதிப்பருக்கைகளை மணற்புயலாக்கும் விசை. இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி ஒருகணம் திகைத்தவர்போல் நின்றனர். பீஷ்மர் தாடி மேலெழ வாயை இறுக்கி, நீள்கை சுழன்று அம்புத்தூளியைச் சென்றடைந்து மீள, தன் வில்லை இழுத்து நாண் விம்மச்செய்து நீளம்பொன்றால் பார்த்தரின் தேரை அறைந்தார். தேர்த்தூண் உடைந்து தெறித்தது. அடுத்த அம்பை ஒழிந்து தன் ஆவநாழியிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து நெற்றிமேல் வைத்து வணங்கி அதை தொடுத்தார் பாரதர். அந்த அம்பு பீஷ்மரின் காலடியில் வந்து தைத்து நின்றது. அவர் குனிந்து அந்த அம்பை பார்த்தார். மேலும் இரு அம்புகள் வந்து அங்கே தைத்து அதிர்ந்து நின்றன.

மூன்று அம்புகளால் பீஷ்மரின் காலடியை வணங்கியபின் பார்த்தர் தன் அம்புகளை விட்டார். இருவரும் உச்சநிலைப் போரை ஓரிரு கணங்களில் சென்றடைந்தனர். பீஷ்மரின் தோள்கவசம் உடைந்தது. அவருடைய தொடைக்கவசத்தின் இடுக்கில் ஒரு அம்பு சென்று தைத்தது. பார்த்தரின் தேர்மகுடம் உடைந்ததது. அவர் புரவிகளில் ஒன்று கழுத்தறுந்து விழுந்தது. அவர் நெஞ்சக்கவசம் உடைந்து தெறிக்க அம்புகளிலிருந்து தப்பும் பொருட்டு அவர் முழங்காலிட்டு தேர்த்தட்டில் புரண்டெழுந்து அடுத்த கவசத்தை அணிந்தபடி எழுந்து அவரை பார்த்தார். இருவரும் போர்புரிவதை சூழ்ந்தவர்கள் போர்நிறுத்தி கைகள் ஓய நின்று நோக்கினார்கள். அந்த அமைதியே செய்தியெனப் பரவ சூழ்ந்திருந்த படையினர் அனைவருமே போரை நிறுத்தி அவர்களை நோக்கி நின்றிருந்தனர்.

இருவரும் ஆற்றிய போர் கணம்தோறும் மேலும் மேலும் விசை கொண்டது. இரு தரப்பிலிருந்த அணுக்க வில்லவர்களும் வில் தாழ்த்தி அவர்கள் மட்டுமே போர்புரியும்படி விட்டனர். சுருதகீர்த்தி அடியிலாத ஆழமொன்றில் விழுந்துகொண்டே அதை பார்ப்பதுபோல் உணர்ந்தான். அங்கிருந்த ஓசைகள் அனைத்தும் முற்றடங்கி அவர்கள் இருவரும் விடும் அம்புகளின் உலோக ஓசை மட்டும் கேட்பது போலிருந்தது. ஓர் அறியா ஆலயத்தின் மணிஓசைபோல் அம்புகளின் கிலுக்கம் ஒழுங்குடனும் இசைமையுடனும் இருந்தது. பின்னர் அதிலொரு சிறு மாறுபாடு தோன்றலாயிற்று. வெறும் செவிகளாலேயே பீஷ்மரின் கை ஓங்குவதை உணரமுடிந்தது. கூர்ந்தபோதும் விழிகளால் அதை அறியமுடியவில்லை. பார்த்தர் பின்னடையவில்லை. அவர் கை தளரவில்லை. அம்புகளின் விசை மேலும் எழுந்தது போலவே தோன்றியது. ஆனால் செவி உணர்ந்துகொண்டிருந்தது, அவர் பின் தங்குகிறார் என்று.

ஒரு கணத்தில் இளைய யாதவர் தன் தேரை சற்றே வலப்பக்கமாக திருப்பி கைதூக்கினார். அர்ஜுனனுக்குப் பின்னாலிருந்து சிகண்டியின் தேர் முன்னால் வந்து பீஷ்மரை எதிர்கொண்டது. சிகண்டிக்கு இருபுறமும் ஷத்ரதேவனும் ஷத்ரதர்மனும் வந்தனர். சிகண்டி அம்பை இழுத்து முதல் அம்பை பீஷ்மரின் நெஞ்சை நோக்கி ஏவினார். பீஷ்மர் சற்றே வாய்திறந்து தாடை தொங்கியிருக்க உடல் நடுக்கு கொள்ள அவரை பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் தன் வில்லைத் தாழ்த்தி செயலற்று நின்றார். சிகண்டி வெறிகொண்டவர்போல் அம்புகளை இழுத்து அவர் நெஞ்சை நோக்கி அறைந்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு அம்பும் அவர் கவசங்களில் பட்டுத் தெறித்தது. கீழே விழுந்த அம்புகளை சுருதகீர்த்தி பார்த்தான். அவற்றில் உலோக முனைகள் அனைத்தும் மடங்கி கிளி அலகுகள் போலாகிவிட்டிருந்தன.

சிகண்டி தன் வெறியடங்கி தளர்ந்து மூச்சிரைத்தார். ஒரு வேள்வியை பார்ப்பவர்கள்போல பாண்டவ வீரர்கள் விழி மலைத்து நின்றிருக்க கௌரவர்கள் என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல் ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டு தேங்கி மெல்லிய அலையாகத் தெரிந்தனர். சிகண்டி தன் ஆவநாழியிலிருந்து தர்ப்பைப்புல்லின் மெல்லிய தண்டு ஒன்றை எடுத்தார். அதைத் தூக்கி உதடுகள் நடுங்க நுண்சொல் ஓதி பீஷ்மர் மேல் எய்தார். அது பீஷ்மரின் கவசத்தின் இடுக்கொன்றுக்குள் பாய்ந்து நின்றது. மேலும் மூன்று புல்லம்புகளை சிகண்டி பீஷ்மர் மேல் ஏவினார். பீஷ்மர் தள்ளாடி மெல்ல அசைய வில்லும் அம்பும் தேர்த்தட்டில் விழுந்தன.

பீஷ்மரின் பாகன் தேரைத் திருப்பி அவரை பின்னால் கொண்டுசெல்ல முயல சிகண்டியின் புல்லம்பு அவன் கழுத்தில் பாய்ந்து அவனை சரித்து நிலத்திலிட்டது. புல்லம்புகள் நரம்புமுடிச்சுகளைத் தாக்க ஏழு புரவிகளும் துடித்து அதிர்ந்து கால்தளர்ந்து தலைகள் தொய்வுற்று சரிந்தன. முகப்புக்குதிரை குருதி வழிந்த மூக்குடன் முகத்தை மண்ணில் ஊன்றியது. இரு பக்கங்களிலிருந்த புரவிகள் விலாவறைந்து நிலத்தில் விழுந்தன. தேர் அசைவிழக்க பீஷ்மர் விரித்த கைகளுடன் நின்றார்.

பார்த்தர் தன் தேர்த்தட்டில் காண்டீபம் ஒரு கையிலும் எடுத்த அம்பு மறுகையிலுமாக உடல் பதற நின்றிருந்தார். இளைய யாதவர் உதடுகளை மட்டுமே அசைத்து அவரிடம் பேசுவதை காண முடிந்தது. இளைய யாதவர் முகத்தில் உறுதியும், பின்னர் சீற்றமும், பின்னர் உச்சத்திலெரிந்த சினமும் தெரிந்தது. அவர் பிறிதொரு சொல் உரைத்து புரவியை அறைந்து தேரை முன்னெடுத்தார். அக்கணம் பார்த்தர் தன் வில்லை சற்றே தூக்கி பேரம்பொன்றை எடுத்து முழுவிசையுடன் இழுத்து பீஷ்மரின் நெஞ்சை நோக்கி அறைந்தார். பார்த்தரின் தோள்தசைகள் இறுகும் அசைவை, நரம்புகள் விம்மித் தளர்வதை, அவருடைய உளவிசை முழுக்க கைகளில் எழுந்த அம்புக்கு வருவதை கணத்துளிகளாக சுருதகீர்த்தியால் பார்க்க முடிந்தது.

நீளம்பு சென்று பீஷ்மரின் நெஞ்சக்கவசத்தை அறைந்து உடைத்து உள்ளே பதிந்து நின்றது. பீஷ்மர் தள்ளாடி பின்னடைந்தார். அடுத்த அம்பால் அதே இடைவெளியில் மீண்டும் அறைந்தார். கௌரவர்கள் தரப்பிலிருந்து பெருங்குரல் எழுந்தது. ஆனால் அவர்கள் அப்போதும் செயலிழந்து ததும்பிக்கொண்டிருந்தனர். பார்த்தர் மேலும் மேலும் அம்புகளால் பீஷ்மரை அறைந்தபடி அணுகி சென்று கொண்டிருந்தார். அணுகுந்தோறும் அம்புகள் விசை மிகுந்தன. பீஷ்மரின் நெஞ்சுக்கவசமும் தோள்கவசமும் உடைந்து விழுந்தன. அவருடைய கழுத்திலும் விலாவிலும் அம்புகள் தைத்துக்கொண்டே இருந்தன. பீஷ்மர் தேரின் பின்தூணில் சாய்ந்து நின்றிருந்தார். அம்புகள் அவருடைய கவசங்கள் அனைத்தையும் உடைத்து தெறிக்கவிட்டன. அவருடைய உடலில் அம்புகள் ஒன்று பிறிதொன்றை நாடிச்செல்வதுபோல் பாய்ந்து தைத்துக்கொண்டே இருந்தன.

பீஷ்மர் தூணில் சாய்ந்தபடியே குடை சாய்ந்த தேரில் நின்று அசைந்தார். அக்கணம் வரை செயலிழந்து நின்றிருந்த கௌரவர்களின் வில்லவர்கள் வெறிக்கூச்சலெழுப்பியபடி பாய்ந்து வந்தனர். அவர்களை சிகண்டியும் அபிமன்யூவும் எதிர்த்து வீழ்த்தினர். வில்லவர்கள் நிலையழிந்திருந்தமையால் வெற்றுநெஞ்சை காட்டுபவர்கள்போல் வந்து அம்பேற்று விழுந்துகொண்டிருந்தனர். சுருதகீர்த்தி தன் அம்புகளால் பதினெட்டு வில்லவர்களை வீழ்த்தினான். வீழ்ந்த தேர்களாலான வேலிவளைப்புக்கு அப்பால் கௌரவப் படை கூச்சலிட்டுக் கொந்தளித்தது. தொலைஅம்புகளை வானிலேற்றி வளைத்திறக்கி அவர்களை வீழ்த்தி அங்கேயே நிறுத்திக்கொண்டிருந்தான் அபிமன்யூ.

பார்த்தர் தன் அம்புகளை குறி பார்க்கவேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அணுகிவிட்டிருந்தார். அத்தனை அம்புகளும் பீஷ்மரின் உடலில் தைத்தன. உடலெங்கும் அம்புகளுடன் அவர் புரண்டு தேரிலிருந்து தொங்கினார். பார்த்தர் வெறியாட்டெழுந்தவர்போல அம்புகளை செலுத்திக்கொண்டே இருந்தார். விசைமிக்க அம்புகளால் பீஷ்மரின் உடல் தேரில் தொங்கிக்கிடந்து துள்ளியது. பின் சுழன்றபடி நிலத்தில் விழுந்து உருண்டது. அம்புகள் அவ்வுடலை அள்ளிப்புரட்ட அவர் முதுகெங்கும் அம்புகள் தைத்தன. முட்பன்றிபோல் அம்புகளால் மூடப்பட்டவராக அவர் களத்தில் கிடந்தார். குருதி ஊறி அம்புகளினூடாக வழிந்தது. அவருடைய வாய்மட்டும் அசைந்துகொண்டிருந்தது. பார்த்தர் காண்டீபத்தை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்த பின் தளர்ந்து பீடத்தில் அமர்ந்தார். இளைய யாதவர் தேரைத் திருப்பி அவரை கொண்டுசென்றார்.

பீஷ்மரை நோக்கி நின்றிருந்த கௌரவப் படையிலிருந்து சொல்லற்ற முழக்கம் எழுந்தது. எவரோ “பிதாமகர் விண்புகுக!” என்று கூவினார். அக்குரலை ஏற்று குரல்கள் எழவில்லை. “காங்கேயர் விண்புகுக! தேவவிரதர் விண்புகுக!” என்று அக்குரல் அழுகையும் ஆங்காரமுமாக மீண்டும் எழுந்தது. வெடித்தெழுந்ததுபோல கௌரவப் படை வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கியது. “பிதாமகர் விண்புகுக!” “காங்கேயர் விண்புகுக! தேவவிரதர் விண்புகுக!” பீஷ்மர் விழுந்த செய்தியை கௌரவர்களின் படைமுரசுகள் ஒலித்தன. இடித்தொடர்போல் அச்செய்தி அங்கிருந்து எழுந்து பரவி கௌரவப் படைகளெங்கும் சென்றது.

முதன்மை வீரர்கள் விழும்போது மட்டுமே ஒலிக்கும் அறுநடைத் தாளத்தைக் கேட்டு கௌரவப் படைவெளி விற்களையும் வாள்களையும் தூக்கி “பிதாமகர் விண்சேர்க! குடிமூத்தார் நிறைவுறுக! விண்வாழ்க காங்கேயர்! சாந்தனவர் விண்வெல்க! ஆபகேயர் வான்வெல்க! பரதர்ஷபர் நிறைவுறுக! தேவவிரதர் அழியா வாழ்வடைக! குருசார்த்தூலர் புகழ் எழுக! நதீஜர் பெயர் வாழ்க! தாலத்வஜர் அழிவின்மைகொள்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். கௌரவப் படையிலிருந்து எழுந்த அந்த வாழ்த்தொலி சற்று நேரத்திலேயே பாண்டவப் படையில் எதிரொலி என எழத் தொடங்கியது. சுருதகீர்த்தி திரும்பிப் பார்த்தபோது அவனைச் சூழ்ந்திருந்த வில்லவர் அனைவரும் விற்களைத் தூக்கி “வெல்க பிதாமகர்! வெல்க குருகுலோத்தமர்! குருமுதல்வர் விண்வெற்றிகொள்க! வெல்லப்படா வில்லவர் புகழ் எழுக!” என்று குரலெழுப்பத் தொடங்கினர்.

பாண்டவ கௌரவ தரப்பென்னும் வேறுபாடில்லாமல் வீரர்கள் வெறிகொண்டு தொண்டை நரம்புகள் புடைக்க கூச்சலிட்டு குதிப்பதை அவன் பார்த்தான். கண்ணீருடன் நெஞ்சிலறைந்து சிலர் அழுதனர். குனிந்து நிலத்தில் அமர்ந்து தரையை ஓங்கி அறைந்து கூச்சலிட்டனர். நோக்க நோக்க அனைத்து முகங்களிலும் இருந்த துயரவெறி அவனை பதறச் செய்தது. அவனுடைய பாகன் கடிவாளத்தை நுகக்கணுவில் கட்டி முகம் குனிந்து அழுதுகொண்டிருந்தான். தன் கண்ணீர் மார்பில் சொட்டும்போதுதான் தானும் அழுதுகொண்டிருப்பதை சுருதகீர்த்தி உணர்ந்தான். பார்த்தர் தலையை கைகளில் தாங்கி தேரில் அமர்ந்திருக்க இளைய யாதவர் தேரை பின்னுக்கிழுத்து மேலும் மேலுமென உள்ளே கொண்டு சென்றார். தன் இரு மைந்தராலும் காக்கப்பட்டு சிகண்டி படைகளுக்குள் சென்று மறைந்தார்.

bowசுருதகீர்த்தி தேரைச் செலுத்தி முன்னால் சென்று யுதிஷ்டிரரை அணுகினான். யுதிஷ்டிரர் தேர்த்தட்டில் மடியில் வில்லுடன் கைகட்டி அமர்ந்து கண்ணீர்விடுவதை பார்த்தான். நகுலன் தன் தேரில் அணுகிவந்து “போர் இனி எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும், மூத்தவரே?” என்றார். “இனி போரில்லை. இனி புவியில் நாம் கொல்வதற்கும் வெல்வதற்கும் எவருமில்லை. சென்று தலைகொடுப்போம். பெண்பழிகொண்ட அக்கீழ்மகனால் கொல்லப்படுவோம். இப்பழிக்கு நம் குலம் ஏழுமுறை முற்றழிக்கப்பட்டாலும் தகும்” என்று யுதிஷ்டிரர் கூவினார். எழுந்து வெறியுடன் அம்பொன்றை எடுத்து தன் கழுத்தை அறுக்க கைதூக்கினார். தன் தேரிலிருந்து பாய்ந்து அவர் தேரிலேறிக்கொண்ட நகுலன் அவர் கையைப்பற்றி நிறுத்தினார்.

அப்பால் புரவியில் தோன்றிய பீமசேனர் இகழ்ச்சியுடன் நகைத்து “சங்கறுத்து விழுவதென்றால் களத்தில் சென்று கௌரவர் கையால் சாகலாம். விண்ணுலகாவது எஞ்சும்” என்றார். யுதிஷ்டிரர் கைதளர உடைந்த குரலில் “மந்தா!” என்றார். “எண்ணியதை இயற்றிவிட்டோம். இனி சற்று குற்றவுணர்வும் கண்ணீரும் கொண்டு அதை கழுவுவோம்” என்றார் பீமசேனர். “பிறகென்ன செய்யவேண்டுமென்கிறாய்? இப்பழிக்கோள் நிகழ்வையே கொண்டாட வேண்டுமா?” என்றார் யுதிஷ்டிரர். “வேண்டாம். ஆனால் அழுதுகொண்டிருக்க நமக்கு நெடும்பொழுதில்லை. பிதாமகர் மறைவால் அவர்கள் வெறிகொண்டு எழுந்துவந்தால் நம் படை முற்றழியும்” என்றார் பீமசேனர்.

பாண்டவத் தரப்பிலிருந்து முதன்மைப் பெருவீரர் மண்மறைந்ததை அறிவிக்கும் முரசுகள் முழங்கத்தொடங்கின. பீமசேனர் அதை செவிகொண்டு கசப்புடன் துப்பியபடி “நம் தரப்பின் பெருவீரர் விழுந்துவிட்டாரா? யார், அபிமன்யூவா அன்றி அர்ஜுனனா?” என்றார். “மந்தா, அவர் நம் பிதாமகர். இக்களத்தில் அவர் நமக்கு எதிர்நின்றதனால் நமது பிதாமகர் அல்லாமல் ஆவதில்லை” என்றார் யுதிஷ்டிரர். பீமசேனர் “அதை நேற்று நானும் சொன்னேன். ஆனால் இன்று இக்களத்தில் அதை சொல்லமாட்டேன். இது வெற்றிக்கும் பழிநிகருக்கும் நாம் நின்றிருக்கும் குருதிவெளி” என்றபின் சுருதகீர்த்தியைப் பார்த்து “அவர்கள் எழவில்லை. உளம்சோர்ந்துவிட்டனர். ஆகவே இதுவே தருணம். இந்தச் சோர்வில் நாம் எழுந்து கௌரவரை அறைவோம். பிதாமகர் பீஷ்மர் கொன்றதற்கு இருமடங்கு வீரர்களை நாம் கொன்றாலொழிய இப்போர் நமக்கு நலம் தருவதாக திரும்பாது” என்றார்.

சுருதகீர்த்தி பேசாமல் நின்றான். தளர்ந்த குரலில் “மந்தா!” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “பிறகென்ன செய்வது? போரை நிறுத்துவதா? இன்னும் முற்பொழுதே ஆகவில்லை. இன்னும் நாம் கொன்றுகுவிக்க வேண்டியவர்கள் எஞ்சியிருக்கிறார்கள். கௌரவர்களில் எஞ்சியவர்களின் தலைகளை அறைந்துடைத்தால் நான் நிறுத்திவிடுகிறேன் போரை. என் வஞ்சம் அதுமட்டுமே” என்று பீமசேனர் சொன்னார். “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. என் புரிதல் திறனுக்கு அப்பால் சென்றுவிட்டன அனைத்தும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். சுருதகீர்த்தியிடம் திரும்பி “எழுக, மைந்தா! இன்று நமது கொலையாட்டு நிகழட்டும்!” என்று பீமசேனர் சொன்னார். “இல்லை, தந்தையே. என்னால் இனி வில் தூக்க இயலுமென்று தோன்றவில்லை” என்று சொன்னான் சுருதகீர்த்தி.

“பார்த்தீர்களல்லவா படையினர் முழுவதுமே அழுதுகொண்டிருக்கிறார்கள். இவர்களை எந்த ஆணையால் போருக்குத் திருப்புவீர்கள்?” என்றார் நகுலன். “இவர்கள் எழ வேண்டியதில்லை. என் வீரர்கள் எழுவார்கள். அவர்கள் என் உணர்வுகளன்றி பிறிதொன்றை அடையமாட்டார்கள். என்னை பின்தொடர்க! இது என் ஆணை” என்றார் பீமசேனர். சுருதகீர்த்தி பேசாமல் நின்றான். “நாம் மட்டும் போதும். இன்றே கௌரவர்களின் தலைகொய்வோம்” என்று பீமசேனர் சொன்னார். அவருக்குப் பின்னால் புரவிகளில் வந்து நின்ற சதானீகனும் சுருதசேனனும் சொல்லின்றி தலைகுனிந்தனர். “எழுக!” என்று பீமசேனர் கைவீசிக் கூவ அவர்கள் மறுகுரல் எழுப்பவில்லை.

சினம் பொங்க “கீழ்மக்களே! எளிய உணர்வுகளுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்றால் எதற்கு போருக்கெழுகிறீர்கள்? சொல்க, எவர் என்னுடன் வரப்போகிறீர்கள்?” என்றார் பீமசேனர். அப்பால் நின்ற யௌதேயன் “தந்தையே, இத்தருணத்தில் போருக்கெழுந்தால் பெரும்பழி சூடுவோம்” என்றான். “சூடிய பெரும்பழி வீணாகப் போகவேண்டாம், அது வெற்றி என்று ஆகட்டும் என்றுதான் வந்துள்ளேன். இக்களத்தில் நமக்கு அதுமட்டுமாவது எஞ்சட்டும்” என்றார் பீமசேனர். கசப்புடன் கைவீசி “ஆமாம், நீங்கள் வரமாட்டீர்கள். என்னுடன் இத்தருணத்தில் நிற்பதற்கு இருவரே உள்ளனர். கடோத்கஜனும் அபிமன்யூவும் போதும், இன்றைய பேரழிவை நான் நிகழ்த்துகிறேன்” என்றபின் பாய்ந்து புரவியிலேறிச் சென்றார்.

யௌதேயன் “ஆம், அவர்கள் இருவரும் செல்வார்கள். எத்தயக்கமும் இன்றி இத்தருணத்தில் கொலைவெறியாடி திளைப்பார்கள்” என்றான். யுதிஷ்டிரர் நீண்ட தேம்பலோசையுடன் அழத்தொடங்க அவர் மேல் பெருவெறுப்பை சுருதகீர்த்தி உணர்ந்தான். பீமசேனர் சொன்னதைவிட கடுஞ்சொற்களால் அவரை வசைபாடவேண்டுமென்று தோன்றியது. திரும்பி நோக்கியபோது சுருதசேனன் முகத்திலும் சதானீகன் முகத்திலும் அந்தக் கசப்பை கண்டான். தேரைத் திருப்பி படைமுகப்பிற்கு கொண்டுசெல்ல ஆணையிட்டான். அவன் தேர் முகப்பெல்லையை கடந்தபோது எங்கும் போர்வீரர்கள் அழுதுகொண்டும் சோர்ந்து குனிந்து அமர்ந்து உடல் விம்மிக்கொண்டும் இருப்பதை கண்டான்.

போர்முரசு முன்னணியில் ஒலிக்கத் தொடங்கியது. “பீமசேனர் எழுகிறார்! அபிமன்யூவும் கடோத்கஜனும் உடன் எழுகிறார்கள்! எழுக! போர் வெல்க! வெல்க குருகுலம்! வெல்க மின்கொடி! வெல்க அறம்!” என்று போர்முரசு கூவியது. படைவீரர்கள் திகைத்தவர்போல ஒருவரை ஒருவர் நோக்கினர். சிலர் எழுந்து முழவொலி கேட்ட திசை நோக்கி பொருளிலாது கைசுட்டினர். சில இடங்களில் வசைச்சொற்களும் கூச்சல்களும் எழுந்தன. பாகனிடம் “முகப்புக்குச் செல்க!” என சுருதகீர்த்தி ஆணையிட்டான். செல்வதற்குள் அங்கு பெரும்போர் மூண்டுவிட்டிருப்பதை ஓசைகளிலிருந்து உணர்ந்தான். “தேரை போர்முனைக்கு செலுத்துக!” என்றான். “தாங்களும் கலந்துகொள்ளப் போகிறீர்களா?” என்றான் தேர்ப்பாகன். “ஆம், வேறு வழியில்லை. இப்போரில் இனி பழியென்று எதுவும் கொள்வதற்கில்லை. தந்தை சொன்னதைப்போல் வெற்றியெனில் பழியை சற்று குறைத்துக்கொள்ளலாம்” என்றான்.

அவனுடைய தேர் படைமுகப்பிற்குச் சென்றபோது பீமசேனர் நடுவிலும் கடோத்கஜனும் அபிமன்யூவும் இருபக்கமும் நிற்க பாண்டவர்களின் படையொன்று அலைவடிவு கொண்டு எழுந்து பின்னர் நீண்டு வேல் வடிவம் கொண்டு கௌரவர்களின் படைகளுக்குள் ஊடுருவிச் சென்றுவிட்டதை கண்டான். கௌரவர்கள் முற்றிலும் எதிர்ப்பற்றவர்களாக இருந்தனர். அபிமன்யூ கௌரவப் படைவீரர்களை வெறும் மரப்பட்டை இலக்குகள் மட்டுமே என்பதுபோல் அறைந்தறைந்து வீழ்த்திக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றி விழுந்த கௌரவர்களாலான வெளி உருவாயிற்று. மறுபுறம் கடோத்கஜன் கழைகளிலும் கொக்கிக்கயிற்றிலுமாக காற்றில் பறந்து கதையால் கௌரவர் தலைகளை அறைந்து உடைத்தான். அவனைத் தொடர்ந்த இடும்பர்கள் எதிர்கொண்ட அனைவரையும் எதிர்த்து குருதிச்சேறென தெறிக்கவைத்தனர்.

கௌரவ மைந்தர்கள் கீர்த்திமானும் கீர்த்திமுகனும் நீரஜனும் நிரலனும் அபிமன்யூவால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் முட்டித் ததும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான ஆணைகள் ஏதும் எழவில்லை. காலபதனும் புசனும் தருணனும் தமனும் அதரியும் அபிமன்யூவின் அம்புகளால் வீழ்த்தப்பட்டனர். அவர்களின் இறப்பை அறிவிக்கும் பொருட்டு கௌரவர் முரசுகள் முழங்கவில்லை. பீமசேனர் தேரிலிருந்து ஊன்றுவேலில் முன்னெழுந்து சென்று கௌரவர்களின் தேர்களை அடைந்து கதையால் அறைந்து உக்ராயுதனையும் துர்விகாகனையும் பாசியையும் கொன்றார். அவர்கள் தலைசிதறி நிலத்தில் விழுந்தபோதும்கூட கௌரவர்கள் போருக்கெழவில்லை. கண்ணீர் நிறைந்த முகங்கள் நம்பமுடியாத வெறிப்புடன் பீமசேனரை நோக்கின. விட்டில்போல களமெங்கும் தாவி அவர்களின் தலைகளை அத்திகைப்பினூடாக சேர்த்து அறைந்துடைத்து தெறிக்க வைத்தார். உக்ரசிரவஸும் உக்ரசேனனும் செத்துவிழுந்தனர். விவித்சுவும் துர்விமோசனும் தேரிலேயே குருதி சிதறி விழுந்தனர்.

மேலும் மேலுமென கௌரவப் படைகளுக்குள் சென்றுகொண்டிருந்தது அவர்களின் படை. சகுனியின் முரசு விழித்துக்கொண்டு கூவத்தொடங்கியது. “அழிவு! பேரழிவு! தடுத்து நிறுத்துக! பீமனை தடுத்து நிறுத்துக!” அதைத் தொடர்ந்து திருஷ்டத்யும்னனின் ஆணை முரசொலியாக எழுந்தது. “பீமனுக்கு துணைசெல்க! கௌரவர்களை வெல்க!” சகுனியின் ஆணைகளுடன் கௌரவரும் மைந்தரும் களம்பட்டதை அறிவிக்கும் முரசொலிகள் எழுந்தன. அதைக் கேட்டதும் பாண்டவப் படையினர் எண்ணியிராக் கணம் ஒன்றில் போர்வெறி கொண்டனர். கூச்சலிட்டபடி பெருகிவந்து பீமசேனரின் படையுடன் இணைந்துகொண்டனர். அவர்களின் கூச்சல் முழக்கை கேட்டு சுருதகீர்த்தி திரும்பிப் பார்த்தான். வெறிகொண்ட முகங்களில் பற்கள் மின்னின. அவர்கள் நகைத்துக்கொண்டும் வசைகூவிக்கொண்டும் நடனமிட்டபடியும் வந்தனர்.

கௌரவ வில்லவர்களும் காலாட்களும் பாண்டவர்களால் நிரைநிரையாகக் கொல்லப்பட்டு சரிந்தனர். விழுந்த சடலங்களை ஓங்கி மிதித்தனர் பாண்டவப் படையினர். தலைகளை வெட்டித் தூக்கி வீசினர். உடல்கள் மேல் நின்று கூத்தாடினர். “உங்கள் பிதாமகரின் குருதி இது, இழிமக்களே!” என்று கூவியபடி ஒருவன் வெட்டுண்ட தலையின் குருதியூற்றை தன் தலைக்குமேல் தூக்கிப்பிடித்தான். அதை நாநீட்டி நக்கிக் குடித்தான். “உங்கள் பிதாமகர் விண்ணிலிருந்து நோக்கட்டும்! அவர் கையால் களம்பட்ட எங்கள் தோழர்கள் அங்கு நின்று ஆர்க்கட்டும்!” என்று ஒருவன் கூவினான். “கொல்க… எண்ணாது கொல்க! எஞ்சாது கொன்று கடந்துசெல்க!” அனைத்து வீரர்களும் நகைத்துக்கொண்டிருந்தனர்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74

bowபோர்முரசு ஒலிக்கத்தொடங்கியதுமே சுருதகீர்த்தி அந்நாள்வரை அத்தருணத்தில் ஒருபோதும் உணர்ந்திராத ஒரு தயக்கத்தை தன் உள்ளத்திலும் உடலிலும் உணர்ந்தான். தேரை பின்நகர்த்தி படைகளுக்குள் புதைந்துவிட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அவ்வெண்ணத்தை உடலுக்குக் கொண்டுசென்று அசைவுகளாகவோ சொல்லாகவோ மாற்ற முடியாமையினால் உறைந்ததுபோல் அவன் நின்றான். அவன் ஆணைக்கு காத்திராமலேயே தேர்ப்பாகன் தேரை முன்னணிக்கு கொண்டுசென்றான். எதிர்க்காற்றின் தண்மை அத்தனை உளச்சோர்விலும் வருடி ஆற்றும் வல்லமைகொண்டிருந்ததை எண்ணி வியந்தான். வெம்மைகொண்ட எண்ணங்களின்மீதே அது தொடுவதுபோலிருந்தது.

எதிரில் கௌரவப் படையிலிருந்து எழுந்து வந்த அம்புகள் அவனைக் கடந்து சென்றன. சில அம்புகள் அவன் தேர்த்தூண்களிலும் கவசங்களிலும் முட்டி ஒலியெழுப்பி சிதறி விழுந்தன. ஒவ்வொரு அம்பும் ஒவ்வொரு சொல்லை உதிர்த்து விழுந்தது. சலித்துக்கொண்டன, விம்மின, உறுமின, கசப்புடன் சூள்கொட்டின, சிறுமியர்போல் நகைத்தன, ஆம் என்றன, இல்லை என்றன, மேலும் என்றன, நான் நான் என்றன. அவற்றை அறியாதவன்போல் விழி மலைத்து ஒரு கையில் வில்லும் மறுகையில் எடுத்த முதல் அம்புமாக அவன் அசைவழிந்து நின்றான். தேரின் அசைவுகளுக்கேற்ப அவன் உடல் கட்டித்தொங்கவிடப்பட்ட அணிப்பட்டம்போல் திரும்பியது.

வழக்கம்போல ஓரிரு கணங்களுக்குள்ளேயே போர் முற்றாக மூண்டுவிட்டிருந்தது. போர் மூண்ட ஒருகணத்துக்குப் பின் நோக்குகையில் அப்போர் நெடுநாட்களாக அதே விசையுடன் அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பதுபோல் தோன்றும் விந்தையை அவன் பலமுறை உணர்ந்திருந்தான். அவ்வண்ணமெனில் அதற்கு முந்தைய கணம் வரை அப்போர் எங்கோ நிகழ்ந்துகொண்டிருந்திருக்கிறது. அவர்களின் உள்ளத்தில், கனவுகளில் அது அறுபடுவதே இல்லை. அது ஏதோ வடிவில் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. “போருக்கும் காமத்துக்கும் எவருக்கும் பயிற்சி தேவைப்படுவதில்லை” என்ற கிருபரின் சொல் குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவன் நினைவில் ஒலித்துக்கொண்டிருந்தது. “ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திற்குள் காமத்தையும் போரையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். புணராப் பெண்களாலும், கொல்லப்படாத எதிரிகளாலும் ஆனது ஆண்மகனின் அகம்.”

அவன் சூழ நோக்கிக்கொண்டு தேரில் நின்றான். ஒவ்வொருவரும் அதற்கு முன்பு முகத்திலோ உடலிலோ இல்லாதிருந்த வெறியை கொண்டுவந்து நிறைத்திருந்தார்கள். கூச்சலிட்டபடி, வசைபாடியபடி, இளிவரலாடியபடி, வெறியுடன் பற்களை நெரித்தபடி அம்புகளை தொடுத்தனர். கதைகளைச் சுழற்றி எதிரியை அறைந்தனர். நீள்வேல்களை உடல் வளைத்து வீசினர். உழலைத்தடிகளையும் கொக்கிக்கயிறுகளையும் நீள்பிடிக் கோடரிகளையும் கொண்டு போரிட்டனர். ஒவ்வொரு முறை படைக்கலமெழுகையிலும் அவர்களின் முகத்தில் குவிந்த வெறுப்பை, அப்படைக்கலம் சென்றடைந்தபோது மின்னிச்சென்ற களிப்பை நோக்கி நின்றபோது அந்த முகங்களை முன்னர் கண்டதே இல்லை என்று தோன்றியது. மென்மயிர்த் தோலை உரித்தகற்றி வெற்றுத்தசை தெரிய கிடத்தப்பட்டிருக்கும் வேட்டைவிலங்கு போலிருந்தது மானுடம் அங்கே.

சற்று நேரத்திற்குப் பிறகே பாகன் அவன் போரிடவில்லை என்பதை தெரிந்துகொண்டு “இளவரசே!” என்றான். அக்குரலால் அவன் திகைத்து “செல்க!” என்று ஆணையிட்டான். தேர் போர்முகப்பின் கொந்தளிப்புக்குள் நுழைந்ததும் அவன் தன் வில்லை நிலைநிறுத்தி நாணிழுத்து அம்புகளை ஏவத் தொடங்கினான். அந்த அம்புகளால் உயிரிழப்போர் அறிக, அவை அவ்வாறு எண்ணப்படவில்லை! அவற்றை தொடுத்தவன் கொலையாளி அல்ல. அவன் தோள்கள் முன்னோர்களால் எப்போதோ முடுக்கப்பட்ட கைவிடுபடைகள். அவர்களின் வஞ்சம் தலைமுறைகளாக தசைகளில் காத்திருந்தது. கண்களும் கைகளும் ஒத்திசைந்தன. பாகனும் தேரும் அதில் இணைந்தனர். அவன் அந்த நடனத்தில் முற்றிலும் கலந்தான். முழுமையாகவே தன்னை இழக்கையில் அடையும் விடுதலையில் அலைகொண்டான்.

ஒவ்வொரு முறையும் தோள் இறுகி அம்பு நெகிழ்கையில் தன்னுள்ளிருந்து ஒன்று வெளியேறுவதை உணர்வதுண்டு. எவரிடமோ எதையோ சொல்லிவிட்டதுபோல். அடுத்த அம்பை எடுக்கையில் அதற்குரிய நுண்சொல்லை உரைத்து அதில் தன்னுள்ளத்தை ஏற்றுகையில் அச்சொற்களினூடாக அத்தருணத்தில் தன் அகம் வடிவெடுப்பதை உணர்வதுண்டு. போர் அதன் அத்தனை இழப்புகளுடனும் அத்தனை வெறுமையுடனும் வெறும் களியாட்டென்றே அவனுக்கு தோன்றியது. ஒவ்வொரு நாளும் போருக்கெழுகையில் வெறுமையும், போர்முடிகையில் நிறைவும், பின்னிரவில் தனிமையும் துயரும், காலையின் முதல் விழிப்பில் ஊக்கமும் எதிர்பார்ப்பும் என அவன் அகம் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

அன்று உணர்ந்த முழு முற்றான அயன்மையை ஒருபோதும் உணர்ந்ததில்லை. அது அவன் கைகளில் எடையென ஏறி அமர்ந்திருந்தது. அவன் உள்ளத்தில் ஒவ்வொரு சொல்லும் தன்னை பிசின்போல் பற்றியிருந்த சொல்லின்மையிலிருந்து பிதுங்கி வெளிவர வேண்டியிருந்தது. அம்புகளுக்குரிய நுண்சொற்களில் ஒன்றைக்கூட அவன் முழுமையாக சொல்லவில்லை. வெற்றுப் பயிற்சியினால் அவன் அம்புகளை ஏவிக்கொண்டிருந்தான். போருக்கு வெற்றுப் பயிற்சியே போதும் என அவன் அறிந்தான். பயிற்சி என்பது ஒவ்வொன்றிலும் இருந்து உள்ளத்தை விடுவிப்பது. உள்ளம் அனைத்தையும் உதறி வேறெங்கோ திளைக்க செயலாற்றுவது.

போர் மூண்டதுமே பீஷ்மரும் அர்ஜுனரும் வெவ்வேறு இலக்குகளை தங்களுக்கென தெரிவு செய்துகொண்டனர். பீஷ்மர் திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் எதிர்த்துக்கொண்டு அம்புகளால் அவர்களை அறைந்து அணுஅணுவாக பின்னடையச் செய்தபடி வலப்பக்கம் சென்றுகொண்டிருந்தார். இடப்பக்கம் பூரிசிரவஸையும் ஜயத்ரதனையும் அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தார் பார்த்தர். தந்தையின் பின்படையாக அமைந்த வில்லவர் வளையத்தின் வலது எல்லையில் சுருதகீர்த்தி நின்றிருந்தான். மறு எல்லையில் சுருதசேனன் அமைந்திருந்தான். அதற்கு அப்பால் அபிமன்யூ சல்யரை எதிர்கொண்டான்.

போர் விசைகொண்டபோது தந்தையும் பீஷ்மரும் எதிர் திசைகளில் முன்னேற ஒரு மாபெரும் வட்டம் சுழல்வதாகத் தோன்றியது. படைகளை அவர்கள் தங்களுடன் இழுத்துச்சென்றார்கள். புயலின் சுழி. சுழியே விசையின் மையம். ஆனால் அது தான் நிகழ்வதை அன்றி எதையும் நிகழ்த்துவதில்லை, விளிம்புகளுக்கு அப்பால் தன்னில் ஆழ்ந்திருக்கிறது. அதன் நடுவே இருந்த வெற்றிடத்தில் விசையொன்று திரள்வதாக. அங்கே எதுவோ ஒன்று வந்தமர்வதற்கான பீடம் ஒருங்குகிறது. அவன் உள்ளம் அவ்வெண்ணத்தால் பதைப்பொன்றை அடைந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் அணுகிக்கொண்டும் இருக்கிறார்கள். மெல்ல இவ்வட்டம் சிறிதாகும். அதன் மையத்தில் அது நிகழும்.

அக்கணம் உருவான மெய்ப்புக்குளிர் அவனை சிலகணங்கள் வில் தாழ்த்த வைத்தது. எத்தனை தெளிவாக இதை உணர முடிகிறது! இன்று அது நிகழும்! அம்புகளால் எதிரிலிருந்த கௌரவத் தேர்வில்லவர்களை மீண்டும் மீண்டும் அடித்து பின்னடையச் செய்துகொண்டிருக்கும்போது அவன் உள்ளம் பீஷ்மரிலும் பார்த்தரிலுமே மாறி மாறி சென்றுகொண்டிருந்தது. பின்பொரு கணத்தில் எதிர்பாராதபடி நெஞ்சில் கூரிய ஈட்டியால் குத்தப்பட்டதுபோல் அவன் சிகண்டியை நினைவு கூர்ந்தான். பார்த்தருக்குப் பின்புறம் சென்ற தேரில் சிகண்டி அத்தேரால் சற்றே மறைக்கப்பட்டதுபோல் நின்றிருந்தார். அவர் முழு விசையுடன் போர்புரியவில்லை என்பது தெரிந்தது. தந்தையும் முழு விசையுடன் போர்புரிகிறாரா என்பது ஐயமாகவே இருந்தது.

அவன் பீஷ்மரை திரும்பிப்பார்த்தான். அவரும் முழு விசையுடன் போர்புரியவில்லை. விஞ்சுவதில்லாது நன்கறிந்ததும், ஒவ்வொரு நாளும் பயில்வதும் சலிப்பூட்டுவதுமான ஒரு செயலை உளமொன்றாது இயற்றுவது போலிருந்தார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் போலும். அருகிருந்த வில்லவனின் விழிகளை அவன் பார்த்தான். அவன் பீஷ்மரை நோக்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. திரும்பி இன்னொருவனை பார்த்தபோது அவனும் பார்த்தரை நோக்கிவிட்டு பீஷ்மரை பார்ப்பதை அறிந்தான். அது உளமயக்கா என்று எண்ணினான். அங்கிருந்த அனைத்துப் படைவீரர்களும் இளைய பாண்டவரையும் பீஷ்மரையுமே மாறி மாறி நோக்கிக்கொண்டிருந்தார்கள்.

அந்தப் பொழுது வந்தணையவிருக்கிறது. இன்று அந்திமுரசு ஒலிப்பதற்குள். அல்லது இன்னும் சற்று நேரத்தில். ஒருவேளை அடுத்த கணமே. ஒவ்வொரு கணமுமென போரை நிகழ்த்தியபடி அதை எதிர்பார்த்திருந்தான். பீஷ்மரால் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் மேலும் மேலும் பின்னடைய அவர் பாண்டவப் படைகளுக்குள் புகுந்து ஊடுருவிச் சென்றார். பூரிசிரவஸ் பார்த்தரின் அம்பு இடையில் தைக்க தேரில் மல்லாந்து விழுந்தான். அவனுடைய கால்குறடு தெறித்தது. அவன் தேர்ப்பாகன் தேரை பின்னெடுத்துச் செல்ல அங்கு கிருபர் தன் அம்புகளுடன் வந்தார். வருகையிலேயே அம்புகளால் அறைந்து காற்றையே முள்வேலியாக்கியபடி அணுகினார்.

பார்த்தரின் விசை மட்டுப்பட்டது. அவருடைய இடப்பக்கம் நின்றிருந்த வில்லவன் அலறி விழுந்தான். மீண்டும் மீண்டுமென துணைவில்லவரை அறைந்து வீழ்த்திக்கொண்டே இருந்தார் கிருபர். பார்த்தரின் நோக்கு அரைக்கணமேனும் அதை நோக்கி திரும்புமென்றால் அவர் அம்பு வந்து அறையும் என்று தெரிந்தது. ஆனால் தந்தையின் விழி கிருபரிலேயே நிலைகொண்டிருப்பதை சுருதகீர்த்தி கண்டான். கிருபரிலல்ல, அவர் விழிகளில். அவர் விழிகளிலும் அல்ல, அவருள் உறையும் சித்தத்தின் கூர்முனையில். அரைவிழி மூடியது போலிருந்தன இளைய யாதவரின் கண்கள். அவர்கள் அங்கே ஊழ்கத்திலென திகழ்ந்தனர்.

சுருதகீர்த்தி தந்தையின் வலப்பக்கம் சென்று ஜயத்ரதனை இடைவிடாத அம்புகளால் அறைந்து அவனை தன்னை நோக்கி திரும்ப வைத்தான். பார்த்தர் கிருபரை அம்புகளால் அறைந்து நிலைக்கச்செய்து பின்னர் மெல்ல மெல்ல புறம் தள்ளத்தொடங்கினார். மீண்டும் பார்த்தரின் வில்லவர் படை கௌரவப் படைக்குள் புகுந்து உள்ளே சென்றது. உருகும் மெழுகை கொதிக்கும் இரும்புக்கழி என கௌரவரை இருபுறமும் அகற்றி இளைய யாதவர் செலுத்திய தேர் முன்னால் சென்றது. ஜயத்ரதன் தன்னை பார்க்கவில்லை என்பதை சுருதகீர்த்தி உணர்ந்தான். அவன் நோக்கு பார்த்தரிலும் அப்பால் எங்கோ தெரிந்த மீன் கொடியிலுமே இருந்தது. எப்படி இது அனைத்தும் அனைவருக்கும் தெரிகிறது? எவரேனும் ஒருவர் உணர்ந்து பிறருக்கு சொல்லியிருக்கலாம் என்றாலும் ஒரு படை முழுக்க இது பரவுவது எளிதா?

முதலில் அவன் உடலில் கோள்மயிர் உருவாகியது. பின்னரே அவன் அந்த எண்ணத்தை அடைந்தான். முந்தையநாள் கனவில் அவர்கள் அனைவரும் அதை பார்த்திருக்கக்கூடும். அங்கு நிகழ்ந்த ஒவ்வொரு பெருநிகழ்வையும் அத்தனை வீரர்களும் எவ்வாறோ முன்னுணர்ந்திருந்தனர். முன்னரே நிகழ்ந்த ஒன்று மீண்டும் நிகழ்வதுபோல் அப்போர் என்று வெவ்வேறு முறை எளிய வீரர்களும் தேர்வலரும் அவனிடம் கூறியிருந்தனர். தாங்கள் அன்று இறப்போமெனும் உட்சொல் எழாது எவரும் அக்களத்திற்கு வரவில்லை. ஆகவே மீண்டு செல்கையில் எவருக்கும் உயிரோடிருப்பதன் திகைப்பு ஏற்படவில்லை. ஒருநாள் ஈட்டப்பட்டது என்னும் உவகை மட்டுமே இருந்தது.

கடோத்கஜன் துரியோதனனுடனும் துச்சாதனனுடனும் போர்புரிந்துகொண்டிருக்கும் செய்தியை முரசுகள் அறிவித்தன. பீஷ்மரின் முன்னிருந்து திருஷ்டத்யும்னன் விலகி மைய ஆணைமாடத்திற்குள் சென்றான். பீஷ்மரை செறுக்க சுருதசேனனும் சுதசோமனும் சென்றனர். “பீஷ்மரை சென்று தடுத்து நிறுத்துக… இனிமேலும் அவர் நம் படைக்குள் செல்லலாகாது” என்று அபிமன்யூவுக்கு திருஷ்டத்யும்னனின் ஆணை வானில் ஒலித்தது. அந்தப் போரில் மீள மீள நிகழ்வதொன்றே. எவருக்கு எவர் இணை, எத்தனை பேரை சேர்த்தால் எவர் நிகர் என்ற கணக்குகள். ஒரு மாபெரும் துலாத்தட்டில் மாறி மாறி வீரர்களை அள்ளி வைத்து அதன் முள் நடுங்கி இருபுறமும் ஆடுவதை பார்த்துக்கொண்டிருத்தல்.

பீஷ்மருக்கு எவரும் இணையல்ல என்று உணர்ந்தமையால் பாண்டவப் படையின் வெவ்வேறு வீரர்களை அவருக்கு முன் அள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு நிறைகொண்டு அவர் கடந்துசென்றார். ஒருபக்கம் வெல்லமுடியாதவர், நிகரற்றவர் என்று தெரிந்துகொண்டே இருந்தாலும் எங்கோ அவர் சரிகிறார் என்ற எண்ணமும் இருந்தது. மீண்டும் அவன் ஏதோ ஒன்றில் உளம்முட்டிக்கொள்ள திடுக்கிட்டு எண்ண ஒழுக்கை திருப்பிக்கொண்டான்.   நின்று துள்ளுவதை அவன் திகைப்புடன் பார்த்தான். “வில்லவர்களை வீழ்த்துக! சூழ்ந்துகொள்ளலை உடைத்துச்செல்க!” என முழவுகள் ஆணையொலித்தன.

திருஷ்டத்யும்னனின் முரசு துடிப்பு கொண்டது. “செறுத்து நிறுத்துக! பிதாமகர் பீஷ்மரை செறுத்து நிறுத்துக! பிதாமகர் வெறி கொண்டிருக்கிறார்! முழு விசையை அடைந்துள்ளார்! நம் படையின் தேர்ந்த வில்லவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை தடுத்து நிறுத்துக!” என்று ஒலித்தது. சுருதகீர்த்தி திகைத்து திரும்பிப் பார்த்தான். முழவோசை அவனுக்கான ஆணையை ஒலித்தது. “சுருதகீர்த்தி பீஷ்மரை நோக்கி செல்க! சுருதகீர்த்தி பீஷ்மரை நோக்கி செல்க!” அவன் பாகனிடம் “பிதாமகரை நோக்கி!” என்றான். அவன் சொல்வதற்கு முன்னரே தேரைத் திருப்பி படைகளினூடாக பீஷ்மரை நோக்கி கொண்டுசென்றான் பாகன்.

பிதாமகர் பீஷ்மர் சலித்த, ஆர்வமற்ற நிலையிலிருந்து அனல்பட்ட களிறு அலறி விசைகொள்வதுபோல் கொலைவெறி அடைந்திருந்தார். தொலைவிலேயே அவரது தேர் சென்ற தடத்தை பார்க்க இயன்றது. தேர்கள் உடைந்து சிதறிக்கிடந்தன. விண்ணிலிருந்து உதிர்ந்தவைபோல நிலம் முழுக்கப் பரவி வில்லவர்களின் உடல்கள் கிடந்தன. சிதறல்களே எஞ்சியிருந்த நெடுஞ்சாலை. அங்கிருந்த ஒவ்வொன்றிலும் அவருடைய எழுந்த பெருஞ்சினத்தை நோக்க முடிந்தது. நோக்க நோக்க அவன் நெஞ்சு அச்சத்திலும் வியப்பிலும் பதறத் தொடங்கியது. ஒற்றை வீரர் தன் ஆற்றலால் அவ்வளவு பெரிய அழிவை உருவாக்க முடியுமா? எனில் அவருள் எத்தனை பெரிய சீற்றம் எழுந்திருக்கவேண்டும்? ஊனுடலுக்குள் அத்தனை அனலெழுந்தால் தாங்குமா?

முதல்நாள் முதல் பீஷ்மர் பாண்டவப் படைகளில் பேரழிவை உருவாக்கிக்கொண்டுதானிருந்தார். என்றும் அவர் வில்கொண்டுசென்ற தடம் தெளிந்தே தெரிந்தது. ஆனால் அன்று உருவாக்கிய அழிவுக்கு இணையே இல்லை என்று தோன்றியது. அவர் ஒருவரையும் எஞ்சவிடவில்லை. பலர் பின்னடைகையில் கொல்லப்பட்டிருந்தனர். பலர் முதுகில் அம்பு தறைத்துச் சரிந்திருந்தனர். எளிய காலாள்படையினர். பயிலாத இளமைந்தர். அஞ்சியமைந்த முதியோர். அத்தனை முகங்களிலும் திகைப்பு இருப்பதுபோல அவனுக்குப் பட்டது. பீஷ்மர் உருவில் பிறிதொரு தெய்வம் எழுந்திருக்குமா என்ன? எட்டுத் தெய்வங்கள் குடிகொண்டது அவர் உடல் என்பார்கள். எட்டுத் தெய்வங்களும் அகன்ற பீடத்தில் எழுந்தருளியதா ஏழாமுலகத்து இருள்தெய்வம்?

“சூழ்ந்துகொள்க! பிதாமகரை சூழ்ந்துகொள்க! தடுத்து நிறுத்துக! காலாட்படையினரும் பிறரும் அவர் முன்னிலிருந்து விலகுக! அவர் அம்புகளின் எல்லைக்குள் கவசமணிந்த வில்லவர் மட்டுமே நின்றிருக்கவேண்டும்!” என்று திருஷ்டத்யும்னனின் ஆணை வந்துகொண்டிருந்தது. அவன் பீஷ்மரை சென்றடைந்தான். பீஷ்மரின் கைகளின் விசையை அவன் எப்போதுமே வியந்துதான் நோக்குவான். அன்று அவர் விழிதொட முடியாத விரைவுகொண்டிருந்தார். ஆனால் அவரிடம் எப்போதுமிருக்கும் நடன இசைவு அகன்றிருந்தது. சுழலியால் அலைமோதிக்கொண்டிருக்கும் மரம் போலிருந்தார்.

பீஷ்மரின் முன்னிருந்து சதானீகன் அம்புபட்டு விழுந்து தேரில் பின்னடைந்தான். சுருதசேனனின் தேர் உடைந்தது. அவனை தேடிவந்த அம்புகளிலிருந்து காக்க பாகன் தேரை திருப்பினான். சுருதசேனன் நிலைசாய்ந்து அம்புடன் எழுவதற்குள் அவனை பீஷ்மரின் அம்புகள் தாக்கி தேரிலிருந்து அப்பால் விழச் செய்தன. பிரதிவிந்தியனை பீஷ்மரின் அம்புகள் தாக்குவதற்குள் நாணொலியுடன் அபிமன்யூ பீஷ்மரை தன் அம்புகளால் எதிர்கொண்டான். சுருதகீர்த்தி மறுபுறம் சென்று பீஷ்மரை தாக்கினான். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் களத்திற்கு வந்தனர். நால்வரும் நான்கு திசைகளிலிருந்து அவரைத் தாக்க பீஷ்மர் தன் தேர்த்தட்டில் நின்றபடியே சுழன்று அவர்கள் அனைவரின் அம்புகளையும் தடுத்தார்.

அவர்களால் பீஷ்மரை அம்புகளால் தொடவே முடியவில்லை. அவருடைய அம்புகளிடமிருந்து தங்களைக் காக்கவே அவர்கள் போராட வேண்டியிருந்தது. அம்புகளின் வடிவுக்கும் வகைமைக்கும் எவ்வொழுங்கும் இருக்கவில்லை. மலையிடிந்து சரிவதுபோல பெரும்பாறைகளும் கூழாங்கற்களுமென அவை பெய்தன. கட்டற்ற வெறிக்கு இயற்கைவல்லமைகளின் ஆற்றல் அமையும் என்பதை சுருதகீர்த்தி கண்டான். புயலையோ காட்டுநெருப்பையோ எதிர்கொள்வதுபோல இயலாததுதான் அது. அத்தனை ஆற்றலையும் அள்ளி வீசுவது, வெடித்தெரிந்து அணைவது. ஆகவே நெடும்பொழுது இவ்விசை நீடிக்காது. இது அணையும். ஓயும். வேறுவழியே இல்லை. பயிற்சியும் இசைவும் ஆற்றலை வீணாக்காது வெளிப்படுத்துவதற்கே. இது மதகுத்திறப்பல்ல, கரையுடைப்பு. இதோ முடிந்துவிடும். அதுவரை நின்றிருக்கவேண்டும். அது ஒன்றே இலக்கு.

வில்லவர்கள் பீஷ்மரின் அம்புகள்பட்டு ஓசையின்றி விழுந்தனர். ஒற்றை நாணில் ஏழு அம்புகளை, பன்னிரு அம்புகளை, இருபத்துநான்கு அம்புகளை அவர் செலுத்தினார். தேர்த்தட்டில் காற்றுச் சகடையென நோக்கற்கரிய விசையில் அவர் சுழல்வதாகத் தோன்றியது. இருபத்துநான்கு அம்புகளை ஒற்றை நாணிலிழுத்து முழு விசையில் சுற்ற அவை ஒவ்வொன்றும் தனித்தனியான திசையும் இலக்கும் கொண்டிருப்பதை முதன்முறையாக அவன் பார்த்தான். ஒரு வீரன் அவ்வாறு களத்தில் போரிட்டிருக்கிறான் என்பதை கதையில் சூதன் சொன்னால் அக்கணமே சிரித்து கைவீசி அவன் அதை புறக்கணித்திருப்பான். போரென்பது எப்போதுமே மானுட எல்லைகளின் உச்சமென்பதனால் எல்லாச் செயல்களும் அருஞ்செயல்களே என்பார்கள். அருஞ்செயல்களின் எல்லையை எப்போதும் புதிய மானுடன் ஒருவன் வந்து கடக்கிறான். அதிமானுடர்கள் உருவாகும் களம் இது. ஆயினும் அது நம்புவதற்கு அரியதாக, நோக்கி அறிகையிலேயே இயல்வதல்ல என்று தோன்றியது.

பீஷ்மரின் அம்புகள் அவன் தேரிலும் கவசங்களிலும் அறைந்தன. சீழ்க்கை ஓசையிட்டபடி அவனைக் கடந்து சென்றன. சிற்றம்புகளின் பெருந்தொகையை அனுப்பி அவற்றால் படைவீரர்கள் நிலையழிந்திருக்கையில் விழிதொடமுடியாத விசையில் பேரம்பொன்றை எடுத்து முன்னரே இலக்குதேரப்பட்ட வீரன் ஒருவனின் நெஞ்சைப் பிளந்து வீழ்த்துவது அவரது போர்முறையாக இருந்தது. அவர் முன் சரிந்து விழுந்த தேர்களும் உடல்களுமே அவருக்கான கோட்டைக் காப்பென ஆயின. அந்த எல்லை விரிந்து அகலுந்தோறும் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் அனுப்பிய அம்புகள அவரை சென்றடைய இயலவில்லை. ஆனால் அவர் அனுப்பிய அம்புகள் வந்து அவர்களின் அணுக்க வில்லவர்களை ஒவ்வொருவராக வீழ்த்தின.

அவரது கை தன் கையைவிட ஒருமடங்கு நீளம் மிகையானது. தன்னைவிட ஒருமடங்கு உயரமானவர். அவர் வில் அவரைவிட மிகப் பெரியது. ஆகவே அவர் இழுத்து நாணேற்றுகையில் எறிவேலைவிட நீளம் கொண்டிருந்தது அம்பு. அவருக்கும் பிறருக்குமான இடைவெளியைக் கடந்துவந்து தாக்குகையில் முழு விசையுடன் அது இருந்தது. அவன் அனுப்பிய அம்புகள் அனைத்தும் அவரை அடைவதற்குள்ளாகவே விசையழிந்து வளைந்து நிலம்பட்டன. அல்லது தளர்ந்தவைபோல் அவர் காலடியில் சென்று விழுந்தன.

அவரை எவ்வகையிலும் தடுக்க இயலாதென்று அவன் உணரத்தொடங்கினான். அவரது கைகளின் நீளம் அல்ல, அம்புகளின் அளவுமல்ல, அவையென வெளிப்படும் பிறிதொன்று அங்கே நின்றிருந்தது. அவர்கள் அனைவரையும்விட மிகப் பெரியது. எவ்வகையிலும் எதிர்கொள்ள முடியாதது. அணுகுதலே இயலாது. இந்த நெடிய உடலில் எழுந்திருக்கும் அது தனக்குரிய உடலொன்றை உருவாக்கிக்கொண்டது. எத்தனை பொங்கியிருந்தால் இமையம் தனக்கென அத்தனை பேருடலை கொண்டிருக்கும் என்னும் கவிச்சொல் நினைவிலெழுந்தது. அணுகவே முடியாது. ஆம், ஒருவேளை கொன்று வீழ்த்தினாலும் வெல்லமுடியாது.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73

bowசுருதகீர்த்தி பிரதிவிந்தியனின் பாடிவீட்டை அடைந்தபோது அங்கு சதானீகனும் சுதசோமனும் இருந்தனர். கவச உடையணிந்திருந்த அவன் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு சிறிய பெட்டி மேல் அமர்ந்து ஏவலன் கவசங்கள் அணிவிக்க முழங்கையை கால்மடித்த முட்டுகளில் ஊன்றி நிலம் நோக்கி அமர்ந்திருந்த பிரதிவிந்தியனை அணுகி “வணங்குகிறேன், மூத்தவரே” என்றபின் அப்பால் கைகட்டி நின்றிருந்த சுதசோமனை நோக்கி “சுருதசேனன் வரவில்லையா?” என்றான். “இல்லை” என்று சுதசோமன் தலையசைத்தான்.

சுருதகீர்த்தி திரும்பிப்பார்க்க அப்பால் நின்ற ஏவலன் வந்து மென்மரத்தாலான பெட்டியை அவன் அமரும்பொருட்டு வைத்தான். அவன் அமர்ந்துகொண்டு “வரும் வழியெங்கும் கெடுநாற்றம் வீசுவதுபோல் உணர்ந்தேன்” என்றான். “ஏன்?” என்று பிரதிவிந்தியன் விழிகளைத்தூக்கி கேட்டான். “வீரர்கள் நேற்று இரவு முழுக்க களியாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். துயின்று எழுந்த பின்னரும் அதே உளநிலை நீடிக்கிறது” என்றான். “அதனால் என்ன?” என்றான் பிரதிவிந்தியன். சுருதகீர்த்தி “கீழ்மை!” என்றான். “அது எப்போதுமுள்ளதுதானே?” என்றான் பிரதிவிந்தியன்.

“மூத்தவரே, நேற்று அவர்கள் அந்த உளநிலையில் இருந்ததை அகிபீனாவின் வெறியென்றோ போருக்குப் பிந்தைய உளச்சோர்விலிருந்து வெளிவரும் முயற்சியென்றோ சொல்லலாம். அது அவர்களிடமில்லை. அத்தருணத்தில் அவர்கள் மேல் கூடும் தெய்வங்கள் மண்ணின் ஆழத்திருலிருந்தும் இருளுக்கு அப்பாலிருந்தும் வருபவை. ஆனால் துயின்றெழுந்து படைக்கலம் அணிந்துகொண்டிருக்கும் அவர்கள் இன்று கொண்டிருக்கும் உணர்ச்சி அவர்களுடையதேதான்” என்றான் சுருதகீர்த்தி.

சுதசோமன் “அவர்கள் உள்ளிலிருந்தும் பேய்த்தெய்வங்கள் எழுந்து வரலாம்” என்றான். அவனை வெறுமனே நோக்கியபின் எரிச்சலுடன் “சென்று சற்று சுற்றி பாருங்கள். அவர்களின் சொற்களை செவிகொள்ளுங்கள். இந்த மூன்று யுகங்களின் மானுடம் இங்கு படைத்துள்ள அனைத்து நெறிகளும், அனைத்து அறங்களும், அத்தனை அழகுகளும், மேன்மைகளும் இடிந்து சரிந்து கிடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஒன்றும் மிச்சமில்லை. தாய் என்றும் மனைவியென்றும் மகளென்றும் பாராத நிலை என்று பேச்சுகளில் கேட்டிருக்கிறேன், இங்குதான் செவிகளால் அறிந்தேன்” என்றான்.

தலையை மீண்டும் உலுக்கி “எண்ணிச் சென்றடையாத கீழ்மை. எத்தனை ஆழங்களுக்கு மனித உள்ளத்தால் சென்றடைய முடிகிறது! மூத்தவரே, அத்தனை ஆழங்களுக்குச் சென்றாலும் மனிதனுக்கு சொல்லுக்கு பஞ்சம் ஏற்படுவதில்லை. அவையனைத்தையும் அவன் எங்கோ ஏற்கெனவே சொல்லாக்கி சேர்த்திருக்கிறான் என்று பொருள். அடுக்கடுக்காக செல்லும் பாதாளக் கரவறைகளில் நிறைந்துள்ளன அவன் ஒருபோதும் வெளியே எடுத்து நோக்கியிராதவை. அழுக்குகள், அழுகல்கள், நஞ்சுகள்” என்றவன் கண்களை மூடிக்கொண்டு “புழுக்களும் மலமும் சீழும் மலைமலையாக கொட்டிக்கிடப்பதுபோல்… அவை பேராறுகளாக ஓடுவதுபோல்” என்றான்.

சுதசோமன் “மேன்மைகளில் அவ்வளவு உச்சத்திற்கு உள்ளம் சென்று சொல்லை அடையமுடியுமெனில் அதே விசை ஊசலின் மறுமுனைக்கும் இருக்குமல்லவா?” என்றான். “உங்கள் கசப்பை பங்கிட நான் இங்கு வரவில்லை, மூத்தவரே” என்றான் சுருதகீர்த்தி. “பின் எதற்காக வந்தாய்? அவருடைய நூலறிவை பங்கிடவா? எந்த நூலறிவனும் சில ஆயிரம் பக்கங்களை புரட்டிவிட்டால் எஞ்சுவது இதே கசப்புதான்” என்று சுதசோமன் சொன்னான். “மந்தா, அவனை பேசவிடு” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் “நான் தேர்கள் ஒருங்கியுள்ளனவா என்று பார்க்கிறேன்” என்று கவசங்கள் உரசியும் குலுங்கியும் ஒலிக்க கிளம்பிச் சென்றான்.

சுருதகீர்த்தி “இவர்கள் யார், மூத்தவரே? இவர்கள் அல்லவா எழவிருக்கும் புதிய வேதத்தின் பொருட்டு போர்புரிபவர்கள்? புத்துலகை ஆக்கும் நெறிகளை இங்கு நிறுவப்போகிறவர்கள்? இத்தனை கீழ்மைகளிலிருந்தா அது முளைக்கும்?” என்றான். பிரதிவிந்தியன் “இரு ஒப்புமைகளை நூல்களிலிருந்து எடுத்து நான் சொல்ல முடியும். இளையோனே, சீழும் குருதியும் கலந்த கருப்பையிலிருந்தே குழவி எழுகிறது. மட்கி அழுகும் சேற்றிலிருந்தே தாமரை முளைத்து மேலெழுகிறது” என்றான். “எந்த ஒப்புமைகளும் இதற்கு பொருந்தாது” என்று சுருதகீர்த்தி சொன்னான். “ஒப்புமைகளைக்கொண்டு விளையாடத் தொடங்கினால் முடிவே இல்லை.”

“ஒப்புமைகளைப் பற்றி கல்லாதவர்களிடம் ஒரு ஒவ்வாமை இருக்கிறது. அது வெறுமனே கற்றோரின் வெற்று உளப்பயிற்சி என்றும், கற்பனையின் விளையாட்டென்றும் எண்ணுகிறார்கள். இளையோனே, இப்புவியில் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடத்தக்கவை என்பதிலேயே உண்மை ஒன்று ஒளிந்துள்ளது. ஓர் உளநிகழ்வையோ புவிநிகழ்வையோ பொருட்களால் ஒப்புமைப்படுத்திவிட முடியுமென்பதுதான் மானுட அறிதலுக்கு இறை அளித்துள்ள ஒரே வாய்ப்பு. இப்புவியையும் மானுட உள்ளத்தையும் விண்நிறைந்த பிரம்மத்தையும் அறிந்துகொள்வதற்கு ஒப்பிடுவதன்றி வேறுவழியில்லை. பிரம்மம் என்பதே ஒரு மாபெரும் ஒப்புமை மட்டுமே” என்றான் பிரதிவிந்தியன். “அடிப்படையில் அறிவு என்பது ஒப்புமைகளை உருவாக்கும் திறன் மட்டுமே. மெய்மை என்பது ஓர் அழகிய ஒப்புமையே.”

அப்பால் கைகட்டி நின்ற சதானீகன் “நீங்களேகூட ஓர் ஒப்புமை வழியாகவே அங்கு நிகழ்ந்ததென்ன என்று சொன்னீர்கள், மூத்தவரே” என்றான். “சீழும் மலமும் குருதியும் போன்ற சொற்கள்.” களைப்புடன் “ஆம்” என்று சுருதகீர்த்தி சொன்னான். பிரதிவிந்தியன் அவன் தோள்மேல் கைவைத்து “எண்ணிப் பார், உடல் கிழித்து வெளிவரும் குருதி எத்தனை தூய்மையானது. தெய்வங்களுக்கு அமுதென அதை படைக்கிறோம். நாமும் சமைத்து உண்கிறோம். அழகியது, அன்று பூத்த செம்மலரின் ஒளிகொண்டது. அனலுக்கு நிகரானது. நீரில் எழுந்த அனல் என்று அதை தொல்நூல்கள் சொல்கின்றன. ஆனால் இரு நாழிகைப்பொழுது கடந்தால் அது சீழ். மேலும் இரு நாழிகை கடந்தால் மலம். முத்தமிட்டு உடல்சேர்த்து நாமறியும் குழவிகூட தன் உடலுக்குள் கொண்டிருப்பது குருதியும் மலமும்தான்” என்றான்.

“இதைப்பற்றி பேசிப் பேசி குறைத்துக்கொள்ளலாம், மூத்தவரே. ஆனால் அங்கு வெளியே எழுந்திருக்கும் இருட்டை எவ்வகையிலும் அகற்றிவிட இயலாது” என்றான் சுருதகீர்த்தி. சதானீகன் “அவர்கள் மெய்யாகவே அதனூடாக ஒரு விடுதலையை உணர்கிறார்கள். இந்தப் பத்தாவது நாள் போர் எந்த நம்பிக்கையும் எஞ்சாத இருண்ட சுவரில் முட்டி நின்றுவிட்டிருக்கிறது. இனி பொருளற்ற சாவன்றி எதுவும் எஞ்சியிருக்கவில்லை. அந்தப் பெருஞ்சலிப்பிலிருந்து இவ்வாறு எளிய விடுதலையை அடைகிறார்களா?” என்றான். “ஆம், இருக்கலாம்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “சோர்விலிருந்தும் துயரிலிருந்தும் மீள்வதற்கு மானுடர் காமத்தையே கருவியாக்குகிறார்கள். மெய்யாகவே அது அவர்களை விடுதலை செய்கிறது” என்றான்.

“இது காமம் அல்ல” என்று கைநீட்டி சுருதகீர்த்தி சொன்னான். பற்களைக் கடித்து தாடை இறுகியசைய “இங்கிருப்பது மாபெரும் மறுப்பு. ஆம், மறுப்பு. மூத்தவரே, காமம் என்பது மாபெரும் ஏற்பு. பெண்ணை, அழகை, களிப்பை முற்றேற்கும் நிலை. அதை சூழ்ந்திருக்கும் இப்புவியின் ஆயிரம் ஆயிரம் இனியவற்றை ஏற்பது அது. அவர்கள் அங்கே செய்து கொண்டிருப்பது காமக்கொண்டாட்டமல்ல, காம மறுப்பு. முடிவிலாத இழிசொற்களால் காமத்தை கீழ்மையினும் கீழ்மை என்றாக்குகிறார்கள். அரசை, அறத்தை, தெய்வங்களை, மூதாதையரை, குடிமாண்பை, அனைத்தையும் இழிவுசெய்கிறார்கள்” என்றான்.

“அது ஒரு உளநடிப்பாக இருக்கலாம்” என்றான் சதானீகன். “இந்த உச்சத்தில் அவை எதுவும் தங்களை காக்கவில்லை என்ற சினமாக இருக்கலாம்.” பிரதிவிந்தியன் “அத்துடன் அவற்றில் ஏதேனும் ஒரு துளி தங்களிடம் எஞ்சியிருந்தால் இத்தருணத்தை எதிர்கொள்ள முடியாது என்பதனால் அவர்கள் அதை உதறிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. மலை ஏறுபவர்கள் எடை குறைப்பதுபோல் அவற்றைக் கழற்றி கீழிட்டு செல்கிறார்கள் போலும்” என்றான்.

சுருதகீர்த்தி எழுந்துகொண்டு “எனக்குத் தோன்றுவது பிறிதொன்று. இதுநாள் வரை அவர்கள் இறப்பை அஞ்சி அணிந்து வந்த கவசங்களை ஒவ்வொன்றாக கழற்றி வீசுகிறார்கள். ஆடையும் கவசமே. வாய்ப்பிருக்கும் தருணங்களிலெல்லாம் ஆடைகளை கழற்றி வீசுவதே மானுட இயல்பு. மானுடரின் விடுதலையும் இன்பமும் ஆடையற்ற நிலையிலேயே அமைகின்றன. இது ஒருவகை நிர்வாணம்” என்றான். பிரதிவிந்தியன் “இதைப்பற்றியும் நூல்கள் சொல்கின்றன. இது வைதரணி. அனைத்துக் கீழ்மைகளும் ஓடும் பெருநதி. யோகிகள் பல்லாயிரம் படிகளை ஏறி சென்றடையும் எல்லை. இந்த வீரர்கள் பின்னிருந்து துரத்தும் இறப்பால் அதன் கரைவரை வந்தடைந்துவிட்டார்கள்” என்றான்.

சுருதகீர்த்தி அதை கேட்காதவன்போல் அமர்ந்திருக்க பிரதிவிந்தியன் “இப்பல்லாயிரங்களில் ஒருவர் அதை கடந்தால் நன்று” என்றான். “அதில் மூழ்கி அழியும் பிறர் பொருட்டு ஒருவரேனும் அமுதை அறியவேண்டும்” என்றான் சுருதகீர்த்தி. பிரதிவிந்தியன் எழுந்துகொண்டு சிரித்து “யோகிகளிலும் பல்லாயிரத்தில் ஒருவரே சென்றடைகிறார்கள் எனப்படுகிறது” என்றான். சுருதகீர்த்தி “காலையிலிருந்தே விந்தையான ஓர் உளக்கலக்கம். கிளம்பி இங்கு வருவதற்குள் இக்காட்சி அக்கலக்கத்தை பெருமடங்கு பெருக்கியது” என்றான்.

பிரதிவிந்தியன் வினாவுடன் நோக்க “நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். நான் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் பீஷ்ம பிதாமகரின்மேல் அம்புகளைச் செலுத்தி அவரை வீழ்த்துகிறேன். அவர் ஒரு கரிய மலைப்பாறை மேல் அமர்ந்திருப்பதாகவே அம்பு செலுத்தும்போது நான் கண்டேன். ஆனால் அவர் உடல்மடங்கி குருதி சிந்தி விழுந்தபோது அந்தப் பாறை ஓர் அன்னையின் மடி என்று உணர்ந்தேன். அவ்வன்னை கல்லாலான தன் பெருங்கைகளால் அவரை எடுத்து தன் நெஞ்சோடணைத்து குனிந்து அவர் முகத்தை நோக்கி விழிநீர் சிந்துவதை பார்த்தேன்” என்றான் சுருதகீர்த்தி.

“விழித்துக்கொண்டு எழுந்து வெளிவந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. என் அணுக்க ஒற்றன் வந்து ஒரு செய்தி சொன்னான். நேற்றிரவு தந்தையர் ஐவரும் சிகண்டியும் இளைய யாதவரும் மட்டும் இளைய யாதவரின் குடிலில் சந்தித்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், நானும் அறிந்தேன்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “நாமறியாத ஏதேனும் படைசூழ்கைகள் வகுத்திருக்கலாம். அது எதுவாயினும் உயர்ந்ததல்ல” என்றான் சுருதகீர்த்தி. “எவ்வாறு சொல்கிறாய்?” என்று பிரதிவிந்தியன் கேட்டான். “எதுவும் கீழ்மை கொள்ளும்தோறும் மந்தணமாகிறது” என்றான் சுருதகீர்த்தி.

பிரதிவிந்தியன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. சுருதகீர்த்தி “இன்றுடன் இந்தப் போரின் தேக்கம் முடிவடையுமென்றும், எங்கோ ஓர் உடைப்பு நிகழுமென்றும் ஓர் உள்ளுணர்வு எனக்கிருக்கிறது” என்றான். பிரதிவிந்தியன் “ஆம், இன்றோ நாளையோ. எந்தத் தேக்கமும் அவ்வாறே முடிவிலாது நீடிக்க இயலாது. ஒழுக்கே புடவியின் இயல்பு. தேக்கம் என்பது ஒழுக்குக்காக ஒவ்வொரு அணுவும் தன் எல்லைகளை முட்டிக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே. எங்கேனும் ஏதேனும் ஒரு வாயில் உடைந்து திறந்தே ஆகவேண்டும்” என்றான்.

“இன்று பீஷ்மர் களம்படுவார்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “என்ன சொல்கிறாய்?” என்று பிரதிவிந்தியன் திகைப்புடன் கேட்டான். “மூத்தவரே, எண்ணி நோக்கினால் தெள்ளத்தெளிவாக தெரிவது அது. பீஷ்மர் களம்படாமல் இந்த தேக்க நிலையில் மயிரிழை அளவுகூட மாற்றம் ஏற்படப் போவதில்லை. இளைய யாதவர் இன்று முதன்மையாக விழைவது அதையே. சிகண்டி பீஷ்மரைக் கொல்லும் நோன்பு கொண்டவர். அவருடனும் அவர் மைந்தருடனும் அமர்ந்து தந்தையர் சொல்லாடுகிறார்கள் என்றால் பீஷ்மரை வீழ்த்தும் வழியொன்றை கண்டுவிட்டார்கள் என்றே பொருள்.”

“இந்த ஒன்பது நாளும் பீஷ்மரை வீழ்த்தவே முயன்றுகொண்டிருக்கிறோம்” என்றான் பிரதிவிந்தியன். “ஆம், இதுவரை பீஷ்மரை வீழ்த்த முயன்றவர்கள் பிறர். இன்று முதல்முறையாக அதற்கு இளைய யாதவர் எழுகிறார்” என்றான் சுருதகீர்த்தி. பிரதிவிந்தியன் அவனை வெறுமனே நோக்கினான். “மூத்தவரே, தாங்கள் அதை உணரவில்லையா, இளைய யாதவர் வெல்லற்கரியவர் என்று? அவர் முயற்சிகள் எதுவும் பிழைபடப்போவதில்லை என்று? இங்கு நிகழ்வன அனைத்தையும் முன்னரே கடந்து அங்கு சென்று நின்று நாம் அங்கு செல்வதற்காக காத்திருக்கிறார்” என்றான்.

“ஆம், சில தருணங்களில் இவை அனைத்தையும் அவரே இயற்றுகிறார் என்று தோன்றும். சில தருணங்களில் அவர் பார்வையாளராக அமர்ந்திருக்கும் மாபெரும் கூத்துமேடையில் நாம் அனைவரும் நடித்துக் கொண்டிருப்பதாக தோன்றும். இளமையிலிருந்தே அவரைப்பற்றி சொல்லிச் சொல்லி அவரை நாம் அணுகவோ அறியவோ முடியாதபடி மாற்றி வைத்திருக்கிறார்கள்” என்றான். “அணுகவோ அறியவோ முடியாதவர் என்னும் உண்மையை நமக்கு கற்பித்திருக்கிறார்கள்” என்றான் சுருதகீர்த்தி. “எவ்வாறாயினும் அது நிகழட்டும். அறமிலி என்று அவருக்கு ஒரு பெயர் இருக்கிறது” என்றான் பிரதிவிந்தியன். “சூதர்கள் அவரை சொல்லும் ஆயிரம் சொற்களில் அதுவும் ஒன்று. அறவடிவன், அறமிலி, அறம்கடந்தோன்.”

“இன்று அவ்விரண்டாம் பெயர் சூடி நின்றிருக்கப் போகிறாரா?” என்று சுருதகீர்த்தி கேட்டான். “அறியமுடியாதவர் என்று முன்னரே சொல்லிவிட்டோம். அதன்பின் நாம் ஏன் இத்தனை சொல்லெடுக்க வேண்டும்?” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் நடந்து வந்து “மூத்தவரே, தேர்கள் ஒருங்கிவிட்டன. நாம் இப்போது கிளம்பினால்தான் களமுனைக்கு செல்ல முடியும். பொழுதில்லை” என்றான். பின்னர் சுருதகீர்த்தியிடம் “நானும் கேட்டேன் படைவீரர்களின் பாடலை. மிக அரிய சொல்லாட்சிகள். ஆனால் என்ன விந்தை என்றால் எவையுமே எனக்கு புதியவை அல்ல. அவற்றை அவ்வாறு சொல்லக்கூடும் என்பதில்தான் புதுமை உள்ளது” என்றான்.

“அத்தனை சொற்களையும் மொழியறிந்த ஐந்தாறு ஆண்டுகளுக்குள்ளேயே நானும் அறிந்திருக்கிறேன்” என்றான் சதானீகன். “மொழியை அறியும்போது அவ்வனைத்தும் கூடவே வந்துவிட்டிருக்கின்றன.” பிரதிவிந்தியன் “செல்வோம்” என்று சொல்லி சுருதகீர்த்தியின் தோளில் தட்டிவிட்டு தேர் நோக்கி சென்றான். சுருதகீர்த்தி தொடர்ந்தான். அவனுடன் நடந்தபடி சதானீகன் “மூத்தவரே, தாங்கள் உணரவில்லையா?” என்றான். “என்ன?” என்றான் சுருதகீர்த்தி. “இந்தக் கீழ்மை ஏன் என்று?” என்றான் சதானீகன். “ஏன்?” என்றான் சுருதகீர்த்தி. “பிதாமகர் வீழ்வார். அறமிலா வழியால். அக்கீழ்மையை எதிர்கொள்ள படையினர் உளம் ஒருங்குகின்றனர்.” சுருதகீர்த்தி நின்று கூர்ந்து நோக்கினான். “அவர்களை ஆளும் தெய்வங்கள் அங்கே அவர்களை கொண்டுசென்று நிறுத்துகின்றன” என்று சதானீகன் சொன்னான். சுருதகீர்த்தி ஒன்றும் சொல்லாமல் நடந்தான்.

bowகளமுனை நோக்கி அவர்கள் தேரில் சென்றுகொண்டிருக்கையில் பக்கவாட்டில் இருந்த ஏழாம் படைப்பிரிவின் முகப்பில் ஷத்ரதர்மனும் ஷத்ரதேவனும் நின்றிருப்பதை சுருதகீர்த்தி பார்த்தான். “மூத்தவரே, பாஞ்சாலர் சிகண்டியின் மைந்தர்” என்றான். சுதசோமன் திரும்பிப்பார்த்து “நேற்றே அவர்களை பார்த்தேன். தந்தையைப்போன்றே இருக்கிறார்கள்” என்றான். பிரதிவிந்தியன் திரும்பிப்பார்த்து “எந்த உடல் ஒப்புமையும் இல்லையே?” என்றான். “ஆம், முற்றிலும் பிறிதொரு உடலில் அவர் எழுந்ததுபோல் இருக்கிறார்கள். கல்லில் சுடரை செதுக்கி வைத்ததுபோல்” என்றான் சுதசோமன்.

பிரதிவிந்தியன் தேரை நிறுத்த அவர்களிருவரும் அருகே வந்து தலைவணங்கினர். பிரதிவிந்தியன் அவர்களின் தலைதொட்டு வாழ்த்தினான். ஷத்ரதேவன் “தங்களை பாடிவீட்டுக்கு வந்து கண்டு வணங்கி நற்சொல் பெறவேண்டுமெனும் விழைவு இருந்தது. ஆனால் நேற்றுதான் இங்கு வந்தோம். இன்று புலரியிலேயே தந்தையுடன் போருக்குச் செல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றான். “இங்கே பாஞ்சாலர்களின் முகப்புத்தேர்ப் படையில் எங்களுக்கு படைப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது.”

சுருதகீர்த்தி “நீங்கள் வில்பயின்றவர்களா?” என்றான். “ஆம், இருவருமே தந்தையால் வில்லெடுத்து அளிக்கப்பட்டு பயின்றிருக்கிறோம். எங்கள் நாட்டின் விற்தொழில் சற்று மாறுபட்டது. நாங்கள் அம்புகளை கீழ்நோக்கி செலுத்துவோம். அவை நீரில் பட்டு மேலெழுவதுபோல் காற்றிலேயே வளைந்தெழுந்து இலக்குகளை தாக்கும். முதன்மை வில்லவர் அன்றி பிறர் எங்கள் அம்புகளை தடுக்க இயலாது” என்று ஷத்ரதேவன் சொன்னான். சுருதகீர்த்தி “உங்கள் தந்தை எங்கிருக்கிறார்?” என்றான். “படைமுகப்பில்” என்று ஷத்ரதேவன் மறுமொழி சொன்னான்.

பிரதிவிந்தியன் ஒருகணம் எண்ணியபின் சுருதகீர்த்தியிடம் “இளையோனே, உனது படைப்பணி எங்கு ஒதுக்கப்பட்டுள்ளது? என்றான். “பாஞ்சாலப் படைகளில்தான்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “தந்தைக்குப் பின்னால் காவல் அணியாக செல்லும்பொருட்டு இன்றும் பணிக்கப்பட்டுள்ளோம்.” பிரதிவிந்தியன் “நன்று, இம்மைந்தரை நீயே உடன் அழைத்துச் செல்க!” என்றபின் “இவர்கள் உன் பொறுப்பில் களம் காணட்டும்” என்றான். அவன் சொல்வதை புரிந்துகொண்டு சுருதகீர்த்தி தலைவணங்கினான்.

ஷத்ரதேவனும் ஷத்ரதர்மனும் உடன்வர சுருதகீர்த்தி பாஞ்சாலப் படைகளினூடாக சென்றான். அவர்கள் சொல்லின்றி புரவியில் உடன்வந்தனர். சுருதகீர்த்தி ஷத்ரதர்மனைப் பார்த்துவிட்டு “இவர் பேசுவதில்லையா?” என்றான். “இல்லை, இளமையிலேயே அவனுக்கும் சேர்த்து நான் பேசுவது வழக்கமாகிவிட்டது” என்று ஷத்ரதேவன் சொன்னான். “தந்தையை பார்த்தீர்கள் என்று அறிந்தேன்” என்றான் சுருதகீர்த்தி. “ஆம். ஆனால் எப்போதும் அவரை பார்த்துக்கொண்டே இருப்பதுபோல்தான் உணர்ந்தோம். ஆகவே நேற்றைய சந்திப்பு எவ்வகையிலும் புதிய நிகழ்வாக அமையவில்லை. என்றுமென நேற்றும் கண்டோம் என்று மட்டுமே தோன்றுகிறது.”

சுருதகீர்த்தி தன்னுள்ளிருந்து எழுந்த அறியாச் சீற்றமொன்றை அறிந்து வியந்து அதை அடக்கிக்கொள்ள முயல்வதற்குள்ளாகவே அவன் நா அதை கூறியது. “அது நன்று. இன்றுடன் அவர் களம்பட்டாலும் உங்களுடன் அவர் இருந்துகொண்டிருப்பார்.” ஆனால் ஷத்ரதேவனின் விழிகளில் எந்த மாறுதலும் தென்படவில்லை. “ஆம், அவர் எப்போதும் எங்களுடன் இருப்பார். எங்கள் குடிகளில் வாழ்வார்.” சுருதகீர்த்தி அவனை திரும்பிப் பார்த்துவிட்டு “மைந்தர்கள் உள்ளனரா?” என்று கேட்டான். “இருவருக்கும் சேர்த்து ஏழு மைந்தர்கள்” என்று ஷத்ரதேவன் சொன்னான். “அது எங்கள் தந்தையின் ஆணை.”

அவர்கள் படைமுகப்பிற்குச் சென்று சேர்ந்தனர். அங்கே தேரில் நின்றிருந்த சிகண்டியை தொலைவிலிருந்தே சுருதகீர்த்தி பார்த்தான். ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் ஏற்படும் புரிந்துகொள்ளமுடியாத துணுக்குறல் அப்போதும் ஏற்பட்டது. பல்லாயிரம் பேரின் நடுவே நின்றிருக்கையிலும் அவர் அவர்களில் ஒருவரல்ல என்றும், உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் முற்றிலும் பிறிதொருவர் என்றும் தோன்றும். மானுட உடலில் தெய்வங்கள் குடியேறுகையில் அத்தெய்வத்திற்குரிய தனித்தன்மை ஒன்று உடலில் தோன்றுவதுபோல. சினம் மிக்க காவல்தெய்வங்கள் எழுகையில் உடலெங்கும் ஒவ்வொரு தசையிலும் சினம் எழும். துயர் மிகுந்த அன்னை தெய்வங்கள் நனைந்த துணிப்பாவைபோல் அவ்வுடலை துயரத்தால் நிறைத்துவிடும். தெய்வங்களின் கோணல் தெய்வங்களின் கூர் உடலென்றே விழிக்கு தென்படும்.

சிகண்டியின் உடலுக்குள் விளங்கும் தெய்வமென்ன என்று அவன் வியப்பதுண்டு. அது வில்லிழுத்துக் கட்டிய நாணில் திகழும் தெய்வம் என்று ஒருமுறை எண்ணினான். அவர் உடலில் அனைத்துத் தசைகளும் இறுகி நின்றிருக்கும். நூற்றுக்கணக்கான நாண்கள் இழுத்துக் கட்டப்பட்ட விற்களின் தொகை. அல்லது நாண்முறுகி ஆணி நிலைத்த எழுபத்துநான்கு நரம்புகொண்ட பேரியாழ். மானுட உடலில் எப்போதும் ஒரு தசை இறுகினால் பிறிதொரு தசை தளரும். ஒன்று உறைந்தால் பிறிதொன்று நெகிழும். ஒவ்வொன்றும் இறுகி நின்றிருக்கும் ஓர் உடலென்று அவன் அவரை நினைத்துக்கொள்வதுண்டு.

அணுகிச் செல்லுந்தோறும் சிகண்டி மேலும் தெளிந்து வந்தார். முதலில் அவர் உடலை அப்போதுதான் அத்தனை தூய்மையாக பார்ப்பதாக அவனுக்கு தோன்றியது. குழலை சீவி கட்டியிருந்தார். தாடியையும் சீவி நுனியில் முடிச்சிட்டு நெஞ்சில் இட்டிருந்தார். இடையிலும் மார்பிலும் புதிய தோலாடைகள் அணிந்திருந்தார். கச்சை புதிதாக இருந்தது. அதில் பளபளக்கும் பிடி கொண்ட குத்துவாள். கவசங்கள் நன்கு தீட்டப்பட்டவைபோல நீரொளி கொண்டிருந்தன. கால்குறடுகள்கூட வெள்ளியென மின்னின. வில்லும் அம்பறாத்தூணியும் மட்டும் குருதிபடிந்து பழையவையாக இருந்தன.

அந்தக் களத்தில் எவரும் புத்தாடை அணிந்திருக்கவில்லை. மாமன்னர் யுதிஷ்டிரர்கூட மீண்டும் மீண்டும் போருக்கணிந்த, குருதி நனைந்து இறுகி மரக்கட்டை போலாகிவிட்ட மரவுரியையே அணிந்திருந்தார். ஒவ்வொரு உடலிலும் மரவுரியால் துடைத்து நீவி எடுத்த பின்னும் எஞ்சும் குருதி உலர்ந்த கரும்பசையாலான வரிகள் நிறைந்திருந்தன. காதுகளுக்குப் பின்னாலும், கழுத்திலும், தோள் மடிப்புகளிலும், கைவிரல்களின் இடுக்குகளிலும் குருதிப்பிசின் எப்போதுமிருந்தது. ஆனால் சிகண்டி நீராடி எழுந்தது போலிருந்தார்.

ஷத்ரதேவனும் ஷத்ரதர்மனும் அருகே சென்று சிகண்டியை வணங்கினர். சிகண்டி வெற்றுவிழிகளுடன் அவர்களை பார்த்தார். சுருதகீர்த்தி “இப்படைப்பிரிவின் வில்லவர்களில் ஒருவனாக நிற்கும்பொருட்டு எனக்கு ஆணை வந்துள்ளது, பாஞ்சாலரே” என்றான். விழிகளை அசைத்து அதை ஏற்ற சிகண்டி திரும்பிக்கொண்டார். அவர் நெடும்பொழுதுக்கு முன்னரே முற்றிலும் பேச்சை நிறுத்திவிட்டிருந்தார் என்பது முகத்திலிருந்து தெரிந்தது. அத்தருணத்தில் அவரால் பேச இயலாதென்பது இயல்பாகவே இருந்தது. தன்னுள் பேருணர்வுகள் நிறையும் ஒருவர் முற்றிலும் சொல்லிழப்பது இயல்பே. நேற்று இரவு என்ன நிகழ்ந்தது என்று மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தாரோ?

அப்போதுதான் சிகண்டி ஒருமுறைகூட பீஷ்மரை படைக்களத்தில் எதிர்கொள்ளவில்லை என்னும் எண்ணம் எழுந்தது. இன்று எதிர்கொள்ளப்போகிறார். அவ்வண்ணமெனில் இன்று பீஷ்மர் கொல்லப்படுவார். ஆனால் அது எவ்வாறு என்று அவன் உள்ளம் வியந்தது. வெல்ல முடியாதவர். தெய்வங்களால் கையிலேந்தி களத்திற்கு கொண்டுவரப்படுபவர். அவரை இக்கடுநோன்பினன் எவ்வாறு வெல்ல இயலும்? தவத்தால் ஒருவர் வடக்கு மலையை இல்லையென்றாக்கிவிட இயலுமா என்ன?

தன் தேரிலேறி பாகனிடம் ஓரிரு சொல் உரைத்த பின் தேர்த்தட்டில் நின்று வில்லையும் அம்புகளையும் நோக்கினான். கையுறைகளை இழுத்துவிட்டு தலைச்சரடை இறுக்கிவிட்டு எதிரே நோக்கியபோது படைமுகப்பில் பீஷ்மர் நின்றிருப்பதை கண்டான். தொலைவிலேயே அவரும் புத்தாடை அணிந்து தன்னை சீர்படுத்திக்கொண்டிருப்பதை அறிய முடிந்தது.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72

bowதுண்டிகன் பீஷ்மரின் பாடிவீட்டை அடைந்தபோது அதன் நுழைவாயிலில் அமர்ந்திருந்த காவலன் தன் நீள்வேலை ஊன்றி, அதை பற்றி, அந்தக் கைகளின் மேல் முகத்தை வைத்து துயின்றுகொண்டிருந்தான். துண்டிகன் “காவலரே!” என்று அழைத்தான். அக்குரல் அவனை சென்றடையவில்லை. “காவலரே! காவலரே!” என்று அழைத்தபின் மெல்ல அவனை தொட்டான். திடுக்கிட்டு எழுந்து வேலை தூக்கியபின் “யார்? எங்கே?” என்றான் காவலன். “காவலரே, நான் தேர்வலனாகிய துண்டிகன். அரசரின் ஆணைப்படி பீஷ்ம பிதாமகரை பார்க்கும்பொருட்டு வந்தவன்” என்றான் துண்டிகன். “ஆம்! பிதாமகர்!” என்றபின் வாயைத்துடைத்து “யார்?” என்று மீண்டும் கேட்டான் காவலன்.

துண்டிகன் பொறுமையிழக்காது மீண்டும் சொன்னான். அவன் இருமுறை கேட்ட பின்னரே விழி தெளிந்தான். சலிப்புடன் கோட்டுவாயிட்டபடி “பிதாமகர் குடிலுக்குள் துயின்றுகொண்டிருக்கிறார்” என்று சொல்லி அமர்ந்தான். “இல்லை, அவர் அக்குடிலுக்குள் இல்லை” என்று துண்டிகன் கூறினான். “எப்படி தெரியும்?” என்று கேட்டபின் காவலன் ஐயத்துடன் சென்று குடிலுக்குள் எட்டிப்பார்த்து “ஆம், மெய்யாகவே அவர் இல்லை. இவ்வழியாகத்தான் சென்றிருப்பார்” என்றான். “இவ்வழியாகத்தான் சென்றிருப்பார் என்று எனக்கும் தெரியும். எங்கு சென்றார் என்று தங்களுக்கு தெரியுமா என்றுதான் கேட்கிறேன்” என்று துண்டிகன் சொன்னான்.

“இல்லை. நான் இங்கு அமர்ந்திருந்தபோது அவர் அங்கே நடைபயின்று கொண்டிருந்தார். சலிப்பும் சினமும் கொண்டிருந்தார். நான் கேட்ட வினாக்களுக்கெல்லாம் கடுமையாக மறுசொல் கூறினார். ஆகவே நான் இங்கே வந்து அமர்ந்தேன். அதன்பின் நான் சற்று அயர்ந்துவிட்டேன்” என்றான் காவலன். துண்டிகன் அவனிடம் “நீர் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்?” என்றான். “நான் அஸ்தினபுரியின் கோட்டைக்காவலன்” என்றான் அவன். “காவலுக்கு நன்கு பழகியிருக்கிறீர்” என்றபின் துண்டிகன் திரும்பி தன்முன் துயிலில் ஆழ்ந்து இருள் மூடிக்கிடந்த கௌரவப் படையை பார்த்தபடி இடையில் கைவைத்து நின்றான்.

பீஷ்மர் எங்கு சென்றிருப்பார் என்று எண்ணி எடுக்க முயன்றான். அவர் துரியோதனனைப் பார்க்க சென்றிருக்கக் கூடும் என்ற எண்ணம் முதலில் வந்ததுமே அவ்வாறு அல்ல என்று தோன்றியது. அல்லது சகுனியைப் பார்க்க சென்றிருக்கலாம். தன் படைகளை பார்வையிடச் சென்றிருக்கவும் கூடும். பின்னர் அவர் எரிகாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று அவன் உள்ளம் சொன்னது. எரிகாட்டில் அவருக்கு அணுக்கமான எவர் இருக்கிறார்கள்? எவருமில்லை என்ற எண்ணம் வந்தது. ஆனால் அவர் செல்வதற்குரிய இடம் என வேறு எதுவுமில்லை. ஒருவேளை பாண்டவப் படைக்குள் இளைய யாதவரைப் பார்க்க சென்றிருக்கலாம். அவன் அகம் திடுக்கிட்டது. ஏன் அவ்வாறு எண்ணினோம் என வியந்துகொண்டான்.

புரவியை அணுகி அதன் சேணத்தை சீரமைத்து கால்வளையத்தில் பாதத்தை ஊன்றி சுழற்றி ஏறி அமர்ந்தபோது அவனுக்கு தெரிந்தது, அவர் அருகே குறுங்காட்டுக்குள் எங்கோ இருக்கிறார் என்று. குருக்ஷேத்ரக் காடு விரிந்து பரந்தது. முட்செடிகளும் கள்ளிச் செடிகளும் மண்டிக் கிடப்பது. குருக்ஷேத்ரத்தில் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெரும்போர் நிகழுமென்றும், அப்போர் நிகழ்ந்த பகுதி முற்றாகவே கைவிடப்பட்டு மானுடர் நடமாடாமல் தெய்வங்களுக்குரிய காடாக மாறிவிடும் என்றும் அவன் கேட்டிருந்தான். அங்கு எப்படி அவரை தேடிச்செல்வது என்று அவன் உள்ளம் திகைத்தது. அவர் திரும்பி வரும்வரை குடில் முற்றத்தில் அமர்ந்து காத்திருப்பதே சிறந்தது. காட்டிற்குள் சென்றால் வழி தவறிவிடக்கூடும். புலரிக்குள் அவன் பீஷ்மரிடமிருந்து தேர்வலனாக பொறுப்பேற்றுக் கொள்ளும் ஆணையை பெறவேண்டும். அதன் பின்னரே தேரையும் புரவியையும் ஒருக்கவேண்டும்.

அவன் புரவியில் அமர்ந்தபடி தயங்கினான். ஆனால் அவன் உடலிலிருந்து ஆணைகளை பெற்றுக்கொண்டதுபோல் புரவி தலைசிலுப்பி மணியோசையுடன் அடியெடுத்து வைத்து முன்னால் சென்றது. துண்டிகன் பெரும்பாலான தருணங்களில் முடிவுகளை புரவியிடமே விட்டுவிடுவதுண்டு. தன் மீது களைப்பு ஈரமான கம்பளிப்போர்வைபோல விழுந்து அழுத்தி மூடுவதுபோல் உணர்ந்தான். கைகால்கள் எடைகொண்டன. தாடை மெல்ல விழுந்து வாய் திறந்தது. இமைகள் மூடின. அவன் பீஷ்ம பிதாமகரிடம் “வீரசேனர் மறைந்துவிட்டார்” என்றான். “ஆம், தெரியும்” என்று பீஷ்மர் சொன்னார். “அவர் மறையும்போது தங்களிடம் வரும்படி என்னிடம் ஆணையிட்டார்” என்றான். “அதுவும் தெரியும்” என்ற பீஷ்மர் திரும்பி அவனை நோக்கி புன்னகைத்து “வீரசேனனை நான் கொன்றேன். உன்னையும் இன்றே கொல்லவிருக்கிறேன்” என்றார்.

அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். புரவி துயின்றுகொண்டிருந்த கௌரவப் படைகள் நடுவே சீரான குளம்போசையுடன் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கனவில் பீஷ்மர் இருந்த இடம் எது என்று அவன் எண்ணிப்பார்த்தான். அது குறுங்காட்டுக்குள் ஒரு சிற்றோடையின் கரை. உயரமற்ற கள்ளிப்புதர்கள் இருபுறமும் செறிந்திருக்கும் ஒரு பாறை. கனவில் அவன் அவரைத் தேடி அந்தக் காட்டுக்குள் சென்ற வழி மிகத் தெளிவாக நினைவில் எழுந்தது. கள்ளிச்செடிகளை எளிதில் அடையாளம் காணமுடியும். அவை காட்டின் விளிம்பிலேயே தொடங்கி தனிப்பெருக்காக காட்டுக்குள் செல்லும். அவ்வழியிலேயே சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வந்தால் என்ன என்று தோன்ற அவன் புரவியைத்தட்டி விரைவடையச்செய்தான்.

குளம்புகள் ஒலிக்க படை நடுவே ஓடிய புரவி வடமேற்கு எல்லைக் காட்டை அடைந்ததும் தயங்கியது. அங்கிருந்த காவல்மாடத்தில் சிறுத்தையின் சிறுநீரில் நனைக்கப்பட்ட மரவுரிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. புரவி அக்காவல்மாடத்தை அணுகியதும் மிரண்டு, தயங்கி, கனைத்து காவலருக்கு தங்கள் வரவை அறிவித்தது. காவல்மாடத்திலிருந்து வெளிவந்த காவலர்தலைவன் கூர்ந்து நோக்கியபடி அவனை அருகழைத்தான். காவல்மாடத்திலிருந்து இரண்டு அம்புகள் அவனை கூர்வைத்தன. துண்டிகன் காவலனை அணுகி கணையாழியைக் காட்டி “நான் பீஷ்ம பிதாமகரின் அணுக்கனாகிய தேர்வலன். அவரைத் தேடி சென்றுகொண்டிருக்கிறேன்” என்றான்.

அவனை நோக்கி குழம்பியபடி “அவர் இங்கு இல்லையே!” என்றான் காவலர்தலைவன். “அப்பால் குறுங்காட்டுக்குள் இருக்கிறார். அவர் இங்கு இருக்கிறார் என்ற செய்தி எனக்கு வந்தது” என்றான் துண்டிகன். “செய்தியா?” என்று காவலர்தலைவன் கேட்டான். “அங்கிருப்பேன் என்று அவர் சொன்னார்” என்று துண்டிகன் சொன்னான். குழப்பத்துடன் மீண்டுமொருமுறை நோக்கிவிட்டு “செல்க!” என்று காவலன் ஒப்புதல் அளித்தான். புரவி மெல்ல தயங்கி காவல்மாடத்தை கடந்ததும் வால்சுழற்றி கனைத்தபடி விரைவு கொண்டது.

குறுங்காட்டுக்குள் செல்வதற்கான ஒற்றையடிப்பாதை உறுதியான செம்மண்ணாலும் சரளைக்கற்களாலும் ஆனதாக இருந்தது. எனவே புரவியால் விரைந்து தாவிச் செல்ல இயன்றது. செல்லச் செல்ல அந்தப் பாதை தனக்கு மிக நன்றாக தெரிந்திருப்பதாகவும், அங்கு பலமுறை வந்திருப்பதாகவும் அவனுக்கு தோன்றியது. ஆனால் சற்று முன் கனவில் மட்டுமே அந்தப் பாதையை கண்டிருக்கிறோம் என்பதை அவன் உள்ளம் உணர்ந்திருந்தது. புரவி செறிகாட்டிற்குள் சென்றதும் இருபுறமும் செறிந்து முட்குலைகளை நீட்டி நின்ற மரங்களால் அதன் விரைவு குறைந்தது. துண்டிகன் தன் உடலை புரவியின் உடலுடன் சேர்த்து வைத்து முட்களிலிருந்து உடலை காத்துக்கொண்டான்.

செல்லச் செல்ல முட்புதர்களின் சூழ்கை அடர்ந்து ஒரு குகைவழிபோல் ஆயிற்று அப்பாதை. முதன் முதலாக செல்லும் வழி சரிதானா என்ற ஐயத்தை அவன் அடைந்தான். கனவில் கண்ட ஒன்றை நம்பி அத்தனை தொலைவு வந்திருக்கலாகுமா? ஆனால் கனவுகள் ஒருபோதும் வீணாவதில்லை. அவை சுற்றுவழிப் பாதைகளாக இருக்கலாம், சென்று சேருமிடம் தெய்வங்களால் வகுக்கப்பட்டது. அவன் மீண்டும் சற்று தொலைவுக்குச் சென்றபோது தெளிவாகவே உணர்ந்தான், அந்த இடம்தான். பின்னர் பீஷ்மர் அருகிருக்கும் உணர்வை அவன் உள்ளம் பெற்றது.

புரவி எடைமிக்க குளம்படிகள் மெல்ல ஒலிக்க தலை தாழ்த்தி புதர்களினூடாக சென்றது. அவரை அணுகிக்கொண்டிருக்கும் உணர்வு எழுந்து வலுத்து வந்தது. பின்னர் அவன் அவரை கண்டான். பீஷ்மர் அவன் அணுகி வருவதை முன்னரே அறிந்திருந்தார். அவர் திரும்பவோ உடலில் அசைவை வெளிக்காட்டவோ இல்லையெனினும் அவனால் அதை உணர முடிந்தது. புரவியை நிறுத்திவிட்டு இறங்கி அவரை நோக்கி சென்றான். குரல் கேட்கும் தொலைவில் நின்று “வணங்குகிறேன், பிதாமகரே. அரசரின் ஆணைப்படி தங்களைப் பார்க்கும் பொருட்டு வந்தேன்” என்றான்.

பீஷ்மர் திரும்பாமலேயே “தேர்வலனா நீ?” என்றார். “ஆம்” என்றான். “என் பெயர் துண்டிகன். ஸ்பூடகுலத்தை சேர்ந்தவன்.” பீஷ்மர் “உன் தந்தையை அறிவேன்” என்று சொன்னார். “பிதாமகரே, தங்கள் மாணவரும் தேர்வலருமாகிய வீரசேனர் சற்று முன்னர் விண்புகுந்தார். அப்போது நான் அவருடன் இருந்தேன்” என்றான் துண்டிகன். பீஷ்மரிடம் எந்த மாறுதலும் உருவாகவில்லை.

“அவரைச் சென்று பார்க்கும்படி என்னிடம் இளவரசர் துச்சகர் சொன்னார். அவரது இறப்பை தங்களிடம் அறிவிக்கும்படி ஆணையிடப்பட்டேன்” என்றான். அதற்கும் பீஷ்மர் ஒன்றும் சொல்லவில்லை. “தங்கள் மாணவர்களில் இனி எவரும் உயிருடனில்லை என்ற செய்தியை தாங்கள் உணர்ந்திருப்பீர்கள், பிதாமகரே” என்றான் துண்டிகன்.

பீஷ்மர் வெறுமனே உறுமினார். அவர் ஏதேனும் சொல்லவேண்டுமென்பதற்காக துண்டிகன் காத்து நின்றான். அவரிடமிருந்து நெடுநேரம் சொல்லெழவில்லை. நிழற்சிலையென அசைவிலாது அமர்ந்திருந்தார். சூழ்ந்திருந்த முட்செடிகளும் தளிரிலைகளும் அசைவற்றிருந்தன. துண்டிகன் “நாளை தங்கள் தேரை ஓட்டும் வாய்ப்பு எனக்கு அமையுமெனில் எனது நல்லூழ்” என்றான். “நன்று” என்று அவர் சொன்னார். “பேறு பெற்றேன்” என்று துண்டிகன் தலைவணங்கினான். பீஷ்மர் அவனிடம் “உனக்கு மைந்தர் உள்ளனரா?” என்றார். “ஆம், பிதாமகரே. நான்கு மைந்தர் என் குடியில் உள்ளனர்.”

செல்லும்படி பீஷ்மர் கைகாட்டினார். துண்டிகன் அடிவைத்து பின்னால் வந்து அவரை கூர்ந்து நோக்கியபடி நின்றான். அவர் அங்கு என்ன செய்கிறார் என்று அறிய விரும்பினான். அவர் முற்றிலும் தனிமையிலிருக்கிறார் என்பதை விழி கூறினாலும் அவருடன் பிறர் இருக்கிறார்கள் என்று நுண்ணுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. விழிகளால் காட்டையும் அருகிருந்த மெல்லிய நீரோடையையும் மாறி மாறி பார்த்தான். அவன் அங்கிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரிடமே அங்கு வேறு எவர் இருக்கிறார்கள் என்று கேட்டால் என்ன என்று அவன் எண்ணினான். ஆனால் அது துடுக்கென கருதப்படும் என தோன்றியது.

மீண்டும் அடிவைத்து பின்னால் சென்று புரவியில் ஏறிக்கொண்டான். புரவி திரும்பிச் செல்லும்போது விந்தையானதோர் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அங்கிருந்த அந்த பிறிதொருவர் தன்னை நோக்குவதுபோல. அவன் புரவியை நிறுத்தி திரும்பிப் பார்த்தான். பீஷ்மர் அதே அசைவின்மையுடன் தெரிந்தார். இந்த இரவில் துயிலின்மையால் உளமயக்குகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறேன். மெய்யையும் பொய்யையும் பிரிப்பது துயில்தான் போலும். துயிலுக்கு அப்பால் அறியாத உலகங்கள் ததும்பிக்கொண்டிருக்கின்றன. இறந்தவர்கள், தேவர்கள், புவிவல்லமைகள். எண்ணங்களின் வடிவில் இயல்பவர்கள்.

அவன் மீண்டும் தன் உடலில் களைப்பை உணர்ந்தான். சற்று நேரம் எங்கேனும் படுத்துத் துயின்றால் போதுமென்று தோன்றியது. அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அவன் துயில்வதை அவனே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைகள் தளர்ந்து விழ, கடிவாளம் மடியில் கிடந்தது. துயிலால் எடைகொண்ட தலை முன்னால் சரிந்து புரவியின் கழுத்தில் முட்டியது. கால்களால் புரவியின் உடலை கவ்வியபடி சற்றே சரிந்து துயின்றபடி அவன் சென்றான். முட்களும் கள்ளியிலைகளும் அவனை வருடிச்சென்றன. காட்டுக்குள் கூகைகள் குழறிக்கொண்டிருக்க இலைகளுக்குள் வௌவால்கள் சிறகடித்துச்செல்லும் ஓசைகள் கேட்டன.

அவன் திரும்பிச்சென்று பீஷ்மரிடம் “பிதமாகரே, தாங்கள் இங்கு பேசிக்கொண்டிருந்தது எவரிடம்?” என்றான். அதன் பின்னரே அவருக்கு முன்னால் அந்த ஓடைக்கு மறுபுறம் அதே போன்றதொரு பாறையில் இளைய யாதவர் நிழலுருவாக அமர்ந்திருப்பதை பார்த்தான். அவர் தலையில் சூடிய பீலி மட்டும் தனி ஒளி கொண்டதுபோல் தெளிவாகத் தெரிந்தது. விழிகளின் இரு ஒளிப்புள்ளிகள். நிழலுருவில் அவர் சிறுவனைப்போல முதுமையற்றவராக தெரிந்தார்.

அவன் தலைவணங்கி கால் வைத்து பின்னால் சென்றபோது அங்கு இனிய குழலோசை எழுவதை கேட்டான். இளைய யாதவர்தான் குழலிசைக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அவரது இடைக்கச்சையில்தான் வேய்குழல் இருந்தது. அந்தக் குழலோசை துயர்கொண்டதாக, கோடைகாலக் குயிலின் தவிப்பு நிறைந்ததாக தோன்றியது. சுழன்று சுழன்று தவிப்பு என்னும் ஒற்றைச் சொல்லையே வெவ்வேறு ஒலியமைப்புகளில் சொல்லிக்கொண்டிருந்தது. பின்னர் அது துள்ளலாயிற்று. கைக்குழவிபோல் காலுதைத்துச் சிரிக்கும் குழலிசை. அது விசைகொண்டது. துள்ளும் புரவியாகியது. மலைச்சரிவில் கனைத்தபடி பாய்ந்திறங்கியது. வெண்ணிற அருவிபோல.

அவன் விழித்துக்கொண்டபோது மீண்டும் படைமுகப்புக்கு வந்திருந்தான். வாயை துடைத்துக்கொண்டு புரவியைத் தட்டி காவல்மாடத்தை நோக்கி அதை செலுத்தினான். அது சிறுத்தைநீர் மணத்தை உணர்ந்து மூக்கை விடைத்து மூச்செறிந்து சிற்றடி வைத்தது. அதை தட்டித்தட்டி ஊக்கி முன் செலுத்தினான்.

bowபடைப்பிரிவை அடைந்ததுமே துண்டிகன் பீஷ்மரின் தேரைச் சென்று பார்த்தான். கௌரவர்களின் படைத்தேர்களிலேயே பெரியது அது. ஆளுயரச் சகடங்களும், உயர்ந்த பீடமும், இரண்டு பின்னிருக்கைகளும், நான்காள் உயரமான முகடும் கொண்டது. ஆனால் மூன்று இரும்புருளைகள்மேல் அதன் அச்சு அமைந்திருந்தமையால் ஓசையின்றி நீரில் படகென ஒழுகுவது. அவன் அடியில் சென்று நோக்கினான். அதன் சகடங்களில் ஒன்றின் உட்புறம் பட்டை சற்று விலகியிருந்தது. எடை தாங்கும் வில்லில் இருந்த மூங்கில்களில் ஒன்று சற்று தளர்ந்திருந்தது. அவற்றை சரிசெய்யும்படி தச்சர்களிடம் சென்று சொன்னான். யவனத்தச்சர்கள் முன்னரே தேரை சரிபார்த்திருந்தனர். அவர்கள் அக்குறைகளை அறிந்திருக்கவில்லை. அவன் குரலில் இருந்த ஆணைக்கு அவர்கள் பணிந்தனர்.

துண்டிகன் புரவிகளை தானே சென்று தெரிவு செய்தான். முன்னரே அத்தேருக்குப் பழகிய புரவிகளே நன்று. ஆனால் ஏழு புரவிகளில் நான்கு மீள முடியாதபடி புண்பட்டிருந்தன. புதிய நான்கு புரவிகளை அழைத்து வந்து அவற்றின் உடலை முழுக்க தன் கைகளால் உருவி சுழிகளைத் தேர்ந்து அவை போருக்கு உகந்த நிலையிலிருப்பதை உறுதி செய்துகொண்டான். அவற்றை பிற மூன்று புரவிகளுடன் சேர்த்துக் கட்டினான். அவை ஒன்றையொன்று நோக்கி மூக்குசுருக்கி மூச்செறிந்து உறுமி உடல் சிலிர்த்தன. அவற்றை ஒரே மூங்கில்கூடையிலிருந்து கொள்ளுண்ணச் செய்தான்.

அவற்றை ஒன்றுடன் ஒன்று அணுகி நிற்கவைத்து அனைத்தையும் ஒரே மரவுரியால் உருவினான். அவற்றுக்குள் ஒரே மணம் உருவானபோது ஒன்றை ஒன்று முகர்ந்து பெருமூச்செறிந்தன. அணுகி உடலொட்டி நின்றன. அவற்றை சேர்ந்து ஓடவிட்டு தேரை நான்குமுறை ஓட்டி பயிற்றுவித்தான். புலரிக்கு முன்னர் அவற்றுக்கு நீர் காட்டி வயிறு புடைக்கும் அளவிற்கு உப்பிட்ட உலர் புல்லை ஊட்டி நிறுத்தினான். அவை ஒற்றைக்கால் தூக்கி நின்றபடி தலைதாழ்த்தி துயிலத் தொடங்கின. போருக்குச் செல்வதற்கு முன் புரவிகளுக்கு வெல்ல உருண்டைகளை அளிப்பதுண்டு. போர் நடுவே வெல்லமும் உப்பும் கலந்த நீர் அவற்றுக்கு அளிக்கப்படும். அவனே சென்று நீரை நோக்கி உறுதிசெய்துகொண்டான்.

கருக்கிருட்டு செறிந்து கொண்டிருந்தபோது அவன் மரவுரியால் தன் உடலைத் துடைத்து புதிய மரவுரி அணிந்து தோற்கச்சை கட்டி கவசங்களை அணிந்துகொண்டான். கையுறைகளை இழுத்துவிட்டு கையில் சவுக்குடன் தேர் அருகே ஒருங்கி நிண்றான். தன் உள்ளம் ஆழ்ந்த நிறைவுகொண்டிருப்பதை உணர்ந்தான். புவியில் இனி ஏதும் எஞ்சியிருக்கவில்லை என்பதுபோல. விழைவதற்கோ எய்துவதற்கோ. அவன் அந்த நிறைவை ஓர் எடையாக உடலெங்கும் உணர்ந்தான்.

புரவிகள் விழித்தெழுந்தன. அவற்றிலொன்று அவனை அழைத்தது. அவன் எழுந்துசென்று அவற்றுக்கு மீண்டும் நீர் வைத்தான். அவை சிறுநீர் கழித்து சாணியுருளைகள் பொழிந்து ஒன்றை ஒன்று முகர்ந்து அடையாளம் கண்டுகொண்டபின் குளம்புகள் மிதிபட கால்களை தூக்கி வைத்தன. ஈரப்புல் கற்றைகளை வைத்தபோது தலைகுலுக்கியபடி புல்லை தின்னத் தொடங்கின. அவற்றின் தாடைகள் இறுகி அசைவதை, வால் சுழல்வதை, உடல் விதிர்ப்பதை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவையும் தானுணர்ந்த அந்த நிறைவை கொண்டிருப்பதாகத் தோன்றியது.

பீஷ்மர் வருவதற்காக அவன் காத்திருப்பதை உணர்ந்த காவலன் “நேற்று இங்கிருந்து அவர் செல்கையில் நான் பார்த்தேன். ஆனால் அவர் செல்கிறார் என்பது எனக்கு தோன்றவில்லை. வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றான். சீற்றத்துடன் திரும்பிய துண்டிகன் “இனி ஒரு சொல் உமது நாவில் எழுமென்றால் சூதனின் எல்லைகடந்து இந்தத் துரட்டியால் உமது கழுத்தை நான் அறுக்கவேண்டியிருக்கும்” என்றான். காவலன் வெறித்து நோக்கியபின் மீண்டும் சென்று தன் சிறுபீடத்தில் அமர்ந்தான். துண்டிகன் அமர்ந்து கைகளை கோத்துக்கொண்டான்.

மெல்ல உடலும் உள்ளமும் அடங்கியபோது அந்தச் சினம் ஏன் என துண்டிகன் வியந்துகொண்டான். அச்சிறுமையாளன் அரிய ஒன்றை கலைத்து ஊடுருவினான் என்பதனாலா? அல்ல, அவனைப் போன்றவர்கள் பிறிதொரு உலகில் வாழ்பவர்கள். அவர்கள் நாணல்கள்போல, புயலுக்குப் பின்னரும் எஞ்சுபவர்கள். ஆம், அதுதான். இவன் எஞ்சியிருப்பான். புரவியின் காலடிகள் ஒலிப்பதைக் கேட்டு துண்டிகன் செவி கொண்டான். பீஷ்மரின் புரவி அது என்பதை எந்த முன்னறிதலுமின்றி அவன் உள்ளம் உணர்ந்தது.

அவன் எழுந்து நின்றான். துள்ளலுடன் வந்த புரவி அணுகி திரும்பி நிற்க பீஷ்மர் இறங்கி வந்தார். அவரது உடலில் இருந்து ஒளி எழுந்து பரவுவதாக தோன்றியது. கருக்கிருள் எங்கும் சூழ்ந்திருந்தபோது மிகத் தெளிவாக அவரை பார்க்க இயன்றது. தவத்தில் நிறுவிக்கொண்ட முனிவர்களின் உடலில் தன்னொளி உண்டென்று அவன் கேட்டிருந்தான். இரவில் துயிலும்போது விளக்கு ஏற்றிவைக்கப்பட்ட படிகக்கலம் என அவர்களின் உடல் துலங்கும் என்பார்கள். அது மெய்தான். அல்லது தன் விழிமயக்கா?

பீஷ்மர் அவனை அணுகி புன்னகைத்து “நன்று, சித்தமாகிவிட்டாய்” என்றார். “ஆம், ஆசிரியரே” என்றான் துண்டிகன். “சற்று நேரம். நானும் ஒருங்கிவிடுவேன்” என்று பீஷ்மர் சொன்னார். துண்டிகன் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம், ஆசிரியரே” என்றான். “நெடுநாள் ஓய்வெடுத்துவிட்டேன். இன்னும் சிறு பொழுதுதான்” என்றபடி பீஷ்மர் உள்ளே சென்றார். அவருக்கு உதவும்பொருட்டு செல்வதா வேண்டாமா என்று தயங்கியபடி துண்டிகன் நின்றான். பின்னர் சவுக்கை கீழே வைத்துவிட்டு பீஷ்மரை அணுகினான்.

பீஷ்மர் மரவுரியால் தன் உடலை துடைத்துக்கொண்டிருந்தார். அவன் அருகே சென்று அந்த மரவுரியை வாங்கும் பொருட்டு கைநீட்டினான். “தொட வேண்டாம்” என்று பீஷ்மர் சொன்னார். “பிழை பொறுக்கவேண்டும்” என்று பதறி அவன் கையை பின்னிழுத்துக்கொண்டான். அவர் நிமிர்ந்து நோக்கி “என்னை இப்போது எவரும் தொடலாகாது” என்றார். அவர் சொல்வதென்ன என்று அவனுக்கு புரியவில்லை. அவர் பீஷ்மர்தானா கந்தர்வர்கள் எவரேனும் அவ்வடிவில் வந்திருக்கிறார்களா என்ற ஐயத்தை அவன் அடைந்தான்.

பீஷ்மர் எழுந்து தன் மரவுரி ஆடையைத் துறந்து சிறிய மூங்கில்பேழையிலிருந்து புதிய மரவுரி ஒன்றை எடுத்து அணிந்தார். புதிய இடைக்கச்சையையும் கையுறைகளையும் அணிந்தார். புதிய தோல்நாடா ஒன்றை எடுத்து குழலை மரச்சீப்பால் நீவி கட்டினார். அவனிடம் “அந்தப் பெட்டியில் இருந்து என் குறடுகளை எடு” என்றார். அவன் பனையோலைப்பெட்டியைத் திறந்து அதிலிருந்து புத்தம்புதிய இரும்புக்குறடுகளை எடுத்து வைத்தான். அவர் பீடப்பெட்டியில் அமர்ந்து அதை தன் கால்களில் அணிந்துகொண்டார். கவசங்களும் புதியனவாக இருக்குமோ என அவன் எண்ணினான். அவர் கைசுட்டி “உம்” என்றார். அந்தப் பெட்டியில் அவருடைய கவசங்கள் உலையிலிருந்து அப்போதுதான் வந்தவை போலிருந்தன. அவர் அவற்றை அணிந்துகொண்டு எழுந்தபோது முதல்நாள் போருக்கெழுந்தவர் போலிருந்தார்.

அவருடைய வில்மட்டும் மாறவில்லை. அதை எடுத்து ஒருமுறை வளைத்து நோக்கியபின் “நான் சித்தமாகிவிட்டேன்” என்றார். அவர் முகம் அவன் அதுவரை கண்டிராத புன்னகையுடன் இருந்தது. எண்ணி எண்ணி மகிழும் எதையோ நெஞ்சுள் கொண்டவர்போல விழிகள் ஒளிகொண்டிருந்தன.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71

bowதுண்டிகன் காவலனின் புலம்பல்களை கேட்காதவன்போல மருத்துவநிலைக்குள் புரவியில் மென்னடையில் சென்றான். வலியலறல்களும் துயிலின் முனகல்களும் நெளிவுகளும் அசைவுகளுமாக அந்த இடம் பரவியிருந்தது. அவற்றுக்கு இடையிலிருந்த இடைவெளி மேலும் இருண்டு செறிந்திருந்தது. அது இறப்பு என அச்சமூட்டியது. அந்த அலறல்களும் முனகல்களும் அசைவுகளும் உயிருக்குரியவை என இனியவையாக தோன்றின. அலறி நெளிந்துகொண்டிருந்த இருவருக்கு நடுவே இருந்த இருண்ட இடைவெளியை அவன் விழி சென்று தொட்டபோது உடல் குளிரில் என நடுங்கியது. நோக்கை திருப்பிக்கொண்டு உடலை இறுக்கி, கைகளை சுருட்டிப்பற்றியபடி அந்தச் சிறிய தொலைவை நெடும்பொழுதெனக் கடந்துசென்று பெருமூச்செறிந்தான்.

அங்கே குருதியும், சீழும், கந்தகமும், படிக்காரமும், பச்சிலைகளும் கலந்த கெடுமணம் மூச்சடைக்கும்படி எழுந்தது. நாற்றம் முகத்தில் ஒட்டடைபோல படியமுடியும் என அவன் அப்போதுதான் உணர்ந்தான். அறியாமலேயே கையால் முகத்தை வருடிக்கொண்டே இருந்தான். அந்தச் சீழ்நாற்றத்தை முன்னரே அறிந்திருந்தான். நாட்பட்ட சீழின் நாற்றம் அது. சூழ்ந்துகொள்ளும் நாற்றம். குருதிபோல் எரிவதோ கந்தகம்போல் தீய்வதோ படிக்காரம்போல் உவர்ப்பதோ அல்ல. மென்மையானது. பாய்வதற்கு முன்னர் புலி உறுமுவதுபோல மிகமிக மென்மையான பேராற்றல்கொண்டது. அவன் கடிவாளத்தைப் பற்றி இழுத்து நிறுத்தினான். அது என்ன? எங்கே அறிந்தேன்? சீழில் அல்ல. இத்தனை சீழை எங்கும் பார்த்ததில்லை. வேறெங்கோ.

கண்களை மூடியபோது விழிகளுக்குள் அலைகள் எழுந்தன. செல்க என புரவியை தட்டியபோது அது மெல்ல செல்லத் தொடங்கியது. அதன் தாளம் அவன் உடலுக்குள் எங்கெங்கோ சென்று நரம்புத்துடிப்புகளாக மாறியது. விழிகள் ஒரு நெளிவை கண்டுவிட்ட பின்னர்தான் அவை அதற்காக துழாவிக்கொண்டிருந்தன என்று அறிந்தான். நெஞ்சு திடுக்கிட நோக்கு கூர்ந்தான். அந்த நாகம் இருளுக்குள் இருளலையாக மறைந்தது. படுத்திருந்தவர்களுக்குள் நிறைந்திருந்த இருளுக்குள் விழிகள் நூற்றுக்கணக்கான நெளிவுகளை உருவாக்கிக்கொண்டன. உடல் அதிர்வடங்கியதும் அவன் முன்னால் சென்றான்.

அவை உயிரின் ஓசைகள் அல்ல என்று அவனுக்கு தோன்றியது. இறப்பின் ஓசைகள்தான் அனைத்தும். ஊற்றின், ஓடையின், ஆற்றின், அருவியின் ஓசைகள் எல்லாமே கடலின் ஓசைகளே. ஆம், என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? நான் ஒருகணம்கூட ஒழியாமல் எண்ணிக்கொண்டிருப்பது சாவைப்பற்றி மட்டுமே. சாவின் ஓசைகளால் நிறைந்திருந்தது இருள். இருளே சாவாகவும் இருந்தது. அவன் நோக்கியபடியே சென்றான். காட்டுமரங்களின் இலைகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருந்த படுக்கைகள். சிலருக்கருகே மரக்கிளைகள் நடப்பட்டு கைகால்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. கட்டுகள் பெரும்பாலும் இலைகளாலும் மரநார்களாலும் ஆனவை. மரவுரிகள் தீர்ந்துவிட்டிருக்கும். மருந்துகள் இருக்குமா? இல்லை இந்த மருத்துவநிலையே ஒரு நாடகம் மட்டும்தானா?

படுக்கையில் எழுந்தமர்ந்த ஒரு வீரன் அவனை நோக்கி “மிக எளிது!” என்று புன்னகைத்தான். துண்டிகன் நின்று “என்ன? என்ன?” என்றான். அவன் ஒருக்களித்து படுக்கையில் மீண்டும் விழுந்தான். அவன் என்ன சொன்னான் என்று திகைத்தபடி சிலகணங்கள் நோக்கிநின்றான். அவன் ஆழ்துயிலில் கிடந்தான். அவனேதானா? அவனிலெழுந்த வேறேதும் தெய்வமா? இங்கு விழியறியாமல் நிறைந்திருப்போர் எவரெவர்! துண்டிகன் மீண்டும் புரவியைத் தூண்டி முன்னால் சென்றான். பின்னால் “மிக எளிது!” என்னும் சொல் எழுந்தது. சொல்லப்பட்டதா, உளம் கேட்டதா? எது எளிது? எது மிக எளிது? விலக்குக! உளம்விலக்கிக் கொள்க! இல்லையென்றால் இங்கிருந்து மீள்தல் அரிது.

பாதையோரமாக உருண்டு வந்து படுத்திருந்த ஒருவன் தன் வலக்கையை நிலத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து “என்னை கொன்றுவிடுங்கள்! கொன்றுவிடுங்கள்! உத்தமரே, என்னை கொன்றுவிடுங்கள்! என் மூத்தோர் உங்களை வாழ்த்துவர். என் அன்னை உங்களை வணங்குவாள். என்னை கொன்றுவிடுக!” என்று அலறிக்கொண்டிருந்தான். துண்டிகன் கடந்து சென்றபோது அவன் தன் கையை நீட்டி “மருத்துவரே, எனக்கு நஞ்சூட்டுங்கள்! என் நரம்பொன்றை அறுத்துவிடுங்கள்! இவ்வண்ணம் இங்கு வலியில் துடிக்க நான் விழையவில்லை! நன்று செய்வீர்கள் எனில் இது ஒன்றையே செய்யுங்கள்!” என்றான். அவன் விழிகள் சிவந்து வெறித்திருந்தன. எங்கும் நரம்பு புடைத்து கொடிகளால் கட்டப்பட்டது போலிருந்தது அவன் உடல்.

கழுத்தறுக்கப்பட்ட கன்றுக்குட்டியென ஊளையிட்டுக்கொண்டிருந்த ஒருவனைக் கடந்து துண்டிகன் சென்றான். ஒருவன் எழுந்து எழுந்து விழுந்துகொண்டிருந்தான். அவர்கள் அனைவரிலும் மானுடமல்லாத ஒன்று இருந்தது. மானுடவியல்பு என்பது அறிந்த அசைவுகளும், பொருள்சூடிய சொற்களும் சேர்ந்து அமைப்பது. உள்தொடர்ச்சியால் அறியப்படுவது. சினம்கொண்டவர்கள், வெறியெழுந்தவர்கள், காமத்திலாடுபவர்கள் மானுடவியல்பை இழந்துவிடுகிறார்கள். தெய்வமெழுந்தவர்களிலும் மானுடவியல்பு இல்லை. பெருவலி கொண்டவர்களும் மானுடர்கள் அல்ல. உடல்கள், விலங்குகள். அல்லது அவர்கள் தெய்வமெழுந்தவர்களா என்ன?

எதிரில் கைவிளக்குடன் மருத்துவஏவலன் ஒருவன் வந்தான். துண்டிகன் இறங்கிக்கொண்டு “வணங்குகிறேன், உத்தமரே. நான் துண்டிகன், தேர்வலன்” என்றான். அவன் விழிகளில் சொல்லடங்கியிருந்தது. நெடும்பொழுதாக எதையுமே பேசாமலாகிவிட்டிருந்தமையால் உதடுகளும் தொண்டையும் அசைவை மறந்திருந்தன. வெறுமனே தலையை மட்டும் அசைத்தான். “உத்தமரே, நான் பீஷ்ம பிதாமகரின் மாணவரும் தேர்வலருமான வீரசேனரை பார்க்க விழைகிறேன். இது அரசரின் ஆணை” என்றான். கணையாழியை காட்டினாலும் மருத்துவஏவலன் அதை வாங்கிப்பார்க்க ஆர்வம் காட்டவில்லை. அவன் வெறுமனே கையை நீட்டி காட்டினான்.

“அங்கா?” என்றான் துண்டிகன். “ஆம்” என அவன் தலையசைத்தான். “உத்தமரே, என் விழிமயக்காக இருக்கலாம். ஆனால் நான் இங்கே ஒரு பாம்பை பார்த்தேன்” என்றான் துண்டிகன். மருத்துவஏவலன் “ஆம், இங்கே பாம்புகள் நிறையவே உள்ளன. அவ்வப்போது பாம்பு கடித்து பலர் இறக்கிறார்கள்” என்றான். “இத்தனைபேர் இருக்கையில் பாம்புகளா! அருகே உள்ள காடுகளிலிருந்து வருகின்றன போலும்!” என்றான் துண்டிகன். “இல்லை, காடுகளில் இருந்து சிற்றுயிர்களும் விலங்குகளும் வராமலிருக்க நெருப்பு அரண் போடப்பட்டுள்ளது. கந்தக அரணும் உள்ளது. இவை இந்த மண்ணில் நிறைந்துள்ள வளைகளினூடாக வருகின்றன.”

துண்டிகன் கீழே பார்த்தான். “இந்த மண்ணே பல்லாயிரம் வளைகளாலானது. யானைக்கூட்டங்கள் நடமாடும் அளவுக்கு பெரிய பிலங்கள் முதல் புழுக்களின் பாதைகள் வரை நாம் கரவுப்பாதைகளின் பெரிய வலைக்கு மேல் அமர்ந்திருக்கிறோம்” என்றான் மருத்துவஏவலன். “ஆகவே, நம்மால் நாகங்களை எவ்வகையிலும் தடுக்கமுடியாது.” துண்டிகன் “அவை ஏன் இங்கே வருகின்றன? இங்கே இரை என ஏதுமில்லையே” என்றான். “அவற்றின் இரை இந்த மண்ணில் நிறைந்துள்ள சிதல்தான். இங்கே சிதலின் மணம் பெருகியிருக்கிறது. சீழுக்கும் சிதலுக்கும் ஒரே நாற்றம்தான்” என்றான் மருத்துவஏவலன்.

துண்டிகன் மெய்ப்பு கொண்டான். ஆம், அந்த மணம்தான். தன் ஆழுள்ளம் தேடித்தேடி அலைந்தது சிதல்மணத்தின் நினைவொன்றைத்தான். இளமையில் அவனுடைய ஆடை ஒன்று தொலைந்துவிட்டிருந்தது. அவன் தந்தை புரவிகளுடன் தண்டகம் என்னும் ஊரில் நிகழ்ந்த விழாவுக்குச் சென்று மீண்டபோது கொண்டுவந்து அளித்த பரிசு. இரு வண்ணங்களில் அமைந்த பருத்தியாடை. அவன் குடியில் பிறிதெவருக்கும் இல்லாதது. பெரும்பாலானவர்கள் பார்த்தே இராதது. தந்தை அதை மூன்று வெள்ளிக்காசுகளுக்கு வாங்கினார். பத்து வெள்ளிக்காசுகளுக்கு ஒரு பரிக்குழவியை வாங்கமுடியும்.

அதை தான் ஆடையென அணியக்கூடும் என்றே அவனுக்கு தோன்றவில்லை. கைகளால் நீவிநீவி நோக்கிக்கொண்டிருந்தான். மென்மையான குழவியொன்றை தொட்டு வருடுவதுபோல. அதை நெஞ்சோடணைத்தபடி படுத்திருந்தான். முகத்தில் ஒற்றிக்கொண்டான். அதை வைத்துப்பூட்டிய மரப்பெட்டிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தான். அதை அணியும்படி அன்னையும் மூதன்னையும் சொல்லியும் அவனால் இயலவில்லை. அதை ஒவ்வொருநாளும் எடுத்துப் பார்த்து முகர்ந்து முத்தமிட்டு திரும்ப வைத்தான். “பெண் வளர்வதற்காக முறைமணவாளன் காத்திருப்பதுபோல” என அன்னை ஏளனம் செய்தாள்.

ஏழு மாதம் அதை அவன் அணியவில்லை. அதன்பின் உள்ளூர் விழவில் அதை அணியும்படி தந்தை ஆணையிட்டார். அன்று அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அதை அணிந்தபோது இரும்புக் கவசம் என எடைகொண்டிருந்தது. அவன் வெளியே வந்தபோது தான் பிறிதொருவனாக ஆகிவிட்டதாக உணர்ந்தான். அனைத்து விழிகளும் மாறிவிட்டிருந்தன. அவை வேறு எவரையோ நோக்கின. அந்நோக்கு தன்னையல்ல என உணர்ந்து அவன் அகம் சீற்றம்கொண்டது. அதை கிழித்து வீசிவிடவேண்டுமென எழுந்தது. ஆனால் அன்று பகலுக்குள் அந்த ஆடைக்குரியவனாக அவன் மாறிவிட்டிருந்தான். தன் உடலுக்குள் வேறொன்றாகப் பிறந்து வளர்ந்திருந்தான்.

பின்னர் அத்தனை விழவுகளிலும் அவன் அந்த ஆடையையே அணிந்தான். துவைத்து கஞ்சியிட்டு வெம்மைமிக்க எடை கொண்டு அழுத்தி புதியதென ஆக்கி அணிந்து வெளியே செல்லும்போது ஒவ்வொருவரும் தன்னைவிட கீழே என உணர்ந்தான். அதை அணிவதற்காகவே விழவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் சென்றான். அந்த ஆடையின் வண்ணமும் வடிவமும் அவன் என்று ஆகியது. தன் அகவையின் அப்பருவத்தின் உடல் அது. பின்னர் அறிந்தான், அத்தகைய நூற்றுக்கணக்கான உடல்களினூடாக ஓடிச்சென்றுகொண்டே இருக்கிறோம் என. கடந்தபின் நம்மால் அவ்வுடலை நினைவுகூரவே இயல்வதில்லை. அது எவருடையதோ என ஆகிவிட்டிருக்கிறது. ஓவியங்களில் அரசர்களை பார்க்கையில் அந்த உடலில் இருந்து அவர்கள் நெடுங்காலம் முன்னரே வெளியேறியிருப்பார்கள் என நினைத்துக்கொள்வான். அதன்முன் வந்து நின்றால் யார் இவர் என்றே அவர்கள் துணுக்குறுவார்கள்.

அவன்மேல் பொறாமை உருவாகிக்கொண்டிருந்ததை அறிந்தாலும் அது அவனை உளம்மகிழச் செய்தது. பின்னர் ஒருநாள் அவன் பெட்டியைத் திறந்து நோக்கியபோது ஆடை அங்கே இருக்கவில்லை. முதல் கணத்திலேயே அது முற்றாக மறைந்துவிட்டது என உள்ளம் உணர்ந்து குளிர்ந்துறைந்தது. ஆனாலும் அது எங்கோ இருக்கும் என தேடத் தொடங்கினான். அனைவரிடமும் உசாவினான். சினந்தான், அழுதான், பித்தன்போல் அலைந்தான். அது எங்குமிலாதபடி மறைந்துவிட்டிருந்தது. அந்த ஏக்கம் அவனை தளர்த்தியது. நோயுற்று விழிகளில் ஒளியும் வயிற்றில் அனலும் அணைந்து சொல்லிழந்து தனித்தான். அவனை மீட்க அன்னையும் மூதன்னையும் முயன்றனர். அவனுக்கு வேறு ஆடை வாங்கி அளிப்பதாக உறுதியளித்தனர். அவனை புதிய ஊர்களுக்கு அழைத்துச்சென்றனர். மீளமீள அவனிடம் நல்லுரை உரைத்தனர். அன்னை நயந்துரைக்க தந்தை கடிந்துரைத்தார்.

உண்மையில் அவன் மீள விழையவில்லை. மீண்டு எழும் அவ்வுலகில் அந்த ஆடை இருக்காதென்பதனால் அந்த ஆடை நினைவென்றும் துயரமென்றும் எஞ்சியிருக்கும் உலகையே நீட்டிக்க விழைந்தான். ஆனால் மிக விரைவில் அந்த உலகம் கரைந்துகொண்டிருந்தது. நாளென்று சூழும் புறம் அவனை உருமாற்றிக்கொண்டே இருந்தது. அவன் அந்த ஆடையை மறந்தான். எப்போதேனும் கனவுகளில் மட்டும் அது எழுந்தது. விழித்து அமர்ந்து ஏங்கி விழிகசிந்தான். ஒவ்வொன்றுக்கும் நிகராக ஆயிரத்தை வைக்கும் விரிவுள்ள புறவுலகில் அவன் மீண்டும் புதியவனாக எழுந்தான்.

அதன்பின் ஒருமுறை இல்லத்தின் பின்புறம் பழைய புரவிச்சேணங்களை இட்டுவைக்கும் சிற்றறைக்குள் சேணம் ஒன்றை எடுப்பதற்காகச் சென்றபோது அவன் அந்த ஆடையை பார்த்தான். கீழே கிடந்த இரும்பாலான கால்வளையம் மண்ணுடன் சேர்ந்து துரும்பெடுத்திருந்தது. அதை தூக்கியபோது உதிர்ந்தது. கூரையின் வெயில்குழல்களின் ஒளியில் அப்பால் தன் ஆடை கிடப்பதை கண்டான். வண்ணம் மாறியிருந்தாலும் அதன் வடிவமே ஆடையென காட்டியது. மெல்ல சென்று குனிந்து நோக்கியபோது உணர்ந்தான், அது ஆடை அல்ல. சிதல் ஆடைக்குமேல் உருவாக்கிய கூடு. ஆடையின் அதே வடிவம், அதே நெளிவுகள். அதன் அணிநெசவுகள்கூட மென்மண்ணால் உருவாகியிருந்தன.

அவன் அதை விரலால் தொடப்போய், தயங்கினான். மீண்டும் மெல்ல தொட்டான். புண் பொருக்கு கட்டியதுபோலிருந்தது. அதை உடைத்தான். உள்ளே வெண்ணிறத்தில் சிதல்கள் ஓடிக்கொண்டிருந்தன. உயிருள்ள சீழ். சீழ்மணம். அவன் அந்த ஆடைவடிவை தட்டித்தட்டி கலைத்தான். சிதல்களின் வழித்தடம் மண்ணில் எஞ்சியிருந்தது. அதையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் பெருமூச்சுடன் எழுந்து மீண்டுவந்தான். அதை அவன் எவரிடமும் சொல்லவில்லை. நெடுநாட்களுக்குப் பின் ஒரு கனவு வந்தது. அவன் துயின்றுகொண்டிருந்தான். உடல் மண்ணாலானதாக இருந்தது. உள்ளே சிதல்கள் ஓடிக்கொண்டிருந்தன.

bow“இவர்தான்” என்று மருத்துவஏவலன் சொன்னான். அவன் தலைவணங்க மருத்துவஏவலன் விலகிச் சென்றான். ஒருமுறை நோக்கி அது வீரசேனர்தான் என்று உறுதி செய்தபின் துண்டிகன் படுக்கையில் படுத்திருந்த அவரை அணுகி நின்றான். அவர் உடலில் இருந்து கந்தகம் உடல் வெப்பத்தால் ஆவியாகும் கெடுமணம் எழுந்தது. கந்தகத்திற்கும் அழுகும் மணம் உண்டு. உடல் அழுகும் மணம் வேறு. கந்தகம் நிலம் அழுகுவதன் கெடுமணம். அவன் வீரசேனரின் கால்களைத் தொட்டு “வீரரே!” என்றான். அவன் அழைத்த பின்பே அவர் கண்களைத் திறந்து “நீங்களா? நீங்களா?” என்றார். “ என்னை அறிவீரா?” என்றான் துண்டிகன் வியப்புடன்.

வீரசேனர் முற்றாக விழித்துக்கொண்டு “நீ யார்?” என்று கேட்டார். “நான் துண்டிகன். அரசர் ஆணைப்படி தங்களை பார்க்க வந்தேன். தங்கள் உடல்நிலையை நோக்கி பீஷ்ம பிதாமகரிடம் சொல்லும்படி ஆணை” என்றான். வீரசேனர் “உங்களுடன் வந்தவர்கள்! இவர்களை நான் முன்னரே அறிவேன்!” என்றார். “யார்?” என்று துண்டிகன் திரும்பிப்பார்த்தான். “இவர்கள்! இங்கெலாம் இவர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். குளிர்ந்தவர்கள். அவர்கள் வருகையிலேயே கைகளும் கால்களும் குளிர்கொண்டு விரைத்துக்கொள்கின்றன” என்றார் வீரசேனர். “பலமுறை வந்திருக்கிறார்கள். நீங்கள் வருவதை தொலைவிலேயே கண்டேன்.”

துண்டிகன் “தங்கள் உடல்நிலை எவ்வாறு உள்ளது?” என்றான். “நான் இவர்களுடன் செல்வேன். இவர்களை பார்க்க முடிவது என்பதே அதற்கான அறிகுறிதான்” என்றார் வீரசேனர். விழிகள் வெறித்து உருள “இவர்கள் என்னை அழைத்துச் செல்வார்கள்… ஆம்” என்று மெல்லிய குரலில் சொன்னார். “பிதாமகரிடம் சொல்லுங்கள், அவரிடமிருந்து அவன் விலகிச் செல்வதை நான் பார்த்தேன். அவரைப் போன்றே தோற்றம் கொண்டவன். ஆனால் வைரங்கள் பதிக்கப்பட்ட பொன்முடியும் ஒளிரும் குண்டலங்களும் பொற்கவசமும் அணிந்தவன். மின்னல் கதிர்போல் ஒளிவிடும் வில்லேந்தியவன்… அவரிடமிருந்து விலகிச்சென்றான்.”

“எப்போது?” என்று துண்டிகன் கேட்டான். “போர்க்களத்தில் என் முன்னாலிருந்த நோக்காடியில் அவரை பார்த்தபடியே தேர்செலுத்திக்கொண்டிருந்தேன். அவர் ஒருவராகவும் இருவராகவும் அதில் தெரிந்தார். அவன் அவர் உடலாக ஆகி உடன்நின்றிருப்பதுபோல. நோக்காடி அசையும்போதெல்லாம் அவருடைய ஆடிப்பாவையும் உடைந்து அவர்கள் இரண்டானார்கள். மீண்டும் ஒன்றாகினர். முன்னரே அவருடைய தேர்ப்பாகனாகிய என் மூத்தவர் உக்ரசேனர் என்னிடம் கூறியிருந்தார், அவரில் எட்டு வசுக்கள் குடிகொள்வதாகவும் ஒவ்வொரு முறையும் ஒரு வசுவே அவர்களில் எழுந்து அப்போரை நடத்துவதாகவும். அந்த எண்ணத்தால் ஏற்பட்ட உளமயக்கா என்று நான் ஐயப்பட்டேன்.”

“ஆனால் ஆடிப்பாவையை விழிநுனியால் நோக்காமலிருக்க என்னால் இயலவில்லை. என் பின்னால் நின்று போரிடுபவர் இருவர் என்ற உணர்வை முதுகுகொண்ட நுண்ணுணர்வும் வலுவாக அடைந்துகொண்டே இருந்தது. போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது எதிரில் அவன் வந்தான்…” என்றார் வீரசேனர். “யார்?” என்றான் துண்டிகன். “சிகண்டி, ஆணிலி. ஒருகணம்தான் என் ஆடியில் நான் அந்தத் தேவனின் முகத்தை பார்த்தேன். திகைத்ததுபோல், கசந்ததுபோல் ஒரு முகம். பின்னர் அவன் அகன்றுவிட்டிருந்தான். வில் தாழ்த்தி துயருடன் நோக்கிக்கொண்டிருந்த பீஷ்ம பிதாமகரின் முகத்தையே அதன்பின் ஆடியில் பார்த்தேன்.”

“தேரை திருப்புகையில் அன்று பீஷ்மரின் பின்னால் எட்டு நிழல்கள் எழுந்து சரிந்திருப்பதை கண்டேன். அவர்கள் எண்மர்தான். எண்மரும் அவரிடமிருந்து விலகிவிட்டார்கள். ஐயமில்லை இனி அவர் ஆற்றலற்றவர். அவர் உடல்தளர்ந்திருந்தார். ஒவ்வொருமுறை நோக்குகையிலும் இறப்பற்றவர், தோல்வியற்றவர், மானுடம்கடந்த பிறிதொருவர் என நமக்கு தோன்றும் ஒன்று அவரிடமுண்டு. அது முற்றாக அகன்றுவிட்டிருந்தது. இன்று அவர் உயிர்துறக்கக்கூடும்” என்றார் வீரசேனர்.

துண்டிகன் “இன்றுமுதல் நான் அவருக்கு தேரோட்டவிருக்கிறேன்” என்றான். வீரசேனர் சிலகணங்கள் அவனை கூர்ந்து நோக்கிவிட்டு “ஆம், பிறிதொரு தேர்வலன் அவருக்கும் தேவை. நீர் எவரென்று சொன்னீர்?” என்றார். துண்டிகன் தன் குலத்தையும் தந்தை பெயரையும் சொன்னான். “அறிந்திருக்கிறேன். உமது தந்தை பலமுறை குருநிலைக்கு வந்து பிதாமகரிடம் சொல்லாடியிருக்கிறார். தங்களை அவர் அறிவார்” என்றார் வீரசேனர். பின்னர் புன்னகைத்து “அவருடன் களம்படும் நல்லூழ் கொண்டவர் நீங்கள். அவர் மாணவர்களாகிய அனைவருமே அந்த நல்லூழை விழைபவர்கள்தான். அவர் பொருட்டு உயிர்துறந்தோம் என்ற நிறைவுடன் இங்கிருந்து செல்கிறோம்” என்றார்.

துண்டிகன் என்ன சொல்வது என்று அறியாது நோக்கிக்கொண்டிருந்தான். வீரசேனர் தன் கைகளை நீட்டி அவன் கைகளை பற்றிக்கொண்டார். “சற்று முன்னர் வரை எண்ணிக்கொண்டிருந்தேன், நான்கு தலைமுறை மாணவர்களை பயிற்றுவித்த பின்னரும் களத்தில் என் ஆசிரியன் தனித்து நின்றிருக்கவேண்டுமா என்று. ஆனால் என்றும் அவர் தனியரே. இக்களத்தில் எவராயினும் தனியரே. ஆனால் எந்தக் கோழையாவது வஞ்சம் கொண்டு அவர் முதுகின் பின் ஒரு அம்பு செலுத்தி களத்தில் வீழ்த்திவிட்டால் அவ்விழிவுக்கு அவருக்கு முன் களம்பட்ட அத்தனை மாணவர்களுமே பொறுப்பேற்க வேண்டுமே என்று எண்ணினேன்.”

“அது நிகழாது” என்று கூரிய குரலில் துண்டிகன் சொன்னான். “நேர்நின்று கற்றால்தான் மாணவன் என்றில்லை.” வீரசேனர் “ஆம், நீர் வந்ததுமே அதை அறிந்துகொண்டேன். நீர் அவருக்குரியவர், அதன்பொருட்டு தேர்வுசெய்யப்பட்டவர். அவருடன் இரும். களம்பட்ட நாங்கள் அனைவரும் உம்முடன் வந்திருப்போம். என் ஆசிரியர் நிமிர்ந்து களம் நிற்க வேண்டும். அடிபணியும் மைந்தர் குருதிநிரையை கைதூக்கி வாழ்த்தும் மூதாதையின் புன்னகையுடன் உயிர் துறக்கவேண்டும். விண்ணுலகில் அவருக்காக சந்தனுவும் பிரதீபரும் ஹஸ்தியும் குருவும் யயாதியும் காத்து நின்றிருப்பார்கள்” என்றார்.

“அவர் அவர்களில் ஒருவர். இங்குள்ளவர் அல்ல. கதைகளில் வாழும் மூதாதைகளில் ஒருவர். இங்கிருக்கும் உலகைவிட நூறுமடங்கு பெரிது கதையுலகு. அதில் ஒரு சிறு துளி காலத்தில் சற்றே பிந்தி, இவ்வுலகில் தலைநீட்டி நின்றிருக்கிறது. அதுதான். அந்தப் பொருந்தாமையினால் இங்கிருக்கும் ஒவ்வொருவருடனும் அவர் முட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அவரை புண்படுத்தியிருக்கிறோம். தேர்வலரே, அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் ஒரு சொல்லம்பையேனும் பிதாமகர் மேல் வீசாத எவரும் இருக்கமாட்டார்கள்.”

“துரியோதனருக்காக படைகொண்டு எழுகிறார் என அவர் சொன்னபோது மாணவர்கள் அனைவரும் அவரை பழித்தோம். அவர் வெற்றிகொள்ளும் தரப்பில் நிற்க விழைகிறார் என்றும், அதனூடாக சென்றபின்னர் இங்கொரு நடுகல்லை ஈட்ட எண்ணுகிறார் என்றும் அவரிடம் நானே சொன்னேன். சொல்லில்லாது விழிதாழ்த்தி தாடியை நீவிக்கொண்டிருந்தார். சென்ற ஒன்பது நாட்களில் இந்தப் படைகளில் நான் செவிகொண்ட அனைவருமே அவரை பழித்தனர். இவ்வழிவுக்கும் போருக்கும் அவரே ஊற்றென்று அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அரங்கிலும் அடுமனைகளிலும் அவரை தூற்றுகிறார்கள். கௌரவரும் பாண்டவரும் அவரை வெறுக்கிறார்கள். சொல்லாதவர் எண்ணத்தால் அம்பு தொடுக்கிறார்கள். உடலெங்கும் இடைவெளியிலாது அம்புகள் தைத்து விழுந்து கிடப்பவராகவே அவரை என்னால் எண்ண இயல்கிறது. மயிர்க்கால்கள் அனைத்தும் அம்புகளாகிவிட்டவைபோல்.”

“ஆனால் அதுவே இயல்பு. நம் வீழ்ச்சிகளுக்கும் சரிவுகளுக்கும் தந்தையரை குறைசொல்வதற்கே நாம் பயின்றிருக்கிறோம். தந்தைவடிவானவருக்கு நிகராக குடிப்பழியும் குலவஞ்சமும் வேறெவருக்கும் அளிக்கப்படுவதில்லை. நம் பொறுப்புகள் அனைத்தையும் தந்தையரிடமே அளிக்கிறோம். நமது கீழ்மைக்கான பொறுப்பையும் அவர்களிடமே கொடுக்கிறோம். அவர்களும் உளம் கனிந்து ஆமென்று பெற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறே என்று தாங்களும் நம்புகிறார்கள். மகவென்று நெஞ்சில் உதைப்பதை மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் அதே உளநிலையில் இறுதிக்கணம் வரை அவர்கள் நீடிக்கிறார்கள். அவர்கள் மண்மறைந்து சொல்லிலும் கனவிலும் விண்ணிலும் நிறைந்த பின்னர் அவர்களுக்கு நாம் என்ன அளித்தோம் என்பதை நாம் உணர்வோம்.”

வீரசேனர் மெல்ல மூச்சு வாங்க கண்களை மூடினார். அச்சொற்கள் அவருக்குள் ஊறிநிறைந்து காத்திருப்பதாகத் தோன்றியது. எஞ்சிய மூச்சே அதுதான் என. இமைகளுக்குள் விழிகள் மெல்ல அசைந்துகொண்டே இருந்தன. துண்டிகன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் உடலிலிருந்து அந்த அதிர்வு மெல்ல வடிந்துசெல்வதுபோல் தோன்றியது. “ஆனால் நான் நிகர்செய்துவிட்டேன். நான் அளித்துவிட்டேன்“ என்றார். மேலும் அவர் பேசக்கூடும் என துண்டிகன் காத்திருந்தான். அவர் நெடுநேரம் பேசவில்லை. மூச்சு மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. காற்றுகாட்டிபோல அவ்வப்போது திடுக்கிட்டு திசைமாறியது. அவர் உடல் இன்னொன்றாக மாறிக்கொண்டிருந்தது. அதிலிருந்து உயிர் என உணரும் ஒன்று, அது அசைவா, தோலின் ஒளியா, மெய்ப்பா ஏதோ ஒன்று அகன்றுகொண்டிருந்தது. குடுவையிலிருந்து துளைகளினூடாக நீர் ஒழிந்து மறைவதுபோல. சற்று நேரம் கழித்து அவன் அவர் கைகளை பற்றினான். அவற்றில் உயிரில்லை என்பதை உடனே உணர்ந்தான்.

துண்டிகன் அவர் கையை வைத்துவிட்டு எழுந்துகொண்டான். சூழ்ந்திருந்த இருளையும் வானில் நிறைந்திருந்த விண்மீன்களையும் நோக்கிக்கொண்டு நின்றான். மூச்சை இழுத்து இழுத்து விட்டான். மருத்துவஏவலனை அழைத்து சொல்லவேண்டுமா என எண்ணினான். வேண்டாம் என்று தோன்றியது. அவன் மெல்ல நடந்து தன் புரவியை நோக்கி சென்றான். கால்வளையத்தை மிதித்துச் சுழற்றி சேணத்தின்மேல் அமர்ந்த கணம் அந்த ஆடை நினைவுக்கு வந்தது. அது எவ்வாறு அங்கே சென்றிருக்கும் என்றும்.