கிராதம்

நூல் பன்னிரண்டு – கிராதம் – 83

[ 39 ]

வேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்?” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை உள்ளது” என்றான்.

“விண்ணளந்தோனை முழுமுதல்தெய்வமென வழிபடுபவர்கள். ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு முறையில் விரிந்துகொண்டிருக்கிறது இவ்வழிபாடு. வடக்கே பசும்புல்வெளிகளின் தலைவனாக அவனை வழிபடுகிறார்கள். விரிந்த நிலத்தின் நடுவே அவன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அங்கே அவன் முப்பிரிப் பேரரவு மேல் அறிதுயில்கொண்டிருக்கிறான். ஆய்ச்சியரும் ஆயரும் நோன்பிருந்து தாமரைமலர்க் குடலைகளுடன் பாற்குடம் சுமந்துவந்து அவனுக்குப் படைத்து வழிபடுகிறார்கள். இங்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் மலைநின்ற நெடுமாலாக அவனை வணங்குகிறார்கள். அவனை வழிபட இசையே வழி என்று சொல்கிறார்கள்” என்றான் சண்டன்.

விண்ணடியார் அணுகும்தோறும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் எழுந்து பறந்தன. தண்ணுமையின் ஒலி செவியை கூர்மையாக தொட்டது. “தாளமென்றால் இதுதான்… காலம்போலவே பிழையற்றது” என்றான் ஜைமினி. “ஆம், தென்னிலமே இசையாலும் தாளத்தாலும் ஆனது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாளக்கருவிகள் இங்குள்ளன. செல்லும்தோறும் ஊருக்கொரு முழவுவகையை நீங்கள் காணமுடியும். தொழில்சூழ்கையிலும் ஓய்வுகொள்கையிலும் வழிபடுகையிலும் பாடிக்கொண்டே இருப்பது அவர்களின் வழக்கம். அவர்களின் ஊர்களில் குழலோ யாழோ முழவோ ஒலிக்காத பொழுதென ஏதுமில்லை” என்றான் சண்டன்.

“அவர்கள் இசையை நூற்றிமூன்று பண்களென வகுத்துள்ளனர். அத்தனை பொழுதுகளுக்கும் உரிய பண்கள் அவர்களிடம் உள்ளன. முதுகுருகு முதுநாரை என நூற்றெட்டு இசைநூல்கள் அவர்களிடமுள்ளன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு இசைநிலைகளை வகுத்துள்ளனர். மயிலகவு, பசுவின் குரல், ஆட்டின் சினைப்பு, அன்னத்தின் விளி, கூகைக்குமுறல், குதிரைக்கனைப்பு, யானைப்பிளிறல் என ஏழு உயிரொலிகளில் இருந்து எழுந்தது இசைநிலைகள் என்பது அவர்களின் கூற்று” என்று சண்டன் சொன்னான்.

விண்ணடியார் உருவங்கள் தெரியத்தொடங்கின. அனைவருமே மஞ்சளாடை அணிந்து மஞ்சள் தலைப்பாகையுடன் விண்ணிறைவனின் காலடிகளை நெற்றியில் வரைந்துகொண்டு கைகளில் இசைக்கருவிகளை ஏந்தி மீட்டியபடியும் பாடி ஆடியபடியும் வந்தனர். அவர்கள் வணங்கியபடி நின்றிருக்க அருகணைந்த பின்னரும் அவர்களால் இசையிலிருந்து இறங்க முடியவில்லை. முதலில் வந்தவர் முழவை நிறுத்திவிட்டு வணங்கியபின்னரும் பிறர் இசையை தொடர்ந்தனர். மெல்ல இசை ஓய்ந்த பின்னரும் அவர்களின் உடல்களில் இசை ததும்பிக்கொண்டிருந்தது. சிவந்து கலங்கி புறநோக்கிழந்து பித்தர்விழிகள் போலிருந்தன கண்கள்.

அவர்களின் முதல்வர் கண்ணீர் வழிய கைகளைக் கூப்பியபடி மிகுவுணர்ச்சியுடன் “விண்ணவன் புகழ் இனிதாகுக! விண்ணவன் பெயர் இனிதாகுக! விண்ணவன் பொழுது இனிதாகுக!” என்றார். சண்டன் “சிவமேயாம்!” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா?” என்றான். “நாங்கள் தென்னிலத்திலிருந்து வேங்கடம் செல்லும் விண்ணடியார். ஒவ்வொருவரும் ஒருவகை தொழில் செய்வோர். இவர்கள் இருவரும் உழவர்கள். அவர்கள் மூவரும் கம்மாளர். பிறிதொருவர் வணிகர். நான் அந்தணன்” என்றார் முதல் விண்ணடியார்.

“மழைவிழும் ஆறுமாதகாலம் எங்கள் ஊர்களில் தொழில்செய்து பொருளீட்டுவோம். அதன்பின் இல்லம் துறந்து விண்ணளந்தோன் நினைவொன்றே நெஞ்சில் நிறைந்திருக்க ஊர்கள்தோறும் செல்வோம். அங்கே எங்கள் இறைவனின் புகழ்பாடி அம்மக்கள் அளிக்கும் உணவை உண்டு சாவடிகளில் தங்கி மறுநாள் கிளம்புவோம். எவ்வூரிலும் ஒருநாள் இரவுக்குமேல் தங்குவதில்லை. தென்னிலத்தின் மாலிருஞ்சோலையில் தொடங்கி வடபுலத்து வேங்கடம் வரை வந்து திரும்பிச்செல்வோம். ஊர்துறந்து கிளம்பியபின் எங்களுக்குப் பெயர்கள் இல்லை. அனைவருமே விண்ணடியார் என்றே அழைக்கப்படுவோம்.”

“அனைவருமே இசையறிந்திருக்கிறீர்கள்” என்றான் சுமந்து. “இசையினூடாக மட்டுமே அவனை அறியமுடியுமென்பதனால் இசையை அறிந்தோம். நோக்குக இளையோரே, இதோ வசந்தம் எழுந்துள்ளது. இப்புவியின் பல்லாயிரம் கோடி மலர்களில் மணமென எழுந்து தேன் என ஊறிக்கொண்டிருப்பவன் அவனே. சற்று சித்தம் திறந்தால் இந்த மரத்தில் அந்தப் பாறையில் அப்பால் மலைகளில் அனைத்திலிருந்தும் அவன் மணமும் இனிமையும் எழுந்துகொண்டிருப்பதை உணர்வீர்கள். இனிது இப்புவி, ஏனென்றால் இது அவனை தன்னுள் கரந்திருக்கிறது. இவ்வினிமையில் கணமும் வீணாகாமல் திளைப்பதற்கென்றே மானுடப்பிறவியை அவன் அளித்துள்ளான்” என்றார் விண்ணடியார்.

“அறிக, கனிந்து தன் முட்டைகளை தேனிலேயே இடும் அன்னைத்தேனீ அவன். தேனில் வளர்ந்து தேனே சிறகாகி எழுந்து தேன் தேடி அலைந்து தேனை உணவாக்கி வாழ்ந்து மறைவதொன்றே நம் கடன்” என்றார் இன்னொரு விண்ணடியார். “ஆகவே, நாங்கள் அவன் புகழன்றி வேறேதும் பேசுவதில்லை. அவன் இசையன்றி ஏதும் பாடுவதில்லை. அவன் அழகை மட்டுமே எங்கள் விழிகள் நோக்கும். அவன் மணம் மட்டுமே எங்கள் மூக்குகள் அறியும். அவனைப்போல் இனிக்கும் அன்னம் மட்டுமே எங்கள் உணவு. எங்கள் குரல் தித்திப்பதை நீங்கள் உணர்வீர்கள், ஏனென்றால் எங்கள் உடல் தித்திக்கிறது. உள்ளம் திகட்டாது தித்திக்கிறது. இளையோரே, அவன் பள்ளிகொண்ட பாற்கடலே எங்கள் இறுதியினிமை” என்றார்.

சண்டன் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். “நன்று சூழ்க!” என முதல் விண்ணடியார் வாழ்த்தினார். “இன்று காலையிலேயே எங்கள் நெஞ்சு மேலும் மேலுமென இனிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. கூசக்கூச இனிமை. என்னவனே, பெருமாளே, போதும் இது என உளத்துள் கூவினேன். ஏன் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். உங்களை நோக்கியதுமே அது ஏன் என அறிந்தேன். இதோ, விண்ணளந்தோன் புகழ் வளர்க்கும் ஐவரை கண்முன் காண்கிறேன். சாம்பல்பூசிய மாவிரதச்சைவர் அவர்களை அழைத்துவருவதும் அவன் ஆடலே” என்றார்.

இன்னொருவர் “ஆம், கண்டதுமே என் நெஞ்சு இனித்து விழிகள் நிறைந்துவிட்டன. நான்கு திசைகளென நால்வர். அந்நான்கையும் அணைக்கும் விண் என ஒருவர். இளஞ்சூதரே, தாங்கள் எங்கள் மால்வண்ணன் என கண்முன் எழுந்து இந்நாளை பெருகவைத்தீர். தங்கள் பாதங்களை சென்னிசூடும் நல்லூழ் வாய்த்தது எங்களுக்கு” என்றார். அவர்கள் எழுவரும் வந்து அந்தணர் நால்வரின் கால்களையும் தொட்டு வணங்கினர். உக்ரனின் கால்களை எடுத்து சென்னிசூடி விழிகளில் ஒற்றிக்கொண்டனர். “எந்தையே, எம்பெருமானே, விண்ணளந்தோனே, உன்சொல் பெருக நீயே முகம்கொண்டெழுகிறாய் போலும்” என்றார் ஒருவர்.

அவர்களின் விழிநீரும் விம்மலும் நால்வரையும் வியப்புகொள்ளச் செய்தன. ஒருவரை ஒருவர் விழியசைவுகளால் நோக்கிக்கொண்டனர். அவர்கள் வணங்கிக்கொண்டிருக்கையிலேயே முதல்வர் முழவை மீட்டி “ஒரு கால் தூக்கி உலகேழும் அளந்தவனே, திருமால் என தென்மலை மீது எழுந்தவனே, கருமாமணியே, கன்னலின் சுவையே, கரியோனே, பெருமாளே, பழவடியார் சொல்லில் இனிப்பவனே” என கூவ இன்னொரு விண்ணடியார் “பைம்பால் ஆழி அலை நடுவே அமைந்தவனே, ஐம்பால் இனமும் அடிபணியும் அருளோனே” என ஏற்றுப்பாடினார். அவர்கள் அக்கணமே பிறிதுருக்கொண்டவர்களென இசைக்குள் மூழ்கினர். இசை அவர்களின் அசைவென்றாகியது. விழியறியாத நீரலை என அவர்களை எற்றி அலைக்கழித்து எடுத்துச்சென்றது.

“விந்தையானவர்கள்” என்று உக்ரன் சொன்னான். “பனித்துளிகள் சொட்டி நிற்கும் காலைச்செடி போலிருக்கிறார்கள்” என்றான் ஜைமினி. பிறர் ஒன்றும் சொல்லாமல் தங்களுக்குள் மூழ்கியவர்களாக நடந்துவந்தனர். ஜைமினி அவர்களைப்பற்றி பேசவிரும்பினான். “அவர்கள் எதைக் கண்டார்கள்? நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள்?” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா?” என்றான் ஜைமினி. ஆனால் அவன் முகம் மலர்ந்துவிட்டிருந்தது. “ஆம், நீங்கள் நால்வருமே நூல்களை எழுதுவீர்கள் என்றார்கள் அவர்கள்” என்றான் உக்ரன்.

“சரி, அப்படியென்றால் நீர்?” என்று ஜைமினி கேட்டான். “நான் நான்கையும் ஒன்றாக்குவேன் என்றார்கள்” என்று உக்ரன் சொன்னான். “நான் அனைத்தையும் பாடலாக ஆக்குவேன். பாடியபடி…” காலை உதைத்து எம்பி கைகளை விரித்து “விண்ணில் பறப்பேன்… பறவைபோல பறப்பேன்” என்றான். நிலையழிந்து ஜைமினி தள்ளாடி நின்று சிரித்துக்கொண்டு “விழப்போகிறீர்” என்றான். “நான் விழமாட்டேன்… நான் இப்போது பறந்துகொண்டிருக்கிறேன்… வண்டுபோல. கந்தர்வர்களின் இசையை கேட்கிறேன்” என்று உக்ரன் சொன்னான்.

பிறமூவரும் பேசப்போவதில்லை என்று தெரிந்ததும் அவர்களுக்குள்ளேயே பேசத்தொடங்கினர். “நீர் நான் எழுதுவதை எப்படி பாடுவீர்?” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே?” என்றான். “தொடங்கிவிட்டீரா? அதை பிறகு எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் “என் முழவு… என் முழவு” என்று சிணுங்கியபடி துள்ளினான். “சரியான…” என்று சலித்துக்கொண்ட ஜைமினி “இரும்…” என அவனை இறக்கி தன் மூட்டையைப் பிரித்து முழவை எடுத்து அவனிடம் அளித்தான். “என் அரணிக்கட்டை…” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “அது எதற்கு உமக்கு?” என்றான் ஜைமினி. “எனக்கு வேண்டும் அது.”

ஜைமினி அதை எடுத்துத்தர ஒரு கையில் முழவும் இன்னொரு கையில் அரணிக்கட்டையுமாக அவன் “என்னை தூக்கு” என்றான். மூட்டையைக் கட்டியபடி ஜைமினி “இரும்” என்றான். “நான் கூட்டிச்செல்லமாட்டேன்” என்றான் உக்ரன். “விட்டுவிட்டுப்போய்விடுவேன்.” சண்டன் திரும்பிப்பார்த்தான். நோக்கு எங்கோ உட்திரும்பியிருக்க அவை சிலைவிழிகள் போலிருந்தன. “அவர் கண்கள் திரும்பியிருக்கின்றன…” என்றான் உக்ரன். “ஓவியத்துணியின் பின்னால் நின்று பார்ப்பதுபோல தெரிகிறார்.” ஜைமினி சிரித்தபடி திரும்பிப்பார்த்தான். சண்டன் தாடியை நீவியபடி முன்னால் சென்றான்.

ஜைமினி உக்ரனைத் தூக்கிக்கொண்டு உடன்சென்றான். அன்று பகலில் அவர்கள் உணவுண்ணவில்லை. அந்தியில் அவர்கள் சென்றிறங்கிய மலைச்சரிவில் பாதை இரண்டாகப் பிரிந்தது. சண்டன் நின்று “அந்தணர்களே, நான் இவ்வழியே செல்கிறேன். இது உங்களுக்குரியதல்ல” என்றான். ஜைமினி திகைப்புடன் “ஏன்?” ஏன்றான். “நான் செல்லுமிடத்திற்கு கரியானை என்று தென்மொழியில் பெயர். செம்மொழியில் காளஹஸ்தி. அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சிவக்குறியை வழிபட்டு பிறவிமுழுமையை அடைய நான் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் வந்தடையவேண்டிய இடம் அதுவல்ல.”

ஜைமினி ஏதோ சொல்ல வாயெடுக்க வைசம்பாயனன் விழிகளால் வேண்டாம் என்றான். “நீங்கள் செல்லுமிடமும் நோக்கமும் எனக்கு நன்றெனத் தெரிகிறது. நான் உங்களை இதுவரை அழைத்துவந்ததும் ஏன் என அவர்களின் சொல்வழி தெரிந்துகொண்டேன். நன்று, அப்பணி நிறைவுற்றது. நலம் சூழ்க!” என்றான் சண்டன். பின்னர் அவர்களிடம் விடைபெறாமல் நடந்து மலைச்சரிவில் இறங்கிச்சென்றான். அவர்கள் அவன் விட்டிலென தாவிச்செல்வதை நோக்கி நின்றனர்.

KIRATHAM_EPI_83

கீழே குறுங்காட்டுக்குள் முழவோசை கேட்டது. இருண்டகாடு பனித்துத் துளித்ததுபோல பிச்சாண்டவர் ஒருவர் கையில் முப்பிரி வேலுடன் சடைமகுடம் சூடி நீறணிந்த வெறும்மேனியுடன் எழுந்து வந்தார். தொடர்ந்து காளாமுகர்களின் ஒரு குழு நடனமிட்டபடி தோன்றி அப்பால் வளைந்து சென்றது. அவர்களுடன் சென்ற முதியபாணன் ஒருவன் முழவை மீட்டியபடி பாடினான். சண்டன் இயல்பாகச் சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் புதர்களுக்குள் மறைய பாடல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

எரிமருள் காந்தள் செம்மலர் சூடி
எரிசிதைச் சாரம் மேனியிற் பொலிய
கரியுரி இருட்தோல் கைக்கோள் ஆக
விரிசடை அண்ணல் ஆடிய கொட்டி
நிலைபிறழ் வடவை நிமிர்ந்தெழு சூலொடு
கலைஇய வேங்கை கடுந்துடி உடுக்கை.

[ 40 ]

உக்ரனுடன் அவர்கள் இருளெழுந்த பின்னர்தான் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்று சேர்ந்தனர். ஊர்வாயிலில் தொலைபயணிகள் அறிந்து வரும்பொருட்டு உயர்ந்த கற்றூண் மேல் அகல் விளக்கேற்றப்பட்டிருந்தது. அவர்கள் அணுகியதும் நாய்க்குரைப்போசை கேட்டு ஊர்த்தலைவர் அகல்சுடருடன் வந்து வணங்கினார். “வருக அந்தணர்களே, தங்கள் கால்களால் எங்கள் ஊர் தூய்மைகொண்டது” என முகமன் உரைத்தார். அவர்களை கால்கழுவச்செய்து ஊருக்குள் அழைத்துச்சென்றார். அவர்களுக்குரிய மாற்றாடையும் குடிநீருமாக அவர் துணைவி அருகே வந்து நின்றாள். இருவரும் தொழுது அழைத்துச்சென்றனர்.

அவர்களுக்குரிய குடிலுக்குச் சென்றதும் ஜைமினி “தமிழ்நிலத்தில்தான் துணைவியும் வந்து விருந்தினரை வரவேற்கிறார்” என்றான். சுமந்து “ஆம், அதை நான் பயின்றறிந்துள்ளேன்” என்றான். அவர்கள் அருகிருந்த சுனையில் நீராடி வந்ததும் உணவு வெம்மையுடன் சித்தமாக இருந்தது. ஊர்த்தலைவரும் ஊரார் மூவரும் தங்கள் துணைவியருடன் வந்து அவர்களுக்கு அன்னம் பரிமாறினர். “துயின்றெழுக, அந்தணர்களே! நாளை புலரியில் எங்கள் ஊர்ச்சிறார்களுக்கு சொல்லளிக்கவேண்டும் தாங்கள்” என்றார் ஊர்த்தலைவர். அவர்கள் சென்றதும் ஐவரும் குடிலின் முன் அமர்ந்துகொண்டனர்.

வானில் விண்மீன்கள் இறைந்து கிடந்தன. ஜைமினி அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். சுமந்து “விண்மீன்களைக் கொண்டே மண்ணில் என்ன நிகழவிருக்கிறதென்று சொல்லும் கலை ஒன்றுண்டு வடமேற்கே” என்றான். “விண் ஒரு பெருநூல். அனைத்தும் எழுதப்பட்டுள்ளது அதில் என அந்தக் கலையறிந்த நிமித்திகர் சொன்னார்.” வைசம்பாயனன் “விண்ணுக்கு நிகரான ஒரு காவியத்தை மண்ணில் எழுதவேண்டும் ஒருவர்” என்றான்.

“எந்தக் காவியமும் ஒருவரால் எழுதப்படுவதில்லை. ஆறுபோல அது ஊறித்தொடங்கி பெருகி துணைகளை இணைத்துக்கொண்டு செல்கிறது” என்றான் பைலன். ஜைமினியின் மடியில் ஒரு கையில் முழவும் மறுகையில் அரணிக்கட்டையுமாக உக்ரன் துயில்கொள்ளத் தொடங்கினான். “மிக மெலிந்திருக்கிறார்” என்று அவன் கையையும் தோளையும் வருடியபடி சுமந்து சொன்னான். “இனி இவரே நம் வழிகாட்டி என்றார் சண்டர்” என்றான் ஜைமினி குனிந்து உக்ரனின் தலையை வருடியபடி. “இவர் நீரல்ல, நெருப்பு. எதையும் இணைத்துக்கொள்வதில்லை, உண்டு தான் தழலாகிறார்.”

குழந்தை ஒன்று சிணுங்கியது. அன்னை “லோ லோ லோ” என மென்மையாக பாடினாள். இரவுப்பறவை ஒன்றின் குரலென அது ஒலித்தது. குழந்தை மேலும் சிணுங்கிவிட்டு அழத்தொடங்கியது. அவள் அதை இழுத்து தன் முலைக்காம்பை வாயில் செருகினாள். குழந்தை வாய் அதுங்கும் ஓசை. பின்னர் எழுந்த மிக இனிய ஓசையின்மை. அவள் ம்ம் என வண்டுபோல ரீங்கரித்தபின் பாடலானாள்.

“இவன் என் மைந்தன்! அரசியே கேள், இவன் வில்விஜயன்
கார்த்தவீரியனுக்கு நிகரானவன், சிவனுக்கு அணுக்கமானவன்
இந்திரவஜ்ரத்தை படைக்கலமாகக்கொண்டவன்
அதிதிக்கு விஷ்ணு எப்படி மகிழ்வளித்தானோ
அப்படி உனை நிறைக்கப்போகும் இளையவன் இவன்
குந்தியே கேள் இவன் பாண்டவரில் பெருவீரன்”

“மகாவியாசரின் வரிகள். அவருடைய அர்ஜுனோதயம் என்னும் நீள்பாடல்” என்று ஜைமினி சொன்னான். உக்ரன் எழுந்து அமர்ந்து மழுங்கலாக “அவர் பாடினார்!” என்றான். “யார்?” என்றான் ஜைமினி. “அவர்… நீண்ட தாடி… அன்னையைப்போன்ற கண்கள். முதியவர்…” சுமந்து “கனவு கண்டீரா?” என்றான்.

“இவன் வெல்வான் எங்கும் பணியமாட்டான்
எதையும் கொள்ளமாட்டான் எப்போதும் தனித்திருப்பான்
மெய்யறிந்திருப்பான் மெய்கடந்து முழுமையடைவான்
ஃபால்குனன் பார்த்தன் விஜயன் பாரதன் ஜிஷ்ணு
தனஞ்சயன் கிருஷ்ணன் ஸவ்யசாசி கிரீடி”

என அப்பெண்ணின் குரல் தொடர்ந்து கேட்டது. “அவர்தான் பாடுகிறார்” என்று உக்ரன் சொன்னான். அரையிருளில் அவன் புன்னகை வெண்மையாகத் தெரிந்தது. “அழகானவர். என்னை நோக்கி சிரித்தார்.” வைசம்பாயனன் “என்ன சொன்னார்?” என்றான். “என்னை அவர் அழைத்தார்… வா என்று கைகாட்டி… இதோ இப்படி” என்றான் உக்ரன்.

அவன் விழிகள் மீண்டும் சரிந்தன. படுத்துக்கொண்டு புன்னகையில் கன்னங்களில் குழி இருக்க அப்படியே நீள்மூச்சு எழ துயில்கொள்ளலானான். “ஓடி வருவேன்” என்றான். பின்னர் மெல்ல அசைந்து வாயை சப்புக்கொட்டி “என்னிடம் அரணிக்கட்டை இருக்கிறதே, உங்களிடம் இருக்கிறதா?” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்?” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே?” என்றான் வைசம்பாயனன். “ம்?” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்?” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது?”

உக்ரன் “பாட்டு வழியாக” என்றான். “எப்படி?” என்றான் வைசம்பாயனன். உக்ரன் துயில்மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். வைசம்பாயனன் “அனைத்தும் நிமித்தங்களாக ஒலிக்கின்றன, ஜைமின்யரே. நாம் ஐவருமே ஒருவரிடம்தான் செல்லப்போகிறோம். அனல்பெருந்தூணை அறியச்சென்ற தெய்வங்களைப்போல” என்றான். ஜைமினி “ஆம்” என்றான். “மகாநாராயணவேதம் அவர் சொற்களில் முழுமைகொள்ளப்போகிறது” என்றான் பைலன். ஜைமினி உள எழுச்சியுடன் பெருமூச்சுவிட்டான்.

குழந்தை துயில்கொண்டுவிட்டதுபோலும், அந்தப் பெண் பாட்டை முடித்துவிட்டாள். உடலசைத்துப் படுக்கும்போது அவள் மூச்சுவிடும் ஒலி மிக அருகே என கேட்டது. “மாவிண்ணவச் சொல் கோக்கும் முனிவரே, மண்ணளக்கும் வியாசரே, தென்குமரி மகேந்திரமலையமர்ந்தவரே காப்பு” என்று சொல்லி விரல்சொடுக்கி கோட்டுவாய் இட்டாள். திரும்பிப்படுக்கும் ஒலியும் மீண்டும் ஒரு கோட்டுவாயும் கேட்டன. “ஓம் ஓம் ஓம்” என்று அவள் சொன்னாள்.

“அன்னை வாக்கு” என்று ஜைமினி கைகூப்பினான். சுமந்துவும் பைலனும் வைசம்பாயனனும் கைகூப்பி “ஓம் ஓம் ஓம்” என்றனர்.

[கிராதம் முழுமை]

வெண்முரசு விவாதங்கள்

நூல் பன்னிரண்டு – கிராதம் – 82

[ 37 ]

கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர்.  மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய வாய்திறந்து மூங்கில்கழிகளில் தொங்கியபடி வந்தன. பெண்கள் கிழங்குகளையும் காய்களையும் கனிகளையும் கொண்டுவந்து நிரத்தினர். அனைத்து உணவும் மன்றிலேயே கொண்டு சேர்க்கப்பட்டன.

மூத்தோர் மூவரும் அங்கே இருந்து ஆணைகொடுக்க அடுமடையர்கள் பன்னிருவர் வந்து தாங்கள் கைத்தேர்ச்சிகொண்டிருந்த செம்புக்கத்திகளால் விலங்குகளின் தோலில் மெல்லிய கோடிழுத்து உள்ளே விரல்செலுத்தி இளங்கமுகுப்பாளைபோல் வெளுத்த உட்தோலை மடித்துப்புரட்டி சுருட்டி எடுத்து அகற்றி குடலும் நுரைக்குலைகளும் விலக்கி கீற்றுகளாக ஊன்கிழித்து உள்ளே உப்புமிளகுஇஞ்சிச் சாந்தை பூசி முக்காலிகளில் தொங்கவிட்டு கீழே அனல்மூட்டி சுடத்தொடங்கினர். வேகும் ஊனின் இனிய மணம் ஊரைச் சூழ்ந்தது.

உருகிச் சொட்டிய ஊன்நெய் எரிபட்டு அனலாகிச் சுடர்ந்து துளிகளாக விழுந்து விறகுக்குவைமேல் எழுந்த தழல்நாவுகளை  துள்ளித் தழைந்து எழுந்து ஆடச்செய்தது. பொசுங்கி நெய்யூறி சிவந்து அருகி கருகி விரிசல் படர்ந்து உணவென ஆயிற்று ஊன். காய் ஒன்று கனிவதுபோலிருந்தது அது.

சூழ்ந்து அமர்ந்து அனலை நோக்கிக்கொண்டிருந்தனர் காலர்கள். அர்ஜுனன் அவர்கள் நடுவே சிறு கல்லொன்றில் கால் மடித்து அமர்ந்திருந்தான். அனலன்றி பிற ஒளியேதும் அங்கிருக்கவில்லை. விண்ணை முகில் மூடி இருந்ததனால்போலும், மீன்களென ஏதும் வானில் எழவில்லை. சீர்வட்டமென சுற்றியிருந்த மலைநிரை அலைகள் வானின் மங்கிய ஒளிப்பரப்பின் பகைப்புலத்தில் இருளுக்குள் நிழல்செறிந்த வடிவுகளெனத் தெரிந்தன.

தொலைவிலிருந்து காட்டின் இரவொலிகள் எழுந்து வந்து ஊரையும் காடென்றே எண்ணவைத்தன. அறுபடாத சீவிடுகளின் ஓசையின் சரடில் கோக்கப்பட்ட காட்டுஆடுகளின் கனைப்பு, கூகைக் குழறல், தொலைவில் வேங்கையொன்றின் உறுமல், அதைக் கேட்டெழுந்த களிறுகளின் ஓசைத்தொடர். மிக அருகே மான்கூட்டம் ஒன்று புதர்களில் சுள்ளிகள் ஒடிய நடந்தது. அனலிருப்பதனால் வேங்கை அணுகாதென்று அறிந்த மான்கூட்டங்கள் புதர்களுக்குள் சீறலோசை எழுப்பியபடி நின்று அவர்களை நோக்கின. விழிதிருப்பி வருகையில் ஒரு மானின் அனல் மின்னும் விழிகளை அவன் நோக்கினான்.

சேறுபூசி அருகமைத்த குழிசிக்குள் விறகுகள் எரிகொண்டு வெடித்து செம்பொறி சிதறின. அவற்றில் ஊறிய அரக்கு எரிந்தபடி பின்னால் வந்தது. அதைத் துரத்தியபடி செந்தழல் உடன் வழிந்தது. சூழ்ந்திருந்தோர் எத்தனை பேரென்று அவ்விருளில் அறியக்கூடவில்லை. சிற்றில்களில் இருந்து மேலும் மேலும் என வந்து ஓசையின்றி பின்னால் அமர்ந்துகொண்டனர். கல்லணிகலன்கள் குலுங்கியதாலும் அமரும் மூச்சொலிகளாலுமே அவர்கள் வந்தமர்வதை உணரமுடிந்தது. ஒளியில் தெரிந்த முகங்களனைத்தும் ஒற்றை உணர்வுகொண்டிருந்தன. சடைத்திரிக் குழல் கொண்ட அன்னையர். வலக்கொண்டை சரிந்த கன்னியர். பிடரியில் சடைக்கற்றை பரவிய இளையோர். அனல்படர்ந்த தாடியுடன் முதியோர். அனைத்து விழிகளிலும் நெருப்பு தெரிந்தது.

நெருப்பை அன்றி பிற எதையும் எவரும் நோக்கவில்லை என்று அவன் உணர்ந்தான். அருமணிக்குவை நோக்கும் கருமியின் மெய்மறந்த நிலைபோலும், பேரழகுப் பாவையொருத்தி மேடையேறி நின்றாடுவதை நோக்கும் காமுகனின் உவகைபோலும், கொலைக்கலம் ஏந்தி எழுந்த அறியா தெய்வம் ஒன்றைக்கண்டு அஞ்சிச் சொல்லழிந்ததுபோலும் நோக்கிச் சமைந்த விழிகள். நெருப்பு சீறிச்சுழன்று நாபறக்க துள்ளி அமைந்து  எழுந்து தழைந்தாடியது. கழுகென இறகு விரித்தது. அரவென கழுத்து நீட்டியது. பசுவென நா துழாவியது.

திறந்த குங்குமச்சிமிழ்போல் அனல் அள்ளி நிறைத்து திறந்திருந்த விழிகளை மாறி மாறி நோக்கிச் சுழன்ற அவன் பார்வை குடிமூத்தார் மூவரில் அமைந்தது. சடையன் இரு கைகளையும் நெஞ்சில் கோத்தபடி அமர்ந்து அனலை நோக்கிக் கொண்டிருந்தார். பிசிறி நின்ற சடையின் உதிரி முடிகள் அனல் எனத் தெரிந்தன. பேயன் இருகைகளிலும் தலையை தாங்கியிருக்க முழங்கால்மடிப்பில் முகம் வைத்து அமர்ந்திருந்தார் எரியன். நாளும் எரியோம்புபவர்கள்போலத் தோன்றவில்லை அவர்களின் முகம். அன்று முதல்முறையாக பொன்னொளி கொண்டெழுந்த தேவனை நோக்குபவர்கள் எனத் தெரிந்தனர்.

காளன் நெருப்புக்கு வலப்பக்கம் கால் மடித்து முழங்கால்கள்மேல் கைவைத்து அமர்ந்திருந்தான். அவனருகே கொம்பன் அமர்ந்திருக்க இடப்பக்கம் காளி தன் மடியில் குமரனுடன் அமர்ந்திருந்தாள். கொம்பன் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை முன்னால் நீட்டி கனிந்த ஊனை மூக்கால் தொடவிழைபவன் போலிருந்தான். இளையவன் இருகைகளையும் வாய்க்குள் விட்டு அடிநிரம்பாச் சிறுபாதங்கள் சுருங்க கட்டைவிரலை சுழித்துக் கொண்டிருந்தான்.

ஊன் வெந்து சுவைமணம் எழுந்ததும் அறிந்த தெய்வம் ஒன்று அறியாவெளியிலிருந்து பெருகி நேரில் தோன்றியதென அர்ஜுனன் உணர்ந்தான். அடுமடையர் சேர்ந்து வெந்த ஊன் விலங்குகளை கணுக்கொழுவால் பற்றி அனலில் இருந்து விலக்கி எடுத்து தூக்கி இயல்பாகச் சுழற்றி தரையில் பரப்பப்பட்டிருந்த பாக்குமட்டைப் பாய்களில் வைத்தனர். வன்பால் நிலத்தில் முதல்மழை என வெம்மைஎழுந்த ஊனில் கொதிக்கும்நெய் சிறுகுமிழியுடன் வற்றிக்கொண்டிருந்தது. சொட்டிய ஊன்நெய் பாளைவரிகளில் தயங்கி வழிந்தது.

ஊன் அனைத்தும் இறக்கப்பட்டதும் கிழங்குகளையும் காய்களையும் பச்சைநாணலில் இறுக்கமாகக் கோத்து அனலில் காட்டி, சுழற்றிச் சுட்டு எடுத்து வாழை இலைமேல் பரப்பினர். காய்ச்சில் பெருங்கிழங்குகள் வெந்து வெண்புன்னகையென வெடித்திருந்தன. கருணைக்கிழங்கு கறைமணம் எழ  தோல் வழண்டிருந்தது. முக்கிழங்கும் நனைகிழங்கும் கொடிக்கிழங்கும் வள்ளிக்கிழங்கும் கலந்து ஒன்றென மணத்தன. ஒவ்வொரு காயும் ஒரு வகையில் வெந்து சுருங்கியது. வழுதுணங்காய்  பசுந்தோல் வழண்டது. மாங்காயின் கடுந்தோல் அதுங்கியிருந்தது. கோவைக்காய் கருகியிருந்தது.

இலைகளிலும் பாய்களிலும் உணவைப் பரப்பியதும் அடுமடையன் சென்று சடையன் முன் நின்று தலைவணங்கி “அன்னம் ஒருங்கிவிட்டது, மூத்தவரே” என்றான். அவர் தன் முப்பிரிவேலை அவன் தலைமேல் தொட்டு வாழ்த்தினார். சடையன் காளனை நோக்கி கைகாட்ட அவன் எழுந்து அனலை மும்முறை வணங்கிவிட்டு தன் கையிலிருந்த கத்தியால் வெந்து விரிந்திருந்த பன்றியின் தொடையொன்றை வெட்டி தனித்தெடுத்தான். அதை மூன்றாகப் பங்கிட்டு குடிமூத்தார் மூவர் முன் வாழையிலையில் படைத்தான். பின்னர் காளி எழுந்து ஊனையும் கிழங்குகளையும் அவர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளித்தாள்.

நீரிலிட்ட பொரி பரவுவதுபோல அன்னம் அத்திரளில் பிரித்து பகிரப்பட்டு ஓசையின்றி விரிவதை அர்ஜுனன் கண்டான். எவரும் கேட்கவில்லை. எவரும் விலக்கவுமில்லை. கிழங்கும் காய்களும் ஊனும் அவர்கள் முன் வாழை இலையில் படைக்கப்பட்டு முடிந்ததும் சடையன் முதல் பிடி ஊனை எடுத்து “மூதாதையரே, உங்களுக்கு” என்றுரைத்து அனலில் இட்டார். பேயன் “வாழ்பவர்களே, உங்களுக்கு” என்றுரைத்து அனலில் அன்னம் இட்டார். எரியன் “என்றுமிருப்பவர்களே, உங்களுக்கு” என்று கூறியபடி அனலூட்டினார்.

அங்கிருந்த அனைவரும் “ஆம். அன்னையரே, உங்களுக்கு. தந்தையரே, உங்களுக்கு” என்று உரைத்தபடி ஒரு சிறு உணவுத்துண்டை எடுத்து அனலில் இட்டனர். அனைவரும் சடையனையே நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் உண்ணத் தொடங்கியதும் தாங்களும் உண்ணலாயினர்.

மழைத்துளி சேற்றில் விழும் ஓசைபோல் உணவு மெல்லப்படும் மெல்லிய ஓசை மட்டும் அர்ஜுனனை சூழ்ந்திருந்தது. அவ்வப்போது சில மூச்சுகள், சில உதடோசைகள். சில குழவிகள் சிணுங்கின. சில மைந்தர் மென்குரலில் அன்னையிடம் ஏதோ சொல்லினர். கொம்பன் இருகைகளாலும் பன்றித்தொடையை எடுத்து ஓநாய்க்குட்டியென மிகுவிரைவுடன் உண்பதை அர்ஜுனன் ஆர்வத்துடன் நோக்கினான். விழிதிருப்பியபோது காளியின் விழிகளைக் கண்டு புன்னகைத்தான். உண்டு முடித்ததுமே முழந்தாளிட்டு கை நீட்டி இன்னொரு மான் தொடையை கொம்பன் அவனே எடுத்துக்கொண்டு அர்ஜுனனை நோக்கி நாணப்புன்னகை செய்தான்.

உண்ணுதல் ஒரு வேள்வியென அங்கு நிகழ்வதாக அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அனவருக்கும் உணவளித்த நிறைவுடன் நடுவே மெல்ல ஆடி நின்றிருந்தது அனல். உண்ணும் ஒலிகள் மெல்ல விரைவழிந்து ஓயும் மழையின் இறுதிச் சொட்டுகளென ஒலிக்கலாயின. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு மூச்சொலிகள் கேட்டன. பின்னர் ஒலிகள் அனைத்தும் அமைய ஒரு சிறு குழந்தை ஏப்பம்விட்ட ஒலி இனிய பறவையின் குரலென இருளில் ஒலித்தது. அர்ஜுனன் திரும்பி அக்குழவியை நோக்க விழி சுழற்றினான். மீண்டும் ஓர் ஏப்பம் ஒலித்தது. முதிய அன்னையொருத்தியின் நிறைவு அது. பின்னர் ஏப்ப ஒலிகள் இருளுக்குள் தொடர்ந்து எழுந்தன.

காளன் ஒரு சிறு மண்குழாயை அனலூட்டி வாய்பொருத்தி ஆழ்ந்து இழுத்தான். மூக்கினூடாக வந்த நீலப்புகை தாடியில் ஊடுருவிப் பரவியது. அவ்வனலை வாங்கி பிறிதொருவன் இழுத்தான். சுழன்றுவந்த அனல் மீண்டும் அவனிடமே வந்தது. இழுக்கையில் முன்னால் குனிந்து புகைவிடுகையில் அண்ணாந்து மீண்டும் குனிந்து என ஒரு தாளம் அவ்வசைவுகளுக்கு இருந்தது. புகை எடைமிக்க சேறுபோல அவர்களை அழுத்தி மூடி ஓசையற்றவர்களாக ஆக்கியது. விழிகள் மட்டும் அதிர்ந்தபடி இருந்தன.

கைகளை ஒன்றுடன் ஒன்று உரசித் துடைத்துக்கொண்டு உடலொடு உடல் தொட்டு பெரிய வட்டமாக அனலைச் சுற்றி அமர்ந்திருந்தனர் காலகுலத்தோர். அவர்களின் தோள்களும் மெல்ல அசைவதை அர்ஜுனன் கண்டான். ஒற்றைச் சரடில் கோக்கப்பட்ட மணிகளென அவை முற்றிலும் ஒத்திசைவு கொண்டிருந்தன. பின் கைகள் நெளிந்தும் குழைந்தும் குவிந்து நீண்டும் வளைந்தமைந்தும் விரல்கள் மலர்ந்தும் கூம்பியும் விழிச்சொற்களாயின.

பலநூறு முறை பயின்ற நடனம் என நிகழ்ந்தது அவ்வசைவு.  பழுதற்ற பொறிபோல. அவர்களை ஆட்டுவிப்பது எது என அவன் எண்ணியதும் தன்னுடல் அப்பெருக்கில் இணையாததை உணர்ந்தான். அவ்விலக்கம் மூலமே அவ்வசைவை அவன் பார்ப்பதையும் அறிந்தான்.

தன் இடையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அக்கூழாங்கல்லை எடுத்து வலக்கையில் வைத்து பொத்திக்கொண்டான். அதை நெஞ்சோடு சேர்த்து விழிகளை மூடியபடி மெல்ல தன் உடலை அசைக்கலானான். இருபுறமும் தோள்கள் அவனை முட்டின. பின் அத்தொடுகையின் தாளத்தை அவன் உடல் அறிந்தது. அத்தாளம் மட்டுமே அவன் உடலில் அசைவென்றாகியது. அந்தக் கல் எடைகொண்டு அவனைத் தன் ஊசலென ஆக்குவது போலிருந்தது.  அவன் மூச்சும் நெஞ்சும் அத்தாளத்தில் அமைந்தன.

காளன் “ஹாம்!” என்று ஒலித்தான். “ஹாம்!” எனும் நுண்சொல் மலையிடுக்கில் காற்றுநுழையும் ஒலியென எழுந்தது. எரிசுழல்வதுபோல் மாறியது.  அவர்களின் உதடுகள் அவற்றை உச்சரிக்கவில்லை. அவர்கள் எவரும் அதை அறியவுமில்லை. அச்சொல் திரளென மட்டுமே இருந்த அவர்களிடமிருந்து இயல்பாக எழுந்தது. மீளமீள. முடிவிலாதென எழும் ஓர் ஒலி சித்தத்தை நிறுத்திவிடுகிறது. “ஹும்!” என்னும் அடுத்த நுண்சொல். மீண்டும் மீண்டும். ஊசல். முடிவிலாச் சுழல்.

தன்னைத் தான் சுற்றும் மையத்தின் அசைவிலா அசைவு. “ஹம்!” அனல் முழக்கம். அனல் ரீங்காரம். அனல் வெடிப்பு. “ஹௌம்!” அனைத்தையும் அறைந்து மூடித்தழுவும் அலை. “ஹௌ!” அனைத்தின் மேலும் பொழியுமொரு பெருமழை. “ஹ்ரீம்!” அனைத்தையும் வளைத்தெழும் பசி. அனைத்தையும் நொறுக்கும் “ஸ்ரீம்!” கொஞ்சல் என “ப்ரீம்!” அழைப்பு என “ரீம்!” ஆழ்ந்த அமைதிகொண்ட “க்ரீம்!” சீறி எழும் “ஸூம்!” அனைத்தையும் மூடிநின்றிருக்கும் “ஹோம்!” ஒலிகளின் நீள்பெருக்கு.

“ஆ” என்னும் ஒலியுடன் காளன் எழுந்தான். அவன் கைகள் நாகபடங்கள் என சீறி எழுந்தன. கால்கள் நிலத்தை உதைத்து உதைத்து துடித்தன. உடன் காலர்கள் இருவர் உடுக்கோசையுடன் எழுந்தனர். துடிதுடித்துப் பற்றிப் படர்ந்தேறிய அவ்வொலியில் துள்ளும் தசைகளுடன் காளன் பாய்ந்து கல்பீடம் மீதேறினான். பெருந்துடி தாளத்துடன் இயைந்து அவனைச் சூழ்ந்து நடனமிட்டனர் பன்னிரு காலர். நடுவே அவன் கணமொரு தோற்றம் கொண்டு கண்விரைவை முந்தி நின்றாடினான்.

கையொன்று சொல்ல கால் அதைத் துள்ள கண் அதற்கப்பால் எனச் சுட்ட சொல்தொடா சித்தம்தொடா விசையில் நிகழ்ந்தது ஆடல். இளநகை கொண்டது இதழ். மான் என்றது கை. சினம்கொண்டு சீறியது முகம். மழு என்றது கை. மலர் என்றது. மின்படை என்றது. அமுதென்றது. ஊழித்தீ என்றது. நஞ்சுண்டது. அமுதளித்தது. ஆக்கியது ஒரு கை. அனலேந்தி காத்துநின்றது மறுகை. அருளியது ஒரு கை. அடி பணிக என்று ஆணையிட்டது மறுகை. அங்கு அத்தனை கைகளும் உடல்களும் உரைத்த விழிச்சொற்கள் அனைத்தும் அவன் கைகளில் உடலில் நிகழ்ந்தன.

இடக்கால் எடுத்து சுழற்றி வலக்கால் சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்றாட பறந்தது புலித்தோல். சிறகென எழுந்து சுழன்றது சடைத்திரள். தூக்கிய கால் குத்தென எழுந்து தலைக்குமேல் ஒரு மையத்தில் நிலைக்க சுழன்று சுழன்று வெறும் சுழிப்பென ஆகி  அவன் விழியிலிருந்து மறைந்தான்.

KIRATHAM_EPI_82

அர்ஜுனன் அச்சுழலில் தான் கரைவதை உணர்ந்தான். இதோ, இக்கணம், மறுகணம், இது, இக்கணம் என உணர்ந்து சென்று பின்பு அனலைச்சுற்றி மாபெரும் சுழியாகச் சுழன்றுகொண்டிருந்தான். விசைகொண்டெழுந்து அவ்வனலென்றானான். விசும்பின்மேல் வெளிசூடி நின்றான்.

[ 38 ]

“ஏழு முழுநிலவுகளை கைலைத் தாழ்வரையில் வாழ்ந்து கண்டு பாசுபதம் பெற்று பார்த்தன் திரும்பி வந்தான்” என்றான் சண்டன். திருவிடத்தின் தென்னெல்லையாக ஒழுகிய கோதை நீர்ப்பெருக்கின் கரையில் ஒரு நாணல்மேட்டில் அந்தணர் நால்வரும் இளஞ்சூதனும் அவனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தனர். “முத்துவிளைந்த சிப்பி மேலெழுந்து வருவதுபோல் அவன் வந்தான் என்கின்றது சூதர் கதை.”

வெண்தாமரை மலரிதழ் அடுக்குகள் என அவனைச் சூழ்ந்திருந்த பனிமலை முடிகள் மெல்ல கூம்பி அவனை வெளியேற்றின. சிறு கருவண்டென அகன்று பின் திரும்பிநின்று அவை இளவெயிலில் வெளிறி மறைவதை நோக்கினான். அங்கு பெற்றவை அனைத்தும் முன்பு எப்போதோ அறிந்திருந்தவை என்று தோன்றும் விந்தையை எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு அறிதலுக்குப் பின்னரும் அவன் உணர்வது அது, அறிதலெல்லாம் நினைவுகூர்தல் மட்டுமே.

அவன் கண்முன் அந்தி எழுந்துகொண்டிருந்தது. மீண்டும் நின்று திரும்பி வெண்புகை நடுவே அனல் என எழுந்த கைலைமலைமுடியை அவன் நோக்கினான். அதைவிட்டு விழியகற்ற இயலாதவனாக நெடுநேரம் உறைந்திருந்தான். பின் எண்ணம் மின்ன தன் இடையில் இருந்து பாசுபதத்தை எடுத்து நோக்கினான். அவன் கையிலிருந்தது கைலைமுடி.

“இங்கு மட்டுமே இது இருத்தல் தகும். பிறிதெங்கும் அமைய ஒண்ணாது” என எண்ணினான். நீள்மூச்சுடன் புன்னகைத்து “நன்று, முழுமுதன்மை இவ்வண்ணம் எனக்கு வாய்த்தது” என்று தனக்கே உரைத்தபின் அதை வெண்பல்நிரை என எழுந்து ஒரு வான்நகைப்புபோலத் தெரிந்த இமயம் நோக்கி வீசினான். திரும்பாமல் நடந்து மீண்டான்.

மலையடுக்குகள் கடந்து சரிவிறங்கி வருகையில்  வெள்ளி நாகமென ஓர் ஆறு வளைந்தோடி நுழைந்து மறைந்த பிலமொன்றைக் கண்டான். அதன் வழுக்கும் பாறைகளுக்குள் நுழைந்து இருண்டு குளிர்ந்த வாய்க்குள் புகுந்து நடந்தான். நூறு வளைவுகளுக்குப் பின் வில்லும் அம்பும் தூளியும் கொண்டு அவன் எழுந்தது கின்னரர்களின் தெய்வக்குகை முகப்பில்.

அது இளம்புலரிவெயில் எழுந்து சிறகுவிரித்து நின்ற நேரம். தங்கள் தெய்வங்களுக்கு பூசனை இட மலரும் நீரும் அன்னமும் கொண்டு அங்கு நின்றிருந்தனர் கின்னரர். காலைச் செவ்வொளியில் கைவில்லுடன் எழுந்து வந்த அவனைக் கண்டதும் குலத்தலைவர் தலைமேல் கைகூப்பி “எந்தையே, தெய்வங்களே!” என்று கூவினார். பூசகரும் பிறரும் அவனை வாழ்த்தி குரலெழுப்பினர். புன்னகையுடன் அவர்களை நோக்கி அருள்மொழி உரைத்தபின் அவன் நடந்து கீழே வந்தான்.

கின்னரஜன்யர்களின் சிற்றூரில் பார்வதி அவனுக்காக நோற்றிருந்தாள். அவன் மீளப்போவதில்லை என்றனர் அவள் குடியினர். தோழியரும் அவனை மறப்பதுவே அவளுக்கு உகந்தது என்றனர். அவள் “முயன்று மறப்பதென்று ஒன்றுண்டா என்ன? மறக்க இயலாதது அவ்வண்ணமே தன்னை நிறுவிக்கொள்கிறது, தோழியரே” என்றாள். “இது என் உடலுக்குள் அமைந்த உள்ளம் என, நான் என்றாகிய பிறிதொன்று. தானின்றி என்னை இருக்க விடாது. இது இவ்வண்ணமே திகழட்டும்” என்றாள்.

இளவேனிலின் முதல்நிலவு நாளில் கின்னரஜன்யர் மலையிறங்கிவரும் தங்கள் தெய்வங்களுக்காக படையல்கள் கொண்டு மலைச்சரிவின் எல்லையென அமைந்த கின்னரப்பாறையருகே கூடிநின்றிருந்தபோது தொலைவில் வெண்பனிமேல் படர்ந்த கதிரொளியில் ஓர் உடல்நிழல் அசைவதைக் கண்டனர். கின்னரர் என்று குலத்தலைவர் கூவினார். கின்னரஜன்யர்களின் குடிநிரைகள் வாழ்த்தொலி எழுப்பினர். பூசகர் மட்டும் இரு கைகளையும் கூப்பியபடி, சுருங்கிய முகமும் நடுங்கும் தலையுமாக காத்திருந்தார்.

“ஒருவன் மட்டுமே வருகிறான்” என்று ஒருவர் சொன்னபோது தலைதூக்கி முகம் விரிய நோக்கினார். “வில்லேந்தியவன்” என்றான் ஒருவன். “கின்னரரல்ல. இங்கிருந்து சென்ற இளையவர்” என்று ஓர் இளையோன் கூவினான். “அவர் வருவார் என்று நான் அறிவேன். அவர் வரவில்லை என்றால் தெய்வங்களும் பொருளிழந்துவிடும்.” அவர்கள் அனைவரும் கூர்ந்து நோக்கியபடி முண்டியடித்தனர். “அவரா?” என்று பிறிதொரு குரல் வியந்தது. “அவர்தான்” என்று நூறு குரல்கள் எழுந்தன.

பின்னர் வியப்பு எழுந்தமைந்த அவர்கள் குரல் அழிந்து நோக்கி நின்றனர். மலைச்சரிவில் கரிய எருதொன்று துணைவர அவன் இறங்கி வந்தான். ஊரெல்லைக்கப்பால் எருது நின்று காதுகளை அடித்துக்கொண்டு தலை குலுக்கி முன்காலால் சுரைமாந்தி நின்றது. அவன் புன்னகையுடன் வந்து அவர்கள் முன் நின்றான். குலத்தலைவர் எழுந்த உணர்வுப்பெருக்குடன் இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி “வருக, வீரரே! எங்கள் குடி தழைக்கட்டும்! மாவீரர் இங்கு பிறக்கட்டும்!” என்றார்.

அர்ஜுனன் பூசகரை அணுகி அவர் கால்களைத்தொட்டு சென்னி சூடினான். அவன் தோள்களை அள்ளி வளைத்து தன் நெஞ்சோடு சேர்த்து “வென்று மீள்வாய் என்று நான் நன்கறிந்திருந்தேன்” என கண்ணீர் விட்டார். எவரோ ஒருவர் தன் தலையணியைக் கழற்றி வானில் வீசி “இளைய பாண்டவர் வாழ்க! வில்கொள் விஜயன் வாழ்க!” என்று கூவினார். அப்பெருந்திரள் வாழ்த்தொலியால் கொந்தளித்தது.

பூசகரும் குலத்தலைவரும் இருபுறமும் அழைத்துச்செல்ல அர்ஜுனன் அச்சிற்றூருக்குள் புகுந்தான். ஊர்மன்றில் சென்றமர்ந்து அவனைச் சூழ்ந்து நின்ற இளையோரிடம் சொன்னான் “இவ்வூரைச் சூழ்ந்த  அனைத்து கோட்டைகளும் அகற்றப்படுவதாக! படைக்கலம் கொள்ளுங்கள், அஞ்சி ஒளியாதிருங்கள். சார்ந்திருங்கள், பணியாதெழுங்கள். வென்று செல்லுங்கள், பழி கொள்ளாதீர்கள். என்றும் இவ்வூரின் நெறியென்று இது அமைக!” இளைஞர்கள் கைதூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” என்று முழங்கினர்.

“கின்னரர், ஊர்ணநாபர் இருவருமே உங்கள் தெய்வங்களென்று அமைக! உங்கள் விண்ணை கின்னரர் ஆள்க! உங்கள் மண்ணை ஊர்ணநாபர் ஆள்க! கிளைகள் தனித்து அசையட்டும். வேர்கள் பின்னி ஒன்றாக இருக்கட்டும். சிறப்புறுக!” என்று அர்ஜுனன் அவர்களை வாழ்த்தினான். “வாழ்க! வாழ்க!” என முதியோர் மலரிட்டு அவன் சொற்களை ஏற்றனர்.

மறுநாள் ஊர்மன்றில் குடிமூத்தார் எழுவர் கூடி பார்வதியை அவனுக்கு கடிமணம் செய்து கையளித்தனர்.  அவள் கைபற்றி ஏழு அடி வைத்து அனல் முன் நின்று “இவள் என் துணைவியாகுக!” என்று அர்ஜுனன் சொன்னான். “இவளைப் போற்றிய தேவர், காத்த கந்தர்வர், அருளிய தெய்வங்கள் அனைவரும் அறிக, இனிமுதல் இவள் என்னவள். இவளுக்கு தேவரும் கந்தர்வரும் தெய்வங்களும் ஆக நான் திகழ்வேன். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

அவன் கைபற்றி தலைகுனிந்து நின்ற பார்வதி புன்னகைத்தாள். அவளுக்கு இருபுறமும் நின்ற தோழியர் அவள் உடல் மயிர்ப்புகொண்டு புள்ளிகளாவதைக் கண்டனர். மணம் முடிந்து அவளை தனித்தழைத்துச் செல்கையில் “வென்றுவிட்டாய்” என்றாள் ஒரு தோழி. அவள் “நான் தோற்றதே இல்லை” என்றாள்.

அன்றிரவு மணவறை மென்சேக்கையில் இளவெம்மையுடன் போர்த்தியிருந்த மயிர்த்தோல் போர்வைக்குள் அவளுடன் மெய்தழுவிப் படுத்திருக்கையில் அர்ஜுனன் சொன்னான் “இங்கிருந்து நான் சிலநாட்களில் கிளம்பிச் செல்லப்போகிறேன், இளையோளே. எனக்கு குடிக்கடனும் அரசகடனும் உள்ளன. மீண்டு வருதல் என் கையில் இல்லை. ஆனால் ஊர்ணநாபனின் குலத்திலிருந்து ஒரு சரடு என்றும் என்னுடன் இருக்கும் என அறிவேன்.”

இரு கன்னங்களும் புன்னகையில் குழிய “ஆம், உங்கள் குருதி இங்கு வாழும்” என்றாள் பார்வதி. அவன் தோளை வளைத்து முகத்தருகே தன் முகம் கொண்டு அவள் கேட்டாள் “ஒன்று கேட்பேன், அக்குகைக்குள் ஏன் நுழைந்தீர்கள்?” அர்ஜுனன் சொன்னான் “அதை நான் முன்பு அறிந்திருந்தேன். நூறுமுறை என் கனவில் நான் நுழைந்த வழி அது.” விழிகளில் வினாவுடன் அவள் நோக்கினாள். “உள்ளே சென்று நின்று நான் சொன்னேன் எழுக இளைய யாதவரே. இங்குளேன் நான்!”

அவள் விழிகள் மாறின. “அவரா?” என்றாள். “ஆம், படையெதிர் நின்று என்னை வென்றவர். அவரை போருக்கு அறைகூவினேன். முதலில் அவர் விழிகளில் திகைப்பைக் கண்டேன். அது ஏன் என அக்குகைச்சுவரின் ஈரத்தில் என் உருவம் தெரிந்தபோது அறிந்தேன். நான் சடைமுடித்திரளில் பிறைசூடி முக்கண் முகத்துடன் சிவமென நின்றிருந்தேன். அவர் புன்னகையுடன் இது நிகர்ப்போர். எனவே முடிவிலாதது. இருவரும் தோள்தழுவுதலே உகந்தது என கைகளை விரித்தார்.”

“இருவரும் தழுவி நின்றோம். பின்னர் வெடித்துச் சிரிக்கலானோம். இளமைந்தராக அன்று அஸ்தினபுரியில் கண்ட நாட்களில் ஒருவர் மேல் ஒருவர் கங்கைக்கரைச் சேற்றை வாரி வீசிவிட்டு ஓடிச்சென்று நீரில் பாய்கையில் சிரித்ததுபோல  மீண்டும் சிரித்தோம்” என்று அர்ஜுனன் சொன்னான்.  அவள் அவனைத் தழுவினாள். “ஆம், நீங்கள் சிவம், ஏனென்றால் நான் மலைமகள்” என்றாள். அவன் முகத்தருகே மீண்டும் முகமெழுந்து “அவர் எத்தோற்றத்தில் இருந்தார்?” என்றாள். “பெருகும் முகம் கொண்ட விருத்திரனின் உருவில்” என்றான் அர்ஜுனன்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 81

[ 35 ]

அர்ஜுனன் கைலையின் மண்ணில் எடுத்த அந்தக் கூழாங்கல்லை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் அதை கேலிக்கென சொல்லவில்லை என்பதை அவர்களின் முகக்குறி காட்டியது. கொம்பன் அவனிடம் “நீங்கள் அடுகலை கற்றவரா?” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு?” என்றான். அவன் சற்று எண்ணிநோக்கி “அதுவும் அமுதே” என்றான்.

எண்ணியிரா கணத்தில் நூறு சிறுவர்கள் மன்றுக்குள் நுழைந்தனர்.  பெருங்கூச்சலுடன் மன்றை நிறைத்து சுழன்று கைவீசி துள்ளி விரிந்தோடினர். ஒரு சிறுவன் சடையனின் தோள்மேல் தாவி அப்பால் விழுந்து எழுந்து ஓடினான். ஒருவனின் தோளில் குமரன் இருப்பதை அர்ஜுனன் கண்டான். அவன் “ஓடு ஓடு ஓடு” என துள்ளிக்கொண்டிருந்தான். “இச்சிறுவர்களை வெறிகொள்ளச் செய்பவன் அவனே” என்றார் எரியன். “ஆம், அவனைச் சுற்றியே எப்போதும் இவர்கள் அனைவரும் இருக்கிறார்கள்” என்றார் பேயன்.

“என் இளையோன்” என்றான் கொம்பன் பெருமிதத்துடன். “நானும் இதைப்போல அவனை தூக்கிக் கொள்வேன்.” சடையன் “அவர்களுடன் சென்று விளையாடுவதுதானே?” என்றார். “ஏன்?” என்றான் அவன் புரியாதவனாக. “சிறுவர் என்றால் விளையாடவேண்டுமே?” என்றார் பேயன். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். “விளையாடாவிட்டால் எப்படி உடல் உறுதிகொள்ளும்?” என்று பேயன் கேட்டார். “நான் நிறைய உண்பேன். என் உடல் உறுதியாகும்” என்றான் கொம்பன். “நன்று, அவனுக்குரியதை அவன் செய்கிறான்” என்று எரியன் நகைத்தார்.

இல்லத்திலிருந்து காளன் வருவதை அர்ஜுனன் கண்டான். அவனுக்குப் பின்னால் காளி ஒரு பெரிய மரக்குடைவுக் கொப்பரையுடன் வந்தாள். கொம்பன் முகம் மலர்ந்து “அது இன்கடுங்கள். இங்குள்ள நெடும்பனைகளில் ஊறிய தேன்” என்றான். “பனைகள் எங்குள்ளன?” என்றான் அர்ஜுனன். “அங்கே மேற்குச்சரிவில். அங்குதான் வெம்மையும் மிகுதி. மழையும் குறைவு” என்றபின் அவன் “இன்கடுங்கள்ளில் மூதாதையர் பாடல்கள் உறைகின்றன என்று எந்தை சொன்னார்” என்றான். “இளையோர் கள்ளருந்தலாமா?” என்றான் அர்ஜுனன். “இளையோர் எதையும் அருந்தலாம்” என இயல்பாக சொல்லிவிட்டு அவன் தந்தையை நோக்கி ஆவலுடன் சென்றான்.

காளன் சிரித்தபடியே அணுகினான். கொம்பன் அன்னையிடமிருந்து கொப்பரையை வாங்க முயல அவள் அவனை வெருட்டி விலக்கியபடி வந்தாள். காளன் அர்ஜுனன் அருகே  வந்ததும் “இவர்கள் காலகுடியின் மூத்தவர்கள். இவர்களின் அருள் பெற்றுவிட்டாயா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். அவன் கையிலிருந்த கூழாங்கல்லை நோக்கியபின் சிரித்து “பாசுபதம் அளித்துவிட்டார்களா?” என்றான் காளன். அர்ஜுனன் மெல்ல புன்னகைத்து “ஆம், ஆனால் அது இத்தனை எளிதென்று நான் அறிந்திருக்கவில்லை” என்றான்.

“அரியவை, அடைதற்கரியவை என்பது எளியமானுடரின் எண்ணம்” என்றான் காளன். “ஆனால் மெய்நோக்கினால் அரியதொன்றை உணர்ந்த ஒருவன் அதை சென்றடையாமல் ஓய்வதில்லை. அவ்வுணர்வை அடைவதே அரிது” என்றபடி அங்கிருந்த உருளைக்கல் ஒன்றில் அமர்ந்தான். காளி அருகே வந்து கொப்பரையை நடுவே வைத்து அதிலிருந்து மூங்கில் குவளையில் நுரையெழும் கள்ளை ஊற்றி அர்ஜுனனுக்கு அளித்தாள். “அவர் மிகுதியாக அருந்தினால் நோயுறுவார்” என்றான் கொம்பன். “வாயை மூடு… விலகிச்செல்” என்றாள் காளி.

கள் இனிப்பும் புளிப்பும் கலந்த மணத்துடன் இருந்தது. “அருந்துக!” என்றாள் காளி. அர்ஜுனன் பிறரும் குவளைகளை வாங்குவதற்காக காத்தான்.  “தந்தை இரவில்தானே அருந்துவார்?” என்றான் கொம்பன். “அப்பால் செல்லும்படி சொன்னேனா இல்லையா?” என்று அவள் கையை ஓங்க அவன் அதை பொருட்படுத்தவே இல்லை. காளன் கையில் குவளையை வாங்கியதுமே குடித்துவிட்டு புறங்கையால் வாயை துடைத்துக்கொண்டு மீண்டும் நீட்டினான். “போதும் போதும்” என்று கொம்பன் சொன்னான்.

காளன் இன்னொரு குவளையை வாங்கி அதே விரைவில் மாந்திவிட்டு “நன்கள்… பனைவேர் அறிந்த அனல் ஊறியிருக்கிறது அதில்” என்றான். முதியவர்கள் குவளைகளை பெற்றுக்கொண்டதும் “முதியவர்களுக்கு ஒரு குவளைக்குமேல் அளிக்கலாகாது” என்றான் கொம்பன். “சும்மா இருக்கப்போகிறாயா இல்லையா?” என்றாள் காளி. அர்ஜுனன் அந்தக் கள்ளின் துவர்ப்பை முதலிலும் புளிப்பை பிறகும் உணர்ந்தான். உடல் உலுக்கிக்கொண்டது. பின் அடிநா இனிப்பு கொண்டது. காளன் மீண்டுமொரு குவளை கள் பெற்றுக்கொண்டான். “போதும், தந்தையே” என்றான் கொம்பன்.

“இவன் குடிக்கவிடமாட்டான்” என்றாள் காளி. “போதும், அவனே அருந்தட்டும்” என்றான் காளன். அச்சொல் முடிவதற்குள் கொம்பன் கொப்பரையை தூக்கிக்கொண்டு அப்பால் சென்றான். “அதை முழுக்க அவர் அருந்துவாரா?” என்றான் அர்ஜுனன் வியப்புடன். “அருந்துவான். ஆனால் மயக்கு கொள்வதில்லை” என்றாள் காளி திரும்பி நோக்கி சிரித்தபடி. “ஏன்?” என்றான் அர்ஜுனன். “மயக்கெழுந்தால் உணவருந்த முடியாதே” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் கையிலிருந்த குவளையை உருட்டியபடி முதியவர்களை பார்த்தான். அவர்கள் குவளைகளை கைகளில் வைத்தபடி பழுத்த விழிகளில் சிரிப்புடன் கொம்பனை பார்த்தனர்.

சடையன் “மீண்டும் மீண்டும் இவர்கள் இங்கு பிறந்தபடியே இருக்கிறார்கள். அழகனும் ஆனையனும்” என்றார். “இங்குள்ளவர்கள் இறப்பதே இல்லை” என்றார் எரியன். “தளிர்வந்து இலையாகி பழுத்துச் சருகாகி உதிர மரம் மாறா இளமையுடன் நின்றிருக்கிறது.” காளன் “காளி, பாசுபதம் அளிக்கப்பட்டுவிட்டது” என்றான். காளி “எப்போது?” என்றாள். அர்ஜுனன் “சற்றுமுன்” என்று நாணச்சிரிப்புடன் சொன்னான். “பாசுபதம் பெற்றவர்கள் மாகாலர்கள் என்றழைக்கப்படுவார்கள். இனி நீயும் காலனே” என்றான் காளன்.

உதட்டைச் சுழித்து நொடித்தபடி “இதெல்லாம் வீண்பேச்சு. அது எதற்கு உனக்கு? வீசிவிட்டு உன் அன்னையிடம் திரும்பு” என்றாள் காளி. அர்ஜுனன் பணிவுடன் “அன்னையே, நான் இதற்கென்றே அருந்தவம் இயற்றி இங்கே வந்தேன்” என்றான். அவள் முகவாயைத் தூக்கி “வந்து எதை அடைந்தாய்? இச்சிறுகல்லையா?” என்றாள். “இதைக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?” அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கினான். “அங்கே உங்களுக்கென வேதங்கள் உள்ளனவே! ஏன் வேதங்களிலிருந்து வேதங்களென முளைக்கச் செய்கிறீர்கள்? ஏன் வேதவேர் தேடி ஆழ்ந்திறங்குகிறீர்கள்? அடைந்த வேதத்தை முற்றறிந்துவிட்டீர்களா என்ன?”

“ஏன் தொடுவானில் ஏதோ கனிந்திருக்கிறதென்று எண்ணி சென்றுகொண்டே இருக்கிறீர்கள்? இருந்த இடத்தில் நிறைந்து கனிவதற்கு உங்களைத் தடுப்பது எது?” என்று அவள் கேட்டாள். அவன் புன்னகையுடன் “தெரியவில்லை” என்றான். “ஏன் உன்குலத்துப் பெண்டிர் காடேகி தவமியற்றி கொடைகொள்ளவில்லை?” என்று கேட்டாள். “அவர்கள் அமர்ந்து முழுமைகொள்ள நீங்கள் மட்டும் ஏன் அலைந்து சிதைவுறுகிறீர்கள்?”

அர்ஜுனன் கைகூப்பி “நான் இதை எண்ணிப்பார்த்ததே இல்லை, அன்னையே” என்றான். காளன் எழுந்து அர்ஜுனனின் தோளைப்பற்றித் திருப்பி “நான் சொல்கிறேன், ஏனென்றால் நீயும் நானும் இங்குள்ள ஆண்கள் அனைவரும் இவர்களின் கருவறையிலிருந்து கிளம்பியிருக்கிறோம். இவர்களிடமில்லாத ஒன்று நம்மில் எழ வாய்ப்பில்லை. மண்ணிலில்லாதது மரத்தில் மணக்காது…” என்றான்.

திரும்பி கொம்பனைச் சுட்டி அவன் சொன்னான் “இதோ இவனுடைய தீராப்பசியும் இளையவனின் இனியஅழகும் இரண்டும் இவளுக்குள் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். இளையவனே, நீ உன் அன்னையின் அகம் தேடித்தவிக்கும் தொலைதிசைகளிலேயே அலைந்துகொண்டிருக்கிறாய்.” காளி சினத்துடன் “எதற்கும் இறுதியில் பெண்ணைப் பழி சொல்வதே வழக்கமாகக் கொள்க… வேறென்ன தெரியும் உங்களுக்கு?” என்றாள். “நீங்கள்தானே பெற்றீர்கள்?” என்றான் காளன். “நாங்கள் என்ன வெறுமனே பெற்றோமா? நீங்கள்தானே தொடக்கம்?” என்று அவள் கேட்டாள்.

காளன் எழுந்து கைகளைத் தட்டியபடி “இப்போது சொல்லிவிட்டாய் அல்லவா? நான்தான் தொடக்கம்… போதுமா? முடிந்துவிட்டதா?” என்றான். நடனமிட்டபடி “சொல்! தோற்றாய் என்று சொல்…” என்றான். அவள் முகம்சீற “சொல்மாற்றவேண்டாம். அது வேறு பேச்சு” என்று கூவினாள். “எல்லாம் ஒரே பேச்சுதான்… சொல்வதெல்லாம் இங்குதான் காற்றில் இருக்கும். அந்தக் காற்றுதான் இதுவும்” என்றான் காளன். “அப்படியா? சொல் மாறாதா? அப்படியென்றால் நேற்று பேசிய பேச்சு ஒன்றை சொல்கிறேன்” என்று அவள் கைநீட்டி கூவ “கையை நீட்டிப்பேசாதே…” என்று அவன் கூவினான்.

இருவர் நடுவே இயல்பாக புகுந்து இப்பால் வந்த கொம்பன் “கடுங்கள்ளின் அடிமண்டி சிறந்தது…” என்றான். “எங்கே?” என்றான் அர்ஜுனன். “முழுக்க முடிந்துவிட்டது. ஆனால் குடிலுக்குள் மேலே ஓர் உறியில் இருக்கிறது கள். நாம் சென்றால் எடுத்து குடிக்கலாம்” என்றான். சடையன் “அதாவது அவன் முழுக்கொப்பரையையும் குடித்ததுபோக அடிமண்டியை உனக்குத் தருவான், இளையோனே” என்றார். காளி சொல் நிறுத்தி திரும்பி “அங்கே என்ன செய்கிறாய்? போய் விளையாடு” என்றாள். “பன்றி ஆறிக்கொண்டிருக்கிறது” என்றான் கொம்பன். “அதை சுடும்போது அழைப்போம். சுடுவதற்குள் தின்றாகவேண்டுமா என்ன? போ” என்றாள். அவன் தயங்கியபடி நின்று பன்றியை காதலுடன் நோக்கிவிட்டு அப்பால் சென்றான்.

அவள் அர்ஜுனனிடம் “இதோ பார் இளையோனே, இந்த பாசுபதமெல்லாம் உனக்கெதற்கு? எளியவனாக இரு. ஒவ்வொரு உயிருக்கும் அளிக்கவேண்டியதென்ன என்று உலகாளும் அன்னைக்குத் தெரியும்… போ!” என்றாள். “நில், பெண்சொல்லைக் கேட்டால் அடுக்களைக்குள் இருக்கவேண்டியிருக்கும். பெற்றுப் புறந்தருவார்கள். எஞ்சிய வாழ்நாளெல்லாம் திரும்ப கருவறைக்குள் இழுக்க முயல்வார்கள்” என்றான் காளன். “நான் உங்களிடம் பேசவில்லை. பித்தர்களிடம் பேச நான் பிச்சி இல்லை” என்று காளி சொன்னாள்.

“நீதான் பிச்சி, பேய்ச்சி” என்று காளன் கூச்சலிட்டபடி அவளை நோக்கி சென்றான். அமர்ந்திருந்த சடையன் ஒரு கல்லை எடுத்து காளன்மேல் எறிந்து “நில், இதோ இவரிடம் சொல், பாசுபதம் என்றால் என்ன என்று” என்றார். “பாசுபதம் என்றால்…” என அவன் சொல்லெடுக்க முனைந்து சொல் தகையாமல் குழம்பி மூவரையும் நோக்கிவிட்டு “அது பெரிய ஒரு…” என்றபின் “அதாவது அது பாசுபதம் என்னும்…” என்றபின் காளியிடம் “என்னடி அது?” என்றான். “எனக்குத் தெரியாது” என்று அவள் சொன்னாள். “என் கண் அல்லவா? என் கரியோள் அல்லவா? நான் உனக்கு நீ கேட்ட வெள்ளைச் செண்பகப்பூவை நாளை கொண்டுவந்து தருவேன்” என்றான் காளன்.

“எனக்குத் தெரியாதென்று சொன்னேனே?” என்றாள் காளி. “நான் உனக்கு எரிமுகடேறிச்சென்று அருமணி கொண்டுவந்து தருவேன். சொல்!” என்றான் காளன். அவள் கண்களில் சிரிப்புடன் சிறிய உதடுகளை அழுத்தியபடி “என்னவென்று தெரியாமல்தான் இத்தனை தொலைவுக்கு அழைத்துவந்தீரா?” என்றாள். “நான் எங்கே அழைத்துவந்தேன்? அவனை நீதான் வரச்சொன்னாய்.” அவள் சிரித்துவிட்டாள். “அப்படியென்றால் எதை எண்ணி தலைதொட்டு வாழ்த்தினீர்?” அவன் “அது எல்லோரும் வாழ்த்துவதுதானே? மேலும் நான் முதியவன்” என்றான்.

“முதியவனா? நேற்று அப்படி சொன்னதற்குத்தானே முப்பிரிவேலை எடுக்கப்போனீர்?” என்று அவள் சொல்ல “அதை பிறகு பேசுவோம். பாசுபதம் என்றால் என்ன? சொல், அதை எப்படி சொல்வது?” என்றான். அவள் “அந்த கரிக்குழாயை எடுத்து புகையை இழுப்பதுதானே? வந்துகொட்டுமே சொல்லும் ஆட்டமும்… எனக்கு வேலை இருக்கிறது” என எழுந்தாள். அவன் பாய்ந்து அவள் கையைப்பிடித்து “சொல்லிவிட்டுச் செல்… என் செல்லம் அல்லவா?” என்றான்.

“என்னிடம் இனிமேல் சண்டை போடக்கூடாது” என்றாள். “இல்லை, மெய்யாகவே இல்லை” என்றான். “நான் சொல்வதை எல்லாம் ஒப்புக்கொள்ளவேண்டும்” என அவள் கையை நீட்டினாள். அதைப்பற்றி அவன் “நான் என்றைக்கு மீறினேன்?” என்றான். “இப்போது சொல்லுங்கள், இன்னும் சற்றுநேரத்தில் அங்கே வந்து மல்லுக்கு நிற்பீர்… சிறியவனை வேறு காணவில்லை. எந்த மரக்கிளையில் இருக்கிறான் என்றே தெரியவில்லை.” அவன் அவள் தாடையைப்பிடித்து “எத்தனைமுறை கேட்டுவிட்டேன்! சொல்லடி!” என்றான்.

அவள் “இளையவனே, ஓர் அனல்கொழுந்தின் முடியை காணமுடியுமா?” என்றாள். அர்ஜுனன் அவ்வினாவால் ஒரு கணம் திகைத்து பின் “கண்ணுக்குத் தெரியும் நுனி…” என்றபின் “ஆம்! அது முடிவிலாது சென்றுகொண்டிருக்கிறது. அது வானமேயாகிறது” என்றான். “அதன் அடியை?” என்றாள். அவன் தலையசைத்து “இன்மையிலிருந்து எழுந்து ஒளியென்றாவதையே காணமுடியும். அது விறகில் அந்த மரம்நின்ற மண்ணில் மண்ணென்றான பொருளில் இருக்கிறது. முடிவிலாதது” என்றான்.

“அனலின் அடிமுடியை காண்பதெப்படி?” என்று அவள் கேட்டாள். “எப்படி?” என்று காளன் அவளிடம் ஆவலாக கேட்டான். “ஆமாம், நீங்களே கேளுங்கள்! உங்களிடம் கற்கவந்த இவன் முன்னால் வைத்தே கேட்டு இழிவுகொள்ளும்” என கைநீட்டி காளனை திட்டியபின் “இளையோனே, அனலை அறிவதற்கு ஒரே வழி அனலென்றாவதே. அனலென்பது அனைத்தையும் தானென்றாக்கும் பெருவிழைவின் வெளிச்சம். அனலுடன் இணைக, அனலாகுக!” என்று சொன்னாள். “அதுவே பாசுபதம் எனப்படுகிறது.”

அர்ஜுனன் கைகூப்பினான். “நான் உனக்கு இனிமேல் விளக்குகிறேன். மிகமிக எளியது.  அதாவது நாம் அனலை ஒரு சிறு மண்குழாயில் எடுத்துக்கொள்கிறோம். அதில்…” என காளன் தொடங்க “இதோ பார்! வரும்போதே சொன்னேன் உன்னிடம், இந்த புகையாட்டெல்லாம் உனக்கு வேண்டியதில்லை. இவரிடம் நீ கற்கவேண்டியது ஒன்றே. இருநிலையழிந்து ஒன்றென்றாதல்” என்று அவள் சொன்னாள். “அதை அவரிடம் கேட்காதே. சிவப்புகையை உன் மூச்சில் திணிப்பார். அவருடன் இருந்து அவரென்றானதை அறி!”

அவள் எழுந்து செல்வதை அர்ஜுனன் நோக்கிநின்றான். காளன் “அவளுக்கு எல்லாமே தெரியும்” என்றான். அர்ஜுனன் “எனில் ஏன் ஓயாது பூசலிடுகிறீர்கள்?” என்றான். “பூசலா? நாங்களா?” என காளன் திகைத்தான். “ஆம், நானே பலமுறை கண்டேனே!” என்றான் அர்ஜுனன். “அதுவா பூசல் என்பது? அவளை நான் வேறு எப்படித்தான் அணுகுவது?” என்று காளன் சொன்னான். “அவளை சற்றுநேரம் தனித்துவிட்டுவிட்டால் பனியிலுறையும் ஏரி என அமைதிகொண்டுவிடுவாள். அதன்பின் எரிமலை எழுந்தாலொழிய சொல்மீளமாட்டாள்.”

அர்ஜுனன் “ஆம், அவ்வாறே நானும் எண்ணினேன். அன்னை எண்ணுவதும் பேசுவதும் இயங்குவதும் பிறர் பொருட்டே” என்றான். அவன் சொன்னதை செவிகொள்ளாத காளன் எழுந்து  தன் புலித்தோலை இடையில் சீரமைத்து “அவள் அங்கே தனித்திருக்கிறாள். நான் அவளிடம் சென்று பாசுபதம் பற்றிய இந்தக் கதையை அவள் எங்கே தெரிந்துகொண்டாள் என்று கேட்டுவருகிறேன். பெரும்பாலும் நானே சிவப்புகை வெறிப்பில் சொன்னதாக இருக்கும். அதை இங்கே சொல்லி என்னை அறிவிலி என்று காட்டிவிட்டுச் செல்கிறாள்” என்றபடி நடந்தான்.

[ 36 ]

அவன் செல்வதை நோக்கி சிரித்த எரியன் “இக்குடியின் ஆண்களும் பெண்களும் இப்படித்தான் எப்போதுமிருக்கிறார்கள்” என்றார். சடையன் திரும்பி பாறைகளாக பெருமுகம் கொண்டிருந்த அன்னையரையும் தந்தையரையும் சுட்டி “அவர்களும் இப்படித்தான் இருந்திருப்பார்கள். அன்னையரின் புன்னகைக்கு வேறொரு ஏது இருக்க வாய்ப்பில்லை” என்று நகைத்தார்.

“அன்னை சொன்னவற்றுக்கு என்ன பொருள், சடையரே?” என்றான் அர்ஜுனன். சடையன் “இளையோனே, கீழே மண்ணில் வாழும் உங்களை ஆள்வது இருமை. அன்னமும் எண்ணமும் என, உள்ளமும் உடலும் என, சொல்லும் பொருளும் என, துரியமும் சித்தமும் என  அனைத்தும் இரண்டெனப் பிரிந்துள்ளன அங்கு. உங்கள் வாழ்வின் துயரென்பது அப்பிளவு அளிக்கும் துன்பமே. நீங்கள் அடையும் இன்பமென்பது அவ்விருநிலை அகன்று அமையும் சிலகணங்கள் மட்டுமே. உணவில் உறவில் காமத்தில் கலையில் அறிதலில் ஊழ்கத்தில் அதை அறிகிறீர்கள்” என்றார்.

“ஊன்சுவை கண்டபின் கூண்டிலடைபட்டிருக்கும் சிம்மக்குருளை போன்றிருக்கிறீர்கள் நீங்கள். அறிந்த ஒன்றை அடைவதற்கான தவிப்பு.  தவமென்பது என்ன? இரண்டழியும் முழுநிலை. இருத்தல்நிறைவு. இன்மையென்றாதல்” என சடையன் தொடர்ந்தார். “காளனை நீ ஏன் போரில் வெல்லவில்லை என்றறிக! உன் வாழ்நாளெல்லாம் நீ கற்ற விற்கல்வி என்பது உளமென உடலை ஆக்கும் பயணமே. உன் உடல் உள்ளமென்றே ஆகிவிட்டமையால்தான் நீ இருநிலை வில்லவன் எனப்படுகிறாய்.”

“ஆனால் அந்நிலையிலும்கூட உன் உளம்வேறு உடல்வேறுதான்.  உளம் உடலுக்கு அப்பால் வியந்தபடி தனித்திருக்கிறது. எங்கள் குலத்துக் காளனின் உடல் அவன் உள்ளமேயாகும். அவன் உடலுள்ளம் அம்புகளைத் தவிர்க்க விழைந்தாலே போதும். ஆற்றுவதல்ல அவன் செயல், ஆவதேயாகும்” என்றார் பேயன். “அதைத்தான் நீ கற்பதற்கு வந்தாய். அறியக்கற்பது கல்வி. ஆவதற்கான வழியே பாசுபதம்.”

“இளையோனே, இந்நிலம் என்றும் இவ்வண்ணமே இருந்தது. மண்ணின் அல்குல்குழி இது  என்று சொல்கின்றன எங்கள் கதைகள். விண்நீர் முதலில் விழுந்த இடம். உயிர்த்துளி முதலில் முளைத்த நிலம்.  எங்கள் குலமுதல்வனை என்றோ யாரோ சிவப்பன் என்றனர். பின் வந்தோர் அச்சொல்லை சிவம் என்றாக்கினர். அவன் ஆளும் இந்நிலத்தை சிவநிலம் என்றுரைத்தனர்” என்றார் எரியன்.

“இங்கு வாழ்ந்திருந்தார் அவர். அவர் இடம் அமைந்த துணையை சிவை என்கின்றன கதைகள். அவர்களின் முகமென்ன என்றறியோம். அன்றி, இந்நிலத்தைச் சூழ்ந்தமைந்த பாறைகள் அனைத்திலும் செதுக்கப்பட்டிருக்கும் அத்தனை முகங்களும் அவர்களுடையனவே என்று சொல்வோம்” என சடையன் சொன்னார். “திமிலெழுந்த வெண்காளை ஒன்று அவருக்குத் துணையென்றிருந்தது. அதனால் அவர் பெயர் பசுபதி எனப்பட்டது. மழு அவர் படைக்கலம். உடுக்கு அவர் காலம். மான் அவர் கொடி. பைநாகம் அவர் கழுத்தணிந்த ஆரம். கதைகள்சொல்லி வரைந்ததெடுத்த ஓவியமே இன்று அவர்.”

“வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்தவர் அவர்” என்று சடையன் சொன்னார். “விண்ணுடன் நேர்த்தொடர்பு கொண்டிருந்தார். ஒளியணையாத சொல் வகுத்தார். பித்தர், எருக்குமாலை சூடும் பேயர், ஆட்டர், ஆராக்காதலர். ஒருமுறை இந்நிலத்தைச் சூழ்ந்திருந்த மலைகள் நகைக்கத்தொடங்கின. வானில் பெருமரங்கள்போல முகில்கள் எழுந்து நின்றன. அதன் பொருள் அறிய தன் வெள்விடை ஏறி தனித்து மலையேறிச் சென்றார். மீள்கையில் அவர் நுதலில் ஒரு செவ்விழி திறந்திருந்தது. ஊன்விழி கடந்து கண்டமைக்கு சான்று அது.”

“இங்கு பிறந்திறந்த பல்லாயிரவரில் அவர் மட்டும் தன் முதிர்ந்த துணைவியுடன் வெள்ளெருது ஊர்ந்து அந்த முடிமலைமீது ஏறிச்சென்று மறைந்தார் என்கின்றன மூதாதைச் சொற்கள். குடியினர் கூடிநின்று கைதொழுது அவர்கள் செல்வதை நோக்கி நின்றனர். மேலேறிச்சென்றவர் ஏழாவது நாள் விசும்புகடந்து செல்லும் அனலுருவாக மலைமேல் எழுந்து நின்றார். பதினெட்டு நாட்கள் அத்தழல்பேருரு வானை ஏந்தியிருந்தது. பின் அது குளிர்ந்து செம்முகிலென ஆனபோது கூனலிளம்பிறையொன்றைச் சூடியிருந்தது. பிறைக்குளிர்கொண்டு அதன் பித்து அணைந்தது.”

“செந்தழலென எழுந்தவரை சிவப்பர் என அழைக்கலாயினர் எங்கள் குடிகள். அவர் கொண்ட மூவிழியையும் பிறையையும் தாங்களும் அணிந்துகொண்டனர்” என்று சடையர் சொன்னார். மன்றில் இருந்த சிவக்குறியைச் சுட்டி “நீத்தோருக்கு கல்லமைத்து வணங்குதல் எங்கள் குடிவழக்கம். கிடைக்கல்லாக அன்னையரும் நிலைக்கல்லாக தந்தையரும் நின்று மலரும் கள்ளும் ஊனும் படையல்கொண்டு அருள்புரிவார்கள். மலையேறிச் சென்று அனலென எழுந்த அன்னையையும் தந்தையையும் வழிபட கிடைக்கல்மேல் நிலைக்கல் நாட்டி ஒன்றென வழிபடலானோம். அதுவே எங்கள் மன்றுகளில் இன்று சிவக்குறி என அமைந்துள்ளது.”

KIRATHAM_EPI_81

“பாசுபதம் எங்கள் வேதம்” என்று எரியன் சொன்னார். “எரியென எழுந்த மூதாதையின் ஒலிகளிலிருந்து எங்கள் குடிமூத்தோர் எடுத்தமைத்தது அது. இளையோனே, உங்கள் வேதங்கள் மானுடர் எரியிடம் உரைப்பவை. எங்கள் வேதம் எரி மானுடரிடம் உரைப்பது. எரியென்றானவர்களுக்குரிய மொழி அது. மானுடப் பொருள்தொடாத் தூய்மை உடையது.”

“அது முந்நூறாயிரம் நுண்சொற்கள் கொண்டது. நூறாயிரம் நுண்சொற்கள் எண்ணங்களாகவே உள்ளன. நூறாயிரம் நுண்சொற்கள் மூச்சென அமைந்துள்ளன. நூறாயிரம் நுண்சொற்கள் ஒலியென்றாகின்றன. இறுதிச் சொல் ஒன்று மட்டுமே மொழியென்று வருகிறது. அதை நாங்கள் ஓம் என்று உரைக்கிறோம். அதுவரையிலான அத்தனை நுண்சொற்களையும் ஏற்று மெய்யென்று சான்றுகூறுகிறது அவ்வொரு மொழிச்சொல்” என்றார் சடையன்.

“அச்சொற்களும் அதனுடன் இணைந்த ஆயிரத்தெட்டு விரல்குறிகளும் இணைந்ததே பாசுபதவேதம். வேதமென மண் அறிந்த முதல்வேதம் அதுவே” என்றார் எரியன். அர்ஜுனன் நீள்மூச்சுடன் மெல்ல நெகிழ்ந்தமைந்தான். “மூத்தோரே, ஓம் எனும் அம்மொழிச் சொல்லை முதலென்றாக்கி ஒலிக்கத் தொடங்கியவையே எங்கள் வேதங்கள் அனைத்தும்” என்றான். “அசுரரும் நாகரும் நிஷாதரும் கொண்ட வேதங்கள் எல்லாம். நால்வேதமென்றான வாருணம், மகாருத்ரம், மாகேந்திரம், மகாவஜ்ரம் அனைத்தும்.”

பேயன் “ஆம், அவை எங்கள் வேதத்தின் நீர்ப்பாவைகள்” என்றார்.  “இன்று இந்த மண்ணின் துளியொன்றைப் பெற்று எங்களுள் ஒருவனாக ஆனாய். பாசுபதத்திற்குள் நுழைந்து முழுமைகொள்க!” என்று சடையன் அர்ஜுனனை வாழ்த்தினார். அர்ஜுனன் கைகூப்பினான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 80

[ 33 ]

காளி தான் சேர்த்துவைத்திருந்த கிழங்குகள் கொண்ட கூடையை எடுத்துக்கொண்டாள். அர்ஜுனனுக்கு இன்சுவைக் கிழங்குகளை அளித்தாள். அவன் அவற்றை உண்டதும் மலைத்தேன் குடுவையை அளித்தாள். சுனைநீருண்டதும் அவன் உடலாற்றல் மீண்டான். அவன் உடலில் இருந்த அம்புகளை அகற்றி பச்சிலை சாறூற்றினாள். அனலென எரிந்து குளிர்ந்தணைந்தபோது புண் மூடிக்கொண்டுவிட்டதை அவன் அறிந்தான். நடந்தபோது வலியிருக்கவில்லை. வெந்நீர் ஓடிய சிற்றோடைகளையும் விழுந்து கிடந்த பெருமரங்களையும் கடந்து அவர்கள் சென்றனர்.

அவர்களுடன் செல்கையில் அந்தச் சிறுகாடு அவன் அப்போதுவரை அறியாத முகங்களை காட்டத்தொடங்கியது. மலைகளின் இடுக்கு ஒன்றை செறிந்த மரங்கள் மூடியிருந்தன. அதனூடாகச் சென்றபோது அந்த மறைவாயிலின் இரு பக்கங்களிலும் திமில்பெருத்து திமிரெழுந்த நோக்குடன் நின்றிருந்த காளைவடிவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். “அவை எங்கள் குலக்குறிகள். இவற்றுக்கு அப்பால் எங்கள் வாழ்நிலம்” என்று பன்றியை தோளில் சுமந்துகொண்டு வந்த மூத்த மைந்தன் சொன்னான்.

“இங்கே காவல் என்று ஏதுமில்லையே?” என்றான் அர்ஜுனன். “காவலா? எதற்கு?” என்று காளி கேட்டாள். “இதற்குள் வரும் விலங்குகள் அனைத்தும் எங்கள் சொல்கேட்பவைதான்.” அர்ஜுனன் “எதிரிகள் வரக்கூடுமே?” என்றான். “எதிரிகள் என்றால்?” என்றான் மூத்த மைந்தன். அர்ஜுனன் “உங்களை தாக்குபவர்கள். வெல்பவர்கள். அடிமைப்படுத்தி திறைகொள்பவர்கள். கொள்ளையடித்துச் செல்பவர்கள்” என்றான். காளன் ஒரு கையால் தொடையை அறைந்து வெடித்துச்சிரிக்க காளி சினத்துடன் திரும்பி “அதென்ன எப்போதும் ஒரு மூடச்சிரிப்பு? செவி ரீங்கரிக்கிறது” என்றாள். காளன் சற்று குறுகி சிறுவன்போல “இவன் காலால் என் மார்பை வருடி கூச்சமளித்தான். அதனால்தான்” என்றான்.

காளி அர்ஜுனனிடம் “நாங்கள் இங்கிருப்பதை எவரும் அறியமாட்டார்கள். இந்த எல்லைக்கு அப்பால் சென்று பிறவுலகை அறிந்து வந்தவர்களே நானும் இவரும் மட்டும்தான். பிறருக்கு புறமென ஒன்று உண்டென்றே தெரியாது” என்றாள். “புறவுலகுக்கு நீங்கள் ஏன் சென்றீர்கள்?” என்றான் அர்ஜுனன். காளன் “எல்லா வகையான காதல்களையும் செய்து பார்ப்பதற்காகத்தான்” என்றான். “அய்யோ” என்றபடி காளி அவனை அறைந்தாள். அவன் விலகிக்கொண்டு உரக்க நகைத்தபடி “ஹை ஹை ஹை” என ஓசையிட்டு நடனமிட்டான். அவள் அவனை அடிக்கச்செல்ல அவன் நடனமிட்டபடி விலகினான். அவன்மேல் அமர்ந்த இளையவன் கைகளை வீசி எம்பி குதித்து பால்பற்கள் தெரிய சிரித்தான்.

மூத்தவன் அர்ஜுனனிடம் “நன்றாக ஆடுவார்… உள்ளே போனதுமே சிவப்புகை இழுப்பார். அதன்பின் இரவெல்லாம் ஆட்டம்தான்” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் அவர்களைப் பார்த்தான். காளி மூச்சிரைக்க “உள்ளே வருக… பார்க்கிறேன்” என்றாள். மூத்தவன் “சில தருணங்களில் நானும் ஆடுவேன். எனக்கு களிமயக்கு எழவேண்டும்” என்றான். “சிவப்புகை எடுப்பாயா?” என்றான் அர்ஜுனன். “இல்லை, எனக்கு வயிறு முழுமையாக நிறைந்தாலே களியெழுந்துவிடும்” என்றான் மூத்தவன்.

அர்ஜுனன் சட்டென்று நின்று “ஆ!” என்றான். “என்ன?” என்று அவள் கேட்டாள். “நாகம் கொத்திவிட்டதா? அஞ்சாதே, எங்களிடம் நஞ்சுநீக்கும் பச்சிலைகள் பல உள்ளன.” அர்ஜுனன் “இல்லை அன்னையே, நீங்கள் அஸ்தினபுரிக்கு வந்திருந்தீர்களா?” என்றான். “நாங்கள் மண்ணிலுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றோம்” என்றான் காளன். “ஆமாம், மண்முழுக்கச் செல்வது… அறிவில்லாமல் எதையாவது பேசுவது. கேட்டால் ஒரு கிறுக்குச் சிரிப்பு” என நொடித்தபின் “ஏன் கேட்கிறாய், மைந்தா?” என்றாள்.

“நீங்களெல்லாம் பேசுவது அஸ்தினபுரியின் தனிச்செம்மொழியை… அந்த உச்சரிப்புகூட அப்படியே அஸ்தினபுரியிலுள்ளது” என்றான். அவள் “அப்படியா?” என்றாள். “ஆம், மலைநோக்கி வருந்தோறும் மொழியில் பீதர்மொழியின் ங ஒலியிருக்கும். மேற்குநோக்கி சென்றால் யவனர்களின் ழ ஒலியிருக்கும். தெற்கே சென்றால் தென்மொழியின் குறுமுழவோசை கலக்கும்” என்றான் அர்ஜுனன். “அஸ்தினபுரியின் மொழி கங்கைக்கரை ஓசைகொண்டது. வங்கம் முதல் பாஞ்சாலம் வரை புழங்கும் இம்மொழியில் யாழின் ஓசை கலந்திருக்கும்.”

“நாங்கள் இந்த மொழியை உன் உள்ளத்திலிருந்தே எடுத்துக்கொள்கிறோம்” என்றான் காளன். “உளம்புகு கலையா? நான் அதை கற்கமுடியுமா?” என்றான் அர்ஜுனன். “உளமழியும் கலை என்று சொல்லலாம். கற்பதற்கு உளமில்லாதாகும்போது வந்தடையும் கலை அது” என்று சொல்லி காளன் கண்சிமிட்டினான். “இவர் பேசுவதை புரிந்துகொள்ள முயலாதே. அது இவருக்கே தெரியாது. நீ உனக்கு வேண்டியதை மட்டும் கற்றுக்கொள்” என்றாள் காளி. “மறந்தும் இவரிடமிருந்து சிவப்புகையை பெற்றுக்கொள்ளாதே. பெற்ற தாய் மைந்தனுக்கு ஊட்டுவதுபோல கொஞ்சிக்கொஞ்சி நீட்டுவார். வாங்கி இழுக்கத் தொடங்கினால் அதன்பின் உனக்குள் ஒரு சொல்லும் இருக்காது. உறவும் கடமையும் மறக்கும். வெறும் முகில் மட்டுமே இருக்கும்.”

அர்ஜுனன் “இல்லை, அன்னையே” என்றான். அவனை நோக்கி காளன் மீண்டும் கண்சிமிட்டி புன்னகை செய்தான். மூத்தவன் மிக எளிதாக அந்தப் பெரிய பன்றியை தூக்கிவருவதை அர்ஜுனன் கண்டான். அவனுக்கு ஐந்து வயதுகூட இருக்காதென்று முகம் காட்டியது. ஆனால் அர்ஜுனனின் தோள் அளவுக்கு உயரமிருந்தான். “உன் பெயர் என்ன?” என்றான். “கொம்பன்” என்றான் அவன். அவ்வொலி அர்ஜுனனை சற்று திகைக்கச் செய்தது. “அதன் பொருள் என்ன?” என்றான். “களிற்றுயானை. பெருங்கொம்பு கொண்டது” என்றான் கொம்பன். “என் இளையோன் பெயர் குமரன்… சிறுவன் என்று அதற்குப் பொருள். தந்தை அவனை அழகன் என்று அழைப்பார்.”

அஞ்சிய முட்பன்றியென அர்ஜுனனுக்குள் அனைத்துப் புலன்களும் முள்கொண்டன. அவன் நின்றுவிட்டான். “ஏன்?” என்றான் கொம்பன். “இந்தப் பெயர்கள் தென்மொழியில் அமைந்தவை…” என்றான். “தென்மொழியா?” என்றபடி கொம்பன் அவனை ஏறிட்டு நோக்கினான். “பாரதவர்ஷத்தின் தென்முனம்பில் பேசப்படும் மொழி அது. தென்னவர் தொன்மையான கடலோடிகள். முத்துக்களை பணமாகக் கொண்டு உலகுடன் வணிகம் செய்பவர். இசை தேர்ந்தவர்கள். ஏழுவகை யாழ்கொண்டவர்கள். அவர்களின் மொழியிலமைந்த பெயர்கள் இவை.”

அர்ஜுனன் அந்தப் பெயர்களை மீண்டும் சொல்லி “கொம்பன் என்ற பெயரிலேயே தென்னகப்பாணன் ஒருவன் அஸ்தினபுரிக்கு வந்திருக்கிறான். அவன் முகத்தைக்கூட நினைவுறுகிறேன்” என்றான். கொம்பன் “அவன் என்னைப்போலவே சிறந்த வீரனா?” என்றான். “அவன் பாணன்” என்றான் அர்ஜுனன். “அவனால் முழுப்பன்றியை உண்ணமுடியுமா?” என்றான் கொம்பன். அர்ஜுனன் சிரித்துவிட்டான்.

அப்பால் காளியும் காளனும் தங்களுக்குள் ஏதோ பேசியபடி வந்தனர். தலைக்குமேல் குமரன் விழுந்து துயின்றுகொண்டிருந்தான். “அவன் மேலே ஏறினாலே துயின்றுவிடுவான். என்னை அவர் அப்படி ஏற்றிக்கொள்வதில்லை” என்றான் கொம்பன். “நான் எடை மிகுதி. மேலும் செல்லும்வழியெல்லாம் கனிகொய்து உண்பதனால் அவரால் நடக்கவும் முடியாது.” அர்ஜுனன் “என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்றான். “அவர்கள் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார்கள். சண்டைபோடுவதற்காக பேசுவார்கள். மீண்டும் பேசுவதற்காக சண்டைபோடுவார்கள்” என்றான் கொம்பன்.

அவர்கள் சென்றடைந்த நிலம் தென்னகம்போலவே இருந்தது. ஓங்கிய தென்னைமரங்கள் உடல்வளைத்து நடமிடும் பாணர்களும் விறலியரும்போல இலைவிரித்து நின்றிருந்தன. கொடிமரங்களின் செறிவென கமுகுகள், கிழிந்த பேரிலையை யானைச்செவிபோல அசைத்தபடி வாழைகள், கருங்கால்வேங்கைகள், விழுதுபரப்பிய ஆல்கள், இலைச்சிமிட்டல்கள் அடர்ந்த அரசுகள், பொன்னணிந்த கொன்றைகள், இலுப்பைகள், இலை சிலிர்த்த வேம்பு, புதுத்தளிர்விட்ட புங்கம். இளவேனில் எழுந்திருந்தது அங்கு. பறவைகளின் ஓசை தலைக்குமேல் பெருகிநிறைந்திருந்தது. இலைகள்மேல் காற்றோடும் ஓசை அருவியை அணுகுவதுபோல எண்ணச்செய்தது.

விழிவிரிய சுற்றிலும் நோக்கியபடி “தென்னகநிலம்!” என்றான் அர்ஜுனன். காளன் அதைக் கேட்டு அருகணைந்து “ஆம், தெற்கே இதைப்போலொரு நிலமிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது எங்கள் பாடல்களில்” என்றான். பசும்பரப்பின் ஊடாகச்சென்ற கால்தடப் பாதையில் அவர்கள் சென்றனர். பசுமைக்குள் தெரிந்த மலைப்பாறைகள் அனைத்துமே முகங்களாக செதுக்கப்பட்டிருந்தன. ஊழ்கத்தில் மூழ்கிய முகங்கள் சில. விழி உறுத்து கேளாச்சொல்லொன்றைச் சொல்லி அமைந்தவை. கனிந்து புன்னகைக்கும் அன்னையர் முகங்கள். தந்தையருக்குக் கீழே எருதுகளும் யானைகளும் செதுக்கப்பட்டிருந்தன. அன்னையருக்கு கலைமான்களும் சிம்மங்களும். அவர்கள் அனைவருமே சடைத்திரிக் கூந்தல் கொண்டிருந்தனர். அவை வழிந்து விழுதுகளென நிலம்தொட்டு விரிந்திருந்தன.

“அவர் எங்கள் குலமூதாதையர்” என்றான் காளன். “உங்கள் குலப்பெயர் என்ன?” என்று அர்ஜுனன் கேட்டான். “காலர்” என்று காளன் சொன்னான். “கால் எனில் காற்று. அலையலையென எழுந்துவரும் முடிவிலா காற்றென்றே காலம் எங்கள் மூதாதையரால் அறியப்பட்டது. பருவங்களைச் சமைப்பது அதுவே. மலர்களை முகிழவிழச் செய்கிறது. மகரந்தங்களால் சூலுறச்செய்கிறது. காயும் கனியும் ஆக்குகிறது. விலங்குகளிலும் பறவைகளிலும் காமத்தை எழுப்புகிறது. மழையையும் பனியையும் சுமந்து வருகிறது. வெயிலை குளிரவைத்து அளிக்கிறது.”

“காற்றே மூச்சு என உடலில் ஓடுகிறது. காலமென்றாகி நெஞ்சில் துடிக்கிறது. எண்ணங்களாகி அகத்தை நிறைக்கிறது. காற்று அகலும்போது அன்னம் மீண்டும் அன்னமென்றாகிறது” என்று காளன் தொடர்ந்தான். “அன்ன எனில் போல என்று பொருள். அன்னதே அன்னமென்றாகியது. பொருளை பிறிதொன்றுடன் ஒப்பிடாமல் அறியமுடியாது. ஒப்பிடப்பட்ட முதற்பொருளின் முன்பாக அனைத்துடனும் ஒப்பிடப்படும் முழுப்பொருள் நின்றிருந்தது” என்றான். “அது அன்னத்தைப் பொருளென்றாக்குகிறது. சொல்லில் பொருளென குடிகொள்கிறது.”

சிவந்தவரிகள் ஓடிய அவன் விழிகள் சிப்பியின் உட்தசைபோலிருந்தன. கருவிழிகளுக்கு நடுவே நோக்கிலாதவைபோல வெறித்தன இரு உள்விழிகள். “குடி என்றால் வாழ்வது. கூடுதல் என்றால் இணைவது, மிகுவது. கூடுவதே குடி. குடியை கூடு என்றும் நாங்கள் சொல்வதுண்டு. வழிதலென்பது வழியென்றானது. வழியே வாழ்வென்றானது. வாழ்வே வழுத்துதல் என்க! வழுவும் அதுவே.” அருகே நின்ற பேரிலைக்கதலியை கையால் தட்டி “வாழ்வதென்பதனால் இது வாழை. குளிர்ந்தது, கனிவது, வேர்முளைப்பது, முழுமைகொண்டழிவது” என்றான்.

“தென்மொழியேதான்… ஐயமே இல்லை. அத்தனை சொற்களும் அம்மொழியே” என்றான் அர்ஜுனன் வியப்புடன். “நன்று, அதை நானறியேன். அவர்கள் இங்கிருந்து மொழியை கொண்டுசென்றிருக்கக்கூடும். இதுவே ஊற்றுமுகம். இங்கு எழுந்த அனலே எங்கும் பற்றிக்கொண்டது” என்று காளன் சொன்னான். “முழுமுதற் சொல்லை பெற்றுக்கொண்ட மூத்தகுடியென்பதனால் நாங்கள் இங்கு மலைசூழ்ந்து காக்க அதில் திளைத்துவாழ்கிறோம்.” அவன் தலையைத் தொட்டு “வருக!” என அவன் முன்சென்றான்.

“அந்த முதற்சொல் வாட்கருக்கு கொண்ட வைரம். அருநஞ்சும் ஆராவமுதும் ஒன்றென்றானது. அதை எங்களுக்கு உகந்த முறையில் மெருக்கிக்கொண்டோம். எங்கள் தலைமுறைச்சரடின் காலப்பெருக்கில் உருண்டு உருண்டு மொழுத்தமையால் அதை மொழி என்கிறோம்” என்றான் காளன். “எங்கள் மொழியை அறிக! எங்கள் தொல்மூதாதையர் கண்ட முழுமுதன்மை ஆயிரம் நாவுகளில் அமைந்ததே எங்கள் மொழி. சொல்தொட்டு பொருள்பெற்று பின்னகர்ந்து சென்றமைக! அதுவே இங்குள்ள ஊழ்கம்.”

அவன் அர்ஜுனனின் தோளில் தன் வேங்கைமரக்கிளைபோன்ற பெருங்கையை வைத்தான். “அந்த முதற்சொல்லே பாசுபதம் என சொல்லப்படுகிறது.” அர்ஜுனன் மின்தொட்ட மரம் என சுடர்ந்து நின்றான். பின்னர் மெல்ல எரிந்தணைந்தான். நீள்மூச்சுடன் “ஆம், அதன்பொருட்டே வந்தேன்” என்றான்.

அவர்களை நோக்கி அங்குள்ள சோலைக்குள் இருந்து இளையோர் கூச்சலிட்டபடி ஓடிவந்தனர். கரிய முகத்தின் வெண்பல்நகைகளும் இடையணிந்த வெண்கல்நகைகளும் மட்டும் முந்தித்தெரிவதுபோலத் தோன்றியது. அவர்களின் குரல்கேட்டு தந்தையின் தோளிலிருந்த இளையவன் எழுந்து கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தான். “இறக்கு இறக்கு” என்று கூவினான். அவனை இறக்கிவிட்டதும் கைவிரித்துக்கொண்டு ஓடி அவர்களுடன் இணைந்துகொண்டான். அவர்கள் அவனிடம் பேசியபடியே உள்ளே ஓடினர்.

உள்ளிருந்து கல்நகைகளும் மான்தோல் ஆடையும் அணிந்த கரிய பெண்கள் இலைப்பசுமைக்குள் இருந்து தோன்றினர். அர்ஜுனனை வியப்புடன் நோக்கி “மீண்டும் வந்திருக்கிறாரா?” என்றாள் ஒரு முதுமகள். “அவர் வேறு ஒருவர். இவர் அவருடைய நண்பர்” என்றான் காளன். “யார்?” என்று அர்ஜுனன் கேட்டான். உடனே பீலிமுடியன் என காளி சொன்னது நினைவிலெழுந்தது. “அவரா? இங்கு வந்துள்ளாரா?” என்றான். “ஆம், அவனுடைய முதிரா இளமையில்… உன்னுடன் என நான் அவனுடன் போரிட்டேன்” என்றான் காளன்.

அர்ஜுனன் “அதன்பின்?” என்றான். “அவன் ஆழியைப் பற்றி இங்கே கொண்டுவந்துவிட்டேன். என் பின்னால் அவனே வந்தான். இங்கு சிலநாட்கள் தங்கிச்சென்றான். அதன்பின் இங்கு வருபவன் நீ மட்டுமே” என்றான் காளன். மேலும் மேலும் பெண்கள் வந்து அவர்களைச் சூழ்ந்தனர். அனைவரும் அர்ஜுனனை ஆர்வத்துடன் நோக்கி உடன் நடந்தனர். அவன் விழி அவர்களை சந்தித்ததும் புன்னகைத்தனர். வெண்பரல்நிரை கரியநீரிலெழுந்ததுபோன்ற சிரிப்புகள். நீர்த்தண்மை நிறைந்த விழிகள்.

“முன்பு எவர் வந்திருக்கிறார்கள்?” என்றான் அர்ஜுனன். “குறுமுனிவன் ஒருவன் வந்தான். என் முழங்காலளவே உயரமானவன். பெருவயிறன். தாள்தோய்ச் சடையன்” என்றான் காளன். “அகத்தியர்” என்றான் அர்ஜுனன். “இப்போது தெரிகிறது, தென்மொழி இம்மொழிபோன்று எழுந்தது எவ்வாறென்று” என்றான். வியப்புடன் தலையை அசைத்தபடி “இங்கிருந்து சென்ற அனலா?” என தனக்குள் சொல்லிக்கொண்டான்.

[ 34 ]

அந்த மலையுச்சித் தாழ்வரையின் பெயர் கைலை. அதன் நடுவே விண்முட்ட எழுந்து நின்ற களிறுவடிவ மலையே கைமா என்றழைக்கப்பட்டது. கைமாமலை மருவி கைலையென்றாகி அத்தாழ்வரையே அப்பெயர் சூடிக்கொண்டது. கைமா மீது எப்போதும் அனல்முகில் அமர்ந்திருந்தது. அதற்கப்பாலிருந்த பன்னிரு அனல்மலைகளின் வெம்மையால் கோடைவெம்மைகொண்டிருந்த அந்நிலத்தில் கதிர்விரியும் பகுதிகளுக்குரிய மரங்களும் செடிகளும் புட்களும் பூச்சிகளும் பிறந்துபெருகி ஒரு தனியுலகை அமைத்திருந்தன.

பச்சைப்பாசி படிந்த கருங்கற்பாளங்களை சுவரென்றும் கூரையென்றும் அமைத்துக் கட்டப்பட்ட தாழ்ந்த இல்லங்களின்மேல் பீர்க்கும் சுரையும் இலைவிரித்துப் படர்ந்தேறியிருந்தன. மூங்கில்வேலிக்குமேல் பூசணிக்கொடிகள் பூக்கள் விரிய நீர் உண்ட செழிப்புடன் பேரிலை விரித்து நின்றிருந்தன. அத்தனை இல்லங்களிலும் முகப்பில் மரத்திலோ மண்ணிலோ செய்யப்பட்ட எருதுச்சிலை வைக்கப்பட்டிருந்தது. சாய்ந்த பின்காலைவெயில் படிந்த சிறுமுற்றங்களில் மூங்கில்பாய்களில் கம்பும் தினையும் சாமையும் வரகும் காயப்போடப்பட்டிருக்க காகங்கள் சூழ்ந்தெழுந்து பறந்தன. கையில் இலைச்செண்டுகொண்ட நீண்ட கழியுடன் அமர்ந்திருந்த மூதன்னையர் பாடல்போலக் கூவி கோல்வீசி காகங்களைத் துரத்தும் அகவலோசைக்கு மரங்கொத்திகளும் அணில்களும் எழுப்பிய கொத்தொலிகளும் செதுக்கொலிகளும் தாளமாயின.

கிளைகளின் ஊடாக இறங்கி புற்பரப்பில் பதிந்து இளம்பச்சை வட்டங்களாக ஆன வெயில்பட்டைகளில் சிறுபூச்சிகளும் சருகுத்திவலைகளும் ஒளிகொண்டு மிதந்தன. அதன் ஒலிவடிவம் என எங்கோ குழலோசை ஒன்று சுழன்று சுழன்று காற்றில் கரைந்து மீண்டும் உருக்கொண்டது. பச்சையின் அழுத்தமாறுபாடுகளால் ஆன சோலைகள். தளிர்ப்பச்சையை வெட்டி அமைத்த சிறுபாத்திகளில் பசும்பயிரின் அலைகள். அவற்றின்மேல் நீராவியென எழுந்து அமைந்த சிறுபூச்சித்தொகையின் ஒளிர்வுகள். காலடிகள் படிந்த செம்மண் தரையில் முந்தைய மழையின் ஈரம் எஞ்சியிருந்தது. கொன்றைகளுக்குக் கீழே கால்குழித் தடங்களில் பொன்பொடி என மகரந்தம் உதிர்ந்து கிடந்தது.

அத்தனை இல்லங்களிலிருந்தும் சிறுவர்கள் இறங்கிவந்து இளையோனுடன் விளையாடலாயினர். அவர்களின் கூச்சல்கள் செவிதுளைக்க முகம் சுளித்த காளி “உண்பதெல்லாம் குரலென்றே வீணாகிறது…” என்றாள். “நான் குரலெழுப்புவதே இல்லை, அன்னையே” என்றான் கொம்பன். “நீ சற்று குரலெழுப்பி உடல்கரைத்தால் நன்று” என்று அவள் சொன்னாள். கொம்பன் அர்ஜுனனிடம் “நாம் இதை மன்றுக்குக் கொண்டுசென்று சேர்ப்போம். அடுமடையர்கள் இதைச் சுடுவார்கள். இஞ்சியும் மிளகும் மலையுப்புடன் சேர்த்துப்பூசி சுட்டால் பன்றியின் ஊன்நெய் உருகி அதிலிணைகையில் அமுதென்றிருக்கும்” என்றான். “செல்க, உண்பதற்கு அவனிடம்தான் கற்கவேண்டும்” என்றாள் காளி.

வெண்ணிறக் கல்லில் செதுக்கப்பட்ட எருதுச்சிலை எழுந்த அவர்களின் இல்லத்தை அடைந்ததும் காளன் “நீ மன்றுக்குச் செல்க, இளவரசே! நாங்கள் அங்கு வந்துவிடுகிறோம்” என்றான். அவன் இல்லத்திற்குமேல் தோகைசரிய மயில் ஒன்று அமர்ந்திருந்தது. காலடியோசை கேட்டு நீள்கழுத்து ஒளிமழுங்க அது திரும்பி நோக்கியது. தோகை தொங்கி அசைய சிறகோசையுடன் பறந்து அருகே நின்ற மகிழமரத்தின்மேல் சென்று அமர்ந்து கழுத்தைச் சொடுக்கி அகவியது. அவர்கள் பசுங்குடிலென ஒளிகொண்டிருந்த அந்த இல்லத்திற்குள் நுழைய உள்ளிருந்து கன்றுக்குட்டி ஒன்று வெளியே பாயந்தது. காளி உரக்க நகைத்து அதன் முதுகில் தட்டினாள்.

அவர்கள் இருவரும் இல்லத்திற்குள் செல்ல கொம்பன் அர்ஜுனனிடம் “அங்கே சென்றதுமே சண்டைபோடுவார்கள்” என்றான். “எப்படி தெரியும்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அவர்களில் யார் உயர்ந்தவர் என்பது இன்னும் முடிவாகவில்லை” என்ற கொம்பன் “நாம் செல்வோம். பன்றி உடல்வெம்மையை இழந்தபடியே செல்கிறது. சுவைகுன்றிவிடும்” என்றான். “ஆம், இது எனக்கு அன்னை அளித்த கொடை” என்றான் அர்ஜுனன். கொம்பன் ஐயத்துடன் நோக்கி “அப்படியா? நம்மிருவருக்கும் உரியது என்றல்லவா சொன்னார்?” என்றான். அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “ஆம், நான் மறந்துவிட்டேன்” என்றான்.

மன்றுமுற்றத்தில் மையமாக ஒரு பெரிய பீடம் இருந்தது. அதன் நடுவே செங்குத்தாக எழுந்த பெரிய சிவக்குறியை அர்ஜுனன் கண்டான். தீட்டப்பட்ட கரியகல்லில் சூழ்ந்திருந்த மரங்களின் பாவைகள் ஆடின. அதன்முன் இருந்த பலிபீடத்தில் காலையில் படைக்கப்பட்ட மலரும் பொரியும் இருந்தன. சிறுகுருவிகள் எழுந்தமைந்து பொரியை உண்டுகொண்டிருந்தன. மன்றில் மூன்று முதியவர்கள் சிறிய கல்பீடத்தில் அமர்ந்து சுருங்கிய விழிகளுடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் திரும்பி நெற்றியில் கைவைத்து நோக்கினர். ஒருவரின் தாடை மெல்ல விழ வாய் சிறுதுளையெனத் தெரிந்தது. உள்ளே நாக்கு பதைத்தது.

அவர்கள் மூவருமே செஞ்சடையை மகுடமெனச் சுற்றிவைத்து நெற்றியில் மூவிழி வரைந்து உடலெங்கும் நீறுபூசியிருந்தனர். இடையில் புலித்தோல், கழுத்தில் கருவிழிமணிமாலை. ஒருவர் கையில் முப்பிரிவேல் இருந்தது. அர்ஜுனன் அவர்களை அணுகியதும் கை தலை மார்பு வயிறு கால்கள் நிலம்படிய விழுந்து வணங்கினான். அவர்களில் முதியவர் முப்பிரிவேலை நீட்டி அவன் தலையைத் தொட்டு “எழுக!” என்றார். அவன் எழுந்ததும் “அஸ்தினபுரியின் இளவரசருக்கு நல்லூழ் அமைக!” என்றார். அர்ஜுனன் மீண்டும் கைகூப்பினான்.

கொம்பன் அந்தப் பன்றியை கால்பிணைத்து தூக்கி முக்கால் நடுவே தலைகீழாகக் கட்டினான். “அடுமடையர்கள் எங்கே?” என்றான். “பொறு மைந்தா… பிறரும் வரட்டும்” என்றார் முதியவர். அர்ஜுனன் அந்த முழுவட்டத் தாழ்வரையைச் சூழ்ந்திருந்த நீலமலையடுக்குகளை நோக்கினான். அவற்றின் அடிவளைவில் இருந்து பசியகாடு எழுந்து வந்து அவ்வூரைச் சூழ்ந்திருந்தது. அங்கிருந்து குரங்குகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. காட்டின் மீது வெண்முகில்கள் சிதறி மெல்ல காற்றில் பிரிந்துகொண்டிருந்தன. முதியவர் “அமர்க!” என்று கையை காட்டினார்.

அர்ஜுனன் அவர்களின் காலடியில் அமர்ந்துகொண்டான். “என் பெயர் சடையன்” என்று முதல் முதியவர் சொன்னார். “நெடுந்தொலைவு வந்துள்ளாய். நீடுதவம்செய்து உடலுருகியிருக்கிறாய்…” இன்னொருவர் “என் பெயர் பேயன்” என்றார். “நீ உகந்த வழிகளினூடாகவே இங்கு வந்துள்ளாய் என உன் விழிநோக்கி அறிகிறேன்” என்றார். அர்ஜுனன் அவரை வணங்கி “அவ்வாறன்றி இங்கு வர இயலாதென்று அறிவேன், எந்தையே” என்றான். அவர் நகைத்து “ஆம்” என்றார். மூன்றாமவர் “என்னை எரியன் என அழைக்கிறார்கள். உன்னைக் கண்டதும் நான் மகிழ்ந்தேன், மைந்தா” என்றார். “அது எந்தையரிடமிருந்து நான் பெற்ற நல்லூழ்” என்றான் அர்ஜுனன்.

“சொல்க, நீ எங்களிடமிருந்து விழைவது என்ன?” என்றார் சடையன். பிற இருவரும் கண்களில் புன்னகையுடன் அவனை கூர்ந்து நோக்கினர். “நான் பாசுபதம் பெறுவதற்காக இங்கு வந்தேன்” என்றான் அர்ஜுனன். சடையன் நகைத்து “நன்று, அதைக்கொண்டு நீ செய்யப்போவது என்ன?” என்றார். அர்ஜுனன் என்ன சொல்வதென்றறியாமல் அவர்களை முன்னும்பின்னும் நோக்கினான். “மைந்தா, எந்த அறிதலும் படைக்கலமாகும். பாசுபதம் முழுமுதல் அறிதலென்பதனால் அதுவே நிகரில்லா கொலைக்கருவி. நீ வெல்ல விழைவது எது?” என்றார் பேயன்.

அர்ஜுனன் இடையில் கைவைத்து திகைத்த உள்ளத்துடன் நின்றான். பின்னர் “நிகரற்ற படைக்கலத்தால் வென்றடையப்படுவதென இங்குள்ளது என்ன? நிகரற்ற ஒன்றை நோக்கி அல்லவா அதை செலுத்தவேண்டும்?” என்றான். “ஆம், நீ வெல்லப்போவது எதை?” என்றார் எரியன். அர்ஜுனன் “இம்மண்ணில் எதையும் அல்ல” என்றான். சடையன் உரக்க நகைத்து “சொல்லெண்ணுக! மானுடர் எய்தற்கரிய பெரும்படைக்கலம் உன்னிடமிருக்கும். நீ காணும் கொலைப்போர்க்களங்களில் உன்னைவிட ஆற்றலுள்ளோர் உனக்கு எதிர்வருவர். உன் உற்றார் அவர்களின் படைக்கலம் முன் நிற்பர். உன் அரசும் குடியும் புகழும் உன் வில் ஒன்றையே சார்ந்திருக்கும். ஆனால் அனைத்தையும் வெல்லும் பெரும்படைக்கலத்தை நீ எடுக்க முடியாது” என்றார்.

“ஆம், எடுக்கமாட்டேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க, உன் மைந்தர் சிரமறுந்து விழும் களத்திலும் அதை கைக்கொள்ளமாட்டாயா?” அர்ஜுனன் “இல்லை, அத்தனை பெரிய படைக்கலத்தை ஏந்தியவன் வான் தொட தலை எழுந்த விராடன். அவன் எளிய மானுடர்மேல் கருணையுடன் மட்டுமே இருந்தாகவேண்டும்” என்றான். “நன்று” என்றார் சடையன். “பாசுபதம் பெறும் தகுதிகொண்டவனே நீ, நன்று!” என்று பேயன் நகைத்தார். “தந்தையரே, பாசுபதம் பெற நான் செய்யவேண்டியதென்ன?” என்றான் அர்ஜுனன். “குனிந்து இம்மண்ணிலுள்ள ஒரு கூழாங்கல்லை எடு” என்றார் சடையன். அர்ஜுனன் குனிந்து ஒரு சிறுகல்லை எடுத்துக்கொண்டான். “இளையவனே, இதுவே பாசுபதம்” என்றார் சடையன்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 79

[ 32 ]

வானில் எழுந்த கருமுகில் திரளிலிருந்து இடியோசையுடன் மின்னலொன்று இறங்கி அர்ஜுனனை தாக்கியது. விண்யானையின் துதிக்கையால் தூக்கி வீசப்பட்டு அவன் சென்று மல்லாந்து விழுந்தான். அவன் முடியும் தாடியும் பொசுங்கிய  எரிமயிர் மணம் மூக்கை நிறைத்தது. கண்களுக்குள் அவன் ஆழ்ந்திருந்த ‘பணிக சிவம்’ என்னும் நுண்சொல் ஒளியலையாக கொந்தளித்தது. அவன் பற்கள் கிட்டித்திருந்தன. அவை உரசும் ஒலியை காதுகள் கேட்டன. அத்தனை தசைகளும் இழுபட்டு இறுக இழுத்து வளைக்கப்பட்ட முற்றிய மூங்கில்வில்லென கிடந்து துள்ளியது அவன் உடல்.

பின்னர் அறுபட்ட நாணொலியுடன் அவன் அகம் விடுபட்டது. இடக்கை மட்டும் இழுபட்டுத் துடித்தது. மூக்கில் தசைபொசுங்கும் வாடை. வாயில் குருதி நிறைந்திருந்தது. அவன் செங்கோழையைத் துப்பியபடி இடக்கையை ஊன்றி எழுந்தான். நெஞ்சில் உதைபட்டவன்போல பின்னால் சரிந்து விழுந்தான். கண்களை மூடி குருதியலைகளைக் கண்டபடி சற்றுநேரம் இருந்தான். அவை மெல்ல அடங்கியபின் மீண்டும் எழுந்தான். நிலம் சரிந்திருப்பதுபோலத் தோன்றியது. இருமுறை தள்ளாடி நிலைகொள்ள முயன்றபின் மீண்டும் விழுந்தான்.

மூன்றாம் முறை எழுந்து கைகளை சற்று விரித்து விழிகளை தொலைவில் இருந்த பாறை ஒன்றில் நட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். ஒரு வலுவான சரடுபோல அந்நோக்கு அவனை நிலைநிறுத்தியது. கடிபட்ட நாக்கு அதற்குள் வீங்கத் தொடங்கியிருந்தது. தலைமுடி உச்சியில் கொத்தாக கருகிச் சுருண்டு புகைந்துகொண்டிருந்தது. தொட்டு நோக்கியபோது சுருண்ட முடி பிசின் என ஒட்டியது கையில். அந்தப் பொசுங்கல்வாடை உடல்குமட்டி அதிரச்செய்தது. மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். மீண்டும் மீண்டும் நெஞ்சை நிரப்பி ஒழித்தான்.

சற்றே நிலைமீண்டபின்னர் காற்றை பற்றிக்கொள்பவன்போல தள்ளாடி நடந்து ஆற்றை அணுகி ஆவியெழ ஓடிக்கொண்டிருந்த சிற்றோடை ஒன்றில் குனிந்து நீர் அள்ளி குடித்தான். நீருக்கான தவிப்பே உடலுள் நிறைந்திருப்பதை அது செல்லும்போது உணரமுடிந்தது. நீர் உள்ளே சென்றதும் நனைந்தமைந்த உட்தசைகள் மீண்டும் தலைசுற்றச் செய்தன. கண்களை மூடி உள்ளோடிய செங்குமிழ்களின் சுழற்சியை நோக்கிக்கொண்டிருந்தான். விழித்து மீண்டும் நீரை அள்ளி முகத்தை கழுவிக்கொண்டான்.

எழுந்தபோது விழிதெளிந்திருந்தது. உடல் இயல்புமீண்டு கால்கள் மண்ணைக் கவ்வி நின்றன. பெருமூச்சுடன் விண்ணை நோக்கினான். அவனை குளவியெனக் கொட்டிவிட்டு அந்தக் கருமுகில் அகன்று சென்றிருந்தது. அதன் சிறகுகள்  மெல்ல விரிந்திருந்தன. அதன் கருமைக்குள் இரு சிறுமின்னல்கள் சீறித்துடித்து அடங்கின. அவன் தன் அடிவயிற்று வலியென பசியை உணர்ந்தான். அது பசியென சித்தம் அறிந்ததுமே உடலெங்கும் பசி பரவியது. கைவிரல்கள் நடுங்கலாயின. சூழிடமெல்லாம் உணவுக்காகத் துழாவியது விழி. மணம் கூர்ந்தது மூக்கு. ஒலி தேடியது செவி. நா ஊறி சுவைகொண்டது.

தன் வில்லையும் அம்புத்தூளியையும் எடுத்துக்கொண்டு மெல்லிய காலடிகளுடன் நடந்தான். நாலைந்து காலடிகளுக்குள்ளாகவே அவனுள் உறைந்த வேட்டைக்காரன் எழுந்தான். அடிமேல் அடி பூனைப்பாதமென பதிந்தது. அவனைத் தொட்ட இலைகள் ஓசையிலாது நிமிர்ந்தன. அவன் மூச்சு அவன் செவிக்கே கேளாதபடி ஒலித்தது. அவன் ஒரு பன்றியின் மணத்தை அடைந்தான். சிலகணங்கள் அசைவிலாது நின்று அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தான். பின்னர் குனிந்து முற்றிலும் நாணல்புதருக்குள் உடல் மறைத்து நாணல்கள் உலையாமல் நீரோடை செல்வதுபோல மென்மையாகப்பிளந்து முன்னால் சென்றான்.

தொலைவில் பன்றியின் சூர் எழுந்தது. ஆண்பன்றி எனத் தெளிந்தான். தேற்றையால் மண்ணைக் கிளறி முன்னங்காலால் கிண்டி கிழங்குகளை உண்டுகொண்டிருந்தது. அவன் அருகே சென்று அம்புதொடும் தொலைவை அடைந்ததும் ஒரு நாணல்கதிர்கூட அசையாமல் அம்பை எடுத்தான். நாணொலி எழாது இழுத்து அம்பைச்செருகி குறிநோக்கி அதன் இடதுவிழியில்  தொடுத்தான். அம்பு சென்று தைத்ததும் பன்றி முடிசிலிர்க்க ஒருகணம் அதிர்ந்து நின்றது. பின் உறுமல் ஒலியுடன் குழறியபடி திரும்பி அவனை நோக்கியே பாய்ந்து வந்தது.

அஞ்சி பின்காலெடுக்காமல் அதன் மேல் வைத்தவிழியசையாமல் அவன் அடுத்த அம்பை எய்ததும் அதையும் ஏற்றுக்கொண்டு விழுந்து வந்தவிசை முடியாமல் உருண்டு அணுகியது. அதன் மேல் மேலுமிரு அம்புகள் இருப்பதை அவன் கண்டான். இன்னொரு அம்பை நாணேற்றி நிமிர்ந்தபோது உள்ளுணர்வால் தன்மேல் முன்னரே ஓர் அம்பு கூர்கொண்டிருப்பதை உணர்ந்தான். அவன் அம்புக்கு நேர் எதிரே ஒரு காட்டாளன் பன்றிக்கு மறுபக்கம் நாணல்களுக்குள் இருந்து எழுந்து நின்றிருந்தான். அவன் அம்பின் கூரிலிருந்த நீலம் அது நஞ்சென்பதைக் காட்டியது.

இருவரும் ஒருவரை ஒருவர் அம்புகளால் நோக்கியபடி அசைவற்று நின்றனர். அவர்களின் விழிகளும் ஒன்றோடொன்று தொட்டுநின்றன. இருவருக்கும் நடுவே இருந்த வெளி அஞ்சி சிலிர்த்து நிற்கும் முள்ளம்பன்றி போல அசைவற்றிருந்தது. அர்ஜுனனின் தோளில் ஒரு நாணல்பூ தொட்டுச்செல்ல அவன் அறியாது சற்று தோளசைத்தான். அவ்வசைவு காட்டாளனிலும் ஏற்பட்டது.  கணங்களாக ஓடிச்சென்ற அத்தருணத்தின் ஒரு புள்ளியில் தன்னை அறுத்துக்கொண்டு தோள்தளர்ந்து அர்ஜுனன் தன் வில்லைத் தாழ்த்தி பெருமூச்சுவிட்டான். காட்டாளனும் வில்தாழ்த்திவிட்டு இயல்பானான்.

காட்டாளன் அர்ஜுனனைவிட அரைமடங்கு உயரமும் அதற்கேற்ப பருமனும் கொண்டிருந்தான். அர்ஜுனனின் தலையளவு இருந்தன அவன் தோள்தசை உருளைகள். வேங்கைத்தூர் என சேற்றில் புதைந்திருந்தன நரம்பு புடைத்த கால்கள். உடலெங்கும் சாம்பல் பூசி இடையில் புலித்தோல் அணிந்திருந்தான். செஞ்சடைக் கற்றைகளை சுருட்டிக் கட்டி அதில் பன்றித் தேற்றையை பிறைநிலவென அணிந்திருந்தான். நெற்றியில் மூன்றாம் நீள்விழி செந்தழல் எனத் தெரிந்தது.

“யார் நீ?” என இருவரும் ஒரே குரலில் கேட்டனர். குரல்கள் முட்டிக்கொண்டதை உணர்ந்து தயங்கி அர்ஜுனன் “யார் நீ?” என்றான். அவன் புன்னகைத்து “நீ யார்? இது என் நிலம்” என்றான். “நான் அஸ்தினபுரியின் குருகுலத்துப் பாண்டுவின் மைந்தனாகிய அர்ஜுனன். இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் யுதிஷ்டிரனின் இளையோன்” என்றான். “நான் காட்டாளன். கரியவன் என்பதனால் காளன்” என்று அவன் சொன்னான். அகன்ற கரிய முகத்தில் வெண்பற்கள் மின்ன ஒரு புன்னகை வந்துசென்றது.

சற்றே எரிச்சலுடன் “என்னை நீ அறிந்திருக்கலாம். நான் வில்விஜயன். நூறு களம் கண்டவன். நூறு பரணிகளால் பாடப்பட்டவன். என்றுமிருக்கும் சூதர்மொழிகளின் பாட்டுடைத்தலைவன்.  இமையசைவதற்குள் தலையறுத்து வீழ்த்தும் வல்லமை கொண்டவன்” என்றான் அர்ஜுனன். “என்னை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என் மனைவியால் நன்கறியப்பட்டவன். பங்காளிகளால் வெறுக்கப்படுபவன். நீ எண்ணுவதை முன்னரே அறியும் திறன்கொண்டவன்” என்றான் காளன். அவன் முகத்தில் மீண்டும் அந்த வெண்சிரிப்பு விரிந்தது.

அவன் தன்னை கேலிசெய்வது அப்போதுதான் அர்ஜுனனுக்குப் புரிந்தது. காட்டாளர்கள் கேலிசெய்வார்கள் என்னும் எண்ணமே தன்னுள் ஏன் எழவில்லை என அவன் உள்ளம் ஓர் எல்லையில் விலகி நின்று வியக்க மறுஎல்லையில் பழுத்த உலோகத்தில் நீர் விழுந்ததுபோல சுரீலென சினம் மூண்டது. அவன் கை அம்பை நாடுவதற்குள் காட்டாளன் அம்புபூட்டி வில்தூக்கிவிட்டிருந்தான். அர்ஜுனனின் கை தழைந்தது. “நன்று, நீயும் கலையறிந்தவன் என ஏற்கிறேன்” என்றான். “இந்தப் பன்றி உணவின்பொருட்டு நான் வேட்டையாடியது. வேட்டைநெறிகளின்படி இது எனக்குரியது.”

காளன் புன்னகையுடன் “வேட்டைநெறிகளின்படி வேட்டைப்பொருள் ஷத்ரியருக்குரியது என்று உரைக்கிறாயா?” என்றான்.  மீண்டும் தலைக்கேறிய சினத்தை மெல்ல அடக்கி “இல்லை, இதன்மேல் முதலில் விழுந்த அம்பு என்னுடையது என்பதனால்” என்றான். “இளவரசே, இதன்மேல் முதலில் பதிந்த அம்பு என்னுடையது என்றே நான் சொல்கிறேன்” என்றான் காளன். கைசுட்டி “நோக்குக! இப்பன்றி என் அம்புபட்டு திகைத்துநின்று பின் உன்னை நோக்கிப்பாய்ந்தது” என்றான். அர்ஜுனன் பற்களைக் கடித்தபடி “என் அம்பு பாய்ந்தபோது உன் அம்பு அதனுடலில் இருக்கவில்லை” என்றான். “ஆம், அதையேதான் நான் சொல்வேன். என் அம்பு பாய்ந்தபோது உன் அம்பை நான் பார்க்கவில்லை” என்றான் காளன்.

அர்ஜுனன் “என் அம்புபட்டு பன்றி என்னை நோக்கி சினந்து வந்தது. தாக்குதல் வந்த திசைக்கே பாய்வது பன்றிகளின் இயல்பு” என்றான். காளன் தலையை அசைத்து “இல்லை, என் அம்புபட்டு அதன் வலக்கண் நோக்கிழந்தது. எனவேதான் இடக்கண் காட்டிய திசைநோக்கி அது பாய்ந்தது” என்றான். அர்ஜுனன் கையை வீசி அவனைத் தவிர்த்து “இச்சொல்லாடலுக்கு முடிவிருக்கப்போவதில்லை. பார், பன்றி என் திசைக்கு வந்துள்ளது” என்றான். “அதை அங்கே செலுத்தியவன் நான்” என்றான் காளன்.

அர்ஜுனன் சினத்தை அடக்க கையிலிருந்த அம்பை சிலமுறை உருட்டினான். அருகே சென்று அந்தப் பன்றியை நோக்கி குனிந்து அதன் முகத்தைப் பார்த்தான். அதன் இருவிழிகளிலும் அம்புகள் தைத்திருந்தன. இரு விலாக்களிலும் அம்புகள் ஒரே ஆழத்தில் இறங்கி நின்றிருந்தன. குருதி நிலைத்து உறுதிகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது. அவன் அதை நன்கு நோக்கியும் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. காளன் அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான். அந்த நிகழ்வே ஓர் பகடிநாடகமெனத் தோன்றியது ஒருகணம்.

பின்னர் தன்னை அடக்கிக்கொண்டு அர்ஜுனன் ஏறிட்டு நோக்கி “சரி, காட்டாளனே இதை நான் உனக்கு அளிக்கிறேன். இன்னொன்றை நான் வேட்டையாடிக்கொள்கிறேன். இதை நீர்தெளித்து நான் அளிக்க நீ கொடையென பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். காளன் சிரித்து “நன்று, நான் வென்றதை ஏன் கொடையெனப் பெறவேண்டும்? இளவரசே, இதை நான் தோளில் ஏற்றிக்கொண்டு வெற்றிக்குரலுடன் மட்டுமே என் குடிக்குச் செல்வேன்” என்றான். அர்ஜுனன் நெற்றிப்பொட்டு துடிப்பதை உணர்ந்தான். விழிகளைத் தாழ்த்தி மெல்லிய குரலில் “உனக்கு வேண்டியது என்ன, பன்றிதானே?” என்றான்.

“இல்லை, கொடைகொள்ளும் இடத்தில் நான் என்றுமிருந்ததில்லை. ஏற்பது என் வில்லுக்கும் குலத்திற்கும் இகழ்ச்சி” என்றான் காளன். அர்ஜுனன் ஏறிட்டு நோக்கியபோது பரிவுதோன்ற புன்னகைத்து “நீ பசித்திருக்கிறாய் என்றால் கூறு, இதை நான் உனக்கு கொடையென்று அளிக்கிறேன். பொழுதிருள்வதற்குள் நூறு பன்றிகளை வேட்டையாட என்னால் இயலும்” என்றான். அர்ஜுனன் முகம்சீறிச் சுளிக்க பற்களைக் கடித்தபடி “சேறுநாறும் காட்டாளனிடம் இரந்துண்டு வாழ்வேன் என நினைத்தாயா? நான் அரசமகன்” என்றான். “ஆம், அரசர்கள் சேறுநாறும் மக்களிடம் கொள்ளையடித்து உண்ணலாம் என்றே நெறியுள்ளது” என்றான் காளன்.

“இனி உன்னிடம் பேசிப்பயனில்லை” என்ற அர்ஜுனன் எதிர்பாராதபடி அம்பொன்றை அவன்மேல் எய்தான். அது சென்று எய்தும் முன்னரே காளனின் அம்பால் இரண்டாக முறிக்கப்பட்டது. காளனின் அம்பு வந்து அர்ஜுனனின் தோளுரசிச் சென்றது. அவன் சினந்து எய்த அம்பை காளன் கிளம்பும்போதே முறித்தான். மீண்டும் எழுந்த அம்பை நாண் தொடும் முன்னரே தெறிக்கவைத்தான். அடுத்த அம்பை அவன் தொடுவதற்குள்ளே அது அம்பறாத்தூணியிலிருந்து பறந்தது. அவன் பின்னங்காலெடுத்துவைத்து நாணலுக்குள் அமிழ்ந்து ஒளிந்துகொண்டு மூச்சிரைத்தான்.

“சினம்” என சொல்லிக்கொண்டான். சினம் கைவிரல்களில் துடித்தது. உதடுகளில் நெளிந்தது. சினத்தை வெல். கடந்துசெல். இந்த ஆட்டத்தை பார்த்தனை ஆடவிட்டு நீ உள்ளே தனித்திரு. ஒவ்வொரு விரலையாக மெல்ல மெல்ல விடுவித்தான். மூச்சை இழுத்து சீராக விட்டான். அவன் அம்புகளுக்கு இலக்காகும் வெளியில் மிக இயல்பாக நின்று தன் தோளில் வந்தமைந்த கொசுவை அடித்தான். வில்லால் முதுகை சொறிந்துகொண்டான். குனிந்து பன்றியை நோக்கி அதன் விழியில் குத்தியிருந்த அம்பை மெல்ல அசைத்தான்.

அத்தனை தன்னம்பிக்கையுடனிருக்கிறான் என்றால் அவனால் இயலும். அவன் நோக்கிழந்திருக்கிறான் என எண்ணி அம்பெய்தால் அக்கணமே அவன் அதை வெல்வான். அச்செயல்வழி மீண்டும் தன்னை சீண்டுவான். இப்போது தேவை அவனை நிலைகுலையச் செய்யும் ஓர் அடி. ஒரு துளிக்குருதி. அவன் மீள்வதற்குள் அதை அளித்தாகவேண்டும். அவன் கை மெல்ல சென்று அம்பைத் தொட்டது. மீண்டுமொரு பாழ் அம்பா? இல்லை. இது வென்றபின் எளிய அம்புகளே போதும். முதல் அடி வென்றேயாகவேண்டும்.

அவன் அம்பைத் தொட்டு யமன் அளித்த அமுதச்சொல்லை மும்முறை சொன்னான். அந்நுண்சொல்லின் நெறிகளுக்கேற்ப அவன் கட்டைவிரல் வளைந்து சுட்டுவிரல் நீண்டது. தண்டபாசம் அவன் கையில் நெகிழ்ந்து உருக்கொள்வதை உணர்ந்தான். இரைகவ்வும் தவளையென எழுந்து அதே விரைவில் அதைத் தொடுத்தான். உறுமலுடன் பாய்ந்து நாகமென வளைந்து காளனை அணுகியது அது. அவன் உடல் குழைந்து வளைந்தெழ அவன் முன் வந்து நெஞ்சுநோக்கிச் சென்றது. பின்காலிட்டு விலகி தன் அம்பால் அதை முறித்து வீழ்த்தினான் காளன்.

அனைத்துக் கட்டுகளும் அகல பெருங்கூச்சலுடன் எழுந்து அந்தர்த்தானையின் நுண்சொல்லை உரைத்து அம்பை எய்தான். அவன் பற்களனைத்தும் ஒளிரும் சிரிப்புடன் சிறிய அம்பொன்றால் அதை முறித்தான். அவன் விடுத்த அம்பொன்று வந்து அர்ஜுனனின் தோளில் தைத்தது. அந்த விசையில் நிலையழிய பிறிதொரு அம்பு வந்து அவன் தொடையை துளைத்து நின்றாடியது. அவன் மல்லாந்து விழுந்து அதே விசையில் கால்களை உதைத்து புதர்களுக்குள் தன்னை முழுமையாக இழுத்துக்கொண்டான். அவன் உள்ளங்காலில் காளனின் அம்பு வந்து தொட்டது.

தான் அழுதுகொண்டிருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். பற்களைக் கிட்டித்து, முகம் இழுபட, விழிநீர் தாடிமயிர்தொகையில் வழிய விம்மினான். அவ்வொலி கேட்டதுமே தன்னிழிவுகொண்டு சினம் மிஞ்ச தலையை அசைத்தான். கைகள் பதைத்துக்கொண்டிருந்தன. உள்ளம் மலைப்புகொண்டிருந்தது. என்ன நிகழ்கிறது? இவன் யார்? புவியிலொருவன் இப்படி இருக்கக்கூடுமா? அங்கே நகரங்களில் வில்வேதமென்று ஓதப்படுபவை, வாழ்நாளெல்லாம் படைத்து கற்கப்படுபவை அனைத்தும் வீணென்றாகும் ஒரு இடம் புவியிலிருக்கலாகுமா? வேதமுதன்மைகொண்ட தெய்வங்களின் நுண்சொல் அமைந்த வாளிகளும் விளையாட்டென்றாவது ஒரு காட்டாளனின் வில் முன்னரா?

வாருணவாளியை எடுத்தபோது அவனுக்கே நம்பிக்கை இருக்கவில்லை. கைகள் நடுங்குவதை உணர்ந்து தன் விழிகளை மூடி உள்விழியை நெற்றிக்குவியத்தில் நிறுத்தி ஒவ்வொரு கணமாக நுண்சொல்லை தன் உளம்வழியாக கடந்துசெல்லவிட்டான். இலைசெறிந்த மரத்திலிருந்து நீர் சொட்டுவதைப்போல அவனுள் அச்சொல் நிகழ்ந்துகொண்டிருந்தது. இலைமேல் இலைசொட்டி இலைகள் ஒளிர்ந்தசைய தன்னுள் அலைகளெழுந்து அறைவதை உணர்ந்தான். பேரலையொன்று வந்து பாறைகளை அறைந்து வெண்சிறகென எழுந்து சிதறி அமைந்தகணம் எழுந்து அவ்வாளியை ஏவினான்.

அலையென எழுந்து ஓசைபொங்கச் சென்று அவனை அடைந்த அதை அவன் அம்பு முறித்த அந்தக் கணத்தை  ஆயிரம் மடங்கு நீட்டிப்பரப்பி அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கைசென்று அம்பெடுத்து நாணுக்களிக்க நாண் விம்மியமைந்து அதை ஏவ கிளையுதைத்தெழும் புள் என அம்பு காற்றிலெழுந்து சென்று வருணபாசத்தைக் கவ்வி சற்றே குதறி முறித்து தானும் சரிந்து புல்லில் விழுந்தது. அமைந்து மீண்டும் நிமிர்ந்த புல்லின் வெண்பூக்குலை சிலிர்த்தது.

அவன் எழுந்து ஒரு கையில் வில்லும் இன்னொரு கையில் அம்புமாக நின்றான். எதிரே காளன் கரும்பாறைமேல் சிறகுகோட்டி அமர்ந்த வெண்கொக்குநிரைபோல பற்கள் தெரியும் சிரிப்பெழுந்த முகத்துடன் நின்றான். “நாம் போரிட்டுவிட்டோம் என எண்ணுகிறேன், இளவரசே. நீ மாபெரும் வில்லவன் என அறிந்துகொண்டேன். பன்றியை நான் எடுத்துச்செல்கிறேன். அன்றி நீ அதை விழைகிறாய் என்றால் உனக்கே கொடையளிக்கிறேன்” என்றான்.

அனைத்தையும் மறந்த பெருங்கூச்சலுடன் அர்ஜுனன் வஜ்ரத்தை எடுத்து அவன் மேல் ஏவினான். சிம்மத்தின் உறுமலென அது சென்ற ஒலி கேட்டது. காளனின் அம்பு அதை வழியிலேயே தடுத்தது. பிறிதொரு அம்பு அதை திசைதிருப்பியது. மூன்றாம் அம்பு அதைச் சுழற்றி நிறுத்த அவன் கையால் அதைப்பற்றி அதன் முனையை நோக்கினான். விழிதூக்கி அவனை நோக்கி “எளிய அம்புதான்… ஏன் இத்தனை ஆற்றல் இதற்கு?” என்றான். அதை வீசிநோக்கியபின் “அம்பில் ஏதுமில்லை… அதை ஏவுகையில் நீ சொல்லும் நுண்சொல்லில் உள்ளது இதன் விந்தை” என்றான்.

அர்ஜுனன் வில்லைத் தளரவிட்டு நின்றான். அனைத்தும் கனவென்றாகுமென அவனுள் இருந்த சிறுவன் விழைந்தான். காளன் மகாவஜ்ரத்தை தூக்கிப்போட்டு பிடித்து “எளிய மூங்கிலம்பு… அது எப்படி இத்தனை பேரொலி எழுப்பியது? இடியெழுகிறதென்றே எண்ணினேன். மின்னலை நோக்கினேன்” என்றான். “இதைச் சொல்கையில் உனது விரல் அதற்கேற்ப அறியாது வளைகிறதுபோலும்.” அதை கீழே போட்டுவிட்டு “நான் பன்றியுடன் செல்லப்போகிறேன்… நீ விரும்பினால் இப்போதுகூட இதை பெறமுடியும்” என்றான்.

அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “நன்று, முடித்துவிட்டுப் போ” என்றான். காளன் புரியாமல் “போராடல் முடிந்துவிட்டதே” என்றான். “என்னை கொல். அதுவே போரின் முறை” என்றான் அர்ஜுனன். “இல்லை ஷத்ரியனே, நான் உண்ணாத உயிரை கொன்றதே இல்லை” என்றான் கிராதன். கைவீசி “திரும்பிச் செல்க…” என்றபடி குனிந்து பன்றியின் காலைப் பற்றினான். நெஞ்சில் கையால் அறைந்தபடி “அடேய், நீ என்மேல் சிறிதளவேனும் மதிப்புகாட்ட விழைந்தால் என்னைக் கொல்” என்று அர்ஜுனன் கூவினான். “மதிப்புகாட்டும்பொருட்டு கொல்வதா? மண்ணவர் நெறிகளே எனக்கு விளங்கவில்லை” என்றான் காளன்.

“மூடா” என வீரிட்டபடி அர்ஜுனன் தன் வில்லை அவன் மேல் வீசினான். “கொல் என்னை… கொன்று செல் என்னை!” அவன் “என்ன சொல்கிறாய், ஷத்ரியனே? உன்னை நான் ஏன் கொல்லவேண்டும்? நீ என் உணவல்ல. என்னை கொல்லப்போகிறவனும் அல்ல” என்றான். “இழிமகனே, காடனே, கொல் என்னை… நீ ஆண்மகன் என்றால் என்னைக் கொல்” என்று கூவியபடி அர்ஜுனன் கீழே கிடந்த கற்களை எடுத்து அவன் மேல் எறிந்தான். புகைபோல உடல் வளைத்து அவன் அக்கற்களை ஒழிந்தான்.

மூச்சிரைக்க அர்ஜுனன் நின்றான். கண்ணீர் வழிய “சிறுமை செய்யாதே… நான் என் உயிரை பறித்துக்கொள்ளும்படி ஆக்காதே… கொல் என்னை” என்றான். “நான் இதுவரை மானுடரை கொன்றதில்லை, ஷத்ரியனே” என்றான் காளன். “உன்னுடன் விளையாடவே வந்தேன்… ஆடல் முடிந்துவிட்டது. நீ விழைந்தால் நாம் நெஞ்சுசேர தோள்தழுவுவோம்” என்று கைகளை விரித்தான். “தோள்தொடுவதா? உன்னிடமா? உன் இழிந்த கையால் இறந்தாலும் எனக்கு விண்ணுலகுண்டு. உன்னை நிகரென நினைத்துத் தழுவினால் நானே விண்ணுலகை விழையமாட்டேன்… நீ செய்யக்கூடுவதொன்றே. கொல் என்னை….” என்று அர்ஜுனன் குனிந்து தன்  தொடையிலிருந்த அம்பை பிழுதெடுத்தான். “இப்போதே என்னைக் கொல். இல்லையேல் என் கழுத்துநரம்பை அறுத்து உன் முன் குருதிசோர விழுவேன்.”

குட்டைமரங்களின் இலைத்தொகை சலசலக்க அவன் திரும்பி நோக்கினான். தழைப்புக்கு அப்பாலிருந்து கரியநிறமும் செஞ்சாந்துப் பொட்டிட்ட பெரிய வட்டமுகமும் கொண்ட பெண் ஒருத்தி இடையில் மலர்சூடிய குழல்முடித்து ஆடையின்றி அமர்ந்திருந்த இளமைந்தனுடன் தோன்றினாள். அவள் அணிந்த மான்தோலாடையைப் பற்றியபடி பெருவயிறனாகிய மூத்தவன் கையில் பாதியுண்ட கனியொன்றுடன் நின்றான். இரு சிறுவரும் ஆவலுடன் அர்ஜுனனை நோக்கினர். “இங்கிருக்கிறீரா? எத்தனை நேரம்?” என்றவள் அர்ஜுனனை நோக்கி “யார் இவன்? முன்பு வந்த பீலிமுடியர் போலிருக்கிறான்?” என்றாள். கணவன் அளவுக்கே அவளும் உயரமிருந்தாள். பெருமுலைகளுக்குமேல் வெண்கல்மாலை கரும்பாறைமேல் அருவியெனக் குழைந்தது.

கண்களில் புன்னகையுடன் “அவனுடன் நான் போரிட்டேன்” என்றான் காளன். “அவனிடமா? உமக்கென்ன அறிவில்லையா? இளமைந்தர்போல விழிகொண்டிருக்கிறான், அவனிடமா போரிடுவீர்?” என்று அவள் சினந்தபின் அவனை நோக்கி “பித்தர்… நீ பொருட்படுத்தவேண்டியதில்லை, மைந்தா” என்றாள். “அவன் அந்த அம்புக்கூரால் தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளப்போவதாக சொல்கிறான். நான் அது கூடாது என்றேன்” என்றான் காளன். “தன் கழுத்தையா? எதற்கு?” என்றாள் அவள். “என்னிடம் தோற்றுவிட்டான். தோற்றபின்  உயிர்துறப்பது அவன் குடியினரின் வழக்கமாம்.”

சீற்றம்கொண்டு திரும்பி “என்ன சொல்கிறாய்? அறிவே இல்லையா உனக்கு? போடு அதை கீழே” என்று கையை ஓங்கியபடி அதட்டிக்கொண்டு அவள் அர்ஜுனன் அருகே வந்தாள். அவன் “நான்…” என்று ஏதோ சொல்ல “போடச்சொன்னேன், கீழே போடு” என்றாள். அவன் கீழே போட்டுவிட்டு “நான் இவரிடம் போரில்…” என காளனைச் சுட்டி சொல்லவர “அவர் பித்தர். பித்தரிடம் எவராவது போரிடமுடியுமா? நீ அழகிய இளையவன்போலிருக்கிறாய்…”  என்றபின் திரும்பி “வரவர என்ன செய்கிறீர் என்றே தெரியவில்லை உமக்கு” என்றாள். காளன் தலைதூக்கி வாய்திறந்து உரக்கச் சிரித்தபடி அர்ஜுனனிடம் “இவள் என் மனைவி. காளி என்று அழைப்பேன். சீற்றம் மிக்கவள்…” என்றான்.

காளி அர்ஜுனனிடம் “இளையவனே, எதற்காக போர்? உனக்கு என்ன வேண்டும்? இந்தப் பன்றியா? இதோ, எடுத்துக்கொள். வேண்டுமென்றால் இந்தக் காட்டிலுள்ள அத்தனை பன்றிகளையும் உனக்கு இவரை வேட்டையாடித் தரச்சொல்கிறேன். இதற்கா பூசல்?” என்றாள். “அதை நான் முன்னரே அவனுக்கு கொடுத்தேன். மறுத்துவிட்டான்” என்றான் காளன். அவள் அவனிடம் “நீர் வாயை மூடும்…” என சீறிவிட்டு “நான் கொடுக்கிறேன் உனக்கு. நீ கொண்டுசென்று உண்க, மைந்தா! இது என் கொடை” என்றாள். அவன் சிறுவன்போல சரி என தலையசைத்தான்.

அவள்  குனிந்து ஒற்றைக்கையால் அந்தப் பன்றியைத் தூக்கி அர்ஜுனனை நோக்கி நீட்டினாள். அர்ஜுனன் இயல்பாகக் கைநீட்டி அந்தப் பன்றியை வாங்கினான். அவள் பிடிவிட்டதும் எடைதாளாமல் அவன் கையிலிருந்து நழுவி அது கீழே விழுந்தது. “அவரால் தூக்கமுடியவில்லை” என்று மூத்த மைந்தன் சொன்னான். “நானே கொண்டு கொடுத்துவிட்டு வரவா?” காளி “அதெல்லாம் அவரே கொண்டுசெல்வார்… நீ பேசாமல் வா. அங்கேயும் சென்று பாதியைப் பிடுங்கி தின்றுவிட்டு வர நினைக்காதே” என அவன் தலையை தட்டினாள்.

அர்ஜுனன் அவள் முகத்தை நோக்கியபடி உளமழிந்து நின்றான். அவள் விழிகள் முலையூட்டும் அன்னைவிழியென கனிந்திருந்தன. சின்னஞ்சிறு குமிழுதடுகளில் எப்போதுமென ஒரு புன்னகை இருந்தது. அவிழ்ந்த நீள்குழலை அள்ளிச் சுழற்றிமுடிந்தபடி அவள் திரும்பியபோது அவன் அறியாமல் அவர்களை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தான். அவள் திரும்பி “என்ன?” என்றாள். அவன் நெஞ்சு கலுழ விம்மி அழுதபடி “இனி நான் வாழ விரும்பவில்லை, அன்னையே” என்றான். அவள் அவனை நோக்கி புருவம் சுளித்து “ஏன்?” என்றாள். “நான் தோற்றுவிட்டேன்… தோல்விக்குப் பின் வாழ்வது என்னால் இயலாது” என்றபோது அவன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து நெஞ்சில் சொட்டியது. உதடுகளை இறுக்கி அவன் தலைகுனிந்தான்.

அறிவிலியே என புன்னகையிலேயே செல்லமாக அழைத்து “தோற்றாய் என்றால் நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்கிறாய் என்றல்லவா பொருள்?  அதைக் கற்கும் ஒரு வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும் நன்மாணவன்?” என்றாள். அவன் உள்ளம் சொடுக்க, விழிதூக்கி அவளை நோக்கினான்.  உதடுகள் சொல்லில்லாமல் அசைந்தன. இனிய மென்குரலில் “நீ கற்றிராததை இவரிடமிருந்து கற்றுக்கொள். கற்பிக்கும் இவர் உன் ஆசிரியர். ஆசிரியனிடம் தோற்பதில் இழிவென ஏதுமில்லை. ஆசிரியன் முன்பு முற்றிலும் தோற்காதவன் எதையும் கற்கத்தொடங்குவதில்லை” என்றாள்.

அர்ஜுனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். ஒரு மூச்சிலேயே உளம்கொண்ட சுமையெல்லாம் அகன்று எடையிழந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். “அவர் காலடியை வணங்கி கல்வியை கேள்” என்றாள் அவள். அவன் காலை நொண்டியபடி எடுத்து முன்னால் வைத்து காளனின் அருகே சென்று வலியுடன் முழந்தாளிட்டு “காலவடிவரே, நான்  எளியவன். ஆணவத்தால் ஆட்டிவைக்கப்படும் இழிந்தோன். உம்மிடமுள்ள அறிவையும் திறனையும் எனக்கும் கற்பித்தருளவேண்டும்” என்றான். காளன் உரக்க நகைத்து அவன் தலைமேல் கைவைத்து “எழுக… நான் அவள் ஆணைகளை மீறுவதில்லை…” என்றான்.

மார்பில் எச்சில்கோழை வழிய வாயில் இடக்கையை வளைத்து வைத்து கசக்கி சுவைத்துக்கொண்டிருந்த இளமைந்தன் கைகளை விரித்து “ந்தையே” என்று தாவ “ஆ! வா வா! என் அழகனல்லவா?” என்றபடி வாங்கிச் சுழற்றி தன் தோளில் வைத்துக்கொண்டான். தந்தையின் மார்பில் இரு கால்களையும் போட்டுக்கொண்டு எம்பி குதித்து “யானை… யானை! பெரீ யானை!” என்றான் இளையவன். மூத்தவன் வந்து அர்ஜுனனின் கைவிரலை இயல்பாக பற்றிக்கொண்டு “பெரிய பன்றி… நாம் அதைக் கொண்டுசெல்வோம்” என்றான். அவனை நோக்கி காளி புன்னகை செய்தாள்.

அர்ஜுனன் “நானே எடுத்துவருகிறேன்” என்றான். காளி “இல்லை, உன் கால்கள் புண்பட்டிருக்கின்றன. அவனே கொண்டுவரட்டும். உணவென்றால் அவன் யானை. எத்தனை எடையையும் சுமப்பான்” என்றாள். “ஆம், பன்றி மிகச்சுவையானது” என்ற மூத்தவன் திரும்பி நோக்கி கைசுட்டி “சிரிக்கிறது” என்றான். அர்ஜுனன் திரும்பி நோக்க பற்கள் தெரிய கிடந்த பன்றி நகைப்பதைப்போல தெரியக்கண்டு தன்னை மீறி சிரித்துவிட்டான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 78

[ 30 ]

மலையில் நின்றது தனிமரம். காய்ந்த மலர்களும் சருகுகளும் உதிர்ந்து அதன் காலடியை மூடின. எடையிழந்து எழுந்தாடி காற்றைத் துழாவின கிளைகள். பின்னர் மலர்களையும் கனிகளையும் உதிர்த்து தனக்கே அடிபூசனை செய்தன. பின்னர் இலைகளையும் காய்களையும் உதிர்க்கத்தொடங்கியது மரம். மெல்ல பிஞ்சுகளும் தளிர்களும் உதிரலாயின. இறுதியில் வெறுமையை சூடிநின்ற கிளைகள் உதிர்ந்தபின்  அடிமரம் வேர்மேல் உதிர்ந்தது. வேர் மண்ணில் பிடிவிட்டது. ஆணிவேரின் குவைக்குள் ஓர் உயிர்த்துளி மட்டும் அனன்றது.

புவியை உண்டு முன்னகர்ந்தது மண்புழு. உடலே நாவென சுவையறிந்தது. நாவே குடலென நெளிந்து செரித்தது. உண்ட மண்ணும் உமிழ்ந்த மண்ணும் நிகரென்றாக உப்பை மட்டும் எடுத்து உடல்நெளிவாக்கிக் கொண்டது. இன்மையைச் சென்றடைந்து திரும்பி நோக்கியபோது புவி ஒரு மண்குவியலென தன் பின்னால் எழுந்திருக்கக் கண்டது. தன் மூச்சை இழுத்து படம் கொண்டது. மேலும் பசித்து தன் வால்நுனியின் அசைவைக் கண்டு வெருண்டெழுந்தது. மும்முறை நிலம் கொத்தியெழுந்தபின் பாய்ந்து அதைக் கவ்வி உண்டது.

தன் நிழல் கண்டு விழிவிரித்து உடல்சிலிர்த்து நின்றது மான். செவியசைந்தபோது நீருள் எதிரி ஒன்று செவியசைக்கக் கண்டு உடல் வெருண்டு அவ்வெருட்சியை தான் கண்டது. அலையின் ஆழத்திலிருந்து ஆடிய அதன் விழிகளின் அருகே விழியென மிதந்து சென்றது மீன். சிறகசைத்தன மூன்று மீன்கள். கோடி மான்விழிகள் ஒளிநோக்குடன் முகில் துழாவிச்சென்றன. உடலெங்கும் விழியாகும் ஒரு நீல விழியாகி வான்நோக்கிக் கிடந்தது சுனை. அதன்மேல் அலையலையலை என விழுந்துகொண்டிருந்தன மரம் உதிர்த்த பனித்துளிகள். ஒரே பனித்துளி. ஒன்றுபோல் ஒன்றென முடிவிலாது பனித்து உதிர்ந்தது விசும்பு.

குத்துவிளக்கிலிருந்து திரை வழியாக சுவடியடுக்கில் பற்றி ஏறியது அனல். நெறி நூல்களை உண்டது. இலக்கண நூல்களை உண்டது. காவியங்களை உண்டு எழுந்து வேதங்களை பற்றிக்கொண்டது. சுவடிகள் எரிந்து நெளிந்து துவண்டு கருகி சாம்பலாக அவை கொண்ட சொற்கள் எரிமேல் எழுந்து சிறகடித்து கூவிச் சுழன்று பறந்தன. பின்னர் அவையும் சிறகுகள் கருகி அனலிலேயே விழுந்து அனல்பற்றி எரிந்து கூவிச் சுழன்று மூழ்கி மறைந்தன. அனல் என்ற சொல்லாக அனல் மட்டும் எரிந்தது. அச்சொல் வெளியில் நின்று தவிக்க அனல் அணைந்தது. அச்சொல் எழுந்து வானில் பரவி மறைந்தது.

முட்டைவிட்டு எழுந்த கணமே தன்னை பறவை என்று அறிந்தது ஓர் உயிர். முதற்கிளைவிட்டு எழுந்து வானில் சுழன்றதன் பேருவகையால் ஆட்டுவிக்கப்பட்டது. இரைதேட இணையறிய முட்டை மீறிய குஞ்சுகளுக்கு சிறகளிக்க பறந்துகொண்டே இருந்தது. முதிர்ந்து இறகுகள் உதிர்ந்து எடைமிகுந்து ஒரு சிறுகிளையில் அமர்ந்து குளிர்ந்துவரும் உடலை உணர்ந்தது. “என் வாழ்நாளின் பொருள்தான் என்ன?” என்று எண்ணியபோது வாழ்நாளெல்லாம் தான் பறந்த தடங்கள் அனைத்தையும் வானில் ஒரு வலை எனக் கண்டது. விழிதிருப்ப அருகே ஒரு சிலந்தி நெய்த வலையைக் கண்டு உளம்திகைத்து பின் புன்னகைத்தது.

கொந்தளித்த கடல் எழுந்து கார்முகிலென வான் நிறைத்தது. கோடிகோடி துளிகளென்றாகி மண்ணை அறைந்து மூடி பெருகிச் சுழித்து திரண்டு ஓடி கடலாகியது. துளியென்றாகாத நீரின் ஓர் அணு வானில் எஞ்சியது. அதன்மேல் விழுந்த விண்மீன்களின் ஒளியால் அதுவும் ஒரு விண்மீன் என்றாகியது. கீழ்வானில் நீலநிறம் கொண்டு மின்னிய அதை மீன்கணங்கள் கண்டுகொண்டு விழிதுளித்து நோக்கிநின்றன. விடாய்கொண்ட பறவைகள் அதை நோக்கி நா நுணைத்தன. விண்ணிலொரு கடலென்று அது நின்றது. மண்ணிலொரு துளியென கடல்.

எழாம் கடலென்பது வானமே. ஆறுகடல்களாக அலையடிப்பதன் அமைதி அது.

*

கரிய தேவன் ஒருவனால் ஓட்டப்பட்ட கரிய தேர் வந்து நின்றது மாளிகை முகப்பில். கதவிடுக்கின் வெள்ளிக்கோல் கரிய பட்டையென்றாகியது. திறந்து வெளிவந்து படிகளில் நின்றான். அவன் உடல் கனலாக ஆடைகள் எரிந்துகொண்டிருந்தன. அத்தழலில் இருந்து மாளிகையின் கதவும் சுவரும் பற்றிக்கொண்டன. அவன் தசைகள் உருகிச் சொட்டி விழுந்த துளிகளும் புகையுடன் எரிந்தன. வாய் திறந்தபோது உள்ளிருந்து தீ பறந்தது. மூக்கினூடாகப் புகை எழுந்தது.

ஏழு குதிரைகளும் எண்ணை மின்னும் கருவண்ணம் கொண்டவை. அவற்றின் திறந்தவாய்களும் நாக்குகளும் பற்களும்கூட கரியவை. கருங்கல் குளம்புகள் கற்தரையில் முட்டும் ஓசை. கரிய இரும்பாலான தேரின் சகடவட்டமும் கரிய ஒளியே கொண்டிருந்தது. அதன் பீடத்தில் எழுந்த தேவனின் கண்விழிகளும் பற்களும் கைநகங்களும் கருஞ்சிப்பிபோல இருளொளி கொண்டிருந்தன. அவன் இரும்புக் குறடுகள் கல்லில் ஒலிக்க அணுகி பணிந்து “வருக!” என்றான்.

“ஏன்?” என அவன் கேட்டான். “வருக!” என்று அவன் மீண்டும் சொல்லி கைகாட்டினான். “நீ யார்?” என்றான். “நான் குரோதன். என் தலைவர் உன்னைத் தேடி வந்துள்ளார்.” அவன் எரிந்துகொண்டே சென்றான். உள்ளே கரிய பட்டுத்திரை அசைந்தது. “யார்?” என்றான். “அவரை அதர்வன் என்கிறார்கள் தேவர்கள். அழிவற்ற ஆற்றலே அவர் என வழிபடுகின்றனர் முனிவர்.”

அஞ்சியபடி அவன் நடந்து சென்று தேரிலேறி அத்திரையை விலக்கினான். உள்ளே புகைமூடிய அனல் என அமர்ந்திருந்தது எரியுடல் கொண்ட தெய்வம். கரிய முட்கள் என மயிர் சிலிர்த்த பன்றிமுகம். வெறிமயங்கிய கருமணிக்கண்கள். “வருக!” என அவனை கைநீட்டி அழைத்தது. எட்டு கைகளில் வாளும் வேலும் வில்லும் அம்பும் பாசமும் அங்குசமும் குளிர்மலரும் அமுதகலமும் கொண்டிருந்தது. அனல் அனலை என அவன் அத்தெய்வத்தின் மடியில் அமர்ந்தான். சவுக்கு சொடுக்கப்படும் ஒலி கேட்டது. தேர் அசைந்து சகட ஒலியுடன் கிளம்பியது.

அவனுக்கு எதிர்வந்தது பிறிதொரு கரியவண்ணத் தேர். அதன் கொடி புகைச்சுருள் என பறந்தது. அதிலமர்ந்திருந்தவனின் எரிவிளிம்புகளை அவன் கண்டான். “அவன் உன் வெஞ்சினத்தின் இலக்கு. அவனை வென்றால் நீ முற்றடங்கி குளிர்வாய். பாண்டவனே, நீ சென்றடையத் தடையென எப்போதும் இறுதியில் எழுந்து நிற்பது இதுவே” என்றது தெய்வம். “யார் அவன்?” என்றான் அர்ஜுனன். “உன் உடன்பிறந்தோன். யுகமடிப்புகள்தோறும் நீங்கள் போரிட்டே வருகிறீர்கள்.”

அர்ஜுனன் விழிகூர நோக்கியதுமே அடையாளம் கண்டுகொண்டான். “என் படைக்கலங்களில் ஒன்றை எடுத்து அவனை எதிர்கொள்க!” என்றது பன்றிமுகத் தெய்வம். அவன் உடல் விம்மி பின் மெல்ல தணிந்து “அந்த மலர் என் படைக்கலமாகுக!” என்றான்.  அதர்வன் புன்னகையுடன் “அவ்வாறே ஆகுக!” என்றான். அர்ஜுனன் எடுத்து வீசிய அந்த மலர் பெருகி மாமழையென்றாகி அக்கரிய தேர்மேல் பொழிய அது குளிர்ந்து நீர்ப்புகையெழ நின்றது. அனல் அணைந்து அது அமைவதை அவனால் காணமுடிந்தது.

புன்னகையுடன் ஏதோ சொல்ல முயன்ற கணம் ‘ஆம்! ஆம்! ஆம்!’ என்னும் முழக்கத்தைக் கேட்டபடி அவன் உதிர்ந்து தேர்த்தட்டிலிருந்து கீழே விழுந்தான். அவன் எரிதல் அணைந்துவிட்டிருந்தது. எழுந்து நின்றபோது தன் உடலின் மென்மையையும் மணத்தையும் அறிந்தான். பூனைமயிர் படர்ந்த முகமும் நாண் இழுத்த கைவில்போன்று இறுகிய இளைய உடலுமாக அவன் முதிராஇளைஞனாக மாறிவிட்டிருந்தான்.

பேரியாழின் நரம்புகளின் அதிர்வுபோன்ற ஒலியைக் கேட்டு அவன் நோக்கினான். இளஞ்செந்நிற தாமரைமலர் நீரலையில் எழுந்தமைந்து  அணுகுவதுபோல வந்த தேர் ஒன்று தெரிந்தது. செந்தாமரையின் மலர்ந்த ஏழு  இதழ்கள் போன்ற குதிரைகள் குளம்புகளை உதைத்து கழுத்து திமிறி கனைப்போசையுடன் நின்றன. அதை ஓட்டிவந்த பாகன் மலர்நடுப்புல்லி போலிருந்தான்.  இறங்கி தலைவணங்கி “நான் காமன்” என்றான். “இது என் தலைவனுடன் நீங்கள் செல்லும் தேர்.”

அவன் அந்தத் தேர் மீட்டிமுடித்த யாழென இசை விம்மிக்கொண்டிருப்பதை தன் உடலால் உணர்ந்தான். அணுகியபோது அவ்விசையை உள்ளம் உணர்ந்தது. “என் தலைவரை சாமன் என்கிறார்கள். வானில் கார் நிறைப்பவர். மரங்களை மலர்கொள்ளச் செய்பவர். யானைத்துதிக்கைகளை குழையச் செய்பவர். மான்விழிகளில் ஒளியாகுபவர். மலைத்தேன்கூடுகளுக்குள் இனிமையை நிறைப்பவர்” என்றான் காமன். “ஷட்ஜன், ரிஷபன், காந்தாரன், பஞ்சமன், மத்திமன், தைவதன், நிஷதன் எனும் ஏழு புரவிகளால் இழுக்கப்படும் இந்தத் தேர் சுநாதம் எனப்படுகிறது.”

அவன் தேரைத் தொட்டதுமே தன் உடல் முழுக்க இசை நிறைவதை உணர்ந்தான். தேனில் துழாவிய நாக்கு என்றாகியது அவன் உடல். அவ்வினிமையை தாளமுடியாமல் அவன் விழிகசிந்தான். உடல்நடுங்கி அதிர தேருக்குள் ஏறி அங்கே முற்றிலும் மலர்ந்த தாமரை மலரென அமர்ந்திருந்த தெய்வத்தைக் கண்டான். புரவியின் தலை. விழிகள் நீல மலர்கள் போலிருந்தன. ஆறு கைகளில் வில்லும் அம்பும் மலரும் மின்கதிரும் கொண்டு அஞ்சலும் அருளலுமென அமைந்திருந்தது. “வருக, மைந்தா!” என அவனை கைபற்றி தன் அருகமரச் செய்தது.

இசையின் அலைகளில் எழுந்தமைந்து அவன் சென்றுகொண்டிருந்தான். எதிரே இளஞ்செந்நிறத் தேர் ஒன்று மிதந்தணைவதைக் கண்டான். “உன் காமத்தின் நிறைவை அளிப்பவள் அவள். நீ இக்கணம்வரை சற்றும் அறியாதவள். இளையோனே, எதிர்ப்படும் அத்தனை முகங்களினூடாகவும் நீ தேடிக்கொண்டிருந்தது அவளையே. இதோ, உனக்கு அவளை அளிக்கிறேன். விழைவை ஆற்றலெனக் கொண்டு எழுக! அத்தனை புலன்களாலும்  அவளை அடைக! இசைதலின் பேரின்பத்தை அறிந்து கடந்தெழுக!” என்றது அத்தெய்வம்.

ஒருகணம் எண்ணியபின் “அறிந்து அதைக் கடந்தவர் எவருமில்லை” என்றான். அக்கணமே அவன் ஒரு சிறுமைந்தனாக மாறி இடையில் கிண்கிணியும் கழுத்தில் ஐம்படைத்தாலியும் மட்டும் அணிந்து அத்தேரில் நின்றிருந்தான். அவனை அறியாமல் எதிர்த்தேர் கடந்து சென்றது. அவனை இரு கைகள் இறக்கி கீழேவிட்டன. கடந்து செல்வனவற்றை விழிமலர்ந்து புன்னகைத்து நோக்கியபடி அவன் அங்கே நின்றிருந்தான்.

பொற்குண்டலம் ஒன்று கீழ்த்திசையில் எழுவதைக் கண்டு கைகளை வீசி சிரித்தான். அது பெருகி அணுகியபோது பொன்னிறப் புரவிகள் இழுக்கும் ஒரு தேர் அது என்பதைக் கண்டான். பொன்னொளி தரையில் மஞ்சள் நீர் என பரவிக்கிடக்க அது வந்து அவனருகே நின்றது. பழுத்த வாழைப்பழச் சீப்பு என புரவிகள் நிலைகொள்ள பாகன் இறங்கி வந்து அவனிடம் “நான் மோகன். எந்தை யஜுர்வனின் தேருக்கு வருக!” என்றான்.

அகிற்புகை மணக்கும் அத்தேரினுள்ளில் கலைமான் உருவில் அமர்ந்திருந்தது நான்கு கைகளில் மலரும் அமுதும் அஞ்சலும் அமுதும் கொண்ட தெய்வம். கவர்கொம்புகளில் மலரும் தளிரும் எழுந்திருந்தன. “வருக, குழந்தை!” என அவனை அள்ளி தன் மடியில் அமர்த்திக்கொண்டது. “இங்கு தெரியும் அனைத்தும் உன்னுடையதே. நீ விழைந்தவையும் அடையாதவையும் மட்டும் நிரைவகுக்கும் வெளி இது. நிறைக!” என்றது.

அவன் விழிவிரித்து வாயில் கையை விட்டுக்கொண்டு ஒவ்வொன்றையாக பார்த்தான். பின் சிணுங்கி அழுதபடி “அம்மா வேண்டும்” என்றான். “இவற்றில் எதை வைத்து விளையாட விழைகிறாய் நீ?” என்றது தெய்வம். “ஒன்றுமே வேண்டாம். அம்மாவிடம் செல்கிறேன். அம்மா மட்டும் போதும்” என்றான். “இதை நீ இனி அடைய முடியாது. இது மிகமிக அரியது” என அவனுக்கு ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டியது. “அம்மா! அம்மாவிடம் செல்கிறேன். அம்மா அம்மா” என அவன் அலறி கால்களையும் கைகளையும் உதைத்தபடி திமிறி அழத்தொடங்கினான்.

அழுது மூச்சு சிக்கிக்கொள்ள உடல் நீலம்பாரித்து அவன் துடித்தான். “அம்மா அம்மா” என்று உதடுகள் அசைந்துகொண்டே இருந்தன. அவனை இறக்கி படுக்கவைத்துவிட்டுச் சென்றது தேர். புழுதியில் அவன் கிடந்து நெளிந்து அழுதான். வெண்மை ஒளிரும் தேர் ஒன்று அவனருகே வந்து நின்றது. வெண்புரவிகள் காலோய்ந்து மூச்சு சீறின. அதிலிருந்து சாந்தன் எனும் பாகன் இறங்கினான். அம்மகவை இரு கைகளால் அள்ளி எடுத்து தேருக்குள் அமர்ந்திருந்த தெய்வத்திடம் அளித்தான்.

வெண்பசுவின் தலையும் அஞ்சலும் அருளலுமென மலர்ந்த இரு கைகளும் கொண்டிருந்தாள் ரிக் என்னும் அன்னை. யஜுர்வன், சாமன், அதர்வன் என்னும் மூன்று மைந்தர்களைப் பெற்றவள். அவள் அவனை தன் முலைகளுடன் அணைத்து அமுதுக்காம்புகளை அவன் வாயில் வைத்தாள். ஆவலுடன் சப்பி உறிஞ்சி உண்ண உண்ண அவன் சுருங்கி ஒரு மொட்டென்று ஆனான். அவனை தன் இடையில்லிக்குள் செலுத்தி கருவறைக்குள் வைத்துக்கொண்டாள். அங்கே அவன் கைகள் குவித்து உடல்சுருட்டி அமைந்தான்.

அவன் உடல் பொன்னாகியது. உருகிச்சொட்டும் பொற்துளி என அவள் கருவறைக்குள் இருந்து அவன் பிறந்தெழுந்தான், ஒன்பது சூரியன்கள் ஒளிவிட்ட பிறிதொரு உலகில். “ஹிரண்யகர்ப்பனே, வருக!” என்று ஓர் அறிந்த குரல் அவனை அழைத்தது.

*

எரிந்தது முதற்புரம். செந்தசைக்கோட்டை சூழ் பெருநகரம் அணுவெனக் குறுகியது. விதையுள் கருவென ஆகியது. இருப்பென்றும் இல்லையென்றும் ஆடும் ஓர் ஊஞ்சல். எரிந்தது மறுபுரம். வெள்ளிச் சிலந்தி பின்னிய வலைநகரம். ஒரு கண்ணி பிறிதொன்றை ஆக்கும் நெசவு. அவிழ்ப்பதே இறுக்குவதாக ஆகும் அவிழாச்சுழல். எரிந்தது பிறிதொரு புரம். பொன்னிறக் கருவறை. ஆடிகள் தங்களுள் நோக்கி அமைத்த மாநகரம். எதிர்ப்பவரை அள்ளி தன் குடிகளென்றாக்குவது. கோடிக் களம் கொண்ட ஆடல். கோடிக் காய்கள் நின்றிருக்கும் களம். எரிந்தழிந்தது முப்புரம். செம்பு எரிந்தது. எரிந்தது வெள்ளி. உருகி அழிந்தது பொன். மூவிழி அனலில் தழல் மூண்டழிந்தது முப்புரம். கைப்பிடி நீறென்றாகியது. எஞ்சியது அது. நீறெனும் வெண்மை.

[ 31 ]

ஸ்ரவ்யம் என்னும் காட்டில் ஓர் ஆண்குயில் மஞ்சள் கொடி ஒன்று பறப்பதைக் கண்டு அருகணைந்தது. அது கொன்றைமரம் பூத்திருப்பது என்று அறிந்ததும் தன் உடல் விம்மி இறகுகள் எழுவதை உணர்ந்தது. சிறகுகளைச் சுழற்றியபடி மாதவிக்கொடி ஒன்றின் வளைவிலிருந்து ஊசலாடியபோது தன் அலகிலிருந்து அன்றுவரை அறிந்திராத இன்னிசை ஒன்று எழுவதைக் கேட்டது. அவ்விசையின் சுழலில் இன்னும் இன்னுமென தித்தித்துச் சென்றுகொண்டிருந்தது.

பின் அதை கேட்பவர் எவர் என உணர்ந்து விழிப்புகொண்டது. மிக அருகே வரிவரியென உடலிறகு கொண்டு அமைந்திருந்த பெண்குயிலை கண்டுகொண்டது. அதை நோக்கி தன் விடாயை பாடியது. விடை எழாமை கண்டு தன் தனிமையைச் சொன்னது. அதை துயரென்று மீட்டியது. அதன் விழிகளைக் கண்டதும் ஒலியடங்கியது. அவள் கொண்ட அமைதி தன் இசையின் உச்சமென உணர்ந்தது.

வீக்‌ஷம் என்னும் காட்டில் ஓர் ஆண்மான்  குளிர்ச்சுனை ஒன்றில் குனிந்து நீர் அருந்தியபோது தன்னருகே நின்ற துணைமானை அங்கு கண்டது. நீரில் ஒளியென நடனமிட்ட அவ்வழகைக் கண்டு பெருங்காதல்கொண்டு முத்தமிட்டது. விடாய் மிகுந்து  நாகுவித்து தன் துணைவியை அள்ளி அள்ளிக் குடிக்கலாயிற்று. ஒரு துளியும் குறையாமல் தன் உடல் ஊறி நிறைந்துகொண்டிருப்பதை உணர்ந்து மயங்கி நின்றிருந்தாள் அவள்.

தம்சம் என்னும் காட்டில் இரு யானைகள் சேற்றுப் பரப்பொன்றில் இறங்கி தங்கள் உடல் எடையை இழந்தன. துதிக்கை தழுவியும் உடல் வழுக்கியும் இணைந்து பிளிறியும் காதல்கொண்டன. மதமெழுந்து கன்னம் நனைந்த களிறு கொம்புகளால் பிடியைத் தூக்கிச் சுழற்றி வீசியது. சினம்கொண்ட பிடி எழுந்து திரும்பி துதிக்கையால் களிற்றை அறைந்து தன் சிறு தந்தத்தால் அதன் விலாவை குத்தியது. காடதிர முழங்கியபடி களிறு பிடியைக் குத்தி தந்தத்தை இறக்க பிடி அலறிய ஒலியில் பறவைகள் வானிலெழுந்தன.

சினம்கொண்ட இரு பேருடல்களும் வெடிபடும் ஒலியுடன் மத்தகங்களால் முட்டிக்கொண்டன. துதிக்கைகளைப்பற்றி ஒன்றை ஒன்று உந்திச் சுழற்றின. மரங்கள் கடைபிழுது விழுந்தன. கிளைகள் ஒடிந்து சொரிந்தன. பாறைகள் சரிவில் உருண்டன. உழுத வயலென்றாகியது காடு. இருபெரும் அடிமரங்கள் நடுவே பிடி சிக்கிக்கொண்டது. களிறு அதை அடக்கி மேலேறி உடலிணைந்தது. இருவர் கொண்ட விசைகளும் எதிரெதிர் முட்டி அசைவிழந்தன. குருதி வழியும் புண்கள் இனிக்கத் தொடங்கின.

ரம்யம் என்னும் காட்டில் இரு தட்டாரப் பூச்சிகள் காற்றில் இணை கண்டுகொண்டன. ஆணும் பெண்ணும் தங்கள் சிறகுகளை இணையாக்கி உடலை ஒன்றாக்கி எழுந்தமைந்த இளங்காற்றில் சுழன்று பறந்தன. இரு சிறகுகளும் ஒற்றைவிசை கொண்டபோது ஒன்றுக்கொன்று முற்றிலும் எடையற்றவையென்றாகின. தொடுவுணர்வு மட்டுமே அவற்றிடையே இருந்தது. சிறகுகள் முற்றிலும் பொருந்தியசைந்த கணத்தில்  தங்கள் காதலால் மட்டுமே அவை தொட்டுக்கொண்டன.

தன்யம் என்னும் காட்டில் அரசித் தேனீயின் அரண்மனையை தேனால் நிரப்பின தேனீக்கள். காடெங்கும் மலர்ந்த பல்லாயிரம் மலர்களின் இனிமை. அவற்றை தேடிச் செல்லவைத்த மணம். அவற்றை உண்டு சுமந்து வருகையில் எழுந்த இசை. அவற்றை நிறைத்தபின் ஆடிய நடனம். விழிசொக்கி அமர்ந்திருந்த பெண்ணின் முன் ஒன்று நூறு ஆயிரமென பெருகியது ஆண். ஒன்று நூறு ஆயிரம் என விரிந்து அன்னையைச் சூழ்ந்தது தந்தை.

*

ஊழ்கத்திலமைந்திருந்த அம்மையப்பனின் உடலில் இருந்து தன் கருணையால் பிரிந்தெழுந்தாள் அன்னை. மெல்ல அவனைத் தொட்டு எழுப்பினாள். “அருந்தவம் முதிர்ந்துவிட்டது அவனுக்கு. இன்னமும் பிந்துதல் அழகல்ல” என்றாள். விழித்தெழுந்து புன்னகைத்து “முலை ஊறுகிறது போலும் உனக்கு” என்றார் ஐயன். “குழவியின் அழுகையை நெடுநேரம் பொறுத்தல் எந்த அன்னைக்கும் அரிது” என்றாள் அவள்.

குனிந்து கீழே ரிஷபவனம் என்னும் சோலையை பார்த்தார் பசுபதி. அங்கே அவன் அருகமைந்து தவம் செய்த கருங்கல் சிவக்குறி உயிர்கொண்டு விதையென்று ஆகிவிட்டிருந்தது. “ஆம், இது தருணம்” என்று அவர் சொன்னார். “குழவியின் உயிர்விசைபோல் அன்னையை மகிழ்விப்பது பிறிதொன்றில்லை” என்றாள் தேவி.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 77

[ 28 ]

அர்ஜுனன் விழித்துக்கொண்டபோது கல்லால் ஆன சிற்றறைக்குள் வெம்மைமிக்க தசையென அணைத்திருந்த மென்மயிர்ப் போர்வைக்குள் இருந்தான். உள்ளே எரிந்த கனலின் ஒளியில் அச்சிற்றறை செங்குருதி என ஒளி நிறைந்திருந்தது. கைகளை ஊன்றி எழமுயன்றபோதுதான் உடலில் ஆழ்ந்த வலியை உணர்ந்தான். முனகியபடி படுத்துக்கொண்டபோது விழிகளுக்குள் அலையலையாக குருதியின் ஓட்டத்தை கண்டான். கீழே விழுந்துகொண்டே இருப்பதைப்போல் உணர்ந்தான். அவன் படுத்திருந்த மென்மயிர்ப் படுக்கை அலைபாயும் நீர்ப்பரப்பெனத் தோன்றியது.

அவனுடைய முனகலை அவனே கேட்டான். மெல்ல எழுந்து அவனருகே வந்து குனிந்த முகத்திலிருந்து பிறிதொரு முனகல் எழுந்தது. “யார்?” என்று அவன் அஞ்சிய குரலில் கேட்டான். “நான் பூசகன். அஞ்சவேண்டியதில்லை, இளைய பாண்டவனே” என்றார் பூசகர். “உன்னை நான் மீட்டு இங்கே கொண்டுவந்தேன்.” அர்ஜுனன் கண்களை மூடி எண்ணங்களால் காலங்களை தொட்டுவிட முயன்றான். சலித்து சோர்ந்து பெருமூச்சுடன் ஓய்ந்தான். “எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என்றான்.

“உன்னை அவர்கள் கொண்டுவந்து இவ்வூர் எல்லையில் போட்டுவிட்டு சென்றிருந்தனர். கடும் காய்ச்சல் கண்டிருந்தது. உடலெங்கும் காயங்கள் சீழ்கொண்டிருந்தன” என்று அவர் சொன்னார். “புண்கள் ஆற இன்னும் நாட்களாகும். ஆனால் உயிர்பிழைத்துவிட்டாய்.” அர்ஜுனன் கண்களை மூடியபடி “ஆம், நான் எளிதில் சாகமாட்டேன்” என்றான். அவர் “நீ மீண்டு வருவாய் என நான் எண்ணவில்லை. உன்னை மேலே அனுப்பியபோதிருந்த நம்பிக்கை நீ சென்றகணமே முற்றிலும் அழிந்தது” என்றார்.

அர்ஜுனன் “நான் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை” என்றான். “ஆம், அவர்களின் வேதம் வல்லமை மிக்கது. அது நம் சொற்கள்மேல் படர்ந்து அனைத்தையும் தான் இணைத்துக்கொண்டுவிடுகிறது. நம்முடன் நாமே போர்புரியும்படி செய்கிறது” என்றபடி அவர் அருகே பீடத்தில் அமர்ந்தார். “அதை மகாநாராயணம் என்கிறார்கள்.” அவன் திடுக்கிட்டு போர்வையை விலக்கிவிட்டு எழுந்தமர்ந்து “என்ன சொன்னீர்கள்?” என்றான். “அவர்களின் தெய்வம் ஏந்திய படைக்கலம் அது” என்றார் பூசகர். “உன்னை உளமயக்குக்கு ஆளாக்கினேன். நிகழ்ந்ததை எல்லாம் உன் சொற்களினூடாக அறிந்துகொண்டேன். நீ சென்ற அக்குகை சுக்லபிலம் எனப்படுகிறது. அதற்குள் உறையும் தெய்வத்தை நீ எதிர்கொண்டாய்.”

அவன் அச்சொல்லை வறண்ட உதடுகளால் உச்சரித்தபடி தலையைச் சாய்த்து கண்களை மூடிக்கொண்டான். அவன் விழியோரம் வழிந்த நீர் கன்னங்களில் இறங்கியது. மூக்கை உறிஞ்சும் ஒலி கேட்டு அவர் மீண்டும் அருகே குனிந்தார். “நீ தோற்கவில்லை, இளையவனே. பெருந்தெய்வம் ஏந்திவந்த படைக்கலத்தின் முன்புகூட நிமிர்ந்து நின்றிருக்கிறாய். உன்னை ஆட்டுவிக்கும் ஊழ் பெரிது.” அர்ஜுனன் ஆம் என தலையசைத்தான். “நீ எஞ்சியிருப்பது எதனால் என நான் எண்ணி எண்ணி வியக்கிறேன். நானறியா பெருநோக்கம் ஒன்று இருக்கலாம்.”

அர்ஜுனன் தன் காய்ச்சலை காதுகளில் உணர்ந்துகொண்டு அசைவிலாது கிடந்தான். கைகால்களில் இனிய தளர்வும் கண்களில் அனல்பட்ட எரிதலும் இருந்தன. மூச்சு மூக்குத்துளைகளை வறளச்செய்தது. ஆனால் வாயில் எச்சில் கசந்தது. “நான் இங்கிருப்பதை அவள் அறிவாளா?” என்றான். அவர் “இல்லை, இவ்வூரில் எவரும் அறியவில்லை” என்றார். அவன் பெருமூச்சுடன் “நன்று” என்றான். “பால் அருந்துகிறாயா?” என்றார் பூசகர். “தேவையில்லை… என் நா சுவையிழந்துள்ளது” என்றான் அர்ஜுனன்.

“ஆம், ஆனால் தொண்டைக்கு பால் தேவையிருக்கும்” என்றபடி அவர் எலும்புகள் ஒலிக்க மூச்சால் உடலை உந்தி எழுந்துசென்று அருகிருந்த அனலில் சிறுசெம்புக்குடுவையை வைத்து வெம்மையூட்டி அதிலிருந்த பாலை மூங்கில்குவளையில் ஊற்றி எடுத்துவந்தார். “நேற்றுவரை உனக்கு சிறு குழாய் வழியாக உணவூட்டினேன். இது மூலிகைப்பால். உடலுறுப்புகள் அனைத்தையும் நனைத்து உயிரூட்டுவது” என்றார். அர்ஜுனன் கைகளை ஊன்றி விலா எலும்புகள்மேல் மிகக்கூரிய வலியை உணர்ந்தபடி எழுந்தமர்ந்து அதை வாங்கி அருந்தினான்.

நாவில் பால் பட்டதுமே உடல் குமட்டியது. ஒவ்வாத எதையோ வாயில் கொண்டதுபோல. ஆனால் தொண்டை இனிதாக அந்த எரிதலை பெற்றுக்கொண்டது. வயிற்றிலிருந்த அனல் அது சென்று படிந்ததும் அணைந்தது. சிலகணங்களில் குருதியெங்கும் இளவெம்மையாக அது ஓடிநிறைவதை உணரமுடிந்தது. “உப்பும் இனிப்பும் கலந்த பால்” என்று அவர் சொன்னார். “மறுபிறப்படைந்துவிட்டிருக்கிறாய். பாலே அமுது” என புன்னகைத்தபோது கூழாங்கற்பற்கள் தெரிந்தன. தலை ஆடியது. “நான் உன்னை மீட்டதை தெய்வங்களுக்கு சொன்ன மறுமொழி என்றே எடுத்துக்கொள்கிறேன்” என்றபடி குவளையை திரும்பக்கொண்டுசென்று வைத்தார்.

“நான் உயிர்வாழ விரும்பவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “திசைவென்று நான் அடைந்த படைக்கலங்களனைத்தும் பொருளற்றவை என இப்போது உணர்கிறேன்.” அவர் புன்னகைத்து “எப்போதும் ஒரு படைக்கலம் அப்பால் இருந்துகொண்டிருக்கும்” என்றார். “அதன் பொருளென்ன என்று எனக்குப் புரியவில்லை” என்றான். அவன் சொல்வதென்ன என்று அவர் உணர்ந்து புன்னகைத்து “அங்கிருந்துதானே இப்பயணம் தொடங்கியது?” என்றார். அவன் திகைப்புடன் அவரை நோக்கினான். “அவ்வண்ணமென்றால் நான் தேடுவதை இன்னமும் அடையவில்லை அல்லவா?” என்றான். அவர் “ஆம்” என்றார்.

அவன் பெருமூச்சுடன் உடலை தளர்த்தினான். அவனுள் எழுந்த எண்ணங்களைத் தொடர்ந்துசென்று சில சொற்களை எடுக்க முயன்றான். ஆனால் நழுவி நழுவிச் சென்றன அவை. அவற்றை தேடிச்செல்லும்தோறும் அவன் தன்னிலை அழிந்துகொண்டிருந்தது. தன் குறட்டையொலியை கேட்டுக்கொண்டு அவன் விழித்தான். வாய் ஒழுகியிருந்தது. “துயின்றேனா?” என்றான். கணப்பருகே உடலைச் சுருட்டிப் படுத்திருந்த அவர் “ஆம், சற்றுநேரம்” என்றார். “உடல் இத்தனை சோர்வை அறிந்ததே இல்லை” என்றான். “இறந்துபிறக்காமல் மெய்யான எதையும் அறிந்துவிடமுடியாது, பாண்டவனே” என்றார் பூசகர்.

“நான் இருந்தாகவேண்டுமா?” என்றான். “ஆம், இல்லையேல் நீ எஞ்சியிருக்கமாட்டாய்” என்றார். “ஏன்?” என்றான். “நீ வெல்வாய்” என்றார். அவன் சிலகணங்களுக்குப்பின் “நான் இனி அறியவேண்டியதென்ன, பூசகரே?” என்றான். “அறியேன். இவை நமக்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஏதோ ஒன்று எஞ்சியிருக்கிறது” என்றார். “இல்லை, நாம் அவ்வாறு எண்ணிக்கொள்ளவேண்டியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “மகாநாராயணம் இன்று இறுதியானது. நிகரான பிறிதொன்று நாளை எழலாம். இன்று இதுவே இவையனைத்தையும் ஆள்கிறது.”

“ஆம், இந்த யுகத்தின் வேதம் அது” என்றார் அவர். “ஆனால் அடிமுடியறியவொண்ணா ஒன்றின் ஓர் உருவம் மட்டுமே அது. ஒவ்வொன்றையும் தொட்டு நாம் சென்றறியும் பிறிதொன்று உள்ளது. அனைத்துமான ஒன்று.” அவன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “ஆழ்ந்து சென்றறியலாகும். அகன்றுசென்று தொட்டுவிடலுமாகும். அது அங்குள்ளது என்பதில் ஐயமே இல்லை” என்றார் பூசகர். “அதை எங்கு சென்று தேடுவது? எவ்வண்ணம் அறிவது?” என்றான் அர்ஜுனன்.

அவர் அவனை தன் வெண்பனித் திவலைபோன்ற விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தார். அவர் விரல்கள் அசையத் தொடங்குவதை அவன் கண்டான். அவை வலைபின்னும் சிலந்தியின் கால்கள் போன்று நடுங்கி அதிர்ந்தன. அவற்றில் அந்த மென்சரடை காணமுடிந்தது. அவன் அவரை கூர்ந்து நோக்கியபடி படுத்திருந்தான். மூச்சில் எழுந்தமைந்த மார்புக்குள் காற்றின் அழுத்தம் வலியளித்தது. அவருடைய விரல்கள் விரிந்து நெளிய தன்னையும் இணைத்துக்கொண்டு அந்த வலை நெசவுகொள்வதை அறிந்தான். அவர் விழிகள் வெறித்து அசைவிழந்தன. உதடுகளின் நடுக்கத்திற்கு அப்பாலிருந்தென உறுமலொன்று எழுந்தது.

“சொல்க…” என்று அவர் எவரிடமோ கேட்டார். “சொல்க, என்ன செய்யவேண்டும்? இவன் செல்லவேண்டியது எங்கு? சொல்க! ஆழ்ந்தவரே, மறைந்தவரே, அங்கிருப்பவரே, அறிந்தவர் நீங்கள். சொல்க! எங்கள் வழியென்ன?” அக்குரல் மன்றாடியது. “சொல்க, முற்றிலும் வென்றவர்களுக்கும் முழுதாகத் தோற்றவர்களுக்கும் மெய்யறியும் வல்லமை உண்டு என்பர் மூத்தோர். சொல்க! எந்தையே, சொல்க!”

அறையை வெள்ளிவலைச்சரடுகள் முற்றிலுமாக மூடிவிட்டன என அவன் கண்டான். அசைவற்றவனாக அவன் நோக்கிக்கிடந்தான். அவன் எண்ணங்கள் அதிர்வுகளாக அந்த வலையை அடைந்தன. எண்ணங்களை பார்க்கமுடிந்தது. விரல் நீட்டினால் அவ்வெண்ணங்களை தொட்டறியமுடியும். எண்ணங்களை சீண்டி மீட்டமுடியும். சரடின் மறுமுனையில் அவன் பிறிதொன்றை அறிந்தான். பிற எண்ணம் ஒன்று. குரலல்ல, மொழியுமல்ல. எண்ணமென்றே அவனை அடைந்தது. உள்ளமென அவனுள் நிகழ்ந்தது, ஆனால் பிறிதாகவே இருந்தது.

“பேரனல்.” அவன் அவ்வெண்ணம் செந்நிறத்தில் எரிவதைக் கண்டான். நெருப்பாலான நீள்சரடு ஒன்றின் அதிர்வு. “அடியிலி, முடியிலி.” அவன் வேறெங்கோ அதை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் மெல்லிய வலிப்பொன்று அவன்மேல் படர்ந்தது. தன் வலக்கால் துடிப்பதைத்தான் அவன் உணர்ந்தான். அதை அடக்கமுயல்கையிலேயே வாய் கோட்டிக்கொண்டது. வலக்கை இழுத்து வளைந்தது. பார்வை மங்கலாகி அனைத்தும் ஊசலாடின. நினைவின் இறுதிக்கரைவில் அவன் அனல் என்னும் சொல்லில் நின்றிருந்தான். மீண்டும் விழித்தபோது அனல் என்னும் சொல்லில் எழுந்திருந்தான். அவனுக்குமேல் பூசகர் குனிந்து நோக்கிக்கொண்டிருந்தார்.

“விடாய்” என்று அவன் சொன்னான். அவர் எழுந்துசென்று பாலைச் சூடாக்கி குவளையில் கொண்டுவந்து அவன் கடைவாயைத் திறந்து ஊட்டினார். அதைப் பற்ற அவன் கையை தூக்கமுயன்றபோதுதான் கை அருகே ஒரு அடிபட்ட நாகமெனக் கிடந்து நெளிவதைக் கண்டான். “கை கை” என்றபோது கடைவாயில் பால் வழிந்தது. “நரம்புகள் இழுபட்டுள்ளன, இளவரசே. சீராக சிலநாட்களாகும்” என்றார் அவர். அவன் தன் உடலே எண்ணங்களுக்குத் தொடர்பின்றி கிடப்பதை உணர்ந்தான். “ஆனால் உடல் துடிக்கிறது. அது நன்று. உள்ளத்தை உந்தி அதற்குள் செலுத்திக்கொண்டே இரு. அது உயிர்கொள்ளும்” என்றார் அவர்.

அர்ஜுனன் தலையை அசைத்து கண்களை மூடிக்கொண்டான். அவனில் கண்ணீர் வழியத் தொடங்கியது. “காய்ச்சல் நின்றிருக்கிறது. புண்கள் ஆறத் தொடங்குகின்றன என்று பொருள்” என்றார் பூசகர். “முன்பென என் கை செயல்கொள்ளுமா?” என்றான். “கை என்பது சித்தத்தின் கருவி” என்றார் பூசகர். அவன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். “நீ ஆற்றவேண்டியவை பல உள்ளன, இளவரசே” என்று பூசகர் சொன்னார். “நேற்று நான் அறிந்தவை அனைத்தையும் உன்னிடம் சொல்லவேண்டும்.”

அர்ஜுனன் “நான் நேற்று கண்டது…” என தொடங்கினான். “அதுவே அங்கிருப்பது. என்றுமுள்ளது. ஆக்கமோ அழிவோ அற்றது. முழுமுதலானது. அதை அனலென்றால் சைவர். புனலென்றால் வைணவர். ஆற்றலென்றால் அன்னைநெறியர்” என்றார் பூசகர். அவன் அவர் சொற்களுக்காக காத்திருந்தான். “நான் பெற்றது ஒன்று. இப்போது சொல்வது அதை மொழியென்றாக்குவது” என்று பூசகர் சொன்னார். “இப்பகுப்புகளுக்கு என்ன பொருளென்று அறியேன். ஆனால் இப்பகுப்புகளினூடாக அன்றி நாம் எதையும் அறியமுடிவதில்லை. அலைகளாகவன்றி கடலை எவர் காணமுடியும்?”

“அழியா அனலை அறிய முயன்ற இருவரால் தோன்றியவை வேதங்கள் என்றறிக! தொல்வேதங்களனைத்தும் பிரம்மனிலிருந்து எழுந்தவை. நாகவேதமும் அசுரவேதமும் மற்றும் இம்மண்ணிலுள்ள அனைத்து நிஷாதவேதங்களும் பிரம்மனால் உருவாக்கப்பட்டவை. அவற்றைக் கறந்தெடுத்த சாறென்றமைந்த வாருணம், மகாருத்ரம், மாகேந்திரம், மகாவஜ்ரம் என்னும் பிற வேதங்களனைத்தும் பிரம்மஜன்யம் என்றே அழைக்கப்படுகின்றன” என்று பூசகர் சொன்னார். “விண்ணளாவ விரிந்தெழுந்து அறிந்தவை. முடிவின்மைக்கு நிகராக ஒரு சொல்லை வைத்தவை. அனலுக்கு மாற்றென மலரை வைத்தவை. அவற்றை கவிதைகள் என்கின்றனர் கற்றோர்.”

“இளையோனே, அவையனைத்தையும் தன்னுள் அடக்கி எழுந்தது மகாநாராயணவேதம். ஆழ்ந்து சென்று அறிந்த நுண்சொல் அது. முடிவின்மையை ஓர் ஒலியென்றாக்கிக்கொண்டது. அனலின் அடியிலிக்கு நிகரென நுண்சொல்லில் எழும் ஒலியின்மையை முன்வைத்தது” என்றார் பூசகர். “நீ மகாநாராயணத்தால் வெல்லப்பட்டாய். உன்னுள் இருந்து பெருகி எழுந்து உன்னைச் சூழ்ந்தது. உன் எதிரியென வந்து உன்னை வென்றது.”

அர்ஜுனன் “அதற்கும் அப்பால் அமைந்துள்ளது என்ன?” என்றான். “அது வேதம் கடந்தது” என்று அவர் சொன்னார். “வேதக்கனி அது என்கின்றனர். கனியென்று எழுவதே முன்பு அதன் விதையென்றும் இருந்தது. சென்று அதை அடைக! அதை அடையாமல் வேதமென எழுந்த எதையும் வென்று கடக்கவியலாது.” அர்ஜுனன் விழிகள் மட்டுமென்றாகி அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “அதை பாசுபதம் என்கின்றனர்” என்று அவர் சொன்னார்.

[ 29 ]

நாற்பத்தெட்டு நாட்களாயிற்று அர்ஜுனன் மீண்டும் தன் உடல் திரும்ப. அவன் கிடந்த அந்த கல்சிற்றறை உண்மையில் தன் சிறு கல்லில்லத்தின் அடியில் பல்லாண்டுகளாக பூசகரால் தோண்டி உருவாக்கப்பட்ட வளை. அது அங்கிருப்பதை அக்குடிகள் எவரும் அறிந்திருக்கவில்லை. அதனுள் கூட்டுப்புழு என அர்ஜுனன் வளர்ந்து உருமாறிக்கொண்டிருந்தான். அவர் அளித்த பச்சிலைச்சாறும் வேர்ப்பொடிகளும் அவன் உடலனலை ஓம்பின. புண்பட்ட பழைய உடல் உயிரிழந்து கருகி சருகுப்பரப்பாகி உரிந்து அகன்றது. உள்ளிருந்து புதிய தளிருடல் எழுந்து வந்தது.

ஒவ்வொருநாளும் அவன் ஆழ்ந்து சென்றுகொண்டிருந்தான். முதலில் இருந்த அச்சங்களும் ஐயங்களும் துயரும் மெல்ல அகன்றன. கொந்தளிப்புகள் அமைதிகொண்டன. பின்னர் நாளெல்லாம் ஒரு சொல்லும் நாவிலெழாமலானான். உள்ளே ஓடிக்கொண்டிருந்த சொற்பெருக்கும் தேய்ந்திற்று ஓய்ந்தது. அமைதி காலத்தை இல்லாமலாக்கியது. காலமென்பது உள்ளும் புறமும் ஓடும் சொற்களே என்றறிந்தபின் விழிப்பா துயிலா என்றறியாத நிலையில் இருப்புணர்வொன்றாக மட்டுமே எஞ்சி தனியறைச் சுடர் என அசைவிழந்து நின்றிருந்தான்.

அவன் உடல் தேறி எழுந்து உடலுக்கு நீர்விட்டு பூசகர் அளித்த ஆடையை அணிந்துகொண்டபோதுதான் மீண்டும் சொற்தளத்திற்கு வந்தான். முந்தையநாள் இரவு பூசகர் அவன் உடலில் நூறு நரம்புமுடிச்சுகளில் ஊசிகளால் மெல்ல குத்தி நோக்கியபின் “நரம்புகள் இறுக்கம்கொண்டுவிட்டன, பாண்டவனே. நீ மீண்டுவிட்டாய்” என்றார். “மீண்டும் எழும் உடல் பிறந்தெழுந்த குழவிக்குரியதென உயிர்நனைந்து துடித்திருக்கிறது. இன்று நீ இளைஞனைப்போல் சென்று களம்நிற்க முடியும்.” அவன் சொற்களுக்கு அப்பாலிருந்தான். அவர் சொன்னதைக் கேட்ட உள்ளம் வேறெங்கோ இருந்தது.

மறுநாள் அவனை ஆடைகளைந்து அமரச்செய்து கொதிக்கும் மருந்திலை நீரைவிட்டு நீராட்டினார். அவன் எழுந்ததும் வேர்ச்சாறு கலந்த பாலை அருந்தும்படி நீட்டினார். அவன் முதல்முறையாக ஒரு சொல்லை அடைந்தான். “அனல்.” அதை அவன் சொல்லியிருக்கவேண்டும். அவர் “ஆம், அனலெழுந்துள்ளது. நீ உடல்சிறந்துள்ளாய், பாண்டவனே” என்றார். அவன் “நான் கிளம்பியாகவேண்டும்” என்று சொன்னான். “ஆம், அனல்தேடிச் செல்லவேண்டும் என்பதற்காகவே உயிர்கொண்டிருக்கிறாய். இன்றே கிளம்புக!” என்றார் பூசகர்.

மலைச்சிற்றூர்கள் முழுதடங்கிவிட்டிருந்தன. குனிந்து நோக்கினால் கால்கள் தெரியாதபடி வெண்பனி மூடியிருந்தமையால் முகிலில் நீந்திச்சென்றுகொண்டிருக்கும் உணர்வே எழுந்தது. அவன் ஊரைக்கடந்து வெளியே சென்றதை எவரும் பார்க்கவில்லை. பார்வதியின் இல்லத்தைக் கடந்துசென்றபோது அதன் மூடிய சாளரங்களுக்கு அப்பால் அவள் நோக்கு கூர்கொண்டிருப்பதான உணர்வை அவன் அடைந்தான். அவன் காலடிகள் பனிக்குள் நீரில் இலைவிழும் மெல்லொலியுடன் கேட்டன. மிக அப்பால் ஒரு கூரை சொட்டும் ஒலி கேட்டது. மலையிடுக்குகளில் காற்று ஊதிச்செல்லும் முழக்கம் எழுந்து அமைந்தது.

ஊரெல்லையில் அவன் மூச்சொலியை கேட்டான். பின்னர் பனிப்பரப்பில் ஒரு கரியதீற்றல் என அந்தக் காட்டெருதைக் கண்டான். மேலும் அணுகியபோது அதன் விழிகளை அருகிலெனக் கண்டான். அது மூச்சு சீறி தலைதாழ்த்தியது. கழுத்தின் மயிர்த்தோகைகள் நிலம் தொட்டு அசைந்தன. பெருந்திமில் தலையென எழுந்து நின்றது. அவன் அஞ்சாது நெருங்கிச்செல்ல அது மேலும் ஓர் அடி முன்னால் எடுத்துவைத்தது. அவன் அருகே சென்று அதன் நெற்றியில் கைவைத்தான். திமில் சிலிர்க்க காதுகள் தழைய அது மீண்டும் மூச்சொலித்தது. அவன் அதன் விலாவை வருடியபடி கடந்துசென்றான்.

அவனை நோக்கியபடி அது பின்னால் நின்றது. மெல்லிய குரலில் “க்ரம்?” என்று கேட்டது. அவன் திரும்பி நோக்கியபோது தலையை அசைத்தது. அவன் அதன் விழிகளை நோக்கியபடி நின்றான். அது அவனருகே திமில் அசைய நடந்துவந்து காதுகள் உடுக்கின் சரடுமுழைபோல ஆடி அடித்துக்கொள்ள தலையை ஆட்டியபின் தும்மல்போல் ஓர் ஒலி எழுப்பியது. மீண்டும் முரசுத்தோலில் கோல் தொட்டதுபோல “க்ரம்?” என்றது. அவன் அதை நோக்கிக்கொண்டு நின்றான்.

கால்களை எளிதாக எடுத்துவைத்து எடைமிக்க உடலை மேலேற்றி அது சரிவில் சென்றது. அவன் அதைத் தொடர்ந்து சென்றான். அது அவன் தொடர்வதை அறிந்திருந்தது. அவன் களைப்புடன் நின்றபோது அப்பால் அதுவும் தயங்கி நின்றது. கீழே கிடந்த கற்களை எடுத்து வாய்க்குள் போட்டு பல்படாமல் குதப்பிவிட்டு உமிழ்ந்தது. மீண்டும் நடந்தபோது அவன் தொடர்கிறான் என்பதை உறுதிசெய்துகொண்டது.

அன்று மாலை அது சென்றடைந்த சிறிய மலைப்பொந்துக்குள் அவன் ஒடுங்கிக்கொண்டான். தன்னிடமிருந்த உலர் உணவை உண்டு அங்கே படிந்திருந்த பனிப்படலத்தை உடைத்து நீராக்கி அருந்தினான். அது மூன்றுகாலில் நின்றபடியே தலைதாழ்த்தி விழிசொக்கித் துயின்றது. துயிலிலும் அதன் செவிகள் ஓசைக்கேற்ப அசைந்துகொண்டிருந்தன உடல் சிலிர்ப்பும் விதிர்ப்பும் கொண்டது. மூச்சொலியுடன் விழித்து கால்மாற்றி நின்றது. காலையில் அதன் ஒலிகேட்டு அவன் விழித்துக்கொண்டான். அது கிளம்பியபோது உடன் கிளம்பினான்.

ஒரு வினாவும் இன்றி அந்த ஏற்பு நிகழ்ந்ததை அவன் எண்ணி வியப்பு கொள்வதற்கே மூன்று நாட்கள் கடந்துவிட்டிருந்தன. கிளம்பும்போது எங்கு செல்கிறோம் என அவன் திட்டமிட்டிருக்கவில்லை. மீண்டும் கின்னரர் உலகம் என்றே எண்ணியிருந்தான் என பின்னர்தான் உணர்ந்தான். எங்கிருந்தோ ஓர் அழைப்பு வரும் என அவன் உள்ளம் சொன்னது. “செல்க, அது உன்னை அழைத்துக்கொள்ளட்டும்” என்றுதான் பூசகரும் சொல்லியிருந்தார். ஆகவேதான் தெளிவான அவ்வழைப்பு வியப்பை அளிக்கவில்லை.

ஏழு நாட்கள் அவன் அவ்வெருதுடன் நடந்தான். அது களைப்படையவில்லை. பனித்துகள்களையும் குற்றிச்செடிகளின் சிறிய காய்களையும் அன்றி எதையும் உணவாகக் கொள்ளவில்லை. அவன் ஏழாம்நாள் தங்கியிருந்த பாறைப்பிளவுக்குள் மென்மணல்குழிக்குள் மலைக்கிழங்குபோல ஆழ்துயிலில் இருந்த பனிக்கீரி ஒன்றைப்பிடித்து கல்லுரசி நெருப்பிட்டு சுட்டு உண்டான். அவற்றைப் பிடிக்கும் முறையை அடைந்ததும் தயக்கமில்லாது சென்றுகொண்டே இருந்தான்.

எட்டாவது நாள் புலரியில் ஒரு பெரிய மலைப்பிளவை எருது சென்றடைந்தது. அங்கிருந்து உருளைக்கற்களுடன் மண் பொங்கி அருவியென வழிந்து பெரிய கூம்பாக நின்றது. அதன்மேல் எருது ஏறிச்சென்றபோது கற்கள் உருண்டுருண்டு விழுந்தன. அவன் ஏறியபோது அவனை முட்டித் தெறித்து கீழே சென்றன. அந்தக் கூம்பு ஏறத்தொடங்கியபின்னர்தான் எத்தனை பெரிதென்று தெரிந்தது. துணிக்குவியல்போல அது அவன் ஏறுந்தோறும் தழைந்து கீழே வந்தது. பின்னர் அந்த எருது கால்வைத்த இடங்களில் மட்டுமே தான் காலை வைக்கவேண்டும் என்று கண்டுகொண்டான்.

மேலேறிச்சென்று மலைப்பிளவினூடாக அப்பால் நோக்கியபோது திகைப்புடன் நெஞ்சுவிரிய மூச்சிழுத்துவிட்டான். அங்கே பசுமைதேங்கியதுபோல ஒரு சிறிய சோலை இருந்தது. உயரமில்லாத சோலைமரங்கள் பச்சை நுரைக்குமிழிகள்போல இலைக்குடை சூடி நின்றன. நடுவே ஓடிய சிற்றோடைகளின் இருமருங்கிலும் நாணல்கள் அடர்ந்திருந்தன. சோலையின் மையமாக ஓடிய ஆறு அப்பால் பிறிதொரு மலைப்பிளவின் வழியாக ஊறிவந்து இரையெடுத்த மலைப்பாம்புபோல சற்று பெருத்து மீண்டும் ஒடுங்கி அவன் காலடியில் ஒரு பாறைவெடிப்புக்குள் புகுந்து மறைந்தது. நீர் விழும் ஒலியை கேட்கமுடியவில்லை. ஆனால் காலில் அந்த நீரோடையின் அதிர்வை அறியமுடிந்தது.

எருது கீழே இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அவன் கால்களை எடுத்து வைத்து உடல்நிகர்செய்து மெல்ல கீழிறங்கினான். கீழிறங்குவது மேலும் கடினமாக இருந்தது. இருமுறை வழுக்கி விழுந்து கைகளை ஊன்றி அமர்ந்தான். மேலே நின்றபோது அத்தாழ்வரையின் நெடுந்தொலைவை நீள்விழிக்கோணத்தில் நோக்கியமையால் ஆழம் தெரியவில்லை. அவன் நோக்கிய மரக்கொண்டைகள் புல்பத்தைகள்போல மிகக்கீழே இருந்தவை. இறங்கி செல்லச்செல்ல வியர்வை வழியலாயிற்று.

அந்தச் சிற்றாறும் அதன் கிளையோடைகளும் வெம்மைகொண்டு கொதித்துக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. அதிலிருந்து நீராவி புகைபோல தயங்கி எழுந்து வெண்மைகொண்டு காற்றில் பட்டுச்சல்லா போல சுழன்றாடிக்கொண்டிருந்தது. அவன் நடுவே இருமுறை அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு கீழிறங்கினான். அந்தியிருண்ட பின்னரே கீழே சென்று சேர்ந்தான். அங்கிருந்த பாறை ஒன்றில் இளைப்பாறினான். காலையில் எழுந்தபோது எருது அவன் அருகே இல்லை என்பதை அறிந்தான். அதன் குளம்புகளுக்காக தேடியபோது அப்பகுதியெங்கும் பலநூறு குளம்புத்தடங்களை கண்டான்.

எழுந்து நின்று அந்நிலத்தின்மேல் காலையொளி பரவுவதை நோக்கினான். நீள்வட்டமாக மலைகளால் சூழப்பட்டிருந்தது அத்தாழ்வரை. அங்கே கதிர் எழுவது பிந்தியும் அணைவது முந்தியும் நிகழுமெனத் தெரிந்தது. அங்கிருந்த வெந்நீர் ஆறு குளிரை மிகவும் குறைத்துவிட்டிருந்தது. அந்த மரங்களும் செடிகளும் அவ்வெப்பத்தை உண்டு அங்கு வாழ்பவை என்று தெரிந்தது. குனிந்து நிலத்தை நோக்கியபடி நடந்தான். மானுடக் காலடிகள் எவையும் தென்படவில்லை. செவிநிறைக்கும்படி பறவைக்குரல்களும் குரங்குகளின் ஓசைகளும் கேட்டுக்கொண்டிருந்தன.

ஆற்றுக்குச் செல்லும் ஓடையொன்றின் வெம்மையெழுந்த நீரை அள்ளி முகம் கழுவிவிட்டு அருந்தினான். கனிந்து நின்ற அத்திப்பழங்களை பறித்து உண்டான். அச்சோலையை சுற்றிவந்தான். மரநிழலிலும் புதர்களிலும் எருதுகள் கால்மடித்துக் கிடந்து கண்களைமூடி அசைபோட்டன. புதர்களுக்குள் செவிவிடைத்து விழி உருட்டி நின்றிருந்த மான்கள் அவன் காலடி அணுகியதும் வால் விரைத்து அசைய ஓசை ஒவ்வொன்றுக்கும் சிலிர்த்து ஒற்றை நாண் எய்த அம்புக்கூட்டமென பாய்ந்து மறைந்தன. புதர்களிலிருந்து ஓணான்களும் அரணைகளும் எழுந்து சருகோசையுடன் ஓடின. மரக்கிளைகள் முழுக்க சிறிய கிளிகளின் ஓசை நிறைந்து அவற்றை கிலுகிலுப்பைச் செண்டுகளென்றாக்கியது.

உயிர் நிறைந்திருந்த காடு. மானுடவாழ்வுக்கான ஒரு சிறு அடையாளம்கூட தெரியவில்லை. அவன் மரங்களிலோ பாறைகளிலோ குழூஉக்குறிகள் தெரிகின்றனவா என்று நோக்கினான். பின்னர் குனிந்து கூர்ந்து நோக்கி ஒரு கல்லை எடுத்துப்பார்த்தான். அது வேல்முனை போலிருந்தது. கைகளால் செதுக்கப்பட்டதென்று தெரிந்தது. படைக்கலமாகும் கூர்கற்களை அவன் முன்னரும் கண்டிருந்தான். எச்சரிக்கையுடன் திரும்பி அந்தச் சோலையை விழிகளால் அளந்தான். அதற்குள் மானுடர் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என உறுதிசெய்துகொண்டான்.

ஆற்றங்கரை வரை சென்றபோது அவன் உடல் மயிராடைக்குள் வியர்த்து வழியத் தொடங்கியது. ஆடைகளைக் கழற்றி அப்பால் வைத்துவிட்டு வெண்ணிறமான சேறுபடிந்த அதன் கரையில் கால்புதைய நடந்து நீரை அணுகினான். கைசுடும் அளவுக்கு கொதித்து குமிழியிட்டது ஆற்றுப்பெருக்கு. அதில் சென்றிணைந்த ஓடைகளின் நீரையே தொடமுடிந்தது. நீரை அள்ளி தலைமேல் விட்டுக்கொண்டு திரும்பியபோது அவன் பாதிமண்ணில் புதைந்ததாக ஒரு சிவக்குறியை கண்டான்.

இல்லை, விழிமயக்கு, அது மலையாறு உருட்டிவந்த மோழைக்கல் மட்டுமே என சொல்லிக்கொண்டான். ஆனால் அவன் விழிகள் உறுதிசெய்துவிட்டிருந்தன. அருகணைந்து குனிந்து சூழ்ந்திருந்த மண்ணை விலக்கி நோக்கினான். சிவக்குறி பதிந்திருந்த ஆவுடை தெரிந்தது. அதை பெயர்த்தெடுத்த பள்ளத்தில் மண்புழுக்கள் நெளிந்தன. நீர் ஊறி மேலெழுந்து அதை மூடியது. அவன் அதை எடுத்து அருகே நிறுத்தினான். அவன் கையளவே இருந்தது. ஆற்றில் வந்த உருளைக்கல்லை செதுக்கி அமைத்தது. ஆவுடை சீரற்ற வடிவுகொண்டிருந்தது. அதை கல்லால் அடித்தே செதுக்கியதுபோல.

அதை சேறு அகல ஓடைநீரில் கழுவி எடுத்துக்கொண்டுசென்று அங்கிருந்த பாறை ஒன்றன் மேல் வைத்தான். கைகளால் மும்முறை அள்ளி அதற்கு நீராட்டு செய்தான். நீலமும் சிவப்பும் மஞ்சளும் என சுற்றிலும் அலர்ந்து நின்றிருந்த மலர்களைக் கொய்து அதன்மேல் இட்டு வணங்கினான். அவன் உள்ளம் பொருளற்ற ஏதோ சொற்களாக இருந்தது. ஒரு சொல்லில் தடுக்கி அவன் திகைத்தான். அனல். உடலுக்குள் ஒரு சொடுக்கலை உணர்ந்தான். தன் ஆடையை முழுமையாக கழற்றி வீசினான். இருகைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி அங்கே நின்று விழிமூடி தன்னுள் அந்த அனலுருவை காணலானான்.