களிற்றியானை நிரை

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73

பகுதி ஏழு : பெருசங்கம் – 5

சுதமன் நகருக்குள் செல்ல விரும்பவில்லை. உப்பரிகையில் நின்று அவர் நகரை நோக்கிக்கொண்டிருக்கையில் ஓர் அச்சத்தை உணர்ந்தார். அவ்வச்சம் எதனாலென அவருக்கு தெரியவில்லை. உயரமான பாறையில் நின்று கீழே கொந்தளிக்கும் கடலை பார்ப்பதுபோல தோன்றியது. மீண்டும் தன் அறைக்குச் சென்று தன் கைகளுக்குள் நிற்கும் சிறு அலுவல்களில் மூழ்கிவிடவேண்டும் என்று விழைந்தார். உப்பரிகையிலிருந்து விழுந்துவிடுவார் என்று அஞ்சியவர்போல அவர் கைப்பிடிகளை பற்றிக்கொண்டார்.

அவர் நெடுநாட்களாக விழைந்தது தலைகால் புரியாமல் வெறிகொண்டு வேலை செய்வதை, வேலையின் முடிவில் அடையும் இனிய களைப்பின் நிறைவை, தானே என நின்று ஆற்றும் பொறுப்புகளை, பிறர் மேல் ஆணைகளைச் செலுத்தும் இடத்தை, அதன் தோரணைகளை, மிடுக்கை. ஒவ்வொருமுறை அஸ்தினபுரியின் அமைச்சர்களை பார்க்கையிலும் ஒருநாள் அதைப்போல தானும் தலைஎழுந்து விழிகூர்ந்து மஞ்சலில் அமர்ந்து செல்லவேண்டும் என்று கனவுகண்டார். அவர்களின் பாவனைகளை கூர்ந்து நோக்கினார். அவர்களிடம் சலிப்பும் கூர்மையும் ஒன்றெனக் கலந்திருந்தன. அவர்கள் விலகியவர்கள் போன்ற உடலசைவுகளும் உள்ளே ஊடுருவிக்கலக்கும் ஆணைகளும் கொண்டிருந்தனர்.

ஆனால் அவர் அஸ்தினபுரியின் அலுவல்பணிக்கு வந்தபின் அவருக்கு பொறுப்பான பணி ஏதும் அளிக்கப்படவில்லை. அவர் முதலில் அலுவலர்கணக்குப் பொறுப்புக்கு அமர்த்தப்பட்டார். நாளெல்லாம் ஊழியர்களின் பெயர்களையும் நிலைகளையும் ஓலைகளில் பொறித்து ஓலைத்தொகைகளை கட்டுகளாக்கி அக்கட்டுகளை மேலும் கட்டுகளாக்கி அவற்றை பேழைகளில் இட்டு அப்பேழைகளுக்கு எண்களிட்டு அடுக்கினார். பெயர்கள் கூட திரும்பத்திரும்ப வந்தன. எதைச் செய்தாலும் ஏற்கெனவே பலமுறை செய்ததுபோலத் தோன்றியது. அரைத்துயிலிலேயே அதை செய்யமுடிந்தது. ஆகவே எப்போதும் அவர் உடலில் துயில் இருந்துகொண்டிருந்தது.

அதன்பின் அவருக்கு பணிமேம்பாடு அளிக்கப்பட்டது. கருவூலத்தின் கணக்கர். அங்கே நுழைகையில் அவர் கிளர்ச்சி அடைந்திருந்தார். கருவூலத்தின் செல்வக்குவைகளுக்கு அவரே பொறுப்பு என்று. ஆனால் அவர் அங்கே குறைவாகவே செல்வங்களை பார்த்தார். கருவூலச்செல்வங்கள் எங்கோ இருக்க அவை பொறிக்கப்பட்ட ஓலைகளை கணக்கிட்டு அடுக்குவதையே அங்கும் அவர் மீளமீளச் செய்யவேண்டியிருந்தது. முன்பு அவர் மானுட முகங்களை நாளும் பார்க்கமுடிந்தது. கருவூலத்திற்குச் சென்றபின் அவர் காலடியில் நிலம் மறைய ஆழ்ந்து புதைந்தார். தன்னை ஒரு சிறு வேர் என உணர்ந்தார். எவருமே பார்க்காத, ஓசையோ வண்ணமோ இல்லாத ஒரு ஆழ்வு மட்டுமே. அவர் உடல் வெயில் படாமல் வெளிறியது. ஒளி காணாது விழிகள் மங்கலாயின. அமர்ந்து அமர்ந்து உடல் குடம் போலாயிற்று.

“நான் விழைவதெல்லாம் ஒரு புரவியின் வாலை பிடித்துக்கொண்டு ஓடுவதை… அது என்னை கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளில் கொண்டு செல்லட்டும். பள்ளங்களில் தள்ளி கொன்றாலும் சரி… இப்படி அமர்ந்து அமர்ந்து துருப்பிடிப்பதைவிட அது மேல்” என்று அவர் தனக்கே சொல்லிக்கொண்டார். அவரிடம் உரையாட அங்கே எவருமில்லை. அவரே தன்னுடன் தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் தன்னுடன் பேசும் ஒருவனை தன் எதிரில் உருவாக்கிக்கொண்டார். அவனிடம் மீண்டும் மீண்டும் தன் விழைவை, தயக்கத்தை, சலிப்பை பற்றி சொல்லிக்கொண்டார்.

அறுந்து விழுந்ததுபோல ஒரே நாளில் அவர் அஸ்தினபுரியின் பெருஞ்சுழலுக்குள் வந்தார். வந்த அன்றே நூறுபேரை சந்தித்தார். ஆயிரம் ஓலைகளை படித்தார். அஸ்தினபுரியை இருமுறை சுற்றிவந்தார். திரும்பிச்சென்று தன் அறையை அடைந்தபோது மஞ்சத்தில் குழைந்து விழுந்து அக்கணமே துயின்றார். பின்னிரவில் உள்ளம் விழித்துக்கொள்ள எழுந்தபோது களைப்பு முழுமையாக அகன்றிருந்தது. உள்ளம் ஊக்கம் கொண்டிருந்தது. வெல்வதற்கு இதோ உலகம் எதிரே விரிந்திருக்கிறது. நீராடி ஆடைமாற்றி அலுவல் அறைக்குச் செல்கையில் அவர் சிறுவன்போல ஓடிக்கொண்டிருந்தார்.

ஆனால் மிகச் சில நாட்களிலேயே அவருக்குத் தெரிந்தது, அத்தகைய இடைவிடாத உழைப்பின் முதல் விளைவு என்பது அகம் என ஒன்றில்லாமல் ஆவதுதான் என. அவருள் ஓடிக்கொண்டே இருக்கும் சொற்பெருக்கு முற்றாக மறைந்தது. அவர் தன்னை தான் என உணர்ந்தே பல நாட்களாகின்றன என திகைப்புடன் ஒருமுறை எண்ணிக்கொண்டார். அகம் அற்ற ஒருவராக ஆகிவிட்டிருந்தார். இனிய பகற்கனவுகள் முழுமையாகவே அகன்றுவிட்டிருந்தன. அவருக்குள் எழுந்த எல்லா கனவுகளும் வெளியே அவர் செய்துகொண்டிருந்தவற்றின் நீட்சியாக, விடுபடல்களின் நிரப்புகைகளாக மட்டுமே இருந்தன. அவர் மீண்டுசெல்ல ஏங்கினார். தித்திக்கும் பகற்கனவுகளுடன், இனிய கதகதப்பான அவற்றின் அணைப்புடன் தனித்திருக்க ஏங்கினார்.

அவரைத் தேடிவந்த ஏவலன் பின்னால் நின்றான். சுதமன் திரும்பி அவனை பார்த்தார். “அமைச்சர் சுரேசரின் அழைப்பு” என்று ஏவலன் சொன்னான். சுதமன் பெருமூச்சுடன் கிளம்பினார். அந்த சில கணங்கள் மட்டுமே அவருக்கு ஓய்வு. இனி எப்போதாவது அவர் தன்னை தான் நோக்கி அமர்ந்திருக்கும் கணம் வாய்க்குமா? அதற்கு வாய்ப்பே இல்லை என்று பட்டது. அஸ்தினபுரி பெருஞ்சுழி ஒன்றின் கண் என ஆகிவிட்டிருக்கிறது. அதற்கு இனி ஒரு கணமும் ஓய்வில்லை. அவர் இடைநாழியினூடாக நடக்கும்போது அங்கே ஏவலர்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருப்பதை கண்டார். அவர்களின் காலடிகளும் பேச்சொலிகளுமாக அந்த அரண்மனை முழக்கமிட்டுக்கொண்டிருந்தது.

சுரேசர் அறையில் வழக்கம்போல சுழற்றிச் சுழற்றி பறக்கச்செய்யும் அலுவல்களின் உச்சவிசையில் இருந்தார். அவர் வணங்கியபோது கையை வீசி அமரச் சொல்லிவிட்டு அவர் அருகே நின்றிருந்த தொலையமைச்சர் சுபதத்தரிடம் “அது எதிர்பார்த்ததுதான். துவாரகை இந்த விழாவில் கலந்துகொள்ள மறுக்கும். மதுராவும் இங்கே வர வாய்ப்பில்லை. ஆனால் இது ராஜசூயம், நாம் எவரை எவ்வண்ணம் அழைத்தோம், எவரை விட்டுவிட்டோம் என்பதெல்லாம் காவியங்களில் பதிவாகும். சொல்லில் நிலைகொள்ளும்” என்றார். சற்று குரல் தழைய “கிருஷ்ணை சுயோதனரின் மகள். அவர் தன் தந்தை கொல்லப்பட்டதை இன்னும் மறக்கவில்லை, எவ்வகையிலும் அச்செயலில் இருந்த அறமீறலை ஏற்கவில்லை” என்றார்.

சுபதத்தர் “செய்தியை நான் முழுமையாக அறிவிக்கக்கூட அரசி காத்திருக்கவில்லை. சீற்றத்துடன் அரியணையிலிருந்து எழுந்துவிட்டார். திரும்பிச் செல்க, திரும்பிச் செல்க என்று கூச்சலிட்டார். அது பழிபடிந்த முடி. அதன் நிழலும் நமக்குத் தேவையில்லை என்று கூறியதுமே குரல் உடைய அழுதார். நான் மேற்கொண்டு ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அரசர் சாம்பனும் ஒன்றும் சொல்லவில்லை. அவையிலிருந்தோர் அனைவரும் எழுந்துவிட்டனர். அமைச்சர்கள், குடித்தலைவர்கள் அத்தனைபேரும் சீற்றத்துடன் முழக்கமிட்டனர். வேண்டியதில்லை, அஸ்தினபுரியுடன் எந்த உறவும் வேண்டியதில்லை என்று அமைச்சர் ஒருவர் கூவினார். ஒருநாள் நாம் படைகொண்டு செல்வோம். அஸ்தினபுரியை அழிப்போம் என்று குடித்தலைவர் ஒருவர் கூச்சலிட்டார். அரசி திரும்பிச் சென்றுவிட அரசர் என்னிடம் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை அந்தணரே என்றார். நான் தலைவணங்கி எழுந்துகொண்டேன்” என்றார்.

“அது தெரிந்துதான் நாம் அழைப்பை அனுப்பினோம். அவ்வழைப்பின் மெய்மை ஒன்றே. அவர்கள் இங்கே எந்நிலையில் வைக்கப்படுவார்கள் என்பது. அவர்கள் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு நாம் அனுப்பியது முதன்மை ஷத்ரிய அரசுகளுக்கு நிகரான அழைப்பு என்னும் செய்தி இந்நேரம் அத்தனை ஷத்ரியர்களுக்கும் சென்றிருக்கும். அது நாம் இளைய யாதவருக்கு அளிக்கும் மறுமதிப்பு. இது அவருடைய வெற்றி, இவையனைத்தும் அவர் நமக்களித்த கொடை. யாதவர்களுடையதே இந்த நாநிலம் இன்று” என்றார் சுரேசர். சுபதத்தர் “மதுவனத்திலிருந்து ஒருவேளை அரசர் வரக்கூடும். விருஷ்ணிகளில் ஒரு சாராருக்கு இது அவர்களின் வெற்றி என்னும் எண்ணம் உள்ளது” என்றார்.

சுரேசர் “ஆம், இது விருஷ்ணிகளின் வெற்றி என்று அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எவருமே அதை இன்று வெளிக்காட்டிக்கொள்ள முடியாது. அவர்களில் மூத்தோர் பலராமரின் சொல்காத்திருக்கிறார்கள். இளையோர் சாம்பன் முதலிய அரசர்களின் ஆணையில் இருக்கிறார்கள். நாம் செய்யக்கூடுவதொன்றும் இல்லை” என்றார். சுபதத்தர் “நான் எண்ணிக்கொண்டேன், அவர்கள் இத்தருணத்தில் அஸ்தினபுரியுடன் நின்றால் இன்னும் பல நூற்றாண்டுகாலம் பாரதவர்ஷமே நம்மிடம்தான் இருக்கும்” என்றார். சுரேசர் புன்னகைத்து “ஊழ் வகுக்கும் வழியே இன்று அவர்களின் நிலைப்பாடு என எழுகிறது” என்றார்.

சுபதத்தர் “நம் இளவரசர் அங்கே நன்கு தேறியிருக்கிறார். அவருடைய நிலையை அரசரிடம் விளக்கும்பொருட்டு அங்கிருந்து ஒரு மருத்துவரையும் அழைத்துவந்துள்ளேன்” என்றார். “இளவரசரை நானே நேரில் பார்த்தேன். நன்கு உடல் கொண்டுவிட்டார். சில மாதங்களுக்கு முன் கையளவே இருந்தார் என்றபோது நம்பவே முடியவில்லை” என்றார். சுரேசர் “அது இவ்வகை குழந்தைகளின் இயல்பு. அவை உயிர்வாழும் வேட்கை கொள்கின்றன. பெரிய தீயை விட சிறிய தீ பற்றி எரிந்து ஏறும் வெறிகொண்டது என்பார்கள்” என்றபின் புன்னகைத்து “யார் கண்டார், அவர் அவருடைய பாட்டியைப்போல பெருந்தோள் கொண்ட மாமல்லராக வளரவும் கூடும்” என்றார்.

சுபதத்தர் “மைந்தனுக்கு ஐம்படைத்தாலி அணிவிக்கும்வரை அங்கேயே இருப்பது நல்லது என்பது மருத்துவர் கூற்று” என்றார். அவர் அப்போதுதான் சுதமனை பார்த்தார். சுரேசர் தலையசைக்க எழுந்து தலைவணங்கினார். சுதமன் “ஆணை எதிர்பார்த்து வந்தேன்” என்றார். சுரேசர் “செய்திகளை ஒன்றுவிடாமல் அரசருக்கும் அரசிக்கும் கூறுக, சுபதத்தரே! அனைத்தும் முறைப்படி செல்கிறது என்பது நிறைவளிக்கிறது” என்றார். “ஆம், இவ்வண்ணமே மங்கலமாகுக!” என்றபின் சுபதத்தர் வெளியே செல்ல சுரேசர் சுதமனிடம் சற்று பொறுக்கச் சொல்லிவிட்டு திரும்பி அப்பால் நின்ற ஒற்றர்தலைவன் சிம்மசேனனை அருகே வரசொன்னார். சொல்க என கைகாட்டினார்.

சிம்மசேனன் “ஒற்றர் செய்திகளை தொகுத்திருக்கிறேன்… ஆரியவர்த்தத்திலும் தென்னகத்திலும் கிழக்கிலும் யவனத்திலும் நாம் அழைத்துள்ள அரசர்களில் எவருமே வருவதற்கு மாற்று தெரிவிக்கவில்லை. வரிசை முறைமை குறித்து சில மாற்றுச்சொற்களை சொன்னவர்கள் கீழ்க்கலிங்கன், அமராவதியின் அரசன், பல்லவன் மூவரும் மட்டுமே. அவர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் கூடுதல் சொல் ஒன்றும் தேவைப்படலாம். வரவிருக்கும் அரசர்களின் பெயர்கள், வரும் நாள், உடன்வருவோர் பெயர்கள் ஆகியவை தனியாக தொகுக்கப்பட்டுள்ளன. அவை சிற்றமைச்சரிடம் அளிக்கப்படும்” என்றான். சுரேசர் சுதமனை நோக்க அவர் எழுந்து அப்பால் விலகி நின்றார். சிம்மசேனன் தாழ்ந்த குரலில் சுரேசரிடம் பேசி முடித்தான்.

அவன் சென்றபின் சுரேசர் திரும்பி சுதமனை அருகழைத்தார். “நீங்கள் உடனே கிளம்பியாகவேண்டும், அமைச்சரே” என்றார். “இன்று இரவுக்குள் நீங்கள் குருக்ஷேத்ரத்தை சென்றடையலாம். நாளை முதற்பொழுதில் அங்கிருக்கவேண்டும்.” சுதமன் தலைவணங்கினார். “அரசர் ஒரு புற்குழலை அளித்திருக்கிறார். அது அரசர் பீஷ்ம பிதாமகருக்கு அளிக்கும் பரிசு. உண்மையில் அதை அவரிடம் அளிக்கவே நீங்கள் செல்கிறீர்கள். ஆனால் இங்கே ராஜசூயம் நிகழும் செய்தியை முறைப்படி அறிவிக்கும்பொருட்டு நீங்கள் செல்வதாகவே அரசமுறைப் பதிவு இருக்கும். உங்களிடம் அரசரின் திருமுகச்செய்தி அளிக்கப்படும். முறைப்படி பட்டோலையை பீஷ்மரிடம் படித்துக்காட்டி நற்சொல் பெற்று திரும்புக!” சுதமன் தலைவணங்கினார்.

சுரேசர் “அந்தப் புற்குழல் எத்தகையது என்பது உடனிருக்கும் ஓலையில் சொல்லப்பட்டிருக்கும். அதை பீஷ்ம பிதாமகர் முன் படித்துக்காட்டலாம். அவர் ஆணையிட்டபடி செய்யலாம்” என்றார். சுதமன் அப்போதும் அது என்ன என்று எண்ணம் ஓட்டவில்லை. அஸ்தினபுரியில் அவரறியாத சடங்குகள் நடந்துகொண்டே இருந்தன. நகரில் வந்துகுடியேறிய அனைவருடைய சடங்குகளையும் நகர் ஏற்றுக்கொண்டுவிட்டிருந்தது. ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் முற்றிலும் மாறுபட்ட பல சடங்குகள் இருந்தன. அவை அனைத்தையுமே அவர்கள் செய்தார்கள். நாளடைவில் அவை உருகி இணைந்து ஒன்றாகக்கூடும். சுரேசர் “ஆணை பெற்றதும் உடனே இங்கு மீள்க! உமது செய்தியுடன்தான் இங்கே ராஜசூயம் தொடங்கும்” என்றார்.

 

சுதமன் கிளம்பும் வரை ஒரு நிலையின்மையில் இருந்தார். குருக்ஷேத்ரம் என்னும் சொல் அவரை துன்புறுத்தியிருந்தது. அந்நகரில் அச்சொல்லைப்போல ஈட்டி என வந்து குத்தும், நஞ்சென உடலில் ஊறிப்பரவும் பிறிதொன்றில்லை. இவ்வளவுக்கும் அங்கிருப்போரில் குருக்ஷேத்ரப் போரை சொல்லால் அன்றி வேறெவ்வகையாலும் அறிந்தோர் மிகச் சிலரே. பெரும்பாலானவர்கள் அதனால் இழப்பை அடைந்தவர்கள் அல்ல, ஈட்டியவர்கள் என்றே சொல்லலாம். ஆயினும் அனைவரும் அச்சொல்லை சித்தத்திலிருந்து விலக்க முயன்றனர். அச்சொற்களின்மேல்தான் அந்தப் பெருவிழவே அள்ளிக்கொட்டி மூடப்பட்டிருந்தது.

ஆனால் கிளம்பும் கணத்தில் அந்நகரின் பித்துவெறியில் இருந்து அகன்று செல்லப்போகிறோம் என்னும் எண்ணம் அவருக்கு உவகையை அளித்தது. ஓரிரு கணங்களிலேயே அவ்வெண்ணத்தை ஒரு கொண்டாட்டமாக வளர்த்துக்கொண்டார். அன்றிரவே சென்று மறுநாள் உச்சிப்பொழுதுக்குள் மீளப்போகிறோம் என்பதையே உளம்பதியச் செய்யாமல் என்றென்றுமென கிளம்புகிறோம் என நடித்துக்கொண்டார். விரைவாகச் செல்லும் விசைத்தேரில் ஏறிக்கொண்டு நகரின் சாலைகள் வழியாக சென்றார். நகர்ச் சாலைகளில் ஒன்று மட்டும் அரசுப்போக்குவரத்துக்காக முற்றிலுமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிலும் தேர்களும் புரவிகளும் நெரிசலிட்டு சென்றுகொண்டிருந்தன. குளம்படியோசைகள் மொத்த நகரமே இடிந்து இடிந்து சரிவதுபோல ஒலித்துக்கொண்டே இருந்தன.

அவர் ஒரு குறுக்குச் சாலையை கடக்கும்போது அப்பால் முச்சந்தியில் ஒரு கூட்டத்தை பார்த்தார். தேர் உயரமான தட்டு கொண்டிருந்தமையால் அவர் கூட்டத்தின் நடுவில் நின்றிருந்த பெரிய சடைமகுடம் கொண்டவரை கண்டுவிட்டார். “நிறுத்துக!” என்றார். “அவர் சார்வாகர் அல்லவா?” தேர்வலன் கடிவாளத்தை இழுத்து தேரை ஓரமாக நிறுத்திவிட்டு “ஆம் அமைச்சரே, நகரிலெங்கும் அவர்கள் தென்படுகிறார்கள். தங்கள் கருத்துக்களை முச்சந்திகளில் கூவிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். சுதமன் நெஞ்சம் படபடப்பதை உணர்ந்தார். “அவர்கள் பேசுவதை நான் இதுவரை கேட்டதில்லை” என்றார். “அவர்களை நகருள் நுழைய ஒப்புவதில்லை அல்லவா?”

“அவர்கள் நுழையலாகாது என்று முறைமையோ ஆணையோ ஏதுமில்லை. ஆனால் அவர்கள் ஒற்றர்கள் அல்ல என்று உறுதி செய்யவேண்டும் என்பது பொதுவான நடைமுறை. ஆகவே அவர்களை தடுத்து நிறுத்தி ஒற்றர்கள் என கூறி திருப்பி அனுப்பிவிடுவார்கள் காவலர்” என்று தேர்வலன் சொன்னான். “பொதுவாக அவர்கள் நகருள் நுழைவதை மக்களும் விரும்புவதில்லை. அவர்கள் மங்கலமற்றவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. குடியை அழிப்பவர்கள், திருவை பழிப்பவர்கள், அரசை எதிர்ப்பவர்கள், தெய்வங்களுக்கு ஒவ்வாதவர்கள். அவர்கள் நோக்கு பட்டால் விதைநெல் பதராகும் என்கின்றனர் வேளிர். அவர்கள் சொல் கேட்டால் பசுக்கள் கருவழியும் என்கின்றனர் ஆயர். அவர்கள் உடல்தொட்ட காற்று பட்டால் பசும்பொன் கருமைகொள்ளும் என்கின்றனர் வணிகர்.”

சுதமனின் நெஞ்சத்துடிப்பு மேலும் கூடியது. “அங்கே செல்வோம்” என்றார். தேர்வலன் “நாம் சென்றுவிடுவதே உகந்தது, அதை சொல்வது என் கடன்” என்றான். “அந்தணர்கள் அவர்களை விழிகொண்டு நோக்குவதே பழி அளிப்பது. பஞ்சகவ்யத்தால் உடல்கழுவி, வேதச்சொல் கொண்டு உளம்கழுவி, ஒருநாள் உணவொழிந்து தூய்மைப்படவேண்டும் என்று நெறி உள்ளது. அத்தனை குலங்களிலும் அவர்களை மைந்தர்கள் நோக்கலாகாது என்னும் நம்பிக்கை உண்டு. அவர்கள் உளம்கட்டும் நுண்சொல் அறிந்தவர்கள். மைந்தர்களை அவர்கள் விழியொடு விழி நோக்கிவிட்டால் அவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிவிடுவார்கள். அவர்களுக்கு தடைகளேதுமில்லை, ஆகவே சார்வாகர் என்னும் சொல்லையே அன்னையர் அஞ்சுகிறார்கள். தந்தையர் அவர்களை எண்ணி எண்ணி கவலைகொள்கிறார்கள்.”

தேர்வலன் அவர்களைப்பற்றிப் பேச மேலும் விழைந்தான். “அவர்களிடமிருக்கும் சொற்களெல்லாம் நஞ்சில் புடமிட்டவை என்கிறார்கள். மீனெறி துரட்டிமுனை என அவர்களின் நோக்கு இளமைந்தரின் உள்ளங்களில் தைத்து கோத்துவிடும். அவர்கள் மைந்தர்களை இழுத்துச்சென்றுவிடுவார்கள். சென்றவர்கள் பின் மீள்வதில்லை. எந்தச் சொல்லும் எவர் விழிநீரும் அவர்களை சென்றடைவதில்லை. அரசும் முடியும் குலமும் குடியும் அவர்களிடமிருந்து ஒழிகின்றன. அவர்களின் தெய்வங்கள் கைவிட்டு அகல்கின்றன. அவர்களை அதன்பின் சார்வாகர் கூடிய சுடுகாடுகளில் சாம்பல் பூசி, பெருச்சாளி கோவணம் அணிந்து, சடைமுடிக்கற்றையுடன் சார்வாகர்களாகவே காணமுடியும்.”

“சார்வாகன் என்று ஒரு மைந்தன் சென்றுவிட்டால் அவனுக்கு நீரும் அன்னமும் அளித்து பலியிட்டு இறந்தோன் என்று சடங்குகளை முடிப்பதே வழக்கம். இல்லையேல் அவன் சொல்லும் தெய்வப்பழியும் அவன் ஈட்டும் குலப்பழியும் அக்குடிக்கே வந்துசேரும்…” சுதமன் மெய்ப்பு கொண்டார். “விந்தை என்னவென்றால் அவர்கள் பழிப்பது முதன்மையாக அந்தணர்களை. ஆனால் அவர்கள் முதன்மையாக நாடுவதும் அந்தண இளைஞர்களையே. அதோ அந்தச் சார்வாகர்கூட முதற்பிறப்பில் அந்தணராக இருக்கவே வாய்ப்பு மிகுதி…” அவரை நோக்கி புன்னகைத்து “நீங்கள் அஞ்சுவது தெரிகிறது, உத்தமரே. அவர்முன் செல்லாமலிருந்தால் போதும். அவர் நோக்கை நாம் காணாமலிருந்தால் நம்மை அவர் ஒன்றும் செய்ய முடியாது” என்றான் தேர்வலன்.

சுதமன் “நான் அவர் சொற்களை கேட்டாகவேண்டும்” என்று தேரிலிருந்து இறங்கிக்கொண்டார். “உத்தமரே, தங்களுக்கு அரசகடமைகள் உள்ளன” என்றான் தேர்வலன். “ஆம், அரைநாழிகைப் பொழுது. அவ்வளவுதான். அதனாலொன்றுமில்லை” என்றார் சுதமன். “உத்தமரே, இது எவ்வகையிலும் உகந்தது அல்ல” என்று தேர்வலன் சொன்னான். “நான் அந்தணன். அறிபவை அனைத்தையும் அறிந்து கடந்தாகவேண்டியதை குலப்பொறுப்பாகக் கொண்டவன். அவருடையதும் மெய்வழிகளில் ஒன்றே. நான் கற்ற அரசுசூழ்தல் நூல்கள் அனைத்திலும் சார்வாக மெய்மை என ஒரு தரப்பு கற்பிக்கப்பட்டுள்ளது. சார்வாகம் அறியாமல் அரசுக்கல்வி நிறைவுறுவதில்லை என்றே சொல்வார்கள். ஆனால் நான் கற்றது சார்வாகமா அன்றி சார்வாகப் பழிப்பா என எனக்கே ஐயமுள்ளது. அதை அவரிடமிருந்தே கேட்டு அறிந்துகொள்கிறேன்” என்றார்.

தேர்வலன் “அவர்கள் வேதப்பழிப்பு கொண்டவர்கள். வைதிகரின் நோன்பை முறித்து நெறியை அழிப்பவர்கள்” என்றபடி அவருக்குப் பின்னால் வந்தான். தன் சொற்களாலேயே சுதமன் மேலும் தூண்டுதல் கொண்டுவிட்டார் என்பதை அவன் உணர்ந்துவிட்டிருந்தான். தானறிந்த ஒன்றை சொல்லிவிடவேண்டும் என்னும் எழுச்சியால் பிழை இழைத்துவிட்டோம் என பதற்றம் கொண்டிருந்தான். “சம்புகரே, வேதமறிந்தவன் வேதப்பழிப்பையும் அறிந்திருக்கவேண்டும். அவர்கள் முறிக்கும்படி என் நோன்பு இருக்குமென்றால் அது நோன்பே அல்ல. அவர்கள் அழித்தால் அழியுமென்றால் அது நெறியும் அல்ல” என்றபின் சுதமன் முன்னால் நடந்தார்.

தேர்வலன் தத்தளிப்புடன் தேர் அருகே நின்றுவிட்டிருந்தான். சுதமன் தயக்கமான காலடிகளுடன் நடந்தார். செல்லச்செல்ல அவர் காலடிகள் விசைகொண்டன. அப்போது பெருமுரச ஓசையை கேட்டார். நின்று செவிகொண்டார். சற்று அப்பால் முரசமேடையில் அது ஓசையிட்டது. அது அமைந்ததும் நகரமே முற்றாக அடங்கியது. கடல் கற்பரப்பாக ஆனதுபோல. முரசறைவோனின் அருகே நின்ற நிமித்திகன் “வெற்றி எழுக! விளங்குக மங்கலம்!” என்று கூவினான். அவன் குரல் தெளிவாக ஓங்கி ஒலித்தது. உரத்த குரல் எழுப்புவதற்கு குலமுறையாகவே பயின்றவன். அது பெண்குரலோ என ஐயுறச்செய்யும் வெண்கலத்தன்மை கொண்டிருந்தது.

“எழுக தெய்வங்கள்! மகிழ்க மூதாதையர்! பொலிக திசைத்தேவர்கள்! விளங்குக ஐம்பெரும் பருக்கள்! ஆகுக பெருமங்கலம்!” என்று அவன் கூவினான். “அறிக குடியினரே, யயாதியின் கொடிவழிவந்தவர், குருவின் குலத்தவர், ஹஸ்தியின் முடிசூடியவர், பிரதீபரின், சந்தனுவின், விசித்திரவீரியரின், பாண்டுவின் மைந்தர், அஸ்தினபுரியையும் இந்திரப்பிரஸ்தத்தையும் ஆள்பவர், பாரதவர்ஷத்தின் முதன்மைப் பேரரசர் யுதிஷ்டிரனின் அறிவிப்பு இது!” முரசு மீண்டும் ஒருமுறை முழங்கி அமைந்தது.

“கேளுங்கள், விண்ணளந்த மணிவண்ணனைப்போல தன் நான்கு கைகளையும் நான்கு புறமும் வீசி பேரரசர் யுதிஷ்டிரன் பாரதவர்ஷத்தை வென்றார். பனிபடு நெடுவரை வடக்கும், உருகெழு குமரியின் தெற்கும் கரைபொரு தொடுகடல் குணக்கும் தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதல் கட்டின் நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது ஆநிலை என இத்தொல்நிலத்தை முழுதும் வென்ற முதல் மன்னர் என்றானார். அவருடைய வேள்விப்புரவிகள் எதிர்ப்படைக்கலம் ஒன்றுகூட நில்லாமல் வென்று திறைச்சுமை கொண்டு திரும்பி நகரணைந்துள்ளன. அவை வெல்க! அவற்றின் குளம்புகள் பட்ட இந்நிலம் வெல்க! வெற்றிவேல் வீரவேல்!” முரசுகள் ஒலிக்க கூடவே நகரின் முழக்கமும் எழுந்தது. “வெற்றிவேல் வீரவேல்!” வெற்றிவேல் வீரவேல்!”

அறிவிப்பாளன் தொடர்ந்தான். “பரிவேள்வியின் நிறைவில் அரசநிறைவுவேள்வி இயற்றப்படவேண்டும் என்பது நெறி. இப்பெருநகரில் அரசப்பெருவேள்வி இதோ முறைப்படி அறிவிக்கப்படுகிறது. நாளை வான்கதிர் வடக்குமுகம் கொள்ளும் முதல் நாளில் எழுகதிர் வேளையில் வேள்விக்கு கால் நாட்டப்படும். வேள்விப்பந்தல் ஏற்கப்படும். வேள்விக்களிறும் வேள்விக்காளையும் வேள்விப்பசுவும் மங்கலம் செய்யப்படும். வேள்விமரம் நடப்படும். நாளை உச்சிப்பொழுதுக்குப் பின் பெருங்கொடையாட்டு தொடங்கும். கருவூலம் முற்றொழிய ஈந்து தன் கையொழிந்து தெய்வங்கள் முன் தன்னை நிறுத்துவார் அரசர். அதன்பின் வேள்விச்செல்வத்தை மட்டும் ஈட்டிக்கொண்டு மும்முடி சூடி அரியணை அமர்வார். வேதம் மழையென குளிர்ந்திறங்கும். அன்னமென பெருகிநிறையும். கன்றென பெற்றுபரவும். பொன் என ஒளிசூடும். மணியென விழிகொள்ளும். அனைத்து மங்கலங்களுமாகி இந்நகரை நிறைக்கும். ஆம், அவ்வாறே ஆகுக!”

மீண்டும் பெருமுரசம் முழக்கமிட அஸ்தினபுரியின் வாழ்த்தோசையும் உவகைக்கூச்சலும் உடலை அறைந்து அனைத்துப் புலன்களையும் மூடியது. சுவர்கள் அதிர்ந்தன. கற்தூண்கள் துடிதுடித்தன. விழிநோக்கை ஒலி மறைத்தது. பின்னர் மெல்ல மீண்டபோது சுதமன் மூச்சுத்திணறிக்கொண்டிருந்தார். விழுந்துவிடாமலிருக்க ஒதுங்கி கற்தூணை பிடித்துக்கொண்டு நின்றார். மீண்டும் தேருக்கே சென்றுவிடலாமா என்று எண்ணினார். திரும்பி காலடி எடுத்து வைக்கவிருந்தபோது சார்வாகரின் பெருஞ்சிரிப்பொலியை கேட்டார். சிரிக்கும் அம்முகத்தையும் கண்களையும் அருகெனக் கண்டார். திரும்பி அவரை நோக்கி நடந்தார்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72

பகுதி ஏழு : பெருசங்கம் – 4

சுதமன் தன் அறைக்கு மீண்டபோது உளநிறைவால் முகம் மலர்ந்திருந்தார். இடைநாழியினூடாக தனியாக மெல்லிய குரலில் தானறிந்த பழம்பாடல் ஒன்றை முனகியபடி நடந்தார். அவரை வழியில் கண்ட சம்வகை “என்ன, முகமெங்கும் மகிழ்ச்சி?” என்றாள். “இனி செய்யவேண்டியதொன்றும் இல்லை. அனைத்தும் அவற்றுக்குரிய இடங்களில் சென்றமைந்துவிட்டன” என்று சுதமன் சொன்னார். “இன்னும் சிக்கல்கள் உள்ளன, ஆனால் அனைத்தும் முறையமையும் என்னும் நம்பிக்கை வந்துவிட்டது.”

ஆனால் சம்வகை “அது ஓர் உளமயக்கு. நாம் செய்த ஒரு பணி சரியாக அமைந்துவிட்டதென்றால் இங்கே அனைத்தும் சரியாக அமைந்துவிட்டது என்னும் நிறைவை நாம் அடைந்துவிடுகிறோம். எதிலாவது ஒரு பிழையை கண்டடைந்து அதை சீரமைத்துவிட்டோம் என்றால் பலநூறு பிழைகளை விட்டுவிடுகிறோம்” என்றாள். சுதமன் எரிச்சலுடன் “இது முடிவேயில்லாத அலைபாய்தல். இந்த அலைபாய்தல் நமக்கு தேவையாகிறது. எங்கோ ஏதோ இடர் இருந்துகொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டால்தான் நாம் நமக்குரிய மைய இடத்தில் நிறைந்து அமைய முடியும். இடர் இல்லையென்றாலும் உருவாக்கிக் கொள்வோம்” என்றார்.

சம்வகை சிரித்து “இருக்கலாம். ஆனால் என் உள்ளம் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறது. அது பிழையாக இருந்தால் நன்று. ஆனால் பொய்யான நிறைவால் எதையேனும் நான் தவறவிட்டுவிட்டேன் என்றால் அதன்பொருட்டு வருந்தவேண்டியிருக்கும்” என்றாள். சுதமன் “மெய்தான்” என்றார். “ஆனால் எனக்கு இப்போது ஒரு பெரிய நிறைவு உருவாகியிருக்கிறது. இதில் திளைக்க விழைகிறேன். ஆகவே இதை தவறவிட விரும்பவில்லை” என்றார். சம்வகை “நாம் இருவரும் இரு வழிகளில் செல்பவர்கள்” என்றாள்.

சுதமன் சற்று தணிந்தார். “இதுவரை பலவகையான இடர்களை நான் எண்ணி கணக்கிட்டுக்கொண்டிருந்தேன். ஷத்ரிய அரசே மீண்டும் எழுகிறது என்னும் ஐயமும் கலக்கமும் கொண்ட நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் சிலர் இருந்தனர். அவர்கள் ஏதேனும் செய்யலாம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. நாகர்களை உண்மையாகவே அஞ்சிக்கொண்டிருந்தேன், ஆகவே அவர்களைப் பற்றி எண்ணவே இல்லை. இப்போது எல்லாமே சரியாக அமைந்துவிட்டது. இங்கே இனி புறக்குடியினரோ நாகர்களோ எந்த இடரையும் செய்யப்போவதில்லை. ஐயமே வேண்டியதில்லை” என்றார்.

“ஏனென்றால் அனைவரையும் அணைத்து அருகமையச் செய்யும் வழிமுறையையே அரசர் கைக்கொள்ளவிருக்கிறார். இந்த நகரம் இனி அனைவருக்கும் உரியதென்றாகும். இங்கே எவரும் எதிரியில்லை என்ற நிலை வரும். ஆகவே எந்த அச்சமும் தேவையில்லை.” அதை சொல்லி முடித்தபோதே அதிலிருந்த பொய்மை தெரிய அவர் முகம் சிவந்தார். விழிகளை திருப்பிக்கொண்டு “மெய்யாகவே அவ்வண்ணம்தான் நிகழும்… தெய்வங்கள் நம்முடன் இருக்கும்” என்றார்.

சம்வகை புன்னகைத்து “அவ்வண்ணமென்றால் நன்று” என்றாள். “எனில் சொல்க, நீங்கள் எதிர்பார்ப்பது என்ன வகையான இடர்?” என்று அவர் கேட்டார். “அதை அறிந்தால் உடனே அதை தீர்க்கச் சென்றிருக்கமாட்டேனா?” என்றாள் சம்வகை. “நான் கருதும் இடர் என்ன என்று எவ்வகையிலும் என்னால் எண்ண முடியவில்லை. ஆனால் ஏதோ ஓர் இடர் எங்கோ உள்ளது என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது” என்றாள்.

“ஏன்?” என்று அவர் கேட்டார். “இந்த மங்கலம், இந்த அழகு, இந்த ஒழுங்கு… இவ்வண்ணம் ஒரு முழுமை நிகழமுடியாது. இதை இதற்குள் இருப்பவர்களுடைய ஆழத்தில் வாழும் தெய்வங்களே விழையா…” என்றாள். சுதமன் தளர்ந்து “அதற்கு நாம் செய்வதற்கொன்றும் இல்லை…” என்றார். “ஆம்” என்றபின் சம்வகை தலைவணங்கி அப்பால் சென்றாள். அவர் அவளுடைய கவசஉடை எடையுடன் அசைந்து செல்வதை நோக்கிக்கொண்டு நின்றார். அவருடைய ஊக்கம் சற்று குறைந்தது. ஆனால் உடனே அது மீண்டும் எழுந்தது. மீண்டும் அவர் முனகியபடி நடந்தார். அந்த மெட்டு அவருக்குள் நாவுக்காக காத்து நின்றிருந்தது. பழைய சூதர்பாடல். “எதிரிகள் அகல்கிறார்கள். ஏனென்றால் நான் எதிர்ப்பை துறந்துவிட்டேன்.”

அவர் தன் அறைக்குச் சென்று சற்று ஓய்வெடுத்தார். துயிலில் இனிய கனவுகள் வழியாக சென்றார். காலையில் விழித்தபோது அவர் முகம் மலர்ந்திருந்தது. அதைக் கொண்டே அவர் கனவுகளை நினைவுகொண்டார். ஆனால் எவையும் தெளிவாக உருத் தெரியவில்லை. எழுந்து நீராடி ஆடை மாற்றி அவர் சுரேசரின் அரண்மனைக்கு சென்றார். அங்கே இரவென்று ஒன்று நிகழ்ந்ததாகவே தெரியவில்லை. சுரேசர் அப்போதுதான் தன் அறைக்கு துயிலச் சென்றிருப்பதாக சொன்னார்கள்.

சுரேசர் அவருக்கு ஏழு ஆணைகளை இட்டிருந்தார். அந்த ஓலையை அவர் ஒருமுறை புரட்டி நோக்கிவிட்டு நடந்தார். மிக மெல்ல இறகுபோல அரண்மனையின் இடைநாழிகளின் வழியாக சென்றார். ஆங்காங்கே கூச்சலிட்டபடி ஓடிக்கொண்டிருப்பவர்களை கண்டதும் புன்னகைத்தார். அவர்களின் விசை அளித்த கோணலான அசைவுகள் சிரிப்பூட்டின. அவர்கள் நூல்பாவைகளை குரங்குகள் இழுப்பதுபோல அசைகிறார்கள் என எண்ணியதும் அவர் வாய்விட்டு சிரித்துவிட்டார்.

அவரை நோக்கி ஓடிவந்த காவலர்தலைவனாகிய யௌனன் “அமைச்சரே, காவல்படையினர் அனைவருக்கும் உரிய ஆணைகள் சிலவற்றை தலைவி சம்வகை அளித்திருக்கிறார். ஆனால் இங்கே காவலர்தலைவியர் என எவருமில்லை” என்றான். அவன் சொல்ல வருவதை செவிகொள்ளாமல் சுதமன் “முதலில் உன் உடலை நிலையாக நிறுத்துக! சொற்களின் பொருளை உள்ளம் வாங்குக…” என்றார். “மேலும் நீ இதை சொல்லவேண்டியவன் நான் அல்ல. நான் ஆட்சித்துறை அமைச்சன்” என்றபின் மேலும் நடந்தார். அரண்மனையின் அறைகளிலிருந்தெல்லாம் ஓசைகள் எழுந்துகொண்டிருந்தன. அப்போதுகூட பழுதுநீக்கும் பணி முடிந்திருக்கவில்லை. ஒரு தூணின் வெண்கலப் பட்டையை அப்போதுதான் பொருத்திக்கொண்டிருந்தார்கள்.

சுதமன் அரசவை மண்டபம் நோக்கி சென்றார். அவரைக் கண்டதும் அங்கிருந்த சிற்றமைச்சன் வித்யோதன் அவரை நோக்கி ஓடிவந்தான். “உத்தமரே, இங்கே எனக்கு ஆணைகள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் செய்யவேண்டியதென்ன என்று தெரியவில்லை. நோக்குக! இந்த அவைக்கூடம் மிகத் தொன்மையானது. ஆகவே மிகச் சிறியது. இங்கே வந்தமரக்கூடும் அரசரின் நிரை மிகப் பெரியது. எவருக்கு எங்கெங்கே பீடம் என சொல்கிறார்கள். இங்கே அத்தனைபேர் அமரமுடியாது” என்றான்.

சுதமன் “நீ சொன்னதே அதற்கான மறுமொழி. இது மிகமிகத் தொன்மையான கூடம். ஹஸ்தியும் அவர் வழிவந்தவர்களும் அமர்ந்து நாடாண்ட அரியணை. அவர்கள் சூடிய மணிமுடியும் கோலும். அதை மாற்ற முடியாது. வேள்விக்குப் பின் பெரிய அவைக்கூடம் அமைக்கப்படலாம். அப்போதுகூட தொன்மையான நிகழ்ச்சிகள் இங்கேதான் நிகழும்” என்றார். “ஆனால் இடம் வேண்டாமா? நீங்கள் இந்த வெற்று அவையை நோக்கினால் இது பெரிதென்றே தோன்றும். வரவிருக்கும் அரசர்களின் நிரையை நோக்கினால்…” என்று வித்யோதன் சொன்னான்.

சுதமன் “அதை சுரேசர் நோக்குவார். நம் பணி அதுவல்ல. அரியணை துலக்கப்பட்டுவிட்டதா?” என்றார். “அருமணி துலக்குவோர் எழுவர் நேற்றிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் வித்யோதன். சுதமன் அப்போதுதான் அவைமேடையில் அரியணைகளை துலக்கிக்கொண்டிருப்பவர்களை கண்டார். அவர்கள் அரியணையின் பொற்செதுக்குகளையும் அருமணிப் பதிப்புகளையும் துடைத்துக்கொண்டிருந்தனர். “திரும்பத் திரும்ப ஒன்றையே செய்துகொண்டிருக்கிறார்கள். துலங்கிவிட்டது, ஒளிவந்துவிட்டது என்று தோன்றும். ஆனால் துலக்கத்துலக்க ஒளி மிகுந்தபடியே செல்வதையும் காணமுடிகிறது” என்றான் வித்யோதன்.

சுதமன் அந்த அரியணையின் காட்சியால் விழிமயங்கி அசைவிலாது நின்றார். அது ஒரு மாபெரும் மலர்போலிருந்தது. மஞ்சள் மலர். செம்மணிகள் பதிக்கப்பட்டது. அவர் உள்ளம் விம்மியது. அது கோன்மையின் அடையாளம் அல்ல. பல்லாயிரம் படைக்கலங்களால் காக்கப்படும் மையம் அல்ல. வேதச்சொல்லும் அல்ல. அதற்கும் அப்பால் மேன்மையேறிய ஒன்று அதில் இருந்தது. அதை வடிவமைத்த பொற்கொல்லனின் கைகளில் அமைந்து ஒரு தெய்வம் தன்னை எழுப்பிக்கொண்டிருக்கிறது. அது சொல்லுக்கு ஆழத்தை அளிப்பது. வெறும் கோலை காவல்தெய்வமென நிலைநிறுத்துவது.

அவர் பிற அந்தணச் சிறுவர்களைப்போல குருநிலையில் நூல்நவிலச் சென்றபோதே அரியணைகள், மணிமுடிகள், செங்கோல்கள் குறித்த இளிவரலைத்தான் முதலில் கற்றுக்கொண்டார். அவை நிலம்நாடுவோர், தான்தான் என தருக்குவோர், விழைவுக்கு அப்பால் ஏதுமற்றோர் தங்களை தெய்வமென்று அமர்த்திக்கொள்ளும் பொருட்டு உருவாக்கிக் கொண்டவை. அவை எளிய மானுடரை ஆணவம் கொண்டவர்கள் ஆக்குகின்றன. பிறரை கொன்று அழிக்கவும் தன்னைத்தானே அழித்துக்கொள்ளவும் செய்கின்றன.

“அந்தணனின் பணி என்பது காட்டுயானை என கட்டற்று நாற்புறமும் திமிறும் அந்த ஆற்றலை கட்டுப்படுத்துவது. செவிகளில் சொற்களாக, துரட்டியின் கூர்முனையாக அதை ஆள்வது” என்று அவருக்கு கற்பிக்கப்பட்டது. “அறிவின்மைக்குத் துணைநிற்கும் அறிவையே அமைச்சுப்பணி என்கிறோம்” என்று அவருடைய ஆசிரியர் கணபத்ரர் வகுப்பில் சொன்னார். அவரும் உடனிருந்தோரும் நகைத்தனர். “அறிவின்மையை எதுவும் அறிவென ஆக்கிவிடாது. அறிவின்மையின் தீங்கை தணிக்கலாம், அதன் விசையை குறைக்கலாம், மீறி அது இழைக்கும் தீங்குகளை சொல்லால் நிகர்செய்யலாம்.” அத்தனை மாணவர்களுக்கும் அதுவே ஆழப் பதிந்தது. அது மானுடத்திரளை உண்டு ஒளிகொள்ளும் ஒரு கொடுந்தெய்வம் என்றே அவரும் எண்ணியிருந்தார்.

ஆனால் அங்கு நின்று அந்த அரியணையை நோக்கிக்கொண்டிருந்தபோது அவர் வெளியே அலைகொண்டிருந்த மக்களின் ஓசையை கூடவே கேட்டார். அங்கிருந்தபடி அது அவ்வோசையை ஆள்கிறது. எத்தனை தலைமுறைகளாக, எத்தனை எத்தனை ஆண்டுகளாக! ஏனென்றால் அது அம்மக்களுக்கு காவல். வெளியே இருந்து வரும் எதிரிகள் முன் அது எல்லை வரம்பென்றாகி அவர்களைச் சூழ்ந்துகொண்டு காக்கிறது. உள்ளிருந்தே எழும் சிதைவுகள் சிதறல்கள் மீறல்களுக்கு முன் மையமென்று அமைந்து அவர்களை தொகுக்கிறது.

அது இல்லையேல் குலங்கள் இல்லை, குடிகள் இல்லை, நாடுகள் இல்லை, உறவுகள் இல்லை, எந்தச் சொல்லும் பயனுறுமதிப்பு கொள்வதில்லை. அதை எளியோர் உயிர்கொடுத்து காக்கிறார்கள். அவர்கள் அதை தங்கள் விழிதொடு தெய்வமென்றே எண்ணுகிறார்கள். அதன்மேல் அமர்பவனுக்கு அது ஆணையிடுகிறது. அவனை நடத்துகிறது. அவன் மீறிச்செல்வான் என்றால் அவனை வீழ்த்தி தன் காலால் நசுக்கிவிடுகிறது. சுதமன் மெய்ப்புகொண்டார். அதை வித்யோதன் உணர்கிறானா என்று திரும்பி நோக்கி மேலாடையை சீர்செய்துகொண்டார்.

வித்யோதன் உரக்க தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான் “இன்று மாலையே வேள்விக்கான அறிவிப்பு எழக்கூடும் என்றார்கள். இன்று உச்சிப்பொழுதுக்குப் பின் நாள் குறித்திருக்கிறார்கள். ஆணையோலையை தெய்வங்கள் முன் படைத்து சொல்பெற்று அமைச்சுநிலைக்கு அனுப்ப அந்தியாகிவிடும். அமைச்சுநிலையில் இருந்து முறையான ஆணை எழவேண்டும். அதன் பின்னரே அது முரசுகளில் எழும்…” சுதமன் தலையசைத்தார். வித்யோதன் “சற்று முன்னர் இளைய அரசர்கள் அரியணையை நோக்க வந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதை கேட்டேன். நாளை காலையிலேயே இங்கே பெருங்கொடையாட்டு தொடங்கிவிடும்… கருவூலத்தைத் திறந்து பொன் அனைத்தையும் அள்ளி அளிப்பார் அரசர்” என்றான்.

சுதமன் “ஆம்” என்றார். அவர் விழிகள் அரியணைகளிலேயே நிலைகொண்டிருந்தன. வித்யோதன் குரல் தாழ்த்தி “ஆனால் இவ்வண்ணம் முழுச் செல்வத்தையும் அளித்தாகவேண்டும் என்பதனாலேயே பெரும்பகுதிச் செல்வங்களை ஆங்காங்கே நிறுத்திவைத்துவிட்டுத்தான் நால்வரும் நகர்புகுந்தார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டேன். அவ்வண்ணமே இருக்கமுடியும். கருவூலம் ஒழிந்த பின் எதிரிகள் படைகொண்டுவந்தால் அதை எவ்வண்ணம் எதிர்கொள்வது?” என்றான்.

சுதமன் அப்பேச்சை தவிர்க்க விழைந்தார். “மணிமுடி எங்கே?” என்றார். “அது கருவூலத்தின் இரும்பறைகளுக்குள்ளேயே மெருகூட்டப்படுகிறது” என்றான் வித்யோதன். “நன்று, நான் அதையும் ஒருமுறை நோக்கவேண்டும்” என்றபின் சுதமன் திரும்பி அவைக்கூடத்தை பார்த்தார். அத்தனை இருக்கைகளும் பழுது நீக்கப்பட்டிருந்தன. அவற்றில் அமர்ந்திருக்கும் பாரதவர்ஷத்தின் அரசர்களை அவர் கண்டார். திரும்பி நோக்கியபோது அரியணையில் அமர்ந்திருக்கும் யுதிஷ்டிரனையும் திரௌபதியையும் கண்டார்.

“காலையில் பெருங்கொடை தொடங்கினால் கருவூலம் முற்றொழிவதுவரை கொடை நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது நெறி… எத்தனை நாட்களாயினும்” என்றான் வித்யோதன். “ஆனால் இங்கே மக்கள் கொந்தளிப்பதை நோக்கினால் ஒரு பகலுக்குள்ளேயே கருவூலம் ஒழிந்துவிடும்… அரசகுடியினர் ஐவரும் அரசியும் முனிவருக்கும் அந்தணருக்கும் பாணருக்கும் புலவருக்கும் கொடையளிக்கிறார்கள்… எளியோருக்கு அரசமுத்திரை பதித்த பொன்னை அமைச்சர்கள் வழங்குவார்கள். கொடையளிப்பதற்கென்றே முதிய அந்தணர் நூற்றுவர் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.”

வித்யோதன் அந்த அவைக்கூடத்தில் இருந்து அவன் அறிந்த அனைத்தையும் சொல்லும் விழைவுகொண்டிருந்தான். சுதமன் அவனிடம் கையசைவால் விடைபெற்று கருவூலம் நோக்கி சென்றார். மேலும் சொல்லும் விழைவு ததும்பிய உடலுடன் வித்யோதன் அவருடன் சற்றுதூரம் வந்தான். அவன் அகன்று சென்றதும் சுதமன் சலிப்புடன் தலையசைத்தார். உள்ளத்தை உணராமல் வெளியே ஒலிக்கும் மொழிபோல எரிச்சலூட்டுவது வேறில்லை. அவர் கருவூலம் நோக்கிய பாதையில் தனியாக நடக்கையில் தன் அகம் விந்தையான இனிமை ஒன்றில் திளைப்பதை உணர்ந்தார்.

 

சுதமன் முன்பு கருவூலத்தின் நாட்செலவுப் பகுதியிலும் தொல்பொருட்களின் அறையிலும்தான் பணியாற்றியிருந்தார். அருஞ்செல்வப் பகுதிக்கு அடிக்கடி வந்ததில்லை. ஆயினும் காவலர் அவரை நன்கறிந்திருந்தனர். ஆகவே வெறும் தலையசைவுகளுடன் அவர் படிகளில் இறங்கிச் சென்றார். கருவூலத்தின் மையக்கூடத்தில் இடைவரை உயரமான எட்டு குவைகளாக பொற்காசுகளைப் போட்டு சூழ அமர்ந்து சிறிய பட்டுக் கிழிகளில் கட்டிக்கொண்டிருந்தார்கள். சுதமன் அவர்களை பார்த்தபடி நின்றார்.

அங்கிருந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த துணையமைச்சனான சூஷ்ணன் அவர் அருகே வந்து “கொடையளிக்கவேண்டிய பொருட்கள். அனைவருக்கும் சீராக கிடைப்பதற்காக இந்த ஒழுங்கை செய்திருக்கிறோம். குடியினர் ஒவ்வொருவருக்கும் ஏழு பொற்காசுகள், பதினெட்டு வெள்ளிக்காசுகள். குடித்தலைவர்களுக்கு பத்துமடங்கு” என்றான். “பாணர்களுக்கும் அந்தணர்களுக்கும் முனிவர்களுக்கும் கிழிகள் இல்லை. அவர்களுக்கு அளக்காது அளிக்கவேண்டும் என்பது நெறி. ஆகவே வெறும் கைகளால் பொன்னையும் வெள்ளியையும் குனிந்தே நோக்காமல் அள்ளி அள்ளி மும்முறை வழங்கவேண்டும்.”

சுதமன் அந்த பொற்குவைகளை நோக்கிக்கொண்டு நின்றார். “இவை பல நாடுகளிலிருந்து வந்தவை. நூற்றில் ஒருபங்குகூட அஸ்தினபுரியின் நாணயங்கள் இல்லை” என்று சூஷ்ணன் சொன்னான். “பொன்னும் வெள்ளியும் மட்டும்தானா?” என்றார் சுதமன். “இல்லை, அந்தணர் முனிவர் பாணர் புலவர் நால்வருக்கும் அளிக்கப்படும் பொன்னுடனும் வெள்ளியுடனும் அருமணிகளும் கலந்திருக்கும். அவற்றை அளவும் கணக்கும் பார்ப்பதில்லை.” சுதமன் “படைவீரர்களுக்கு?” என்றார். “மறவர் கொடைபெறுவது நெறி அல்ல. ஆகவே அவர்களுக்குரிய பொன் ஊதியமாக இன்றே வழங்கப்படுகிறது. ஏற்கெனவே அனைத்துப் படையினருக்கும் உரிய செல்வம் இங்கிருந்து சென்றுவிட்டது. இன்னமும்கூட செல்லவேண்டியிருக்கும்.”

சுதமன் “மணிமுடி எங்கு துலக்கப்படுகிறது?” என்றார். “தேவயானியின் மணிமுடி பழுதடைந்திருந்தது. அதை சீரமைக்கும் பணி சிலநாட்களுக்கு முன்னரே தொடங்கி நேற்று நிறைவடைந்தது. ஹஸ்தியின் மணிமுடியை ஒளிதுலக்கினர். அதுவும் முடிந்துவிட்டது. வருக!” என்று சூஷ்ணன் அவரை அழைத்துச் சென்றான். அவர்கள் கருவூலத்தின் இடைநாழிகளினூடாகச் சென்றனர். இடைநாழி முழுமையாக தூய்மைசெய்யப்பட்டு உரிய வெளிச்சம் கொண்டு இனிய பாதையாக மாறியிருந்தது.

தர்ப்பைக்கற்றைகளும் பொற்குடங்களுமாக அந்தணர் குழு ஒன்று ஏவலர்களால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டது. “அவர்கள் எவர்?” என்று சுதமன் கேட்டார். “அவர்கள் இங்குள்ள தெய்வங்களுக்கு பூசனை செய்ய வந்தவர்கள். இக்கருவூலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் குடிகொள்கின்றன” என்றான் சூஷ்ணன். “நூற்றுக்கணக்கான தெய்வங்களா? நானறிந்து இங்கிருப்பவை மாமன்னர் ஹஸ்தி இந்தக் கருவூலத்தை கட்டியபோது நிறுவிய எட்டு திருமகள்கள், தேவகணத் தலைவனாகிய யானைமுகனும் குபேரனும் என பத்து தெய்வங்கள் மட்டுமே” என்றார்.

“அது பொதுவாக அறியப்பட்டது. இங்குள்ள தெய்வங்கள் எவை எவை என தொன்மையான சுவடிகளிலிருந்து படித்து எடுத்தார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் இங்கே சிறுதெய்வங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. படைகொண்டுசென்று எதிரிமன்னர்களின் முடிகளை கொண்டுவந்தபோது உடன்வந்த தெய்வங்கள், சில அருமணிகளுடன் வந்த சில தீயவிசைகளை ஆளும்பொருட்டு நிமித்திகர் நிலைநிறுத்திய தெய்வங்கள். சில அருமணிகளே தெய்வங்கள். கருவூலம் ஒழியும்போது அத்தெய்வங்கள் நிலையழிந்துவிடலாகாது என்றனர். ஆகவே முறையான பூசனைகளினூடாக அவர்களை நிலைக்கோள் அடையச்செய்கிறார்கள் அந்தணர்கள்.”

கருவூலத்தின் உள்ளறைகளில் இருந்து மணியோசையும் வேதச்சொல்லும் ஒலித்தன. “இப்போது வேதச்சொல்லுக்கும் அவிப்படையலுக்கும் ஆட்படும் தெய்வங்கள். இரவெழுந்த பின் குருதிகோரும் தெய்வங்களுக்குரிய பலிச்சடங்குகள் உண்டு” என்றான் சூஷ்ணன். “இங்கே ஒவ்வொன்றும் புதிதாக தோன்றிக்கொண்டிருக்கின்றன” என்றார் சுதமன். “இல்லை உத்தமரே, அவை கண்டடையப்படுகின்றன” என்று சூஷ்ணன் புன்னகைத்தான்.

கருவூலத்தின் உள்ளறையைத் திறந்து அவரை சூஷ்ணன் உள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. மெல்லிய காற்றுச் சுழற்சி இருந்தது. மணிமுடியிருக்கும் அறை ஆலயக் கருவறைபோல அமைக்கப்பட்டிருந்தது. அங்கே அணையா விளக்கு எரியும் என்பதை சுதமன் அறிந்திருந்தார். அறையின் நடுவே அரசமேடையில் ஹஸ்தியின் மணிமுடியும் தேவயானியின் மணிமுடியும் இரு பொற்பீடங்களில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குக் கீழே அருமணிகள் அனலென மின்னும் செங்கோல் பிறிதொரு பீடத்தில் இருந்தது. அருகே அரசரின் உடைவாள் பொன்னிறமான நாகம்போல் செதுக்குகள் செதிலென ஒளிர அமைந்திருந்தது. அதைச் சூழ்ந்து பலவகையான படைக்கலங்கள் வைக்கப்பட்டிருந்தன. இருபுறமும் ஏழு திரியிடப்பட்ட நிலைவிளக்குகள் எரிந்தன.

“இங்கே திருமகள் ஒழியலாகாது என ஆணை. ஒவ்வொருநாளும் இவற்றுக்கு கோயில்தெய்வங்களுக்கு நிகரான ஐம்பொருள் பூசனையும் படையலும் உண்டு” என்றான். “ஐம்பொருட்கள் என்னென்ன?” என்று சுதமன் கேட்டார். “தேவயானியின் முடிக்கு கொற்றவைக்குரிய கான்மங்கலங்கள் ஐந்து. ஹஸ்தியின் மணிமுடிக்கு காற்றுத்தேவனுக்குரிய ஐந்து நிலமங்கலங்கள்” என்றான் சூஷ்ணன்.

சுதமன் அந்த மணிமுடிகளை நோக்கியபடி நின்றார். “நாளை அந்தியில் அவை கூடவிருக்கிறது என்றார்கள்… இன்று வேள்விக்கு நாள்குறிக்கும் சடங்கு மேலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது… அந்தணர் அவைகூடி வகுத்தவற்றை அவர்கள் அரசருக்கு அறிவிக்கிறார்கள்… நாளை அரசி திரௌபதி தன் நீள்குழல் முடிந்து அரியணையில் அமர்கிறார். யுதிஷ்டிரன் வஞ்சம் முடித்து கோலேந்துகிறார். இந்நகரில் அறுதிவெற்றி ஒன்று நிகழ்ந்துள்ளது. அறுதிவெற்றியை திருமகள் விரும்புகிறாள் என்பார்கள். இனி இங்கே செல்வம் கொழிக்கும். செல்வமிருக்கும் இடத்தில் கலைகளும் சொல்லும் பெருகும்.”

ஒவ்வொருவரும் சற்றே நிலையழிந்திருப்பதாக சுதமன் எண்ணினார். அவரும்கூட அவ்வண்ணமே இருக்கக்கூடும். அவர் பெருமூச்சுவிட்டார். “பேரரசி குந்தி இங்கில்லை என்பதை நேற்று பலரும் பேசிக்கொண்டனர். அவர்கள் தன் முதிரா இளமையில் விழைந்தது, இன்று அது நிகழ்கையில் எங்கோ இருக்கிறார்.” சூஷ்ணன் அவருடைய எதிர்வினையை எதிர்பார்த்தான். அது எழாதபோது “அப்படிப் பார்த்தால் மூத்தவர் என இங்கே எவருமில்லை. இங்குள்ள எல்லா விழிகளும் புதியவை” என்றான்.

சுதமன் “நான் கிளம்புகிறேன்” என்றார். “நீங்கள் பேரமைச்சர் சுரேசரிடம் சொல்லலாம், இங்கே அனைத்தும் முறையாகவே உள்ளன. எதிலும் குறைவில்லை. ஆணைகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று சூஷ்ணன் சொன்னான். சுதமன் நடந்தபோது அவன் வெளியேவந்து அறைக்கதவை மூடினான். அதன் ஓசை சங்கொலிபோல எழுந்தது.

அவருடன் வந்தபடி “நீடுகாலம் நோன்பிருந்தவற்றை அடையும்போது மானுடர் நிறைவடைவதில்லை என்று நேற்று ஒரு புலவர் பாடினார். ஏனென்றால் அடையும் எதுவும் இழந்தவற்றுக்கு நிகராவதில்லை என்றார். எனக்கு அது மெய் என்று சில தருணங்களில் தோன்றுகிறது. இவர்கள் அடைந்திருப்பவை எல்லாமே தங்கள் மைந்தரின் குருதியை அளித்து அல்லவா?” என்றான் சூஷ்ணன்.

சுதமன் திரும்பி நோக்கினார். சூஷ்ணன் மெய்யாகச் சொல்ல விழைந்தது அதுவே என்று தெரிந்தது. அதை மறைக்கும்பொருட்டே வேறு சிலவற்றை சொல்லிக்கொண்டிருந்திருக்கிறான். அவர் சம்வகையின் சொற்களை நினைவுகூர்ந்தார். “நான் நகரை ஒருமுறை சுற்றிவந்து அனைத்து ஆலயங்களையும் பார்வையிடவேண்டும் என்று சுரேசரின் ஆணை” என்றார். “ஆம், அத்தனை தெய்வங்களும் நிறை செய்யப்படவேண்டும். இது தெய்வங்கள் அனைத்தும் விழிதிறந்து எழும் பொழுது” என்றான் சூஷ்ணன்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71

பகுதி ஏழு : பெருசங்கம் – 3

சுதமன் அரண்மனைக்குள் நுழைந்ததுமே நேராக சுரேசரின் அறைக்குத்தான் சென்றார். சுரேசர் தன் அறையில் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். நீண்ட நிரைகளாக நின்றிருந்த சிற்றமைச்சர்களும் அலுவலர்களும் அவரிடம் சென்று ஆணைகளைப் பெற்று விலகினர். எழுத்தர்களிடமும் கற்றுச்சொல்லிகளிடமும் உரிய ஓலைகளை பெற்றுக்கொண்டு வெளியே சென்றனர். சுதமன் வந்ததை சுரேசர் பார்த்துவிட்டிருந்தார். அவருடைய பதறிய முகத்தையும் அவர் பார்த்து புரிந்துகொண்டார். ஆனால் அவரால் அந்த அலுவலில் இருந்து விடுபட இயலவில்லை.

சுதமன் ஆணைகளை செவிகொண்டு அங்கேயே நின்றார். அவ்வாணைகள் வழியாகவே அப்பெருநகரம் அவர் சித்தத்தில் விரிந்தது. நகரின் எப்பகுதியின் மக்கள் எந்த நாளில் வேள்விச்சாலைக்கு வரலாம் என்று சுரேசர் வகுத்திருந்தார். ஒவ்வொரு குடியிலும் குடித்தலைவர் எழுவர் மட்டுமே பந்தலுக்குள் அமர ஒப்பப்படுவார்கள். எஞ்சியோர் வெளியே பெருமுற்றத்தில் அமர்ந்து வேதச்சொல்லை செவிகொள்ளலாம். அவிமிச்சம் பெற்று திரும்பிச் செல்லலாம். வேள்விப்புகையால் தலைதொட்டு வாழ்த்தப்படலாம்.

ஒவ்வொருநாளும் ஆண்களுக்கு முன்காலையும் பின்னிரவும் அளிக்கப்பட்டது. பெண்களுக்கு முன்உச்சிப்பொழுது முதல் முதல்மாலைப் பொழுதுவரை. ஒவ்வொருவரும் அணியவேண்டிய ஆடைகளும் அணிகளும் வகுக்கப்பட்டிருந்தன. பட்டும் பருத்தியும் மட்டுமே அணியப்படவேண்டும். முனிவர்களன்றி எவரும் மரவுரி அணியலாகாது. தோலாடைகளையும் கம்பளி ஆடைகளையும் எவருமே அணிய ஒப்புதல் இருக்கவில்லை. வேளாண்குடிகள் பச்சை நிறமான ஆடைகள். ஆயர்குடியினர் மண் நிறம். மச்சர்கள் நீல நிறம். ஷத்ரியர் செந்நிறம். வைசியர் மஞ்சள். அந்தணர் வெண்மை. கருநிற அடை அணிய எவருக்கும் உரிமை இருக்கவில்லை.

ஒவ்வொருவரும் அவரவருக்குரிய குடிமுத்திரைகளை நெஞ்சில் பதக்கம் என அணிந்திருக்கவேண்டும். எவரும் தலையணிகள் என எதையும் அணிந்திருக்கலாகாது. பெண்கள் தலையில் மலர்சூடிக்கொள்ளலாம், அணிசெய்து கொண்டிருக்கலாகாது. ஆண்கள் மேலாடைகளை அணிந்திருக்கக் கூடாது. மலர்மாலைகளை தோளில் அணிந்திருக்கலாம். சந்தனம், குந்திரிக்கம் போன்ற மரத்திலெழும் நறுமணங்களுக்கு ஒப்புதல் உண்டு. விலங்கிலெழும் நறுமணங்களான கஸ்தூரி, கோரோசனை, புனுகுக்கு ஒப்புதல் இல்லை.

ஒவ்வொரு குடியினரும் தங்களை முறையாக அறிவித்து பதிவுசெய்து நாளும் பொழுதும் வகுத்துக்கொள்ள வேண்டும். வேள்விச்சாலைக்கு அவர்கள் வருகையில் தங்கள் குடியையும் குலத்தையும் அறிவிக்கும் கொடிகளை ஏந்தியிருக்கவேண்டும். சங்கும் மணியும் அன்றி வேறெந்த இசைக்கலங்களும் வேள்விநகருக்குள் முழக்கப்படலாகாது. வேதமுதல்வர்களாகிய தெய்வங்களையும் வேள்விக்காவலனாகிய அரசனையும் அன்றி எவரையும் வாழ்த்தி சொல்லெடுக்கலாகாது. அந்த நெறிகள் ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் அறிவிக்கவேண்டியிருந்தது.

அறிவிக்குந்தோறும் அவற்றில் ஐயம் எழுந்துவந்தது. விலங்கிலெழும் நறுமணத்திற்கு ஒப்புதல் இல்லை என்று அறிவிக்கப்பட்டதுமே தென்கலிங்கக் கடற்கரையிலிருந்து பெயர்ந்துவந்த மச்சர்குடிகளில் ஒன்று சிப்பியில் இருந்து எடுக்கப்படும் ஒரு நறுமணத்திற்கு ஒப்புதல் உண்டா என்று வினவியது. ஆகவே விலங்கு என்பது அசைவுயிர் என மாற்றப்பட்டது. எனில் மண்ணிலிருந்து எடுக்கப்படும் உப்புகளை நறுமணமென அணியலாமா என்ற வினா எழுந்தது. நறுஞ்சுண்ணம் அணிய ஒப்புதல் இல்லை என்பதனால் அகழ்வுப்பொருட்களில் இருந்து எடுத்த எவையும் ஒப்பப்படாது என்று தெளிவுறுத்தப்பட்டது.

நகரமெங்கும் முந்நூறு அன்னநிலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குரிய அடுமனைகளும் அருகிலேயே கட்டப்பட்டிருந்தன. அவற்றுக்குரிய களஞ்சியங்களும் அருகிலேயே அமைக்கப்பட்டு அங்கிருந்து அடுமனைக்கு தனியான சாலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அடுமனைக்கும் வெவ்வேறு ஆட்சியாளர்கள் பொறுப்பளிக்கப்பட்டிருந்தனர். பத்து ஆட்சியாளர்களுக்கு ஒரு தலைவர். அவர்கள் அனைவருக்கும் பெருஞ்சூதர் சுபாகரர் கோன்மை கொண்டிருந்தார்.

அதேபோலவே களஞ்சியப்பொறுப்பாளர்களும் நிறுவப்பட்டு அவர்களுக்கு அமைச்சர் சம்பூதர் தலைமைகொண்டிருந்தார். இருவருடைய அறைகளும் அரண்மனையின் வலப்பக்கம் அருகருகே என அமைந்திருந்தன. அங்கே ஒவ்வொரு கணமும் தூதுப்புறாக்கள் வந்தமர்ந்து எழுந்து பறந்துகொண்டிருந்தன. செய்திவீரர்கள் புரவிகளில் வந்திறங்கி மீண்டுசென்று அவர்களின் முற்றம் நீர்ச்சுழி என சுழன்றுகொண்டிருந்தது. களஞ்சியங்களின் இருப்பை அறிவிக்கும் பலகை ஒன்று சம்பூதரின் முன் அமைந்திருந்தது. ஒரு சூதர் அதன் முன் நின்று அவருக்கு வரும் செய்திகளை அதில் வரைந்துகொண்டே இருந்தார். களஞ்சியம் நிறைந்து ஒழிந்து நிறைந்துகொண்டே இருந்தது. அவர் அதை நோக்கி பதற்றமும் ஆறுதலும் கொண்டார்.

நகரின் போக்குவரத்தை ஒழுங்குசெய்யும் பொறுப்பு இளம்படைத்தலைவியான நிஷாகரிக்கு அளிக்கப்பட்டிருந்தது. நகரின் திரளை மேலிருந்து நோக்கும் பொருட்டு நூறு காவல்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குமேல் இருந்த காவல்வீரர்கள் வெவ்வேறு வண்ணக்கொடிகளை அசைத்து நகரின் தெருக்களின் செய்திகளை அறிவிக்க, அரண்மனையின் மேலிருந்த காவல்மாடத்தில் அமர்ந்திருந்த பதினெட்டு ஓவியர்கள் அச்செய்தியின் அடிப்படையில் நகரின் தெருக்களை வரைந்தனர். சாலைகளில் நெரிசல்களை ஏழு வண்ணங்களில் அவர்கள் காட்டினர்.

அந்த ஓவியப்பலகையை நோக்கி நிஷாகரியின் அறைமுகப்பில் இருந்த ஓவியப்பலகையை வரைந்துகொண்டிருந்தான் இன்னொரு ஓவியன். நிஷாகரி எப்போது விழிதூக்கினாலும் அவள் கண்முன் நகரம் தெரிந்துகொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு தெருவையும் அவள் அங்கிருந்தே கண்டாள். தன் அறையிலிருந்தே நகரின் நெரிசலை ஆட்சிசெய்தாள். “அங்காடித்தெருவில் ஏன் அத்தனை திரள்? அவர்களை அங்கிருந்து அகற்றுக!” என அவள் ஆணையிட்டால் அந்த ஆணை உடனே கொடியசைவாக மேலே சென்றது. கொடிகளினூடாகவே சென்று சேர்ந்து அக்கணமே அங்காடித்தெருவை நோக்கி குதிரைப்படைப்பிரிவு ஒன்று சென்றது.

நெருப்புக்காவலுக்கு தனி அமைச்சு செயல்பட்டது. நகரமெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூங்கில்மேடைகளில் கங்கையின் பெரிய படகுகள் ஏற்றிவைக்கப்பட்டு அவற்றில் நீர் ஊற்றி நிரப்பப்பட்டிருந்தது. அத்திரிகளும் காளைகளும் மேலும் நீரை மேலே ஏற்றிக்கொண்டிருந்தன. எங்கேனும் அனல் எல்லைமீறுமென்றால் அருகிருக்கும் படகிலிருந்து நீரை அள்ளி ஊற்றி அணைக்க அந்த மேடைகளுக்குக் கீழேயே எரிகாவலர் இருந்தனர். அவர்களுக்கு ஒளிவிடும் செந்நீலநிறத்தில் தலைப்பாகைகளும் ஆடைகளும் அளிக்கப்பட்டிருந்தன.

“அனைவர் தலைக்கும் மேலாக ஓர் ஏரி நின்றிருக்கிறது இன்று” என்று சூதன் இளிவரல் பாடினான். “அஸ்தினபுரியின் மேல் நாம் மழைமுகிலை சமைத்துள்ளோம்!” எரிகாவலர்கள் பதின்மர்குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். பத்து குழுக்களுக்கு நூற்றுவனும் பத்து நூற்றுவருக்கு ஆயிரத்தவனும் இருந்தனர். ஆயிரத்தவர்களை ஆள படைத்தலைவி பிராதை அமர்த்தப்பட்டிருந்தாள். “இங்கே பணியாற்றாமலிருக்கும் பொருட்டு பணியாற்றிக்கொண்டிருக்கிறாய் நீ” என்று அவளை சுரேசர் ஏளனம் செய்தார். அவள் பதற்றத்துடன் தன் முகவாய் வியர்வையை துடைத்து “ஆம், அமைச்சரே” என்றாள்.

நகரெங்கும் குடிநீர் வழங்குவதற்கான பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊற்றுநிலைகள் அதற்கான அமைச்சால் ஆளப்பட்டன. கழிப்பறைகளுக்குரிய அமைச்சு அதற்கு அருகே அமைந்திருந்தது. கங்கையின் ஓரமாகவே வேள்விக்கு வரும் அரசர்கள் தங்குவதற்கான மாளிகைகள் மென்மரத்தால் கட்டப்பட்டன. ஒவ்வொரு மாளிகையுடனும் ஒரு படகுத்துறை இணைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் வந்துசேரவும் பயணிகள் வந்திறங்கவும் வெவ்வேறாக நூற்றெட்டு படித்துறைகள் கங்கைக்கரையில் அமைக்கப்பட்டன. அங்கிருந்து வேள்விச்சாலைக்குச் செல்ல தனியாக அரசப்பாதை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அப்பணிகளை துணையமைச்சரான புண்டரீகர் நோக்கி நடத்தினார்.

ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிந்துகொண்டே இருந்தன. விலங்குகளைப் பேணும்பொருட்டு அமைக்கப்பட்டிருந்த அமைச்சின் பொறுப்பு படைத்தலைவர் பஞ்சஜித் தலைமையில் அமைந்திருந்தது. அது ஏழாக மேலும் பிரிக்கப்பட்டது. யானைகள், புரவிகள், காளைகள், பசுக்கள், அத்திரிகள், கழுதைகள், வேட்டைநாய்கள் என ஒவ்வொரு விலங்குக்கும் தனித்தனியான துணையமைச்சுகள் உருவாயின. அவற்றில் புரவிகளுக்குரிய அமைச்சு மேலும் ஐந்தாக பிரிக்கப்பட்டது. படைப்புரவிகள், பயணப்புரவிகள், பணிப்புரவிகள், அரசுப்புரவிகள், அணிப்புரவிகள் வெவ்வேறு பணித்தலைமைகளால் புரக்கப்பட்டன.

பிரியும்தோறும் பணிகள் எளிதாயின. ஆனால் ஒருங்கிணைப்பு மெல்லமெல்லத்தான் உருவாகி வந்தது. ஒவ்வொருநாளும் எழுந்து வந்துகொண்டிருந்த புதிய இடர்களைக் கண்டு சுதமன் சலிப்படைந்தார். சுரேசர் சிரித்தபடி “எந்த அமைப்பை உருவாக்கினாலும் முதலில் இடர்கள் எழுந்து வரும். முறையீடுகள் பெருகும். அவை நன்று. அந்த இடர்களுக்கு நாம் அளிக்கும் செல்வழிகள், அம்முறையீடுகளுக்கு நாம் காணும் தீர்வுகள் வழியாகத்தான் இவ்வமைப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நெறிகள் உருவாகி வருகின்றன. இத்தனை சிக்கல்கள் எழுவதென்பது இந்த அமைப்புக்கள் செயல்படுகின்றன என்பதற்கான சான்று. சிக்கல்கள் பெருகப்பெருக நெறிகள் பெருகும். நெறிகள் அமையுந்தோறும் சிக்கல்கள் குறையும். பின்னர் ஆணைகளின்றியே இவை இயங்கலாகும். ஆகவே நாம் இப்போது செய்துகொண்டிருப்பது ஆளும் பணி அல்ல அமைக்கும் பணி” என்றார்.

சுரேசரிடம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை முறையிட்டனர். ஒவ்வொருவருக்கும் தங்கள் கோன்மையின் எல்லை என்ன என்பதே சிக்கலாக இருந்தது. அவர்களின் பணியெல்லை அக்கோன்மை எல்லையைக் கடந்து விரிந்திருந்தது. ஆகவே அவர்கள் இன்னொருவரின் பணியெல்லைக்குள் தலையிட்டனர். அது ஆணவமோதலாகியது. ஆணைக்குழப்பங்களை உருவாக்கியது. மேல்கீழ் அடுக்கை குலைத்தது. ஒருவருடன் ஒருவர் ஒத்திசைந்தே ஒவ்வொன்றையும் செய்யவேண்டியிருந்தது. ஆனால் இசைவு என்பதற்கும் பணிதல் என்பதற்கும் இடையே நுட்பமான வேறுபாடே இருந்தது.

சுரேசர் ஒவ்வொன்றுக்கும் தெளிவான ஆணைகளை பிறப்பித்தார். ஒருவரின் கோன்மையின் எல்லையை இன்னொருவர் கடப்பதாக இருந்தால் அதை முறைப்படி அவருடைய ஒப்புதலைப் பெற்று செய்க, அதை ஒரு பணிக்கென மட்டுமே செய்க, எப்போதைக்குமென கொள்ளாதொழிக, ஒவ்வொரு செயலையும் முறைப்படி பதிவுசெய்க என்று அவர் மீள மீள சொல்லிக்கொண்டிருந்தார். தன் நோக்கத்தை தெளிவுற உணர்த்தாமல் பிறிதொருவரின் எல்லைக்குள் நுழைவது ஒழிக என ஆணையிட்டார்.

அவர் இறுதியாக இட்ட ஆணை நீர்நிலைகளில் இருந்து தன் கட்டுப்பணிக்கு ஓடை ஒன்றை வெட்டிக்கொண்ட ஆட்சியாளருக்கு. அவர் அதை நீர் மேலாட்சி செய்பவரிடம் சொல்லவில்லை. “நீரின்றி எப்படி எழுப்புவது?” என்று அவர் மீளமீள கேட்டுக்கொண்டிருந்தார். நெறிகளை சுரேசர் மீண்டும் ஒருமுறை அவரிடம் சொன்னார். அவர் முகம் அதை விளங்கிக்கொண்டதுபோல காட்டவில்லை. “ஆணை” என்று மட்டும் சொல்லி விலகினார். சுரேசரின் தொண்டை அடைத்திருந்தது. அவர் சற்றே இளைப்பாறினார். ஓர் ஏவலன் அவருக்கு சுக்கு போடப்பட்ட இளவெந்நீரை அளிக்க அதை அருந்தினார்.

அவர் சாய்ந்துகொண்டதும் சுதமன் அருகே சென்று நின்றார். “சொல்க!” என்றார் சுரேசர். “நான் புரவிக்கொட்டிலுக்கு சென்றிருந்தேன்” என்றார் சுதமன். “அங்கே முழுமையான காவல் இருந்தது. ஆனால் நான் அங்கே ஓர் அரசநாகத்தை கண்டேன்.” நிகழ்ந்ததை அவர் சுருக்கமாக சொல்லி முடித்தார். சுரேசர் முகவாயைத் தடவியபடி அதை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் விழிகள் மங்கலடைந்திருந்தன. “நாகங்களை தடுக்க இயலாது. அந்நிலையில் அவற்றின்மேல் ஒரு போர் தொடங்குவதில் பொருளில்லை” என்று சுதமன் சொன்னார். “ஆனால் நாம் அவற்றை அஞ்சியாகவேண்டும். அவர்கள் நம்மை அழிக்குமிடத்திலேயே இன்றும் இருக்கிறார்கள்.”

“என்ன செய்யலாம் என நினைக்கிறீர்?” என்றார் சுரேசர். “அவர்களுக்கான இடத்தை நாம் அளித்தாகவேண்டும். அவர்களின் காண்டவப் பெருங்காட்டை நாம் அழித்துவிட்டோம். அவர்கள் வாழ்ந்த நகர்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவர்களுக்கு என்ன தேவை என்று அரசர் உசாவவேண்டும். அவர்கள் நிறைவுறும் பிழைநிகர்ச் செயல்பாடுகளை இயற்றவேண்டும். இந்த வேள்வியின்போதே அது நிகழவேண்டும்” என்றார் சுதமன். சுரேசர் “ஆம், அதை நான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். “நான் இந்த அரண்மனையிலேயே இருமுறை நாகங்களை பார்த்துவிட்டேன்.”

சுதமன் “நாம் அரசரிடம் சொல்வோம். நாம் அவர்களை வெல்ல இயலாது. அவர்களின் உலகம் நம் காலடிக்குக் கீழே இருக்கிறது” என்று சொன்னார். சுரேசர் “அரசர் அதை எவ்வண்ணம் ஏற்றுக்கொள்கிறார் என்று அறியேன். ஆனால் நம் பணி அதை அவரிடம் சொல்வதே” என்றார். சுதமன் “நகரில் சார்வாகர்கள் ஊடுருவியிருக்கிறார்கள். நகர்ச்சதுக்கங்களிலேயே அவர்கள் நிறைந்திருக்கிறார்கள். காபாலிகர்களும் காளாமுகர்களும் மாவிரதர்களும் பாசுபதர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நம் மீது வஞ்சமோ பகையோ கொண்டிருந்தால்கூட அவர்களைப் பணிந்து அவர்களின் வாழ்த்துக்களையே பெற்றுக்கொண்டிருக்கிறோம். நாகர்களையும் அவ்வண்ணமே கருதவேண்டும்” என்றார்.

சுரேசர் எழுந்துகொண்டு “வருக, நாம் அரசரிடம் நேரிலேயே பேசுவோம்!” என்றார். சுதமன் திகைத்து “நானா! அரசரிடம் நான்…” என்று சொல்ல “நீர் வரவேண்டும். இறுதியாக பாம்பைக் கண்டவர் நீர்” என்றார் சுரேசர். ஒற்றன் ஒருவன் தலைவணங்கினான். “சொல்க!” என்றார். “அரசர்களுக்கு தூதுசெல்லவேண்டிய அந்தணர்களின் நிரையை அறுதிசெய்திருக்கிறார் இளவரசர் யுயுத்ஸு. அதை தாங்கள் ஒருமுறை நோக்குவது நன்று” என்றான். “ஆம், அதை இன்றே முடிவுசெய்யவேண்டும்” என்றபின் சுரேசர் “வருக” என்று நடந்தார். தயக்கத்துடன் சுதமன் உடன் சென்றார்.

 

யுதிஷ்டிரனின் அறைக்குள் ஏற்கெனவே பலர் இருந்தனர் என்பது கதவு திறந்தபோது எழுந்த உரையாடல் ஓசையிலிருந்து தெரிந்தது. அவர்களையும் உள்ளே வரும்படி அவர் ஆணையிட்டார். உள்ளே நுழைந்ததும் சுரேசர் தலைவணங்கி நிற்க “அமர்க”! என்று கைகாட்டிவிட்டு யுதிஷ்டிரன் சகதேவனிடம் திரும்பினார். அப்பால் நகுலன் அமர்ந்திருந்தான். நான்கு அரசத்தூதர்கள் அச்சிறிய அறைக்குள் இருந்தனர். யுதிஷ்டிரன் ஏற்கெனவே சீற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்ததை மேலும் சீற்றத்துடன் தொடர்ந்தார்.

“எதுவும் பழைய முறைப்படி நடந்தாகவேண்டும் என்பதில்லை. முறைமை என்பது உளம்கோணாதபடி அனைத்தும் நிகழவேண்டும் என்பதற்காகவே… வரவிருக்கும் அரசர்களின் படிநிலை என்ன என்பதை அவர்கள் முடிவுசெய்யவேண்டியதில்லை. அவர்கள் அதை நமக்கு அறிவிக்கவும் வேண்டியதில்லை. இந்த மச்சநாட்டு அரசன் மந்தரன் என்ன சொல்கிறான்? அவன் நம் அவைக்கு வந்து வேள்விமண்டபத்தில் அமரவேண்டும் என்றால் நாம் அவனை பணியவேண்டுமா என்ன?” என்றார்.

நகுலன் சுரேசரை நோக்கிவிட்டு “அவ்வாறல்ல. அவன் சொல்வது மச்சர்குலத்தில் அவனுக்கு ஒரு முன்நிலை முன்பே உள்ளது என்று. அதை கருத்தில்கொண்டு நாம் அவனை அழைத்திருக்கவேண்டும் என்கிறான்” என்றான். “ஆனால் அவனைவிட பிரஜங்கன் மேலும் பெரிய படைவல்லமை கொண்டவன். அவனை நாம் இரண்டாம்நிலையில் வைக்க முடியாது.” யுதிஷ்டிரன் “ஏன்? எவரை எங்கே வைப்பதென நாம் முடிவுசெய்வோம். அவன் வரவில்லை என்றால் அவனை கட்டி இழுத்துவர நம் படைகள் செல்லட்டும். முடிசூடி வர மறுத்தான் என்றால் தளையிடப்பட்டு நகர்நுழையட்டும்” என்று கூவினார்.

சகதேவன் “மூத்தவரே, இந்த வேள்வியை நடத்துவதைப் பற்றிய பேச்சு அல்ல இது. இங்கே நாம் பாரதவர்ஷத்தை ஒருங்கிணைத்து எப்படி ஆட்சி செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியது. இவர்கள் பாரதம் முழுக்க பரவியிருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஆற்றல்பெற்று எழுந்து கொண்டிருக்கிறார்கள். வரும்காலம் முழுக்க இவர்களுடன் நாம் போரிட்டுக்கொண்டே இருக்கமுடியாது. போர் வழியாக எவரும் எந்த நாட்டையும் நிறுவி நிலைநாட்ட இயலாது” என்றான். “இவர்கள் நம்மை தலைமை என ஏற்கவேண்டும். அதற்கு இவர்களுக்கு நாம் பயனுள்ள சிலவற்றை அளிக்கவேண்டும், அவர்கள் நமக்கு அதற்கு விலையாகவே ஏற்பை அளிப்பார்கள்.”

“படை இன்றி ஏற்பில்லை” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், ஆகவேதான் நாம் தலைமைகொள்கிறோம்” என்றான் சகதேவன். “ஆனால் படையை மட்டும் கொண்டு ஏற்பை உருவாக்க முடியாது. இவர்கள் நம்மை ஏற்பது நாம் புதிய வேதத்தின் காவலர்கள் என்பதனால். இவர்களை நாம் இனிவரும் வரலாற்றில் நிலைநிறுத்துவோம் என்பதனால். சென்ற யுகத்தில் பரசுராமரின் மழு இயற்றியதை இன்று இளைய யாதவரின் ஆழி இயற்றுகிறது. எழுகின்றன பலநூறு புதிய ஆட்சியாளர்களின் குடிகள். அவர்களை நாம் ஒருங்கிணைக்கவேண்டும் என்றால் அவர்களுடன் ஒருபோதும் நாம் பூசலிடக்கூடாது.”

“அவர்கள் நம்மை அஞ்சவேண்டும். ஆனால் எதிர்க்கக் கூடாது. நாம் அவர்களில் ஒருவரை வெல்லலாம், தண்டிக்கலாம். ஆனால் அது பிறரிடம் அச்சத்தை மட்டுமல்ல வஞ்சத்தையும் உருவாக்கும். வஞ்சம் அச்சத்தை கடக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது. வஞ்சமில்லாத அச்சமே நீடிப்பது” என்று சகதேவன் சொன்னான். “அவர்களில் ஒருவரை நாம் அழித்தால்கூட அந்த நிலை தங்களுக்கும் எதிர்காலத்தில் அமையும் என அவர்கள் அஞ்சுவார்கள். அதன்பொருட்டு திட்டமிடுவார்கள். தங்களை ஒருங்கு திரட்டிக்கொள்வார்கள். இன்று அவர்கள் திரளவில்லை. அவ்வாறு திரண்டார்கள் என்றால் பாரதவர்ஷம் முழுக்க செலுத்தும் படையாற்றல் நம்மிடம் இல்லை, எவருக்கும் அது அமையமுடியாது.”

யுதிஷ்டிரன் சலிப்புடன் “என்ன செய்யவேண்டும் என்று சொல்” என்றார். சகதேவன் “பூசல் நிகழவேண்டும் என்றால் அவர்களுக்குள் நிகழட்டும். பிரஜங்கன் மந்தரனை சிறைப்பிடித்து அழைத்துவரட்டும்” என்றான். “ஆம், அதைச் செய்ய ஆணையிடுகிறேன்” என்றார். “அவர்கள் பூசலிட்டால் நாம் இன்னொருவரைக்கொண்டு இருவரையும் வெல்வோம்.” சுரேசர் உள்ளே நுழைந்து “ஒரு சொல், அரசே” என்றார். “சொல்க!” என்று யுதிஷ்டிரன் திரும்பினார். “அதை மறுதிசையில் செய்யலாமே? மூத்த குடியினனான மந்தரன் சென்று ஆற்றல்மிக்கவனாகிய பிரஜங்கனை முறைப்படி வேள்விக்கு அழைத்துவரட்டும். மந்தரனுக்கு உரிய மதிப்புடன் அரசரின் ஓலை செல்லட்டும், பிரஜங்கனை அரசர் பொருட்டு அவரே சென்று அழைத்துவரவேண்டும் என்று.”

யுதிஷ்டிரன் “ஏன், அதனால் என்ன?” என்றார். “அரசே, மந்தரன் நாடுவது குடிப்பெருமை. அரசரே தன் பொருட்டு அவனிடம் செல்லும்படி சொன்னால் அவன் அதை இழப்பதில்லை. பிரஜங்கனுக்குத் தேவை, குடியின் மெய்யான தலைமை. அதை அவனும் பெறுகிறான்” என்றார் சுரேசர். சகதேவன் “அதுவே உகந்தது. அவர்கள் தாங்களே தங்கள் அமைப்பை உருவாக்கிக்கொள்ளவேண்டும். தங்கள் முறைமைகளை அவர்களே நிலைநாட்டவேண்டும். நாம் அந்த அமைப்பும் முறைமையும் நமக்கு உகந்ததாக உள்ளனவா என்று மட்டும் நோக்கினால் போதுமானது, இல்லையென்றால் அவர்களின் விசையைக்கொண்டே அதை நமக்குரிய வகையில் சற்றே திருப்பிக்கொண்டால் மட்டும் போதும்” என்றான்.

நகுலன் “அவர்கள் ஏற்கெனவே குலமுறைகளையும் நெறிகளையும் கொண்டிருக்கிறார்கள். அதை மாற்றியமைப்பதென்றாலும் அவர்களே செய்யவேண்டும். நாம் அதில் நம் ஆற்றலை செலுத்தலாகாது” என்றான். யுதிஷ்டிரன் “எனில் அவ்வாறே அகுக!” என்றார். சகதேவன் “ஆணைகளை பிறப்பிக்கிறோம்… செல்க!” என்றான். அவர்கள் ஒவ்வொருவராகச் சென்றபின் யுதிஷ்டிரன் திரும்பி சுதமனை நோக்கினார். “இவர் துணையமைச்சர் அல்லவா?” என்றார். “ஆம்” என்று சுரேசர் சொன்னார். “இவர் இன்று ஒரு செய்தியுடன் வந்தார். நான் ஏற்கெனவே அறிந்த செய்திதான். ஆனால் இதை அவர் வந்து சொன்னபோதுதான் நான் முடிவை எடுத்தேன்” என்றார். “சொல்க!” என்று யுதிஷ்டிரன் சொன்னார். நகுலன் தன்னை கூர்ந்து நோக்குவதைக் கண்டு சுதமன் திகைத்து தலைகுனிந்தார்.

சுரேசர் “சொல்க!” என்றார். சுதமன் திடுக்கிட்டு சூழ நோக்கியபின் எச்சில் விழுங்கி “நான் வேள்விப்பரிச்சாலையில் இன்று ஓர் அரச நாகத்தை கண்டேன்” என்றார். சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதை உணர்ந்து வாய் உலர்ந்து நின்றார். யுதிஷ்டிரன் விழிகளைச் சுருக்கி “அங்கே காவல் இல்லையா?” என்றார். “காற்றுக்கும் நாகத்திற்கும் காவல் இல்லை என்பார்கள்” என்று சுதமன் சொன்னார். “நாகர்கள் நுழைய முடியாத இடம் என ஒன்றில்லை. அந்த நாகம் தற்செயலாக வந்திருக்கலாம். ஆனால் அது இளையவர் பார்த்தனின் பரியின் அருகே சென்றமை எனக்கு ஐயத்தை உருவாக்குகிறது.” சுரேசர் “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்’ என்றார்.

நகுலன் “அந்தக் குதிரை நாகத்தின் மணத்தை உணரவில்லையா?” என்றான். “இல்லை” என்றார் சுதமன். “எனில் அது வெறும் நாகம் அல்ல” என்று நகுலன் சொன்னான். “அது இலக்கு கொண்டது.” யுதிஷ்டிரன் “நாம் என்ன செய்யமுடியும்? பாரதவர்ஷத்தையே வென்றிருக்கிறோம். நாம் இவர்களை வெல்லமுடியாதா என்ன?” என்றார். “முடியாது, தெய்வங்கள்கூட நாகர்களை வெல்லமுடியாது” என்று நகுலன் சொன்னான். “என்ன செய்வது? சொல்லுங்கள், அவர்களை அடிபணியவேண்டுமா? மைந்தரையும் தந்தையரையும் உற்றாரையும் இழந்து நாம் பெற்ற அனைத்தையும் அவர்களுக்கு அளித்து முடிகீழே வைக்கவேண்டுமா?”

சுரேசர் “தொல்கதைகள் அனைத்தும் காட்டுவது ஒன்றே, நாகர்களை வெல்லலாம், ஆனால் அழிக்கமுடியாது” என்றார். “அவர்களை வென்றபின் நம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். ஆழியமைந்தவனின் படுக்கைபோல, அனல்வண்ணனின் அணிபோல, ஆறுமுகனின் அடித்துணைபோல, அன்னையின் விரல் ஆழிபோல நம்முடன் அவர்களும் இருக்கவேண்டும், அது ஒன்றே வழி.” யுதிஷ்டிரன் “அவர்களா, இங்கா?” என்றார். சுரேசர் “ஆம், இங்குதான். அவர்களுக்கான இடத்தை அளித்தாகவேண்டும்” என்றார். “எப்படி? அவர்களை நாம் அழித்திருக்கிறோம். அவர்களின் வஞ்சம் நம்மைச் சூழ்ந்துள்ளது” என்றார் யுதிஷ்டிரன்.

“ஆம், ஆனால் குருக்ஷேத்ரம் அனைத்து வஞ்சங்களும் எரிந்தணைந்த சிதை. அவர்களுக்கும் அவ்வாறே. அவர்களுடன் நாம் பேசுவோம். அவர்களுக்குரியனவற்றை அளிப்போம்.” யுதிஷ்டிரன் “எப்படி, எவரினூடாக?” என்றார். “இரு வழிகள் நமக்குள்ளன” என்றார் சுரேசர். “மூன்றாமவரின் துணைவி உலூபியின் குலம் இன்றும் நமக்கு அணுக்கமானது. நாகர்களின் தலைமையை அவர்களுக்கு அளிப்போம். அரவானுக்கு நம் நகரில் ஒரு ஆலயம் எழட்டும். அதற்கு உலூபியின் குடியினர் வந்து அவர்களின் முறைப்படி பூசனை செய்யட்டும். அந்த ஆலயமே அவர்களுக்குரியதாகட்டும். அரசர் தன் மணிமுடியுடன் சென்று அவர்களின் தெய்வத்தின் முன் பணியட்டும்… அந்த ஆலயம் வழியாக இந்த நகரில் அவர்கள் விழையும் இடத்தை அளிக்கமுடியும்.”

யுதிஷ்டிரன் “ஆம், அது ஒரு வழிதான்” என்றார். “அரவானின் இளையோன் நாகர்குலத்து அரசனாக மணிமுடி சூடட்டும். அவனுக்கு நம் அவையில் ஷத்ரியர்களுக்கு நிகரான இடத்தை அளிப்போம். அவன் குலத்துடன் உறவுகொள்ளும் நாகர் குலங்கள் அனைத்தும் நமக்கு குருதியுறவு கொண்டவை என அறிவிப்போம்” என்று சுரேசர் தொடர்ந்தார். “நம் குடியில் இருந்தே அவனுக்கு இளவரசியரை அளிக்க முடிந்தால் மேலும் நன்று.” யுதிஷ்டிரன் புன்னகைத்து “அதைத்தான் நிஷாதருக்கும் அரக்கருக்கும் அசுரருக்கும் ஏற்கெனவே செய்துகொண்டிருக்கிறோம்” என்றார். “ஆம், அதை நான் குருதிப் பங்கீடு என்பேன். இன்று நாம் செய்யவேண்டியது அதையே” என்றார் சுரேசர்.

“நமக்கு இன்னொரு தொடர்பும் உள்ளது. அங்கநாட்டரசர் கர்ணன் நாகர்களின் தலைவன் என்று இன்று போற்றப்படுகிறார். நாகபாசன் என அவரை அவர்கள் ஆலயம் அமைத்து வழிபடுகிறார்கள். நம் ஆலயங்கள் அனைத்திலும் நாகபாசனுக்கு கருவறைகள் அமையட்டும். நம் அரசகுடியின் பூசனைக்குரியவராக அவர் ஆகுக! நம் வேள்வியில் அரசகுடியின் மூதாதையருக்கு அளிக்கப்படும் அவியன்னப் படையலில் நாகபாசனுக்கும் ஒரு பங்கு அளிக்கப்படட்டும்.”

யுதிஷ்டிரன் “அது வழக்கம்தான்… மூத்தவர் எங்கள் முன்னோர் நிரையில் அமர்ந்திருப்பவர்” என்றார். “அது நாகபாசன் என்னும் பெயரால் அளிக்கப்படவேண்டும்” என்று சுரேசர் சொன்னார். “அதை அங்கநாட்டை ஆளும் கர்ணனின் கடைமைந்தரே முன்னின்று செய்யட்டும். அங்கநாட்டு அவையில் நாகர்குலத்தார் எவரும் இடம்பெறலாம் என நாம் அறிவிக்கலாம். காண்டவக் காடு குறித்த வஞ்சத்தால் நம் அவையில் அமரத் தயங்குபவர்கள் அவர் அவைக்கு செல்லட்டும்.”

யுதிஷ்டிரன் வாய்விட்டு நகைத்து “அதாவது அனைத்து இடங்களிலும் நான் முடிதாழ்த்தவேண்டும்” என்றார். “ஆம் அரசே, தாழ்த்துவதனூடாகவே இனி உங்கள் முடி உயரமுடியும்” என்றார் சுரேசர். “நான் குருக்ஷேத்ரத்தில் பெற்ற வெற்றியை இவ்வண்ணம் அனைத்துக் குலங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறேன், நன்று!” என்றார் யுதிஷ்டிரன்.

சுரேசர் “அதுவும் மெய்யே” என்றார். “வெற்றி என்பது செல்வம், அதை பகிர்ந்தே ஆகவேண்டும். இதோ ராஜசூயத்தின்போது நாம் கொண்ட செல்வம் அனைத்தையும் பகிர்ந்தளிக்கவிருக்கிறோம். அதற்கு முன் நீங்கள் சூடிய மணிமுடியை பங்கிடுவோம். ஐயம் வேண்டாம், பகிரப்பகிர முடிபெருகும். அது அரசியல்நெறி” என்றார். யுதிஷ்டிரன் “ஆம், அவ்வண்ணம் கற்றிருக்கிறேன்” என்றார். சுரேசர் தலைவணங்கி எழுந்துகொண்டார். சுதமனும் தலைவணங்கினார். யுதிஷ்டிரன் அவரிடம் தனிப்பட்ட முறையில் புன்னகைக்க அவர் உள்ளம் மலர்ந்தது. அறையை விட்டு வெளியே வந்தபோது அவர் இனிய பெருமூச்சைவிட்டு உடல்தளந்தார்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 70

பகுதி ஏழு : பெருசங்கம் – 2

மரத்தடிகளை நட்டு பலகை அறைந்து மூன்றாள் உயரத்தில் சுற்றுவேலியிடப்பட்ட வேள்விநகரில் எழவிருக்கும் ராஜசூயவேள்விக்கான வேள்விச்சாலை கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. எண்கோண வடிவிலான பந்தல். எட்டு கோபுரவாயில்கள். எட்டு வாயிலுக்கும் வந்து சேர்ந்த அகன்ற பாதைகளில் பலகைகளை அறைந்து பொருத்திக்கொண்டிருந்தார்கள். வெவ்வேறு கொட்டுவடிகள் மரங்கொத்திகள் என ஓசையிட்டுக்கொண்டிருந்தன.

வேள்விச்சாலையைச் சுற்றி இரு பிறைவடிவங்களில் குடில்நிரைகள் இருந்தன. அவை ஒருபக்கம் வேள்வி நிகழ்த்த வரும் அந்தணர்கள் தங்குவதற்குரியவை. மறுபக்கம் வேள்வியை வாழ்த்த வரும் முனிவர்களுக்கு உரியவை. அவையனைத்திலும் பணி முடிந்துவிட்டிருந்தாலும் மேலும் பணி நடந்துகொண்டிருந்தது. வேள்விக்கு முந்தையநாள் வரை அங்கே பணிகள் நிகழ்ந்துகொண்டிருக்கும். அந்தணர்களும் முனிவர்களும் உணவு சமைப்பதற்குரிய புது மண்கலங்களை கொண்டுவந்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குரிய மரவுரி ஆடைகளும் தோலாடைகளும் ஏவலர்களின் தலைகளில் சுமைகளாக சென்றுகொண்டிருந்தன.

ஒவ்வொரு குடிலும் மையக்குடிலைச் சுற்றி மாணவர்கள் தங்குவதற்குரிய விரிவான திண்ணைகளுடனும் பின்பக்கம் ஏவலர் தங்குவதற்குரிய சிறு துணைக்குடில்களுடனும் அமைக்கப்பட்டிருந்தன. அந்தப் பிறைகளில் இருந்து பின்பக்கம் விரிந்துசென்ற சிறிய பாதைகள் வேள்விநகரின் அப்பால் அமைந்திருந்த ஏவலர்களின் குடில்தொகைகளைச் சென்று சேர்ந்தன. அதை ஒட்டியே நெய்ப்பசுக்களின் கொட்டில்களும் புரவிக்கொட்டகைகளும் அமைந்திருந்தன. மையச்சாலையில் இருந்து அங்கே வந்துசேர தனிச் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே விறகுவண்டிகள் மாடுகளால் இழுக்கப்பட்டு எடைமிக்க சகட ஓசையுடன் நிரைநிரையெனச் சென்றுகொண்டிருந்தன.

வேள்விச்சாலையின் தேவைக்கென கங்கைக்குச் சென்றுசேரும் சிற்றாறுகளில் ஒன்று அணைகட்டி நிறுத்தப்பட்டு மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட ஓடை வழியாக கொண்டுவரப்பட்டிருந்தது. அது அங்கே ஒரு குளத்தை நிறைத்து மறுபக்கம் பொங்கி சரிவில் சிறு அருவியென விழுந்து அப்பால் சென்றது. மரத்தாலான கரைகளும் அடித்தளமும் அமைக்கப்பட்ட குளத்தில் தூய நீர் அலைகொண்டது. அதைச் சூழ்ந்து நீரை அள்ளித்தேக்கும் பொருட்டு கங்கைப்படகுகளை மண்பீடங்களில் பொருத்தும் பணி நடந்துகொண்டிருந்தது.

வேள்விச்சாலை அரக்கு பூசப்பட்ட மரப்பலகைகளால் கூரையிடப்பட்டிருந்தது. கூரையின் பணி அப்போதும் முடியவில்லை. அங்கிருந்து கொட்டுகழிகளும் முழைக்கழிகளும் ஓசையிட்டன. அந்தத் தாளம் வெவ்வேறு ஒழுங்குகளில் மாறிமாறி ஒலித்தது. ஓர் உரையாடல்போல் அது தோன்றியது. கீழிருந்து அவர்களுக்கு உதவியவர்கள் கைகளில் வெவ்வேறு வண்ணத் துணிகளை அசைத்து குறிமொழியை பயன்படுத்தினர். அவர்கள் தங்கள் கழிகளையும் உளிகளையும் தூக்கி அசைத்தும் சுழற்றியும் மறுமொழி உரைத்தனர். மிக அப்பால் மணியோசை கேட்டது. பெரிய உருளிகள், நிலைவாய்கள், குட்டுவங்கள் தட்டுவண்டிகளில் ஏற்றப்பட்டு அத்திரிகளால் இழுத்துக்கொண்டு செல்லப்பட்டன.

கூரைமேல் அமர்ந்திருந்த தச்சர்கள் உருக்கிய அரக்குடன் சுண்ணமும் தேன்மெழுகும் கலந்து உருவாக்கிய குழம்பைக் கொண்டு பலகையின் இணைப்புகளை ஒட்டிக்கொண்டிருந்தனர். கீழே பல இடங்களில் பெரிய இரும்பு உருளிகளில் அரக்கும் மெழுகும் கலந்த கலவை கொதித்து குமிழிவெடித்து கமறும் கெடுமணப்புகையை எழுப்பியது. அதில் சுண்ணத்தைக் கொட்டி நீண்ட சட்டுவங்களால் கிளறிக்கொண்டிருந்தார்கள். அக்குழம்பை அள்ளி இரும்புச் சட்டிகளில் ஊற்றி கயிறு சுற்றப்பட்டிருந்த சகடங்களைச் சுற்ற அவை எழுந்து மேலே சென்றன. அங்கு நின்றவர்கள் அவற்றைத் தூக்கி சிறிய மரக்கொப்பரைகளில் கொண்டுசென்று தச்சர்களிடம் அளித்தனர். கூரைவிளிம்புகளில் அரக்குத்துளிகள் வழிந்து வந்து சொட்டி உறைந்து மணிகள்போல் நின்றிருந்தன.

சுதமன் ஒரு திறந்த வாயிலினூடாக வேள்விச்சாலைக்குள் எட்டிப்பார்த்தார். உள்ளே காடுபோல பல்லாயிரம் மூங்கில் தூண்கள் செறிந்து நின்றிருந்த மண்தரையை எடைமிக்க உருளைக்கற்களால் இடித்து செறிவாக்கிக்கொண்டிருந்தனர். மூங்கில் தூண்களுக்கு மேல் பலவகையில் வளைக்கப்பட்ட மூங்கில்களை பின்னிப் பின்னி உருவாக்கிய கூரைக் கட்டமைப்பு மாபெரும் வலை போலிருந்தது. அதன்மேல் வெவ்வேறு இடங்களில் மூங்கில் பணியாளர்கள் தொற்றி அமர்ந்திருந்தனர். கீழிருந்து அவர்களுக்குத் தேவையான உளிகளும் கத்திகளும் கயிறுகளும் கம்பிச்சுருள்களும் கயிறுகளால் கட்டப்பட்டு மேலிழுக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான நாகங்கள் கீழிருந்து அப்பொருட்களைக் கவ்வி மேலே கொண்டுசெல்வதுபோலத் தோன்றியது.

சுதமன் வேள்விச்சாலையை சுற்றிக்கொண்டு பின்னால் சென்றார். ஒரு நீண்ட கோட்டைபோல அதன் சுவர் அவரருகே வந்துகொண்டே இருந்தது. அவரைக் கண்டதும் ஏவலர்தலைவன் வந்து தலைவணங்கினான். அவனிடம் ஆணைபெற்றுக்கொண்டிருந்தவர்கள் தலைவணங்கி நின்றனர். சுதமனால் அவன் முகத்தை நினைவுகூர முடியவில்லை. “ஆநிரைகள் அனைத்தும் வந்துவிட்டனவா? மீண்டுமொருமுறை நேரில் வந்து பார்த்துச்செல்லும்படி பேரமைச்சர் சுரேசரின் ஆணை” என்றார். அதற்குள் அவன் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது, மாகேயன்.

மாகேயன் “ஆம், அனைத்தையும் கொட்டிலில் பேணிக்கொண்டிருக்கிறோம். மூன்று பசுக்களுக்கு ஓர் ஆயன் என அமர்த்தியிருக்கிறோம். அத்தனை பசுக்களின் உடல்நிலையையும் காலையிலும் மாலையிலும் நோக்கி எனக்கு அறிவிக்கவேண்டும் என ஆணையிட்டிருக்கிறேன்” என்றான். சுதமன் “அறிவிப்புகள் நன்றாகவே இருக்கும். ஆனால் நேரில் சென்றால் நிலைமைகள் எப்போதுமே வேறாக இருப்பதை காணலாம். ஆகவேதான் என்னை நேரில் சென்று பார்க்கும்படி பேரமைச்சர் சுரேசர் சொல்லியிருக்கிறார்” என்றார். அமைச்சர் பெயர் உருவாக்கும் அதிர்வை அவர் கண்டார். அதன் பொருட்டே அப்பெயரைச் சொல்கிறோம் என அவர் அறிந்திருந்தார்.

“நீங்களே நேரில் பார்க்கலாம், உத்தமரே. நான் இரண்டு நாளுக்கு ஒருமுறையேனும் நேரில் பார்த்துவிடுகிறேன்” என்றான் மாகேயன். “பார்க்கிறேன். பசுக்களுக்கு நோய்கள் ஏதும் வந்துவிடக்கூடாது. அத்தனை பசுக்களும் அன்றலர்ந்த வெண்தாமரைகள்போல் இருக்கவேண்டும் என்பது நூல்நெறி” என்றார். மாகேயன் தலையசைத்தான். அவன் வெயிலுக்கு கண்களை சுருக்கியிருந்தமையால் கவலைகொண்டவன் போலவும் சுதமனின் பேச்சு புரியாதவன் போலவும் தோன்றினான்.

“முன்பு ஒருமுறை பிரக்ஜ்யோதிஷத்தில் பசுக்களில் நான்கு நோயுற்றமையால் வேள்வி தொடங்கவில்லை… அன்றிலிருந்து இதில் முழு நோக்கையும் செலுத்துகிறார்கள்” என்றபடி அவர் நடக்க மாகேயன் உடன் வந்தான். அப்போதுதான் சுதமனுக்குத் தோன்றியது, சென்ற சிலநாட்களாக என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று. வெவ்வேறுவகையில் வேள்வி நின்றுவிடுவதை கற்பனையில் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அவர் மட்டுமல்ல, சுரேசரும் அனைவரும் அதைத்தான் செய்கிறார்கள். அந்த வழியை மூடுகிறார்கள், பிறிதொன்றை தேடுகிறார்கள். ஒரு வழியைக் கண்டடைந்து அதை மூடும்போது நிறைவடைகிறார்கள். அந்நிறைவுக்காகவே மீண்டும் அதை தேடுகிறார்கள். பல்லாயிரம் முறை பல்லாயிரம் வழிகளில் இவ்வேள்வி நின்றுவிட்டிருக்கிறது உள்ளங்களில்.

சுதமன் பசுக்கொட்டில்கள் அமைந்த மேட்டுநிலம் நோக்கி பலகையால் அமைக்கப்பட்ட சரிவான பாதையில் ஏறிச்சென்றார். அங்கே மூங்கில் நட்டு தட்டிகளால் இரண்டாள் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய வேலிச்சுவருக்கு உள்ளே பசுக்கொட்டில் இருந்தது. அதன் முகப்பு கொட்டில்களுக்குரிய தொன்மையான வடிவில் வாயிலுக்குக் குறுக்கே மேடையுடன் அமைக்கப்பட்டிருந்தது. அமுதகலக் கொடியும் பசுக்கொட்டில் என அறிவிக்கும் கொம்புமுத்திரை கொண்ட கொடியும் மேலே பறந்தன. அணுகும்போதே பசுக்களின் ஓசையும் சாணியும் சிறுநீரும் கலந்த மணமும் வரத்தொடங்கின.

கொட்டிலின் பக்கவாட்டில் அமைந்த கொட்டகையில் பச்சைப்புல் கட்டுகள் குவிக்கப்பட்டிருந்தன. ஏவலர் அவற்றை உள்ளே கொண்டு சென்றுகொண்டிருந்தனர். கொட்டிலுக்குள் பகலிலும் குந்திரிக்கப் புகையின் நீலப்படலம் எஞ்சியிருந்தது. மூங்கில்களில் இரவில் எரிந்து அணைந்திருந்த பந்தங்களுக்குக் கீழே எண்ணைக்கறை மரவுரி விழுந்துகிடப்பதுபோலத் தெரிந்தது. கொட்டில்காவலனாகிய மர்க்கன் எழுந்து வந்து தலைவணங்கினான். “எப்படி இருக்கின்றன பசுக்கள்?” என்று சுதமன் கேட்டார். மர்க்கன் “அனைத்தும் நலமாக உள்ளன” என்றான்.

சுதமன் கொட்டில்கள் வழியாக நடந்தார். பசுக்கள் அசைபோட்டுக்கொண்டு படுத்திருந்தன. அழிகளிலிருந்து புல்லை எடுத்து மென்றன. மணியோசைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. கால்மாற்றி நின்று திரும்பி அவரை நோக்கின. “இரவும் பகலும் கொட்டில்களிலேயே அவை நிற்கலாகாது. பசுநிலம் காணாதொழிந்தால் அவை உளச்சோர்வு கொள்ளக்கூடும்” என்றார். “ஆம் உத்தமரே, ஒவ்வொருநாளும் ஒருநாழிகைப்பொழுது அவற்றை அருகே காட்டுக்குள் நடக்க கூட்டிச்செல்கிறோம்” என்றான் மர்க்கன். இரு ஆயர்கள் வந்து இணைந்துகொண்டனர். சுதமன் “ஆனால் அவற்றை அயலார் நோக்கவேண்டியதில்லை. மானுட விழிகளில் தீய விசைகள் உண்டு” என்றார். “எவரும் நோக்குவதில்லை. அவை உலவிவருவதற்கான வழி நன்கு வகுக்கப்பட்டுள்ளது” என்றான் மர்க்கன்.

“பசும்புல் மட்டும்தானா உணவு?” என்று சுதமன் கேட்டார். அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்தபோதும் அதை கேட்டார் என அப்போது நினைவு வந்தது. “இல்லை, பருத்திக்கொட்டையும் சிறிதே புண்ணாக்கும் கொடுப்பதுண்டு… உணவு முதுஆயர்கள் எழுவரால் ஒவ்வொருநாளும் நோக்கி வகுக்கப்படுகிறது” என்றான் மர்க்கன். “இவற்றின் சாணி இங்கே போடப்படுவதில்லை அல்லவா?” என்றார். அதையும் பலமுறை கேட்டிருந்தார். “இல்லை, உத்தமரே. அதை உடனுக்குடன் அள்ளி வண்டிகளில் ஏற்றி நெடுந்தொலைவு கொண்டுசெல்கிறோம்” என்றான் மர்க்கன்.

கன்றுகள் தனியாக கட்டப்பட்டிருந்தன. சிறுகன்றுகள் மூங்கில் வளைப்புக்கள் கட்டப்படாமல் விளையாட விடப்பட்டிருந்தன. அன்னைப்பசுக்கள் தலையைச் சரித்து அவ்வப்போது கன்றுகள் நலமாக உள்ளனவா என நோக்கிக்கொண்டன. அவர் கன்றுகளை நோக்கியபடி நின்றார். பின்னர் “இவை இப்போது பால் கறப்பதில்லை அல்லவா? கன்றுகளுக்கு குடிக்கக் கொடுப்பதுதானே?” என்றார். “அவைதான் அருந்துகின்றன. ஆனால் முழுக்க அருந்தினால் அவற்றின் வயிறு புளித்துவிடுகிறது. அவை ஓடியாடவேண்டும்… கூட்டமாக நின்றால் விளையாடாமலிருக்க அவற்றால் இயலாது” என்றான் மர்க்கன்.

வேள்விக்கு ஆயிரத்தெட்டு வெண்காராம் பசுக்கள் தேவை என்றனர் வேள்வி கணித்த அந்தணர். நாடெங்கிலும் இருந்து அவை தேடிக் கொண்டுவரப்பட்டிருந்தன. அனைத்துமே இரண்டு கன்றுகளுக்குமேல் ஈனாதவை. நகம்போல் சிவந்த கொம்புகளும், இளநிற மூக்கும், செம்மையோடிய கண்களும், வெளிர்வண்ணக் குளம்புகளும் கொண்ட பால்வெண்ணிறப் பசுக்கள். காம்புகளும் நாக்கும் மட்டும் கருமையானவை. நெற்றியில், நெஞ்சில், விலாவில், பின்புறம் என ஐந்து சுழிகளும் அமைந்தவை. வாயில் புளிப்புவாடையும் சாணியில் அமிலவாடையும் இல்லாதவை.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்தெட்டு பசுக்களும் அவற்றுக்கு ஏதேனும் குறை வருமென்றால் இடமாற்றம் செய்யத்தக்க நூற்றெட்டு பசுக்களும் அக்கொட்டிலில் இருந்தன. மேலும் ஆயிரத்தெட்டு பசுக்கள் கங்கைக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்தன. தேவையென்றால் அவற்றை படகில் நான்கு நாழிகையில் வேள்விச்சாலைக்கு கொண்டுவந்துவிடமுடியும். அவற்றைத் தவிர ஆநீர் கொள்வதற்குரிய நூறு கன்னிப்பசுக்கள் பிறிதொரு கொட்டிலில் தனியாக பேணப்பட்டன. சாணியில் உருளை மாறாதவை, ஆனால் ஐந்து காம்பும் எழுந்தவை என்பது அவற்றுக்கான இலக்கணம்.

அவர் பசுக்களின் வால்கள் சுழல்வதை நோக்கியபடி நடந்தார். “ஆயர்களின் கைகள் ஒவ்வொருநாளும் மூலிகை எண்ணையால் தூய்மை செய்யப்படுகின்றன” என்று மர்க்கன் சொன்னான். “நன்று” என்று அவர் சொன்னார். கூடுதலாக அங்கே என்ன செய்யவேண்டும் என அவருக்கு தெரியவில்லை. சுரேசர் அவரை எதற்கு அனுப்புகிறார் என அவர் உணர்ந்திருந்தார். அவர் தன் கண்களில் ஒன்று என அவரை அங்கே செலுத்துகிறார். எண்ணியிராதபடி எவரேனும் வந்து நேரில் நோக்கக்கூடும் என்ற அச்சத்தை ஒவ்வொருவரிடமும் உருவாக்குகிறார்.

அவர் யானைக்கொட்டிலுக்கு எவரை அனுப்பினோம் என எண்ணினார். பின்னர் அவ்வெண்ணத்தை அப்படியே கடந்து “நெய்ப்பசுக்கள் எவ்வண்ணம் உள்ளன?” என்றார். மாகேயன் “அவை இங்கில்லை, கங்கைக்கு அப்பால்” என்றான். “ஆம், அறிவேன்” என்றார் சுதமன். “அவற்றை தாங்கள் பார்க்கவேண்டும் என்றால்…” என்று மாகேயன் தயங்க “தேவையில்லை, வெறுமனே கேட்டேன்” என்றபின் சுதமன் தன் தேர் நோக்கி சென்றார். கன்னிப்பசுக்களையும் சென்று பார்த்துவிட்டுச் செல்லலாம். ஆனால் அதற்கு நீண்ட பொழுது ஆகும். அவர் செல்லவேண்டிய இடங்கள் மேலும் பல இருந்தன.

வேள்விச்சாலையிலிருந்து கங்கைவரை நீண்ட பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. கங்கைக்குள் ஆயிரக்கணக்கான செம்புக்கலங்களில் நெய் நிறைக்கப்பட்டு வாய்வட்டம் உருக்கிய ஈயத்தால் மூடப்பட்டு நீருக்குள் இறக்கப்பட்டிருக்கும். நீருள் குளிர்ந்து காத்திருக்கும் அனல். அவர் அவ்வெண்ணத்தால் விந்தையான ஓர் உளச்சுமையை அடைந்து பெருமூச்சுவிட்டார்.

 

சுதமன் மீண்டும் கோட்டைவாயிலுக்குள் நுழைந்தபோது அவர் களைத்திருந்தார். தேரிலேயே சற்று துயின்றார். அத்துயிலில் அவர் அவளை கண்டார். ஓர் ஆலமரத்தின் அடியில் வேர்முடிச்சின்மேல் கால்களை மடித்து தெய்வச்சிலை என அமர்ந்திருந்தாள். கீழிருந்து வேர்கள் எழுந்து அவள் உடலை மூடியிருந்தன. அவள் கூந்தல் பரவி நிலமெங்கும் ஓடியிருந்தது. அவர் முகத்தில் ஆலமர விழுதுகள் முட்டின. அவர் அவற்றை தள்ளித் தள்ளி விலக்கிச் சென்றபோது அவை அவள் கூந்தலிழைகள் என உணர்ந்தார். “தேவி!” என்றார். அவள் அவரை பார்க்கவில்லை. அவள் அமர்ந்திருந்த வேர்கள் அனைத்தும் நாகங்கள் என நெளிந்தன.

கோட்டைக்குள் நுழைந்தபோது எழுந்த ஒலிமாறுபாடு அவரை எழுப்பியது. “இடப்பக்கம் திருப்புக!” என அவர் ஆணையிட்டார். தேர் கோட்டையை ஒட்டிய படைக்கலநிலைகள் வழியாகச் சென்றது. புதியதாக அமைக்கப்பட்டிருந்த கற்பலகைச்சாலையில் ஓசையின்றி நீரோடையிலெனச் சென்றது. கோட்டைக்கு இணையாக அமைக்கப்பட்டிருந்த நூற்றெட்டு அன்னையரின் ஆலயங்கள் அனைத்திலும் விளக்குகள் எரிந்தன. அன்னையர் வெள்ளிவிழிகளுடன், பொன்முடிகளுடன், அவரவர்களுக்குரிய வண்ணங்களில் பட்டு ஆடையுடன் சாலையை நோக்கி அமர்ந்திருந்தனர்.

கோட்டையை ஒட்டி தாழ்வான குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருவர் அமர்ந்துகொள்ளும் அளவுக்கே உயரமானவை. அவற்றின் கூரையும் கல்லால் ஆனது. ஆகவே அவற்றின் மேல் ஏறி கோட்டைக்கு செல்லமுடிந்தது. உள்ளே வீரர்கள் படுத்துத் துயின்றபடியும் அமர்ந்து சொல்லாடியபடியும் தென்பட்டனர். சாலையின் மறுபக்கம் மரத்தாலான பாடிவீடுகள் ஒன்றன்மேல் ஒன்று என அடுக்கப்பட்ட பெட்டிகள்போல ஏழு நிலைகளாக எழுந்திருந்தன. அவை முழுக்க படைவீரர்கள் செறிந்திருந்தனர். அஸ்தினபுரியின் படை பலமடங்கு பெருகியிருந்தது. காவல்படையே மும்மடங்காகிவிட்டிருந்தது.

கோட்டைச் சாலையில் இருந்து பிரிந்து விலகிச் சென்ற சாலை முழுக்கமுழுக்க படைகளுக்கு மட்டுமே உரியது. அதன் நுழைவாயிலிலேயே காவலர் இருந்தனர். அவருடைய தேரின் கொடியைக் கண்ட பின்னரும் நிறுத்தி அவர் முகத்தை நோக்கிய பின்னரே உள்ளே செல்ல ஒப்பம் அளித்தனர். அவர் கல்தரையில் தேர்ச்சகடம் உருளும் ஓசை உடன்வர அங்கிருந்த காவலர்களை நோக்கியபடி சென்றார். அவர்களில் யவனரும் பீதரும் தென்னவரும் கீழைநிலத்தவரும் கலந்திருந்தனர். குருதி வேறுபட்டவராயினும் சொல் ஒன்றால் மட்டும் அஸ்தினபுரிக்கு கட்டுப்பட்டவர்கள். இனி குருதியின் இடத்தை சொல்லே எடுத்துக்கொள்ளும் போலும் என எண்ணிக்கொண்டார்.

படைக்கலங்கள் முட்புதர் என செறிந்து நின்ற படைப்பிரிவு ஒன்று அடுத்த வாயிலில் அவரை தடுத்து மீண்டும் ஒருமுறை கூர்ந்து நோக்கி செலவொப்பியது. மூன்றாவது வளையம் தடித்த மரத்தடிகள் ஊன்றப்பட்டு பலகைகள் அறைந்து வேலியிடப்பட்டிருந்தது. உள்ளே சென்றதும் அவர் ஒருவகை அமைதியிழப்பை உணர்ந்தார். கடுமையான காவல் என்பது கடுமையான சூழ்கையும் கூடத்தான். அவர் தேரிலிருந்து இறங்கியதும் இரண்டு யவனக் காவலர் அவர் உடைகளையும் கச்சையையும் தொட்டு நோக்கி ஏற்பறிவித்த பின்னரே அடுத்த கதவு திறந்தது.

உள்ளே நான்கு திசைப்புரவிகளும் நான்கு கொட்டில்களில் நின்றிருந்தன. மையமாக அமைந்த முற்றத்தின் நடுவே அஸ்தினபுரியின் அமுதகலக் கொடி பறக்கும் உயர்ந்த கம்பம். அதன் நான்கு மூலைகளில் கொட்டில்கள். ஒவ்வொன்றிலும் அந்த திசைக்குரிய தேவனின் கொடி ஒருபக்கமும் அத்திசை வென்ற பாண்டவ வீரனின் கொடி மறுபக்கமும் பறந்தது. ஒவ்வொரு கொட்டிலுக்கு அருகிலும் இரு குடில்களில் ஒன்றில் படைக்கலம் ஏந்திய காவலர்களும் இன்னொன்றில் அப்புரவியைப் பேணும் சூதர்களும் இருந்தனர்.

கொட்டில்தலைவரான யாமகேது அருகே வந்து பணிந்தார். “நான்கு புரவிகளும் நலமாக உள்ளன அல்லவா?” என்று சுதமன் கேட்டார். முடிந்தவரை அதை குரல் நிமிர்வுடன் கேட்கவேண்டும் என விழைந்தார். ஆனால் அவர் விழிகளை நோக்கி அதை கேட்கமுடியாது என்பதனால் நோக்கை முற்றம் நோக்கி பதித்திருந்தார். யாமகேது “நலமாக உள்ளன. ஒவ்வொரு நான்கு நாழிகைக்கும் ஒருமுறை அவற்றின் நலம் உசாவப்படுகிறது. உரிய உணவு அளிக்கப்படுகிறது. மருத்துவர்களே வந்து உழிச்சில் நிகழ்த்துகிறார்கள்” என்றார்.

கொட்டில்களின் திறப்புகள் அனைத்திலும் பட்டுநூலால் ஆன வலை கட்டப்பட்டு கொசுக்களும் ஈக்களும் உள்ளே செல்லாமல் தடுக்கப்பட்டிருந்தன. கொட்டில்களுக்குள் கூரையிலிருந்து வண்ணம்பூசப்பட்ட ஈச்சையோலையால் ஆன விசிறிகள் தொங்க அதை வெளியே இருந்து இருவர் இழுத்து காற்றுவீசச் செய்துகொண்டிருந்தனர். புரவிகளுக்குரிய மூலிகைப்பூச்சும் தைலமும் மணத்தன. கொட்டில்களுக்குள் புகைந்துகொண்டிருந்த குந்திரிக்கம் நீலத் துகில்போல அலையடித்தபடி வெளியே சென்றுகொண்டிருந்தது.

சுதமன் ஒவ்வொரு கொட்டகையாக நின்று உள்ளே நின்றிருந்த புரவிகளைப் பார்த்தபடி சென்றார். தெற்குத் திசைப்புரவியின் கொட்டிலின்மேல் எமனுக்குரிய எருமைக் கொடியும் சகதேவனின் அன்னப்பறவைக் கொடியும் பறந்தன. அவருடைய மணத்தை உணர்ந்த புரவி எடைமிக்க குளம்புகளை எடுத்து வைத்து நின்ற இடத்திலேயே ஓடுவதுபோல காலெடுத்து வைத்தது. அதன் பிட்டம் துடித்து அதிர்ந்தது. அதன் தூக்கிய பின்இடதுகாலுக்கு அடியில் பெரிய லாடத்தின் வடிவம் தெரிந்தது. உள்ளே இருந்த சூதன் எழுந்து தலைவணங்கினான்.

சுதமன் நடந்து சென்றபடி கிழக்குக்கு உரிய இந்திரனின் மின்படைக் கொடி பறக்கும் கொட்டகையை பார்த்தார். அர்ஜுனனின் குரங்குக் கொடி அருகே பறந்தது. “புரவிகளுக்குரிய அணிகலன்களை அனுப்பிவைப்போம். அவற்றை நீங்களே வந்து பெற்றுக்கொள்ளவேண்டும். புரவிகளை அணிசெய்பவர்களுக்கு நேரில் நின்று வழங்கவேண்டும்” என்று அவர் சொன்னார். “அணிசெய்வோர் வேறு… அவர்களை. அணிச்சூதர்கள் என்போம்” என்று யாமகேது சொன்னார். “அவர்களின் கல்வியும் நெறியும் வேறு. அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அவர்கள் அணிச்சூதர்களின் ஒரு பிரிவு. அவர்களுடைய கல்வியை சமையக்கல்வி என்பர்.”

இடைமறித்து “ஆம், அறிவேன்” என்று எரிச்சலுடன் சுதமன் சொன்னார். “உங்கள் நினைவுக்காக சொல்கிறேன்… புரவிகள் எவ்வண்ணம் அணிசெய்யப்பட்டிருக்கவேண்டும் என்று முறையாக வகுக்கப்பட்டுள்ளது. அதை பட்டுத்திரையில் ஓவியங்களாக வரைந்து அளித்திருக்கிறார்கள். அணிசெய்பவர்கள் அதை நோக்கி அவ்வண்ணமே செய்யவேண்டும்.” யாமகேது “ஆம் அந்தணரே, அவ்வண்ணமே செய்வோம். அவ்வாணையை நீங்கள் அணிச்சூதர்களிடம் அறிவிக்கவேண்டும்” என்றார். சுதமன் எரிச்சலுடன் அவரை நோக்கி ஏதோ சொல்ல நாவெடுப்பதற்குள் எதையோ பார்த்துவிட்டார். அவர் பதறி “என்ன? என்ன அது?” என்று கூவி பின்னடைந்தார்.

“ஒரு நெளிவு… நாகம்!” என்று ஓர் ஏவலன் கூவினான். “நாகமா? இங்கா?” என்று கூவியபடி யாமகேது முன்னால் ஓடினார். அதற்குள் அவரும் பார்த்துவிட்டார். “ஆ! நாகம்… நாகம்… ஓடி வருக! ஓடி வருக!” என்று கூவினார். அங்கிருந்த ஏவலர்கள் கையில் கிடைத்த தடிகளுடன் அப்பகுதியை சூழ்ந்துகொண்டார்கள். கிழக்குத் திசைப் புரவி நிலையழிந்து துள்ளி கொட்டிலின் சிறிய இடத்திற்குள் சுற்றி வந்து கனைத்தது. அதன் செவிகள் விடைத்து முன்கோட்டியிருக்க மூக்குத்துளைகள் விரிந்து அசைந்தன. உடலெங்கும் மயிர்கள் எழுந்து மென்பரப்பாகும்படி மெய்ப்பு அடைந்து அது நடுங்கிக்கொண்டிருந்தது.

அனைவரும் கூடி கூச்சலிட்டபடி ஓடினர். கைக்குக் கிடைத்த கழிகளை எடுத்துக்கொண்டனர். புரவிகளின் தசைகளை உருவிவிடுவதற்குரிய மரவுரிக்குவை ஒன்று கொட்டிலின் அருகே கிடந்தது. அதை ஏவலர் நீண்ட கழிகளால் அகற்றினார்கள். ஒவ்வொரு மரவுரிக்குவையாக அகல அகல சூழ்ந்திருந்தவர்கள் எச்சரிக்கை கொண்டு உறுமல்களையும் ஓசைகளையும் எழுப்பினர். ஒரு மரவுரிக்கு அடியில் நாகத்தின் சுருள்கள் தெரிந்தன. அது கழி பட்டதும் சீறி படமெடுத்தது. பெரிய அரசநாகம். அதன் தலை இடையளவு உயரம்கொண்டு எழுந்து நின்றது. மணி கோத்தது போன்ற செதில்கள் அசைய கழுத்தின் வெண்ணிறமான வளைகோடு நெளிந்தது. நா பறக்க மணிவிழிகளுடன் அது நோக்கியது.

வீரர்களில் ஒருவன் சற்றே அசைய அத்திசை நோக்கி பாய முற்பட்டது. “அடியுங்கள்…” என்று யாமகேது கூவ இருவர் கூச்சலிட்டபடி தடியுடன் பாய்ந்தனர். நாகம் அவர்கள் மேல் பாய்வதுபோல முன்னெழுந்தது. அவர்கள் பின்னடைந்த கணம் அது தன் உடலைச் சொடுக்கிச் சுழற்றி வெற்றுத்தரைக்குள் புகுந்ததுபோல் மறைந்தது. “மரவுரிகளை அகற்றுக!” என்று யாமகேது கூவினார். மூங்கில்களால் மரவுரிகளை அகற்றினர். அடியில் ஒரு சிறிய நிலப்பிளவு தெரிந்தது. கைவிரல்கள் உள்ளே செல்லக்கூடுமா என ஐயுறச் செய்யும் அளவுக்கு சிறிது. ஆனால் அது உள்ளேதான் சென்றிருந்தது. உள்ளே இருளுக்குள் அதன் விழிமணிகளை காணமுடியும் என்பதுபோல தோன்றியது. அந்நிலப்பிளவே ஒரு விழி எனத் தெரிந்தது.

யாமகேது “தீயிடலாம்… தீ” என்று கூவினார். சுதமன் “வேண்டாம்” என்றார். “புரவிகள் உள்ள இடம்… நாம் இத்தனை பாதுகாப்பாக வைத்திருக்கும்போது…” என்று யாமகேது சொல்லத்தொடங்க “எந்தப் பாதுகாப்பும் நாகங்களை தடுக்காது… வேண்டாம்” என்று சுதமன் சொன்னார். “ஆனால்… இவை வேள்விப்பரிகள்” என்று யாமகேது மேலும் சொல்ல “என் ஆணை… அது விலகிச்செல்லட்டும்” என்றார் சுதமன். யாமகேது “என் கடமை எச்சரிப்பது” என்றார். “அது உள்ளே போகும் வழி இருக்கும்” என்றார் சுதமன். “தோண்டிப் பார்ப்போம்” என்றார் யாமகேது. “எதுவரை?” என்று சுதமன் கேட்டார். யாமகேது திகைப்புடன் நோக்கினார். “செல்க!” என்று சுதமன் கைகாட்டினார்.

யாமகேது தலைவணங்கி அகல, ஏவலர் முணுமுணுத்தபடி விலகினர். “அது இங்கேயே இருந்திருக்கிறது.” “காலடியில் உள்ளது நாகர்களின் உலகம்.” “அதன் எதிரி கீழ்த்திசைவென்ற பார்த்தன்.” “அப்புரவி ஏன் அதன் மணத்தை அறியவில்லை?” “அதற்கு தன்னை சுருட்டிக்கொள்ளத் தெரியும். தன் மணத்தையும் சுருட்டிக்கொள்ளும். உடலைப் பந்தாக்கி ஒரு விதைபோல ஆகி மண்ணில் கிடக்கும். நம் கால்களில் இடறவும் கூடும்.” “இங்கே கிடக்கும் இக்கூழாங்கற்கள் எல்லாமே நாகங்கள்தான். அவை நாகமென ஆகும் தருணம் அமையவில்லை.”

சுதமன் தன் உடலில் அதுவரை இருந்த எல்லா இறுக்கமும் விலக களைப்பும் சோர்வும் எடை என வந்து அழுத்துவதை உணர்ந்தார். கால்களும் கைகளும் அழுத்தமான பிசினில் சிக்கியிருப்பதுபோலத் தோன்றியது. அவர் தன் தேரை நோக்கி சென்றார். தேர் ஒருங்கட்டும் என தொலைவிலேயே கைகாட்டினார்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 69

பகுதி ஏழு : பெருசங்கம் – 1

சுதமன் பதற்றத்துடன் இடைநாழியினூடாக ஓடினார். பிறகு ஏன் அப்படி ஓடுகிறோம் என்று உணர்ந்து நின்று மூச்சுவாங்கிக்கொண்டார். ஆனால் உள்ளம் விசைகொண்டிருக்கையில் உடலை நிலைகொள்ளச்செய்ய முடியவில்லை. அவரால் எங்கும் அமரவோ படுக்கவோ முடியவில்லை. துயிலில் உடல் பல பக்கங்களிலாக தள்ளியது. நீர் நிறைந்த கலத்தை தூக்கிக்கொண்டு செல்வதுபோல தள்ளாடினார். ஆனால் படுத்தால் ஒரு நாழிகைகூட துயில்கொள்ள முடியவில்லை. துயில் கலைந்த பின் ஒரு கணம்கூட படுக்கையில் நீடிக்க முடியவில்லை.

அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சியே இல்லை என்று தோன்றியது. செய்யவேண்டியவை குறித்த பதற்றம், செய்யவிட்டுப்போனவை பற்றிய அச்சம், செய்துகொண்டிருப்பவற்றின் முடிவின்மை குறித்த கொந்தளிப்பு ஆகியவை கலந்து அவர் அகமொரு பெருங்கூச்சலாக இருந்தது. ஆனால் நின்று எண்ணும்போது அதுவே மகிழ்ச்சி என்று தோன்றியது. இந்தப் பரபரப்புகள் ஓய்ந்து அஸ்தினபுரி மீண்டும் தன் இயல்பமைதியில் நிலைகொள்ளுமென்றால் வாழ்க்கையே பொருளில்லாததாக ஆகிவிடக்கூடும்.

அவர் எதிர்ப்படுபவரிடமெல்லாம் எதையாவது கூவி ஆணையிட்டார். ஆணையிட்டு அகன்ற பின் திரும்ப ஓடிவந்து மீண்டும் ஆணையிட்டார். ஆணைகளை அவர்கள் மறந்துவிடுவார்களோ என்னும் ஐயத்துடன் ஓடிச் செல்கையில் இன்னொருவரைக் கண்டு அவரிடம் இன்னொரு ஆணையை இட்டார். ஒவ்வொருவரிடமும் அவர் சொல்லவேண்டியவை பெருகிக்கிடந்தன. ஒவ்வொன்றும் அறுந்து துடித்துக்கொண்டிருந்தது. பல்லாயிரம் முனைகளாலான ஒரு கூடையை அவர் முடைந்துகொண்டிருந்தார். ஒவ்வொன்றையும் பற்றி எடுத்து பின்னி முடைந்து அதன் வடிவை முழுமைசெய்யவேண்டும்.

அவரால் அதை எண்ணிநோக்கவே முடியவில்லை. உள்ளம் மலைத்து அப்படியே செயலற்றது. மறுகணமே அதை எண்ணக்கூடாது என ஒழிந்தார். அதை திரும்பி நோக்கவேகூடாது. மொத்தப் பணியையும் எண்ணுபவனால் பெருஞ்செயல்களை ஆற்றமுடியாது. செயலின் விளைவையும் எதிர்கால மதிப்பையும் கருதுபவன் சோர்வடைவான். இன்று இக்கணம் நான் ஆற்றும் செயல்மட்டுமே நான். வேறேதுமல்ல. அதில் முழுமையாகத் திகழ்வதே செய்யக்கூடுவது. முழுமை இருப்பது எதிர்காலத்தில். செயல் என அனைத்தும் திகழ்வது நிகழ்காலத்தில் மட்டுமே.

ஆனால் அது இயலவில்லை. அவர் நான்கு திசையிலும் சிதறித்தெறித்துக்கொண்டிருந்தார். மூன்று காலங்களிலும் ஒரே தருணத்தில் திகழ்ந்தார். எங்கும் இல்லாமலும் இருந்தார். எதிரே வந்த காவலனிடம் “பிரீதர் எங்கே? நான் அவரை கேட்டதாக சொன்னேனே? உடனே என்னை வந்து சந்திக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேனே?” என்றார். அவன் திகைத்து “என்னை யானைக்கொட்டிலுக்கு செல்லும்படி சொன்னீர்கள். நான் வேள்விக்குரிய நூற்றெட்டு யானைகளையும் நோக்கி வந்து செய்திசொல்லவேண்டும் என்றீர்கள்” என்றான்.

சுதமன் சீற்றத்துடன் “யானைகளைப்பற்றி என்ன கவலை இப்போது? அதற்கு இன்னமும் ஏழு நாட்கள் இருக்கின்றன. இப்போது…” என்றபின் கைவீசி “செல்க, உடனடியாக சாரதனை நான் சந்திக்கவேண்டும் என்று சொல்க!” என்றார். “தாங்கள் பிரீதரை சொன்னீர்கள்” என்றான் ஏவலன். “சொன்னதை செய். எதிர்ப்புச்சொல் எனக்கு உகந்ததல்ல, தெரிகிறதா?” என்று கூச்சலிட்ட பின் சுதமன் இடைநாழியினூடாக ஓடத்தொடங்கினார். ஓடும்போதுதான் அவர் இயல்பாக இருப்பதாகத் தோன்றியது.

மேற்கு முற்றத்தை அடைந்து இறங்கி காற்று தூசும் சருகுத்தூளுமாகச் சுழன்றுகொண்டிருந்த வெளியில் நின்றபோதுதான் எதற்காக அங்கே வந்தோம் என்னும் உணர்வை அடைந்து திகைப்புடன் திரும்பி அரண்மனையை பார்த்தார். பதைப்புடன் மீண்டும் அரண்மனை நோக்கி செல்ல காலெடுத்தபோது எதன் பொருட்டு அங்கே வந்தோம் என நினைவுக்கு வந்துவிட்டது. அவர் கைதூக்கி கூவியபடியே ஓடினார். “தேர்… தேர் வருக!” அவரை தொலைவிலேயே நோக்கிக்கொண்டிருந்த தேர்வலன் தேரைப் பூட்டி அவர் அருகே வந்தான். “மூடா, நான் முற்றத்திற்கு வந்தால் தேரை கொண்டுவரமாட்டாயா?” என்று சுதமன் சீறினார். “நீங்கள் இன்று பலமுறை இவ்வாறு முற்றத்திற்கு வந்த பின் திரும்பி ஓடியிருக்கிறீர்கள், உத்தமரே” என்றான் தேர்வலன். “செல்க! தேவையற்ற பேச்சு வேண்டாம்” என்றார் சுதமன்.

தேர்வலன் தேரை மெல்ல செலுத்தியபடி “எங்கே?” என்றான். “அதை நான் ஏறியதுமே நீ கேட்டிருக்கவேண்டும்… புரவிகள் இருக்குமிடத்திற்கு” என்றார். “எந்தப் புரவிகள்?” என்று அவன் மேலும் தணிந்த குரலில் கேட்டான். “அஸ்வமேதப் புரவிகள்… வேறெங்கே செல்வேன்? நான் என்ன குதிரைச்சூதனா? அறிவிலி” என்று சுதமன் கூவினார். தேர் விசைகொண்டதும் அவர் அகம் சற்றே அடங்கியது. இருபுறமும் அணிகொண்டிருந்த அஸ்தினபுரியை நோக்கியபடி பீடத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தார்.

நகரின் அத்தனை கட்டடங்களும் புதுச்சுண்ணமும் பல்வண்ணமும் கொண்டு பொலிந்தன. கூரைகள் புதிய அரக்கும் மெழுகும் பூசப்பட்டு அன்று எழுந்தவை போலிருந்தன. சாலையோரங்களில் எல்லாம் தோரணங்கள். அடிக்கடி வளைவுகள். ஆங்காங்கே பந்தல்கள். ஆனால் அனைத்தையும்விட நகரை அணிசெய்தது எங்கும் பெருகியிருந்த திரள்தான். மக்களின் முகங்களெல்லாம் ஒன்றே எனத் தோன்றின. அனைத்தும் மகிழ்ச்சியில் வெறிப்பு கொண்டிருந்தன. தேவையில்லாமலேயே அனைவரும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எறும்புவாய் என வீடுகளுக்குள் இருந்து வெளியே வந்தனர், அதேயளவு மக்கள் உள்ளே சென்றனர்.

எங்கும் மலர்மணமும் குங்குமமும் சந்தனமும் கொம்பரக்கும் புனுகும் கஸ்தூரியும் கலந்த மணமும் நிறைந்திருந்தன. வெயிலில் அவை ஆவியென்றாகி வந்து முகத்தை அறைந்தன. “காடு பூத்தால் அத்தனை பூக்களும் ஒன்றே என்றாகிவிடுகின்றன” என்று ஒரு சூதன் விழவெழுந்த நகரைப் பாடியதை அவர் நினைவுகூர்ந்தார். விழாவில் களிவெறிகொள்ள மக்களுக்கு எவரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனிமையால், அத்தனிமையில் வெளிப்படும் தங்கள் சிற்றுருவால் உளம் நைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் விழைவது ஒன்றெனத் திரள்வதை, பேருருக் கொள்வதை. கைபெருகி கால்பெருகி கண்பெருகி உடல்பெருகி உளம் ஒன்றாகி திகழ்வதை.

அவர் விழிகள் பெருகியவர்போல் ஆனார். உடலெங்கும் விழிகள். விழிகள் மேலும் மேலும் ஆற்றல்கொண்டன. இல்லங்களுக்குள் பெண்களின் களியாட்டை காணமுடிந்தது. இருள்மூலைகளில் நிகழும் காமக்கொண்டாட்டங்களைக்கூட காணமுடிந்தது. இந்திரவிழா அவிழ்த்துவிட்ட முடிச்சுகளை மீண்டும் கட்டி இறுக்க முடியவில்லை. நகரில் பிறிதொரு பெருநிகழ்வு எழுந்தால் மட்டுமே அவ்வுளநிலை மாறமுடியும். அதற்கு வேள்வியறிவிப்பு எழவேண்டும். வேதச்சொல் தெருக்கள் தோறும் முழங்கவேண்டும். மக்கள் இப்போதிருக்கும் உடலுக்குள் இருந்து பிறர் என வெளிவருவார்கள்.

தேர் வணிகச்சாலையினூடாகச் சென்றது. அவ்விழாவிலும் வணிகர்கள் விற்றுக்கொண்டே இருந்தனர். ஆடைகள், அணிகள், நறுமணப்பொருட்கள், இன்னுணவுகள், மங்கலப்பொருட்கள். ஒவ்வொன்றும் கடைகளின் முகப்பில் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றை அறிவிக்கும் கொடிகள் படபடத்தன. வாங்குவோரை அறைகூவும் கொம்புகளும் சங்குகளும் குழல்களும் முழங்கின. வாங்குபவர்கள் தோளோடு தோள்முட்டி ததும்பிக்கொண்டிருந்தனர். விலைகூறி கூச்சலிட்டனர். நறுமணப்பொருட்களை எடுத்து ஒருவரோடு ஒருவர் வீசிக்கொண்டாடினர். வழக்கமாக தனியிடங்களில் மட்டுமே மது விற்கப்பட்டது. அப்போது கடைவீதிகள் முழுக்க பெரிய கலங்களில் மதுவை கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொன்றிலும் எத்தனை வகை! நூற்றுக்கணக்கான விலங்குகளின் தோல்களால் ஆன ஆடைகள். விலைமிக்க இமையக் கவரிமானின் வெண்மயிர் செறிந்த நுரையாடைகள், மான்தோல் ஆடைகள், புலித்தோலாடைகள், தென்னகத்திலிருந்து வந்த செந்தழல்போன்ற மயிர்கொண்ட மலையணில் ஆடைகள். புரவிவால் வண்ணம் கொண்ட ஆசுரநாட்டு மரவுரிகள், செவ்வண்ணமும் நீலவண்ணமும் பூசப்பட்ட மரவுரிகள். முகிலாலானவை போன்ற, நீர்க்குமிழியாலானவை போன்ற, இளம்பாளையாலானவை போன்ற, தளிராலானவை போன்ற பட்டுகள். பல்வேறுவகை படைக்கலங்கள்.

உடைவாள் பிடிகளில் அருமணிகள் மின்னிக்கொண்டிருந்தன. வகைவகையான மலர்ச்செதுக்குகள், மரப்பட்டைச் செதுக்குகள், நாகச்செதில் செதுக்குகள், முதலைப்பொருக்கு செதுக்குகள் கொண்ட வாளுறைகள். குறுவாள்கள், குத்துக்கத்திகள், எறிவாள்கள், எய்வாள்கள், வளைவாள்கள், சுழிமுனைவாள்கள், ஐம்முனை நகப்பிடிகள், உகிர்முனை கைப்பொருத்துக்கள். மானுடனுக்கு இப்புவியிலுள்ள அனைத்துத் தோல்களையும் தன்னுடையதாக்கவேண்டும். வண்ணத்துப்பூச்சியாகவேண்டும். புலியாகவேண்டும்.

கோட்டையைக் கடந்து தேர் சென்றதையே அவர் அறியவில்லை. கோட்டை வெண்ணிறத் திரைச்சீலை என பகலொளி பரவிய வானில் மறைந்துவிட்டிருந்தது. அதில் நிழல்கள் ஆடிக்கொண்டிருந்தமையால் விழிமயக்களித்த பெருங்கூட்டத்தில் தானும் கரைந்துவிட்டிருந்தது. கோட்டைக்குள்ளும் வெளியிலும் ஒரேபோல பெருந்திரள் அலைகொண்டது. திரும்பி நோக்கியபோது நகர் இருப்பதே தெரியவில்லை. வெண்ணிறக் கோட்டைக்கு அப்பாலிருந்து எழுந்த ஒலியலைகளும் அதிலாடிய நிழல்களும் அங்கே முடிவிலா மக்கள்வெளி இருப்பதாகவே தோன்றச்செய்தன.

சென்ற பல மாதங்களாகவே கண்கள் மக்கள்திரளுக்கு பழகிவிட்டிருந்தன. திரள் நாளென பொழுதென கணமென பெருக கண் அதை அறியாமல் ஏற்று ஒப்பி எப்போதும் எங்கும் மக்களின் திரள் கொப்பளிப்பை மட்டுமே நோக்குவதாக மாறி எப்போதேனும் அசைவற்று நிலைத்த ஓரிடத்தைப் பார்க்கையில் சற்று துணுக்குறல் உருவாகியது. கண்களை எப்போது மூடினாலும் உள்ளே காட்சியலைகள் எழுந்தன. இரவு துயிலில் எழும் கனவுகளில்கூட பெருந்திரள் அலையடித்தது. அத்தனை சொற்களிலும் திரளில் இருந்து கூச்சலிடும் தன்மை அமைந்தது. தனித்து ஒருவரை பார்த்தால்கூட அவர் திரளில் ஒரு துளியென உள்ளம் உணர்ந்தது.

நகருக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு மேற்குவாயிலும், வெளியே செல்வதற்கு வடக்குவாயிலும், அரசச்செய்தியாளரும் பிறரும் வெளியே செல்வதற்கு தெற்குவாயிலும் ஒதுக்கப்பட்டிருந்தன. நகரைச் சூழ்ந்திருந்த காடு அகன்று விலகிச் சென்றுவிட, அங்கே குடியிருப்புகளும் சாலைகளும் உருவாகி வந்துவிட்டிருந்தன. முச்சந்தி முனைகளில் சிறு சந்தைகள் எழுந்தன. அங்கே ஆலயங்கள் உருவாயின. உருவாகிவிட்டிருந்த ஆலயங்கள் நாள்தோறும் வளர்ந்து செழித்துப் படர்ந்தன. ஒருநாள் விட்டு மறுநாள் ஒரு வழி சென்றால் அங்கே ஓர் ஆலயம் எழுந்துவிட்டிருந்தது. அவற்றுக்கென எந்த நெறியையும் அரசால் அமைக்க முடியவில்லை. “அது தெய்வங்களின் பாதை. அவற்றின் விழைவு. நம் ஆணைகளை அவை செவிகொள்ளப்போவதில்லை” என்றார் சுரேசர்.

பலநூறு குடித்தெய்வங்கள். பாரதவர்ஷம் எங்கிலுமிருந்து அவை பிடிமண் என, அடையாளப்பொருள் என, நுண்சொல் என கொண்டுவரப்பட்டு அஸ்தினபுரியின் நிலத்தில் நிறுவப்பட்டன. பீடங்களில் களிமண் உருவங்களாக, மரச்செதுக்குகளாக, கல்லுருளைகளாக, நடுகற்களாக, விழிக்கற்களாக அவை நின்றன. ஒவ்வொரு தெய்வமும் முதல் நோக்கில் துணுக்குறச் செய்தது. ஒவ்வொன்றும் புதியதாகவும், கூடவே ஏற்கெனவே சற்று தெரிந்ததாகவும் இருந்தது. “இந்த தெய்வம் எது?” என்று வினவி அதன் கதையை, இயல்பை அறிந்து முன்னரே தெரிந்த தெய்வமொன்றுடன் அதைப் பொருத்தி வகுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

“பாரதவர்ஷம் தெய்வங்களின் நிலம். ஏதோ ஆணையை ஏற்றுக் கிளம்பியதுபோல எல்லா தெய்வங்களும் இன்று இங்கே வந்து சேர்ந்துவிட்டிருக்கின்றன” என்று சுரேசர் சொன்னார். “தெய்வங்கள் புது நிலத்தில் மிக எளிதாக வேர்விடுகின்றன. பல்லாயிரமாண்டுகளாக அங்கேயே நிலைகொண்டவை என தோன்றச் செய்துவிடுகின்றன.” அவரே அதை உணர்ந்தார். ஐந்தாறு முறை பார்த்த பின் ஓர் இடத்தின் அடையாளமாகவே அந்த தெய்வங்கள் உருமாறின. அவை இருக்குமிடம் அவற்றால் பெயர் பெற்றது. இன்னும் சில ஆண்டுகளில் அவற்றின் தொன்மை கதைகளால் நிறுவப்படும் என்று அவர் எண்ணிக்கொண்டார். ஆழுளம் உணரும் ஆழம் என்பதனால் அதை சித்தம் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும்.

அனலிலும் புனலிலும் காற்றிலும் சொல்லிலும் எழுந்து எங்கும் நிலைகொள்ளாத தெய்வங்கள் பல்லாயிரம். பூசைக்கென எழுந்து பூசைபெற்று அக்கணமே மறைபவை. மானுடரில் எழுந்து மானுடரைக் கடந்த நிலைப்பேறைப் பெற்று உறைபவை. கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் உருப்பெறும் தெய்வங்கள் மேலும் பல்லாயிரம். அத்தனை தெய்வங்கள் மானுடருக்கு தேவைப்படுகின்றன. “முன்பும் இங்கு பல்லாயிரம் தெய்வங்கள் இருந்தன. அவை சொல்லில் எழுந்தவை. இவை மண்ணில் இருந்து எழுந்த தெய்வங்கள்” என்றார் சுரேசர். “இனி இவை சொல்லுக்குள் சென்று பீடம் கொள்ளும். அங்கே முளைவிட்டு பெருகிப்பரவும். சொல் பெறும் தெய்வம் தன் ஆற்றலை சொல்லை ஆள்பவனுக்கு அளித்துவிடுகிறது.”

ஒவ்வொருநாளும் சுதமன் வெவ்வேறு பூசனைமுறைகளை பார்த்தபடி சென்றார். வெறியாட்டு எழுந்த பூசகன் முழுக் காளைக்கன்றை வாயில் கவ்வி அப்பால் தூக்கி வீசுவதை கண்டார். பல்லால் கடித்து மரக்கிளையில் தொங்கிக்கிடக்கும் வேலனைக் கண்டு உடல் நடுங்கி பின்னடைந்தார். வறுமுலை மூதன்னையின் நாவில் கேளாச் சொல் என நடுங்கும் தெய்வ ஆணையை கண்டார். துள்ளி அதிரும் வேல்கள். ஒளிர்நாவென திளைக்கும் வாள்கள். சுழலும் தடிகள். கருவறைக்குள் இருளில் அமர்ந்திருந்தன சில தெய்வங்கள். முச்சந்தியில் உச்சிவெயிலில் வெறித்து நோக்கி இருந்தன சில தெய்வங்கள்.

நகருக்கு மேற்கே முன்பு அடர்காட்டுக்குள் இருந்த ஓர் கலிதேவனின் ஆலயம் ஒவ்வொருநாளும் மக்கள் செல்லத்தொடங்கி தானே எழுந்து அணுகி சாலையோரத்திற்கு வந்ததுபோல தெளிவடைந்தது. அங்கு செல்வதற்கான படிகள் அமைந்த பாதை உருவாகியது. கலிதேவனுக்கு உகந்த நீலமலர்களுடன் கரிய ஆடை அணிந்து மக்கள் நீண்ட நிரைகளாக அப்பாதையில் வளைந்து ஏறிச்சென்றனர். கலிதேவனை புகழ்ந்து பாவலர் இயற்றிய செய்யுட்கள் ஒவ்வொருநாளும் புதிதாகக் கிளம்பி வந்தன. “எழும் யுகம் கலிக்குரியது. இனி நெறிகளை ஆள்பவன் அவனே. விழைவின் அரசன், வஞ்சத்தின் தலைவன், வெற்றிக்குரியவன், அனைத்து தெய்வங்களுமென்றாகி நின்று இப்புவியை இனி நடத்தவிருப்பவன்.” அவ்வழியே தேரில் செல்கையில் அச்சிறு குன்று ஒரு வண்டு என ரீங்கரிப்பதை கேட்கமுடிந்தது.

பெரும்பாலும் பெண்கள் அங்கே சென்றுகொண்டிருந்தனர். அத்தனை பெண்கள் செல்வது ஏன் என்று அவர் சுரேசரிடம் கேட்டார். அனைவருக்கும் கலிமேல் அத்தனை ஈடுபாடு எப்படி வந்தது? கலி எதிர்மறை உணர்வுகளின் தேவன். எழும் யுகம் பொருளுக்குரியது. விழைவின், உடைமையின், களிப்பின், துறப்பின் காலகட்டம். ஆகவே திருட்டின், காப்பின், ஐயத்தின், அச்சத்தின் சூழல். அன்று கலியே வழிபடப்படுவார். “உடைக்குள் பொன்னை ஒளித்துவைத்திருப்பவனை எப்படி கண்டுபிடிப்பாய் என நான் முன்பு ஒரு கள்வனிடம் கேட்டேன். அவன் தெய்வத்தை தொழுவதைப் பார்த்தாலே போதும் என்று அக்கள்வன் மறுமொழி சொன்னான்” என்றார் சுரேசர்.

சுதமன் சூழ நிறைந்திருந்த மக்களை நோக்கிக்கொண்டே சென்றார். நோக்க நோக்க ஒரே சொல்லை மீளமீள கேட்பது போலிருந்தது. ஒரே சொல் வளர்ந்துகொண்டே செல்வதுபோலவும் இருந்தது. சொற்களில் இருந்து சென்றடையக் கூடியவை பல. சொற்களில் இருந்து சென்றடையக் கூடியது இன்னொரு சொல் என்றிருந்தால் சொல் பயனில்லாததாகிறது. சொல் மானுடரிடம் விளையாடுகிறது. சொல்லை பகடையென வைத்து களத்தில் முடிவில்லாது நம்மை தோற்கடிக்கின்றன தெய்வங்கள். விழைவெனும் சொல் உடைமையெனும் சொல்லை சென்றடைகிறது. உடைமையெனும் சொல் ஆணவமெனும் சொல்லை.

இந்த மக்கள் எவர்? இவர்கள் இன்மையில் இயல்பாக இருந்தவர்களாக இருக்கலாம். இருத்தலையே நிறைவெனக் கொண்டவர்களாக வாழ்ந்திருக்கலாம். நிறைவையே மகிழ்ச்சியாக அறிந்திருக்கலாம். மகிழ்ச்சியைப்போல சிறந்த ஆடையும் அணிகலனும் ஒப்பனையும் வேறில்லை. இப்போது இவர்கள் ஒவ்வொருவரும் எதையேனும் வைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இல்லங்கள் அமைந்திருக்கின்றன. இல்லங்களுக்குள் அவர்கள் அமர்ந்து சொல்லாடுவதை, இல்லமுகப்புகளில் மைந்தரும் சுற்றமுமாக அமர்ந்திருப்பதை அவர் பார்த்துக்கொண்டு செல்வதுண்டு. ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு துண்டு வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மைகொண்டதாக இருக்கும்.

அஸ்தினபுரியை நாடி வந்தவர்கள் ஒருவர்கூட இல்லமின்றி தெருவில் தங்கியிருக்கலாகாது என்று யுதிஷ்டிரன் ஆணையிட்டிருந்தார். ஆகவே மொத்த நகரமும் தன்னைத்தானே கட்டி எழுப்பிக்கொண்டிருந்தது. சிதல்புற்று என நகர் வளர்ந்தது. நுரையெனப் பெருகியது. முகிலென மேலோங்கியது. வந்தவர்களுக்கு இருந்தவர்கள் இல்லம் செய்து அளித்தனர். வந்தவர்கள் இருப்பவர்கள் ஆகி வருபவர்களுக்கு இல்லம் செய்தனர். நகரம் ஒரு பெரும்பரப்பாகி அதன் நடுக்குமிழியாக பழைய அரண்நகர் அமைந்திருந்தது. ஒவ்வொருவரிடமும் சற்றேனும் பொன் இருந்தது. வந்தவர் அனைவருக்கும் உகந்த தொழில் அமைந்தது. அதற்கு பொன் ஊதியமாக கிடைத்தது. நகரமெங்கும் உணவும் கள்ளும் மலிந்து கிடந்தன. எனவே பொன் பொன் எனவே அவர்களிடம் சேர்ந்தது. அவர்கள் அதைக்கொண்டு வாங்கத்தக்க பொருட்களின் நுண்வடிவம். அவற்றை வாங்கும் தருணத்து இன்பத்தின் பருவடிவம்.

சேர்க்கச் சேர்க்க அவர்கள் மேலும் மேலும் பொன்விழைவு கொண்டவர்கள் ஆனார்கள். கனவுகளை கைகளால் தொடமுடிகிறது. எண்ணி எண்ணி அடுக்கமுடிகிறது. மடியில் முடிந்துகொள்ள, இல்லத்தில் புதைத்துவைக்க முடிகிறது. பொன் அவர்கள் கையில் வளர வளர அவர்களின் ஆடை மாறியது. நடை மாறியது. சொற்களும் விழிகளும் மாறுபட்டன. தெய்வங்கள் மாறலாயின. குடித்தெய்வங்கள் அவர்களின் ஊர்களிலும் இல்லங்களிலும் தென்மேற்கு மூலைகளில் ஒடுங்கின. காக்கும்தெய்வங்களை அவர்கள் நாடினர். மேலும் மேலும் ஆற்றல்கொண்ட தெய்வங்களை. கொல்வேல் தேவர்படைத்தலைவனை. அவன் வழிநடத்தும் ஆயிரத்தெட்டு அன்னையரை. கொற்றவையை. அறுதியாக கலியை.

பிற தெய்வங்கள் அனைத்தையும்விட கலியே அவர்களின் அகத்தை நன்கறிந்தவன் என்று அவர்கள் உணர்ந்தனர். “கலி மூன்று தெய்வங்களுக்கும் மைந்தன். இருளில் இருந்து எழுந்தவன், எனவே இருளை அறிந்தவன், ஒளியை நோக்கி செல்ல பிறிதொரு வழித்துணை இல்லை” என்றனர் சூதர். நகரில் காகங்கள் திரும்பிவந்தன. நகரில் வறுமை எழுந்தபோது அவை மறையலாயின. துரியோதனன் களம்பட்டபோது அவை முற்றாக அகன்றன. கலிதேவனை வழிபடும் சொற்களால் அவர்கள் காகங்களை அழைத்தனர். நகரை அவற்றிடம் ஒப்படைத்தனர்.

நகரில் காகங்கள் பெருத்துவிட்டிருப்பதை எவரும் அறியவில்லை. நகரம் மக்கள்திரளால் ஓசையிட்டுக்கொண்டிருந்தமையால் அவற்றின் ஓசை மறைந்துவிட்டிருந்தது. ஆனால் ஒருநாள் இரவில் நிலவில் வானமெங்கும் காகங்கள் பறந்துகொண்டிருந்ததை சுதமன் கண்டார். அவர் முதலில் அவை வௌவால்கள் என நினைத்தார். பின்னர் அவை பறக்கும் சிறகசைவைக்கொண்டு காகங்கள் என தெளிந்தார். மறுநாள் அவர் அதை சொன்னபோது அமைச்சுநிலையில் இருந்த இளைய அமைச்சர்கள் அனைவருமே அதை சொன்னார்கள். நகரில் வெவ்வேறு இடங்களில் அவர்கள் அச்சுறுத்தும் அளவுக்கு காகங்கள் பெருகிநிறைந்திருந்ததை கண்டிருந்தனர்.

“அங்காடி முகப்பில் ஒருநாள் காலையில் நான் என்ன இது இந்த இடம் இத்தனை இருண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டு தேரில் சென்றேன். ஒருகணத்தில் உண்மை நெஞ்சை அறைய திகைத்துவிட்டேன். அந்த இடம் முழுக்க காகங்கள். காகங்கள் அசையவில்லை. தேருக்கான வழியை மட்டுமே அவை விட்டன. பெரும்பாலானவை ஓசையிடவோ எழுந்தமரவோ இல்லை…” என்றான் ஒருவன். “ஆம், நானும் கண்டேன். தெற்குக்காட்டில் மரங்களில் இலைகளை மறைக்கும் அளவுக்கு காகங்கள்…” என்றான் இன்னொருவன். நகர்ச்சதுக்கச் சூதன் “இது காகங்களின் ஆலயம் என்று அறிக! காலம்சமைக்கும் கலியின் அருள் எழுந்த நகர் இது” என்று பாடினான். “கருமையே எழும் யுகத்தின் நிறம். எல்லா வண்ணங்களும் சென்றடையும் வண்ணம் அது.”

கலியின் காகக்கொடியை முதலில் வணிகர்கள் தங்கள் கடைகளிலும் இல்லங்களிலும் நிறுவினர். பின்னர் பெரும்பாலான மக்கள் தங்கள் இல்லங்களின் முகப்பில் காகச்சின்னத்தை பொறித்துக்கொண்டனர். காகத்தின் படம் பொறித்த வெள்ளி முத்திரைகள், நீலப்பட்டு துணிகள், பலகைகள் கடைகளில் விற்கப்பட்டன. காகம் பொறிக்கப்பட்ட செம்புக் கணையாழிகளை பெரும்பாலும் அனைவருமே அணிந்திருந்தனர்.

“நால்வருணமும் திரிந்து அனைவருமே வைசியர் என்றான காலகட்டம் இது” என்றார் அந்தணராகிய மர்க்கர். “அவ்வண்ணம் ஒன்று எழும் என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அன்று வேதச்சொல்லும், முனிவரின் ஊழ்கமும், அரசனின் அறமும், மறவரின் வீரமும், புலவரின் சொல்லும்கூட பொன்னால் அளவிடப்படும். மூத்தோரின் மதிப்பும் அன்னையரின் அன்பும் மகளிரின் காதலும்கூட பொன்னுக்கு நிகர்வைக்கப்படும். அது எழுந்துவிட்டதென்பதை இந்நகர் காட்டுகிறது.”

சுதமன் துயின்றுவிட்டிருந்தார். சற்றுநேரம்தான், ஆனால் அவர் அதற்குள் தன்னுள் நெடுந்தொலைவு சென்று மீண்டார். அவர் அங்கே துரியோதனனை கண்டார். இரவில் நீர் என கன்னங்கருமையாக மின்னிய அரியணையில் துரியோதனன் அமர்ந்திருந்தான். அவன் வலப்பக்கம் சகுனி நின்றிருந்தார். துரியோதனனின் காலடியில் சிறிய சிற்பங்களாக நூற்றுவர் தம்பியர் நின்றிருந்தனர். அப்போதுதான் துரியோதனன் நான்கு கைகளுடன் கல்லுடல் கொண்டு தெய்வம் என கருவறைப் பீடத்தில் அமர்ந்திருப்பதை சுதமன் கண்டார்.

துரியோதனன் தன் வலது மேற்கையில் முப்புரிவேலும் இடது மேற்கையில் பாசச்சுருளும் ஏந்தியிருந்தான். கீழ் வலக்கை அஞ்சலும் இடக்கை அடைக்கலமும் காட்டியது. காலுக்குக் கீழே பீடத்தில் காகம் பொறிக்கப்பட்டிருந்தது. துரியோதனனின் கண்கள் உயிருடன் இருந்தன. அவன் நட்புடன் புன்னகைத்தான். “அரசே, நான் சுதமன். உங்கள் அவையில் எந்தை அமைச்சராக இருந்தார்” என்று சுதமன் சொன்னார். “நான் உங்களை இளமைந்தனாக அரசவையில் கண்டிருக்கிறேன்.” துரியோதனன் புன்னகைத்து “உங்கள் குடி பெருகுக, உத்தமரே” என்றான். “நான் எளியோன். இந்நகரில் ஒரு சிறு துளி. உங்கள் அடிதொழுபவன்” என்றார் சுதமன்.

தேர் உலுக்கி நிற்க அவர் இறங்கி திகைத்து நின்றார். எங்கு வந்திருக்கிறேன்? பின்னர் இடமுணர்ந்தார். அஸ்தினபுரிக்கு வடகிழக்கே கங்கைவளைவு வரை பரந்திருந்த காட்டுக்குள் வேள்விக்கென ஒரு நகர் அமைக்கப்பட்டிருந்தது. அவர் அதன் முற்றத்தை அடைந்துவிட்டிருந்தார்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 18

அர்ஜுனன் நகர்நுழைவு முடிந்து அரண்மனையை அடைந்தபோது களைத்து தளர்ந்துவிட்டிருந்தான். அவன் அஸ்தினபுரியின் அணிப்படையினருடன் கோட்டைமுகப்பை அடைந்தபோது முதற்கதிர் எழத் தொடங்கியிருந்தது. அவ்வேளையிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அவனை எதிர்நோக்கி கோட்டைமுகப்பின் பெருமுற்றத்தில் செறிந்திருந்தனர். உள்முற்றத்தில் அவனுடைய தேர் செல்வதற்கான பாதையை அமைக்கும்பொருட்டு நூற்றுக்கணக்கான புரவிவீரர்களை அணிநிரத்தி வேலி ஒன்றை அமைத்திருந்தாள் சம்வகை. ஆனால் அந்த வேலி மக்கள்திரளின் உந்தலால் உலைந்தாடிக்கொண்டிருந்தது. மேலும் மேலும் படைகளை அங்கே நிறுத்தவேண்டியிருந்தது. அவர்கள் நீர்நிறைந்த ஏரியின் கரை என விம்மிக்கொண்டிருந்தனர். நகரின் அத்தனை தெருக்களிலிருந்தும் மக்கள் பெருகி மையச்சாலை நோக்கி முட்டிமோதி உந்தி திணறிக்கொண்டிருந்தனர். காற்று நிறைந்த தோற்பை என கோட்டை வெடித்துவிடும் என தோன்றியது.

அர்ஜுனனின் கொடி தெரிந்ததும் கோட்டை மாபெரும் முரசென மாறி முழக்கமிட்டது. ஓசையின் உச்சத்தில் செவி செயலிழக்க வெற்று அசைவுகளாக நகரம் நுரைகொந்தளித்தது. முந்தையநாள் பகல்முதல் தொடங்கிய கொண்டாட்டம் அது. இந்திரவிழவு குறித்து யுயுத்ஸு நன்கறிந்திருந்தான். அது நகரை அதன் அனைத்துச் சங்கிலிகளையும் அவிழ்த்து தளைகளை விடுவித்து அதன் பித்துகளுக்கு விட்டுவிடுவதுதான். அன்று எதுவும் நிகழும். எதையும் எவரும் ஆளமுடியாது. அதன் பித்தில் ஆடியவன்தான் அவனும். அவை அவன் நினைவில் கொந்தளிப்பான கனவு என நீடித்தன. எப்போதேனும் கனவிலெழுகையில் அச்சமும் கிளர்ச்சியும் அளித்தன. ஆனால் அன்று அவன் கண்டது எவ்வகையிலும் எண்ணியிருக்க முடியாததாக இருந்தது. நகரம் அதன் வெறியால் உடைந்து தெறித்துவிடும் என, அதன் விசையால் சுழன்று வானிலெழுந்துவிடும் என தோன்றியது.

அர்ஜுனன் காமரூபத்திலிருந்து இந்திரனின் அடையாளமாகக் கொண்டுவந்த பொன் மூங்கில் வெள்ளித் தேரில் நகர்புகுந்ததும் அந்தக் களியாட்டம் தொடங்கியது. இந்திரனின் ஆலயத்திலிருந்து சிலை அணியூர்வலமாக எடுத்துக்கொண்டுவரப்பட்டு செண்டுவெளியின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்ட மண்மேடையில் நிறுவப்பட்டது. அதன் முன் போர்விளையாட்டுக்களும் படைக்கலப் போட்டிகளும் தொடங்கின. நகரெங்கும் சூதர்களின் நடனங்களும் பாடல்களும் நிகழ்ந்தன. மெல்லமெல்ல பெண்கள் நகரில் நிறைந்தனர். சாலைகளில் அவர்களின் நடனங்களும் விளையாட்டுக்களும் தொடங்கின. மதுக்களியாட்டு என அவை மாறின. காமக்களியாட்டுகளாயின. அனைத்து எல்லைகளும் மீறின. இரவெல்லாம் நகரம் எரியெழுந்ததுபோல் சுடர்ந்தது. கூவி ஆர்ப்பரித்தது. விடிந்தபோது அது அணையுமெனத் தோன்றியது. ஆனால் கருக்கிருள் கடந்ததும் புது வெறியுடன் மீண்டும் எழுந்தது.

அர்ஜுனன் நகருக்குள் நுழைந்ததும் அத்தனை வேலிகளும் ஒரே கணத்தில் உடைந்தன. அவன் ஊர்ந்த தேரை புரவிகளை கழற்றிவிட்டு அப்படியே தூக்கி மேலெடுத்தனர். மக்கள்திரளின் ஒழுக்கின் மேல் அவன் மிதந்து அலைமோதினான். அவனை அவர்கள் மலர்மழையால் மூடினார்கள். அவன் நகரெங்கும் அலைந்து திரிவதை காவல்மாடம் மேலிருந்து யுயுத்ஸு நோக்கினான். “என்ன செய்வது?” என்று சம்வகை கேட்டாள். “ஒன்றும் செய்யமுடியாது. அவர் அரண்மனைக்கு வந்துசேரவேண்டியதுதான்” என்று யுயுத்ஸு சொன்னான். “அவருடைய பாதுகாப்பு…” என்று சம்வகை சொல்ல “அவர் இம்மக்கள்திரளால் நசுக்குண்டு கொல்லப்பட்டால் அதுவல்லவா வீடுபேறு?” என்றான் யுயுத்ஸு. சம்வகை அவன் உணர்ச்சியை புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவள் நின்று தவித்தாள். அமர்ந்தும் எழுந்தும் சொல்லெடுத்தும் சொல்லடங்கியும் உலவிக்கொண்டிருந்தாள். எவரிடமென்றில்லாமல் சினம்கொண்டாள். பின் செயலோய்ந்து அமர்ந்தாள். யுயுத்ஸு அவளை வேடிக்கையுணர்வுடன் நோக்கிக்கொண்டிருந்தான்.

அரசக்காவலர் ஆணைகளைப் பெறுவதை நிறுத்திவிட்டிருந்தனர். ஆணைகள் முழங்கிய போதிலும் அந்த நகர்ப்பெருமுழக்கத்தில் அவை மறைந்தன. எதையும் செய்யமுடியாது என உணர்ந்த பின் செயலற்றிருந்த காவலர் மெல்லமெல்ல நகரின் வெறியால் தாங்களும் ஈர்க்கப்பட்டனர். அதில் இறங்கி கரைந்தழிந்தனர். “நூலறுந்த பட்டம். இது எங்கேனும் சென்றமையவேண்டும். அதுவரை செய்வதற்கொன்றுமில்லை” என்று சுரேசர் சொன்னார். சம்வகை அரண்மனையில் நிலையிலாது உலவியபடி “பகல் வெளுத்துவிட்டது. அவரை நகரின் அத்தனை தெருக்களுக்கும் கொண்டுசென்றுவிட்டார்கள். அவர் அவர்களின் தலைக்கு மேலேயே மிதந்துகொண்டிருக்கிறார்” என்றாள். சுரேசர் “ஓர் இடத்தில் இது நின்றுதான் ஆகவேண்டும்” என்றார். “அவர் அரசருக்கு சிறப்புப் பரிசொன்று கொண்டுவந்திருக்கிறார் என்றார்கள். இப்போது அது அவர் கையில் இருக்கிறதா என்ன?” என்றாள் சம்வகை. யுயுத்ஸு “அதை அவர் விடமாட்டார்” என்றான்.

யுதிஷ்டிரன் அரண்மனையின் உப்பரிகையில் வந்து நின்று நகரிலெழுந்த கொந்தளிப்பை நோக்கினார். “என்ன அது? இளையோன் வருகையா?” என்றார். “ஆம், அரசே. அர்ஜுனன் நகர்புகுகிறார்” என்று யுயுத்ஸு சொன்னான். “இதுவரை இதைப்போல் ஒரு வரவேற்பு எவருக்கும் அளிக்கப்பட்டதில்லை.” அவன் மிகமிகக் கூர்மையாக சொற்களைத் தெரிவுசெய்து “பேரரசி திரௌபதிக்கு வந்த கூட்டத்தைவிட ஏழுமடங்கு. நகரில் நிற்க இடமில்லை…” என்றான். ஆனால் அவன் எண்ணியதுபோல யுதிஷ்டிரனின் முகம் மலரவில்லை. கண்கள் சுருங்க கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றார். “நகரைச் சூழ்ந்திருக்கும் சிற்றூர்கள் அனைத்திலுமிருந்தும் மக்கள் இங்கே வந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே பார்த்தனை ஒருகணம் பார்ப்பதொன்றையே கொண்டாட்டமாகக் கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

யுதிஷ்டிரன் “நேற்றே இங்கு இந்திரவிழவு தொடங்கிவிட்டதல்லவா?” என்றார். “ஆம்” என்று யுயுத்ஸு சொன்னான். “அவர்கள் அதைத்தான் கொண்டாடுகிறார்கள். கட்டின்மையை, காமத்தை” என்றார் யுதிஷ்டிரன். மீண்டும் கண்களைச் சுருக்கி நோக்கிய பின் “இந்நகரை இவ்வண்ணமே விட்டுவிட முடியாது. ஒரு பகலுக்குள் இந்திரவிழா கட்டுக்குள் வந்தாகவேண்டும் என்று நெறியிருக்கிறது” என்றார். யுயுத்ஸு ஒன்றும் சொல்லாமல் நின்றான். யுதிஷ்டிரன் தன் அறைக்கு மீண்டபடி “இளையோன் அரண்மனைக்கு வந்ததும் அவன் என்னை வந்து பார்க்கட்டும்” என்றார். யுயுத்ஸு “ஆணை” என்றான். அவர் தொய்ந்த தோள்களுடன், தளர்ந்த நடையுடன் சென்றார். அவன் நகரை உப்பரிகையில் நின்று மீண்டும் நோக்கிக்கொண்டிருந்தான். அது மெல்ல அடங்கத்தொடங்குவதை உணர்ந்தான். அதற்குரிய விழிச்சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. ஓசையோ பெருகிக்கொண்டிருப்பதாகவே தோன்றியது. ஆனால் அது குறைந்துகொண்டிருக்கிறது என அகம் சொன்னது.

அவன் யுதிஷ்டிரனின் அறைவாயிலை அடைந்தபோது அங்கே மருத்துவர்கள் இருவர் நின்றிருந்தனர். “முதன்மை மருத்துவர் அரசரை நோக்கிக்கொண்டிருக்கிறார். அரசர் இருமுறை வாயுமிழ்ந்திருக்கிறார். அவருக்கு கடுமையான நடுக்கும் தலைச்சுற்றலும் இருக்கின்றன” என்றார் ஒருவர். “அவர் இளையவரை உடனே தன்னை வந்து பார்க்கும்படி ஆணையிட்டிருக்கிறார். அவரால் பார்க்க இயலுமா?” என்று யுயுத்ஸு கேட்டான். “அவர் எவரையும் பார்ப்பதனால் ஏதுமில்லை. அவருடைய உள்ளம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. அவரை சந்திப்பவர்கள் அதை உணர்ந்திருந்தால் மட்டும் போதுமானது” என்றார் மருத்துவர். “நன்று, அதை நான் இளையவரிடம் சொல்கிறேன்” என்று யுயுத்ஸு சொன்னான். அவன் படியிறங்கும்போது மிகவும் களைத்திருந்தான். காட்சியும் ஓசையுமே அக்களைப்பை அளிக்கக்கூடுமா? அவற்றினூடாக அவனும் அத்திரளுடன் களியாட்டம் இடுகிறானா என்ன?

கீழே சுரேசரின் அறையில் சம்வகை இருந்தாள். “அலையடங்கிக்கொண்டிருக்கிறது” என்று அவன் சொன்னான். “எவ்வண்ணம் எனத் தெரியவில்லை. இன்னும் சற்றுநேரத்தில் நகர் அமையத்தொடங்கிவிடும்.” சம்வகை “ஆம், அதை நானும் கருதினேன்” என்றாள். “எவ்வண்ணம்?” என்று அவன் கேட்டான். “நகரின் சில பகுதிகளில் இடம் ஒழிந்து தெரிகிறது” என்றாள். அவன் களைப்புடன் அவளருகே பீடத்தில் அமர்ந்தான். “சம்வகை, நீ அரசரின் துயர் எதனால் என்று எண்ணுகிறாய்?” என்று அவன் கேட்டான். “அதை ஆய்வுசெய்வது என் பணி அல்ல” என்றாள். “எனக்காக சொல். நான் அதை அறிய விழைகிறேன்” என்றான். “அவர் சில விடையில்லா வினாக்களால் வேட்டையாடப்படுகிறார்” என்று அவள் சொன்னாள். “அவருக்குத் தேவை என்ன என அவரே அறியவில்லை. ஆணவ நிறைவா? வெற்றியா? தனிமையா? எதையும் அவரல்ல, எவரும் சொல்லிவிட முடியாது.”

அவள் சொல்வது சரி என அவன் உணர்ந்தான். பெருமூச்சுடன் “உண்மையில் அவர் நோயுறும்போது நானும் சற்றே நோயுறுகிறேன்” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். சுவர்களில் மோதி அலைப்புற்ற நகரின் பெருமுழக்கம் குறைந்துகொண்டே சென்றது. ஒருகட்டத்தில் அதன் சரிவிறக்கத்தை தெளிவாகவே உணரமுடிந்தது. ஒற்றன் அருகே வந்து “இளையவர் அர்ஜுனன் அரண்மனையை அணுகிக்கொண்டிருக்கிறார். வணிகர்தெருவிலிருந்து அவரை கொண்டுவருகிறார்கள்” என்றான். யுயுத்ஸு பெருமூச்சுவிட்டான். “நான்காவது காவல்மாடத்தை அவர் அணுகிவிட்டார்” என்று அடுத்த செய்தி வந்தது. யுயுத்ஸு எழுந்துகொண்டு “நான் சென்று அவரை எதிர்கொள்கிறேன். அவர் களைத்திருப்பார்” என்றான். “ஆம். அவரால் எழுந்து நிற்கவே முடியாது என நினைக்கிறேன்” என்று சம்வகை சொன்னாள்.

அர்ஜுனன் அரண்மனைக்குள் ஆயிரக்கணக்கான மக்களால் தூக்கிக்கொண்டு வரப்பட்டான். அரண்மனை முகப்பின் முற்றத்தில் அத்திரள் அலைசுழித்தது. அவன் அதில் ஒதுங்கும் நெற்றுபோல வந்து முதல்தளத்தின் சாளரவிளிம்பின் மேல் தொற்றிக்கொண்டான். அவனை நோக்கி மக்கள் கூச்சலிட்டனர். ஆடைகளை தூக்கி வீசினர். அவன் சாளரம் வழியாகவே முதல்மாடிக்கு சென்றான். யுயுத்ஸு மேலே ஓடினான். இடைநாழியை அடைந்த அர்ஜுனன் அங்கேயே விழுந்துவிட்டான். அவன் உடலெங்கும் புளித்த வீச்சத்துடன் மது நாறியது. உலர்ந்த மதுவின் பிசுக்கின்மேல் மலர்ப்பொடியும் மலரிதழ்களும் மஞ்சளரிசியும் ஒட்டியிருந்தன. அவன் குழல்கற்றைகள் பிடிபடிந்து நார்நாராக தொங்கின. உடலில் வியர்வை வழிந்தபோது மலர்ப்பொடி உருகி இறங்கியது. யுயுத்ஸு அருகணைந்து “நீங்கள் நீராடலாம், மூத்தவரே” என்றான். ஆனால் அவன் விழிமூடித் துயிலத் தொடங்கிவிட்டிருந்தான்.

 

அர்ஜுனன் இரண்டுநாழிகைப் பொழுதே துயின்றான். விழித்து எழுந்து நீராடி ஆடைமாற்றி அவன் ஒருங்கி அமர்ந்திருந்தபோது யுயுத்ஸு அவனை நாடி வந்தான். அவன் அத்தனை விரைவாக ஒருங்கியிருப்பான் என அவன் நினைக்கவில்லை. “தங்களை எழுப்பலாம் என்றே வந்தேன், மூத்தவரே” என்றான். “நெடும்பொழுது துயில்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை” என்றான் அர்ஜுனன். நகரம் அதற்குள் முற்றாக அடங்கிவிட்டிருந்தது. ஓசையின்மை செவிகளை அறைந்தது. “செல்வோம், தங்களுக்காக அமைச்சர் காத்திருக்கிறார்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், செல்லவேண்டியதுதான்” என அர்ஜுனன் நடந்தான். யுயுத்ஸு உடன் நடந்தபடி “மூத்தவர் சற்று உடல்நலக்குறைவுடன் இருக்கிறார். இந்தக் களியாட்டின் முழக்கம் அவர் நோயை கூட்டியிருக்கிறது, ஆனால் அவரை நாம் சந்திப்பதில் பிழையில்லை என்றனர் மருத்துவர்” என்றான்.

அவர்களை எதிர்நோக்கி சம்வகை இடைநாழியில் காத்து நின்றிருந்தாள். “இவளை இப்போது படைத்தலைவியாக ஆக்கிவிட்டீர்கள் என்று அறிந்தேன்” என்றான் அர்ஜுனன். “ஆம், அரசே. இவள் ஆட்சியில்தான் இந்நகர் இன்று இருக்கிறது” என்றான் யுயுத்ஸு. அர்ஜுனன் சம்வகையை நோக்கி புன்னகைத்து “நன்று… அவளுடைய கவசங்கள் ஒளிர்கின்றன” என்றான். சுரேசர் இடைநாழியில் எதிரே வந்தார். முகமன் உரைத்து வணங்கினார். “நானும் உடன்வரவேண்டுமென்றால் வருகிறேன்” என்றார். “இது விந்தையான ஓர் விளையாட்டு, அமைச்சரே. நீங்களும் உடனிருக்கலாம்” என்றான் அர்ஜுனன். “நாம் ஒரு காவியத்தின் பகுதியை நடிக்கவிருக்கிறோம்” என்று நகைத்தான். யுயுத்ஸு “இந்நான்கு பகுதிகளும் ஒன்றே என்று இளைய யாதவர் சொன்னார். எனக்கு அது அப்போதும் புரியவில்லை, இப்போதும் குழப்பமாகவே உள்ளது” என்றான். அர்ஜுனன் நகைத்து “அது அவர் வழக்கம். எண்ண எண்ண சென்றடையமுடியாத சிலவற்றை சொல்லிவிடுவார். அவை சில தருணங்களில் அவர் வேண்டுமென்றே நம்மை குழப்பும்பொருட்டு சொன்னவையாகவே இருக்கும்” என்றான்.

யுதிஷ்டிரனின் அறைவாயிலில் நின்ற ஏவலனிடம் சுரேசர் உள்ளே அரசர் எவ்வண்ணம் இருக்கிறார் என உசாவி அறிந்தார். அர்ஜுனனிடம் “செல்வோம். நன்றே நிகழுமென எதிர்பார்ப்போம்” என்றார். “ஏன் அவ்வாறு எதிர்பார்க்கவேண்டும்?” என்று அர்ஜுனன் கேட்டான். சுரேசர் நகைத்து “ஏனென்றால் இது நான்காவது பரிசு. கதை இங்கே முடிவடைந்தாக வேண்டும்” என்றார். ஏவலன் வந்து அவர்கள் உள்ளே செல்லலாம் என அறிவித்தான். சுரேசர் “அரசரிடம் நீங்களே பேச்சை தொடங்கலாம். அவர் நோயுற்றிருந்தாலும் சில தருணங்களில் நிறையவே பேசுவார்” என்றார். அர்ஜுனன் “நானே பேசுகிறேன். இன்று அவர் நிறைய பேசமாட்டார் என நினைக்கிறேன்” என்றான்.

அவர்கள் அறைக்குள் நுழைந்தபோது யுதிஷ்டிரன் மல்லாந்து படுத்திருந்தார். சுரேசரும் யுயுத்ஸுவும் சம்வகையும் சுவர் அருகே பணிந்து நிற்க அர்ஜுனன் அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். “உங்கள் ஆணைப்படி கீழ்த்திசையை வென்று மீண்டிருக்கிறேன், மூத்தவரே. நமது வேள்விப்பரி கொட்டில் சேர்ந்துவிட்டது. நான்கு புரவிகளும் கொட்டில் நிறைத்து நின்றுள்ளன. பாரதவர்ஷத்தை நாம் நமது முன்னோரின் கொட்டிலில் கொண்டுவந்து கட்டிவிட்டிருக்கிறோம்” என்றான். யுதிஷ்டிரன் முனகினார். பின்னர் கையை ஊன்றி புரண்டு படுத்து “ஆம், நாம் இனி ராஜசூய அறிவிப்பை செய்யவேண்டியதுதான். எவருக்கும் மறுகுரல் இருக்காது என நினைக்கிறேன். நான்கு திசைகளிலிருந்தும் அந்தணர் வந்து கூடிவிட்டனர். வேள்விக்குரிய அனைத்தும் சேர்ந்துவிட்டன” என்றார். அர்ஜுனன் “ஆம், தாங்கள் மும்முடிசூடி அமரவேண்டிய பொழுது அணைகிறது” என்றான்.

யுதிஷ்டிரன் “எனக்கு நீ தனிப்பரிசு என எதை கொண்டுவந்தாய்?” என்றார். “ஏனென்றால் பிற மூவரும் அவ்வண்ணம் அரிய பரிசுகளை கொண்டுவந்தனர். எனில் நீயும் கொண்டுவந்தாகவேண்டும். இங்கே நாம் அனைத்தையும் சூதர்களுக்காகவும் காவிய ஆசிரியர்களுக்காகவும் நடித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார். அர்ஜுனன் புன்னகைத்து “நான் கொண்டுவந்ததும் மெய்யாகவே காவிய ஆசிரியர்கள் விழையும் பரிசுதான், மூத்தவரே” என்றான். “கீழைநிலம் இந்திரனுக்குரியது. நான் காமரூபத்துக்கு அப்பால் செல்லவில்லை என்றாலும் என் ஆணையை மேருநிலம் வரை செலுத்தினேன். அங்கிருந்து இப்பரிசு கிடைத்தது. உண்மையில் இதை பரிசு என்று சொல்லமுடியாது. இது ஓர் அறைகூவல். அறைகூவல் எனக்கல்ல, தங்களுக்கு. ஆகவே இதை தங்களுக்காகவே கொண்டுவந்தேன்” என்றான்.

ஆனால் யுதிஷ்டிரன் ஆர்வம்கொண்டவராகத் தெரியவில்லை. “அது என்ன? ஏதேனும் தீச்சொல்லோ மெய்ச்சொல்லோ படிந்த அருமணியா?” என்றார். “எதுவானாலும் அது ஒரு கதை. நான் கதைகளுக்குள் வாழ்பவனாக ஆகிவிட்டிருக்கிறேன்.” அர்ஜுனன் “ஆம் மூத்தவரே, கதைதான்” என்றான். “அக்கதையை சற்று விரிவாகவே நான் சொல்ல நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்” என்றபின் சொல்லத் தொடங்கினான். அவன் கதை சொல்லும்போது சிறுவனாகவே மாறிவிடுவதை யுயுத்ஸு கண்டான். கதைக்குரிய அசைவுகள் அவன் உடலில் எழுந்தன. கதையின் மெய்ப்பாடுகள் அவன் முகத்தில் தெய்வங்களை, பூசகர்களை, தொலைநிலத்துக்குடிகளை, பெண்களை, குழந்தைகளை கொண்டுவந்து காட்டிச்சென்றன. அவன் வழியாக அனைத்தும் நிகழ்ந்து முடிந்தது. எந்த நடனக்கூத்தனும் அவனுக்கு நிகரல்ல என்ற எண்ணத்தையே யுயுத்ஸு அடைந்தான்.

யுதிஷ்டிரனும் அக்கதையால் கொண்டுசெல்லப்பட்டிருந்தார். கதை முடிந்ததும் அவர் நீள்மூச்செறிந்தார். அர்ஜுனன் “இதுதான் அந்தப் புற்குழல். இதை மீட்டி அந்த வானம்பாடியை இங்கு கொண்டுவர முடியும்” என்றான். பின் சாளரத்தருகே சென்று நின்று அதை இசைத்தான். அதற்குள் இருந்து ஒரு வானம்பாடி வெளியே எழுந்ததுபோல ஓசை பிறந்தது. மன்றாட்டு என, கொஞ்சல் என அது ஒலித்தது. சற்றுநேரம் கழித்து வெளியே மரக்கிளையில் வானம்பாடி ஒன்று அவ்வோசைக்கு மறுமொழி அளித்தது. “காலப்பறவை எழுந்துள்ளது, மூத்தவரே. அதனிடம் அது மீளச்சொல்லாத சொல் என்ன என்று நீங்கள் கேட்கலாம்” என்றான் அர்ஜுனன். “உண்மையில் நீங்கள் கேட்டு அச்சொல்லை அறிந்துகொண்டீர்கள் என்றால் உங்களையும் உங்கள் ஊழையும் அறிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். அந்தத் தொலைநிலம் உங்களால் ஆளப்படும். அதை அறியாதவரை அந்நிலம் உங்களுக்கு அயலானது. உங்கள் மும்முடி அந்த வகையில் குறையுடையதே.”

யுதிஷ்டிரன் அவனை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் புன்னகைத்து “அதை நீ இளைய யாதவரிடம் கேட்டாயா?” என்றார். “ஆம், அவருக்கு அவருடைய அறுதிச்சொல் தெரியும்” என்றான். “அனைவருக்கும் தெரியும்” என்றார் யுதிஷ்டிரன். “அதை பல்லாயிரம் சொற்களால் மறைத்திருப்பார்கள். பல்லாயிரம் கோடி சொற்களால் திசைதிருப்பியிருப்பார்கள். அந்தச் சொற்களையெல்லாம் அள்ளி அகற்றி அச்சொல்லை மீட்பதுதான் அறைகூவல்.” அர்ஜுனன் “இது உங்கள் அறையில் இருக்கட்டும், மூத்தவரே. உங்கள் சாளரத்துக்கு வெளியே அந்தப் பறவை உங்களுக்காக எப்போதும் காத்திருக்கட்டும். உங்களுக்கான சொல் என்ன என்பதை தனிமையில் நீங்கள் அதனிடம் உசாவலாம்” என்றான்.

யுதிஷ்டிரன் அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “நாம் அறுதிசெய்து வைத்திருக்கும் சொற்களை ஒவ்வொன்றாகச் சொல்லலாம் என்கிறர்கள், மூத்தவரே. மறுக்கப்படும் ஒவ்வொரு சொல்லும் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியை நம்மிடமிருந்து வெட்டி வீசுகிறது. எஞ்சுவதே நம் வாழ்க்கை என்றாகிறது. உசாவிச் செல்லச் செல்ல மிகமிகக் குறைவாகவே நம்மிடம் எஞ்சும் என்கிறார்கள். அல்லது எதுவுமே எஞ்சாது. நாமறிந்த ஒரு சொல்கூட எஞ்சாது, அவ்வெறுமையில் எஞ்சும் ஒரு சொல்லே பிரம்மம் நாம் இங்கே வரும்போது நமக்கு அளித்தது. நாம் அதை சென்றடையும்போது ஒரு வட்டம் முழுமையடைகிறது” என்று அர்ஜுனன் சொன்னான். “உண்மையில் ஊழ் எனப்படுவது அந்தச் சொல் நோக்கி நம்மை தள்ளிச்செல்லும் நிகழ்வுகளின் பெரிய வலை அன்றி வேறல்ல.”

“நல்ல பரிசு” என்று யுதிஷ்டிரன் கண்களை மூடியபடி சொன்னார். “இதை கொண்டுவந்து எனக்கு அளிக்க உனக்கு ஓர் இரக்கமின்மை தேவை. இன்றும் உன்னிடம் அது எஞ்சியிருப்பது நிறைவளிக்கிறது.” அர்ஜுனன் “அது எனக்கு எதிரான இரக்கமின்மையும்கூட அல்லவா?” என்றான். யுயுத்ஸு அவர்களிடையே நிகழ்ந்த அந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தான். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று அவனுக்கு புரியவில்லை. “இளையோனே, எந்த உலகியலாளனும் அந்தச் சொல்லை அப்பறவையிடமிருந்து கேட்டு அறியமுடியாது. அதை அறியவேண்டுமென்றால் நான் இவையனைத்தையும் துறந்து செல்லவேண்டும். ஆனால் மெய்யாகவே இது எனக்கு தேவைப்படும். அதுவரை நான் காத்திருக்கிறேன்” என்றார். “ஆனால் இது உடனடியாகத் தேவைப்படுவது நம் பிதாமகருக்கு. அவர் இன்னமும் குருக்ஷேத்ரத்தில் தன் இறுதிச்சொல்லுக்காக காத்துக் கிடக்கிறார். அவர் மண்நீங்காமல் இங்கே நான் முடிசூட முடியாது. அவர் தேடியிருப்பது இச்சொல்லைத்தான் போலும். இந்தக் குழலுடன் தூதனை அவரிடம் நான் அனுப்புகிறேன்” என்றார்.

அர்ஜுனன் “ஆம், ஒருவேளை இது இங்கு வந்ததே அதன்பொருட்டுதான் போலும்” என்றான். “நன்று, நீ நாளை அவையமரவேண்டும். ஓய்வெடு” என்று சொல்லி யுதிஷ்டிரன் கண்களை மூடிக்கொண்டார். சுரேசர் செல்வோம் என்று உதட்டை அசைத்து சொன்னார். அர்ஜுனன் அவரை மீண்டும் வணங்கிவிட்டு வெளியேறினான். வெளிவந்ததும் “அவர் இதை கையாலும் தொடவில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “அவ்வாறுதான் நான் எதிர்பார்த்தேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் ஆடலை விழைபவர். இதை அவர் தொடுவதற்கு முன் பல்லாயிரம் முறை தன் நெஞ்சுக்குள் ஆடியிருப்பார்.” அவர்கள் ஓசைகள் தொடர அஸ்தினபுரியின் அரண்மனையின் இடைநாழிகள் வழியாக நடந்தனர். அர்ஜுனன் சுவரோவியங்களைப் பார்த்தபடி நடந்தான். பாண்டுவின் ஓவியத்தின் முன் நின்றான். இணைசேர்ந்து நின்றிருந்த மான்களை நோக்கி அம்பு கூர்வைக்கும் பாண்டுவை நோக்கி அவன் நின்றபோது விழிகள் சுருங்கின.

“அந்த மான்களின் இறுதிச்சொல் என்னவாக இருந்திருக்கும்?” என்று அவன் தனக்குத்தானே என கேட்டான். சுரேசர் “அது ஒரு தீச்சொல் என்கிறார்கள். அஸ்தினபுரியின்மேல் விழுந்த தெய்வப்பழி அது. அனைத்து அழிவுகளுக்கும் அதுவே வழிவகுத்தது” என்றார். அர்ஜுனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். “ஆனால் அது பழிச்சொல்லாக இருக்காது. இன்பத்தின் உச்சத்திலெழுந்த முனகலாகவே இருந்திருக்கும். இன்பத்திலேயே உயிர்விடுவதைப்போல் அரியது வேறென்ன?” என்றான். நடந்தபடி “அச்சொல் பாண்டுவின் நெஞ்சிலேயே பழிச்சொல் என திரிந்து நஞ்சுகொண்டிருக்கவேண்டும்” என்றான். யுயுத்ஸு அவன் சொல்வதென்ன என்று தெரியாமல் உடன் நடந்தான்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 67

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 17

யுயுத்ஸு துரோணரின் குருநிலையைச் சென்று சேர்ந்தபோது உச்சிப்பொழுதாகிவிட்டது. அவன் வழியிலேயே காய்களைத் தின்று நீர் அருந்தியிருந்தான். எனினும் பசித்துக் களைத்திருந்தான். அவனைக் கண்டதுமே அங்கிருந்த யாதவ இளைஞன் “நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம். தங்கள் குடிலுக்கு உணவை கொண்டுவரும்படி ஆணையிடுகிறேன்” என்றான். யுயுத்ஸு “என் வருகையை இளைய யாதவருக்கு அறிவிக்கவேண்டும். எனக்கு நெடும்பொழுது ஓய்வு தேவைப்படாது. சற்றே முதுகை நீட்டிக்கொண்டாலே போதும்” என்றான். “அவர்களிடம் நான் அரசமந்தணச் செய்தியுடன் வந்திருப்பதாகச் சொல்க!”

அவனுக்கு பெரிய கொப்பரையில் கிழங்குகளும் கீரையும் சேர்த்து சமைக்கப்பட்ட கஞ்சி வந்தது. உடன் உண்பதற்கு சுட்ட ஊன்துண்டுகள். அவை சிவந்து நெய்க்குமிழிகள் பொரிய சூடாக முனகிக்கொண்டிருந்தன. உண்டு முடித்து சிறுகுடிலில் பசுஞ்சாணி மெழுகிய திண்ணையில் தர்ப்பைப்புல் பாயில் படுத்தபோது ஒரு கணம் திரும்ப அஸ்தினபுரிக்கே செல்லவேண்டாம் என்னும் எண்ணம் யுயுத்ஸுவுக்கு ஏற்பட்டது. கங்கையிலிருந்து குளிர்காற்று அலையலையாக எழுந்து வந்துகொண்டிருந்தது. உச்சிப்பொழுதுக்கே உரிய மயங்கும் பறவைக்குரல்கள். நெடுந்தொலைவு வரை கொண்டுசெல்பவை ஓசைகள். கண்களை மூடி ஓசைகளை கேட்கத் தொடங்கினாலே உள்ளம் மிக விரிந்த நிலப்பகுதியை உணரத் தொடங்கிவிடுகிறது. மிகமிக அப்பால் ஏதோ பறவை இன்குழலோசை ஒன்றை எழுப்பிக்கொண்டிருந்தது. அதற்கும் அப்பால் ஏதோ நாயின் ஓசை. பறவையின் குழலோசை சுழன்று சுழன்று அவனை ஆட்கொண்டது. அவன் ஆழத்திலிருந்தே எழுவது போலிருந்தது அது.

இனிமை இனிமை இனிமை என உள்ளம் நிறைவுகொண்டது. இருத்தலைவிட இனிதாவதொன்றும் இல்லை. எதையும் சென்று எய்தாமல் எதையும் எண்ணிக்கொள்ளாமல் எவருக்கும் எதையும் நிறுவத் தேவையில்லாமல் வெறுமனே இருத்தலைப்போல் நிறைவளிப்பது வேறொன்றுமில்லை. அஸ்தினபுரி ஒரு பெரும் பொய். அங்குள்ள அரசியல்சூழ்ச்சிகள் பொய். பாரதவர்ஷமே மாபெரும் பொய். மெய்யென்றிருப்பது உடலே. அதன் எளிய இன்பங்களே. நல்லுணவு. நல்ல உறக்கம். நன்னீராடல். நல்லகாற்று. வானின் கீழ் இருத்தல். மண்ணின்மேல் இருத்தல். அவன் துயில்கொள்ளத் தொடங்கியதை அவனே அறிந்தான். நல்ல துயில் வந்தணையும் இடத்திலேயே நல்ல எண்ணங்கள் முளைக்க முடியும். வாழ்க்கையின்மேல் நம்பிக்கை கொண்ட பெருநோக்குகள் எழ முடியும். துயிலணையாத இடங்களில் இருப்பவை முட்கள். கால முட்கள். ஆணவ முட்கள்.

அவன் விழித்துக்கொண்டபோது எண்ணியதைவிட பொழுது பிந்திவிட்டிருந்தது. உள்ளம் பதற்றம் கொண்டது. எடுத்த பணியை தவறவிட்டுவிட்டோமா? இன்றே இளைய பாண்டவருடன் பேசிமுடித்துவிட வேண்டும். நாளையாயினும் அவர் நகர்புகவேண்டும். நாளை கிளம்பி வருவதற்கு அவரிடம் இன்று சொல்பெற்று இரவுக்குள் அவன் மீண்டுவிட வேண்டும். அவன் ஆடை திருத்தி முகம் கழுவி கிளம்பியபோது துயில்வதற்கு முந்தைய எண்ணங்களை நினைவுகூர்ந்து புன்னகை செய்தான். ஆனால் ஒன்றை உணர்ந்தான். அவன் வந்தபோதிருந்த பதற்றம் குறைந்திருந்தது. நம்பிக்கை உருவாகிவிட்டிருந்தது. அந்த இனிய எண்ணங்களின் அடியோட்டம் நெஞ்சுக்குள் இருந்துகொண்டேதான் இருந்தது.

குறுங்காட்டின் விளிம்பில் ஒரு பாறையில் இளைய யாதவர் அருகே அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை யுயுத்ஸு கண்டான். அவர் இசைமீட்டிக்கொண்டிருந்திருப்பாரோ என நினைத்தான். ஆனால் அவருடைய குழல் இடைக்கச்சையில்தான் இருந்தது. ஏன் அவ்வாறு எண்ணினோம் என்று பின்னர் வியந்தான். அவர்களின் முகங்களில் அந்தக் கனிவு நிறைந்திருந்தது. யாதவ மாணவன் “அவர்களிடம் செல்க! ஆணை பெற்றுவிட்டேன்” என்று சொல்லி தலைவணங்கி திரும்பிச் சென்றான். யுயுத்ஸு அவர்களை நோக்கி நடந்தான். அவர்கள் அவன் வருவதை அறிந்திருந்தாலும் திரும்பி நோக்கவில்லை. ஆனால் அவர்களின் நோக்கை உணர்ந்தவனாக அவன் நடைதளர்ந்தான்.

அவர்கள் தன்னை வேண்டுமென்றேதான் நோக்கவில்லையா? இல்லை, அவர்கள் இருந்த ஒருமையில் அவனுக்கு இடமில்லையா? அவனுக்கு கசப்பு ஒன்று ஊறி எழுந்தது. பெரும் பொறாமை அது எனத் தெரிந்தது. அத்தகைய நட்பை அடைந்தவன் அதற்குப் பின் இப்புவியில் அடைவதற்கென்ன உள்ளது? காதல்கள் அதற்கு ஈடாகுமா? தந்தையும் அன்னையும் அளிக்கும் அன்பு நிகராகுமா? எதுவுமில்லை. ஒன்றே எஞ்சுவது. ஆசிரியர் மாணவன் என்னும் உறவு. இங்கு நண்பனே ஆசிரியனாக அமர்ந்திருக்கிறான். அவன் பெருமூச்சுவிட்டான். அதை அடைவதற்குரிய தகுதி ஒன்றுண்டு. எஞ்சாமல் தன்னை அளிப்பது. அதை ஆணவமில்லாதவர்களே அடையமுடியும்.

ஆணவமில்லா நிலை எவருக்கும் இல்லை. மானுடக்கீழோரிடம்கூட ஆணவமே நிறைந்திருக்கிறது. ஆணவத்தைக் கடந்தோரிடம் மட்டுமே அந்த ஆணவமழிந்த நிலை உருவாகும். அதற்கு தன்னில் நிறையவேண்டும். தான் எனும் எல்லையை கண்டடையவேண்டும். தானெனத் தருக்கிச் சென்றடையும் உச்சமேது என்று புரிந்துகொண்டு மீளவேண்டும். இளமையிலேயே தன் திறனின் எல்லையை சென்று கண்டவனுக்குரியது அந்நிலை. அது வில்லுடன் பிறந்த விஜயனுக்கு இயல்பாகலாம். தொட்டுத்தொட்டு தன்னைப் பயின்று தானென்று உணர்ந்து சென்றடைந்து மேலும் நோக்கி ஏங்கி ஏங்கி நின்றிருக்கும் எளியோருக்குரியது அல்ல. ஆசிரியனாதல்கூட எளிது, மாணவனாதலே கடினம்.

அவன் அருகணைந்து வணங்கினான். இளைய யாதவர் திரும்பி நோக்கி புன்னகைத்தார். அவருடைய புன்னகை எப்போதுமே அவனை உளம்பொங்கச் செய்வது. அது அவனுக்காக மட்டுமே எழும் ஒன்று என்று தோன்றச் செய்வது. பால்பற்கள் எழுந்த குழவிக்குரிய கண்கள் ஒளிவிடும், முகமே மலரும் புன்னகை. அவன் “நான் இத்தருணத்தில் இங்கு வரும் பேறு பெற்றேன்” என்றான். அவர் “உன்னை உண்மையில் இவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை விடமாட்டார்கள் என அறிந்திருந்தான். அவர்கள் பொருட்டு உன்னைத்தான் சுரேசர் அனுப்புவார் என்றான்” என்றார். அர்ஜுனன் அவனை நோக்கி புன்னகை செய்து “சொல்ல வந்ததை சொல்! அங்கே மக்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். நான் செல்லாவிட்டால் விழவு முழுமையடையாது. அரசரும் உடன்பிறந்தவரும் நான் வந்தாகவேண்டும் என்கிறார்கள். அரசர் நோயுற்றிருக்கிறார், நான் செல்வது அவருடைய நோயை அவிக்கும். வேறென்ன?” என்றான்.

யுயுத்ஸு சிரித்துவிட்டான். “என் பணியை எளிதாக்குகிறீர், மூத்தவரே” என்றான். “ஆனால் அதை நான் நாலாயிரம்முறை மீண்டும் மீண்டும் சொல்வதாக எண்ணிக்கொள்ளுங்கள்.” அர்ஜுனன் வெடித்து நகைத்து இளைய யாதவரிடம் “இவனிடம் மூத்தவரிடம் இருக்கும் எல்லா சாயல்களும் உண்டு. ஒன்று கூடுதலாக உண்டு என்றால் அது நகையாட்டு” என்றான். “அதை நான் கௌரவ மூத்தவரிடமிருந்து பெற்றேன்” என்றான் யுயுத்ஸு. “ஆம், கௌரவ அவை சிரிப்பும் நகையாட்டுமாக செல்வது என அறிந்துள்ளேன்” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, நீங்கள் இங்குதான் வந்திருக்க முடியும் என நான் அறிந்துள்ளேன். இங்கு நீங்கள் வந்ததே எவ்வகையிலும் முறையானதும்கூட. உங்கள் ஆசிரியர் இங்கிருக்கையில் வேறெங்கும் நீங்கள் நிறைவுகொள்ளவும் முடியாது” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆனால் அங்கு நீங்கள் செய்யவேண்டுவனவற்றை செய்த பின் இங்கு மீண்டீர்கள் என்றால் நிறைவுடன் இருப்பீர்கள். நான் கூற வந்தது அதை மட்டுமே.”

“முடிவில்லாத நடிப்பு, அது எனக்கு சலிப்பூட்டுகிறது” என்றான் அர்ஜுனன். “ஆம், அதையே சற்றுமுன் கங்கைக்கரைக் காற்றேற்று துயில்கொள்கையில் நானும் உணர்ந்தேன்” என்றான் யுயுத்ஸு. “ஆனால் அது உங்கள் கடமை. உங்கள் மூத்தவர்கள் எதிர்பார்க்கையில் அதை நீங்கள் செய்தே ஆகவேண்டும். எவ்வகையிலும் தவிர்க்க உங்களுக்கு உரிமை இல்லை.” அர்ஜுனன் “நான் என்னால் இயன்றதை செய்துவிட்டேன். இனிமேலும் நடிப்பதில் பொருளில்லை. எங்கோ ஓர் இடத்தில் இதை நான் நிறுத்திக்கொண்டே ஆகவேண்டும்” என்றான். “நேற்று அங்கிருந்தவர்கள் என்னை இளமை முதல் அறிந்தவர்கள். அவர்கள் முன் அவ்வாறன்றி நான் தோன்றமுடியாது. இவர்கள் முன்னால் அவ்வாறு நான் தோன்றினேன் என்றால் அது மீண்டும் ஒரு தொடக்கம். போதும், என் விழைவின்மையை நீயே அரசரிடம் தெரிவித்துவிடு” என்றான்.

“நீங்கள் அஸ்தினபுரியின் முதன்மை முகம். அங்கிருப்போர் உங்களை அவ்வண்ணமே அறிந்திருக்கிறார்கள்” என்றான் யுயுத்ஸு. “நான் இறுதி முடிவை எடுத்துவிட்டேன். நீ பேசி என்னை மாற்றிவிட முடியாது” என்றான் அர்ஜுனன். “நான் இளைய யாதவர் அருகே இருக்க விழைகிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை.” இளைய யாதவர் “நான் நகருக்குள் வருவதாக இல்லை. இன்றிருக்கும் நிலையில் நான் எந்நகருக்குள்ளும் நுழையக்கூடாது. நான் துவாரகையால் வெளியேற்றப்பட்டவன்” என்றார். “உங்களை மாற்றி அழைத்துச்செல்ல முடியும் என நான் நினைக்கவில்லை. என் எல்லைகளை நான் அறிவேன்” என்றான் யுயுத்ஸு. அர்ஜுனன் “இளையோனே, நான் இளைய யாதவர் அருகேதான் இருக்கப்போகிறேன். அவருடன் இருக்கையில் மட்டுமே நிறைவை அடைகிறேன். நான் ஆற்றிய பணிகளுக்கு எதையேனும் என் மூத்தவர் அளிப்பாரென்றால் இதையே கோருவேன்” என்றான்.

“ஆனால் உங்கள் மூத்தவரின் விழைவு…” என யுயுத்ஸு தொடங்க “அவர் தன் விழைவை உன்னிடம் கூறினாரா? எனக்குரிய ஆணை என எதையேனும் விடுத்தாரா?” என்று அர்ஜுனன் கேட்டான். “இல்லை” என்றான் யுயுத்ஸு. “எனில் சென்று அவரிடம் கேள். நான் இளைய யாதவரை விட்டுவிட்டு என் விழைவுக்கு மாறாக அஸ்தினபுரிக்குள் நுழைந்தாகவேண்டும் என அவர் ஆணையிடுகிறாரா என்று” என்றான் அர்ஜுனன். “அவர் இளைய யாதவரின் விழைவுக்கு மாறாக ஆணையிடமாட்டார் என நான் அறிவேன்” என்றான் யுயுத்ஸு. “எனில் என்ன எஞ்சுகிறது? நாம் பேசிக்கொள்ள ஏதுமில்லை. நான் வரவியலாது” என்று அர்ஜுனன் சொன்னான். யுயுத்ஸு “நான் என் தூதை சொல்லிவிட்டேன். அறுதி முடிவுகளுடன் பேசும் ஆற்றல் எனக்கில்லை. நான் எளியோன்” என்றான். பெருமூச்சுடன் கைகளை மடியில் சேர்த்துவைத்து அமர்ந்துகொண்டான். குறுங்காட்டிலிருந்து காற்று இலையோசையுடன் வந்து அவர்களைத் தழுவி கடந்துசென்றது.

இளைய யாதவர் அவனிடம் “இளையோர் கொண்டு வந்த தனிப்பரிசுகள் என்னென்ன?” என்றார். யுயுத்ஸு அவரை திரும்பிப் பார்த்தான். அவர் அவற்றைப் பற்றி அறிந்திருப்பார் என்றே அவனுக்கு தோன்றியது. அவனுக்கு அவர் கேட்பதன் நோக்கம் புரியவில்லை. இருந்தாலும் சொல்லத் தொடங்கினான். ஒவ்வொருவரின் பரிசைப் பற்றியும் யுதிஷ்டிரன் அவற்றுக்கு அளித்த எதிர்வினை பற்றியும் அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது அர்ஜுனன் ஆர்வமற்று காட்டை பார்த்துக்கொண்டிருந்தான். இளைய யாதவர் அவ்வப்போது சிரித்தும் ஊடுவினாக்கள் எழுப்பியும் அவன் சொல்வதை கேட்டார். பின்னர் அர்ஜுனனிடம் “விந்தைதான், மூன்று திசைகளிலிருந்தும் ஏறத்தாழ ஒரே பரிசு வெவ்வேறு வகையில் வந்திருக்கிறது” என்றார். யுயுத்ஸு திகைத்து அவரை பார்த்தான். அவருக்கு அப்பரிசுகளைப் பற்றி தெரியவில்லை என்று தோன்றியது. விளக்கியபோது அவர் கூர்ந்து கேட்டதுபோலத்தான் தோன்றியது.

அர்ஜுனன் உளம்குவியாமல் “அப்படியா?” என்றான். இளைய யாதவர் “நீ கூட அதேபோல எதையாவது ஒன்றை கொண்டுசென்று கொடுக்கலாம். இப்பரிசுகளுக்கு ஓர் ஒழுங்கு உள்ளது. நால்வரும் நான்கு திசைகளிலிருந்து நான்கு பரிசுகளை அரசருக்கு கொடுக்கிறார்கள். நான்குவகை வினாக்கள், நான்கு விடைகள். சூதர்கள் கதை சொல்ல உகந்தவை. நீ செல்லாவிட்டால் கதை அறுந்து நின்றிருக்கும்” என்றார். “நான் அவ்வகையில் எதையும் கொண்டுவரவில்லை” என்று அர்ஜுனன் எரிச்சலுடன் சொன்னான். “எதையாவது கொண்டுவந்திருப்பாய். நன்கு எண்ணிப்பார்” என்ற இளைய யாதவர் “இல்லையேல் கொண்டுவந்த எதையேனும் அவ்வாறு அரும்பொருளாக ஆக்கிக்கொள்ளலாம்” என்றார். “விளையாடாதீர்கள், யாதவரே” என்றான் அர்ஜுனன். “நீ கூறியது நினைவுக்கு வருகிறது. மணிபூரகநாட்டின் மறுஎல்லையில் மாமேருவின் அடிவாரத்தில் இருந்த ஊர்களின் தெய்வங்களைப்பற்றி சொன்னாய். அவற்றில் ஒன்று உன்னை தேடிவந்ததைப்பற்றி…” என்றார்.

யுயுத்ஸு புரிந்துகொண்டான். புன்னகையுடன் அர்ஜுனனிடம் “எதை கண்டீர், மூத்தவரே?” என்றான். அர்ஜுனன் எரிச்சல் விலகாதவனாக “எங்குமுள்ளவைதான். அங்குள்ள சிற்றூர்கள் எல்லாமே தொல்தெய்வங்களால் நிறைந்திருக்கின்றன” என்றான். “பாரதவர்ஷம் முழுக்க அத்தனை தொல்குடிச் சிற்றூர்களிலும் எண்ணித்தீராத தெய்வங்கள் உள்ளன. முதல் நோக்கில் அவை வேறுபட்டவைபோலத் தோன்றும். ஆனால் அனைத்தும் ஒன்றே. விண்ணில் ஒரு சொல் ஒலிக்க அதை மண்ணில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வகையில் சொல்லிக்கொள்வதுபோல. தவளைகளும் கிளிகளும் விலங்குகளும் மானுடரும். அவை வெவ்வேறு ஒலிகள். ஆனால் எங்கோ அவை ஒன்று என்றும்படுகின்றன.” அவனை பேசவைக்க யுயுத்ஸு விழைந்தான். “அவ்வாறு சொல்லிவிடமுடியுமா என்ன? நாம் பொதுமையை நோக்கும் விழிகொண்டிருந்தால் பொதுமை நம் கண்களுக்குபடுகிறது” என்றான்.

சற்றே சரிந்து அமர்ந்திருந்த அர்ஜுனன் எழுந்தான். “இவ்வாறு சொல்லாடுவது எளிது. நான் அதை விழையவில்லை. நான் கூறுவது நானே கண்டது” என்றான். “கீழைநிலத்தில் நான் கண்ட தெய்வங்கள் அனைத்துமே நீத்தாரின் வடிவங்கள்தான். நீத்தார் பல்வேறு பறவைகள், உயிரினங்களின் வடிவில் மானுடர் முன் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் அவ்வடிவிலேயே வழித்தோன்றல்களால் வழிபடப்பட்டு தெய்வங்களாகியிருக்கிறார்கள்.” அவன் பேசும் உளநிலையை அடைந்துவிட்டான் என்று யுயுத்ஸு உணர்ந்தான். “நாங்கள் கிழக்கே காமரூபம் வரைதான் சென்றோம். அதற்கு அப்பால் படைகொண்டுசெல்ல எங்களுக்கு பொழுதில்லை. ஆகவே நான் ஓர் அறைகூவலை விடுத்தேன். கிழக்கிலிருக்கும் ஒவ்வொரு நாட்டு அரசனும் தன் கப்பத்தை என்னிடம் கொண்டுவந்து அளிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காதவர்கள் எதிரிகளென கருதப்படுவார்கள். அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவர்கள் மேல் படைகொண்டு வருவேன் என்று.”

கிழக்கே இருந்த அனைத்து நிலங்களில் இருந்தும் மன்னர்களும் குடித்தலைவர்களும் எங்களுக்கு பரிசில்களை கொண்டுவந்து அளித்தனர். பரிசிலளிக்க வருபவர்கள் தங்கள் குடிக்கோல்களுடன் அரசகுடியைச் சேர்ந்த ஒருவரை அனுப்பவேண்டும் என்று நான் ஆணையிட்டிருந்தேன். காமரூபத்தைச் சேர்ந்த துரூமன் என்னும் அமைச்சன் என்னுடன் சேர்ந்துகொண்டான். அவன் என்னிடம் அவ்வண்ணம் கோல்களுடன் வருவதில் பொருளில்லை, அவர்கள் தங்கள் குடித்தெய்வங்களில் ஒன்றை கொண்டுவந்து என்னை வாழ்த்தவும் வேண்டும் என ஆணையிடும்படி சொன்னான். ஆகவே அவ்வாணைகளையும் இட்டேன். அதன்பின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தெய்வங்கள் என்னை தேடிவந்தன. விந்தையான தோற்றங்கள் கொண்டவை. ஆனால் பெரும்பாலானவை விலங்குகளின், பறவைகளின், பூச்சிகளின் வடிவம்கொண்டவைதான். ஒரு நிலையில் அது ஓர் இனிய விளையாட்டாக ஆகியது.

அப்போதுதான் பாரதவர்ஷத்தின் எல்லைக்கு அப்பாலிருந்த மேருநிலத்தைச் சார்ந்த ஒருவன் என்னிடம் வந்தான். அவன் அங்கிருந்த தொல்குடிகளைச் சேர்ந்த பூசகன். அவனுடன் எவரும் வரவில்லை. அவன் என்னிடம் அவர்களின் குடி எனக்கு அடிபணியவோ பரிசில் அளிக்கவோ போவதில்லை என்றான். ஏனென்றால் அவர்கள் தங்கள் தெய்வங்களிடம் ஆணை கோரியிருக்கிறார்கள். தெய்வங்கள் ஆணை மறுத்திருக்கின்றன. அச்செய்தியை எனக்கு அறிவிக்கவே அவன் குடி அவனை அனுப்பியிருக்கிறது. முதலில் எனக்கு சீற்றம் எழுந்தாலும் உடனே சிரிப்பும் எழுந்தது. அவனுடைய குடி மிகமிகச் சிறிது என்று தெரிந்தது. அது என் படைப்பிரிவில் ஒன்றை ஒருநாள்கூட எதிர்த்து நிற்க முடியாது. நான் அவர்களின் நம்பிக்கையை எண்ணி வியந்தேன். அதை மேலும் சீண்டி நகையாட விழைந்தேன்.

“சொல்க, உங்கள் தெய்வங்கள் எவை? அவை எவ்வகைப்பட்டவை? அவை என்னை முன்னர் அறியுமா?” என்று அவனிடம் கேட்டேன். “அறியா எனில் அவற்றுக்கு நான் என்னை அறிவிக்க என்ன செய்யவேண்டும்?” அவன் பெயர் ஹைமன். அதன் பொருள் பனி. அவன் என்னிடம் அவர்களின் தெய்வங்களைப் பற்றி சொன்னான். மண்ணில் பிறந்தவர்களுக்கு பலவகையான இறப்புகளை தெய்வங்கள் அளித்திருக்கின்றன. கனிகள் மரங்களிலிருந்து உதிர்வதுபோல. கனிந்து, பின் அழுகி, காம்பு இற்று உதிர்கின்றனர் மானுடர். இனிமையும் வண்ணமும் சிறந்த உயரிய கனியை மட்டும் தெரிவுசெய்து காம்புகளில் பால் வடிய தெய்வங்கள் பறித்துக்கொள்கின்றன. இளமையிலேயே கொடிய சாவுகொண்டவர்கள் தெய்வங்களால் பலியெனக் கொள்ளப்பட்டவர்கள். மலைகளிலிருந்து விழுபவர்கள், இடிவிழுந்து கருகுபவர்கள், நாகநஞ்சு ஏற்பவர்கள். அவர்கள் தெய்வங்களாகிறார்கள். அவர்களை நாத் என்கின்றனர்.

நாதர்கள் விண்நிறைந்த தெய்வங்களின்பொருட்டு இப்புவியை ஆள்கின்றனர். அவர்களில் முப்பத்தேழு நிழல்வடிவ நாதர்கள் புவியை மண்ணில் ஊர்ந்தும் புதைந்தும் கட்டுப்படுத்துகின்றனர். அந்த முப்பத்தேழுபேரின் ஒளிவடிவங்கள் விண்ணில் பறந்தும் மரங்களின் மலர்களில் குடிகொண்டும் மானுட வாழ்க்கையை நடத்துகின்றன. மேருநிலத்து மக்களின் அனைத்துச் சிற்றூர்களின் நடுவிலும் நாதர்களின் ஆலயங்கள் உள்ளன. மேலடுக்கில் விண்ணோரும் கீழடுக்கில் மண்ணோரும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு மலர்கள் சூட்டப்படுகின்றன. இனிய நறுமணப்புகை எழுப்பப்படுகிறது. படையல் என தேங்காய்கள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் அவ்வூர்களை காக்கின்றனர். அவ்வூரின் அனைத்து நிகழ்வுகளையும் வழிநடத்துகின்றனர். அவர்களின் காலம், பருவமாறுதல்களினூடாக அவர்களால் நடத்தப்படுகிறது.

நாதர்களின் முதல்வன் திங்க்யான் என அவர்களால் அழைக்கப்படுகிறான். திக்ஞானன் புவியையும் விண்ணையும் இணைப்பவன். அதனூடாக இங்குள்ள வாழ்க்கையின் நிகர்நிலைகளை பேணுபவன். அவனுடைய இளையவள் ஆஹ்தி என அவர்களால் கூறப்படுகிறாள். திக்ஞானனும் ஆகுதியும் முன்பொரு நாள் சூதாடினார்கள். சூதுக்களத்தில் கருக்கள் என அவர்கள் சந்திரனையும் சூரியனையும் கோள்களையும் விண்மீன்களையும் வைத்தனர். அந்த ஆட்டத்தின் முடிவில் ஆகுதி தோல்வியடைந்தாள். தோல்வி முழுமையடைவதற்கு முன்னரே அவள் விண்மீன்களை கைகளால் அள்ளி வீசி எறிந்து ஆட்டக்களத்தை கலைத்தாள். சினமடைந்த திக்ஞானன் தன் மின்படைவாளால் ஆகுதியின் தலையை வெட்டினான்.

எரிந்தபடி அந்தத் தலை மண்மேல் விழவந்தது. அந்தத் தலையின் எரியெனும் குழல் நெடுந்தொலைவுக்கு எழுந்து பறந்தது. அவளுக்குப் பின்னால் மின்னி இடியோசையுடன் எழுந்த திக்ஞானன் நாதர்களிடம் “பிடியுங்கள்… பிடியுங்கள் அதை!” என்று கூவினான். நாதர்களில் ஒருவனான கொல்லன் மின் மகாகிரி அதை பிடித்துக்கொண்டான். “ஒருபோதும் அந்தத் தலை மண்ணை தொடலாகாது. மண்ணை அது தொடும்போது புவி அழியும். நினைவில் கொள்க!” என்று திக்ஞானன் ஆணையிட்டான். மகாகிரி தன் கை சுடும்வரை அந்தத் தலையை வைத்திருந்தான். அதை உடனே அடுத்த நாதனிடம் அளித்தான். அவர்கள் அதை கைமாறிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் அதை இன்றுவரை நிலம்தொட விடவில்லை. ஆகவே இப்புவியில் மானுட வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

என்னைக் காணவந்த பூசகனாகிய ஹைமன் சொன்னான் “எங்கள் குடியினர் உங்களுக்குப் பணிந்தாகவேண்டுமா என்று எங்கள் குடித்தெய்வங்களிடம் கேட்டோம். நாங்கள் கேட்டபோது அந்த எரிதலையை மிந்தா என்னும் அரசமைந்தன் வைத்திருந்தான். அவனிடமிருந்தது சொல் அளிக்கும் உரிமை. அவன் என்னிடம் சொன்னான். பூசகனே, நீ உசாவுவது நன்று. நம் நிலத்தை ஆள விழையும் அயலவன் அதற்குரிய தகுதிகொண்டவனாக இருக்கவேண்டும். தெய்வங்களுக்கு உகந்தவனே நம் குடியின்மேல் கோல்கொள்ள முடியும். அவனை நீ சென்று அறிந்து வருக! நான் அவ்வாணையைப் பெற்று உங்களிடம் வந்தேன்.” நான் அப்போதும் அதை ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன். “நன்று, என் தகுதியை நான் எவ்வண்ணம் நிறுவவேண்டும்?” என்று கேட்டேன்.

அவன் தன் இடையில் ஒரு மூங்கில்குழலை வைத்திருந்தான். நமது வேய்குழல்களைவிட சிறியது. இரு பகுதிகளாக இருந்தது. அதை இணைத்து அவன் ஓர் இசையை எழுப்பினான். அது விண்ணுலகத்தின் ஒலியை மண்ணில் ஒலிக்கும் காலவின்கா என்னும் பறவையின் ஓசையை எழுப்புவது என்று அவன் சொன்னான். காலவின்கையின் குரலை எழுப்பினால் அதை கேட்கும் முதல் வானம்பாடியில் அந்த தெய்வப்பறவை எழும் என்று சொல்லி அதை ஊதலானான். கிழக்குப் பகுதிகளுக்கே உரிய கொஞ்சும் இசை. சுழன்று சுழன்று இறங்கும் புகைபோன்ற பண். சற்றுநேரத்தில் அருகே மரக்கிளையின் இலைச்செறிவுக்குள் அந்த இசையை ஒரு வானம்பாடி திரும்பப் பாடியது. “அதுதான், காலப்பறவை வந்துவிட்டது” என்று அவன் சொன்னான்.

“வானம்பாடிகள் குரல்களை திரும்பச் சொல்வதொன்றும் புதிதல்ல” என்று நான் சொன்னேன். “அல்ல, இது காலப்பறவை. இதற்கு மூன்றுகாலமும் தெரியும்” என்று அவன் சொன்னான். “இது நீங்கள் சொல்லும் எல்லா சொற்களையும் திரும்பச் சொல்லும். ஒரே ஒரு சொல்லைத் தவிர. அச்சொல்லையே நீங்கள் சாவின் போது இறுதிக்கணத்தில் சொல்வீர்கள். உங்கள் உதடுகள் அச்சொல்லில் உறைய உயிர்நீப்பீர்கள்” என்று அவன் சொன்னான். “எங்கள் நிலத்தை ஆள்பவர் தன் சாவைப்பற்றி அறிந்திருக்கவேண்டும். தன் வாழ்வின் மெய்மையை அறிந்தவரே தன் சாவை அறிந்தவர். அவருக்கு அச்சொல் தெரிந்திருக்கும். எவர் ஒரு சொல்லை உரைத்து அச்சொல்லை அந்த வானம்பாடி மீளச் சொல்லவில்லையோ அவரே மேருநிலத்தை ஆளும் தகைமைகொண்டவர். தெய்வங்களுக்கு உகந்தவர். அவரை வணங்குக! அவருக்கு அடிபணிந்து கோல் அளித்து அழைத்துவருக! என்று தெய்வம் கூறியது. ஆகவேதான் வந்தேன்.”

“நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று யுயுத்ஸு கேட்டான். “அது ஒரு சூழ்ச்சியாகக்கூட இருக்கலாம். இப்புவியில் சொற்கள் முடிவிலாக் கோடி. எவ்வொலியையும் அவ்வண்ணமே திரும்பச் சொல்பவை வானம்பாடிகள். மானுடச் சொற்களை மட்டுமல்ல மரங்கொத்தியின் ஓசையைக்கூட அவை அவ்வண்ணமே எழுப்புகின்றன. ஒருவன் தான் அறிந்த சொற்கள் அனைத்தையும் வானம்பாடியிடம் சொல்லிக்கொண்டிருப்பான் என்றால் வாழ்க்கை முடிந்துவிடும்.” அர்ஜுனன் “ஆம், ஆகவே நான் அவனை செல்லவிட்டேன்” என்றான். “குறைந்தது ஒரு நல்ல கதையையும் ஓர் அழகிய சூழ்ச்சியையும் அவர்களால் உருவாக்க முடிந்தது அல்லவா?” யுயுத்ஸு “ஆம், மெய்தான்” என்றான்.

“ஆனால் அந்தக் குழலை நான் வாங்கிக்கொண்டேன். அவனே அதை எனக்கு அளித்தான். பாரதவர்ஷத்தில் எவர் காலப்பறவையை வரவழைத்து அதனிடமிருந்து தன் அறுதிச்சொல்லை உறுதிசெய்துகொள்கிறாரோ அவர் எங்கள் நிலத்திற்குரியவர் என்று அவன் சொன்னான்” என்றான் அர்ஜுனன். யுயுத்ஸு “அது எங்கே?” என்றான். “என்னிடமே உள்ளது. நான் சற்றுமுன் காட்டிலிருக்கையில் அதை மீட்டி வானம்பாடியை வரவழைத்தேன். அதில் காலப்பறவை எழுந்தது. ஆனால் நான் ஒரு சொல்லையும் அதனிடம் கேட்கவில்லை. அதன்முன் என் மொழி திகைத்து நின்றுவிட்டது.” யுயுத்ஸு “ஏன்?” என்றான். “அதை நீயே உணர்வதுதான் வழி” என்றான் அர்ஜுனன். யுயுத்ஸு ஆர்வத்துடன் “காட்டுக!” என்றான்.

அர்ஜுனன் தன் இடைக்கச்சைக்குள் இருந்து ஒரு சிறுகுழலின் இரு துண்டுகளை எடுத்து ஒன்றோடொன்று பொருத்தினான். அதை உதடுகளில் வைத்து இசைத்தான். மெல்லிய கூரிய இசைத்துணுக்கு வானம்பாடியின் ஓசைபோலவே இருந்தது. சற்றுநேரத்தில் வானம்பாடி ஒன்று அங்கே மறுகூவல் விடுத்தது. அர்ஜுனன் “இளையோனே, உன் சொற்களை நீ சொல்லிப் பார்க்கலாம்” என்றான். யுயுத்ஸு திகைத்து பின் இளைய யாதவரிடம் திரும்பி “தாங்கள் கூறி நோக்கினீர்களா?” என்றான். அவர் “என் சொல்லை நான் நன்கறிவேன்” என்றார். யுயுத்ஸு அந்த மறுமொழியால் திகைத்தான். பின்னர் “எவர் எதனடிப்படையில் தன் சொற்களை அதனிடம் கோரமுடியும்?” என்றான். “மிக விருப்பமான சொற்களா? மிக வெறுக்கும் சொற்களா? விழைந்தனவா? வென்றனவா? தெய்வங்களா அன்றி இருளிருப்புகளா? எதைக்கொண்டு தெரிவுசெய்வது?” என்றான்.

இளைய யாதவர் உரக்க நகைத்து “எது மிகமிகமிக பொருளில்லாமலிருக்கிறதோ, எது எல்லாவற்றையும் வெற்றுக்கேலிக்கூத்தென்று ஆக்கி கடந்துசெல்கிறதோ, அத்தகைய சொல்” என்றார். யுயுத்ஸு அவரை வியப்புடன் நோக்கினான். “என் வரையில் அதுவே உண்மை” என்றார். புன்னகை அணைய “அனைவருக்கும் அவ்வாறு ஆகவேண்டுமென்பதில்லை” என்றார். “எவரும் இதனிடம் ஒரு சொல்லும் உசாவத் துணியமாட்டார்கள். அச்செயலின் முடிவின்மையும் பொருளின்மையும் முகத்தில் அறைய உளமழிந்து அமர்ந்திருப்பார்கள்.” இளைய யாதவர் “யுதிஷ்டிரன் என்ன செய்வார் என நினைக்கிறாய்?” என்றார். யுயுத்ஸு அவரை நோக்கிய பின் “என்னால் சொல்லக்கூடவில்லை. அவர் எதையேனும் கேட்கவும்கூடும்” என்றான்.

அர்ஜுனன் “ஆம், நான் அவருக்கு இப்புற்குழலை அளிக்க விழைகிறேன். அவர் என்ன செய்வார் என்று அறிய வேண்டும்” என்றான். எழுந்துகொண்டு “நாம் செல்வோம். நான் இதை அரசருக்கு அளிக்கிறேன். இதுதான் நான் கீழைநாட்டிலிருந்து அவருக்காகக் கொண்டுவந்த அரும்பொருள்” என்றான். யுயுத்ஸு “அவர் இதை உசாவிநோக்காமலேயே அப்பால் வைத்துவிடுவார் என்றே தோன்றுகிறது” என்றான். “எனில் மேலும் நன்று. அவருக்கு அவர் வெல்லவே முடியாத அகமும் புறமும் சற்று எஞ்சியிருக்கிறது என்று காட்டுவோம்… நான் கிளம்பி வருகிறேன்” என்றான் அர்ஜுனன். “நன்று, நான் இச்செய்தியுடன் இப்போதே கிளம்புகிறேன். உங்களை அழைத்துவர அரசணிப்படையினர் அனுப்பப்படுவார்கள்” என்றபடி யுயுத்ஸு எழுந்துகொண்டான். “ஆகுக!” என்றான் அர்ஜுனன்.

யுயுத்ஸு திரும்பி குறுங்காட்டை நோக்கி “அந்தப் பறவை நம் சொல்லுக்காகக் காத்து அங்கே அமர்ந்திருக்கிறது” என்றான். “ஆம்” என்றார் இளைய யாதவர். “அச்சுறுத்துகிறது அவ்வெண்ணம்” என்றபடி யுயுத்ஸு திரும்பிக்கொண்டான். அர்ஜுனன் காட்டை நோக்கியபடி “என்னை கவர்ந்தபடியே இருக்கிறது. ஆனால் தயக்கமும் அளிக்கிறது” என்றான். யுயுத்ஸு தலைவணங்கி அங்கிருந்து நடந்தான். தப்பிஓடுபவன்போல விசைகூட்டினான். சற்றுமுன் உச்சிமயங்கலில் அந்தப் பறவையின் மெல்லிய இசையை கேட்டோமா என எண்ணிக்கொண்டான். அதில் ஒரு சொல் இருந்ததா? மிகமிக இனிய ஒரு சொல்?