களிற்றியானை நிரை

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 80

பகுதி ஒன்பது : கலியன்னை

ஆதன் முதற்புலரியிலேயே விழித்துக்கொண்டான். அவன் ஒரு கனவு கண்டான். விழித்தும் அக்கனவிலேயே இருந்தான். மீண்டும் அதிலேயே மூழ்கினான். அதில் அவன் ஒரு செம்மண்சாலையினூடாக நடந்து சிற்றூர் ஒன்றை நோக்கித் திரும்பும் சிறிய பாதையைக் கண்டு தயங்கி நின்றான். பின்னர் அந்த ஊரை நோக்கி திரும்பினான். மரக்கூட்டங்களுக்குமேல் எழுந்து தெரிந்த குன்றின் முடியை புதர்களுக்கு அப்பாலிருந்து மெல்ல தலைதூக்குவதாகவே எண்ணினான். மிகப் பெரிய ஒரு விலங்கு. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அதை முன்னரே கண்டிருக்கிறோம் எனத் தோன்றியது. பின் அதை நோக்கி அவன் நடந்தான்.

அந்தக் குன்றை அடைந்து அதன் சரிவுகளில் மேலேறிச் சென்றான். செல்லும் வழியெங்கும் சித்தர்களின் நிறைவிடங்கள் தெரிந்தன. அவன் மேலே சென்றபோது சோறு வேகும் மணத்தை உணர்ந்தான். அப்பால் மரத்தடியில் ஒரு கலத்தில் சோறு வெந்துகொண்டிருந்தது. அவன் அதை நோக்கி சென்றான். அனல் அப்போதும் எரிந்துகொண்டிருந்தது. கொதிக்கும் அன்னநீர் மூடியைத் தூக்கி சீறியது. அவன் விழிசுழற்றி நோக்கியபோது அப்பால் இரு கால்களை கண்டான். புதர்களுக்கு நடுவே ஒருவர் விழுந்து கிடந்தார். மிக முதியவர். அருகணைந்து அவர் முகத்தைக் கண்டதும் அவன் திடுக்கிட்டான். வெண்தாடியும் மீசையும் நீள்சடைகளும் கொண்டிருந்தார்.

அவனை சுக்ரன் எழுப்பினான். “பூசகரே, செய்தி… செய்தி வந்துள்ளது” என்றான். அவன் எழுந்து அமர்ந்தான். அரைநாழிகைப் பொழுதுகூட அவன் துயில்கொண்டிருக்கவில்லை. “என்ன? யார்?” என்றான். சுக்ரன் “அரண்மனையில் இருந்து பேரரசி இங்கே வழிபட வரவிருக்கிறார். ஆணை வந்துள்ளது” என்றான். “பேரரசியா? இங்கா? அவ்வண்ணம் மரபில்லையே?” என்றான் ஆதன். “இந்த ஆலயமே மரபு மீறியமைந்தது அல்லவா? கலியின் ஆலயத்திற்கு அன்றாடப் பூசெய்கை எங்காவது உண்டா?” என்றான் சுக்ரன். “அவர் வருவது நன்று. இனி இங்கே ஒருநாளும் ஆளோயாது. எழுக, ஒருங்குக!”

ஆதன் “எவர் வந்து சொன்னார்கள்?” என்றபடி எழுந்துகொண்டான். கரிய மேலாடையை சீரமைத்தபடி அவன் மண்சரிவில் இறங்கி ஆலயமுற்றம் நோக்கி சென்றான். ஆலயமுற்றம் மரங்கள் வெட்டப்பட்டு புதர் களையப்பட்டு பலகைகள் பரப்பி பெரிதாக்கப்பட்டிருந்தது. கரிய கற்களால் ஆன ஆலயத்தின்மேல் படர்ந்திருந்த கொடிகள் நீக்கப்பட்டிருந்தன. அங்கே ஒவ்வொருநாளும் பல்லாயிரம்பேர் வந்தனர். அவர்களுக்கான குடில்கள் கீழ்ச்சரிவெங்கும் அமைந்தன. குடிநீர் ஊற்றுக்கள். இளைப்பாறுவதற்கான மஞ்சங்கள். அவர்கள் வரத்தொடங்கியபோதே அங்கே இருந்த நரிகளும் ஓநாய்களும் கீரிகளும் விலகிச் சென்றுவிட்டன.

ஆனால் காகங்கள் மரங்களின்மேல் செறிந்தே இருந்தன. அவை பிற இடங்களைப்போல கீழே நோக்கி கூச்சலிடுவதில்லை. இலைகளுக்குள் கரிய நிழல் என அவை அமைந்திருந்தன. விழிகள் கரிய மணிகள் என துறித்து நோக்கின. பெரும்பாலும் அவை ஓசையே எழுப்புவதில்லை. சருகுகள் உதிர்வதுபோல மண்ணிறங்கி அன்னமும் பிறவும் உண்டு மேலெழுந்தன. அவற்றின் ஓசையின்மையே அவ்விடத்தின் மீதான அச்சத்தையும் ஈர்ப்பையும் உருவாக்குவதாக இருந்தது.

அரண்மனையிலிருந்து வந்தவனை ஆதன் அறிந்திருந்தான். குள்ளமான உருவம்கொண்டவனாகிய ஒற்றன் யாமன் அவனைக் கண்டதும் அருகே வந்து “எனக்கும் சற்றுமுன்னர்தான் செய்தி வந்தது. பேரரசி பெருங்கொடையாட்டு முடிந்து ஆடைமாற்ற அணியறைக்கு வரும் வழியில் என்னை அழைத்து ஆணையிட்டார். பெருநிகழ்வாக இது அமையவேண்டியதில்லை, ஆகவே அறிவிப்பும் திரளும் இருக்காது. ஆனால் எல்லா ஒருக்கங்களும் முழுமை பெற்றிருக்கவேண்டும். ஆகவே விரைந்து வந்தேன்” என்றான். ஆதன் “இங்கே தனியாக ஏதும் செய்யவேண்டியதில்லை. இங்குள்ள சடங்குகள் மிக எளியவை” என்றான். “பேரரசி வரும்போது மக்கள்திரள் இருக்கலாகாது. இப்போதே திரளை நிறுத்திவிட்டிருப்பார்கள். அதற்கான ஆணை சென்றுவிட்டது” என்றான் யாமன்.

ஆதன் “அங்கே ஏதோ விரும்பாதன நிகழ்ந்தது என்று கேட்டேன்” என்றான். “ஆம், ஒரு சார்வாகர். அவர் நிகழ்வில் ஒரு மங்கலமின்மையை நிகழ்த்த விழைந்தார். அதை அவர் விழைந்தபடி அந்தணர் நிகழ்த்தி முடித்தனர்” என்றான் யாமன். “அரசர் மயங்கி விழுந்துவிட்டார். ஆனால் அதை ஈடுகட்டிவிட்டனர். அவர் எழுந்து வரும்வரை இளையோர் பெருங்கொடையை நிகழ்த்தினர். இளைப்பாறிய பின் அரசரும் வந்து சேர்ந்துகொண்டார். ஆனால் அவர் நோயுற்றிருந்தார் என்று எனக்குப்பட்டது.” ஆதன் அவனை நோக்காமல் தவிர்த்து தன் இடைப்பட்டையைக் கட்டியபடி “அரசி நிலையழிந்துள்ளாரா?” என்றான்.

“இல்லை, உண்மையில் அரசி அச்செய்தியை அறிந்திருந்தாரா என்றே ஐயம் தோன்றியது. அவரிடம் அது சொல்லப்பட்டபோது ஒருகணம் கூட அவர் விழிதாழ்த்தவில்லை. அவர் செயலில் சிறு தயக்கம்கூட நிகழவில்லை.” ஆதன் ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் அவர் இங்கு வர முடிவெடுத்தது அதனாலாக இருக்கலாம்” என்று யாமன் தொடர்ந்தான். “அவருக்கு இன்று பல பணிகள் உள்ளன. முதற்கதிர் எழுவதற்குள் எல்லா ஆலயநெறிகளும் முடிந்து அவையெழுந்தருளவேண்டும்… இன்று வேள்விதொடக்கம்.” ஆதன் “எனில் அவர் உடனே கிளம்பியாகவேண்டும்” என்றான். “அவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான் யாமன். “அறைக்குச் சென்று அணிகளைக் களைந்த பின் வரவேண்டும். இங்கே எவரும் பொன்னோ மணியோ பட்டோ அணிந்து வரலாகாது” என்று ஆதன் சொன்னான்.

“தென்னவரே, அரசி திரௌபதி அரியணை அமர்ந்தபோதும் அணிகளின்றியே இருந்தார்” என்று யாமன் சொன்னான். “அரியணை ஏற அவர் தன் அறையிலிருந்து வெளியே வந்தபோது பேரரசிக்கு இளமை திரும்பிவிட்டதுபோல் தோன்றியது. என் விழிமயக்காக இருக்கலாம். ஆனால் முப்பதாண்டுகள் அகவை குறைந்துவிட்டது போலிருந்தார். முகத்திலிருந்த சுருக்கங்கள் எல்லாம் அகன்றுவிட்டிருந்தன. கன்னங்களிலும் தோள்களிலும் கருங்கல் மெருகு. நடையில் இளமையின் மிடுக்கு. குரல்கூட மாறிவிட்டிருந்தது. அவை எல்லாம்கூட என் கற்பனைகளாக இருக்கலாம், ஆனால் விழிகளில் எழுந்த ஒளி. அது இளமையால் மட்டுமே அமைவது.”

ஆதன் ஆர்வத்துடன் நின்றுவிட்டான். யாமன் தொடர்ந்தான். என்னிடம் பேரரசர் கேட்டார், அரசி எவ்வண்ணம் இருக்கிறார் என்று. நான் அவர் இளமைக்கு மீண்டுவிட்டதை சொன்னேன். அவர் நகைத்து “நன்று! நன்று!” என்றார். “அரசி கிளம்பிக்கொண்டிருக்கிறாரா?” என்று கேட்டார். “கிளம்புகிறார்” என்று நான் சொன்னேன். “அணிசெய்துகொண்டிருப்பார், பொழுதாகும்” என்று சொல்லி உரக்கச் சிரித்தார் அரசர். அரசரை நான் முதல்முறையாக அத்தனை உவகையுடன் பார்க்கிறேன். அவர் எதையோ கொண்டாடிக்கொண்டிருந்தார். அவருடன் இருந்தவர்கள் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவில்லை. அவர் அதற்குள் இருந்தார்.

அப்போதுதான் பீஷ்ம பிதாமகர் விண்புகுந்த செய்தி வந்தது. அது அவரை சற்று அணையச் செய்தது. யுயுத்ஸு “அது நாம் எண்ணியதுதானே, மூத்தவரே?” என்றார். “ஆம், ஆனால்…” என்றார். “அவர் காத்திருந்த பொழுது” என்று சகதேவன் சொன்னார். நான் பேரரசியைப்பற்றிய ஆணைக்காக காத்து நின்றிருப்பதை அவர்கள் மறந்துவிட்டிருந்தனர். “அமைச்சரை அழைத்துவருக! அவருக்கான நீத்தார்கடன்கள் என்னென்ன என்று அறிந்தாகவேண்டும்” என்றார் அரசர். என்னிடம் திரும்பி “அரசி ஒருங்கியதும் வந்து சொல்” என்றார். நான் தலைவணங்கி வெளியே வந்தேன். அமைச்சர் சுரேசர் ஓடி வருவதைக் கண்டேன்.

அரசியின் அறைக்குச் சென்றபோதுதான் அரசி அணிகளேதுமின்றி, வெண்ணிறப் பருத்தியாடை மட்டுமே அணிந்து குழலை கட்டிச் சரித்து கிளம்பிவிட்டிருப்பதை கண்டேன். ஒரு பொன்துளிகூட உடலில் இல்லை. ஆனால் இளங்கன்னி எனப் பொலிந்தார். அவர் கிளம்பிவிட்டார் என்னும் செய்தியைச் சொல்ல நான் திரும்பி அரசரிடம் சென்றேன். அங்கே சுரேசர் இருந்தார். அரசர் “அரசி ஒருங்கிவிட்டாரா?” என்றார். “கிளம்பிவிட்டார். ஆனால் அணிகளேதும் பூணவில்லை” என்றேன். “அணிகளேதுமின்றியா?” என்றார். அவர் முகம் சுருங்கியது. “ஆம் அரசே, ஒரு பொன்மணிகூட இல்லாமல்” என்றேன். “மணமங்கலத்தைக்கூட நாரில்தான் அணிந்திருக்கிறார்.”

அரசர் என்னை கூர்ந்து நோக்கினார். பின்னர் திரும்பி சுரேசரிடம் “ஆவன செய்க… நான் கிளம்பவேண்டும்” என்றபின் என்னை பார்த்தார். “செல்க” என்றார். திரும்பி சகதேவனிடம் “அனைத்து அணிகளும் வரட்டும்… மாமன்னர் ஹஸ்தி முதலானவர்கள் அணிந்த அருமணிகள் ஒன்றுகூட குறையலாகாது. இன்று நான் என் மூதாதையரின் முழுவுருவென அரியணை அமர்வேன்” என்றார். நான் திரும்ப வந்தபோது பேரரசி அவைக்குச் சென்றுவிட்டதை அறிந்தேன். பின்னால் சென்று பீஷ்மர் விண்புகுந்த செய்தியை சொன்னேன். அதற்குள் செய்தியுடன் சுரேசரே வந்துவிட்டிருந்தார். பீஷ்ம பிதாமகரின் விண்புகுகையை நகரில் முரசுகள் அறிவிக்கவேண்டும் என்றும், அவர் நிறுவுகை செய்த நூல்களை அஸ்தினபுரி தன் நெறிகளென ஏற்கும் என்றும் அரசர் அறிவித்திருப்பதாக சொன்னார். அரசி இயல்பாக நன்று என்று சொல்லி அவைநோக்கி நடந்தார்.

 

கீழே கொம்பொலி கேட்டது. யாமன் “அவர்தான், அணுகிக் கொண்டிருக்கிறார்” என்றான். “நான் சென்று அவரை வழிகாட்டி அழைத்துவருகிறேன்” என கிளம்பினான். ஆதன் “நான் திருச்சிலையை ஒருக்குகிறேன்” என்றபடி சென்று கோயிலுக்குள் நுழைந்தான். கலிதேவனின் சிலை நீலப்பட்டாடை அணிந்து விழிகள் நீலத்துணியால் கட்டப்பட்டு அமர்ந்திருந்தது. புதிதாக அதன் காலடியில் இருபுறமும் இரு சிறிய கருங்கற்களாக துரியோதனனும் சகுனியும் நிறுவப்பட்டிருந்தனர். ஆதன் நெய்விளக்குகளை எண்ணைவிட்டு தூண்டினான். சூழ எரிந்த பந்தங்களில் எண்ணை துலக்கும்படி ஏவலர்களுக்கு ஆணையிட்டான். இசைச்சூதர்களை அணுகி வந்து ஒருங்கி நிற்கும்படி கைகாட்டினான். அவர்கள் அப்போதுதான் துயில்கொள்ளும்பொருட்டு அமர்ந்திருந்தனர். துடித்து எழுந்து வந்து நின்றனர்.

அவன் மேலே நின்று நோக்கிக்கொண்டிருந்தான். கீழிருந்து விளக்குகளின் நிரை ஊர்ந்து வந்தது. அது இருளை எரித்துக்கொண்டே வருவதுபோல கற்பனை செய்தான். அங்கிருந்து கொம்புகளின் ஓசையும் ஆணைகளும் எழுந்தன. மையச்சாலையில் வந்த ஒளிநிரை புதிதாக அமைக்கப்பட்ட பாதை நோக்கி திரும்பியது. முகப்பில் அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியுமாக மூன்று கொடிவீரர்கள் வந்தனர். தொடர்ந்து பூசனைப்பொருட்களுடன் சேடியர் நிரை. அதன்பின் முழவும் கொம்புமாக சூதர்கள். தொடர்ந்து வந்த திரௌபதியை அவன் நிழலுருவெனக் கண்டான். அந்த அசைவிலேயே அவளிருந்த இளமையை அவனால் உணர முடிந்தது. அவளருகே படைத்தலைவி சம்வகை கவச உடையணிந்து வந்தாள்.

அவர்கள் வளைந்து வளைந்து ஏறிவந்த சாலையில் மேலே வந்தனர். பந்தங்களின் ஒளியை கடக்கையில் திரௌபதி தெரிந்து அணைந்தாள். அவள் உடலில் நகைகள் என ஏதுமில்லை. வெண்ணிற ஆடை, வெண்மேலாடை. முடிந்து கொண்டையாக்கி தோளில் தழைந்த குழல். அவளுடைய காலடிகள் இளம்புரவியின் மிடுக்குடன் இருந்தன. அவள் ஆலயமுற்றத்தை அணுகியதும் ஆதன் கையில் நிறைகலத்துடன் சென்று எதிர்கொண்டான். நீரை மாவிலையால் தொட்டு அவள்மேல் தெளித்து வரவேற்றான். அவள் விழிகள் ஆலயத்தை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தன. அங்கே பிறர் இருப்பதையே அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சம்வகை கையசைத்து அவனிடம் பூசனை நிகழட்டும் என ஆணையிட்டாள்.

ஆதன் அவளை ஆலயமுகப்புக்கு அழைத்துச்சென்றான். அவன் கைகாட்டியதும் சூதர் இசை முழக்கினர். அவன் ஆலயத்திற்குள் மண்டியிட்டு நுழைந்து அமர்ந்தான். ஏவற்பெண்டுகள் மலர்த்தாலங்களையும் பூசனைப்பொருட்களையும் அளித்தனர். நீல மலர்கள், அரிசி, கரிய பட்டாடை. அவன் தாலங்களை கலிதேவனின் முன் பரப்பினான். உள்ளிருந்து மலர் கொண்டுவந்து பேரரசியிடம் நீட்டினான். அவள் அதை சம்வகைக்கு கொடுக்கும்படி கண்காட்டினாள். அவன் அளித்த மலரை சம்வகை பெற்றுக்கொண்டாள். அவன் மீண்டும் கருவறைக்குள் நுழைந்து கலிதேவனைப் போற்றும் தொல்பாடலை உரைத்தபடி பூசனையை தொடர்ந்தான்.

கரியவனே, கண்ணற்றவனே

கண்ணே கருவிழியே உடலானவனே

காகக் கொடியும் கழுதை ஊர்தியும்

சிறக்க அமர்ந்திருப்பவனே

எழுயுகத்தோனே, எதிரற்றவனே

அறத்தின் ஊர்தியே

எழுக, எழுக, இங்கெழுக!

எழுக உன் குளம்படிகள்!

எழுக உன் கனைப்பொலிகள்!

எழுக உன் இருள்வண்ண ஒளி!

இந்தப் பொழுதில் எழுக

உன் முடிவிலாத கருணை!

தேவனே,

அருள்கொண்டவனே

நீ அறிவாய்

மானுடரின் எளிமையை

அவர்களின் ஆணவத்தை

விழைவை வஞ்சத்தை

தனிமையை

பிறதெய்வங்கள் உணராத அனைத்தையும்

நீ அறிவாய்

நீயே எங்களுக்கு துணைவன்

எங்களை ஆளும் இறைவன்

எங்களுக்கு பாதையாகுக!

எங்களுக்கு ஒளியாகுக!

எங்கள் வழிச்சொல் ஆகுக!

உடனிருந்து அருள்க!

எளியோரின் எளிமையால்

உன்னை வழிபடுகிறோம்

தீயோரின் தீமைகளை

உனக்குப் படைக்கிறோம்

கீழோரின் கீழ்மைகளால்

உன்னை நீராட்டுகிறோம்

அறிந்த தேவனே

அறியாத தெய்வங்களைவிட அணுக்கமானவன்

நீயன்றி எங்களுக்கு

இன்று உற்றான் எவருமில்லை

எழுயுகத்தோனே

இனி நீயன்றி அடைக்கலம் பிறிதில்லை

அவன் தீயாட்டும் சுடராட்டும் மலராட்டும் காட்டினான். கலிதேவனின் மூடிய விழிகளுக்குக் கீழே என்றும் அவன் காணும் புன்னகையை உணர்ந்தான். சுடர்கொண்டு காட்டும்போது திரௌபதியை நோக்கினான். பந்த வெளிச்சம் மேனிமென்மையில் மிளிர அவள் விழிமூடி கைகூப்பி நின்றிருந்தாள்.

[களிற்றியானைநிரை நிறைவு]

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79

பகுதி எட்டு : அழியாக்கனல்-3

தீக்ஷணன் வெளியே நெரிந்த கூட்டத்தில் இறங்கியதுமே அவனை அது அள்ளிச் சென்றது. அவன் தன்னை மறந்து அதில் ஒழுகினான். அது எத்திசை நோக்கி செல்கிறது என அவனால் உணரமுடியவில்லை. அஸ்தினபுரியின் அரண்மனைக் கோட்டை தெரிந்ததும் அவன் “அரண்மனையா!” என்றான். அருகே நடந்த ஒரு முதியவன் “ஆம், பெருங்கொடையாட்டு. பொன் பெறும் நாள்!” என்றான். தீக்ஷணன் அப்போதுதான் அதை உணர்ந்தான். “நூற்றெட்டு கொடை மையங்கள். நீங்கள் எவரென்று கூறி உரியவற்றில் இணையலாம்.” அவன் மறுமொழி சொல்லாமல் சென்றான். அவன் சென்ற நிரை பலவாகப் பிரிந்தது. அவன் தன்னியல்பாக ஏதேனும் ஒன்றில் இணைந்தான். பிரிந்து மீண்டும் வேறொன்றில் ஒழுகினான்.

சாலைகள் எங்கும் மக்கள். பெரும்பாலானவர்கள் களிவெறி கொண்டிருந்தனர். கைதட்டி பாடியபடி ஆடினர். பெண்கள்கூட நிலையழிந்திருந்தனர். கள்மொந்தைகள் பலர் கைகளில் இருந்தன. ஒருவன் தன் கையிலிருந்த வெள்ளிக்காசுகளை சுழற்றி வீசி கூச்சலிட்டான். “எடுத்துக்கொள்ளுங்கள்… இரவலரே, எடுத்துக்கொள்ளுங்கள்… இதோ! இதோ!” ஆனால் எவரும் குனிந்து அதை அள்ளவில்லை. ஏனென்றால் கூட்டம் முட்டி நெரித்துக்கொண்டிருந்தது. அவன் கண்கள் சிவந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. அவன் நெடும்பொழுதாக குடித்துக் கொண்டிருந்திருக்கவேண்டும்.

அங்கே ஓர் இசை நிறைந்திருப்பதை அதன் பின்னர்தான் தீக்ஷணன் உணர்ந்தான். எவரும் இசைக்கவில்லை, ஆனால் அக்கூட்டமே அவ்விசையில் பொருந்தியிருந்தது. அதற்கேற்ப அசைந்துகொண்டிருந்தது. அந்த இசை அதன் அசைவிலிருந்தே பிறந்தது. அந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெவ்வேறு மொழிகளில் தங்களுக்குள் பேசிக்கொண்ட, கூவி ஆர்ப்பரித்த, சிரித்துக் கொப்பளித்த ஓசை இணைந்து முழக்கமென்றாகி அந்த இசையாக அமைந்தது. அதனுடன் வெவ்வேறு இசைக்கலன்கள் சேர்ந்துகொண்டன. முழவுகள், பறைகள், கொம்புகள், குழல்கள், மணிகள். அந்நகரமே ஓர் இசைக்கலன் என்றாகி அந்த இசையை உருவாக்கிக்கொண்டது. தன் செவிகள் நிகழ்த்தும் மயக்கா அது என தீக்ஷணன் எண்ணினான். காதை மூடுவதுபோல் கண்களை பலவாறாக மூடித்திறந்தான். அது வான் என காற்று என மண் என அங்கே நின்றிருந்தது. அது நீர், இந்த மக்கள் அதில் மீன்கள்.

அந்த இசை அவன் உடலுக்குள்ளும் நிறைந்திருந்தது. அவன் நரம்புகள் அதை முழக்கின. அவன் வயிற்றில் அது கார்வைகொண்டது. பின்னர் அவன் உணர்ந்தான், வெவ்வேறு முரசுமாடங்களில் அமைந்த பெருமுரசுகளின் தாளமே அதை உருவாக்குகிறது என. அந்தச் சீரான பெருநடைத் தாளம் அனைத்து ஒலிகளையும் தொகுத்து ஒருங்கமைத்தது. பின்னர் அந்தத் தாளம் அங்கிருந்தோர் அனைவருள்ளும் சென்றது. அவர்களின் அசைவுகளை அது ஆண்டது. அவர்களின் ஓசைகளை அது வகுத்தது. அவர்கள் எழுப்புவதெல்லாம் இசையே என்றாக்கியது. இசை என்பது தாளம் அமைந்த ஓசை.

அவன் அதை தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். தாளம் என்பது ஒழுங்கைமைந்த ஓசை. ஒழுங்கு. அதை நாடுகிறது உள்ளம். இந்த ஒழுங்கின்மையின் பெருக்கு ஓர் ஒழுங்குக்குள் அமைந்திருக்கிறது. ஒழுங்கின்மையின் தாளம், அல்லது தாளத்தின் ஒழுங்கின்மை. இவர்கள் கட்டின்றி விடப்படவில்லை. அந்தத் தாளத்தால் இவர்கள் ஆளப்படுகிறார்கள். அதை எழுப்புபவர்கள் சற்றே விசைகூட்டினால் இவர்களை வெறிகொள்ளச் செய்யமுடியும். ஒருவரை ஒருவர் கொன்றொழிக்கச் செய்யமுடியும். மெல்லமெல்ல தளரவைத்து இவர்களை நாணறுந்த ஆட்டப்பாவைகள் என நிலம்படியச் செய்யமுடியும். ஆனால் அது இவர்களை தாங்கியிருக்கிறது. இவர்களை ஒன்றெனத் திரட்டுகிறது.

அரண்மனை கண்ணெதிரே சுடர்கொண்ட மலை என எழுந்து தெரிந்தது. அதன் விளிம்புகள் அனைத்திலும் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி பீதர்நாட்டு பளிங்குக் குமிழி இருந்தமையால் காற்றில் சுடர்கள் அசைவுகொள்ளவில்லை. சாளரங்கள் செம்பிழம்புகளெனத் தெரிந்தன. “அரண்மனையே பற்றி எரிவதுபோல!” என்று ஒரு முதியவன் சொன்னான். “இன்னும் சற்றுநேரத்தில் அங்கே கைப்பிடிச் சாம்பல் மட்டுமே எஞ்சும் என்பதுபோல.” துணுக்குற்று தீக்ஷணன் அவ்வாறு சொன்னவனை விழிகளால் தேடினான். அவன் முகம் தெரியவில்லை. இன்னொருவன் அவனை நோக்கி புன்னகைத்தான். அவர்களில் எவரும் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடும் என்பதுபோல.

அவன் சற்று அப்பால் சார்வாகரை பார்த்துவிட்டான். தன் யோகக்கோலுடன் அவர் தனித்துச் சென்றுகொண்டிருந்தார். ஆடையில்லாத மண்படிந்த உடல். நிமிர்ந்த தலையில் சடைக்கொண்டை. தோளில் புரண்ட சடைத்திரிகள். நாணேற்றிய வில் என நடை. அவரை காவலன் ஒருவன் தடுத்தான். அவர் ஏதோ சொன்னதும் அவன் தலைவணங்கினான். அவர் அப்பால் சென்று அங்கு நின்றிருந்த நீள்நிரை ஒன்றில் இணைந்தார். அவரை அந்த நிரை நெற்றை ஓடை என இழுத்துச் சென்றது. அவர் அதில் செல்வதை நோக்கி அவன் சித்தமற்று நின்றான். பின் துடிப்பு கொண்டு தன் நிரையிலிருந்து பிரிந்து அவரை நோக்கி சென்றான்.

தீக்ஷணன் சார்வாகரை அனுப்பிய அதே காவலனிடம் சென்று “நான் சார்வாக முனிவரின் மாணவன், அவருடன் வந்தேன். திரளால் விலக்கப்பட்டேன்” என்றான். “அவர் யார்?” என்று அவன் கேட்டான். “முனிவர், அவரை பார்த்தால் தெரியவில்லையா? சார்வாகர்” என்றான் தீக்ஷணன். “அவர் இங்குள்ள மங்கலங்கள் எதையும் பேணவில்லை. இன்று அரசரின் முன் மங்கல ஆடையின்றி எவரும் செல்லலாகாது என நெறி” என்றான் காவலன். “தவத்திற்சிறந்த மங்கலம் இல்லை. அறியமாட்டாயா நீ?” என்று அவன் சொன்னான். இன்னொரு முதிய காவலன் “ஆனால் சார்வாகர்கள் கொடை பெறுவதில்லையே?” என்றான். காவலர்தலைவன் “ஆம், அவர்கள் அதை வைத்து என்ன செய்வார்கள்?” என்றான். தீக்ஷணன் “அவர் கொடுக்கவும் செல்லலாம் அல்லவா?” என்றான். அவர்கள் திகைத்தனர். “ஆணையிடுக, நான் செல்லவேண்டும்!” என்றான் தீக்ஷணன். காவலர்தலைவன் குழப்பமாக நோக்கிய பின் “செல்க!” என்றான்.

தீக்ஷணன் நிரையில் சேர்ந்துகொண்டான். அது உந்தி உந்தி முன்னகர்ந்தது. எரித்துளி என சார்வாகர் தனித்துத் தெரிந்தார். அவரைச் சூழ ஒரு வெற்றிடம் உருவானது. அந்நிரைக்கு இணையாக அந்தணர் நிரை ஒன்று வந்துகொண்டிருந்தது. அவர்கள் அவரைக் கண்டு திடுக்கிட்டனர். ஒருவரை ஒருவர் அழைத்து அவரை சுட்டிக்காட்டினர். அத்தனை அணுக்கமாக அவர்கள் அவரை முன்பு கண்டிருக்கவில்லை என்று தெரிந்தது. அவர் தன் கையில் அந்த யோகக்கழி அன்றி எதையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தன்னை நோக்குவதை அவர் உணர்ந்ததாகவும் தெரியவில்லை.

அங்கிருந்த ஒவ்வொருவரின் உடலிலும் மெல்லிய ததும்பல் இருந்தது. அவர்களின் உடல்நீர் உள்ளே அந்தத் தாளத்தைப் பெற்று அதற்கேற்ப அலைகொண்டபடி இருந்தது. விரல்நுனிகளில், தோளசைவுகளில், கால்நிலைகளில் அந்தத் தாளத்தை பார்க்க முடிந்தது. அதிலிருந்து விலக அவன் எண்ணினான். ஆனால் நிலமே அந்தத் தாளத்தை எழுப்பிக்கொண்டிருந்தது. பெரும் மரக்கலம் ஒன்றில் என, கடலின் அலைவை அது அத்தனைபேரிலும் நிகழ்த்துவதுபோல. அவன் சார்வாகரை நோக்கினான். அவர் நிலைக்கோள் கொண்டிருந்தார். அந்தத் தாளத்தின் துளிகூட நிகழா உடலுடன் சென்றார்.

அந்தணர்களும் புலவர்களும் அடங்கிய நான்கு நிரைகளும் நகர்ந்துசென்று வெண்பட்டுப் பந்தலுக்குள் நுழைந்தன. அதன் மூங்கில்கள் தோறும் பீதர்நாட்டு பளிங்குக் குமிழ்கள் உள்ளிருக்கும் நெய்ச்சுடரால் ஒளிகொண்டிருந்தன. ஆயிரம் நிலவுகள் நிரை வகுத்தது போன்ற கண்ணை நிறைக்கும் தண்ணொளி. பரவிய ஒளி நிழல்களை கரைத்திருந்தமையால் அவர்கள் அங்கே விந்தையான சுடர்கள் என அசைந்தனர். நகரின் ஓசைகள் அகன்று சென்றன. மிக அப்பால் மங்கல இசை ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கே பெரிய அடுக்கு விளக்குகள் எரியும் ஒளி, ஒளிக்குள் மேலும் ஒளியென எழுந்து தெரிந்தது.

அந்தணர்கள் உரக்கப் பேசியபடி ஒருவரை ஒருவர் உந்தினர். முன்னால் சென்றவர்களை நோக்கி கூச்சலிட்டனர். சிலர் வசைபாடினர். பெரும்பாலானவர்கள் அயல்நிலத்து அந்தணர். உருவாகிவரும் குலங்களில் வேதச்சடங்கு ஒன்றை நம்பி அலைந்தவர்கள். ஆகவே வறுநிலையிலேயே வாழ்வை கழித்தவர்கள். அவர்களின் கண்களுக்கு நெடுந்தொலைவில் எங்கோ இருந்த கொடைப்பீடம் படவில்லை. ஆகவே பதற்றம் கொண்டனர். கொடை பெற்றுக்கொண்டவர்கள் மறு பாதையினூடாக வெளியே சென்றனர். “கொடுக்கிறார்களா? மெய்யாகவே இங்கேதானா?” என்று ஒருவர் கேட்டார். “இங்குதான்” என்று ஒருவர் மறுமொழி சொன்னார்.

கேட்டவர் நிறைவடையாமல் காலில் எம்பி நுனிவிரலில் நின்று “ஒன்றும் தெரியவில்லை. இது வேறு எதற்காகவாவது அமைந்த நிரையாக இருக்கலாம்…” என்றார். “இங்குதான், வேறெதற்கு இங்கே நிரைவகுக்கப்போகிறார்கள்?” என்றார் மறுமொழி சொன்னவர். அவர் பதற்றத்துடன் “ஒன்றும் தெரியவில்லை. ஒருவேளை வேறெங்காவது கொடுக்கப்பட நாம் இங்கே நின்று பொழுதை வீணடிக்கிறோம் போலும்” என்றார். அவரே அருகே நின்ற ஒருவரிடம் “உத்தமரே, இது அந்தணர்களுக்கு பெருங்கொடை அளிக்கப்படும் இடம் அல்லவா?” என்றார். “ஆம், இவ்விடம்தான்” என்றார் அவர்.

“இங்கே ஒன்றும் தெரியவில்லை” என்றார் கேட்டவர். “சற்று தொலைவு செல்லவேண்டும்.” இன்னொருவர் மெல்லிய உடலும் நீள்முகமும் கொண்டவர். குழிந்த கண்களுடன் ஒட்டிய கன்னங்களுடன் அன்னம்காணாதவர் போலிருந்தார். “என்ன நிகழ்கிறது அங்கே? கொடுக்கிறார்களா? இந்த நிரை முன்னகரவே இல்லையே?” அவர் ஒன்றும் சொல்லவில்லை. இன்னொருவர் முதியவர். எரிச்சலுடன் “நிரை சற்றுப் பெரியது… இங்கு நின்றால் எல்லை தெரியாது” என்றார். “என்ன கொடுக்கிறார்கள்?” என்றார் மெலிந்தவர். பருத்த உடல்கொண்ட ஒருவர் “என்னவானால் என்ன? கொடுப்பதை மறுக்கப்போவதில்லை, மேலும் கோரவும் தகுதியில்லை. பேசாமல் நில்லும்” என்றார்.

மெலிந்தவர் படபடப்புடன் “வாங்கியவர்கள் எங்கு செல்கிறார்கள்? அவர்களிடம் உசாவி அறியலாமென்றால் இங்கே அவர்கள் எவருமில்லை” என்றார். “அவர்கள் மறுவழியே வெளியே செல்கிறார்கள்.” முதலில் கேட்டவர் “அவர்கள் சுற்றுவழியாக மீண்டும் இங்கு வந்து நின்றிருக்க மாட்டார்களா என்ன?” என்றார். “அவ்வாறு எவரும் இங்கு செய்வதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையரையும் குலத்தொழிலையும் எண்ணி உறுதிகொண்ட பின்னரே பொருள் பெறுகிறார்கள்.” “நாம் வேதம் சொல்லவேண்டுமோ?” என்றார் மெலிந்தவர். எவரும் மறுமொழி சொல்லவில்லை.

அவர் அமைதியிழந்து வேட்கைகொண்ட கோழிபோல கீழ்த்தாடை பதைக்க சுற்றும் நோக்கி “இத்தனை பெருந்திரள்… இவர்களுக்கெல்லாம் கொடுத்தபின் நாம் செல்லும்போது இல்லை என்று சொல்லிவிடப்போகிறார்கள்” என்றார். மீண்டும் எட்டிப்பார்த்து “இத்தனைபேர் இருப்பதை கணக்கிட்டு பொருளை பங்கிடுகிறார்களா? கருவூலத்தில் உள்ளது என்று எண்ணி அள்ளிக்கொடுத்துவிட்டு இறுதியில் வந்தவர்களை விட்டுவிடப்போகிறார்கள்” என்றார். அவரை பிறர் எரிச்சலுடன் பார்த்தனர். அவர்களும் அந்தப் பதற்றத்தை உள்ளூர கொண்டிருந்தனர் எனத் தெரிந்தது.

“ஆனால் எவருக்கேனும் கொடுக்காமல் விட்டுவிட்டால் அது பழி. அஸ்வமேதம் நிறைவடையாது” என்றார் மெலிந்தவர். பருத்தவர் “இது அஸ்வமேதமல்ல, ராஜசூயம். மேலும் அனைவருக்கும் கொடுத்தாகவேண்டும் என நெறியேதுமில்லை. கருவூலம் ஒழியக் கொடுக்கவேண்டும் என்றுதான் நெறி” என்றார். மெலிந்தவர் சீற்றம் கொண்டார். “எவர் வகுத்த நெறி அது? கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்கவேண்டும்… சிலருக்குக் கொடுத்து சிலருக்கு இல்லை என்றால் அவர்கள் வயிறெரிந்து தீச்சொல் இடமாட்டார்களா என்ன?”

சிறிய விழிகள் கொண்ட பருத்து உயர்ந்த அந்தணர் ஏளனம் மின்னும் விழிகளுடன் “நீர் தீச்சொல்லிடுவீரா?” என்றார். “அதாவது நான் இங்கே காலையிலேயே வந்துவிட்டேன். என் தோழர்தான் மடைப்பள்ளிக்குச் சென்று உண்போம் என அழைத்துச் சென்றார். அங்கிருந்து எங்களை வேதம் ஓத அழைத்துச் சென்றுவிட்டார்கள். வருவதற்குள் பிந்திவிட்டது. வேதம் ஓதுவது பிழையா? அதன்பொருட்டு எங்களுக்கு பொன் மறுக்கப்படுமென்றால்…” அவர் கையை மேலே தூக்கினார். “தெய்வங்கள் மீண்டும் வஞ்சம் கொள்கின்றன என்றே பொருள். நடுக்கடலிலும் நாய் நக்கியே குடிக்கமுடியும் என்பார்கள்…”

அவருடைய தொண்டை இடறியது. “நான் என் கையால் இதுவரை பொன்னை தொட்டதில்லை. ஒருமுறைகூட… மெய்யாகவே பொன்னை தொட்டதில்லை. எனக்கு மனையாட்டி குடி என ஏதுமில்லை… வேதம் மட்டுமே வாய்ப்பொருள் என இதுவரை வாழ்ந்தேன்… மிக நம்பி இங்கே வந்தேன்.” அவர் அழத்தொடங்கினார். “நான் எங்கு சென்றாலும் துரத்திவருகிறது என் வறுமை. அது என் ஊழ். அதை நான் மீறமுடியாது. இப்பிறவி இவ்வண்ணமே ஒழியும்போலும்.” அவர் மேலாடையால் முகத்தை துடைத்துக்கொண்டார்.

ஒருவர் தீக்ஷணனிடம் “அவர் யார்?” என்று சார்வாகரை சுட்டிக் காட்டி கேட்டார். “அறியேன்” என்று அவன் சொன்னான். “அவருக்கு மாணவனாக உள்ளே வந்தீர் அல்லவா?” என்றார் அவர். “அல்ல, நான் தனியாகத்தான் வந்தேன்” என்று தீக்ஷணன் சொன்னான். “அவர் ஒரு முனிவர்” என்றான் ஓர் இளைஞன். “அவன் எப்படி இந்த நிரையில் வந்தான்? அவனிடம் மட்கிய ஊனின் கெடுமணம் அல்லவா எழுகிறது?” என்றார் ஒரு முதியவர். “அவர்கள் அவ்வாறுதான்… புறநிலங்களில் தங்குபவர்கள்” என்றான் இளைஞன். “அவர்களின் நெறிகளென்ன என்று நாம் அறியோம். பாரதவர்ஷத்தில் துறவுக்கும் தவத்திற்கும் எல்லையில்லா வழிகள் உண்டு என்பார்கள்.”

“அதற்காக ஆடையில்லாதவனை எப்படி அகத்தே ஒப்பினார்கள்?” என்றார் முதியவர். “இது மாமங்கல நிகழ்வு. மங்கலங்களில் முதன்மையானது ராஜசூயம்.” இளைஞன் “ஆனால் அவர் புறநெறி சார்ந்த முனிவர். கடுநோன்பு கொண்டவர். அஸ்தினபுரியில் இன்று அனைவருக்கும் நுழைவொப்புதல் உண்டு. அனைத்து நிலை முனிவர்களுக்கும் இந்நிரையில் இடமுண்டு” என்றான். முதியவர் “அவன் இரவலன்… உளநிலை மயங்கியவன். அன்றி களிமகன்” என்றார். “சார்வாகர்கள் அவ்வாறுதான் இருப்பார்கள்” என்று இளைஞன் சொன்னான். “சார்வாகர்களா? யார் அவர்கள்?” என்றார் முதியவர். “நானும் இங்கு வந்துதான் கேட்டேன். அவ்வண்ணம் ஒரு சாரார் இருக்கிறார்கள். வேதமறுப்பாளர்கள், வேள்விமறுப்பாளர்கள், அரசுமறுப்பாளர்கள், குலமறுப்பாளர்கள்.”

கிழவர் திகைப்புடன் சூழ நோக்கிய பின் நம்பிக்கையின்றி “அவ்வண்ணம் ஒரு தரப்பா? அசுரர்களா?” என்றார். “வேதங்களில் அவர்களும் உண்டு என்கிறார்கள். அவர்களின் முதலாசிரியர் பிருஹஸ்பதி முனிவர். அவர்களின் நெறிவந்த பலர் உண்டு என்கின்றனர் புலவர்” என்றான் இளையவன். “அவர்களின் கொள்கை என்ன?” என்றார் முதியவர். “அவர்கள் நான்கு விழுப்பொருட்களை மறுக்கிறார்கள். இன்பம் ஒன்றே விழுப்பொருள் என்கிறார்கள்” என்றான் இளையவன். அவர் வெறுப்புடன் உரக்க நகைத்து “அவன் கூறும் இன்பம் என்பது காட்டுப்பன்றிகளுடன் சேற்றில் உழல்வதுபோலும்” என்றார். “வேதவெறுப்பும் ஒரு மெய்யறிவுத்தரப்பு என்று எப்போது ஆயிற்று இங்கே? எனில் இனி வேள்வியை அழிக்கும் அரக்கர்களின் தரப்பும் இங்கு வந்து அவையமர்ந்திருக்குமா என்ன?”

நிரையின் முன்பக்கம் ஓசைகள் எழுந்தன. பல அந்தணர்கள் சார்வாகரை நோக்கி கூச்சல் எழுப்பினர். சிலர் திரும்பி நோக்கி காவலரை அழைத்தனர். காவலர்களும் சார்வாகரை நோக்கி திகைத்தனர். ஆனால் அவரை வெளியேற்ற முடியாது என்றும் உணர்ந்தனர். அங்கிருந்து ஒருவர் முன்னகர்ந்தே வெளியேற முடியும். ஆகவே “வாயை மூடுங்கள்… அந்தணர்கள் அமைதியாகுக! அவர் முனிவர். அரசரின் விருந்தினர்” என்று காவலர்தலைவன் கூவினான். “மறுத்துரை செய்வது அரசப்பழி… அதற்கு இங்கு தண்டனை உண்டு.” அவன் பலமுறை அவ்வாறு கூவியபோது அந்தணர்கள் அடங்கினர். சினத்துடன் ஒருவரிடம் ஒருவர் உறுமலாகவும் முனகலாகவும் பேசிக்கொண்டனர். அந்த ஓசைகள் இணைந்து ஒற்றை முனகல் என அங்கே நிறைந்திருந்தன.

 

சார்வாகர் விழிகளில் இருந்து மறைந்துவிட்டிருந்தார். தீக்ஷணன் தவிப்புடன் நோக்க திரளுக்கு அப்பால் ஒளி பெரிதாகத் தெரிந்தது. அங்கே தொங்கிய வெண்பட்டுத் திரைகளெல்லாம் தழல்கள் என காற்றில் நின்றாடின. ஒரு சிறு மேடேறி திரும்பி அங்கே சென்றுகொண்டிருந்தது நிரை. தீக்ஷணன் ஒருகணம் எண்ணினான், உடனே குனிந்து பிறர் கால்களினூடாக ஊடுருவிச் சென்றான். “ஏய், யாரது? எங்கே செல்கிறாய்?” என்றெல்லாம் கூச்சல்கள் கேட்டன. அவன் எழுந்தபோது அவனுக்கு முன்னால் சார்வாகர் நின்றிருந்தார். அவன் இருவரை விலக்கி அவருக்குப் பின்னால் சென்று நின்றான். அவர் அவ்வண்ணம் அவன் அருகே வந்ததை உணரவில்லை. நிமிர்ந்த தலையுடன் தனக்கு முன்னால் நின்றிருந்த இரு இளமுனிவர்களைக் கடந்து அரசமேடையை நோக்கி சென்றார்.

வெண்பட்டுத் திரைச்சீலைகள் சூழ வெண்பட்டாலான கூரைக்குவையுடன் அமைக்கப்பட்டிருந்தது அரசமேடையின் பந்தல். பொன் என மின்னிய பித்தளை விளிம்புகள் கொண்ட எடைமிக்க பீடங்களை அடுக்கி அதை சற்றே மேலெழுப்பியிருந்தனர். அதன்மேல் யுதிஷ்டிரன் அருமணிகளும் பொற்செதுக்குகளும் கொண்ட பீதர்நாட்டு பளிங்குக்குமிழ் விளக்குகளின் செவ்வொளியில் அனல் என மின்னிய அரியணையில் அமர்ந்திருந்தார். அதில் அருமணிகள் விழிகள் என நோக்கு கொண்டிருந்தன. அவருக்கு இருபக்கமும் பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் நின்றிருந்தனர். அவர்களுக்கு வலப்பக்கம் யுயுத்ஸு பதற்றத்துடன் நின்று பின்பக்கம் நோக்கி ஆணைகளை இட்டான். முன்பக்கம் நோக்கி கைகளை வீசி கூட்டத்தை கட்டுப்படுத்தினான்.

யுதிஷ்டிரன் மெல்லிய பொற்கம்பிகளால் முடையப்பட்டு அருமணிகள் பதிக்கப்பட்ட மணிமுடியை அணிந்திருந்தார். அதுதான் ஹஸ்தியின் மணிமுடி என தீக்ஷணன் எண்ணிக்கொண்டான். அருமணிகள் பதித்த நகைகள் அவர் உடலெங்கும் மின்னிக்கொண்டிருந்தன. அவரை அவன் சிலமுறை சாலைகளில் தேரில்செல்பவராகக் கண்டதுண்டு. ஒவ்வொருமுறையும் துணுக்குறலையே அடைவான். அனைத்திலிருந்தும் உளம்விலகிய, எரிச்சல்கொண்ட, முதியவர் என்று தோன்றும். அரசர் என்றல்ல குடித்தலைவர் என்றுகூட அவரை எண்ணிக்கொள்ள முடியாது. அப்போது அவர் பேரரசர் எனத் தோன்றினார். அவரை அவ்வண்ணம் காட்டுவது அந்த அருமணிகளும் நகைகளுமா? எனில் அரசர் என்பது அவைதானா?

யுதிஷ்டிரனின் பின்னால் அமர்ந்து சூதர்கள் மங்கல இசையும் வாழ்த்தொலியும் எழுப்பினர். நிரையாகச் சென்றவர்கள் மங்கல இசை எழுந்ததும் சென்று அவர் முன் நின்றனர். அவர்களுக்கு மும்முறை கைநிறைய அள்ளி பொன்னும் வெள்ளியும் அளித்து கைகூப்பினார். அவர்கள் அதை தோல்கிழியிலோ பட்டுச்சால்வையிலோ பெற்றுக்கொண்டு அவரை வாழ்த்தி நல்லுரை கூறினர். உடனே பின்னின்று சூதர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அதைக் கேட்டதும் பரிசில்பெற்றவர் புறம் காட்டாமல் பின்னடி வைத்து விலகி அப்பால் இறங்கிச் செல்லவேண்டும். அவர்கள் கீழிறங்க இரு வீரர்கள் உதவினர். அவர்கள் அவ்வண்ணமே பட்டுத்திரைக்குள் மறைந்து இயல்பாக நடந்து அகல வழி அமைக்கப்பட்டிருந்தது. அப்பால் வேறொரு மண்டபத்தில் பேரரசி திரௌபதி பெண்களுக்கு கொடை வழங்கிக்கொண்டிருந்தாள் என தீக்ஷணன் அறிந்தான். அங்கு இங்கிருப்பதைவிட பலமடங்கு பெரிய நிரை இருந்துகொண்டிருக்கும்.

பரிசில்பெற்ற அந்தணர் ஒருவர் மேலும் பல சொல்ல விழைந்தார். அவர் வாழ்த்தியதும் இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்து செவிமூடின. அவர் உரக்க உரக்க சொல்ல முயல அமைச்சர்கள் இருவர் அவர் கைபற்றி மெல்ல விலக்கினர். அவர் கண்ணீரும் பதைப்புமாக ஏதோ சொன்னபடியே பின்னடி வைத்து பட்டுத்திரைக்குள் மூழ்கி மறைந்தார். வந்தவர்களிடமிருந்து தீய தெய்வங்கள் யுதிஷ்டிரனை அணுகாமலிருக்கும் பொருட்டு அந்த மண்டபத்தின் கூரைகளில் பல்வேறு செப்புத் தகடுகளும் மூலிகைவேர்களும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. அங்கே ஒரு மூலையில் மூலிகையிட்ட நீர்க்கலம் கொதித்தது. இன்னொரு மூலையில் குந்திரிக்கம் புகைந்தது. அக்காட்சியை செவ்வொளி பரவிய மென்புகையும் ஆவியும் மறைத்து விண்ணிலென திகழச்செய்தன.

யுதிஷ்டிரன் முகம் மலர்ந்திருந்தார். அந்தச் செயலின் முடிவில்லாத சுழற்சி அவருள் ஊழ்கநிலையை உருவாக்கியிருந்தது எனத் தோன்றியது. கனவிலென அவர் அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவ்வண்ணம் பற்பல ஆண்டுகள் அவரால் அள்ளிக்கொடுத்தபடியே இருக்கமுடியும் எனத் தோன்றியது. அருகணைந்தபோதுதான் தீக்ஷணன் அப்பால் நீண்ட தெய்வபீடம் அமைக்கப்பட்டு அங்கே ஹஸ்தி முதலிய முன்னோரின் நினைவாக செம்பட்டு சுற்றப்பட்ட பொற்குடங்களும் உடைவாள்களும் மாலையிடப்பட்டு பூசெய்கை இயற்றப்பட்டு கொலுவைக்கப்பட்டிருப்பதைக் கண்டான்.

இசையொலி எழ ஏவலன் கையசைத்து சார்வாகரை மேலே வரச்சொன்னான். அவரைக் கண்டதும் பீமனின் முகத்தில் ஒரு மெய்ப்பாடு எழுந்தது. அது என்னவென்று எண்ணக்கூடவில்லை. தீக்ஷணன் எல்லைகடந்து அவர் அருகே செல்லமுயன்றான். ஆனால் வீரன் அவனை கைநீட்டித் தடுத்தான். யுதிஷ்டிரன் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. அவர் சார்வாகரை அறியவே இல்லை. வழக்கமான புன்னகையுடன் வணங்கி கைநிறைய பொருளை அள்ளி நீட்ட சார்வாகர் தன் வெறுங்கையை நீட்டினார். யுதிஷ்டிரன் ஒருகணம் திகைத்தபின் அந்தக் கையில் பொருளை வைத்தார். அர்ஜுனன் முன்னகர்ந்து ஏதோ சொல்ல முயல சகதேவன் அவன் கையை தொட்டான். சார்வாகர் அந்தப் பொருளை மூக்கருகே கொண்டுசென்று முகர்ந்துவிட்டு தரையிலிட்டார்.

யுதிஷ்டிரன் திகைப்புடன் “என்ன?” என்றார். கீழே நோக்கி “ஏன் கீழே போட்டீர், உத்தமரே?” என்றார். “அவற்றில் குருதி நாறுகிறது” என்றார் சார்வாகர். பீமன் முன்னகர்ந்து கைநீட்ட அவனை விலக்கிவிட்டு யுதிஷ்டிரன் மாறாப் புன்னகையுடன் “வேறு பொருள் தருகிறேன், கொள்க!” என்றார். சார்வாகர் கைநீட்ட இன்னொரு கலத்திலிருந்து பொன்னை அள்ளி அவர் கைகளில் இட்டார். அவர் அதையும் முகர்ந்து நோக்கி முகம் சுளித்து கீழே போட்டார். யுதிஷ்டிரன் முகத்தில் மிகச் சிறிய சுளிப்பு ஒன்று தோன்றியது. பீமன் “யார் இவர்? எவர் இவரை உள்ளேவிட்டது?” என்றான். சகதேவன் “மூத்தவரே” என்றான். யுதிஷ்டிரன் புன்னகை மீண்டு “பிறிதொன்று பெற்றுக்கொள்க, முனிவரே!” என இன்னொரு குவையிலிருந்து அள்ளினார்.

“யுதிஷ்டிரா, குருதி நாறாத பொன் உன் கருவூலத்தில் உண்டா?” என்றார் சார்வாகர். யுதிஷ்டிரனின் கைகள் நடுங்கின. அவர் முகம் துடிப்பதை தீக்ஷணன் கண்டான். அவர் கையிலிருந்து பொன்னும் வெள்ளியும் கீழே சிதறின. ஒரு கால் செயலிழந்தவர்போல அவர் சரிந்து விழப்போக யுயுத்ஸு அவரை பிடித்துக்கொண்டான். பீமன் உரத்த குரலில் “யார் இவர்? பாரதவர்ஷத்தின் பேரரசரிடம் இப்படிப் பேச ஒப்புதலளித்தவர் எவர்? இத்தருணத்தின் மங்கலத்தை அழிக்க இவரை ஏவியவர் எவர்?” என்று கூவினான். அர்ஜுனன் சீற்றத்துடன் முன்னால் வந்து “கொண்டுசெல்லுங்கள் இவரை!” என்று ஆணையிட்டான். யுயுத்ஸு சற்று தடுமாறிவிட்டான். அவன் என்ன செய்வதென்று அறியாமல் அப்பால் நின்றிருந்த சுரேசரை நோக்க அவர் அவனை நோக்கி வந்தார்.

ஆனால் அக்கணத்தில் தனக்குப் பின்னால் செறிந்திருந்த அந்தணர் நிரையில் ஓர் உடைவு உருவாவதை தீக்ஷணன் கேட்டான். சீற்றம்மிக்க ஓலங்களுடன் அந்தணர் பெருகி எழுந்து வந்து சார்வாகரை பிடித்துக்கொண்டனர். அவரை அள்ளித் தூக்கிக்கொண்டு சென்றனர். அவரை ஒரு மாபெரும் யானையின் துதிக்கை சுழற்றி எடுத்து கொண்டுசெல்வதுபோலத் தோன்றியது. ஓலங்களும் அலறல்களுமாக அதுவரை அங்கே நிறைந்திருந்த இசை சிதறி அழிந்தது. தீக்ஷணன் கைநீட்டிக் கூச்சலிட்டபடி அந்தத் திரளில் பாய்ந்து சார்வாகரை நோக்கி செல்ல முயன்றான். ஆனால் அதன் விளிம்பு விலகு சுழல் என அவனை தூக்கித் தூக்கி அப்பால் வீசியது. அவன் வெறியுடன் அலறியபடி எழுந்து பாய்ந்து மீண்டும் எங்கோ சென்று விழுந்தான். “நெய்! நெய்!” என எவரோ கூவினார்கள். அச்சொல் தீக்ஷணன் எண்ணத்தை வந்து தொடுவதற்கு முன்னரே உடல் உறையச் செய்தது.

விளக்குகளுக்கு ஊற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய நெய்க்குட்டுவம் காற்றில் சருகென எழுந்தது. கைகளின் அலைகளினூடாக மிதந்துசென்றது. அவன் நெய்யின் குமட்டும் வாடையை உணர்ந்தான். தீ பற்றிக்கொள்ளும் ஓசை. ஒரு பெருநாகம் இரையைக் கவ்வும் ஒலி அவ்வண்ணம்தான் இருக்கும்போலும். மிக மெல்லிய ஒலி. ஆனால் அனைவருக்கும் அது கேட்டது. கூச்சலிட்டபடி அவர்கள் சிதறி நாற்புறமும் விலகினார்கள். உடலெங்கும் அனலெரிய சார்வாகர் கற்தரையில் கைகளை விரித்தபடி சுழன்றார். அவரிடமிருந்து ஓசையேதும் எழவில்லை. ஒரு தொன்மையான தெய்வச்சடங்குபோல அவர் சுழன்று சுழன்று எரிகொண்டார்.

தீ தன் தழல்கிழிசல்களை உதறிக்கொண்டு காற்றில் எழுந்து புகை விசிறியது. சார்வாகரின் உடலில் சுற்றப்பட்டிருந்த நெய்யில் நனைந்து ஊறிய மரவுரியிலிருந்து நீலநிறமாக கனல் கிளம்பிக்கொண்டிருந்தது. அந்தணர் பலர் கண்களையும் செவிகளையும் மூடிக்கொண்டு வெறிகொண்டு கதறினர். சிலர் கால் தளர்ந்து கற்தரையில் விழுந்தனர். அவர்கள்மேல் கால்தடுக்கி பிறர் விழுந்தனர். கையூன்றி எழுந்த தீக்ஷணன் கால் தளர்ந்து பின்னால் விழுந்தபோது பிற உடல்கள் அவனை தாங்கிக்கொண்டன. அவன் புரண்டு எழுந்து நோக்கியபோது அந்தணர் சிலர் வெறிக்கூச்சலிட்டு கைவீசி நடனமிடுவதை கண்டான். சிலர் அப்பாலிருந்து மேலும் நெய்க்கலங்களைக் கொண்டு வந்து எரிந்துகொண்டிருந்த சார்வாகரின் மேல் ஊற்றினார்கள். களிவெறிகொண்ட முகங்கள். பித்தெழுந்த விழிகளும் வலிப்புகொண்டது போன்ற சிரிப்புகளுமாக அவை அந்த அனலில் அலையடித்தன.

யுயுத்ஸுவும் படைவீரர்களும் நீண்ட கழிகளை வீசியபடி அந்தத் திரளைப் பிளந்து அருகணைந்தனர். படைவீரர்கள் அந்தணர்களை விலங்குகளை என மூங்கில்கழிகளால் அறைந்து விலக்கினர். வெறிகொண்டு ஆடிக்கொண்டிருந்தவர்கள் அந்த அடிகளை வாங்கிக்கொண்டு தலையிலும் முகத்திலும் குருதி வழிய கூத்தாடினர். விழுந்தவர்கள் எழுந்து ஓடினர். அடித்து அடித்து விலக்கி வீரர்கள் சார்வாகரை அணுகியபோது அவர் கரிய கற்தரையில் உடல் உருகிப் படிந்திருக்க நீலச்சுடர்கள் வெடித்து வெடித்து எழ அசைவில்லாது எரிந்துகொண்டிருந்தார். சூழ வழிந்து பரவியிருந்த நெய் எரிந்தபடி அனலென வழிந்தது. யுயுத்ஸு ஓடிவந்து குனிந்து சார்வாகரை நோக்கினான். பின்னர் திரும்பி கைகாட்ட அவனுடைய செய்தியை ஏதோ கொம்பு ஒலிபெயர்த்தது.

வெறியாட்டமிட்ட அந்தணர்கள் ஒவ்வொருவராக இருண்ட வானிலிருந்து அவர்களை கட்டித்தூக்கியிருந்த சரடுகள் அறுந்து அறுந்து கைவிட நிலத்தில் விழுந்தனர். சிலர் கைகளை ஊன்றி வானை நோக்கி விம்மி விம்மி சிரித்தனர். சிலர் கேவி அழுதனர். சிலர் மண்ணில் முகம்படிய படுத்தனர். எஞ்சியோர் எழுந்து விலகி ஓட அரண்மனை முற்றம் நீர் விலகிய குளத்தின் அடிப்பரப்பு என தெரிந்தது. மட்கிய மரங்கள், பாறைகள் என மானுடர். கொம்போசை எழுந்தது. புரவிகளின் குளம்படிகள் அணுகி வந்தன.

தீக்ஷணன் கையூன்றி எழுந்து நின்றான். உடல் தளர இருமுறை தள்ளாடி விழுந்தான். மீண்டும் எழுந்து நின்றான். குதிரைகளின் உடல்கள் காட்சியை மறைத்தன. எங்கோ பெருமுரசம் ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் கால்களை விரித்து நின்று சார்வாகரை பார்த்தான். அவர் உடல் உருவழிந்துவிட்டிருந்தது. தசை உருகி எரிந்துகொண்டிருந்த செந்தழலுக்குள் மண்டையோடு தெரிந்து மறைந்தது. அவனுக்கு ஒருகணத்தில் குமட்டலெழுந்து வாய் நிறைந்தது. உடல் உலுக்க குனிந்து வாயுமிழ்ந்தான். மீண்டும் மீண்டும் வாயுமிழ்ந்து நிமிர்ந்தபோது அவன் விழிகளிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.

தள்ளாடும் காலடிகளுடன் அவன் நடந்தான். அவன் அகம் சிலைத்திருந்தது. மக்கள் வெவ்வேறு சிறு குழுக்களாக திரண்டுவிட்டிருந்தனர். புரவிவீரர்கள் அவர்களை மீண்டும் நிரைகளாக ஆக்கும்பொருட்டு ஆணைகளை கூவிக்கொண்டிருந்தனர். தீக்ஷணன் தன் காலடியில் ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்தான். நாகம் என கால் சொல்ல அகம் துணுக்குற்றது. குனிந்து நோக்கியபோது அது சார்வாகரின் யோகதண்டு எனத் தெரிந்தது. அவன் அதை தன் கையில் எடுத்துக்கொண்டான்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78

பகுதி எட்டு : அழியாக்கனல்-2

மீண்டும் அஸ்தினபுரியின் பெருந்தெருவை அடைந்தபோது முதலில் தீக்ஷணன் அமைதியடைந்தான். திரளுக்குள் தன்னை பொருத்திக்கொண்டான். அவன் கைகளும் கால்களும் கைகால் அலைகளில் இணைந்தன. தோள்கள் தோள்களுடன் பிணைந்தன. அவனுக்கான இடம் அங்கே ஏற்கெனவே செதுக்கப்பட்டிருந்தது. மிச்சமில்லாமல் கரைந்தழியும் உணர்வை அடைந்தான். ஆனால் சற்றுநேரத்திலேயே அவன் பிரிந்து படியலானான். அவன் அடித்தளமென அமைந்திருக்க அவனுக்குமேல் அலைகள் சுழித்துக்கொண்டிருந்தன. ஓசைகள், வண்ணங்கள், உடல்கள். அவன் மேல் உடல்கள் முட்டியபோதெல்லாம் அவன் துணுக்குற்றான். உடல் அதிர்ந்து சீறித் திரும்பினான். ஆனால் அங்கே எவரும் எதையும் காணவில்லை. எவரும் இன்னொருவர் அங்கிருப்பதை உணரவில்லை.

அவன் தன்னை பிரித்துக்கொள்ள முயன்றான். தன்னை இழுத்து இழுத்து சேர்த்துக்கொண்டான். கைகளையும் கால்களையும் ஆடையையும் இழுத்துக்கொண்ட பின்னரும் திரளில் ஏதோ எஞ்சியிருந்தது. அவன் பெருமூச்சுடன் மாளிகை ஒன்றின் சுவரோரமாக நின்றான். பின்னர் அதன் சிறு திண்ணையில் ஏறிக்கொண்டான். திரண்டு சுழித்து அலைகொண்டு நின்று புரண்டு கரைததும்பி சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவராலும் அந்தப் பெருக்கில் இருக்க இயல்கிறது. அவர்கள் அப்பொய்மையில் திளைக்க முடிகிறது. அதுவே இன்பமென்றால் மெய்யென்ற ஒன்றுக்கான தேடல் எதற்காக?

ஆனால் அவர்கள் அதில் திளைக்கவில்லை. அதைவிடப் பெரிய ஒன்றுக்கு அதை நிகர்வைக்க முயல்கிறார்கள். ஆகவேதான் துலாத்தட்டை இப்படி அழுத்திக்கொள்கிறார்கள். மிடிமையை, இழிவை, சாவை, வெறுமையை இவற்றைக்கொண்டு நிகர்செய்கிறார்கள். அவை மெய். இவையனைத்தும் பொய். பாறையை முகில்கொண்டு நிகர்செய்ய முயல்கிறார்கள். பாறையை மறைக்க முடியும். சற்றுநேரம். ஒரு காற்று எழும் வரை. பகலொளி வெளிக்கும் வரை. ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்களுக்கு இதுவாவது எஞ்சியிருக்கிறது. ஆனால் நான் அறிந்தாகவேண்டும். அந்தப் பாறையின் நிகர் எடை எது என. மாயை இன்றி, பொய் இன்றி, நேர்விழிகாளால் அறிந்தாகவேண்டும்.

அவன் நின்றிருந்த அந்தத் திண்ணையை ஒட்டியிருந்த சிறிய வாயில் திறந்தது. உள்ளிருந்து ஒருவன் எட்டிப்பார்த்து “இன்னும் திரள் சென்றுகொண்டிருக்கிறது” என எவரிடமோ சொன்னான். கதவு மூடப்பட்டது. இந்தப் பெருக்கில் இவர்கள் அறைமூடி அமர்ந்து என்ன செய்கிறார்கள்? மதுவா, வேறேதும் மூலிகைக் களிமயக்கா? எதுவானாலும் அதில் நான் ஒன்ற முடியும். என்னைப்போல் வண்டல் எனப் படிந்தவர்கள் இவர்கள். அவன் அக்கதவை மெல்ல சுண்டினான். உள்ளிருந்து தாழ் விலக்கும் ஓசை கேட்டது. முன்பு திறந்தவன் இம்முறையும் திறந்தான். “யார்?” என்றான். தீக்ஷணன் “செய்தியுடன் வந்துள்ளேன்” என்றான். “என்ன செய்தி?” என்றான் அவன். ”விழவு குறித்த செய்தி.” அவன் உள்ளே நோக்கி “எவனோ விழவு குறித்த செய்தியுடன் வந்திருப்பதாக சொல்கிறான்” என்றான். “களிமகனா? சூதாடியா?” என்றார் உள்ளிருந்தவர். “அல்ல” என்றான் திறந்தவன். “வரச்சொல்” என்றார் உள்ளிருந்தவர். கதவு திறந்து அவனை உள்ளே எடுத்துக்கொண்டது.

உள்ளே விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தரை முழுக்க சுவடிக்கட்டுக்கள் செறிந்திருந்தன. நடுவே எழுவர் அமர்ந்து சுவடிகளை அடுக்கி கட்டிக்கொண்டிருந்தனர். மூவர் முதியவர்கள், இருவர் மிக இளையோர். இருவர் நடு அகவையினர். அனைவருமே அந்தணர்கள். “யார் நீர்?” என்று முதியவர் கேட்டார். தீக்ஷணன் சூழலை உடனே புரிந்துகொண்டான். “நான் கௌசிக குலத்து சுகேசரின் மைந்தனாகிய தீக்ஷணன். அதர்வவேதத்தவன். அதை மீறும் நூல்களை கற்றவன். இங்கே சுவடிகள் ஆய்வுசெய்யப்படுவதை அறிந்தேன். இங்கு இருக்க விழைந்தேன்” என்றான். அவர் அவனை கூர்ந்து நோக்கி “இது வேதம் உசாவும் இடம் அல்ல. மெய்நூல் பேசுவதற்குரிய இடமும் அல்ல. நாங்கள் நெறிநூல்களை தேர்பவர்கள்” என்றார்.

“ஆம், நான் நெறிநூல்களில் மெய்நூல்கள் எவ்வண்ணம் செயல்படுகின்றன என்று ஆராய்பவன்” என்று தீக்ஷணன் சொன்னான். அவர் “என் பெயர் ஜங்காரி. விஸ்வாமித்ரரின் மைந்தரான ஜங்காரி முனிவரின் வழிவந்த குருமரபு என்னுடையது” என்றார். “நான் கையில் வைத்திருக்கும் இச்சுவடி ஒரு நெறிநூலைச் சார்ந்தது. இது இவ்வாறு உரைக்கிறது. இது எந்நூல் என சொல்லமுடியுமா? எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீரா?” என்றபின் இளம் மாணவனிடம் அச்சுவடியை நீட்டி “படி” என்றார்.

அவன் உரத்த குரலில் அச்சுவடியை படித்தான். “தெய்வத்தை நான் கண்டதில்லை. தெய்வத்தை ஏற்க சான்றுகளும் இல்லை. தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் முன்னை வினைப்பயனால் அல்லவா அந்த நிலையை அடைந்தனர்? செயல் விளைவை உருவாக்குமென்பதை ஐயமறக் காண்கிறோம். மானுடர் பிறந்து மாய்கிறார்கள். மறக்கப்படுகிறார்கள். அவர்களின் செயல்களோ விளைவுகளாக எஞ்சுகின்றன. விளைவுகள் செயல்களாகி மீண்டும் நீள்கின்றன. முன்னைவினை நிகழ்வினை வருவினை ஈட்டியிருக்கும் வினை என நான்குவகையான நிலைகள் இவ்வண்ணம் உருவாகின்றன. ஆகவே வேதச்சொல்லுக்கு அடுத்தபடியாக உலகியலில் துயரறுத்து மீட்புகொள்ளச் செய்யும் செயல்நிலைகளை சொல்லியிருக்கின்றனர் மூதாதையர்.”

தீக்ஷணன் “இது பராசர கீதை என்னும் தொல்நூல். இது முன்னர் மிதிலையை ஆண்ட அரசமுனிவரான ஜனகர் பராசர முனிவரிடம் கோரியபோது அவர் உரைத்தது” என்றான். ஜங்காரி புன்னகைத்து “நன்று, உம் விழிகளைக் கண்டபோதே எண்ணினேன். அமர்க!” என்றார். தீக்ஷணன் அவரை வணங்கிய பின் அமர்ந்தான். “என்ன நிகழ்கிறது இங்கே? இச்சுவடிகள் எவை?” என்றான். அவர் “நான் தென்புலத்தின் விஜயபுரியிலிருந்து வருகிறேன். ஷத்ரியகுடியில் பிறந்தவன்” என்றார். “இங்கே பாரதவர்ஷத்தின் மாபெரும் ராஜசூய வேள்வி நிகழவிருக்கிறது. அதில் நூறு நாட்கள் நூறு நெறியவைகள் கூடவிருக்கின்றன. அவற்றில் பாரதவர்ஷத்தின் முதன்மை நெறிநூல்கள் அனைத்தும் அரங்கேற்றப்பட்டு அறிஞர்களால் முழுதுற உசாவப்பட்டு ஏற்புடையவை அஸ்தினபுரியின் அரசரின் ஒப்புதலுக்கு அளிக்கப்படும். மும்முடி சூடிய பேரரசரின் கோலால் நிலைநிறுத்தப்படும் நூல்களே இனி பாரதவர்ஷத்தை ஆட்சி செய்யும்” என்றார்.

அவன் “இவையனைத்தும் நெறிநூல்களா?” என்றான். “ஆம், இவற்றில் தொல்நூல்கள் முதல் அண்மையில் புலவர்கள் யாத்தவை வரை உள்ளன. நாங்கள் நூறுநெறிநூல்களை அவை முன் வைக்கிறோம். இவ்வண்ணம் நூற்றுக்கணக்கான அறிஞர் குழுக்கள் தங்கள் நெறிநூல்களை முன்வைப்பார்கள். நூல்வேறுபாடும் சொல்மாறுபாடும் கலைந்து தூயநூல் அறுதி செய்யப்படும். அந்நெறிகளின் நேற்றைய நிலையும் இன்றைய நடப்பும் நாளைய விளைவும் முழுதுற ஆய்வுசெய்யப்படும். அதன்பின் அரசருக்கு அவை தன் ஏற்பையும் அதன் அடிப்படைகளையும் அளிக்கும். மறுக்கப்படும் நூல்களுக்கு மேல் நிகழ்ந்த சொல்லாடல்கள் தொகுத்து அளிக்கப்படும்” என்றார் ஜங்காரி. “இச்சடங்கு ராஜசூயத்தை ஒட்டி வழக்கமாக நிகழ்வதுதான். இதை சாந்தி தர்ப்பணம் என்பார்கள். இந்நூல்களை சாந்திகிரந்தங்கள் என்று அடையாளப்படுத்துவார்கள்.”

“இதுவரை பாரதவர்ஷத்தில் இருபத்தெட்டு அமைதிக்கொடை நிகழ்வுகள் நடந்துள்ளன. இருபத்தெட்டு அமைதிநூல் தொகைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வேள்வியே இதுவரை நிகழ்ந்தவற்றில் தலையாயது, இன்னும் பல தலைமுறைக்காலம் பாரதவர்ஷத்தை ஆளவிருப்பது. ஆகவே இந்த அமைதிநூல்தொகையில் ஒரு சிறந்த நூல்கூட தவறவிடப்படக் கூடாது என முடிவுசெய்திருக்கிறோம்” என்று இன்னொரு புலவர் சொன்னார். “யாக்ஞவல்கிய மரபைச் சேர்ந்தவனாகிய நந்திசேனன் நான். எங்கள் குருநிலையின் ஏழு நூல்கள் இங்குள்ளன. நீங்கள் வருகையில் நாங்கள் எங்கள் முதலாசிரியர் ஊழிவெள்ளத்தைப் பற்றி கூறிய செய்திகளை ஏடுகளுடன் ஒப்பிட்டுக்கொண்டிருந்தோம்.”

ஜங்காரி “இங்கே நாரதர், யாக்ஞவல்கியர், வசிட்டர், பராசரர், கபிலர் என முதன்மையான முனிவர்களின் சொற்களெல்லாம் உள்ளன. ஏடுகளை ஒப்பிட்டு முடித்துக்கொண்டிருக்கிறோம். செய்யச்செய்யப் பெருகும் பணி இது. நூலறிந்தோர் எவர் வந்தாலும் பணிக்கு போதியவர்கள் இல்லை என்பதே நிலை” என்றார். “அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு நிலைகளும் இங்கே முற்றாக வகுக்கப்பட்டுவிடும். அவை குறித்த உசாவல்கள் என்றுமிருக்கும். ஆனால் இங்கு இவ்வண்ணம் தொகுக்கப்பட்டவற்றுக்கு மேலெழுந்தே எவரும் சொல்லெடுக்க முடியும்.”

தீக்ஷணன் ஒரு சுவடியை எடுத்து புரட்டினான். இந்திரனுக்கும் மாந்தாதாவுக்கும் அரசநெறி பற்றி அமைந்த உரையாடல் அது. அவன் அந்நூலை முன்னரே பயின்றிருந்தான். அதை கீழே வைத்துவிட்டு பிறிதொரு சுவடியை எடுத்தான். க்ஷேமதர்சி என்னும் முனிவருக்கும் காலகவ்ருக்ஷீயருக்குமான உரையாடல். உலக நிலையாமை, யாக்கை நிலையாமை, அறம் நிலையாமை, அறிதல் நிலையாமை என்னும் நால்வகை நிலையாமைகளை பற்றியது. அவன் அச்சுவடியை மீண்டும் அடுக்கிவிட்டு “நான் அறியாத நூல். கேள்விப்பட்டதே இல்லை” என்றான்.

“அத்தகைய பல நூல்கள் இங்குள்ளன. பல நெறிநூல்கள் சிற்றூர் முதியவர்கள் சொல்லும் கதைகளின் வடிவில் உள்ளன. இதோ இந்நூல் பௌரிகன் என்பவன் நரியாக மாறிய கதையை சொல்கிறது. நரிகளுக்கும் புலிகளுக்குமான உரையாடல்… நாம் எண்ணிப் பார்க்கவே முடியாத நூல்களெல்லாம் உள்ளன. இன்னும் விந்தையானவை இங்கு நிகழவிருக்கும் அவைகளில் எழுந்து ஒலிக்கக்கூடும். பாரதவர்ஷத்தின் அத்தனை மூலைகளில் இருந்தும் அறநூல்கள் இங்கே வந்தாகவேண்டும் என்று மாமன்னர் யுதிஷ்டிரன் ஆணையிட்டிருக்கிறார். அசுரர் அரக்கர் நிஷாதர் கிராதர் என எவருமே விடுபட்டுவிடக்கூடாது. யவனரின் நெறிகளும் பீதரின் நெறிகளும் சோனகர் காப்பிரிகளின் நெறிகளும் கூட உசாவப்படுகின்றன. நெறிநூல் என்பது காட்டில் மழைபெய்ய தாழ்ந்த நிலத்தில் சுனை உருவாவதுபோல மக்களிடமிருந்து இயல்பாக உருவாகி வரவேண்டும் என்றார்.”

தீக்ஷணன் “இதில் சார்வாக மரபின் நெறிநூல்கள் உள்ளனவா?” என்றான். “அவர்கள் நெறிவகுக்கலாகாது என்பவர்கள். ஆனால் அவர்களின் பொருள்நோக்கு அணுகுமுறையின் முதன்மை ஆசிரியரான பிரஹஸ்பதி முனிவரின் நூல்கள் ஆறு இங்குள்ளன. இதோ இது இந்திரனுக்கும் பிரஹஸ்பதிக்குமான உரையாடல்.” தீக்ஷணன் அந்நூலின் சில வரிகளை படித்தான். “நான்கு விழுப்பொருட்களுக்கும் அடிப்படை ஒன்றே, அவை ஒன்று பிறிதுக்கு பயன்படவேண்டும். பொருளுக்கும் இன்பத்திற்கும் உதவாத அறமும், இன்பத்துக்கும் அறத்துக்கும் உதவாத பொருளும் அவை மூன்றுக்கும் உதவாத வீடுபேறும் பயனற்றவையே.” அவன் “எதன் அடிப்படையில் இவற்றில் சில தெரிவுசெய்யப்படுகின்றன” என்றான்.

“நெறிநூல்களெல்லாம் ஸ்மிருதிகள், அவை சுருதிகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படவேண்டும் என்பது தொல்நெறி” என்று ஜங்காரி சொன்னார். “இங்கே நெறிநூல்கள் அனைத்திற்கும் மையமென அமைந்திருக்கப்போவது பெறுநூலான யாதவகீதை. அதுவே இச்சகடத்தின் அச்சு. அதைக்கொண்டே இவையனைத்தையும் தொகுக்கவிருக்கிறோம். இந்த அமைதி நூல்கள் அதன்மேல் சென்று அமையும். அங்கே குருக்ஷேத்ரத்தில் பீஷ்ம பிதாமகரால் தெரிவுசெய்யப்பட்டு நிலைக்கோள் பெற்ற நிறுவுநூல்களும் யாதவரால் ஒப்பப்பட்டவை. அவையும் அதன்மேல் நின்றிருக்கும். சங்கும் ஆழியும் ஏந்திய விண்முதல்வன் என புதிய வேதம் இந்நெறிநூல்களால் பொலிவுபெறும். அதுவே ஐந்தாம் வேதம் என்றும் நாராயணவேதம் என்றும் வரும் யுகத்தில் வழுத்தப்படும்.”

“பிதாமகர் பீஷ்மரின் நெறிநூல்களுக்கு இனி இங்கே என்ன பொருள்?” என்றான் தீக்ஷணன். ஜங்காரி “ஏன்?” என்றார். “பீஷ்மரை இங்குளோர் இன்று வெறுக்கிறார்கள்” என்று தீக்ஷணன் சொன்னான். “அவர் சூதர்பாடல்களில் இன்று எதிர்மானுடராகவே காட்டப்படுகிறார்.” ஜங்காரி “ஆம், நானும் பல பாடல்களில் அவ்வாறே அவரை பாடக்கேட்டேன்” என்றார். “இது எழும் யுகத்தின் பெருங்களியாட்டக் காலம். இன்று எல்லா பறவைகளும் எல்லா பூச்சிகளும் ஒற்றைச் சிறகில் பறக்க முயல்கின்றன. ஆகவே எல்லா பறத்தலும் சுழல்களும் கூத்தாட்டமும் என்றே உள்ளன. நிலைமீண்டு புடவிநெறியின் இயல்பறிந்து அமைகையில் பீஷ்மரை மீண்டும் கண்டடைவார்கள்” என்றார்.

“அவர் பெண்பழி சூடியவர் என்பதை மறுக்க முடியுமா? இன்றும் அங்கே கங்கைக் கரையில் அம்பையன்னையின் சிலை குருதிப்பலி கொண்டு அமர்ந்திருக்கிறது. அரசியின் விழிநீர் விழுந்த அவை இங்கே காத்திருக்கிறது” என்றான் தீக்ஷணன். ஜங்காரி “ஆம், பெண்பழி கொண்டவர்தான் அவர். அதன்பொருட்டே அங்கே களத்தில் தன் குலம் முழுதழிவதை கண்டார். அவர் படுகளத்தில் கிடந்து அனைத்தையும் மீண்டுமொருமுறை எண்ணி தொகுத்துக்கொள்ள வகுத்தன தெய்வங்கள்” என்றார். “அவர் அங்கே களத்தில் குருதியாலும் விழிநீராலும் சொல்லாலும் எண்ணத்தாலும் அமைதியாலும் தன்னை மீட்டுக்கொண்டார். விண்புகுந்தார். எட்டு வசுக்களில் எட்டாவது வசு என சென்று அமைந்தார்.”

“ஒவ்வா செயலொன்றைச் செய்தவர் இயற்றிய நெறிநூலுக்கு என்னதான் மதிப்பு இருக்கமுடியும்?” என்று தீக்ஷணன் கேட்டான். ஜங்காரி “ஆனால் அவர் பிறிதென்ன செய்திருக்க முடியும்? இளையவரே, அவர் வாழ்ந்தது துவாபர யுகத்தில். அவரிடமிருந்தவை கிருதயுகத்தில் விளைந்து திரேதாயுகத்தில் கனிந்த விழுப்பொருட்கள். விழுப்பொருட்கள் மானுடரிடம் இல்லை, மானுடர் விழுப்பொருட்களின் ஊர்திகள் மட்டுமே” என்றார். அவரிடம் தணிந்த குரலில் ஏற்ற இறக்கம் இல்லாமல் பேசும் வழக்கம் இருந்தது. அது அவருடைய சொற்களுக்கு ஆழ்ந்த உறுதிப்பாட்டை அளித்தது. அவனை கூர்ந்து நோக்கி அவர் சொன்னது, அவனுக்கு அப்பாலிருக்கும் எவரிடமோ என ஒலித்தது.

“கிருதயுகத்திற்கு முன்பிருந்தது தமோயுகம். அன்று வானில் ஒளியிருந்தது, மண்ணில் அது பரவவும் செய்தது, சொல்லில் ஒளி எழுந்திருக்கவில்லை. எங்கும் வழிகாட்டுவதாக மானுடச் சொல் உருப்பெறவில்லை. அன்று நிலம் சேறுபோல் நெகிழ்வுகொண்டிருந்தது. மரங்கள் அதில் வேர்மிதக்கும் பாசிகள் என ஒழுகின, மலைகள் அதில் மிதந்தலைந்தன என்கின்றன தொல்நூல்கள். எதற்கும் எந்த உறுதிப்பாடும் இல்லாமலிருந்தது. சொல்லுக்கு உறுதியளிப்பது எது? சொல்லுக்குப் பொருளாவது எதுவோ அது. அவை இயற்கையும், தெய்வங்களும் மட்டுமே. வான் எட்டாத் தொலைவிலிருந்தது. மண் நெகிழ்ந்திருந்தது. தெய்வங்கள் அறியமுடியாமையில் அமைந்திருந்தன. எஞ்சியது ஒன்றே, குருதி. இந்த விதையிலெழுந்தது இந்த மரம், இவள் கருவிலெழுந்தது இந்த மகவு, இவனுக்கு இவன் தந்தை என்னும் மாற்றமுடியாத மெய்மை. அது அனைத்தையும் இணைக்கும் ஒன்று, எந்நிலையிலும் மாறாமல் அமையும் ஒன்று. ஆகவே அதை தலைக்கொண்டனர் முன்னோர்.”

“சொல்லுக்குப் பொருள் அளிக்கும் முதல் பருவடிவ உண்மை குருதியே” என ஜங்காரி சொன்னார். “குருதி தொட்டு நெறிகூட்டுக என்றன தொல்நூல்கள். அத்தனை சொற்களும் அத்தனை நெறிகளும் குருதியால் சான்றுரைக்கப்படவேண்டும், குருதியால் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்றன. குருதி அளித்து தெய்வங்களை விண்ணிலிருந்து இறக்கி இங்கே நிலைநிறுத்தினர். தெய்வங்கள் தங்கள் பீடமென நிலத்தை உறுதியாக்கின. தொல்நெறிகள் அனைத்துக்கும் அடிப்படையானது குருதியே. ஒவ்வொரு மானுடனின் வாழ்வும் சாவும் அவன் குருதியால் முற்றாக வகுக்கப்பட்டது. ஒவ்வொருவரின் அடையாளமும் குருதியால் பொறிக்கப்பட்டது. நன்றும் தீதும் குருதியால் முடிவுசெய்யப்பட்டது. பீஷ்மர் அறிந்தது அதைத்தான், மலைக்கங்கர்களிடமிருந்து அவர் கொண்டு வந்தது அதையே. அம்பையின் முன் அவர் அக்குருதியின் சொல்லுடன் நின்றார். அவையில் அக்குருதியின் அமைதியுடன் அமர்ந்திருந்தார்.”

ஜங்காரி தொடர்ந்து சொன்னார். “துரியோதனனையும் யுதிஷ்டிரனையும் பிதாமகர் நன்கறிவார். குடிகளின் உள்ளத்தை மேலும் அறிவார். தூதுவந்து அவை நின்றவன் எவன் என மிகமிக நன்றாகவே அறிவார். எனினும் குருதியால் நிலைகொண்ட நெஞ்சும் குருதியின் பாதையில் ஒழுகும் அறமும் கொண்ட அவர் வேறு என்ன செய்திருக்கமுடியும்? கூறுக! தொல்குருதிநெறியை அறிந்த எவரும் அவர் எண்ணியதையே தானும் எண்ணக்கூடும். குருதியால் முடிக்குரியவர் துரியோதனன் மட்டுமே. அவருக்கு துணைநின்று, அந்த முடி நிலைக்க போரிடுவதே அவர் செய்வது.”

தீக்ஷணன் சீற்றத்துடன் “அவையில் பெண்சிறுமை செய்யப்படுவதை நோக்கி அமர்ந்திருப்பதும் கூடவா?” என்றான். “ஆம்” என்றார் ஜங்காரி. “நாம் கொண்டிருக்கும் நெறிநூல்களில் தொன்மையான அனைத்துமே நிலமும் பெண்ணும் வல்லமையால் கொள்ளப்படவேண்டியவை என்றே சொல்கின்றன. வெல்லப்படவேண்டியவை, வெல்பவனுக்குப் பரிசென ஆகவேண்டியவை. ஆகவே எதிரியின் கையில் சிறப்பு கொள்ளப்படக்கூடாதவை. நம் தொல்மூதாதையர் நிகழ்த்திய அத்தனை போர்களிலும் எரிபரந்தெடுத்தல் நடைபெற்றிருக்கிறது. நகரங்களும் காடுகளும் எரியூட்டப்பட்டிருக்கின்றன. ஊருணிகள் யானைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஊற்றுகள் நஞ்சூட்டப்பட்டிருக்கின்றன. ஏரிகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அறிக, தொல்வேதம் வணங்கிய தலைவனாகிய இந்திரன் நகரங்களை எரிப்பவன், ஏரிகளை உடைப்பவன் என்றே போற்றப்பட்டிருக்கிறான்.”

தீக்ஷணன் பெருமூச்சுவிட்டான். ஜங்காரி புன்னகைத்து “தெய்வத்தின் முழுதுருவை நோக்குவதை ஒப்பவே கடினமானது அறத்தின் முழுதுருவை காண்பது. அதுவும் முடிவில்லா தோற்றப்பெருக்கு கொண்டது, எண்ணற்ற செயல்வடிவு கொண்டது” என்றார். “தொல்நூல்களை கற்றிருந்தால் அறிந்திருப்பீர். இங்கிருந்தவை பெண்கோன்மைகள். அன்னையர் ஆட்சியை வென்று அடைந்தவையே அனைத்தும். ஆகவே பெண்ணை சிறைப்பிடித்தல் அன்றைய அறம். வெல்லமுடியாத பெண்ணை சிறுமைசெய்தலும் இங்கு இயல்பென்றே நடந்தன. இளையவரே, இங்குள்ள நகரங்கள், படைகள், அரண்மனைகள், அரசவைகள், கொடைகள், நெறிகள், அறங்கள் அனைத்தும் பெண்ணை வென்று அடையப்பெற்றவையே. பெண்சிறுமை நிகழாத ஒரு தொல்நூலேனும் நீர் கற்றவற்றில் உண்டா?”

தீக்ஷணன் சொல்மலைத்து அமர்ந்திருந்தான். “பீஷ்மரின் நெறிகளின்படி மணிமுடி சூடி அமர்ந்தமையாலேயே அரசி திரௌபதி படைகொண்டு சென்று வெல்லத்தக்கவர். வென்றெடுத்த அரசர்களை அவைச்சிறுமை செய்து மாண்பழித்து அரசரென அல்லாமல் ஆக்குதல் தொல்வழக்கம். ஆகவே தொல்நெறியை மீறி எதையும் துரியோதனனும் துச்சாதனனும் செய்துவிடவில்லை. துரோணரும் கிருபரும் மற்றும் அவையமர்ந்த மூத்தோரும் அவ்வண்ணமே எண்ணினார்கள்” என்றார் ஜங்காரி. “பீஷ்மர் நின்ற தொல்நெறிகளின் தளத்தில் முனிவர் முனிவரால், அந்தணர் அந்தணரால், அரசர்கள் அரசர்களால் வெல்லப்படத்தக்கவர்கள். அரசர்களுக்கு உரியவர்களே குடிகளனைத்தும். குடிகளுக்கென உரிமைகளும் உணர்வுகளும் ஏதுமில்லை. ஒவ்வொரு குடிக்கும் உளமுண்டு, தன்னிலை உண்டு, விழைவுகளும் உண்டு என்பது இன்று எழுந்த ஐந்தாம் வேத நெறி.”

“ஒவ்வொரு உயிரும் ஆத்மாவே என்பதும் ஆத்மாவனைத்தும் பிரம்மவடிவமே என்பதும் தன்னை தான் அறிந்து தன்முழுமையில் தானமைய ஒவ்வொரு உயிர்த்துளிக்கும் முற்றுரிமை உண்டு என்பதும் நாராயணவேதத்தின் மெய்ச்சொல்.” அவர் பேசி நிறுத்தியதும் அறைக்குள் அமைதி நிலவியது. அங்கிருந்த சுவடிகளை நோக்கியபடி தீக்ஷணன் அமர்ந்திருந்தான். பொருளில்லாது ஏடுகளை அடுக்கி கலைத்தான். ஜங்காரி சொன்னார் “தொல்நெறிகள் மூன்று யுகங்களாக நாளுமெனப் பெருகி குவிந்திருக்கின்றன. அவற்றிலிருந்து எழும் யுகத்திற்கு உகந்தவற்றை பிதாமகர் பீஷ்மர் தெரிந்து தொகுத்து தன் சொல்லுறுதியை அளித்து நிறுவியிருக்கிறார்.”

“நாராயணவேதத்தின் அறுதியை அவர் படுகளத்தில் உணர்ந்தார். ஆகவே அவர் சொற்கள் மூதாதையரின் ஆணைகளென்றாகின்றன. கிருதயுகத்தில் இருந்து எழுந்து வந்து நாராயணவேதத்தை தொடுபவை அவை. இங்கே எழும் அறத்தின் சொற்கள் என தொடங்கி வரும் காலங்களின் முடிவிலிநோக்கி செல்பவை இங்கே நாங்கள் தொகுக்கும் அமைதிநிறைவின் சொற்கள். யாதவர் நாவிலெழுந்து இனியென்றும் புவிக்கு ஒளிகாட்டும் மூன்றாம் சுடரெனத் திகழப்போகும் தெய்வப்பாடலின் இரு வடிவங்கள் இவை என்று கொள்க!”

இன்னொரு புலவர் “சாந்தியும் அனுசாசனமும் இரு சிறகுகள் என்று ஆகுக! கூட்டுத்தவம் முடித்து எழுக நாராயணவேதம்” என்று வாழ்த்துச் சொல்வரியை சொன்னார். தீக்ஷணன் பெருமூச்சுவிட்டான். “இந்த வேள்வியில் எழும் தொழுகைச்சொல் இது. இனி இச்சொல்லே இங்கு இந்த யுகமெங்கும் திகழும், ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார் ஜங்காரி. அங்கிருந்தோர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர். தீக்ஷணன் எழுந்துகொண்டான். “நீர் கற்பதற்குரிய அனைத்தும் இங்குள்ளன” என்றார் ஜங்காரி. “ஏன் எழுகிறீர்? எங்கு செல்கிறீர்?” தீக்ஷணன் மறுமொழி சொல்லவில்லை. இளையவர் “அவர் நால்வேத வைதிகர் போலும்” என்றார். “அல்ல, நான் வேதமின்மையை நோக்கி செல்ல விழைபவன். இவ்வேதங்கள் அனைத்தும் கோட்டையும் அரண்மனையும் என மாறுவன. வாளும் வில்லும் வேலும் என்றாவன. பொன்னும் மணியும் என்று உருக்கொள்வன. வியர்வையும் கண்ணீரும் குருதியும் உண்டு நிலைகொள்வன. இல்லை என நீங்கள் எவரேனும் சொல்லலாகுமா?” என்றான்.

ஜங்காரி “அவ்வாறே” என்றார். “எச்சொல்லும் அவ்வாறே இங்கு நிலைகொள்ள முடியும். சொல் தன்னை பொருளென்று ஆக்கிக்கொள்ளாது செயலென நிகழமுடியாது. செயலே புவியை ஆள்கிறது. அறமிலா எதிரிக்கு எதிராக படைக்கலம் என எழாது, குருதி குடித்து தருக்காது நிற்குமென்றால் அச்சொல் பதர் என்றே பொருள்படும். இச்சொல்லும் அவ்வாறே நிலைகொள்ளும்” என்றார். “என்றேனும் இச்சொல் எடைமிகுந்து மானுடரால் தாளமுடியாதபடி ஆகுமென்றால் அன்றும் இன்று இவ்வண்ணம் இவரிலெழுந்த ஒன்று மண்கீறி எழும். விண்தொட எழுந்து நிற்கும். அதையும் சொல்கிறது இந்த மெய்வேதம். நன்று காக்க, தீது ஒழிக்க, அறத்தை நிலைநிறுத்த யுகங்கள் தோறும் எழுகிறேன் என்று.”

தீக்ஷணன் தலையை அசைத்தான். “மீளமீள ஒன்றே நிகழ்கிறது. மானுடமென்னும் இச்சிற்றுயிரை எத்தனை முறை தூக்கி எங்கே போட்டாலும் அது தானறிந்த ஒன்றையே வரைகிறது. நேற்று வேதம் ஏன் வன்மைகொண்டது, வழிமறந்தது? அது நிகழ்ந்தமைக்கான ஏதுக்கள் கண்டடையப்படாதபோது இன்று ஒரு வேதம் மானுடத்திற்கு அளிக்கப்படுவதனால் என்ன பயன்?” ஜங்காரி “இத்தகைய வினாக்களால் பயனில்லை. அன்றைய சிறுவயலுக்கு முள்வேலி போதுமென்றிருந்தது. இன்றிருப்பது யானைகளை புறம்நிறுத்தும் பெருங்கோட்டை தேவையென்றாகும் பெருவேளாண்மை” என்றார்.

தீக்ஷணன் குனிந்து அவர் விழிகளை நோக்கி “உத்தமரே, உங்கள் அகம் நோக்கி வினவுகிறேன். குருதிகோராத வேதம் என்று ஒன்று உண்டா?” என்றான். அவர் “எவர் குருதி என்பதே வினா. பலிக்குருதியும் பகைக்குருதியும் படாமல் படைக்கலங்கள் செயல்பட முடியாது” என்றார். “வெறும் சொற்கள்” என்றான் தீக்ஷணன். “நான் கிளம்புகிறேன்” என அவன் கதவை நோக்கி சென்றான். “நீர் சார்வாகரா?” என்று இளைஞன் ஒருவன் கேட்டான். அவனை நோக்காமல் “இல்லை, என்னால் அவர்களையும் ஏற்க முடியவில்லை” என்றான் தீக்ஷணன். “நீர் ஏற்பது எதை?” என்று ஜங்காரி கேட்டார். “அறியேன். நான் மறுப்பதென்ன என்று மட்டும் அறிந்துகொண்டிருக்கிறேன், ஒவ்வொன்றையும் மறுத்து மறுத்தே அதை அறிகிறேன். ஏற்பது என ஒன்றைக் கண்டால் அங்கே நின்றுவிடுவேன்.” இளம் புலவன் ஏதோ சொல்ல முயல ஜங்காரி அவனை கைநீட்டித் தடுத்து “உம்மிடம் சொல்லாடுவதில் பொருளில்லை. நீரே கண்டடைக… நலம் சூழ்க!” என்றார். தீக்ஷணன் தலைவணங்கி வெளியே சென்றான்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77

பகுதி எட்டு : அழியாக்கனல்-1

தீக்ஷணன் வீட்டுக்கு வந்தபோது இரவு பிந்திவிட்டிருந்தது. அவன் அன்னை வாயிற்படியிலேயே அமர்ந்திருந்தாள். அவன் அவளை தொலைவிலேயே பார்த்தான். மையச்சாலை ஒளியில் மூழ்கி சிவந்த நதி என அலைகொண்டிருந்தபோதிலும் அவன் வாழ்ந்த தெரு அரையிருளில் இருந்தது. மையச்சாலையின் ஒளி கசிந்து அதன் இரு முனைகளிலும் பரவியிருந்தது. அவனுடைய வீடு முற்றிருளில் ஒற்றை பிறைவிளக்குச் சுடர் விழியென திகழ்ந்திருக்க கதவுகள் வாய்திறந்து அமைந்திருந்தது. அத்தெருவில் அவ்வேளையில் மானுடர் எவருமே இருக்கவில்லை. முற்றாக கைவிடப்பட்டதுபோல் அது கிடந்தது.

சாலையின் மையத்தில் இருந்த கற்தூண்மேல் பீதர்நாட்டு பளிங்கு விளக்கு புன்னைக்காய் எண்ணையில் எரிந்துகொண்டிருந்தது. பின்னிரவில் அதன் பளிங்குச் சுவர்கள் கருமைகொண்டு ஒளி மங்கியிருந்தன. தூணுக்குக் கீழே சிந்திய செந்நீர் என வெளிச்சம். சாலையின் முழக்கத்தையும் பரபரப்பையும் கண்டு அஞ்சிய தெருநாய்கள் அங்கே அடைக்கலம் புகுந்திருந்தன. அவை அந்த ஒளிவட்டத்திற்கு அப்பால் இருளில் வெவ்வேறு மூலைகளில் உடல்களை சுருட்டிக்கொண்டு படுத்திருந்தன. காவல்பொறுப்பிலிருந்த நாய்கள் மட்டும் ஒளிப்பரப்பை நோக்கியபடி முன்கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டு விழிகள் இருளில் கங்குகள்போல் மின்ன அமர்ந்திருந்தன. அவற்றின் கண்களுக்கு நடுவே அந்த ஒளிப்பரப்பு ஒழிந்த கூத்துமேடை எனத் தெரிந்தது.

பிறைவிளக்கு அன்னையின் தலைக்குப் பின்னால் இருந்தது. அவளுடைய கூந்தலிழைகள் செந்நிறமாக சுடர்விட்டன. அவள் நிழலுருவெனத் தெரிந்தாள். தீக்ஷணன் இல்லத்தை அணுகுந்தோறும் நடைதளர்ந்தான். அன்னையின் தோற்றம் அவனுக்கு கசப்பூட்டியது. அவன் இல்லம் திரும்பியது அன்னைக்காகத்தான். நகரில் அலைந்துகொண்டிருந்தபோது அன்னை காத்திருப்பாள் என்ற எண்ணம் குளிர்ந்த ஊடுருவலென அவன் வயிற்றில் புகுந்தது. அதை தவிர்க்க முயன்று தெருக்களின் கொண்டாட்டங்களில் திளைக்க முற்பட்டபோதிலும் அது அவனுள் உறுதியாக வளர்ந்தது. ஒரு கட்டத்தில் அதன் எடையை தாளமுடியாமல் ஆகியது. ஆகவே அவன் திரும்பிவந்தான். ஆனால் அன்னையின் காத்திருப்பைக் கண்டதுமே அவளை வசைபாடி சிறுமைசெய்யவேண்டும் என்ற வெறி எழுந்தது. சினத்தில் அவன் உடல் நடுங்கியது. படிகளில் ஏறும்போது அவன் காலடியோசையில் அது எதிரொலித்தது.

தீக்ஷணன் அவளிடம் ஒரு சொல்கூட பேசாமல் திண்ணையில் ஏறி உள்ளே சென்றான். அன்னை எழுந்து உள்ளே வந்தாள். அவள் உடலின் எலும்புகளின் ஓசை கேட்டது. அவன் தன் சிற்றறைக்குள் சென்று மஞ்சத்தில் அமர்ந்துகொண்டான். அன்னை அவனருகே வந்து நின்றாள். அவன் நிமிர்ந்து நோக்காமல் அமர்ந்திருந்தான். அன்னை தாழ்ந்த குரலில் “அன்னம் கொண்டுவருகிறேன்” என்றாள். “வேண்டாம்” என்று அவன் சொன்னான். “நான் உண்டுவிட்டே.ன்.” அன்னை சிலகணங்கள் பொறுத்து “நான் அறிவேன், நீ உண்ணவில்லை” என்றாள். அவன் சீற்றத்துடன் எழுந்து “நான் உண்ணவில்லை என நீ அறிந்தாயா? நான் சொல்வது பொய்யா? நிறுவவேண்டுமா நான்? என் நெஞ்சைப் பிளந்து பார்க்கவேண்டுமா உனக்கு?” என்று கூவினான். அன்னை தலைகுனிந்து நின்றாள். அவளுக்குப் பின்னால் விளக்கின் ஒளியிருந்தமையால் முகம் தெரியவில்லை. ஆனால் விழிநீர் உதிர்வது தெரிந்தது.

அவன் அவளுடைய மெல்லிய விசும்பலோசையை கேட்டான். “ம்” என்றான். பின்னர் மீண்டும் “ம்” என்றான். அன்னை “ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு? இந்த நகரே கொண்டாடிக்கொண்டிருக்கிறது” என்றாள். “நானும் கிளம்புகிறேன். நானும் கொண்டாடிவிட்டு வருகிறேன்…” என்று அவன் பற்களைக் கடித்தபடி சொன்னான். “மூக்குவார கள்ளருந்துகிறேன். பரத்தையரிடம் ஆடிவிட்டு மீள்கிறேன். நிறைவா உனக்கு?” அன்னை ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். விழவொழிந்த ஆலயம் என்னும் சொல் நெஞ்சில் எழுந்தது. எந்த நூலில் வரும் ஒப்புமை? அவன் உள்ளம் தணிந்தது. “செல்க, பால்கஞ்சி மட்டும் கொண்டுவருக!” என்றான். அன்னை பெருமூச்சுடன் திரும்பிச் சென்றாள்.

அவன் கண்களை மூடிக்கொண்டான். நகரின் கொந்தளிப்பான அசைவுகளும் ஒளிப்பெருக்கும் கண்களுக்குள் எஞ்சியிருந்தன. அவன் பெருமூச்சுவிட்டு கண்களைத் திறந்து எதிர்ச்சுவரை பார்த்துக்கொண்டிருந்தான். சுவரிலிருந்த காரை பெயர்ந்த வடுக்கள் ரிஷிகளின் முகங்களாயின. அவன் அவற்றை விழிதொட்டு விழிதொட்டு சந்தித்தான். உரு அடைந்தன, விழி கொண்டன, நோக்கு தெளிந்தன, சொல்கொண்டன. அவன் அவற்றையே நோக்கிக்கொண்டிருக்க அன்னை கஞ்சிக்குடுவையுடன் வந்து நின்றாள். அவள் காலடியோசை கேட்டு அவன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். அக்கலயத்தை வாங்கி ஒரே மூச்சில் அருந்தினான். “சுடும்… வெம்மை மிக்க கஞ்சி” என அன்னை பதறுவதற்குள் குடுவையை திரும்ப அளித்துவிட்டான். அன்னை அவனை திகைப்புடன் பார்த்தாள்.

அவன் எழுந்து சென்று குறுந்திண்ணையில் இருந்த சிறுகலத்து நீரில் வாய் கழுவி வந்தான். மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தான். “படுத்துக்கொள்… துயில்க!” என்று அன்னை சொன்னாள். அவன் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். மிக அருகே வந்து கூர்கொண்டது ரிஷிமுகம். கணாதரின் முதிய விழிகள் அவனை நோக்கின. “அறிவது எதை, மெய்மை என ஒன்றுண்டு என்றால் அதற்கு ஏன் இத்தனை விளக்கங்கள்?” அவன் “புரியவைக்க” என்றான். “அல்ல, பிழைப்புரிதல்களை களைய” என்றார். “ஒவ்வொரு மெய்மையையும் அடைந்த அக்கணமே மானுடர் மறுக்கத்தொடங்குகிறார்கள். அவர்களின் அன்றாடத்திற்கு ஏற்ப திரிக்கிறார்கள். அந்த மறுப்புக்கும் திரிப்புக்கும் எதிராகத்தான் இத்தனை விளக்கங்கள் தேவைப்படுகின்றன.” அவன் “ஆம்” என்றான். “ஏன் அவற்றை மறுக்கிறார்கள்?” என்று அவர் மீண்டும் கேட்டார். அவன் அவர் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான்.

“ஏனென்றால் அம்மெய்மைகள் முழுமையானவை அல்ல. அவை ஒருபக்கம் உண்மை என்றிருக்கையில் மறுபக்கம் பொய்யென்றும் போதா என்றும் தோற்றம் கொள்கின்றன.” அவன் “ஆம்” என்றான். “ஏன்? ஏன் மெய்மைகள் அவ்வண்ணம் இருக்கின்றன?” அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் உரக்க நகைத்து “அவை அடையப்படும்போதே அவ்வண்ணம்தான் வந்தணைந்தன… மூடா, நீரிலல்ல நதியிலல்ல அழுக்கு, அள்ளிய கைகளில்தான்” என்றார். அவன் பெருமூச்சுவிட்டான். “கைகள் கறைபட்டவை. தன்னுணர்வால், விழைவால், அச்சத்தால் கட்டுண்ட உள்ளத்தில் வந்தமைகையில் மெய்மை தன்னை சிதைத்துக்கொள்கிறது. வளைக்குள் சென்று சுருண்டமையும் நாகம் பத்திவிரிக்க இயலாது.”

அவன் அவர் சொல்வதையே நோக்கிக்கொண்டிருந்தான். “அச்சத்திலிருந்து, விழைவிலிருந்து, தன்னுணர்விலிருந்து விடுதலை கொள்பவனுக்கு மட்டுமே மெய்மையை அள்ளும் அகக்கலம் அமைகிறது. அஞ்சியவனுக்கு அளிக்கப்படும் மெய்மை படைக்கலமும் கோட்டையும் என்றாகும். விழைவுகொண்டவனுக்கு அது கருவூலமென்றாகும். தன்னுணர்வு கொண்டவனிடம் சொற்குவை என்றாகும். தன்னந்தனி நிற்பது, தானொன்றறிந்து இன்னும் ஒருவருக்கு இயைவிக்கும் மெய்மை என்பது தனியர்களுக்குரியது. தன்னிலும் பிரிந்து தனித்தோர். தனியென்று தருக்கினோர். தானன்றி பிறிதொன்று தன்னைக் கடந்ததை அன்றி ஒன்றை ஏற்காதோர்.”

அவன் புரண்டு படுத்து பெருமூச்சுவிட்டான். அவன் அறைச்சுவர்கள் முழுக்க அவர்கள்தான். பிரஹஸ்பதியின் வழித்தோன்றல்கள். சுக்ரர், கபிலன், கௌதமன், தீக்ஷணன், பரமேஷ்டி, அஜிதகேசகம்பளன். அவர்களின் சொற்களால் சூழப்பட்டு அங்கே அவன் துயின்று விழித்தான். அவர்களிடமிருந்து தப்பும்பொருட்டு கிளம்பிச் சென்றான். அவர்களை இழந்த வெறுமை தாளாது திரும்பி வந்தான். அவன் எழுந்து அமர்ந்தான். நீர்க்குடுவையை அரையிருளிலேயே கைநீட்டி எடுத்து குளிரக்குளிர குடித்தான். தாடியில் வழிந்த நீரை துடைத்தபின் மீண்டும் படுத்துக்கொண்டான். பெருமூச்சுவிட்டான். இவ்விரவில் தீரா நோய்கொண்டவர்கள் மட்டுமே படுக்கைகளில் முடங்கிக்கிடப்பார்கள். வலியுடன் இயலாமையுடன். நான் கொண்டதும் நோய்தான் போலும்.

சுவரில் எழுந்த இளமையான படிவர்முகம் ஒன்று அவனை அணுகியது. “மெய்யென்று ஒன்றிருந்தால் எல்லா வழிகளும் அங்கேதான் செல்லும். அதை எண்ணித் தொட்டு எடுக்கமுடியும். நோக்க முடியும். கைகளால் தொட்டு அடையமுடியும். நாம் நோக்கவில்லை என்றாலும் அங்கிருக்கும். நாம் அனைவருமே மறைந்தாலும் தான் எஞ்சியிருக்கும்.” அவன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். “மெய்மை ஒன்றே. பகலொளிபோல் தெளிவானது. நாளுமென நாம் அறிவது. நம் அன்னமும் நலமும் அழகும் ஆவது. அதை மறுக்கவும் தாண்டவுமே பிற மெய்மைகள் சமைக்கப்பட்டன. அதிலிருந்து அள்ளப்பட்டு அதனாலேயே ஒளியூட்டப்பட்டு அதன்மேலேயே போடப்பட்டன. யானையை மறைக்க நெற்றிப்பட்டமும் கவசமும்போல் பிறிதொன்று உதவுவதில்லை.” அவர் வாய்விட்டுச் சிரித்தார். “ஏனென்றால் அவை மேலும் சிறந்த யானை என தங்களை காட்டுவன. மேலும் ஆற்றல்கொண்டவை, மேலும் அழகியவை.”

அவன் எழுந்து சென்று தன் அறையின் மூலையில் இருந்த சிறிய பெட்டியை திறந்தான். அதற்குள் அவன் தன் மரவுரி ஆடைகளை வைத்திருந்தான். ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்து உள்ளிருந்து தொன்மையான ஏட்டுச்சுவடி ஒன்றை எடுத்தான். பழுப்பேறி மண் ஓடுகள் என்றே தோன்றின. விளக்கைத் தூண்ட அவன் தயங்கினான், அது அன்னையை எழுப்பிவிடக்கூடும். சாளரத்தருகே சென்று அமர்ந்து வெளியே இருந்து வந்த மெல்லிய வெளிச்சத்தில் அச்சுவடிகளை படித்தான். விழிகளுக்கு எழுத்துக்கள் தெளியவில்லை. கண்களை மூடி விரலால் தொட்டுத் தொட்டு எழுத்துக்களை படித்தறிந்தான். விழிகளால் படிப்பதைவிட அவ்வண்ணம் படிக்கையில் சொற்கள் மேலும் கூர்மைகொள்கின்றன. ஆணிகளை அறைவதுபோல இறங்கி அமைகின்றன.

அவன் பலமுறை படித்த நூல். பிரஸ்னசமுச்சயம், ஆயிரம் வினாக்கள் மட்டுமே அடங்கியது. ஒவ்வொரு வினாவுக்கு நடுவிலும் சொல்லில்லாமல் விடை அளிக்கப்பட்டுள்ளது என்பார்கள். அவ்விடையிலிருந்தே அடுத்த வினா எழுகிறது. ஆகவே ஒரு வினாவின் விடையை அடைந்த பின்னரே அடுத்த வினாவை சென்றடைய முடியும். சில இடைவெளிகள் எளிதில் தாண்டக்கூடியவை. சிலவற்றின் நடுவே அடியிலியென ஆழம். அச்சமூட்டும் இருள். ஆனால் அவ்விருளே அவ்விரு வினாக்களின் விளிம்புகளையும் ஈர்ப்பு மிக்கதாக்குகிறது. அவன் வாயிலருகே அன்னையின் நிழலசைவை உணர்ந்தான். அச்சுவடிக்கட்டை தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டான். அவளை திரும்பி நோக்காமல் அமர்ந்திருந்தான்.

“வேண்டாம், மைந்தா. சொல்வதை கேள். அச்சுவடிகளை படிக்காதே. அவற்றை வீசிவிடு… வேண்டாம். அன்னைசொல் கேள். உனக்காகவே நான் இதுவரை வாழ்ந்தேன். இங்கு தனிப்பெண் எதிர்கொள்ளும் துயர்களை நீ அறியமாட்டாய். நான் ஒவ்வொரு முள்முனையிலாக தவம் செய்து இங்கு வந்திருக்கிறேன். உன்னை கண்ணீரால் நீராட்டி வளர்த்திருக்கிறேன்.” தீக்ஷணன் திரும்பி அவளை நேர்நோக்கி வெறுப்புடன் உதடுகளைச் சுழித்து “அதற்கு நான் என்ன செய்யவேண்டும்? அடிமையென உனக்கு தொண்டு செய்யவேண்டுமா?” என்றான். அன்னை உடனே விசும்பினாள். “நீ அச்சுவடிகளை படிக்காதே. அவற்றை வீசிவிடு. அவற்றை படித்துத்தான் உன் தந்தை என்னைவிட்டு கிளம்பிச் சென்றார். உன்னையும் இழந்தால் என் உலகமே அழிந்துவிடும்.”

அவன் அவளை நோக்கி இகழ்ச்சியுடன் “உன் உலகைப் பேணும் பொறுப்புதான் எனக்கு வாழ்க்கை, அல்லவா?” என்றான். அவளால் அதற்கு மறுமொழி சொல்ல முடியவில்லை. “வேண்டாம், மைந்தா…” என்றாள். “செல்க! செல்க!” என்றபடி தீக்ஷணன் எழுந்தான். கைவீசி “என்னை தனிமையில் விடு… என்னை விட்டுவிடு…” என்று கூவினான். அவன் குரல் உடைந்து ஒலித்தது. “என்னை உன் காலடியில் நாயென கட்டியிட நினைக்கிறாய். என்னை உன் அடிமையென எண்ணுகிறாய்… நீதான் என் தளை. என் சிறை நீ.” அன்னை உதடுகளை இறுக்கிக்கொண்டு ஓசையின்றி அழுதாள். அவன் அந்த அழுகையோசைகளை அன்றி எதையும் கேட்க முடியாதவனாக அமர்ந்திருந்தான். அவை கூசவைத்தன, சிறுமைகொள்ளச் செய்தன, ஆகவே சீற்றத்தை எழுப்பின. எதையோ கிழித்துக் கிழித்து வீசிக்கொண்டிருப்பதுபோன்ற அழுகை.

அவன் வெளியே சென்றுவிடலாம் என்று எண்ணினான். ஆனால் அஸ்தினபுரியின் ஓசையும் ஒளியும் அவன் நினைவிலெழுந்து உடலை கூசவைத்தன. மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தான். பின்னர் வெறியுடன் தலையை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். விம்மலும் கேவலுமாக அழத்தொடங்கினான். அன்னை ஓடிவந்து அவன் கைகளை பற்றினாள். அவன் அவளை உதறி அகற்ற முயல கைகளை இறுகப்பற்றி இறக்கி அவன் மடிமேல் அமைத்து அழுத்திக்கொண்டாள். “உனக்கு என்னவேண்டும்? எதற்காக இத்தனை துயரம் அடைகிறாய்? சொல், உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? நான் சாகிறேன். நான் செத்தால் நீ மகிழ்ச்சியாக இருப்பாயா?”

அவன் அவளை பெருகிப் பெருகி உடலையே ஆட்கொண்ட கசப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். அந்த உணர்வுகள் மிகை. அந்தச் சொற்கள் மிகை. ஆனால் காலந்தோறும் அத்தனை பெண்களும் அத்தருணத்தில் அத்தகைய சொற்களையே சொல்லிவந்திருக்கிறார்கள். அவர்கள் வேறொன்று அறியார். அவன் அவள் முகத்தை நோக்கி “நான் இந்நகரை வெறுக்கிறேன். இந்த வீட்டை வெறுக்கிறேன். இந்த மக்களை, என் சுற்றத்தை, உன்னை வெறுக்கிறேன்” என்றான். “ஏனென்றால் இவையனைத்துமே பொய். பொய்யை உண்டு பொய்யை உயிர்த்து பொய்யில் திளைக்கிறீர்கள் நீங்கள். இந்தப் பொய் என்னை தொட்டாலே கூசுகிறேன். எண்ணி எண்ணி அருவருக்கிறேன்.”

அவள் அவன் கையை உலுக்கி “வேண்டாம், இப்படியெல்லாம் நினைக்காதே. இது உன்னை தூக்கிக்கொண்டு சென்றுவிடும்” என்றாள். “ஆம், இங்கிருந்து சென்றுவிடவே எண்ணுகிறேன். இவையனைத்தையும் ஒருகணம்கூட எண்ணாமல் அகன்றுவிடவேண்டும் என்று விழைகிறேன்” என்றான். அவள் “மைந்தா… மைந்தா, என் உயிர் நீ. என் வாழ்க்கையின் பொருள் நீ” என்றாள். மீண்டும் அவன் உடல்கூசினான். ஏதோ கூத்துப்பாடலின் வரிபோல அத்தனை தொன்மையானது, பழகியது, ஆகவே செயற்கையானது அச்சொற்றொடர். அவ்வழுகையும் அந்த முகமும்கூட அத்தனை குமட்டலை உருவாக்கின. “எழுந்துசெல். நீ என் தளை. உன்னை உதறினாலன்றி எனக்கு விடுதலை இல்லை” என்றான்.

அவள் கண்களில் ஒருகணம் வந்து மறைந்த சீற்றம் அவனுக்கு நிறைவை அளித்தது. “சினமடைகிறாய் அல்லவா? அதைத்தான் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் அது உண்மையானது, இந்த அழுகையும் புலம்பலும் பொய். எனக்கு பொய் குமட்டுகிறது” என்றான். அவள் உடலுக்குள் அவள் இன்னொன்றாக மாறுவதை அவனால் உணரமுடிந்தது. அவள் குரல் மாறிவிட்டிருந்தது. “உன் தந்தையும் இப்படித்தான் என்னிடமிருந்து கிளம்பிச் சென்றார். நீயும் செல். சென்று எதை அடையப்போகிறீர்கள் நீங்கள்?” என்று அவள் கூவினாள். அவள் முகம் வெறுப்பில் வலிப்பு கொண்டிருந்தது. “நான் சொல்கிறேன், நீயும் உன் தந்தையும் உன்னைப் போன்றவர்களும் எதையும் அடையப்போவதில்லை. ஏனென்றால் நீங்கள் தன்மையம் கொண்டவர்கள். ஆணவம் நிறைந்தவர்கள். அந்த ஆணவம் பெருகி அழுகி சீழ்கட்டி துடிக்கும்போது சூழ இருப்பவர்களை புழுக்கள் என நினைக்கிறீர்கள். அவர்களுக்கு மேல் தலைதூக்கி நின்று மானுடப்பதர்களே என அழைக்க விரும்புகிறீர்கள். நீங்கள் நாடுவது அதை மட்டுமே. உன் தந்தை அதன்பொருட்டே கிளம்பிச் சென்றார். நீயும் அதற்காகவே செல்கிறாய்.”

அவள் எழுந்து விசையுடன் தன் அவிழ்ந்த குழலை சுழற்றிக் கட்டினாள். “செல், சென்று ஆடையில்லாமல் மண்பூசிய உடலுடன் சுடுகாட்டில் வாழ்ந்துகொள். சடை நீட்டி பேயுருக் கொள். மானுடர் விழைவன அனைத்தையும் விலக்கு. மானுடர் அருவருப்பும் அச்சமும் கொள்வன அனைத்தையும் செய். நான் நான் என தருக்கு. முச்சந்திகளில் சென்று நின்று மானுடமே என அறைகூவு. அதுதானே நீ விழைவது?” அவன் நடுங்கத் தொடங்கினான். அவளுடைய சீற்றம் முதலில் அவனுக்கு அளித்த தண்மை அகன்று அவன் அகம் கொதிக்கத்தொடங்கியது. “மூடு வாயை” என்று கூவினான்.

“நான் வாயை மூடிக்கொள்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். பிறர் துயர் அறிய முடியாத உங்களைப் போன்றவர்கள் இப்புடவியில் ஒரு சிறுதுளியைக்கூட அறிய முடியாது. நான் உன்னை அறிவேன், ஏனென்றால் நான் என்றும் உன்னுடன் இருக்கிறேன். அணுக்கத்தால் அறிகிறேன். நீ என்னை துளியும் அறியமாட்டாய். ஏனென்றால் நீ என்னை விலக்கவே எண்ணிக்கொண்டிருக்கிறாய். விலகிச்சென்று அறிவது எங்ஙனம்? ஒவ்வொன்றாக விலக்கிச் சென்று இன்மையை அறிவதைப்போல் பேதைமை வேறென்ன? இருப்பதை அறிய வந்தாயா? இன்மையை அறிவதென்றால் அவ்வறிவின் பயன்தான் என்ன?”

அவன் “செல்க!” என்றான். “செல்க! செல்க! செல்க!” என்று கூச்சலிட்டான். அவள் வஞ்சத்துடன் அவனை பார்த்தாள். “உன் தந்தையை ஆயிரம் முறை நான் தீச்சொல்லிட்டிருப்பேன். அவர் என்னை நீங்கிச் சென்றமையால், எனக்களித்த துயரால் எதையுமே அறியலாகாது என்று. வெறுமையைச் சென்றடைந்து அழியவேண்டும் என்று. அத்தீச்சொல்லையே உனக்கும் அளிக்கிறேன். நீ எதையும் அறியப்போவதில்லை. நீ அடைவதென ஏதுமில்லை. கெடுக உன் அறிவு!” அவள் மூச்சிரைக்க திரும்பிச் சென்றாள். அவன் கூடவே சற்று எழுந்து கைநீட்டி எதையோ சொல்ல எண்ணி பின் ஒழிந்து தளர்ந்து அமர்ந்தான்.

சுவர்களில் இருந்து முகங்கள் எழுந்து வந்தன. அஜிதகேசகம்பளனின் முகம். “அதுவே மிகப் பெரிய மாயை. அது விழிநீரால், அறச்சீற்றத்தால், பழிச்சொல்லால் உன்னை அள்ளிக்கொள்ளும். ஆயிரம் கைகள், பல்லாயிரம் நாவுகள், பலகோடி கலங்கிய விழிகள் கொண்டது. வென்றெழுக!” அவன் “ம்” என்றான். “நோக்குக, இங்குள்ள ஒவ்வொன்றையும் அறியவே நீ வந்தாய்! ஆனால் கொள்ள எண்ணினால், பேண விழைந்தால், வெல்ல முனைந்தால் நீ அவற்றை உரியது என்றும் அல்லது என்றும் பிரித்துக்கொள்கிறாய். நன்றென்றும் தீதென்றும் அழகென்றும் அல்லவென்றும் ஆயிரம் பிரிவினைகளை நிகழ்த்திக்கொள்கிறாய். இங்கிருந்து அறியமுயல்வோர் பாதியையே அறிய முடியும். பாதியறிதல் என்பது முழுப் பொய்யே” என்றார்.

“நீ விடுவது இப்பொருட்களை அல்ல, இவ்வுறவுகளை அல்ல, இவ்வுலகையும் அல்ல. நீ விடுவது இவற்றுடன் நீ கொண்டுள்ள உறவையே. விலக்கம் பயிலவே விட்டுச் செல்கிறாய். விலகிய பின் அணுகி வந்து அறிக! அவ்வறிவே மெய்யென்று உணர்க!” அவன் பித்துவிழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான். பரமேஷ்டி அவன் முன் எழுந்தார். “உன் அன்னை உன்னை அறிந்துள்ளாளா என்ன? அவள் அறிந்த நீயா உன் மெய்? நீ அவளை அறிந்ததற்கு மறுபக்கம் அது. இரண்டும் பாதியறிதல்களே. வெறுப்பதை அறியமுடியாதென்று அறியாதோர் எவருமிலர். எனில் விரும்புவதை மட்டும் எவரால் அறியமுடியும்?” அவன் முன் கபிலர் எழுந்தார். “இங்குள்ளோர் கொள்ளும் பெருந்துயரே அதுதானே? விரும்பியவர்களுக்காக அவர்கள் உயிர்வாழ்கிறார்கள். விரும்புவதனால் அவர்கள் அவர்களை அறிவதுமில்லை. ஆகவே அறியாதோருக்காக வாழ்வை அளிக்கிறார்கள். அறியமுடியாமையின் பெருந்துயரில் உழல்கிறார்கள்.”

அவன் எழுந்துகொண்டு தன் சால்வையை எடுத்தான். அறையைவிட்டு வெளியே செல்ல முனைந்தபோது அன்னை ஓடிவந்து அவனை தடுத்தாள். “அன்னை சொல் கேள். மைந்தா, வேண்டாம். வேண்டம், செல்லாதே!” என்றாள். “நீ செல்லுமிடம் எனக்கு நன்றாகவே தெரிகிறது, வேண்டாம். நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடு. அவை அடிவயிற்று நெருப்பால் எழுந்த சொற்கள். நீ என் தெய்வம், என் மூதாதை வடிவம். என் கொடிவழிகளின் முகம். நீ இன்றி எனக்கு உலகமே இல்லை.” அவன் “விலகு” என்றான். “மைந்தா மைந்தா” என அவள் அவன் கையை பிடித்தாள். அவன் அவளை உதறி படியிறங்கினான்.

அவள் அவனுக்குப் பின்னால் ஓடிவந்தாள். “நான் சொன்னவை எல்லாம் பொய்யுணர்வுகள். உன்னைச் சீண்டும் பொருட்டு சொன்னேன். உன் பாதை செல்லுமிடம் வெறும் இருள். அன்னை அதை நன்கறிவேன். மைந்தா, அன்பன்றி வேறேதும் இப்புவியில் ஒரு பொருட்டல்ல. அதுவன்றி இன்பமும் வேறில்லை.” அவன் நின்று திரும்பி “எனில் நீ துயரடைவது அன்பால் அல்லவா? ஆணவத்தாலா?” என்றான். அவள் திகைத்து நின்றாள். “நீ மகிழ்வுறுகிறாயா? துயர்கொண்ட அன்னையென்னும் மாற்றுருவை நடித்து நிறைவடைகிறாயா?”

அவள் கசப்புடன் சிரித்தாள். “அணுக்கமானவர்களை துன்புறுத்தும் கலையை நாம் குழவிப்பருவத்திலேயே கற்றுக்கொள்கிறோம்” என்றாள். “ஆனால் நீ அறிவாய் மெய்யை. நான் ஐயமின்றி சொல்கிறேன். நீ செல்லும் பாதை வெற்று ஆணவத்தாலானது. அடியிலா இருளை அன்றி எதையும் அளிக்காதது. வேண்டாம். நில், அன்னையின் ஆணை இது நில்!” அவன் அவளை திரும்ப நோக்காமல் நடந்தான். அவள் தெருவருகே நின்றுவிட்டாள். நன்று, அவள் பெண். பெண்கள் தெருவுக்கு அப்பால் வரமாட்டார்கள். வீதிவரை மங்கை, காடுவரை மைந்தர். அவன் புன்னகைத்துக்கொண்டான்.

இம்முறை அவன் விளக்கொளியின் கீழ் சென்றுவிட்டான். அங்கே காவல்நின்றிருந்த நாய் ஒன்று அவனைக் கண்டு திடுக்கிட்டு பின்னகர்ந்து கூச்சலிட்டது. பின்னர் அனைத்து நாய்களும் ஊளையிட்டு அழுதன. அவன் ஒளியில் சிவந்த உடலுடன் அங்கே நின்று தன்னைச் சூழ்ந்து ஓசையிடும் பதைப்பு மிக்க விழிகளை கண்டான். பின்னர் மையச்சாலை நோக்கி சென்றான்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76

பகுதி ஏழு : பெருசங்கம் – 8

சுதமன் உள்ளே நுழைந்தபோது நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் கூப்பியிருந்தன. கால்கள் குழைந்தன. பதற்றத்தில் முதலில் உள்ளே என்ன திகழ்கிறதென்பதையே அவர் கண்கொள்ளவில்லை. பின்னர்தான் அந்த வேலிவட்டத்திற்குள் ஓர் உயரமான படுக்கையில் மெலிந்து ஒடுங்கிய நீண்ட உடல் மிதந்ததுபோல் கிடப்பதை கண்டார். அதன் பின்னரே அது அம்புப்படுக்கை என்று உணர்ந்தார். அம்புகள் அவர் உடலை தொடாமல் தாங்கியிருப்பதுபோல, அவர் காற்றில் மிதந்து நிற்பதுபோல் தோன்றியது.

அவர் முகமும் தோளும் தோல் மட்கியதுபோல ஒளியிழந்திருந்தன. உடலில் எங்கும் தசையே இருப்பதாகத் தெரியவில்லை. உடலெங்கும் அம்புகள் பதிந்து பொருக்கோடி சிறு புற்றுகள்போல் எழுந்திருந்தன. தாடியும் தலைமுடியும் பெரும்பாலும் உதிர்ந்திருந்தன. கைகளில் நகங்கள் வளர்ந்து சுருண்டிருந்தன. கால்களின் நகங்களும் அவ்வாறே வளர்ந்து சுருள முடியும் என்பதை சுதமன் அப்போதுதான் உணர்ந்தார். அவர் முள்ளில் வந்து படிந்த சருகு போலிருப்பதாக அவர் எண்ணிக் கொண்டார்.

அவர் உடலில் உயிர் இருப்பதாகத் தெரியவில்லை. சுதமன் வானை நோக்கினார். கதிர் வடமுகம் எழுவது நாளை. நாளை முதல்தான் ராஜசூய விழா தொடங்குகிறது. ஆனால் இன்றே அந்நாள் இலக்கணப்படி தொடங்கிவிட்டது. இன்னும் ஒரு நாழிகை. ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தார். இல்லை, உயிர் இருப்பதாகவே அகம் சொல்கிறது. எந்தத் தடயமும் இல்லை, ஆனால் உள்ளம் அவ்வாறே ஆணையிடுகிறது. அவர் முகத்தை கூர்ந்து நோக்கினார். மூச்சு ஓடுவது தெரியவில்லை. நெஞ்சக்குழி அசைவற்றிருந்தது.

அவர் என்ன செய்வதென்று அறியாமல் தயங்கி மருத்துவர்களை பார்த்தார். “சொல்லுங்கள்” என்று முதிய மருத்துவர் சொன்னார். “அவருக்கு கேட்குமா?” என்று சுதமன் கேட்டார். அவர் “இனி சொல்ல முடியாது” என்றார். சுதமன் மேலும் மூச்சை இழுத்துத்தான் தன் சொற்களை கண்டடைந்தார். “பிதாமகரே, நான்…” அவரால் தன்னை அறிமுகம் செய்துகொள்ள முடியவில்லை. அக்கணத்தில் அச்சொற்கள் பொருளில்லாதவை என்று தோன்றின. “அந்தணனாகிய நான் அஸ்தினபுரியின் அரசர் யுதிஷ்டிரனின் ஆணைப்படி இங்கு வந்துள்ளேன்” என்றார்.

“அஸ்தினபுரியின் இளையவர் நால்வரும் நான்கு வேள்விப்பரியுடன் சென்று பாரதவர்ஷத்தை வென்று மீண்டிருக்கிறார்கள். அதன் நீட்சியாக நாளை எழவிருக்கும் கதிர்மாறு நாளில் அஸ்தினபுரியில் ராஜசூய வேள்வி நிகழவிருக்கிறது. தந்தையெனும் நிலையில் தங்களுடைய அருட்சொல் கோரப்படுகிறது” என்றார். அவர் இமைகள் அசைவதை கண்டார். அவர் “ம்” என்றார். அச்சொல் அவர் வாயிலிருந்து எழுவதா என சுதமன் ஐயுற்றார். அவரிடமிருந்தே எனத் தெளிந்ததும் பெருமூச்சுவிட்டார். “என்னிடம் அஸ்தினபுரியின் அரசர் ஒரு பரிசை அளித்து அனுப்பியிருக்கிறார். அது கீழ்த்திசையிலிருந்து இளையவர் அர்ஜுனனால் கொண்டுவரப்பட்டது. தங்களுக்குரியது அது என அரசர் கருதினார். உடன் ஒரு செய்தியோலையும் அளிக்கப்பட்டுள்ளது.”

அவருடைய இமைகள் அசைந்தன. சுதமன் திரும்பி நோக்கினார். மருத்துவர்கள் வியப்படைந்ததுபோல் தெரியவில்லை. கங்கர்களிடமும் வியப்பு தென்படவில்லை. அவர் ஓலையை எடுத்து உரத்த குரலில் படித்தார். அதன்பின் தன் இடையிலிருந்து அந்த புற்குழலை எடுத்தார். பீஷ்மரின் முகத்தில் புன்னகை தெரிந்தது. சுதமன் அது விழிமயக்கா என திகைத்தார். திரும்பி அனைவரையும் நோக்கினார். புன்னகையேதான். ஆனால் உதடுகளில் தசைகளில் எந்த மாறுதலும் நிகழவில்லை. மூடிய விழிகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. ஐயமே இல்லை, புன்னகைதான்.

அவர் அந்த புற்குழலை வாயில் வைத்து “நான் இதை மீட்டலாமா?” என்றார். “ம்” என்று பீஷ்மர் சொன்னார். சுதமன் இப்போது அவர் குரலே என உறுதிகொண்டார். அவர் உள்ளம் மலர்ந்தது. விந்தையான, அரிதான ஒரு நிகழ்வை அவர் நிகழ்த்தவிருக்கிறார். அதனுடாக அவர் அரியவராக ஆகப்போகிறார். அவரிடம் சொற்கள் பெருகும். அவரைச் சூழ்ந்தமர்ந்து அதை கேட்பார்கள். இன்னும் நெடுங்காலம். அவர் பிறவியின் பொருளே அந்நிகழ்வை கண்டவர், நிகழ்த்தியவர் என்பதாக இருக்கலாம். அவர் அதை தன் உதடுகளில் வைத்து மூச்சை செலுத்தினார்.

அதன் கூரிய ஒலி எழுந்தபோதுதான் குருக்ஷேத்ர வெளியெங்கும் ஒரு பறவையின் அசைவைக்கூட காணமுடியவில்லை என்பதை அவர் நினைவுகூர்ந்தார். காடு மிக அப்பால் பச்சை நிழல்வரம்பு என தெரிந்தது. அங்கே காற்று ஓடும் ஒலிகூட இங்கே கேட்கவில்லை. வெற்றுச் செம்மண் அலைவெளிக்குமேல் பறவைகளின் நிழல்கள் கூட இல்லை. அங்கே பறவைகள் உண்பதற்கு ஏதுமில்லை போலும். எனில் எந்தப் பறவை இதை கேட்கும்? அவர் மீண்டும் மீண்டும் மீட்டி குழல் தாழ்த்தி செவிகூர்ந்தார். பின்னர் மீண்டும் ஒரு முறை மீட்டினார். ஒலி சுழன்று சுழன்று கலைந்து அமைந்தது.

அப்போது ஒரு வானம்பாடியின் குரல் கேட்டது. அது தன் குழலில் இருந்து எழுந்தது என முதலில் எண்ணினார். பின்னர் அவர்களில் எவரேனும் அவ்வொலியை எழுப்புகிறார்களா என்று நோக்கினார். ஆனால் அதற்குள் அவர் அப்பறவையை பார்த்துவிட்டார். அது மூங்கில்மேல் வந்தமர்ந்தது. பாடியபடி எழுந்து இன்னொரு மூங்கில்மேல் அமர்ந்தது. மேலும் எழுந்து காற்றில் தாவி சிறகடித்து அருகே வந்து அமர்ந்து சிறகு பிரித்து அடுக்கி கூவியது. “ம்?” என்றார் பீஷ்மர். சுதமன் பேசாமல் நின்றார். அவர் உதடுகள் அசைந்தன. மிருகாங்கன் உரக்க “பிதாமகரே, நீங்கள் அப்பறவையிடம் உசாவலாம்” என்றார்.

சுதமன் அந்தப் பறவையை பார்த்தார். அது தன் விழிமயக்கல்ல, மெய்யாகவே அங்கே ஒரு வானம்பாடி வந்து அமர்ந்திருக்கிறது. மென்மையான மண்சாம்பல் நிற உடல். சிறிய தலை. அதன்மேல் ஏந்திய பூ என கொண்டை. பீஷ்மர் மெல்ல முனகினார். மிருகாங்கன் அருகணைந்து அவர் வாயருகே செவியை வைத்து சொற்களை கேட்டார். பறவையை நோக்கி “யயாதி” என்றார். பறவை “யயாதி” என்றது. பீஷ்மர் அதை கேட்டார். அவர் முகம் கூர்மைகொண்டு பின் தளர்ந்தது. சற்றுநேரம் கழித்து பீஷ்மரின் உதடுகள் அசைந்தன. மீண்டும் செவிகொடுத்து திரும்பி மிருகாங்கன் “புரு!” என்றார். பறவை அதை திரும்பச் சொல்லவில்லை. சிறகடித்து எழுந்து அமர்ந்தது.

மீண்டும் “புரு” என்றார் மிருகாங்கன். பறவை எழுந்து அமர்ந்தது. “புரு” என்றார் மிருகாங்கன். பறவை எழுந்து சிறகடித்து வீசியெறியப்பட்டதுபோல் காற்றில் தாவி அலைகளில் எழுந்தமைந்து அப்பால் பறந்தது. அது மறைவது வரை நோக்கிவிட்டு மிருகாங்கன் “அது கூறவில்லை, பிதாமகரே” என்றார். பீஷ்மரின் முகத்தில் புன்னகை உறைந்திருந்தது. விழிகள் அசைவிழந்திருந்தன. மிருகாங்கன் “பிதாமகரே…” என்றார். சுதமன் சற்று அருகே சென்றார். மிருகாங்கன் “மருத்துவரே” என அழைத்தார்.

மருத்துவர் அப்பால் நின்று “விலகுக!” என்றார். மிருகாங்கன் விலக அவரை நோக்கி சுதமனும் விலகினார். மருத்துவர் பீஷ்மரின் கையைப் பற்றி நாடியை நோக்கினார். கழுத்திலும் நெஞ்சிலும் கைவைத்து இரு நாடிகளை நோக்கியபின் “பொழுது கணக்கிடுக நிமித்திகரே, பிதாமகர் மண்நீங்கினார்!” என்றார். சுதமன் தன் நெஞ்சு அதிர்வதை கேட்டுக்கொண்டு நின்றார். அவர்கள் எவரும் பதறவில்லை. அந்த நிகழ்வை பலமுறை நெஞ்சுக்குள் ஒத்திகை பார்த்திருப்பார்கள் என்று தெரிந்தது. ஒவ்வொருவரின் பணியும் நன்கு வரையறை செய்யப்பட்டிருந்தது. பழகிய சடங்கு என அனைத்தையும் இயற்றினர்.

மிருகாங்கன் வெளியே சென்று மெல்லிய குரலில் ஏதோ கூற அங்கே நின்றிருந்த இளைய கங்கர் வலம்புரிச் சங்கை எடுத்து வான் நோக்கி அண்ணாந்து மும்முறை ஊதினார். தொடர்ந்து கொம்புகள் மும்முறை ஒலித்தன. மிக அப்பால் ஒரு முரசு ஒலியெழுப்பியது. முரசொலியினூடாக செய்தி அஸ்தினபுரியை இன்னும் சற்றுநேரத்தில் சென்றடையும் என சுதமன் உணர்ந்தார். நிமித்திகர் “மிகச் சரியாக வடக்குமுகம் தொடங்கிய கணம்” என்றார். மிருகாங்கன் சென்று பீஷ்மரின் கால்களைத் தொட்டு சென்னி சூடினார். மருத்துவர்களும் நிமித்திகர்களும் அவரை கால் வணங்கினர். கங்கர்கள் நிரையென வந்து வணங்குவதை அவர் நோக்கி நின்றார். மிருகாங்கன் “வணங்குக, அந்தணரே!” என்றார். சுதமன் சென்று பீஷ்மரின் கால்களில் தலை வைத்து வணங்கினார்.

சுதமன் மூச்சை இழுத்து வெளியே விட்டபடி தளர்ந்த காலடிகளுடன் வெளியே வந்து நின்றார். மிருகாங்கன் அருகே வந்து “அரசருக்கு செய்தி சொல்லுங்கள். கிளம்புங்கள்” என்றார். “பிதாமகர்…” என்று சுதமன் சொல்ல “அவரை இன்னும் மூன்று நாழிகையில் கங்கநாட்டுக்கு கொண்டு செல்வோம். கொண்டு செல்வதற்குரிய அனைத்தும் நெடுநாட்களாகவே ஒருக்கப்பட்டு காத்திருக்கின்றன. எங்கள் குடிக்கு செய்தி முரசொலியாக சென்றுவிட்டது” என்றார்.

“அரசரிடம் ஒப்புதல் பெறவேண்டாமா? அவருடைய முதற்குருதி, அவருடைய தந்தை” என்றார் சுதமன். “இல்லை, அஸ்தினபுரிக்கு எங்கள் குலம் அளித்த கொடை, அதை நாங்கள் மீட்டுக்கொள்கிறோம்” என்று மிருகாங்கன் சொன்னார். “அவர் தன்னை கங்கையின் சிறுதுணையாறு ஒன்றின் கரையில் நிலைநாட்டவேண்டும் என ஆணையிட்டிருக்கிறார். அங்கே அவருக்கான ஆலயம் அமையும். எங்கள் குடிமுற்றங்களில் அவர் என்றுமென அமர்ந்திருப்பார். எங்கள் கொடிவழிகளால் வணங்கப்படுவார்.”

சுதமன் தளர்ந்து காலோய்ந்து குடிலை சென்றடைந்தார். அங்கே பாய்மேல் உடலை எடையுடன் அமர்த்தினார். பின்னர் கால்களை நீட்டிக்கொண்டார். விடாயை உணர்ந்து எழுந்து நீர் அருந்தினார். மீண்டும் எழுந்து அமர்ந்தார். குடிலில் இருந்து மரக்குடுவைகளில் மூலிகைத்தேனை கொண்டு சென்றனர். சுதமன் எழுந்துகொண்டு “என்ன செய்கிறீர்கள்?” என்றார். “எங்கள் நிலத்திற்கு பிதாமகரைக் கொண்டுசென்று சேர்க்க நான்கு நாட்களாகும். ஆகவே உடலை பதப்படுத்தவேண்டும். தேனும் மெழுகும் கொண்டு பதப்படுத்தும் எங்கள் குடிமருத்துவர் இங்குதான் சென்ற பல மாதங்களாக இருக்கிறார்” என்றார்.

உள்ளே மூலிகையின் மணம் எழுந்தது. அது கசப்பு என மூக்குக்கு சொன்னது. சுதமன் “நான் கிளம்புகிறேன்” என்றார். அப்பாலிருந்து முரசொலி எழுந்தது. அதை ஒரு கங்கன் செவிகோட்டி கேட்டு மீள் கொம்பொலி எழுப்பினான். மிருகாங்கன் அருகே ஓடிவந்து தாழ்ந்த குரலில் கங்கர்மொழியில் ஏதோ சொன்னார். சுதமன் “என்ன?” என்று கேட்டார். “விந்தைதான், ஆனால் இத்தகைய விந்தைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன” என்று மிருகாங்கன் சொன்னார்.

“பீஷ்ம பிதாமகர் இளமையில் கங்கையின் ஒரு கிளையாற்றை அம்புகளால் அறைந்து அணைகட்டி நிறுத்தியதாக கதை சொல்வார்கள். அங்கே இன்று காலை மெய்யாகவே அணை ஒன்று உருவாகியிருக்கிறது. மானுடர் சமைத்த அணை அல்ல. நீரணில்கள் அதை உருவாக்கியிருக்கின்றன. நீர் தேங்கி மேலேறியிருக்கிறது. பிதாமகரின் ஆலயம் அமையவேண்டிய இடம் அது. காலையில் அதை பார்க்கச் சென்றவர்கள் அந்த அணையைக் கண்டு வியந்து ஊருக்கு ஓடிவந்து செய்தி சொன்னார்கள். அச்செய்தி கிளம்பியதுமே அவர் விண்புகுந்த செய்தி அவர்களை சென்றடைந்திருக்கிறது.”

சுதமன் பெருமூச்சுவிட்டார். “நான் கிளம்புகிறேன்” என்றார். பின்னர் எழுந்துகொண்டு தேரை நோக்கி சென்றார். தேர்ப்பாகன் தேரின் அடியிலேயே அமர்ந்திருந்தான். “செல்வோம்” என்று சொல்லி சுதமன் ஏறிக்கொண்டார். தேர்ப்பாகன் ஏறி அமர்ந்த பின் “இச்செம்மண் பரப்புக்கு அடியில் எலும்புக்கூடுகள் நிறைந்துள்ளன, உத்தமரே” என்றான். “நான் ஒரு கைப்பிடி மண்ணை அகற்றிப் பார்த்தேன். சிரித்த முகம் கொண்ட மண்டை ஓடு. எதை எண்ணி நகைத்தானோ இறைவனே அறிவார்.”

சுதமன் அவன் சொற்களை செவிகொள்ளவில்லை. “இங்குள்ள அத்தனை வெடிப்புகளிலும் நாகங்கள் நெளிகின்றன. அவை நாக உலகுக்கான நுழைவாயில்கள். நாம் நாகங்களுக்குமேல் சென்றுகொண்டிருக்கிறோம்.” சுதமன் தன்னைச் சூழ்ந்து முரசொலிகள் சென்று கொண்டிருப்பதை கேட்டார். தளர்ந்து தேர்த்தட்டில் படுத்துக்கொண்டார்.

 

சுதமன் தேரில் விழித்துக்கொண்டபோது யமுனைக்கரையை அடைந்திருந்தார். “உத்தமரே, படித்துறை” என்று தேரோட்டி சொன்னான். அவர் இறங்கிக்கொண்டு காற்றில் பறக்கும் சால்வையுடன் நின்றார். யமுனையின் கரிய நீர் அந்திவெளிச்சத்தில் ஒளிகொண்டிருந்தது. அதை நோக்கியபடி நின்றபோது அவர் ஓர் உள எழுச்சியை அடைந்தார். நேராக படகு நோக்கி சென்று அதன் பலகை வழியாக ஏறி உள்ளே சென்று அமர்ந்தார். படகோட்டி அவரிடம் “கிளம்புவோமா, உத்தமரே?” என்றான். “கிளம்புக, கீழ்நோக்கி! மகதத்திற்கு” என்றார். “அல்லது அதற்கும் கீழே. அஸ்தினபுரிக்கு அல்ல.”

“உத்தமரே…” என்று அவன் அழைத்தான். “செல்க! செல்க!” என்று சுதமன் கூவினார். “விரைக, விரைக!” படகோட்டி “நாம் அஸ்தினபுரிக்கு திரும்பிச் செல்லவேண்டும், அரசாணை அது” என்றான். “என் பணி முடிந்துவிட்டது” என்று சுதமன் சொன்னார். “நான் இனி எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. என்னை எவரும் இனி எதிர்பார்க்கப்போவதில்லை. செல்க!” படகோட்டி “ஆனால் நான் அஸ்தினபுரியின் எல்லைவரை மட்டுமே வரமுடியும்” என்றான். “நன்று! எனில் என்னை அடுத்த துறைமேடையில் இறக்கிவிடுக!” அவன் “உத்தமரே” என்றான். “இது என் ஆணை” என்றார் சுதமன். “அவ்வாறே” என படகோட்டி தலைவணங்கினான்.

படகு நீரலைகளை மெல்ல கிழித்தபடி சென்றுகொண்டிருந்தது. அதன் துடுப்புகள் நீரை துழாவும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மீன்கள் தாவுவது போலவும் நீரை மறந்து நினைவு நிலத்தை அடையும்போது ஏதோ விலங்கு நீரை நக்கி குடிப்பது போலவும் அவ்வோசை உளமயக்கு அளித்தது. இருபுறமும் காடுகள் இருள்கொள்ளத் தொடங்கியிருந்தன. பறவைக்கூட்டங்கள் சுழன்று சுழன்று மரக்கூட்டங்களின் மேல் இறங்கின. அல்லது பறந்தெழுகின்றனவா? வானில் செந்நிற முகில்கள் அணைந்துகொண்டிருந்தன. ஓசை கணம் கணமென மாறியது. ஒளி துளித்துளியென அணைந்தது. காலம் உறைந்ததுபோல் நின்றிருந்தது.

அந்தியை அவர் பார்த்தே நெடுநாட்களாகிறது என்று உணர்ந்தார். விழிகளே தான் என அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அஸ்தினபுரியை முற்றாக மறந்துவிட்டிருந்தார். அது நினைவிலெழுந்தபோது கைமறதியாக எங்கோ வைத்துவிட்டதை எண்ணிக்கொண்டதுபோல் அகம் துணுக்குற்றது. அஸ்தினபுரி என்னும் ஒன்று தன்னுள் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். கோட்டை, முகமுற்றம், நெடுஞ்சாலை, அங்காடி, காவல்மாடங்கள், அரண்மனை என்றுதான் நினைவுக்கு வந்தன. அவர் மீள மீள அஸ்தினபுரியை நினைத்துக்கொண்டே இருந்தார். எங்கு சென்றது அது? இத்தனை விரைவில் அகன்றுவிடுமா?

ஒரு கணத்தில் உள்ளம் முரசறைவு என அதிர்ந்தது. அவர் அறிந்த அனைத்தும் அவ்வண்ணம் விலகிச் செல்லலாம். அவர் பிறந்த குடி, அவருடைய அடையாளமென்றான குலம். அவர் கற்ற நூல்கள், சேர்த்துக்கொண்ட அறிதல்கள் அனைத்தும் மறைந்துவிடக் கூடும். அவர் திரும்பி வரவே முடியாதாகலாம். ஒருபோதும் மீளமுடியாத எழுகையா இது? எழுந்த பறவையின் கால்களுக்குக் கீழ் மரம் நிழலென்றாகி மறைந்துவிடும் என்றால்? ஆனால் கிளம்புபவர்கள் எவராயினும் மீண்டு வருவதில்லை. மீள்கையில் விட்டுச்சென்றவை அங்கிருப்பதில்லை.

அவர் அஞ்சி உடல்நடுங்கினார். கைகளை கோத்துக்கொண்டார். “செல்க செல்க செல்க” என தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டார். ஆனால் அவர் உடலில் காய்ச்சல் என வெப்பம் ஏறியது. செல்லுமிடம் அடியிலாதது. அறிந்திராத எதுவும் முடிவிலாததே. அறிவு எனும் ஒளிவட்டத்திற்குள் இச்சிறுவாழ்க்கை. அறியாதவை இருள்வெளியென விண்மீன் பெருக்கென சூழ்ந்திருக்கின்றன. அங்கே செல்லும் ஒரு துளி எங்கு சென்று விழும்? முடிவிலியில், அடியிலில். அச்சொல்லே அச்சுறுத்தியது. முடிவிலி, அடியிலி. இன்மை. அங்கே காத்திருப்பது இன்மை மட்டுமே. இருப்பென நான் திரட்டிவைத்திருப்பன அனைத்தும் அஸ்தினபுரியில் நான் ஈட்டியவை. அவை அழிந்துவிட்ட பின் எவ்வண்ணம் எஞ்சுவேன்?

அவர் எழுந்து நின்று கைநீட்டி “போதும், நிறுத்து. நிறுத்து படகை!” என்றார். படகோட்டி “உத்தமரே…” என்றான். “மீளவும் அஸ்தினபுரிக்கு… திரும்புக… அஸ்தினபுரிக்கே செல்க!” படகோட்டி “ஆணை” என்றான். சுக்கானை திருப்பி படகை ஒருபக்கமாக துழாவி நீர்ப்பரப்பின் மேலேயே வளைத்தான். படகு ஒழுக்கில் செல்கிறது. ஒருவேளை அதனால் திரும்ப முடியாமலேயே போகலாம். அது இவ்வொழுக்கிலேயே சென்று மறையலாம். நான் ஏற்கெனவே என் அஸ்தினபுரியிலிருந்து அறுந்து உதிரத்தொடங்கிவிட்டிருக்கலாம். “விரைக விரைக!” என்று அவர் கூவினார். “விசைகொள்க! விரைவுகொள்க!”

படகு திரும்பி எதிர்த்திசை நோக்கி செல்லத் தொடங்கியதும் அவர் உளம்சோர்ந்து அமர்ந்தார். பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தார். அங்கே அஸ்தினபுரி காத்திருக்கும். கனிந்த அன்னைபோல, உணவுடன் இன்சொல்லுடன். அவர் அமர்ந்தெழுந்த பீடங்கள் அங்கே இருக்கும். அவற்றில் அவர் உடல்பதிந்த மென்மையான தடம் இருக்கும். அவர் உடலின் இனிய வெம்மை எஞ்சியிருக்கும். அவர் ஈட்டிய அனைத்தும் அங்குதான் இருந்துகொண்டிருக்கும். அவர் எதையும் இழக்கவில்லை. இழப்பதைப்போல அறிவின்மை வேறில்லை.

எனில் எதன்பொருட்டு இழக்கத் துணிந்தேன்? ஏனென்றால் அச்சார்வாகரின் சொல். எனக்கு மகிழ்வளிப்பதை செய்யும்படி சொன்னார். அதுவே அறமும் பொருளும் வீடுபேறும் என்றார். எனக்கு அந்நகர் மகிழ்வளிக்கவில்லை என எண்ணிக்கொண்டேன். என் மகிழ்வு விடுதலையில் இருப்பதாக கற்பனை செய்தேன். அவ்விடுதலை என் எல்லைகளுக்கு அப்பால் இருப்பதாக சொல்லிக்கொண்டேன். அறிவின்மை, அறிவின்மையின் எல்லை. சார்வாகரே, நீர் அறிவிலி. நீர் மாய நீர் தேடி அலைந்து சாகும் ஊழ்கொண்ட பேதை. தன் மெய்யான மகிழ்வு எது என்று அறிந்தவர் இங்கு எவர்? ஆணவத்தைக் கடந்து சோம்பலைக் கடந்து தனிமையைக் கடந்து மெய்யான மகிழ்ச்சியை சென்றடைய எத்தனைபேரால் இயலும்?

ஆயிரத்தில் ஒருவரால். அவருக்கு மகிழ்ச்சி அக்கணமே தேடிவந்துவிடும். அவரே துறவி. அவரே படிவர். எஞ்சியோர் மகிழ்வு இது என்று தேடிச் சென்று அல்ல என்று அடைந்ததுமே தெளிந்து மேலும் தேடிச்சென்று அறியாமலேயே அணைந்துவிட ஊழ்கொண்டவர்கள். எளியோர், கீழோர், கட்டுண்டோர், கனியாது உதிரும் ஊழ்கொண்டோர். அவர் விம்மி அழத்தொடங்கினார். அழுந்தோறும் விம்மல்களும் விசும்பல்களும் ஏறி ஏறி வந்தன. படகோட்டி ஒரு சொல் பேசாமல் அவர் அழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். விண்ணகம் மீன்களால் பெருகியிருந்தது. காற்றுவெளியில் குளிரலைகள் நிறைந்திருந்தன. துடுப்புகளை நாவாக்கி ஆறு ஒற்றைச் சொல்லை மீளமீள சொல்லிக்கொண்டிருந்தது. தன் தேம்பல் ஓசையை தானே கேட்டு அவர் அழுதுகொண்டிருந்தார்.

அவர் அழுது அழுது ஓய்ந்து படகில் மல்லாந்து படுத்தார். உடல் எடையற்றிருந்தது. மெல்லிய இனிமை உள்ளத்தில் நிறைந்திருந்தது. சீழ்கட்டிய கட்டி உடைந்தபின் எழும் மெல்லிய எரிச்சலின் தண்மை. அவர் தன்னைக் கடந்து ஒழுகிக்கொண்டிருந்த விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார். அவை எங்கோ என பெருகிச் சென்றன.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75

பகுதி ஏழு : பெருசங்கம் – 7

சுதமன் குருக்ஷேத்ரத்தை அணுகியபோது காலை வெயில் ஏறிவிட்டிருந்தது. அவர் கங்கையினூடாக படகில் சென்று யமுனைக்குள் நுழைந்து காலையில் படித்துறையில் இறங்கி அங்கிருந்த அஸ்தினபுரியின் காவல்மாடத்திலிருந்து விரைவுத் தேர் ஒன்றை பெற்றுக்கொண்டு குருக்ஷேத்ரம் நோக்கி சென்றார். செல்லும் வழி போருக்கான பொருட்கள் கொண்டு செல்லப்படும் பொருட்டு அமைக்கப்பட்டு விரிவான நெடுஞ்சாலையாக ஆகியிருந்தது. அங்கே போடப்பட்டிருந்த பலகைகள் மண்ணில் மூழ்கியிருந்தாலும் தேரின் சகடத்தைத் தாங்கி உருளச்செய்தன. அந்த ஓசையில் சூழ்ந்திருந்த காடு கலைந்தெழுந்து ஓசையிட்டது.

இருபுறங்களிலும் இருந்து பசுமை பெருகி வந்து சாலையை மூடத்தொடங்கியிருந்தது. தளிர்க்கொடிகள் தேரில் தொட்டுத் தொட்டு ஒடிந்தன. வேர்கள் பலகை விளிம்புகள் மேல் கவ்வி எழுந்துவிட்டிருந்தன. தன்மேல் குத்தி இறக்கப்பட்ட ஆணியை இழுத்து உடலாக்கிக்கொள்ளும் அடிமரம் போல. காட்டுக்குள் உயிரசைவு நிறைந்திருந்தது. இரண்டு இடங்களில் சாலைக்குக் குறுக்கே நரிகள் ஓடின. காடுகளுக்குள் மீண்டும் பறவையோசைகளும் சிற்றுயிர் சருகுகளை உலைத்து ஓடும் அரவங்களும் நிறைந்திருந்தன. அப்பாதையில் அவர் ஒருவரைக் கூட எதிரில் பார்க்கவில்லை. யமுனைக்கரைக்குப் பின் காவல்மாடங்கள் என ஏதுமில்லை. குருக்ஷேத்ரத்தை அஸ்தினபுரி கைவிடத் தொடங்கிவிட்டது என அவர் புரிந்துகொண்டார்.

இன்னும் சின்னாட்களில் இந்தப் பெருஞ்சாலை முழுமையாகவே காட்டுக்குள் மறையும். இந்த தடித்த மரப்பலகைகள் மண்ணுக்குள் மூழ்கி வேர்களால் கவ்வப்படும். குருக்ஷேத்ரத்திற்கு எவரும் செல்லப்போவதில்லை. அதன் மறுஎல்லையிலிருக்கும் சமந்த பஞ்சகத்திற்குச் செல்லும் பிருகு குலத்து முனிவர்களுக்கும் அனற்குலத்து ஷத்ரியர்களுக்கும் அலைந்து திரியும் யோகிகளுக்கும் வேறுபாதைகள் உள்ளன. குருக்ஷேத்ரம் முற்றாக மறக்கப்பட்டுவிடலாம். அப்படியொரு இடம் உண்மையில் இருந்ததா என்னும்படி. சொல்லில் மட்டும் திகழலாம். சொல்லில் பெருகி கதையென்று ஆகி கதையென்றானமையாலேயே மெய்யல்ல என்றாகி நின்றிருக்கலாம்.

அவர் காட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் குருக்ஷேத்ரத்தை பார்த்ததே இல்லை. போர் தொடங்குவதற்கு முன்னர்தான் அவரை அமைச்சுப்பணிக்கு எடுத்தார்கள். அப்போது அமைச்சுப்பணிக்கு ஏராளமனாவர்கள் தேவைப்பட்டனர். அந்தணர், அமைச்சுக்கல்வி முடித்தவர் என்றாலே பணியாணை அளிக்கப்பட்டது. மெல்லமெல்ல போர் ஒருங்குவதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். அன்றெல்லாம் நாளும் செவியில் விழுந்த பெயர் குருக்ஷேத்ரம். அங்கே களம் ஒருங்குகிறது, தெய்வங்கள் திரள்கின்றனர், அங்கே முடிவாகவிருக்கின்றன அனைத்தும். பாரதவர்ஷமே அந்நிலத்தை மையமெனக்கொண்டு சுழன்றுகொண்டிருந்தது. அவர் அஸ்தினபுரியில் இருந்தாலும் குருக்ஷேத்ரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரும் உடனிருந்தனர் அங்கே.

படைகள் போருக்குக் கிளம்பிச்சென்றன. பின்னர் ஒரே நாளில் குருக்ஷேத்ரம் வெறும் சொல்லென்றாகியது. அச்சொல் நாள்தோறும் பொருட்செறிவுகொண்டது. போர் நீளநீள அதன் பொருள் மாறிக்கொண்டே இருந்தது. செயல்மையமென, வரவிருக்கும் யுகத்தின் விழியெனத் திகழ்ந்தது, அறத்தின் ஆடற்களமென மாறியது. வீரத்தின் விளைவயல் ஆகியது. பின்னர் ஆறாப்பெரும்புண் என்று பொருள்கொண்டது. அச்சொல்லே துயரளித்தது. உகிர்களும் பற்களும் இரக்கமற்ற விழிகளும் கொண்டு ஒவ்வொருவரையும் வேட்டையாடியது. அதிலிருந்து தப்பி நகர்மக்கள் சென்றுகொண்டே இருந்தனர். அந்தணர் திரள் திரளாக நகர் நீங்கினர். பலர் தங்கள் குடியறம் துறந்து கான் புகுந்தனர்.

ஓரிருநாட்களிலேயே தலைக்குமேல் இருந்த அனைவருமே சென்றுவிட அவர் மேலெழுந்து வந்தார். தலைமுறைகள் தோறும் முன்னகர்ந்து சென்றடைய வேண்டிய இடங்களை பறந்துசென்று தொட்டார். அதற்குள் நகரிலிருந்து குருக்ஷேத்ரம் என்னும் சொல்லே மறைந்துவிட்டிருந்தது. தெருக்கள்தோறும் போர்க்காட்சிகளை சூதர்கள் பாடிக்கொண்டிருந்தனர். ஆனால் அவற்றை கேட்டவர்கள் அனைவருமே அப்போரை அறியாதவர்கள். அதில் எதையும் இழக்காதவர்கள். அங்கே தன் குலக்குருதியில் ஒருதுளியேனும் சிந்த நேர்ந்தவர்கள் அச்சொல்லை பிறிதொருமுறை செவிகொள்ளவில்லை.

சுரேசர் ஆணையிட்டபோது அவர் செவிக்கு அது வெறும் சொல்லென்றே திகழ்ந்தது. செல்ல ஓர் இடம், ஓர் ஊர். அவர் அந்நிலத்தை பார்த்திருக்கவில்லை என்பதுகூட அப்போது உறைக்கவில்லை. வரும்வழியில் சார்வாகரின் சொற்கள் அவர் செவிகளை நிறைத்தன. ஆனால் தேர் கங்கைநோக்கி செல்லச்செல்ல அவர் அச்சொற்களை காற்றில் உதறிக்கொண்டே வந்தார். கங்கையில் படகிலேறி அமர்ந்ததும் துயின்றுவிட்டார். விழித்துக்கொண்டபோது சார்வாகரின் நினைவு அகலே எங்கோ சென்றுவிட்டிருந்தது. அவருடைய தோற்றமும் விழிகளும்கூட மங்கலான ஓவியமாகவே எழுந்தன. படகு யமுனையை அடைவது வரை அவர் எதைப்பற்றியும் எண்ணவில்லை. கரையோரக் காட்சிகளிலேயே உளம்தோய்ந்திருந்தார். பின்னர் உணர்ந்தார், அவர் மகிழ்ந்துகொண்டிருந்தது அக்காட்சிகளில் அல்ல, அங்கிருந்த அமைதியில் என்று. ஆறு கரைதொட்டு ஒழுக மரக்கூட்டங்கள் தங்கள் நிழல்களுடன் இணைந்து உறைந்தவைபோல் இருந்தன. மாபெரும் ஓவியத்திரைச்சீலை ஒன்றில் சிற்றுயிர் என அவர் ஊர்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.

அசைவின்மை அவர் உள்ளத்தையும் அசைவின்மை கொள்ளச் செய்தது. உண்மையில் அப்படி அல்ல என்று பின்னர் எண்ணினார். முதலில் அந்த அசைவின்மையில் அவருடைய சொற்கள் கொந்தளிக்கும் உள்ளம் சென்று அறைந்து அறைந்து சிதறிக்கொண்டிருந்தது. அவர் விழிகள் அந்தப்பரப்பில் அசைவுகளுக்காகத் தேடி சிறு சிறு அசைவுகளை கண்டடைந்தன. பின்னர் மெல்லமெல்ல சலித்தது உள்ளம். விழி சோர்ந்தது. ஒட்டுமொத்தமாக வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தார். உள்ளம் புறவுலகை தானென ஆக்கிக்கொண்டது. மெல்ல அமைதியடைந்து இன்மையென்றாகியது. அந்த ஊழ்கநிலை அவர் இருப்பை இனிக்கச் செய்தது. இனி நான் திரும்பப்போவதில்லை. இது கிளம்புதல் மட்டுமே. இது பறந்தெழல். இது துறவு.

மீண்டும் அவர் அகமசையப் பெற்றது குருக்ஷேத்ரம் என்னும் சொல் வளரத் தொடங்கியபோதுதான். சூழ்ந்திருந்த காட்டிலிருந்து குளிர் என வந்து அது தொட்டது. குருக்ஷேத்ரம். எப்படி இருக்கும் அந்நிலம்? குருதிபெருகிய நிலம். எரிபரந்து கருகிய நிலம். நாகர்நிலம். அறவெளி. எத்தனையோ சொற்கள், காட்சிகள். ஆனால் எவையுமே அதன்மேல் ஒட்டவில்லை. அது வேறெங்கோ வேறெவ்வகையிலோ இருந்தது. அவர் சென்று காணப்போகும் அந்நிலம் முற்றிலும் பிறிதொன்றாகவே இருக்கப்போகிறது. முற்றிலும் அறியப்படாததாக. அவருக்கு மட்டுமாக எழுவதாக. தன்னை காட்டிவிட்டு அவ்வண்ணமே மூடிக்கொள்வதாக.

குருக்ஷேத்ரம் அணுகுவது நெடுந்தொலைவிலேயே தெரியும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவ்வண்ணம் எந்தத் தடயமும் தெரியவில்லை. பின்னர்தான் கைவிடப்பட்ட காவல்மாடங்களை கண்டார். அவை கொடிகள் படர்ந்தேறி பட்டமரங்கள் போல உருமாறிவிட்டிருந்தன. சில இடங்களில் யானைகளால் குத்திச் சரிக்கப்பட்டிருந்தன. ஒருகணத்தில் கண்களுக்குள் ஒளி பீறிட்டு நிறைவதுபோல் உணர்ந்து கைகளால் மூடிக்கொண்டார். பின்னர் உணர்ந்தார், அவர் குருக்ஷேத்ரத்துக்குள் நுழைந்துவிட்டிருந்தார். தேர்ப்பாகன் “அணைந்துவிட்டோம், உத்தமரே” என்றான். “காங்கேயரின் படுகளத்திற்குச் செல்க” என்று சுதமன் சொன்னார்.

குருக்ஷேத்ரத்தை இருபக்கமும் வெறித்தபடி அவர் சென்றார். அது ஒரு கடல் வற்றிய அடித்தளம் போலிருந்தது. சேறு உலர்ந்த குவைகள், மேடுகள், அலைகள் என செம்மண்பரப்பு வந்துகொண்டே இருந்தது. உயிரசைவே இல்லை. அல்லது இச்செம்மண் ஒரு பெரும்போர்வை. இதற்கு அடியிலுள்ளன அனைத்தும். போர்த்தப்பட்டு, அழுத்தி மூடப்பட்டு, அவை காத்திருக்கின்றன. அவர் சூழ விழியோட்டி எதையேனும் வடிவென அடையாளம் காணமுடியுமா என்று பார்த்தார். வெறும் மண். விழியறிந்த எதையும் காட்டாத வடிவங்கள். சோர்ந்து அவர் தேர்த்தட்டில் அமர்ந்துவிட்டார்.

“நரிகளும் நாய்களும் நிறைந்திருக்கும் என நினைத்தேன்” என்றான் தேர்ப்பாகன். “நீர் இங்கே வருவதில்லையா?” என்று சுதமன் கேட்டார். “இல்லை, நான் புதியவன்…” என்று பாகன் சொன்னான். “இங்கே எவருமே வருவதில்லை, உத்தமரே.” “அவரை எவர் பார்த்துக்கொள்கிறார்கள்?” என்று சுதமன் கேட்டார். “அவரை கங்கர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு காடுவழியாக வேறொரு கழுதைப்பாதை உள்ளது. அவர்களுக்கும் நமக்கும் எந்தச் சொல்லுறவும் இல்லை.” சுதமன் “அவர்கள் நம்முடன் எதையுமே பகிர்வதில்லையா?” என்றார். “அவர்கள் பேசும் மொழியே வேறு” என்றான் பாகன்.

குருக்ஷேத்ரம் அவர் நினைத்திருந்ததுபோல இல்லை என்பது உண்மைதான் என்று சுதமன் எண்ணிக்கொண்டார். அது எவ்வண்ணமிருக்கும் என எண்ணினேன்? விழிநிறைப்பதாக, உளம்பதறச் செய்வதாக. அல்ல, சொல்பெருகச் செய்வதாக. இங்கிருந்து மீண்டால் சிலநாட்களேனும் என்னுள் சொற்கள் எழுந்து குவியவேண்டும். ஒரு காவியத்தை நான் எழுதவேண்டும். பிறர் அறியாத சில அதில் இருக்கவேண்டும். அவர் புன்னகைத்துக்கொண்டார். அந்த எளிய ஆர்வமே மானுடரை புதிது தேடச் செய்கிறது. அறிந்த ஒன்று என் உடைமை. அது என்னை வேறுபடுத்துகிறது, அறியாதோரிலிருந்து மேலெழச் செய்கிறது. அதன்பொருட்டு நான் என் அடித்தளத்தை புரட்டிப்போடுவனவற்றையும் அறிய முற்படுவேன்.

அப்போது ஓர் அலை என சார்வாகரின் சொற்கள் அவர் செவிகளில் வந்தறைந்தன. குருதி. அவர் குருதியைப்பற்றி ஏதோ சொன்னார். ஆம், குருதியைப்பற்றித்தான். ஆனால் வேறொன்று. சொற்களுக்கு பொருளேற்றம் நிகழ்வதைப் பற்றி. குருதி என்றால் குலம், மரபு, மைந்தன், பற்று. குருதியென்றால் உயிர்க்கொடை, வீரம், வெற்றி. அல்ல, குருதி என்றால் குருதி மட்டுமே. குருதி அன்றி வேறேதுமில்லை. அதை உணர்ந்தவர்கள்தான் அஸ்தினபுரியை விட்டு அகன்றனர். குருக்ஷேத்ரத்தை முற்றிலுமாக மறந்தனர். எப்போதும் அப்படித்தான். தாங்கள் புழங்கும் சொற்களின் பொருட்கள் மாறிவிடும்போது மானுடர் திகைக்கிறார்கள். வெறுமைகொள்கிறார்கள். துறந்துசெல்கிறார்கள்.

நெடுந்தொலைவிலேயே படுகளம் தெரிந்தது. அதைச்சூழ்ந்து நாலைந்து தாழ்வான குடில்கள் இருந்தன. மூங்கிலால் ஆன வேலி கட்டப்பட்டு அவற்றின் எல்லைக்கழிகளில் கங்கர்களின் பனைமரக் கொடி பறந்துகொண்டிருந்தது. அவர்களின் தேர் அணுகுவதை குடிலில் இருந்து ஒருவன் வந்து எட்டிப்பார்த்தான். ஒரு கொம்பு ஒலித்தது. தேர் அணுகுந்தோறும் படுகளத்தின் காட்சி பெருகி அருகணைந்தது. சுதமன் பதற்றம் ஓய்ந்து நீள்மூச்செறிந்தார்.

சுதமன் படுகளத்தைச் சூழ்ந்து அமைக்கப்பட்டிருந்த மூங்கில்வேலியை அணுகியபோது அங்கே வந்து நின்ற கங்கர்கள் அவரை முறைப்படி வாழ்த்தி வரவேற்றனர். அவர் தேரிலிருந்து இறங்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் முன்னால் வந்து “என்பெயர் மிருகாங்கன். இந்த குழுவிற்குத் தலைவன். நாங்கள் இங்கே முறைவைத்து பிதாமகரை பேணுகிறோம்” என்றார். “பிதாமகர் உடல்நலம் குன்றாமல் குறையாமல் அவ்வண்ணமே இருந்துகொண்டிருந்தது. நேற்று காலை முதல் முற்றிலும் அமைதியாகிவிட்டார். நோயென ஏதுமில்லை. வலி மிகுவதாகவும் தெரியவில்லை. ஆனால் நாடிகள் அடங்கிவருகின்றன. உடல் பெரும்பகுதி குளிர்ந்துவிட்டிருக்கிறது” என்றார்.

“இதை அஸ்தினபுரிக்கு தெரிவித்தீர்களா?” என்று சுதமன் கேட்டார். “இல்லை” என்று மிருகாங்கன் சொன்னார். “எவருக்கும் தெரிவிக்கலாகாது, இங்கே எவருமே வரக்கூடாது என்பது பிதாமகரின் ஆணை. கங்கர்குலத்திற்குக்கூட அவருடைய இறப்பை அன்றி எதையுமே தெரிவிக்கலாகாது என்று கூறியிருந்தார்.” சுதமன் “நான் அரசரின் ஆணைப்படி அவரை பார்க்கவந்தேன்” என்றார். “அவர் இங்கே இருக்கும் நிலையை அவர்கள் மறந்துவிட்டிருப்பார்கள் போலும்” என்று மிருகாங்கன் சற்று கசப்புடன் சொன்னார். “இப்போது ஒரு சொல்லும் உணரும் நிலையில் அவர் இல்லை. எங்கள் குரல் மட்டுமல்ல மருத்துவர் குரலையும் அவர் கேட்கவில்லை. நேற்று உச்சிக்குப்பின் உணவோ நீரோ பெற்றுக்கொள்ளவுமில்லை. மெய்யுரைப்பதென்றால் எஞ்சும் ஒரு சில நாடிகள் அணைவதற்காகக் காத்திருக்கிறோம்.”

சுதமன் “என் கடனை நான் செய்யவேண்டும். அஸ்தினபுரியின் செய்தியை அவரிடம் நான் கூறுகிறேன். அரசர் அவருக்கு ஒரு பரிசிலும் அளித்திருக்கிறார்” என்றார். மிருகாங்கன் சிரித்துவிட்டார். “பரிசா, அவருக்கா?” என்றார். “எனக்கு உரைக்கப்பட்டது அது” என்ற சுதமன் “உள்ளே செல்வோம். நான் மருத்துவரிடமும் பேசவேண்டும்” என்றார். மிருகாங்கன் “இப்போது அங்கே மருத்துவர் அவர் நாடியை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுக்கட்டும், நீங்கள் எப்போது அவரை சந்திக்கலாம் என்று. நீங்கள் வந்துசேர்ந்த செய்தி அவர்களுக்கு சொல்லப்படும்” என்றார். சுதமன் “நன்று, நான் காத்திருக்கிறேன்” என்றார்.

மிருகாங்கன் “சற்று அமர்ந்து இளைப்பாறுக! இன்நீர் அருந்துக! இந்தப்பயணம் களைப்பூட்டுவது” என்றார். சுதமன் அவருடன் சென்று குடிலின் மூங்கில் பீடத்தில் அமர்ந்தார். இளையவர் இன்நீர் கொண்டுவந்து தந்தார். சுதமன் அதை அருந்தியபடி “அவர் தன்னிலையுடன் இருந்தாரா?” என்று கேட்டார். “பிதாமகர் நேற்று முன்னாள் வரை அவ்வப்போது ஓரிரு சொற்கள் பேசிக்கொண்டுதான் இருந்தார். நாம் பேசுவதை செவிமடுப்பார், சொற்கள் உளம்செல்வது விழிகளில் தெரியும்” என்று இளைய கங்கர் சொன்னார். “எங்கள் குலத்தவர் குருக்ஷேத்ரப் போரில் கலந்துகொள்ளலாகாது என்று பிதாமகர் ஆணையிட்டிருந்தார். நாங்கள் போரில் கலந்துகொள்ள விழைந்தோம். போருக்கு கிளம்புவதற்கு சித்தமானோம். உண்மையில் ஓராண்டாக படைப்பயிற்சியும் முடித்தோம். ஆனால் பிதாமகரிடமிருந்து ஆணை வந்தது, போரை ஒழியும்படி. எங்கள் போர் இது அல்ல என்று அவர் சொல்லியிருந்தார். எங்களுக்கு பெருத்த ஏமாற்றம். ஆனால் அவருடைய ஆணையை நாங்கள் மீறமுடியாது.”

‘அவரே எங்கள் குலமூதாதை. அவர் உயிருடனிருக்கையிலேயே எங்கள் ஊரில் அவர் தெய்வமென கோயில்கொண்டு பலிபெற்றுக்கொண்டும் இருந்தார்” என்று மிருகாங்கன் சொன்னார். “அவர் இப்போரில் களம்படுவார் என்று எங்களுக்கு சொல்லியிருந்தார். களத்தில் அவரை நாங்கள் வந்து காணவேண்டும் என்றும் கங்கர்நிலத்திலேயே அவருடைய உடல் கங்கர்முறைப்படி எரியூட்டப்படவேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆகவே அவர் களம்விழுந்தார் என்னும் செய்தியை அறிந்ததுமே நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். இங்கு வந்தபோது போர் முடிந்துவிட்டிருந்தது. அவர் வெறும்களத்தில் வானை நோக்கியபடி அம்புப்படுக்கைமேல் கிடந்தார்.”

“நாங்கள் அவரை சூழ்ந்துகொண்டோம். அவரை காவல்காத்தோம். அவர் உடலை இங்கிருந்து அகற்றமுடியாது என்பதனால் அவர் உயிர்விடுவதற்காக இங்கே காத்து அமர்ந்தோம். ஆனால் அவர் இப்படி மாதக்கணக்காக இங்கே கிடப்பார் என நாங்கள் எவ்வகையிலும் எண்ணவில்லை. அவருடைய உடல்நிலை மாறுதலே இல்லாமல் நீடித்ததும் என்ன செய்வதென்று குலக்குழு கூடி உசாவினோம். அவர் விழைவதுவரை இங்கே இவ்வண்ணமே அவருடைய இருத்தல் நீடிக்கட்டும். எங்கள் குலத்தவர் சூழ்ந்து அவருடன் உரையாடிக்கொண்டிருப்போம் என்று முடிவுசெய்தோம்.”

“ஆனால் அவரிடம் என்ன பேசுவதென்று எங்களுக்கு தெரியவில்லை. எங்கள் உரையாடல் எங்களுக்குள் நிகழ்வதாக ஆகிவிடலாகாது என உணர்ந்தோம். அவருக்கு உகந்தவற்றைப் பேச எண்ணினோம். எங்கள் குலச்செய்திகளை சொன்னோம். அவர் அதை விழையவில்லை. அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் நிகழ்வன எதையும் அவர் செவிகொள்ளவில்லை. ஒருமுறை எங்கள் குடிமூத்தவர் ஒருவர் எங்கள் குலக்கதை ஒன்றை சொன்னார். கங்கர்குலத்தவளாகிய கௌதமி என்னும் முதுமகளின் கதை அது. அவள் மைந்தன் நாகம் கடித்து நஞ்சேறி இறந்தான். அவள் துயருற்றிருக்கையில் அர்ஜுனகன் என்னும் வேடன் அவளிடம் அந்நாகத்தை சுருக்கிட்டு பிடித்துக் கொண்டுவந்து அளித்து நீ உன் பழியை தீர்த்துக்கொள் என்றான். அவள் அவனிடம் வாழ்வின் நெறியை சாவு எவ்வண்ணம் வகுக்கிறது என்று விரித்துரைத்தாள்.”

“அந்நெறிநூலைக் கேட்டதும் பிதாமகர் எதிர்வினையாற்றினார். மெல்ல முனகி விழிதிறந்து அந்நூலில் கூறப்பட்ட நெறித்தொகை முதன்மையான ஒன்று, அதை முறைப்படுத்திச் சொல்க என எங்களுக்கு ஆணையிட்டார். நாங்கள் எங்கள் குலப்பாடகரை வரவழைத்து அதை பாடலாக சொல்கோத்தோம். மீண்டும் அவர் முன் அதை ஓதியபோது அவர் விரும்பி கேட்டார். முகம் மலர்ந்து ஆம் ஆம் ஆம் என்று மும்முறை சொன்னார். அதை எங்கள் குலத்திற்குக் கொண்டுசென்று பிதாமகரின் சொல் பெற்ற நெறிநூல் என அறிவித்தோம். அதன்பின் இல்லறத்தை வகுத்துரைக்கும் சுதர்சனனின் கதையை அவர் முன் பாடினோம். அதையும் அவர் ஏற்றருளினார்.”

“அதன்பின் கண்டுகொண்டோம், பிதாமகர் நாடுவது நெறிநூல்களையே என்று. ஆகவே எங்கள் குடியின் ஊர்கள் அனைத்திற்கும் தூதனுப்பி பாடகர்களை வரச்சொன்னோம். அவர்கள் பிதாமகர் முன் அமர்ந்து நெறிநூல்களை பாடச்செய்தோம். அவர் சொல் சொல் எனக் கேட்டு ஏற்றார். ஒரு சொல்லில் உடன்பாடில்லை என்றால்கூட உடலை அசைத்து எதிர்வினையாற்றினார். கால்கட்டைவிரல் அசைந்தால் அச்சொல் மாற்றப்படவேண்டும். கைகளின் கட்டைவிரல் அசைந்தால் அந்நெறியே மாற்றப்படவேண்டும். தலை அசைந்தால் அந்நூலே ஒவ்வாதது. முகம் மலர்ந்து ஆம் என்று உரைத்தால் அந்நூல் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.”

“அவ்வண்ணம் இங்கே சென்ற ஒன்பது மாதங்களில் உயர்ந்த கதைகளினூடாக வாழ்வின் பொருளையும் மீட்பின் வழிகளையும் உசாவி வகுத்துரைக்கும் இருநூற்றெண்பத்திரண்டு நெறிநூல்கள் அவர் முன் ஓதப்பட்டன. எங்கள் குலநெறிகள் முடிந்ததும் வேறு குலங்களில் இருந்து நெறிநூல்களை கொண்டுவரச்சொன்னோம். பின்னர் அயல்நிலங்களில் இருந்தும் தொலைநாடுகளில் இருந்தும் நெறிநூல்களுடன் பாணர்களை அழைத்து வரச்சொன்னோம். இங்கே குடிகள் நடுவிலும் அரசவைகளிலும் பேசப்படும் அனைத்து நூல்களும் அவர் முன் வந்தாகவேண்டும் என்பது நாங்கள் வகுத்துக்கொண்ட நெறி.”

“அந்த முந்நூற்று எண்பத்தெட்டு நூல்களில் பிதாமகர் ஏற்றுக்கொண்ட நூல்கள் இருநூற்று எழுபத்திரண்டு.” நேற்று முன்நாள் இங்கே இளைய யாதவர் வந்திருந்தார். அவர் உரைத்ததே அறுதியான நெறிநூல்” என்றார் மிருகாங்கர். திகைப்புடன் சுதமன் “இளைய யாதவரா? இங்கா?” என்றார். ‘ஆம், அவர் வருவார் என பிதாமகர் எதிர்பார்த்திருந்தார் எனத் தோன்றியது. காலையில் தனியாக நடந்து வந்தார். அவரை தொலைவிலேயே கண்டுவிட்டோம். அவருடைய வருகையை உரைக்கும்பொருட்டு உள்ளே சென்றோம். அப்போது பிதாமகர் புன்னகை புரிந்துகொண்டிருந்தார்” என்றான் இளம் கங்கன்.

“அவரை அழைத்துவா என்று பிதாமகர் ஆணையிட்டார். அவர் உள்ளே சென்று அமர்ந்தார். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அல்லது இருவரும் எவ்வகையிலோ பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். இளைய யாதவர் நூல் ஒன்றை சொல்லத் தொடங்கினார். அதை அருகமர்ந்து நாங்கள் ஏடுபெயர்த்தோம். ஒவ்வொரு சொல்லுக்கும் தலையசைத்து அதை பிதாமகர் ஏற்றார். இளைய யாதவர் நூலுரைத்து முடித்ததும் பிதாமகர் கைகளைக் கூப்பியபடி இளைய யாதவரிடம் யாதவரே என் முன் வந்து நிலைகொள்க என்றார். இளைய யாதவர் அவ்வண்ணமே சென்று நின்றார். நீர் எவரோ அவ்வண்ணமே தோன்றுக என்றார் பிதாமகர். இளைய யாதவர் புன்னகைத்ததை கண்டேன்.”

“பீஷ்ம பிதாமகர் மெய்ப்பு கொண்டார். அவர் உடல் துடிப்பு எழுந்து அடங்கியது. விழிநீர் வழிய அவர் பாடல் என ஒன்றை சொன்னார். அவ்வண்ணம் ஒரு செய்யுளை அவர் சொல்வார் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே எவரும் எழுதிக்கொள்ளவில்லை. பின்னர் நாங்கள் ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்த சொற்களைக்கொண்டு அப்பாடலை மீட்டமைத்தோம். இளைய யாதவர் அவரை வாழ்த்திவிட்டு ஒரு சொல்லும் உரைக்காமல் நடந்து விலகினார். பிதாமகரின் சொற்கள் அடங்கின. விழிகள் மூடின. எல்லா நரம்புகளும் ஓயத்தொடங்கின. கால்விரல்களிலிருந்து உடல் குளிர் அடையலாயிற்று’ என்றான் இளைய கங்கன்.

“இந்த இருநூற்று எழுபத்திரண்டு நெறிநூல்களையும் ஒற்றை நூல்தொகை என எழுதிச்சேர்க்கலாம் என எங்கள் குலக்குழு முடிவுசெய்தது” என்று மிருகாங்கன் சொன்னார். “அவற்றை இப்போது தொகுத்து ஏடுகளில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பிதாமகர் உரைத்த இறுதிப்பாடல் அந்நூல்களை நிறுவுகிறது என்பதனால் இப்போது நிறுவுசொல் என்றே அந்நூல்கள் கருதப்படுகின்றன. அனுசாசன நிரை என்றே அவற்றுக்கு பெயர் இட்டிருக்கிறோம்” என்றான் இளம் கங்கன்.

மிருகாங்கன் “பிதாமகர் ஏற்பையும் மறுப்பையும் எவ்வண்ணம் நிகழ்த்துகிறார் என்பது எங்களுக்கு திகைப்பூட்டுவதாகவே இருந்தது. அவர் முதன்மை நெறிநூல்கள் பலவற்றை மறுத்து விலக்கினார். கேட்டதுமே மெய்யென்று தோன்றுபவை. கிருதயுகத்தின் ஒளிபடிந்தவை. அவர் ஏற்ற நூல்கள் பல எளியவை, கிராதரும் நிஷாதரும் கடைக்கொள்பவை. தொன்மையான அசுரப்பேரரசர்களும் அரக்கர்குடித்தலைவர்களும் வகுத்த நூல்களும் அவற்றில் உண்டு. எங்கள் குழப்பம் மிகுந்தபடியே வந்தது. ஆனால் மறுசொல்லின்றி செவிகொண்டோம். முறைப்படி இவற்றைத் தொகுத்தபோதுதான் உணர்ந்தோம், இந்நூல்களினூடாக எழுவது எழும் கலியுகத்திற்கான நெறி என்று.”

“கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் துவாபர யுகத்திலும் இருந்து எவையெல்லாம் கலியுகத்திற்கு வந்துசேரவேண்டுமோ அவற்றை மட்டுமே பிதாமகர் கொண்டார். எவை கலியுகத்தில் மாற்றாக பொருள்படாதமையுமோ அவற்றை. கலியுகத்திற்கான நெறிகளை மண்ணிலிருந்தும் நீரிலிருந்தும் கண்டடைந்தார். அவை ஒன்றென ஆக்கப்பட்டதே இந்த நிறுவுசொல் என்னும் நூல்தொகை. எழுயுகத்திற்கான அறம் பொருள் இன்பம் வீடு என நான்கையும் அறுதிபடச் சொல்லும் பிறிதொரு நெறிநூல் இல்லை என்று துணிந்தோம்” என்றார் மிருகாங்கன்.

“பிதாமகரின் அந்த அனுசாசனப் பாடல் என்ன?” என்றார் சுதமன். “பாடுக!” என்றார் மிருகாங்கன். இளம் கங்கன் கைகூப்பி கண்மூடி அந்தப் பாடலை சொன்னான்:

நன்மை தீமைகள்

அசைவன அசையாதவை

அனைத்தும் அவனே என்று அறிக!

நிகழ்வனவும் வருவனவும்

அனைத்தும் அவனே எனத் தெளிக!

உடல்கொண்டோருக்கு

இறுதிக்கணத்தில் காலவடிவம் என எழுபவன்

நாம் அறியாதன அனைத்தும் ஆன முழுமை

சிறந்தவை நலம் அளிப்பவை

இன்ப துன்பங்களும்

எண்ணித்தொட முடியாத அவனே என உணர்க!

அவனைவிட மேலான ஒன்றில்லை

சொல்லப்பட்ட இவையனைத்தும் அவனே

சொல்லப்படாதவையும் அவனே

புடவிப்பெருக்கின்

தோற்றமும் துலக்கமும் மறைவும் அவனே

பழுதற்றவன்

மேலானவன்

வீடுபேற்றை விரும்புபவனுக்கு பற்றுக்கோல் ஆனவன்

அழிவற்றவனாகிய நாராயணன்.

அறிக நெஞ்சே!

பணிக!

ஆம் அவ்வாறே ஆகுக!

சுதமன் தலைகுனிந்து அச்சொற்களை மீண்டும் உளம் மீட்டியபடி அமர்ந்திருந்தார். இளம் கங்கன் “இறுதியாக ஒரு நாகசூதன் வந்தான். ஒரு அரசப்பெருநாகம் வெடிப்பிலிருந்து கிளம்பி தொலைவில் அணுகி வருவதைக் கண்டதும் அஞ்சி அதை எவ்வகையிலாவது தடுத்து நிறுத்த முடியுமா என்று பார்த்தோம். அதை நோக்கி ஓடியபோது அது மறைந்தது. எவ்வண்ணம் மறைந்தது என்று எண்ணி சூழநோக்கியபோது அந்த நாகசூதன் வேலிவாயிலில் நின்றிருக்கக் கண்டோம். அருகே வந்து அவனைத் தடுப்பதற்குள் அவன் உள்ளே சென்றுவிட்டான். நாங்கள் அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றோம்” என்றான். சுதமன் திகைப்புடன் ஏறிட்டுப்பார்த்தார். மிருகாங்கன் தொடர்ந்தார்.

“பிதாமகர் அப்போது தனிமையில் கிடந்தார். அவன் அவர் அருகே அமர்ந்திருந்தான். அவர்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களுக்குள் ஓர் உரையாடல் நிகழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. அவர்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அங்கே திகழ்ந்தனர். ஒருநாழிகைப்பொழுது. அதன்பின் அவன் எழுந்துகொண்டான். பெருமூச்சுடன் வணங்கிவிட்டு திரும்பிச் சென்றான். அவன் வெளியே வந்தபோது அவன் விழிகளை கண்டோம். நாகவிழிகள், இமையா மணிகள். அவன் எங்களை அறியவே இல்லை. அவன் இந்தத் திறந்தவெளியில் இறங்கிச் சென்று மறைந்தான். அவன் நாகமென ஆகி மறைவான் என எண்ணி காத்திருந்தோம். அவன் காட்டின் எல்லைவரை தெரிந்தான். பின்னர் மறைந்துவிட்டான்.”

உள்ளிருந்து இளம் மருத்துவன் வெளிவந்து “அரசத்தூதர் எவர்?” என்று கேட்டான். சுதமன் எழுந்து “நான், ஆங்கிரீச குலத்தவனும் சாமவேதியனுமாகிய சுமங்கலரின் மைந்தன் சுதமன். அரசச்செய்தியுடன் வந்தவன்” என்றார். “அவரை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் சொல்லை அவர் செவிகொள்வார் என்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை, ஆனால் இன்னும் சற்றுநேரத்திற்குள் மட்டுமே நீங்கள் அவரை சந்திக்க முடியும்” என்றான் மருத்துவன். சுதமன் “அவர் உடல்நிலை…” என்றார். மருத்துவன் “அவர் உடல்நிலை முடிவை அடைந்துவிட்டது. அறிந்திருப்பீர், சூரியன் வடக்குமுகம் கொள்ளும் பொழுதில் உயிர்துறக்க அவர் எண்ணியிருந்தார். வடக்குமுகம் இன்னும் ஒரு நாழிகையில் தொடங்கும்” என்றான்.

சுதமன் நெஞ்சு அதிர “ஆம், அதைப்பற்றிக்கூட அங்கே பேசிக்கொண்டார்கள்” என்றார். “வடக்குமுகம் தொடங்குவதற்குள் தூதுச்செய்தியை கூறுக! கூறும் நிறைவு உங்களுக்கு அமையட்டும்” என்றான் மருத்துவன். “என் பரிசு…” என்றார் சுதமன். “அமைச்சரே, நீங்கள் இதற்குள் உணர்ந்திருப்பீர் என எண்ணினேன். நீங்கள் அவருடைய சாவுச்செய்தியை கொண்டுசெல்லும்பொருட்டே அனுப்பப்பட்டிருக்கிறீர். மகரசங்கராந்தியை ஒட்டியே ராஜசூயம் அங்கே எழவிருக்கிறது. அவர்களுக்கும் தெரியும், இது இன்று இங்கே நிகழும் என்று” என்றார் மிருகாங்கன்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74

பகுதி ஏழு : பெருசங்கம் – 6

சார்வாகர் உரக்க நகைக்கத் தொடங்கிவிட்டிருந்தார். அவர் எதையோ நோக்கி நகைக்கிறார் என்று அங்கிருந்தோர் எண்ணினார்கள். அவர் நோக்கு எங்கும் பதியாமை கண்டு குழம்பி ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு அணுகினார்கள். சுதமன் அவருடைய நகைப்பை கண்டார். தன்னை நோக்கி அவர் நகைப்பதாகத் தோன்றியது. அங்கிருந்தோரில் அரசவைத்தோற்றம் கொண்டவர் அவர் மட்டிலுமே. சுதமன் சுற்றிலும் நோக்கிவிட்டு தன் மேலாடையை எடுத்துச் சுழற்றி தலைப்பாகைபோல் அணிந்துகொண்டார். முப்புரிநூல் தெரிய அதை தோளினூடாகக் கழற்றி இடையில் சுற்றிக்கொண்டார்.

ஓசையில்லா நடையுடன் சென்று கூட்டத்தின் பின்னணியில் நின்றார். தன்னருகே விழிகள் பதற நின்றுகொண்டிருந்த அந்தண இளைஞனை பார்த்தார். அவன் உடலே வெம்மைகொண்டிருப்பதாகத் தோன்றியது. அவருடைய நோக்கைக் கண்டு அவன் அஞ்சியதுபோல விழிவிலக்கினான். அங்கிருந்து செல்லப்போவதுபோல் ஓர் அசைவு அவன் உடலில் ஏற்பட்டது. சுதமன் அவனை ஆறுதல்படுத்துவதுபோல புன்னகைத்தார். அவன் மேலும் அஞ்சி பின்னடைந்தான். இருவரின் தோளினூடாக சுதமன் எட்டிப்பார்த்தார். சார்வாகர் உரக்க பேசிக்கொண்டிருந்தார். எப்போது பேசத்தொடங்கினார்?

அவரால் முதலில் அவருடைய மொழியை புரிந்துகொள்ள முடியவில்லை. அது கீழ்நிலையோர் பேசும் மொழி. அதன் ஒலி மேலும் இழுபட்டு ஒரு நகைப்பு அத்தனை சொற்களிலும் கலந்திருப்பதுபோலத் தெரிந்தது. “நாற்குலங்களே, எண்பெருங்குடிகளே, எளியோரே, கேளுங்கள். இது மெய்யான சொல். நீங்கள் கேட்கும் ஒவ்வொரு சொல்லும் உங்களிடம் விற்கப்படும் பொருள் என நினைவுகூருங்கள். நீங்கள் பெறுவனவற்றுக்கு ஏழுமடங்கு விலை அளிக்கிறீர்கள். காணா விலை, அறியா விலை. குருதியுண்ணும் அட்டையென ஒட்டியிருக்கின்றன அச்சொற்கள் உங்கள் நெஞ்சில். உங்களுக்குள் புகுந்த தீய தெய்வங்கள் என ஆட்டிவைக்கின்றன உங்களை.”

“இதோ இத்தெருவில் நின்றிருக்கிறேன். தன்னந்தனியன். அடைய ஏதுமில்லாதோன். ஆகவே காக்கவும் பொறுப்பில்லாதோன். இந்த மண்ணில் இருந்து ஒரு பொடிப் புழுதியைக்கூட எடுத்துச் செல்லாதவன். அறிக, நான் கொள்வதொன்றுமில்லை இப்புவியில்! எனவே கோருவதும் ஏதுமில்லை. நான் அளிக்க வந்தவன். என் சொற்களை செவி கொள்க! அவை உங்கள் சித்தத்தில் வளர்க! அவை உங்கள் வழியென்று உணர்ந்தால் கொள்க, அல்லவென்றால் தள்ளுக! நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.” தன் இடையிலிருந்த பெருச்சாளித்தோல் கோவணத்தை தொட்டுக்காட்டி “இங்கிருந்து என் உடலில் ஒட்டியிருப்பதென்றால் இது ஒன்றே. இதுவும் என்றுமுள ஒட்டு அல்ல” என்று கூறி அதையும் உருவி அப்பால் வீசிவிட்டு ஆடையற்ற உடலுடன் நின்றார். மண்ணும் சாம்பலும் மூடிய நெடிய கரிய உடல். திரிதிரியாக தோளில் படர்ந்திருந்த சடைக்கற்றைகள். “இது கொடை. கொடைபெற்று விதைக்கும் நெல் நூறுமேனி பெருகும் என்று அறிந்தவர்களே எழுக! கொள்க, இரு கை நீட்டி இச்செல்வத்தைப் பெறுக!”

சுதமன் அந்தக் கூட்டத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரின் விழிகளும் ஒவ்வொரு உணர்வைக் காட்டின. பெரும்பாலானவற்றில் பதற்றமும் ஐயமும் தத்தளிப்பதுபோலத் தோன்றியது. அவர்கள் தங்கள் உடலை அங்கே நிறுத்தி, அதை ஒரு மறைவென்று ஆக்கி, அதற்குப் பின்னால் ஒளிந்திருப்பதுபோல. அவர்களின் விழிகள் இரு சிறு துளைகள். அப்பாலிருந்து அவர்கள் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது ஒரு கிளர்ச்சியூட்டும் நிகழ்வு. அதை எப்படி பிறரிடம் சொல்லிக்கொள்வது என கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். அதை உடனுக்குடன் அகத்தே சொல்லென சமைத்துக்கொள்ளவும்கூடும். பிறருக்கில்லாத ஓர் நிகழ்வு தனக்கு நிகழ்ந்துள்ளது. அந்நிகழ்வை சென்று தொடுமளவுக்கு தான் துணிச்சல் கொண்டவனாக இருந்திருக்கிறேன்.

சார்வாகர் எவரையுமே நோக்கியதாகத் தெரியவில்லை, எவரிடமும் என அவர் பேசவுமில்லை. அவர் அங்கில்லாத ஒருவரை நோக்கி பேசுவது போலிருந்தது. அல்லது அங்குள்ள மானுடர் அனைவரையும் ஒன்றெனத் திரட்டிய பேருருவம் ஒன்றுடன் பேசிக்கொண்டிருப்பதுபோல. “எளியோரே, உழைத்து உண்போரே, வரிசெலுத்தி அரசுகளை அமைப்போரே, அவர்களுக்கு கோட்டையும் அரண்மனையும் கட்டுவோரே, அவர்களுக்கு அணிகளும் ஆடைகளும் செய்வோரே, அவர்களுக்கு ஏவல் செய்வோரே, அவர்பொருட்டு களம்படக் காத்திருப்போரே, அவர்களைப் பாடி புகழ்சேர்ப்போரே, அவர்களுக்கு வேதச்சொல் சமைத்தளித்து வீதம் பெறுவோரே, கேளுங்கள். இதோ உங்களுக்கான சொல். வருக, இதோ உங்களுக்கான மாற்றில்லா மெய்!”

அவருக்கு அச்சொற்களைச் சொல்வதில் ஒரு பயிற்சி இருந்தது. ஒவ்வொரு சொல்லிலும் சவுக்கின் சொடுக்கு எழுந்தது. முச்சந்திகள் தோறும் கூவிக்கூவி நாவுக்குப் பழகிய சொற்கள் அவை. ஆகவே ஒன்றுகூட குறி தவறவில்லை. அவர் சூழ்ந்திருப்போரின் விழிகள் மாறிவிட்டிருப்பதை கண்டார். “அதோ ஒலிக்கிறது உங்கள் பேரரசனின் வேள்விமுரசம். அது உங்களுக்கு கூறுகிறது அவன் மும்முடி சூடுவான் என்று. அவன் அனுப்பிய நான்கு திசைப்புரவிகள் நானிலம் வென்று மீண்டன என்று. அவன் குடி பெருமைகொண்டது என்று. அவன் பெயர் என்றும் வாழும் என்று. அவன் கொடிவழி இங்கே என்றுமிருக்கும் என்று. மானுடச்சருகுகளே, புல்விதைகளே, அதனால் உங்களுக்கு என்ன? நான் கேட்கிறேன், அதனால் உங்களுக்கு என்ன? நீங்களே உசாவுக, அதனால் உங்களுக்கு என்ன?”

“அவன் படைகள் கொண்டுவந்த பெருஞ்செல்வத்தை கைநீட்டிப் பெறுகையில் கேட்டுக்கொள்ளுங்கள், எங்கிருந்து வந்தது அது என்று. உங்களைப்போன்ற தொலைநிலத்து மாந்தர்ப்பெருந்திரள் வயல்களில் பயிரிட்டு, வெறுநிலங்களில் ஆபுரந்து, கடல்களில் அலையாடி ஈட்டியது அது. அதை ஒருவன் வரியெனப் பெற்றான். பிறிதொருவன் கப்பம் எனக் கொண்டான். இங்கே ஒருவன் அறம் என அளிக்கிறான். நாளை ஒருவன் வேள்விக்கொடை எனப் பெறுவான். நாணில்லையா உங்களுக்கு? உடன்பிறந்தானைக் கொன்று அவன் ஊனை உண்டு வாழும் கீழ்மை அல்லவா இது? பிள்ளைக்கறி தின்னும் பெருமுதலையின் வாழ்வல்லவா இது?”

“இரத்தல் இழிது. இரவலரே, திருடனிடம் இரத்தல் இழிதினும் இழிது. நாணுக, உங்கள் கைகள் இரக்கும் பொருட்டு எழும் என்றால்! மண்வெட்டி பிடித்த கைகள், ஆநிலைக் கோலேந்திய கைகள், மழுவும் உளியும் ஏந்திய கைகள், தறியோட்டும் கைகள் ஏற்க விரியும் எனில் குலமகள் தன் இடைப்பிளவை கடைவிற்க விரிப்பதற்கு நிகர் அது. உங்கள் குடித்தெய்வங்கள் அமைதியிழக்கும். உங்கள் குடிமூத்தோர் நினைவுள் எழுந்து வந்து பழிப்பர். உங்களுள் தோன்றி உங்கள் ஆழம் நாணுறும். உங்கள் குருதியில் முளைக்கும் மைந்தர் உங்கள் நினைவுக்கென கீழ்மைகொள்வர். பசியினால் சாகக்கிடப்பினும் அழுகிய பொருள் உண்ணார் அறிவுடையார். இதோ சுவைநாடி மலம் உண்ண எழுந்திருக்கிறீர்கள், மானுடரே. சிறுமை கொள்க உங்களுக்காக! காறி உமிழ்க உங்கள் நிழல்கள் மேல்!”

சுதமனின் உடல் நடுக்கு கொள்ளத் தொடங்கியது. சார்வாகர் எப்போதுமே தடையற்றுப் பேசுபவர்கள் என அவர் அறிந்திருந்தார். ஆனால் அவ்வண்ணம் ஒருவர் அஸ்தினபுரியின் தெருவில் நின்று பேசமுடியும் என அவர் எண்ணியிருக்கவே இல்லை. அங்கிருந்தோர் அனைவருமே அவ்வண்ணமே உணர்கிறார்கள் என அனைவரின் உடல்களிலும் எழுந்த தவிப்பு காட்டியது. அவர்கள் அங்கிருந்து அகன்றுசென்றுவிட விழைந்தார்கள். ஆனால் அச்சொற்கள் அவர்களை கட்டிவைத்தன. அங்கிருந்து உடனே அகல்பவன் அச்சொற்களுக்கு தன்னை இலக்காக்கிக்கொள்கிறான். அதை அங்கே வெளிக்காட்டுகிறான். அங்கே அச்சொற்களை எதிர்கொள்ள உகந்த ஒரே வழி அது எவரிடமோ சொல்லப்படுவதென்ற நடிப்புடன் அங்கே நின்றிருப்பது மட்டுமே.

“உணவை மெல்கிறீர்கள். உண்பனவற்றை செரிக்கிறீர்கள். உங்கள் குருதியும் தசையுமென ஆக்கிக்கொள்கிறீர்கள். எஞ்சியதை கழிக்கிறீர்கள். ஒவ்வாதனவற்றை உமிழ்கிறீர்கள். மானுடரே, சொற்களை மட்டும் விழுங்குவதென்ன? அவற்றை உள்ளே கல்லென இரும்பெனச் சுமந்தலைவதென்ன?” என்று சார்வாகர் கூவினார். “யானையை ஆள்கிறான் சிறுமானுடன். ஏன் என்று அறிவீர்களா? அவன் அதை எதனால் கட்டி வைத்திருக்கிறான்? அந்த எடைமிக்க இரும்புச் சங்கிலியாலா? அந்தக் குத்துக்கம்பாலும் துரட்டியாலுமா? அவன் அளிக்கும் சிற்றுணவாலா? அவ்வப்போது செவிபற்றி துதிக்கை தடவி அளிக்கும் எளிய அன்பினாலா? சொற்களால்! சொற்களால்! சொற்களால்!” இரு கைகளையும் மேலே தூக்கி சார்வாகர் சுழன்றார். “உணர்க, சொற்களால்! அறிக, சொற்களால்! தெளிக, சொற்களால்! வெறும் சொற்களால்!”

அன்றொரு யானையிடம் சொல்லாடினேன். அதனிடம் கேட்டேன், உன் அளவிறந்த ஆற்றல் எப்படி இச்சிறு மானுடனுக்கு அடிமையென்றானது என்று. உன்னில் திகழும் கருங்காடு எப்படி இந்நகர் கோட்டையில் அடுக்கப்பட்ட பாறைகளைப்போல் மாறியது என்று. அதன் சிறுவிழிகளில் துயரைக் கண்டேன். அவை கலங்கி வழிய செவி பின்னடைய அது உடல் தணித்தது. அறியேன், நான் உயிர்வாழ வேறு வழியில்லை. எனக்கு இங்குதான் உணவும் துயிலிடமும் காப்பும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்றால் நான் அப்பெருவெளியில் திசையிழந்து அலமறுவேன். அக்காற்றில் கரைந்தழிவேன் என்றது. அதன் விழிகளை நோக்கி நகைத்து அதனிடம் சொன்னேன் “கரிய பேருருவே, காட்டின் விதையே, முகில்வடிவே, உன்னை கட்டியிட்டிருப்பது சொல் என அறிவாயா? பருவடிவம் கொண்டெழும் பெருவிசைகளை கட்டும் அருவமென்றமைந்த அதன் வல்லமையை அறிவாயா?”

அதனிடம் நான் சொன்னேன் “அது ஒலிகளின் தொகை. ஒவ்வொரு ஒலித்துளிக்கும் பொருள் என சிலவற்றை ஏற்றி அதை சொல்லென்றாக்குகிறார்கள். அச்சொற்களுக்கெல்லாம் பொருள் அளிக்கும் காணாப் பெருவெளி என நின்றிருப்பதே மொழி என்றறிக! மதகரியே, மொழியால் கட்டுண்டவன் நீ.” அது செவி முன்மடித்து, நீர்விழிகள் மின்ன என்னை நோக்கியது. நான் அதனிடம் சொன்னேன் “நீ சிறுகுழவியாக இவர்களிடம் வந்தாய். இவர்கள் உன்னிடம் சில சொற்களை சொன்னார்கள். தழை என்றனர். தளை என்றனர். கவளம் என்றனர். கந்து என்றனர். நீர் என்றனர். நில் என்றனர். குனி என்றனர். கொட்டில் என்றனர்.”

அதனிடம் நான் “ஒவ்வொரு சொல்லுடனும் பிறிதொன்றை சேர்த்தனர். ஆணைக்கு அடிபணிதலே அன்னம் என்று உன் நெஞ்சில் பதியச் செய்தனர். பணிக என்று அவர்கள் ஆணையிடுகையில் நீ உன் பேருடல் குறுக்கி நிலம்படிகிறாய். உன் உள்ளத்தில் இனிய தழைகளின் மணம் எழுகிறது. கல்லை தூக்குக என அவர்கள் கூவுகையில் இனிய குளிர்நீர் என பொருள்கொண்டு நீ துதிக்கை நீட்டி சுமை எடுக்கிறாய். என்னை மேலேற்றுக என்று அவர்கள் சொல்கையில் நீ அன்னக் கவளம் என பொருள்கொள்கிறாய். அவர்கள் உன் மத்தகத்தின் மேல் அமர்ந்து காதுகளை காலால் உதைத்துச் செல் என கூவுகிறார்கள். ஆம், இனிய கரும்பு என நீ காலெடுத்து வைக்கிறாய்” என்றேன். “அமைக என்கிறார்கள். நீ அதை வலி என்று புரிந்துகொள்கிறாய். நில் என்கிறார்கள் நீ அதை கால்நகத்தில் துரட்டியின் கூர் என எடுத்துக்கொள்கிறாய்.”

யானை திகைத்தது. “ஆம், இச்சொற்களுக்கெல்லாம் நான் அளிக்கும் பொருள் வேறு. அவர்கள் அவற்றைக்கொண்டு என்னை பிறிதொன்றை செய்யவைக்கிறார்கள்.” நான் அதன் காதுமடலை பற்றிக்கொண்டேன். “ஒன்று செய்க, அவ்வொலிகளில் இருந்து உன் அகம் அதற்கு அளிக்கும் பொருளை விலக்கிக் கொள்க! அதற்கு அவர்கள் அளிக்கும் பொருளையே கொள்க! குனி என்றால் உன் எழுமத்தகம் தாழ்த்துவதேதான். பணி என்றால் உன் கால்களை மண்பட மடிப்பதேதான். தூக்கு என்றால் துதிக்கையில் எடை சுமப்பதேதான். வேறொன்றில்லை.” யானை என்னிடம் “ஆம், வேறொன்றில்லை” என்றது. “அவ்வாறே, மொழியின் பொருள் செயல் மட்டுமே” என்றேன். “ஆம் ஆம் ஆம்” என்றது அந்த வேழம்.

அன்று மாலை மெலிந்த சிற்றுடல்கொண்ட பாகன் அதனருகே வந்தான். யானையிடம் துரட்டியை நீட்டி “பணிக!” என்றான். அது அசைவிலாது செவிமடித்து நின்றது. “பணிக!” என அவன் ஆணையிட்டான். “எடு காலை!” அது சொல்கொள்ளவில்லை. அவன் துரட்டியால் அதன் நகத்தை கிழித்தான். அது அவனை பின்காலால் மெல்ல தட்டியது. அவன் எலும்பு முறிந்து அக்கணமே உயிரிழந்தான். தன் கால்தளையை உடைத்தது யானை. துதிக்கை தூக்கி பிளிறியது. அக்கணமே தொலைவில் நீலநிற அலைகள் எனத் தெரிந்த தன் தொல்மலைகளை கண்டுகொண்டது. பின்னர் அதை எதனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

எளியோரே, துயருறுவோரே, கட்டுண்டவரே, கேளுங்கள். சொல்லுக்கு அது எழுப்பும் செயல் மட்டுமே தற்பொருள் என்று கொள்ளுங்கள். சொல்லுக்கு அது விளைவிக்கும் பயன் மட்டுமே பிற்பொருள் என்று கொள்ளுங்கள். கடமை என்பது துயரளிக்கும் என்றால் அச்சொல்லின் பொருள் துயரமே. கடமை என்பது சாவில் நிற்கும் என்றால் அச்சொல் குறிப்பது சாவை மட்டுமே. பற்று என்பது தளைப்படுத்தும் என்றால் அது அவ்வாறே. மலராத மெய்யறிவு கொண்டவர்களே, அரசு என்பது அச்சுறுத்துகிறது என்றால் அது அச்சமன்றி வேறல்ல. அரசன் என்பவன் வரிகொள்வான் என்றால் அவன் ஏந்திய கை அன்றி பிறிதல்ல. காவல் என்பது படைக்கலம். நெறி என்பது தண்டனை. அவை என்பது மேல்கீழ் அடுக்கு. குலம் என்பது எல்லை. குடி என்பது சிற்றெல்லை.

உங்கள் உள்ளம் அளிக்கும் பொருளென்பது உங்களுக்குள் முலைப்பாலுடன் புகட்டப்பட்டது. நஞ்சு உங்கள் மூதன்னை அருந்திய சுனையில் கலக்கப்பட்டிருந்தது. அவள் குருதிவழியாக கொடிவழிகளில் ஊறி உங்களுக்கு வந்தது. உங்கள் மைந்தருக்கு அதை அளிக்காதீர். உங்கள் நெஞ்சு கூறும் பொருளை நோக்கி அகன்றுசெல்க கீழ்மையே என்று ஆணையிடுங்கள். துலாவின் மறுதட்டில் எது வைக்கப்படுகிறதோ அதுவே உங்களுக்கு மெய்யாக அளிக்கப்படுகிறதென்று உணர்க! அன்னம் கொடுத்து வெற்றுச் சொல் பெறுகிறீர்கள். அரும்பொன் கொடுத்து பொருளிலாக் கனவை பெறுகிறீர்கள். கொடுப்பதற்கு நிகர் எனக்கு வேண்டும் என்று கேளுங்கள். அதுவே விடுதலையின் முதற்சொல்.

நான்கு சொற்கள், நான்கு திசைகளென உங்களைச் சூழ்ந்துள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு. எங்கு திரும்பினாலும் அதில் முட்டிக்கொள்கிறீர்கள். அவை உங்களுக்குக் காவலென உணர்கிறீர்கள், எல்லை என அறிவதில்லை. இதோ இந்தக் கோட்டை என. இது வெண்மையாக்கப்பட்டுள்ளது, இல்லாமலாக்கப்படவில்லை. நான்கு சொற்கள், மானுடரே, நான்கு சொற்கள். நான்கு சொற்களால் தளைக்கப்பட்டிருக்கிறீர்கள். நான்கு சொற்களால் வகுக்கப்பட்டிருக்கிறீர்கள். நான்கு சொற்களுக்குள் உங்கள் அகச்சொற்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அலைகள் எழுந்து எழுந்து அறைவதெல்லாம் அவற்றின் மேலேயே. கொந்தளித்துக் கொப்பளிப்பதெல்லாம் அதற்குள்ளேயே.

நான்கு சொற்கள், அறம் பொருள் இன்பம் வீடு. இளமையில் நா பழகியதும் அளிக்கப்படுகிறது அறம். அன்பில் குழைத்து அன்னத்துடன் கலந்து ஊட்டப்படுகிறது. செய் என்று, செய்யாதே என்று, சரி என்று, தவறு என்று, நன்மை என்று, தீமை என்று, உளது என்று இலது என்று, அன்று என்று ஆம் என்று. நீங்கள் மண்ணில் நிறுத்தப்படவில்லை. அறத்தில் நிறுத்தப்படுகிறீர்கள். நீரிலாடவில்லை, அறத்திலாடுகிறீர்கள். அன்னமென உண்டு, மூச்சென உயிர்த்து, ஒளியெனக் கண்டு, மணமென முகர்ந்து நீங்கள் களித்தது அறத்தையே. அறம் எனும் சொல். மானுடரே, தெய்வமெனத் திரட்டி உங்கள் முன் நிறுத்தப்பட்டிருப்பது அறமென்னும் சொல்லே.

பின்னர் கால் வளர்ந்து கை வளர்ந்து நீங்கள் வெளியே இறங்கினீர்கள். பொருள் என உங்களிடம் கூறினார்கள். உழைக்க, சுமைதூக்க, ஏவல்செய்ய, போரிட உங்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் அது. பொருளென்னும் சொல் உங்களை ஆட்டுவித்தது. அறமும் பொருளும் முரண்படக் கண்டு திகைத்தீர்கள். பின்னர் அறமனைத்தும் பொருளென்று உருமாறக் கண்டீர்கள். பொருளே அறமென்றமைந்தவர் வெல்வதை அறிந்தீர்கள். பொருளில் அமர்ந்தீர்கள். பொருளுக்கென விழிநீரும் வியர்வையும் சிந்தினீர்கள், குருதிகொடுத்தீர்கள். அப்பொருளுக்குப் பொருள் என்ன என்று கேட்டீர்கள். அதற்கு இன்பம் என்று மறுமொழி பெற்றீர்கள். அவ்வின்பம் எப்போதும் துளித்துளியாகவே கிடைப்பது ஏன் என வினவினீர்கள். மேலும் இன்பம் என விழைவுகொண்டீர்கள். அதன்பொருட்டு மேலும் பொருள் மேலும் பொருள் என தூண்டப்பட்டீர்கள். மேலும் உழைப்பு மேலும் அடிபணிதல் மேலும் அலைச்சல் என சிக்கிக்கொண்டீர்கள். மேலும் வியர்வை மேலும் விழிநீர் மேன்மேலும் குருதி.

விந்தையான முரண்பாடு, உலகோரே! மிகமிக நுட்பமான பொறி அல்லவா இது? மேலே சிவந்திருக்கிறது இன்கனி. நீங்கள் சிக்கிக்கொண்டிருப்பதோ சேறு. துள்ளி எழுந்தோறும் அமிழ்கிறீர்கள். மேலும் விழைவுகொண்டு எழுகிறீர்கள். இன்பவிழைவே துன்பமென விளையும் இந்தச் சூழ்ச்சியை என்றேனும் எண்ணியிருக்கிறீர்களா? மூழ்கி மூழ்கி இனி எழவியலாதென்றமைகையில் உங்களுக்கு சொல்லப்படுகிறது வீடுபேறு. விடுக, விழைவதனைத்தையும் விட்டு அகல்க, அதுவே பேரின்பம் என்று. இன்பமென வந்தவையெல்லாம் துன்பத்தின் நடிப்புருக்களே என்று. இன்பத்தைத் துறத்தலே இன்பத்தை அடையும் வழி என்று. நன்று, விட்டவர் அடைந்த இன்பம் ஏது என்றால் விடுதலின் இன்பம் என்கிறார்கள். நன்று நன்று. துறந்தோர் அடையும் பேறு என்னவென்றால் துறவுப்பெருமை என்கிறார்கள். நன்று நன்று மிக நன்று!

விட்டவர் அடைவதெல்லாம் வேறெங்கோ என்பவர் உண்டு. மண்ணை துறந்தால் விண்ணை அடையலாம். அங்கிருப்பதோ இம்மண்ணில் அவர்கள் துறந்தவை அனைத்தும் என்கிறார்கள். துறப்பது அடைவதற்காகவே. அடைவதெல்லாம் துறப்பதற்காகவே என்று அதற்கு பொருள் சொல்கிறார்கள். இங்கிருப்பவை எல்லாம் நீங்கள் அமைத்தவை. இந்தக் கோட்டை, இந்த அங்காடி, இந்த அரண்மனை, இந்தப் பெருமுரசங்கள், ஓங்கிப்பறக்கும் இக்கொடி. ஆனால் இவை அளிக்கும் இன்பங்களை நீங்கள் விழையலாகாது எனப்படுகிறது. அவற்றை நீங்கள் இங்கே விரும்பித்துறந்தால் வேறெங்கோ வேறெவ்வகையிலோ பெறலாம். எளியோரே, இந்த சொற்பசப்புக்கு, இந்தச் சூழ்ச்சிக்கு எப்படி உடன்பட்டோம்? எப்படி உளம் அளித்தோம்?

அறிக, உங்களுக்கு அறம் என பொருள்படும் சொல் வேறு எவருக்கோ இன்பம் என்று பொருள்படுகிறது! உங்களுக்குப் பொருள் என்று நின்றிருக்கும் சொல் உங்கள்மேல் நின்றிருக்கும் சிலருக்கு இன்பம் என்று பொருள் அளிக்கிறது. நீங்கள் இன்பம் என எண்ணுவது அவர்களுக்கு உரிமை என்று பொருள்படுகிறது. நீங்கள் வீடுபேறு என நினைப்பது அவர்களுக்கு வேடிக்கை என்று பொருள்படுகிறது. எண்ணுக மூடரே, எழுந்து நின்று இதோ உரைக்கிறேன். மலையேறி நின்று தொலைவு கண்டவனின் சொல் இது. விடுபட்டபின் திரும்பி சிறையை நோக்கி சொல்லப்படுவது இது. நான்கு மெய்ப்பொருட்களும் பொய். இன்பம் ஒன்றே மெய். இன்பம் அன்றி ஈட்டுவன பிறிதில்லை.

“சார்வாகா, மூடா, சதுர்வித புருஷார்த்தமும் பொய் என்கிறாயா?” என்று ஓர் அந்தணன் கூவினான். அவன் கையில் தர்ப்பை இருந்தது. அவன் தன்னை அங்கே காட்டாமல் திரளில் மறைந்து நின்றிருந்தான். அவனை மீறி முன்னெழுந்துவிட்டிருந்தான். “பொய் மட்டுமல்ல அறிவிலி, ஏமாற்றும் கூட. கன்னம் வைத்து இல்லம் நுழையும் கள்வனின் கையிலிருந்து எழும் துயில்மயக்குப் பொடி அது.” அந்தணன் உடைந்த குரலில் பதறும் கைகளை வீசியபடி முன்னெழுந்தான். “பெரும்பழிகொண்டவனே, கீழ்மகனே” என்று கூவினான். “வேதம் பொய்யா? வேதம் பொய்யென்றா சொல்கிறாய்?” சார்வாகர் உரக்க நகைத்து “அது அக்கள்வனின் கையிலிருக்கும் கடப்பாரை” என்றார்.

“கீழ்மகனே!” என்று கூவியபடி அந்தணன் முன்னால் பாய அவனை அவன் தோழர் இருவர் பற்றி இழுத்துச் சென்றனர். “வாருங்கள் சுரஜரே, இவன் யார்? இரந்துண்டு வாழும் இழிமகன். இவனிடமா சொல்லெடுப்பது?” என்றான் ஒருவன். “அந்தணனே, நீ மட்டும் என்ன உழுதுண்டு வாழ்கிறாயா?” அவன் சீற்றத்துடன் “வேதம் பழித்த வீணனே, உன் நாவை அறுப்பேன். ஈயமுருக்கி ஊற்றுவேன்!” என்று கூவினான். அவனை சுரஜன் பிடித்துக்கொண்டான். “சதமுகரே, என்ன இது? சேற்றுப்பன்றியுடன் மற்போரிடவா செல்கிறீர்கள்? வருக, நமக்கு நம் இடம் உள்ளது” என்றான். “செல்க, உங்களிடம் சொல்ல என்னிடம் சொல் இல்லை. நான் களஞ்சியத்தாரிடமும் காவலரிடமும் பேசுகிறேன், கள்வரிடம் அல்ல” என்றார் சார்வாகர். சுரஜன் “உன்னை கொல்வோம். உன் குருதி காண்போம்!” என்று கைநீட்டி கூவினான். “கொல், வந்து கொல். என்னை கொன்றால் நீயும் என்னைப்போல் ஆகிவிடுகிறாய்” என்றார்.

அவர்கள் ஒருவரை ஒருவர் இழுத்துக்கொண்டு விலகிச் சென்றார்கள். சுதமன் அவர்கள் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தார். ஒருவரின் கால் இடற இன்னொருவர் தூக்கிக்கொண்டார். அவர்கள் ஏன் வந்துநின்று இதை கேட்டார்கள்? சார்வாகர் அவர்களை நோக்கி சிரித்து “இது உங்களுக்காகவும்தான் அந்தணர்களே, தொழிலென்று எரியோம்புதலைக் கொண்டிருக்கும் எளியோர் நீங்கள்” என்றார். அவர்கள் அவர் குரல் கேட்காதபடி விரைந்து ஓடினார்கள். கூடியிருந்தவர்கள் சிரித்தனர். ஒரு சிலர் அவர்களை அச்சுறுத்தும்பொருட்டு ஓசைகளை எழுப்பினர். களிமகன் ஒருவன் கையில் மொந்தையுடன் அவர்களைத் தொடர்ந்து ஓடினான். காலடி கேட்டு அவர்கள் மேலும் விசைகொண்டு ஓடினர்.

சார்வாகர் தொடர்ந்தார். கேளுங்கள் மானுடரே, நான்கு விழுப்பொருட்கள் என்பது பொய். மானுடனுக்கு விழுப்பொருள் ஒன்றே. அது இன்பம். உண்ணுங்கள், குடியுங்கள், உற்றாருடன் மகிழ்ந்திருங்கள். அதுவே இன்பம். காதலில் ஆடுங்கள், கலைகளில் திளையுங்கள், கணந்தோறும் கற்றுக்கொள்ளுங்கள், அதுவே பேரின்பம். அவ்வின்பத்தை பிறருக்குத் துன்பமில்லாமல் அடைவதற்குரிய நெறிகள் மட்டுமே அறம். அவ்வின்பத்தை அடைவதற்குரியது மட்டுமே பொருள். வந்த வாழ்வில் விழைந்ததை அடைந்து நிறைவுகொள்ளலே வீடுபேறு. ஆகவே இன்புறுங்கள். குற்றவுணர்வின்றி இன்பத்தில் திளையுங்கள்.

மகிழ்ந்திருங்கள். மானுடன் மகிழ்வதையே இங்குள்ள அனைத்தும் விரும்புகின்றன என்று உணருங்கள். இல்லையேல் நீரில் தண்மையும், காற்றில் நறுமணமும், கனிகளில் இனிமையும், அன்னத்தில் சுவையும் அமைந்திருக்காது. விண்ணிலிருந்து ஒளி மண்மேல் பொழிந்திருக்காது. வண்ணங்களும் வடிவங்களுமென இப்புடவி பெருகி நம்மை சூழ்ந்திருக்காது. அறத்தின்பொருட்டு இன்பத்தை இழந்தோர் அறத்தையும் இழந்தவரே. பொருளின் பொருட்டு இன்பத்தை இழந்தோர் பொருளை வீணடித்தோரே. வீடுபேற்றின் பொருட்டு இன்பத்தை இழந்தோர் வெறுமையை விலைகொடுத்து பெற்றுக்கொண்டவரே. அறிக, ஐயமின்றி அறிக, அறிந்து தெளிக, எச்சமின்றி தெளிக, எண்ணித் தலைசூடுக, இன்பம் ஒன்றே விழுப்பொருள்! மானுடருக்கு இப்புவியில் அளிக்கப்பட்டுள்ள ஆணை இனிதிருத்தல் மட்டுமே!

அவர் தன் யோகக்கோலைத் தூக்கி “நிலைநிறுத்தப்பட்டது இவ்வுண்மை. நின்று பொலிக இவ்வுண்மை! நீடு வாழ்க இவ்வுண்மை! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். பின்னர் எவரையும் நோக்காமல் அங்கிருந்து திரும்பி நடந்தார். அங்கிருந்தோர் ஒவ்வொருவரும் அவர்களை ஒன்றாகக் கட்டியிருந்த சரடு மறைய தனித்தனியாக ஆனார்கள். ஒருசிலர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். சிலர் பொருளின்றி சிரித்தனர். சிலர் தலைதாழ்த்தி எடைமிக்க காலடிகளுடன் நடந்தனர். சுதமன் அந்த இளைஞனை நோக்கினார். அவன் வெறிபடிந்த கண்களுடன், உலர்ந்த உதடுகளுடன் நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். சுதமன் தன் மேலாடையை அவிழ்த்து தோளில் இட்டபடி தேர் நோக்கி சென்றார்.