கல்பொருசிறுநுரை

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 25

பகுதி நான்கு : அலைமீள்கை – 8

நான் காளிந்தி அன்னையை சந்திக்கச் சென்றபோது என் நெஞ்சு ஒழிந்து கிடந்தது. ஒரு சொல் எஞ்சியிருக்கவில்லை. நீள்மூச்செறிந்தபடி, தன்னந்தனியனாக உணர்ந்தபடி நடந்தேன். கணிகர் என்னிடம் சொன்ன அனைத்தையும் மறந்துவிட்டேன். நான் உணர்ந்தது ஒன்றையே. தந்தையே, பாலைநிலங்களில் ஆழ்ந்த மண்வெடிப்புகளுக்குள் மிகமிகத் தூய்மையான நீர் தேங்கியிருக்கும். புறவுலகிலிருந்து ஒளி மட்டுமே அங்கே சென்று அதை தொடும். அத்தகைய நீர்ச்சுனை ஒன்றில் என் கைகளை கழுவப் போகிறேன்.

ஆனால் அது என் பணி, நான் செய்தே ஆகவேண்டியது. ஏனென்றால் நான் இந்த ஆடலில் இருந்துகொண்டிருக்கிறேன். இந்தக் களத்தில் நான் வென்றாகவேண்டியிருக்கிறது. காளிந்தியன்னையை சந்திக்கவேண்டும் என்று நான் செய்தி அனுப்பினேன். ஆனால் அச்செய்திக்கு எனக்கு மறுமொழி வந்தது இளவரசி கிருஷ்ணையிடமிருந்து. கிருஷ்ணையின் ஆட்சியில் காளிந்தியன்னை இருக்கிறார் என அறிந்திருந்தேன். ஆனால் அவ்வண்ணம் ஒரு நேரடியான கட்டுப்பாடு இருக்கும் என நான் எண்ணியிருக்கவே இல்லை.

எதன்பொருட்டு நான் அன்னையை சந்திக்கவேண்டும் என்று கிருஷ்ணை கேட்டிருந்தார். என் அன்னையை சந்திக்க எனக்கு தனியான நோக்கங்கள் தேவையில்லை, அவர்களை சந்தித்தாலே போதும் என்று சொல்லி அனுப்பினேன். எனில் இளவரசி கிருஷ்ணையை சந்தித்தபின் நான் அரசியை சந்திக்கலாம் என்று செய்தி வந்தது. வேறுவழியில்லை. ஆகவே நான் கிருஷ்ணையை சந்திக்கச் சென்றேன்.

இளவரசியின் அரண்மனை மைய அரண்மனையிலிருந்து சற்றே விலகி இருந்தது. அங்கே துரியோதனனின் அரவக்கொடி பறப்பதை கண்டேன். அங்கு முன்பு அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி பறந்துகொண்டிருந்ததை நினைவுகூர்ந்தேன். என்னை உள்ளே அழைத்துச்சென்ற ஏவலன் அங்கே சிறுகூடத்தில் அமர்த்திவிட்டுச் சென்றான். அந்த அறையிலிருந்த முழுமையும் தூய்மையும் என்னை திகைக்கச் செய்தன. தந்தையே, மொத்த துவாரகையிலும் ஓர் அரசியின் அவை என தோன்றியது அதுவே.

இளவரசி கிருஷ்ணை என்னை உள்ளே அழைப்பதாகச் சொன்னார்கள். நான் உள்ளே நுழைந்து அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த இளவரசி கிருஷ்ணையை வணங்கினேன். அவர் முகமன் உரைத்து பீடம் அளித்தார். “கூறுக!” என்று கூரிய சொல்லால் ஆணையிட்டார். அவர் களைத்துப்போயிருந்தார். கண்களைச் சூழ்ந்து கருவளையங்கள். அகவை முதிர்ந்தவர்போல, நோயுற்றவர்போல தோன்றினார். முன்பு சாம்பனின் துணைவியாக அவர் துவாரகையில் நுழைந்தபோது இருந்த தோற்றத்தை நினைவுகூர்ந்தேன். அவரை பேரரசி திரௌபதியின் இளைய வடிவம் என்றனர். நகரே சாலைகளில் கூடி அவரை வரவேற்றது. ‘கன்னங்கரிய முத்து’ என்றனர் சூதர்.

“இளவரசி, நான் என் அன்னை காளிந்தியை சந்திக்கவேண்டும்” என்றேன். “என் தனிப்பட்ட நோக்கத்துக்காக அன்னையை சந்திக்க விழைகிறேன். அவருடைய நற்சொல் என்னை நிறைவுறச் செய்யும் என எண்ணுகிறேன். அதன்பொருட்டு நான் எவருடைய ஆணையையும் பெறவேண்டியதில்லை என அறிவேன். ஆனால் தாங்கள் என் அன்னையை பேணி பணிவிடைசெய்து வருவதனால் என் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லும்பொருட்டு வந்தேன்” என்றேன்.

“அவர் தன் விருப்பத்தால் என் ஆணைக்குள் இருக்கிறார்” என்று இளவரசி கிருஷ்ணை சொன்னார். அவரின் விழியை என்னால் நோக்கமுடியவில்லை. வஞ்சமா சினமா வெறுப்பா எனத் தெரியாத அனல் ஒன்று அங்கே நிறைந்திருந்தது. “நான் ஒப்பாமல் எவரும் அவரை சந்திக்கமுடியாது” என்றார். “ஆனால் எவ்வண்ணம் நீங்கள் எனக்கு ஒப்புதல் மறுக்கமுடியும்?” என்றேன். “முடியும், அவர் என்னை அதன்பொருட்டு அமர்த்தியிருப்பதனால். அதை மறுக்கவேண்டும் என்றால் நீங்கள் யாதவர்கள் படைகொண்டு வந்து என்னை வெல்லுங்கள்” என்றார்.

நான் அவரை நேருக்குநேர் பார்த்தேன். அவரிடம் எளிதில் சொல்லாட முடியாது என்று புரிந்துகொண்டேன். ஆகவே பணிவுடன் சொல்லெடுத்தேன். “இளவரசி, நான் பூசலுக்கு வரவில்லை. என் அன்னையை சந்திக்க எனக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றேன். அவர் என்னை சில கணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு “அன்னை அரசியலுக்கு அப்பால் இருக்கிறார். அவர்மேல் உங்கள் அழுக்குகளை கொண்டுவந்து கொட்டவேண்டியதில்லை” என்றார். “ஆம், அறிவேன். நான் வந்தது அவருடைய வாழ்த்தை நாடித்தான்” என்றேன்.

இளவரசி கிருஷ்ணை “எதன்பொருட்டு?” என்றார். அக்கணம் என்னுள் ஒரு கூர் எழுந்தது. “அன்னை முன்னர் என்னிடம் ஒருமுறை சொன்னார், நான் என் தந்தையின் தோற்றம் கொண்டவன் என்று. அதை நினைவுகூர்கிறேன். துவாரகையின் யாதவர்குடியின் அரசனாக நான் முடிசூடிக்கொள்ளவேண்டும் என்றால் எட்டு அன்னையரில் காளிந்தியன்னையின் வாழ்த்தே முதலில் அமைவது என்று தோன்றியது” என்றேன். இளவரசி கிருஷ்ணையின் கண்கள் சுருங்கின. “நீங்களா, முடிசூடுவதா?” என்றார். “ஆம், ஏன் நான் முடிசூடக்கூடாது? யாதவக்குடிகளில் விருஷ்ணிகளின் ஆதரவு என்னிடமே” என்றேன்.

“மூத்தவர் ஃபானுவின் அவைமுதல்வர்களில் ஒருவர் நீங்கள். அவருடைய தூது என வந்தவர்” என்றார். “இன்று ஒவ்வொருவரும் அவ்வண்ணம் ஒவ்வொரு தோற்றத்தில் இருக்கிறார்கள். நான் என் இலக்கை நன்கறிந்தவன்” என்றேன். “ஏனென்றால் நானே யாதவ மைந்தர் பதின்மரில் தகுதி கொண்டவன்.” அவர் விழிகளில் ஐயம் அலையடிப்பதை கண்டேன். “கணிகர் என்னிடம் சொன்னார், என் வழிகள் சிக்கலானவை, ஆனால் அவை என்னை தகுதிப்படுத்தி இலக்கடையச் செய்யும் என்று” என்றேன்.

அவர் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு புன்னகை மலர்வதை விழிகளில் முழுக்க மறைக்க முடியவில்லை. “கணிகர் இங்கிருக்கிறார் என அறிவேன்” என்றார். “அவர் என்னுடன் இருக்கிறார்” என்றேன். “அவரிடமிருந்து ஆணைபெற்றே அன்னையை சந்திக்கச் செல்கிறேன்.” இளவரசி கிருஷ்ணை உள்ளூர புன்னகைத்துக்கொண்டே இருப்பதை என்னால் காணமுடிந்தது. என்னுள் கணிகர் ஒவ்வா விழைவொன்றை தூண்டிவிட்டு அது பெருகிய களிமயக்கினால் நான் அங்கே வந்திருக்கிறேன் என்று அவர் எண்ணுவதை புரிந்துகொண்டேன். ஆனால் என் விழிகளில் என் எண்ணங்கள் தெரியாதவாறு என்னை மறைத்துக்கொண்டேன்.

“நீங்கள் அன்னையின் வாழ்த்தைக் கொண்டு என்ன செய்யமுடியும்?” என்று இளவரசி கிருஷ்ணை கேட்டார். “இளவரசி, நீங்களே அறிவீர்கள். லக்ஷ்மணையன்னையின் மைந்தரை பேசி நம்பவைத்து யாதவர் தரப்புக்கு கொண்டுவந்தவர்களில் நானும் ஒருவன். அவர்களில் மூவர் என்னை ஆதரிக்கிறார்கள். என் இளையோர் இருவர் என்னுடன் இருக்கிறார்கள். காளிந்தியன்னை என்னை ஆதரிக்கிறார் என்ற ஒரு சொல்போதும், விருஷ்ணிகளில் ஒருசாரார் எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்” என்றேன்.

“அதை வைத்து நீங்கள் எதிர்த்து எழுவீர்களா என்ன?” என்றார். மிகமிக சொல்தேர்ந்து கூறப்பட்டது அந்தக் கேள்வி. நான் “ஆம், அரசி” என்றேன். “கிளர்ந்தெழவேண்டியதில்லை. கிளர்ந்தெழக்கூடும் என்ற வாய்ப்பு இருந்தாலே போதுமானது… அவ்வண்ணம் ஒரு வாய்ப்பு கண்ணுக்குப்பட்டாலே என்னை நோக்கி ஆதரவு வரத்தொடங்கும். என்ன இருந்தாலும் ஃபானு அந்தகர்களின் தலைவர். விருஷ்ணிகள் அவரை இன்னும் முற்றேற்கவில்லை.”

“விருஷ்ணிகளின் ஆதரவுக்கும் காளிந்தியன்னையின் ஆதரவுக்கும் என்ன தொடர்பு?” என்று இளவரசி கிருஷ்ணை கேட்டார். “ஓர் உணர்வுத்தொடர்பு உள்ளது. விருஷ்ணிகளில் பலர் அன்னை காளிந்தியை பர்சானபுரியின் ராதையின் வடிவமாகவே எண்ணுகிறார்கள். பர்சானபுரியின் கோபிகை இன்று விருஷ்ணிகளின் இல்லந்தோறும் அமைந்திருக்கும் தெய்வம்” என்றேன். இளவரசி கிருஷ்ணையின் விழிகளை நோக்கியபோது அவர் நிறைவுற்றுவிட்டிருப்பதை உணர்ந்தேன்.

என்னால் அத்தனை கூர்மையாக அத்தருணத்தை உருவாக்க முடிந்ததை எண்ணி நானே வியந்தேன். “இளவரசி, மூத்தவர் சாம்பன் துவாரகையை முழுதாள்வதை நான் அறிவேன். அவரை வென்று இந்நகரை யாதவர் கைப்பற்றமுடியாதென்பதை என் மூத்தவர் உணரவில்லை. ஷத்ரியரும் விலகி நின்றிருக்கையில் யாதவர் ஒருபோதும் அசுரர்களையும் நிஷாதர்களையும் போரில் வெல்லமுடியாது. நான் நிலைமையை நன்குணர்ந்தவன். அதை என் மூத்தவரின் அவையில் என்னால் சொல்லமுடியாது. ஆகவே எனக்கான கனவுகளை நானே உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.”

சொல்க என்பதுபோல அவர் பார்த்தார். “இளவரசி, நான் விழைவது ஒரு யாதவநிலம். மதுராவையும் மதுவனத்தையும் இணைத்து ஓர் அரசு. இங்கல்ல, யாதவக்குடிகள் வாழும் கங்கையமுனை சமவெளியில். இங்கே இப்படி ஒரு மாபெரும் வணிகநகரை ஆட்சிசெய்யும் ஆற்றல் யாதவர்களிடமில்லை. அதை கணிகரும் என்னிடம் சொன்னார்” என்றேன். அவர் “ஆம்” என்றார். “ஒருவேளை என் கணக்குகள் நிறைவேறும் என்றால் நான் சாம்பனிடம் அதைப்பற்றி நேரில் பேசவே விழைகிறேன். அதில் இருசாராருக்கும் நன்மையே விளையும்” என்றேன்.

“சாம்பன் விழைந்தால் நீங்கள் இங்கு வந்து இணையக்கூடுமா?” என்றார் இளவரசி கிருஷ்ணை. “ஆம், ஆனால் வெறுமனே இளையோனாக வரமாட்டேன். என்னுடன் விருஷ்ணிகளின் குடித்தலைவர்கள் பலர் வந்தாகவேண்டும். என் இளையோர் சிலரும் உடனிருக்கவேண்டும். யாதவர்களின் தலைவன் என சாம்பன் என்னை ஏற்பார் என்றால், எனக்கான நிலத்தை வாக்களிப்பார் என்றால் வருவேன். அதற்கு இன்னும் பொழுதும் நாளும் உள்ளது” என்றேன். இளவரசி கிருஷ்ணை “ஆம், அதையே நானும் எண்ணினேன். உங்கள் தரப்பை திரட்டிக்கொள்க. கணிகரிடம் எண்ணிச் சொல்சூழ்க. உரிய தருணத்தில் சாம்பனிடம் பேச நானே உங்களுக்கு அவையமைக்கிறேன்” என்றார்.

“இளவரசி, மெய்யாகவே நான் உங்களை சந்திக்க வந்ததே இதன்பொருட்டுத்தான்” என்று நான் சொன்னேன். “இந்தப் பேச்சு எல்லா வகையிலும் எனக்கு உதவுவது.” இளவரசி கிருஷ்ணை என்னிடம் “கணிகரின் நோக்கம் என்ன?” என்றார். “உரிய முறையில் விருஷ்ணிகளை கோல்கொள்ளச் செய்வது என்று அவர் என்னிடம் சொன்னார். விருஷ்ணிகளின் தலைவனாக நானே உகந்தவன் என்பதனால் அவர் என்னை ஆதரிக்கிறார்.” இளவரசி கிருஷ்ணை உள்ளே வாய்விட்டு சிரிப்பதை கண்கள் காட்டின. அவர் என்னை அறிவிலா தன்விரும்பி என நினைக்கிறார். அவ்வெண்ணமே நீடிக்கட்டும். என்னை இளையோன், அறிவிலி என்று பிறர் எண்ணுவதுபோல எனக்கான கவசம் வேறில்லை.

“நன்று, நான் உங்களுக்கான சந்திப்பை ஒருக்குகிறேன்” என்று இளவரசி கிருஷ்ணை சொன்னார். அவருடைய ஏவலன் சென்று காளிந்தி அன்னையின் அணுக்கியிடம் பேசிவிட்டு வந்து அவர் சித்தமாக இருப்பதாக சொன்னான். “நான் தங்களுக்கு இதன்பொருட்டு கடமைப்பட்டிருக்கிறேன், இளவரசி” என்றேன். “நம் அணுக்கம் நீடிக்கட்டும்” என்று அவர் சொன்னார். “நான் தங்களை சந்திக்கவேண்டும் என்று கணிகர் சொன்னார். அவ்வாறு சந்திப்பதை இங்கே எவரிடமிருந்தும் மறைக்கவும் முடியாது. ஆகவே இந்த முறையான சந்திப்பு நிகழ்வது நன்று என்றார்” என்றேன்.

இளவரசி கிருஷ்ணை வாய்விட்டு நகைத்து “கணிகர் அறியாத ஒன்றில்லை” என்றார். “அவரை நான் சந்திக்க விழைகிறேன். அவர் எந்தைக்கு அணுக்கமானவராக இருந்தார்” என்றார். “ஆம், அதை சொல்லிக்கொண்டே இருந்தார்…” என்றேன்.

 

காளிந்தி அன்னையின் தவக்குடிலுக்கு நான் கிளம்பியபோது என்னுடன் தானும் வருவதாக கிருஷ்ணையும் கிளம்பினார். நான் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. இளவரசி வெளியே சென்றபின் நான் கூடத்தில் காத்திருந்தேன். என்னை அழைத்துச்செல்லவிருந்த ஏவலன் “சற்றே பொறுங்கள், அரசியும் உடன் வருகிறார்” என்றான். நான் ”யார்?” என்றேன். “அரசி கிருஷ்ணை, தானும் உடன் வருவதாகச் சொன்னார்” என்றான்.

நான் திகைத்துவிட்டேன். அது எவ்வகையிலும் முறையானது அல்ல. அதுவரை மிக நுட்பமாக அத்தருணத்தை நான் கையாண்டதாக எண்ணிக்கொண்டிருந்தேன். முறைமைகளை மீறிய ஒரு முரட்டுச் செயல்பாடு வழியாக என்னை அவர் வென்றுவிட்டார் என்று தோன்றியதும் சினம் எழுந்தது. என் உடலெங்கும் அது படபடத்தது. அவ்வண்ணமென்றால் என் மாற்றுருவை அவர் ஏற்கவில்லை. அந்த அறையிலிருந்து விலகியதுமே அதன் மேல் ஐயம் கொள்கிறார். அல்லது அந்த மாற்றுருவை முழுமையாக நம்பி என்னை ஓர் அறிவிலி என்றே எண்ணுகிறார்.

ஆனால் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று என்னை நானே ஆணையிட்டுக்கொண்டேன். நான் அதுவரை உருவாக்கிய அனைத்தையும் அந்தப் பொறுமையிழப்பால் இழந்துவிடலாகாது. சற்றுநேரத்திலேயே மேலாடை அணிந்தபடி இளவரசி கிருஷ்ணை வந்தார். “செல்வோம், நானும் உடன் வருகிறேன். நான் அன்னையைப் பார்த்து இரு நாட்களாகின்றன” என்றார். நான் “அரசி, இது தனிப்பட்ட முறையில் நான் அன்னையை சந்திக்கும் நிகழ்வு. அவர்கள் என்னிடம் ஏதேனும் தனிச்செய்தி சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்றே அவரை பார்க்கச் செல்கிறேன்” என்றேன்.

“அவ்வண்ணம் ஒரு தனிச்செய்தி இன்று அவருக்கு இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அப்படி இருப்பினும் கூட அதை நான் அறியாது கூற வேண்டியதில்லை” என்று கிருஷ்ணை கூறினார். சினம் மேலெழ நான் ஒருகணம் நடுங்கினேன். பின்னர் “என் அன்னையிடமிருந்து ஒரு வாழ்த்தை நான் பெற்றுக்கொள்ள நீங்கள் உடனிருந்தாக வேண்டுமா?” என்றேன். “ஆம், என் ஆணையில்லாமல் இங்கே எதுவும் நிகழாது” என்றார். என் அத்தனை கட்டுப்பாடுகளும் சிதறின. “இளவரசி, இந்த அரசில் அல்ல எந்த அரசிலும் என் மூத்தவரின் ஆணைக்கப்பால் பிறிதொரு ஆணையை நான் ஏற்றுக்கொள்வதில்லை” என்றேன்.

அவர் சினத்தில் முகம் சுருங்க பற்கள் தெரிய என்னைப் பார்த்து “யாதவபுரிக்குள் எனது ஆணையே செல்லும். என் கோல் இங்கு நிலைகொள்கிறது” என்றார். “இல்லை, அது என்னிடம் செல்லாது, இளவரசி” என்றபடி நான் திரும்பிக்கொண்டேன். “நான் சென்று அன்னையை சந்திக்கப் போகிறேன். நீங்கள் ஒன்று செய்யலாம். உங்கள் படைகளை அனுப்பி என்னை சிறைப்படுத்திவிடலாம். தலை கொய்யலாம். ஆனால் என் விருப்பின்றி ஒரு ஆணையை என் மீது செலுத்தமுடியாது” என்றேன். அவர் நடுங்குவதை கண்டேன். என்னுடைய அந்த முகத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் நினைத்தவன் அல்ல நான் என்று அக்கணத்தில் உணர்ந்துகொண்டிருந்தார்.

நான் தலைவணங்கி அறையைவிட்டு வெளியே கிளம்பும்போது அவர் என் பின்னால் வந்தார். “என்னால் உங்கள் தலை கொய்ய முடியாது என்று எண்ணுகிறீர்களா?” என்றார். “முடியும். ஏனெனில் முன்பின் எண்ணாது வெறும் விழைவையும் ஆணவத்தையும் மட்டுமே நம்பிச்சென்ற ஒருவரின் மகள் நீங்கள். என் தலை கொய்யலாம். ஆனால் யாதவநிலத்தில் உங்கள் அசுரகுடியினரைவிட மிகுதியான படைவீரர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணுங்கள். நாங்கள் திரண்டெழுந்து வந்து உங்களை வென்று உங்கள் மைந்தர்களின் தலைகொண்டு போவது நிகழக்கூடாதது அல்ல. என் தலையை உங்கள் மைந்தர்களின் தலையை வைத்து ஆடுங்கள்” என்றேன்.

அவர் உடல் நடுங்க முகமெங்கும் சினம் கொதிக்க நின்றார். கைகளை முறுக்கி பற்களை இறுகக் கடித்து என்னை நோக்கி வந்து “அங்கு நீங்கள் என்ன பேசினாலும் எனக்கு தெரியும். நான் அறியாது எதையும் இந்நகரில் எவரும் உரைக்க இயலாது” என்றார். “அது உங்கள் திறன். அதைப்பற்றி எனக்கு ஒரு பொருட்டும் இல்லை. ஆனால் என் மீது பிறர் ஆணை எழாது என்பதை மீண்டும் சொல்ல விழைகிறேன்” என்றேன். தளர்ந்து அவர் கையை தொங்கவிட்டபோது வளையல்கள் ஒன்றின் மேல் ஒன்று அமைந்து ஓசையெழுந்தது. “நன்று, செல்க!” என்றார். நான் மீண்டும் தலைவணங்கினேன்.

“ஆனால் அரசியென நான் அமர்ந்திருக்கையில் என் முன் நின்று நீங்கள் சொன்ன இச்சொற்களுக்காக தாங்கள் வருந்தவேண்டியிருக்கும். துவாரகை பேரரசென எழும். மணிமுடி சூடி சாம்பன் இதில் அமர்ந்திருப்பார். ஒருநாள் இங்கிருந்து படைகொண்டு சென்று அஸ்தினபுரியை அழிப்பேன். அங்கு வஞ்சத்தில் வென்று அமர்ந்திருக்கும் அவ்வீணர்களை சிதைப்பேன். அவர்களின் கொடிவழியில் ஒருதுளிக் குருதியும் எஞ்சாமலாக்குவேன். அன்று ஒருவேளை விருஷ்ணி குலமும் முற்றழிக்கப்பட்டிருக்குமெனில் அது இப்போது நீங்கள் உரைத்த இச்சொற்களுக்காகவே” என்றார்.

நான் உரக்க நகைத்து “எது அழியும் எது வாழும் என்பதை மானுடரின் ஆணவம் முடிவெடுப்பதில்லை என்பதை தங்கள் தந்தையின் வரலாற்றைக்கொண்டு குருக்ஷேத்ரத்தில் அறிந்தேன். இனி இத்தகைய சொற்கள் எதையும் செவிகொள்வதில்லை என்று சொல்லிக்கொண்டேன்” என்றேன். “என் தந்தை வஞ்சத்தால் தோற்கடிக்கப்பட்டார். அரசனுக்குரிய பேரியல்புகளுள் தந்தைக்குரிய நல்லியல்புகளும் கொண்டவர். அவரை வென்றது அச்சிறப்புகளே” என்றார் கிருஷ்ணை. “நான் அத்தகைய புறவாயில்கள் எதையும் திறந்துபோட்டு அமர்ந்திருக்கவில்லை. எனக்கு அரச முறைமைக்கு அப்பாற்பட்ட நெறியென ஏதுமில்லை. எந்த எல்லைக்கும் சென்று எதையும் இயற்றி வெல்லலாம், வெற்றியே அறமென்றாகும் என்று சொன்னவர் உங்கள் தந்தை. இதோ அதை தலைமேற்கொண்டு அமர்ந்திருக்கிறேன்” என்றார்.

“எந்தை வென்றவர் அல்ல” என்று நான் சொன்னேன். “அவர் சொல் முழுமையானதும் அல்ல.” அவர் ஏளனத்துடன் “இல்லை, என் நோக்கில் அவரே வென்றவர். கலியுகத்தின் இறைவன் அவரே. முழுமையாகவே அவரை ஏற்று ஒழுகவிருப்பவள் நான். ஆகவே இங்கு, இந்த துவாரகையில் என் தந்தை கனவுகண்ட அரசொன்றை நிறுவுவதும் அதன் மேல் அமர்ந்து எந்தை பெயர் சொல்லி ஒரு மைந்தனை ஈன்று அரியணை அமர்த்திச் செல்வதும் மட்டுமே நான் கொண்டிருக்கும் இலக்கு. அது நிகழும். நோக்குக!” என்றார்.

நான் “இது தங்கள் தந்தையின் குரல் அல்ல, இளவரசி. இது அஸ்தினபுரியின் அரசி திரௌபதியின் குரல்” என்றேன். “இதுவல்லவா சத்யவதியின் குரல்? தேவயானியின் குரல், தமயந்தியின் குரல்? காலந்தோறும் இவ்வண்ணம் பெண்டிர் அலையலையென எழுந்து வருகிறீர்கள் போலும். நன்று, இதை வைத்து ஆடுவது ஊழ் எனில் அதுவே முடிவெடுக்கட்டும்” என்று சொல்லி நான் திரும்பிச்சென்றேன். என் பின் உருகும் இரும்புப் பதுமை என அரசி கிருஷ்ணை நின்றுகொண்டிருப்பதை நோக்காமலே நடந்தேன். இரும்பு இரும்பையே ஈனுகின்றது. எரிகொண்டுருகி அனல்கொண்டு நிற்கையிலும் இரும்பு இரும்பின் இயல்புகளையே வெளிப்படுத்துகிறது.

நான் எண்ணிக்கொண்டேன் இரும்பு இங்கு ஆற்றும் பணிதான் என்ன? வெட்டுவது, துளைப்பது, முறுக்குவது, பற்றி இறுக்குவது. இரும்பு உலோகங்களின் அரசன். கொதிநிலையில் இரும்பு பொன்னென்று தன்னை காட்டுகிறது. ஒருவேளை பொன்னென்று அது தன்னை எண்ணிக்கொண்டிருக்கவும் கூடும். ஆயினும் இரும்பு இரும்பேதான். அதன் ஆற்றல்கள் எல்லையற்றவை. ஆனால் அதைக்கொண்டு ஓர் ஆலயச்சிலையை எவரும் வடிப்பதில்லை. அதன் உறுதி இணையற்றது ஆயினும் காலத்தில் துருவேறி மண்ணென்றும் புழுதியென்றும் ஆகி அது மறைந்தே ஆகவேண்டும். உருகி எழுந்து பொன் பொன்னென்று தருக்கும் இரும்பிடம் நீ துரு மட்டுமே என்று சொல்வதற்குரிய நாவுகள் என்றும் சூழ்ந்திருக்கவேண்டுமல்லவா?

அறியேன், இது நான் என்னிடமே சொல்லிக்கொண்டதாக இருக்கலாம். ஏவலனுடன் நடக்கையில் நான் அங்கே நிகழ்ந்த அந்நாடகத்தின் பொருளென்ன என்று எண்ணிக்கொண்டேன். முதலில் ஒருமுகம், பின்னர் இன்னொரு முகம். இரு முகம் காட்டி ஒரே அவையில் நின்றிருக்கிறேன். இரண்டுமே என் முகங்கள் அல்ல. ஒன்று நான் அவர்களுக்காகக் காட்டியது. ஒன்று எனக்கென சமைத்துக்கொண்டது. இத்தருண வெளிப்பாடுகளுக்கு அப்பால் நான் யார்? வெறும் விழைவும் ஆணவமும் என நிறைந்திருக்கும் என் அகத்துக்கும் அப்பால் நான் யார்?

அப்போது ஒன்று தோன்றியது, அங்கு நான் கண்ட கிருஷ்ணையின் மெய்யுருவும் அதுவல்ல என்று. அவர் தன்னை அவ்வண்ணம் சமைத்துக்கொள்கிறார். அதற்கப்பால் ஆழத்தில் பிறிதொருவராக நின்றிருக்கிறாரா? எந்தையே, அவர் உங்களை தெய்வமென்று ஏற்றவர் அல்லவா? அவ்வண்ணம் தெய்வங்களை மானுடர் உதறிவிட முடியுமா? தெய்வங்கள் மேல் கசப்பு கொள்வதும் வஞ்சம் கொள்வதும்கூட இறைவழிபாடே அல்லவா?

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 24

பகுதி நான்கு : அலைமீள்கை – 7

நான் அவைக்குள் நுழைந்தபோது மூத்தவரின் குரல் உரத்து ஒலித்துக்கொண்டிருந்தது. வழக்கமாக அவ்வாறு உரத்துப் பேசுபவர் அல்ல அவர். இளமை நாளிலேயே துவாரகையில் எப்போதுமே குரல் தணிந்தவராகவும் விழி தழைந்தவராகவுமே அவர் இருந்திருக்கிறார். அவரே யாதவ இளவரசர்களில் மூத்தவர். ஆனால் குடிநிகழ்வுகளன்றி பிறிதெங்கும் அவரை இளவரசராக அமரச்செய்ததில்லை. ஷத்ரிய அவைகளில் அவர் பெரும்பாலும் அழைக்கப்பட்டதில்லை. வீரரல்ல என்று இளமையிலேயே அவர் அடையாளம் காணப்பட்டுவிட்டார். நூல் நவில்தலும் அவருக்கு இயலவில்லை. எங்கோ எவரோ ‘நீ ஆநிரை மேய்ப்பதற்குரியவன், பிறிதொன்றல்ல’ என்று கூறிய சொல் அவர் உள்ளத்தில் ஆழத்தில் பதிந்தது. ஆழத்தில் ஆநிரை மேய்ப்பவராக தன்னை எண்ணிக்கொண்டிருந்தார். அவ்வாறல்ல என்று அவைகளில் நடித்தார்.

அவர் தன் தனித்த கனவுகளில் அந்நகரிலிருந்து கிளம்பிச்சென்று பசும்புல்வெளிகளில் ஆநிரைகளுடன் அமர்ந்திருப்பவராகவே தன்னை எண்ணிக்கொண்டார் என நான் அறிவேன். தங்கள் மைந்தர்களில் வேய்குழல் மீட்டும் திறன்கொண்டவர் அவர் மட்டுமே. தங்கள் வேய்குழலுக்கு நிகரானது அவரது இசைத்திறன் என்று குடிமூத்தவர்கள் கூறுவதுண்டு. தன் வேய்குழலுடன் எங்கோ குயில்கள் பாடும் பசுவெளியில் அமர்ந்திருப்பவர் என அகத்தே திகழ்ந்தார். அவர் குழலிசைக்கையில் முகத்திலிருக்கும் கனவை கூர்ந்து பார்த்திருக்கிறேன். அதோடு நானே அவரென்றாகி அவ்வண்ணம் இசைத்து அந்த உளநிலையை உணர்ந்திருக்கிறேன். அன்னை அவர் இளமையில் குழலிசைத்தபோது அதை விரும்பியிருந்தார்.

தங்கள் இளமைக்காலத் தோழர் ஸ்ரீதமர் அவருக்கு குழல் கற்பித்தார். ஆனால் அவருடைய துணைவியர் அவர் குழலிசைப்பதை தடுத்தனர். அவருடைய மைந்தர்கள் அதை வெறுத்தனர். அவருடைய நான்கு துணைவியருமே யாதவக்குடியை சேர்ந்தவர்கள்தான். இருவர் அந்தகர், போஜர் குலத்தை சேர்ந்தவர்கள். இருவர் விருஷ்ணிகுலத்தை சேர்ந்தவர்கள். அவர்களும் இளமையில் குழல்கேட்டு வளர்ந்தவர்களே. ஆனால் அவர்கள் குழலோசையை வெறுத்தனர். தங்கள் மைந்தர்கள் அதை கேட்காமலேயே வளர்த்தனர். குழல் என்பது யாதவர்களின் இழிவின் அடையாளம் என்னும் உளநிலை அவர்களிடமிருந்தது. எந்த அவையிலும் அவர்கள் குழலிசை ஒலிக்க விடுவதில்லை.

மூத்தவர் குழலிசைப்பதையே விட்டுவிட்டார். மிக அரிதாக நாங்கள் மட்டுமே அமர்ந்திருக்கையில் சில மெட்டுகளை வாசிப்பார். அதை அரசியிடம் ஒருமுறை நான் சொன்னபோது அரசி சீற்றத்துடன் எழுந்துவிட்டார். முகம் சிவந்துவிட்டது. கண்களில் நீர் கோத்தது. மறுநாள் என்னிடம் மூத்தவர் “ஏன் நீ அதை அவளிடம் சொன்னாய்?” என்று கேட்டார். “அவள் அன்னமும் நீரும் மறுத்து படுத்திருக்கிறாள். அழுதுகொண்டே இருக்கிறாள். அவளை அமைதியடையச் செய்யவே முடியவில்லை. நீங்கள் என்னை இழிவுசெய்யும்பொருட்டே குழலிசைக்கிறீர்கள் என்கிறாள்” என்றார். நான் பல மாதங்கள் அரசியிடம் பேசவே முடியவில்லை.

உண்மையிலேயே குழல் அவ்வாறு குலஇழிவின் அடையாளமாக ஆகிறது என்பதை நான் பின்னரே அவைகளில் உணர்ந்தேன். பிரத்யும்னனின் அவையில் ஒருமுறை ஷத்ரியப் படைத்தலைவர் ஒருவர் எல்லையை ஊடுருவிய கூர்ஜரர்களைப் பற்றி சொல்கையில் “அவர்கள் குழலோசைக்கெல்லாம் கட்டுப்படுபவர்கள் அல்ல, வாள் தேவை அவர்களை எதிர்கொள்ள” என்றார். பிரத்யும்னன் சிரித்தார். அச்சிரிப்பை அதற்கு முன் எங்கெல்லாம் கண்டிருக்கிறேன் என்று எண்ணி திகைத்தேன். இளமையில் பிரத்யும்னன் எங்களுடன் விளையாடும்போது உடைவாள்போல இடையில் குழலை அணிந்துகொண்டிருப்பார். குழலைக் கொண்டு வாட்போரிடுவார். அவையெல்லாம் எளிய நகையாட்டுகள் அல்ல குலஇளிவரல்கள் என அப்போதுதான் உணர்ந்தேன்.

இருமுனைகள் நடுவே ஆடிக்கொண்டிருந்தார் மூத்தவர். ஒவ்வொரு அவையிலும் மேலும் மேலும் சீண்டப்பட்டு தன்னை உறுதியானவராக காட்டிக்கொண்டார். ஷத்ரிய அவைகளில் தனக்கு இடம் வேண்டுமென்று வீம்பு கொண்டார். அவ்வாறு ஷத்ரிய அவைகளில் இடம்பெற்ற போதெல்லாம் அவைமுறைமைகளிலும் அவைச்சொற்களிலும் பிழைகள் இயற்றி இளிவரலுக்கு ஆளானார். ஒவ்வொரு முறையும் அவைகளில் இருந்து நாணி முகம் சிவந்து, தன்னை எண்ணியே சீற்றம் கொண்டு, பற்களைக் கடித்து, கைகளைச்சுருட்டி, விழிநீர் மல்க, நடுங்கும் உடலுடனே திரும்பிச் சென்றார். இனியில்லை என உளம்சோர்ந்து அமைந்து தன்னைத்தானே தூண்டிக்கொண்டு மீண்டும் எழுந்தார்.

“நோக்கு, ஒருநாள் இத்துவாரகையை பொசுக்கி அழித்துவிடுவேன்” என்று ஒருமுறை சொன்னார். “இந்நகரை வெல்லவேண்டும். இதன் மேல் மணிமுடி சூடி அமரவேண்டும். அதன் பின் தீய வேள்வி ஒன்றினூடாக இதன்மீது விண்ணின் இடிமின்னல்கள் அனைத்தும் இறங்கச்செய்யவேண்டும். இதன் மாட மாளிகைகள் அனைத்தும் சரியவேண்டும். இது ஒரு இடிபாடுக்குவை என்றாகி கடலில் மறையவேண்டும். அதன்பின் இங்கிருந்து சென்று எனக்குரிய புல்வெளியை கண்டடைவேன். அங்கு அமர்ந்து என் குழலை வெளியே எடுப்பேன்” என்றார்.

அப்போது நாங்கள் ஒன்பது உடன்பிறந்தாரும் இருந்தோம். அச்சொற்களால் திகைத்து அவரை நோக்கினோம். “இந்தப் பெருநகர் எனக்குரியதல்ல. ஆனால் இங்கிருந்து ஒருபோதும் தோற்று பின்மாறப்போவதில்லை. யாதவ குலத்துப் பிறந்த எந்தையின் நகரல்ல இது. அவர் தன்னுள் இருந்த ஆணவத்தை பெருக்கிப் பெருக்கி அமைத்தது. அவ்வாணவத்தை வென்று அவர் கடந்தார். நானும் கடந்தால் மட்டுமே எந்தை இனிதிருக்கும் அந்தப் புல்வெளிக்கு செல்லமுடியும்” என்றார்.

அவை விழவென்றால் எந்த அவையிலும் மிக விரைவிலேயே அவர் சலிப்புறுவார். மிக விரைவிலேயே எச்சொல்லையும் செவிமடுக்காமலாவார். பிறரைப் பேசவிட்டு முற்றொதுங்கி முகவாயைத் தடவியபடி கண்கள் விலகிச்சரிந்திருக்க அமர்ந்திருப்பார். அவர் குரல் ஒலிக்க வேண்டுமெனில் சீற்றம் எழவேண்டும். அன்றி அவர் உவகை கொண்டெழ வேண்டும். அவர் இயல்பாக ஓய்வு கொள்வது மிக மிக அரிது. எப்போதும் பதற்றத்தில் இருந்தார். உவகை என அவரில் எழுவது ஒரு கொந்தளிப்பு மட்டுமே. அணுக்கமான உடன்பிறந்தாருடன் ஏதேனும் தனி அறையில் அமர்ந்திருக்கையிலோ எங்கேனும் ஆநிரை மேய்க்கச் செல்கையிலோ மட்டுமே அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.

ஆநிரைப் பட்டிகளில் அவற்றுடன் அமர்ந்திருக்கையில் சொல்லடங்கிய ஆழ்ந்த மகிழ்வை அடைந்தார். கன்றுகளின் அருகே அமர்ந்து அவற்றைத் தொட்டும் தடவியும் மகிழ்ந்திருக்கும் மூத்தவரை தொலைவிலிருந்து பார்க்கையில் அவர் அவ்வாநிரைகளுடன் கிளம்பி எங்கேனும் சென்றுவிட்டால் தன் வாழ்வை முற்றே அடைந்து நிறைவுறுவார் என்று தோன்றியிருக்கிறது. அவருடைய கால்கள் மாட்டிக்கொண்டிருக்கும் பொறி இந்தப் பெருநகர். ஆனாலும் நகர் அவரை கவ்விப்பிடித்திருக்கவில்லை. அவர்தான் அதை பிடித்திருக்கிறார். இதோ விடுகிறேன் என்று மூன்று முறை சொல்லி காலை எடுத்துக்கொண்டு அவரால் செல்ல இயலும். ஆனால் மானுடர் எவரேனும் அவ்வண்ணம் தங்களை பொறிகளிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார்களா? மானுடர் சிக்கி அழியும் அனைத்துப் பொறிகளும் அவர்களே சென்று சிக்கிக்கொண்டவைதான் அல்லவா?

மூத்தவர் சிரித்துக் களித்துக் கொண்டிருந்த அந்த அவையில் விழிமுன் தெரியாது பதிந்து அமர்ந்தேன். அவர் “இளையோனே, அந்தணராகிய கணிகரை அறிமுகம் செய்துகொள். நீ இங்கிருக்கையிலேயே அவர் இங்கு வந்துவிட்டார். அப்போது இவரை எவரும் தெரிந்துகொள்ளவில்லை. பின்னர் நாள்தோறும் அவைக்கு வந்திருக்கிறார். அவருடைய வெளித்தோற்றம் அவர் மேல் நம் விழிநிலைக்காமல் செய்தது. சில நாட்களுக்கு முன் அவையில் ஒரு இடர் பற்றி பேசியபோது முற்றிலும் புதிய ஒரு பார்வையை முன்வைத்தார். முற்றிலும் புதிய பார்வை எனில் அது எந்தையிடமிருந்து மட்டுமே எழமுடியும் என்று நான் எண்ணியிருந்தேன். பிறிதொருவர் நாவில் அவ்வாறு ஒரு பார்வை எழுந்ததை முதன்முறையாக பார்க்கிறேன்” என்றார்.

நான் ஆர்வம்கொண்டேன். “லக்ஷ்மணை அன்னையின் மைந்தர் நம்முடன் அவைமுரண் கொள்ள வாய்ப்புள்ளதென்று நாம் அறிவோம். அவர் நம்மிடம் நாடுவது அவைமுதன்மையை. அம்முதன்மையை நாம் அவர்களுக்கு அளித்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு மேல் நாம் கோன்மை கொள்ள இயலாது. நாம் வெல்லும் மணிமுடியில் அவர்களுக்கு பங்கு கொடுப்பதுபோல் ஆகிவிடும். எனில் அவர்களை எங்கு நிறுத்துவது என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் இங்கு நமக்கு இரண்டாம் குடியாக அமைய விரும்பமாட்டார்கள். இது இன்று உடனே நாம் தீர்த்தாகவேண்டிய இடர்.”

“இங்கே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது மத்ரநாட்டின் இளவரசனாக லக்ஷ்மணை அன்னையின் மைந்தனை முடிசூட்டலாம் என்றார் கணிகர். ஒருகணத்தில் அவர் உரைப்பதென்ன என்று எங்கள் அனைவருக்கும் புரிந்தது. அவ்வாறென்றால் அவர்கள் தனிநாடு கொள்ள முடியும். எதிர்காலத்தில் விழைந்தால் துவாரகைக்கும் எதிராகக்கூட எழும் வாய்ப்புள்ள பேரரசொன்றை அமைக்க இயலும். அந்தச் சொல்லுறுதியை அவர்களுக்கு அளிப்போம் என்றுதான் அவர் சொல்கிறார் என்று புரிந்தது. நன்று என்று அவ்வண்ணமே செய்தோம். அம்முடிவை அவர்களுக்கு அறிவித்ததும் அனைத்து இறுக்கங்களும் அவிழ அவர்கள் அடைந்த இயல்பு நிலையை கண்டு நான் திகைத்தேன். கணிகர் நம் அவையில் முதன்மையான ஒருவராக ஆனது அவ்வாறுதான். நீ அவரை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்றார். நான் கணிகரை நோக்கி தலைவணங்கினேன். அவர் புன்னகைத்தார்.

மூத்தவர் என்னிடம் உரத்த குரலில் “நாம் இயற்றவேண்டியதென்ன என்பதை கணிகர் முன்வரைவு அளித்துக் காட்டிவிட்டார். இனி குலக்குழுத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கூட்டி செயல்திட்டம் வகுத்துவிட வேண்டியதுதான். இத்தனை நாட்கள் எதன்பொருட்டு அஞ்சிக்கொண்டிருந்தோமோ அதை கடந்துவிட்டோம். உடனடியாக நடவடிக்கைகளை தொடங்கவிருக்கிறோம். போரெனில் போர். சூழ்ச்சி எனில் சூழ்ச்சி” என்றார். நான் என் உள்ளத்துள் புன்னகைத்தேன். என்ன திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று எனக்கு புரியவில்லை. ஆனால் கணிகர் உடனடியாக எதையும் தொடங்கமாட்டார் என அறிந்திருந்தேன். தொடங்கிவிடும் என்னும் உச்சநிலை சில நாட்கள் நீடிக்கும்.

நான் அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையாக பார்த்தேன். “நீ கணிகருடன் இதைப்பற்றி பேசவேண்டும்… அதைத்தான் நான் சொல்லவிழைகிறேன்” என்றார் மூத்தவர். நான் அச்சொற்களை ஒரு அச்சத்தொடுகையுடன் எடுத்துக்கொண்டேன். சென்ற சில நாட்களாகவே அவையில் நான் நோக்கப்படுகிறேன். மூத்தவர் இருவரும் என்னைப் பார்த்தே பேசுகிறார்கள். இயல்பாக அது நிகழ்ந்தாலும் அது அவர்கள் என்னைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. எதனால் எனக்கு அந்த அவையில் முதன்மை உருவானது என்பதே அப்போது என் அகவினாவாக இருந்தது. அவையில் எவரும் என்னை இருப்புணர்வதே இல்லை. அவ்வாறு உணர்கிறார்களா என்று அறிய நான் இன்மையை உருவாக்கிப் பார்த்திருக்கிறேன். அப்போதும் நான் உணரப்பட்டதில்லை.

ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்று எனக்குத் தெரிந்தது. அது கணிகரிடமிருந்து கிளம்பியிருக்கிறது. அக்கூடத்தில் பின் நிரையில் நான் அமர்ந்திருந்தேன். தலை திருப்பினாலன்றி மூத்தவர் என்னை பார்க்கமுடியாது. ஒருவனுக்கு ஒரு அவையில் இடம் அமைவதுகூட இயல்பாக அன்று. எடையின் அடிப்படையில் பொருள் மிதப்பதுபோல அங்குள்ள இயங்கும் நெறிகளின் விசையால் அது அவனுக்கு அளிக்கப்படுகிறது. என்னருகே இருந்தவர்கள் என்னைப்போன்ற இளைய மைந்தர்கள். அவர்கள் அங்கிருந்து கிளம்பி கடலாடவோ, வேட்டைக்குச் செல்லவோ, குடிக்களியாட்டுக்கு கிளம்பவோ உளம் கொண்டிருந்தனர் என்று தெரிந்தது. அவ்வண்ணம் நான் பின்நிரையில் அமர்ந்திருக்கையில் மூத்தவர் தலைதிருப்பி என்னை பார்த்தமை அவர்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்தது, வெளிச்சம் பட்ட எலிகளைப்போல அவர்கள் கூசிச் சுருங்கி விழிமின்னினர்.

கணிகரை அங்கிருந்து நான் பார்க்க இயலவில்லை. எங்கிருந்து பார்த்தாலும் எழுந்து நின்று கூர்ந்து நோக்கினாலொழிய கண்ணுக்குப்படாத ஓர் இடத்தை தெரிவு செய்வதில் அவர் திறன் கொண்டவராக இருந்தார். அதையும் நான் எண்ணிக்கொண்டேன். தன் இடத்தை மிகமிக கீழாக அமைத்துக்கொள்பவர் அந்த அவையையே கையிலிட்டு விளையாடுபவர். தன்னை தானே வகுத்துக்கொள்பவனே பிறரை ஆள்கிறான், பிறரால் வகுக்கப்படுபவன் எப்போதுமே நாற்களத்தின் காய் மட்டுமே. நான் கணிகரை அவ்வப்போது நோக்கிக்கொண்டிருந்தேன். அவர் தன்னை ஒரு பொருள் என, துணிச்சுருள்போல ஆக்கிக்கொண்டிருந்தார்.

மூத்தவர் அவையை நோக்கி “நேற்று பேசிக்கொண்டிருக்கையில் இங்கே கணிகர் ஒன்றை சொன்னார். நாம் காளிந்தி அன்னையின் மைந்தரை நம்முடன் சேர்த்துக்கொள்ள முழுமையாக முயலவில்லை என்று” என்றார். அவையில் ஒரு கலைவோசை எழுந்தது. மூத்தவர் கை அசைத்து அவர்களை அமையச்செய்து “ஆம், நீங்கள் எண்ணுவது புரிகிறது, அவர்கள் நிஷாதர்கள். ஆகவே இயல்பாகவே சாம்பனுடன் நின்றிருக்க வேண்டியவர்கள். ஆனால் எண்ணுக, நாம் முயற்சி செய்தோமா?” என்றார். குடித்தலைவரான குமுதர் “அவர்களை நம்மால் அழைக்கவே முடியாது, ஒரே குருதி என்பது பெரும் வல்லமை” என்றார். “ஆம், அவர்கள் ஏன் நிஷாதர்களை விட்டுவிட்டு நம்முடன் வரவேண்டும்?” என்றார் சப்தகர் என்னும் குடித்தலைவர்.

கணிகர் மிக மெல்ல கனைக்க அனைவரும் அவரை பார்த்தனர். “அவர்கள் ஒரே குடி என்பதனாலேயே பூசல் இருக்கலாம் அல்லவா?” என்றார் கணிகர். அரசரை நோக்கி “சாம்பன் என்ன இருந்தாலும் மலைக்குடியினர். காளிந்தியின் மைந்தர்கள் நீர்மேல் வாழ்பவர்கள். அடிப்படையில் அந்த வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும். இந்நாளுக்குள் ஏதேனும் சிறு பூசல்கள் அவர்களிடையே எழுந்திருக்க வாய்ப்பிருக்கும்” என்றார். “ஆம், அவ்வாறு செய்திகளும் உள்ளன” என்றார் மூத்தவர். நான் “ஆனால் குருதி என்பது பெரிய இணைப்பு, குடிப்பெரியவர்களால் அவை இணைக்கப்பட்டுவிடும். நம்மால் காளிந்தி அன்னையின் மைந்தர்களை இங்கே கொண்டுவர முடியாது” என்றேன்.

“அதற்கு நாம் வாய்ப்பு அளித்தோமா?” என்றார் கணிகர். “ஒரு வாய்ப்பு அளித்துப்பார்ப்போம். சில தருணங்களில் மிகப் பெரிய வெடிப்புகள் எளிய விரிசல்களாகவே தென்படும். செல்ல ஒரு வழி இல்லை என்பதனாலேயே அவர்கள் அங்கே இருக்கவும் வாய்ப்புண்டு. மாற்றுவழி உண்டு என்னும்போதே உளக்கசப்புகள் பிரிவுகளாக மாறுகின்றன.” நான் “ஆம், அதை செய்யலாம்” என்றேன். “நீங்கள் சொல்வது உண்மை. அவர்கள் மொத்தமாக இங்கே வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் அவர்களில் ஒருவர் பிரிந்து இங்கே வந்தால்கூட அது நமக்கு நன்மையே” என்றார் கணிகர். நான் “ஆம்” என்றேன்.

“நாம் அவர்களிடம் பேசுகிறோம் என்பதே சாம்பனின் உள்ளத்தை நிலைகுலையச் செய்யும். அவர்களை உளவறியத் தொடங்குவார். ஒருவரை நாம் எதன்பொருட்டு உளவறிந்தாலும் உளவறியும்போதே நாம் ஐயம்கொள்ளத் தொடங்குகிறோம். நாம் ஐயம் கொண்டிருந்தால் நம் கேள்விகள் ஐயத்தையே முன்வைக்கும். ஒற்றர்கள் அந்த ஐயத்தை வளர்க்கும் செய்திகளையே நம்மிடம் அளிப்பார்கள். வேண்டுமென்றே சிலர் அளிப்பார்கள், நற்பெயர் பெறும்பொருட்டு. அதை நாம் சற்று உணர்ந்துவிடமுடியும். நம்முடைய ஐயத்தை நாம் நம்மையறியாமலேயே ஒற்றனுக்கு அளித்து அவன் ஐயம்கொண்டு அந்த ஐயத்தைப் பெருக்கி நமக்கு அளிப்பான்.”

“எண்ணவே வேண்டியதில்லை, நாம் காளிந்தியின் மைந்தர்களிடம் பேசினாலே அவர்களுக்குள் நம்பிக்கையின்மையை உருவாக்கிவிடுவோம்” என்று கணிகர் தொடர்ந்தார். “நம்பிக்கையின்மை என்பது ஐயத்திற்கு ஆளாகிறவர்களின் ஆணவத்தை சீண்டுகிறது. அவர்கள் பூசலிடுவார்கள். பூசல் ஐயத்தை வலுப்படுத்தும். ஐயம்போல் வளர்வது பிறிதொன்றில்லை. ஆகவே அரசியலாடுபவனின் முதல் பெரும் கருவி ஐயமே என்று அறிக!” என்று கணிகர் தொடர்ந்தார். எனக்கு ஆழ்ந்த அச்சமொன்று உருவானது. என்னால் அவர் முகத்திலிருந்து விழிகளை எடுக்க முடியவில்லை. அவர் சொற்களைக் கேட்காதவர்கள் அம்முகத்தை மட்டும் கண்டால் அவர் அமுதென இனிக்கும் மெய்யறிவையே புகட்டிக்கொண்டிருப்பதாக எண்ணக்கூடும்.

“ஐயம் பிளவுபடுத்துகிறது. ஐயப்படுபவர்களே பலவாக பிளவுபடுகிறார்கள். பொதுவாக பூசல் நிகழும் சூழலில் அனைவருமே பூசலுக்குரிய உளநிலையில் இருக்கிறார்கள். பூசலுக்கான உளநிலை என்பது ஒருவகை நோய். அது அருகிருப்போரையே மிகுதியாகத் தாக்கும். நாம் நம் எதிரியிடம் பூசலிட்டால் நம் உடனிருப்பவர்களையே வசைபாடுவோம். ஆகவே அவர்களிடம் பூசலை வளர்ப்போம். உளந்திரிந்து விலகுபவர்களை இங்கே இழுப்போம். எண்பதின்மரில் எத்தனைபேர் நம்மிடம் இருக்கிறார்கள் என்பது மக்கள் முன் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் கணக்கு என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றார் கணிகர்.

“நாம் செய்யவேண்டியது என்ன?” என்று ஒரு குடித்தலைவர் கேட்டார். அவர் முற்றிலும் சொல்லிழந்துவிட்டார் என்று தெரிந்தது. ”நம் தூதர் காளிந்தியன்னையின் மைந்தரை அணுகட்டும்” என்று சுஃபானு சொன்னார். “தூதர் எனச் செல்லவேண்டியவர் நம் குடிமைந்தர்களில் ஒருவராகவே இருக்கவேண்டும். ஆனால் அவைமுதன்மை கொண்டவராக இருக்கக்கூடாது. முயற்சி தோற்றால் அது அவருக்கு இழிவு. மேலும் நாம் காளிந்தியின் மைந்தர்களை மிகைப்படுத்திக் கொள்கிறோம் என்றும் தோன்றலாகும். ஆகவே இளையவர்களில் ஒருவர் செல்லட்டும்.” நான் நெஞ்சு படபடக்க அமர்ந்திருந்தேன். எனக்கு புரிந்துவிட்டது.

ஆனால் யாதவ மைந்தர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அந்த வாய்ப்பை விரும்பினர், கூடவே அந்தச் செயலை அஞ்சினர். எனவே இரு நிலைகளில் ஊசலாடினர். சுஃபானு “நம் இளையோரில் சொற்திறன் கொண்டவன் இளையவனாகிய பிரதிபானு… அவன் செல்லட்டும்” என்றார். அவையிலிருந்த பிற மைந்தர் நீள்மூச்செறிந்து உடல் எளிதாவதை கண்டேன். அவர்கள் ஆறுதல்தான் கொள்கிறார்கள் என்ற எண்ணம் என்னை அச்சத்தை நோக்கி தள்ளியது. “மூத்தவரின் ஆணை என் கடமை” என எழுந்து தலைவணங்கினேன். “ஆனால் என்ன பேசுவது, எப்படித் தொடங்குவது என்பது எனக்கு இன்னமும் புரியாததாகவே உள்ளது.”

சுஃபானு “அதை கணிகர் உனக்கு கற்பிப்பார்” என்றார். “அவரிடம் சொல்தேர்க…” என்றார் ஃபானு. கணிகர் “காளிந்தியின் மைந்தர்களில் இளையவரான சோமகன் உங்களுக்கு சற்று அணுக்கமானவர் என அறிந்துள்ளேன், அரசே” என்றார். “ஆம், அவன் கடலாட விழைபவன்… அவர்கள் அனைவருமே நீர்விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள்” என்றேன். “எனில் அதுவே உள்ளே நுழையும் வழி எனக் கொள்க. அதனூடாக அன்னையை நேரில் சென்று சந்தித்துப் பாருங்கள்” என்றார் கணிகர். “அவர் இருக்கும் நிலையை ஊர் அறியும். அவர் உளநிலை குலைந்திருக்கிறார். தந்தை இன்னும் தன்னைவிட்டு நீங்கவில்லை என்றே எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்றேன்.

“அது நன்று. அவரை சந்தியுங்கள், எப்படியாவது அவர் நாவிலிருந்து அரசர் ஃபானுவுக்கு ஒரு வாழ்த்தை பெற முயல்க! அந்த வாழ்த்தில் இளைய யாதவரின் முதல் மைந்தர் ஃபானு என்னும் ஒரு வரி இருக்குமென்றால் போதும், எஞ்சியதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார் கணிகர். “அது இயலுமென்றே தோன்றுகிறது. முன்பு நான் காளிந்தியன்னைக்கு அணுக்கமான மைந்தனாக இருந்தேன்” என்றேன். “அன்பினூடாகச் செல்க! ஒற்றறியவும் அரசாடவும் மிகச் சிறந்த வழி அதுவே” என்றார் கணிகர். “ஆணை” என நான் தலைவணங்கினேன்.

அவை முடிந்து நான் வெளியே வந்தேன். என்னை வழக்கமாகச் சூழ்ந்து வரும் இளையோர் அனைவரும் விலகிச்சென்றுவிட்டிருந்தனர். நான் தனியாக இடைநாழியில் நடந்தேன். என்னைவிட்டு ஏன் இளையோர் அகல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பின்னால் வந்த ஏவலன் என்னை அழைத்து “கணிகர் தங்களை பார்க்கவிழைகிறார், இளவரசே” என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் அவனுடன் சென்றேன். அவைக்கு அருகிலிருந்த சிற்றறையில் கணிகர் இருந்தார். தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அவர் உடல் கிடந்தது. ஏவலன் ஒருவன் அவர் அணிந்திருந்த பட்டாடையைக் கழற்றி அவருக்கு பருத்தியாடைகளை அணிவித்துக்கொண்டிருந்தான்.

அவர் ஒரு தவளைபோலிருந்தார். அவ்வுடலின் சிதைவு என்னை விழிவிலக்கச் செய்தது. “பெரும்பொறுப்பு இளவரசே, ஆனால் வென்றால் நீங்கள் தலைமை கொள்வீர்கள்” என்றார். “நானா?” என்றேன். சிரித்து “தலைமையா?” என்று சொன்னேன். கணிகர் “ஆம், பத்துபேரில் இன்றிருப்பவர்கள் இருவரே தலைவர்கள். ஃபானுவும் அவரை எதிர்க்கும் ஸ்வரஃபானுவும். மூன்றாவதாக நீங்கள் எழவேண்டும்…” என்றார். நான் “அவர்கள் அனைவரும் என்னை அஞ்சி விலகிச் செல்கிறார்கள்” என்றேன். “ஆம், அதுவே முதல் எதிர்வினையாக இருக்கும். அது நன்று. நீங்கள் அவர்களில் ஒருவரல்ல என்று அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார் கணிகர். “வென்றால் அவர்களைவிட நீங்கள் மேல் என்று எண்ணுவார்கள்.”

நான் தலையசைத்தேன். “வெல்வது எளிது” என்று அவர் சொன்னார். “காளிந்தியிடமிருந்து அவ்வண்ணம் ஒரு சொல்லை நீங்கள் பெற முடியாது. ஆனால் பெறும் எச்சொல்லையும் நாம் விழைந்ததுபோல் விளக்கிக்கொள்ளலாம். வெற்றி ஒன்றே நம் இலக்கு. உலகியலுக்கு அப்பால் நிற்பவர்கள் உலகியலில் சரியாகப் பொருள்படும்படி பேச முடியாது. ஆகவேதான் அவர்களை உலகியலார் எளிதாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.” நான் “ஆம்” என்றேன். “அவர் சொன்னதை என்னிடம் வந்து சொல்லுங்கள், நான் அதை விளக்குகிறேன்” என்றார் கணிகர். “அவரை நீங்கள் சந்திக்கும்போது உங்கள் மூத்தவர் ஃபானு துவாரகையின் மன்னராக முடிசூடவிருக்கிறார் என்று சொல்லுங்கள். வாழ்த்தி ஏதேனும் பொருளை வாங்குங்கள். பொருள் சொல்லைவிட பொருட்செறிவு மிக்கது. அதை ஒரு விதை என நட்டு நாம் மரமாக்கி காடாகவே ஆக்கிக்கொள்ளமுடியும்.”

“ஆம்” என்று நான் சொன்னேன். “அவர்கள் வாழ்த்துவார்கள். இங்குள்ள அரசியல்பூசல் அவர்களுக்கு புரிந்திருக்காது. தன் கொழுநரின் மைந்தன் என்றே அவர்கள் ஃபானுவை கருதுவார்கள். வாழ்த்தை ஒரு பொருள் என பெற்றால் நாம் வென்றோம்” என்றார் கணிகர். நான் “ஆம்” என்றேன். ஏவலர் அவரை புரட்டிப்புரட்டி ஆடை அணிவிப்பதை நோக்கி நின்றேன். அப்போது என்னுள் தோன்றிய எண்ணம் அக்கணமே அந்தப் புழுவை நசுக்கி அழித்துவிடவேண்டும் என்பதே. என்றாவது என் கையில் செங்கோல் வருமென்றால் அதையே முதல் ஆணையாக பிறப்பிப்பேன்.

ஏவலன் கணிகரை திருப்பியபோது அவர் என்னை நோக்கி புன்னகைத்தார். அந்தப் பேரழகுப் புன்னகை. தந்தையே, நான் கால்தளர்ந்துவிட்டேன். என் எண்ணங்களை அறிந்தா அவர் புன்னகைக்கிறார்? அல்லது அது அறியாமையின் புன்னகையா? அல்ல, அவர் அறியாத ஒன்றில்லை. அவர் அவ்வண்ணம் பழகிவிட்டிருக்கிறார். வெயிலில் மலர்கள் அழகுகொள்வதுபோல அவர் வெறுப்பு பொழியப்படும்போதே உள்ளம் மலர்கிறார். நான் தலைவணங்கி வெளியேறினேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 23

பகுதி நான்கு : அலைமீள்கை – 6

தந்தையே, விருந்து முடிந்து வெளிவந்த கணம் அனைத்தும் ஒரு இளிவரல் நாடகமென எனக்குத் தோன்றியது. நான் அந்நிகழ்வை ஒரு ஏமாற்றுவித்தை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். கணிகரை நான் முன்னரே செவிச்செய்தியென அறிந்திருந்தேன். அஸ்தினபுரியில் சகுனியின் அணுக்கராக இருந்தவர். அங்கு அனைவராலும் வெறுக்கப்பட்டவர். தீங்கே உருவானவர் என்று அவரை சூதர்கள் பாடி கேட்டிருக்கிறேன். ஆயினும் அத்தனை தொலைவு கடந்து அவர் வந்தது வெறுமனே அடைக்கலம் தேடித்தான் என்று அப்போது நம்பினேன்.

இன்று அறிகிறேன், அவர் இத்திள் செடிகளைப்போல ஒட்டி உயிர்வாழ்பவர். பூசல்களில் மட்டுமே அத்தகையோரை மனிதர்கள் விரும்புகிறார்கள். அமைதிக் காலங்களில் அத்தகையோரின் இடம் குறுகிக் குறுகி சிறிதாகிறது. ஆகவே நோயுற்ற உடலை தேடிச்செல்லும் ஊனுண்ணிப் பறவைகள்போல் அவர்கள் உளமுறிவுகளும் பூசல்களும் நிறைந்த நாட்டை நண்ணுகிறார்கள். ஆயினும் அவரால் என்ன செய்துவிட முடியுமென்று அப்போது தோன்றியது. அவர் தன் திறனால் ஏற்கெனவே அங்கு உருவாகியிருக்கும் உட்பூசல்களிலும் சிடுக்குகளிலும் ஒருவருக்கொருவர் மிகைகூறி, புறம்கூறி, உணர்வுகளை எழுப்பிவிட்டு, சற்றே சீண்ட முடியும். ஒருவேளை மேலும் சற்று பூசல்களை நிகழ்த்திக் காட்ட முடியும். ஆனால் அரசாடலில் அதற்கு பெரிய இடமில்லை என நினைத்தேன்.

அஸ்தினபுரியில் அவர் வென்றதென்பது அது அரசாடல் என்பதைக் காட்டிலும் ஒரு சிறு குடிக்குள் நிகழ்ந்த பூசல் என்பதனால்தான். அங்கே அனைத்து எதிரெதிர் முகங்களும் தெளிவாகி நின்றிருந்தன. துவாரகையில் எழுந்து நின்ற பூசல் குருக்ஷேத்ரப் பெரும்போருக்குப் பின் பாரதவர்ஷம் முழுக்க முளைத்து முனைகொண்ட உண்மையான கோன்மைப் பூசலின் துளிவடிவு என்றனர் அரசறிந்தோர். ஷத்ரியரும், அசுரரும், அவர்களுக்கு நடுவே புத்தரசுகள் நிறுவிக்கொண்ட பிற குடியினருமாக மூன்று அணிகள் ஒவ்வொரு நிலத்திலும் இருந்தன. திருவிடத்திலும், தெற்கிலும், புதிதாக உருவாகி வந்த கிழக்கு நிலங்களிலும் எங்கும் நிகழ்ந்துகொண்டிருந்த பூசல் அதுவே. ஆகவே கணிகருக்கு இங்கு ஆற்றுவதற்கு எதுவுமில்லை என்று எண்ணிக்கொண்டேன்.

அதைவிட ஒன்று இருந்தது என நான் உணர்ந்தது மிகப் பல நாட்கள் கடந்தே. கணிகர் என் ஆணவத்தையே முதலில் சீண்டினார். தன்னை அவ்வண்ணம் அவர் முன்வைத்தமையாலேயே நான் அவரை குறைத்து மதிப்பிட்டேன். என் ஆணவத்தை மிகையாக்கிக்கொண்டேன். நான் நஞ்சு, முடிந்தால் என்னை கையாள்க என்று அவர் அறைகூவினார். அந்த அறைகூவலை இயல்பாகவே நான் ஏற்றுக்கொண்டேன். அவருடைய நஞ்சை என் படைக்கலமாகக் கொள்ளலாம் என்று அவரே சொன்னார். அப்போதே அவரை என் படைக்கலம் என எண்ணத் தலைப்பட்டேன். மிகமிக சொல்சூழ்ந்து அவர் எனக்கு அந்தத் தூண்டிலை போட்டார் என நான் உணர்ந்தது காலம்கடந்த பின்னர். தந்தையே, அவர் நம்மை கொட்டிவிட்டு நாம் துடித்து கதறி ஓடிச்சென்று ஓய்வுகொள்ளும் இடத்திற்கு முன்னரே சென்று நின்றிருக்கிறார்.

என் அறைக்குச் சென்று, களைத்து மஞ்சத்தில் விழுந்து அவ்வண்ணமே துயின்று, புலரியில் எப்போதோ விழித்துக்கொண்டபோது அறைக்குள் கரிய நிழலென கணிகரே இருப்பதுபோல் உணர்ந்தேன். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து அவ்வுணர்வை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டேன். அத்தனை ஆழமாக அவர் எனக்குள் ஊடுருவியிருக்கிறார். நான் அவரை எண்ணிக்கொண்டிருந்திருக்கிறேன். துயிலில் கனவில் கூட அவர் என்னுடன் இருந்திருக்கிறார். மெய்யாகவே! அன்று பகல் முழுக்க நான் அவரையே நினைத்துக்கொண்டிருந்தேன். அன்று மாலை உணர்ந்தேன், ஒருகணம் கூட அவரை எண்ணாமல் நான் இருக்கவில்லை என்று. அந்த ஆட்கொள்ளலை எண்ணி எரிச்சலுற்றேன், சீற்றம்கொண்டேன், பின்னர் அஞ்சினேன். அஞ்சும் எதையும் அகற்ற முனைகிறோம், இல்லையென்று எண்ண விழைகிறோம்.

அவரிலிருந்து அகன்று செல்லும்பொருட்டு அரண்மனையிலிருந்து கிளம்பி இரு தோழர்களுடன் கடலாடச் சென்றேன். உட்கடலில் அலைகளில் எழுந்தமைந்துகொண்டிருந்தபோது கூட அவர் நினைவு என்னுடன் எழுந்தலைந்துகொண்டிருந்தது. தந்தையே, நான் எளிதாக, இயல்பாக இருப்பது கடல் அலைகளின்மேல் நீந்திக்கொண்டிருக்கையிலேயே. அங்கும் அவர் உடனிருந்தார். அவரை என்னால் தவிர்க்க இயலாது என்று அறிந்தேன். எனில் அவரிடமிருந்து முற்றாக விலகிச் செல்வது ஒன்றே வழி. அவர் என்னிலிருந்து எதிர்பார்த்த எதையும் நான் செய்யாமலிருக்கலாம். என்னிலிருந்து அவருக்கு எந்தக் கருவியையும் அளிக்காமலிருக்கலாம். நான் செய்யக்கூடுவது அது ஒன்றே.

அதை எண்ணிச்சூழ்ந்தேன். மூத்தவரின் ஆணையை கேட்டுப்பெற்று எல்லைப்புறக் காவல்நிலை ஒன்றை நோக்கி மறுநாளே கிளம்பினேன். துவாரகையிலிருந்து ஏழு நாட்கள் பயணம் செய்து சிந்துவின் கரையில் அமைந்திருந்த அக்காவல்கோட்டையை சென்று சேர்ந்தேன். முன்பு அது செங்கல்லால் கட்டப்பட்ட எட்டடுக்குக் காவல்மாடம் மட்டுமாக இருந்தது. பின்னர் அதை ஒட்டி இல்லங்கள் அமைந்தன. காவலர் தங்குமிடங்களும், ஒரு சிறு சந்தையும் படகுத்துறையும் உருவாயின. அங்கே சிறுவணிகர்கள் வந்து செல்லத்தொடங்கினர். சூழ்ந்திருக்கும் பாலைநிலத்து மக்கள் அங்கே வணிகம் செய்ய வந்தனர். அவர்களில் சிலர் அங்கே குடியேறினர். அது ஒரு சிறு ஊராக மாறியது. மணற்காற்று சூழ்ந்து வீசும் தனிச்சிற்றூர். உலகுடன் தொடர்பில்லாது நுனிக்கிளையில் காய்த்துத் தொங்கும் காய்போல துவாரகையில் இணைந்திருந்தது.

ஊர்த்தலைவன் மூர்த்தன் என்னை வரவேற்று அங்குள்ள சிறுமாளிகையில் தங்க வைத்தான். அங்கு நான் பன்னிரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். அங்கு செல்லும்போது உள்ளம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. மூன்றாவது நாள் அக்கொந்தளிப்பு அடங்கியபோது ‘என்ன மூட எண்ணம் இது!’ என்று எனக்கு நானே வியந்துகொண்டேன். உண்மையில் அப்படி என்ன நிகழ்ந்தது? உடலொடிந்த முதியவர், அந்தணர், என்னிடம் சில சொற்களை சொல்லியிருக்கிறார். அதை அப்படியே நம்பி சொற்பொருளென எடுத்துக்கொண்டு நான் உளம் குழம்பி இருக்கிறேன். அதை என் அச்சத்தால் பேருருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அவரை அஞ்சி வந்திருக்கிறேன் எனில் அவர் நோக்கத்தை அவர் வென்றுவிட்டார் என்றே பொருள்.

அவர் என்னை அவ்வண்ணம் உளம் குழம்ப வைப்பதையே அந்த உரையாடலின்போது தன்நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அவருக்கு அவ்வாறு தோன்றியிருக்கலாம். அவர் அந்த அவைக்கு வந்தபோது அவரை எவரும் எதிர்கொள்ளவில்லை. அவரை மறந்துவிட்டிருந்தனர். அரசவரவேற்பென ஒரு சொல்கூட கூறப்படவில்லை. தெளிந்த போதத்துடன் அவருடன் சொல்லாடும் நிலையில் அங்கு இருந்தது நான் மட்டுமே. எனவே அவர் என்னிடம் பேசினார். என்னிடம் ஒரு ஆழ்ந்த பதிவை உருவாக்க நினைத்தார், அதை உருவாக்கியிருக்கிறார். சிறுமைசெய்யப்பட்டதாக உணர்பவர்கள் தங்களைத் தாங்களே பெருக்கிக் கொள்வார்கள். தங்களுக்குள்ளேயே அறைகூவல் விடுப்பார்கள், பெருமிதம் கொள்வார்கள், வஞ்சினம் பூணுவார்கள். அரிதாக எதிரில் ஒருவன் சிக்கிவிட்டால் அவனிடமே அதை சொல்வார்கள்.

அது இயல்பே. பெருவிருந்துகளில் தங்களை பொருட்படுத்தும்படியானவர்களாக உணராதவர்கள் இவ்வண்ணம் சிலவற்றை செய்வதை நான் கண்டிருக்கிறேன். அங்குள்ள எவரேனும் ஒருவரை பற்றிக்கொண்டு அவரிடம் மிக எடைமிக்க சிலவற்றை சொல்வார்கள். ஆழ்ந்த மந்தணங்களையோ வஞ்சகங்களையோ சூழ்ச்சிகளையோ பற்றி விவரிப்பார்கள். சில தருணங்களில் நோயுற்றவர்கள்போல் நடிப்பதுண்டு. கீழே விழுந்து வலிப்பு வந்து எழுந்து துடித்த ஒருவரை நான் கண்டிருக்கிறேன். உணவுத்தட்டுகளை கீழே போடுவது, மங்கலமின்மையைக் காட்டும் சொற்களை கூறுவது, தன்னைத்தானே இளிவரலாக்கிக் கொள்வது எல்லாம் வழக்கம்தான்.

விருந்துகள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் நிறுத்துகின்றன. தங்கள் இடம் எது என்று ஒவ்வொருவரும் விருந்தில் நோக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு விருந்தில் எவராலும் கவனிக்கப்படாதிருப்பது என்பது சாவுக்கு நிகரானது. அவ்வண்ணம் சிலர் விருந்துகள் முடிந்து உளம் அழிந்து பிணங்கள்போல் துயில்வதை பார்த்திருக்கிறேன். சிலர் அங்கிருந்து எழுந்துசெல்கையில் பெருவஞ்சமும் நஞ்சும் நிறைந்தவர்களாக ஆவதைக்கூட கண்டிருக்கிறேன். அன்று அவரில் எழுந்த ஒரு துளி நஞ்சை எனக்கு காட்டினார். அதன் பொருட்டு நான் துயர் கொள்ளலாகாது.

நான் என்னை மெல்ல மெல்ல அடங்கச் செய்தேன். என்ன செய்வதென்பதை எண்ணி அடுக்கத் தொடங்கினேன். என்னை நோக்கி நானே சிரித்தேன். எவரோ ஓர் அந்தணன் எங்கோ சொன்ன ஒற்றை வரிக்காக அனல்பட்ட பூனையென அஞ்சி பதறி வந்து ஒளிந்து உலகை நோக்கிக்கொண்டிருக்கும் சிற்றுயிர். என் ஆற்றல் கூர்மை எல்லாம் அவ்வளவுதானா? மெய்யாகவே என்னைப்பற்றி என்ன எண்ணிக்கொண்டிருந்திருக்கிறேன்?

இத்தனை நாள் அரசகுடிப் பிறப்பின் அடுக்கில் உடன்பிறந்தார் நிரையில் மிகக் கீழென அடுக்கப்பட்டவன். மேலுள்ள எடையனைத்தாலும் எடையென அழுத்தி வைக்கப்பட்டவன். எழ வாய்ப்பே அற்றவன். ஆனால் எவரை விடவும் திறமைகள் கொண்டவன். கடலாடுபவன், சுழற்பாதையில் விசைப்புரவி ஓட்டுபவன், இவர்கள் அனைவரும் எண்ணிக்கூட இருக்காத நூல்களை எழுத்தெண்ணிப் பயின்றவன், சொல்சூழத் தெரிந்தவன். ஆனால் எந்த அவையிலும் என் சொல் எழுந்ததில்லை. எனினும் அங்கு எவர் பேசும் சொற்களைவிடவும் கூரிய சொற்கள் என்னுள் ஒலித்துக்கொண்டுதான் இருந்திருக்கின்றன.

என்றோ ஒருநாள் எழுவேன் என்னும் கனவே அதுவரை என்னை கொண்டுசென்று நிறுத்தியது. எட்டாவது மைந்தராகிய என் தந்தை எழவில்லையா எனும் சொல்லே எனக்கு ஊக்கமளித்தது. ஒருநாள் ஒருநாள் என்று ஒவ்வொரு தருணத்திலும் வஞ்சினம் உரைத்து அதை கடந்து வந்திருக்கிறேன். இங்கிருக்கிறேன், அறிக உலகே என்று நெஞ்சு வெடிக்க இவ்வுலகை நோக்கி கூவிக்கொண்டிருந்தவன். உண்மையில் துவாரகையை முழுதாளும் தகைமை கொண்டவன் நான் ஒருவனே என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒருநாள் என் சொல்லை, என் ஆற்றலை இந்நகர் அறியும். இக்குடிகள் திரண்டு வந்து தன் தலைவனென என்னை ஏற்றுக்கொள்வார்கள். என்னை இவர்களே அரியணையில் அமரவைப்பார்கள். என் குலமும் எனக்கு அடிபணியும். என் கோல் இங்கு நிற்கும்.

உண்மையில் அங்கும் என் கனவுகள் நின்றுவிடவில்லை. நான் அஸ்தினபுரியை வெல்வேன். பாரதவர்ஷத்தை வெல்வேன். மும்முடி சூடி இப்பெருநிலம் மீது விண்ணவனுக்கு நிகராக அமர்ந்திருப்பேன். இக்குடிவழிகளின் குருதியில் அழிவின்மை கொள்வேன். சூதர்கள் சொல்லில் விண்ணவன் என எழுவேன். எழும் தலைமுறைகளில் ஆலயங்களில் தெய்வமென அமர்ந்திருப்பேன். எத்தனை ஆணவம்! நுரைத்து நுரைத்து புளித்தெழும் ஆணவம்போல் இனிய மது மனிதனுக்கு பிறிதொன்றில்லை. அத்தகைய நான் இதோ அஞ்சி அமர்ந்திருக்கிறேன்.

எவரென்றே அறியாத முதியவர் அரை நாழிகைப்பொழுது பேசியபோது நான் அஞ்சியது எதை? நான் அஞ்சியது ஒன்றைத்தான். அத்தனை பெருந்திரளில் ஒருவராலும் தனித்தறியப்படாதவனாகிய என்னிடம் மிகச் சரியாக சொல்லெடுத்த கூர்மையில் அவர் எளியவரல்ல என்று கண்டுகொண்டேன். என் உடன்பிறந்தார் அனைவரும் என்மேல் அடுக்கப்பட்ட போர்வைகள்போல. அடியில் ஒளிந்திருந்து வேவு பார்த்துக்கொண்டிருந்தேன். இளிவரலுடன், வஞ்சத்துடன், விழைவுகளுடன். ஆனால் எந்தத் தடையும் பொருட்டின்றி நேராக வந்து என்னைத் தொட்டு எழுப்பி என் விழிநோக்கி அவர் பேசத்தொடங்கினார். தன் மேலிருந்த மறைப்பு விலக்கப்பட்டு பகல் வெளிச்சத்தில் வந்து நின்ற சிற்றெலிபோல் நான் ஆனேன்.

என்னை அவர் கண்டடைந்தது என்னை அச்சுறுத்தியது. அவர் என்னிடம் பேசிய ஒவ்வொரு சொல்லும் என்னை மீறியே வளர்ந்தது. அங்கு அந்த ஒவ்வாமையுடன் என்னால் வெறுமனே அமர்ந்திருக்க இயலவில்லை. புரவியில் சென்று சிந்துவின் கரையினூடாக நீள்பயணங்கள் செய்தேன். பாலையில் நெடுந்தொலைவு சென்று நீரின்றி தவித்து இறப்புக்கு முந்தையகணம் என இடர்கொண்டு மீண்டு வந்தேன். என் உடலிலுள்ள ஆற்றல் அனைத்தையும் அள்ளி அள்ளி வெளியே இறைத்தேன். என் இறுதி எல்லைகளை கண்டபின்பே திரும்பினேன். அவ்வாறு என்னை நானே தேற்றிக்கொண்டேன். உடல் ஆற்றலை அள்ளி வீசுந்தோறும் உள்ளத்தின் ஆற்றல் மேலும் ஊறுகிறது என்பதை நான் முன்னரே அறிந்திருந்தேன்.

பின்னர் அக்கோட்டைமேல் அமர்ந்து தொலைவு வரை செந்நிற அலைகளாக எழுந்து சென்று வானைத் தொட்ட பாலை நில விரிவை பார்த்துக்கொண்டிருந்தபோது எண்ணிக்கொண்டேன், என் அல்லல்களில் இருந்து தப்ப ஒரே வழிதான் உள்ளது. ஆம் எனும் ஒரே சொல். ஆம், நான் இவ்வண்ணம் இங்கிருக்கிறேன். நான் வஞ்சமும் விழைவும் கொண்டவன். நான் காத்திருக்கும் ஒரு கரவுப்படைக்கலம். அதை இந்த நாள் வரை எவரும் அறியாமல் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எவரேனும் ஒருவர் அறிந்தாகவேண்டும். அதை நானே அறிவிப்பதைவிட மிகச் சரியாக இன்னொருவர் அறிந்துகொண்டது நன்று. அவ்வண்ணம் ஒருவர் சொல்லாமலே அறிந்துகொள்வாரெனில் அதன் பொருள் நான் முற்றாக திரண்டுவிட்டேன் என்பதுதான்.

படைக்கலம் முற்றாக கூர்கொண்டுவிட்டது. அது உண்மையில் எனக்கு நம்பிக்கையை அல்லவா அளிக்கவேண்டும்? நான் யாரென்று எனக்கு அது காட்டவேண்டுமல்லவா? இனி முற்றாக மறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. குறைந்தது கணிகரிடமாவது நான் யாரென்பதை காட்டலாம். அது அளித்த விடுதலையை எண்ணிப்பார்த்தபோது உள்ளம் ஆறுதல் கொண்டது. எரியும் வெயிலில் ஒன்றுக்கு மேல் ஒன்றென அணிந்த ஆடைகளனைத்தையும் களைந்து இளங்காற்றில் நின்றதுபோல. அந்தத் தருணத்திலிருந்து மிக எளிதாக முடிவெடுத்தேன். ஒன்றுக்கு மேல் ஒன்றென தொட்டுத் தொட்டுச் சென்று ‘ஆம், இதுவொன்றே வழி’ என்று என்னிடம் சொல்லிக்கொண்டேன்.

கணிகரிடமே திரும்பிச்செல்வதுதான் செய்யவேண்டியது. ஆம் கணிகரே, நீங்கள் எண்ணியது சரிதான். என் நோக்கம் அதுதான். எனக்கு உதவுங்கள். நீங்கள் யாரென்று நானும் கண்டுகொண்டுவிட்டேன். உங்களுக்கு என்னை அளிக்கிறேன். எனக்கு உங்களை அளியுங்கள். நான் உங்கள் படைக்கலம் என்று கண்டதனால்தான் என்னை அணுகி வந்திருக்கிறீர்கள். இத்தருணம் இருவருக்கும் உகந்ததே.

 

மூன்று மாதம் கழித்து அங்கிருந்து கிளம்பி துவாரகைக்கு வந்தேன். துவாரகையில் அதற்குள் கணிகர் முதன்மை பெற்றவராக மாறிவிட்டிருந்தார். எவ்வண்ணம் அவர் அப்படி ஆனார் என்பதை என்னால் எண்ணி எடுக்க இயன்றது. ஒரு இந்திர மாயக்காரனின் விழிதொடு வளையத்திற்கு வெளியே இருந்து அவனுடைய ஆடலை பார்ப்பதுபோல. அவருடைய அசைவுகள் அனைத்தும் பொருளற்றவையாக இருந்தன. அவற்றுக்கு ஏன் ஒவ்வொருவரும் அவ்வண்ணம் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது திகைப்பூட்டுவதாக இருந்தது. சிலபோது வேடிக்கையாக. சிலபோது அச்சமூட்டுவதாக. அடிக்கடி மானுடர் உண்மையில் அறிவுடையவர்கள்தானா என ஐயமெழுப்புவதாக.

அமைச்சரும் அவையினரும் அரசரும் அரசகுடியினரும் மீள மீள அமர்ந்து சொல்லெடுக்கிறார்கள். பேசிப்பேசி பாதை படிந்து அறியாதொழுகத் தொடங்கும்போது தங்களை அறியாமல் ஒன்றுக்கு ஒற்றைச்சொல்லையே கையாள்கிறார்கள். ஒன்றை சுட்ட ஒற்றைச்சொல்லை அனைவரும் கையாளத் தொடங்குகையிலேயே ஒன்று நிகழ்கிறது, அனைவரும் ஒன்றையே எண்ணத்தொடங்குகிறார்கள். உள்ளங்களுக்கு அவ்வியல்பு உண்டு. நீர்த்துளிகளைப்போல அவை ஒன்றோடொன்று இணைந்து ஒற்றை நீர்ப்படலமென ஆக விழைகின்றன. ஒரு சிறு கூட்டம் ஓரிடத்தில் அமர்ந்து எப்படி பூசலிட்டாலும், எதை சொன்னாலும் மெல்ல மெல்ல அவர்களின் உள்ளங்கள் ஒன்றாகிவிடுகின்றன. அவர்கள் பூசலிடும் தரப்புகளாக நீடித்தாலும்கூட ஒவ்வொன்றையும் ஒன்று போலவே எண்ணுவார்கள். ஆகவேதான் எதிரிகளின் எண்ணங்கள்கூட ஒன்று போலிருக்கின்றன. சொற்கள் ஒன்று போலிருக்கின்றன. அவர்கள் கண்டடையும் வழிமுறைகளும் ஒன்றே.

அஸ்தினபுரியில் நடந்ததும் அதுவே. காலத்தின் நீண்ட இடைவெளிக்குப்பின் நின்று நோக்குகையில் அஸ்தினபுரியில் கௌரவரும் பாண்டவரும் ஒன்றையே சொல்லி, ஒன்றையே எண்ணி, ஒன்றையே செய்து, ஒற்றைத் திரளென்றே திகழ்ந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. தன் வாலை தான் விழுங்கும் பாம்பென அவர்கள் குருக்ஷேத்ரத்தில் போரிட்டிருக்கிறார்கள். துவாரகையில் நிகழ்வதும் அதுவே. துவாரகையின் மூன்று எதிரித் தரப்புகளில் எவருக்கும் மாற்று என எண்ண ஓட்டம் இல்லை என நான் முன்னரே கண்டிருந்தேன். அவர்கள் ஒன்றின் மூன்று முகங்கள். ஆகவேதான் ஒரு தரப்பிலிருந்து இன்னொன்றுக்குச் செல்பவர் பெரிய மாறுதல் எதையும் காண்பதில்லை.

அவைக்கூடல்களில் ஒன்றை நானே எனக்குள் உணர்ந்திருக்கிறேன். பிரத்யும்னனோ சாம்பனோ என்ன முடிவெடுப்பார் என்பதை என்னால் முன்னால் சொல்ல முடிந்தது. பிறர் எண்ணி எண்ணித் தவிக்கும் இடங்களுக்கு நான் எளிதாகச் சென்று மீண்டுவந்தேன். பிறர் அறியாதனவற்றை அறிந்தேன். அது ஏன் என்று அப்போது தெரிந்தது. ஏனெனில் எந்த அவையிலும் நான் பேசியதில்லை. ஒவ்வொரு உரையாடலிலும் பிற அனைவரும் சொல்லும் எந்தச் சொல்லையும் நான் எடுப்பதில்லை. நான் வேறு சொற்களால் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டேன். வேறு வகையில் சொல்லாட்சிகளை அமைத்தேன். ஆகவே என் எண்ணங்கள் வேறாக இருந்தன. ஆயினும், நான் அக்குருதிக்குள் இருந்தவன். அந்தச் சூழலில் வளர்ந்தவன். எத்தனை விலகினாலும் கிளை மரத்திலிருந்து இணைப்பை வெட்டிக்கொள்ள இயலாது.

ஆனால் கணிகர் அவ்வாறல்ல. அவருடைய உடல் அமைப்பினாலேயே அவர் எந்த அவையிலும் அமர முடியவில்லை. அவைகளில் அவரை மிக விலக்கி கீழே அமரச்செய்கிறார்கள். அதுவும் ஒரு கூரிய உண்மை. அவரது உடல் ஒன்றுடன் ஒன்று சற்றே மடிந்த இரு தகடுகள்போல. மானுடர் எந்த அவையிலும் நின்றோ அமர்ந்தோ பேசுகையில் அனைவருக்கும் பொதுவான உயரத்தை விழிகளால் வகுத்துக்கொள்கிறார்கள். அந்த உயரத்திற்குள் மட்டும்தான் நோக்குகள் இருக்கின்றன. அவ்வெல்லைக்குள் வருபவர்களைப்பற்றி மட்டும்தான் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடனே உரையாடுகிறார்கள். எந்த அவையிலும் ஒருவர் அமர்ந்துகொண்டு பேசினால் திடுக்கிட்டு அவரை நோக்கி நோக்குகள் கீழிறங்குகின்றன. ஒரு சிறு குழந்தை அவைக்கு வந்தால் அவையின் நோக்கை வலிந்து கீழிறக்க வேண்டியிருக்கிறது.

அவைகளில் நிலத்திலிட்ட புலித்தோலில் படிந்ததுபோல் கிடக்கும் கணிகர் அங்கிருக்கிறார் என அனைவருக்கும் தெரிந்தாலும் மிகச்சிறு பொழுதிலேயே அங்கிலாதவராக ஆகிவிடுவார். அவர் குரலெழுப்புவது வரை அவரை எவரும் பார்ப்பதில்லை. அவர் பேசும்போது அனைத்து நோக்குகளும் தழைந்து கீழிறங்கி அவர் மேல் படிகின்றன. அவர் பேசி முடித்த சில கணங்களிலேயே அவை இயல்புநிலைக்கு திரும்பிவிடுகின்றன. விழிகள் மூங்கில்களைப்போல, வளைத்துக்கட்டி நிறுத்தினாலும் கைவிட்ட கணமே அவை இயல்புநிலை மீள்கின்றன. அதை அவர் எப்போதும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். எந்த அவையிலும் அந்த அவையின் ஒரு பகுதியாக இருந்து அனைத்தையும் அறிகையிலேயே அந்த அவையின் சொற்களங்களுக்குள் செல்லாமல் அகன்றிருக்கிறார். அகன்றிருக்கும் ஒருவரால் அனைவரையும் துணுக்குற வைக்கும் பார்வைகளை கூற முடியும். ஒவ்வொருவரும் சென்று முட்டிக்கொண்டிருக்கும் வாயிலுக்கு அப்பால் மூடப்படாத வழியொன்றிருப்பதை சுட்டிக்காட்ட முடியும்.

மிகச்சில நாட்களிலேயே கணிகர் என் மூத்தவரின் அவையில் ஒவ்வொரு முறையும் தவறாது புதிய வழியைக் காட்டும் பேரறிஞராகவும், மதிசூழ் திறனாளராகவும் அடையாளம் காணப்பட்டிருந்தார். நான் மூத்தவரின் அவைக்குச் சென்றபோது முதலில் அவரைத்தான் பார்த்தேன். அவர் விழிகளை சந்தித்தபோது அவர் முன்னர் என்னை அறிந்திருப்பதைப்போலவே தெரியவில்லை. மெய்யாகவே அன்றிரவு நான் கொண்ட உளமயக்குதானா என்ற ஐயத்தையே அப்போது அடைந்தேன்.

அந்த அவையில் ஒன்றை நான் உணர்ந்தேன், அவையை கணிகர் தன் முழு ஆட்சியில் வைத்திருக்கிறார். நான் வெளியே இருந்தபோது துவாரகையில் போர் தொடங்கிவிடும் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தேன். இதோ இதோ என்று என் புலன்கள் துடித்து நின்றன சிலநாட்கள். நான் கிளம்பிய அன்று இரவு மறுநாளே போர் அறைகூவப்படும் என்று மூத்தவர் ஃபானு சொல்லியிருந்தார். நாள் செல்லச்செல்ல அந்தப் பதற்றம் குறைந்தாலும் போர் நிகழக்கூடும் என்றே எண்ணினேன். உண்மையில் நான் இல்லாமல் அப்போர் முடிந்து அனைத்தும் எவ்வகையிலேனும் ஒருங்கமைந்துவிட்டால் நன்று என்று கருதினேன். என் சுமைகள் குறையும், நான் அஞ்சும் பாதைகளில் செல்லவேண்டியிருக்காது. ஆகவே ஒவ்வொருநாளும் மெல்லிய எதிர்பார்ப்பு எனக்கிருந்தது.

அவையைக் கண்டதும் புரிந்துகொண்டேன், போர் நிகழவில்லை என்றால் அதற்கு கணிகரே முதல் ஏது. போர் நிகழுமென்றால் அதை அவரே நடத்துவார். அவர் காத்திருக்கிறார். மேலும் திரள்வதற்காக, மேலும் கூர்கொள்வதற்காக. அவையை தொலைவிலிருந்து ஒருகணம் பார்த்தபோது எழுந்த கொந்தளிப்பு உடனே அடங்கி மெல்லிய இளிவரலும் கசப்பும் எஞ்சியது. நான் முகமன் உரைத்து மூத்தவரை வணங்கி அவைக்குள் சென்று அமர்ந்துகொண்டேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 22

பகுதி நான்கு : அலைமீள்கை – 5

தந்தையே, கணிகர் மிகத் தாழ்ந்த குரலில் பேசினார். பேசும்போது விழிகள் அச்சொற்களுக்கு தொடர்பே அற்றவைபோல மின்னிக்கொண்டிருக்கும். அவர் நகையாட்டு உரைப்பதில்லை. ஆனால் நகையாடுவதுபோலத் தோன்றும். ஏனென்றால் அவர் விழிகளில் ஒரு சிறு புன்னகைபோல் ஓர் ஒளி இருக்கும். அவர் பேசுவதை நாம் செவிகொடுக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு சொல்லையும் உளம்பதிக்காமல் அகலவே இயலாது. அது ஏன் என்று அன்றே எண்ணிக்கொண்டேன், இன்றும் எண்ணுகிறேன். அவர் முற்றிலும் புதியவர், அவைக்கு அப்போதுதான் வந்திருந்தார். ஆனால் நான் அவர் சொற்களில் என்னை மூழ்கடித்தவன்போல் அவர் முன் அமர்ந்திருந்தேன்.

கணிகர் “நான் இங்கு வரும்போது இளைய யாதவரைப் பார்த்து உசாவி திரும்பிப்போகும் எண்ணத்திலிருந்தேன். வந்தபின்னரே யாதவக் குடியின் முதன்மை அரசராகிய ஃபானுவை முறைமீறி நிலம்விழையும் ஷத்ரியர்களும் கட்டுகளற்ற அசுரர்களும் எதிர்ப்பதை கண்டுகொண்டேன்” என்றார். “என் பணி யாதவர்களுக்கு உதவியாக இங்கே களம்நிற்பதே என உணர்ந்தேன். ஆகவே நேராக வந்து அரசரை பார்த்தேன். நல்லவேளையாக நான் வந்தநாளில் இங்கே லக்ஷ்மணையின் மைந்தர் யாதவர்களுடன் கைகோக்கும் நிகழ்வு உருவானது. அரசர் உளம் மகிழ்ந்த நிலையில் இருந்தார். என்னை இந்த அவைக்கு வரும்படி சொன்னார்.”

நான் “இயல்பாக நீங்கள் ஷத்ரியர்களை ஆதரிக்க வேண்டியவர் அல்லவா? அந்தணர்கள் எப்போதும் ஷத்ரியர்களுடன்தானே நிலைகொள்வார்கள்?” என்றேன். ”ஆம், அது மெய். ஆனால் அந்தணர்கள் ஷத்ரியர்களால் முறையாக அழைக்கப்பட வேண்டும். அவர்கள் என்னை அழைக்கவில்லை. அவர்கள் அவையில் இன்று என்னைப்போல் ஆற்றல் மிக்க அந்தணர்கள் எவருமில்லை. ஏனெனில் பிரத்யும்னன் தன்னை ஷத்ரியரென்று எண்ணவில்லை. அங்கே அந்தணர் செல்வதில்லை. ஏனென்றால் பிரத்யும்னன் தன்னை அசுரக்குருதி சார்ந்தவர் என்றுதான் உள்ளாழத்தில் எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்றார். நான் “எவ்வண்ணம்?” என்றேன். “அன்னம்போல ஒருவரை அடிமைப்படுத்துவது பிறிதொன்றில்லை. சுகவனத்தின் கிளிகள் வேதம் ஓதுகின்றன என்கிறார்கள். எனில் அது அங்கு பழுக்கும் கனிகளின் சுவையாலேயே. பிறிதொரு காட்டில் அவை வளர்ந்தால் அவைகளின் நாக்கில் வேதம் எழுவதில்லை” என்றார்.

“அது எவ்வண்ணம்?” என்று கேட்டேன். “அவ்வண்ணமே” என்று அவர் என்னை கூர்ந்து நோக்கியபடி சொன்னார். “எண்ணி நோக்குக!” என்று அவர் மேலும் சொன்னார். “உண்ணும் உணவுபோல் உயிரை நேரடியாக சென்று தொடும் பிறிதொன்றுண்டா? எண்ணங்களும் கனவுகளும் உணர்வுகளும் உயிரின் வெளிப்பாடுகளல்லவா? சுடரிலிருந்து ஒளியும் புகையும் வெப்பமும் எழுவதுபோல அல்லவா அவை எழுகின்றன?” நான் “ஆம்” என்றேன். “அவ்வுயிரைப் பேணும் உணவு அம்மூன்றையும் ஆளுவதில்லையா என்ன?” என்றார். “ஆம், ஆள்கிறது” என்றேன். “யாதவ இளவரசே, சம்பராசுரரின் உணவை பன்னிரண்டு ஆண்டுகளாக உண்ட பிரத்யும்னன் எச்சிந்தனைகளால் ஆளப்படுகிறார்?” என்றார்.

“நான் அதை எண்ணியதில்லை” என்றேன். “எண்ணுக, அவர் ஒருவகையில் அசுரமைந்தன்!” நான் திகைப்புடன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றேன். “இளவரசே, இதுவல்லவா நிகழ்ந்தது? விதர்ப்பினியாகிய ருக்மிணி தன் முதல் மைந்தனை நகருக்கு வெளியே இருந்த பேற்றரண்மனையில் ஈன்றார். மைந்தனுக்கு இருபத்தெட்டாம் நாள் இடைநூல் அணிவிக்கும் விழா ஒருக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நாள் அவர் தன் தோழியருடன், இளமைந்தனுடன் நகர்நுழைந்தார். அன்று அரசி தேரில் கொலுவிருந்து மக்களுக்கு காட்சியளித்தார். மைந்தனை மக்கள் மறுநாள்தான் காணமுடியும், விழிக்கோள் ஒழிய இடைக்காப்பு அணிவித்தபின். ஆகவே அருகே வந்த பல்லக்கில் இளஞ்சேடியர் இருவர் மைந்தனுடன் வந்தனர்” என்றார் கணிகர்.

“அணியூர்வலம் அரண்மனையை அடைந்ததும் பல்லக்கும் உடன்வந்து நின்றது. ஏவற்பெண்டுகள் அதற்குள் ஏறிப் பார்த்தபோது இரு சேடியரும் நஞ்சூட்டப்பட்டு இறந்துகிடந்தனர். அவர்களிடம் இருந்த மைந்தனை காணவில்லை. அச்சேடியரை மயக்கியது எந்த நஞ்சு என்று கண்டுபிடிக்க இயலவில்லை. மைந்தன் எங்கு சென்றார் என்றும் அறியமுடியவில்லை. இளைய யாதவர் அன்று நகரில் இல்லை. அவர் அன்று இரவுதான் வந்துசேர்வதாக இருந்தது. நகரை ஆண்டுகொண்டிருந்தவர் அவருடைய சாலை மாணாக்கரான ஸ்ரீதமர். உடனடியாக நகரின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. கலங்கள் எவையும் கடல் நீங்கலாகாதென்று ஆணையிடப்பட்டன. நகர் எங்கும் வீரர்கள் சென்று ஒரு சிறு இடுக்கு கூட எஞ்சாமல் உசாவி நோக்கினர். எங்கும் அவர் இல்லை.”

“மைந்தன் முற்றாகவே மறைந்துவிட்டிருந்தார். பின்னர் இறந்துகிடந்த இரு சேடியரையும் ஆராய்ந்த மருத்துவர்கள் அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டிருக்கிறது என்றும், அந்த நஞ்சு மண்ணில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை நச்சுக்கல்லின் புகையால் ஆனது என்றும், அவ்வகை நச்சு அசுரர்களுக்கு மட்டுமே உரியவை என்றும் கூறினார்கள். அசுரர்களின் சிறைகளில் எங்கேனும் இளமைந்தன் இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக ஒற்றர்கள் அனுப்பப்பட்டனர். எச்செய்தியும் வரவில்லை. இளைய யாதவர் தன் ஒற்றர்களின் நுண்ணுணர்வால் அசுரர் வந்த வழியை கண்டடைந்தார். அவர்களின் அடையாளங்களைக் கொண்டு மைந்தனை இங்கு வந்து தூக்கிச்சென்றவர்கள் சம்பராசுரரின் ஒற்றர்கள் என்று கண்டடைந்தார்.”

“ஆனால் சம்பராசுரரின் அரண்மனையிலோ அகத்தளத்திலோ அம்மைந்தன் வளர்க்கப்படவில்லை. சம்பராசுரரின் அவையிலிருந்த சேடியொருத்தி பல நாட்கள் முன்னரே தனக்கு வயிற்றில் கரு தங்கியிருப்பதாக நடித்துக்கொண்டிருந்தாள். கையில் குழந்தையுடன் அவள் மீண்டும் பணிக்கு வந்தபோது அது அவள் குழந்தை என்று நம்பப்பட்டது. அவ்வாறு அகத்தளத்தில் அக்குழவி வளர்ந்தது. பதினாறாண்டுகள் அம்மைந்தன் இல்லாமையினால் அவருடைய இளவலாகிய சாருதேஷ்ணனை இளவரசர் என்று பட்டம் கட்டினார்கள். அவர் இளவல் என அரியணை அமர்ந்து ஆட்சி செய்தார், அனைத்துச் சடங்குகளிலும் அவரே அமர்ந்தார்.”

“அந்நிலையில் ஒருநாள் கடலாடச் சென்ற பிரத்யும்னன் எண்ணியிராது எழுந்த அலைக்கொந்தளிப்பால் நிலையழிந்த படகிலிருந்து நீரில் விழுந்தார். அசுரர்கள் கடலில் பாய்ந்தும் வலைவீசியும் அவரை தேடினர். அலைகளில் அவர் மறைந்துவிட்டார். அசுரர்களின் படகுகளை அலைகள் அறைந்து வேறு திசைக்கு கொண்டுசென்றன. மைந்தனை இழந்து திரும்பி வந்த அசுரர்களைக் கண்டு சம்பராசுரர் கடுமையாக சினம்கொண்டார். வாளை உருவி அவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தினார். மீண்டும் பல நாட்கள் மைந்தனுக்காக தேடினார்கள். அவர் உடல் கிடைக்கிறதா என்று கடலோரங்கள் முழுக்க அலைந்து நோக்கினார்கள். மைந்தன் மறைந்துவிட்டிருந்தார்.”

“ஆனால் அவர் சாகவில்லை. அவரை கடல்வாழ் முதலைமீன் ஒன்று நீரிலிருந்து தூக்கி வானில் வீசி மூழ்காது காப்பாறியது. அவரை அது தன் வாலாலும் மூக்காலும் தட்டி உந்தி அங்கிருந்த பாறை ஒன்றுக்கு கொண்டுசென்றது. பாறையில் தொற்றி ஏறி மயங்கிக் கிடந்த அவரை மீனவர் சிலர் கண்டடைந்தனர். அவர்கள் தெற்கே நெடுந்தொலைவிலிருந்து வந்தவர்கள். வீசிய புயலால் நிலையழிந்து திசைமாறி அலைந்தவர்கள். அவர்கள் அவரை கொண்டுசென்றனர். தங்கள் குடிலில் மருத்துவம் செய்து உயிர்மீட்டனர்.”

“ஆனால் மைந்தன் மொழியை மறந்திருந்தார். நினைவுகளை இழந்திருந்தார். அவர் எவர் என அவர்களால் கண்டறிய முடியவில்லை. அவர் அவர்களிடம் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்தார். ஒருநாள் அவர் உடல் அடையாளங்களைக் கண்ட ஒற்றர்கள் சிலர் சம்பராசுரரிடம் சென்று மைந்தனை மீன்குடியினர் சிறைப்பிடித்து வைத்திருப்பதாக சொன்னார்கள். படைகளுடன் சம்பராசுரரே மீன்குடிகளை வெல்லும்பொருட்டு வந்தார். மீன்குடியினர் கரைப்போர் அறியாதவர் என எண்ணி அவர் வெறும் எழுபது படைவீரர்களுடன் வந்தார். அவர்கள் மீன்குடியினரின் ஊரை தாக்கினார்கள்.”

“நாணொலி கேட்டதும் இயல்பாகவே பிரத்யும்னனின் தோள்கள் எழுந்தன. வெளியே ஓடிச்சென்று தங்களை தாக்கவந்த இருவரை தூண்டில்வேல் எறிந்து வீழ்த்தி அவர்களில் ஒருவரின் வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டார். அவருடைய வில்திறனுக்கு முன் சம்பராசுரரால் நிற்க முடியவில்லை. போர்க்களத்திலேயே பிரத்யும்னனின் அம்பேற்று சம்பராசுரர் மண்படிந்தார். அசுரப்படை தோற்று ஓடியது. அவர்கள் மேலும் படைகளுடன் வருவதற்குள் மீன்குடியினர் தங்கள் படகுகளில் ஏறி கடலுக்குள் சென்றுவிட்டனர்.”

“சம்பராசுரர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததுமே அது தன் மைந்தன் பிரத்யும்னன்தான் என இளைய யாதவர் உய்த்தறிந்தார். உடனே துவாரகையின் படைகள் கடற்கரை நோக்கி சென்றன. கலங்களும் கடல்வழியே சென்றடைந்தன. அசுரர்கள் அஞ்சி பின்னடைந்தனர். பிரத்யும்னன் இளைய யாதவரின் மைந்தனே என்று அவர் உடலில் இருந்த எட்டு அடையாளங்களைக் கண்டு உறுதிசெய்தனர். அதை அவருக்கும் கூறி ஏற்கச் செய்தனர். அவர் துவாரகைக்கு மீண்டார். தனக்கு வாழ்வளித்த மீனவர்களுக்கு நன்றிசொல்லும் பொருட்டு தன் கொடியில் முதலைமீன் அடையாளத்தையும் பொறித்துக்கொண்டார்.”

மெய்யாகவே நான் அக்கதையை அறிந்திருக்கவில்லை. நான் அறிந்தது வேறொரு கதை, குழந்தைகளுக்குச் சொல்வதற்கு ஏற்றது. நான் “இந்தக் கதை எனக்கு வேறுவகையில் சொல்லப்பட்டிருக்கிறது” என்றேன். “ஆம், கதைகளை சொல்லிச் சொல்லி பயனற்றவையாக ஆக்கி நிலைநிறுத்துவதே சூதர்களின் தொழில்” என்று கணிகர் சொன்னார். நான் சிரித்தேன். “கதைகளினூடாக அரசியல் உருவாகிவிடக்கூடாது என்பதை அரசர்களும் விரும்புகிறார்கள்” என்றார் கணிகர். “உங்கள் அரசியல்கதையை சொல்லுங்கள்” என்றேன்.

“துவாரகைக்கு வந்தபின் பிரத்யும்னன் சம்பராசுரரின் குடிகளுடன் இசைவுகொண்டார். அவர்களும் அவரை தங்கள் இளவரசராக ஏற்றுக்கொண்டார்கள். தன் அன்னை ருக்மிணியின் மூத்தவர் ருக்மியின் வளர்ப்பு மகள்களான மாயாவதி, சாருமதி, ருக்மவதி ஆகியோரை மணந்துகொண்டார். மைந்தனை மீட்டெடுத்தனர் துவாரகையினர். அவரை மீண்டும் ஷத்ரியகுடியுடன் குருதியால் இணைத்தனர். ஆனால் துவாரகையினர் ஒன்றை நோக்க விட்டுவிட்டிருந்தனர். அசுரர்கள் அன்னத்தை வழிபடுபவர்கள். அன்ன வடிவிலேயே இங்கு தெய்வம் எழுந்தருள முடியும் என்று தொல்நம்பிக்கையாக சாங்கியம் கூறுகிறது. ஆகவே அவர்கள் தங்கள் அன்னத்தில் ஒரு பகுதியை முறைப்படி நுண்சொல் உரைத்து அளித்து அவரை வளர்த்திருக்கிறார்கள்.”

“அன்னத்தால் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்” என்றபோது கணிகரின் விழிகள் மேலும் கூர்மைகொண்டன. “அவரில் ஓடும் குருதி அசுரர்களுடன் தொடர்புடையது. இனி அதை அவரிடமிருந்து நீக்கவே முடியாது. ஆகவேதான் ஷத்ரியகுடியில் மூன்று இளவரசியரை மணந்த பின்னரும் அவர் அசுரப்பெண்ணைக் கண்டு காதல்கொண்டார். அசுரகுலச் சக்கரவர்த்தியான ஹிரண்யாக்ஷரின் குடியில் வந்த வஜ்ரநாபரின் மகள் பிரபாவதியை அவர் மணந்தது அவ்வாறுதான். தன் மைந்தன் அனிருத்தன் பாணாசுரரின் மகள் உஷையை விழைந்தபோது படைகொண்டு சென்று அப்பெண்ணைக் கவர்ந்து அவருக்கு மணமுடித்தார். அப்பெண்ணின் குருதியில் பிறந்த மைந்தனுக்கு வஜ்ரநாபன் என்றே பெயரிட்டார்.”

“அம்மைந்தன் நாளை துவாரகையை ஆளவேண்டும் என்று கனவு காண்கிறார் அவர்” என்று கணிகர் தொடர்ந்தார். “வஜ்ரநாபன் அசுரரேதான். நஞ்சு கலந்த பால் பாலே அல்ல, நஞ்சுதான். அந்தணனாகிய நான் ஒருபோதும் அசுரர்களை அரசர் என ஏற்க இயலாது. கறைபட்ட ஷத்ரியர், அசுரர், நிஷாதர் என்னும் மூன்று தரப்புகளுக்கு எதிராக யாதவர்களை வலுப்படுத்துவது என் கடன்.” நான் “ஆனால் அவரை ஷத்ரியர் என்கிறார்கள்” என்றேன். அவர் சீற்றத்துடன் “ஷத்ரியர்க்ள் என்பவர்கள் யார்? ஆற்றல்கொண்டு நிலம்வென்றபின் வேதவழிநின்ற அந்தணர்கள் சொல்கேட்டு நடக்கும் அனைவரும் ஷத்ரியரே. அவ்வண்ணமென்றால் யாதவரும் ஷத்ரியரே” என்றார்.

“அறிக! தொன்மையான சேதிநாட்டு அரச குலமும், விதர்ப்ப அரசகுலமும் யாதவக் குடியிலிருந்து எழுந்தவையே. அஸ்தினபுரியின் பாண்டவர் யாதவஅன்னையின் மைந்தர் அல்லவா? இன்று பாரதவர்ஷம் எங்கும் பரவிக்கொண்டிருப்பது யாதவக் குருதி. அதை மேம்படுத்தி ஷத்ரியர் என்றாக்கி நிலைநிறுத்துவது அந்தணர்களின் பொறுப்பு” என்றார். “நான்கு எனத் திரண்ட தொல்வேதம் ஷத்ரியர்களை முற்றாக வகுக்கிறது. அவர்களுக்குரிய நெறிகளை வகுத்து அந்நெறிகொண்டோர் அனைவரும் ஷத்ரியரே என்கிறது ஐந்தாம் வேதம். நான் இளைய யாதவர் அருளிய ஐந்தாம் வேதத்தை ஏந்தியே இந்நகருள் புகுந்தேன்” என்றார் கணிகர்.

“இங்கு தங்கள் வரவு நலம் தருக!” என்றேன். “ஆனால் தாங்கள் நுழைந்த தருணம் நன்றல்ல என்று தோன்றுகிறது. இப்போது தங்கள் செவிகளில் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் எவரும் இல்லை” என்றேன். “ஆம், அதை அறிவேன். ஆனால் மிக மெல்ல எவரும் அறியாது உள்நுழைவதே என் வழக்கமாக இருந்திருக்கிறது. இன்று இவர்கள் அனைவரிடமும் ஒரு சொல்லேனும் நான் உரைத்து அது இவர்கள் உள்ளத்தில் நிற்கச் செய்துவிடுவேன். என்னைப்பற்றிய நினைவென ஒன்றை இவர்களுக்குள் பதித்துவிடுவேன், அதன்பின் இவர்கள் அவையில் இயல்பாக நான் வந்து அமர்வேன்.”

“இவர்கள் அவைசூழ்ந்திருக்கையில், அகம் முழு விழிப்பு கொண்டிருக்கையில் நான் வந்தால் என்னை ஏற்கையிலே ஒரு சிறு ஐயத்தையும் அடைவார்கள். என் நினைவு எழும்போதும், என் முகம் காணும்போதும் அந்த ஐயமும் உடன்வந்து அமையும். இப்போது சித்தம் மயங்கி தெளிவற்றிருக்கையில் விழிப்பறியாமல் நான் அகத்தே கடக்கின்றேன். கூடத்தில் நுழையாமல் அகத்தளத்தில் தோன்றுவதே நாகங்களின் வழி என்பார்கள். நஞ்சுள்ள அனைத்துக்கும் அதுவே இயல்பு” என்றார்.

நான் “நீங்கள் நஞ்சு கொண்டவரா?” என்றேன். அவர் இரு கைகளையும் ஊன்றி எழுந்து என்னை கண்களுள் உற்றுப்பார்த்து “என்னைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?” என்றார். நான் ஒருகணம் அகநடுக்கை அடைந்தேன். என் கைகள் அதிரத்தொடங்கின. “ஆம்” என்றேன். “ஆம். நான் நஞ்சு கொண்டவனே. வெல்லப்பட முடியாத நஞ்சு. அந்நஞ்சுடன்தான் அஸ்தினபுரிக்குள் சென்றேன். அக்குடியை முற்றழித்தேன். குருக்ஷேத்ரம் மேல் என் கொடியை பறக்கவிட்டேன். இங்கு வந்துள்ளேன். இங்கும் அதை நிகழ்த்துவேன்” என்றார்.

நான் அது கனவா என்று எண்ணினேன். மெய்யாகவே அவ்வண்ணம் ஒருவர் வந்தாரா? எனில் சூழ்ந்திருந்த எவரும் ஏன் அவர் சொல்வதை கேட்கவில்லை? ஒவ்வொருவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பெருந்திரளில் முற்றிலும் தன்னந்தனியராக அவர் அமர்ந்திருந்தார். பத்தி விரித்து எழுந்து நின்றிருக்கும் அரவரசனாக. அவர் முன் சிறு தவளைக் குஞ்சென நான் இருந்தேன். அவர் புன்னகைத்து “எனது நஞ்சு வெல்லப்பட இயலாதது. ஏனெனில் இது நேர்நஞ்சல்ல, எதிர்நஞ்சு. எதிரி இருக்கையில் மட்டும் எழுவது, எதிரிக்கு இணையாகவே வளர்வது. இதை வெல்ல ஒரே வழியே உள்ளது, எதிரியிலாதிருத்தல். எதிரியில்லா மானுடர் ஒருவர் உண்டேல் அங்கே இது பொருளிழக்கும்” என்றார்.

“நான் எவரிடமும் நஞ்சைச்செலுத்துவதில்லை. ஒருதுளி கூட. அவர்களிடம் முன்னரே இருந்த நஞ்சைத் தொட்டு உயிர்ப்பித்துப் பெருக்கும் ஒன்றையே கொடுக்கிறேன். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் நஞ்சை தாங்களே பெருக்கிக்கொள்கிறார்கள். தாங்களே நச்சுரு ஆகிறார்கள். பிறரை அழிக்கிறார்கள். தாங்களும் அழிகிறார்கள். எனது நஞ்சு என்னுள்ளிருந்து ஒரு துளியும் வெளியே செல்வதில்லை. அது தோன்றிய நாளிலிருந்து குன்றாது குறையாது அவ்வண்ணமே இருந்துள்ளது. ஐயம் தேவையில்லை, இந்நகர் என்னால் அழியும். இக்குடி என்னால் முற்றழியும்” என்றார் அவர்.

நான் “இதை ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்? நானும் இவர்களில் ஒருவன்” என்றேன். “ஆம், நீங்களும் இவர்களில் ஒருவர்தான். ஆனால் எனக்கு எப்போதுமே உங்களைப்போன்று ஒருவர் தேவை. நெடுங்காலத்திற்கு முன் பிறிதொரு வடிவில் என் மூதாதை இலங்கையை ஆண்ட ராவண மகாபிரபுவின் அவையிலிருந்தார். அங்கே அவர் விபீஷணனிடத்தில் நஞ்சை எழுப்பினார். அவரே கிஷ்கிந்தையின் சுக்ரீவனை எழுப்பியவர். ஹிரண்யகசிபுவின் அவையில் பிரஹலாதனைத் தொட்டு மூட்டியவர் அவர். துரியோதனன் அவையில் நான் சகுனியை எழுப்பினேன். விகர்ணனை எழுப்பியதும் நானே. ஒவ்வொரு அவையிலும் எங்களுக்கு உங்களைப்போல் ஒருவர் தேவை. இன்று நீங்கள்.”

“நான் இங்கே என்ன செய்யப்போகிறேன்?” என்றேன். “நீங்கள் செய்வதற்கு இரண்டே உள்ளது. உடனே எழுந்து என்னை இந்த அவைக்கு அறிவிக்கலாம். அல்லது உங்கள் மூத்தவர்களை தனியிடத்தில் சந்தித்து இங்கு நான் சொன்னவற்றை அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் என்மேல் ஐயமும் வெறுப்பும் கொள்ளச்செய்யலாம். அவர்கள் நம்பமாட்டார்கள், உங்கள் முழு ஆற்றலையும் அதற்கு பயன்படுத்த வேண்டியிருக்கும்” என்றார். “இன்னொன்று என்னை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகையாற்றல் கொண்ட படைக்கலம் நான். என்னை கையாளும் திறன் உங்களுக்கிருந்தால் நீங்கள் இந்நகரை வெல்லலாம். பாரதவர்ஷத்தை வெல்லலாம்.”

“ஆனால் இந்நகரை நீங்கள் அழிப்பீர்கள் என்றீர்கள்” என்றேன். “ஆம், ஆனால் கூட்டை உடைத்துத் திறக்காமல் எந்தப் பட்டாம்பூச்சி காட்டில் எழமுடியும்? அமைந்த இலையை உண்டு முடிக்காமல் அதற்கு எப்படி வண்ணச்சிறகு முளைக்கக்கூடும்?” என்றார் கணிகர். “எண்ணிப்பாருங்கள், துவாரகை என்ற இந்த இடத்திலிருந்து எழுந்து யாதவக்குடி நெடுந்தொலைவு சென்றாகவேண்டும். அதற்கு இந்த இடம் அழிந்தாகவேண்டும். இந்த அடையாளங்கள் அனைத்திலிருந்தும் அது விடுபட்டாகவேண்டும்.” அவர் என்ன சொல்கிறார் என்றே எனக்கு புரியவில்லை. தான் சொன்னவற்றையே மறுத்து மாற்றிச்சொல்கிறார் என்று மட்டும் புரிந்தது.

“எண்ணி நோக்குக, இன்று ஏன் இத்தனை பூசல்? தந்தை பரிசென தன் கையில் வைத்துத் தந்த இந்நகரை முழுதாளக்கூட ஏன் ஃபானுவால் முடியவில்லை?” என்று கணிகர் கேட்டார். “ஏனென்றால் யாதவர்களின் பூசல். பூசலிட வைப்பது அவர்களின் குடியடையாளம். அவை முற்றழிய வேண்டும். இளைய யாதவர் முயன்றதேகூட அதற்காகத்தான், அவரால் அது இயலவில்லை. யாதவக்குருதி பாரதவர்ஷம் முழுக்க பரவவேண்டும். யாதவக்கொடி பறக்கவேண்டும். அது நிகழவேண்டும் என்றால் யாதவக்குடி முற்றழியவும் வேண்டும். விதை அழியாமல் செடி முளைக்கவியலாது.”

“இதை இந்த அவையில் வைத்து இப்படி சொல்கிறீர்கள்” என்றேன். “இங்கே கள்ளில் மூழ்காமல் எஞ்சுபவர் நீங்கள் மட்டுமே…” என்றார். “நான் இதை என் மூத்தவரிடம் சொன்னால் என்ன ஆகும்?” என்றேன். “சொல்க, அதுவும் நன்றே!” என்றார். “எனில் இதை நீங்கள் ஏன் செய்யவேண்டும்? அதுவே என்னை குழப்புகிறது” என்றேன். “நீங்கள் இதை அவர்களிடம் கூறக்கூற அவர்கள் என் மேல் ஆர்வம் கொள்வார்கள். எளிதாக நான் அவைக்கு வந்திருந்தால் அவர்கள் என்மேல் விழிதிருப்பவே வாய்ப்பில்லாது போய்விடக்கூடும். உங்கள் சொற்கள் அவர்கள் என்னை கூர்ந்து நோக்க வைக்கும். நோக்க நோக்க வளர்வது காமம், நோக்கினால் அணைவது வஞ்சம். நான் காமம் என உள்நுழைந்து அறியாமல் வஞ்சமென வளர்பவன். என்னை கூர்ந்து நோக்காதவர்களிடம் என்னால் செயல்பட இயலாது. இங்குள்ள அத்தனை யாதவர்களும் இரவு பகல் ஒழியாது என்னைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்க வேண்டுமெனில் ஒருவன் என்னை எதிர்த்து என்னை வெறுத்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கவேண்டும். அது நீங்கள்தான்” என்று கணிகர் என்னிடம் சொன்னார்.

நான் அவருடைய புன்னகையை பார்த்தேன். மிகமிக தெரிந்த புன்னகை அது. தந்தையே, அவருடைய முகம் ஒடுங்கியது. குழிந்த கண்கள். தொய்ந்த மூக்கு. அவர் இதழ்கள் முதுமையால் சுருங்கியவை. ஆனால் புன்னகைக்கும்போது மட்டும் அவர் பேரழகு கொண்டவரானார். நான் தெய்வத்தின் முன் என நிலைமறந்து சொல்லிழந்து நின்றேன். பின்னர் அக்கனவிலிருந்து என்னை பிடுங்கி எடுத்துக்கொண்டேன். அந்த ஒரு .கணத்தில் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்று இன்னமும் நான் அறியேன். நான் முறிந்தேன். முற்றாக அனைத்தையும் இழந்தேன். பல்லாயிரம் காதம் கடந்தேன். கைகூப்பி “இல்லை அந்தணரே, நீங்கள் என் ஆசிரியர். நான் உங்கள் அடியவன். எந்நிலையிலும் நான் உங்களைவிட்டு அகலப்போவதில்லை. உங்களுடன் சொல்லாலும் எண்ணத்தாலும் முரண்கொள்ளப் போவதுமில்லை. என்னை ஆள்க!” என்றேன்.

அவர் புன்னகைத்து “ஆகுக!” என்றார். நான் ஓர் அலை என சூழ இருந்த ஒலிகள் வந்து செவிகளை அறைவதை உணர்ந்தேன். துயிலில் இருந்தேனா அப்போது? கனவிலிருந்து மீண்டேனா? அவரை நோக்கினேன். அவர் மீண்டும் புன்னகைத்து “நன்று, இன்று நாம் இவ்வண்ணம் சந்திக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது” என்றார். நான் “நீங்கள் என்னை நோக்கி நேராக வந்தீர்கள்… என்னை முன்னரே அறிவீர்களா?” என்றேன். “இல்லை, ஆனால் முன்னரே கண்டிருந்தேன்” என்றார். “எங்கே?” என்று நான் நெஞ்சு துடிக்க கேட்டேன்.

“நான் இந்நகருக்குள் நுழைந்தது நேற்று” என்று அவர் சொன்னார். “வரும்வழியில் சாலையின் வலப்பக்கம் எழுந்த மணல்மேட்டின் மீது நீங்கள் நின்றிருப்பதைக் கண்டேன். தொலைவில், ஒரு சிற்றுருவெனத் தெரிந்தீர்கள். ஆனால், நீங்கள் என்னை அழைப்பதுபோலத் தோன்றியது.” நான் திகைப்புடன் “நானா?” என்றேன். “ஆம், நீங்கள்தான் என்னை அழைத்தீர்கள். நகருக்குள் நுழைந்ததுமே நீங்கள் எவர் என உசாவி அறிந்தேன்…” நான் திகைத்து அவரையே நோக்கிக்கொண்டிருந்தேன். “நான் தேடிவந்ததே உங்களைத்தான்” என்று அவர் சொன்னார்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 21

பகுதி நான்கு : அலைமீள்கை – 4

அவைக்கூடல் முறையாக முடிந்ததும் ஒவ்வொருவரும் இயல்பானார்கள். எல்லாம் நிறைவாகவே நடந்துவிட்டது என்னும் எண்ணம் மூத்தவர் ஃபானுவுக்கு உருவானதை உணரமுடிந்தது. ஒவ்வொருவரும் அருகிருந்தவர்களிடம் எளிமையாக உரையாடலாயினர். அரங்கே வெற்றுப்பேச்சுகளின் கூட்டு முழக்கமாக ஆகியது. மூத்தவர் சுஃபானு என்னை நோக்கி “இன்று கடலாடச் சென்றிருந்தீர்கள் அல்லவா?” என்றார். அதை ஏன் அவர் கேட்கிறார் என்பதை உடனே நான் புரிந்துகொண்டேன். அங்கிருந்த அனைவருக்கும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் எவரை சந்திக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும் என்பதை காட்ட விரும்புகிறார்.

“ஆம், இன்று நான் சற்று ஓய்வாக உணர்ந்தேன்“ என்றேன். சுஃபானு சிரித்து “ஆம், இங்கு நாம் நெடுநாட்களாக ஓய்வு நிலையிலேயே இருக்கிறோம். போர் வருகிறது என்ற எண்ணத்தால் ஓய்வை குற்றவுணர்வின்றியே நுகர்ந்தோம். ஆனால் இப்போதைய நிலையில் பெரும்பாலும் நாம் வாள்களை உருவ வாய்ப்பின்றியே வெற்றியை அடைந்துவிடுவோம் என்று படுகிறது. வென்றபின் அதன்பொருட்டு குற்றவுணர்ச்சியை நாம் அடையக்கூடும்” என்றார். அனைவரும் நகைத்தனர். அத்தருணத்தில் உவகை ஒலி எழுப்ப வேண்டுமென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. நான் சிரித்து “வெற்றிக்குப் பின் இங்கு வாழ்வது எப்படி என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றேன். சுஃபானு மேலும் செயற்கையாக சிரித்து “நாம் அனைவரும் அதை நன்கு பயின்றிருக்கிறோம்” என்றார்.

அப்போது ஓர் எண்ணம் எனக்கு வந்தது. அது இயல்பான ஒரு செயல் அல்ல, சுஃபானு என்னை உளம்கொண்டிருக்கிறார். எவ்வகையிலோ என்னை அவர் வேறிட்டறிகிறார். அவ்வண்ணம் ஓர் அவையில் எவரும் என்னை நோக்குவதில்லை. அது எனக்கு அமைதியின்மையை உருவாக்கியது. சுஃபானு அப்பாலிருந்த யாதவ குடித்தலைவர் முக்தரிடம் “ஷத்ரியர் தரப்பிலிருந்து நம்மை நோக்கி வருவதற்கு அன்னை லக்ஷ்மணையின் மைந்தர் முன்னரே ஒருக்கமாக இருந்தனர். அவர்களுக்கு சில பொய்யான சொல்லுறுதிகளை அளித்து பிரத்யும்னனின் தரப்பு தங்களிடம் இழுத்தது. ஆனால் ஷத்ரியர்களின் ஆணவத்தின் முன் அடிமையென்று இருக்க இயலாது என்று உணர்ந்த அவர்கள் விலகினார்கள். அச்சினத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை தங்கள்பால் அழைத்தனர் சாம்பனின் தரப்பினர். அங்கு சென்ற பின்னர்தான் தொல்குடியினராகிய மலைமக்கள் ஒருபோதும் இழிகுலத்தாராகிய அசுரருடன் இணைந்து இருக்க இயலாதென்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதன் விளைவாகவே இன்று நம்மை நோக்கி வந்திருக்கிறார்கள்” என்றார்.

மிக மரபான ஒரு பேச்சு அது. ஆனால் ஒருகணம் என்னை வந்து தொட்டுச் சென்ற சுஃபானுவின் கண்கள் வேறுவகை உணர்வு ஒன்றை காட்டின. “இந்த அவை அவர்கள் இயல்பாக இருக்குமிடம். அவர்களுக்குரிய பீடம் இங்குதான் முன்னரே போடப்பட்டிருக்கிறது. அவர்கள் இங்கு வருவதன் வழியாக நமக்கு ஆற்றல் சேர்த்திருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் இங்கு வருவதுடன் இங்கே போர் முடிந்துவிட்டதென்றே பொருள். இனி பூசலிடுபவர்கள் ஒன்றுக்கு மூன்று முறை எண்ணவேண்டும். நம்மிடம் படை வல்லமை இருக்கிறது. போர் வல்லமை சற்றே குறைவு, அதை அவர்கள் ஈடுகட்டுகிறார்கள். அவர்களை வரவேற்கும் முகமாக இந்த உண்டாட்டை ஒருக்கியிருக்கிறோம்” என்றார்.

அப்பால் ஃபானு ஏதோ சொல்ல அனைவரும் கைகளைத் தூக்கி வாழ்த்தினர். ஃபானு திரும்பி “உண்டாட்டு தொடங்குக…” என்றார். அரசரின் ஆணையை ஏற்று அவைநிமித்திகன் கொம்பொலி எழுப்பினான். ஊட்டறை நோக்கி அனைவரும் நிரைவகுத்துச் சென்றனர். இரு குலங்களையும் அவையில் பிரித்து அமரச்செய்திருந்தனர். ஆகவே உண்டாட்டு அறையில் அனைவரும் கலந்து அமரும்படி ஒருக்கியிருந்தனர். குடிமுறைமை இல்லாமல் தன்னியல்பான அமர்வு என்றால் அரசருக்கு என அரியணை நிகர்த்த பீடம் போடப்படாது. அவரும் பிறரைப்போல இயல்பாக ஏதேனும் ஒரு பீடத்தில் சென்று அமர்வார். அங்கே குலங்கள் கலக்கும் அமர்வுக்கு அதுவே உகந்தது என சுஃபானு முடிவு செய்திருந்தார்.

மூத்தவர் ஃபானுவுக்கு தனி இருக்கை போடப்படவில்லை. அவர் சென்று இயல்பாக அமர்ந்தார். அவரிடம் சிரித்துப் பேசியபடி சென்ற பிரகோஷன் அங்கே முறைமை ஏதுமில்லை என்பதை ஓரக்கண்ணால் பார்த்த பின் அவர் அருகே சென்று இன்னொரு இருக்கையில் அமர்ந்தார். ஒவ்வொருவரும் சென்று அமர்ந்தனர். அனைவர் முன்னிலும் பீதர்நாட்டு வெண்ணைக்களிமண் தாலங்கள் வைக்கப்பட்டன. பளிங்குக் குடுவைகளில் யவனமதுவும் பீதர்நாட்டு எரிமதுவும் வந்தன. தொடர்ந்து அன்னமும் ஊனும் வந்தன. மூத்தவர் ஃபானு முதல் அப்பத்தை எடுத்து யாதவ முறைப்படி அதை இரண்டாகக் கிழித்து பாதியை பிரகோஷனின் தட்டில் வைத்து “தங்கள் நலனுக்காக” என்றார். “அன்னம் பெருகுக! உயிர் பெருகுக! புகழும் வெற்றியும் செல்வமும் நிலைகொள்க!” என்றார்.

ஃபானு அதைச் செய்வது எப்போதுமுள்ள வழக்கம், ஆனால் அன்று ஒருகணம் அவர் விழிகள் நிலை தடுமாறுவதை கண்டேன். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. தாங்கள் இருந்த நாள் முதலே துவாரகையில் கடைபிடிக்கப்படும் அம்மரபு எங்களை ஒரு குடியென நிலைநிறுத்துவது. யாதவ குடிகள் காடுகளில் தங்கி அந்தியுணவு அருந்துகையில் ஒவ்வொரு முறையும் கிடைத்தலைவர் அவ்வகையில் அன்னம் பகுப்பதுண்டு. பகுக்கப்பட்ட அன்னமே பெருகும் என்பது யாதவர்களின் நம்பிக்கை. அன்னம் தன்னை நிலையமைத்துக்கொள்ளும் விழைவு கொண்டது. உயிர்க்குலங்களின் வேண்டுதலே அதை பெருக்குகிறது என்பார்கள். “பெருகுக!” என்ற சொல்லுடன் அன்னத்தை பகுப்பதும் “உடலென்று அமைக” என்று சொல்லி உண்பதும் தொல்வழக்கம்.

நாங்கள் உண்ணத்தொடங்கினோம். “நமது படைகளை ஒருங்கிணைக்க வேண்டும்” என்று ஃபானு சொன்னார். “இன்று நமது படைகள் தனித்தனியே குலங்களாகவே பிரிந்துள்ளன. அது நன்றல்ல. அவ்வாறு குலங்களாக பிரிகையில் பூசல்களும் பெருகுகின்றன. வெற்றிகளை ஒப்பிட்டுக்கொள்ளத் தொடங்குகிறார்கள். நமது ஒவ்வொரு படைக்குழுவிலும் அந்தகர்கள் விருஷ்ணிகள் போஜர்கள் அனைவரும் இருக்கவேண்டும். மத்ரர்கள் அத்தனை படைப்பிரிவுகளிலும் பங்குகொள்ள வேண்டும்.” மீண்டும் அவர் முகம் மாறுவதை கண்டேன். அதை அருகிருந்து கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். “ஆம், அதை நாம் பேசி முடிவெடுப்போம்” என்றார் பிரகோஷன். அப்போதுதான் மூத்தவர் ஃபானுவின் விழிகள் மாறியது பிரகோஷனின் விழிகளை அருகிருந்து கண்டமையால் என புரிந்துகொண்டேன்.

தன் கலத்திலிருந்த மதுவை பிரகோஷனின் கலத்தில் ஊற்றியபடி ஃபானு சொன்னார் “ஒன்றெனப் பெருகுவோம். இந்தப் பெருநகர் நமக்கு நமது தந்தையால் அளிக்கப்பட்டது. இங்கு நாம் செழிப்போம்.” அனைவரும் கை தூக்கி பேரொலி எழுப்பி வாழ்த்துரைத்தனர். நான் பிரகோஷனை நோக்கிக்கொண்டிருந்தேன். நெடும்பொழுதுக்குப் பின்னரே ஒன்றை உணர்ந்தேன், ஃபானு கிழித்துக்கொடுத்த அந்த அப்பத்தை அவர் தன் தட்டின் ஒரு ஓரமாக தனியாக வைத்திருந்தார். அதை உண்ணவில்லை. பலமுறை இயல்பாக கை அங்கு சென்றபோதும் கூட அதை தொடாமல் தவிர்த்தார். பிறர் உண்டுகொண்டிருந்த போது மிக இயல்பாக அதை எடுத்து ஏவலர் எடுத்துகொண்டு சென்ற ஒழிந்த தட்டொன்றில் போட்டு அகற்றினார்.

அவர் விழிகளில் ஃபானு கண்டது என்ன என்று எனக்குத் தெரிந்தது. அதை அவர் எச்சில் என்று எண்ணுகிறார். அவருடைய மிச்சிலை உண்டு வாழும் நிலைக்கு தன்னை கொண்டுவந்து விட்டோமோ என்று ஐயுறுகிறார். எனில் படைக்கலப்பை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்வார்? மத்ரநாட்டுக்கு என்று துவாரகையில் அவர் சேர்த்து வைத்திருக்கும் படையை துண்டுகளாக உடைத்து செயலற்றதாக்கும் திட்டம் என்று அவர் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. அங்கு இருந்து எழுந்து செல்கையில் அவர் அவ்வாறே கருதுவார் என நான் உறுதிகொண்டேன். நான் விழியோட்டி பார்த்தேன், மத்ரநாட்டார் பிறருடைய விழிகளை சந்தித்தபோதும் அவ்வாறே தோன்றியது. சலிப்புற்று என் கையிலிருந்த ஊன்துண்டை கீழே வைத்துவிட்டு சாய்ந்து அமர்ந்து நெளியும் திரைச்சீலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.

உண்டாட்டுகளின் முடிவில், தலையை நனைத்து எடைகொள்ளச் செய்துவிட்ட மதுவின் மயக்கில் எவரும் எவரையும் நோக்காமல் ஆவார்கள். ஒவ்வொருவரும் அங்குள்ள அனைவரையும் நோக்கி எதையேனும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நான் மது அருந்தவில்லை. காலையிலிருந்து தொடர்ந்த பலவகையான உள அலைவுகளால் எனக்கு மது அருந்தத் தோன்றவில்லை. இனி எந்த உண்டாட்டிலும் மது அருந்துவதில்லை என எனக்கே ஆணையிட்டுக்கொண்டிருந்தேன். ஆகவே எனக்கு மதுவை எவரும் ஊற்றித் தரவில்லை. நான் அருந்தினேனா என்று நோக்கவுமில்லை.

நான் உண்டாட்டுகளில் மதுவை விரும்பி அருந்துபவன். மது அருந்துவதனூடாக ஒவ்வாமைகளையும் சலிப்புகளையும் கடந்து சென்றுவிடலாம் என்று அறிந்திருந்தேன். ஓர் அவை என்னை அழுத்திச் சிறியவனாக்குகையில் மதுவினூடாக நான் விரிந்து எழுவேன். அங்கே என்னை காட்டிக்கொள்வேன். மது என்னை மிகைக்களி கொண்டவனாக்குகிறது என அனைவரும் அறிந்திருந்தனர். எழுந்து சென்று ஒவ்வொருவரையும் தழுவிக்கொள்வேன். ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன். தோளில் அறைந்தும் கைபிடித்து உலுக்கியும் உரக்க பேசுவேன். அனைவரையும் உறவுமுறை வைத்து அழைப்பேன். மதுமயக்கு அளிக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வேன்.

ஆனால் ஒவ்வொருமுறையும் அது எல்லைமீறிச் செல்லும். எங்கே அது என் கையை விட்டுச் செல்கிறது என்று என்னால் உணரமுடியாது. என்னை எவரேனும் சிறுமைசெய்வார்கள். சினம்கொண்டு கண்டிப்பார்கள். அது என்னை சீற்றம்கொண்டவனாக ஆக்கும். சில தருணங்களில் நானே எதையேனும் சொல்லி பூசலிடத் தொடங்குவேன். அது முதிர்ந்து அழுகையும் குமுறலும் என்று ஆகும். வசைபாடுவதும் நெஞ்சில் அறைந்து எழுந்து நின்று அறைகூவுவதும்கூட உண்டு. பின்னர் சோர்ந்து அறைமூலையில் விழுந்து சுருண்டு துயில்கொள்வேன். காலையில் எழும்போது நிகழ்ந்ததென்ன என்பது பொதுவாக நினைவில் இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தமாக பெரிய அளவில் ஏதோ நிகழ்ந்துவிட்டதென்று தோன்றும்.

ஒன்றுமே செய்யாமல், குறிப்பிடும்படி எதுவுமே நிகழாமல், வெல்லாமல் இழக்காமல் சென்றுவிட்ட வாழ்க்கையை அந்தச் சிறுபொழுது பலமடங்கு செறிவும் இசைவும் கொண்டதாக ஆக்கிவிடுகிறது என்றே என் அகத்தில் தோன்றும். அது உண்மையில் ஒரு நிறைவையே அளிக்கும். நான் வாழ்விலிருந்து உதிரவில்லை, எட்டுக் கைகளையும் கொக்கியாக்கி வாழ்வின்மேல் தொங்கிக்கொண்டிருக்கிறேன் என்ற நிறைவு அது. நான் மது அருந்திவிட்டு செய்த பூசல்களைக் குறித்து எவரேனும் என்னிடம் சொன்னார்கள் என்றால் அதன் பொருட்டு பொறுத்தருளும்படி கோரி கைகள் கூப்பி வணங்கி மீளமீள பிழைகூறி நின்றிருப்பேன். அப்போதுகூட என்னுள்ளத்தில் ஏதோ ஒன்று மகிழ்ந்துகொண்டிருக்கும். நான் ஒன்றும் இல்லாமலாகிவிடவில்லை, இதோ எல்லாக் கீழ்மைகளுடனும் சிறுமைகளுடனும் நானும் இருந்துகொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால் அன்று அவர்களிடமிருந்து பிரித்துக்கொள்ளவும் பிறிதொருவனாக ஆக்கிக்கொள்ளவும் விழைந்தேன். அவர்கள் அனைவரும் அடியிலாத சேற்றுப்பரப்பில் மெல்ல மெல்ல தாழ்ந்து சென்றுகொண்டிருப்பதாகவும் எனக்கு மட்டும் ஒரு மெல்லிய கொடி பிடிகிடைத்துவிட்டதாகவும் தோன்றியது. அவர்களை அணுகிப் பார்க்க வேண்டும் என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருப்பதை கூர்ந்து அறிய வேண்டும் என்றும் எண்ணம் எழுந்தது. அதற்கு என் உள்ளத்தின் மீது மதுவை ஊற்றி நனைத்துக்கொள்ளக் கூடாது.

மூத்தவர் குழறிய குரலில் “இத்தனை பேர் வந்தபிறகு நான் இனி எதைப்பற்றி எண்ண வேண்டும்?” என்றார். “போர்! ஆம், நாளை காலையே போர்.” சுஃபானு “ஆம், நாம் நாளை அதைப்பற்றி பேசுவோம்” என்றார். “நாளையா? நாம் இப்போதே கிளம்பிச்செல்வோம். பிரத்யும்னன் வரட்டும். அனிருத்தன் வரட்டும். அல்லது நகர் நீங்கி ஓடிப்போன யாதவ அரசரே வரட்டும். யார் வந்தாலும் போராடிப் பார்ப்போம்” என்றார் ஃபானு. “நாம் போராடுவோம்!” என்று சொன்னார் சுஃபானு. அவரும் குழறிக்கொண்டிருந்தார். “படைகளை எழச்சொல்… என் ஆணை இது.” சுஃபானு “ஆம், ஆணை! ஆணையிட வேண்டியதுதான்!” என்றார். “நாம் வென்றுவிட்டோம்” என்றார் ஃபானு.

அங்கு நின்று ஒற்றைப்பார்வையிலேயே ஒரு வேறுபாட்டை உணர முடிந்தது. ஒருவகையான வெற்றிக்களிப்பிலும் என்ன செய்வதென்றறியாத குழப்பத்திலும் உள்ளாழத்திலிருந்து எழுந்த அச்சத்திலும் ததும்பிக்கொண்டிருந்தனர் யாதவ மைந்தர். ஆனால் லக்ஷ்மணையின் மைந்தர்கள் அங்கு வரும்போதே சிறு ஒவ்வாமை கொண்டிருந்தனர். அதை மறைக்கும்பொருட்டு மிகையாக மது அருந்தினர். மேலும் மேலும் ஒவ்வாமை கொண்டனர். ஆகவே குடிக்கும்தோறும் சொல்லவிந்தனர். பெரும்பாலும் பிறர் சொல்வதை ஆம் என்றோ உண்மை என்றோ சொன்னார்கள். கை நீட்டி சுட்டிக்காட்டி எதையோ சொல்ல வந்து அச்சொல் உள்ளத்தில் எழாமல் வாயை மட்டும் அசைத்து விழிவிரித்து நோக்கினர்.

அந்த இளிவரல் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது ஏவலர் அருகிருந்த சிற்றறையின் கதவை சற்றே திறந்து உள்ளே ஒருவரை கொண்டு வந்தார்கள். உண்மையில் அது ஒரு பொருள் என்றுதான் நான் எண்ணினேன். சற்று பெரிதாக சமைக்கப்பட்ட ஏதோ உணவு. உணவுப்பொருட்களை வெண்பட்டால் போர்த்திக்கொண்டு வருவது துவாரகையில் பழக்கம். அது யவனர்களிடமிருந்து வந்தது. அவர்கள் உண்ணுங்கலத்தில் அன்றி வேறெங்கும் உணவு திறந்திருப்பதை விரும்பாதவர்கள். ஆனால் மெல்லிய வெண்பட்டு அணிந்து மரத்தாலம் போன்ற ஒன்றில் உடல் சுருக்கி அமர்ந்திருந்தவர் ஒரு முதியவர் என்பதை உணர்ந்து நான் அப்போது இருந்த உளநிலையில் அவரை கைசுட்டி நகைத்தேன். “என்ன இது? இது சமைக்கப்பட்ட உணவா என்ன?” என்றேன்.

பிறர் என்னைப் பார்த்தபின் அவரை பார்த்தனர். “விந்தையான மனிதர்” என்று ஒரு யாதவ குடித்தலைவர் சொன்னார். “ஆம், இரண்டாக ஒடிந்து இருக்கிறார்” என்றார் இன்னொருவர். அப்பால் இருந்த இன்னொருவர் “அவரை ஏதோ சிறு பேழையில் வைக்க முயன்றிருக்கிறார்கள்” என்றார். அனைவரும் அவரை நோக்கி சிரித்தனர். “அஷ்டவக்ரர்!” என்றார் ஒருவர். “தசவக்ரர்.” இன்னொரு குரல் “சதவக்ரர்” என்றது. “அதற்கு இந்த உடலில் இடமேது? இவர் வக்ரர்! ஒற்றை வளைவுதான்…” ஒருவர் எழுந்து அவர் அருகே வந்து “நான் சொல்கிறேன், இவரை வில் என நினைத்து எவனோ நாணேற்ற முயன்றிருக்கிறான்” என்றார். பெருஞ்சிரிப்புகள், கூச்சல்கள்.

அவருடைய கண்கள் ஆழத்தில் வளைக்குள் தெரியும் பெருச்சாளியின் கண்கள்போல் மின்னிக்கொண்டிருந்தன. அவரை அவர்கள் தாழ்ந்த பீடத்தில் அமர்த்தினர். அவரை கொண்டு வந்த ஏவலன் தலைவணங்கி என்னிடம் “இங்கே இவரை கொண்டு வரும்படி சொன்னார்கள். அழைப்பு வரும் என்று நெடும்பொழுதாக எதிர்பார்த்து பக்கத்து தனியறையில் காத்திருந்தோம். அதன் பின் அனைவரும் மறந்துவிட்டார்கள் என்று உணர்ந்து இவரை திரும்ப கொண்டு செல்லலாம் என்று இவரிடமே ஒப்புதல் கேட்டேன். ஆனால் இவர் அவைக்கு வர விரும்பினார்” என்றான்.

அவர் அவனை கையசைத்து செல்லும்படி பணித்துவிட்டு என்னை நோக்கி “அந்தணனாகிய என் பெயர் கணிகன்” என்றார். எனக்கு அவரை பார்த்தபோது அப்போதும் அது ஒரு மானுடத்தோற்றம் என்று தோன்றவில்லை. ஆகவே அக்குரல் அவரிடமிருந்து எழுந்தது விலங்கொன்று பேசத்தொடங்கியதுபோல வியப்பை அளித்தது. “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று நான் கேட்டேன். ”இறுதியாக நான் அஸ்தினபுரியில் இருந்தேன். மண்மறைந்த மாவீரர் துரியோதனனும் அவர் மாதுலர் சகுனியும் என் புரவலர்களாக இருந்தனர். அவர்கள் களம்பட்ட பின் அங்கிருந்து கிளம்பி சில குருநிலைகளில் தங்கினேன்” என்றார்.

என் அருகே நின்றிருந்த யாதவர் ஒருவர் கை நீட்டி  “பேசுகிறது! அது பேசுகிறது!” என்றார். “வாயை மூடுங்கள்” என்று அவரிடம் சொல்லிவிட்டு நான் மீண்டும் “இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன். “நான் சாந்தீபனி தவச்சாலைக்கு சென்றேன். இளைய யாதவரை சந்திக்க விழைந்தேன். அங்கே அவர் இல்லை. இங்கு இருப்பார் என்றார்கள். அவரை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன். அவர் முன்பு என்னை இங்கு வரும்படி ஆணையிட்டிருந்தார்” என்றார். “இங்கிருந்து அவர் நீங்கி நெடுநாட்களாகின்றன. மாபாரதப் போர் தொடங்குவதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே அவர் இங்கிருந்து சென்றுவிட்டார்” என்றேன்.

என் பின் நின்றிருந்த ஒரு யாதவ முதியவர் “உண்மையில் இந்நகருக்கும் அவருக்கும் இன்று தொடர்பில்லை” என்றார். “இப்போது இந்நகரின் அரசர் சத்யபாமையின் மைந்தரும் அந்தகக் குடித்தலைவருமான ஃபானு” என்றார். பின்னிருந்து ஒருவர் “அவர் விருஷ்ணிகளின் தலைவர்” என்றார். “ஆம், விருஷ்ணிகளின் தலைவரும்கூட” என்று இவர் சொன்னார். “ஆனாலும் அந்தகர்களின் குடியில் பிறந்தவர். குடிப்பிறப்பு அன்னைமுறை என அமைவது அந்தகர்களின் மரபு” என்றார். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள நான் அவரிடம் “அவர்கள் சொல்வது உண்மை. இங்கு என் தந்தை இப்போது எவ்வகையிலும் இல்லை. நகரமே அவரை மறந்துவிட்டிருக்கிறது. அவர் எப்போது வருவார் என்று இப்போது கூறவும் முடியாது” என்றேன்.

“ஆம், இங்கு வந்ததுமே நான் நிலைமையை அறிந்துகொண்டேன். அது இயல்பானதுதான்” என்று அவர் சொன்னார். “அவர் இங்கிருக்க வாய்ப்பில்லை என்று இந்நகரத்தில் நுழைந்ததுமே நான் அறிந்தேன்.” நான் “நீங்கள் இந்நகருக்கு முன்பு வந்திருக்கிறீர்களா?” என்றேன். “உண்மையில் நான் பாலைநிலத்தில் வாழ்ந்தவன். அஸ்தினபுரியில் சில காலம் இருந்தேன் என்பதைத் தவிர்த்து நான் எந்த ஊருக்கும் சென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு ஊரைப்பற்றியும் அறிந்துகொண்டிருக்கிறேன். அகன்றிருப்பவர்கள் மேலும் அணுகி அறிகிறார்கள், நெடுந்தொலைவில் இருக்கும் கணவன் மனைவியையும் குழந்தைகளையும் எண்ணிக்கொண்டிருப்பதுபோல.”

“ஆகவே இந்நகரின் ஒவ்வொரு அடையாளமும் எனக்கு தெரியும். இதன் எல்லை கடந்து உள்ளே வந்ததுமே இங்கு ஒவ்வொன்றும் மாறியிருப்பதைக் கண்டே. ஏன் என்று உடனே புரிந்துகொண்டேன். ஆனால் நான் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். என் உடல்நிலை இவ்வண்ணம் இருக்கையில் இத்தனை தொலைவு கடந்து வருவது எனக்கு எளிதல்ல. மீள்வதற்கு சற்றே நான் தேறியாக வேண்டும். ஆகவே இங்கு சில காலம் இருந்தே ஆகவேண்டும்” என்றார். “இங்கு நீங்கள் இருக்கலாம். இங்கு அந்தணர்கள் எப்போதுமே விரும்பப்படுகிறார்கள்” என்றேன்.

“நான் நூல்நவின்றவன். நாட்கோன்மையில் மிகவும் உதவியானவன், அமைச்சு அறிந்த அந்தணன்” என்று அவர் சொன்னார். “எனது இடம் நெறிநூல் ஆய்வு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக அதிலேயே வாழ்ந்திருக்கிறேன். நான் கற்ற அத்தனை நெறிநூல்களையும் நினைவுகூரவும், தருணத்திற்கு உகக்க அவற்றை தொகுக்கவும், உரிய முறையில் பயன்படுத்தவும் என்னால் இயலும்” என்றார். “பயன்படுத்துவது என்றால்?” என்றேன். “உருமாற்றுவது” என்றார். நான் வியப்புடன் “நெறிகளை உருமாற்றுவதா?” என்றேன். “உருமாற்றுவதனால் என்ன பயன்? நெறிகள் என்பவை எங்கோ எவருக்கோ என சொல்லப்பட்டவை. எங்கும் எவருக்கும் என நிலைகொள்பவை. நம் தேவைக்கேற்ப அவற்றை மாற்றிக்கொள்வதனால் என்ன பயன்?”

அவர் “கடல் அங்கிருக்கிறது, அலைகொண்டிருக்கிறது, முடிவிலியாக தோற்றம் அளிக்கிறது. நமக்குரியவற்றை நமக்குரிய கலத்தில் மொண்டால் மட்டுமே அதனால் நமக்குப் பயன்” என்றார். “ஆம், ஆனால் அது கடல் அல்ல” என்றேன். “இல்லை, கடலின் எவ்வியல்பையும் கலத்தில் அள்ளிய நீரில் நாம் பார்க்க இயலாது, அதை கடலென்று சொல்லலாம்” என்றார் அவர். “ஆனால் நமக்கு கடல் எவ்வகையிலேனும் பயன்படும் என்றால் அவ்வாறுதான்.” நான் “விந்தையானது” என்றேன்.

அவர் “அவ்வாறு இடமும் காலமும் கருதி பிரித்தெடுக்கப்பட்ட ஒரு நெறி, தனி ஒரு மனிதரால் முன்வைக்கப்படும் நெறி, எந்நிலையிலும் பொதுவான நெறி அல்ல. பொதுநெறியிலிருந்து பிரிந்தது அது. ஆனால் அதற்கு பொதுநெறியின் நோக்கம் இல்லை. ஆகவே பொதுநெறியின் இயல்புகளும் எதுவுமில்லை” என்றார். “நெறியின் மாறாத இடர் என்பது இதுதான். அது பொதுநெறியாகவே நிலைகொள்ள இயலும், அந்நிலையில் அதற்கு எந்தப் பயனும் இல்லை. பயன்படுகையில் அது தனிநெறி. பொதுநெறிக்குள்ள எந்த இயல்புகளும் அதில் இல்லை.”

அவர் கண்களைச் சிமிட்டி புன்னகைத்து “ஆனால் ஒவ்வொரு தனிநெறியும் அப்பெரும் பொதுநெறியின் இன்னொரு வடிவென்றே தன்னை முன் நிறுத்துகிறது. பொதுநெறிக்கு வேதங்களின் சான்றொப்புதல் உள்ளது. மூதாதையரின் ஏற்பு உள்ளது. வழிவழி வந்த அனைத்து நம்பிக்கைகளும் அதில் உள்ளன. தெய்வங்கள் அதை சூழ்ந்து அமைந்துள்ளன. அது அடையும் அனைத்து ஆற்றலையும் இச்சிறு தனிநெறி தானும் அடைகையிலேயே அது பயனுள்ளதாகிறது. அரசன் தன் இயல்புக்கும் தேவைக்கும் உகந்த தனிநெறிக்கு தெய்வங்களின் பொதுநெறி என்னும் அடையாளத்தை அளிக்கும் பொருட்டே அமைச்சென்றும், அந்தணர் என்றும், முனிவர் என்றும், தெய்வங்கள் என்றும் நான்கு வகை அவைகளை அமைத்திருக்கிறான்” என்றார்.

நான் “விந்தை! இப்படி ஒரு எண்ணத்தை நான் அறிந்ததே இல்லை” என்றேன். “நான் அவற்றை உரைக்கவே இங்கு வந்தேன். எனது உதவி இங்கு அரசருக்கு தேவைப்படுகிறது” என்றார்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 20

பகுதி நான்கு : அலைமீள்கை – 3

தந்தையே, நான் திரும்பி துவாரகைக்கு வந்தபோது முற்றிலும் மாறிவிட்டிருந்தேன். ஆனால் அதை நான் மட்டுமே அறிந்திருந்தேன். பெருவாயிலுக்குள் நுழைகையிலேயே நகரின் உளநிலை மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன். ஒருநாள் மட்டுமே ஆகியிருந்தது. சொல்லப்போனால் ஓர் இரவு. அதற்குள் அனைவருக்கும் அனைத்தும் தெரிந்துவிட்டிருந்தது. ஏனென்றால் அனைவரும் அரண்மனையையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர். அத்தனை கூர்ந்து நோக்குபவர்களிடமிருந்து எவரும் எதையும் மறைத்துவிடமுடியாது.

ஏன் அந்த கூர்நோக்கு? ஏனென்றால் அவர்கள் எதிர்நோக்கியிருக்க வேறேதும் எஞ்சியிருக்கவில்லை. மானுடவாழ்க்கை என்பது எழும் நல்லநாள் என்னும் கனவிலேயே சென்றுகொண்டிருக்கிறது. அதைப்பற்றி பேசி, புனைந்து வாழ்கிறார்கள். மகிழ்ந்தும் ஐயுற்றும் நாளெண்ணியும் பதற்றம்கொண்டும் அன்றாடத்தை கடந்துசெல்கிறார்கள். நாளை பறிக்கப்பட்ட மனிதர்கள் தீயூழ் கொண்டவர்கள். அவர்கள் உடனடியாக தங்கள் இன்றை சிதைக்கத் தொடங்குகிறார்கள். அதிலிருந்து துண்டுகளை எடுத்து தங்கள் நாளைகளை கற்பனை செய்வார்கள்.

என் மாற்றத்தை எவரும் அறியலாகாது என்று நான் எனக்கே ஆணையிட்டுக்கொண்டேன். ஆகவே என் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தேன். துயிலெழுந்தபோது அரண்மனையிலிருந்து அடுத்த செய்தி வந்திருந்தது. மத்ரநாட்டு படைத்தலைவர்களும் குடித்தலைவர்களும் யாதவர்களின் படைத்தலைவர்களுடனும் குடித்தலைவர்களுடனும் இணைந்து கொண்டாடும் ஒரு பெருவிருந்து அரண்மனையில் ஒருக்கப்பட்டிருந்தது. வியப்பாக இருந்தது, அது ஓர் அறிவிப்பு. போருக்கான அறைகூவலென்றே சொல்லலாம். அத்தனை விரைவாக அதைச் செய்ய மூத்தவர் ஃபானு துணிவார் என நான் நினைத்திருக்கவில்லை.

ஆனால் மூத்தவர் சுஃபானு என்ன எண்ணியிருக்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வெல்லும்தரப்பு என்னும் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார். அது எஞ்சியிருக்கும் ஆறு அன்னையரின் மைந்தர்களில் சிலரையேனும் ஈர்க்கும் என்று கருதுகிறார். நான் உடனே எண்ணியது அவருடைய இலக்கு காளிந்தியின் மைந்தர்களாகவே இருக்கும் என்றுதான். அதன்பின் தோன்றியது அவருடைய உடனடி இலக்கு யாதவக் குடித்தலைவர்களிடம் அவர் குடிமுதன்மை பெற்று முடிசூடுபவராகிவிட்டார் என்பதை அறிவிப்பதே என்று தோன்றியது. மத்ரர்களின் ஆதரவு அவருக்கே என்றால் விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் அவரை ஏற்றேயாகவேண்டும். எண்ணியபோது அது சரியே என்று தோன்றியது. எனில் ஓர் ஐயமும் என்னை குடைந்துகொண்டிருந்தது.

அந்தப் பெருவிருந்து எதன் பொருட்டு தொடங்குகிறது என்று இளையோராகிய எங்களுக்கு சொல்லப்படவில்லை. மூத்தவரிடமிருந்து அன்று மாலை ஓர் உண்டாட்டு நிகழ்வு இருக்கிறது என்று மட்டுமே செய்தி வந்தது. அதன் பின்னரே அது குடியுண்டாட்டு என்ற செய்தி வந்தது. அப்போது நான் என் இளையவன் அதிஃபானுவுடன் களிப்படகில் கடலில் சென்று அலையாடி கரை வந்திருந்தேன். எனக்காகக் காத்திருந்த ஏவலன் அச்செய்தியை சொன்னான். “இன்று மாலையா?” என்று நான் கேட்டேன். “ஆம்” என்றான். “மாலைக்கு இன்னும் பொழுது அதிகம் இல்லையே?” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை.

அதிஃபானு “ஏதேனும் மந்தணச் செய்திகள் உண்டா?” என்றான். “இல்லை” என்று அவன் சொன்னான். “மூத்தவர் வெறுமனே கொண்டாட விழைகிறார் போலும்” என்றான் அதிஃபானு. ஏனெனில் அதுதான் அப்போது வழக்கமாக இருந்தது. பொதுஉண்டாட்டு நிகழ்வதற்கு துவாரகையில் முதன்மையான எந்த அடிப்படையும் தேவையில்லை என்றாகிவிட்டிருந்தது. பொதுஉண்டாட்டு என்பது மிகமிக அரசியல்முதன்மை கொண்ட செயலாக ஒருகாலத்தில் இருந்தது. அத்தனை குடித்தலைவர்களும் வருவார்கள். அவர்கள் அனைவரையும் அவர்களின் குடிமுதன்மை நோக்கி அவையமரச் செய்வதென்பது சிலந்தி வலையைப் பிரித்து நூலென நீட்டுவதுபோல என்பார்கள்.

என்னதான் செய்தாலும் ஏதேனும் முரண்பாடு எழும். பூசல் நிகழும். உளக்கசப்பு எழும். ஒவ்வொரு பொதுஉண்டாட்டும் கசப்புகளை உருவாக்குவது என்பதனால், முந்தைய உண்டாட்டின் கசப்புகள் எஞ்சியிருக்கையில் அடுத்த உண்டாட்டை நிகழ்த்தலாகாது என்பதனால் ஆண்டுக்கு ஒருமுறைகூட குடிசூழ் உண்டாட்டுகள் நிகழ்வது யாதவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் நீங்கள் இருந்தபோது துவாரகையில் குடியுண்டாட்டுகள் இயல்பாக அடிக்கடி நிகழ்ந்தன. அன்று அந்நகரில் இரவும் களியாட்டு நிறைந்திருந்தது. அதன் பகுதியாக உண்டாட்டுகள் எங்கும் நடந்தன. துவாரகையில் என்றும் திருவிழா என்று சூதர்கள் பாடிய காலம் அது.

அவற்றுக்கும் இப்போது நடைபெறுவனவற்றுக்கும் பெரிய வேறுபாடு இருந்தது. அன்றெல்லாம் உண்டாட்டென்பது குலம் என்றும், குடி என்றும், தொழில் என்றும், வாழ்விடம் என்றும் பிரிந்து கிடக்கும் மக்கள் ஒருவரோடொருவர் கலந்து உரையாடி புரிந்து ஒன்றாவதற்கான வழிமுறை. நீங்கள் குடியுண்டாட்டில் எல்லாக் குடியும் பங்குகொள்ளச் செய்தீர்கள். யவனரும் பீதரும் காப்பிரிகளும் சோனகர்களும் பங்குகொள்ளும் பெருவிழவுகள் அவை. என் இளமையிலேயே அரண்மனையிலும் களியாட்டரங்குகளிலும் ஒருமுறை விழி சுழற்றிப் பார்த்தாலே துவாரகையில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களையும் பார்க்க முடியும்.

இன்று அவ்வாறல்ல. இன்று ஒவ்வொருவரும் தங்களை தாங்களே தொகுத்துக்கொள்ள, அதனூடாக பிறரிடமிருந்து பிரித்துக்கொள்ள உண்டாட்டுகளை அமைக்கிறார்கள். இன்று நிகழும் உண்டாட்டுகளில் மிகமிக நம்பிக்கையான உள்வட்டத்தினர் மட்டுமே பங்கு கொள்கிறார்கள். யாதவர்களின் உண்டாட்டுகளில் பிறர் ஒருவர் கூட இருப்பதில்லை. யாதவர்களுக்குள்ளேயே விருஷ்ணிகளும் போஜர்களும் அந்தகர்களும் தனித்தனியான உண்டாட்டுகளை ஒருங்கிணைக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே குடித்தொடர்புடையவர்கள் வேறு உண்டாட்டுகளை அமைக்கிறார்கள்.

உண்டாட்டு என்பது முன்பு வெற்றிக்களியாட்டு, தெய்வவழிபாடு, மூதாதை வணக்கம் என்னும் அடிப்படைகள் கொண்டதாக இருந்தது. இன்று அங்கே மிக எளிய ஒன்றை அறிவித்துக்கொண்டதாக இருக்கிறது. மைந்தர் ஒருவரின் பிறந்தநாள், தொலைவிலிருந்து ஒருவர் பயணம் முடித்து வந்த நாள், பயணம் தொடங்கும் நாள், ஏதேனும் சிறுதெய்வம் ஒன்றுக்கு பூசனை என்று. ஆனால் நோக்கம் அதுவாக இருக்காது. அது அனைவருக்கும் தெரியும். உண்டாட்டு தொடங்கிய சற்று நேரத்திலேயே அங்கு அனைவரும் ஏன் கூடியிருக்கிறார்கள் என்பதை உணரமுடியும். அவ்வாறு ஏதோ புதிய செய்தி வந்துள்ளதென்று நான் புரிந்துகொண்டேன்.

அன்று சலிப்புற்றிருந்தேன். முன்பெல்லாம் பதற்றமும் ஆவலும் கொண்டிருப்பேன். அங்கு செல்வதற்கு முன்னரே அது என்ன செய்தி என்று அறிந்துகொள்ள முயல்வேன். உடன்பிறந்தாரிடம் அதைப்பற்றி உசாவுவேன். அவர்களும் அதே ஆர்வம் கொண்டிருப்பதனால் என்னிடம் தங்களுக்குத் தெரிந்தவற்றை புனைந்துரைப்பார்கள். அவர்கள் எண்ணுவது அச்செய்தியின் நுனி பற்றி நான் எனக்குத் தெரிந்த எதையேனும் சொல்வேன் என்று. அவ்வாறு சொல்லாதொழிந்தால் எனக்கு ஒன்றுமே தெரியாதாகும் என்பதனால் நானும் எதையேனும் புனைந்துரைப்பேன். அவ்வண்ணம் புனைந்து புனைந்து மிகப் பெரிதாக ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு சென்று அமர்ந்திருப்போம்.

முதலில் உண்டாட்டுச் சடங்குகள் நிகழும். எளிய முகமன்கள் உரைக்கப்படும். அவைமுறைமைப் பேச்சுகள் எழும். மெல்ல மெல்ல பேச்சு வளர்ந்து ஓர் இலக்கை அடைந்து சொல்லவிந்து நின்றிருக்கும். அந்த அமைதியில் அங்கு அச்செய்தியை சொல்லக் கடமைப்பட்டவர் சூழநோக்கி தன்னை ஒருக்கிக்கொண்டு மெல்ல கூறுவார். அது கூறப்படும்போதுகூட கூறப்படும் முறையால் அது சிறிதாக இருக்கிறது என்றும், மேலும் பெரிதாக ஒன்று எழுந்து வரும் என்றும் எதிர்பார்த்து காத்திருப்போம். ஆனால் அது நிகழ்வதில்லை. மெல்ல மெல்ல அச்செய்தி அவ்வளவுதான் என்று புரியும். அப்போது அவையில் ஏற்படும் தளர்வை உடலசைவாக விழிகளாலேயே காணமுடியும்.

அதற்காகவா என்று ஏமாற்றம் எழுந்தாலும் அதன் பொருட்டு அங்கு கூடிவிட்டோம் என்பதனாலேயே அதை பேசி பெருக்கிக்கொள்ளவேண்டிய நிலையை அடைவோம். ஒவ்வொருவரும் அதை விரித்தெடுப்போம். இல்லாத நுட்பங்களை கண்டடைவோம். சூழ்ச்சிகளை முன் வைப்போம், தீர்வுகளை சென்றடைவோம். பேசிப் பேசி உடன் மதுவும் அருந்தி தளர்ந்து நாகுழைந்து எவர் எங்கு சென்றால் எங்களுக்கென்ன என்ற நிலையை ஒவ்வொருவரும் சென்று அடைவோம். மது விசைகொண்ட நீர்ப்பெருக்கென ஒவ்வொருவரையும் அள்ளிச் சுழற்றி கொண்டுசென்று அவரவருக்கான மணல் திட்டுகளில் அமரவைக்கும். அங்கே அமர்ந்து புலம்பிக்கொண்டிருப்போம்.

நெடுநாள் இதுவே நிகழ்ந்தது. மறுநாள் அவ்வுண்டாட்டு எதன்பொருட்டு என்று கேட்டால் எவராலும் மறுமொழி சொல்ல இயலாது. எனினும் உண்டாட்டுகள் எதற்கு நிகழ்கின்றன என்றால் அதனூடாக எங்கள் அனைவருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டுவிட்டதென்றும், அச்செய்தியினூடாக பொதுக்கருத்து எட்டப்பட்டுவிட்டதென்றும் நாங்களே நம்புவதற்காகத்தான். உண்மையில் அவ்வுண்டாட்டின்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தோன்றும். ஆனால் அம்முடிவுகள் முன்னரே சுஃபானு முதலிய சூழ்வலரால் எடுக்கப்பட்டுவிட்டிருக்கும். அம்முடிவுகள் அங்கு அறிவிக்கப்படவும் வாய்ப்பில்லை. ஏனெனில் அங்கிருப்பவரில் எவர் எங்கே எதை சொல்வார்கள் என்று நம்ப முடியாது. ஆகவே பின்னர் அம்முடிவு அந்த உண்டாட்டுச் சந்திப்பில்தான் எடுக்கப்பட்டது என்று சொல்லும்போது எவராலும் மறுக்க முடியாது. எடுக்கப்பட்ட முடிவுடன் அனைவரும் ஒத்து சென்று சேர்ந்தே ஆகவேண்டும். ஏனெனில் அது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு.

அவ்வாறாக உண்டாட்டுகள் விந்தையான இளிவரல் நாடகமென ஆகிவிட்டிருந்தன. ஆயினும் அவை தேவையாயின. அதற்கும் அப்பால் அவற்றை ஒருங்கிணைக்கும் தலைவர்களுக்கு எவர் எவர் உடன் நிற்கிறார்கள் என்று அறிவதற்கான வாய்ப்பு. உடன் நிற்கிறவர்கள் உளத்திரிபு கொண்டிருக்கிறார்களா என்பதற்கான உசாவல். தங்களுடன் அத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்ளும் முனைப்பு. சூழ்ச்சிகள் நிறைந்த சூழலில் ஆள்வோருக்கு அவ்வப்போது ஓர் அலையென தனிமை வந்து தாக்குகிறது போலும். கைவிடப்பட்டிருக்கிறோமோ என்னும் ஐயம் எழுகிறது. அதற்கு மறுமொழி என நாங்கள் இணைந்து பின்குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.

உண்டாட்டின்போது ஏதோ ஒரு கணத்தில் தன்னைச் சூழ்ந்திருக்கும் இளையோரையும் உற்றாரையும் கண்டு அவர்கள் நிறைவுறுகிறார்கள். ஆம், இவர்கள் என்னவர் என எண்ணுகிறார்கள். தாங்களே கைபெருகி கண்பெருகி நின்றிருப்பதுபோல் கருதிக்கொள்கிறார்கள். அதன் பொருட்டு நிகழும் ஒரு பொய்யான பயிற்சி அது. போருக்குப் பிந்தைய உண்டாட்டுகளைப்பற்றி கேட்டிருக்கிறேன். போர்களே பலநூறு உண்டாட்டுகளின் வழியாகத்தான் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்று தோன்றுகிறது. போருக்குப் பிந்தைய உண்டாட்டு அதன் தொடர்ச்சி மட்டுமே.

 

அரண்மனையின் யாதவர்களுக்குரிய பகுதியில் அமைந்த மையப்பெருங்கூடத்தில் அந்த உண்டாட்டு நிகழ்ந்தது. தந்தையே, அங்கு தங்கள் காலகட்டத்தில் பல பெருவிருந்துகள் ஒருக்கப்பட்டிருந்தன. பல அயல்நாட்டு அரசர்கள் இங்கு வந்து விருந்தோம்பலை பெற்றிருக்கிறார்கள். என் அகவைநிறைவுக்காக அளிக்கப்பட்ட உண்டாட்டில் மையத்தில் பொன்னாலான பீடத்தில் நான் அமர்த்தப்பட்டதும், என் இரு பக்கமும் தாங்களும் மூத்த தந்தையும் அமர்ந்திருந்ததும், அன்று வந்திருந்த அரசர்கள் ஒவ்வொருவராக வந்து எனக்கு பெருமைமிக்க பரிசுகளை தந்ததும் என் நினைவில் இன்றும் நீடிக்கின்றன. அந்நினைவை சற்றேனும் தொடாமல் என்னால் அந்த அறைக்குள் நுழைய முடிந்ததே இல்லை.

நான் உள்ளே செல்லும்போது ஏற்கெனவே என் உடன்பிறந்தாரில் பலர் அங்கு வந்துவிட்டிருந்தனர். ஒவ்வொருவரும் குழம்பிய, கவலையுற்ற உளநிலையிலேயே இருந்தனர். என்னைப் போலவே அவர்களும் சலிப்பு அடைந்திருந்தனர். ஆனால் முற்றிலும் விட்டொழிக்க முடியாத சிறு ஆர்வத்தையும் தக்க வைத்துக்கொண்டிருந்தனர். என்னை நோக்கி எழுந்து வந்த அதிஃபானு “இந்த விருந்தில் யாதவ குலங்கள் அனைத்தும் பங்கு பெறுகின்றன என்றார்கள்” என்றான். நான் “ஆம், அவ்வாறுதான் அறிந்திருந்தேன்” என்றேன். “அன்னை லக்ஷ்மணையின் மைந்தர்கள் நம்முடன் சேர்ந்தது ஒரு நல்ல அறிகுறி. அவர்களை இங்கே வென்றெடுத்து கொண்டுவந்தவர் சுஃபானு. இன்று அவருக்கு அவையில் மூத்தவர் ஒரு பரிசை அளிக்கக்கூடும்” என்றான்.

“நன்று. நாம் பெருகுகிறோம்” என்று நான் சொன்னேன். ஊண்அறை ஒருங்கிக்கொண்டிருப்பதை அங்கு கேட்டுக்கொண்டிருந்த கலங்களின் ஓசையிலிருந்து புரிந்துகொண்டேன். நான் அதை செவிகூர்வதைக் கண்ட ஃபானுமான் “இங்கு நிகழும் சொல்லாடலை திசைதிருப்புவது அங்கு கேட்கும் ஒலிகளே. உண்மையில் அங்கு சென்று உண்டு முடித்து அங்கு அமர்ந்து பேசத்தொடங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும்” என்றான். “ஆம், சொல்லில் ஆர்வம் உடையவர்கள் மட்டுமே செவி கொடுப்பார்கள். எஞ்சியோர் கள்ளும் ஊனும் உண்டு மயங்கிவிட்டிருப்பார்கள்” என்றேன். ஒவ்வொருவரும் பொய்யாக சிரித்துக்கொண்டோம். இளிவரலினூடாக, ஏளனத்தினூடாக ஒவ்வொருவரும் அணுக்கத்தை நடித்துக்கொண்டோம்.

உண்மையில் உடன்பிறந்தாரிடம் ஒருவரோடொருவர் அணுக்கமிருந்ததா? இல்லை என்றே என் அகம் சொல்கிறது. ஏனெனில் அடிப்படையில் ஓர் ஐயம் தோன்றிவிட்டிருந்தது. மூத்தவர் எங்கள் அனைவரையுமே ஒற்று அறிகிறார் என்று எங்களுக்கு தெரியும். எங்களை எவரேனும் ஒற்றறிந்தால் நாமும் பிறரை ஒற்றறியத் தொடங்கிவிடுகிறோம். ஒற்றறிதல் நமது உள்ளத்தை கூர் கொள்ளச்செய்கிறது. நமது அனைத்து ஆற்றல்களும் அங்கு திரள்கின்றன. நாம் மகிழ்வு கொள்ளும் தருணம் என்பது நமது ஆற்றல்கள் திரளும்போதுதான். ஆகவே உளவறியப்படுபவரும் உளவு செய்பவரும் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சி மிகுந்த தருணங்களை அடைகிறார்கள். எனவே அதிலிருந்து அவர்களால் விடுதலை கொள்ள இயல்வதில்லை.

இடைவிடாது செய்யப்படும் ஒன்று நம்மை முற்றாக மாற்றிவிடுகிறது. உளவறியத் தொடங்கும் நாம் மிகச் சில நாட்களிலேயே ஒற்றர்களாக மாறிவிடுகிறோம். ஒற்றர்கள் எவரையும் நம்புவதில்லை. ஒற்றர்கள் முற்றிலும் தனித்தவர்கள். தந்தையே, யாதவ மைந்தர்களாகிய நாங்கள் அனைவருமே முற்றிலும் தனித்தவர்களாக ஆகிவிட்டிருக்கிறோம். எப்போதும் என்னுடன் இருந்துகொண்டிருக்கும் இளவலாகிய அதிஃபானுவைக்கூட நான் மாறாத ஐயத்துடனேயே அணுகினேன். அவன் என்னைக் கடந்துசென்று வேறெவருடனாவது உளத்தொடர்புடன் இருக்கிறானா என்பதை எப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்கிறேன்.

எங்களை அவைக்குள் கொண்டுசென்று ஒவ்வொருவராக அமரவைத்தனர் சிற்றமைச்சர்கள். குடித்தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அவருடைய இடம் வகுக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் ஒவ்வொருவரையும் எவரேனும் கூட்டிச்சென்று அமர்த்த வேண்டியிருந்தது. அனைவரும் அமர்ந்து முடித்து ஆழ்ந்த அமைதி நிலவியது. ஒருவரை ஒருவர் ஐயத்துடன் பார்த்துக்கொண்டனர். தங்கள் இடம் மாறிவிடவில்லையே என்று. தங்களைவிட எவரும் அவைமுதன்மையும் அரசரின் அணுக்கமும் பெற்றுவிடவில்லையே என்று. கண்கள் ஒன்றையொன்று சந்தித்தபோது திகைத்தன. பொய்முறுவல் காட்டின. யாதவர்கள் இன்னும்கூட அவையில் புழங்கக் கற்றுக்கொள்ளவில்லை என்று தெரிந்தது.

வெள்ளிக்கோலுடன் நிமித்திகன் மேடைக்கு வந்து துவாரகையின் அரசர் ஃபானு அவை நுழைய இருப்பதாக அறிவித்தான். ஒவ்வொரு முறை அந்த அறிவிப்பு எழுகையிலும் அவையில் ஒரு சிறு விழிப்பரிமாற்றம் நிகழ்வதை நான் பார்த்திருக்கிறேன். எவர் முகத்திலும் இளிவரல் தோன்றுவதில்லை. எனினும் விழிகளில் விந்தையானதோர் மின்னொளி தோன்றி மறையும். மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது அந்த அறிவிப்பு. தொல்புகழ் கொண்ட யாதவ குலத்தில் சூரசேனரின் கொடிவழியில் பிறந்த மைந்தராகிய ஃபானு என்பது முதல் வரி. அந்தகக் குடியில் பிறந்த அன்னை சத்யபாமையின் மைந்தரென எழுந்தவர் என்பது பிறிதொரு வரி. பாரதவர்ஷத்தின் கலைநிலமாகிய துவாரகையை முற்றிலும் வென்று கோல்கொண்டு அமர்ந்த பேரரசர் என்பது மூன்றாவது வரி.

மூன்று வரிகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை. விருஷ்ணி குலத்தவன் என்றும் அந்தக குலத்தவன் என்றும் தன்னை அறிவித்துக்கொள்ளவேண்டிய நிலை எப்போதும் இருந்தது அவருக்கு. முன்பு ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது மூத்தவர் பிரஃபானு சிரித்தபடி “போஜர் குலத்தில் ஒரு பெண்ணை மணந்து போஜர் குலத்து அரசியின் தலைவருமாகிய என்று அறிவித்தால் என்ன?” என்று சொன்னார். ஆனால் மெய்யாகவே சில நாட்களுக்குப் பின்னால் அது நடந்தது. போஜர் குலத்து சுதீரரின் மகள் பௌமையை ஃபானு மணந்துகொண்டார். சுதீரையின் கொழுநர் என்று அவையில் அறிவிப்பது அத்தனை முறையானதல்ல என்பதனால் ஒவ்வொரு முறையும் அறிவிப்புகள் முடிந்த பின்னர் சுதீரர் எழுந்து கோல் தூக்கி மூத்தவரை வாழ்த்தும் மரபொன்று உருவாக்கப்பட்டது.

துவாரகையின் தலைவர் என்று அவரை அறிவிக்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்த இளிவரலுக்கான அடிப்படை ஒன்றே. கசந்து சிரித்தும் வஞ்சம் கூர்கொண்டும் நாங்கள் பல முறை சொல்லிக்கொண்டது அது. ஒவ்வொருவரும் துவாரகையின் அரசர், ஆகவே எவரும் துவாரகையின் அரசர்களாக திகழ முடியாது. எண்பதின்மரில் ஒன்று குறைவோர் எவரேனும் இருக்கக்கூடுமென நான் எண்ணவில்லை. மூப்பு இளமை, வீரம், திறன் என பகுப்புகள் எல்லாம் அவைப்பாவனைகள். அனைத்திற்கும் அப்பால் அனைவரும் இணையானவர்களே. தந்தையே, அங்கிருந்த அனைவருமே தந்தையைக் கொன்று தானென்று எழுந்தவர்களே. அங்கிருந்த அனைவர் விழிகளையும் நோக்கிக்கொண்டிருந்தேன். ஒன்றுபோலிருந்தன அவை. அனைத்து முகங்களும் ஒன்றுபோலத் தோன்றச்செய்தன விழிகள்.

நான் என் உடன்பிறந்தார் இருவருக்கு அருகே அமர்ந்திருந்தேன். அவர்கள் இருவரும் அங்கு நிகழவிருக்கும் அவை கூடலில் எந்த ஆர்வமும் இன்றி தங்களுக்குள் எதையோ மெல்ல பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். கொம்பொலி எழுந்ததும் ஒவ்வொருவரும் எழுந்து முறைப்படி வணங்கினோம். மூத்தவர் ஃபானுவும் மத்ரநாட்டு மூத்தவர் பிரகோஷனும் இணையாக அவைநுழைந்தனர். ஃபானு அவருக்கு இடப்பட்ட அரியணைபோன்ற பீடத்தில் அமர்ந்தார். சுஃபானு அவருக்குப் பின்னால் நடந்து வந்து இணையான பீடத்தில் அமர்ந்தார். அவையிலிருந்து எழுந்த அனைத்து வணக்கங்களையும் தானே பெற்றுக்கொள்வதுபோல் முகமும் தலையசைவுகளும் சுஃபானுவில் வெளிப்பட்டன. பிரகோஷன் இன்னொரு இணையான பீடத்தில் அமர்ந்தார். அவர் அருகே ஓஜஸ் அமர்ந்தான்.

நிமித்திகன் அவை தொடங்கவிருப்பதை அறிவித்து கோல் தாழ்த்தி வணங்கி அகன்றான். தன் கையிலிருந்த வெண் செங்கோலை ஏவலனிடம் அளித்துவிட்டு கைகளை மடித்து விரல்களை நெரித்து எளிதாக்கிக்கொண்ட பின் ஃபானு அவையினரிடம் “நன்று. மீண்டும் உண்ணப்போகிறோம்” என்றார். அந்த அவையை எளிதாக்கும்பொருட்டு அந்த வரியை சொன்னார். அது ஒரு முதிரா நகைச்சொல். ஆயினும் அவை நகைத்தது. “இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பதை சுஃபானு அறிவிப்பார்” என்றார் ஃபானு. சுஃபானு தலைவணங்கிவிட்டு “அனைவரும் ஓரளவு அறிந்திருப்பீர்கள். எனினும் இந்த அவையில் முறையாக அறிவித்தாகவேண்டும். ஏனென்றால் யாதவ குடியின் தலைவர்கள் அனைவரும் இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கே நாம் முடிவெடுத்த பின்னரே அதை மதுராவுக்கும் மதுவனத்திற்கும் முறைப்படி தெரிவிக்கவேண்டும்” என்றார்.

அதன்பின் அவர் லக்ஷ்மணையின் மைந்தர் வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டதை அறிவித்தார். அவர்கள் எப்படியெல்லாம் எங்கெல்லாம் சிறுமைப்படுத்தப்பட்டனர் என்றும் எப்படி அவர்கள் முறையான இடத்திற்கு அறுதியில் வந்துசேர்ந்துள்ளனர் என்றும் சொன்னார். அவர்களை வாழ்த்தி குரலெழுப்பும்படி அவர் கோர யாதவ குடித்தலைவர்கள் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பினார்கள். பிரகோஷன் தலைவணங்கி அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். யாதவ குடித்தலைவர்களில் மூத்தவரான கன்மாஷர் எழுந்து வந்து தன் வளைதடியை பிரகோஷனிடம் கொடுத்தார். அந்த அவை வணக்கத்தை ஏற்று பிரகோஷன் அதை வாங்கி தலைமேல் தூக்கினார். யாதவர்களின் குடித்தலைவர்களில் ஒருவராக பிரகோஷன் மாறிவிட்டதான அறிவிப்பு அது. யாதவர்கள் களிவெறிக்கூச்சல் எழுப்பினர்.

அதன்பின் ஃபானு மத்ரர்கள் பேசும்படி கோரினார். பிரகோஷன் யாதவர்களிடம் அவர் மீண்டுவந்ததே தெய்வங்களின் ஆணை என்றும், மூதாதையரை மகிழ்விப்பது என்றும் சொன்னார். மத்ரர்களும் பிறரும் மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். ஒவ்வொன்றும் முறையாக நிகழ்ந்துகொண்டிருப்பதை மூத்தவர் ஃபானுவின் முகக்குறியில் கண்டேன். அவர் அஞ்சிக்கொண்டுதான் இருந்திருப்பார். ஏனென்றால் மங்கல நிகழ்வுகளை சிதைப்பதில் யாதவர்களுக்கென்றே ஒரு பயிற்சி உண்டு. அவர்கள் அவைமுதன்மை கொள்வதே அவ்வாறுதான். நான் முகங்களை ஒவ்வொன்றாக நோக்கிக்கொண்டிருந்தேன். எண்ணியிராதபோது ஒன்று தோன்றியது, வேறு எவருமே வேண்டியதில்லை, மூத்தவர் ஃபானுவே அதை செய்யக்கூடும். நான் புன்னகைத்துக்கொண்டேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 19

பகுதி நான்கு : அலைமீள்கை – 2

அந்தச் சந்திப்பு அதற்குள் ஒற்றர்கள் வழியாக துவாரகையின் பிற மைந்தர்கள் அனைவருக்கும் சென்றுவிட்டிருக்கும் என அறிந்திருந்தேன். அரண்மனை ஒரு கலம் என அதிர்ந்துகொண்டிருக்கும். அங்கே நிகழும் ஒவ்வொன்றையும் செவிகளும் விழிகளும் நோக்கிக்கொண்டிருக்கும். ஆனால் அது எங்களுக்கு எச்சரிக்கையை அளிக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் இளைய மைந்தர்கள். எங்களுக்கு வரலாற்றில் ஆற்றுவதற்கொரு பணியில்லை, வரலாற்றெழுத்தில் இடமும் இல்லை. எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒரே இன்பம் என்பது வரலாற்றிற்கு மிக அருகே அமர்ந்திருக்கும் வாய்ப்பு மட்டுமே. அதை கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

என்னைச் சூழ்ந்திருந்த யாதவ மைந்தர்கள் கிசுகிசுவென்று பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் அனைவருமே லக்ஷ்மணையின் மைந்தர்களை நன்கறிந்திருந்தனர். ஆனாலும் அப்போது புதிதாக சந்திப்பவர்கள்போல பேசிக்கொண்டனர். “அதோ அவன் பெயர் ஓஜஸ். அவன் நஞ்சே உருவானவன். பிரகோஷனை கழுதை என்றால் அவனை அதன் குதச்சதையில் கொட்டி ஓடவைக்கும் வண்டு என்று சொல்லலாம்” என்றான் ஃபானுமான். “பிரகோஷன் அறிவற்றவன். எப்போதுமே மூத்தவர்கள் அவர்கள் மூத்தவர்கள் என்பதனாலேயே அறிவில்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்” என்று அதிஃபானு சொன்னான். “ஏன்?” என்று நான் கேட்டேன். “இளமையில் விளையாடி கற்றுக்கொள்ளவேண்டிய எதையும் அவர்கள் கற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கட்டுமீறுவதே இல்லை, ஏனென்றால் பிறரை கட்டுப்படுத்தும் பொறுப்பை அவர்கள் இளமையிலேயே அடைந்துவிடுகிறார்கள்.”

பிரகோஷனும் அவருடைய தம்பியரும் எங்களை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களை மதிக்கிறோமா என்பதுதான் அவர்களின் பார்வையின் பொருள் என அறிந்திருந்தோம். ஆனால் மதிப்பு என்பது என்ன? எளிய மக்கள் உண்மையான மதிப்பை அறிவதே இல்லை. அவர்கள் அஞ்சுவதையே மதிக்கிறார்கள். நாங்கள் அஞ்சுவது பிரத்யும்னனை மட்டுமே. அவரை மட்டுமே உண்மையில் மதிக்கவும் செய்தோம். அவர்களின் விழிகள் எங்கள் விழிகளை சந்திக்கும்போதெல்லாம் சிரித்தும் தலைவணங்கியும் முறைமைசெய்தாலும் எங்கள் உடல்கள் உள்ளங்களை காட்டிக்கொண்டிருந்தன.

உணவறைக்குள் சென்று அமர்ந்தபோது அதுவரை இருந்த ஒழுங்கு கலைந்து இன்னொரு ஒழுங்கு உருவாகியது. உடனே பேச்சுமுறையும் உடல்மொழியும் மாறுபடலாயின. தந்தையே, அன்னை சத்யபாமையின் மைந்தர்களான யாதவர்கள் தங்களுக்கு பிற மைந்தர் எவரிடமும் இயல்பான கூட்டு அமைவதில்லை என்பதை கண்டுகொண்டிருந்தனர். யாதவர்களிடம் இருந்த ஓர் இயல்பு அதற்கு தடையாக இருந்தது. அவர்கள் மொத்த துவாரகையும் தங்கள் உடைமை என நினைப்பதிலிருந்து விலகவே இயலவில்லை. யாதவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் தங்களிடமிருந்து அந்நகரை பறித்துக்கொள்ளும்பொருட்டு முயல்பவர்களாக, அயல்குருதி கொண்டவர்களாக அவர்களுக்கு தோன்றினர். அத்துடன் அதை சொல்லாமல், வெளிப்படுத்தாமல் இருக்கும் நாவடக்கமும் அவர்களுக்கு அமையவில்லை.

ஆகவே லக்ஷ்மணையின் மைந்தரின் ஆதரவை தங்கள் தரப்பு பெருகுவது என்று அவர்கள் மெய்யாகவே எண்ணவில்லை. தங்களை அயலவர் ஒருவர் ஆதரிக்கிறார் என்றே அவர்கள் உண்மையில் எடுத்துக்கொண்டார்கள். அவர்களின் ஆதரவால் மகிழ்வடைந்தபோதுகூட மெய்யாகவே அவர்களை அகற்றி நிறுத்தவேண்டும் என்றும் அவர்களை எப்போதும் கண்காணிக்கவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டனர். யாதவர்களுக்கு ஷத்ரியர்களிடம் தாழ்வுணர்ச்சி இருந்தது. அது இயல்பு. மலைமக்களாகிய மத்ரர்களிடம் தாழ்வுணர்ச்சி இருந்ததைக்கூட புரிந்துகொள்ளலாம், அவர்களும் சற்று நிலைதாழ்ந்த ஷத்ரியர்களே. ஆனால் அவர்கள் நிஷாதர்களையும் அசுரர்களையும்கூட தாழ்வுணர்ச்சியுடனேயே பார்த்தனர்.

ஏனென்றால் அசுரர்களுக்கும் நிஷாதர்களுக்கும் களவீரம் இருந்தது என அவர்கள் நம்பினர். அவர்கள் சொல்லிக்கொள்ள பேரரசர்கள் இருந்தனர் என்று கருதினர். அது யாதவர்களின் பேச்சுக்களில் வந்தபடியே இருக்கும். யாதவர்கள் கொண்டாடிய தலைவர்களான கார்த்தவீரியரும் கம்சரும் அசுரக்குருதி கொண்டவர்கள். தந்தையே, தங்களையும் லவணர்களின் குருதிகொண்டவர், லவணாசுரரின் மரபில் வந்தவர் என்று சொல்லிக்கொள்ளவே யாதவர்கள் முயன்றனர். என்றோ ஒருநாள் ஷத்ரியர்களைப்போல ஆகிவிடுவோம் என்றும் அதுவரை அசுரர்களாக ஆக முயல்வோம் என்றும் நம்பியவர்கள் அவர்கள். ஆகவே மத்ரர்களின் வரவை அவர்கள் கொண்டாடவில்லை. மகிழ்ந்தனர், எப்படி அந்த மகிழ்வை வெளிப்படுத்துவது என்று அறியாமலும் இருந்தனர்.

அத்துடன் விருஷ்ணிகளுக்கும் அந்தகர்களுக்கும் நடுவே நடந்த பூசலில் அந்தகர்களின் குடித்தலைவராக உள்ளூர தன்னை உணர்ந்து கொண்டிருந்த மூத்தவர் ஃபானுவுக்கு அவர்களின் ஆதரவு அந்தகர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவென்று தோன்றியது. அதை அவர் வெளிப்படுத்தவில்லை, ஆனால் அவருடைய அணுக்கரான சுஃபானு அதை பேச்சுவாக்கில் குறிப்பிட்டார். ஆனால் இளையவரான ஸ்வரஃபானு தன்னை விருஷ்ணிகுலத்தார் என்று உணர்ந்துகொண்டிருப்பவர். அந்த அவையில் அவர் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார். அங்கே அப்படி பத்து மைந்தர் இருந்தால் பத்து உள்ளோட்டங்கள் இருந்தன. ஆயினும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அங்கு அந்த விருந்து நிகழ்ந்தது.

விருந்துக்கூடத்தில் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் பொருளுடனும் பொருளின்றியும் சொல்லாடிக்கொண்டபடி தழுவினர். புன்சொற்கள் கூவி நகைத்தனர், களியாடினர். உண்டும் குடித்தும் கூச்சலிட்டும் கொண்டாடினர். எள்ளலும் களிவசையும் வரையின்றி நடந்தன. உளஅழுத்தம் கொண்டவர்கள் மிகையாக சிரிப்பார்கள், மிகையாக கொண்டாடுவார்கள். சிலர் அழுவது போன்ற விழிகளுடன் வெறிகொண்டு நகைப்பதைக் கண்டு நான் வியந்துகொண்டிருந்தேன். அரசியலே பேசப்படவில்லை. ஏனென்றால் நேரடியாக அங்கே செல்ல அனைவரும் அஞ்சிக்கொண்டிருந்தார்கள். அரசியல் என்றால் பங்கிடுதல்தானே, பங்கிடுதல் என்றால் பூசல்.

ஆனால் பேசாமலிருக்கவும் இயலாது. குடி மேலெழ மேலெழ எச்சரிக்கைகள் அகன்றன. இயல்பாகவே “இந்தக் கூட்டை தந்தை ஏற்பாரா?” என்று ஃபானுமான் கேட்டான். உங்கள் பெயர் முதல் முறையாக அங்கே சொல்லப்பட்டது. ஆனால் அனைவர் நெஞ்சிலும் அதுவே திகழ்ந்துகொண்டிருந்தது. “ஏற்காவிட்டால் என்ன?” என்று எவரோ மறுமொழி கூறினர். ஃபானு ”தந்தை பெரியவர், எந்த வினாக்களுக்கும் அப்பாற்பட்டவர். ஆனால் எந்தை பிறந்து அருளியிருப்பது யாதவ குலத்தில். யாதவக் குருதியில் ஒரு துளி அவர். எந்நிலையிலும் அலை கடலைவிட பெரிதாவதில்லை. அவர் யாதவ நெறிகளுக்கு கட்டுப்பட்டாகவேண்டும்” என்றார்.

சந்திரஃபானு “ஆனால் இங்கே அவரை தெய்வம் என்று கொள்கிறார்கள்” என்றார். அதற்கு சுஃபானு மறுமொழி சொன்னார். “ஆம், ஆனால் அவர் வெறும் தெய்வம் என்றாக வேண்டும் எனில் அவர் யாதவராக பிறந்திருக்கக் கூடாது. யாதவராகப் பிறந்தமையாலேயே அவர் யாதவ தெய்வம் என்றே கருதப்படுவார். யாதவர்களின் தெய்வங்கள் யாதவர்கள் பலிக்கும் கொடைக்கும் நுண்சொல்லுக்கும் கட்டுப்பட்டவை.” லக்ஷ்மணையின் மைந்தர் காத்ரவான் “ஆம், அது நல்ல மறுமொழி” என்று சொன்னார். “மெய்யாகவே அது நல்ல மறுமொழி. அவர் யாதவர்களில் பிறந்தார். ஆனால் அது அவர் தெரிவு அல்ல. அவர் மத்ரநாட்டு அரசியை மணந்தார். அது அவருடைய தெரிவு. ஆகவே அது தெய்வத்தின் ஆணை. அனைத்து யாதவர்களுக்கும் மேல் நின்றிருக்கும் மாறாத ஆணை அது!”

“எந்த ஆணையும் எங்கள்மேல் இல்லை. நாங்கள் தொல்குடியினர். இந்நிலத்திலுள்ள புல் போன்றவர்கள். புல்லின்றி உயிரில்லை” என்றார் ஃபானு. அது யாதவர் வழக்கமாகப் பேசும் பெரும்பேச்சு. தங்கள் அவைகளில் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். அந்த அவையில் செய்யக்கூடாதது அது. யாதவர்கள் தங்கள் அவைகளில் எப்படி பேசுவார்களோ அப்படி அனைத்துக் குடிகளின் கூட்டங்களிலும் பேசுவார்கள். அதனூடாக அனைவரையும் அயன்மைப்படுத்திக்கொள்வார்கள். அந்த நுட்பத்தை கற்ற யாதவர் தாங்கள் ஒருவரே. சூரசேனரும் பலராமரும்கூட அதை கற்றுக்கொள்ளவில்லை.

“ஆலமரங்கள் சரியும். புல் நீடூழி வாழும்” என்று ஃபானு சொன்னார். “ஒன்று அறிக, புல்லை எந்தப் புயலும் அழிக்கமுடியாது! காட்டெரி அழிக்கமுடியாது. புல் அன்னை. அனைத்து உயிருக்கும் அமுதூட்டுவது. மண்ணின் கருவில் நீடுவாழும் கலை அறிந்தது. ஆழ வேரூன்றும் அருகும் புல்லே. மிதந்தலையும் நீர்ப்புல்லும் உண்டு. புல்லை வணங்குகின்றன வேதங்கள்” என்று அவர் தொடர்ந்தார். அதை அவர் ஏன் பேசுகிறார் என்றே எவருக்கும் புரியவில்லை. அவரை சுஃபானு தடுத்து “நாம் இங்கே புல்லை உண்ணும் விலங்குகளை உண்ண வந்திருக்கிறோம்” என்றார். அனைவரும் நகைத்து அத்தருணத்தை கடத்தி கொண்டுசென்றார்கள்.

அவ்வாறு தொடங்கியது அந்தச் சொல்லாடல். ஃபானு பேசிக்கொண்டே சென்றார். தந்தையே, அது சுஃபானு அவரில் ஓதிச்செலுத்திய சொற்கள். நீங்கள் எதற்கெல்லாம் கட்டுப்பட்டவர் என்று மூத்தவர் சொல்லத்தொடங்கினார். பின்னர் எவரெல்லாம் உங்களை கட்டுப்படுத்துவர் என்று சொன்னார். பின்னர் எப்படியெல்லாம் உங்களை கட்டுப்டுத்துவது என்று பேசத்தொடங்கினார். இறுதியில் உங்களை அனைத்துச் சரடுகளாலும் கட்டி அசைவிலாது நிறுத்தினார். உங்கள் மேல் தங்கள் வெற்றியை அவ்வண்ணம் நிறுவிய பின்னர் உங்களை மெல்ல களியாடத் தொடங்கினார். “அவர் கட்டற்றவர், ஆனால் காற்று எங்கும் நிலைகொள்வதில்லை, எதையும் கட்டுவதில்லை. நிலைகொள்வது மலை, நகர்களென கோட்டைகளென ஆவதும் மலையே. மலை கட்டுகளுக்கு உட்பட்டது. கட்டுவதே கட்டடம் என்று அறிக!”

லக்ஷ்மணையின் மைந்தர் ஊர்த்துவாகன் கேட்டார் “அறியாது கேட்கிறேன். இளைய யாதவர் மாவீரர் என்று கொண்டாடுகிறார்கள். எந்தக் களங்களில் அவர் பெருவெற்றி கொண்டிருக்கிறார்? அஸ்தினபுரியின் துணை கொண்டு மதுராவை வென்றார். பீமனைக் கொண்டு மகதத்தை அழித்தார். அபிமன்யுவை துணைகொண்டு பாணாசுரரை வென்றார். அஸ்தினபுரியைச் சுட்டி அச்சுறுத்தி அருகமைந்த நாடுகளை அடக்கினார். தன் படைகொண்டு சென்று அவர் வென்ற களங்கள் என்ன?” எவரோ நகைத்தனர். பலன் “அவர் வென்றதெல்லாம் சொற்களங்களிலேயே” என்று சொன்னான். “அவர் புரியாத சொற்களின் தலைவர்” என்று ஃபானு சொன்னார். சிரிப்புகள் உணவுக்கூடமெங்கும் நிறைந்தன.

பிரகோஷன் சிரித்தபடி “அவ்வெற்றி உண்மையில் நன்று. அவர் உரைக்கும் சொற்களில் ஒன்றுகூட புரியாதவர்களை பிறர் வெல்வது எளிதல்ல. எனென்றால் அறியாச் சொல் வேதம் என்று நம்புபவர் எளியோர்” என்றார். அனைவரும் வெடித்து நகைத்தனர். அவர்களில் பலர் ஏன் நகைக்கிறார்கள் என்றே அறிந்திருக்கவில்லை. “அவர் வெற்றிகொள் பெருவீரர்! சூதர்களின் பாடல்கள் அவ்வாறு உரைக்கின்றன” என்று அபராஜித் சொன்னான். “அவர் எட்டு பெண்களை வென்றார்” என்று எங்கோ ஒரு குரல். அது அதிஃபானுவின் குரலெனத் தோன்றியது. மீண்டும் சிரிப்பு.

“ஆம், சூதர்களின் பாடல்களில் வென்று அவர் காலத்தை கடந்து செல்வார். அதற்குப் பின் இங்கே மெய்யாகவே அவர் எவரையும் வென்றது இல்லை என்று ஒருவர் சொன்னால் பித்தனென்றே ஆவார்” என்றார் சுஃபானு. “வெல்லவேண்டியது சூதர்களையே என்று அறிந்தவர்” என்றார் மத்ரரான மகாசக்தன். “இந்தச் சூதர்களின் நாவை முதலில் அடக்கவேண்டும்” என்றார் மத்ரரான சகன். “பூசணிக்கொடியின் வேரை வெட்டுவதே எளிது. அது படர்ந்து செல்லும் திசைகள் அனைத்தையும் சென்று நோக்கி வெட்ட எவரால் இயலும்?” என்றார் சுஃபானு. “ஆம், வேரை வெட்டவேண்டும். வேரில் வெந்நீர் விடவேண்டும்” என்று ஒரு குரல்.

நகைப்புகள், இளிவரல்கள், ஒவ்வொருவராக மேலும் மேலும் கள் போதை கொண்டனர், ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளை முற்றழித்துக்கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து பிறிதொருவரை வெளியே எடுத்தனர். பிறதொருவர் அறியாது கரந்தவை, ஒவ்வொரு கணத்திலிருந்தும் ஊறிச் சொட்டி எஞ்சிய நஞ்சின் திரள். அவர்கள் அனைவரையும் இணைத்தது உங்கள் மீதான காழ்ப்பும் விலக்கமும். அதை அவர்கள் வெளிப்படுத்தியதிலுள்ள சிறுமையும். தீமையையும் சிறுமையையும் பங்கிட்டுக்கொள்பவர்களிடையே உருவாகும் ஒற்றுமை வியப்பூட்டுவது.

ஃபானு “என் புகழ் என்பது ஒருநாளேனும் களத்தில் எந்தையை வெல்லும்போதுதான் நிறைவுறும்” என்றார். “கொல்லும்போது என்று சொல்லுங்கள், மூத்தவரே. கொல்வதும் உகந்ததே” என்று பிரஃபானு சொன்னார். “ஏனெனில் தந்தையாயினும் பிதாமகரே ஆயினும் மண்ணின் பொருட்டு கொல்லலும் ஆகும் என்ற நெறியை வகுத்து உலகுக்கு அளித்தவர் அவர்.” ஊட்டறை பேரொலி எழுப்பியது. ஓரிருவர் கையில் கோப்பையுடன் எழுந்துவிட்டனர். “எனில் சொல்க. எந்நெறியின் பொருட்டு அவரை கொல்லலாம்?” என்றார் ஃபானு. “தந்தையையும் கொல்லலாம் என்னும் நெறியின் பொருட்டு. அவர் தந்தையின் இடத்தில் இருந்த கம்சரை கொன்றார் என்பதன் பொருட்டு” என்று சுஃபானு சொன்னார்.

பிரகோஷன் “அறமென ஒன்றைச் சொல்லி அதன் பொருட்டு களம் நின்றால் நாம் இயற்றுவது அனைத்திற்கும் பொறுப்பை அறமே ஏற்றுக்கொள்ளும் என்று அவர் சொன்னார். அறம் என்ற சொல்லை ஆணித்தரமாக சொன்னால் அது நம்மை சூதர்சொற்களில் கொண்டு அமரச்செய்யும். நாம் அறத்தோடு நின்றோம் என்று சூதர் நிறுவினால் அந்த அறமே எழுந்து வந்தாலும் அதை மறுக்கமுடியாது” என்றார். சுஃபானு “ஆம் மூத்தவரே, ஒருமுறையேனும் தந்தையை வெல்ல வேண்டும்” என்றார். “எனில் எண்பது முறை தந்தையை கொல்ல வேண்டியிருக்கும்” என்று பிரகோஷன் சொன்னார்.

“எண்பது முறை கொல்லப்பட்ட பின்னர் அவரில் எஞ்சுவது ஒன்றுண்டு. அதை அவரே கொல்ல வேண்டும்” என்றான் ஃபானுமான். அந்தச் சொல் அனைவரையும் எவ்வகையிலோ கவர்ந்தது. “ஆம், எண்பது முறை கொல்லப்படுதல்! நன்று! எண்பது முறை கொல்லப்படுதல்!” என்று கள்மயக்கில் அதிஃபானு கூவினான். “எண்பது முறை!” என்று பலர் கூவினார்கள். “அதெப்படி எண்பது முறை? எண்பது உறுப்புகளா?” என்றான் ஸ்ரீஃபானு. “எண்பது பெயர்கள் அவருக்கு… எண்பது முகங்கள்” என்றான் பிரபலன். மதுக்கோப்பைகளை உயர்த்தியபடியும் கைகளை தூக்கியபடியும் “எண்பது முறை கொல்லுவோம்!” என்று கூவினர். கூச்சலிட்டு கைகளை வீசினர். ஆர்ப்பரித்தனர். எங்கும் வெறிகொண்ட முகங்கள். சிரிக்கும் பற்கள்.

எந்தையே, அன்று எண்பது முறை என்னும் சொல்லை நானும் பலநூறு முறை என் நாவால் சொன்னேன். எண்பது பேரும் ஒருவராதல், ஒவ்வொருவரும் எண்பது முறை உங்களை வெல்லுதல். எண்பது எத்தனை அழகிய எண்! எண்பது வஞ்சங்கள், எண்பது தயக்கங்கள், எண்பது விந்தையான தனிமைகள். ஒவ்வொருவர் உள்ளத்திலும் எண்பது வடிவில் எழுந்தருளியிருக்கிறீர்கள் என்று எனக்கு ஓர் எண்ணம் எழுந்தது. எண்பது தோற்றங்களா அன்றி எண்பது பிறழ்வுகளா? எண்பது மீறல்கள் போலும். எண்பது விடுபடல்களோ ஒருவேளை? தந்தையே, மைந்தர் என தந்தையில் எழுவதுதான் என்ன? மீள நிகழ்த்துவதில்லை இயற்கை. எனில் எஞ்சுவதோ விஞ்சுவதோ உண்மையில் என்ன?

அம்மதுக்களியாட்டு முடிந்து நான் கிளம்பும்போது என் தலை வீங்கி பெருத்திருந்தது. சேற்றில் சிக்கிக்கொண்ட யானைபோல் தம் எடையில் தாமே தடுமாறிக்கொண்டிருந்தன என் கால்கள். என்னை ஏவலர்கள் கைத்தாங்கலாக பற்றி என் அறைக்கு கொண்டுசென்றனர். “போர் அறிவிக்கப்பட்டுவிட்டது!” என்று எனக்குப் பின்னால் ஒருவன் சொன்னான். “இனி எவரும் எதையும் அஞ்சி தயங்கவேண்டியதில்லை. எதன் பொருட்டும் ஐயம் கொள்ளவும் வேண்டியதில்லை. ஒவ்வொன்றும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஒவ்வொன்றுக்கும் பொழுது குறிக்கப்பட்டுவிட்டது. நாம் வென்றாகவேண்டியது அவரைத்தான்.”

“ஆம், எங்கு இருந்தாலும் தேடி அவரை இங்கு வரச்சொல்வோம். இங்கு வந்து அவர் அறிவிக்கட்டும் எது முதன்மையானதென்று. எது அழிவற்றதென்று!” எவர் குரல் என அறியேன். குரல் மட்டும் கேட்டால் அது எண்பதில் எவராகவும் இருக்கலாம். எங்களை எங்கள் அறைகளில் ஒவ்வொருவராக கொண்டுசென்று படுக்க வைத்தனர் ஏவலர். என் அறை மஞ்சத்தில் படுத்தபோது நீர்ப்பரப்பின் மீது நீர்த்தாவி பூச்சியைப்போல் நான் பறந்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன். என் கைகால்கள் எடை மிகுந்து விழுந்தன. என் நா குழைந்த சொற்களாக இருந்தது. எதை எதையோ எண்ணிக்கொண்டிருந்தேன். பின்னர் ஓர் உலுக்கலில் உணர்ந்தேன், என் அருகே தாங்கள் அமர்ந்திருந்தீர்கள். என் அருகே, தலைக்கு அருகே!

நான் படுத்தபடி “எந்தையே!” என்றேன். நீங்கள் ஒளி மிக்க சிறிய வாளொன்றை என்னிடம் அளித்தீர்கள். “எதன் பொருட்டு, தந்தையே?” என்றேன். “நீ விழைந்தது” என்று சொன்னீர்கள். “இல்லை” என்று நான் சொன்னேன். “நீ விழைந்தாயெனில்…” என்று நீங்கள் கூறினீர்கள். “இல்லை இல்லை” என்றேன். “நீ விழைந்தது” என்று மீண்டும் கூறினீர்கள். “இல்லை தந்தையே, நான் விழையவில்லை. மெய்யாகவே விழையவில்லை” என்று நான் கூறினேன். நீங்கள் அந்தக் குறுவாளை நீட்டியபடி புன்னகைத்துக்கொண்டே இருந்தீர்கள். எண்ணியிராக் கணம் ஒன்றில் நான் எழுந்து அக்குறுவாளை வாங்கி தங்கள் நெஞ்சில் பாய்ச்சினேன்.

குறுவாள் பாய்ந்து நீங்கள் நீர்ப்பாவை என கலைந்து மறைந்தீர்கள். நான் எழுந்து நின்றுகொண்டிருந்தேன். என் காலடியில் ஓர் உடல் கிடந்தது. தந்தையே, குனிந்து நான் அதை பார்த்தேன். என் உடல் விதிர்ப்படைந்தது, தள்ளாடி நடந்து அறைக்கதவைத் திறந்து வெளியே பாய்ந்தேன். உடனே அங்கிருந்து கிளம்பிச்சென்றுவிடவேண்டும் என்னும் விசை மட்டுமே என்னுள் எஞ்சியிருந்தது. கதவைத் திறந்து வெளியே பாய்ந்தபோது வெற்றிடத்தில் சுழன்ற விசைகொண்ட காற்றை உணர்ந்தேன். என் புரவியை அடைந்து அதை அவிழ்த்து ஏறி அதை குதிமுள்ளால் ஊக்கி விசையூட்டி காற்றில் பாய்ந்தேன். ஒழிந்த நகரினூடாக வெறிகொண்டு விரைந்தேன்.

எத்தனை தொலைவு, எத்தனை பொழுது என்று அறிந்திருக்கவில்லை. சென்று நின்றபின்னரும் அது எந்த இடம் என்று தெரியவில்லை. துவாரகையின் மேற்கே விரிந்திருந்த வறுநிலங்களின் ஒரு பகுதி என்று பின்னர் கணித்துக்கொண்டேன். அங்கு நான் உணர்ந்தது ஒரு தனிமை. ஆனால் முற்றிலும் விடுபட்டிருந்தேன். பேருருக் கொண்டிருந்தேன். நான் என்னை வெல்ல முடியாதவனாக, துயரற்றவனாக உணர்ந்தேன். அப்போதும் தனிமை கொண்டிருந்தேன். ஆனால் அத்தனிமை பெருங்கொண்டாட்டத்தை பேருவகையை அப்போது அளித்தது. தந்தையே, அப்போது நான் தாங்களாக இருந்தேன்.

விடியும்வரை அங்கே நின்றிருந்தேன். பாலையில் வானம் மிக விரைவாகவே ஒளிகொண்டுவிடுகிறது. மிளிரொளி. எதுவும் சுடர்விடுவதில்லை, எல்லாம் தங்கள் உள்ளொளியை உமிழ்கின்றனவோ என்று தோன்றும். என் கண்கள் துலங்கிவிட்டிருப்பதை அறிந்து, காலம் உணர்ந்து திரும்பிச் செல்லும்பொருட்டு புரவியை நோக்கினேன். நான் நின்றிருந்த இடம் ஒரு மணல்மேடு. துவாரகையை ஒட்டிய மணற்பரப்பின் மிக உயரமான இடம் அதுவே. அங்கிருந்து ஒற்றை நோக்கில் துவாரகையை கண்டேன். இரு குன்றுகளில் ஒன்றின்மேல் அந்த மாபெரும் நுழைவாயிலுக்கு அப்பால் நீலக்கடல் மேல் வானம் படிந்திருந்தது. துறைமுகத்தில் ஒரு பீதர்நாட்டுக் கப்பல் அலைகளில் ஆடி நின்றது. சுழன்று சுழன்றேறும் துவராகையின் தெருக்கள். கீழே வைக்கப்பட்ட ஒரு மாபெரும் படையாழி போன்ற அதன் வடிவம்.

சிறிய செப்புபோலிருந்தது. தெய்வங்கள் விட்டுச்சென்ற களிப்பாவை போலிருந்தது. குனிந்து எடுத்து கையில் வைத்துக்கொள்ளலாம்போல. நான் அங்கு நின்று அதை பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநேரம்.