எழுதழல்

நூல் பதினைந்து – எழுதழல் – 33

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 11

fire-iconபிரலம்பன் அனைத்தும் பிழையாக சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தான். அந்த உரையாடல் எப்படியாவது நின்றுவிடவேண்டும் என அவன் உள்ளம் பதைபதைத்தது. ஆனால் பிழையாகி சரியத் தொடங்கும் உரையாடல்கள்மேல் மானுடருக்கு பெரும் ஈடுபாடு இருக்கிறதென்று அப்போது தெரிந்தது. அதுவரை பேசாமலிருந்த அனைவருக்கும் அப்போது சொல்வதற்கு ஏதோ ஒன்று இருந்தது. வத்சநாட்டரசர் சுவாங்கதர் “நீங்கள் சொல்லும்படி அரசை வேட்பதென்றால் அதை அரசென்று சொல்லலாகாது. அது வேள்விக்கொடை. ஆனால் யுதிஷ்டிரர் அந்தணர் அல்ல” என்றார். பலராமர் கடும்சினத்துடன் “நீர் எதற்காக இங்கே வந்துள்ளீர்? போரைத்தூண்டவா?” என்றார்.

“ஆம், போரென்றால் போர். எனக்கு அச்சமில்லை. அஞ்சி நடுங்கி வல்லவன் காலடியில் அடைக்கலம்புகும் சிறுமதி எங்கள் குடிக்கு இல்லை” என்றார் சுவாங்கதர். பலராமர் “வாயை மூடு… எவரிடம் பேசுகிறாய் என எண்ணிச்சொல்லெடு” என கூவினார். “யாதவர்களில் மூத்தவரிடம். இளையவன் வென்றநாட்டைக் கொண்டு அரசரென முடிசூட்டி பின் அவனைத்துறந்து அவன் எதிரியிடம் சென்று சேர்ந்துகொண்டு முடிகாத்துக்கொள்ள விழையும் வீரரிடம்…” என்றார் சுவாங்கதர். பலராமர் வெடிப்போசையுடன் தன் தோள்களை ஓங்கி அறைந்தபடி சுவாங்கதரை நோக்கி பாய்ந்தார். வசுதேவர் “மைந்தா, இது அவை” என்று கூவ அப்படியே நின்று “மூடா, இச்சொல்லின்பொருட்டு என்றேனும் உன் தலையை கதையால் சிதறடிப்பேன்” என்று கூவினார்.

துஷார மன்னர் வீரசேனர் “மூத்த யாதவரே, நீங்கள் துரியோதனர் மீது கொண்டுள்ள பற்று என்பது அவர் உங்கள் மாணவர் என்பதனால் மட்டும்தான் என நம்ப நான் சித்தமாக உள்ளேன். ஆனால் யாதவ ஐங்குடியும் உங்களைத் துணைப்பதும் அதனாலேயே என்று நம்ப என்னால் இயலவில்லை. அவர்கள் ஷத்ரியக்கூட்டின் ஒருபகுதியென்று ஆக விழைகிறார்கள். கார்த்தவீரியனின் முடிவை எண்ணி அஞ்சி எடுத்த முடிவு அது. இல்லை என்று சொல்வீர்களா?” என்றார். “நான் எதையும் விளக்க இங்கு வரவில்லை. இங்கு நலம் பயக்கும் ஒரு செயலையே முன்வைத்தேன்” என்றார் பலராமர். அவர் குரல் தழைந்துவிட்டது என்பதை பிரலம்பன் கண்டான்.

பீமன் “நாம் இதை இங்கே நிறுத்திக்கொள்வோம். அவையோரே, மூத்த யாதவர் என் ஆசிரியர். நான் அவருக்கு கட்டுப்பட்டவன்” என்றாம். “மூடா, இந்த அவையில் அவர் தன் மாணவன் துரியோதனன் மட்டுமே என அறிவித்துவிட்டார்” என்றார் குந்திபோஜர்.

திரிகர்த்தமன்னர் சுசர்மர் “நான் வீரசேனர் கேட்டதை மீண்டும் கேட்க விழைகிறேன். யாதவ ஐங்குடியும் இளையவரை துறந்தது எதனால்? ஏன் அவர்கள் துரியோதனரின் பக்கம் நின்றிருக்கிறார்கள்? அதை மட்டும் விளக்குக!” பலராமர் “நாம் அதை உசாவ இங்கே அமர்ந்திருக்கவில்லை. இந்த அவையில் அதைப்பற்றி நான் பேசவேண்டியதுமில்லை” என்றார். “பேசியாகவேண்டும். ஏனென்றால் இந்த அவையின் நோக்கத்தையே சற்றுமுன் நீங்கள் மறுத்தீர்கள். அது ஏன் என்பதை இந்த அவை புரிந்துகொண்டாகவேண்டும்.”

“விளக்க எனக்கு உளமில்லை. விரும்பாவிட்டால் நான் இந்தப்பூசலில் தலையிடவுமில்லை” என்றபின் பலராமர் அமர்ந்தார். கேகய மன்னர் பிருஹத்ஷத்ரர் “அவ்வாறு அமர்ந்தால் இதை விட்டுவிடமுடியாது, பலராமரே. ஏனென்றால் இங்கே பேசப்படுவது பாரதவர்ஷத்தின் அரசியல். நேரடியாகவே சொல்லுங்கள். இத்தருணம் போர் எழுந்தால் நீங்கள் எந்தப்பக்கம்?” பலராமர் “நான் துரியோதனின் பக்கமே. ஐயமே வேண்டியதில்லை” என அமர்ந்திருந்தவாறே சொன்னார். அவர்முகத்தில் ஆழ்ந்த கசப்பு நகைப்பாக வெளிவந்தது. “எதிர்ப்பக்கம் உங்கள் இளையவர் படையாழியுடன் நின்றால்?”

பலராமர் சற்று திகைத்து “அது இங்கே பேசப்படவேண்டியதல்ல” என்றார். மல்லநாட்டரசர் ஆகுகர் உரக்க “இங்கே பேசப்படுவதே அதுதான்” என்றார். காரூஷ நாட்டு க்‌ஷேமதூர்த்தி “நீங்கள் இங்கே பேசிய உடன்பிறந்தார் குருதி தவிர்த்தல் என்பது உங்கள் குலங்களுக்குள் உள்ள பூசல்தான் அல்லவா?” என்றார். “வாயைமூடு…” என்றபடி பலராமர் பாய்ந்து எழுந்தார். பல்லவநாட்டரசர் நதீஜர் “சினம் உண்மையை வெளிக்காட்டுகிறது. நீங்கள் போரை தவிர்க்கமுடியாது, யாதவரே. ஏனென்றால் போருக்கு முதன்மை ஏதுக்களில் நீங்களும் ஒருவர். இளைய யாதவரின் நேர் தமையனாகிய நீரே அப்பக்கம் சென்றுவிட்டமையால்தான் துரியோதனன் துணிவுகொள்கிறான்” என்றார்.

பீமன் “நாம் இதைப் பேசவேண்டியதில்லை… இந்த அவையின் நோக்கம் இதுவல்ல” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், நாம் பேசவேண்டியதே வேறு. மூத்த யாதவர் நம் விருந்தினர்” என்றார். பலராமர் “யுதிஷ்டிரா, அவ்வாறு உன் அளி எனக்குத் தேவையில்லை. இந்த மூடர்கள் உன்னிடம் கலந்துகொள்ளாமல் அவையில் இப்படி பேசுகிறார்கள் என நான் நினைக்கவில்லை. பேசட்டும். இவர்களின் அறிவிலாப்பிதற்றல்களுக்கு அஞ்சுபவன் அல்ல நான்” என்றார். தரதர்களின் அரசராகிய கர்ணவேஷ்டர் “அறிவிலாப்பிதற்றலுக்கு மறுமொழி சொல்லுங்கள். முடிந்தவரை அறிவு அதில் அமையட்டும். துரியோதனனை நீங்கள் ஆதரிப்பது எதனால்? முடிவிருப்பா? குடிபேணலா? உடன்பிறந்த தம்பியைத் துறந்து சென்று நீங்கள் அவனிடம் அடைவது எதை?” என்றார்.

பலராமர் “இழிமகனே, இதோ நீ எழுந்து நின்று என்னிடம் கைநீட்டி பேசுகிறாய் அல்லவா? இந்நிலையை தவிர்ப்பதற்குத்தான். நீ யார்? தரதர்களின் மரபென்ன? அசுரநிலமான கஜமதனத்தை அவர்களிடம் இரந்துபெற்று அரசமைத்தவர் உன் மூதாதை. நத்தை ஒன்று நாளுக்குள் தவழ்ந்து கடக்கும் நிலத்தை வைத்துக்கொண்டு அரசன் என வந்து அமர்ந்திருக்கிறாய்” இழிவுதோன்ற இதழ்வளையச் சிரித்து பலராமர் அவையை சுட்டிக்காட்டினார். “இந்த அவையையே பார்! இங்கே தொல்குடியினர் எவர்? மீன்முடை வீசும் மச்சர்கள். ஊன் நெடி கொண்ட நிஷாதர்கள். இருளை வணங்கும் அசுரர்கள். இங்கு வந்தமர்ந்தால் நானும் என் குடியும் இழிவுகொள்வோம்.”

அவர் குரல் ஓங்கியது “ஆம், நாங்கள் கன்றோட்டும் குலம். ஆனால் நாங்கள் நிலம் வென்று அரசமைத்து ஆயிரமாண்டுகளாகின்றன. கார்த்தவீரியர் இந்த பாரதவர்ஷத்தை முழுதாண்டதை ஷத்ரியரும் மறுக்கவியலாது. யாதவர் இனிமேலும் கன்றோட்டும் குடிகள் அல்ல. அவர்கள் ஷத்ரியர் அவையில் நிகர்பீடம்கொண்டு அமர்ந்தாகவேண்டும். இந்தத் தலைமுறையில் அமர்ந்தால் இனிவரும் தலைமுறைகளின் இடம் அதுவாக அமையும். இது ஒரு நல்வாய்ப்பென்றால் அதை ஏன் துறக்கவேண்டும்?”

“யாதவப்பெருநிலம் விரிந்து பரவிவிட்டது. அதன் நகரங்கள் செல்வக்குவைகளாகிவிட்டன. இனி குடிப்பெருமை மட்டுமே வென்றெடுக்கப்படவேண்டியது. இந்த இழிகுலத்தாரவையில் வந்தமர்ந்து அதை நான் ஈட்டவியலாது. அஸ்தினபுரியில் அங்கனும் வங்கனும் கலிங்கனும் கூர்ஜரனும் சைந்தவனும் விதர்ப்பனும் மாளவனும் அமர்ந்திருக்கும் அவையில் நிகரென்றமர்ந்து அதை நான் அடைவேன்…”

அந்த வெளிப்படையான பேச்சை அவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. அவை சற்றுநேரம் அமைதியாக இருந்தது. ஏதோ ஒருவகையில் அவர்கள் அனைவரும் அதை ஆழத்தில் புரிந்துகொண்டார்கள் என பிரலம்பன் எண்ணினான். அது அவர்கள் அனைவரும் கொண்டுள்ள கனவு. அந்த அவைக்கு அழைப்பு வந்தால் செல்லமாட்டேன் என்று சொல்பவர்களாக எவர் இங்கே உள்ளனர் என அவன் நோக்கினான். ஒவ்வொருவரும் தங்கள் எதிரி அப்பக்கம் சென்றிருப்பதனால் இங்கு வந்தவர்கள்.

அமைதி பலராமரை ஊக்கியது. ஏளனச்சிரிப்புடன் “ஏன் என் இளையோனை துறக்கிறேன் என்று கேட்டீர்கள் அல்லவா? இதனால்தான். இவனைத் தொடர்ந்துசென்றால் யாதவர்கள் ஷத்ரியர்களின் பகைமையையே சேர்த்துக்கொள்வார்கள். அது காட்டெரியால் சூழப்படுவதுபோல. இவன் ஆற்றிய ஒவ்வொரு வினையும் யாதவர்களின் குடிப்பெருமையை அழிப்பதாகவே அமைந்தது. நேற்று முன்நாள் இவன் எங்கிருந்தான்? சொல்லட்டும்… இந்த அவையில் எழுந்து அதை உரைக்கட்டும்”

அனைவரும் திரும்பி இளைய யாதவரை நோக்கினர். அசைவற்ற உடலும் சரிந்த விழிகளுமாக அவர் அமர்ந்திருந்தார். பீலி இளங்காற்றில் அசைந்துகொண்டிருந்தது. “நான் சொல்கிறேன். ஏனென்றால் அவன் சொல்லமாட்டான்” என்றார் பலராமர். “நேற்று முன்நாள் அசுர மன்னன் சம்பரனின் சம்பரபுரியில் அசுரகுடியினரின் பேரவை ஒன்று கூடியது. பதினெட்டு அசுரமன்னர்களும் நூற்றெட்டு அசுரகுடித்தலைவர்களும் அதில் பங்குகொண்டனர். வஜ்ரபுரியின் அசுர மன்னனாகிய வஜ்ரநாபன் தன் குடித்தலைவர்களுடன் வந்திருந்தான். பாணாசுரனின் மருகன் மாருதன் அவர் சார்பில் பங்குகொண்டான். அதில் இவன் முதன்மை விருந்தினன். அங்கே இவன் பேசிய அனைத்தையும் சொல்லெண்ணி இங்கே என்னால் சொல்லமுடியும்.”

“பிறருக்காக அல்ல, இதை தூய ஷத்ரியராகிய துருபதருக்காக சொல்கிறேன். அங்கே ஷத்ரியர்களுக்கு எதிராக பெரும்சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பாரதவர்ஷம் வேதப்பயிர் விளையும் நிலம். அந்தணர் இதில் நீர்பாய்ச்சுவோர். ஷத்ரியர் இதன் வேலி. அந்த வேலியை அழிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டன” என்று பலராமர் தொடர்ந்தார். “இவன் ஏன் அங்குசென்றான்? அங்கிருந்த அசுரர்கள் இவனுக்கு மணவுறவுள்ளவர்கள். வஜ்ரநாபனின் மகள் பிரபாவதியும் சம்பரனின் மகள் மாயாவதியும் இவன் மைந்தன் பிரத்யும்னனின் மனைவியர். அவர்களில் பிறந்தவர்களே இவன் கொடிவழியினர். இவன் பெயர்மைந்தன் அநிருத்தன் இப்போது பாணனின் மகள் உஷையை மணம்புரிந்துகொண்டிருக்கிறான். இவன் தன்னை ஒவ்வொரு நாளும் அசுரனென்றாக்கிக் கொண்டிருக்கிறான். அசுரவேதத்தை தலைக்கொள்கிறான்.”

“இல்லையென்று சொல்லட்டும்… இந்த அவையில் எழுந்து இவன் ஏற்கும் வேதம் அசுரர்களுக்கு எதிரானதென்று ஒரு சொல் உறுதியளிக்கட்டும். ஆணையிடுகிறேன், நான் இந்த அவையிலேயே இவன் காலடியை பணிகிறேன். இவன் கூறுவதை தலைக்கொள்கிறேன்…” என்றார் பலராமர். அனைவரும் இளைய யாதவரையே நோக்க அவர் அசைவிலாது அமர்ந்திருந்தார். அவர் எக்கணமும் எழுவார் என பிரலம்பன் எதிர்பார்த்தான். பின்னர் அவர் எழமாட்டார் என்பதை உணர்ந்தான். அவர் அங்கே இல்லை என.

fire-iconபலராமர் மேலும் குரலெழுப்புவதற்குள் சாத்யகி கையை நீட்டியபடி எழுந்தான். “மூத்தவரே, அவையிலெழுந்து சொல்லாடக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். பேரவைகளில் ஒவ்வொரு சொல்லிலும் அறிவிலாதவர் என்று காட்டிக்கொண்டிருந்த நிலையிலிருந்து இந்த வளர்ச்சி வியப்பூட்டுவதே” என்றான். பலராமர் “வாயை மூடு, மூடா… இக்கணமே உன் தலையை அறைந்து உடைப்பேன்” என்றார். “செருகளத்தில் என்னைக் கொல்வது உங்களுக்கு எளிது, மூத்தவரே. இது அறத்தின் களம். இங்கு உங்கள் அகச்சான்று எழுந்து வரவேண்டும்” என்றான் சாத்யகி. “எங்கு அகம் கட்டுண்டிருக்கிறதோ அங்குதான் நா கூத்தாடுகிறது.”

“உன்னிடம் பேச எனக்கு ஒன்றுமில்லை” என்றார் பலராமர். “இனி இந்த அவையில் நின்று சொல்லாடவும் நான் சித்தமாக இல்லை.” சாத்யகி “அந்த அச்சமே இங்கு நீங்கள் உரைத்தவை உங்கள் அகமுணர்ந்தவை அல்ல என்பதற்குச் சான்று” என்றான். “அச்சமா? எனக்கா? உன்னிடமா…?” என பலராமர் சினத்துடன் நகைத்தார். “எனில் நின்று நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் செல்லுங்கள்” என்றான் சாத்யகி. “நீங்கள் யார்? இன்று யாதவப்படை என உங்களுடன் ஒரு திரள் நின்றுள்ளதே அது இல்லையேல் உங்களை எந்த ஷத்ரியன் அவையிலமரச்செய்வான்? நீங்கள் இன்று பேசும் இந்தக் குடிப்பெருமைகளை எல்லாம் உங்கள் ஆபுரக்கும் கொட்டிலின் கீழ் நின்று காட்டுக்காய் சுட்டுத்தின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்திருப்பீர்கள்.”

“நீங்கள் தொடங்கிய இடம் ஏதென்று எவரும் அறிவர். துரியோதனனுக்கு கதைப்பயிற்சி அளித்த ஆசிரியர் நீங்கள். குடிமரபுகளில் ஊன்றியவர் என்பதனால் உங்கள் அடிபணியத் தவறாதவர் அவர். ஆனால் நிலவிழைவால் தெய்வங்களை தூக்கிவீசத்தயங்காதவர் கௌரவமூத்தார். ஆர்வமிருந்தால் சென்று அவர் கொண்ட நிலத்தை உதறிவிடவேண்டுமென்று கோரிப்பாருங்கள். கூழாங்கல் என உங்களைத் தூக்கி வீசிவிட்டுச் செல்வார். மூத்தவரே, நீங்கள் வெறும் அணிகலன் அவருக்கு. நோய்கொண்டவனும் அஞ்சியவனும் அக்கணமே கழற்றி வீசுவது அணிகலன்களையே. தன்னந்தனிமையில் தன்னை நோக்க விழைபவன் அணிகலன்களை அகற்றியபின்னரே தானென்று உணர்வான்.”

பலராமர் அச்சொற்பெருக்கின் முன் செயலற்றவர்போல நின்றபின் மெல்ல தன் பீடத்தில் அமர்ந்துகொண்டார். “யாதவரே, சொல்லுங்கள்! எது குலம்? குருதித்தொடரா? மலையிறங்கும் கங்கை பல்லாயிரம் ஓடைகளை இணைத்துக்கொண்டு பெருகி வங்கத்தை அடைகிறது. அதில் முதலோடை எதுவென்று தேடிச்செல்ல எவரால் இயலும்? இதோ அமர்ந்திருக்கிறார்கள் பாண்டவர்கள். அவர்களின் குருகுலம் என்பது என்ன? சர்மிஷ்டையின் அசுரக்குருதியா? சத்யவதியின் மச்சர்குருதியா? குந்தியின் யாதவக்குருதியா? அல்லது வேடர்களான காந்தாரர்களின் குருதியா? குரு என்னும் மாமன்னரின் நினைவன்றி அக்குலத்திற்கு அடையாளம் ஏது? வென்ற களங்களால் மட்டும் அல்ல, ஆற்றிய அறத்தால் நிறைவேற்றிய வேள்விகளால் அமைந்தது அவர் புகழ்”.

“கன்றோட்டும் குடியை தேரோட்ட வைத்தவரைத் துறந்து தன்னலம் கருதி அனைத்து அறங்களையும் கடந்த கலிமைந்தரின் காலடியில் அமர்ந்தால் நீங்கள் யாதவகுலத்திற்கு அளிப்பது என்ன? எண்ணி எண்ணிப் பெருமிதம்கொள்ளும் புகழ்கொண்டவர்களே குலமூத்தார் என விண்ணிலும் சொல்லிலும் அமைகிறார்கள். யயாதியின், பரதரின், ஹஸ்தியின், குருவின், பிரதீபரின் பெயர் அவ்வண்ணம் வாழ்வதே. நீங்கள் உங்கள் கொடிவழியினரால் பழிக்கப்படுவீர்கள். அவையில் உங்கள் பெயர் சொல்ல அவர்கள் நாணம் கொள்வார்கள். மூத்தவரே, நாயும் நரியும் மைந்தரைப்பெற்று குருதியூன் ஊட்டி வளர்த்து கொடிவழி சமைக்கின்றன. அக்குலங்கள் நினைக்கப்படுவதில்லை. நீடிப்பதுமில்லை.”

“வாழும் குலங்கள் புகழை கைவிளக்கெனக் கொண்டு அறத்தின் திசைதேர்பவை. உங்கள் கொடிவழியினருக்கு அறம்பேணி அமைந்தவர் நீங்கள் என்ற புகழை விட்டுச்செல்லுங்கள். அதன்பொருட்டு அழிந்தாலும் அது அவர்கள் கொண்டாடும் வெற்றியே. வென்றதனால் அல்ல, நீங்கள் கார்த்தவீரியனின் பெயரை இங்கு சொன்னீர்கள், வளையாது களம்பட்டமையால். சிம்மம் என எழுந்தவர்களே தங்கள் குருளைகளுக்கு சிம்மவாழ்க்கையை அளித்துச் செல்லமுடியும். நாய் என காலடியில் உடல்வளைத்தபின்னர் திரும்பி குருளைகளை நோக்கி உறுமிக்காட்டினால்…”

“அடேய்!” என்று கூவியபடி பலராமர் எழுந்து கைகளை விரித்தபடி சாத்யகியை நோக்கி சென்றார். பீமன் பீடத்திலிருந்து எழுந்து அவர்களை நோக்கி ஓடினான். சாத்யகி அசையாமல் நின்று உரத்தகுரலில் “சிம்மக்குருளைகளால் நெஞ்சு கிழித்து கொல்லப்படுவீர், யாதவரே” என்றான். பலராமர் தன் இருகைகளையும் சேர்த்து அறைந்து “உன்னை கொல்வேன்… இரக்கமே இல்லாமல் உன்னைகொல்வேன். கீழ்மகனே…” என்று கூவினார். ஆனால் முன்னகரவில்லை. வசுதேவர் “பலதேவா, பின்னால் வா…!” என மெல்லிய குரலில் சொல்லி இருமினார். பலராமர் நெஞ்சு எழுந்தமைய பின்னால் வந்தார். அவர்களை நோக்கியபடி பீமன் இரு கைகளையும் மற்போருக்கென விரித்து நின்றான்.

“வெற்றிதோல்வியின் கணக்குகளால் அல்ல, வேதமெய்மையின் கணக்குகளாலும் அல்ல, அந்தக் காலடிப்புழுதி என் மூதாதையர் சிதைச்சாம்பலுக்கு நிகர் என்பதனால், அச்சொல் ஒவ்வொன்றும் நூறுவேதங்களுக்கு மேல் என்பதனால் நான் அவர் ஆணைக்கு அடிபணிபவன். அதுவன்றி பிறிதறியாதோர் இம்மண்ணில் உள்ளனர் என்பதனால் அச்சொல் வாழும்” என்று சாத்யகி அதே ஓசையுடன் சொன்னான். பிரலம்பன் கண்ணீர் வழிய கைகளைக் கூப்பியபடி அமர்ந்திருந்தான். “வேதம் புரப்பவர் எவர்? வேதம் எவரைப் புரக்கிறதோ அவர். உங்கள் வெற்றுப்படைக்கலங்களின் வல்லமையால் வாழ்வது வேதமல்ல. உங்களையும் என்னையும் அவரையும் மூன்று முதல்தெய்வங்களையும் அன்னையென கையிலேந்தி அமர்ந்திருக்கும் முழுமுதன்மையே வேதம்.”

“அந்தணர் அதற்கு தங்கள் அனலை அளிக்கிறார்கள். ஷத்ரியர் அதற்கு குருதியை அளிக்கிறார்கள். மேழிபற்றுவோர் ஆபுரப்போர் அதற்கு அவியும் நெய்யும் அளிக்கிறார்கள். அசுரரும் நிஷாதரும் நாகரும் பிறரும் அதற்கு தங்கள் ஆத்மாவை அளிக்கட்டும். நேற்றுவரை மலையை கிழக்குநின்றும் மேற்குநின்றும் நோக்கி பூசலிட்டோம். மலைமுடிகண்டவன் இறங்கிவந்து உரைக்கும் மெய்வழி நம்மை ஒன்றாக்குமென்றால் அவ்வாறே ஆகட்டும்.”

“என்றும் தன்னலத்திற்கு குரல்துணை மிகுதி. படைகண்டு தருக்கவேண்டாம், மூத்தவரே. மெய்மை வெல்லமுடியாத வாள். அதற்கு எதிர்நிலை கொள்ளவேண்டாம். நொறுக்கி வீசப்படுவீர்கள். யாதவகுலம் எதிர்ப்படை என நின்றிருக்குமென்றால் அழிவதே அதன் ஊழ். இது உங்கள் குருதிவழிகொண்டவனின் சொல், தந்தைசொல் கேட்காதவன் மைந்தன் சொல் கேட்டு சிறுமைகொள்வான். இது அச்சிறுமை உங்களுக்கு. நேர்வழிக்கு மீள்க! அழிவை தேடிக்கொள்ளவேண்டியதில்லை.”

கைகூப்பியபடியே நிலத்தில் விழுந்து எட்டுறுப்பும் நிலம்தொட வணங்கி எழுந்த சாத்யகி சொன்னான் “மூப்பு முறை மீறிச் சொல்லெடுத்த என்னை என் மூதாதையர் பொறுத்தருள்க! இதன்பொருட்டு அமையும் பழி என் மைந்தருக்கு மேல் சேராதமைக! இது முழுமையும் என் தலைமேல் குவிக!” திரும்பி நோக்காமல் அவன் நடந்து வெளியே செல்ல பலராமர் அவன் சென்ற திசையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்.

நெடுநேரமெனத் தோன்றிய அமைதிக்குப்பின் யுதிஷ்டிரர் “எண்ணாதன நிகழ்ந்தன. எண்ணிக்கொள்ளவேண்டாதவை உரைக்கப்பட்டன. இந்த அவை கலையட்டும். நாம் சொல்சூழ்வது பிறகென்றமையட்டும்” என்றார். சௌனகர் வணங்கியபடி அவைமேடைமேல் ஏறினார்.

இடைநாழியைக் கடந்து அபிமன்யூவுடன் படியிறங்கும்போது சுருதகீர்த்தியும் சுதசோமனும் எதிரே வருவதை பிரலம்பன் கண்டான். சுருதகீர்த்தி அபிமன்யூவிடம் “தந்தையர் எங்குள்ளனர்?” என்றான். அபிமன்யூ “சிற்றவையில். இளையதந்தை சினம்கொண்டிருக்கிறார்” என்றான். “ஏன்?” என்றான் சுதசோமன். “மூத்த யாதவர் அவையிலிருந்தே கிளம்பிச் சென்றார். எவரிடமும் விடைகொள்ளவில்லை. அவைமுறைமைகளை ஏற்றுக்கொள்ளவுமில்லை.” சுருதகீர்த்தி தலையசைத்தபின் “இளைய யாதவர் உடனிருக்கிறாரா?” என்றான். “இல்லை, அவரும் சாத்யகியும் அவர்களின் மாளிகைக்கு சென்றுவிட்டனர்.”

சுருதகீர்த்தி “என்னை வந்து பார்க்கச்சொன்னார்கள் தந்தையர். நான் அவைபுகவிருக்கிறேன்” என்றான். “செல்க!” என்றான் அபிமன்யூ. “இந்த அரண்மனை சிறிதாக இருந்தாலும் எந்த முறைமைப்படியும் இல்லை. உன் அணுக்கன் வந்து வழிகாட்டட்டும்.” அபிமன்யூ திரும்பி பிரலம்பனை நோக்கி விழிகாட்ட “அவ்வாறே” என்று பிரலம்பன் தலைவணங்கினான். சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் மேலும் ஏதோ பேசிக்கொண்டார்கள் என அவனுக்குத் தோன்றியது. செவியசைவுகள் மீசைவிடைப்புகள் விழியுருட்டல்கள் வழியாக புலிக்குருளைகள் பேசிக்கொள்வதுபோல. முதலில் அவர்கள் சந்தித்த கணம் முதல் அவன் அதை பார்த்துக்கொண்டு வந்தான். அவர்களுக்கு நடுவே பிறிதொரு அறியாப்பாதை இருந்தது.

அபிமன்யூ விடைகொண்டு படியிறங்க அவர்கள் படி ஏறினர். சுதசோமன் “தந்தை பசித்திருப்பார். அவை நீண்டநேரம் நடந்தது” என்றான். கூரம்புகள் நடுவே கொசு பறப்பதுபோல அத்தனை அரசுசூழ்தல்களுக்கும் நடுவே சுதசோமனும் சர்வதனும் தங்கள் இயல்புடன் வாழ்ந்துகொண்டிருப்பதையும் அவன் கண்டிருந்தான். புன்னகைத்து “அவர் நடுநடுவே சிற்றுணவு உண்டார்” என்றான். “அது அவருக்கு எப்படி போதுமானதாக ஆகும்? பேருண்டிக்காரர்” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி “நீ அவன் அணுக்கன் அல்லவா?” என்றான். “ஆம், இளவரசே” என்றான் பிரலம்பன். “அவர்கள் நடுவே உறவு எப்படி?” என சுருதகீர்த்தி கேட்டான்.

அதை புரிந்துகொண்டு “அதை நான் அறியேன். அவர்கள் ஒருமுறைதான் சந்தித்துக்கொண்டனர்” என்றான் பிரலம்பன். “அதன்பின் அவன் முகம் எப்படி இருந்தது?” பிரலம்பன் ஒன்றும் சொல்லவில்லை. “அவன் மகிழ்ந்திருந்தானா?” என்று சுருதகீர்த்தி மீண்டும் கேட்டான். “இல்லை” என்றான் பிரலம்பன். அவனை ஒருகணம் திரும்பி நோக்கியபின் சுருதகீர்த்தி பேசாமல் நடந்தான். அவர்கள் சிற்றறையை அடைந்ததும் பிரலம்பன் காவலனிடம் அவர்களை அறிவிக்கும்படி சொன்னான். காவலன் உள்ளே சென்று வரவறிவித்து அவர்களை உள்ளே செல்லும்படி சொன்னான். சுருதகீர்த்தி “வருக, நீர் அவன் ஒற்றன் அல்லவா?” என புன்னகைத்தபின் உள்ளே சென்றான். பிரலம்பன் தொடர்ந்தான்.

அறைக்குள் யுதிஷ்டிரர் பீடத்தில் அமர்ந்திருக்க அருகே நகுலனும் சகதேவனும் சிறுபீடங்களில் அமர்ந்திருந்தனர். சாளரத்தருகே பீமன் கைகட்டி நின்றிருந்தான். சுருதகீர்த்தினும் சுதசோமனும் முறைப்படி வணங்கி நின்றனர். சுவர் அருகே பிரலம்பன் நின்றான். அவர்கள் எவருக்கோ காத்திருப்பது போலத்தெரிந்தது. யுதிஷ்டிரர் அமைதியின்மையுடன் “என்ன செய்கிறான்?” என்றார். நகுலன் “இளைய யாதவருடன் அமர்ந்தால் அவர் வருவார் என்று கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே” என்றாரன்.

“அப்படியென்றால் நாம் முடிவை எடுப்போம்… தௌம்யரும் துருபதரின் அமைச்சர் கருணரும் சௌனகரும் நம் செய்தியுடன் அஸ்தினபுரிக்கு செல்லட்டும்” என்றார் யுதிஷ்டிரர். “ஷத்ரியர் துணைசெல்லவேண்டும் என்பது மரபு” என்றான் சகதேவன். “ஆம், அரசகுடிப்பிறந்தவர் செல்லவேண்டும்” என்ற யுதிஷ்டிரர் சுருதகீர்த்தியை நோக்கி “இவன் சென்றால் என்ன?” என்றார். நகுலன் “ஆம், இவன் உகந்தவனே” என்றான். “இவர்கள் இருவரும் உடன்செல்லட்டும், நன்று” என்றார் யுதிஷ்டிரர். “அவர்களுக்கான ஓலைச்சொற்களை நானே குறித்துக்கொடுக்கிறேன். அவர்கள் எவ்வகையிலேனும் நால்வரை தனித்தனியாக சந்திக்கவேண்டும். பீஷ்மரையும் துரோணரையும் திருதராஷ்டிரரையும் காந்தாரியையும்.”

“அதனால் என்ன பயன்?” என்றான் பீமன். “மந்தா, மீண்டும் தொடங்கிவிடாதே. களைத்திருக்கிறேன். நான் அவர்களின் அகச்சான்றை நம்புகிறேன்” என்ற யுதிஷ்டிரர் “ஆகவே இதுவே என் ஆணை. இவர்கள் உடன்செல்வதாக இருந்தால் இவர்களுக்குரிய ஆணைகளை பிறப்பித்து அனுப்புக!” என்றார்.நகுலன் “நான் அதை கற்பிக்கிறேன்” என்றான். அப்போது ஏவலன் வந்து தலைவணங்கி “பேரரசி” என்றான். யுதிஷ்டிரர் எதிர்நோக்கியிருந்தது அவளைத்தான் எனத் தெரிந்தது. அவர் ஆணையிட்டதும் ஏவலன் சென்று குந்தியை உள்ளே அனுப்பினான்.

குந்தி நுழைந்ததும் அனைவரும் எழுந்து வணங்கினர். அவள் அமர்ந்ததும் அமர்ந்தனர். குந்தி பேசவேண்டும் என பிறர் எதிர்பார்த்திருந்தமையால் அமைதி நிலவியது. அவள் மெல்லிய குரலில் “சல்யர் அஸ்தினபுரி நோக்கி செல்கிறார்” என்றாள். “ஏன்?” என்றபடி பீமன் அருகே வந்தான். “யாரோ தூதர் அவரைச் சந்தித்து இட்டுச்செல்கிறார். முதலில் அவர்கள் வழிதவறிவிட்டனர் என்று நம் ஒற்றர் எண்ணினர். ஆனால் அவர் தெளிவாக வழிகாட்டப்பட்டே செல்கிறார் எனத் தெரிகிறது. இன்னும் ஒருநாளில் அவர் அஸ்தினபுரி எல்லைக்குள் செல்வார்.”

சலிப்புடன் தலையசைத்து “கணிகரின் சூழ்ச்சிதான்” என்றார் யுதிஷ்டிரர். “நாம் என்ன செய்வது?” என்று பீமன் கேட்டான். “அர்ஜுனனின் மைந்தனையும் பீமனின் மைந்தனையும் சல்யரைச் சந்திக்க அனுப்பும்படி இளையவன் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றாள் குந்தி. “இவர்களா?” என்று பீமன் கேட்டான். “இவர்கள்தான் அஸ்தினபுரியின் எல்லைக்குள் தயக்கமில்லாது நுழையமுடியும், இளையோனே. இவர்கள் இன்றும் கௌரவரின் மைந்தர்களும் குடிகளும்தான்” என்றார் யுதிஷ்டிரர்.

“இவர்கள் சென்று அச்சூழ்ச்சியை எப்படி எதிர்கொள்வார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவர்களிடம் அனைத்தையும் சாத்யகியே சொல்வான் என்பது இளையவன் செய்தி. அவன் எண்ணுவதென்ன என்று அறியேன். அதுவே நிகழட்டும்” என்றாள் குந்தி. யுதிஷ்டிரர் “அப்படியென்றால் சதானீகனும் சுருதவர்மனும் அஸ்தினபுரியின் தூதருக்கு துணைசெல்லட்டும்” என்றார். நகுலன் “ஆம், அவர்கள் செல்லட்டும்” என்றான். சுருதகீர்த்தியும் சுதசோமனும் தலைவணங்கினர்.

மீண்டும் அமைதி நிலவியது. “முறைப்படி அபிமன்யூவின் திருமணம் நிகழட்டும் என்று இளையவன் ஆணை” என்றாள் குந்தி. “ஆம், அதையும் சிறப்புறச் செய்வோம். நடப்பது நன்மைதரும் என்று நம்புவோம்” என்றார் யுதிஷ்டிரர்.

நூல் பதினைந்து – எழுதழல் – 32

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 10

fire-iconபிரலம்பன் இளைய யாதவரின் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவைமுறைமைகளின்போது அவர் அரைக்கண்மூடி அங்கிலாதவர் என அமர்ந்திருந்தார். அவைநுழைந்தபோது நேராகச் சென்று முன்னிரையில் அமர்ந்திருந்த வசுதேவரை அணுகி கால்தொட்டு வணங்கினார். அவர் ஒருமுறை பலராமரை நோக்கிவிட்டு “நலம் சூழ்க!” என்றார். பலராமரை அவர் தாள்வணங்கியபோது அவரும் அதேபோல உணர்வற்ற மொழியில் “நலம் சூழ்க!” என்றார். அவர்களருகே அமர்ந்திருந்த அக்ரூரரை வணங்கியபோது அவர் வெறுமனே அவரது தலையை தொட்டார். அதன் பின் தன் இருக்கையை வந்தடைந்த இளைய யாதவர் கண்களை மூடிக்கொண்டார்.

இளைய யாதவரின் அருகே அமர்ந்திருந்த சாத்யகி குமுறிக்கொண்டிருப்பதை பிரலம்பன் கண்டான். இளைய யாதவர் வணங்கும்போது அவன் யாதவநிரையை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் ஒருமுறைகூட திரும்பி நோக்கவில்லை. ஆனால் அவன் உடலிலேயே உளக்குமுறல் விழி அறியாத ஒன்றாக தெரிந்துகொண்டிருந்தது. அங்கு நிகழ்ந்ததை அங்கிருந்த அனைவருமே நன்குணர்ந்திருந்தனர். இளைய யாதவர் அவைக்குள் நுழைகையில் தன்னை அவருக்கான இருக்கையருகே சென்று நின்றிருக்கச் சொன்னது அந்த இக்கட்டான சூழலை சுருக்கமான காலடிகளுடன் விரைந்து முடிப்பதற்காகத்தான் என பிரலம்பன் உணர்ந்தான்.

இளைய யாதவர் உள்ளே நுழைந்ததும் அவை மெல்லிய கலைவோசையுடன் பதற்றம் கொண்டது. பின்னர் உச்சம் கொண்டு விழிகளாகியது. இளைய யாதவர் அமர்ந்ததும் அவர்மேல் விழி நிலைக்கச்செய்து காத்திருந்தது. பின்னர் மெல்ல இயல்பாகி பேச்சொலி கொண்டது. யுதிஷ்டிரர் வந்தமர்ந்து முடியும் கோலும் சூடிக்கொண்டார். இளைய பாண்டவர்கள் அவரை வணங்கி தங்கள் பீடங்களில் அமர்ந்தனர்.

முதலில் குந்திபோஜர் யுதிஷ்டிரரை வாழ்த்தினார். பின்னர் துருபதர் வாழ்த்தளித்தார். பின்னர் ஷத்ரியர்களான வத்சநாட்டரசர் சுவாங்கதரும், துஷார மன்னர் வீரசேனரும், திரிகர்த்த மன்னர் சுசர்மரும், கேகய மன்னர் திருஷ்டகேதுவும், மல்லநாட்டரசர் ஆகுகரும், காரூஷநாட்டு க்‌ஷேமதூர்த்தியும், பல்லவநாட்டரசர் நதீஜனும், தரதர்களின் அரசராகிய கர்ணவேஷ்டரும் அவைமுறைமைகளை செய்தனர்.

ஒரே குரலில் என முறைமைச்சொற்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு அசைவும் நன்கு வகுக்கப்பட்டிருந்தது. அவை முறைமைகள் முடிந்தபின்னர் சௌனகர் அபிமன்யூவின் திருமணச்செய்தியை அறிவித்தார். மறுநாள் முதற்புலரியில் விராடநிலத்தின் உபப்பிலாவ்யநகரியில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள கொற்றவை ஆலயத்தில் மணக்கோள் நிகழும் என்றும் அந்நாள் முழுக்க விழவுகளும் களியாட்டுகளும் எழும் என்றும் அறிவித்தார். வழக்கமான கலைவோசையுடன் வாழ்த்தொலிகள் எழுந்தன. எவரும் பெரிதாக ஆர்வம்கொள்ளவில்லை என்று தெரிந்தது. அபிமன்யூ எழுந்து அவையை வணங்க அனைவரும் அரிமலர் தூவி அவனை வாழ்த்தினர். அவன் குந்திபோஜரையும் துருபதரையும் வசுதேவரையும் பலராமரையும் வணங்கியபின் இளைய யாதவரை அணுகி வாழ்த்து பெற்றான். விழித்துக்கொண்டவர்போல அசைந்தெழுந்து அவர் மரபுச்சொற்களை உரைத்தார்.

அவையை வணங்கியபின் வந்து அமர்ந்த அபிமன்யூ “அரசன் என்றால் வணங்கி வணங்கி சாகவேண்டும் என வகுத்தவன் எவன்?” என்றான். “ஆணவம் கொள்ளலாகாதே என்றுதான்” என்றான் பிரலம்பன். “ஆணவமில்லா அரசன் எவன்? நான் அரசனாக இருந்தாலும் இதோ எப்படி பணிகிறேன் பார்த்தீர்களா என்றல்லவா அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “முகத்தை உறைநிலையில் வைத்துக்கொள்ளுங்கள், அரசே. அசைந்தசைந்து அமரவேண்டாம். அவையே உங்களை நோக்குகிறது” என்றான். “நான் துயில்கொள்ளப்போகிறேன். வேறுவழியில்லை” என்றான் அபிமன்யூ. “மூத்த தந்தை பேசத்தொடங்கினாரென்றால் நன்று. நல்லுறக்கம் அமையும்.”

அதன் பின்னர் இயல்பாக அரசுசூழ்தலைப்பற்றி பேச்சு திரும்பியது. அதிலிருந்த ஒழுக்கு பிரலம்பனை வியக்கச் செய்தது. அவைக்கு நன்றி சொன்ன யுதிஷ்டிரர் ஒவ்வொரு அரசரையும் பெயர்சொல்லி வாழ்த்தி முகமன்கள் உரைத்து முடிக்கையில் மெய்யாகவே அபிமன்யூ மெல்லிய குறட்டையுடன் முகம் மார்பின்மேல் படிய துயில்கொண்டுவிட்டிருந்தான். வாழ்த்துக்களுக்குப்பின் யுதிஷ்டிரர் “நான் இன்று நிலமில்லாதவன். இந்நகரை கொடையெனப் பெற்று முடிசூடியிருக்கிறேன். இங்கே என் முடியை நம்பி வந்துள்ள அனைவரும் என் முடிகாக்க உடன்நிற்பவர்கள் என்றே கொள்கிறேன். பாண்டுவின் குருதிக்குரிய நிலத்தில் நான் கோல் கொண்டமைகையில் மீண்டும் அனைவரும் வரவேண்டும். அன்று ஓர் உண்டாட்டில் நாம் கைகோத்து நடமிடுவதற்கு இறையருள் கூடவேண்டும்” என்றார்.

துருபதர் எழுந்து “அது நிகழும்… விரைவிலேயே. இங்கே நாம் முடிகொண்ட மன்னர்கள் கூடியிருப்பது அது குறித்து பேசும்பொருட்டே. என்ன செய்யப்போகிறோம்? இப்போதே முடிவு செய்துவிடுவோம்” என்றார். “முதலில் நிகழ்ந்ததென்ன என்று சௌனகர் விளக்கட்டும்” என்றார் குந்திபோஜர். “ஆம், நாம் முதலில் நிகழ்ந்ததை சுருக்கிக் கொள்வோம். முறைப்படி அனைத்தும் செய்யப்பட்டுள்ளனவா என்பதிலிருந்தே நாம் தொடங்கமுடியும்” என்றார் விராடர். முதற்பேச்சுக்களை மூத்தவர்களே முன்னெடுத்தனர். அது உரையாடலை அவர்கள் வழிநடத்திக்கொண்டு செல்ல முயல்வதை காட்டியது. அதை மச்சர்களும் நிஷாதர்களும் ஆதரித்தனர். அங்கிருந்த அனைவரும் அத்தனை சொற்களையும் இளைய யாதவருக்காகவே எடுப்பதுபோல் இருந்தது.

சௌனகர் அன்றுவரை நிகழ்ந்த அனைத்தையும் படிப்படியாக விரித்துரைத்தார். அப்போது சூழ்ந்துள்ள அரசியல் நிலையை விளக்கினார். “இன்று அணைந்திருப்பது இத்தருணம். நம்முடன் எட்டு துணையரசர்களும் மூன்று மணவுறவு அரசர்களும் மட்டுமே உள்ளனர். நம்மிடம் சேராதவர்கள் அனைவருமே அவர்களிடம் சேரக்கூடுமென்று எண்ணி நிலை சூழ்வதே நமக்கு நன்று. ஏனெனில் நம்மிடம் சேராதவர்கள் தன்னுடன் சேர்ந்துகொள்வதாக எண்ணியே மூத்த கௌரவர் தன் நிலைபாடுகளை எடுப்பார். அவை ஆகவேண்டியதை உரைக்கட்டும்” என்று தலைவணங்கி அமர்ந்தார்.

வசுதேவர் “சல்யர் இன்னும் அவைபுகவில்லை அல்லவா?” என்றார். யுதிஷ்டிரர் “ஆம். ஆனால் அவர் கிளம்பிவிட்டாரென்ற செய்தி வந்திருக்கிறது. இங்கு வந்துகொண்டிருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இங்கன்றி வேறெங்கும் அவர் செல்வதற்கும் இல்லை” என்றார். விராடர் “மச்சர்கள், நிஷாதர்களில் பெரும்பான்மையினர் நம்முடன் இருக்கிறார்கள் என்றே கொள்வோம். எங்கள் குடி இத்தருணத்தில் இங்கு நின்றாகவேண்டும். எங்கோ ஒரு களத்தில் ஷத்ரியர்களை வாள் எதிர்கொள்பவர்களாகவே நாங்கள் இங்கிருக்கிறோம்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “பாஞ்சாலர்களின் படை, கருவூலம் இரண்டும் சென்ற ஆண்டுகளில் திரண்டு முழுத்திருக்கின்றன. பாரதவர்ஷத்தின் எந்த நாட்டுக்கும் இளைத்தவையல்ல” என்றான். குந்திபோஜர் தளர்ந்த தாழ்ந்த குரலில் “மகதர் என்ன முடிவெடுத்திருக்கிறார்?” என்றார். பீமன் “ஜராசந்தரின் மைந்தன் சகதேவனை இளைய யாதவர் நெஞ்சோடணைத்து அரியணை அமர்த்தினார். இந்திரப்பிரஸ்தம் கோல்துணை அளித்தது. நாம் கானேகிய காலகட்டத்தில் துரியோதனன் சகதேவனை வென்று அவன் அன்னைவழியினராகிய ஜரைகுடியின் காட்டுக்குத் துரத்திவிட்டு ஜராசந்தரின் இளையோனும் பிருஹத்ரதருக்கு ஷத்ரியகுடியில் பிறந்தவனுமாகிய பிருஹத்சேனனை அரசனாக்கினான். இன்று அவன் மகதத்தை துரியோதனனின் ஆணைபெற்று ஆள்கிறான்” என்றான்.

சௌனகர் “ஜரர்கள் மகதத்துடன் எவ்வகையிலும் பொருந்தாமல் போரிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நான்காண்டுகளுக்கு முன்பு சகதேவன் நோயுற்று இறந்தான். அவன் இளையவன் ஜயத்சேனன் ஜரர்களுக்கு தலைமை தாங்குகிறான். ராஜகிருகத்திற்கு வடக்கே கங்கைக்கரையின் சேற்றுநிலத்தில் அவர்கள் பாடலிபுரம் என்னும் ஊரை சிறுநகரென உருவாக்கியிருக்கிறார்கள். சதுப்பிலமைந்த துறைமுனம்பு அது. இன்று அது கங்கைக்கரைப் பெரும்படகுகள் அணையும் துறைநகர். ஜரர்கள் தங்களை மெய்யான மகதர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார்.

“அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா?” என்றார் துருபதர். “ஆம், ஆனால் அவர்கள் உடனடியாக முடிவெடுக்க விரும்பவில்லை. வணிகம் வளர்ந்துவரும் பொழுதில் ராஜகிருகத்துடன் ஒரு பூசல் வேண்டுமா என ஐயுறுகிறார்கள்” என்றார் சௌனகர். “உண்மையில் ஜராசந்தரின் எட்டு மைந்தர்கள் அரசுரிமை கோருகிறார்கள். அவர்களுக்குள் தொடர் பூசல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஜராசந்தரின் ஷத்ரிய குலத்து மைந்தனை அரியணை அமர்த்தியிருக்கிறார் துரியோதனர். அவனை ஆறு ஷத்ரியகுடி மைந்தர்கள் எதிர்க்கிறார்கள். ஜரர்கள் மட்டுமல்ல சில ஷத்ரியர்களும் நம்முடன் சேரக்கூடும்.”

“அவ்வாறு கணிக்கப்போனால் நாம் செல்லும் தொலைவுகள் பல உள்ளன. இன்று நம் கையில் திரண்டிருப்பதென்ன என்று மட்டுமே நாம் பார்க்கவேண்டும்” என்றார் யுதிஷ்டிரர். குந்தி “அவ்வாறல்ல, மைந்தா” என மெல்ல தொடங்கினாள். “இவ்வாறு இன்று முரண்கொண்டு நிற்கும் அனைவரிடமும் நாம் தொடர்பு கொள்ளவேண்டும். அவர்களை நாம் தொடர்பு கொள்கிறோம் என்பது மந்தணமாக இருக்க இயலாது. எனவே முரண்கொள்வோர் அனைவருமே கூர்ந்து உளவு பார்க்கப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்களை நாம் தொடர்பு கொள்கிறோம் என்பதே நம்மீது அச்சத்தை உருவாக்கும். நம் தரப்பு பெருகி வருகிறது என்ற எண்ணம் எழும்.”

சௌனகர் “ஆம், பேரரசியின் கூற்று மெய்யானதே. பாரதவர்ஷத்தின் பத்தொன்பது நாடுகளில் இளவரசர்கள் எவரேனும் ஆளும் அரசுடன் முரண்கொண்டு படைதிரட்டி நின்றிருக்கிறார்கள். அனைவருக்கும் நம் அரசரிடமிருந்து தூது செல்லலாம்” என்றார். யுதிஷ்டிரர் “நாம் படைதிரட்டுவதைப்பற்றி இப்போது பேச வேண்டியதில்லை” என்றார். “நானும் படை திரட்டுவதைப்பற்றி பேசவில்லை” என்று சினமெழுந்த குரலில் குந்தி சொன்னாள். “அவர்களை நமது தூதர் சென்று சந்திக்கட்டும். அச்சந்திப்பின் செய்தி துரியோதனனை சென்று அடையட்டும். நம் நில உரிமை குறித்து நாம் பேச அமர்கையில் அச்செய்தியும் அருகே அமைந்திருக்கவேண்டும்.”

குந்தியின் சினம் அவையை அச்சம் கொள்ளச்செய்தது. சற்றுநேரம் அங்கே சொல்லெழவே இல்லை. அபிமன்யூவின் குறட்டையோசை உரக்க ஒலிக்க அர்ஜுனன் திரும்பி நோக்கினான். அவ்விழிகளை சந்தித்து தலைகுனிந்த பிரலம்பன் அபிமன்யூவை தொட்டான். குறட்டை நிற்க அவன் விழிக்காமலேயே உடலை அசைத்து சப்புகொட்டினான். மீண்டும் குறட்டை மெல்ல எழுந்தது. “எனக்கு இவை அனைத்தும் ஏதோ போரை நோக்கி செல்வதாகவே தோன்றுகிறது” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “நமக்கு நில உரிமை உள்ளது. அதை மட்டுமே நாம் பேசவிருக்கிறோம். அதை மறுப்பது அறமல்ல என்று பேரறத்தானின் மைந்தனாகிய துரியோதனனின் உள்ளமைந்த உளச்சான்றுக்கு சொல்கிறோம். அவ்வளவுதான்” என்றார்.

குந்திபோஜர் “மூத்த கௌரவர் நமது யுகத்தைச் சார்ந்தவர் அல்ல என்கிறார்கள். எழுந்துவிட்ட கலியுகத்தின் முகம் அவர் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவருள் வாழ்வது இன்று நம் அனைவரிலும் வாழும் அறமல்ல. நாளை எழுந்து இப்புவியை ஆளப்போகும் பிறிதொரு அறம். கொண்டதனைத்தும் எனக்கே என்றும் கொள்ளும் முறை அனைத்தும் நெறியே என்றும் தன் அகத்துறையும் தெய்வங்களை நம்பவைக்கும் ஆற்றல்கொண்ட கூர்மதி அன்று அனைவரையும் ஆளும் என்கிறார்கள். மைந்தா, கிருதயுகத்தை அறம் ஆண்டது. திரேதாயுகத்தை உணர்வுகள் ஆண்டன. துவாபர யுகத்தை நம்பிக்கைகள் ஆள்கின்றன. கலியுகத்தை மதியே ஆளும் என்கிறார்கள் நூலோர்” என்றார். “நாம் செய்யக்கூடுவதென்ன? துரியோதனனிடம் எவர் பேசக்கூடும்? எதை? அதைமட்டும் நாம் இங்கு முடிவெடுப்போம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.

சுற்றிச் சுற்றி பேச்சு ஒரு முனையையே வந்து அடைவதைப்போல் பிரலம்பனுக்கு தோன்றியது. இளைய யாதவர் தன் சொல்லுடன் எழவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பதுபோல. அவர் அத்தருணத்தை முன்னரே வந்து அடைந்து ஒவ்வொரு சொல்லுக்கும் ஒத்திப்போட்டுக்கொண்டிருக்கிறார் என்பதுபோல. அவன் அவரையே நோக்கினான். அரைவிழி தாழ்த்தி தலையை வலக்கையில் சாய்த்து ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். மணிமுடியிலெழுந்த பீலி விழிதிறந்து அனைவரையும் நோக்கிக்கொண்டிருந்தது.

யுதிஷ்டிரர் “எங்களால் எங்கும் சென்றடைய முடியவில்லை. எங்கள்பொருட்டு இளைய யாதவரே தன் தரப்பை சொல்ல வேண்டுமென்று விழைகிறேன்” என்றார். அனைவரும் இளைய யாதவரை நோக்க சாத்யகி அவரை மெல்ல தொட்டான். இளைய யாதவர் திகைத்தவர்போல விழிதிறந்து அனைவரையும் பார்த்தார். பின்னர் எழுந்து “நிலத்தின்பொருட்டு எனில் நான் பேச ஏதுமில்லை. எந்த நிலமும் இப்புவியில் அறத்தால் கொள்ளப்பட்டதல்ல. எனவே அறத்தின் பொருட்டு கோரப்படவேண்டியதும் அல்ல” என்றார்.

அவையில் எழுந்த அமைதியையும் பின் வெடித்தெழுந்ததுபோல் ஒலித்த முழக்கத்தையும் கேட்டு உளவிசையுடன் பிரலம்பன் எழுந்தமர்ந்தான். “என்ன சொல்கிறீர்கள்? நிலம் அரசர்களுக்கு தெய்வங்களால் அளிக்கப்பட்டது, வேதங்களால் உரிமைநிறுத்தப்பட்டது” என்றான் தனாயு நாட்டரசனாகிய மணிமான். இளைய யாதவர் புன்னகையுடன் அவனை நோக்கி “உங்கள் நாட்டுநிலம் எப்படி பெறப்பட்டது? இல்வலர் என்னும் அசுரமன்னரால் ஆளப்பட்டது உங்கள் தலைநகரமாகிய மணிமதீபுரம். அதை உங்கள் முன்னோரான மணிமயர் வென்று கைப்பற்றி அரசொன்றை அமைத்தார்” என்றார்.

மணிமான் “ஆம்” என்றான். “அதை முன்பு கசியபருக்கு திதியில் பிறந்த தைத்யர்களாகிய நிவாதகவசர்கள் ஆண்டிருந்தனர். அவர்கள் தொல்புகழ் அசுரச்சக்ரவர்த்தியான பிரஹலாதரின் குருதியிலெழுந்தவர்கள். முன்பு அவர்களை இலங்கையரசர் ராவணப்பிரபு வென்றார் என்கின்றன நூல்கள். அவர்களும் காலகேயர்களும் இணைந்து ஷத்ரிய நகர்களின்மேல் படைகொண்டு சென்றனர். ஹிமமேருமலைச்சாரலில் இந்திரனின் பேராலயத்தில் கூடிய பதினெட்டு ஷத்ரிய அரசர்கள் இந்திரனின் சாரதியாகிய மாதலியை படைமுகப்பில் அமைத்து அவர்களை அழித்தனர். எஞ்சியவர்கள் காட்டுக்குடியினரானார்கள். அவர்களில் ஒருவர் இல்வலர்.”

மணிமான் “ஆம்” என மீண்டும் தலையசைத்தான். “இல்வலரின் மகள் சாந்தையை உங்கள் மூதாதை மணிமயர் மணந்தார். அவள் குருதிவழியில் எழுந்தவர்கள் உங்கள் மூதாதையர்” என இளைய யாதவர் தொடர்ந்தார். “இங்குள்ள அத்தனை நிலங்களும் அசுரர்களிடமிருந்தோ நாகர்களிடமிருந்தோ அரக்கர்களிடமிருந்தோ வெல்லப்பட்டவையே. எவரேனும் மறுப்புரைக்க இயலுமா?” அவை அமைதியாக இருந்தது. விராடர் “ஆம், வரலாறு சொல்வது அதுவே” என்றார். துருபதர் “இந்தக் கதை இப்போது எதற்கு?” என்றார்.

“வென்றும் பின்பு குடிகலந்தும் நிலம்கொண்டவர்களே அத்தனை ஷத்ரியர்களும் என்று கொள்வோம். ஆகவே நிலத்தின் மீதான அறம்சார்ந்த உரிமை எவருக்குமில்லை. அறத்தின்பொருட்டு நிலம்கோரச் செல்கிறோமென்றால் அதனால் எப்பயனும் இல்லை” என்றார் இளைய யாதவர். “இரு வகையில் நாம் நிலம் கோரமுடியும். ஒன்று ஒரு குடிக்குள் திகழும் நெறியின் அடிப்படையில். இந்திரப்பிரஸ்த நிலம் குடிமூத்தவர்களால் அளிக்கப்பட்டது. அவர்கள் முன்னிலையில் இழக்கப்பட்டது. அவர்கள் அளித்த சொல்லின்படி மீண்டும் பெறப்படவேண்டியது.”

“மைந்தருக்கு அன்னையர் அன்னம் என்றும் தந்தையர் சொல் என்றும் தோற்றமளிக்கிறார்கள் என்பது நூல்நெறி. மைந்தருக்கு அளித்த சொல்லை தந்தையர் காக்கவேண்டும் என்று பீஷ்மரிடமும் திருதராஷ்டிரரிடமும் சொல்லலாம். அதன்பொருட்டு நாம் தூதனுப்பலாம்” என்றார் இளைய யாதவர். “பிறிதொன்று, அரசருக்கு அரசர் அளித்த சொல். அரசுகள் சொல்லால் நிலைகொள்பவை. வாள்களை ஏந்தி களம்நிற்கும் வீரனை அரசனின் சொல்லே ஆள்கிறது. வணிகனும் உழவனும் வரியளிப்பது அச்சொல்லின்பொருட்டே. துரியோதனன் அவைநடுவே அளித்த சொல்லை அவன் காக்கவேண்டும் என்று சென்று சொல்லலாம்.”

“இரண்டுக்கும் அந்தணர் தூது செல்வதே நல்லது. நாம் போரை விரும்பவில்லை என்றால் ஷத்ரியரும் அரசரும் தூது செல்லலாகாது” என்று இளைய யாதவர் சொன்னபோது மெல்லிய சோர்வுடன் அவையினர் பீடங்களில் சாய்ந்தனர். அவை அமைதியாக இருந்தது. “தௌம்யர் செல்லலாம். சௌனகர் உடன்செல்லலாம்” என்று இளைய யாதவர் சொன்னார். எவரும் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். பீமன் “தூது செல்வதில் பொருளில்லை. அவர்களின் மறுமொழிகளில் அதற்கான வழியீடுகளே இல்லை” என்றான். “எறும்பு நுழையவேண்டும் என்றாலும் விரிசலாவது வேண்டுமல்லவா?” என மீண்டும் அவன் சொன்னபோதும் அவை எதிர்வினையாற்றவில்லை.

பலராமர் அசைந்தபோது அத்தனை விழிகளும் அவரை நோக்கி திரும்பின. அவர் எழுந்து தன் கையை விரித்து “அவை விரும்பினால் நான் துரியோதனனிடம் பேசிப்பார்க்கிறேன்” என்றார். “தூதனாக நான் செல்லமுடியாது, ஏனென்றால் நான் அரசன். ஆனால் அவனுடைய ஆசிரியனாக அவனைச் சென்று பார்க்கவியலும். இங்குள்ள உணர்வுகளை நான் அவனிடம் சொல்கிறேன்” என்றார். யுதிஷ்டிரர் முகம் மலர்ந்து “ஆம், அது நன்று. உங்கள் சொல் அவனை கட்டுப்படுத்தும். மூத்தவரே, உங்களால் நாங்கள் சிக்கியிருக்கும் இந்த இக்கட்டிலிருந்து அனைவரையும் மீட்கமுடியும்” என்றார்.

“ஆம், நான் எண்ணுவதும் அதையே. இங்கே மெல்லமெல்ல ஒரு போர் முனைகொண்டுவருகிறதோ என்னும் ஐயமெழுகிறது. உடன்பிறந்தார் எவ்வகையிலும் களமெதிர்நிற்கக்கூடாது. அது குருதியளித்த மூதாதையருக்கு எதிரான போர். ஒவ்வொரு அம்பும் சென்று தைப்பது மூதன்னையரின் முலைகளுக்குமேல். அதை தவிர்த்தேயாகவேண்டும். அதை நான் அவனிடமும் சொல்கிறேன்.”

மணிமான் “மூத்தவரே, ஒரு சொல். இன்று சொல்லுடன் எழும் நீங்கள் உங்கள் மாணவன் தன் இளையோரின் நிலத்தைப் பிடுங்கியபின் கானேக ஆணையிட்டபோது அதை தடுத்திருக்கலாமே? அப்போது மதுராவில்தான் இருந்தீர்கள்” என்றான். “அதை ஏன் இப்போது பேசவேண்டும்?” என்று யுதிஷ்டிரர் சொல்ல சினத்துடன் கைதூக்கிய பலராமர் “நான் அதில் பிழையேதும் காணவில்லை. ஒருவன் தன் அறியாமையாலும் ஆணவத்தாலும் நிலத்தை வைத்து சூதாடுகிறான் என்றால் அவனுக்கு அந்நிலத்தை ஆளும் உரிமை இல்லை. ஏந்த முடியாததை அவன் இறக்கிவைப்பதன்றி வேறுவழியில்லை. குருதியின்றி அவனிடமிருந்து நாடு கொள்ளப்பட்டது முறை என்றே எண்ணுகிறேன்” என்றார்.

“அது முறையென்றால் இப்போது எதன்பொருட்டு பேசச்செல்கிறீர்கள்?” என்றார் மன்னர் திருஷ்டகேது. “அன்று எதன்பொருட்டு அமைதிகாத்தேனோ அதன்பொருட்டு. உடன்பிறந்தார் போரிடலாகாது. துரியோதனனிடம் நாம் சொல்லப்போவதும் அதையே. இப்போர் நிகழுமென்றால் அது பெரும்பழியையே சேர்க்கும். பாரதவர்ஷத்தில் இனி நிகழவிருக்கும் அத்தனை உடன்பிறந்தார் பூசல்களுக்கும் பிழைவழிகாட்டியதாக ஆகும். ஆகவே அவன் உளம் கனிந்தாகவேண்டும்.”

“உளம் கனிந்து எவரும் எங்களுக்கு கொடையளிக்க வேண்டியதில்லை” என்றார் துருபதர். “ஆம், அவன் நிலத்தை அளித்தால் அது கொடையேதான். வேறென்ன? எதன்பொருட்டு    நிலம் கோருகிறீர்கள் நீங்கள்? வென்றவன் கொண்ட நிலத்தை கேட்டுப்பெற்றவர்கள் உண்டா இங்கே? அவன் பேரறத்தானின் மைந்தன், என் மாணவன். ஆகவே அவன் அதை செய்வான். நான் ஆணையிட முடியும். அதனால்தான் இங்கே அவையெழுந்து பேசுகிறேன்” என்றார் பலராமர். துருபதர் “அனைத்துக்கும் அப்பால் நெறி என ஒன்றுண்டு, யாதவஅரசே. அதை சொல்க! இங்கே எவர் பக்கம் உள்ளது அறம்?” என்றார்.

“அவனிடம்தான். அதிலென்ன ஐயம்?” என்றார் பலராமர் உரத்த குரலில். “அவன் நிலம்வென்றவன். வென்ற நிலத்தை விண்ணவர் உகக்கும்படி ஆண்டவன். அவன் வென்ற நிலமோ அவனுக்கே முறைப்படி உரியதும்கூட.” துருபதர் சீற்றத்துடன் எழுந்து “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “எதன்பொருட்டு நீங்கள் அவனிடம் நிலம் கோருகிறீர்கள்? குலமுறைப்படி என்றால் அக்குலமுறை அவனுக்கே முடியை முற்றளிக்கும் நெறிகொண்டது. அஸ்தினபுரியின் அரசர் திருதராஷ்டிரரே. அவர் மைந்தனே அடுத்த அரசன். குடியில் பிறந்த மூத்தவனல்ல, கொடிவழியில் மூத்தவனே முடிக்குரியவன்” என்றார் பலராமர்.

“நீங்கள் சொல்பேணும்படி கோரினீர்கள் என்றால் அதற்கு முன் உங்கள் தந்தை அளித்த சொல்லை பேணுக! பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின் மணிமுடியை அளிப்பதாக உரைத்த பாண்டுவின் சொல் வாழட்டும்” என்று பலராமர் உரக்க சொன்னார். “ஆகவே, நெறி பேசவேண்டாம். உடன்குருதியினரென அளிகோருவோம். அருகமைதலை கேட்டுப்பெறுவோம். அதைச் சொல்லவே நான் செல்கிறேன். அது ஒன்றே சொல்வதற்கும் உரியது.”

அவை அமைதியாக இருக்க குந்தி மெல்லிய குரலில் “மைந்தா, உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்றாள். “நான் என்ன செய்யவேண்டுமென எண்ணுகிறீர்கள்? யாதவன் என்பதனால் யாதவக்குருதிக்கு துணைநின்று அறமில சொல்லவேண்டுமா என்ன? நான் என்றும் என் உளச்சான்றின்படி நின்றவன். ஆம், என் மைந்தனுக்கு நிகரானவன் என் மாணவன். ஆனால் அவன் பிழைசெய்தால் அதையும் சொல்லத் துணிவேன்” என்றார் பலராமர். “இப்போதுகூட குருதியுறவைச் சொல்லி பாண்டவர்களுக்காக பரிந்து பேசவே வந்திருக்கிறேன். போரைத் தவிர்ப்பதற்காகவே முயல்கிறேன். இதுவே என் அறம்.”

நகுலன் “மூத்தவரே, திரௌபதியின் ஆடையை அவையில் களைய முற்பட்டதை நீங்கள் அவனிடம் கேட்டீர்களா?” என்றான். “அதை கேட்கவேண்டியதில்லை. பாஞ்சாலத்தரசி அகத்தறையில் அமர்ந்தவளல்ல. மும்முடிசூடி அரியணை அமர்ந்தவள். அவள் கணவன் அருகமர்ந்தவன் மட்டுமே. வென்ற அரசனை அவைச்சிறுமை செய்து தருக்குவது ஷத்ரியர் வழக்கம். அது முறையல்ல, ஆனால் பெரும்பிழையும் அல்ல.” அவை இமையா விழிகளுடன் பலராமரை நோக்கி அமர்ந்திருந்தது. அவையெங்கும் எழுந்த உளவிம்மலை ஒருவகை உடல்வெம்மையென தசைவிம்மலென மூச்சொலியென பிரலம்பன் உணர்ந்தான்.

“இங்கு சொல்லப்பட்டது குடியறத்தின்பொருட்டும் அரசநெறியின்பொருட்டும் துரியோதனனிடம் நிலம்கோரலாம் என்று. இரண்டின்பொருட்டும் நிலம் உங்களுக்குரியதல்ல. செய்வதற்கொன்றே உள்ளது, அது நேரடி மன்றாட்டு. யுதிஷ்டிரன் இளையவன் துரியோதனனிடம் ஆள்வதற்கு நிலம் கோரிப்பெறலாம். அதன்பொருட்டு இந்த அவை என்னை அனுப்பும் என்றால் இங்கிருந்தே அஸ்தினபுரிக்கு கிளம்புகிறேன்” என்று பலராமர் சொன்னார்.

அபிமன்யூ காலைநீட்ட அவ்வொலியைக் கேட்டு அருகமர்ந்திருந்த சதானீகன் திரும்பி நோக்கினான். அவன் விழிகள் நீர்மைகொண்டிருந்தன. மறுபக்கம் இருந்த சுருதவர்மன் “இளையோனே, சிறுமை கொள்ளாதே” என பல்லைக் கடித்தபடி சொன்னான். அபிமன்யூ “அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். சௌனகரை தூதனுப்புகிறார்கள். அவ்வளவுதானே?” என்றான்.

நூல் பதினைந்து – எழுதழல் – 31

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 9

fire-iconபிரலம்பன் அபிமன்யூவின் அவையணுக்கனாக அவன் அமர்ந்திருந்த பீடத்திற்கு சற்று பின்னால் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து அவையை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரும் முதல் அரசப்பேரவை அது என்பதனால் காலையிலிருந்தே நிலைகொள்ளாதவனாக சுற்றிவந்தான். சௌனகரும் தௌம்யரும் சுரேசரும் மாறி மாறி அவனிடம் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஏன் செய்கிறோமென்றறியாமல் அவன் சுண்டப்பட்ட சிறுகாய் என திசைகளில் தெறித்துக்கொண்டிருந்தான்.

அவையின் ஒருக்கங்கள் அத்தனை முறையாக செய்யப்படும் என்றும் அத்தனை முறை அவை சீர்நோக்கப்படுமென்றும் அவனறிந்திருக்கவே இல்லை. இருக்கைகள் அமைப்பதை சௌனகர் ஒரு சதுரங்கக் களம் அமைக்கும் அளவுக்கு எண்ணித் தேர்ந்து இயற்றினார். மீண்டும் மீண்டும் இருக்கைகளை மாற்றி எவர் எவருடன், எவருக்கு எவர் எதிர்முகம், எவர் குரல் எங்கிருந்து கேட்கும் என்று வகுத்துக்கொண்டே சென்றார். சுரேசர் அவனிடம் “எவரது குரல் கேட்கவேண்டுமென்னும் அளவுக்கு எவர் குரல் கேட்கலாகாது என்பதும் முதன்மையானது” என்று சொல்லி கண்சிமிட்டினார்.

இரு ஆசுரநாட்டு அரசர்களை யுதிஷ்டிரரின் பீடத்திற்கு அருகில் அமைத்தபோது “இது மாற்றப்படுமா?” என்று அவன் சுரேசரிடம் கேட்டான். “நீர் கற்றுக்கொள்ள இன்னும் ஏராளமாக இருக்கிறது, பிரலம்பரே. இவர்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தத்தக்கவர்கள் அல்ல. ஆனால் பின்னிருக்கையில் அமரச்செய்தால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக எண்ணக்கூடும். அவ்வுணர்வாலேயே மிகையாக அவையில் வெளிப்பாடு கொள்வார்கள். பின்னிருக்கையில் இருப்பதனாலேயே எழுந்து உரக்க கூச்சலிடுவார்கள். முன்னிருக்கையில் அமரச்செய்தால் அரசருக்கு அருகிருக்கிறோம் என்பதனாலேயே அரசரை ஆதரிக்கும் பொறுப்பை அறியாமல் ஏற்றுக்கொள்வார்கள். பெரும்பாலும் அவையெழுந்து பேசமாட்டார்கள். பேசினால் அது வெறும் ஒப்புதலாகவே இருக்கும். தாழ்ந்த குரலிலேயே ஒலிக்கும்” என்றார்.

பிரலம்பன் அவரது புன்னகையைப் பார்த்து கேலியாகச் சொல்கிறார் என்று எண்ணினான். பின்னர் அவையில் இருக்கைகள் அமைந்திருக்கும் முறைமையை பார்த்தபோது அது மெய்யென்றும் உணர்ந்தான். சௌனகர் அவனிடம் “இளைய யாதவர் தங்கியிருக்கும் இல்லத்திற்கு அருகில் செல். அங்கிருந்து அவர்கள் கிளம்பும்போது எனக்கு செய்தி வந்திருக்கவேண்டும்” என்றார். தலைவணங்கி அவன் மாளிகையிலிருந்து முகமுற்றத்திற்கு வந்து புரவியிலேறி வெளியேறி முதல் வளையத்தில் பெருவணிகர் ஒருவரின் இல்லமாக இருந்த மாளிகையை நோக்கி சென்றான்.

பழைய மாளிகை அது. அதன் முகப்பில் வண்ண மூங்கிலின்மேல் துவாரகையின் கருடக்கொடி பறந்தது. முற்றத்தில் ஏழு கரிய புரவிகள் அணிகொண்டு நின்றிருந்தன. வெண்புரவி பூட்டப்பட்ட அணித்தேரின் பீடத்தில் தேரோட்டி அமர்ந்திருந்தான். கடிவாளத்தை மென்றபடி முன்காலால் மண் தரையை சுரண்டிக்கொண்டிருந்தது புரவி. மாளிகை முற்றத்தை நோக்கியபடி முதல் காவலரணருகில் அவன் நின்றான். அங்கிருந்த காவலன் “கிளம்புவதற்கான ஒருக்கங்கள் தொடங்கி நெடுநேரமாகின்றன, பிரலம்பரே” என்றான். “சொல்லப்போனால் கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றான் இன்னொரு காவலன்.

அவர்கள் கிளம்பியதுமே காவலரணில் இருந்து முழவோசை எழப்போகிறது, தன்னை எதற்காக அங்கே அனுப்பினார்கள் என்று பிரலம்பன் ஐயுற்றான். ஆனால் வாய்கவிந்து ஒரு சொல்லும் சௌனகர் உரைப்பதில்லை என்பதை எண்ணிக்கொண்டான். முதிய காவலன் “நேற்று காலையில் இளைய யாதவர் வந்தார். மாலையில் மூத்த யாதவர் வந்தார். மூத்தவருடன் அவர் தந்தை வசுதேவரும் வந்தார். அவர்கள் மறுபக்கம் பெருவணிகர் பூர்ணரின் இல்லத்தில் தங்கியிருக்கிறார்கள். இளைய யாதவர் இன்னும் சென்று தந்தையையும் தமையனையும் பார்க்கவில்லை. அவர்கள் அவையில்தான் சந்தித்துக்கொள்ளவிருக்கிறார்கள்” என்றான். “நமக்கெதற்கு அரண்மனை வம்பு?” என்றான் இளங்காவலன் ஒருவன்.

முதியவன் “நான் என்ன வம்பா சொல்கிறேன்? நடந்ததை சொல்கிறேன்” என்றான். “எனக்குத் தேவையில்லாத எதையும் நான் காண்பதுமில்லை, கேட்பதுமில்லை. இந்த காவலரணில் நான் அமரத்தொடங்கி எட்டாண்டுகளாகின்றன. இவர்களெல்லாம் இன்று வந்தவர்கள்.” பிரலம்பன் “ஆம், நீங்கள் மூத்தவர் என அறிவேன்” என்றான். “யாதவ அரசர்கள் வருவார்கள் என்பதை இங்கே பலரும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிந்தது. காலையில் இளைய யாதவர் வந்தபோது அரசரும் அர்ஜுனரும் பீமசேனரும் கோட்டைமுகப்பிற்குச் சென்று வரவேற்றனர். அர்ஜுனர் மட்டும் நேற்று இரவு வரை இளைய யாதவருடன் இருந்தார். ஆனால் மூத்தவரும் தந்தையும் வந்ததும் அரண்மனை பரபரப்படைந்தது. விராடரும் துருபதரும் யுதிஷ்டிரரும் கோட்டைமுகப்புக்குச் சென்று வரவேற்றனர்.”

“இளவரசர் உத்தரகுமாரரும் நகுலரும் சகதேவரும் உடன் நின்று அவர்களை தங்கவைத்தனர். சௌனகரும் விராடரும் துணை வர அரசர் யுதிஷ்டிரர் மாலையில் மீண்டும் அவர்களை சந்திக்கச் சென்றார். பின்னர் துருபதரும் மைந்தரும் சென்றார்கள். முதியவரான குந்திபோஜர் நேற்று காலையில்தான் வந்தார். அவரும் பேரரசி குந்தியும் இரவில் சென்று அவர்களிடம் உரையாடினர்” என முதுகாவலன் தொடர்ந்தான். “நேற்றோ இன்று புலர்காலையோ இளையவர் சென்று மூத்தவரை பார்ப்பார் என்றார்கள். இறுதியாக அவர்கள் தனித்தனியாகவே அவைபுகவிருக்கிறார்கள். அதைப்பற்றித்தான் இன்று ஊர் முழுக்க பேச்சு.” பிரலம்பன் வெறுமனே தலையசைத்தான்.

“உண்மையில் இன்று யாதவபுரியின் அரசர் மூத்தவரே. ஐங்குடிகளும் படைகளும் குலமூத்தோரும் அவருடனேயே இருக்கிறார்கள். இளையவர் துவாரகையை மட்டுமே ஆள்கிறார் என்கிறார்கள்” என்று இளைய காவலன் ஆர்வமாக பேசலானான். “துவாரகையிலிருந்து ஐங்குலத்துப் படைகளும் சென்ற பல ஆண்டுகளாக வெளியேறிவிட்டமையால் அது கைவிடப்பட்ட நகரென மேலைக்கடலோரம் கிடக்கிறது. கூர்ஜரனோ மாளவனோ கைநீட்டினால் அதைப்பற்றி எடுத்துவிடமுடியும். ஆனால் மூத்த யாதவர் பெருஞ்சினம் கொண்டவர். அவருக்கு அஸ்தினபுரியின் படை பின்துணை உள்ளது. ஒரு சொல்லெடுத்தால் அத்தனை ஆற்றல்களுடனும் குருகுலத்து மூத்தவர் அவருக்கென வந்து நிற்பார். அதனால்தான் துவாரகை இன்னும் எஞ்கிறது.”

“அரசியல் நமக்கெதற்கு?” என்றான் முதுகாவலன். “துவாரகையின் தலைவரை எவரும் வெல்லமுடியாது.” இளங்காவலன் “இவர் எங்கு துவாரகைக்குச் சென்றார்? சப்தஃபலத்தில் பதின்மூன்றாண்டு இருள் தவம் மேற்கொண்டார் என்கிறார்கள். அங்கிருந்து எழுந்ததுமே துவாரகைக்குச் செல்வார் என்று யாதவர்கள் எதிர்பார்த்தபோது நேராக அசுர குடிகள் அளித்த விருந்துகளில் கலந்துகொண்டுவிட்டு இங்கு வருகிறார். திரும்பிச் செல்கையில் அங்கு துவாரகை இருக்குமா என்பதே ஐயத்திற்குரியது” என்றான்.

யாதவ மாளிகையின் முகப்பிலிருந்த அறிவிப்புமுரசு முழங்கத்தொடங்கியது. காவல்மாடத்திலிருந்த வீரன் “எழுகிறார்… கிளம்பிவருகிறார்” என்று கூவியபடி சுழல் படிகளிலேறி ஓடினான். காவல்மாடத்தின் உச்சியில் முரசு மேடையில் இருந்த முரசு “அரசெழுகை அரசெழுகை அரசெழுகை” என ஒலிக்கத்தொடங்கியது. அவ்வோசை அரண்மனையை அடைந்துவிட்டதென்று அங்கு எழுந்த கொம்பு ஒலி அறிவித்தது. தான் என்ன செய்ய வேண்டுமென்று பிரலம்பனுக்கு புரியவில்லை. மரக்கிளையில் எக்கணமும் பறந்தெழக்கூடுமென தவிப்பசைவுடன் அமர்ந்திருக்கும் சிறுபுள்ளென அவன் காவல்மாடத்தின் முன்னால் நின்றான்.

யாதவ மாளிகைக்குள்ளிருந்து கருடக்கொடியேந்திய கவசவீரன் வெளியே வந்தான். தொடர்ந்து கொம்பும் முழவும் குறுமுரசும் சங்கும் ஒலிக்க சூதர்கள் இருநிரையென வந்தனர். மங்கலத்தாலங்கள் ஏந்திய மூன்று சேடியருக்குப் பின்னால் இளைய யாதவர் சீர்நடையில் வந்தார். பிரலம்பன் உள்ளத்தின் ஓசையால் விழிக்காட்சி அலைவுற்று மறைவதுபோல் உணர்ந்தான். தன் உள்ளத்தை, அகத்தை நிலைநிறுத்தும்பொருட்டென அருகிருந்த தூணை இறுகப் பற்றிக்கொண்டான். நீர்ப்பாவைமேல் காற்றென அவன் பதற்றம் அக்காட்சியை அலைவுறச் செய்தது. குருதி தலையிலிருந்து மெல்ல இறங்க உடல் ஓய்வு கொண்டமைந்தபோது மிக அருகிலென இளைய யாதவரை கண்டான்.

அவருக்கு வலப்பக்கம் மார்பில் பொற்கவசம் அணிந்த சாத்யகியும் இடப்பக்கம் அரச அணிக்கோலத்தில் பிரத்யும்னனும் வந்தனர். சில கணங்களுக்குப்பின் அங்கிருந்த அனைவரும் மறைய இளைய யாதவர் மட்டுமே தோன்றினார். பொற்பூச்சுள்ள வெள்ளி குறடணிந்திருந்தார். பொன்மலரணி கரைவைத்த மஞ்சள் பட்டாடை. அதற்கு மேல் கட்டிய செம்பட்டுக் கச்சை. அதில் செருகப்பட்ட புல்லாங்குழல். மார்பில் மணியாரமும் சரப்பொளி மாலையும் தழைந்தன. இருபுறமும் எழுந்த தோளிலைகள், புயவளைகள். கங்கணம் அணிந்த மணிக்கட்டு. கணையாழிகள் மின்னும் விரல்கள். கன்னங்களில் வண்ண ஒளி மின்னிய குழைகள். இனிய நினைவொன்றில் மயங்கியவை போன்ற விழிகள். இன்சொல் ஒன்று எழுவதற்கு முந்தைய குறுநகை. தலையிலணிந்த வெண்பட்டுத் தலைப்பாகையில் விழி திறந்த மயிற்பீலி.

முதற்கணம் அவரைப் பார்த்ததை எண்ணியதுமே அவன் மெய்ப்பு கொண்டான். பாணாசுரரின் கையைத் துணித்து ஒரு துளிக்குருதிகூட ஒட்டாத தூய ஒளியென வானில் எழுந்து மண் அறியாப் பறவையெனச் சுழன்றுசென்று தூக்கிய சுட்டுவிரலில் அமைந்து மீண்டும் எழுந்த படையாழியின் ஒளித்துளி மின்னலென தொட்டுச் சென்ற அழகிய கரிய முகம். கன்னியரின் கண்கள். மழலையின் உதடுகள். புயல் எழுந்த கடல்அலையென வெண்நுரை பறக்கப் பாய்ந்து வந்த புரவியின்மேல் இளங்காற்றில் ஒரு நீலத் தூவலென பறந்தணைந்த உருவம். கைதளர்ந்து படைக்கலம் நழுவ கால்மடித்து அமர்ந்து கைகூப்பி வணங்கி அவன் அசைவற்றிருந்தான்.

போர் முடிந்து சிதறிய அசுரப்படைகளுக்குப் பின்னால் யாதவப்படையினர் துரத்திச்செல்ல சிருங்கபிந்துவை நோக்கி புரவியில் செல்கையில் அவருக்கிணையாக சென்ற அபிமன்யூ “மாதுலரே, இக்கணம் நான் எத்தனை அறிவிலி என்றே உணர்கிறேன். இப்படி இவ்வாறு நீங்கள் எழுவதே முறை. அன்று வந்து நான் உங்கள் காலடியில் தலையறைந்தபோது நீங்கள் விழித்து எழுந்திருந்தால் அதை எந்தக் காவியம் பொருட்படுத்தியிருக்கும்? உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அழியா வேதமொன்றின் சொல்” என்றான். ஒவ்வொரு எண்ணத்திற்கும் மெய்ப்பு கொண்டு உடல் விதிர்த்தபடி அபிமன்யூவுக்குப் பின்னால் புரவியில் அமர்ந்திருந்த பிரலம்பன் அறியாமல் பிறசெவியறியா சிறுவிம்மலொன்றை எழுப்பினான்.

புரவிச்சரடை இழுத்து திரும்பிப்பார்த்து இளைய யாதவர் “இவர் யார்?” என்றார். அபிமன்யூ “இவர் பிரலம்பன், எனது தோழர்” என்றான். புன்னகைத்து “இளைஞர், பார்க்க உன்னைப்போல் இருக்கிறார்” என்ற இளைய யாதவர் “அன்று நீ வந்திருந்தாய் என்பதை இன்று காலைதான் நான் அறிந்தேன். வேறெங்கோ இருந்தேன்” என்றார். பிரலம்பன் அவர் கால்களை நோக்கி கண்களை தாழ்த்திக்கொண்டான். ஆம், இதுவே உகந்தது. இதுவே எனக்குப் போதுமானது. கால்கள் இத்தனை அழகுகொள்ளுமா? இவை மண்ணை மிதிக்கவும்கூடுமா? ஆனால் இவை மண்ணை அறிந்தவை. ஆகவே எனக்கு அணுக்கமானவை. இவைகொண்ட எழில் நான் வாழும் மண்ணால் அளிக்கப்பட்டது. விண்ணெழில் கொண்ட பீலியை அறிய நான் மீண்டும் பிறந்தெழுவேன். அவன் உள்ளம் கண்ணீர் வார்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு சொல்லும் ஒளிகொண்ட துளிகளென எங்கோ சொட்டின.

சிருங்கபிந்துவின் கோட்டைவாயிலில் இளைய யாதவர் நுழைந்தபோது அச்சிற்றூரின் பெண்டிர் அனைவரும் இல்லங்களின் திண்ணை முகப்புகளில் தோளொடு தோள் நெருக்கி நின்று ஒருவர் மீது ஒருவர் எட்டி அவரைப் பார்த்தனர். புன்னகையுடன் அவர்களை நோக்கியும் சிறுகுழவிகளிடம் கை நீட்டி கன்னம் தொட்டு ஓரிரு இன்சொல் உரைத்தும் அவர் மையமாளிகை நோக்கி சென்றார். குழந்தைகள் அவரிடம் கண்டதென்ன என அவன் வியந்தான். கன்னியர் கண்டது பிறிதொன்று. அன்னையர் அறிந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்கள் விழிகளால் அவரை அள்ளி வண்ணங்களாக்கி பெருந்திரை ஒன்றில் வரைந்துகொண்டிருந்தனர்.

இயல்பான நடையும் அசைவுகளுமாக அவர் இழந்த நகருக்கு மீண்டுவரும் அரசன் போலிருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரையும் முன்னரே அறிந்தவர் எனத் தோன்றினார். அங்கிருந்த ஒவ்வொருவரும் அவரை ஒவ்வொரு நாளும் காண்பவர்போல் விழிமலர்ந்திருந்தனர். அரண்மனையின் படிகளில் அவர் ஏறும்போது அசுர குடியின் மூதாட்டியர் மூவர் மங்கலக் குருதி நிரப்பிய மூன்று சிறு கலங்களுடன் எதிர்வர கன்னியர் மூவர் மலரும் மஞ்சளரிசியும் மண்ணும் கொண்ட தாலங்களை ஏந்தி உடன்வந்தனர். ஒரு சொட்டுச் செங்குருதியை ஆலிலையால் தொட்டு அவர் நெற்றியிலிட்டு மூதன்னை வாழ்த்தினாள். “வெற்றியும் புகழும் தொடர்க! எண்ணியது இயல்க!”

அரிமலரிட்டு வாழ்த்திய அன்னையரை குனிந்து கால் தொட்டு சென்னி சூடி வணங்கினார். “என் இளைய மருகன் பிழையென்று எது செய்திருந்தாலும் என் பொருட்டு பொறுத்தருளுங்கள், அன்னையரே” என்றார். மூதாட்டி ஒருத்தி “உங்களைப்போன்றவன், உங்கள் இனிமையும் கூர்மையும் கொண்டவன்” என்றாள். அபிமன்யூவை நோக்கி புன்னகைத்து அவன் தோளைத்தொட்டு அருகணைத்து “புல்லாங்குழல் இசைபோல் கூரியது பிறிதொன்றில்லை என்றொரு கூற்றுண்டு, அன்னையே” என்றார்.

பின்பு படிகளில் ஏறிச்செல்கையில் அபிமன்யூவிடம் “சென்று பாணரை மருத்துவ சாலைக்கு கொண்டு செல்க! அவர் அருகே இருந்து வேண்டிய அனைத்தையும் இயற்றுக! நலமடைவார் என்னும் செய்தியுடன் என்னை வந்து பார்” என்றார். தலைவணங்கிய அபிமன்யூ திரும்பிச்செல்ல அங்கிருந்த வேட்டுவக் காவலர்களிடம் ஓரிரு சொற்கள் பேசி புன்னகைத்தபின் பீடத்தில் அமர்ந்து திரும்பி பிரலம்பனைப் பார்த்து “என் கால்களைக் கழுவு” என்றார்.

முதற்கணம் அச்சொற்கள் அவனுக்குப் புரியவில்லை. அவர் கூறாமலேயே அவனுள் அவை மீண்டும் ஒலிக்க உடல் மெய்ப்புகொண்டு கைகூப்பி கண்ணீர் மல்கி “ஆணை” என்றான். ஓடிச்சென்று ஏவலரிடம் “வெந்நீர்… மஞ்சளிட்ட வேப்பெண்ணை கலந்த வெந்நீர்” எனக் கூவினான். இருவர் ஓடிச்சென்று இரு அகல்யானங்களில் ஆவியெழுந்த நீருடன் வந்தனர். அவற்றை அருகே வைத்து முழந்தாளிட்டு தரையில் அமர்ந்து நடுங்கும் கைகளால் கால்களை தொட்டன். விரல்கள் நடுவே குருதி உலர்ந்து கரிய பசையாகி இருந்தது. இரு வாழைக்கூம்புகள். இரு குவளைமலர் அடுக்குகள். இரு புன்னகைகள்.

அவன் உள்ளம் நெகிழ்ந்து கண்களில் நீர் நிறைந்திருந்தது. உடல் நடுங்கிக்கொண்டிருக்க அண்ணாந்து அவர் முகத்தை பார்க்க வேண்டுமென்ற விருப்பை தவிர்த்தான். அக்கால்களைத் தொட்டு விழியொற்ற வேண்டுமென்று எடுத்த கைகளை பிறிதொன்று தடுத்தது. அதைவிடப் பெரிதொன்று வந்து அதை அறைந்து வீழ்த்தியது. இனியொரு தருணம் இல்லை உனக்கு என்றது. தன் இரு கைகளையும் அக்கால்களில் வைத்து தொட்டு கண்களில் ஒற்றினான். இளைய யாதவரின் கைகள் அவன் தலைமேல் பட்டன. அவன் விழிநீர் அக்கால்களின்மேல் உதிர்ந்தது.

fire-iconஅரண்மனை முகப்பில் இளைய யாதவரை வரவேற்கும்பொருட்டு முரசுகள் முழங்கின. முற்றத்தில் தேர் சென்று நின்றதும் அவர் இறங்குவதற்கு முன்னரே மரப்படிகளுடன் இரு ஏவலர் ஓடிவந்தனர். இறங்கி அவர்களின் தோள்களைத்தொட்டு புன்னகையுடன் ஓரிரு சொற்களை பேசியபின் இருபுறமும் வேல் தாழ்த்தி நின்றிருந்த வீரர்களை நோக்கி கைகூப்பியபடி நடந்து மாளிகையின் படிகளில் ஏறினார். பிரலம்பன் அவரிடம் சென்று “அமைச்சுமாளிகை வழியாக செல்லலாம், அரசே” என்றான். ஒருகணம் அவன் கண்களை தொட்டபின் “ஆம், சௌனகரைப் பார்த்து நெடுநாட்களாகிறது” என்றார்.

அவர்கள் படியேறி இடைநாழியில் திரும்பி அமைச்சு அமைந்திருந்த அறைக்குள் நுழைந்ததும் சௌனகர் எதிர்கொண்டு வந்து தலைவணங்கி “இளைய யாதவருக்கு வணக்கம். பதின்மூன்றாண்டுகளுக்குப் பின்னர் முந்தைய கணத்தில் இருந்து தொடங்கிவருபவர்போல் எழுந்திருக்கிறீர்கள்” என்றார். “நீங்கள் முதிர்ந்துவிட்டீர்கள், சௌனகரே” என்றார் இளைய யாதவர். “இந்திரப்பிரஸ்தத்தின் இந்தப் பதின்மூன்றாண்டுகளும் மும்முடங்கு காலமெனச் சென்றன. ஒவ்வொரு நாளும் சோர்ந்து தனித்து துயர்கொண்டுதான் மஞ்சத்திற்கு சென்றேன். இளைய யாதவரே, அன்றாட நெறிப்பிறழ்வுகளின்றி அரசாள எந்த மன்னனாலும் இயலாது. ஆகவே அரசப்பொறுப்பை அந்தணர் ஒருபோதும் ஏற்கலாகாதென்று அறிந்தேன்” என்றார் சௌனகர்..

“அதையே நானும் சொல்ல முடியும். ஒவ்வொரு நாளும் மாற்றமின்றி ஒன்றையே செய்ய ஷத்ரியனால் இயலாது. அச்சலிப்பை வெல்ல நாளுக்கு ஒரு நெறிபிறழல் நன்று” என்றார் இளைய யாதவர். சௌனகர் நகைக்க வெளியே முழவோசையும் கொம்போசையும் எழுந்தது. பிரலம்பன் மெல்ல காலடி எடுத்து வைத்து திறந்த வாயிலினூடாக பார்க்க வெளியே முகமுற்றத்தில் பலராமர் தேரில் வந்திறங்குவதை கண்டான். அவருடன் இருந்த முதியவர் அக்ரூரர் என உணர்ந்தான். தொடர்ந்து வந்த தேரில் வசுதேவர் இருந்தார். நகுலனும் சகதேவனும் அவர்களை எதிர்கொண்டு தலைவணங்கி முகமன் சொல்லி அவைக்கு அழைத்துச் சென்றார்கள்.

தொலைவிலென வாழ்த்தொலிகளும் உலோகக்குறடுகள் மரத்தரையில் எழுப்பும் ஓசைகளும் கேட்டு அடங்கின. சௌனகர் “தாங்கள் அவை நுழையலாம், அரசே” என்றார். இளைய யாதவர் “ஆம், மூத்தவர் நுழைந்துவிட்டார்” என்றார். அப்போதுதான் தனக்கிடப்பட்ட பணி என்ன என்று உணர்ந்த பிரலம்பன் திடுக்கிட்டு திரும்பி நோக்க இளைய யாதவர் புன்னகையுடன் அவன் தோள்களைத் தொட்டு “வழிநடத்திச் செல்லுங்கள், வீரரே” என்றார். சௌனகர் “தங்களை அவையமர்த்த நானே வருகிறேன்” என்றார். “நன்று! மேலும் அரசர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றபின் இளைய யாதவர் இடைநாழியில் நடக்க பிரலம்பன் அவரை அழைத்துச் சென்றான்.

அவைக்குள் நுழைவதற்கு முன்பு இளைய யாதவர் நின்று பிரலம்பனிடம் “என் இருப்பிடம் என்னவென்று ஒருகணம் முன்னரே தாங்கள் பார்த்து அதன் அருகே நின்றுகொள்ளுங்கள்” என்றார். “ஆணை!” என்றபின் பிரலம்பன் உள்ளே சென்றான். அரசர்களுக்குரிய இருக்கைகள் ஒன்றையொன்று நோக்கும் இரு குறுவாள்களின் வடிவில் வளைவாக அமைந்திருந்தன. முதன்மை அரசர்களுக்குரிய நிரைக்கு நேர் எதிரில் இளைய யாதவருக்கான இடம் இருப்பதை அவன் பார்த்தான். அதிலிருந்த இலச்சினையை பார்த்தபின் திகைத்து பின்னர் திரும்பி வாயிலில் எட்டிப்பார்த்த சாத்யகியிடம் தலைவணங்கினான்.

நிமித்திகர் மேடையேறி “யாதவ அரசர், துவாரகையின் தலைவர், கிருஷ்ணர் நுழைவு” என அறிவித்தார். அவையிலிருந்த குடிகளும் படைத்தலைவர்களும் உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். கைகூப்பியபடி நடந்து வந்த இளைய யாதவர் தன் இருக்கையில் அமர்ந்துகொள்ள அவருக்குப் பின்னால் சிற்றிருக்கையில் பிரத்யும்னனும் சாத்யகியும் அமர்ந்தனர். பிரலம்பன் வெளியே செல்ல சௌனகர் அவனிடம் “இளவரசர்கள் அவைபுகவிருக்கிறார்கள். அவை ஒருங்கிவிட்டதென்ற செய்தியை அபிமன்யூவிடம் சென்று சொல்க!” என்றார்.

அவன் கிளம்புவதற்குள் சுரேசர் “இளவரசரை தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கு சென்றார்?” என்றார். “அணி செய்வதற்காக தன் அறைக்கு சென்றார்” என்றான் பிரலம்பன். “அறையில் அவர் இல்லை. எங்கிருந்தாலும் உடனடியாக அவைக்குள் நுழையவேண்டும் என்று சொல்க! அரசர் அரியணை அமர்வதற்குள் தன் பீடத்தில் அவர் அமர்ந்தாகவேண்டும்” என்றார் சுரேசர். பிரலம்பன் வெளியே சென்றபோது பீமனும் நகுலனும் சகதேவனும் உரையாடியபடி வந்துகொண்டிருப்பதை கண்டான். அரசர்கள் அனைவரும் அவைபுகுந்துவிட்டிருந்தமையால் அவர்கள் சற்று எளிதாகிவிட்டிருந்தனர்.

பீமன் அவனை அணுகி தன் பெரிய கையை அவன் தோளில் வைத்து “எங்கே உன் இளவரசன்?” என்றான். “மாடிக்கு சென்றார்” என்றான் பிரலம்பன். கையின் எடையால் அவன் முதுகு வளைந்தது. அவன் தோளில் தட்டி “அழைத்து வா!” என்றபின் பீமன் “இளைய யாதவர் அவைபுகுந்துவிட்டாரா?” என்றான். “ஆம்” என்று பிரலம்பன் சொன்னான். நகுலன் அவனிடம் “மற்ற இளவரசர்கள் எங்கே?” என்றான். “அவைபுகும்பொருட்டு மறுபக்க அணியறையில் அமர்ந்திருக்கிறார்கள்.” நகுலன் தலையசைத்து நடந்தான்.

பீமன் அவை புகுந்த ஓசை உரக்க ஒலித்தது. கூடத்திற்குச் சென்றபோது அங்கு இருந்த காவலர்கள் அனைவரும் அவை நோக்கி வந்துவிட்டிருப்பதை கண்டான். ஒழிந்த கூடம் வழியாக இடைநாழியினூடாகச் சுற்றி திரும்பி வந்தபோது அர்ஜுனன் அவனை கண்டான். “இங்கென்ன செய்கிறாய்?” என்றான் அர்ஜுனன். பிரலம்பன் திகைத்து “இளவரசர்…” என்று இழுக்க “அந்த மூடன் மாடிப்படியில் கனவு கண்டபடி அமர்ந்திருக்கிறான். உரிய ஆடைகளுடன் அவனை அவைபுகும்படி சொல்!” என்றபடி அர்ஜுனன் அவை நோக்கி சென்றான். திரௌபதியும் யுதிஷ்டிரரும் அவை புகும் வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் கேட்டன.

அவன் உள்ளறையினூடாகச் சென்று இடைநாழிக்கு வந்தபோது குந்தி சேடியர் சூழ அவைக்கு சென்று கொண்டிருந்ததைக் கண்டு ஒதுங்கி நின்றான். பிரலம்பன் அவைக்குள் நுழைந்து அமைச்சரிடம் “எங்கும் தேடிப்பார்த்துவிட்டேன். இளவரசரை காணவில்லை” என்றான். “காணவில்லையா? இச்செய்தியைச் சொல்ல உமக்கு நாணமில்லையா?” என்றார் சுரேசர். பிரலம்பன் பேசாமல் நின்றான். “அவர் இருக்கைக்கு பின்புறம் அமர்ந்துகொள்க. நான் அவரை அழைத்துவர ஒற்றர்களை அனுப்புகிறேன்” என்றபடி சுரேசர் வெளியே சென்றார்.

பிரலம்பன் அபிமன்யூவின் இருக்கைக்கு பின்னால் சென்று அமர்ந்தபோது அபிமன்யூ மறுபக்க வாயிலினூடாக விரைந்து வந்து அவனுடைய இருக்கையில் அமர்ந்து அவனை நோக்கி புன்னகை செய்தான். பிரலம்பன் பெருமூச்சுவிட்டான்.

நூல் பதினைந்து – எழுதழல் – 30

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 8

fire-iconஒருகணத்தில் அபிமன்யூ அனைத்திலிருந்தும் முற்றாக பிரிந்து தனித்துவிட்டிருந்தான். மூச்சிரைக்க படிகளிலேறி தன் அறைக்குச் சென்று அங்கே சிறு பேழையில் இருந்த கணையாழிகளை எடுத்துக்கொண்டு படியிறங்குகையில் எட்டாவது படியிலிருந்து கால் எடுத்து அடுத்த படிக்கு வைக்கும்போது என்ன நிகழ்ந்ததென்று அறியாமல் அவன் நின்றுவிட்டான். அவன் உள்ளம் உடலில் இருந்து தனித்து பிரிந்துவிட்டது. படிக்கட்டின் கைப்பிடியை பற்றியபடி மெல்ல அமர்ந்து தன்னுடலெங்கும் பரவி மயிர்க்கால்களைக்கூட அசைவிழக்கச் செய்த செயலின்மையை உணர்ந்தான்.

அவனைச்சூழ்ந்து உபப்பிலாவ்யத்தின் அத்தனை பகுதிகளும் ஒலியால் கொந்தளித்துக்கொண்டிருந்தன. நகரின் கோட்டைக்கு வெளியே குறுங்காடுகளை அழித்து போடப்பட்டிருந்த பாடிவீடுகளின் நிரை நகரைவிட மும்மடங்கு பெரிதாக பரவியிருந்தது. தெற்குப் பகுதியில் அடுமனையாளர்களும் சூதரும் அரசஏவலரும் தங்குவதற்கான சிறிய மரப்பட்டை வீடுகளும் ஈச்சையோலை வேய்ந்த மூங்கில்குடில்களும் நெடுந்தொலைவில் இருந்த முகுளகம் என்னும் சிறிய பாறை வரை சென்றிருந்தன. அவற்றைச்சூழ்ந்து தோல்கூடாரங்களில் அயலக சிறுவணிகர்களும் மலையிறங்கி வந்த தொல்குடிகளும் தங்கியிருந்தனர்.

கோட்டையின் வடக்குப்பக்கத்தில் அரசர்களுக்கான பெரிய இரண்டடுக்கு பாடிவீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் மூங்கில் வேலியிட்ட ஒரு வளாகம் வகுக்கப்பட்டது. முகப்புக் கட்டடத்தின் இருபுறமும் ஏவலரும் அமைச்சரும் தங்குவதற்கான இணைப்புகளும் பின்புறம் அடுமனையும் நீராட்டறையும் அமைந்த சாய்ப்புகளும் கொண்ட மரக்கட்டடங்கள் உபப்பிலாவ்யத்தின் மாளிகைகளைவிட பெரிதாக இருந்தன. ஒவ்வொரு மாளிகை முகப்பிலும் அங்கு தங்கியிருக்கும் அரசர்களின் கொடிகள் உயர்ந்த மூங்கில் கம்பங்களில் பறந்தன. அவர்களின் தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் யானைகளும் முற்றங்களில் நிரைவகுத்து நின்றன. காற்றிலாடும் கரிய திரையென யானைகளின் அசைவு. அனல்பற்றிக்கொண்டதென பல்லக்குகளின் திரை நெளிவு. புரவிகள் தலைகுலுக்க கழுத்து மணிகளும் சேணக்கொக்கிகளும் குலுங்கும் ஓசை எழுந்தது.

அரசர்களுக்கான பாடிவீடுகளை அமைப்பதிலும் அவற்றை முறைப்படி ஒதுக்குவதிலும் மூத்த அமைச்சர் சௌனகர் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த கணம் முதல் ஈடுபட்டார். நட்பரசர் அருகருகே வரும்படியும் பகையரசர் எதிரெதிர் அமையும்படியும் அவை அமையலாகாதென்பது முதல் நெறி. சமந்தர்கள் அருகமையவேண்டும், ஆனால் அவர்களுக்குள் நல்லுறவு உண்டா என்று தெரிந்திருக்கவும் வேண்டும். ஒவ்வொரு மாளிகைக்கும் அவர்களின் ஊழியர்கள் பிறருடன் கலவாமல் வந்து மீள்வதற்கு உகந்த வகையில் சிறு புறவூடுவழிகள் அமைக்கப்பட்டன. ஒருவரின் அணிநிரை பிறிதொருவருடன் முட்டாதவாறு ஒவ்வொருவரும் எழுந்தருளவும் மீளவும் பொழுது வகுக்கப்பட்டது.

மேற்குப்பக்கம் அரசர்களின் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் தங்குவதற்கான சிறிய மாளிகைகள் அரசமாளிகைகள் அமைந்த அதே ஒழுங்கில் அதே கொடி முகப்புகளுடன் முகமுற்றங்களுடனும் கொல்லை சாய்ப்புகளுடனும் அமைந்திருந்தன. மேற்கு விரிவிலிருந்து உபப்பிலாவ்யத்திற்குள் நுழையாமலேயே வடக்கே செல்வதற்கான நான்கு பாதைகள் அமைந்தன. ஒன்று அரசர்கள் மட்டும் செல்வதற்கு. பிறிதொன்று பிற அனைவருக்கும். ஏவலருக்கும் விலங்குகளுக்குமென இரு வேறுபாதைகள் சற்று அப்பால் உபப்பிலாவ்யத்திற்கு ஏழுநாழிகை அப்பால் இருந்தது. உஜ்ஜீவனி என்னும் சிற்றாறு மூன்று இடங்களில் அணைகட்டி திருப்பிக் கொண்டுவரப்பட்டு மேற்கே புதிதாகத் தோண்டப்பட்ட சஞ்சீவனி என்னும் குளத்தில் நிரம்பி எழுந்து வழிந்து நகருக்குள் நுழைந்து பன்னிரண்டு ஓடைகளினூடாக மறுபக்கம் சென்று மறைந்தது.

பாடிவீடுகள் கட்டி முடிக்கப்பட பன்னிரண்டு நாட்களாயின. கலிங்கச் சிற்பிகள் யானைகள் இழுத்த துலாநிலைகளையும் பெருவடங்களையும் கொண்டு மரப்பட்டைகளைத் தூக்கி அடுக்கி நோக்கி நின்றிருக்கையிலேயே இரண்டடுக்கு மாளிகையொன்றை எழுப்பி முடிப்பதை கோட்டை காவல் மேடையிலிருந்து அபிமன்யூ ஒருமுறை பார்த்தான். அலையறைந்து நுரை திரண்டு மேலெழுவது போலிருந்தது. அருகே நின்றிருந்த சுரேசர் “செவ்வெறும்புகள் இலைப்பொதிக்கூடு கட்டுவதை பார்ப்பது போலிருக்கிறது. நம் விழி நோக்கியிருக்கையிலேயே இலைகளைப்பற்றி இணைத்து விளிம்புகளை பசையால் ஒட்டி அவை பெரிய கூடுகளை கட்டி முடித்துவிடும்” என்றார்.

Ezhuthazhal _EPI_30

விராட நகரியிலிருந்து ஒழியாத தொடரொழுக்கென அத்திரிகளிலும் மாட்டு வண்டிகளிலும் அடுமனைப்பொருட்களும் பிறவும் நகருக்குள் நுழைந்துகொண்டிருந்தன. எட்டு நூற்றுவர்குழுக்கள் சிறுபடைத்தலைவர்களால் வழிநடத்தப்பட்டு முன்னரே நகர்காவலுக்கு வந்துவிட்டிருந்தன. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த ஆறு நூற்றுவர் படைக்குழு அவர்களை ஒருங்கிணைத்து நகரைச் சூழ்ந்து மூன்று காவல் வளையங்களை அமைத்தது. அத்தனை காவல் மேடைகளும் கொடிகளாலும் அகல் விளக்குச் சுடர்களாலும் முழவோசைகளாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்டிருந்தன.

“நகர் விரிந்துவிட்டது. இனி அது ஒருபோதும் சுருங்காது” என்று கோட்டையின் காவல் மருப்பில் நின்றபடி மும்மடங்காக விரிவுபடுத்தப்பட்ட முகமுற்றத்தில் கூடி சிறுகூடாரங்களை விரித்து எழுப்பி அத்திரிகளையும் புரவிகளையும் வண்டிக்காளைகளையும் அவிழ்த்துகட்டிவிட்டு பொதிகளை அவிழ்த்து பரப்பிக்கொண்டிருந்த வணிகர் திரள்களைப் பார்த்தபடி சுரேசர் சொன்னார். அவர் அருகே நின்ற அபிமன்யூ “இது நகரல்ல, திருவிழாத்திரள்” என்றான். “ஆம், கீழே ஊற்றப்பட்ட நீர் என நாற்புறமும் சிதறிப்பரந்துள்ளது இந்நகர். இதற்கு வடிவென்று ஏதுமில்லை. இதைச் சூழ்ந்து ஒரு கோட்டை அமைத்தால் அரணிடப்பட்ட எதற்கும் வடிவென்று ஒன்று அமைந்து விடுகிறது” என்ற சுரேசர் “வடிவென்பது ஓர் அரண் மட்டுமே” என்றார்.

அபிமன்யூ புன்னகையுடன் “இத்தகைய சொற்றொடர்களை அமைப்பதில் மூத்த தந்தை எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பார். வந்ததிலிருந்து நூறு சொற்றொடர்களையாவது கேட்டிருப்பேன். முதல் சில சொற்றொடர்கள் உள்ளத்தை முரசுகோல் பட்டதுபோல் அதிர வைத்தன. நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று நானே எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டேன். பின்னர் இவை எவ்வகையிலோ அலை அடிக்கும் உள்ளமொன்றின் வெளிப்பாடுகள் என்று தோன்றியது” என்றான். சுரேசர் திரும்பி நோக்கி புன்னகையுடன் “எவரும் சொல்லாத ஒன்று இது” என்றார்.

“அமைச்சரே, மூத்த தந்தையின் உள்ளத்துக்குள் கொந்தளிப்பொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இப்புவியின் பேரறத்தையும் முழுமைநெறியையும் முரணொழுக்கத்தையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே அடைந்தவற்றை அள்ளி அள்ளி வைத்து வகுத்துக்கொள்கிறார். இந்நகரைச்சுற்றி கோட்டை அமைவது போல” என்றான். சுரேசர் நகைத்து “நல்ல கருத்து. இதை உங்கள் இரண்டாவது தந்தையிடம் சொல்லலாம், மகிழ்வார்” என்றார். அபிமன்யூ “அவர் பெருந்தோளர், கட்டப்பட்ட எதையும் உடைப்பதற்கு விழைபவர்.” சுரேசர் “நீங்கள்?” என்றார். “நான் வில்லவன், இலக்குகளென்றே அனைத்தையும் பார்ப்பவன். பறந்து கடப்பவன்” என்றான் அபிமன்யூ.

உபப்பிலாவ்யம் சௌனகரால் எட்டு பகுதிகளாக முற்றிலுமாக பகுக்கப்பட்டிருந்தது. அரண்மனை அதைச் சூழ்ந்திருந்த அத்தனை இல்லங்களுடன் முழுமையாகவே பாண்டவ அரசகுடியினருக்குரியவை என்று எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. கோட்டையை ஒட்டி அமைந்த இல்லங்கள் காவலர்களுக்கும் அங்காடி வீதியிலும் சூதர் வீதிகளிலும் இருந்தவை அரண்மனையின் ஏவல் செய்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. குடிமக்கள்பகுதிகள் ஐந்தாக பிரிக்கபப்ட்டு விராட புரியிலிருந்து வந்த குடித்தலைவர்களுக்கும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வரும் முதன்மை அமைச்சர்களுக்கும் இசைச்சூதர்களுக்கும் அணிப்பரத்தையருக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆலயப் பூசகர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடம் தொலைவிலிருந்தே தெரியும்படி உயர்ந்த கொடியால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

தங்களுக்குரிய இடங்களை ஒவ்வொருவரும் மிக எளிதில் உரித்தாக்கிக் கொண்டனர். அவற்றை ஒட்டி தங்களை வடிவமைத்துக்கொண்டு மீறுபவர்களை நோக்கி சினம் கொண்டனர். இடம் அமைவதுவரைதான் அவர்கள் அங்கே அயலவர்களாக இருந்தனர். அமைந்ததும் முந்தைய ஊரைப்பற்றி கடந்தகாலத்தில் பேசலாயினர்.

அபிமன்யூ முதலில் நுழைந்தபோதிருந்த உபப்பிலாவ்யம் அவன் கண்ணெதிரிலேயே முழுமையாக மறைந்து முற்றிலும் புதிய நகரமொன்று எழுந்து வந்தது. அந்நகரம் அதற்கு முன்பு எங்கிருந்தது என்று அவன் எண்ணிக்கொண்டான். சௌனகரின் கற்பனையிலா? ஆனால் அது அவருடைய கற்பனை மட்டுமல்ல. அவருடைய எண்ணங்களும் கலிங்கச் சிற்பிகளும் சூத்ராகிகளும் காவல்படைத்தலைவர்களும் சிற்றமைச்சர்களும் இணைந்து உருவாக்கியது. அடுமனையளர்களும் ஏவலர்களும் சிற்றாலயங்களை அமைத்த பூசகர்களும் அதில் பங்கு கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் அந்நகருக்குள் நுழைந்த அனைவருமே அதை உருவாக்கினார்கள்.

அந்நகர் அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் என இருந்தது. அவர்கள் அதை வெளிப்படுத்தும் உள்ளங்களும் உடல்களும் மட்டுமே. அவர்களுக்கு முன்பு அது இருந்தது. பாடலிபுத்திரமாக, ராஜகிரகமாக, அஸ்தினபுரியாக, காம்பில்யமாக. சிதல்களுக்குள் புற்றென. பறவைகளுக்குள் காற்றென. அவர்கள் மறைந்தபின் பிறந்தெழுபவர்களினூடாக அது அங்கே இருக்கும். எங்கோ கண்காணாத ககனவெளியில் கருத்துருவென எழுந்து தன் கல்மண்மரவுருவை வண்ணவடிவ இருப்பை அடைந்தது. அடைந்தபின்னர் அதற்கப்பால் அப்படியே நீடிப்பது.

இவை அறியாமுகம் ஒன்றின் ஆடிப்பாவைகள். முடிவின்மையில் முடிவின்மையாக இருக்கும் ஒன்று காலஇடவடிவத்தை பருவடிவென்று சூடிக் களைந்தாடுகிறது. இந்நகரும் இதன் மாளிகைகளும் இங்கு கொந்தளிக்கும் திரளும் அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அறிதல்களும் எண்ணங்களும் நிகழ்வுகள் விளைவுகள் அழிவுகள் ஆக்கங்கள் என அனைத்தும் வேறெங்கோ பிறிதெவ்வகையிலோ நிலைகொள்பவை. இங்கு அது இவ்வாறு தங்களை நிகழ்த்தி பார்த்துக்கொள்கின்றது. கற்றநூல்களில் மொழியென இருந்தவை அறிதலென ஆனபோது வாள்வீச்சென போழ்ந்து சென்றன. அறிதல் நிகழும் தருணமென்பது சாவுக்கணம்.

மின் ஓய்ந்த இருள். உடல் விதிர்க்க உணரும் தனிமை. எண்ணுந்தோறும் சோர்வு அவன் உள்ளத்தின் ஆழத்தை அசைவிழக்கச் செய்தது. ஒவ்வொரு செயலையும் பொருளற்றதென்று காட்டியது அச்சோர்வு. அதை அஞ்சி செயல்வெறி கொண்டான். புலரியில் விழித்தெழுந்த கணம் முதல் பின்னிரவில் உடல் ஓய்ந்து மஞ்சத்தில் விழுவது வரை அங்கு அவனுக்கு பணிகள் இருந்தன. அடுமனைகளை ஒருங்கமைத்தான். காவலணிகளை பகுத்தும் தொகுத்தும் வகுத்தமைத்தான். அரண்மனை ஏவலரை மேலும் மேலுமென விசை கூட்டினான்.

முதலில் ஒவ்வொன்றையும் அமைத்தார்கள். பின் செம்மைப்படுத்தினார்கள். செம்மையென்று ஒன்று கண்ணுக்குத் தென்பட்டதுமே பிற அனைத்தும் மீறல்களென்றும் பிறழ்வுகளென்றும் பிசிறுகளென்றும் தோன்றலாயின. அதன்பின் சீரமைத்தல். சீரமைக்குந்தோறும் செம்மை கூர்மை கொண்டது. அந்நுண்மை மேலும் மேலுமென பிறவற்றை விலக்கி பிறழ்வுகளையும் மீறல்களையும் பிசிறுகளையும் பெருக்கியது. மணநாள் நெருங்க நெருங்க கண் பட்ட அனைத்துமே பிழையென்று தோன்றலாயிற்று கைதொட்ட அனைத்தையுமே செம்மைப்படுத்த வேண்டியிருந்தது. ஒருகணத்தில் அங்கிருந்த அனைத்துமே பிசிறுகளின் பிழைகளின் பெரும்பெருக்கென தோன்றி உளம் மலைக்கச் செய்தது.

ஒருகணமேனும் அனைத்தும் முழுதமையுமா என்று உள்ளிலிருந்து ஏதோ ஒன்று ஏங்கியது. மானுடர்களின் உள்ளே அமைந்து இப்புவியை பிறிதொன்றென சமைக்க விழையும் ஒன்று. இங்குள்ள அனைத்தையும் படைத்தது படைத்தவற்றை ஓயாது அழித்துக்கொண்டிருக்கிறது என்று ஒரு கூற்றை நினைவு கூர்ந்தான். அது யுதிஷ்டிரர் சொன்னது என நினைவில் பதிந்திருந்தது. மீண்டும் ஒருமுறை எழுந்தபோது சௌனகரின் கூற்று அது என்று தெரிந்தது.

அரண்மனை உப்பரிகையில் நின்று பார்த்தபோது வண்ணமலர்கள் பூத்த வசந்தகாலக்காடென கொடிகளும் அணித்தோரணங்களும் பாவட்டாக்களும் அணித்தூண்களும் சித்திர எழினிகளும் காற்றில் கொந்தளிக்க உபப்பிலாவ்யம் விரிந்து கிடந்தது. அவர்கள் அனைவரின் கைகளினூடாகவும் தன்னை பிறப்பித்துக்கொண்டு அவர்களைச் சூழ்ந்து அவர்களால் அறிய முடியாத பேருரு என நின்றிருந்தது. முதல் கணம் அந்நகரிலிருந்து தன் உள்ளம் விலகியது அப்போதுதான் என்று அபிமன்யூ உணர்ந்தான்.

ஒவ்வொரு செயலும் அதிலிருந்து விலகி நின்று நோக்கிய உள்ளத்திற்கு பொருளற்றதாகவும் பொருந்தாததாகவும் தோன்ற சவுக்கால் அறைந்து புரவியை விரையச்செய்வதுபோல உள்ளத்தை உந்தி அவன் பொருத்த வேண்டியிருந்தது. அந்த விசையால் ஒவ்வொரு உழைப்பும் பலமடங்காகியது. ஒவ்வொரு செயலுக்குப்பின்னும் களைப்பு வந்து தசைகளை எடையுடன் அழுத்தியது. திமிறி விலக்கி எண்ணி விசை கூட்டி தன்னை அந்நாட்களின் செயல் கொப்பளிக்குப்புக்குள் செலுத்திக்கொண்டிருந்தான். அதன் உச்சப்புள்ளி ஒன்றை எப்போதோ அடைவோம் என்று எண்ணியே இருந்தான். ஆனால் அதை முடிவின்றி ஒத்திவைக்க முடியுமென்றும் இவையனைத்திற்கும் அப்பால் அதை கடத்தி கொண்டு சென்றுவிட முடியுமென்றும் எண்ணினான்.

அவன் பெயரை கீழே மாளிகையின் அறைகளுக்குள் நகுலன் அழைப்பது கேட்டது. சுரேசர் அவனைப் பற்றி மறுமொழி ஏதோ சொன்னார். பிறிதொரு அறையில் திரௌபதியின் குரலை அவன் கேட்டான். கோட்டை முகப்பில் அரசர் ஒருவர் நுழைவதன் முரசொலியும் கொம்போசையும் எழுந்தது. மேற்கு கள முற்றத்தில் களிறொன்று பிளிறியது. உரத்த குரலில் சகதேவன் “அபிமன்யூ எங்கு சென்றான்? ஒவ்வொரு அரசரையும் இளவரசன் ஒருவனாவது சென்று வரவேற்க வேண்டுமென்று ஆணையிட்டிருந்தேனல்லவா?” என்றான். சிற்றமைச்சர் பூர்ணர் “அவர் தன் கணையாழிகளை எடுக்கச்சென்றார்” என்றார். “சென்று பாருங்கள்! உடனடியாக அவனை அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி நகுலன் மறுபுறம் படிகளில் இறங்கிச் சென்றான்.

அபிமன்யூ அமர்ந்திருந்த படிகளின் முகப்பு வழியாகவே பூர்ணர் அங்குமிங்கும் பார்த்தபடி படிகளில் இறங்கி முற்றத்தை நோக்கி சென்றார். முழு உருவுடன் அவன் மிக அருகே அமர்ந்திருந்தாலும் அவரால் அவனை பார்க்க முடியவில்லை. முற்றிலும் அசைவிழந்து அதனாலேயே காட்சியிலிருந்தும் அவன் மறைந்துவிட்டிருந்தான். அசைவைத்தான் விழிகள் முதலில் அறிகின்றன. அசைவிழந்தால் மறைந்துவிடலாமென்னும் போர்க்கலை அவனுக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. அதைவிட அதற்கும் அப்பால் சென்று தொட்டழைப்பது இருப்பு. தன்னிருப்பு கரைந்தோரை பிறர் உள்ளங்கள் அடையாளம் காண்பதில்லை.

எழவேண்டும் என்ற ஆணையை ஆழத்தில் நூறு சுவர்களுக்கு அப்பாலிருந்து அவன் கேட்டான். எழவேண்டும். இன்னும் ஒரு நாள். நாளை புலரியில் அவன் உத்தரையை மணம் கொள்கிறான். உண்டாட்டும் சூதர் கலையாடலும் போர்க்களியாடலும் அந்தியுடன் முடிவடையும். நுரைத்துப் பெருகி எழுந்த உபப்பிலாவ்யம் மீண்டும் தன்னை குறுக்கி அமைத்துக்கொள்ளத் தொடங்கும். மறுநாள் முதல் ஒவ்வொருவராக கிளம்பிச்செல்வர். அரசர்கள், படைத்தலைவர்கள், அமைச்சர்கள், ஏவலர்கள், வணிகர்கள். அவர்கள் வாழ்ந்த மாளிகைகள் மட்டும் இங்கு எஞ்சும். அவர்கள் செல்லும்போதே அவற்றை பிறர் நிரப்பத் தொடங்கிவிடுவார்கள் உண்மையில் அவர்கள் இங்கிருக்கையிலேயே அவ்விடங்களில் பிறர் உள்ளத்தால் இருக்கிறார்கள்.

“அறிக, இளவரசே! அமைக்கப்பட்ட எந்த இல்லமும் குடியேறப்படாததில்லை. இல்லங்களுக்கேற்ப தன்னை விரித்துக்கொள்வது மானுடம். நீர்த்துளியின் ஒவ்வொரு அணுவும் விலகி பரவ விழைகிறது” கலிங்கச்சிற்பி காளிகர் சொன்னார். “இல்லங்கள் என்பவை மானுட உடலின் விராடவடிவங்களே. ஆமையின் ஓடுபோல.” அவன் எங்கோ குரல்களை கேட்டான். கனவிலென. சுபகையின் புன்னகை நினைவிலெழுந்தது. ஆடிப்பாவை குறித்த ஒரு சொற்றொடர். சுபகை ஏன் நினைவிலெழவேண்டும் இப்போது? ஆடிப்பாவை அதில் எங்கு இணைகிறது?

fire-iconஅர்ஜுனனின் உரத்த குரல் “இங்கென்ன செய்கிறாய்?” என்று வினவ அபிமன்யூ திடுக்கிட்டு விழித்துக்கொண்டு எழுந்து நின்றான். சற்று நேரம் எங்கிருக்கிறோம் என்ற உணர்வையே அவன் அடையவில்லை. கால்கள் நடுங்கிக்கொண்டிருக்க கைப்பிடியை பற்றிக்கொண்டு உதடுகளை திறந்து மூடினான். “உன்னை அரண்மனை முழுக்க தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவையினர் அமர்ந்துவிட்டார்கள். மூடன் போல் இங்கமர்ந்திருக்கிறாய்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“நான் கணையாழியை…” என்று அபிமன்யூ சொல்ல கையால் மறித்து “அவைக்கு செல்! இப்போது அங்கிருக்க வேண்டியவன் நீ” என்றபடி அர்ஜுனன் திரும்பிச் சென்றான். அபிமன்யூ மேல்மூச்சுவிட்டபடி படிகளில் எடைமிக்க காலடிகளை ஒவ்வொன்றாக வைத்து இறங்கி கீழே வந்தான். நெடுந்தொலைவு ஓடி மீண்டதுபோல் உடலெங்கும் களைப்பு நிறைந்திருந்தது. குளிர்ந்த நீர் நிறைந்த தோல்பை என தன்னை உணர்ந்தான். ஒவ்வொரு அடிக்கும் உந்தி முன்செல்ல வேண்டியிருந்தது.

அவனைக்கண்டதுமே சுரேசர் விரைந்து ஓடி வந்து “இளவரசே, எங்கு சென்றீர்கள்? தங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். “அவை கூடிவிட்டதா?” என்று அபிமன்யூ கேட்டான். “அவை முறைமைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. சௌனகர் பேசிக்கொண்டிருக்கிறார். வருக!” என்று சுரேசர் அவனை அழைத்துச் சென்றார். அவனை ஏற இறங்க நோக்கியபின் “தாங்கள் இன்னும் சற்று சிறப்பாக ஆடை அணிந்திருக்கலாம்” என்றார். அபிமன்யூ தன்னை நோக்கி “வெண்ணிறப் பட்டாடை. பொன்னூல் பின்னலிட்ட செம்பட்டுத்தலையணி. ஆரங்கள், தோள்வளைகள், கங்கணங்கள், பொற்கச்சை. இதைவிட சிறப்பாக நான் எப்போதும் உடை அணிந்ததில்லை” என்றான்.

“இளவரசே, இது தங்கள் மணநிகழ்வுக்கான அவைகூடல். அனைவராலும் தாங்கள் நோக்கப்படுவீர்கள்” என்றார் சுரேசர். “இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து கொண்டு வந்த உடை இது” என்று அபிமன்யூ சொன்னான். “ஆம்” என்றபின் ஒருகணம் தயங்கிய சுரேசர் “இன்று எத்தனை சிறிய ஊரில் நிலமில்லாதவர்களாக தங்கள் தந்தையர் இருக்கிறார்கள்! வந்துள்ள அத்தனை அரசர்களுக்கும் தெரிந்த ஒன்றுண்டு. இனி வென்றெடுத்தால் மட்டுமே உங்களுக்கு நிலம். அவர்கள் விழிமுன் அவர்கள் எண்ணியிராத உயராடையணிந்து நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும்” என்றார்.

அபிமன்யூ “அது ஏளனத்துக்குரியதாகும்” என்றபின் “கவலைவேண்டாம், அமைச்சரே. ஒன்று சொல்கிறேன், அந்த அவையில் எனது மண நிகழ்வைப்பற்றி எவரும் எதுவும் பேசப்போவதில்லை” என்றான். “ஏன்?” என்று சுரேசர் கேட்டார். “இது என் மணநிகழ்வை முன்வைத்து இந்திரப்பிரஸ்தத்தை மீட்பது குறித்த சொல்லாடல் மட்டுமே. நம் தரப்பில் எத்தனை மன்னர்கள் வந்திருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கும் பொருட்டே இதை இளைய யாதவர் நமக்கு ஆணையிட்டார்” என்றான்.

சுரேசர் புன்னகைத்து “அவ்வண்ணமெனில் நிலம் மீட்பதைப்பற்றி மேலும் பேசவேண்டியதில்லையென்றே எண்ணுகிறேன். அநேகமாக முதன்மை ஷத்ரிய மன்னர்கள் எவரும் வரவில்லை” என்று அவனை சிற்றறைக்குள் அழைத்துச் சென்று அங்கு நின்ற இரு காவலரிடம் “அரசரின் ஆடைகளை சீர் செய்யுங்கள். கச்சை முறைப்படி மடிக்கப்பட்டிருக்க வேண்டும். குழல் கலைந்திருக்கிறது” என்றார். ஏவலர் தேர்ந்த விரல்களால் அபிமன்யூவின் தோற்றத்தை சீரமைத்தனர்.

அபிமன்யூ “பிதாமகர் சல்யர் வந்துவிட்டாரா?” என்றான். “ஏழுநாட்களுக்கு முன்னரே மத்ர நாட்டிலிருந்து கிளம்பிவிட்டார். வந்துகொண்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது. பிரியவாகினியை கடந்துவிட்டார் என்று அடுத்த செய்தி நேற்று வந்தது. இன்று காலை தீர்க்கதனுஸைத்தாண்டி அவரது அணிப்படைநிரை சீர்வரிசைகளுடன் வந்து கொண்டிருக்கிறது என்றார்கள்” என்றார் சுரேசர். “அவை நிகழ்வு இன்றென அவருக்குத் தெரியாதா?” என்றான் அபிமன்யூ.

சுரேசர் “அவருக்கும் யாதவர்களுக்கும் நல்லுறவில்லை. அவையில் அவர்களுக்கு இணையாக தான் அமரவேண்டுமென்று ஐயுறுகிறார் போலும். அவை நிகழ்வுகள் முடிந்து இளைய யாதவர் இங்கிருந்து கிளம்பிய பின்னர் அவர் நகர் நுழைவாரென்று எண்ணுகிறேன்” என்றார். “எப்படியும் அவர் வந்தாகவேண்டும். இது அவரது குருதி, அவருடைய கொடி வழியினர் அமரப்போகும் அரியணை.” அபிமன்யூ சிலகணங்கள் எண்ணத்திலமைந்துவிட்டு தலைதூக்கி “நமது செய்தியுடன் சென்றவர் எவர்?” என்று கேட்டான்.

“சௌனகரே நேரில் சென்றழைத்தார். செய்தியைக் கேட்டதும் பேருவகையுடன் எழுந்து ஆம் நாம் நமது தரப்பை மதிப்பிடவேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்று சல்யர் சொல்லியிருக்கிறார். எனது படைகளுடன் உபப்பிலாவ்யத்திற்கு வருகிறேன். விராடரும் பாஞ்சாலரும் நானும் இணைந்தால் அஸ்தினபுரியிடம் வாளின் மொழியில் உரையாட முடியும் என்றார். அவரது அவையிலிருந்த குடித்தலைவர்கள் அவரை ஆதரித்து கோல் தூக்கி முழக்கமிட்டனர். எனது தங்கையின் மைந்தர் நிலம் இழந்து வெறும் பெயர் கொண்டவர்களாக அங்கிருக்கிறார்கள். நான் சென்று மீள்கையில் அவர்களின் கொடி அவர்களுக்குரிய நிலத்தில் ஊன்றப்பட்டு பறக்கும் என்றார்” என்றார் சுரேசர்.

அபிமன்யூ சுரேசரையே நோக்கிக்கொண்டிருந்தான். சுரேஷர் அவன் கண்களை சந்தித்து “சௌனகர் அவ்வுணர்வுகள் அனைத்தும் மெய்யென்றே சொன்னார். அவரது கணிப்புகள் எப்போதும் பொய்யாவதில்லை” என்றார். “மேலும் பலகாலமாகவே சல்யர் பால்ஹிகர்களுக்கு எதிர்நிலை கொண்டிருக்கிறார். சென்ற பதினான்கு ஆண்டுகளில் எட்டுமுறை சிறு எல்லைப்பூசல்கள் நிகழ்ந்துள்ளன. பால்ஹிக நாட்டு பூரிசிரவஸ் தனது நகரைச் சுற்றி கல்கோட்டை ஒன்றை எழுப்பியிருக்கிறான். எல்லைகள் முழுக்க காவல் கோட்டங்கள் அமைந்துள்ளன.”

“ஆம், அவரது கனவுகள் எளிய மலைமகனுக்குரியவை அல்ல என்றனர்” என்றான் அபிமன்யூ. சுரேசர் “அஸ்தினபுரியின் துரியோதனரின் இடம் அமர்ந்திருக்கும் தகுதி கொண்டிருக்கிறான். தார்த்தராஷ்டிரர் கோல் கொண்டு அமர்ந்ததுமே பால்ஹிகம் வளரத்தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அவனை எண்ணி சினந்தும் பொறுத்தும் அமர்ந்திருக்கிறர் சல்யர். அவருக்கு வேறு வழியில்லை. நமக்கென்றில்லை, அவருக்கென்றே கூட அவர் இங்கு வந்தாக வேண்டும்” என்றார்.

அறைக்குள் புகுந்து யௌதேயன் “இளையவனே, உன்னை மூன்றுமுறை முதற்தந்தை கேட்டுவிட்டார்” என்றான் “இதோ வந்து கொண்டிருக்கிறேன்” என்று அபிமன்யூ சொன்னான். சுரேசர் “ஆடையணியவேண்டியிருந்தது” என்றார். அபிமன்யூ “அவை முடிய நெடுநேரமாகுமா?” என்றான். “அவையில் அமர்ந்து பழகுக, இளவரசே. அத்தனை அவைகளிலும் நெளிந்துகொண்டே இருக்கிறீர்கள்” என்றார் சுரேசர். யௌதேயன் சிரித்து, “ஆம், அவைகளில் பந்தங்களும் இவன் உடலும் மட்டுமே நெளிந்தாடுகின்றன” என்றான்.

சுரேசர் “எனது கணிப்பென்னவென்றால் இந்த அவை நிகழ்ந்து முடியப்போகும் தருணத்தில் சல்யர் தன் பெரும்படையுடன் நகர் புகுவார். இங்கு பேசப்பட்டவை அனைத்தும் அந்த ஓசையிலும் தூசியிலும் மறந்துபோகும். நுழைகையிலேயே பெருவெள்ளமென நகரை நிறைப்பார். வந்ததுமே அவைத்தலைமை கொள்வார். தன் மருகருக்கு உரிய நிலத்தை தன் கைகளால் மீட்டளித்தேன் என்னும் பெருமையை ஈட்டிக்கொள்வார். அவர் பிந்துவது இதன் பொருட்டே” என்றார். யௌதேயன் “உன் வரவை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள், இளையோனே” என்றான்.

நூல் பதினைந்து – எழுதழல் – 29

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 7

fire-iconஉபப்பிலாவ்யத்தின் முதல் காவலரணை தொலைவில் பார்த்ததுமே பிரதிவிந்தியன் தன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இரு முன்கால்களை தூக்கி அறைந்து தலைதிருப்பிக் கனைத்து அது அரைவட்டமாகச் சுழன்று நிற்க அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சதானீகனின் புரவி மேலும் நாலைந்தடி வைத்து சுழன்று நின்றது. அவர்களுக்குப் பின்னால் எடை மிகுந்த குளம்புகள் மண்ணில் அறைந்தொலிக்க வந்துகொண்டிருந்த சுதசோமன் விரைவழிந்து நின்று பெருமூச்சு விட்டு உடல் தளர்ந்து “நகர் எல்லை தொடங்கிவிட்டது” என்றான்.

Ezhuthazhal _EPI_29

பிரதிவிந்தியன் சாலையைப்பார்த்தபடி “ஆம், ஒருநாழிகைக்குள் நகர் வந்துவிடும். மிகச்சிறிய நகர் என்று எண்ணுகின்றேன்” என்றான். சதானீகன் “நகர் என்றே இதை சொல்லவியலாது என்றார்கள். ஓர் எல்லைக்காவலரண் காலப்போக்கில் ஊரென்றாகியது. விராடபுரி இதை மச்சர்களுக்கு எதிராக நிலைநிறுத்துகிறது.” சுதசோமன் உடலை நெளித்து “ஆனால் இப்போது அங்கு நம் படைகள் இருப்பதனால் அடுமனை பெரிதாகவே இருக்கும். சென்றதுமே அமர்ந்து வயிறு நிறைய உண்ணவேண்டும். நெடும்பொழுது வந்திருக்கிறோம். வழியில் இரு இடங்களில் மட்டுமே சிற்றுணவு. ஓநாய்போல பசிக்கிறது” என்றான்.

அவனை சற்று சலிப்புடன் பார்த்தபின் திரும்பி அப்பால் வந்துகொண்டிருந்த சுருதகீர்த்தியையும் சுருதவர்மனையும் பார்த்து “பேசிக்கொண்டே வருகிறார்களோ?” என்றான் பிரதிவிந்தியன். சதானீகன் “ராகவராமனும் லக்ஷ்மணனும்போல அவர்கள் என அவர்களே எண்ணிக்கொள்கிறார்கள்” என்றான். அவர்களின் புரவிகள் எழுப்பிய பொடித் திரைக்கு அப்பால் யௌதேயனும் சர்வதனும் நிர்மித்ரனும் வந்தனர். அனைவரும் களைத்திருந்தனர். ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு தரங்களில் களைப்படைகிறதா என பிரதிவிந்தியன் எண்ணிக்கொண்டான். அவர்கள் ஒவ்வொருவரும் புரவியில் ஒவ்வொரு முறையில் சாய்ந்தும் ஒசிந்தும் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் அணுகியதும் “சேர்ந்தேதான் வரவேண்டுமோ?” என்றான் பிரதிவிந்தியன். சுருதகீர்த்தி “நாம் ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்தாலே மூன்று குழுக்களாக ஆகிவிடுகிறோம்” என்றான். சுதசோமன் “எல்லா குழுக்களிலும் எனக்கு நுழைவொப்புதல் உள்ளது, மூத்தவரே” என்றான். சுருதவர்மன் மெல்ல “உணவுண்ணும் பொழுதுகளில்” என்றான். சதானீகன் புன்னகைக்க சுதசோமன் திரும்பி நோக்கி முறைத்தான். சுருதகீர்த்தி “நகர் எல்லை வந்துவிட்டது, மூத்தவரே. காவலரணில் இருவர் மட்டுமே உள்ளனர், அவர்கள் விராடவீரர்கள்” என்றான்.

“அவர்களின் ஒருவன் கன்னத்தில் சிறிய மச்சம் ஒன்று இருந்திருக்குமே?” என்று சதானீகன் கேட்டான். சுருதகீர்த்தி “ஆம், சற்று அகவை முதிர்ந்தவனின் கன்னத்தில்” என்றான். “அவன் மைந்தன் ஒருவன் கீழே நின்றிருக்கிறான்.” சதானீகன் நகைத்து சுதசோமனிடம்  “நோக்குந்தோறும் கூர்தீட்டப்படும் விழிகள்…” என்றான். “ஆசிரியர் சொல்வதுண்டு, கூர்விழிகொண்டவை சிறியவற்றை மட்டுமே நோக்கும் தீயூழ் கொண்டவை என” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி “இதற்கெல்லாம் என்னால் மறுமொழி சொல்லமுடியும்” என்றான்.

பிற மூவரும் அருகணைந்து புரவிக்கடிவாளத்தை இழுத்து நின்றனர். அவர்களைச் சூழ்ந்து எழுந்த செம்மண் பொடிப் படலம் மெல்ல அடங்கியது. புரவிகள் பெருமூச்சுவிட்டன. அவற்றின் வாயிலிருந்து நுரை வழிந்தது. ஒரு புரவி தும்மலோசையிட்டு தலையை குலுக்க மணியோசை எழுந்தது. இன்னொரு புரவி காலைத் தட்டியபடி சுழல முயன்றபோது யௌதேயன் அதை கடிவாளத்தை இழுத்து அடக்கினான்.

பிரதிவிந்தியன் “இந்நகரில் அரசகுடியினர் என்று யாரிருக்கிறார்கள்? கோட்டை எவர் காவலில்?” என்றான். சதானீகன் “இளையவன் அபிமன்யூ நேற்று முன்னாளே இங்கு வந்துவிட்டான் என்றார்கள். எந்தையரும் அன்னையும் நாளை மறுநாள்தான் வருகிறார்கள். விராட இளவரசர் நாளை வந்து சேர்கிறார். கோட்டை நமது சிற்றமைச்சர் சுரேசரின் பொறுப்பில் உள்ளது” என்றான். சுருதகீர்த்தி கண்கள் சற்று சுருங்க “அவன் தந்தையருடன் சேர்ந்து வருவதாகத்தானே சொல்லப்பட்டது?” என்றான். சர்வதன் “இல்லை அவர் முன்னரே கிளம்பிவிட்டார்” என்றான்.

சுருதவர்மன் புன்னகையுடன் “தன் மணமகளை பார்க்க விழைந்திருக்கலாம்” என்றான். சுதசோமன் “மைந்தர் பிறப்பதற்குள் மனைவியர் முகத்தை தெளிவாக பார்த்துவிடுவது நல்லது” என்றான். சுருதகீர்த்தி ஒருகணம் அவன் விழிகளை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான். பிரதிவிந்தியன் “என்ன பேச்சு இது?” என்றபின் “நம்மில் எவரேனும் முன்னரே சென்று அங்கு நான் வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிவிக்க வேண்டும். பதினெட்டாண்டு அகவை நிறைந்தபின்னர் இந்திரப்பிரஸ்தத்தின் எல்லை கடந்து நான் செல்லும் முதல் நகர் இது. பட்டத்து இளவரசனுக்குரிய முறைமைப்படி நான் இங்கு வரவேற்கப்படவேண்டும். கோட்டை முகப்பில் என் கொடி எழவேண்டும். கோட்டைக்காவலர் அணிநிரைகொண்டு படைக்கலங்கள் தாழ்த்தி வரவேற்க வேண்டும். அரசகுலத்தார் ஒருவர் வந்து என்னை எதிர்கொண்டு அழைத்துச் செல்லவேண்டும்” என்றான்.

சதானீகன் யௌதேயனிடம் “தாங்களே சென்று சொல்வதே முறை, மூத்தவரே” என்றான். சுதசோமன் “ஆம், அவர் செல்வது மூத்தவர் செல்வதற்கு நிகர்” என்றான். நிர்மித்ரன் புன்னகைத்தான். யௌதேயன் “ஆம், நான் சென்று அபிமன்யூவிடம் சொல்கிறேன்” என்றான். “நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றதென்று எடுத்துரைக்கிறேன்.” சுருதவர்மன் “சொல்லவேண்டிய முறைப்படி சொல்ல வேண்டும். அவன் எந்நிலையில் இருக்கிறான் என்று எவரும் சொல்ல முடியாது. இளமைந்தனாகவா, இரக்கமற்ற வில்லவனாகவா, எவ்வுருவை அணிந்திருக்கிறான் என்பதை அவனே சொல்லிவிட முடியாது” என்றான்.

யௌதேயன் “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான். பிரதிவிந்தியன் சர்வதனிடம் “நீயும் உடன் செல்!” என்றான். சர்வதன் “ஆம் மூத்தவரே, அவ்வாறே எண்ணுகிறேன்” என்றான். சுதசோமன் “நாம் அனுப்பாவிட்டாலும் அவன் கிளம்பிச்செல்வான். எண்ணியிருங்கள், நாம் நகர் நுழையும்போது நம்மை எதிர்கொள்ள வரும் கூட்டத்தில் அவனிருக்க மாட்டான். நேராக அடுமனைக்குச் சென்றால் மட்டுமே அவன் உண்டு எஞ்சிய உணவை நாம் கைப்பற்ற முடியும்” என்றான்.

பிரதிவிந்தியன் “மந்தா, மீண்டும் உணவைப்பற்றி ஒரு சொல்லும் எடுக்க உனக்கு ஒப்புதலில்லை. சலித்துவிட்டேன்” என்றான். சதானீகன் சிரித்து “உணவைப்பற்றி பேசாதே என்ற ஆணை பிறக்காத ஒருநாள் நம்மிடையே இல்லை. உணவைப்பற்றிய பேச்சொழிந்த பொழுதும் இல்லை” என்றான். சுதசோமன் “ஏன் பேசக்கூடாது? நானே மூத்தவரின் பேச்சில் சலிப்புற்றிருக்கிறேன். ஏடுகளுடன் புலவர்களும் முழவுகளுடன் சூதர்களும் இருபுறமும் கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து வருகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு ஒவ்வொரு சொல்லையும் எடுக்கிறார். எனக்கே எளிதாகவும் இயல்பாகவும் எவராவது பேசினால் புரிந்துகொள்ளமுடியாமல் ஆகிவிட்டது” என்றான்.

பிரதிவிந்தியன் “போதும், செல்வோம்” என்று சொல்லி புரவியை இழுத்து முன்னால் சென்றான். சுதசோமன் “உணவுண்பதில் பிழையென ஏதுமில்லை. எந்தை உண்ணாத உணவையா நான் உண்கிறேன்?” என்றான். தந்தையரின் நினைவு அவர்கள் அனைவரின் விழிகளையும் கனிவு கொள்ளச்செய்தது. சீராக குளம்படிகள் ஒலிக்கச் சென்ற புரவிகளின் மீது தலை குனிந்து தோள் தளர்ந்து கடிவாளத்தை மெல்ல பற்றியபடி அவர்கள் சென்றனர்.

சற்று நேரத்திற்குப்பின் சுருதவர்மன் “எந்தை எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகரிலா அழகனாகத் தெரிந்தார்” என்றான். சுருதகீர்த்தி சிரித்து “இப்போது முதுமையின் அழகு கொண்டிருப்பார்” என்றான். சுதசோமன் “எந்தை முதுமை கொண்டிருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். ஐம்புலன்களிலும் இறுதி வரை கூர் மழுங்காதது நாவு மட்டுமே. சுவை தேர்ந்து உண்ணவும் சுவை சமைத்து எடுக்கவும் திறன் கொண்டவர் அவர். உணவு அவரை ஆற்றல் குன்றாது வைத்திருக்கும்” என்றான். “அவர் திரும்பி வந்ததுமே இவர்கள் மூவருக்கிடையே உணவுக்கான போர் தொடங்குமென நினைக்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி.

சதானீகன் “தந்தையர் ஐவரைப்பற்றி நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. நம் சித்தத்தின் காலமின்மையில் அவர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பால் காலத்தின் பேரொழுக்கில் சென்றுகொண்டும் இருக்கிறார்கள். நேரில் காண்கையில் நாம் திகைத்து சொல்லிழப்போம் என்பதில் ஐயமில்லை” என்றான். “ஆனால் இரண்டாவது தந்தை மட்டும் மலைகளைப்போல மாறாஉடல் கொண்டு எப்போதும் இருப்பார் என்று என் உள்ளம் சொல்கிறது.”

சுருதவர்மன் இணையாக புரவியில் வந்துகொண்டிருந்த சதானீகனையும் நிர்மித்ரனையும் பார்த்து “காம்பில்யத்தில் ஒரு சுவரோவியம் உள்ளது. பாஞ்சால அரசி மணம்கொண்ட காட்சி. அதில் தந்தை நகுலர் இவர்கள் உருவில் இருந்தார்.” என்றான். திரும்பிப்பார்த்த சுருதகீர்த்தி “ஆடிப்பாவைகள் போல இரண்டாகிவிட்டார்” என்றபின் “ஒருமுறை சதானீகன் ஏரியில் குனிந்து முகம் கழுவிக்கொண்டிருந்தான். சரிவிறங்கி வந்த நான் இவர்கள் இருவரும் அங்கே பேசிக்கொண்டிருப்பதாக எண்ணி மயங்கிவிட்டேன்” என்றான்.

பிரதிவிந்தியன் திரும்பி கடுகடுத்த குரலில் “இருவரும் இணைந்து நிற்கலாகாதென்று ஆணையிட்டிருக்கிறேன் அல்லவா? விழிக்கோள் பட்டுவிடப்போகிறது” என்றான். “பொறுத்தருள்க, மூத்தவரே” என்றபடி சதானீகன் விலகி சுருதவர்மனின் அருகே சென்றான். சுதசோமன் “நானும் சர்வதனும் மற்போரிடுகையில்…” என ஏதோ சொல்லத் தொடங்க “இரட்டையுருவர் எவராயினும் சேர்ந்து பிறர் விழிமுன் நிற்கலாகாது. இது என் ஆணை” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் “அவ்வண்ணமே” என்றான். “ஏற்கனவே வேண்டிய விழிக்கோள் உள்ளது… இளவரசர்களாகவா வாழ்கிறோம் இன்று?” என முணுமுணுத்தான்.

இளங்காலை ஒளியில் அவர்களின் நிழல்கள் நீண்டு புரவிக்குளம்படிகள் படிந்த செம்மண் பரப்பில் நெளிந்து சென்றன. குளம்படித்தாளம் அவர்களின் எண்ண ஒட்டங்களை சீரமைத்தது. பிரதிவிந்தியன் பெருமூச்சுடன் கலைந்து “அவர்கள் ஏன் அவனை தெரிவு செய்தார்கள்?” என்றான். அவன் கூறுவதென்ன என்று பிற அனைவருமே அக்கணமே புரிந்துகொண்டனர். எவரும் மறுமொழி சொல்லவில்லை. “இளையவன் நம்மில் உளமுதிர்வும் நிலையமைவும் குறைந்தவன்” என்று பிரதிவிந்தியன் மீண்டும் சொன்னான்.

சுதசோமன் “விராட இளவரசியை வென்றவர் இளைய தந்தை அர்ஜுனர். அவருக்கு எப்போதும் இனியவன் சுபத்திரையன்னையின் மைந்தன்” என்றான். சுருதகீர்த்தி “ஆம், முதன்மை மைந்தனென அவர் அவனையே எண்ணுகிறார் என நான் எப்போதும் அறிந்திருந்தேன்” என்றான். பிரதிவிந்தியன் அவனை திரும்பிப் பார்த்து “தந்தையரை மதிப்பிடும் உரிமை மைந்தருக்கில்லை” என்றான். சுருதகீர்த்தி உதடுகளைச் சுழித்து முகம் திருப்பிக்கொண்டான். “அவர் அவனை வெறுக்கவும் செய்கிறார்” என்றான் சதானீகன். “ஆம், ஆனால் ஒரு துளி வெறுப்பு இருப்பது நன்று. அது விருப்பை மறுஎதிர் என நின்று பலமடங்கென பெருகச்செய்யும்” என்றான் சுருதகீர்த்தி.

பிரதிவிந்தியன் “அவர் தன் முகத்தையும் தன் மெய்த்தோழரின் முகத்தையும் அவனில் காண்கிறார் என்று அன்னை ஒருமுறை சொன்னார். மயிற்பீலியைத் திருப்பி இருவண்ணம் பார்ப்பதுபோல ஒருமுகம் இருவருடையதாக இருக்கிறது. அதிலிருந்து அவருக்கு மீட்பில்லை” என்றான். சுருதவர்மன் “ஆம், அத்தனை பேரன்பு கொண்டிருப்பதனாலேயே அவனை நோக்கி புன்னகையுடன் ஒரு சொல்கூட தந்தையால் எடுக்க முடிவதில்லை” என்றான். சுதசோமன் நகைத்து “தெய்வங்களை அஞ்சுவதுபோல மனிதர்கள் அன்பையும் அழகையும் அஞ்சுகிறார்கள்” என்றான்.

பின்னர் அவனே தனக்குள் என மகிழ்ந்து “மூத்தவரே, இம்மண்ணில் மானுடர் அஞ்சாத ஒரே தெய்வம் அன்னம்தான்” என்றான். சுருதகீர்த்தி நகைத்து “மூத்தவரைப்போலவே பேசத்தொடங்கிவிட்டீர்கள்” என்றான். பிரதிவிந்தியன் திரும்பி சுதசோமனை பார்த்தபின் “அவ்வப்போது இவனும் உகந்த சொற்களை சொல்லத்தொடங்கியிருக்கிறான்” என்றான். “இளையவனே, எண்ணிக்கொள்! பேரழகும் பேரன்பும் தெய்வங்களுக்குரியவையே. தெய்வங்களுக்குரியவை மானுடருக்கு உவகையை அளிப்பதில்லை. பெருந்துயரை, பேரச்சத்தை, எல்லையற்ற அலைக்கழிப்பை மட்டுமே அளிக்கின்றன. ஆனால் அவை தெய்வமெழும் கணங்கள் என்பதனால், அவற்றைத் தொட்டதுமே மானுடத்தின் எல்லைகளை கடந்துவிடுவதனால், மானுடர் அவற்றை தேடிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். எரியிலிருந்து விலக விட்டில்களால் இயலாது” என்றான்.

சதானீகன் “அபிமன்யு இந்தத் திருமணத்தை ஒரு பொருட்டென எண்ணவில்லையென்றுதான் நான் அறிந்தேன்” என்றான். சுருதகீர்த்தி “அவனுக்கு எப்போதுமே பெண்கள் ஒரு பொருட்டில்லை. தந்தையின் நேர்க்குருதி அவனே. மாதுலரின் குருதியும்கூட. தந்தைக்கு பெண்கள் பொருட்டல்ல. அவர் தோழருக்கு பெண்களன்றி பிறிதொன்றும் பொருட்டில்லை என்கிறார்கள்” என்றான். “நாம் தந்தையரை களியாடுவது எதற்காக? நம்மை அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ள விழைகிறோமா? அல்லது அவர்களே நாம் என்பதன் எளிமையுணர்வை அதைக்கொண்டு கடக்கிறோமா?” என்றான் சதானீகன். “நாம் அபிமன்யூவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.”

அபிமன்யூவின் பெயர் மீண்டும் பிரதிவிந்தியனை முகம் சுருங்கச்செய்தது. பிறர் ஒருவருக்கொருவர் விழிகளால் நோக்கியபின் அவனிடம் மீண்டும் சொல்லெடுக்க வேண்டாமென்று முடிவு செய்தனர். குளம்படி ஓசைகள் மட்டும் சாலையில் ஒலித்தன. பிரதிவிந்தியன் நீண்ட நேரத்திற்குப்பின் அந்த அமைதியை உணர்ந்து “இளையோனே, நெடுங்காலத்திற்கு முன் பாண்டுவின் மைந்தர் என்னும் அடையாளம் மட்டுமே கொண்டிருந்த நம் தந்தையருக்கு மீண்டும் அரசிளங்குமரர்கள் என்னும் இடத்தை அளித்தது பாஞ்சாலத்தின் மணஉறவு. படைகொண்டவர்களாக உறவு சூழ்ந்தவர்களாக அவர்களை அது மாற்றியது. பின்னர் அவர்கள் அடைந்த அத்தனை வெற்றிக்குப்பின்னாலும் துருபதர் இருந்தார். இன்று உபபாண்டவர்களில் முதல் மணம் கொள்பவன் அபிமன்யூ. துருபதர் இருந்த இடத்தில் இன்றிருப்பவர் விராடர்” என்றான்.

அவன் சொல்ல வருவதென்ன என்பதை அனைவருமே புரிந்துகொண்டனர். அவர்கள் கண்களில் அத்திகைப்பை பார்த்தபின் பிரதிவிந்தியன் சொன்னான் “விராடபுரியில் மாற்றுருக்கொண்டு நுழைந்ததுமே நம் சிறிய தந்தை சகதேவர் அவள் பிறவி நூலை நோக்கி பேரரசின் முதலரசியாக அமர்வாள் என்றும் அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தனே இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாகவும் அவன் குருதியினரே நம் கொடிவழியினராகவும் ஆவார்கள் என்றும் கணித்திருக்கிறார்”. சதானீகன் “அவ்வாறென்றால் ஏன் அவளை அவனுக்கு என முடிவெடுத்தார்கள்?” என்றான்.

சுதசோமன் “மூத்த தந்தையின் இடத்தில் நான் இருந்தால் அதையே செய்திருப்பேன். ஒரு மண உறவினூடாக அவர் யாதவர்களையும் விராடர்களையும் ஒருங்கிணைத்திருக்கிறார். மூத்தவரே, இன்று நமக்கிருக்கும் இரு படைபுலங்கள் அவர்கள் மட்டுமே” என்றான். பிரதிவிந்தியன் நீண்ட பெருமூச்சுவிட்டு “ஆம், எம்முடிவாயினும் அது எந்தையால் எடுக்கப்படும் என்றால் மறுசொல் எழமுடியாத தெய்வ ஆணையும் ஊழின் தொடரும்தான்” என்றான்.

fire-iconஉபப்பிலாவ்யத்தின் கோட்டை வாயிலில் சுரேசர் காலைவெயிலில் வழிந்த வியர்வையுடன் மேலாடையால் முகத்தை விசிறியபடி காத்திருந்தார். தொலைவில் பிரதிவிந்தியனின் புரவி தெரிந்ததும் கோட்டைக்கு மேல் இரு முரசுகள் முழங்கத்தொடங்கின. பிரதிவிந்தியனுக்குரிய ஆலிலைக்கொடி மேலேறியது. சுரேசர் “அனைவரும் சித்தமாகுக!” என்றார். யௌதேயன் “இத்தனை வீரர்கள் மட்டும்தானா?” என்றான். சுரேசர் சலிப்புடன் “இக்கோட்டையின் காவலர்கள் அனைவரும் இங்கு வந்துவிட்டார்கள். அரண்மனைக்காவலரை இங்கு கொண்டு வந்தால் அரண்மனை காப்பற்றதாக ஆகும்” என்றார்.

யௌதேயன் நிறைவின்மையுடன் தன்னைச் சூழ்ந்து நின்ற காவலர்களை பார்த்தான். அவர்களில் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமே முறைமைகள் பயின்றவர்களாகவும் ஆகவே பதற்றமற்றவர்களாகவும் இருந்தனர். விராட வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டும் தங்கள் உடைகளையும் படைக்கலங்களையும் சீரமைத்துக்கொண்டும் காற்றில் கிளைகளென அசைந்தபடியே இருந்தனர். ஒருவன் தேவையில்லாமல் இளித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் மூக்கை விரலால் நோண்டிக்கொண்டிருந்தார்.

பிரதிவிந்தியன் புரவியின் விரைவைக் குறைத்து சீர் நடையில் காற்றில் பஞ்சென கோட்டை நோக்கி வந்தான். சுரேசர் “பிற எதையும் கற்கவில்லையென்றாலும் இதில் மட்டும் தேர்ந்திருக்கிறார்” என்றார். யௌதேயன் “அவர் இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்து இளவரசர். இச்சொற்கள் அவரைப்பற்றியதென்றால் அது அரச குற்றம்” என்றான், சுரேசர் “இந்திரப்பிரஸ்தம் என்னும் அரசு இன்றில்லை” என்றார். யௌதேயன் முகம் சினத்தில் சிவந்தது. பின்னர் “இதை தாங்கள் பாண்டவ அரசர்களிடம் சொல்ல முடியுமா?” என்றான்.

“எங்கும் எண்ணியதை சொல்வதற்குப் பெயர்தான் அமைச்சுப்பணி” என்று சொன்ன சுரேசர் “இந்த முறைமைகள் எவைக்கும் இவர் உரியவரல்ல. இளைய மைந்தர் ஒருவரின் விழைவென்பதால் மட்டுமே இது இங்கு அமைக்கப்படுகிறது. பாண்டவர்கள் எந்த நிலத்தின்மேலும் முற்றுரிமை கொண்டவர்கள் அல்ல. இச்சிறு கோட்டையின் அரியணையில் விராடரின் மணமுறை பொருட்டே யுதிஷ்டிரர் அமர்ந்திருக்கிறார். இது விராட இளவரசி உத்தரையின் உரிமை நகர். அவளை மணம் கொள்பவருக்குரியது. பட்டத்து இளவரசருக்கு இங்கு எந்த முறையுரிமையும் இல்லை” என்றார்.

யௌதேயன் தணிந்து “பொறுத்தருள்க, அந்தணரே! அவரிடம் அதை சொல்ல வேண்டியதில்லை. தங்கள் வாயிலிருந்து இச்சொற்களை அவர் கேட்டால் வருந்துவார்” என்றான். சுரேசர் மெல்ல தணிந்து புன்னகைத்து “அரண்மனையிலிருந்து இந்த எதிர்வெயிலில் இத்தனை விரைவாக இங்கு வந்தது என்னை சற்று நிலையழியச் செய்தது போலும்” என்றார். யௌதேயன் “முறைமைகளினூடாகவே தன் முதன்மையை அவர் நிறுவிக்கொள்ளவேண்டியிருக்கிறது” என்றான்.

பிரதிவிந்தியன் கோட்டை முகப்பை அடைந்ததும் தலைமைக்காவலர் இருவர் முன்னால் சென்று தங்கள் வேல்களை நிலம் தொட தாழ்த்தி தலைவணங்கினர். காவலர்தலைவன் “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசருக்கு வணக்கம். உபபிலாவ்யம் தங்களை பணிந்து எதிர்கொள்கிறது” என்று முகமன் உரைத்தான். சுரேசர் கைகூப்பியபடி அருகணைந்து “வருக, இளவரசே! இங்கு நிகழவிருக்கும் மங்கலத்திற்கு முதலெழுகையாக தங்கள் வருகை அமையட்டும்” என்றார். பிரதிவிந்தியன் புரவியிலிருந்து இறங்கி கைகூப்பியபடி நடந்து வந்து “மகிழ்கிறேன், அமைச்சரே. இக்கோட்டை சிறிதெனினும் என் நினைவில் என்றும் இருக்கும்” என்றான்.

அவனுக்குப்பின்னால் புரவியிலிருந்து இறங்கிய சுதசோமன் சுரேசரிடம் “இங்கு குறைவான இடம்தான் இருக்கும்போல் தோன்றுகிறதே. இங்கா இளையவனின் மண நிகழ்வு நிகழப்போகிறது? பெரிய அடுமனை ஒன்றை அமைப்பதற்குக்கூட இடமில்லை” என்றான். “சிறிய அடுமனையிலேயே வேண்டிய அளவு சமைக்க முடியும்” என்றார் சுரேசர். சதானீகனும் சுருதவர்மனும் புரவியிலிருந்து இறங்கி சுரேசரை வணங்கினர். சுருதகீர்த்தி புரவியில் அமர்ந்தபடி கோட்டையை இருமருங்கும் விழியோட்டி நோக்கியபின் “சிறிய திருத்தங்கள் வழியாக இதை அழகும் காவலும் கொண்டதாக ஆக்க முடியும். இருபக்கமும் நான்கு காவல் மேடைகளை மரத்தால் அமைக்க வேண்டும்” என்றான்.

“நெடும்பயணம், இளைப்பாறியபின் பேசுவோம். வருக!” என சுரேசர் அவர்களை நகருக்குள் இட்டுச்சென்றார். அப்போதும் உபப்பிலாவ்யத்தின் தெருக்களில் அலங்காரப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. பாவட்டாக்களுக்கான மூங்கில்களையும் தோரணங்களுக்கான கொடிச் சரடுகளையும் கட்டும் ஏவலர்கள் பணிகளை நிறுத்தி புரவியில் தெருக்களினூடாகச் சென்ற இளவரசர்களை திரும்பிப் பார்த்தனர். குடிமக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களுக்கு வந்து நின்று வெறுமனே நோக்கினர். வணிகர்கள் விற்பனைக்கூச்சல்களை நிறுத்தி எஞ்சிய சொற்கள் நிலைத்த முகத்துடன் அவர்களை பார்த்தனர்.

பிரதிவிந்தியன் “இவர்கள் வாழ்த்து கூவ மாட்டார்களா?” என்றான். சுரேசர் “இது சிறு எல்லை ஊர், இளவரசே. இங்கு அரசகுலத்தார் வருவதும் தங்குவதும் இல்லை. இவர்களுக்கு அத்தகைய முறைமைகள் எதுவும் தெரியாது” என்றார். “இங்கு நாம் வந்து ஒரு மாதம் ஆகிறது. இதற்குள் இம்முறைமைகளை அவர்களுக்கு கற்றுத் தந்திருக்க வேண்டுமல்லவா?” என்றான் பிரதிவிந்தியன். சுரேசர் “அதற்கு முன் தாங்கள் ஓர் அரசின் குடிகள் என்று அவர்களை கற்பிக்க வேண்டியிருந்தது” என்றார். அவர் கூறியதன் பொருள் புரியாமல் திரும்பிப் பார்த்த பிரதிவிந்தியன் “அத்தனை மக்களும் ஏதேனும் அரசனின் குடிகளே” என்றான். சுரேசர் புன்னகையுடன் “ஆம்” என்றார். “அத்தனை விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும்கூட.” பிரதிவிந்தியன் அவரை திரும்பி நோக்க “நிலமென்பது உயிர்க்குலமே” என்றார். அவன் தலையசைத்தான். சுதசோமன் “தெய்வங்கள்?” என்றான். சதானீகன் “வெறுமனே இருங்கள், மூத்தவரே” என்றான்.

அரண்மனை முகப்பில் அபிமன்யூவும் பிரலம்பனும் முதன்மைக்காவலர் எழுவரும் மங்கலச்சூதரும் அவர்களுக்காக காத்து நின்றனர். புரவிகள் அரண்மனை முற்றத்தை அணுகியதும் முரசுகள் முழங்கத்தொடங்கின. கொம்புகள் உடன் இணைந்தன. “இங்கு மங்கலச் சேடியர் கூடவா இல்லை…?” என்று பிரதிவிந்தியன் கேட்டான். “அனைவரையும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கொண்டு வர வேண்டியிருக்கிறது. நாளையும் நாளை மறுநாளுமாக அவர்கள் வந்து சேர்வார்கள்” என்று சுரேசர் சொன்னார். “அரசமுறைப்படி நாம் எவரையும் அங்கிருந்து கொண்டுவர முடியாது. விராடபுரியிலிருந்து அவர்களை வரச்சொல்வதும் உகந்ததல்ல. யாதவபுரி இன்னமும் நமது தொடர்பில் இல்லை. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து ஏவலரையும் சேடியரையும் சூதரையும் பிறர் அறியாமல் கொண்டு வரவேண்டியிருக்கிறது.”

அதை செவி கொடுக்காமல் “மிகச்சிறிய அரண்மனை” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன். “அரண்மனை என்ற சொல்லின் எடையை அது தாங்காது. உத்தரங்கள் விரிசலிட்டுவிடக்கூடும்” என்றான். உள்கோட்டை வளைப்புக்குள் புரவிகள் நுழைந்ததும் அங்கு நின்றிருந்த நான்கு மங்கல சூதர்கள் முழவுகளையும் கொம்புகளையும் முழக்கினர். அபிமன்யூ வணங்கியபடி அருகணைந்து தலைபணிந்து “மூத்தவரை உபபிலாவ்யத்திற்கு வரவேற்கிறேன். இவ்வரண்மனை தங்கள் வருகையால் நிறைவு கொள்க!” என்றான். பிரதிவிந்தியன் இறங்கி “தந்தையர் நாளை வருகிறார்கள் என்றார்கள்” என்றான். “ஆம். நாளை மறுநாள் முதல் இங்கு வருகையாளர் பெருகத் தொடங்குவார்கள்” என்று அபிமன்யூ சொன்னான்.

சதானீகன் “நீ களம் கண்டு வென்ற செய்தியை இந்திரப்பிரஸ்தத்தில் சூதர்கள் பாடினார்கள்” என்றான். அபிமன்யூ “கேட்க ஆவல் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் அடைந்த வெற்றிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளுக்குப்பின் நான் வெல்ல பாரதவர்ஷத்திலேயே மன்னர் எஞ்ச மாட்டார்கள் என்று தோன்றுகிறது” என்றான். திரும்பி பிரலம்பனிடம் “நான் சொன்னேன் அல்லவா? பாரதவர்ஷத்தில் போர்களையே சூதர்கள்தான் நிகழ்த்துகிறார்கள்” என்றான். பிரதிவிந்தியன் “இவர் யார்?” என்றான். “இவர் என் அணுக்கர், ஒற்றரும் கூட” என்றான் அபிமன்யூ.

சதானீகன் “இத்தனை வெளிப்படையாக பகல் வெளிச்சத்தில் வந்து நிற்கும் ஒற்றனை இதற்கு முன் கண்டதில்லை” என்றான். “அதுதான் இவருடைய தனிச்சிறப்பே. அவரை ஒற்றர் என்று அறிமுகம் செய்தால்கூட எவரும் நம்புவதில்லை” என்று அபிமன்யூ சொன்னான். “வருக! அரண்மனைக்குள் செல்வோம்” என்று அழைத்துச் சென்றான். பிரதிவிந்தியன் “நான் சற்று ஓய்வெடுக்க வேண்டும். இங்கு நீராட்டறைகள் உள்ளன அல்லவா?” என்றான். “நீராட்டறைகள் ஏலவர் நறுமணப்பொருட்கள் அனைத்துமே உள்ளன, குறைவாக சிறிதாக” என்று அபிமன்யூ சொன்னான்.

அவர்கள் உள்ளே நடக்கையில் சுருதகீர்த்தி அபிமன்யூவிடம் “நீ தந்தையை கண்டாயா?” என்றான். அபிமன்யு “ஆம், காம்பில்யத்தில் நேருக்கு நேர் கண்டேன்” என்றான். சுருதகீர்த்தி “முதிர்ந்திருக்கிறாரா? உடல் நலம் குன்றியுள்ளாரா?” என்றான். “உண்மையை சொல்லப்போனால் நான் ஒருமுறைதான் பார்த்தேன். உடனே விழிகளை விலக்கிக்கொண்டு தலைகுனிந்தேன் அதன் பிறகு நோக்கவேயில்லை. அவர் குரலை வைத்துப் பார்த்தால் முதுமையோ நலிவோ இல்லாமல் இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது” என்றான் அபிமன்யூ. “மூடன்” என்று சுருதகீர்த்தி தலையை திருப்பிக்கொண்டான்.

சுதசோமன் திரும்பி “எந்தை எப்படி இருக்கிறார்?” என்றான். “காலமில்லா மாமலைகளைப்போல” என்று அபிமன்யூ சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. சதானீகனும் சுருதவர்மனும் அபிமன்யூவை சூழ்ந்துகொண்டு “எந்தையரை பார்த்தீர்களா? என்ன சொன்னார்கள்? உளம்நைந்துள்ளனரா?” என்றனர். “அனைவரும் நலமாக இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்களின் இளமைத் தோற்றத்தை ஓரிரு கணங்களுக்குப்பின் மறந்துவிடுவோம். என்றுமே இவ்வாறே நம்முன் இருந்தார்கள் என்று எண்ணத்தலைப்படுவோம்” என்றான் அபிமன்யூ. “ஏன்?” என்றான் நிர்மித்ரன்.

“இங்கிருந்து அவர்கள் சென்றபோது இல்லாத ஒன்று இப்போது அவர்களிடம் இருக்கிறது. கூர்கொள்கையில் வாளிலும் சுடர் ஏறுகையில் அகலிலும் அவற்றுக்குரிய தெய்வங்கள் குடியேறுகின்றன” என்றான் அபிமன்யூ. “நீண்ட பயணம்” என்று யௌதேயன் சொன்னான். “பதின்மூன்று ஆண்டுகள் கானுறைவாழ்வென்பது எவரையும் அழிக்கும். அழிக்கப்படாதவர்கள் மறுபிறப்பெடுத்தவர்கள்.” சுதசோமன் “எந்தை நம்மிடம் முழுமையாக மீளமாட்டார் என்று தோன்றுகிறது” என்றான்.

“நான் விந்தையான ஒரு உணர்வை அடைந்தேன்” என்று பிரலம்பன் சொன்னான். அவர்கள் திரும்பி நோக்க “பாண்டவ மூத்தவர்கள் இங்கிருந்து செல்லும்போதிருந்த உருவில் நீங்கள் எஞ்சுகிறீர்கள். பட்டத்து இளவரசர் பிரதிவிந்தியரும் யௌதேயரும் அரசர் யுதிஷ்டிரரைப்போன்று இருக்கிறார்கள். சுதசோமரும் சர்வதரும் இளைய பீமசேனரைப்போல. இளவரசர் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் அர்ஜுனரைப்போல. நிர்மித்ரரும் சதானீகரும் நகுலரைப்போல. சுருதவர்மர் சகதேவரின் உருவம். தங்களை உங்கள் வடிவில் இங்கு விட்டுவிட்டு கிளம்பிச்சென்று பிறிதென்றென உருமாறி மீண்டும் வந்திருக்கிறார்கள்.”

அவன் எண்ணியதற்கு மாறாக அவர்கள் அனைவரும் ஆழ்ந்த அமைதியை அடைந்து ஓசையின்றி நடந்தனர். பிரலம்பன் தான் பிழையாக ஏதேனும் சொல்லிவிட்டோமா என எண்ணினான். ஆனால் அந்த ஒப்புமையின் இனிமை அவன் நெஞ்சிலிருந்தமையால் அதை பொருட்படுத்தவும் தோன்றவில்லை.

நூல் பதினைந்து – எழுதழல் – 28

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 6

fire-iconஅறைக்கு வெளியே வந்து இடைநாழியில் வீசிய காற்றை உடலெங்கும் உணர்ந்தபோது அபிமன்யூ ஆறுதலை அடைந்தான். ஏன் இங்கே வந்தோம்? இவளை ஏன் சந்தித்தோம்? ஒட்டுமொத்தமாக எண்ணியபோது அதிலிருந்த பொருளின்மை திகைப்பூட்டியது. ஏன் இந்த சந்திப்பு இப்படியெல்லாம் ஆயிற்று என்ற எண்ணம் எழுந்தது. அதற்கிணையான சந்திப்புகள் எவை என எண்ணத்தை ஓட்டினான். ஒவ்வொரு முறையும் தன் திசைப்பயணத்திலிருந்து தந்தை திரும்பி வரும்போது நாள் நாள் என ஆண்டுகளாகக் காத்திருந்து அணைந்த அத்தருணத்தில் ஒவ்வொரு சொல்லாக திட்டமிட்டு ஒவ்வொரு அசைவையும் நூறுமுறை நிகழ்த்தியபின் அமையும் சந்திப்புகள் அனைத்தும் அவ்வாறே ஆகின. சந்திப்புகளை நாம் அமைக்கலாகாதா? அவை நிகழவிட்டுவிடவேண்டுமா?

அத்தருணங்களில் முற்றிலும் அறியாத எண்ணங்களும் உணர்வுகளும் எழுந்துவருகின்றன. எழுந்ததுமே அவை திகைப்பூட்டி திகைத்து நிற்கின்றன. உள ஓட்டத்தைக் கலைத்து உணர்வுகளை அலைபாயச்செய்து பொருளற்ற சொற்களும் இசைவு பெறாத முகபாவங்களுமாக காற்றில் புகை கலைவதுபோல நோக்க நோக்க உருவழிகிறது அந்தப்பொழுது. பெரும்பாலும் மிகச் சிறிய நினைவுகள். தொடர்பற்றவை, கலைந்தபடியே எழுந்து கலைபவை. அத்தருணத்தால் தொடப்பட்டு விழித்தெழும் அவை அதுவரை எங்கிருந்தன என்று வியப்பூட்டுகின்றன. அதைவிட அவை ஏன் அங்கெழுந்தன என திகைப்பளிக்கின்றன.

கைவிரித்து “வா… வா என் வில்லவனே” என்று சிரிக்கும் பற்களின் வெண்மையை அருகெனக் கண்டு கால்தயங்கிய மறுகணம் அரண்மனைச்சேடி சுபகையின் விழிகள் நினைவிலெழுந்தன ஒருமுறை. அவன் விழிகள் அணைவதைக் கண்ட அர்ஜுனன் எழுந்து வந்து அவன் இடையை வளைத்து அருகணைத்துக்கொண்டான். “வியர்வை மணம்…” என்றான். “நீராடுவதேயில்லை… இரவுபகல் என காட்டிலும் களத்திலும் வில் பயில்கிறான். சேடியரிடம் நான் சொல்லிச் சொல்லி சலித்துவிட்டேன்” என்றாள் சுபத்திரை. சிரித்து “வெயில் இளமைந்தருக்கு நன்று” என்றான் அர்ஜுனன். “வில்லில் இனி அறிய என்னவுள்ளது, மைந்தா?” அபிமன்யூ புன்னகைத்து “அறிதொறும் அகல்வது” என்றான்.

அப்போது சுபகை ஏன் நினைவுக்கு வந்தாள்? அவள் அஸ்தினபுரியிலிருந்து வந்து சில நாட்கள் மட்டும் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்துவிட்டு மீண்டுசென்ற செவிலி. அவள் முகத்தையே அவன் மறந்துவிட்டிருந்தான். ஆனால் ஒவ்வொருமுறையும் எளிய பொருளற்ற நினைவுகளே ஊடே செல்கின்றன என்பதை அவன் பின்னர் அறியலானான். அவை மானுடர் அறியும் பொருள்கொண்டவையல்ல, தெய்வங்கள் அறியும் நுண்மைகொண்டவைபோலும் என எண்ணிக்கொண்டான். பின்னர் சுபகையை ஒருமுறை நோக்குகையில் அப்பொருளின்மை அச்சமூட்டுமளவுக்கு விரிந்தது. அவள் நினைவுடன் ஒரு பழைய பீதர்நாட்டு நீர்க்கலமும் என்றோ கண்ட நீர்நிலை வாத்து ஒன்றும் இணைந்து எழுந்ததை அப்போது நினைவுகூர்ந்தான். ஒவ்வொன்றையும் இணைத்துக்கொண்டு இங்கு விரியும் அறியா வலைகளும் முடிவற்றவை.

ஒவ்வொருமுறையும் அத்தகைய சிதையும் தருணங்களை ஆடிமுடித்து விலகுகையில் எழும் விடுதலை உணர்வையே அதன் இனிமை என்று அவன் நினைவில் கொண்டிருந்தான். அவனைக் காணும்போது அர்ஜுனனின் விழிகளில் எழுவதென்ன என்பதை உபப்பிலாவ்யத்தின் சிறுமாளிகையின் மரப்படிகளில் கால்கள் ஒலிக்க இறங்குகையில் எண்ணிக்கொண்டான். நினைவறிந்தபின் அந்த விழிகளை முதற்கணம் சந்தித்தபின் முற்றும் தவிர்ப்பதே அவன் வழக்கம். சந்திப்பு முடிந்தவுடன் அவ்விழிகளை அழுத்தி எங்கோ நினைவு தொடா ஆழத்தில் புதைப்பான். பிறகு எப்போதும் அவற்றை மீட்டெடுப்பதில்லை.

ஒவ்வொரு படிக்கும் ஒன்றென அர்ஜுனனின் அனைத்து விழிக்கணங்களையும் அவன் எடுத்து தன் முன் நிறுத்தினான். ஒவ்வொரு முறையும் முதற்கணம் அவன் அர்ஜுனனுக்கு அளித்தது திகைப்பையே என்றுணர்ந்தான். ஒவ்வாமையென அத்திகைப்பு திரிபடையும் மறுகணம் அவன் நோக்கை விலக்கிக்கொண்டிருக்கிறான். உதடுகள் நகைக்க தோள்கள் அள்ளியணைக்க விரிய விழிகள் மட்டும் ஏன் அவ்வுணர்வை சூடிக்கொள்கின்றன? ஒவ்வாமையை ஏன் அவர் அடைந்தார்? ஒவ்வாமையா அது? இன்று என்னை நோக்கி இவள் வரும்போது நான் அடைந்த உளக்கலைவைத்தான் அவரைப் பார்க்க நான் அணுகும்போது அவர் அடைந்தாரா?

நின்று மீண்டும் ஒவ்வொரு விழியாக கண்முன் தோன்றச்செய்தான். திகைப்பு திகைப்பு திகைப்பென்று தொட்டுச் சென்று நின்று நீள்மூச்சுவிட்டான். எதன்பொருட்டு அத்திகைப்பு? அவனை அர்ஜுனனின் சிறுவடிவம் என்பார்கள். அர்ஜுனனின் வில்லுணர்ந்த கைகளின் மிகச் சிறந்த அசைவுகளால் மட்டுமே ஆனவை அவன் கைகள் என்பார்கள். அர்ஜுனன் தன் கனவிலிருந்து எடுத்த மைந்தன் என்று சூதர் பாடினர். ஆடியில் எழுவதை நோக்குவதற்கு முற்கணம் எவரும் அறிந்திருப்பதில்லை.

ஆடியைப்பற்றி முன்பு எவரோ சொன்னார்கள். கனவென எங்கோ இருந்த இளமையில். அப்போது சுபகை அங்கிருந்தாள். அவள் சிரிப்பு அவன் உள்ளத்தில் பதிந்தது அப்போதுதான். ஆடி குறித்து சொல்லப்பட்டதென்ன? அது அர்ஜுனன் கீழ்த்திசைப்பயணம் முடித்து இந்திரப்பிரஸ்தம் வந்தபோது. அவன் நினைவில் தெளிவாக இருக்கும் தந்தையின் வடிவம் அன்று அவன் பெற்றதே. அன்றுதான் சுபகையின் அப்புன்னகை. ஆனால் ஆடி குறித்து அன்று அவர் ஏதோ சொன்னார். அல்லது சுபகை சொன்னாள். அல்லது ஆடி ஒன்று அங்கிருந்ததா?

அவனுக்கு மூன்று வயது இருக்கையில்தான் தன் திசைப்பயணத்திலிருந்து அவர் திரும்பி வந்திருந்தார். அவன் அன்னை கருவுற்றிருக்கையில் அவளை துவாரகையில் விட்டுவிட்டு கிளம்பிச்சென்றவர். நெஞ்சைத் தொடும் தாடியும் தோள்களில் பரவி கீழிறங்கும் நீண்ட குழலும் கொண்டிருந்தார். தாடியில் குழல்களில் வெண்மயிர்க்கற்றைகள் கலந்திருந்தன. அன்று அவர் விழிகளில் திகைப்பு இருக்கவில்லை. மீண்டும் மீண்டும் நினைவிலெழும் அம்முகத்தில் தந்தையெனும் பெருமிதச் சிரிப்புதான்.

அவனை அழைத்துச் சென்று காண்டீபத்தை காட்டினார். அதை அவன் கையில் எடுத்து வைத்து ஒரு களிப்பாவையென்றாட முடியுமென்று கற்பித்தார். அன்றே அவன் கைகள் வில்லை அறிந்திருந்தன, ஆனால் நாவில் சொல்லெழத் தொடங்கவில்லை. குதலைமொழியில் உடன்பிறந்தாருக்கும் அன்னைக்கும் ஆணைகளை மட்டுமே விடுத்துக்கொண்டிருந்தான். அவனை அள்ளி அணைத்து மேலே வீசிப்பிடித்து அவர் நகைத்தார். “உனக்கெதற்கு சொல்? அம்புமுனையால் பேசுக, என் அரசே!” என்றார்.

அபிமன்யூ அந்நினைவால் புன்னகைத்தபடி முற்றத்தில் நின்றான்.  ஒவ்வாமையுடன் ஒவ்வொரு கணத்தையும் நடித்து கடக்கும் அர்ஜுனனுக்குள் அவனுக்கு மட்டுமேயான புன்னகை இருந்தது என்று எண்ணிக்கொண்டான். இது என் விழைவல்ல, அங்கு அது உண்மையிலேயே இருந்தது. மீண்டும் காலெடுத்த கணம் குளிர்போல் அவனை வந்து சூழ்ந்து தூக்கிக்கொண்டது அவ்வறிதல். அந்த ஒவ்வாமை அவன் காண்டீபத்தை கையில் எடுத்த கணம் உருவானது.

fire-iconஅபிமன்யூ அப்போதுதான் சற்று கண்ணயர்ந்திருந்தான். விடிவெள்ளி எழுந்த பின்னரே அவன் உபப்பிலாவ்யபுரியின் கோட்டையிலிருந்து தன் மஞ்சத்தறைக்கு வந்தான். முந்தைய நாள் இரவும் பகலும் துயிலாதிருந்ததன் முழுக் களைப்பும் படிகளில் ஏறும்போதுதான் தெரிந்தது. உடலை நனைந்த மரவுரிச்சுருள் என தூக்கிக்கொண்டு சென்றான். மஞ்சம் அதன் மென்மையால், தூய்மையால் அவனை அழைத்தது. ஆடை மாற்றிக்கொள்ளவோ உடல்தூய்மை செய்துகொள்ளவோ முயலாமல் வாளை உருவி குறுபீடத்தின் மீது வைத்துவிட்டு மஞ்சத்தில் அமர்ந்து தோல்காலணிகளை கால்களாலேயே கழற்றி அறை மூலையில் வீசிவிட்டு மல்லாந்து படுத்தான். அக்கணமே உடலிலிருந்த எடையனைத்தும் விலக மிதப்பது போன்ற உணர்வை அடைந்தான்.

மஞ்சம் எத்தனை இனியது என்ற எண்ணம் எழுந்தது. அதில் படுத்து புரள வேண்டுமென்றும் கைகால்களால் அதை தழுவிக்கொள்ள வேண்டுமென்றும் உளம் எழுந்தது. உடற்தசைகளின் வலியும் களைப்பும் கைகளை விரித்தும் கால்களைச் சொடுக்கியும் புரண்டு புரண்டு படுக்கச்செய்தன. பின்னர் மெல்ல ஒவ்வொரு தசையாக முறுக்கவிழ கைகள் எடைகொண்டு மெத்தையில் பதிய இமைகள் சரிந்து எண்ணங்களின்மேல் இனிய அசைவின்மை ஒன்று படர துயிலத் தொடங்கியபோது எத்தனை இனியது என்னும் சொல்லாக அத்தருணம் நெஞ்சில் நின்றது.

மஞ்சம் என்று பிறிதொரு சொல் எழுந்ததும் ஒருவித உளநடுக்கை அடைந்தான். மஞ்சமென்று சிதையையும் சொல்வதுண்டு என்னும் எண்ணம் அந்நடுக்கின் ஒரு பகுதியாக எழுந்து வந்தது. அதுவும் இனிது என முதியவர்கள் சொல்லக் கேட்டிருந்தான். அவன் மூத்த தந்தை பீமனை வளர்த்த செவிலியன்னை அனகை இறப்புத் தருவாயில் இருப்பதை ஏவலர் சொல்ல பிற இளவரசர்களுடன் பார்ப்பதற்காகச் சென்றிருந்தான். பிரதிவிந்தியன் “அவர் செவிலியாயினும் நம் மூதன்னையருக்கு நிகரானவர். நம் சொற்கள் அவரை நிறைவுறச் செய்யவேண்டும். இது நம் கடமை” என்றான். சுதசோமன் “கடமைக்காக செல்கிறோமா? அவ்வாறென்றால் முறைமைச் சொற்களையும் சொல்லிவிடுங்கள் மூத்தவரே, ஒப்பித்துவிடுகிறோம்” என்றான். “நீ வீணன். உன் நாவில் இளிவரலே என்றும் எழுகிறது” என்றான் பிரதிவிந்தியன். சுருதவர்மன் “மூத்தவரே, நாம் தேரில் செல்கையில் நகரே நம்மைப் பார்க்கிறது என்பதை நினைவில் கொள்க!” என்று சுருதகீர்த்தியிடம் சொன்னான்.

இந்திரப்பிரஸ்தத்தில் சூதர் தெருவில் தன் மைந்தர்மைந்தனின் இல்லத்தின் இடப்பக்கச் சிற்றறையில் அனகை கிடந்தாள். மெலிந்து தோல் சுருங்கி உலர்ந்த சுள்ளிக்கட்டுபோல் ஆகியிருந்த உடல் மரவுரி மஞ்சத்தின் ஒரு மூலையில் என வளைந்து ஒடுங்கியிருந்தது. மூடிய கண்களுக்குள் இமைகள் அசைவதை அபிமன்யூ கண்டான். நரைகுழல் நெடுநாள் அழுக்கு கலந்து திரிதிரியாக மென்மரத்தில் செதுக்கப்பட்ட தலையணையைச் சுற்றிலும் விழுந்துகிடந்தது. அவர்களை உள்ளே அழைத்துச்சென்ற அவள் பெயர்மைந்தர்கள் முத்ரனும் சுகிர்தனும் அவளருகே சென்று குனிந்தனர். ஓசை ஒவ்வொன்றுக்கும் அவள் உடல் யானத்து நீர்வட்டமென மெல்ல விதிர்த்து எதிர்வினையாற்றியது. “பல நாட்களாக நினைவே இல்லை. எதுவும் இனி கருதவேண்டியதில்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார்” என்றான் முத்ரன். பிரதிவிந்தியன் அவளருகே சென்று “செவிலியன்னையே, நான் இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்து இளவரசன் பிரதிவிந்தியன்… தங்களை பார்க்க வந்துள்ளேன்” என்றான். அவள் இமைகள் அதிர்ந்தன. உலர்ந்து ஒட்டிய உதடுகள் மெல்ல பிரிந்தன.

பிரதிவிந்தியன் “நினைவு மீளவில்லை” என்றான். “அன்னையே, அன்னையே” என்றான் சுதசோமன். “எதையும் அன்னை அறிவதில்லை” என்றான் முத்ரன். பிரதிவிந்தியன் “நினைவு மீள்கையில் நாங்கள் வந்ததை நீர் தெரிவிக்கவேண்டும். அன்னை அதை பெருமதிப்பாக கொள்வார். எங்கள் அரசகுடிக்கென வாழ்ந்தவர் அவர்” என்றான். சுருதகீர்த்தி “ஆம், விண்ணுலகிலும் அவருக்கு அச்சொல்லே நுழைவொப்புதலாக அமையும்” என்றான். சுருதவர்மன் திரும்பி விழிகளால் சீற சுருதகீர்த்தி புன்னகை செய்தான்.

அபிமன்யூ அருகே அமர்ந்து அவள் சிறிய கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டான். மிக மெல்லியவை. விரல்கள் எலும்புத்தொகைபோல் இருந்தன. அவன் ஒரு கைக்குள் அவள் இரு கைகளையும் அள்ள முடிந்தது. எத்தனை சிறிய கைகள்! முதுமை உடலை குறுக வைக்கும் என அவன் அறிந்திருந்தான். ஆனால் அத்தனை சிறிதென ஆக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான். பாரதவர்ஷத்தின் பேருடலரை பல்லாண்டுகாலம் இந்தக் கைகள் சுமந்திருக்கின்றன. இந்த முலையிலிருந்து அவர் பாலருந்தியிருக்கிறார். விந்தையுணர்வும் அதைத் தொடர்ந்து ஓர் அமைதியின்மையும் ஏற்பட்டது.

அவன் கைகளை மெல்ல மரவுரி மெத்தையில் வைத்தபோது அவள் அதிர்ந்து விழிதிறந்து அவனை பார்த்தாள். பாலாடை பரவியதுபோன்ற விழிகள். நடுவே நரைத்த கருவிழிகள் தத்தளித்தன. மீண்டும் விழியிறங்கிச் சரிந்தது. அவன் சற்றுநேரம் நோக்கிவிட்டு மெல்ல எழுந்துகொண்டான். அப்போது பின்னால் விசும்பலோசையை கேட்டான். சுதசோமன் உதடுகளை அழுத்தியபடி அழுகையை அடக்கினான். “மந்தா, என்ன இது?” என்றான் பிரதிவிந்தியன். “இளவரசர் அழுவது மரபல்ல…” சுதசோமன் “ஆம்” என்று தன் முகத்தை துடைத்தான். அவன் பெரிய தோள்கள் அவ்வசைவிலேயே எடைதூக்குபவன்போல புடைத்தெழுந்தன.

அனகை விழிதிறந்து “இளவரசே!” என்றாள். பிரதிவிந்தியன் “சொல்க, செவிலியன்னையே! நாங்கள் அனைவரும் உள்ளோம்” என்றான். சதானீகன் சுதசோமனின் தோளைப்பற்றி முன்னால் உந்தி “மூத்தவரே, அவர் தேடுவது உங்களை” என்றான். அபிமன்யூ “ஆம்” என்றபின் சுதசோமனை அனகையின் அருகே செல்லவைத்தான். “இளவரசே, உங்கள் உணவு ஒருங்கியிருக்கிறது” என்று அனகை சொன்னாள். சுதசோமன் அபிமன்யூவை திரும்பி நோக்க “ஆம் என்று சொல்லுங்கள்” என அவன் உதடசைவால் சொன்னான். “ஆம், உண்டுவிட்டேன் அன்னையே” என்றான் சுதசோமன்.

“நீங்கள் வருவதற்காக காத்திருந்தேன். பதின்மூன்று ஆண்டுகள். அதற்குள் உயிர் துறக்கலாகாதென்றிருந்தேன்” என்றாள் அனகை. “ஒருமுறை மீண்டும் இப்பெருந்தோள்களை விழிதொட்டால்தான் செல்லுமிடத்தும் எனக்கு நிறைவிருக்கும்.” அபிமன்யூ “சற்றுமுன்னர்தான் வந்தார், அன்னையே” என்றான். “இளைய தந்தை என எண்ணுகிறார், பாவம்” என பிரதிவிந்தியன் முணுமுணுத்தான். “பொய்தான், ஆனால் இறப்புத்தருணத்தில் இதை செய்யலாமென நெறிநூல்கள் ஒப்புகின்றன.” அனகை “பெருந்தோள்கள்…” என்றாள். சுதசோமன் அவள் கைகளை எடுத்து தன் தோள்கள்மேல் வைத்துக்கொண்டான். அவை உயிரற்றவைபோல அங்கே இருந்தன. அவன் கை தளர்ந்ததும் உருவி விழுந்தன.

“இனி எனக்கு இங்கே ஏதும் எஞ்சுவதில்லை. இனிய மஞ்சம். இங்கு கடுங்குளிர். இரவுகளில் என் எலும்புகள் நடுங்குகின்றன. ஆனால் மஞ்சத்திலிருந்து வெம்மை எழுகிறது” என்றாள். “மஞ்சத்தில் அனலுறங்குகிறது…” அவள் உதடுகள் மெல்ல பிரிந்தன. “அந்த மஞ்சம் வெம்மை மிக்கது” என்றபின் விழிதிருப்பி அவனைப் பார்த்து பற்களற்ற கரிய ஈறுகள் தெரிய புன்னகை புரிந்தாள். “அந்த மஞ்சத்தில் வெம்மையான செந்நிறப் பட்டு உண்டு என்பார்கள். இப்புவியிலேயே தூய பட்டு அது.” அப்புன்னகை நிலைத்திருக்க விழிகள் மூடின. சுதசோமன் விம்மியழுதபடி அவள் கால்களில் தலையை வைத்தான். சதானீகன் அவன் தோளைத்தொட்டு “கிளம்புவோம், மூத்தவரே” என்றான். பிரதிவிந்தியன் “ஆம், இவன் அழுது ஊரைக்கூட்டிவிடுவான். செல்வோம்” என்றான்.

அவர்கள் அரண்மனை திரும்புவதற்குள்ளேயே அவள் இறந்துபோனாள் என்று செய்தி வந்தது. மறுநாள் நிகழ்ந்த எரியூட்டுக்கு அவர்கள் தெற்குக்காட்டுக்குச் சென்றபோது சுதசோமன் மட்டும் விழிநீர் வழிய தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவனை நோக்கிக்கொண்டிருந்தபோது எங்கோ ஏனென்றறியாமல் மூத்த தந்தை பீமசேனர் அப்போது துயர்கொண்டிருப்பார் என எண்ணிக்கொண்டான். திரும்பி சுதசோமனை மீண்டும் நோக்கியபோது அவனிடமும் பீமசேனரிடமும் உள்ள மென்மையான ஏளனம் அனகையிடமிருந்து வந்தது என்று தோன்றியது.

சிதையில் அனகை பிறிதொரு விறகுபோல வைக்கப்பட்டிருந்தாள். அவள் உடல்மேல் வெண்பட்டை பிரதிவிந்தியன் போர்த்தினான். அதன்பின் அவள் குடிமூத்தார் அனைவரும் பட்டுமூடினர். சுகிர்தனும் முத்ரனும் இணைந்து ஈமச்சடங்குகளை செய்ய முத்ரன் அனல் மூட்டினான். அப்போது அருகே நின்றிருந்த நாவல்மரத்திலிருந்து பெரிய குரங்கு ஒன்று இறங்கி வருவதை அபிமன்யூ கண்டான். அனைவரும் வியப்பொலி எழுப்பினர். கைகளை மெல்ல ஊன்றி சிதையை நோக்கியபடி வந்த தாட்டான்குரங்கு அமர்ந்து இரு கைகளையும் மடிமேல் வைத்துக்கொண்டு இமைசிமிட்டி நோக்கியது. எரியெழுந்தபின் அவர்கள் திரும்பிநோக்காமல் மீண்டனர். அக்குரங்கு எரியணைவதுவரை அங்கிருந்ததாக மறுநாள் சிதைப்பேணுநர் சொன்னார்கள்.

Ezhuthazhal _EPI_28

விழித்துக்கொண்ட அபிமன்யூ எவரோ சொன்ன சொற்றொடர் ஒன்றை நினைவுகூர்ந்தான். அக்குரலுடன் அது எழ அறைக்குள் எவரோ இருப்பதைப்போல் உணர்ந்தான். எழுந்தமர்ந்து மீண்டும் அச்சொற்றொடரை நினைவிலோட்டினான். “பதினெட்டாவது தெய்வம் நேமி என்று பெயர் கொண்டது. அவரது ஆடிப்பிம்பம் போலவே அது இருக்கும். அவர் கொள்ளும் ஆற்றலை அவரிடமிருந்தே அதுவும் கொள்ளும்.” எவர் எவரிடம் சொன்னது அது என அவன் தன் நினைவை துழாவிக்கொண்டே இருந்தான். பின்னர் சலித்து அதை விட்டுவிட்டு எழுந்து நின்று சோம்பல் முறித்தான்.

fire-iconசிற்றமைச்சர் சுரேசர் ஓலைகளை கொண்டு வந்து அபிமன்யூவின் முன்னால் பரப்பி வைத்து ஒவ்வொன்றாக எடுத்து அனுப்புநர் பெயர்களைச் சொல்லி அவனிடம் அளித்தார். அபிமன்யூ அவற்றை வாங்கி இலச்சினையை மட்டும் நோக்கினான். மற்றபடி அவற்றில் உள்ள அனைத்துச் சொற்றொடர்களும் ஆயிரம் ஆண்டுகளாக அந்தணர்களால் மீண்டும் மீண்டும் மாற்றமின்றி எழுதப்படுபவை என அறிந்திருந்தான். ஓலையை கீறிச்சென்ற எழுத்துகளினூடாகக் கடந்து இறுதிக்கு முந்தின வரியை மட்டும் படித்து அப்பால் வைத்தான். மணநிகழ்வுக்கு வரும் அரசர்களின் பட்டியல் அதில் இருந்தது.

“இவ்வோலைகளை மூன்றாக பிரித்திருக்கிறேன், இளவரசே” என்றார் சுரேசர். “முதல் தொகையிலுள்ளவை நம் அழைப்பை ஏற்றதுமே மகிழ்வுடன் வருகிறோம் என்று ஒப்புக்கொண்டவர்களின் ஓலைகள். இரண்டாம் தொகுப்பிலுள்ளவை சொற்றொடர்களில் சற்று தயக்கமும் முறைமையின் பொருட்டே வருகிறோம் என்ற உட்குறிப்பும் கொண்டவை. மூன்றாம் தொகையிலுள்ளவை வர இயலாமைக்கான மறுப்புகள். முதல் தொகை மிகச் சிறிது. உண்மையில் குந்திபோஜரும் விராடநாட்டுடன் குருதியுறவுகொண்டுள்ள மச்சநாட்டரசர்களும் மட்டுமே உவகையுடன் வர ஒப்பியிருக்கிறார்கள். வத்சநாட்டரசர் சுவாங்கதரும் துஷார மன்னர் வீரசேனரும் திரிகர்த்த மன்னர் சுசர்மரும் கேகய மன்னர் பிருகத்ஷத்ரரும் மல்லநாட்டரசர் ஆகுகரும் இரண்டாம் தொகையில் உள்ள மன்னர்கள்.”

“மணநிகழ்வின் நாளும் நிகழும் இடமும் சூழ்ந்தபின் அவை முடிவெடுத்து அறிவிப்பதாக சொல்கின்றன பெரும்பாலான ஓலைகள். வர இயலாமைக்கான ஏதுவாக இவற்றில் ஒன்றை அவர்கள் சொல்லப்போகிறார்கள். பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் பெரும்பாலானவர்கள் இவ்வாறே மறுமொழி அளித்திருக்கிறார்கள். வர இயலாதென்று உறுதியான மறுப்பை தெரிவித்தவர்கள் மகதர், கலிங்கர், மாளவர், கூர்ஜரர், ஆஃபிரர், அவந்தி, வங்கம், பிரக்ஜ்யோதிஷம் போன்ற நாடுகள். நம்மிடம் வெளிப்படையாகவே வஞ்சத்தை உணர்த்துபவர்கள்” என்றார் சுரேசர். “இளைய யாதவர் எண்ணியதற்கு மாறாகவே நிகழ்கிறது. நம்முடன் இப்போது ஆற்றல்மிக்க ஷத்ரிய அரசுகள் எவையும் இல்லை.”

அபிமன்யூ “அஸ்தினபுரியிலிருந்து வந்த செய்தி என்ன?” என்றான். “ஓலை அவர்களுக்கும் சென்றது. மணநிகழ்வுக்கு உரிய முறையில் அழைப்பை எதிர்பார்ப்பதாக திருதராஷ்டிரரின் கைச்சாத்திட்ட மாற்றோலை வந்தது. பிதாமகர்களையும் ஆசிரியர்களையும் தந்தையையும் முறைப்படி குடியில் அகவை முதிர்ந்தவர் நேரில் சென்று பரிசுடன் எண்மங்கலங்களும் வைத்து அழைப்பதே வழக்கம் என்றும் அது இங்கு கடைபிடிக்கப் படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்” என்று சுரேசர் சொன்னார். “நன்று. நன்கு சொல்சூழ்ந்த ஓலை அது. கணிகர் எழுதியிருக்கக்கூடும்” என்றான் அபிமன்யூ. “இதையெல்லாம் கனகரே எழுதுவார்” என்றார் சுரேசர்.

“முறைப்படி எனில் பேரரசியும் அரசர் யுதிஷ்டிரரும் அரசி திரௌபதியும் தங்கள் தந்தை அர்ஜுனரும் தங்கள் தாய் சுபத்திரையும் நேரில் சென்று அழைக்க வேண்டும். சூரசேனரும் குந்திபோஜரும் அழைப்பை ஓலையினூடாக தெரிவிக்கவேண்டும். அவ்வாறு அழைக்கப்படவில்லையென்பதனாலேயே இவ்விழாவை அவர்கள் புறக்கணிப்பது அனைத்து வகையிலும் முறையே” என்றார் சுரேசர். “அஸ்தினபுரி முறைப்படி அழைக்கப்படாமையால் அங்க நாடும் கலந்துகொள்ளவில்லையென்று ஓலை அனுப்பியிருக்கிறது. காந்தாரமும் அவ்வாறே.”

அபிமன்யூ ஓலைகளை பீடத்தில் போட்டுவிட்டு “அப்படியென்றால் தெளிவாகவே அணிகள் வகுக்கப்பட்டுவிட்டன” என்றான். “இல்லை அரசே, இரு அணிகளுக்கும் நடுவே இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கும் ஷத்ரியர்கள் உள்ளனர். வேதம் காப்பதும் குடிப்பெருமை நிறுவுவதும் அவர்களுக்கு முதன்மையானவையே. ஆனால் ஒவ்வொருவருக்கும் அருகிருக்கும் அரசுகளுடன் குடிப்பூசலும் எல்லைப்போரும் உள்ளது. அச்சுறுத்தியும் விருப்பூட்டியும் நம்முடன் மேலும் பலரை சேர்க்கமுடியும்” என்றார் சுரேசர். “இந்தப் பட்டியலில் தயங்குபவர்கள் அவ்வாறு தயங்குகிறார்கள் என்பதாலேயே இன்னமும் நமக்கு நம்பிக்கையளிப்பவர்கள்தான்.”

“அதை அவர்களும் செய்யமுடியும். நம்மைவிட கணிகர் அதில் தேர்ந்தவர்” என்றான். “என்ன நிகழ்ந்தாலும் நம்முடன் உறுதியாக நிலைகொள்பவர்கள் எவரெவர்?” சுரேசர் “நம் சமந்தர்கள் மட்டுமே. பாஞ்சாலம், மத்ரம்” என்றார். அபிமன்யூ “ஆம், தந்தையர் ஐவருக்குப்பின் சல்யரே நமக்கு முதன்மை படைத்தலைவர்” என்றான். “துருபதரும் எளியவரல்ல. திருஷ்டத்யும்னரை அப்பக்கம் கர்ணனுடன் மட்டுமே ஒப்பிட முடியும்” என்றார் சுரேசர்.

அபிமன்யூ மெல்ல கால்களை நீட்டி உடலைத் தளர்த்தி “போர் நெருங்குகிறதா, அமைச்சரே?” என்றான். சுரேசர் “ஆற்றல்கள் இரு பக்கமும் குவிவதனூடாக போர் நிகழலாம், தவிர்க்கவும் படலாம்” என்றார். “துலா ஆடி நிற்கவேண்டும். அதுவரை காத்திருக்கவேண்டியதுதான்.”

நூல் பதினைந்து – எழுதழல் – 27

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 5

fire-iconஉபப்பிலாவ்ய நகரிக்கு அபிமன்யூ பிரலம்பனுடன் வந்து சேர்ந்தபோது நள்ளிரவு. வழியெங்கும் அவர்கள் பேசிக்கொண்டே வந்தனர். அபிமன்யூ பேசத்தொடங்கினால் ஒன்றிலிருந்து பிறிதொன்றென கோத்துக்கொண்டே செல்வது வழக்கம். அவனிடமிருக்கும் ஓர் இயல்பை அதற்குள் பிரலம்பன் வகுத்துக்கொண்டுவிட்டிருந்தான். அவன் எப்போதும் முன்னிற்பவரை பேச்சில் ஈடுபடுத்தவும் மகிழ்விக்கவும் முயல்வான். அவர்கள் எவராக இருந்தாலும் சரி. அவர்களின் விழிகளினூடாகவே அவன் அங்கே தன் இருப்பை நிறுவிக்கொள்வான். அத்தருணத்தை கடந்துசெல்வான்.

அப்போது தன்னை அவன் ஒரு கூத்தனாகவே எண்ணிக்கொண்டிருப்பதுபோலத் தெரியும். கூத்தர்களுக்குரிய அத்தனை நுண்ணுணர்வுகளும் அவனிடம் வந்து கூடும். ஓருசில சொற்றொடர்களுக்குள் அவர்கள் எதற்கு சிரிப்பார்கள், எதில் அவர்களின் உள்ளம் மீட்டப்பட்டு விழிகள் ஒளிகொள்ளும் என அவன் புரிந்துகொண்டுவிடுவான். அதன்பின் பேச்சு அதை மையம் கொள்ளும். தொட்டுத் தொட்டு எடுத்து விரிக்கும். தன் பெட்டியிலிருந்து முடிவிலாது பொருட்களை எடுத்துப்பரப்பும் அணிவணிகனைப்போல. சிரிப்போ வியப்போ முதல் அதிர்வெழுகை வலுவானதாக அமையவேண்டும் என்றும் அதன் மீட்டலை சிறுசிறு தூண்டல்கள் வழியாக மேலெடுத்துச்செல்ல முடியும் என்றும் அவன் அறிந்திருந்தான். எங்கு அது கீழிறங்குகிறதென்று மேலும் நுட்பமாக உணர்ந்தான். அங்கே அடுத்த தொடக்கம் ஒன்றை நிகழ்த்துவான்.

அவன் பேச்சு ஒரு நுரை. ஒரு துளியின் குமிழிப்பெருக்கம். ஆனால் ஒளிகொள்வது, வானை ஏந்துவது. எளிய காவலர்களும் ஏவலரும் அடையாளம் காணப்பட ஏங்குபவர்கள் என்று அறிந்திருந்தான். அவர்களை அவன் ஏளனம்செய்தால்கூட அது பெருந்திரளில் இருந்து பிரித்தறியப்படுவதென்றே அவர்களுக்கு பொருள்படும். மீண்டும் மீண்டும் அவன் ‘நான் உன்னை அறிவேன், நானும் நீயும் நிகர்’ என்னும் ஆடலை ஆடினான். முதியவர்கள் அனைவரிடமும் சிறுமைந்தன் என்றானான். அவர்கள் விளையாடினால் விளையாட்டுப்பிள்ளை. அவர்கள் கடுமைகொண்டால் தண்டிக்கப்பட்ட குழந்தை.

ஒவ்வொரு சீண்டலுக்குள்ளும் இருக்கும் நுட்பம் ஒன்றை பிரலம்பன் மெல்லவே கண்டுகொண்டான். முதியவர்கள் அனைவரிடமும் அவன் அவர்களின் இளமைப்பருவத்தையே நினைவூட்டினான். அவர்களின் காதலை, காமத்தை, இளமையழகைப் பற்றியே பேசினான். முகம்சிவந்து சீறியும், எரிச்சலுடன் விலகியும் அவர்கள் எதிர்வினையாற்றினாலும் அவர்களுக்குள் அமைந்த ஒன்று உவகை கொள்வதை பிரலம்பன் உணர்ந்தான். அது அவர்கள் தங்கள் ஆழத்திற்குள் பிறர் அறியாது மீட்டும் ஒரு யாழ். அத்துமீறி அதில் கைவைத்து அவர்களை திடுக்கிடச் செய்கிறான். ஆனால் அதிர்ச்சியும் அந்தக் கூசலும் அவர்களுக்கு இனியவையே. முதியவனென்றும் ஆகி தன்னை நிகழ்த்திக்கொள்ளக் கற்றவனின் வழிமுறை அது. எளிய இளையோர் அதை ஆடவியலாது.

ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் விந்தையோ நகைப்போ கொண்ட ஏதோ ஒன்றை அவன் கண்டடைந்தான். அவற்றை நினைவில் தேக்கிக்கொண்டு உரிய இடங்களில் சொன்னான். சொல்லிச்சொல்லி அவற்றை வளர்த்தெடுத்தான். அவை புனைவுகள் என்பதொன்றே அவற்றை தோற்கடிப்பதென்று அறிந்தமையால் அவனே அவற்றை புனைவென்று நகையாடியபடி முன்வைத்தான். அவனைப்பற்றிய அத்தனை எள்ளல்களையும் அவனே செய்து அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான். தன்னை எதிர்படுபவர்களினூடாக அவன் தன்னை வடிவமைத்துக்கொண்டிருந்தான்.

முற்றிலும் பிறருக்காக ஒருவன் தன்னை அமைத்துக்கொள்ளவியலுமா என பிரலம்பன் ஐயம் கொண்டான். அவனை கூர்ந்து அறிந்து தொடரும்தோறும் அவனுள் அமைந்த பிறிதொருவனை காணலானான். உண்மையில் அவன் பிறர்பேச்சை பொருட்படுத்துவதே இல்லை, எங்கும் அவன் குரலே ஒலித்துக்கொண்டிருக்கும். பிறர் நீளப்பேசத்தொடங்கினால் அவன் கண்கள் அவர்களை விலக்கி அகல்வு கொண்டன. மீண்டும் அருகணைந்தபோது ஏளனத்தை சூடியிருந்தன. மிக நுட்பமாக அவற்றிலிருந்த சலிப்பை பிரலம்பன் கண்டுகொண்டான்.

அர்ஜுனனும் இளைய யாதவரும் அன்றி எவரும் அபிமன்யூவுக்கு ஒரு பொருட்டே அல்ல என பிரலம்பன் உணர்ந்தான். இளைய யாதவருடன் அவன் பேசுகையில் அவ்விழிகளை நோக்கினால் அக்கணமே பாய்ந்து அவரை அவன் தழுவிக்கொள்ளப்போகிறான் என்று தோன்றும். ஒரு சொல்லுக்காக காப்பவன் போல. அர்ஜுனனின் கதைகளை கேட்கையில் மட்டும் அவன் முகம் பிறிதொன்றென்று ஆகும். அவன் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் மாறி மாறி அகம்நடித்துக்கொண்டிருப்பவன். அவனுள் இருக்கும் அந்தப் பிறிதொருவன் பிறரை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளாதவன். அனைவருக்கும் மேல் எழுந்து நின்று குனிந்து நோக்கும் பேருருவன்.

பேச்சின் நடுவே இயல்பாக தன்னுள் சென்று ஒடுங்கி விழிகள் அணைந்து உடல் அசைவழிந்து ஊழ்கத்திலெனச் சமைவது அபிமன்யூவின் வழக்கம். மீண்டும் உயிர்ப்பசைவு கொண்டு எழுகையில் எழுவது எப்போதும் தன் பகடிச்சொல்லாகவே இருக்கும். பழகியணுகும்தோறும் அவன் நடத்தையில் இயல்புகொண்டிருந்த மிகையை பிரலம்பன் கண்டான். அவன் உள்ளியல்பு அல்ல என்பதனாலேயே பிறிதென அது அமையவியலாதென்று தெளிந்தான். நடிப்பென எழுவது எதுவானாலும் மிகையே. அறியாது நடிப்பதென்றாலும்கூட. அது மிகையென்றறிந்தபோது மேலும்  மேலும் இனியவனாகவே அவனைக் காட்டியது.

காம்பில்யத்திலிருந்து கிளம்பிய பயணத்தில் அவன் கொப்பளித்தபடியே இருந்தான். பல இடங்களில் புரவிக்கடிவாளத்தை பிடித்து இழுத்து நிறுத்தி பேரொலியுடன் நகைத்தான். புரவியைத் தூண்டி மலைச்சரிவுகளில் பாய்ந்தான். ஓடைகளை பறந்து கடந்தான். வழிப்போக்கர்களை நகையாடினான். பெண்களிடம் குலவினான். ஆனால் மெல்ல மெல்ல அணைந்துகொண்டிருந்தான். இரண்டுநாட்களில் முற்றிலும் அமைதிகொண்டு பிறிதொருவனென்றானான். பிரலம்பன் உடன்வருவதையே அறியவில்லை.

அவனைச்சூழ்ந்த இன்மையின் திரையை கலைக்கவேண்டியதில்லை என எண்ணிய பிரலம்பன் தானும் விலகி தன் உள்ளத்தை அளைந்தபடி உடன் சென்றான். ஆனால் அவனுடைய ஒவ்வொரு உடலசைவையும் அவன் விழிகள் நோக்கி அளவிட்டுக்கொண்டிருந்தன. உள்ளத்தை உடல் இத்தனை தெளிவாக வெளிக்காட்டுமா என்ன என அவன் வியந்தான். மூடவியலாச் சாளரங்களும் கதவுகளும் கொண்டவன் மனிதன். கரந்து வைக்க இயல்வது  என ஏதுமில்லை அவனிடம். ஒளிந்துகொள்வது பிறர் மேல் ஒவ்வொருவரும் கொள்ளும் நுண்நோக்கின்மையின் திரைக்குப்பின்னால்தான். ஒவ்வொருவரும் தன்னையன்றி பிறரை எண்ணுவதேயில்லை என்னும் மாயத்தால்தான்.

முதற் காவல்கோட்டத்தில் அவனது புரவியின் ஓசையைக் கேட்டதுமே இருகாவல் வீரர்கள் தங்கள் நீண்ட வேல்களால் சாலையை மறித்தனர். புதியதாக வெட்டி நாட்டப்பட்ட மரங்களின்மேல் மூங்கிலால் கட்டி ஈச்ச ஓலையால் கூரையிட்டு கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தின் அருகிருந்த நுணா மரத்தில் மீன்பந்தம் எரிந்துகொண்டிருந்தது. காவலர்தலைவன் “இருவரும் பந்த வெளிச்சத்தில் வந்து நில்லுங்கள்” என்று உரத்த குரலில் ஆணையிட அபிமன்யூவும் பிரலம்பனும் அந்தச் செந்நிற வட்டத்திற்குள் நுழைந்தனர். பிரலம்பன் புரவியிலிருந்து இறங்கி தன்னிடமிருந்த அபிமன்யூவின் கணையாழியைக்காட்டி “இவர் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வருகிறார். இளைய பாண்டவர் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ” என்றான்.

Ezhuthazhal _EPI_27

காவலர்கள் விராட வீரர்களாகையால் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். காவலர்தலைவன் “அபிமன்யூ மிகஇளவயதினர் அல்லவா?” என்றான். பிரலம்பன் “கதைகளில் அவ்வாறே இருப்பார். மெய்யில் வளர்ந்துகொண்டிருக்கிறார்” என்றான். அவன் சொல்வது புரியாமல் ஈட்டியுடன் காவலர்தலைவன் காவல் கோட்டத்திற்குள் நுழைந்து “மந்தரரே, எழுக…” என்றான். மந்தரன் முனகும் ஓசை கேட்டது “மந்தரரே எழுங்கள்” என்று துயிலில் இருந்த நடுஅகவைகொண்ட காவலனை எழுப்பினான். அவன் வெளிவரும்போதே மெல்லிய குரலில் ஏதோ சலிப்புரையை சொல்லிக்கொண்டு வந்தான்.

அருகே வந்து இருவரையும் மாறி மாறி நோக்கி பிரலம்பனிடம் “தாங்களா இளவரசர் அபிமன்யூ?” என்றான். “நானும்தான்… இப்போதைக்கு அவர்” என்றான் பிரலம்பன். “இளவயதில் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தேன். அப்போது கண்டிருக்கிறேன். ஆனால் என்னால் அடையாளம் கொள்ளக்கூடவில்லை” என்றான் மந்தரன். அபிமன்யூ புரவியிலிருந்து தாவி இறங்கி அருகே வந்து சினத்துடன் “கணையாழிக்கு கூடுதலாக நான் காட்ட வேண்டிய அடையாளமென்ன?” என்றான். மந்தரன் திகைத்து “ஆ… தாங்கள் இளைய பாண்டவரின் மைந்தரே. இந்த நடை போதும். இதை நான் பார்த்திருக்கிறேன். இந்தக்குரல்…” என்றான்.

காவலர்தலைவன் தலைவணங்கி “நல்வரவு இளவரசே, தங்கள் மண நிகழ்வுக்காக நகர் ஒருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு நள்ளிரவில் வருவீர்கள் என்று எண்ணவில்லை” என்றான். அபிமன்யூ அவனுக்கு மறுமொழி சொல்லாமல் புரவியில் ஏறிக்கொண்டு உள்ளே சென்றான். “வருகிறேன் மந்தரரே” என்றபடி பிரலம்பன் இரு காவல் வீரர்களிடமும் விடைபெற்று புரவியிலேறி அவனுடன் சென்று இணைந்துகொண்டான். அபிமன்யூ வாய்க்குள் “மூடர்கள்” என்றான். பிரலம்பன் “எளியவர்கள். அவர்களுக்கு ஆளும் சொல் மட்டுமே புரிகிறது” என்றான். “சவுக்கு இன்னும் தெளிவாகப்புரியும்” என்றான் அபிமன்யூ.

எண்ணியிராக்கணத்தில் ஓர் ஒப்புமை பிரலம்பனின் உள்ளத்தில் எழுந்தது. நுண்ணிய அணிச்செதுக்குகள் கொண்ட உறையில் இடப்பட்ட கொலைவாள் இவன். மிகக்கூரியது, இரு புறமும் நா கொண்டு சுழல்வது, குருதி பட்டு ஒளி ஏற்றது. எங்குதொட்டாலும் குருதியுண்பது என்பதனாலேயே இத்தனை அழகிய வாளுறை அதற்கு தேவைப்படுகிறது. உறையுடன் அதை சிறுகுழந்தைகளுக்கு விளையாடக்கொடுக்கலாம். முகப்பறையில் அணிப்பொருளென தொங்கவிடலாம். எந்த ஆடையுடனும் அணிகளுடனும் இயல்பாக இணைந்துகொள்ளும். அவன் அதை விரித்துக்கொண்டே சென்று ஒரு கட்டத்தில் புன்னகையுடன் என்ன இது என வியந்து நிறுத்திக்கொண்டான்.

பின்னர் அந்த ஒப்புமையை எவரிடமேனும் சொல்ல வேண்டுமென்று பிரலம்பன் உளம்கிளர்ந்தான். சொன்னால் இவனிடம்தான் சொல்லவேண்டும் என்று எண்ணியதுமே புன்னகையுடன் தலையை அசைத்தான். எத்தனை விரைவாக என் எல்லைகளை கண்டுகொண்டுவிட்டேன் என எண்ணியதும் வியப்புகொண்டான். எண்ணச்சரடு திசைமுறுக்கிக்கொண்டது. மானுடர் ஒருவருக்கொருவர் எல்லைகளைத்தான் முதலில் வகுத்துக்கொள்கிறார்கள் போலும். பிறர் எல்லைகளை அறியாமல் அவர்கள் தங்கள் எல்லைகளை மீறுவதேயில்லை. அவ்வெல்லைகள் ஒருவரை ஒருவர் அறிவதனூடாக உருவாகின்றவை. காட்டுபவை, பெறுபவை, வடித்துக்கொள்பவை. அவ்வாடலின் நிகர்நிலைப்புள்ளிகள். எல்லைகளுக்கு அப்பால்தான் இருக்கின்றன மெய்கள். அவை எல்லைகளால் வேலியிடப்பட்டு திரைசூட்டப்பட்டு காக்கப்படுபவை.

உபபிலாவ்ய நகரி முழுக்க நெய்ப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. முதல் காவல்கோட்டத்திலிருந்து கோட்டையை அணுகுவதற்குள்ளாகவே அவர்கள் வரும் செய்தி முழவு வழியாக வந்தடைந்திருந்தது. அத்தனை காவல்கோட்டங்களிலும் தலைவணங்கி வாழ்த்துரையும் முகமனும் கூறி அவர்களை வரவேற்றனர். கோட்டைமுகப்பில் காவலர் தலைவன் உடைவாளுடன் வந்து முகமன் உரைத்து வாளுருவி நிலம் தொட்டு வணங்கினான். எவரையும் விழிதொட்டு பேசாமல் அரைக்கண் மூடியவன்போல அபிமன்யூ புரவியின் மேல் அமர்ந்திருந்தான். பிரலம்பன் ஒவ்வொருவரிடமும் இன்சொல்லும் நகையுரையும் அளித்து உடன் சென்றான்.

நகரெங்கும் அணிவளைவுகளையும் கொடித்தோரணங்களையும் பாவட்டாக்களையும் மலர்த்தூண்களையும் அமைக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. ஏவல்சூதர்களை நூற்றுவர் உரக்கக்கூவி அழைத்து ஆணைகளை உரைத்தனர். அங்குமிங்கும் நீள்நிழல் வளைந்தாடித் தொடர ஓடியும் ஏணிகளிலும் சுவர்களிலும் ஏறியும் மரக்கிளைகள் மேல் நின்றும் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். இன்னமும் எழுப்பப்படாத அணிவளைவுகள் சாலை ஓரங்களில் வண்ணக்குவியல்களாகக் கிடந்தன. இழுத்துக் கட்டப்படாத கொடித்தோரணங்கள் குருவிச்சிறகுகளின் நிரையாக தரையில் விழுந்திருந்தன. வண்ணத்தொட்டிகள், குருத்தோலை அணிப்பொருட்கள், ஓவியப்பாய்கள், வண்ணமிடப்பட்ட மூங்கில்கள். யானை ஒன்று சலிப்புடன் கடந்து சென்றது. இரு புரவிகள் சாலையோரம் நின்றபடி துயின்றன.

இடுங்கலான சாலைகளில் தரைப்பலகைகளை பொருத்தும் பணி அப்போதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. தச்சர்களின் கொட்டுவடிகளின் தட்டலோசையும் உளிகளின் செதுக்கோசையும் பணிக்குரல்களும் இருளுக்கு அப்பாலிருந்து கேட்டன. பலகைப்பரப்புகளில் பூசுவதற்காக அரக்கையும் மெழுகையும் சேர்த்து உருக்கி அதில் மரத்தூளைக்கொட்டி கூழென காய்ச்சிக்கொண்டிருந்தனர். உருகும் மணமும் குமிழிகொதிக்கும் ஓசையும் அனலாட்டமும் வழியெங்குமிருந்தன. அரக்குமை ஊற்றப்பட்ட பலகைகள் மேல் மென்வண்ணச் சுண்ணத்தைப் பரப்பி மர உருளைகளால் நிரப்பாக்கினர். பெரிய மரவுரிககளால் உரசி பளபளப்பாக்கினர்.

புரவிகளில் எதிரே வந்த உபப்பிலாவ்யத்தின் காவலர்கள் அபிமன்யூவைக்கண்டு தலைவணங்கி விலகி நின்றனர். அரண்மனை முகப்புக் காவல் மாடத்தில் அபிமன்யூவுக்காக சிற்றமைச்சர் சுரேசர் காத்திருந்தார் அவனைக்கண்டதும் அருகணைந்து வணங்கி முறைமுகமன் உரைத்து “தங்களுக்காகவே நகர் மங்கலம் கொள்கிறது, இளவரசே. அரண்மனையில் தங்கள் மணமகள் ஒவ்வொரு நாளும் உளங்கனிந்துகொண்டிருக்கிறாள். இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரின் வருகையால் உபப்பிலாவ்யம் ஒளியும் புகழும் கொள்ளும். நமது கொடிவழியினரின் சொற்களில் இந்நகர் என்றும் வாழட்டும்” என்றார்.

மறுமுகமனோ வணக்கமோ கூறாமல் இறங்கிய அபிமன்யூ “நான் நீராட வேண்டும். அதன் பின் சற்று துயில்கிறேன். காலையில் அவைக்கு வருகிறேன்” என்றான். “ஆம், அனைத்தையும் ஒருக்க ஆணையிட்டிருக்கிறேன்” என்றார் சுரேசர். மறுமொழி சொல்லாமல் அபிமன்யூ படிகளில் ஏறி நடக்க பிரலம்பனிடம் தாழ்ந்த குரலில் “தாங்களும் அவருடன் இருக்கலாம், அவர் அறைக்கு அருகிலேயே தங்களுக்கு சிற்றறை ஒருக்கப்பட்டுள்ளது” என்றார். பிரலம்பன் “நாங்கள் காம்பில்யத்திலிருந்து நில்லாது வந்தோம், அமைச்சரே” என்றான். “இளவரசர் களைத்திருக்கிறார்.” சுரேசர் “ஆம், தெரிகிறது” என்றார்.

அபிமன்யூ அதற்குள் இடைநாழியில் ஏறி அங்கே அவனை எதிர்கொண்ட ஏவலனிடம் தன்னை அறைக்கு கூட்டிச் செல்லும்படி கையசைவால் ஆணையிட்டான். பிரலம்பன் “அனைத்தையும் நான் வந்து தங்களுக்கு விளக்குகிறேன், அமைச்சரே” என்றபின் அபிமன்யூவுக்குப் பின்னால் ஓடினான். படிகளில் ஏறி தன் அறை நோக்கிச் சென்ற அபிமன்யூ அவனுடன் சென்ற ஏவலனிடம் “மது” என்றான். அவன் தலைவணங்கினான். பிரலம்பன் “விடிவதற்கு இன்னும் நான்கு நாழிகைகூட இல்லை, இளவரசே” என்றான். அபிமன்யூ அதை கேட்டதாகவே தெரியவில்லை.

fire-iconநீராடிவந்து குழல் கற்றைகள் உலர்வதற்கு உள்ளாகவே மூன்றுகோப்பை யவனமதுவை அருந்தி ஊனுணவை உண்டு எழுந்து மஞ்சத்தில் விழுந்து அபிமன்யூ துயிலத்தொடங்கினான். தொலைவுப்பயணம் அவன் உடலின் தசைகளை தளரச் செய்திருந்தது. எப்போதும் அவனைச் சுழற்றி இழுத்துக்கொள்ளும் அப்பெருஞ்சுழிக்குள் சென்றான். மிக ஆழத்தில் அணுகும்தோறும் அகலும் தொலைவில் ஒளிப்புள்ளி ஒன்று தெரிந்தது. அதுவொரு வாயில். அந்த வாயிலுக்கு அப்பால் வண்ணத்தின் அசைவென ஒரு முகம். முகம் அல்ல, பிறிதொன்று. முகமென மட்டுமே பெறப்படுவது, முகமல்ல என்று உணரப்படுவது.

அவன் விழித்துக்கொண்டபோது புலரிப்பறவைகளின் ஒலி அறையை சூழ்ந்திருந்தது. எழுந்தமர்ந்து தன் கனவை எண்ணத்தில் ஓட்ட முயன்றான். அவன் எழுந்த ஒலிகேட்டு வந்து வணங்கிய காவலனிடம் “நீராட்டறை” என்றான். இடைநாழியினூடாக நடந்து சென்றபோதுதான் அம்மாளிகை எத்தனை சிறியதென்று தெரிந்தது. உபப்பிலாவ்யமே மிகச்சிறிய ஊர். கோட்டை, தெருக்கள், காவல்மாடங்கள் அனைத்துமே சிறியவை. பெரியவர்களின் கருவிகளை குழந்தைகளுக்கான பாவைகளாக ஆக்கியதுபோல. ஆனால் முந்தையநாள் இரவில் இருட்டில் அது தெரியவில்லை. இருட்டில் அளவுகள் மறைந்துவிடுகின்றன. இருட்டுக்கு எல்லாமே நிகர்தான்.

மிகக்குறுகிய நீராட்டறைக்குள் தலைகுனிந்து நுழைந்தான். ஒருவர் மட்டுமே நின்று நீராடும் அளவுக்கு இடுங்கியது. நறுமணத் தைலமிட்ட வெந்நீர் அவனுக்காக காத்திருந்தது. நீராட்டறை ஏவலன் நறுமணச் சுண்ணங்களும் லேபனங்களும் எண்ணைகளும் கொண்ட பெட்டியுடன் நின்றிருந்தான். அபிமன்யூ ஒன்றும் சொல்லாமல் குறுபீடத்தில் அமர்ந்தான். ஏவலன் அவனை நீராட்டத்தொடங்கியபோது ஒரு திடுக்கிடல் ஏற்பட்டது அது ஏன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். எதையோ கண்டேன். இந்த இடைநாழியினூடாக வரும்போது, அல்லது எனது அறையில், அல்லது நகருக்கு வரும் நீண்ட காட்டுவழியில். எதையோ…

வெந்நீராட்டு முடிந்து, ஈரம் போக துடைத்து, நறுஞ்சுண்ணமிட்டு அவனை நீராட்டறை ஏவலன் ஒருக்கினான். என்ன அது? எங்கு கண்டேன்? அவன் உள்ளம் நாக்கு நுனியென ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டுத் தவித்து நெளிந்து சுழன்றுகொண்டிருந்தது. அணியறைக்குச் சென்றபோது அவனுக்கான அரச உடைகளுடன் ஏவலர் காத்து நின்றனர். ஆடி முன் அவன் அமர்ந்ததும் அவர்கள் அவனை ஒருக்கத் தொடங்கினர். ஓர் ஆணிலி அவன் நகங்களுக்கிடையே இருந்த அழுக்குகளை நீக்கினான். இருபது நகங்களையும் மிக விரைவிலேயே சீர்படுத்தி மெருகிட்டு புலி விழிகளென ஒளிரச்செய்தான் அவன் குழலை சிறு சுழித்திரிகளாக்கி தோளில் பரப்பினான் ஒருவன். அவன் காலில் இருந்து தலைவரை பொன்னணிகளும் மணியாரங்களும் வளைகளும் கணையாழிகளும் அணிவிக்கப்பட்டன.

பட்டுச் சால்வையை தோளிலிட்டபடி அவன் இடைநாழிக்கு வந்தபோது காத்து நின்றிருந்த ஏவலன் “அவைக்கு அல்லவா, அரசே?” என்றான். அதுவரை எங்கு செல்வது என்ற எண்ணமே இல்லாமல் தன்னில் அமிழ்ந்திருந்த அபிமன்யூ “அல்ல. நான் விராட இளவரசியை பார்க்க வேண்டும்” என்று சொன்னான். “இந்தப்பொழுதில் அவர்கள் சித்தமாக இருக்கிறார்களா என்று தெரியாது….” என்று ஏவலன் சொல்ல அபிமன்யூ சினத்துடன் விழிதூக்கி “இது ஏவல், நான் அவள் மாளிகைக்குச் செல்கிறேன். அங்கு அவள் என்னை சந்திக்கவேண்டும்” என்றான்.  ”ஆணை” என்று அவன் தலைவணங்கினான். பின்னர் பாய்ந்து படிகளிலிறங்கி இடைநாழியினூடாக ஓடி முற்றத்திற்குச் சென்றான்.

இரு ஏவலர்கள் வந்து ஓசையிலாது வணங்கி அபிமன்யூவை அழைத்துச் சென்றனர். குறடுகள் மரத்தரையில் ஒலிக்க நடந்து அந்த மாளிகையில் இருந்து அருகிருந்த அடுத்த மாளிகைக்குச் செல்லும் கூரையிடப்பட்ட இடைநாழியில் நடந்தான். அது சற்று முன்னர்தான் அமைக்கப்பட்டிருந்தது, மரச்சட்டங்களிலிருந்து அரக்குவாடை எழுந்தது. ஏவலனின் வேல்தாழ்த்தல்களும் வணக்கங்களும் முகமன் உரைகளும் அவனை வந்தடையவில்லை. அவன் அனுப்பிய ஏவலன் துணைக்கோட்டத்து வாயிலில் வந்து நின்றான். “இளவரசி தங்களை சிறுகூடத்தில் சந்திப்பதாக சொன்னார்” என்றான். அவன் தலையசைக்க தலைவணங்கி அவனை அழைத்துச்சென்று சிறுகூடத்தில் இருந்த பீடத்தில் அமரவைத்தான்.

ஐந்துபேர்கூட அமர முடியாத அளவுக்கு சிறிய உட்கூடம். கூரை தாழ்ந்து கைநீட்டினால் தொட்டுவிடலாம் போலிருந்தது. சாளரத்தினூடாக அப்பாலிருந்த தோட்டத்திலிருந்து செடிகள் வளர்ந்து உள்ளே தலை நீட்டியிருந்தன. “இந்த அறையை செம்மை செய்வது வழக்கமில்லையா?” என்று ஏவலனிடம் கேட்டான். ஏவலன் தலைவணங்கி “இது மிகப்பழைய இல்லம், இளவரசே. இங்கு இந்நகரத்தின் கணக்கர் ஒருவர் தங்கியிருந்தார். இதை ஓரளவே செம்மை செய்ய முடியும்” என்றான். அபிமன்யூவின் நோக்கை சந்தித்து பின் “தழைகள் உள்ளே வருவதை வெட்டுவது இங்கே வழக்கமில்லை. அது ஓர் அழகென்றே கொள்ளப்படுகிறது” என்றான்.

அவன் செல்லலாம் என்று கைகாட்டியபின் அபிமன்யூ கைகளை மார்பில் கட்டிக்கொண்டு தலை குனிந்தபோது குழல் புரிகள் சரிந்து விழுந்து முகத்தை மறைத்து ஆடின. அவன் விடாய் கொண்டிருப்பவனாக உணர்ந்தான். உடனே மதுவுக்காக உள்ளம் எழுந்தது. வலக்காலால் தரையை மெல்ல தட்டிக்கொண்டிருந்தான். அந்த ஓசை அவனை அமைதியிழக்கச் செய்தது. அமைதியிழப்பு அந்த ஓசையினால்தான் என்று சற்று பிந்தியே புரிந்து கால்களை அசையாமல் வைத்தான். ஆனால் அந்த்த் தாளம் உள்ளத்தில் தொடர்ந்து ஒலித்தது.

எழுந்து அறைக்குள் உலாவ எண்ணினான். ஆனால் அது ஒரு நேர்வெளிப்பாடு எனத்தோன்றியது. எங்கும் நிலைக்காத உள்ளத்துடன் உடலை ஓரிடத்தில் அமரச்செய்வது எவ்வளவு கடினமானதென்று உணர்ந்தான். அணுகி வரும் காலடியோசையைக் கேட்டதுமே அவள் என்று அபிமன்யூ உணர்ந்து அறியாமல் எழமுயன்று மீண்டும் அமர்ந்துகொண்டான். முதற்கணம் எழுந்த ஒவ்வாமையைக் கடக்க  இருகைகளையும் விரல்கோத்து மடியில் வைத்துக்கொண்டு உடலை இறுக்கி கால்களைச் சேர்த்து அமர்ந்தான். மூச்சை இழுத்திருக்கிறோம் என்று உணர்ந்தபின்னர் அதை வெளிவிட்டான்.

கைவளைகளின் ஒலியும் காற்சிலம்பின் சிணுக்கமும் ஆடையுரசும் ஓசையும் தனித்தனியாக கேட்டன. அவள் நடக்கும்போது ஒருகாலை நிலத்தில் கட்டைவிரல் உரச சற்று இழுத்து வைக்கிறாள் என்று தோன்றியது. அறைவாயிலில் அவளுடைய வண்ண அசைவு தோன்றியதுமே அறியாது திரும்பி நோக்கிவிட்டு விழிவிலக்கி சாளரத்தினூடாகத் தெரிந்த தோட்டத்தை பார்த்தான். அவள் அருகே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரை வணங்குகிறேன்”  என்றாள். அவன் தலைதிருப்பி அவளை நோக்கி “அமர்க!” என்றான். அவள் அமர்ந்தபோது ஆடையணி ஓசையுடன் மூச்சொலியும் மெல்லிய பெண்மணமும் வந்து அவனை அறியா உளக்கிளர்ச்சி அடையச்செய்தன. முதற்கணத்து ஒவ்வாமை முற்றிலும் விலக உடல் எளிதாகி அவன் அவளை நேர்விழிகொண்டு நோக்கினான்.

அவள் அரசமுறைப்படி அணிசெய்துகொண்டிருக்கவில்லை. குழலை பெரிய கொண்டையாக முடிந்து அதன்மேல் முத்துச்சரமிட்டு சுற்றியிருந்தாள். அகத்தளத்தில் அணியும் எளிய வெண்பட்டாடை. அன்றாட அணிகள். அவள் தோள்களும் கழுத்தும் மிக நொய்மை கொண்டிருந்தன. தோள் கைகளை சந்திக்கும் இடத்திலும் கழுத்திலும் இருந்த வெண்ணிறக் கோடுகள் அவள் விரைவாக மெலிந்துகொண்டிருந்தாள் என்பதை காட்டின. அவன் பார்ப்பதை உணர்ந்தபின் அவள் உடல் தன்னுணர்வு கொள்வது கழுத்தில் எழுந்த மெல்லிய மெய்ப்பால் தெரிந்தது. இமை சரித்து விழிகளை பக்கவாட்டில் திருப்பி சுட்டுவிரலால் பீடத்தின் கைப்பிடியை மெல்ல நெருடியபடி அமர்ந்திருந்தாள்.

காதோரக்குறுங்குழல் காற்றில் அசைய அதன் நிழல் கன்னத்தில் விழுந்து ஆடியது. உதடுகள் மெல்ல பிரிந்த ஓசையைக்கூட அவன் கேட்டான். என்ன சொல் தேர்வது  என்று அவன் உள்ளம் தயங்கிக்கொண்டிருக்க அதற்கு மிக அருகிலேயே கட்டுக்கடங்காத சொற்பெருக்கொன்று அனைத்தையும் இடித்துச் சரித்தபடி சுழன்று சென்றுகொண்டிருந்தது. அவள் “இளையபாண்டவரும் உடன் பிறந்தாரும் நாளை மறுநாள்தான் இங்கு திரும்பி வருவார்கள் என்று செய்தி வந்தது” என்றாள். அவன் திடுக்கிட்டு அவளை நோக்கி “ஆம், அவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கும் இங்கு நுழைவதற்கும் அரச முறைமைகள் உள்ளன” என்றான்.

எத்தனை விரைவாக அவள் பேசத்தொடங்கிவிட்டாள் என அவன் அகம் வியந்தது. மிக எளிய நடைமுறைச்செய்தி ஒன்றைத் தொடங்கியதுபோல பொருத்தமான ஒன்று வேறில்லை. அவன் அவளை வென்று கடக்க உளமெழுந்தான். “நான் முறைமை மீறி உன்னை பார்க்கும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றான். அவள் அவன் விழிகளை சந்தித்து “நான் முன்னரே உங்களை எதிர்பார்த்தேன்” என்றாள். அபிமன்யூ திடுக்கிட்டு நெஞ்சு ஓசையிட “இல்லை, நான் எந்தையின் ஆணைப்படியே வந்தேன்” என்றான். அவள் தலைசாய்த்து “நன்று” என்றாள்.

அவள் தன்னைவிட உள்ளத்தால் மிகமூத்தவள் என அவன் அறிந்தான். அதுவே அவனை சீண்டியது, அவள்மேல் உளவெற்றியை அடைந்தாகவேண்டும் என எண்ணி அவன் அகம் சொல்துழாவியது. “ஆம், இங்கு பணிகள் இருக்கும். அரசகுலத்தவர் ஒருவர் இருந்து அவற்றை நடத்தியாகவேண்டும்” என்றாள். மேலும் எளிதாக அதை அவள் ஆக்கியபோது அவனுடைய உணர்ச்சிகள் பொருளிழந்தன. தன் பதற்றமும் கிளர்ச்சியும் கேலிக்குரியவை என்று தோன்ற அவன் தளார்ந்தான். மூச்சு எழுந்தமைய, உடல்மேல் மெல்லிய நீராவியென வியர்வை குளிரத்தொடங்க, புகை படிந்த சித்தத்துடன் அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

அவள் முகத்தையும் தோள்களையும் உளவிலக்குடன் பார்த்தான். மெலிந்த மென்மையான உடல். அதில் அகவை எப்படி வெளிப்படுகிறது? கன்னங்கள் சற்று ஒட்டி எலும்புகள் புடைத்திருந்தன. கண்களுக்குக் கீழே கண்மை கலங்கி வழிந்ததுபோல் கருமை. உதடுகளைச்சுற்றி இருகோடுகள். அவளை நோக்கலாகாது என தன் விழிகளை இழுத்துத் திருப்பி அருகிருந்த தூணைப்பார்த்தபடி “தந்தையின் ஆணை நான் மீறமுடியாத ஒன்று” என்றான். அச்சொல் மேலும் எங்கோ சென்று தொட அவள் பெருமூச்சுவிட்டாள்.

அவன் அச்சொல் மிகப்பிழையாக புரிந்துகொள்ளப்படக்கூடும் என்ற உணர்வை அடைந்து “நான் எதையும் என் விருப்பப்படியே செய்யக்கூடியவன். கட்டற்றவனாகவும் திரும்பிப் பார்க்காதவனாகவும் மட்டுமே இதுவரை இருந்திருக்கிறேன்” என்றான். அவள் “ஆம், அதற்கே வாய்ப்பு” என்றாள். என்ன சொல்கிறாள் என்று புருவம் சுருக்கினான். “அன்னையால் வளர்க்கப்பட்ட ஆண்கள் எங்கும் தயங்கும் கோழைகளாகவோ எங்கும் தயங்காத விசைகொண்டவர்களாகவோதான் இருப்பார்கள்” என்றாள். அபிமன்யூ “நான் தந்தையை எண்ணி வளர்ந்தவன்” என்று சினத்துடன் சொன்னான்.

அவள் உதடுகள் இழுபட, கன்னம் மடிய புன்னகைத்து “அதை நான் மறுக்கவில்லை. தந்தையுடன் இருந்திருந்தால் மேலும் நிகர்நிலை கொண்டவனாக இருந்திருப்பீர்கள்” என்றாள். அபிமன்யூ “நாம் ஏன் அவரைப்பற்றி பேச வேண்டும்?” என்று எரிச்சலுடன் சொன்னபின் என்றபின் நினைவுகூர்ந்து “நீ என்னிடம் பேசிய முதற்சொல்லே அவரைப்பற்றித்தான்” என்றான். அவள் “ஆம் அவர்தான் பாண்டவர்களில் எனக்குத் தெரிந்தவர். என்னை மணக்கொடையாகப் பெற்றவர் அவருடைய பிறிது வடிவமாகவே உங்களை நான் பார்க்கிறேன்” என்றாள்.

அப்படி அவள் நேர்விழியுடன் சொல்வாள் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் முழுமையாக தளர்ந்தான். எழுந்து விலகி நெடுந்தொலைவு சென்றுவிடவேண்டும் என்று விழைந்தான். எவ்வகையிலோ அவள் பேரரசி குந்தியை நினைவுறுத்தினாள். குந்தி எப்போதுமே முதலில் நினைவில் எழுகையில் அவனிடம் ஓர் ஒவ்வாமையைத்தான் உருவாக்கினாள். அதை கடக்கும்பொருட்டே அவன் சிறுவன்போல் மிகையாக விளையாட்டை நடித்தான். குந்தியிடம் அவனுக்குப் பிடிக்காதது என்ன என்று அவன் அகம் துழாவியது. மெலிந்த, முதுமை கனிந்த பெண். பாரதவர்ஷமெங்கும் அவள் மேல் ஓர் இரக்கம் அனைவருக்கும் உள்ளது. எதையும் அடையாதவள், ஒவ்வொன்றும் வந்தணைந்து வாயிலிலே திரும்பிச்செல்லும் ஊழ் கொண்டவள். எண்ணும்போது அவனும் உளநெகிழ்வுக்கு உள்ளாவது உண்டு. ஆனால் எண்ணத்தில் அவள் எழும்போது முதலில் தோன்றுவன அவள் விழிகள். அவற்றில் அவன் விழையாத ஏதோ ஒன்று இருந்தது.

அபிமன்யூ “நன்று, நான் கிளம்புகிறேன். இங்கு அனைத்தையும் நானே ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்று அவளும் எழுந்துகொண்டாள். “நீ நடக்கையில் காலை சற்று இழுத்து வைக்கிறாய்” என்றான். “இல்லையே” என்று அவள் சொன்னாள். “இயல்பாகத்தான் நடக்கிறேன். ஏன் சொல்கிறீர்கள்?” “இல்லை, வெறுமனே தோன்றியது” என்றான். “நான் உன்னை முறைமையின்படித்தான் சந்திக்க விழைந்தேன்” என்றான்.

அதுவும் பிழைபொருள் அளிக்குமே என்றுணர்ந்து பிழைபொருள் அளிக்காத ஒன்றை சொல்லவே இல்லை என்று எண்ணி புன்னகைத்தான். அப்புன்னகையாலேயே அதுவரை இருந்த உள இறுக்கம் மறைய அவளிடம் “நீ இனியவள். உன்னை விரும்புகிறேன் என்று சொல்லும்பொருட்டே வந்தேன். அதையன்றி பிற அனைத்தையும் சொல்லிவிட்டேன் போலும்” என்றான். அவள் கூரிய முள்ளொன்றால் குத்தப்பட்டதுபோன்ற முக மாற்றத்தை அடைந்தாள். “பேறு பெற்றேன்” என்று நிலத்தைப்பார்த்தபடி முணுமுணுத்தாள். அபிமன்யூ “நன்று சூழ்க!” என்றபடி எழுந்து வெளியே சென்றான்.