இருட்கனி

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 47

சல்யர் தன்னை மிகையாக காட்டிக்கொள்வதை விருஷசேனன் நோக்கினான். கைகளை வீசி உரத்த குரலில் “யாரங்கே? பின்சகடத்தின் ஆரத்தை இன்னொருமுறை பார்க்கச் சொன்னேனே? அடேய் சம்புகா, நான் வந்தேனென்றால் குதிரைச்சவுக்கு உனக்காகத்தான்” என்று கூவினார். “அறிவிலிகள், பிறவியிலேயே மூடர்கள்” என்று முனகியபடி திரும்பி வந்து ஒவ்வொரு புரவியின் வாயாக பிடித்து பிளந்து நாக்கை பார்த்தார். அவற்றின் கழுத்தை தட்டியபடி “புரவிகள் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று மலைமது வரட்டும்” என்றார். அதைக் கேட்டு இரு ஏவலர் விரைந்ததைக் கண்டபின்னரும் “அடேய்! மலைமது என்று சொன்னேன். எங்கு பார்க்கிறாய்? விழிக்கிறான். உன்னையெல்லாம் படைக்குக் கொண்டுவந்தவன் எவன்?” என்றார்.

அந்தத் தருணத்தில் சல்யரின் கூச்சலும் வசைகளும் ஒவ்வாமையை உருவாக்கின. அவன் பார்வை சென்று தைக்க அவர் விருஷசேனனைப் பார்த்து, “என்ன செய்கிறாய்? உனது புரவிகளை பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை” என்று அவன் சொன்னான். “எங்கு போர்க்கலை கற்றாய் நீ? வில்லவன் தேரிலேறுவதற்கு முன் தன் தேரில் கட்டப்பட்டிருக்கும் புரவிகளை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். அவற்றுடன் பேச வேண்டும். அவை அவனை புரிந்துகொள்ள வேண்டும். யாருக்காக போர் புரியவேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை அவற்றுக்கு உண்டு. உனக்கும் புரவிக்குமிடையே ஒரு உரையாடல் நடந்தாலொழிய தேரில் நின்றிருக்கும் உன்னை அவை அறியப்போவதில்லை. அவை எண்ணப்போவதென்ன என்று உனக்கும் தெரியாது” என்றார்.

விருஷசேனன் முதல் கணம் தன்னுள்ளிருந்து எரிச்சல் பொங்கி வருவதை உணர்ந்தான். ஆனால் ஒரு சொல்லும் பேசாமல் தலை திருப்பிகொண்டு புரவிகளை அணுகி அவற்றின் கழுத்தையும் காதுகளையும் தொட்டு மெல்ல இழுத்தான். தந்தை எப்போதுமே சல்யரிடம் புரிந்துகொள்ள இயலாத பணிவு ஒன்றை கொண்டிருப்பதை அவன் அறிந்திருந்தான். அவருடைய அந்தச் சிறுமைகளை அவர் விரும்புவதுபோலக்கூடத் தோன்றும். மீண்டும் திரும்பியபோது சல்யர் என்ன செய்வதென்றறியாமல் சகடத்தின் பட்டையை கைகளால் நீவிப்பார்ப்பதை கண்டான். ஒருகணத்தில் அவனுக்கு அவருடைய உளநிலை புரிந்து புன்னகை வந்தது. அவர் தன் வாழ்வின் உச்சதருணமொன்றில் இருக்கிறார். உச்ச தருணங்களில் இளிவரல் கூத்தர்போல் நடிக்கத் தொடங்கிவிடுபவர்களே மிகுதி. அப்போது என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எவருக்கும் தெரிவதில்லை. அவர்கள் செய்வதெல்லாமே எண்ணிச்செய்பவை. செயற்கையாக இயற்றப்படும் அனைத்துமே ஒவ்வாமையை உருவாக்குகின்றன. மிகையாக, பொருத்தமற்றவையாக, பிழையானவையாக ஆகிவிடுகின்றன.

அத்தருணத்தில் தானும் அவ்வாறு மிகையாக நடந்துகொள்ளக்கூடுமோ என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவன் உள்ளம் முற்றாக சொல்லணைந்து படிந்துகிடந்தது. ஒரு வகையிலும் எழுச்சி கொள்ளவில்லை என்பதை நோக்கும்தோறும் உணர்ந்தான். என்ன ஆயிற்று எனக்கு? முதல் நாள் தந்தையுடன் போருக்கு வந்தபோதிருந்த கொந்தளிப்பில் துளிகூட இப்போதில்லை. தந்தையுடன் போருக்கு வந்தபோது அன்றே போர் முடியுமென்று அவன் நம்பினான். தந்தையின் அம்புகளுக்கு நிகராக எவரும் நின்றிருக்க இயலாது. அவரை வென்று கடந்து செல்வதென்பது பரசுராமர் ஒருவருக்கே இயல்வது. ஒருவேளை மறுபுறம் தேரோட்டி அமர்ந்திருக்கும் இளைய யாதவர் எண்ணினால் அவருக்கு நிகர் நிற்க இயல்வதாகும். வெல்லவும் கூடும். அவரோ படைக்கலம் எடுப்பதில்லை என நோன்பு கொண்டிருக்கிறார்.

ஆனால் களத்தில் ஒவ்வொன்றும் அவன் எண்ணியதற்கு மாறாகவே நிகழ்ந்தது. ஒவ்வொரு நிகழ்வும் வேறெங்கோ எவரோ முன்னரே முடிவு செய்து தன் வழியினூடாக கொண்டு செலுத்தி அமைப்பது போல் தோன்றியது. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உருவாகும் வெறுமையை, சலிப்பை, அதிலிருந்து உந்தி உந்தி நம்பிக்கையை மீட்டுக்கொள்ளும் தவிப்பை உணர்ந்த பின்னர் போர்க்களத்திற்கு எழுகையில் அவன் எந்த நம்பிக்கையையும் பேணிக்கொள்ளவில்லை. முதல்நாள் போரிலிருந்து மீள்கையில் அவன் ஏழுமுறை தேர் ஏறிச்சென்ற நாகம்போல மண்ணோடு மண்ணாக வெறும் தோல்சக்கைபோல தான் மாறிவிட்டிருப்பதாக உணர்ந்தான். இளையோரின் முகங்களை நோக்கிய பின்னர்தான் தன் கடனை உணர்ந்து “இன்று நாம் அவர்களை பெரும்பாலும் அழித்துள்ளோம். நாளை முழுவெற்றி, ஐயம் வேண்டாம்” என்றான்.

மறுநாள் “இன்று நாம் பாண்டவ மணிமுடியை வெல்வோம். தந்தை அதை அரசரின் தலையில் சூட்டுவார்” என்று தம்பியரிடம் சொன்னான். அவர்கள் அச்சொற்கள் முறைமைக்கென உரைக்கப்படுவன என அறிந்திருந்தார்கள். ஆயினும் அவர்களை அவை ஊக்கமூட்டி எழச்செய்தன. ஆனால் இருநாட்களில் அவன் அந்தச் சொற்களையும் இழந்தான். அடுத்தநாள் காலை களமெழுகையில் அவன் “இன்று களம் புகுகிறேன், இன்று என் உயிர் எஞ்சும் வரை தந்தையை காத்து நிற்பேன். இதற்கப்பால் எனக்கென்று இலக்குகளில்லை. இன்றுக்கு அப்பால் எனக்கு திட்டங்களுமில்லை” என்று திவிபதனிடம் சொன்னான். “நமது பணி அதுவே. இது ஒன்றே நம்மை காக்கும். இங்கு முரண்படும் அறங்கள் போரிடுகின்றன. நம்முடையதல்லா அரசுகள் முட்டிக்கொள்கின்றன. வெல்பவர்களும் வீழ்பவர்களும் நமக்கொரு பொருட்டு அல்ல. இந்த ஆடலில் நாம் இல்லை.”

திவிபதன் “அவ்வாறு நம்மை விலக்கிக்கொள்ள முடியுமா என்ன?” என்றான். “முடியும். ஆகவேதான் இதை சொல்கிறேன். இச்சொற்களை மீள மீள நமக்கே சொல்லிக்கொள்க! நம்மிடம் நாமே சொல்வதனைத்தையும் நாம் ஏற்று அறியாமலே அடிபணிகிறோம் என்பதை சொல்லிப்பார்ப்பவர்கள் உணர்வார்கள்” என்றான். திவிபதன் “ஆம் செய்து பார்க்கிறேன்” என்றபின் “இப்போர் என்னுடையதல்ல. இதன் வெற்றி தோல்விகள் எனக்கொரு பொருட்டல்ல. எந்தையைக் காத்து நிற்பதென்பதே எனது பணி” என்றான். பின்னர் “மூத்தவரே. இதை நாம் கிளம்பும்போது நாம் கூட்டு உறுதிப்பாடென சொல்லிக்கொண்டால் என்ன?” என்றான்.

விருஷசேனன் அவ்வெண்ணத்தை உடனே பெற்றுக்கொண்டு “ஆம், நன்று. அதை நாம் செய்வோம்” என்றான். படைகள கிளம்புவதற்கு முன்பு வாளை உருவி நீட்டி அவன் அவ்வரிகளை சொன்னான். இளையோர் அனைவரும் தங்கள் வாள்களை உருவி நீட்டி அவ்வரிகளை ஏற்றுச் சொன்னார்கள். வாளுடன் சொல்லப்படும் வரி வாளே நாவென்றாக எழுவது. வாளென உடனிருப்பது. வாள் போல் கூர்மை கொண்டு படைக்கலமாவது. பின்னர் நிகழ்ந்த போர்களில் அவ்வுறுதிப்பாடு அவர்களை காத்தது. அவர்கள் எதற்கும் தயங்க வேண்டாம் எனும் நிலை ஏற்பட்டது. திரும்பி வருகையில் தங்கள் குருதிச் சுற்றத்தின் இழப்பை அன்றி எதைப் பற்றியும் அவர்கள் எண்ணிக்கொள்ளவில்லை. அவ்விழப்புகளைக்கூட அந்தியின் கூடுகையில் ஓரிரு சொற்களினூடாக கடந்து சென்றார்கள்.

அன்று காலை தன் குடிலுக்கு இளையோர் வந்தபோது விருஷசேனன் கவசங்கள் அணிந்துகொண்டிருந்தான். திவிபதன் அவனிடம் வந்து தலைவணங்கி நின்றான். பிற இளையோருக்காக விருஷசேனன் விழி தூக்கினான். அவர்கள் ஒவ்வொருவராக புரவியில் வந்து அருகே நின்றனர். “கிளம்புவோம்” என்றபடி அவன் எழுந்தான். அவன் இடைக்கச்சையை ஏவலன் இறுக்கிக்கட்டினான். தன் உடைவாளை கையிலெடுத்தபின் அவன் அவர்கள் விழிகளை பார்த்தான். பின்னர் “இன்று அவ்வுறுதிமொழியை நாம் எடுக்கவேண்டியதில்லை” என்றான். “ஏன்?” என்று திவிபதன் கேட்டான். “தேவையில்லை என்று தோன்றுகிறது. அச்சொல் நம் உளம்சென்று அமைந்துவிட்டது” என்றபின் செல்வோம் என கைகாட்டி அவன் தன் தேரை நோக்கி சென்றான்.

தேரின் அருகில் சென்றதும் ஏன் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவில்லை என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அன்று காலை முதல் நெடுநேரம் அவன் உள்ளம் முற்றாக ஓய்ந்துகிடந்தது. துயிலெழுந்து நெடுநேரம் இருளை வெறித்துக்கொண்டிருந்தான். புலரியில் துயில் விழிப்பில் எந்த முகமும் நினைவிலெழவில்லை. முந்தைய நாள் துயிலில் எஞ்சிய எண்ணம் எழுந்து தொடர்வதும் நிகழவில்லை. வெளியிலிருக்கும் இருளே உள்ளும் நிறைந்திருந்தது. அப்போது அறிந்த பொருளின்மையை அவன் முன்பு எப்போதும் அறிந்ததில்லை. அப்பொருளின்மை அந்தக் காலையை நிறைத்திருந்தது. தெளிநீர்ப்பரப்பில் மலர் என அக்காலை அவ்வெறுமை மேலேயே விடிந்தது.

மிக அரிதாக ஏதோ ஒரு பொருளின்மையில் சென்று அவன் உளம் தொடுவதுண்டு. அது இப்புவியிலுள்ள எந்த நிகழ்வுகளுடனும் தொடர்புகள் அற்றது. கற்றோ எண்ணிச்சூழ்ந்தோ அடைவதல்ல. புரிந்துகொள்ள முடியாத ஒரு பொருள் விண்ணிலிருந்து விழுந்து முன் கிடப்பது போல் புலரி முதல் விழிப்பில் வந்து உள்ளம் நிறைப்பது. அகம் ஏங்கி விழிநீர் வடித்துக்கொண்டிருப்பான். கண்ணீர் காது மடல்களை நோக்கி வழியும். அதிலிருந்து அறுத்துக்கொண்டு எழுந்து முகம் துடைத்து கைகளை நீட்டி சோம்பல் முறிக்கையில் அவ்வெறுமை மெல்லிய தித்திப்பு கொண்டிருக்கும். இரும்பை மெல்ல நாவால் நக்கிக்கொண்டதுபோல பொருளற்ற தித்திப்பு.

ஆனால் அன்று அறிந்த வெறுமை விழிநீருக்கும் இடமற்றதாக இருந்தது. நீர்த்துளியை இழுத்து இன்மையென்றாக்கும் வான் பெருவெளி போல். ஏவலன் வந்து கதவு மடலை மெல்ல தட்டி ஓசையெழுப்பாவிடில் அவன் அந்த முடிவிலியில் சென்று மறைந்திருக்கவும் கூடும். அந்த வெறுமை அவனை அன்று சொல்லற்றவனாக்கியது. நாவால் சொற்களை உரைப்பதுகூட அகத்துடன் தொடர்பற்று வேறெங்கோ நிகழ்வதுபோல் தோன்றியது. அவ்வுறுதிமொழி உரைக்கப்பட்டால் அது நெடுந்தொலைவில் எங்கோ கேட்கும். அவ்வளவு தொலைவுக்கு அதை விலக்கிவிட்டால் ஒருவேளை அதன் மீதிருக்கும் நம்பிக்கையை அவன் இழக்கவும் கூடும்.

சல்யர் கர்ணனிடம் “பொழுதாகிறது. தாங்கள் தேரில் ஏறிக்கொள்ளும் நேரம் இது. படைகள் முகம் திரண்டுவிட்டன. நமது தேர் சென்று முன்னில் நிற்கையில்தான் அவர்கள் தலைமையை விழிகளால் காண்பார்கள். போருக்கு அது இன்றியமையாதது” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் கிழக்கு நோக்கி நிலம் தொட்டுத் தொழுது சென்னி சூடி வணங்கி தன் தேர் நோக்கி சென்றான். விருஷசேனன் சற்று அப்பால் சகட ஓசை எழுவதைக்கேட்டு திரும்பிப்பார்த்து துரியோதனனின் தேர் அணுகுவதை கண்டான். திரும்பி தந்தையிடம் “பேரரசர்!” என்றான். கர்ணன் திரும்பி நின்று துரியோதனனின் விரைவுத்தேர் சகடப்பாதையினூடாக விசையுடன் ஒலித்தபடி அணுகுவதை பார்த்தான். தேர் நின்றதும் அங்கு நின்றிருந்த படைவீரர்கள் “பேரரசர் வெல்க! அமுதகலக்கொடி வெல்க! கௌரவ குலம் வெல்க! அஸ்தினபுரி வெல்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர்.

தேருக்குள்ளிருந்து துரியோதனன் இறங்கி அவர்கள் அனைவரையும் நோக்கி வணங்கிவிட்டு கர்ணனை நோக்கி வந்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது. விழிகள் சிறுவவர்களுடையவைபோல் ஒளிகொண்டிருந்தன. நேராக வந்து இருகைகளையும் விரித்தபடி ஒருசொல்லும் இன்றி கர்ணனின் தோள்களைப்பற்றி தன் நெஞ்சோடணைத்து தழுவிக்கொண்டான். கர்ணனும் தன் நீண்ட பெருங்கைகளால் அவன் உடலை தழுவினான். இருவரும் மிக அரிதாகவே அவ்வாறு தழுவிக்கொள்வார்கள் என்பதை விருஷசேனன் அறிவான். அவர்கள் தொடும்போதுகூட ஒரு ஒவ்வாமை இருப்பதுபோல் தோன்றும். தழுவிக்கொள்கையில் இரு வேழங்கள் கொம்புகளை மெல்ல உரசிக்கொண்டு விலகுவதுபோல் இருக்கும். தொடுவதில் அவர்களுக்கு தயக்கம் இருந்தது. என்றாவது நெஞ்சோடு நெஞ்சு இறுகத் தழுவிக்கொள்வார்களா என்று அவன் எண்ணியதுகூட உண்டு.

அத்தருணத்தில் அவர்களின் உடல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்துவிட்டதுபோல் தோன்றினார்கள். சூழ்ந்திருந்த படைப்பெருக்கை, திகைப்புடனும், மகிழ்வுடனும் சற்றே விலக்கத்துடனும் அவர்களை நோக்கிநின்ற பல நூறு விழிகளை, அத்தருணத்தில் எழவிருக்கும் போரை முற்றாக மறந்ததுபோல் தெரிந்தார்கள். விருஷசேனன் அவர்களின் தழுவல் நீண்டு செல்வதைக்கண்டு பொறுமையிழந்தான். அவர்களை எவ்வண்ணம் விலக்குவது என தயங்கினான். விலக்கியாகவேண்டும் என்று தோன்றியது. உச்சநிலைகளில் ஏன் அவற்றிலிருந்து விலகிவிடவேண்டும் என்ற தவிப்பு ஏற்படுகிறது? போதும் போதும் என ஏன் உள்ளம் தவிக்கிறது? ஏன் அஞ்சுகிறது? மானுட அகம் அன்றாடங்களில்தான் இயல்புநிலை கொள்ளக்கூடியதா என்ன? தன் உச்சநிலையில் காலம் மறந்துவிடக்கூடும். பிறர் கொள்ளும் உச்சநிலைகளில் காலம் இழுபட்டு நீண்டு விடுகிறது. சூழ்ந்திருப்பவர்களால் அங்கே நிற்கவே முடிவதில்லை. அங்கிருந்த அனைவரும் அப்படித்தான் தவித்துக்கொண்டிருந்தனர் என விழிகள் காட்டின.

தன்னிலை உணர்ந்து அவர்கள் ஒருவரிலிருந்து ஒருவர் விலகி, ஆடைகளையும் அணிகளையும் சீரமைத்தபடி, உடல்கள் நிறைவுடனும் பிரிவால் உணர்ந்த தனிமையுடனும் ததும்ப, சற்றே அகன்று, அல்லது அகல்வெனக் காட்டும் ஓர் அசைவை எழுப்பி, அருகிருப்பவர்களிடம் ஏதேனும் பொருளற்ற சொற்களைச் சொல்லி, ஏதேனும் ஆணைகளை இட்டு, அல்லது ஏதேனும் சிறு செயலினூடாக நிலை மீள்வார்கள் என்று அவன் எண்ணினான். அந்நிகழ்வை அவன் உள்ளத்தால் கண்டுவிட்டிருந்தமையால் அவர்களின் அத்தழுவல் நீண்டு நீண்டு நெடும்பொழுதாக சென்றுகொண்டிருப்பதுபோல் தோன்றியது. மேலும் மேலும் பொழுதாகிக் கொண்டிருந்தது. அவன் பெருமூச்சு எழ அதை நெஞ்சுக்குள் அடக்கினான்.

சல்யர் உரத்த குரலில் “பொழுதாகிறது! போர்முரசுகள் எக்கணமும் ஒலிக்கும். விண் வெளுக்கலாயிற்று” என்றார். விருஷசேனன் அவர் முகத்தை பார்த்தபோது அது சிவந்து, கண்கள் கலங்கி, கழுத்து நரம்புகள் இழுபட்டு, உச்சகட்ட சினத்துடன் தெரிவதை கண்டான். அவன் பார்ப்பதை அவருடைய விழிகள் வந்து சந்தித்ததும் நாணுவதற்கு மாறாக மேலும் அவர் சினம் கொண்டார். “நமது உணர்வுகளைக் காட்டும் இடமல்ல இது. ஆற்றலும் நம்பிக்கையும் வெளிப்பட்டாகவேண்டிய இடம்” என்று கூவினார். அத்தருணத்தின் அனைத்து உணர்வுகளையும் வாள் என வெட்டியது அவர் குரல்.

துரியோதனன் கர்ணனை தன் அணைப்பிலிருந்து விடுவித்து பின்னகர்ந்து தன் மேலாடையை சீரமைத்து திரும்பி விருஷசேனனிடம் “பார்த்துக்கொள்” என்றான். கர்ணன் விலகி தன் ஆடையை சீரமைத்து குழல்கற்றைகளை அள்ளி பின்னால் தள்ளி சல்யரிடம் “மெய்தான், மத்ரரே” என்றான். சல்யர் மேலும் சினம் கொண்டு “இப்போது எதற்காக இங்கு அரசர் வரவேண்டும்? இங்கிருந்த உணர்வுகள் அனைத்தையும் கீழிறக்கிவிட்டார். இன்றுடன் இப்போர் முடியவேண்டும். வில் விஜயனையும் அவன் உடன் பிறந்தோரையும் கொன்று மீளும் நாள் இது. அனல்தொட்டு வஞ்சினம் உரைத்து நீஙகள் வில்லெடுக்க வேண்டிய பொழுது இது” என்றார்.

துரியோதனன் “பொறுத்தருள்க மத்ரரே, நான் முழு நம்பிக்கையோடும் உவகை நிறைந்த உள்ளத்தோடும்தான் இங்கு வந்தேன்” என்றான். “இதற்கு முன் அங்கர் போருக்குச் செல்லும் நாளிலெல்லாம் வந்து தழுவிக்கொண்டிருக்கிறீர்களா என்ன?” என்றார் சல்யர். சல்யரின் உடல் முழுக்க இருந்த நடுக்கம் அவருடைய கழுத்தின் தசையில் அதிர்ந்துகொண்டிருந்தது. பேசும் போதே பற்களை இறுகக் கடித்திருந்ததும் விருஷசேனனுக்கும் இளையோருக்கும் விந்தையாக இருந்தது. அவர்கள் விழிளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டனர்.

துரியோதனன் சிறுவன் என விழிதாழ்த்தி “ இல்லை. ஆனால் இன்று புலரியில் நான் ஒரு கனவு கண்டேன். அது என்னை மீட்டது. நான் என் அரண்மனை அறைக்குள் நோயுற்று படுத்திருக்கிறேன். மிக இளமைந்தனாக இருக்கிறேன். இரவெல்லாம் என் அரண்மனை வாயிலுக்கு வெளியே அங்கர் எனக்காக காத்திருக்கிறார். அங்கரும் மிக இளமைந்தர். பின்னர் அங்கர் வந்து என் மஞ்சத்தறை கதவை தட்டினார். அந்த ஓசையைக் கேட்டு அக்கணமே என்னிலிருந்த அனைத்து வலிகளும் அகன்றன. நோய் நீங்கி பாய்ந்தெழுந்து கதவை நான் திறந்தேன். இருவரும் ஆரத்தழுவிக்கொண்டோம். இறுக முயங்கி நெடுநேரம் நின்றோம்” என்றான். அவன் முகம் நாணத்தால் சிவந்து அகல்கொண்டதுபோல் ஆகியது.

“பின்னர் கைகளைக் கோத்தபடி பாய்ந்து ஓடினோம். அது ஒரு அணிச்சோலை. பொற்கொன்றை மரங்கள் பூத்து நின்றிருந்தன. பொன்னிற ஒளி கொண்டிருந்தது அக்காற்று. பொன்மலர்களை அள்ளி விரித்த தரையில் நாங்கள் ஓடிச்சென்று ஒளிததும்பி பெருகி ஒழுகிக்கொண்டிருந்த ஆற்றில் குதித்தோம். கூச்சலிட்டு நீரை அள்ளி வீசி சிரித்து களியாடிக்கொண்டிருக்கையில் நான் விழித்துக்கொண்டேன். என் உள்ளம் மலர்ந்திருந்தது. முந்தைய நாள்வரை என்னைத் தொடர்ந்த எந்நினைவும் எத்துயரும் ஒரு துளியும் எஞ்சவில்லை. இந்தக்காலை இப்போது தொடங்கியதுபோலிருந்தது. இப்போது என்னிடமிருக்கும் நம்பிக்கையும் ஆற்றலும் அக்கனவிலிருந்து வந்தது. என் படைமுகத்துக்குச் செல்லும்போது கனவில் நான் அங்கரை தழுவிக்கொண்டதை நினைவு கூர்ந்தேன். ஆகவேதான் வந்து தழுவிக்கொள்ளவேண்டுமென்று தோன்றியது.”

சல்யர் “படைமுகப்பில் இவ்வாறு உணர்வுகளைக் காட்டுவதற்கு வேறு பொருள்கள் உண்டு” என்று தணிந்த குரலில் சொன்னார். “ஏதேதோ எண்ணிக்கொள்வார்கள் படைவீரர்கள். அறிக, தலைவர்களையும் அரசர்களையும் ஒவ்வொரு படைவீரனும் நோக்கிக்கொண்டிருக்கிறான். அவன் உடலில் ஒரு தசை தளர்வதை, ஓர் எண்ணமும் அவர்களில் எழுந்தமைவதை முழுப்படையும் அறியும்.” தலைதாழ்த்தி “ஆம்” என்றபின் துரியோதனன் திரும்பி கர்ணனிடம் “படைமுகம் கொள்க, அங்கரே! வெற்றியுடன் மீள்க!” என்றான். கர்ணன் “நன்று! படைமுகம் கொள்ளவிருந்தேன. நீங்கள் வந்தது மேலும் ஊக்கமளிக்கிறது” என்றபின் தலைவணங்கி தன் வில்லுக்காக கை நீட்டினான். அப்பால் நின்றிருந்த இரு ஏவலர்கள் விஜயத்தை கொண்டு வந்து அவன் கையில் அளித்தனர். அதை வாங்கிக்கொண்டு நடந்து தேரில் ஏறினான்.

தேரில் ஏறுகையில் படிகளில் கால் வைக்காது தட்டிலேயே நீண்டகாலை வைத்து ஏறிக்கொள்வது கர்ணனின் வழக்கம். அது நிலத்திலிருந்து ஒருகணத்தில் அவன் மேலெழுந்து தோன்றுவதுபோல் விழிமயக்களிக்கும். துரியோதனன் புன்னகையுடன் கர்ணன் தேரிலேறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். சல்யர் விருஷசேனனிடம் “பிறகென்ன? நீங்களும் தேரில் ஏறிக்கொள்ள வேண்டியதுதானே?” என்றபின் துரியோதனனை நோக்கி தலைவணங்கினார். துரியோதனன் “நன்று மத்ரரே, வெற்றியுடன் அந்தியில் பார்ப்போம்” என்றபின் தலைவணங்கி திரும்பிச்சென்று தன் தேரில் ஏறிக்கொண்டான்.

மத்ரர் அலுப்புடன் தலையசைத்து “நாடகங்கள்! எல்லோருக்குமே நாடகங்கள் பிடித்திருக்கின்றன” என்று பற்களைக் கடித்தபடி தலையசைத்து தனக்குத்தானே என சொன்னார். பின்னர் திரும்பி அப்பால் நின்ற சூதர்களிடம் “அங்கு என்ன செய்கிறீர்கள்? அறிவிலிகளே, விலகிச்செல்லுங்கள். தேர் கிளம்பவிருக்கிறதல்லவா?” என்று கூவினார். அவர்கள் தலைவணங்கி திரும்பிச் சென்றனர். புரவிகளை மீண்டும் தொட்டுத் தடவி செவி பற்றி இழுத்து ஓரிரு இன்சொற்கள் கூறிய பின்னர் கையூன்றி அமரத்தில் அமர்ந்து கடிவாளக் கற்றையை தன் கையிலெடுத்துக்கொண்டு சாய்ந்தமர்ந்தார் சல்யர்.

விருஷசேனன் தன் தேரிலேறி நின்றான். திவிபதனும் இளையவர்களும் தேரிலேறிக்கொண்டார்கள். அங்கிருந்து நோக்கியபோது கௌரவப்படை முற்றிலும் ஒருங்கமைந்துவிட்டிருப்பதை காண முடிந்தது. சகுனியின் முரசு பின்பக்கம் தணிந்த குரலில் “ஒருங்கிணைக! அணிமுழுமை கொள்க! ஒருங்கிணைக!” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்தது. விருஷசேனன் பாண்டவத் தரப்பை பார்த்தான். இருபுறமும் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் பின்துணையென அமைய அர்ஜுனன் தேரில் நின்றிருந்தான். காற்று நின்றுவிட்டிருந்தமையால் குரங்குக்கொடி தளர்ந்துகிடந்தது. காண்டீபத்தை ஊன்றி வானத்தொலைவை நோக்குவதுபோல் விழிதூக்கி அசைவிலாது நின்றிருந்தான் அர்ஜுனன். அவன் தேரிலும் அசைவில்லை. புரவிகள்கூட அசைவிழந்தது செவிகளைக்கூட திருப்பாமல் நின்றிருப்பதுபோல் தோன்றின.

தேர்முகப்பில் தலையில் சூடிய மயிலிறகு விழிகொண்டிருக்க கால்களை மடித்து அமர்ந்து கைகளை மடியில் தளரவைத்து அரைவிழி மூடி ஊழ்கத்திலென இளைய யாதவர் இருந்தார்.

பாண்டவப்படையின் வலப்புறம் சாத்யகியும் இடப்புறம் திருஷ்டத்யும்னனும் அணிவகுத்திருந்தனர். வடக்கு எல்லையில் சுதசோமனும் சர்வதனும் இருபுறமும் துணையிருக்க பீமன் நின்றிருந்தான். இடது எல்லையில் நகுலனும் சகதேவனும் துணை நிற்க யுதிஷ்டிரர் படைமுகம் வந்திருந்தார்.  அவர்களின் முகங்களும் மண்பாவை என உறைந்த உணர்வுகளுடன் இருந்தன. பிற அனைத்தையும்விட அப்போது அவர்களை ஆள்வது துயிலே எனத் தோன்றியது. அவர்கள் நற்துயில்கொண்டு பதினேழு நாட்களாகிவிட்டிருந்தன. அமைதியான பொழுதில் குளிர் என துயில்வந்து உள்ளங்களை கவ்வி மூடியது. உளைசேற்றில் என எண்ணங்கள் சிக்கி அசைவிழந்தன.

படைகள் எழுபொழுதிற்காக காத்திருந்தன. ஒவ்வொரு படைவீரனும் முன்னும் பின்னுமின்றி அத்தருணத்தில் மட்டும் உளம் நட்டு நின்றிருக்கும் பொழுது. முன்னோர்களும் தெய்வங்களும் அவனை சூழ்ந்திருக்கவேண்டிய தருணம். தன் உளம் ஏன் அவ்வாறு முற்றிலும் ஓய்ந்துகிடக்கிறதென்று விருஷசேனன் வியந்தான். அதை எவ்வுணர்வால் எச்சொற்களால் உந்தி முன் செலுத்துவது? வானம் நன்கு வெளுத்துவிட்டிருந்தது. முகில் நிரைகள் வடமேற்கே மிக அப்பால் விலகிச்சென்றுவிட்டிருந்தன. தென்கிழக்கில் புதிய முகில்கள் எழுந்து வரவுமில்லை. கதிரொளி எத்தருணத்திலும் எழக்கூடும். எக்கணமும் முரசொலி எழும். இத்தனை ஆயிரம்பேரும் துயிலில் இருந்து விழித்தெழுவார்கள். அனைவருமே குறுங்கனவுகளுக்குள் இருப்பார்கள். அவை தனிக்கனவுகள். இந்த மாபெரும் பொதுக்கனவுக்குள் விழித்தெழுவார்கள்.

தன் புரவி தலை திருப்பி செருக்கடித்த கணத்தில் விருஷசேனனின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. துரியோதனன் சொன்ன சொல் என்ன? தன்னிடம் அவர் என்ன சொன்னார்? அச்சொல்லுக்காக அவன் உள்ளம் தவித்து அலைந்தது. என்ன சொன்னார்? என்ன சொன்னார்? பல்வேறு நினைவுமூலைகளில் முட்டிமோதியபின் அதை அவன் கண்டுகொண்டான். அவன் உள்ளம் அனைத்து விசைகளையும் இழந்து நிலைத்தது. பின்னர் எங்கிருந்தோ என விசை எழுந்து அவன் தோள்கள் இறுகின. கண்கள் அனல் கொள்ளும் அளவுக்கு உள்ளம் பொங்கி எழுந்தது.

அத்தருணத்தில் போர் முரசு முழங்கியது. “வெற்றிவேல்! வீரவேல்!” எனக்கூவியபடி கௌரவப்படை எழுந்து பாண்டவப்படையை தாக்கலாயிற்று. கர்ணன் ஒளி சுடர எழுந்து பாண்டவப்படையை நோக்கி அம்புகளைச் செலுத்தியபடி சென்றான். “வெற்றிவேல்! வீரவேல்!” என்று தன் அகமே பல்லாயிரம் நாவென்று மாறி அப்படைக்களத்தில் ஒலித்துக்கொண்டிருப்பதாக விருஷசேனன் உணர்ந்தான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 46

மென்மழை நின்றுகொண்டிருந்த குருக்ஷேத்ரக் களத்தில் கௌரவப்படைகள் அணிவகுத்து சூழ்கை அமைத்தன. படைக்கலங்களும் தேர்களின் உலோகமுகடுகளும் ஒளியென்றும் மெல்லிருளென்றும் மாறி மாறி விழிமாயம் காட்டிய நீர்த்திரைக்குள் மின்னி திரும்பின. புரவிகளின் குளம்படி ஓசைகளும் சகட ஒலிகளும் ஆணைகளின் பொருட்டு எழுந்த கொம்பொலிகளும் சங்கொலிகளும் நீர்த்திரையால் மூடப்பட்டு மழுங்கி கேட்டன. கூரையிடப்பட்ட காவல்மாடங்களில் எழுந்த முரசொலிகள் இடியோசைகளுடன் கலந்து ஒலித்தன.

முரசுத்தோற்பரப்பு சாரல் ஈரத்தில் மென்மை கொள்ளாதிருக்கும்பொருட்டு காவல் மாடத்தில் அனல்சட்டிகளை கொளுத்தி தோலை காய்ச்சிக்கொண்டிருந்தார்கள். மழைக்குள் நூற்றுக்கணக்கான காவல் மாடங்களில் எரிந்த பந்தங்களின் ஒளி எரிவிண்மீன் நிரைகள் எனத் தெரிந்தது. அனலொளி மழைச்சாரலில் குருதிபோல் கரைந்து பரவுவதுபோலத் தோன்றியது. படைகள் இடம்மாறிக்கொண்டிருக்கையில் நின்றுகொண்டிருப்பன போன்றும் சென்றுகொண்டிருப்பன போன்றும் விழிமயக்கு ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கட்டற்ற முட்டிமோதலாகவும் ஒவ்வொன்றும் சென்றமைகையில் முன்னரே வகுக்கப்பட்ட வடிவம் என்றும் தன்னை காட்டியது படை. பெருந்திரள் வடிவம் கொள்கையிலேயே அது இயற்கை என்று ஆகி இயற்கையின் இயங்குமுறையையே தானும் கொண்டுவிட்டிருந்தது.

விருஷசேனன் தன் புரவியிலிருந்து இறங்கி கர்ணனின் குடில் வாயிலில் காத்து நின்றான். மழையின் ஈரத்தில் தரையில் காலடித்தடங்கள் நீர்ச்சுவடுகளாக மாறி ஒளிகொண்டிருந்தன. அங்கிருந்த புரவிச்சுவடு சல்யருடையது என அவன் எண்ணினான். அவர் வந்து சுழன்று நின்று இறங்கிச்சென்றதை அதிலேயே பார்க்கமுடிந்தது. அப்பகுதியில் வயல்சேறென நிலம் கலக்கப்பட்டிருந்தது. எடைமிக்க குறடொலி கேட்டது. அவன் நன்கறிந்த ஓசை. மெல்லிய மெய்ப்புடன் அவன் உடல்நீட்டி நின்றான். கவசங்கள் அணிந்து முழுதணிக்கோலத்தில் குடிலில் இருந்து வெளிவந்த கர்ணன் கிழக்கு நோக்கி கைகூப்பி வணங்கிவிட்டு மைந்தனை அணுகினான். இயல்பாக அவன் கை வந்து விருஷசேனனின் தோளில் பதிந்தது.

விருஷசேனன் உளஎழுச்சி அடைந்து மெல்ல நடுக்கம் கொண்டான். சிறு குழந்தையென அவன் தோள்கள் முன் வளைந்தன. கர்ணன் அவனைத் தொடுவது மிக அரிது. இளநாட்களில் நீர்விளையாடும்பொழுதோ அவன் மைந்தர்களை தூக்கி வீசுவதுண்டு. கானாடச் செல்கையில் மரங்களில் கை பிடித்து ஏற்றுவதுண்டு. அம்பு பயில்கையில் பிழை நிகழும்போது மட்டும் கண்களில் சிறு சினம் தெரிய எழுந்து வந்து கைபற்றி வில்லுடன் சேர்த்து திருத்துவது வழக்கம். அத்தனை தொடுகைகளும் விருஷசேனனுக்கு நன்கு நினைவிருந்தன. ஒருகணத்தில் அத்தனை தொடுகைகளுமே நினைவிலெழ அவன் மேலும் மேலும் அகம் நெகிழ்ந்தபடியே சென்றான்.

கர்ணன் அவனை நோக்கி வந்தபோது முகத்தில் இருந்த உணர்வு அவன் எதையோ சொல்லப்போவதுபோல் தோன்றியது. ஆனால் தோளைத் தொட்டதுமே அனைத்துச் சொற்களையும் அவன் மறந்துவிட்டவன்போல அவன் முன்னால் சென்றான். விருஷசேனன் தொடர்ந்தான். கர்ணன் தன் புரவியை அணுகி அதன் கழுத்தை தடவிவிட்டு கால் வளையத்தில் மிதித்து மறுகால் சுழற்றி அமர்ந்தான். மீண்டும் அவன் எதையோ சொல்லப்போகிறான் என்ற எண்ணத்தை விருஷசேனன் அடைந்தான். ஆனால் கர்ணன் புரவியை மெல்ல தட்டி செல்லும்படி பணித்தான்.

மழை ஓங்குவதுபோல் ஓசை எழுந்தது. ஆனால் விசையுடன் தெற்கிலிருந்து வீசிய காற்று மழைப்பிசிறுகள் அனைத்தையும் ஒற்றை அலையென அள்ளிச் சுழற்றி வடமேற்காக கொண்டு சென்றது. பின்னர் ஒரு குளிர்காற்று மேலும் சுழல்விசையுடன் வந்து அனைத்துக் கொடிகளையும் படபடக்கச்செய்து கூடாரத்தோல்கள் உப்பி எழுந்து உடனே வளையும்படிசெய்து, தேர்மணிகளையும் புரவிகளின் கவசங்களையும் மணிக்குச்சங்களையும் குலுங்க வைத்து கடந்து சென்றது.

காற்றில் ஒரு நீர்ப்பிசிறுகூட இல்லை என்பதை விருஷசேனன் கண்டான். அங்கு அதுவரை இளம்ழை பெய்ததற்கான தடயங்கள் தரைச் சேற்றில் மட்டுமே இருந்தன. புரவிக்குளம்புகள் பதிந்த பள்ளங்களில் தேங்கிய நீர் மான்விழிகள் போல் ஒளி கொண்டிருந்தது. பல்லாயிரம் விழிகள் எழுந்து குருக்ஷேத்ரம் அவர்களை நோக்கிக்கொண்டிருந்தது. மழை நின்றதும் அனைத்து ஒலிகளும் கூர்மை கொள்ள அதுவரை அங்கிலாத பெரும் படையொன்று வந்து தன்னை சூழ்ந்துகொண்டதைப்போல விருஷசேனன் உணர்ந்தான். அந்த ஒலியே குளம்புக்குழிவிழிகளில் நீரின் நலுங்கல் என உள்ளம் மயங்கியது.

கர்ணன் புரவியைத் தட்டி ஊக்கி மென்நடையில் மரப்பலகை பாதை மீது எழுந்தான். நோக்கியிருக்கவே அனைத்து வண்ணங்களும் மேலும் துலங்கி புடைப்புகொண்டு எழுவதுபோல் விருஷசேனன் உணர்ந்தான். காட்சி கூர்கொண்டபோது அதையே உள்ளமென போலிசெய்துகொண்டிருந்த அகமும் தெளிவடைந்தது. சூழ நோக்கியபோது யானைகளின் கவசங்களும் முகபடாம்களும் சுடர் கொண்டிருந்தன. கொடிகள் முற்றாக ஈரத்தை இழந்து படபடத்தன. படைவீரர்கள் அந்தக் காற்றால் அதுவரை இருந்த உளஅமைப்பு மாறுபட நகைத்தபடியும் சிறுசொற்கள் பேசிக் களியாடியபடியும் சென்றுகொண்டிருந்தனர்.

அவன் அண்ணாந்து நோக்கியபோது வானம் மிக மெல்ல பிளவுபடுவதை கண்டான். கருமுகில் திரை விலகி வானின் பெரும்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கிழக்கு வானில் திறந்த பெருவாயிலினூடாக கண்கூசாத இனிய ஒளி குருக்ஷேத்ரத்தின்மேல் பெய்தது. படைகளின் வியப்பொலியைக் கேட்டு அவன் திரும்பிப்பார்த்தபோது ஒரு கணம் மெய்ப்பு கொண்டு அறியாது கடிவாளத்தை இழுத்தான். அவன் புரவி தயங்கி நிற்க கர்ணன் மட்டும் காற்றில் மிதந்து செல்வதுபோல் மரப்பலகை பாவிய பாதையில் சென்றான்.

கர்ணன் மீது விண்ணிலிருந்து பொன்னிற ஒளி ஒன்று இறங்கியிருந்தது. அவன் அணிந்திருந்த கவசங்களும் அணிகளும் விழிமலைக்கும்படி மின் கொண்டிருந்தன. அவன் புரவியின் கடிவாள மணிகளும் சேணத்தின் பித்தளை வளையங்களும் அது அணிந்திருந்த வெள்ளி அணிகளும்கூட பொற்சுடர் பெற்றிருந்தன. புரவியின் கால்கள் நிலம் தொடுவதுபோல் தோன்றவில்லை. அவை காற்றைத் துழாவி சென்றுகொண்டிருந்தன. முகில் ஊர்வது போல் அவன் படைகளின் நடுவே சென்றான்.

படைவீரர்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை. ஆனால் இயல்பாக அவர்கள் வாயிலிருந்து எழுந்த வியப்பொலிகளும் மகிழ்ச்சிக் கூச்சல்களும் கலந்து பெரும் கார்வையென கர்ணனை சூழ்ந்திருந்தது. விருஷசேனன் நடுங்கிக்கொண்டிருந்தான். கண்களிலிருந்து நீர் வழிந்து மார்பில் சொட்டியது. இருகைகளையும் கூப்பி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

கூடி நின்ற படைவீரர்களில் எவனோ ஒருவன் தன் வேலை தூக்கி வானிலெறிந்து பற்றி வெடிப்புறு பெருங்குரலில் “மணிக்குண்டலன் வாழ்க! கதிர்க்கவசத்தோன் வாழ்க! விண்ணூர்பவன் மைந்தன் வாழ்க! வெற்றிகொள் வேந்தன் வாழ்க!” என்று கூவினான். “மணிக்குண்டலன் வாழ்க! ஒளிக்கவசன் வாழ்க! கதிர்மைந்தன் வாழ்க!” என்று சூழ்ந்திருந்த கௌரவப்படையினர் கைவீசி ஆர்ப்பரித்தனர். திகைப்புடன் திரும்பி கர்ணனின் உடலை விருஷசேனன் பார்த்தான். சற்று முன் அவன் அணிந்திருந்த அதே இரும்புக்கவசங்களும் வழக்கமான அருமணிக் குண்டலங்களும்தான் தெரிந்தன.

தேவதேவனுக்கு அளிக்கப்பட்ட மணிக்குண்டலங்களும் கதிர்க்கவசமும் மீண்டு வந்துவிட்டனவா? இப்படை வீரர்கள் எதை பார்க்கிறார்கள்? அவன் புரவியைத்தட்டி தந்தையின் அருகே சென்றான். விழிகளால் தந்தையின் உடலையும் சூழ்ந்து அவனை நோக்கி படைக்கலங்களை வீசி துள்ளி குதித்தெழுந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த படைகளையும் மாறி மாறி பார்த்தான். இவர்கள் பார்ப்பதென்ன? இவர்கள் உணர்வதென்ன? ஏன் அதை நான் பார்க்கவில்லை? இவர்கள் பார்ப்பதை பார்க்கும் அளவுக்கு எனக்கு அயல்கை இல்லையா? அறியாமை இல்லையா? அல்லது அது அணுக்கமும் அறிவும்தானா?

பின்னர் நீள்மூச்சுடன் அவன் மெல்ல தளர்ந்து அமைந்தான். ‘ஆம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். மானுடம் எனும் அழியாப் பெரும்திரைச்சீலையில் வரையப்பட்ட கதிர்மைந்தனின் ஓவியத்தை எவர் அழிக்க இயலும்? என்றும் அது அங்குதான் இருக்கும். அதைத்தான் இந்திரன் அச்சுனைக்கரையில் நின்று சொன்னான். அது என்றென்றும் அழியாது அங்கு இருக்கும்.

 

போர் முனையில் சல்யர் நின்றிருந்தார். தொலைவிலேயே அவரை விருஷசேனன் கண்டான். கைகளை விசையுடன் ஆட்டி ஏவலர்களுக்கும் சூதர்களுக்கும் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். படையில் எழுந்த ஆரவாரத்தை அவர் அறியவில்லை. தன்னைச் சூழ்ந்திருந்த அனைவரும் தன் ஆணைகளை முற்றாகவே கேட்பதை நிறுத்திவிட்டு விழிநட்டு நோக்கும் திசையை உணர்ந்தபின்னர் அவர் திகைப்புடன் திரும்பிப் பார்த்தார். கர்ணனைக் கண்டதும் அவர் கையிலிருந்த சவுக்கு மெல்ல தாழ்ந்தது. முதிய முகம் வியப்பில் விரிய வாய் திறந்து கண்கள் நிலைத்தன. கர்ணன் புரவியில் அவரை அணுகும் வரை அவர் சொல்லிழந்து செயலற்று நின்றார்.

கர்ணன் புரவியிலிருந்து கால் சுழற்றி இறங்கியதும் சல்யர் உயிர்கொண்டு சிறிய தாவல்களுடன் அவனை நோக்கி வந்து “பிந்திவிட்டாய்! சற்று பிந்திவிட்டாய்!” என்றார். கர்ணன் “ஆம், மத்ரரே. சற்று பிந்திவிட்டேன். இங்கு விரைந்து வர எண்ணினேன், இயலவில்லை” என்றான். சல்யர் “நீ அணியூர்வலம்போல வந்தாய்… உன் இயல்பாகவே அது ஆகிவிட்டது. நீ அழகன் என அனைவரும் சொல்லிச்சொல்லி உன்னில் ஆணவத்தை ஏற்றிவிட்டனர். அவர்களின் விழிகளுக்கு முன் நடிக்கிறாய்” என்றார்.

கர்ணன் “பொறுத்தருளவேண்டும்” என்று மட்டும் சொன்னான். சல்யர் “ஆயிரம் விழிகளில் ஒருவிழி நச்சுவிழி என்றாலே போதும்… இவர்கள் அத்தனை பேரும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அல்ல” என்றபின் மீண்டும் தன்னை தொகுத்துக்கொண்டு “சரி, வெகுவாக பிந்தவில்லை. இன்னும் பொழுதிருக்கிறது. நமது படைகள் ஒருங்கமைந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது எஞ்சியிருக்கும் படைகளில் திறன் மிகுந்த வில்லவர்கள் இருப்பது காந்தாரர்களிடம்தான். அவர்களை நமக்குப் பின்னால் நிறுத்தியிருக்கிறேன். அஸ்தினபுரியின் காலாட்படையினர் நமது நிரையின் இருபுறமும் இரு கைகளென வருவார்கள். உனது மைந்தர் உனக்குப் பின்னால் பிறை வடிவுகொண்டு புறம் காக்கட்டும்” என்றார்.

கர்ணன் “ஆம், தங்கள் ஆணைப்படி” என்றான். சல்யர் “இன்று நம்மை எவரும் நிறுத்தப்போவதில்லை. பாண்டவப்படைகளை ஊடுருவிச் செல்லவிருக்கிறோம். ஐவரும் இன்று அடிபணிந்தாகவேண்டும். அன்றேல் யுதிஷ்டிரனின் தலைகொண்டு மீள்வோம். அர்ஜுனனின் நெஞ்சு பிளந்த பின்னரே அது ஆகுமெனில் அவ்வாறே ஆகட்டும்” என்றார். கொந்தளிப்புடன் கைகளைத் தூக்கி அசைத்து “இன்றுடன் இப்போர் முடிந்தாகவேண்டும். அது நம் கடமை” என்று கூவினார். கர்ணன் “ஆம், அவ்வாறே ஆகுக, மத்ரரே!” என்றான்.

அந்த அழைப்பு சல்யரின் விழிகளில் சிறிய ஒளி ஒன்றை அணையச் செய்வதை விருஷசேனன் கண்டான். சல்யரின் உடலசைவு, பேச்சு, தோற்றம் என எதிலும் கர்ணனின் எந்தச் சாயலும் இல்லை என்றாலும் எவ்வகையிலோ அவர் அவனுக்கு கர்ணனை நினைவுறுத்திக்கொண்டே இருந்தார். அது ஏனென்று அப்போதும் அவனால் உணரமுடியவில்லை. சல்யர் சவுக்கால் தன் தொடைக்கவசத்தை தட்டியபடி ஏவலர்களிடம் “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள், அங்கே? அனைத்துக் குளம்புகளையும் இறுதியாக சரிபார்த்துவிட்டீர்களா? “என்றார்.

புரவிக்குளம்புகளை தரையிலமர்ந்து நோக்கிக்கொண்டிருந்த ஏவலன் “பார்த்துவிட்டோம், அரசே” என்றான். கர்ணன் இடையில் கைவைத்து நின்று புரவிகளைப் பார்த்து ‘சற்று சிறியவை” என்றான். “ஆம், சிறியவை. ஏற்கெனவே இங்கு கட்டப்பட்டிருந்த புரவிகள் நீண்ட பேருடல் கொண்டவை. அப்புரவிகளால் இந்தத் தேரை மிகுந்த விசையுடன் இழுத்துச்செல்ல முடியும். ஆனால் நெடுநேரம் அவை செல்வதில்லை விரைவிலேயே அவை களைத்துவிடுவதை பார்க்கலாம். ஏனெனில் அவை கடுகிச்செல்பவை. இவை மலைப்புரவிகள். இவற்றால் அந்த அளவுக்கு விரைவுகூட்ட இயலாது. ஆனால் நிகர்நிலத்தில் இன்று அந்திவரை ஒருகணமும் கால்தளராமல் நுரை கக்காமல் தேரை இழுக்க முடியும்.”

“ஏனென்றால் எடைகளுடன் மலையேறிச்செல்லும் தொடைவல்லமை கொண்ட புரவிகள் இவை. என் கைகளில் பிறந்து வளர்ந்தவை. ஒவ்வொன்றையும் கருப்பையிலேயே இலக்கணம் நோக்கி தெரிவு செய்து ஒன்றுடன் ஒன்று இசைவுபடும்படி பயிற்றுவித்து வளர்த்தேன். நோக்குக, என் ஆணை பிறந்ததும் இவ்வேழு புரவிகளும் ஒன்றென்றாகும்! ஒற்றை எண்ணமும் இயல்பும் மட்டுமே கொண்டவை ஆக மாறும். இந்தத் தேர் அவற்றுக்குப் பின்னால் தெய்வங்களால் உள்ளங்கையில் ஏந்திச்செல்லப்படுவது போல செல்லும்” என்றார் சல்யர். உள ஊக்கம் எழ கைதூக்கி “ ஐயம் வேண்டாம், இன்று இந்தக்களத்தில் நானே சிறந்த தேர்ப்பாகன்” என கூவினார்.

கர்ணன் “நன்று, மத்ரரே. இந்நாளில் வெற்றி நம் அரசருடன் நிலைகொள்க!” என்றபடி தேரை நோக்கி சென்றான். விருஷசேனன் சூழ்ந்திருந்த கௌரவப்படையை பார்த்தான். எழுகதிரோன் வடிவத்தில் சூழ்கை அமைக்கப்பட்டிருந்தது. புரவியில் அமர்ந்தவாறே படையின் இரு எல்லைகளையும் பார்க்க இயன்றது. வலது எல்லையில் கிருபர் தன் பின்னால் அஸ்தினபுரியின் படைப்பிரிவுகளுடன் நின்றார். இடது எல்லையில் கிருதவர்மன் யாதவபடைப்பிரிவுகளுடன் நின்றான். இருபுறமும் அஸ்வத்தாமனும் சுபாகுவும் அணிவகுத்து நின்றிருந்தனர். கதிரோனின் நீல மையம் என கர்ணன நின்றிருக்க அவனிலிருந்து எழும் கதிர்களின் வடிவில் கௌரவப்படைப்பிரிவுகள் அமைந்திருந்தன.

விருஷசேனன் துரியோதனன் படைமுகப்புக்கு வந்துவிட்டாரா என்று பார்த்தான். அவர் காலையில் புத்துணர்வுடன் துயிலெழுந்துவிட்டார் என்றும் படைபயிற்சி எடுத்துவிட்டு உணவு அருந்திக்கொண்டிருக்கிறார் என்றும் தந்தையின் குடில் நோக்கிச் செல்லும்போது ஏவலன் சொல்லி அறிந்திருந்தான். புத்துணர்ச்சியுடன் எழுவதா என்று ஒருகணம் தோன்றினாலும் துரியோதனனின் இயல்பை அறிந்திருந்தமையால் அது நிகழக்கூடியதே என்றும் தோன்றியது.

படைசூழ்கை முழுமையடைந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு படைப்பிரிவும் அதற்குரிய இடத்தில் வந்து பொருந்த, தேர்ந்த ஓவியன் தூரிகையில் வண்ணம் தொட்டு வரையும் ஓவியம் உருதிரண்டு முழுமை கொள்வதுபோல் படைசூழ்கை தெளிந்து வந்தது. எத்தனை முறை இப்படி படைசூழ்கைகள் துளிகளென இணைந்து ஒருங்கமைவதை பார்த்திருக்கிறோம் என்று விருஷசேனன் எண்ணிக்கொண்டான். முதல் நாள் படைசூழ்கை அவ்வாறு ஒத்திசைவதைக் கண்டபோது எழுந்த உளஎழுச்சியை நினைவு கூர்ந்தான். அன்று அவன் தேர்ப்பாகனாக இருந்தான். அணிவித்தொருக்கிக்கொண்டிருந்த தேரின் மேல் நின்று படைசூழ்கையை பார்த்தான்.

பல்லாயிரம் மானுடரை அவ்வாறு ஒரு பெரிய போர்ப் பொறியாக ஆக்க முடியும். ஒற்றைச் சொல்லில் அவற்றை இயக்க முடியும். பெரும்பூதம் போல் ஆணைகளுக்கு அது கட்டுப்படும். ஒருகட்டத்தில் ஆணையிடுபவன் உள்ளத்தையே உணர்ந்து பல்லாயிரம் கைகளும் படைக்கலங்களுமாக நின்று போரிடும். எண்ண எண்ண அன்று உள்ளம் கொந்தளித்தது. படைசூழ்கையே மானுடர் வகுத்தவற்றில் தலை சிறந்தது என்று அவன் நூல்களில் பயின்றிருந்தான். மானுடர் குடிகளை அமைத்தனர். குலங்களென திரண்டனர். அரசுகளாயினர். நகரங்களை அமைத்தனர். அவை அனைத்திலுமிருந்து கற்றவற்றைக் கொண்டு படைசூழ்கையை வடிவமைத்தனர். படையில் வெளிப்படும் செயல்கூர்மையும் ஒழுங்கமைவும் மானுடர் கூடிச்செயல்படும் வேறெங்கும் வெளிப்படுவதில்லை.

மானுடர் படைகளில் மட்டுமே முழுமையாக தானற்றவர்களாகிறார்கள். தாங்கள் என்று உணராமல் தன்னை அப்பேருருவென்று முற்றிலும் எண்ணி மயங்குகிறார்கள். படைகளில் தன்னழிவு கொள்ளும் வீரன் புடவியில் தன்னைக் கரைத்து அமரும் முனிவருக்கு நிகரானவன். பிறிதொரு இடத்திலும் அப்பேருருவை அவன் அடைய இயலாது என்பதனால்தான் பெரும்போரில் உயிர் பிழைத்தவர்கள்கூட மீண்டும் போருக்கெழ விழைகிறார்கள். போரை எப்போதும் கனவு காண்கிறார்கள். போரிலேயே மானுடனின் அனைத்து உச்சங்களும் வெளிப்படுகின்றன என்பதனால்தான் கவிஞர்கள் எழுதிய காவியங்கள் அனைத்துமே போரைப்பற்றி அமைந்துள்ளன.

ஆனால் அன்று அந்தப் படைசூழ்கை அவனை சிறிய ஏமாற்றத்தை நோக்கி கொண்டுசென்றது. போர் தொடங்கியதுமே அப்படைசூழ்கை பொருளற்றதாகிவிடுவதை அவன் கண்டான். ஒரு படைசூழ்கையை நிகரான இன்னொரு படைசூழ்கையால் தாக்கமுடியும் என்றால், படைசூழ்கையை தக்க வைப்பதே அதை அமைத்தவர்களின் முழுப்பொறுப்பாக போரின்போது ஆகிவிடுமெனில் அதனால் என்ன பயன்? ஒழுங்கின்மையை படைத்துப் பரப்பியிருக்கும் பிரம்மத்தின் முன் ஒழுங்கு ஒன்றை அமைத்துக்காட்டி தானும் படைப்பாளியே என்று தருக்குகிறான் மானுடன். அல்லது பிரம்மத்தின் பேரொழுங்கிற்கு மாற்றாக தன் சிற்றொழுங்கை முன்வைக்கிறான். ஒழுங்கின்மை என பேருருக் கொண்டெழுந்த மலைகளுக்குக் கீழே சிறிய ஒரு மாளிகையை கட்டுபவன் போல். கட்டற்ற காட்டைத் திருத்தி சதுரக் கழனியாக்குபவன் போல.

அது மானுடனின் எல்லையை மட்டுமே காட்டுகிறது. அதன் செயலின்மை அவன் சிறுமைக்கு சான்று. போர் படைசூழ்கைகளால் நிகழ்வதில்லை. சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் கோடி மானுடரின் உள விழைவுகளால், தெய்வங்களின் ஊடாட்டங்களால், ஐம்பெரும் பருக்களின் ஆடலால், அவையனைத்தையும் ஆட்டுவிக்கும் பிறிதொன்றின் விருப்பத்தால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது தன் உள்ளங்கையில் ஏந்தி உற்று நோக்கும் சிறு குமிழி மட்டுமே.

முதல் நாள் போர் முனையில் புலரி எழுவதற்குமுன் அவன் மயிர்ப்புகொண்டு உடல் தசைகள் இறுகி உச்சத்தில் நின்றிருந்தான். எக்கணம் முரசுத்தோலில் கோல் விழும் என அவன் கைகால்கள் வலிப்புற்று நின்றன. இதோ இதோ இதோ என அக்கணம் நீண்டுகொண்டிருந்தது. அங்கு சென்றிருந்த அத்தனை படைவீரர்களும் அவ்வண்ணமே நாண் ஏற்றிய அம்பின் இறுக்கத்துடன் அசைவற்றிருந்தனர் அவன் விழி சுழற்றி நோக்கியபோது அப்பால் பீஷ்மபிதாமக்ர் தேரில் நின்றிருக்கக் கண்டான். அவர் மட்டுமே அந்தக்களத்தில் அச்சூழ்கைக்கு அப்பாலென நின்றிருந்தார். அங்கிருந்த எதையுமே உணராதவர் போல். அப்போரிலேயே ஆர்வமற்றவர் போல்.

அவன் அணிவித்த தேரை ஊர்ந்த கலிங்க நாட்டு படைத்தலைவனாகிய பர்ஜன்யன் “எங்கு நோக்குகிறாய், அறிவிலி?” என்றான். ஒன்றுமில்லை என்பதுபோல் அவன் தலைவணங்கினான். மீண்டும் பீஷ்மரின் முகத்தை நோக்கியபோது அதுவரை எழுந்த உளஎழுச்சி முற்றணைந்து சலிப்பும், பின் சினமும் ஏற்பட்டது. இத்தனை பெரிய உளக்கொந்தளிப்பை எழுப்பி, பல்லாயிரம் பேரில் நிரப்பி, அதைக்கொண்டு அவர்களை தொடுத்து, ஒற்றை விசையென்றாக்கி களத்தில் கொண்டு வந்து நிறுத்தியபின் அதன் தலைமையில் சற்றும் உளம் குவியாத முதியவர் ஒருவரை கொண்டுவந்து நிலைகொள்ள வைத்த அறிவின்மையை அவன் எண்ணி வியந்தான்.

இங்கு நின்றிருக்கும் இப்பல்லாயிரவரின் உணர்வெழுச்சியில் ஒரு துளி கூட அவரை சென்றடையவில்லை. எனில் அவரிலிருந்து ஒரு துளி ஊக்கத்தை கூட இப்படையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. இது ஓர் உரையாடல் என்று அவன் நூல்களில் பயின்றிருந்தான். படையினர் படைத்தலைவனை நடத்துகிறார்கள், படைத்தலைவன் படையினரை ஆள்கிறான். இன்னும் சற்று நேரத்தில் அவர் உடலிலிருந்து அந்த ஆர்வமின்மையை கௌரவப்படைகளும் பெற்றுக்கொள்ளும். அவருடைய சலிப்பே படைகளின் ஒவ்வொரு வாள்வீச்சிலும் ஒவ்வொரு போர்க்கூச்சலிலும் வெளிப்படும்.

அவன் பீஷ்மரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் ஓர் அடையாளம். இத்தனை பெரிய படையும், இத்தனை உளக்கொந்தளிப்பும் அறுதியாக தோல்வியடையும் என அவர் காட்டுகிறாரா என்ன? அவரை அறியாமல் அவர் ஆழம் அதை முன்னுணர்ந்துவிட்டதா? பர்ஜன்யன் “எங்கு நோக்குகிறாய்? பிறிதொரு முறை புரவிகளின் குளம்புகளை நோக்கு” என்று ஆணையிட்டான். அத்தருணத்தில் அந்த ஆணை அத்தனை உவப்பானதாகத் தோன்றியது. விழிதாழ்த்தி புரவிகளின் குளம்புகளை பிறிதொரு முறை பார்த்தான். அவை பொறுமையிழந்து நிலத்தை தட்டிக்கொண்டிருந்தன. மிக அப்பால் முரசுத்தோல்மேல் கழிகள் அதே போல் பொறுமையிழந்து தொட்டுக்கொண்டிருக்கின்றன.

அவனால் மீண்டும் விழிதூக்கி பீஷ்மரை நோக்காமலிருக்க முடியவில்லை. பீஷ்மரின் வில்லின் நாண் தளர்ந்திருப்பதை அப்போதுதான் பார்த்தான். இன்னமும் வில்லை நாண் இழுத்து பூட்டக்கூட இல்லை இம்முதியவர். இவர் பெருவீரர் என்றே ஆகுக! இக்களத்தில் இவர் எவரும் நிகழ்த்தாத விந்தையை காட்டுவார் என்றே ஆகுக! ஆயினும் இறுதியில் எஞ்சப்போவது இந்த ஆர்வமின்மையே. இத்துளியே இக்களத்தில் கௌரவரை வீழ்த்தும் நஞ்சு. இதையே அவர்கள் அறுதியில் தங்கள் போர்ப்பரிசென பெறுவார்கள்.

இல்லை, இவ்வாறு எண்ணக்கூடாது. இது வீண் எண்ண ஓட்டம். இது தோல்வியை வரிந்துகொள்ளும் முயற்சி. ஆனால் இச்சலிப்பும் அவரிடமிருந்தே வந்தது. விழிகளால் அவரிடமிருந்து நஞ்சை தொட்டெடுக்கிறேன். தன் உடலிலிருந்து அவர் அதை பரப்பிக்கொண்டிருக்கிறார். அத்தருணத்தில் போர் முரசு ஒலித்தது. படைகள் ஒருகணம் திகைத்து அசைவிழந்து நின்றன. எங்கிருந்தோ “வெற்றிவேல்! வீரவேல்! அமுதகலக்கொடி வெல்க! கௌரவப்படை வெல்க!” என்று வாழ்த்தொலி எழுந்தது. மலையிறங்கும் வெள்ளமென கௌரவப்படை பெருகி பாண்டவப்படை நோக்கி சென்றது.

கலிங்கப் படைத்தலைவன் பர்ஜன்யனின் தேரை விட்டு விலகி உடல் குனித்து முன்னேறி வந்த படைகளின் இடைவெளியினூடாக சென்று விருஷசேனன் படைகளின் பின்நிரையை அடைந்தான். அங்கு நின்று நோக்கியபோது அவனுக்கு முன்னால் படைக்கலங்களும் மானுட உடல்களும் புரவிகளும் யானைகளும் தேர்களும் கலந்து கொப்பளித்த பெரும் திரையை பார்த்தான். அதுவரை படையென்றும் போரென்றும் அவன் உருவாக்கிக்கொண்டிருந்த அத்தனை உளஓவியங்களும் கலைந்தன. அவன் முற்றிலும் அறியாத பிறிதொன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. எவ்வகையிலும் எச்சொற்களாலும் பொருள் அளிக்க இயலாத ஒன்று.

விருஷசேனன் நீள்மூச்சுடன் தன்னைச்சூழ்ந்து முழுமைகொண்டுவிட்ட கௌரவப்படையின் அமைப்பை பார்த்தான். கதிர்முகச் சூழ்கை பழுதற அமைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றியது. முழுப்படையையும் கொண்டு முதல்நாள் பெரும்படை சூழ்கை அமைத்த அஸ்வத்தாமனின் பணி ஒப்பு நோக்க எளிது என்று தோன்றியது. இது இன்னும் கடினமானது. வறுமையில் ஐந்தறைப் பெட்டியில் எஞ்சும் பொருட்களைக் கொண்டு கையளவு அரிசியை களைந்து அடிசில் சமைக்கும் இல்லத்தரசியின் பொறுமை அதற்கு தேவை. அவன் அஸ்வத்தாமனை விழிகளால் தேடினான். அஸ்வத்தாமனின் உருவத்தைக் கண்டதும் முதற்கணம் அவன் உள்ளம் அதிர்வு கொண்டது. அவன் அதில் பீஷ்மரின் அதே உடல் மொழியை கண்டான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 45

எட்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான துருதர் பாரதவர்ஷத்தில் மலைக்காடுகள் மண்டிய மணிப்பூரக நாட்டிலிருந்து வந்திருந்தார். மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து அமைக்கப்பட்டிருந்த வேத்ரம் என்னும் இசைக்கருவியின் மீது சிறிய கழிகளால் விரைந்து தட்டி யாழ்நிகர் ஒலியெழுப்பி அவர் பாடத்தொடங்கினார். “தோழரே இக்கதையை கேளுங்கள். இது செவிகளினூடாக பரவி, புல்விதைகள் போல் பெருகி, அருகு போல் செழித்து, அனல் கடந்து, நீர்ப் பெருக்கை வென்று என்றும் இங்கு நின்றிருக்கும் சொல்லென்று உணர்க! இதைச் சொல்லும் நான் புல்லின் வேர். ஆலமரங்கள் சரியும், மலைகள் மடிந்து மண்ணாகவும் கூடும், புல் என்றும் இங்கிருக்கும். புல்லின் தழல் என என் நா எழுக! இச்சொல் இங்கு விளைக! ஓம், அவ்வாறே ஆகுக!

சூழ்ந்திருந்த சூதர்களும் கைகளைக்கூப்பி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று ஒலிக்க துருதர் தன் கதையை சொல்லத்தொடங்கினார். இது முன்பொரு நாள் நிகழ்ந்தது. பிருகு குலத்து அந்தணரும் மழுவேந்திய மாவீரருமான பரசுராமர் கோதை நதியின் கரையிலிருந்த தன்னுடைய குடிலிலிருந்து தன் மூதாதையருக்குரிய ஆண்டு நீர்க்கடன் செய்யும் பொருட்டு கிளம்பினார். அன்று அவருடன் இருந்தவன் இளைய மாணவனாகிய கர்ணன் மட்டுமே. ஆசிரியனின் நிழல் தன் மீது எப்போதும் விழும்படி, தன் காலடியோசை எழுந்து அவர் சித்த ஓட்டத்தை முறிக்காதபடி அணுகியும் அணுகாமலும் அவன் அவரைத் தொடர்ந்தான். அது அனலுக்குரிய நாள். வைகாசி மாதம் வளர்பிறை மூன்றாம்நாள். குறைவிலா மூன்றாம்பக்கம். பார்க்கவ குலத்து முனிவர்களுக்கு அவர்களின் வழித்தோன்றல்கள் நீரளிக்கும் பொழுது. பாரதவர்ஷம் எங்குமிருந்த பரசுராமர் நிலைகளில் பூசனைகள் நிகழும். அனல்குலத்து அந்தணர் அனலோம்பி அவியிட்டு குருநிரையை வழுத்துவர். அனல்குடி ஷத்ரியர்கள் குருபூசனைசெய்வர்.

அன்று முதற்கதிர் எழும் தருணத்தில் கோதையின் கரையை அடைந்த பரசுராமர் தன் வில்லை நிலத்தில் வைத்துவிட்டு நீரருகே சென்று அதை தன் சுட்டுவிரலால் தொட்டார். கோதையின் நீர் செவ்வொளி கொண்டு அனல்பெருக்காக மாறி ஓடத்தொடங்கியது. அதிலிருந்து வாள் என, நெருப்பென, தளிரென மின்னிய மீன்கள் துள்ளி எழுந்து விழுந்து அலைவட்டம் கிளப்பின. நீரை மும்முறை அள்ளி ஒளிர்ந்து வழியவிட்டு முன்னோருக்குச் சொல்லும் முறைவணக்கமும் முடித்தபின் பரசுராமர் நீர்மேல் கால்வைத்து நிலம்மேல் என நடந்து நடுஆற்றை சென்றடைந்தார். ஆற்றின் நடுவே மலரமர்வில் கால்களை மடித்து அமர்ந்தார். அவரைச்சூழ்ந்து அனற்கொழுந்தின் அலைவென கோதை ஓடிக்கொண்டிருந்தது. பொன்னுருகி வழிவதுபோல் பரசுராமரின் தாடியும் குழல்கற்றைகளும் பொன்னொளி கொண்டன. அங்கிருந்து நோக்கியபோது நீரில் பொற்றாமரை மலர்ந்ததெனத் தோன்றியது.

கரையில் இருகைகளையும் நெஞ்சோடு சேர்த்துக்கட்டி தன் ஆசிரியரை நோக்கியபடி கர்ணன் நின்றிருந்தான். குறையுணர்ந்து விழித்துக்கொண்ட பரசுராமர் தன் கையைத்தூக்கி அசைத்து  “வில்லை கொண்டு வருக!” என்று ஆணையிட்டார். தன் அருகே அவர் வைத்த வில் இருப்பதைக் கண்ட கர்ணன் அதை எடுக்கும்பொருட்டு சென்றபோது அதைச்சூழ்ந்து ஓர் அனல் வட்டம் எழுவதைக்கண்டு திகைத்து நின்றான். மீண்டும் ஆசிரியரின் பெயரை உளம் நிறுத்தி அதை அணுகி எடுக்க முயன்றபோது அவனை சுட்டு தூக்கி வீசியது சூழ மின் என துடிப்புகொண்டு எழுந்த அனல். மீண்டும் ஒருமுறை முயன்றபின் உடல் வெந்து உயிர் தளர்ந்து அவன் நிலத்தில் விழுந்தான்.

அதன் பின்னரே பரசுராமர் திரும்பி அவன் விழுந்துவிட்டதைக் கண்டார். எழுந்து நீர்மேல் நடந்து அருகணைந்து சுட்டுவிரலைக்கொண்டு அவ்வில்லை எடுத்தார். மூன்று முறை அம்பு தொடுத்து கோதையின் மீது எய்தார். மூன்று அம்புகள் மூன்று மீன்கொத்தி முத்தங்கள் என நீர்ப்பரப்பை தொட்டன. அவருடைய மூதாதையர்களான ஜமதக்னியும், ருசிகரும், ஊர்வரும், சியவனரும், பிருகுவும் எழுந்துவந்தனர். அலைவடிவான கைகள் விரித்து அவர் அளித்த அக்கொடையை பெற்றுக்கொண்டனர். வில்லை தோளிலிட்டபடி பரசுராமர் திரும்பி நடக்க கர்ணன் அவருக்குப் பின்னால் சென்றான். அவர் அன்று காலை உணவு உண்பதில்லை என்பதனால் ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தார். சற்று முன்னால் சென்று அவர் விழி முன் இல்லாமலும் நோக்கில் இருந்து அகலாமலும் கர்ணன் நின்றான்.

கண் மூடி நெடுநேரம் அமர்ந்திருந்தபின் அவர் தன் உணர்வு கொண்டு விழித்து அவனைப் பார்த்து சில கணங்கள் விழி கூர்ந்து அமர்ந்திருந்தபின் நீள் மூச்செறிந்து “என் பிழைதான்” என்றார். கர்ணன் அவரை பணிவுடன் நோக்கி நிற்க “உன்னால் அது இயலாது என்று நான் எண்ணியிருக்கவில்லை. என் மாணவர்கள் அனைவரும் இயல்பாக அதை இயற்றக்கூடும் என்று நான் எண்ணினேன்” என்றார். கர்ணன் “தங்கள் மாணவர்களில் நான் எவ்வகையில் குறைவுடையவன், ஆசிரியரே?” என்றான். “இது அனல்குலத்து முன்னோர் தங்கள் கைகளில் சூடியிருந்த வில். நூற்றெட்டு பரசுராமர்கள் இதை ஏந்தியிருக்கிறார்கள். இன்னும் முடிவிலி வரை பரசுராமர்கள் இதை ஏந்துவார்கள். பரசுராமர் என்றாகும் தகைமை கொண்டவனே இதை தொட இயலும். நீ ஷத்ரியன் அல்ல, அந்தணனும் அல்ல. எளிய போர் வீரன். உன்னால் இதை தொட இயலாமல் ஆனது இயல்பே” என்றார் பரசுராமர்.

கர்ணன் கைகூப்பி “நான் இதை தொடவும் ஏந்தவும் விழைகிறேன், ஆசிரியரே” என்றான். “நீ ஏன் இதை தொடவேண்டும்? நீ சென்று நிற்கப்போகும் எந்தக்களத்திலும் இது உனக்கு உதவப்போவதில்லை. இது மண்ணை வெல்லும், விண்ணை வளைத்து அணையச்செய்யும். மாபெரும் யோகிகளுக்கு நிகராக உன்னை அமரவைக்கும். ஆனால் இவ்வுலகில் மானுடன் அடையப்பெறும் எளிய செல்வங்கள் அவன் இயற்றும் உலகியல் செயல் எதற்கும் இதை பயன்படுத்த இய்லாது” என்றார். கர்ணன் “ஆசிரியரே, மாணவன் ஆசிரியனாக மாறுவதே கல்வி என்பது. நான் தங்களைப்போல் ஆகவில்லை எனில் இத்தனை தொலைவு வந்து, இங்கு தங்கள் அடிபணிந்து, சொல்பெறுவதில் என்ன பொருள்? அது எனக்கு இழிவு. அவ்வண்ணம் கல்வி முழுமையடையாது நான் செல்வேனெனில் தங்கள் பெருமைக்கு குறைவும்கூட” என்றான்.

“மூடா! இது எளிய செயலுக்கு பயன்படாது என்று உணர்க! நீ இவ்வுலகில் திகழ்பவன், யோகம் தேடும் ஊழ் இல்லாதவன்” என்று பரசுராமர் மீண்டும் சொன்னார். “எளிய செயல் என்பது என்ன? பேரரசுகளை உருவாக்குவது, பல்லாயிரம் கோடி மக்களின் நலன் பேணுவது, வேள்வி நிறைய வைப்பது, வேதம் விளையச்செய்வது, எளிய செயலா என்ன?” என்று கர்ணன் கேட்டான். “ராஜசூயத்தில் தன் கருவூலம் ஒழியும்படி அள்ளி வழங்கும் அரசன் ஆயிரம் வேதியருக்கு நிகரானவன், ஏழு தலைமுறைக்காலம் அனல் புரந்த அந்தணர் சென்று அமரும் இட்த்தில் தானும் சென்று அமர்பவன் என பராசர ஸ்மிருதி சொல்வதை தாங்கள் அறிந்திருப்பீர்கள், ஆசிரியரே” என்று தொடர்ந்தான். “ஒவ்வொருவரும் தங்கள் உச்ச எல்லையில் சென்று நின்று செய்வதே பெருஞ்செயல். அது தன்நலம் கருதியதாக அமையாது.”

அவனை நோக்கிக்கொண்டிருந்த பரசுராமர் ஒருகணத்தில் வாய்விட்டு நகைத்தார். “நான் பராசர ஸ்மிருதியை சொன்னேன்” என்று கர்ணன் விழிதாழ்த்தினான். “எல்ல்லையற்ற ஆற்றல்கொண்ட இந்த வில்லால் எளிய வெற்றிகள் என்று தாங்கள் கூறும் இவ்வுலகத்துப் பொருட்களை வென்றெடுக்க இயலாதா என்ன?” என்றான். “இயலும். அவை இந்த வில்லையும் அம்பையும் கொண்டவனுக்கு மிக எளிய விளையாட்டுக்கள்” என்று பரசுராமர் சொன்னார்.  “எனில் எனக்கு இந்த வில்லை ஏந்தும் ஆற்றலை அளியுங்கள். தேக்கு மரங்களை வேருடன் பிழுதெடுக்கும் ஆற்றல் கொண்ட காட்டுவேழத்தின் முகக்கை மென்மலர்களை தொட்டெடுத்து சுருட்டிக்கொள்வதையும் நான் கண்டதுண்டு. பெரும்படைக்கலங்கள் அனைத்தும் எண்ணித்தீரா நுண்மை கொண்டவை” என்று கர்ணன் சொன்னான். இளஅகவையருக்குரிய உறுதியுடன் அவர்களுக்கே உரிய நம்பிக்கையுடன் அவன் ஆசிரியரிடம் பேசினான்.

“என் இலக்கு எதுவெனினும் இது என் படைக்கலமாகுக! இதை ஏந்துகையில் நான் தாங்களாக மாறுவேன். அத்தருணத்தில் மட்டுமே நான் முழுமை கொள்வேன்” என்றான் கர்ணன். பரசுராமர் அறிவுதெளியா இளமைந்தனை நோக்கும் தந்தையின் கனிவு நிறைந்த நகைப்புடன் அவனைப் பார்த்து “இதை பெறுவதற்கு நீ இயற்றவேண்டிய தவம் என்னவென்று அறிவாயா?” என்றார். “எத்தவமாயினும் ஆகுக! நான் இயற்றுவேன்” என்றான் கர்ணன். பரசுராமர் வாய்விட்டு நகைத்து தன் தொடையில் தட்டியபடி எழுந்தார். “நன்று எத்தவம் தேவை என்று அறிவாயா எனக் கேட்டதும் எதுவானாலும் ஆகுக என்று உரைப்பவன் மட்டுமே தவம் செய்ய இயலும். எண்ணிச் செயல்சூழ்பவன் அருந்தவம் செய்வதில்லை. தவநோன்பென்பது எண்ணிய அக்கணமே எஞ்சியவற்றை அறுத்தெறிபவர்களுக்குரியது” என்றார். “என் குடிலுக்கு இன்று மாலை வருக! இதன் பொருளென்னவென்று உனக்குச் சொல்கிறேன்” என்று அவன் தலைமேல் கைவைத்து வருடினார்.

அன்று மாலை பரசுராமரின் குடில் முற்றத்தில் பனை விதையின் சாரம் பிழிந்தெடுத்த நெய் ஊற்றிய கல்லகல் எரிந்துகொண்டிருக்க அதன் அருகே கர்ணன் கால்மடித்து கைகூப்பி அமர்ந்தான். அவன் முன் கல்பீடத்தில் அமர்ந்த பரசுராமர் அவனுக்கு ஐந்தனல் யோகத்தின் கதையை சொன்னார். அக்னி வித்யை, அக்ஷர வித்யை, ஆனந்த வித்யை, அதிம்ருத்யுபாஸன வித்யை, பாலாகி வித்யை, பூம வித்யை , ப்ரம்ம வித்யை, சாண்டில்ய வித்யை, தஹர வித்யை,. ஜ்யோதிர் வித்யை, கோச விஜ்ஞான வித்யை, மது வித்யை, மைத்ரேயி வித்யை, கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை, ந்யாஸ வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர வித்யை, பர்யங்க வித்யை, ப்ரஜாபதி வித்யை, ப்ராண வித்யை, ப்ரதர்ன வித்யை, புருஷ வித்யை, புருஷாத்ம வித்யை, ரைக்வ வித்யை, புருஷோத்தம வித்யை, ஸத் வித்யை, ஸர்வ பர வித்யை,. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை, உத்கீத வித்யை , உபகோஸல வித்யை, வைஷ்ணவ வித்யை, வைச்வாநர வித்யை என முப்பத்திரண்டு வித்யைகளை யோகநூல்கள் சொல்கின்றன. அவற்றில் ஒன்றான பஞ்சாக்னி வித்யை வன்பாதை. ஷத்ரியர்களுக்கு மட்டுமே உரியது. அதை பிறர் அறிந்திருக்கவில்லை.

நெடுங்காலம் ஷத்ரியர் தங்கள் குல முறைப்படியும் குருமுறைப்படியும் அதை பேணினர். அதை பெற்ற முதல் அந்தணர் ஆருணியான உத்தாலகர். அதை ஆற்றி தகைவு கொண்டவர் அந்தணனின் தொழிலெல்லை கடந்து, அறிவெல்லை கடந்து, ஷத்ரியனும் ஆகி நிமிர்ந்தவராகிய அவர் மைந்தன் ஸ்வேதகேது. உத்தாலகரின் மைந்தரான ஸ்வேதகேது அந்தணருக்குரிய அனைத்தையும் கற்றபின் பாஞ்சாலநாட்டு அவைக்குச் சென்று அங்கே அரசுவீற்றிருந்த பிரவாகண ஜைவாலி என்னும் அரசருக்கு அறமுரைக்க முற்பட்டார். “அந்தணரே, உமது கல்வியின் தொலைவென்ன?” என்று உசாவிய பிரவாகணர் ஐந்து வினாக்களை தொடுத்தார். ஐந்துக்கும் மறுமொழி சொல்ல இயலாது உளம்நலிந்த ஸ்வேதகேது திரும்பிச்சென்று தந்தையிடம் அவற்றை கேட்டார்.

உத்தாலகருக்கும் அந்த விடை தெரிந்திருக்கவில்லை. அவர் பிரவாகணரிடம் சென்று அவ்வினாக்களுக்குரிய விடையை கேட்டார். ஷத்ரியர்களுக்கு மட்டுமே உரிய மெய்யறிதல் அது என்று பிரவாகணர் சொன்னார். அதை எய்துவதற்கும் ஷத்ரிய ஆற்றல் தேவை என்றார். “நான் ஷத்ரியனாகிறேன். என் மைந்தனும் ஷத்ரியனாகி அவ்வித்தையை கற்பான்” என்றார் ஸ்வேதகேது. பாஞ்சாலனாகிய பிரவாகண ஜைவாலி ஆணவம் அகற்றி, குலமிழந்து தன் அடிபணிந்து அமர்ந்த ஆருணியாகிய உத்தாலகருக்கு ஐந்தனல்யோகத்தை கற்பித்தார். அது பின்னர் அனைவருக்கும் உரியதாகியது. பிருகுகுலத்து அனல்குடி முனிவர்கள் தங்கள் யோகமுறை என அதை கொண்டார்கள்.

பிரம்மத்தின் சுடர்வே அனல். அனல்களே இப்புடவியை சமைத்திருக்கின்றன. ஐந்துவகைகளில் அறியப்படுவதனால் அவ்வனல்வெளி ஐந்தனல் எனப்படுகிறது என்று பரசுராமர் சொன்னார். அனலை அறிவது புடவிமெய்மையை உணர்வது. அனலென்றாவது மாயையை அழித்து மானுட எல்லை கடப்பது. புடவியை ஆள்பவை ஐந்து அனல்கள். மின்வடிவில் விண் நிறைப்பது ஒன்று. பருவடிவப் பொருளென்றாகி நிலைப்பது பிறிதொன்று. விசையென்றாகி பொருள்களை ஆட்டுவிப்பது மூன்றாவது, இணைவும் பிரிவும் அழிவும் என்றாகி பொருள்களை ஆளும் நெறியாகி நிற்பது நாலாவது அனல். இன்மை என்றாகி இருள் வடிவில் சுழல்வது ஐந்தாம் அனல். இவ்வுடலை ஐந்தனல்கள் ஆள்கின்றன. மூலாதாரத்தில் காமம். சுவாதிட்டானத்தில் பசி. மணிபூரகத்தில் இதயம். அனாகதத்தில் மூச்சு. விசுத்தியில் சொல்.

இப்புவியை ஆள்கின்றன ஐந்தனல்கள். ஒன்று விண்ணில் ஒளியென உறைகிறது. பிறிதொன்று அனைத்துப் பருப்பொருட்களிலும் அனல் என உறைகிறது. நீரில் வாழ்கிறது மூன்றாவது. அன்னத்தை உயிர்பெறச்செய்வது அது. கருவில் தளிரில் குருதியில் நிறைந்திருப்பது. நான்காவது அனல் சொல்லில் பொருள் எனத் திகழ்கிறது. ஐந்தாவது அனல் யோகத்தில் வெறுமையென விரிகிறது. ஐந்து வகை கருவனல்களால் இவை படைக்கப்படுகின்றன. விண்ணின் தூயநீர்வெளி. அதிலெழுந்தவை விண்மீன்களும் சூரியனும் சந்திரனும். முகில்களில் விளைகின்றது மழை. மண்ணின் கருவிலெழும் அனலே உணவாகிறது. ஆணின் விந்துவிலும் பெண்ணின் கருப்பையிலும் வாழும் அனல்கள் உடலென உள்ளமென பொறிகளென சித்தமென மலர்ந்து நோக்கு கொண்டு புடவிசமைக்கின்றன.

பரசுராமர் சொன்னார் “கதிர் கொள் அனைத்திலும் எழுகிறது அனல். ஐந்து அனல்தெய்வங்களை வணங்குக! முன்பு பிரவாகண ஜைவாலி ஸ்வேதகேதுவுக்கு அளித்த ஐந்தனல் யோகநெறியை நான் உனக்கு உரைக்கிறேன். ஐந்து ஆற்றல்கள், ஐந்து அழிவின்மைகள், ஐந்து இன்மைகள். அவை உனக்கு அருள்க!” கர்ணன் அவர் காலடியை வணங்கி அச்சொற்களை பெற்றான். நூலறிவுறுத்திய நெறிகளின்படி கர்ணன் கோதையின் கரையில் ஏழுபனை என்று பெயர் கொண்ட குன்றின் மீது நூற்றெட்டு பாறைக்கற்களை கூம்பு வடிவில் அடுக்கி தனக்கென கற்சிதை ஒன்று அமைத்தான். அதனைச் சுற்றி விறகுகளை அடுக்கி அனல்மூட்டினான். கிழக்கு திசையின் அனலான ஜாதவேதனும் மேற்கின் அனலோனான வஹ்னியும் எழுந்தனர். தெற்கே சாவின் நெருப்பான கிரவ்யாதன் பற்றிக்கொண்டான். வடக்கே ஊழிநெருப்பான ருத்ரன். மேலே விண்நெருப்பான சூரியன் ஒளிசூடி நின்றான்.

அந்தச் சிதைபீடத்தின் மீதேறி கிழக்கு நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்தான் கர்ணன். ஜ்வாலை, கீலம், அர்ச்சிஸ், ஹேதி, சிகை என்னும் ஐந்து தழல்கள் எழுந்து சுழன்றாடின. ஃபூதி, ஃபஸிதம், பஸ்மம், க்ஷாரம், ரக்ஷ என்னும் ஐந்து சாம்பல்கள் தோன்றின. அனல் ஜ்வலனன், பர்ஹிச், கிருசானு, பாவகன், அனலன், தஹனன், தமுனஸ், விஃபவச், சூசி என்னும் தன் முடிவிலா வடிவங்களில் வண்ணவண்ணத் தோற்றங்களில் அவனைச்சூழ்ந்து எழுந்தான். அனல்பட்டு உடல் பொசுங்க பாறை கொதித்து தானும் அனலென்றாகி மெய்யுருக கர்ணன் நின்றான். உடலென்பது எரியும் நீரும் நிகர்செய்த கணமே இருப்பென்றாகி நீளும் காலம் கொண்டது என்று உணர்ந்தான். நீரும் அனலே என்று உணர்கையில் அனல் ஏந்திய அனலே உடலென்று அறிந்தான். அனலன்றி பொருளென்று ஏதுமில்லை. அனல்தலன்றி நிகழ்வென்று ஏதும் புடவியில் இல்லை. அனலாதலே தவம். அனல் மூன்று நிலை கொண்டது. எழும் அனல், அணையும் அனல். அனலின்மை, இன்மையென ஆன அனல். இன்மையனலில் இருப்புகொண்டுள்ளன அனைத்தும். கருவனல் அது. காண்பதற்கரியது. யோகத்தீ. அவன் அதை சென்றடைந்தான். அது அவனைத் தொட்டு தானாக்கிக் கொண்டது.

ஐந்தனல் மேல் தவம் செய்பவன் தன்னுள் ஒவ்வொரு அனலாக எழுப்புகிறான். அவை தன்னை கொதிக்க வைத்து, உருக வைத்து. முற்றழிப்பதை காண்கிறான். பின்னர் அனலின் ஆழத்தில் தண்ணிலவு ஒன்று எழுகிறது. விண்ணின் அமுதாக உருகிச்சொட்டிய துளி என நோக்குகையிலேயே உடல் தித்திக்கவைப்பது அது. எண்ண எண்ண சித்தம் குளிர வைப்பது. அதிலிருந்து பெருகி வழியும் வெண்ணிற தண்மையில் தன் உடலின் அனல்கள் ஒவ்வொன்றாக அணைவதை காண்கிறான். அனைத்து அனல்களும் அணைந்து குளிர்ந்த பாறை ஒன்று சுனையடியில் கிடப்பதுபோல் தான் அங்கு இருப்பதை அவன் உணர்கிறான். பின்னர் விழி திறந்து நோக்குகையில் அவன் தன்னைச் சூழ்ந்திருந்த அனல் குளிர்ந்த மென்மலர்களாக ஆகிவிட்டிருப்பதை காண்பான்.

கர்ணன் விழி திறந்தபோது தன் இரு கண்மணிகளும் பனிக்கட்டிகளென குளிர்ந்திருப்பதை உணர்ந்தான். கிழக்குத்திசையில் பொற்கொன்றை மரம் பூத்திருந்தது. மேற்கே செந்தழலென செண்பகம். வடக்கே பொன்பூசி நின்றது வேங்கை. தெற்கே செவ்வொளி கொண்டிருந்தது காந்தள். அவன் எழுந்து நான்கு பூமரங்களையும் வணங்கினான். தலைக்கு மேல் பொன்முகில்கள் அலைதிரண்டு ஒளி சூடி நின்றிருந்தன. தன் உடல் ஒளிகொண்டிருப்பதை, ஆகவே நிழலற்றிருப்பதை அவன் கண்டான். விழிமூடி ஆசிரியரின் காலடிகளை சித்தத்தில் நிரப்பி தொழுதான்.

கொன்றையில் எழுந்த முதல் அனலோனாகிய ஜாதவேதஸ் அவன் முன் தோன்றினான். பொன்னெரியாலான ஒளியுடல்கொண்டிருந்தான். வலக்கையில் அமுதகலமும் இடக்கையில் வேள்விக்குரிய நெய்க்கரண்டியும் ஏந்தியிருந்தான். அவன் நா எரிகுளத்தின் எழுதழலென பறந்தது. “உன் தவம் பொலிக! உன் அம்பில் நான் எழுவேன். உன் ஆணைப்படி நின்று ஆடுவேன். என் அருளை பெறுக!” கர்ணன் அவனை வணங்கினான். செண்பகத்தில் வஹ்னி எழுந்தான். வலக்கையில் தர்ப்பையும் இடக்கையில் மின்படையும் வைத்திருந்தான். “உன் படைக்கலம் என ஆவேன். உன்னுடன் நின்றிருப்பேன்” என அருள் அளித்தான். தெற்கே காந்தளில் எழுந்த கிரவ்யாதன் “நீ விழையும்வரை உனக்கு சாவில்லை. விழைந்தால் அழிவின்மையையும் அளிப்பேன்” என்றான். வடக்கே வேங்கையில் எழுந்த ஊழித்தீயான ருத்ரன் “வீரனே, உலகனைத்தையும் உண்ணும் பசியுடன் உன் அம்புகளில் வாழ்வேன்” என்றான்.

விண்ணிலிருந்து ஒளிரும் இளமழை என இறங்கி அவன் முன் நின்று ஐந்தாவது அனலோன் சொன்னான். “விண்ணெரிவடிவு கொண்ட என் பெயர் திரிகாலன். என்னை நீ எடுக்கையில் உருத்திரனுக்கும் ஆழிவெண்சங்கு கொண்டவனுக்கும் நிகராக ஆவாய். அவர்களும் உன்னை எதிர்த்து வெல்லமுடியாதவர்கள் என உணர்வார்கள். என்னை கையில் வைத்து நீ இவ்வுலகை ஏழு முறை அழிக்க இயலும். ஏழாயிரம் முறை புரக்கவும் இயலும். ஆம் அவ்வாறே ஆகுக!” கர்ணன் ஐந்தாம் அனலோனை வணங்கி தன் ஆசிரியரின் குடிலுக்கு திரும்பினான். அவர் காலடிகளைப் பணிந்து “நான் மீண்டேன், ஆசிரியரே” என்றான். அவர் புன்னகையுடன் தன் வில்லை சுட்டிக்காட்டினார். அவன் சென்று அதை எடுத்தபோது மென்மூங்கில்போல் எடையற்று குளிர்ந்திருந்தது.

எட்டாவது சூதரான துருதர் சொன்னார். “அன்று காலை கர்ணன் தன் விஜயத்தை எடுத்தபோது அதைச்சூழ்ந்து ஐந்து அனலவன்களும் ஒளிக்கதிர்களாக விரிந்திருப்பதை கண்டான். அப்போரில் அவர்கள் தன்னுடன் வருவார்கள் என்று உணர்ந்தான். சூதரே, மாகதரே, கேளுங்கள். அன்றைய போர் ஐந்தனல்கள் ஆற்றிய விளையாடலாக அமைந்தது.”

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 44

கர்ணன் கவசங்களை அணிந்துகொண்டிருந்தபோது சற்று அப்பால் சல்யர் குளம்படிகள் விசையுடன் ஒலிக்க புரவியில் வந்து கால்சுழற்றி இறங்கினார். அவன் விழிதூக்கி நோக்க கையிலிருந்த கடிவாளத்தை ஓங்கி நிலத்தில் வீசிவிட்டு பதற்றத்தில் நிலையழிந்து அங்குமிங்கும் ஆடிய உடலுடன் முதுமையின் நடுக்கத்துடன் அவனை நோக்கி வந்தார். வரும் வழியிலேயே ஓங்கி நிலத்தில் உமிழ்ந்தார். அருகணைந்து கைநீட்டி “அறிவிலி! உன்னைப்போல் அறிவிலியை நான் இதற்குமுன் கண்டதில்லை. காமத்தாலும் விழைவாலும் அறிவிலாது ஆனவர்கள் உண்டு. ஆணவத்தால் அறிவிலி ஆனவன் நீ. அறிவிலி, அறிவிலி… உன்னை என்னவென்று எண்ணிக்கொண்டிருக்கிறாய்? அள்ளி அள்ளிக்கொடுத்து அனைத்துமின்றி அழிய நீ யார் யோகியா அன்றி விண்ணிலிருக்கும் மெய்ஞானத்தை தேடிச்செல்லும் துறவியா?” என்று கூவினார்.

எழுந்து கைகூப்பி வரவேற்றபடி “மத்ரரே, தங்கள் சினம் எனக்கு புரியவில்லை” என்று கர்ணன் சொன்னான். “புரிந்தது என்று உன் விழிகளில் காண்கிறேன். நீ சற்று முன் அளித்ததென்ன? சொல், மூடா! அளித்தது என்ன?” என்று மத்ரர் கூவினார். கர்ணன் “வேதம் ஓதி கொடை நோக்கி நின்ற இளைய அந்தணர் ஒருவருக்கு அவர் கோரியதன்பொருட்டு நான் என் கவசத்தையும் குண்டலங்களையும் அளித்தேன். அதுவே அத்தருணத்தில் இயல்வது” என்றான். சல்யர் தலை நடுநடுங்க “எவரைக்கேட்டு அதை அளித்தாய்? சொல், எதன்பொருட்டு அளித்தாய்? அதை அளிக்க உனக்கு என்ன உரிமை? உன் தந்தை எதன் பொருட்டு உனக்கு அதை அளித்தார் என்று தெரியுமா உனக்கு? அவர் ஒப்புதலின்றி நீ அதை எப்படி கொடையளிக்கலாம்?” என்றார்.

“கொடையில் மடம் ஒப்பப்பட்டுள்ளது” என்று கர்ணன் சொன்னான். ‘கொடையளிப்பதன் பொருளே அதுதான், இங்குள எதுவும் நம்முடையதல்ல, நம் முன்னோராலும் நம்மைவிடப் பெரியவர்களாலும் நமக்களிக்கப்பட்டது என்பதனாலேயே நம்மைவிட இளையோரும் நம்மைவிட அறத்தோரும் அதைப் பெறும் தகுதி கொண்டவர்களாகிறார்கள் என்னும் உணர்வு. அது உலகியலில் மடமை. வேறு ஒரு பொருளில் மெய்யறிவு.” சல்யர் அச்சொற்களை எவ்வகையிலும் உள்வாங்கவில்லை. “தத்துவம் பேசுவதற்கு நான் வரவில்லை. இப்படி சொல்மடக்கிப் பேசுமளவிற்கு நான் அறிவுள்ளவனும் அல்ல. நான் மலைமகன். ஆனால் ஒன்றுமட்டும் சொல்வேன். நீ செய்தது அறிவின்மை. ஆம் முழுமுதல் அறிவின்மை.”

மிகையுணர்ச்சியால், அதன் விளைவான மூச்சிளைப்பால் அவர் சற்று தளர்ந்தார். ‘அதைவிட இது மிகப்பெரிய கீழ்மை. உன் உயிரை எப்பொருளுமின்றி களத்தில் மாய்த்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறாய். ஆம், நீ செய்ததற்கு அது ஒன்றேதான் பொருள். எனில் என்ன பொருள்? உனக்கு இங்கே உறவுகள் பொருட்டல்ல. கடமை பொருட்டல்ல. உன் ஆணவம் ஒன்றே பொருட்டு… ஆணவம்போல் அழுகிநாறும் சிறுமை வேறு ஏது?” என்று சொன்னபின் உளமுடைந்து சல்யர் மெல்ல குரல் தழைந்து “என்ன செய்துவிட்டாய்… நீ செய்தது என்ன என்று உணர்கிறாயா?” என்றார்.

“இதை உங்களுக்கு எவர் சொன்னார்கள்?” என்றான் கர்ணன். “நான் அறிந்தேன். உனது மைந்தர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைக்கேட்டு ஐயம்கொண்டு சுபாகு உசாவியபோது அவனிடமும் கூறினார்கள். அவன் விரைந்து என்னை நாடிவந்து என்னிடம் இதை சொன்னான்” என்றார் சல்யர். கர்ணன் சலிப்புடன் “சுபாகுவிடம் அவர்கள் ஏன் சொன்னார்கள்?” என்றான். “அவர்கள் சொல்லியாகவேண்டும். ஏனெனில் இன்று அரசரின் இடத்தில் உளம்எஞ்சியிருக்கும் கௌரவன் அவன் மட்டுமே. அவன் நீங்கள் எங்கு சென்றீர்கள், அங்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்டபோது மைந்தர் அனைத்தையும் சொல்லிவிட்டார்கள்” என்றார் சல்யர்.

கால் தளர அவர் அங்குமிங்கும் நோக்கி அருகிருந்த பெட்டியில் அமர்ந்தார். “துயரமும் கசப்புமாக சுபாகு என் குடிலுக்கு வந்தான். நீ உன் கவசத்தையும் குண்டலங்களையும் அளித்துவிட்டதை சொன்னபோது நான் அதை நம்பமுடியாமல் அமர்ந்திருந்தேன். எந்த மானுடனும் அதை செய்ய மாட்டான். இதுவரை நீ அளித்ததெல்லாம் உன் தந்தை அளித்த பெருங்கொடைகள் உன்னிடம் இருக்கின்றன என்ற தன் நிமிர்வால் என்று எண்ணினேன். எந்நிலையிலும் எங்கும் தோற்கமாட்டாய் என்று உணர்ந்ததனால்தான் எதுவரினும் கொடுப்பேன் என்று நிலைகொண்டிருக்கிறாய் என்று கருதினேன். இவ்வாறு அறிவின்மையின் எல்லை வரை செல்வாய் என்று அணுவளவும் எண்ணவில்லை.”

“மத்ரரே, இது அறிவின்மையெனில் அவ்வாறே ஆகுக! என் முன் கைநீட்டி நின்றிருக்கும் அந்தணர் ஒருவருக்கு அளிக்க இயலாமல் ஒரு செல்வத்தை பேணினேன் எனில் இதுவரை நான் அளித்தவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? நான் அளிப்பது அவர் அங்கு ஓதிய வேதத்திற்கு நிகராக அமையவேண்டும் என்பது நெறி. அதை முடிவுசெய்யவேண்டியவர் அவர். நான் அதில் பேரம் பேசியிருக்கக்கூடுமா என்ன?” என்றான் கர்ணன். மீண்டும் உளவிசைகொண்டு பாய்ந்து எழுந்த சல்யர் “அது சூழ்ச்சி! வெறும் போர்சூழ்ச்சி. உன்னை அழிப்பதற்காக அவர்கள் வகுத்த கீழ்நெறி அது என்று அறியாதவனா நீ? அவன் உருவை உன் மைந்தர் நீரில் பார்த்தார்கள்…” என்றார்.

“ஆம், அவர் வரும்போதே நானும் நீரில் பார்த்தேன்” என்றான் கர்ணன். “பிறகென்ன? அது அந்த யாதவனால் செய்யப்பட்ட சூழ்ச்சி. அந்தணனின் உடலில் இந்திரனை அமைத்து அவன் அனுப்பியிருக்கிறான். இந்திரன் உன் தந்தை உனக்களித்த காப்புகள் அனைத்தையும் உன்னிடமிருந்து திருடியிருக்கிறான் என்றால் என்ன பொருள்?  இன்றைய போரில் நீ எக்காப்புமின்றி நின்றிருக்கப்போகிறாய். உன்னை இன்றே கொன்றுவிடவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்” என்றார் சல்யர். கர்ணன் விழிதாழ்த்தி எழாக்குரலில் “அது ஊழெனில் அவ்வாறு ஆகுக! ஒவ்வொன்றும் பிறிதொன்றுக்காகவே நிகழ்கிறது என்று அறிந்தபின் என் கையிலிருப்பது எதையும் முற்றாக வடிவமைக்க நான் முயல்வதில்லை” என்றான்.

சல்யர் அவன் கைகளை பற்றிக்கொள்ள கைநீட்டினார். “வேண்டாம், சொல்வதை கேள்” என்றபின் கைகளை பின்னிழுத்துக்கொண்டார். உடல் முழுக்க ஓடும் தவிப்பால் சற்று துடித்து, பின் இருகைகளையும் கோத்து இறுக்கி, தலைகுனிந்து நிலம் நோக்கி, உதடுகள் பலமுறை அசைந்தபின் தனித்தனியாக உதிர்ந்த சொற்களால் அவர் சொன்னார் “என்னை உன் தந்தையென்று எண்ணிக்கொள். ஒரு த்ந்தையாக நின்று இங்கு என் உளம் துடிப்பதை சற்றேனும் புரிந்துகொள்.” கர்ணன் அதே குரலில் “புரிகிறது” என்றான். அவர் தாக்குண்டவர்போல அவனை நிமிர்ந்து நோக்கினார். அவர் உதடுகள் அசைந்தன. விழிகள் நீர்மைகொண்டு பளபளத்தன. அவன் எந்த உணர்வும் இல்லாமல் அவர் விழிகளை நோக்கினான்.

விழிகளை விலக்கிக்கொண்டு “என்னை ஒரு சொல் உசாவவேண்டும் என்று எண்ணினாயா நீ?” என்று சல்யர் கேட்டார். “எப்போதும் எதையும் அவ்வாறு உசாவிச் செய்ததில்லையே” என்று கர்ணன் சொன்னான். “கொடையை நான் மறுமுறை என்னிடமேகூட உசாவுவதில்லை.” சல்யர் தளர்ந்து “ஆம், நீ அன்னையாலும் தந்தையாலும் கைவிடப்பட்டவன். உனக்குரிய தனிவழியை தேடிக்கொண்டாய்” என்றார். கைகளை விரித்து “விண்ணில் கதிரவனும் அவ்வாறே முழுத்தனிமையில் சென்றுகொண்டிருக்கிறது என்பார்கள்” என்றபின் மேலும் ஏதோ பேச விழைந்து சொல்லின்றி நீள்மூச்செறிந்தார்.

கர்ணன் “இன்றைய போரில் என் வெற்றி எவ்வண்ணம் என்பதை நானும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றான். மென்னகை காட்டி “ஒன்று நோக்கின் இது நன்றே. அரிய அம்புகள், மூதாதையரின் சொற்கொடைகள், தெய்வக்காப்புகள் எதுவுமின்றி என் தோள்வலிமை மட்டுமே கொண்டு களத்தில் தனித்து நிற்கப்போகிறேன். நான் களத்திற்குக் கொண்டுசெல்லவிருப்பவை அனைத்தும் நானே ஈட்டிக்கொண்டவை. ஆகவே நான் பெறும் வெற்றி முற்றிலும் என்னுடையதே” என்றான். சல்யர் மீண்டும் சினம்கொண்டு “மூடா! மூடா! மூடா!” என்று தலையில் அடித்துக்கொண்டார். “நீ போரிடப்போவது அர்ஜுனனிடம் அல்ல. அவன் தனியன் அல்ல. யானையின் கையிலிருக்கும் கதாயுதத்துடன் போரிட முடியாதென்று ஒரு சொல் உண்டு. யானையின் முழு எடையும் அக்கதையில் இருக்கிறதென்பதை நீ உணரவில்லை.”

“இது ஊழின் ஆடல்போலும்” என சல்யர் சொல்தளர்ந்தார். “அறுதியாக இப்போரில் அவனே வெல்வான் என்பதை எப்போதோ என் உளம் அறிந்திருந்தது. அதை நான் கற்ற அனைத்துச் சொற்களைக்கொண்டும் மழுப்பிக்கொண்டிருந்தேன். இன்று நீ இவ்வண்ணம் களத்திற்குச் செல்கிறாய் என்றபோது அதை முழுமையாக உணர்கிறேன். இன்றுகாலைவரை உன்னை எவரும் வெல்ல இயலாது என்று நம்பினேன். கதிர்மைந்தனை வெல்லும் மானுடர் எவரும் இங்கில்லை. இன்று ஒருவேளை போர் முடியும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இப்படி ஒரு அறிவின்மையை ஆற்றி மீள்வாய் என்று எண்ணியிருக்கவே இல்லை.”

அவர் விசைகொண்டு தன் தலையை கைகளால் அறைந்துகொண்டார். “என் பிழை! ஆம் என் பிழை! நான் பொறுப்பேற்றுக்கொண்டிருக்க வேண்டும். நான் வந்து நின்றிருக்கவேண்டும். நான் அறிந்தது அனைத்தும் உனக்குரியவை என்று உரைத்திருக்கவேண்டும். என் பிழை! என் சிறுமை!” என்றார். அவர் மெல்லிய விம்மல்களுடன் விழிநீர் சிந்துவதை கர்ணன் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். சிலகணங்களுக்குப்பின் அவர் மீண்டு மூச்சு சீறி கனைத்து குரல் திரட்டி “என் சிறுமையை எண்ணி நான் நாணாத நாளில்லை. தன்பிழையை தன்னிடமிருந்து மறைக்கவே இப்புவியில் மானுடர் சொல்பெருக்குகிறார்கள்…” என்றார்.

கர்ணன் அதை கேட்டதாகக் காட்டவில்லை. “நீ இவ்வண்ணம் களத்திற்குச் செல்வதைப்போல பிழை வேறில்லை. அவன் இந்திரனின் மைந்தன். தன் மைந்தனை வெல்லச்செய்ய தந்தையே வேதம்வழியாக மண்ணிறங்கி வந்திருக்கிறான்” என்றார். “நீ உன் தந்தையை அழை. நிகழ்ந்ததை சொல். இன்னும் பிந்தவில்லை. உடனே ஒரு வேதியரை நான் அழைத்துவருகிறேன்.” கர்ணன் “நாம் தெய்வங்களுடன் நாற்களமாடவேண்டியதில்லை, மத்ரரே” என்றான். ‘இனி எதற்கும் பொழுதில்லை. அதை நீங்களே அறிவீர்கள்.” சல்யர் “ஆம், மெய்தான். இத்தருணத்தில் எதைப்பேசுவதும் எவ்வண்ணம் சொற்கூட்டுவதும் ஒற்றைப்பொருளையே அளிக்கின்றன. இது வீண் உளமாடல்” என்றார்.

கர்ணன் திரும்பி அப்பால் விலகி நின்றிருந்த ஏவலனிடம் தனக்கு கவசங்களை அணிவிக்கும்படி கைகாட்டினான். அவன் வந்து கவசங்களை எடுத்து அணிவிக்க இயல்பாக உடலை அவனிடம் அளித்தபடி நிலம் நோக்கி அமர்ந்திருந்தான். சல்யர் தலைதாழ்த்தி சொல்லின்றி அமர்ந்திருந்தார். ஆனால் அவர் உடலில் இருந்து வெம்மைபோல் ஒன்று வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. மெல்லிய அசைவுகள் அவ்வப்போது ஏற்பட்டன. அவருள் எரிவதை உடல் காட்டியது. கர்ணன் கையசைவாலேயே ஏவலனுக்கு ஆணைகள் இட்டான்.

கவசங்களை அணிவித்துமுடித்த ஏவலன் சற்று விலகி தலைவணங்கி “முடிவுற்றது, அரசே” என்றான். கர்ணன் தலையசைக்க அவன் “அங்கர் போருக்கு எழுகிறார்” என்று கையசைவால் அப்பால் நின்றிருந்த காவலர்களுக்கு அறிவித்தான். காவலர்களில் ஒருவன் சங்கொலி எழுப்ப அது ஒன்றில் இருந்து ஒன்றென தொட்டுச் சென்று தொலைவெளியெங்கும் நிறைந்திருந்த அங்கநாட்டுப் படைகளை சென்றடைந்தது. அவர்கள் “அங்கர் வாழ்க! கதிர்மைந்தன் வாழ்க! வெல்க சம்பாபுரி! வெல்க கதிர்க்கொடி!” என வாழ்த்தொலி எழுப்பினார்கள். அவ்வொலி பரவ கௌரவப்படைகள் அனைத்திலிருந்தும் வாழ்த்தொலிகள் ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக்கொண்டு பெருகி ஒலித்தன.

சல்யர் எழுந்து கர்ணனை நோக்காது “இன்று நான் உனக்கு தேர் நடத்துகிறேன்” என்றார். “தாங்கள் அதற்கு விரும்பவில்லை என்று நேற்று சொன்னார்கள்” என்றான் கர்ணன். “ஆம், நேற்று அதை ஒழிய வேண்டியிருந்தது. இன்று வேறு வழியில்லை” என்றார் சல்யர். “இன்று நானே தேர் நடத்துகிறேன். நான் தேரிலிருக்கும்வரை எவரும் உன்னை கொல்ல முடியாது” என்றார். “தாங்கள் விழையாத ஒன்றை செய்யவேண்டியதில்லை” என்று கர்ணன் சொன்னான். சினம் மேலேற “அறிவிலி!” என்று உரக்க கூவிய சல்யர் அடிக்க என எழுந்த கை காற்றில் நிற்க, எண்ணம் தயங்கி, “நான் உன்னுடன் இருப்பேன். இன்று நான் உன்னுடன் இருப்பேன்” என்றார்.

“நன்று” என்று கர்ணன் புன்னகையுடன் சொன்னான். மேலும் ஏதோ சொல்ல முயன்றபின் அதை அவ்வாறே விட்டு விட்டு சல்யர் எடைமிக்க நடையுடன் சென்று தன் புரவியை அணுகி அதன்மேல் ஏறிக்கொண்டார். ஏவலன் அளித்த கடிவாளத்தைப் பற்றி காலால் குதிமுள்ளை புரவியில் செலுத்தி விசை கூட்டி மரப்பலகைகளில் குளம்படிகள் துடி தாளமெழுப்ப விரைந்தகன்றார். கர்ணன் அவர் செல்வதை வெறும்விழிகளுடன் நோக்கி நின்றான். ஏவலன் அவனருகே குனிந்து குறடுகளை அணிவிக்கலானான். ஏவலன் ஏதோ சொல்ல ஒருகணம் குனிந்து அதை ஏற்றுவிட்டு மீண்டும் விழிதூக்கியபோது சல்யர் நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தார்.

கர்ணன் எழுந்து குறடுகளை அணிவித்துக்கொண்டிருந்த ஏவலனிடம் “விரைவாக” என்றான். மீண்டும் குளம்படித் தாளம் ஒலிக்க சல்யர் வளைந்து திரும்பி வந்தார். புரவியிலிருந்து வில்லில் அம்பை என தன்னை விடுவித்துக்கொண்டு அவனை நோக்கி ஓடிவந்து மூச்சிரைக்க நின்று “செல்கையில் ஓர் எண்ணம் வந்தது. அதை சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நீ உரைத்ததுபோல நீ களத்திற்கு கொண்டுசெல்லவிருப்பவை நீ ஈட்டிக்கொண்ட அனைத்தும்தான். அவற்றில் தலையாயவை கொடைப்பயன்கள். அவை உன்னை காக்கும். தேவர்கள் நிரைநிரையாக வ்ந்து உன்னைச் சூழ்ந்து நின்றாகவேண்டும். உனக்கு அழிவின்மையை அவர்கள் அளித்தாக வேண்டும்” என்றார்.

“இல்லையேல் இப்புவியில் மானுடரைக் காக்கும் அறம் என்று ஒன்றை நிறுவிய தெய்வங்கள் பொருளற்றவர்கள் ஆவார்கள். சற்று முன் நீ அளித்த கவசமும் குண்டலங்களும்கூட அதற்கு நிகரான கொடைப்பயனை உனக்கு அளித்திருக்கும். அவற்றை தக்கவைத்துக்கொள். அவை உன்னைக் காக்க்கும் கேடயங்கள் ஆகுக! உன் படைக்கலங்கள் என கூர்கொள்க! உடன் நானுமிருப்பேன். ஒருகணமும் ஓயாது நிற்பேன். எண்ணிக் கொள்க, நான் தேர் அமரத்தில் இருக்கும் வரை உன்னை எவரும் வெல்லப்போவதில்லை! தேரின் கணக்கனுக்கு புரவியின் உள்ளம் தெரியும், அதற்கப்பால் களத்தில் நிகழும் பிறிதொன்று எனக்குத் தெரியும். அது மலைமகனின் உள்ளுணர்வு, அது அவர்களுக்குத் தெரியாது. எரியும் பந்தம் ஒன்றை கையிலேந்தி இருளுக்குள் செல்வது போல நீ என்னை கூட்டிக்கொள். நான் உடன் இருப்பேன்” என்றபின் மீண்டும் உடல் தளர்ந்து “தெய்வங்களே” என்றார்.

“நன்று, தாங்கள் உடனிருப்பது என்னை நம்பிக்கை கொள்ளச்செய்கிறது. நான் வெல்வேன்” என்றான் கர்ணன். அந்த முறைமைச்சொற்கள் அவரை திடுக்கிடச்செய்தன. அவனை திகைப்பு கொண்ட விழிகளுடன் நோக்கினார். ஒரு கண் இமைதளர்ந்து சற்று கீழிறங்கியதுபோலிருந்தது. உதடுகளில் அவர் அங்கு சொன்ன சொற்களுக்கு அப்பாலிருந்த ஏதோ சொற்கள் ஒலியிலாது அசைவென நிகழ்ந்தன. போகட்டும் என்பதுபோல கைகளை வீசினார். முதுமை நிறைந்து தசைகள் நெகிழ்ந்து உடல் வளைந்தவர் போல் நடந்து தன் புரவியை நோக்கி சென்றார். கர்ணன் ஒரு சொல் பேசாமல் அவர் செல்வதையே நோக்கிக்கொண்டிருந்தான்.

படைகள் அணி நிரப்பதற்கான கொம்போசையும் முரசோசையும் எழுந்தன. மழைச்சாரல் சற்று ஓய்ந்திருக்க வானொளியை வாங்கி ஆடித்துண்டுகள் என மின்னிய நீர்ப்பரப்புகள் விழிதுலங்கும் ஒளியை எங்கும் பரப்பியிருந்தன. யானைகள் நிழலுருக்களாக அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தன. புரவிகள் நீரொளிச்சிதறல்களில் தயங்கி மெய்குறுக்கி தாவிக்கடந்தன. “தங்கள் படைக்கலங்கள் ஒருங்கிவிட்டன, அரசே” என்று ஏவலன் சொன்னான். “எடுத்து தேரில் வை” என்று கர்ணன் ஆணையிட்டான். பின்னர் தன் குடில்நோக்கி நடந்து படலைத் திறந்து உள்ளே சென்றான். குடிலுக்குள் ஏதோ ஒன்று மறந்து வைக்கப்பட்டுவிட்டதுபோல் உணர்ந்தான். அதுவரை ஆழம் அதை எண்ணிக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தான்.

குடிலின் குளிருக்குள் அரையிருள் நிறைந்திருந்தது. அவன் விழி திருப்பியபோது குடில் மூலையில் அவன் எண்ணியதைக் கண்டான். ஒரு சிறு நாக நெளிவு. அவன் அசையாது நிற்க அது ஒளியுடன் ஒழுகி வந்து அவன் முன் சுழித்தது. சிறுசுனையில் முளைத்து எழுந்த கரிய செடி என அதன் சிறிய தலை படம்கொண்டது. “உன்னைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்று கர்ணன் சொன்னான். “ஆம், எனக்களிக்கப்பட்ட ஒரு சொல் எஞ்சியுள்ளது” என்றது நாகம். பின்னர் அது தட்சமைந்தனின் உருக்கொண்டு எழுந்தது. அதன் நிழல் நாகவடிவமென அரைச்சுவரில் வளைந்து நின்றது. பாதி வெந்த உடலும் தசை பிளந்து எலும்புகள் தெரியும் விலாவுமாக அம்மைந்தன் நின்றிருந்தான். அவன் இருகண்களும் இமையா மணிகளென கர்ணனை நோக்கின.

“எனக்களிக்கப்பட்ட சொல் அவ்வாறே உள்ளது, அங்கரே” என்றான். “எங்கள் குலம் அச்சொல்லை நம்பித்தான் பாரதவர்ஷமெங்கும் காத்துள்ளது.” கர்ணன் “ஆம், நான் எந்நிலையிலும் சொல்லழிபவனல்ல” என்றான். “இனி எஞ்சுவதென்ன? எங்கள் குலத்திற்கு நீங்கள் அளிக்க உங்களிடம் மிஞ்சுவதென்ன?” என்று தட்சன் கேட்டான். “சற்று முன் எந்தை இங்கு சொல்லிச் சென்றார். என்னில் இப்போதிருப்பது நான் வாழ்நாளெல்லாம் ஈட்டிய கொடைப்பயன் என்று. அது அழிவின்மையை அளிப்பது. அதற்குப்பின் தெய்வங்கள் அணிநிரக்கும். அதை அளிக்கிறேன். உனக்கும் உன் குலத்துக்கும் அதை அளிக்கிறேன். என்றும் அது உன்னுடன் இருக்கட்டும். உங்கள் குலம் அழிவின்மை கொள்ளும். எந்தபோரிலும் உங்களுக்குத் துணையாக தெய்வங்கள் இறங்கி வரும்” என்றான் கர்ணன்.

அவன் இமையாவிழிகளை நோக்கி அவன் சொன்னான் “அறிக, இங்கிருக்கும் அத்தனை தெய்வங்களுடனும் நீங்களும் இருப்பீர்கள் ஆழிவண்ணன், அனல்வண்ணன். நான்முகன், யானைமுகன், ஆறுமுகன், முப்பெரும் தேவியர், இங்கு தெய்வமென எழுந்த அனைவரும் நாகமின்றி நிலைகொள்ளாமலாவார்கள். இனி இங்கு தெய்வங்களை வணங்குவோர் எவராயினும் நாகங்களையும் வணங்குவர். உஙகள் குலம் பாலில் நெய் என பாரதவர்ஷத்தின் அனைத்துக் குலங்களிலும் கலந்து உறையும்.” தட்சமைந்தனின் உடல் நடுங்கியது. தன் கையை நீட்டி “அளியுங்கள்” என்று அவன் சொன்னான்.

கர்ணன் புன்னகைத்து “எவ்வடிவு கொண்டாலும் அவ்வடிவில் இருக்கையில் அவர்களே நாம் என்பதை நீ அறிவாய்தானே?” என்றான். இளம்தட்சன் “ஆம்” என்றான். “எனில் உன் படம் தூக்கி இந்நிலம் தொட்டு மும்முறை ஆணையிடு. என்னிடம் பெற்றுக்கொண்ட இந்தக்கொடை பயனுறும் என்று. எந்நிலையிலும் இது எவராலும் நாகர்களுக்கு மறுக்கப்படாது என்று.” தட்சன் சிலகணங்கள் நிலைத்த நோக்குடன் நின்று பின் புன்னகைத்து தன் இடக்கையை தூக்க அது சிறு நாகக்குழவியின் படமென்றாயிற்று. மும்முறை அதை நிலத்தில் கொத்தி “ஆணை! ஆணை! ஆணை!” என்றான்.

கர்ணன் தன் இடையிலிருந்த குறுவாளை எடுத்து கையின் நீல நரம்பை வெட்டி அதில் பெருகிய குருதியை வலக்கை குமிழில் ஏந்தி மூன்று சொட்டுகள் விட்டு “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்றான். நாகக்குழவியின் உடல் சற்று ஒளி கொண்டது. “பெற்றுக்கொண்டேன், அங்கரே. இச்சொல்லால் நாகர்குலம் என்றும் இந்நிலத்தில் அழியாது நீடிக்கும். சொல்லில் ஒளிகுறையாது வாழும். எங்கள் நினைவுகளில் நாகபாசன் என்று நீங்களும் நின்றிருப்பீர்கள். கார்கடல் ஒளிகொண்டது போல் பாரதவர்ஷத்தில் உமது புகழ் ஒருபோதும் குன்றாது பெருகி நிறைந்திருக்கும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் சிறு நாகக்குழவியின் உடல் கொண்டு சுருண்டு வளைந்து தரையிலிருந்த சிறுவெடிப்புக்குள் புகுந்து மறைந்தான்.

கர்ணன் குடிலிலிருந்து வெளிவந்தபோது விருஷசேனன் அங்கே நின்றிருந்தான். “தேர் ஒருங்கிவிட்டது, தந்தையே” என்றான். கர்ணன் தன் அணிகளின் ஒளி சுடர தேர் நோக்கி சென்றான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 43

குருக்ஷேத்ரத்திற்கு தென்கிழக்காக செறிந்த காட்டிற்குள் அமைந்த சிறு ஊற்றுக்கண் சூரியதாபினி என்று அழைக்கப்பட்டது. அங்கு அரிதாக சில நிமித்திகர்களும் விண்ணுலாவியை வழிபடும் யோகியரும் ஒழிய பிறர் எவரும் செல்வதில்லை. அவ்வாறொன்று அங்கிருப்பது நிமித்த நூல்களில் மட்டுமே இருந்தது. முள்செறிந்த காட்டுக்குள் வழி தேடி அங்கு செல்வது எளிதாக இருக்கவில்லை என்பதனால் அவ்வாறொன்று இருப்பதையே கற்பனை என்று பெரும்பாலானோர் எண்ணினர். அது கற்பனை என்பதனால் ஆழ்ந்த பொருளை அதற்கு அளித்து, உருவகமென வளர்த்து, பிறிதொன்று என்று ஆக்கி பிறிதொரு இடத்தில் அதை நிறுவிக்கொண்டனர்.

கிழக்கே மணிபூரக நாட்டிற்கு அப்பால் மேரு மலையின் அடியில் சூரியதாபினி இருப்பதாக பின்னாளில் நம்பலாயினர். தொல்நூல்களை உளமயக்கிலாது கற்கவும், அடையாளங்களை செவிச்சொல் மரபெனப் பேணவும் ஆசிரியநிரை இருந்த பூசகரும் யோகியரும் நிமித்திகரும் மட்டுமே அங்கு வந்தனர். அவர்கள் அந்தச் சிறிய ஊற்றைக் கண்டு ஏமாற்றம் அடையவும் இல்லை. ஏனெனில் மிகத் தொல்காலத்திலேயே அடையாளம் காணப்பட்ட எதுவும் மிகச் சிறிதாகவே இருக்குமென அவர்கள் அறிந்திருந்தார்கள். தொன்மையான ஆலயத்தின் சிலைகள் மிகச் சிறியவை. தொன்மையான மலைமுடிகள்கூட சிறியவை என்று அவர்களின் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சூரியதாபினியை அணுக முள்செறிந்த புதர்களினூடாக ஓடும் ஓர் ஓடை ஒன்றே பாதை. ஓடையின் வழுக்கும் பாறைகளினூடாக தொற்றி ஏறி, மேலும் மேலும் உள்ளே சென்று, காட்டிற்குள் புதைந்து அமர்ந்திருக்கும் ஒரு பிலத்தைக்கண்டு, அதன் இடைவெளியினூடாக அப்பால் சென்றால் சற்றே தாழ்ந்த வட்ட வடிவ நிலத்தை அடையலாம். அதன் நடுவே சூரியதாபினி ஒரு சிறு குமிழியாக மண்ணுக்குள் இருந்து எழுந்துகொண்டிருந்தது. தொலைவிலிருந்து நோக்குகையில் அது செந்நிற உடல் கொண்ட விலங்கின் விழிக்குமிழி என்றே தோன்றும். அக்குமிழி அசைய அது செல்பவர்களை நோக்கி விழி திருப்புவது போலிருக்கும். அணுகிய பின்னரே அது குன்றாது குறையாது கூடாது எழுந்துகொண்டிருக்கும் ஊற்றென்று தெரியும். அதனைச் சுற்றி செம்மண்ணாலான வரம்பு கட்டிய சுனைப்பெருக்கு இருந்தது. அதன் நான்கு பக்கமும் நீர் பெருகி கவிழ்ந்தொழுகும்படி கரைவிளிம்பு நிகராக வளைத்திருந்தது.

காலையில் கதிர் எழுகையில் நீர்ப்பெருக்கு கிழக்கு நோக்கி வழிந்து வளைந்தோடி ஓடையை அடையும். கதிர் செல்லும் திசை நோக்கியே அந்த நீர் பெருகி விழும். அந்தியில் மேற்கு திசைநோக்கி விழும் நீர் இரவில் எஞ்சிய அரைவட்டத்தை முடித்து புலரியில் சூரியன் எழும் திசைநோக்கி காத்திருக்கும். அந்த விந்தை அதை கதிரவனின் கோயிலாக ஆக்கியது. சுனைக்கு அப்பால் சிறிய கற்சிலையாக கதிரவன் உயரமில்லாத பீடத்தில் நிலை பொருத்தப்பட்டிருந்தான். நான்கு கைகளில் தாமரையும் அஞ்சலும் அருளலும் காட்டி, நிகர்நிலையில் உடல் கொண்டு அவன் நின்றிருந்தான். அப்பகுதியில் பறவைகளும் சிற்றுயிர்களும் செறிந்திருந்தன. பெரிய உயிர்கள் அச்சுனையில் நீரருந்த வருவதில்லை. எனவே அச்சமிலாது பல்லாயிரக்கணக்கில் சிற்றுயிர்கள் வந்து அந்த ஓடையிலும் சுனையிலும் நீரருந்தின. சூழ்ந்திருந்த புதர்களில் பறவைகள் இரவும் பகலும் கூடி குறுமொழி பேசி முழக்கமென திரண்டிருந்தன. அப்புதர்கள் அனைத்திலும் மலர்களும் விரிந்திருந்தமையால் அப்பகுதி வண்ணங்களாலும் நறுமணங்களாலும் நிறைந்திருந்தது.

முதலில் அச்சுனையைக் காண்பவர்கள் அதைச் சூழ்ந்திருக்கும் அந்த முழக்கத்தை காற்று எழுப்பும் ஓசையென உணர்வார்கள். அல்லது அருகே அருவி இருப்பதாக. மறுகணமே அந்த ஓசை பல்லாயிரம் தனிப்பறவைக்குரல்களாக விரியும்போது உள எழுச்சி அடைந்து கைகூப்பி வணங்குவார்கள். அவர்கள் காலடி எடுத்து வைத்து அணுகுந்தோறும் சிற்றுயிர்கள் அகன்று அவர்களுக்கு வழிவிடும். தங்கள் வாழ்நாளில் கண்டிராத உயிர்களை அவர்கள் அங்கு காண்பார்கள். இவை இங்கிருந்தனவா, விழிக்கு மறைந்து வாழும் கலை இத்தனை முழுமையானதா, நாம் வாழும் உலகு இத்தனை விரிந்ததா என உள்ளம் விம்மிதம் கொள்ளும். விழிச்சுனையின் நீர் மிக இனியது. அதில் இனிமை என எது அமைகிறதென்பது நெடுங்காலமாகவே உசாவப்பட்டு விடையறியாதது. அள்ளி வாயில் விடுகையில் குளிர் கொண்டதென்றே தோன்றும். பிற நீரை விட அது எடைமிக்கது என நா அறியும். விழுங்கிய பின்னர் நாவிலும் உடலெங்கும் உணரும் இனிமை என்பது சுவையல்ல, ஓர் மெல்லுணர்வு என்று கூறினர் அங்கு சென்றோர்.

மீள மீள அருந்தவேண்டுமென்று விடாய் எழுப்புவது அச்சுவை. அருந்தி உடல் நிறைத்ததும் இனிய களைப்பால் அங்கேயே அமரச் செய்துவிடும். அங்கிருந்து மீள உளம் கொளாமல் அங்கேயே இருந்து அம்மயக்கிலேயே உயிர்விட்டவர்கள் உண்டு. அங்கிருந்த மென்சேறு நத்தையின் நாவென வந்து அவர்களை மூடி மண்ணின் வயிற்றுக்குள் கொண்டு செல்லும். அவர்களின் உடலுக்கு மேல் ஓரிரு நாட்களிலேயே சிறு செம்மலர்கள் முளைத்து நிறையும். தேனீக்களும் வண்டுகளும் பொன்னீக்களும் அமர்ந்து எழுந்து ரீங்கரித்துச் சுழலும் யாழொலி சூழ அப்பகுதியை சென்றடைந்து, ஏழுமுறை அச்சுனையை வலம் வந்து, நீரள்ளி தலையில் விட்டு உடற்தூய்மை செய்து, அங்கிருக்கும் ஏழு வண்ண மலர்களைப் பறித்து கதிரவனின் முன் படைத்து சுடரேற்றி வணங்கி மீள்வது அங்கு வருபவரின் வழக்கம். கண்களை மூடிக்கொண்டு கைநீட்டி பறித்தாலே ஏழு வண்ண மலர்கள் கைநிறைய வந்து சேரும் என்று அந்த இடத்தைப் பற்றிய கதைகள் சொல்லின. ஏழு வண்ணப் பறவைகள், ஏழுவித கனிகள், ஏழு நிறத் தளிர்கள், ஏழு ஒளிகொண்ட கற்கள் அங்கே சூழ்ந்திருந்தன. அங்குள்ள மண்ணுமே ஏழு வண்ணக் கீற்றுகளாக விரித்த பட்டாடையின் அலைமடிப்புபோல தெரிவது.

விழிச்சுனைக்கு புலரிக்கு முன்னரே கர்ணன் விருஷசேனனும் திவிபதனும் தொடர வந்து சேர்ந்தான். சுனைக்கு அருகிலிருந்த சிறிய பாறை வரை வருவதற்கான குறுக்கு வழி அவர்களுக்கு தெரிந்திருந்தது. திவிபதனும் விருஷசேனனும் அங்கு முன்னர் வந்திருக்கவில்லை. தந்தை செல்லுமிடம் ஏதென்று அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. கர்ணன் பாறைகளினூடாக தொற்றி ஏற அவர்கள் உடன் சென்றனர். விழிச்சுனையை தொலைவிலிருந்து நோக்கியதுமே விருஷசேனன் அவன் முன்னரே நூல்களில் அறிந்த அதே இடம் என்பதை உணர்ந்தான். திவிபதனிடம் ஒலியில்லாமல் “விழிச்சுனை” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். கர்ணன் கைகூப்பியபடி விழிச்சுனையை நோக்கியபடி நீள்காலடிகளுடன் நடந்து சென்று அங்கே நோக்கு கொண்டு அசைந்துகொண்டிருந்த விழிமணியை அடைந்தான். அந்நீரை வலக்கையால் அள்ளி மும்முறை தன் தலையில் தெளித்து நீராடினான். மும்முறை அருந்தி உடல் நிறைத்தபின் கைகூப்பியபடி கதிரவனின் சிலை நோக்கி சென்றான். அங்கே கால் மடித்து விழிநாட்டி அமர்ந்தான்.

அவனைத் தொடர்ந்துசென்ற மைந்தர் விழிச்சுனையை வணங்கினர். திவிபதன் ஏழு வண்ண இலைகளையும் விருஷசேனன் ஏழு வண்ண மலர்களையும் கொய்து கொண்டுவந்தனர். இரு அகன்ற இலைகளைப் பறித்து அவற்றை தாலமெனக்கோட்டி அவற்றில் அவற்றை நிறைத்துக்கொண்டு வந்து கர்ணன் முன் வைத்தனர். கர்ணன் கதிரவனின் பெயர்களை ஒலியிலாது கூறியபடி அம்மலர்களை எடுத்து சிலையின் காலடிகளில் இட்டு வணங்கினான். அவன் உதடுகளின் அசைவுகளிலிருந்தே அப்பெயர்களை அறிந்துகொண்ட விருஷசேனனும் திவிபதனும் அச்சொற்களை தாங்களும் ஓசையின்றி சொல்லி உடன் உளம் சென்றனர். கருக்கிருள் முன்னரே வடியத் தொடங்கிவிட்டிருந்தது. சுனையை அவர்கள் காணும்போது விழிதுலங்கும் ஒளி இருந்தது. அவர்கள் மலர் கொய்யத் தொடங்கும்போதுதான் வண்ணங்கள் தெரியுமளவுக்கு ஒளி அங்கு பரவியிருப்பதை உணர்ந்தார்கள். வானிலிருந்து அங்கு மட்டும் ஒளி இறங்கியிருந்தது. கதிரவன் ஒரு கைப்பிடி ஒளியை அள்ளி அங்கே வீசியதுபோல.

ஊழ்கத்தில் அமர்ந்த பின்னர் ஒவ்வொரு உளச்சொல்லுக்குமென பொழுது விடிந்தபடியே வந்தது. இலைகள் மிளிர்வு கொண்டன. மலர்வண்ணங்கள் சுடர் ஏந்தின. பறவைக்குரல்கள் உருமாறிக்கொண்டே இருந்தன. தாழ்ந்த கிளையொன்றில் அமர்ந்திருந்த அனல்கொழுந்தென வளைந்த வால் எழுந்த நீள்கழுத்து மாந்தளிர்ப்பீலிச் சேவல் ஒன்று தலை சொடுக்கி நிமிர்ந்து இரு சிறகுகளையும் காற்றில் அசைத்து “உம்பர் குலக்கோவே இங்கெழுந்தருளாயே!” என்று கூவியது. “எங்கோ வாழ்! எங்கோ வாழ்!” என்றன நாகணவாய்கள். “இங்கெழுக! இங்கெழுக! இங்கெழுக!” என்றன ஆலாக்கள். “இனிதே! இனிதே!” என்றன உள்ளான்கள். “காவலா! காவலா” என்றன காகங்கள். பறவைக்குரல்கள் சொல்திரண்டு கதிரவனை வாழ்த்துவதை சூதர் பாடல்களிலும் காவியங்களின் அணிமுகப்பிலும் விருஷசேனன் பயின்றிருந்தான். அவை மிகைக்கற்பனைகள் என்று கருதியுமிருந்தான். மெய்யென அவை நிகழும் ஓரிடம் இப்புவியில் உண்டென்று அவன் அதற்கு முன்னால் அறிந்திருக்கவில்லை.

வானொளி முதலில் சுனை நீரின் ஒளியிலேயே தெரிந்தது. தண்ணென்ற சுடரென்று நீர்க்கொப்பளிப்பு மாறியது. விழிநிறைக்கும் குளிர்ந்த ஒளி எழுந்து வளைந்து சுழியாகியது. அவ்வளைவில் சூழ்ந்திருந்த காட்டின் பசுமையும் மலர்வண்ணங்களும் நெளியலையென தெளிந்தன. சுழிமையத்தில் விழிக்கூர் ஒன்று அசைவிலாது நின்றது. ஆணையிடுவதுபோல். அன்புகொண்டு கனிந்ததுபோல். கர்ணன் கைகூப்பி எழுந்தபோது பிறிதொரு காலடி ஓசை கேட்டது. வியப்புடன் விருஷசேனன் திரும்பிப்பார்க்க இளம் அந்தணன் ஒருவன் கைகூப்பியபடி சூரியமகள் உஷையைப் போற்றும் வேதச்சொல் உரைத்துக்கொண்டு நடந்து வருவதை கண்டான்.

திருமகள், இந்திரனுக்கு விருப்பமானவள்

உஷை இதோ பிறந்தாள்

உலகுவாழ அன்னத்தை பிறப்பிக்கிறாள்

விண்மகள், சுடர்மகள், அங்கிரிசர்களின் முதல்வி

நலம்செய்பவனுக்கு செல்வத்தை அருள்பவள்

உஷையே, உன்னை வணங்கினோர் பெற்ற

பெருஞ்செல்வங்களெல்லாம் எங்களுக்கும் அமைவதாக!

காளைகள் என முழங்கி உன்னை வரவேற்கிறோம்

கவரப்பட்ட பசுக்கள் அடைபட்ட

மலைவாயில்களை திறக்கிறாய்!

அவன் குரல் வெள்ளிக்கம்பிபோல் ஒளியுடன் மென்மையாக வளைந்தது. வேதச்சொற்கள் காலையொளியில் தளிர்கள் என எழுந்தன. பதினைந்து அகவைகூட நிறையாத இளைஞன். சிறுவர்களுக்குரிய உடலமைப்பும் மழலைகளுக்குரிய தோல் மினுப்பும் கொண்டிருந்தான். பொன்னிற உடலில் முப்புரி நூல் குறுக்காக ஓடியது. செவிகளில் சிறுமணிக் குண்டலங்கள் அணிந்திருந்தான். கழுத்தில் அவன் கொண்ட வேதநெறியைக் காட்டும் ஒற்றை விழிமணி மாலை புல்சரடில் தொங்கியது. இடையில் அணிந்திருந்த வெண்பட்டாடையும் இரு கைகளிலும் இருந்த மலர்க் குடலைகளும் அவன் அங்கு பூசனைக்கு வருபவன் என்று காட்டின. அவர்களை அவன் முன்னரே பார்த்துவிட்டிருந்தாலும்கூட எவ்வகையிலும் பொருட்படுத்தாதவன்போல் ஒருகணமும் ஓதிய வேதம் ஒலி நலுங்காமல் சீரடி எடுத்து வைத்து நடந்து வந்தான். ஆகவே துயிலிலோ பிற மயக்கிலோ நடந்து வருபவன்போல் தோன்றினான்.

கர்ணன் கைகூப்பி அவனை வணங்கினான். அந்தணன் அவனை விழி நோக்கினாலும் உளம் அறியவில்லை. வேதச்சொல் ஓதியபடி மும்முறை விழிச்சுனையை சுற்றிவந்து கிழக்கு நோக்கி அமர்ந்தான். தன் கையிலிருந்த மலர்த்தாலத்தை வலப்பக்கம் வைத்து இடப்பக்கம் அரிமணித்தாலத்தை வைத்து மலரையும் அரியையும் எடுத்து சுனை சுழிப்பில் இட்டு கதிர்மகளின் புகழ் பாடும் வேதத்தை பாடினான். ஏற்றம் இறக்கம் இல்லாமல் சிறு அலையென எழுந்து கொண்டிருந்த வேதச்சொல் எத்தனை நுட்பமாக அங்கிருந்த பறவைக்குரல்களுடன் முற்றிணைந்து பிரித்தறிய முடியாதபடி ஆகிறது என்பதை விருஷசேனன் வியப்புடன் அறிந்தான். அந்தப் பறவை ஒலிகளிலிருந்தே தொட்டெடுத்து கோத்த ஒலிகளாலானது அது. மீண்டும் அப்பெருக்கிலேயே சென்று சேர்ந்தது. அங்கிருந்த முடிவிலா நுண்பொருட்களிலொன்று மானுடனுக்கு தன்னை அறிவித்து மீண்டும் அந்த முழுப்பொருள் வெளிக்கு சென்றது.

பின்னர் அங்கிருந்து புதிய ஒலி ஒன்று வந்து அந்த வேதசொல்நிரையில் கலப்பதுபோல் தோன்றியது. வேதம் பறவைக்குரல்களுக்கு ஏற்ப உருமாறுவது போலிருந்தது. புதிய ஒலிகள் அதில் சேர இடம் உண்டா என்ன? ஒரு சொல் நுழையவோ ஒரு சொல் உதிரவோ இயலாதபடி ஏழு முறை பொன்னூலால் கோத்துக் கட்டப்பட்டது வேதம் என்பார்கள். ஆனால் கண்முன் அது உருமாறிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். நாகணவாய்கள், காகங்கள், சிட்டுக்குருவிகள், மரங்கொத்திகள், சேவல்கள், மயில்கள் தங்கள் சொற்களை அதில் கலந்துகொண்டிருந்தன. அவன் தன் திகைப்பு ஓய்ந்தபோது பிறிதொன்றை உணர்ந்தான். ஒழுகும் தெளிந்த நீர்ப்பரப்பில் கரைக் காட்சிகள் படிவது போலத்தான் அந்த ஓசை வேதச் சொல்லொழுக்கில் படிகிறது. அது விழிமயக்குபோல் செவிமயக்குதான்.

வேதம் ஓய்ந்து ஏழு முறை ஓங்கார ஒலியெழுப்பி வணங்கியபின் இளம் அந்தணன் எழுந்து மீண்டும் மும்முறை விழிச்சுனையை வலம் வந்து வணங்கினான். கதிர்த்திசை நோக்கி கைகூப்பி நின்றான். கர்ணன் அருகணைந்து குனிந்து அவன் கால்கள் அருகே நிலம் தொட்டு வணங்கி “இது என் நல்லூழ் என்று எண்ணுகிறேன், உத்தமரே. இந்தக் காலையில் தங்களை நோக்கி விழிமங்கலம் கொள்ளும் பேறு பெற்றேன்” என்றான். விழியசைந்து அப்போதுதான் அவனைப் பார்ப்பதுபோல் முகம் திகைத்து பின்னர் “நீ பொன்றாப் புகழ் பெறுவாய். உன் குலம் இங்கு அரியணை வீற்றிருக்கும். உன் கொடிவழியினர் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசவைகளிலும் முதலிடம் பெறுவார்கள். இந்நிலத்தில் இனியெழும் எந்தப் படைக்கலப்பயிற்சி நிலையிலும் வில் தொடுபவர் உன்னையும் வழுத்திவிட்டே கல்வி தொடங்குவர். இங்குள்ள சொற்களில் நீ அழியாமல் என்றுமிருப்பாய். இங்குள இளமைந்தர் தங்கள் வாழ்வில் ஒருகணமேனும் நீயென திகழ்ந்து மீள்வர். என்றுமிரு! ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்று அந்தணன் அவனை வாழ்த்தினான்.

கர்ணன் திரும்பி தன் மைந்தரைப் பார்த்து அந்தணரை வணங்கும்படி சொன்னான். விருஷசேனனும் திவிபதனும் சென்று அந்தணரை வணங்க “புகழ் பெறுக! என்றும் பெயர் நிலைகொள்க!” என்று அவன் வாழ்த்தினான். கர்ணன் திகைப்புடன் தன் உடலை தானே தொட்டுப் பார்த்து தேடி “உத்தமரே, தங்கள் வாழ்த்துச் சொல் பெற்றேன். இத்தருணத்தில் தங்களுக்குப் பரிசிலென அளிக்க என்னிடம் எதுவுமில்லை. இங்கு வரும்போது விழிகளன்றி அணியேதும் உடலிலிருக்கலாகாது என்று நெறியிருப்பதால் அவ்வண்ணம் வந்தேன். தாங்கள் என் குடிலுக்கு வருவீர்கள் என்றால் தாங்கள் விழைவது அனைத்தையும் அளிப்பேன்” என்றான். அந்தணன் அவனை கூர்ந்து நோக்கி “சற்று முன் ஒருகணம் நான் உன்னை இந்த நீரில் பார்த்தபோது நீ அணிகள் அணிந்திருப்பதை கண்டேன். பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் கொண்டிருந்தாய்” என்றான்.

“ஆம். என் உடலை பிறர் அவ்வாறு நோக்குவதை நான் அறிந்திருக்கிறேன். இன்றுவரை நான் அதை முழுமையாக கண்டதில்லை. அது கனவு அல்லது விழிமயக்கென்றே உணர்ந்துள்ளேன்” என்று கர்ணன் சொன்னான். “சென்று அச்சுனையில் நோக்குக! அவ்வாறு அணிகலன் தெரியுமெனில் அதை எனக்கு கொடையென அளி” என்று இளைய அந்தணன் சொன்னான். திகைத்து ஓர் அடி எடுத்துவைத்து திவிபதன் ஏதோ சொல்ல முயல விருஷசேனன் வலக்கை நீட்டி அவனை தடுத்தான். கர்ணன் விழிமாறுபாடு ஏதுமின்றி “அவ்வாறே” என்றபின் மூன்றடி எடுத்து வைத்து சுனையருகே குனிந்து தன்னை அதில் பார்த்தான். “ஆம், பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் தெரிகின்றன” என்றான்.

“அங்கநாட்டரசே, அந்தக் குண்டலங்களின், கவசத்தின் மதிப்பை நான் அறிவேன். எனக்கு அதை பரிசிலெனக் கொடு” என்றான் அந்தணன். “அந்தணனாகிய நான் நீ அளிக்கும் உலகியல் பரிசுகளால் உளநிறைவு கொள்பவன் அல்ல. அவை தேவை என்ற விழைவால் வேதம் கற்றவனும் அல்ல. அந்தணன் பரிசில் கொள்வதாக இருந்தால் என் வேதச்சொல்லுக்கு நிகரானதையே கொள்ளவேண்டும். அத்தருணத்தில் வேதச்சொல்லுக்கு எது நிகரோ அதைத்தான் கோரவேண்டும். சில தருணங்களில் எளிய கூழாங்கல்லோ ஒரு பருக்கை அன்னமோகூட வேதத்தை நிகர்செய்யும். சிலபொழுது பேரரசர்களின் கருவூலம் தேவையாகும். இத்தருணத்தில் இங்கு என் சொல்லுக்கு நிகரானது அதுவே, ஆகவேதான் உன்னிடம் அதை கோருகிறேன்” என்றான்.

திரும்பி விருஷசேனனை நோக்கிய பின் “உன் மைந்தரை எண்ணுவாய் என்றால் நீ பிறிதொன்றை அளிக்கலாம். அந்த மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் நீயே வைத்துக்கொள்ளும் வழி அது. உன்னை நான் வாழ்த்துகையில் சொன்ன அனைத்தும் உன்னை காத்திருக்கும் நல்லூழ். அதை என் நா சொன்னதே அதற்குச் சான்று. அவையனைத்தையும் எனக்கே கொடையென அளி. இங்கு நான் ஓதிய வேதத்திற்கு அதுவும் நிகரே” என்றான் அந்தணன். கர்ணன் சொல்லெடுப்பதற்கு முன் விருஷசேனன் “அந்தணரே, தந்தையின் புகழும் எழுகாலத்தில் அவர் கொள்ளவிருக்கும் அழிவின்மையும் எதன்பொருட்டும் விடப்படவேண்டியவை அல்ல” என்றான். திவிபதன் “ஆம், தந்தை இன்று எழுஞாயிறு. காவியங்களில் அவர் திசைக்கதிராக நிலைகொள்ளவேண்டும்” என்றான்.

கர்ணன் “அந்தணரே, வீரன் வில் தொட்டு எடுத்து முதலாசிரியரை வணங்கும்போது தலையில் கைவைத்து அவர் சொல்லும் முதல் வாழ்த்தொலியே புகழ் பெறுக என்றுதான். புகழ்தான் இங்கு வாழும் ஒவ்வொரு வீரனும் கனவிலும் கணந்தோறும் விழைவது. எதன் பொருட்டேனும் வீரர்கள் புகழை அளிப்பார்களா என்ன?” என்றான். அந்தணன் புன்னகைத்து “வெற்றியை அளிக்கும் வீரர்கள் உண்டா என்ன?” என்றான். கர்ணன் “ஆம், புகழின் பொருட்டெனில் வெற்றியையும் அளிப்பார்கள்” என்று சொன்னான். “உன் தெரிவு” என்று அந்தணன் சொன்னான். “உத்தமரே, நீங்கள் கோரியதை கொள்க! இத்தருணத்தில் அவ்வழியா வேதச்சொல்லுக்கு நிகரென என்னிடம் ஒன்று இருப்பது நிறைவளிக்கிறது. இதன்பொருட்டே தெய்வங்கள் இதை எனக்களித்தன போலும்” என்றான்.

“வேதச்சொல்லுக்கு நிகர் வைக்கும் ஒவ்வொரு பொருளும் வேதமென்றே ஆகிறது. வேதங்களின் விழுப்பொருளான பிரம்மத்திற்கு படைக்கப்படுகிறது அது. இவ்வாறு ஒரு இறுதிக்கொடையை விண்பெருவெளியென நின்ற பரத்திற்கு அளிக்கும் நல்லூழ் எனக்கமைந்தது இறையருள், என் மூதாதையர் சொல், ஆசிரியரின் வாழ்த்து” என்றபின் கர்ணன் தன் உருவை விழிச்சுனை நீரில் நோக்கி இரு காதிலிருந்த குண்டலங்களை கழற்றினான். விருஷசேனனும் திவிபதனும் அணுகி நீர்ப்பரப்பில் அவனை நோக்கினர். கர்ணனின் கைகளில் மணிக்குண்டலங்கள் இரு செந்தழல்துளிகள் என சுடர்விட்டன. அவற்றை அவன் நீட்ட அந்தணன் “நான் செல்வத்தை கையால் தொடுவதில்லை . அவற்றை அந்த நீரில் இடுக… நான் வேதக் கொடைச்சொல் உரைத்து அவற்றை விண்தேவர்களுக்கு ஆகுதியாக்குகிறேன். இந்தச் செவ்வொளிப்பொழுதில் அனலும் நீரும் ஒன்றே” என்று சொன்னான்.

“ஆம், அவ்வாறே” என்று சொல்லி கர்ணன் குண்டலங்களை நீரிலிட்டான். திவிபதன் கைநீட்டி விருஷசேனனைத் தொட்டு நோக்குக என்று சொல்லெழாது சொன்னான். விருஷசேனன் முன்னரே அதை நோக்கிக்கொண்டிருந்தான். நீருக்குள் தெரிந்த அந்தணனின் உரு பிறிதொன்றாக இருந்தது. இரு கைகளையும் நீட்டி அவன் அந்தக் குண்டலங்களை வாங்குவது தெரிந்தது. அவன் சூரியனுக்கு அவியளிக்கும் வேதச்சொல்லை உரைத்துக்கொண்டிருந்தான். தன் நெஞ்சிலிருந்து கவசத்தைக் கழற்றிய கர்ணன் நீரில் இட்டபோது மும்முறை “கொள்க! கொள்க! கொள்க!” என்றுரைத்து அந்தணன் இரு கைகளையும் மலர் முத்திரை காட்டி ஓதி முடித்தான். அளித்த கைகளைக் கூப்பியபடி கர்ணன் நின்றான். விழிச்சுனை ஒளிக் கொப்பளிப்பென தெரிந்தது.

கர்ணன் திரும்பும்பொருட்டு வணங்கியபோது அந்தணன் அவனை நோக்கி கனிந்த விழிகளுடன் “உன் கவசமும் குண்டலங்களும் உன் தந்தையான சூரியனுக்கே அளிக்கப்பட்டன. வேள்வியில் அளிக்கப்பட்டவற்றை தேவர்கள் மறுக்கவியலாது என்பதனால் அவன் அதை கொண்டான். கதிர்மைந்தனே, ஈன்று எழுந்த அன்னைப்பசு அதுவரை தன்னுள் அமைந்து அக்கன்றைக் காத்த கருப்பையையும் நச்சுக்கொடியையும் உண்பதுபோல இது இயல்பானது. நீ அளித்தவற்றை உரிய தேவனுக்கே அளித்து நான் மேலும் வேதப்பயன் கொண்டவன் ஆனேன். அதன்பொருட்டு மீண்டும் உன்னை வாழ்த்துகிறேன். என்றுமிருப்பாய்! ஒளி வளர பாரதவர்ஷம்மேல் நின்றிருப்பாய்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். கர்ணன் அவன் காலடியைத் தொட்டு வணங்கி மூன்றடி எடுத்து வைத்து பின்னடைந்தான்.

மைந்தரை அணுகி “செல்வோம்” என்று கர்ணன் சொன்னான். அவர்கள் மூவரும் திரும்பி புதர்களினூடாக நடந்தனர். காடு இருண்டிருந்தது. விழிதுலங்கும் அளவுக்குக்கூட பாதை தெரியவில்லை. திரும்பி நோக்கியபோது அந்த வட்ட தாழ்நிலத்தில் மட்டுமே ஒளியிருப்பது தெரிந்தது. வானில் கதிர் எழுந்திருக்கவில்லை. விருஷசேனன் நோக்குவதைப் பார்த்து “விடிய இன்னும் நெடும்பொழுது இருக்கிறது” என்றான் திவிபதன். அவர்கள் தங்கள் காலடியோசை சூழப்பெருகியிருந்த இருட்டில் முட்டி எதிரொலிக்க நடந்தனர். விருஷசேனன் “தந்தையே, நீரில் தெரிந்த தோற்றத்தில் வந்தது எவரென்று நான் கண்டேன்” என்றான். “ஆம், நானும் நீரில் அவரை பார்த்தேன்” என்று கர்ணன் சொன்னான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 41

புலரிச்சங்கொலி எழுந்தபோது கௌரவப் படைகளுக்குள் எந்த அசைவும் ஏற்படவில்லை. சுபாகு  தலையில் பாயாலான மழைமூடியை கவிழ்த்துக்கொண்டு காவல்மாடத்தின்மீது சாய்ந்த மழைச்சரடுகளுக்கு சற்றே குனிந்து உடல்கொடுத்து நின்றிருந்தான். புலரிமுரசு அமைந்த பின்னரும் படை அசைவிலாதிருக்கக் கண்டு ஒருகணம் அவன் உளம் துணுக்குற்றது. ஒருநாள் காலையில் அங்குள்ள படைவீரர்கள் அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என்று அவனுள் ஒரு எண்ணம் முன்பொருநாள் வந்தது. உண்மையாகவே அது நிகழ்ந்துவிட்டதா?

பல படையெடுப்புகளில் கொடிய நோய்கள் உருவாகி முழுப் படையும் அழிந்த கதையை அவன் அறிந்திருக்கிறான். ஒருவரோடொருவர் நெருங்கி வாழும் படைகளில் தொற்று நோய்கள் எளிதில் பரவுகின்றன. நோய்களுக்கு தங்களை கொடுக்கும் உளநிலையும் படைநிலைகளில் எளிதில் உருவாகிவிடுகிறது. நோய்கண்டவர்களை அப்படியே விட்டுவிட்டு அப்படியே இடம் பெயர்வதையே பெரிய படைகள் செய்வது வழக்கம். அவ்வுடல்களை மறைவு செய்தாலோ எரித்தாலோ அச்செயலாலேயே மேலும் நோய் தொற்றும். ஆனால் மழைக்காலம் என்றால் அவர்கள் விலகிச்செல்லுந்தோறும் நீரினூடாகவும் காற்றினூடாகவும் நோய் அவர்களை தொடர்ந்து வரும்.

சதகர்ணிகளின் நிலத்திற்குள் சென்ற கலிங்கமன்னன் ஜோதிவர்மனின் பெரும்படை முழுமையாகவே நோயில் அழிந்து அவன் உடலை மட்டும் அவர்கள் மெழுகு பூசிய துணியில் சுற்றிக்கொண்டு வந்து எரித்த கதையை கலிங்க விஜயம் எனும் காவியத்தில் அவன் பயின்றிருந்தான். அவன் மைந்தன் அது சதகர்ணிகளின் தெய்வங்கள் அளித்த தீச்சொல் என எண்ணி விஜயபுரியின் அத்தனை ஆலயங்களையும் இடித்தும் எரித்தும் அழித்தான். ஆனால் அவர்கள் திரும்பி வரும்போது மீண்டும் நோய் பரவி படைவீரர்கள் மறைந்தனர். இறந்த உடல்கள் அனைத்திலும் உடல் வலிப்பு கொண்டு முகம் இளித்து பெருநகைப்பு ஒன்று உறைந்திருந்தது.

சதகர்ணிகளின் தெய்வங்களின் நகைப்பு அது என்றது கலிங்க விஜயம். அதன்பின் அந்நகைப்புடனேயே அத்தெய்வங்களை கலிங்கநாட்டு எல்லையில் நிறுவி குருதிபலி கொடுத்து தடுத்து நிறுத்தினர். ஆண்டுதோறும் பலிகொடுத்து நிறைவுசெய்தனர். கலிங்கப் படை பின்னர் சதகர்ணிகளின் மண்ணுக்குள் நுழையவே இல்லை. அவர்களின் எல்லைக்கோயில்களில் கழுத்துநரம்பு தெறிக்க வாய்விரித்து இளித்துநிற்கும் தெய்வங்களின் சிலைகளை அவன் கண்டதுண்டு. உக்ரஹாஸர்கள் என அத்தெய்வங்கள் அழைக்கப்பட்டன.

எதை எதிர்பார்க்கிறோம் என்று அவன் வியந்துகொண்டிருக்கையிலேயே படையின் ஒரு மூலையில் மெல்லிய அசைவு தெரிந்தது. ஒவ்வொருவராக எழுந்து நின்றனர். மழைக்கு உடலை மடக்கி ஒடுக்கியிருந்த மெழுகுப்பாய்களையும் பாளைகளையும் மரப்பட்டைகளையும் அகற்றினர். குளிரில் அனைவரும் உடலொடுக்கி நின்றிருப்பதை அவனால் காண முடிந்தது. அவர்களின் குரல்கள் மழைச்சாரலைக் கடந்து வரவில்லை. வானில் இடியோசையும் மின்னல் தெறிப்புகளும் நின்றுவிட்டிருந்தன. நீரே அவன் விழிதுலங்கச் செய்யும் ஒளியாக மாறியதுபோல் தோன்றியது.

படைகள் அணிவகுக்கும்படி ஆணையிட்டபடி கொம்புகள் முழங்கின. ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு அவைகள் படைக்களம் எங்கும் பரவின. சுபாகு கயிற்றேணியின் வழியாக இறங்கி கீழே வந்தான். அங்கு நின்ற தன் புரவியை அணுகி அதன்மேல் ஏறிக்கொண்டு மரப்பட்டைப் பலகைகளினூடாக சென்றான். படைகள் குறுகி சிறு எல்லைக்குள் ஒடுங்கிவிட்டிருக்க படையெல்லைக்கு அப்பாலிருந்த பாதைப்பலகைகளையும் கைவிடப்பட்ட காவல் மாடங்களையும் உடைத்து அந்த மரங்களை விறகுக்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.

அவன் புரவி அந்த வண்டிகளைக் கடந்து சென்றது. அடுமனை நெருப்புகள் அனல் வழிந்தோடும் ஆறென நெடுந்தொலைவுக்கு தெரிந்தன. படைவீரர்கள் விசையற்ற அசைவுகளுடன் துயிலில் நடமாடுபவர்கள்போல் தோன்றினார்கள். பெரும்பாலானவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. மிக மெல்ல நடந்து நீரள்ளி முகம் கழுவினார்கள். அவர்களின் படைக்கலங்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. அவர்கள் எவரும் இரவில் நன்கு துயின்றிருக்கவில்லை என்று அண்மையில் தெளிந்த முகங்களிலிருந்து தெரிந்தது.

மழை மட்டுமல்ல, அதற்கப்பால் அவர்களை துயிலவிடாத வேறு ஒன்றும் இருந்தது. முந்தைய நாள் அந்தியிலேயே அது ஒரு நோயென அவர்கள் மேல் படர்ந்திருந்தது. எதிரே வந்த வீரனின் விழிகளிலிருந்த ஒளிமங்கலில் அதை அவன் கண்டான். அது என்ன என அவன் அறிந்திருந்தான். அவர்கள் அனைவரையும்போல அவனும் அதை சொல்லென உளமாக்க விழையவில்லை. அதை ஒவ்வொரு உளச்சொல்லாலும் உந்தி அகற்றிவிடவே முயன்றான்.

அஸ்வத்தாமனின் குடிலை அடைந்து புரவியை நிறுத்திவிட்டு இறங்கி முற்றம் நோக்கி சென்றான். குடில் வாயிலில் அமர்ந்திருந்த காவலன் அவனைக் கண்டதும் எழுந்து நின்று நடுங்கினான். அவன் இரவெல்லாம் சாரல் அடித்த ஈரத்தை காலில் வாங்கி உடலில் நடுக்கெனச் சூடியிருந்தான். குடிலுக்குள் சிறு அகல் விளக்கின் ஒளி இருந்தது. குறடுகளை கழற்றிவிட்டு “வணங்குகிறேன், பாஞ்சாலரே” என்றபடி சுபாகு உள்ளே நுழைந்தான். அஸ்வத்தாமன் நிலத்தில் அமர்ந்து மென்தோல் இழுத்து ஆணியறையப்பட்ட பலகையில்  முள்ளம்பன்றி முள்ளால் கடுக்காய் அரைத்து உருவாக்கப்பட்ட மையைத் தொட்டு வரைந்துகொண்டிருந்தான்.

அந்தக் களத்தை சுபாகு நோக்கினான். படைசூழ்கை என்ன என்று உய்த்துணரக்கூடவில்லை. குடில்கூரைமேல் மழையின் ஓசை பெருகியிருந்தது. “படைசூழ்கை இன்னும் முடிவாகவில்லையா?” என்றான் சுபாகு. “படைசூழ்கை ஒருபோதும் முடிவடையாது. இது பொற்கொல்லர்கள் நகை செய்வதுபோல் செய்யச் செய்ய பெருகும் பணி” என்றான் அஸ்வத்தாமன். “படைசூழ்கையே தேவையில்லை என்று நேற்று சொன்னீர்கள்” என்றான் சுபாகு. “ஆம். ஆனால் ஒன்றை அமைக்கத் தொடங்கும்போது அது முழுமை பெறாது உள்ளம் நிறைவடைவதில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“இனி நமக்கு பொழுதில்லை” என்றான் சுபாகு உடல் தாழ்த்தி சிறிய பீடத்தில் அமர்ந்தபடி. “இப்போது கருக்கிருள். ஆயினும் இன்னும் சற்று நேரத்திலேயே விடிந்துவிடும் என்று தோன்றுகிறது. இந்த மென்மழைச்சாரல் விண்ணிலிருந்து ஒளியை இறக்குவது. நாம் எண்ணுவதைவிட விரைவாகவே ஒளியெழும். ஒளியெழுந்த பின்னர் படையினரை சூழ்கைக்குச் செலுத்தும் வழக்கமில்லை.” அஸ்வத்தாமன் விழிதூக்காமல் “ஆம், ஆனால் அதெல்லாம் முன்பு. அன்று எதிரிப் படையினர் காவல்மாடத்திலிருந்து நமது படையை அறிந்துவிடுவார்கள் என்று எண்ணினோம். அதெல்லாமே வெறும் நடிப்புகளென்று இன்று தோன்றுகிறது” என்றான்.

“நாம் இருளுக்குள் எவருமறியாது படைகளை நகர்த்தி சூழ்கை அமைத்தபோதுகூட நமது சூழ்கையை அவர்கள் அறியாமல் இருந்ததில்லை. அவர்களது சூழ்கையை நாமும் அறியாமலிருந்ததில்லை. ஏனெனில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வாறு கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறோம். இங்கிருப்பவர்கள் அங்கிருப்பவர்களின் உறவினர்கள். அங்கிருப்பவர்கள் நமக்கு அவ்வாறே. இது உண்மையில் போரல்ல, காதலனும் காதலியும் கொள்ளும் காமம்போல அணுக்கமானது. ஒருவரையொருவர் நன்கறிந்து ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொண்டு தாங்கள் விழைந்ததை அடையும் திளைப்பு இது” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

அஸ்வத்தாமன் அன்று காலையில் நன்கு துயின்று புத்துணர்வு கொண்டு எழுந்தவன் போலிருந்தான். “பாஞ்சாலரே, இந்தப் போர் வெல்லக்கூடுவதா? இன்று போரில் நாம் எதை எய்துவோம் என்று எண்ணுகிறீர்?” என்று சுபாகு கேட்டான். “வெல்வதென்றால் இன்று வெல்வோம். நேற்றே அங்கர் அவர்கள் படைகளின் பெரும்பகுதியை அழித்துவிட்டார். இன்று எஞ்சியிருப்பவற்றை அவரால் அழிக்க முடியும். இன்று அவர்கள் தங்கள் இறுதி எல்லையை அறிவார்கள்” என்றான் அஸ்வத்தாமன்.

சுபாகு “இன்னும் அவர்களில் எவரும் கொல்லப்படவில்லை” என்றான். “உண்மை. அவர்கள் எவரையும் கொல்லும் எண்ணம் அங்கருக்கு இல்லை என்று நேற்று தெரிந்துகொண்டேன். எண்ணியிருந்தால் அவர் நேற்று யுதிஷ்டிரனையும் பீமனையும் கொன்றிருக்க முடியும். அர்ஜுனனையன்றி எவரையும் அவர் கொல்ல முயலவும் இல்லை என்பது தெளிவு” என்றான் அஸ்வத்தாமன். “ஏன்?” என்று சுபாகு கேட்டான். “அவர்களைக் கொல்லும் பழி தனக்கு வேண்டாம் என்று எண்ணுகிறார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“இங்கு நாங்கள் நூற்றுவரில் இருவர் எஞ்ச பிறர் கொல்லப்பட்டோம்” என்று சுபாகு சீற்றத்துடன் சொன்னான். “ஆம்” என்றான் அஸ்வத்தாமன். “பாஞ்சாலரே, நானும் இறந்துவிட்டேன்” என்று சுபாகு சொன்னான். “மெய். அதன்பொருட்டு அவர்களை கொன்றால் நாளை நாம் நாடாள இயலாது. அவர்கள் நிலம்நாடி போரிட்டு சாக எண்ணுகிறார்கள். நாம் வென்று நாடாள திட்டமிடுகிறோம். பழிகொண்ட மன்னனை மக்கள் துறப்பார்கள். அதை அங்கர் கருதுகிறார்” என்றான் அஸ்வத்தாமன். “நேற்றே அந்த மணிமுடியை நிலத்திலிட்டு உருட்டி அது தனக்கு எத்தனை எளிய ஒன்று என்று காட்டிவிட்டார். சற்றேனும் நுண்ணுணர்வு அவர்களுக்கு இருக்குமென்றால் அவர்கள் அதை எண்ணிச்சூழ்ந்து அம்மணிமுடியை கொண்டு வந்து அங்கருக்கு அளிக்கவேண்டும்.”

அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “நன்று. எஞ்சியிருக்கும் தினவால் இன்று அவர்கள் போருக்கு வருவார்கள் என்றால் இறுதி எல்லையை அவர்கள் இன்று காண்பார்கள். இன்று ஆணவம் உடைந்து அடிபணிவார்கள். ஐயமே இல்லை. அங்கர் ஒருவேளை அவர்கள் கோரும் சிறு நிலப்பகுதியை அளித்து அவர்களை துரத்திவிடக்கூடும். இன்று போர் முடிந்துவிடும். இன்று இச்சூழ்கையை அமைக்கும்போதே அந்த நம்பிக்கையை நான் அடைந்தேன். இப்போதும் அவர்களைவிட இருமடங்கு இருக்கிறது நமது படை. அவர்களைவிட வில்லவரும் தலைமைத் திறன் கொண்டோரும் நம்மிடையே மிகுதி.”

சுபாகு “நன்று நடக்கட்டும்” என்றான். “ஏன், நீங்கள் ஐயம் கொண்டிருக்கிறீர்களா?” என்றான் அஸ்வத்தாமன். “நம்பிக்கை கொள்வதை நான் விட்டுவிட்டேன். ஆகவே ஐயம் கொள்வதற்கான உரிமை எனக்கில்லை” என்றபின் சுபாகு எழுந்தான். பின்னர் “நான் கிருதவர்மனை இங்கு வரச்சொல்கிறேன். இப்படைசூழ்கையை அவர் படையில் நிகழ்த்தட்டும்” என்றான். “ஆம், நானே அவரை வரச்சொல்லியிருக்கிறேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“மூத்தவர் எழுந்துவிட்டாரா என்று பார்க்கவேண்டியிருக்கிறது” என்றான் சுபாகு. “அவர் நேற்று நன்கு துயின்றார். ஆகவே இன்று தெளிந்த உள்ளத்துடன் எழுவார். ஐயமில்லை, சென்று நோக்குக!” என்று அஸ்வத்தாமன் சொன்னான். சுபாகு வெளிவந்து தன் புரவியை நோக்கி சென்றபோது ஒருகணத்தில் எடைமிக்க சேற்றுப் பரப்பொன்று அவன் மீது விழுந்து மண்ணோடு மண்ணாக அழுத்துவதுபோல் துயில் வந்து தாக்குவதை உணர்ந்தான்.

இமைகளை உந்தி மேலே தூக்கி உடற்தசைகளை இறுக்கி மெல்ல விட்டு அத்துயிலை கடந்தான். புரவியிலேறி அமர்ந்து அதை கிளம்பும்படி ஆணையிட்டதை உணர்ந்தான். பின்னர் விழித்துக்கொண்டபோது புரவி சீரான குளம்படிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அவனைச் சூழ்ந்து கௌரவப் படை துயிலெழுந்து காலைக்கடன்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஓசை கேட்டது. அவன் செலுத்தாமலேயே புரவி துரியோதனனின் குடில் நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தது. அது அவன் உள்ளத்தை அறியத்தொடங்கி நெடும்பொழுதாகிறது என எண்ணினான். விழித்திருக்கையில் உள்ளம் கொள்ளும் அலைக்கழிவுகளை புரவிகளால் தொடர இயல்வதில்லை. துயில்கையில் உடலிலிருந்து தெளிவான ஆணை அவற்றுக்கு கிடைக்கிறது போலும்.

துரியோதனனின் பாடிவீட்டின் முகப்பில் அவன் இறங்கி புரவியின் கடிவாளத்தை ஏவலனிடம் ஒப்படைத்துவிட்டு நடந்தபோது குடிலின் முகப்பில் கர்ணன் அமர்ந்திருப்பதை கண்டான். அருகே சென்று அவனை வாழ்த்த எண்ணிய பின்னர் தயங்கி நின்றான். அங்கிருந்து கர்ணனை பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளே துரியோதனன் இன்னும் துயில் விழிக்கவில்லை என்று தெரிந்தது. கர்ணன் அமர்ந்திருக்கும் உடல் அமைப்பில் சற்று முன் அவ்வாறு அமர்ந்ததுபோல் தோன்றினான். உடற்தசைகள் தளர்ந்திருக்கவில்லை. உடல் எங்கும் சாய்வு தேடவுமில்லை. இரவு முழுக்க அவ்வாறு உடல் திரட்டி அமர்ந்திருக்கிறாரா என்ன? உள்ளம் அவ்வாறு எழுந்து நிலை கொள்கிறதா?

உள்ளிருந்து ஏதோ ஓசை கேட்டதுபோல கர்ணன் திரும்பிப்பார்த்தான். பின்னர் எழுந்து நின்று தன் கைகளை நீட்டி உடலை இறுக்கி தளர்த்தினான். துரியோதனன் துயிலெழுந்த ஓசை அது என்பதை சுபாகு உணர்ந்தான். கர்ணன் திரும்பி ஏவலனை நோக்கி கைகாட்ட ஏவலன் குடில் படலைத் திறந்து உள்ளே சென்றான். கர்ணனும் தொடர்ந்து உள்ளே செல்வான் என்று சுபாகு எதிர்பார்த்தான். ஆனால் கர்ணன் திரும்பி முற்றத்தில் இறங்கி நீண்ட கால்களை எடுத்து வைத்து நடந்து அவனை நோக்கி வந்தான். சுபாகு தலைவணங்கியதை அவன் உளம் பார்க்கவில்லை. அவனைக் கடந்து சென்று அங்கு நின்றிருந்த புரவிமேல் ஏறி அதை கிளப்பிக்கொண்டு மரப்பாதையில் ஏறி குளம்புகள் விசைத் தாளமிட விரைந்து அகன்றான்.

சுபாகு அவனை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். ஏவலன் வெளியே வந்து “அரசர் விழித்தெழுந்துவிட்டார்” என்றான். சுபாகு குடில் வாயிலை சென்றடைந்து குறடுகளை கழற்றியபின் மெல்ல உள்ளே சென்று “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். கையூன்றி எழுந்து அமர்ந்த துரியோதனன் இரு கைகளாலும் முகத்தை அழுத்தி துடைத்தபின் நிமிர்ந்து அவனை பார்த்தான். “இளையோனே” என்றான். “ஆம், இங்குள்ளேன்” என்றான் சுபாகு. “சற்று முன் உன்னைத்தான் கனவில் கண்டேன்” என்றான் துரியோதனன். அவன் முகம் நன்கு தெளிந்திருந்தது.

துரியோதனன் புன்னகைத்தபடி படுக்கையை கையால் தட்டி “விழிப்பதற்கு சற்று முன் உன்னை பார்த்தேன். இரவெல்லாம் அவர்கள் அனைவரையும் பார்த்தேன். அவர்கள் என்னிடம் சொன்னார்கள், இன்று அவர்களும் போரில் இருப்பார்கள் என்று. இன்று நாம் வெல்வோம். அது உறுதி. இன்றுடன் போர் முடியும். இன்றுடன் நாம் மூதாதையருக்கு அளித்த சொல் நிறைவேறும்” என்றான். சுபாகு துரியோதனனின் மலர்ந்த கண்களை பார்த்துக்கொண்டு அசையாமல் நின்றான்.

சுபாகு புரவியில் அமர்ந்து கௌரவப் படைகளினூடாகச் சென்றான். அவன் புரவியின் ஒவ்வொரு குளம்படியும் எடைமிக்கதாக இருந்தது. எதிரே வந்த கௌரவப் படைத்தலைவர்கள் தலைவணங்கி வாழ்த்துச்சொல் உரைத்ததை அவன் அறியவில்லை. அவர்கள் அவன் முகத்திலிருந்த பதைப்பைக் கண்டு வியப்படைந்தனர். அவன் சாவுநோக்கி செல்பவனின் விழிகள் கொண்டிருந்தான். அல்லது பெருவிடாயோ பசியோ கொண்டவன் போலிருந்தான். அவன் உதடுகள் அழுந்தி தாடை அசைந்துகொண்டிருந்தது. வாய்க்குள் ஏதோ ஒன்றை இறுக மென்றுகொண்டிருப்பவனைப்போல. அல்லது அவன் மெல்வது ஓர் உளச்சொல்லை என்பதுபோல.

கௌரவப் படைகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. மிக அப்பால் கிருதவர்மனின் ஆணைகள் கொம்போசையாக எழுந்து படைகளை மூடியிருந்த கருக்கிருளுக்குள் ஊடுருவி ஒலித்தன. அதற்கேற்ப படைத்தலைவர்கள் எழுப்பிய சிறுகொம்போசைகளும் முழவோசைகளும் கேட்டன. ஆனால் படையினர் ஒருவருக்கொருவர் முட்டிமோதினார்கள். மாறிமாறி ஆணைகளையும் எச்சரிக்கைகளையும் கூவிக்கொண்டார்கள். சிறுதலைவர்கள் வசைக்கூச்சலிட்டனர். படையினர் தங்களவரை கூவி அழைத்தனர். இருளுக்குள் இருளலைகளாக படை ததும்பிக்கொண்டே இருந்தது.

பயிற்சிபெற்ற படையினரிடம் உள்ள ஒழுங்கும் அமைதியும் கலந்த சிறுசலிப்பு அவர்களிடையே இருக்கவில்லை. பெரும்பாலானவர்கள் ஏவல்பணியினர் என்பதனால் ஆணைகளை புரிந்துகொள்வதில் அவர்களுக்கு இடர் இருந்தது. புரிந்துகொண்டதும் உருவாகும் கிளர்ச்சியும் இருந்தது. அதை அவர்களால் கூச்சலிட்டு பிறரிடம் உரைக்காமலிருக்க இயலவில்லை. ஒருவரோடு ஒருவர் உடல்முட்டிக்கொண்டார்கள். பழகாத கால்கள் ஒன்றுடனொன்று உரச குறடுகள் ஒலித்தன. படைக்கலங்கள் ஒருவரை ஒருவர் குத்த எச்சரிக்கைச் சொற்களுடன் வசைபாடினார்கள்.

அந்தப் பதற்றத்திலும்கூட அவர்கள் புதிய ஒன்றைச் செய்வதன் உவகையை கொண்டாடினர். நகையாடலும் இளிவரலும் செய்தனர். உறவுமுறை பேசி இழிசொற்கள் வீசி விளையாடினர். நெடுங்காலமாக அவர்கள் ஏவலர்களாக படைவீரர்களுக்கு பணிசெய்தவர்கள். படைபயின்ற வீரர்கள் அவர்களை கீழாகவே நடத்துவார்கள். ஆணையிடுவார்கள், வசைபாடுவார்கள், அவ்வப்போது அடிப்பதுமுண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவில் படைவீரர்களாக ஆகி களம்சென்று வீரம்விளைத்து மீள்வதை கண்டுவந்தவர்கள். அந்த நாள் வந்தது அவர்களை நிறைவடையச் செய்தது.

முதல்முறை மேடையேறிய நடிகன் என தங்கள் கவசங்களையும் கச்சையையும் படைக்கலங்களையும் நோக்கி நோக்கி மகிழ்ந்தார்கள். அவற்றை எத்தனை முறை சீரமைத்துக்கொண்டாலும் அவர்களின் உள்ளம் நிறைவடையவில்லை. ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டி நகையாடினர். ஒருவரை ஒருவர் சீரமைத்துக்கொண்டார்கள். அவை உரிய முறையில் அமைந்தாலே போதும், போர் என்பது அந்தத் தோற்றம் மட்டுமே என்பதுபோல. அந்த மாற்றுருவுக்குள் ஒளிந்திருக்கும் உணர்வை அவர்கள் அடைந்தமையால் அனைவர் முகங்களிலும் ஓர் அறிவின்மையின் நகைப்பு இருந்தது.

சாவு மிக அண்மையிலிருப்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் அது எவருடைய உள்ளத்திலும் அப்போது இருக்கவில்லை. அவர்கள் களத்திற்குச் சென்று அணிவகுத்து நின்றிருக்கையிலும்கூட அத்தருணத்தின் நடிப்பில் மகிழ்வுற்றிருந்தனர். போர்முரசு ஒலிக்கத்தொடங்குவதற்கு முந்தைய பொழுதின் ஆழ்ந்த அமைதியில்தான் அவர்கள் ஒரு கடுங்குளிர் அலையென அச்சத்தை உணர்ந்தனர். அது அவர்கள்மேல் எடையுடன் ஏறி அமர்ந்து மூச்சை திணறச்செய்தது. கால்களை எடைதாளாமல் வளைய வைத்தது. நெஞ்செலும்புக்கூடு வெடித்துவிடுவதுபோல் அக்கணங்களை அறிந்தனர்.

ஒவ்வொருவரும் அங்கிருந்து தப்பியோட, மைந்தர்களையும் மனையாட்டியரையும் காண விழைந்தனர். அது இயலாதென்று உணர்ந்து உளமுருகி விழிநனைந்தனர். சிலர் வெளிப்படையாகவே விழிநீர்விட்டு விசும்பி அழுதனர். ஒவ்வொரு படைக்கலத்தின் கூரும் அவர்களை நோக்கி வஞ்சத்துடன் திரும்பியிருப்பதாகத் தோன்றியது. மண்ணில் மானுடர் எத்தனை கோடி படைக்கலங்களை கூர்தீட்டி வைத்திருக்கிறார்கள் என வியந்தனர். அவை மானுடர் பிற மானுடர்மீது கொண்ட அச்சமும் ஐயமும் பருவுருக்கொண்டு எழுந்தவை.

படைக்கலம் தீட்டுபவனுக்குள் இருந்து தன்னை கூர்கொள்ளச் செய்வது ஒன்றுண்டு. அது குருதிவிடாய் கொண்டது. அணையாத சினமும் தளராத வஞ்சமும் கொண்டது. அது மானுடரை அழித்துக்கொண்டே இருக்கிறது. பல்லாயிரமாண்டுகாலமாக. அதன் விசை குறையவே இல்லை. வேல்முனைகளை நோக்கியதுமே அவற்றின் கூரின் குளிர் நெஞ்சில் பாய்வதுபோல, வாள்களின் கூரின் ஒளி வயிற்றைப் பிளந்துசெல்வதுபோல தோன்ற அவர்கள் மெய்ப்பு கொண்டனர். பலர் நிலம் நோக்கினர். சிலர் வானை. சிலர் அப்பால் ஏதேனும் இலக்கை. சிலர் கொடிகளை.

கொடிகளைப்போல அத்தனை பொருளில்லாத எதையும் அவர்கள் அதற்குமுன் கண்டதில்லை என உணர்ந்தார்கள். அந்தக் கொடிகளை வணங்கவும் அவற்றின் ஆணைகளுக்குப் பணியவும் அவற்றுக்காக உயிர்விடவும் அவர்கள் நினைவறிந்த நாள் முதலே பயிற்றுவிக்கப்பட்டிருந்தார்கள். அவற்றை நோக்கி களிவெறிகொண்டு கூச்சலிட்டார்கள். அவற்றை நோக்கி நோக்கி மெய்ப்பு கொண்டார்கள். கொடிக்கென வாழ்வதாக உறுதிபூண்டவர்கள், தங்கள் நினைவின் வாழ்வின் மீட்பின் குறி என கொடியை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.

கொடி அரசனின் நேர்த்தோற்றம். அரசன் என எழுந்த குருதிநிரையின் அடையாளம். அவர்களுக்கு அன்னமும் அன்னையும் ஆன நிலத்தின் துளி அது. மூதாதையரின் சொல் எழுந்து விழிநோக்க வானில் துடிப்பது. ஆனால் களத்தில் கிழிந்த வெற்றுத் துணியாகவும் ஒவ்வொரு கணமும் குருதிப்பசிகொண்ட கொடிய விலங்கொன்றின் விடாய்கொண்ட நாவாகவும் இரக்கமேயற்ற அரசாணை ஒன்று பொறித்த ஏடாகவும் பலிநாடும் இருள்தெய்வமொன்றின் முகப்புப்படாமாகவும் அது தோன்றியது. கொடிகளை நோக்கிய அனைவரும் திடுக்கிட்டு விழிதாழ்த்திக்கொண்டார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையைப்பற்றி எண்ணும் கணம் அது. தாங்கள் எய்தியவற்றை நினைவுகூர்ந்தனர். அவையனைத்தும் முதிரா இளமையிலேயே என்பதை மெல்ல உணர்ந்ததும் ஏக்கம் கொண்டனர். தாங்கள் வாழவே இல்லை என, வாழ்வுக்கு அப்பால் என சிலவற்றைக்கொண்டு அவற்றை நோக்கி செல்வதையே வாழ்வாக எண்ணி மயங்கி நாள்கடத்தியிருக்கிறோம் என உணர்ந்தனர். அவை அனைத்தும் பிறரால் உருவாக்கி அளிக்கப்பட்டவை. அவற்றை தங்கள் அகம் முழுமையாக நம்பியதுமில்லை. ஆயினும் அவற்றுக்காக வாழ்க்கையை அளித்திருந்தனர்.

ஏனென்றால் வாழ்க்கை முடிவற்றது என்னும் மாயை அவர்களுக்குள் இருந்தது. நாட்கள் நெடிது நீண்டு முன்னால் கிடக்கின்றன என்றும் அள்ள அள்ளக் குறையாதவை காத்திருக்கின்றன என்றும் அவர்களின் ஆழம் நம்பியது. அந்நம்பிக்கை குழந்தைப்பருவத்தில் வந்தமைந்தது. அதை பின்னர் எண்ணி நோக்கியதே இல்லை. தொடப்படாததாக அது அங்கிருந்தது. கையிடுக்கினூடாக காலம் ஒழுகுவதை உணர்ந்திருந்தபோதும்கூட அவர்கள் எண்ணிய அனைத்தையும் அடையும் பொழுது எழவிருப்பது என்றே மயங்கினர்.

அந்நினைப்பு சிலரை விழிகசிய, நெஞ்சுலையச் செய்தது. சிலரை நெடுமூச்சுடன் தளரவும் சிலரை எவர் மேலோ என வஞ்சம்கொண்டு பல்லிறுக்கவும் செய்தது. சிலர் மட்டும் கசப்புடன் சிரித்துக்கொண்டார்கள். அச்சிரிப்பை அருகிருந்தோர் ஐயத்துடன் நோக்க அவர்கள் நோக்குபவர்களின் உள்ளத்தை எண்ணி மேலும் சிரித்தனர். அச்சிரிப்பு அவர்களை அத்தருணத்தின் இறுக்கத்திலிருந்து முற்றாக விடுவித்தது.

போர்ப்பறை முழங்கிய கணம் அவர்கள் திகைத்து செயலற்று நின்றனர். உள்ளமும் உடலும் தனித்தனியாக பிரிந்துவிட்டதுபோல. மீண்டும் மீண்டும் போர்ப்பறை அறைகூவியது. “செல்க! செல்க!” என ஆணையிட்டது. “உயிர்கொடு! உயிர்கொடு!” என அது ஒலித்தது. தங்களை முந்தைய கணத்திலிருந்து அறுத்துக்கொண்டு அவர்கள் அந்த உச்சக்கொந்தளிப்பு நோக்கி பாய்ந்தார்கள். அடியிலா ஆழம் நோக்கி பாய்பவர்கள்போல. இருண்ட ஆழம். வெறுமையின் முடிவிலி.

முரசொலிகள் ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. இருளில் சென்றுகொண்டிருந்த சுபாகு தன் எதிரில் வந்த பெண்ணைக் கண்டு நின்றான். அவள் கரிய ஆடை அணிந்திருந்தாள். விழிகள் கனிவு கொண்டிருந்தன. ஒரு கையில் அமுதகலமும் மறுகையில் கொடியும் சூடியிருந்தாள். சுபாகு தன் புரவியை இழுத்து நிறுத்தினான். அவள் அருகணைந்து தன் கையிலிருந்த கலத்தை அவனை நோக்கி நீட்டினாள். அவன் அதை வாங்கியபின் அவள் விழிகளை நோக்கினான். அவள் முகத்தில் புன்னகை இல்லை. உதடுகள் இறுகியிருந்தன. ஆனால் விழிகளின் ஒளி கனிவுகொண்டிருந்தது. வைரங்கள்போல. வைரங்கள் கனிவுகொண்டு ஒளிசூடிய கூழாங்கற்கள்.

அவன் அந்தக் கலத்தைத் தூக்கி அதிலிருந்த குளிர்ந்த இனிய மதுவை அருந்தினான். அது நரம்புகளில் ஓடும் மெல்லிய அதிர்வாக உடலெங்கும் பரவியது. கைவிரல்நுனிகளை அதிரச்செய்தது. இனிப்புண்ணும் நாக்கு என காதுமடல்கள் தித்தித்தன. அவன் முகம் மலர்ந்தது. அக்கணம் வரை அவனை அழுத்திய அனைத்துத் துயர்களும் விலகின. அவன் முகம் மலர்ந்தது. “வாழ்த்துகிறேன், அன்னையே! என்னை மீட்டீர்கள்” என்றான். அவள் கலத்தை வாங்கிக்கொண்டு புரவியில் கடந்துசென்றாள். அவன் உள்ளம் உவகையில் திளைக்க புரவியில் படைநடுவே சென்றான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 40

ஏழாவது களமான துலாவில் அமர்ந்திருந்த சமன் என்னும் சூதர் தன் முறை வந்ததை உணர்ந்து நீள்குழலை எடுத்து வாயில் பொருத்தி அதன் பன்னிரு துளைகளில் விரலோட்டி சுழன்று சுழன்றெழும் கூரிய ஓசையை எழுப்பி நிறுத்தி தன் மெல்லிய குரலை அதன் மீட்டலென தொடரச்செய்து சொல்லாக்கி, மொழியென விரித்து கதை சொல்லத் தொடங்கினார் “தோழரே கேளுங்கள், இது பதினேழாவது நாள் போரின் கதை.”

முந்தைய நாள் இரவு முழுக்க ஓங்காது ஒழியாது குருக்ஷேத்ரத்தின் படைவிரிவின்மீது மென்மழை நின்றிருந்தது. அனைத்து கூரைப்பரப்புகளும் விளிம்புகள் உருகிச்சொட்டுவதுபோல் துளியுதிர்த்துக் கொண்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான பறவைகள் அலகால் நிலத்தைக் கொத்துவதுபோல் துளிவிழும் ஓசை எழுந்து கொண்டிருந்தது. யானைகள் அக்குளிரை விரும்பி உடலசைத்து, செவி வீசி, துதிக்கை சுழற்றி, இருளுக்குள் ததும்பிக்கொண்டிருந்தன. புரவிகள் தசை விதிர்த்து கால் மாற்றி துயின்றன.

கமுகுப்பாளைகளாலும், ஈச்சஓலைமுடைந்து உருவாக்கப்பட்ட பாய்களாலும், தோலாலும் செய்யப்பட்ட மூடுகைகளை தலைமேல் கவிழ்த்துக்கொண்டு, தோல்போர்வைகளையும் மரவுரிப்போர்வைகளையும் போர்த்தியபடி குந்தி அமர்ந்தும், சாய்ந்து கால்நீட்டியும் படைவீரர்கள் துயின்றனர். தரையிலிருந்து ஈரம் எழுந்து வந்தமையால் தரைப்பலகைகள் அமையாத எவரும் படுத்துத் துயில இயலவில்லை. அவர்கள் தொலைவிலிருந்து பாதையெனப் போடப்பட்ட பலகைகளை பெயர்த்துக்கொண்டு வந்தனர். உடைந்த தேர்களையும் தண்டுகளையும் சேர்த்து தீமூட்டி அதன்மேல் பலகை அமைத்து நனையாமல் காத்து எரிகாய்ந்தனர். படைகள் மிகமிகக் குறைந்துவிட்டிருந்தமையால் படைவீரர்களில் ஏராளமானவர்களுக்கு கூடாரங்கள் அமைந்தன.

அடுமனையாளர்கள் பின்னிரவிலேயே விழித்துக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் வானை நோக்கி “இன்று பகல் கதிர்வன் எழுமென்று தோன்றவில்லை” என்றார். பிறிதொருவர் “அவ்வாறே நேற்றும் தோன்றியது. நேற்று பின்னுச்சிப் பொழுதில் கண்கூச ஒளி எழுந்தது கண்டோம்” என்றார். அடுமனைக்கலங்கள் மரங்களில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அவையனைத்திலும் மழைநீர் கீழ்வளைவு விளிம்பில் தேங்கியிருந்தது. அவற்றைச் சுழற்றி கலங்களை கவிழ்த்துவிட்டு காதுகளில் வடம் புகுத்தி மூங்கிலுள் நுழைத்து இருவரும் நால்வரும் என அவற்றை தூக்கிக்கொண்டு சென்று அடுப்புகளின்மேல் வைத்தனர்.

அடுகலமே கூரையென்றாக, அடுப்புகளுக்குள் விறகை அடுக்கி அரக்கும் தேன்மெழுகும் இட்டு எரிமூட்டினர். மென்மழைக்குக்கீழே நெருப்பெழுந்தபோது சூழ்ந்திருந்த நீர்ச்சரடுகள் அனைத்தும் தழலால் ஆனவைபோல் தோன்றின. “மழையை கொதிக்க வைத்துவிடலாம் போலிருக்கிறது” என்று ஒருவர் சொன்னார். பிறிதொருவர் “இசைச்சூதர் ஏன் அடுதொழிலுக்கு வருகிறீர்? யாழ் நரம்பு அறுந்துவிட்டதோ?” என்று அவரை நோக்கி ஏளனம் செய்தார். “அவர் அன்னை விறலி”என்றார் இன்னொருவர்.

சூதர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்தனர். முகம் கழுவி கைகால் தூய்மை செய்து கிழக்கு நோக்கி வணங்கிவிட்டு தங்கள் பணிகளை தொடர்ந்தனர். களஞ்சிய அறைக்குச் சென்ற சூதர்கள் அங்கிருந்த முது சூதரிடம் “இன்று ஐந்திலொரு அக்ஷௌகிணி வீரர்கள் இருப்பார்கள் என்று தோன்றுகிறது” என்றனர். முதுசூதர் வாயிலிருந்த வெற்றிலைச் சாறை எட்டி அப்பால் உமிழ்ந்து மரவுரி ஒன்றால் சுருங்கிய உதடுகளை துடைத்தபின் “அது இங்கிருந்து நோக்கும்போது தெரிகிறது. புலரிக்கொம்பு ஒலிக்கும்போது இவர்களில் எத்தனை பேர் எழுவார்கள் என்று எண்ணுகிறீர்? எண்ணிக்கொள்க, பாதி கூட இருக்காது! இந்த மழையில் நனைந்து உயிர் விடும் நல்லூழ் அமைந்தவர்கள் பலர் இருப்பார்கள்” என்றார்.

“அதை நாம் அறிய வேண்டியதில்லை. போருக்குச் செல்பவர்களுக்கு உணவு போதாமலாகக்கூடாது. எஞ்சியதை மாலையில் அளிப்போம்” என்றார் ஒருவர். “நான் அளிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. சொல்லிப்பார்த்தேன்” என்றபின் தன் மரப்பட்டை ஏட்டில் மைதொட்டு கூலக்கணக்குகளை எழுதி அதை பிறிதொரு ஓலையில் பார்த்து எழுதி அதை சூதர்களிடம் அளித்தார். சூதர்கள் அவற்றை தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களைத் தொடர்ந்து வந்து நின்றிருந்த கூலவண்டிகளை நோக்கி கையசைத்தனர். அவற்றை ஓட்டிவந்த ஏவலர்கள் அச்சூதர்களின் கையசைவுக்கு ஏற்ப பிரிந்து களஞ்சியவாயில்களை நோக்கி சென்றனர்.

தாழ்வான சுவர்களின்மேல் பனையோலைக் கூரையிட்டு அமைக்கப்பட்டிருந்த களஞ்சிய நிரைகள் தோளோடு தோள்தொட்டு இரு புறமும் நிரைவகுத்தன. அவற்றின் நடுவே செல்வதற்கும் வருவதற்குமான மரப்பட்டை சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. எண்ணைப்பந்தங்களின் சுடர்நிரைகள் பெருநகர்த்தெரு என எண்ணச்செய்தன. அனைத்து களஞ்சியங்களுக்கு முன்னும் சிறிய கமுகுப்பாளைக் கூரையிட்ட காவல்மாடத்தில் நெய்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இரு காவலர்கள் அரைத்துயிலில் வேலுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் தோல்தைத்து உருவாக்கபப்ட்ட மழை மூடிகளை தலையிலணிந்திருந்தனர். அழுத்திய துயிலில் அவர்கள் குனிந்திருந்தமையால் ஈரத்தோல்பரப்பில் கருமை மின்ன ஆமைகள்போல் தோன்றினர்.

ஓலைகளின்படி ஒவ்வொரு சூதரும் களஞ்சியங்களின் முன் சென்று நின்று அவர்களைக் கூவி எழுப்பினர். துயில் கலைந்து எழுந்த வீரர்கள் “என்ன… என்ன நிகழ்ந்தது?” என்றனர். சூதர்கள் “பொழுது விடியப்போகிறது. பிறிதொரு நாள் போர், வேறென்ன?” என்றனர். வாயைத் துடைத்தபடி “சற்று முன்னர்தானே இருட்டியது” என்று ஒரு காவலர் சொன்னார். “நற்துயில்! இப்படி போர்க்களத்தில் துயில்வதற்கும் ஒரு தனிப்பயிற்சி இருக்கவேண்டும்” என்றார் ஒரு சூதர். “வந்து அமர்ந்து பாரும், தெரியும்… நான் படுத்துத் துயின்று பன்னிருநாட்கள் ஆகின்றன” என்றார் காவலர்.

பெருமூச்சுடன் வேலை எடுத்துக்கொண்டு சென்று களஞ்சியத்தின் தாழைத் திறந்து கதவை விலக்கினார் காவலர். சூதர்கள் ஆணையிட ஏவலர் உள்ளே சென்று பனைநாரும் ஓலையும்கொண்டு முடைந்து உருவாக்கிய கூலமூட்டைகளை தூக்கிக்கொண்டு வந்து வண்டிகளில் ஏற்றினர். முதிய காவலர் ஒருவர் “இன்னும் எத்தனை நாளுக்கு இக்கூலம் நிற்கும், சூதரே?” என்றார். “எண்ணி எண்ணி சமைத்தால் இன்றும் நாளையும். நாளை மறுநாள் இவ்வண்ணமே போர் நிகழுமெனில் வெறும் வயிற்றுடன்தான் போருக்கெழ வேண்டியிருக்கும்” என்றார் ஒரு சூதர்.

அப்பால் நின்ற முதிய சூதர் “இன்று ஒருநாள் அனைவரும் நிறைவுற்று உண்ணவே அன்னம் இருக்குமென்று தோன்றவில்லை. அன்னத்தை குறைத்து ஊனைக்கூட்டும்படி தலைமை அடுமனையாளரின் ஆணை” என்றார். அப்பால் வண்டிகளில் கூலங்களை ஏற்றிக்கொண்டிருந்த இன்னொரு சூதர் ஏதோ சொல்ல பிறிதொரு சூதன் உரக்க நகைத்தான். “என்ன?” என்று முதிய சூதர் அவனிடம் கேட்டார். “ஒன்றுமில்லை” என்றான் அவன். “சொல்” என்று அவர் உரக்கக் கூற “ஒன்றுமில்லை” என்று அவன் பின்னடைந்தான்.

“சொல், அறிவிலி! இப்போதே சொல்!” என்று முதுசூதர் ஆணையிட “இந்த அன்னமும் ஊனும் அனைத்தும் கழிவாக இங்கேயே மண்ணுக்குள் இறங்கியிருக்கிறது, என்றேன்” என்று அவன் சொன்னான். “களஞ்சியத்திலிருந்து மண்ணுக்கு அவற்றைச் செலுத்தும் வழிகள்தான் இவ்வீரர்கள் என்று இவர் சொன்னார்” என்றார் இன்னொரு சூதர். முதியசூதர் அதிலிருந்த பகடியை புரிந்துகொள்ளாமல் சிறுகண்களால் உற்று நோக்கியபின் “வேலை நடக்கட்டும்” என்றார்.

தன் பகடி புரிந்துகொள்ளப்படாததால் ஏமாற்றம் அடைந்த இளம் சூதன் “இங்கே மானுடரையும் அவ்வாறே தெற்குக்காட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம்” என்றான். “நாம் பேசுவதற்காக இங்கு வரவில்லை. இந்த மழையில் தழல் நின்று நெடுநேரம் எரிந்தாலும் கலத்தில் வெப்பம் ஏறாது. இருநாழிகைப்பொழுதுக்குள் உணவு ஒருங்கியிருக்க வேண்டும்” என்றார் முதுசூதர். ”நாம் பிந்துவதை வீரர்கள் விழைவார்கள். அவர்கள் துயிலத்தொடங்கி இருநாழிகைப்பொழுதுகூட ஆகவில்லை” என்றான் ஒரு சூதன்.

கூலமூட்டைகளை ஏற்றி அவற்றின்மேல் தேன்மெழுகு பூசப்பட்ட பாய்களால் கூரையிட்டுக் கட்டி அத்திரிகளையும் மாடுகளையும் பூட்டி இழுத்தபடி மரப்பட்டைப் பாதைகளினூடாக அவர்கள் அடுமனை நோக்கி சென்றனர். அடுமனைகளும் கருவூலங்களும் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு தீ பரவாத அளவுக்கு படைப்பெருக்கின் இரு எல்லைகளிலாக அமைக்கப்பட்டிருந்தன. நடுவே தீயைக்கடத்தும் கூரைகளோ காவலரண்களோ எதுவும் இருக்கவில்லை. மழையில் உடல் குவித்து குனிந்து வண்டிகளைத் தொடர்ந்து சூதர்கள் சென்றனர்.

அடுகலங்கள் அனைத்திலும் நீர் கொதிக்கத் தொடங்கியிருந்தது. கூலங்களை மரக்காலால் அள்ளி நீரிலிட்டனர். “ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து பத்திற்கொன்று பத்திற்கொன்று… ஒன்று இரண்டு மூன்று” என்று கூலம் அள்ளியிடும் சூதர்கள் கூவும் ஒலிகள் எழுந்தன. கொதித்து ஓசையிட்டுக்கொண்டிருர்த நீர் கூலம் விழுந்ததும் அமைதியடைந்தது. மழையின் ஓசைக்குள் அனலின் ஓசை எழுந்தது.

விறகென குவிக்கப்பட்டிருந்தது முழுக்க உடைந்த தேர்களின் மரப்பகுதிகள். அவற்றிலிருந்த ஆணிகள் நெருப்பில் சிவந்து குருதித் துண்டுகள்போல் மாறி நீட்டி நின்றன. ஊன் கொள்ளப்போன வண்டிகள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. முதுசூதர் ஒருவர் ஊன் துண்டுகளைப்பார்த்து “புரவிகளா?” என்றார். “ஆம் வேறு ஊன் இல்லை” என்று சூதர் ஒருவர் சொன்னார். ”நேற்றே தெற்கு அடுமனைகளில் புரவியைத்தான் சமைத்திருக்கிறார்கள். நேற்று முதல்நாளே கௌரவ அணியில் உணவென புரவியூன்தான் அளிக்கப்பட்டது.”

முதுசூதர் “இன்னும் இவ்வாறு போர் நீளுமென்றால் இறந்த வீரர்களை நாம் உண்ணவேண்டியிருக்கும்” என்றார். “புரவியை உண்ணும் பழக்கம் முன்பே உண்டு. சற்று கடினமான ஊன் என்பதற்கப்பால் அதற்கென்ன குறை? ஊனுண்ணி விலங்குகளை உண்பதுதான் விலக்கப்பட்டுள்ளது. ஊனுண்ணிகள் என்பதனால் பறவைகளையும் விலக்குவதுண்டு. ஆனால் மலை வேடர்கள் மட்டுமன்றி மலைப்பயணம் செய்யும் ஷத்ரியர்களும்கூட பறவை ஊனைத்தான் உண்கிறார்கள்” என்றார் ஒரு சூதர். “புரவி நம்முடன் தோள்நின்று பொருதியது” என்றான் ஓர் இளம்சூதன். எவரும் மறுமொழி சொல்லவில்லை.

புரவிகளின் தொடைகள் தோலுரிக்கப்பட்டு பெரிய வெண்ணிற மரக்கட்டைகள்போல் தோன்றின. அவற்றைத் தூக்கி அடிக்கட்டை மேல் வைத்து ஊன் வெட்டும் கோடரியால் வெட்டி துண்டுகளாக்கி விரிக்கப்பட்ட பாய்மேல் குவித்தனர். செம்மண்பாறைத்துண்டுகள்போல அவை பளபளத்தன. மழை விழுந்து கழுவியபோது அவற்றிலிருந்து குருதி வழிந்தோடியது. “இறந்த புரவிகளா, அன்றி புண்பட்டவையா?” என்றார் ஒருவர். “நேற்று புண்பட்டு மீண்ட புரவிகள் மட்டுமே உண்ணப்பட்டன. இன்று போர்முகப்பிலிருந்து வெட்டுண்ட புரவிகளின் உடல்களையும் எடுத்து வந்திருக்கிறார்கள்” என்றார் ஒரு சூதர்.

“இத்தனை பேருக்கும் ஊன்உணவு வேண்டும். இன்று அன்னத்தில் மூன்றில் ஒருபங்கு ஊன்” என்று ஊன்வெட்டிய சூதர் சொன்னார். “எடுத்து வரும்போது நன்கு பார்த்தீர்களா? புரவித்தொடைக்கு நிகராக மானுடத்தொடைகளும் அங்கு கிடந்தன” என்றார் இருளில் ஒருவர். “இப்பேச்சை நாம் ஏன் பேசுகிறோம்? எங்கோ நம்முள் மானுட ஊன் உண்ணவேண்டும் என்று விழைவிருக்கிறதா என்ன?” என ஒரு குரல் எழுந்தது. “மானுடஊன் உண்டு அமலையாடிய காற்றின்மைந்தனின் படையினர் நாம்” என இன்னொரு குரல் சொல்ல அனைவரும் அமைதியடைந்தனர்.

சற்றுபொழுது கடந்து “மானுடரில் அமர்ந்து ஊனுண்ண விரும்புபவை தெய்வங்கள். தெய்வங்களுக்குரிய பலிகளில் முதன்மையானது மானுடக் குருதி. அதை மறக்க வேண்டியதில்லை” என்றார் இருளுக்குள் ஊன்களை துண்டுபடுத்திக்கொண்டிருந்த ஒரு பேருடல்கொண்ட சூதர். “நான் துர்க்கையன்னைக்கு மானுடனை பலிகொடுத்திருக்கிறேன். எட்டு முறை… ஒவ்வொரு நாள் கனவிலும் அன்னை எழுந்து வந்து என்னை வாழ்த்தியிருக்கிறாள்.” தொலைவில் ஒரு முதிய சூதர் “மண்ணை பொறையன்னை என்பதுண்டு. அவளும்கூட குருதிவிழைபவளே” என்றார்.

“என்ன ஐயம், புவிமகளுக்கு மானுடக்குருதி இன்றி பொழுதமையாது. துர்க்கை கொண்டதைவிட நூறு மடங்கு குருதியை அவள் கொண்டிருப்பாள்” என்றார் ஒருவர். “புவித்திரு என சீதையை சொல்வதுண்டு. இலங்கையை உண்டு அவள் பசியாறினாள். ராவண மகாபிரபுவின் நெஞ்சக்குருதியில் ஆடினாள்” என்றார் ஒருவர். நெடுநேரம் கழித்து “நிலமங்கையும் அனல்மங்கையும்” என்றார் ஒருவர். அவ்வெண்ணம் அவர்கள் அனைவரிலும் ஏற்கனவே இருந்ததுபோல் எவரும் ஒன்றும் சொல்லவில்லை.

ஊன் துண்டுகள் இடையளவு குவியலென்றாக அவற்றின்மேல் பெய்த மழையிலிருந்து ஊறிய நிணமும் குருதியும் ஓடை என ஒழுகின. “இன்னும் குருதியூறுகின்றன” என்றார் ஒருவர். “வேட்டை விலங்குகள் அருகிவிட்டனவா இக்காட்டில்?” என்று ஒருவர் கேட்டார். “கொண்டு வந்த உலர்ஊனும் உப்பிட்டஊனும் முதல் இரு நாட்களிலேயே முடிந்துவிட்டன. நாற்புறமிருந்தும் நிஷாதரும் கிராதரும் கொண்டுவந்த ஊனும் படைப்பிரிவின் வில்லவர்கள் சென்று வேட்டையாடி வந்த ஊனும் அதை ஈடு கட்டின. இப்போது வில்லவர் மாய அடுமனையாளரும் போருக்கெழுந்துவிட்டார்கள். இரவில் வேட்டையாடச்செல்ல எவருமில்லை. நிஷாதர்கள் இங்கு நிகழ்ந்த போரைக் கண்டு அஞ்சி விலகி நெடுந்தூரம் சென்றுவிட்டனர். ஊன் மணம் பெற்று ஓநாய்களும் நரிகளும் கழுதைப்புலிகளும் வந்து சூழவே காட்டின் விலங்குகளும் அகன்று சென்றுவிட்டன” என்றார் முதியசூதர்.

இருளுக்குள்ளிருந்து ஒரு சூதர் “மண்ணுக்குள் உள்ளது இன்னும் நூறாண்டுகாலம் உண்ணத்தொலையாத ஊன். பல்லாயிரம் நாகங்கள் அங்கே செறிந்துள்ளன” என்றார். பலர் அவரை நோக்க எவரும் ஒன்றும் சொல்லவில்லை. அவரே “நாகங்கள் நாகங்களை உண்ணும்” என்றார். “நாமும் உண்ணத்தொடங்கினால் இன்னும் எட்டு தலைமுறைக்காலம் இங்கு இவ்வாறு உணவு உண்டு போரிடலாம்” என்றார். அவர் சொல்வதன் பொருளென்ன என்றறியாமல் பலர் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்தனர். அடுப்பிலிருந்து எழுந்த செந்நிறத் தழலில் அவர் முகம் மட்டும் எரியும் கனலென இருளுக்குள் நின்றிருந்தது. விண்ணிலிருந்து அறியாத தெய்வம் ஒன்று இறங்கிவந்து அதை சொல்வதுபோல் தோன்றியது.

“பேச்சு போதும். அடுமனைகள் விரைவு கொள்ளட்டும்” என்று மிக அப்பால் நின்ற தலைமைச் சூதர் உரக்க குரல் கொடுத்தார். தொலைஎல்லை வரை நூற்றுக்கணக்கான அடுப்புகள் இருபுறமும் அனல் கொள்ள வானை நோக்கி எரியாலான இணைக்கோட்டு பாதைபோலத் தோன்றியது அடுமனைக்கூடம். இளம்சூதன் ஒருவன் “எரிநூல் ஏணி” என்றான். பின்னர் “ஏறி இருண்ட விண்ணுக்குச் சென்று மறைந்துவிடலாம்” என்றான்.

குதிரைப்பந்தியில் பாண்டவப்படையின் தலைமைப் புரவிச்சூதரான சுதீபர் மழையில் நனைந்து உடல்சிலிர்த்துக்கொண்டிருந்த குதிரைகளை நோக்கியபடி மெல்ல நடந்தார். அவற்றின் முதுகின்மேல் தேன்மெழுகு பூசப்பட்ட பாய்களாலான மழைமூடிகள் அணிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் பிடரியிலும் கழுத்திலும் நீர் வழிந்தது. குளிருக்கு அவை மெய்ப்பு கொண்டபடி தசை விதிர்த்தபடி கால்மாற்றி நீள்மூச்செறிந்தபடி நின்றன. அவர் ஒவ்வொரு புரவியையாக நோக்கால் தொட்டார். சிலவற்றை மட்டும் கைகளால் தொட்டு நோக்கினார். அவருடைய நோக்கை புரவிகள் உணர்ந்திருந்தன. அவர் பார்வை தொட்ட இடத்தில் அவை உடல்சிலிர்த்தன.

இளம்சூதனும் அவருடைய மாணவனுமான காமிகன் “புரவிகள் நூற்றுக்கு ஒன்றே எஞ்சியிருக்கின்றன” என்றான். “ஆம், அவையும் நோயுற்றவை, புண்பட்டவை” என்று சுதீபர் சொன்னார். “இப்போது புரவிகளின் சாவு விழுக்காடு மிகவும் பெருகிவிட்டது” என்றான் காமிகன். “ஆம், ஏனென்றால் பெரும்பாலான புரவிகள் புண்பட்டவை. புண்பட்ட புரவி தன் உடலீின் நிகர்நிலையை இழக்கிறது. உடல்மீதான கட்டுப்பாட்டை கைவிடுகிறது. அம்புகளுக்கும் வேல்களுக்கும் எளிதில் இலக்காகிறது” என்றார் சுதீபர். “அத்துடன் இந்தப்புரவிகள் பெரும்பாலும் படைப்பயிற்சி கொண்டவை அல்ல. வெறும் வண்டிக்குதிரைகள் பல. இவை போரில் எ்ளிய தசைக்கேடயங்களாகவே நின்றிருக்கும்.”

காமிகன் சொல்லத் தயங்கினான். ஆனால் முட்டிவந்த சொல்லால் திணறினான். பின்னர் “அவர்கள் புரவியை உண்கிறார்கள்” என்றான். “எல்லா போர்களிலும் இறுதியில் புரவிகள் உண்ணப்படும்” என்றார் சுதீபர். “ஆனால்…” என தயங்கிய காமிகன் “ஆனால் புரவியை உண்பதில் மிகமிக அறப்பிழையாக ஏதோ ஒன்று உள்ளது. ஏன் உண்ணலாகாது என கேட்டால் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. பசுவைக்கூட உண்ணலாம், புரவியை உண்ணலாகாது. புரவி இப்பேரரசுகளை உருவாக்கியது. அறம்வளரவும் மெய்ஞானம் விளையவும் தன்னை வேலியாக்கிக்கொண்டது. தேவர்கோன் இந்திரன் புரவிவடிவில் மண்ணில் வந்தான் என்கின்றன கதைகள்” என்றான்.

சுதீபர் புன்னகைத்து “நீ கண்டிருப்பாய், இவர்கள் போரை எப்படி தொடங்கினர் என. தங்கள் மைந்தர்களை களப்பலி கொடுத்து போர் குறித்தவர்கள். புரவிகளை எப்படி கருதுவார்கள்?” என்றார். “இருந்தாலும்…” என்று காமிகன் சொன்னான். “என்ன நிகழும் என்கிறாய்?” என்றார் சுதீபர். “இப்போருக்குப்பின் புரவிகளை இவர்கள் எப்படி அணுகுவார்கள்? போரில் புரவிகளை வெட்டிக்குவிப்பது இயல்பானதே. ஏனென்றால் புரவிகள் ஷத்ரியர்கள். போருக்கெனப் பிறந்தவர்கள். ஆனால் புரவியை உண்டபின் எப்படி அவர்கள் ஒரு புரவியின் தோளை தழுவமுடியும்? அதன்மேல் ஏறி அமர்ந்து ஊர்ந்து செல்லமுடியும்? ஆசிரியரே, புரவி தன்னை ஊர்பவனின் உள்ளமென ஆவது. அவன் உண்பது எதை?’

காமிகன் சொல்கொண்டான். “எண்ண எண்ண என் துயில் அழிகிறது. புரவிகள் இப்போரில் எப்படி நின்று பொருதுகின்றன என நாம் அறிவோம். நீரின்றி புரவி நிலைகொள்ளாது. முதற்சில நாட்களுக்குப்பின் அனைத்துப்புரவிகளும் களத்தில் ஒழுகும் குருதியையே உறிஞ்சிக் குடிக்கின்றன. அவற்றின் சாணத்தில் கரிய குழம்பு என குருதிச்சேறு இருக்கிறது.” அவன் மூச்சிளைத்தான். “மூன்றாம் நாள்தான் நான் அதை கண்டடைந்தேன். புரவிகளின் சாணத்தின் நாற்றம் மாறிவிட்டிருந்தது. அழுகிய ஊன் எனத் தோன்றின அவை. நான் உசாவியபோது முதுசூதரான கர்மர் சொன்னார் அப்புரவி குருதியை உண்டுவிட்டிருக்கிறது என்று.”

“ஆம், பெருவிடாய் கொண்டு களம்நிற்கும் புரவி தன் வாயருகே ஒழுகிவரும் குருதியை நாநீட்டி குடிக்கத்தொடங்குகிறது. பின்னர் அதில் சுவை காண்கிறது. விழுந்தவர்களின் பச்சை ஊனைக் கவ்வி உண்டு விடாயும் பசியும் தீர்க்கும் புரவிகளை கண்டிருக்கிறேன்” என்றார் சுதீபர். “ஆனால் ஒன்றுண்டு. அத்தனை புரவிகளும் முதலில் குடிப்பது தங்கள் உடலில் இருந்து ஒழுகும் குருதியைத்தான். பின்னர் அவை குடிப்பன எல்லாம் தங்கள் குருதியே என அவை எண்ணிக்கொள்கின்றன.”

“இவர்கள் உண்பது எதை? தன்குருதி உண்ட புரவிகளின் ஊனை என்றால் அது தன்னையே அல்லவா?” என்றான் காமிகன். சுதீபர் திரும்பி அவனை நோக்கி சிலகணங்கள் விழியிமைக்காமல் நின்றபின் “மெய், இங்கே களத்தில் இளையபாண்டவன் உண்டது தன் குருதியைத்தான்” என்றார். மீண்டும் எண்ணம்சூழ்ந்து பெருமூச்சுவிட்டு “ஆனால் இங்கே நிகழும் இப்போரே தன்குருதி உண்ணல்தானே?” என்றார். மேலும் எண்ணத்திலாழ்ந்து “எல்லா போர்களும் இவ்வண்ணம் நிகழ்வதே. இங்குள்ள ஷத்ரியர்கள் அனைவருமே உடன்குருதியினர் என்பார்கள். இவர்கள் கொன்றுகுவிக்காமலிருந்த நாளே இருந்ததில்லை.”

அவர்கள் நின்று நெடுந்தொலைவுவரை விழியோட்டி நோக்கினர். அடுமனை எரிநிரை தெரிந்தது. “புரவிச்சிதை” என்றான் காமிகன். சுதீபர் மறுபக்கத்தை சுட்டிக்காட்டி அங்கிருந்த படைகளைக் காட்டி “அவர்களும்தான்” என்றார். சுதீபர் ஒரு பெரும்புரவியை அணுகி அதன் முதுகை மெல்ல தட்டினார். அது எண்ணியிராமல் சீறியபடி திரும்பி அவரை கடிக்க வந்தது. அவர் திகைத்து பின்னடைந்தார். காமிகன் “பெரும்பாலான புரவிகள் இப்படி கடிக்க வருகின்றன” என்றான். “நேற்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் புரவிகளால் கடிக்கப்பட்டார்கள். அணுகாமல் உணவளிக்கும்படி ஆணை.”

“ஊன்சுவை கண்ட புரவிகள் இவ்வண்ணம் ஆகின்றன” என்றார் சுதீபர். இரு ஏவலர் கூடைகளில் உணவுடன் புரவிகள் நடுவே சென்றார்கள். சுதீபர் விழிசுருக்கி நோக்கியபின் ஒருவனை கைசுட்டி அருகே அழைத்து “என்ன உணவு?” என்றார். அவன் தயங்கி இன்னொருவனை நோக்க அவன் “ஊன்” என்றான். “ஊனா?” என்றான் காமிகன். “ஆம், ஆணையாளரே. பச்சை ஊனை மட்டுமே இவை உண்கின்றன. அவற்றையே இரண்டு நாட்களாக அளித்து வருகிறோம்” என்றான் சூதன். “முதலில் புல்லும் வைக்கோலும் அளிக்கப்பட்டபோது சற்று பச்சை ஊனும் சேர்க்கப்பட்டது. பச்சை ஊன் என்றால் புல்லும் வைக்கோலும் குறைவாகவே போதும். இப்போது நிஷாதர்கள் வருவதில்லை. ஆகவே இந்தப்படைகளில் புல்லோ வைக்கோலோ இல்லை.”

“யானைகள்? அவை எதை உண்கின்றன?” என்றார் சுதீபர். “அவை தழைகளையே உண்கின்றன. சற்று குருதிபட்டிருந்தால்கூட கையால் தொடுவதில்லை” என்றான் சூதன். சுதீபர் “நல்லூழ்தான். அந்த அளவுக்கேனும் தெய்வங்கள் மானுடன்மேல் கனிவுடன் உள்ளன” என்றார். பின்னர் கைகூப்பி “இந்திரனின் இரு ஊர்திகள். அவன் தாமரைக்கையனாக எழுகையில் யானை. மின்படைகொண்டு எழுகையில் புரவி. யானை நீர். புரவி அனல்” என்றார். “அனல் தன் எல்லையை கடந்துவிட்டது. நீர் வேலிமீறவில்லை.”

“நாமநீர் வேலி என்கின்றன நூல்கள். தெய்வங்களின் சொல் நீரின் வேலி” என்றான் காமிகன். சுதீபர் அவர்களிடம் செல்லும்படி கைகாட்டினார். அவர்கள் அடுத்த புரவிநிரை நோக்கி கூடையுடன் செல்ல காமிகன் “இங்கே இத்தனை ஊன் எங்கிருந்து?” என்றான். சுதீபர் மெல்ல நடுங்கினார். காமிகன் “அது என்ன ஊன்?” என்றான். “முதலில் களம்பட்ட எருதுகளை அளித்தோம். பின்னர் அத்திரிகள், யானைகள்”. காமிகன் “புரவிகள்?” என்று மூச்சுக்குரலில் கேட்டான். “ஆம், ஆணையாளரே. இப்போது பெரும்பகுதி புரவியூன்தான்” என்றான் சூதன்.