பதிவர்: SS

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 38

பகுதி ஐந்து : விரிசிறகு – 2

கொம்பொலி எழுந்ததும் சம்வகை தன் சிற்றறையிலிருந்து வெளியே வந்தாள். அவளைச் சுற்றி அமர்ந்து அவள் கூறிய ஆணைகளை ஏடுகளில் எழுதிக்கொண்டிருந்த கற்றுச்சொல்லிகள் எழுந்து நின்றனர். அவர்களிடம் “முறைப்படி அனைத்தையும் அனுப்பிவிடுங்கள்” என்று ஆணையை அளித்துவிட்டு அவள் கவசங்கள் உரசி ஒலிக்க, எடைமிக்க காலடிகள் மரத்தரையில் முழக்கமிட படிகளில் இறங்கி வெளியே வந்தாள். அவளுடைய கவசமிட்ட உடலின் பெருநிழல் உடன் வந்தது, மெய்க்காவல் பூதம்போல.

அவளுக்காக புரவி காத்து நின்றிருந்தது. யவன நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட அகன்ற முதுகும் பெரிய கால்களும் குறுகிய கழுத்தும் கொண்ட புரவி. அது எடை தாங்குவது, ஆனால் விரைவு கூடுவதில்லை. ஆகவே நெடும்பொழுது களைப்படையாது ஓட அதனால் முடியும். அவள் அருகணைவதை உணர்ந்து அது தன் சிறிய செவிகளை திருப்பி மூக்கை விரித்து செருக்கடித்தது. அவள் அருகே வந்து அதன் கழுத்தை தட்டிவிட்டு கால் சுழற்றி ஏறி அமர்ந்தாள்.

அந்த எடை மிக்க கவசத்துடன் அதன் மேல் அவளால் ஏற முடியும் என்று அவள் எண்ணியிருக்கவில்லை. முதல்நாள் முழுக்கவச உடையுடன் அந்தப் புரவியில் ஏறும்போது காலைச் சுழற்றி அப்பாலிடுவது எப்படி என்று தன்னுள் திட்டமிட்டபடியே சென்றாள். வளையத்தில் கால் நுழைத்து ஏறி அமர்ந்தபோது எதையும் எண்ணாமல் காலை தூக்கிச் சுழற்றி அமர்ந்த பின்னர்தான் இயல்பாக தன்னால் அமர இயன்றிருக்கிறது என்பதை உணர்ந்தாள். அப்பால் சூழ்ந்திருந்த வீரர்களின் விழிகளும் அவள் மேலேயே பதிந்திருந்தன. அவள் எப்படி அதில் ஏறி அமர்கிறாள் என்பதை அவர்கள் ஒருவருக்கொருவர் விழிகளால் கூறிக்கொண்டிருக்க வேண்டும். அனைவரும் விழி மலைத்திருப்பதை அவளால் நோக்காமலேயே உணர முடிந்தது.

அவள் ஏறி அமர்ந்த இயல்பிலேயே புரவி அவள் எடையை உணர்ந்துகொண்டிருந்தது. ஆகவே அது எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. ஒருகணம் முதுகை வளைத்து முன்னங்காலை தூக்கி வைத்து சற்றே ஊசலாடியது. அவள் குதிகாலால் ஆணை அளித்ததும் பெருநடையில் விரைந்து செல்லத்தொடங்கியது. அந்த நாளில் இருந்து புரவிக்கும் அவளுக்குமான இணக்கம் கூடிக்கூடி வந்தது. அவள் பெரும்பாலான பொழுதுகளில் முழுக்கவச உடையிலேயே புரவியில் ஏறினாள். அக்கவச உடை பெருவிழவுகளுக்கு மட்டுமே உரியது. போரும் பெருவிழவுதான். பிற நாட்களில் அஸ்தினபுரியில் எவரும் கவசஉடை அணிவதில்லை. ஆகவே அவள் கவசஉடையணிந்திருப்பதை எவரும் விழிகளுக்கு பழக்க முடியவில்லை.

அக்கவச உடை அவளை ஒரு பேருருவாக்கியது. ஆற்றல் கொண்டவளாக மாற்றியது. இரும்பு வடிவில் பிறர் முன் தோன்றும் அவளை அவளே பார்த்துக்கொண்டிருந்தாள். அது பிறிதொருத்தி என்று முதலில் தோன்றியது. தன்னிலிருந்து சிலவற்றை பிரித்துப் பெருக்கி அப்பிறிதொருத்திக்கு அளித்து அவளை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். என்னால் ஆட்டி வைக்கப்படும் பாவை, இதிலிருந்து நான் விலகிக்கொள்ள விரும்புகிறேன், வேறெங்கோ இயல்பான எளிய பெண்ணாக பதுங்கிக்கொள்ள என அவள் எண்ணிக்கொண்டாள். உடனே அவ்வியல்பான எளிய பெண்ணிலிருந்து முளைத்தெழுந்து இவ்வண்ணம் ஆவதற்குத்தானே எப்போதும் விழைந்துகொண்டிருந்தேன் என வியந்தாள். ஒவ்வொரு நாளும் என்னை கூர்தீட்டி இங்கு வந்தடைந்தேன். வந்தடைந்தபின் ஏன் திரும்பிச் செல்ல விழைகிறேன்? அந்த எளிய பெண்ணை முற்றுதறி இங்கு இவ்வண்ணம் நிமிர்ந்திருப்பதே நான் என்று ஆக ஏன் என்னால் இயலவில்லை?

அவள் அதை பல முறை தனக்குள் உசாவிக்கொண்டிருந்தாள். அதை எவரிடமேனும் பேச வேண்டும் என்று எண்ணினாள். ஒருவேளை சாரிகர் அங்கிருந்தால் அவள் அதை பேசியிருக்க கூடும். ஆனால் அவர் அந்நகரை உதறிச்சென்று முற்றிலும் பிறிதொருவராக துவாரகையில் இருந்தார். அவரைப் பற்றிய செய்திகள் அவள் அறியாத ஒருவரை காட்டின. அந்த பிறர் அறியா ஆழத்தை அவர் என்றும் பேணிக்கொண்டிருந்தார். காட்டிலிருக்கும் புதர்க்கூடுகள்போல. நாமறியாத பறவைகளின் முட்டைகளை அவை தங்களுக்குள் வெம்மை ஊட்டி வளர்க்கின்றன என்று சுரேசர் கூறுவதுண்டு. என்னுள் இருந்து விரிந்தெழுவது ஆற்றல் மிக்க கழுகு போலும் என்று எண்ணினாள்.

ஆனால் பிறிதொரு மென்வடிவை எதற்காக தனித்து எங்கோ சேர்க்க முயல்கிறேன்? பின்னர் ஒருநாள் அவள் உணர்ந்தாள். அவ்வண்ணம் ஒரு எளிய பெண்ணை எடுத்து எங்கோ பிறர் அறியாமல் சேர்த்து வைக்கவில்லையெனில் அவள் அவ்வடிவில் முற்றழிந்து போவாள். உருவாக்கப்படும் வடிவுகள் அனைத்தும் செயற்கையானவை. அவை வளர்வதில்லை. கைவிடுபடைகள்போல் ஆற்றல் மிக்கவை, நேர்த்தியானவை. ஆனால் தங்கள் முடிவை தாங்களே எடுக்கும் ஆற்றல் அற்றவை. அந்த எளிய பெண் தன்னுள் உயிருடன், உணர்வுடன் தனித்திருக்கையிலேயே தான் மானுட உயிராக அறிவும் நுண்மையும் கொண்டு திகழ முடியும். அதற்கு ஒரே வழி தன்னை இரண்டாக பகுத்துக்கொள்வது. இரண்டாக பகுத்துக்கொள்வதற்கான வழி என்பது இந்த இரும்பு உருவை இவ்வண்ணம் பெருக்கிக்கொள்வது.

இதை எந்த அளவு பெருக்கிக்கொள்கிறேனோ அந்த அளவு நான் இதிலிருந்து அகல்கிறேன். இது பேருருக் கொள்கிறது, நிகரற்ற ஆற்றல் கொள்கிறது, அச்சமும் திகைப்பும் உருவாக்குவதாக ஆகிறது. இதற்குள் மிக ஆழத்தில் மென்மையான சிறிய முயல்போல் செவி விடைத்து உடல் விதிர்த்தபடி நான் பதுங்கியிருக்கிறேன். இவ்வாற்றலும் அந்நுண்ணுணர்வும் கலந்ததே நான். அந்நுண்ணுணர்வு என்னுள் இருக்கையில், நான் எவர் என நானே அறிந்திருக்கையில் மேலும் ஆற்றல் கொண்டவளாகிறேன். என் முன் வந்து இவ்விரும்புப் பேருருவை பார்ப்பவர்கள் எண்ணுவதற்கு அப்பால் ஒரு நுண்மை, ஒரு கூர் படைக்கலம் என்னுள் இருக்கிறது என்னும் உணர்வே என்னை வெல்லற்கரியவளாக்குகிறது.

அதன் பிறகு அவளுக்கு அக்குழப்பம் வந்ததில்லை. அவள் தன்னை மேலும் மேலும் இரண்டென பகுத்துக்கொண்டாள். தன் தனியறையில் மட்டுமே இயல்பான ஆடைகளுடன் இருந்தாள். எளிய உடல்மொழியை அங்கு மட்டுமே பயின்றாள். அப்பொழுது அவள் குரலும் பிறிதொன்றாக இருந்தது. இற்செறிப்பில் வாழும் கன்னியொருத்தியின் மொழியின் நாணம் அவளில் கூடியது. அவளை அங்கு எவரும் பார்க்கவில்லை. அவள் அணுக்கச் சேடியர் மட்டுமே அறிந்திருந்தனர். ஆடியில் அங்கு தன்னை பார்க்கையில் அவள் மிக அணுக்கமான தோழியொருத்தியிடமென நாணி புன்னகைத்துக் கொண்டாள். கவசஉடை அணிந்து அவள் தன்னை ஆடியில் பார்த்துக்கொள்வதில்லை. அஸ்தினபுரியே ஒரு மாபெரும் ஆடியென அவளை காட்டியது.

அஸ்தினபுரியின் தெருக்களினூடாகச் செல்கையில் அப்பெருநகர் எத்தனை விரைவில் உருமாறிக்கொண்டிருக்கிறது என்பதை அவள் பார்த்தாள். பெரும்பாலான மாளிகைகள் ஆடிச்சாளரங்கள் கொண்டுவிட்டிருந்தன. முகடுகள் வெண்சுண்ணம் பூசப்பட்டு முகில்கள் ஒழுகிய ஒளி குவிந்து உருவானவைபோல் மெருகு கொண்டிருந்தன. சாலைகளின் ஓரங்கள் அனைத்தும் புதிய செந்நிற கற்பலகைகள் பதிக்கப்பட்டு அவற்றில் தூண்கள் நாட்டப்பட்டு அவை அனைத்திலும் உலோகப்பட்டைகள் பொறிக்கப்பட்டிருந்தன. மாளிகைகளின் சாளரவிளிம்புகளில் பித்தளைச் சட்டங்கள் அமைந்திருந்தன. பல்லாயிரம் பித்தளைக்குமிழ்கள் விழிமுனைகள்போல் தெருவைச் சுழற்றி அள்ளிக்கொண்டிருந்தன. அனைத்துக் காவல்மாடங்களும் மாந்தளிர் வண்ண அரக்கு பூசப்பட்டு புது மரத்தாலானவைபோல் மெருகு கொண்டிருந்தன.

அவள் அஸ்தினபுரியின் கோட்டையை மிகத் தொலைவிலேயே பார்த்தாள். அது புதிதாக வெண்சுண்ணம் பூசப்பட்டிருந்தது. அஸ்தினபுரியின் தொல்கோட்டை நேரடியாக கற்களை அடுக்கிக் கட்டப்பட்டது. முதல் அடுக்கின் மீது சுடுமண் கற்களால் ஆன இரண்டாம் அடுக்கு அமைந்திருந்தது. நெடுங்காலம் மழையும் வெயிலும் பட்டு செங்கற்கள் கருகி ஒன்றாகிவிட்டிருந்தன. இருள் செறிந்ததுபோல் தெரிந்தது அக்கோட்டை. அதை களிற்றுயானை நிரை என்று சூதர்கள் பாடுவதுண்டு. அதற்கு சுண்ணம் பூச முடியுமென்ற கற்பனை எவரிடமும் எழுந்ததில்ல. அதன் மேலிருக்கும் பாசிப் படர்வு சுண்ணத்தை ஏற்காது.

எப்போதோ ஓரிரு முறை சில பகுதிகளில் சுண்ணம் பூச முயன்றிருக்கிறார்கள். கோட்டை முகப்பில் சுண்ணம் பூசுவதற்கு ஒருமுறை முயன்றதாக அவள் தந்தை சொல்லியிருக்கிறார். மரம் பட்டை உதிர்ப்பதுபோல் சில நாட்களிலேயே சுண்ணம் பொருக்குகள் எழுந்து வளைந்து உதிரத் தொடங்கிவிடும். பின்னர் அவற்றை செதுக்கிச் செதுக்கி எடுக்க வேண்டியிருக்கும். சுண்ணம் பூசும் முயற்சி முற்றிலும் கைவிடப்பட்டதற்கு அஸ்தினபுரியின் கோட்டையின் நீண்ட அளவும் வழிவகுத்தது. அத்தனை பெரிய வடிவை சுரண்டி தூய்மைப்படுத்த பல்லாயிரம் பேர் பலமாத காலம் உழைக்க வேண்டியிருக்கும். ஆகவே அக்கருமை அதன் அழகென்று தங்கள் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டிருந்தார்கள். நூறுநூறாண்டுகளாக அது அவ்வாறே நீடித்தது. பாடல் பெற்றது. கனவில் ஊறி நிறைந்தது.

புதிதாக வந்த பீதர்நாட்டுச் சிற்பி அக்கோட்டைசுவரில் சுண்ணம் பூச முடியுமென கூறியபோது யுதிஷ்டிரனின் அவையிலேயே நகைப்பொலி எழுந்தது. கலிங்கச் சிற்பி சாரதர் “சுண்ணம் பூசலாம், அது ஈரம் காயும் வரை நன்றாக இருக்கும்” என்றார். யுதிஷ்டிரனே புன்னகைத்தார். பீதர்நாட்டுச் சிற்பி “சுண்ணம் பூசும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். உரிய பொன் மட்டும் ஒதுக்கினால் போதும். எனக்கான பணியாளர்களை நான் கொண்டு வருகிறேன்” என்றார்.

சுண்ணம் பூசப்பட்டபோது அது இளநீல நிறத்தில் இருந்தது. கரிய பரப்பின் மீது அந்த இளநீலப் படிவு ஊறி மறைந்து கற்சுவர் மேலும் கருமை கொள்வதுபோல் தோன்றியது. முழுக் கோட்டையும் அவ்விளநீலப் பூச்சு பெற்றபின் நான்கு நாட்களில் காய்ந்து சுவர் முற்றாக வண்ணம் மாறியது. அது செம்மண் வண்ணத்தை அடைந்து பொருக்கோடியது. உலர்ந்த மரப்பட்டைகள் என அதன் மேற்பரப்பில் விரிசல்கள் பரவின. அதன் மேல் தேன்மெழுகும் அரக்கும் களிமண்ணுடன் கலந்த கலவையை பூசினார்கள். அக்கலவை உலர்ந்து தடித்த பொருக்குகளாக ஆகி ஏரிப்படுகை என ஒரு நோக்கில் தன்னை காட்டியது. நீண்ட செதுக்கிகளைக் கொண்டு மிக விரைவாக செதுக்கி அதை எடுத்தார்கள்.

முதலில் பூசப்பட்டது கடும் நஞ்சு என்று அதன் பின்னரே அனைவரும் உணர்ந்தனர். அக்கற்பரப்பின் மீதிருந்த பாசி உயிரிழந்து களிமண்ணில் பற்றிக்கொண்டு உதிர்ந்து விழுந்தபோது அன்று கட்டப்பட்டதுபோல் புதுக்கல் மினுக்குடன் கோட்டை எழுந்து வந்தது. செங்கல் கட்டமைப்பு சூளையிலிருந்து கொண்டு வந்ததுபோல் செவ்வண்ணம் பெற்றது. செதுக்கி எடுக்கப்பட்ட களிமண் பொருக்குகளைப் பெயர்த்து கொண்டு சென்று காட்டிற்குள் நான்கு ஆள் ஆழத்தில் எடுக்கப்பட்ட குழிகளில் இட்டு புதைத்தனர்.

அந்தச் செங்கல் பரப்பின் மீதும் கற்பரப்பின் மீதும் நீரூற்றிக் கழுவி அதன் பின்னர் சுண்ணம் பூசப்பட்டது. பாரதவர்ஷத்தின் வழக்கப்படி சுண்ணமும் அரக்கும் மெழுகும் கலந்த கலவை அல்ல அது. முற்றிலும் புதிய ஒரு கலவை. சுண்ணத்துடன் எண்ணை கலக்கப்பட்டதுபோல் தோன்றியது.  சுண்ணம் பூசப்பட்டதும் உடனடியாக உலர்ந்து மூக்கை அரிக்கும் ஆவியை கிளப்பியது. பகலில் சுண்ணம் பூசப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டது. இரவில் பூசப்பட்டு புலர்காலையில் நன்கு உலர்ந்து ஒளியெழுந்தபோது கண்நிறைத்து நிரம்பியிருந்தது அஸ்தினபுரியின் கோட்டை. மாபெரும் வெண்துணி தொங்கவிடப்பட்டதுபோல் அது தோன்றியது. முன்பு அஸ்தினபுரியில் விழும் வெயிலொளியில் பாதியை கோட்டையே உறிஞ்சிக்கொண்டிருந்தது என்பதை அப்போதே உணர்ந்தனர்.

வெண்சுண்ணம் பூசப்பட்டபோது நகர் புத்தொளி கொண்டது. பல தெருக்களில் நிழல்கள் விழுவதே இல்லாமலாயிற்று என்று கூறினார்கள். முதல் கதிரிலேயே கோட்டை ஒளிகொள்ளத் தொடங்கியது. அந்தி இறங்குவது மிகப் பிந்தியது. இருண்ட பின்னரும் கோட்டை மிளிர்வுகொண்டிருந்தது. அங்கிருந்த பழைய கோட்டை நினைவிலும் சொல்லிலும் முற்றாக மறைந்து பிறிதொன்று அங்கே நிலைகொண்டது. சில நாட்களில் அது என்றும் அவ்வாறு இருந்தது என்று விழி உள்ளத்தை பழக்கியது.

அந்தச் சுண்ணப்பரப்பு உதிரக்கூடும் என்றும், வண்ணம் மாறக்கூடும் என்றும் சிலர் எதிர்பார்த்தார்கள். அஸ்தினபுரியின் குடிகள் ஒவ்வொரு நாளும் வந்து அக்கோட்டைப் பரப்பை பார்த்துச் சென்றார்கள். ஆனால் சில நாட்களில் அவர்கள் உணர்ந்துகொண்டார்கள், அது இன்னும் நெடுங்காலத்துக்கு அவ்வாறுதான் இருக்கும் என்று. எனினும் நகரில் எஞ்சிய முதியவர்களில் சிலர் அக்கரிய வண்ணமே அதன் இயல்பு என்று சொன்னார்கள். “இவ்வெண்மை நீடிக்காது. இது மெல்ல மெல்ல தன் இயல்பான கருமையை நோக்கி சென்றாகவேண்டும்… தெய்வங்களுக்குரியது வெண்மை. கருமையே மானுடர்களுக்குரியது.”

ஒவ்வொரு நாளும் யுதிஷ்டிரன் வந்து கோட்டையின் அருகிலூடாக புரவியில் சுற்றி நோக்கிவிட்டு திரும்பிச்சென்றார். “இக்கோட்டைபோல் வெண்ணிறமான பிறிதொன்று பாரதவர்ஷத்தில் இல்லை” என்று அவர் கூறினார். “வெண்மை அமைதியின் நிறம். அறத்தின் நிறம். ஊழ்கத்தின் வண்ணம் அது என்று முனிவர்கள் கூறுவார்கள். இனி இந்நகரின் வண்ணம் இதுவே ஆகுக! இது களிற்றுயானை நிரைதான், ஆனால் இந்திரனின் வெண்களிற்றுயானை நிரை” என்றார்.

 

சம்வகை கோட்டைவாயிலை அடைந்தபோது அனைத்து ஒருக்கங்களும் ஏற்கெனவே முடிந்திருந்தன. துணைப்படைத்தலைவியான உக்ரை தொலைவிலேயே அவளுடைய புரவி அணுகுவதைக் கண்டு படிகளில் இறங்கி வந்து அணிவகுத்து நின்ற படைகளின் முன்னால் நின்றாள். அவள் புரவியிலிருந்து இறங்கி அணுகியதும் உக்ரை தலை தாழ்த்தி வணங்கி மூன்று அடி வைத்து அருகணைந்து “ஒருக்கங்கள் முழுமை அடைந்துவிட்டன, தலைவி” என்றாள். சம்வகை விழிகளை ஒருமுறை சுழற்றி படைகளை நோக்கிவிட்டு “நன்று, பிழையற அமையட்டும்” என்றாள்.

இடைவிடாத ஆட்சிப்பணிகளால் அவள் முகத்தில் ஆர்வமின்மை ஒரு தசையமைப்பாகவே திரண்டுவிட்டிருந்தது. கண்களுக்குச் சுற்றும் சுருக்கங்கள் செறிந்திருந்தன. ஆனால் விழிகளின் அசைவில் அவளுடைய கூர்நோக்கு எப்போதும் வெளிப்பட்டது. உக்ரை “முரசுச்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சிந்துநாட்டின் படைகள் தொலைவில் அணைகின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவை முதல் காவல்மாடத்தை வந்து சேரும்” என்றாள். சம்வகை தலையசைத்து “முறைமைகள் அனைத்தும் ஒருங்கிவிட்டன அல்லவா?” என்றபடி நடந்தாள்.  அது ஒரு வெறும்வினா என உணர்ந்தும் உக்ரை அவளுக்குப் பின்னால் நடந்தபடி “சூதர்களும் அணிப்பெண்டிரும் வந்துவிட்டனர்” என்றாள்.

அந்த இடைவெளியை சம்வகை உணர்ந்து சற்றே நடை தளர உக்ரை “இங்கு முதிய சூதர் ஸ்ருதர் ஒரு சிறு ஐயத்தை எழுப்பினார்” என்றாள். சம்வகை கூறுக என்பதுபோல் முனகினாள். “வருபவர் கணவனை இழந்த கைம்பெண். அவருக்கு மங்கல வரவேற்பும் கொடி வாழ்த்தும் உரியதாகுமா என்றார். முன்பு இங்கே அவ்வழக்கம் இருக்கவில்லை என்றார். நான் அதை எண்ணியிருக்கவில்லை. சிந்துநாட்டின் வழக்கமென்ன என்று நமக்குத் தெரியாதே என்று சொன்னேன். அஸ்தினபுரியில் அஸ்தினபுரியின் வழக்கங்கள்தான் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். அது சற்று குழப்பமாக உள்ளது” என்றாள்.

“இளவரசி துச்சளை அஸ்தினபுரியின் மகளாக அன்றி சிந்துநாட்டின் அரசியாகவா இங்கு வருகிறார்?” என்றாள் சம்வகை. தயக்கமில்லாமல் அவள் விழிகளை நோக்கி “இரண்டும்தான் அவர்கள் என்று அறிவேன். எனினும் இங்கு நாம் கொள்ளும் நிலைப்பாடென்ன என்பது இங்குள்ள பிற அனைத்தையும் வகுப்பதற்கு உதவும்” என்றாள் உக்ரை. சம்வகை திரும்பி புதியவள் என அவளை பார்த்தாள். அந்தக் கோணத்தில் அவள் அதுவரைக்கும் எண்ணியிருக்கவே இல்லை. ஒருகணம் உக்ரையின் முகத்தை பார்த்த பிறகு “உனக்கென்ன தோன்றுகிறது, கைம்பெண் ஒழுக்கம் இங்கே கடைக்கொள்ளப்பட வேண்டுமா?” என்றாள்.

“இது புதிய வேதம் எழுந்த நாடு. அவ்வேதத்தை உரைத்த ஆசிரியன் யாதவர். அவர்கள் குடியில் கைம்பெண் ஒழுக்கமும் உடன்கட்டை ஏறுதலும் இல்லை” என்றாள் உக்ரை. சம்வகை நகைத்து “நன்று… நீ முன்னரே எண்ணியிருக்கிறாய் அனைத்தையும்” என்றாள். அவள் தோளில் கைவைத்து “நாம் முறைப்படி அரசியருக்குள்ள வரவேற்பையே அவருக்கு அளிப்போம். சிந்துநாடு இளவரசியை அகற்றியிருக்கலாம். இங்கு இப்போது அவருடைய நேர்க்குருதியினர் எவரும் இல்லாமலிருக்கலாம். ஆனால் இந்நகரம் அவருக்குரியது. இதில் அரசிக்குள்ள இடம் என்றும் அவருக்கு இருக்கும். அந்நிலையிலேயே அவர் இங்கு வருகிறார். இந்நகரம் மங்கல இசையும் மங்கலப் பொருட்களும் கொண்டு அவரை எதிர்கொள்ளட்டும்” என்றாள் சம்வகை.

உக்ரை “அம்முடிவை நாம் எடுக்கலாகுமா?” என்றாள். சம்வகை “இங்கு கோட்டையில் இப்போது முடிவை நானே எடுக்கிறேன். என் முடிவில் எனக்கு உறுதியிருக்கிறது. அதை அரசரிடமோ பிறரிடமோ என்னால் கூற இயலும்” என்றாள். உக்ரை புன்னகைத்தாள். காவல் அறைக்குள் சென்று அமர்ந்து தன் கால் குறடுகளைக் கழற்றி நெஞ்சக் கவசத்தையும் இயல்பாக்கிய பிறகு சம்வகை “நாளை முதல் அஸ்தினபுரியின் கோட்டைத்தலைவியாக நீயே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்” என்றாள். உக்ரை திகைத்து “தலைவி?” என்றாள். “ஆம், சற்று முன்னர் அரசர் என்னிடம் பேசினார். அஸ்தினபுரியின் உருவாகிவரும் படைகளுக்கான தலைமையை என்னை ஏற்கும்படி கூறினார்” என்றாள் சம்வகை. “படைத்தலைவியாகவா?” என்றாள் உக்ரை. “ஆம், நாற்படைக்கும் தலைவியாக” என்று சம்வகை புன்னகைத்தாள்.

உக்ரை “இன்றுவரை நான்காம் குலத்து உதித்த ஒருவர் அப்பதவியை ஏற்றதில்லை” என்றாள். “நான்காம் குலத்தவர் இங்கு அரசியாகவே முன்னர் அமர்ந்திருக்கிறார். என் குலத்தவர்” என்று சம்வகை சொன்னாள். உக்ரை முகம் மலர்ந்து “நன்று, இதைப்போல் நிறைவளிக்கும் செய்தி பிறிதொன்றில்லை” என்றாள். சம்வகை “பெரும் பொறுப்பு இது. இன்று நம்மிடம் படையென ஒன்றில்லை” என்றாள். “நம் படை நாள்தோறும் என பெருகிக்கொண்டிருக்கிறது” என்றாள் உக்ரை. “ஆம், இன்று அஸ்தினபுரி வலுவான படையொன்றை உருவாக்கிகொண்டிருக்கிறது. ஆனால் அது இன்னும் பயிலாத படை. ஒவ்வொருவரும் பயின்றவர்கள், ஆனால் ஒரு படையென ஒத்திசைவதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகும்” என்றாள் சம்வகை.

“படையென ஒன்றுபடுவதிலுள்ள இடர் என்ன என்று இப்போதுதான் தெரிகிறது” என அவள் தொடர்ந்தாள். “தனியாணவம் இல்லாதவன் வீரன் அல்ல, தனியாணவத்தை அகற்றாமல் அவனால் படையின் ஒரு பகுதியாக செயல்படவும் இயலாது. பல தருணங்களில் பெருஞ்செயல்களை செய்பவர்கள் படையுடன் ஒன்றாகாமல் பிறழ்பவர்களாகவும், படைகளால் தொடர்ந்து தண்டிக்கப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இங்கு ஒவ்வொருவருக்கும் எங்கு அவர்களது தனி ஆணவம் தலைநிற்கவேண்டும் என்றும் எங்கு அது அகற்றப்பட்டு ஆணைக்கு அடிபணியவேண்டும் என்றும் கற்பிக்கப்படவேண்டும். அதன் பின்னரே இங்கே ஒரு படையென ஒன்று உருவாகும்.”

“ஆனால் அதை ஆணை மூலம் கற்பிக்கலாகாது. தொடர்ந்து படையென அவர்களை பழக்குவதினூடாகவே கற்பிக்க இயலும். ஒரு போர் நிகழ்ந்தால் இவையனைத்தும் இயல்பாக அவர்கள் அனைவருக்கும் தெரிந்துவிடும். போரைப்போல் சிறந்த போர்ப்பயிற்சி வேறில்லை” என்றாள் சம்வகை. உக்ரை “போரெனில்…” என்றபின் நகைத்து “உடனே மீண்டும் ஒரு போரெனில் இங்கிருக்கும் அத்தனை குடிகளும் கிளம்பிச் சென்றுவிடுவார்கள்” என்றாள். சம்வகை “அவ்வாறு தோன்றும். ஆனால் அது உண்மையல்ல” என்றாள். “இங்கு வந்து சேர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் நம் படைகள் ஆற்றல் திரட்டிக்கொண்டு சென்று யவனத்தையோ பீதர்நாடுகளையோ வெல்ல வேண்டுமென்ற எண்ணத்தையே கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஓராண்டில் அஸ்தினபுரியிலிருந்து யுதிஷ்டிரன் பெரும்படையுடன் கிளம்பி உலகை வெல்ல முனைவார் என்றுதான் அவர்களிடையே பேச்சு உலவிக்கொண்டிருக்கிறது” என்றாள்.

உக்ரை “ஒருவேளை அது நிகழக்கூடும். அன்று படைமுகப்பில் தாங்கள் செல்லவும் கூடும்” என்றாள். சம்வகை கைகளை கட்டிக்கொண்டு பீடத்தில் சாய்ந்து “மெய்யாக நான் போரிட விரும்பவில்லை. போர் என்பது ஆற்றலை பயன்படுத்துவது அல்ல, சிதறடிப்பது. குவிக்கப்பட்ட ஆற்றல் ஒன்றை படைத்தாகவேண்டும். ஒரு பெரும்போரைவிட படைகளால் ஓர் ஏரி வெட்டப்படும் என்றால் அதுவே மெய்யான ஆற்றல்வெளிப்பாடு என்று தோன்றுகிறது” என்றாள். “வீசப்படும் வாளைவிட உறையிலிருக்கும் வாள் ஆற்றல் மிக்கது என பெண்களாகிய நாம் அறிவோம். அதுவே நமது வெற்றி.”

உக்ரை அவளுடைய சொற்களால் உளமெழுந்து விழிமின் கொண்டாள். “நிறைந்து நிலைகொண்ட ஆற்றல் நம்மை அனைவருக்கும் மேலென எழச் செய்கிறது. அனைத்திற்கும் அப்பால் நிற்கச் செய்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அது வெற்றியை அளிக்கிறது. அஸ்தினபுரி பாரதவர்ஷத்தை எதிர்த்து வெல்லும் நாடல்ல, பாரதவர்ஷத்தால் எதிர்க்கவும் எண்ணப்பட முடியாத நாடென்ற நிலையையே நான் விரும்புகிறேன்” என்றாள் சம்வகை.  “அன்று அது இங்குள்ள அனைத்து சிறுகுலங்களையும் ஒன்றாக்க முடியும். சிந்துவையும் கங்கையையும் பிரம்மபுத்திராவையும் ஒன்றென இணைக்க முடியும். பாரதவர்ஷம் முழுக்க மெய்மையின் செய்தியை அனுப்ப முடியும்.”

“எந்நகரில் கல்வி சிறக்கிறதோ அதுவே உண்மையில் வெல்லும் நகர். கல்வியினூடாகவே மெய்யான புகழ் நிலைநிறுத்தப்படுகிறது. ஒரு நகர் சுழன்றுகொண்டிருக்கும் மத்துபோல. இப்பாற்கடலில் அது எதை கடைந்தெடுக்கிறது என்பதே அதன் மதிப்பு. அஸ்தினபுரி சொல்லின் நகராக மாற வேண்டும். சொல் திகழவேண்டுமெனில் படைக்கலம் அதற்கு காவலாக இருக்க வேண்டும். அச்சொல் மெய்மையை சென்றடைய வேண்டும் என்றால் அதில் குருதி படிந்திருக்கலாகாது” என்றாள் சம்வகை. அவள் அச்சொற்களை முன்னரே பலமுறை சொல்லிக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தாள். அதை அப்போது சொல்வதுகூட வேறெங்கோ எவரிடமோ சொல்வதுபோல் தோன்றியது. எவருடைய சொற்கள் அவை என அகம் திகைத்தது.

உக்ரை அவளை விழிமலர பார்த்துகொண்டிருந்தாள். பின்னர் “பேரரசியருக்குரிய சொற்கள், தலைவி. தாங்கள் பிறந்த எளிய குடியிலிருந்து இவ்வெண்ணங்களை எப்படி அடைந்தீர்கள்?” என்றாள். சம்வகை புன்னகையுடன் மீண்டு “அவ்வப்போது நானும் அதை எண்ணிக்கொள்வதுண்டு. நான் பிறந்த சூழலில் இருந்து இந்த எண்ணங்கள் எதுவும் எனக்கு வந்ததில்லை. ஆனால் ஒவ்வொன்றும் நிலைகுலைந்த ஒரு தருணத்தில் இந்நகர்ப் பொறுப்புக்கு வந்தேன். ஒவ்வொரு நாளும் ஓர் ஆண்டுபோல் சென்றது. நான் இன்று அகத்தே முதுமையை அடைந்துவிட்டிருக்கிறேன்” என்றாள்.

சம்வகை தன் கவசங்களை எளிதாக்கி உடலை தளர்த்திக்கொண்டு நீள்மூச்சுவிட்டாள். “நெருக்கடிகளினூடாகவே நாம் நம்மை கண்டுகொள்கிறோம். நம்மை ஒவ்வொரு நாளும் கலைத்து மீண்டும் அடுக்கிக் கொள்கிறோம். ஒருவரின் அகமென்பது அவரே இயற்றிக்கொள்வதே. ஒருவர் சொல் சொல்லெனச் சேர்த்து தன் வாழ்க்கையை ஒரு நூலென யாத்துக்கொள்கிறார் எனத் தோன்றுகிறது. நான் என்னை அவ்வாறு உருவாக்கிக்கொண்டேன்” என்றாள்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 37

பகுதி ஐந்து : விரிசிறகு – 1

நகர்மேல் எழுந்துநின்ற கோட்டை மேலிருந்து சம்வகை சூழ நோக்கிக்கொண்டிருந்தாள். அஸ்தினபுரிக்குள் பாரதவர்ஷம் எங்கணுமிருந்து மக்கள்பெருக்கு வந்து நிறையத் தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வருபவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது. அனைத்துத் தெருக்களிலும் தலைகள் செறிந்து திரளன்றி பிறிதொன்றும் விழிக்கு தெரியாமலானது. நகரம் ஒரு கொடியென நெளிவதாக, சுனையென அலைகொள்வதாக விழிமயக்கூட்டியது. ஒவ்வொருவரும் அந்நகரை நோக்குவதை விரும்பினர். எங்கேனும் உயர்ந்த இடத்தில் இருந்து அதை நோக்கியவர்கள் மெய்மறந்து விழிகளாகி நெடுநேரம் நின்றிருந்தனர்.

எறும்புக்கூட்டங்கள்போல மக்கள் ஒழுகிக்கொண்டிருந்தனர். ஆயினும் மேலும் மேலுமென உள்ளே வந்து செறிந்துகொண்டிருந்தனர். எவரையும் விலக்குவது இயலாதென்பதை அதற்குள் புரிந்துகொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்தனர், அங்கு வருவதொன்றே வாழ்வின் நோக்கமெனக்கொண்டு ஊர்களிலிருந்து கிளம்பியிருந்தனர். அவர்களை எந்தத் தடையும், எந்த ஆணையும் அஸ்தினபுரியிலிருந்து விலக்க இயலாதென்பதை காவலர் அறிந்துவிட்டிருந்தனர். அந்த மக்களைச் சென்றடையும் ஆணைகள் ஏதும் காவலர்களிடமிருக்கவில்லை. சொற்கள், முழவொலிகள், கொம்பொலிகள். சவுக்கடிகள்கூட.

அவர்களின் உளநிலையில் அவை அனைத்துமே விளையாட்டாக மாறின. சவுக்கடி பட்ட பீதர்முகம் கொண்ட உழவன் ஏதோ சொல்ல அவனுடன் வந்தவர்கள் வெடித்துச் சிரித்தனர். “என்ன சொல்கிறான்?” என்று சவுக்கு வீசிய வீரன் கேட்டான். அவர்களுக்கு அந்தச் சொற்களும் புரியவில்லை. “என்ன சொல்கிறான்?” என்று அவர்கள் அதையே தங்கள் மூக்கடைத்த கிளிக்குரலில் திரும்பக்கூவினர். அதை மாறிமாறி பல ஒலிகளில் கூச்சலிட்டு நகைத்தபடி முன்னால் சென்றனர். அவன் அவர்களின் சிரிப்பை நோக்கியபடி நின்றான். செல்லும் ஒவ்வொருவரிடமும் “அவர்கள் சொல்வதென்ன? சொல், அவர்கள் சொல்வதென்ன?” என்று கேட்டான். அவர்கள் அனைவருமே சிரிக்கும் முகம் கொண்டிருந்தனர். சிரிப்பு ஓர் ஒளியோடை என அவன் முன் நெளிந்து சென்றது.

அவன் அச்சொற்களை திரும்பத்திரும்ப தன் நாவில் பதியவைத்துக்கொண்டான். பலரிடம் உசாவினான். இறுதியில் ஒருவன் சொன்னான் “நாக்கு என்கிறார்கள், வீரரே”. காவல்வீரன் திகைத்து “நாக்கு என்றா?” என்றான். “ஆம், சவுக்காலடிப்பதை நீங்கள் அவர்களை நக்குகிறீர்கள் என எடுத்துக்கொள்கிறார்கள்.” காவல்வீரன் சோர்ந்து “மெய்யாகவா?” என்றான். பின்னர் தன் காவல்தலைவனிடம் “இவர்களை சவுக்காலடிப்பதில் பயனில்லை. அம்புகளை எய்தால்கூட அதை கோழி கொத்துவது என்று சொல்லி சிரித்துக்கொண்டு உயிர்விடுவார்கள்” என்றான். காவல்தலைவன் அவனை நோக்கி விழிமலைத்திருந்தான். “ஆம், அவர்கள் பித்தர்கள் போலிருக்கிறார்கள்… அவர்களை நோக்கி நாம் எதையும் சொல்லமுடியாது” என்றான். காவல்வீரன் “குழந்தைகள்போல” என்றான். சம்வகை அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு அப்பால் நின்றிருந்தாள். ஒருகணம் விழிதூக்கியபோது கடந்துசென்ற அத்தனைபேரும் சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு முதல்முறையாக துணுக்குற்றாள்.

அந்த மக்கள் பலவகையான முகங்கள் கொண்டிருந்தனர். உடலசைவுகளேகூட வேறுபட்டன. “மானுடர் ஒன்றே என்பது பொய்மொழி. விலங்கெல்லாம் ஒன்றே என்பதுபோல. புலியும் பூனையும் வேறுவேறே. நாயும் பூனையும் வேறு வேறு” என்று ஒரு காவல்வீரன் சொன்னான். “ஆனால் நாம் இவர்களை ஒன்றெனக் காண்கிறோம். ஒற்றைத்திரள் என ஆக்கிக்கொள்கிறோம். எத்தனை முகங்கள், எத்தனை விழிகள்!” அவர்கள் சொல்லிச் சொல்லிச் சலித்தும் சொல்லிக்கொண்டிருந்தனர். “முகம் என்னும் வடிவம் ஒன்றே பொது. அவை கலங்கள், ஊற்றிவைக்கப்பட்டவை வெவ்வேறு நீர்மைகள்” என்றான் ஒருவன்.

அவர்களிடம் கள்வாங்கி அருந்திவிட்டு மீசையை நீவித்துடைத்து பூச்சிகளை துப்பியபின் சூதன் ஒருவன் திரும்பி அத்திரளைப் பார்த்தான். “நீங்கள் இங்கே இருந்து கண்டது சிறு வட்டம் மட்டுமே. பாரதவர்ஷம் முகங்களின் பெரும்பரப்பு. விழிகளின் விண்மீன் வானம். இதோ இந்த நகரில் இப்போது பாரதவர்ஷம் ஒரு சிறுபுள்ளியில் குவிகிறது. வானம் பனித்துளியில் என.” அவன் கைசுட்டி முகங்களை காட்டினான். தனக்குத்தானே சிரித்தவனாக “விரித்துப் பரப்பியதை எல்லாம் அள்ளிச் சுருக்கிக்கொள்கிறது ஊழ். விதைநெல் சேர்க்கும் உழவனைப்போல” என்றான்.

ஆனால் மெல்லமெல்ல அத்திரள் ஒற்றை முகமெனத் தெரியலாயிற்று. ஒற்றை மொழிகொண்டு பேசலாயிற்று. காவல்மாடங்களின் மேல் நின்றிருக்கையில் அந்தத் திரளின் முகம் வானுருவமெனத் தெரிந்து உளம் திகைக்கச்செய்தது. அதன் சொல் துயிலிலும் வந்து அழைத்தது. ஆணையென்றாகியது. அறைகூவலாக ஒலித்தது. அதை கேளாமல் வாழமுடியாதென்றாகியது. படைக்கலங்கள் அதன் முன் தணிந்தன. பூதமென எழுந்து நின்று அது அவர்களை மிகக் குனிந்து நோக்கியது. “செய்” என்றது. “பணி” என்றது. “தொழு” என்றது. “நானே” என்றது. “ஆம் ஆம் ஆம்” என்றனர் வீரர்கள்.

அஸ்தினபுரியின் அனைத்துப் பாதைகளும் மக்கள்பெருக்கு செறிந்து ஓடைகளென்றாயின. பாதைகள் மக்கள் வந்து வந்து அகன்று இருமடங்கு விரிவு கொண்டதாயின. பாதைகளின் இருபுறமும் இருந்த காடுகள் வெட்டி அழிக்கப்பட்டு அங்கே குடில்கள் உருவாயின. அக்குடில்கள் பெருகி மேலும் இருபக்கங்களிலாக அகன்று சிற்றூர்களாயின. “முந்திரிக்கொடியில் கனிக்கொத்துகள் செறிவதுபோல் ஒவ்வொரு பாதையிலும் சிற்றூர்கள் உருவாகியுள்ளன” என்று ஒற்றனாகிய சூதன் சொன்னான். “காட்டெரி பரவுவதுபோல் மானுடர் எரிந்து விரிகிறார்கள். உடல்கள் தழல். உண்டு தீராத பசிகொண்ட அலைவு” என்றான்.

அஸ்தினபுரியைச் சுற்றி நூற்றியெட்டு ஊர்கள் உருவாயின. ஒவ்வொன்றுக்கும் இயல்பாகவே பெயர்கள் அமைந்தன. அங்கு வந்து தங்கிய குடிகள் கொண்ட தனித்தன்மையை அவ்வழி கடந்து சென்ற பிறர் கண்டு சூட்டிய பெயர்களாக அவை அமைந்தன. பெரும்பாலும் விந்தைகளைக் கண்டுதான் அப்பெயர்கள் சூட்டப்பட்டன. அரிதாக அடையாளங்களின் வழியாக. எப்போதாவது எந்நோக்கமும் இன்றி. அப்பெயர்கள் எதிலும் அறிவு எதுவும் செயல்படவில்லை. அவை குழந்தை நோக்கில் இடப்பட்ட பெயர்களாகவே தெரிந்தன. சிரிப்புத்தலை என ஓர் ஊருக்கு பெயர் இடப்பட்டிருப்பதைக் கேட்டு தாங்கள் நகைத்ததை பின்னர் அவர்கள் எண்ணிக்கொண்டனர். “கைப்புண்” என்றும் “பூனைக்காது” என்றும் ஊர்களுக்கு பெயர்களிடப்பட்டன. “நல்ல ஊற்று” என்றும் “உப்புக்கஞ்சி” என்றும் ஊர்களுக்கு பெயர்கள் அமைந்தன. ஒவ்வொரு புதுப் பெயரும் புன்னகைக்க வைத்தது. அப்பெயர்கள் நிலைகொண்டதே அப்புன்னகையால்தான் என்று தோன்றியது.

பல ஊர்களின் பெயர்கள் விந்தையான அயல்மொழியில் அமைந்திருந்தன. அவற்றை சூதர்களைக்கொண்டு மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அதன் பின்னரும் அவை ஒலிகளாகவே அமைந்தன. அயல்மொழிச் சொற்களை வெற்றொலியெனக் கேட்ட செவிகள் அவற்றை ஏளனம் கலந்து சொல்லத்தொடங்கி புதிய பெயர்களை யாத்தன. ஊர்களைப் பதிவுசெய்ய ஒரு அமைச்சு அமைந்தது. அதில் நாளுமென பெயர்கள் வந்து தங்களை அடுக்கிக்கொண்டன. “இளமையில் ஒரு கதை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறை சிறகை விரித்து அடுக்கும்போதும் தூவல்கள் பெருகும் ஒரு பறவையைப்பற்றி. அது ஆணவம் கொண்டு கடல்மேல் பறக்கலாயிற்று. சிறகுகள் பெருக முடியாமல் நீர்வெளியில் விழுந்து மறைந்தது” என்றார் சுதமன்.

அஸ்தினபுரியின் நான்கு பக்கமும் உருவாகி பெருகிய ஊர்ப்பெயர்களுடன் அத்திசையையும் இணைத்துக்கொள்ளச் சொன்னாள் சம்வகை. பெயரைக் கேட்டவுடன் அது எங்குள்ளது என்ற உளப்பதிவு உருவாக வேண்டியிருந்தது. தட்சிண மிருகபாதம், உத்தரமாகம் என்று பெயர்கள் அமைந்தன. அப்பெயர்கள் சூட்டிய ஊர்களைக்கொண்டு அஸ்தினபுரியின் நிலவரைபடம் ஒன்றை உருவாக்கும் பணியை சுதமன் மேற்கொண்டார். கலிங்க நாட்டிலிருந்து வந்த சிற்பிகள் எழுவர் அமர்ந்து சேர்த்து தைத்து உருவாக்கப்பட்ட பெரிய தோல்திரையில் அடர்ந்த எண்ணை வண்ணங்களில் அஸ்தினபுரியின் கோட்டையையும் அதைச் சுற்றி அமைந்த ஊர்களின் பெயர்களையும் வடிவமைத்தனர்.

நிலம் வரையப்படுவதை சம்வகை ஒவ்வொரு நாளும் சென்று நோக்கிவந்தாள். நிலம் என அவள் உணர்ந்த ஒன்றுடன் அக்கோட்டுவிரிவை அவளால் இணைத்துக்கொள்ள இயலவில்லை. அது வேறு ஒரு நிலமாக, எங்கோ இருக்கும் ஒன்றாகத்தான் தோன்றியது. ஒவ்வொருநாளும் அதில் வரையப்பட்ட ஊர்களுக்கு அவள் புரவியில் சென்று மீண்டாள். மெல்ல மெல்ல அந்த கோட்டுரு நிலமென்று ஆகியது. பெரும்பாலான ஊர்கள் ஓடைகளால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை கோட்டுருவால்தான் அவள் அறிந்துகொண்டாள். அவை பின்னர் சாலைகளாலும் பாதைகளாலும் இணைக்கப்பட்டன. இருவகை நரம்புகளால் அவை ஒன்றெனப் பின்னப்பட்டன.

“இவ்வாறு நகரைச்சுற்றி ஊர்கள் அமைவது ஒருவகையில் நன்று. அஸ்தினபுரிக்குள் வருபவர்களை இந்த ஊர்க்ளே தாங்கிக்கொள்ளும்” என்று சுதமன் சொன்னார். “ஆயிரம் அணைகளைக் கடந்து இங்கே வரவிழைபவர்கள் மட்டும் வரட்டும்.” சுரேசர் வெளியிலிருந்து வருபவர்கள் அனைவரும் அச்சிற்றூர்களுக்குச் செல்லவேண்டும் என்று ஆணையிட்டார். ஆனால் அஸ்தினபுரிக்குள் வந்து அங்கு தங்கள் ஊழ் என்னவென்று அறிந்து அதன் பின்னர் வெளிச்சென்று மட்டுமே மக்களால் அச்சிற்றூர்களில் தங்க இயன்றது. அங்கு சென்ற பின்னரும் அவற்றை அஸ்தினபுரியின் கைகளென கால்களென கற்பனை செய்துகொண்டார்கள்.

ஆனால் சிலர் தாங்கள் விட்டுவந்த ஊர்களை அங்கு திரும்ப உருவாக்கிக்கொண்டார்கள். அவ்வூர்களின் பெயர்களையே அங்கு அமைத்துக்கொண்டார்கள். “விட்டுவிட்டு வந்த ஊர்களை ஏன் மீள உருவாக்கிக்கொள்கிறார்கள்?” என்று சுதமன் கேட்டார். “அவர்கள் குழியானைகளைப்போல. எங்கு எடுத்துப் போட்டாலும் சுழன்று அவ்வட்டத்தையே அமைப்பார்கள்” என்று சீர்ஷன் சொன்னான். “எனில் ஏன் ஊரைவிட்டு கிளம்புகிறார்கள்?” என்று சுதமன் கேட்க சுரேசர் நகைத்து “தாங்கள் புதிய ஊரிலிருக்கிறோம் என்பதை தங்களுக்குத் தாங்களே நிறுவிக்கொள்வதற்காகத்தான். பழைய ஊர்களின் சிக்கல்களும் இடர்களும் இல்லாத புதிய ஊர் ஒன்றை அமைக்க முயல்கிறார்கள். ஆனால் அவர்களின் கற்பனையும் இயல்கையும் இணைந்து உருவாக்கும் ஊர்களையே அவர்கள் அமைக்க இயலும்” என்றார்.

“நாம் அவர்களுக்கு ஊர் உருவாக்கும் நெறிமுறைகளை வகுத்தளிப்போம்” என்று சம்வகை சொன்னபோது சுரேசர் நிமிர்ந்து நோக்கி “ஆம், அது நன்று. நான் அவ்வாறு எண்ணவில்லை” என்றார். “ஆனால் இயல்பாக ஊர்களை உருவாக விட்ட பின்னர் அவற்றை செம்மைப்படுத்துவது எளிதல்ல. அவற்றுக்கு ஒரு கட்டற்ற தன்மை வந்திருக்கும். அவை உருவாகும்போதே சில அடிப்படை இயல்புகளை வகுத்து அளிப்பது ஒருமையை உருவாக்கும். நூல்கள் அதைத்தான் சொல்கின்றன. ஊரை உருவாக்கும் முதல் தறியும் முதல் நூலும் அவ்வூரில் என்றும் இருக்கும்” என்றார்.

அரசவையில் சுரேசர் அதை முன்வைத்தார். “ஆம், அஸ்தினபுரியில் இன்று செல்வம் இருக்கிறது. காடுகளை அழித்து திட்டமிட்டு ஊர்களை அமைப்போம். நேரான தெருக்களும், ஒழுங்கமைந்த இல்லங்களும், கோட்டையும், புறங்காடும், இணைப்பு பாதைகளும் கொண்டவை” என்றார் யுதிஷ்டிரன். சுரேசர் “அவ்வாறு ஊரமைப்பு உருவாக்குவது ஒன்றும் பெரிய பணி அல்ல. ஆனால் அங்கு குடியேற்றங்களை உருவாக்குவது எளிதல்ல. அங்கு எவ்வகை குடிகள் சென்று வாழ்வார்கள்? எவ்விதமான குமுகங்களை அங்கு உருவாக்குவார்கள் என்பதை நாம் அங்கு வகுக்க இயலாது. நகரங்களை உருவாக்கலாம். ஆனால் இல்லங்களை அமைப்பதில் நம்மால் ஒரு கொள்கையை வகுக்கவோ அதை நிலைநிறுத்தவோ இயலாது. அவர்களே தங்கள் போக்கில் உருவாக்கிக்கொள்ளும் குமுகங்களுக்கு ஓரளவுக்கு நெறிப்படுத்தப்பட்ட ஊரமைப்பை வலியுறுத்துவதே நம்மால் செய்யக்கூடியது” என்றார்.

“புதிய நகர்கள் உருவாகட்டும். அங்கே என்ன நிகழ்கிறதோ அதை நாம் ஒழுங்கமைப்பு செய்வோம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நகர வடிவமைப்பாளர்களான நூறு கலிங்கச் சிற்பிகளை வரவழைப்போம். புதிய வடிவங்களில் நகர்கள் எழட்டும்.” சம்வகை வணங்கி மெல்ல கனைக்க யுதிஷ்டிரன் திரும்பி நோக்கினார். “அரசே, அஸ்தினபுரியின் இதே நகர அமைப்பையே பல்வேறு வகையில் உருமாற்றம் செய்து அவ்வூர்களுக்கான வரைவுகள் உருவாக்கப்படுவதே நன்று” என்றாள். “ஒரு நகரை ஆள்வது எளிதல்ல. நகரம் நம் கால்களில், செவிகளில், விழிகளில் உள்ளே சென்று உறையவேண்டும். அதற்கு ஆண்டுகள் பல ஆகும். நாம் அஸ்தினபுரியை ஆண்டு பழகியிருக்கிறோம். அஸ்தினபுரிகளை ஆள்வது மிக எளிது.” யுதிஷ்டிரன் கூர்ந்து நோக்க சுரேசர் “ஆம், அன்னைப்பன்றி நூறு குட்டிகளை பெறட்டும். அனைத்தும் அன்னை வடிவிலேயே” என்றார். யுதிஷ்டிரன் வெடித்து நகைத்து “ஆம், ஆகுக!” என்றார்.

சுற்றியமைந்த கோட்டையும், நான்கு வாயில்களையும் ஒன்றுடன் ஒன்றிணைக்கும் மையச்சாலைகளும், நடுவே அரண்மனையும், அரண்மனையைச் சுற்றி சிறு கோட்டையும், ஒவ்வொரு சாலையிலிருந்து இன்னொரு சாலைக்குச் செல்லும் ஊடுபாதைகளும் என அவ்வூர்கள் அஸ்தினபுரியின் வடிவிலேயே அமைந்தன. புதிய ஊருக்குச் செல்பவர்கள்கூட வழிதவறாமல் தங்கள் இலக்குகளை அடைந்தனர். “இவ்வூர்களின் அமைப்பு என்பது ஒன்றே. இதை சக்ரவியூகம் என்கிறார்கள். இந்த நகர்வடிவம் சதுரமாக்கப்பட்ட வட்டம் போன்றது” என்று கலிங்கச் சிற்பி சந்திரர் சொன்னார். “ஊர்வடிவங்களில் இதுவே மிகச் சிறந்தது. பாரதவர்ஷத்தின் பெரும்பாலான நகரங்கள் இவ்வடிவிலேயே அமைந்துள்ளன.”

“ஏன்? வெவ்வேறு வகையான ஊர்களை உருவாக்கும்போது அல்லவா வெவ்வேறு வகையான இயல்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது?” என்று சுதமன் கேட்டார். சந்திரர் “இவ்வாறு ஒரு நகர் வடிவம் உருவாகி வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு தேவை. பல வடிவங்களில் நகர்கள் முயலப்பட்டிருக்கலாம். தொல்குடிகளின் ஊர்களை நான் சென்று பார்த்ததுண்டு. குகைத் தொகுதிகளான ஊர்கள், மரங்களுக்கு மேல் அமைந்த ஊர்கள், சுழி வடிவ ஊர்கள், பாலையில் அமைந்திருக்கும் பொந்துவடிவ ஊர்கள் என. அவற்றில் பிறை வடிவ ஊர்கள், அம்புமுனை வடிவ ஊர்களைக்கூட நான் பார்த்திருக்கிறேன். அந்தந்த நிலங்களுக்கு ஏற்ப அந்தந்தக் குடிகளின் அமைப்புக்கேற்ப ஊர்கள் அமைகின்றன” என்றார்.

“ஆனால் சகடவடிவ ஊர்களே நெடுநாட்களாக நீடித்தன. அவை அவ்வாறு நீடித்தன எனில் அதற்கான பயன்பாடும் தேவையும் வலுவாக உள்ளதென்றே பொருள். சகடவடிவ ஊர்கள் பின்னர் சதுரவடிவிலாயின. அச்சு அவ்வாறே நீடித்தது” என்று சந்திரர் தொடர்ந்தார். “ஊரென்பது புறத்தே நின்று உருவாக்கப்படக்கூடியது அல்ல. அம்மக்களின் கோன்மையின் படிநிலையே ஊரென்றாகிறது. மன்னன் முதற்றே மலர்தலை உலகென்ற தொல்கூற்றின் வெளிப்பாடே இந்நகரங்கள். நாம் அமைக்கும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு தலைவன் என்று ஒருவனை அமைக்கிறோம். அவன் ஆளுகைக்குள் அந்த ஊர் இருக்கவேண்டுமென்று எண்ணுகிறோம். ஆகவேதான் இவை இவ்வடிவில் அமைகின்றன.”

“இந்நகர்களின் மையமாக ஊர்த்தலைவனின் மாளிகை அமைவது என்பது உடலில் தலை எழுவதுபோல. உண்மையில் அரசனின் மாளிகை ஊரின் மையத்தில் அமைவது அவ்வளவு உகந்தது அல்ல. அது அதன் நுழைவாயிலில் கிழக்குக் கோட்டையை ஒட்டி அமைவதே பல வகையிலும் புழக்கத்திற்கு எளிதாகிறது. எப்போதாவது போர் நடக்கையில் மட்டுமே அவன் மையத்தில் இருப்பது தேவையாகிறது. மற்றைய பொழுதுகளில் எளிதாக வெளியே செல்லவும் உள்ளே வரவும் உகந்த முதன்மை இடத்தில் அம்மாளிகைகள் அமைவதே நன்று. நகரங்கள் போரில் ஈடுபடுவது என்பது பல தலைமுறைகளுக்கு ஒருமுறையே நிகழ்கிறது. அதன்பொருட்டு ஒவ்வொரு நாளும் வருபவர்களும் செல்பவர்களும் கோட்டைமுகப்பிலிருந்து நகர் மையம் வரை சாலைகளில் செல்ல வேண்டிய தேவை இல்லை. தேவைப்படுமெனில் நகர் மையத்தில் ஒரு மாளிகை அமைத்துக்கொள்வதும், போரெனில் அங்கு சென்று தங்குவதும் மிக எளிய செயல்.”

“ஆனால் நகரென்பது அக்குடிகளின் உள்ளத்தில் அமையும் ஓர் அடையாளமும்கூட. நகர் மையத்தில் அரண்மனை இருக்கையிலேயே தங்கள் வாழ்வின் மையத்தில் அது இருப்பதாக மக்கள் எண்ணுவார்கள். தங்களுக்குமேல் ஒரு கோபுர முகடென அரண்மனை இருப்பதாக அவர்கள் உள்ளம் சமைத்துக்கொள்கிறது. ஒவ்வொருவரிடமிருந்தும் அது கொண்டிருக்கும் தொலைவு அக்கோன்மையின் அளவுக்கு அடையாளம். நகர்முகப்பில் அரண்மனை இருக்குமெனில் அவ்வரண்மனைக்குப் பின்புறம் அவ்வரண்மனையால் அறியப்படாது தாங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதான உணர்வை குடிகள் அடையக்கூடும். அரசன் அங்கிருந்து தங்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனும் கற்பனை குடிகளுக்குத் தேவை. அதுவே அரசெனும் அமைப்பை நிலைநிறுத்துவது” என்று சந்திரர் சொன்னார்.

நகர்களினூடாக சம்வகை ஓயாது புரவியில் சென்றுகொண்டிருந்தாள். சுதமன் அவளிடம் “நீங்கள் இன்று படைத்தலைவி. அரண்மனையில் இருந்தபடியே அனைத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் ஆணைக்கு இங்கே ஏவலரும் காவலரும் உள்ளனர்” என்றார். சுரேசர் “கால்களினூடாக மண்ணை அறிந்தவனே நல்ல அரசன் என்பார்கள். காவலரும் அவ்வாறே” என்றார். சம்வகை “நான் அறிந்துகொண்டிருப்பது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாளுக்குநாள் இந்நகரத்தொகை என்னை அணுகிவருகிறது என்று மட்டும் தெரிகிறது” என்றாள்.

அவளை நகர்மக்கள் அடையாளம் காணவில்லை. ஒவ்வொரு ஊரிலும் புதியவர்களே நிறைந்திருந்தனர். அவர்களின் அந்த உவகை அவர்களுக்குமேல் ஓர் அரசு இன்னமும் உருவாகவில்லை என்பதனாலா என்று அவள் வியந்தாள். அரசு இல்லாமையால் அவர்களின் ஒழுங்கு குலையவில்லை. அவர்களின் அறமும் ஒழுக்கமும் எல்லை கடக்கவில்லை. அவர்களிடையே நிகழ்ந்த பூசல்கள்கூட மூத்தோரால் உடனே தீர்த்துவைக்கப்பட்டன. அப்படியென்றால் அரசு என்று ஒன்று எதற்காக? இப்போது ஓர் எதிரி இந்நாட்டை தாக்குவான் என்றால் அரசு தேவை. அதன் படைவல்லமை, அதன் அமைப்பு, அதை நடத்தும் அரசு தேவை. ஆனால் அரசன் என்று ஒருவன் இல்லை என்றால் இன்னொரு அரசன் படைகொண்டுவர வாய்ப்பில்லை. அரசனை தேன்கூடு என்கின்றன நூல்கள். அங்கிருந்தே தேன் கவரமுடியும். மலர்களில் நிறைந்திருக்கும் தேனை எவரும் கவரமுடியாது. மக்கள்திரள் மேல் எவர் படைகொண்டுவரக்கூடும்?

தன் எண்ணங்களை அவள் அளைந்துகொண்டே இருந்தாள். கோட்டைக்காவல்பெண்டாக அமைந்த நாள்முதலே அவள் உள்ளம் பெருகிக்கொண்டிருந்தது. சொற்களை அவளே அவ்வப்போது நின்று நோக்கி துணுக்குற்றாள். “இந்நகர்களை ஒரே ஆணையால் அஸ்தினபுரி தன்னை நோக்கி இழுத்து படையென திரட்டிக்கொள்ள முடியும்” என்று ஒரு காவலர்தலைவன் சொன்னபோது அவள் உள்ளம் “இவை ஒரே ஆணையால் அஸ்தினபுரியை நூறாகப் பிளந்துவிடவும்கூடும்” என்று எண்ணிக்கொண்டாள். பின்னர் ஏன் அவ்வாறு தோன்றியது என வியந்தாள். கோன்மையைக் கையாள்பவர்களுக்குள் கோன்மைக்கு எதிரான ஒருவன் எழுந்து பேசிக்கொண்டிருப்பான் போலும். அவன் அக்கோன்மைக்கு ஒற்றனும்கூட.

அவள் புரவியில் அமர்ந்து அந்த துளிநகரங்களின் சாலைகளினூடாகச் சென்றுகொண்டிருந்தாள். அவை உருவாகி வந்த விரைவு அவளை ஒவ்வொரு முறை விழிதூக்கும்போதும் துணுக்குறச் செய்தது. பல நகரங்கள் பதினைந்து நாட்களுக்குள் எழுந்துவிட்டிருந்தன. அவை மரத்தாலானவை என்பதனாலா? அன்றி ஊரார் அனைவருமே அந்நகரை உருவாக்குவதில் முழுமையாக முனைந்தமையாலா? ஆனால் அவை கட்டிமுடிக்கப்படவுமில்லை. கட்டக்கட்ட அவை பெருகின, செய்யச் செய்ய பணி கோரின. அவை இன்னும் நூறாண்டுகளுக்கு கட்டி முடிக்கப்படாமலிருக்கக்கூடும்.

அவள் அந்நகர்களில் ஒவ்வொருவரும் சற்றே தடுமாறுவதை கண்டாள். அவை அவர்கள் அறிந்த ஊர்களல்ல. பெரும்பாலானவர்கள் சிற்றூர்களிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அந்த நகர அமைப்பை உடலில் வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் உவகையில் திளைத்துக்கொண்டிருந்தனர். ஆகவே ஒவ்வொன்றையும் கொண்டாட்டமாக ஆக்கிக்கொண்டிருந்தனர். ஒற்றைத்திரள் என வந்த அம்மக்கள் மீண்டும் பல்லாயிரம் நகர்களாக குமுகங்களாக குலங்களாக குடிகளாக பிரிந்துவிட்டதை அவள் கண்டாள். அப்பேருருவை அஞ்சி அதை செய்தோமா? அந்தப் பெரும்பூதத்தை ஆளமுடியாது. அதற்கு எந்த ஆணையையும் இட முடியாது. அதை வெல்வதற்கு ஒரே வழி அதுவே தன்னை பலவாக உணரவைப்பது மட்டுமே.

அவள் ஜலநிபந்தம் என்னும் சிறிய நகர்சதுக்கம் ஒன்றினூடாகச் செல்கையில் சிறுமியர் விளையாடிக்கொண்டிருக்கும் சிரிப்பொலியை கேட்டாள். அவர்கள் செம்மண் நிலத்தில் அரங்கு வரைந்து வட்டாடிக்கொண்டிருந்தனர். கண்களை மூடி தலையை அண்ணாந்து நெற்றிமேல் வைத்த பனையோட்டு வட்டுடன் ஒரு பெண் தாவித்தாவிச் சென்றாள். அரங்கின் கோடுகளுக்கு மேல் அவள் கால்கள் படுகின்றனவா என பிற சிறுமியர் நோக்கி கூச்சலிட்டனர். அவள் தாவித்தாவிச் சென்று இறுதிக்கோட்டைக் கடந்து குதித்து வட்டை எடுத்த பின் “வென்றுவிட்டேன்! வென்றுவிட்டேன்!” என்று கூச்சலிட்டு குதித்தாள். அவளுடன் இணைந்த சிறுமியரும் கூச்சலிட்டனர். சிறுபறவைகளின் ஓசைபோல அச்சிரிப்புகளும் கூச்சல்களும் கேட்டன. சம்வகை மலர்ந்த முகத்துடன் நோக்கியபடி சென்றாள்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36

பகுதி நான்கு : அன்னையெழுகை – 8

யுயுத்ஸு திரௌபதியின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்தான். தான் பேசும் சொற்கள் அவளை சென்றடைகின்றனவா என்று ஐயுற்றான். திரௌபதி பிறர் பேசும்போது எப்பொழுதும் சற்றே விழிகளை சரித்து வேறெங்கோ நோக்கி வேறெதிலோ உளம் செலுத்தி அமர்ந்திருப்பவள் போலிருப்பாள். அது பேசிக்கொண்டிருப்பவரை ஏமாற்றும் ஒரு பாவனை என அவன் அறிந்திருந்தான். அவள் நன்கு உளம் ஊன்றவில்லை என்றும், சொற்களை சரியாக அவள் பொருள் கொள்ளவில்லை என்றும் எதிரில் இருப்பவர்கள் எண்ணுவார்கள்.

அவர்கள் அவள் உளம் கொள்ளவேண்டுமென்று எண்ணும் வார்த்தைகளை பிறிதொரு முறை சொல்வார்கள். நாத்தவறி வந்துவிட்ட ஒரு வார்த்தையை மறைக்கும்பொருட்டு அதைச் சுற்றி பொருளற்ற சொற்களால் ஒரு வளையம் அமைப்பார்கள். அவர்கள் கூற விழைவதென்ன மறைக்க விரும்புவதென்ன என்பதை அவள் எளிதில் உணர்ந்துகொள்வாள். பின்னர் அவள் பேசத்தொடங்குகையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த அனைத்துக்கும் அப்பால் சென்று அவர்களை அவள் பார்த்துவிட்டாள் என்பதை உணர முடியும்.

ஓரிரு முறை அதை தான் அறிந்த பின்னர் யுயுத்ஸு அவளிடம் பேசும்போது தானும் விழிகளை தழைத்து நிலம் நோக்கியபடி சொற்களை கோக்கலானான். அவள் உடலில் சற்று அசைவு எழுகையில், மூச்சொலி மாறுபடுகையில் விழிதூக்கி அவளை பார்ப்பான். அவளை நேருக்கு நேர் பார்த்து பேசுவது கடினமென்று அதன் பின்னரே அவன் கண்டுகொண்டான். அவளுடைய தோற்றம் பேசுபவரில் ஆழ்ந்த அழுத்தத்தை அளித்தது. அவள் ஒரு பெண்ணல்ல, கருவறை வீற்றிருக்கும் தெய்வம் என்பதுபோல. அவளை மானுடர் எவரும் அணுக இயலாதென்பதுபோல. முப்பொழுதையும் எட்டு திசையையும் ஏழு அகநிலைகளையும் நன்கு அறிந்தவள் என்பதுபோல.

அவள் அதற்குரிய பாவனைகளை இயல்பாகவே அடைந்திருந்தாள். எப்பொழுதும் மிகக் குறைவாகவே பேசினாள். மிகத் தாழ்ந்த குரலில் தான் எண்ணுவனவற்றை உரைத்தாள். ஒவ்வொரு சொல்லுக்கும் நடுவே ஆழ்ந்த இடைவெளிவிட்டாள். அப்போது சொற்கள் ஊழ்கநுண்சொற்கள்போல ஒலிதோறும் அழுத்தம் கொள்கின்றன. ஒலியே உணர்த்துவதாகிறது. அவள் பேசும்போது அவள் குரலைக் கேட்கும்பொருட்டு எவராயினும் சற்றே முன்னகர வேண்டியிருக்கும். அது அவள்முன் கேட்பவர் பணிவது போன்ற ஓர் அசைவை உருவாக்கும். உடலில் ஓர் அசைவெழுந்தால் அவ்வசைவிற்குரிய பொருளை உள்ளம் இயல்பாகவே அடைகிறது. தருக்கி நிமிரும் பாவனையை தோள்களில் கொண்டுவந்தால் எதையும் பொருட்டின்றி எண்ணும் உளநிலை அமைகிறது, தோள்கள் குறுகி தலை சற்று தாழ்கையில் உள்ளம் பணிவு கொள்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான். அவள் தன் முன் பணியாது பேசும் எவரையேனும் கண்டிருப்பாளா என வியந்தான்.

அவள் எப்பொழுதும் வினாக்களை முழுமைப்படுத்துவதில்லை. அவ்வினா என்ன என்பதை கேட்பவர் புரிந்துகொண்டு தொகுத்துக்கொள்வதற்காக அடையும் பதற்றமே அவ்வினாவிற்கு அவர் அளிக்கக்கூடிய தடைகளை இல்லாமலாக்கிவிடும். பெரும்பாலானவர்கள் அவற்றைக் கேட்டவுடனே “அரசி?” என்று பணிவுடன் மீண்டும் கேட்பார்கள். அவள் விழி நிமிர்ந்து அவர்களை கூர்ந்து பார்த்து முன்பு சொன்ன வினாவின் ஓரிரு சொற்களை சற்றே மாற்றி மறுபடியும் கேட்பாள். அப்பதற்றத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் மறுமொழியை உளம்நழுவி சொல்லிவிடுவார்கள். உடனே பதறி அக்கூற்றிலிருக்கும் பிழைகளையோ விரும்பாமெய்களையோ மறைக்கும்பொருட்டு சொல்பெருக்குவார்கள். அவ்வாறு தங்களை முழுமையாகவே அவள் முன் படைப்பார்கள்.

பிறர் பேசும்போது சில இடங்களில் அவள் காற்று தொட்ட திரை ஓவியம்போல மெல்ல கலைந்து ஓர் அசைவொலி எழுப்புவாள். ஒரு மூச்சொலி எழும். மிக அரிதாக விழிதூக்கி புன்னகைப்பாள். அவ்வெதிர்வினைகள் அனைத்துமே பேசும் சொற்களுடன் நேரடியான பொருத்தமில்லாமல் சற்றே இடம் மாறி விழுவதை யுயுத்ஸு கண்டிருந்தான். அது பேசிக்கொண்டிருப்பவரை உடனடியாக பதறச்செய்யும். தான் பேசிக்கொண்டிருக்கும் சொற்களைப் பற்றிய அலசல் ஒன்றை தனக்குள் நிகழ்த்திக்கொள்ளச் செய்யும். பிழை இழைத்துவிட்டோமா, பொருத்தமற கூறிவிட்டோமா, எண்ணாப் பிறிதொன்று கடந்து வந்துவிட்டதா என நெஞ்சு துழாவிக்கொண்டிருக்கையில் அவர்களின் சொற்கள் தடுமாறத் தொடங்கும்.

தெளிவுறக் கோத்து பிறர் கூறும் சொற்களில் பொய்யே மிகுதி என அவன் கண்டிருந்தான். அது பொய்யல்ல, மானுடர் எவ்வண்ணம் தங்களை காட்டிக்கொள்ள விரும்புகிறார்களோ அது. எவ்வண்ணம் தங்களை தாங்களே சமைத்துக்கொண்டிருக்கிறார்களோ அது. பெரும்பாலும் அது அவர்களால் வாழ்நாள் முழுக்க பயிலப்பட்டதாக இருக்கும். ஆகவே அதற்குரிய சொற்கள், உளநிலைகள், உடலசைவுகள், முகநடிப்புகள் அனைத்தையும் பழகியிருப்பார்கள். மிகத் தேர்ந்த சொல்சூழ்வோர் மட்டுமே அவர்களின் அந்த பாவனையைக் கடந்து ஊடுருவிச்சென்று அவர்களின் மெய்மையை அடையமுடியும். எஞ்சியோர் பெரும்பாலானவர்கள் அந்தத் திரையையே அவர்களென எண்ணுவார்கள். சற்றே திறன்கொண்டோர் அதை தங்கள் கற்பனையால் கடந்து அக்கற்பனையே அவர்கள் எனக் கொள்வார்கள்.

யுயுத்ஸு அவர்களின் அந்தத் தற்கோப்பைக் குலைத்து உள்ளே செல்ல பல வழிகளை தானே கண்டடைந்திருந்தான். அவர்கள் உருவாக்கும் அச்சித்திரத்தின் ஒருமைக்குள் ஒரு இடைவெளியைக் கண்டடைந்து அதில் விசையுடன் தன்னை செலுத்திக்கொண்டு அவர்களை நிலைகுலைய வைப்பதே அவனுடைய வழக்கம். அவன் சூதன் என்றும் அரசுசூழ்தல் முறையாகக் கற்காதவன் என்றும் அவர்கள் எண்ணியிருப்பதனால் பாம்பு படமெடுப்பதுபோல அவன் எழும்போது அவர்கள் அகம்பதறி நிலைஅழிந்து சொல் சிதறவிடுவார்கள். சில தருணங்களில் கூரிய வினாக்களினூடாக அவர்கள் தங்களை தொகுத்து வைத்திருக்கும் திசையை பிறிதொன்றாக திருப்பிவிடுவான்.

மிக அரிதாக பெரும்பணிவு ஒன்றை நடித்து அவனுக்கு ஒன்றும் தெரியாதென்று அவர்களை நம்பவைத்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவர்களை தங்களைப் பற்றி பேசவிட்டு அவர்கள் தேவைக்கு மேல் சொல் பெருக்கி தங்களை காட்டிக்கொள்ளவிடுவான். எத்தனை பயின்ற தன்நடிப்பாயினும் அதை ஒருவர் மிதமிஞ்சிச் செய்வாரெனில் அது பொய்யாக ஆகிவிடுகிறது. அது பொய்யென்று அவரே உணர்ந்து மீண்டும் தன் எல்லைக்குள் திரும்பும் பொருட்டு அதுவரை சொன்னவற்றை நகையாட்டாக மாற்றி அல்லது பிறிதொரு கோணத்தை அளித்து சற்றே மறுத்து சொல்லெடுப்பார்கள். அத்திரும்பலினூடாக அவர்களை அவன் அடையாளம் காண்பான்.

ஆனால் திரௌபதி அவ்வண்ணம் தன்னிடம் பேசவருபவர்களைக் கடந்து உள்ளே செல்வதை அவர்களே அறிந்திருப்பதில்லை. அவளிடம் பேசிவிட்டு எழுந்து செல்லும்போதுகூட மெய்யாகவே தங்கள் காப்புகளை அவள் கரைத்துவிட்டதை, கடந்து சென்று தங்களை துளியென்றாக்கி அவள் புரிந்துகொண்டதை அவர்கள் உணர்ந்திருக்கமாட்டார்கள். கூர்மிக்கவர்கள்கூட தங்களை அவள் உணர்ந்துகொண்டிருக்கக் கூடுமோ என்று ஐயுற்று அப்படி இருக்காதென்று ஆறுதல் கொண்டு ஊசலாடிக்கொண்டிருப்பார்கள். அவளுடைய தெய்வத்தன்மையே அவ்விலக்கத்தை அளித்தது. தெய்வம் மானுடர்களுடன் அவ்வாறு விளையாடுமா என்ன என்று எண்ணவைத்தது.

அவனுடன் சொல்லாடுபவர்கள் மிக விரைவிலேயே அவன் கடந்து உள்ளே நுழைந்துவிட்டதை அறிவார்கள். அதனால் எச்சரிக்கையும் எரிச்சலும் கொள்வார்கள். அவனை அப்பேச்சின் இறுதிக்குள் எவ்வகையிலாவது புண்படுத்த முயல்வார்கள். அவன் வெறும் ஒரு சூதன்தான் என்பதை அவனிடம் எவ்வண்ணமோ சொல்வார்கள். அவன் சிறுமையோ சீற்றமோ கொள்ளும் ஒன்று அவர்கள் பேச்சில் இயல்பாக எழுந்து வரும். பெரும்பாலும் அது அவனது அன்னையின் காந்தாரநாட்டுப் பிறப்பு குறித்ததாக இருக்கும். அவனுடைய குலத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று அவர்களில் எழும். அது எப்போதும் ஒரு வகை பாராட்டாகவே சொல்லுரு பூண்டிருக்கும்.

அதன் மெய்ப்பொருள் என்ன என்று அவன் அறிவான். “தாங்கள் சூதர்களுக்குரிய நுண்ணுணர்வுடன் இருக்கிறீர்கள், அரசுசூழ்தலில் அது மிகப் பெரிய படைக்கலம்” என்று ஒருவர் சொன்னால் அவன் இளமையில் கடும் சீற்றம் கொண்டு, விரல்கள் நடுங்க, முகம் சிவந்து கொந்தளித்து, பின்னர் தன்னை அடக்கிக்கொள்வான். பின்னர் அந்தப் படைக்கலம் அவனுக்கு பழகியது. அதை அவர்கள் எடுக்கும் தருணத்திற்காக காத்திருப்பான். அவர்கள் எடுத்த உடனே மேலும் பணிவுடன் அப்படைக்கலத்திலிருந்து ஒழிவான். மேலும் சிறிதாகிவிடுவான். உடல் குறுக்கி அவர்கள் முன் அமர்ந்திருப்பான். “வாள்வீச்சுகளிலிருந்து பூச்சிகள் எளிதாக தப்பிவிடுகின்றன” என்று ஒரு சூதர் சொன்னது அதற்குரியதாக அவனுக்கு எப்போதும் தோன்றியிருந்தது.

ஆனால் அவர்கள் எழுந்து செல்வதற்குள் அவர்கள் கரந்து வைத்திருக்கும் ஓர் இடத்தை மெல்ல தொட்டு அனுப்புவான். அத்தொடுகை அவர்களை திடுக்கிடச் செய்யும். பிறர் எவரும் அறியாத ஓரிடத்தில் அவன் எப்படி வந்தான் என்று திகைப்பார்கள். அது தற்செயலாக இருக்குமோ என்று குழம்புவார்கள். விடைபெற்றுச் செல்கையில் நிலையழிந்திருப்பார்கள். செல்லச் செல்ல அவன் எண்ணிச் சூழ்ந்து அங்கு வந்தடைந்தான் என்பதை புரிந்துகொள்வார்கள். அதை அவன் சொன்னதனால் அல்ல, சொல்லும் நிலையிலிருக்கிறான் என்பதனால் மேலும் சீற்றம் கொள்வார்கள். எவ்வகையிலும் அச்சீற்றத்தை அவனிடம் காட்ட முடியாதென்பதனால் சினம் பெருகி உடல் பதற நின்றுவிடுவார்கள். நாட்கணக்கில் அவ்வலியில் துடிப்பார்கள். பின்னர் அவனை பார்க்கையில் அவர்களிடம் இயல்பாக ஒரு அச்சம் திகழும்.

ஈயல்ல குளவி என்று தன்னை அறிவுறுத்துவதே அவனுடைய சொல்சூழ்தலின் மைய இலக்காக இருந்தது. பிற அனைவரிடமும் அவன் தன் கொடுக்குகளில் ஒன்றை வெளியே எடுப்பதுண்டு. யுதிஷ்டிரனிடம் அவர் கற்ற நூல்களில் ஒரு போதும் அவர் காணாத ஒன்றை அவன் கூறுவான். அவர் அனைத்து நூல்களையும் மேலிருந்து அணுகுபவர் என்று அவன் புரிந்துகொண்டிருந்தான். அனைத்து நூல்களையும் அடியிலிருந்து அணுகி புதிய ஒரு நோக்கை அவன் அளிப்பான். ஆகவே யுதிஷ்டிரன் அவனிடம் பேசும்பொழுது எப்பொழுதும் அவர் கற்ற நூல்களில் ஒன்றைச் சொல்லி உடனே அதில் ஐயம் கொண்டு அவன் என்ன சொல்கிறான் என்று கேட்பார். அதனூடாக அவனுக்கான இடத்தை அவரே உருவாக்கி அளிப்பார். அவன் அதனூடாக அவரைக் கடந்து சற்றே அப்பால் சென்று நின்று மேலும் பணிவை நடிப்பான்.

நகுலனிடமும் சகதேவனிடமும் அவன் யுதிஷ்டிரனின் அதே பாவனையை தானும் கைக்கொண்டான். யுதிஷ்டிரனின் உடலுடன் அவனுக்கிருந்த ஒற்றுமையும் பேச்சிலும் நோக்கிலும் இருந்த சாயலும் அவர்களை அறியாமல் விழிபதறச் செய்தன. அவன் இளையோன் எனினும் அவர்கள் அறியாமல் மூத்தோனுக்குரிய சொற்களையும் உடல்மொழியையும் அவனுக்கு அளித்தனர். அம்முரண்பாடால் எப்போதும் அவனிடம் நிலைகுலைந்து இருந்தனர். அர்ஜுனனுடன் அவனுக்கு சொல்லாடலே நிகழ்வதில்லை.

பீமன் அவனை எப்போதும் வெற்று உடலாகவே நடத்தினான். பீமனின் பெரிய கைகள் தன்னை சூழ்ந்துகொள்கையில் அவன் ஆடைகளை களைந்துவிட்டு வெற்றுடலுடன் நிற்கும் சிறுகுழவியென உணர்ந்தான். அத்தருணத்தின் உவகை உடனே திகட்டி தவிப்பென்றாகியது. அவன் அணைப்பில் அவன் நிற்கையில் உளமுருகி உடனே தன்னை உணர்ந்து இயல்பாக விலகி அப்பால் சென்றான். ஆனால் எப்போதும் ஓரவிழியால் அவனை பார்த்துக்கொண்டே இருந்தான். எவ்வகையிலேனும் தனியென, சிறியவன் என, அயலான் என உணர்கையில் பீமனின் வலிய கைகளின் தொடுகையை நாடினான்.

இளைய யாதவரிடமும் திரௌபதியிடமும் மட்டுமே அவன் கொண்ட படைக்கலங்கள் அனைத்தும் பயனிழந்தன. எவ்வகையிலும் கணிக்க முடியாதவர்களாக இருந்தார்கள் அவர்கள். அரிதென நுண்ணென சிடுக்கெனத் தோன்றிய அனைத்தையும் எந்த முயற்சியும் இல்லாமல் இயற்றினார்கள். இயற்றியதறியாமல் அகன்று நின்றனர். தன் முன் இருப்பவர்களை மிகச் சிறியவர்களாக மாற்றி மலையென ஓங்கினர். தேவையான இடங்களில் கூழாங்கல்லென மாறி தங்களை விளையாடக் கொடுத்தனர்.

பின்னர் அவன் அறிந்துகொண்டான், அவர்கள் இருவரிடம் மட்டும் அனைத்துப் படைக்கலங்களையும் கீழே வைத்து எந்தக் காப்புமின்றி நிற்பதே உகந்ததென்று. தன் ஐயங்களை, குழப்பங்களை, நோக்கங்களை அவன் எடுத்த எடுப்பிலேயே அவர்கள் முன் திறந்து வைத்தான். தனக்கு, தன் தரப்புக்கு எது நன்றோ அதை அவர்களே உவந்து செய்யவேண்டும் எனும் கோரிக்கையை அவர்கள் முன் வைத்தான். அதற்கான சொற்களை மட்டுமே சூழ்ந்தான். அவர்கள் நலம் சூழ்வதன்றி பிறிதொன்று கருதமாட்டார்கள் என்று அவன் ஆழம் உறுதியாக நம்பியது. ஆகவே அவர்கள் முன் அவ்வாறு சென்று முழுக்க திறந்துகொள்வது ஒரு விடுதலை என்று தோன்றியது. அவர்கள் முன்னிருந்து எழுகையில் நெடுநேரம் அருவியில் குளித்து மீண்டதுபோல் நிறைவும் ஓய்வும் தோன்றியது.

 

யுயுத்ஸு தன் தூதை முறையான சொற்களில் முதலில் சொன்னான். அதன்பின் யுதிஷ்டிரன் தன்னிடம் சொன்னவற்றை எல்லாம் ஒரு சொல் எஞ்சாமல் உரைத்தான். சுரேசரின் ஆணையையும் கூறி முடித்தான். திரௌபதி அவன் சொற்களைக் கேட்டபடி விழிதாழ்த்தி அமர்ந்திருக்க அவன் அவள் மேலும் எதிர்பார்ப்பதென்ன என்று எண்ணிக்கொண்டு அவள் கால்களை நோக்கி இருந்தான். அவள் மெல்ல அசைந்தமர்ந்தாள். “நான் இங்கே தங்கியிருப்பதாக முடிவேதும் எடுத்து இங்கே வரவில்லை” என்று திரௌபதி மெல்லிய குரலில் சொன்னாள். “ஆனால் இங்கு வந்தபின் இங்கே அமைந்துவிட்டேன். எதன்பொருட்டும் இங்கிருந்து கிளம்பவேண்டும் என்று தோன்றவில்லை” என்றாள்.

“அரசி, தாங்கள் இந்திரப்பிரஸ்தத்தை விட்டு கிளம்ப மறுப்பீர்கள் என்று அரசர் ஐயம் கொண்டிருக்கிறார். அவர் அஸ்தினபுரியின் அரசரென மணிமுடி சூடிக்கொள்ளவே விழைகிறார். இந்திரப்பிரஸ்தத்தில் அவருக்கு சிறு ஒவ்வாமை உள்ளது. அது தன் நகர் அல்ல என்று எண்ணுகிறார். தாங்கள் அஸ்தினபுரிக்கு வந்து அவருடன் அமர்ந்து மணிமுடி சூடிக்கொள்ள வேண்டும் என அவர் விழைவது அதனால்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அச்சடங்கு நிகழுமெனில் அது தாங்கள் முடிசூடியது போலாகும். இது தங்கள் நகர், இங்கு முன்பு நடந்த ராஜசூயத்திலும் மும்முடி சூடியவர் நீங்கள். அஸ்தினபுரி குருகுலத்திற்கு உரியது. யுதிஷ்டிரனின் முன்னோர்களின் மணிமுடி அங்குள்ளது. அவர் சூடிக்கொள்ள விரும்புவது அதைத்தான்.”

“உண்மையைச் சொல்வதென்றால் நெடுநாட்களாக அவர் தன்னுள் கொண்டிருக்கும் கனவு அது. அக்கனவு தன்னுள்ளிருப்பதை அவர் அறிந்திருந்தார். அவ்வாறல்ல என்று பிறரை நம்பவைக்க முயன்றுகொண்டிருந்தார். தன்னை நோக்கி அவ்வாறல்ல என்று பலமுறை கூறினார். இப்புவியில் அவர் முதன்மையெனக் கருதுவது அதுதான். தெய்வங்களைவிட, அறத்தைவிட, உடன்பிறந்தாரைவிட, தங்களைவிட அவருக்கு அம்மணிமுடியே முதன்மை பொருட்டு. அதை அவர் சூடுகையில் நீங்கள் அங்கு இருக்க வேண்டுமென்று அவர் விழைகிறார். அதுவே அவருடைய முழு வெற்றி. அவருடைய பிறவி நிறைவுறுகை” என்றான் யுயுத்ஸு.

“அதற்குப் பின்னால் அரசியல் கணிப்புகள் பல உண்டு என்பதை தாங்கள் அறிவீர்கள். தாங்கள் வந்து அவருடன் அமர்ந்து மணிமுடி சூடவில்லையெனில் அவரது குலம் ஒருபடி குறைவானது என்பதனால் இன்னும்கூட ஷத்ரியர்களின் முழுதேற்பை அவருடைய அரசுநிலை பெறாமல் போகலாம். அவர் போர்வெற்றியினால் மட்டுமே ஷத்ரியர்களின் முழுதேற்பை அடைய முடியாதென்பதை இதற்குள் புரிந்துகொண்டிருக்கிறார். தோற்ற பின்னரே ஷத்ரியர்களின் குலத்தன்னுணர்வு சீண்டப்பட்டுள்ளது என்பது இயல்பானது. யாதவக்குருதி கொண்டோரால் தாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை அவர்கள் சொல்லிக்கொள்ள விழையமாட்டார்கள். ஆகவே அதை மறுப்பார்கள். நூல்களில் மழுப்புவார்கள். களத்தில் வென்று நிகர்செய்யும் கனவை வளர்த்துக்கொள்வார்கள். ஆகவே ஒருபோதும் பகை அணையாது.”

“மணிமுடி சூடுகையில் தாங்கள் அருகிருந்தால் ஷத்ரியகுலத்துப் பேரரசியால் தோற்கடிக்கப்பட்டோம் என்று அவர்கள் எண்ணிக்கொள்ள முடியும். அவர்கள் விழைவது அத்தகைய ஓர் அடையாளத்தை மட்டும்தான். அதன்பின் அவர்கள் பகைமறக்கக்கூடும். சிதைந்த நாடுகளை மீட்டுக் கட்டியெழுப்ப முடியும். அரசி, தாங்கள் முடிசூடி அதை பாரதவர்ஷத்து அரசர்கள் முழுதேற்பார்கள் என்றால் ஒரு தலைமுறைக் காலத்திற்கேனும் பாரதவர்ஷத்தில் போர் இல்லாமலாகும். குடிகள் செழிப்பார்கள். நகர்கள் மீண்டெழும். வேள்வியும் அறமும் மெய்மையும் நிலைகொள்ளும். தாங்கள் உளம்கனியக் காத்து நின்றிருக்கின்றன கோடி உயிர்கள்.”

“அதன் பொருட்டே தங்களை அழைக்கிறார் யுதிஷ்டிரன்” என்று யுயுத்ஸு தொடர்ந்தான். “ஆகவேதான் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார் இங்கு அமைச்சரை அனுப்பியிருக்கலாம். தங்கள் முன் மேலும் சிறப்பாக அவர் சொற்களை அவர்களால் முன்வைக்க முடிந்திருக்கும். ஆனால் தங்கள் முன் அரசுசூழும் ஆற்றல் கொண்டவர்கள் எவரும் இல்லை. ஆனால் நான் அவருடைய உடலுருவுடன் அணுக்கம் கொண்டவன். என்மேல் நீங்கள் மைந்தன் எனக் கொண்டுள்ள கனிவை அவர் அறிவார். ஆகவே என்னை அனுப்பியிருக்கிறார். என் சொல் ஆணையென எழாது, அடிபணிந்த மன்றாட்டென்றே ஒலிக்கும் என அவர் அறிந்திருக்கிறார்.”

“ஆகவே இந்தச் சொற்களுக்கு உங்கள் உளமிரங்கவேண்டும். அஸ்தினபுரியின் அரசரும் என் தமையனுமாகிய யுதிஷ்டிரன் தாங்கள் இந்திரப்பிரஸ்தத்தைவிட்டு அஸ்தினபுரிக்கு வந்து அவர் ராஜசூயத்தில் அமர்ந்து மும்முடி சூட்டிக்கொள்ளுகையில் அருகிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை ஏற்றருள்க!” என்றான் யுயுத்ஸு. திரௌபதி தலையசைத்தாள். அதன் பொருள் அவனுக்கு புரியவில்லை. அவன் மேலும் தழைந்து “தாங்கள் எண்ணுவதென்ன என்பதை நான் நன்கு அறிவேன். ஏனென்றால் அன்னையை மகவென உங்களை அறிந்துகொண்டிருப்பவன் நான். மிகைச்சொல் என்றால் பொறுத்தருள வேண்டும்” என்றான். அவள் விழிதூக்கி நோக்கினாள்.

“அஸ்தினபுரியின் ஆட்சியில் இந்திரப்பிரஸ்தம் கைவிடப்படும் என்று உணர்ந்திருக்கிறீர்கள். அது மெய். ஒருபோதும் இந்திரப்பிரஸ்தம் தழைத்தோங்க யுதிஷ்டிரன் விரும்பமாட்டார். இந்திரப்பிரஸ்தம் என்னும் சொல்லே பாரதவர்ஷத்தின் நாவிலிருந்து அகலுமெனில் அவர் நிறைவடையவும் கூடும். முன்பு அங்கு முடிசூடிக்கொண்ட போதே அவரிடம் அந்த ஒவ்வாமை இருந்ததை நான் இப்போது நினைவுகூர்கிறேன். இப்போது சூதர்கள் பாடும் எப்பாடலிலும் அஸ்தினபுரியின் அரசன் என்ற சொல்லையே அவர் விரும்புகிறார். ஒன்றை வெறுப்பவர்கள் அதை விலகுவார்கள். ஒன்றிலிருந்து ஒவ்வாமை கொண்டவர்கள் அதை பலமடங்கு விலக்குவார்கள். ஒன்றை அஞ்சுபவர்கள் அதை பற்பல மடங்கு விலக்குவார்கள்.”

“மூத்தவர் யுதிஷ்டிரன் இந்திரப்பிரஸ்தத்தை அவர் கைவிடுவதைப்பற்றிக்கூட ஒரு பேச்சு எழுவதை விரும்பமாட்டார். ஆனால் அதை அவர் உளம்கொள்ளவும் மாட்டார். இந்நகரம் இப்பொழுதே புழங்குவாரற்ற பெருவெளியாக உள்ளது. இங்கே ஒரு துணை தலைநகர் அமையும். அவ்வப்போது அவர் இங்கு வந்து தங்கவும் கூடும். ஒருவேளை முடிசூட்டிக்கொண்டபின் தாங்கள் இங்கு வந்து தனித்து தங்கலாம். தங்களின் அவை இங்கு கூடவும் கூடும். ஆனால் அஸ்தினபுரியில் அவர் மணிமுடி சூட்டிக்கொண்டால், உடன் நீங்கள் அங்கே அமர்ந்தால் இந்திரப்பிரஸ்தம் கைவிடப்படும், மறக்கப்படும். அதை எவருமே மாற்றமுடியாது. அதுவே ஊழின் வழி” என்றான் யுயுத்ஸு.

“ஏனெனில் குருக்ஷேத்ரப் பெரும்போர் அஸ்தினபுரிக்காகவே நிகழ்ந்ததென்பதை சூதர்கள் பாடிப் பாடி நிறுவிவிட்டார்கள். பாரதவர்ஷம் எங்கும் இன்று திகழும் பெயர் அஸ்தினபுரியே. இங்குள்ள கோட்டைகளையும் பெருமாடங்களையும்விட, செல்வக்குவைகளைவிட மதிப்பு மிக்கது அஸ்தினபுரிக்கு இருக்கும் தொன்மை. அச்சொல் எழுப்பும் கனவு. ஆகவே இந்நகர் குறித்த தங்கள் ஐயங்களும் அச்சங்களும் முற்றிலும் உண்மை. அதன் பொருட்டு நீங்கள் தயங்குவது சரியானது.”

திரௌபதி அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். யுயுத்ஸு தொடர்ந்தான். “தாங்கள் பாரதவர்ஷத்திலுள்ள பல்லாயிரம் கோடி மக்களின் கனவுகளுக்கு கடன்பட்டவர். குருக்ஷேத்ரத்தில் உங்கள் பொருட்டு உயிர்துறந்த படைவீரர்களின் குருதிக்குக் கடன்பட்டவர் என்று அரசர் தங்களிடம் கூறும்படி என்னிடம் சொன்னார். தாங்கள் அஸ்தினபுரியில் மணிமுடி சூடி அமரவேண்டும் என்பதன் பொருட்டே மக்கள் உயிர்துறந்தார்கள் என்றார். நீங்கள் மக்களின் கனவுகளால் சூழப்பட்டிருக்கிறீர்கள் என்றே நானும் எண்ணுகிறேன். அரசகுடியினர் அக்கனவுகளை தவிர்க்கவே முடியாது.”

“ஆனால் இச்சொற்கள் தங்களை இழுத்து வருவன என்று அரசருக்கே நம்பிக்கை இல்லை. ஏனெனில் எதனுடனும் எந்நிலையிலும் கட்டுப்பட்டவராக தாங்கள் தங்களை உணர்வதில்லை. ஆகவே பிறிதொன்று சொன்னார். அஸ்தினபுரியின் அவையில்தான் தாங்கள் சிறுமை செய்யப்பட்டீர்கள். அங்குதான் உங்கள் வஞ்சினம் உரைக்கப்பட்டது. ஆகவே அங்கு ராஜசூயம் நிகழ்ந்து அதே அவையில் நீங்கள் முடிசூடி அமர்கையிலேயே அவ்வஞ்சம் முழுமை பெறுகிறது. அவ்வஞ்சம் உங்களுக்குள் இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாரதவர்ஷத்தின் பலகோடிப் பெண்டிர் அதை தங்கள் வஞ்சம் என ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். வழிவழியாக பிறந்து எழும் பெண்கள் அதையே முழுச் சீற்றதுடன் வந்தடைவார்கள். அவர்கள் அனைவருக்குமான மறுமொழியாக தாங்கள் அங்கு அமரவேண்டும். அக்கதை அவ்வண்ணமே நிறைவடையவேண்டும்.”

“அதை என்னிடம் சொல்லும்போது அதுவும் தங்களை அங்கு அழைத்து வராமல் போய்விடுமோ என்ற அரசர் அஞ்சினார் போலும். ஆகவே அறுதியாக ஒரு கணவராக, தங்களுக்காக இதுகாறும் வாழ்ந்தவராக நின்று எளிய மன்றாட்டாகவும் இதை முன் வைத்தார். இறுதியாக தாங்கள் முடிவெடுக்கலாம்” என்றான் யுயுத்ஸு. “இவை அனைத்துமே மெய்யானவை என்றே நான் உணர்கிறேன். தாங்கள் வந்தாகவேண்டும் என நானும் என் ஆழத்தில் உணர்வதனாலேயே இங்கே வந்தேன். இது என் தனிப்பட்ட மன்றாட்டும் கூட.”

அவள் கலைந்து மூச்செறிந்து “இந்நகரை பார்த்தாய் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றான் யுயுத்ஸு. “இந்நகரிலும் மக்கள் வந்து குழுமிக்கொண்டிருக்கிறார்கள். இந்நகரில் அவர்கள் நிலைபெறுவார்கள். இந்நகர் இவர்களால் நெடுங்காலம் வாழும்” என்றாள். “ஆனால் இன்று இதற்கு இருக்கும் முழுமையும் முதன்மையும் நீடிக்காது” என்றான் யுயுத்ஸு. “அதை நானும் அறிவேன். நான் இங்கிருந்து அதை சிறப்புறச் செய்ய முடியும். இங்கு வரும் குடிகள் எனக்கு போதும். இவர்களே என்னை நம்பி இங்கே வந்தவர்கள். என் கடன் முதன்மையாக இவர்களிடமே. இங்கு நான் முடிசூடி அமர்ந்தால் அனைத்துக்கும் நிறைவென ஆகும். பாரதவர்ஷத்தின் தலைநகராக இந்நகரை நிலைநிறுத்துவது எனக்கு மிக எளிதே.”

“ஆம், தங்களால் இயலும்” என்று யுயுத்ஸு சொன்னான். “எனில் சொல், எதன் பொருட்டு நான் அஸ்தினபுரிக்கு வந்து அவருடன் அமர்ந்திருக்க வேண்டும்? இந்நகரை அழிய விடுவதற்கான முடிவை நான் ஏன் எடுக்க வேண்டும்? என்னை நிறைவுறச் செய்யும் ஒன்றை நீ சொல்வாயெனில் நான் உடன்படுகிறேன்” என்றாள். யுயுத்ஸு அவளை நேர்விழி கொண்டு பார்த்து “பேரரசி, தாங்கள் இந்நகரை அஸ்தினபுரிக்கு மேல் பாரதவர்ஷத்தின் தலைநகர்களுக்கு நிகராக நிலைநிறுத்த முடியும். ஆனால் அதை தாங்கள் செய்யமாட்டீர்கள்” என்றான். அவள் விழித்து நோக்கி அமர்ந்திருந்தாள்.

“இந்நகரைக் கட்டி எழுப்புகையில் மாகிஷ்மதியையும் மகேந்திரபுரியையும் உருவாக்கிய அசுரப்பேரரசர்களின் உளநிலையில் இருந்தீர்கள். இங்கு ஒவ்வொன்றும் பேருருக்கொண்டது தங்கள் ஆணவத்தால். அந்த ஆணவம் இன்று உங்களிடம் இல்லை. ஆகவே இதை உங்களால் நிலைநிறுத்த முடியாது. இடையாடையைக் கழற்றி வீசி நீரில் பாயும் உளநிலையுடன் இந்நகரை நீங்கள் அகற்றி விலகிச்செல்லக்கூடும். இந்நகர் மேல் மெய்யாகவே உங்களுக்கு பற்றில்லை. ஏனெனில் இவ்வுலகில் எதன் மீதும் இன்று உங்களுக்கு பற்றில்லை. பற்றற்றவர்கள் பேரரசர்களாக முடியாது.”

திடுக்கிட்டவள்போல் அவள் அவனை நோக்கி அமர்ந்திருந்தாள். “நீங்கள் இன்னும் நெடுங்காலம் இங்கு திகழமுடியாது. கோல் கொண்டு எழுவது மட்டும் அல்ல, குடி கொண்டு வாழ்வதும்கூட தங்களால் இயலாது. கனி பழுத்த பின் மரத்தை அது கைவிடுகிறது. நீங்கள் உலகிலிருந்து அகன்றுவிட்டீர்கள். இக்குடிகளுக்கு, பாரதவர்ஷத்தின் மக்களுக்கு, மூதாதையருக்கு, பிறப்போருக்கு என எப்பொறுப்பையும் நீங்கள் இனி ஏற்க மாட்டீர்கள்” என்று யுயுத்ஸு சொன்னான்.

“ஆனால் இறுதியாக எஞ்சும் கைப்பொருளை கனிந்து எவருக்கேனும் அளிக்க முடியும். பெறும் தகுதி கொண்டவர்களில் முதல்வர் அங்கே துவாரகையில் பிறந்திருக்கும் இளவரசர். ஒரு பூனைக்குட்டியளவுக்கே இருக்கிறார். அவர் உயிர்கொண்டெழுவது பீதர்நாட்டு மருத்துவர்களிடம், ஊழிடம் உள்ளது. அவர் எழுந்து வரவேண்டுமென்றால் இங்கிருந்து பெரும் அறைகூவல் ஒன்று செல்லவேண்டும். அதைவிட பெருங்கொடை ஒன்று அளிக்கப்படவேண்டும். அதை அச்சிற்றுடலில் குடியேறியிருக்கும் ஆத்மன் அறியவேண்டும். நீங்கள் மும்முடிசூடி அஸ்தினபுரியில் அமர்ந்தால் அவர் ஷத்ரியர்களால் முழுதேற்கப்பட்ட பேரரசொன்றினை அடைவார். ஐயமின்றி ஷத்ரியர் என ஏற்கப்படுவார்” என்றான் யுயுத்ஸு. பின் கைகூப்பியபடி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தான்.

திரௌபதி பெருமூச்சுவிட்டாள். பின்னர் மெல்ல எழுந்து தன் மேலாடையை சீரமைத்தாள். தணிந்த குரலில் “சென்று சொல்க அரசரிடம்! நான் அஸ்தினபுரிக்கு வருகிறேன்” என்றாள்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35

பகுதி நான்கு : அன்னையெழுகை – 7

இந்திரப்பிரஸ்தத்தில் தன் அரண்மனை அறையில் யுயுத்ஸு ஆடியின் முன் நின்று ஆடைகளை சீர்படுத்திக்கொண்டான். அவனே தன் ஆடைகளை அணிந்திருந்தான். பிறர் உதவியின்றி அணியாடைகளை அணிவது அவனுக்கு பழகியிருக்கவில்லை. அஸ்தினபுரியில் அதற்கென்றே அணிஏவலர்கள் குடிமரபாக பயின்றுவந்திருந்தார்கள். அவர்களின் கலை நூலாக யாக்கப்பட்டு மரபாக கற்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் அதற்கான நெறிகள் இருந்தன. நாகபட கணையாழியை நீள்விரலில் அணிவித்தமைக்காகவே ஓர் அணியேவலர் சிறைப்படுத்தப்பட்டார் என்னும் செய்தியை அவன் இளமையில் கேட்டிருந்தான்.

குடித்தலைவர்களுக்கும் வணிகர்களுக்கும் அணியேவலர் இருந்தனர். அரசகுடியினருக்கு அணியேவல் செய்வது அவற்றில் முதிர்நிலை. அணியேவலர்களிலேயே ஐந்து பிரிவினர் இருந்தனர். ஆடைகளையும் அணிகளையும் தேர்ந்து அணிவிப்பவர்கள் அவர்களில் கடைநிலையினர். நீராட்டறை அணியேவலர் மேலும் உயர்ந்தவர்கள். ஒப்பனையாளர்கள் மேலும் தேர்ச்சி தேவையானவர்கள். அவைக்கும் விழவுகளுக்கும் நகர்வலத்திற்கும் உரிய அணிகளை அணிவிப்பவர்கள் பன்னிரு ஆண்டுகள் பயின்று பன்னிரு ஆண்டுகள் பணியாற்றி தேர்ச்சி பெற்றவர்கள். அருமணிகள் தேர்பவர்களே அவர்களின் முதன்மையானவர்கள். ஆடை தைப்பவர்கள், பொற்கொல்லர்கள், நறுஞ்சுண்ணமும் சந்தனமும் இடிப்பவர்கள், தூபக்காவலர்கள் முற்றிலும் வேறு வகுப்பினர். அவர்களை அணியேவலர் தங்களவர் என்பதில்லை. அணிமருத்துவம் செய்பவர்கள் மருத்துவர்களில் ஒரு துணைப்பிரிவினர்.

அவர்களுக்கிடையேயான உறவு சிக்கலானது. எப்போதும் இணைந்தே பணியாற்றவேண்டியவர்கள் எப்போதும் போட்டியிலேயே இருப்பார்கள். அந்தப் போட்டியே அவர்களின் திறனையும் தனித்தன்மையையும் நிலைநிறுத்தி தொடர்ந்து மேம்படுத்துகிறது என்று அவனுக்கு சொல்லப்பட்டதுண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை வேறுபடுத்திக்காட்ட அடையாளங்களை அணிந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக அவர்கள் அனைவரும் ஒன்றே என்று காட்டும் அடையாளங்களை கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரிலுமே சற்று பெண்மையின் சாயல் இருந்தது.

அவன் அப்பெண்மையின் சாயல் எங்கிருந்து வருவது என்று எண்ணிக்கொண்டான். அணிகளே பெண்மை கொண்டவை போலும். நெளிபவை, குழைபவை, சிரிப்பவை, ஒளிர்பவை. எல்லா நகையிலும் சற்றே நாணம் கலந்திருக்கிறது. எல்லா ஆடைகளிலும் சற்றே சஞ்சலம் அமைந்திருக்கிறது. அணிகொள்கையில் ஆண்கள் தங்கள் கடுமையை, திமிர்ப்பை, மிதப்பை இழந்து மென்மைகொள்கிறார்கள். அணிகொண்ட யானை ஓர் அருநகை என ஆகிவிடுகிறது. அணிகொண்டு அரியணை அமரும் அரசன் மேலும் அணுக்கமானவனாக, கனிந்தவனாக தோன்றுகிறான். அணிநிறைந்த பெண் அன்னையென்றே தோன்றுகிறாள். முழுதணிக்கோலத்தில் எவரும் கூச்சலிடுவதில்லை. அப்போது எழும் ஆணைகள்கூட முழங்குவதில்லை.

ஆடி முன் அமர்ந்து அவன் தன்னை நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொன்றும் முறையாக அமைந்திருக்கிறதா என்பதை திரும்பத் திரும்ப பார்த்தான். கணையாழிகள் இடம் மாறி இருக்கின்றனவா? ஆரங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றென அமைந்துள்ளனவா? காதில் ஒரு குழை சற்று பெரிதாக இருக்கிறதா? இடம் மாறிவிட்டால் கணையாழிகள் கழன்றுவரும். விரல்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளும். அடுக்கமையா ஆரங்கள் பின்னிக்கொண்டு உடலை உறுத்தும். ஒருமுறை புரண்டுவிட்டால் அவை புரண்டபடியே இருக்கும். அடுக்கு குலைந்த ஆரங்கள் அழகை இழந்துவிடுகின்றன. வெறும் மஞ்சள் கொத்தென மணித்தொகையென ஆகிவிடுகின்றன. அவற்றில் ஒவ்வொன்றிலும் இருக்கும் செதுக்கும் நுணுக்கமும் பொருளிழந்து ஒத்திசையாத குவியல்களாக தோன்றுகின்றன.

அவனுக்காக அறைவாயிலில் ஏவற்பெண்டு காத்து நின்றிருந்தாள். அவள் எளிய சேடியாக இருந்து காவலுக்கு வந்தவள். கண்முன் அவ்வண்ணம் வந்து காத்திருக்கக்கூடாது என அறியாதவள். அவன் ஆடியிலே அவள் நிற்பதை பார்த்தபின் எழுந்துகொண்டு “செல்வோம்” என்றான். தலைவணங்கி அவள் திரும்பிய பின்னர் மீண்டும் ஆடியைப் பார்த்து மேலாடையின் மடிப்புகளை சீரமைத்தான். அவள் மீண்டும் நின்று திரும்பிப்பார்க்க “செல்க!” என்று கையசைத்தபின் குறடுகள் ஒலிக்க அவளுக்குப் பின்னால் நடந்தான். அவனுடைய உருவம் இடைநாழியிலிருந்த மென்பரப்புகளில் தோன்றி மறைந்தது. கிடையான எல்லா பரப்புகளிலும் அவன் தூசுப்படலத்தை பார்த்தான். சில திரைச்சீலைகள் கதவில் சிக்கி படபடத்தன. சில கிழிந்திருந்தன.

அஸ்தினபுரியின் அரண்மனையைவிட பலமடங்கு அகன்றும் உயரமாகவும் இருந்த இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனை வெட்டவெளியில் நிற்கும் உணர்வை அளித்தபடியே இருந்தது. அதன் சுவர்களும் தூண்களும் அவற்றின் பேரளவினாலேயே அங்கிலாதவைபோல் விழிகளிலிருந்து அகன்றுவிட்டிருந்தன. வந்தது முதல் அத்தனை பெரிய அரண்மனையின் அறைகளில் தடுமாறி சுவர்களிலும் தூண்களிலும் அவன் முட்டிக்கொண்டிருந்தான். சாளரக்கதவுகளை இழுத்து மூடும்பொருட்டு அமைக்கப்பட்ட பித்தளை கைப்பிடிகளை அவனால் சுழற்ற முடியவில்லை. அவை நெடுங்காலமாக இறுகியிருந்தன. ஆகவே அறைக்குள் யமுனையிலிருந்து வந்த காற்று பொங்கிப் பெருகி சுழன்று அனைத்து திரைச்சீலைகளையும் அலைகொள்ள வைத்தது. அவன் அரைத்துயிலில் பாய்கள் புடைத்து விம்மும் படகொன்றில் படுத்திருப்பதாக உணர்ந்தான்.

அவனுடைய அறை அவன் வந்து தங்கும் பொருட்டு விரைவாக தூய்மை செய்யப்பட்டிருந்தது. ஆயினும் அதன் சுவர் மடிப்புகளிலும் பொருட்களுக்கு அடியிலும் புழுதிப் படிவுகள் இருந்தன. அதை தூய்மை செய்தவர்கள் முதியவர்களாக இருக்கலாம். முதியவர்கள் எங்கும் முட்டிக்கொள்ளாமலிருக்க எப்போதும் நடுவிலேயே நடமாடுகிறார்கள். மெல்லமெல்ல மூலைகள் அவர்களின் நோக்கிலிருந்தே மறைந்துவிடுகின்றன. அவன் அறையின் ஒரு மூலையில் அவ்வறையை தூய்மை செய்ய பயன்படுத்தப்பட்ட துணிச்சுருள் கிடந்தது. அவன் அறையிலிருந்த பெரிய ஆடி துடைக்கப்பட்டிருந்தாலும் அதன் மேல் பகுதியில் புழுதி ஈரத்துடன் அலையாக படிந்திருந்தது. மஞ்சத்தில் விரிக்கப்பட்டிருந்த மரவுரிகளும் போர்வைகளும் தலையணைகள் அனைத்துமே புதியவை. ஆனால் அனைத்திலும் புழுதி மணம் இருந்தது. முதியவர்களின் கைகளில் நடுக்கை அத்தனை பணிகளின் பதிவுகளிலும் காணமுடிந்தது.

முந்தைய நாள் இரவு அங்கு வந்து சேர்ந்தபோது அந்த அரண்மனையின் அகன்ற தோற்றம் அச்சத்தைதான் அளித்தது. மீண்டும் அவன் கதைகளில் படித்திருந்த அசுரப்பெரு நகரங்கள் நினைவில் எழுந்தன. அச்சமே கோட்டைகளாகின்றன, ஆணவமே அரண்மனைகள். அசுரர்கள் தங்கள் கோட்டைகளையும் அரண்மனைகளையும் மேலும் மேலுமென எழுப்புபவர்கள். மலைகளைப்போல, முகில் நகரங்களைப்போல. முந்தையோர் அவ்வண்ணம் பேருருவங்களை எழுப்பவில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உரிய அளவில்தான் கட்டடங்கள் கட்டப்பட வேண்டுமென்று அவர்கள் நம்பினர். ஆமைக்கு ஓடென அமைக கோட்டைகள். நத்தைக்கு கூடென அமைக இல்லங்கள் என்பது பாரத்வாஜ நீதி. அஸ்தினபுரி அவ்வுணர்வால் கட்டப்பட்டது. அதைவிட தொல்நகரங்கள் அதைவிடவும் சிறியவை.

அச்சமோ ஆணவமோ மிகையாகி அதன் பொருட்டு கட்டப்பட்ட எந்த மாளிகையையும் தெய்வங்கள் வாழ விடுவதில்லை என்று அவன் கேட்டிருந்தான். தேவையான அளவிற்கு மேல் கட்டப்படுமென்றால் தங்களுக்குரியவை அவை என தெய்வங்கள் எண்ணும். அவை அங்கே குடியேறத் தொடங்கும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் உரியவை, ஒவ்வொரு வடிவத்திற்கும் உரியவை. தெய்வங்கள் வாழுமிடத்தில் மானுடர் இயல்பாக வாழமுடியாது. ஒளிரும் நீர்ப்பரப்புகளில், மலர்சூழ் காடுகளில், மலையுச்சிகளில், விளைநிலங்களில் தெய்வங்கள் உறைகின்றன. குடிமானுடர் அங்கே சென்று மீளலாம். அங்கே குடியிருக்க முடியாது. அங்கே தெய்வங்களுக்குரிய உணர்வுகளே எழமுடியும். விழைவுசினம்பகை என உள்ளம் பெருக முடியாது. அவ்வுணர்வுகள் இல்லாமல் உலகியலில் அமைய முடியாது. அவை தெய்வங்களுக்குரிய இடங்கள். காமமும், சினமும், பகையும் நுரைக்கும் இல்லங்களே மானுடர்க்குரியவை.

ஆகவே மானுடர் வாழுமிடத்தில் இயல்பாக உறைபவை இருள்தெய்வங்களே. மூத்தவளே மானுடருக்கு உறுத்தாத தோழி. இல்லம் எத்தனை தூய்மைப்படுத்தப்பட்டாலும் எத்தனை மங்கலம் கொண்டாலும் துளியாகவேனும் அவள் இருப்பாள். மானுடரின் உடலில் நகமாக, முடியாக, எச்சிலாக திகழ்பவள். வசைச்சொல்லாக துயரமுனகலாக வெளிப்படுபவள். பகலில் நிழலாக, இரவில் இருளாக நிறைபவள். காற்றில் தூசியாக எழுந்து பரவிக்கொண்டே இருப்பவள். இல்லங்களில் மூத்தவள் சற்றேனும் இருப்பதே நன்று. மூத்தவள் இருக்கும் இடத்தில் இளையவளும் குடிகொள்வாள். அவர்கள் ஒருவரை ஒருவர் நிறைப்பவர்கள். மூத்தவள் சற்றுமில்லாத இடத்தில் இளையவள் நீங்குவாள். அங்கே தெய்வங்கள் குடியேறிவிடுகின்றன. தெய்வங்கள் நிறைவடிவுகள். நாழிக்குள் நாழி நுழைவதில்லை, முழுமை முழுமையை உட்கொள்வதில்லை. எனவே அவர்களுக்கிடையே பூசல் உருவாகத் தொடங்கும். அதன் பின் அங்கு மனிதர்கள் வாழ இயலாது.

இந்திரப்பிரஸ்தம் அதன் முழுமைத்தருணத்தில் இருளற்றதாக இருந்திருக்கும் என அவன் எண்ணிக்கொண்டான். ஒரு சிறு கலைக்குறைபாடுகூட இல்லாதது. ஒரு மூலையில்கூட இருள்தெய்வங்கள் குடிகொள்ளாதது. ஆகவே தன் முழுமையை அடைந்த கணம் முதல் அது மெல்ல சரியத்தொடங்கியது. பேருருவங்கள் சரிவதை நாம் அறியமுடியாது, அவை நம் கண்களுக்கு அப்பாற்பட்டவை. உருள்பொட்டல் நிகழ்வது வரை மலை நிலையாக இருக்கிறதென்றே நம்புவோம். இந்நகரம் இதில் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அயன்மையையே அளித்திருக்கும். இதற்குள் அவர்கள் தங்கள் சிறுவளைகளை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்திருப்பார்கள். இதை எவரும் தங்களுடையதென எண்ணவில்லை. ஒவ்வொருவரும் இதிலிருந்து தப்பியோடவே எண்ணினார்கள்.

ஒருபோதும் இந்த அரண்மனை இந்தப் புதைவிலிருந்து மீளப்போவதில்லை என்று அவனுக்குத் தோன்றியது. இது ஒரு மாய நகரம். விந்தையான ஆற்றல் ஒன்றை பெற்ற ஒருவர் தன் கனவிலிருக்கும் ஒன்றை நனவாக மாற்றிக்கொண்டது. ஆகவே குறுகிய காலம் மட்டுமே இப்புவியில் இது இருக்கும். இச்சுவர்கள் ஒளிப்படலமென மறையும். இத்தூண்கள் நோக்கியிருக்கவே இல்லாமலாகும். இந்நகரம் நுரைக்குமிழிகள் வெடித்து மறைவதுபோல் விழியிலிருந்து அகலும். இங்கு எஞ்சியிருக்கப்போவது இந்நகரின் உச்சியிலிருக்கும் இந்திரனின் ஆலயம் மட்டுமே. ஏனெனில் ஆலயத்தை தெய்வங்கள் கைவிடுவதில்லை.

அந்நகரை எழுப்புவதற்கான பெரும் உழைப்பை, அதை அமைத்த சிற்பிகளின் தவத்தை அவன் எண்ணிக்கொண்டான். அது ஒரு பெரும்பழியின் கல்வடிவத் தோற்றமா என்ன? அவள் கனவில் முதிரா இளமையில் அது முளைத்தது. இளையோர் கனவில்தான் அத்தகைய பேருருக்கள் எழுகின்றன. மதலைகள் தெய்வங்கள், சிறுவர்களாகும்போது அவர்கள் அசுரர்கள் என்பது தொல்லுரை. இந்திரப்பிரஸ்தம் எழுப்பப்பட்டிருக்கவில்லையெனில் ஒருவேளை குருக்ஷேத்ரப் போர் நிகழாமலிருந்திருக்கக்கூடும். அந்நகரம் ஒவ்வொருவர் நோக்கையும் கவர்ந்தது. அமைதியிழக்கச் செய்தது. அறைகூவும்பொருட்டு சுருட்டித் தூக்கப்பட்ட கைச்சுருள் என அது பாரதவர்ஷத்தில் எழுந்தது. ஒவ்வொரு அரசரும் அதை தங்களுக்கு எதிரான போர்விளி என எடுத்துக்கொண்டனர்.

இந்திரப்பிரஸ்தமே அத்தனை ஷத்ரியர்களும் துரியோதனனைச் சென்றுசேரச் செய்தது. அவர்கள் சூழ்ந்தமையால் அவன் ஆணவமும் நம்பிக்கையும் கொண்டான். தெய்வமென எழுந்துவந்த இளைய யாதவரின் பேருருவைக் காணும் கண்ணில்லாதவனானான். இந்நகரை உருவாக்கும் எண்ணம் எப்போது அவளில் எழுந்ததோ அப்போதே தெய்வங்கள் முடிவெடுத்துவிட்டன இம்மண்ணில் ஒரு மாபெரும் போர் நிகழவேண்டும் என்று. அவளோ இந்நகரை தன் கருவறை வாழ்விலேயே கனவுகண்டுவிட்டாள். அதன்பொருட்டே அவள் மண்ணில் பிறந்தாள். அவன் எந்தத் தொடர்பும் இல்லாமல் துவாரகையை எண்ணிக்கொண்டான். அந்நகர் பற்றி வரும் செய்திகளும் உகந்தவை அல்ல. அங்கும் பெருமாளிகைகள் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன. மலையுச்சிகளில் அசுரர்கள் முன்பு குடியிருந்து கைவிட்டுச்சென்ற குகைகள்போல இருண்டு கிடக்கின்றன அவை என்றது ஓர் ஒற்றுச்செய்தி.

இடைநாழியினூடாக நடக்கையில் பெரும்தூண்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி மத்தகம் எழுந்து செவிவீசி அணுகி வந்து அவனை கடந்து சென்றன. அவன் குறடுகளின் ஒலி ஒழிந்த இடைநாழியின் மடிப்புகளில் விம்மல்கள்போல எதிரொலித்தது. ஒவ்வொரு தூணுக்கு இடையிலும் புழுதி சேர்ந்திருந்தது. உச்சி வளைவுகளில் ஒட்டடைகள் தோரணம்போல் படிந்திருந்தன. நுரையென சுவர் மடிப்புகளில் செறிந்திருந்தன. சில இடங்களில் தூண்களுக்கு மேல் தாமரை மலர்வுகளில் புறாக்கள் அமர்ந்திருந்தன. அவற்றின் குறுகலோசை அத்தூண்களின் விந்தையான உறுமல்போல் ஒலித்தது. அம்மாளிகை மூங்கில்களாலும் மரத்தாலும் கட்டப்பட்டு உரசல் ஓசை எழுப்புவதுபோல ஒருகணம் உளம் மயங்கச் செய்தது. அல்லது கற்பாளை விரிசலிட்டுப் பிளக்கிறது. அவன் உடல் எச்சரிக்கையுணர்வு கொண்டு சிலிர்த்தது.

இல்லை, இந்நகர் அல்ல. இதுவல்ல அந்த முதல் குருதிப்புண். இதற்கு முன்னரே எழுந்துவிட்டது துவாரகை. அங்கிருந்து தொடங்குகிறது போர். அந்நகரின் அறைகூவலே இந்நகரை உருவாக்கியது. இது அதன் பேருருவப் போலி. அந்நகரை உருவாக்கியவன் உண்மையிலேயே பாரதவர்ஷத்தின் மேல் ஓர் அறைகூவலை விடுத்தான். மாகேந்திர மாயக்காரனைப்போல தன் இரு கைகளையும் விரித்து வெட்டவெளியில் ஒரு மாயப் பெருநகரை உருவாக்கிக்காட்டினான். எதன் பொருட்டெல்லாம் ஷத்ரியர் இங்கு பெருமை கொள்கிறார்களோ அவையனைத்தும் வெறும் கண்மாயங்களே என்பதை நிறுவியவன் அவன். அவன் தங்கள் அடித்தளங்களை நுரையென ஆக்குவதை அவர்கள் கண்டனர். மேலே மண் அகற்றப்படும்போது வளைகளுக்குள் பாம்புகள் அடையும் திகைப்பை அடைந்தனர். நீரூற்றப்பட்ட சிதல்புற்று எனப் பதறின அவர்களின் நகரங்கள். அவனிடமிருந்து தொடங்குகிறது இந்நகரும்.

அவன் இடைநாழிகளினூடாக திரும்பித் திரும்பி நடந்து மகளிர்க்கோட்டத்தை அடைந்தான். பிற அரண்மனைகளில் மகளிர்க்கோட்டங்கள் மைய அரண்மனையிலிருந்து தனியாகப் பிரிந்து அகன்று அமைந்திருக்கும். அங்கே செல்லும் நீண்ட இடைநாழியால் இணைக்கப்பட்டிருக்கும். பறக்கும் மாளிகை ஒன்றுக்கு படிக்கட்டில் செல்வது போலிருக்கும். அல்லது புதைந்த சிறைக்கு இறங்கி நுழைவதுபோல. எப்போதுமே அவை மைய அரண்மனையைவிட சற்று சிறிதாக, சிற்பங்களும் அணிகளும் குறைவானதாகவே இருக்கும். அஸ்தினபுரியின் மகளிர்க்கோட்டங்கள் அரண்மனையால் தூக்கி தோளில் சுமக்கப்படும் பேழைகள்போல் தோன்றுபவை. ஆனால் இந்திரப்பிரஸ்தத்தின் மகளிர்க்கோட்டம் அரண்மனைக்கு மேல் சூட்டப்பட்ட மகுடம்போல் இருந்தது. அதை நோக்கிச் செல்லும் பாதை பளிங்குப்படிகளாலான அரசப்பெருவீதி போலிருந்தது.

இருபுறமும் அணிவகுத்த வெண்பளிங்குத் தூண்களுக்கு மேல் பித்தளையாலான கவசமிடப்பட்ட தாமரைகள் கூரையை தாங்கியிருந்தன. சுதைச்சுவர் பரப்புகளில் மாபெரும் ஓவியங்கள் அந்தி வண்ணப் பெருக்கென, மலர்க்காடென பரவியிருந்தன. அவை அனைத்துமே போர்க்களக் காட்சிகள் என்பதை அவன் கண்டான். விருத்திரனை வெல்லும் இந்திரன் வெண்யானை மேல் தோன்றி கீழே சிதல்புற்றென எழுந்த நகர் மீது தன் வெள்ளிமின் படைக்கலத்தை வீசினான். முகில்கள் சுருள் சுருளென எழுந்து செறிந்த வானம் எங்கும் பல நூறு மின்னல்கள் வெடித்து துடித்துக்கொண்டிருந்தன. சிதல்புற்றுகளுக்கு மேல் ஒளிரும் வாள்களென மின்னல்கள் வளைந்து விழுந்தன. மழை அறைந்து சிதல்மாளிகைகள் சிதல்கோபுரங்கள் சிதல்கோட்டைகள் கரைந்துகொண்டிருக்க அலைபோல் பெருகும் கைகளுடன் அனைத்திலும் பல்வேறு படைக்கலங்களுடன் அறைகூவும் விழிகளும் நகைக்கும் வாயுமாக விருத்திரன் அண்ணாந்திருந்தான்.

பிறிதொன்றில் இந்திரனுக்கும் வருணனுக்குமான போர். கடல் அலைகள் கொந்தளித்தெழ அவற்றுக்கு மேல் இந்திரன் முகில் ஊர்திகளில் தன் படைகள் செறிந்திருக்க மின்னல்கள் வெட்டி அதிர்ந்து சூழ நின்றிருந்தான். வருணனின் கையில் அலைநுரையே வாள் என அமைந்திருந்தது. அவனுக்குப் பின் வெண்ணிறப் பிடரி மயிர்க் கற்றைகள் பறக்கும் நீலப் புரவிகளின் நிரை அலையலையென எழுந்து சுவரை நிறைத்திருந்தது. வருணனின் கையில் இருந்த வெண்சங்கும் இந்திரனின் கையில் இருந்த படையாழியும் மங்கியும் மங்காமலும் இருவருக்கு நடுவே எழுந்த பிறிதொருவனின் இரு கைகளிலும் படைக்கலங்களாக அமைந்திருப்பதுபோல் தெரிந்தன.

திரௌபதியின் அறைமுன் சென்றதும் அவன் கனவிலிருந்து உலுக்கப்பட்டவன்போல் விழித்தெழுந்தான். அவன் விழிகளுக்குள் அவ்வண்ணப்பெருக்கு நிறைந்திருப்பதாகத் தோன்ற விழிகளை கொட்டி தலையை உலுக்கிக்கொண்டான். அவனை அழைத்துச்சென்ற சேடி அவன் வருகையை அங்கிருந்த முதிய சேடியிடம் சொல்ல அவள் தலைவணங்கி உள்ளே சென்றாள். அவன் மீண்டும் தன்னை தொகுத்துக்கொள்ள முயன்றான். ஆனால் சொற்கள் எவையும் நினைவிலெழவில்லை. எதன் பொருட்டு இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தோம் என்பதையே அவன் உள்ளம் மறந்துவிட்டிருந்தது. அறைக்கதவு திறந்து அவன் உள்ளே செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டதும் அவன் அறுந்து விழுவதுபோல காலடி வைத்து முன்னால் சென்றான்.

திரௌபதியின் அறை விரிந்தகன்று ஓர் அவைக்கூடம் அளவுக்கு பெரிதாக இருந்தது. அவன் முதலில் அதையும் ஒழிந்த அறை என்றே எண்ணினான். அதனுள்ளும் காற்று சுழன்றுகொண்டிருந்தது. அதன் பின்னரே அவள் அங்கிருப்பதை கண்டான். முதலில் அங்கில்லை என எப்படி தன் புலன் உணர்ந்தது என வியந்தான். அவள் தன் மணிமுடியுடன் அங்கிருந்த நாட்களில் அவ்வறையை அவள் நிறைத்திருப்பாள். கதவை சற்று திறந்ததுமே அவள் இருப்பு வெளியே கசிந்திருக்கும். இந்த மாபெரும் சுவர்களில் அது முட்டி மீளலை கொண்டிருக்கும். முழக்கமிட்டு வானை நிறைத்திருக்கும். அவ்வறையின் மறு எல்லையில் விரிந்த சாளரத்தினருகே அவள் அரியணை போன்ற பெரிய பீடத்தில் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு அசைவில்லாமல் அமர்ந்திருந்தாள். அவனை அவள் நோக்கவே இல்லை. ஆகவே அவன் உடலும் அவளை உணரவில்லை.

அறைச்சுவரில் நிறைந்திருந்த மாபெரும் ஓவியங்களில் கந்தர்வர்களும் கின்னரர்களும் யட்சர்களும் களியாட்டமிட்டுக் கொண்டிருந்தனர். பூக்களும் தளிர்களும் நிறைந்த காடுகளும் நீர் ஒளிரும் சுனைகளும் கதிர் பரவிய முகில்நிரைகளும் என அவ்வோவியங்கள் வண்ணச் சுடர் கொண்டிருந்தன. ஓவியத்திற்குள் இருந்து எப்படி ஒளி எழுந்து கண்கூசவைக்க முடியும் என அவன் வியந்தான். ஓவியங்கள் அவனை அள்ளி உள்ளே இழுத்தன. அவை உருவாக்கிய பிறிதொரு உலகில் வாழச்செய்தன. பெருவிழவின்போது ஏற்படும் கள்மயக்குபோல, நெடும்பொழுது இசை கேட்ட பின் எழும் சொல்லின்மைபோல, அவன் உள்ளம் வெறுமையும் ததும்பலுமாக இருந்தது. அவ்வறையின் ஓவிய மலர்வெளியில் அவன் சிறகு முளைத்த சிறுவண்டென பறந்தலைந்தான். மலர்கள் இதழ்கள் விரித்து பூம்பொடி நிறைத்து காத்திருந்தன. அவற்றில் சிறகு முளைத்த கந்தர்வர்கள் தேன்தேர் தும்பிகள் என பறந்தலைந்தனர். அவர்களின் விழிகளில் இருந்தது அந்தக் கள்மயக்கம்.

வாடாத, இதழ்குவியாத, ஒளி மறையாத மலர்கள். மலர்வு நிலை மாறாதமைந்தவை. காலத்தில் நிலைகொண்டவை. ஓவிய மலர்களே தெய்வங்களுக்குரியவை. அவை மலர்களின் அக்கணத் தன்மையை கடந்துவிட்டவை. மலர்களில் அவை தெய்வங்கள். அவற்றிலேயே கந்தர்வர்கள் எழக்கூடும். ஆனால் நிலையிலா மலர்கள் மானுடரின் காலத்தில் அவ்வண்ணம் தங்களை காட்டுகின்றன. தேவர்களின் காலத்தில் அவை நிலையானவை. அங்கே கணமும் யுகமும் ஒன்றே. மலர்களை மானுடர் வரைந்துகொண்டே இருக்கிறார்கள். அவை மறைந்துவிடும் என அஞ்சியவர்களாக. அவர்கள் வரைய எண்ணுவது மலர்களில் தேவர்கள் காணும் காலத்தை. அவர்கள் தேவர்களின் கண்பெற்று வரைகிறார்கள். தேவர்களின் விழிகளை அம்மலர்கள் நோக்குபவர்களுக்கு அளிக்கின்றன.

அவன் நெடுநேரம் கழித்தே திரௌபதியை கண்டான். முதற்கணம் திடுக்கிட்டு பின்னடைந்தான். அங்கு அவள் ஒரு தொன்மையான தெய்வச்சிலையென அமைந்திருந்தாள். கைவிடப்பட்ட காட்டு ஆலயத்திற்குள் கண்கள் மின்ன அமர்ந்திருக்கும் கொற்றவை சிலை. அவள் அத்தனை முதுமை அடைந்துவிட்டிருப்பதை அவன் அப்போதுதான் பார்த்தான். ஒருபோதும் அவள் உருவம் தன் உள்ளத்தில் முதியவளாக எழுந்ததில்லை என்று தோன்றியது. அவள் உடல் மிக மெலிந்திருந்தது. ஆகவே மேலும் உயரமானவளாகவும் உறுதியான எலும்புகளால் ஆன விரிந்த தோள்கள் கொண்டவளாகவும் தோன்றினாள். முகம் கன்னங்கள் ஒட்டி, கண்கள் குழிந்து, வாயைச் சுற்றி சுருக்கங்களுடன் உதடுகள் அழுந்த மூடியிருக்க அவ்வுலகு கடந்து அமைந்ததுபோல் தோன்றியது.

முதுமை கொண்ட கொற்றவை. அல்லது சாமுண்டி. ஆம், சாமுண்டி. மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருக்கிறாளா? வெட்டப்பட்ட தலைகளை குண்டலமாக அணிந்துள்ளாளா? கால் கழலில் அனல் சுழல்கிறதா? நாகங்கள் அணிகளென உடலெங்கும் வளைந்துள்ளனவா? குழலென எழுந்து பரந்து நின்றிருப்பது அழலா? அவ்வழலில் எரிந்துருகி வழிந்தகன்ற தசைக்கு அடியிலிருந்து புடைத்தெழுந்த மண்டை முகமா? எலும்புருக்கொண்ட உடலா? இங்கே புதுக்கள் வெறியுடன் பிணக்கூத்திடும் பேய்கள் நிறைந்துள்ளனவா? அணிகொண்ட சாமுண்டி. எழுந்தெரியும் அழலுடுத்த அன்னை.

அவள் அணிகளேதும் அணிந்திருக்கவில்லை. காலில் சிலம்போ தலையில் சுடுமலரோ இல்லை. ஆரங்கள் குண்டலங்கள் ஏதுமில்லை. அணியே இல்லாத உடலே அவளை தெய்வமாக்கியது என எண்ணிக்கொண்டான். அவள் விழிகளை அணியெனச் சூடியிருந்தாள். அவை நோக்கிழந்தவைபோல், இரு கரிய வைரங்கள் என மின்னிக்கொண்டிருந்தன. என்றும் அவளில் ஆண் என ஒரு நிமிர்வு உண்டு. பெண் என ஒரு கனிவும் உடனமைந்ததுண்டு. அன்று ஆணென்றும் பெண்ணென்றும் இன்றி கடந்து வெறும் தெய்வமென்று அமர்ந்திருந்தாள். அவள் தன்னை நோக்குகிறாளா என அவன் வியந்தான். அவளை நோக்கியபடி திகைத்து நின்றான். பின்னர் தன்னுணர்வடைந்து அருகணைந்து கைகூப்பினான்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34

பகுதி நான்கு : அன்னையெழுகை – 6

இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குக் கோட்டைவாயிலை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். அஸ்தினபுரியின் கோட்டைவாயிலைவிட பலமடங்கு பெரியது. மாபெரும் கற்களை வெட்டி ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளக் கோட்டைக்கு மேல் செங்கற்களாலான பிறிதொரு கோட்டை எழுந்து அதற்குமேல் மாபெரும் மரக்கலங்கள்போல மரத்தாலான காவல்மாடங்களை ஏந்தியிருந்தது. அவற்றை மரக்கலங்கள் என்று எண்ணும் கணம் கற்சுவர் அலைகொள்வதுபோல் உளமயக்கு உருவாகும்.

அக்காவல்மாடங்களும் ஏழு அடுக்குகள் கொண்டவை. மூன்று கீழடுக்குகளில் கீழ்நோக்கி சரிந்து திறக்கும் சாளரங்களில் வில்லேந்திய வீரர்கள் அமர்வதற்கான சிற்றறைகள். உள்ளிருந்து நோக்கினால் அவை தேனீக்கூடுபோல செறிந்திருந்தன. வெளியே நின்று நோக்குகையில் அவை பகலில் மாபெரும் சல்லடை எனத் தோன்றின. இரவில் உள்ளே விளக்குகள் சுடர்விடத் தொடங்குகையில் உடலெங்கும் விழிகள் எழுந்த இந்திரன்போல் மாறின. அவற்றுக்கு உள்ளே இருப்பவர்களை வெளியே நின்று நோக்க முடியாது. அச்சாளரங்களுக்கு அப்பால் படைவீரர்களின் தங்குமிடங்களும் படைக்கல அறைகளும் இருந்தன.

நான்காம் அடுக்கில் இருபுறமும் திறக்கும் அகன்ற சாளரங்களுக்குள் முரசுக்காரர்களும் கொம்பூதிகளும் அமர்வதற்கான மேடைகள். அவர்களிடமிருந்து எழுந்து ஆறாவது அடுக்கில் வாய் திறந்தன மாபெரும் கொம்புகள். இந்திரப்பிரஸ்தத்தின் காவல்மாடங்களின் மாபெரும் கொம்புகள் பாடல் பெற்றவை. கலிங்கச் சிற்பிகள் சமைத்த அக்கொம்புகள் ஒவ்வொன்றும் உள்ளே வீரர்கள் இறங்கிச் சென்று தூய்மை படுத்தும் அளவுக்கு பெரியவை. அவற்றின் முகப்புகள் மாபெரும் மலர்கள்போல் வெளியே திறந்திருந்தன. செம்பாலும் வெண்கலத்தாலுமான அவை செந்நிற மஞ்சள் நிற இதழ்கள் விரித்து அக்கோபுரம் சூடிய காதுமலர்கள் எனத் தெரிந்தன.

யுயுத்ஸு சென்று அவற்றை நோக்கியிருக்கிறான். சுருண்டு குவிந்து சென்ற அவற்றின் முனையில் தோலாலான பெருந்துருத்திகள் பொருத்தப்பட்டு கீழிருக்கும் அறைகளில் அவற்றை இயக்கும் நெம்புகோல்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை நான்கு வீரர்கள் ஏறி நின்று மிதித்து இயக்க அக்கொம்புகள் நெடுந்தொலைவு கேட்கும்படி பிளிறின. நூறு யானைகளின் பிளிறலுக்கு நிகரான ஓசை கொண்டது அது என்றனர் சூதர். இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வி நிகழ்ந்தபோது அந்தக் கொம்புகள் எழுப்பிய பேரொலி தெற்குவாயிலுக்கு வெளியே பல காதங்களுக்கு அப்பால் சிற்றூர்களிலெல்லாம் முழக்கமிட்டது. திசையானைகளின் துதிக்கைகள் அவை என்று சூதர்கள் பாடினார்கள்.

ஏழாவது அடுக்கில் பன்னிரு பெருமுரசுகள் அமைந்திருந்தன. அவை வெவ்வேறு திசைகளை நோக்கி சரிக்கப்பட்டவை. ஒவ்வொன்றின் வாயும் செந்நிற நீர் நிறைந்த சிறுகுளம்போல தோல்பரப்பால் மூடியிருந்தன. கீழே நின்று நோக்குகையில் வானிலெழுந்த நிலவுத்தொகைகள். ஒவ்வொன்றும் பன்னிரு யானைகளின் தோல்களை உரித்து சேர்த்துத் தைத்து உருவாக்கப்பட்டது. அவற்றில் விழும் முழைக்கழிகள் கைவிடுபடைகளைப்போல் வில்லுடன் இணைக்கப்பட்டவை. அவற்றை இயக்கும் நெம்புகோல்கள் ஐந்தாம் அடுக்கில் இருந்தன. அவற்றை பயின்று தேர்ந்த ஏவலர்கள் வெவ்வேறு வகையில் இழுத்து முழங்க வைத்தனர். அவை விண்ணில் இடி முழங்குவது போலவே ஒலித்தன. அவை முழங்கி அமைந்த பின்னர் எழும் கார்வை நெடுநேரம் வயிற்றில் தங்கியிருந்தது.

காவல்மாடக் கோபுரத்திற்கு மேல் நடுவில் இந்திரப்பிரஸ்தத்தின் இறைவனாகிய இந்திரனின் சிலை நின்றது. தெற்குக்கு உரிய எமன் ஒருபுறமும் யமி மறுபுறமும் நோக்கி நிற்க நடுவே தலைசொடுக்கி நிமிர்ந்து விழியுருள பல்காட்டிக் கனைக்கும் உச்சைசிரவஸின் மேல் இந்திரன் அமர்ந்திருந்தான். ஒருகால் புரவியின் மேல் மடித்து வைத்து மறுகால் சேணவளையத்தில் ஊன்றி ஒரு கையில் மின்படையும் மறுகையில் தாமரையுமாக, மூன்றடுக்கு ஒளிமுடி சூடி புன்னகையுடன் கீழ் நோக்கி அருள்புரிந்தான். இந்திரனின் சிலைக்குக் கீழே முனிவர்கள் தவத்தில் ஆழ்ந்திருந்தனர். தேவர்களும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் கின்னரர்களும் களியாடினர்.

கிழக்குக் கோட்டைமுகப்பில் வெண்களிற்றின்மீது அமர்ந்த தோற்றம். இந்திராணியும் ஜயந்தனும் இருபுறங்களிலும் நின்றனர். மேற்கே வருணனும் வாருணியும் இருபக்கமும் நிற்க வியோமயானத்தின் மேல் அமர்ந்த இந்திரன். வடக்கே குபேரனும் பத்ரையும் இருபுறத்திலும் அமர்ந்திருக்க வெண்களிற்றின்மேல் இந்திரன் அமர்ந்திருந்தான். அருகே காமதேனு நின்றிருந்தது. இந்திரனின் பேராலயம் நகரின் நடுவே குன்றின் மகுடமென அமைந்திருந்தது. கோட்டையின் நான்கு வாயில்களில் இருந்தும் மைய ஆலயத்திற்குச் செல்லும் புரிவழிச் சாலைகள் அமைந்திருந்தன.

இந்திரனின் சிலைகள் மிகப் பெரியவை. கீழிருந்து பார்க்கும்போது வானிலிருந்து குனிந்து கீழே நோக்கும் வடிவில் இருந்தன அவை. மேலே சென்று பார்க்கையில் அவை முற்றிலும் விந்தையான வடிவம் கொண்டிருந்தன. காலைவிட தலை இருமடங்கு பெரியது. முதலில் பார்த்தபோது அவன் அந்த ஒருமையின்மையை நோக்கி வியந்தான். அவனுடன் வந்த காவலன் “கீழிருந்து நோக்கும் கண்ணுக்குப் பொருந்தும்படி இவ்வுடல் அமைக்கப்பட்டுள்ளது, இளவரசே” என்றான். “எனில் நாம் கீழிருந்து நோக்கும் தெய்வங்கள் நாமறியும் வடிவில் இல்லையா?” என்று அவன் கேட்க காவலன் சிரித்தான். “கீழிருக்கையில் அறியும் ஒருமைகள் மேலெழுகையில் மறைகின்றன. தெய்வங்கள் அறியும் நாம் ஒருமையழிந்தவர்களா? அன்றி நாம் காணும் ஒருமையின்மைகள் அவர்கள் காணும் ஒருமையின் மரூஉவா?” என்று அவன் சொல்ல காவலன் புன்னகைத்தான்.

கலிங்கச் சிற்பிகளால் செதுக்கப்பட்ட அந்த மரச்சிற்பங்கள் நூற்றெட்டுத் துண்டுகளாக மேலே கொண்டுவரப்பட்டு செம்புக்கம்பிகளால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. இந்திரனின் முகத்திலும் தோள்களிலும் நெஞ்சிலும் பொற்தகடுகளால் கவசங்கள் அமைக்கப்பட்டன. தங்கத்தை தட்டித்தட்டிப் பட்டுதுணியென, நீர்ப்படலம் என மென்மையாக்கி, உருகு நிலையிலேயே விசையுடன் காற்றால் ஊதி மரத்தின் மேல் படியவைத்து உருவாக்கப்பட்டது அப்பொற்பூச்சு. இந்திரனின் விழிகளென பீதர் நாட்டுப் பளிங்குக் குமிழிகள் அமைந்திருந்தன. இந்திரனின் நெஞ்சு வழியாக தலைக்குள் செல்வதற்கு வழியிருந்தது. குறுகலான இரும்புப்படிகளில் இருளில் ஏறிச்செல்கையில் அது சிலையல்ல மரத்தாலான ஒரு சிறிய இல்லம்  என்று அவனுக்குத் தோன்றியது. அங்கே வெளிக்காற்று சீறிச் சுழன்றுகொண்டிருந்தது.

சிலையின் உள்ளே அந்தியில் பன்னிரு இடங்களில் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டன. அவ்விளக்குகளுக்குப் பின்னால் அமைந்த குழியாடிகளினூடாக ஒளி பெருக்கப்பட்டு வெளியே விசிறி வீசப்பட்டது. கீழிருந்து நோக்குகையில் இந்திரனின் உடலில் அமைந்த சிறு துளைகளினூடாக ஒளி வெளிவந்து அவன் கண்கள் சுடர்ந்தன. முகம் செவ்வொளி கொண்டது. உடலெங்கும் பலநூறு அருமணிகள் மின்னின. அவை இரவிலெழும் அருமணிகள். பகலில் அவை விண்ணொளியில் மறைந்துவிடுகின்றன என்றனர் குடிகள். அவ்வப்போது வீசும் காற்றில் உள்ளே சுடர்கள் அசைகையில் விண்மீன் நலுங்குவதுபோல இந்திரனின் விழிகளும் அணிகளும் மின்னி அணைந்தன.

யுயுத்ஸு அந்தக் கோபுரத்தை நோக்கியபடி அணுவணுவாக முன்னேறிச் சென்றான். கோபுரம் கண்ணுக்குப் பட்டதும் அதை நோக்கி சென்றுகொண்டிருந்த திரள் மெல்ல மெல்ல அமைதியாகியது. அனைவரும் அண்ணாந்து நோக்கியபடி பின்னிருந்து வந்தவர்களின் உந்தலால் விசைகொண்டு அதன் வாயில் நோக்கி செலுத்தப்பட்டனர். யுயுத்ஸு கோபுரத்தின் மரச்சிற்பங்கள் விண்ணில் படைக்கலங்களைத் தூக்கி, உறைந்த விழிகளும் திறந்த வாய்களுமாக சொல்லற்று நின்றிருப்பதை கண்டான். அதன் வாயிற்கதவுகள் முழுமையாகத் திறந்து சுவருடன் ஒட்டியிருந்தன. கதவைத் திறந்துமூடும் பொறிகள் கைவிடப்பட்டு துருவேறிக் கிடந்தன. அவற்றை இயக்கும் வடங்களும் சங்கிலிகளும் மண்ணில் புதைந்திருந்தன.

கோட்டைக்குள் நுழைந்து அப்பால் சென்றதையே அவன் அறியவில்லை. வாயில் அத்தனை பெரிதாக, அணுகுகையில் இல்லையென அகன்று செல்வதாக இருந்தது. கோட்டைக்குப் பின்னால் இருந்த முற்றமும் மக்களால் நிறைந்து நான்கு பக்கமும் முட்டிக்கொண்டிருந்தது. கோட்டைக்குப் பின்னால் இருந்த மூன்றடுக்குக் கல்மேடைகளில் நிறுவப்பட்டிருந்த கைவிடுபடைகள் அனைத்தும் முறுக்கப்பட்ட விற்களிலும், சகடங்களிலும் அம்புகள் தெறித்து நின்றிருக்க இக்கணம் இதோ என வான் நோக்கி கூர்கொண்டு நின்றிருந்தன. அவன் புரவியை அவற்றை நோக்கி செலுத்தி அவற்றின் இடைவெளியினூடாகச் சென்று அப்பால் நின்றான். அது திரளின் அலையில் இருந்து அவனைக் காத்தது.

மதகினூடாக ஏரி நீர் வெளியேறுவதுபோல் எத்தடையும் இன்றி மக்கள் உள்ளே புகுந்தனர். உள்ளே வந்து எம்முடிவையும் அவர்கள் எடுக்க இயலவில்லை. அனைத்துத் தெருக்களிலும் நிறைந்திருந்த மக்கள் திசையின்மையை உணரச்செய்தனர். வந்துகொண்டிருந்த திரளால் அவர்கள் உந்தப்பட்டு தாங்கள் எண்ணியிராத இடங்களை நோக்கி கொண்டுசெல்லப்பட்டனர். வெவ்வேறு சாலைகளினூடாக பிதுங்கிச் சென்றனர். கூச்சல்களும் ஓலங்களும் எழுந்தன. எங்கும் வீரர்கள் என எவரும் கண்ணுக்குப்படவில்லை. மேலே முரசுத்தோல்மேல் புறாக்கள் வந்தமராதபடி கட்டப்பட்டிருந்த மெல்லிய வலை காற்றில் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

யுயுத்ஸு அந்நகரை நன்கு அறிந்திருந்தமையால் எட்டாவது கைவிடுபடை மேடையின் அருகே சென்று அதன் ஓரமாக திரும்பி அப்பால் செல்லும் சிறிய படிக்கட்டை அடைந்தான். அப்படிக்கட்டினூடாக புரவியைச் செலுத்தி மேலேறிச் சென்றான். அது அங்கிருப்பதை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தது. சருகுகள் உதிர்ந்து மழைநீரில் கருமைகொண்ட படிகள் தூசுபடிந்து கிடந்தன. படிகளில் புரவி இயல்பாக ஏறிச்சென்றது. குன்றின்மேல் வளைவாக ஏறிச்சென்ற படிகளில் செல்லச் செல்ல நகர் கீழிறங்கியது. கைவிடுபடைகள் எத்தனை பெரியவை என்பதை அப்படிகளில் ஏறிய பிறகுதான் காண முடிந்தது. மூன்றடுக்கு மேடையே எட்டு ஆள் உயரமிருந்தது. அதன் மேல் அமைந்திருந்த பதினெட்டு பெருவிற்கள் ஒவ்வொன்றும் பத்து ஆள் உயரமானவை. ஒவ்வொன்றிலும் நூறு நீளம்புகள் இறுக்கிப் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை முறுக்கும் ஆழிகள் பின்னணியில் அமைய அவற்றைச் சுழற்றும் யானைகள் நடப்பதற்கான வட்ட வடிவப் பாதை அமைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தின் மேலும் நெடுங்காலமாக பெய்த சருகுகளும் புழுதியும் படிந்திருந்தன.

அவன் அஸ்தினபுரியின் கைவிடுபடைகளை எண்ணிக்கொண்டான். நகரைச் சீரமைக்கையில் அவற்றை என்ன செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. மீண்டும் கைவிடுபடைகளை அமைக்கலாமா என்று அவன் கேட்டான். “வேண்டியதில்லை, அவை இனி இந்நகரத்தின் அடையாளங்கள் அல்ல” என்று சுரேசர் சொன்னார். எனில் அந்தப் பீடங்களை இடித்துவிடலாம் என்று யுயுத்ஸு சொன்னபோது “அந்த வெற்றிடம் அக்கைவிடுபடைகளை நினைவில் நிறுத்தும். இருப்புக்கு நிகரே இன்மையும். இன்மை வளர்வதும்கூட” என்றார் சுரேசர். “அங்கே ஆலயங்களை அமைக்கலாம். நூற்றெட்டு கைவிடுபடைமேடைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சிற்றாலயமாகட்டும். நகரில் நுழைபவர்கள் அவற்றை முதலில் காணட்டும். இந்நகரின் முகஅடையாளங்களும் அவையே.”

அங்கே நகரின் காவல்தெய்வங்கள் அமைக்கப்படலாம் என்றார் சுரேசர். “அங்கே படைக்கலங்கள் இருந்தன. அவை நம்மை காப்பவை என்னும் நம்பிக்கையை அளித்தன. அந்நம்பிக்கையை நாம் கைவிடமுடியாது. அங்கே அமையும் தெய்வங்கள் அந்நம்பிக்கையை அளிக்கும். தேவியின் நூற்றெட்டு உருவத்தோற்றங்கள் அங்கே தெய்வமென அமையட்டும்.” ஆனால் யுதிஷ்டிரன் அதை மறுத்துவிட்டார். “இனி இந்நகரில் அறிவே காவல்தெய்வமென அமையட்டும். புதிய வேதம் எழுந்த நிலத்தில் சொல்தெய்வங்களே நிறுவப்படட்டும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நகரில் நுழைபவர்கள் இந்நகர் தங்களைக் காக்குமென இனி உணரவேண்டியதில்லை. இந்நகரை தாங்கள் காக்கவேண்டும் என உணரட்டும். ஒரு படைக்கலநிலைக்குள் நுழைவதாக அவர்கள் உணரலாகாது, ஒரு கல்விநிலைக்குள் நுழையும் உளநிறைவை அவர்கள் அடையவேண்டும்.”

அங்கே அமையவேண்டிய தேவதைகள் என்ன என்று யுதிஷ்டிரன் அந்தணரிடம் கேட்டார். வேதச்சொல்லின் காவலர்களான நூற்றெட்டு அன்னையரை அவர்கள் வகுத்தளித்தனர். அச்செய்திகளை கலிங்கச் சிற்பியருக்கு அளித்து கருங்கல்லில் சிலைவடிக்க யுதிஷ்டிரன் ஆணையிட்டார். நகரின் கிழக்குவாயிலின் நேர்முன்னால் அதிதி. வலப்பக்கம் திதி, இடப்பக்கம் தனு, உஷை, பிருத்வி, வாக்தேவி, ஜ்வாலை, சுவாகை, சாயை என அன்னையர் நிரை நகரின் கோட்டையை ஒட்டிய முற்றத்தை நோக்கி திறந்த வாயில்களுடன் அமைந்த சிறு ஆலயங்களில் கோயில்கொள்ளவிருந்தனர். அவன் கிளம்பி வருகையில் அவ்வாலயங்களின் பணிகள் நடந்துகொண்டிருந்தன.

யுயுத்ஸு மேலேறிச்செல்லுந்தோறும் அந்நகரின் அடுக்குகள் ஒவ்வொன்றாக விண்ணிலிருந்து கழன்று உதிர்வதுபோல கீழே சென்றன. அவனுடைய புரவி படிகளின் ஒழுங்கை தன் கால்களால் புரிந்துகொண்ட பிறகு இயல்பாக சிறு தாவல்களாக மேலே சென்றது. இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்பாலான வெண்குவைமாடங்கள் குடியிருப்போர் எவருமின்றி கைவிடப்பட்டிருந்தன. அங்கு வாழ்ந்த படைத்தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடிகள் நிலம்பெயர்ந்தன. பெரும்பாலான கட்டடங்களைச் சுற்றி சருகுகளும் புழுதியும் குவிந்திருந்தன. கிழிந்த கொடிகள் காற்றில் பறந்து துடித்தன. அந்நகர் புத்தம் புதிதாக எழுந்து மெருகழியாமலேயே கைவிடப்பட்டிருந்தது.

அவன் புழுதியை பார்த்தபடியே சென்றான். புழுதி மண்ணின் மெல்லிய கை. கொடியின் தளிர்ச்சுருள்போல. இளங்குழவியின் விரல்நுனிபோல. வந்து தொடும். தழுவும். இழுத்து மண்ணுக்குள் செலுத்தும். விழுங்கிப் புதைத்து மேலே எழும். பின்னர் வேர்கள் மட்டுமே அறிந்த மந்தணம் என புதைவன உள்ளே உறைந்திருக்கும். ஒரு வலுவான புயல்காற்று சுழன்றடித்தால் தன் தூசுச்சருகுப்படலத்தை அவை இழுத்து அகற்றி முகிலிலிருந்து நிலவென பிறந்தெழுந்துவிடுமெனத் தோன்றியது.

அவன் வணிகர்களின் துணைநகரையும் படைத்தலைவரின் உள்நகரையும் கடந்து அரசகுடியினருக்குரிய மையநகரை சென்றடைந்தான். அங்குள்ள உள்கோட்டையும் முழுமையாகவே திறந்து கிடந்தது. அதன் காவல்மேடையில் மட்டும் ஓரிரு காவலர்கள் இருப்பதை காண முடிந்தது. அவன் புரவி அணுகுவதை அவர்கள் எவரும் பார்க்கவில்லை. கோட்டையின் பெருவாயிலை நோக்கி வந்த பாதையில் பெரிய தடிகளை குறுக்காக அடுக்கி வேலி அமைத்திருந்தார்கள். அந்த வேலி வரைக்கும் பெருகி வந்து முட்டிச் சுழித்து வளைந்து அப்பால் சென்று சிறு பாதைகளினூடாக ஒழுகி மறைந்துகொண்டிருந்த மக்கள் திரள் நோக்கியே அவர்களின் பார்வை இருந்தது.

உள்கோட்டைச் சுவர் அஸ்தினபுரியின் வெளிக்கோட்டை அளவுக்கே பெரியது. வெட்டி அடுக்கப்பட்ட மரக்கற்களுக்கு மேல் மூன்றடுக்கு மரக்கோட்டை மிதந்தது. அதன்மேல் முரசுகளும் கொம்புகளும் அமைந்திருந்தன. இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைக்கலம் பொறிக்கப்பட்ட அதன் முகப்பில் நெடுங்காலத்துக்கு முன் சூட்டப்பட்ட மலர்மாலை நார்ச்சுருளாக தொங்கிக்கொண்டிருந்தது. கோட்டைமுகப்பிலிருந்து எழுந்து வானில் பறந்துகொண்டிருந்த மின்படைக் கொடி கிழிந்து அனற்கொழுந்துகளென துடித்துத் துடித்துப் பறந்தது. அப்பாலெழுந்த அரண்மனைகளின் வெண்ணிறக் குவைமாடங்கள் நடுவே அரசியின் பொன்னிறக் குவைமாடம் ஒரு செவிக்குழையணி என இளவெயிலில் மின்னியபடி தெரிந்தது.

யுயுத்ஸு தன் புரவியை கோட்டையின் முகப்பு நோக்கி செலுத்தினான். அவன் மிக அருகணைந்த பின்னரே மேலிருந்து அவனை பார்த்தார்கள். அவன் படிகளினூடாக சென்று மரத்தடுப்புக்கு அப்பாலிருந்த முற்றத்தை அடைந்தான். கோட்டைக்குள்ளிருந்து ஒரு படைவீரன் கவசங்களுடன் இறங்கி வருவதை அவன் கண்டான். சற்று கழித்தே நடையிலிருந்து அது பெண்ணென்று உணர்ந்தான். புரவியை சீரான நடையில் செலுத்தி அவளை நோக்கி சென்றான். அவள் அங்கிருந்தே அவனை அடையாளம் கண்டு கையிலிருந்த வேலைத் தாழ்த்தி “இளவரசருக்கு நல்வரவு” என்றாள். “நான் உள்கோட்டைக் காவலர்தலைவி.”

யுயுத்ஸு “நான் அரசியை பார்க்கும்பொருட்டு வந்தேன்” என்றான். “அஸ்தினபுரியிலிருந்து அரசிக்கு அரசச்செய்தி கொண்டுவந்திருக்கிறேன்.” அவள் தலைவணங்கி “அரசிக்கு செய்தி அனுப்புகிறேன். முதலில் தங்களுக்கு தங்கும் ஒருக்கங்களை செய்கிறேன். வருக!” என்று அவன் குதிரையைப் பற்றி அழைத்துச் சென்றாள். அவன் புரவியிலிருந்து இறங்கி நடந்தபடி “இங்கு ஆட்சியென எதுவும் நடக்கிறதா?” என்று கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய ஒவ்வாமையை உணர்ந்து பேச்சை மாற்றும்படி “அரசி எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று அவன் கேட்டான். அதுவும் ஒவ்வா வினா என உடனே உணர்ந்தான்.

ஆணின் கவச உடையுடன் ஒரு பெண்ணை பார்ப்பதனால் தன் உள்ளம் அவளை அணுகமுடியாமலாகிறதா? அல்லது இவளை சம்வகையிடம் இணைத்துக்கொள்கிறேனா? ஆனால் அவள் அந்தத் தருணத்தின் ஒவ்வாமையை கடக்கும்பொருட்டு பேசினாள். “அவர் பெரும்பாலும் தன் அறையைவிட்டு வெளிவருவதில்லை. ஒவ்வொரு நாளும் இங்கு நிகழ்வனவற்றை சுருக்கமாக சென்று சொல்கிறோம். அவற்றை செவி கொள்வதும் இல்லை.” அவன் அவள் பேசியதை எதிர்பார்க்கவில்லை. “அவர் துயரில் இருக்கிறார்” என்று பொதுவாகச் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.

“அரசி எவருடன் ஒவ்வொரு நாளும் சொல்லாடுகிறார்?” என்றான். “அவ்வண்ணம் எவரும் இங்கில்லை. அரசியின் அணுக்கர்கள் என்று இப்போது இங்கு எவரும் இல்லை. அரசியின் குரலை எவரேனும் கேட்டே நெடுநாட்களாகிறது” என்று அவள் சொன்னாள். அவன் திரௌபதியை அப்போதுகூட அவ்வண்ணம் எண்ணிக்கொள்ளவில்லை. அவன் விழிகளுக்குள் போர்ச்செய்திகளைக் கேட்டபடி அமர்ந்திருந்த கரிய தெய்வச்சிலையே நின்றிருந்தது. “அஸ்தினபுரியின் செய்திகளை அரசி விரும்புவார் என்று சொல்லமுடியாது. நான் நீங்கள் வந்துள்ள செய்தியை அவருக்கு அறிவிக்கிறேன். அவர் முடிவெடுக்கட்டும்” என்றாள்.

கோட்டைக்கு உள்ளே இரு பிரிவு விரிந்த அரண்மனைகளின் முகப்புகள் அனைத்தும் பராமரிப்பின்றி கிடந்தன. “இங்கு எவருமே இல்லையா?” என்று அவன் கேட்டான். “இங்கு அரசியர் இருந்தபோது ஓரளவுக்கு பராமரிப்பிருந்தது. பின்னர் அவர்களும் இங்கிருந்து கிளம்பிச்சென்றார்கள். படைகளும் இங்கிருந்து தொடர்ந்து வெளியே சென்றுகொண்டிருந்தன. இப்பெருநகரை புரக்க இங்கு எவரும் இல்லை” என்றாள். “இங்கு வந்து குழுமுபவர்கள் காட்டில் குடியமைப்பவர்களைப்போல தாங்களே இடங்கண்டு கொள்கிறார்கள். அவர்களுக்கு பெரிய மாளிகைகள் அச்சமூட்டுகின்றன. அங்கு அதன் முற்றத்திலேயே சிறு குடில் அமைத்துக்கொள்கிறார்கள்.”

“இங்கு வரும் திரளைக்கொண்டே இந்நகரை சீரமைத்துவிடமுடியும்” என்று அவன் சொன்னான். “அஸ்தினபுரியில் அதைத்தான் செய்கிறோம். அந்நகர் புதிதெனப் பிறந்து எழுந்துவிட்டது.” அவள் “ஆம், ஆனால் அதற்கு அஸ்தினபுரியிலிருந்து அமைச்சர்களும் பிறரும் இங்கு வரவேண்டும். இங்கொரு ஆட்சி முறைமை மீண்டும் உருவாகவேண்டும்” என்றாள். அவன் “உன் பெயர் என்ன?” என்றான். “பிரக்யை” என்றாள். “உன் குடி?” என்றான். “நான்காம் குடி. எந்தை குதிரைக்கொட்டிலில் இருந்தார்.” அவள் உரைத்தாள் “நான் இந்நகரில் பிறந்து வளர்ந்தவள். நகரம் ஆண்கள் ஒழிந்து எங்கள் கைகளுக்கு வந்தது. இங்கிருப்பவர்களைக்கொண்டு ஒரு காவல் அமைப்பை உருவாக்கி நிலை நிறுத்தினோம்.”

அவன் “நீ அஸ்தினபுரியின் காவலர்தலைவியைப் பற்றி கேள்விப்பட்டாயா?” என்றான். அவள் முகம் மலர்ந்து “சம்வகை தேவியைப் பற்றி அல்லவா? இங்கே அவரைப் பற்றி நாங்கள் பெண்டிர் பேசிக்கொள்ளாத நாளே இல்லை” என்றாள். “அவர் அங்கே அனைத்துப் படைகளையும் தலைக்கொள்ளக்கூடும். படைநடத்தி நாடுகளை வெல்லக்கூடும். இங்கே அவரை முன்பு பேரரசி திரௌபதியை எண்ணிக்கொண்டதுபோல எண்ணிக்கொள்கிறார்கள். அவர் பேரரசி சத்யவதியின் குருதி என்றுகூட சொல்லப்படுகிறது.”

அவனுக்கு அவளுடைய பேச்சு உவகையை அளித்தது. அதை மறைக்க முகத்தை இறுக்கிக்கொண்டான். “அவரை நீங்கள் அறிவீர்களா?” என்றாள் பிரக்யை. “அறிவேன்” என்று அவன் சொன்னான். “அவருக்கு நீங்கள் அணுக்கம் என்று தோன்றியது” என்றாள். “ஏன்?” என்று அவன் சீற்றத்துடன் கேட்டான். “ஒன்றுமில்லை” என்றாள். “சொல்” என அவன் உரக்க கேட்டான். “இல்லை, உங்கள் விழிகளில் அப்படி தெரிந்தது” என்றாள். “எப்படி?” என்று அவன் கடுமையாகக் கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் தன் உள்ளம் இனிமைகொள்வதை உணர்ந்தான். குறடுகள் ஒலிக்க நடந்தான்.

“இங்கே உட்கோட்டையை மட்டுமே முறைப்படி காக்கிறோம். அரண்மைக்காவலுக்கு காவலர் உள்ளனர். அவர்களும் பெரும்பாலும் ஏவலர்” என்று அவள் சொன்னாள். அவன் “நீயே உருவாக்கிய படையா?” என்றான். அவள் “அப்படி சொல்லமாட்டேன், ஆனால் ஏறத்தாழ அவ்வாறே” என்றாள். அவன் “மிகப் பெரிய நகர். மிகக் கூரிய ஆணையால் மட்டுமே இதை ஆள முடியும்” என்றான். அவள் புன்னகைத்தாள். “அந்தக் கோட்டை மேலிருக்கும் கொம்புகள்போல” என்று யுயுத்ஸு சொன்னான். “அவ்வாறு இந்நகரைச் சூழ்ந்து உன் குரல் எழுக!”

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 33

பகுதி நான்கு : அன்னையெழுகை – 5

இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படித்துறையில் நீர் தெரியாமல் படகுகள் செறிந்து நின்றிருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு கண்டான். காற்றில் பறந்த மேலாடையை உடலில் சுற்றிக்கொண்டு படகின் வடத்தைப் பிடித்து சற்றே குனிந்து கூர்ந்து நோக்கினான். அவை வணிகப்படகுகள் போலவும் தோன்றவில்லை. சிறிய பயணப்படகுகள், ஓரிரு பாய்கள் மட்டுமே கொண்டவை. அவற்றில் பொருட்களும் பெரிதாக இருக்கவில்லை. படகுத்துறையை நோக்கி சென்றுகொண்டிருந்த படகுகளில் மக்கள் அள்ளித் திணித்ததுபோல் செறிந்திருந்தார்கள். பலர் தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் சுழற்றி காற்றில் வீசி பிற படகுகளில் இருந்தவர்களை நோக்கி கூச்சலிட்டார்கள். அவர்களின் எடையால் படகுகள் அலைகளில் என ததும்பின.

மேலும் அணுகியபோது பல படகுகளில் வீட்டுப் பொருட்களும் வளர்ப்பு விலங்குகளும் இருப்பதை அவன் கண்டான். அவன் அருகே வந்த குகன்இன்னும் ஒரு நாழிகையில் நாம் கரையணைய முடியும். சற்று பொறுத்திருக்கத்தான் வேண்டும்என்றான். யுயுத்ஸுவந்திருப்பது அரசப்படகு என்று செய்தி அனுப்பினீரா?” என்றான். குகன்ஆம், அச்செய்தியை பல முறை அனுப்பிவிட்டேன். அங்கு இருக்கும் துறைத்தலைவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தோன்றுகிறது. இவர்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு புதிதாக வருபவர்கள். இங்குள்ள செய்தி முறைகளையும் ஒழுங்குகளையும் பற்றி எந்த அறிதலும் இல்லாதவர்கள். முற்றிலும் புதிய கூட்டத்தினருக்கு ஆணைகளை பிறப்பிக்க இயலாது. வன்முறையை கையிலெடுக்கும் ஆற்றலும் இப்போது படகுத்துறை தலைவரிடம் இருக்காதுஎன்றான்.

அணைவது அஸ்தினபுரியின் அரசப்படகு என்ற செய்தியை மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டே இருங்கள்என்று யுயுத்ஸு சொன்னான். “ஆணைஎன்று தலைவணங்கி குகன் திரும்பிச் சென்றான். யுயுத்ஸு அத்தனை மக்கள்பெருக்கு இந்திரப்பிரஸ்தத்துக்குள் எப்படி வருகிறது என்று எண்ணியபடி நின்றான். அஸ்தினபுரிக்குள் வந்துசேர்பவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் அந்நகருக்கு அத்திரள் விந்தையானதுதான். காவலன் அருகணைந்தபோதுஇவர்கள் எப்போதிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்?” என்றான். “இளவரசே, போர் முடிந்து அரசி இங்கு வந்த செய்தி பரவத் தொடங்கியது முதல் இவ்வாறு பெருகி வந்து கொண்டிருக்கிறார்கள்என்றான். “இனிமேல் அரசி இங்கே தனிமுடி சூடி அமரவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.”

யுயுத்ஸு வெறுமனே தலையசைத்தான். காவலன்பாரதவர்ஷத்தின் பெரும்பாலான நகரங்களுக்கு இதுபோல வெளியிலிருந்து மக்கள் உள்ளே வருகிறார்கள். உள்ளிருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துவிட எஞ்சிய பெண்களும் முதியவர்களும் நகர்நீங்கி உருவான இடத்தை அவர்கள் நிரப்புகிறார்கள். ஆனால் அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் மட்டுமே இத்தனை பெரிய நெரிசல் இருக்கிறது. ஏனெனில் இவ்விரு நகரங்களும் பேருருவம் கொண்டெழவுள்ளன என்று சூதர்கள் பாடுகிறார்கள். இங்கே வளமும் வெற்றியும் திகழும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள்என்றான். யுயுத்ஸு மீண்டும் வெறுமனே தலையசைத்தான்.

அங்கிருந்த மக்களை பார்க்கையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் கலிங்கத்திலிருந்தும் வங்கத்திலிருந்தும் பிரக்ஜ்யோதிஷத்திலிருந்தும் கங்கையினூடாக படகுகளில் வந்து யமுனைக்குள் புகுந்து இந்திரப்பிரஸ்தத்தை அணுகுபவர்கள் என்று தெரிந்தது. அவர்கள் படகுகளுக்கு பழகியவர்கள் அல்ல என்பதும், அந்தப் பயணத்தின் பொருட்டே படகுகளில் ஏறியிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் படகுகளின் ஆட்டத்தில் நிலைகுலைந்து கயிறுகளை பற்றிக்கொண்டு விழப்போவதை பார்த்தபோது தெரிந்தது. “அவர்கள் கீழைநிலத்தவரா?” என்று அவன் கேட்டான். “ஆம், கீழைநிலம் அன்னையரை முதன்மையாக வழிபடுபவது. அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தை நாடுவது இங்கே பெண்ணரசு எழவிருக்கிறது என்று எண்ணியே.”

அவன் சென்றபின் யுயுத்ஸு அங்கே நின்று நோக்கிக்கொண்டிருந்தான். கூட்டம் மேலெழுவதுபோலத் தெரியவில்லை. ஆனால் படகுகள் வந்தபடியே இருந்தன. அவை எந்த ஒழுங்கையும் கடைப்பிடிக்கவுமில்லை. அவன் சென்று அறைக்குள் சற்று நேரம் அமர்ந்தான். பின்னர் எழுந்து வந்து நோக்கினான். எந்த மாறுதலும் தென்படவில்லை. அவன் பொறுமை இழந்துஎன்ன நடக்கிறது?” என்றான். “அங்கிருந்து பொறுத்திருக்கும்படி செய்தி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்என்று காவலன் சொன்னான். யுயுத்ஸு படகின் விளிம்பிற்கு நடந்தான். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கூட்டம் கூட்டமாக நூற்றுக்கு மேற்பட்ட சிறிய படகுகள் அவனுடைய படகை கடந்து சென்று இந்திரப்பிரஸ்தத்தின் துறையை மொய்த்தன. அவற்றிலிருந்தவர்கள் உளம்கிளர்ந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர்.

படகுகளை மீன் கூட்டங்கள் என்றெண்ணி அவன் பழகியிருந்தான். அவை ஈக்கள்போல என்று அப்போது தோன்றியது. பெரும்பாலானவை மீன்பிடிப் படகுகள். அவற்றுக்கு முறையான பாய்மரம் இருக்கவில்லை. மூங்கில்கள் நடப்பட்டிருந்தன. கையால் முடையப்பட்ட மரவுரிப்பாய்கள் காற்றின் திசையில் பல இடங்களில் கிழிந்து துளை விழுந்து சீறி அதிர்ந்துகொண்டிருந்தன. பாய்மரங்கள் வில் என வளைந்து காற்று நின்றதும் விம்மி நிமிர்ந்தன. துளை விழுந்த பாய்களின் துடிப்பால் அப்படகுகளும் அடங்கா புரவிகளென துள்ளித் திமிறின. அதிலிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு உலைந்தாடி கூச்சலிட்டனர்.

படகுகளில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் நிறைந்திருப்பதை அவன் கண்டான். மிக எளிய வீட்டுப்பொருட்கள். மண்பாண்டங்கள், மரப்பெட்டிகள், தோல் குடுவைகள், வெவ்வேறு வடிவிலான மரக்குடுக்கைகள். அவர்கள் தங்கள் இறுதி உடைமைகளை எடுத்துக்கொண்டு வந்திருப்பது தெரிந்தது. அவன் படகுக்காவலனை அழைத்துநாம் கரையிறங்க இயலுமா இயலாதா?” என்றான். “இந்தத் துறையில் கரை இறங்குவதற்கு ஏதேனும் படை உதவி தேவைப்படும். படகில் எவரேனும் வந்து இந்தப் படகுப் பெருக்கை பிளந்து வழி அமைத்தாலன்றி நமது படகு கரையணைவது இயலாதென்றே தோன்றுகிறதுஎன்றான் காவலன்.

யுயுத்ஸுஎனில் ஒரு சிறு படகை ஒருக்குக! அதிலேறி யமுனையின் கரைகளில் எங்காவது நான் ஒதுங்கி அங்கிருந்து புரவியில் நகரை அடைகிறேன்என்றான். “ஆனால் தாங்கள்…” என்று அவன் தயங்கபடகிலிருந்து பொருட்களை சிறிது சிறிதாக அவ்வண்ணமே கரை சேருங்கள். படகு இங்கேயே நிற்கட்டும்என்று யுயுத்ஸு சொன்னான். “ஆணைஎன்று தலைவணங்கி காவலன் சென்றான். படகிலிருந்து மென்மரத்தில் குடையப்பட்ட சிறு படகை நீரில் கயிற்றினூடாக இறக்கினார்கள். அது படகின் விலாவில் அறைந்து துள்ளிய அலைகளின் மேல் நெற்று என எகிறி அலைபாய்ந்து நின்றது. யுயுத்ஸு அரக்கு பூசப்பட்ட வடத்தைப் பற்றிச் சறுக்கி கீழிறங்கி அப்படகில் அமர்ந்தான். குகனும் இறங்கி அமரத்தில் அமர்ந்தான்.

யுயுத்ஸு பக்கவாட்டுக் கயிற்றை தன் கால் மேல் இழுத்துக் கட்டி உடலைக் குறுக்கி அமர்ந்துகொண்டான். படகோட்டி துடுப்பை இரு கொக்கிகளிலும் செலுத்தி தோல்சுற்றப்பட்ட பிடிக்கொடுவைப் பற்றி நிலைகொண்டபின் கயிற்று முடிச்சுகளை அவிழ்த்து காலால் உந்தி படகை பெரும்படகிலிருந்து விலக்கினான். இருமுறை துடுப்புகள் சுழன்றமைந்தபோது துள்ளும் மீன்போல மென்மரப் படகு எழுந்து அலைகளில் தாவி அப்பால் சென்றது. அவன் கைகளின் சுழற்சியில் துடுப்புகள் இருபெரும் சகடங்கள்போல வட்டமிட படகு அலைகளில் ஏறி இறங்கி கரை நோக்கி சென்றது.

யமுனையின் கரைகளிலிருந்த குறுங்காடுகளிலும் நூற்றுக்கணக்கான சிறு படகுகள் அணைந்திருப்பதை அவன் கண்டான். பரிசல்களும் ஏராளமாகத் தெரிந்தன. “இப்பரிசல்கள் எங்கிருந்து வருகின்றன?” என்று அவன் கேட்டான். “இவையும் நெடுந்தொலைவிலிருந்து வருகின்றன என தோன்றுகிறது. அவர்கள் பேசும் மொழி வங்கக்கரைகளில் எழுந்ததுஎன்றான் குகன். “பரிசல்களில் அத்தனை தொலைவிலிருந்து வருகிறார்களா?” என்றான் யுயுத்ஸு. “ஆம் இளவரசே, இவர்கள் கிளம்பிய இடத்திலிருந்து வழிதோறும் தங்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கொற்றவையை வழிபடுகிறார்கள். சிலர் நாக அன்னையரை வழிபடுகிறார்கள். இங்கு இனி அரசியின் ஆட்சி என்று அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அன்னை எழுந்துவிட்டாள் என்ற செய்தி குலப்பாடகர்களினூடாகவும் சூதர்களினூடாகவும் இவர்களின் சிற்றூர்களில் பரவிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்என்று படகோட்டி சொன்னான்.

யுயுத்ஸுஇங்கிருந்து ஏதேனும் அறிவிப்பு எழுந்ததா? அல்லது குறிப்புணர்த்தப்பட்டதா?” என்றான். “இல்லை, இந்திரப்பிரஸ்தம் கல்போல் ஓசையற்றிருக்கிறது. ஆனால் அரசி இங்கு முடிசூடப்போகிறார் என்று அவர்கள் அனைவருமே உறுதிபடக் கூறுகிறார்கள்என்றான். யுயுத்ஸுகுருநாட்டின் தலைநகரம் அஸ்தினபுரி. அரசி அங்குதான் மும்முடி சூடி அமரவிருக்கிறார், பாரதவர்ஷத்தை அங்கிருந்து முழுதாளவிருக்கிறார்என்றான். “ஆம், அதை நான் அறிவேன். ஆனால் இவர்கள் ஒன்றை நம்பி இத்தனை தொலைவு வந்துவிட்டார்கள். இனி இவர்களிடம் அந்நம்பிக்கையை மாற்றும்படி எவராலும் சொல்ல இயலாதுஎன்று படகோட்டி சொன்னான்.

படகு மரங்கள் சரிந்து நீரில் படிந்து இலைகளை அலசிக்கொண்டிருந்த கரையை அணைந்தது. அங்கும் ஒன்றுடன் ஒன்று முட்டி பல அடுக்குகளாக கரையை நிறைத்திருந்த சிறு படகுகளுக்கு நடுவே சென்று தயங்கியது. படகோட்டி தன் காலாலும் துடுப்பாலும் பிற படகுகளைத் தள்ளி இடைவெளியை உருவாக்கி அதனூடாக யுயுத்ஸுவின் படகை கரையணையச் செய்தான். கரையிலிருந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே நூற்றுக்கணக்கான சிறு குடும்பங்கள் அமர்ந்து சமைத்துக்கொண்டும், உணவுண்டபடியும், ஓய்வெடுத்தபடியும், தாயமும் நாற்களமும் ஆடிக்கொண்டும், கூவிப் பேசி நகைத்தபடியும் நிறைந்திருந்தன.

அவர்கள் எவரும் யுயுத்ஸுவையோ அஸ்தினபுரியின் அடையாளங்களையோகூட அறிந்திருக்கவில்லை. படகோட்டி கரையிலிறங்கிவழி விடுங்கள்! இளவரசருக்கு வழி விடுங்கள்!” என்று கூவியபோதுகூட எவரும் பொருட்படுத்தி திரும்பிப் பார்க்கவில்லை. யுயுத்ஸு அணிந்திருந்த மணிமாலைகளை பெண்கள் வியப்புடன் பார்த்தனர். ஒரு பெண் கைசுட்டி ஏதோ சொல்ல பிற பெண்கள் வாய் பொத்தி உரக்க நகைத்தனர். யுயுத்ஸு அவர்களை விழிசுழற்றி நோக்கியபடி சென்றான். அவர்கள் அங்கேயே செடிகளென முளைத்தெழுந்து வண்ணங்களெனப் பூத்தவர்கள்போலத் தோன்றினர்.

பெரும்பாலானவர்கள் கரிய நிறமும், மின்னும் வெண்விழிகளும் கொண்ட உயரம் குறைவான மக்கள். அவர்கள் செந்நிற விதைகளாலும், தேய்த்துருட்டிய வெண்ணிறக் கற்களாலுமான மாலைகளையும் இரும்பாலான வளையல்களையும் அணிந்திருந்தனர். செந்நிறமும் நீல நிறமும் கொண்ட தடித்த பின்னலாடைகள். அவற்றில் கற்களை வைத்து அணி செய்திருந்தார்கள். தலையில் உருட்டிய வண்ணக் கற்களைக் கோத்து செய்யப்பட்ட சரங்களைச் சூடியிருந்த பெண்கள் தொன்மையான ஓவியங்களிலிருந்து எழுந்து வந்தவர்கள்போல் தோன்றினார்கள். கைகளில் சங்கு போழ்ந்த வெண்வளையல்கள். சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட காப்புகள். கால்களில் வெண்கலச் சிலம்புகள்.

யுயுத்ஸுஇந்திரப்பிரஸ்தம் முற்றிலும் புதிய குடிகளை பெறப்போகிறது. இனி அந்நகரின் நெறிகளையும் ஒழுங்குகளையும் இவர்கள் முடிவெடுப்பார்கள். அரசர் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்என்றான். “நம்பிக்கையுடன் வந்திருக்கிறார்கள். கடுமையாக உழைக்கவும் ஒருக்கமாக இருக்கிறார்கள். அதுவே நன்றுஎன்று படகோட்டி சொன்னான். கைகளை விரித்துவழி விடுங்கள்! வழி விடுங்கள்!” என்று கூவி பாதையெங்கும் செறிந்து நின்றிருந்தவர்களை உந்தி விலக்கி யுயுத்ஸுவை யமுனையின் ஓரமாக அமைந்த சாலையை நோக்கி கொண்டுசென்றான்.

அஸ்தினபுரியை நெருங்கும் மையச்சாலை அளவுக்கே அங்கும் மக்கள் பெருக்கு இருந்தது. ஆனால் அஸ்தினபுரியில் காவல்மேடைகளில் வீரர்கள் இருந்தனர். சாலையில் எப்படியாயினும் ஒரு புரவிவீரன் வேலுடன் தென்பட்டுக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் விழி தொடும் தொலைவு வரை எங்கும் காவலர்களோ இந்திரப்பிரஸ்தத்தின் கொடி அடையாளங்களோ தென்படவில்லை. “இந்நகரம் இன்று வெறும் மக்கள் திரளாக மாறிவிட்டிருக்கிறது. இங்கே எவ்வகையிலேனும் அரசாள்கை ஒன்று நிகழ்கிறதா என்று ஐயமாக இருக்கிறதுஎன்று யுயுத்ஸு சொன்னான். “மெய்யாகவே அரசாளுகை ஏதுமில்லை. இங்கிருந்த எஞ்சிய காவலர்களையும் அஸ்தினபுரிக்கு அழைத்துக்கொண்டுவிட்டார்கள். இந்நகர் முழுக்க நூறு காவலர்கூட இல்லை. அரண்மனையைக் காக்கவே இருபது பேர் மட்டுமே இருக்கிறார்கள். நம்மால் அறிய முடியாத இறையாணை ஒன்றால் அனைத்தும் எவ்வகையிலோ செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனஎன்று படகோட்டி சொன்னான்.

பெருந்திரளுக்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கும் சித்தம் உள்ளது என்பார்கள். ஒவ்வொருவரும் தங்களை அறியாமலேயே அதன் ஆணைகளுக்கு கீழ்ப்படிவார்கள். துளித் துளியாக நோக்குகையில் எவ்வொழுங்கும் இன்றி அலைமோதிக்கொண்டிருக்கும் திரள் என்றுதான் அவர்கள் தோன்றுவார்கள். ஆனால் ஒரு குன்றின் மேலிருந்து பார்த்தால் நதி தன் பாதையையும் ஒழுங்குகளையும் வகுத்துக்கொள்வதுபோல இத்திரள் செயல்படுவதை காணமுடியும்என்று யுயுத்ஸு சொன்னான். ஆனால் அது ஒரு உளமயக்குதானா என்று அவனுக்குத் தோன்றியது. எந்தப் பெருக்கிலும் சிதறலிலும் வடிவங்களைக் காண உள்ளம் முயல்கிறது. வடிவின்மையை மானுட உள்ளத்தால் நினைவில் நிறுத்திக்கொள்ள முடியாது.

தொலைவில் ஒரு புரவி செல்வதை படகோட்டி பார்த்தான். “புரவி!” என்று அவன் சுட்டினான். “அப்புரவியை கேட்டுப் பார்என்று யுயுத்ஸு சொன்னான். “அது மகதத்திலிருந்து வருகிறது என்று தோன்றுகிறது. அதற்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் தொடர்பில்லைஎன்றான் பட்கோட்டி. “ஆம்என்றபின் யுயுத்ஸுஅதை விலைக்கு கேட்டுப் பார்என்றான். படகோட்டி பலரை உந்தி வழியேற்படுத்தி அப்புரவியை அணுகினான். அதை விலைபேசி முடித்து வாங்கி கடிவாளத்தை பற்றிக்கொண்டு அருகே வந்தான். “ஏறிக்கொள்ளுங்கள், இளவரசேஎன்றான். யுயுத்ஸு அதன் மேல் ஏறி அமர்ந்து கடிவாளத்தைப் பிடித்துநான் செல்கிறேன். நீ மீண்டும் படகிற்குச் சென்று அங்குள்ள பொருட்களை எவ்வண்ணமேனும் இந்திரப்பிரஸ்தத்துக்குள் அனுப்பி வைஎன்று ஆணையிட்டபின் கூட்டத்தை ஊடுருவி முன்னால் சென்றான்.

இந்திரப்பிரஸ்தத்தை விரைந்து அணுக முடியாதென்று செல்லுந்தோறும் யுயுத்ஸுவுக்கு தெரிந்தது. சாலை நிறைத்து ஒழுகிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடந்துதான் சென்றார்கள். அவர்களும் இடையிலும் தோளிலும் மூட்டைகளையும் குழந்தைகளையும் வைத்திருந்தார்கள். மனிதர்கள் கையால் இழுக்கும் சிறு சகடங்களில் இல்லப் பயன்பாட்டுப் பொருட்களும், குழவியரும், முதியவர்களும் இருந்தனர். அத்திரிகளும் காளைகளும் கழுதைகளும் உடலெங்கும் பொதிகளையும் பொருள் மூட்டைகளையும் சுமந்தபடி ஒன்றுடன் ஒன்று முட்டி வழி விடும்படி ஓசையிட்டு, ஒன்றையொன்று முகர்ந்து தும்மலோசை எழுப்பி, செவி மடித்து அடித்து, வால் சுழற்றித் தயங்கி, கிடைத்த வழிகளூடாக புகுந்து சென்றன.

புரவிகள் மிகக் குறைவாகவே இருந்தன. பெரிய வண்டிகளும் அரிதாகவே தென்பட்டன. தேர்கள் அங்கு செல்லவே இயலாதென்று தோன்றியது. அவனுடைய புரவி மிக விரைவிலேயே அத்திரளுக்குள் செல்வதற்கான வழியை கண்டுகொண்டது. பிற உயிரினங்களைவிட புரவிகள் மிக எளிதாக திரளை புரிந்துகொள்கின்றன. காட்டில் அவை ஒட்டிப் பெருகிய ஒற்றைத் திரளென்றே இருக்கும் போலும். அவனுடைய புரவி சிறு இடைவெளிகளில் புகுந்து, கழுத்தை உலைத்து வழியுருவாக்கி ஊடுருவி முன் சென்றது. மரவுரிக்குள் நுழைந்து செல்லும் ஊசிபோல அது ஊடுருவுவதாக அவன் எண்ணினான்.

அவ்வப்போது முழுக் கூட்டமுமே முட்டித் தேங்கி நின்றது. சில தருணங்களில் சுழித்து எதிர் திசைக்கு திரும்பியது. சாலையில் யமுனையின் விளிம்புகளிலிருந்து மேலும் மேலும் மக்கள் எழுந்து வந்து சேர்ந்துகொண்டிருந்தார்கள். அவன் ஒவ்வொரு முகமாக பார்த்துக்கொண்டிருந்தான். உரக்க நகைத்துக்கொண்டும் கூவிப் பேசிக்கொண்டும் கைகளைத் தட்டி பாடிக்கொண்டும் அவர்கள் சென்றனர். அவர்களில் எவரேனும் ஒருவருக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கலாம். ஒரு சிலருக்கு உவகை எழுந்திருக்கலாம். அதன் ஆற்றல் அவர்கள் அனைவரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. அத்தனை பெருங்கூட்டம் ஒற்றை உணர்வையே கொண்டிருக்க இயலும். அப்போது அவர்களில் மிஞ்சிப்போனால் நூறு சொற்களுக்குள் மட்டுமே உளம் திகழ முடியும்.

அவனுக்கு அப்போது தன்னால் ஒரு காலகட்டத்தையே விழிகளால் பார்க்க முடியும் என்று தோன்றியது. இந்தப் பெருந்திரள் ஓரிரு மாதங்களுக்கு முன் இங்கு நிகழ்ந்த பெரும் போரைப்பற்றி அறிந்திருக்கும். அப்போது இவர்களில் பலர் பதைப்பு கொண்டிருக்கக் கூடும். பலர் நேரடி இழப்புகளையும் அடைந்திருக்கலாம். அப்போர் குறித்த எப்புரிதலும் இல்லாதவர்களும் இங்கிருக்கலாம். ஆனால் இன்று அதுவே ஒரு களியாட்டாக மாறியிருக்கிறது. அவன் அவர்கள் பாடிச்சென்ற சொற்களை செவிகொண்டான். பெரும்பாலானவற்றில் குருக்ஷேத்ரப் போரே குறிப்பிடப்பட்டது. ஒன்று களத்தில் அபிமன்யு பிருஹத்பலனை சந்தித்ததைப் பற்றிய பாடல் என்று புரிந்துகொண்டான். பிறிதொன்றில் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்குமான போர். கதிரவன் மகனும் இடிமின்னலின் மைந்தனும் விண்ணில் சந்தித்துக்கொள்கிறார்கள். மண்ணில் மழையும் வெயிலும் மாறி மாறி பொழிகிறது.

ஒரு போர் அதன் அனைத்துத் துயரங்களுடனும், அழிவுகளுடனும் இனிய நினைவாக, களியாட்டாக மாறிவிட்டிருக்கிறது. அப்போர் இங்கு நிறைந்திருந்த பெருமரங்கள் அனைத்தையும் வீழ்த்தி இப்புது முளைகள் எழுவதற்கு வழி வகுக்கிறது. படைசூழ்கை குறித்து எழுதப்படும் அனைத்து நூல்களிலும் போரில்லாத நாடுகள் விரைவிலேயே ஆற்றல் இழந்து அழியும் என்று கூறப்பட்டுள்ளது என அவன் படித்திருந்தான். அவனுக்கு அந்நூலை கற்பித்த கிருபர்போரில்லாத நாடுகளில் படைவீரர்கள் களம் காணாது முதிர்வடைவார்கள். அவர்களின் படைக்கலப் பயிற்சி நேரடியாக களத்தில் பயன்படாதபோது மெல்ல மெல்ல வெறும் சொற்களாக மாறும். அச்சொற்களே மேலும் சொற்களை பெருக்கும். அடுத்த தலைமுறையினரை படைக்கலங்களுக்கு மாறாக அச்சொற்களே சென்று அடையும்என்றார்.

சொற்களைக் கொண்டு எவரும் போரிட இயலாதுஎன்றார் கிருபர். “அவை பயனற்றவை. இலையுதிர்கால சருகுக்குவை போன்றவை.” அவன்அவர்கள் தொடர்ந்து களரிகளில் பயின்றுகொண்டுதானே இருக்கிறார்கள்?” என்றான். “களரிகளில் பயில்வது போரல்ல. போருக்குரிய மெய்யான உளநிலைகள் களரியில் இல்லை. அங்கு எவரும் கைபிழைத்தால் இறப்பதில்லை. கொல்லும் வெறிகொண்டிருப்பதும் இல்லை. அது ஒரு நடிப்பு. நடிப்பென அனைவருக்கும் தெரியும்.” புன்னகைத்து கிருபர் சொன்னார்எண்ணுக, இங்கே காமமே நிகழவில்லை, காதல் நாடகங்களும் நடனங்களும் மட்டுமே நிகழ்கின்றன எனில் அடுத்த தலைமுறை எவ்வாறு உருவாகும்?”

மாணவர்களிடமிருந்து சிரிப்பொலி எழுந்தது. “களரியில் நிகழும் போர் மெய்யான போரை கண்டு நடிக்கப்படுவது. மிஞ்சிப்போனால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையேனும் மெய்யான போர் நிகழவேண்டும். அப்போது மட்டுமே அக்கற்பனை உண்மைக்கு அணுக்கமானதாக இருக்கும். பயனுள்ளதாக இருக்கும். இல்லையேல் அக்கற்பனை பெருகி உண்மைகளை தாண்டிச் செல்லும். அதன் பிறகு அப்பயிற்சியே கற்பனையை பெருக்கும். களம் நின்று போரிடுவதற்கு முதல் எதிரி வெற்றுக்கற்பனைதான். வாளேந்துபவனின் முதற்பெரும் அறைகூவல் என்பது வாள் குறித்து அவன் உள்ளம் கொண்டிருக்கும் பாவனைகளை அகற்றிக்கொள்வதே.”

எந்தப் பெருவீரனையும் எக்கணத்திலும் ஓர் வாள் வெட்டக்கூடும், ஓர் அம்பு வீழ்த்தக்கூடும். அது வேறுபாடு அறியாது. அதிலுறையும் தெய்வங்களுக்கு தங்களுக்கான தனி வழிகள் உள்ளன. களத்தில் எந்த முறைமையும் இன்றி முதுகில் படைக்கலம் பாய்ந்து உயிர்விட்ட மாவீரர்கள் உண்டென்பதை ஒருமுறையேனும் போருக்குச் சென்றவரால் மட்டுமே உய்த்துணர இயலும்என்றார் கிருபர். “மெய்யான போர் மெய்யான அறைகூவலை மெய்யான வீரத்தை நிலைநிறுத்திக்கொண்டே இருக்கிறது. போர் என்பது ஆண்டுக்கொருமுறை வயலை உழுவதுபோல. உழப்படாத நிலம் களைகளுக்குரியது.”

அவன் அக்கூட்டத்தை பார்த்தான். அவர்கள் அனைவருமே சிறிதும் பெரிதுமான போர்களை பார்த்தவர்களாகவே இருப்பார்கள். போரென்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். அன்று கிருபர் சொன்னார்நகரில் மூத்த படைவீரர்கள் போரில் கொல்லப்பட வேண்டும். ஒரு படையின் பொதுவான வாழ்நாள் நாற்பது அகவைக்கு மேல் செல்லக்கூடாது. படையிலிருக்கும் இளம்வீரர்கள் போரின்றியே முதுமை கொண்டு ஓய்ந்து அமர்ந்திருக்கும் முதியவர்களை அடிக்கடி காண வாய்க்கலாகாது. அவர்களுடன் சொல்லாடுவதற்கான தருணங்கள் அமையவே கூடாது. போரிலாது மூத்த முதியவர்கள் தாங்கள் அவ்வண்ணம் போரிலாது அகவை முதிர்ந்ததையே தங்கள் வாழ்நாள் வெற்றியாக சொல்வார்கள். அந்த இலக்கை இளையோரும் கொண்டால் அது படையல்ல, களிமகன்களின் திரள்.”

போருக்குச் செல்லாதவர்களே போரை மிகைப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அவர்கள் போரை மிகைப்படுத்திக் கூறுகையிலேயே போரிலாது கடந்து வருவதே சிறந்தது என்ற செய்தியையும் இளைஞர்களிடம் கூறிவிடுவார்கள். அவ்வீரர்கள் போருக்குச் சென்றாலும் அவர்களிடம் மெய்யான போர் பற்றிய அறிதலின்மையால் ஏமாற்றத்தையும் அச்சத்தையுமே அடைவார்கள். பெரும்போர் ஒன்றில் உயிர்கொடுக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் படைவீரர்களாலான படை களத்தில் முதற்கணத்திலேயே சோர்வடைகிறது. ஏனென்றால் போர் என்பது கனவு அல்ல, வாள்முனைபோன்ற மெய்மை அது.”

போருக்காக வீரன் ஒருங்கிக்கொண்டே இருக்கவேண்டும். அவனறியாமல் உடல்வளர்வதுபோல உள்ளம் அவ்வாறு உருவாகவேண்டும். போருக்கெழுகையில் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே எவ்வீரனுக்கும் இருக்கலாகாது. போரென்பது ஆண்டுதோறும் கோடையில் எழும் காட்டெரி போன்றது. முதுபெரும் மரங்கள் அதை கடந்து செல்லும். உயிரற்ற பழைய மரங்கள் எரிந்தழியும். பயனற்ற புதர்கள் சாம்பலாகி எருவாகி முளைக்கும் விதைகளுக்கு உணவாகும்என்றார் கிருபர். பின்னர் அச்சொற்களை வெவ்வேறு குரல்களில் வெவ்வேறு தருணங்களில் அவன் கேட்க நேர்ந்தது.

அவன் அந்தத் திரளை நோக்கி எண்ணிக்கொண்டான். இவர்கள்தான் முளைக்கும் விதைகள் எனில் இதைப்போல பொருளற்ற விந்தை பிறிதில்லை. நெறி நின்றவர்கள், குடிப்பெருமை கொண்டவர்கள், பெருவீரர்கள் மண்மறைந்து ஏதுமறியா கட்டற்ற பெருந்திரள் அவ்விடத்தை நிரப்புகிறது. இத்திரள் மாண்புகள் ஏதும் அற்றது. நெறிகளை கொண்டிராதது. கட்டற்றது. அழகற்றது. பெருமிதமும் தன்னுணர்வும் இல்லாதது. இது ஒரு பண்படாத காட்டுவிலங்கு. இவர்களுக்காகவே அந்தத் திறனோரை, துணிந்தோரை காலம் அழித்திருக்கிறதென்றால் அது மானுடருடன் ஒரு இளிவரல் கூத்தையே நிகழ்த்த எண்ணியிருக்கிறது.

ஒருவேளை அது இதை எண்ணியிருக்க வாய்ப்பில்லை. அந்த முன்னோடிகளின் திரள் மூத்துவிட்டது. தன் நெறியில், தன் அழகில் அது முழுமை அடைந்துவிட்டது. அது மேலும் வளர்வதற்கு எல்லையில்லை. வளர்வதற்கு இடமில்லாதவை அழிய வேண்டுமென்பது இயற்கையின் நெறி. ஆகவே அவை அழிக்கப்படுகின்றன. நன்மையே ஆயினும் அழகே ஆயினும் மாண்பே ஆயினும் முழுமை அடைந்துவிட்டால் அழிந்தாகவேண்டும். சிறுமையே ஆயினும் தீமையேயாயினும் வளர்வதற்கு இடமிருக்கும்போது தன் வழியை அது கண்டுகொள்கிறது.

சென்ற காலங்களில் சிறப்பு மிக்க அனைத்தும் குருக்ஷேத்ரத்தில் அழிந்தன. நெடுங்காலமாக நெறிகளை பேணியவர்கள், தங்கள் அறங்களை சொல்லிச் சொல்லி நிலை நிறுத்தியவர்கள், அந்நெறிகளுக்கும் அறங்களுக்கும் அறுதி எல்லை என்ன என்பதை கண்டறிந்து திகைத்து களத்தில் உயிர்விட்டார்கள். வென்றவர்களும் தோற்றவர்களும் எழும் இப்புத்துலகிலிருந்து முற்றிலும் அயலாகிவிட்டார்கள். இப்புத்துலகு முற்றிலும் பிறிதொன்று. அறியா விசைகளால் இயக்கப்படுவது.

இது புது வெள்ளம். சருகும் சேறும் அடித்துச் சுருட்டி வந்து எல்லைகளை மீறி வயல்களுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் புகுந்து அனைத்தையும் நிரப்பி கொப்பளிக்கும் செம்பெருக்கு. நைந்தவற்றை வீழ்த்துகிறது. புது வழிகளை கண்டடைகிறது. மிகப் பெருவெள்ளம் வந்தபின் கங்கையே முற்றிலும் புது வழி தேர்கிறதென்பார்கள். யுயுத்ஸு திகைத்த விழிகளுடன் அப்பெரும்பெருக்கை நோக்கியபடி சென்றுகொண்டிருந்தான்.

நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32

பகுதி நான்கு : அன்னையெழுகை – 4

யுயுத்ஸு காட்டினூடாக கங்கை நோக்கி செல்லும்போது எதிரே வந்துகொண்டிருந்த அயல்நிலத்து மாந்தரை கூர்ந்து நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் அனைவரிடமும் முதன்மையான வேறுபாடு ஒன்று இருந்தது. அவன் நகரில் சந்தித்த மானுடரிலிருந்து அவர்கள் உடலசைவால் வேறுபட்டார்கள். அது என்ன என்ன என்று நோக்கி நோக்கி அவன் கண்டடைந்தான். அஸ்தினபுரியின் அசைவுகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டவையாக, ஒற்றைத் திரளின் அலைவுகளாக அமைந்திருந்தன. ஒவ்வொருவரின் நிகழசைவும் முந்தைய அசைவுகள் அனைத்துக்குஅம் தொடர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு அசைவுக்குப் பின்னாலும் அவர்களின் தன்னுணர்வு இருந்தது. அத்தன்னுணர்வு அவற்றுக்கு பொருள் அளித்தது.

அஸ்தினபுரியில் மக்களின் தன்னுணர்வை அந்தப் பீதர்நாட்டு ஆடிவிழிகள் கட்டமைத்தன. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி தாங்கள் கொண்டிருந்த அகவுணர்வை அவை மாற்றி அமைத்தன. மிக விரைவிலேயே ஒவ்வொருவரும் தங்களை நாளில் ஒருமுறையேனும் அந்த ஆடிகளில் பார்க்கத் தொடங்கினர். சாளரங்களின் கண்ணாடிகளுக்கு முன்னால் அவ்வண்ணம் மக்கள் தங்களை பார்த்துக்கொள்வதை யுயுத்ஸு நகருலா செல்லும்போதெல்லாம் கண்டான். அதை அவன் யுதிஷ்டிரனிடம் சொன்னான். “மக்கள் ஆடிகளின் முன் நின்று பொழுதுபோக்குகிறார்கள். ஆடிநோக்கி மெய்மறந்து உணவுநீத்து உயிர்விடும் சிறுகுருவிகளைப்போல் ஆகிவிட்டிருக்கிறார்கள்.”

“அது நன்று” என்று யுதிஷ்டிரன் நகைத்தார். “அவர்கள் உயிர்விடமாட்டார்கள். ஆடிகள் தங்கள் மாற்றுரு மட்டுமே என அறியும் தன்னுணர்வு அவர்களுக்கு உண்டு. அவர்கள் இனி துணையில்லாதவர்கள் அல்ல. அவர்கள் தங்களைத் தாங்கள் அறியாதவர்களும் அல்ல. அஸ்தினபுரியினர் அனைவருமே ஆடிகளை நோக்கட்டும்.” வெள்ளி பூசப்பட்ட பெரிய ஆடிகளை நகரின் ஆலயங்களின் சுற்றுவட்டங்களிலும் அங்காடிகளின் அருகிலும் தெருச்சந்திப்புகளிலும் நிறுவும்படி அவர் ஆணையிட்டார். அவற்றின் முன் மக்கள் கூடி தங்களை பார்த்துக்கொண்டனர். அதன்முன் பார்ப்பதற்கென்றே நல்லாடை அணிந்து அணிபூண்டு கிளம்பி வந்தனர். பின்னர் அவ்வழி செல்லும்போதெல்லாம் இயல்பாகப் பார்த்தனர். பின்னர் பார்ப்பதறியாமலேயே பார்க்கலாயினர்.

ஆண்கள் ஒவ்வொரு முறையும் அதை அணுகுகையில் தங்களைப் பார்த்து மீசையை முறுக்கி தலைப்பாகையை சரி செய்துகொண்டனர். எவரேனும் பார்க்கிறார்களா என்று சூழ நோக்கியபின் மீண்டும் நோக்கி பிரியாவிடை என அதை விட்டு அகன்றனர். பெண்டிர் பிறிதொரு பெண் வந்து அவளை உந்தி அகற்றுவது வரை ஆடி முன் கட்டுண்டிருந்தனர். தங்களைத் தாங்கள் முழுக்கவே பார்க்கவில்லை என்றே அவர்கள் அனைவரும் ஒவ்வொரு முறையும் உணர்ந்தனர். எவரும் இலாது சற்று பொழுது அவ்வாடிகள் ஓய்ந்திருக்குமெனில் புறாக்களும் காகங்களும் வந்து தங்களை பார்த்தன. எதிரியென எண்ணி பறந்து பறந்து கொத்தின. காதல் இணையென எண்ணி கொஞ்சி மொழிபேசி கொக்குரசிக்கொண்டன. புரவிகள் அவற்றில் தங்களைப் பார்த்து கனைத்து பிடரி சிலிர்த்தன. ஒருமுறை அரசநாகம் ஒன்று அதன்முன் படமெழுந்து நின்றாடுவதை அவன் கண்டான்.

அஸ்தினபுரியின் அனைத்து உடலசைவுகளையும் ஆடிகள் மாற்றிவிட்டதை யுயுத்ஸு கண்டான். தங்கள் நடை குறித்தும், உடை குறித்தும், உடல் அசைவுகள் குறித்தும் ஒவ்வொருவரும் தன்னுணர்வு கொண்டனர். உள்ளத்தில் அமைந்த பேராடி ஒன்றில் தங்களை ஒவ்வொரு கணமும் பார்த்தபடி புழங்கினர். தன்னிடம் பேசிய ஏவலரின் அசைவுகளில் அதை அவனே கண்டான். எப்போதும் அவர்கள் தங்களுள் தாங்களே உணர்ந்திருக்கும் ஒரு கட்டுப்பாடு உருவாவதை உணர்ந்தான். நாள்பட அது சற்று நடிப்பென ஆகிவிட்டதை அறிந்தான். தேர்ந்த உடலசைவுகள் இனியவை என முதலில் தோன்றின. ஒன்றோடொன்று இசைபவை என்று பின்னர் மாறின. மெல்ல அவை நோக்கிலிருந்தே மறைந்தன. அவ்வசைவொழுக்கின் பிழைகளும் பிசிறுகளும் மட்டுமே கண்ணுக்குப் பட்டன.

அனைத்து அசைவுகளும் மாபெரும் கூட்டு நடிப்பென்றாகி ஒரு திறந்த கூத்து மேடையென நகரம் மாறிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது. மீறி எழும் அசைவுகள் இல்லை என்றாகியது. கட்டற்ற துள்ளல்கள் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே தங்களை நடித்துக் காட்டிக்கொண்டார்கள். இளஞ்சிறார்கள் ஆடிகளிலிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டார்கள். யுதிஷ்டிரன் நகைத்து “ஆடிகளென முன்பு அமைந்தவை சூதர்பாடல்கள். இனி சொல் இல்லை, காட்சிகள் மட்டுமே” என்றார். “ஆடிகளுக்குள் புகுந்து மீள்பவை அழிவதில்லை. அவை நோக்குபவரை உள்ளே உறிஞ்சி தாங்கள் வெளிவந்து இங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன.”

அவன் அகம் திடுக்கிட்டது. அந்த விந்தையான சொல்லாட்சி ஒரு கனவல்ல என அவனே நேரில் கண்டான். ஒருமுறை ஆடி ஒன்றின் வழியாக செல்லும்போது மக்கள் அனைவரும் அவ்வாடிகளினூடாக நுழைந்து மறுபக்கம் சென்று அங்கே அமர்ந்து வெளியே புழங்கும் தங்கள் பாவைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் கைகள் பதறத்தொடங்கின. ஆடி ஆழம் மிக்கது, அகலும் தோறும் சிறிதாக்கி ஒவ்வொருவரையும் இழுத்துப் புதைத்துக்கொள்வது. இந்நகரிலிருந்து ஒவ்வொருவரும் அகன்று அகன்று ஆடிக்குள் புதைந்து மிகத் தொலைவிலெங்கோ நுண்துளிகளாக ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆடிக்குள் வானம் அமைந்திருக்கிறது. அது ஓர் அடியிலா துளை, முடிவிலா பாதை. அவன் ஆடியை நோக்குந்தோறும் அச்சம் கொண்டான். ஆடிகளை ஒழிந்தே நடந்தான். ஆனால் அவனை பல்லாயிரம் ஆடிகள் சூழ்ந்து நோக்கிக்கொண்டிருந்தன.

அஸ்தினபுரியின் தெருக்களில் ஆடிப்பாவைகள் கொப்பளித்துக்கொண்டிருந்தன. ஆடியில் பாவை விழும்போது இருக்கும் ஓசையின்மை ஒரு துணுக்குறலை ஒவ்வொருமுறையும் உருவாக்குகிறது. ஆடிப்பாவையின் அமைதி ஆடி போலவே குளிர்ந்து உறைந்தது. ஆகவே ஆடிநோக்குகையில் அப்பாவையை நோக்கி கூச்சலிடுவதை ஒவ்வொருவரும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அது அவர்கள் செய்வது அனைத்தையும் திருப்பிச் செய்தது. அவர்களின் ஓசைகளை மட்டும் தான் வாங்கி எங்கோ வைத்துக்கொண்டது.

“ஆடிப்பாவை நாகம்போல் அத்தனை அமைதியானது, அத்தனை சொல்லற்றது” என்று சூதன் ஒருவன் சொன்னான். “ஆடிப்பாவைகளை இங்கிருந்து பீதர்கள் கொண்டு செல்கிறார்கள். அங்கு இவ்வாறு உலகெங்கிலுமிருந்து கொண்டுவரப்பட்ட ஆடிப்பாவைகளை அவர்கள் தங்களுக்கு அடிமைகளாக்கி வைத்திருக்கிறார்கள். அவை அவர்களுக்கு பேய்களென பூதங்களென பணிவிடை செய்கின்றன. அவை ஆற்றும் செயலுக்கு நம் உள்ளத்தையும் உடல்விசைகளையும் எடுத்துக்கொள்கின்றன. ஆகவேதான் நாம் கனவில் களைப்படைகிறோம். எப்போதும் செயலாற்றுபவர்களாக நம்மை உணர்கிறோம்.”

“அந்த ஆடிப்பூதங்கள் பறக்கவும் நெளியவும் உருமாறவும் அறிந்தவை. மானுடருக்கு நிகரானவை, எனில் மானுடரை விட ஆற்றல் கொண்டவை” என்றான் சூதன். “பீதர்நாட்டில் இவ்வாறு உலகம் எங்கணுமிருந்து கொண்டுசென்று சேர்க்கப்பட்ட ஆடிப்பாவைகளினாலான ஒரு பெருநகரம் இருப்பதை ஒரு பீதன் சொன்னான். நீரலைகள்போல் ஒளி நெளியும் நகர் அது. அங்கு ஒரு நெல் மணி கீழே விழுந்தால் ஓசை கேட்கும் பேரமைதி நிறைந்திருக்கும். இரவுகளில் அந்நகரம் முற்றாகவே கரைந்து இல்லாமலாகும். அங்கு இரவில் செல்பவர்கள் வெற்றிடம் ஒன்றை உணர்கிறார்கள். காற்று சுழன்றமையும் வெளி. காலையில் ஒளி எழுகையில் அங்கே பெருமாளிகைகள் உருவாகி வரும். உலகெங்கிலும் பல்வேறு நகரங்களிலிருந்து பாவைகளாக பீதர்கள் கொண்டுவந்தவை அவை.”

“அவற்றில் இருந்து மானுடர் வெளிவருவார்கள். அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள். கரியவர்கள், மஞ்சள் இனத்தவர்கள், வெண்ணிறத்தோர். அவர்கள் அங்கு ஓசையின்றி புழங்குவார்கள். ஒருவரை ஒருவர் இயல்பாக ஊடுருவுவார்கள். அவர்களின் விழிகள் வெறித்து நோக்கிக்கொண்டிருக்கும். அவர்கள் வேறெங்கோ ஏதோ ஆடியை நோக்கிக்கொள்வது போலிருக்கும். அங்கே எடை இல்லை. ஆகவே யானையை குழந்தை தூக்கிவிட முடியும். கீழிருந்து மிதந்தெழுந்து மாடங்கள்மேல் உலவ முடியும். அங்கு மட்டுமே விரும்பியவர்களுடன் நாம் முழுதாக கரைந்து மறைய முடியும்.”

அஸ்தினபுரி ஒவ்வொரு நாளும் விந்தைகளை கண்டுகொண்டிருந்தது. விந்தைகளை சிறிதாக்கி விந்தைகள் பெருகிக்கொண்டிருந்தன. பீதர்நாட்டிலிருந்து பளிங்குக் குமிழிகளுடன் ஒருவன் வந்தான். ஆடி சமைக்க உருக்கி பலகையாக்கிய அதே மணற்பொருளை துளியென சொட்ட வைத்து உருவாக்கப்பட்டது அது. கை நிறைக்கும் பெரிய நீர்த்துளி போலிருந்தது. கல்லென எடைகொண்டிருந்தது. முதலில் பார்த்தபோது அங்கே நீர் இருப்பதாகவே தோன்றியது. பின்னர் அதில் சாளரங்கள் வளைந்து தெரிவதை கண்டான். யுதிஷ்டிரன் அதைப் பார்த்த பின் கையில் வாங்கி “வைரமா?” என்றார்.

“இது துளியாடி” என்று பீதர்நாட்டு வணிகன் சொன்னான். “இவற்றை வெவ்வேறு வகையாக வார்க்கிறார்கள். காட்சிகளை சுருக்கி அருகணையச் செய்யும் ஆற்றல் கொண்டவை இவை. விண்மீன்களை தொடும்தொலைவுக்கு கொண்டுவர முடியும். தொடுவானத்தை வளைத்து சூழவைக்க முடியும். அவ்வாறு ஓர் ஆடிக்கோவையை இங்கே முன்பிருந்த அரசருக்கு நான் விற்றேன். அதை இயக்க ஓர் உதவியாளனையும் நானே அளித்தேன்.” யுதிஷ்டிரன் “ஆம், அவ்வாறு ஒரு தொலைநோக்கியைப் பற்றி சொன்னார்கள். அது சூதர்சொல்லின் மாயம் என்றே எண்ணினேன்” என்றார். “அது மாயம்தான்” என்றான் வணிகன்.

யுதிஷ்டிரன் அதை தன் கையில் வைத்து “ஒரு மாபெரும் விழிமணி” என்றார். “மாபெரும் மீன் ஒன்றின் கண்” என்று மீண்டும் சொன்னார். “பிறகு இந்த அவைக்கூடமும் சாளரங்களும் கூரையும் தூண்களும் இதில் சுருண்டு சுழிக்கிறது” என்றார். “ஆம், அரசே. சூழ்ந்திருக்கும் அனைத்துக் காட்சிகளையும் அள்ளி தன்னுள் சுழித்து துளியென்றாக்கும் வல்லமை இதற்குண்டு” என்றான் வணிகன். யுதிஷ்டிரன் அவன் கொண்டுவந்த எட்டு ஆடிகளையும் வாங்கினார். அஸ்தினபுரியின் ஏழு கொற்றவை ஆலயங்களிலும் இறையுருவின் முன் அதை அமைக்கும்படி சொன்னார்.

“அன்னையின் காலடியில் இந்த விழி அமையட்டும். சூழ்ந்திருக்கும் அனைத்தும் அவள் முன் படைக்கப்படட்டும்” என்றார். ஒன்றை அவர் தனக்கென வைத்துக்கொண்டார். தன் அறையில் சிற்றவையில் தன் முன் சிறு பீடத்தில் அதை வைத்தார். மாயத்தால் கட்டுண்டவர் என அதை நோக்கிக்கொண்டே இருந்தார். “இத்தனை எளிதாக இவ்வுலகை சுருக்கி துளியாக்க முடியும் என்று எண்ணியதே இல்லை” என்றார். “நோக்க நோக்க பெருகுகிறது. பிறிதொன்றில் உள்ளம் செல்லாதாக்குகிறது” என்று சொல்லிக்கொண்டார். “இது ஒரு கனவு. கனவு இவ்வண்ணம் காட்சிகளைச் சுழற்றி தன்னகத்தே கொண்ட துளி…” என்றார். சொல்லிச் சொல்லி தீராமல் “தெய்வத்தின் ஓர் எண்ணத்துளி” என்றார்.

தன் அறையில் பெரும்பாலான பொழுதுகளில் அதை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார். “இது என்னை விந்தையான கனவுகளுக்குள் தள்ளுகிறது. இங்கு பறந்து பறந்து என்னை திகைக்க வைக்கும் அனைத்தையும் சுழற்றி கையிலெடுத்துக்கொள்கிறேன். காலத்தையும் வெளியையும்கூட பட்டுநூலை சிறு கழியிலென சுருட்டிக்கொள்ள முடியுமெனத் தோன்றுகிறது” என்றார். “இது ஊழ்கத்தில் அமைந்திருக்கிறது. விந்தைதான், ஒரு பருப்பொருள் ஊழ்கத்தில் அமையக்கூடும் என்பதை நான் உணர்ந்திருக்கவே இல்லை.” அவர் எழுந்து சாளரம் வழியாக நோக்கினார். அவர் கண்களில் பித்து எழுந்துவிட்டிருந்தது.

“அங்கே எங்காவது ஒரு மலையுச்சியில் இதைக் கொண்டு பொருத்திவிடவேண்டும். அப்படியே அகன்றுவிடவேண்டும். இது மட்டும் அங்கே இருக்கவேண்டும். எவரும் அறியாமல். எவரும் எப்போதும் கண்டடையாமல். இது வானையும் மண்ணையும் தன்னுள் உருக்கி துளியாக்கிக்கொண்டே இருக்கவேண்டும். எவரும் அறியவேண்டியதில்லை. அவ்வண்ணம் ஒன்று அங்கிருந்தால் போதும். இவ்வுலகம் அதை மையம் கொண்டுவிடும். இவ்வுலகின் சிக்கலே இதன் நிகழ்வுகளுக்கென ஒரு மையம் இல்லை என்பதுதான். ஒரு மையம் அமைந்தால் இது இப்போதுபோல வடிவமில்லா சிதறல்களாக இருக்காது. இது ஒருங்கிணைவு கொள்ளும். நிறைவுற்ற வட்டமென்றாகும். வட்டமே முழுமையுள்ள ஒரே வடிவம். ஏனென்றால் மாறாத மையம் கொண்டது அது மட்டுமே.”

 

யுயுத்ஸு கங்கையில் படகிலேறிக்கொண்டு அறைக்குள் சென்று கண்களை மூடிக்கொண்டான். படகு சென்றுகொண்டிருக்கையில் அவன் எண்ணங்கள் மீண்டும் ஒழுகிச்செல்லத் தொடங்கின. அவன் திரௌபதியைப் பற்றி எண்ணிக்கொண்டான். அவளை அவன் முதல்முறையாகக் கண்டது காம்பில்யத்தில் நிகழ்ந்த மணத்தன்னேற்பு நிகழ்வில். துரியோதனனும் கர்ணனும் முதலில் கிளம்பிச் சென்றுவிட்டிருந்தார்கள். அஸ்தினபுரியிலிருந்து கௌரவ இளவரசர்கள் நூற்றுவரும் செல்வதாக அதன் பின்னரே முடிவெடுக்கப்பட்டது. அவனை உடன் வரும்படி துச்சாதனன் ஆணையிட்டான். அவர்களுடன் அவனும் கிளம்பினான்.

செல்லும் வழியெங்கும் அவர்கள் திரௌபதி பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். சூதன் ஒருவன் திரௌபதியின் எழிலையும் நிமிர்வையும் கல்வியையும் ஆட்சித்திறனையும் புகழ்ந்து பாடினான். சூதர்கள் இளவரசியரைப் புகழ்ந்து பாடி அலைவதை அவன் கேட்டிருந்தான். ஆனால் அப்பாடல்களில் இருக்கும் வழக்கமான வரிகளேதும் அப்பாடலில் இல்லை. “இரவின் நிறம்கொண்டவளே, உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா? நீ அவற்றைச் சூடிய முடிவிலியா என்ன? அன்னையே, நீ கரந்துள்ள மெய்மைகள் என்ன?” அந்த வரிகள் ஒரு மானுடப் பெண்ணைப் பற்றியவை என்று அவனால் எண்ண முடியவில்லை.

கௌரவர் திரௌபதியை கர்ணன் வென்று கொண்டுவருவார் என நம்பினர். அதன் வழியாக அஸ்தினபுரிக்கும் பாஞ்சாலத்திற்குமான அழியா முடிச்சு உருவாகும் என்றனர். “பிறிதொருவர் அவளை அணுகவே முடியாது. ஐயம் வேண்டியதில்லை. அவள் அங்கருக்கு உரியவள். அங்கே எதிர் எழுவதற்கு எவர்? மகதனா? சைந்தவனா? அவர் அவையிலெழுந்தால் அவர்கள் ஒளியிழந்து அகல்வார்கள். அவர்கள் வில்லெடுத்து அவர் முன் நின்றிருக்காது ஒழிந்தால்கூட வியப்பதற்கில்லை.”

அவன் அதை ஏனோ உள்ளூர ஏற்கவில்லை. எங்கோ அர்ஜுனன் உயிருடன் இருக்கிறான் என அவன் நம்பினான். அதற்கான எந்தச் சான்றும் அவனிடமிருக்கவில்லை. அவனை அவ்வாறு எண்ணச்செய்தது விதுரரின் விழிகள். பாண்டவர்கள் வாரணவதத்தில் எரிந்தழிந்திருந்தால் அவ்விழிகள் அவ்வாறு இருக்காது. அர்ஜுனன் உயிருடன் இருக்கிறான் என்றால் அவனே திரௌபதியை மணப்பான் என்று அவனுக்குத் தோன்றியது. அதற்கும் எந்தச் சான்றும் அவனிடமிருக்கவில்லை. பின்னர் உணர்ந்து அதை கொள்கையென சொல்படுத்திக்கொண்டான். கர்ணனிடம் அனைத்துச் சிறப்புகளுடன் இணைந்து தோல்வி நோக்கிச் செல்லும் சரிவொன்று இருந்தது. அர்ஜுனனிடம் எப்போதுமே வெற்றி நோக்கிய எழுகை இருந்தது.

“ஊழை நேரில் கண்டவனின் விழிகள் பதைப்பு கொண்டுவிடுகின்றன. அதன்பின் அவன் எப்போதுமே தன்னைப்பற்றிய முழு நம்பிக்கையை அடைவதில்லை. அறியாமையே ஆயினும் ஊழை உணராதவன் தன்னம்பிக்கை கொண்டிருக்கிறான். ஆகவே வெற்றி நோக்கி செல்கிறான்” என்று அவன் ஒருமுறை சொன்னான். விகர்ணன் அதைக் கேட்டு “ஆம், நான் அவ்வாறு எண்ணியதில்லை. ஆனால் உன் சொற்களைக் கேட்கையில் அது அவ்வண்ணமே என்று எண்ணத்தோன்றுகிறது” என்றான்.

காம்பில்யத்தில் திரௌபதி மணத்தன்னேற்பு மண்டபத்திற்குள் நுழைந்தபோது அவன் பதற்றம் கொண்டிருந்தான். அவன் அதற்கு முன்னரே அர்ஜுனனை கண்டுவிட்டிருந்தான். அவனுடைய நம்பிக்கையும் விழைவுமே அந்தத் திரளில் அவனை அடையாளம் காட்டியது. ஆனால் தன் நோக்கு மெய்யா என்று அவன் குழம்பினான். அதை கௌரவர்களிடம் சொல்லலாகுமா என்று தயங்கினான். அப்போது எழுந்த வாழ்த்தொலி வெடிப்பைக் கேட்டுத் திரும்பி அங்குமிங்கும் நோக்கி திகைத்த விழி மேடையேறி நின்ற திரௌபதியை கண்டுகொண்டது. அவன் அறியாமல் கைகூப்பிவிட்டான்.

அதன்பின் ஆலயம் அமர்ந்த தேவி என்றே அவன் அவளை எப்போதும் உணர்ந்தான். தனியாக அவளிடம் அவன் பேச வாய்க்கவில்லை. கௌரவர் திரளுடன் நின்றிருக்கையில் அவளைக் கண்டதுமே அவன் கைகள் நெஞ்சோடு சேர்ந்தன. அவன் அவள் அடிகளை மட்டும் நோக்கி அகம்பணிந்து நின்றிருந்தான். அவள் அவைச்சிறுமை செய்யப்பட்டபோது அவன் அவையின் மூலையில் சுஜாதனின் அருகே தூணுக்குப் பின்னால் பாதி உடல் மறைத்து நின்றிருந்தான். துச்சாதனனால் அவள் இழுத்துவரப்பட்டபோது எழுந்த அவையோசையை மட்டுமே கேட்டான். விழிகளை மூடிக்கொண்டு அன்னையே அன்னையே என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவை முடிவுவரை அவன் அவ்வாறு அகத்தே அரற்றிக்கொண்டு நின்றான்.

அன்று பின்னிரவில்தான் அவன் தன் மாளிகைக்குத் திரும்பினான். அவன் அன்னை அவைக்கு வந்திருக்கவில்லை. அந்த அவையில் அரசகுடிப்பெண்டிருக்கு மட்டுமே இடம். ஆனால் அன்னை அனைத்தையும் அறிந்துவிட்டிருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் அவள் சீற்றத்துடன் எழுந்து வந்து “நிகழ்ந்தது என்ன? அவையில் என்ன நிகழ்ந்தது?” என்று கூவினாள். அவன் அவள் சீற்றத்திலிருந்தே அன்னைக்கு எல்லாம் தெரியும் என்று உணர்ந்து ஒன்றும் சொல்லாமல் நின்றான். “நீயும் பழிகாரனே. அந்த அவையில் நின்ற ஆண்கள் அனைவரும் பழிகொண்டவர்களே. ஒவ்வொருவரும் அதன்பொருட்டு குருதி சிந்துவார்கள். குலம் அழிவார்கள்… இதை தெய்வங்கள் பொறுக்கப்போவதில்லை. விண்ணெரி விழுந்து இந்நகர் அழியும். அதன்பொருட்டே இவ்வண்ணம் இயற்றின தெய்வங்கள்!” என்றாள்.

“நான் விழிதூக்கவில்லை. தெய்வங்களை இறைஞ்சும் சொல்லன்றி ஒன்றும் எண்ணவில்லை” என்று அவன் சொன்னான். “நீ நூல்கற்றவன் அல்லவா? அவையெழுந்து ஒரு சொல் உரைக்க உன்னால் இயலவில்லை என்றால் நீ கற்ற சொற்களுக்கு என்ன பொருள்?” என்று அன்னை கேட்டாள். “குலமூத்தாரும் நூல்தெளிந்தவரும் அங்கிருந்தனர்” என்று அவன் சொன்னான். “அவர்கள் தங்கள் சொற்களால் தங்களை கட்டிக்கொண்டவர்கள். நீ யார்? குலமிலி. குடியிலி. நீ எதை அஞ்சவேண்டும்? உயிருக்காகவா? அதை இழந்தால்தான் என்ன?” என்று அன்னை கேட்டாள்.

யுயுத்ஸு “நான் அறியேன். என்னால் விழிநீர் சிந்துவதன்றி ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் நான் கோழை. கோழையின் அறிவும் நல்லியல்பும் பொருளற்றவை என்கின்றன நூல்கள்” என்றான். கால்தளர்ந்து சென்று அமர்ந்தான். அன்னை அவனருகே வந்து நின்று “சொல், நீ ஏன் சொல்லெடுக்கவில்லை? சொல், ஏன் அந்த அவையில் சங்கறுத்துச் செத்துவிழவில்லை?” என்றாள். “அறியேன், அவை முடிந்தபின் நீங்கள் சொன்ன அனைத்தையும் ஆயிரம் முறை உள்ளத்துள் இயற்றினேன். அந்த அவையில் செத்த உடலென நின்றுகொண்டிருந்தேன். ஏன் என்று அறியேன்” என்றான்.

“நீ விழைவு கொண்டவன். இந்த நூற்றுவரை ஒட்டிப்பிழைக்கும் நசைகொண்டவன்” என்று அன்னை கூவினாள். அவன் சீற்றத்துடன் நிமிர்ந்து “இல்லை, நான் கோழை. ஏன் கோழை என்றால் நான் குலமில்லாதவன் என்பதனால். அந்த அவையில் சூதனுக்குரிய ஆடையணிந்து இசைக்கலத்துடன் நின்றிருந்தேன் என்றால்கூட துணிந்திருப்பேன். இதோ இந்தப் பொய்யாடை அணிந்திருந்தேன். பொருந்தாத் தோற்றம் கொண்டவன் அவைபுக நாணுவான். அதனால்தான் தயங்கினேன்” என்றான். அன்னை நீர் நிறைந்த விழிகளால் அவனை நோக்கிக்கொண்டு நின்றாள்.

அவன் விசும்பியபடி தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டான். “இதன் பொருட்டு நான் பழிகொள்கிறேன். கீழ்மைகொள்கிறேன். என்னால் மூத்தவரை விட்டு அகல முடியாது. அவருடைய கைகளின் வெம்மையில் வளர்ந்தவன் நான்” என்றான். அன்னை அவனையே நோக்கிக்கொண்டு நின்றாள். பின்னர் மெல்லிய காலடிகளுடன் அகன்று சென்றாள். அவன் அங்கேயே சுருண்டு படுத்துக்கொண்டான். இரண்டு நாட்கள் அந்த மஞ்சத்திலேயே கிடந்தான். நீர் மட்டும் அருந்தியபடி எண்ணங்கள் மயங்கி மயங்கி ஓட. விழிநீர் வழிந்து உலர்ந்து மீண்டும் முகம் நனைய. துரியோதனனுடைய அழைப்புடன் அரண்மனையிலிருந்து சுஜாதன் வந்தபோதுதான் அவன் மீண்டு அரண்மனைக்கு கிளம்பினான்.

அவன் திரௌபதியை அணுக்கமாக சந்தித்தது போர்ச்செய்திகளை சொல்லும்பொருட்டு செல்லும்போது மட்டும்தான். அவன் சென்று கூடத்தில் காத்திருக்கையில் குந்தி முதலில் வருவாள். ஓசையில்லாத நிழலசைவுபோல. சிற்றடிகள் வைத்து வந்து அமர்ந்துகொள்வாள். அவன் எழுந்து கைகூப்பி நிற்பான். சற்றுநேரத்தில் திரௌபதி கூடத்திற்குள் வருவாள். அவ்வறைக்குள் வேறொன்று குடியேறிவிடும். முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. ஆற்றல் மிக்கது. மானுடரை மீறியது. அவன் அவள் உருவை நிமிர்ந்து நோக்குவதே இல்லை. அவள் கால்களையே நோக்குவான். நிழலாகவே அவள் அசைவுகளை உணர்வான். அவள் கைகாட்டியதும் அமர்ந்து நிகழ்வுகளை சொல்வான். விடைபெறும்போது மட்டும் எழுந்து அவளை நோக்கி வணங்கி மீள்வான். குந்தி உணர்வுகளால் நடுங்கிக்கொண்டிருப்பாள். திரௌபதியின் விழிகளில் அவன் அதுவரை சொன்னவற்றின் எந்த உணர்ச்சிகளும் இருக்காது. அனைத்துக்கும் அப்பால் என அவள் அமர்ந்திருப்பாள்.

மைந்தரை இழந்தபின் அவளை முக்தவனத்தில் அவன் ஓரிருமுறை அகலே நின்று நோக்கினான். அவள் சித்தமழிந்துவிட்டவள் போலிருந்தாள். மரங்களிடமும் செடிகளுடனும் ஏதோ உரையாடிக்கொள்பவள்போல. அகலே நின்று நோக்கியபோது அந்தப் பச்சையொளியில் அவள் துயரற்றவள் என்றே தோன்றினாள். இப்புவியிலுள்ள எதுவும் சென்று தொட முடியாதவள்போல. அவன் அவள் அடிகளை அருகிலென பார்த்துக்கொண்டிருந்தான். படகின் ஊசலாட்டத்தில் சித்தம் மயங்கி இருப்புக்கும் இன்மைக்கும் நடுவே எங்கோ அலைபாய்ந்துகொண்டிருந்தது. அவள் அவன் அருகே அங்கே இருப்பதாக உணர்ந்தான்.