பதிவர்: SS

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 27

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 8

குழல்கற்றைகள் ஈரமாக இருந்தமையால் தலைப்பாகை அணிய முடியவில்லை. தலைதுவட்டிக்கொண்டிருந்தபோது நகுலன் உள்ளத்தால் யுதிஷ்டிரனின் அவைக்கு சென்றுவிட்டிருந்தான். அங்கே என்ன சொல்லவேண்டும் என்று சொல்லை எடுத்து கோக்கத் தொடங்கியபோதுதான் தன் உள்ளம் திருதராஷ்டிரரின் குடிலில் நிகழ்ந்த அனைத்திலிருந்தும் மிக விலகி, எண்ணி எடுக்கத்தக்க சில சொற்களாக அனைத்தையும் மாற்றிவிட்டிருப்பதை உணர்ந்தான். அதன்பொருட்டே வேறெங்கோ சென்றது அகம். எதைஎதையோ கோத்தது. எவற்றையெல்லாமோ எடுத்து போர்த்திக்கொண்டது.

திருதராஷ்டிரரின் குடிலில் நிகழ்ந்தது வாழ்நாள் இறுதிவரை நீடிக்கும் ஒரு நினைவு. அல்லது நாளையே அதை உள்ளம் கழித்துவிடவும்கூடும். அத்தருணத்தின் அறியமுடியாமையும் உணர்வுச்சுழல்களும் அடியிலியைச் சென்றடைந்து மீண்ட அவ்வெறுமைப்பெருவெளியும் இத்தனை எளிதாக சொல்லாக மாறுமென்பதை எண்ணும்போது அவனுக்கு விந்தையானதோர் நிறைவும் பின்னர் புன்னகையும் தோன்றியது. சொல்லைப்போல் முடிவுற்றுவிட்ட பிறிதொன்றில்லை. மீண்டும் நேரடி நிகழ்வினூடாக, கற்பனையினூடாக அதைத் திறந்து விரித்தாலொழிய அது ஒன்றையே சுட்டி நின்றிருக்கும்.

அவன் யுதிஷ்டிரனின் அவைக்களம் நோக்கி செல்கையில் அச்சொற்களை மீண்டும் ஒருமுறை முறையாக கோத்து அடுக்கி உருவமைத்துக்கொண்டான். ஆகவே அவன் நடை சீரான காலடிகளாக அமைந்தது. யுதிஷ்டிரன் தன் குடிலுக்கு வெளியே சாலமரத்தடியில் போடப்பட்டிருந்த தாழ்வான மூங்கில் பீடத்தில் அமர்ந்திருக்க சகதேவன் அவர் அருகே பின்னால் அமர்ந்திருந்தான். சற்று அப்பால் மரங்களில் சாய்ந்தபடி பீமனும் அர்ஜுனனும் நின்றனர். ஏவலர்கள் மேலும் விலகி நிற்க தௌம்யர் யுதிஷ்டிரனுக்கு நேர் முன்னால் உயரமான மரப்பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய மாணவர்கள் நின்றனர். யுதிஷ்டிரனுக்கு வலப்பக்கம் அமைச்சர்கள் நின்றிருந்தனர்.

அவர்கள் மெல்லிய குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அப்பேச்சு அத்தனை செறிவானதல்ல என்பது அவர்களின் விழிகள் அலைந்ததில் இருந்து தெரிந்தது. யுதிஷ்டிரன் முதலிலேயே நகுலனை பார்த்துவிட்டார். அவருடைய சொல் தயங்கியதும் தௌம்யரும் பிறரும் திரும்பி நோக்கினர். நகுலன் அருகணைந்து சொல்லின்றி தலைவணங்கி நின்றான். யுதிஷ்டிரன் அவனை நிமிர்ந்து பார்த்து சற்றே எரிச்சலுடன் “நெடும்பொழுதாக உனக்காக காத்திருக்கிறோம்” என்றார். “நான் அங்கிருந்து வந்து ஒற்றர்களை சந்தித்து சில ஆணைகள் விடுக்க வேண்டியிருந்தது” என்றான் நகுலன். என்ன என்பதுபோல் யுதிஷ்டிரன் ஏறிட்டுப் பார்த்தார்.

“பிற அரசியரும் திருதராஷ்டிரருடன் தங்க விரும்பினார்கள். அதனால் என்ன நிகழும் என்பதை எண்ணவேண்டியிருந்தது. ஆனால் அது முறையானது என்பதனால் அவர்களை அங்கு அனுப்ப ஆணையிட்டேன்” என்றான். யுதிஷ்டிரன் “அவர்கள் அங்கு தங்க இடமிருக்கிறதா?” என்றார். “இப்போது அவர்கள் பேரரசருடன் இருக்கிறார்கள். இன்று மாலைக்குள் அவர்களுக்கான குடில்களை அங்கு போட்டுவிடமுடியும். அனைத்துக்கும் ஆணையிட்டிருக்கிறேன்” என்று நகுலன் கூறினான்.

அப்பேச்சினூடாக அவர்களின் எண்ணங்களை அவன் திருதராஷ்டிரரின் மேல் திருப்பிவிட்டான். தௌம்யர் “அவர்கள் அவருடன் இருப்பது நன்று” என்றார். ஆனால் கூடவே மெல்லிய குரலில் “அவர்கள் பதின்மர்” என்றார். அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதுபோல் அச்சொல் ஒலித்தாலும் அனைவரும் திரும்பி கூர்ந்து நோக்கினர். அவரே அச்சொற்களை உணர்ந்து “பத்து முகங்களைப்போல. உள்ளத்தின் பத்து வடிவங்கள்” என்றார். “ராவணப்பிரபுவைப்பற்றி அவ்வண்ணம் சொல்வதுண்டு. அவருடைய பத்து ஆணவநிலைகள் அவை என. இவை அறத்துணையின் பத்து வடிவங்களாக இருக்கக் கூடும்.” அப்போதும் அவர் சொல்ல வருவதென்ன என்று நகுலனுக்கு புரியவில்லை. யுதிஷ்டிரன் தவிர பிறர் அதை உளம்கூர்ந்து எண்ணவுமில்லை.

தௌம்யர் நகுலனை நோக்கிவிட்டு “அவர்கள் அறத்துணை என்பதன் எடுத்துக்காட்டுக்கள் என்பதை மறுக்கவேண்டியதில்லை. ஆனால் பத்து நிலைகள். பத்து எனில் கொழுநருக்காக கண்களை கட்டிக்கொண்ட காந்தாரி ஓர் எல்லை. மறு எல்லையில் உளம் உடைந்து சாளரத்தில் அமர்ந்தவள்… விழியின்மை. பற்று என்பது ஒரு விழியின்மை. கற்பு என்பதும் இன்னொரு விழியின்மையே” என்றார். புன்னகைத்து “நான் சொல்லவருவதை சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. இதெல்லாம் சற்றே வழிவிட்டுச் செல்லும் எண்ணங்கள். என் குருமரபுக்கு மட்டுமே உரியவை. பிறர் இவற்றை உளக்கோணல் என்றே எண்ணக்கூடும்” என்றார்.

“சொல்க!” என்றார் யுதிஷ்டிரன் தணிந்த குரலில். “இப்படி சொல்கிறேன். உலகளந்தானுக்கு மஞ்சமும் குடையும் ஆகி நின்றிருக்கும் முதல்நாகம் ஆயிரம் தலைகொண்டது. ஈராயிரம் நா கொண்டது. வாழ்த்தும் பணிவும் என அதன் நா ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஆயிரத்தின் மடங்குகளில் என பெருகிச் செல்லும் அச்சொற்களில் பலகோடியில் ஒன்று அவர்மேல் நஞ்சு கக்கும் என்று தப்தகீதிகை சொல்கிறது.” நகுலன் அவர் சொல்லவருவதை புரிந்துகொண்டு “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது” என்றான். யுதிஷ்டிரன் “என்ன வாய்ப்பு?” என்றார். தௌம்யரை நோக்கி “என்ன நிகழும்?” என்றார். நகுலன் “நமக்கு வேறு வழியில்லை, அமைச்சரே” என்றான். “ஆம், அவருக்கும் வேறுவழியில்லை” என்றார் தௌம்யர்.

மீண்டும் ஒரு சொல்லின்மை உருவாகியது. காடு ஓலமிட்டுக்கொண்டிருந்தது. நகுலன் தௌம்யரை பார்த்துக்கொண்டிருந்தான். வேதம் பெருங்கனவென எழுந்து ஆட்டிவைக்கும் காடுகளை அவன் கண்டு மீண்டிருந்தான். இங்கே அது அன்றாட உலகியல் மெய்மையாக, அவற்றை நிகழ்த்தும் சடங்குகளாக மாறி அமைந்திருக்கிறது. வேதமுடிபினர் அளவைநோக்கை வெறுப்பதை அவன் கண்டிருந்தான். ஆனால் அப்போது அதுதான் பயனுள்ளதா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒவ்வொன்றையும் இயற்கை ஒளியில் அவற்றுக்கான மெய்யான அளவில் நிறுத்துகிறது. தெய்வங்களையும் அளந்தே வைத்திருக்கிறது அளவைநோக்கு. வேதமுதன்மைநோக்கு என்கிறார்கள் அவர்கள். வேதம் அவர்களின் அளவுகோல். அதை மாற்றிக்கொள்ள அவர்களால் இயலாது.

யுதிஷ்டிரன் பொருளற்ற எண்ணங்களில் உழல்வதை அவருடைய விழிகளின் மங்கல் காட்டியது. சற்று நேரம் கழித்து உளம் மீண்டு அசைந்தமர்ந்து “நாம் பேரரசரைக் கண்டு வணங்கி சொல் பெற்ற பின்னரே நீர்க்கடன் தொடங்கவேண்டுமென்று தௌம்யர் ஆணையிடுகிறார், இளையோனே” என்றார். நகுலன் “ஆம், அது முறையே” என்றான். யுதிஷ்டிரன் மேலும் ஒவ்வாமையை உடலில் காட்டி “ஆனால் நாம் சென்று வணங்கி சொல் பெறும் நிலையில் அவர் உள்ளாரா? இப்போது இந்த அவை அறிய வேண்டியது அதுவே” என்றார்.

நகுலன் “எந்நிலையிலாயினும் அவர் நம் தந்தை” என்றான். யுதிஷ்டிரன் பெருகும் எரிச்சலுடன் உரக்க “நான் உன்னிடமிருந்து நெறியுரைகளை எதிர்பார்க்கவில்லை. இன்று நிகழ்ந்ததை வைத்து உன் கணிப்பென்ன என்று அறியத்தான் உன்னை அழைத்தேன்” என்றார். அவர் எரிச்சல்கொண்டது நகுலனுக்கு உவப்பாக இருந்தது. அவன் தன் நிலையழிவை கடந்து நின்று சொல்லெடுக்க வாய்ப்பாக அமைந்தது அது. “இன்றைய நிகழ்வுகளை வைத்து நாம் எதையும் முடிவெடுக்க முடியாது” என்றான். “ஆம், ஆனால் நிகழ்ந்தவையே அடையாளம்… சொல்” என்றார் யுதிஷ்டிரன்.

தௌம்யர் “இன்று பேரரசி அரசரைச் சென்று சந்தித்தபோது என்ன நிகழ்ந்தது? அதை முதலில் சொல்க!” என்றார். நகுலன் “அவர்கள் இன்று மைந்தரை இழந்த தந்தையும் தாயும் மட்டுமே. அறுதியில் அவர்களிடம் எஞ்சியது அந்நிலை மட்டும்தான். அதுவே நிகழ்ந்தது. தழுவிக்கொண்டு விழிநீர் உகுத்தனர்…” என்றான். யுதிஷ்டிரன் கை நீட்டி அவனைத் தடுத்து “அவ்வாறே நிகழும் என்று நானும் எண்ணினேன். அத்துயர் உச்சியில் அவர்கள் வெஞ்சினம் கொண்டார்களா? நம்மைக் குறித்த பழிச்சொற்கள் அவர்கள் நாவில் எழுந்தனவா? பேரரசியோ அரசரோ நம்மை தீச்சொல்லிட வாய்ப்புண்டா? நாம் சென்று அவர்களைப் பார்ப்பது நலம் பயக்குமா? நான் அறிய விரும்புவது அதை மட்டும்தான்” என்றார்.

நகுலன் கசப்புடன் “இத்தருணத்தில் மானுடரைப் பற்றி என்ன சொல்ல இயலும்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலிருக்கிறார்கள். முந்தைய கணம் அடுத்த கணத்தை உருவாக்காமல் ஆகிவிட்டிருக்கிறது இங்கே. மூத்தவரே, இன்று எவரைப் பற்றியும் எக்கணிப்பையும் சொல்லும் நிலையில் நானில்லை” என்றான். பீமன் உடலை அசைத்து எழுந்தபோது கைகள் மார்பிலிருந்து தழைந்தன. “இப்பேச்சுக்கு பொருளே இல்லை. நாம் சென்று அவரைப் பார்த்து வணங்கி சொல் பெறவேண்டுமென்பது முறையெனில் அதை செய்வோம். அதன் பொருட்டு தீச்சொல்லோ பழிச்சொல்லோ வருமெனில் அது நமக்குரியது என்றே கொள்வோம். எண்ணிச் சூழ்ந்து இங்கு அமர்ந்திருப்பதுபோல் வீண்செயல் பிறிதில்லை” என்றான்.

யுதிஷ்டிரன் “வாயை மூடு… நீ அவர் முன் சென்று நின்றிருக்கப்போகிறாயா? கீழ்மகனே, நீ அவருக்குச் செய்தது என்ன என்பதை உணர்ந்திருக்கிறாயா? ஒரு தந்தையின் நூறு மைந்தரையும் ஆயிரம் பெயர்மைந்தரையும் கொன்றுவிட்டு அவரை எதிர்கொள்ளப்போகிறாய்” என்றார். “நான் அவர்களை போரில் வென்றேன். படைக்கலம் எடுத்து களம்வரும் ஒருவன் முடிந்தால் என்னை கொல் என்னும் அறைகூவலையே விடுக்கிறான். வென்றால் கொல்லும் ஒப்புதலை வழங்குகிறான்… நான் போர்வென்றவன். என் வெற்றியை தெய்வங்களுக்கு அளித்துவிட்டவன். எதைப்பற்றியும் வருந்தவேண்டியதில்லை நான்” என்றான் பீமன்.

யுதிஷ்டிரன் சினத்துடன் உரக்க “நீ நெறி பேசுகிறாயா? என்னிடம் அறம் பேச வந்தாயா?” என்றார். “ஆம், என் அறம் பற்றி எனக்கு எந்த ஐயமும் இல்லை. எதைப்பற்றியும் குற்றவுணர்ச்சியும் இல்லை” என்று பீமன் சொன்னான். “செய்தவற்றின்பொருட்டு குற்றவுணர்ச்சி கொள்வதே நரகம் என்பது… நான் அதில் இல்லை.” யுதிஷ்டிரன் “அது மானுட இயல்பு. குற்றவுணர்ச்சி அற்றவை விலங்குகள்” என்றார். “மூத்தவரே, இக்குற்றவுணர்ச்சி ஒரு நடிப்பு. இச்செயலைக் கடந்துசென்று வெற்றியின் கனிகளை உண்ண நாமனைவரும் அதை பயன்படுத்திக்கொள்கிறோம். நான் எதையும் நாடவில்லை. ஆகவே எனக்கு எந்த நடிப்பும் தேவையில்லை” என்றான் பீமன்.

“சீ, கீழ்மகனே! என்ன சொன்னாய்?” என்றபடி யுதிஷ்டிரன் எழுந்துவிட்டார். “என்னடா சொன்னாய்? என் முகத்தை நோக்கி நீ என்னடா சொன்னாய்?” பீமன் உறைந்த முகத்துடன் அமைதியாக நிற்க தௌம்யர் “அரசே, அமர்க!” என்றார். யுதிஷ்டிரன் பதறும் உடலுடன் அமர்ந்துகொண்டார். “இவன் சொல்வதென்ன? இவனுடைய சொற்களில் என்றுமிருந்தது இந்த நஞ்சு. இன்று அது நொதித்து கூர்கொண்டுவிட்டிருக்கிறது. அறிவிலி… காட்டாளன். அமைச்சரே, இவன் வடிவில் காட்டின் இருள் எழுந்து வந்து பாண்டுவின் குடியை பழிப்பு காட்டுகிறது. பாண்டுவால் கொல்லப்பட்ட அந்த விலங்கின் வஞ்சம் போலும் இது.” அவர் தன் தலையில் அறைந்து கொண்டார். “ஊழ், ஊழன்றி வேறில்லை…”

தௌம்யர் “நாம் இப்போது பேசவேண்டியவை இவை அல்ல. ஒருவரை ஒருவர் குத்திக் கிழித்துக்கொள்வதில் பொருளில்லை” என்றார். “ஏன் இதை செய்கிறோம்? அமைச்சரே, இங்கே நிகழ்வது இதுவே. நாங்கள் ஐவரும் சந்தித்துக்கொள்ளவே இயல்வதில்லை. ஒருவரை நோக்கி ஒருவர் நஞ்சு கக்காமல் எங்களால் மீள இயல்வதில்லை” என்றார். “ஏனென்றால் நீங்கள் ஐவரும் ஓருடலின் ஐந்து முகங்கள்” என்றார் தௌம்யர். “நீங்கள் உங்களிடமே சொல்லிக்கொள்வனதான் சொல்லாகவும் எழுகின்றன.” யுதிஷ்டிரன் குரல் தளர்ந்து “ஏன் இந்த பெருந்துன்பம்? ஏன் துயரை வளர்த்து அதில் இப்படி திளைக்கிறோம்? ஏன் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொள்கிறோம்?” என்றார்.

சகதேவன் “நஞ்சில் புழுத்த புழுக்கள்போல் துயருக்கே பழகி அதில் வாழத் தொடங்கிவிட்டிருக்கிறோம். ஆகவே அது நமக்கு போதாமலாகிவிட்டிருக்கிறது” என்றான். அவன் குரலில் இருந்த ஏளனம் யுதிஷ்டிரனின் உள்ளத்தை அடங்கச்செய்தது. “ஆம், உண்மை. நம்மைப்போல் ஏளனத்துக்குரிய சிற்றுள்ளங்கள் இங்கு வேறில்லை…” என்றார். நகுலன் தன்னுள்ளே புன்னகைத்துக்கொண்டான். துயரைக் கொட்டி அதை வெறுப்பினூடாக வளர்த்து உச்சத்தை அடைந்து ஓர் ஏளனம் வழியாக கீழிறங்கி வருவதே ஒவ்வொருநாளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தௌம்யர் “நாம் பேசவேண்டியதை பேசுவோம்” என்றார்.

நகுலன் “ஆம், அதையே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றான். “அமைச்சரே, பேரரசர் நம்மை நோக்கி என்ன சொல்லக் கூடுமென்பதை இத்தருணத்தில் அவரே அறியார். இவ்வனைத்தையும் நிகழ்த்தும் தெய்வங்கள்கூட அவற்றை சொல்ல முடியாது. ஒவ்வொருமுறையும் நம் கணிப்புகள் அனைத்தையும் கடந்து ஏதோ ஒன்றுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்னும்போது இங்கு அமர்ந்து ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி கணிப்பதில் உள்ள பொருளின்மையை நாம் உணர்வதில்லை” என்றான். யுதிஷ்டிரன் “நம் செயல்களை பொருளற்றுப் போகச்செய்வது தெய்வங்களின் ஆணை. ஆனால் நாம் ஆற்றும் செயலுக்கான பொருள் ஒன்று நம்மிடம் இருக்கவேண்டும். இல்லையேல் அச்செயலை நம்மால் நம்பி ஆற்றமுடியாது” என்றபின் சகதேவனிடம் “நீ என்ன எண்ணுகிறாய், இளையோனே?” என்றார்.

சகதேவன் “அவர்கள் விழிநீர் உகுத்திருக்கிறார்கள், அது ஒன்றே இப்போது போதுமானது” என்றான். “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “மூத்தவரே, விழிநீர் அனைத்தையும் கழுவுவது. முதன்மையாக வஞ்சத்தை. பேரரசியின் அணைப்பில் சிறுமைந்தராக மாறிய பேரரசர்தான் அங்கிருப்பார். ஒருவேளை அவர் அகம் மீண்டும் நஞ்சு கொள்ளக்கூடும். ஆனால் இப்போது இக்காலையிலேயே நாம் அவரை சந்திக்கச் சென்றால் அங்கிருப்பவர் சற்றுமுன் உளம் கனிந்தவர். மைந்தர்போல் உளத்தூய்மை கொண்டவராக அவர் இருக்க வாய்ப்பு. ஆகவே அஞ்சவேண்டியதில்லை” என்றான்.

யுதிஷ்டிரன் திரும்பி நகுலனிடம் “நான் என்பொருட்டு அஞ்சவில்லை. அங்கிருப்பவர் நூறு மைந்தரையும் ஆயிரம் பெயர் மைந்தரையும் இழந்தவர். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என மும்முடிசூடி அமரத்தக்க மைந்தனை இழந்தவர். அறியாது ஒரு அவச்சொல் அவர் நாவில் எழுமெனில் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் அதன் நஞ்சையே சென்றடையும். எரிமழையென அவர் சினம் நம் குடிமேல் விழும். அதை தவிர்ப்பது அரசன் என என் கடமை” என்றார். நகுலன் ஓர் உளத்துடிப்பை உணர்ந்தான்.

சகதேவன் “அவ்வண்ணம் ஒன்று எழுமென்றால் அதை எவ்வகையிலும் நாம் கடக்க இயலாது. தந்தையென ஒரு சொல்லேனும் அவர் நம்மை பழித்துச் சொல்லாமலிருந்தால் அதுவே குறை” என்றான். “என்ன சொல்கிறாய், இளையோனே?” என்றார் யுதிஷ்டிரன். “நமக்குரிய பழி என ஒன்று உண்டு எனில் அதை நாம் பெறுவோம். அனைத்து தீச்சொல்லுக்கும் தகுதியானவர்கள் நாம் என்பதை நாமே அறிவோம். தந்தையிடமிருந்து தண்டம் பெறாமல் நாம் நம்மை பொறுத்துக்கொள்ள மாட்டோம். மூத்தவரே, இளஅகவையில் ஒரு பிழை செய்தால் அன்னையிடமிருந்து அதற்குரிய தண்டனையைப் பெற்றால்மட்டுமே நம் அகம் நிறைவுறுகிறது” என்றான்.

“இன்று அதை நமக்களிக்க அவரன்றி வேறெவரும் இல்லை” என்று அவன் தொடர்ந்தான். “சென்று அவர் முன் நிற்போம். அவர் நம்மை அழிப்பதென்றால் நிகழட்டும். நம் குடியையே பொசுக்குவார் என்றால் அதுவும் முறையே.” பீமன் “நான் எப்பிழையும் இயற்றவில்லை. எவர் அளிக்கும் தீச்சொல்லும் என்னை வந்தடையாது. தேவை என்றால் நானே முன்னால் செல்கிறேன். நான் மட்டுமே சென்று அவருடைய பழிச்சொல்லை பெற்றுக்கொள்கிறேன்” என்றான். யுதிஷ்டிரன் அவருடைய எல்லா பொறுமையையும் இழந்தார். “நீ உளம்தொட்டுச் சொல். இப்போதேனும் நீ உன் மைந்தரைக் கொன்றவர்களும் போரில்தான் கொன்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறாயா? சொல்” என்றார்.

அச்சொல் எவ்வண்ணம் சென்று அறையும் என யுதிஷ்டிரன் நன்கறிந்திருந்தார். கைகள் தளர விழிகள் சுருங்க முகத்தசைகள் இழுபட்டு அதிர பீமன் அவரை வெறித்துப் பார்த்தான். இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து உரசியபடி மரம் பிளக்கும் ஒலியில் உறுமினான். தௌம்யர் அவர்களின் நடுவே புகுந்து “இங்கு நின்று இதைப்பற்றி வெறுமனே சொல்லாடிக்கொண்டிருப்பதில் எப்பொருளும் இல்லை. அவர் எந்நிலையில் இருந்தாலும் சரி, எது நிகழக்கூடுமென்றாலும் சரி, அங்கே சென்று அவர் கால் பணிந்து சொல் பெற்று இந்நீர்க்கடன் சடங்கை நிகழ்த்துவதே நம்முன் உள்ள ஒரே தெரிவு. மாற்றுவழி ஒன்றில்லை” என்றார்.

நகுலன் “ஆம், நான் கூறவருவதும் அது மட்டும்தான்” என்றான். யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் “அதை நானும் அறிவேன். இருப்பினும் ஏதேனும் ஒரு வழி தோன்றுமோ என்று எண்ணினேன்” என்றபின் “இளைய யாதவன் எங்கே?” என்றார். “காலையிலிருந்து அவர் தன் குடிலில்தான் இருக்கிறார்” என்றான் சகதேவன். “அவனை உடனழைத்துச் செல்வோம்” என்று யுதிஷ்டிரன் கூறினார். சகதேவன் “மூத்தவரே, இது நமக்கும் நம் தந்தையருக்குமான தருணம். இதில் அவர் எதற்கு?” என்றான். யுதிஷ்டிரன் “ஏனெனில் இப்போரை நிகழ்த்தியவன் அவன். இவையனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டியவனும் அவனே. முதலில் அவன் நின்றிருப்பதே முறை” என்றார்.

“போரை அவர் நிகழ்த்தியிருக்கலாம். நம் தந்தைக்கு எதிராக அனைத்தையும் செய்தவர்கள் நாமே. மானுட குலத்திற்கும் பாரதவர்ஷத்து அரசர்களுக்கும் அவர் தம் பெண்டிருக்கும் மறுமொழி சொல்லவேண்டிய இடத்தில் இளைய யாதவர் இருக்கலாம், நம் தந்தையருக்கு சொல்லளிக்க வேண்டியவர் அவர் அல்ல” என்று சகதேவன் சொன்னான். “ஆம்” என்றபின் யுதிஷ்டிரன் தத்தளிப்புடன் “ஆனால் அவன் வந்து முன்னால் நின்றால் அனைத்தும் எளிதாகலாம். பேரரசி இளைய யாதவன் மேல் பெரும்பற்று கொண்டவர். இன்று காலை வந்திறங்கியபோது இளைய யாதவனை வாழ்த்தினார். அவனுடன் இருக்கையில் தந்தையும் அவ்வாறு எண்ணக்கூடும். அனைத்தையும் எளிதாக்கும் ஒன்று அவனிடம் உள்ளது. இத்தருணத்தையும் அவன் எளிதாக்கி அளிக்கக்கூடும்” என்றார்.

நகுலன் “ஒருவேளை மூத்த தந்தை முனிந்தெழுந்தால்கூட அந்நஞ்சனைத்தையும் அவரே தாங்கிக்கொள்ளவும் கூடும் அல்லவா?” என்றான். அச்சீண்டலால் சீற்றமடைந்த யுதிஷ்டிரன் “ஆம், அவ்வாறே. அந்நஞ்சையும் அவனே தாங்கட்டும். அதுவே முறை. அவன் பொருட்டு நாம் படைகளையும் மைந்தரையும் அளித்தோம். நம் பொருட்டு அவன் அத்தீச்சொல்லை பெறட்டும். அதில் என்ன பிழை?” என்றார். “நன்று. தீச்சொல் அவருக்கு, மண்ணும் முடியும் நமக்கு” என்று பீமன் பல்லைக் கடித்தபடி சொன்னான். யுதிஷ்டிரன் “மண்ணும் முடியும் எனக்கு வேண்டியதில்லை. நீயே வைத்துக்கொள். அரசனையும் இளையோரையும் கொன்றவன் நீ அல்லவா? காட்டரசு நெறிப்படி நீயே முடிசூடும் தகுதி கொண்டவன். நீ முடி கொள்க! நான் அஸ்தினபுரிக்கோ இந்திரப்பிரஸ்தத்துக்கோ வரவில்லை. இக்காட்டிலேயே இருந்துகொள்கிறேன். இங்கு தவம் செய்கிறேன். என் இறுதியை நான் கண்டடைகிறேன். ஆம், நீ செல், நீயே நிலம்கொள்க!” என்றார்.

“மெய்யாகவே காட்டில் இருக்க விரும்புபவன் நான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள், மூத்தவரே” என்று சொன்னபின் பீமன் நகுலனிடம் “நாம் கிளம்புவோம். அனைத்து ஒருக்கங்களையும் செய்” என்றான். “நீ சொன்னதற்கு என்ன பொருள்? நீ சொன்னதற்கு என்ன பொருள்? அதை முதலில் சொல்!” என்று யுதிஷ்டிரன் கூவினார். தௌம்யர் “வீண்சொல் வேண்டாம். இளைய யாதவர் உடன் வரட்டும். உரிய சொற்களை எடுப்பதற்கான ஆற்றல் அவருக்குண்டு. மெய்யாகவே இத்தருணத்தை அவர் எளிதாக்கக்கூடும்… கிளம்புக!” என்றபின் “நீங்கள் ஐவரும் இணைந்தே செல்லுங்கள். பேரரசியும் பேரரசரும் உளம் ஓய்ந்து அமர்ந்திருக்கும் தருணமே அதற்குரியது. இன்னமும் பொழுதை வீணடிக்க வேண்டியதில்லை. இளைய யாதவர் நேராகவே அங்கு வரட்டும். அவரை அழைத்துவர நான் என் மாணவர்களை அனுப்புகிறேன்” என்றார்.

“இவன் சொல்லும் இச்சொற்கள்… இவன்!” என்று பீமனை நோக்கி கைநீட்டி பேசத்தொடங்கிய யுதிஷ்டிரனை நோக்கி சினத்துடன் கை நீட்டித் தடுத்து “போதும். இனி இங்கு சொல் வேண்டியதில்லை” என்றார் தௌம்யர். தன்னை அடக்கி தணிந்து யுதிஷ்டிரன் “அவ்வாறே” என்று தலைவணங்கினார். பீமன் பொருட்டின்மை தெரிய உடலை திருப்பிக்கொண்டான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 26

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 7

நகுலன் யுதிஷ்டிரனின் அவைக்களத்திற்கு உடனே செல்லவேண்டும் என்றுதான் தன் குடிலுக்கு வந்தான். நீராடி ஆடைமாற்றிச் செல்லலாம் என்று தோன்றியது. காலையிலேயே உடல் வியர்வையில் நனைந்து ஆடைகளை ஈரமாக்கியது. புலரொளி மறைந்ததுமே எழுந்த இளவெயில் கீற்றுக்கள் காட்டுக்கு அப்பாலிருந்து இலைகளை ஊடுருவிச் சாய்ந்து வந்து விழுந்து வெட்டி அகற்றிய புதர்களின் வேர்கள் விரல்கள் என, நரம்புகள் என பரவியிருந்த சிவந்த ஈரமண்ணில் விழுந்து மெல்லிய புகையை கிளப்பிக்கொண்டிருந்தன. அவன் புரவி அந்த வெயிலின் வெம்மையால் எழுந்த சேற்று மணத்தை குனிந்து முகர்ந்து கழுத்து சிலிர்த்து மூக்கு விடைத்து ஆழ மூச்சுவிட்டது. அவன் அதன் கழுத்தையும் காதுகளையும் வருடி “செல்க! செல்க!” என்றான்.

அது எப்போதுமே அவனுடைய உளவிசையை பொருட்படுத்துவதில்லை. மிக மெல்ல காலெடுத்து வைத்து தலையசைத்து நடந்து, அவ்வப்போது நின்று தரையில் கிடக்கும் ஏதேனும் இலைச்சருகை வாயால் கவ்வி எடுத்து மென்று பாதியை உமிழ்ந்து, தன் போக்கில் செல்லும். தன் உளவிசையை பொருட்படுத்தாத புரவிதான் அப்போது அவனுக்கு உகந்ததாக இருந்தது. பாய்ந்து திசைவெளியில் விரையும் புரவி விரைவிலேயே கால்சோர்ந்து நுரை கக்கி விழுந்துவிடும் என்று அவனுக்குத் தோன்றியது. இந்த அன்னைக் குதிரை தன் எல்லைகளை நன்கறிந்தது. தன்னை விலங்கென்று எப்போதும் உணர்வது. அனலென்றும் காற்றென்றும் ஆக முயலாதது. ஒருபோதும் தன் இறுதி விளிம்பில் சென்று முட்டுவதற்காக அது பாய்ந்தெழுவதில்லை. இது எந்த வில்லாலும் செலுத்தப்பட்ட அம்பல்ல. நீரோடையென தன் வழியையும் விசையையும் தானே அமைத்துக்கொள்ளும் அகஆற்றல் கொண்டது.

குடில் முன் வந்து அதுவே நின்று ஒருமுறை செருக்கடித்தது. அவன் இறங்கி அதன் கழுத்தை தட்டிவிட்டு கடிவாளத்தை அதன் முதுகிலேயே போட்டான். அது சிலிர்த்தபடி சென்று முள்மரத்தடியில் நின்று புண்பட்ட காலை தூக்கிக்கொண்டது. குடிலுக்குள் சென்று நின்றபோதுதான் தன் உடல் முழுக்க வெம்மை மிகுந்து ஈரம் பரவியிருப்பதை உணர்ந்தான். மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டி கண்களை மூடிக்கொண்டபோது உடல் குளிரத் தொடங்கியது. வெளியே காலடி ஓசை கேட்க, எழ உளம் குவியாமல் கண்களை மூடியபடியே “வருக!” என்றான். ஒற்றன் உள்ளே வந்து தலைவணங்கி நின்றான். “ஆணைகள்?” என்றான். “சொல்” என்று நகுலன் சொன்னான். “பிற அரசியரையும் பேரரசரிடமே அனுப்ப வேண்டுமா?” என்று ஒற்றன் கேட்டான். “அவர்கள் அவ்வாறு கோரினார்கள்.” ஒரு கணத்திற்குப் பின் “ஆம், அதுதானே முறை” என்று நகுலன் சொன்னான். “அவ்வண்ணமெனில் ஆகுக! ஒரு சொல் உசாவாமல் அதை செய்யக்கூடாதென்று தோன்றியது” என்றபின் அவன் தலைவணங்கி வெளியே சென்றான்.

நகுலன் சற்று முன் நிகழ்ந்த அனைத்தையும் மீண்டும் உள்ளத்தில் ஓட்ட முயல்பவன்போல கண்களை மூடி நினைவுகளை எடுத்தான். அந்தக் காட்சியே மிகப் பழையதாக ஆகிவிட்டிருந்ததை உணர்ந்து வியப்படைந்தான். பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததென்று தோன்றியது. அல்லது எவரோ கூறி நினைவில் பதிந்தது. அல்லது ஏதோ நூலொன்றில் படித்தது. எத்தனை விரைவாக உணர்வுமிக்க தருணங்களிலிருந்து உள்ளம் நம்மை விலக்கிக்கொள்கிறது என்று அவன் எண்ணிக்கொண்டான். எளிய தருணங்கள் அருகிருக்கும் அனைத்தையும் இழுத்து அவற்றுடன் சேர்த்து முடிச்சிட்டு விரித்துக்கொள்ளவும் பெருக்கிக்கொள்ளவும் கூர்த்துக்கொள்ளவும் முயல்கிறோம். அதனில் நம்மை பெய்கிறோம்.

பெருந்தருணங்களை அணுகுகையிலேயே ஏன் கால்கள் தயங்குகின்றன? ஏனென்றால் பெருந்தருணங்கள் முற்றாகவே மானுடருக்கு அப்பால் நின்றிருக்கின்றன. தெய்வங்களால் இயக்கப்படுகின்றன. அங்கு தன் அறிவுக்கும் கற்பனைக்கும் இடமில்லை என்பதை அறியாத மானுடரில்லை. அவ்வறியமுடியாமையின் மையத்தில் கண்களை மூடி பிறிதொன்று எண்ணாமல் பாய்ந்து சென்று அமிழ விழைபவருமில்லை. பெருந்தருணங்களில் மானுடர் செயலற்றுவிடுகிறார்கள். அறிந்த அனைத்தையும் மறந்து ஆவதென்ன என்று அறியாமல் அதன் சுழலுக்கு தன்னை அளிக்கிறார்கள். பெருந்தருணங்களை எண்ணி நோக்கி காலெடுத்து வைத்து சென்றடைபவர்கள் உண்டா? பெருமானுடர்கள் அவ்வாறு இருக்கலாகும். அவனைப்போல. அவன் அவற்றை நாற்களம் என ஆடுகிறான். நடனமென உடலாக்கிக் கொள்கிறான். பீலியென சூடிக்கொள்கிறான். உடற்பொடி என உதறி முன்செல்கிறான்.

நான் எளியன். என்னைப்போன்ற எளியோர் அதை நோக்கி பெருவிசைகளால் தள்ளப்படுகிறார்கள். அதனால் ஏனென்றறியாமல் ஈர்க்கப்படுகிறார்கள். அதில் எரிந்தழிகிறர்கள். அல்லது பிறிதொருவராகி வெளிவருகிறார்கள். அதிலிருந்து விலகவும் விடுவித்துக்கொள்ளவும் முயல்கிறார்கள். அல்லது அதை சிறிதாக்கிக்கொள்ள முயல்கிறார்கள். கையில் நிற்கும் அளவுக்கு எளிதாக்கிக்கொள்கிறோம். பற்றிக்கொள்ள பிடிகளும் புழங்குவதற்கு உரிய வடிவமும் உரியதாக உருமாற்றிக்கொள்கிறோம். அதன்பொருட்டே இத்தவிப்பு. அது ஏன் பெருந்தருணம்? எனில் இப்போது இங்கு நிகழ்வன அனைத்துமே பெருந்தருணங்கள் அல்லவா? ஆம், மெய்யாகவே அப்படித்தான். பெருநிகழ்வொன்றின் பகுதி என்று ஆகும்போது அனைத்துமே அந்நிகழ்வின் முடிவிலா எடையை தாங்களும் கொண்டு விடுகின்றன. இன்று முற்றத்தில் பரவியிருக்கும் நீராவி படிந்த இளவெயில்கூட பொருட்செறிவு மிக்கது. புரிந்துகொள்ளவே முடியாதது. ஒரு கொலைப்புன்னகைபோல. ஒரு வாளின் ஒளிபோல. வேறெங்கிருந்தோ ஊறிவழியும் ஒளிர்நஞ்சு போலும் அது. இல்லை, அது பொருளற்றது. நஞ்சு தன்னில் சாவு என்னும் விழுப்பொருள் கொண்டது. இந்த ஒளி அவ்வாறல்ல.

பெருந்தருணங்கள் அனைத்திலிருந்தும் ஒரு விழுப்பொருளை மானுடர் திரட்டி வைத்திருக்கிறார்கள். ராகவராமனின் கதையை எழுதிய தொல்வேடனின் பாடல்களில்தான் எத்தனை அரிய மெய்மைகள். எவ்வளவு செறிந்த பொருள் கொண்ட வரிகள். பெருந்தருணங்களுக்கு அப்படி ஒரு மானுட உட்பொருள் இருக்க இயலாது. இவ்வுலகில் புழங்கும் ஒரு மெய்மை அதில் திரளவும் வாய்ப்பில்லை. அவை யானை காலில் நாம் இடும் தளைப்புச் சங்கிலிகள். புரவிக்கு நாமிடும் கடிவாளங்கள். பொன்னிலும் இடலாம். அருமணிகள் பொறிக்கலாம். அவையனைத்தும் நம்முடையவை. அவை அறியாதவை. பெருமலைப்பாறைகளை பார்க்கையில் எல்லாம் உள்நுழைய வழியில்லாத மாளிகைகள் என்று அவன் இளமையில் எண்ணிக்கொண்டதுண்டு. மெய்யாகவே அவை உள்ளீடற்றவைதானா என்ற ஐயம் வளர்ந்த பின்னரும் வந்ததுண்டு. பலமுறை கனவுகளில் பாறைகளை முட்டியும் உந்தியும் சுற்றிச் சுற்றி வருவதாக கண்டிருக்கிறான்.

 

அவன் துயின்றுவிட்டிருந்தான். ஓசை கேட்டு விழித்தபோது வாயிலில் ஏவலன் நின்றிருந்தான். அவன் எழுந்தமர்ந்து கைகளால் முகத்தை துடைத்தபடி கூறுக என்னும் பொருளில் “ம்” என்றான். “அவை கூடியிருக்கிறது, அரசே. தங்களின் வருகை அங்கு எதிர்நோக்கப்படுகிறது” என்றான் ஏவலன். நகுலன் எழுந்து “நான் நீராடிவிட்டு செல்ல வேண்டும்” என்றான். “அரசர் அமர்ந்துவிட்டார்” என்றான் ஏவலன். “அவை நிகழ்க! நான் உடனே வருகிறேன்” என்றான். ஏவலன் விலகிச்சென்றதும் குடிலுக்குள்ளிருந்து சிறிய மரக்குடைவுக்கலத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தனது மாற்று ஆடையையும் மரவுரியையும் எடுத்தபடி வெளியே சென்று ஈரமண்ணில் கால் புதைய நடந்து கங்கையை நோக்கி இறங்கினான்.

அந்நிலம் அனல் விழுந்த இடம்போல சூழ்ந்திருந்த காட்டை எரித்து விரிந்துகொண்டிருந்தது. படகுத்துறையில் பணியாளர்கள் காலையிலேயே ஏதோ செய்யத் தொடங்கியிருந்தார்கள். ஒருபக்கம் படகுகளில் பொருட்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. மறுபக்கம் துறைமேடை விரிவாகிக்கொண்டிருந்தது. அவன் கண்ட நாள் முதல் அந்தப் படகுத்துறை ஒவ்வொரு கணமும் மேலும் பெரிதாகிக்கொண்டிருந்தது. எண்ண எண்ணத்தான் தேவை பெருகுகிறது. மூங்கில்களை சேற்றுபரப்பில் வைத்து அறைந்து இறக்கிக்கொண்டிருந்தனர். பறக்கும் ஆடையை பலகையில் அறைவதுபோல் கங்கையை கரைச்சேற்றில் அறைகிறார்கள் என்று தோன்றியது. இந்தப் படித்துறையில் திகழும் இக்காலத்தில் அதை கட்டி நிறுத்த முயல்கிறார்கள். பனிமலை இறங்கி ஆழ்கடல் செல்லும் பெருக்கு அவள். இங்கு இந்த மூங்கில் தறிகளில் சிக்குண்டு சற்றே நெளிந்து நிலைகொள்வது போன்ற ஒரு நடிப்பை அவளும் வழங்குகிறாள்.

அவன் நீராடும் துறைக்காக அங்கிருந்து அகன்று அகன்று சென்றான். சில கணங்களிலேயே யுதிஷ்டிரனின் அவைக்கூடலை தான் மறந்துவிட்டிருந்ததை சில கணங்கள் கடந்தே கீற்று நினைவு எழுந்தபோது உணர்ந்தான். கையிலெடுத்த இலையை உளம்கொள்ளாமல் வீசுவதைப்போல் அதை உதறினான். அப்பால் காட்டிற்குள் நீத்தார்பலி கொடுப்பதற்கான படித்துறைகள் ஒருங்கியிருந்தன. ஆனாலும் சிலர் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். பண்படாத மரப்பலகைகளை ஆணிகளால் அறைந்து நீர்விளிம்பில் மேடையாக எழுப்பி இரண்டடுக்குப் படிகளாக ஆக்கியிருந்தார்கள். அதற்குமேல் மண் வெட்டித்தெளிவிக்கப்பட்டு அதன்மேல் மணல் பரப்பி சடங்குமுற்றம் அமைக்கப்பட்டிருந்தது. நீருக்கு அடியில் பிரதீபர் அமைத்த கல்லாலான படிகள் உள்ளன. அந்தப் படிகள் அங்கிருப்பது வீரர்களை உவகைக்கொப்பளிப்பு அடையச்செய்வதை அவன் கண்டான். முதல்நாளே அனைவரும் நீரில் பாய்ந்து மூழ்கி அதை தொட்டு மீண்டனர். “ஆம், படிகள்!” என்று ஒருவரை ஒருவர் நோக்கி கூவினார்கள். வந்த அன்றே நீரில் இறங்கி மூழ்கி கைகளால் துழாவி அடியைத் தொட்டு மேலெழுந்து வந்த யுதிஷ்டிரன் கையால் குழலை அள்ளி பின்னால் சரித்து, வாயில் அள்ளிய நீரை நீட்டி உமிழ்ந்து, கை சுழற்றி நீந்தி, அணைந்து கால் ஊன்றி நின்று “படிகள் உள்ளன, இளையோனே. மென்பாறையாலானவை! தொட்டறிய இயல்கிறது” என்றார். கரையில் நின்றிருந்த நகுலன் ஆர்வமில்லாமல் “ஆம், கூறினார்கள்” என்றான். “நீ தொட்டறியவில்லையா?” என்றார் யுதிஷ்டிரன். “இல்லை” என்றான் நகுலன்.

“இறங்கிப் பார்! நமது மூதாதை தன் போர் வெற்றியின் பொருட்டு அமைத்தது… அது மிகப் பெரிய போர். அன்று சௌவீரர்களும் யவனர்களும் சைப்யர்களும் ஒற்றைக்குலமென தங்களை திரட்டிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு சோனகர்களின் உதவி இருந்தது. பீதர்களின் வணிகப்பாதைமேல் அவர்கள் கோன்மை கொண்டிருந்தமையால் முடிவில்லா செல்வமும் இருந்தது. அவர்களை வெல்லாமல் அஸ்தினபுரி நிலைகொள்ள இயலாதென்றனர் அமைச்சர். அவர்கள் ஒருநாள் கீழ்நிலம் நோக்கி வருவார்கள், முளைக்கையிலேயே அழிப்பது மேல் என்றனர் படைத்தலைவர். பிரதீபர் பெரும்படையுடன் வடமேற்கே சென்றார். ஒட்டுமொத்தமாக அவர்களை எதிர்க்க இயலாதென்றும் அறிந்திருந்தார். அவருக்கு இங்கே எவரும் துணையில்லை. அப்போதும் மகதம் நமக்கு எதிராகவே இருந்தது. அன்றைய அங்கமும் வங்கமும் கலிங்கமும் பிரக்ஜ்யோதிஷமும் பௌண்டரமும் பஞ்சசஹ்யம் என்ற பேரில் ஒற்றைக்கூட்டென்று இருந்தனர்.”

யுதிஷ்டிரன் மேலெழுந்து வந்து உடல் நீரை உதறினார். உள்ளத்தின் எழுச்சியாலோ குளிராலோ அவர் உடல் நடுங்கியது. “அன்று அஸ்தினபுரியின் முழுப் படையையும் வடமேற்கே கொண்டுசெல்வதென்பது தற்கொலையென ஆகிவிடும் வாய்ப்புள்ள முயற்சி. ஆனால் பெருமானுடர் பெருந்திட்டங்களையே வகுக்கிறார்கள். பிரதீபர் முதலில் படையுடன் சென்று மகதத்தை தாக்கி அவர்களின் பதினெட்டு கங்கைப் படகுத்துறைகளை அழித்தார். அவர்கள் அஞ்சி பின்வாங்கினர். அஸ்தினபுரியின்மேல் படைகொண்டு வந்து நாம் கைப்பற்றிய படகுத்துறைகளை மீட்க எண்ணிய மகதர் பஞ்சசஹ்யத்திடம் உதவி கேட்டார். அந்தப் பேச்சு நடந்துகொண்டிருந்தபோதே பிரதீபர் வடக்கே கிளம்பிவிட்டார். அவர்கள் பேசி கூட்டமைப்பதற்குள் வென்று மீளமுடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார். எத்தனை துணிவு, எத்தனை தன்னம்பிக்கை… அது தன் மீதான நம்பிக்கை மட்டும் அல்ல. தெய்வங்கள் மீதான நம்பிக்கையும்கூட.”

“வடக்கே பெரும்பாலை. அது உச்சக்கோடையும்கூட. கோடையில் கீழ்நிலத்தார் பாலையில் நுழையவே அஞ்சுவர் என எண்ணியிருந்தமையால் சௌவீரக்கூட்டு நம்மை எதிர்பார்க்கவே இல்லை. படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்னும் செய்தி சென்றபோதுகூட அவர்கள் பாலைநிலத்தில் நமது படை வற்றி அழியும் என்றே எண்ணினார்கள். ஆனால் பாலையில் வற்றி அழிவது சிறுநதிகள். சிந்து பாலையை நிறைத்து பெருகிச் செல்வது அல்லவா? நமது படைகளில் மூன்றிலொருவர் நீரின்றியும் வெயிலில் வெந்தும் வெங்காற்றில் மூச்சிழந்தும் மடிந்தனர். ஆனால் எஞ்சியோர் சிபிநாட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து யவனர்களின் நகரங்கள் ஒவ்வொன்றாக வென்றனர். ஆயிரம் யானைகளில் பொன்னை ஏற்றிக்கொண்டு வந்தார் பிரதீபர் என்று பாடுகிறார்கள் சூதர்கள். இப்போதுகூட அஸ்தினபுரியின் கருவூல அறைகளில் அன்றைய கொள்ளைச்செல்வம் நிறைந்திருக்கக்கூடும்.”

“அதன்பின் மகதர் நம்மை எதிர்க்கத் துணியவில்லை” என்றார் யுதிஷ்டிரன். “அது எப்போதுமே அப்படித்தான், இளையோனே. ஒரு பெருவெற்றிக்குப் பின் உண்மையில் வென்றவர்கள் வலு குறைந்திருப்பார்கள். புண்பட்ட யானையை பூனை எதிர்க்கமுடியும். ஆனால் வெற்றி எதிரிகளை அச்சுறுத்தும். அவர்கள் நம்முடன் பேச்சுக்கு வந்தனர். வடக்கே செல்கையில் தன் மைந்தர் சந்தனுவை இங்கே படையுடன் நிலைகொள்ளச் செய்துவிட்டே சென்றார் பிரதீபர். மகதர்கள் நமக்கு பதினெட்டு படகுத்துறைகளை அளித்தனர். எட்டு கோட்டைகளும் நமக்கு வந்தன. மகதம் பணிந்ததுமே சந்தனு படையுடன் சென்று கோசலத்தையும் ஏழு சிறுநாடுகளையும் வென்று கங்கைமேல் நமது ஆட்சியை முழுமை செய்தார்.”

“கங்கையின் மேலான நமது கோன்மையே நம்மை வளர்த்தது… கங்கை வந்து மாமன்னர் பிரதீபரின் மடியில் அமர்ந்தாள் என்றும் அவளை தன் மைந்தன் சந்தனுவுக்கு அவர் மணமகளாக ஆக்கினார் என்னும் கதை உருவானது அவ்வண்ணம்தான்” என்றார் யுதிஷ்டிரன். அவன் வெறுமையாக நோக்கிக்கொண்டு நிற்க யுதிஷ்டிரன் “கங்கை நமது ஊர்தியும் படைக்கலமும் ஆக திகழ்ந்திருக்கிறது. விசித்திரவீரியனின் காலத்தில் நாம் கங்கையை இழக்கலானோம். எந்தையின் காலகட்டத்தில் கங்கை முழுமையாகவே நம்மிடமிருந்து அகன்று மகதத்தால் கொள்ளப்பட்டது. கங்கையை ஆள்பவனே ஆரியவர்த்தத்தின் மெய்யான அரசன் என்பார்கள்” என்றார். “அங்கர் கங்கைக்கரையை முழுமையாகவே வென்றார்” என்றான் நகுலன். யுதிஷ்டிரன் அவனை நோக்கி திரும்பாமல் “நாம் அறுதியான வெற்றியை அடையவேண்டும். நம் கொடிவழிகள் இன்னும் நூறாண்டுகள் ஐயமின்றி கொள்ளும் கோன்மையை” என்றார்.

மீண்டும் நீரில் இறங்கி நீந்தியபடி “அன்று வடபுல வெற்றியின்பொருட்டு பிரதீபர் ஒரு ராஜசூயவேள்வியை நிகழ்த்தினார் என்கிறார்கள். அதன் தொடக்கமாக மாபெரும் நீர்க்கடன் ஒன்று நடந்தது. அனைத்து நீத்தாருக்கும் அளிக்கப்பட்ட கொடை. அதன்பொருட்டு கட்டப்பட்டது இப்படித்துறை. இதைப்பற்றி பிரதீபவிஜயமும் ஜயபிரதீபமும் விரிவாகவே சொல்கின்றன” என்றார். நீந்தி கால்களை நீருள் துழாவியபடி “கீழே இரண்டு படிகளை தொட முடிகிறது. மேலும் ஒரு படி சேற்றுக்குள் இருக்கலாம்” என்றபின் மீண்டும் நீரில் மூழ்கி ஆழத்திற்கு சென்றார். அவருடைய நீண்ட தலைமுடி நீரில் அலைபாய்ந்தது.

அவன் அங்கு நிற்க இயலாமல் திரும்பி நடந்தான். நீருக்குள் மூழ்கி குளிர்ந்து எவர் கண்களுக்கும் படாமல் அந்தப் படிகள் அமைந்திருக்கின்றன. அவற்றின் மேல் கங்கையின் மென்சிறகு பொதிந்திருக்கிறது. இந்தப் படிக்கட்டும் நீரில் மூழ்கும். நீர்ப்பலிக்குப் பிறகு இப்போது அமைந்த மரப்படிகளை கல்லால் எடுத்து கட்டிவிடவேண்டும் என்று யுதிஷ்டிரன் ஆணையிட்டிருந்தார். ஒருவேளை அவருடைய அகத்தில் ஒரு ராஜசூயத்திற்கான திட்டம் இருக்கலாம். ஆண்டுதோறும் அளிக்கும் நீர்ப்பலி அங்குதான் நிகழும். பின்னர் அதுவும் நீரில் மூழ்கும். பலிச்சடங்குகள் சுருங்கி ஒருவேளையாகி, ஒரு கைப்பிடி நீராகி, ஒரு விரல் செய்கையாகி ஒரு சொல் நினைவாகி மறையும். பிறிதொரு படிக்கட்டு எழும்.

எனில் நான் இப்போது நின்றிருக்கும் இந்த மண்ணில் நாளை அமையும் இன்னொரு படிக்கட்டு உள்ளது. அதன் இயல்கை வாய்ப்புக்கு மேல் நின்றிருக்கிறேன். தன் உள்ளம் சென்றுகொண்டிருக்கும் திசையை எப்போதுமே ஒருகணம் திரும்பி நின்று நோக்கி வியப்பது அவன் வழக்கமாகிவிட்டிருந்தது. உள்ளம் பெருக்காகவே எப்போதும் இருந்தது. புறவுலகுடன் அதன் தொடர்பு இலைதாவும் தவளை போலத்தான். தொட்டுத்தொட்டு எழுந்தமைந்தது. அவன் தன் உள்ளம் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்துவிட்டது என்றே எண்ணினான். ஆனால் அங்குள்ள அனைவரின் உள்ளமும் அப்படித்தான் கொப்பளித்து ஓடிக்கொண்டிருந்தது என விழிகள் காட்டின.

ஒருவேளை யுதிஷ்டிரனுடைய உள்ளம் அவ்வண்ணம் இல்லாமலிருக்கலாம். கல்வியால் அடைந்த சொற்கரை அதற்கு அமைந்திருக்கலாம். அவன் அங்கு நின்று நோக்கியபோது நீரிலிருந்து எழுந்து தலைமயிரை அள்ளி பின்னாலிட்டு கைகூப்பியபடி கரை நோக்கி வந்த யுதிஷ்டிரனை கண்டான். ஒடுங்கிய தோள்களிலிருந்து நீர்வழிந்து இறங்கியது. நீராடும்போது மட்டும் அவரில் கூடும் சிறுவனின் பாவனை வந்துவிட்டிருந்தது. கரை நின்ற ஏவலனிடம் அவர் எதையோ சொன்னபோது வெண்பற்கள் தெரிந்து மறைய அவர் புன்னகைப்பதுபோல் இருந்தது.

கங்கையின் ஓரமாக இருந்த நாணல் புதர்களுக்குள் செல்லும் பொருட்டு பலகைகள் போட்டு வழி அமைக்கப்பட்டிருந்தது. நாளும் பலர் நடந்து சென்றமையால் பலகைகள் சேற்றில் அழுந்தி அங்கே ஒரு ஒற்றையடித்தடம் இருப்பதாகவே உணரச்செய்தன. கால்கள் மட்டுமே பலகையை உணரமுடிந்தது. பலகையின் விளிம்பில் கால் வைத்தபோது மறுமுனை திடுக்கிட்டு மண்ணை அதிரவைத்தது.

அவன் இறங்கி கங்கையின் நீர்விளிம்பை அடைந்தான். அது நீராடுவதற்குரிய இடமாக அடையாளம் காணப்பட்டிருந்தது. கங்கைக்குள் ஒரு செறிமண் பாறை நீட்டி நின்றது. கங்கையின் உதடுகளின்மேல் நீட்டிய ஒற்றைப் பல் என்று அது தோன்றியது. அவன் மேலாடையைக் களைந்து மரவுரி அணிந்து நீரில் பாய்ந்திறங்கி மூழ்கி மேலெழுந்து வந்தான். கைவீசி நீந்தி கரையை அணுகினான். உடலில் இத்தனை வெம்மை நிறைந்திருக்கிறதா? நீரில் வெம்மை கரைய உள்ளிருந்து மேலும் வெம்மை எழுந்து தோல்பரப்பை அடைவதை உணர முடிந்தது. ஆனால் அவன் கரையேறிவிட்டான்.

கங்கையில் இறங்கினால் பொழுது பிந்தும் வரை நீந்திக்கொண்டிருப்பது அவன் வழக்கம். அவை நிகழ்வுகளுக்கு பிந்தக்கூடாதென்பதனால் மிக முன்னதாகவே நீராட்டுக்குச் செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தான். இன்னொரு கைச்சுழல் நீச்சல், இன்னொரு முழுக்கு என எண்ணி எண்ணி பொழுது செல்வதை அறியாது நீரிலிருப்பான். மழைக்கால நீரின் சேற்று மணம், கோடைகால நீரின் ஆழ்ந்த தண்மை, மேல் பரப்பிலொரு மென்படலமாக செல்லும் வெயில்வெம்மை என கங்கையின் அனைத்து நிலைகளையும் அவன் அறிந்திருந்தான். ஒவ்வொன்றினூடாகவும் கடந்துசென்றுகொண்டிருப்பான்.

ஒவ்வொரு நாளும் என நீராடிய பின்னரும்கூட கனவில் கங்கையில் நீராடும் நினைவு வந்துகொண்டே இருந்தது. ஆனால் அப்போது கங்கையில் நீராடுவதை அவன் அஞ்சினான். பெரும்பாலும் சிற்றோடைகளிலோ சிறு சுனைகளிலோதான் நீராடினான். கங்கைக்கரைக்கு வந்த பிறகு ஒரு முழுக்குக்கு மேல் அவனால் நீராட முடிந்ததில்லை. ஒருகணம் தயங்கினால் கங்கையில் இறங்கவும் முடியாதென்பதனால் அணுகியதுமே கண் மூடிக்கொண்டு எண்ணாமல் பாய்ந்து துழாவி நீந்தி கரையேறிவிடுவது அவன் வழக்கம் என ஆயிற்று.

ஆயிரம் கைகளுடன் அள்ளி இழுத்து ஆழத்திற்கு கொண்டு செல்ல முயலும் கங்கையிடமிருந்து தப்ப விரும்புபவன்போல மூச்சு திணற கரைப்பாறையைப் பற்றி மேலே திரும்பிப்பார்க்காமல் மரவுரி எடுத்து தலை துடைத்து ஆடை மாற்றி அகன்று சென்றான். நீராட எழும்போதும் தலை துவட்டுகையிலும் விழி கொள்ளாது நீரின் ஒளிப்பெரும்பரப்பை பார்த்து நின்றிருப்பது அவன் வழக்கம். நீராடிய பிறகும் நெடுநேரம் கங்கையை நோக்கி நின்றிருப்பதும் உண்டு. இப்படி ஒரு கணமும் திரும்பாமல், அச்சுறுத்தும் விதியிடமிருந்தென அன்னை நீர்ப்பெருக்கிடமிருந்து ஓடி அகல்வோம் என ஒருபோதும் எண்ணியதில்லை.

நடக்கையில் அவன் மிகவும் களைத்திருந்தான். அத்தனை களைப்பு எதனால் என்று எண்ணினான். உள்ளம் ஓடிய நெடுந்தொலைவின் களைப்பு. எண்ணி எண்ணிச் சென்ற தொலைவு அனைத்தையும் சலித்துச் சலித்து நடந்து மீளவேண்டியிருக்கிறது. அவனுக்கு அப்போது யுதிஷ்டிரனின் அவைக்குச் செல்ல சற்றும் உளம்கூடவில்லை. வெளியே எங்காவது சென்றுவிடவேண்டும் என்றுதான் தோன்றியது. உடனே கிளம்பி எங்கேனும் சென்றுவிடுவோம் என்று எண்ணியபோது அவ்வெண்ணமே மேலும் நடக்க ஆற்றல் அளித்தது. குடிலுக்கு மீண்டு ஆடைமாற்றிக்கொண்டிருந்தபோதுகூட அங்கிருந்து காட்டுக்குள், அறியா நிலம் ஒன்றுக்குள் செல்லப்போகிறோம் என்றே எண்ணிக்கொண்டிருந்தான். ஏவலன் வந்து நின்று தலைவணங்கியபோது பெருமூச்சுவிட்டான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 25

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 6

நகுலன் எதிரே ஏவலன் வருவதை எதிர்பார்த்து விழிநாட்டி புரவியின் மீது அமர்ந்திருந்தான். காந்தாரியின் வண்டி மிக மெல்ல காட்டுப் பாதையில் உலைந்து அசைந்து, குழிகளில் திடுக்கிட்டு, மேடுகளில் சரிந்து எழுந்து சகடம் உரசும் ஒலியுடன் சென்றுகொண்டிருந்தது. ஏவலன் தொலைவில் புரவியில் வருவதைக் கண்டதும் நகுலனின் உள்ளம் படபடப்பு கொண்டது. அவன் கூறப்போவது பிறிதொன்றல்ல என்று அறிந்திருந்தாலும்கூட அதை தன்னால் நிலைகொண்ட அகத்துடன் கேட்க முடியாது என்று தோன்றியது. அத்தருணத்தை ஒத்திப்போட அவன் உள்ளம் முயன்றது. மேலும் சில கணங்கள். மேலும் சில அடிகள். இன்னும் பொழுதிருக்கிறது. அதுவரை ஒன்றுமில்லை. இந்தக் காட்டின் இனிய காற்று, வெளுத்துவரும் இருள், எழுபறவை ஒலிகள். இருத்தலின் திகட்டாத் தித்திப்பு.

ஏவலன் வண்டியை ஒழியும்பொருட்டு பக்கவாட்டு நாணல் புதர் வழியாக புரவியைச் செலுத்தி கடந்து நகுலனின் அருகே வந்தான். நகுலன் அவனை நோக்கி தலையசைத்தான். இணையாக அவனுடன் புரவியில் வந்தபடி தாழ்ந்த குரலில் “பேரரசர் நல்ல உளநிலையில் இல்லை. தொடர்ச்சியாக அவருக்கு அகிபீனா கொடுக்கப்படுகிறது. அவ்வப்போது மட்டுமே விழிப்பு கொள்கிறார். உளத்தன்னிலை மீளாதவராகவே இருக்கிறார். சஞ்சயனும் சங்குலனும் அன்றி எவரும் அவர் அருகே செல்ல இயலவில்லை” என்றான். “சங்குலன் உடனிருக்கிறான் அல்லவா?” என்று நகுலன் கேட்டான். “ஆம், இருமுறை பேரரசர் தான் தங்கியிருந்த குடிலையே அடித்து நொறுக்கியிருக்கிறார். நேற்று மாலை எழுந்து கூச்சலிட்டு மூங்கில் தூண்களை அறைந்து உடைத்தார். குடில் அவர் மீதே விழுந்துவிட்டது. சங்குலன் அவரைப் பற்றி நிறுத்தி கைகளை கொடிகளால் பிணைத்துக்கட்டி அகிபீனா புகைசூழ அமைத்திருந்தமையால் துயின்றார். சற்று முன்னர்தான் விழித்தெழுந்தார். மீண்டும் அவருக்கு அகிபீனா கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது நான் சென்றேன்” என்றான் ஏவலன்.

“மற்றபடி அகிபீனாவை விரும்பி முகர்கிறாரா?” என்று நகுலன் கேட்டான். “ஆம், அவருக்கு அது வேண்டியிருக்கிறது. விடாய் கொண்டவர்போல் அவர் அப்புகையை அள்ளி அள்ளி இழுப்பதை தொலைவிலிருந்து நான் பார்த்தேன்” என்று சொன்னான். “அது நன்று. அது அவர் மறக்க விழைகிறார் என்பதற்கும் மறந்து துயில்வதில் மகிழ்வைக் காண்கிறார் என்பதற்கும் சான்று… பெருந்துயர்கொண்டவர்கள் துயில் வரவில்லை என்று புலம்பினால் அவர்கள் துயரிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறார்கள் என்று கொள்ளவேண்டும்” என்றான் நகுலன். பின்னர் “பேரரசி வருவதை சஞ்சயனிடம் கூறியபோது அவன் சொன்னதென்ன?” என்றான். “பேரரசி வருவதென்றால் அதை தவிர்க்க வேண்டாம் என்றார். எந்நிலையிலும் அச்சந்திப்பு நிகழவேண்டியதுதான். அரசர் உளம் சோர்ந்திருக்கும் இத்தருணம் அதற்கு உகந்ததுதான் என்றார்.”

“பேரரசி இருக்கும் நிலையும் மற்றொன்றல்ல” என்று நகுலன் சொன்னான். “அவருக்கும் இப்போது பேரரசர் தேவைப்படுகிறார். அவர் உடைந்து கதறக்கூடும். அழுது மீள்வதும் ஆகும்.” ஏவலன் தலையசைத்தான். நகுலன் கைவீசி ஏவலன் செல்லலாம் என்று காட்டினான். அவன் விலகியதும் மீண்டும் கையசைத்து அருகழைத்து “பேரரசி பேரரசரை சந்திக்கச் செல்லும் செய்தியை மூத்தவரிடம் சென்று அறிவி. நிகழ்ந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறுக!” என்றான். அவன் மேலும் ஒரு சொல்லுக்காக காத்தான். “அனைத்தும் நன்றெனச் செல்கிறது. பேரரசி மீளக்கூடும் என்றேன் எனச் சொல்க!” என்றான்.

தலைவணங்கி ஏவலன் சென்ற பின்னர் நகுலன் நெஞ்சு தளர்ந்து கடிவாளத்தை இடக்கையால் பற்றிச் சுழற்றியபடி புரவியின் மேலேயே அமர்ந்தான். ஒன்றும் செய்வதற்கில்லை என்று உணரும்போது ஏற்படும் விடுதலை. தெய்வங்களிடம் வாழ்வை முற்றும் ஒப்படைக்க இயல்வதில்லை. உற்றாரிடமோ அரசிடமோ மூத்தோர் சொல்லிடமோ நெறிகளிடமோகூட முழு நம்பிக்கை கொள்ள இயல்வதில்லை. ஆனால் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு நிலையில் அனைத்தையும் காலத்திடம் ஒப்படைத்துவிடுகிறோம். காலம் அடித்துச் சுழற்றி கொண்டுசெல்ல ஒப்புக்கொடுத்து ஒழுகுகையில் மட்டுமே முழு விடுதலையை உணர்கிறோம். மனிதர் கட்டுண்டிருப்பது செயல், செயல்வினையென்னும் இருமையின் ஊடாட்டத்திற்குத்தான். செய்க செய்க என்கின்றன உடலும் உயிரும். செயல்வினையை எதிர்நோக்கி தவிக்கிறது உள்ளம். இரண்டையும் கடந்த நிலை ஒன்றே விடுதலை எனில் தவத்தாரும் விடுதலை கொண்டவர் அல்ல. தவம் என்பதும் செயலே. தவம் ஒழிகையில் அடையும் தவப்பேறொன்று இருக்கக்கூடும்.

அச்சொற்களின் விந்தையால் அவன் புன்னகைத்தான். யுதிஷ்டிரனின் முகம் நினைவுக்கு வந்தது. அத்தகைய விந்தையான சொல்லாட்சிகள் வழியாக வாழ்வின் சில மெய்மைகளை சொல்லிவிடமுடியுமென்று நம்புவது அவருடைய இயல்பு. பல்லாண்டுகால நூல் நவில்தல் மெய்மை என்பது ஒருவகையான மொழி அமைப்பே என்னும் நம்பிக்கையை அவருக்கு அளித்திருக்கிறது. மொழியினூடாக வெளிப்படும்போது மட்டுமே மெய்மை மானுடரால் அறியத்தக்கதாகவும் ஆளத்தக்கதாகவும் இருக்கிறது. எனில் மொழி என்பது கைக்குவளை. அப்பெருநதியில் அள்ளி எடுத்த ஒரு மிடறுதான் அது கொண்ட மெய்மை. அதிலேயே அலைகளையும் வானையும் பார்க்கப் பயில்வதற்குப் பெயர்தான் கல்வி. கல்வி என்பது அறிதலின் எல்லைக்குள் நின்று அனைத்தையும் விளங்கிக் கொள்வதற்கான பயிற்சி அன்றி வேறல்ல. கற்றோர் தங்கள் கல்வியால் சிறைப்பட்டோர். கல்வி மானுடரை தங்கள் எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும் திறன் கொண்டவர்களாக்குகிறது. ஆகவேதான் கற்றோர் மூடர்களென நின்றிருக்கும் தருணங்களை மீள மீள பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இத்தருணத்தில் அர்ஜுனனின் வில்லும் பீமனின் தோளும் என ஒவ்வொன்றாக பொருளிழந்து செல்கையில் யுதிஷ்டிரனின் கல்வி மட்டுமே ஏளனத்திற்குரியதாக மாறிவிட்டிருக்கிறது. ஏனெனில் காண்டீபம் தன் தோல்வியை உணர்ந்துவிட்டது. கதை மண்ணில் பதிந்துவிட்டது. இன்னமும் தன் மொழியை பற்றிக்கொண்டு தன் சிறுபீடத்தில் தருக்கி நின்றிருக்கவே யுதிஷ்டிரன் முயன்றுகொண்டிருக்கிறார். அவன் ஏன் ஒவ்வொருவரின் வெறுப்பும் அறுதியாக யுதிஷ்டிரன் மேல் சென்று படிகிறது என வியந்தான். அவர் ஆற்றியதென ஏதுமில்லை. அனைத்துக்கும் தடைகூறுபவராகவே இருந்திருக்கிறார். தயங்காது எதையும் ஆற்றியதில்லை. அனைத்தையும் விளக்கி ஏற்கவைத்தவன், ஆற்றி முடிக்கவைத்தவன் அவன். அவன்மேல் சினமெழவில்லை. ஏனென்றால் அவனுடைய அறியமுடியாமை அச்சமூட்டுகிறது. அச்சம் அளிக்காதவரிடமே சினமெழுகிறது. அறியமுடியாமை என்பது முடிவிலி. முடிவிலி என்பதே தெய்வமெழும் இடம். பிரம்மம் அறியமுடியாதது என்பதனால் அறியமுடியாமைகள் அனைத்தும் பிரம்மமே.

நகுலன் திருதராஷ்டிரரின் குடிலை தொலைவிலேயே பார்த்தான். அதன் மேல் மெல்லிய நீலப்புகை எழுந்துகொண்டிருந்தது. அடுப்பிலிருக்கும் கலம் போன்றிருந்தது அது. மண்ணுக்கு அடியில் அனல் சுழன்றெழும் அடுப்பொன்று இருக்கக்கூடும். அதற்குள் உலைக்கொந்தளிப்பென அலை நிறைந்திருக்கக்கூடும். அணுகுந்தோறும் அது ஒரு மாபெரும் உலைக்கலம் எனும் எண்ணத்திலிருந்து அவனால் மீளவே இயலவில்லை. சத்யசேனை தேரிலிருந்து திரைவிலக்கி எட்டிப்பார்த்து “அக்குடிலா?” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். “சிறிதாக உள்ளதே” என்றாள். அந்நிலையிலும் பேரரசரின் முதன்மையையே அவள் எண்ணுவது அவனிடம் எரிச்சலை எழுப்ப “கொடி பெரிதாக உள்ளதே” என்றான். அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி நனைந்த சிறகுகளுடன் தலைகீழாக கட்டப்பட்ட சேவல் என தொங்கிக்கிடந்தது. அவனை ஒருகணம் நோக்கிவிட்டு தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.

வண்டி சேற்றில் சகடங்கள் ஆழப்புதைய முனகி இழுபட்டு, பின் தசை பிளந்து எழுவதுபோன்ற ஒலியுடன் சகடம் விடுபட, கூண்டு உலைந்து அசைய, முன்னால் சென்றது. திருதராஷ்டிரரின் குடிலுக்கு முன்னால் காவல் நின்றிருந்த ஏழு வீரர்கள் வண்டி அணைவதைக்கண்டு தலைவணங்கி வேல் தாழ்த்தி விலகினர். அவர்களின் தலைவன் தன் வேலுடன் நகுலனை அணுகி தலைவணங்கினான். “சஞ்சயனும் சங்குலனும் உடனிருக்கிறார்கள் அல்லவா?” என்று தாழ்ந்த குரலில் நகுலன் கேட்டான். “ஆம், அரசே” என்று அவன் கூறினான். சஞ்சயனுக்காக தனிக்குடில் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கப்பால் காவலர்களுக்கான கொட்டகை நாற்புறமும் சுவரிலாது திறந்து நின்றது. திருதராஷ்டிரருக்கான உணவு சமைக்கும்பொருட்டு கட்டப்பட்ட அடுமனைக்குடில் சற்று அப்பால் குறுங்காட்டின் விளிம்பிலிருந்தது. சங்குலன் எப்போதுமே அவருடன் இருக்கிறான் போலும்.

சில நாட்களுக்கு முன்னரே அப்பகுதியின் மரங்களும் புதர்களும் வெட்டி அகற்றப்பட்டிருந்தமையால் தரையெங்கும் இலைகளும் சிதைந்த கொடிகளும் பரவி, புரவிகளும் வண்டிகளும் இரும்புக் குறடுகளும் மிதித்த தடங்களுடன் உழுதிட்ட வயல் போலிருந்தது முற்றம். சேற்றுத்தடம் ஆழப்பதிய வண்டி சென்று நின்றதும் நகுலன் அதன் திரைவாயிலருகே நின்று “வந்துவிட்டோம், அரசி” என்றான். சத்யசேனை திரைவிலக்கி அவனைப் பார்த்து “இங்குதானா?” என்றாள். “ஆம்” என்றபின் அவன் திரும்பி திருதராஷ்டிரரின் குடிலிலிருந்து சஞ்சயன் வெளியே வருவதை பார்த்தான். பின்னர் “அரசர் நல்ல உளநிலையில் இல்லை. அவர் அகிபீனா மயக்கிலிருக்கிறார் என்றார்கள்” என்றான். சத்யசேனை “இங்கு அனைவரும் அவ்வாறுதான் இருக்கிறார்கள். தன்னிலையுடன் இருப்பவர்கள் மிகச் சிலரே” என்றாள். பின்னர் படியில் கால் வைத்து இறங்கி சேற்றில் நின்று உள்ளிருந்து காந்தாரி இறங்குவதற்காக கைநீட்டினாள். காந்தாரி கைநீட்டி அவள் கையைப் பற்றியபின் தன் சிறிய கால்களை மரப்படியில் எடுத்துவைத்து இறங்கி சேற்றில் நின்றாள். உள்ளிருந்து சத்யவிரதை இறங்கி கையில் சிறிய பேழையுடன் நின்றாள். நகுலன் “வருக, பேரரசி!” என்றபின் நடந்தான்.

காந்தாரியின் கண்களைக் கட்டியிருந்த நீலத்துணியின் கீழ்விளிம்பு நனைந்து நிறம் மாறியிருப்பதை அவன் பார்த்தான். முதல் முறையாக அவள் விழிகளில் கண்ணீரைப் பார்க்கிறோம் என்று தோன்றியது. முன்னர் எப்போதேனும் அவள் அழுவதை பார்த்தேனா? குந்தியை சந்திக்கும்போது அவள் அழுதாளா? ஆம், அழுதாள். அவன் திடுக்கிடும்படி ஓர் உணர்வை அடைந்தான். குந்தியின் அருகே அவள் கைபற்றி அமர்ந்திருக்கையில் காந்தாரியின் விழிகளைப் பார்த்ததாகவே அவன் எண்ணிக்கொண்டிருந்தான். அவள் விழிகளை அவன் பார்த்ததே இல்லை என்றாலும் நினைவில் எழுகையில் எல்லாம் அவள் விழி கொண்டவளாகவே வந்தாள் என்பதை உணர்ந்தான். மீள மீள ஒவ்வொரு தருணமாக நினைவில் மீட்டினான். எவ்வண்ணம் இது நிகழ்கிறது? இந்நீலத் துணிக்கு அப்பாலிருந்து அவள் விழிகள் நோக்கிக்கொண்டிருக்கின்றனவா? அவள் விழிகளை நோக்கும் விழி ஒன்று தன் விழிக்கு அப்பாலிருக்கிறதா?

கண்மூடி தொலைநினைவில் ஆழ்ந்தபோதுகூட எப்போதும் விழி கொண்டவளாகவே அவளை அகத்தே உணர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்தான். அவ்விழிகள் சத்யசேனையின் விழிகள் அல்ல. சத்யவிரதையின் விழிகளோ பிற அரசியரின் விழிகளோ அல்ல. காந்தாரத்தில் வேறு எவருடைய விழிகளும் அல்ல. குந்தியின் விழிகள் அல்ல. திரௌபதியின் விழிகளோ பானுமதியின் விழிகளோ அல்ல. வேறு எவருடைய விழிகள்? மெல்லிய நீலம் கலந்த விழிமணிகள். சிறிய இமைப்பீலி கொண்டவை. எவருடைய விழிகள் என்று அவன் அகம் பதைத்து துழாவிக்கொண்டே இருந்தது. சகுனியின் விழிகளா? உடனே அகம் திடுக்கிட்டது. அவ்விழிகளுடன் காந்தாரியின் விழிகளுக்கு தொடர்பே இருக்கவில்லை. எனில் எவர் விழிகள்? ஏதோ தெய்வ விழிகள். சிலையிலெழுந்தவை. அது பளிங்குச்சிலை. அவ்விழிகள் இளநீலமணிகள்.

குடிலை நோக்கி செல்கையில் சஞ்சயன் அருகணைந்து தலைவணங்கினான். “எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று நகுலன் கேட்டான். “தன்னினைவு இருக்கிறது” என்று சஞ்சயன் கூறினான். “சங்குலன் உடனிருக்கிறான் அல்லவா?” என்றான். “அவன் அருகேதான் எப்போதும் இருக்கிறான்” என்றான் சஞ்சயன். குடிலை அடைந்து அதன் படலை திறந்தபோது காந்தாரி திரும்பி நகுலனிடம் “மைந்தா, நீயும் உடன் வருக!” என்றாள். நகுலன் “நான்…” என்றபின் “சஞ்சயன் உடன் இருப்பதே நன்று…” என்றான். மேலும் விரைவாக திணறும் குரலில் “மேலும் அங்கே சங்குலனும் இருக்கிறான்” என்றான். காந்தாரி ஒருகணத்திற்குப் பின் சஞ்சயனை நோக்கி முகம் திருப்பி “உள்ளே அழைத்துச் செல்க, சூதனே!” என்றாள். சஞ்சயன் “வருக, பேரரசி!” என்றபடி குடிலுக்குள் நுழைய காந்தாரி தலை குனிந்து உள்ளே நுழைந்தாள். சத்யசேனையும் சத்யவிரதையும் தயங்கும் காலடிகளுடன் தொடர்ந்தனர்.

அங்கிருந்து விலகிச்சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தை நகுலன் அடைந்தான். ஆனால் அவ்வாறு சென்றுவிடமுடியாதென்றும் தோன்றியது. கதவுப்படலை பிடித்தபடி அவன் வெளியே நின்று குடிலுக்குள் பார்த்தான். உள்ளே திருதராஷ்டிரரின் காலடியில் அமர்ந்திருந்த சங்குலன் தன் மாபெருந்தோள்களுடன் எழுந்து ஓலைவேய்ந்த சுவரில் சாய்ந்து நின்றான். அக்கணமே சிலையென்றாகி அங்கே அவன் இல்லையென்று தோன்றலானான். குடிலுக்குள் மூங்கிலாலான தாழ்வான பெரிய மஞ்சத்தில் விரிக்கப்பட்ட மரவுரியின் மீது திருதராஷ்டிரர் படுத்திருந்தார். பெருந்தசை புடைத்து நரம்புகள் இறுகிய அவருடைய இரு கரிய கைகளும் மஞ்சத்திலிருந்து தழைந்து நிலத்தை முட்டிக் கிடந்தன. இரு பாதங்களும் மஞ்சத்திற்கு வெளியே நீட்டி நின்றன. வயிறு ஒட்டி, விலா எலும்புகள் வரிவரியாகப் புடைத்த மார்பு மூச்சில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. தொண்டைக்குழி பதைத்து அசைந்தது. சிறு கன்றுக்குட்டியின் திமிலளவு பெரிய தொண்டை முழை ஏறியிறங்கியது.

காந்தாரி கைகளைக் கூப்பியபடி திருதராஷ்டிரரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இரு அரசியரும் கைகளை கூப்பியிருந்தனர். திருதராஷ்டிரர் தலையை உருட்டியபடி விளங்காச் சொல்லொன்றை புலம்பிக்கொண்டிருந்தார். அவரது தாடி மயிர் உதிர்ந்து நனைந்து திரிகளாக கழுத்திலும் தோள்களிலுமாக பரவியிருந்தது. உதடுகள் மடிந்து உள்ளடங்கியிருந்தன. ஆகவே மூக்கு புடைத்து வாய் மேல் மடிந்து நிழல் வீழ்த்தியிருந்தது. கண்கள் குழிந்து உள்ளே சென்றிருக்க இமைகளுக்குள் விழியுருளைகள் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. கன்னமுழை எழுந்து நெற்றி புடைத்து அவர் பிறிதொருவராக ஆகிவிட்டிருந்தார். தோலைப் புடைத்து உந்தியபடி மண்டையோடு மேலெழுந்துவிட்டதுபோல. அவரில் அனல் எரிந்துகொண்டிருப்பதுபோல நகுலன் உணர்ந்தான். தொன்மையான அடிமரக்கட்டை நாட்கணக்கில் கனன்று எரியும்.

காந்தாரி ஏதேனும் சொல்வதற்காக சஞ்சயன் காத்து நின்றிருந்தான். நகுலன் மீண்டும் காந்தாரியைப் பார்த்தபோது அவள் தன் விழிகளால் திருதராஷ்டிரரை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்ற அவன் திடுக்கிட்டான். விழிகள் இல்லாமலேயே பார்க்க முடியும்போலும். அல்லது ஒருவேளை மிக முதன்மையானவற்றை எல்லாம் விழிகளின்றிதான் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ? சஞ்சயன் காந்தாரியை பார்க்கவில்லை. திருதராஷ்டிரரையும் அவன் பார்க்கவில்லை. தலைகுனிந்து நிலத்தைப் பார்த்தபடி மெலிந்து தொய்ந்த தோள்களுடன் நின்றிருந்தான். ஆனால் அவன் காந்தாரியைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது எப்படி அவன் உடலின் வழியாக தெரிந்தது? வெவ்வேறு தன்னுணர்வுகள் ஒன்றையொன்று நுனிதொட்டு அசைவிழந்து நின்றிருந்த தருணம்.

காந்தாரி மெல்ல அசைந்து மூச்சொலி எழுப்பினாள். சஞ்சயன் தானும் உயிர்கொண்டு “தாங்கள் ஆணையிட்டால் நான் அரசரை எழுப்புகிறேன், பேரரசி” என்றான். “வேண்டியதில்லை” என்று சொன்னபின் அவள் சஞ்சயனைப் பார்த்து “அவர் அறிவாரா?” என்றாள். எந்த முன்பின் தொடர்பும் இன்றி கேட்டபோதும்கூட அவள் கேட்பதென்ன என்பதை உணர்ந்து “அங்கு அழைத்துச் சென்றேன்” என்று சஞ்சயன் சொன்னான். காந்தாரி மீண்டும் பெருமூச்சுவிட்டான். சஞ்சயன் அருகிருந்த மூங்கில் பீடத்தை எடுத்து திருதராஷ்டிரரின் கட்டிலின் அருகே இட்டு “அமர்க, அரசி!” என்றான். சத்யவிரதையும் சத்யசேனையும் இருபுறமும் பிடிக்க காந்தாரி எடைமிக்க உடலை மெல்ல தாழ்த்தி அதன் மேல் அமர்ந்தாள். பெருமூச்சுடன் மஞ்சத்தின் விளிம்பில் தன் கைகளை ஊன்றிக்கொண்டாள்.

இரு இணையரசியரும் திருதராஷ்டிரரின் காலருகே சென்று மண்ணில் அமர்ந்தனர். சத்யவிரதை தன் கையை நீட்டி நடுங்கும் விரல்களால் அவர் கால்களை தொட்டாள். சத்யவிரதையின் தோளை சத்யசேனை பற்றிக்கொண்டாள். காந்தாரி நிலம் தொட தழைந்திருந்த திருதராஷ்டிரரின் வலக்கையை தன் கையிலெடுத்து தூக்கிக்கொண்டாள். திருதராஷ்டிரரின் கையின் எடையை நகுலன் முன்பும் பலமுறை அறிந்ததுண்டு. மல்லர்கள் மட்டுமே அவர் கையின் எடையை தோளில் தாங்க முடியுமென்று அவன் அறிவான். காந்தாரியின் கை திருதராஷ்டிரரின் கையளவுக்கே பெரியது என்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். கரிய பெருநாகமும் வெண்ணிறப் பெருநாகமும் முத்தமிட்டுக்கொண்டதுபோல் என்று தோன்ற விழிகளை விலக்கிக்கொண்டான்.

காந்தாரி திருதராஷ்டிரரின் கைகளை தன் மடியில் வைத்து அவ்விரல்களுக்குள் தன் விரல்களைச் செலுத்தி பற்றிக்கொண்டாள். திருதராஷ்டிரர் தன் துயிலுக்குள் எங்கோ அத்தொடுகையை உணர்ந்து முனகினார். பின்னர் தீச்சுட்டதுபோல் உணர்ந்து எழுந்து அமர்ந்தார். திரும்பி தலைசரித்து அவளைப் பார்த்து பிறிதொரு கையால் அவள் தோளைப்பற்றி உலுக்கி “அரசி! அரசி!” என்றார். காந்தாரி தாழ்ந்த குரலில் “படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். “அரசி! அரசி!” என்று மீண்டும் அவர் கூவினார். பின்னர் உடலைத் தாழ்த்தி மீண்டும் மஞ்சத்தில் படுத்து “நீண்ட நிலம்! பாலை நிலம்! கோடை” என்றார். அவருடைய உதடுகளில் இருந்து அக்குரல் எழவில்லை எனத் தோன்றியது. “அங்கு ஒரு முள்மரச்சோலை. அதற்குள் பதினொரு உருத்திரர்கள்… மூவிழி கொண்டவர்கள். குருதிவிடாய் கொண்டவர்கள்” என்றார்.

நகுலன் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியாமல் சஞ்சயனைப் பார்த்தான். சஞ்சயன் அங்கிலாதவன்போல் ஆகிவிட்டிருந்தான். இரு விழிகளை மட்டும் அவன் அங்கே பதித்து எஞ்சவிட்டுச் சென்றிருந்தான் எனப் பட்டது. இரு செவிகள் மட்டும் அங்கு திறந்திருந்தன போலும். திருதராஷ்டிரர் உரத்த குரலில் கனைப்போசை எழுப்பினார். உறுமலும் இருமலும் கலந்து அவர் உடலை திணறச்செய்தன. மீண்டும் எழுந்து அமர்ந்து சிவந்த விழிக்குமிழிகள் துள்ள “அரசி, இங்கு வந்துவிட்டாயா?” என்றார். “இங்குதான் இருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “நாம் இனி அங்கு திரும்ப வேண்டியதில்லை. நாம் காட்டுக்கு சென்றுவிடுவோம். காடொன்றே இனி நமக்கு எஞ்சியுள்ளது” என்றார். “ஆம் அரசே, காடு ஒன்றுதான் நமக்கு எஞ்சியுள்ளது” என்று காந்தாரி சொன்னாள்.

அவர் அச்சொற்களின் முழுப் பொருளையும் அக்கணம் உணர்ந்தவர்போல துடிப்பெழுந்த உடலுடன் அமர்ந்திருந்தார். பின் நெஞ்சில் ஓங்கி அறைந்து கதறியபடி அவள் மடியில் தலை அறைந்து விழுந்து இரு பெருத்த தொடைகளுக்கு நடுவே தன் முகத்தை புதைத்துக்கொண்டார். தோள்கள் குலுங்க வலக்கால் வலிப்பு எழுந்ததுபோல் இழுபட்டுத் துடிக்க விம்மி அழுதார். காட்டுமரம் பிளந்து உள்ளே எரிந்த தீயின் தழல் எழுந்து ஆடுவதுபோல. தீயின் உறுமல். தீயின் சீறல். அவருடைய அழுகையை வெறித்த விழிகளுடன், சொல்லற்ற உள்ளத்துடன் நகுலன் பார்த்து நின்றான். கதவுப்படலை இறுகப் பற்றிக்கொண்டு தன் கால்கள் தளர்ந்து உடல் தழைவதை தவிர்த்தான்.

காந்தாரி அவர் தலையில் கையோட்டி, குழலை நீவிக்கொண்டிருந்தாள். அவருடைய உடலுக்குள் இருந்து பலர் பிளந்து வெளிவர முயல்வதுபோல தசைகள் புடைத்து திமிறி நெளிந்தன. அவருடைய குரல் அடைத்தது. தொண்டைமுழை மரமூடியென ஆகி கழுத்தை இறுக்கிக்கொண்டதுபோல அவர் திணறி விம்மி விக்கலோசை எழுப்பினார். பின்னர் வெடித்து மூச்சு எழ மீண்டும் கேவி அழுதார். ஆடி நிலைக்கும் ஊசல் என அழுகை ஓய மிகமிக நொய்ந்த ஒரு தேம்பல் அவரிடமிருந்து எழுந்தது. காந்தாரி மெல்லிய முனகலோசையை எழுப்பி அவரை நோக்கி குனிந்தாள். அழும் குழவியை ஆறுதல்படுத்த அன்னையர் எழுப்பும் ஓசை போலிருந்தது அது. அவள் தன் இரு கைகளாலும் அவர் தலையைப்பற்றி தூக்கி தன் முலைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி அணைத்து இறுக்கிக்கொண்டாள்.

நகுலன் திரும்பி வெளியே காலடி எடுத்து வைத்தான். உடல் நிலம் நோக்கி சென்றது. அவன் மேலும் இரு அடி எடுத்துவைத்து குடிலின் வெளித்திண்ணையில் அமர்ந்து தலையை தன் கைகளால் தாங்கி கண்களை மூடிக்கொண்டான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 24

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 5

நகுலனின் எண்ணத்தில் எஞ்சியதெல்லாம் ஒன்று மட்டுமே, காந்தாரி அடுத்ததாகச் செல்லும் இடம். வண்டியின் இணையாக புரவியில் சென்றபடி அவன் அவள் தன் குடிலுக்கு மீளவேண்டும் என விழைந்தான். அவள் சற்றே ஓய்வெடுக்கவேண்டும். சற்று துயில்கொண்டால் அவள் பிறிதொருத்தி ஆகிவிடக்கூடும். அவள் இருக்கும் நிலையை அவன் எவ்வகையிலோ உணர்ந்துகொண்டு விட்டிருந்தான். அவனை அது பதறச்செய்தது. புரவியின் மேல் அமரமுடியாதபடி உடலை அதிர்வுகொள்ளவைத்தது.

வண்டி திரும்பியதிசை காந்தாரியின் குடில் என்பதே அவனுக்கு இருந்த ஆறுதலாக இருந்தது. ஆனால் சற்று நேரத்தில் வண்டி விசையழிந்தது. சத்யவிரதை வெளியே நோக்கி “அக்கை பேரரசரை காணச்செல்ல ஆணையிடுகிறார்” என்றாள். “ஆம், ஆணை” என்ற நகுலன் “ஆனால் அவர் எவ்வண்ணம் இருக்கிறார் என நாம் அறியோம். இப்போதிருக்கும் நிலையில்…” என்றபின் “நான் ஓர் ஏவலனை அனுப்பி அவரிடமிருந்து ஆணை பெற்று வருகிறேன்” என்றான். அவனுக்கே தன் குரலின் நடுக்கம் விந்தையாக இருந்தது. “பேரரசி தன் குடிலில் சற்று ஓய்வெடுக்கையில்….” என்றான்.

சத்யவிரதை இடைமறித்து “இப்போதே செல்லவேண்டும் என பேரரசி ஆணையிடுகிறார்… பேரரசரின் நிலை எதுவாக இருப்பினும் பேரரசிக்கு அது தடை அல்ல” என்றாள். “ஆம்” என்று சொல்லி நகுலன் தளர்ந்தான். ஆம், இதுவே நிகழவிருக்கிறது. எவ்வகையிலும் தடுக்க முடியாது. இது ஒன்றே எஞ்சியிருக்கிறது. “ஆணை” என மீண்டும் தலைவணங்கி முன்னால் சென்று வண்டியோட்டியிடம் “பேரரசரின் குடிலுக்கு” என்றான். வண்டியோட்டியின் விழிகளில் ஓர் உணர்வும் வெளிப்படவில்லை என்றாலும் அவனுக்கு அவன் ஏதோ சொல்லவருவதாகப் பட்டது. தன் உள்ளத்தில் ஒரு கணம் அவன் விழிமுனை எஞ்சி பின் அணைந்ததுபோல் உணர்ந்தான்.

விழிகளை சுழற்றியபோது ஓர் ஏவலன் கண்ணுக்கு பட்டான். அவனை விழிகளால் அருகழைத்தான். “சஞ்சயனிடம் பேரரசி அணுகிக்கொண்டிருப்பதாக சொல்” என்றான். ஏவலன் “ஆணை” என்றான். புரவியில் முடிந்தவரை விரைவில் செல்” என்றான் நகுலன். “ஆணை” என்றபின் அவன் புரவி நோக்கி ஓடினான். வண்டியோட்டி திரும்பி நோக்கினான். நகுலனின் விழிகளிலிருந்து ஆணையை பெற்றுக்கொண்டான். வண்டி விரைவழிந்தது. சற்றே முன்னால் சென்று சுற்றுப்பாதையை தெரிவு செய்து செல்லத்தொடங்கியது. நகுலன் புரவிமேல் உடல் தளர்ந்து அமைந்தான்.

திருதராஷ்டிரரை அவனோ பாண்டவர்களோ அதுவரை நேரில் சந்திக்கவில்லை. அவர் எவ்வண்ணம் இருக்கிறார் என்பதை ஒற்றர்கள் வந்து சொன்னதிலிருந்து கற்பனைசெய்து நிகழ்த்தி நோக்கிக்கொண்டிருந்தார்கள். நோக்குமாடத்தில் இருந்து மலையிறங்கி வரும்போது அவர் “ஏன் நாம் செல்கிறோம்? போர் என்ன ஆயிற்று?” என்று உசாவிக்கொண்டிருந்தார். “பேரரசே, போர் முடிந்துவிட்டது” என்று சஞ்சயன் சொன்னான். “முரசறிவிப்பு எழவில்லையே. என் மைந்தனின் வெற்றியை நீ எவ்வண்ணம் அறிந்தாய்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். சஞ்சயன் அத்தருணத்தை இயல்பாகக் கடந்து “வெற்றியை எவ்வண்ணமும் அறியலாகும்…. ஏன் போர் முரசுகள் முழங்கவில்லை என நாம் அவரை நேரில் சந்திக்கையில் உசாவுவோம்” என்றான்.

கீழிறங்கிவருகையில் திருதராஷ்டிரர் முரசொலிகளை கேட்டுவிட்டார். “ஆ! முரசொலி! வெற்றி முரசின் ஒலி! ஆம்! அது வெற்றிமுரசொலியேதான்!” என்று கூவினார். பற்கள் வெண்ணிறமாக ஒளிகொண்டு தெரிய இரு கைகளையும் விரித்துத் தூக்கி “அவன் வென்றான்! அவன் வெற்றிகொண்டான்! கௌரவர்களுக்கு வெற்றி! குருகுலத்திற்கு வெற்றி!” என்று கூச்சலிட்டார். சஞ்சயன் திரும்பி அவர் முகத்தையே திகைப்புடன் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவருடைய முகம் உவகையால் விரிந்து கன்னத்தசைகள் நெளிந்தன. மெய்யான உவகை. தெளிவாகவே முரசுகள் பாண்டவர்களின் வெற்றியை அறிவித்துக்கொண்டிருந்தன. ‘இந்திரப்பிரஸ்தத்திற்கு வெற்றி! யுதிஷ்டிரனுக்கு வெற்றி! பாண்டவர்களுக்கு வெற்றி!’

அவன் மேலும் மேலும் முரசொலி வலுக்க அவர் முகத்தையே ஊன்றி நோக்கினான். அம்முரசொலியை முதலில் அவன் அஞ்சி அதை தவிர்க்க எண்ணினான். ஆனால் பின்னர் அதுவே நல்ல வழி, அவ்வண்ணமே அவர் அறியட்டும் என தோன்றியது. ஆனால் அவர் கைகளை அதன் தாளத்திற்கு ஏற்ப அசைத்து தலையை உருட்டி விழியின்மைக்குழிகள் துள்ளி குழம்ப “வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். மெல்ல மெல்ல அவன் உளம்தளர்ந்தான். அது நடிப்பு அல்ல. மெய்யாகவே அவருக்கு அவ்வண்ணம்தான் செவிகளில் விழுகிறது. அதை எப்படி கலைக்கப்போகிறோம் என்னும் அயர்வை அடைந்தான்.

மலையிலிருந்து கீழே வருந்தோறும் அவன் அவர் உடைந்து பெருகிக் கொந்தளித்து எழும் அக்கணத்திற்காக நெஞ்சம் துடிக்க காத்திருந்தான். மிகமெல்லிய ஒரு நீர்க்குமிழி என அவன் அவரை கொண்டுவந்தான். இக்கணம் இதோ இக்கணம் இன்னொரு கணம் என காலத்தை கடந்தான். ஆனால் அவர் அந்த உளம்பெருகிய நிறைநிலையிலேயே இருந்தார். இனிய பெருமூச்சுடன் “மைந்தர்கள் வெற்றி கொண்டாடிக்கொண்டிருப்பார்கள்!” என்றார். உரக்க நகைத்து “எந்த மகிழ்ச்சியையும் உண்டாட்டாகவே அவர்களால் கொண்டாட இயலும்… இந்நேரம் அவர்கள் தின்று குடித்து கூச்சலிட்டுக்கொண்டிருப்பார்கள்!!” என்றார்.

கைகள் இரு நாகங்கள் என அலைய “அவர்கள் நானே. நான் என் அகத்திலிருந்து பெருகி எழுந்து பரவியதுதான் அவர்கள். நிமித்திகர் சொல்வதுண்டு, என் விழியின்மையிலிருந்து அவர்கள் விழிகொண்டார்கள் என. என் விழைவிலிருந்து அவர்கள் உயிர்கொண்டார்கள். இவ்வுடற்சிறைக்குள் இருந்துகொண்டு பெருகுக நான் என என் ஆத்மா தவித்தமையாலேயே நூறென ஆயிரமென ஆனேன். கந்தகம் இருந்த இடத்திலிருந்துகொண்டே காற்றை நிறைப்பதுபோல அஸ்தினபுரியை நிரப்பினேன்…” அவர் கைகளை அறைந்துகொண்டு நகைத்தார் “அஹ்ஹஹ்ஹஹா!” என்ற ஒலி தேரின் சுவர்களை அதிர்வடையச்செய்தது.

“அவர்களுடன் சென்றமர்ந்து உண்டாட்டில் திளைக்க விழைகிறேன்… அவர்களுக்கு உண்டு நிறைவதில்லை என்பார்கள். உணவால் உடல் நிறைந்து சித்தம் மயங்கி விழுந்து கிடக்கையில்கூட அவர்கள் உண்பதுபோல வாயை மெல்வார்கள், உணவை உருட்டுவதுபோல கைவிரல்களை அசைப்பார்கள். இதை சேடியர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவர்கள் தொட்டிலில் கிடக்கையில் எந்நேரமும் வாயை சப்புக்கொட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பசி அடங்குவதே இல்லை. எதைக்கொடுத்தாலும் தழலென எழுந்து கவ்வி உண்பார்கள். நீ அறிய மாட்டாய். அன்றெல்லாம் அஸ்தினபுரியின் பால் முழுக்க அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டது. உச்சிப்பொழுதில் பசும்பால் போதாமலானபோது புரவிப்பால்கூட அவர்களுக்கு அளிக்கப்பட்டது!”

“அதை அந்நாளில் மருத்துவர்களிடம் உசாவியிருக்கிறார்கள். மருத்துவர்கள் பல வழிகளை கண்டடைந்திருக்கிறார்கள். மூத்தவர் இருவருக்கும் யானைப்பால் கொடுத்துப் பார்க்கலாம் என்றார் ஒருவர். யானைப்பால் பளிங்குக்கல்போல் அடர்த்தியானது. அதை கொடுத்தாலும் அவர்களின் வாயில் அந்த அசைவு இருந்துகொண்டே இருந்தது. ஆம், மெய்யாகவே அவர்கள் யானைப்பாலை செரித்துக்கொண்டார்கள். பின்னர் நிமித்திகர் ஒருவர் சொன்னார், அது பசி அல்ல, பிறிதொன்று என்று. அவர்கள் மாபெரும் விழைவொன்றை அகமெனக்கொண்டு வெளிப்பட்டவர்கள். குழவியர் என்பதனால் அதை அவர்களின் வாய் மட்டுமே இப்போது வெளிப்படுத்துகிறது. வளருந்தோறும் ஐம்புலன்களும் அவ்விழைவை வெளிப்படுத்தும். உடலே அதுவாக திகழும். அவர்களின் இருப்பே அதுவென்று நிகழும் என்றார்.”

திருதராஷ்டிரர் நீண்ட பெருமூச்சுகள் விட்டார். அவர் உவகையின் உச்சியில் இருப்பதாகத் தோன்றியது. உவகை வானிலிருந்து அருவியாகக் கொட்ட அதன்கீழே மூச்சுத்திணறி தவித்து அதை உதறி உதறி சிலிர்த்தபடி அவர் பேசிக்கொண்டிருந்தார். “நிமித்திகர் சொன்னதன்படி ஒன்று செய்தோம். அஸ்தினபுரியின் நான்கு எல்லைகளில் இருந்தும் கைப்பிடி மண் எடுத்துவந்தோம். அதை கலந்து அந்தத்தூளை பாலூட்டி முடித்ததும் அவர்களின் உதடுகளில் சற்றே தடவினோம். நம்ப மாட்டாய், அதன் பின் அந்த உதடசைவு நின்றது. முகங்களில் இருந்த தவிப்பு அணைந்தது. அவர்கள் புன்னகையுடன் தங்களைத் தாங்களே தழுவிக்கொண்டு ஆழ்ந்து உறங்கினார்கள். அதைப்பற்றி சூதர் சிலர் எழுதிய பாடல்கள் உள்ளன. இன்றுகூட அவர்கள் துயில்கையில் அப்பாடலை பாணர் பாடுவதுண்டு…”

அவன் உள்ளம் ஆழ்ந்த துயரை ஒரு வலி என உணர்ந்துகொண்டிருந்தது. இத்தகைய களிப்புடன் தான் அவரை பார்த்ததே இல்லை என எண்ணிக்கொண்டான். இது களிப்பென்றால் களிப்பு என்பதுதான் என்ன? எதையும் எவ்வண்ணமும் உள்ளம் உருமாற்றிக்கொள்ளும் என்றால் மானுட உணர்வுகள் என்பதுதான் என்ன? திருதராஷ்டிரர் அவன் தோளைப்பற்றி உலுக்கி “அங்கே அவர்கள் துயில்கையில் அதைப் பாட பாணர்கள் இருப்பார்கள் அல்லவா?” என்று கேட்டார். “இருப்பார்கள் என்றுதான் படுகிறது” என்றான் சஞ்சயன். “அங்கே அவர்கள் படுத்திருக்கையில் குருக்ஷேத்ரத்தின் குருதிபடிந்த மண்ணில் ஒரு துளி எடுத்து அவர்களின் உதடுகளில் வைக்கவேண்டும். அவர்கள் ஆழ்ந்துறங்குவார்கள்.”

அவர் வெடித்து நகைத்து “ஆனால் மறுநாள் எழுந்ததுமே பாரதவர்ஷத்தையே வெல்லவேண்டும் என கிளர்வுகொள்வார்கள்… அவர்கள் இம்மாநிலத்தையே விழுங்கினாலும் தீராப்பசி கொண்டவர்கள்!” என்றார். சஞ்சயன் தோளை அறைந்து “அது என் பசி… அந்தப்பசி என்னுள் இருந்ததை நான் அவர்கள் என்னிலிருந்து எழ எழத்தான் உணர்ந்தேன். நான் என் அகத்தையே கைகளால் தொட்டுத் தழுவி அறியும் வாய்ப்பு கிடைத்தவன்!” என்றார். சஞ்சயன் தன் கன்னங்களில் நீர் வழிவதை உணர்ந்தான். அவருடைய களிவெறிகொண்ட முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான்.

தேர் வெடிப்பொலியுடன் முழக்கமிட்டுக்கொண்டிருந்த முரசுகளின் நடுவே வந்திறங்கியது. மையச்சாலைக்கு வந்ததும் அவன் முதல்முறையாக மேலே செல்வது எத்திசைநோக்கி என்னும் திகைப்பு கொண்டான். அப்போதுதான் அவனுக்கு தன் உள்ளம் கொண்டிருந்த மயக்கமும் தெரியவந்தது. அவன் அஸ்தினபுரிக்கு திரும்பிச் செல்வதாகவே எண்ணிக்கொண்டிருந்தான். அங்கே துரியோதனனும் கௌரவர்களும் வழக்கம்போல இருப்பார்கள் என்னும் புனைவையே உள்ளம் கொண்டிருந்தது. அந்த அஸ்தினபுரி அவனுள் அதுவரைக்கும் அழியவில்லை.

அவன் அஸ்தினபுரியில் கௌரவர்கள் இல்லை என தன் உள்ளத்தை நோக்கி சொல்லிக்கொண்டே இருந்தான். அதை ஒரு செய்தியாக வாங்கிக்கொண்டபோதும் அது அந்த அஸ்தினபுரிக்கே மீண்டது. ஒன்றே வழி, அரசகுடி ஒழிந்த அஸ்தினபுரியை நேரில் காணவேண்டும். அங்கே ஒருகணம் திகழவேண்டும். அங்கு சென்றபின்னரும்கூட உள்ளத்தின் அக்கற்பனை அழியாமல் நீடிக்கக்கூடும். ஆனால் ஒரு கணத்தில் குமிழி என அது உடைந்து இனியில்லை என மறையும். அக்கணம் தன் அகத்தே இன்னமும் நடைபெறவில்லை. ஆகவேதான் அவனிடமிருந்து அது அவருக்கு சென்றுகொண்டிருக்கிறது. அவர் மைந்தர்பொலிந்த அஸ்தினபுரியை உருவாக்கிக்கொண்டிருப்பது அவன் சொற்களில் தெரியும் உணர்வுகளினூடாகவே.

சஞ்சயன் ஒரு கணத்தில் அம்முடிவை எடுத்தான், குருக்ஷேத்ரம் நோக்கி தேரைத் திருப்ப ஆணையிட்டான். அதை எவ்வகையிலும் எதிர்பார்த்திருக்காத தேர்ப்பாகன் திரும்பி அவனை பார்த்தான். ஆம் என அவன் விழிகளால் சொன்னான். திருதராஷ்டிரர் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே வந்தார். “வெற்றிவிழவை ஒரு வேள்வியென்றே நாம் கொண்டாடவேண்டும். நாம் உண்டாட்டு கொண்டாடுகிறோம். தேவர்களின் உண்டாட்டே வேள்வி எனப்படுகிறது. அவர்கள் மகிழவேண்டும். நம் நிலம்பொலிய குடிபெருக புகழ்நிலைக்க அவர்களின் வாழ்த்து நமக்கு வேண்டும்.”

குருக்ஷேத்ரத்தில் என்ன நிகழும் என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் குருக்ஷேத்ரத்தை அங்கே மலைமேலிருந்து நோக்கும் கோணத்திலேயே தன் அகம் புனைந்து வைத்திருப்பதை அவன் உணர்ந்தான். மெய்யாக விரிந்திருக்கும் குருக்ஷேத்ரத்திற்குச் சென்று அதை தன் அகத்தால் வாங்கிக்கொள்ள இயலுமா? அது இப்போது எவ்வண்ணம் இருக்கும்? அவன் அங்கிருந்து நோக்கியபோது அது ஒரு மாபெரும் செம்மண் வெளியாகவே தெரிந்தது. அங்கே ஓர் உயிரசைவுகூட இல்லை. அங்கே சென்று அதுவே அப்போர்ந்நிலம் என்று அகத்திற்குச் சொல்லி நம்பவைக்க இயலுமா?

ஆனால் வேறுவழியில்லை. அங்குதான் சென்றாகவேண்டும். சாவை உள்ளம் ஏற்றுக்கொள்வதற்காகவே சடலத்தின் மேல் விழுந்து அழுகிறார்கள் மானுடர். தொட்டுத்தழுவி கதறிப் புலம்பும்போது அவர்களின் உயிர் அது வெற்றுடல் என்பதை அறிந்து அமைந்துகொண்டிருக்கிறது. குருக்ஷேத்ரம் அனைத்தையும் சொல்லிவிடும். அது ஒன்றே சொல்லமுடியும். அவனுக்கு மட்டும் அல்ல இன்னும் நெடுங்காலத்திற்கு எழுந்து வரும் தலைமுறைகளுக்கு. அது ஒரு மாபெரும் ஏடு. ஒரு பெருங்காவியம் எழுதப்பட்ட ஒற்றை சுவடிப்பரப்பு.

அவன் காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தபோது எழுந்த கெடுமணத்தை நெடும்பொழுது உணரவில்லை. அவன் உடல் குமட்டி அதிர்ந்துகொண்டே இருந்தது. வாயில் குமட்டலை உருவாக்கும் நீர் சுரந்து துப்பிக்கொண்டே இருந்தான். திருதராஷ்டிரர் “ஆ, இது குருதிமணம் அல்லவா?” என்றபோது அவன் திடுக்கிடான். “அழுகிய குருதி! சீழ்கொண்ட குருதியின் அதே வாடை!” என்றார். “இதுதான் களத்தின் மணம்போலும்… சஞ்சயா நீ சொன்ன சொற்களில் இல்லாதிருந்தது இதுவே. மணத்தை நீ உணரவில்லை. உன்னால் அதை சொல்வடிவாக்கவும் இயலவில்லை.”

அதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். “மூடா! நீ சொன்னது குருக்ஷேத்ரமே அல்ல. அது வெறும் கதை. காவியநூல்களில் இருக்கும் கதைகளைப்போன்ற ஒன்று. மெய்யான போர் குருதிமணம் கொண்டது. அதை இப்போதுதான் உணர்கிறேன். நோக்கு… நோக்கு… இக்காடு முழுக்க குருதி நிறைந்திருக்கிறது. போர்க்களத்தில் இருந்து ஊறிநிறைந்த குருதி. வேட்டையாடி உண்டுவிட்டு வயிறு நிறைந்து துயிலும் வேங்கை போலிருக்கிறது இக்காடு.” அவர் ஆவலுடன் முகத்தைச் சுளித்து மூக்கை கூர்ப்படுத்தி நீட்டினார்.

“போர்வீரனுக்கு இதுவே நறுமணம்… இது புதிய ஊன்சோற்றின் மணத்தை விட, புளித்த மதுவின் மணத்தைவிட, மதம் கொண்ட பெண்ணின் மணத்தைவிட இனியது… வேள்விமிச்சத்தைவிட அவிப்புகையைவிட இனியது… மெய்யாகவே இனியது!” அவர் கைகளை விரித்து “இந்த மணத்தை நான் எங்கோ அறிந்திருக்கிறேன். நான் கனவுகளில் போரிட்டிருக்கிறேன். சௌவீரத்தையும் யவனத்தையும் கூர்ஜரத்தையும் மாளவத்தையும் வங்கத்தையும் மணிபூரகத்தையும் தெற்குத்திருவிடத்தையும் வென்றிருக்கிறேன்… இக்குருதிமணம் நான் நன்கறிந்தது…”

அவர் அவன் தோளை எட்டிப்பிடித்தார். “அந்நாளில் நான் எவ்வண்ணமெல்லாம் கனவுகாண்பேன் என நீ அறிந்திருக்க மாட்டாய். ஒற்றர்களிடம் எல்லா நிலங்களில் இருந்தும் மண்ணை அள்ளிக்கொண்டுவரச்சொல்வேன். சிறிய சிப்பிமூடிகொண்ட சிமிழ்களில் அந்த மன்ணை சேர்த்து வைத்திருப்பேன். ஒவ்வொன்றாக திறந்து எடுத்துப்பார்ப்பேன். இது மாளவம், இது விஜயபுரி, இது காஞ்சி, இது தென்மதுரை… எல்லாவற்றையும் என்னால் சொல்லமுடியும். பின்னர் ஒருநாள் அறிந்தேன். குருதிமணமே என்னை கொந்தளிக்கச் செய்கிறது என. குருதிகொண்டுவரும்படி ஆணையிட்டேன். ஆட்டின்குருதி. காளைகளின் குதிரைகளின் குருதி. பின்னர் களிற்றுக்குருதி. பின்னர் மானுடக்குருதியால் அன்றி நிறைவுறாதவன் ஆனேன்.”

“குருதிகொண்டுவாருங்கள் என கூச்சலிட்டுக்கொண்டே இருப்பேன். குருதியை முகர்ந்து முகர்ந்து நோக்கி மகிழ்வேன். அடிமைக்குருதி வேண்டாம், வீரர்களின் குருதி வேண்டும் என்பேன். என்னால் குருதியின் மணத்திலேயே அவ்வேறுபாட்டை உணரமுடியும். எனக்காக தொலைநாடுகளிலிருந்து ஒற்றர்களை பிடித்துக் கொண்டுவந்து அக்குருதியை கொண்டுவருவார்கள். பின்னர் அறிந்தேன். குருதியை மண்ணுடன் கலந்தால் விந்தையான ஒரு மணம் எழுவதை. மிக விந்தையான மணம் அது. அதை வேறெவ்வகையிலும் உருவாக்க முடியாது. அந்த மணம் என்னை காமவெறிகொண்டவனைப்போல் கிளரச்செய்தது…”

“இதேமணம்தான்… அன்று நான் உணர்ந்தவை துளிகள். இது கடல்… பெருங்கடல் ஒற்றை அலையென எழுந்து என்னை அறைவதுபோல் இதை உணர்கிறேன்… வீரனுக்கு இதைப்போல் நறுமணம் வேறில்லை. என் மைந்தர் இந்த மணத்தை என்பொருட்டு உருவாக்கியிருக்கிறார்கள். சஞ்சயா, குருக்ஷேத்ரம் சென்றதும் என்னை குருதிக்களத்திற்கு கொண்டுசெல். நான் அச்சேற்றில்படுத்து உருளவேண்டும். என் உடலெங்கும் செங்குருதிச்சேறு படியவேண்டும். பதினெட்டுநாட்கள் நானும் இப்போரில் உழன்றவனாக உணர்வேன்” என அவர் அவன் தோளைப்பற்றி பிசைந்தார்.

அந்த முகத்தில் இருந்தது பித்தின் வெறி என அவன் அறிந்தான். அவர் தலையை சுழற்றியபடி அரற்றினார். “ஆனால் அதில் என் குருதியும் கலக்கவேண்டும். இல்லையேல் அந்த மணம் முழுமை அடையாது. அங்கே சென்றதும் ஒரு வாளை என்னிடம் கொடு. நானே என் உடலை வெட்டி குருதி வரவழைக்கிறேன். அக்குருதிக்குழம்புடன் என்குருதியும் கலக்கவேண்டும். அன்றும் அதை செய்வேன். என் உடலில் இருந்தும் குருதியெழச்செய்து அதை மண்ணுடன் கலந்துவிடுவேன். அப்போதுதான் அது முழுமை கொள்கிறது.”

சஞ்சயன் மெல்ல அகத்தே அமைந்துகொண்டிருந்தான். இந்தப்பித்து இவ்வண்ணம் மிகுந்துகொண்டே செல்வது ஒன்றின்பொருட்டே. இது வெடித்துச் சிதறவிருக்கிறது. இன்னும் சற்றுநேரத்தில். இன்னும் சிலகணங்களில். அப்போது அது நிகழ்வதை அறிவதற்கான ஆவல் மட்டுமே தன்னுள் முதன்மைகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். தான் ஒரு கதைசொல்லி மட்டுமே என்றும் எதுவும் கதையாகவே தன்னால் அறியப்படுகிறது என்றும் தெளிந்தான். கதையில் மெய்யான எதுவும் இல்லை. உணர்ச்சிகள்கூட மெய்யல்ல. அவை சமைக்கப்பட்டவை. கதைபோலவே எல்லைகள் கொண்டவை. கதைசொல்லிக்கு இப்புவியே ஒரு முடிவிலாக்கதை மட்டுமே.

சாலை ஓரத்திலேயே அவர்களை யுயுத்ஸு எதிர்கொண்டான். தேரிலிருந்து இறங்கி சஞ்சயன் அவனை நோக்கி சென்றான். யுயுத்ஸு தணிந்த குரலில் “நாம் பேரரசரை மூத்தவரின் சிதைக்கு கொண்டுசெல்லவேண்டும்” என்றான். சஞ்சயன் திகைப்புடன் “ஏன்?” என்றான். “நானும் அதை அறியேன். ஆனால் இன்று காலை இளைய யாதவர் என்னிடம் அதை சொன்னார். நீங்கள் மலையிறங்கும்போது எதிர்கொண்டு இதை சொல்லும்படி சொன்னார்” என்றான். சஞ்சயன் “மேலும் என்ன சொன்னார்?” என்றான். “ஒன்றுமில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “அவர் எவரையோ ஏளனம் செய்வதுபோலிருக்கிறது இப்போதெல்லாம். முகத்திலிருக்கும் அப்புன்னகையில் வஞ்சம் நிறைந்திருக்கிறது எனப்படுகிறது.”

“வஞ்சம் என தோன்றும் ஏதோ ஒன்றை அவர் சொன்னார் அல்லவா?” என்று சஞ்சயன் கேட்டான். “ஆம், அவர் சொன்னதை நினைவுறுகிறேன். மைந்தனின் சிதையிலேயே அவர் அக்கனவிலிருந்து வெளியே வருவார் என்றார்.” சஞ்சயன் உள்ளம் படபடக்க “ஆம்” என்றான். யுயுத்ஸு தேருக்குள் எட்டிநோக்கி “எப்படி இருக்கிறார்?” என்றான். “கனவில்” என்று சஞ்சயன் சொன்னான். “இப்போது அவரை சந்திக்கக்கூடாதவர் தாங்களே. செல்க!” அவன் “ஆம்” என்றபின் புரவியைத் திருப்பிவிட்டு “இவ்வழியே செல்க… இயல்பாகவே நீங்கள் சிதைக்குழியை சென்றடைவீர்கள். அங்கே இளைய அரசர் நகுலன் உங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான். சஞ்சயன் “ஆம்” என்றான்.

அந்த ஊடுவழி காட்டுக்குள் சென்றது. திருதராஷ்டிரர் ஏதேனும் கேட்பார் என அவன் எதிர்பார்த்தான். ஆனால் கூண்டிலிருக்கும் விலங்கிடம் தெரியும் ஒரு பதைப்பு மட்டுமே அவரிடம் வெளிப்பட்டது. அவருடைய கேள்வியை அவன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான். அவர் முற்றடங்கி சிலையென ஆனார். தேருள் அவர் இருப்பதை விழிகளால் நோக்கினால் மட்டுமே உணரமுடிந்தது. தேர் நின்றதும் சஞ்சயன் “பேரரசே” என்றான். அவர் “உம்” என்றார். “இறங்குக!”! என்றான். அவர் கைநீட்டினார். அவன் அந்தப் பெரிய கையை பற்றிக்கொண்டான். அவர் மெல்ல காலெடுத்து வைத்து இறங்கி மண்ணில் நின்றார். தலையைச் சுழற்றி வாயை இறுக்கி செவிகளால் அந்த இடத்தை நோக்கிக்கொண்டிருந்தார்.

அப்பால் நகுலன் நிற்பதை அவன் கண்டான். அவனைக் கண்டதும் நகுலன் கை வீசி அருகணைய ஆணையிட்டான். நகுலன் விலகிச்செல்லலாம் என சஞ்சயன் கையசைவால் சொன்னான். ஆம் என நகுலன் அகன்று சென்றான். “வருக, அரசே!” என்று சொல்லிக்கொண்டு அவன் அவர் கையைப் பற்றி அழைத்துச்சென்றான். அவர் கால்களை கிளறியிட்ட புதுமண்ணில் நடக்கும் யானைபோல நோக்கி கருதி எடுத்துவைத்து நடந்தார். அப்போதுதான் சஞ்சயன் அந்தத் தருணத்தின் இக்கட்டை முற்றுணர்ந்தான். அவரிடம் எப்படி சொல்லப்போகிறேன்? என்னவென்று சொல்லெடுக்க முடியும்? எட்டுத்திசைகளிலும் அவன் உள்ளம் சென்று முட்டியது. முதற்சொல் போதும். சொற்களஞ்சியமான அவன் உள்ளம் ஒழிந்துகிடந்தது. மொழியையே முற்றிழந்துவிட்டவன்போல் உணர்ந்தான்.

சிதை ஆழ்ந்த கரியகுழியாக மாறி மழையில் ஊறிக் கிடந்தது. சாம்பல்மேல் பெய்த மழை அதன் மேற்பரப்பை மென்படலமாக ஆக்கிவிட்டிருந்தது. அதை நோக்கி செல்லச் செல்ல திருதராஷ்டிரர் நடைதளர்ந்தார். அவர் எதை உணர்கிறார் என அவன் வியந்தான். ஆனால் எதையோ உணர்கிறார். அவர் ஏன் எதுவும் கேட்கவில்லை? அந்த இடத்தில் சாம்பல் மணம் நிறைந்திருந்தது. இலைகளிலிருந்து சொட்டிய நீரில்கூட சாம்பல் கலந்திருந்தது. மழை நீரோடைகள் வற்றிய தடங்களெல்லாம் சாம்பலால் வரையப்பட்டிருந்தன.

குழியை அணுகியதும் திருதராஷ்டிரர் நின்றார். இருகைகளையும் தலைக்குமேல் தூக்கினார். எடைமிக்க பாறையை தூக்குபவர் போல கைகளை அசைத்தார். அவருடைய பெருந்தசைகள் இறுகி இழுபட்டு நெளிந்தன. பின்னர் வேறெங்கோ என ஒரு பிளிறலோசையை சஞ்சயன் கேட்டான். அவன் வயிற்றுத்தசைகள் இழுத்துக்கொண்டன. அறியாமல் பின்னடி எடுத்துவைத்து விலகினான். திருதராஷ்டிரர் தள்ளாடியபடி ஓடி சிதைக்குழியை அணுகி அவ்விசையிலேயே பாய்வதுபோல் முன்னால்சென்று முகம் மண்ணிலறைந்து விழுந்தார். கைகளால் நிலத்தை ஓங்கி ஓங்கி அறைந்தபடி கரிய சாம்பல்புழுதியில் புரண்டு நெளிந்து கூவிக்கதறி அழுதார்.

அவன் மேலும் மேலும் பின்னகர்ந்து சென்றான். அங்கே நின்றிருந்த நகுலனும் பிறரும் அவன் அருகே வந்தனர். அவன் கைகளை நெஞ்சோடு கூப்பியபடி கண்களிலிருந்து நீர் வழிய அவரை நோக்கிக்கொண்டிருந்தான். நகுலன் அவன் தோளை தொட்டான். சஞ்சயன் திரும்பி நோக்கியபோது நகுலன் அஞ்சி கையை பின்னிழுத்துக்கொண்டான். சஞ்சயனின் உடல் அப்போது அனற்கலம் என கொதித்துக்கொண்டிருந்ததை நகுலன் நினைவுகூர்ந்தான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 23

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 4

நகுலன் யுதிஷ்டிரனின் குடிலருகே சென்று நின்றான். யுதிஷ்டிரனிடம் எதைப்பற்றியும் உசாவுவதில் பொருளில்லை என்று தோன்றியது. எதை கேட்டாலும் அதை அருகிருக்கும் எவரிடமேனும் வினவி அதே மறுமொழியை தானும் சொல்வதே அவருடைய வழக்கமாக இருந்தது. சகதேவனிடம் கேட்கலாமென்று தோன்றியது. பெரும்பாலான நிகழ்வுகளில் சகதேவன்தான் முடிவெடுத்துக்கொண்டிருந்தான். புரவியைத் திருப்பியபின் மீண்டும் தயங்கினான். அவனிடம் கேட்பதிலும் பொருளில்லை. அப்போது செய்யக்கூடுவதாக ஏதுமில்லை. காந்தாரி குந்தியையும் திரௌபதியையும் சந்திப்பதை எவ்வகையிலும் தவிர்க்க இயலாது என்று பட்டது.

அவன் தன் புரவியைத் திருப்பி குடில்களின் முற்றங்கள் வழியாக மெல்ல செலுத்தி குந்தியின் குடிலைநோக்கி சென்றான். குந்தியின் குடிலுக்கு அவன் சென்று சிலநாட்களாகிவிட்டிருந்தது. ஓரிருமுறைக்குமேல் அவன் அவளை சந்திக்கவில்லை. அவன் சென்று பார்த்தபோதெல்லாம் அவள் தன்னிலையில் இருக்கவில்லை. அகிபீனா மயக்கில் உயிரிலா உடல் என மஞ்சத்தில் கிடந்தாள். அவளை நோக்கி நின்றபோது அவன் ஒருவகையான ஒவ்வாமையை உணர்ந்தான். தோல் வெளிறிச்சுருங்கியிருந்தது. தசைகள் ஒடுங்கி உடல் குறுகி நெற்றுபோலிருந்தாள். கண்கள் குழிந்து உள்ளே சென்றுவிட்டிருந்தன. உதடுகளும் உள்மடிந்து உதட்டுவரம்பைச் சூழ்ந்து சுருக்கங்களுடன் ஓரிரு நாட்களிலேயே பல்லாண்டு அகவையைக் கடந்து முதுமையை எய்திவிட்டிருந்தாள்.

அருகே நின்ற மருத்துவப்பெண்டு “நினைவு திரும்பவில்லை” என தணிந்த குரலில் சொன்னாள். ‘மீண்டெழுகையிலும் தன்னிலையழிந்தவராகவே தெரிகிறார். பித்தெழுந்து கூச்சலிடுகிறார். தன்னைத்தானே தாக்கிக்கொள்கிறார். எழுந்து வெளியே ஓட முற்படுகிறார். ஆகவே நினைவுமீளாமலிருப்பதே நன்று என்று மருத்துவர் சொன்னார்கள். அகிபீனா உணவு என அன்றாடமுறைமையாகவே அளிக்கப்படுகிறது” என்றாள். அவனுக்கு அந்த ஒவ்வாமை ஏன் என்று புரியவில்லை. அப்போது அவள் அரசியல்லாமல் ஆகிவிட்டிருந்தாள். அவளிடம் என்றுமிருந்த நிமிர்வும் விழைவின் விசையும் சூழ்ச்சித்திறனும் முற்றாக மறைந்து எந்தப் பாதுகாப்பும் இல்லாதவளாக ஆகிவிட்டிருந்தாள். அவள் பிறருடைய ஆதரவைத் தேடும் தருணம் அது. ஆனால் அவன் உள்ளம் அவளுக்காக கனியவில்லை. அங்கிருந்து உடனடியாக சென்றுவிடவேண்டும் என்றே தோன்றியது.

அதன்பின் அவளுக்குரிய அனைத்தையும் செய்ய அவன் ஆணையிட்டான். ஆனால் அவளை சந்திப்பதை ஒழிந்தான். அவளை அவ்வண்ணம் தவிர்ப்பதுகுறித்து குற்றவுணர்ச்சி கொண்டான். ஆனால் அவனால் அதை தன்னிரக்கமாக ஆக்கி விழிநீர் கசிந்து பின் பெருமூச்சுடன் கடக்கமுடிந்ததே ஒழிய அவளைச் சென்று சந்திக்கமுடியவில்லை. சந்திப்பதிலும் பொருளில்லை, அவள் தன்னிலையில் இல்லை என எண்ணிக்கொண்டான். ஆனால் அது வெறும் பேச்சு என்றும் அறிந்திருந்தான். அவள் அவனை ஒருவேளை அடையாளம் காணக்கூடும். ஆனால் அந்த ஒவ்வாமை அவள் மேல் அல்ல. அவளென அங்கே எழுந்தமைந்துள்ளது பிறிதொன்று. மானுடரை மீறிய ஒன்று மானுடரில் திகழ்வது. மானுடரை வெறும் அடையாளமென்றாக்கிக் கொள்வது அது.

அவன் குந்தியின் குடிலை அடைந்தபோது என்ன செய்வதென்று முடிவுசெய்துவிட்டிருந்தான். மருத்துவப்பெண்டு அவனைக் கண்டு வந்து வணங்கி “யாதவ அரசி அகிபீனா மயக்கிலேயே இருக்கிறார்கள். எப்போது நினைவுமீளுமெனச் சொல்ல முடியாது” என்றாள். நகுலன் “நான் பேரரசியின் நிலையென்ன என்று நோக்கவே வந்தேன்” என்றான். பின்னர் “அவர்கள் அந்நிலையில் இருக்கட்டும். சற்றுநேரத்தில் பேரரசி காந்தாரி அவர்களை பார்க்க வரக்கூடும்” என்றான். அவன் சொல்வதை அவள் புரிந்துகொள்ளாமல் “அவர்கள் விழித்தெழ வாய்ப்பே இல்லை” என்றாள். “ஆம், அந்நிலையே நன்று. அவர்கள் சந்திக்காமல் இருப்பதே உகந்தது. பேரரசி அன்னையை வந்து பார்த்துவிட்டுச் செல்லட்டும்” என்றான். அவள் புரிந்துகொண்டு தலையசைத்தாள்.

அவன் மீண்டும் புரவியைச் செலுத்தி அந்தக் குடில்நிரையின் மறு எல்லையில் அமைந்த திரௌபதியின் குடில் நோக்கி சென்றான். அங்கே திரௌபதி இருப்பாளா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. அவள் ஒரு சிறுகுடிலுக்குள் ஒடுங்கியிருப்பவள் அல்ல என்றே உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் பலநாட்களாக அவள் குடிலின் இருளுக்குள் பிறர்முகம் நோக்காதவளாக ஒடுங்கிக்கிடக்கிறாள் என்றே செய்திவந்துகொண்டிருந்தது. ஒருமுறைகூட அவன் அங்கே சென்று அவளை பார்க்கவில்லை. அவள்மேல் அவனுக்கு அச்சமே இருந்தது. அவள் முகம் நினைவிலிருந்தே அகன்று பிறிதொருமுகம் அங்கே பதிந்துவிட்டிருந்தது. அது எரிபுகுந்த மாயையின் முகம்.

செல்லச்செல்ல அவன் புரவியின் கால்கள் தள்ளாடின. அவனால் மேலும் செல்லமுடியவில்லை. புரவி நின்றுவிட்டது. அவன் அதை பலமுறை தட்டி ஆணையிட்டு முன்னால் செலுத்தினான். அது கனைத்துக்கொண்டும் இருமிக்கொண்டும் நடந்தது. திரௌபதியின் குடில்முன் ஏவல்பெண்டு நின்றிருந்தாள். அவனைக் கண்டதும் அருகே வந்து வணங்கினாள். “அரசியை பார்க்கவந்தேன்” என்று அவன் சொன்னான். அவள் “அரசி இங்கில்லை” என்றாள். அவன் திகைப்புகொள்ளவில்லை என்பது அவளை குழப்பியது. “அரசியை காலைமுதல் குடிலில் காணவில்லை. காலையுணவு கொண்டுவந்து வைத்தேன். அது அவ்வண்ணமே இருக்கிறது. அரசி எங்கே என்று உசாவினேன். காட்டுக்குள் சென்றுவிட்டதாக சொன்னார்கள். காட்டுக்குள் தேடிச்செல்லும் திறன் எனக்கு இல்லை. ஏவலர்களிடம் சொல்லி இளைய அரசர் சகதேவரிடம் செய்தியறிவித்தேன். அவ்வாறே விட்டுவிடும்படி அவர் ஆணையிட்டார். அரசியே திரும்பி வருவார் என்றார்” என்றாள்.

நகுலன் சிலகணங்கள் அவளை வெறித்தபடி எண்ணத்தில் மூழ்கி நின்றான். பின்னர் “நன்று” என்றபடி புரவியை திருப்பினான். காந்தாரி வருகையில் திரௌபதி காட்டிலிருப்பதும் நன்றே. ஒவ்வொன்றும் உகந்தவகையிலேயே நிகழ்கிறது. அவன் உள்ளம் எளிதாகிக்கொண்டே வந்தது. தன் முகத்தில் புன்னகை எழுந்திருப்பதைக் கண்டு அவன் வியந்தான். அத்தனை துயர்நிறைந்த சூழலிலும் சிறிய ஆறுதல்கள் இனிதாகவே இருக்கின்றன. எண்ணிய நிகழ்ந்தால் மானுடர் உலகம் தனக்கானது என்று எண்ணும் மாயைக்குள் சென்றுவிடுகிறார்கள். அல்லது துயர் கொண்டிருப்பவர்களின் இயல்பு போலும் இது. மிகச்சிறிய இன்பங்களைக்கூட அவர்கள் தவறவிடுவதில்லை. இருளில் ஒளிக்கென விழிகள் தேடிக்கொண்டே இருக்கின்றன.

 

நகுலன் காந்தாரியின் குடிலுக்குச் சென்றபோது சத்யசேனையும் சத்யவிரதையும் வெளியே நின்றிருந்தனர். அவன் அருகணைந்து “பேரரசி ஒருங்கியிருந்தால் அவர் அன்னையை காணச் செல்லலாம்… அன்னையின் உடல்நிலை நன்று அல்ல. அவர் தன்னினைவு இன்றி இருக்கிறார். இருப்பினும் பேரரசி அவரைப் பார்ப்பது நன்றுதான்” என்றான். சத்யசேனை “அக்கை கிளம்பிவிட்டார்… உங்களுக்காக காத்திருக்கிறார்” என்றாள். நகுலன் பெருமூச்சுவிட்டான்.

காந்தாரி வண்டியில் ஏறிக்கொள்ள அவளருகே சத்யசேனையும் சத்யவிரதையும் ஏறி அமர்ந்துகொண்டார்கள். நீண்டதொலைவு இல்லை என்றாலும் களைத்திருந்த காந்தாரியால் நடக்கமுடியாது என்று சத்யவிரதை சொன்னாள். வண்டியில் ஏறி அமர்வதற்குள் காந்தாரி பெருமூச்சுவிட்டாள். காலையொளி விரியத்தொடங்கியிருந்தது. முற்றத்தின் செம்மண் பரப்பு மிளிர்வுகொண்டது. மரக்கூட்டங்களுக்குள் ஒளி இறங்க இலைவடிவங்கள் துலங்கின. வண்டி மெல்ல முன்னால் செல்ல நகுலன் குதிரையில் உடன் சென்றான். அவன் உள்ளம் விந்தையான ஒரு தவிப்பை அடைந்தது. காந்தாரி கிளம்பும்வரை அவனிடம் ஒரு ஆறுதல்நிலை இருந்தது. ஆனால் அவள் வந்து வண்டியில் ஏறிக்கொண்டதும் அது அகன்றது. அவள் கிளம்பிச்செல்வதில் அரிதான ஒன்று இருந்தது. அத்தகைய ஒன்று வீணாக நிகழவிருக்காது. தெய்வங்கள் உச்சநிலைகளை விரும்புபவை. மானுடரை மோதவிட்டு கண்ணீரையும் குருதியையும் கண்டு மகிழ்பவை.

காந்தாரியின் தேர் குடில்முற்றங்கள் வழியாகச் சென்றது. அதன் ஓசைகேட்டு உள்ளிருந்து இளையஅரசியரும் இளவரசியரும் வந்து நோக்கினார்கள். காந்தாரி குந்தியின் குடில்முற்றத்தை அடைவதற்குள் நோக்குபவர்களின் உள்ளங்களில் எத்தனைபெரிய உணர்ச்சிநாடகங்கள் நடந்து முடிந்திருக்கும் என அவன் எண்ணிப் பார்த்தான். மானுடரும் உச்சங்களை விரும்புகிறார்கள். அவற்றை அவர்கள் வகைவகையாக நிகழ்த்திப்பார்க்கிறார்கள். அவற்றிலொன்றே உண்மையில் நிகழ்கிறது. நிகழ்ந்தவற்றை மீண்டும் பெருக்கிக்கொள்கிறார்கள். ஒரு நிகழ்வு நூறாகிறது, ஆயிரமாகிறது.

குந்தியின் குடில்முற்றத்தில் நின்றிருந்த மருத்துவப்பெண்டு வந்து வண்டியின் அருகே நின்று வணங்கினாள். சத்யவிரதை சத்யசேனை இருவரும் இறங்கி காந்தாரியை கைகொடுத்து இறக்கினர். சற்று தள்ளாடியபின் காந்தாரி வண்டியை பிடித்துக்கொண்டாள். ஒளியில் அவளுக்கு கண்கள் கூசுவது தெரிந்தது. அவள் கைகளை நெற்றிமேல் வைத்து முகத்தை சுருக்கிக்கொண்டாள். வானில் ஒளி எழவில்லை என்றாலும் அவளுடைய வெண்ணிறமுகம் சுடர்கொண்டிருப்பதாக நகுலனுக்குப் பட்டது. மருத்துவப்பெண்டு “வணங்குகிறேன், பேரரசி. யாதவ அரசி நோயுற்றிருக்கிறார். அவர்களுக்கு அகிபீனா அளிக்கப்பட்டுள்ளது. விழிக்காத துயிலில் பன்னிருநாழிகைகள் சென்றுள்ளன. அவர்களின் உள்ளம் நைந்திருக்கிறது. தன்மாய்ப்புநோக்கு கொண்டிருப்பதனால் விழிக்கச்செய்யவேண்டாம் என்பதே மருத்துவர்களின் கூற்றாக உள்ளது. அவர்களை இப்போது வெறுமனே நோக்கமட்டுமே இயலும்” என்றாள்.

“எங்கிருக்கிறார்?” என்று காந்தாரி கேட்டாள். “குடிலுக்குள் மஞ்சத்தில் படுத்திருக்கிறார்கள். தாங்கள் விழைந்தால் வெறுமனே உடலை மட்டும் நோக்கி மீளலாம்” என்றாள் மருத்துவப்பெண்டு. “செல்வோம்” என்றபடி காந்தாரி உள்ளே நுழைந்தாள். சத்யவிரதையும் சத்யசேனையும் உடன் சென்றனர். மருத்துவப்பெண்டு வெளியே நின்றுவிட்டாள். நகுலன் தயங்கி நிற்க சத்யவிரதை “நீயும் வரலாம், மைந்தா” என்றாள். நகுலன் உடன் உள்ளே சென்றான். குடிலுக்குள் இருட்டு நிறைந்திருந்தது. ஒரு சிறு நெய்விளக்கின் சுடர் திரிதாழ்ந்து எரிந்துகொண்டிருந்தது. குடில்மூலையில் இருந்த கலத்தில் கனல் சீறிக்கொண்டிருக்க எழுந்த மூலிகைப்புகை உள்ளே நிறைந்திருந்தது. தாழ்வான மூங்கில்படல் மஞ்சத்தில் குந்தி கிடந்தாள். சுருண்டு அதன் ஒரு ஓரத்தில் ஒடுங்கியிருந்தது அவள் உடல். நீலநரம்போடிய கைகள் மெலிந்து கொடிகள்போல மாறிவிட்டிருந்தன. கூந்தல் நன்றாக நரைத்து பெரும்பகுதி உதிர்ந்து விரிந்து முருக்குத்தடியானால தலையணையைச் சுற்றிச் சிதறியிருந்தது. வெண்ணிற உடல், வெண்ணிற ஆடை. ஒரு கொக்கிறகு விழுந்து கிடப்பதுபோலிருந்தாள்.

அவள் ஆழ்ந்து துயில்வதுபோல் மூச்சு உரக்க ஓடிக்கொண்டிருந்தாலும் வாய் எதையோ சொல்வதுபோல் அசைந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டே இருந்தன. அவ்வப்போது உடலில் ஒரு விதிர்ப்பு உருவாகியது. அது சிலதருணங்களில் மெல்லிய வலிப்பென ஆகி இடக்கையும் இடக்காலும் இழுத்துக்கொண்டன. காந்தாரி அவளருகே நின்று குனிந்து நோக்கினாள். சத்யவிரதை அருகே இருந்த மூங்கில் பீடத்தை இழுத்து அருகே போட்டாள். அவள் சத்யசேனையின் தோளைப்பற்றியபடி எடைமிக்க உடலைத் தாழ்த்தி அதன்மேல் அமர்ந்தாள். குந்தியின் கையை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டாள். அவளுடைய கைகளும் சிறியவைதான். ஆனால் குந்தியின் கை கருக்குழவியின் கைபோல் அவள் பிடிக்குள் இருந்தது.

அங்கே என்ன நிகழ்கிறது என்பதை நகுலனால் உணரமுடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. சொல்லின்றி உள்ளம் மட்டும் திகழமுடியும் என்பதை, உடலில் இருந்து எழுந்து அது வெளிசூழ்கை என நிலைகொள்ள முடியும் என்பதை அவன் உணர்ந்தான். செவிகளிலல்லாது ஓர் இசை ஒலிக்கக்கூடும். விழியறியாத ஒளி ஒன்று துலங்கக்கூடும். அவன் தன் உள்ளம் ஏன் நெகிழவில்லை என எண்ணிக்கொண்டான். அத்தருணம் விந்தையான அமைதியை கொண்டிருந்தது. அது உணர்வுகளால் ஆனதாக இருக்கவில்லை. சொற்களால் ஆனதாகவும் இருக்கவில்லை. அதில் எந்த அலையும் இல்லை. ஒரு படிகத்துளி போல் அசைவற்ற ஒளியாக இருந்தது. நீடுசெல்லும் காலம் கொண்டதாக, அழிவற்றதாக. அது அவன் முழு இருப்பையும் இனிமையாக ஆக்கியது. அந்த இனிமை என மட்டுமே அதை அவனால் உணரமுடிந்தது. அல்லது அவ்வாறு அவன் அதை மீட்டு எடுத்துக்கொண்டான். அது வேறொன்று. அப்போது அவன் எதையும் உணரவில்லை. அதை உணரத்தொடங்கியதுமே அதிலிருந்து மீண்டுவிட்டான்.

குந்தி விழிகளைத் திறந்து காந்தாரியை பார்த்தாள். அவள் விழிகள் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தன. அவள் விழிகளிலிருந்து நீர் பெருகி கன்னங்களில் வழிந்தது. விசும்பல்களோ விம்மல்களோ இல்லாத அழுகை. உருகிவழிவதுபோல. கரைந்துகொண்டே இருப்பதுபோல. காந்தாரி அவள் கைகளை மிகமென்மையாக பற்றிக்கொண்டிருந்தாள். அத்தனை மென்மையாக ஆண்களால் எதையேனும் பற்றமுடியுமா என நகுலன் எண்ணினான். குந்தியின் உடலில் ஒரு மெல்லிய உலுக்கல் நிகழ்ந்தது. பின்னர் மெல்ல அவள் முகத்தசைகள் தளர்ந்தன. இமைசரிந்து விழிகள் மூடின. ஆனால் முழுமையாக இமை விழிகளை மூடவில்லை. கீற்றுபோல் ஓர் இடைவெளி தெரிந்தது. வாய் திறந்தபோது ஒட்டியிருந்த உதடுகள் விரிசலிட்டன. சிறிய வெண்பற்கள் தெரிந்தன. அவள் மூச்சு சீரடைந்தது.

காந்தாரி எழுந்துகொள்ளும் பொருட்டு கைநீட்டினாள். சத்யவிரதை சத்யசேனை இருவரும் அவளைப் பற்றித்தூக்கினர். அவள் சத்யசேனையின் தோளில் கைவைத்தபடி மெல்ல மூச்செறிந்தாள். அவர்கள் மூவரும் வெளியே சென்றார்கள். அவள் திரும்பியபோது மெல்லிய விளக்கொளியில் நகுலன் அவள் முகத்தை நோக்கினான். அங்கே விழிநீர் தெரியவில்லை. விழிகள் நீர்மைகொண்டவைபோலத் தோன்றின, அது விளக்கொளியின் மினுப்பு என்றும் தோன்றியது. அவர்கள் வெளியே சென்றபின் அறை மெல்ல சுருங்கி மீண்டும் தன்னிலை கொள்வதுபோலத் தோன்றியது. நகுலன் குந்தியின் முகத்தை நோக்கினான். அவள் புன்னகைப்பதுபோலிருந்தது. அவன் அகம் திடுக்கிட்டது. கூர்ந்து நோக்கியபோதும் அவ்வாறே தெரிந்தது. முகத்தசைகள் நெகிழ்ந்திருந்தமையாலும் உதடுகள் விரிந்து பற்கள் தெரிந்தமையாலும் எழுந்த தோற்றம் அது என அவனுக்குத் தெரிந்தது. ஆயினும் அது புன்னகை என்று எண்ணவே அவன் விழைந்தான்.

 

நகுலன் வெளியே வந்தபோது காந்தாரியும் சத்யசேனையும் வண்டியில் ஏறிவிட்டிருந்தனர். சத்யசேனை கீழே நின்றிருந்தாள். அவன் அவளை அணுகி “பாஞ்சாலத்து அரசியிடம் செல்வதென்று பேரரசி கூறுகிறாரா?” என்றான். “அவர் மற்றொன்று சொல்லவில்லை. எனில் அவர் அங்கே செல்ல விழைகிறார்கள் என்றே அதற்குப்பொருள்” என்று அவள் சொன்னாள். “நன்று” என்று அவன் தன் புரவியை அணுகினான். சத்யசேனை “பேரரசியின் உள்ளம் எனக்கும் புரியாததாகவே உள்ளது” என்றாள். அவன் விழிசுருக்கி நோக்கி நின்றான். அவள் சொல்லவருவதென்ன என்று புரியவில்லை. “பேரரசி இதுவரை உளமுடைந்து அழவில்லை… அவர் அத்தனை தன்னுறுதி கொண்டவர் அல்ல. மெய்யாகவே அவர் இப்படி இருப்பது எனக்கு திகைப்பாக உள்ளது” என்றாள். நகுலனின் அகம் நடுக்கம் கொண்டது. ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மிகத்தாழ்ந்த குரலில் விசையுடன் தெறித்த சொற்களால் சத்யசேனை சொன்னாள். “எனக்கு அச்சமாகவே உள்ளது. என்ன நிகழுமென்று சொல்லக்கூடவில்லை.பேரரசி பாஞ்சாலத்து அரசியை சந்திப்பது நன்று என்று எனக்குப் படவில்லை. எவ்வண்ணமேனும் அதை தவிர்ப்பது நன்று” என்றாள். “நான் அஞ்சிக்கொண்டேதான் இருக்கிறேன், மைந்தா. அவர் இளைய யாதவரைக் கண்டதும் கொந்தளிப்பார் என கருதினேன். பின்னர் அந்த நிலையழிவை புரிந்துகொண்டேன். குந்திதேவியிடம் அவர் அனல்கொண்டெழுவார் என்று ஐயமிருந்தது. ஆனால் குந்திதேவி நினைவிலாது கிடக்கிறார் என்பது ஆறுதலளித்தது. இப்போது நிகழ்ந்ததைப் பார்க்கையில் இதுவே அக்கையின் இயல்பு என்று தோன்றுகிறது. ஆயினும் அச்சம் நீங்கவில்லை. ஒருவேளை இவையனைத்தும் அங்கே அக்கை பெருகியெழும்பொருட்டே என்று இருக்கக்கூடும்…” நகுலன் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “சென்று அவள் அங்கில்லாதபடி ஏதேனும் செய்” என்றாள் சத்யசேனை. “அவள் அங்கில்லை” என்று நகுலன் சொன்னான். “அவள் காட்டுக்குள் சென்றிருக்கிறாள் என்று காலையில் செய்திவந்தது. பேரரசி அவளை சந்திக்க வாய்ப்பில்லை.”

சத்யசேனை பெருமூச்சுவிட்டு “எனில் நன்று… தெய்வங்கள் துணையிருக்கட்டும்” என்றாள். அவள் முகத்தில் கலக்கம் அகலவில்லை. “அக்கையின் உள்ளத்தை நான் நன்கறிவேன் என்பார்கள். அவ்வண்ணம் நானும் நம்பியிருந்தேன். உண்மையில் மானுட உள்ளத்தை இன்னொருவர் அறியவே முடியாதென்பது இத்தகைய தருணங்களில்தான் தெரியவருகிறது. அக்கை இத்துயரைக் கடந்தவர் அல்ல. அவர் இங்கே உளம்பரப்பி வாழ்பவர். பெருமரங்களைப்போல கிளையையும் தடியையும்விட பெரிய வேர்கள் கொண்டவர். அரசி அல்ல, அன்னை. மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் மறைந்ததை அவரால் தாள முடியாது. ஆகவே இந்த நிறைநிலை என்னை அச்சுறுத்துகிறது. ஏதோ ஒரு கணத்தில் அவர் வெடித்து எரிந்து அழிந்துவிடுவார் என்று தோன்றுகிறது…” அவள் மூச்சை இழுத்தபோது கழுத்துக்குழிகள் ஆழ்ந்திறங்கின, “அல்லது எவர்மீதேனும் கொடும் தீச்சொல்லை உமிழக்கூடும்… என்ன இருந்தாலும் நீங்கள் என் மைந்தர்.”

“அக்கையே” என்று சத்யவிரதை உள்ளிருந்து அழைத்தாள். சத்யசேனை “வந்துவிட்டேன்” என்று வண்டியில் ஏறிக்கொண்டாள். நகுலன் அவளை சிலகணங்கள் நோக்கிநின்றான். மீண்டும் அந்தப் பதற்றத்தை அடைந்தான். திரௌபதி தன் குடிலில் இருக்கமாட்டாள் என்று நம்புவது என் விழைவுக்கற்பனையாக இருக்கலாம். அவள் அங்கே மீண்டு வந்திருக்கலாம். இத்தருணத்தை தெய்வங்கள் அமைத்திருக்கின்றன எனில் இதற்கு இலக்கையும் அவை உருவாக்கியிருக்கும். ஒவ்வொன்றாகக் கடந்துசென்று காந்தாரி சென்று நிற்கப்போவது திரௌபதியின் முன்னால் என தெய்வங்கள் வகுத்திருக்கலாம். ஆனால் அம்முறை மெல்லிய ஆர்வம் ஒன்று எழுவதை உணர்ந்தான். என்ன நிகழும்? விந்தையான, அச்சமூட்டுவதாகிய, எண்ணி எண்ணி உளமழியக்கூடிய ஒன்று. சொல்லிச்சொல்லிப் பெருக்கவேண்டிய ஒரு தருணம். அதில் உடனிருக்கவேண்டும் என்ற முதிராவிழைவு. இச்சலிப்பூட்டும் நாட்களில் ஓர் உச்சம். அவ்வாறு ஒன்று நிகழ்ந்தால் இச்சிறு துயரங்களெல்லாம் மறைந்துவிடும். தெய்வங்கள் வாய்ப்பளித்தால் என் சிறு அல்லல்களை எல்லாம் திரட்டி ஒரு பெருந்துயராக மாற்றிக்கொள்ளலாமா என்றே கேட்பேன்.

அல்லது அவள் மேல் கொண்ட வஞ்சமா இது? அவளை காந்தாரி தீச்சொல்லிடவேண்டுமென விழைகிறேனா? உடனே உள்ளம் அதை மறுத்தாலும்கூட அது அத்தனை எளிதாக கடந்துவிடக்கூடியது அல்ல என்றும் தோன்றியது. இந்தக் குடில்களில் திரௌபதிமேல் வஞ்சமில்லாத எவரேனும் இன்று இருக்கக்கூடுமா? அவளே இவ்வழிவனைத்திற்கும் முதன்மையாக வழிவகுத்தவள் என்று அனைவரும் நம்புகிறார்கள். அவளை பழிக்கிறார்கள். அவள் தன் மைந்தரை இழந்து கொடுந்துயரில் உழல்வதைக் கண்டு உள்ளூர நிறைவு கொள்கிறார்கள். மேலும் ஒன்று அவளுக்கு நிகழவேண்டும் என விழைகிறார்கள்.

நானும் அவ்வண்ணம்தான் எண்ணுகிறேன். எனக்குத்தெரியும் என் விழைவின் விசை என்ன என்று. என் ஆணவம் எவ்வண்ணம் புளித்து நஞ்சாகியதென்று. எனினும் நான் அவளை பழித்தேன். அதனூடாக என்னை அழுத்தும் துயரிலிருந்து விடுபட்டேன். ஒவ்வொருவருக்கும் பழிசுமக்க இன்னொரு மானுடர் தேவைப்படுகிறார். அனைத்துக்கும் முழுப்பொறுப்பேற்க எவராலும் இயல்வதில்லை. யுதிஷ்டிரனேகூட “எங்கே இவை தொடங்கின, இளையோனே? நாம் பிறக்கும் முன்னரே இவை தொடங்கிவிட்டன என்கிறார்கள். சத்யவதியின் பெருவிழைவே குருக்ஷேத்ரமென விளைந்தது என்கிறார்கள். அவள் நமக்கு கருவிலேயே அளித்துவிட்டுச் சென்ற துயரா இது?” என்று ஒருமுறை சொன்னார். “ஒன்றிலிருந்து ஒன்றென துயரும் வஞ்சமும் தீயும் பற்றிக்கொள்கின்றன என்கின்றது நெறிநூல்” என்று சொல்லி நீள்மூச்செறிந்தார்.

இன்னமும் பாண்டவ அரசியர் வந்துசேரவில்லை. அவர்கள் பாஞ்சாலத்து அரசியை வசைகூறிப் பழித்து கதறியழுததாக ஒற்றர்கள் கூறினார்கள். தேவிகை தலையிலறைந்து கதறியபடி மயங்கி விழுகையில் “அக்குடிகேடியால் அழிந்தது என் குலம். அவள் ஆணவத்தால் அழிந்தது அஸ்தினபுரியின் குடி!” என்று கூவினாள். விஜயை நெஞ்சிலறைந்து அழுதபடி வெளியே ஓடிவந்து முற்றத்திலிருந்து கைப்பிடி மண் எடுத்து பாஞ்சாலம் அமைந்த வடமேற்கு நோக்கி வீசி “உன் குருதி ஒருதுளியும் இப்புவியிலெஞ்சாது ஒழிக! நீ கொண்ட அனைத்தும் உன் கண்முன் அழிந்து மறைக! ஓயாத்துயரில் ஒரு நாளும் நீ துயிலமுடியாதாகுக!” என்று தீச்சொல்லிட்டாள். பாண்டவ அரசியர் இங்கே வந்து திரௌபதியை சந்திக்கையில் என்ன நிகழும்? அதற்குமுன் இதோ காந்தாரி அவளை சந்திக்கவிருக்கிறாள்.

காந்தாரி வசையுரைக்கலாம். தீச்சொல்லிடலாம்.  என்ன செய்வாள்? திரௌபதி முன்பென்றால் வேங்கைபோல் வெறிக்கும் விழிகளுடன் நோக்கி நின்றிருப்பாள். ஒரு சொல் உரைக்கமாட்டாள். எவருடைய சினமும் பழியுரையும் அவளை சென்றடையாது. மானுடரின் வாழ்த்துக்கூச்சல்களுக்கும் கண்ணீருக்கும் அப்பால் நின்றிருக்கும் கருவறைத்தெய்வம் போலிருப்பாள். ஆனால் இன்று எந்நிலையில் இருக்கிறாள்? அவள் உருமாறிவிட்டிருப்பதை இருமுறை தொலைவிலிருந்து பார்த்தான். உடல் மெலிந்தமையால் மேலும் உயரமாகி சற்றே கூன்கொண்டவள்போல் தோன்றினாள். கன்ன எலும்புகள் மேடாகி எழ, முகவாய் உந்தி பற்கள் சற்றே முன்னெழ, கண்கள் குழிக்குள் பதிந்துகொள்ள அவள் அவன் அறிந்தவளே அல்ல என்று தோன்றினாள். நாட்கணக்காக துயில்நீப்பு. இருளில் முடங்கிய தனிமை. அவள் விழிகளில் என்றுமிருக்கும் நேர்நோக்கின் ஒளி மறைந்து தீராநோயாளிகளுக்குரிய பொருளில்லா வெறிப்பு வந்துவிட்டிருந்தது.

அவன் அவளை எண்ணி அப்போது துயர்கொண்டான். அவள் ஒரு கொடியடையாளம் மட்டுமே. நாவாயை கொடி இட்டுச்செல்வதுபோலத் தோன்றுவது ஒரு விழிமயக்கு. நாவாய் கொடியை கொண்டுசெலுத்துகிறது. அதன் கூம்புவடிவும், பாய்களும், துடுப்பும், சுக்கானும். அதை அறியாத எவரேனும் உண்டா? ஆயினும் அவளை அனைத்துக்கும் முதன்மை என்று கொள்வதில் எவருக்கும் தயக்கமில்லை. உண்மையில் அவளை அனைவரும் முன்னிறுத்தியதே அதற்காகத்தான். மாமானுடர் திரளுக்கு கேடயங்கள்போல. முதற்களப்பலிகள் அவர்களே. அவர்களை அதன் பொருட்டே தலைமையில் நிறுத்தி வாழ்த்துகிறார்கள். அவர்கள் பலியானபின் தெய்வமாக்குகிறார்கள். அவளிடம் இச்சூழலே கேட்டுக்கொண்டிருக்கிறது, அவள் இவையனைத்துக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு தன்னை பலியிடவேண்டும் என்று. அதன்பொருட்டு காத்திருக்கிறது, அதற்காக அவளை அழுத்துகிறது.

அவள் அதை செய்யக்கூடியவள்தான். ஏனென்றால் அவ்வாறு எழுந்து முன்செல்கையில், எரிந்தழிகையில்தான் அவர்களின் ஆணவம் நிறைவடைகிறது. மாமானுடர் என்பவர் ஆணவத்தாலானவர்கள். ஆணவமே அவர்களை பேருருக்கொள்ளச் செய்கிறது. ஆற்றல்கொள்ளச் செய்கிறது. தலைமைகொள்ள வைக்கிறது. வெல்லவும் தருக்கவும் செய்கிறது. பொறுப்பேற்று பலியாவதென்பது தன்னை அளித்து இறுதிவெற்றியை ஈட்டுவது. தெய்வமாவது. தெய்வமாவதே மானுட ஆணவம் கொள்ளும் அறுதிவிழைவு. அதற்குக் குறைவாக எதனாலும் அது நிறைவுறாது. கொள்க என்னை என காலத்தின் முன் தலைகாட்டி நின்றிருக்கிறார்கள். எரிந்தழிய ஒரு முற்றம்தேடி அலைகிறார்கள். அவள் காத்திருக்கிறாள், இங்கு எதையோ அவள் முடிக்கவேண்டியிருக்கிறது.

அவன் தொலைவிலேயே திரௌபதியின் குடிலைப் பார்த்து அவள் உள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டான். வாயிலில் நின்றிருந்த ஏவல்பெண்டு அவனைப் பார்த்துவிட்டு ஓர் அடியெடுத்துவைத்து பின் திகைத்து நின்றாள். அவன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். தான் எதுவும் செய்யவேண்டியதில்லை என்று தோன்றியது. நிகழ்வது நிகழட்டும். பேரரசியே சென்று திரௌபதியை சந்திக்கட்டும். அவன் நெஞ்சு படபடத்தது. குடிலை நோக்கியபடி அசையாமல் புரவிமேல் அமர்ந்திருந்தான். அக்குடிலைப் பார்க்கையிலேயே அவள் உள்ளே இருப்பது எப்படி தெரிகிறது? அந்தக் காட்சியை உள்ளம் பலமுறை நடித்துவிட்டிருந்தது. அது நுண்ணுணர்வை கூர்தீட்டியிருந்தது.

வண்டி சகடங்கள் உரசும் ஒலியுடன் நின்றது. உள்ளிருந்து சத்யவிரதை எட்டிப்பார்த்து “பேரரசி திரும்பிச்செல்ல ஆணையிடுகிறார்” என்றான். நகுலன் திகைப்புடன் “என்ன?” என்றான். “பேரரசி இப்போது பாஞ்சாலத்து அரசியை சந்திக்க விழையவில்லை. திரும்பிச்செல்ல ஆணையிடுகிறார்.” நகுலன் பெருமூச்சுவிட்டான். “ஆம், அதுவும் நன்றே” என்றான். அவன் கைகாட்ட வண்டி திரும்பியது. சத்யசேனையின் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. சத்யசேனை புன்னகைசெய்தாள். வண்டி செல்லத்தொடங்கியதும் அவன் புரவியில் அமர்ந்தபடியே திரும்பி திரௌபதியின் குடிலை நோக்கினான். காந்தாரி ஏன் திரௌபதியை சந்திக்கத் தயங்கினாள் என்னும் வினா எழுந்தது. அதை அப்படியே தவிர்த்துவிட்டு புரவியைச் சுண்டி வண்டியைத் தொடர்ந்து சென்றான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 22

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 3

நகுலன் சிறுபொழுது துயிலலாம் என்றுதான் குடிலுக்குச் சென்றான். பச்சை ஓலைகளை வெட்டி முடைந்து கட்டப்பட்ட தாழ்வான குடிலுக்குள் அவன் நுழைந்தபோது உள்ளே ஒருவன் நிற்பது தெரிந்தது. “யார்?” என்று திடுக்கிட்டதுமே அவனுக்கு அது நிழல் எனத் தெரிந்துவிட்டது. ஆனால் அந்த முந்தைய கணத்தில் அங்கே நின்றவன் சதானீகன். அவன் நடுங்கியபடி குடில்படலைப்பிடித்தபடி நின்றான். சகதேவன் கமுகுப்பாளை வேய்ந்த மூங்கில் மஞ்சத்தில் படுத்திருந்தான். அவன் “இளையோனே” என அழைத்ததுமே சகதேவன் கண்களை திறந்தான். “வந்துவிட்டாயா?” என்றான். “நான் சற்றுமுன் அவனை பார்த்தேன்.”

“நானும் பார்த்தேன்” என்றான் நகுலன். “நான் சதானீகனை…” என்று சகதேவன் சொல்லத்தொடங்க “ஆம்” என்றான் நகுலன். “அது கனவா? கனவெனில்…” என்றான் சகதேவன். “கனவல்ல…” என்று நகுலன் சொன்னான். “அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள். நம்முடன்”. சகதேவன் “ஏன் இருக்கவேண்டும்? இந்தத் துயரை அவர்களின் இருப்பால் பெருக்குகிறார்கள்… அவர்கள் சென்று மறையட்டும்” என்றான். “நாம் அவர்களுக்கு செய்யவேண்டியவற்றை செய்யவில்லை” என்றான் நகுலன். “மூத்தவரே, மெய்யாகவே உங்களுக்கு இவற்றில் நம்பிக்கை உள்ளதா? நாம் கொடுக்கும் அன்னமும் நீரும் அங்கு சென்று சேர்கின்றனவா?” என்றான் சகதேவன். நகுலன் “நாம் செய்யக்கூடுவது இது ஒன்றே” என்றான்.

அதன்பின் அவனுக்கு துயில் வரவில்லை. மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். கண்களுக்குள் காட்சிகள் அலையடித்தன. சகதேவன் “பேரரசி வந்தார்களா?” என்றான். “ஆம்” என்றான் நகுலன். “இளைய யாதவர் வந்து அவர்களை எதிரேற்றார்.” சகதேவன் “அவருக்கும் அது தேவைப்படுகிறது” என்றான். “எது?” என்றான் நகுலன். “ஆறுதல்… பேரரசி வாழ்த்துச்சொல் மட்டுமே சொல்வார்கள். அதை செவிகளால் கேட்டால் அவர் தன்னை ஆற்றிக்கொள்ள முடியும்.” சிலகணங்களுக்குப்பின் நகுலன் “எனில் எவர் கடுமொழி உரைக்கக்கூடும்? எவர் தீச்சொல்லிடக்கூடும்?” என்றான். “நம் அன்னை” என்றான் சகதேவன். நகுலன் ஒரு சிறு திடுக்குறலை உணர்ந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.

நகுலன் சிலகணங்களுக்குப்பின் “நாம் பேரரசரைக் கண்டு நீர்க்கொடைக்கு அவரை அழைக்கவேண்டும். அப்படி ஒரு முறைமை எஞ்சியிருக்கிறது” என்றான். சகதேவன் “ஆம், அதைத்தான் இங்கே அவையில் பேசிக்கொண்டிருந்தார்கள்” என்றான். நகுலன் “மூத்தவர் அஞ்சுகிறார்” என்றான். சகதேவன் “தீமையை அஞ்சிவாழ்ந்தவர் இன்று அறத்தை அஞ்சுமிடத்திற்கு வந்துவிட்டார்” என்றான். நகுலன் அவன் ஏதேனும் சொல்வான் என எதிர்பார்த்தான். “நாம் செய்யக்கூடுவது என்ன?” என்று இறுதியில் அவனே கேட்டான். “செய்யக்கூடுவது ஒன்றே. சென்று தலைவைப்பது. பெருமதக்களிற்றின் கால் எளிய உயிர்களை அறிவது என்று சொல் உண்டு. அது நிகழட்டும்.” நகுலன் “சொல்வது எளிது, அதை இயற்றுதல் அவ்வாறல்ல. பேரரசர் பித்துநிலையில் இருக்கிறார். அவரிடம் மானுடர்க்குரிய எதையும் நாம் எதிர்பார்க்கவியலாது” என்றான்.

சகதேவன் “எனில் ஒன்று செய்க, பேரரசி காந்தாரி பேரரசரை முதலில் சந்திக்கட்டும்” என்றான். நகுலன் எழுந்தமர்ந்தான். “ஆம், அது ஒரு நல்லவழி” என்றான். “பேரரசியை சந்திக்கும் கணம் முதியவர் உளமுடைந்து கதறுவார். கொந்தளித்து கொதித்து மெல்ல ஆறி நிலைகொள்வார். அதன்பின் நாம் செல்வோம்” என்றான் சகதேவன். “அத்துடன் பேரரசியும் அரசரைக் கண்டு விழிநீர் உகுத்தபின் நிலைமீள்வார்.” நகுலன் “பேரரசி நிறைநிலையில்தான் இருக்கிறார்” என்றான். “இல்லை, அவ்வாறு இருக்கவியலாது. எந்த அன்னையாலும் அவ்வண்ணம் இருக்கவியலாது. அவர் பேரன்னை” என்றான் சகதேவன். “இளையோனே, இன்றுகாலை சற்றுமுன் அவர் இளைய யாதவரை அருகே கண்டார். நிறைகுடம் என்றே தெரிந்தார். வாழ்த்துச்சொல் மட்டுமே அவர் நாவில் எழுந்தது” என்றான். “ஆம், அது அவர் நிறைநிலை. பேரரசியென அவர் முழுமைகொண்டவர். அன்னை அகத்தே கொதித்துக்கொண்டிருக்கிறார். எவர்மேல் எக்கணம் அந்த அனல் பெருகிப்பொழியும் என நம்மால் சொல்லிவிடமுடியாது” என்றான் சகதேவன்.

நகுலன் “அன்னை முகத்தை பலமுறை அருகெனக் கண்டேன். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை” என்றான். “அவர் அழுதாரா?” என்றான் சகதேவன். “இல்லை” என்றான் நகுலன். “நீயும் நானும் கதறிக்கொண்டிருக்கிறோமே” என்றான் சகதேவன். “நாம் எளியோர்” என்று நகுலன் சொன்னான். “அவர்கள் பேரன்னை , ஆனாலும் உள்ளே ஓர் எளிய அன்னை உறைந்தாகவேண்டும். நெஞ்சிலறைந்து கதறுபவள். நிலையழிந்து விழுபவள். உலகையே பொசுக்கும் சினம் எழுபவள். மூன்றுமுழுமுதல் தெய்வங்களுக்கும் தீச்சொல்லிடுபவள்…” என்று சகதேவன் சொன்னான். “அச்சினப்பெருந்தெய்வம் எழுவதை நாம் காண்போம். ஐயமே இல்லை…” நகுலன் பெருமூச்சுவிட்டான்.

சகதேவன் “அன்னை தன் அரசரை சந்திக்கையில் அது வெளிப்பட்டால் பிழையில்லை. அவருடைய கொந்தளிப்பை தாங்கும் மலையென அவர் நின்றிருப்பார். அவர்கள் ஒருவரை ஒருவர் ஆற்றிக்கொள்வார்கள். அவர்களின் துயர் இன்னமும் வெளிப்பாடு கொள்ளாதது. துயர் வெளிப்பாடு கொள்கையில் குறைவது, இன்பம் வெளிப்பாட்டில் பெருகுவது. அத்தருணத்தை ஒருக்குவோம். அதன்பின்னர் அவர்களை நாம் சென்று சந்திப்போம். நாம் செய்வதற்கு உகந்தது இது ஒன்றே” என்றான். நகுலன் பெருமூச்சுவிட்டான். சகதேவன் கசப்பான சிரிப்புடன் “மைந்தரை இழக்கையில் பெண்கள் கணவர்கள்மேல் கடுஞ்சினம் கொள்கிறார்கள். வாழ்நாள் முழுக்க அவ்வெறுப்பை அவர்கள் பேணவும் செய்கிறார்கள்” என்றான்.

“ஏன்?” என்று நகுலன் திகைப்புடன் கேட்டான். “அறியேன். ஆனால் இதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்” என்றான் சகதேவன். “எனில்…” என்றான் நகுலன். ஒன்றும் சொல்லாமல் சகதேவன் பேசாமல் அமர்ந்திருந்தான். “ஆம்” என்றான் நகுலன். “நாம் இன்னமும் அவர்களை சந்திக்கவில்லை”. சகதேவன் “அவர்கள் இன்றுமாலை இங்கே வருகிறார்கள்” என்றான். “அவர்கள் வரவேண்டியதில்லை அல்லவா?” என்றான் நகுலன். “ஆனால் வரவிழைவதாக சொன்னார்கள்” என்று சகதேவன் சொன்னான். “அவர்களை எண்ணிப்பார்க்கவே இல்லை” என்றான் நகுலன். சகதேவன் கண்களை மூடிக்கொண்டான். நகுலன் கூரைச்சரிவை பார்த்தபடி சொல்லில்லா உள்ளத்துடன் படுத்திருந்தான்.

சகதேவன் பெருமூச்சுடன் எழுந்து சென்றான். நகுலன் துயில்வரக்கூடும் என எண்ணிக்கொண்டே படுத்திருந்தான். ஆனால் உள்ளம் விழிப்புகொண்டுவிட்டது. சென்ற பலநாட்களாக துயில் என அவன் உணர்ந்தது எல்லாம் எதிர்பாராதபோது அலையென வந்து அறைந்து சுழித்துக்கொண்டு சென்று எங்கெங்கோ ஆழ்த்தி மீளக்கொண்டுவீசும் ஒரு நிலைமறப்பை மட்டும்தான். புரவியூர்கையிலேயே துயில்கொண்டான். ஆனால் எண்ணிப்படுத்தால் துயில் மறைந்துவிடும். அவன் தன் அகத்தையே நோக்கிக்கொண்டு படுத்திருந்தான். அது எப்போது தன் மூடுதிரைகளை களையும்? எப்போது அந்த ஆழத்து நஞ்சை வெளியே எடுக்கும்? கூரியமுனையை தேடித்தேடிச் செல்லும் குழவியின் கை என அதை மட்டுமே அகம் நாடியது.

அத்தனை சொற்களும், நினைவுகளும் வெறும் நடிப்புகள் மட்டுமே. அத்தனை குவியல்களுக்கும் அடியில் அதுவே உயிருடன் இருக்கிறது. இரும்பாலும் கல்லாலும் மூடப்பட முடியாத ஒரு நோக்கு போல. அதை நோக்குவதொன்றே அதை ஒத்திப்போடுவதற்கான வழி. அதை நோக்கும்போது அது சுருங்கி மறைந்துவிடுகிறது. அப்படியே விட்டுவிட்டால் ஏதோ ஒரு கணத்தில் அது சுருளவிழ்ந்து எழுந்து சீறிக்கொத்துகிறது. இதோ அதை நோக்கிக்கொண்டிருக்கிறேன். அதற்காக காத்திருக்கிறேன். எக்கணம் என் நோக்கு திசைமாறும்? எப்படி நான் அதற்கான விரிசலை வழங்குவேன்?

இதை நான் ஏன் செய்கிறேன்? அத்துயரை ஒத்திப்போடுகிறேன். இல்லை. அது மட்டும் அல்ல. அத்துயருடன் விளையாடுகிறேன். உயிர்ப்புண்ணைக்கூட தொட்டுத்தொட்டு விளையாடும் மானுடக்கை. விளையாடுவது மேலும் பெரிய ஒன்றை அகற்றுகிறது. இந்த வலியைவிட இத்துயரைவிடக் கொடியது அது. காலமெனும் பெருந்துயர். இருத்தல் என்னும் மாபெரும்துயர். காலத்தை எதுவும் நிறுத்தமுடியாது, மூன்று முதற்தெய்வங்களுக்கும் அப்பாற்பட்டது அது. காலத்தை மூவரும் மூவகையில் வென்றனர். ஒருவன் கிடந்து துயின்றான். இன்னொருவன் படைப்பில் அதை கடந்தான். பிறிதொருவன் ஆடலில் அதை சுழற்றிக்கலைத்தான். இங்கே நிறைந்திருப்பவை அவை மூன்றும். உயிர்கள் துயில்கின்றன. படைக்கின்றன. முடிவிலாது ஆடுகின்றன. துயரை வைத்து ஆடுகின்றன. சாவை வைத்து ஆடுகின்றன.

கட்டவிழ்ந்து சூழ்ந்துகொண்டது துயர். அக்கணம் ஒரு மதகுவாயிலெனத் திறந்து அதை பெருக்கெடுக்கச் செய்தது. “மைந்தா… என் மைந்தா!” என்று விம்மியபடி அவன் அழுதான். நெஞ்சத்தசையை கையால் பற்றிக் கசக்கியபடி தொண்டை இறுகி மூச்சு தெறிக்க விம்மலும் விசும்பலும் கேவல்களுமாக அழுதுகொண்டிருந்தான். சூழ்ந்திருந்த இருளில் அவன் அழுகை பரவி அதை ஈரமும் எடையும் கொண்டதாக ஆக்கியது. அது அவன் மேல் அழுந்தி படுக்கைமேல் இறுக்கியது. உடல் பெரும்பாறையொன்றால் மண்ணுள் செலுத்தப்பட்டதுபோல் அசைவிழந்தது. அவன் மெல்ல ஓய்ந்தான். மைந்தன் மைந்தன் மைந்தன் என்னும் சொல்லாக அவன் அகம் ஓடிக்கொண்டிருந்தது.

பின்னர் அவன் தன்னை உணர்ந்தபோது தனிமைதான் பெருகிவிட்டிருந்தது. ஆழ்ந்த அழுகைக்குப்பின் உணரும் விடுதலை அல்ல. மேலும் எடைகொண்டுவிட்டிருந்தான். இதை நான் கடக்கவே போவதில்லை. இது உயிர்கொல்லும் பிளவை. எனக்கு மட்டும் அல்ல இது. இங்கே அனைவருக்கும்தான். இத்தனைநேரம் அவனும் அழுதுகொண்டிருந்தான்போலும். ஆகவேதான் கிளம்பிச்சென்றான். நீயும் அழுக என விட்டுவிட்டுச் சென்றான். அவன் சகதேவனை நினைத்துக்கொண்டான். அந்தக் குடிலில் அதேபோல அவன் அழுதுகொண்டிருப்பதை.

 

விடிவதற்கு முன்னரே அவன் எழுந்துகொண்டான். துயிலவில்லை, ஆனால் அரைநாழிகை அவன் சித்தம் இல்லாமலாகி மீண்டது. அது துயிலுக்கிணையான ஓய்வை அளித்துவிட்டிருந்தது. அவன் வெளியே சென்றபோது விடியலின் ஓசைகள் காட்டிலிருந்து எழுந்தன. அப்பால் வேள்விச்சாலையிலிருந்து வேதச்சொல் ஒலித்தது. அவிப்புகையை முகரமுடிந்தது. அரசர் வேள்விக்குச் சென்றிருப்பார் என எண்ணிக்கொண்டான். தௌம்யர் கூறும் எல்லா சடங்குகளையும் முறைப்படி செய்பவர் அவர்தான். பீமனும் அர்ஜுனனும் அங்கே இருப்பதாக நம்பிக்கை, அவர்கள் அவ்வப்போது காட்டிலிருந்து வந்துசென்றார்கள்.

நகுலன் புரவியை நோக்கி சென்றான். அது முதிய பெண்புரவி. அவன் அணுகுவதை உணர்ந்ததும் அது நீள்மூச்செறிந்து செவிகளை முன்கோட்டியது. அதன் முன்னங்கால் முறிந்துவிட்டிருந்தது. அதற்கு கட்டுபோட்டிருந்தனர். மூங்கில் வைத்துக் கட்டி தேன்மெழுகும் அரக்கும் களிமண்ணும் குழைத்து பற்று போட்டு இறுக்கியிருந்தனர். முன்னங்காலில் எடை செலுத்தாமல் அது நடந்தது. அவன் அதன் முன்னங்கால்மேல் உடல் அமையாதபடி அமர்ந்திருக்க பயின்றிருந்தான். போருக்குப்பின் காட்டில் விடப்பட்ட புரவிகளில் ஒன்று அது. புரவிகள் அனைத்தும் கொன்று உண்ணப்பட்டன, பெண்புரவிகளைத் தவிர.

போருக்குப்பின் அவனை எந்தப்புரவியும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் அருகணையும்போதெல்லாம் அவை அச்சத்துடன் விழிசுழற்றி வாய்திறந்து நாக்கு வளைய பின்னடி எடுத்துவைத்து மெய்ப்புகொண்டன. மூச்சு சீற மெல்ல உறுமின. அவன் மென்சொல் உரைத்தும் கையசைவுகளால் அணுக்கமுத்திரை காட்டியும் அணுகும்போது மேலும் அஞ்சின. அவற்றின் அச்சம் என்ன என்று அவன் முதல் நாளுக்குப்பின்னரே உணர்ந்தான். அவ்வறிதல் அவனை சாவுக்குநிகரான சோர்வை நோக்கி கொண்டுசென்றது. மைந்தர்துயர் இல்லையேல் அச்சோர்விலேயே உயிரை போக்கிக்கொண்டிருப்போம் என்று தோன்றியது. ஒரு துயரை இன்னொரு துயரே ஈடுசெய்ய முடியும். வெப்பம் வெப்பத்தால் ஈடுசெய்யப்படுகிறது என்கிறது மருத்துவநூல்.

அவன் அதுவரை ஊர்ந்து வந்த முதிய கடுவன்புரவி அன்றுகாலைதான் உயிர்விட்டது. அது நோயுற்றிருந்தது. அதன் வாயிலிருந்து கெடுமணம் எழுந்தது. அதன் வெளிப்போக்கு அழுகிய சடலம்போல் நாறியது. போரில் மானுடக்குருதியை உண்டுவந்தது அது. அதனால் காட்டுப்புல்லை அதன்பின் விரும்பி உண்ண முடியவில்லை. நத்தைகளையும் தவளைகளையும் பிடித்துத் தின்றது. சிதல்புற்றுக்களையும் புழு அடுக்குக்ளையும் தேடி நா துழாவியது. நீளுடல் கொண்ட ஒரு சாரைப்பாம்பை அது கவ்வி வாய்க்குள் இழுத்து மென்று உண்பதை அவன் கண்டான்.

அதை அணுக வீரர்கள் அஞ்சினர். அது மானுடரை கடித்துக்குதறி குருதி உண்டது. அது குதிரையல்ல, வேங்கை என்றனர் வீரர். அவன் அதை காட்டுக்குள் கண்டான். அவனை தாக்கவந்த குதிரை நின்று செவிகூர்ந்து பின் உறுமியபடி விலகி ஓடியது. அவன் அதை துரத்திச் சென்று பிடித்தான். காட்டுக்கொடிகளால் அதை கடிவாளமிட்டு கொண்டுவந்தான். அச்சுறுத்தி அடக்கி அதை ஊர்தியாக்கினான். அவன் சொல்லும் சொற்கள் எதையும் அது செவிகொள்ளவில்லை. ஆனால் அதன் பழகிய உடல் ஆணைகள் தொடுகைகளாக எழுந்தபோது ஏற்றுக்கொண்டது.

ஆனால் அது அவனை தலைவனாகவோ நண்பனாகவோ ஏற்றுக்கொள்ளவே இல்லை. மானுடரை அது அடையாளம் காணவில்லை. விழியுருட்டி அனைவரையும் கவ்வ வந்தது. புல்லுண்ணவும் அன்னநீர் அருந்தவும் மறுத்துவிட்டது. அருகே நின்ற எருது ஒன்றைக்கொன்று குருதியுண்டபோது அதை மீண்டும் காட்டுக்குள் துரத்திவிடலாம் என்று யுதிஷ்டிரன் சொன்னார். சகதேவன் “அதை கொல்லாமல் காட்டில் விடலாகாது. குருதியுண்ணும் குதிரைகளின் கொடிவழி ஒன்றை அது உருவாக்கிவிடக்கூடும்” என்றான். “அதற்குள் குடியேறியிருப்பது என்ன என்று நாம் அறியோம்.”

நகுலன் அது அவ்வண்ணம் நீணாள் வாழாது என்றான். அதன் வயிற்றுக்குரியது அல்ல குருதி. குருதியை உண்ணும் விலங்குகளின் வயிற்றுக்குள் வாழும் தெய்வங்கள் வேறு. இது போரில் குருதியுண்டது, போருக்குப்பின் நிலைமீளாமல் தவிப்பது. சகதேவன் “நூல்களின்படி நாகங்கள் நஞ்சுகொண்டதும் பின்னாளில்தான். சிம்மங்கள் குருதிபழகியதும் இவ்வாறாக இருக்கக்கூடும்” என்றான். நகுலன் “புரவி தெய்வங்களால் ஆளப்படுவது. நாம் அதை இழிவுசெய்கிறோம்” என்றான்.

அதைப்பழக்கி எடுக்க அவன் பலவாறாக முயன்றான். அவனை பலமுறை அது கடிக்க வந்தது. ஒருமுறை தோளில் குருதி பெருகும்படி கடித்தும்விட்டது. அக்குருதியை அது நா சுழற்றி உண்பதை அவன் அச்சத்துடன் நோக்கிக்கொண்டு நின்றான். அந்த நாச்சுழல்வு அச்சமூட்டியது. அதை அவன் உள்ளம் மறக்கவே இல்லை. அச்சுழலலில் தெரிந்த சுவை. தன் குருதியை தானே அவ்வண்ணம் நா திளைக்க உண்பவனாக உணர்ந்தான். உணவு செரிக்காமல் அது வயிறு வீங்கி இறந்தது. அது முந்தையநாள் ஒரு பூனையை முடியுடன் கவ்வி உண்டது என்றார்கள் ஏவலர்.

அதன் சாவுக்கணங்களில் அதன் விழிகளை அருகிருந்து நோக்கினான் நகுலன். அது அவனை வஞ்சத்துடன் நோக்கியது. அவன் அதன் முகத்தருகே தன் கையை கொண்டுசென்றான். அது தலைசுழற்றி அவனை கடிக்கவந்தது. அவன் அதன் கண்களிலிருந்த வெறிப்பை நோக்கினான். நெஞ்சு திடுக்கிட எழுந்துகொண்டான். அத்தனை புரவிகளும் அவனிடம் அதே வஞ்சத்தையே காட்டின. அவன் காலடியோசையிலேயே உடல்விதிர்க்க முகம் சுழற்றி மூச்சு சீறி மகிழும் புரவிகளை இனி பார்க்கப்போவதே இல்லை என உணர்ந்தான்.

காட்டுக்குள் அந்த முதிய பெண்புரவியைக் கண்டதும் அவன் அதை நோக்கியபடி நின்றான். அவனைக் கண்டதும் அது அருகே வந்தது. பின்னர் திகைத்ததுபோல நின்று செவிகோட்டியது. மூச்செறிந்தபடி மயிர்ப்பு கொண்டு வால்சுழற்றியது. பின்னர் மெல்ல பின்கால் எடுத்துவைத்தது. அவன் அதன் அச்சத்தை உணர்ந்து கைகூப்பினான். கண்ணீர் வார அவ்வாறே நின்றான். பின்னர் கண்களை மூடி நிலத்தில் அமர்ந்தான். அக்கணம் கத்தியை எடுத்து கழுத்தில் பாய்ச்சியிருப்பான். அவ்வாறான நூறு நூறு தருணங்களில் அவனைக் காத்த ஒன்றே அப்போதும் தடுத்தது.

அவன் அப்புரவி தன் அருகே வந்து நிற்பதை உணர்ந்தான். அது தன் உளமயக்கு என்று தோன்றியது. ஆனால் மெய்யாகவே அது வந்து அருகே நின்றிருந்தது. அவன் அதன் கழுத்தைத் தழுவியபடி “அன்னையே! அன்னையே!” என விம்மி அழுதான். அதன் கால்கள் உடைந்திருப்பதை கண்டான். அதனால் காட்டில் வாழமுடியும். ஆனால் அது மானுடருடன் குலத்தாரும் குட்டிகளும் சூழ வாழ்ந்து பழகியது. அவனுடன் வர அது விழைந்தது. அவன் அதற்கு க்ஷமை என்று பெயரிட்டான்.

க்ஷமை அவனைக் கண்டதும் மெல்ல தலையசைத்தது. அது வரவேற்பொலிகளை எழுப்புவதில்லை. எந்த உளக்கிளர்ச்சியையும் வெளிப்படுத்துவதில்லை. அதன் இயல்பான பொறைநிலையில் அனைவரையும் இணையாக நடத்தியது. அவன் அதன் கழுத்தையும் தோளையும் வருடினான். பின்னர் மேலேறி அமர்ந்துகொண்டு காந்தாரியின் குடில் அமைந்திருந்த பகுதி நோக்கி சென்றான்.

 

காந்தாரி துயில்கொள்ளவில்லை எனத் தெரிந்தது. அவளுடைய குடில்முன் பந்தம் எரிந்துகொண்டிருக்க அதன் ஒளியில் ஏவற்பெண்டுகள் நடமாடும் நிழலசைவு தெரிந்தது. நகுலன் அருகே சென்றபோது அவனை சத்யசேனை கண்டுகொண்டாள். ஏவற்பெண்டுகளுக்கு ஆணையிட்டபடி நின்ற அவள் அவனிடம் முகமனுரைத்தாள். அவன் புரவியிலிருந்து இறங்கி அருகே சென்று தலைவணங்கினான். “அரசி ஒருங்கிவிட்டார்… பிற அரசியரும் இளவரசியரும் விழித்தெழ இன்னும் பொழுதாகலாம்” என்றாள். “அவர்களுக்கு இன்று உச்சிப்பொழுதுவரை வேறு அலுவல்கள் இல்லை. பேரரசியிடம் மட்டுமே நான் சில சொல்லவேண்டும்” என்றான் நகுலன்.

“உள்ளே வருக!” என்றாள் சத்யசேனை. அவள் உள்ளே சென்று வரவறிவிக்க அவன் குனிந்து குடிலுக்குள் சென்றான். காந்தாரியின் குடில் பத்துபேர் படுக்கும் மஞ்சங்களுடன் அவள் அமர்ந்து விருந்தினரை சந்திப்பதற்குரிய பீடங்களுடன் பெரிதாகவும் விரிவாகவும் கட்டப்பட்டிருந்தது. அவள் இளஞ்சிவப்பு ஆடை அணிந்து ஓரிரு அணிகலன்களுடன் மரப்பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் முகமன் உரைத்து வணங்க அவள் அவனை வாழ்த்தி அமரும்படி கை காட்டினாள். அவன் அமர்ந்துகொண்டு “பேரரசி, தாங்கள் இன்று பேரரசரை சந்திக்கலாம். அவர் இன்னும் முக்தவனத்திற்குள் வரவில்லை. தாங்கள் சென்று அவரைச் சந்தித்து இருவராக உள்ளே நுழையலாம் என அரசர் எண்ணுகிறார். அரசரும் தங்களை சந்தித்து அடிபணிய விழைவுடன் இருக்கிறார்” என்றான்.

“ஆம், அவர் இங்கில்லை என அறிவேன்” என்றாள் காந்தாரி. “நானும் இளையோரும் சென்று அவருடன் இருக்கவேண்டும். நீர்க்கடன் என்பது ஆண்களுக்குரியது. பெண்டிர் துயர்த்துணை மட்டுமே.” நகுலன் “ஆம்’ என்றான். “அதற்குமுன் நான் யாதவ அரசியையும் பாஞ்சாலத்து அரசியையும் சந்திக்கவேண்டும். அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள் அல்லவா?” நகுலன் மூச்சடைக்க பேசாமல் இருந்தான். “அவர்கள் இங்கிருப்பதாக அறிந்தேன்” என்றாள் காந்தாரி. நகுலன் இடறிய குரலில் “ஆம் அரசி, இங்குதான் இருக்கிறார்கள்” என்றான். “நான் அவர்களை சந்திப்பதில் அறப்பிழையோ நெறிமீறலோ இல்லை அல்லவா?”என்றாள்.

“அரசி, இது உங்கள் அரசு. இன்னும்கூட நீங்களே அஸ்தினபுரியின் பேரரசி. நீங்கள் சந்திப்பதற்கு நீங்களே முடிவெடுக்கலாம்” என்றான் நகுலன். “ஆனால்…” என்று மெல்ல சொன்னான். “அவர்கள் தங்கள் சந்திப்பை மறுக்கவியலாது. அவர்கள் எந்நிலையில் உள்ளனர் என்பதை நீங்கள்தான் உசாவி முடிவெடுக்கவேண்டும்” என்றான். காந்தாரி “அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் நான் அவர்களை சந்தித்தாகவேண்டும்” என்றாள். “பேரரசி, அவர்கள் இன்று மைந்தர்சிறந்த அன்னையரோ மண்வென்ற அரசியரோ அல்ல. அவர்கள் கொடுந்துயரில் மூழ்கியிருக்கிறார்கள். சாவுக்கும் மேலான துயர் அது.”

“மைந்தர்துயரை நானும் அறிவேன்” என்றாள் காந்தாரி. அப்போதுதான் தன் சொற்களின் பொருளின்மையை அவன் உணர்ந்தான். அவன் உள்ளம் குன்றியது. “நான் அவ்வாறு பொருள்கொள்ளவில்லை…” என்றான். “நான் அவர்களை சந்திக்கிறேன். என் மருகியரும் அவர்களை சந்திப்பது நன்று. அதன்பின்னர் நான் அரசரை சந்திக்கச் செல்கிறேன்” என்று காந்தாரி சொன்னாள். நகுலன் “அவர்களில் என் அன்னை படுக்கையில் இருக்கிறார். விழிப்பு எழாதபடி அகிபீனா அளிக்கப்படுகிறது. அரசி திரௌபதியும் எங்கிருக்கிறோம் எவ்வண்ணம் இருக்கிறோம் என்று உணராநிலையில் இருக்கிறாள்” என்றான். “ஆம், அதை உணர்கிறேன். நான் அவர்களை சந்திக்கவேண்டும்” என்றாள் காந்தாரி. “ஆகுக, அரசி!” என நகுலன் தலைவணங்கினான்.

அவன் வெளியே வந்தபோது சத்யசேனையும் சத்யவிரதையும் முற்றத்தில் நின்றிருந்தனர். அவன் தயங்கி நிற்க அவர்கள் அருகே வந்தனர். “அரசி…” என்றான் நகுலன். சத்யவிரதை “சொல்க!” என்றாள். “பேரரசி அன்னையையும் திரௌபதியையும் சந்திக்க விழைகிறார்கள்…” என்றான். சத்யவிரதை அவனை கூர்ந்து நோக்கினாள். “இத்தருணத்தில் அவர்கள் இருக்கும் நிலை…. அதை என்னால் கூறிவிட முடியாது” என்றான் நகுலன். “அவர்கள் ஒரே ஒரு சொல்லால்கூடக் கொல்லப்படக்கூடும்… அதை மட்டுமே கூறவிழைகிறேன்.” சத்யசேனை “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றாள். நகுலன் “இச்சந்திப்பு இப்போது தேவையில்லை” என்றான். “இதை தவிர்க்க இயலாது, ஆனால் ஒத்திப்போடலாம்… அருள்கூரவேண்டும்.”

சத்யவிரதை மறுமொழி சொல்வதற்குள் சற்று அப்பால் நின்றிருந்த நிகுதி சீற்றத்துடன் உறுமலோசை எழுப்பியபடி அருகே வந்தாள். “தவிர்க்க முடியாது. இச்சந்திப்பு நிகழ்ந்தாகவேண்டும். எந்நிலையிலும் இச்சந்திப்பை தவிர்க்க முடியாது…. அது என் தமக்கையின் உரிமை. அவருக்குள் யாதவநாட்டு இயக்கியிடமும் பாஞ்சாலத்துக் கொற்றவையிடமும் பேசுவதற்கு சொற்கள் இருக்குமென்றால் அவற்றை அவர் கேட்டாகவேண்டும். அவருக்கு அதை மறுக்க எவருக்கும் உரிமை இல்லை.” அவள் விம்மலுடன் தன்னை திரட்டிக்கொண்டாள். “அவர் நெஞ்சுக்குள் நஞ்சென அச்சொற்கள் இருக்கும் என்றால் அவற்றை அவஎ உமிழட்டும். எவர் இறந்தாலும் எங்களுக்கு ஒன்றுமில்லை. இத்தனை உயிர்களை குடித்துவிட்டு அவர்களுக்கு மட்டும் என்ன ஒரு வாழ்வு? பெற்ற மைந்தரையும் பெயர்மைந்தரையும் கொன்றுகளியாடியவர்களிடம் எவர் அளிகூரவேண்டும்?”

நகுலன் “மெய், ஒரு சொல்லையும் நான் மறுக்கவில்லை. உங்கள்முன் பெரும்பழி சேர்ந்தவனாகவும் கீழினும்கீழோனாகவும் மட்டுமே என்னால் நின்றிருக்க இயலும். ஒரு சொல்கூட நெறிசார்ந்து சொல்லும் தகுதி எனக்கில்லை. எங்களில் எவருக்குமே தெய்வங்களை நேர்நின்று நோக்கும் அறநிலை இல்லை. ஆயினும்…” என்றான். உளம் உலைந்து எழ இரு கைகளையும் நீட்டி “மைந்தன் என்றும் கொழுநன் என்றும் நான் இதை செய்தாகவேண்டும். அரசி உங்களிடம் அளி இரந்து நின்றிருக்கிறேன். அருள்க!” என்றான். சத்யசேனை ஏதோ சொல்ல முயல தேஸ்ரவை உரத்தகுரலில் கூவியபடி முன்னால் வந்தாள். “நிறுத்துங்கள் அக்கையே. இவர்களுக்கு நீங்கள் ஒரு சொல்லும் அளிக்கலாகாது. எங்களை மீறி சொல்லளிக்கப்படும் என்றால் சங்கறுத்துச் செத்துவிழுவதே நாங்கள் செய்யக்கூடுவதாக இருக்கும்… ஆறு பாலைநிலத்துத் தெய்வங்களின் மேல் ஆணை! மூதன்னையர் மேல் ஆணை!” என்றாள்.

சத்யசேனை திகைத்து அவர்களை மாறிமாறி நோக்க நகுலன் “நன்று அரசி. என்னால் உங்களுக்குள் பூசல்வேண்டாம். பேரரசி எண்ணியதே நிகழட்டும். அன்னையையும் அரசியையும் அவர் உடனே சந்திக்க ஒருங்குசெய்கிறேன். இதுவரை இவையனைத்தையும் கொண்டுவந்து சேர்த்த ஊழே இதையும் நிகழ்த்துக!” என்றான். தலைவணங்கி தன் புரவிமேல் ஏறிக்கொண்டான். அது முறிந்த காலை மெல்ல எடுத்துவைத்து மூச்சிளைப்பின் ஒலியுடன் நடக்கத்தொடங்கியது.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 21

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 2

நகுலன் யுதிஷ்டிரனின் குடிலை அடைந்தபோது வாசலில் பிரதிவிந்தியன் நின்றிருந்தான். எனில் உள்ளே அவைகூடியிருக்கிறது என்னும் எண்ணத்தை அடைந்து தான் பேசவேண்டிய சொற்களை தொகுத்துக்கொண்டபோதுதான் அவன் அகம் ஓங்கி அறையப்பட்டதுபோல திடுக்கிட்டது. புரவியிலிருந்து விழப்போகிறவன்போல நிலையழிந்து கடிவாளத்தை இறுகப்பற்றி மீண்டான். அந்த ஒவ்வா அசைவை உணர்ந்து புரவி நின்றுவிட்டது. அதன் கழுத்தைத் தட்டி ஆறுதல்படுத்தி மேலே செல்ல வைத்தான். அவன் அகம் படபடப்பு ஓய்ந்து அமைந்தபோது அழுத்தம் மிக்க ஏக்கம் எழுந்து விழிநீர் கசியுமளவுக்கு உளமுருகச் செய்தது. அவன் தொண்டையை கமறிக் கமறி மூச்சிழுத்து விழுங்கிக்கொண்டான். பெருமூச்சுவிட்டு நெஞ்சை ஆற்றிக்கொண்டான்.

சித்தப்பெருக்கை வேறு திசைநோக்கி திருப்பி தன்னை விலக்க முயன்றான். அந்தச் சிறிய மண்பாதையை, சூழ்ந்திருந்த சிறுகுடில்களை, விடியலில் துலங்கிநின்ற வான்வெள்ளிகளை நோக்கினான். மெல்ல உள்ளம் அமைந்து மீண்டான். “தெய்வங்களே!” என்று தன்னுள் முனகிக்கொண்டான். உள்ளம் துயர்கொண்டிருக்கையில் மென்குளிர்காற்றுபோல் அணுக்கமானது வேறில்லை. அது ஒரு தழுவல். திசைகளின் அணைப்பு. வானின் குழல்வருடல். இளங்குளிர்காற்று மானுடன்மேல் தெய்வங்கள் இன்னமும் அன்புடன் இருக்கின்றன என்பதற்கான சான்று. அவை மானுடப்பிழைகளை எப்போதும் பொறுத்துக்கொள்கின்றன என்பதற்கான சுட்டு. மேலிருந்து இமைக்கும் விண்மீன்கள் ‘ஒன்றுமில்லை ஒன்றுமில்லை’ என்கின்றன. மிகமிக அப்பால். மிகமிக விரிந்து. ககனக் கடுவெளி. முடிவிலி. இருள்பெருக்கு. அது மானுடனை சிறிதாக்கிவிடுகிறது. ஒவ்வொன்றையும் சிறியதாக்குகிறது. துயர்களை இழப்புகளை வெறுமையை சிறிதாக்குகிறது.

சென்றநாட்களில் அது மீள மீள நிகழ்ந்துகொண்டிருந்தது. அவன் இளையோர் அனைவரிலும் மைந்தர்களை கண்டான். ஓர் அசைவில், ஒரு தோற்றத்தில், ஒரு சொல்லில் அவர்கள் தோன்றி மறைந்தார்கள். தோன்றும்போது அவர்கள் முழுமையாகவே தெரிந்தனர். தங்களுக்குரிய விழியொளியுடன், புன்னகையுடன், தனித்த இயல்புகளுடன். அவர்களை பிறர் என உணரும் அக்கணம் அவர்கள் மறைந்தனர். அது ஒரு இறப்பு. ஒவ்வொரு நாளும் பலமுறை மைந்தர் தோன்றித்தோன்றி இறந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்காக விழிகளுக்குள் ஒரு விழி எப்போதும் துழாவிக்கொண்டிருந்தது. ஆனால் எண்ணித்தேடினால் அவர்கள் எழுவதில்லை. எண்ணாக்கணத்தில் தோன்றி முன் நின்றனர். அந்த எதிர்பாராக் கணத்திற்காக அகம் எதிர்பார்த்திருந்தது.

போரில் மறைந்தவர்கள் பல்லாயிரம். அணுக்கமானவர்கள், உடன்பிறந்தவர்கள், குருதிச்சரடினர். அவர்கள் அனைவரும் மெல்லமெல்ல கரைந்து மறைந்துவிட்டிருந்தார்கள். பலருடைய முகங்களையே நினைவுகூர முடியவில்லை. அவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டபோது முகங்கள் தற்செயலாக மின்னி தொடுவதற்குள் மறைந்தன. எண்ணி எண்ணி எடுத்தால் கனவிலென மறைந்தும் திரிந்தும் அவை தோன்றின. ஆனால் மைந்தர் முகங்கள் மேலும் மேலும் தெளிவுகொண்டன. அவர்களை வாழ்ந்தகாலத்தில் கூர்ந்து நோக்கியதே இல்லை என்று தோன்றியது. அவர்கள் வளர்ந்த பொழுதில் ஐவரும் காட்டிலிருந்தனர். மீண்டு வந்தபோது கண்ட இளையோர் அயலவராகத் தெரிந்தனர். அவர்களைப் பார்க்கையில் ஆடியை நோக்கும் திகைப்பு எழுந்தது. அறியாதோன் ஒருவன் தன் ஆழம் நோக்கி ஊடுருவுவதுபோல் துணுக்குறல் எழுந்தது. அவர்களையே எண்ணிக்கொண்டிருக்கையில்கூட நேர்விழியால் நோக்க இயலவில்லை. அணுக்கமாகப் பேசுகையில்கூட அவர்களை விழிதவிர்க்கவே முடிந்தது.

சகதேவனிடம் அதைப்பற்றி ஒருமுறை அவன் கேட்டான். “இவர்களை நாம் ஏன் விழிதொட்டுப் பேசுவதில்லை? இவர்கள் அணுகும்போது அகன்றும் அகல்கையில் அணுகியும் ஏன் விளையாடிக்கொண்டிருக்கிறோம்?” சகதேவன் புன்னகைத்தான். பின்னர் தணிந்தகுரலில் “நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். “பிரத்யங்கரரின் மிருத்யுவிலாசம் என்னும் காவியத்தில் தந்தையின் முதுமையை வாங்கி கானேகி மீண்ட புருவை முதல்முறை சந்திக்கும் யயாதிமன்னரைப்பற்றி ஒரு விவரிப்பு வருகிறது. மைந்தனின் விழிகளை நோக்க யயாதியால் இயலவில்லை. அவனை தன் மனைவியின் காதலனை சந்திக்கும் கணவன் என உணர்ந்தான்” நகுலனின் நெஞ்சு திடுக்கிட்டது. “என்ன?” என்றான். “அவர்கள் இளைஞர்கள்… நாம் முதியவர்கள்” என்று சகதேவன் சொன்னான். “என்ன சொல்கிறாய்?” என்றான் நகுலன். “அவ்வளவுதான், அதற்குமேல் சொல்வதற்கில்லை” என்றான் சகதேவன்.

“அவர்கள் மேலும் கூர்மையுடன் தோன்றுகிறார்கள்” என்று நகுலன் முணுமுணுத்தான். “மிக மிக அண்மையிலென… அவர்கள் குழவியராக இருந்தபோதுதான் அவ்வண்ணம் கூர்ந்து நோக்கியிருக்கிறோம். அருகே அமர்ந்து அவர்களின் முகத்தை நோக்கிக்கொண்டு பலநாழிகைப்பொழுது அமர்ந்திருப்பேன் அன்றெல்லாம்… அதன்பின் அவர்களை நோக்கியதே இல்லை எனப் படுகிறது. எனில் இந்த்த் தெளிவுரு எங்கிருந்து எழுகிறது?” சகதேவன் “அவர்கள் இன்று வாழும் உலகு ஒளிமிக்கது. அங்கிருந்து எழுகிறார்கள் போலும்” என்றான். அச்சொல்லால் இருவரும் ஒரேதருணத்தில் உளமழிந்தனர். சகதேவன் விம்மலோசை எழுப்பி முகம் குனிக்க நகுலன் தன் விழிகளிலிருந்து நீர் பெருகி வழிவதை உணர்ந்தான். இருவரும் அருகமர்ந்து நெடுநேரம் அழுதுகொண்டிருந்தார்கள். பின்னர் சகதேவன் பெருமூச்சுடன் ஒரு சொல்லும் உரைக்காமல் எழுந்து அகன்றான். அவன் அவ்வளவுபொழுது உடனிருந்திருப்பதை அப்போதுதான் நகுலன் உணர்ந்தான். அவன் அவ்வாறு உடனிருந்தது கசப்பை உருவாக்கியது. அத்தனை ஆழ்ந்த ஒன்றுடன் இன்னொருவரை உடன்சேர்க்க முடியாதென்பதுபோல.

அவன் சகதேவன் செல்வதையே நோக்கிக்கொண்டிருந்தான். தளர்ந்த நடை. தொய்ந்த தோள்கள். அவனுக்கு அச்சிலநாட்களுக்குள்ளேயே பல்லாண்டு அகவை முதிர்வு வந்துவிட்டதுபோல. தன் உருவை அவன் நீர்ப்பரப்பில் பார்க்கையில் எல்லாம் திடுக்கிட்டான். ஆழத்தில் இருந்து அறியா முதியவன் அவனை தன் தளர்ந்த விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான். ஐயமும் கசப்பும் கொண்டவன். நம்பிக்கை அழிந்தவன். சாவை அருகே கண்டுகொண்டவன். சாவு அணுகும்போது தந்தையர் நினைவு மிகும் என்பார்கள். மூதாதையர் அருகணைவார்கள். மைந்தர் அணைவதும் அவ்வாறா? மைந்தர் மூதாதையரின் உருவென்பதுண்டு. முன்னரே மறைந்த மைந்தர் மூதாதை நிரையில் சென்றமர்ந்து காத்திருப்பவர்களா?

மைந்தர் அவ்வண்ணம் தோன்றுவது ஐவருக்கும் நிகழ்ந்துகொண்டிருந்தது. யுதிஷ்டிரன் ஒருநாள் “இளையோர் இங்கே பணிக்கு வரவேண்டியதில்லை” என்றார். நகுலன் பேசாமல் நின்றிருக்க அமைச்சர் “அரசே, நம்மிடம் செயல்திறனுடன் எஞ்சியிருப்பவர்கள் முதிரா இளைஞர்கள் மட்டுமே…” என்றார். யுதிஷ்டிரன் சீற்றத்துடன் “இங்கே என்ன போரா நிகழ்கிறது? செயல்திறனற்றவர்கள் போதும் எனக்கு… என்னைப்போல் சாவை கண்டுவிட்டவர்கள். மூதாதையர் எழுவதற்காக காத்திருப்பவர்கள்… இனி என்முன் இளையோர் தோன்றலாகாது. இது ஆணை” என்றார். அமைச்சர் தலைவணங்கி அகன்றார். யுதிஷ்டிரன் இளைய யாதவரிடம் “என்னால் இதற்குமேலும் தாளவியலாது… இளையோர் வைரமணிகள்போல் ஆயிரம் ஆடிப்பட்டைகளால் ஆனவர்கள். அவர்களில் எழுகிறார்கள் மாண்டவர்கள்” என்றார். பீமன் விலங்குபோல் உறுமலோசை எழுப்பினான். பின்னர் அவையிலிருந்து வெளியே நடந்தான். யுதிஷ்டிரன் அவன் செல்வதை நோக்கியபின் முனகலாக “கொடிது இவ்வாழ்க்கை!” என்றார்.

நகுலன் அணுகியதும் யுதிஷ்டிரனின் குடில்வாயிலில் நின்ற அந்தண இளைஞன் வணங்கி “அரசர் துயின்றுகொண்டிருக்கிறார். அவருக்கான செய்தியுடன் வந்தேன்” என்றான். “சொல்க!” என்று அவனை நோக்கமால் நகுலன் சொன்னான். “ஆசிரியர் தௌம்யரின் செய்தி. அஸ்தினபுரியின் அமைச்சர் விதுரர் நாளை முக்தவனத்தை வந்தடைகிறார். நாளை அவர் வந்தபின்னர் அவருடன் கலந்துகொண்டு நாளை மறுநாள் காலையிலேயே நீர்க்கடனுக்குரிய சடங்குகளை செய்யத் தொடங்கிவிடலாமா என்று அரசரிடம் ஆசிரியர் உசாவுகிறார். எனில் அதற்குரிய அனைத்தையும் அவர் ஒருக்கத் தொடங்கிவிடுவார்.” நகுலன் “ஆம், விதுரர் வந்ததும் தொடங்கிவிடவேண்டியதுதான்…” என்றான். “இதை நான் அரசாணையாக ஆசிரியரிடம் தெரிவிக்கலாமா?” என்றான் இளைஞன்.

அவன் முகத்தை நகுலன் நிமிர்ந்து நோக்கினான். தருணங்களை நுண்ணிதின் புரிந்துகொண்டு அதற்கேற்ப எழுபவர்களுக்குரிய தன்னமைவு தெரிந்த முகம். “ஆம். அவ்வாறே” என்றான். “உத்தமரே, உமது பெயர் என்ன?” என்றான். ‘சாண்டில்ய குடியினனாகிய என் பெயர் காஞ்சனன்… என் தந்தை சோமர் “ என்று அவன் சொன்னான். “எங்கிருந்தீர் இதுவரை?” என்றான் நகுலன். “பாரத்வாஜ தவக்குடிலில் கல்விபயின்றுகொண்டிருந்தேன். கல்வி முடிவதற்குள் இங்கு வரநேர்ந்தது…” நகுலன் “கல்வி இங்கும் தொடரலாமே” என்றான். அவன் புன்னகைத்தான். நகுலன் தலைவணங்க அவன் பின்னடைந்து நடந்து அகன்றான்.

அவனை நோக்கி நின்றபோது நகுலன் தனக்குள் ஒரு நிறைவை உணர்ந்தான். அனைத்தும் முடிந்துவிட்டன என்று தோன்றுகையில் புதியவர்கள் எழுகிறார்கள். காட்டெரியின் சாம்பல்நிலத்தில் பசுமுளைகள் எழும் விந்தையை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். தன் முகம் மலர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். உதடுகளில் புன்னகை எழுவது அரிதினும் அரிதாக இருந்தமையால் அவ்வண்ணம் முகத்தசைகள் விரிவதை உடனே முகமே அறிந்து அறிவித்தது. ஒரு துளி இனிமை, ஒரு சிறு இளைப்பாறல். இது தெய்வங்கள் அருளுவது. துயரிலேயே முற்றாக ஊறிவிடக்கூடாது என்பதற்காக. ஊறுகாய் உப்பென்றே ஆகிவிடலாகாது. ஆகவே புளிப்பு, கொஞ்சம் இனிப்பு. துயரறியும் திறனை துயர் மழுங்கடித்துவிடக்கூடும். இனியில்லை என ஒரு நம்பிக்கை. இதோ மறுகரை என ஒரு கானல். இதுவே என ஒரு மாயப்பற்றுக்கோடு. மீண்டும் துயரத்தின் பெரும்பாலை. அலை கொந்தளிக்கும் முடிவிலி. எரியெழுந்த வெறுமை.

நகுலன் யுதிஷ்டிரனின் குடிலுக்குள் நுழைந்து அவரை நோக்கியபடி நின்றான். அவர் மஞ்சத்தில் மடியில் ஒரு சுவடியுடன் அமர்ந்து துயின்று பக்கவாட்டில் சரிந்துவிட்டிருந்தார். சுவடிக்கட்டு உதிர்ந்து நிலத்தில் கிடந்தது. அவருடைய தலை மார்பில் முட்டும் குழல்கற்றைகளுடன் முன்னால் குனிந்திருந்தது. கனிந்து உதிரவிருக்கும் கனிபோல. அவருடைய கழுத்து வலிக்கக்கூடும், மெல்ல தூக்கி அப்பால் படுக்கவைக்கவேண்டும் என்னும் எண்ணமே முதலில் எழுந்தது. ஒவ்வொருமுறை அவரை முதலில் பார்க்கையிலும் எழுவது ஒரு கனிவே என்பதை அவன் முன்னரும் உணர்ந்திருந்தான். அவர் மீதான கசப்புகளும் சினமும் திரள்வது அதன் பின்னர்தான். அந்தக் கனிவு அவருடைய விழி முதற்கணம் தன் மேல் படிகையில் கொள்ளும் கனிவிலிருந்து எழுவது என்று அவன் எண்ணிக்கொண்டதுண்டு. அக்கனிவு ஒரு சரடென இருவரையும் தைத்திருந்தது. அது இப்புவி சார்ந்தது அல்ல, ஆகவே இப்புவிநிகழ்வுகளை அது தொடுவதேயில்லை.

நகுலன் அது என்ன நூல் என்று நோக்கினான். அவன் எண்ணியதுபோல அது நெறிநூல் எனத் தோன்றவில்லை. சற்று அருகே சென்று அதை கூர்ந்து நோக்கியபின் குனிந்து எடுத்துப்பார்த்தான். விருஷ்டிவைபவம் என்னும் நூல். எதைப்பற்றியது? மழையைப்பற்றியது என்று தோன்றியது. அதை புரட்டிப்பார்த்தான். மழை பொழிவதற்குரிய சடங்குகள். பொழியாதொழிந்தால் இயற்றவேண்டிய பிழைநிகர்கள். மழைநீரைப் பேணி மண்ணை வளமாக்க அரசன் இயற்றவேண்டிய முறைமைகள். அவன் அதன் சுவடிகளை அடுக்கிக் கட்டி அருகிலிருந்த் பீடத்தில் வைத்தான். அதிலிருந்த குடுவையில் எஞ்சிய இன்நீரில் ஃபாங்கம் கலந்திருப்பது மணத்திலிருந்து தெரிந்தது. யுதிஷ்டிரன் அகிபீனாவும் ஃபாங்கமும் இன்றி விழிப்பிலோ துயிலிலோ இருக்க இயலாதவராக ஆகிவிட்டிருந்தார்.

அவர் அவனுடைய காலடியோசையை துயிலுக்குள் கேட்டுவிட்டிருந்தார். “ம்ம்” என்று முனகினார். அவன் “மூத்தவரே” என்றான். அவர் “ம்?” என்றார். “மூத்தவரே” என்று அவன் மீண்டும் அழைத்தான். அவர் தலைநிமிர்ந்து கண்களைத்திறந்தபோது முகம் மலர்ந்திருந்தது. “வந்துவிட்டாயா? நீதானா? நீ வருவதை பார்த்தேன்” என்றார். சிரிப்பு என அவர் பற்கள் வெளிப்பட்டன. “நீ சொல்வது பிழை. அவ்வண்ணம் அந்நூலில் இல்லை. அது முற்றிலும் வேறுநூல். இத்தனைபொழுது அதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதை உன்னிடம் சொல்லவேண்டும் என எடுத்து வைத்தேன்… இதோ” அவர் சூழவும் தேடி பீடத்தில் அந்நூலை கண்டுகொண்டார். “நீ இதை எடுத்துப் பார்ப்பதை கண்டேன். ஆனால் உன்னால் இதை கண்டுபிடிக்கமுடியாது. ஏனென்றால் இதை என்னால்தான் படிக்கமுடியும்…”

அக்கணமே அவன் அனைத்தையும் உணர்ந்துவிட்டிருந்தான். சலிப்புடன் அவரை நோக்கியபடி நின்றான். “உன் இளையவன் எங்கே? அவன் அன்னை அவனை தேடிக்கொண்டிருந்தாள்” என்றார். பின்னர் அவர் விழிகள் அலைபாய்ந்தன. உடலில் ஒரு நடுக்கு நிகழ்ந்தது. “ஆ!” என்றபடி எழுந்து இரு கைகளையும் விரித்தார். “நான்தான் மூத்தவரே” என்றான் நகுலன். “நீயா?” என்று அவர் மூச்சொலியுடன் கேட்டார். தளர்ந்து பீடத்தில் அமர்ந்துகொண்டார். கைகளை மடிமேல் கோத்து வைத்துக்கொண்டு “சொல்க!” என்றார். “அனைத்தும் முறையாக நிகழ்ந்துவிட்டன. அதை சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்” என்றான் நகுலன். “ஆம், சொல்” என்றார் யுதிஷ்டிரன்.

“பேரரசி காந்தாரி இன்று கருக்கலில் வந்தணைந்தார். உடன் அஸ்தினபுரியின் அரசியரும் இளவரசியரும் வந்தனர். அவர்களை வரவேற்று அழைத்துச்செல்ல நான் சென்றிருந்தேன். உடன் இளைய யாதவரும் வந்திருந்தார்.” யுதிஷ்டிரன் திகைப்புடன் “அவரா?” என்றார். “ஆம், அவர் வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை” என்றான் நகுலன். “என்ன நிகழ்ந்தது?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “கைகூப்பியபடி நின்று அன்னை காந்தாரியை அவர் வரவேற்றார். அன்னை அவரை நோக்கி தீச்சொல்லிடக்கூடும் என நான் எதிர்பார்த்தேன். தீச்சொல்லிடவேண்டும் என எதிர்பார்த்தேன் என்றும் சொல்லலாம்.” யுதிஷ்டிரன் “ஆம் நானும் அவ்வண்ணமே எதிர்பார்த்தேன், ஒருகணம் முன்பு” என்றார். “அன்னை எனக்கும் தீச்சொல்லிடவேண்டும், என்னை எரித்து அங்கேயே சாம்பலாக்கவேண்டும் என்றும் விழைந்தேன்” என்றான் நகுலன்.

யுதிஷ்டிரன் “அதுவும் நான் எண்ணுவதே” என்றார். “ஆனால் படகிலிருந்து இறங்கியதுமே அன்னை அவர் பக்கம் பார்த்து வணங்கினாள். கைகூப்பியபடி துறைமேடைமேல் ஏறிக்கொண்டாள். அவள் அருகணைந்ததும் இளைய யாதவர் “அஸ்தினபுரியின் பேரரசிக்கு யாதவனின் தலைவணக்கம்… குடிநலம் சூழ்க! என்றார்.” யுதிஷ்டிரன் “ம்” என்றார். “அனைத்தும் நலமாகுக, யாதவரே. மெய் நிலைகொள்க என்று அன்னை சொன்னாள். யாதவர் கைகூப்பி நிற்க அரசியர் ஒன்பதின்மரும் அதையே சொன்னார்கள்.” யுதிஷ்டிரன் “அவர்கள் வேறொன்று சொல்ல முடியாது” என்றார். “அரசி பானுமதி கரையணைந்தபோதும் இளைய யாதவர் அவ்வண்ணமே கைகூப்பியபடி நின்றார். இப்பாரதவர்ஷத்தின் அனைத்து அன்னையரிடமும் மனையாட்டியினரிடமும் அடிபணிவு உரைத்து பொறுத்தருள்கை கோருபவர்போல. அரசி பானுமதியும் அவள் தங்கை அசலையும்கூட நற்சொல்லே உரைத்தனர்.”

“நலம் சூழ்க என்று அவள் நாவுரைத்த அசைவை கண்முன் காண்கிறேன். தெய்வச்சொல் என எனக்கு தோன்றியது. மெய்ப்புகொண்டு விழிநீர் வழிய கைகூப்பி நின்றேன். ஆனால் அவர் அருகே நின்றிருக்க என்னால் இயலவில்லை. அகன்று பின்னடைந்து என்னை மறைத்துக்கொண்டிருந்தேன்.” யுதிஷ்டிரன் தலையசைத்தார். “அவர்களை அவர்களுக்குரிய குடில்களுக்கு கொண்டு தங்கவைத்துவிட்டு வருகிறேன். அனைவருமே களைத்திருக்கிறார்கள். உணவுண்டு ஓய்வெடுக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். நாளை பின்காலைப்பொழுதில் அவர்கள் எழுவார்கள்.” யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டார். பின்னர் “இழிசொல்லே எழவில்லையா என்ன?” என்றார்.

“எழுந்தது” என்று நகுலன் சொன்னான். “அவ்வண்ணம் எழாமலிருக்காது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அஸ்தினபுரியின் அமைச்சர் கனகர் இளைய யாதவர் முகத்தை நோக்கி பழிச்சொல் உரைத்தார். அவர் குலம் முற்றழியும் என தீச்சொல்லிட்டார்.” யுதிஷ்டிரன் இமைக்காமல் நோக்கினார். “அத்தீச்சொல்லை தனக்கே தான் இட்டுக்கொண்டுவிட்டதாக இளைய யாதவர் சொன்னார். அச்சொற்களைக் கேட்டு அவர் மகிழ்வதுபோலக்கூட எனக்கு தோன்றியது” என்றான் நகுலன். “அவ்வண்ணம் எனக்கும் தோன்றியிருக்கிறது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அவர்கள் சொல்லிழந்து தனிமைகொண்டு அமைந்தனர்.

நகுலன் “கனகர் நகருக்குள் நுழையவில்லை. படித்துறையிலிருந்து அப்படியே கங்கைக்குள் சென்றுவிட்டார் என்று ஒற்றுச்செய்தி வந்தது” என்றான். யுதிஷ்டிரன் “அவர் விடுதலைகொண்டார்… நன்று” என்றார். “அவர் கங்கையில் பாய்ந்திருக்கக்கூடும். வரும் வழியில் நூற்றுப்பதினெட்டு இளவரசியர் கஙகைபாய்ந்திருக்கிறார்கள்” என்றான் நகுலன். “எனில் அதுவும் விடுதலையே…” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இளையோனே, அவரை நான் நன்கறிவேன். இங்கே வெளிப்பட்ட இச்சொற்கள் அவருக்குள் நஞ்சென எழுந்து பெருகித்திரள எத்தனை கொந்தளிப்பும் வலியும் தேவை என்று எண்ணிப்பார்க்கிறேன். அத்தனை பெரிய அலைக்கழிப்புக்குப்பின் அவர் விடுதலைகொண்டே ஆகவேண்டும்” என்றார்.

“நான் சென்று எஞ்சிய பணிகளை நோக்குகிறேன். அமைச்சர் விதுரர் நாளை உச்சிப்பொழுதுக்குள் இங்கு வரக்கூடும். எனில் நாளை மறுநாளே நீர்க்கடன்களை வைத்துக்கொள்ளலாம் என்று வேதியர் தௌம்யரின் சொல் வந்தது.” யுதிஷ்டிரன் “ஆம், அவர் வரட்டும்” என்றார். நகுலன் பேசாமல் நின்றான். பின்னர் “நாம் இன்னமும்கூட அரசர் திருதராஷ்டிரரை சந்திக்கவில்லை” என்றான். “ஆம், சந்திக்கவேண்டும். அவர் இங்கேயே இருக்கிறார்… ஆனால் அவரை சந்திக்கும் உளத்திண்மை எனக்கு இருக்கும் என தோன்றவில்லை” என்றார். “நம் கடமை அது” என்று நகுலன் சொன்னான். “நெறிகளின்படி துரியோதனனுக்கும் இளையோருக்கும்கூட நீங்கள்தான் நீர்க்கடன் செய்யவேண்டும்… அதற்கு அவருடைய ஒப்புதல் தேவை.”

யுதிஷ்டிரன் “ஏற்கெனவே அதை பலமுறை தௌம்யர் உணர்த்திவிட்டார்” என்றார். “அரசமுறைப்படி அவரை நானே சென்று வரவேற்றிருக்க வேண்டும். என்னால் இயலவில்லை. ஆகவேதான் தௌம்யரை அனுப்பினேன். நீர்க்கடனுக்காக வந்திருக்கையில் அரசமுறைமை தேவையில்லை என்பது ஒழிதலுக்கான வழியொன்றை காட்டியது. ஆனால் நான் சென்றாகவேண்டும். அடிபணிந்தாகவேண்டும். இளையோனே, அதைவிட என் கழுத்தில் வாளை பாய்ச்சிக்கொள்வேன் என தோன்றுகிறது. தௌம்யர் சொன்னதுமே நான் நடுங்கத்தொடங்கிவிட்டேன். அதை நினைக்காமலிருக்கவே முயல்கிறேன். அதன்பொருட்டு என் துயரைப்பெருக்கி அதை என்னைச்சூழ அரண் என அமைத்துக்கொள்கிறேன்…”

“அவர் இன்னமும் முக்தவனத்திற்குள் முறைப்படி நுழையவில்லை. அருகில் என்றாலும் மரபின்படி அவர் இருக்குமிடம் சமந்தம் என்னும் காடு. ஆகவே முறைமைகளை நாம் கருதவேண்டியதில்லை” என்று நகுலன் சொன்னான். “ஆனால் பேரரசி இங்கே வந்துவிட்டிருக்கிறார்கள். அவரும் இங்கே வந்தாகவேண்டும். நீங்கள் அவர்களை சந்தித்தே ஆகவேண்டும்…” யுதிஷ்டிரன் உடைந்தகுரலில் “நான் என்ன செய்வேன்! தெய்வங்களே!” என்றார். “இதை நமக்கான தண்டனை என்று கொள்ளவேண்டியதுதான்” என்றான் நகுலன். யுதிஷ்டிரன் அவனை விழித்து நோக்கினார். நெடுநாள் துயில்நீப்பினால் அவர் விழிகள் பித்தனின் வெறிப்பை கொண்டிருந்தன. நீர் கலங்கி நிறைந்திருந்த சிமிழ்கள்.

பின்னர் அவர் “ஆம்” என்றார். “அதுவே தண்டனை. அவரை சென்று வணங்குகிறேன். அவர் அளிக்கும் தீச்சொற்களை தலைக்கொள்கிறேன். அவரால் கொல்லப்படுவேன் எனில் உயிர்விடுகிறேன்” என்றார். நகுலன் “ஆனால் நம் சொல்லில் உடலில் வெற்றியின் ஒரு சிறு துளி வெளிப்பட்டால்கூட அது அவரை கொன்றுவிடக்கூடும். அது நமக்கு மேலும் பழியையே சேர்க்கும்” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று நடுங்கும் குரலில் யுதிஷ்டிரன் கேட்டார். “நாம் நம் வெற்றியை அறிவிக்க அவரிடம் சென்றோம் என இனி வாழும் சொல்நிற்றலும் கூடும்” என்றான் நகுலன். “நம் மேல் நமக்கே ஆணை இல்லை. நாம் எவரென்று நமக்கே தெளிவில்லை.”

யுதிஷ்டிரன் தன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து சினவெறி கொண்டார். அதுவரை தளர்ந்திருந்த அவருடைய அனைத்து உளவிசைகளும் அதனூடாக மீண்டெழ விழைந்தன. அவ்வாறு தங்களை நிறுவிக்கொள்ளத் துடித்தன. “கீழ்மகனே!” என்று வீறிட்டபடி அவர் கைவீசிக்கொண்டு எழுந்தார். “என்னை என்னவென்று நினைத்தாய்? என் முன் பணிந்து நின்றிருக்கையில் என்னைக்குறித்த இக்கீழ்மையையா உன் உள்ளத்தில் நிறுத்தியிருந்தாய்? கீழ்மகனே, என்னையும் உன்னைப்போல் கீழ் என்று எண்ணினாயா?” அவர் குரல் உடைந்தது. “வெற்றியில் தருக்குகிறேனா? நானா? எது வெற்றி? உடன்பிறந்தாரைக் கொன்று மைந்தரையும் இழந்து பித்தனாக பழிகொண்டவனாக இதோ நின்றிருக்கிறேனே இதுவா? இதன்பொருட்டு தருக்குபவனா நான்? சொல்…. ஏன் அதை சொன்னாய்?”

நகுலன் அச்சினத்தை உள்வாங்கியவனாகவே தோற்றமளிக்கவில்லை. அவரை நோக்கிக்கொண்டு பேசாமல் நின்றான். அவர் அருகே வந்து அவன் தோளைப்பற்றி உலுக்கினார். “சொல், எதன்பொருட்டு நான் தருக்கவேண்டும்? இன்று நானிருக்கும் இழிநிலையில் இனி எந்த மானுடர் நின்றிருக்கமுடியும்? இதிலும் மகிழ்வேன் என்றால் நான் யார்? கீழினும் கீழ். இழிவே உருவானவன்… அவ்வண்ணமா எண்ணுகிறாய் என்னை? சொல்… ஏன் அதை சொன்னாய்? என்னை புண்படுத்தி நீ அடையும் இன்பம்தான் என்ன?” அவர் அவன் விழிகளை கூர்ந்து நோக்கி “உன் துயர் என்னால் வந்தது என எண்ணுகிறாயா? என்னை பழிகொள்ள முனைகிறாயா? என்மீதான வெறுப்பு உனக்கு ஆறுதலாக அமைகிறதா?”

அவர் விழிகளை அசையா நோக்குடன் நகுலன் எதிர்கொண்டான். “சொல், என்னை வெறுத்து நீ விடுதலை கொள்வாய் எனில் அவ்வண்ணம் ஆகுக! நானே இவ்வழிவனைத்தையும் இயற்றியவன். இப்பழி முழுக்க என்மேலேயே படியட்டும். என்னை நீங்கள் அனைவரும் வெறுக்கலாம். அனைத்துக்கும் தகுதியானவன் நானே.” அவர் விம்மலோசையுடன் தலைகுனிந்தார். மீண்டு சென்று தன் பீடத்தில் அமர்ந்தார். கைகள்மேல் தலையைத் தாங்கி அமர்ந்து விம்மி அழுதார். அவர் தோள்கள் குலுங்குவதை அவன் நோக்கி நின்றான். அவர் மெல்ல மீண்டார். நிமிர்ந்து அவனை நோக்கி அவன் செல்லலாம் என கையசைத்தார். அவன் தலைவணங்கி பின்னடைந்தான்.

அவர் அவனை அழைத்தார். “இளையோனே” என்னும் நலிந்த குரல்கேட்டு அவன் நின்றான். “சொல்க, மெய்யாகவே நீ அவ்வண்ணம் எண்ணுகிறாயா?” அவன் “ஆம், மூத்தவரே. நாம் ஐவருமே ஆழத்திற்கு ஆழத்தில் ஒரு துளியினும் துளியாக அந்த ஆணவத்தை கொண்டுள்ளோம்… வென்றோம் என்னும் சொல்லாகக்கூட நாம் அதை திரட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அது அங்குள்ளது” என்றான் நகுலன். அவனை உறுத்து நோக்கியபடி அமர்ந்திருந்த யுதிஷ்டிரன் பின்னர் “மெய்தான்” என்றார். கசப்புடன் சற்றே சிரித்து “மெய்தான்…” என்றார். “மானுடனைப்போல் இழிந்த உயிர் இப்புவியில் இல்லை, இளையோனே” என்றார்.