பதிவர்: SS

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 85

84. நீர்ப்பாவை நடனம்

flowerசுபாஷிணி சைரந்திரியின் சிற்றறைக் கதவை மெல்ல தட்டி “தேவி… தேவி…” என்று அழைத்தாள். சில கணங்களுக்குப்பின் தாழ் விலக புறப்படுவதற்கு சித்தமாக ஆடையணிந்து சைரந்திரி தோன்றினாள். அவள் தோளில் கைவைத்து புன்னகைத்து “செல்வோம்” என்றாள். இடைநாழியினூடாக நடக்கையில் “என்னடி சோர்வு?” என்று சைரந்திரி கேட்டாள். சுபாஷிணி தலையசைத்தாள். “உன் கண்களில் துயிலின்மை தெரிகிறது. சில நாட்களாக நன்கு மெலிந்துவிட்டாய். கழுத்தெல்லாம் வரி வரியாக இருக்கிறது” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி தலைகுனிந்து நடந்து வந்தாள். அவள் தோளில் கைவைத்து “சொல், என்ன?” என்றாள் சைரந்திரி. “ஒன்றுமில்லை” என்றாள் சுபாஷிணி. அவள் தொண்டை அடைத்திருந்தது.

“என்னவென்று எனக்குத் தெரியும்” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி விழிகளைத் தூக்க “பெண்ணென்றால் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். கனி மடியில் உதிர்வதற்காகக் காத்திருப்பதே காதலில் அவளுக்கு வகுக்கப்பட்டுள்ள இடம்” என்றாள். சுபாஷிணி “ஐயோ, அதில்லை” என்று பதற்றத்துடன் சொல்லத் தொடங்க அவள் தோளை மெல்ல தட்டி சிரித்தாள் சைரந்திரி. சுபாஷிணி தலைகுனிந்தாள். ஏனென்று தெரியாமல் அவளுக்கு கண்ணீர் வந்தது.

இருவரும் படிகளில் இறங்கியபோது அங்கே இரு சேடியர் காத்து நின்றிருந்தனர். ஒருத்தி சைரந்திரியிடம் “அரசி கிளம்பிவிட்டார். தங்களை அங்கு வரச்சொன்னார்” என்றாள். “அங்கா?” என்றபின் ஒருகணம் எண்ணி “நன்று, அங்கு செல்வோம்” என்றாள். அவர்கள் நடக்கையில் சுபாஷிணி மெல்ல “எங்கு செல்கிறோம்?” என்றாள். “மருத்துவநிலையில் இளவரசர் உத்தரர் இருக்கிறார். அவரைப் பார்க்க அரசி செல்கிறார்கள். இளவரசியும் அங்கு வரக்கூடும் என்றார்கள்” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி “கலிங்க நாட்டுச் செய்தி வந்துள்ளது என்று அறிந்தேன்” என்றாள். சைரந்திரி “ஆம், இங்கு அனைவரும் எதிர்பார்த்திருந்ததுதான்” என்றாள்.

“இளவரசர் துயருற்றிருப்பார் என்று நினைக்கிறேன். எப்போதும் அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.” சைரந்திரி சுபாஷிணியைப் பார்த்து புன்னகைத்து “துயரை வெல்வதற்கு அவர் தனக்குரிய வழியை கற்றுக்கொண்டிருக்கிறார். இங்கிலாத உலகில் வாழ்பவர்களுக்கு இங்குள்ள துயர்கள் சென்று சேர்வதில்லை” என்றாள். “இன்று இளவரசரின் பிறந்தநாள் என்று சேடி சொன்னாள்” என்றாள் சுபாஷிணி. அந்த உரையாடல் அவள் உள்ளத்தை எளிதாக்கவே அவள் தொடர்ந்து பேச விரும்பினாள். “வழக்கமான குலதெய்வப் பூசனைகள் வேண்டியதில்லை என்று அரசர் ஆணையிட்டுவிட்டதாக சொன்னார்கள்.”

“ஆம்” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி “போர் முரசு முழங்கிவிட்டதால் எந்த விழவும் கொண்டாட வேண்டாமென்பது அமைச்சரின் ஆணை. ஆகவே சென்ற ஆண்டு போலன்றி இந்த ஆண்டு இளவரசரின் பிறந்த நாள் எளிதாக கடந்து செல்கிறது. பேரரசி புலரியிலேயே கொற்றவை ஆலயத்திலும் மூதன்னையர் ஆலயத்திலும் வழிபட்டு முடித்து மலர் கொண்டுவந்திருக்கிறார். இளவரசியும் ஆலயங்களில் இளவரசருக்காக வணக்கமும் வேண்டுதலும் செய்திருப்பார் என்றாள் தலைமைச்சேடி சுதார்யை” என்றாள். சைரந்திரி புன்னகையுடன் “நாமும் ஏதாவது வேண்டுதல் செய்ய வேண்டுமல்லவா?” என்றாள்.

சுபாஷிணி சிரித்து “நாமா? நாம் எதற்கு? செய்வதென்றால்கூட அதற்கு இப்போது பொழுதில்லையே?” என்றாள். சைரந்திரி சுற்றும்முற்றும் பார்த்தபின் அங்கு தூணில் தொங்கிய மலர்த்தோரணத்தைப் பார்த்து “அந்த மலர் மாலையை எடு” என்றாள். “இதையா? இது சற்று வாடியிருக்கிறதே?” என்றாள். “தாழ்வில்லை, எடு” என்றாள் சைரந்திரி. “ஒரு தாலம் கொண்டு வா.” சுபாஷிணி சிரித்து “அய்யோ” என்றாள். “கொண்டு வாடி.” சுபாஷிணி அப்பால் ஒரு அறைக்குள் இருந்த தாலத்தை பார்த்தபின் சிரித்தபடி ஓடிச்சென்று அதை எடுத்து வந்தாள். அதில் அந்த மலர் மாலையை சுழற்றி வைத்து “இது போதும்” என்றாள் சைரந்திரி. “பார்த்ததுமே தெரிந்துவிடும்” என்றாள் சுபாஷிணி. “அவருக்குத் தெரியாது” என்றாள் சைரந்திரி. உடன்வந்த சேடியர் சிரித்துக்கொண்டிருந்தனர். “சிரிக்கவேண்டாம்” என்றாள் சைரந்திரி.

அவர்கள் மருத்துவநிலைக்குச் சென்றபோது இடைநாழியில் காவல் பெண்டுகள் நின்றிருந்தனர். சைரந்திரியைக் கண்டதும் தலைவணங்கி உள்ளே ஆற்றுப்படுத்தினர். சைரந்திரியும் சுபாஷிணியும் உடன்சென்ற சேடியரும் மருத்துவசாலைக்குள் நுழைந்து அதன் இடைநாழியில் நடந்தார்கள். அவர்களை எதிர்கொண்ட மருத்துவ உதவியாளன் “இளவரசர் முதன்மை அறையிலிருக்கிறார்” என்றான். சைரந்திரி தலையசைக்க அவன் “நானே அழைத்துச்செல்கிறேன்” என்றான். அவன் முகமே காமத்தின் மடமை வெளிப்படும் சிரிப்பு கொண்டிருந்தது. “மருத்துவ உத்தரர்” என்றாள் சுபாஷிணி. சேடியர் சிரிக்க அவன் திரும்பி “என்ன சொன்னீர்கள்?” என்றான். “உத்தரரின் மருத்துவர் நீங்கள் என்றேன்.” அவன் “ஆம், நான் அவரை இரவில் பார்த்துக்கொள்கிறேன்” என்றான்.

அறைக்குள் நுழையும்போது சைரந்திரி உத்தரனின் உரத்த குரலை கேட்டாள். “அவர்களுக்கு ஏன் துணிவு வந்தது என்று தெரியும். அழிவு துணிவைத்தான் முதலில் கொண்டுவருகிறது என்பார்கள். விராடபுரியுடன் எதிர்த்து எவர் வெல்ல முடியும்? மாமன்னர் நளன் பயிற்றுவித்த புரவிகள் நம்மிடம் உள்ளன. நமது வல்லமை எதுவென்று நாமறியாவிட்டாலும் நம்மிடம் தோற்று அஞ்சி ஒடுங்கியிருக்கும் ஷத்ரியர் அனைவருக்கும் தெரியும்” என்றான் உத்தரன். “இதுவும் நன்றே. நமக்கு நம் ஆற்றலை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. உண்மையை சொல்லபோனால் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பெரும்போர் நிகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் படைகளின் உள ஆற்றலும் நம்பிக்கையும் குறையும். படைப்பயிற்சியென்பது வெறும் விளையாட்டென எண்ணிக்கொள்வார்கள்.”

“இன்றைய மெய்ப்பாடு வீரம் போலிருக்கிறது” என்றாள் சுபாஷிணி. “நேற்று முழுக்க காவியத் துயரம்.” சேடியர் சிரித்தனர். “இப்போரை நமது தெய்வங்கள் நமக்கு அளித்தன என்று கொள்வோம். இதில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை. விராடம் அதன் மூதன்னையரால் மூதாதையரால் குலதெய்வங்களால் மும்முறை வாழ்த்தப்பட்டது.” அவர்கள் உள்ளே நுழைகையில் சுபாஷிணி தாழ்ந்த குரலில் “எங்கோ உளப்பாடம் செய்திருக்கிறார் போலும்” என்றாள். விழிகளால் குரல் எடுத்துப் பேசாதே என்பதுபோல் அவளை அடக்கிவிட்டு சைரந்திரி உள்ளே நுழைந்தாள்.

உத்தரனைச் சுற்றி பெண்கள் அமர்ந்திருந்தனர். காலடியில் சிலர் அமர்ந்திருக்க சிலர் சுவர் சாய்ந்து நின்றிருந்தனர். உத்தரன் “கீசகன் கொல்லப்பட்டதால் அஸ்தினபுரி ஊக்கமடைந்திருக்கிறது. ஆனால் விராடபுரியின் ஒவ்வொரு நிஷாதனும் ஒரு கீசகன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அதை அவர்களுக்கு இந்தப் போர் கற்பிக்கும்” என்றான். சைரந்திரியைப் பார்த்ததும் புன்னகைத்து “வருக!” என்றபின் “நான் அணுகிவரும் போரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

சைரந்திரி “தங்களுக்காக வேண்டிக்கொண்டேன், இளவரசே” என்றபின் மலர்த்தாலத்தை நீட்டினாள். உத்தரன் அதை வாங்கி கண்களில் ஒற்றி அப்பால் வைத்துவிட்டு செல்லச் சலிப்புடன் “காலையிலிருந்து எனக்கான வேண்டுதல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒருகணமும் ஓயாது பெண்டிரின் வேண்டுதல்கள் நம் மூதாதையரிடம் சென்று கொண்டிருப்பதைக் கண்டால் அவர்கள் எரிச்சலுற்று என்னை மேலும் சில நாட்கள் இங்கே படுக்க வைத்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது” என்றான். “தங்கள் கால்வலி குறைந்திருக்கிறதா?” என்றாள் சைரந்திரி. உத்தரன் “வலி இருக்கிறது. காரகனைப்போன்ற புரவியில் ஊர்வதென்பது சினம்கொண்ட சிம்மத்தின்மேல் செல்வது. நான் விழுந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. கொட்டிலில் வருந்தியபடி உடல் சிலிர்த்து கால்மாற்றி துயருற்று நின்றிருக்கிறான் என்றார்கள். சற்று நடக்க கால் ஒப்பும்போது சென்று பார்த்து அவனை ஆறுதல்படுத்த வேண்டும்” என்றான்.

சைரந்திரி அவன் காலருகே நின்றாள். “நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? போர்! ஆம், இந்தப் போரில் நிஷாதர்கள் யாரென்பது ஷத்ரியர்களுக்கு தெரியவரும். அது அவர்கள் ஒருநாளும் மறக்காத பாடமாக அமையும்.” சைரந்திரி “போருக்கு யார் படைத்தலைமை ஏற்பது என்பதுதான் பேச்சாக இருக்கிறது” என்றாள். “யார் படைத்தலைமை ஏற்றால் என்ன? ஒவ்வொரு நிஷாதனும் ஒரு படைத்தலைவன் போலத்தான்” என்றான் உத்தரன். சுபாஷிணி “இளைய விராடர் படைத்தலைமை ஏற்கக்கூடுமென்று ஒரு பேச்சிருக்கிறது” என்றாள். உத்தரன் முகம் மலர்ந்து அவளை நோக்கி “ஆம், நான்தான் இயல்பாகவே விராடத்தின் படைத்தலைவன்” என்றான்.

“காலையிலிருந்தே அமைச்சரும் படைத்தலைவரும் வந்து என்னிடம் இதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு எனக்குப் புரிகிறது. உண்மையை சொல்லப்போனால் நான் உடல் தேறி வரவேண்டுமென்று வேண்டுதல் எழுவதற்கு ஏதுவாக அமைவது அந்த எதிர்பார்ப்புதான். என் கால் சற்றே நலம்கொண்டுவிட்டிருந்தால் இந்நேரம் கோட்டை முகப்பில் படைகளை சூழ்கைக்காக நிரைப்படுத்திக்கொண்டிருப்பேன். நாளை புலரியில் படைகளுக்கு முன்னால் எனது கரும்புரவியில் தலைமை தாங்கி சென்றுகொண்டிருப்பேன்” என்றான் உத்தரன். “என்ன செய்வது? இது ஊழ்.”

“கால்வலி இருந்தாலும் தேரில் அமர்ந்து செல்லலாமே?” என்றாள் சைரந்திரி. “ஆம், தேரில் செல்வதற்கு இப்போது எந்தத் தடையும் இல்லை. ஆனால் யார் தேர் ஓட்டுவது? நான் இரு கைகளாலும் அம்பு விடுபவன். பாரதவர்ஷத்தில் அஸ்தினபுரியின் விஜயனுக்குப் பிறகு சவ்யசாஜி நானே என்று சூதர் பாடிய பாடலை நினைவுறுகிறாயா?” என்றான். சேடி ஒருத்தி “பிரஃபூதர் எழுதிய காவியம்” என்றாள். “ஆம், பிரஃபூதர் எழுதிய காவியம்” என்று அவன் சைரந்திரியிடம் சொன்னான். சுபாஷிணி “அவரா? அவர் கவிதையெழுதுவாரா? அடைப்பக்காரர் அல்லவா?” என்றாள். உத்தரன் சினத்துடன் “அவர் அடைப்பக்காரர் மட்டும் அல்ல” என்றபின் “என்னை வைத்து திறம்பட ஓட்டும் தேரோட்டிகளே இங்கில்லை. இதுதான் உண்மை” என்றான். “மெய்” என்றாள் சைரந்திரி.

உத்தரன் மேலும் ஊக்கம் கொண்டு “உண்மையை சொல்லப்போனால் அஸ்தினபுரியின் அர்ஜுனனைப் போன்ற ஒரு தேரோட்டி எனக்குத் தேவை. அவர் எனக்கு தேரோட்டுவார் என்றால் எனக்கு படைத்துணையே தேவையில்லை. தனியொருவனாகச் சென்று மச்சர்களின் அந்த எலிக்கூட்டத்தை சிதறடித்து மீள்வேன்” என்றான். “அவர்தான் இப்போது இல்லையே” என்றாள் சுபாஷிணி. “ஆம், அதைத்தான் சொல்ல வருகிறேன். அவர் இல்லை. அவருக்கு நிகரானவர்களும் இல்லை. தேரோட்ட ஆளில்லாமல் இதோ இங்கு நான் படுத்திருக்கிறேன்.” சுபாஷிணி “ஆனால் அனைத்து இடர்களையும் கடந்து சென்று வெல்வதுதானே வீரர்களின் கடமை?” என்றாள்.

“ஆம். அதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். புரவியில் நான் செல்ல இயலாது, தேரோட்ட ஆளில்லை. அப்படியென்றால் எப்படி இந்தப் போரை நான் நடத்த முடியும்?” என்றான். “எப்படி?” என்றாள் சுபாஷிணி. “முடியும்” என்று அவன் புன்னகைத்தான். “படைக்கலங்களால் செய்யப்படுவதல்ல போர்” என்றான். சுபாஷிணி “விலங்குகளால் செய்யப்படுவதோ?” என்றாள். சேடிகள் சிரிக்க “அறிவிலாது பேசலாகாது. போரென்பது அறிவை படைக்கலமாகக் கொண்டது. படைக்கலமேந்தி களம் நின்று போராடுவது இரண்டாம் கட்டம். படைசூழ்கையை வகுப்பதில் உள்ளது படைத்தலைவரின் திறன்” என்றான்.

“ஆம், அதற்கு படைத்தலைவர்கள் வேண்டுமே?” என்றாள் சுபாஷிணி. “நான் இருக்கிறேன். படைகளை நான் நடத்துவேன். அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றான் உத்தரன். இன்று மாலையே போருக்கான அறிவிப்பு வந்துவிடுமென்றார்கள்” என்றாள் சைரந்திரி. “ஆம், போர்முரசுதான் கொட்டிவிட்டதே? உச்சிப்பொழுதுக்குள் படை ஒத்திகை முடிந்துவிடும்” என்று உத்தரன் சொன்னான். “நாளை புலரியில் படைகள் கிளம்புகின்றன. அரசாணையை அந்தியில் கொற்றவை பூசனைக்குப் பிறகு அவையில் வெளியிடலாம் என்று ஆபர் என்னிடம் சொன்னார். படை ஒத்திகை முடிந்தவுடனே அதை வெளியிடுவதுதான் சிறந்தது என்றேன். ஏன்?”

“ஏன்?” என்றாள் சைரந்திரி. “கேள், சொல்கிறேன். வீரர்கள் தங்கள் இல்லம் திரும்பி குழந்தைகளிடமும் மனைவியிடமும் விடைபெற்று அந்திக்குள் படைமுகாம்களை வந்தடைந்துவிடலாம். இன்று முன்னிரவிலேயே அவர்கள் படுத்து நன்கு துயின்றார்கள் என்றால்தான் நாளை காலையில் புத்துணர்வுடன் கிளம்பமுடியும். ஆபர் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். திறமையானவர்தான். ஆனால் படைகளின் உள்ளம் அவருக்குத் தெரியாது. அதை பிறிதொரு படைவீரனால்தான் புரிந்துகொள்ள முடியும்.”

flowerஅரசியும் இளவரசியும் வருவதை ஏவலன் வந்து அறிவித்தான். சைரந்திரி எழுந்து நின்றாள். வலம்புரிச்சங்கின் ஒலி கேட்டது. சுதேஷ்ணை கையில் தாலத்துடன் வந்தாள். தொடர்ந்து உத்தரை வந்தாள். அவர்கள் தாலங்களை அவனுக்கு அளிக்க அவன் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு அப்பால் வைத்தான். கொற்றவையின் குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்து “நூறாண்டு வாழவேண்டும்” என்றாள் சுதேஷ்ணை. “தங்கள் வாழ்த்துக்கள் நலம் கொணரட்டும், அன்னையே” என்றான் உத்தரன். உத்தரையும் அவனுக்கு செந்தூரமிட்டு வாழ்த்தினாள்.

“படைப் புறப்பாட்டைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்” என்றான் உத்தரன். “இன்று விராடத்தின் மிகப் பெரிய இக்கட்டே என் உடல்நிலைதான். படைகளை தலைமைதாங்க ஆளில்லை. என்ன செய்வது? நான் இங்கிருந்தே படைசூழ்கையை அமைக்கலாமென்று சொல்லிக்கொண்டிருந்தேன்.” உத்தரை “தாங்கள் முதற்படைத்தளபதியாக முன்செல்வதாக அரசாணை” என்றாள். “நானா? என்னால் எழுந்து அமரவே முடியாதே? தவறான செய்தி” என்றான். உத்தரை “அல்ல” என்றாள். “அரசாணையை படித்து நோக்கியபின்புதான் வருகிறேன்.”

உத்தரன் படபடப்புடன் எழுந்தமர்ந்து “என்ன சொல்கிறாய்?” என்றான். “தாங்கள்தான் படைநடத்தி செல்லப்போகிறீர்கள், மூத்தவரே” என்றாள். “நானா? நான் எப்படி? என்னால் வலியை தாங்கமுடியாமல் படுத்திருக்கிறேன். நேற்றிரவெல்லாம் இறந்துவிடுவேன் என்றே ஐயுற்றேன்” என்றான். “வேண்டுமென்றால் மருத்துவரிடம் கேள். உண்மையில் என்னால் இப்போதுகூட அசையமுடியவில்லை. எலும்புகள் உடைந்து நொறுங்கியுள்ளன.”

“எப்படியாயினும் அரசகுடியைச் சேர்ந்த ஒருவர்தான் படைநடத்திச் செல்லமுடியும். தாங்கள் முன்னால் சென்றால்தான் படைவீரர்கள் ஊக்கம் கொள்வார்கள். அரசகுடி அரண்மனையில் அமர்ந்துகொண்டு படைகளை மட்டும் அனுப்பினால் அது இழிசொல்லுக்கு இடமாகும். அதை எண்ணியே தாங்கள் படைநடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்றாள் சைரந்திரி. “என்னை கேட்காமல் எப்படி அறிவிக்கலாம்? என்னிடம் எவருமே எதையும் சொல்லவில்லையே? இதென்ன அறமின்மை? இதை தட்டிக்கேட்க ஆளில்லையா?” என்று உத்தரன் கூச்சலிட்டான்.

“இல்லையே, ஆபர் வந்து தங்களிடம் சொன்னார் என்றார்களே?” என்றாள் சைரந்திரி. “ஆம், ஆபர் சொன்னார். ஆனால் என்னால் இயலாது. என் கால் இன்னும்   சீரடையவில்லை என்று நான் சொன்னேன். மருத்துவரை அழைத்து அவரிடம் விளக்கச்சொன்னேன். மருத்துவரே அவரிடம் விரிவாக விளக்கினார்.” சைரந்திரி “யார், வெளியே நின்றிருக்கிறாரே, அவரா?” என்றாள். “ஆம், சுக்ரன் என்று பெயர். திறன்கொண்டவன்.” சைரந்திரி “தெரிகிறது” என்றாள். சுபாஷிணி “தாங்கள் தேரில்தான் செல்லப்போகிறீர்கள்” என்றாள். “தேரில் செல்லலாம், ஆனால் தேரை யார் ஓட்டுவது? பயிலாத ஓட்டுநர் ஓட்டினால் படைக்களத்தில் நான் எப்படி போர்புரிய முடியும்? என் திறனுக்கு நிகரான பாகன் வேண்டாமா?”

உத்தரை “எனது ஆசிரியர் பிருகந்நளை தேரை ஓட்டுவார்” என்றாள். சுதேஷ்ணை “அவளா? அவள் ஆணிலி அல்லவா?” என்றாள். “ஆம்! ஒரு ஆணிலி என் தேரை ஓட்டலாகாது. அது எனக்கு இழுக்கு. நாளை நூல்களில் ஆணிலியை முன்னிறுத்தி போர்புரிந்தான் என்று என்னைப்பற்றி சொல்வார்கள்” என்றான். “அவர் ஆண் உரு தாங்கி வருவார். அவரென்று எவருக்கும் தெரியாது” என்றாள் உத்தரை. “எனக்குத் தெரியுமே? அந்த இழிவை என்னால் தாங்க முடியாது. அவள் வேண்டியதில்லை. நான் மறுக்கிறேன்… உயிர்போனாலும் அவள் ஓட்டும் தேரில் நான் ஏறமாட்டேன்” என்றான் உத்தரன்.

சுதேஷ்ணை “ஆம், அவனுக்கு உவப்பில்லாத ஒருவர் தேரை ஓட்டினால் அவனால் போரிட முடியாது” என்றாள். உத்தரை சினத்துடன் அன்னையை நோக்கி “அன்னையே, தாங்கள் சற்று வாயை மூடிக்கொண்டிருங்கள். உங்கள் மைந்தனை இவ்வண்ணம் ஆக்கியதே உங்கள் அறியாமைதான்” என்றாள். ஒருகணம் அறியாமல் சைரந்திரியை திரும்பி நோக்கியபின் முகம் சிவந்து எழுந்த சுதேஷ்ணை “என்னடி பேசுகிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா?” என்றாள். “விராடரின் மனைவியிடம், விராடபுரி அரசியிடம் பேசுகிறேன். அரசிபோல பேசும்படி கோருகிறேன். அகத்தளத்துப் பெண்டிரின் குரலில் பேசுவது அரசிக்கு எந்த வகையிலும் உகந்ததல்ல” என்றாள் உத்தரை.

அரசி உடல்பதற மீண்டும் சைரந்திரியை பார்த்துவிட்டு “இதெல்லாம் யார் சொல்லி எழும் சொற்களென்று எனக்குத் தெரியும். நான் பார்க்கிறேன்” என்றாள். பிறகு மூச்சு ஏறி இறங்க கைகள் பதைக்க சொல்லுக்காக தத்தளித்தபின் “என் மைந்தனை ஆணிலி கொண்டுசெல்லவேண்டாம்” என்றாள். “ஆணிலியாக இருப்பதைவிட அது ஒன்றும் இழிவில்லை” என்றாள் உத்தரை. “என்னடி சொல்கிறாய்?” என்று சுதேஷ்ணை கூவினாள். “ஆம், இவர் ஒரு போருக்காவது சென்றால் விராடத்தின் இழந்த மதிப்பு சற்றாவது மீளும்.”

“என் மைந்தன் போர்முனையில் சாக நான் விடமாட்டேன். அனைவரும் அறிவார்கள் அவனுக்கு போர் தெரியாதென்று. எவரோ வஞ்சம்கொண்டு அவனை வேண்டுமென்றே படைமுகப்புக்கு அனுப்புகிறார்கள்” என்றாள் சுதேஷ்ணை. உத்தரன் “ஆம், அன்னையே. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. என்னை கொல்ல நினைக்கிறார்கள்…” என்றான். “என் மைந்தன் உயிர் பிரிந்தால் இந்த நாடு வேறு சிலர் கைகளுக்கு செல்லும். பெண்கொள்ள வருபவர்கள் இந்நாட்டை கைப்பற்றுவார்கள்…” என்றபின் அவள் சீற்றத்துடன் உத்தரையை நோக்கி “அதுதான் இச்சூழ்ச்சியின் பின்னால் உள்ள எண்ணம்” என்றாள்.

உத்தரன் உத்தரையை நோக்கி “நீதான் தந்தையிடம் சொன்னாயா, நான் படைநடத்திச் செல்லவேண்டுமென்று?” என்றான். உத்தரை ஏளனத்துடன் உதடு வளைய “எவர் சொன்னாலும் சொல்லாவிடினும் தாங்கள்தான் படைமுகம் செல்லவேண்டும். அது அரசாணை” என்றபடி எழுந்தாள். “நான் செல்லப்போவதில்லை. நான் எவர் ஆணையிட்டாலும் செல்லப்போவதில்லை” என்றான் உத்தரன். “நீ செல்ல வேண்டியதில்லை. நான் உன் தந்தையிடம் பேசிக்கொள்கிறேன்” என்றபின் சுதேஷ்ணை மீண்டும் சைரந்திரியை பார்த்தபின் திரும்பிக்கொண்டு “நான் இந்த நாட்டின் அரசி. இங்கு அரசருக்குப்பின் என் சொல்லே நெறியென்றாகும். நானே ஆணையிடுகிறேன்” என்று மூச்சிரைக்க சொன்னாள். கால்கள் அதிர்வொலி எழுப்ப திரும்பிச் சென்றாள். அவளுடன் சேடிகளும் சென்றனர்.

சைரந்திரி “அரசி சொன்னதை தாங்கள் ஏற்கிறீர்களா? தங்களைப்போன்ற பெருவீரர் படைமுகப்பில் இறந்துவிடுவார்கள் என்கிறார்களே?” என்றாள். உத்தரன் கண்களில் நீர் தளும்ப குரல் தழுதழுக்க “அவர் சொன்னதுதான் உண்மை. என்னால் போர்புரிய முடியாது” என்றான். “சவ்யசாஜி என்றீர்கள்?” என்றாள் சுபாஷிணி. “அதெல்லாம் நான் வெறுமனே சொல்லிக்கொள்வது. மெய்யாகவே இதுவரை நான் ஒருமுறைகூட இலக்கில் அம்பை எய்ததில்லை. படைமுகம் சென்றால் எழும் முதல் அம்பிலேயே தேர்த்தட்டில் இறந்துவிழுவேன்” என்றான்.

சைரந்திரியின் கைகளைப்பற்றியபடி “சைரந்திரி, உன் சொற்களை அரசர் கேட்பார். நீ சென்று சொல், என்னை இழந்துவிடவேண்டாம் என்று” என்றான். அவன் கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. மூக்கை உறிஞ்சி மேலாடையால் துடைத்தபடி “இளவரசனாகப் பிறந்ததனால் நான் களம் சென்று சாக வேண்டுமா என்ன? இளவரசுப் பதவியை துறக்கிறேன். எங்காவது ஓடிச்சென்று எளிய குதிரைக்காரனாக வாழ்ந்துகொள்கிறேன்” என்றான். உத்தரை எழுந்து ஏளனத்துடன் “குதிரைக்காரனாக வாழவேண்டுமென்றால் குதிரை ஏறத் தெரியவேண்டுமல்லவா? அது தெரிந்தால் எப்படி இப்படி விழுந்து கால் ஒடிந்து கிடப்பீர்கள்?” என்றாள்.

உத்தரன் வெறிகொண்டு “நீதான் என்னை கொல்லப்பார்க்கிறாய்! நான் செத்தால் என் நாடு உனக்கென்று திட்டமிடுகிறாய்” என்று கூவினான். நரம்புகள் புடைக்க பற்களைக் கடித்து கைநீட்டியபடி “கலிங்கத்து இளவரசி என்னை மணக்கமாட்டாளென்று சொன்னதே உன்னால்தான். உனது ஒற்றர்கள் என்னைப்பற்றி பிழையான செய்திகளை அவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். உத்தரை சினத்துடன் சிரித்து “என்ன பிழையான செய்திகள்? புரவியிலிருந்து உருண்டு அவர்கள் காலடியில் விழுந்து கிடந்ததா? அதை நான் சொல்லித்தான் அவர்கள் அறிந்தாக வேண்டுமா?” என்றாள்.

“அது விபத்து. அது அவர்களுக்கும் தெரியும். என்னைப்பற்றி நீ என்ன சொன்னாய் என்று நான் விசாரித்து தெரிந்துகொள்ளத்தான் போகிறேன்” என்றான். உத்தரை “அதெல்லாம் பிறகு. நாளை புலரியில் நீங்கள் தேர் ஏறி போருக்குச் செல்கிறீர்கள்… இது உறுதி” என்றாள். “செல்லப்போவதில்லை. மாட்டேன்… எவர் சொன்னாலும் உடன்பட மாட்டேன்” என்றான். அவள் எழுந்துகொண்டு திரும்ப “என்னை வற்புறுத்தினால் நான் உயிர்துறப்பேன்” என்று கூவினான். “நன்று! களம்சென்று உயிர்துறவுங்கள்…”  என்றபடி உத்தரை தன் தோழிகளிடம் வரும்படி தலையாட்டிவிட்டு நடந்து சென்றாள்.

உத்தரன் “நான் என்ன செய்வேன்? அனைவரும் சேர்ந்து என்னை கொல்லப்பார்க்கிறார்கள்” என்றபின் உரத்த குரலில் விசும்பி அழத்தொடங்கினான். சுபாஷிணி சிரிப்பை அடக்குவதற்காக உதடுகளைக் கடித்தபடி சாளரத்தை பார்த்தாள். சைரந்திரி உத்தரனின் தலையை கையால் தொட்டு “இளவரசே, எனது சொற்களை நம்புகிறீர்களா?” என்றாள். “உன்னை நம்புகிறேன். இந்த இக்கட்டிலிருந்து என்னை நீ காப்பாற்ற முடியும்” என்றான் உத்தரன். “அப்படியானால் இது என் சொல். இந்தப் போரில் நீங்கள் இறக்கப்போவதில்லை. வென்று மீளப்போகிறீர்கள். இந்த நகரம் உங்கள்மேல் அரிமலர் வீசி வாழ்த்தி கொண்டாடப்போகிறது. பெருவீரர் என்ற பெருமை உங்களுக்கு இந்தப் போரால் அமையும். நீங்கள் இழந்த கலிங்கத்து இளவரசி உங்களை நாடி வருவாள். நம்புங்கள்” என்றாள்.

“அது எப்படி? உண்மையில் எனக்கு ஒன்றுமே தெரியாது. என் எதிரே ஒருவர் வாளை உருவினாலேயே என் நெஞ்சு திடுக்கிடுகிறது” என்றான் உத்தரன். “உங்களை பிருகந்நளை அழைத்துச் செல்வாள் அல்லவா, அவளை நம்புங்கள்” என்றாள் சைரந்திரி. “அந்த ஆணிலியை…” என்று அவன் தொடங்க “அவளுக்கு விஜயன் என்னும் கந்தர்வனின் துணை உண்டு. அவன் போரை நிகழ்த்துவான்” என்றாள் சைரந்திரி. “கந்தர்வனா? அதை எப்படி நம்புவது?” என்றான் உத்தரன். “நம்புங்கள்… அவளிலிருந்து அந்த கந்தர்வன் வெளிப்படுவான். பாரதவர்ஷத்தின் எந்தப் பெருவீரனும் அவள் முன் நிற்க முடியாது” என்றாள்.

உத்தரன் கேவலோசை எழுப்பினான். “அவள் முன் நிற்கும் தகுதி படைத்தவர் ஒருவரே. அங்கநாட்டார் கர்ணன். அவர் இப்போது உகந்த உள நிலையில் இல்லை. மச்சர் படைகள் அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டவையும் அல்ல. தாங்கள் வென்று மீள்வீர்கள்” என்றாள் சைரந்திரி. “என்னால் நம்ப இயலவில்லை” என்றான் உத்தரன். “என் சொற்களை நம்புங்கள். பிருகந்நளையை நம்புங்கள்” என்றாள் சைரந்திரி. உத்தரன் மஞ்சத்தில் குப்புறக் கவிழ்ந்து தலையணையில் முகம் புதைத்து தோள்கள் குலுங்க அழுதுகொண்டிருந்தான். அவன் தலையை மெல்ல தொட்டபின் செல்வோம் என்று விழிகாட்டினாள் சைரந்திரி.

வெளியே செல்லும்போது சுபாஷிணி “அரசரிடம் இளவரசரை எப்படியாவது தவிர்த்துவிடச் சொல்லுங்கள், தேவி” என்றாள். “ஏன்?” என்றாள் சைரந்திரி. “அவர் அழுவதைக் காணும்போது உளம் நெகிழ்கிறது” என்றாள் சுபாஷிணி. சைரந்திரி புன்னகையுடன் “பார்ப்போம்” என்றாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 84

83. படைமுகம்

flowerவிராடர் தன் அருகே இருந்த பீடத்தை கையால் அறைந்து “சூக்தா, மூடா, உள்ளே வா” என்றார். கதவைத் திறந்து உள்ளே வந்த காவலனிடம் “சாளரக் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென்று உன்னிடம் சொன்னேன் அல்லவா? யார் மூடியது கதவுகளை? என்னை இங்கே சிறையா வைத்திருக்கிறீர்கள்? மூடர்கள், அறிவிலிகள்” என்றார். வீரன் திகைப்புடன் திரும்பிப் பார்த்தபோது அறையின் நான்கு சாளரங்களின் இரு கதவுகளில் ஒன்று மூடியிருப்பதை கண்டான். காற்று வீசி அது மூடியிருக்கிறதென்று தெரிந்துகொண்டு பணிவுடன் “திறந்துவைக்கிறேன், அரசே” என்றபின் அதை திறந்து வைத்தான். கட்டையைச் சுழற்றி அது மீண்டும் மூடாமல் அமைத்தபின் வெளியே சென்றான்.

“மூடர்கள்… சொல்லறியா வீணர்கள்” என்றபின் விராடர் எழுந்து அறைக்குள் நடந்தார். மீண்டும் பீடத்தை கையால் தட்டி “உள்ளே வா… மூடா… இழிமகனே” என்றார். வீரன் உள்ளே வந்து தலைவணங்கினான். “உன்னை வரச்சொல்லவில்லை. சேடியர் எவருமில்லையா அங்கு?” என்றார். “சேடி சற்று அப்பால் இருக்கிறார். அழைக்கிறேன்” என்றான். “சேடி அங்கே என்ன செய்கிறாள்? அவள் தலையை வெட்டிவீச ஆணையிடுவேன்… ஆணவக்காரர்கள்… கீழ்மக்கள்” என்று விராடர் கூச்சலிட்டார். “முதலில் உன்னை அழைத்தேனா என்று தெரிந்துகொண்டு வா.” அவன் தலைவணங்க “போ!” என்றார். அவன் மீண்டும் தலைவணங்கி வெளியே சென்றான்.

சற்று பொறுத்து வந்த சேடி கதவருகே நின்று தலைவணங்கினாள். “அழைத்தால் வரமாட்டாயா? வேறென்ன வேலை பார்க்கிறாய் இங்கு? பிள்ளைபெற்றுப் பெருக்கவா இங்கே இருக்கிறாய்? நீ என்ன பன்றியா? கீழ்மகளே” என்றார். அவள் தலைகுனிந்து நிற்க “மது கொண்டு வா… போ” என்றார். அவர் அருகே அமர்ந்திருந்த ஆபர் மெல்ல அசைந்தார். அவர் இருப்பதை அப்போது உணர்ந்து “மது வேண்டியதில்லை. இன்நீர் கொண்டு வா. சூடாக இருக்கவேண்டும்” என்றார். அவள் தலைவணங்கி வெளியே சென்று கதவை மூடினாள்.

ஆபர் “பதற்றம் கொள்ள ஏதுமில்லை, அரசே. இதை நாம் உரிய முறையில் முடித்துக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார். “என்ன வாய்ப்புகள்? இதுவரை கங்கைக்கரை ஷத்ரியர்களிடம் எந்தப்  பூசலுமில்லாமல் சென்றுகொண்டிருந்தது நமது அரசியல், நாம் இருப்பதே அவர்களுக்குத் தெரியாததுபோல. அத்துடன் நமது படைகளை வழிநடத்த கீசகன் இருந்தான். அவனது ஆற்றல் இங்கு அனைவருக்கும் தெரியும்” என்றார் விராடர். “ஆம், கீசகர் திறன்மிகுந்த படைத்தலைவர்தான். ஒருமுறை சதகர்ணிகளை அவர் வென்றதை இன்னமும் சூதர்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் ஆபர்.

அதிலிருந்த உட்குறிப்பை உணர்ந்து விராடர் மேலும் சினம்கொண்டார். “ஆம், அவன் அடைந்தது ஒரேயொரு படைவெற்றியைத்தான். ஆனால் அது போதும் அவன் யாரென்று காட்ட. விராடநாடு தொல்புகழ் கொண்டதல்ல. ஒருங்கிணைந்த படைவல்லமை அதற்கில்லை சதகர்ணிகளைப்போல. அவ்வளவு பெரிய படைக்கூட்டுகளை வென்று வருவதென்றால் அது எளிய நிகழ்வு அல்ல” என்றார். தணிவாக “நான் மறுக்கவில்லை” என்றார் ஆபர். “ஆனால் அவரை எண்ணி எத்தனைபேர் அஞ்சினர் என்பதே ஐயமாக இருக்கிறது.” விராடர் “அஞ்சவில்லை. ஆனால் ஒரே படைவெற்றிதான் நம் கணக்கில் உள்ளது. அது அவனுடையது. அதற்குப்பின் இங்கே போர் நிகழவேயில்லை” என்றார். ஆபர் “அது உண்மை” என்றார்.

வீரன் கதவைத் திறந்து உள்ளே வந்து தலைவணங்கினான். “என்ன?” என்றார். “குங்கர்” என்றான். வரச்சொல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பிச்சென்று சாளரத்தருகே நின்றுகொண்டார் விராடர். குங்கன் உள்ளே வந்து அமைச்சருக்கும் அரசருக்கும் தலைவணங்கியபின் அங்கிருந்த சிறுபீடத்தில் அமர்ந்தான். ஆபர் “செய்தியை அறிந்திருப்பீர்கள்” என்றார். “முழு வடிவில் அறிய விருப்பம்” என்றான் குங்கன். “அஸ்தினபுரியின் படைகள் விராடபுரி நோக்கி வந்துகொண்டிருக்கின்றன” என்றார். “ஆம்” என்று குங்கன் சொன்னான். “இன்னும் இரண்டு நாட்களில் நமது எல்லைகளை அவர்கள் கடப்பார்கள்” என்றார் ஆபர்.

குங்கன் “அதற்கு முன்னரேகூட வந்துவிடக்கூடும்” என்றான். “நாம் ஒரு போருக்கு சித்தமாக இருக்கிறோமா? நமது படைகளை யார் வழிநடத்துவது?” என்றபின் ஆபர் அரசரை விழிசுட்டி “நிலைகுலைந்திருக்கிறார்” என்றார். குங்கன் அவரைப் பார்த்தபின் “அஞ்சுவதற்கேதுமில்லை” என்றான். விராடர் திரும்பி “அஞ்சாமல் இருக்க இயலாது. நான் படைநடத்துவதா அல்லது என் மைந்தன் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மூடனை அனுப்புவதா? விராடபுரியின் படைகள் போரைக் கண்டு பதினான்கு ஆண்டுகளாகிவிட்டன. வேலை எப்படி பற்றுவது என்றுகூட பலர் மறந்துவிட்டிருப்பார்கள். இன்றிருக்கும் படைகளில் புதிய தலைமுறையினர் எவரும் களம் கண்டவர்கள் அல்ல” என்றார்.

குங்கன் “உண்மை. ஆனால் வருபவை அஸ்தினபுரியின் முறையான படைகள் அல்ல. கங்கைக்கரை மச்சர்நாட்டு பகுதிகளில் கர்ணனும் துரியோதனனும் முதலைகளை வேட்டையாடும்பொருட்டு வந்திருக்கிறார்கள். அங்குள்ள மச்சர்களையும் சில சிறு நட்புப் படைகளையும் திரட்டிக்கொண்டு இப்படையெடுப்பை நிகழ்த்துகிறார்கள். இது வெல்வதற்கான போர் அல்ல. நம்மை அச்சுறுத்துவதற்கானது மட்டுமே” என்றான். விராடர் “எதற்காக நம்மை அச்சுறுத்தவேண்டும்?” என்றார். “அச்சத்தில் இங்கிருந்து சில உண்மைகள் வெளிப்படக்கூடும் என எண்ணுகிறார்கள்” என்றான் குங்கன். விராடர் ஐயத்துடன் நோக்க “அதை பின்னர் விளக்குகிறேன். ஆனால் அவர்கள் நம்மை மிகக் குறைவாக மதிப்பிட்டிருக்கிறார்கள். வருவது மிகச் சிறிய படை. நம்மால் எளிதில் அதை வென்றுவிட முடியும்” என்றான்.

விராடர் அவனைப் பார்த்தபின் “சிறிய படை என்று உம்மிடம் யார் சொன்னது?” என்றார். “சிறிய படை ஒன்றையே மச்சர்களிடமிருந்து திரட்ட முடியும். அத்துடன் வருபவர்களுக்கு இந்தப் பகுதியின் நிலமோ பாதைகளோ தெரியாது. கர்ணனும் துரியோதனனும் விந்தியப் பகுதிகளுக்கு படைகொண்டு வந்தவர்களல்லர்” என்றான். ஆபர் “ஆம், அப்படி சில வாய்ப்புகள் நமக்குள்ளன” என்றார். விராடர் உரக்க “என்ன வாய்ப்பு? வருபவை எலிகள் என்றாலும் சிம்மங்களால் தலைமை தாங்கப்படுகின்றன. கர்ணனைப்பற்றி தெரியாதவர் பாரதவர்ஷத்தில் எவர்?” என்றார்.

குங்கன் “அவன் இப்போது பழைய கர்ணன் அல்ல. நான் அறிந்தவரை பாண்டவர்கள் காடேகியபின் கர்ணன் பெரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உடல் நலிந்திருக்கிறான். பகலும் இரவும் தன் அரண்மனையில் மது மயக்கத்திலேயே அவன் இருக்கிறான் என்கிறார்கள். பதினான்காண்டுகளில் அவன் அஸ்தினபுரிக்குச் சென்றதோ அவையில் அமர்ந்ததோ இல்லை. அங்கநாட்டில் ஏரி வெட்டுவதையும் கால்வாய் திருத்துவதையும் மட்டும் செய்துகொண்டிருக்கிறான். அவன் படைக்கலம் தொட்டு பதினான்காண்டுகளாகின்றன என்கிறார்கள் ஒற்றர்கள்” என்றான்.

“ஒற்றர்களா? உமக்கா?” என்றார் விராடர். “சரி, சூதர்கள்” என குங்கன் புன்னகைத்தான். “பெருங்கொடையாளி என அவன் ஈட்டிய அத்தனை நற்பெயரும் அவைநடுவே நிகழ்ந்த பெண்ணிழிவாலும் பாண்டவர்களின் காடேகலாலும் அகன்றுவிட்டது. செல்லுமிடமெல்லாம் அவன் செவிகேட்க மக்கள் பழிச்சொல் உரைக்கிறார்கள். அவன் கையால் கொடை பெறமாட்டோம் என சூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவன் தங்கள் குழந்தைகளை தொடக்கூடாது என அவன் நாட்டின் அன்னையரே எண்ணுகிறார்கள். குடியால் அவன் உடல் நலிந்துள்ளது, உள்ளம் மேலும் நலிந்துள்ளது. ஒரு பயிலாப் படைத்திரளை அழைத்துக்கொண்டு தெரியாத நிலத்தில் படைசூழ்கை அமைக்கும் அளவுக்கு இன்று அவனுக்கு ஆற்றல் இருக்காது.”

விராடர் “இப்படியெல்லாம் நாம் எதையும் குறைத்து பேசிவிட வேண்டியதில்லை. விராடபுரி அஸ்தினபுரியின் பெருவீரர்களை எதிர்க்க முடியுமா முடியாதா என்பதுதான் நமது வினா” என்றார். “முடியும், வாய்ப்புள்ளது” என்றான் குங்கன். விராடர் குங்கனை நோக்கி “உமது இந்த உறுதி வியப்பளிக்கிறது” என்றார். ஆபர் “நாம் செய்வதற்கொன்றுமில்லை. அவரிடம் இதை ஒப்படைப்போம். முழுப் பொறுப்பையும் அவரே ஏற்று செய்யட்டும்” என்றார். “நம் இக்கட்டு ஒன்றே, நமக்கு படைத்தலைமை ஏற்க எவருமில்லை” என்றார் விராடர். ஆபர் “அதையும் அவரிடமே விடுவோம். எவர் தலைமை தாங்கவேண்டுமென்பதை அவர் முடிவெடுக்கட்டும்” என்றார்.

குங்கன் “உத்தரர் படைத்தலைமை ஏற்கட்டும்” என்றான். திடுக்கிட்டு “அவனா?” என்றார் விராடர். “அவரால் முடியும்” என்றான் குங்கன். “விளையாடதீர், குங்கரே” என்றார் விராடர். “அவரது தேரை பிருகந்நளை ஓட்டிச்செல்லட்டும்” என்றான் குங்கன். “அந்த ஆணிலியா? நடனம் கற்பிக்க வந்தவள் அவள்” என்றார் விராடர். “அவள் தேர்த்தொழிலில் தேர்ந்தவள். விற்தொழிலும் தெரியுமென்று அவள் கைகள் காட்டுகின்றன” என்றான் குங்கன். விராடர் நம்பிக்கையில்லாமல் தலையசைத்து “அவள் என்ன செய்யமுடியும்?” என்றார். “அவர்கள் என்ன செய்யவேண்டுமென்பதை இங்கிருந்து நான் வகுத்தளிக்கிறேன். அவர்கள் வென்று வருவார்கள்” என்றான் குங்கன்.

ஆபர் “இதற்கு முன்னரும் குங்கனை நம்பியிருக்கிறோம். அது நிகழ்ந்துள்ளது, அரசே” என்றார். விராடர் சலிப்புடன் தலையசைத்து “என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. நமக்கும் அஸ்தினபுரிக்கும் என்ன பூசல்? ஒரு எச்சரிக்கை செய்திகூட அவர்கள் அனுப்பவில்லை” என்றார். “அது குங்கருக்குத் தெரிந்திருக்கலாம்” என்றார் ஆபர். குங்கன் “அவர்களுக்கு பொழுதில்லை. இன்னும் ஒன்பது நாட்களுக்குள் அவர்கள் விராடபுரிக்குள் ஊடுருவ வேண்டும். பத்தாவது நாள் வந்தால்கூட பயனில்லை” என்றான். விராடர் “என்ன சொல்கிறீர்?” என்றார். “இது பின்னர் உங்களுக்கு புரியும்” என்றான் குங்கன்.

விராடர் களைப்புடன் பீடத்தில் அமர்ந்து “முற்றிலும் புரியவில்லை. குடித்துக் குடித்து மதி மழுங்கிவிட்டது. சூதாடிப் பழகியதனால் நாற்களத்துக்கு அப்பால் எந்த ஆடலும் பிடி கிடைக்கவில்லை” என்றார். தலையை பிடித்துக்கொண்டு “ஆனால் எவரோ எங்கோ ஆடும் ஆட்டத்திற்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்று மட்டும் புரிகிறது” என்றார். ஆபர் “பொறுத்திருங்கள், அரசே. நாம் எவருக்கும் எப்பிழையும் ஆற்றவில்லை. ஆகவே நாம் பாதுகாக்கப்படுவோம்” என்றார்.

சீற்றத்துடன் தலைதூக்கி “இச்சொற்களுக்கு என்ன பொருள், அமைச்சரே?” என்றார் விராடர். “வரலாறெங்கும் இங்கே அழித்தொழிக்கப்பட்ட அசுரர்களும் நிஷாதர்களும் பிழை செய்தமைக்கான தண்டனையையா பெற்றார்கள்? அரசியலில் ஆற்றலின்மையே பெரும்பிழை. அதன்பொருட்டே நாடுகளும் குலங்களும் முற்றழிகின்றன. நாம் ஆற்றலற்றவர்கள். பேரரசர் நளனின் காலத்திலிருந்து நிஷாதர்கள் தொடர்வீழ்ச்சியை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். ஆம், நாம் அறிந்த ஒரே வெற்றி கீசகன் சதகர்ணிகளை வென்றதுதான். அது ஒரு தற்செயல் என்பதை நானும் அறிவேன். ஆனால் அதை சொல்லிச் சொல்லி நிலைநிறுத்திதான் இத்தனை காலம் இங்கு தனிநாடென வாழ்ந்தோம்.”

“இனியும் தனி நாடென வாழ்வீர்கள். உங்கள் மைந்தர் இந்நாட்டை முடிசூடி முழுதாள்வார். அவரது கொடிவழிகள் இங்கு வாழும். இது என் சொல்” என்றான் குங்கன். ஆபர் புன்னகைத்து “அவரது சொல்லை நாம் நம்பலாம், அரசே” என்றார். “எப்படி? பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்திகள் சொல்லவேண்டிய சொற்கள் அவை” என்றார் விராடர். ஆபர் நகைத்து “இப்போது அவ்வண்ணமே கொள்வோம்” என்றார். “நகைக்கிறீர்களா? நான் மச்சர்கள் முன் கைச்சங்கிலியுடன் நிற்பதை எண்ணி நீறிக்கொண்டிருக்கிறேன்” என்றார் விராடர்.

ஆபர் “பிறிதொரு செய்தி சற்று முன்புதான் அவைக்கு வந்தது. சிற்றமைச்சர் அதை என்னிடம் கொண்டுவந்தார்” என்றபின் ஓலையை எடுத்து பீடத்தின்மேல் வைத்தார். விராடர் அதை ஐயத்துடன் பார்த்தபடி “கலிங்க நாட்டு ஓலை. என்ன சொல்கிறார்கள்? அவர்களும் நம்மைப்போல் எவர் கண்ணுக்கும் படாமல் வாழும் கூட்டம்” என்றார். “அவர்கள் தங்கள் இளவரசியை உத்தரருக்குக் கொடுப்பதற்கு ஒப்பவில்லை” என்றார் ஆபர். திகைப்புடன் “அதை அவர்கள் இங்கு சொல்லவில்லையே? இங்கு நம் வரிசைகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு அல்லவா சென்றார்கள்?” என்றார் விராடர்.

“தூதுக்குழுவென வந்து நம் நகர்புகுந்த பிறகு அவையெழுந்து அதை எப்படி அவர்களால் சொல்ல முடியும்? அன்று அவையிலேயே அவர்கள் நடத்தை அனைத்தையும் சொல்லிவிட்டது. மணஉறுதி அறிவிப்பை வெளியிடவோ மணநிகழ்வுகளின் அடுத்த கட்டத்தைப்பற்றி ஏதேனும் கூறவோ அவர்கள் முற்படவில்லை. கொண்டு வந்த பரிசுகளை நமக்கு அளித்தார்கள். பயின்று வந்த முறைமைச்சொற்களை உரைத்தார்கள். நம் விருந்தை உண்டு நாம் அளித்த பரிசுகளை பெற்று மீண்டார்கள். அனைத்தையும் அங்கு சென்றபின் முறைப்படி அறிவிப்போம் என்று மட்டுமே அவர்களால் சொல்ல முடிந்தது. அப்போதே இதை எதிர்பார்த்தேன்” என்றார் ஆபர்.

சலிப்புடன் மீண்டும் தலையசைத்து எழுந்து சென்று சாளரம் வழியாக காற்று அலையடித்த தோட்டத்தை பார்த்து நின்றார் விராடர். “அவர்களை சொல்வதிலும் பிழையில்லை” என்றான் குங்கன். அவனை நோக்கி திரும்பாமல் விராடர் “இந்த மூடன் அவர்களின் காலடியில் சென்று உருண்டு விழுந்திருக்கிறான். மூடர்கள் பலரை அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு செயலாலும் தான் மூடன் என்று அறிவித்துக்கொண்டிருக்கும் ஒருவனை பிறிது கண்டதில்லை” என்றார். “அவன் என் குருதியில் உள்ள ஒரு குமிழி மைந்தன் என எழுந்தது. அவனை காண்கையில் எல்லாம் என்னை வெறுக்கிறேன்.”

குங்கன் “அதை பிறகு பார்ப்போம். முதலில் நாம் எதிர்கொள்ளும் இந்தப் போரை வெல்வோம்” என்றான். “உத்தரர் இப்போரை வென்றாரென்றால் கலிங்கர்கள் உளம் மாறவும் கூடும்.” விராடர் சிரித்து “நன்று. பகற்கனவுகளுக்கு உள்ள இனிமை அரியது” என்றார். ஆபர் “இவையெதையும் இப்போது குடியவையில் பேசவேண்டியதில்லை. படைப்புறப்பாடுக்கான அறிவிப்பை மட்டும் தாங்கள் அவையில் வெளியிட்டால் போதும். படைசூழ்கையை குங்கர் அமைக்கட்டும். உத்தரர் படை நடத்தட்டும்” என்றார். விராடர் “எப்போதும் தாங்கள் சொல்பவற்றை ஆணையென பிறப்பிப்பது மட்டுமே என் பணியாக இருந்துள்ளது. அவ்வாறே ஆகட்டும்” என்றார்.

flowerகுங்கனுடன் வெளியே நடக்கையில் ஆபர் “நான் செய்யவேண்டியவை என்ன?” என்றார். “தெரிவுசெய்யப்பட்ட புரவிகள். அவை மிக நன்கு பழக்கப்பட்டவையாக இருக்கவேண்டும்.” ஆபர் “கிரந்திகன் புரவிகளை பழக்கியிருக்கிறார். அவரிடமே சொல்கிறேன்” என்றார். “ஆம், விராடர்களின் ஆற்றல் புரவிகளில்தான். அவர்கள் நாம் எங்கு சென்று சந்திக்கக்கூடும் என எண்ணுகிறார்களோ அதற்கு முன்னரே அவர்களை நம் புரவிகள் சந்திக்கவேண்டும்” என்றான் குங்கன். “மச்சர்களுக்கு புரவிகள் பழக்கமில்லை. அவர்களின் ஆற்றல் கைத்தோணிகளை செலுத்துவதில்தான். அவர்களை காடுகள் வழியாக நடத்திக்கொண்டு வருகிறார்கள்.”

ஆபர் “ஆம்” என்றார். “வேனில் எழுகிறது. இப்பகுதியின் காடுகளில் தைலப்புற்கள் காய்ந்து எரி காத்துள்ளன.” ஆபர் நின்றுவிட்டார். “எரியம்புகள் தொடுக்கும் கலையை பிருகந்நளை அறிவாள்.” ஆபர் “ஆம்” என்றார். “நிஷாதர்கள் பரசுராமரால் அனல் அளித்து அரசகுடியாக்கப்பட்டவர்கள். பிருகுவின் ஏவலன் அனலோன். அவன் உதவி விராடர்களுக்கும் இருக்கும் அல்லவா?” ஆபர் புன்னகைத்தார். “சொல்லுங்கள்” என்றான் குங்கன். “போரை மட்டும் அல்ல, போருக்குப் பிந்தைய சூதர்பாடலையும் எழுதிவிட்டீர்” என்றார் ஆபர். குங்கன் புன்னகைத்தான்.

“அரிஷ்டநேமியிடம் ஓர் அமைச்சர் சென்று கிளம்புவதற்குரிய பொழுதை கணித்துக்கொண்டு வரவேண்டும்” என்றான் குங்கன். “வலவரிடமும் செய்தியறிவிக்கிறேன்” என்றார் ஆபர். அவரை திரும்பி நோக்கிவிட்டு “ஆம், ஆனால் அவன் களமிறங்கும் அளவுக்கு இப்போர் பெரியது அல்ல” என்றான் குங்கன். இருவரும் சொல்லில்லாமல் நடந்தனர். ஆபர் மெல்ல கனைத்தார். குங்கன் திரும்பிப் பார்த்தான். “இது போருக்குப்பின் நிகழவேண்டியது” என்றார் ஆபர். “இளவரசியின் மணத்தன்னேற்பு.” குங்கன் “ஆம்” என்றான். “ஆனால்…” என்றபின் “அவர்களிடையே என்ன உறவு என்பது எவருக்கும் தெரியவில்லை” என்றார்.

குங்கன் நின்று ஆபரை நோக்கினான். தாடியை நீவியபடி விழிதாழ்த்தியபின் “ஆம்” என்றான். “கரவுக்காட்டில் அவர்களை கண்டிருக்கிறார்கள்” என்றார் ஆபர். குங்கன் ஒன்றும் சொல்லாமல் நடக்க உடன்நடந்தபடி “அறப்பிழை நிகழலாகாது. நீங்களே இருவரிடமும் பேசலாம்” என்றார். “இல்லை, நான் பேசவியலாது” என்ற குங்கன் “சைரந்திரி பேசட்டும்” என்றான். ஆபர் முகம் தெளிந்து “ஆம், அது நன்று” என்றார்.

ஆபர் தன் அமைச்சு அறையை அடைந்தபோது துணையமைச்சர்களும் படைத்லைவர்களும் காத்து நின்றிருந்தனர். அவர் உள்ளே நுழைந்ததும் அவர்கள் உடன்வந்தனர். “என்ன செய்தி?” என்றார் ஆபர். “மச்சர்படை மிக அணுகிவிட்டது. நினைத்ததைவிட விரைவு. எங்கும் ஓய்வில்லாமல் வருகிறார்கள். நாளையே நம்மை அவர்கள் அடைந்துவிடக்கூடும்.” ஆபர் “ஆம், விரைவார்கள்” என்றார். பின்னர் “அங்கர் எப்படி இருக்கிறார்? ஒற்றர்கள் சொல்வதென்ன?” என்றார்.

“அவர் படைசூழ்கையை அமைக்கவில்லை. சொல்லப்போனால் அவர் வெளியே வரவே இல்லை. படைசூழ்கையை அமைப்பவர் இளைய கௌரவரான துச்சாதனர்தான்.” ஆபர் “நோயுற்றிருக்கிறாரா?” என்றார். “இல்லை” என தயங்கிய அமைச்சர் “குடியில் மூழ்கியிருக்கிறார். வில்லெடுக்கவே கை நடுங்குகிறது என்கிறார்கள்” என்றார். “உளச்சான்றெனும் நோய்” என்றார் ஆபர். “பெண்பழி என்கிறார்கள். பாஞ்சாலியான திரௌபதி காட்டில் மானசாக்னி என்னும் சுனையில் இறங்கி உயிர் மாய்த்துக்கொள்வதற்கு முன் தீச்சொல்லிட்டதாகவும் அதன்பின் கர்ணனின் கைகள் முதுமைகொண்டு நடுங்கத் தொடங்கின என்றும் கதைகள் சொல்கின்றன.”

“நாம் நாளை காலை படைஎழுகிறோம்” என்றார் ஆபர். “நாளையா? நாளை…” என தயங்கிய படைத்தலைவன் “படைத்தலைமை எவர்?” என்றான். “உத்தரர்” என்றார் ஆபர். அனைவரும் அமைதியடைந்தனர். படைத்தலைவன் “நன்று… எவரானாலும் போர் நம் கடமை” என்றான். “அவருடைய தேரை பிருகந்நளை செலுத்தட்டும் என்கிறார் குங்கர்.” படைத்தலைவர்களின் முகங்கள் மலர்ந்தன. “அவர் வந்தால் வேறெவரும் வேண்டாம்” என்றான் முதன்மைப் படைத்தலைவன் சங்காரகன். “ஏன்?” என்றார். “அமைச்சரே, தேர்ந்த வில்லவனின் கைகள் வில்லென்றே ஆகிவிட்டவை” என்றான் சங்காரகன்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 83

82. இருளூர்கை

flowerகஜன் அரண்மனை அகத்தளத்தின் காவல் முகப்பை அடைந்து புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தை கையில் பற்றியபடி காவல் மாடம் நோக்கி சென்றான். அங்கு அமர்ந்திருந்த ஆணிலி காவலர்களில் ஒருத்தி எழுந்து வந்து “தங்கள் ஆணையோலை” என்றாள். “ஆணையோலை அளிக்கப்படவில்லை. இளவரசர் உத்தரர் இங்கு வந்து தன்னைப் பார்க்கும்படி என்னிடம் சொன்னார்” என்றான். அவள் விழிகள் குழப்பத்துடன் அலைந்தன. திரும்பி காவல் மாடத்திற்குள் இருந்த பிற ஆணிலிகளை நோக்கினாள். “என் பெயர் கஜன். வேண்டுமென்றால் உங்களில் எவரும் உள்ளே சென்று இளவரசர் உத்தரரிடம் அவர் என்னை வரச்சொன்னாரா என்று கேட்டு வரலாம். அதுவரை நான் இங்கு காத்திருக்கிறேன்” என்றான்.

காவல் மாடத்திலிருந்து எழுந்து வந்த இன்னொரு ஆணிலி “ஆம், சென்று கேட்டு வருவோம். இவரை திருப்பி அனுப்பினால் வந்து நம்மிடம் பூசலிடுவார்” என்றாள். முதலில் வந்த ஆணிலி “இங்கு நின்றிருங்கள். நான் சென்று உசாவி வருகிறேன்” என்றபின் வேலை கையிலெடுத்துக்கொண்டு அரண்மனை அகத்தளத்திற்குள் புகுந்து மறைந்தாள். கைகளை மார்பில் கட்டியபடி இடைநாழிகளையும் உப்பரிகைகளையும் கூர்ந்து நோக்கி கஜன் நின்றான். சற்று நேரத்தில் அவள் வெளியே வந்து அவனை நோக்கி நடந்து வந்தாள். அவ்வருகையிலேயே உத்தரன் என்ன சொல்லியிருப்பான் என்பதை உணர்ந்து தன்னையறியாமல் கஜன் புன்னகைத்தான்.

ஆணிலி அவனை வணங்கி “மூன்றாவது தளத்தில் சேடியர்கள் கூடத்தில் அமர்ந்திருக்கிறார். அங்கு செல்லும்படி ஆணை” என்றாள். கஜன் “நன்று” என்றபின் புரவிக் கடிவாளத்தை அவளிடம் ஒப்படைத்துவிட்டு செங்கல் பரப்பிய முற்றத்தில் விரைவிலாது நடந்தான். தன் பின்னால் ஆணிலிக் காவலரின் நோக்கு பதிந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. படிகளிலேறி அகத்தளத்திற்குள் நுழைந்ததும் அவ்வுணர்விலிருந்து விடுபட்டான். உடலை எளிதாக்கி விழிகளை ஓட்டி அந்தக் கூடத்து அமைப்பை பார்த்தான். வலப்பக்கமிருந்த படிக்கட்டு வளைந்தேறி முதல் தளத்திலிருந்த உப்பரிகையை நோக்கி சென்றது. அதில் ஏறி மேலே சென்றதும் அதன் இருபக்கமும் வளைந்து சென்ற இடைநாழிகளை பார்த்தான். எந்தத் திசை நோக்கி செல்வது என்று குழம்பி அங்கு நின்றான்.

கையில் தாலங்களுடன் எதிரே வந்த நடுஅகவைச் சேடி அவனைக் கண்டதும் விழிகள் சுருங்க நடைவிரைவு தாழ அருகே வந்து “யார்? இங்கு எப்படி வந்தீர்?” என்றாள். “நான் இளவரசியின் ஆசிரியர் பிருகந்நளையின் அணுக்கன். அவரது ஆணை பெற்று இங்கு வந்தேன்” என்றான். அவள் “யாரை பார்க்கவேண்டும்?” என்றாள். அவள் ஐயம் விலகவில்லை என்று தெரிந்தது. “இங்கு அரண்மனைச் சேடியாக உள்ள ஒருத்தியை. அவள் அரசியின் சைரந்திரியின் துணைவி. அவளுடன் கரவுக்காட்டிற்கு வந்திருந்தாள்” என்றான். “அவள் பெயர் தெரியாதா?” என்றாள். “ஆசிரியருக்கே அவள் பெயர் தெரியாது. இங்கு பொறுப்புள்ள ஏதேனும் பெண்மணியிடம் அவளைப்பற்றி விசாரிக்கச் சொன்னார். பெயர் தெரிந்திருந்தால் அவளை வரச்சொல்லும்படி ஓலையனுப்பியிருப்பாரே?” என்றான் கஜன்.

அவள் விழிகளில் மேலும் ஐயம் கூடியது. “கரவுக்காட்டிற்கு பலர் வந்தனர்” என்றாள். “ஆம், ஆனால் அரசியும் சைரந்திரியும் வந்த அதே தேரில் இவளும் இருந்தாள். அப்போது நான் ஆசிரியரின் அருகே இருந்தேன்” என்றபின் “மாநிறமானவள். நீளமுகம், மெல்லிய உடல், சுருள்கொண்ட நீண்ட கூந்தல்” என்றான். அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது. “துணிந்து பொய்யுரைத்து இத்தனை தொலைவு வந்திருக்கிறீர். இன்னும் சற்று அழகிய விவரணைகள் அளிக்கலாமே? காவியங்கள் படிப்பதில்லையோ?” என்றாள். “பொய்யல்ல” என்று அவன் சொன்னான். “வீரரே, என்னால் கண்களில் காதலை பார்க்க முடிகிறது” என்றாள் அவள்.

அவன் புன்னகைத்து “அக்கா, உன்னை நம்பி வந்தேன்” என்றான். “ஏன், என்னை உனக்கு முன்னால் தெரியுமா?” என்றாள். “இப்போது தெரிந்துகொண்டேன். ஆனால் என்மேல் அன்புகொண்ட அக்கையொருத்தி இங்கிருப்பாள் என என் உள்ளாழத்தில் தோன்றியிருந்தது” என்றான். அவள் மீண்டும் நகைத்து “உனக்கு பேசத் தெரிகிறது. எவர் பெயரைச் சொல்லி உள்ளே நுழைந்தாய்? பிருகந்நளை பெயரை சொல்லமுடியாது” என்றாள். “உத்தரர் பெயரை” என்றான். “நம்பமாட்டார்களே?” என்றாள். “என் பெயரைச் சொல்லி சென்று அவரிடமே கேட்டுப் பாருங்கள் என்றேன். கேட்டுப் பார்த்தபோது அவரே உள்ளே வரும்படி ஆணையிட்டார்.”

அவள் புருவம் சுருங்க அவனை நோக்கினாள். “எவர் எந்தப் பெயரைச் சொல்லி எதைச் சொன்னாலும் ஆம் நான் சொன்னேன் என்றுதான் அவர் சொல்வார். முந்தைய கணத்தை முற்றிலும் மறப்பது அவரது இயல்பு” என்றான். அவள் வாய்விட்டு நகைத்து “நன்று. இனி நானும் அதை பயன்படுத்திக்கொள்கிறேன்” என்றாள். “அவள் பெயர் என்ன, அக்கையே? உங்களுக்குத் தெரியும்” என்றான். “நீ சொல்லத் தொடங்கியபோதே தெரியும்” என்று அவள் சொன்னாள். “நீங்கள் கூர்மையானவர்கள். கூர்மையான பெண்கள் அழகிகளாக இருப்பதில்லை. அதற்கும் விதிவிலக்கு” என்றான்.

“இதோ பார், பெண்களுக்கு புகழ்ச்சி பிடிக்கும். ஆனால் சற்று நுண்ணுணர்வோடு அதை செய்யவேண்டும்” என்றாள். “நான் என்ன பிழை செய்தேன்?” என்றான். “முதலில் என் பெயரை கேட்டிருக்கவேண்டும் அல்லவா? அக்கை என்றாய். பெயர்கூடத் தெரிய வேண்டாமா?” என்றாள். “ஆம், உங்கள் பெயர் என்ன?” என்றான். “மீண்டும் நாம் சந்திக்கும்போது என் பெயரை நினைவில் கொள்ளமாட்டாய்” என்றாள். “அதெப்படி அக்கா? மீண்டும் நாம் நாளையே சந்திப்போம் அல்லவா?” என்றான். அவள் திகைத்து “நாளையா? எங்கே?” என்றாள். “இங்குதான்” என்றான் அவன். “இங்கா?” என்றாள் குழப்பத்துடன். “நீங்கள் வரச்சொன்னீர்கள் என்று உள்ளே வந்துவிடுவேனல்லவா?” என்றான்.

அவள் நகைத்து “அடப்பாவி, தலைக்கு தீங்கு கொண்டுவந்துவிடுவாய் போலிருக்கிறதே!” என்றாள். “என் பெயர் முரளிகை” என்றாள். “நல்ல பெயர். காட்டு மூங்கிலின் இசையொன்றை நினைவில் எழுப்புகிறது.” முரளிகை சிரித்து “அவள் பெயர் சுபாஷிணி” என்றாள். “ஆம், இனிய குரலுள்ளவள்” என்றான். “அவளுக்கு தண்மொழி என்றே என் உள்ளத்தில் பெயரிட்டிருந்தேன்.” அவள் “இதற்குமேல் நீ வருவது நன்றல்ல. அரசகுடியினரல்லாத ஆண்கள் உள்ளே நுழையலாகாது. இச்சிறுகூடத்தில் இரு. அவளை வரச்சொல்கிறேன்” என்றாள். “அவள் சற்று நோயுற்றிருந்தாள். ஓரிரு நாட்களாக தேறி வந்திருக்கிறாள்.”

“நோயுற்றா?” என்று அவன் கேட்டான். “மூதன்னையர் அவள் உடலில் வந்துகொண்டே இருந்தார்கள். உணவும் நீருமின்றி அலைபாய்ந்த சித்தத்துடன் இருந்தாள். உன்னைக் கண்டபின் அவள் நிலைகொள்ளக்கூடும்” என்றபின் “அமர்க, வருகிறேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள். அவன் அந்தச் சிற்றறையின் உயரமற்ற பீடத்தில் அமர்ந்தான். சற்று நேரத்தில் வெளியே சிலம்பின் ஒலி கேட்டது. உள்ளம் படபடக்க அவன் எழுந்து பின் அமர்ந்தான். பதற்றத்துடன் மீண்டும் எழுந்தான்.

கதவு திறந்து சுபாஷிணி நுழைந்தபோது திகைத்தவனாக ஒரு அடி பின்னால் வந்து பீடத்தில் கால்தட்ட மீண்டும் அமர்ந்துகொண்டான். அவள் உள்ளே வந்து விழிகளை ஓட்டி பின் அவனைப் பார்த்து ஒருகணத்திற்குப்பின் அடையாளம் கண்டுகொண்டு “நீங்களா?” என்றாள். “ஆம், உன்னை பார்ப்பதற்காகத்தான் வந்தேன்” என்றபடி எழுந்துகொண்டான். அவள் முகத்தைப் பார்த்து “உனக்கு என்ன செய்கிறது?” என்றான். “இல்லையே, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றாள். “இல்லை, நோயுற்றிருக்கிறாய். உன் முகத்தின் ஒளி பெரிதும் குறைந்துவிட்டது. உன் கண்கள் அலைபாய்கின்றன.”

அவள் விழிகளில் நீர் நிறைய தலைகுனிந்து “அறியேன். என்னால் நன்றாகத் துயில முடியவில்லை” என்றாள். அவன் அவளை நோக்கியபடி சில கணங்கள் நின்றான். அவள் உடல் வண்ணத்துப்பூச்சி இறகுபோல அதிர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவன் ஒன்றும் சொல்லாததைக் கண்டு அவள் விழிதூக்கி “தாங்கள் என்னைப் பார்க்க வந்தீர்கள் என்று அக்கை சொன்னாள்” என்றாள். “ஆம், உன்னைப் பார்க்கும்பொருட்டே இத்தனை தொலைவு வந்தேன்” என்றான். “ஏன்?” என்றாள். “நீ கேட்ட முதல் வினாவிலேயே நான் சொல்ல வந்ததை சொல்லலாகாது என்ற முடிவுக்கு வந்தேன்” என்றான். அவள் கண்கள் திகைக்க “நான் என்ன கேட்டேன்?” என்றாள். “நீங்களா என்றாய்.” அவள் தலையசைத்தாள். “அவ்வாறென்றால் நீ பிறிதொருவரை எதிர்பார்த்திருந்தாய்.” அவள் “அய்யோ, இல்லை” என்றாள். “ஆம், பிறிதொருவரை… நீ அறியாமல் அவனைக் காத்திருந்தாய்.”

அவள் திரும்பி கதவை பார்த்துவிட்டு “இல்லை” என்றாள். அவன் “சொல், யார் அவர்?” என்றான். “நான் செல்கிறேனே” என்று அவள் மெல்ல அசைந்தாள். “நீ பிறிதொருவரை எதிர்பார்த்தாய்” என்றான். “இல்லை” என்று அவள் மூச்சுத் திணறினாள். “உன்னிடம் அக்கை என்ன சொன்னாள்?” அவள் “என்னைப் பார்க்க காதலுடன் ஒருவர் வந்திருப்பதாக” என்று தாழ்ந்த குரலில் தரையைப் பார்த்தபடி சொன்னாள். “யார் அப்படி காதலுடன் வரவேண்டுமென்பது உன் கனவு?” என்று கஜன் கேட்டான். அவள் இல்லை என்று தலையசைத்தாள். “அஞ்சாதே. என் விழிகளைப் பார்த்து சொல். அது எவராக இருந்தாலும் நானே அவரிடம் சென்று சொல்கிறேன்.”

அவள் நிமிர்ந்து பார்த்து “நான் அச்சம் கொள்ளும்போதெல்லாம் அவர் என் கனவில் வருகிறார்” என்றாள். “யார்?” என்றான். “அடுமனைச் சூதர் சம்பவர்.” அவன் உடல் முழுக்க ஓர் அதிர்வை உணர்ந்தான். கைகளை என்ன செய்வது என்று அறியாததுபோல் மார்மேல் கட்டிக்கொண்டான். நெஞ்சக்கூட்டை உள்ளிருந்து அறைந்த இதயத்தின் ஒலியை அவ்வாறு அழுத்திக்கொள்ள முடிந்தது. ஓரிரு கணங்கள்தான். ஆனால் நெடுந்தொலைவைக் கடந்து அங்கு மீண்டும் வந்தான். “ஆம், அவர்தான் உனக்குப் பொருத்தமானவர். அவரிடம் நான் சொல்கிறேன்” என்றான். “இல்லை, அப்படியெல்லாம் இல்லை” என்று அவள் சொன்னாள்.

“அஞ்சாதே, எப்படி சொல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியும். உன்பொருட்டு என்னால் அதை சொல்லவும் முடியும்” என்றான் கஜன். “நான் மிகவும் அஞ்சுகிறேன். என்னால் இங்கு இருக்க முடியாது. என்னை இங்கிருந்து அழைத்துச் செல்வாரென்றால்…” என்று அவள் தழுதழுத்த குரலில் சொல்ல அவன் புன்னகையுடன் “நீ இருக்கவேண்டிய இடம் அவரது இல்லம். ஒவ்வொரு நாளும் உடலுழைப்பு நிகழும் சூழல். கைகளால் உணவை உருவாக்கி குவிப்பாய். அள்ளி அள்ளி பரிமாறி பசி போக்குவாய். நீ கொள்ளும் துயரனைத்தும் மறையும்” என்றான்.

அவள் “உம்” என்றாள். “இனிய மைந்தர். மிகப் பெரிய குடும்பம்… அங்குதான் நிறைவடைவாய். பெற்றுப்பெருகி பேரன்னையென்று முதிர்ந்து கனிவாய்” என்றான். அவள் விழிகள் நிறைந்தன. “நான் அவரிடம் சொல்கிறேன்” என்றான். “வேண்டாம். நான் என்ன சொல்கிறேன் என்றே அவருக்குத் தெரியாமல் போகலாம்” என்றாள். “அவருக்கும் தெரியும்” என்று அவன் சொன்னான். அவள் நிமிர்ந்து பெரிய விழிகளுடன் அவனை பார்த்தாள். “அவருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும்” என்றான். “எப்படி?” என்றாள். “அடுமனையாளர் சம்பவன் என்று சொன்னதுமே அதை நான் வியப்பின்றி எதிர்கொண்டேனல்லவா அவ்வாறுதான்” என்றான் கஜன். பின்னர் “அஞ்சாதே, ஓரிரு நாட்கள் மட்டுமே” என்றபின் திரும்பி நடந்தான்.

படிகளில் இறங்குகையில் ஒவ்வொரு காலடிக்கும் அவன் தளர்ந்துகொண்டிருந்தான். ஓடி வெளியே சென்று தன் புரவியை எடுத்துக்கொண்டு நகரத் தெருக்களில் வெறி பிடித்தவன்போல பாயவேண்டுமென்று தோன்றியது. அவ்வெண்ணம் எழுந்ததுமே அவ்வாறு நகரத் தெருக்களில் வெறிகொண்டு சீறிச்செல்லும் தன் புரவியை அவன் கண்ணால் கண்டுவிட்டான். அதன் பின் உடலை உந்தி எடுத்து வைத்த ஒவ்வொரு காலடியும் நூறு கைகளால் அழுத்தப்பட்டிருந்ததாக எடை கொண்டிருந்தது. மூச்சு இழுத்துவிட்டும் இமைகளைக் கொட்டியும் தன் கணங்களை ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கி காலத்தை உருவாக்கியபடி அவன் நடந்தான்.

flowerகஜன் படிகளில் இறங்கி வெளியே வந்தபோது அரண்மனை முகப்பில் புரவிகள் நின்றிருக்க அருகே உத்தரன் நான்கு ஏவலருடன் நின்றிருப்பதை கண்டான். இயல்பாகத் திரும்பி நோக்கிய உத்தரன் கஜனைக் கண்டு “நீ யார்?” என்றான். அத்தனை காவலரும் அவனை நோக்கினர். கஜன் அவனருகே சென்று தலைவணங்கி “தங்கள் ஆணைப்படிதான் இங்கு வந்தேன்” என்றான். “ஆம், நான் உன்னை ஒரு முதன்மையான செயலுக்காகவே அழைத்தேன். வருக!” என்றபின் உத்தரன் தன் புரவியை நோக்கி சென்றான். “என் புரவி வெளியே நிற்கிறது, அரசே. நான் தங்களைத் தொடர்ந்து…” என்று அவன் சொல்லத்தொடங்க “அது அங்கு நிற்கட்டும். நீ இந்தப் புரவியில் ஏறிக்கொள்” என்று இன்னொரு புரவியைக் காட்டியபடி உத்தரன் தன் புரவிமேல் ஏறிக்கொண்டான்.

இருவரும் பெருஞ்சாலைக்கு வந்தனர். உத்தரன் “நாம் எங்கு செல்கிறோம் என்று தெரியுமா?” என்றான். அவன் உவகை பொங்கும் நிலையிலிருப்பதை கஜன் புரிந்துகொண்டான். “தாங்கள் இன்று உவகையுடன் இருக்கிறீர்கள், இளவரசே” என்றான் “ஆம். இன்றல்ல, சென்ற பல நாட்களாகவே நான் உவகையில் நிறைந்திருக்கிறேன். ஏனெனில் ஒவ்வொன்றும் எழுந்து தானாகவே அமைந்து என்னை அரியணை நோக்கி கொண்டு செல்கின்றன” என்றான் உத்தரன். கையை நீட்டி “மூடா! நீ என்னைப்பற்றி என்ன நினைத்தாய்? எண்ணிக்கொள், ஒருநாள் இதே நகரியில் நான் ராஜசூயப் பெருவேள்வி நடத்துவேன். சத்ராஜித் என்று என்னை பேரரசர்கள் மணிமுடி தாழ்த்தி வணங்குவார்கள்” என்றான்.

கஜன் “அதிலென்ன வியப்பிருக்கிறது? நான் சிறுவனாக இருக்கும்போதே இதை கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான். “எதை?” என்றான் உத்தரன் ஐயத்துடன். “தாங்கள் சத்ராஜித்தாக மணிமுடி சூட்டிக்கொள்வதற்கென்றே பிறந்தவர் என்று நிமித்திகர்களும் சூதர்களும் பாடுவதுண்டு. அவ்வாறு நிகழாது போனால்தான் அது வருத்தத்துக்குரியது” என்றான் கஜன். ஒருமுறை அவனை ஓரக்கண்ணால் பார்த்தபின் உத்தரன் சாலையைப் பார்த்து “ஆம், ஒவ்வொன்றும் அமைந்து வருகிறது. இன்று கலிங்கத்திலிருந்து அரசக்குழு ஒன்று வருகிறது. அறிந்திருக்கிறாயா?” என்றான். கஜன் “இல்லை. நான் எளிய காவலன்” என்றான். “ஆம், இது அரசவைக்கு மட்டும் தெரிந்தது. உனக்கு நான் சொல்கிறேன்” என்றான் உத்தரன். “ஆம், என்னை தங்கள் நல்லியல்பால் மதித்து இவ்வரிய செய்தியை சொல்கிறீர்கள்” என்றான் கஜன்.

உத்தரன் உரக்க நகைத்து “ஆம், நான் எப்போதுமே அப்படித்தான். பெரியோர் சிறியோர் என்னும் வேறுபாடு என் உள்ளத்தில் இல்லை. தகுதி உடையவர்களை அணுக்கர்களாகக் கொள்வேன்” என்றான். “அதை அறியாத எவரும் இந்த நகரில் இல்லையே” என்றான் கஜன். “தூதுக்குழு எதன்பொருட்டு வருகிறது தெரியுமா?” என்று உத்தரன் மீண்டும் கேட்டான். “தங்களை சந்திக்கும்பொருட்டு” என்றான் கஜன். “ஆம், என்னையும் அவர்கள் சந்திக்கிறார்கள். ஆனால் என்பொருட்டே அவர்கள் இன்று வருகிறார்கள். கலிங்க இளவரசியின் உடன்பிறந்த இளவரசர் மூவர் தலைமை அமைச்சருடன் வருகிறார்கள். இன்றே அவையில் அவர்கள் தங்கள் மணஏற்பை அறிவிப்பார்கள். மங்கலப் பேச்சுக்குரிய வரிசையும் பரிசிலும் கொண்டு அவர்கள் வருகிறார்கள். அவர்களின் மணஏற்பை தந்தை ஏற்று மணநாள் முடிவை அறிவிப்பார். அவர்களுக்கு நாங்கள் பரிசும் வரிசையும் செய்வோம்” என்றான் உத்தரன்.

“இன்றுடன் நான் கலிங்க இளவரசியை மணக்கவிருக்கும் செய்தி உறுதிப்படுத்தப்படும். நாளைமறுநாள் அனைத்து ஷத்ரிய அரசர்களுக்கும் மண அறிவிப்பு ஓலைகள் சென்று சேரும். ஒவ்வொருவரும் அந்த ஓலையை கையில் வைத்துக்கொண்டு என்ன எண்ணுவார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.” புரவியை கடிவாளத்தை இழுத்து நிறுத்தி அவன் உரக்க நகைத்தான். “எத்தனை முகங்கள் சுருங்கும். எவரெவரெல்லாம் நெஞ்சில் அறைந்துகொண்டு விம்முவார்கள்… எண்ணவே உளம் கிளர்கிறது” என்றான். “ஏன்?” என்றான் கஜன். “மூடா, கலிங்கமும் விராடமும் ஒன்று சேர்ந்தால் இப்பகுதியில் எவர் என் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியும்? விராடம் பேரரசாவதை ஊழை ஆளும் தெய்வம் முடிவுசெய்துவிட்டதென்றே பொருள்.”

“இளவரசே, இது தங்கள் பெருந்தன்மையால் தாங்கள் சொல்லிக்கொள்வது. எங்களைப்போல விராடகுடிகளுக்குத் தெரியும், பாரதவர்ஷத்தின் பிற நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டு எதிர்த்தாலும் தாங்கள் முன்நின்று களம்கண்டால் விராடப் படைகள் சுழல்காற்று சருகுகளை என அவற்றை வெல்லும் என்று” என்றான் கஜன். “தாங்கள் பேரரசராக மணிமுடி சூடி அமர்வதென்பது தங்கள் பிறப்புக்கு முன்னரே ஊழ் முடிவெடுத்த ஒன்று. அதை கலிங்கமோ சதகர்ணிகளோ எவரும் மாற்ற முடியாது.” உத்தரன் தலைதிருப்பிக்கொண்டு இயல்பாக “ஆம், அதுவும் உண்மைதான்” என்றான்.

கஜன் “ஆனால் எப்படியென்றாலும் தங்கள் தகுதிக்குரிய பேரரசி இங்கு வருகிறார்கள் என்பது எங்களுக்கு நிறைவூட்டுகிறது. நாளை தாங்கள் மணிமுடி சூடி அமர்கையில் தங்கள் அருகே அமரும் அழகும் நிமிர்வும் அவருக்கும் இருக்கவேண்டுமல்லவா?” என்றான். “ஆம், நான் அதில்தான் குறிப்பாக இருந்தேன். ஏராளமான மணத்தூதுகள் வந்தன. எதையும் நான் ஏற்கவில்லை. பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு முதன்மை அரசுகளில் ஓர் அரசின் இளவரசி மட்டுமே என்னால் ஏற்கப்படுபவள் என்று தெளிவாகவே தந்தையிடம் தெரிவித்துவிட்டேன்” என்றான் உத்தரன். “காலமுதல்வர் தங்கள் பணியென்ன என்று அறிந்தவர்” என்றான் கஜன்.

அவர்கள் புறக்கோட்டை காவல் மாடம் ஒன்றை கடந்தனர். அதில் பெருமுரசு முழங்கிக்கொண்டிருந்தது. வெவ்வேறு இடங்களில் முரசுகள் எதிரொலித்தொடர் என முழங்கின. ஏழு காவல் வீரர்கள் புரவிகளில் கொக்குக் கூட்டம்போல மிதந்து கடந்து சென்றனர். தெற்குப் பெருவீதியின் இருபுறமும் மாளிகைகள் மலர்களாலும் தளிர்த்தோரணங்களாலும் அணி செய்யப்பட்டிருந்தன. சாலைகள் முழுக்க தோரண வளைவுகள் அமைக்கப்பட்டு அவற்றின்மேல் கலிங்கத்தின் சிம்மக்கொடியும் விராடபுரியின் காகக்கொடியும் பறந்தன. மலர்த்தூண்களும் அவற்றிலாடிய பட்டுத் திரைச்சீலைகளும் அணிப்பாவட்டாக்களும் மலர்க்காடு என விழிமயங்க வைத்தன.

உத்தரன் “கலிங்கத் தூதுக்குழுவினருக்கான வரவேற்பு அணிச்செய்கைகள்” என்றான். “மூன்று நாள் முன்னதாகவே நகரில் முரசறைந்து அனைவருக்கும் செய்தியை அறிவித்துவிட்டிருக்கிறோம்.  இன்று நகரமே பொலிந்து தூதுக்குழுவை வரவேற்க ஒன்றுகூடும். அந்தியில் குடியவையில் அத்தனை குடித்தலைவர்களும் வந்து அமர்வார்கள். அவர்களின் அரசியின் பெயரை அவர்கள் அறியும் முதற்தருணம் அது. வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பு என்பதை அவர்கள் அறிவார்கள்.” கஜன் “அந்த வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது” என்றான்.

குதிரைக்கொட்டிலை நோக்கிச்செல்லும் பாதையை நோக்கி திரும்பிய உத்தரன் “நான் இங்கு எதற்காக வந்திருக்கிறேன் தெரியுமா?” என்றான். “புரவிப்பயிற்சிக்காக” என்றான் கஜன். “தாங்கள் பயில வேண்டியது ஒன்றுமில்லையென்றாலும் எப்போதும் பயிற்சியை விட்டுவிடுபவரல்ல. அஸ்தினபுரியின் வில்விஜயன் ஒவ்வொரு நாளும் புலரியில் வில்தொட்டு பயிற்சி எடுப்பான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.” உத்தரன் “ஆம், பயிற்சியை நான் தவறவிடுவதில்லை” என்று சொன்னான். “ஆனால் இன்று வெறும் பயிற்சிக்காக நான் வரவில்லை. காரகனில் ஏறிக்கொண்டு நகர் வீதிகளில் சுற்றிவர எண்ணுகிறேன்.”

“ஆனால் காரகன்…” என்று கஜன் சற்று தயங்க உத்தரன் “இன்று அவன் கன்றுக்குட்டிபோல என் கைக்கு அடங்குகிறான். கலிங்கத் தூதுக்குழு கோட்டைவாயிலுக்குள் நுழைந்து மங்கல இசையுடனும் குரவையொலியுடனும் அரண்மனை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது அவர்களை மின்னல்போலக் கடந்து ஒரு கரும்புரவி செல்லும். அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்க அமைச்சர்கள் அதுதான் முடிசூடி நாட்டை ஆளப்போகும் இளவரசர் உத்தரர் என்பார்கள். பயிற்சி முடிந்து விரைந்து அரண்மனைக்குச் செல்கிறார். நாம் அங்கு செல்வதற்குள் நீராடி ஆடை மாற்றி அரசணிக்கோலத்தில் அவைக்குச் சென்றுவிடுவார். நாம் அவையில் அவரைப் பார்க்கும்போது அப்போது வரைந்து முடிக்கப்பட்ட அணிஓவியம்போல் இருப்பார் என்பார்கள்” என்றான்.

“ஆம், மாவீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முகங்கள் கொண்டவர்கள்” என்றான் கஜன். “மூடா! மூடா!” என உத்தரன் நகைத்தான். “உண்மையை சொல்கிறாய். காரகனைப்போன்ற ஒரு புரவியை அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். அப்பெரும்புரவிமேல் ஏறிச்செல்கையில் நான் யாரென்பதை பிறிதெவ்வகையிலும் அறிவிக்க வேண்டியதில்லை அல்லவா?” என்றான். “ஆம், உண்மை” என்று கஜன் சொன்னான். “இணையான புரவியில் கிரந்திகன் தங்களைத் தொடர்ந்து வருவான். தங்கள் ஏவலரும் எத்தனை ஆற்றல் மிக்கவர்கள் என்பதை அவர்கள் அறியட்டும்.” அவனை திரும்பி நோக்கியபின் “ஆம்” என்று உத்தரன் சொன்னான்.

குதிரைக்கொட்டிலின் முற்றத்தில் அவர்கள் சென்றிறங்கியபோது எவரும் இருக்கவில்லை. அவர்களை வரவேற்க சற்று பொழுது கழிந்தே உள்ளிருந்து நாமர் ஓடி வந்தார். “எங்கே குதிரைக்காரர்கள் அனைவரும்?” என்றான் உத்தரன் இறங்கியபடி. “புரவிப்பயிற்சிக்காக காட்டுக்கு சென்றிருக்கிறார்கள். இன்று கலிங்கத் தூதுக்குழு வருவதனால் தாங்கள் வர வாய்ப்பில்லையென்று சொல்லப்பட்டது” என்றார் நாமர். “யார் சொன்னது? நான் சொல்லாமல் யார் சொன்னது?” என்று உத்தரன் கேட்டான். “இளவரசே, தங்கள் அரண்மனையில் தாங்களேதான் சொன்னீர்கள்” என்றார் நாமர். “நானா? நான் சொன்னேனா?” என்றான் உத்தரன். “ஆம், இளவரசே. என்னிடம் சொன்னீர்கள்” என்றார் நாமர்.

கஜன் கண்காட்ட அதை புரிந்துகொண்டு நாமர் “ஆனால் வரக்கூடும் என்றும் சொல்லப்பட்டது. நான் பிழையாக புரிந்துகொண்டேன்” என்றார். “என் நினைவு பிறழ்வதில்லை…” என்று உத்தரன் சொன்னான். “சரி, கிரந்திகனை அழைத்து வா. காரகன் உடனே ஒருங்கட்டும். நான் இப்போதே கிளம்பவேண்டும்.” நாமர் “கிரந்திகன் இங்கே இல்லை. அவர்தான் புரவிகளுடன் காட்டுக்கு சென்றிருக்கிறார்” என்றார். “அவன் எதற்கு காட்டுக்கு செல்லவேண்டும்?” என்றான் உத்தரன். “குதிரைகளுடன்…” என்று நாமர் சொல்ல இடைமறித்து “அவனை உடனே காட்டிலிருந்து அழைத்துவர ஆணையிடுகிறேன்” என்றான் உத்தரன். “இளவரசே, காடு இங்கிருந்து தொலைவில் இருக்கிறது. அவர்களை அழைத்து வருவதென்றால் பத்து நாழிகையாவது ஆகும்” என்றார் நாமர்.

உத்தரன் பொறுமையை இழந்து “காரகனை பூட்டி அழைத்து வாருங்கள்… உடனே” என்றான். “காரகனை…” என அவர் தயங்க “சொன்னதை செய்… செல்!” என்று உத்தரன் கூவினான். நாமர் உள்ளே செல்ல கஜன் உடன்சென்றான். நாமர் “என்ன சொல்கிறார்? காரகன் இவரை கடித்தே கொன்றுவிடும்” என்றான். “இல்லை, நான் ஒரு வழி வைத்திருக்கிறேன்” என்றான் கஜன். “வருக, சொல்கிறேன்.”

காரகன் அவர்கள் தன்னை நெருங்குவதை முன்னரே உணர்ந்து செவிகளை பின்னால் கோட்டி முன்னங்காலால் கற்தரையைத் தட்டி மூச்சு சீறியது. அதன் உடலில் தசைகள் விதிர்த்து அசைந்தன. கஜன் அதனருகே சென்று அதன் கீழ்க்கழுத்தை வருடினான். அது கழுத்தை வளைத்து தலையைத் திருப்பி அவன் தோளை நக்கியது. அவன் “சேணத்தை கொண்டுவாருங்கள்” என்றான். நாமர் “சேணத்தையா? இந்த மூடன் விழுந்து செத்துவிடுவான்… இதை என்னவென்று எண்ணினாய்? குதிரையல்ல, சிம்மம் இது” என்றார்.

“அவர் ஏறப்போவதில்லை… நான் ஒரு சூழ்ச்சி செய்யவிருக்கிறேன்” என்றான் கஜன். நாமர் சேணத்தை எடுத்துவந்து புரவிமேல் போட்டார். அதன் நாடாக்களை அவர் இழுத்துக் கட்டியபோது முதல் நாடாவை எடுத்து காரகனின் முன்வலக்காலைச் சுற்றி கட்டினான் கஜன். “என்ன செய்கிறாய்?” என்றார் நாமர். “அது நடக்கையில் சற்று நொண்டும்” என்றான் கஜன். நாமர் முகம் மலர்ந்து “ஆம், அது நன்று. அவரிடம் காட்டுவோம்” என்றார்.

அவர்கள் புரவியுடன் கொட்டில் முகப்புக்கு வந்தனர். நாமர் “உண்மையில் இவரைப் பார்க்கும்போதுதான் வாழ்க்கைமேல் நம்பிக்கையே வருகிறது. எக்குலத்தில் பிறந்தாலும் மூடன் மூடனே…” என்றார். காரகன் முன்னங்காலை இழுத்து இழுத்து வைத்து நடந்து வந்தது. “அதற்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை” என்றார் நாமர்.

உத்தரன் உரத்த குரலில் “மூடர்களே, அங்கே என்ன செய்கிறீர்கள்? விரைந்து வருக!” என்றான். கஜன் “அரசே, காரகனைக் காட்டவே கொண்டுவந்தோம். அதன் குளம்பு ஒன்று விரிந்துள்ளது. கமுக்கட்டில் வலி இருக்குமென நினைக்கிறேன். இன்று அது ஊர்வதற்கு உகந்தது அல்ல” என்றான். நாமர் “சந்திரிகை என்னும் அழகிய வெண்புரவி உள்ளது. விரைவானவள். தாங்கள் ஆணையிட்டால் அவளை இப்போதே ஒருக்கிக் கொண்டுவருவேன்” என்றார்.

ஒருகணம் தயங்கி காரகனின் கால்களை நோக்கிய உத்தரன் “இதுவே போதும்…” என்றான். “இது ஓடவியலாது, இளவரசே” என்றான் கஜன். “கால் சற்று நொண்டுவதும் நன்றே… கிரந்திகன் இல்லை என்பதனால்…” என்ற உத்தரன் “நான் நகருக்குள் செல்கிறேன். அவன் இருந்தால் எதிரே வருபவர்களை எச்சரிக்க முடியும்” என்றான். நாமர் “கோழை” என்று மெல்ல சொன்னார். “சேணமிட்டுவிட்டீர்களா? நன்று…” என்று உத்தரன் வந்து நாமரின் கையில் இருந்து சவுக்கை வாங்கிக்கொண்டான்.

காரகன் இருமுறை கால்களை உதறியது. பின்னர் குனிந்து நோக்கி உறுமியது. அது காலில் தோல்பட்டை தடுக்குவதை புரிந்துகொண்டுவிட்டது என்று கஜனுக்குப் புரிந்தது. காலை இருமுறை உதறிவிட்டு ஒடிப்பதுபோல முழங்காலை மடித்து அதேபொழுதில் வயிற்றை எக்கி உடலைக் குறுக்கி நாடாவினூடாக காலை வெளியே எடுத்துவிட்டது. இருமுறை உதறிவிட்டு தலையை நிமிர்த்தி பிடரி உலைய ஒருமுறை காலெடுத்து வைத்து நின்றது.

உத்தரன் “நான் விரும்புவது இதன் இந்த நிமிர்வைத்தான்…” என்றபடி அதன் விலாவை தொட்டான். காரகன் அசைவில்லாமல் நின்றது. அதன் காதுகள் மட்டும் பின் மடிந்தன. கஜன் அதன் கடிவாளத்தைப் பற்றி அதன் காதில் “அளிகூர்க… வேந்தே, அளிகூர்க” என்றான். “என்ன செய்கிறாய்? கொடு கடிவாளத்தை” என்று உத்தரன் கைநீட்டினான். கடிவாளத்தை அளித்துவிட்டு “வேந்தே, எளியமானுடர். வேந்தே, தங்களை வணங்குகிறோம்… அளிகூர்க, அரசே” என்றான் கஜன். “செல்வோம்… அங்கே என்ன செய்கிறாய்?” என்றான் உத்தரன். கஜன் தன் புரவியில் ஏறிக்கொண்டான். நாமரின் விழிகளை முழுமையாக தவிர்த்தான்.

“செல்வோம்” என்றபடி உத்தரன் புரவியை குதிமுள்ளால் தொட அது கணை என எழுந்து விரைந்தது. அதனுடன் விரைந்தபடி கஜன் “இளவரசே, சவுக்கை சொடுக்கவேண்டாம். அதன் ஒலியே எழலாகாது. காரகன் அதை விரும்புவதில்லை” என்றான். “ஆம், நான் அறிவேன்” என்றான் உத்தரன். அவர்கள் சிறிய சாலை வழியாக விரைந்தனர். காரகனின் குளம்படிகளின் எடையை ஓசைகள் வழியாக கஜன் உணர்ந்தான். முதுகிலேயே அதன் அதிர்வு விழுவதுபோலிருந்தது. எவ்வளவு பெரிய புரவி என எண்ணிக்கொண்டான். பிடரிமயிர் காற்றில் அலைபாய்ந்தது. கரிய சிம்மம், முரசுமேல் விழும் முழைத்தடிகள்போல. அதன் குளம்புகளை நோக்கியபடியே சென்றான்.

அரசப்பெருவீதியை அடைந்தபோது தரையெங்கும் அரிமலர் பெய்து பரவியிருப்பதைக் கண்டான். உப்பரிகைகளிலும் முகமண்டபங்களிலும் சாளரங்களிலும் கலைந்துகொண்டிருந்த பெண்கள் ஓடிவந்து அவர்களை நோக்கினர். சாலையோரங்களில் நின்றவர்கள் ஓசைகேட்டு பதறி விலகினர். தொலைவில் முரசுகளும் மங்கலப் பேரிசையும் முழங்கிக்கொண்டிருந்தது. வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் அதனுடன் கலந்தன. உத்தரன் “கடந்து சென்றுவிட்டனர்” என்றான். “ஆம்” என்றான் கஜன்.

அவன் அறியாமல் எண்ணியது அப்பொழுதே நிகழ்ந்தது. “ஏய்! ஏய்!” என உவகைப்பெருக்குடன் கூவிய உத்தரன் காரகனை சவுக்கால் ஓங்கி அறைந்தான். கனைத்தபடி முன்னிரு கால்களை காற்றில் தூக்கி எழுந்த காரகன் சீறியபடி ஒரு அணித்தூணை தட்டித்தெறிக்கவிட்டு சாலையில் பாய்ந்தது. “இளவரசே! இளவரசே!” என்று கூவியபடி கஜன் தொடர்ந்தான். தன் புரவியை மேலும் மேலுமென ஊக்கினான். அதற்குள் நெடுந்தொலைவு சென்றிருந்தது காரகன். அதன்மேல் உடலால் அதை அள்ளிப்பற்றியபடி உத்தரன் அமர்ந்திருந்தான்.

முன்னால் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தை கஜன் கண்டான். அதைக் கண்டு காரகன் சற்றே விரைவழியுமென அவன் எண்ணினான். ஆனால் அந்நிரையைச் சிதறடித்தபடி அது உள்ளே புகுந்தது. சொல்லற்ற ஓலமாக உத்தரன் அலறுவது அக்கூச்சல்களுக்கு நடுவிலும் கேட்டது. காரகன் முன்னால் சென்ற வண்டியை ஒதுங்கிக் கடந்து இரு புரவிகளை இடித்து இருபக்கம் தள்ளிவிட்டு முன்னால் பாய்ந்தது. உத்தரனின் கால் ஒரு தூணில் முட்டிக்கொள்ள அவன் அலறியபடி நிலத்தில் ஒருக்களித்து விழுந்து உருண்டு துடித்தான். தொலைவிலிருந்து பார்க்க ஓர் ஆடை விழுந்து காற்றிலாடுவது போலிருந்தது.

கடிவாளங்கள் இழுக்கப்பட்ட தேர்ப்புரவிகள் தலைகளைத் திருப்பி வாய்தூக்கி கனைத்தன. குளம்புகள் ஒன்றுடனொன்று முட்ட அங்குமிங்கும் திரும்பிக்கொண்டு நின்றன. பின்மரங்கள் உரசி ஒலிக்க, அச்சாணிகள் முனக தேர்ச்சகடங்கள் நிலைத்தன. தேர்களிலிருந்து இறங்கி ஓடிய கலிங்க இளவரசர்கள் உத்தரனை பற்றி தூக்கினர். அடிபட்ட கால் நீண்டிருக்க தொங்கும் தலையுடன் அவன் நினைவிழந்திருந்தான். “இளவரசர்! இளவரசர் உத்தரர்!” என்று விராடநாட்டுக் காவலர் கூவினார்கள். அனைத்து திசைகளிலிருந்தும் காவலரும் பிறரும் உத்தரனை நோக்கி கூடினர். கூச்சல்களும் ஆணைகளும் உரக்க எழுந்தன. கஜன் சோர்வுடன் புரவியை கடிவாளம் பற்றி நிறுத்திவிட்டு மெல்ல நிலத்தில் இறங்கி தலைகுனிந்து நின்றான்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 82

81. முகம்பரிமாறல்

flowerசேடியர் இன்னீரும் வாய்மணமும் விளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன் உதடுகளை நீட்டி கழுத்துத் தசை அதிர இளவரசியை கண்டித்தாள். ஒருகணத்தில் முக்தன் அவள் வசையுரைப்பது சைரந்திரியைத்தான் என்று புரிந்துகொண்டான். சைரந்திரி அரசியை நோக்காமல் இயல்பாக மேடையில் விழிகொண்டிருந்தாள்.

விறலி நீர் அருந்தி வாயில் மிளகுகளை போட்டுக்கொண்டாள். அவளுடனிருந்தவள் முழவின் பட்டைகளை இழுத்து கட்டைகளை சிறுசுத்தியலால் தட்டி இறுக்கினாள். இன்னொருத்தி யாழ் தந்திகளை முறுக்கி விரல்களை ஓட்டி சுதி நோக்கினாள். அதுவரை பாடிக்கொண்டிருந்த அவை குழந்தைகளென்றாகி சிணுங்குவதாக முக்தன் நினைத்தான். சைரந்திரியின் பக்கவாட்டு முகத்தில் தெரிந்த மென்னகையை நோக்கியபோது அவன் ஒன்றை உணர்ந்தான், அவளுக்கு அவன் நோக்குவதும் தெரியும்.

உளஅதிர்வுடன் அவன் விழியோட்டி எதிர்ப்பக்கத்தின் வெண்கலக் கதவுமுழையில் தெரிந்த ஒளித்துளியை கண்டான். பின்னகர்ந்து சுவரில் சாய்ந்துகொண்டான். இவள் ஷத்ரிய குலத்தவள். போர்க்கலை பயின்று உடலை விழியாக்கியவள். ஏன் இங்கு வந்திருக்கிறாள்? மீண்டும் அரசியை பார்த்தான். அவள் பற்களைக் கடித்தபடி பேசிக்கொண்டிருந்தாள். அவனுக்கு அவளை எண்ணி ஏளனமும் இரக்கமும் எழுந்தன. உடனுறைந்தும் சைரந்திரியை அரசி உணர்ந்திருக்கவில்லை. தான் பேசும் சொற்களால் அவளை அச்சுறுத்தவோ துயருறுத்தவோ முயல்கிறாள். அவன் புன்னகையுடன் வேலை கைமாற்றிக்கொண்டான்.

விறலி மீண்டும் வந்து மேடைமணையில் அமர்ந்தாள். அவள் தோழியர் இரு பக்கமும் அமர்ந்து யாழையும் தண்ணுமையையும் மடியில் வைத்துக்கொண்டனர். அவள் குறுமுழவை எடுத்து விரலோட்ட அது மெல்ல விம்மியது. அவ்வொலியில் பேசிக்கொண்டும் வேறுபக்கம் நோக்கிக்கொண்டும் இருந்த சேடியர் அனைவரும் அசைவுகொண்டு ஒருங்கமைந்தனர். அரசி இறுதியாக உத்தரையிடம் சில சொல்லிவிட்டு பெருமூச்சுடன் மேடையை நோக்கினாள்.

சைரந்திரி மேடையை நோக்கிக்கொண்டிருப்பதை ஓரவிழியால் கண்டு அவள் அமைதியிழப்பது தெரிந்தது. சைரந்திரி அறியாமல் அவளைப் பார்க்கவேண்டும் என விரும்பி அவள் மெல்ல திரும்பி நோக்க சரியாக அத்தருணத்தில் திரும்பிய சைரந்திரி அரசியை நோக்கி புன்னகையுடன் தலைதாழ்த்தினாள். அரசி திடுக்கிட்டு விழிவிலக்கிக்கொண்டாள். அவள் முகத்தில் தெரிந்த பதற்றத்தைக் கண்ட முக்தன் சிரிப்பை அடக்கியபடி முகம் திருப்பிக்கொண்டான்.

விறலி மீண்டும் தமயந்தியின் கதையை சொல்லத் தொடங்கினாள். “குண்டினபுரியில் முடிசூட்டிக்கொண்ட பீமபலன் தன் தமக்கையைத் தேடி நூற்றெட்டு வைதிகர்களை பாரதவர்ஷமெங்கும் அனுப்பினான். ஆயிரத்தெட்டு ஒற்றர்களை அனைத்து சாலைகளையும் உளவு நோக்க அனுப்பினான். தன் அக்கையைக் குறித்த செய்தி கொண்டுவருபவர்களுக்கு ஆயிரம் பொன்னும் ஆயிரம் பசுக்களும் பரிசளிப்பதாக முரசறிவித்தான். ஆற்றில் விழுந்த வைரக் கணையாழியை வலையிட்டுத் தேடுவதுபோல அந்தணரும் வணிகரும் ஒற்றரும் சூதரும் தமயந்தியை பாரதவர்ஷமெங்கும் தேடலானார்கள்.”

பாஸ்கரரின் தவச்சாலையிலிருந்து கலிங்கப் பெருவணிகர் குழுவுடன் வடக்கே சென்ற தமயந்தி வழியில் அவ்வணிகர் குழு காட்டு யானைகளால் தாக்கப்பட்டு சிதறடிக்கப்பட தான் மட்டும் காட்டு மரம் ஒன்றில் ஏறி உயிர் தப்பினாள். அங்கிருந்து தன்னந்தனியாக நடந்துசென்று சேதிநாட்டை அடைந்தாள். நெடுவழி நடந்து அவள் உடல் கன்றி பொலிவிழந்தது. நீள்குழல் உதிர்ந்த தேம்பியது. உணவின்றி மெலிந்து நோயுற்று நலிந்து சூக்திமதி நகருக்குள் நுழைந்தாள்.

அரசியென அமர்ந்திருந்தவளுக்கு தொழிலென்றும் புழக்கமுறையென்றும் ஏதும் தெரிந்திருக்கவில்லை. யானையிலும் பல்லக்கிலும் அமர்ந்தே அவள் நகரை கண்டிருந்தாள். மண்ணில் நடந்தறிந்த நகர் பிறிதொன்றாக இருந்தது. அங்கே எவரும் எவரையும் நோக்கவில்லை. எவரிடமும் பிறர் கனியவில்லை. பட்டி ஆடுகள் என மானுடர் தோள்முட்டி சினைத்தபடி எல்லைக்குள் ததும்பிக்கொண்டே இருந்தனர். அவள் அறிந்த ஆட்டநெறிகள் ஏதும் செயல்படாத பெருங்களம். அறியமுயன்று முட்டி மோதி ஏதோ கணத்தில் அவள் அகப்பதற்றம் ஒன்றை அடைந்தாள். அக்கணமே அனைத்தும் மேலும் சிதறிவிரிந்து முற்றிலும் அறியமுடியாதவை என்றாயின. பகைகொண்டு சூழ்ந்தன.

நீண்ட வழித்தனிமையில் தன்னுள் பேசிப்பேசி மொழியை இழந்துவிட்டிருந்தாள். சூக்திமதியின் தெருக்களில் அலைந்து எவரேனும் அளித்திடும் உணவை உண்டு தெருக்களில் உறங்கினாள். அவளை பிச்சி என்றெண்ணிய அங்காடிச் சிறுவர்கள் கற்களை வீசித் துரத்தினர். அவர்களிடமிருந்து தப்ப தெருவில் ஓடிக்கொண்டிருந்த அவளை ஆலயவழிபாடு முடித்து பல்லக்கில் வந்துகொண்டிருந்த சேதிநாட்டு அரசனின் அன்னை கண்டாள். நடையிலிருந்தே அவள் அரசகுலத்தாள் என்று அறிந்து தன்னுடன் அழைத்துச்சென்றாள்.

சேதிநாட்டு அரண்மனையில் தமயந்தி அரசனின் தங்கை சுனந்தையின் சேடியென்றும் தோழி என்றும் வாழ்ந்தாள். அரசிக்கு அணுக்கி என அமையும் ஷத்ரியப் பெண்ணையே சைரந்திரி என்பர். மிகச்சில நாட்களிலேயே சைரந்திரி மீண்டும் தன் உயிர்த்துடிப்பை பெற்றாள். அரசுநூலும் காவியமும் கலைகளும் அறிந்த அவளை சுனந்தை ஒருகணமும் பிரியாதவளானாள். அவள் சொல் பெற்றே எதையும் செய்தாள். இளவரசிக்கு அவள் ஒவ்வொரு நாளும் பாடம் சொன்னாள். களிக்காட்டில் வேட்டைக்கு அழைத்துச்சென்றாள். புரவி ஊரவும் யானையை மெருக்கவும் கற்றுக்கொடுத்தாள்.

தமயந்தி ஒருபோதும் குன்றாத ஊக்கம் புன்னகை என விளங்கும் முகம் கொண்டிருந்தாள். அரண்மனை அகத்தளத்தில் சுடரேற்றப்பட்டதுபோல அவள் விளங்குவதாக சேடியர் சொன்னார்கள். “சிறுமியருக்குரிய துள்ளலும் கன்னியருக்குரிய சிரிப்பும் அன்னையருக்குரிய கனிவும் கொண்டவள்” என்று அரசி சுகிர்தை சொன்னாள். மூதரசி அவளை நகைகளாலும் ஆடைகளாலும் அணிசெய்தாள். தன்னருகே நிகரென அமர்த்தி உணவளித்தாள். “மங்கலையே, நீ யார்? உன் முகத்தை எங்கோ நான் கண்டிருக்கிறேனே?” என்று அவள் கேட்டாள். “அதை மட்டும் நான் உரைக்கப் போவதில்லை, அரசி. காலம் வருகையில் அது தெளியட்டும்” என்று தமயந்தி சொன்னாள்.

அவ்வினாவைக் கேட்டதுமே அவள் முகம் மங்குவதைக்கண்டு அதை தவிர்த்தனர். பின்னர் அவள் எவரென்பது வெளிப்பட்டால் அங்கிருந்து சென்றுவிடுவாள் என அஞ்சி அவ்வெண்ணத்தையே அவர்கள் ஒழித்தனர். தமயந்தி அவர்களுடன் அவைமன்றுக்குச் செல்வதில்லை. நகர்த்தெருக்களிலோ ஆலயத்திலோ பொதுவிழிகள் முன் தோன்றுவதையும் தவிர்த்தாள். விறலியர் பாடும் அவைகளில் பின்நிரையில் அரையிருளிலேயே அமர்ந்தாள். ஆனால் பிறர் அறியாமல் அவள் குண்டினபுரியில் என்ன நிகழ்கிறதென்று அறிந்துகொண்டிருந்தாள்.

அந்நாளில் சுனந்தைக்கு மணத்தூதுடன் அந்தணராகிய சுதேவர் சூக்திமதிக்கு வந்தார். பத்மாவதி நகரை ஆண்ட பார்ஷிவ நாகர்குலத்தின் அரசனான விருஷசேனன் தன் மைந்தன் விருஷநாகனுக்காக அவளை கேட்டிருந்தான். அவையில் அச்செய்தி முன்வைக்கப்பட்டபோது முரண்பட்ட குரல்கள் எழுந்தன. “அவர்கள் நாகர்களில் இருந்து உருவான ஷத்ரியர். பரசுராமரால் அனலளிக்கப்பட்டவர்கள்” என்று அமைச்சர் தப்தர் சொன்னார். “குலப்பெருமை இல்லையென்றாலும் வளர்ந்துவரும் படைவல்லமையும் வாய்ப்பான வணிகமும் கொண்டவர்கள். சேதிக்கு நலம் சேர்க்கும் படைக்கூட்டாகவும் அமையும் இவ்வுறவு.”

ஆனால் அரசி சுகிர்தை “அரசனுக்கு பதினெட்டு மைந்தர்கள். அவர்கள் பூசலிட்டால் அம்மணிமுடி ஒருகணமும் நிலைகொள்ளாது” என்றாள். முதலில் அமைச்சர் சொன்னதை ஏற்றுக்கொண்ட அவை மெல்ல அரசியை நோக்கி சென்றது. இளவரசியின் ஒப்புதலைப் பெற்றபின் முடிவெடுக்கலாம் என்று கலைந்தது. அரசி சொல்வதையே இளவரசி சுனந்தை சொல்வாள் என அவையோர் எண்ணினர். ஆனால் மறுநாள் அவையில் இளவரசி தன் மணஒப்புதலை அறிவித்துவிட்டாள் என்றாள் முதுசெவிலி. அவை அதை வாழ்த்துரைத்து ஏற்றுக்கொண்டது.

சுதேவர் அரசியைச் சந்தித்து விடைபெறும்போது எப்படி அம்முடிவு எட்டப்பட்டது என இயல்பாக வினவினார். “அது இளவரசியின் அணுக்கியான சைரந்திரியின் சொல். பதினெட்டு இளவரசர்கள் என்பதே ஒற்றுமையை உருவாக்கும் என்று அவள் எண்ணுகிறாள்” என்றாள் அரசி. “பதினெட்டில் ஓரிருவர் முரண்பட்டால் பிறர் இணைந்து அவர்களை எளிதில் வெல்லமுடியும். நிகரென ஒருவன் எழுந்து உரிமைகோர இயலாது என்றாள். அது மெய்யென்றே தோன்றியது.”

சுதேவர் நகைத்து “மெய், அரசியல் வரலாறு காட்டுவது அதையே” என்றார். “அத்துடன் ஒற்றரை அழைத்து விருஷநாகரின் இளையோர் அவரிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று உசாவினாள் சைரந்திரி. அவர்கள் அவரிடம் எதையும் கேட்பதில்லை. தாங்கள் எண்ணியதைச் செய்கிறார்கள் என்றான் தலைமை ஒற்றன். நான் அதெப்படி என சினம்கொள்ள சைரந்திரி அது நன்று என்றாள். ஒவ்வொன்றுக்கும் மூத்தவரை நம்பினார்கள் என்றால் அவர்களுக்கு தன்னெண்ணம் இல்லை என பொருள். அவர்களை பிறர் வழிதவறச் செய்யக்கூடும். எங்கோ ஓரிடத்தில் அவர்கள் ஆணவம் புண்படலாம். அன்று அவர்கள் மீறிச்செல்லலாம் என்றாள்” என்றாள் அரசி.

சுதேவர் வியப்புடன் “மிகக்கூரிய நோக்கு, அரசி. அவர்களை நான்கூட இத்தனை தெளிவாக புரிந்துகொண்டதில்லை” என்றார். அரசி ஊக்கமடைந்து “தானென நிற்பவர்களே சிறந்தோர், அவர்கள் சித்தத் தெளிவுடன் மூத்தானுடன் நிற்பார்கள் என்றாள். அத்துடன் மூத்தவனின் உள்ளமென்ன என்று இளையோர் நன்கறிந்திருப்பதையும் அது காட்டுகிறது என்று விளக்கினாள். எனக்கு மாற்று எண்ணம் எழவேயில்லை” என்றாள்.

சுதேவர் “நான் அவளை காணலாமா?” என்றார். “அழைக்கிறேன்” என்றாள் அரசி. “வேண்டாம். அவள் அவைக்கு வரமறுக்கிறாள் என்றால் இங்கும் வரமாட்டாள். நானே சென்று அவளை பார்க்கிறேன். எங்கிருக்கிறாள் என்று மட்டும் சொல்க!” என்றார். “அங்கே கல்விச்சாலையில் இருக்கிறாள். உடன்அமர்ந்து இளவரசி காவியம் பயில்கிறாள்” என்றாள் அரசி. சுதேவர் சேடியொருத்தியுடன் கல்விநிலைக்குள் நுழைந்தபோதே தமயந்தியை கண்டுகொண்டார். அவர் நோக்கைக் கண்டு எழுந்து நின்றதுமே தமயந்தியும் அவர் தன்னை அறிந்ததை உணர்ந்துகொண்டாள்.

“அரசி, தங்களுக்காக பாரதவர்ஷமெங்கும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் விதர்ப்பத்தினர்” என்று சுதேவர் சொன்னார். “ஆம், நான் அதை அறிவேன். ஆனால் அவர்கள் என்னைக் கண்டடைந்து அழைத்துச் செல்லவேண்டும். அதுவே முறை. அதற்காகக் காத்திருந்தேன். வருந்தியழைக்காமல், வாயில்வந்து வரவேற்காமல் நான் குண்டினபுரிக்குள் நுழையமாட்டேன். அது என் கணவனுக்கும் நான் புகுந்த இல்லத்திற்கும் பெருமையல்ல” என்றாள் தமயந்தி. “நான் சென்று விதர்ப்பத்திற்கு செய்தியை அறிவிக்கிறேன். அரசவரிசையுடன் இளவரசர்களில் ஒருவர் நேரில் வந்து தங்களை அழைத்துச்செல்வார்” என்றார் சுதேவர்.

சுனந்தையும் அரசியும் அவள் தமயந்தி என்றறிந்ததும் திகைத்தனர். பின் உணர்வுக் கொந்தளிப்புடன் அவளை தழுவிக்கொண்டனர். அவள் அடைந்த துயர்களைக் கேட்டு விழிநீர் விட்டனர். ஆனால் மூதரசி அவளை அழைத்து தலைதொட்டு வாழ்த்தி “நான் அதை முன்னரே அறிந்துவிட்டிருந்தேன், மகளே. தசார்ணநாட்டு அரசர் சுதாமரின் இரு மகள்களில் நான் இளையவள். உன் மூதன்னை வாஹினி மூத்தவள். உன்னில் நான் கண்டது என் அக்கையின் இளமை முகத்தை. நளன் கதையை விறலி ஒருத்தி சொல்லக்கேட்டு உன் விழி மாறியதைக் கண்டதும் புரிந்துகொண்டேன். முடிந்தவரை நீ என்னுடன் இருக்கட்டும் என என் உள்ளம் விழைந்தது” என்றாள்.

அப்போதே பேரரசி தமயந்தி நகரில் உறைவதை அறிவிக்கும்பொருட்டு நிஷதநாட்டின் மின்கதிர்க் கொடியும் விதர்ப்பத்தின் கொடியும் சேதிநாட்டுக் கோட்டைமுகப்பில் ஏற்றப்பட்டன. பேரரசியை வாழ்த்தி நகரெங்கும் பெருமுரசுகள் முழங்கின. செய்தி பரவ நகரம் கொந்தளித்தெழுந்தது. அன்று மாலை அவள் கொற்றவை ஆலயத்திற்கும் இந்திரகோட்டத்திற்கும் சென்றபோது கொடியேந்தி வீரன் முன்செல்ல மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் வழியமைத்தனர். அரசஅகம்படி உடன் சென்றது. முதன்மை முறைமை அளித்தனர் பூசகர். சூக்திமதியின் அரசவையில் அவளை அழைத்து பொற்தால எதிரேற்பளித்தனர். அவள் அவைபுகுந்தபோது செங்கோல் தாழ்த்தி அரசன் வரவேற்றான். வாழ்த்துரைத்தது குடியவை.

விதர்ப்பத்திலிருந்து ஏழு இளவரசர்கள் நூற்றெட்டு வண்டிகளில் பரிசில்களும் வரிசைகளுமாக சேதிநாட்டுக்கு வந்தனர். அவையை வணங்கி தமயந்தியை அழைத்துச்செல்ல ஒப்புதல் கோரினர். பேரரசிக்கு அளிக்கப்படும் அவைமுறைமைகளுடன் தமயந்தியை சேதிநாடு வழியனுப்பியது. நகரம் அணிகொண்டது. தெருக்களில் கூடிய மக்கள் வாழ்த்தொலித்து அரிமலர் தூவினர். பெருமுரசங்கள் முழங்கி விடையளித்தன. படையூர்வலமாக தமயந்தி விதர்ப்பத்திற்கு சென்றாள். அவளை வரவேற்க நாட்டு எல்லை முதல் சாலையெங்கும் மக்கள் காத்து நின்றிருந்தனர். கோட்டைமுகப்பில் பீமபலனும் இளையோரும் வந்து நின்றனர். பீமபலன் தன் வாளை உருவி அவள் காலடியில் தாழ்த்தி எதிரேற்றான்.

பொன்முகபடாம் சூடிய பட்டத்து யானைமேல் அமர்ந்து தமயந்தி குண்டினபுரிக்குள் நுழைந்தாள். பேரரசி நகர்புகுவதை அறிவித்து முரசுகள் முழங்க கோட்டைமுகப்பில் மின்கதிர்க்கொடி எழுந்தது. நகரம் களிவெறிகொண்டு வாழ்த்து கூவியது. வீரர்கள் வாள்களையும் வேல்களையும் வீசி கூச்சலிட்டனர். பெண்கள் நெஞ்சைப் பற்றியபடி விம்மினர். அவளை நோக்கி நோக்கி தங்கள் நினைவுகளிலிருந்து வரைந்தெடுத்துக்கொண்டனர். பின்னர் அக்கணம் எழுந்தவள்போல அவள் தெரியலானாள். அவள் அரண்மனையை நெருங்கியபோது வாழ்த்தொலிகள் முற்றாக அமைந்து நகரம் அமைதியாக அழுதுகொண்டிருந்தது.

அரண்மனை முகப்பில் காத்திருந்த அவள் அன்னையும் அரசியரும் விழிநீர் விட்டபடி அவளை தழுவிக்கொண்டனர். அன்னை நிலைமயங்கி கீழே சரிய சேடியர் தாங்கிக்கொண்டார்கள். அங்கே செவிலியருடன் நின்றிருந்த இந்திரசேனன் அவள் கால்தொட்டு வணங்க அவனை தலைதொட்டு வாழ்த்தினாள். இந்திரசேனையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டபோதுமட்டும் அவள் விழிநீர் கொண்டாள். மைந்தருக்கும் விழிநீரன்றி ஒரு சொல்லும் இருக்கவில்லை. அன்னையின் தொடுகையிலேயே அவர்கள் இறுக்கிச் செறித்து உள்ளடக்கியிருந்த துயரை உணர்ந்தனர். இந்திரசேனையை செவிலி அணைத்து கீழே விழாமல் கொண்டுசென்றாள்.

வலக்கால் வைத்து தமயந்தி அரண்மனை புகுந்தாள். அவளை அரசன் அழைத்துச்சென்று தன் அரியணையில் அமரச்செய்து செங்கோலை அவள் கையில் அளித்தான். அவள் தலையில் விதர்ப்பத்தின் முடியை குலமூத்தோர் அணிவித்தனர். அந்தணர் அவளை வாழ்த்தினர். குடிகளும் சான்றோரும் அவளை வணங்கினர். “என்றும் என் மூத்தவள் சொல்லுக்கு அப்பால் இந்நாட்டில் நெறியென ஒன்றில்லை. அவள் நோக்கில் இந்நகர் வெல்லும். அவள் அளியால் இது செழிக்கும்” என்றான் பீமபலன். அவையினர் “ஆம்! ஆம் !ஆம்!” எனக்கூவி ஆர்ப்பரித்தனர்.

தமயந்தி தன் இளையவன் பீமத்துவஜனை அவைக்கு அழைத்து தோளுடன் அணைத்து அருகமர்த்திக்கொண்டாள். பீமபாகு என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த அவன் அவள் கால்களைத் தொட்டு வணங்கி அவள் அணைப்பில் விழிநீர் மல்கி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். குடியினர் ஒவ்வொருவராக வந்து அவளை வணங்கி கண்ணீர் பெருக குரல் உடைய அன்புரைத்தனர். அன்று நிகழ்ந்த உண்டாட்டில் பீமகர் மதுவுண்டு அனைத்து தன்கரைகளையும் மீறி அழுதுகொண்டே இருந்தார். தன் இளையோரின் மைந்தருடனும் தன் மைந்தருடனும் மலர்ச்சோலையில் இரவெல்லாம் விளையாடிய தமயந்தி புலரி எழுந்தபோதுதான் படுக்கைக்கு சென்றாள். தனிமையில் அவள் நளனை எண்ணி விழிநிறைந்தாள்.

flowerவிறலி முழவைத் தாழ்த்தி வணங்கியபோது சூழ்ந்திருந்தவர்கள் பாராட்டு ஒலிகளுடன் எழுந்தனர். முக்தன் அவர்களின் நோக்கு படாமல் விலகிக்கொண்டான். உள்ளே கலைந்த குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. பின்னர் அரசி கிளம்புவதை அறிவிக்கும்பொருட்டு முதற்சேடி தன் கையிலிருந்த வலம்புரிச் சங்கை முழக்கினாள். வாழ்த்தொலிகள் எழுந்தன. கொடியுடன் ஒருத்தி முன்னால் செல்ல அரசி தொடர்ந்து சென்றாள். அவளுக்குப் பின்னால் சைரந்திரி நடந்தாள்.

அவர்கள் சென்றபின் உத்தரை வெளியே வந்தாள். அவளுடன் இருந்த சேடியர் அவனை நோக்கினர். அவள் முன்னால் நடக்க முக்தன் பின்தொடர்ந்தான். அவள் இடைநாழியை அடைந்தபோது நின்று திரும்பி அவனிடம் “உமது பெயர் முக்தன் அல்லவா?” என்றாள். “ஆம், இளவரசி” என்றான். “உம்மிடம் ஆசிரியர் சொன்னதென்ன?” என்றாள். “உங்களுடன் இருக்க.” அவள் புன்னகைத்து “எனக்குக் காவலாகவா?” என்றாள். “ஆம்” என்றான். அவள் சிரித்து “அவர் உம்மை விலக்கியிருக்கிறார். இப்போது சென்றால் குடிலில் அவர் இருக்கமாட்டார்” என்றாள்.

முக்தன் ஒன்றும் சொல்லவில்லை. “அவர் பூனையைப்போல என என் தோழிகள் சொல்கிறார்கள். இங்கிருப்பதான தோற்றத்தை உருவாக்குகிறார். ஆனால் எங்கெங்கோ சென்று மீள்கிறார். அவருடைய தடம் இங்கு எவருக்கும் தெரிவதில்லை.” முக்தன் “ஆனால் காவலர்…” என சொல்லத்தொடங்க “காவலர் கண்மறைவது அவருக்கு ஒரு பொருட்டா என்ன?” என்றாள். முக்தன் “ஆம்” என்றான். “ஏன் உம்மை விலக்கினார் என எண்ணுகிறீர்?” என்றாள். அவனால் ஒன்றும் சொல்லக்கூடவில்லை.

“அவருக்கும் இங்கிருக்கும் சிலருக்கும் நாம் அறியாத உறவு உள்ளதென்று தோன்றவில்லையா உமக்கு?” என்றாள். அவன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “ஏறத்தாழ இரண்டுமாத காலத்திற்குள் இங்கே அறுவர் வந்துசேர்ந்தனர். அறுவரும் எளிய மானுடர் அல்ல. இங்கே நிகழ்வன ஒவ்வொன்றும் தேவர்கள் நிகழ்த்துவது போலுள்ளது. அதில் உச்சம் கீசகரின் மறைவு” என்றாள் உத்தரை. “அதை பாரதவர்ஷமே அறிந்துவிட்டது என்றான் ஒற்றன். ஏனென்றால் வெல்லப்பட முடியாதவர் என்னும் தோற்றம் கீசகருக்கு இருந்தது.”

“அவரை கந்தர்வர்கள்…” என்று முக்தன் சொல்லத்தொடங்க அவள் கைவீசி அதைத் தடுத்து “வலவன் கந்தர்வன் அல்ல” என்றாள். அவன் நின்றுவிட்டான். அவள் திரும்பிநோக்கி “என்ன?” என்றாள். “அவரா?” என்றான். “ஐயமுண்டா?” என்றாள். “நான் அவ்வண்ணம் எண்ணவே இல்லை, இளவரசி” என்றான். அவள் புன்னகை செய்தாள். பின்னர் “ஏதோ நம்மைச் சூழ்ந்து நிகழ்கிறது. இவ்வரண்மனையில் என்னைத் தவிர அரசகுடியினர் எவரும் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆபரை நம்பி இந்நாடு இயங்குகிறது” என்றாள்.

அவள் இதையெல்லாம் தன்னிடம் ஏன் சொல்கிறாள் என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் அரசகுடியினர் அவ்வாறு மிக எளியவர்களிடம் அணுக்கம் காட்டுவதும் மறுமுறை பார்க்கையில் முகமே அவர்களுக்குத் தெரிந்திருக்காது என்பதும் அவன் அறிந்தவையே. “நீர் இன்று கேட்ட கதையைப்பற்றி என்ன நினைக்கிறீர்?” என்றாள் உத்தரை. “அரசி தமயந்தியின் கதை… நன்று” என்றான். “நான் இக்கதையை இதுவரை பதினைந்து வடிவங்களில் கேட்டிருக்கிறேன். இங்கே நாகவிறலி சொன்ன கதையில் அவள் கார்க்கோடகனின் நஞ்சு படர்ந்து முதுமகளானாள். ஆகவேதான் அவளை சேதிநாட்டில் எவரும் அடையாளம் காணவில்லை” என்றாள் உத்தரை.

“ஆம், அதுவே பொருத்தமாகத் தெரிகிறது” என்றான் முக்தன். உத்தரை “அது நாகர்களின் கதை” என்றாள். “பீமகர் நாடுகளெங்கும் தேடியும் அவளை கண்டடைய முடியவில்லை. இறுதியில் தென்னகத்துக் கணியர் ஒருவரை அழைத்துவரச் செய்து அவள் பிறவிநூலை ஆராய்ந்தார். அவளுக்கு நாகக்குறை இருப்பதை அவர் கணித்துச் சொன்னார். அவள் ஆவணி மாதம் ஆயில்யம் மீன்பொழுதில் பிறந்தவள்.” முக்தன் “ஆம்” என்றான். “அவளை நாகம் கவ்வியிருப்பதை அவர் கண்டறிந்து சொன்னார். நாக கிரகணம் விலக பீமகர் விதர்ப்பத்தில் பெருவேள்வி ஒன்றை நிகழ்த்தினார். அதில் ஆயிரம் நாகங்கள் வந்து நிலம்கொத்தி ஆணையிட்டுச் சென்றன. இறுதியாக நிழலுருவாக வந்த கார்க்கோடகன் அவளைக் கொத்தியது தானே என்று ஒத்துக்கொண்டான்.”

சேடிகள் அப்பால் விலகி குரல் கேட்காத தொலைவில் நடக்க அவன் அவளுடன் தனியாக பேசிக்கொண்டு சென்றான். அது அவனுக்கு பதற்றத்தை அளித்தது. அதை ஒரு நூற்றுவர்தலைவன் நோக்கினால்கூட அவன் முற்றெதிரியாகிவிடுவான். அவனிடமிருந்து அரசகுடியினர் தன்னை காக்கவும் போவதில்லை. அவள் “கார்க்கோடகன் அவளிடமிருக்கும் தன் நஞ்சு அவளால் செரிக்கப்படுவதாகவும் அது முற்றிலும் மறையும்போது அவள் விடுபடுவாள் என்றும் சொன்னான். அப்போது அவள் தன்னுரு தெளியும், அவளை பிறர் எவரென்று அறிவர் என்றான். பீமகர் அதற்காக காத்திருந்தார்.”

“தமயந்தியின் உடல் மாறிக்கொண்டே இருப்பதை அகத்தளப் பெண்டிர் அனைவரும் அறிந்திருந்தனர். அவள் தோலின் சுருக்கங்கள் மறைந்தன. கூன் நிமிர்ந்துவந்தது. தளர்ந்த முகத் தசைகள் இறுகின. அவள் நாள்தோறும் இளமைகொண்டாள். புகைவிலகி சுடர் எழுவதுபோல அவளைப் பீடித்திருந்த ஒன்று அகன்றது. ஒருநாள் அவள் தன் படுக்கையில் துயின்றுகொண்டிருக்கையில் ஏதோ சொல்லக்கேட்டு உடன் துயின்ற சேடி எழுந்து நோக்கினாள். அவள் மலர்ந்த முகத்துடன் குரல் கனிந்து ஏதோ உரைத்தாள். அவள் கச்சு நனைய முலைப்பால் ஊறியிருந்ததை சேடி கண்டாள்.”

முக்தன் “ஆம் இளவரசி, இக்கதையை நான் இளமையில் கேட்டிருக்கிறேன்” என்றான். ஆனால் அக்கதையை அவன் அப்போதுதான் அறிந்தான். உத்தரை உளம் குலைந்துவிட்டாளோ என்னும் ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. “அப்போது அவள் முகத்தை நோக்கிய சேடி அவளை எங்கோ பார்த்திருப்பதை உணர்ந்தாள். மறுநாள் அவள் எழுந்தபோது மிக இளமையாக இருந்தாள். அரசி அவள் தமயந்தி என்பதை உடனே கண்டுகொண்டாள். அவள் முடிசூட்டு விழாவுக்கு அரசருடன் அவளும் சென்றிருந்தாள். தமயந்தி நிகழ்ந்த அனைத்தையும் உரைத்தாள். விதர்ப்பத்திற்கு செய்தியனுப்பப்பட்டது. அவளுடைய ஏழு இளவல்கள் பரிசில்களும் வரிசைகளுமாக வந்து அவளை அழைத்துச் சென்றனர். அவளைப் பற்றியிருந்த அரவுக்குறை முற்றிலும் விலக அவள் முன்னிருந்த எழிலை அடைந்தாள்.”

“ஆம்” என்றான் முக்தன். “முக்தரே, நானும் அரவுக்குறை கொண்டவள்தான், அறிந்திருப்பீர்” என்றாள் உத்தரை. அவள் அங்கே வந்துசேர்வதற்காகவே அதை சொல்லியிருக்கிறாள் என்று முக்தன் உணர்ந்தான். அவன் தலையசைத்தான். “அதை ஆசிரியரிடம் சென்று சொல்லும். விதர்ப்பினியாகிய தமயந்திக்கு இணையாகவே குருவின் அருளுமிருந்தது. என்னுடையது முற்றான அரவுக்குறை. நான் மீள்வது கடினம்.” முக்தன் என்ன சொல்வதென்று அறியாமல் “இளவரசி…” என்றான். “இதை இவ்வண்ணமே சென்று சொல்க!” என்றாள் உத்தரை. “ஆணை” என்றான் முக்தன்.

அவர்கள் படிகளை அடைந்தனர். “நீர் உடன்வரவேண்டியதில்லை. அவர் குடிலருகே காவலிரும். அவர் வரும்போது நான் சொன்னவற்றை அப்படியே சொல்லும்” என்றாள் உத்தரை படிகளில் ஏறியபடி. “அவரை நீர் அறிவீர்” என்று அவனை நோக்காமல் சொன்னாள். அவன் “இல்லை, இளவரசி” என்றான். “என்னைப்போலவே நீங்களும் அவரை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர். நான் பார்ப்பதன் மறுபக்கத்திலிருந்து.” அவன் நெஞ்சு படபடக்க “காவலனாக என் பணியை…” என்றான். அவள் இடைமறித்து “நான் அவரில் அகழ்ந்தெடுத்த உருவம் ஒன்று உண்டு. நீங்களும் அவ்வாறு ஒன்றை அகழ்ந்தெடுத்திருப்பீர்கள்” என்றாள்.

அவன் மூச்சை இழுத்துவிட்டு மறுமொழி சொல்லாமல் நின்றான். “ஆம், எப்போதும் மேலே தெரிவது இனியது. ஆழ்ந்திருப்பது ஒவ்வாதது” என்று உத்தரை சொன்னாள். அவன் அப்போதும் மறுமொழி சொல்லவில்லை. அவள் திரும்பி “சொல்க!” என்றாள். முக்தன் தொண்டையைச் செருமி குரலை திரட்டிக்கொண்டான். “இளவரசி, அது நீங்களும் உள்ளூர அறிந்ததே” என்று கூறியபோது அவன் சொற்கள் உருக்கொண்டன. “அந்த ஆழுருவமும் அவரால் நமக்கு அளிக்கப்படுவதே. அதுவும் பொய்யே.” அவள் உடலில் ஒரு விதிர்ப்பை அவன் கண்டான். மாடிப்படியின் கைப்பிடியைப் பற்றியிருந்த கைகள் இறுகின.

“அவர் நம்முடன் விளையாடுகிறார். நாம் விரும்பவும் வெறுக்கவும் இரு தோற்றங்களை பூண்கிறார். அவற்றுக்கு அப்பால் அவர் யார்? அதை நம்மால் அறியவே முடியாது. எங்கோ எவரோ ஒருவரிடம் மட்டுமே முற்றிலும் திறந்துகொள்கிறார். அவ்வாறு திறந்துகொள்வது அவருக்கு தான் அளிக்கும் காணிக்கை என்று எண்ணுவதனால் பிறர் எவருக்கும் அதை அளிக்க மறுக்கிறார்.” அவள் திரும்பி நோக்கியபோது முகம் சீற்றம்கொண்டிருந்தது. மூச்சில் கழுத்துக்குழிகள் எழுந்தமைந்தன. “யார் அவள்?” என்றாள்.

“அது பெண்ணல்ல” என்றான் முக்தன். “அவர் ஓர் ஆண். அவரிடம் இவர் கொள்ளும் காதலே இவரில் பெண்மையென வெளிப்படுகிறது.” அவள் கலங்கிய கண்களுடன் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். “இந்த ஓராண்டும் நான் அவரையன்றி பிறிதொன்றை எண்ணவே இல்லை. என் தவம் இது” என்றான் முக்தன். “நீங்களும் அதையே செய்தீர்கள். ஆகவே நாமிருவரும் அவர் எவரென்று உள்ளூர அறிவோம்.” அவள் நீள்மூச்சுடன் ஒன்றும் சொல்லாமல் படிகளில் ஏறிச்சென்றாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 81

80. உள்ளொலிகள்

flowerஉத்தரை அவ்வேளையில் அங்கு வருவாள் என்று முக்தன் எதிர்பார்க்கவில்லை. பிருகந்நளையின் குடில் வாயிலில் மரநிழலில் இடைக்குக் குறுக்காக வேலை வைத்துக்கொண்டு கையை தலைக்குமேல் கட்டி வானை நோக்கியபடி விழியுளம் மயங்கிக்கொண்டிருந்தான். அவள் வரும் ஓசையைக் கேட்டு இயல்பாக தலை திருப்பி நோக்கியவன் இளவரசி என அடையாளம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்றான். வேல் அவன் உடலிலிருந்து உருண்டு கீழே விழுந்தது.

உத்தரை அருகே வந்து “ஆசிரியர் உள்ளே இருக்கிறாரா?” என்றாள். “ஆம், இளவரசி. ஓய்வெடுக்கிறார்” என்று முக்தன் சொன்னான். குனிந்து வேலை எடுக்க வேண்டுமா என்ற எண்ணம் வந்து அதைத் தவிர்த்து அக்குழப்பம் உடலில் ஒரு சிறு தத்தளிப்பாக வெளிப்பட “ஓய்வெடுக்கையில் அவர் எவரையும் பார்க்க ஒப்புவதில்லை” என்றான். “நான் வந்திருப்பதாக சென்று சொல்லுங்கள்” என்று சொன்னாள் உத்தரை. “அவர் பொதுவாக…” என்று முக்தன் சொல்லத்தொடங்கவும் கைகாட்டி “செல்க!” என்று கூர்கொண்ட விழிகளுடன் அவள் சொன்னாள்.

அவன் பணிந்து “இதோ” என்று குடிலின் படிகளில் ஏறி மூடியிருந்த மரக்கதவை மும்முறை தட்டி “ஆசிரியரே!” என்று அழைத்தான். இரண்டு முறை அழைத்த பின்னர்தான் உள்ளே ஒலி கேட்டது. “யார்?” என்று பிருகந்நளை கேட்டாள். “இளவரசி தங்களை பார்க்கும்பொருட்டு வந்திருக்கிறார்” என்றான். எப்போதுமே பிருகந்நளை கதவைத் திறக்க நெடுநேரம் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது மறுமொழிக்கே அவன் காத்து நிற்கவேண்டியிருந்தது. “நான் ஆடை மாற்றிக்கொள்கிறேன். அதன் பிறகு உள்ளே அனுப்புக” என்றாள். “ஆணை” என்று தலைவணங்கியபின் வெளிவந்து “ஆடை மாற்றிக்கொள்கிறார். சற்று பொறுங்கள்” என்று முக்தன் சொன்னான்.

அவள் சற்று அப்பால் மரநிழலில் மார்பில் கைகளைக் கட்டியபடி நின்றாள். அவள் முகத்தை ஓரவிழியால் பார்த்தபோது அதில் கவலையும் பதற்றமும் தெரிவதைக் கண்டான். அவள் எதையோ முறையிடும்பொருட்டு வந்திருக்கிறாள் என்று தோன்றியது. அது என்னவாக இருக்கும் என்று எண்ணினான். வெறும் காவலனாக அவன் அதை எண்ணக்கூடாது என்பதே படைப் பயிற்றுவிப்பில் அவன் கற்றது. ஆனால் எண்ணாமலிருக்கவும் கூடவில்லை. ஏனெனில் அவள் அவனுக்கு இளவரசியல்ல. பிறிதொருத்தி. அவ்வெண்ணம் அவனை திடுக்கிடச் செய்தது.

அவளுக்கும் தனக்குமான உறவு எத்தகையது என்று அவனால் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவள் பிருகந்நளையிடம் நடனம் கற்றுக்கொள்கையில் கூடத்திற்கு வெளியே அவன் காவல் நின்றிருப்பான். அவனைக் கடந்துதான் அவள் நடனக்கூடத்திற்கு செல்வாள். தொலைவிலேயே அவனை அவள் பார்த்துவிடுவாள் என்று அவனுக்குத் தெரியும். அவனைக் கண்ட முதற்கணமே அவள் உடல் மாறுபடும். மிடுக்குடன் தலைதூக்கி கைகளை சற்று மிகையாகவே வீசி இடையை நெளித்து நடந்து வருவாள். குரல் மிகுந்து ஒலிக்கும்.

பெரும்பாலும் அவ்வாறு மிகையொலி கொண்ட குரல் கேட்டுதான் அவன் அவளை பார்ப்பான். அருகணைந்ததும் தலைவணங்கி முகமன் உரைப்பான். ஒருமுறைகூட அவள் அவனை நோக்கி திரும்பியதோ அவன் உரைக்கும் முகமனுக்கு மறுமொழி சொன்னதோ எதிர்வினை காட்டியதோ இல்லை. ஓரிரு நாட்களுக்குள் அவன் புரிந்துகொண்டான், அவள் தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறாள் என்று. அது இளவரசி எளிய காவலன்மேல் கொண்டுள்ள புறக்கணிப்பு அல்ல என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

அதை நோக்கி செல்வதைத் தவிர்த்து மேலும் பணிவு கொண்டவனாக தன்னை காட்டிக்கொண்டான். அவளைக் காணும்போதெல்லாம் பதற்றத்துடன் எழுந்து இடைவரை வணங்கி உரத்த குரலில் முகமன் உரைத்தான். சில தருணங்களில் அது அவளுடன் வந்த தோழியருக்கு நகைப்பூட்டுவதாகவும் இருந்தது. அவள் உள்ளே சென்று பிருகந்நளையிடம் பேசும்போது மட்டும் குரல் மிகத் தாழ்ந்து ஒரு சொல்லும் புரியாதபடி மாறும். அத்தனை சிலம்பல்களில் அவள் கால் சதங்கையை மட்டும் அவன் தனித்தறிவான். அவ்வோசையிலிருந்தே உள்ளே அவள் என்ன செய்கிறாள் என்பதை அவனால் பார்க்க முடியும்.

நெடுநேரம் சலங்கையொலி கேட்காதிருக்கையில் அந்த ஒலியின்மையை ஒவ்வொரு கணமாக கேட்டபடி செவிகளே உடலாக அவன் அமர்ந்திருப்பான். பின்னர் உரக்க நகைத்தபடி கைவளைகளும் சதங்கைகளும் குலுங்க அவள் வெளியே செல்வாள். அவன் தலைவணங்குவதை கிளையசைவோ நிழலாட்டமோ என கடந்துசென்று இடைநாழியின் முனையில் வண்ணம் கரைந்தழிவதுபோல் மறைவாள். அதன் பின் அவன் நிமிர்கையில் எரிச்சலும் கசப்பும் உருவாகும்.

பிருகந்நளைக்கும் உத்தரைக்குமான உறவைப்பற்றி அவள் சேடியர் என்ன சொல்லிக்கொள்கிறார்களென்று உதிரிச் சொற்களினூடாகவே அவன் அறிந்திருந்தான். “மெல்ல இளவரசி ஆணாக வேண்டியதுதான். இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்ள முடியும்” என்றொருத்தி சொன்னாள். பிறர் சிரிக்க அவன் விழிகளை விலக்கி உடலை இறுக்கிக்கொண்டு நின்றான். அவர்கள் தாழ்ந்த குரலில் தங்களுக்குள் பேசி கிளுகிளுத்துச் சிரித்தனர். ஒருத்தி மேலும் தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல அனைவரும் பேரொலியுடன் வெடித்துச் சிரித்து கண்ணீர் மல்க உடல் துவண்டனர். இருவர் எழுந்து வயிற்றைப் பற்றியபடி அப்பால் ஓடினர். அங்கு நின்றிருக்க முடியாமல் அவன் மெல்ல விலகிக்கொண்டான்.

கதவு திறந்து பிருகந்நளை வெளியே வந்து “வருக, இளவரசி!” என்றாள். இளவரசி அவளை நோக்கி சென்று “தங்களை தனியாக சந்திப்பதற்காக வந்தேன், ஆசிரியரே” என்றாள். பிருகந்நளை சுற்றும் நோக்க “சேடியருக்குத் தெரியாது” என்றாள் உத்தரை. “வருக!” என்று உத்தரையை பிருகந்நளை உள்ளே அழைத்துச் சென்றாள். முக்தனிடம் “இளவரசி அருந்துவதற்கு குளிர்நீர்” என்றாள். “வேண்டியதில்லை” என்று உத்தரை சொன்னாள். “என் குடிலுக்கு முதல் முறையாக வந்திருக்கிறீர்கள்” என்றாள். “வருக!”

இருவரும் உள்ளே சென்று அமர்வதை திறந்த வாயிலினூடாக முக்தன் பார்த்தான். பிருகந்நளை சுவரோரமாக மரத்தாலான மணையில் ஒரு காலை கிடைமடித்து இன்னொரு காலை நிலைமடித்து அதன் மேல் கைகளை வைத்துக்கொண்டு அமர்ந்தாள். அவளுக்கெதிராக இரு கால் மடித்து அமர்ந்து மடியில் கைகளை வைத்துக்கொண்டு தாழ்ந்த குரலில் பேசத்தொடங்கினாள் உத்தரை. முகமனோ தயக்கமோ இல்லை. அவள் அச்சொற்களை நீரை கைகளில் அள்ளிக்கொண்டுவருவதுபோல கொணர்ந்திருக்கவேண்டும்.

பிருகந்நளைக்கு உணவு சமைக்கும் சிறுகுடில் அதே சோலையில் சற்று அப்பால் இருந்தது. அங்கு சென்று குளிர்நீரும் பாக்கும் ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு முக்தன் திரும்பி வந்தான். அவற்றை அவர்கள் இருவருக்கும் நடுவே வைத்தான். அதுவரை பேசிக்கொண்டிருந்த உத்தரை இறுதியாகச் சொன்ன சொல் கண்களிலும் முகத்திலும் உறைந்து நின்றிருக்க அவனை பார்த்தாள். அவள் கண்கள் சற்று கலங்கியிருப்பதுபோல முக்தனுக்குத் தோன்றியது. பிருகந்நளையின் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை.

தலைவணங்கி அவன் வாயிலை நோக்கி செல்ல பிருகந்நளை “இளவரசியின் மணத்தன்னேற்புக்கு நாள் குறிக்கப்போவதாக கேள்விப்பட்டேன்” என்றாள். முக்தன் அவர்கள் இருவர் முகத்தையும் மாறி மாறி நோக்கியபின் “ஆம், அது நகரில் அனைவரும் அறிந்ததே” என்றான். “இளவேனில் தொடக்கத்தில் அல்லவா?” என்றாள் பிருகந்நளை. “ஆம், ஆசிரியரே” என்றான் முக்தன். அதை ஏன் அவர்கள் தன்னிடம் சொல்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. எதன்பொருட்டு தன்னை உள்ளிழுக்க முயல்கிறார்கள்?

“மணத்தன்னேற்பு நன்று. அது எவ்வகையிலோ அவ்விளவரசியை முதன்மைப்படுத்துகிறது. அவளை பாரதவர்ஷம் திரும்பி நோக்குகிறது. பேரரசியென்று அவள் கொழுநன் நகர்புகுவாள். அரியணை சிறக்கவும் புகழ் நிலைக்கவும் மணத்தன்னேற்பு ஒரு நல்ல தொடக்கம். பாரதவர்ஷத்தில் அத்தனை பேரரசியரும் மணத்தன்னேற்பினூடாகவே அறியப்பட்டார்கள். தமயந்தியும்கூட” என்றாள் பிருகந்நளை. “ஆம், ஆசிரியரே” என்று முக்தன் சொன்னான். அப்போதும் அவ்வுரையாடல் எதற்காக என்று அவனுக்கு புரியவில்லை. உத்தரை எதுவுமே சொல்லவில்லை.

முக்தன் அங்கு நின்றிருப்பதா விலகிச் செல்வதா என்று அறியாமல் உடல் திகைத்தான். பிருகந்நளை “எப்படியென்றாலும் பெண் தன்னை உடலென முன்வைத்தே ஆகவேண்டும். அவள் உடல் அதன்பொருட்டே மலர்வு கொண்டுள்ளது. வெறும் உடலாக முன்வைப்பதுதான் பிற குடிகளின் வழக்கம். கொடியும் முடியும் அகம்படியுமாக அவற்றைச் சூடிய ஆணவமுமாக தன்னை முன்வைப்பதென்பது ஓர் அருங்கொடை” என்றாள் பிருகந்நளை.

எதிர்பாராதபடி உத்தரை உரத்த குரலில் அவனிடம் “இங்கென்ன செய்கிறாய்? வெளியே போ!” என்றாள். அந்தக் கடுங்குரல் அவனை திகைக்க வைத்தது. “பொறுத்தருள்க, இளவரசி” என்று அவன் சொன்னான். “வெளியே போ” என்று அவள் கைநீட்டி மூச்சிரைக்க கூவினாள். “இதோ” என்று அவன் தலைவணங்கி புறங்காட்டாது வெளியே சென்றான். “கதவை மூடு!” என்று அவள் ஆணையிட்டாள். அவன் கதவை மூடிவிட்டு வெளியே நின்று கொண்டான்.

உள்ளே அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை செவி கொடுத்து உளம் ஏற்றக்கூடாது என்று முடிவெடுத்தான். மரத்தடியில் நின்றபோது மெல்லிய குரல் கேட்டது. அழுகையோ மன்றாட்டோ என உத்தரை பேசிக்கொண்டிருந்தாள். அவன் மேலும் நடந்து மகிழ மரத்தடியில் சென்று நின்றான். அங்கு முற்றிலும் குரல் கேட்கவில்லை. ஆயினும் கேளாக் குரலை உள்ளம் நடித்துக்கொண்டிருந்தது. கண் மூடினாலும் எஞ்சும் விழித்தோற்றம்போல. அவன் தன் வேலை மடியில் வைத்து மகிழ மரத்தடியில் அமர்ந்தான். அங்கு வெயில் அவன் கால்களில் விழுந்து வெம்மை காட்டியது.

எண்ணியிராதபடி குடிலுக்குள் உரத்த குரலில் உத்தரை “இறப்பதொன்றே வழி” என்று கூவுவதை கேட்டான். மீண்டும் தாழ்ந்த குரலில் அவர்கள் பேசிக்கொள்ள உத்தரை மீண்டும் உரத்த குரலில் “நான் இறந்தேன் என்றால் என்ன செய்வீர்கள்? நான் கேட்பது அதுதான். என் இறப்பை ஒரு பொருட்டாகக் கருதுவீர்களா?” என்றாள். முக்தன் மூடிய கதவையே பார்த்துக்கொண்டு நின்றான். அந்தக் கதவு அழுகையை அடக்க முயலும் இதழ்போல விம்முவதாகத் தோன்றியது. நீர் நிறைந்த ஏரியின் மதகுபோல உள்ளிருந்து அழுத்தம் அதை முட்டியது.

அவன் ஒவ்வொரு கணமாக கடந்து சென்றான். தன் உடலில் அனைத்து தசைகளும் இறுகி நின்றிருப்பதை உணர்ந்தான். பின்னர் கதவு வெடிப்போசையுடன் திறந்து சுவரில் அறைந்தது. உத்தரை வெளியே வந்து படிகளில் இறங்கி ஓடி அவனை நோக்கி வந்தாள். அவன் தலைவணங்குவதை நோக்காமல் அவனைக் கடந்து அரண்மனையை நோக்கி ஓடினாள்.

பிருகந்நளை குடிலிலிருந்து வெளியே வந்து மரப்படிகளில் கைகளைக் கட்டியபடி நின்றாள். இளங்காற்றில் அவள் ஆடை தழலென உலைந்தாடிக் கொண்டிருந்தது. முக்தன் பிருகந்நளையை நோக்கி சென்று தலைவணங்கி நின்றான். அவனை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் “அரண்மனைக்கு செல்க! இளவரசியின் தோழியரிடம் அவள் எங்கும் தனியாகச் செல்லவேண்டியதில்லை என்று நான் ஆணையிட்டதாகக் கூறுக!” என்றாள். முக்தன் “ஆணை” என்று தலைவணங்கினான். “நீரும் இங்கிருக்க வேண்டியதில்லை. இளவரசி மாளிகைக்கு அருகிலேயே இரும்” என்றாள். “ஆனால் என் பணி…” என்று அவன் சொல்ல “இதுவும் என் ஆணை என்று சொல்க!” என்றாள் பிருகந்நளை. தலைவணங்கி “அவ்வாறே” என்றான் முக்தன்.

flowerமுக்தன் உத்தரையின் அரண்மனை அகத்தளத்தின் புறவாயிலில் வேலுடன் நின்றிருந்தான். அங்கு முன்னரே நின்றிருந்த நான்கு காவல் வீரர்களும் அவன் யாரென்றே அறியாதவர்கள்போல் இருந்தனர். முதல் நாள் அங்கு அவன் வந்தபோது அவனை அங்கு நிற்க ஒப்பவில்லை. “இளவரசியுடன் நான் இருக்க வேண்டுமென்பது ஆசிரியரின் ஆணை” என்று அவன் சொன்னான். “எங்களுக்கு அரசகுலத்தாரன்றி பிறர் ஆணை பிறப்பிக்க முடியாது” என்றார்கள்.

அவர்களுடன் நிற்காமல் பெருந்தூண் அருகே பாதி உடல் மறைத்து நின்றிருந்தான். நீராட்டறைக்குச் செல்வதற்காக தோழியருடன் இளவரசி வந்தபோது அவன் தலைவணங்கி அவர்களுக்குப் பின்னால் சென்றான். அவள் நின்று திரும்பி அவனை நோக்கி புருவங்களை தூக்கினாள். “தங்களுடன் நானிருக்க வேண்டுமென்பது ஆசிரியரின் ஆணை, இளவரசி” என்றான். அவள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டாள்.

அதையே ஆணை என்று எடுத்து அவன் அவளை தொடர்ந்து சென்றான். அவள் நீராட்டறைக்குள் சென்ற பின்னர் இடைநாழியில் வேலுடன் நின்றான். மீண்டும் அவளுடன் திரும்பி வருகையில் வாயிற்காவலர் அவனை நோக்கிய விழிகள் மாறியிருந்தன. இளவரசி உள்ளே சென்றபின் அவன் அவர்களிடம் “இளவரசியின் ஆணை வேண்டுமென்றால் அவர்களிடமே சொல்கிறேன்” என்றான். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் விழிகளை விலக்கிக்கொண்டனர். பின்னர் அவனிடம் ஒரு சொல்லும் உரையாடவில்லை.

பகல் முழுக்க அவன் அங்கேயே வேலுடன் நின்றிருந்தான். அந்தியில் முறை மாற்றம் நிகழ்ந்து புதிய வீரர்கள் வந்தனர். அவர்களிடம் பழைய வீரர்கள் தாழ்ந்த ஓரிரு சொற்களில் அவன் யாரென்று சொல்லிச் சென்றனர். சேடி ஒருத்தி அவனிடம் வந்து “நீங்கள் உணவருந்தி வரலாம், வீரரே” என்றாள். அவன் தயங்கி “இல்லை…” என்று சொல்லத்தொடங்க “இளவரசி தாங்கள் உணவருந்தினீர்களா என்று கேட்கச் சொன்னார்” என்றாள். “இல்லை, உணவருந்தி வருகிறேன்” என்று மடைப்பள்ளிக்கு சென்றான். உணவருந்தி முகம் கழுவி மீண்டும் வந்து அங்கு காவல் நின்றான். உத்தரையின் முகம் அவனுள் மாறிவிட்டிருந்தது.

அந்தி எழுந்தபோது இளவரசி ஆலய வழிபாட்டிற்குரிய வெண்பட்டாடை அணிந்து கையில் பூசைத் தாலத்துடன் தோழியர் சூழ வெளிவந்தாள். இடைவெளி விட்டு அவன் அவளைத் தொடர்ந்து சென்றான். துர்க்கை ஆலயத்திலும் ஏழு மூதன்னையர் ஆலயத்திலும் பூசனைகள் முடித்து இருளெழுந்த பின்னர் அவள் திரும்பி வந்தாள். மீண்டும் வெளிவந்து இடைநாழியில் நடந்தபோது மெல்லிய ஒற்றை ஆடை அணிந்திருந்தாள். கழுத்தில் ஒரு முத்தாரம் மட்டும் சுடர்ந்தது.

தண்ணுமையின் கூரொலி கேட்டது. அவள் கதை கேட்கச் செல்கிறாள் என புரிந்துகொண்டான். உத்தரை சிற்றம்பலத்திற்குள் நுழைந்து அங்கே முன்னரே வந்திருந்த பேரரசி சுதேஷ்ணையுடன் சேர்ந்து அமர்ந்தாள். சுதேஷ்ணையின் பின்னால் சைரந்திரி அமர்ந்திருப்பதை அவன் கண்டான். சற்று அப்பால் அரைவட்ட வடிவில் அகத்தளப் பெண்டிர் அமர்ந்திருந்தனர். முன்னரே கதை நிகழ்ந்துகொண்டிருந்தது. தண்ணுமையும் யாழும் சிறுமுழவுடன் இணைந்த இசை மெல்ல துள்ளிக்கொண்டிருந்தது.

முக்தன் கூத்தம்பலத்தின் வாயிலில் தன் நிழல் உள்ளே விழாதவாறு ஒதுங்கி வேலை சுவரில் சாய்த்து வைத்து கைகட்டி நின்றான். மரவுரி விரிக்கப்பட்ட மேடையில் கன்னங்கரிய உடலும் நீண்ட விழிகளும் கொண்ட விறலி குறுமுழவுடன் அமர்ந்திருந்தாள். அவள் விழிகளில் சிரிப்பு வெள்ளி தீற்றியதுபோல அழியாமல் இருந்தது. விரல்கள் துடிப்பதும் வாய் கதை சொல்வதும் அவற்றுக்குத் தெரியாதென்பதைப்போல.

அந்தக் கதை எதைப் பற்றியதென்பது வெகுநேரம் அவனுக்கு புரியவில்லை. விதர்ப்ப நாட்டின் முடியுரிமைக்கான பூசல் என்று மெதுவாக தெரிந்துகொண்டான். விதர்ப்ப அரசர் பீமகர் தன் இரு மைந்தர்களுகிடையேயான முடிப்பூசலில் மூத்தவனை ஆதரித்தார். அவரை இளையவன் சிறையிட அவர் தப்பி ஓடி மூத்தவனுடன் சேர்ந்துகொண்டார். அவரை தேடிப்பிடித்துக் கொல்வதற்காக இளையவன் பீமத்துவஜன் படைகளை அனுப்பினான். ஆனால் மூத்தவன் பீமபலன் தன் குடிகள் அனைவரிடமிருந்தும் முடியொப்புதலை பெற்றான். ஒவ்வொரு குடியிலிருந்தும் சிறிய படையை அவனுக்கு அனுப்பத் தொடங்கினர். மெல்ல அவனுடைய படை பெருகியது. எல்லைப்புறச் சிற்றூர்களை ஒவ்வொன்றாக அவன் பிடித்தான். காட்டெரி படர்ந்து வருவதுபோல இரு கைகளையும் விரித்து திசைகளைச் சூழ்ந்து குண்டினபுரியை நோக்கி வந்தான்.

அவன் எவ்வகையிலும் விரைவை காட்டவில்லை. ஏனெனில் குண்டினபுரியை ஆண்ட பீமத்துவஜன் தன் குடியின் படையுடன் அருகிருந்த சிறு நாடுகளிலிருந்து திரட்டிய படையையும் வைத்திருந்தான். குடிப்போர் நிகழ்ந்து விதர்ப்ப வீரர்கள் ஒருவரோடொருவர் மோதினால் விதர்ப்பமே ஆற்றல் குன்றி அழியும் என்று பீமகர் தன் மூத்த மைந்தனுக்கு அறிவுறுத்தினார். எனவே போர் நிகழாமலேயே ஊர்கள் ஒவ்வொன்றையாக கைப்பற்றி முழு நாட்டையும் தன் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவந்தபடி இருந்தான் பீமபலன். மூழ்கும் படகென குண்டினபுரியின் நேரடி ஆளுகைக்குக் கீழிருந்த பகுதிகள் சுருங்கி வந்தன. தான் வெல்வது உறுதி எனும் எண்ணத்தை தன் குடிகள் நடுவே உருவாக்குவதில் பீமபலன் வெற்றி பெற்றான். சிற்றூர்கள் அவனுடன் சென்று சேர சேர மேலும் சிற்றூர்கள் அவனுடன் சென்று சேர்வது விரைவு மிகுந்தது.

பின்னர் குண்டினபுரியும் அதைச் சூழ்ந்த நான்கு கோட்டைகளுமன்றி பிற நிலங்கள் அனைத்தும் பீமபலனிடம் சென்று சேர்ந்தன. குண்டினபுரியில் தன் படையுடன் சிறைப்பட்டவன் போலிருந்த பீமத்துவஜன் ஒவ்வொரு நாளும் பொறுமையிழந்தான். சினம் கொண்டு படைத்தலைவரிடமும் குலத்தலைவரிடமும் கூச்சலிட்டான். எளிய வீரர்களை தூக்கிலிட்டும் கழுவிலேற்றியும் வெறி தணித்தான். அவனைச் சூழ்ந்திருந்த ஒவ்வொருவரும் அவன் முன்னரே தோற்றுவிட்டான் என்று உணர்ந்தனர்.

தன் படைகள் அனைத்தையும் திரட்டி பீமபலனைத் தாக்கி வெல்லவேண்டுமென்று ஈராண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டுக்கொண்டிருந்தான் பீமத்துவஜன். ஆனால் படைகள் குண்டினபுரியைவிட்டுக் கிளம்பியதுமே குண்டினபுரியின் மக்கள் கிளர்ந்து நகரை கைப்பற்றிவிடக்கூடும் என்ற அச்சம் அவனைத் தடுத்தது. காலப்போக்கில் தன் ஆணைக்குக் கட்டுப்பட்டு தன் படைகள் எழுமா என்ற ஐயமே அவனுக்கு ஏற்பட்டது. ஆணை பிறப்பிக்கப்பட்டு அதை படைவீரர்கள் மறுத்துவிட்டால் அனைத்தும் அன்றே முடிந்துவிடும் என்பதனால் அந்த ஆணையை பிறப்பிக்காமலேயே காலம் கடத்தினான். ஆனால் போர் முடிந்துவிட்டதென்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவனுடைய காவல் கோட்டைகளும் பீமபலனால் கைப்பற்றப்பட்டன. குண்டினபுரியின் கோட்டை முகப்பிலிருந்த காவல் மாடத்தில் ஏறி நின்று நோக்கினால் தெரியும் தொலைவுக்கு பீமபலனின் படைகள் வந்து நின்றிருந்தன.

முக்தன் தன்னையறியாமலேயே அந்த அரசியல் களத்தில் உளம் ஈடுபட்டான். முற்றிலும் உள்ளத்திலேயே நிகழ்ந்து முடியும் ஒரு போர். ஒருமுறைகூட வாள் உருவப்படவில்லை. ஓர் அம்புகூட எழவில்லை. போர் முரசுகளின் மீது முழைக்கோல் ஒவ்வொரு கணமும் காத்திருந்தது. சித்தம் பேதலித்து கண்கள் பதறி தொடர்பற்ற சொற்களைப் பேசி அழுகையும் சிரிப்பும் என கொந்தளித்து தன் அரண்மனைக்குள்ளேயே சுற்றிவந்தான் பீமத்துவஜன். பீமபலனின் தூதர்கள் அவனுடைய குலத்தலைவர்களை எவரும் அறியாது வந்து பார்த்தனர். பீமகரின் சொல்லுறுதி பெற்றபின் ஃபீலர்களின் குலம் முழுமையாகவே அடிபணிந்தது.

ஒருநாள் புலரியில் பீமபலனின் படைகள் விதர்ப்பத்தின் கொடி பறக்க வெற்றி முரசு கொட்டியபடி குண்டினபுரியை அணுகின. குண்டினபுரியின் மேலிருந்து ஃபீலர்களின் கொடி தாழ்ந்து குண்டினபுரியின் கொடி ஏறியது. கோட்டைக்காவலர்கள் அனைவரும் படைக்கலங்கள் தாழ்த்தி பீமபலனின் படைகளிடம் பணிந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு படை விளையாட்டுபோல குண்டினபுரியை பீமபலன் மீண்டும் கைப்பற்றினான்.

ஏழு படைவீரர்கள் பீமத்துவஜனின் அறைக்கதவைத் தட்டி அவனை அழைத்தபோது அவன் உடல் நடுங்கியபடி மஞ்சத்தின்மேல் அமர்ந்திருந்தான். கதவைத் திறந்த அவன் பட்டத்தரசி சுதேவை கண்ணீர்விட்டு அழுதபடி தன் மைந்தர்களை இடையுடன் அணைத்திருந்தாள். படைத்தலைவன் “இளவரசே, வருக” என்று அழைத்தான். பாய்ந்தெழுந்த பீமத்துவஜன் தன் குறுவாளை எடுத்து கழுத்தில் வைக்கப்போனபோது இருவர் பாய்ந்து அக்கைகளை பற்றிக்கொண்டனர். அவனை கைகள் பற்றி அரசவைக்கு கொண்டு சென்றனர்.

பீமபலன் குண்டினபுரியின் அரியணையில் அமர்ந்திருந்தான். ஃபீலர்குடித் தலைவர்களும் பைலர்குடித் தலைவர்களும் இணைந்து எடுத்தளித்த மணிமுடியையும் செங்கோலையும் சூடியிருந்தான். குடிகள் அவனை வாழ்த்தும் முழக்கம் அவை நிறைத்திருந்தது. வீரர்களால் அழைத்துவரப்பட்ட பீமத்துவஜன் அவையில் நுழைந்தபோது அமைதி ஏற்பட்டது. பேரரசர் பீமகர் தனது இருக்கையில் நெஞ்சுடன் கைகட்டி தலை குனிந்து அவனை நோக்காது அமர்ந்திருந்தார். பீமத்துவஜன் கலங்கிய கண்களும் பதறி முட்டிக்கொண்ட கால்களும் நிலையழிந்து தத்தளித்த உடலுமாக அவை நடுவே வந்துநின்றான். அவனால் நடக்க முடியவில்லை. இரு வீரர்கள் அவன் இரு தோள்களையும் பற்றி மெல்ல தள்ளிக்கொண்டு வந்தனர்.

பீமத்துவஜனின் பட்டத்தரசியும் நான்கு மனைவியரும் ஆணிலி வீரர்களால் அவைக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டனர். பீமபலன் அவையினரிடம் “குடித்தலைவர்களே, சான்றோரே, மணிமுடி மறுசொல்லின்றி இருக்கையில் மட்டுமே ஆற்றல் கொண்டதாகிறது, மறுக்கப்பட்ட மறுகணமே அரியணை தன் ஆற்றலில் பாதிப் பங்கை இழந்துவிடுகிறது என்கிறார்கள் அரசுநூலோர். ஆகவே மணிமுடியை மறுக்கும் எவருக்கும் இறப்பே தண்டனை என்று முன்னோர் வகுத்துள்ளனர். பாரதவர்ஷத்தில் எங்கும் எப்போதும் அம்முறை மீறப்பட்டதில்லை” என்றான். அவை அசைவற்று அமர்ந்திருந்தது.

“எந்தையின் சொல்லை கேட்க விழைகிறேன்” என்றான் பீமபலன். பீமகர் எழுந்து ஓங்கிய குரலில் “வருங்காலத்திலும் குண்டினபுரியின் மணிமுடி உறுதியாக நின்றாக வேண்டும். அதை இவன் குருதி நிறுவட்டும்” என்றார். பீமபலன் “ஆம், இறப்பே தண்டனை. ஆனால் இளையோனாகிய இவனை முடிசூட்டி போஜகடகத்தில் அமர்த்தியது எனது தமக்கை தமயந்தி. இவனை தண்டிக்கவும் பொறுக்கவும் உரிமை படைத்தவர் அவரே. அவர் இல்லாத இவ்வவையில் அம்முடிவை நான் எடுக்க இயலாது” என்றான். அமைச்சர்களிடம் “நான் என்ன செய்ய வேண்டும், அமைச்சரே?” என்றான்.

முதிய அமைச்சர் விஸ்ருதர் எழுந்து வணங்கி “நூல்நெறிப்படி இறப்புகள் பல உண்டு. பீமத்துவஜர் தன் பெயரையும் குலத்தையும் துறந்தால் இறந்தவர் என்றே கருதப்படுவார். வரதாவில் மும்முறை மூழ்கி ஆடை களைந்து கரையேறட்டும். அவரது மைந்தன் அவருக்கு அன்னம் வைத்து நீர்க்கடன் செய்து முடிக்கட்டும். வேறு ஒரு பெயருடன் வேறொரு மனிதராக அவர் இங்கு வாழ்வதில் தடையேதுமில்லை” என்றார். பீமகர் ஏதோ சொல்வதற்குள் பீமபலன் “ஆம், அதுவே எனது ஆணை. இளையோனே, பிறிதொருவனாக என்னுடன் இரு” என்றான்.

கால்கள் தளர்ந்த பீமத்துவஜன் தன்னைத் தாங்கியிருந்தவர்களின் கைகளில் தொங்கியவன் போலிருந்தான். அவர்கள் அவனை மெல்ல அமரவைத்தனர். “இளையவனே, உன் இறப்பு நிகழ்வதற்குமுன் இந்த அரியணையையும் செங்கோலையும் முழுதேற்பதாக மும்முறை நிலம் தொட்டு ஆணையிடு. உன்னையும் என்னையும் இங்கமர்த்திய நமது மூத்தவர் திரும்பி வருகையில் நம்மைக் குறித்து அவர் நிறைவையே அடையவேண்டும்” என்றான் பீமபலன். இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து தலைமுடி முகத்தில் பரவியிருக்க தாடை மார்பில் பதிய தலைகுனிந்து அமர்ந்திருந்தன் பீமத்துவஜன்.

பீமகர் உரத்த குரலில் “ஆணையிடு, மூடா! நீ ஆற்றிய பிழையெல்லாம் போதும்” என்றார். பீமத்துவஜனின் அரசி “அவர்பொருட்டு நான் ஆணையிடுகிறேன். என் மைந்தரின் தலை தொட்டு ஆணையிடுகிறேன்” என்றாள். பீமத்துவஜனை சற்று நேரம் நின்று நோக்கிய பீமபலன் “நீ ஆணையிடவில்லையென்றால்கூட எனது தீர்ப்பில் மாற்றமில்லை, இளையோனே. நீ செல்லலாம்” என்றான்.

பீமத்துவஜன் முழந்தாளிட்டு உடல் நிமிர்த்தி எழுந்தான். தலை தூக்கி பீமபலனைப் பார்த்து “இக்கணம்வரை இவ்வரியணை எனக்குரியது என்றே எண்ணியிருந்தேன். எனக்குரியதை இழந்தேன் என்றே வருந்தினேன். மூத்தவரே, இக்கணம் அறிகிறேன், இது தாங்கள் அமரவேண்டிய அரியணை. இதிலமரும் அறச்செல்வர்கள் இந்நாட்டை புகழ்பெறச் செய்யவேண்டும்” என்றபின் “இக்கொடிக்கும் இம்முடிக்குமென ஒருநாள் எங்கோ ஒரு களத்தில் குருதி சிந்தி விழுவேன். நான் ஆற்றிய அனைத்திற்கும் அவ்வண்ணம் ஈடு செய்வேன். ஆணை! ஆணை! ஆணை!” என்றான்.

அவையிலிருந்த அனைவரும் விழிநீர் சிந்திக்கொண்டிருந்தனர். பீமபலன் “நன்று இளையோனே, நாளை பிறிதொரு உடன்குருதியினன் எனக்குக் கிடைக்கையில் அவனை நெஞ்சோடு தழுவி எஞ்சியதை சொல்ல விழைகிறேன்” என்றான். பீமத்துவஜன் எழுந்து மீண்டும் நிற்க முடியாமல் தள்ளாடி இரு வீரர்கள் அவனை பற்றிக்கொள்ள நிமிர்ந்த தலையுடன் அவையை ஒரு முறை நோக்கிவிட்டு வெளியேறினான்.

பீமபலன் “போஜகடகம் இரண்டாவது தலைநகராகவே நீடிக்கட்டும். என் இளையோனின் அரசி அங்கிருந்து ஆளட்டும். அவள் மைந்தனுக்கு இப்போது பதினான்கு வயதாகிறது. பதினெட்டு வயதுக்குப்பின் அவனே அங்கு முடி சூடட்டும்” என்றான். அவை வாழ்த்துரைத்து முழக்கமிட்டது.

விறலி கதையை சொல்லி முடித்தபின் மெல்ல தலைதிருப்பி அவையை பார்த்தான் முக்தன். பெண்டிர் அனைவரும் விழிநீர் கொண்டிருப்பதைக் கண்டான். அத்தனை தொலைவிலிருந்துகூட விழிநீர் மட்டும் எத்தனை தெளிவாகத் தெரிகிறது என்று எண்ணிக்கொண்டான். தன் இமைகளிலும் நீர் இருப்பதை உணர்ந்தான். பெருமூச்சுடன் மீண்டும் இருளுக்குள் உடலை இழுத்துக்கொண்டான். கண்களைத் துடைத்தபோது மலர்ந்த முகத்தில் விழிநீர் எழுவதுதான் மனித உணர்ச்சியின் உச்சமா என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 80

79. நச்சின் எல்லை

flowerபாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப முட்டிமோதுவான். எண்ணமெழுந்ததும் பாய்ந்தெழுந்து சாளரம் வழியாக வெளியேறி மரங்களினூடாகவே குதிரைக்கொட்டில் நோக்கிச் செல்வான். அவனுடன் நகையாடிக்கொண்டிருக்கும் ரிதுபர்ணன் “ஏய், நில்… எங்கே செல்கிறாய்?” என்று கூவியபடி எடைமிக்க காலடிகள் ஓசையிட இடைநாழிகள் வழியாக ஓடுவான். விந்தையும் ஒவ்வாமையுமாக அதை நோக்கி விழிகூர்ந்து நிற்பார்கள் காவலர்கள்.

குதிரைக்கொட்டிலிலும் அடுமனையிலும் அரசன் வந்து அமர்ந்திருப்பது ஏவலர்களுக்கு முதலில் குழப்பமும் எரிச்சலும் அளிப்பதாக இருந்தது. அதை எப்படி எதிர்கொள்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அரசன் முன் காட்டவேண்டிய பணிவென்பது செயலின்மைதான். அடுமனை வேலைகள் அவன் வந்ததுமே நிலைத்தன. ஆனால் அவர்களை அவன் ஒரு பொருட்டாகவும் எண்ணவில்லை. பாகுகனுடன் மட்டுமே அவன் பேசிக்கொண்டிருந்தான். அவன் செல்லுமிடமெல்லாம் சென்று அவன் செய்வதனைத்தையும் கண்டு நகைத்துக்கொண்டிருந்தான்.

பாகுகன் அவனை அரசே என்று அழைத்தாலும் தோழனென்றே நடத்தினான். அடுமனையில் முதன்முதலாக சிக்கிமுக்கிக் கல்லை உரசி எரியெழுப்பியபோது ரிதுபர்ணன் உடலெங்கும் பரவிய ஆழ்ந்த உவகை ஒன்றை அடைந்தான். விறகடுக்கவும் உப்புபுளி கரைக்கவும் பேரார்வத்துடன் கற்றான். அவனே சமைத்த முதல் புளிக்கரைசலை உண்டு அடுமனையாளர் முகம் மலர்ந்தபோது உரக்க நகைத்தான். அவன் சொல்லை புரிந்துகொண்டு முதுபுரவியாகிய சாரதை முதன்முறையாக செவிதிருப்பி தலையசைத்தபோது இரு கைகளையும் விரித்து கூச்சலிட்டு துள்ளிக்குதித்தான்.

அடுமனைத் தொழிலும் புரவிபயிற்றலும் அவனை உளம் மாற்றின. எதை நோக்குகிறோமோ அதுவென்றாகும் உள்ளம் அவனை அடுமனையில் அனைத்தையும் தொகுத்து அனைத்திலும் இருந்து எழுவதொன்றை நோக்கி கொண்டுசென்றது. புரவியுடன் எழுந்து திசை திசை என விரிந்தது. அடுமனையாளர் அவனிடம் இயல்பாகப் பேசி களியாடலாயினர். அவன் வருகையை முன்னரே அறிந்து புரவிகள் செவிதிருப்பி கால்மாற்றி மெல்ல கனைத்தன. ஒவ்வொரு நாளும் அவன் அன்று செய்யவேண்டிய ஒன்றை எண்ணியபடி விழித்தெழுந்தான். விழி அயர்வது வரை அன்று செய்தவற்றைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தான்.

அமைச்சரிடம் “ஒவ்வொரு நாளும் எய்துவதற்கு ஒரு வெற்றி தேவை மானுடனுக்கு. அதை இத்தனை காலம்கடந்த பின்னரே உணர்ந்தேன், அமைச்சரே” என்றான். “என்றோ வரும் வெற்றிக்காக ஒவ்வொரு நாளையும் செலவிடுபவன் துயரிலிருக்கிறான். இறந்தபின் பேசப்படுவதற்காக வாழ்பவன் வீணாக அழிகிறான்.” முகுந்தர் “விடை இதைவிடவும் மிக எளியது, அரசே. தன் கைகள் வழியாக எதையேனும் உருவாக்காதவன் வாழ்வதில்லை” என்றார். அவன் வெடித்துச் சிரித்து “உண்மை” என்றான்.

முகுந்தர் புன்னகைத்து “உங்கள் விழிகள் மாறிவிட்டன, அரசே” என்றார். “கண்களுக்குக் கீழே இருந்த வளையங்கள் அகன்றுவிட்டன. மூச்சிரைக்காது நடக்கிறீர்கள்.” அவன் “அது தன் மகாசூர்ணத்தின் வெற்றி என உளமகிழ்கிறார் மருத்துவர் குந்தலர். நான் அதை கலைப்பதுமில்லை. உண்மையில் நான் இப்போது அரிதாகவே மதுவருந்துகிறேன். பகடி செய்யாமலும் உளம் மயங்காமலும் சலிப்பை வெல்பவனே வாழ்வின் உவகையை அறிந்தவன் என்று நேற்று எண்ணிக்கொண்டேன்” என்றான்.

அவையினருக்கு அவனிடம் வந்த மாறுதல் முதலில் ஒவ்வாமையை அளித்தாலும் அவனிடம் எப்போதுமிருந்த கசப்பும் எரிச்சலும் அகன்றதைக் கண்டு அவர்களும் உவகை அடைந்தனர். “இப்போது நாம் சொல்வதை செவிகொள்கிறார். மறுமொழிகளில் பொருளிருக்கிறது. எவரால் வந்தது என்றால் என்ன, இந்த மாற்றம் நன்றே” என்றான் படைத்தலைவன் ருத்ரன். துருமன் “நான் எப்போதும் சொல்வதுதான். புரவி பயிலும் பொழுது கூடக்கூட ஆண்மகன் நிமிர்வடைகிறான். இன்றுதான் அதை கற்றுக்கொண்டிருக்கிறார்” என்றான்.

சிற்றமைச்சர் பிரதீபர் மட்டும் முகம் சுளித்து “அரசனின் ஆர்வம் நெறி நிறுத்துவதிலும் வளம் பெருக்குவதிலும் பகை கடிவதிலும் மட்டுமே நிற்கவேண்டும் என்கின்றன நூல்கள். அடுமனைத் தொழில் அடிமைக்குரியது. புரவிபேணுதல் அண்டிவாழ்வோர்க்குரியது. ஆயிரமாண்டுகளாக அவர்கள் செய்துசெய்து அத்தொழிலின் ஒவ்வொரு அசைவிலும் சொல்லிலும் அப்பண்புகள் குடியேறியிருக்கும். அதைச் செய்யும் அரசன் அவனை அறியாமலேயே அப்பண்புகளை தான் பெற்றுக்கொள்கிறான்” என்றார்.

பேரமைச்சர் புன்னகைத்து “பாரதவர்ஷத்தில் பாதியை வென்ற நளன் அடுமனையாளன், புரவிபேணுநன்” என்றார். “ஆம், ஆனால் அவன் நிஷாதன்” என்றார் பிரதீபர். “நிஷாதன் அல்லவா அச்செயல்களின் தீய பண்புகளைப் பற்றி மேலும் அஞ்சவேண்டியவன்? ஷத்ரியர்களுக்கு குலக்குருதியின் காப்பு உள்ளது” என்றார் முகுந்தர். பிரதீபர் “நளன் நாட்டை பேணிக்கொள்ளவுமில்லை. அவன் தமயந்தியை இழந்ததும் நாடுதுறக்க நேரிட்டதும்கூட புரவியும் அடுப்பும் அளித்த தீயபண்புகளால்தானோ, எவர் சொல்லமுடியும்?” என்றார். “தொழிலே வர்ணங்களை ஆக்குகிறதென்பதனால் தொழில்மாற்றம் வர்ணங்களை அழிக்கும்.”

“நான் சொல்லாட விழையவில்லை. அது என் வழி அல்ல” என்றார் முகுந்தர். “ஆனால் அரசியலை நேரடியாக அரசியல் வழியாக எவரும் கற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அது மிகமிக விரிந்தது. அதன் அலகுகளும் கிளைகளும் எண்ணற்றவை. அதில் ஒரு நெறியைக் கண்டடைய பல காலம் ஆகும். அரசியலை ஒரு கையால் ஆற்றியபடி பிறிதொரு கையால் ஏதேனும் தொழிலையோ கலையையோ ஆற்றுபவர்கள்தான் அரசியல்நெறிகளை எளிதில் கற்றுக்கொள்கிறார்கள்.” பிரதீபர் வியப்புடன் தலையை ஆட்டினார். அவரால் சொல்லெடுக்க முடியவில்லை.

“மருத்துவமும் விற்தொழிலும் வானியலும் துணைவேதங்கள் என்பதை எண்ணுக! அவை சிற்றுருக் கொண்டு வந்த வேதங்கள் என்றே நூலோர் உரைப்பார்கள். வேதம் அளிப்பதை துணைவேதம் அளிக்கமுடியும்” என்றார் முகுந்தர். “ராகவராமன் வில்லால் அரசியலை அறிந்தான். அவன் எதிர்நின்ற ராவணப்பிரபுவோ வீணையால் அதை அறிந்தான்.” பிரதீபர் மீண்டும் தலையசைத்துவிட்டு “அடுமனையில்…” எனத் தொடங்க “நளன் களத்தை புரவியாலும் அவையை அடுமனையாலும் அறிந்தான் என்கிறார்கள்” என்றார் முகுந்தர்.

பிரதீபர் சினத்துடன் “அடுதொழில் துணைவேதமா?” என்றார். “எந்தக் கலையும் வேதம்துளித்து உருவானதே. எச்செயலும் முழுமையை நோக்கி தவமெனச் செல்லுமென்றால் கலையே” என்றார் முகுந்தர். “இது முதுமையின் மெத்தனம். அதை நிகர்நோக்கும் கனிவு என விளக்கிக் கொள்கிறீர்கள்” என்றபடி எழுந்து சென்றார் பிரதீபர். “நானும் இவ்வாறு எழுந்து சென்றவனே” என்று முகுந்தர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

அடுமனையாளனாகவும் கொட்டில்சூதனைப்போலவும் மாறிக்கொண்டே சென்ற ரிதுபர்ணன் ஓர் இடத்தில் அதன் எல்லையொன்றைக் கண்டதும் திரும்பி சினந்து பாகுகன்மேல் பாய்ந்தான். அவனை அறைந்தான், வசைபாடினான். அவன்மேல் உமிழ்ந்து எட்டி உதைத்தான். அடுமனையாளரும் சூதரும் அதை எப்போதும் அஞ்சியிருந்தனர். அவ்வச்சத்தாலேயே அவனை அவர்கள் அணுகவில்லை. பாகுகன் அதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. நாலைந்துநாள் ரிதுபர்ணன் அவனை வெறுத்து ஒதுக்குவான். காணும்போதெல்லாம் இழிவு செய்வான். கட்டு அறுந்து அவன் பாகுகனை தேடிச்சென்று மீண்டும் இணைகையில் அதுவரை நிகழ்ந்த தடமே பாகுகனில் எஞ்சியிருக்காது.

“இவனுடைய இந்த முழுப்பணிவுதான் எனக்குத் தேவையாக இருக்கிறதா? அவ்வாறென்றால் நான் ஆணவம்கொழுத்த கீழ்மகனா?” என்றான் ரிதுபர்ணன். முகுந்தர் “அல்ல, அரசே. நீங்கள் அனைவரையும் அவ்வாறு நடத்துவதில்லை. அவன் உங்கள் மறு எல்லை” என்றார். ரிதுபர்ணன் அவரை களைத்த விழிகளுடன் நோக்கினான். “அரசே, நீங்கள் மரபும் குலமும் நாடும் கொண்டு பிறந்தவர். கோல்கொண்டு அரியணை அமர்ந்து நாடாள்பவர். முழுமையான அரசர். நோக்குக, ஆணெனப் பிறந்த அனைவருமே சற்றேனும் அரசர்கள்தான். பணியாளரிடம், மனைவியிடம், மைந்தரிடம். குறைந்தது எளிய இரவலனிடமோ வளர்ப்புவிலங்குகளிடமோ அவன் சற்று அரசனாகி மீளமுடியும். பாகுகன் முற்றிலும் அரசனல்லன். உங்கள் ஈர்ப்பும் கசப்பும் அதனாலேயே” என்றார் முகுந்தர்.

“இவ்விளக்கங்கள் சலிப்பை அளிக்கின்றன. இது விளக்கப்படாமலேயே இருக்கட்டுமெனத் தோன்றுகிறது” என்றான் ரிதுபர்ணன். “அப்படியென்றால் நீங்கள் வினவவும்கூடாது” என்றபடி முகுந்தர் எழுந்துகொண்டார். ரிதுபர்ணன் எழுந்து அவருக்கு விடைகொடுக்கையில் “அது அவன் கையின் சமையல். அந்த மணம் பிறிதெவராலும் உருவாக்கப்பட இயலாதது” என்றான். அவரை முற்றிலுமாக மறந்து பீடத்தில் கிடந்த சால்வையை எடுத்தணிந்துகொண்டு நடந்தான். அவர் அவன் செல்வதை புன்னகையுடன் நோக்கி நின்றார்.

ரிதுபர்ணன் புரவிக்களத்திற்குச் சென்றபோது வார்ஷ்ணேயன் புரவியுடன் அவனுக்காக காத்திருந்தான். அவன் சவுக்கை கையில் எடுத்துக்கொண்டு சுற்றிலும் நோக்கி “பாகுகன் எங்கே?” என்றான். “அவனுக்கு இன்று காலைமுதல் காய்ச்சல் கண்டிருக்கிறது. எழ முடியவில்லை. ஜீவலன் உடனிருக்கிறான்” என்றான் வார்ஷ்ணேயன். “மருத்துவர்கள் நோக்கிவிட்டனரா?” என்று ரிதுபர்ணன் கேட்டான். “மருத்துவரிடம் சொல்லவே துருமர் சென்றிருக்கிறார்” என்றான் வார்ஷ்ணேயன்.

இரண்டு சுற்று புரவியோட்டி மீண்டபோது துருமன் வந்திருந்தான். அவன் புரவியிலிருந்து இறங்கும்போதே “ஒன்றுமில்லை, காய்ச்சல்தான். மருத்துவர் வந்துபார்த்து மூலிகைப்பொடி அளித்திருக்கிறார். வாற்றுச்சாறு அடுமனையில் கொதிக்கிறது” என்றான் துருமன். “காய்ச்சலுக்கு என்ன ஏது இருக்கமுடியும்?” என்று ரிதுபர்ணன் கேட்டான். துருமன் சிரித்து “அவனும் மானுடனே என்று காட்டுவதற்காக இருக்கலாம்” என்றான்.

மேலும் புரவி பயில அவனால் இயலவில்லை. அடுமனைக் கொட்டகையில் நார்க்கட்டிலில் கிடந்த பாகுகனை சென்றுநோக்கினான். விழிகள் சற்று வீங்கியிருந்தன. வாய் உலர்ந்து ஒட்டியிருந்தது. மூச்சில் நெஞ்சுக்குழி பதைத்தது. “நோக்குங்கள்…” என துருமனிடம் ஆணையிட்டுவிட்டு அவன் அரண்மனைக்கு சென்றான்.

அன்று அவையில் அவன் உளம் சொல்கொள்ளவில்லை. தன் அறையில் சென்றமர்ந்து தன்னுடன் பகடையாடினான். ஆட்டம் அகம் புகவில்லை. நிலையழிந்து அறையிலும் இடைநாழியிலும் சோலையிலும் சுற்றிவந்தான். ஏவலனை அனுப்பி காய்ச்சல் எப்படி இருக்கிறது என்று கேட்டுவரச் சொன்னான். “ஒருநாள் ஆகும் என்று மருத்துவர் சொன்னார். மருந்து அளிக்கப்படுகிறது” என்றான் ஏவலன். அன்றிரவு உறங்கப்படுத்தவன் மெல்லிய மயக்கத்திற்குப்பின் எழுந்துகொண்டு மீண்டும் மதுவருந்தினான்.

காலையில் ஒளியுணர்ந்து எழுந்தான். உடனே வாயிற்காவலனை அனுப்பி பாகுகன் எப்படி இருக்கிறான் என்று பார்த்துவரச் சொன்னான். எக்கணமும் பாகுகனே வந்துவிடக்கூடும் என அவன் எதிர்பார்த்தான். ஏவலன் திரும்பி வந்து “காய்ச்சல் அவ்வண்ணமே இருக்கிறது, அரசே. மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றான். காலைப் பூசனைகளும் உணவும் முடிந்ததும் அவன் பாகுகனை பார்க்கச் சென்றான். முந்தையநாள் படுத்திருந்த அதே கோலத்தில் அவன் கிடந்தான். “ஏனென்று தெரியவில்லை, அரசே. மருந்தை உடல் வாங்கிக்கொள்ளவில்லை. கடுமருந்து அளிக்கவிருக்கிறோம்” என்றார் மருத்துவர்.

அவை நிகழ்ச்சிகள் முடிந்தபின் அவன் வந்து பாகுகனின் அருகில் நெடுநேரம் இருந்தான். அன்றிரவும் காய்ச்சல் நீடித்தது. மறுநாள் அவன் அனைத்தும் நலமடைந்துவிட்டிருக்குமென நம்ப விரும்பினான். உள்ளாழத்தில் அவ்வாறல்ல என்றது ஒரு மெல்லிய குரல். “மருந்துகள் என ஏதும் இனி அளிப்பதற்கில்லை, அரசே. உடல் முடிவெடுக்கக் காத்திருப்பதன்றி வேறுவழியில்லை” என்றார் மருத்துவர்.

“என்ன நோய்?” என்று அவன் கேட்டான். “நம்பமுடியாத அளவுக்கு வாதம் ஏறிநின்றிருக்கும் உடல் அவனுடையது. கபமும் பித்தமும் உடலில் உள்ளனவா என்றே ஐயமெழுவதுண்டு. முதல்முறை இவன் நாடியைப் பற்றியபோது நான் திடுக்கிட்டு எழுந்துவிட்டேன். மானுடவடிவில் எழுந்த ஏதோ காட்டுத்தெய்வமென்றே எண்ணினேன். வாதம் ஏழுமுறை முறுக்கப்பட்ட யாழ்நரம்புபோல் அதிர்ந்தது. இப்போது பித்தம் விழித்துக்கொண்டு பெருகி வாதத்தை எதிர்கொள்கிறது. கபம் தவித்துச் சுழிக்கிறது” என்றார் மருத்துவர்.

“இவ்வுடலில் என்ன நிகழ்கிறதென்று எங்களுக்கு புரியவில்லை. இது உயிர்துறக்க முடிவெடுக்கவில்லை என்று தெரிகிறது. அதுவே ஒரே ஆறுதல்” என்றார் பிறிதொரு மருத்துவர். அவன் “எதையாவது செய்யுங்கள். அயலக மருத்துவர்களுக்கு ஏதேனும் தெரியுமா என அறிந்துவர தூதர்களை அனுப்புங்கள். எத்தனை மருத்துவர்கள் வந்தாலும் நன்றே” என்றான்.

பன்னிரு நாட்கள் பாகுகன் கடும்காய்ச்சலிலேயே இருந்தான். அவனை நோக்கி நிற்கையில் அவன் உடல்வளைவுகள் சற்றே சீரமைவதுபோலத் தோன்றியது. மருத்துவர்கள் நம்பிக்கையிழந்தனர். “அனைத்து வாயில்களையும் மூடிக்கொண்டுவிட்டிருக்கிறது உடல். நாங்கள் தட்டித்தட்டி தளர்ந்துவிட்டோம்” என்றனர். அயலகத்து மருத்துவர்கள் வந்துகொண்டே இருந்தனர். அவன் உடலைக் கீறி நஞ்சுகளை செலுத்தினர். நாவில் பச்சிலைச்சாற்றைப் பூசினர். மூக்கிலும் பின் வாயிலும் மருந்துகளை செலுத்தினர்.

திரிகர்த்த நாட்டிலிருந்த ஒற்றனாகிய காகளன் அங்கே காளாமுகநெறியினரான மருத்துவர் ஒருவர் இருப்பதாகவும் அவரால் இயலக்கூடும் என்றும் பறவைச்செய்தியனுப்பினான். “அவர் இதற்கு நிகராக நோயுற்றிருந்த சிலரை எழுப்பியிருக்கிறார். அவரிடம் பேசினேன். காளாமுகர்களுக்கு கங்கையின் கரையில் ஒரு காட்டை அளித்து அங்கு பிற நெறியினர் நுழைவதை தடைசெய்தால் வருவதாக சொல்கிறார். அங்கு அவர்கள் கட்டும் ஆலயத்திற்கும் அவர்கள் அங்காற்றும் வழிபடுநெறிகளுக்கும் அயோத்தி காவலாகவேண்டும் என்கிறார்” என்றான். “அவ்வாறே ஆணை. அவர் வரட்டும்” என்றான் ரிதுபர்ணன்.

மேலும் பதினெட்டு நாட்களுக்குப்பின் வந்துசேர்ந்த காளாமுகர் இடைவரை விழுந்தலைந்த நீண்ட சடைத்திரிகளும் எரிவிழிகளும் கொண்டிருந்தார். புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் வெண்ணீறு பூசி நெற்றியில் மூவிழி வரைந்திருந்தார். இரு கைகளிலும் மணிகள் கட்டிய நீண்ட முப்புரிவேலும் மண்டையோட்டு இரவுக்கலமுமாக வந்து அரண்மனை முற்றத்தில் நின்றார். அவரை அழைத்துவந்த ஒற்றன் “அவர் கூரைகளுக்குக் கீழே நுழைவதில்லை. மண்ணிலன்றி படுப்பதில்லை” என்றான். பிரதீபர் பதற்றத்துடன் ஓடிச்சென்று முகுந்தரிடம் சொல்ல அவர் கைகூப்பியபடி வந்தார். சுடலையரின் காலடிகளைத் தொட்டு சென்னிசூடி “தங்கள் கால்களால் ராமனின் நகர் தூய்மையுறட்டும், சிவனே” என்றார்.

அவர் பாகுகனை நாடி நோக்கிக்கொண்டிருந்தபோது ரிதுபர்ணன் வந்தான். அவர் நோக்கி முடித்து எழுந்துகொண்டு “மூன்று நாட்களில் எழுவான்” என்றார். “என்ன நோய் என்று தெரியவில்லை என்றார்கள்” என்றான் ரிதுபர்ணன். காளாமுகர் “நாகநஞ்சு உடலில் ஏறியிருக்கிறது. அதை உடல் எதிர்கொள்கிறது” என்றார். “நஞ்சுண்டனின் மருத்துவம் எங்களுடையது. விரைவில் இவன் அதை கடக்கச்செய்வேன். என் கோரிக்கைகளை நிறைவேற்றுக!” ரிதுபர்ணன் தலைவணங்கி “அது என் சொல்” என்றான்.

காளாமுகரின் மருத்துவம் என்னவென்று பிற மருத்துவர்களால் கண்டடைய முடியவில்லை. அவை பெரும்பாலும் உலர்மூலிகைகள், வேர்கள், பூஞ்சைப்பொடிகள். அரிதாக சில வேதிப்பொருட்கள். முன்னிரவில் காட்டுக்குள் சென்று சில மருந்துகளை கொண்டுவந்தார். அவற்றை தீயிலிட்டு புகைஎழுப்பி பாகுகன் முகரச்செய்தார். அவன் அதில் மயங்கி ஆழ்மூச்சிழுக்கத் தொடங்கியபின் அவன் இடக்கையைப் பற்றியபடி அருகே அமர்ந்து அவனிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொல்வன எதையும் அவன் கேட்டதாகத் தெரியவில்லை. அப்பாலுள்ள அறைகளில் இரவுறங்கியவர்கள் விழிக்கும்போதெல்லாம் அவர் சொல்லிக்கொண்டிருந்த ஒலியை கேட்டனர். தவளைக்குழறல்போல அவர் ஒரே சொல்லையே சொல்லிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. புலரியில் அவர் கிளம்பிச்சென்று மீண்டும் இரவில் திரும்பிவந்தார்.

ஏழு நாட்களுக்குப் பின் பாகுகன் கண்விழித்தான். சிவந்த கண்கள் கலங்கி நீர்வழிய உதடுகள் பொருளில்லாமல் ஏதோ சொல்லை கூறிக்கொண்டிருக்க அவன் இரு கைகளையும் விரித்து வானிலிருந்து விழுந்தவன்போல படுத்திருந்தான். அவன் விழித்துக்கொண்ட செய்தியைக் கேட்டு ஓடிவந்த ரிதுபர்ணன் அவன் தன்னை அடையாளம் காணவில்லை என்பதைக் கண்டு திகைத்தான். அவனுடைய முகமும் உடலும் அவற்றுள்ளிருந்த சிறுவனை களைந்துவிட்டிருந்தன. அவன் சொல்லிக்கொண்டிருப்பதென்ன என உதடுகளைக்கொண்டு உய்த்தறிய ரிதுபர்ணன் முயன்றான். அது ஒரு பெயரோ எனத் தோன்றியது.

மேலும் இரண்டு நாட்களில் அவன் எழுந்தமர்ந்தான். இன்னொருநாள் கடந்தபோது பழைய பாகுகன் திரும்பிவந்தான். ஆனால் அவன் துள்ளலிலும் சிரிப்பிலும் ஏதோ ஒன்று குறைவதாக ரிதுபர்ணன் எண்ணினான். அவ்வெண்ணம் ஓரிரு நாட்களிலேயே மறைய அனைத்தும் முன்பிருந்ததுபோல் ஆயின. அவன் பாகுகனுடன் புரவியாடவும் அடுமனைகூடவும் தொடங்கினான். அவன் நோயுற்றிருந்த நாட்களில் தான் எண்ணி அஞ்சியது எதை என அவன் ஒருமுறை நினைவுதுழாவினான். அரிதெனக் கிடைத்த ஒன்றை இழப்பதைப்பற்றி மட்டுமே அவன் எண்ணியதாகத் தோன்றியது.

அரசனின் ஆணைப்படி கங்கைக்கரையிலிருந்த மோதவனம் என்னும் காடு காளாமுகர்களுக்கு அளிக்கப்பட்டது. கங்கை வழியாக ஒவ்வொருநாளும் அங்கே காளாமுகர்கள் வரலானார்கள். அங்கே ஆவுடை அற்ற சிவக்குறி ஆளுயரத் தூண்வடிவில் நிறுவப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொருநாளும் அங்கே பலிபூசனை நிகழ்வதாகவும் ஒற்றர்கள் சொன்னார்கள். தலைக்கொடைப் பூசனையும் நிகழ்வதாகச் சொன்ன ஒற்றன் “தலைகொடுப்பதற்கென்றே நோன்புநோற்று காந்தள் மாலைசூடி வந்துசேர்கிறார்கள் கருமையெதிர்வோர்” என்றான்.

மூன்று மாதங்களுக்குப்பின் அவன் கங்கைக்கரையில் வேட்டைக்குச் சென்றிருக்கையில் அங்கே தன் மாணவர்களுடன் அமர்ந்திருந்த காளாமுகரை கண்டான். சென்று அவர் கால்தொட்டு வணங்கினான். அவனை சிதைச்சாம்பலிட்டு வாழ்த்திய அவர் “நஞ்சுகொண்டோன் எவ்வண்ணம் இருக்கிறான்?” என்றார். “முன்பிருந்ததுபோலவே” என்றான் ரிதுபர்ணன். அவர் புன்னகைத்து “மாற்றுரு கொண்டவர் அதைத் துறப்பதற்குத் தயங்குவர்” என்றார். “ஏனென்றால் துறக்கையில் அவர்கள் ஒரு வாழ்க்கையை இழக்கிறார்கள்.”

“மாற்றுருவா?” என்றான் ரிதுபர்ணன். “ஆம், அவன் உடல் நாகநஞ்சால் அவ்வண்ணம் ஆகியிருக்கிறது. அந்த நஞ்சை முற்றிலும் நீக்கும் மருந்தை அவனிடம் அளித்தேன். சிறுபளிங்குச் சிமிழிலிருக்கும் அது தசபாஷாணம். அவனை நாற்பத்தொரு நாட்களில் முன்பிருந்த வடிவில் ஆக்கும்” என்றார் காளாமுகர். “அவன் அதை உண்ணவில்லையா?” என்று ரிதுபர்ணன் கேட்டான். “அது தனக்கு வேண்டாம் என்றும் இன்றிருக்கும் உருவும் இயல்புமே தனக்கு இனியவை என்றும் சொன்னான்” என்றார் அவர்.

“அவன் முன்செல்ல அஞ்சி நின்றுசுழலும் ஓடைபோல. அவன் உடலில் இருக்கும் குறுகலும் வளைவும் அதனாலேயே. முடிவின்றிச் சுழிக்க இயலும், மண்துளைத்து பாதாளங்களுக்குச் செல்லமுடியும். என்றால், இவன் யோகி அல்ல” என்றார் காளாமுகர். ரிதுபர்ணன் “இன்று அவன் எளிய விலங்கென்றும் அறியாச் சிறுவனென்றும் இருக்கிறான்” என்றான். “ஆம், நான் அவனிடம் சொன்னேன். எப்போது அதன் எல்லையை காண்கிறானோ அப்போது அந்த மருந்தை உண்ணுக என்று அளித்தேன்.”

ரிதுபர்ணன் சற்றுநேரம் அத்தருணத்தை தன் எண்ணத்தில் ஓட்டிவிட்டு “அவன் உங்களிடம் என்ன சொன்னான்?” என்றான். காளாமுகர் நகைத்து “அன்றன்று இருத்தல் என்பதற்கப்பால் வாழ்வதற்கென ஏதேனும் பொருள் இருக்க இயலுமா என்றான். இறப்பை அணுகுதல் என்றல்லாமல் இளமை முதிர்வதற்கு என்ன இலக்கு என்றான். நான் அவனிடம் உனக்கான விடையை நீ கண்டடைக. அத்தருணம் அமைக என வாழ்த்தி விடைகொண்டேன்” என்றார்.

ரிதுபர்ணன் பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். “விந்தை! அவன் எதை கண்டடையக்கூடும்?” என்றான். காளாமுகர் மீண்டும் உரக்க நகைத்தார்.

flowerஆபர் எழுந்துகொண்டு வணங்கி “நளமகாசயப் பிரபாவம் என்னும் நூலில் உள்ள செய்தி இது. இக்கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் திறந்துகொள்பவை” என்றார். “ஆம், ஆகவேதான் இக்கதைகளை நான் மீளமீளக் கேட்கிறேன்” என்று குங்கன் சொன்னான். “ஒருமுறை சொல்லப்பட்ட கதை மீண்டும் வருவதில்லை.” ஆபர் “சொல்பவர் எவர், அவருடைய மரபு எது என்பதே கதையை அமைக்கிறது” என்றார்.

விராடர் “கார்க்கோடகனால் நஞ்சூட்டப்பட்ட நளன் உருக்குறைகொண்டு பாகுகன் என்ற பேரில் ஆண்டுக்கு நூறு பொன் பெற்றுக்கொண்டு ரிதுபர்ணனின் அரண்மனைக் கொட்டிலில் புரவிப்பேணுநனாகவும் அடுமனையாளனாகவும் சேர்ந்தார் என்றுதான் நான் கேட்டிருக்கிறேன்” என்றார். “அங்கு அவர் எவரிடமும் விழிகொடுத்து உரையாடவில்லை. விழிதாழ்த்தி நிலம்நோக்கியபடி எப்போதும் தனியாக அமர்ந்திருந்தார். தனித்து இருள்மூலைகளில் துயின்றார். கொட்டிலில் புரவிகளுடன் மட்டும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். அடுமனையில் விழிசரித்து அடுப்பில் கொழுந்தாடும் அனலையே நோக்கிக்கொண்டிருந்தார்.”

ஆபர் “ஆம், அதுவே பொதுவாகப் பேசப்படும் கதை” என்றார். விராடர் “அவர் உடல் பலமடங்கு எடைகொண்டுவிட்டதைப் போலிருந்தது என்பார்கள். அது அவர் உடலில் நிழலெனக் கூடியிருந்த கலியின் எடை. அவர் நடந்த இடத்தில் காலடித் தடங்கள் ஆழ்ந்திறங்கியிருந்தன. அவர் ஒருமுறை இரும்புக் கலமொன்றை உதைத்தபோது அது நசுங்கியது. புரவிப்பயிற்றுநன் ஆயினும் அவர் புரவியூர்வதே இல்லை. அவர் உடலெடையை அவற்றால் தாளமுடியாது” என்றார். ஆபர் நகைத்து “ஆம், அவர் உடலில் இருந்து எழுந்த நிழல் தனியசைவுகள் கொண்டிருந்தது. அவர் துயில்கையில் அவர் உடலில் இருந்து எழுந்து வளர்ந்து கூரைமேல் படர்ந்து கரிய ஆலமரமென விழுதுபரப்பி விண்சூடி நின்றிருந்தது என்கின்றன அக்கதைகள்” என்றார்.

“அவர் எச்சொற்களையும் செவிகொள்வதில்லை என்றாலும் விதர்ப்பநாட்டு இளவரசி தமயந்தியைப்பற்றிய செய்திகள் பேசப்படும்போது மட்டும் அவர் உடலசைவுகள் மாறுபடுவதை அவர்கள் கண்டடைந்தனர். அவர் கையில் சட்டுவம் விரைவழியும். கலம் ஒலியெழுப்பும். பெருமூச்சுடன் அவர் அங்கிருந்து விலகிச்செல்வார். தேடிச்சென்றால் தன் வழக்கமான அறைமூலையில் இருளில் முழங்கால்களில் முகம் பதித்து அவர் அமர்ந்திருப்பதைக் காணமுடியும்” என விராடர் குங்கனிடம் சொன்னார்.

கதை அவர் முகத்தை மலரச் செய்தது. ஆர்வத்துடன் எழுந்து “அவர் எப்போதும் உதடுகள் மட்டும் அசைய ஒரு சொற்றொடைரை சொல்லிக்கொண்டிருப்பதை அவர் தோழர்களான வார்ஷ்ணேயனும் ஜீவலனும் கண்டனர். அது என்ன என்று அறிய அவர்கள் முயன்றனர். அவரை அணுகுவதே கடினமாக இருந்தது” என்றார். “ஒருநாள் அயலகச்சூதன் ஒருவன் உணவுக்கூடத்தில் பேசுகையில் விதர்ப்பநாட்டு தமயந்தியை காட்டில் இருந்து பாஸ்கரரின் மாணவர் பரர் அழைத்து வந்ததைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தான். அன்றுதான் பாகுகன் உளமுடைந்து அழுததை அவர்கள் கண்டார்கள். ”

“தமயந்தி காட்டில் வழிதவறி சித்தம்சிதைந்து அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார். தன்னை நாகங்கள் வழிதவறச் செய்வதாகச் சொன்னார். பாஸ்கரர் அவரை தன் தவச்சாலையில் தங்கவைத்தார். சில நாட்களில் அவர் சித்தம் தெளிந்து புன்னகைக்கத் தொடங்கினார். பாஸ்கரரிடம் மட்டும் தான் யார் என்று அவர் சொன்னார். அவரை அவர் கலிங்க வணிகர் பூமிகரிடம் ஒப்படைத்து விதர்ப்பத்திற்கு அனுப்பிவைத்தார். ஆனால் செல்லும் வழியிலேயே யானைக்கூட்டம் ஒன்றால் அந்த வணிகக்குழு சூறையாடப்பட்டது. அதிலிருந்த எவரும் எஞ்சவில்லை. நாய்கள் உண்ட வெள்ளெலும்பு மிச்சத்தையே காவலர் கண்டடைந்தனர்.”

“தமயந்தியும் அவ்வெலும்புகளில் ஒன்றெனக் கிடந்தார். பாஸ்கரர் தன் மாணவர் பரரை அனுப்பி அவருக்கு மட்டும் அருகிருந்த ஓடையில் நீர்க்கடன் செய்து விண்ணேற்றும்படி ஆணையிட்டார்” என்றார் விராடர். “அன்றிரவு அடுமனையாளர் மெல்லிய குரலில் எழுந்த ஒரு பாடலைக் கேட்டனர். அவர்கள் வெளியே சென்று நோக்கியபோது நிழல்களாடிய முற்றத்தில் இருளில் மறைந்தவனாக அமர்ந்து பாகுகன் பாடிக்கொண்டிருந்தான். அந்தப் பாடலை இளமையில் நான் பாடுவதுண்டு.”

விராடர் தலையைத் தட்டி நினைவுகூர முயன்றபின் சிரித்து “மறந்துவிட்டேன். கலியின் ஆற்றலைப்பற்றிய பாடல் அது” என்றார். ஆபர் “இக்கதை கலிதேவமகாத்மியம் என்னும் குறுங்காவியத்தில் இருந்து செவித்தொடராக மாறி நம் குடிகளிடம் வாழ்கிறது. அனைத்தும் கலியாலேயே என்பது அதன் விளக்கம்” என்றார். “அந்தக் கதை சொல்வது இதுதான். பெண்டிர் நீராடும்போதும் தனியறையில் ஆடைமாற்றும்போதும் கணவரே ஆனாலும் ஆண்கள் அவர்களை நோக்கக் கூடாது. நளன் காமமிகுதியால் ஒருநாள் தமயந்தி ஆடைமாற்றும்போது சாளரவிரிசலினூடாக பார்த்தார். பகலில் காகங்களாகவும் இரவில் வௌவால்களாகவும் வானில் பறந்துகொண்டிருக்கும் கலி அப்போது அவரை பார்த்தான். அவருடன் நிழலென சேர்ந்துகொண்டான்.”

“தமயந்தியின் அறைக்குள் நளன் பார்த்த காட்சி அவளுடையதல்ல, கலியால் காட்டப்பட்டது. அந்தக் கணத்தில் இருந்து ஏழரை ஆண்டுகள் கலி அவருடன் வாழ்ந்தது” என்றார் ஆபர். விராடர் “ஏழரை ஆண்டுகளில் கலி நீங்க முகிலில் இருந்து கதிரவன் என அவர் மீண்டார்” என்றார். ஆபர் எழுந்துகொண்டு “ஆனால் கதைகள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொள்கின்றன. நளமகாசயப் பிரபாவத்தில் நளன் தன் கனவுகளில் எடைமிக்க தனித்த துயருற்ற மனிதனாக இருக்கிறார்” என்றார்.

குங்கன் நகைத்து “கலிமகாத்மியத்தில் அவர் தன் கனவில் எடையற்ற தும்பியென பறந்தலைந்திருக்கலாம்” என்றான். ஆபர் உடன் நகைக்க இருவரையும் மாறிமாறி நோக்கினார். “வருகிறேன், அரசே” என்று ஆபர் விடைகொண்டார்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 79

78. காட்டுக்குதிரை

flowerரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான் அவை. ஒரு கட்டத்தில் அதில் என்ன இயலும் என்ன இயலாதென்பது தெளிவானதுமே அவன் விலகிக்கொண்டான். ஆனால் அவையினர் அதன் பின்னரே பேசத்தொடங்கினார்கள்.

விதர்ப்பத்தில் குண்டினபுரியை கைப்பற்றிய ஃபீலர்களின் அரசனான பீமத்துவஜன் தந்தை பீமகரை சிறை வைத்திருந்தான். முறைப்படி முடிசூடிய பைகர் குலத்து பீமபலன் மாளவத்தின் எல்லையில் சுஃபலம் என்னும் கோட்டையில் தன் படைகளுடன் ஒளிந்திருந்தான். எட்டு நாட்களுக்கு முன்னர் பீமகர் குண்டினபுரியிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்தி வந்தது. பீமத்துவஜன் தந்தையை நாடெங்கிலும் ஒற்றர்களையும் படைவீரர்களையும் அனுப்பி தேடிக்கொண்டிருந்தான். செய்தியை அறிவித்த ஒற்றன் “பீமத்துவஜன் நிலைகுலைந்திருக்கிறான். ஃபீலர்கள் வெறிகொண்டு அலைகிறார்கள்” என்றான்.

அச்செய்தியைக் கேட்டதும் அது பீமத்துவஜனின் ஒரு சூழ்ச்சி என்றே அவையினர் ஐயப்பட்டனர். “அவன் தந்தையை கொன்றிருப்பான். ஐயமே இல்லை. அவர் அவனை ஏற்கவில்லை என்பது அவன் குடிகளனைவருக்கும் தெரியும். ஏற்க வைக்க முயன்றிருப்பான். முடியாதென்றானபோது கொன்றிருப்பான்” என்றார் சிற்றமைச்சர் பிரதீபர். ஆனால் முந்தையநாள் பீமகர் தன் முதல் மைந்தன் பீமபலனுடன் சென்று சேர்ந்துவிட்டதாக செய்தி வந்தது.

பிரதீபர் “இது நான் எதிர்பாராதது. இதை யார் நிகழ்த்தினார்கள் என்று தெரியவில்லை. எவராக இருந்தாலும் போர் முடிவுற்றது. இன்னும் சில மாதங்களுக்குள் குண்டினபுரியை பீமபலன் வெல்வான்” என்றார். ரிதுபர்ணன் “ஆனால் இப்போது அவனிடம் படை என பெரிதாக ஏதுமில்லை. விதர்ப்பம் ஆற்றல்கொண்டு மீள்வதை பிற நாடுகள் ஒப்பவும் போவதில்லை” என்றான். பிரதீபர் “ஆம், ஆனால் மக்களின் ஆற்றலே இறுதியாக வெல்லும். பீமத்துவஜன் சிறிதுகாலம் நின்று போராடுவான். ஆனால் அவனால் ஒருபோதும் அரியணையில் நிலைக்க முடியாது” என்றார்.

அதை படைத்தலைவன் ருத்ரன் மறுத்துரைத்தான். பிரதீபர் கிளர்ந்தெழுந்து மக்கள் வல்லமையை வலியுறுத்த ருத்ரன் வாளின் ஆற்றலென்ன என்று விளக்கினான். இரு சாராரும் அவையை பங்கிட்டுக்கொள்ள ரிதுபர்ணன் இயல்பாக பாகுகனைப்பற்றி எண்ணலானான். அவனுடைய சிரிப்பும் துள்ளலும் நினைவிலெழ அவன் முகம் புன்னகையில் விரிந்தது. சுருங்கிய முகத்தில் பெரிதாகத் தெரிந்த பற்கள் எப்போதுமே சிரிப்பவை போலிருந்தன. கைகளையும் கால்களையும் ஆட்டி அவன் நடப்பதைக் கண்டால் அனைவர் முகமும் சிரிப்பில் விரிந்தது. அச்சிரிப்பை அவனும் எடுத்துக்கொண்டான். நாளடைவில் சிரிக்க வைப்பதற்காகவே நடந்தான்.

குதிரைக்கொல்லையில் அன்று புலரியில் அவனை பார்த்தபோது சின்னஞ்சிறிய மலர்கள் மண்டிய புல்வெளியில் பறந்த சிறிய வண்ணத்துப்பூச்சிகளைப் பிடிக்க துரத்தி ஓடிக்கொண்டிருந்தான். அவனுடைய சிரிப்பொலி கேட்டுன் அவன் திரும்பிப்பார்த்தான். அருகே நின்றிருந்த வார்ஷ்ணேயன் “சிறுவனைப் போன்றவன். நேற்று ஒவ்வொரு கவளம் உணவையும் அள்ளி மேலே எறிந்து வாயால் அள்ளிப்பற்றி உண்டான். என்ன செய்கிறாய் என்று கேட்டேன். இப்படி உண்டு பார், சுவை மிகுந்து தெரியும் என்கிறான்” என்றான்.

ரிதுபர்ணன் புன்னகையுடன் “அவனை அழைத்து வா” என்றான். ஜீவலன் ஓடிச்சென்று பாகுகனை அழைத்துவந்தான். “என்ன செய்கிறாய்?” என்றான். “வண்ணத்துப்பூச்சிகளை பிடிக்கிறேன்” என்றான். “எதற்கு?” என்றான். “வெறுமனே…” என்றான் பாகுகன். “அதற்கென்ன இத்தனை ஓட்டம்?” என்றான் ரிதுபர்ணன். “நான் அவற்றை விரல்களால் பிடிக்க முயலவில்லை. அவற்றை அவ்வாறு பிடித்ததுமே அவை இறகுதிர்ந்து மீண்டும் புழுக்களாகிவிடுகின்றன. அவையே உளம்கொண்டு என் கைகளில் வந்து அமரவேண்டும். அதற்காக முயல்கிறேன்” என்றான்.

ரிதுபர்ணனின் புன்னகையைக் கண்ட அமைச்சரும் அவையினரும் அவர்கள் பேசியதை அவன் மிகவும் விரும்புவதாக எண்ணி ஊக்கம் கொண்டார்கள். “நாம் செய்யவேண்டியது ஒன்றே. இப்போதே படைகொண்டுசென்று பீமகரை ஆதரிப்போம். குண்டினபுரியை அவர் கைப்பற்ற உதவுவோம். மாற்றாக பெருஞ்செல்வத்தையும் வணிக உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்” என்றான் ருத்ரன். “அது எளிதல்ல. அதற்கு முன் நாம் பிற ஷத்ரிய அரசர்களின் ஒப்புதலை பெறவேண்டும்” என்றார் பிரதீபர். “ஆம், ஆனால் அது அவர்கள் கையில் நாம் பகடையாவதாக ஆகிவிடக்கூடாது.”

அவன் அதை வேறேதோ உள்ளத்தால் கேட்டுக்கொண்டிருந்தான். பின்னர் ஏன் இந்த எளிய சூதனை இத்தனை தொலைவுக்கு நினைவில்கொண்டிருக்கிறோம் என வியந்துகொண்டான். அந்த எண்ணம் எழுந்ததுமே உண்மையில் ஓராண்டாக பெரும்பாலான தருணங்களில் அவனைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தது. காலையில் எழுந்த சற்றுநேரத்திலேயே அவனைப்பற்றி ஏதேனும் ஓர் எண்ணம் வந்துவிடும். இரவில் ஒவ்வொன்றாக உளம்துழாவிச் சலித்து துயிலில் ஆழ்கையில் அவன் நினைவு ஒன்று எங்கேயோ எஞ்சியிருக்கும்.

பேச்சு ஓர் எல்லையை அடைந்தபோது அரைத்துயிலில் தாடை தளர்ந்து விழுந்து பல்லில்லாத வாய் திறந்திருக்க அமர்ந்திருந்த பேரமைச்சர் முகுந்தர் விழித்துக்கொண்டு வாயைத் துடைத்தபின் “எண்ணவேண்டிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நாம் அரசரின் கருத்தையும் அறிய வேண்டியிருக்கிறது” என்றார். அனைவரும் அவனை நோக்க அந்த அமைதியைக் கேட்டு அவன் விழித்துக்கொண்டு “இப்போது நாம் எம்முடிவையும் எடுக்கமுடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் விதர்ப்பத்துடன் நாம் இணைந்தால் நிஷதபுரியை ஆளும் புஷ்கரன் அதை அவனுக்கெதிரான போர் என்று கொள்ள வாய்ப்புள்ளது. இன்றைய சூழலில் அவனுடைய சினத்தை எதிர்கொள்ளும் ஆற்றலுள்ள நாடல்ல கோசலம்” என்றான்.

ருத்ரன் “ரகுவும் திலீபனும் ஆண்ட மண். தசரதனும் ராமனும் கோல்கொண்டு அமர்ந்த அரியணை இது…” என தொடங்க “இவ்வகையான சொற்களை நான் பிறந்தபோதிருந்தே கேட்டுவருகிறேன். இவற்றுக்கு எந்தப் பொருளும் இல்லை. அன்று கங்கையே பெருவழி. இன்று கடல் திறந்துவிட்டிருக்கிறது. நாம் அன்னைமுலையில் தொங்கிக்கிடந்து உண்ணும் பன்றிக்குட்டிபோல கங்கையை ஒட்டி வாழும் சிறுநாடு. அன்னை குட்டிகளை பெருக்கிக்கொண்டே இருக்கிறாள்” என்றான். அவை அமைதியடைந்தது. ரிதுபர்ணனின் கசப்புநகை அனைவரும் அறிந்தது.

“அங்கே அனைத்தும் கலங்கித் தெளியட்டும். புஷ்கரனுக்கும் சதகர்ணிகளுக்கும் இடையே பூசல் தொடங்கவிருக்கிறதென்கிறார்கள் ஒற்றர்கள். புஷ்கரனை அவர்கள் அழித்தால் நாம் விதர்ப்பத்தை அணைத்துக்கொள்வோம்” என்றான். “மேலும் விதர்ப்பத்துக்கும் நமக்கும் நடுவே பல நாடுகள் உள்ளன. மகதமும், அங்கமும், சேதியும் நம்மைவிட வலுவான நாடுகள். நாம் அவற்றுடனும் நட்புடன் இருக்கவேண்டியிருக்கிறது.” ருத்ரன் “ஆம், மெய்” என்றான். “மச்சர்களும் நிஷாதர்களும் ஒருங்கிணைந்து வருகிறார்கள். பாணாசுரனின் ஆதரவு அவர்களுக்கு உள்ளது” என்றான் ரிதுபர்ணன். அவை “ஆம்” என்றது.

அவை கலைய ரிதுபர்ணன் கைகாட்டினான். சங்கொலியும் கொம்போசையும் எழுந்தன. ரிதுபர்ணன் எழுந்தபோது அவன் இடை வலித்தது. கைகால்கள் குருதிகட்டி எடைகொண்டிருந்தன. நீட்டி நீட்டி நடந்தான். அவன் இடைநாழியை அடைந்தபோது முகுந்தர் உடன் வந்துசேர்ந்துகொண்டார். “உச்சிக்குமேல் என்ன நிகழ்ச்சி?” என்றான். “அவந்தியின் தூதுக்குழு ஒன்று வந்துள்ளது. காமரூபத்து வணிகர்கள் எழுவர் சந்திக்க விழைகிறார்கள்.” ரிதுபர்ணன் “அவர்களை நாளை பார்க்கிறேன்” என்றான்.

“ஆணை” என்றார் முகுந்தர். ரிதுபர்ணன் சலிப்புடன் “இது என்ன என்றே எனக்கு புரியவில்லை. பேசுவதெல்லாம் பொய் என உணர்ந்தும் எப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான். “அவர்கள் நடிக்கிறார்கள். கோசலம் ஒரு சிறுநாடு, செய்வதற்கேதும் இல்லாதது. அதை இவர்களனைவரும் அறிவார்கள். அவர்கள் ஏதேனும் செய்தாகவேண்டும். மெய் சொல்லவேண்டுமென்றால் இங்குள்ள அரசே ஒரு நடிப்புதான்” என்றார். ரிதுபர்ணன் நகைத்து “ஆம், அதை நானும் அறிவேன். எனக்கு அலுத்துவிட்டது” என்றான்.

முகுந்தர் புன்னகைத்து “ஆனால் பெரும்பாலான அரசுகளும் அரசவைகளும் அரசநிகழ்வுகளும் விழாக்களும் பொருளிலா நடிப்புகளே என நாம் ஆறுதல் கொள்ளலாம்” என்றார். “நான் அவைநிகழ்வுகளின்போது பாகுகனைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றான். “நான் ஏன் அவனை நினைத்துக்கொண்டிருக்கிறேன்? அதை எண்ணியபோதுதான் வியப்பாக இருந்தது.” முகுந்தர் “அது இயல்பு. நீங்கள் அவனாக மாறி நடிக்கிறீர்கள்” என்றார்.

ரிதுபர்ணன் நின்று “நானா?” என்றான். “அரசர்கள் அவ்வாறு செய்வதுண்டு. அவர்கள் கொண்டிருக்கும் சூடியிருக்கும் எதுவுமே இல்லாமல் வெறுமனே நின்றிருக்கும் கடையனில் கடையன் ஒருவனைக் கண்டு அவனாக மாறிக்கொள்வார்கள். அது அவர்களுக்கு அனைத்திலிருந்தும் கற்பனையில் ஒரு விடுதலையை அளிக்கிறது.” ரிதுபர்ணன் அவர் சொல்வதை எண்ணியபடி நடந்தான். “பாகுகனுக்கு உடலென்றும் ஒன்றில்லை. தன்னிடம் இல்லாதவற்றைப் பற்றிய எண்ணமும் இல்லை. எனவே முழு விடுதலையில் அவன் திளைக்கிறான்” என்றார் முகுந்தர்.

“ஆம், நான் அவனுடைய அந்த விடுதலையைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். புரவிகளுடன் வாழ்கிறான். அடுமனையில் சுவைகளை உருவாக்குகிறான். தான் இயற்றுகிறோம் என்னும் உணர்வோ வெல்லவேண்டும் என்னும் முனைப்போ இன்றி தன்னியல்பாலேயே செயலாற்றுகிறான்” என்றான் ரிதுபர்ணன். “அனைத்தையும் விளையாட்டாகவே செய்பவனை எதுவும் பற்றிக்கொள்வதில்லை என்று தோன்றுகிறது.”

flowerஅன்று மாலை அவன் புரவி பயிலச் சென்றபோது வார்ஷ்ணேயனும் ஜீவலனும் இளம்புரவி ஒன்றை பழக்கிக் கொண்டிருந்தார்கள். அவனைக் கண்டதும் வந்து பணிந்த ஜீவலனிடம் “பாகுகன் எங்கே?” என்று ரிதுபர்ணன் கேட்டான். “அடுமனையில் இருக்கிறான். இன்று கொற்றவை பூசனைக்கான சிறப்புச் சமையல்” என்றான் ஜீவலன். “அழைத்து வருக!” என்று அவன் ஆணையிட்டான். காலணிகள் அணிந்து சவுக்குடன் அவன் தேவிகை என்னும் புரவியை அணுகி அதில் ஏறப்போனபோது பாகுகன் ஓடிவந்தான். தொலைவிலேயே அவனுடைய சிரிப்புதான் தெரிந்தது. அகலில் சுடர்போல அவன் சிரிப்பு என்று ஜீவலன் ஒருமுறை சொன்னதை நினைவுகூர்ந்தான்.

பாகுகன் வந்து வணங்கி “அரசே, தாங்கள் மாலையில் வருவீர்கள் என்று சொல்லப்படவில்லை” என்றான். “உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்” என்றான் ரிதுபர்ணன். பாகுகன் அதற்கு மகிழ்ந்து சிரித்து “இந்தப் புரவி இன்னும் பழகவில்லை. பழகிய பின்னர் இதுவே இங்கே மிகச் சிறந்ததாக இருக்கும்” என்று வார்ஷ்ணேயன் பிடித்திருந்த புரவியின் முதுகை தட்டினான். “ஏறிக்கொள்” என்றான் ரிதுபர்ணன். “இன்னும் அது பழகவில்லை” என்று ஜீவலன் சொல்வதற்குள் பாகுகன் அதில் ஏறிக்கொண்டான். ரிதுபர்ணன் புரவியைத் தட்டி அதை விரைந்தோடச் செய்தான். பாகுகன் உடன் தாவிவந்தான். புரவியின் கழுத்தளவே அவன் உயரமிருந்தான்.

“நீ எடையற்றவன்” என்றான் ரிதுபர்ணன். “புரவிகள் எடையை விழைபவை” என்று பாகுகன் சொன்னான். நிழல் ஒன்று உடன்வருவதுபோல பாகுகன் புரவியில் அவனைத் தொடர்ந்து வந்தான். எத்தனை சரியாக அவன் உடல் புரவியில் அமைந்திருக்கிறது! எந்த ஆணையுமில்லாமல் எண்ணத்தாலேயே புரவியை ஆள்கிறான். ரிதுபர்ணன் தன் குதிமுள்ளால் குத்தி புரவியின் விரைவை எண்ணியிராமல் கூட்டினான். அவன் புரவியுடன் மிகச் சரியாக உடன் பாய்ந்தது பாகுகனின் புரவி. அவன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தியபோது மிகச் சரியாக நின்றது.

அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே ரிதுபர்ணன் சென்றான். மிகச் சரியாக எப்படி அவனால் தொடர முடிகிறது, தன் புரவியையும் அவனே ஓட்டுவதுபோல. அருகே அமர்ந்திருப்பவன்போல தோளருகே தெரிந்தது அவன் முகம். “இன்று ஒரு புதிய அப்பம் செய்தேன். இலவங்கத்தின் இலையில் சுருட்டி ஆவியில் வேகவைக்கும் இனிப்பு. அந்தத் தைலமணத்துடன் வெல்லம் இணைகையில் அருஞ்சுவை. சிவசக்தி லயம் என்றார் சூதரான சாமர்” என்றான். அவன் மீண்டும் குதிமுள்ளால் புரவியைக் குத்தி பாயவிட்டான். அவனுடன் பாய்ந்து காற்றில் எழுந்துகொண்டே “ஆனால் தெற்கே இதில் தேங்காய் சேர்க்கிறார்கள். நான் பால்விழுதில் மாவை உருட்டினேன்” என்றான் பாகுகன்.

அவன் தன் எண்ணங்களை அறிந்ததுபோலவே தெரியவில்லை. இயல்பாக உடன் வருகிறான். அது எப்படி இயலும்? விளையாடுகிறானா? மிகத் திறமையாக நடிக்கிறானா? விழிகளில் சிறுவனுக்குரிய உவகை. அது ஒரு திரை. அவன் சிறுவனல்ல. நடு அகவையன். அச்சிரிப்புக்கும் குற்றுடலுக்கும் அப்பால் அவன் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறான். அவனை நோக்கி ஏளனம் செய்பவர்களை எல்லாம் அங்கு மறைந்திருந்து நோக்கி சிரிக்கிறான்.

ஏன் இத்தனை கசப்பு? இவனையே நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன் என இன்று உணர்ந்தபோதே இது தொடங்கிவிட்டது. இவனைப் பார்க்க இன்று வரலாகாதென்று எண்ணினேன். மீண்டும் மீண்டும் மதுவுண்டேன். ஆனால் அறியாமல் கிளம்பி வந்துவிட்டேன். மணிமுடியும் செங்கோலும் அரியணையும் பொன்னும் மணியும் குலமும் பெருமையும் இருந்தும் இவனிடம் தோற்றுக்கொண்டிருக்கிறேன்.

என்ன நிகழ்ந்ததென்று அவன் அறிவதற்குள்ளாகவே அவன் கால் நீண்டு பாகுகனின் புரவியின் வலதுமுன்னங்காலைத் தட்டி விலக்கியது. பயிலாப் புரவி துள்ளிக் கனைத்தபடி விழுந்து உருண்டு எழுந்து நின்று காலை உதறிக்கொண்டது. அது விழுவதற்கு ஒருகணம் முன்னரே அதன் மேலிருந்து குதித்து நிலத்தில் நான்கு காலடி வைத்து ஓடி அது எழுந்த அதே விரைவில் அதன் மேல் ஏறி அதை மீண்டும் செலுத்தி அவனருகே வந்தான் பாகுகன். “இன்னும் பழகாத புரவி… கால் தடுக்கிவிட்டது” என்றான்.

ரிதுபர்ணன் அவனை நோக்குவதை விலக்கினான். நெஞ்சு செவிகளிலும் வயிற்றிலும் அதிர்ந்து கொண்டிருந்தது. மூச்சை சீராக விட்டுக்கொண்டபோது மெல்ல மீண்டு வந்தான். ஒன்றும் நடவாததுபோல அவனுடன் இணைந்து வந்துகொண்டிருந்த பாகுகன் “ஆனால் இனிப்பு பொதுவாக ஆண்களுக்கு பிடிப்பதில்லை. நறும்பாக்கும் மதுவும் சுவையறியாதவர்களாக ஆக்கிவிட்டிருக்கின்றன. குழந்தைகள் இனிப்பை மட்டுமே விரும்புகின்றன. நல்ல சமையலை இளையோனும் கன்னியருமே அறிந்து சொல்லமுடியும், அரசே” என்றான்.

ரிதுபர்ணன் தன் புரவியை பீறிட்டுச் செல்லவைத்தான். அவன் காதுகளில் காற்று ஓசையிட்டது. குதிரையின் பிடரிமயிர் துடித்துலைந்தது. அதன் குளம்போசை அவன் நெஞ்சத் துடிப்புடன் இணைந்தது. இயல்பாக உடன் வந்துகொண்டே இருந்தான் பாகுகன். ஒரு கணத்தில் அவன் உடலெங்கும் சினமெழுந்து பெருகியது. கைவிரல்கள் நடுங்கி கடிவாளத்தை விட்டுவிடுவான் என்று தோன்றியது. புரவி அவனை விட்டுவிட்டு உருவிச்சென்றுவிட்டதென்றே எண்ணினான். உடன்வரும் அவனை விலக்கவேண்டும் என்று தோன்றியதுமே அவ்வெண்ணம் பெருகி ஒரு கணமும் அவனைத் தாளமுடியாதென்று தோன்றியது. நரம்புகள் இறுகி இறுகி உடைவதுபோல் விம்மின.

அவன் நிலத்தில் உடலறைய விழுந்தபோதுதான் அதை உணர்ந்தான். அகன்று செல்லும் அவன் குதிரையின் குளம்புகளின் அடிப்பூண்கள் தெரிந்தன. பாகுகன் தன் புரவியில் இருந்து இயல்பாக குதித்து அவனை நோக்கி வந்து “அரசே” என கைநீட்டினான். இரு புரவிகளும் அப்பால் விரைவழிந்து நின்று கழுத்தை வளைத்து திரும்பி நோக்கின.

“நாயே! நாயே!’ என்று கூவியபடி எழுந்த ரிதுபர்ணன் சவுக்கால் பாகுகனை மாறிமாறி அடிக்கத் தொடங்கினான். “அடிக்காதீர்கள்… அடிக்காதீர்கள்… அரசே! அரசே! நான் ஒன்றும் செய்யவில்லை… அரசே!” என கூவியபடி பாகுகன் அடிகளை கையால் தடுத்தான். ரிதுபர்ணன் வார்ஷ்ணேயனை நோக்கி “டேய், இவனைப் பிடித்துக் கட்டுங்கள்” என்றான். அவன் “அரசே, அவன் ஒன்றுமறியாதவன், பேதை” என்றான். “உன்னை கழுவிலேற்றுவேன். இது என் ஆணை!” என்றான் ரிதுபர்ணன்.

வார்ஷ்ணேயனும் ஜீவலனும் சேர்ந்து பாகுகனை பிடித்தனர். அவன் விசும்பி அழுதபடி “நான் ஒன்றும் செய்யவில்லை… நான் ஒன்றும் செய்யவில்லை” என்று கைகூப்பி நின்றான். அவர்கள் அவன் கையை பின்னால் பிடித்துக் கட்டினர். “அவனை அந்தத் தறியில் கட்டுங்கள்…” என்றான் ரிதுபர்ணன். அவர்கள் அவனை கட்டப்போக “திருப்பிக் கட்டுங்கள். அவன் முதுகு எனக்குத் தேவை” என்றான் ரிதுபர்ணன்.

அவர்கள் அவனைக் கட்டியதும் ரிதுபர்ணன் சவுக்கால் வெறியுடன் அடிக்கலானான். அடிக்க அடிக்க வெறி ஏறிவந்தது. அவனுள் இருந்து வெளிவந்து நின்று எக்களித்தது அவன் அறியாத பிறிதொன்று. சவுக்கு முதுகுத்தோலில் விழுந்து நக்கிச் சுருள்வதை, குருதி ஊறிக் கசிந்து வழிவதை கண்டான். குருதிமணம் எழுந்ததும் மூச்சிரைக்க சவுக்கை வீசினான். “டேய், அவனை அவிழ்த்துவிடுங்கள்” என்றான். அவர்கள் சென்று அவன் கட்டை அவிழ்த்தனர். கதறியழுது ஒலியடங்கி உடல் நடுங்கிக்கொண்டிருந்தான் பாகுகன்.

“நாயே, உன் ஆணவத்தை என்னிடம் காட்டுகிறாயா? நீ என்ன குதிரைத் தெய்வமா?” என்று ரிதுபர்ணன் உறுமினான். “வந்து என் காலை நக்கு. நீ நாய்… என் காலணியை நக்கி புழுதியை களை…” இரு கைகளையும் ஊன்றி அருகே வந்த பாகுகன் அவன் காலணியை நாக்கை நீட்டி நக்கினான். அவன் கண்ணீர் வழிய நக்குவதை குனிந்து நோக்கிக்கொண்டு ரிதுபர்ணன் அசையாமல் நின்றான். நாக்கு அவன் உடலில் படவில்லை. ஆனால் ஒருகணம் சிவப்பாக அது தெரிந்து மறைந்தபோது அவன் முதுகுத்தண்டு குளிர்ந்தது.

தலையைத் திருப்பிக்கொண்டு கைவீசி “போ” என்று ரிதுபர்ணன் சொன்னான். பாகுகன் கண்ணீர் கோடு விழுந்த கன்னங்களுடன் நிமிர்ந்து புன்னகை செய்து “போகலாமா?” என்றான். “போடா” என்று ரிதுபர்ணன் கூவினான். பாகுகன் துள்ளி எழுந்து ஓடி ஜீவலன் அருகே சென்று அவன் பின்னால் ஒளிந்துகொண்டான். அந்த அசைவு ரிதுபர்ணனை புன்னகைக்கச் செய்தது. ஜீவலனும் கண்ணீர் நிறைந்த கண்களுடன் புன்னகை செய்தான்.

flower“ஆம், அது நிஷாதர்களின் இயல்பு” என்றார் முகுந்தர். “அவன் சூதனல்ல. சூதர்கள் அவ்வாறு முற்றடிமையென்று ஆகமாட்டார்கள். கான்மக்கள் விலங்குகளைப் போன்றவர்கள். நேற்றும் நாளையுமில்லாமல் இன்றில் வாழ அவர்களால் இயலும். அரசே, விலங்குகளால் தங்கள் இயல்புகளில் இருந்து தாங்களே விடுவித்துக்கொள்ள இயலாது.” அவன் குடித்த மது எதுக்களித்து வாயில் வந்தது. அதை தென்னாட்டு கம்பளம் விரிக்கப்பட்ட தரையில் துப்பினான்.

“அரசன் தன் செயலுக்காக வருந்தலாகாது. எதுவாக இருந்தாலும்” என்றார் முகுந்தர். “ஏனென்றால் பின்னர் வருந்த நேருமோ என அஞ்சி கடுஞ்செயல் புரியாதொழிவான். அறம் காக்கும் அவன் வாள் கூர்மழுங்கும்.” “நான் வருந்துவது நான் ஏன் அதை செய்தேன் என்று எண்ணியே” என்றான் ரிதுபர்ணன். “நீங்கள் உங்கள்மேல் வீசிய சவுக்கு அது” என்றார் முகுந்தர். அவரையே கூர்ந்து நோக்கினான். பின் கள்மயக்கில் சிரித்து “அந்தணரின் வழிமுறை இது. ஒவ்வொன்றையும் தத்துவமாக ஆக்கிக்கொள்வார்கள். அதன்பின் ஏட்டில் எழுதிவிட்டு விலகிச் செல்வார்கள்” என்றான். முகுந்தர் புன்னகைத்து “எங்கள் பணியும் அதுவே” என்றார்.

“அவன் ஏன் அப்படி இருக்கிறான்? கீழிறங்கிக் கீழிறங்கி விலங்கென்றே ஆகிவிட்டிருக்கிறான்” என்றான் ரிதுபர்ணன். அவன் அதையே சொல்லிக்கொண்டிருப்பதை உணர்ந்த முகுந்தர் எழுந்துகொண்டு “நான் வருகிறேன். எனக்கு நாளை நிறைய பணியிருக்கிறது” என்றார். “அமைச்சரே, நான் கேட்பது ஒன்றே. ஒரு மனிதன் இத்தனை கீழிறங்க முடியுமா? தன்முனைப்பை ஒழியலாம். தன்மதிப்பைக்கூடவா முற்றொழிய இயலும்?” முகுந்தர் “அவ்வாறு இருப்பது அவனுக்கு எளிதாக இருக்கிறதுபோலும். சற்றேனும் தன்மதிப்பிருந்தால் அந்த உடலுக்காக அவன் நாணம் கொள்வான். நகைப்போர்மேல் வஞ்சம் திரட்டிக்கொள்வான். இன்றிருக்கும் உவகையை முழுமையாக இழந்து கசந்து கொந்தளித்துக்கொண்டே இருப்பான்” என்றார். “நான் வருகிறேன்” என்று தலைவணங்கி வெளியேறினார்.

ரிதுபர்ணன் அவர் செல்வதை நோக்கியபடி தலை ஆடிக்கொண்டிருக்க அமர்ந்திருந்தான். “அவர் சென்றுவிட்டார். அவருக்குப் புரியாது” என்றான். எதுக்களித்த மதுவை துப்பிவிட்டு “அவன் எவ்வளவு தொலைவுக்கு செல்வான்? புழுவென்றாகி மண்ணில் நெளிவானா?” என்றான். சேடியை கைதட்டி அழைத்து மீண்டும் மது கொண்டுவரச் சொன்னான். அவள் தயங்க “ஆணை இது, இழிமகளே!” என்று கூவினான். அவள் தலைவணங்கி மீண்டும் கொண்டுவந்த மதுவை வாங்கி ஒரே மிடறில் குடித்தான்.

சற்றுநேரம் சுவரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். எதை எண்ணிக்கொண்டிருந்தேன்? ஆம், அவன் எதுவரை செல்வான்? யார்? அவன் உடல் வலப்பக்கமாக இழுபட்டது. வலத்தோள் இரும்பாலானதாக ஆகிவிட்டதுபோல. இருமுறை ஆடியபின் சரிந்து கையை ஊன்றி அமர்ந்து “ஆம், அவன் நெடுந்தொலைவு செல்ல முடியாது” என்றான். மீண்டும் ஏதோ சொல்லியபடி படுத்து துயின்றான். ஆனால் விழிகள் முழுமையாக மூடாததனால் அவன் கண்களுக்குள் புகுந்த ஒளி உள்ளே வெயிலைப் பரப்பியது. அவன் எரிவேனிலில் விடாய் தவிக்க சென்றுகொண்டிருந்தான். சூழ்ந்து மலைச்சரிவுகள் கொதித்துக்கொண்டிருந்தன.

விழித்துக்கொண்டு எழுந்து வாயை துடைத்தான். விடாயை உணர்ந்ததும் கையூன்றி எழுந்து நீர்க்குடுவையை இழுத்து எடுத்து குடித்தான். நீர் உடலில் நிறைந்தாலும் விடாய் அவ்வாறே இருப்பதுபோலிருந்தது. ஆனால் தலையின் எடை குறைந்திருந்தது. சுவரைப் பற்றியபடி நின்று ஆடையை சீரமைத்துக்கொண்டான். அவன் வெளியே சென்றபோது காவலன் தலைவணங்கினான். சுவரைப் பிடிக்காமலேயே நடக்கமுடிந்தது. காற்று வீச உடல் எடையில்லாமல் ததும்புவது போலிருந்தது.

அவனுக்குப் பின்னால் காவலர் இருவர் ஓசையில்லாமல் வந்ததை அவன் அறிந்தான். இடைநாழியில் நடந்து படியிறங்கி அரண்மனை முற்றத்தை அடைந்தான். குளிர்ந்த இரவுக்காற்று அவன் சித்தத்திலும் பட்டது. உடலெங்கும் பரவியிருந்த வெம்மை குறைவது போலிருந்தது. அடுமனை நோக்கி சென்றான். அவ்வேளையில் அங்கே எவருமே விழித்திருக்கவில்லை. அடுமனையை ஒட்டிய திறந்த கொட்டகையில் அடுமனைச் சூதர் துயின்றுகொண்டிருந்தனர். அவன் படிகளில் ஏறிய ஒலி கேட்டு வார்ஷ்ணேயன் விழித்துக்கொண்டான். ஓசையின்றி தலைவணங்கி விலகி நின்றான்.

தரையில் குப்புறப்படுத்து பாகுகன் துயின்றுகொண்டிருந்தான். ரிதுபர்ணன் அவனை நோக்கியபடி நின்றான். குனிய முயன்றபோது அவன் பருத்த உடல் கீழே இழுத்தது. ஜீவலன் எழுந்து பாகுகனை உலுக்கினான். பாகுகன் புரண்டு ஜீவலனை நோக்கியபோது ரிதுபர்ணனை பார்த்துவிட்டான். முகம் மலர பாய்ந்து எழுந்து “அரசே!” என்றான். “நான் உங்களை கனவு கண்டேன். நாம் இருவரும் காட்டில் ஒரு சிறிய புரவிக்குட்டியை பார்க்கிறோம். வெண்குதிரை. குருத்துப்பாளை போன்றது.” அவன் கைகளை மேலே தூக்கி “அது சிவந்த கண்கள் கொண்டது…” என்றான்.

ரிதுபர்ணன் “நான் ஏன் உன்னை அடித்தேன் என்று தெரியவில்லை” என்றான். ஆனால் அவன் சொல்ல விழைந்தது அதுவல்ல. “ஆம், அடித்தீர்கள். ஆனால் இந்தக் குதிரைக்குட்டி மிக விரைவானது. அதை நாம் பொறி வைத்தே பிடிக்கமுடியும்” என்று பாகுகன் சொன்னான். ரிதுபர்ணன் தன் விழிகளை அழுத்தி கண்ணீரை நிறுத்தியபின் “ஆம், நாம் நாளை கானாடச் செல்வோம். புரவியை பிடிப்போம்” என்றான். “நாளை காலையே செல்வோம்… வெண்புரவி அங்கே நிற்கிறது. ஐயமே இல்லை” என்றான்.