பதிவர்: mahajeyamohan

நூல் ஒன்று – முதற்கனல் – 2

பகுதி ஒன்று : வேள்விமுகம்

[ 2 ]

வேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எடுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில் நீர் நிறைத்துவைத்து, நெற்றியில் குலதெய்வங்களின் மஞ்சள் குறியை அணிவித்து ”நீண்ட ஆயுளுடன் இரு. உன் வழிகளெல்லாம் சென்றுசேர்வதாக” என்று வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினாள். அப்போது அவளுடைய குலத்தின் அத்தனை பெண்களும் அவள் வீட்டின் முன் கூடியிருந்தனர். ஆலமரத்தடியில் அவர்களின் குலதெய்வங்களான நாகங்கள் கல்லாலான பத்திகளை விரித்து, கல்லுடல் பின்னி, கல்விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தன.

ஆறு வயதான ஆஸ்திகன் குனிந்து தன் அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு தன் சிறுகால்களை எடுத்து வைத்து பசும்சாணி பூசிய படிகளில் இறங்கி நீலச்செண்பகமலர்கள் பாரித்துக்கிடந்த முற்றத்தைத் தாண்டி நடந்து ஊர்முனையில் மறைந்தபோது விம்மும் நெஞ்சுடன் அவள் பின்னால் ஓடிவந்து ஊர்மன்றின் அரசமரத்தடியில் நின்று கண்ணெட்டும் தூரம் வரை பார்த்திருந்தாள். மண்நிறமான மரவுரியும், கரிய குடுமியும் கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.

(மேலும்…)

நூல் ஒன்று – முதற்கனல் – 1

பகுதி ஒன்று : வேள்விமுகம்

[ 1 ]

வேசரதேசத்தில் கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரேமகன் ஆஸ்திகனை மடியில் அமரச்செய்து கதை சொல்ல ஆரம்பித்தாள். நாகர்குலத்தவர் வாழும் சின்னஞ்சிறு மலைக்கிராமத்தை சுற்றிலுமிருந்த காட்டிலிருந்து வந்த கடும்குளிர் வளைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். இரவுலாவிகளான மிருகங்களும் பறவைகளும் எழுப்பும் ஒலிகள் இணைந்து இருட்டை நிறைத்திருந்தன. பெரிய கண்கள் கொண்ட சிறுவன் தன் அன்னையின் மடியின் அணைப்பையும் தன் தலைமேல் படும் அவள் மூச்சின் வருடலையும் உணர்ந்தபடி முற்றம் வரை சென்று விழுந்து அங்கு நின்ற செண்பகத்தின் அடிமரத்தை தூண்போலக் காட்டிய அகல்விளக்கின் செவ்வொளிக்கு அப்பால் தெரிந்த இருட்டை பார்த்துக்கொண்டிருந்தான்.

(மேலும்…)

வியாசனின் பாதங்களில்…

இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன். இளவயதின் கனவு.அப்படி பல கனவுகள் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படித்தானிருந்தது.

(மேலும்…)