மாதம்: ஏப்ரல் 2020

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 47

பகுதி நான்கு : அலைமீள்கை – 30

பிரத்யும்னனின் இளையவர்கள் அமர்ந்திருந்த சிற்றறை நோக்கி நான் ஓடினேன். அதன் வாயிலிலேயே என்னை கைநீட்டி தடுத்தபடி காவலர்கள் வந்தனர். “நான் உடன்பிறந்தாரை சந்திக்கவேண்டும், உடனடியாக இப்போதே” என்றேன். “அவர்கள் சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்போது எவரையும் சந்திப்பதில்லை” என்று காவலர்தலைவன் சொன்னான். “சந்தித்தாகவேண்டும். உடனே இப்போதே” என்று நான் மீண்டும் கூறினேன். ”இத்தருணத்திலேயே சந்தித்தாகவேண்டும்” என்று கூவினேன். “இது துவாரகையை ஆளும் மூத்தவர் ஃபானுவின் ஆணை. மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள்.”

இன்னொரு அகவை முதிர்ந்த காவலர் “சற்று பொறுங்கள். நான் சென்று சொல்லிவிட்டு வருகிறேன்” என்றார். அவர் அறைக்கதவை திறந்து உள்ளே செல்வதற்குள் ஒரு கணத்தில் என் முன்னால் நின்றிருந்த காவலனைப் பிடித்து தள்ளிவிட்டு அவரை முன்னால் உந்தித் தள்ளி உள்ளே சென்று நான் கதவை தாழிட்டேன். தள்ளப்பட்ட முதிய காவலர் சென்று நிலத்தில் விழுந்து எழுந்தார். உள்ளிருந்த சாருதேஷ்ணனும் பரதசாருவும் சாருவும் எழுந்து நின்றனர். சாருதேஷ்ணன் வாளை தொட்டார். நான் “பொறுங்கள். ஒருகணம் நான் சொல்லெடுக்கிறேன். அதன்பொருட்டே இங்கு வந்திருக்கிறேன்” என்றேன்.

“நாங்கள் எவரிடமும் பேசுவதற்கு ஒருக்கமில்லை. இத்தருணத்தை நாங்கள் கடந்தாகவேண்டும்” என்றார் சாருதேஷ்ணன். “நான் இங்கு நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்தேன். என்ன நிகழ்ந்ததென்று மீண்டும் ஒருமுறை விளக்குகிறேன்” என்றேன். “என்ன நிகழ்ந்தது என்று ஆய்ந்துகொண்டிருக்க இப்போது பொழுதில்லை. சுதேஷ்ணன் தனக்கு எதிரான சூழ்ச்சி ஒன்றை அமைத்திருந்தார் என்பது பிரத்யும்னனுக்கு தெரிந்துவிட்டது. அவருடன் எவரெவர் இருந்தார் என்பதே அவருக்கு தெரியவேண்டியது. நாங்கள் அவருடன் இருந்தோம் என்பதை எங்களால் மறைக்க முடியாது. அவருக்குத் தெரியும் என்பது அவர் அந்தச் சொல்சூழ்கையில் எங்களை சேர்த்துக்கொள்ளவில்லை என்பதிலேயே தெரிகிறது. ஆகவே அவருடைய படைகள் எத்தருணமும் வந்து எங்களை சிறைசெய்யக்கூடும். தலைவெட்டி வீழ்த்தவும் வாய்ப்புண்டு. நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றான் சாரு.

“நான் கூறுவதை சற்று கேளுங்கள்” என்றேன். “கூறுக!” என்றார் சாருதேஷ்ணன். அதற்குள் பரதசாரு முந்தி வந்து ”எங்களுக்கும் படைவல்லமை இருக்கிறது. எங்களை ஆதரிக்கும் ஷத்ரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நாங்கள் பேசுகிறோம். இந்த அசுரக்குடி மைந்தனுக்கு முடிசூட்டும்பொருட்டா ஷத்ரியர்கள் இங்கே படைகொண்டு நின்றிருக்கிறார்கள்? களங்களை வென்று உயிர்கொடுத்து அவர்கள் போரிடுவது ஷத்ரியர்கள்மேல் அசுரக்கோல் நிலைகொள்வதற்கா என்று அவர்களை கேட்கிறேன். ஷத்ரியர்களை மீறி பிரத்யும்னன் எதுவும் செய்துவிடமுடியாது” என்றான்.

“நான் சொல்கிறேன். ஓசையிடவேண்டாம். நான் பேசுகிறேன்” என்றேன். “சொல்” என்று சாருதேஷ்ணன் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும் கொந்தளித்துக்கொண்டிருந்தனர். எந்தக் கணமும் அவர்களின் அறைக்கதவை உடைத்துக்கொண்டு பிரத்யும்னனின் படைகள் உள்ளே வந்துவிடுமென்று அவர்கள் அஞ்சுவது தெரிந்தது. “இத்தருணத்தில் நீங்கள் அஞ்சுவதுபோல பிரத்யும்னன் நிலையழிந்து நடந்துகொள்ளவே வாய்ப்பு மிகுதி. அவர் சுதேஷ்ணனை கொல்லவில்லை என்றால் இவையனைத்தையும் பிறிதொன்றாக கருதலாம். ஆனால் தன் கையில் குருதிபட்ட பிறகு இனி அவர் தவிர்க்கப் போவதில்லை. உறுதியாக பிரத்யும்னனை நாம் எதிர்கொண்டாகவேண்டும். சுதேஷ்ணனை ஆதரித்த அனைவரையும் அவர் வாழவிடமாட்டார்.”

பரதசாரு “அவரிடம் சென்று பேசினாலென்ன என்று எண்ணிக்கொண்டிருந்தோம். எவ்வண்ணம் பேசுவது என்பதைப்பற்றித்தான் இங்கு சொல்சூழ்ந்து கொண்டிருந்தோம்” என்றான். “எதை பேசுவீர்கள்? சுதேஷ்ணனுக்கு நீங்கள் அளித்த ஆதரவு பொய் என்றா? அல்லது அந்த ஆதரவு மெய், இன்று அஞ்சி பிரத்யும்னனுக்கு மீண்டும் ஆதரவு தெரிவிக்கப்போகிறோம் என்றா? அதை அவர் நம்புவாரா? அத்தகைய ஒரு தரப்பை அவர் தன் முடிக்கு கீழே விட்டுவைப்பாரா?” சாரு “நாங்கள் ஒன்றும் தனித்தவர்கள் அல்ல. எங்களுக்கும் படைவல்லமை உள்ளது” என்றான்.

“இது அறிவின்மை. படைவல்லமை இருப்பது உங்களைக் கொல்வதற்கு இன்னும் தெளிவான அடிப்படையை அவருக்கு அளிக்கிறது. நீங்கள் படைவல்லமை அற்றவர்கள், எதுவுமே செய்ய இயலாதவர்கள் என்றால் ஒருவேளை உங்களுக்கு அவர் உயிர்க்கொடை அளிக்கக்கூடும். ஆனால் உங்களால் ஷத்ரியர்களை தூண்டிவிட முடியும் என்றும் ஷத்ரியர்களிடம் பேசுவதற்கு உங்களிடம் வலுவான குரல் ஒன்றுள்ளது என்றும் உணர்ந்தால் அவர் எவ்வகையிலும் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார். உங்களை அழித்து வென்றுநிற்க வேண்டுமென்றே அவர் விரும்புவார்” என்றேன்.

சாருதேஷ்ணன் தளர்ந்து “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். “உங்களுக்கு பிற மைந்தரின் ஆதரவு இருக்கிறதா என்பதுதான் இப்போது உங்களை வாழவைப்பது. உங்கள் ஷத்ரிய குடியின் ஆதரவல்ல நீங்கள் நாடவேண்டியது. நீங்கள் மூத்தவர் ஃபானுவை அடைக்கலம் புகுங்கள்” என்றேன். சாருதேஷ்ணன் “நாங்கள் அங்கு வந்தால்…” என்றபின் ”நாங்கள் அங்கு வந்தால் பிரத்யும்னனுக்கும் ஃபானுவுக்கும் பூசல் எழும்” என்றார். “அவ்வாறல்ல, ஃபானுவிடம் மூத்தவர் என்ற நிலையில் வந்து காலில் விழுங்கள். மூத்தவரே, எங்களை காப்பாற்றுங்கள் என்று நீங்கள் பணிந்து சொல்லும்போது ஃபானு உங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் பிரத்யும்னனிடம் பேசுவார்.”

“மெய், பிரத்யும்னனின் ஆதரவை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஆனால் உங்கள் உயிரை காப்பாற்றிக் கொடுப்பார். இங்கிருந்து நீங்கள் உயிருடன் வெளியே செல்வதற்கு ஒரு வழியை அவர் திறந்துகொடுப்பார்” என்றேன். “குறைந்தது இந்நகரில் இருந்து நாங்கள் சென்றுவிட்டால் போதும். நாங்கள் எவ்வகையிலேனும் விதர்ப்பத்திற்கு சென்றுவிட்டால் போதும்” என்றார் சாருதேஷ்ணன். “விதர்ப்பத்திற்கு நீங்கள் செல்ல இயலாது. விதர்ப்பம் பிரத்யும்னனுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கே வாய்ப்பு மிகுதி” என்றேன். பரதசாரு “எப்படி?” என்றான். “அவர் சுதேஷ்ணனுடன் மிக நெருக்கமாக இருந்தார்.”

நான் “ஆனால் அவர் கையால் விசாரு கொல்லப்பட்டிருக்கிறான்” என்றேன். “ஆகவே அவர் பிரத்யும்னனை அடைந்தே தீரவேண்டும். பிரத்யும்னனின் ஆதரவு இல்லையென்றால் ருக்மியால் விதர்ப்பத்தை ஷத்ரியர் நடுவே ஒரு தனி நாடென நிலைநிறுத்த இயலாது. ருக்மியின் ஆதரவு இல்லாவிட்டால் பிரத்யும்னன் இந்நகரில் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவரல்ல. ஆகவே அரசுசூழ்தல் என்ற முறையில் அவர் ஒருபோதும் ருக்மியை கைவிடப் போவதில்லை. ருக்மியும் அவரை கைவிடப் போவதில்லை.” சாருதேஷ்ணன் “ஆம், அதற்கான வாய்ப்புகள் உள்ளன, அனைவரும் நாடுவது அரசையே” என்றார்.

“நீங்கள் ருக்மியை சென்றடைவது இடரை அழைப்பது. பிரத்யும்னன் அவ்வாறு ருக்மியை கைவிடுவார் என்றால் ருக்மி செய்வதற்கு ஒன்றே உள்ளது. உங்களை பிரத்யும்னனிடம் கையளித்து தன் நேர்மையையும் தன் பணிவையும் அறிவித்துக்கொள்வது” என்றேன். “என்ன செய்வதென்றே தெரியவில்லை, என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றபடி பரதசாரு எழுந்தான். “இந்த எந்த சூழ்ச்சியிலும் நான் இடம்பெறவில்லை. நான் சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தேன். நான் பிரத்யும்னனுக்கு அணுக்கமானவனாக இருந்தேன். என்னை பேசிப் பேசி இங்கு இழுத்தார்கள். எனக்குள் விழைவை மூட்டினார்கள். என்னை இவர்கள் தென்திசைக்கு பொறுப்பாக்குவதாக சொன்னார்கள்” என்றான்.

நான் அவனைப் பார்த்து “அதைவிட நீ விழைந்தாய், இளையோனே” என்றேன். “ஒருநாள் துவாரகையின் முழுமுடியையும் நீயே சூடிக்கொள்ள வாய்ப்பு அமையும் என்றும் அதுவரை சுதேஷ்ணனிடம் அணுக்கமாகி உடன் இருப்பதாக நடிக்கவேண்டும் என்றும் எண்ணினாய்” என்றேன். “இல்லை இல்லை…” என்று அவன் கூவினான். நான் உரக்க “அவ்வண்ணமே நினைத்தாய், அதில் எந்த ஐயமும் இல்லை. சுதேஷ்ணன் முடிசூடட்டும். ஃபானுவையும் பிரத்யும்னனையும் அவர் தோற்கடிக்கட்டும். அதன்பிறகு சுதேஷ்ணனை நீ வெல்லலாம் என்று எண்ணினாய்” என்றேன். “இல்லை” எனும்போது அவன் குரல் தழைந்தது. “ஐயமே இல்லை, நீ அவ்வாறுதான் எண்ணினாய்” என்றேன்.

பரதசாரு ”ஆம், அவ்வாறுதான் எண்ணினேன். பித்தன்போல் எண்ணினேன். கீழ்மகன்போல் எண்ணினேன். அதற்காகத்தான் இன்று இதோ பழிசுமத்தப்பட்டு நின்றிருக்கிறேன். என் தலை இந்த மண்ணில் உருளப்போகிறது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அழியப்போகிறேன். அழிவதைத் தவிர எனக்கு வேறெந்த முடிவும் கண்ணுக்குத் தெரியவில்லை” என்று கூறிவிட்டு தலையில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு அழுதபடி நிலத்தில் அமர்ந்தான். பிறர் அவனை வெறித்து நோக்கியபடி நின்றனர்.

நான் அவனை நோக்கி “ஃபானுவை சென்றடைக! ஃபானுவிடம் உதவி கோருக! நாங்கள் இந்நகரத்தைவிட்டு வெளியே செல்கிறோம் என்று அவரிடம் கூறுக! நகரிலிருந்து வடபுலம் நோக்கி செல்க! கூர்ஜரமோ அல்லது பிற ஏதேனும் நாடோ. எங்கேனும் உங்களுக்கு அடைக்கலம் அளிக்கும் ஒரு ஷத்ரிய நாட்டுக்கு செல்லுங்கள். அங்கே இருந்துகொண்டு இங்கிருக்கும் ஷத்ரியர்களை சிறிது சிறிதாக அங்கே சேர்த்துக்கொள்ளுங்கள். அங்கே ஒரு படையை திரட்டிக்கொண்டீர்கள் என்றால் பிறகெப்போதேனும் நீங்கள் பிரத்யும்னனிடம் வந்து பேசமுடியும். உங்களுக்கான உரிமையை எங்கேனும் கேட்டு பெறமுடியும். இத்தருணத்தில் உயிருடன் இருப்பதே உங்களுக்கான அறைகூவல்” என்றேன்.

“ஆம், உயிர்… அதுவன்றி பிறிதெதையும் இப்போது நாங்கள் நாடவில்லை” என்றார் சாருதேஷ்ணன். ”எனில் வருக! உடனடியாக நாம் சென்று ஃபானுவை பார்ப்போம். என்னுடன் எழுக!” என்றேன். சாரு “ஆனால் நாங்கள் இந்த அரண்மனை விட்டு வெளியே செல்ல முடியாது. இந்த அரண்மனை முற்றாகவே பிரத்யும்னனின் படைகளால் சூழப்பட்டிருக்கிறது” என்றான். “ஆம், நான் அதை அறிவேன். ஆனால் நான் ஃபானுவின் தூதன். அவர் அளித்த அரசமுத்திரை மோதிரத்துடன் இங்கு வந்திருக்கிறேன். என்னை இங்கு சிறையிட அவர்களால் முடியாது. அது ஃபானுவின் எதிர்ப்பை ஈட்டிக்கொள்வதாகும். நான் அன்றி நீங்கள் இந்த வளையத்திலிருந்து வெளியே செல்லமுடியாது என்பதை உணருங்கள்” என்றேன்.

“ஆம், உணர்கிறோம். வருகிறோம்” என்றார் சாருதேஷ்ணன். நான் அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். இடைநாழியினூடாக நடக்கையில் நான் ஐயம் கொண்டிருந்தேன். இத்தருணத்தில் பிரத்யும்னன் செய்வதற்கு ஒன்றே உள்ளது. அவர் கையில் குருதி படிந்துவிட்டது. அக்குருதிக்கு அவர் தெய்வங்களிடம், குடிகளிடம், உடன்பிறந்தாரிடம் ஈடு சொல்லியே ஆகவேண்டும். அதை ஈடுகட்டுவதற்கு ஒரே வழி சுதேஷ்ணன் இயற்றியது என்ன என்பதை மேலும் மேலும் பெரிதாக்குவது. பொறுத்துக்கொள்ள இயலாத ஒன்றாக மாற்றுவது. அதை செய்ய வேண்டுமெனில் முதலில் சுதேஷ்ணனையும் சுதேஷ்ணனுடன் இணைந்த இவர்களையும் கொன்றுவிடவேண்டும். எவ்வகையிலும் இப்பகையை எஞ்சவிடலாகாது.

இங்கிருந்து வெளியே சென்றால் இவர்கள் மக்களிடம் இரக்கத்தை ஈட்டிக்கொள்வார்கள். பிரத்யும்னனுக்கு பெரும்பழியையே திரட்டி வைப்பார்கள். சுதேஷ்ணனின் கொலையை பயன்படுத்திக்கொண்டு பிரத்யும்னனுக்கு எதிராக குடிகளின் பகையையும் அச்சத்தையும் பெருக்கிக்கொள்வதே இவர்கள் தங்கள் இடத்தை ஈட்டிக்கொள்வதற்கான வழியாக அமையும். ஆகவே அரசுசூழ்தலின் நெறிகளின்படி அவர் இவர்களை எந்நிலையிலும் வாழ விடமாட்டார். இந்த அரண்மனை இதற்குள் முற்றாக சூழப்பட்டிருக்கும். இங்கிருந்து வெளியே செல்ல எவரையும் விடப்போவதில்லை.

நான் அத்தருணத்தில் முற்றிலும் நம்பிக்கையிழந்திருந்தேன். ஆயினும் அனைத்து முடிவுகளையும் எடுத்துவிட்டவன் போலவும் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் போலவும் உறுதியாக அடிகள் வைத்து சென்றேன். எனது தோற்றத்தை நம்பி அவர்கள் பதறியபடியும் விம்மியபடியும் எனக்குப் பின்னால் வந்தனர். இடைநாழியினூடாக நடந்து படிகளினூடாக இறங்கி கூடத்திற்கு வந்தபோது அங்கே நின்றிருந்த காவல்வீரர்கள் வாட்களை உருவியபடி எங்களை தடுத்தனர். அவர்கள் தலைவன் முன்னால் வந்து “நில்லுங்கள், இங்கிருந்து எவரும் வெளியே செல்ல முடியாது. பிரத்யும்னனின் ஆணை” என்றான்.

நான் எனது முத்திரை மோதிரத்தை தூக்கிக்காட்டி உரக்க “நான் இந்நகரை ஆளும் ஃபானுவின் இளையோன். இந்நகரை ஆளும் தலைவன் ஆணைப்படி இவர்களை அழைத்துச்செல்கிறேன். என்னை தடுப்பவர் எவர்?” என்றேன். “இந்நகரில் இன்று எவரும் முழுதாக முடிசூட்டிக்கொள்ளவில்லை. எங்கள் அரசர் இப்போதும் பிரத்யும்னன்தான். அவருடைய ஆணையையே நான் நிறைவேற்ற முடியும்” என்று காவலர்தலைவன் சொன்னான். “எந்நிலையிலும் இங்கிருந்து எவரையும் நான் வெளியே செல்ல ஒப்ப இயலாது. படைக்கலங்களை கீழே வீழ்த்தி கைகளைத் தூக்கி முழந்தாளிடுக! சிறைப்படுக!”

“என்னை தடுப்பவர் எவர்? பேரரசர் ஃபானுவின் ஆணையை மீறுபவர் எவர்? எனில் மீறுங்கள் பார்க்கலாம்” என்றபடி அந்த முத்திரை மோதிரத்தை தூக்கிக்காட்டியபடி நான் முன்னால் நகர்ந்தேன். “இவர்களை அழைத்து வரும்படி ஃபானுவின் ஆணை. அந்த ஆணையை மறுப்பது தங்கள் தலைகளை பலிபீடத்தில் வைப்பதேதான். உணர்க, இத்தருணம் ஒரு போருக்குரியது என்று உணர்க! போரில் ஒவ்வொருவரும் தங்கள் தலையைத்தான் முன் வைக்கிறார்கள்” என்றேன்.

“இளவரசே, எந்நிலையிலும் என் அரசர் பிரத்யும்னனின் ஆணையை நான் மீறப்போவதில்லை. தாங்கள் எவரும் இங்கிருந்து வெளியே செல்லமுடியாது” என்று கூறி அவன் வாளை உருவினான். நான் “என் தலையை வெட்டு. நான் இங்கிருந்து செல்லாமல் இருக்கபோவதில்லை. ஏனெனில் இது எனது மூத்தவரின் ஆணை” என்றபடி என் வாளை உருவி முன்னால் சென்றேன். “வேண்டாம் நில்லுங்கள் பொறுங்கள்” என்று அவன் கூவினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றோம். பிறகு நான் ஓங்கி வெட்டியபடி முன்னால் சென்றேன். அவன் ஒருகணம் தயங்கி பின்னடைந்தான்.

சிறுவழி உருவானால் கூட அதனூடாக அவர்களை இட்டுச்செல்ல முடியுமென்று எண்ணினேன். அத்தருணத்தில் என் கால் சற்றே வழுக்கியது. என் தலை சுழன்றது. காட்சிகள் அனைத்தும் அதிர்ந்து சற்றே நெளிந்தன. நான் வாளை உருவி ஊன்றி தயங்கி நின்றேன். என்னுள் உடல்நீரில் ஓர் அலை எழுந்தடங்கியது. என் அகத்தே ஓடிய எண்ணப்பெருக்கும் சொல்கலங்கி சுழிப்பு கொண்டது. தன்னுணர்வு அடைந்தபோது என் உடலெங்கும் வியர்வை எழுந்திருந்தது. நான் களைத்திருந்தேன். என் உள்ளம் அதன் தாங்கெல்லையை கடந்திருக்கலாம்.

ஆனால் என்னைச் சுற்றி அத்தனை பேருமே கூச்சலிட்டுக்கொண்டிருப்பதை கண்டேன். நகருக்குள்ளிருந்து பெரும் ஓசை எழுந்து சாளரங்களினூடாக உள்ளே வந்தடைந்தது. எங்கும் ஓலங்கள். பலர் ஓடும் ஓசைகள். மரப்படிகளிலும் பளிங்குப்படிகளிலும் காலடிகள் விழும் முழக்கங்கள். வெளியிலிருந்து ஒரு வீரன் உள்ளே ஓடிவந்து ”நிலநடுக்கம். நிலம் நடுங்கியிருக்கிறது” என்றான். ”எங்கு? யார்?” என்று கேட்டபடி என்னைத் தடுத்த காவலர்தலைவன் வெளியே ஓடிப்போனான். “வருக! வருக!” என்று நான் சாருதேஷ்ணனையும் இளையவர்களையும் நோக்கி சொல்லிவிட்டு ஓடினேன்.

“வெளியே வருக! என்னை தொடர்ந்து வருக!” என்று கூறியபடியே வெளியே ஓடினேன். உள்ளிருந்தும் ஏராளமான படைவீரர்கள் படிகளிலிருந்தும் இறங்கி ஓடி வந்தனர். “நிலநடுக்கம்! நிலம் நடுங்கியிருக்கிறது!” என்று ஒருவன் கூவினான். என்னைத் தொடர்ந்து வந்த சாரு “நான் குமட்டலெடுத்தேன், தலைசுழன்றது. என்ன நிகழ்ந்ததென்றே தெரியவில்லை” என்றான். பரதசாரு ”சுவர்களில் மாட்டப்பட்டிருந்த படைக்கலங்களும் பொருட்களும் அசைந்துவிட்டிருந்தன” என்று சொன்னான். “நிலம் நடுங்கியிருப்பது உண்மைதான்” என்று நான் சொன்னேன். “அது நன்று, நாம் தப்ப வாய்ப்பு கிடைத்தது.”

“என்ன நிகழ்ந்ததென்றே தெரியவில்லை. இங்கிருந்து தெய்வங்கள் கிளம்பிச்செல்கின்றன. தெய்வங்கள் இந்நகரை கைவிடுகின்றன” என்று அப்பால் ஒரு காவலன் கூவினான். ”பேரழிவு அணுகியிருக்கிறது. இந்நகர் கடலின் இரு உள்ளங்கைமேல் அமைந்துள்ளது என்பதை மறக்காதீர்கள். இதை ஏந்தியிருக்கும் பெரும்பாறைகளில் ஒன்று அசைகிறது” என்று வேறு ஒருவன் கூறினான். ”இந்நகரமே உடைந்து விழப்போகிறது. கட்டடங்கள் ஒன்றின்மேல் ஒன்று விழப்போகின்றன” என்று இன்னொருவன் கூவினான்.

“இது நகரா என்ன? ஒன்றுக்குமேல் ஒன்றென கட்டடங்களை கட்டியிருக்கிறார்கள். உச்சியிலிருக்கும் ஒரு மாளிகை இடிந்துவிழுந்தால் அனைத்துக்கும் மேலே அது விழுந்துவிடும். வானிலிருந்து விழுவதுபோல” என்று ஒரு குரல். “ஒவ்வொரு மாளிகையும் இன்னொரு மாளிகையின் தலைமேல் அமர்ந்திருக்கும் இது போன்ற ஒரு நகரம் நிலநடுக்கத்தில் மிக மிக அழிவை அளிப்பது” என்று இன்னொரு குரல். அந்தப் பதற்றத்திலும், அவ்வாறு ஓடிக்கொண்டிருக்கையிலும் எத்தனை தெளிவாக சொற்களை கேட்கிறேன்! இடர்களில் புலன்கள் பல மடங்கு கூர்கொள்கின்றன.

“வெளியேறுங்கள்! கட்டடங்களை விட்டு வெளியேறுங்கள்!” என்று யாரோ எங்கோ கூவிக்கொண்டிருந்தார்கள். மேலிருந்து ஏவலர்கள் பெருந்திரளாக வந்து எங்களைக் கடந்து சென்றனர். ஒவ்வொருவரும் மிரண்ட கன்றுக்கூட்டங்களை போலிருந்தனர். நான் திரும்பி “இவர்கள் நடுவே நாம் செல்வோம். இவர்களைத் தடுக்க எவராலும் இயலாது. நாம் வெளியே சென்றுவிடுவோம். இப்போது நாம் முற்றத்தை சென்றடைந்தாக வேண்டும்” என்று கூறியபடி அவர்கள் நடுவே ஓடி வாயிலினூடாக பிதுங்கி வெளியே முற்றம் நோக்கி பாய்ந்தேன்.

“புரவிகளை நோக்கி செல்லுங்கள். இத்தருணத்தில் எவரும் புரவிகளை நாடமாட்டார்கள், ஏனென்றால் புரவிகள் அஞ்சிவிட்டிருக்கின்றன. நமது புரவிகளை நாடிச் செல்லுங்கள். ஒவ்வொருவரும் ஒரு புரவியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூவியபடி நான் ஓடிச்சென்று என்னுடைய புரவியில் தாவி ஏறிக்கொண்டேன். அதைத் தட்டி முற்றத்தைக் கடந்து பக்கவாட்டுப் பாதையில் ஏறினேன். என்னைத் தொடர்ந்து மூவரும் வந்தனர். ஒவ்வொருவரும் எங்கு செல்வது என்று தெரியாமல் திசையறியாது தத்தளித்துக்கொண்டிருந்ததனால் திசையறிந்த நாங்கள் சரியாக வழி கண்டுபிடித்து செல்ல இயன்றது.

நகரமே தெருக்களில் நின்று கூச்சலிட்டுக்கொண்டிருப்பதை கண்டேன். “என்ன நிகழ்கிறது?” என்று எதிரே வந்த ஒருவனிடம் கேட்டேன். “நிலம் நடுங்கியிருக்கிறது. பல கட்டடங்கள் விரிசல் விட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் இடிந்து சரிந்துகொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அத்தனை பேரும் இல்லங்களிலிருந்து வெளியே வந்து கூச்சலிடுகிறார்கள்” என்றான். இன்னொருவன் “அனைத்து ஒழுங்குகளும் சிதறிவிட்டன. எவரும் எந்தச் சொல்லையும் செவிகொடுக்க சித்தமாக இல்லை” என்றான்.

“செல்க! செல்க!” என்று புரவியைத் தட்டி நான் அவர்களை அழைத்துக்கொண்டு அரண்மனையை சுற்றிக்கொண்டு சென்றேன். பிரத்யும்னனின் படைகள் சிதறிவிட்டிருந்தன. எவருக்கும் எவரும் ஆணையிட முடியாத நிலை. எவரும் எங்களைத் தொடர்ந்து வர இயலாது என்று எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் நான் திரும்பிப் பார்த்தபோது புரவியில் வாளுடன் என்னைத் தொடர்ந்து வந்த அந்த படைத்தலைவனை கண்டேன். அவன் தன் கடமையிலிருந்து ஒருகணமும் விலகவில்லை என்று எனக்கு தெரிந்தது.

“நில்லுங்கள்! நீங்கள் செல்ல நான் ஒப்பமுடியாது” என்று கூவியபடி அவன் வந்தான். நான் மாற்று எண்ணவில்லை. திரும்பி என் இடையில் இருந்த குத்துவாளை எடுத்து அவனை நோக்கி வீசினேன். அவன் எதிர்பாராமல் திகைக்க அவன் கழுத்தில் பாய்ந்த கத்தி ஆழ இறங்க அதை பிடித்துக்கொண்டு பக்கவாட்டில் சரிந்து கீழே விழுந்தான். ”வருக!” என்று கூறியபடி நான் புரவியில் விரைந்து யாதவர்களின் அரண்மனைப் பகுதியை அடைந்து அங்கு முற்றத்தில் புரவியை நிறுத்திவிட்டு இறங்கினேன். ”வருக!” என்று அழைத்தபடி மேலே சென்றேன். அங்கு முற்றம் முழுக்க யாதவப் படைவீரர்களும் ஏவலர்களும் நின்று கொந்தளித்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தில் எவரும் எங்களை அறியவில்லை. நீர்ப்பரப்புபோல மானுடத்திரள் அலையடித்தது. சுவர்களில் சென்று மோதிச் சுழன்றது. அதில் சுழிகள் எழுந்தன.

நான் படிகளில் ஏறுகையில் இயல்பாக திரும்பிப்பார்த்தபோது எதிரே நின்ற மாபெரும் மாளிகை விரிசல்விட்டிருப்பதை கண்டேன். நான் எதை பார்க்கிறேன் என்பது தெரியாமல் “என்ன? என்ன?” என்று கேட்டார் சாருதேஷ்ணன். “அங்கு பாருங்கள்” என்றேன். ”என்ன?” என்று பரதசாரு கேட்டான். அது கீழிருந்து மேலே சென்று மேலே கிளைவிரித்து நின்ற மாபெரும் மரம் போலிருந்தது. அல்லது மேலிருந்து கீழிறங்கும் கரிய மின்னல். “விரிசல்விட்டிருக்கிறது” என்று சாரு சொன்னான். “சேர்த்து நிறுத்தியாக வேண்டும். இல்லையெனில் விழுந்துவிடும்” என்று பரதசாரு சொன்னான்.

“விரிசல்விட்ட கட்டடத்தை எவரும் சேர்த்துவிட முடியாது. விரிசல் என்பது ஏற்கெனவே அதற்குள் இருந்து கொண்டிருக்கும் ஒன்று. அது வெளிப்பட்டிருக்கிறது. தானே அது கீழே விழ முடிவெடுத்த பிறகுதான் முதல் விரிசல் வருகிறது. அம்மாளிகை விழுந்தால் அதன் கீழிருக்கும் மாளிகைகள் ஒவ்வொன்றாக சரியும்” என்றேன். “இப்போது அதைப் பற்றி பேச நேரமில்லை. வருக!” என்றபடி படிகளில் ஏறி எதிர்ப்பட்டவர்களை முட்டி முட்டி விலக்கிக்கொண்டு மேலே சென்றேன்.

மேலிருந்து ஏவலர்களும் படைவீரர்களும் கொந்தளித்து கீழிறங்கிக்கொண்டிருந்தார்கள். அதே எண்ணிக்கையில் சிலர் மேலே செல்ல முண்டியடித்துக் கொண்டிருந்தனர். “வருக வருக” என்று கூறி நான் இடைநாழியினூடாக அவர்களை அழைத்துச் சென்றேன். ”மூத்தவர் எங்கே?” என்றேன். காவலன் “அவர்கள் சொல்சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் இந்த நிலநடுக்கம். அவர்கள் அந்த அறையில் இருக்கிறார்கள்” என்று சொன்னான். “என்னை அழைத்துச் செல்க! அழைத்துச் செல்” என்று கூவினேன். “வருக!” என்று அவன் என்னை கைபற்றி கூட்டிச்சென்றான். அவர்கள் மூவரும் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.

பிரத்யும்னனின் இளையவர்களை வியப்புடன் திரும்பிப் பார்த்தனர். ”வருக வருக” என்று அழைத்துக்கொண்டு நான் முன்னால் சென்றேன். அங்கு ஃபானுவின் அறைவாயிலில் இருந்த காவலனை ”என்னை அழைத்துச் செல்க, உள்ளே செல்க!” என்றேன். அவன் கதவைத் திறந்து உள்ளே செல்வதற்குள் இளையவன் வெளியே வந்து “தாங்கள் வருவதை சாளரத்தினுடாக பார்த்தேன். பிரத்யும்னனின் ஆணை பறவைத்தூதாக வந்துவிட்டது. இளையவர்கள் இங்கு வந்திருக்கிறார்களா?” என்றான். “ஆம், வந்திருக்கிறார்கள்“ என்றேன். “அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப பிரத்யும்னன் கோருகிறார்” என்றான்.

நான் திரும்பி மூவரிடமும் “உள்ளே சென்று மூத்தவர் ஃபானுவின் கால்களில் விழுங்கள்” என்றேன். அவர்கள் ஒரு கணத்தில் புரிந்துகொண்டு எங்களைக் கடந்துசென்று அவையில் அமர்ந்திருந்த மூத்தவர் ஃபானுவின் காலடியில் குப்புற விழுந்தனர். “மூத்தவரே, எங்களை காப்பாற்றுங்கள். எங்கள் உயிருக்கு நீங்களே காப்பு” என்று கூவினார்கள். “நான் என்ன செய்வது இப்போது…” என்று சொல்லியபடி அவர் எழுந்தார். நான் ”மூத்தவரே, தங்களிடம் அடைக்கலம் கோரி அவர்கள் வந்திருக்கிறார்கள். இந்நகரைக் காப்பவர், இந்தக் குடிக்கு மூத்தவர் என்ற வகையில் தாங்கள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்றேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 46

பகுதி நான்கு : அலைமீள்கை – 29

நான் துவாரகையின் தெருக்களினூடாக எனது புரவியை வெறிகொண்ட விரைவில் செலுத்தி அரண்மனையை சென்றடைந்தேன். நகரம் கலைந்த பூச்சித்திரள்போல் ஆகியிருந்தது. குறுக்கும் நெடுக்கும் பொருளற்ற விசையுடன் மக்கள் ஓடினர். என் புரவிக்கு முன்னால் பலர் பாய்ந்து விழுந்தார்கள். எங்கும் பதற்றமும் அழுகையொலியும் வசைகளும் கூச்சல்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொருவரும் முந்தையநாள் வரை அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் மகிழ்ச்சியையும் முற்றாக இழந்து, தீ பற்றி எரியும் கிளையில் இருக்கும் எறும்புகளைப்போல் ஆகிவிட்டிருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் அவ்வண்ணம் ஒன்று நிகழும் என்று தெரிந்திருந்ததுபோல. எவ்வண்ணமோ அது நிகழும் என்று எதிர்பார்த்ததுபோல. தெய்வங்கள் அவர்களுக்கு முன்னுணர்த்தியிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வங்கள். உழவர்களுக்கு மேழியிலும் ஆயர்களுக்கு வளைகோலிலும் சிற்பிகளுக்கு உளியிலும் எழும் தெய்வங்கள். பாணர்களுக்கு நாவில் பூசகர்களுக்கு நீரில் அவை எழுந்திருக்கும். அவை உரைத்திருக்கும். அதை அறியாத ஒருவர்கூட இந்நகரில் இன்று இருக்க வாய்ப்பில்லை.

நான் முதலில் மூத்தவர் ஃபானுவை சென்று பார்க்கத்தான் விரும்பினேன். பின்னர் தோன்றியது, அதற்கு முன் பிரத்யும்னனைச் சென்று பார்க்கலாம் என்று. அங்கே என்ன நிகழ்ந்தது என்று உணரக்கூடவில்லை. நான் அங்கே இருந்தாகவேண்டும் என்று மட்டும் தோன்றியது. நான் தொடங்கிவைத்த ஒன்று என்ற குற்றவுணர்வு உருவாகவில்லை. அந்தச் சுழலில் இருந்து தப்புவது எப்படி என்று மட்டுமே உள்ளம் தவித்தது. எங்கே சுழிமையம் உள்ளதோ அங்குதான் நான் இருக்கவேண்டும். உண்மையில் என்ன நிகழ்கிறது என்பது அங்கு சென்றால் மட்டுமே தெரியவரும்.

நடுவே கணிகரை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஓடியது. ஆனால் என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு கணிகரை பார்க்கச் செல்வதே முறையானது என்றும் தோன்றியது. அத்தருணத்தில் பிரத்யும்னனின் அரண்மனைக்குச் செல்வது உகந்ததா என்ற ஐயமும் அலைக்கழித்தது. ஒருவேளை அந்நிகழ்வுகள் அனைத்தும் மூத்தவர் ஃபானுவுக்கு எதிரான கிளர்ச்சியாக இருக்குமெனில் அங்கு நான் செல்வதே என்னை பணயப் பொருளாக அளிப்பது. அல்லது அவர்களை இளிவரல் செய்ய நேரில் செல்வதுபோல. ஆனால் அவ்வண்ணம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.

என் ஆழத்தில் இருக்கும் ஒன்று அதில் எனக்கிருக்கும் பங்கையே சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தது. நான் பிழையுணர்ச்சி அடையவில்லை, நான் அடைந்தது தன்மைய உணர்ச்சி. என் கையிலிருந்து இறங்கி நெருப்பு எழுந்து தொலைவில் பேருருவென நின்றிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். அது என்னையும் முற்றாக அழிக்கும் என்று ஒரு உள்ளுணர்வு அப்போது முற்றாக சொல்லத்தொடங்கிவிட்டிருந்தது. ஆயினும் அதை அப்போது பார்க்க விழைந்தேன். தன்னுள் இருந்து எழுந்த ஒன்றை மானுடர்கள் எப்போதும் திரும்பிப் பார்க்கிறார்கள். மலமோ சீழோவாக இருப்பினும்கூட.

நான் பிரத்யும்னனின் அரண்மனை முன் இறங்கி மேலே சென்றேன். எதிரே வந்த பிரத்யும்னனின் இளைய மைந்தன் சுஜனனிடன் “நான் அரசரை பார்க்க வேண்டும்” என்றேன். “அரசரைப் பார்க்க இப்போது பொழுதில்லை. ஒவ்வொருவரும் பிரிந்து வெவ்வேறு அறைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்“ என்றான். “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டேன். “என்ன நிகழ்ந்தது என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. ஒவ்வொருவரும் ஒன்று சொல்கிறார்கள். ஆனால் குருதி விழுந்துவிட்டது. துவாரகையில் இளைய யாதவரின் மைந்தர் ஒருவர் கொல்லப்படுவார், அக்குருதியிலிருந்து இந்நகர் அழியும் தருணம் தொடங்கும் என்று சூதர்சொல் இருந்தது, அது நிகழ்ந்துவிட்டது” என்றான்.

நான் “இந்தத் தருணத்தில் நிமித்திகர் கூற்றுகளையும் சோர்வுறுத்தும் எண்ணங்களையும் மிகைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. நாம் செய்வதற்கு பலது உண்டு. இப்போது என்ன நிகழ்ந்தது என்று நான் அறியவேண்டும். என் மூத்தவரின் பொருட்டு. மிகச் சரியாக என்ன நிகழ்ந்தது என்று மூத்தவரிடம் நான் சொல்லவேண்டியிருக்கிறது” என்றேன். “தந்தை ஓடி தன் தனியறைக்குள் சென்றுவிட்டார். அவருடன் இளையவர்கள் நால்வர் சென்றிருக்கின்றனர். எஞ்சிய மூவரும் வேறு ஒரு அறைக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மூத்தவரின் படைகள் சூழ்ந்துள்ளன. அவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றான்.

“நான் அரசரை பார்த்தாகவேண்டும்” என்றேன். “அரசரின் தனியறைக்குள் இப்போது எவருக்கும் நுழைவுஒப்புதல் இல்லை. அவர்கள் பேசி முடிப்பது வரை நீங்கள் காத்திருந்துதான் ஆகவேண்டும்” என்றான். நான் ஒருகணத்திற்குப் பின் “இந்நிகழ்வின்போது உடனிருந்த மைந்தர்கள் எவரேனும் இருக்கிறார்களா?” என்றேன். “எனது மூத்தவர் சுகர்ணன் அக்கணத்தில் அறைக்குள் இருந்தார்” என்று அவன் சொன்னான். “எனில் அவனை நான் சந்திக்கவேண்டும். அங்கு நிகழ்ந்ததென்ன என்று எனக்கு அவன் சொல்லவேண்டும்” என்றேன். ஒருகண தயக்கத்திற்குப் பின் “வருக!” என்று அவன் என்னை அழைத்துச்சென்றான்.

சுகர்ணன் ஓர் அறையில் இருக்க அவனைச் சூழ்ந்து உடன்பிறந்தாரும் சிற்றமைச்சர்களும் ஏவலர்களும் முட்டி மோதி ஒருவரோடொருவர் பேசி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். சுஜனன் என்னை வெளியே நிறுத்திவிட்டுச் சென்று அவனிடம் பேசிவிட்டு வந்து “அவர் பதறிக்கொண்டிருக்கிறார். அவரால் சொல்லெடுக்க இயலுமென்று தோன்றவில்லை. தாங்கள் மெல்ல பேசவைத்து அவரிடம் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்” என்றான். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். “ஆனால் பிறர் உடன் இருக்கலாகாது. தாங்கள் மட்டும் இருங்கள்” என்றான் சுஜனன்.

அவன் உள்ளே சென்று மூத்தவர் ஃபானுவின் தூதன் என என்னை அறிவித்து பிறரை விலக்கிவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அவனே கதவை சாத்திவிட்டு வந்து சற்று அப்பால் அமர்ந்துகொண்டான். நான் சுகர்ணனின் கைகளை பற்றிக்கொண்டு “அஞ்சவேண்டியதில்லை. நிகழ்ந்தது ஒரு கொடுநிகழ்வென்று அறிவேன். நாம் அதை எந்த வகையில் எதிர்கொள்ளமுடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. எனில் நன்றென ஒன்றுள்ளது. மூத்தவர் கையால் இளையவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஒருவகையில் அது உகந்தது. எவ்வண்ணமாயினும் மூத்தவருக்கு அவ்வுரிமை உண்டு. அதை துவாரகையின் பிற அரசமைந்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்” என்றேன்.

“பிறிதொன்று நடந்து பிற அரசியரின் மைந்தர் எவராலோ சுதேஷ்ணன் கொல்லப்பட்டிருந்தால் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன என்று எண்ணிப்பார். இது ஒரு வகையில் மிக எளிதாக முடியும். முதற்கண பரபரப்புக்குப் பின் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள். இதை நம்மால் கடந்து செல்ல இயலும்” என்றேன். என் சொற்கள் அவனுக்கு நம்பிக்கையளித்தன. என் கைகளை பற்றிக்கொண்டு “கடந்து செல்ல முடியுமல்லவா?” என்றான். நான் எண்ணியது சரிதான், இறந்தவருக்காக அல்ல இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அந்த இடருக்காகவே இவர்கள் கவலைப்படுகிறார்கள். “உறுதியாக கடந்து செல்ல முடியும். அதற்கான அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. என்ன நிகழ்ந்ததென்று மட்டும் கூறு” என்றேன்.

தந்தையே, அங்கே அரசர் ஃபானுவின் அவையிலிருந்து வரும் வழியிலேயே இளைய தந்தை சுதேஷ்ணனிடம் தந்தை பிரத்யும்னன் பூசலிட்டுக்கொண்டு வந்தார். அவர்கள் எதன் பொருட்டு பூசலிடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தனியறைக்குச் சென்று அமர்ந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நான் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். சற்று நேரத்தில் தந்தை என்னை உள்ளே அழைத்தார். “நீ சென்று நமது கருவூலத்திலிருந்து வெளியே சென்ற பொருட்களின் தொகை குறிப்பை எடுத்துக்கொண்டு வா” என்றார்.

நான் விரைந்து கீழே சென்று கருவூலப் பொறுப்பாளரிடம் சுதேஷ்ணன் வழியாக வெளியே சென்ற பொருட்களுக்கான தொகைக்குறிப்பை கேட்டேன். “வெளியேவா?” என்று குழம்பியபின் அவர் புரிந்துகொண்டு ”இதோ” என்று எடுத்துத் தந்தார். நான் அந்தத் தோற்சுருளை எடுத்துச் சென்று அறைக்குள் நுழைந்தபோது அவர்கள் இருவரும் மேலும் உரக்க பூசலிட்டுக்கொண்டிருந்தனர். தந்தை அதை வாங்கி பார்த்தார். “இத்தனை பொருட்கள் எப்படி சென்றன?” என்றார். சுதேஷ்ணன் “அவை தேவைப்பட்டன” என்றார். அவர் சீற்றத்தை அடக்கிக்கொண்டிருந்தார். சொல்லிலும் செயலிலும் பொருட்டின்மையை வெளியிட்டார். “அரசுசூழ்தலில் சில தருணங்களில் அவ்வாறு தேவைப்படும்” என்றார்.

பிரத்யும்னன் “நான் அறியாது என் இளையோன் அங்கு ஏன் சென்றான் என்பதற்கான விடை இதில் உள்ளது. ருக்மியிடம் அளிக்கும்படி நான் ஆணையிட்டது ஒரு படையைத் திரட்டும் செல்வம் மட்டும்தான். நீ இந்நகரின் கருவூலத்தில் பெரும்பகுதியை விதர்ப்பத்திற்கு அனுப்பியிருக்கிறாய்” என்றார். சுதேஷ்ணன் “தங்கள் ஒப்புடன்தான் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து ஓலைகளிலும் உங்கள் கைச்சாத்து உள்ளது” என்றார். “அது என் உளம் ஏற்ற கைச்சாத்தல்ல. உன்னை நம்பி இட்டது” என்று பிரத்யும்னன் சொன்னார். “நீங்கள் நம்பி இட்டிருக்கலாம். ஆனால் அது தேவைப்பட்டது” என்றார் சுதேஷ்ணன்.

“எதன் பொருட்டு தேவைப்பட்டது? நான் அறியாது என் செல்வம் எப்படி ருக்மியிடம் சென்றது?” என்று பிரத்யும்னன் கூவினார். ”அவர் உங்கள் தாய்மாமன். உங்கள் பொருட்டு படைகொண்டு வந்தவர்” என்றார் சுதேஷ்ணன். “ஆம், என் பொருட்டு படைகொண்டு வந்தார். ஆனால் எனது முழுக் கருவூலம் அவர் கையில் இருக்கும்போது நான் அவருக்கு அடிமையல்லவா?” என்று பிரத்யும்னன் கூறினார். “அவர் கோரினார்” என்று சுதேஷ்ணன் உதட்டைச் சுழித்தபடி சொன்னார். “இத்தனை செல்வம் அவருக்குத் தேவை என்று சொன்னாரா?” என்றார் பிரத்யும்னன். “ஆம், கோரினார்” என்றார் சுதேஷ்ணன்.

“எனில் அவரிடம் கேட்கிறேன். இத்தருணத்தில் உடனே ஒரு ஓலைச்செய்தி அவருக்கு செல்லட்டும். அவர் கூறட்டும் இத்தனை செல்வம் எப்போது வந்தது, எங்கிருக்கிறது என்று” என்றபடி திரும்பிய பிரத்யும்னன் “அதுவரை நீ சிறை இரு. என் ஆணை வந்த பிறகு நீ விடுதலை அடைந்தால் போதும்” என்றார். சீற்றத்துடன் சுதேஷ்ணன் “என்னை சிறையிடுகிறீர்களா?” என்றார். “ஆம், நான் அறிவேன் நீ அச்செல்வத்தை வேறெங்கோ வைத்திருக்கிறாய். இங்கு இந்நகருக்குள் எங்கோ. முழுச் செல்வமும் ஒருபோதும் உன் கையிலிருந்து விதர்ப்பம் போன்ற பிறிதொரு நாட்டுக்கு செல்லாது. தேவையான சிறுபொருளை அவருக்கு அளிக்கும்பொருட்டு நான் உன்னை ஒப்புவித்ததை பயன்படுத்திக்கொண்டு என் தந்தை என் பொருட்டு சேர்த்து வைத்த முழுச் செல்வத்தையும் நீயே கையில் வைத்திருக்கிறாய்” என்றார் பிரத்யும்னன்.

ஒருகணம் கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்தபின் சுதேஷ்ணன் எழுந்து “ஆம்” என்றார். பிரத்யும்னன் “இழிமகனே” என்றபடி கையை ஓங்கிக்கொண்டு அடிக்கச் சென்றார். சுதேஷ்ணன் அசையாமல் நின்றார். “ஆம், மிகத் தெளிவாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன். தங்கள் செல்வத்தின் பெரும்பகுதி என் கையில்தான் இருக்கிறது. பெரும்பகுதி என்ன, தாங்கள் இன்று செல்வமே இல்லாத ஒருவர். ஆகவே நீங்கள் சென்று கீழ்மகனாகிய யாதவருடன் இணைந்துகொள்ளலாம், துவாரகையின் கருவூலத்தை கையில் வைத்திருக்கும் ஷத்ரியனாகிய நான் அதை செய்யவேண்டியதில்லை” என்றார்.

“என்ன சொல்கிறாய்?” என்று பிரத்யும்னன் கடுஞ்சினத்துடன் கைகளைச் சுருட்டியபடி உடல்பதற கேட்டார். “நீங்கள் ஷத்ரியக்குருதிக்குத் தலைமை தாங்கி இந்நகரை முன்னெடுத்துக்கொள்வதற்கான தகுதியை இழந்துவிட்டீர்கள். ஒரு யாதவக் கிழவர் வந்து தோள் தழுவி அழைத்தால் சென்று விழிநீர் பெருக்கும் கோழைக்கு ஷத்ரியர்களை தலைமை தாங்கி துவாரகையை வென்றெடுக்கும் தகுதியும் வாய்பும் இல்லை. இங்குள்ள ஷத்ரியர் அனைவருக்கும் இன்று இது தெரியும். இத்தனை பெரிய பேரரசு இத்தனை பெரிய நகரம் நம் கைக்கு கனிந்த பழமென வந்து விழுவதற்கான ஒரு தருணத்தை நீங்கள் உங்கள் கோழைத்தனத்தால் இழந்துகொண்டிருக்கிறீர்கள்.”

“உங்கள் தகுதியை நான் நன்கறிவேன். எனென்றால் உங்களுக்கு அணுக்கமானவனாக இருந்தேன். ஆகவேதான் இப்பொறுப்பை நான் முன்னர் எடுத்தேன்” என்றபோது சுதேஷ்ணன் உரக்க உறுமினார். “இவ்வண்ணம்தான் உங்கள் உள்ளம் செயல்படமுடியும் என்று எனக்கு முன்னரே தெரிந்திருந்தது. ஏனெனில் இங்குள்ள ஷத்ரியர் உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அறிந்திருந்தீர்கள். யாதவர்களிடம் இணைந்துசென்று முடியுரிமைக்கு மாற்றாக ஏதேனும் சிறுநலன்களைப் பெற்று அமையவே நீங்கள் உளம்கொள்வீர்கள். நீங்கள் ஷத்ரியர்களின் அரசர் அல்ல. உங்கள் மைந்தர் அசுரக்குருதி கொண்டவர். அவர் மைந்தரோ தூய அசுரக்குருதியினர். அசுரர்களுக்கு நகரை தேடிக்கொடுப்பதற்காக ஷத்ரியர்கள் இங்கு குருதிசிந்த வேண்டியதில்லை.”

“எனவே இந்தத் தேரின் கடிவாளத்தை நானே எடுத்துக்கொள்வதென்று முன்னரே முடிவு செய்திருந்தேன். ஆகவேதான் செல்வத்தை என் கையில் வைத்திருக்கிறேன்” என்றார் சுதேஷ்ணன். “காவலர்களே!” என்று கூவியபடி பிரத்யும்னன் கதவை தட்டினார். கதவைத் திறந்து காவலன் வந்து நின்றான். பிரத்யும்னன் “படைத்தலைவர்களை அழையுங்கள். இக்கீழ்மகனை இப்போதே சிறையிடுங்கள்” என்றார். அந்த ஏவலன் வெற்றுவிழிகளுடன் அசையாமல் நின்றான். சுதேஷ்ணன் ஏளனம் தெரியும் நடையுடன் திரும்பிச் சென்று பீடத்தில் அமர்ந்தபடி ”தங்களைச் சூழ்ந்திருக்கும் எந்த ஏவலனும் தங்கள் ஆணையை என் ஒப்புதலின்றி கைக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் தங்களைச் சுற்றி இவர்களை அமைத்தது நான்” என்றார்.

ஏளனம் சிரிப்பாக விரிய “முழுமையாக தாங்கள் என்னுடைய ஆணையில் இருக்கிறீர்கள். இன்னும் ஓரிரு நாட்களில் துவாரகை முழுக்க என் ஆணையில் இருக்கும். எனது சொல் இங்கிருந்து சென்று ஷத்ரியப் படைநிரைகளை அடைவது வரை மட்டுமே நீங்கள் ஒரு அரசமைந்தர் என்று அறியப்படுகிறீர்கள். அதற்குப் பிறகு ஒரு ஷத்ரியக் குடிமகனாக மட்டுமே. குருதிக்கலப்பு கொண்ட ஷத்ரியனாக, ஒரு படி கீழோனாக” என்றார். “மூத்தோருக்கெதிராக வாளெடுக்கிறாய் அல்லவா?” என்று பிரத்யும்னன் கேட்டார். “மூத்தவர் தன் கடமையை செய்யவில்லை. தான் இருக்கும் இடமென்ன என்று உணரவில்லை. காலம் தன் மேல் அளிக்கும் பொறுப்பை ஏற்கவுமில்லை. ஷத்ரியர்களின் பொருட்டு நான் இதை செய்தாகவேண்டும்” என்றார் சுதேஷ்ணன்.

பிரத்யும்னன் தன்னை கோத்துக்கொண்டு, உடலசைவுகள் ஒழுங்கமைய நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து மீசையை வருடியபடி “சரி, இப்போது எல்லாம் தெளிவடைந்துவிட்டது. இனி ஒளித்தல்கள் தேவையில்லை. நான் கேட்கும் இன்னொரு வினாவுக்கு விடை சொல். உன் இளையோன் எதற்காக ருக்மியை பார்க்கச் சென்றான்?” என்றார். “துவாரகையின் முழு ஷத்ரியர்களும் உங்கள் தலைமையில் கிளர்ந்து எழவிருக்கிறார்கள், நீங்கள் என்னை பொறுப்பேற்கச் செய்திருக்கிறீர்கள், ஆகவே ருக்மியும் அவந்தியும் என்னுடன் நின்றிருக்கவேண்டும் என்று சொல்லத்தான் அவனை அனுப்பினேன். இன்னும் இரு நாட்களில் ஷத்ரியர்கள் கிளர்ந்தெழுந்து துவாரகை நகரை முழுக்க கைப்பற்றுவார்கள். அப்போது ருக்மி கிளம்பி வரவேண்டும் என ஆணையிட்டேன்.”

“அச்செய்தியை அவர் ஏற்றுக்கொண்டாரா?” என்றார். “இல்லை, ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மேலும் ஒரு உறுதியை நாடுகிறார். அதன் பொருட்டு நீங்களே உங்கள் ஓலையுடன் இன்னொருவரை அனுப்பவேண்டும் என்று கோரினார். அவருக்கு விதர்ப்பத்தையும் அவந்தி உட்பட பிற நாடுகளுக்கான பொன்னையும் நான் அளித்தால் அவர் என்னுடன் நிற்பார். அவர் இப்போது உங்கள் இடமென்ன என்பதை அறிய விரும்புகிறார். உங்களுக்கு எதிராக நான் எழக்கூடும் என்பதை அவர் உள்ளம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குத் தகுதியானவரை நான் அனுப்பவிருக்கிறேன்” என்றார் சுதேஷ்ணன்.

நான் சுகர்ணனின் கையை பற்றிக்கொண்டு “எவர் பெயரை சொன்னார் சுதேஷ்ணன்?” என்று கேட்டேன். “அவர் கணிகர் பெயரை சொன்னார்” என்று சுகர்ணன் சொன்னான். “கணிகர் சுதேஷ்ணனுக்கு அவ்வண்ணம் சொல்லளித்திருக்கிறாரா?” என்றேன். “தந்தையே, கணிகரும் சுதேஷ்ணனும் மிக அணுக்கமானவர்கள். ஒவ்வொரு நாளும் முன்னிரவில் கணிகரை சென்று பார்த்து சொல்லுசாவி வருவது சுதேஷ்ணனின் வழக்கம்.” என் கைகள் படபடக்கத் தொடங்கின. என்னால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. நான் எழுந்து மீண்டும் அமர்ந்துகொண்டேன். “சொல்க!” என்றேன். “என்ன நடந்ததென்று சொல்க!”

சுதேஷ்ணன் “இத்தூது இன்னும் ஓரிரு நாட்களில் முடியும். ருக்மி என்னை ஆதரிப்பார். அப்போது என் படைகள் எழும். அதுவரை சிறையிருக்கப்போவது நீங்கள், நானல்ல” என்றார். ”நன்று, எனில் அதை செய்” என்றார் பிரத்யும்னன். பின்னர் “இளையவர்களில் எவரெவர் உன்னுடன் இருக்கிறார்கள்?” என்றார். “அதை நான் இப்போது கூற இயலாது. ஆனால் ஒன்று உணர்க, இளையவர்களில் மூவர் என்னுடன் இருக்கிறார்கள். உங்களுடன் இருக்கும் இருவருக்கும் நான் கிளர்ந்தெழுந்திருப்பது தெரியாது. அவர்கள் உங்களுடனும் இல்லை, என்னுடனும் இல்லை. நான் கோன்மை கொண்டால் மூத்தவரென என்னை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.”

சுதேஷ்ணன் வஞ்சமாகச் சிரித்து “நான் உங்களை கொல்வதையோ சிறையிடுவதையோ அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது வேறு. ஆனால் நீங்கள் இயற்கையாக இறப்பீர்கள் என்றால் இயற்கையாகவே நானும் கோன்மை கொள்வேன். மூத்தவரென என் சொல்லை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார். “எனில் என்னை இயற்கையாக உயிர்துறக்கச் செய்யப்போகிறாய் அல்லவா?” என்றார். “ஆம்” என்றபின் “உடைவாள் கையில் இல்லாத தருணத்தில் உங்களிடம் இதை கூற நேர்ந்ததுகூட இறையருள் என்றே கருதுகிறேன். துவாரகைக்கு மேல் ஷத்ரியர்களின் கொடி பறப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும், தெய்வங்கள் அனுப்புகின்றன” என்று சுதேஷ்ணன் சொன்னார்.

சுதேஷ்ணன் காவலனை நோக்கி “நமது படைவீரர்களை உள்ளே வரச்சொல்” என்றார். படைவீரர்கள் வந்து வெளியே நின்றிருப்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். எதன்பொருட்டு எப்போதும் தந்தையின் பக்கவாட்டு அறைகளிலும் கீழறையிலும் இத்தனை படைவீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை நான் முன்னரே ஐயத்துடன் எண்ணியிருக்கிறேன். அதைப்பற்றி ஒரு முறை சுதேஷ்ணனிடம் கேட்டபோது ஃபானுவோ சாம்பனோ சற்றே மிகையாக துணியக்கூடும் என்ற ஐயம் தனக்கிருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு அரண்மனைக்குள் அத்தனை பேரையும் ஒருகணத்தில் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பெரும்படைப்பிரிவு ஒன்று இருப்பது விந்தையானதென்றே தோன்றியது.

கீழிருந்து இரண்டு மரப்படிகளினூடாக படைவீரர்கள் ஏறி வரும் ஓசை எழுந்தது. சிரித்தபடி “நன்று, இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவ்வண்ணம் நிகழ்ந்தது ஒருவகையில் நன்று. அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதல்லவா?” என்று பிரத்யும்னன் கூறினார். பின் நிகழ்ந்ததை என்னால் சரியாக சொல்ல முடியாது. ஒருகணம், அதிலும் குறைவான ஒரு கணம். சிட்டுக்குருவி அல்லது அரசநாகம் போன்றவற்றுக்கு மட்டுமே அந்த விரைவிருக்கிறது. பிரத்யும்னன் தன் பீடத்தின் பின்னாலிருந்து உடைவாளொன்றை எடுத்து உருவி அதே விசையில் செலுத்தி சுதேஷ்ணனின் தலையை வெட்டினார். என்ன நிகழ்ந்ததென்று தெரிவதற்குள் சுதேஷ்ணனின் தலை துண்டாகி கீழே விழுந்தது.

“மைந்தா, இவ்வறையின் கதவுகளை மூடுக!” என்று அவர் கூவினார். “மூடுக, அனைத்து கதவுகளையும்!” என்றார். நான் ஓடிச்சென்று கதவுகளை மூடினேன். மூன்றாவது கதவை மூடுவதற்குள் இரண்டு படைவீரர்கள் உந்தி என்னைத் தள்ளி உள்ளே வந்தனர். அவர்களை பிரத்யும்னன் வெட்டி வீழ்த்தினார். நாகமென நெளிந்து அவர்களின் கழுத்து நரம்புகளை வெட்டிச் சரித்தது அவருடைய வாள். காலால் அவர்களை உதைத்து வெளியே தள்ளி கதவுகளை மூடிய பின் “சாளரத்தினூடாக கீழிறங்கு. சென்று என் தம்பியரிடம் இந்த அரண்மனையை முழுப் பொறுப்பில் எடுத்துக்கொள்ளச் சொல்” என்றார். நான் சாளரத்தினூடாக தொற்றி இறங்கினேன். அனைத்துக் கதவுகளையும் படைவீரர்கள் முட்டிக்கொண்டிருக்கும் ஓசையை கேட்டேன்.

கீழிறங்கி வந்து என்னை எதிர்கொண்டு ஓடிவந்த சாருதேஹனிடம் என்ன நிகழ்கிறது என்று கூறினேன். “உந்தி என்னைத் தள்ளி தந்தையை சிறைப்பிடிக்க முயல்கிறார்கள். தந்தை சுதேஷ்ணனை கொன்றுவிட்டார்” என்றேன். சாருதேஹன் வெளியே ஓடி கையசைவாலேயே ஆணையிட்டார். வெளியே காவல்முரசுகள் முழங்கின. கொம்போசைகள் எழுந்தன. அரண்மனைக்கு வெளியே அனிருத்தனின் தலைமையில் பரவியிருந்த படை உடனே ஒருங்கிணைந்து அணிவகுத்து அனைத்து வாயில்களினூடாகவும் அரண்மனைக்குள் நுழைந்தது. தந்தையை பிடிப்பதற்காக முயன்று கொண்டிருந்த படைப்பிரிவை அவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அனிருத்தன் முன்னரே தந்தையின் அறையைச் சூழ்ந்து சுதேஷ்ணனின் படை இருப்பதை கண்டிருந்தார். ஆகவே அரண்மனை முற்றத்திலேயே எட்டு பிரிவுகளாக தன் படையை நிறுத்தியிருந்தார்.

சுதேஷ்ணனின் படையினர் தந்தையின் அறையின் ஒரு கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்றுகொண்டிருந்தனர். அவர்களை வாளால் தடுத்த தந்தையால் எழுவர் கொல்லப்பட்டனர். எஞ்சிய அனைவரையும் அங்கேயே பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். அவர்களை அரண்மனை முற்றத்தில் கழுவேற்றும்படி சாருதேஹன் கூறினார். ஆனால் அவர்களை அரண்மனைக்கு வெளியே எவரும் அறியாமல் கழுவேற்றும்படி அனிருத்தன் ஆணையிட்டார். அனைத்துப் படைவீரர்களும் சேர்ந்து அவர்களை கொண்டுசென்றனர். இப்பொழுதில் அவர்கள் பாலைவனத்தில் தலைகொய்யப்பட்டிருப்பார்கள்.

“சுதேஷ்ணனின் உடலை எந்த இறுதி நெறிகளும் பேணாது எரித்து அழிக்கும்படி தந்தை ஆணையிட்டார். அவ்வுடலை எட்டு துண்டுகளாக வெட்டினார்கள். ஒவ்வொன்றையும் துவாரகையின் வெவ்வேறு தெருக்களில் போடும்படி எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். இவையனைத்தும் இங்கிருந்து பரவிவிட்டன. இவை நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே நகர் அறிந்துகொண்டிருக்கும்” என்று சுகர்ணன் சொன்னான். “ஆம், நகரம் அத்தனை விரைவாக அறிந்துகொள்ளும்” என்று நான் சொன்னேன்.

என் உடல் சோர்ந்து களைத்திருந்தது. “தந்தையே, என்ன நிகழும் இனி?” என்று அவன் என் கையை பற்றினான். “எதுவும் நிகழும். அவர்கள் முடிவெடுக்கட்டும்” என்றபின் “ஷத்ரிய மைந்தர்கள் அனைவரும் மூத்தவர் பிரத்யும்னனின் தலைமையில் ஒருங்கிணைவார்கள் எனில் இன்று அல்லது நாளையே நாம் இவ்விடரை வென்று கடக்க முடியும். சுதேஷ்ணனை புறந்தள்ளி பிற அனைவரையும் ஒருங்கிணைத்து பிரத்யும்னன் தன் கோன்மையை உறுதியாக நிலைநாட்டிக்கொள்ள முடியும். உள்ளிருந்த ஒரு சிறு மீறலும் இல்லாமலானது அவரை மேலும் வலிமைப்படுத்தக்கூடும்” என்றேன்.

“ஆனால் ஷத்ரியர்களில் சிலராவது சுதேஷ்ணனின் பொருட்டு கிளர்ந்தெழுவார்களெனில் அவருக்கு வேறு வழியில்லை. ஷத்ரிய மைந்தர் ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொள்ளத்தான் வேண்டும். எவராவது வென்றாகவேண்டும். வெல்லாதவர்கள் கொல்லப்பட்டாகவேண்டும்” என்றேன். “ஐயோ” என்று அவன் தன் தலையை பற்றிக்கொண்டான். “ஒன்றும் செய்வதற்கில்லை. இவ்வாறு நிகழ வேண்டுமென்றிருந்தால் இது நிகழும்” என்றபின் நான் வெளியே சென்றேன். “தாங்கள் தந்தையை சந்திக்கவில்லையா?” என்றான் சுகர்ணன். “இல்லை, அதற்கு முன் நான் என் மூத்தவரை சந்திக்கவேண்டும். அதற்குமுன்…” என்றபின் நான் கணிகரை நினைவுகூர்ந்தேன். உடனே கணிகரை சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சென்றதுமே வாளை உருவி மறுசொல்லின்றி அவர் தலையை துண்டித்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 45

பகுதி நான்கு : அலைமீள்கை – 28

பிரத்யும்னன் கிளம்புவதற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை சுதேஷ்ணனிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றார். “அதற்கும் முன்பு நீங்கள் இருவரும் மட்டும் அத்தனியறைக்குள் செல்லுங்கள். நீங்கள் மட்டும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார் சுஃபானு. “உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிறிதெவரும் நுழைய முடியாத அணுக்கம் இருக்கவேண்டும்.”

பிரத்யும்னன் ஒருகணம் எண்ணியபின் “ஆம்” என்றார். “வருக, மூத்தவரே!” என்றார். ஃபானு தயங்கியபடி எழுந்துகொண்டார். அவர்கள் அருகிருந்த சிற்றறைக்குள் சென்றனர். வெளியே அனைவரும் பதற்றத்துடன் காத்திருந்தனர். நான் அந்த எண்ணம் கணிகருடையது என்பதை உணர்ந்தேன். அதனால் என்ன பயன்? பிரத்யும்னனிடம் தனக்கு அணுக்கம் உள்ளது என்று ஃபானு நம்புவதற்கு மட்டுமே அது வழிவகுக்கும். எவ்வகையிலும் அது பயனளிக்காது. அரசர்கள் தனியுணர்வுகளால் கட்டப்பட்டவர்கள் அல்ல. அவர்களை கட்டுப்படுத்தும் தனியுணர்வு என்றால் அவர்களின் ஆணவம் மட்டுமே. அதை ஃபானு தொட்டுப் பேசப்போவதில்லை.

தனியறையிலிருந்து பிரத்யும்னன்தான் முதலில் வெளிவந்தார். கதவு திறந்து அவர் உள்ளே வந்த ஓசையிலேயே உள்ளிருந்த அனைவரும் அவரை பார்த்தனர். அக்கணத்திலேயே அனைத்தும் முடிவாகிவிட்டன. அனைத்து முகங்களும் கூர்கொண்டன. பிரத்யும்னன் “மாதுலர் ருக்மி இதற்கு மறுமொழி கூறவேண்டும்” என்றார். நான் என்னுள் ஒரு குளிர்ந்த தொடுகையை உணர்ந்தேன். அவையிலிருந்த அனைவருமே ஓசையற்றிருந்தனர். “அவரை நாம் பிடித்து வருவோம். இந்த அவையில் நிறுத்துவோம். நிகழ்ந்தவற்றுக்கு அவரிடம் விளக்கம் கேட்போம்” என்று பிரத்யும்னன் கூறினார்.

ஃபானு “உடனே ஒரு போர் தேவையில்லை. நமது தூதுக்குழு ஒன்று செல்லட்டும். அங்கு நிகழ்ந்தது என்ன என்று அவரிடம் கேட்டு அறியட்டும்” என்றார். “இல்லை. இது நாங்கள் தீர்த்துக்கொள்ளவேண்டிய கணக்கு. மூத்தவரே, என் இளையோரில் ஒருவன் இவ்வண்ணம் ஒரு செய்தியுடன் அங்கு சென்றதென்பது எனக்கு திகைப்பளிக்கிறது. இது நானறிந்து நிகழ்ந்ததல்ல. சுதேஷ்ணன் விசாருவை அனுப்பியதை நான் அறிவேன். ஆனால் அது வேறொன்றுக்காக.”

“முன்பு எங்களுக்கான படை ஒன்றை திரட்டும் பொருட்டு நாங்கள் மாதுலர் ருக்மிக்கு ஒரு செல்வத்தை அளித்தோம். இப்போது அது தேவையில்லை என்ற நிலை வந்துள்ளமையால் அச்செல்வத்தை திரும்பப் பெறும்பொருட்டு உரிய கணக்கை உரைப்பதற்காக இளையவனை அனுப்பியிருக்கிறான் சுதேஷ்ணன். அவ்வண்ணமே எனக்கு சொல்லப்பட்டது. அவன் கொல்லப்பட்ட செய்தி எனக்கு உரைக்கப்படவில்லை. பெரும்பாலும் அச்செல்வத்தை திரும்பக் கேட்டதன் பொருட்டான பூசலில் இளையோன் கொல்லப்பட்டிருக்கலாம்.”

“ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவன் மாதுலர் ருக்மியின் மகளை மணந்தவன். அல்லது அவருக்கு அங்கே உள் எதிரிகள் இருக்கலாம். அவரை நம்மிடம் சிக்கவிடுவதற்காக எவராவது இதை செய்திருக்கலாம். எதுவாயினும் ஒரு பொதுஅவையில் வைத்து இது உசாவப்படவேண்டும். உரிய முறையில் குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படவேண்டும்” என்றார். மூத்தவர் ஃபானு அமைதி இழந்தவர்போல “இதை நாம் நமது மூத்தவருக்கு விட்டுவிடுவோம். கிருதவர்மனும் சாத்யகியும் இணைந்து இதை உசாவட்டும். ருக்மிக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சொல்லாடல் நிகழட்டும். என்ன நிகழ்ந்ததென்று பார்ப்போம்” என்றார்.

பிரத்யும்னன் உரக்க “இறந்தவன் என் இளையோன். ஆகவே நான் வெறும் ஒரு சொல்லாடலில் இங்கு நிறுத்தினேன் என்றால் அவனுக்கு இயற்றவேண்டிய கடமையை ஒழிந்தவனாவேன். அனைத்துக்கும் மேலாக அவன் எனது ஆணையில்லாமல் அவரை பார்க்கச்சென்று கொல்லப்பட்டிருக்கிறான். அதை முழுதாக உசாவாமல் அப்படியே விடுவேனாயின் அதில் நானும் பங்கெடுத்துள்ளேன் என்றுதான் மக்கள் உள்ளத்தில் பதியும். இதை முழுக்க உசாவித் தீர்க்கவேண்டியது எனது பொறுப்பு” என்றார். ஃபானு “எதுவாயினும் எண்பதின்மரும் சேர்ந்து செய்வதே முறையாகும். நீ தனித்து செய்வது…” என்றார்.

“இல்லை, இதை நானே தனித்துச் செய்யவேண்டும், அதுவே முறை. எண்பதின்மரில் பிற அன்னையரின் மைந்தர் எவர் இதற்குள் வந்தாலும் அதுவே ஷத்ரியரிடையே பிளவை உருவாக்கலாம். இறந்தவன் ஷத்ரிய அன்னையின் மைந்தன். ஷத்ரியர்கள் இதற்கு கணக்கு தீர்ப்பார்கள்” என்று சொல்லி தலைவணங்கி அவையிலிருந்து வெளியே சென்றார்.

அவருடன் சாருவும் சாரகுப்தனும் வந்து அப்பால் நின்றிருந்தனர். அவர்களும் அவருடன் சென்றனர். மூத்தவர் ஃபானுவும் சுஃபானுவும் ஸ்வரஃபானுவும் பிரஃபானுவும் ஃபானுமானும் சந்திரஃபானுவும் அவர்கள் வெளியே செல்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தனர். பின்னர் சுஃபானு “நாம் அறியவேண்டியது ஒன்றே. எண்பதின்மரும் அமர்ந்திருந்த ஒரு அவையில் எடுத்த ஒரு முடிவுக்கு எதிராக தன் மாதுலருக்கு ஒருவன் தூதனுப்பியிருக்கிறான் என்றால் அவன் யார்? பிரத்யும்னனை மீறி அதை அனுப்பியவர் சுதேஷ்ணன் எனில் அங்கே பிரத்யும்னனுக்கு நிகரான விசையாக சுதேஷ்ணன் இருக்கிறாரா?” என்றார்.

“அவர் இங்கு அவையில் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஆனால் அங்கு அனைத்து முடிவுகளையும் அவர் எடுக்கிறார். இவ்வண்ணம் ஒருவரை வைத்துக்கொண்டு நாம் எவ்வாறு எண்பதின்மரின் ஒற்றுமையைப்பற்றி பேசுவது?” என்று ஃபானுமான் சொன்னான். “நீங்கள் முடிசூட்டப்பட்ட பின்னர் இதேபோல மறுசொல் எழுமென்றால் எவர் அதை ஆளமுடியும்? மீண்டும் குடிப்பூசலே எழும்” என்றார் பிரஃபானு. “முடிவுகளை நோக்கி உடனே நாம் தாவவேண்டியதில்லை” என்று சந்திரஃபானு கூறினார்.

“உண்மையில் இந்த அவையில் தன் குடியுணர்ச்சியை பிரத்யும்னன் வெளிப்படுத்தியது பிழை…” “இல்லை அது இயல்பானது” என்றான் ஃபானுமான். “அவர் சொல்லெண்ணிப் பேசியிருந்தால் நான் ஐயுற்றிருப்பேன்.” ஃபானு சலிப்புடன் “நான் மீண்டும் பிரத்யும்னனிடம் பேசுகிறேன். எதுவாயினும் எண்ணிச் செய்வோம்” என்றார். நீள்மூச்சுடன் “நேற்று இந்த அவையில் ஒரு முழுமை எட்டப்பட்டது. அனைத்து எதிர்த்தரப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. விழைந்தன அனைத்தும் கையெட்டும் தொலைவிலிருந்தன. இன்று அகன்றுவிட்டிருக்கின்றன. இந்தப் பூசலை நான் வளர்த்தால் இதுவே நம்மை முற்றாகப் பிளந்து தோற்கடிக்கும். நமது விசையை விதர்ப்பத்தையும் அவந்தியையும் பகையாக்கி அவர்களிடம் போர்புரிய இன்று செலவிட இயலாது” என்றார்.

“அவ்வாறல்ல” என்று சுஃபானு சொன்னார். “நம்மை எதிர்த்த முதல் எதிரியையே பிறர் எண்ணி அஞ்சும்படியாக நசுக்குவதென்பது ஒரு போர்முறை. அவர்களை நாம் நயந்து அஞ்சி உடன் வைத்துக்கொண்டோம் எனில் இனி இவ்வாறே பிறரும் நடந்துகொள்வார்கள். இரண்டு செய்யவேண்டியுள்ளன. நம் இளையோரில் ஒருவன் கொலைக்கு நாம் ருக்மியை பழிவாங்க வேண்டும். அவர் நிகர்க்குருதி கொடுத்தேயாகவேண்டும். அதற்கப்பால் ஒன்றுண்டு. இந்த உள்ளிருந்து பிளக்கும் சூழ்ச்சியை செய்தவர் எவர் என்பதை கண்டுபிடித்து அவர் நமது எண்பதின்மரில் ஒருவராயினும்  களையெடுக்கப்படவேண்டும்.”

“களையெடுத்தலைப் பற்றி இப்போது பேசவேண்டாம். மீண்டும் மீண்டும் பிளவையும் பிழைகளையும் பற்றி பேசவேண்டாம்” என்று ஃபானு சொன்னார். சுஃபானு “இல்லை மூத்தவரே, சில தருணங்கள் தேவைப்படும். இனி சூழ்ச்சிகள் ஏற்கப்படமாட்டாது என்று எண்பதின்மர் ஒவ்வொருவருக்கும் சொல்லியாகவேண்டும்” என்றார். ஃபானு “எண்பதின்மர் என்ற சொல்லை சொல்லிச் சொல்லி பழகிவிட்டோம். இன்று இதோ ஒருவன் இல்லை” என்றார். “தீங்கிழைப்போர், விலகி நிற்போர் அனைவருமே இல்லாமலாகட்டும். எஞ்சியோர் காத்து நிற்கட்டும் இந்த முடியை” என்று சுஃபானு சொன்னார்.

“நாம் சுதேஷ்ணனை அழைத்து இந்த அவையில் நிறுத்தி அந்தத் தூதன் எவ்வாறு சென்றான் என்று உசாவியாகவேண்டும்” என்று ஃபானுமான் சொன்னான். “ஆம், சுதேஷ்ணன் மறுமொழி கூறியாகவேண்டும்” என்று ஸ்வரஃபானுவும் பிரஃபானுவும் சந்திரஃபானுவும் கூறினார்கள். “பொறுங்கள். அம்முடிவை எடுத்தது சுதேஷ்ணனா என்று இன்னும் நமக்கு தெரியாது. அதற்குள் நாம் முடிவுகளை எட்ட வேண்டியதில்லை. சுதேஷ்ணனை இந்த அவையில் அமர்த்தி உசாவச்செய்வதற்கு நாம் இன்னும் முடிசூடிக்கொள்ளவும் இல்லை” என்று ஃபானு கூறினார். “முடிசூடும் முடிவை எடுத்தாகிவிட்டது. எவரும் முடிசூடவில்லை எனில் எவர் உசாவுவது?” என்றார் சுஃபானு.

“அது அவர்களின் தரப்பும் நமது தரப்பும் இணைந்து செய்யவேண்டியது. நமது நம்பிக்கையை பெறவேண்டியது அவர்களின் பொறுப்பு” என்றார் ஃபானு. “அவர்கள் உசாவப்போவதில்லை. இந்த அவையில் பிரத்யும்னன் பேசியதிலிருந்து ஒன்று தெரிகிறது. அவர் அனைத்தையும் அறிந்திருக்கிறார். இந்த அவையில் அனைத்தும் வெளிப்படும்போது அவர் திகைத்து ஒரு நிலைப்பாடு எடுக்கிறார். அவருக்கு தெரியாமல் இல்லை” என்றார் சந்திரஃபானு. “இல்லை, அவருடைய விழிநீர் உண்மையானது” என்றார் பிரஃபானு. “அவர் அரசியல்சூழக் கற்றவர்” என்றான் ஃபானுமான். “நாம் எப்படி அனைவரையும் ஐயுறத் தொடங்கினோம்?” என்றார் ஸ்வரஃபானு.

ஒவ்வொருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்கள் சீற்றமும் பதற்றமுமாக. பின்னர் ஒன்றை கண்டுகொண்டேன். ஒவ்வொருவரிலும் ஒரு சிறு வஞ்சம் இருக்கிறது. எண்பதின்மரின் ஒற்றுமைக்கு எதிராக சற்றேனும் உளம் கூட்டாத ஒருவரும் இல்லை. ஆகவே அந்த அவையில் ஒவ்வொருவரும் மிகையாக தங்களை வெளிப்படுத்தினர். தங்களை நோக்கி வந்த ஐயங்களுக்கு மறுமொழி என்பது சீற்றத்துடன், காழ்ப்புடன் பிறரை சுட்டுவது என்று புரிந்துகொண்டனர். அனைத்து வெறுப்புகளுக்கும் இலக்காக அங்கு சுதேஷ்ணன் நின்றிருந்தார்.

நான் எண்ணி வியந்தது என்னவென்றால் நான் அந்த கொலையைச் செய்தவன் என்னும் நிலையில் இருந்து முற்றாக விலகிவிட்டேன். அதை வேறெவரோ செய்தார்கள் என ஆழமாக நம்பிவிட்டிருந்தேன். அதை செய்தவர்கள்மேல் வஞ்சம்கூட கொள்ளத் தொடங்கியிருந்தேன்.

 

அவையை விட்டு வெளியே செல்கையில் நான் கணிகருடன் செல்ல விரும்பினேன். ஏவலனிடம் “கணிகர் எங்கே?” என்றேன். கணிகர் மூத்தவர் ஃபானுவுடன் தனியறையிலிருந்து சொல்லாடிக்கொண்டிருப்பதாக அவன் கூறினான். அச்செய்தி என்னை திடுக்கிடச் செய்தது. கணிகர் ஃபானுவுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மறுகணம் அவ்வாறு செல்லுமிடமெல்லாம் நான் உடனிருக்க இயலாது என்று தெரிந்துகொண்டேன். என்னை தவிர்ப்பது எப்படி என்றும் அவருக்கு தெரிந்திருக்கும்.

இப்போது அவர் எதை பேசிக்கொண்டிருப்பார்? உண்மையில் என்ன நிகழ்ந்தது என்று ஒரு குறிப்பை அவர் ஃபானுவுக்கு வழங்கக்கூடும். அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று உடனே தோன்றியது. மூத்தவர் ஃபானு எளிமையானவர். எண்பதின்மரில் ஒருவரை நான் என் கையால் கொன்றேன் என்று அவருக்குத் தெரிந்தால் மறுகணமே எழுந்தோடி வந்து அவையைக் கூட்டி என்னை நடுவே நிறுத்தி தலைகொய்யவே ஆணையிடுவார். அல்லது துயரடைந்து நிலத்தில் விழுந்து கதறி அழுது அனைவருக்கும் என் பழி தெரியும்படி செய்வார். அதை உறுதியாக அறிந்திருப்பார் கணிகர். அவர் அங்கு என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதை என்னால் ஒருபோதும் உணர இயலாது. ஆகவே அதைப் பற்றி எண்ணுவதில் பயனில்லை. கணிகருக்கு மேலும் அணுக்கமானவனாக, ஒருபோதும் அவரால் கைவிடப்படாதவனாக மாறுவதே நான் செய்யக்கூடுவது.

நான் என் அறைக்குச் சென்று பதற்றத்துடன் நிலைகொள்ளாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். பின்னர் புரவியை எடுத்து என் மைந்தரை பார்க்கும்பொருட்டு சென்றேன். துவாரகையின் தெருக்களில் பதற்றம் நிறைந்திருப்பதை கண்டேன். பல ஆலயங்களுக்கு முன் மக்கள் கூட்டம் கூட்டமாக செறிந்து நின்றனர். கடந்து செல்லும் புரவி ஒவ்வொன்றையும் அவர்கள் கூர்ந்து பார்த்தனர். நான் சென்றபோது அனைத்து விழிகளும் என்மேல் பதிந்திருந்தன. இளையோன் இறந்த செய்தி வந்தடைந்துவிட்டது, நகரில் பரவிவிட்டது என்று தெரிந்தது. அதை ஒரு பிழையான நிமித்தமாகவே அங்குள்ளவர் கொள்வார்கள். வரக்கூடுமென அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் ஒன்றின் முதல் காலடியோசை.

எண்பதின்மரில் ஒருவர் இறப்பது எவ்வளவு பெரிய நிகழ்வென்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. எண்பதின்மரும் ஓர் உடல். ஓர் உறுப்பு குறைபட்டிருக்கிறது எனில் அவ்வுடல் முடமாகிவிட்டதென்றே பொருள். அது ஒரு தொடக்கம் என்று அறியாத எவரும் இங்கில்லை. நான் ஏன் அத்தருணத்தில் அதை செய்தேன். எண்ணி எண்ணி என்னால் எடுக்க இயலவில்லை. நான் செய்தது என் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக. வஞ்சமகன் என அவைமுன் நின்றிருக்கும் இழிவிலிருந்து தப்புவதற்காக.

ஆனால் அந்த நிலைக்கு நான் ஏன் சென்றேன்? அதற்கு என் ஆணவமே அடிப்படை விசை. எந்த அவையையும் சொல்லால் தாண்டிவிட முடியுமென்று எண்ணினேன். சொல்கோத்து சொல்கோத்து அனைத்தையும் அமைத்துவிட முடியும் என்று கனவு கண்டேன். எங்கு அந்த ஆணவம் தூண்டப்பட்டது? முதல்முறை அவையில் எழுந்து ஒரு சொல்லை உரைத்தபோது நான் எத்தனை தணிவும் பதற்றமும் கொண்டவனாக இருந்தேன்! எவராயினும் தன்னை உணர்ந்து தருக்கும் சிறுமைக்கு சென்ற பின்னர் பிழைகளை இயற்றாமலிருக்க இயலாது. தோள்வலியில் தருக்குபவன் பழி செய்கிறான். நாவலியில் தருக்குபவன் மும்மடங்கு பழி செய்கிறான்.

என்னால் புரவியில் அமர்ந்திருக்க முடியவில்லை. விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. மாலை ஒளி மங்கிக்கொண்டிருந்தபோது என் மைந்தர் வாழ்ந்த அரண்மனைக்கு சென்றேன். களைத்து சலித்துச் சென்று என் அறையில் அமர்ந்திருந்தேன். மைந்தர் என்னை பார்க்க வரும்படி சொல்லியனுப்பினேன். அவர்கள் பாலையில் பந்து விளையாடச் சென்றிருப்பதாக ஏவலன் சொன்னான். சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு நீராடி ஆடை மாற்றி அங்கு அமர்ந்திருந்தபோது அவர்கள் ஒவ்வொருவராக வந்தனர். அவர்கள் வரும் ஓசையே சிரிப்பும் கூச்சலுமாக எழுந்தது. மூத்தவன் இளையோரை அதட்டி அமைதியடையச் செய்தான்.

அவர்கள் விளையாடி முடித்து நீராடி வந்திருந்தாலும்கூட உடலெங்கும் இளம் புழுதியின் மணம் இருந்தது. சிறியவன் என்னை ஓடிவந்து அணைத்துக்கொண்டு “தந்தையே, இன்று நான் மும்முறை மூத்தவரை வென்றேன்” என்றான். அவன் தலையின் புன்மயிரை வருடியபடி “ஆம், நீ வெல்வாய். நீ அனைவரையும் வெல்வாய்” என்று நான் சொன்னேன். “அவன் வெல்லவில்லை. அவன் இளையவன் என்பதனால் நான் விட்டுக்கொடுத்தேன்” என்றான் மூத்தவன். ”ஆம், இளையோருக்கு விட்டுக்கொடுத்துதானே ஆகவேண்டும்” என்றேன். “நான்தான் விட்டுக்கொடுத்தேன்” என்று இன்னொருவன் சொன்னான். “சரி, இரண்டுபேருமே விட்டுக்கொடுத்தீர்கள்” என்று நான் சொன்னேன். “நானும் விட்டுக்கொடுத்தேன்” என்று அவனுக்கு இளையவன் சொன்னான். “அப்போது யார்தான் வென்றார்கள்?” என்று நான் நகைத்தேன்.

மிக சில கணங்களிலேயே அவர்களுடன் விளையாடத் தொடங்கிவிட்டேன். என் அருகே இருந்த பித்தளை செம்பொன்றை எடுத்து “இந்தப் பந்தை யார் பிடிக்கிறீர்கள் பார்ப்போம்” என்றேன். மூத்தவன் அதை தாவிப்பற்றி பிடித்துக்கொண்டான். “பந்தை பிடிக்கக் கூடாது, தட்டவேண்டும். எவர் கையிலிருந்து நிலம் படுகிறதோ அவர்கள் வெளியேறவேண்டும்” என்று சொல்லி அதை ஒரு ஆடலாக மாற்றிக்கொண்டேன். அறையெங்கும் அந்தச் செம்பு ஒரு சிறு பறவைபோல வெண்கல ஒளியுடன் சுழன்று அலைந்தது. எழுந்து எழுந்து பறந்து சிறியவன் கையிலிருந்து ஓசையுடன் தரையில் விழுந்தது.

“தோற்றுவிட்டான்! தோற்றுவிட்டான்!” என்று மூத்தவன் கூறினான். “இல்லை, அதுவே விழுந்தது!” என்று அவன் சொன்னான். “ஆமாம், அது விழ விரும்பினால் எவரால் தடுக்க முடியும்?” என்று சொல்லி அவனை அருகணைத்தேன். “இல்லை. அவன் தோற்றுவிட்டான், அவன் விலகவேண்டும்” என்றான் மூத்தவன். “அவன் ஏன் விலகவேண்டும்? அவன் இவ்வளவு நேரம் நன்றாக விளையாடினான் அல்லவா?” என்று நான் சொன்னேன். “தந்தையே, நீங்கள் அவனுக்கு ஓரம் சாய்கிறீர்கள். இது முறையல்ல” என்றான் மூத்தவன். “அவன் இளையவன், உங்கள் அனைவராலும் கனிந்து பேணப்படவேண்டியவன்” என்றேன்.

“இளையவனாக இருக்கலாம், ஆனால் ஆட்டத்தின் நெறிகள் அனைவருக்கும் ஒன்றே” என்றான். “உங்களுக்குள் பூசல் வேண்டியதில்லை. பூசலிடாமல் விளையாட முடியாதா என்ன?” என்றேன். “அனைத்து விளையாடல்களிலும் அவனே வெல்ல வேண்டுமென்று நினைக்கிறான். அவன் இளையவன் என்பதனால் ஒவ்வொரு முறையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. இனி விட்டுக்கொடுக்க முடியாது” என்றான் மூத்தவன். “இளையோர்களுக்கு விட்டுக்கொடுத்துதான் ஆகவேண்டும்” என்றேன். “பிறகு எப்போதுதான் நாங்கள் வெல்வது?” என்றான் மூத்தவன்.

“சரி விடு… நாம் மீண்டும் ஒருமுறை விளையாடலாம்” என்று நான் சொன்னேன். மீண்டும் கலம் அறையெங்கும் பறந்தது. வேண்டுமென்றே சற்றே சுழற்றி தவறாக மூத்தவனை நோக்கி அனுப்பினேன். அவன் அதை பிடிப்பதற்குள் அவன் கையிலிருந்து சுழன்று நிலத்தில் விழுந்தது. “வெளியேறுங்கள், மூத்தவரே! வெளியேறுங்கள்!” என்று சிறியவன் சொன்னான். “இல்லை, அது சுழன்றது” என்று அவன் சொன்னான். “இல்லை, வெளியேறித்தான் ஆகவேண்டும்” என்று இளையவன் சொன்னான். “கையிலிருந்து விழுந்தது! கையிலிருந்து விழுந்தது!” என்று அவன் கூவினான்.

“உன் கையிலிருந்து விழுந்தது அல்லவா?” என்றான். “என் கையிலிருந்து விழவில்லை. உங்கள் கையிலிருந்துதான் விழுந்தது. நீங்கள் வெளியேறுங்கள்” என்றான் இளையவன். எண்ணியிராக் கணத்தில் மூத்தவன் வந்து இளையவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். இளையவன் அலறி கீழே விழுந்தான். நான் பாய்ந்து எழுந்து அவன் கையை பற்றிக்கொண்டேன். “என்ன செய்கிறாய், அறிவிலி?” என்றேன். அவன் வஞ்சத்துடன் “அவன் ஒவ்வொரு முறையும் பிழையாக ஆடுகிறான்” என்றான். “அதற்காக?” என்று கூவினேன். அவன் மேலும் வஞ்சத்துடன் “அவனை நான் கொல்வேன்!” என்றான்.

நான் ஓங்கி மூத்தவனை அறைந்தேன். அவன் வளைந்து நிலத்தில் அமர்ந்து சினம்கொண்ட கண்களால் என்னை பார்த்தான். ஒருகணம் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் நான் நிலைமறந்தேன். ஓங்கி ஓங்கி அவனை அறைந்து கழுத்தைப் பிடித்து சுவரோடு சேர்த்து “உடன்பிறந்தான் மேல் கைவைப்பாயா நீ? என் முன் அதை செய்யும் அளவிற்கு துணிந்துவிட்டாயா?” என்றேன். அவன் பல்லைக் கடித்து கைகளை முறுக்கி அசையாமல் நின்றான். ஒருகணத்திற்குப் பின் மூச்சை நிறுத்தி கைகளை விட்டேன். “வெளியே செல்லுங்கள்! செல்க வெளியே!” என்று கூவினேன். அவர்கள் பற்களைக் கடித்து சினம்கொண்ட கண்களால் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வெளியே சென்றனர்.

தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து தலையை பற்றிக்கொண்டேன். தலையணையில் முகத்தைப் பதித்து உடல் குறுக்கி படுத்தேன். என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? ஏதோ என்னைச் சூழ்ந்து வந்தடைகிறது. நான் விழையாத ஒன்று. என்ன நிகழ்கிறது? இங்கு இருக்க இயலாது என்னால். வெளியே வந்து ஏவலனிடம் “புரவி ஒருக்குக, நான் மீண்டும் துவாரகைக்கே செல்கிறேன்!” என்றேன். புரவிகளை ஓய்வுக்கு அனுப்பியிருந்த ஏவலன் திகைத்து “இளவரசே!” என்றான். “ஒருங்குக புரவி! நான் கிளம்ப வேண்டும்” என்றேன். ஓய்வுக்கான ஆடைகளை அணிந்திருந்தேன். மேலாடையை எடுத்து இறுக்கி கச்சையால் சுற்றிக்கொண்டு இறங்கி ஓடிவந்து ஒருங்கி நின்றிருந்த ஒரு புரவியிலேறி அதைத் தட்டி துவாரகையை நோக்கி விரைந்தேன்.

துவாரகையை நான் அடையும்போது நகரம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. நான் அறியாமலேயே கடிவாளத்தைப் பிடித்து புரவியை நிறுத்தினேன். நெடுந்தொலைவிலேயே நகரமெங்கும் எழுந்துகொண்டிருந்த ஓசையை கேட்டேன். ஒரு திருவிழாபோல. அல்லது படையெழுச்சியா? பிரத்யும்னன் அதற்குள் கிளம்பிவிட்டாரா என்ன? நான் புரவியைத் தட்டி மேலும் விசைகொண்டு தோரணவாயிலைக் கடந்து நகருக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி புரவியில் வந்த காவலர்தலைவனை நோக்கி நானும் விரைந்து சென்று “என்ன நிகழ்கிறது? படையெழுச்சியா?” என்றேன்.

“இல்லை, நகரம் கலைந்திருக்கிறது. மக்கள் ஆங்காங்கே கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். பல இடங்களில் மாளிகைகளை நோக்கி கற்களையும் தடிகளையும் வீசுகிறார்கள். அரசகுடியினர் பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான். ”என்ன நிகழ்ந்தது?” என்றேன். “இளவரசே, சற்றுமுன் பிரத்யும்னனால் சுதேஷ்ணன் கொல்லப்பட்டார்” என்றான். “எப்போது?” என்றபடி நான் கீழிறங்கினேன்.

“என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரியாது. நான் கேட்டு அறிந்தது இது. அவர்கள் தங்கள் சிற்றவையில் ஒருவரை ஒருவர் சந்தித்து உசாவிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இளையவர் விசாருவின் சாவுக்கு எவர் வழிவகுத்தது என்ற அளவில் சொல்லாடல் நிகழ்ந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது சுதேஷ்ணன் பிரத்யும்னனுக்கு எதிராக நெடுங்காலமாக செய்துவந்த பல சூழ்ச்சிகள் வெளிப்பட்டிருக்கின்றன. சீற்றம்கொண்டு சுதேஷ்ணனை நோக்கி பிரத்யும்னன் வாளை உருவியிருக்கிறார். பிரத்யும்னனைக் கொல்ல சுதேஷ்ணன் வாளுடன் பாய்ந்திருக்கிறார். அத்தருணத்தில் அருகே நின்றிருந்த எவரோ சுதேஷ்ணனை பற்றிக்கொண்டிருக்கிறார். பிரத்யும்னன் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருக்கிறார்.”

“இது அரசமுறையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை” என்றான் காவலர்தலைவன். நான் பதற்றம் மெல்ல வடிய களைப்பு கொண்டவனாக புரவியின் சேணத்தை பற்றிக்கொண்டு நின்றேன். “ஆனால் செய்தி நகருக்குள் பரவிவிட்டிருக்கிறது. நகர மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். நல்லவேளையாக ஷத்ரியர் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள். கொல்லப்பட்டவர் விசாரு என்றதுமே கொன்றவர் யாதவரா என்றுதான் கேட்டனர் இங்குள்ள ஷத்ரியர். யாதவர் கையால் ஷத்ரிய மைந்தர் கொல்லப்பட்டிருந்தால் நகரம் இதற்குள் போர்வெறி கொண்டிருக்கும்.” நான் தளர்ந்தவனாக புரவியில் ஏறி அமர்ந்தேன். பின்னர் அதைத் தட்டி “செல்க!” என்று நகரினூடாக அரண்மனை நோக்கி சென்றேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 44

பகுதி நான்கு : அலைமீள்கை – 27

மூத்தவர் ஃபானுவை சந்திக்கச் செல்வதற்கு முன்னர் அங்கு என்ன சொல்லவேண்டும் என்பதை ஒருமுறை கணிகரிடம் சொல்லி நா பழகிக்கொண்டேன். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதை உள்ளத்தில் ஒருமுறை செய்து பார்ப்பது நன்று என்று பலமுறை கணிகர் என்னிடம் கூறியிருக்கிறார். ஒன்றை சொல்வதற்கு முன் ஒருமுறை அதை நாவால் சொல்லிப்பார்க்க வேண்டும் என்று அவர் கூறியபோது “நான் அதை உள்ளத்தில் சொல்லிப்பார்ப்பதுண்டு” என்றேன்.

“அல்ல. உள்ளம் வேறு, நா வேறு. உள்ளத்தில் நூறு சொற்கள் ஓடுமென்றால் அதில் இரண்டு சொற்களே நாவிலெழும். நா பருப்பொருளால் ஆனது, உள்ளம் அவ்வாறல்ல” என்று கணிகர் சொன்னார். “ஒன்றை நாவால் உரைக்கப் போகிறீர்கள் என்றால் அதை முன்னரே ஒரு முறை நாவால் கூறிவிடுங்கள். நாவிற்கு உள்ளத்திலிருந்து சொற்கள் எழும்போது பல சொற்கள் நாவுக்கு எத்தனை அரியவை என்று தெரியும். பல சொற்களை நா சொல்லத் தயங்குவது தெரியும். குறிப்பாக நாவால் பொய்யுரைக்கப் போகிறோம் எனில் அப்பொய்யை உரக்க ஓரிரு முறை ஏற்கெனவே நாவால் உரைத்திருக்கவேண்டும்.”

“முதன்முறையாக நாவில் பொய் எழும்போது உள்ளத்தின் விசையை சென்று தொட இயலாமல் நா வளைந்து தயங்குவதை அறிந்த கண்கள் உடனே தொட்டெடுத்துவிட முடியும்.” கணிகர் புன்னகைத்து “அத்துடன் ஒன்று, நாவால் உரைக்கப்படுமெனில் அது வெளியே பருப்பொருளில் நிகழ்ந்துவிடுகிறது, பருப்பொருளைப் பார்த்து அதை பின்தொடர்வது உள்ளத்தின் இயல்பு. நாவால் உரைத்த ஒன்றை உள்ளம் தானும் நம்பும். ஒரு பொய்யை நாவால் பலமுறை உரையுங்கள், அதன் பின் உங்கள் உள்ளம் அதை மெய்யென்று நம்ப ஆரம்பிப்பதை பார்ப்பீர்கள்” என்றார்.

நான் “எவரிடம் உரைப்பது?” என்றேன். “மிகச் சிறந்த எதிர்முனை என்பது ஆடிப்பாவையே. ஆடியில்லையெனில் நிழல். நமக்கு நாமே சொல்லும் பொய்கள் அளவுக்கு தூய்மையானவை இவ்வுலகில் வேறேதும் இல்லை. நமக்கு நாமே சொல்லும் பொய்கள் உண்மையில் பொய்களே அல்ல. இங்கு நம்மை சூழ்ந்திருக்கும் இப்புவி என்பது உண்மையில் நமக்கு நாமே சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் பொய் அல்லவா? அப்பொய்யில் பிறிதொரு பொய்யை கலக்கிறோம். அப்பொய்யை சற்று நீட்டிக்கொள்கிறோம். எனவே அது மெய்யென்று எப்பொருளில் பொதுவுலகில் புழங்குகிறோமோ அதுவே ஆகும், கூறுக!” என்றார்.

“இங்கு ஆடிப்பாவை நோக்கி கூறுவதா?” என்று நான் புன்னகையுடன் கேட்டேன். “என்னிடம் கூறுக! இப்போது உங்கள் ஆடிப்பாவையென நான் அமைகிறேன்” என்றார். எனது தரப்பை மிக விரிவாக அவரிடம் கூறினேன். அவர் கூறியது போலவே நாவால் அதை உரைக்கும்போதுதான் அதுவரை பலமுறை உள்ளத்தில் எண்ணி வந்த அந்த நடப்போவியம் எத்தனை பிழைகள் கொண்டது என்று தெரிந்தது. அதை ஒவ்வொன்றையும் முழுமைப்படுத்திக்கொண்டேன். எவ்வண்ணம் அது நிகழ்ந்தது, அப்போது எப்படி நான் உணர்ந்தேன், அந்தத் தருணக்காட்சியின் ஒவ்வொரு சிறு நுட்பங்கள், ஒவ்வொரு முகங்களின் எதிர்வினைகள். அது மெய்யாகவே நடந்தது என்பதைப்போல் அதன் மீது எனது உளப்பதிவு.

நான் பேசி முடித்ததும் கணிகர் தன் மின்னும் கண்களால் என்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பின்னர் “என்னை பிறிதொருவராக எண்ணுங்கள். மீண்டும் ஒருமுறை கூறுங்கள்” என்றார். “பிறிதொரு முறையா?” என்று நான் சொல்ல “கூறிப் பாருங்கள், ஏன் என்று தெரியும்” என்றார். அவரை முதலில் என் ஆடிப்பாவை என்று நினைத்து சொல்லிக்கொண்டிருந்தேன். இம்முறை மூத்தவர் ஃபானு என்று நினைத்து சொன்னேன். சொல்லச் சொல்ல முன்னர் நான் சொல்வது மேலும் குறுகுவதை, கூர்கொள்வதை, சரியான சொல் சேர்வதை கண்டேன். “ஆம், பாதியளவாகிவிட்டது” என்றேன்.

“பொய் சொல்பவர் இயற்றும் பிழைகளில் முதன்மையானது ஒன்றுண்டு. ஒன்றை சொல்லி வருகையிலேயே அது சொல்லொழுங்கின்படி அமைகிறதா என்று அவர் உள்ளம் பார்த்துக்கொண்டிருக்கும். ஒரு பிழையை கண்டுபிடிப்பார். அவ் இடைவெளியில் ஒரு புதிய செய்தியை கொண்டு வந்து அமைப்பார். ஒரு கதைக்குள் துணைக்கதைகளை ஒருவர் அமைக்கிறார் என்றாலே அது பெரும்பாலும் பொய்தான்” என்று கணிகர் சொன்னார். பிறகு “மீண்டும் ஒருமுறை சொல்க! முற்றிலும் புதிய ஒருவரிடம்” என்றார். நான் புன்னகைத்து “இம்முறை மூத்தவர் பிரத்யும்னனிடம்” என்றேன். “வேண்டாம். உங்கள் கதையை கேட்கப்போகிறவர் சுஃபானு, அவரிடம் கூறுக!“ என்றார்.

நான் மீண்டும் கூறியபோது அந்தக் கதை கூர்மையை இழந்து இயல்பான அலைவுகொண்டு எளிய அன்றாடச் சொற்களுடன் மெய்யென்றே ஆகிவிட்டிருந்தது. சொல்லி முடித்தவுடன் நானே மெய்யான உணர்வுகளுக்கு ஆளாகி முகம் குழைந்து, விழிகள் நனைந்து, உடலெங்கும் பரவிய மென்துடிப்புடன் அமர்ந்திருந்தேன். என் உணர்வுகளை வென்று இயல்புநிலைக்கு நான் மீள சற்று நேரமாகியது. கணிகர் “ஒன்றை திரும்பத் திரும்பச் சொல்லுகையில் அதிலிருந்து நீங்கள் விலகியாகவேண்டுமல்லவா? ஒன்றை ஒப்பிக்கத் தொடங்கவேண்டுமல்லவா?” என்றார். “ஆம், அவ்வாறுதான் நான் எண்ணியிருந்தேன். ஆனால் என் உணர்வுகள் மிகுந்தபடியே செல்கின்றன” என்றேன்.

“யாதவரே, காட்சிகளும் பொருட்களும் சொற்களாகின்றன. எனில் சொற்களும் திரும்ப அவ்வாறே ஆகக்கூடும் அல்லவா?” என்றார். “நீங்கள் இந்நிகழ்வுகளை உள்ளத்தில் மெய்யென நிகழ்த்திக்கொண்டு அதை சொல்கிறீர்கள். மீள மீள நிகழ்வது மெய்யென்றே ஆகும். இம்முறை அதை அரசவையில் கூறினால் உங்கள் உணர்வுகள் மெய்யாக இருக்கும். உங்கள் நா தயங்காது. ஏனெனில் உங்கள் ஆழம் இதை மெய்யென்று நம்பிக்கொண்டிருக்கும். மிகச் சிறந்த பொய்யென்பது சொல்பவனால் நம்பி கூறப்படுவது” என்று உரைத்து “நலம் சூழ்க!” என்றார்.

நான் எழுந்துகொண்டு தலைவணங்கி “பயிற்சிக்கு நன்றி, ஆசிரியரே. ஆனால் என்றேனும் இந்தத் திறனை நான் உங்களிடம் பயன்படுத்தினால் எளிதில் கண்டடைவதற்கு ஒரு வழிமுறையை நீங்கள் வைத்திருப்பீர்களல்லவா?” என்றேன். அவர் நகைத்து “ஆம், அவ்வண்ணம் ஒரு முறை இருந்தால் அதை உங்களிடம் கூறமாட்டேன் என்றும் தெரிந்திருக்குமே” என்றார். நான் நகைத்து “மெய்” என்றேன்.

 

மூத்தவர் ஃபானுவின் அவையில் அப்போது சுஃபானுவும் ஸ்வரஃபானுவும் பிரஃபானுவும் ஃபானுமானும் சந்திரஃபானுவும் இருந்தனர். நான் உள்ளே நுழைந்து தலைவணங்கினேன். அவர் என்னை அமரும்படி சொன்னார். நான் செல்லும் வழியிலேயே அச்சொற்களை சொல்லத் தொடங்கிவிட்டிருந்தமையால் மெய்யான உணர்வுகளுக்கு ஆளாகி என் உடல் பதறிக்கொண்டிருந்தது. அமர்ந்து பின்னர் மீண்டும் எழுந்து கைகள் அலைபாய உடைந்த குரலில் கண்ணீருடன் “தீதொன்று நடந்துவிட்டது மூத்தவரே, அதை தங்களிடம் அவ்வாறே சொல்ல வேண்டுமா அன்றி வேறெவ்வகையிலும் அதை உரைப்பதா என்று எனக்கு தெரியவில்லை. அதன் அரசியல் விளைவுகளைக் குறித்து கணிகரிடம் பேசிவிட்டுதான் இங்கு வருகிறேன். ஏனெனில் நிகழ்ந்தது எளிய ஒன்றல்ல” என்றேன்.

“கூறுக!” என்றார் ஃபானு. ஆனால் தன் பதற்றத்தை அவரால் மறைக்கமுடியவில்லை. நான் என்னை சொல்லடக்கி, உணர்வுகளை வெல்ல சற்று நேரம் இறுகி உடல் குறுகி அமர்ந்திருந்தேன். பின்னர் “மூத்தவரே, பிரத்யும்னனின் இளையோன் விசாரு கொல்லப்பட்டான், ருக்மியின் படைநிலையில்” என்றேன். ஃபானு “என்ன!” என்றார். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அங்கிருந்து பறவைத்தூது வரவில்லை என்று கண்டுகொண்டேன். “கூறுக!” என்றபடி சுஃபானு எழுந்தார். “நான் அவனை ருக்மியின் அவையில் பார்த்தேன்” என்றேன். “எனக்கு முன்னரே அவன் அங்கே சென்று சேர்ந்திருக்கிறான். இங்கிருந்து ஒரு தூது என அவனை அனுப்பியிருக்கிறார்கள்.” ஃபானு “யார்?” என்றார். “அறியேன், பிரத்யும்னன் என எண்ணினேன், பின்னர் சுதேஷ்ணன் என கண்டடைந்தேன்” என்றேன்.

“கூறுக!” என்றார் சுஃபானு. “நான் செல்லும்போது ருக்மியின் அவையில் அவன் இருந்தான். ருக்மியிடம் யாதவ மைந்தர் அனைவரும் சேர்ந்து தங்களுக்கு முடிசூட்டுவது என எடுத்த முடிவை நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது அவன் பேச்சுக்குள் நுழைந்தான். அம்முடிவை பிரத்யும்னன் ஏற்க இயலாது என்றான். பிரத்யும்னன் அவனிடம் தனியாக வேறொரு செய்தியை அனுப்பியிருப்பதாக அப்போதுதான் அறிந்தேன். ‘மாதுலரே, நான் ஏற்கெனவே சொன்னேன். இது எண்பதின்மரும் ஏற்றுக்கொண்ட முடிவு அல்ல’ என்றான். ‘அவ்வண்ணம் வரும் தூதுகளை ஏற்கவேண்டாம்’ என்றான். ருக்மி எளியவர் என அறிந்திருப்பீர்கள். அவர் குழம்பி என்னை பார்த்தார்.”

“நான் அந்த சூழ்ச்சி எனக்குத் தெரியாது என்றேன். எண்பதின்மரும் இருந்த அவையில் எடுத்த முடிவு நான் உரைப்பது. அரசுமுறையாக எனக்கு அறிவிக்கப்பட்டதை இங்கு அறிவிக்கிறேன். முடிவெடுப்பது தங்கள் உரிமை. நான் அதில் தலையிடப்போவதில்லை என்றேன். சுதேஷ்ணனின் செய்தியுடன் தான் வந்திருப்பதாக அவன் மீண்டும் கூறினான். ருக்மி அவனிடம் ‘சற்று பொறு, நான் இப்பேச்சை முடித்துவிட்டு வருகிறேன்’ என்றார். அவன் சிற்றறைக்கு அனுப்பப்பட்டான். அதன்பின் என்னிடம் ‘அங்கு நடந்தது என்ன என்பதை கூறுக!’ என்றார். நான் மிக விரிவாக விளக்கினேன். ருக்மி கூர்ந்து அவற்றை கேட்டார்.”

“சாத்யகியும் கிருதவர்மனும் ஒருங்கிணைந்து நம் தரப்பில் நின்றிருந்ததை நான் சொன்னதுமே அவர் விழிகள் மாறிவிட்டன. பிரத்யும்னனும் அநிருத்தனும் இணைந்து நமக்கு ஆதரவு தெரிவிப்பதையும் சொன்னேன். அனைத்து யாதவ மைந்தரும் ஒருங்கிணைந்திருப்பதை கூறினேன். அவர் தளர்ந்து ‘ஆம், இனி ஒன்றும் செய்வதற்கில்லை. ஒருவேளை உளவிலக்கம் கொண்டு பிரத்யும்னன் மட்டும் தனித்திருந்தால்கூட பிற ஏழு பேருக்கு எதிராக எதுவும் செய்துவிட இயலாது’ என்றார். ‘ஆம், அதுவே அரசியல்நிலைமை. வேறு சொற்களுக்கு செவியளிக்கவேண்டாம்’ என்று நான் சொன்னேன்.”

“ருக்மியால் சொல்கோத்துக்கொள்ள இயலவில்லை. அவர் என்னிடம் ‘நேரடியாக ஒன்று கேட்கிறேன். நான் இதில் எதை பெறுவேன்?’ என்றார். ‘பிரத்யும்னன் தென்திசையை ஆள்வதற்கு அனுப்பப்படுவார். அவர் தங்கள் மருகர்’ என்றேன். ‘ஆம், ஆனால் பிரத்யும்னனை நான் ஆதரிக்காமல் இருந்தால் ஃபானுவுக்கு ஆதரவளித்தால் விதர்ப்பத்திற்கு எவை அளிக்கப்படும்?’ என்றார். அத்தருணத்தில் நான் தங்கள் குரலாக மாறினேன். ‘விதர்ப்பத்திற்கு தனியுரிமை அளிக்கப்படும். ஒரு தருணத்திலும் விதர்ப்பம் நேரடியாக துவாரகைக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்காது. வருங்காலத்திலும் விதர்ப்பத்தின் இளவரசியர் துவாரகையின் அரசியராவார்கள்’ என்றேன்.”

“ருக்மி எதிர்பார்த்திருந்தது அதுவே. அவர் மகிழ்ந்து ‘அது போதும். நான் இம்முடிவை ஆதரிக்கிறேன். மணிசூட்டு விழாவுக்கு நான் வந்து கலந்துகொள்கிறேன்’ என்று சொன்னார். ‘என் மூத்தவரின் பொருட்டு உங்களை வணங்குகிறேன். விதர்ப்பம் துவாரகையுடன் அணுக்கமாக என்றும் இருக்கவேண்டும்’ என்று சொல்லி நான் வெளிவந்தேன். என் அறைக்கு சென்றேன். அங்கு துயின்றுகொண்டிருக்கையில் என்னைச் சூழ்ந்து படைகள் நிலைகொள்வதன் ஓசையை கேட்டேன். எழுந்து பாடிவீட்டின் சிறு விலக்கினூடாக வெளியே பார்த்தபோது என் குடிலைச் சுற்றி காவலர்கள் நின்றிருந்தனர்.”

“என்ன நிகழ்கிறது என்று எனக்கு புரிந்தது. என்னை காவலில் வைத்திருக்கிறார்கள். நான் அங்கிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது காவல்வீரர்களில் ஒருவன் என் குடிலுக்குள்ளே வந்தான். ‘தாங்கள் காவல் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்தக் குடிலைவிட்டு அரசாணை வரும்வரை வெளியே செல்ல தங்களுக்கு உரிமையில்லை. அவ்வாறு வெளியே சென்றால் தங்களைத் தாக்கும் ஆணை எங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது’ என்றான். ‘ஆம், புரிகிறது’ என்று நான் சொன்னேன். அவன் குரல் மாறுபட்டு ‘தாங்கள் உண்மையில் சிறைவைக்கப்படவில்லை. அரசர் சில முடிவுகளை எடுக்கிறார். அம்முடிவுகளை எடுக்கும் வரை அவரவர் அவரவர் இடத்திலேயே இருக்கும்படி ஆணையிடப்பட்டிருக்கிறார்கள்’ என்றான்.”

“அவன் பார்வையில் வேறொன்றை நான் கண்டேன். ஆகவே நான் அவனிடம் ‘அரசர் எனக்கு சாதகமான முடிவை எடுத்தார். ஆகவே நான் இதை எதிர்பார்க்கவில்லை’ என்றேன். ‘தங்களுக்கு சாதகமான முடிவுதான் எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறிய அவன் விழிமாறி சற்று அருகே வந்து ‘சற்று முன் பிரத்யும்னனின் இளையவர் கொல்லப்பட்டார்’ என்றான். நான் திகைத்து ‘கொல்லப்பட்டாரா? எவ்வண்ணம்?’ என்றேன். ‘அவரைக் கொன்றவன் நான்’ என்று அவன் சொன்னான். ‘அவரை சிறை வைக்கும்போது அவர் தப்ப முயன்றார் என்று சொல்லி கொன்றுவிடும்படி சொல்லப்பட்டது. ஆகவே சிறை வைப்பதற்கு முன்பே அவர் தலையை வெட்டிவிட்டோம். அச்செய்தியை நான் அரசரிடம் சொல்லபோகிறேன். இளவரசே, நான் தங்களுக்கு அணுக்கமானவனாகும் பொருட்டு இதை சொன்னேன். துவாரகையில் தாங்கள் செல்வாக்கு பெறும்போது எனக்குரிய இடத்தை தாங்கள் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்றான்.

‘ஆம், இச்சொல் மதிப்புக்குரியது. நான் உன்னை எண்ணியிருப்பேன், ஆவன செய்வேன்’ என்றேன். பின்னர் ‘என்னை எவ்வகையிலேனும் வெளியே கொண்டுவிட முடியுமா?’ என்றேன். ‘நான் கொல்லப்படுவேன்’ என்றான். ‘நீ கொல்லப்படமாட்டாய். அதற்கான வழியை நான் சொல்கிறேன்’ என்றேன். ‘என்னுடன் வருக! என்னை பாலைவனத்தில் கொண்டுவந்து விடு. அங்கிருந்து நீயும் தப்பி அவந்திக்கு செல். உரிய பொழுதில் நீ துவாரகைக்கு வா’ என்றேன். அவன் என்னை அவர்களுடைய படைவீரன் உடையில் வெளியே அழைத்துவந்தான். அவனும் என்னுடன் வந்தான். என்னை கடத்திவிட்ட பின் அவன் அவந்திக்கு திரும்பிச்சென்றான். நான் தன்னந்தனியாக பாலையினூடாக பயணம் செய்து இங்கு வந்தேன்.”

மூத்தவர் ஃபானு பெருமூச்சுவிட்டார். நான் கூறிய முறைமையை நானே திருப்பி பார்த்தேன். ஏற்கெனவே சொன்னதுபோல ஒழுங்கான சொல்லடுக்காக அதை நான் சொல்லவில்லை. அங்கிங்காக தொட்டுத் தொட்டு சொன்னேன். ஆனால் உண்மையில் நிகழ்ந்தவற்றை திரும்பச் சொல்பவர்கள் அவ்வாறுதான் கூறுவார்கள். ஒன்றை கற்பனை செய்து சொல்பவர்கள்தான் ஒழுங்கான போக்கில் சொல்வார்கள். பலமுறை கூறிவிட்டிருந்ததனால் அது மெய்யென்றாகிவிட்டது. மெய்யென்ற ஒன்றை சொல்லும்போது அவற்றின் உணர்வு சார்ந்தும், செய்திமையம் சார்ந்தும் அரிதென தோன்றுமிடங்களைத்தான் முதலில் தொட்டுச் சொல்வது நம் வழக்கம். ஆகவே நான் கூறியது உண்மையாக இருந்தது.

மூத்தவர் ஃபானு பதற்றம் அடைந்தார். கைகள் அலைபாய்ந்தன. “எனில் விசாரு எவருடைய தூதன்? சுதேஷ்ணனுடைய தூதனா?” என்றார். “ஆம்” என்றேன். “எதுவானாலும் எண்பதின்மரில் ஒருவனை அயலான் கொன்றிருக்கிறான், இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?” என்று ஃபானு கேட்டார். “அதுதான் எனக்கு தெரியவில்லை. அந்த முடிவை தாங்கள் எடுக்கவேண்டும். ஆகவேதான் அதை முன்னரே சென்று கணிகரிடம் சொன்னேன். அவர் எண்ணிப்பார்த்து தங்களிடம் சொல்லச் சொன்னார். எம்முடிவையும் ஓராண்டில் அதன் விளைவென்ன என்று எண்ணி எடுக்கவேண்டும் என்றார்” என்றேன். “அவரிடம் எண்ணிச்சூழ்வதே உகந்தது என்பது என் கருத்து.”

ஃபானு எழுந்து நிலைகொள்ளாமல் நடந்தார். “அனைத்தும் முறையாக நடந்துவிட்டன என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இவ்வாறு ஒன்று ஊடே வருகிறது. தொடக்கம் முதலே சுதேஷ்ணனுக்கு என் மேல் நம்பிக்கையின்மை இருந்தது. அதை நான் அறிவேன்” என்றார். சுஃபானு “அவ்வண்ணம் உள்ளோட்டங்கள் எட்டு அன்னையரின் மைந்தர்குழுக்களிலும் உள்ளன. அவற்றை எல்லாம் நாம் கருத்தில் கொள்ளமுடியாது. நாம் முடிசூட்டிக்கொண்ட பின் பேசி முடிக்கவேண்டியவை அவை” என்றார். “நான் புரிந்துகொள்ள முடியாமலிருப்பது ஏன் ருக்மி விசாருவை கொல்ல ஆணையிட்டார் என்பதுதான்.”

சற்று நேரத்திலேயே கணிகர் அவைக்கு கொண்டுவரப்பட்டார். மூத்தவர் ஃபானு அவரிடம் “அமைச்சரே, இங்கு நிகழ்ந்ததனைத்தையும் இளையவன் உங்களிடம் சொல்லியிருப்பான்” என்றார். “ஆம்” என்று அவர் சொன்னார். “சொல்லுங்கள், நாம் என்ன செய்வது? இத்தருணத்தில் எதைச் செய்தாலும் பிழையென்றாகும் என்று தோன்றுகிறது. இச்செய்தியை நாம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டுமா?” என்றார். கணிகர் “இல்லை, பிரத்யும்னனிடம் தெரிவிப்பதற்கு முன்பு நாம் தெளிவடைய வேண்டிய சில உண்டு” என்றார். “இந்த அவையில் நாம் அதை முடிவு செய்யவேண்டும்.”

“கூறுக!” என்றார் ஃபானு. “தங்களுக்கு எதிராக சுதேஷ்ணனோ அல்லது பிறரோ சூழ்ச்சி செய்தால் அதை பொறுத்துக்கொள்ளப்போவதில்லை என முடிவெடுங்கள். அதை நீங்களே உறுதிகொள்ளுங்கள். அதன்பின் பிரத்யும்னனை இங்கு வரவழையுங்கள். அவரிடம் தனிப்பட்ட முறையில் இதை சொல்லுங்கள். ஏனெனில் அவருக்கு அணுக்கமான இளையோனாகிய சுதேஷ்ணனால் இந்தச் செயல் இயற்றப்பட்டிருக்கிறது. இளையவர் ருக்மியின் அவைக்குச் சென்றது பிரத்யும்னனின் அறிதலின்படியா இல்லையா என்று நமக்கு தெரியவேண்டும்” என்றார். ஃபானு “பிரத்யும்னனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்றார்.

கணிகர் “இல்லை, பிரத்யும்னனுக்கு தெரிந்திருக்கும். பிரத்யும்னனுக்குத் தெரியாமல் அவ்வாறு ஓர் இளையவரை அனுப்ப இயலாது. ஆனால் பிரத்யும்னன் எதன்பொருட்டு அனுப்பினாரோ அதன்பொருட்டு அவர் அங்கு செல்லவில்லை. பிரத்யும்னனிடம் ஒன்று சொல்லியிருக்கலாம், பிறிதொரு செய்தியை உண்மையில் அவர் கொண்டுசென்றிருப்பார்” என்றார். “ஆம், அதற்கே வாய்ப்புள்ளது. அவ்வாறே நிகழ்ந்திருக்கும்” என்றார் சுஃபானு. “ஆகவே பிரத்யும்னனை இங்கே வரவழைத்து பேசுவதே நன்று” என்றார் கணிகர். “அப்போது நான் உடனிருப்பது உகந்ததல்ல. நான் தனியறையில் இருக்கிறேன். நீங்கள் கேட்டதை அதே உணர்வுடனும் எண்ண அலைவுடனும் அவருக்கு கூறுங்கள். அவர் முடிவெடுக்கட்டும்.”

“அவர் முடிவெடுப்பதென்றால்?” என்றார் ஃபானு. “சுதேஷ்ணனை என்ன செய்வதென்ற முடிவை பிரத்யும்னன்தான் எடுக்கவேண்டும்” என்று கணிகர் சொன்னார். “நன்று” என்றார் ஃபானு. ஏவலனை பிரத்யும்னனை வரவழைக்க அனுப்பிவிட்டு நிலைகொள்ளாமல் அறைக்குள் நடந்தார். ஏவலர் கணிகரை அணுக்கத்து அறைக்கு தூக்கிக்கொண்டு சென்றார்கள். நான் மூத்தவருக்குத் தலைவணங்கி விடைபெற்று கணிகருடன் சென்றேன். கணிகர் என்னிடம் புன்னகைத்து “அங்கிருந்து பறவைத்தூது ஏதேனும் பிரத்யும்னனுக்கு வந்திருக்குமென்றால் பிரத்யும்னன் இங்கு வருவதற்குள்ளாகவே செய்தியை அறிந்து முடிவெடுத்திருப்பார்” என்றார்.

நான் பதறி “பறவைத்தூதா?” என்றேன். “பறவைத்தூது வந்திருக்கவே வாய்ப்பு மிகுதி. அது வராமல் தடுப்பதற்கான வாய்ப்பனைத்தையும் நான் செய்திருந்தேன். பிரத்யும்னனின் அறையில் நமது ஒற்றர்கள் மூவர் இருக்கிறார்கள். பிரத்யும்னனுக்கு எந்தப் பறவைத்தூதும் இப்போது செல்லக்கூடாதென்று அவர்களுக்கு சொல்லி அனுப்பியிருந்தேன். அந்த வலை மிக உறுதியானது, பறவைத்தூது வந்தால் அவர்களிடம் சிக்கிக்கொள்ளும்” என்றார். “ஆனால் ஒருவேளை அவ்வாறு சிக்கிக்கொள்ளவில்லை எனில் நாம் திட்டமிட்டது எதுவும் நிகழாது. நாம் பிறிதொன்றை எண்ணவேண்டியிருக்கும்” என்றார்.

“என்ன சொல்கிறீர்கள், கணிகரே?” என்று நான் பதறினேன். “அச்சம் வேண்டாம். ஏதாவது ஒரு வாய்ப்பு அமையும்” என்று அவர் சொன்னார். என்னால் அமர்ந்திருக்க இயலவில்லை. கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. கண்ணீர் வரப்போவதுபோல் இருந்தது. தொண்டை அடைத்து எங்கிருக்கிறேன் என்று தெரியாத நிலையில் இருந்தேன். கைகளைக் கோத்து பீடத்தில் அமர்ந்து என் உடலுக்குள் குருதி ஓடிக்கொண்டிருந்த ஓசையை கேட்டுக்கொண்டிருந்தேன். மெல்லிய குறட்டையோசை கேட்டது. கணிகர் துயின்றுகொண்டிருப்பதை கண்டேன்.

அணுக்கத்து அறையில் பிரத்யும்னன் வரும் ஓசைகள் கேட்டன. மூத்தவர் ஃபானு அவரை வரவேற்பதும் பீடமளிப்பதும் ஓசைகளினூடாகவே காட்சியாகியது. கதவு திறந்து உள்ளே வந்த ஃபானுமான் “வருக, உங்களை அழைக்கிறார்!” என்று என்னை நோக்கி சொன்னான். நான் எழுந்து அவ்வறைக்குச் சென்று பிரத்யும்னனை பார்த்தேன். அவர் முகத்திலிருந்து எனக்கு எதையும் உய்த்துணர முடியவில்லை. ஆனால் ஒருகணத்தில் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. நான் நெஞ்சுடைய அழுதபடி நிலத்தில் அமர்ந்தேன். தலையில் ஓங்கி அறைந்துகொண்டு அழத்தொடங்கினேன்.

பிரத்யும்னன் பாய்ந்து வந்து என் கைகளைப்பற்றி “என்ன? என்ன?” என்றார். “இளையவன்! இளையவன்!” என்று நான் சொன்னேன். “நம் இளையவன் ருக்மியின் படைவீரர்களால் கொல்லப்பட்டான். அவனைக் கொன்றவனே என்னிடம் சொன்னான். என்னையும் சிறைவைத்திருந்தார்கள். நான் தப்பிவந்தேன்.” என்னால் எதையும் கோவையாக சொல்ல இயலவில்லை. “யார் கொன்றது?” என்றார் பிரத்யும்னன். “ருக்மியின் ஆணைப்படி அவருடைய படைவீரன்!” என்றேன். “எதன் பொருட்டு?” என்றார். “அவன் அவருடைய மருகன், அவர் மகளை மணந்தவன்.”

“மூத்தவரே, அவன் தங்களிடமிருந்து ஒரு செய்தியுடன் சென்றிருக்கிறான். அதற்கு மாறான செய்தியுடன் நான் சென்றேன். ஆகவே இது நடந்தது” என்றேன். “தவறுதலாகவா?” என்று அவர் கேட்டார். “அறியேன். முழுச் செய்தியும் எனக்கு தெரியவில்லை. ஏன் இதை செய்தார்கள் என்று என்னால் உணரக்கூடவில்லை. நான் உயிருடன் தப்பியதே மிக அரிதான ஒன்றென்று எனக்கு தோன்றுகிறது” என்றபின் நான் தளர்ந்து தரையிலேயே படுத்துவிட்டேன். “இளையவனை கொண்டு செல்க” என்று ஃபானு சொன்னார். என்னை இருவர் தூக்கி அறைக்கு கொண்டு சென்றனர்.

கணிகர் முன் நான் அமர்ந்து மீண்டும் அழுதுகொண்டிருந்தேன். மெல்லிய குரலில் “நல்ல அழுகை!” என்று அவர் சொன்னார். நான் பெருமூச்சுடன் “ஏன் அழுதேன் என்றே தெரியவில்லை. இங்கிருக்கையில் அஞ்சி நடுங்கிவிட்டேன். பிரத்யும்னன் அனைத்தையும் அறிந்து வந்திருந்தாரெனில் என் வாழ்வு இந்த அவையிலேயே முடியும். அதை எண்ணியபோது என் அகம் உடைந்துவிட்டது” என்றேன். “ஆகவே அதற்காகத்தான் அழுகை?” என்றார் கணிகர். “இல்லை, அந்த அழுகை அப்போது உண்மையானது. உடன் வந்த சொற்கள் உண்மையானவை” என்றேன். “ஆம், அதை பிரித்தறிய மனிதர்களால் இயலாது” என்று கணிகர் சொன்னார்.

நான் திடுக்கிடலுடன் கணிகரை பார்த்தேன். இத்தகைய கூர்மைகொண்ட ஒரு மனிதரை தெய்வங்கள் அன்றி எவரும் எதிர்கொள்ள முடியுமா என்ற திகைப்பு எனக்கு ஏற்பட்டது. அக்கணமே வாளை உருவி அவர் கழுத்தை வெட்டி வீசிவிடவேண்டும் என்றும் தோன்றியது. மனிதர்களை முற்றழிக்கக் கூடிய ஒருவர் அவர். தெய்வங்களுக்கு நிகரான அழிவை நிகழ்த்த வல்லவர். கணிகர் “என்னிடம் ஏதேனும் ஒரு தருணத்தில் என் கழுத்தை வெட்டவேண்டும் என்று எண்ணாதவர்கள் மிகக் குறைவு” என்றார். நான் திகைக்க “நீங்கள் அவ்வாறு எண்ணினீர்கள், நன்று. அவ்வாறு எண்ணுபவர்களை நான் வெறுப்பதில்லை. அவர்களுக்கும் உதவுவேன்” என்றார்.

புன்னகையுடன் “ஏனென்றால் அவர்கள் என்னை அணுகி அறிவதனால்தான் அவ்வாறு எண்ணுகிறார்கள். எனது வழிகளை முற்றுணர்ந்த பின்னர் அவ்வாறு எண்ணுவதில்லை. நான் யார் என்று அறிந்தவர்களுக்கு வழிபடு தெய்வமாகவே நான் ஆவேன்” என்றார். நான் பெருமூச்சுடன் “மெய்யாகவே உங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் யார்?” என்றேன். கணிகர் புன்னகைத்தார். கதவு திறந்து ஃபானுமான் வந்து “மூத்தவர் தங்களை அழைக்கிறார்” என்றான். நான் எழுந்து பக்கத்து அறைக்கு சென்றேன்.

அங்கு ஃபானு அழுதுகொண்டு நின்றிருந்தார். தலையை கையில் தாங்கி பிரத்யும்னன் அமர்ந்திருந்தார். பிரத்யும்னன் என்னிடம் “நீ கேட்டவற்றை மீண்டும் கூறுக! சுதேஷ்ணனின் தூதுடன் அவன் வந்ததாகவா அவன் சொன்னான்?” என்றார். “ஆம், அவன் நிலைகுலைந்திருந்தான். உடைந்த குரலில் கூவினான். ‘அப்படியென்றால் சுதேஷ்ணனின் சொல்லுக்கு என்ன பொருள்? அவருக்கு நீங்கள் அளித்த சொல்லுறுதிக்கு என்ன பொருள்?’ என்றான்” என்றேன். ”சுதேஷ்ணனின் சொல் என்றா?” என்றார் பிரத்யும்னன். “ஆம், தான் சுதேஷ்ணனின் தூதனென்றே அவன் சொன்னான்” என்றேன். பிரத்யும்னன் பெருமூச்சுடன் எழுந்து கொண்டார். “நன்று, இதை நான் எண்ணி முடிவெடுக்கிறேன்” என்றார்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 43

பகுதி நான்கு : அலைமீள்கை – 26

துவாரகைக்கு நான் தன்னந்தனியாகவே கிளம்பினேன். பிறரை அழைத்துக்கொள்ளத் தோன்றவில்லை. எனது காவலர்களும் பயணத்துணைவர்களும் என் குடிலைச்சுற்றித்தான் தங்கியிருந்தனர். அவர்களை அழைத்திருக்க இயலும். ஆனால் அவர்களால் ஓசையின்றி கிளம்ப இயலாது. கவச உடைகளை அணிவது, காலணிகளை போட்டுக்கொள்வது, படைக்கலன்களை எடுத்துக்கொள்வது அனைத்தையுமே ஒருவகையான அலுவல் நடவடிக்கையாக அவர்கள் மாற்றிவைத்திருக்கிறார்கள். அதற்கான ஆணைகள் கூச்சல்கள் உடல்மொழிகள் அவர்களிடம் கூடிவிடும். வழக்கமான காவல்வீரர்களை மந்தணப்பயணத்திற்கு அழைத்துச்செல்லவே முடியாது.

ஏனெனில் பெரும்பாலான படைவீரர்கள் பணி என்று எதையும் ஆற்றுவதில்லை. வெறுமனே இருக்கிறோம் என்னும் உணர்வு அவர்களுக்கு எழுமெனில் அவர்கள் தங்கள் தொழிலில் சலிப்படையக்கூடும். ஆகவே படைநிரைகளை காலை எழுவதிலிருந்து ஆடைகளை அணிந்து கொள்வது, உணவருந்துவது, ஓய்வெடுப்பது, அந்தியில் துயில்வது அனைத்தையுமே ஒருவகையான படை நடவடிக்கைகளாக மாற்றி அதற்கான ஆணைகளையும் கூச்சல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நாங்கள் கிளம்ப இருப்பது உடனடியாக தெரிந்துவிடும். எனக்கு அங்கு பொழுதில்லை. நான் உடனே கிளம்பியாகவேண்டும். குருதிமணத்தை படைவீரர்கள் நன்கறிவார்கள். மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். அதைவிட புரவிகள் குருதிவீச்சத்தை அறியும். அப்போதே பல குதிரைகள் பல இடங்களில் கனைப்பொலி எழுப்பத் தொடங்கிவிட்டிருந்தன.

நான் புரவியை விரைவாகச் செலுத்தி படையின் எல்லையென அமைந்த காவல்நிலையை அடைந்து அங்கு என்னை மறித்த காவலனிடம் கணையாழியைக் காட்டி “நான் விரைந்து முன் செல்கிறேன், என் படைவீரர்கள் தொடர்ந்து வருவார்கள். அவர்களை பின்னால் வரச்சொல்க!” என்றபடி புரவியை முழுவிசையில் செலுத்தி பாலை நிலத்திற்குள் சென்றேன். என் சொற்கள் விசையுடன் எழுந்தமையால் அவர்களால் மேற்கொண்டு எண்ணம் சூழ இயலவில்லை. அதற்குள் நான் புழுதி பரவி அலையடித்த பாலைநிலத்தினுள் நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருந்தேன். என்னைச் சூழ்ந்திருந்த செம்புழுதியை திரையென உணர்ந்தேன். அது எனக்கு ஆறுதலை, தனிமையை, தன்னம்பிக்கையை அளித்தது.

பாலைநிலத்திற்கு புரவி பழகிவிட்டிருந்தது. ஆகவே பலகை பதிக்கப்பட்ட பாதையினூடாகவே விரைந்தது. அங்கே வரும்போது அது மணலில் புதைந்திருந்த அந்தப் பாதையை கண்டுபிடித்திருந்தது. செல்லும்போது அதற்கு எதையும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. நான் எங்குமே நிற்கவில்லை. சீரான விசையில் சென்றுகொண்டே இருந்தேன். என் பின்னால் சூரியன் இருந்தது. என் நிழல் எனக்கு முன்னால் நீண்டு சென்றது. பின் குறுகியது. பின்னர் என் உடலைக் கடந்து பின்னால் சென்றது. நான் வெம்மைகொண்டு செம்புழுதியால் ஆனதுபோல் வானில் திகழ்ந்த சூரியனை நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.

முதல் தங்குமிடத்திலேயே இன்னொரு பயணக்குழுவை கண்டடைந்தேன். அவந்தியிலிருந்து துவாரகைக்கு சென்றுகொண்டிருந்த சிறிய வணிகக்குழு அவர்கள். அவர்களை வணிகர்குழு என்று சொல்லமுடியாது, ஒரு நாடோடிக்குழு. சில பொருட்களை வாங்கி விற்று வாழ்க்கையை ஈட்டிக்கொள்பவர்கள். ஆகவே அவர்களுக்கு பெரிய வணிகப் பொருட்கள் ஏதுமில்லை. எனவே சென்றாகவேண்டிய பதற்றமும் இல்லை. இயல்பாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் வந்திருந்த புரவி களைத்திருந்தது. அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கு நின்றிருந்த புரவி ஒன்றை பெற்றுக்கொண்டு மேற்கொண்டு சிறிது பணமும் அவர்களுக்கு அளித்தேன். அந்தப் புரவியில் ஏறி ஓய்வெடுக்காமலேயே துவாரகை நோக்கி சென்றேன்.

பிறிதொரு புரவி அவ்வாறு வழியில் கிடைக்குமெனில் துவாரகையை மறுநாள் புலரிக்குள் சென்றடைந்துவிட முடியும். நாடோடிகளின் புரவி பாலைக்கு மேலும் பழகியது. எனவே சீரான விசையில் சென்றுகொண்டிருந்தது. எப்படி ஒவ்வொன்றையும் வகுத்துக்கொள்வது என்று செல்லும் வழியிலேயே நான் எண்ணம் சூழ்ந்தேன். அந்தச் சாவுக்குரிய பொறுப்பை ருக்மி மேல் போடுவதே சிறந்த வழி. விசாரு அங்கு சென்றதற்கு துவாரகையில் சான்றுகள் ஏதுமில்லை. தாங்களேதான் அவனை அனுப்பினேன் என்று பிரத்யும்னனோ சுதேஷ்ணனோ பொதுஅவையில் கூற இயலாது. அவனே தன் முயற்சியில் ருக்மியை பார்க்கச் சென்றதாகவும் அவர்களுக்குள் பிறர் அறியாத ஏதோ உறவாடல் இருந்ததாகவும் எவரும் இயல்பாக எண்ணக்கூடும்.

அதையே நானும் சொல்லவேண்டும். அக்கொலைக்கு நான் சான்றாகவில்லை என்றே கூறவேண்டும். அவையில் விசாருவை பார்த்தேன். ருக்மிக்கும் அவனுக்கும் இடையே ஏதோ அறியா ஆடல் இருந்தது என்றும், அது மோதலாக மாறிவிட்டிருப்பதை நான் உணர்ந்தேன் என்றும், ருக்மி என்னை சிறைபிடிக்க முயன்றதால் குடிலிலிருந்து தப்பி துவாரகைக்கு விரைந்து வந்தேன் என்றும் கூறுவதே உகந்ததென்று முடிவு செய்தேன் என்றும் கூறுவதாக வகுத்துக்கொண்டேன். சொல் சொல்லாக அம்முடிவை என்னுள் எழுப்பிக்கொண்டேன்.

அம்முடிவை எடுத்த பின்னர் என் உள்ளம் நிலைகொண்டது. என் முகத்தில் புன்னகை எழுந்தது. மீண்டும் நான் தன்னம்பிக்கையை அடைந்தேன். எத்தருணத்தையும் எதிர்கொள்ள என்னால் இயலும். எங்கும் என்னை நிறம் மாற்றிக்கொள்ள இயலும். என் தந்தையின் சூழ்ச்சிகளில் முதலானது அவர் தானிருக்கும் இடத்திற்கேற்ப முழுமையாக மாறிக்கொள்பவர் என்பது. அங்கு பிறந்து அங்கு வளர்ந்தவர்களைவிட அவ்விடத்திற்கு உரியவராக அவரால் ஆகிவிட முடியும். நானும் அவ்வண்ணமே. அவருடைய பிற திறன்களை நான் ஈட்டிக்கொள்ள இயலும். நானும் நூல் நவில்வேன். படைநின்று பொருதி வெல்வேன். ஆனால் இத்தருணத்தில் நிலைகொள்ளவும் வென்றெழவும் இத்திறனே முதன்மையானது.

அந்தி இறங்கியது. கதிரவன் செம்புழுதியில் கலங்கி இருண்டு மறைந்தான். பாலைமணல்வெளியில் மட்டும் மென்வெளிச்சம். வானில் விண்மீன்கள் தோன்றிக்கொண்டிருந்தன. புரவியை சற்று ஓய்வெடுக்கவிடலாம் என்று வழியில் கண்ட ஒரு சிறு சோலை அருகே சென்றேன். அது வழக்கம்போல கைவிடப்பட்ட சோலை. அதற்குள் பேணப்படாத கலங்கிய ஊற்று ஒன்று இருக்கும் என்று எண்ணினேன். புரவியிலிருந்து இறங்கி அதைப் பிடித்து அழைத்தபடி சோலையை நோக்கி சென்றேன். இரவின் நிலவொளியில் பாலைநிலம் காற்றில் அதிரும் மெல்லிய திரைச்சீலைபோல என்னைச் சுற்றி அலைவு கொண்டிருந்தது. அதை நோக்கலாகாது. விழிக்குள் வெளிச்சத்தை நிறைத்து பிறிதொன்றை நோக்க முடியாது. உள்ளிருளச் செய்துவிடும் தன்மை அதற்குண்டு.

நான் நிலத்தைப் பார்த்து குனிந்து நடந்து சோலைக்குள் சென்றேன். உள்ளே எவரோ இருப்பதை என் உணர்வு சொன்னது. வாளில் கைவைத்தபடி “எவர்?” என்று உரக்க குரல் எழுப்பினேன். அங்கே எவரோ இருப்பதைப்போல செவியறியா ஒலியை கேட்டேன். “யார்? யாரது?” அங்கிருந்து ஒரு சிரிப்பொலி மறுமொழியாக எழுந்ததும் “நன்று” என்றேன். மீண்டும் உரத்த குரலில் “எவர்?” என்றேன். மீண்டும் நகைப்பொலி கேட்டது. நான் உடைவாளில் கைவைத்து அசைவிலாமல் நின்றேன்.

சாமி மரத்தின் முட்புதருக்குள்ளிருந்து ஒருவன் தோன்றினான். உடலெங்கும் மட்கிய ஆடைகள் தொங்கின. சடைத்திரிகள் என மீசையும் தாடியும் தலைமயிரும். பாலைகளில் அலையும் பேய்களில் ஒன்றென்று என் மனம் சொல்லியது. ஆனால் புலன்கள் அவன் மனிதன் என்பதை உறுத்துக் காட்டின. நகைத்தபடி என்னருகே வந்து “ஒவ்வொன்றும் அதனிடத்திலிருந்து நழுவுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். “உணவு எங்குமிருக்கிறது. உணவுக்காக எதையும் செய்யவேண்டியதில்லை. நீர் இங்கிருக்கிறது. மனிதன் வாழ்வதற்கு விரிந்த வெளி தேவையில்லை. இதோ இந்தச் சிறுவட்டம் போதும். ஆனால் உளம் எழுந்து பறப்பதற்கு பெருவெளி தேவை. அது இங்கே சூழ்ந்திருக்கிறது. ஆனால்…” என்றான்.

திகைப்புடன் அவன் கண்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அவை அவன் எவர் என்று எனக்கு காட்டியது. பாலையில் வழி தவறிய பித்தர்களில் ஒருவன். இந்தச் சோலையை கண்டடைந்ததனால் இங்கு வாழ்கிறான். தனிமையில் நோயுற்று இங்கு இறந்து மட்கி மண்டை ஓடென எஞ்சுவான். அதுவரை இவ்வாறு உள்ளம் அலைந்து கொண்டிருக்கும். பாலை மானுடரை பித்தராக்குவது. மனிதர்கள் எட்டு திசைகளாலும் அழுத்திக் கவ்வி நிறுத்தப்படவேண்டியவர்கள். அப்போதுதான் அவர்களுக்கு வடிவம் அமைகிறது. உளவடிவம், உடல்வடிவம். ஒருதிசை சற்றே திறந்தால் ட அவ்வழியே அவர்கள் உள்ளம் பீறிட்டு விலகுகிறது. உடல் உடைந்து பீறிடுகிறது. எண் திசையும் நிறைந்துகிடக்கும் பாலையில் அவர்கள் சிதறிப் பரவிவிடுகிறார்கள். இந்தப் பாலையில் திறந்து வைத்த ஒரு குடம் நீர் ஆவியாகி காற்றெங்கும் நிறைந்து இன்மையென்றாகி முற்றிலும் மறைவதைப்போல.

“விலகு” என்று அவனை தள்ளிவிட்டு நான் சோலைக்குள் சென்றேன். அங்கு அந்த ஊற்று நன்றாகவே பேணப்பட்டிருந்தது. அதன் கரைகளுக்கு கற்கள் அடுக்கப்பட்டு விளிம்பு அமைக்கப்பட்டிருந்தமையால் மணல் சரிந்து உள்ளே இறங்கவில்லை. ஒவ்வொரு நாளும் அதிலிருந்த தண்ணீர் இறைத்து வெளியே கொட்டப்பட்டிருந்தமையால் குப்பைகளும் சருகுகளும் இன்றி நீர் கண்ணாடித் துண்டென தெளிந்து கிடந்தது. சூழ்ந்திருந்த மரங்களின் இலைநிழல்களை அலைகள் நெளியச் செய்துகொண்டிருந்தன. அருகே இருந்த கொப்பரையால் நீரள்ளி அருந்தினேன். தலையிலும் உடலிலும் நீரை விட்டுக்கொண்டேன். புரவியை நீர் குடிக்க கொண்டு சென்றேன்.

இந்தப் பாலைவனப் புரவிகள் குளம்பு தொட்டு நீரை கலங்கடிக்காமல், முகத்தை மூழ்க வைக்காமல், எந்த வகையிலும் நீரை தூய்மையிழக்கச் செய்யாமல் உதடுநுனிகளை மட்டுமே வைத்து அருந்துவதற்குப் பயின்றவை. புரவி நீரை உறிஞ்சிக் குடித்ததும் தலையை சற்றே வெளியே எடுத்து அண்ணாந்து வாயின் மயிர்களில் இருந்த நீர் சொட்டச்சொட்ட ஆழ உறிஞ்சிய பின் மீண்டும் கழுத்தை நீட்டியது. நீர் அருந்தியதுமே அதன் உடல் இளைப்பாறல் கொண்டது. பல இடங்களில் தசை விதிர்க்கத் தொடங்கியது. நிறைந்த வயிற்றுடன் செவிகளை அடித்த பின் அதன் தலையை என் தோளில் வைத்து உரசி தன் அன்பை தெரிவித்தது. நான் அதை கழுத்தைத் தட்டி ஆறுதல்படுத்தியபடி வெளியே வந்தேன்.

எனக்குப் பின்னால் வந்த பித்தன் அங்கு நின்று இடையில் கைவைத்து மிகுந்த பதற்றம் கொண்டவன்போல் என்னை பார்த்துக்கொண்டிருந்தான். நான் திரும்பிச்சென்றதும் என் பின்னால் வந்து “அதாவது நான் என்ன சொல்கிறேன் எனில் ஒவ்வொன்றும் நிலையழிந்துகொண்டிருக்கிறது. இடிந்துகொண்டிருக்கிறது. ஏன் இடிகிறது என்றால் அவை இடிவதற்காகவே அவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதனால்தான்” என்றான். கைதூக்கி “நோக்குக! மனிதர்கள் கட்டும் ஒவ்வொன்றும் இடிகின்றன. ஒன்றை புதிதாக கட்டுபவனிடம் சென்று கேட்டுப்பாருங்கள், அது எவ்வாறு இடியுமென்று. அவனுக்கு அது தெரிந்திருக்கும். மனிதன் படைத்த ஒரு கட்டடம் எவ்வாறு இடியுமென்பதை அதை பார்க்கும் எவரும் சொல்லிவிடமுடியும். ஒரு மரத்தை அவ்வாறு சொல்ல முடியாது” என்றான்.

“இது ஆழமானது. இதை நான் சொல்லும்போதே என்னை பலர் வணிகத்திற்கு வராதே என்கிறார்கள். ஆனால் நிலவில் ஒரு வணிகன் தனியாக இருக்கக்கூடாது. ஏனெனில் நிலவு வணிகனை அவனுடைய கையிலிருக்கும் அத்தனை பொருட்களுக்கும் மதிப்பில்லாமல் செய்துவிடுகிறது. பொன் வெள்ளியாகிறது. வெள்ளி மண் ஓடாகிறது. நிலவில் தனித்திருக்கும் வணிகன் அனைத்தையும் இழந்துவிடுகிறான். அவன் கையிலிருக்கும் அத்தனை பொருட்களும் பயனற்றவையாகிவிடுகின்றன. அவன் கண்ட சொற்கள் அனைத்தும் ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன. மணலும் கூலமும் கலப்பதுபோல. ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து பிரிக்கப் பிரிக்க மீண்டும் அவன் கலந்துகொண்டே ஒருக்கிறான். இந்தப் பாலைமணல் முழுக்க இங்குள்ள கூலங்கள் கலந்துவிட்டால் எவரால் பிரித்தெடுக்க முடியும்?”

அவன் என் தோளைப் பிடித்து உலுக்கி பதறும் கண்களுடன் “கூலங்கள் மட்டுமல்ல அருமணிகளும் பாலை நிலத்தில் அவ்வாறுதான் தொலைந்து போகின்றன” என்றான். அவன் சொற்களுக்கு செவி கொடுக்காமல் புரவியைத் தட்டி ஆறுதல்படுத்தியபின் நான் ஏறி அமர்ந்தேன். அதன் கடிவாளத்தை இழுத்து அதன் செவியருகே சற்றே தட்டி “செல்க!” என்றேன். அது செருக்கடித்து காலெடுத்ததும் அவன் பின்னால் ஓடிவந்து “முதற்கொலை! முதற்குருதி!” என்றான். என் உடல் விதிர்த்தது. நான் இறந்தவனைப்போல் அதன்மேல் இருந்தேன். அவன் மேலும் என் அருகே ஓடிவந்து “முதற்குருதி!” என்றான். ”முதற்குருதி… அது முதற்குருதி.”

பதறும் குரலில் “என்ன?” என்று நான் கேட்டேன். “உடன்பிறந்தான் குருதி! அது புனிதமானது! தெய்வங்கள் விரும்புவது. நமது உடன்பிறந்தான் சங்கை அறுத்து பலி கொடுத்தால் எந்த தெய்வமும் நமக்கு கனியும். தெய்வங்கள் நமக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும். மணிமுடிகளை, பேரரசுகளை, பெரும் கருவூலங்களை, நிகரற்ற வெற்றியை, நிலைத்து வாழும் புகழை. நாம் செய்யவேண்டுவது ஒன்றே. உடன்பிறந்தானை கொல்வது” என்று அவன் சொன்னான். நான் அவனை நோக்கி நெஞ்சின் ஒலி முழக்கமிடக் கேட்டு அமர்ந்திருந்தேன். “ஆனால் ஒன்று! ஆனால் ஒன்று!” என்றான். “ஆனால் ஒன்று உண்டு. துலாவின் மறு எடை… மறுஎடை இல்லா துலா இல்லை! மறு எடை இல்லாத எதுவுமே இல்லை!”

அங்கு நின்றால் நானும் பித்தனாகிவிடுவேன் என்று எனக்குத் தோன்றியது. புரவியை தட்டினேன். ஆனால் என் உள்ளத்தை அப்புரவி அறிந்திருந்தது. அது அவனுடைய சொற்களுக்கு செவிகொடுக்க விரும்பியது. ஆகவே அது மிக மெல்ல காலெடுத்து வைத்து முன்னகர்ந்தது. அவன் ஓடி பின்னால் வந்து “ஆனால் ஒன்று, நாம் நம் உடன்பிறந்தானைக் கொன்று தெய்வங்களுக்கு பலியிட்டு அரியணையை அடையலாம். ஆனால் ஒன்று!” என்றான். எரிச்சலுடன் “செல்க!” என்றேன். அவன் அதை கேட்கவில்லை. “நாம் நம் மைந்தரை பலியிட்டு அந்தக் கொடையை நிகர்செய்ய வேண்டியிருக்கும்!” என்றான்.

என் உடலெங்கும் ஒரு துடிப்பு ஓடியது. “தெய்வங்களை இறக்கிக் கொண்டுவருவது எளிது. வந்த தெய்வத்தை இங்கிருந்து அனுப்ப வேண்டுமென்றால் நாம் மீண்டும் பலிகொடுக்க வேண்டியிருக்கும். முதற்பலியை சிறிதாக்கும் மேலும் பெரிய பலியை. அத்தனை பேரும் அதை செய்திருக்கிறார்கள். தன் மைந்தரை, தன் கைகளாலேயே கொன்றிருக்கிறார்கள்” என்றான். சிரித்தபடி தொடர்ந்தான் “அல்லது நம் மைந்தர் நம்மை பலிகொடுக்க வேண்டும். பலி பலியால் ஈடு செய்யப்படுகிறது. ஆகவே…”

நான் குதிமுள்ளை ஓங்கி புரவியின் விலாவில் அடித்தேன். செல்க என்று கூவினேன் அது கனைத்தபடி கால் தூக்கி சற்றே சுழன்று முழு விசையில் பாலைவனம் நோக்கி வால் சுழற்றி புழுதி கிளப்பி பாய்ந்தது. நிலவில் புழுதி பின்னால் செல்வதை அப்பித்தனாக அங்கு நின்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

நான் துவாரகையை அடைந்து நேராக கணிகரை பார்க்கத்தான் சென்றேன். துவாரகைக்குள் நான் நுழைவதை பிறர் அறியாமல் இருப்பது நன்று என்று எனக்குத் தோன்றியது. ஆகவே முடிந்தவரை புரவியைச் செலுத்தி புலரியிலேயே தோரணவாயிலை கடந்தேன். அங்கு காவல்மாடத்தில் களைத்த புரவியை விட்டுவிட்டு புதிய புரவியை பெற்றுக்கொண்டு முழு விசையில் அதை ஓட்டி துவாரகையின் தெருக்களினூடாக விரைந்து அரண்மனையை அடைந்து கணிகரின் சிறுகுடிலை நோக்கி சென்றேன்.

கணிகர் அவ்வேளையில் விழித்திருப்பார் என்று எனக்கு தெரிந்திருந்தது. அவர் மிகக் குறைவாகவே துயில்பவர். அதிலும் முன்னிரவில் ஓரிரு நாழிகைப்பொழுது. எஞ்சிய பொழுதெல்லாம் விழித்திருக்கிறார். பெரும்பாலும் விண்மீன்களைப் பார்த்தபடி இருட்டில் தனித்திருக்கிறார். அவர் விண்மீன்களை எண்ணி கணக்கிடுபவர் என்று ஏவலர்கள் ஏளனமாக சொன்னார்கள்.

நான் அவர் குடில் வாயிலில் சென்று நின்று “அந்தணரே, நான் பிரதிபானு” என்றேன். கணிகர் மெல்லிய குரலில் “வருக!” என்றார். நான் உள்ளே சென்று அமர்ந்தேன். என் கண்களை ஒருகணம் பார்த்துவிட்டு “கூறுக!” என்றார். நான் நிகழ்ந்ததை கூறினேன். பதறும் சொற்களுடன். சொல்லச்சொல்லத்தான் என்ன செய்துவிட்டேன் என்று எனக்கு புரிந்தது. அதுவரை அதை நிகழ்த்துகையில் நிகழ்காலத்திலும் அதன் விளைவுகளை எண்ணுகையில் எதிர்காலத்திலுமாக பிளந்து நின்றிருந்தேன். ஆகவே அதனை முழுமையாக உணராமலிருந்தேன். அப்போது முழுமையாக அக்கணத்தில் குவிந்தேன். அதை முழுதுற உணர்ந்தேன்.

“ஒவ்வாப் பிழை செய்துவிட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் வேறு வழியில்லை” என்றேன். அவர் புன்னகைத்தார். அப்பேரழகுப் புன்னகை அத்தருணத்தில் என் மேல் நெய்யூற்றி தீ வைத்ததுபோல் உணரச்செய்தது. “என்ன?” என்றேன். அவர் “நன்று!” என்றார். “ஏன்?” என்றேன். “இவ்வண்ணமே இது நிகழும். எண்பதின்மரில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். கொல்பவர்களே இங்கு முடிகொள்ள இயலும்” என்றார். நான் அவரை அச்சமும் பதற்றமுமாக நோக்கிக்கொண்டிருந்தேன். “ஆம், அது அவ்வாறுதான்” என்றார். “முன்பும் அவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது. எண்பதின்மரில் பெரும்பாலானவர்கள் கொல்லப்படுவார்கள்.”

“அவர்களைக் கொல்லும் துணிவு எவருக்கும் இல்லையென்பதனால்தான் இதுநாள் வரை இங்கே எதுவும் நிகழாமல் ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டிருந்தீர்கள். ஏனெனில் நீங்கள் எல்லோரும் இளைய யாதவரின் மைந்தர்கள். இளைய யாதவரை வெறுப்பவர்கள்கூட உள்ளூர அவரை வழிபடுபவர்களே. அவரை பேருருவாக்கி அதனூடாக தங்களை பேருருவாக்கிக்கொண்டவர்கள் அவர்கள். அவரை வெறுப்பதனூடாக அவரை கூர்ந்து அறிபவர்கள். ஒருகணமேனும் அவராக நின்று உலகனைத்தையும் உணர்ந்தவர்கள். ஆகவே இளைய யாதவரின் எதிரிகளால் நீங்கள் கொல்லப்படமாட்டீர்கள். ஆனால் உடன்பிறந்தாரால் ஒருவருக்கொருவர் கொல்லப்படுவீர்கள்.”

“ஏனெனில் நீங்கள் எவரும் அவரை உணர்ந்ததில்லை. தந்தையென அவரை நிறுத்திவிட்டமையாலேயே அவரென்றாக இயலாதவர்களாகிவிட்டீர்கள். பிறர் உங்களை தந்தையின் சிறு வடிவம் என்று பார்ப்பதனாலேயே அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டவேண்டிய பொறுப்பை இளவயதிலேயே ஏற்றுக்கொண்டவர்கள் ஆகிவிட்டீர்கள். உங்களால் இயலாதது அதுவே, நீங்கள் உங்கள் தந்தையென்றாகி அவர் கண்டதை காணவே முடியாது” என்றார் கணிகர். “ஆகவே நீங்கள் ஒருவரை ஒருவர் கொல்வீர்கள். இது முதற்கொலை, நன்று. இவ்வண்ணம் தொடங்கியது மிகவும் நன்று.”

“அக்கொலை முன்னரே நிகழ்ந்திருக்கவேண்டும். இத்தனை நாள் இங்கு ஒன்றும் நிகழாமல் நாகங்கள் ஒன்றையொன்று கவ்வி ஒரு திரளென்றாகி நெளிந்துகொண்டிருப்பதுபோல் நீங்கள் இருந்தமைக்கான ஏது ஒன்றே. ஒருவரை ஒருவர் கொல்ல அஞ்சினீர்கள். இதோ முதல் தடையை கடந்துவிட்டீர்கள். இனி கொலைகள் நிகழும். நிகழ்ந்தபடியே இருக்கும்” என்றார். நான் “அச்சமூட்டாதீர்கள், ஆசிரியரே” என்றேன். “அஞ்சுவதா?” என்று அவர் சிரித்தார். “அது மானுடருக்கு தெய்வங்கள் வகுத்த எல்லை. முதலில் அவ்வெல்லையை எவர் கடக்கிறார்களோ அவர்களே மானுடர் அல்லாமலாகிறார்கள். தெய்வங்களின் ஆற்றல் கொண்டவர்கள் ஆகிறார்கள்.”

“நீ கடந்துவிட்டாய். நீ ஆற்றல் கொண்டவனாகிவிட்டாய்” என்றார். அப்போது மைந்தனிடம் பேசும் கனிந்த தந்தையென அணுக்கம் கொண்டிருந்தார். “இனி உன்னால் இயலும். எஞ்சிய அனைவரையும் கொன்று துவாரகையின் மணிமுடியை சூடவேண்டும் என்றால்கூட உன்னால் இயலும். அரசன் மானுடனல்ல, ஒரு வகையான தெய்வம். மானுடனை கட்டுப்படுத்தும் குருதியும் அளியும் அறமும் அவனை கட்டுப்படுத்துவதில்லை. மானுடரை ஆட்டுவிக்கும் சாவு அவனை அச்சுறுத்துவதில்லை. மானுடருக்கு அப்பால் எழுபவனே மானுடனை ஆளமுடியும். மானுடர் தயங்கும் இடங்களில் விழியிமை சலிக்காது கடந்து செல்பவன் அரசன். மானுடர் தலைக்கு மேல் எழுந்து நின்று அவர்களை நோக்கி பேசுபவன்.”

“இங்கு மானுடரின் கால்கள் தயங்கும் இறுதி எல்லைகள் மூன்று. உற்றார் குருதி காண்டல், நம்பிக்கை வஞ்சம், எளியோரை கொல்லுதல். அம்மூன்றையுமே செய்பவர்களே இதுவரை மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். பல்லாயிரம் படைவீரர்களை அவர்கள் கொலைக்களத்திற்கு அனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் தந்தையர், கணவர், உடன்பிறந்தார், மைந்தர் என்பதை அவர்கள் அறிவார்களாயினும் கருத்தில்கொள்வதில்லை. குடிப்பேரவையில் குலமூதாதையரைத் தொட்டு ஆணையிட்டு எடுத்த வஞ்சினத்தையும் அளித்த சொல்லுறுதியையும் கைவீசி இல்லையென்றாக்கி கடந்து செல்பவனே பாரதவர்ஷத்தின்மேல் கோல்கொள்ள முடியும்.”

“தன் மைந்தனை, தன் தந்தையை கொல்லும் திறன்கொண்டவன்தான் பிறரில் அச்சத்தை நிறைக்கிறான்” என்று கணிகர் தொடர்ந்தார். “மானுடன் தெய்வமாகும் தருணம் இது. மானுடரை ஆளும் அனைத்து விசைகளையும் எல்லைகளையும் கடந்து செல்பவன் மாவீரன். நீ முதல் கட்டை அவிழ்த்துவிட்டாய். வென்று மேல்மேலே செல்லவிருக்கிறாய்.” விழிதாழ்த்தி “நான் பதறிக்கொண்டிருக்கிறேன், கணிகரே” என்றேன். “எண்ணுக, நீ சந்தித்த அந்த முடிச்சை எவராலும் அறுக்க இயலாது!” என்றார் கணிகர்.

“ஒரு யவனநாட்டுக் கதை உண்டு. வருவதுரைக்கும் தெய்வங்கள் வகுத்திருந்தன, மிகச் சிக்கலாக கட்டப்பட்ட பன்னிரு அடுக்காலான முடிச்சொன்றை அவிழ்த்தால் அவன் அரசனாகலாம் என்று. அம்முடிச்சு ஒன்றை அவிழ்த்தால் பிறிதொன்று தானாக விழும் தன்மை கொண்டது. ஆகவே அதை எவராலும் அவிழ்க்க இயலவில்லை. பெரும்தத்துவ ஞானியரே அதை அவிழ்க்க முடியும், அவர்கள் முடிசூட விரும்புவதில்லை. அதை அவிழ்ப்பதற்கான கணக்குநூல்கள் பல இயற்றப்பட்டிருந்தன. அவற்றைப் பயின்று அவற்றை அவிழ்க்க முயலும் பல இளைஞர்கள் அங்கிருந்தனர். அப்போது அங்கு ஒருவன் வந்தான். துணிவுள்ளவன், எல்லைகளை கடப்பவன், தெய்வமாகும் தகுதி கொண்டவன். தன் உடைவாளை உருவி அம்முடிச்சை துண்டுகளாக வெட்டி வீழ்த்தினான். அவனை தெய்வமென்று தெய்வங்கள் ஏற்றுக்கொண்டன. அவன் அரசனானான்.”

“யவனத்தில் முடிசூடும் ஒவ்வொரு அரசனைப் பற்றியும் இந்தக் கதை சொல்லப்படுகிறது” என்றார் கணிகர். “நீ முதல் முடிச்சை அறுத்துவிட்டிருக்கிறாய். நீ வெல்வாய். இன்னும் அறுக்க வேண்டிய முடிச்சுகளை காண்பாய். இதுவே வழி என்று உணர்க!” நான் அச்சொற்களால் மெல்ல மெல்ல மீண்டு வந்தேன். “அவன் கழுத்தை அறுக்கையில் என் கை நடுங்கவில்லை” என்று நான் சொன்னேன். “அத்தருணத்தில் அதை கடந்து செல்லவேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது, அதனாலாக இருக்கலாம். ஆனால் என் கை நடுங்கவில்லை என்பது எனக்கு பேரச்சத்தையே இப்போது அளிக்கிறது. என்னை எண்ணியே நான் பதற்றம் கொள்கிறேன்” என்றேன்.

“நீ உன்னை எண்ணி பெருமிதம் கொள்ளவேண்டிய தருணம் இது. மகிழ்க! அனைத்தும் தொடங்கிவிட்டன. அனைத்தும் விசை கொண்டுவிட்டன. இந்த ஆடலில் முதல் கருவை நீக்கி முதல் வெற்றியை நீ அடைந்திருக்கிறாய்” என்று கணிகர் கூறினார்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 42

பகுதி நான்கு : அலைமீள்கை – 25

ருக்மியின் அறையிலிருந்து வெளிவந்தோம். இளையவன் விசாரு என்னை தொடர்ந்து வந்தான். அவன் மிகவும் குழம்பிப்போய் இருப்பதை அவன் உடலசைவுகளிலேயே உணர்ந்தேன். என்னையே நான் வெறுத்து கசந்துகொண்டேன். அவன் மிக மிக எளிமையானவன். ஒரு பெரிய சூழ்ச்சியை அறிவிக்க அவனை அனுப்பமாட்டார்கள். அவனாகவே ஏதும் சொல்லத்தேவையில்லாத, ஆனால் ஓர் ஓலையிலோ ஒற்றனிடமோ அனுப்பமுடியாத ஒரு செய்திக்காகவே அனுப்பியிருப்பார்கள். அதை நான் உணர்ந்திருக்கவேண்டும்.

ஆனால் அத்தருணத்தில் என் உள்ளம் எழுந்து தாவியது. அது ஏன் என்று எண்ணி எண்ணி நானே வகுத்துக்கொண்டிருக்கிறேன். தந்தையே, அது முதன்மையாக அச்சூழலினால் என்று எனக்கு பட்டது. நான் அங்கே களைப்புடன் சென்றேன். முன்னரே எதையும் வகுத்து தொகுத்துக்கொள்ளவில்லை. புதியதாக எழுந்த சூழ்நிலையை என்னால் முழுக்க உணர முடியவில்லை. ஆனால் அது எளிதான ஒன்று, அதை நான் கடந்திருப்பேன். அத்தகைய தருணங்களை கடப்பதற்குரிய தற்கோப்புநிலை என்னுள் எப்போதும் உண்டு.

அதைவிட சிக்கலானது ருக்மியின் இயல்பு. அவர் எளியவர், நேரடியானவர். ஆகவே அச்சூழலை அவர் நான் எண்ணியிராதபடி கொண்டுசென்றார். சற்றேனும் அரசுசூழ்தலை அறிந்த ஒருவர் அவனையும் அவைக்கு அழைத்து இருவரையும் அருகருகே நிறுத்தி எவர் சொன்னது உண்மை என உசாவிக்கொண்டிருக்கமாட்டார். அது ஒரு தந்தை தன் இரு மைந்தரை நிறுத்தி அவர்களில் எவர் பொய்சொன்னார் என ஆராய்வதுபோல் இருந்தது. அதிலிருந்த அப்பட்டமான தன்மையை என்னால் கையாள முடியவில்லை. தந்தையே, ஆழ்கடலில் நீந்துபவர்கள் முழங்காலளவு நீரில் தடுமாறிவிடக்கூடும்.

ஆனால் அனைத்தையும்விட முதன்மையானது நான் அச்சூழலை மதிப்பிட்டது. பெரிய மருத்துவர்கள் இந்தப் பிழையை செய்வதை கண்டிருக்கிறேன். அவர்கள் மாபெரும் மருத்துவர்கள், இடர்மிகு நோய்களை கையாள்பவர்கள். ஆகவே எளிய நோய்களை அவர்கள் மிகைப்படுத்திக்கொள்வார்கள். எதிரி தனக்கு இணையானவனாக இருக்கவேண்டும் என்ற விழைவால் எளிய எதிரியை தனக்கு இணையான பேருருவனாக எண்ணுவதுபோல. அவ்வண்ணம் அச்சூழலை நான் மதிப்பிட்டேன். என் மதிநுட்பத்தால் கையாளவேண்டிய ஆழ்ந்த தருணமாக.

வெளியே செல்லும்போது நான் கசந்திருந்தேன். என்னையே வெறுத்துக்கொண்டிருந்தேன். அதைவிட கண்ணுக்குத் தெரியாத பெரிய எதிரி ஒன்றை எங்கோ கண்டு அஞ்சிவிட்டிருந்தேன். அது என்னை வெற்றிகள் வழியாக கொண்டுசென்றது. என்னை வீங்க வைத்தது. இத்தருணத்தை உருவாக்கி நொறுங்க வைத்தது. எதையோ அது திட்டமிட்டிருக்கிறது. அது பேரழிவேதான். ஆக்கம் துளித்துளியாக நிகழ்கிறது. ஆக்கத்தில் மானுட ஆற்றலே துலங்கித்தெரிகிறது. வீழ்ச்சியில்தான் ஊழின் பேராற்றல் வெளிப்படுகிறது. ஊழ்தான் தவிர்க்கமுடியாததாக, வெல்லமுடியாததாக, புடவிப்பெருநெறிகளால் இயக்கப்படுவதாக தோன்றுகிறது.

விசாரு என்னிடம் “மூத்தவரே, தாங்கள் தூது வரும் செய்தியை அறிந்தேன். ஆனால் மூத்தவர் சுதேஷ்ணனுக்கும் தங்களுக்குமான உறவை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை” என்றான். “உண்மையில் அவையில் அதை கேள்விப்பட்டபோது நான் திகைத்துவிட்டேன். ஆகவே என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை” என்றான். நான் அவனிடம் “உனக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது மிக தற்செயலாக இந்த அவையில் வெளிவந்தது. இங்கு நீ இருப்பாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எவ்வகையிலாயினும் இதை நீ அறிந்தது நன்று” என்றேன். “நான் சுதேஷ்ணனிடம் இதை எதிர்பார்க்கவில்லை, நிலைகுலைந்துள்ளேன், மூத்தவரே” என்று அவன் சொன்னான். “இதில் குழம்ப ஏதுமில்லை. நன்றே நிகழும்” என்றேன்.

“அனைத்தும் நன்றாக முடியவிருக்கிறது என எண்ணினேன். ஒவ்வொன்றும் சிக்கலாகப்போவதாக இப்போது தோன்றுகிறது. சுதேஷ்ணன் இவ்வண்ணம் எண்ணுபவரா?” என்றான் விசாரு. “இது அரசுசூழ்தலில் இயல்பான ஒன்று. உகந்த ஒன்றும்கூட. இன்று நாம் இருவருமே சுதேஷ்ணனின் செய்தியுடன் வந்துள்ளோம். விதர்ப்பத்தின் அரசர் நம்மை ஆதரிப்பார் என்றால் சுதேஷ்ணன் வென்று அரியணை அமர்வார். அது எனக்கும் நலம் பயப்பதே” என்றேன். “ஒருவகையில் இயல்பாக நீயும் உள்ளே வந்திருக்கிறாய். சுதேஷ்ணன் உனக்கும் உகந்ததை செய்தாகவேண்டும். அதன்பொருட்டு நீ மகிழ்ச்சி அடையலாம்.”

“இல்லை. எவ்வகையிலும் நான் என் மூத்தவர் பிரத்யும்னனுக்கு எதிராக திரும்ப இயலாது. நான் அவருக்கு அணுக்கமான இளையோன். அவரை வழிபடுபவன்” என்றான் விசாரு. “ஆனால் என்னால் நம்பவே முடியவில்லை. என்னைப் போலவே மூத்தவரை வழிபடுபவர் என்றே சுதேஷ்ணனை பற்றி எண்ணியிருந்தேன்.” அவன் நிலையழிந்து தலையை அசைத்தான். “ஆனால் உண்மையில் இந்த உளப்பதிவு எனக்கு இருந்திருக்கிறது என இப்போது உணர்கிறேன். சென்ற சற்றுநேரத்தில் என்னுள் ஏற்கெனவே நிகழ்ந்த நூற்றுக்கணக்கான தருணங்கள் ஓடின. சுதேஷ்ணனின் விழைவையும் ஏமாற்றத்தையும் உண்மை என்று என் அகம் சொல்கிறது.”

அது எனக்கு நம்பிக்கையை அளித்தது. அவனுள் துளி ஐயமிருந்தால் போதும், அதை பெருந்தழலாக ஆக்கமுடியும். “சுதேஷ்ணன் தனக்காக இதை செய்யவில்லை. அவருடைய எண்ணம் துவாரகையில் அசுரர் நிலைகொள்ளக்கூடாது என்பதே” என்றேன். “ஆனால் ஃபானு முடிசூட்டிக்கொண்டால் அசுரர் எவ்வண்ணம் ஆளமுடியும்?” என்றான் விசாரு. “பிரத்யும்னனுக்கு தென்னகம் சொல்லளிக்கப்பட்டுள்ளது. ஷத்ரியர் மேல் ஏறி அசுரர் முடிகொள்வதல்லவா அது?” என்றேன். “ஆனால் பிரத்யும்னன் எந்தையின் மைந்தர்” என்று விசாரு சொன்னான். “தன் வடிவாகவே அவர் முன்நிறுத்திய மைந்தர் அவரே.”

“ஆம், ஆனால் ஷத்ரியக்குருதி…” என்று நான் தொடங்க “எவருடைய குருதி என்று முடிவெடுக்கும் இடத்தில் நாம் இல்லை. மூத்தவர்கள் எடுக்கும் முடிவுகளை பின்தொடர்பவர்களே நாம். தந்தையின் முடிவை மூத்தவர் எடுக்கிறார். மூத்தவரை தந்தை என எண்ணுபவன் நான்” என்றான். “ஆம், நாம் இதைப்பற்றி பிறகு பேசலாம்” என்று நான் கூறினேன். பிறகு இருவரும் பேசவில்லை. தங்களுக்குள் ஆழ்ந்து நடந்தோம். எங்கள் காலடிகள் ஒலித்து உடன் வந்தன. நம் காலடிகளைக் கேட்கும் தருணங்கள் நம் வாழ்க்கையில் அரிதானவை. அப்போது நாம் அகம் குவிந்திருக்கிறோம்.

என் உள்ளத்தின் விரைவை நானே எண்ணி வியந்துகொண்டிருந்தேன். உள்ளம் விரைவு கொள்கையில் ஆற்றல் குவிகிறது. ஆற்றல் குவிகையில் மேலும் விசை கொள்கிறது. விரைந்து செயல்படுகையிலேயே உள்ளத்தின் அனைத்து கற்பனைத் திறன்களும், சொல்லடுக்குத் திறன்களும் நினைவுத் தொகையும், கனவு ஆழமும் திரள்கின்றன. உருக்கொண்டு எழுந்து கையருகே வருகின்றன, கருவிகளாகின்றன. ஓய்ந்திருக்கையிலேயே உள்ளம் தன் அனைத்துத் திறன்களையும் இழந்து சிதறி திரிகிறது. சரிந்த நிலத்தில் செல்கையில் நதி ஆற்றல் கொள்வதைப்போல.

நான் அவனை ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தேன். அவனை முன்னரே எனக்கு தெரியும். இளையவன், ஆகையால் எந்த அவையிலும் இல்லாதவன் போலிருப்பவன். உண்மையில் அவன் அவனுக்கு நேர்மூத்தவன் சாருசந்திரனின் நிழலென வாழ்பவன். சாருசந்திரனும் எவ்வகையிலும் அவை முதன்மை கொள்பவன் அல்ல. விளையாட்டுகளில்கூட அவர்களின் குரலை நான் கேட்டதில்லை. அவ்வண்ணம் ஒருவன் இருப்பதே அப்பதின்மருக்கு அப்பால் எவருக்கும் தெரியாது. ஆகவேதான் அவனை தூதனுப்பியிருக்கிறார்கள். அவன் வந்த செய்தி எவருக்கும் தெரியாது.

அவன் அரசு சூழ்ச்சி அறியாதவன். ஆகவேதான் அவையில் நான் உரைத்த சூழ்ச்சிச் சொற்களைக் கேட்டு திகைத்து உளம் அழிந்திருக்கிறான். சற்றேனும் அரசியல் சூழ்ச்சியை அறிந்தவன் ஒருபோதும் என்னிடம் அதைப் பற்றி நேரடியாக பேசியிருக்க மாட்டான். தனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று என்னிடம் காட்டியிருக்கவும் மாட்டான். ஆனாலும் இந்த நிலத்திலிருந்து இவன் கிளம்பும்போது எனக்கான இடர் தொடங்குகிறது. இங்கு நான் சொன்னவை எவ்வகையிலேனும் பிரத்யும்னனை சென்றடைந்தால் அவரிலிருந்து ஃபானுவை சென்றடைந்தால் நான் உயிர் வாழ இயலாது.

இதை நான் கடந்தாக வேண்டும். அதற்கு ஒருவழியே உள்ளது. இவனை அழைத்துக்கொண்டு சேர்ந்து திரும்பிச்செல்லலாம். செல்லும் வழியில் இவன் உளம் நம்பும்படியான ஒரு கதையை சொல்லலாம். மெல்லமெல்ல கரைத்து இங்கு நிகழ்ந்தவற்றை சுதேஷ்ணனிடமும் கூறாமல் ஆக்கிவிடலாம். அது எனக்கு ஓர் அறைகூவல். அத்தருணத்தில் அத்தனை தோல்விகளுக்குப் பின்னரும் நான் என் ஆற்றலை நம்பி மேலும் ஊக்கம் கொண்டேன். இந்த எளியவனை நம்பவைக்க என்வயமாக்க என்னால் இயலும். அதையே ஓர் ஆடலெனக் கொள்ளலாம். என் திறனை நானே மதிப்பிட்டுக்கொள்ளும் ஒரு தருணம்.

அதை எவ்வண்ணம் செய்வது என்று எண்ணி நான் சொல் தொகுக்கத் தொடங்கினேன். இவனை நம்பச் செய்வது எளிது. அதற்கான சொற்களை உரிய முறைப்படி அமைக்கவேண்டும். இளையோனே, இங்கு ருக்மியின் அவையில் நான் சொன்னது சுதேஷ்ணனின் எண்ணம், ஆனால் சுதேஷ்ணன் அதை அவரே பிறஇளையோரிடம் கூறவில்லை. ஆகவே தங்களுக்கு அது தெரியும் என்று பிற இளையோர் அவரிடம் காட்டாமலிருப்பதே முறை. அவரே கூறும்வரை காத்திருக்கலாம். தனக்கு தேவையில்லாத இடங்களில் சென்றதையோ சொல்லறிந்ததையோ வெளிக்காட்டாமலிருப்பதுதான் அரசுசூழ்தலின் நெறி. அவ்வண்ணமே இங்கே நிகழ்ந்தவற்றை மறந்துவிடு. நினைவுகூரும் தருணம் வரும், அப்போது நினைவுகூர்.

பிரத்யும்னனிடம் அவன் இதை சென்று கூறலாம். உண்மையில் அது அவனுடைய கடமை. ஆனால் அதன் விளைவாக எழுவது பிரத்யும்னனுக்கும் சுதேஷ்ணனுக்குமான பூசல். பிரத்யும்னன் சினந்தெழுந்து சுதேஷ்ணனை கொன்றால் அதன் முழுப்பொறுப்பும் விசாருவுக்கே. இத்தருணத்தில் அப்படி உடனடியாக எதையும் செய்யக்கூடாது. சுதேஷ்ணனை பிரத்யும்னனிடம் அடையாளம் காட்டுவதென்றால்கூட அதற்கான தருணம் அமையவேண்டும். ஆகவே இப்போது அதை கூறாமலிருப்பதே முறை.

அதற்கு பிறிதொரு தருணம் வரும். அப்போது முறையாக அறிவிக்கலாம். ஃபானு முடிசூட்டிக்கொண்ட பிறகு, எண்பதின்மரும் ஒன்றாக நின்று அந்நிகழ்வை நிறைவடையச் செய்த பின்னர், அனைவரும் ஓய்ந்திருக்கையில் இவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்ததென்று பிரத்யும்னனிடம் கூறினால் அவர் சுதேஷ்ணனிடம் காட்டக்கூடிய சினம் சற்று குறைந்திருக்கும். இச்சிக்கல் மிக எளிதாக அவிழும். அன்றி இயல்பாக இச்செய்தியை அவன் எவரிடம் கூறினாலும் இடரே நிகழும்.

அத்துடன் ஒன்று, அவன் சுதேஷ்ணனின் சூழ்ச்சியை அறிந்திருந்தான் என சுதேஷ்ணன் அறிந்தால் அவர் அவனை கொல்லவும்கூடும். அவன் அறிந்துவிட்டான் என்பது என் வழியாக சுதேஷ்ணனை உடனடியாக சென்று சேரும். அச்சூழலை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவன் அல்ல அவன். இப்படி ஒரு சூழ்ச்சி ருக்மியின் அவையில் தனக்கு தெரிந்தது என்று எந்நிலையிலும் அவன் நாவிலிருந்து எழவேண்டியதில்லை. அதை நாவிலிருந்தே அழித்துவிடுக! எல்லைகள் எதையும் கடந்ததாக எண்ணிக்கொள்ளாதொழிக! அதுவே இத்தருணத்தில் உகந்தது.

அவ்வாறு சொல்லடுக்கிக்கொண்டதும் நான் நிறைவடைந்தேன். அதை என்னால் உரிய சொற்களில் சொல்லி அவனை நம்பவைத்துவிட முடியும். அங்கிருந்து துவாரகை வரை செல்வதற்கு ஓரிரவும் இரண்டு பகல்களும் இருக்கின்றன. நெடுநேரம் நான் சொல்லவேண்டியதை பலமுறை திருப்பித் திருப்பி சொல்லி நிறுவலாம். அத்துடன் மேலும் கூடுதலாக அவனை கட்டும் ஒரு தளையும் தேவை. தான் அறிந்ததை அவன் சுதேஷ்ணனிடமோ பிறரிடமோ கூறினால் அவனுக்கு தனிப்பட்ட முறையில் ஓர் இடர் வருமென்பதையும் உறுதியாக்க வேண்டும்.

அதற்கான வழியை நான் எண்ணி கண்டடைந்தேன். சுதேஷ்ணன் ருக்மியின் மகள் ஊஷ்மளையை மணந்தவர். சுதேஷ்ணன் மணிமுடி சூடினால் பட்டத்தரசியாக அமரவிருப்பவர் ஊஷ்மளையே. ஊஷ்மளையின் வயிற்றில் பிறந்த மைந்தன் சந்தீபன் துவாரகையின் முடிகொள்வான். ஆகவே ருக்மி பிரத்யும்னனுக்கு மேலாக சுதேஷ்ணனை ஆதரிக்கவே வாய்ப்பு. விசாருவும் ருக்மியின் மகள் காத்யாயினியை மணந்தவன். அவனை சுதேஷ்ணனின் அணுக்கனாக, ருக்மியின் மருகனாகவே பிரத்யும்னன் எண்ணுவார்.

ஆகவே அவன் இவ்வாறு நடந்ததென்று பிரத்யும்னனிடம் கூறினால்கூட அது சுதேஷ்ணனின் சூழ்ச்சியாக பிரத்யும்னன் எடுத்துக்கொள்ளக்கூடும். அவனை சுதேஷ்ணனின் தரப்பை சார்ந்தவன் என்று ஐயுறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இயல்பாகவே உள்ளன. அவ்வாறு ஒரு வாய்ப்பை உருவாக்குவதற்கு நான் தயங்கப்போவதுமில்லை. பிரத்யும்னனிடம் விசாரு சுதேஷ்ணனுடன் இணைந்து பிரத்யும்னனுக்கு எதிராக சூழ்ச்சி செய்ததை நேரில் கேட்டதாகவே நான் சொல்வேன், ஏனென்றால் அது எனக்கு என்னை காப்பதற்கான வழி. அவன் சுதேஷ்ணனிடம் சென்று நிகழ்ந்ததை சொன்னால் அச்செய்தியால் பிரத்யும்னனின் பகை எழும். பிரத்யும்னனிடம் சொன்னால் சுதேஷ்ணனின் பகை மிகும். ஆனால் அவ்வாறொன்று உண்மையில் தனக்கு தெரியாதென்று சொல்லுகையிலேயே இந்த இடர்கள் அனைத்திலிருந்து அவன் முழுமையாக வெளியேறலாம்.

இவ்விரு சொற்கோட்டைகளுக்கும் அப்பால் அவன் செல்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. நான் நிறைவடைந்தேன். என் உள்ளம் மெல்லமெல்ல அமைதி கொண்டது. கடந்துவிடலாம். மிக எளிதுதான். அஞ்சி குழம்பி இதை பெரிதுபடுத்திக்கொள்ள வேண்டியதில்லை. “இளையோனே, நான் இன்றே கிளம்பலாமென எண்ணுகிறேன். இங்கே நாம் நீடு தங்குதல் நன்றல்ல. நம் தூது முடிந்தது. நீ என்னுடன் வருகிறாயா?” என்றேன். “ஆம், நானும் உடன் வருகிறேன்” என்று அவன் சொன்னான். “நன்று, சற்று ஓய்வுகொள்க! நானும் ஓய்வெடுக்கிறேன். மாலையிலேயே ருக்மியிடம் விடைசொல்லிவிட்டுக் கிளம்புவோம்” என்று நான் சொன்னேன். “அவரை மீண்டும் சந்திக்கவேண்டியதில்லை. நம் வணக்கத்தை அவர் அமைச்சரிடமே தெரிவித்துவிடுவோம்.” அவன் “ஆம்” என்றான்.

 

எங்கள் இருவருக்கும் ஒரு கூடாரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று நான் ஆடை மாற்றிக்கொண்டேன். முகம் கழுவி உணவு உண்டு கூடாரத்தில் மூங்கில்கள் நடுவே இழுத்துக் கட்டப்பட்டிருந்த தூளியில் படுத்து கண்மூடி ஓய்வு கொண்டேன். கண்களை மூடியதுமே புலன்களை விழித்துக்கொள்ள வைப்பது என் வழக்கம். நான் கண்களை மூடிக்கொண்டிருப்பதனாலேயே எதையும் அறியாமலிருக்கிறேன் என்று அவன் எண்ணுவான். ஆனால் ஓசைகளினூடாக அவனுடைய நடத்தையை, பதற்றத்தை நான் அறிந்துகொண்டிருந்தேன். அவன் குழம்பியிருக்கிறான் என்று தெரிந்தது.

அவன் நிலைகொள்ளாமல் கூடாரத்தை விட்டு வெளியே சென்றான் மீண்டும் உள்ளே வந்தான். அவன் என்னிடம் பேச விழைகிறான். ஆனால் இப்போது நான் பேசலாகாது. உடனடியாக அவனை கூட்டிக்கொண்டு துவாரகை கிளம்பலாம். ஆனால் உடனே சென்றால் அது ருக்மியிடம் ஐயத்தை உருவாக்கும். எனக்கும் சற்று ஓய்வு தேவைப்பட்டது. ஆகவே துயின்று எழுந்து அந்தியில் கிளம்பலாம் என்று நான் முடிவெடுத்தேன். உடனடியாக கிளம்புவதற்கான எல்லா சூழ்நிலையும் துவாரகையில் இருந்தன. இங்கு பேசப்பட்டதை உடனடியாகச் சென்று சொல்லியாகவேண்டும்.

நான் கண்களைத் திறந்து “இளையோனே, நான் செல்கையில் நீயும் உடன் வருகிறாய், ஓய்வெடு” என்றேன். “நான் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன். நாம் இருவரும் தனித்தனியாக அல்லவா வந்தோம்” என்றான். “ஆம், தூது முடிந்த பிறகு சேர்ந்து செல்லலாம். அதிலொன்றும் பிழையில்லை. இங்கே இயல்பாக சந்தித்துக்கொண்டோம், அதிலென்ன பிழை?” என்றேன். “ஆம், நான் வருகிறேன்” என்று அவன் சொன்னான். ஆனால் அவன் முகத்தில் மேலும் குழப்பம் இருந்தது. “நன்று” என்றபின் புன்னகையுடன் நான் ஒருக்களித்தேன்.

கண்மூடிய பின் அவன் காட்டிய அந்த முகபாவனையை என்னுள் அசையாமல் பெரு ஓவியமெனத் தீட்டி அவன் விழிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சிறு அசைவை கண்டேன். அவன் எதையோ ஒளிக்கிறான் என்று தெரிந்தது. எதை? அவன் என்னிடமிருந்து எதையோ அப்பால் கொண்டு செல்கிறான். எதை? என் உள்ளம் கூர்கொண்டு தேடியது. சற்றுநேரம் கழித்துத்தான் அவன் குடிலுக்குள் இல்லை என்பதை உணர்ந்தேன். ஓசையின்றி எழுந்து நின்றபோது கால்கள் மரத்தரையை தொட்டதுமே என்னவென்று தெரிந்துவிட்டது. அவனிடம் புறா ஒன்று இருக்கிறது. அவன் அதை அனுப்பவிருக்கிறான். இங்கு நிகழ்ந்த செய்தியை இதற்குள் அவன் மந்தணச் சொற்களில் எழுதிக்கொண்டிருப்பான். இன்னும் சற்று நேரத்தில் புறா இங்கிருந்து கிளம்பும். சிறகடித்து அது எழுந்துவிட்டதென்றால் எதுவும் செய்ய இயலாது.

நான் உடைவாளை எடுத்து உடைக்குள் வைத்தபடி ஓசையிலாது வெளியே சென்றேன். இரு கூடாரங்களுக்கு நடுவே இருந்த சிறு இடைவெளியில் மணலில் அமர்ந்து தொடையில் ஓலையை வைத்து எழுத்தாணியால் அவன் மந்தணச் சொற்களை விரைவாக எழுதிக்கொண்டிருப்பதை பார்த்தேன். உடைவாளை உருவி கையில் வைத்துக்கொண்டு அவனை பார்த்தபடி நின்றேன். அவனால் விரைவாக எழுத முடியவில்லை. அவன் உள்ளத்தை நான் நன்கறிந்தேன். அவன் குழம்பிக்கொண்டிருந்தான். ஆனால் எழுதத் தொடங்கியதுமே அவன் உள்ளம் கூர்கொண்டது. அவனுக்கு எல்லாமே தெரிந்துவிட்டது.

அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. முகம் உணர்வுகளால் மாறிக்கொண்டிருந்தது. இளையோர் தங்கள் வாழ்வில் முதல் முறையாக மிகக் கூர்கொண்ட செயலொன்றை செய்யும்போது எழும் பதற்றம். அவ்வுணர்வுகளை அவ்வுடல் தாங்கவில்லை. என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அத்தருணத்தில் நான் செய்யக்கூடுவது ஒன்றே. அந்த ஓலை அங்கிருந்து செல்லலாகாது. அந்த ஓலையை பிடுங்கிவிடவேண்டும். அதை உடனே செய்ய முடியும். ஆனால் அது போதாது. அந்த ஓலையை அவன் எழுதிவிட்டான். ஆகவே இனி எந்நிலையிலும் அவன் அதை சொல்லாமல் இருக்கமாட்டான்.

அக்கணம் என்ன நிகழ்ந்தது என பலமுறை எண்ணி எண்ணி வியந்துள்ளேன். அத்தகைய தருணங்களில் மானுடர் பிறிதொரு உடலின் உறுப்பாக ஆகிவிடுகிறார்கள். விரல் செய்வதற்கு விரல் பொறுப்பல்ல அல்லவா? நான் பிறிதொன்று எண்ணாமல் மூன்றடி முன்வைத்து வாளை ஓங்கி அவன் தலையை வெட்டினேன். வாளின் வீச்சொலி எழுந்த கணம் அவன் திடுக்கிட்டுத் திரும்பி என்னை பார்த்தான். அந்தப் பார்வையையே என் வாள் இரண்டாக வெட்டியது. அவ்வுணர்வு அவ்வண்ணமே மலைத்து உறைந்து நின்ற விழிகளுடன் அவனுடைய துண்டுபட்ட தலை கழுத்தில் இருந்து சரிந்து தசைத் தொடர்பொன்றால் தொங்கியது.

குருதிக்கொப்பளிப்பின் ஒலி எழுந்தது. குருதியின் கனவுத்தன்மைகொண்ட மணம். அவன் பக்கவாட்டில் விழுந்து கால்களும் கைகளும் மணலில் துழாவித் துழாவி தவிக்க உடல் துடிக்கத் தொடங்கியது. குருதி கொப்பளித்து கொழும்சரடுகளென மணலில் இறங்கி வற்றி மறைந்தது. அவன் துடித்துக்கொண்டிருந்த மெல்லிய ஓசை என் உடலை கிளரச் செய்தது. மெய்ப்புகொண்டு என் கண்களில் நீர் நிறைந்தது. என் பற்கள் கிட்டித்திருந்தன. தந்தையே, என் உடல் காமம் கொண்டதுபோல் கிளர்ந்திருந்தது.

நான் அவன் கையிலிருந்த ஓலையை எடுத்துக்கொண்டேன். அவனை கூர்ந்து பார்த்தபின் சுருட்டி என் இடைக்கச்சையில் வைத்தேன். எவரேனும் பார்க்கிறார்களா என்று பார்த்தேன். பின் சிற்றடி வைத்து மெல்ல கூடாரத்திற்குள் நுழைந்து என் பயணப்பையை எடுத்தேன். பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மெல்ல வெளியே வந்தேன். என் புரவி அருகேதான் நின்றிருந்தது. அதன் கழுத்தில் கொள்ளு போடப்பட்ட பை தொங்கியது. அதில் ஏறிக்கொண்டேன். அதை தட்டி மெல்ல நடக்கச்செய்து கூடாரங்களின் நடுவிலூடாக எல்லை நோக்கி சென்றேன். என் முகத்திலும் முழங்கையிலும் குருதி தெறித்திருந்தது. மேலாடையால் அதை துடைத்துக்கொண்டேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 41

பகுதி நான்கு : அலைமீள்கை – 24

தந்தையே, நான் அந்தத் தருணத்திற்காக எவ்வகையிலும் ஒருங்கியிருக்கவில்லை. நுண்ணிய சூழ்ச்சிகளை ஒருக்கி, சொல்தொகுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைப்போன்ற நேரடியான அடியை எதிர்கொள்ள முடியாது. என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் தத்தளித்தபோது தோன்றியது, அதை நேரடியாகவே எதிர்கொள்ளவேண்டும் என்று. “எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளவேண்டியவர்கள் நாங்கள் எண்பதின்மர். எங்களுக்குள் வேறுபாடென ஏதுமில்லை. இப்போது அவ்வேறுபாட்டைச் சொல்ல முற்படுபவர் எங்களுக்குள் பிரிவை உருவாக்க எண்ணுபவர் என்றே பொருள்படுவர்” என்றேன்.

“நான் என் மகள்களை அங்கே அரசியராக அனுப்பியிருக்கிறேன்” என்று ருக்மி சொன்னார். “அவர்களின் நலனை நான் நோக்கவேண்டும். அத்துடன் என் மருகர்களின் நலனையும் நாடவேண்டும். அனைத்திற்கும் மேலாக என் நாட்டுநலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.” அவரால் எளிய நேரடித்தாக்குதல்களை எளிதாக எதிர்கொள்ளமுடியும் என்று தெரிந்தது. ஆகவே எதிரியை எளிய நேரடிச் சொல்லாடலுக்கு இழுக்கிறார். அவரை நான் என் வழக்கமான சொற்பெருக்கால் திணறச் செய்திருக்கவேண்டும். ஆனால் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். மேலும் செய்வதற்கொன்றும் இல்லை.

“நான் கூறுவது இதுதான், ருக்மிணியின் மைந்தர்களுக்கு, குறிப்பாக பிரத்யும்னனுக்கு, அவர்களுக்கென தனி நிலமோ பிறிதொன்றோ சொல்லுறுதி அளிக்கப்பட்டுள்ளதா?” என்றார் ருக்மி. “அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நாங்கள் எண்பதின்மரும் எங்களுக்குள் முடிவெடுத்து பகிர்ந்துகொள்வது, அதில் பிறர் இடம்பெற வேண்டியதில்லை” என்றேன். சில கணங்களுக்குப் பின் “இது பிரத்யும்னனின் சொல்லும்கூட என்று என்னால் எப்படி நம்ப முடியும்?” என்றார். நான் மறுமொழி சொல்வதற்குள் “பிரத்யும்னனிடமிருந்து எனக்கு ஒரு நேரடிச்சொல் வேண்டும்” என்றார்.

அதை நான் முன்னரே கணித்திருந்தேன் என்பது எனக்கே என்னைப்பற்றிய நிறைவை அளித்தது. “விதர்ப்பரே, நான் பிரத்யும்னனின் சொல்லுடன்தான் இங்கு வந்திருக்கிறேன்” என்றபின் எனது கணையாழியை எடுத்துக் காட்டினேன். அவர் அதை வாங்கி பார்த்தார். “ஆம், இது ருக்மிணியின் கணையாழி” என்றார். “சுதேஷ்ணனிடமிருந்து எனக்கு கிடைத்தது, அவருக்கான தனிமுத்திரை அந்த வைரத்திற்குள்ளேயே பொறிக்கப்பட்டுள்ளது. சுதேஷ்ணன் இச்சொல்லை உரைக்கும் உரிமையை அளித்து என்னை அனுப்பியிருக்கிறார். முடிசூட்டிக்கொண்ட பின்னர் பிரத்யும்னனுக்கு தென்னிலத்தை முழுதாக அளிப்பதாக ஃபானு உறுதி அளித்திருக்கிறார். ஆகவே ஃபானுவுக்கு தன் முற்றாதரவை பிரத்யும்னன் அளிக்கிறார்” என்றேன். “தென்னிலமெனில்?” என்றார். “விதர்ப்பமும் அவந்தியும் உட்பட அனைத்து நிலங்களையும் ஆள்பவராக பிரத்யும்னன் மாறவிருக்கிறார்” என்று நான் சொன்னேன்.

ருக்மி திகைத்தவர் போலிருந்தார். என்னிடம் எதையோ பேச விரும்புபவர்போல. அவருடைய முகம் பதற்றத்தை காட்டிக்கொண்டிருந்தது. குழம்பியவர்போல தத்தளிப்பவர்போல. கூரிய அறிவுத்திறன் கொண்டவரல்ல என்று நான் முன்னரே அறிந்திருந்தேன். ஆகவே அவருடைய அந்தத் தத்தளிப்பு அரசியல் சூழ்ச்சியினால் அல்ல, அவரால் ஆளமுடியாத ஒன்றை தொட்டுவிட்டதனால் என்று தோன்றியது. கண்கள் சுருக்கி தாடியில் விரலோட்டியபடி “இந்தக் கணையாழி தங்களுக்கு எப்போது தரப்பட்டது?” என்றார். நான் ஒருகணம் தயங்கி “கிளம்பும்போது” என்றேன். “கிளம்பும்போதென்றால்?” என்றார்.

“துவாரகையிலிருந்து இங்கு வருவதற்காக நான் கிளம்பிக்கொண்டிருந்தேன். அப்போது பிரத்யும்னன் என்னை சந்திப்பதற்காக தன் ஏவலனை அனுப்பியிருந்தார். ஏவலனுடன் நான் சென்றபோது அங்கு தனியறையில் இருந்தவர் சுதேஷ்ணன். அவரிடம் தலைவணங்கி இப்பயணத்தை நான் செய்யவிருப்பதாக சொன்னேன். அவர் மாதுலர் ருக்மி நேரில் கேட்கக்கூடும், மூத்தவர் ஃபானுவை அரசுசூட முடிவெடுத்திருப்பது உண்மையா என்று. அவரிடம் நாங்கள் ஏற்கெனவே விரிவாக பேசியிருப்பதனால் அத்தனை எளிதாக இச்செய்தியை அவர் நம்பியிருக்க வாய்ப்பில்லை என்றார். குழம்பிய நிலையில் இருப்பார். பொதுவாக உச்சகணங்களில் திரிபுகளும் மிகும் என்பதனால் எதையும் ஏற்றுக்கொள்ளாதிருப்பதே நன்று என்று ஷத்ரியர் எண்ணுவதுண்டு என்றார்” என்று நான் சொன்னேன்.

சுதேஷ்ணன் கூறும் நிலையை நான் புரிந்துகொண்டேன். “ஆனால் நாம் அவையில் பேசியதும் எண்பதின்மரும் கூடி முடிவெடுத்ததும் எவ்வண்ணமோ ஒற்றர்களினூடாக அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது” என்றேன். “ஆனால் அப்போதுகூட அது நாங்கள் ஏதேனும் அரசியல் சூழ்ச்சி கருதி அவ்வாறு நடித்துக்கொண்டிருக்கலாம் என்றே அவர் எண்ணுவார். ஏனெனில் நாங்கள் விரிவான படைநகர்வையே திட்டமிட்டிருந்தோம். ஓரிரு நாட்களுக்குள் அவந்தியின் படைகளுடன் துவாரகைக்குள் வந்து முடிகொண்டு மூத்தவர் பிரத்யும்னனை அரசணையச் செய்ய வாய்ப்புண்டென்றே எண்ணியிருந்தோம்” என்றார் சுதேஷ்ணன்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். “ஆகவே இது அறுதி முடிவுதான் என்பதை மாதுலர் ருக்மிக்கு உறுதியாக சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் உன்னிடம் கேட்கக்கூடியது ஒன்றாகவே இருக்கும். படைகள் இங்கு இதற்கு மேலே இருக்கவேண்டுமா திரும்பிச்செல்ல வேண்டுமா என்று. நாம் அதற்கான சொல்லையே அவருக்கு உரைக்கவேண்டும்” என்றார் சுதேஷ்ணன். “நான் என்ன சொல்லவேண்டும், மூத்தவரே?” என்று அவரிடம் கேட்டேன்.

“விதர்ப்பத்தின் படைகளுடன் உடனடியாக திரும்பிச்செல்லவேண்டும் என்று அவரிடம் சொன்னால் அது ஏதோ சூழ்ச்சி என்றே கருதப்படும். படைகள் அங்கிருக்கட்டும். ஃபானு துவாரகையில் முடிசூட்டிக்கொண்ட பின்னர் படிப்படியாக படைகள் அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்தால் போதும். அங்கு படைகள் இருப்பது ஒருவகையில் துவாரகைக்கு நன்றும் கூட. ஃபானு முடிசூட்டிக்கொண்டதை ஒவ்வாத பிற ஷத்ரியர்கள் எவரும் துவாரகைமேல் படைகொண்டு வருவதைப்பற்றி எண்ணாமலிருக்கக் கூடும்” என்றார் சுதேஷ்ணன்.

“ஆம்” என்று நான் சொன்னேன். சுதேஷ்ணன் “மாதுலர் ருக்மி உன்னிடம் ஏதேனும் சான்று கேட்கக்கூடும்” என்றார். “ஆம், அதற்காகவே நான் முயன்றேன். ஓர் ஓலை எனக்குக் கிடைத்தால் நன்று” என்று நான் சொன்னேன். சுதேஷ்ணன் “ஓலை அரசாணைப்படி எழுதப்படுவது. முறையான அரசாணை பிறப்பிக்கப்படும் வரை ஃபானு அன்றி வேறொருவர் ஓலை எழுதுவதில் பொருளில்லை. பிரத்யும்னனிடம் ஓலை வாங்கலாம். ஆனால் அது தனிப்பட்ட ஓலையாக அமையும். எதன்பொருட்டு என்றாலும் ஃபானுவை அரசராக்க முடிவெடுத்த பின்னர் அவரை கலந்துகொள்ளாமல் பிரத்யும்னன் தன்னுடைய மாதுலருக்கு அவ்வாறு ஒரு ஓலை அனுப்புவது முறையா என்றும் தெரியவில்லை” என்றார்.

அதன் பின்னர் இந்த கணையாழியை நீட்டினார். “ஆகவே இந்தக் கணையாழியை உனக்கு அளிக்கிறேன். இதை மாதுலரிடம் காட்டுக! இது நெடுங்காலம் முன் அவரால் எனக்கு அளிக்கப்பட்டது. இதைப் பார்த்ததும் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்வார். உன் சொற்களுக்கு மதிப்பு வரும். என் சொற்களே உன்னுடையவை என்று அவர் நம்ப ஏதுவாகும்” என்றார். அவ்வாறுதான் இதை பெற்றேன் என்றேன். சீராக சொல்லிவிட்டேன், ஆனால் மிக எளிமையான ஒரு காட்சியாக அதை சொன்னேன். ருக்மியைப் போன்றவர்களுக்கு விரிவாக ஆனால் எளிமையாக சொல்லவேண்டும். நாம் பேசும்போதே அவர்கள் தங்களுக்குள் எண்ணம் சூழ்ந்துகொண்டும் இருப்பார்கள்.

பெருமூச்சுடன் “உங்களிடம் எப்படி கூறுவதென்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கணையாழிக்குப் பிறகு நம்பாமல் தயங்குவதிலும் பொருளில்லை. எதையாவது முடிவுசெய்தாக வேண்டும்” என்று ருக்மி சொன்னார். “யாதவ மைந்தரே, பிரத்யும்னனின் தூதரென ஒருவர் முன்னரே இங்கு வந்திருக்கிறார்.” என் உள்ளம் அதிர்ந்தாலும் நான் அதை அடக்கிக்கொண்டேன். “எவர்?” என்று நான் கேட்டேன். என் உள்ளம் படபடப்பதை விழிகள் காட்டின. ஆனால் அதை காணும் அளவுக்கு ருக்மி கூரியவர் அல்ல. “ருக்மிணியின் மைந்தரில் இளையவர், என் மகளை மணந்தவர்” என்றபின் “அவரை தாங்கள் சந்திக்கலாம்” என்று திரும்பி அப்பால் நின்ற ஏவலனை நோக்கி தாழ்ந்த குரலில் ஆணையிட்டார்.

அவன் தலைவணங்கி வெளியே சென்றான். அத்தருணத்தில் நான் என்னை மீண்டும் தொகுத்துக்கொள்ளத் தொடங்கினேன். பிரத்யும்னனிடமிருந்து எவ்வாறு ஒரு தூது வரமுடியும்? இரண்டு வாய்ப்புதான் உள்ளது. ஒன்று பிரத்யும்னனே ஃபானுவின் தலைமையை உள்ளூர ஏற்காமல் அன்று உண்டாட்டு அவையில் நடித்திருக்கலாம். அச்செய்தியை ருக்மியிடம் கூறுவதற்காக தன் இளையோரில் எவரையாவது எவருக்கும் தெரியாமல் இங்கு அனுப்பியிருக்கலாம். அல்லது பிரத்யும்னனின் தம்பிகளில் ஒருவர் தானாக முடிவெடுத்து இங்கு வந்திருக்கலாம். அன்றி பிரத்யும்னனின் தம்பியரில் ஒருசிலர் கூட்டமைவாக முடிவெடுத்து முரண்கொண்டிருக்கலாம். ஆம், அவ்வாறுதான் வாய்ப்பு.

ஆனால் எவருடைய கூட்டமைப்பு அது? எதன் பொருட்டு அங்கு வந்திருக்கிறார்கள்? என் உள்ளம் தொட்டுத் தொட்டுத் தவித்து இறுதி முடிவுக்கே வந்தது. அது பிரத்யும்னனுக்கு எதிரான ஒரு சூழ்ச்சிதான். அவர் என்ன சொல்லியிருக்கக் கூடும் என்பதை மீண்டும் தொகுத்துக்கொண்டேன். ‘பிரத்யும்னன் ஃபானுவை ஏற்றுக்கொண்டால்கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் ஃபானுவுக்கு எதிராக முடிசூடி அமர விழைகிறோம். அதற்கு ருக்மியின் உதவி கிடைத்தால் நன்று.’ ஆம், அதைத்தான் கூறவிருக்கிறார்கள், பிறிதொன்றல்ல. அது ஒரு சூழ்ச்சி. அதில் நான் எடுக்கவேண்டிய நிலையே இப்போது முன் நிற்கிறது.

நான் உறுதி கொண்டபோது அவைக்குள் இளையவன் விசாரு வந்தான். என்னைப் பார்த்ததும் குழம்பியபடி ருக்மிக்கும் எனக்கும் தலைவணங்கினான். “அமர்க!” என்று அவர் கூறியதும் என் முன்னால் இருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டான். ருக்மி “இப்போது இரண்டு தூதுகள் வந்துள்ளன. ஒருவர் வந்தது பிறிதொருவருக்கு தெரியவில்லை என்று எண்ணுகின்றேன்” என்றார். “ஆம், நான் வருவது அவனுக்கு தெரியும். எவர் சொல்லுடன் என்று தெரியாது” என்றேன். “நேற்று உண்டாட்டறையில் எடுக்கப்பட்ட முடிவின்படி நான் வந்தேன். ஆனால் என் நோக்கம் வேறு. இவர் பிறிதொரு தனி முடிவின்படி வந்திருக்கிறார் போலும்” என்றேன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் உடல் பதறிக்கொண்டிருந்தது.

“உங்கள் தூதுகள் முரண்படுகின்றன. என்னை குழப்புவது அதுதான்” என்றார் ருக்மி. அத்தருணத்தில் அதை கடப்பதற்கான சூழ்ச்சியை என் உள்ளம் சென்றடைந்தது. ஒரு தெய்வம்போல எழுந்து என் முன் நின்றது. முன்னர் நான் எண்ணியிராதது. அக்கணத்தில் அது தோன்றியமையாலேயே நான் அதற்கு முற்றாக ஆட்பட்டேன். மற்றொன்று எண்ணாதவன் ஆனேன். ஆனால் அது அத்தருணத்தை கடப்பதற்கான எளிய சூழ்ச்சி மட்டுமே. மிகமிக எளியது, சிறுமைகொண்டது. ஆனால் அப்போது அது தெரியவில்லை. அவ்வண்ணம் ஓர் எண்ணம் எழுந்ததே ஊழ் என இப்போது எண்ணுகிறேன்.

“விதர்ப்பத்தின் அரசே, இளையோன் வந்ததும் நான் வந்ததும் ஒன்றை சொல்வதற்காகவே. நான் இதுவரை சொன்னது எதன்பொருட்டு நான் முறைமைசார்ந்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதற்கு. இனிமேல் சொல்லப்போவதே இக்கணையாழியை அளித்தவர் மெய்யாக எனக்கு சொன்னது. அதனால்தான் கணையாழியை அவர் எனக்கு அளித்தார்” என்று நான் சொன்னேன். “துவாரகையின் மணிமுடியை ஷத்ரியர்கள் சூடவேண்டும், அதற்கு தாங்கள் உதவ வேண்டும். ஃபானுவின் முடிசூடுகையை தூய ஷத்ரியக் குருதி கொண்டவர்களாகிய ருக்மிணியின் மைந்தர் ஏற்கவில்லை என்று கூறுவதற்காகவே நான் வந்துள்ளேன். அவனும் அதற்காகவே வந்துள்ளான்.”

“அரசே, பிரத்யும்னன் மிகையுணர்வுகளுக்கு ஆட்பட்டு ஃபானுவின் முடிகொள்கையை ஆதரித்திருக்கிறார். அதை அந்த அவையில் பிற மைந்தர் எதிர்க்க முடியவில்லை. ஆனால் அவர்களால் அதை ஏற்க முடியாது. விதர்ப்பம் ஷத்ரியர்களே துவாரகையின் அரியணையில் அமரவேண்டும் என்று எண்ணுமென்றால் சுதேஷ்ணன் அதை ஆதரிப்பார். அவர் தலைமையில் இளையோர் பலர் இருக்கிறார்கள். அவர்களும் தங்களுடன் இருப்பார்கள். அச்செய்தியுடன்தான் இளையோன் இங்கு வந்திருக்க வேண்டும். அச்செய்தியை மறுபடியும் உறுதிப்படுத்தும் கணையாழியை நான் கொண்டு வந்தேன். இருமுனை செய்தி என்று இதை கொள்க! இதற்குள் முரண்பாடு ஏதுமில்லை” என்றேன்.

அத்தருணத்தை மிகச் சிறப்பாகக் கடந்துவிட்டேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நானே எனக்குள் புன்னகைத்துக்கொண்டேன். தந்தையே, மதிசூழ்கையில் ஈடுபடுபவர்கள் தங்கள் மதிசூழ்கையைப்பற்றி மகிழத்தொடங்கும்போது பிழை செய்யத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு மதிசூழ்கைக்குப் பின்னரும் ஐயமும் குழப்பமும் கொண்டு அவர்கள் பிழைகளை எண்ணி எண்ணி நோக்கி அடையும் ஐயமும் பதற்றமும் பிழைநோக்கும் எஞ்சும் வரை மட்டுமே மதிசூழ்கையாளர்களாக திகழக்கூடும். சற்றே மகிழ்பவர்கள் வைக்கும் அடி பிழைக்கும். அத்தருணத்தில் அவ்வாறு நிகழ்ந்தது.

ருக்மி எழுந்து “ஆனால் இவ்விரு தூதுகளும் மாறுபடுகின்றன. மருகன்  விசாரு வந்து என்னிடம் கூறியது எண்பதின்மரும் ஒரே முகம்கொண்டு ஃபானுவை ஆதரிக்கிறார்கள் என்றுதான். ஃபானுவின் தூதராக தாங்கள் வருவீர்கள் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. என் மருகன் வந்து என்னிடம் பேசினாலொழிய ஏற்கமாட்டேன் என்பதற்காக அவனை அனுப்பியிருக்கிறார்கள். எவ்வண்ணம் பிறிதொரு எண்ணத்தை சுதேஷ்ணன் தங்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறான்?” என்றார்.

என்னால் ஒருகணம் எதையுமே எண்ண முடியவில்லை. என்ன நிகழ்கிறது என்று தெரியவில்லை. “அந்தத் தூதின் பொருள் எனக்கு புரியவில்லை” என்றேன். அக்கணம் முழுமையாகவே தோற்றேன். ருக்மி “தெளிவாகவே கூறிவிடுகிறேன். துவாரகையின் கருவூலத்திலிருந்து செல்வத்தை என்னிடம் கொண்டு வந்து அளித்திருந்தார்கள் பிரத்யும்னனும் சுதேஷ்ணனும். அப்பொருளைக்கொண்டே நான் படை திரட்டினேன். அப்பொருளுக்கு இணையான பொருளையோ அல்லது அப்பொருளுக்கு இணையான படையையோ துவாரகைக்கு திருப்பி அளித்துவிடவேண்டும் என்று கூறவே  விசாரு வந்தான். அது பிறிதொருவர் அறியாத மந்தணம் என்பதனால்தான் இவனை அனுப்பியிருக்கிறார்கள்” என்றார்.

நான் கைகள் தளர்ந்து தொங்க அங்கே நின்றேன். நான் அடைந்த அவை வெற்றிகள் அனைத்தும் அந்த முனைநோக்கி என்னை கொண்டுவந்து சேர்க்கவே என்று அப்போது உணர்ந்தேன். என்னை மீறிய பெருவிசை ஒன்றின் ஆணை அது. என்னை வெல்லச்செய்து, ஆணவம் கொள்ளச்செய்து, மேலும் மேலும் நுண்மை கொள்ள வைத்து அறுதிப்புள்ளியில் சிறு பிழை ஒன்றினூடாக கீழே வீழ்த்தியது அது. மேலே தூக்கி கீழே வீழ்த்த தெய்வங்களுக்கு இருக்கும் விழைவு வியப்பூட்டுவது. அவை மானுடரை வைத்து விளையாடவில்லை. அவை மானுடர்மேல் வஞ்சம் கொண்டிருக்கின்றன.

அத்தருணத்தில் நான் இயற்றிய பிழை என்ன என்று பின்னர் பலமுறை என் நெஞ்சில் ஓட்டிக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் ஒன்று தோன்றுகிறது. இன்று இவ்வண்ணம் உணர்கிறேன், என் நாவன்மையில் நான் கொண்ட நம்பிக்கைதான். இப்போது இத்தருணத்தை கடப்போம், இனி எழுவதை எவ்வண்ணமேனும் பேசி வெல்வோம் என்று எண்ணிக்கொண்டேன். மேலும் சில செய்திகளை தெரிந்துகொள்ளவும் பேச்சை தொகுத்துக்கொள்ளவும் எனக்கு பொழுது தேவை, அவ்வளவுதான்.

அந்த எண்ணம்போல் ஆணவம் பிறிதில்லை. நாம் எல்லாவற்றையும் பேசிக்கடந்துவிடலாம் என்று எண்ணுவது மாயை. பேசப்பேச உருமாறாமல் நின்றுகொண்டிருக்கும் சில உண்டு. மலையென எழுந்த மிகப் பெரியவற்றை வென்றிருப்போம். தொடப்படாமல் அணு ஒன்று நம் முன் நின்றிருக்கும். அத்துடன் நாம் ஒரு தருணத்தை கடந்துசெல்ல சொன்ன சொற்கள் முளைத்துப் பெருகி ஒன்று பிறிதொன்றை வளர்த்து பேருருக்கொண்டு பிறிதொரு இடத்தில் நம்மை வழிமறிக்கும். தந்தையே, ருக்மியின் அவையில் நான் அடைந்தது ஊழின் தருணம்.

“பிரத்யும்னனின் இளையோரிடையே ஒரு சாரார் ஃபானுவுக்கு எதிராக கிளம்புகிறார்கள் என்பதை என்னால் நம்ப இயலவில்லை. அவர்கள் பதின்மரும் ஒற்றைக்குரல் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார் ருக்மி. அப்போது அந்த அவையிலிருந்து வெளியே செல்வதன்றி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் “தெளிவாக உரைக்கிறேன், அரசே. ஒருவேளை இளையோனுக்கு புரியாமல் இருக்கலாம். மூத்தவர் சுதேஷ்ணன் தான் அரியணை அமரவேண்டும் என்று எண்ணுகிறார். இப்போதல்ல, நெடுங்காலமாகவே அந்த எண்ணம் அவருக்கு உண்டு” என்றேன்.

“அவர் ஃபானுவின் இளையோராகிய எங்களிடம் அதைப்பற்றி பேசியிருக்கிறார். ஃபானுவின் இளையோர்களில் ஒரு சாரார் சுதேஷ்ணன் முடிசூடுவதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். சுதேஷ்ணன் முடிசூடுவதென்றால் இரண்டாம் பொறுப்பில் என்னை அமர்த்துவதாக எனக்கு சொல்லுறுதி அளித்திருந்தார், ஆகவே நான் அவரை ஆதரித்தேன். நான் சுதேஷ்ணன் தலைமையில் முடிவிழைபவர்களில் ஒருவன். நான் இங்கு வந்தது சுதேஷ்ணனின் தனிப்பட்ட தூதுடன்தான். அரசே, ஷத்ரியர்கள் துவாரகையில் மணிமுடி சூடி அமரவேண்டுமெனில் அதற்கு ஒற்றை வழிதான் உள்ளது, தாங்கள் சுதேஷ்ணனை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினேன்.

ருக்மி அதை ஏற்பார் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் இயல்புப்படி மேலும் குழப்பத்தை அடைவார். எவரிடமேனும் மேலும் உசாவி மேலும் குழம்பி எவரேனும் சொல்லும் ஒரு முடிவைத்தான் அவர் எடுப்பார். ஆனால் அந்தத் தருணத்தில் அனைத்தையும் ஒருங்குபடுத்தி ஒரு தரப்பாக மாற்றி கடந்துவர என்னால் இயன்றது. கடந்துவிட்டேன் என்றுதான் எண்ணினேன். ருக்மி “நான் சுதேஷ்ணனின் தூதை கருத்தில் கொள்கிறேன். அவந்தியின் அரசனிடம் பேசுகிறேன். முடிந்தால் சுதேஷ்ணனிடம் பிறிதொருமுறை சென்று உசாவுகிறேன். எளிதில் நான் முடிவெடுக்க இயலாது. ஏனென்றால் பிரத்யும்னனும் எனது மகளை மணந்தவனே” என்றார்.

“ஆம், ஆனால் பிரத்யும்னனுக்குப் பிறகு முடிசூடவிருப்பவர் தங்கள் மகளின் வயிற்றில் உதித்தவர் அல்ல. சம்பராசுரரின் மகளின் வயிற்றில் உதித்த அநிருத்தன் என்பதை மறக்கவேண்டியதில்லை என்று உணர்க!” என்றேன். ருக்மியின் விழிகள் மாறின. அவர் தாடியை உருவியபடி “ஆம், அவ்வெண்ணம் எனக்கும் உண்டு” என்றார். “நீங்கள் அதை எண்ணியே ஆகவேண்டும். பிரத்யும்னன் முடிசூடுவது ஷத்ரியர்கள் தலைமை கொள்வது அல்ல. ஷத்ரியர்களினூடாக அசுரர்கள் குருதி தலைமை கொள்வதுதான்” என்றேன். ருக்மி “ஆம், அதை எண்ணி முடிவெடுப்போம். இத்தூது நிறைவடைந்தது என்று கொள்க!” என்றார்.

அவர் எழுந்து செல்வதை பார்த்தபடி நான் நின்றிருந்தேன். என் உள்ளம் ஓய்ந்து கிடந்தது. ஒரு முடிவை கண்ணருகே கண்டேன். அங்கே நிகழ்ந்த அனைத்தையும் ஒவ்வொன்றாக என்னுள் தொட்டு எடுத்தேன். ஒரு கூரிய குளிர்போல அச்சம் என்னுள் எழுந்தது. என்னை சந்திக்க கணிகர் ஏன் மறுத்தார் என்று உணர்ந்தேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 40

பகுதி நான்கு : அலைமீள்கை – 23

தந்தையே, ஒவ்வொருவரும் நம்முள் ஒவ்வொன்றாக பதிந்திருக்கிறார்கள். நாம் அதை நம் எல்லைகளைக் கொண்டே மதிப்பிட்டிருக்கிறோம், அவர்களின் எல்லைகளைக் கொண்டு அல்ல. நம் எல்லைகளை வகுப்பவை நம் விழைவுகள், அச்சங்கள், சினங்கள். அதற்கும் அப்பால் நம் ஆணவம். நாம் ஒவ்வொருவரையும் நம் ஆணவத்தை அளவுகோலாகக் கொண்டே மதிப்பிடுகிறோம். நான் ருக்மியை அவ்வண்ணம் மிகக் கீழே மதிப்பிட்டிருந்தேன். அது அவர் பேசத்தொடங்கியதுமே தெளிவடைந்தது.

ருக்மி அரசர் என்பதை நான் மறந்துவிட்டேன். அரசர்களை ஒருபோதும் தனிமனிதர்களாக எண்ணலாகாது. அவர்கள் அமைச்சர்களும் ஒற்றர்களும் இணைந்து உருவான பேருரு ஒன்றின் கண்திகழ் வடிவங்கள். பலநூறு விழிகளும் பல்லாயிரம் கைகளும் கொண்டவர்கள். பெருந்திரளெனப் பெருகிய ஓருருவர். நான் அன்று அறிந்தேன், ஆளும் பொறுப்பில் இருக்கும் எவரையும் மனிதராக எண்ணி மதிப்பிடலாகாது, அவர்களின் அரசநிலையையும் கருதியாகவேண்டும். ருக்மி என்னிடம் “நான் உங்களிடம் அறியவிழைவது ஒன்று உண்டு, இளையவரே” என்றார். “கூறுக!” என்றேன். “கிருதவர்மன் துவாரகைக்கு வந்தபின் சந்தித்த அரசகுடியினர் எவர்?” என்றார். நான் “யாதவ மைந்தர் அனைவரையும் சந்தித்தார்” என்றேன். “அதை அறிவேன். அதற்கும் மேல்” என்றார்.

அவர் சொல்வதென்ன என்று உடனே புரிந்துகொண்டேன். அவர் அதை அறிந்திருப்பார் என்று நான் எண்ணவே இல்லை. ஏனென்றால் மிகமிக மந்தணமாக அது நிகழ்ந்தது. என் உடன்பிறந்தாரிலும் எவரும் அதை அறிந்திருக்கமாட்டார்கள் என எண்ணியிருந்தேன். தந்தையே, கிருதவர்மன் துவாரகைக்கு வந்தபின், நான் சாத்யகியை கூட்டிவந்த மறுநாள் காலை அன்னையிடமிருந்து ஒரு அழைப்பை பெற்றேன். அன்னை என்னை அழைத்து உரையாடி நெடுநாட்களாகிவிட்டிருந்தது. அவர்களை நான் நேரில் பார்த்தது தாங்கள் நகரிலிருந்து கிளம்பிய அன்று. அதன்பின் ஒருமுறை அவைக்கு வந்து அன்றைய யாதவ குடித்தலைவர்களை நோக்கி நகர் பொறுப்பிலிருந்து அவர் விடுபடுவதாக அறிவித்தார். அதன் பிறகு நோன்புகள், விழவுகள் எதிலும் அவர் தென்படவில்லை.

அவர் அங்கு இருக்கிறார் எனும் உணர்வு மட்டுமே எஞ்சியிருந்தது. முதலில் அவரைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. பின்பு அவையும் வராமலாயின. எட்டு அரசியரில் ருக்மிணிதேவியையும் ஜாம்பவதியன்னையையும் அன்றி பிறரை எவரும் பார்க்க இயலாமலாயிற்று. அரசு அமர்வதற்கோ பிற சடங்குகளுக்கோ அரிதாக ருக்மிணிதேவி வந்தார். ஜாம்பவதியன்னையும் அவ்வாறே அரிதாகத்தான் தோன்றினார். அரசியென நகரை ஆண்டது சாம்பனின் துணைவியும் அஸ்தினபுரியின் இளவரசியுமான கிருஷ்ணை மட்டுமே.

ஆகவே காலையில் என்னைத் தேடி முகமறியாத சேடி ஒருத்தி வந்து நின்றபோது நான் முதலில் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவளே தன் கணையாழியைக் காட்டி “மூத்த அரசி சத்யபாமையின் தூதுப்பெண் நான்” என்று அறிவித்துக்கொண்டாள். அப்போது அவளை எவ்வாறு எதிர்கொள்வதென்றும் எவ்வகையில் முகமன் உரைப்பதென்றும் எனக்கு தெரியவில்லை. திகைத்த வண்ணம் பேசாமல் நின்றேன். “மூத்த அரசி தங்களை சந்திக்க விழைகிறார்” என்று அவள் சொன்னாள். “எப்போது?” என்று நான் கேட்டேன். “முடிந்தவரை விரைவில்” என்றாள். “நன்று, நான் உடனே வருகிறேன்” என்றேன்.

அவள் சென்ற பிறகு மூத்த அரசியிடமிருந்து வந்த அழைப்பை மூத்தவரிடமும் அமைச்சர்களிடமும் பகிர்ந்துகொண்டு அவர்களின் கருத்தை கேட்டபிறகு முடிவெடுக்கலாமா வேண்டாமா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. உண்மையில் அது எளிய சந்திப்பாக இருக்கப்போவதில்லை. எளிய சந்திப்பாயினும் அதற்கு அரசியல் முதன்மை உண்டு. நானும் அரசியும் என்ன பேசிக்கொண்டோம் என்பதை அறிவதற்கு யாதவ மைந்தர்கள் அனைவருமே விழைவு கொண்டிருப்பார்கள். அங்கு நான் பேசியதன் பொருட்டு அரசியல் தொடர் விளைவுகள் எழக்கூடும். ஆகவே நான் குறைந்தது மூத்தவர் சுஃபானுவிடமாவது கலந்துகொண்ட பின்னரே அங்கு செல்லவேண்டும் என்று விழைந்தேன்.

ஆனால் அவ்வாறு எண்ணியபோது முதலில் என்னுள் எழுந்தது ஒரு வீம்பு. என் ஆணவத்தின் கூர்முனை அது. நான் என்னை மேலெழுப்பி நின்று அதை நோக்கினேன். இத்தருணத்தில் அவர்களுக்கு மேல் நான் நின்றிருப்பவன். அவர்களுக்கு இயலாத ஒன்றை நான் செய்வதை அவர்களுக்கு காட்டியாக வேண்டும். முன்பொரு நாள் உணவறைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டதற்கு எதிர்வினையாக அதை செய்தேனா என்று இப்போதும் சொல்ல முடியவில்லை. அவ்வாறும் இருக்கலாம். மானுட உணர்வுகள் எங்கிருந்து எங்கு செல்கின்றன என்றும் எதை நிகர்க்க எது செய்யப்படுகிறது என்றும் எவராலும் முன்னரே சொல்லிவிட இயலாது.

ஆனால் அத்தருணத்தில் அன்னையை தனியாகச் சென்று பார்ப்பதினூடாக நான் ஈட்டுவது ஒன்று உண்டு என்று எனக்குத் தோன்றியது. ஆகவே நான் அரசியை சந்திப்பதற்குரிய முறையான ஆடைகளுடன் எவருக்கும் அறிவிக்காமல் கிளம்பி அன்னையை பார்க்கச் சென்றேன். கடலோரமாக அமைந்த அவருடைய தவக்கோட்டத்திற்கு உப்பு உருகி வழிந்துகொண்டிருந்த கற்பாதையினூடாக நடந்தேன். அன்னையின் சிற்றறை உப்பரித்திருந்தது. அங்கு அமர்ந்திருந்தபோது சுவர்கள் உயிருள்ள தசைப்பரப்புகள்போல ஈரமும் வெம்மையும் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அங்கு எவ்வண்ணம் வாழ முடியும் என்று வியந்தேன். அங்கு வாழ்வதென்பது தன் உடலை தானே நலிய வைத்துக்கொள்வது, ஒருவகையில் படிப்படியாக இற்று உயிர்விடுவது. அன்னை நோன்பென்ற பெயரில் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.

முதிய சேடி வந்து “அன்னை வருகிறார்” என்று அறிவித்தாள். அரசி என்று அல்ல. சற்று நேரத்தில் அன்னை வந்து என் முன் அமர்ந்தார். நான் முன்பு கண்டிருந்த அன்னை அல்ல. அன்னையிடம் எப்போதும் ஒரு நிமிர்வு இருந்தது, காலடிகள் அனைத்திலும் ஒரு உறுதி இருந்தது. கண்களில் ஆணை கூர்ந்திருக்கும். நேர் நோக்கும் குரலில் நடுக்கிலாத ஒருமையும் இருக்கும். அவையனைத்தையும் இழந்து முற்றாகவே பிறிதொருத்தியாகிவிட்டிருந்தார். நான் அங்கு கண்டது வற்றி ஒடுங்கிய முதுமகளை. முற்றிலும் உள்வாங்கிவிட்டிருந்த விழிகள். பதறி நடுங்கிக்கொண்டிருந்த குரல்.

அவர் உள்ளே வரும்போது முதலில் அது என் அன்னை என்று எனக்கு தோன்றவில்லை. ஆகவே எழுந்து தலைவணங்காமல் திகைத்து அமர்ந்திருந்தேன். நாம் நமக்கு அணுக்கமானவர்களை உடலசைவுகளினூடாகவே அடையாளம் காண்கிறோம் என்பது வியப்பூட்டுவது. உடலசைவு மாறிவிட்டிருந்தால் கண்ணெதிரே ஒருவர் வந்தால்கூட அவர்தான் என்று நம் அகம் எண்ணிக்கொள்வதற்கு நெடுநேரம் பிடிக்கும்.

அன்னை வந்து என்னை வணங்கிய பின்னரே நான் பாய்ந்தெழுந்து வணங்கினேன். “வணங்குகிறேன் அன்னையே, தங்கள் தாள் பணிகிறேன்” என்று கூறினேன். அப்போதும் சென்று அவர் கால் பணிந்து சென்னி சூடுவதற்கு தோன்றவில்லை. அன்னை “அமர்க!” என்று கை காட்டி தன் பீடத்தில் அமர்ந்தார். அதன் பிறகு நான் விழிப்பு கொண்டு மூன்றடி எடுத்துவைத்து குனிந்து அவர் காலடியைத் தொட்டு தலைசூடி மீண்டும் “வணங்குகிறேன், அன்னையே” என்றேன். என் தலைமேல் கைவைத்து வாழ்த்தி அமர்க என்று கைகாட்டினார்.

நான் அமர்ந்ததும் “கிருதவர்மன் வந்ததை அறிந்தேன்” என்றார். முகமன்களோ பிற சொற்களோ இல்லை. ஆகவே அதை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் தத்தளித்து “ஆம், அவர் இங்குதான் இருக்கிறார்” என்று சொன்னேன். “அவரை நான் சந்திக்கவேண்டும்” என்று அன்னை சொன்னார். “நான் ஒருக்குகிறேன்” என்றேன். “இங்கு வேண்டியதில்லை. அங்கு கரையில் ஏதேனும் ஒரு சிறு மண்டபத்திற்கு அவரை வரச்சொல். அவரிடம் நான் ஒரு சொல் உரைக்கவேண்டும்“ என்றார். “ஆணை” என்றேன். “நன்று, இது மந்தணமாக அமைக!” என்றபின் அவர் எழுந்துகொண்டார்.

நான் “அன்னையே” என்றேன். அவர் துவாரகையின் நிலைமை பற்றி ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தேன். மைந்தர்களைப்பற்றி உசாவுவார் என்றும் மைந்தர் மைந்தர்களைப்பற்றி ஏதேனும் அவர் கேட்பார் என்றுகூட எண்ணினேன். அவர் கேட்கும் வினாக்களுக்குரிய விடைகளை நான் முன்னரே ஒருக்கியிருந்தேன். ஒரு சில சொற்களில் அவ்வுரையாடல் முடிந்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அன்னை அதற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். நான் “மைந்தர் எண்பதின்மரும் இப்போது ஒன்றாக இருக்கிறோம். அனைவரும் இணைந்து மூத்தவர் ஃபானுவுக்கு முடிசூட்ட முடிவெடுத்திருக்கிறோம். அதற்கு அனைவரையும் அழைப்பதற்காக சென்று கொண்டிருக்கிறோம்” என்றேன்.

அன்னையின் முகத்தில் எந்த உணர்வு மாறுபாடும் தெரியவில்லை. தலையை அசைக்கவோ அச்சொற்களை உள்வாங்கியதாகக் காட்டவோ கூட இல்லை. மீண்டும் நான் “மூத்தவர் ஃபானு முடிசூட இருக்கிறார். அஸ்தினபுரியின் ஆதரவு நமக்கிருக்கிறது. எண்பதின்மரும் ஒற்றுமையுடன் நின்றால் துவாரகை பெருவல்லமையுடன் எழும் என்கிறார்கள். கிருதவர்மனும் சாத்யகியும் இணைந்து நம்முடன் இருக்கிறார்கள். அன்னையே, நாம் எண்ணியதனைத்தும் நிறைவேறவிருக்கிறது” என்றேன். அன்னை அதற்கும் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவர் விலகிச்சென்ற பின்னரும் பார்த்தது அன்னையைத்தானா என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் நான் அங்கே அமர்ந்திருந்தேன்.

கிருதவர்மனிடம் நானே சென்று அன்னையின் அழைப்பைப் பற்றி சொன்னேன். கிருதவர்மன் புலரியில் எழுந்து கதிர் நோக்கி அமர்ந்திருந்தபொழுது நான் அவரை காணச் சென்றேன். என் வருகையை அறிவித்த ஏவலன் உள்ளே செல்லும்படி கைகாட்டினான். உப்பரிகையில் கால் மடித்து கண்மூடி ஊழ்கத்திலென இளவெயிலில் அவர் அமர்ந்திருந்தார். தொலைவில் கடல்அலைகள் வெயிலொளியில் கொப்பளித்துக்கொண்டிருந்தன. அதன் ஒளியலைகள் உப்பரிகையின் பளிங்குச் சுவர்களில் நெளிந்தன. அங்கு அமர்ந்திருந்த கிருதவர்மன் ஓர் ஓவியம்போல் ஆகிவிட்டிருந்தார். தொன்மையான ஓர் ஓவியம் காலத்தால் பெரும்பகுதி உதிர்ந்து உருவழிந்துவிட்டிருந்தது.

நான் தலைவணங்கி “வணங்குகிறேன், தந்தையே” என்றேன். அவர் விழி திறந்து அமர்க என்று கைகாட்டி “கூறுக!” என்றார். “அன்னை தங்களை சந்திக்க விழைகிறார்” என்றேன். அவர் அதை முதலில் உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஒருகணத்திற்குப் பின் “யார்?” என்று கேட்டார். “அன்னை சத்யபாமை” என்றேன். “அவர் நோன்பில் இருப்பதாக அல்லவா கேள்விப்பட்டேன்?” என்றார். “ஆம், ஆனால் இன்று புலரியில் அவர் தன்னை வந்து சந்திக்கும்படி என்னை அழைத்திருந்தார். ஆகவே நான் கிளம்பிச்சென்றேன்” என்றேன். ஏன் அத்தனை கூர்மையாக, முகமன்கள் இல்லாமல் சொல்கிறேன்? ஏனென்றால் அவ்வண்ணம் அன்னை என்னிடம் அதைப்பற்றி சொல்லியிருந்தார். அந்த உணர்வு என்னையறியாமலேயே நீடிக்கிறது.

கிருதவர்மன் “என்ன கூறினார்?” என்று கேட்டார். “அவர் எதையும் உசாவவில்லை. என்ன நிகழ்கிறது என்று கேட்பாரென்றும் குறைந்தது மைந்தரின் நலம் உசாவுவார் என்றும் நான் எதிர்பார்த்தேன். அவர் தங்களை பார்க்கவேண்டும் என்பதற்கப்பால் எதுவும் கூறவில்லை.” கிருதவர்மன் “எதற்கென்று கூறினாரா?” என்று கேட்டார். “இல்லை. தன் நோன்பிடத்திற்கு வெளியே ஓர் இடம் ஒருக்கும்படியும், தங்களை அங்கு அழைத்துவரும்படியும் மட்டும்தான் கூறினார்” என்றேன். கிருதவர்மன் “நன்று” என்றார். பிறகு நீள்மூச்செறிந்து “நெடுநாட்களாகிறது” என்றார். “ஆம்” என்றேன்.

சட்டென்று அவர் உரக்க நகைத்து “அறுதியாகப் பார்த்தது இந்நகரின் தெருக்களூடாக கைகள் கட்டப்பட்டு நான் இழுத்துவரப்படுகையில். இந்த உப்பரிகை மேடையிலிருந்து அவள் என்னை பார்த்தாள்” என்றார். ஒருமையில் அவர் அவ்வாறு சொன்னது என் உள்ளத்தை திடுக்கிடச் செய்தது. முதன்முறையாக என் அன்னைமேல் பெருங்காதல் கொண்டிருந்த ஒருவர், அதை அப்போதும் பேணி வந்த ஒருவர் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவருடைய வஞ்சம் அனைத்திற்கும் அடியில் வேரென்றிருப்பது அந்தக் காதல். அக்காதல் துவாரகை அரண்மனை முற்றத்தில் சிறுமைப்பட்ட தருணமே அவரை கசப்புநிறைந்தவராக ஆக்கியது. துவாரகையின் அரண்மனை முற்றத்தை மீண்டும் வந்தடைந்த கணமே அவர் அதிலிருந்து விடுபட்டுவிட்டார் என அறிந்தேன்.

தந்தையே, முதற்கணம் ஒரு பெரிய அலையென கசப்பு எழுந்து என்னை அறைந்தது. என் கைகால்களை நடுங்கச்செய்தது. விரல்களை மடித்து முறுக்கி உள்ளத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன். அவர் “அந்த இறுதிக் கணத்து முகத்தோற்றம் இத்தனை ஆண்டுகளில் என் முன் அவ்வண்ணமே நீடிக்கிறது. அது ஒரு தெய்வ உருபோல என்னை ஆள்கிறது. இவ்வண்ணம் செலுத்துகிறது” என்றார். எத்தனை நெடுங்காலம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அத்தனை காலம் ஒரு பெண்ணின் முகத்தை மட்டும் உளம்தேக்கி ஒருவர் வாழமுடியுமா? கதைகளில் அவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வண்ணம் இயல்வதென்றால் அது ஒரு தெய்வ வெளிப்பாடா என்ன?

நான் அவரை நோக்கிக்கொண்டிருந்தேன். என்னை அறியாமலேயே அவராக நான் உருமாறிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த அனைத்தையும் நோக்கியபோது அதுவரை இருந்த அனைத்தும் உருமாற ஒருகணத்தில் என் அகம் இனிமை கொண்டது. அவரையும் அன்னையையும் நான் விரும்பினேன். அத்தருணத்திற்காக நான் உளநிறைவு கொண்டேன். ஆம், பெருங்காதல் அரிதாக ஏதோ புவியில் நிகழ்கிறது. ஆணும் பெண்ணும் அறிவதும் இணைவதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஒருவர் ஒரு பெண்ணை விரும்பக்கூடும். இழந்தபின் மேலும் விரும்பக்கூடும். அவள் முன் சிறுமை கொண்டபின் மேலும் மேலும் விரும்பக்கூடும். ஆனால் அவள் பொருட்டு பெருவஞ்சம் கொண்டு, வாழ்வை அனலாக்குவது ஒரு தவம். தவம் தெய்வங்களை படைக்கிறது.

கிருதவர்மன் எழுந்து கொண்டு “செல்வோம்” என்றார். “இல்லை, தாங்கள் ஒருங்கி…” என்று நான் சொல்ல “ஒருங்கவேண்டியதில்லை. இவ்வண்ணமே செல்வோம். இது முறைசார் சந்திப்பு அல்ல அல்லவா?” என்றார். “ஆம்” என்றேன். அவரை அழைத்தபடி அரண்மனையின் இடைநாழியினூடாகச் சென்றேன். அன்னையின் நோன்புமாடத்திலிருந்து சற்று தள்ளி கடலோரமாக அமைந்திருந்தது காவலர்தலைவனின் சிறு கல்மாளிகை. அங்கு சென்றபின் அன்னையை அழைத்துவரும்படி ஏவலனிடம் ஆணையிட்டேன்.

நாங்கள் அந்தக் கல்மண்டபத்திற்குச் சென்று அமர்ந்திருந்தோம். கீழே நெடுந்தொலைவில் துவாரகையின் துறைமுகம் தெரிந்தது. அங்கே மூன்று கலங்கள் கடலில் மெல்ல உலைந்துகொண்டிருந்தன. அவற்றின் கொடிகள் சிறகுகள் என பறந்துகொண்டிருந்தன. விழி தொடும் தொலைவு வரை மிக மெல்ல அசைந்துகொண்டிருந்தது கடல். கடலை அவ்வண்ணம் மெல்ல நெளியச் செய்யும் அதே காற்று கொடியை கிழிந்துவிடும்போல் துடிக்கச்செய்கிறது என்று எண்ணிக்கொண்டேன். கடலலைகளை நெடுந்தொலைவில் இருந்து பார்க்கையில் அவை எழுவது போலும் அணுகுவது போலும் தோன்றுவதில்லை. அவை சற்றே உருகி நெளியும் கற்பரப்புபோல தோன்றுகின்றன. மெல்ல உருமாறிக்கொண்டே இருக்கின்றன. அவற்றின்மேல் வெண்நுரை வளையங்கள் மட்டும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

கடலை நெடுந்தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருப்பது உள்ளத்தை விரியச் செய்வது, தன்னிலையை சிறுமையாக்குவது. இந்திரப்பிரஸ்தத்திலோ அஸ்தினபுரியிலோ இல்லாத ஒன்று கடல். துவாரகையில் ஒவ்வொரு நாளும் குடிகளில் அனைவருமே கடலை பார்க்க முடியும். ஆனால் கடல் எவருக்கும் அவர்களின் தன்னிலையை உணர்த்தவில்லை. எவரையும் உள்ளத்தால் எளியவராக்கவில்லை. நானே கடலை அரிதாகத்தான் அப்படி பார்த்திருக்கிறேன்.

அன்னை வருகிறார் என்று ஏவலன் அறிவித்தபோது நான் எழுந்து தலைவணங்கி “நான் இங்கு இருப்பது உகந்ததல்ல. தங்கள் சந்திப்பு நிகழட்டும்” என்றேன். கிருதவர்மன் கைகாட்டி “அல்ல, நீ இருந்தாகவேண்டும்” என்றார். “இல்லை” என்று நான் சொல்ல “அல்ல. இத்தருணத்தில் மைந்தன் உடன் இருந்தாகவேண்டும்” என்றார். அவர் என்ன கூறுகிறார் என்று எனக்கு புரிந்தது. “மைந்தர்கள் உடனின்றி சந்திக்கலாகாது” என்று அவர் மீண்டும் கூறினார். நான் தலைவணங்கி ”ஆம்” என்றேன். பின்னர் அந்த அறையிலிருந்து வெளிவந்து அன்னை வருவதற்காக காத்து நின்றேன்.

ஏவலன் ஒருவனும் ஏவற்பெண்டும் தொலைவில் வந்தனர். ஏவலன் கையில் கொம்புடன் முன்னால் வந்தான். ஏவற்பெண்டு கையில் மங்கலத்தாலமொன்றை வைத்திருந்தாள். அதில் சிற்றகல் சுடர் எரிந்தது. புது மரங்களின் கனிகளும் இருந்தன. அவளுக்குப் பின்னால் அன்னை பெரிய வெண்ணிற ஆடையால் முற்றிலும் உடல் மறைத்து முகம் தாழ்த்தி நடந்து வந்தார். அருகணைந்ததும் ஏவலன் கொம்பை எடுத்து ஊதி “துவாரகையின் பேரரசி சத்யபாமை எழுந்தருள்கை!” என்றான். நான் தலைவணங்கி நின்றேன். மங்கலத்தாலமேந்திய சேடி அறைக்குள் புகுந்து அதை வைத்துவிட்டு வெளியேற ஏவலன் வெளியே நின்றான்.

அன்னை அருகணைந்து என் அருகே வந்து நின்றார். “வருக அன்னையே, தங்களுக்காக காத்திருக்கிறார்!” என்றபடி உள்ளே சென்றேன். அன்னை என்னைத் தொடர்ந்து உள்ளே வந்தார். அன்னை அறைக்குள் நுழைந்ததும் அவர் அன்னை என்றே உணராதவராக திகைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கிருதவர்மன். நான் அவ்விருவரையும் மாறி மாறி பார்த்தபடி அறையில் சாளரத்தோரமாக விலகி நின்றேன். அன்னை தனது வெண்ணிற ஆடையை விலக்கி கைகளில் சரியவிட்டு பீடத்திலிட்டார். அவரது உரு தெரிந்தவுடன் கிருதவர்மன் திடுக்கிட்டு இரு கைகளையும் விரித்தபடி பீடத்திலிருந்து எழுந்தார். அவ்வுடல் நடுங்கத் தொடங்கியது. அன்னையும் கிருதவர்மனின் தோற்றத்தைக் கண்டு உடல் நடுங்கினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கைகள் அதிர முகம் இழுபட்டு கண்கள் நீர்மை கொண்டு பற்கள் கிட்டித்து அத்தருணத்தில் ஒன்றின் இரு முனைகளென நின்றனர். அத்தருணத்தை அப்போதுதான் முற்றுணர்ந்தேன். இருவரும் உடல் சிதைந்து உருமாறியிருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் இளமைக்குப் பின் கண்டதில்லை. அவர்களுக்குள் வாழ்ந்தவர்கள்தான் இளமைத்தோற்றம் கொண்டிருந்தனர். உடல்கள் பொருளிழந்துவிட்டன, ஆனால் அவ்வுடல்களினூடாகவே அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவேண்டியிருந்தது.

கிருதவர்மன்தான் முதலில் தன்னுணர்வு கொண்டார். “அரசி” என்றார். அன்னை “ஆம்” என்றார். “தாங்கள்… தங்கள் உரு…” என்றார். அன்னை “மறையும் நேரம்” என்றார். பின்னர் “போரில் அனல்பட்டதாக அறிந்தேன். ஆனால்…” என்றார். அப்போதுதான் தன்னை உணர்ந்து “ஆம், நானும் உதிரும் பொழுது” என்றார் கிருதவர்மன். அன்னை மெல்ல பீடத்தில் அமர அவரும் அமர்ந்துகொண்டார். கிருதவர்மன் “அரசன் என நகர் நுழைந்தேன். என்னை யாதவப் பெருங்குடியே திரண்டு வரவேற்றது” என்றார். சிரிப்பில் உதடு வளைய “ஆனால் இவ்வண்ணமல்ல நான் நகர் நுழையவேண்டும் என்று எண்ணியிருந்தது” என்றார்.

“எண்ணியது நிகழ்வதில்லை” என்று அன்னை சொன்னார். “ஆம், எண்ணியது நிகழ்வதில்லை. எண்ணாதது நிகழ்ந்தாலும் நன்றே நிகழ்ந்தது. மைந்தரை ஒருங்கிணைத்திருக்கிறேன்” என்றார் கிருதவர்மன். “அறிந்தேன்” என்று அன்னை சொன்னார். ஆனால் அவரிடம் எந்த உவகையும் நிறைவும் வெளிப்படவில்லை. கிருதவர்மன் அதை உணரவில்லை. அவர் தன்னுள் ததும்பிக்கொண்டிருந்தார். “எவ்வகையிலோ இங்கு இளைய யாதவரை நான் நடிக்கிறேன். அது அளிக்கும் நிறைவும் பேரின்பமும் என்னை பேருருக்கொள்ளச் செய்கின்றன” என்றார்.

அன்னை நிமிர்ந்து பார்த்தார். இருவரும் பார்த்தனர். அன்னை விழிநீர் உகுத்து அழத்தொடங்கினார். அவரை நோக்கிக்கொண்டிருந்த கிருதவர்மனும் அழுதார். இருவரும் அங்கு அமர்ந்து அவ்வாறு சொல்லின்றி விழிநீர் உகுத்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு நான் நின்றிருந்தேன். அவர்களுக்கு இடையே கூறுவதற்கு எதுவும் இருக்கவில்லை. இணைந்து அமர்ந்து அவ்வாறு அழுவதற்கு ஒரு தருணம் மட்டுமே அவர்கள் எதிர்பார்த்திருந்தது. அது அவர்களை நிறைவுறச் செய்தது. நெடுந்தொலைவு அலைந்து சென்ற ஒரு கோடு வட்டமென திரும்பி வந்து சந்திப்பதுபோல. நெடுங்காலம் பல ஊர்கள் பல நிலங்கள் சென்ற ஒரு கோடு. விலகிச்செல்கிறது என்றும் ஒருபோதும் மீண்டு வராதென்றும் எண்ண வைத்த ஒரு கோடு.

அவர்கள் அழுதுகொண்டிருக்கும்போது அங்கிருப்பது ஒரு ஒவ்வாமையை அளித்தது. ஆனால் அங்கிருந்து நான் விலகவேண்டும் என்றும் தோன்றவில்லை. உடலில் சிறு அசைவு எழுந்தாலும் அது அவர்களை கலைத்துவிடுமென்று தோன்றியது. அவர்கள் முற்றும் அழுது ஓயவேண்டும். ஒரு துளி எஞ்சினாலும் அது மீண்டும் வளரும். இத்தருணத்துடன் அவர்கள் ஒருவரை ஒருவர் நிறைவு செய்யவேண்டும். ஒருவரிலிருந்து ஒருவர் முற்றாக அகலவேண்டும். அந்த எடை எவ்வாறிருக்கும்? வளர்ந்து வளர்ந்து ஒருவரை நசுக்கி கீழே வீழ்த்தும் அளவுக்கு பெரிதாகும். வேரொடு மரத்தை சாய்க்கும் பெருங்கனிபோல் என்று சூதர்கள் பாடுவார்களே அதுவா? அன்றி சுருங்கிச் சுருங்கி பொருளற்றதாகி மிகச் சிறு துளியென எஞ்சியிருக்கிறதா? அது உதிர்ந்தபின் எஞ்சிய விடுதலையை அவர்கள் நாடுகிறார்கள்.

அத்தருணத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. அன்னை தலைகுனிந்து அமர்ந்திருந்தார். கிருதவர்மன் சாளரத்தினூடாக கடலை நோக்கிக்கொண்டிருந்தார். இருவர் கண்களிலும் நீர் வழிந்து மடியிலும் மார்பிலும் சொட்டிக்கொண்டிருந்தது. நெடுநேரத்திற்குப் பின் ஒரு விசும்பலோசையுடன் அன்னை மேலாடையால் முகத்தை அழுத்தித் துடைத்தார். அவ்வோசை கேட்டு கிருதவர்மனும் திடுக்கிட்டு விழித்துக்கொண்டார். அன்னை எழுந்து தலைவணங்கி “நன்று, நலம் சூழ்க!” என்றார். கிருதவர்மன் “ஆம்” என்றார். அன்னை மறுமொழி கூறாமல் அறையைவிட்டு வெளியேறினார். வெளியே காத்து நின்றிருந்த சேடியுடன் அவர் நடந்து செல்லும் காலடி ஓசை கேட்டது.

அன்னை அகன்றபின் கிருதவர்மன் மார்பில் கைகளைக் கட்டியபடி கடலைப் பார்த்து ஆழ்ந்திருந்தார். அவர் முகம் மலர்ந்திருந்தது. இனிய நினைவில் ஆழ்ந்திருப்பவர்போல. எதையோ எண்ணி எண்ணி உவகை கொள்பவர்போல. தசையுருகி தோல்வெந்து வழண்டிருந்த அந்த முகம் அவ்வினிமையில் அழகாகத் தோன்றியது. கண்களில் இருந்தது முதிரா இளஞ்சிறுவர்களுக்குரிய கனவு. காதல் கொண்ட ஓர் இளைஞன் அங்கு அமர்ந்திருந்தான். தன்னுள் எழும் இனிமையை பல்லாயிரம் நாவுகள் எழுந்து சுவைத்து தான் மகிழ்ந்து அதை சொல்லென்றும் ஆக்காமல் மூழ்கியிருப்பதுபோல.

நான் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கலைக்கலாகாது என்ற தன்னுணர்வு இருந்தது. நெடுநேரம் கழித்து அவர் விழிப்பு கொண்டு என்னைப் பார்த்து “கிளம்புவோம்” என்றார். பெருமூச்சுடன் மேலாடையை எடுத்துக்கொண்டு நடந்தார். நான் அவருடன் நடந்தேன். இருவரும் ஒரு சொல்லும் உரையாடிக்கொள்ளவில்லை. கிருதவர்மன் மிக அப்பால் வேறொருவர் போலிருந்தார். வேறொரு காலத்தில் அவர் வாழ அவரது பாவை ஒன்று என்னுடன் இருப்பதாகத் தோன்றியது.

தந்தையே, நான் அந்தத் தருணத்தை மிகமிக ஆழமாக உணர்ந்தேன். அரிதாகவே நாம் நம் முந்தைய தலைமுறையினரின் வாழ்வுக்குள் அத்தனை ஆழமாக செல்லமுடிகிறது. அன்று நிகழ்ந்தது என்ன என்று நான் எவரிடமும் சொல்லவில்லை. எவரும் என்னிடம் கேட்கவுமில்லை, எனவே எவரும் அறிந்திருக்கவில்லை என்றே எண்ணினேன். முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து அந்தச் சொல் எழுந்தபோது நான் திகைத்துவிட்டேன். ருக்மி என்னை நோக்கி புன்னகைத்து “அத்தருணத்தில் நீங்கள் உடனிருந்தீர்கள்” என்றார். நான் “ஆம்” என்றேன். “அங்கே ஒரு சொல்லும் உரையாடப்படாவிட்டாலும் அது அந்தகர் குலத்து வீரர் ஒருவர் அந்தகக் குலத்து அரசிக்கு அளித்த சொல்லுறுதி” என்றார் ருக்மி.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 39

பகுதி நான்கு : அலைமீள்கை – 22

ருக்மியை சந்திக்கக் கிளம்புவதற்கு முன்பு நான் கணிகரை சந்திக்க விரும்பினேன். அவரை சந்திக்க விழைகிறேன் என்று செய்தி அனுப்பினேன். கணிகர் உடல்நலமின்றி படுத்திருப்பதாகவும் உடனடியாக அவரை சந்திப்பது இயலாதென்றும் தூதன் வந்து சொன்னான். என்ன செய்கிறது அவருக்கு என்று கேட்டேன். நேற்றைய விருந்தில் அவர் உண்டது ஒவ்வாமையை உருவாக்கியிருக்கிறது. ஆகவே தன் குடிலில் உணவொழிந்து உப்பிட்ட நீர் மட்டும் அருந்தி படுத்திருக்கிறார் என்றான். மருத்துவர்கள்? என்றேன். மருத்துவர்களை அவர் சந்திப்பதில்லை. மருந்துகள் எதையும் உண்பதுமில்லை என்றபின் அவர் உண்பது வலி போக்குவதற்கான அகிபீனா மட்டுமே என்றான் ஏவலன்.

எனக்கு அது விந்தையாக இருந்தது. ஆனால் அகிபீனா களியுருளைகளை உண்பவர்களுக்கு தொடர்ந்து வயிற்றுக்கடுப்பு நோய்கள் வருமென்பதை நான் முன்னரே அறிந்திருந்தேன். “நன்று, நான் சென்றுவந்தபின் அவரை சந்திக்கிறேன் என்று கூறுக!” என்றேன். ஒருவகையில் அதுவும் நன்றே என்று எண்ணிக்கொண்டேன். நான் அவரை சந்திக்காமலேயே சென்று ருக்மியை வென்று மீண்டேன் என்றால் அது என் தனிப்பட்ட சொல்வன்மைக்கான இன்னொரு சான்றாகவே அமையும். இதுவரை வென்றவர்கள் இருவரும் அணுக்கமானவர்கள், இவர் முற்றெதிரி.

ருக்மியை சந்திப்பதற்கான பயணம் தொடங்குவதற்கு முன் துவாரகையிலிருந்து முறையான அழைப்பு ஒன்றை நான் ருக்மிக்காக எழுதி வாங்கிக்கொண்டேன். உண்மையில் துவாரகையில் அப்போது மூத்தவர் ஃபானுவின் முடிசூட்டு விழா விருந்தறைப் பேச்சாகவே எஞ்சியிருந்தது. அரசாணை வெளியிடப்படவில்லை. அரசவை அறிவிப்பும் நிகழவில்லை. ஒற்றர்களினூடாக அப்பேச்சின் ஒரு பகுதி ருக்மியை சென்றடைந்திருக்க வாய்ப்பிருந்தது. அது அவரில் பலவகையான உளக்குழப்பங்களை உருவாக்கியிருக்கும். அச்செய்தியை எந்த அளவுக்கு ஏற்பது என்ற ஐயம் இருக்கும். அவருக்குத் தேவை ஓர் உறுதிப்பாடு, அதை என் செய்தி அளிக்கவேண்டும்.

துவாரகையின் முடியுரிமை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிவிக்கும் ஓர் ஓலையே நான் விழைந்தது. ஆனால் மூத்தவர் ஃபானு அதில் கைச்சாத்திட இயலாது. துவாரகையின் மைந்தர் அனைவரும் பங்கெடுக்கும் ஒரு அவையாணை வேண்டும். அல்லது அந்த அவையில் பொறுப்பளிக்கப்பட்ட ஓர் அமைச்சரின் முத்திரை அதற்கு வேண்டும். என்னிடம் உண்டாட்டு அறையில் பொறுப்பு அளிக்கப்பட்டுவிட்டது, நானும் ஏற்றுக்கொண்டுவிட்டேன். உண்டாட்டு அறைக்கு வெளியே யாதவ மைந்தர் என்ன எண்ணுகிறார்கள்? பிரத்யும்னனும் சாம்பனும் அங்கிருந்து சென்றபின்னர் உளம் மாறிவிட்டிருக்கிறார்களா?

ஆனால் நான் மீண்டும் ஃபானுவை சந்தித்து எனக்கு முறையான ஓலை வேண்டும் என்று கோரமுடியாது. அவ்வண்ணம் ஓர் ஓலையை இன்று அவரோ பிறரோ அளிக்கமுடியாது. அதற்கு மைந்தர் அனைவரின் ஒப்புதலை தனித்தனியாக பெறவேண்டும். அல்லது முறையான அரசவை கூடவேண்டும். அதற்கு இனி பொழுதில்லை. காலம் பிந்தும்தோறும் ருக்மி அறுதி முடிவுகளை எடுக்கக்கூடும். நான் செல்வதற்குள் அவர் பாறைபோல் இறுகிவிட்டிருக்கக்கூடும். அவர் குழம்பி நிலையழிந்திருக்கையிலேயே என் தூது வெல்லமுடியும். அப்போதே கிளம்பியாகவேண்டும்.

என்ன செய்வது என்று அறியாமல் நான் குழம்பினேன். ஆனால் அனைத்தையும் நானே செய்தாகவேண்டும் என்றும் எண்ணினேன். அவையாள்கை அமைச்சர் சுஃப்ரரிடம் “யாதவ மைந்தர் கருத்தொருமித்து முடிவெடுத்துவிட்டார்கள் என ருக்மியை அறிவிக்கச் செல்லவிருக்கிறேன். அவ்வண்ணம் ஓர் ஓலை எனக்கு உடனடியாக தேவையாகிறது” என்றேன். “ஆனால் அம்முடிவு இன்னும் எட்டப்படவில்லை” என்று அவர் தயங்கினார். நான் சீற்றத்துடன் “முடிவு எட்டப்பட்டுவிட்டது. எனக்குத் தேவை ஓலை. இல்லையேல் எதன்பொருட்டு நான் சென்று அவரை சந்திக்க முடியும்? எப்படி அவை நின்று முறைமைச்சொல் பேசி தொடங்கலாகும்?” என்றேன்.

என் சினம் அமைச்சரை மேலும் பின்வாங்கச் செய்தது. “நான் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் மூத்தவரிடமிருந்து அல்லது இளையவர் சுஃபானுவிடமிருந்து ஓர் ஓலை பெற்றுக்கொண்டு செல்வதே நன்று. அல்லது அவர்களே என்னை அழைத்து ஆணையிடவேண்டும்” என்றார். நான் “இத்தருணத்தில்…” என்று தொடங்க அவர் “அல்லது பிரத்யும்னனின் ஓலையே போதுமானது” என்றார். அப்போது என்னில் எழுந்த சினத்தை முழுமையாகவே அடக்கி “நோக்குகிறேன்” என்றேன். ஓலை பெறுவது இயல்வதல்ல. வேறேதேனும் வேண்டும்.

எண்ணியபடி என் அறைக்கு திரும்பினேன். எனது பழைய பேழையில் இருந்த ஒரு கணையாழியை நினைவுகூர்ந்தேன். அது மிக இயல்பாக அத்தருணத்தில் நினைவில் எழுந்தது. அது நெடுங்காலம் முன்னர் நாங்கள் களத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது சுதேஷ்ணனின் கையிலிருந்து உதிர்ந்தது. அனைவரும் சென்றபின் நாங்கள் விளையாடிய இடத்தில் அந்தக் கணையாழி கிடந்ததை கண்டேன். அதை எடுத்து வந்து என் தனியறைப் பேழைக்குள் போட்டுவைத்தேன். ஏன் அப்படி செய்தேன் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. அவ்வண்ணம் பொருட்களை காத்து வைப்பவன் அல்ல. பிறர் பொருட்கள் மேல் விருப்பம் கொண்டவனும் அல்ல. ஆயினும் அதை செய்தேன். உரிய தருணத்தில் அது நினைவுக்கும் வந்தது.

இவ்வாறு எண்ணுகையில்தான் இவ்வனைத்தும் முற்றிலும் முன்னொருங்கிவிட்டவையோ என்ற எண்ணம் எழுகிறது. வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு எண்ணத்தை அடையாத எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால், அவ்வெண்ணம் மனிதர்களை செயலின்மை நோக்கி செலுத்துகிறது. தானே இயற்றினேன் என்னும், தன் வலிமையால் வென்றேன் என்னும் ஆணவங்களை இல்லாமலாக்குகிறது. ஆகவே அதை உணர்ந்தாலும் தனக்குத்தானே என ஏற்றுக்கொள்ளாமலிருப்பதே மானுட இயல்பு. சுதேஷ்ணனின் கணையாழியை எடுத்ததுமே அதைக்கொண்டு நான் இயற்றக்கூடும் அனைத்தும் என் நினைவில் எழுந்தன. ஏற்கெனவே எங்கோ முறையாக வகுக்கப்பட்டு முழுமையாக எழுதிப் பதிவு செய்யப்பட்டு, என்னால் அப்போது ஓர் ஏட்டிலிருந்து படிக்கப்படுவதைப்போல.

சுதேஷ்ணனின் கணையாழியுடன் என் புரவியில் நான் துவாரகையிலிருந்து எல்லை நோக்கி கிளம்பினேன். என்னுடன் எட்டு காவலர்கள் வந்தனர். ஒருவன் கொம்பூதி முன்னால் செல்ல இன்னொருவன் துவாரகையின் கொடியுடன் தொடர்ந்தான். பிறர் வில்லேந்தி காத்து வந்தனர். துவாரகையிலிருந்து அவந்தி செல்லும் வழி ஒரு காலத்தில் வணிக வண்டிநிரைகளால் நிறைந்திருக்கும். அன்று வருவதற்கும் போவதற்கும் வெவ்வேறு வழிகள் ஒருக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வழியிலும் அப்பால் வருபவர்களை காணமுடியும். மேலிருந்து பார்க்கையில் இரு எறும்புநிரைகள்போல் தெரியும். அந்தப் பாதையில் நாங்கள் ஒரு சிறு வண்டுக்கூட்டம்போல சென்றோம்.

பாலைநிலம் எடைவண்டிகள் வருவதற்குரியதல்ல. அகலமான சகடங்கள் கொண்ட தாழ்வான வண்டிகளில்தான் பாலையில் பொருட்களை கொண்டுவர முடியும். அவற்றையும் பரைக்கால் ஒட்டகைகளே இழுக்க முடியும். தொடக்கத்தில் ஒட்டகைகள் இழுக்கும் மென்மரச் சகடங்கள் கொண்ட வண்டிகளே வந்துகொண்டிருந்தன. அவை சகடங்களே அல்ல, உருளும் மரத்தடிகள் சகடங்களாக பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு வண்டிக்கும் பன்னிரண்டு உருளைகள். ஆயிரங்காலட்டை செல்வதைப்போல் அவை மணல்மேல் உருளும். அவை சென்ற வழியே ஒரு பாதையென தெரியும்.

பின்னர் வண்டிநிரை பெருகியபோது அவந்தியிலிருந்து துவாரகை வரைக்கும் பலகைகள் பதிக்கப்பட்ட உறுதியான சாலை தங்களால் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு எடைமிகுந்த வண்டிகள்கூட வரலாம் என்று ஆயிற்று. புரவிப்பாதை ஒன்று குறுக்காக இருந்தாலும் பெரும்பாலும் அனைவரும் அந்த மரம் பதிக்கப்பட்ட வண்டிப்பாதையையே விரும்பினர். முன்பு அந்தப் பாதையில் வண்டிகள் மணிகோத்த மாலை என அவந்திமுதல் துவாரகை வரை நிரைகொண்டிருக்கும். அப்போது அப்பாதை கைவிடப்பட்டு மணலில் புதைந்து முற்றிலும் தடமில்லாததாக மாறிவிட்டிருந்தது. நான் புரவியில் சென்றபோது பல இடங்களில் அந்தப் பாதையை புரவிக்குளம்படிகள் உணர்ந்தன. மீண்டும் விலகி பாலையின் புதையும் மணலுக்குள் சென்று மீண்டும் வழி கண்டு அப்பால் ஏறின. தந்தையே, என் உள்ளமும் அவ்வாறே தடம் விலகி தடம் கண்டு அலைக்கழிந்துகொண்டிருந்தது.

அன்று மாலை பாலைநிலச் சோலை ஒன்றில் தங்கினேன். தந்தையே, உங்கள் காலகட்டத்தில் ஒரு அழகிய விடுதியாக பேணப்பட்ட சோலை அது. ஐநூறு வணிகர்களும் அவர்களின் வண்டிகளும் தங்குவதற்கு உகந்தது. முன்பு அங்கிருந்த ஊற்று ஆழப்படுத்தப்பட்டு கரைகட்டப்பட்டு காவலுடன் முறையாக பேணப்பட்டிருந்தது. நான் அங்கு சென்றபோது அச்சோலையையே மணல் மூடியிருந்தது. ஊற்றின் ஒரு பகுதி மணலால் மூடப்பட்டிருந்தது. மானுடர் வருவது குறைந்ததுமே பாலை விலங்குகள் அச்சோலையை கையில் எடுத்துக்கொண்டுவிட்டிருந்தன. மணலெங்கும் ஓநாயின் காலடித்தடங்களை பார்த்தேன். என்னுடன் வந்த காவலர்கள் ஓநாய்கள் அணுகாமல் இருப்பதற்காக பந்தங்கள் கொளுத்திவைத்து எனக்கு காவலிருந்தனர்.

விண்மீன்களைப் பார்த்தபடி பாலையில் அமர்ந்திருந்தபோது ஒரு சிறு தொடுகையென அந்த எண்ணம் வந்து எனக்கு அதிர்வளித்தது. என்னை பார்ப்பதை கணிகர் வேண்டுமென்றே ஒழிந்தார். அவருக்குத் தெரியும், நான் ருக்மியை பார்க்கச் செல்வது. அங்கு என்ன பேசவேண்டுமென்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதை எனக்கு அவர் கூறியாகவேண்டும் என்று மூத்தவர் ஆணையும் இட்டிருக்கிறார். ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை. ஏன்? என்னை அவர் கையொழிகிறாரா? அன்றி நான் செல்லுமிடத்தில் ஏதேனும் பிழையாக நிகழும் என்று எண்ணுகிறாரா? அதற்கு தானும் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாதென்று கருதுகிறாரா?

என் உள்ளம் பதறிக்கொண்டிருந்தது. எண்ணங்கள் கிளம்பி வெவ்வேறு திசைகளில் வெடித்துச் சென்று வெட்டவெளியில் முட்டி திரும்பி வந்தன. அன்றுபோல் அத்தனை குழம்பி பதறி நிலையழிந்து ஒருபோதும் இருந்ததில்லை. இத்தனைக்கும் அத்தனை பதற்றம் கொள்வதற்கு அன்று எதுவும் நிகழவும் இல்லை. கணிகர் என்னை காண மறுத்தமைக்கு அவர் உடல்நலமில்லை என்பதேகூட உண்மையான ஏதுவாக இருக்க அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. நான் மிகைப்படுத்திக் கொண்டிருக்கலாம். எனது அச்சங்களால் தடம் மாறி அவ்வெண்ணத்தை சென்றடைந்திருக்கலாம். ஆனாலும் எனக்கு தோன்றிக்கொண்டிருந்தது, அது இயல்பானது அல்ல என்று.

அவர் என்னை வரவழைத்து ஓரிரு சொல் பேசி வாழ்த்தி அனுப்பியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. என்னுள் எழுந்த அமைதியின்மை என்னை அங்கே அமரவிடவில்லை. எழுந்து பாலைநிலத்தில் கால் புதைய நடந்தேன். எவரோ என்னை பார்க்கும் உணர்வு இருந்துகொண்டே இருந்தது. விந்தையானதோர் அச்சம் உடனே அங்கிருந்து செல் என்று சொன்னது. நான் கண்களை மூடிக்கொண்டு எனது எண்ணங்களை தொகுக்க முயன்றேன். பின்னர் ஒன்று உணர்ந்தேன். ஒருவேளை எனது நன்மைக்காகவே கணிகர் அதை செய்திருக்கலாம். நானே வெற்றியை முழுமையாக அடையவேண்டும் என்றும் அதற்கான தகுதி உடையவன் என்றும் அவையில் என்னை நிறுத்த அவர் எண்ணியிருக்கலாம்.

நான் அடையும் சொல்வெற்றிகள் அனைத்துமே கணிகரால் எனக்கு அளிக்கப்படுபவை என்று பல்வேறு சொற்களில் சுஃபானு அவைதோறும் நிறுவ முயன்றுகொண்டிருந்தார். அவரை நான் சந்திக்காமலேயே சென்றேன் வென்றேன் என்று வரும்போது என்னை மேலும் அழுந்தச்செய்யும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆம், என் நலன் நாடும்பொருட்டே அதை செய்கிறார். அவரை நான் வீணாக ஐயுறுகிறேன். என் நலன் நாடும் பொருட்டேதான். ஐயமே இல்லை என் நலன் நாடும் பொருட்டேதான்.

அவ்வெண்ணம் என்னை விடுதலை செய்தது. என்னை இயல்பு நிலைக்கு மீட்டது. எழுந்து சென்று மீண்டும் மணலில் விரித்த தோல் படுக்கையில் படுத்துக்கொண்டேன். என் உடலை மென்மையாக உள்வாங்கிக்கொண்டது மணல்படுக்கை. ஆழ்ந்து துயின்று எப்பொழுதோ விழித்துக்கொண்டபோது என் மேல் ஒரு நோக்கு பதிந்திருப்பதை உணர்ந்தேன். விழி திறக்காமலே அது எவருடைய நோக்கு என்று அறிந்தேன். கணிகர் என் அருகே அமர்ந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.

“கணிகரே, தாங்களா?” என்றேன். அவர் புன்னகைத்தார். மிக மிக அழகிய புன்னகை. “கணிகரே, தாங்கள் என்னை தொடர்ந்து வந்தீர்களா? இங்குதான் இருக்கிறீர்களா?” திடுக்கிட்டு கண்விழித்தேன். மிக அருகே ஒரு ஓநாய் அமர்ந்திருந்தது. நான் எழுந்து அதை பார்த்தேன். அதை விரட்டும்பொருட்டு கையை வீசினேன். அது அசைவிலாது என்னை பார்த்துக்கொண்டிருந்தது. பின்னர் எழுந்து விலகிச்சென்றது. சிறுத்தையாலோ வேறு விலங்குகளாலோ தாக்கப்பட்டமையால் அதன் பின்னங்கால்கள் இரண்டு பழுதடைந்திருந்தன. முன்கால்களால் தன் உடலை உந்தி அதை முன்னெடுத்துச் சென்றது.

அது இச்சோலைக்குள்ளேயே வந்து இங்கேயே ஒளிந்திருந்து வாழ்கிறது என்று தெரிந்தது. அதனால் ஓடவோ வேட்டையாடவோ இயலாது. சிற்றுயிர்களைப் பிடித்து உண்டு இங்கு மறைந்திருக்கிறது. என் காவலர்கள் இச்சோலைக்கு காவலிடும்போது முன்னரே வந்து இந்த ஓநாய் சோலைக்குள் ஒளிந்திருக்கக்கூடும் என்று எண்ணியிருக்கவில்லை. அதன் நோக்கைத்தான் அங்கு வந்த கணம் முதல் நான் உணர்ந்துகொண்டிருந்தேன். அதுதான் என்னை அத்தனை அமைதியிழக்கச் செய்தது. நான் மணலில் கையால் தட்டினேன். நின்று பசி வெறித்த விழிகளால் என்னை பார்த்தது. பின்னர் வாய் திறந்து மெல்ல சீறி உடலை உந்தி இழுத்துக்கொண்டு மணல் சரிவில் இறங்கி ஊற்றை நோக்கி சென்றது.

பெருமூச்சுடன் இயல்பு நிலையை அடைந்து மீண்டும் மணல்பரப்பில் அமர்ந்தபோது நான் ஒன்றை உணர்ந்தேன். மிகத் தெளிவாக. கண்முன் எழுந்த பாலைவெளியென பருவடிவாக. என்னை கணிகர் மாபெரும் சூழ்ச்சி ஒன்றுக்குள் இறக்கிவிட்டிருக்கிறார். என்னை கைவிட்டுவிட்டார். அல்லது என் கதையை முடிக்க முடிவு செய்துவிட்டார். இந்தச் சந்திப்பிலிருந்து நான் மீளப்போவதில்லை. ஏற்கெனவே அடைந்த இரு வெற்றிகளால் என்னை நானே மிகையாக எண்ணிக்கொண்டேன். இதையும் மிக எளிதாக வென்றுவிடுவேன் என்று கருதினேன். அந்த நம்பிக்கையே என் புதைகுழி. அதை மிகத் தெளிவாக உணர்ந்து கணிகர் என்னை இந்தப் புதைமணலுக்குள் அனுப்புகிறார். இதில் தனக்குப் பங்கில்லை என்று முன்னரே கைகழுவிக்கொள்கிறார்.

என்ன நிகழும்? எங்கு சிக்கிக்கொள்வேன்? சிக்கிக்கொள்வேன் என்று அத்தனை உறுதியாகத் தெரிந்தது. தந்தையே, ஒரு மாற்றெண்ணம்கூட இல்லை. கண் முன் நின்றிருந்தது. ஆயினும் நான் அதை தவிர்க்கவில்லை. அச்சந்திப்பை ஒழிந்து நான் திரும்பி துவாரகைக்கு சென்றிருக்கலாம். ஏதேனும் ஒரு ஒழிவுச் சொல் உரைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு தோன்றவில்லை. மேலே செல்க என்றே தோன்றியது. அதிலிருந்து எழுந்த ஆணவம். அதைவிட அறியும் விழைவு. என்னை விட பெரிதாக அங்கு என்ன இருக்கப்போகிறது? அவ்வாறு ஒன்று அங்கு என்னை காத்திருக்கையில் அதை ஒழிந்து என்னால் திரும்ப முடியாது. ஆகவே நான் செல்லவே முடிவெடுத்தேன்.

 

மறுநாள் முதற்காலையில் கிளம்பினோம். செல்லும் வழியெங்கும் என்ன நிகழும் என்று என்னால் எண்ணக்கூடும் அனைத்து தடங்களிலும் எண்ணங்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தேன். எதுவும் பிடி கிடைக்கவில்லை. அத்தனை வாயில்களும் மூடியிருப்பது மேலும் மேலும் வெறி கிளப்பியது. சென்று முட்டித்திறந்தே ஆகவேண்டும் என்று என் உள்ளம் எழுந்தது. செல்க செல்க என்று என் புரவியை துரத்தினேன். தந்தையே, தன் புதைகுழியை தானே தேடிச்செல்பவனின் விரைவைப்போல விந்தை வேறில்லை இப்புவியில்.

நான் துவாரகையின் எல்லைக்கு அப்பால், அவந்தி நாட்டின் முகப்பில் அமைந்திருந்த பாலைநிலப் பகுதிக்கு சென்றேன். நெடுந்தொலைவிலேயே அங்கே ஒரு படை இருப்பது வானில் பறந்த பல்லாயிரம் பறவைகளில் இருந்து தெரிந்தது. பாலைநிலப் பறவைகள் அனைத்தும் அங்கு உணவு கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்றுவிட்டிருந்தன. கூடாரங்களிலிருந்து மிஞ்சியவற்றை உண்டு பழகிய காகங்களும் மைனாக்களும். மிக உயரத்தில் வட்டமிட்ட பருந்துகள். அவந்தியின் அரைப்பாலை நிலமும் புல்வெளியும் அங்கிருந்துதான் தொடங்குகின்றன. ஆகவே அது ஒரு படை தங்குவதற்கு மிகவும் உகந்த நிலம். பாலை நிலம் என்பதனால் மரங்களை வெட்டத் தேவையில்லை. கூடாரங்களை எளிதில் அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அருகில் புல்வெளி இருப்பதனால் விலங்குகளுக்குரிய புல்லும் நீரும் அங்கு கிடைக்கும்.

நான் வருவதை தொலைவிலேயே அவர்களின் காவல்மாடத்திலிருந்து பார்த்துவிட்டார்கள். அங்கே ஒரு கொம்பொலி எழுவது மிகச் சிறிய ஒலித்தீற்றலென என் காதில் கேட்டது. என்னை வரவேற்க வருபவர்களுக்காக நான் மெதுவாக புரவியில் சென்றுகொண்டிருந்தேன். விதர்ப்ப நாட்டுக் கொடியுடன் தொலைவில் மூன்று வீரர்கள் என்னை நோக்கி வந்தனர். முதலில் வந்தவன் விரைவழிந்து கொம்பொலி எழுப்பினான். எனது காவல்வீரனும் கொம்பொலி எழுப்பி துவாரகையின் கொடியை ஆட்டினான். இருவரும் கொடி தாழ்த்தி வணங்கிய பிறகு காவலன் என்னை அணுகி “துவாரகையின் இளவரசர் அவந்தி நாட்டு எல்லைக்குள் வருக! மாமன்னர் ருக்மி தங்களை வரவேற்கிறார்” என்றான்.

“எனது வரவு அறிவிக்கப்பட்டுள்ளதா?” என்று நான் கேட்டேன். “இல்லை, முறையான அறிவிப்புகள் இல்லை. ஆனால் ஒற்றுச்செய்திகளின் மூலம் தாங்கள் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. தாங்கள் வந்ததும் நேராக அழைத்து வரும்படி ஆணை” என்றான் காவலன். அவனுடன் செல்கையில் அங்கு சென்று சற்றே ஓய்வெடுத்து சொல்கோத்து அதன் பிறகு ருக்மியை சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இப்பொழுது இந்த அகப்பதற்றத்துடனேயே அவரை சந்திக்கவேண்டியிருந்தது இடரே என்று எனக்கு தெரிந்தது. என்ன நிகழ்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நிகழ்வுகளின் சுழல் என்னை இழுத்துச் செல்லத் தொடங்கிவிட்டது. முற்றாக ஒன்றுமே தெரியாமல் சுழன்று அடித்து மோதி மூழ்கவேண்டியதுதான், வேறுவழியில்லை.

உண்மையில் அந்தத் தருணத்தில் மெல்லிய உவகை ஒன்று எனக்கு ஏற்பட்டது. என்னைவிடப் பெரிதான ஒன்றை சந்திப்பது அது. ஒருவேளை அதை நான் கடந்துவந்தேன் எனில் வாழ்வின் மிகப் பெரிய அறிதல் ஒன்றை பெற்றவன் ஆவேன். தெய்வத்தை நேரில் கண்டவன் போலாவேன். என்ன நிகழவிருக்கிறது என்று ஒரு கதை கேட்கும் குழந்தையின் ஆர்வத்துடன் என் அகம் விழித்து பதற்றம் அடைந்திருந்தது. ஆனால் என் இடத்தொடை நடுங்கிக்கொண்டே இருந்தது. என்னுள்ளிருந்த பதற்றம் விரல்களை முறுக்கி கைகளை அழுத்தி வைத்திருக்கச் செய்தது.

நேராகவே ருக்மியின் குடில் நோக்கி கொண்டுசெல்லப்பட்டேன். அங்கே என்னை எதிர்கொண்ட சிற்றமைச்சர் “தாங்கள் இச்சிற்றறையில் ஆடை திருத்தி முகம் கழுவலாம். அரசர் கூடாரத்தில் தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றார். நான் அந்தச் சிறு குடிலுக்குள் சென்று அங்கிருந்த அகன்ற மண்கலத்தில் முகம் கழுவினேன். என் தலைப்பாகையை அவிழ்த்து திருப்பிக்கட்டி மேலாடையை உதறி அணிந்துகொண்டேன். எனக்காக வாயிலில் ஏவலன் காத்திருந்தான். என்னை அவன் தனியாக விடவே இல்லை.

எதன்பொருட்டு என்னை வந்த பொழுதிலேயே சந்திக்கவேண்டும் என்று ருக்மி விரும்புகிறார் என்று என்னால் எண்ண முடியவில்லை. துவாரகையின் கொடியுடன் வருவதனால் இது ஒரு முறையான அரசத்தூதென்றே கொள்ளப்படவேண்டும். ஆகவே என்னை தன் அவையில் வரவழைத்து சொல்எடுக்கச் சொல்வதே முறையானது. அன்றி ஏதேனும் ஐயம் இருந்தால் தனியறைக்கு வரச்சொல்லலாம். பாலையிலிருந்து நேராக வரவழைத்திருக்க வேண்டியதில்லை. நான் நிலைகுலைந்திருப்பேன் என்றும், அறியாச் சொல்லெடுத்து என்னை காட்டிக்கொடுப்பேன் என்றும் அவர் எண்ணியிருந்திருக்கலாம்.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. என்னை அவருக்கு தெரியாது. மெய்யாக அவர் பதறிக்கொண்டிருக்கலாம். நான் நீராடி உடைமாற்றி வரும்வரை பொறுத்திருக்க அவரால் இயலாமல் இருக்கலாம். ஆம், விதர்ப்பத்தின் அரசர் ருக்மியைப்பற்றி அறிந்தவர்கள் அவ்வாறே முடிவெடுப்பார்கள். ருக்மி அஞ்சுபவர், விரைவாக நிலையழிபவர், உறுதியாக முடிவெடுக்க இயலாது ஊசலாடுபவர். குருக்ஷேத்ரத்தில் இருபுறமும் அலைபாய்ந்து தன்னை பாரதவர்ஷத்திற்கே காட்டிக்கொண்டவர். ஆகவே அவர் ஒரு போரினூடாக தன்னை நிறுவிக்கொள்ள விழைகிறார்.

நான் அவர் கூடார வாயிலில் நின்றேன். என்னை உள்ளே அழைத்தனர். கூடாரத்திற்குள் மண்ணில் விரிக்கப்பட்ட தோல் இருக்கையின் மீது ருக்மி அமர்ந்திருந்தார். செந்தழல்போல் தாடி மார்பில் விழுந்திருந்தது. குழலைச் சுருட்டி தலைக்கு மேல் கட்டி அதில் ஒரு எலும்பு குத்தியிருந்தார். கழுத்தில் விழிமணி மாலை. எரியும் செந்நிற ஆடை. தழலெழுந்த மகாருத்ரன் போன்ற வடிவம். அவர் ருத்ரஉபாசனை கொண்டவர் என்று முன்னரே அறிந்திருந்தேன். உபாசனை கொண்டவர்கள் தங்கள் தெய்வம்போல தாங்களும் ஆகும் விந்தையை பலமுறை கண்டிருந்தேன்.

தலைவணங்கி “அனல் வடிவமான அரசருக்கு வணக்கம். நான் துவாரகையின் இளைய யாதவர் கிருஷ்ணனின் மைந்தன். துணைவி சத்யபாமையின் எட்டாவது சிறுவன். மூத்தவர் ஃபானுவின் இளையோன். அரச முறைப்படி ஒரு தூதுச்செய்தியுடன் தங்களை பார்க்க வந்திருக்கிறேன்” என்றேன். அவர் சிவந்த விழிகளால் என்னை நோக்கி “கூறுக!” என்றார்.

“அரசே, துவாரகையில் எண்பதின்மரும் இணைந்து ஒன்றாக ஆகியிருக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்” என்றேன். “ஆம்” என்று அவர் சொன்னார். “தந்தை கிருதவர்மன் வந்ததுமே எங்கள் பூசல் முடிவுக்கு வந்துவிட்டது. அந்தகக் குலத்து மூத்தவரும் எந்தை இளைய யாதவருக்கு நிகரானவருமான அவருடைய சொல்லை எண்பதின்மரும் தலைக்கொண்டிருக்கிறோம். இன்று மூத்தவர் ஃபானு முடிசூடுவதற்கு பிரத்யும்னனுக்கோ சாம்பனுக்கோ பிற அன்னையர் மைந்தருக்கோ மாற்றுச்சொல் எதுவும் இல்லை. எண்பதின்மரிடையே கருத்துப்பிரிவென்று எதுவும் இல்லை” என்றேன்.

அவர் அதை அறிந்திருக்கிறார் என விழிகள் காட்டின. “இன்னும் ஓரிரு நாட்களில் மைந்தர் அனைவரும் கூடி மூத்தவர் ஃபானுவை முடிசூட வைப்பதென்றும், அதை அனைத்து அரசர்களும் பங்குபெறும் பெருவிழவென நிகழ்த்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அம்முடிவு அரசவையில் அறிவிக்கப்பட்டு ஆணையாக வெளியிடுவதற்கு முன்னரே தங்களிடம் தெரிவிக்கப்படவேண்டும் என்று மூத்தவர் ஃபானு விரும்பினார். ஆகவேதான் என்னை தங்களிடம் அனுப்பினார்” என்றேன்.

கண்கள் உறுத்து என்னை பார்க்க கைகள் தாடியை அளைந்துகொண்டிருக்க ருக்மி தலையாட்டினார். “தாங்கள் இதில் என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள் என்பதைப்பற்றி மூத்தவருக்கு ஐயம் எதுவும் இல்லை. தாங்கள் என்றும் துவாரகையின் நலம் நாடுபவராகவே இருந்திருக்கிறீர்கள். குருதி வழியாக தாங்கள் பிரத்யும்னனுக்கு அணுக்கமானவர். ஆகவே பிரத்யும்னன் முடிசூடவேண்டும் என்று விழைந்தது இயல்பானது. அது தங்கள் மகள் பட்டத்தரசியாகக்கூடும் என்பதனாலாக இருக்கலாம். அதுவும் இயல்பானதே. ஷத்ரியர் நிலம் விழைவதும் குடிபெருக எண்ணுவதும் அவர்களுக்கு தெய்வங்கள் இட்ட ஆணை. ஆனால் இன்று பிரத்யும்னன் ஃபானு முடிசூட வேண்டும் என்று ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் தாங்கள் பிரத்யும்னனை ஆதரித்து ஃபானுவின் அவைக்கு வந்து முடிசூட்டுவிழாவை சிறப்பிக்க வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கை” என்றேன்.

என் சொற்களை நானே எண்ணி மகிழ்ந்தேன். “மூத்தவரே, இச்செய்தியை நான் அரசமுறைப்படி அறிவிக்க வரவில்லை. அதற்கு இன்னும் சில நாட்களாகும். ஆனால் குடிமூத்தவர்களுக்கு முடிவெடுப்பதற்கு முன்னரே சொல்லவேண்டும் என்பதனால் உங்களிடம் கூறவந்தேன். உங்கள் வாழ்த்தே மூத்தவர் ஃபானுவை அரசமையச் செய்யும். எண்பதின்மரையும் வாழவைக்கும். கிருதவர்மனும் சாத்யகியும் நீங்களும் பிதாமகர்களாக நின்று எடுத்துக்கொடுக்கும் மணிமுடியைச் சூட மூத்தவர் ஃபானு விழைகிறார்” என்றேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 38

பகுதி நான்கு : அலைமீள்கை – 21

தந்தையே, எந்த ஒரு அவையிலும் நான் பார்க்கும் ஒன்றுண்டு, அது கூடி சற்றுநேரம் கலைவுகொண்டிருக்கும். அதன் மையம் நோக்கி செல்வதற்கான தயக்கம் அனைவரிலும் வெளிப்படும். எவரோ ஒருவர் அந்த மெல்லிய படலத்தை கிழித்து எழுந்து அந்த மையத்தை நோக்கி செல்லவேண்டியிருக்கிறது. மெல்லமெல்ல அவை குவியும். உச்சம்கொள்ளும். ஆர்ப்பரிக்கும். அழுது சிரித்து கொந்தளித்து எங்கோ வானிலென இருக்கும். அங்கிருப்போர் தேவரோ அசுரரோ என தெரிவர். பின்னர் மெல்ல மெல்ல அந்த அலை வளைந்து பின்னடைகிறது. ஒவ்வொருவரும் மண்ணில் இறங்குகிறார்கள். தங்களுக்கு உரியதென்ன, தங்கள் நலன்கள் என்ன என்று கணிக்கத் தொடங்குகிறார்கள். அதன்பின் அங்கே திரள் என்பது இல்லை. ஒவ்வொருவரும் தனியர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசை.

அவையில் அந்த தரைபரவல் நிகழலாயிற்று. அவர்களின் உடல்நெகிழ்வுகள் அதையே காட்டின. இயல்பாக பின்சரிந்து அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டும் தாடியை வருடிக்கொண்டும் அவர்கள் கிருதவர்மனின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள். “மைந்தர்களே, யாதவர்களாகிய நாம் குருக்ஷேத்ரத்தில் நம் நற்பெயரை இழந்தோம். குருக்ஷேத்ரத்தில் நானும் சாத்யகியும் பெரும்புகழ் ஈட்டிக்கொண்டோம் என்பதில் ஐயமில்லை. ஆனால் யாதவர்கள் அழிந்தார்கள், புகழ்மறைந்தார்கள் என்பதே உண்மை. அதை நாம் ஈடுகட்டியாகவேண்டும். அந்தச் சிறுமையிலிருந்து கடந்துசென்றாகவேண்டும்.”

அப்போரில் பிரத்யும்னனும் சாம்பனும் தந்தையின் ஆணைக்கேற்ப விலகி நின்றார்கள் என்பது உண்மை. போரில் பலராமரும் பங்குகொள்ளவில்லை என்பதும் உண்மை. ஆனால் அது நாம் கூறும் ஒரு மாற்றுரை என்ற அளவிலேயே வரலாற்றில் நிற்கும். நாம் அஞ்சினோம், தன்னலம் கணித்து விலகினோம் என்றே அது வரலாற்றில் பதிவாகும். ஆகவே நாம் படைவல்லமையுடன் எழுந்தாகவேண்டும். இன்று நம்மிடம் குருக்ஷேத்ரப் போரில் வென்று மீண்ட இரு போர்வீரர்கள் இருக்கிறோம். நானும் சாத்யகியும் படைமுகம் நிற்கிறோம் என்பதே ஓர் ஆற்றல்தான். இளைய யாதவரின் ஆற்றலையும் மதிநுட்பத்தையும் கொண்டவர் என்று அறியப்படும் பலராமர் இருக்கிறார். படைத்தலைமைக்கு நம்மிடம் குறைவில்லை. யாதவர்கள் ஒருங்கிணைந்தால் படை எண்ணிக்கைக்கும் குறைவிருக்காது.

நாம் நிலம் வெல்வோம். முடிசூடுவோம், முழுதாள்வோம். இங்கு இதுவரை நிகழ்ந்த பூசல்கள் அனைத்திலும் இருந்த இடர் என்ன? நீங்கள் அனைவரும் துவாரகைக்காக விழைவுகொண்டீர்கள், இந்த மணிமுடிக்காக கனவு கண்டீர்கள். மைந்தரே, அது பிழை. துவாரகை கைப்பிடியளவு நிலம். இது ஒரு தொடக்கம். இந்நிலத்தை அல்ல, நீங்கள் பங்குபோட்டுக்கொள்ளவேண்டியது விரிந்து பரந்திருக்கும் பாரதவர்ஷத்தைத்தான். அங்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் நிலங்கள் அமையும். ஐயம் வேண்டியதில்லை, நீங்கள் எண்பதின்மரும் தனித்தனியாக முடிசூடி அமையும் நாடுகள் அமையும். உங்கள் கொடிவழிகள் முடிசூடி பாரதநிலத்தில் நீண்டு வளரும் உங்கள் புகழ் என்றுமிருக்கும். மரம் விதைகளை உருவாக்குவது தன் காலடியில் உதிர்ப்பதற்காக அல்ல, வெடித்துச் சிதறி நிலமெங்கும் பரவுவதற்காக. எண்பதின்மரின் தோற்றத்தில் இளைய யாதவர் எழுந்தது பாரதநிலத்தை வெல்வதற்காக என்றே உணர்க!

இளைய யாதவரின் மைந்தர் என்னும் அடையாளம் உங்கள் பெரும் படைக்கலம். வெல்லற்கரியவர் என அவர் இன்னமும் பாரதவர்ஷத்தால் நம்பப்படுகிறார். நீங்கள் இயற்றுவதனைத்திற்கும் அவரது சொற்களின் துணை உண்டு. பாரதவர்ஷம் முழுக்க இன்று ஐந்தாவது வேதம் என்று அவர் சொற்கள் ஏற்கப்படுகின்றன. பல்லாயிரம் பல்லாயிரம் மாந்தர் அச்சொற்களை நோக்கி வந்து குழுமுகிறார்கள். ஒரு நிலத்தில் ஐந்தாம் வேதம் ஏற்கப்பட்டுவிட்டது என்று அரசர் அறிவிப்பாரெனில் சில நாட்களுக்குள்ளேயே எட்டு பெருங்குடிகளும் திரண்டு அங்கு சென்று அந்நிலம் பொலிவு கொள்வதை காண்கிறோம். இன்று ஷத்ரியர்கள் அல்லாத அத்தனை அரசர்களுக்கும் இருக்கும் நல்வாய்ப்பு அது.

ஷத்ரியர்களால் ஐந்தாவது வேதத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. பாஞ்சாலம் தவிர எந்நிலமும் ஐந்தாம் வேதத்தை முழுமையாக ஏற்றதென்று இன்றும் அறிவிக்கப்படவில்லை. எனில் அவ்வாறு அறிவித்தால் வேதம் அளிக்கும் இயல்பான முடியுரிமையை அவர்கள் இழந்தவர்கள் ஆவார்கள். ஐந்தாம் வேதத்தை மறுக்கவில்லை என்ற நிலைபாட்டை அன்றி வேறு எதையும் இன்று ஷத்ரியர்கள் ஏற்க இயலாது. ஐந்தாம் வேதத்தை ஏற்றுகொண்ட நாடுகள் தவிர வேறெந்த நாடும் ஓங்கவும் இயலாது. ஆகவே நாம் ஷத்ரிய அடையாளத்துடன் இல்லை என்பதும், நமது கோன்மை தொல்வேத நெறியால் அமைக்கப்பட்டதல்ல என்பதும் நமக்கு மிகப் பெரிய வாய்ப்பு.

நாம் செல்லுமிடமெல்லாம் உங்கள் தந்தையின் ஐந்தாம் வேதத்தை கையில் ஏந்திச் செல்வோம். படைகொண்டு செல்லும் எவரும் ஒரு கையில் வாளும் மறுகையில் சொல்லும் கொண்டிருக்கவேண்டும் என்பதை அறிக! ஐந்தாம் வேதத்தின் பொருட்டு படையெழுகை நடக்கும் என்றால் நமது நில விழைவையோ கோன்மை விழைவையோ குடி ஆணவத்தையோ முற்றாக மறைத்துவிட முடியும். அறத்தின் பொருட்டே, அழியாச் சொல்லின் பொருட்டே நாம் படைகொண்டெழுகிறோம் என்று வரலாற்றில் நிலைநிறுத்த முடியும். ஆம், நாம் இளைய யாதவரின் நகரை சேர்ந்தவர், அவர் மைந்தர் என்ற வகையில் அவர் சொல்லுக்காக திரள்வோம். அவர் சொல்வதை பாரதவர்ஷம் முழுக்க நிலைநிறுத்தும் பொறுப்பை அஸ்தினபுரியிடமிருந்து நாம் ஏற்றுக்கொள்வோம். அதன்பொருட்டு படைகொண்டு செல்வோம். அதன்பொருட்டு பாரதவர்ஷத்தை முற்றாக வெல்வோம்.

மைந்தரே, அதன் பின் உங்களுக்கு இந்த துவாரகை ஒரு பொருட்டா என்ன? இன்று இந்த அவையில் அறிவிக்கிறேன். தந்தையென, பாரதவர்ஷத்தின் பெரும்போர்வீரன் என நின்று இதை உங்களுக்கு சொல்கிறேன். நான் பாரதவர்ஷத்தை வென்று உங்களுக்கு அளிக்கும்வரை ஓயமாட்டேன். வென்றபின் வெல்லும் தென்னிலத்தை முழுக்க பிரத்யும்னன் ஆள்வான். வடபுலம் முழுக்கவே சாம்பனுக்கு உரியது. கிழக்கும் மேற்கும் அவ்வாறே இளைய யாதவரின் மைந்தரால் பங்கிடப்படும். இந்தத் தலைமுறை முடிவதற்குள் எண்பது பேரரசுகள் பாரதவர்ஷத்தில் உருவாகும். அவையனைத்தும் இளைய யாதவரின் ஐந்தாவது வேதத்தை நிலைநிறுத்துவதாக இங்கு அமையும். ஆம், எண்பது அரசுகள். எண்பது அரசக்கொடிவழிகள்! யயாதிக்குப் பின் மாபெரும் பிரஜாபதியென உங்கள் தந்தையே அறியப்படுவார்.

இந்த எண்பது அரசுகளில் எதுவும் வீழ்ச்சியடைய முடியாது. எண்பதும் தனித்தனியாக வளரும். ஆனால் ஒன்று தாக்கப்பட்டால் எண்பதில் பிற நாடுகள் வந்து உதவி செய்யும். இதற்கு இணையான அரசியல் கூட்டு இதற்கு முன்பு இங்கு உருவானதில்லை. இதற்கு இணையான ஒரு கோன்மை இங்கு நிலைபெற்றதில்லை. ஒருவேளை இவ்வண்ணம் நிலைபெற வேண்டும் என்பதற்காகவே ஐந்தாவது வேதம் இங்கு எழுந்ததோ என்று ஐயுறுகிறேன். நாம் இளைய யாதவரின் பெருங்கனவை நனவாக்கும் தருணம். அவரது சொல்லை நிலைநிறுத்தும் தருணம். நமது குடி பாரதவர்ஷம் முழுக்க நிறைந்து இது நம் நிலமென்று ஆகும் தருணம்.

மைந்தர்ளே, பாரதவர்ஷம் முழுக்க நிறைந்து பெருகவேண்டும் என்று விழையாத ஒரு குடியும் இங்கு இல்லை. ஒவ்வொரு குடி வேண்டுதலின் போதும் பூசகர் சொல்லும் வரிகளில் “எங்கும் நிறைக! பாரதவர்ஷமே ஆகுக!” என்னும் சொல் இல்லாமல் இருந்ததில்லை. அச்சொல்லை மெய்யாக்கும் வாய்ப்பு நமக்கு மட்டுமே கிடைக்கிறது. இத்தருணத்தில் உறுதி கொள்வோம். நாம் பாரதவர்ஷத்தை வெல்வோம். நம் மூதாதையர் அனைவருக்கும் இச்சொல்லை அளிப்போம். இங்கு நம்மிடம் இருக்கும் அனைத்து சொல் வேறுபாடுகளையும் மறப்போம், ஒருங்கிணைந்து எழுவோம். நமக்கு இளைய யாதவர் அளித்த அறைகூவல் இது. அவரே எண்ணி வியக்கும் அளவுக்கு அதை மேற்கொள்வோம். ஆம், அவ்வாறே ஆகுக!

தலைகுனிந்து வணங்கிய கிருதவர்மனை நோக்கி அனைவரும் திகைத்தவர்கள் என அமர்ந்திருந்தனர். சாத்யகி எழுந்து கிருதவர்மனை தழுவிக்கொண்டதும் வாழ்த்தொலிகள் பொங்கி எழுந்தன.

தந்தையே, அதன் பின்பு உணவுக்கலங்கள் வரத்தொடங்கின. ஒவ்வொருவரும் கலைந்து அவரவர்களுக்கு உரியவர்களுடன் உரையாடத்தொடங்கினார்கள். கூச்சலும் சிரிப்பும் அவையை நிறைத்திருந்தன. என் அருகே அமர்ந்திருந்த கணிகர் மெல்லிய குரலில் “எனக்கொரு ஐயம். இந்த அவையில் அதை எழுப்பலாமா என்று எனக்கு தெரியவில்லை. எவரேனும் அதை எழுப்பலாம்” என்றார். “என்ன?” என்று நான் கேட்டேன். “இல்லை, இந்த அரங்கின் உவகைக் கொண்டாட்டத்தை சற்று குறைக்கக் கூடியதாக அது இருக்கலாம். பிறிதொருமுறை கூட அதை பேசலாம்” என்றார்.

அவருடைய சூழ்ச்சியை நான் புரிந்துகொண்டேன். அத்தகைய ஒரு பெருங்கூச்சல் அரங்கில் கூச்சலிடும் சொற்களை எவரும் செவிகொள்வதில்லை. மெல்ல சொல்லும் சொற்களை நோக்கி செவிகள் வரும். அவர் எனக்காக அதை சொல்லவில்லை. அவர் அங்கே எதையும் சொல்லவேண்டியதில்லை என்று எனக்கு தோன்றியது. அவரை தவிர்க்க நான் விழைந்தேன். ஆனால் எனக்கு அப்பால் அமர்ந்திருந்த பிரஃபானு “என்ன அது? சொல்லுங்கள் கணிகரே, என்ன?” என்றார். நான் “இதை நாம் பிறகு பேசிக்கொள்வோம். இத்தருணத்தில் அல்ல” என்றேன்.

பிரஃபானு நான் தடுத்தமையாலேயே ஆர்வம் கொண்டார். மிக நுண்ணிய ஒன்று அங்கே எழுகிறது என எண்ணினார். எழுந்து கணிகர் அருகே வந்து “கூறுக, தங்கள் ஐயம் என்ன?” என்றார். “ஐயம் அல்ல. என்ன செய்வது என்பதைப்பற்றிய பேச்சு மட்டுமே” என்றார் கணிகர். “கூறுக!” என்று பிரஃபானு கேட்டார். கணிகர் அவரையே இலக்காக்கினார் என்று உணர்ந்தேன். அந்த அவையில் அவர் சொன்னதை கூறுவதினூடாக தனக்கு கிடைக்கவிருக்கும் ஒரு சிறு முதன்மையை ஒருபோதும் அவர் இழக்கப்போவதில்லை. சலிப்புடன் பீடத்தில் சாய்ந்துகொண்டு என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம் என்று நான் என்னை விடுவித்துக்கொண்டேன்.

கணிகர் அவரிடம் மெதுவாக பேச அவர் தலையசைத்தார். அவர் முகம் மாறியது. அவர் தலைவணங்கியபின் திரும்பி உணவுப்பீடத்தை கையால் தட்டினார். அனைவரும் திரும்பி அவரை பார்த்தனர். எழுந்து கைதூக்கி உரத்த குரலில் “அவையீரே, ஒரு சொல்! இளைய யாதவரின் மகனாக ஒரு சொல்! நான் இந்த அவையில் ஒரு சொல் உரைக்கவிருக்கிறேன்” என்றார். ஃபானு எரிச்சலுடன் “என்ன அது?” என்றார். அந்த எரிச்சலால் அவர் மேலும் கூர்கொண்டார். தான் சொல்வதை கேட்ட பின் ஃபானு நிறைவுறுவார் என எண்ணினார். “அதை இங்கு உரைக்கலாமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கே அதற்கு ஒரு முடிவு கண்டுவிட்டால் மேற்கொண்டு செல்லலாம் என்று தோன்றுகிறது” என்றார்.

ஃபானு “கூறுக!” என்றார். அவை சொல்லவிந்து செவிகூர்ந்தது. ஆனால் கிருதவர்மன் அது ஒவ்வாத சொல்லின் தொடக்கம் என உள்ளுணர்ந்தார். எரிச்சல் வெளிப்படையாகவே தெரிய “மைந்தா, இங்கு ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அம்முடிவை எவ்வண்ணம் நிலைநிறுத்தப் போகிறோம் என்பது குறித்த சூழ்ச்சியை தனி அவையில் பிறகு நடத்தலாம். இம்முடிவு மட்டுமே பொது அவைக்குரியது” என்றார். “ஆம், ஆனால்…” என்று அவர் தொடங்க “நீ கூறவிருப்பது அம்முடிவில் ஏதேனும் மாற்றோ விலக்கோ எனில் மட்டும் கூறுக! அதை நடைமுறைப்படுத்துவதன் இடர்களைக் குறித்தோ வாய்ப்புகளைக் குறித்தோ எனில் தனி அவையில் ஆகுக!” என்று கிருதவர்மன் மீண்டும் கூறினார்.

கிருதவர்மனின் கண்களில் இருந்த உணர்விலிருந்து அவர் கணிகரின் உள்ளத்தை தெரிந்துகொண்டார் என்று எனக்கு தோன்றியது. கணிகரை அவர் மதிக்கிறார். கூடவே அஞ்சுகிறார். ஓரளவு தெரிந்தும் இருக்கிறார். ஆனால் எவரும் அவரை முழுமையாக தெரிந்துகொள்ள இயலாது என நான் எண்ணிக்கொண்டேன். பிரஃபானு “நான் எண்ணுவதை இங்கு கூறியாகவேண்டும். இங்கேயே முடிவெடுக்கப்படவேண்டும். ஏனெனில் இங்கு முடிவெடுத்தால் மட்டுமே சில தெளிவுகள் கிடைக்கும். வேறு எங்காயினும் இந்தச் சொல்லாடல் நின்று நின்று செல்லும். எண்ணியிராத உணர்வுகளும் கருத்துகளும் எழுந்து வரும். இங்கெனில் அது மிக எளிதில் முடிந்துவிடும்” என்றார்.

“கூறுக!” என்று ஃபானு சொன்னார். நான் மூத்தவர் ஃபானுவின் முகத்தை பார்த்தேன். புன்னகைக்கவேண்டும்போல் இருந்தது. அது எளியோரின் உளப்பாங்கு, ஓர் ஆவல் எழுந்துவிட்டால் என்னதான் இழப்பு என்றாலும் அதை அறிந்தே ஆகவேண்டும் என விழைவார்கள். அரசர்கள் ஒன்றை செவிகொள்வதோ தவிர்ப்பதோ கூட தங்கள் அரசுசூழ்தலின் தேவைக்கேற்பவே. பிரஃபானு “நாம் விதர்ப்ப நாட்டு அரசர் ருக்மியை எப்போது எதிர்கொள்ளப்போகிறோம்?” என்றார். “இங்கு யாதவக் கூட்டமைப்பை குறித்தும் பாரதவர்ஷத்தை யாதவர்கள் வெல்வதைக் குறித்தும் பேசினோம். ருக்மி தன்னை ஷத்ரியர் என்று எண்ணிக்கொள்கிறார். ஷத்ரிய மேன்மைக்காக துவாரகை மேல் படைகொண்டு வந்து நம் எல்லைக்கப்பால் நின்றிருக்கிறார். அவரை எங்கு நிறுத்துவோம்?”

“அவர் நமது நட்பு நாடு” என்று கிருதவர்மன் கூறினார். “ஆம், ஆனால் அவர் நட்புகொண்டு வருவது தனது குருதியைச் சேர்ந்த பிரத்யும்னனிடமே ஒழிய அந்தகக் குருதி கொண்ட ஃபானுவிடம் அல்ல. மூத்தவர் ஃபானுவை அவர் ஏற்கிறாரா இல்லையா என்பதை நான் அறிந்தாகவேண்டும். ஃபானுவின் தலைமை கொள்ளும் இந்நிலத்திற்கு துணையரசாக அவர் திகழமுடியுமா என்று அறியவேண்டும். அதன் பின்னரே நாம் இந்த முடிவை எடுக்கமுடியும்” என்றார் பிரஃபானு. “அதற்கும் நம் முடிவுக்கும் என்ன தொடர்பு?” என்று கிருதவர்மன் கேட்டார். “அவரை பிரத்யும்னனால் மீறமுடியுமா? அவர் சொல்லை ஏற்று அன்னை ருக்மிணி ஆணையிட்டால் அவர் மைந்தர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் முதலில் இந்த அவையில் அதை அறிவிக்கட்டும்” என்று பிரஃபானு சொன்னார்.

“முதலில் நாம் ஃபானு நமது தலைவர் என்று அறிவிப்போம். அதன் பின்னர் முறையாக அவருக்கு முடிசூட்டு விழாவுக்கு அழைப்பு தெரிவிப்போம்” என்று கிருதவர்மன் கூறினார். “அதுவே முறை. ஆனால் அதற்கு அப்பால் ஒன்றிருக்கிறது, நமது எல்லையில் அவரது படைகள் இருக்கின்றன. நாம் முடிசூட்டுவிழா முடிவை எடுத்திருப்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டும். அவருக்கு அதற்கு உடன்பாடுள்ளதா என்று கேட்கவேண்டும்” என்றார் பிரஃபானு. “அவர் எளியவரல்ல. எண்பதின்மரும் சேர்ந்து ஃபானுவை அரசராக்கினால் முதல் எதிர்ப்பு தனக்கே வரும் என்று அவர் அறிந்திருப்பார். பாரதவர்ஷம் எங்கும் யாதவர்கள் எழுந்தால் விதர்ப்பமும் பிற ஷத்ரிய நாடுகளும் ஆற்றல் குன்றும் என்றும் யாதவர்களின் காலடியில் ஷத்ரியர்கள் அமர்ந்திருக்கும் காலம் வரும் என்றும் அவர் அறிந்திருப்பார்.”

“இதை ஏன் இங்கு பேசுகிறோம்? பேசிப் பேசி இதை ஏன் இங்கு வளர்க்கிறோம்?” என்று கிருதவர்மன் எரிச்சலுடன் சொன்னார். “எதையும் சழக்குப்பேச்சாக, பூசலாக ஆக்கும் பழக்கத்தை யாதவர்களாகிய நாம் என்று கைவிடப்போகிறோம்?” பிரஃபானு “நான் பேசுவது அரசுசூழ்கை” என்றார். கிருதவர்மன் “நோக்குக, அவருடைய குருதிமைந்தன் பிரத்யும்னன் இங்கிருக்கிறான். அவன்தான் தென்பாரதத்தை முழுவதும் ஆட்சி செய்யவிருக்கிறான்” என்றார். “ஆம். ஆனால் அவர் யாதவக்குருதியின் ஒரு பகுதியாக ஆட்சி செய்யவிருக்கிறார். ஷத்ரிய அரசராக அல்ல” என்று பிரஃபானு சொன்னார். “அதை அவர் ஏற்பாரா? நான் கேட்கவிழைவது அதையே.”

அவையில் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். சிறுகுரல்களில் பேசத்தொடங்கினர். தான் ஒரு ஆழ்விளைவை உருவாக்கிவிட்டோம் என்னும் நிறைவை அடைந்த பிரஃபானு தன்னைத்தானே வியந்து மகிழ்ந்து புன்னகைத்து “ஒரு முடிவை எடுக்கவேண்டியது இன்றியமையாதது. இந்த அவையில் இந்த முடிவை நான் கூறுவதற்கு முதன்மையான அடிப்படை ஒன்றுள்ளது. இங்கு பிரத்யும்னன் இருக்கிறார். இங்கு யாதவ மைந்தர் நடுவே அவர் தன்னுடைய நிலைபாட்டை அறிவிக்கட்டும். அவர் ருக்மியை எவ்வாறு எதிர்கொள்வார்? ருக்மி ஷத்ரியர் என நிலைபாடு எடுத்து துவாரகைக்கு எதிராக நிலைகொள்வாரெனில் பிரத்யும்னன் ருக்மிக்கு எதிராக நம்முடன் நிற்பாரா? பிரத்யும்னன் நம்முடன் சேர்ந்து ருக்மிக்கு எதிராக என்றேனும் போர்புரிய ஒருக்கமாக இருப்பாரா?” என்றார்.

“ஆம், அது உண்மை” என்றார் குடித்தலைவரான கூர்மர். பிரஃபானு “அவ்வாறெனில் மட்டுமே நாம் ருக்மியுடன் பேசமுடியும். அவரை நமக்கு அடிபணிந்திருக்கச் செய்யமுடியும். அவருடைய படைகளை நமது எல்லையிலிருந்து அகற்றும்படி கோரமுடியும். எல்லையில் அவர் படை இருக்கும் வரை நாம் இங்கு முடிசூடுவது பொய்யாகவே ஆகும்” என்றார். கிருதவர்மன் “நாம் ஓர் அறிவிப்பை பாரதவர்ஷத்துக்கு வெளியிடுகிறோம். அதில் உடன்பாடும் எதிர்ப்பும் இருக்கும். உடன்பாடுகளை உரக்க சொல்ல சிலர் இருப்பார்கள். எதிர்ப்புகளை எவரும் உரக்க சொல்லமாட்டார்கள். எதிர்ப்புகள் புகைந்துகொண்டுதான் இருக்கும். நமது வெற்றியால் அவ்வெதிர்ப்புகளை இல்லாமல் ஆக்க முடியும். அதற்குமேல் எழும் எதிர்ப்புகளை மட்டுமே நாம் படைபலம் கொண்டு வெல்ல வேண்டியதிருக்கும்” என்றார்.

சாத்யகி “இன்றிருக்கும் சூழலில் ருக்மி நம்மை எதிர்க்கமாட்டார். ஒருங்கிணைந்த துவாரகையை எதிர்க்கும் ஆற்றல் அவருக்கு இல்லை. ஏனெனில் தேவையெனில் அஸ்தினபுரியின் படையை நாம் சேர்த்துகொள்ள முடியும் எனும்போது மொத்த பாரதவர்ஷமும் நம்முடன் இருப்பதாகவே பொருள். ருக்மி அதற்கு மாறாக எதுவும் செய்ய இன்று வாய்ப்பில்லை” என்றார். பிரஃபானு அது தன் நாள் என எண்ணிக்கொண்டார். உரக்க “வாய்ப்புகளைக்கொண்டு எண்ணவேண்டியதில்லை. நான் கோருவது ஒன்றே. இந்த அவையில் பிரத்யும்னன் கூறட்டும், அவர் எண்பதின்மருள் ஒருவராகவே நிலைகொள்வார் என்று. எந்நிலையிலும் அதுவே அவர் நிலை என்று. அதன் பிறகே அவருக்கு தன் மாதுலர் என்று. அதை கூறுவதற்கான ஒரு நல்வாய்ப்பல்லவா இந்த உண்டாட்டு? அதன் பிறகு ருக்மியை என்ன செய்வதென்று முடிவு செய்வோம்” என்றார்.

அதன்பின் ஒருவரும் ஒன்றும் சொல்ல இயலவில்லை. சில கணங்களில் அனைத்து ஓசைகளும் அடங்கி உண்டாட்டறை அமைதிகொண்டது. அனைவரும் பிரத்யும்னனை நோக்க, பிரத்யும்னன் தன் இளையவர்களை நோக்கினார். அவர் எழுவதற்குள் அநிருத்தன் எழுந்தான். அவன் எழுந்த அணியொலிகளும் ஆடையொலிகளும் கேட்டன. “இதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை. எந்தையின் பொருட்டு நான் இந்த அவையில் கூறுகிறேன், யாதவக் கூட்டமைப்பே எங்கள் முதன்மைத் தெரிவு. இளைய யாதவரின் மைந்தர், பெயர்மைந்தர் என்னும் நிலையிலேயே எப்போதும் நிலைகொள்வோம்” என்றான். அவையெங்கும் பெருமூச்சொலிகள் எழுந்தன. யாதவர்களை நன்கறிந்த நான் அவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். அவர்கள் பூசலிட விழைகிறார்கள். தங்கள் காலடி நிலம் பற்றி எரிந்தாலும் பூசலைப்போல அவர்கள் களிப்பது பிறிதொன்றிலில்லை.

“பிதாமகர் ருக்மி நமக்கு முதன்மையானவரே. அவரிடம் நானே பேசுகிறேன், அவர் புரிந்துகொள்வார். எனக்கும் அவருக்கும் எப்போதும் நல்லுறவே இருந்துள்ளது” என்றான் அநிருத்தன். பிரஃபானு யாதவர்களின் உளநிலையில் தானும் இருந்தார். அது கீழிறங்கி அமைய அவர் விரும்பவில்லை. “நல்லுறவைப்பற்றி பிறகு பேசுவோம். இப்போது அறுதியாகக் கேட்கவிருக்கும் வினா இதுவே. முதன்மையாக எவரை கொள்வீர்கள்? ஷத்ரிய மைந்தர்கள் கூறுக!” என்றார். அநிருத்தன் “நாங்கள் முதன்மையாக யாதவர்கள்” என்றான். “இதை எந்தையின் மைந்தர், அன்னை ருக்மிணியின் மைந்தர் அனைவர் பொருட்டும் சொல்கிறேன்.” பிரத்யும்னனும் இளையோரும் கைதூக்கி அதை ஏற்றுக்கொண்டனர்.

அநிருத்தன் “நான் கிருதவர்மனின் சொற்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். யாதவக் கூட்டை ஏற்கிறேன். எந்நிலையிலும் அதற்கு நிலைகொள்வேன் என்றும், அதன்பொருட்டு எவரிடமும் போர்புரிவேன் என்றும், தேவையெனில் அதற்காக உயிர்கொடுப்பேன் என்றும், எனது தனி விழைவுகளையும் ஆணவத்தையும் ஒருபோதும் அந்தப் பொதுநோக்கத்திற்கு எதிராக வைக்கமாட்டேன் என்றும் ஆணைகூறுகிறேன்” என்றான். “ஆனால்…” என்று பிரஃபானு மீண்டும் தொடங்க “அறுதிச்சொல்லை அவன் கூறிவிட்டான். அதை திரித்து ஐயுற்று விவாதிக்க வேண்டியதில்லை” என்றார் கிருதவர்மன்.

“நன்று, என் ஐயம் என்னவென்றால்…” என அவர் மீண்டும் தொடங்க “அறிவிலி, இக்கணம் நீ அமரவில்லை என்றால் என் கையால் உன் தலையை துண்டிப்பேன்” என்று சாத்யகி வாளை உருவியபடி எழுந்தார். பிரஃபானு அதை எதிர்பார்க்கவில்லை. அவர் முகம் குழம்பிச்சுருங்கியது. உடல் நடுங்கத் தொடங்கியது. அவர் தன் உடன்பிறந்தார் அனைவரின் முன்னும் பேருருவாக எழுந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்தார். எங்கே பிழை செய்தோம் என்று அவருக்கு புரியவில்லை. கால் தளர்ந்து அமர்ந்தார். நான் அவரிடம் “சொல்லை எடுப்பதில் அல்ல, நிறுத்துவதில்தான் நுண்ணறிவு உள்ளது” என்றேன். அவர் உதடுகளை அழுத்திக்கொண்டார். விழிகளில் நீர் நிறைந்திருந்தது.

ஃபானு “இது நம் அவைமுடிவு எனில் இச்செய்தியை நாம் முறையாக அவருக்கு அறிவிக்க வேண்டும். ருக்மிக்கு இங்கிருந்து ஒரு தூது செல்லட்டும்” என்றார். “அநிருத்தன் செல்லட்டும். அதுவே நன்று” என்று கிருதவர்மன் சொன்னார். கணிகர் “அவரும் அவருடைய குருதியை சார்ந்தவர். ஆகவே அணுக்கம் கூடும். அது நன்று” என்றார். “ஆனால் அணுக்கம் கூடுவதனால் சொல் பெருகும், சொல் பெருகும்போது முரண்பாடு பெருகும். குருதியைச் சேராத ஒருவர் செல்வதே முறையானது” என்றபோது அவர் ஒருகணம் என்னை பார்த்தார். ”என் தெரிவு பிரதிபானு செல்லலாம் என்பது.”

“ஏன்?” என்று சுஃபானு கேட்டார். “எற்கெனவே சாத்யகியை சந்திக்கவும் கிருதவர்மனை சந்திக்கவும் அவரே சென்றிருக்கிறார். வென்று வந்திருக்கிறார். அவர் இப்பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றுவார். அத்துடன் அவர்கள் இருவரையும் சந்திக்கச் சென்றவரே இவரையும் சந்திக்கச் சென்றார் என்பது அவருக்கும் மதிப்பை அளிப்பதாக அமையும். மூவரையும் இணையான இடத்தில் வைக்கிறோம் என்று காட்டும்” என்றார் கணிகர். ஃபானு “ஆம், அவ்வண்ணமே அவரிடம் தெரிவிக்கலாம்” என்றார். கணிகர் “சாத்யகிக்கும் கிருதவர்மனுக்கும் நிகராக ருக்மி நின்றிருப்பார் எனில் அவர் பெருவீரராகவும் வரலாற்றில் அறியப்படுவார். துவாரகை என்னும் பெருவிசை எழும்போது அவரது இடமென்ன என்பது அவ்வாறாக வகுக்கப்படுகிறது” என்றார்.

“சாத்யகிக்கும் கிருதவர்மனுக்கும் நிகராக குல மூதாதையின் இடம்” என்றார் கணிகர். “அவர் இங்கு துணையரசராக அல்ல, மூதாதையாகவே கணிக்கப்படுவார் என்பதை அதனூடாக அவருக்கு நாம் உணர்த்த முடியும். ஆகவே இளையவர் பிரதிபானு செல்வதே உகந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” என்றார். ஃபானு “ஆம், அவ்வாறே நானும் எண்ணுகிறேன்” என்றார். சுஃபானு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் விழிகள் மாறுபட்டிருந்தன. முதன்முறையாக என்னை அவர் அஞ்சத் தொடங்கியிருக்கிறார் என்பதை அறிந்து நான் புன்னகையை உள்ளடக்கி முகத்தை இறுக வைத்துக்கொண்டேன்.

சுஃபானு “ஆம், ஆனால் ஒருவேளை கிருதவர்மனிடமும் சாத்யகியிடமும் இளையவன் என்னென்ன பேசினான் என்பதை அறிவதற்கு ருக்மி முயல்வாரெனில் அந்த முயற்சி வீணாகிவிடக்கூடும். பிறிதொரு இளையவனை அனுப்பலாம். சாம்பனின் இளையோரோ லக்ஷ்மணையன்னையின் மைந்தர்களோ யாராவது ஒருவர்” என்றார். “அல்ல, அவர்களின் சொல்திறன் இன்னும் நிறுவப்படவில்லை. பிரதிபானு நிகரற்ற சொல்வீரர் என்பது முற்றாக நிறுவப்பட்டு நாமனைவரும் அறிந்ததாக உள்ளது” என்றார் கணிகர். “ஆம், அவனே செல்லட்டும்” என்று ஃபானு சொன்னார். கிருதவர்மன் “ஆம், எனில் அவ்வாறே. அவரிடம் கூறுவதென்ன என்பது தெளிவாக அமைந்துவிட்டபிறகு சென்று பேசுபவர் தனியாகச் சொல்லாடுவதற்கு ஒன்றுமில்லை. பிரதிபானு சென்று அவரை சந்திக்கட்டும்” என்றார்.