மாதம்: மார்ச் 2020

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 17

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 12

அரசே, நான் காளிந்தியன்னையை சந்திக்கச் சென்றபோது முற்றிலும் உளம் ஓய்ந்திருந்தேன். எண்ணுவதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் பல நாட்கள் அந்நிலையில் இருந்திருக்கிறேன். அன்னை தங்கியிருந்த தவச்சாலை நகரில் இருந்து தொலைவில் பாலைநிலத்திற்கு நடுவே இருந்தது. அங்கே அவருக்குத் துணையாக ஒரு சேடிப்பெண் மட்டுமே இருந்தாள் என்று என்னிடம் தேரோட்டி சொன்னான். அவள் அன்னை பிறந்த யமுனைக்கரை படகோட்டிக் குலத்திலிருந்து வந்தவள். அவளுக்கும் துவாரகையின் மொழி நாப்படவில்லை. என்னை பெரும்பாலும் கையசைவினாலேயே ஆற்றுப்படுத்தினாள்.

உள்ளே அவள் அழைத்துச் சென்றபோது அங்கே ஓர் அமைதியின்மையை உணர்ந்தேன். சேடி உள்ளே சென்றபின் மீண்டு வந்து “செல்க!” என சொன்னபோது நான் கதவைக் கடந்து அப்பால் சென்றேன். அது ஓர் அறையாக இருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால் வெளியே திறக்கும் வாயில் அது. அப்பால் திறந்த மண்வெளி அலையலையாகப் பெருகி வான் நோக்கி சென்றிருந்தது. வானம் முகிலற்ற நீலமென இறங்கி மண்ணில் படிந்திருந்தது. ஒரு மரம்கூட இல்லை, புதர்கள்கூட தொலைவில் சிறு கருந்துளிகள் எனத் தெரிந்தன. காற்று அங்கே அலைகொண்டிருந்தது. வலப்பக்கம் ஒரு கதவு சற்றே திறந்திருந்தது. ஏனென்றறியாமல் அப்பாலிருந்து எவரோ என்னை நோக்கிக்கொண்டிருந்தார்கள் என்னும் பொய்யுணர்வு உருவாகியது, அதுவே அந்த அமைதியின்மையை உருவாக்கியது என உணர்ந்தேன்.

அன்னை ஒரு சிறு கல்பீடத்தில் அமர்ந்திருந்தார். அவர் அருகே இன்னொரு கல்பீடத்தில் சிறுகலத்தில் நீர். அவர் எளிய மரவுரி ஆடை அணிந்திருந்தார். தன் குடிக்குரிய கல்மணி மாலை, சங்கு வளையல்கள். அவருக்கு அகவையே மிகவில்லை என்று என் உள்ளம் மயங்கியது. நான் நெடுங்காலம் முன்பு கண்ட அதே தோற்றம். யமுனைக்கரையிலிருந்து உங்கள் கைபற்றி இந்நகரில் நுழைந்தபோதிருந்த அதே இளமை. அவர் சிறுமியுடையவை என மெலிந்த கைகளைக் கோத்து மடியில் வைத்துக்கொண்டார். நான் கண்ட எட்டு அரசியரில் அவரே பொலிவும் அழகும் கொண்டிருந்தார். முகத்தில் இளம்புன்னகை இருந்தது. விழிகள் நீண்டு கனவில் எனத் தோன்றின. காதல்கொண்ட கன்னியரில் தோன்றும் மிதப்பும் சோர்வும் அவரிடம் இருந்தது. பிறர் விழிகளை உணரும் நுண்ணுணர்வும் எவரையும் பொருட்படுத்தாத தனிமையும் கொண்டவர் போலிருந்தார்.

நான் வணங்கினேன். ஆனால் முகமன் என எச்சொல்லும் உரைக்கத் தோன்றவில்லை. அன்னை விழிகளால் அமரும்படி சொன்னார். நான் அமர்ந்தேன். அன்னையிடம் எவ்வண்ணம் எதை பேசுவதென்று தெரியவில்லை. என் உள்ளம் வெவ்வேறு சொற்களை எடுத்து நோக்கி சலித்து உதிர்த்துக்கொண்டிருந்தது. அவர் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. நான் அவரை நோக்கியபடி அமர்ந்திருந்தேன். பொழுது சென்றுகொண்டிருந்தது. அவர் என்னை மறந்துவிட்டவர் போலிருந்தார். எத்தனை பொழுதானாலும் நாட்களோ ஆண்டுகளோ கடந்தாலும் அவ்வண்ணம் அங்கே இருக்க அவரால் இயலும் என்பதுபோல. நான் காலத்தை உணர்ந்தேன். உணரத்தொடங்கிய கணமே ஒன்று ஆயிரம் லட்சம் கோடி மடங்கென எடைமிகும் தன்மைகொண்டது காலம். எதிரே காலமேயான வெட்டவெளி.

நான் என் உடலை அசைத்து உள்ளத்தை மீட்டுக்கொண்டேன். “அரசி, நான் துவாரகையின் அரசரை சந்திக்கச் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றேன். அன்னை என்னை திகைப்புடன் ஏறிட்டுப் பார்த்தார். இளநங்கையின் விழிகள் என நான் மீண்டும் எண்ணிக்கொண்டேன். “இங்கிருக்கும் அத்தனை சிக்கல்களுக்கும் தீர்வு அரசர் இங்கே வருவதுதான் என்று தோன்றுகிறது. ஆகவே எட்டு அரசியரின் அழைப்புடன் அவரைத் தேடிக் கிளம்பலாம் என நினைக்கிறேன். ஏழு அரசியரும் ஓலை அளித்துள்ளனர். உங்கள் ஒப்புதலை நாடி வந்தேன்.” அவர் விழிகளில் “என்ன?” என்பதுபோல் ஒரு மெல்லிய பதைப்பு. நான் “உங்கள் ஓலை ஒன்று தேவை, அரசி” என்றேன்.

அவர் “என்ன?” என்றார். இளநங்கையின் இனிய குரல். “நான் தொலைவில் எங்கோ இருக்கும் துவாரகையின் அரசரை தேடிச்செல்கிறேன். அவருக்கு உங்கள் செய்தி என ஏதேனும் தேவை” என்றேன். “செய்தியா?” என்று இழுத்தார். சிறுமியைப்போல என்று என் அகம் சொல்லிக்கொண்டது. “ஆம், அவர் இருக்குமிடம் எனக்கு தெரிந்துவிட்டது.” அதை எண்ணிச் சொல்லவில்லை. ஆனால் அதுவே அவரை தொட்டெழுப்ப உகந்த சொல் என உடனே உணர்ந்தேன். அவர் எந்த வியப்பையும் உவகையையும் காட்டவில்லை. என் சொல்லை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. “அரசி, துவாரகையின் அரசர் கீழ்த்திசை நாடுகளில் ஒன்றில் இருக்கிறார். மேருமலையின் அடியில். இடம் தெரிந்துவிட்டது. நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்” என்று மீண்டும் சொன்னேன்.

அச்சொற்களும் அவரிடம் எந்த உணர்ச்சியையும் உருவாக்கவில்லை. அவர் புன்னகைத்தார். அதன் பொருள் எனக்கு புரியவில்லை. “தங்கள் சொற்களை நாடி வந்தேன். துவாரகையின் தலைவரிடம் நீங்கள் கூற விழைவது என்ன?” அவர் “என்ன?” என்றார். என்னுள் எரிச்சல் எழுந்தது. “அவரை நீங்கள் இங்கு வரும்படி அழைக்கலாம்” என்றேன். அவர் “ஏன்?” என்றார். அவர் என்ன எண்ணுகிறார் என்று தெரியாமல் திகைத்தேன். அவர் எழுந்துகொண்டு “இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்றார். நான் அமர்ந்திருந்தேன். அவர் திரும்ப வருவார் என்று எதிர்பார்த்தேன். நெடுநேரமாயிற்று. வெளியே காலமே இல்லாமல் கிடந்த வெறுநிலம் என்னை பொறுமையிழக்கச் செய்தது.

மேலும் சற்றுநேரம் நோக்கிவிட்டு எழுந்து வெளியே சென்றேன். அங்கே சேடி நின்றிருந்தாள். “அரசி உள்ளே சென்றார். நெடுநேரமாயிற்று” என்றேன். அவளால் நான் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை. “அவரிடம் நான் பேசியது முழுமை பெறவில்லை. என் தூது முடியவில்லை. அவர் மீண்டும் வந்தாலொழிய என்னால் இங்கிருந்து செல்லமுடியாது” என்றேன். “ஆம்” என்றாள். நான் சினத்துடன் “சென்று அவர் அங்கே என்ன செய்கிறார் என்று பார். அவரை நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்று சொல். முடிந்தால் கூடவே அழைத்து வா… புரிகிறதா?” என்றேன். “ஆணை” என்று சொல்லி உள்ளே சென்றாள்.

ஆனால் அவளும் நீண்டநேரம் வெளியே வரவில்லை. என்னால் அங்கே நிற்கமுடியவில்லை. முதுகை கூரிய ஈட்டி ஒன்று தொட்டுக்கொண்டிருப்பதுபோல அமைதியின்மை. திரும்பிச்சென்றுவிடலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தபோது வெளியே வந்தாள். என்னை அணுகி தயக்கத்துடன் “அரசிக்கு உங்களை சந்தித்த நினைவே இல்லை… அவர் அங்கே தன் பாவைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்” என்றாள். “பாவைகளுடனா?” என்றேன். “ஆம், பாவைகள் அல்ல, பூசனைச் சிலைகள்” என்றாள் சேடி. “எவருடைய சிலைகள்?” என்றேன். “அரசருடையவைதான். அவருடைய வெவ்வேறு அகவையைச் சேர்ந்த சிலைகள். மரப்பாவைகள், மண்பாவைகள், ஓவியத்திரைச்சீலைகள். அவர் அவற்றுடன் பேசி சிரித்து மகிழ்ந்திருக்கிறார்.”

நான் ஒருகணம் எண்ணிய பின் “நன்று, நான் கிளம்புகிறேன்” என்றேன். “அவரை மீண்டும் அழைக்கமுடியும். இப்போது அவர் ஒரு பாவைக்கு அன்னமிட்டுக்கொண்டிருக்கிறார். அதை துயிலச்செய்துவிட்டார் என்றால் அவர் மீண்டுவிடுவார்” என்றாள். “வேண்டியதில்லை” என்று நான் சொன்னேன். “நான் வந்ததை அவர் மைந்தர்கள் கேட்டால் சொல்க!” என்றபின் வெளியேறினேன். திரும்பும் வழியில் மெல்ல மெல்ல நிலைமீண்டேன். அங்கே எழுந்த ஒவ்வா உணர்வு என்ன என்று தெளிவாகியபடியே வந்தது. அங்கே எவரோ இருக்கிறார்கள் என்னும் உணர்வை எனக்கு அளித்தவை காளிந்தியன்னையின் விழியசைவுகளும் மெய்ப்பாடுகளும். அங்கே அவரன்றி எவருமில்லை என்பதை நான் நன்கறிந்தும் இருந்தேன். அந்த முரண்பாட்டில் திகைத்து நின்ற என் நுண்ணுணர்வு அளித்த ஒவ்வாமை அது.

நான் வெளியே வந்தபோது அங்கே காளிந்தியன்னையின் மைந்தர்களான சோமகனும் பத்ரனும் களிந்தவீரனும் நின்றிருந்தனர். நான் அவர்களை வணங்கினேன். பத்ரன் என்னிடம் “மூத்தவர் தங்களை சந்திக்க விழைந்தார்” என்றார். “நான் எவரையும் சந்திக்கும் நிலையில் இல்லை” என்றேன். “சுருதனிடம் கூறுக, நான் அன்னையிடமிருந்து ஓலை எதையும் பெறவில்லை, ஏழு ஓலைகளுடன்தான் கிளம்பவிருக்கிறேன் என்று!” அதை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். சோமகன் என்னிடம் “அன்னை என்ன சொன்னார்?” என்றார். “எதையும் சொல்லும் நிலையில் இல்லை” என்றேன். “ஆம், அவர் அவ்வண்ணம்தான் இருக்கிறார். தந்தை இங்கில்லை என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை” என்றார் சோமகன்.

சுபாகுவும் சாந்தனும் அப்பாலிருந்து அருகணைந்தனர். “என்ன நடந்தது?” என்று சுபாகு கேட்டார். பத்ரன் “வழக்கம்போலத்தான்” என்றார். சுபாகு என்னிடம் “ஏழு அன்னையரும் முனைப்புடன் உள்ளனர், ஒவ்வொருவருக்கும் முதன்மைப் படைக்கலமும் ஊர்தியும் அவர்களின் அன்னையரே. நாங்கள் மட்டும் அன்னையிருந்தும் இல்லாதவர்களாக உணர்கிறோம். அங்கே அகத்தளத்தில் இருப்பவர் அன்னை அல்ல, வெறும் ஒரு பாவை” என்றார். பூர்ணநமாம்ஷுவும் விருஷனும் இடைநாழி வழியாக வந்தனர். “ஒருவேளை உங்களிடம் அன்னை பேசக்கூடும் என எண்ணினோம்” என்றார் சுபாகு. நான் “அவர் ஒருவரிடம் மட்டுமே பேசுகிறார்” என்றேன்.

 

சாத்யகி சொன்னான் “அரசே, இதோ ஏழு அன்னையரின் ஓலையுடன் வந்துள்ளேன். இவற்றை உங்கள் முன் படைக்கிறேன். இவை ஏழு மன்றாட்டுகள். இவற்றை நீங்கள் புறக்கணித்துவிடக்கூடாது. என்னுடன் எழுக! உங்கள் நகர்காக்க வருக!” இளைய யாதவர் அவனை நோக்கியபடி அமர்ந்திருந்தார். “உங்கள் முடிவை நீங்கள் உரைத்தாக வேண்டும், அரசே” என்றான் சாத்யகி. அவர் முகத்தில் எந்த மெய்ப்பாடும் இல்லை. வேறெதையோ எண்ணி மகிழ்ந்திருப்பவர் போலிருந்தார். அப்புன்னகை அவனை நிலைகுலையச் செய்தது. அவன் சொல்லிக்கொண்டிருந்த போதெல்லாம் அவர் அப்புன்னகையுடன்தான் இருந்தாரா? மெய்யாகவே அவன் அவற்றை அவரிடம் சொன்னானா? இல்லை, அவை அவனுள் எழுந்து ஒழுகிச் சென்று ஓய்ந்த சொற்பெருக்கு மட்டும்தானா?

தயை வந்து “வடநிலத்தாரே, வருகிறீர்களா?” என்று கூவினாள். அவளருகே நின்றிருந்த சிறுவன் “வடநிலத்தாரே!” என்று திருந்தாச் சொல்லில் அழைத்தான். மேலும் குழந்தைகள் சிரித்தபடி ஓடிவந்தன. அவை வடநிலத்தாரே என அழைப்பதையே ஒரு விளையாட்டு எனக் கொண்டன. அவர் எழுந்து அவர்களை நோக்கி சென்றார். தயை அவரைத் தொட்டுவிட்டு “நான்தான் தொட்டேன்” என்று கூவியபடி ஓடினாள். அவர் அவளைத் தொடர்ந்து ஓட மற்ற குழந்தைகள் கூச்சலிட்டு நகைத்தபடி சிதறி ஓடின. இயல்பாக அங்கே ஒரு விளையாட்டு தொடங்கிவிட்டது. அவர் அவர்களுடன் ஓடி கூச்சலிட்டு நகைத்து ஆடிக்கொண்டிருந்தார்.

சாத்யகி அந்தத் திண்ணையில் அமர்ந்தபடி அவரை பார்த்துக்கொண்டிருந்தான். அவர் அவன் அறிந்த இளைய யாதவர் அல்ல. முற்றிலும் வேறொருவர். அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று அவன் அடையப்போவதுதான் என்ன? துவாரகையில் தன் மைந்தர் மைந்தருடன் அவர் இதைப்போல விளையாடிக்கொண்டிருக்கக் கூடும். அவரிடமிருந்து விடைபெற்றுக் கிளம்புவதே உகந்தது என எண்ணினான். ஆனால் அவரிடமிருந்து ஒரு சொல்லேனும் பெற்றாகவேண்டும். துவாரகையில் அவனை எதிர்பார்த்திருகும் அரசியருக்கு சொல்வதற்காக. அவர்களை அவர் முற்றிலும் துறந்துவிட்டார் என்று அறிவது அவர்களின் நிகர்ச்சாவு.

அவர் விளையாடி முடித்து வருவார் என அவன் எதிர்பார்த்தான். ஆனால் குழந்தைகள் விளையாடிச் சலிக்கவே இல்லை. இயல்பாக அவை ஒரு விளையாட்டிலிருந்து இன்னொன்றுக்கு சென்றுகொண்டிருந்தன. பின்னர் அவன் அந்தத் திண்ணையிலேயே படுத்துக்கொண்டான். முந்தையநாள் முதல் தொடர்ச்சியாக அவன் பேசிக்கொண்டிருந்தவற்றை மீண்டும் எண்ணிக்கொண்டான். அவை எங்கோ எனத் தெரிந்தன. அவன் விழித்துக்கொண்டபோது அந்தியாகிவிட்டிருந்தது. அவன் வெளியே வந்து அங்கே நின்றிருந்த முதுமகளிடம் “வடவர் எங்கே?” என்றான். “குழந்தைகளுடன் ஓடையில் நீராடுகிறார்” என்று அவள் சொன்னாள். “சற்று நேரத்தில் உணவருந்த வந்துவிடுவார்.”

இருண்டபின் கூச்சலிட்டபடி குழந்தைகளும் இளைய யாதவரும் வந்தார்கள். இளைய யாதவர் கையில் தாமரை மலர்களை வைத்திருந்தார். அவர்கள் கூவியபடியே முற்றத்தைக் கடந்து சென்றார்கள். அங்கே தென்மேற்கு மூலையில் ஏழன்னையரின் ஆலயப்பதிட்டை இருந்தது. ஏழு சிறு உருளைக்கற்களாக அன்னையர் நிறுவப்பட்டிருந்தார்கள். சிற்றகல் ஒன்று மணிச்சுடர் கொண்டிருந்தது. குழந்தைகள் மலர்களை அங்கே வைத்து வணங்கின. அப்போதும் அவை ஒன்றோடொன்று பூசலிட்டுக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தன.

அன்னையொருத்தி குழந்தைகளை உணவுக்கு அழைத்தாள். அவர்கள் உணவுண்ணும்பொருட்டு சென்று அமர்ந்தனர். ஈர உடையுடன் இளைய யாதவரும் உண்பதற்காக அமர்ந்தார். அந்திக்குப் பின் உணவுண்பதில்லை, ஈர ஆடையுடன் உண்ண அமர்வதில்லை என ஊர்களில் கொண்டிருந்த அத்தனை நெறிகளும் அங்கே எவராலும் கடைபிடிக்கப்படவில்லை. திண்ணையில் மணையில்லாமல் அமர்ந்து கொப்பரைகளிலும் தொன்னைகளிலும் தேன் சேர்த்து சமைக்கப்பட்ட பழக்கஞ்சியை அவர்கள் அருந்தினர். பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் உண்டு முடித்தனர். குழந்தைகள் கலங்களை வழித்து நக்கின. இளைய யாதவரும் குழந்தைபோல நக்குவதை அவன் பார்த்தான்.

ஒரு குடுவையில் சாத்யகிக்கும் உணவு கொண்டுவரப்பட்டது. அவன் இளைய யாதவரை பார்த்தபடியே அதை உண்டான். அவர் அவனை மறந்ததுபோல் தெரிந்தார். உண்டபின் அன்னையர் குழந்தைகளை உள்ளே கொண்டுசென்றனர். சிறுகுழந்தைகள் உண்ணும்போதே சரிந்து துயில்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தன. இளைய யாதவர் எழுந்து கைகழுவிவிட்டு வந்தார். அவன் அவரை நோக்க அவர் புன்னகைத்தபடி “நல்ல விளையாட்டு… இன்று நிலவில்லை. இருந்திருந்தால் இரவிலும் விளையாடியிருக்கலாம்” என்றபடி மேலிருந்து பாயை எடுத்துப் போட்டார். அதில் மல்லாந்து படுத்துக்கொண்டார். அவன் அருகே அமர்ந்திருந்தான். அவர் அவனிடம் ஒன்றும் பேசவில்லை.

“அரசே” என அவன் அழைத்தான். அவர் ஒருக்களித்து “சொல்” என்றார். “நான் கோரியவற்றுக்கு நீங்கள் மறுமொழி உரைக்கவில்லை” என்று அவன் சொன்னான். அவர் “எவற்றுக்கு?” என்றார். “நான் கொண்டுவந்த ஓலைகளுக்கு…” என்றான் சாத்யகி. “ஆம், ஆனால் அவற்றை என்னால் உளம்வாங்கவே முடியவில்லை. உகந்ததை நீயே செய்துகொள்” என்றார் இளைய யாதவர். “நீங்கள் என்னுடன் வரவேண்டும், அரசே” என்றான் சாத்யகி. அவர் ஒன்றும் சொல்லவில்லை. முகத்தில் அந்த இளமைந்தருக்குரிய புன்னகையே இருந்தது. துயிலில் இமைசரிவதை காணமுடிந்தது. “உங்கள் குடி காக்க, கொடிவழியினர் அழியாமல் தடுக்க, நகரை மீட்க நீங்கள் வந்தாகவேண்டும், அரசே” என்றான் சாத்யகி. அவர் இமைகள் மூடிக்கொண்டன. மூச்சின் ஓசை கேட்டது.

“அரசே” என்று அவன் அழைத்தான். மீண்டும் உரக்க “அரசே” என்றான். இளைய யாதவர் திடுக்கிட்டு விழிதிறந்து “சொல்க!” என்றார். “நான் கிளம்பவேண்டும்” என்றான். “ஆகுக!” என்றார் இளைய யாதவர். “எனக்கு நீங்கள் அளிக்கும் மறுமொழி என்ன?” அவர் புன்னகையுடன் “நான் எதையுமே உளம்கொள்ளவில்லை. ஆகவே எனக்கு சொல்வதற்கும் ஏதுமில்லை…” என்றார். “உங்களை எண்ணி தவமிருக்கும் அரசியருக்கு நீங்கள் உரைப்பதென்ன? ஒரு சொல்லேனும் கூறுக!” என்று சாத்யகி சொன்னான். அப்போது அவன் குரல் உடைந்ததைக் கேட்டு அவனே உளமுருகினான். “அவர்களை நீங்கள் முற்றாகக் கைவிடலாகாது, அரசே. அவர்கள் அத்தகு பிழை என எதையும் செய்ததில்லை.”

“நான் எவரையும் கைவிடவில்லை” என்றார் இளைய யாதவர். “ஆனால் அவர்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு சொல்லும் இல்லை.” சாத்யகி “அரசே” என்றான். அவர் “நான் இங்கே வந்தபின்னர்தான் பொருளை ஒளித்து வைத்து மீண்டும் கண்டுபிடிக்கும் விளையாட்டை ஆடத்தொடங்கினேன். ஒரு பொருளை இந்தப் படுகையில் எங்கேனும் ஒளித்துவைக்கவேண்டும். அதை தேடிக் கண்டுபிடிப்பவர் வென்றார். காலடிகளைக்கொண்டு கண்டுபிடிக்கலாம். ஆனால் சித்ரன் பின்னோக்கி நடந்துசென்று ஒளித்துவைத்தான் ஒருமுறை… சில குழந்தைகள் மரம் வழியாகவே செல்கின்றன. மிகக் கடினம். ஒன்றை ஒளித்துவைத்தவர் அதை நினைவில் வைத்திருப்பார் என்றால் எப்படியும் கண்டுபிடிக்கலாம். தேடும்போது அவர் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தாலே போதும். சிறுகுழந்தைகள் உடனே மறந்துவிடுவதுண்டு. அவர்களே மறந்த இடத்தை நாம் சென்றடையவே முடியாது” என்றார்.

சாத்யகி தலையசைத்தான். “இன்னொரு நல்ல விளையாட்டு இங்கே உள்ளது. சிறுகுச்சிகளை அள்ளி கொட்டவேண்டும். பிற குச்சிகள் அசையாமல் ஒவ்வொரு குச்சியாக எடுக்கவேண்டும். என்னால் எடுக்க முடிந்ததே இல்லை. அவ்விளையாட்டில் எந்த ஆணும் வென்று நான் பார்த்ததே இல்லை. ஆனால் பெண்குழந்தைகள் மிகப் பொறுமையாக அவற்றை எடுத்துவிடுகின்றன. தயை மிக எளிதாக எடுப்பாள். அவளிடம் அவள் எப்படி எடுக்கிறாள் என்று கேட்டேன். மற்ற குச்சிகளிடம் உங்களை தொடவில்லை, தூங்குங்கள் தூங்குங்கள் என்று சொல்லிக்கொண்டே எடுப்பேன் என்றாள். நாம் சொன்னால் குச்சிகள் கேட்குமா என்றேன். நான் சொன்னால் அவற்றுக்குக் கேட்கிறதே என்றாள்” என்றார் இளைய யாதவர்.

“இங்கே அவ்வளவு விளையாட்டுக்கள் உள்ளன… விளையாடி முடிப்பதற்குள் இளமை கடந்துவிடும். இளமை முடியாமல் இங்கே வாழமுடிந்தால் அதுவே இன்பம்.” அவர் காலை ஆட்டியபடி புன்னகையுடன் கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். உடலெங்கும் உவகை நிறைந்திருந்தது. “இன்னொரு விளையாட்டு உண்டு. ஒரு கூழாங்கல்லை நம்மிடம் தருவார்கள். அதில் ஒரு சிறிய அடையாளம் வைக்கப்பட்டிருக்கும். அதே போன்ற அடையாளம் பொறித்த இன்னொரு கூழாங்கல்லை காட்டுக்குள் வீசிவிடுவார்கள். அதை நாம் கண்டடைய வேண்டும். விதைகள், இறகுகள் அனைத்தும் ஒன்றே எனத் தோன்றும். கூழாங்கல் மட்டும் ஒன்று பிறிதுபோல் இல்லை. அந்தக் கூழாங்கல்லைக் கண்டடைகையில் நாம் அடையும் உவகை…”

அவர் புரண்டுபடுத்து அவனிடம் “நாம் இதையெல்லாம் துவாரகையிலோ மதுராவிலோ மதுவனத்திலோ விளையாடுவதுண்டா?” என்றார். “இல்லை” என்று சாத்யகி சொன்னான். “ஏன்?” என்று அவர் கேட்டார். “அங்கே நாம் ஆடும் விளையாட்டுக்களெல்லாம் சற்று முதிர்ந்தால் போர் என ஆகக்கூடியவை.” அவர் புன்னகையுடன் காலை ஆட்டியபடி “ஆம், போர். அதுகூட நல்ல விளையாட்டுத்தான்” என்றார். அவன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். காலில் ஆட்டம் நின்றது. இமைகள் சரிந்து மூடிக்கொண்டன. அவர் துயில்கொள்ளலானார். மூச்சொலியை அவன் கேட்டுக்கொண்டிருந்தான். நெடும்பொழுது. வெளியே இருள் செறிந்துகொண்டிருந்தது. ஊர் முற்றிலும் இருளுக்குள் ஆழ்ந்து மறைந்திருந்தது.

சாத்யகி எழுந்து சென்று எண்ணை விளக்கை திரியிழுத்து தாழ்த்தினான். இருட்டில் அக்குடிலும் இல்லையென்றானது. வெட்டவெளியில் படுத்திருப்பது போன்ற உணர்வு. ஆனால் வெளியே ஒளித்துளிகள் அலைந்தன. அங்கே நிறைந்திருந்த ஈரம் மின்மினிகளுக்கு மிக உகந்தது என அவன் கண்டிருந்தான். அவை கூட்டம் கூட்டமாக கிளம்பி இருளை ஊடுருவிக் கிழித்து சுழன்று பறந்து ஒளிக்கோடிகளாகி வலையென்றாகி விழிநிறைப்பதை முந்தைய நாளும் கண்டிருந்தான். கதவினூடாக ஒரு மின்மினி உள்ளே வந்தது. எங்கே அமர்வதென்று எண்ணுவதுபோல சுழன்றது. பிறிதொன்று, மேலும் ஒன்று. மின்மினிகள் அறைக்குள்ளும் பரவின. மின்மினிகளின் ஒளியாலான மெல்லிய மிளிர்வு. நீலமா சிவப்பா என மாறிமாறி மாயம் காட்டுபவை.

அவன் திரும்பியபோது ஒருகணம் உளம் அதிர்ந்தான். அவனருகே படுத்திருந்த இளைய யாதவரின் முகம் சிறுவனுடையது. அது கனவா உளமயக்கா என ஐயம்கொண்டு அவன் விழிமூடி திறந்து நோக்கினான். அவர் முகம் ஏழு அகவைகொண்ட சிறுவனின் முகமாகவே தோன்றியது. விரிந்த மென்சிரிப்பு அவ்வண்ணமே நிலைத்திருந்தது. அவன் நோக்கிக்கொண்டே அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து மெல்ல வெளியே வந்தான். தான் கொண்டுவந்த ஓலைகளையும் கணையாழியையும் திண்ணையில் பார்த்தான். அவற்றை மீண்டும் எடுத்துக்கொண்டான். முற்றத்தில் இறங்கி காட்டை நோக்கி நடந்தான்.

நீரோடைகளின் ஓசையும் காட்டில் காற்று பெருகிச்செல்லும் முழக்கமும் கேட்டுக்கொண்டிருந்தன. வானம் விண்மீன்கள் நிறைந்து பொலிந்தது. கீழே மின்மினிகளின் ஒளி விழியை கூசச்செய்யும் அளவுக்கு நிறைந்திருந்தது. அனல்பொறிகள் என, கண்கள் என. மின்மினிகளுக்கு அத்தனை ஒளி உண்டு என அவன் முன்பு அறிந்ததே இல்லை. அவன் ஓடையைக் கடந்து காட்டை வகுந்துசென்ற பாதையை அடைந்தான். அவனுடைய மணம் உணர்ந்து அவன் புரவி குரல் கொடுத்தது. அவன் சீழ்க்கை அடித்து அதை அழைத்தான். இரு மின்மினிகள் புரவியின் விழிகளாயின. அது காலடியோசை வேறெங்கோ கேட்க அவனை நோக்கி வந்தது. அவன் அதன் கழுத்தை தடவினான். அதை அழைத்துக்கொண்டு தன் சேணம் மாட்டப்பட்டிருந்த மரத்தை நோக்கி நடந்தான்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 11

அரசே, நான் காளிந்தி அன்னையை நேரில் சந்திப்பதற்கு முன்பு இளவரசி கிருஷ்ணையை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அவையில் அவரை சந்தித்திருந்தபோதிலும்கூட அது அவரல்ல என்று தோன்றிக்கொண்டிருந்தது. அவையில் அவர் வெளிப்படுத்தியது ஒரு பொது உணர்வு, அது தந்தையின் மகள் என அவர் திகழ்ந்தது. அவர் தந்தையின் இறப்பிற்கு தாங்கள் வழி வகுத்தீர்கள் என்பதை இன்று சூதர்கள் பாடிப் பாடி நிறுவிவிட்ட பின்னர் அவ்வண்ணமன்றி அவர் தோற்றமளிக்க இயலாது. ஆனால் அதற்கப்பால் அவருக்குள் நீங்கள் திகழ முடியும், திகழ்ந்தே ஆகவேண்டும்.

பாரதவர்ஷமெங்கும் கன்னியரின் கனவுப் பருவத்தில் ஒளியுடன் உள்ளே நுழைபவர் நீங்கள். ஒருபுறம் இசையாலும் மறுபுறம் கவிதையாலும் வடிக்கப்பட்டது உங்களுடைய உருவம். பெண்டிர் பின்னர் துணைவியராகி, அன்னையராகி, முதியோராகி உருமாறிக்கொண்டாலும் கன்னியராக இருந்த காலகட்டத்தின் பாவனை ஒன்று அவர்களுள் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. எங்கு வழி பிரிந்து எத்தனை தொலைவு சென்றாலும் தனித்த ஆழத்தில் தன்னுள் தனியாக திரும்பிச்சென்று தன் புதைந்த சிற்றறைக்குள்ளிருந்து அந்தக் காலகட்டத்தின் அணிகளையும் பூண்களையும் எடுத்து நோக்கி மகிழாமல் இருக்க அவர்களால் இயலாது.

பெண்களுக்கு அவர்களின் பெண்ணெழிலும் பெண்ணாற்றலும் பெண்ணுவகையும் முழுதுற அமைவது கன்னிப்பருவத்திலேயே. அவர்கள் தருக்கி நிமிர்வதும், மகிழ்ந்து மெய்மறப்பதும், தன்னை தானே உருவாக்கி தன்னை தான் நுகர்ந்து நிறைவடைவதும் கன்னிப்பருவத்திலேயே. கன்னியென பெண்டிர் அனைவரையும் நூல்கள் சொல்வது அதனால்தான். கன்னியன்னையென புடவிபடைத்த விசையை கல்லில் நிறுத்தியவன் கண்ட மெய்மை அது. முன்பு கேட்டேன், ஒரு சூதன் பாடியதை. அன்னையரின் மைந்தரை எண்ணி சொல்லிவிடலாம், கன்னியரின் மைந்தர் கணக்கற்றவர் என்று. துணைவியரின் ஆண்கள் ஒருசிலரே, கன்னியருக்கு அவர்கள் ஒற்றைப் பேருரு என்று. ஆகவே நான் அவரை சந்திக்கவேண்டும் என்று செய்தி சொல்லி அனுப்பினேன்.

எவ்வண்ணம் அச்சந்திப்பு நிகழவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்கோத்துக்கொண்டேன். அவரிடம் சென்று உங்களுக்கென ஒரு செய்தியை கேட்பதல்ல எனது நோக்கம். அவ்வண்ணம் கேட்டால் இச்சூழல் எதை வகுத்திருக்கிறதோ, அவரிடம் எதை எதிர்பார்த்திருக்கிறதோ அதை மட்டுமே கூற இயலும். பிறிதொன்றைச் சொல்லி பழி சூடிக்கொள்ளவோ பிறிதொன்றை எண்ணி தனக்குத்தானே பழி ஏற்றுக்கொள்ளவோ அவர் துணியமாட்டார். இயல்பாக பேசிக்கொண்டிருக்கவேண்டும். அப்பேச்சில் அரசியல் எழலாகாது. நான் அவரிடம் பர்சானபுரியின் ராதையைப்பற்றி பேசலாமா என்று எண்ணினேன். பின்னர் அதையும் தொடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

இங்குள்ள அத்தனை பெண்டிரிலும் ராதை உறைகிறாள். ஆனால் தங்களை ராதையென உணரும் அக்கணமே விலகி ராதை மேல் காழ்ப்பு கொள்ளாத எவருமில்லை. ராதையை தொட்டெழுப்ப வேண்டும், ராதையைப் பற்றி பேசிவிடலாகாது. ராதை என் பேச்சினூடாக எவ்வண்ணமேனும் என்னையறியாமல் அங்கு நினைவுகூரப்படுவாளெனில் அது நன்று. அவரை தன் கன்னிப்பருவம் நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். அன்று அவருள் எழுந்த தங்கள் இனிய வடிவை ஒருகணமேனும் நினைத்து முகம் மலர்வார் எனில், விழி கனிவார் எனில், சொல் குளிர்வாரெனில் அதுவே அத்தருணம், அப்போது தங்களைப்பற்றி சொல்லவேண்டும்.

இன்று தாங்களிருக்கும் இத்தனிமை, அனைவரும் உடனிருக்கையிலும் எவருமிலாதிருக்கும் இந்த உச்சம் பற்றி கூறவேண்டும் என முடிவெடுத்தேன். பெண்டிர் ஆண்கள் துயருற்றிருப்பதை விரும்புகிறார்கள், அது இறுகிய நிலம் மீது பெருமழை பெய்து மண் இளகுவதுபோல் அவர்கள் மேல் தாங்கள் வேர் விடுவதற்கு உகந்தது. தளிர்க்கிளை விரித்து தழைத்தோங்குவதற்குரிய கதுப்பு. பெண்டிர் உள்ளத்தில் தனித்த, நோயுற்றுத் துயரடைந்த ஆண் எப்போதும் எழுகிறான். அப்போது அவர்கள் அவனை மாண்பு நீக்கி, பேருரு அகற்றி, ஆணவம் களைந்து குழவியாக்கிக்கொள்ள முடியும். ஆடைகளைக் களைந்து கையிலெடுத்துக்கொள்ள முடியும்.

நான் என் ஏவலன் செய்தியுடன் மீண்டு வருவதை எதிர்பார்த்து பதற்றத்துடன் காத்திருந்தேன். ஒருவேளை இளவரசி கிருஷ்ணை என்னை சந்திப்பதை முற்றாக தவிர்த்துவிடக்கூடும் என்றும் எண்ணினேன். பலமுறை அவ்வாறே நிகழ்ந்துள்ளது. குருக்ஷேத்ரப் பெரும்போர் அங்கு நிகழ்ந்துகொண்டிருந்தபோது இளவரசி தன் கொழுநர் உட்பட எவரையுமே சந்திக்கவில்லை என்றார்கள். களத்திலிருந்து வந்த செய்திகளை மட்டும் ஒரு சேடிப்பெண் வந்து கேட்டு சென்று அரசியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். போர் தொடங்குவதற்குள்ளேயே அப்போரின் முடிவை முற்றுணர்ந்து தன்னுள் தனித்து குளிர்ந்து இறுகிவிட்டார் கிருஷ்ணை. அவருக்குத் தெரியும் நீங்கள் யார் என்று.

அச்சேடியிடம் பின்னர் கேட்டேன் “செய்திகளை நீ சென்று அவரிடம் சொல்வதுண்டா?” என்று. “இல்லை” என்று அவள் சொன்னாள். “கௌரவத் தரப்பின் பெருவீரர்கள் உட்பட எவர் மறைந்தாலும் அதை தன்னிடம் வந்து சொல்ல வேண்டியதில்லை என்றார். போரில் என்ன நிகழ்கிறது என்றும் தன்னிடம் விரித்துரைக்க வேண்டியதில்லை என்று இளவரசி ஆணையிட்டிருந்தார். களத்தில் என்ன நிகழ்கிறது என்பதை நோக்கி, அங்கே அஸ்தினபுரியின் அரசரோ அவரது இளவல்கள் நூற்றுவரோ அவர் மைந்தரோ களம்படுவார்களெனில் அச்செய்தியை மட்டும் உரைத்தால் போதும். மாண்டோர் பெயர் மட்டும் கூறப்பட்டால் போதும். அச்செய்தியையும் சொல்லென உரைக்க வேண்டியதில்லை. அதை ஓலையில் எழுதி அளித்தால் போதும் என்றார்.”

ஒவ்வொரு பெயராக அவர் தன் உள்ளத்திலிருந்து அகற்றிக்கொண்டிருந்தார். இறுதியில் துச்சாதனன் மறைந்தால் இளஞ்சிவப்புப் பட்டாடை அணிந்து வந்து தன் முன் நிற்கவேண்டும் என்றும் லக்ஷ்மணன் மறைந்தால் பச்சை என்றும் துருமசேனனுக்கு மஞ்சள் என்றும் துரியோதனன் மறைந்தால் அடர்சிவப்பு என்றும் அரசி ஆணையிட்டிருந்தார். அவ்வாறு சொல்லின்மையில் இருந்தே அச்செய்தியை அவர் அறிந்திருக்கிறார். தந்தையின் நீப்புச் செய்தியை அறிந்த அக்கணமே உணவொழித்து பன்னிரு நாட்கள் நோன்பு கொண்டார். பின்னர் வெளிவந்தபோது மெலிந்து வாயுலர்ந்து விழி மங்கி பிறிதொருத்தியாக மாறியிருந்தார்.

“அதன்பின் இன்று வரை அவர் புன்னகைக்கவில்லை. விழிகளில்கூட புன்னகை எழவில்லை” என்றாள் சேடி. “ஒவ்வொரு நாளும் அரசுசூழ் பணிகளுக்கு வந்தமர்ந்துவிட்டு தன் சிற்றறைக்கு மீள்கிறார். அணுக்கர் என்று இன்று அவருக்கு எவரும் இல்லை. அரசர்கூட மிக அரிதாகவே அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று அங்கிருப்பது ஓர் அறியாத் தெய்வம். அவ்வுள்ளத்தில் நிகழ்வதென்ன என்பதை எவரும் அறியார்” என்றாள். நான் அத்தோற்றத்தை என்னுள் முன்னரே எழுப்பிக்கொண்டிருந்தேன். நான் நேரில் கண்ட கிருஷ்ணை அவ்வாறே தோற்றமளித்தார். ஆயினும் எனக்கு அவரை சந்திக்கமுடியும் என்னும் நம்பிக்கை இருந்தது. அவையில் அவர் பேசியவை குறைவு. எஞ்சிய சொற்கள் அவரிடம் இருக்கும், அவை அவரை என்னை சந்திக்கச்செய்யும். எஞ்சும் சொற்கள் கணமொழியாமல் புழுக்கள் எனத் துடிப்பவை.

பலமுறை பலரும் அவரை தனியாக சந்திக்க முயன்றிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அஸ்தினபுரியிலிருந்து பெருங்கவிஞர் சாரிகர் இங்கு வந்து ‘அருந்ததி வைபவம்’, ‘துவாரகை வலம்’ எனும் இரு காவியங்களை எழுதியதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அருந்ததி வைபவம் இன்று உத்தராபரிணயம் என்ற பேரில் சூதர்பாடலாக ஆகி மக்களிடையே புகழ்பெற்றிருக்கிறது. அக்காவியங்களை அவர் சாம்பனின் அவையில் அரங்கேற்றியபோது மேடையில் அரசருக்கருகே கிருஷ்ணை அமர்ந்திருந்தார். அச்சொற்களில் ஒன்றேனும் அவர் செவியில் நுழைந்ததா என்பதற்கு சான்றில்லை என்று அவையோர் உணர்ந்தனர். அவர் விழி கனிந்தது ஒரு சொல்லுக்காக மட்டுமே. உடல் சுருங்கி பிறந்து மெல்ல உருக்கொண்டு வளர்ந்து வந்த பரீக்ஷித்தின் பெயர் கூறப்பட்டபோது.

பரீக்ஷித்தை அவர் பேரன்புடனும் அதற்குரிய பதற்றத்துடனும் பேணினார். அம்மகவை ஏழு நாட்களுக்கு ஒருமுறை அவரே சென்று பார்த்தார். தொட்டிலுக்கு அருகே தன் கைவிரல்களால் அம்மகவின் சிறு தளிர்விரல்களைத் தொட்டு அமர்ந்திருக்கையில் விழி சரித்து ஒரு கனவுநிலைக்குச் சென்றார். பரீக்ஷித் அஸ்தினபுரிக்கு கிளம்பியபோதுதான் நீண்ட நாட்களுக்குப் பின் அரசி கிருஷ்ணை தன் அகத்தளத்திலிருந்து வெளிவந்து துவாரகையின் பெருமுற்றத்தில் நிகழ்ந்த கொலுஅமர்தலுக்கும் விடைகொடலுக்கும் அமர்ந்தார். அவரை எதிர்பார்த்திருந்த குடிகள் அவருடைய தோற்றம் கண்டு திகைத்து சொல்லவிந்தனர். எனவே வாழ்த்தொலிகள்கூட எழவில்லை. உயிர்நீத்த உடல்போலிருந்தார் அரசி என்று சேடி ஒருத்தி என்னிடம் சொன்னாள்.

அஸ்தினபுரியின் இளவரசரை பட்டு விரித்த பொற்தாலத்தில் ஏந்தி துவாரகையின் குடிமக்களுக்கு காட்டியபோது அரண்மனை முற்றமெங்கும் நிறைந்திருந்த திரள் ஒரு சொல்லையும் உரைக்கவில்லை. ஒரு வாழ்த்தொலிகூட எழவில்லை. திகைத்தவர்கள்போல, அஞ்சியவர்கள்போல அவர்கள் விழி மலைத்து நோக்கி நின்றனர். இரு கைகளையும் கூப்பியபடி எழுந்த கிருஷ்ணை “அஸ்தினபுரியின் இளவரசர் வெல்க! வெல்க குருவின் கொடிவழி வந்த பரீக்ஷித்!” என்று கூவினார். அவர் குரல் முன்னால் நின்ற சிலருக்கே கேட்டது. ஆனால் உதடுகள் அசைவதிலிருந்து புரிந்துகொண்டு துவாரகையின் குடிமக்கள் பேரொலி எழுப்பி அம்மைந்தனை வாழ்த்தினர். முனிவரும் அந்தணரும் புலவரும் சூதரும் குடிமுற்றம் வந்து மைந்தனை மலரிட்டு வாழ்த்தினர்.

அரசி மைந்தனை எடுத்து நெஞ்சோடணைத்து முன்நெற்றியில் முத்தமிட்டு நற்சொல் உரைத்து அஸ்தினபுரியிலிருந்து அவரை கொண்டுசெல்வதற்காக வந்திருந்த தூதுக்குழுவிடம் அளித்தார். சுதமனும் சுரேசரும் அரசியை வணங்கி மைந்தனை பெற்றுக்கொண்டனர். அணிநிரை அரண்மனைமுற்றத்திலிருந்து கிளம்பி அகன்று செல்வதை பார்த்தபடி அரசமேடையில் கைகளைக் கோத்து நெஞ்சில் வைத்து அமர்ந்திருந்தபோது அரசி கிருஷ்ணை விழி நிறைந்து முகம் கனிந்தார். தேர்கள் சென்று மறைந்த நெடுந்தொலைவு வரை நோக்கிக்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் அவர் குடிகள் காண எங்கும் கொலுஅமரவில்லை. பின்னர் பல விழவுகள் வந்து சென்றன. ஒவ்வொரு ஆண்டும் துவாரகையில் கூடும் ஆவணிமாத எட்டாம் கருநிலவுநாள் கொண்டாட்டம் இப்போது பொலிவிழந்து பேருக்கென நிகழ்கிறது. அன்று பழைய நினைவை இழக்க விரும்பாத குடிகள் துவாரகையின் அரசமுற்றத்திற்கு வந்து அங்கு கூடிநின்று அரசரையும் அரசியையும் வணங்கிச் செல்வதுண்டு. அவ்விழவுக்கும்கூட அரசகொலுமேடையில் அரசர் சாம்பன் தன்னந்தனியாகவே வீற்றிருந்தார். ஆனால் பரீக்ஷித் அஸ்தினபுரிக்குச் சென்று சேர்ந்ததைப்பற்றி அஸ்தினபுரியின் கவிஞர் ஒருவர் எழுதிய ‘சூக்திகம்’ என்னும் பாடலை சூதர்கள் பாடிய நிகழ்வில் அரசி கிருஷ்ணை வந்து அமர்ந்திருந்தார். அவர் விழி கனிந்து அதை கேட்டுக்கொண்டிருப்பதை அனைவரும் வியப்புடன் நோக்கினர்.

அரசியின் உள்ளத்தை அறிந்துவிட்டேன் என்று தோன்றியதுமே அவ்வாறு எவர் உள்ளத்தையேனும் அறிய முடியுமா என்றும் ஐயுற்றேன். நான் நம்பியது ஒன்றையே, ஒளி இலாது நீரில்லை. இருண்டிருக்கையில், மண்ணில் ஆழத்தில் உறைகையில் கூட நீர் தன் ஒளியை தக்கவைத்திருக்கிறது.

 

நான் எண்ணியதுபோலவே எனக்கு அரசியிடமிருந்து அழைப்பு வந்தது. நான் ஏவலனால் அவருடைய அரண்மனைக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். செல்லும் வழியில் எண்ணங்களை தொகுக்க முயன்றேன். ஆனால் என்னால் குவிய இயலவில்லை. உள்ளறைக்குள் சற்றுநேரம் காத்திருந்தபின் அரசியின் சிற்றறைக்குள் செலவொப்புதல் அளிக்கப்பட்டது. உள்ளே கிருஷ்ணை சிறுபீடத்தில் இளநீல ஆடை அணிந்து அமர்ந்திருந்தார். நீலநிற மலர்கள் சூடிய குழல் நீண்டு கிடந்தது. நீலக் கல் பதித்த அட்டிகை. முகமன் உரைத்தபோது அந்த நீல நிறத்தையே நான் நோக்கினேன். என்னை அமரச்சொன்னார்.

“நான் தங்களைப் பார்க்கவந்தது ஒரு கோரிக்கையுடன்தான், அரசி” என்றேன். “அரசர் இங்கு மீளவேண்டும் என்னும் கோரிக்கையை அவருடைய துணைவியர் எழுவரிடமிருந்தும் பெற்றுள்ளேன். காளிந்தி அன்னையை சந்திக்கச் செல்லவிருக்கிறேன். அதற்கு முன் உங்களிடமிருந்து ஒரு சொல் பெற விழைந்தேன். காளிந்தி அன்னைக்குப் பின் எவரையும் சந்திக்க நான் விழையவில்லை” என்றேன். “சொல்க!” என்று அவர் சொன்னார். “தேவி, இங்கே மீண்டுவருவதற்கு துவாரகையின் அரசருக்கு ஏதேனும் உளத்தடை இருக்குமென்றால் அது உங்களை சந்திக்கவேண்டும் என்பதே. உங்கள் தந்தையின் இறப்புக்கு முன்நின்றவர் துவாரகையின் அரசர் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் அது போர், அரசர்களின் அறம். இன்று அனைவருமே அதைக் கடந்து உளம் அமைந்துள்ளனர். நீங்களும் அவ்வண்ணமே கடந்துள்ளீர்கள் என்றே எண்ணுகிறேன். அரசர் இங்கே நகர்நுழைகையில் அவரை வரவேற்பவர்களில் தாங்களும் முதன்மைகொள்ளவேண்டும் என்பது என் விழைவு. அவ்வண்ணம் ஒரு சொல்லை தங்களிடம் இருந்து பெற விழைகிறேன்.”

அவர் என்னை கூர்ந்து நோக்கி “அவ்வண்ணம் நான் வந்து நிற்கமாட்டேன் என எப்படி நினைக்கிறீர்கள்?” என்றார். “உங்கள் அரசநெறியை கைவிடமாட்டீர்கள் என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் இன்று ஜாம்பவதி அன்னையின் அவையில் உங்களை சந்தித்தபோது சிறு ஐயம் எழுந்தது, ஆகவே மீளவும் சந்திக்கலாம் என்று தோன்றியது” என்றேன். “அதாவது அவையில் நான் சொன்னவை பொய்யாக இருக்கக்கூடும் என்றும் என் அகத்தே நான் வேறு எண்ணம் கொண்டவளாக இருக்கலாமென்றும் கருதினீர்கள் அல்லவா?” நான் “இல்லை, ஆனால் அரசநெறியை மீண்டும் வலியுறுத்தவும் அப்பால் ஒருசில நடைமுறை நலன்களை சொல்லுறுத்தவும் தனிச்சந்திப்பில் வாய்ப்பு அமையும் என கருதினேன்” என்றேன்.

“சொல்க!” என்றார். “அரசி, ஒன்று உறுதிகொள்க! சாம்பன் இங்கே அரசாள நிஷாதர்களும் அசுரர்களும் அன்றி எவரும் விழையமாட்டார்கள். அறுதியாக யாதவரும் ஷத்ரியர்களும் அவர்களுக்கு எதிராக ஒருங்கிணைவார்கள். அஸ்தினபுரியின் ஆதரவும் அவர்களுக்கே அமையும். எனில் சாம்பனும் பிறரும் துவாரகையிலிருந்து முழுமையாகவே துரத்தப்படலாம். அவ்வாறு நிகழாது காக்கும் அடிப்படைகள் என்பவை இரண்டு. ஒன்று, துவாரகையின் அரசர் உருவாக்கிய ஐந்தாம் வேதம். இன்னொன்று சாம்பன் அவருடைய குருதியிலெழுந்தவர் என்பது. அவ்விரண்டையும் நிலைநாட்ட அவர் நேரில் வருவது இன்றியமையாதது.”

“அவர் வந்தால் சாம்பனை அரசர் என ஏற்பாரா?” என்று அவர் கேட்டார். “அதை நான் சொல்லமுடியாது. அது அவருடைய உளத்தில் உறைவது. ஆனால் அவரால் ஒருபோதும் தன் மைந்தரல்ல சாம்பன் என்று கூற இயலாது. நிஷாதரும் அசுரரும் அரசுகொள்வதற்கு எதிராக நிலைகொள்ளவும் இயலாது” என்றேன். அவர் புன்னகைத்தார். அதிலிருந்த வஞ்சம் என்னை திகைக்கச் செய்தது. “உங்கள் எவரைவிடவும் நான் அவரை அறிவேன்” என்று அவர் சொன்னார். “ஏனென்றால் நான் நினைவறிந்த நாள் முதல் அணுகி நுணுகி அறிந்துகொண்டிருப்பது அவரை மட்டுமே. அவர் விழைவது துவாரகையின் வாழ்வை அல்ல, அழிவை” என்று அவர் சொன்னார். அக்கணம் அதுவே உண்மை என்று என்னுள் ஓர் எண்ணம் எழ கடுங்குளிர்போல் அச்சம் என்னுள் நுழைவதை கண்டேன்.

“அவர் தெய்வப்பேருரு என்பதை நான் நன்கறிவேன். இந்நகர் அவர் ஒரு போருக்கென எடுத்த படைக்கலம். இங்கே அவர் அமர்ந்துசென்ற பீடம் இது. போர்முடிந்துவிட்டது, படைக்கலத்தை அவர் கடலில் வீசிவிடவே விழைகிறார். தெய்வங்கள் மலைநீங்கியபின் பீடத்தை முற்றழிப்பது பூசகர் வழக்கம்” என்றார் கிருஷ்ணை. “இல்லை தேவி, என் தலைவர் பேரளி கொண்டவர்” என்றேன். அவர் சிரித்தபோது மேலும் வஞ்சம் தோன்றியது முகத்தில். “தெய்வங்கள் அளிகொண்டவை என எவர் சொன்னார்கள்? எந்த வேதம் அவ்வண்ணம் உரைக்கிறது? பேரழிவின் வடிவங்களே தெய்வங்கள். அவை புயலென, ஊழியென, எரிமழை என பேருருக் காட்டுபவை. அவ்வண்ணமே இவரும் எழுந்திருக்கிறார். சென்ற வழியெங்கும் குருதியையும் விழிநீரையும் சாம்பலையுமே எஞ்சவைத்திருக்கிறார்.”

“எனில் துவாரகை மட்டும் பொலிவுடன் மிஞ்சும் என எப்படி எண்ணமுடியும்? இது இடிமின்னல் இறங்கிய பாறை என நொறுங்கும், வேறுவழியே இல்லை” என்று கிருஷ்ணை தொடர்ந்தார். “அரசியல் என நோக்கினாலும் இந்நகர் அழிவதே அவருக்கு நன்று. அவர் நிறுவிய வேதம் இங்கு முளைத்தெழவேண்டும் என்றால் அதை எழும் புதிய குடிகள் ஒவ்வொன்றும் தங்களுடையது என்று எண்ணவேண்டும். துவாரகை இங்கே பேரரசு எனத் தொடருமென்றால் அந்த வேதம் அவ்வரசின் முகப்படையாளமாக ஆகும். ஆகவே பிறரால் புறக்கணிக்கப்படும். துவாரகை இங்கே சிறுத்து நீளும் என்றால் அது அவ்வேதத்தின் தோல்வி என்றே கருதப்படும். இந்நகர் அழிந்து சொல்லில் பேருருக் கொள்ளும் என்றால் ஒவ்வொரு சிறுகுடியும் அது அமைக்கவிருக்கும் பெருநகரை துவாரகை என்று எண்ணிக்கொள்ளும். அவர்களின் கனவுகளில் அது நிலைகொள்ளும். அவர் விழைவது அதையே.”

“தன்னுடைய பருவுடல் அழிகையில் தனதென்று எதுவும் இங்கு எஞ்சாதொழியவேண்டும் என அவர் விழைகிறார். தன் நிழல் என தான் உருவாக்கிய அனைத்தையும் இழுத்துக்கொண்டு மறைய எண்ணுகிறார். தன் சொல் ஒன்றே இங்கு திகழவேண்டும் என்பதே அவருடைய திட்டம்” என்றார் கிருஷ்ணை. “ஆகவே எனக்கு அவர் இங்கு வந்து இந்நகரை மீட்பார், இது செழிக்க வழியமைப்பார் என்ற நம்பிக்கை எவ்வகையிலும் இல்லை. அவர் வரப்போவதில்லை, வந்தால் இதன் அழிவை விரைவாக்க, முழுமையாக்க செய்யவேண்டியவற்றையே செய்வார்.” அவர் மீண்டும் நகைத்து “அதையும் செய்யவேண்டியதில்லை. அடித்தளத்தில் விரிசலை உருவாக்கியபின் அவர் கட்டி எழுப்பிய பெருநகர் இது” என்றார்.

நான் சொல்லிழந்து அமர்ந்திருந்தேன். அரசி “வேறேதேனும் சொல்வதற்குள்ளதா?” என்றார். “எனில் நீங்கள் இங்கு போரிடுவது எவருடன், அரசி?” என்றேன். “அவருடன்தான். தெய்வமே என்றாலும் கொல்ல வரும் என்றால் எதிர்த்து நின்றிருப்பதே உயிர்களின் அறம். நான் அவர்மேல் வெறுப்பை உருவாக்கி வளர்த்தெடுத்துக் கொண்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன் எனில் அது என்னால் இயலுமா என்று எண்ணி திகைத்திருப்பேன். ஆனால் வெறுக்கத் தொடங்கியதும் அது எத்தனை எளிதெனக் கண்டறிந்தேன். என் அன்பையும் அளிப்பையும் முழுமையாகவே கசப்பென்றும் காழ்ப்பென்றும் மாற்றிக்கொண்டேன். இன்று அவர் பெயரே என்னை குமட்டச் செய்கிறது. நேர்முன் அவரை கண்டால் முகத்தில் காறி உமிழக்கூடும். நெஞ்சில் வாளெடுத்துப் பாய்ச்சவும்கூடும்.”

“தெய்வம் மானுடருக்கு அருள்கிறது என்பது மானுடர் தங்கள் எளிமையால், சிறுமையால் உருவாக்கிக் கொள்ளும் பொய். தெய்வமென மானுடர்முன் தோன்றுவன அனைத்துமே பேரழிவின் விசைகளே. பெருவெள்ளம், காட்டெரி, புயல், கடல்கோள், கொடுநோய். அவற்றை அஞ்சி அவற்றிடமே மன்றாடி அவற்றை வழிபடுகின்றனர் எளியோர். வழிபடுவதற்காக அவற்றை அளிகொண்டதாக அமைத்துக்கொள்கின்றனர். எறும்புகள் யானையின் கால்கள் இரக்கம் மிக்கவை என எண்ணிக்கொள்ளும் போலும். அவை மிதித்தழிப்பது நன்மைக்காகவே என்று கற்பனை செய்துகொள்ளும். யானை எறும்புகளை அறிவதே இல்லை. அதன் பாதையை எறும்புகள் உணரவும் இயலாது.”

“ஆயினும் எறும்புகள் வாழ்ந்தாகவேண்டும். நூறாயிரம்கோடி எறும்புகளில் ஒன்றேனும் திரும்பி யானையை கடித்தாகவேண்டும். கொடுக்கு உடையலாம், உயிர்துறக்கலாம். ஆனாலும் எதிர்த்தாகவேண்டும். நான் இன்று இவரை வெறுப்பதுபோல் எவரும் என்றும் வெறுத்ததில்லை. அந்த வெறுப்பு என் தந்தையையும் இளையோரையும் இவர் வஞ்சத்தால் களத்தில் வீழ்த்தியதிலிருந்து தொடங்குகிறது. பல லட்சம் மக்களை வெறும் தசைக்குப்பைகளாக அள்ளியிட்டு அழித்ததில் வளர்கிறது. அதன் பின்னரும் அறத்தை நாட்டுகிறேன் என அவர் கொண்டிருக்கும் பாவனை கண்டு பேருருக் கொள்கிறது. தன் சொல் நிலைகொள்ளவேண்டும் என்பதற்காக தன் குருதியினரையும் தன் நகரையும் அழித்துக் கடந்துசெல்லும் ஆணவம் கண்டு அழுகி கெடுநாற்றம் கொள்கிறது.”

அவர் குரல் உடைந்தது. அழுகையில் வெடிக்கப்போகிறார் என எண்ணினேன். ஆனால் மூச்சிழுத்து தன்னை திரட்டிக்கொண்டார். “அனைத்துக்கும் அப்பால் என் சிற்றிளமைப் பருவத்தில் நெஞ்சில் நுழைந்து இசையென்றும் அழகென்றும் நிறைந்தமைக்காக, தெய்வமென்றால் இனிதென்று என்னை நம்பவைத்தமைக்காக அவரை வெறுக்கிறேன். இக்கசப்புடன்தான் என் உடல் சிதைநின்று எரியவேண்டும். இதுவே இங்கே நான் ஈட்டிய மெய்யறிதல்” என்றார். நான் பெருமூச்சுடன் உடல் தளர்ந்தேன். “இதை நீங்கள் அவரிடம் சொல்லலாம்” என்றார்.

“சொல்கிறேன், அரசி” என்றேன். “வாழ்நாளெல்லாம் உளம்கனிந்த மகளிர்ச்சொல்லையே கேட்டு வந்தவர். கௌரவ மகளிரும் பாண்டவ மகளிரும் சேர்ந்து அளித்த பழிச்சொற்களை கைகூப்பி அவர் பெற்றுக்கொண்டு நின்றிருப்பதையும் கண்டேன். அவற்றையும் அவர் மலர்மாலையெனவே சூடிக்கொண்டார். இச்சொற்களும் அவர் நெஞ்சுக்கு அணிகலன் என்றாகலாம்” என்றேன். அரசி இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்க நான் எழுந்து வணங்கி விடைகொண்டேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 15

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 10

அரசே, நான் என்ன நிகழுமென்று எண்ணினேனோ அதுவே ஒவ்வொன்றாக நிகழ்கிறது என்று தெளிந்தேன். அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன் என்பதை அது நிகழ்ந்த பின்னர்தான் உணர முடிந்தது. அன்னையர் மைந்தரின் ஆளுகையில் இருக்கிறார்கள். மைந்தர் ஓர் அகவைக்கு மேல் அன்னைக்குமேல் கொள்ளும் செல்வாக்கு விந்தையானது. ஒவ்வொரு குடியிலும் ஆண்மகன்கள் அதை நுட்பமாக உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். மைந்தரின் ஆணியல்பு அதன் இளமை வீச்சுடன் வெளிப்படுகையில் அன்னையரின் பெண்ணியல்பு அவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறது போலும். அது கனிவென்றும் பணிவென்றும் வெளிப்படுகிறது. அதனூடாக ஆட்சிசெய்து அடிபணியவும் செய்கிறது.

அன்றி அன்னையரில் அணையாதிருக்கும் காமம் குற்றஉணர்வென மாறி மைந்தருக்கு தங்களை அடிபணிய வைக்கிறதா? பேரன்னையர் பெருங்காமம் கொண்டவர் என்று சொல்லப்படுவதுண்டு. அழகென்றும் அன்பென்றும் மங்கலங்கள் என்றும் வெளிப்படுவதே காமம் என்றும் திகழ்வு கொள்கிறது என்பார்கள். அன்றி, அனைவரும் இயல்பாகக் கூறுவதுபோல் மைந்தர் வளர்ந்து ஆண்களாகிவிட்டார்கள் என்று உணராமல் கைக்குழவியாகவே அவர்களை எண்ணிக்கொண்டிருக்கும் பேதைமையாலா? மானுட இயல்பை நோக்குகையில் பேதைமையால் உலகியல் நிகழ்கிறதென்று தோன்றுவதில்லை. ஏனென்றால் விழைவால், வஞ்சத்தால்தான் ஒவ்வொன்றும் முடிவெடுக்கப்படுகின்றன. பேதைமை இருப்பது விழைவையும் வஞ்சத்தையும் மெய்மையென எண்ணிக்கொள்ளும் இடத்தில் மட்டுமே.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அமைவதென்பதே உறவுகளின் இயல்பு. மைந்தரின் விழைவுக்கு அஞ்சி சத்யபாமை நீர் விளிம்பருகே தவம் இருக்கின்றார். மைந்தர் வணங்கும் விழைவின் வடிவென அமைந்திருந்தார் ருக்மிணி. மைந்தரின் விழைவுகளை தானும் ஏற்று தானும் பெருக்கி அமர்ந்திருந்தார் ஜாம்பவதி. மைந்தர்கள் கைக்கருவியென அமர்ந்திருந்தார்கள் பத்ரையும் நக்னஜித்தியும். மைந்தரின் அடிமைகள் என மித்ரவிந்தையும் லக்ஷ்மணையும். இது இவ்வாறுதான் அமையும் என்று யார் கூற முடியும்? எஞ்சியிருப்பவர் காளிந்தி மட்டுமே. அவரோ தங்கள் துணைவியரில் கனிந்தவர். துவாரகையின் ராதை என்று அவரை கூறுகிறார்கள் புலவர்கள். அவரும் அவ்வண்ணம் தன்னை மைந்தர்களுக்கு அளித்துவிட்டிருந்தார் என்றால் நான் இதுகாறும் நம்பியிருந்த ஒன்றின் முழுமையான தோல்வியைக் காண்பது இப்போதுதான். அதன்பின் எனக்கு பெண்ணென்றும் துணைவியென்றும் எண்ண எக்கருத்தும் எஞ்சாது.

ஆகவே தவிப்பும் ஒவ்வாமையும் கொண்டிருந்தேன். ஒவ்வொரு காலடியும் பின்னெடுத்து வைப்பதுபோல் தயங்கி முன்னெடுத்து வைத்தேன். பின்னர் அமைச்சர் ஸ்ரீகரரின் சிற்றறைக்குள் நுழைந்து அங்கு அமர்ந்துகொண்டேன். அங்கே நெடுங்காலமாக அலுவல்கள் எதுவும் நிகழாததுபோல் தோன்றியது. பீடங்களின்மேல் பொடி படிந்திருந்தது. பீடங்களை நான் நோக்குவதைக் கண்ட ஏவலன் அவற்றை துடைத்து “இங்கே ஒவ்வொன்றும் பெரியவை” என்றான். “ஏன் இங்குள்ள மானுடர் சிறியராகிவிட்டனரா?” என்றேன். “ஒருவகையில் ஆம்” என்றான் ஏவலன். நான் அவனை நிமிர்ந்து நோக்கினேன். முதியவன், அக்கண்களில் நான் நன்கறிந்த ஒன்று இருந்தது. நான் நோக்கை விலக்கிக்கொண்டேன்.

ஏவலனை அழைத்து “காளிந்தி அன்னையை நான் சந்திக்க விழைவதாக கூறுக! இளைய யாதவரின்பொருட்டு ஒரு தூது செல்லவிருக்கிறேன் என்றும் சேர்த்துக்கொள்க!” என்று சொல்லி அனுப்பினேன். மறுமொழி வராதொழிந்தால் நன்று. என் உள்ளத்தில் இருக்கும் கற்பனையை அவ்வண்ணமே நிலைநிறுத்திக்கொள்வேன் என்று எண்ணினேன். கைகளை மார்பில் வைத்து சாய்ந்து சற்றே விழி மூடிவிட்டேன். அத்துயிலில் தங்களை கண்டேன். என்னிடம் எதையோ கேட்டீர்கள். அதற்கு நான் மறுமொழியும் உரைத்தேன். ஆனால் விழித்துக்கொண்டபோது அப்புன்னகை மட்டும் நினைவிருந்தது. நீங்கள் கேட்டதென்ன, நான் கூறியதென்ன என்பதை மறந்துவிட்டிருந்தேன்.

என்னை எழுப்பியவன் அனிருத்தனின் ஏவலன். அனிருத்தன் என்னை பார்க்க விழைவதாக சொன்னான். “அனிருத்தனா?” என்று மீண்டும் கேட்டேன். பிரத்யும்னனின் மைந்தர் அவர் என்ற எண்ணத்திலிருந்து என்னால் விலக இயலவில்லை. பிரத்யும்னனை சற்று முன் சந்தித்தபோது உடன் அனிருத்தன் இல்லையென்பதை நினைத்துக்கொண்டேன். “ஆம், அனிருத்தனேதான். இங்குதான் இருக்கிறார். உஷையுடன் இந்த நகருக்குக் கிழக்கே பாலையொன்றின் விளிம்பில் சிறுசோலை ஒன்றை அமைத்து அங்கு தங்கியிருக்கிறார்” என்றான் ஏவலன். என் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. ஏன் என்று அறிந்திருந்தேன், எண்ணியிராத ஒன்று நிகழவிருக்கிறது. “செல்வோம்” என்று சொல்லி அவனுடன் தேரில் ஏறிக்கொண்டேன்.

செல்லும் வழியில் அவன் என்னிடம் ஒன்றும் கூறவில்லை. நான் பன்னிரண்டு காவல்மாடங்களைக் கடந்து கோட்டையின் முகப்பை அடைந்தபோது களைத்து மீண்டும் அரைத்துயிலில் ஆழ்ந்தேன். கனவில் எழுந்து நீங்கள் எதையோ சொன்னீர்கள். இம்முறை எதையோ ஆணையிடுவதுபோல். நான் விழித்தெழுந்து “என்ன?” என்றேன். அருகிருந்த ஏவலன் “அரசே?” என்றான். “ஒன்றுமில்லை, கனவு” என்று விழிமூடிக்கொண்டேன். என் கண்களுக்குள் துவாரகை நிகழ்ந்துகொண்டிருந்தது. முன்பிருந்த பொலிவுகொண்ட நகர் அல்ல. இன்றிருக்கும் இருள்படிந்த நகரும் அல்ல. அது பிறிதொன்று. ஒருகணம் அங்கும் மறுகணம் இங்குமென அலைபாய்ந்தது அது. சாலைகள் பொன்னொளி கொண்டிருந்தன. ஆனால் இடுக்குகளுக்குள் எலிகள் விழிமின்ன ஓடின.

கோட்டையை விட்டு வெளியே நெடும்பாதையில் வளைந்து பாலைவெளி நோக்கி செல்லத்தொடங்கியது தேர். அரசே, துவாரகையைச் சூழ்ந்திருந்த பெரும்புல்வெளி இன்று கருகி மண்நிறம் கொண்டு பாலை என்றாகிவிட்டிருக்கிறது. அங்கிருந்த நாட்களில் நீங்கள் விண்மழையை மண்ணுக்கு இறக்கினீர்கள் என்று தோன்றுகிறது. பசும்புல் முற்றாக மறைந்துவிட்டது. அதை நம்பி அங்கு வாழ்ந்திருந்த ஆநிரை மேய்ப்போர் மெல்ல மெல்ல தொழு சுருக்கி நகருள் வந்து சிறு வணிகங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டிருந்தனர். பலர் நகர்விட்டு செல்லவும் செய்தனர். யாதவர்களில் பெரும்பகுதியினர் குருக்ஷேத்ரப் போரில் மறைந்துவிட்டிருந்தமையால் எஞ்சிய அனைவரும் சிறு வணிகத்தொழில்களிலேயே அமைய இயல்கிறது.

அரசே, துவாரகை இன்று எஞ்சும் சிறிய கடல் வணிகத்தால் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாகவே பெருங்கலங்கள் அங்கு வருவதில்லை. ஏனெனில் கரைவணிகர்களின் வண்டி நிரைகளும் துவாரகைக்குள் நுழைவதில்லை. நெடுந்தொலைவு பயணம் செய்துவந்து அங்கு கடல் வணிகம் செய்வது ஈட்டு பொருள் அளிப்பதல்ல என்று வணிகர்கள் கருதுகிறார்கள். அதைவிட சிந்துவினூடாகச் சென்று தேவபால துறைநகரில் வணிகம் செய்வது எளிது என எண்ணுகிறார்கள். சிந்துநாடு இன்று அஸ்தினபுரியின் துணையரசு. ஆகவே அங்கே வலுவான காவல் உள்ளது. சுங்கமென்று ஏதும் கொள்ளப்படுவதுமில்லை.

மாளவத்தின் துறைமுகங்களும் வணிகர்களுக்கு மேலும் அணுக்கமானவை. மாளவ மன்னர் இந்திரசேனனின் நான்காவது அரசியின் மைந்தர் சமுத்ரவர்மனின் அமைச்சரான புஷ்யகீர்த்தி திறன்மிக்கவர் என்கிறார்கள். அரசுகள் வலுவிழந்து படைவல்லமை குறைந்துவிட்டமையால் காவல் நலிந்து நாடெங்கும் உள்வழி வணிகம் சோர்வுற்றிருக்கிறது என்று புரிந்துகொண்டு கடல்வணிகத்தை பெருக்க ஆவன செய்கிறார். அங்கே இன்று நிகுதி இல்லை. பெறுபொருளை முழுக்க செலவிட்டு யவனக்காவலர்களை அமர்த்தி கடலிலும் கரையிலும் காவலை வலுப்படுத்திக்கொண்டே செல்கிறார்கள். காவல் வலுக்கையில் வணிகம் பெருகும். இன்னும் சில ஆண்டுகளில் மாளவம் ஆற்றல்கொண்ட வணிகநாடென்று ஆகும்.

மாறாக இங்கு நிகுதி மிகுந்துகொண்டே இருக்கிறது. நிகுதி வருவாய் குறையுந்தோறும் நிகுதி அளவைக் கூட்டுவது துவாரகையை ஆள்வோரின் இயல்பு. மாறி மாறி நிகுதி அமைப்பதில் போட்டியிடுகிறார்கள். இன்று அங்கே எந்த இளவரசரும் தங்களுக்கென எந்தத் தனி முடிவையும் எடுக்க முடிவதில்லை. ஒருவர் எடுத்த முடிவை பிறர் எடுத்தாகவேண்டும். ஒருவர் நிகுதி கூட்டினால் பிறர் நிகுதி கூட்டாமல் இருக்க இயலாது. எனவே எவரும் பிறரை எண்ணாமல் எம்முடிவையும் எடுப்பதில்லை. பிறர் கூட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தாலேயே தாங்களும் கூட்டுகிறார்கள். பிறரை சூழ்ந்துநோக்கி தாங்கள் அடையும் ஐயத்தாலும் அச்சத்தாலும் முடிவுகளை எடுக்கிறார்கள்.

ஓர் அரசு மூன்றெனப் பிரிந்து தனக்குள் போரிட்டுக்கொண்டால் அதற்கு மூன்று கருவூலங்கள் தேவையாகின்றன. மூன்று படைகள், மூன்று ஆட்சிமுறைகள், மூன்று நெறிகள். மூன்று அரசுகளை அங்கிருக்கும் சிறு வணிகம் பேணவேண்டியிருக்கிறது. ஆகவே நகர் நலிந்துவிட்டிருக்கிறது. மாளிகைகள் பசி கொண்ட யானைகள்போல் மெலிந்துவிட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் இரு விளிம்பும் தொட்டு மக்கள் பெருகி ஓடிக்கொண்டிருந்த துவாரகையின் தெருக்கள் ஒழிந்து மிக அகன்று பெரிய களிக்களங்கள்போல் தென்படுகின்றன. துவாரகையின் வணிகத்தெருவில் தரையில் அமர்ந்து காகங்களும் மைனாக்களும் மேய்வதை பார்க்கிறேன். பகலில் சாலைகளில் பெருச்சாளிகள் ஓடுகின்றன.

எண்ணியதைவிட பலமடங்கு விரைவில் பாலை விளிம்பில் அமைந்திருந்த அனிருத்தனின் சோலையைச்சென்றடைந்தோம். கற்களை அடுக்கி எழுப்பப்பட்டிருந்த தாழ்வான கோட்டைக்கு காவல் நின்றிருந்தவர்கள் அசுரகுலத்து வீரர்கள். எங்களை நன்கு ஆய்ந்த பின்னரே உள்ளே செல்லவொப்பினர். என்னை அழைக்க வந்தவன் யாதவ வீரன் என்பதனால் அந்த ஐயம் என்பதை உணர்ந்தேன். அந்தச் சிறு கோட்டைக்குள் ஓர் அழகிய சோலை உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு அந்தர்காமினி என்னும் ஆழத்து ஆற்றில் இருந்து எழும் அக்ஷபிந்து என்னும் குன்றா ஊற்று இருக்கிறது, அந்த ஊற்று நீரை மிகக் குறைவாக கொண்டுவந்து செடிகளின் வேருக்கு மட்டுமே அளித்து அச்சோலை பேணப்படுகிறது என்றார்கள்.

நீரை குறைவாகக் கோரும் மரங்களையும் செடிகளையும் மட்டும் அங்கு வளர்த்திருந்தார்கள். அம்மரங்கள் அனைத்துமே ஒருவர் நின்றால் தலைமறையும் அளவுக்கு மட்டுமே உயரம் இருந்தன. குற்றிலைகள் தழைத்து மண்ணோக்கி இறங்கிய கிளைகள் கொண்டவை. பாலை நடுவே அப்படி ஒரு சோலை எழுகையில் பல்லாயிரம் பறவைகள் அங்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. அங்கு சிறு பறவைகளினால் ஆன ஒரு போர்ப்படை தங்கியிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அத்தனை புதர்களும் சலங்கைகள்போல் குலுங்கிக்கொண்டிருந்தன. அத்தனை மரக்கிளைகளும் பறவைகளின் எடையால் தழைந்திருந்தன. சோலைக்கு மேல் நீராவி எழுந்து அலையடிப்பதுபோல் பறவைக்குலங்கள் எழுந்து அமைந்து சுழன்றன.

சோலை நடுவே முன்பு தங்கள் காலத்தில் கட்டப்பட்டிருந்த கல்லால் ஆன சிறு மாளிகை இருந்தது. தாழ்வான கூரை கொண்டது. எடைமிக்க கற்களை தூண்களென நாட்டி மேலே கற்பாளங்களை வைத்து கட்டப்பட்டது. ஆகவே அங்கு வீசிய காற்றின் விசையை தாங்குவது. அதன் மையத்தில் இருந்த சிறுகூடத்தில் நான் அன்று அனிருத்தனை சந்தித்தேன். நான் செல்வதற்குள்ளாகவே என்னைக் காத்து அங்கு அவருடைய அணுக்கர்களும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர். கோட்டைவாயிலில் என்னை சந்தித்து அழைத்துச் சென்ற சிற்றமைச்சனும் அசுரகுலத்தானே. பாணாசுரரின் நாட்டில் இருந்து வந்தவன் என்பதை அவனுடைய மொழியிலிருந்தே புரிந்துகொண்டேன். துவாரகையின் மொழிக்கு அவன் நா பழகியிருக்கவில்லை.

“நீர் பாணாசுரரின் நாட்டவரா?” என்றேன். “ஆம்” என்றான். “நான் அசுரவேதம் பயின்ற அமைச்சன்.” நான் புன்னகையுடன் “ஐந்தாம் வேதம் அசுரவேதத்தில் இருந்து எழுந்தது என்கிறார்களே?” என்றேன். “பெருமரங்கள் தங்கள் வேர்களால் சூழ இருக்கும் அனைத்தையும் கவ்வி உறிஞ்சி உண்கின்றன. அவற்றில் சாறென ஓடி மலர்களென விரிந்து தேன் என ஊறுவது எந்த நீர் என எவர் சொல்ல முடியும்?” என்றான். அவன் நூல் தேர்ந்தவன் என்று தெரிந்துகொண்டேன். “ஆயினும் நிலம் மரத்தின் சுவையில் உள்ளது அல்லவா?” என்றேன். “நிலம் நன்றென்றால் மரத்தின் தன்னியல்பை வளர்க்கிறது, மாற்றுவதில்லை” என்று அவன் சொன்னான். “இனிக்கும் நிலத்தில் முளைத்த எட்டி இனிக்குமா என்ன?”

 

அரண்மனையின் உள்ளே சென்றதும் நான் அறைவாயிலில் அமர்ந்திருக்கும்படி செய்யப்பட்டேன். உள்ளே எனக்காக அவை ஒருங்குகிறது என்று தெரிந்தது. சற்று நேரம் கழித்து சிற்றமைச்சர் ஒருவர் வந்து “வருக!” என்று என்னை அழைத்தார். உள்ளே சென்று அத்தனை பெரிய அவையை பார்த்ததும் திகைத்தேன். அனிருத்தன் எழுந்து அரசருக்குரிய மதிப்பை எனக்களித்து தலைவணங்கி முறைமை கூறினார். நான் அந்த முறைமையை ஏற்று அவரை வாழ்த்தினேன். அரசருக்குரிய பீடம் எனக்கு அளிக்கப்பட்டது. முறைமைகள் நடக்கும்போது நான் அவையை நோக்கிக்கொண்டிருந்தேன். அங்கே உஷை வந்துவிடக்கூடும் என எதிர்பார்த்தேன், ஆனால் அவர் எந்த அரசநிகழ்வுகளிலும் வந்தமர்வதில்லை என்றும் அறிந்திருந்தேன்.

அனிருத்தன் நேரடியாகவே என்னிடம் “அரசே, தாங்கள் துவாரகையிலிருந்து அனைத்து மைந்தரின் செய்தியுடன் தாதையை பார்க்கச் செல்வதாக நான் அறிந்தேன்” என்றார். நான் “அனைத்து மைந்தரின் செய்தியல்ல. அன்னையரின் செய்தி மட்டுமே” என்று சொன்னேன். “ஆம், இங்கு அன்னையர் மைந்தரின் செய்திகளைதானே உரைக்கிறார்கள்?” என்றபின் புன்னகைத்து “என் மூதன்னையின் செய்தியை அன்றி என் மைந்தரின் செய்தியையும் என் செய்தியையும் சேர்த்தே சென்று உரைக்கும்படி உங்களை கோரும்பொருட்டே உங்களை அழைத்தேன்” என்றார். நான் உணர்வுகளைக் காட்டாமல் “கூறுக!” என்றேன்.

“யாதவ அரசே, இங்கு இப்போது துவாரகையின் அரசகுடி மூன்றெனப் பிரிந்து வாளோங்கி நின்றிருக்கிறது. பிறப்பால் நான் ஷத்ரிய மைந்தனாகிய பிரத்யும்னனின் குருதிகொண்டவன். பிரத்யும்னன் விதர்ப்பத்தின் ருக்மியின் படையை நம்பி இந்நகரை கைப்பற்றி முடிசூடும் விழைவுடன் இருக்கிறார். அவர் முடிசூடினால் அவருடைய முதல் மைந்தனென நான் வழி அமைந்து அரியணை கொள்ளமுடியும். ஆகவே இயல்பாகவே தந்தையுடன் நான் நின்றிருக்க வேண்டும். தந்தை அவ்வாறே எதிர்பார்க்கிறார். ஆனால் இன்றுவரை நான் அந்த முடிவை அறுதியாக எடுக்கவில்லை” என்று அனிருத்தன் பேசத்தொடங்கினார்.

ஏனென்றால் நான் தந்தையின் மைந்தனென அமைந்தேன் என்றால் என்னுடன் படைத்துணையாக இன்று இருக்கும் பாணாசுரரின் அசுரகுடியினர் அனைவரையும் தவிர்க்க வேண்டியிருக்கும். நான் முடிசூட்டிக்கொண்டால் என்னருகே பட்டத்தரசியாக உஷை அமரமுடியுமா என்பதே முதற்கேள்வி. அதை என் தந்தையிடம் கேட்டேன். ஒரு நிலையிலும் அமர இயலாது என்று அவர் கூறினார். ஏற்கெனவே குருதியில் ஒரு குறைவிருக்கிறது, அதை நிகர்செய்யும் பொருட்டு நான் தொன்மையான ஷத்ரிய குடிகளிலிருந்தே மணம்புரியவேண்டும் என்றார். அந்த ஷத்ரிய அரசியில் பெற்றெடுக்கும் மைந்தனே எனக்குப் பின் துவாரகையை ஆளவேண்டும் என்றார். என் மைந்தன் வஜ்ரநாபனுக்கு மணிமுடி சூடும் உரிமை இல்லை. ஏனென்றால் அவன் அசுரகுடியினன்.

நானும் எந்தையும் சினத்துடன் முட்டிக்கொண்டோம். “குருதியில் குறையென நீங்கள் எண்ணுவது தந்தையின் குருதியையா?” என்று நான் கேட்டேன். “ஆம், அதிலென்ன ஐயம்?” என்றார். “லவண குலத்து மரீஷையின் குருதி அது. யாதவ குலத்திற்கும் ஒரு படி இழிவானது. யாதவ குடியிலிருந்து முளைத்தவன் என்னும் பழியை நான் சூடுவதனாலேயே இன்னும் எனக்கு அரியணை அமையவில்லை. ஷத்ரியர் என்னை முழுதேற்றிருந்தால் இந்த எளிய யாதவக்குடியினர் என்னை மறுத்து ஒரு கணமும் நின்றிருக்கமாட்டார்கள். அந்த யாதவக்குருதியே குறையுடையது என்பது எனக்கு இன்னமும் பெரிய தடை. ஆகவே என் அன்னையின் குருதிவழியையே நான் கொள்ளவிருக்கிறேன். ருக்மியின் குடிவழியன் நான். தாய்மாமனை கொடிவழியென ஏற்க நூல்கள் ஒப்புகின்றன” என்றார்.

“நீங்கள் உங்கள் தந்தையின் மைந்தன் அல்ல ருக்மியின் மருகர் மட்டுமே என்கிறீர்களா?” என்றேன். “ஆம், அவ்வாறே. இனி எந்த அவையிலும் அவ்வாறே கூறவிருக்கிறேன். என் உடலில் இருக்கும் மரீஷையின் குருதியை தவிர்ப்பதே என் இலக்கு” என்றார் எந்தை. நான் சீற்றத்துடன் “எனில் என்னில் இருக்கும் ஷத்ரியக்குருதியை தவிர்ப்பதே எனது இலக்கு. நான் மரீஷையின் கொடிவழி வந்தவன். அவ்வாறே என்னை வைத்துக்கொள்வேன்” என்றேன். அவர் உறுமியபடி எழுந்து “இது உனக்கு அந்த அசுரமகள் கற்றுத் தந்த பாடமா? அவள் பொருட்டே அவள் குரலை இங்கு ஒலிக்கிறாயா?” என்று கேட்டார். “ஆம், நீங்கள் ஒலித்துக்கொண்டிருப்பது உங்கள் அன்னையின் பெருவிழைவை. அவர் நாவில் எழுந்த தாய்மாமனின் வஞ்சத்தை. அதுபோல் அல்ல இது. இது நெடுநின்ற தொல்குலம் ஒன்றின் குரல்” என்று நான் சொன்னேன்.

குலம் பற்றிய அந்தப் பேச்சு எந்தையை சீற்றம் கொள்ள வைத்தது. தன் தொடையில் ஓங்கி அறைந்தபடி அரியணையிலிருந்து இறங்கி வந்தார். அடிக்கப்போவதுபோல் கைவீசி “எவரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று அறிவாயா? அறிவிலி! நீ என் மைந்தன் அல்ல. நீ எனக்குப் பிறந்தவன் அல்ல. உன்னுடலில் ஓடுவதும் அசுரக்குருதிதான்” என்றார். “ஆம், என்னில் சம்பராசுரர் அளித்த அன்னம் குருதியென கலந்திருக்கலாம்” என்றேன். என் சொற்களின் உட்பொருள் அவரைத் தாக்க தளர்ந்து மீண்டும் சென்று அரியணையில் அமர்ந்து “மெய்! எந்தை எனக்கிழைத்த பெரும் பழி என்பது இவ்வண்ணம் அசுரகுலத்தில் என்னை வளரவிட்டது. அசுரகுலத்து மங்கையை எனக்கு மணமுடித்தது” என்றார். தொய்ந்து அரியணையுடன் ஒட்டினார்.

ஒரு துடிப்பு அவரில் உடனே எழுந்தது. வெறிகொண்டவராக எழுந்து “அப்பழி என்னில் முடியட்டும். நீ என் கொடிவழியினன் அல்ல என்று இதோ இன்றே அவையில் அறிவிக்கிறேன். என் குருதி தூய ஷத்ரிய அரசியொன்றில் முளைத்தது. அதுவே என் தகுதி. என்னிடமிருந்து ஷத்ரியக்குருதியில் முளைத்த ஒருவனை என் மணிமுடிக்குரியவன் என்று அறிவிக்கிறேன். இனி எனக்கு நீ மைந்தன் அல்ல, விலகு” என்றார். “அதை உங்கள் நாவிலிருந்து கேட்டுச் செல்லவே நான் வந்தேன். நன்று” என்றபடி எழுந்துகொண்டேன். நாங்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தபோது அவையில் என் தந்தையின் உடன்பிறந்தார் இருந்தனர். அவர்கள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவர்கள் எவ்வகையிலோ அந்தப் பிரிவை விரும்பினார்கள் என்று தோன்றியது.

தந்தை “ஒன்று உணர்க!” என்று கூவினார். “ஒன்று உறுதிபட உணர்க! என்றேனும் களத்தில் வாளுடன் நாம் எதிரெதிர் சந்திப்போமெனில் இமையின் அசைவும் இன்றி உன் கழுத்தை அறுத்து தலையை நிலம்தொட வைப்பேன்” என்றார். “நானும் அவ்வாறே. அவ்வண்ணம் களத்தில் சந்திக்க நேர்ந்தால். உங்களை தந்தையென்றல்ல, என் குருதியை என் மூதாதையை பழித்த கீழ்மகன் என்றே எண்ணுவேன்” என்றபின் திரும்பி வந்தேன். அவர் சொல்லின்றி கூச்சலிட்டபடி எனக்குப் பின்னால் ஓடிவந்தார். அவர் உடன்பிறந்தவர்கள் அவரை பிடித்துக்கொண்டார்கள். “இந்த அவையிலிருந்து அவன் வெளியே செல்லக்கூடாது. அவன் தலை என் அவையில் உருண்டிருக்கவேண்டும்” என்று அவர் கூவுவதை பின்னால் கேட்டேன்.

அனிருத்தன் சொல்லிமுடித்தார். நான் அமைதியாக கேட்டு அமர்ந்திருந்தேன். அனிருத்தன் “நான் என் தந்தையை அஞ்சினேன். அவர் என்னை சிறையிடவும் கூடும். எனவே இங்கே தனியிடம் தேடினேன். அசுரகுடியின் வீரர்களை மட்டும் இங்கே காவலுக்கு வைத்திருக்கிறேன்” என்றார். நான் “எனில் நீங்கள் இப்போது எத்தரப்பு? நான்காவது தரப்பா?” என்றேன். “இல்லை இன்று அசுரகுடியின் போரிடும் ஆற்றல் குன்றியிருக்கிறது. நிஷாதருடனும் கிராதருடனும் ஒன்றிணைந்து நின்றால் ஒழிய துவாரகையை ஆளும் ஆற்றல் எங்களுக்கு இல்லை. நாங்கள் யாதவர்களையும் ஷத்ரியர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் இருவரும் இணைந்தால் அவர்கள் எங்களை வெல்லக்கூடும். ஆகவே சாம்பனுடன் நின்றிருப்பதாக நாங்கள் உறுதிகொண்டிருக்கிறோம்.”

நான் “இம்முடிவை உங்கள் தந்தைக்கு தெரிவித்துவிட்டீர்களா?” என்றேன். “இல்லை. இன்று அசுரகுடியின் அனைத்து அமைச்சர்களும் படைத்தலைவர்களும் சேர்ந்து எடுத்த முடிவு இது. உண்மையில் சற்று முன்னர்தான் அறுதிமுடிவு எடுக்கப்பட்டது” என்றார் அனிருத்தன். “எங்கள் அரசர் சாம்பனே. அதை உங்களிடம் சொல்ல விழைந்தேன்.” நான் “எனில் உங்கள் நிலம் எது?” என்று கேட்டேன். “துவாரகை எனக்கு வேண்டியதில்லை. துவாரகையின் முடி சாம்பனின் கொடிவழிகளுக்கு செல்லட்டும். நாங்கள் எங்கள் அசுர நிலத்தையே ஆள்கிறோம். அங்கு பேரரசுகளை உருவாக்குகிறோம். எங்கள் அரசுக்கு நிஷாதர்களின் மணிமுடி அமைந்திருக்கும். இந்த துவாரகை உதவி செய்தால் போதுமானது” என்றார் அனிருத்தன்.

நான் புன்னகைத்தேன். “உங்கள் புன்னகை புரிகிறது. ஒரு பேரரசு இன்னொன்று வளர ஒப்பாது என்பீர்கள். எங்களுக்கு மூன்று தெரிவுகளே உள்ளன. ஷத்ரியர்களும் யாதவர்களும் நிஷாதரும். இம்மூவருள் ஓர் அசுரப் பேரரசு உருவாவதை சற்றேனும் ஒப்புக்கொள்பவர்கள் எவர்? நீங்களே கூறுக!” என்றார் அனிருத்தன். “ஆம், அவ்வண்ணமெனில் தெரிவு நிஷாதர்களே” என்றேன். “அந்த முடிவையே நான் எடுத்தேன். இது நன்கு எண்ணிச்சூழ்ந்து எடுத்த முடிவு. பிறிதொரு வழியில்லை. எங்கள் படைத்துணை சாம்பனே” என்று அனிருத்தன் கூறினார். நான் பெருமூச்சுவிட்டேன். “சரி, இதில் நான் செய்வதற்கென்ன?” என்றேன்.

“காளிந்தி அன்னையின் ஓலையை பெற்றால் நீங்கள் கிளம்பிச் செல்வீர்கள். அங்கே துவாரகையின் அரசரை சந்தித்தால் இதை சொல்லுங்கள். நான் சாம்பனுடன் நிலைகொள்ளவிருக்கிறேன்.” நான் “இதை ஏன் இப்போது அவரிடம் சொல்லவேண்டும்?” என்றேன். “அவர் அனைத்தையும் உணரவேண்டும்” என்றார். “அவர் வராதொழிவார் என்றே நான் நினைக்கிறேன். இங்குள்ள விசைகள் இயல்பாக மோதிக்கொண்டு தங்கள் நிலைபேற்றை சென்றடையட்டும் என்றே எண்ணுவார். அவ்வண்ணம் அவர் கருதினார் என்றால் இச்செய்தி அவருக்கு உகந்ததே.” நான் “அவ்வண்ணமே அவரிடம் சொல்கிறேன்” என்றேன். அனிருத்தன் எழுந்து எனக்கு வாழ்த்துரைத்து விடை அளித்தார்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 14

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 9

லக்ஷ்மணை அன்னையின் அழைப்பு வந்தபோது நான் அனிலனுடன் இடைநாழியின் அருகிருந்த சிறிய பூங்காவின் நடுவே கற்பீடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். நான் எழுந்தபோது அனிலனும் எழுந்தார். நான் அவரிடம் “நீங்களும் வரலாம்” என்றேன். “நான் எதற்கு?” என்றார். “இது ஏதோ அரசுசூழ்தல் நிகழ்வு என ஆகிவிட்டிருக்கிறது. இதை தொடங்கும்போது நான் இவ்வண்ணம் எண்ணவில்லை. இப்போது ஒவ்வொருவரும் தங்கள் காய்நகர்வுகளை செய்கிறார்கள். தங்கள் தரப்பை பதிவு செய்தாகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் இருப்பே இல்லாமலாகிவிடும் என்றும் எண்ணுகிறார்கள். இந்த அரசியலாடல் எனக்கு சலிப்பை அளிக்கிறது. நீங்கள் வரக்கூடுமென்றால் ஒருவேளை இதை இம்முறை எளிதாக நான் கடந்துசெல்லமுடியும்” என்றேன்.

அனிலன் சிரித்து “இதை சொல்கிறீர்கள். சில மாதங்களுக்கு முன்பு இங்கே ஒரு சிறுபூசல் எழுந்தது. அரண்மனையிலிருந்த யானை ஒன்று முதுமையால் உயிர்துறந்தது. அதை எம்முறையில் மண்மறைவு செய்வது என்று பேச்செழுந்தது. யானை மண்மறைவு செய்யப்படவேண்டும் என்றால் மண்ணாளும் அரசரின் செங்கோல் அங்கே வரவேண்டும். அவ்வகைச் சடங்குகளுக்கு கொடுத்தனுப்ப இங்கே ஒரு வெள்ளிச் செங்கோலும் உள்ளது. மூத்தவர் ஃபானு இயல்பாக அதற்கு ஒப்புதல் அளித்தார். செங்கோல் சென்றபோது அதை பிரத்யும்னனின் இளையவர் தடுத்தனர். அரசர் என அந்த எரிநிலையில் பிரத்யும்னனின் பெயரே சொல்லப்படவேண்டும் என்றனர். செங்கோலை பிடுங்கிக்கொண்டு வந்தனர். சாம்பன் தலையிட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொன்னார்கள். இறுதியில்… என்ன சொல்ல! ஏழு நாட்கள் இங்கே அந்த யானைச்சடலம் கிடந்தது. அதை புதைக்கவும் முடியவில்லை. அழுகி நாற்றமெடுத்தபோது எவரோ அதன்மேல் விறகையும் அரக்கையும் உமியையும் கொட்டி அங்கேயே எரியூட்டினர். அது பாதி வெந்த பின்னரே செய்தி தெரிந்து அனைவரும் ஓடிச்சென்றனர். எரிந்துகொண்டிருந்த யானைக்கு மூன்று தரப்பினரும் தனித்தனியாக மீண்டும் எரியூட்டினர்” என்றார்.

லக்ஷ்மணையின் அரண்மனை முகப்பில் எங்களை எதிர்கொண்டவர் அவர் மைந்தர் சகன். அவர் அனிலனைக் கண்டதும் திடுக்கிட்டதுபோல தெரிந்தது. ஆனால் மறைத்துக்கொண்டு முகமன் உரைத்தார். அவர் உள்ளே சென்றபோது குழப்பத்தில் நடையும் அலைபாய்ந்தது. அவருடன் நாங்கள் அக்கூடத்திற்குள் நுழைந்தபோது எவரும் அனிலனை பார்க்கவில்லை, எதிர்பார்க்காத ஒன்றை நாம் சில கணங்கள் பிந்தியே பார்க்கிறோம். நான் ஓஜஸைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முதற்கணமே அனிலனை பார்த்துவிட்டிருந்தார். எங்கள் விழிகள் சந்தித்துக்கொண்டன. அவரை நான் புரிந்துகொண்டதை அவர் புரிந்துகொண்டார். அவரிடம் எழுந்த சீற்றம் எனக்கு வியப்பையும் பின்னர் சிரிப்பையும் அளித்தது. சூழ்ச்சித்திறன் கொண்டோர் அவைமுன் நிறுத்தப்பட்டால் தோற்றுவிடுகிறார்கள். அவைமுன் நின்று சூழ்ச்சி செய்தவர் அஸ்தினபுரியின் சகுனி மட்டுமே.

பிரகோஷன் அமர்ந்திருக்க அவருடைய இளையவர்களான காத்ரவானும், சிம்மனும், பலனும், பிரபலனும் அருகே அமர்ந்திருந்தனர். சற்று பின்னால் ஓஜஸ் அமர்ந்திருந்தார். ஊர்த்துவாகனும் மகாசக்தனும் சகனும் அபராஜித்தும் பின்னால் நின்றனர். வழக்கம்போல அவர்கள் அனைவரின் விழிகளும் ஒன்றுபோலவே தோன்றின. நான் பிரகோஷனை வணங்கி முகமன் உரைத்தேன். அவரும் என்னை வணங்கி பீடம் அளித்தார். நான் சற்று எரிச்சல்கொண்டிருந்தேன். “இளவரசே, நான் தங்களை அல்ல சந்திக்க விழைந்தது. தங்கள் அன்னையை. தங்கள் அவையில் நான் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றேன். பிரகோஷன் “என்னிடம் சொல்லாத எதையும் அன்னையிடம் நீங்கள் சொல்ல இயலாது” என்றார். “அன்னையரை ஆளும் மைந்தரை இப்போதுதான் பார்க்கிறேன், நன்று” என்றேன்.

“எங்கள் அன்னையே இந்நகரில் எங்களுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு” என்றார் பிரகோஷன். “நாங்கள் மலைமக்கள். வாழ்க்கையின் பெரும்பகுதியை மத்ரநாட்டில் கழித்தவர்கள். எங்கள் மலைக்கூட்டமைப்பு சிதறி அழிந்துவிட்டிருக்கிறது இன்று. மீளச் செல்ல நிலமில்லாதவர்கள். இங்கே எங்கள் இடமென்ன என்று இன்னும் முடிவாகவில்லை. எங்கள் அன்னையை இந்நகரின் தலைவர் மணந்தார் என்பதன்றி எங்கள் அடையாளம்தான் என்ன?” என்று பிரகோஷன் சொன்னார். “எங்கள் அன்னை எளிய மலைமகள். அரசியல் சொற்கூட்டல்கள் அவருக்குத் தெரியாது. அவரிடமிருந்து ஒரு சொல்லைப் பெற்று எங்களை இங்கிருந்து துரத்திவிட்டுவிட முடியும்.”

“தந்தையின் அறச்சொல்லை நீங்கள் நம்பவில்லை அல்லவா?” என்றேன். “இல்லை, நம்பவில்லை” என்றார் பிரகோஷன். “ஏனென்றால் அது இப்போது இங்கே திகழவில்லை. அதன் இடமென்ன என்பதே எவருக்கும் தெரியவில்லை.” நான் பெருமூச்சுவிட்டு “நன்று. நீங்கள் ஐயுற வேண்டியதில்லை. உங்கள் அன்னையிடமிருந்து தன் கொழுநர் இந்நகருக்கு திரும்பிவர அவர் விழைகிறார் என்ற ஒரு சொல்லை மட்டுமே நான் கோருகிறேன்” என்றேன். “அதை அளிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை” என்று பிரகோஷன் சொன்னார். “ஆனால் நோக்குக, நீங்கள் சொல் நாடி வருவதிலேயே இங்கிருக்கும் சிக்கலின் வடிவம் உள்ளது! நீங்கள் முதலில் தேடிச்சென்றது யாதவ அரசியை. அதன் பின்னர் ஷத்ரிய அரசியை. அதன்பின் நிஷாத அரசியை. இறுதியாக எங்களை.”

“நான் அவ்வண்ணம் திட்டமிடவில்லை. உங்களை ஷத்ரியக்கூட்டில் ஒரு பகுதி என்றே கருதினேன்” என்றேன். “நாங்கள் அக்கூட்டில் ஒரு பகுதி அல்ல என்று எவருக்கும் தெரியும். அவ்வண்ணம் ஓர் எண்ணம் எங்களுக்கிருந்தது. ஆனால் அவர்கள் எங்களை அவ்வண்ணம் நடத்தவில்லை. அவந்தியில் இருந்து வந்தவர்களுக்கு நிகராகக்கூட நாங்கள் அவையமர்த்தப்படவில்லை. எந்த அரசுசூழ்தல் செய்திகளும் எங்களுக்கு வழங்கப்படவில்லை” என்றார் பிரகோஷன். “அங்கே ஏவலர் என்றே கருதப்பட்டோம். ஏவல்பணிக்கு ஏன் இத்தனை அல்லல்படவேண்டும் என்று எண்ணி அகன்றோம். அகன்றதை அவர்களுக்கு இன்னமும் முறையாக அறிவிக்கவில்லை.”

அனிலன் “அவந்தியினர் அங்கே அவைமதிப்புடனேயே நடத்தப்பட்டனர். அங்கே எங்களுக்கு இருக்கும் இடமல்ல எங்கள் கோரிக்கை. நாளை துவாரகையை பிரத்யும்னன் ஆளும்போது எங்கள் நிலம் எதுவாக இருக்கும் என்பதுதான்” என்றார். அந்த ஊடுபுகல் பிரகோஷனை எரிச்சல்கொள்ளச் செய்தது. நான் ஓஜஸை பார்த்தேன். அவர் ஏதேனும் சொல்வார் என எண்ணினேன். பிரகோஷன் “நான் பேசிக்கொண்டிருப்பது வேறு. இது எளிய அவை மதிப்பைப் பற்றிய பேச்சு அல்ல” என்றார். “நானும் என் கொடிவழியினரும் இங்கே எந்நிலையில் வைக்கப்படுவோம் என்று கவலைப்படுகிறோம். அதற்குரிய சொற்களையே எதிர்பார்க்கிறோம். எங்களுக்கான இடம் வரையறை செய்யப்படவேண்டும். அதுவே எங்கள் கோரிக்கை.”

அனிலன் அந்தக் குறிப்பை புரிந்துகொள்ளவில்லை. “அக்கோரிக்கையை நீங்கள் இன்னமும் பிரத்யும்னனின் அவையில் முன்வைக்கவே இல்லை, மூத்தவரே” என்றார். “அதை முன்வைக்கவேண்டியதில்லை. அவர்களுக்கு இன்று எங்கள் தேவை உள்ளது. விதர்ப்பம் ஒன்றும் தூய ஷத்ரிய நாடு அல்ல. அது நளன் ஆண்ட தொன்மையான நிஷாத நாடுதான். நிஷாதர்களே அங்குள்ள குடிகளில் பெரும்பகுதியினர். ஆகவே அவர்கள் எங்களை ஒதுக்கிவிட முடியாது” என்றார். நான் பேசுவதற்குள் அனிலன் உரக்க “ஆனால் உங்களாலும் பிரத்யும்னனை தவிர்க்கமுடியாது. அவர் உங்களுக்குத் தேவை” என்றார். பிரகோஷன் சீற்றத்தை அடக்குவது தெரிந்தது. “ஏன்? எங்களுக்கு சாம்பனும் நிகர்தான். அங்கே மேலும் இடம் எங்களுக்கு அமையலாம்” என்றார்.

நான் அனிலன் பேசுவதற்குள் முந்திக்கொள்ள முயன்றாலும் அவர் பேசிவிட்டார். உரக்க “அமையக்கூடும். ஆனால் சாம்பனின் கீழே நீங்கள் அவையமர வேண்டியிருக்கும். மலைஷத்ரியர்கள் நிஷாதருக்குப் பணிந்திருப்பதைவிட தூய ஷத்ரியர்களுக்குப் பணிந்திருப்பது மேல்” என்றார். நான் ஓஜஸை பார்த்தேன். அவர் அப்போதும் பேசவில்லை. எப்போது பேசப்போகிறார் என்று நோக்கிக் கொண்டிருந்தேன். பிரகோஷன் “நாங்கள் எங்கும் பணியவேண்டியதில்லை. எங்கள் உதவி தேவைப்படுபவர்கள் பணிந்தால் போதும்” என்றார். அனிலன் நகைத்து “இங்கே சொல்லலாம். ஆனால் பிரத்யும்னனின் அவையிலும் சாம்பனின் அவையிலும் இதை சொல்லமுடியாது” என்றார்.

நான் அனிலனை பார்த்தேன். அவருடைய உணர்வுகள் என்ன என்று என்னால் உணரக்கூடவில்லை. சற்றுமுன் அந்த அவைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கையில் தெரிந்தவர் அல்ல அவர். முற்றிலும் இன்னொருவர். நான் அவைக்கு அழைத்துவந்தது அவரைத்தான். அவைக்குள் நுழைகையிலேயே அவருடைய நடை மாறிவிட்டது. அவைக்கூடுகைகளில் மானுடர் ஏன் மாறுகிறார்கள்? உண்மையில் தங்கள் கற்பனையில் அவைகளில் மானுடர் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். மெய்யான அவைகளில் தோன்றும் வாய்ப்பற்றவர்கள் மேலும்மேலும் அகத்தே நடிக்கிறார்கள். அந்நடிப்பு பெருகி வீங்கி பொருளின்மையின் விளிம்பை அடைந்துவிட்டிருக்கும். ஓர் அவையில் வாய்ப்பு கிடைக்கையில் அவர்கள் அந்த விளிம்பிலிருந்தே தொடங்குகிறார்கள். அவர்கள் அகத்தே சென்றுவிட்டிருக்கும் அந்தப் பயணம் என்ன என்று நமக்குத் தெரியாது என்பதனால் அந்தப் புதியவரைக் கண்டு நாம் திடுக்கிடுகிறோம்.

நான் பேச்சை மாற்ற விரும்பினேன். “நாம் இங்கே பேசவேண்டியது இவற்றைப் பற்றி அல்ல. நான் கோருவது அன்னையின் ஓலையை மட்டுமே” என்றேன். “அதை அளிப்பதில் தடையில்லை. அதைத்தான் சொல்லவந்தேன். நீங்கள் இதை இங்குள்ள அரசியலின் ஒரு பகுதியாக ஆக்கிவிட்டீர்கள். ஆகவே எங்கள் தரப்பை நான் முழுமையாகச் சொல்லிவிட வேண்டியிருக்கிறது. நாங்கள் அனுப்பும் ஓலையை எப்படி கொண்டுசெல்வது என்பது உங்கள் தெரிவு. ஆனால் அதை நீங்கள் இங்குள்ள மூன்று குலத்தொகைகளில் எதனுடனும் சேர்க்கலாகாது. அது எங்கள் அன்னையின் செய்தியாக மட்டுமே இருந்தாகவேண்டும்.” நான் “அவ்வண்ணமே அது அமையும்” என்றேன்.

அனிலன் “எங்கள் அன்னையின் செய்தியும் அவ்வண்ணமே செல்லவிருக்கிறது. அதுவே நன்று. இங்கே மூன்று குலக்குழுக்கள் உள்ளன என்பதே ஒரு பொய். எங்கள் மூத்தவர் முற்றிலும் வேறு. எங்களிடமும் எண்ணிக்கையில் மிகுதியானோர் உள்ளனர்” என்றார். பிரகோஷன் பேசுவதற்குள் நான் “ஆம், குழுக்களின் எண்ணிக்கையை இப்போதே எவரும் சொல்லிவிடமுடியாது. யாதவர் மூன்று குழுக்கள். ஷத்ரியர்களில் நீங்கள் இருவரும் தனிக் குழுக்கள். அன்னை ருக்மிணியின் மைந்தர்களிலேயே சாருதேஷ்ணன் இன்னொரு குழுவை கொண்டிருக்கிறார்” என்றேன். அனிலன் திகைத்து “சாருதேஷ்ணனா? எவர் சொன்னது?” என்றார். “அவரே என்னிடம் சொன்னார்” என்றேன். “அவரா? அவர் ஒருமுறைகூட…” என்றபின் அனிலன் அமைதியானார்.

அவர் சொல்லடங்கிவிட்டார் என்று உணர்ந்ததும் நான் பிரகோஷனிடம் சொன்னேன் “நான் அன்னை லக்ஷ்மணையை சந்திக்கலாம் அல்லவா?” பிரகோஷன் “எவர் வேண்டுமென்றாலும் சந்திக்கலாம். தடையென ஏதுமில்லை. அரசுமுறைச் சந்திப்பில் என்ன நிகழ்கிறது என நாங்கள் நுண்ணோக்குகிறோம், அவ்வளவுதான். நீங்கள் சந்திக்கலாம். அன்னை அளிக்கவேண்டிய ஓலையை நாங்களே அமைத்துள்ளோம். அதை உங்களிடம் அளிக்கிறோம். அன்னையிடம் பேசி அதை அவரிடம் அளித்து ஒப்பம் பெறலாம்” என்றார். “அவர் அந்த ஓலையை ஒப்பவேண்டும் என என்னால் சொல்ல முடியாது” என்றேன். “வேண்டியதில்லை, நாங்களே சொல்கிறோம். எங்கள் உடன்பிறந்தவர் ஒருவர் உடன் வருவார்” என்றார் பிரகோஷன்.

“அன்னை அச்சொற்களை மறுத்தால்?” என்றேன். “மறுக்கப்போவதில்லை” என்று பிரகோஷன் சொன்னார். “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் ஒருவேளை மறுக்க நேர்ந்தால்… ஆகவேதான் கேட்டேன்” என்றேன். அதுவரை பேசாமலிருந்த ஓஜஸ் “அவர் மறுத்தால் அவரிடமே நீங்கள் ஓலை வாங்கலாம்” என்றார். நான் அவரை பார்த்தேன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. மிக மிக வழக்கமான சொற்கள். அந்த இடத்தில் அவ்வண்ணம் அவர் உள்ளே நுழைவதற்கு எந்தத் தேவையும் இல்லை. நா தவறி பேசிவிட்டாரா? அவ்வண்ணம் நா தவறுவதென்றால்கூட அது இப்படி ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில்லை. நான் அவருடைய இறந்தவை போன்ற கண்களை பார்த்தபின் “ஆம், எனில் நன்று” என்றேன்.

பிரகோஷன் அவை முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக தலையசைத்தார். நான் எழுந்து வணங்கினேன். “என் இளையோன் சகன் உங்களை அன்னையிடம் அழைத்துச்செல்வான்” என்றார். நான் மீண்டும் தலைவணங்கினேன். சகன் எழுந்து அவை வணங்கி என்னுடன் வந்தார். அனிலன் எழுந்து அவைவணக்கம் செய்து தொடர்ந்து வந்தார்.

 

அவைக்கூடத்தில் இருந்து வெளியே வந்ததும் அனிலன் “நான் எண்ணியதுபோலவேதான். தாங்கள் இருக்கும் நிலை என்ன என்பதை இவர்கள் உணரவே இல்லை” என்றார். நான் “எவர்தான் உணர்ந்திருக்கிறார்கள்?” என்று சொன்னேன். என் சொற்களை அவர் உளம்கொள்ளவில்லை. தன் வாழ்க்கையின் முதல் அவைவெற்றியை அடைந்த திளைப்பில் இருந்தார் என்று தோன்றியது.

“அன்னை லக்ஷ்மணை தனக்கென தனி எண்ணங்கள் அற்றவர். மைந்தர் சொல்லையே அவரும் சொல்வார், ஐயமே இல்லை” என்றபடி அனிலன் என்னுடன் வந்தார். “ஆகவேதான் இவர்கள் இத்தனை துணிவுடன் இருக்கிறார்கள்.” நான் ஓஜஸ் ஏன் அதை சொன்னார் என்னும் எண்ணத்தை அடைந்தேன். ஒருவேளை அனிலன் அவரை பிழையாக எண்ணியிருக்கக் கூடுமோ? தோற்றம்கூட அதற்கு அடிப்படையாக இருக்கலாம். ஆனால் அவருடைய கண்களை நான் சந்தித்தேன். அவை கூரியவை, அத்தகைய கூரிய கண்கள் கொண்டவர் பேரறிஞராக, கவிஞராக, கலைஞராக இருக்கலாம். இல்லையேல் அவர் சூதாடியேதான்.

அதை எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அனிலன் “ஓஜஸ் நம் உரையாடலை முடித்துவைத்தார். ஏனென்றால் அன்னையிடம் முரண்தென்பட்டால் என்ன செய்வது என்னும் வினா நோக்கி நீங்கள் சென்றீர்கள். அவர்களை நிலைகுலையச் செய்யும் சொல் அது. அந்தச் சொல்லாடல் மேலும் சென்றிருந்தால் பிரகோஷன் மீறி எதையேனும் சொல்லியிருப்பார். அது உங்கள் உள்ளப்பதிவாக எஞ்சியிருக்கும். ஒருவேளை நீங்கள் அதை தந்தையிடம் சொல்லவும்கூடும்” என்றார். அது முற்றிலும் உண்மை என அக்கணம் உணர்ந்தேன். ஓஜஸ்தான் நான் சந்தித்த துவாரகையின் இளவரசர்களிலேயே கூரியவர், நஞ்சுநிறைந்தவர் என்று தெளிவடைந்தேன்.

நான் சகனை பார்த்தேன். அனிலன் அவரை கூடவே அழைத்துச்செல்கையில் அவ்வண்ணம் பேசுவது விந்தையாக இருந்தது. ஆனால் சகன் “ஆம், நீங்கள் வருவதற்கு முன்புகூட மூத்தவரிடம் ஓஜஸ் என்னென்ன பேசலாகாது என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார். மூத்தவர்கூட என்ன இது, என்னென்ன பேசலாம் என்று சொல்லாமல் இதை சொல்கிறாய் என்றார். ஓஜஸ் சொல்வதற்கு ஒருசில சொற்றொடர்களே உள்ளன, சொல்லாமல் ஒழிவதற்கு கடலளவு என்றார்” என்றார். சற்று திகைப்புடன் அவர் கணகளை பார்த்தேன். அங்கிருந்தது பிறிதொரு ஒளி. எந்தச் சிக்கல்களுக்குள்ளும் செல்லாத வெள்ளை நெஞ்சுகளுக்குரியது.

அவரை நான் புரிந்துகொண்டதை உணர்ந்த அனிலன் “அவனை அறிந்தே ஓஜஸ் அனுப்பியிருக்கிறார். நாம் சொல்வதையும் அங்கே சென்று சொல்வான்” என்றார். சகன் புன்னகைத்து “ஆம், நான் எங்கே சென்று வந்தாலும் என்னிடம் அங்கே என்ன நடந்தது என்று கேட்பார்கள். நான் எதையுமே மறக்கமாட்டேன். எல்லாவற்றையும் சொல்வேன்” என்றார். நான் புன்னகைத்தது அவருக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. “நீங்கள் விருஷ்ணிகுலத்தவர் என்று ஓஜஸ் சொன்னார். விருஷ்ணிகுலத்தவர்களுக்காகவே நீங்கள் அறுதியில் நிலைகொள்வீர்கள். அவ்வாறல்ல என்று உங்களுக்கு நீங்களே ஆணையிட்டுக்கொள்வீர்கள். ஆனால் வேறுவழியே இருக்காது என்றார். நான் அப்போது அருகே நின்றிருந்தேன்.”

அனிலன் சிரித்தார். நானும் சிரித்து “இருக்கலாம்” என்றேன். லக்ஷ்மணையின் அரண்மனை முகப்பை அடைந்தோம். அங்கே நின்றிருந்த ஏவற்பெண்டிடம் நான் அவரைப் பார்க்க வந்திருக்கும் செய்தியை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே எந்த அறிவிப்பும் இன்றி சகன் உள்ளே சென்றார். நான் என்ன செய்வதென்று திகைத்து நின்றிருந்தேன். சற்றுநேரத்தில் சகன் வெளியே வந்து “அன்னை ஒப்புதல் அளித்துள்ளார், வருக!” என்றார். நான் அனிலனிடம் “நீங்கள் இங்கே நில்லுங்கள். நான் சென்றுவிட்டு உடனே வருகிறேன்” என்றேன். அவர் விழிகள் மாறின. நான் அதை பொருட்படுத்தாமல் சகனுடன் நடந்தேன்.

நாங்கள் உள்ளே நுழைகையில் சகன் “முதலில் சென்று எதன்பொருட்டு என்று சொல்லிவிடும்படி என்னிடம் ஓஜஸ் சொன்னார்” என்றார். நான் ஓஜஸின் நோக்கம் என்ன என்று எண்ணிக்கொண்டேன். இவரை என்னுடன் அனுப்பியதன் வழியாக அவர் எதை நிகழ்த்துகிறார்? அல்லது நான் இவ்வாறு எண்ணிக் குழம்பவேண்டும் என்றுதான் எண்ணுகிறாரா? உள்ளறை முன் ஏவற்பெண்டு என்னை அறிவிக்கும்பொருட்டு நின்றிருக்கையில் ஓர் எண்ணம் வந்தது, அவர் அனுப்பப்பட்டது அன்னை எந்தக் கோரிக்கையையும் முன்வைத்துவிடலாகாது என்பதற்காக. பெரும்பாலும் அவர் மட்டுமே லக்ஷ்மணை அன்னையை சந்திக்கிறார். அவர் வழியாக ஆணைகள் மட்டுமே அவருக்கு வருகின்றன. அவரிடம் அன்னை எதையும் சொல்லி புரியவைக்க முடியாது.

உள்ளறையில் லக்ஷ்மணை ஒரு சிறுபீடத்தில் அமர்ந்திருந்தார். மிக மெலிந்திருந்தார். தலை நன்கு நரைத்திருந்தது. மலைமகள்களின் வழக்கப்படி ஏழு புரிகளாக குழலை தொங்கவிட்டிருந்தார். நெற்றியில் மலைக்குடிகளுக்குரிய கரிய பொட்டு. கைகளை மடியில் கோத்து உணர்வற்ற கண்களுடன் அமர்ந்திருந்தார். அவரை எவரும் ஓர் அரசியெனச் சொல்லிவிட முடியாது. எளிய மலைமகன் ஒருவனை மணந்து நீடுநாள் வாழ்ந்து பசி, தனிமை, சாவு என அனைத்து துயர்களினூடாகவும் கடந்து முதுமையை அடைந்தவர்போல் தோன்றினார். அவரால் அரசியலை புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. அவர் என் வருகையை உணர்ந்திருக்கிறாரா என்றே ஐயம் கொண்டேன்.

நான் “அரசி, இன்றைய சூழலை அறிந்திருப்பீர்கள்” என்றேன். அவர் விழிகளில் எந்த மாறுதலும் இல்லை. “அரசி, நான் துவாரகையின் அரசரைத் தேடி செல்லவிருக்கிறேன். எட்டு அரசியரின் அழைப்பையும் ஏந்திச்சென்றால் அவரை அழைத்துவந்துவிடலாமென்று எண்ணுகிறேன். தங்களின் ஓலை தேவை” என்றேன். அவர் விழிகள் தழைந்தன. மடியில் விழிநீர்த்துளிகள் உதிர்ந்தன. “அரசி, ஓலையை தங்கள் மைந்தர்கள் எழுதிவிட்டார்கள். அதில் நீங்கள் ஒப்பு முத்திரை அளித்தால் மட்டும் போதும்” என்றேன். அரசி ஓசையின்றி அழுதுகொண்டிருந்தார். நான் சகனிடம் ஓலையை அளிக்கும்படி சொன்னேன். அரசி அதை வாங்கி நோக்காமலேயே தன் கணையாழியை அழுத்தி திரும்ப அளித்தார்.

நான் மேலும் ஏதேனும் சொல்ல விழைந்தேன். ஆனால் அரசி விழிநீர் பொழித்துக்கொண்டு அசைவிலாது அமர்ந்திருந்தார். அவர் உள்ளத்தில் நிகழ்வதென்ன என்று அறியவே முடியாது என்று தோன்றியது. நான் தலைவணங்கி வெளியே நடந்தேன். சகன் என்னுடன் வந்தபடி “தந்தையைப் பற்றிப் பேசினாலோ தந்தையை நினைவூட்டும் எதையேனும் பார்த்துவிட்டாலோ இதேபோல அழுவார். நெடுநேரம். ஒரு சொல்லும் உரைப்பதில்லை. அழுதழுது அவரே ஓயவேண்டியதுதான். ஏவற்பெண்டுகள் எவரும் அவரிடம் பேசுவதில்லை” என்றார். நான் அவ்வாறன்றி வேறேது இருக்கமுடியும் என எண்ணிக்கொண்டேன்.

வெளியே காத்திருந்த அனிலன் “வாங்கிவிட்டீர்களா?” என்றார். “ஆம்” என்றேன். “நன்று, நான் சொன்னேனே. அன்னை எதையுமே நினைவுகூரவில்லை. அவர் இவர்கள் சொல்வதை செய்வார்” என்றார். சகன் “ஆம், என்னிடம்தான் எல்லாவற்றையும் சொல்லி அனுப்புவார்கள். நான் சொல்வதை அன்னை மறுப்பதே இல்லை” என்றார். “நன்று இளவரசே, நான் இனி ஒரே ஒரு அரசியை மட்டுமே சந்திக்கவேண்டும். ஓலை பெற்றேன் என்னும் செய்தியை என் பொருட்டு தங்கள் மூத்தவரிடம் சொல்லுங்கள்” என்றேன். சகன் “நான் சொல்கிறேன். நானே ஓலையை பெற்றுக்கொடுத்தேன் என்று சொல்கிறேன்” என்றபின் சென்றார்.

அனிலன் “எளிய உள்ளம்” என்றார். “ஆனால் இத்தகையோரை பயன்படுத்தி எந்தத் தீங்கையும் செய்ய முடியும்” என்றார். தன்னை ஒரு சூழ்ச்சிக்காரராக உருவாக்கிக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையை அனிலன் பெற்றுவிட்டார் என்று தோன்றியது. இனி ஒவ்வொன்றையும் நுட்பமாக்கிக் கொள்வார். சூழ்ச்சிகளை கண்டடைவார். சூழ்ச்சிகளை உள்ளத்துக்குள் செய்து பார்ப்பார். அரிதாக வெற்றிகளையும் அடைவார். “நன்று, நான் காளிந்தி அன்னையையும் சந்திக்கவேண்டும்” என்றேன். “நான் அதற்கும் ஒருங்கமைக்கிறேன். அவர் இருக்குமிடத்தை அறிவேன்” என்றார் அனிலன். “இல்லை, அவர் சாம்பனின் கூட்டமைவில் இருப்பவர். நீங்கள் வருவதை அவர்கள் விரும்ப வாய்ப்பில்லை” என்றேன். “ஆம், அது உண்மை” என்றார் அனிலன்.

“மீண்டும் சந்திப்போம். தங்கள் மூத்தவரிடம் என் உசாவலை சொல்க!” என்றபடி நான் விடைபெற்றுக்கொண்டேன். “நான் ஒட்டுமொத்தமாக ஒன்று சொல்கிறேன், யாதவரே. இப்பூசல் தந்தை வந்தாலும் முடியாது. ஏனென்றால் இவர்களெல்லாம் இவ்வண்ணம் ஆடியும் எதிர்நின்றாடியும் சுவை கண்டுவிட்டார்கள். உள்ளத்துள் பலநூறுமுறை ஆட்சியை நடித்துவிட்டார்கள். திரும்பச் சென்று மீண்டும் எளிய இளவரசர்களாக அமர எவராலும் முடியாது” என்றார் அனிலன். அது உண்மை என்று தெரிந்தாலும் என் அகம் எரிச்சலுற்றது. “பார்ப்போம். நான் அவர் ஆற்றலை நம்புபவன்” என்றேன்.

“ஆம். தந்தை அளவிலா ஆற்றல் கொண்டவர். ஆனால் நாங்கள் எண்பதின்மரும் அவருடைய வடிவங்களே. இதோ செல்லும் இந்த நுண்ணிலிகூட. அவரால் எங்களை எதிர்கொள்ள முடியாது. எங்களை அஞ்சியே அவர் விலகிச்சென்றார். நாங்கள் எங்கள் அன்னையரை இப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதேகூட நாங்கள் தந்தையின் மாற்றுருக்கள் என்பதனால்தான்” என்றார் அனிலன். “ஒருவேளை அன்னையரின் ஓலையுடன் செல்கையில் நீங்கள் தந்தையை அறச்சிக்கலுக்குள் இழுத்துவிடுகிறீர்கள். அன்னையரின் சொல்லை மறுக்க முடியாமல் வரவும் விரும்பாமல் அவர் துயருறக்கூடும்.”

நான் எரிச்சலை வெளிப்படையாகவே காட்டி “நான் அதை கருதவில்லை. இது என் பணி” என்றேன். “ஆம், கடமையை நாம் செய்யவேண்டியதுதான்” என்றார் அனிலன். அவர் பேசிக்கொண்டே இருக்க விழைபவர்போலத் தோன்றினார். நான் தலையசைத்து விடைபெற்று விலகிநடந்தேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 13

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 8

என்னை மித்ரவிந்தையின் அரண்மனைக்கு கூட்டிச்செல்லும்படி காவலரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். எண்ணியதுபோலவே பிந்தியது. என்னை வந்து அழைத்துச்சென்ற காவலன் துவாரகைக்கு புதியவன். அரசி மித்ரவிந்தை அவந்தியினருக்குரிய சிறிய அரண்மனையில் குடியிருந்தார். அங்கே அவந்தி நாட்டிலிருந்தே காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறர் மேல் ஐயம் கொண்டிருந்த துவாரகையில் பெண்கள் தங்கள் பிறந்த நாட்டுக்கு உள்ளத்தால் திரும்பிச் சென்றுவிட்டிருந்தனர். மணத்தன்னேற்பில் உங்களை ஏற்று உடன்வந்த மித்ரவிந்தை ஒவ்வொரு அடியாக பின்வைத்து மீண்டும் அவந்திக்கே சென்றுவிட்டிருந்தார் என்று தோன்றியது.

என்னை அழைப்பதற்குப் பிந்தியமை ஏன் என்று புரிந்துகொண்டிருந்தேன். எண்ணியதுபோலவே விருகனும் கர்ஹனும் அனிலனும் கிருதரனும் வர்தனனும் அங்கிருந்தனர். மைந்தர்கள் வந்து அன்னையிடம் ஓரிரு சொற்கள் பேசி முடிவுகள் எடுத்த பின்னரே என்னை அழைத்திருந்தனர். நான் அறைக்குள் சென்றபோது மித்ரவிந்தையின் அருகே விருகன் அமர்ந்திருந்தார். கர்ஹன் அப்பால் நின்றிருந்தார். பிறர் சற்று தள்ளி சாளரத்தோரம் நின்றிருந்தனர். நான் தலைவணங்கி அமர்ந்தேன். விருகன் என்னிடம் நேரடியாக “நிகழ்வன அனைத்தையும் அறிந்தோம். எங்கள் அன்னையின் ஓலை அளிக்கப்படுவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் அது ருக்மிணி அன்னையின் ஓலையுடன் சேர்த்து அளிக்கப்படாது. எங்கள் ஓலை தனியாகவே அளிக்கப்படும்” என்றார்.

நான் “நான் உங்கள் ஓலைகளை கோரவில்லை, நான் கோருவது அரசியின் ஓலையை மட்டுமே” என்றேன். “ஆம், அந்த ஓலையை என் அன்னை தனியாகவே தருவார்” என்றார் விருகன். “அதிலென்ன?” என்று நான் இயல்பாக சொன்னேன். “இன்று அவந்தி விதர்ப்பத்துடன் இணைந்திருக்கிறது. பிரத்யும்னனின் அவையிலேயே நாங்கள் இடம்பெறுகிறோம். ஷத்ரியக்கூட்டிலிருந்து நாங்கள் வெளியே செல்லவும் முடியாது. ஆனால் நாங்கள் அவர்களின் அடிமைகள் அல்ல, கூட்டர் மட்டுமே. அதை அவர்கள் உணரவேண்டும். அவர்கள் அனுப்பும் ஓலையில் ஒரு துணைமுத்திரையென எங்கள் அன்னை அமையலாகாது” என்றார் விருகன். “அவ்வாறு நீங்கள் முடிவெடுத்தால் நான் ஏதும் சொல்வதற்கில்லை” என்றேன். “ஓலையை கொடுங்கள், அதற்குமேல் பேச ஏதுமில்லை.”

“அந்த ஓலையை உடனே உங்களிடம் அளிக்கச் சொல்கிறேன்” என்று விருகன் தொடர்ந்தார். “அவ்வண்ணம் ஓலை தனியாகவே அளிக்கப்பட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும். இங்கு நாங்கள் அதைப்பற்றி எண்ணினோம். இது ஒரு நல்ல தருணம், அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் ஆனால் அவர்களுக்கு அடங்கி அல்ல என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவதற்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.” நான் சலிப்புடன் “இது ஒரு மிகச் சிறிய செயல். இதனூடாக ஆவதொன்றுமில்லை” என்றேன். “இல்லை, அந்த அவையில் நாங்கள் எப்படி நடத்தப்படுகிறோம் என்பதை நீங்கள் உணர்ந்தால் இதை சொல்லியிருக்கமாட்டீர்கள். எங்களை அவர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசின் இளவரசர்கள் என்றே நடத்துகிறார்கள்” என்றார் விருகன்.

நான் புன்னகைத்தேன். “என்ன புன்னகை?” என்று விருகன் ஐயத்துடன் கேட்டார். “நன்று, யாதவர்கள் மட்டுமல்ல ஷத்ரியர்களும் ஒற்றுமையுடன் இல்லை என்பதை காண்கையில் நிறைவளிக்கிறது” என்றேன். “ஏன்?” என்றார். “அனைத்துத் தரப்பும் நிகர்நிலையில் இருப்பது நன்றல்லவா?” என்றேன். அவர் “எங்கள் இடமென்ன என்று எங்களுக்குத் தெரியும்” என்றார். நான் அவருக்கு அறிவூக்கி எவர் என அறிய விழைந்தேன். “ஆனால் அவந்தி என்றுமே விதர்ப்பத்திற்குக் கீழேதானே இருந்துள்ளது?” என்றேன். அவர் சீற்றத்துடன் “எவர் சொன்னது? அவந்தி தன் தன்னுரிமைக்காக போராடிக்கொண்டே இருந்திருக்கிறது. அதன் வீரவரலாறு அனைவருக்கும் தெரியும்” என்றார்.

எண்ணியதுபோலவே வர்தனன் தணிந்த உறுதியான குரலில் “சிறிய நாடுகளை விழுங்கிவிடலாம் என பெரிய நாடுகள் எண்ணுவது என்றுமுள்ளதே” என்றார். “ஆனால் அவ்வண்ணம் விழுங்கப்படாமல் ஒரு நாடு பல தலைமுறைக்காலம் நீடிக்கிறதென்றாலே அது தன்னுரிமையை முதன்மை கொள்கிறது, அதன்பொருட்டு போரிடச் சித்தமாக உள்ளது என்றே பொருள். அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் மாளவத்திற்கும் விதர்ப்பத்திற்கும் அச்சமூட்டுபவர்களாகவே திகழ்ந்தனர். குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அவர்களின் களவீரத்தை இன்றும் சூதர்கள் பாடிப்புகழ்கின்றனர்” என்றார்.

அவர்தான் சுழிமுனை என்று கணித்த என் கூர்மையை நானே வியந்துகொண்டேன். அந்த அவைக்குள் நான் நுழைந்த கணம் அங்கிருந்தவர் அனைவரும் அவரை ஒருகணம் நோக்கி விழிவிலக்கியதை நான் கண்டிருந்தேன். இளையவர் ஆயினும் அவரே அங்கே சூழ்திறன் கொண்டவர். அதனாலேயே அவைமுதன்மை கொண்டவர். ஒவ்வொரு குழுவிலும் அவ்வண்ணம் ஒருவர் எழுவதன் விந்தையை எண்ணிக்கொண்டேன். அவரை மேலும் சீண்ட விழைந்தேன். அவருக்கு தன் நாவின்மேல் எவ்வளவு ஆட்சி என்று அறிய. ஏனென்றால் இந்தக் களமாடலில் தன்னை தான்வென்ற திறனாளரே முதன்மைவிசை என திகழவிருக்கிறார்.

நான் அவரிடம் “மாளவமும் விதர்ப்பமும் போரிட்டுக்கொண்டே இருந்தமையால் இரு தரப்பிலும் மாறி மாறி ஒட்டிக்கொண்டு ஒரு தரப்பை இன்னொரு தரப்புடன் மோதவிட்டு அவந்தி தங்கிவாழ்ந்தது என்பார்கள்” என்றேன். “ஆம், அதை அரசுசூழ் திறன் என்பார்கள்” என்று வர்தனன் சொன்னார். “அதன் பொருட்டு நாங்கள் பெருமிதமே கொள்கிறோம். வில்திறனுடன் சொல்திறனையும் இணைத்துக் கொண்டுள்ளோம்.” நான் “இங்கும் உங்கள் வழி அதுதானா?” என்றேன். விருகன் இடைமறித்து “ஆம், அங்கே மோதல்கள் இருக்கின்றன. ருக்மிணியின் மைந்தர்களிலேயே சாருதேஷ்ணனின் குரல் விலகி ஒலிக்கிறது. நக்னஜித்தியின் மைந்தர்களுக்குள்ளும் சில அமைதியின்மைகள் உள்ளன. அனிருத்தனின் தரப்பு என்ன என்பது எவருக்கும் தெரியாததாகவே உள்ளது” என்றார்.

அவரை நோக்கிய வர்தனனிடம் எரிச்சல் தெரிந்தது. மிகைச்சொல் எழுந்துவிட்டது என்பதை உணர்ந்த விருகன் “நாங்கள் எவரிடமும் பிரிவுச்சூழ்ச்சி செய்து விளையாட விழையவில்லை. ஆனால் எங்கள் நலன்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றார். வர்தனன் “நான் தெளிவாக எங்கள் ஐயத்தை சொல்லிவிடுகிறேன், யாதவரே. இங்கு தந்தை வரவேண்டும் என்றே நாங்கள் விழைகிறோம். அவர் சொல்லில் இருந்து ஆணைகொண்டு பிரத்யும்னன் முடிசூடுவது எங்களுக்கு நன்று. ருக்மி இந்நகர்மேல் படைகொண்டுவந்து அதன் விளைவாக பிரத்யும்னன் முடிசூடுவார் என்றால் இங்கே விதர்ப்பத்தின் குரல் ஓங்கிவிடும்… அது அவந்திக்கு நன்று அல்ல” என்றார்.

“ஆனால் இரண்டாமவரான சாருதேஷ்ணனும் விதர்ப்பத்தின் இளவரசியை மணந்தவர் அல்லவா?” என்றேன். வர்தனன் தடுப்பதற்குள் விருகன் சொல்லெடுத்துவிட்டார். “ஆம், ஆகவேதான் நாங்கள் சாரகுப்தனை ஆதரிக்கிறோம்.” நான் வியந்து சொல்லவிந்துவிட்டேன். அவ்வண்ணம் ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை. “சாரகுப்தனா? அவர் முரண்கொண்டிருக்கிறாரா? அவைகளில் அப்படி ஒருவர் இருப்பதே வெளிப்பட்டதில்லை” என்றேன். வர்தனன் “அவரிடம் பேசிவிட்டோம். அவர் எங்கள் ஆதரவுடன் முடியை கைப்பற்றலாம் என்னும் எண்ணம் கொண்டிருக்கிறார்” என்றார். வர்தனனை திரும்பிப்பார்த்தபின் விருகன் திகைத்து என்ன சொல்ல என்று தெரியாமல் தவித்தார். சாரகுப்தனின் பெயரை சொல்லியிருக்கக் கூடாது என்பது அவருக்கும் அங்கிருந்த பிற மைந்தருக்கும் அப்போதுதான் தெரிந்தது.

நான் புன்னகையுடன் “சாரகுப்தன் மிகச் சிறியவர். அவருக்கென இங்கே படையோ ஆதரவோ இல்லை. எந்தப் படைக்களத்திலும் அவர் நின்றதில்லை. அத்தகைய ஒருவருக்கும் இவ்வண்ணம் ஒரு விழைவு இருப்பது விந்தையே” என்றேன். வர்தனன் “அவர் விழைவதில் என்ன பிழை? அவர் மணந்துகொண்டிருப்பது மாளவத்தின் இளவரசியை… அவருடன் பரதசாருவும் விசாருவும் சாருவும் இணைந்திருக்கிறார்கள். பரதசாரு கேகயத்து இளவரசியையும் விசாரு கலிங்க இளவரசியையும் சாரு கூர்ஜரநாட்டு இளவரசியையும் மணந்திருக்கிறார்கள்” என்றார்.

வேறுவழியில்லாமல் பேசத்தொடங்கி விழையாதவற்றை பேசிக்கொண்டிருக்கிறார் என உணர்ந்தேன். நான் அவரை நோக்கி புன்னகைத்து “ஆம். ஆனால் அவர்கள் அனைவருமே கவர்ந்து கொண்டுவரப்பட்டு மணக்கப்பட்டவர்கள்” என்றேன். “கூர்ஜரமும் கலிங்கமும் துவாரகையின் முதன்மை எதிரிகள்.” வர்தனன் “மெய், ஆனால் அதெல்லாம் போருக்கு முன்னர். குருக்ஷேத்ரப் போருக்குப் பின் நிலைமை அதுவல்ல. இன்று ஷத்ரியர் நிலைநிற்புக்காகவே போராடும் நிலையில் இருக்கிறார்கள். பழைய சினங்களும் பகைமைகளும் இன்றில்லை. பழைய அரசர்களே கூட இன்றில்லை. கூர்ஜரத்தில் முந்தைய கூர்ஜர மன்னர் சக்ரதனுஸின் எட்டாவது அரசியின் மைந்தர் சந்திரதனுஸ் இன்று அரசேற்றிருக்கிறார். அவருக்கு பழைய வரலாறுகளுடன் எந்தத் தொடர்ச்சியும் இல்லை. அவருடைய நேர்தங்கையைத்தான் சாரு மணந்திருக்கிறார்” என்றார்.

“இன்று எந்தெந்த வகையில் எல்லாம் படைக்கூட்டுக்களை அமைக்க முடியும், எப்படியெல்லாம் சிறிய அளவிலேனும் படைகளை தொகுத்துக்கொள்ள முடியும் என்றே ஒவ்வொரு ஷத்ரியநாடும் எண்ணுகிறது. ஆதரிக்கும் எவரையும் வரவேற்கும் நிலையில் உள்ளது. கூர்ஜரமும் கலிங்கமும் மாளவமும் கேகயமும் நம்முடன் இணையக்கூடும். இங்கே வலுவான ஒரு ஷத்ரியப் படைக்கூட்டு அமைக்கமுடியும்.” நான் “அதை பிரத்யும்னன் எண்ணியிருக்க மாட்டாரா?” என்றேன். “எண்ணவில்லை. அவர்கள் மிகையான தன்னம்பிக்கையில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆற்றலால் அச்சுறுத்தி எஞ்சிய நாடுகளை உடன் சேர்த்துக்கொள்ளலாம் என கணக்கிடுகிறார்கள். ஆனால் ஆற்றல் மீதான அச்சமே அவர்களை விலக்கும் என நாங்கள் எண்ணுகிறோம்” என்றார் விருகன்.

வர்தனன் “மேலும் ஒன்றுண்டு, விதர்ப்பம் போருக்கு வராதொழிந்தமையால் இன்று பெரும் படைவல்லமையுடன் உள்ளது. அதை அத்தனை நாடுகளும் அஞ்சிக்கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக அனைத்து ஷத்ரியர்களும் அணிசேர்வார்கள்” என்றார். “ருக்மி வரலாற்றை நன்கு கணித்திருக்கிறார். இன்று அவர் விழைந்தால் பாரதவர்ஷத்தில் எவருடனும் போரிடும் நிலையில் இருக்கிறார்” என்று கர்ஹன் சொன்னார். “இல்லை, அவருக்கு ஒரு நல்லூழ் அமைந்தது, அவ்வளவுதான்” என்று வர்தனன் திரும்பி அவரிடம் சொன்னார். “எண்ணாது சொல்லெடுக்கலாகாது அவையில்.” அவருடைய அச்சினம் எனக்கு வியப்பூட்டியது.

கர்ஹன் அவரைவிட மூத்தவர். ஆனால் அவர் தணிந்து “நான் எனக்குத் தோன்றியதை சொன்னேன்” என்றார். “தோன்றியதைச் சொல்லும் இடம் அல்ல அவை” என்றபின் என்னிடம் திரும்பிய வர்தனன் “போரில் அத்தனை ஷத்ரியர்களும் கலந்துகொண்டது ஏன்? ஒருவர் கலந்துகொள்ளாமல் இருந்தால் அவர் தனித்து நிற்க நேரிடும். போருக்குப் பின் ஆற்றல்கொண்டு எழும் தரப்பு அவரை தாக்கி அழிக்கும். போரில் எவர் வென்றாலும் அவரை விலகிநின்றவர் எதிர்கொண்டாகவேண்டும். எந்த அரசுசூழ் நுட்பமும் அறியாமல் வெற்று வெறியாலேயே ருக்மி விலகி நின்றார். போருக்குப் பின் இரு தரப்பும் இவ்வாறு ஆற்றல் அழிந்து சுருங்கி மறையும் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நிகழ்ந்தது” என்றார்.

“அத்துடன் அஸ்தினபுரி இன்று பழைய பகைகளை கடக்க நினைக்கிறது. அதுவும் ருக்மிக்கு நலம்பயப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றுகூட அஸ்தினபுரி என்ணினால் விதர்ப்பத்தை அழித்துவிட முடியும். அவர்கள் அதை எண்ணவில்லை” என்று வர்தனன் தொடர்ந்தார். நான் “அவந்திநாட்டு அரசர்கள் விந்தனும் அனுவிந்தனும் களத்தில் மடிந்தபின் இன்று அங்கே அவர்களின் அகவைநிறையாத இளமைந்தர் உக்ரசேனன் ஆட்சியிலிருக்கிறார். படைத்தலைவர் சூரனும் அமைச்சர் சத்வரும் சேர்ந்து அரசாள்கிறார்கள் என அறிந்தேன்” என்றேன். “ஆம், இன்று அவந்தி ஒன்றும் செய்ய இயலாத நிலையிலேயே உள்ளது. ஆனால் அவந்தி ஒருபோதும் அடங்கியிருக்கும் நிலம் அல்ல.”

நான் சூழ்ந்திருக்கும் முகங்களை நோக்கினேன். அவற்றில் எல்லாம் வர்தனன் மீதான அச்சமோ ஒவ்வாமையோ ஒன்றை கண்டேன். ஆனால் விருகன் “ஆம், நல்லூழ்தான். அது நீடிக்காது” என்றார். நான் “நன்று, உங்கள் தரப்பை அறிந்துகொண்டேன். ஓலையை எதிர்பார்க்கிறேன்” என்றேன். பின்னர் மெல்லிய ஏளனத்துடன் “இப்பூசல்கள் அனைத்தையும் அந்த ஓலை பேசவேண்டும் என்ற தேவை இல்லை” என்றேன். வர்தனன் சிரித்து “அந்த ஓலை அனைத்தையும் சுட்டும். அறிந்தோருக்குப் புரியும்” என்றார். நான் புன்னகைத்தேன்.

 

நான் விருகனின் அவையிலிருந்து வெளியே வந்தபோது என்னுடன் இளவரசர் அனிலனும் வந்தார். நான் அவரிடம் “நான் அரசி லக்ஷ்மணையை சந்திக்க விழைகிறேன்” என்றேன். “அவரை இன்னும் சந்திக்கவில்லையா என்ன? இங்கே அருகேதான் அவர்களின் அரண்மனை. நீங்கள் பிரத்யும்னனை சந்தித்த பின் தொடர்ந்து அவரையும் சந்தித்திருப்பீர்கள் என எண்ணினேன்” என்றார். “இல்லை, அவர்கள் இன்னமும் முழுமையாக நிலைபாடு எடுக்கவில்லை. ஆகவே அவர்கள் இப்போது எங்குமில்லை” என்றேன். “அவர்களுக்கு வேறுவழியில்லை. பிரத்யும்னனுடனேயே வந்துசேரவேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பது சில உறுதிகளை மட்டுமே” என்றார் அனிலன்.

“நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? இங்கே உங்கள் மூத்தவர் செய்யும் அரசாடலைப் பற்றி?” என்றேன். “நான் என்ன சொல்வது? இவை அரசுசூழ்தலை அறிந்தவர்களால் ஆற்றப்படுபவை. நான் எளியவன், இளையவன்” என்றார். “ஆனால் நீங்கள் ஷத்ரியர். உங்களுக்கென ஒரு நிலைபாடு இருக்கத்தான் வேண்டும்.” அவர் தயங்கியபின் “மெய் சொல்வதென்றால் வெறுமனே பித்துகொண்டு செயல்படுவது இது என எனக்குப்படுகிறது. இங்கே அறிந்தோ அறியாமலோ அனைத்தும் பிறப்படையாளத்தில் குழுவமைந்துவிட்டன. எனில் அதைச் சார்ந்தே நாமும் செயல்பட முடியும். அவந்தி ஷத்ரிய நாடு. பிரத்யும்னன் ஷத்ரியர். நாம் உடன் செல்வதொன்றே செய்யக்கூடுவது” என்றார்.

“அதை சொல்லியிருக்கிறீர்களா?” என்றேன். “சொல்லியிருக்கிறேன். பலமுறை. என் வாயை மூடிவிடுவார்கள். உண்மையில் அவர்களுக்கே தெரியும், நாம் சென்றுசேரவிருப்பது பிரத்யும்னனின் தரப்புடன்தான் என்று. ஆனால் ஐயம்கொள்கிறார்கள், அரசியலாடுகிறார்கள். நோக்கம், தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவது. அரசியலாட இது ஒரு களம். ஆகவே ஆடிப்பார்க்கிறார்கள். பல்லும் உகிரும் முளைத்த புலிக்குட்டி தன் நிழலை வேட்டையாடிக் களிப்பதுபோல…” என்றார் அனிலன். நான் “லக்ஷ்மணை அன்னையை நான் சந்திக்கவேண்டும்” என்றேன். “வருக, நானே அழைத்துச் செல்கிறேன்! அவர் மைந்தர்கள் அனைவருமே எனக்கு அணுக்கமானவர்கள்தான்” என்றார்.

அவர் என்னை அழைத்துச்செல்கையில் “உண்மையில் லக்ஷ்மணை அன்னையின் மைந்தரின் உளச்சிக்கலும் இதுதான். எங்களை வந்து கெஞ்சி மன்றாடி அழைத்துச்செல்லுங்கள், நாங்களே வரமாட்டோம் என்னும் இயல்பு. அது பெண்களுக்குரிய தன்மை என்பார்கள். அவர்களுக்குப் பிடித்த ஆடையை அவர்கள் அணியவேண்டும் என்றாலும்கூட நாம் அவர்களிடம் கெஞ்சி மன்றாடவேண்டும்” என்றார். நான் சிரித்தேன். அவரும் சிரித்து “இதை நான் பலமுறை அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்களால் அதற்கும் சிரிக்கவே முடிகிறது. அங்கு முடிவெடுப்பவர் ஓஜஸ்” என்றார். “அவரா?” என்றேன். அவர் முகம் எனக்கு நினைவுக்கு வரவில்லை.

“நினைவுக்கு வரும் முகம் அல்ல” என்றார் அனிலன். “மிக மெலிந்தவர். ஒடுங்கிய நீண்ட முகம். நடுவே ஒடிந்து கூன்விழுந்த முதுகும் சற்றே வளைந்த கைகளும் கொண்டவர். எந்த அவையிலும் முன்னால் வந்து நின்றிருக்க மாட்டார், எவரிடமும் அவரே பேசமாட்டார். நேருக்குநேர் அவரிடம் நாம் பேசினால் கூச்சம்கொண்டு பதறுவார். சிற்றகவையில் புரவியிலிருந்து விழுந்து முதுகெலும்பு ஒடிந்தமையால் நெடுநாள் படுக்கையில் இருந்தவர். அப்போதுதான் நூல்களைப் பயின்று சூழ்கைவல்லவர் ஆகியிருக்கிறார்.” நான் “ஓஜஸ்” என்று சொல்லிக்கொண்டேன். “ஆம், ஓஜஸ். அவர் பெயரே இங்கு சொல்லப்பட்டதில்லை” என்றார் அனிலன். “ஓஜஸ் நெடுங்காலம் மத்ரநாட்டில்தான் இருந்தார். அவர் புரவியிலிருந்து விழுந்தார், மத்ரநாட்டவருடன் குட்டைப்புரவியில் மலையிலிருந்து பாய்திறங்கியபோது.”

நான் அவர் முகத்தை நினைவில் மீட்டிக்கொள்ள முயன்றேன். “ஒன்று நீங்கள் நோக்கியிருக்கலாம். இந்த அவைகளில் அரசுசூழ்தலை நிகழ்த்துபவர்கள் அனைவருமே உடற்குறை கொண்டவர்கள். அதனால் அவர்கள் இளமையில் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பொழுதை நூல்பயிலச் செலவிட்டு அதனூடாக அவைமுதன்மையை அடைந்துவிட்டார்கள். அவர்களை இளமையில் பிறர் ஏளனம் செய்திருக்கலாம். இங்கே நாங்கள் எண்பதின்மர். பலர் இணையான அகவைகொண்டவர்கள். ஆகவே ஒருவருக்கொருவர் இரக்கமற்ற இளிவரல் என்றுமிருந்தது. அந்த இளிவரலால் அவர்கள் நெஞ்சு புண்பட்டிருக்கலாம். இன்று சூதுகளம் தேர்ந்தவர்களாகி எங்களை எல்லாம் கடந்து அவையில் இரண்டாமிடத்தவராக அமர்ந்திருக்கிறார்கள்.”

நான் எண்ணியதை உடனே அனிலன் சொன்னார். “வர்தனன் இளமையில் ஒரு காய்ச்சலுக்குப் பின் இடது கால் மெலிவுநோய்க்கு ஆளானான். அவன் நடக்கையில் இடக்கையை இடக்கால் முட்டின்மேல் ஊன்றி எம்பி விழுந்து ஊசலாடித்தான் செல்கிறான். அவனால் புரவியில் கால்களை நாடாவால் கட்டிக்கொண்டு ஒருக்களித்துத்தான் அமரமுடியும். அவன் படைபயின்றதே இல்லை. இளமையிலேயே நாகரூபரின் களத்திற்குச் சென்று நூல்நவின்றான். இளமைக்குப் பின் அவனை நாங்கள் பார்த்ததே குறைவுதான். கல்வி முடித்து திரும்பிவந்தபோது அவன் பிறிதொருவனாக இருந்தான். செல்லும்போது எவரிடமும் பேசாதவனாகவும் எதிலும் கலந்துகொள்ளாதவனாகவும் இருந்தான்.”

“மீண்டுவந்தபோது அவன் விழிகளில் விந்தையானதோர் ஏளனம் இருந்தது. நாங்கள் எதை கேட்டாலும் மெல்லிய குரலில் இளிவரலாகவே மறுமொழி சொன்னான். அந்த நுண்ணிய இளிவரலை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே எப்போதும் தடுமாறினோம். எங்கள் குழப்பத்தைக் கண்டு மெல்லிய புன்னகையுடன் அவன் அப்பால் சென்றான். எங்கள் மேல் இரக்கம் கொண்டவன்போல் இருந்தது அவன் சிரிப்பும் நடிப்பும். அது எங்களை சீற்றம் கொள்ளச் செய்தது. ஆனால் அவனுடைய சொல்திறன் அச்சுறுத்தியது. அவனை முற்றாகத் தவிர்க்கலானோம்.”

“அவன் மூத்தவருக்கு எளிதில் அணுக்கமானவன் ஆனான். அவைகளில் அவருக்கு இரண்டாமிடமாக அமரத் தொடங்கினான். பின்னர் மூத்தவரிடம் ஏதேனும் சொல்லவேண்டும் என்றால் அவனிடம் சொல்லலாம் என்றாயிற்று. அவனால் மூத்தவரிடம் எங்களைப்பற்றி எதை வேண்டுமென்றாலும் சொல்லமுடியும் என்று நிலை வந்தது. நாங்கள் அவனை அஞ்சவும் பணியவும் தொடங்கினோம். இன்று மூத்தவரைவிட அவனையே அஞ்சுகிறோம்.” நான் அனிலனை பார்த்தேன். அவருக்கு ஆறுதல் அளிக்கும்படி எதையாவது சொல்லலாம் என நினைத்தேன். அதற்குள் அவரே தொடர்ந்தார்.

“ஆனால் ஒன்று உறுதி. வர்தனனைப் போன்றவர்கள் என்றும் இரண்டாமிடத்திலேயே இருப்பவர்கள். அவர்களால் முதலிடத்திற்கு செல்லமுடியாது. அனைத்தையும் நிகழ்த்துவோன் என்னும் ஆணவம் தோன்றும்தோறும் அவர்கள் அறியாமலேயே முதலிடத்தை விழைவார்கள். அதை எத்தனை ஆழத்திற்குள் புதைத்தாலும் எப்படியெல்லாம் சொல்லடுக்கி அகற்றினாலும் அவர்களால் கடந்துசெல்ல முடியாது. முதலிடத்தை அவர்கள் அகத்தால் நடிப்பார்கள். அதன் ஒரு கட்டத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் மேல் கசப்பு கொள்வார்கள். அவர்களை ஆட்டுவிப்பார்கள். அவர்களின் ஆட்கொள்ளலுக்கு முதலிடத்தில் இருப்பவர்கள் கட்டுப்பட்டாகவேண்டும். ஏனென்றால் அந்நிலை அதற்குள் உருவாகியிருக்கும்.”

“அவ்வண்ணம் கட்டுப்படுவதனால் முதலிடத்தில் இருப்போர் இவர்கள்மேல் உள்ளூர எரிச்சலும் சினமும் கொண்டிருப்பார்கள். தங்கள் சொற்படி ஆடுபவர் என்பதனால் இவர்கள் அவர்கள்மேல் பொருட்டின்மை கொண்டிருப்பார்கள். அவைகளில் எப்படியோ அது வெளிப்படும். இருவரும் ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல முயல்வார்கள். முதலிடத்தில் இருப்போர் அல்ல, தாங்களே மெய்யான கோன்மைகொண்டவர்கள் என்று காட்ட சூழ்வலர் முயல்வார்கள். அவர்களல்ல, தானே இறுதிச்சொல் உரைப்பவர் என்று காட்ட முதலிடத்தோர் முயல்வார்கள். அந்தப் போட்டியே அவர்களை அழிக்கும். சூழ்வலர் ஒருநாள் முதலிடத்தாரால் அழிக்கப்படுவார்கள். அதைத் தவிர்க்க ஒரே வழிதான், முதலிடத்தாரை அவர்கள் அழிக்கவேண்டும். ஆனால் அதன்பின் அவர்கள் நிலைகொள்ள முடியாது.”

நான் வியப்புடன் அவரை நோக்கியபின் சிரித்தேன். அவரும் நகைத்து “பதின்மரில் ஒருவர் என்பது ஒருவகை சிறுமைநிலை. எங்களை எவரும் நோக்குவதில்லை, எங்கள் குரலை எவரும் கேட்பதுமில்லை. எனவே நாங்களே இவ்வண்ணம் எங்களுக்குள் பேசிப்பேசி தேர்ச்சி கொள்கிறோம்” என்றார். நான் சுமித்ரனின் உடலை நினைவுகொள்ள முயன்றேன். அவர் அமர்ந்திருந்த முறையில் ஒரு கோணல் இருந்தது. ஆனால் இருவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். தன் உடலை திறமையாக மறைத்துக்கொண்டிருந்தார். அக்கணமே சுதேஷ்ணனின் தோற்றமும் நினைவுக்கு வந்தது. அவரும் ஏதோ பிழை கொண்டிருந்தார். விழிகளில், உதடுகளில் ஒரு கோணல். ஆனால் அது ஏன் என எனக்குப் புரியவில்லை.

“லக்ஷ்மணை அன்னையிடம் நீங்கள் நேரில் பேசமுடிந்தால் நன்று. அன்னை எளிமையானவர். அவரால் சூழ்ச்சிகள் செய்ய முடியாது. எதையும் விரித்து எண்ணவும் இயலாது. அவர் அறிந்ததெல்லாம் தன்னை ஆட்கொண்ட தலைவரை மட்டுமே. அவரிடமிருந்து ஓர் ஓலையை வாங்கிக்கொண்டால் அனைத்தும் முடிந்தது.” நான் அவரிடம் “உளமுவந்து கூறுக இளவரசே, இங்கே உங்கள் தந்தை வருவதை விழைகிறீர்களா?” என்றேன். “ஆம், அவர் வந்தாகவேண்டும். இங்கு நிகழ்வன கண்டு சலித்துவிட்டேன். அவர் வந்தாலொழிய இங்கே ஒன்றும் சீர்படப் போவதில்லை” என்றார்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 12

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 7

சாத்யகி சொன்னான். அரசே, மீண்டும் நான் என் நம்பிக்கையின்மையுடன் தனித்துவிடப்பட்டேன். சாம்பனை அரசவைக்குச் சென்று சந்திக்கவேண்டும், அவருடன் அவருடைய இளையோர் இருப்பார்கள். அவர்களை நிறைவுபடுத்தி அரசியின் ஓலையை வாங்கவேண்டும். அம்முயற்சியை அவ்வாறே விட்டுவிடலாமா என்று மீண்டும் தோன்றியது. இடைநாழியில் நடந்துகொண்டிருக்கையில் திரும்பிவிடலாம் என்ற எண்ணமே என் மேல் எடையென அழுத்தியது. கடமையுணர்வு பின்சென்றுவிட்டிருந்தது. ஆனால் பின்னர் தோன்றியது, இதை முற்றறிவதே நன்று என்று. எது எவ்வண்ணம் எங்கு முடியும் என்பதை தெரிந்துகொள்ளலாம். அந்த உந்துதல் என்னை சாம்பனின் அவை நோக்கி செல்லச் செய்தது.

நான் அனுப்பிய ஏவலன் சென்று திரும்பிவந்து அரசர் என்னை பார்க்க ஒப்புக்கொண்டதாக சொன்னான். செல்லும் வழியிலேயே அரசர் என்னும் சொல்லைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். உள்ளே நுழைகையில் நான் எந்தச் சொல்லை பயன்படுத்த வேண்டும், எம்முறைமையை கையாள வேண்டும் என்று குழம்பினேன். முதல் வணக்கத்திலேயே அவருடன் முரண்பாடு தோன்றிவிடலாகாது. ஆகவே என்னை கட்டுப்படுத்திக்கொண்டு என் செய்கைகளை வகுத்துக்கொண்டேன். சாம்பனிடம் மிக இயல்பான குறைவான நடைமுறைகளை மேற்கொள்வது, அவருடைய சொல்லையும் செயலையும் கண்டு என்னை அமைத்துக்கொள்வது. அதன்பின் என்னை அங்கே முன்கண்டு நடித்து அதன்படி தொகுத்துக்கொண்டு சீராக நடந்தேன்.

சாம்பன் தன் அவையில் உடன்பிறந்தாருடன் இருந்தார். அவர் பீடத்தில் அமர்ந்திருக்க அருகே இளையவர்களான சுமித்ரனும் புருஜித்தும் அமர்ந்திருந்தனர். சதாஜித்தும் சகஸ்ரஜித்தும் விஜயனும் சித்ரகேதுவும் வசுமானும் திராவிடனும் கிராதுவும் பின்னால் நின்றிருந்தனர். சாம்பன் முந்தைய நாள் இரவெல்லாம் மதுவருந்தியிருந்தார் என்பதை விழிகளின் சோர்வு காட்டியது. அரசருக்குரிய உடைகளை அவர் அணியவில்லை, தோளில் ஒரு பொன்னூல் பின்னலிட்ட மேலாடை மட்டுமே அவரை அரசகுடியினர் எனக் காட்டியது. அருகே நாற்களப் பலகை விரிக்கப்பட்டிருந்தது. அவருடன் ஆடிக்கொண்டிருந்த சூதன் எழுந்து விலகி நின்றிருந்தான். அது ஓர் முறைமையிலா சந்திப்போ என நான் எண்னியபோதே ஏவலன் “ரிஷபவனத்தின் அரசர், சத்யகரின் மைந்தர், யுயுதானன் வருகை” என அறிவித்தான்.

அச்சொல்லை செவிகொண்டபோது மீண்டும் துணுக்குற்றேன். அது என்னை உந்தி வெளியே தள்ளுவதுபோல. ஆனால் அப்போது அது நன்றென்றும் தோன்றியது. நான் வகுக்கப்பட்டுவிட்டேன், இனி இருநிலைகள் இல்லை. ஆகவே அரசன் என்ற நிலையில் எனது வணக்கத்தை தெரிவித்தேன். “துவாரகையின் பொறுப்பை கைக்கொண்டுள்ள இளைய யாதவரின் மைந்தர் சாம்பனுக்கு ரிஷபவனத்தின் குடிகளும் முடியும் அளிக்கும் நல்வணக்கம்” என்றேன். அவர் விழிகள் மாறுவதை உண்ர்ந்தேன். “அமர்க!” என்றார். நான் அமர்ந்தேன். அவர்களின் விழிகள் என்மேல் ஊன்றியிருந்தன. அவர்கள் என்னைப்பற்றி நான் வருவதற்கு முன் பேசியிருந்தார்கள். அச்சொற்கள் அனைத்தும் திரண்டு அங்கே ஒளிகொண்டிருந்தன.

நம்மை வருடும் கூர்நோக்குகள் விந்தையான உணர்வுகளை உருவாக்குகின்றன. முதலில் நம்மை அவை எச்சரிக்கை கொள்ளச் செய்கின்றன. ஆனால் விரைவிலேயே அந்த எச்சரிக்கை சலித்து மிகமிக தன்னுணர்வற்றவர்களாக ஆக்கிவிடவும் செய்கின்றன. மேடையில் நடிகர்கள் முதலில் நோக்குகளால் நிலையழிகிறார்கள். பின்னர் நோக்குகளே அவர்களை தனிமைகொள்ளச் செய்கின்றன. நூறு விரல்களால் தூக்கப்படுவதுபோல ஒருவகை மிதத்தல் அது. நாம் அங்கே அப்போதும் சூடும் உருவை நம்பி ஏற்று நடித்து முடிப்போம். முழுமையுடன் அங்கே துலங்குவோம். எவ்வண்ணமாயினும் எதன்பொருட்டாயினும் நம்மை எவரேனும் நோக்குவது நமக்கு மகிழ்வளிக்கிறது. பலர் நோக்குகையில் நாம் உருப்பெருகுகிறோம். நோக்க நோக்க வளர்வதே நாமெனும் உணர்வு. நாம் அந்த மேடையில் ஒருபோதும் நாமென வெளிப்படுவதில்லை, ஆணவமே நம் வடிவைச் சூடி எழுந்து அங்கே நிற்கிறது.

நான் பேசுவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். இன்நீர் வந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அதை அருந்தினார்கள். நான் கோப்பையை கையிலேயே வைத்திருந்தேன். அவர்கள் பேசட்டும் என்று எதிர்பார்த்தேன். சற்று பொறுமை இழந்தபின் சாம்பன் என்னிடம் “கூறுக!” என்றார். “இளவரசே, நான் வந்திருப்பது தங்கள் அன்னையிடமிருந்து ஒரு ஓலையை பெற்றுக்கொண்டு இளைய யாதவரிடம் செல்வதற்காக. பிற செய்திகளை அறிந்திருப்பீர்கள்” என்றேன். “ஆம், ஆயினும் நீங்கள் முழுமையாகச் சொல்லலாம், அதுவே முறை” என்றார். “எட்டு அரசியரின் செய்திகளுடன் நான் இளைய யாதவரை பார்க்கலாமென்றிருக்கிறேன். தங்கள் அன்னையும் பிற நான்கு அரசியரும் அளிக்கும் செய்தியை ஒற்றை ஓலையாக அளிப்பதாக சொன்னார்கள். அதை தங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி ஆணையிட்டார்கள்” என்றேன்.

“ஐவரில் அன்னை லக்ஷ்மணையின் ஒப்புதலை நான் பெற முடியாது. அவர் இப்போது எங்களுடன் இல்லை” என்று சாம்பன் சொன்னார். “அன்னை நக்னஜித்தியும் பத்ரையும் தங்கள் ஒப்புதலை அளிப்பார்கள். மித்ரவிந்தையிடம் ஏதோ சிறு தயக்கம் உள்ளது. அவர் மைந்தர்களின் எண்ணம் என்ன என்று இன்னமும் தெளிவில்லை.” நான் “வேண்டுமென்றால் நான் அவர்கள் இருவரையும் தனியாக சந்திக்கிறேன்” என்றேன். “அது தங்கள் விருப்பம். நீங்கள் எண்ணுவதுபோல் இது எளிதான ஒன்றல்ல” என்று சாம்பன் சொன்னார். “நான் முயன்றுபார்க்கலாம் என எண்ணுகிறேன். முயலாமலிருந்தால் என்னால் இங்கு அமைய முடியாது” என்றேன்.

“எந்தை எங்கிருக்கிறார் என அறிவீர்களா?” என்றார் சாம்பன். “அறியேன். ஆனால் கதிரவன் எங்கிருக்கிறான் என்பதை அவனால் மறைத்துவிட முடியாது. எங்கிருந்தாலும் சூதர்கள் அவரை அறிந்திருப்பார்கள். சொல் வழியாக அவரை தேடிச்செல்ல இயலும்” என்றேன். சாம்பன் ஏளனத்துடன் உதடு கோண புன்னகைத்து “பாரதவர்ஷத்தின் ஏதேனும் ஷத்ரிய அரசனின் சிறையில் இருக்கக்கூட வாய்ப்புள்ளது” என்றார். என் உடலெங்கும் பரவிய சினத்தை விரல்களை முறுக்கித் தடுத்து “அவரைச் சிறையிடும் ஆற்றல் கொண்ட அரசர் எவரும் பாரதவர்ஷத்தில் இல்லை. அவ்வண்ணம் ஒன்று நிகழுமென்றால் ஆழிவண்ணன் மானுடனாக மீண்டும் எழுந்திருக்கிறார் என்றே பொருள்” என்றேன்.

அரசே, சாம்பனின் முகத்தை இன்னமும் நான் நினைவுகூர்கிறேன். அந்த அவையில் அவர் தன்னை அரசர் எனக் காட்ட விழைந்தார். அரசகோலத்தில் அமர்ந்திருந்தால் அது அத்தோற்றத்தைச் சூடுவதாக தோன்றும் என எண்ணியிருக்கலாம். ஆகவே இயல்பாக, மஞ்சத்தறையிலிருந்து அப்படியே எழுந்து வந்த பேரரசராக தோற்றம் காட்ட முயன்றார். எந்நிலையிலும் அரசர் என்றே திகழ்பவராக நடித்தார். பெரும்போக்கும் பொருட்டின்மையும் தோன்றும்படி பேசினார். ஆனால் அனைத்துக்கும் அடியில் அவர் யார் என்பதை மறைக்கமுடியவில்லை. சொல் பெருகுந்தோறும் திரைவிலக்கி வெளியே வந்தார். நீங்கள் சிறையில் இருக்கக்கூடும் என்று சொன்னபோது அவ்விழிகளில் எழுந்தது கீழ்மையின் நகைப்பு. நூறு கதவுகளுக்கு அப்பால் உள்ளே பூட்டப்பட்டிருந்த ஒன்று மீறி எழுந்து சாளரம் வழியே எட்டிப்பார்த்தது. கீழ்மக்களால் இயலாத ஒன்றே உள்ளது, அவர்களால் அக்கீழ்மையை மறைத்துக்கொள்ள முடியாது.

சாம்பன் நகைத்து “அறிக யாதவரே, இன்று ஷத்ரிய நாடுகள் வல்லமை பெற்று வருகின்றன! அவர்கள் புதிய சூழ்ச்சி ஒன்றை கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அசுரர்களையும் நிஷாதர்களையும் உடன் இணைத்துக்கொண்டு வல்லமைகொள்கிறார்கள். உங்கள் தலைவர் வகுத்த வழியை அவரைவிட சிறப்பாக அவர்கள் கையாளக்கூடும்” என்றார். “எனக்குக் கிடைத்த ஒற்றர் செய்திகள் அவர் எங்கோ சிறையில் இருப்பதாகவே சொல்கின்றன. கூடிய விரைவிலேயே அவர் தங்களிடம் பணயமென இருக்கிறார் என்பதை ஏதேனும் ஷத்ரிய நாடு அறிவிக்கும்.” நான் சீற்றத்துடன் “அவ்வண்ணம் ஓர் எண்ணம் எவருக்கேனும் வருமென்றால் அவர்கள் மீது அஸ்தினபுரியின் தேர்ச்சகடங்கள் ஏறிச்செல்லும்” என்றேன்.

சாம்பன் “நீங்கள் அறிந்தது அவ்வளவுதான். அஸ்தினபுரி இன்று நிஷாதகுடிப் பெண்ணால் ஆளப்படுகிறது. துரியோதனனின் இளைய உடன்பிறந்தவனின் கோல் அங்கு நின்றிருக்கிறது, அதை அவள் சூடியிருக்கிறாள். அங்குள்ளோர் புதிய குடிகள். இளைய யாதவரை நேரில் அறிந்த எவரும் அங்கில்லை” என்றார். “அவரை அறிந்தவர் இல்லாமல் இருக்கலாம். அவரால் அறியப்படாத எவருமில்லை” என்றேன். சாம்பன் ஒருகணத்தில் கடுஞ்சினம் கொண்டார். உரத்த குரலில் “இப்படி கூறிக்கூறி எளிய முதியவரை இறைநிலைக்கு ஏற்றிவிட்டிருக்கிறீர்கள். உங்கள் சொற்களின் சுமையை தாளமுடியாமல் அவர் ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்” என்றார். “அவர் இறைநிலையை அடைந்தவர் அல்ல, இறைவனேதான். எனக்கு அதில் ஐயமில்லை” என்றேன்.

சாம்பன் சினமும் ஏளனமும் கலக்க பற்களை இளித்துக்கொண்டு “இறைவனால் தன் மைந்தரை இருக்கும் இடத்தில் இருந்து ஆள இயலாதா என்ன? இறைவனின் மைந்தர்கள் எதற்கு முடிசூடி அமரும்பொருட்டு பூசலிடவேண்டும்? ஏன் தந்தை சொல்லை எதிர்க்கத் துணியவேண்டும்?” என்றார். அவருடைய இளையோர் நகைத்தனர். அவர் அந்நகைப்பில் கலந்துகொண்டபோது சற்று எளிதானார். “என்னை பண்பறியாதவன், பெருவிழைவு கொண்டவன், அறம்மீறிச் செல்லும் அசுரன் என்கிறார்கள். எனில் என்னைப் போன்ற ஒருவனை மைந்தனாகப் பெற்ற அவர் எப்படி இறைவனாக இருக்க இயலும்?” என்றார். “இறைவன் தன் மைந்தரை எண்ணி எண்ணி ஏன் துயருறவேண்டும்? இறைவனிடம் சென்று அவர் மைந்தர்களைப் பற்றி உங்களைப்போன்றோர் ஏன் முறையிடவேண்டும்?”

நான் என் பொறுமையை மீட்டுக்கொண்டேன். உள்ளே ஒரு புன்னகை எழுந்தது. “இறைவடிவங்கள் அனைவருக்கும் எதிர்நிலை கொண்ட மைந்தர்கள் பிறப்பார்கள் என்பது இங்கு ஒவ்வொரு முறையும் எழுதப்பட்ட சொல், கண்கூடான நெறி” என்றேன். “நீங்கள் இவ்வாறு இருப்பதே அவரது இறைநிலைக்கு சான்றென்று கற்றோர் கூறுவர்.” சாம்பன் மேலும் சினம்கொள்வது தெரிந்தது. என் புன்னகை பெரிதாகியது. “ஹிரண்யகசிபுவுக்கு பிரஹலாதன் மைந்தர் எனப் பிறப்பார் என்றால் துவாரகையின் அரசருக்கு நீங்கள் பிறப்பதுதானே காவிய நெறி?” என்றேன். அவர் சீற்றத்துடன் ஏதோ சொல்ல நாவெடுத்து என் கண்களின் நகைப்பைக் கண்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். பீடத்தின் கைப்பிடிமேல் கைகள் தளர்ந்து அமைந்தன. பெருமூச்சுடன் சாய்ந்துகொண்டார். சலிப்புடன் தலையசைத்து “எதற்கு வீண்பேச்சு?” என்று அவர் சொன்னார்.

“தந்தை வருவதனால் தாங்கள் இவை அனைத்தையும் இழந்துவிடுவீர்கள் என்று அஞ்சுகிறீர்கள் என்றால் அதை நேரடியாகவே கூறலாம். ஓலை தேவையில்லை. தாங்கள் ஓலை தரமறுத்துவிட்டதை பிறரிடம் கூறிவிடுகிறேன்” என்றேன். நான் நினைத்தது போலவே சாம்பன் சீற்றம் கொண்டார். “எவர் வந்தாலும் இந்த மணிமுடியை நான் துறக்கப்போவதில்லை, ஏனெனில் இதை நான் சூடிவிட்டேன். இதற்கு எதிராக வரும் எக்குரலும் என் வாளுக்கும் வில்லுக்கும் எதிர்நிற்க வேண்டும். அது தந்தையே ஆயினும், தெய்வமே ஆயினும்” என்று கூவினார். நான் என் குரலில் ஏற்றமில்லாமல் “நன்று, எனில் அவர் வருவதில் உங்களுக்கு மாற்றுச்சொல் இல்லை அல்லவா?” என்றேன்.

“இல்லை. எவர் வந்தாலும் மாற்றுச்சொல் இல்லை. தருகிறேன். அன்னையரின் சொற்களை அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள். அவற்றுக்குக் கீழே என் சான்றொப்பம் இட்டு தருகிறேன். ஓலைகளுடன் இன்றே நீங்கள் கிளம்பலாம்” என்று சாம்பன் சொன்னார். நான் “மித்ரவிந்தையும் காளிந்திதேவியும் ஓலையை தரவில்லை. அவற்றை பெற்றபின் கிளம்புகிறேன்” என்றேன். “அவர்களின் மைந்தர்களில் பெரும்பாலும் அனைவரும் இங்குதான் இருக்கிறார்கள்” என்று சாம்பன் சொன்னார். “ஆனால், மைந்தர்களின் சொல்லை நான் நாடவில்லை” என்றேன். “மித்ரவிந்தையை நீங்கள் சந்திக்கலாம். காளிந்தி அன்னை எவரிடமும் பேசுவதில்லை என்று அறிந்திருப்பீர்கள். எவரும் அவரை பார்ப்பதுமில்லை. அவர் இருக்கும் ஊழ்கத்தை கடந்து சென்று அவரைக் காண நாங்கள் எவரையும் ஒப்புவதில்லை” என்றார் சாம்பன்.

“நான் செல்வது ராகவராமனின் சொல்லுடன் இலங்கை சென்ற அனுமனைப்போல. எங்கும் நுழைவொப்புதல் எனக்குண்டு” என்றேன். சில கணங்களுக்கு பின் அவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் அதுவும் நன்றே” என்றார். அவருடைய உள்ளம் அனைத்திலிருந்தும் விலகிவிட்டது என்று தெரிந்தது. அது நிஷாதரும் அசுரரும் கொண்டிருக்கும் இயல்புகளில் ஒன்று. எதிலும் நெடும்பொழுது நீடிக்க அவர்களால் இயல்வதில்லை. பொங்கி எழுந்து கொப்பளித்து அலையடித்து உச்சத்திலிருந்து அப்படியே சரிந்து சுருங்கி அகன்று சென்றுவிடுவார்கள். அவர் அவையிலிருந்தே அகம் நீங்கிவிட்டார் என்று உணர்ந்தேன். அவர் அப்போது விழைந்தது கலம்நிறைய மதுவும் ஊனுணவும்தான். அதுவும் நன்றே என எண்ணிக்கொண்டேன். என் சொற்களே அங்கு அறுதியாக ஒலிக்கும்.

“நான் சென்று அன்னையை பார்க்கிறேன். அவர் சொல் என்னவென்று கேட்கிறேன்” என்றேன். “அவர் சொல் என்னவாக இருக்குமென்று என்னால் உய்த்துணர முடிகிறது. ஏனென்றால் எங்கள் அனைவருக்குள்ளும் ஒரு துளியேனும் அவர் கொண்டுள்ள அந்தத் தவம் எஞ்சியிருக்கிறது. அவர் உங்கள் குடியினர் என நீங்கள் எண்ணலாம். ஆனால் மரத்தின் அடித்தூரும் மலரிதழும் ஒன்றல்ல. மென்மையும் வண்ணமும் தேனும் மணமும் அடித்தூரும் வேரும் அறிவதே இல்லை. அவர் உங்கள் குடியில் தோன்றியதனால் ஷத்ரியர்களும் யாதவர்களும் அடையாத ஒன்றை அடைந்தார். மறு எண்ணமே இல்லாத தற்கொடை. அசுரருக்கே அருந்தவம் கைகூடுகிறது. பண்டு அசுரப்பெருவீரர்கள் தெய்வங்களை எளிதில் சென்றடைந்தனர். காளிந்தி அன்னையும் அவ்வாறே. எங்கள் எவரைவிடவும் அவர் என் இறையை மிக அணுகிச் சென்றார். அவரே என்று ஆனார். எனக்கு அவர் என் தலைவரின் தோற்றமேதான்.”

அவர் விழிகளை நோக்கியபடி தணிந்த உறுதியான குரலில் “மெய், அவர் மைந்தர் உங்களுடன் இருக்கிறார்கள். அவர்களின் சொல்லும் செயலும் உங்களுக்கு உகந்தவையாக இருக்கலாம். எண்ணுக, அவர்கள் காளிந்தியின் மைந்தர்கள்! யமுனையின் தண்மை அவர்களுக்குள் துளியேனும் எஞ்சியிருக்கும்” என்று நான் சொன்னேன். என் சொற்களால் அவர் மிகவும் குழம்பியிருப்பதை உணர்ந்தேன். மேலும் அவரை குழப்பும்பொருட்டு “நீங்களும் அவ்வாறே. இளவரசே, உங்களுக்குள் திரண்டிருக்கும் இந்த எதிர்ப்பின் விசையே ஆழத்தில் இருக்கும் பணிவையும் கனிவையும் காட்டுகிறது. ஒருநாள் நீங்களும் உங்கள் அன்னையரின் தவத்தின் துளிகளை உள்ளே உணர்வீர்கள்” என்றேன்.

சாம்பன் சுமித்ரனை பார்த்தார். அவர் கொண்ட உணர்வுகள் மீண்டும் முற்றடங்கிவிட்டிருந்தன. எண்ணங்கள் திசைகுழம்பி ஓடி பின் சுருண்டுவிட்டிருப்பதை உணர்ந்தேன். தயங்கிய குரலில் “அவ்வாறெனில் அதுவும் நன்று. சென்று அவர் சொல்லை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். “பெற்றே ஆகவேண்டும். அவர் சொல்லை நான் பெறாவிட்டால் அச்சொல் எழக்கூடாது என்று நீங்கள் தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்றே நான் புரிந்துகொள்வேன்” என்றேன். சாம்பன் அக்கணமே பற்றிக்கொண்டு சினவெறியுடன் எழுந்து இரு கைகளாலும் பீடத்தின் கைகளை அறைந்து உரக்க “சென்று சொல்பெறுங்கள். எனக்கு எந்த இழப்புமில்லை. நான் எவரையும் தடை செய்யப்போவதில்லை. ஆனால் இந்த ஓலைகள் ஒரு சொல்லுடனே இருக்கும், எனது மணிமுடியை உறுதி செய்யும் பொருட்டு அரசர் இங்கு வரவேண்டும் என்று” என்றார்.

நான் “அரசருக்கு ஆணை இடுகிறீர்கள்” என்றேன். “ஆம், ஆணைதான். சில தருணங்களில் ஆணையிட்டே ஆகவேண்டும். தெய்வங்களுக்கே ஆனாலும். அவர் இங்கு வருவதென்றால் எனது மணிமுடியை உறுதி செய்வதன் பொருட்டே அது நிகழவேண்டும். பிறிது ஒரு சொல்லையும் ஏற்க மாட்டேன். என் அவ்வுறுதி ஓலையில் இருக்கும்” என்றார் சாம்பன். “பிற ஓலைகளில் அவ்வாறு இல்லை” என்றேன். “அது அவர்களின் எண்ணம். அவர்களுக்கு ஒன்று தெரியும், தந்தை வந்தாலும் அவர்களை ஏற்கப் போவதில்லை என்று. ஏனென்றால் இந்நகர் ஷத்ரிய வல்லமையால் உருவாக்கப்படவில்லை. இது யாதவர்களின் ஆற்றலால் அமைந்ததும் அல்ல. இது நிஷாதகுடியின் ஆற்றலால், அசுரக்குருதியின் விசையால் அமைக்கப்பட்டது.”

“ஷத்ரியர்களை எதிர்த்து இது இவ்வண்ணம் எழுந்து நிலைகொண்டதே ஷத்ரியர்கள் என்றும் அஞ்சிவந்த அசுரவல்லமையால் இது படைக்கப்பட்டது என்பதனால்” என்று சாம்பன் தொடர்ந்தார். “இந்நகர் இவ்வண்ணம் பொலிந்தெழுந்த விரைவை எண்ணிக்கொள்ளுங்கள். எந்த ஷத்ரிய நகர் இப்படி எழுந்துள்ளது? எந்த யாதவபுரி இப்படி பெருகியிருக்கிறது? இந்தப் பொங்குவிசை அசுரர்களுக்குரியது. விருத்திரனின் புற்றுகளைப் போன்றது இது. இந்நகருக்கு நிகர் சூரபதுமரின் வீரமாகேந்திரம், நரகாசுரரின் பிரக்ஜ்யோதிஷமும் ராவணமகாப்பிரபுவின் இலங்கையும் மட்டுமே. அதை இங்கு வந்து இன்றுவரை சொல்லெடுத்த அத்தனை சூதரும் புலவரும் பாடியிருக்கிறார்கள்.”

“யாதவரே, உங்களாலோ கிருதவர்மனாலோ ஏன் இத்தனை பெரிய நகரை உருவாக்க இயலவில்லை? ஏனென்றால் இந்நகர் அசுரவல்லமையின் ஆக்கம். என் தந்தையில் ஓடிய மரீஷையின் குருதியில் இருந்து எழுந்த மாநகர் இது. இது லவணர்களின் கொடிவழியின் படைப்பு. ஆகவேதான் அத்தனை புல்வெளிகளையும் கடந்து உப்பு விளையும் இக்கடல்முனைக்கு வந்தார் எந்தை. பிற எவரைவிடவும் அதை அவர் அறிவார். இதை யாதவர்களால் ஆளமுடியாது, அவர்களுக்கு அப்பாற்பட்டது இதன் பேருருவம். இதை ஷத்ரியர் பெற்றால் பிற ஷத்ரிய நகர்களில் ஒன்றென்றே ஆகும். இதை இவ்வண்ணம் நிலைநிறுத்தும் ஆற்றல் நிஷாத அசுர குருதிக்கே உண்டு. ஆகவேதான் என்னை இதன் அரசன் என்று ஆக்கினார் எந்தை. இது என் நகர், என் மூதன்னை மரீஷையின் நகர். இதை எவரும் என்னிடமிருந்து கொள்ள இயலாது.”

நான் “இந்த உச்சவிசை என்னை கசப்புகொள்ளச் செய்கிறது” என்றேன். சாம்பன் ஏளனமாக “அது உங்கள் உணர்வு. எனக்கு அது ஒரு பொருட்டல்ல. தந்தை வரட்டும், என்னை அரியணை அமர்த்தி முடிசூட்டட்டும்” என்றார்.  அதுவரை சொல்கொள்ளாமலிருந்த சுமித்ரன் கை நீட்டி “அவர் எழுதிய வேதம் உண்மையென்று அவருக்குத் தோன்றுகிறது என்றால், அது இங்கு நிலைநிற்க வேண்டும் என்றால், அவர் எங்களையே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்நகருக்கு உரிமைகொண்ட எங்களைத் தவிர்த்து தான் பிறந்த யாதவக் குடியினரை இங்கு மணிமுடி சூட வைத்தால் அதற்கு ஒன்றே பொருள், அவர் குடிவழி முடியுரிமையை மட்டுமே ஏற்கிறார். ஷத்ரியர் என்பதனால் ருக்மிணியின் மைந்தர்கள் முடிசூடவேண்டுமென்றால் அவர் வேதச்சொல்லின்படி மணிமுடி கைமாறப்படவேண்டுமென்று எண்ணுகிறார்” என்றார்.

“தகுதிப்படி மணிமுடி சூடப்படவேண்டும் என்று அவர் எண்ணுவது உண்மை என்றால், மணிமுடியை வெல்லும் திறன்கொண்டவரே சூடும் தகுதிகொண்டவர் என்று அவர் சிசுபாலரின் அவையில் எழுந்து கூறியது அவர் முன்வைக்கும் மெய்மை என்றால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு அமையும் என்று தன் இறைப்பாடலில் அவர் கூறிய வரி மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டுமென்றால் நாங்களே இங்கு முடிசூடவேண்டும். எங்கள் மணிமுடியை உறுதி செய்வதனூடாகவே தான் உரைத்த வேதத்தின் சொல்லை தன் வாழ்க்கையால் அவர் நிறுவுகிறார். அவரிடம் கூறுக, நோக்கிக்கொண்டிருக்கிறது பாரதவர்ஷம்! அவர் எடுக்கப்போகும் முடிவென்ன என்று அது காத்திருக்கிறது” என்று சுமித்ரன் கூவினார்.

அவருடைய நடுக்கை, வெறியை நோக்கிக்கொண்டிருந்தேன். “ஒன்று அவரே அம்முடிவை எடுத்து தன் மைந்தருக்கு ஆணையிடவேண்டும். அம்மைந்தர் எதிர்ப்பார்கள் என்றால் எங்கள் பொருட்டு அவர் படையாழி சூடி போர்முகம் நிற்கவேண்டும். இல்லை எனில் தான் இயற்றியதை ஊழுக்கு விட்டுவிட்டு அவர் அகன்றே நிற்கட்டும். இங்கிருக்கும் இயல்பான வல்லமைகளால் அனைத்தும் முடிவாகட்டும் என்று அவர் ஒதுங்கட்டும். இந்த ஷத்ரியர்களையும் யாதவர்களையும் வென்றும் கொன்றும் துவாரகையின் முடியை நாங்கள் சூடுகிறோம். மாறாக எந்த முடிவை அவர் எடுத்தாலும் தன் சொல்லுக்கு அவரே மாறு நிற்கிறார் என்பதே பொருள். அவ்வாறெனில் அதையும் அவர் கூறட்டும். அது உலகுமுன் தெளிவாகட்டும்” என்றார் சுமித்ரன்.

அப்போது ஒன்றை உணர்ந்தேன், அந்த உடன்பிறந்தார் குழுவில் சொல்தேர்பவர் சுமித்ரனே. சாம்பன் கூறுவது அவருடைய சொற்களையே. அவ்வண்ணம் சொல்கூட்டி அளிப்பவர்களில் நா மீது முற்றிலும் கட்டுப்பாடு கொண்டவர்களால் மட்டுமே அவைகளில் தங்கள் சொற்களை பிறர் சொல்லவிட்டு அடங்கியிருக்க முடியும். அவர்கள் விலகி நின்று நோக்குவார்கள், ஆனால் தங்கள் சொற்கள் அவையிலெழும்போது அதனுடன் உளம்செலுத்திக்கொண்டே இருப்பார்கள். ஏதோ ஒருகணத்தில் அவர்களே பேசத்தொடங்கிவிடுவார்கள். சுமித்ரன் பேசத்தொடங்கியதும் சாம்பன் மீண்டும் உளம் ஒடுங்கி ஆர்வமிழந்தார். “ஓலையை பெற்றுக்கொள்க, யாதவரே!” என்றபின் மேலாடையை எடுத்து மேலே சுற்றிக்கொண்டு கால்களை ஆட்டலானார்.

நான் பெருமூச்சுடன் “உங்கள் சொற்களை நான் அவரிடம் கூறுகிறேன். ஓலை பெறும் வழிகளை ஏவலருக்கு ஆணையிடுங்கள்” என்றேன். “அவ்வாறே ஆகுக!” என்று சாம்பன் கூறினார். “அந்த ஓலை சற்று நேரத்தில் தங்களை வந்தடையும்” என்றார் சுமித்ரன். நான் “விடைகொள்கிறேன்” என்றபடி எழுந்துகொண்டேன். “யாதவரே, உங்கள் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியாது. விருஷ்ணி குலத்தின் பொருட்டு அவர்களுடன் படைநின்றீர்கள் என்றால் ஒருநாள் உங்களை களத்தில் சந்திப்பேன். உங்களை கழுத்தறுத்து மண்ணில் வீழ்த்தும் அறைகூவலை விடுப்பேன்” என்றார் சாம்பன்.

ஆனால் அவரிடம் வஞ்சமோ பகையோ வெளிப்படவில்லை. ஒருவகை உவகைதான் கண்களில் தெரிந்தது. சுமித்ரனின் சொல்லெழுந்ததுமே அரசன் என அவையில் இருந்து அகன்று சென்ற சாம்பன் கிராதர் என திரும்பி வந்திருந்தார். நான் புன்னகைத்து “அந்த அறைகூவலை இப்போதே விடுத்ததாக எடுத்துக்கொள்கிறேன்” என்றேன். “ஆம், அவ்வாறெனில் அவ்வாறே” என்று அவர் சொன்னார். நான் புன்னகைத்து தலைவணங்கி அவை நீங்கினேன். அங்கிருந்து வெளியே வந்தபோது சாம்பனின் அந்த இறுதி அறைகூவலின் பொருளென்ன என்று எண்ணிக்கொண்டேன். அவர் உங்களை என்னுருவில் கண்டாரா என்று ஐயுற்றேன்.

நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 11

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 6

சாத்யகி கூறினான். அரசே, நான் பிற அரசியரை அதன்பின் உடனே சந்திக்க விழையவில்லை. அவர்களின் உள்ளங்கள் எப்படி இருக்கும் என்பதை ஒருவாறாக கருதிவிட்டிருந்தேன். அவர்கள் எவரும் தம்மை உங்களுக்கு அயலானவர்கள் என்று எண்ணவில்லை. உங்களை மீறி ஒரு சொல் உரைக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தம்மை உங்களுக்கு முதன்மை அணுக்கர்கள் என்று எண்ணுகிறார்கள். உங்கள் கொடையனைத்தும் தங்களுக்குரியது என்று எண்ணுகிறார்கள். நீங்கள் வரவேண்டும் என்று அவர்கள் விழைவது அவ்வாறு வந்தால் பிறிதொருவருக்கு நீங்கள் அருள மாட்டீர்கள் என்ற அறுதியான நம்பிக்கையால்தான்.

மெய்யாகவே அவ்வெண்ணம் அச்சுறுத்தியது. எண்ணிய ஒவ்வொன்றும் கூர்கொண்டது. ஒவ்வொன்றும் பயின்ற வாளென பிறிதொன்றை தடுத்தது. அன்று என் அறைக்கு மீண்டு தலைநிறையும்வரை மதுவருந்தி தன்னிலை இழந்து துயில்கொள்ளவேண்டும் என்றே விரும்பினேன். ஆயினும் அப்பணியை முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தால் ஏவலனிடம் ஜாம்பவதியையும் காளிந்தியையும் சந்திக்கவேண்டும் என்று செய்தி சொல்லி அனுப்பினேன். உணவுண்டு ஓய்வெடுக்கும் பொருட்டு என்னுடைய அறைக்குத் திரும்பி அங்கு சோர்ந்து தனித்து அமர்ந்திருந்தேன். ஏவலன் கொண்டுவந்த உணவை சற்றே உண்டேன். மதுவை மிகுதியாக அருந்தினேன். பின்னர் துயின்று உடனே விழித்துக்கொண்டேன்.

மஞ்சத்தில் அமர்ந்து தனித்தலையும் என் எண்ணங்களை நானே நோக்கிக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டு இதை தொடங்கினேன் என்று வியந்துகொண்டேன். அரசியருக்கும் உங்களுக்குமான உறவு ஒருபோதும் என்னால் புரிந்துகொள்ள முடியாதது. அவர்கள் தாங்கள் மட்டுமே வாழும் ஓர் உலகில் உங்களை வைத்திருந்திருக்கிறார்கள். அங்கு பிற எவருக்கும் இடம் இருந்திருக்கவில்லை. எனில் அவர்களின் மைந்தர்கள் எவர்? எங்கிருந்து ஊடே அவர்கள் எழுந்தனர்? அம்மைந்தர்களே அவர்களை இன்று ஆட்டிவைக்கிறார்கள், தெய்வங்கள் என, இயற்கைப்பெருவிசைகள் என. அவர்களுடன் ஒத்துச்சென்றாலும் முரண்பட்டு விலகிச்சென்றாலும் இன்று மைந்தர்களாலேயே அவர்களின் அனைத்துச் செயல்களும் இயக்கப்படுகின்றன.

அரசே, நான் இவ்வாறு கூறுகிறேன், பிழையென்று இருந்தால் பொறுத்தருள்க! உங்களுடன் இருக்கையில் அவர்கள் முற்றிலும் நிறைகிறார்கள். அக்கணத்தில் அவர்கள் உணரும் ஒருவரை அவர்கள் உடனே இழக்கிறார்கள். உங்களில் ஒரு பகுதியையே அவர்கள் கொள்ள முடியும். அதை அவர்கள் அறிவதே அவர்களின் துயர். துவாரகையில் அத்தனை இல்லங்களிலும் காதலர் என, கணவர் என, தந்தை என நீங்கள் நிறைந்திருக்கிறீர்கள். அத்தனை பெண்டிரில் ஒருவர் என தங்களை உணர உங்கள் துணைவியரால் இயல்வதில்லை. அவர்கள் விழைவது மேலும் ஒரு யாதவரை, தங்களுக்கேயான ஒருவரை. அவ்வண்ணம் ஒருவரை எப்போதும் உடனமைத்துக் கொண்டிருக்கும் பொருட்டு தங்களுள் திகழும் கனவிலிருந்து உங்கள் உருவொன்றை படைத்துக்கொள்கிறார்கள். அரசே, அவர்களிடமிருக்கும் ஒன்றுதான் அவர்களின் வயிற்றில் மைந்தனாக உருப்பெறுகிறது.

ஒவ்வொன்றும் ஒன்று. உங்கள் எண்பது வடிவங்கள். தயக்கமும் தனிமையும் கொண்ட ஃபானுவும் சீற்றமும் விழைவும் கொண்ட பிரத்யும்னனும் ஆற்றலும் சூழ்ச்சியும் கொண்ட சாம்பனும் நீங்களே. அவர்கள் எண்பதின்மரும் ஒருவரே என்று ஒருகணமும் முற்றிலும் வேறுபட்டோர் என்று பிறிதொரு கணமும் தோன்றுகிறது. அரசே, உங்களில் அவர்கள் காணமுடியாதவைதான் அவர்களினூடாக மைந்தராயிற்றா? அன்றி, காணவிழைந்தவையா? உங்களில் எஞ்சியவையா? மிக அணுக்கமானவருடன் அணுக்கத்தைக் காட்டும்பொருட்டு நாம் அவர்களின் அறியாத் தீமை ஒன்று நமக்குத் தெரியும் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆற்றலற்ற பகுதி ஒன்றை அறிவோம் என்கிறோம். அவையே அம்மைந்தர்களா? எப்படி எழுந்தனர் அம்மைந்தர் உங்கள் குருதியில்?

இவ்வண்ணம் சொல்வேன். ஆம், பிழையென்றும் அறிவேன். பாமையிலிருந்த அச்சம் அம்மைந்தர்களாகப் பிறந்தது. ஷத்ரியர்களின் விழைவு ருக்மிணியின் மைந்தர்களாகியது. ஜாம்பவதியிடம் இருந்து பிறந்தது அசுரர்களின் அடங்காமை. அரசே, ஒருவேளை அவ்வியல்புகளும் உங்களுடையதுதானோ? இவ்வண்ணம் பரவி இப்புவியில் வளர்கிறீர்களா? நீங்கள் எடுக்கும் எண்பது மாற்றுருக்கள்தானா இவை? இவ்வுருவில் நின்று நீங்கள் ஆடியவை போதா என்று கண்டு அவ்வண்ணம் எண்பதின்மர் என எழுந்தீர்களா? தந்தையிடம் எஞ்சியதும் விஞ்சியதும் மைந்தர்களாகின்றன என்றொரு சொல் உண்டு. அரசே, உங்களிடம் விஞ்சுவதொன்றில்லை. எஞ்சுவதே இம்மைந்தர்களா?

சாம்பனின் அரண்மனையில் இருந்து அணுக்கஏவலன் என்னை வந்து சந்தித்து அரசி ஜாம்பவதி பொழுது அருளியிருப்பதாக சொன்னான். இம்முறை முறைமையை கைக்கொள்வோம் என்று எண்ணி நான் அவையுடையுடன் அரசியை பார்க்கும்பொருட்டு சென்றேன். ஜாம்பவதி நகரின் மேற்கு எல்லையில் வளைந்தோடும் சிறிய ஓடையின் கரையில் அமைக்கப்பட்டிருந்த புதிய மாளிகையில் தங்கியிருந்தார். அங்குதான் சாம்பனின் அவையும் இருந்தது. அவர்களைச் சுற்றி வலுவான அரண் அமைக்கப்பட்டிருந்தது. அசுரர்கள் காவல் காக்கும் பன்னிரண்டு காவல்மாடங்களும், ஏழு அடுக்கு படைத்திரளும் இருந்தன. என்னை முற்றிலும் உடல் நோக்கி படைக்கலம் நோக்கிய பின்னரே உள்ளே செல்ல ஒப்பினர்.

“என்னை இவ்வண்ணம் எவரும் நோக்குவதில்லை” என்றேன். என்னை அழைத்துச்சென்ற ஏவலன் “இங்குள்ள பூசல்சூழலில் இது இயல்பானதே. ஏனென்றால் இங்குதான் அரசரும் இளையோரும் இருக்கின்றனர்” என்றான். மீண்டும் அச்சொல் இடறவே “அரசர் என்று எவரை கூறுகிறாய்?” என்றேன். அவன் கண்களில் சினம் வந்து மறைந்தது. “இன்று இந்நகரை ஆள்பவர் ஜாம்பவதியின் மைந்தரும் ஜாம்பவானின் கொடிவழிவந்தவருமான சாம்பன். அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனின் மகள் கிருஷ்ணை அவருடைய பட்டத்தரசியென அமர்ந்திருக்கிறார். அரசர் நகர்நீங்கும்போது பன்னிரு போர்முனைகளில் தன்னுடன் தோளிணை என நின்ற மைந்தர் சாம்பனுக்கே மணிமுடியை அளித்துச் சென்றார். இங்கு பிறிதொருவர் அரசர் என்று இல்லை” என்றான்.

“ஆம், நீங்கள் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று அறிந்தேன்” என்றேன். “அதை மறுப்பவர்கள் இன்னும் இந்நகரில் உள்ளனர்” என்று அவன் சொன்னான். “அவர்கள் நெடுநாட்கள் அவ்வண்ணம் மறுக்கமாட்டார்கள்.” நான் என்னை முயன்று திரட்டிக்கொண்டேன். அவனிடம் பேசுவது வீண் என்று எண்ணினேன். ஆனால் ஒரு வேறுபாட்டை உணர்ந்தேன். யாதவ வீரர்களுக்கு அரசியலில் ஈடுபாடே இல்லை. அவர்கள் தங்கள் குடிப்பூசலிலேயே மூழ்கியிருக்கிறார்கள். நிகழ்வதென்ன என்றுகூட செவிகொடுப்பதில்லை. ஷத்ரிய வீரர்களுக்கு அரசியலே மூச்சு. ஆனால் அவர்கள் அதை அறிவுசார்ந்தே அணுகுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் கருத்து என ஒன்று இருக்கிறது. ஆனால் அசுரர்கள் ஒற்றை உள்ளமென, ஒற்றை உணர்வென திரண்டிருக்கிறார்கள். அதுவே அவர்களின் ஆற்றல். ஆனால் அவர்களின் தலைவர் வெல்லப்பட்டால் அக்கணமே அவர்களும் முற்றாக அழிகிறார்கள். ஷத்ரியர்களைப்போல கணுதோறும் முளைத்து மீண்டும் எழுவதில்லை.

ஜாம்பவதியின் அறைக்கு முன் என்னை அரைநாழிகை அமரச்செய்தனர். அவர்கள் எவருக்காக காத்திருக்கின்றனர் என்று எனக்கு புரியவில்லை. சற்று நேரம் கழித்து இயல்பாக திரும்பி சாளரத்தினூடாக பார்த்தபோது கீழே அரவக்கொடி கொண்ட பல்லக்கு ஒன்று நின்றிருப்பதை கண்டேன். அதன் பின்னரே கிருஷ்ணை அங்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்றும், அவர் வரும்பொருட்டே ஜாம்பவதி காத்திருந்தார் என்றும் புரிந்துகொண்டேன். கிருஷ்ணையின் வரவு என்னை அமைதியிழக்கச் செய்தது. நான் பேச விழைவது அரசரின் துணைவியரிடம். அவர்களின் மைந்தர்களைக்கூட என்னால் ஏற்கமுடியும், கிருஷ்ணை துரியோதனனின் மகள். துவாரகையின் அரசியென்றே அவர் கருதப்பட்டாலும் அந்நிலத்திற்கு உரியவர் அல்ல. ஆனால் நான் ஒன்றும் செய்ய இயலாது, அதை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

கதவைத் திறந்து ஏவலன் வெளிவந்து என்னை உள்ளே அழைத்தான். நான் உள்ளே செல்லும்போது ஜாம்பவதியும் கிருஷ்ணையும் அருகருகே இணையான பீடங்களில் அமர்ந்திருந்தனர். ஏனோ அங்கு காளிந்திதேவி இருப்பார் என்று எண்ணினேன். பின்னர் அவ்வாறு எதிர்பார்த்தது பிழை என்று தெரிந்தது. அவர் பிறிதொரு உளநிலையில் இருக்கிறார் என்பதை முன்னரே செய்திகளினூடாக அறிந்திருந்தேன். அரசியர் இருவருமே முறைமைசார் ஆடை அணிந்திருக்கவில்லை. கிருஷ்ணை பட்டுமேலாடை ஒன்றை அள்ளி தோளில் இட்டிருந்தார். நீண்ட துயில்நீப்பு கொண்டவை போலிருந்தன ஜாம்பவதியின் கண்கள். கிருஷ்ணை என்னை அறிந்தவர் என்றே விழிகாட்டவில்லை. என் வணக்கத்தைக்கூட அவர் பெற்றுக்கொள்ளவில்லை.

நான் வணங்கி முகமன் உரைத்தேன். என்னை அமரச்சொன்ன ஜாம்பவதி புன்னகைத்து “முழுதணிக்கோலத்தில் வந்திருக்கிறீர்கள், நன்று” என்றார். நான் “ஆம் அரசி, அரசியை அவைநின்று பார்க்கும்பொருட்டு இவ்வாறு வரவேண்டும் என்பது முறைமை” என்றேன். “அந்த முறைமையை நீங்கள் சத்யபாமையையும் ருக்மிணியையும் சந்திக்கச் செல்லும்போது பேணவில்லை அல்லவா?” என்றார் ஜாம்பவதி. அவ்வினாவால் நான் திகைத்துவிட்டேன். “ஆம், ஆனால்…” என்று சொல்வதற்குள் கைநீட்டித் தடுத்து “புரிகிறது. அவர்கள் உங்களுக்கு அரசியர் அல்ல, அணுக்கமான அன்னையர். இங்கு நீங்கள் வந்திருப்பதென்பது அவர்களின் அணுக்கர் என்னும் நிலையில்தான். நாங்கள் அயலவர், எனவே அரசியர் அல்லவா?” என்றார்.

நான் முற்றிலும் சொல்லிழந்தேன். ஆகவே எரிச்சல்கொண்டேன். “அவ்வாறு அல்ல… அவர்களை நான் முன்பு எண்ணாமல் இயல்பாக சந்திக்கச் சென்றேன்…” என்றேன் “இயல்பாகச் சென்று சந்திக்கும் நிலையில் தாங்கள் இருக்கிறீர்கள்” என்று ஜாம்பவதி கூறினார். நான் சலிப்புடன் தலையை அசைத்து “இதைப்பற்றி மேலும் நான் பேச விழையவில்லை. தூது மட்டும் கூறிச்செல்லவே வந்தேன்” என்றேன். “கூறுக!” என்று அரசி சொன்னார். கிருஷ்ணை என்னை உற்றுநோக்கியபடி அமர்ந்திருந்தார். ஜாம்பவதியின் அசைவுகளிலிருந்து எழுந்த ஒவ்வாமை என்னையும் கசப்படையச் செய்தது. அச்சந்திப்பு சினமின்றி முடியுமென்றால் நல்லூழே என எண்ணிக்கொண்டேன்.

ஜாம்பவதி “கூறுக!” என்றார். அவர்கள் அனைவரிடமும் ஒரே அசைவும் சொல்லும் எழுகின்றன. பின்பு அவற்றிலிருந்து அவர்கள் விலகி விலகிச் சென்று பிறிதொருவர் ஆகிறார்கள். “அரசி, இன்று துவாரகை இருக்கும் நிலையை நீங்கள் அறிவீர்கள். இந்நாடு அழிந்துகொண்டிருக்கிறது. இங்கு குடிப்பூசல் எக்கணமும் வெடிக்கலாம். குருதி சிந்தப்படலாம்” என்று நான் சொன்னேன். “ஆம், அதைத்தான் நானும் இவளும் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் சென்று பாமையிடம் பேச வேண்டியது அதுவே. போஜர்களும் அந்தகர்களும் விருஷ்ணிகளுடன் போர் புரிவார்கள் எனில் இந்நகரம் அழியும்” என்றார் ஜாம்பவதி. “ஆம், அதை நான் அவர்களிடம் சொன்னேன். அதைவிட முடியுரிமைக்காக இளைய யாதவரின் மைந்தர்கள் போர்புரிவார்கள் என்றால் இந்நகர் பொலிவிழக்கும்” என்றேன்.

“இங்கு போரென எதுவும் நிகழவில்லை, இனி நிகழவும் வாய்ப்பில்லை. இந்நகர் சாம்பனின் ஆட்சியில் முழுதமைந்திருக்கிறது. இளையோருக்கும் மூத்தோருக்கும் சில மாற்றுச் சொல்லிருக்கலாம். அவ்வாறு எதிர்ச்சொல் இல்லாத நாடென எதுவுமில்லை. அவர்கள் கோருவது எதுவோ அதை அளிக்க சாம்பன் சித்தமாகவும் இருக்கிறான். மீறுவார்கள் எனில் இளையோர் தண்டத்தாலும் மூத்தோர் அச்சத்தாலும் அமைதியாக்கப்படுவார்கள். ஒரு மன்னன் முடிகொண்டு கோல்சூடி ஆட்சி செய்யும் நாடு இது. இங்கு குடிகளுக்கு மாற்றுச்சொல் இல்லை. அந்தணரும் அறவோரும் மறுப்புரைக்கவில்லை. அயல்நாட்டு அரசர்களும் அடிபணிந்தே இருக்கிறார்கள். ஏது குறை?” என்றார் ஜாம்பவதி.

அச்சொற்கள் அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டவை என்று எனக்குத் தோன்ற, எழுந்த சினத்தை அடக்கி “அரசி, தாங்கள் அறிந்ததை நான் மீண்டும் சொல்லவேண்டுமென்று விழைகிறீர்கள். ஆகவே சொல்வது என் கடன். இங்கு யாதவர்களும் ஷத்ரியர்களும் அசுரர்களும் மூன்று குழுக்களாக அமைந்திருக்கிறார்கள். ஷத்ரியர்கள் இயல்பாக தங்களுக்குரியதே இந்நாட்டின் உரிமை என்று எண்ணுகிறார்கள். யாதவர்களோ குலவழியில் துவாரகை தங்களுக்குரியது என்று எண்ணுகிறார்கள்” என்று நான் சொன்னதும் ஜாம்பவதி தடுத்து “ஷத்ரியர்கள் அவ்வாறு விரும்பவில்லை. ஷத்ரியர்களுக்கு சாம்பன் அயலான் அல்ல. அவன் மணம்முடித்திருக்கும் பெண் ஷத்ரியகுடிப் பிறந்தவள், ஷத்ரியர்கள் தங்கள் தலைவர் என ஏற்ற பேரரசரின் மகள்” என்றார்.

நான் “ஆம், அது உண்மை. ஆனால் மணவுறவுகளை எவர் முதன்மையெனக் கருதுகிறார்கள்? பிரத்யும்னனே அசுரகுடியில் மணம்புரிந்தவர் அல்லவா?” என்றேன். ஜாம்பவதி “அதைத்தான் சொல்லவந்தேன். பிரத்யும்னனின் மைந்தன் அனிருத்தன் மணந்திருப்பது பாணாசுரரின் மகள் உஷையை. இன்று சம்பராசுரரும் பாணாசுரரும் எங்களுடன் இருக்கிறார்கள். ஷத்ரியர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்த பின்னர் எஞ்சியிருப்பவர் எவர்? ஒருவரோடொருவர் பூசலிட்டுக்கொண்டிருக்கும் யாதவர்களா? அந்த யாதவர் தங்கள் பூசலை நிறுத்திவிட்டு ஒன்றெனத் திரண்டு வந்து கோரிக்கை என்ன என்று எனது மைந்தனிடம் சொல்லட்டும். அவன் அதை எண்ணி, அவைசூழ்ந்து உகந்ததை முடிவெடுப்பான்” என்றார்.

நான் கிருஷ்ணையை பார்த்துக்கொண்டிருந்தேன். அச்சொற்களில் அவருக்கு உடன்பாடுள்ளதா என்று நோக்கில் தெரியவில்லை. அங்கிலாததுபோல் சற்றே விழி திருப்பி அமர்ந்திருந்தார். ஒருகணத்திற்குப் பின் நான் நேரடியாக ஜாம்பவதியிடம் “அரசி, இங்கு பூசல் நிகழலாகாது. அதை தவிர்க்கும் பொருட்டே நான் வந்துள்ளேன்” என்றேன் “அசுரர்களிடம் பூசலேதும் இல்லை” என்றார் ஜாம்பவதி. நான் மீண்டும் ஒருகணம் கிருஷ்ணையைப் பார்த்த பின் “அரசி, பூசலிடுவது எவராயினும் நம் மைந்தர். இளைய யாதவரின் கொடிவழியினர். பூசலால் குடியழியுமென்றால் இழப்பவர் நாம்” என்றேன். “தோற்பவர் இழக்கிறார், வெல்பவர் பெறுகிறார்” என்றார் அரசி.

“எவர் இழந்தாலும் இழப்பவர் இளைய யாதவர். என் கவலை அதன்பொருட்டே. அரசி, இங்குள்ள இடரைத் தீர்க்க துவாரகையை சமைத்த அரசர் இங்கு வருவது ஒன்றே வழி. எவர் ஆளவேண்டும் என்று இளைய யாதவர் முடிவுசெய்யட்டும் எட்டு அரசியரும் ஓலை அனுப்பினால் அதை ஆணை என்றுகூடக் கொள்ளலாகும். அவர் வந்து சேர்ந்தால் இங்குள்ள அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். அதன் பின் இங்கொரு மாற்றுச் சொல் எழாது என்பதில் ஐயமில்லை” என்றேன். ”அவருடைய நகர் இது, அவர் வரட்டும்” என்றார். “ஆம், ஆனால் அவரை நாம் இங்கிருந்து விலக்கினோம். நம் சொல் எழுந்தாலொழிய அவரை இங்கு வரவழைக்க முடியாது. அதன்பொருட்டே நான் முயல்கிறேன்” என்றேன்.

ஜாம்பவதி “அவர் வரட்டும். சாம்பனை அரசபீடத்தில் அமர்த்தியது அவர், அதை மீண்டும் அவர் சொல்லட்டும். பிறிதொன்று அவர் சொல்ல வாய்ப்பில்லை. அவர் சொல் எழுந்தால் அன்றி இந்த ஷத்ரிய அரசியரும் யாதவ அரசியும் அடங்கமாட்டார்கள்” என்றார். “அவர்களும் அவர் வந்துகூற வேண்டுமென்று விழைகிறார்கள். அவர் வருவார் எனில் அனைத்தும் முடிவுற்றுவிடும் என்று நம்புகிறார்கள். அவர்களிடம் ஓலை பெற்றுவிட்டேன். தாங்களும் ஓலை ஒன்றை அளிப்பதாக இருந்தால்…” என்று நான் சொல்ல “ஓலை அளிக்கிறேன். அவ்வோலையை நீங்கள் சாம்பனிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்” என்றார் ஜாம்பவதி. நான் “அந்த ஓலையை தங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள விழைகிறேன், அரசி“ என்றேன்.

“அந்த ஓலையை அளிக்கவேண்டியவள் நான் அல்ல, அவனே. இந்நாட்டை ஆள்பவன் சாம்பன். அவன் மணிமுடிக்குக் கீழ் அமைந்திருக்கும் குடி நான். அவனை மீறி ஒரு சொல்லும் உரைக்க உரிமையற்றவள். என் ஓலையை அவனே எழுதுவான். அவ்வோலை எழுதுவதற்கான ஒப்புதலை மட்டுமே நான் அளிக்கமுடியும்” என்றார் ஜாம்பவதி. “அரசி, இது தங்களுக்கும் தங்கள் கொழுநருக்குமான உறவு குறித்தது” என்றேன். “அரசனே குடிகள் மேல் முற்றுரிமை கொண்டவன்” என்று ஜாம்பவதி சொன்னார். நான் திரும்பி கிருஷ்ணையை பார்த்தேன். “அரசி, அரசரின் சார்பில் தாங்கள்கூட அவ்வண்ணம் ஒரு ஓலை அளிப்பதற்கு ஆணையிடலாம்” என்றேன். அவரை உரையாடலுக்குள் இழுப்பதற்காகவே அதைச் சொன்னேன்.

கிருஷ்ணை புன்னகைத்து “இங்கு பூசல் ஏதோ நிகழ்வதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதுதான் எனக்குப் புரியவில்லை. நான் அறிந்து பாரதவர்ஷத்தில் பூசல் நிகழாத ஒரே நகர் இதுதான். இன்று வரை இங்குள்ள மைந்தருக்கும், மைந்தர் மைந்தருக்கும் நடுவே எந்த மோதலும் நிகழவில்லை. ஒரு சொல்கூட எதிர்த்து சொல்லப்படவில்லை. ஒருவேளை பூசலை உருவாக்க நீங்கள் எண்ணுகிறீர்களோ என்று ஐயம்கொள்கிறேன்” என்றார். அவர் விழிகளில் நான் முன்பறிந்திருந்த ஒருவரை கண்டேன். உடனே அவர் எவர் என்றும் புரிந்துகொண்டேன். அவை பாஞ்சாலத்து அரசி திரௌபதியின் கண்கள். “ஏனெனில் நீங்கள் விருஷ்ணி குலத்தவர். இந்நகரில் விருஷ்ணிகளுக்கு இருக்கும் முன்தூக்கு சற்றே குறைகிறது என்று எண்ணுகிறீர்கள். ஆகவே இங்கு வந்து இச்சூழ்ச்சியை செய்கிறீர்கள்” என்றார்.

நான் “அவ்வாறல்ல, அரசி…” என்றேன். எழாக் குரலில் கிருஷ்ணை “யாதவரே, அந்த முன்தூக்கம் குறைந்தே ஆகும். அதை எவரும் தடுக்கவியலாது. ஏனெனில் இப்போது இந்நகரை ஆள்பவர் சாம்பன். இளைய யாதவரின் ஆட்சி முடிந்துவிட்டது. அன்று விருஷ்ணிகள் தங்கள் தகுதியால் அல்ல, குருதித்தொடர்பால் மட்டுமே இங்கு பெரும் பதவிகளையும் இடங்களையும் நிறைத்திருந்தார்கள். அது இனி நிகழப்போவதில்லை. அதை அவர்கள் உணர்ந்தாகவேண்டும். அதை அவர்களுக்கு உணர்த்துவது உங்கள் பொறுப்பு. அதற்கு மாறாக அவர்களை மேலும் தூண்டிவிடும் பொருட்டு இச்செயலை நீங்கள் செய்கிறீர்கள். அதனூடாக அவர்களை அழிவுக்கு இட்டுச் செல்கிறீர்கள்” என்றார்.

சினத்தை அடக்கி “இந்நகர் வாழ வேண்டும் என்பதற்கப்பால் நான் கூறுவது ஒன்றில்லை” என்று நான் சொன்னேன். குரலெழாமலேயே உறுதியுடன் “ஒன்றுணர்க அரசி, என்றேனும் விருஷ்ணிகளுக்கும் நிஷாத அசுர குடிகளுக்கும் இடையே போர் நிகழுமெனில் விருஷ்ணிகளின் பொருட்டுத்தான் வில்லெடுத்து களம் முன் நிற்பேன். என்னை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர் இங்கு எவரும் இல்லை. பிரத்யும்னனோ சாம்பனோகூட. எண்ணுக, ரிஷபவனத்தின் படைகளும் என்னுடன் எழும்!” என்றேன். கிருஷ்ணை ஏளனச் சிரிப்புடன் “ஏன் உங்கள் இறைவர் கூடவா உங்களுக்கு நிகரல்ல? அவரது படையாழியை எதிர்த்து நிற்குமா உங்கள் வில்?” என்றார்.

நான் திகைத்து “அவர் வருவாரெனில் இங்கு வேறு பேச்சே இல்லை” என்றேன். “அவர் வந்தாக வேண்டும். ஏனெனில் சாம்பன் முடிசூடியது அவரது காலத்திலேயே. இன்றுவரை சாம்பனின் முடிக்கெதிராக அவர் எதுவும் சொல்லவும் இல்லை. ஆகவே அரசருக்கெதிராக துவாரகையின் குடிகள் எவர் எழுந்தாலும் அரசரின் பொருட்டு படைக்கலத்துடன் வந்து நிற்பது அவருடைய பொறுப்பு” என்றார் கிருஷ்ணை. “இப்பூசல்களை நாம் மீள மீள ஏன் பேசுகிறோம்? தாங்கள் ஓலை அளிப்பீர்கள் என்றால் நான் கிளம்புகிறேன்” என்றேன். “ஓலை அளிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சென்று சாம்பனிடம் பெற்றுக்கொள்ளுங்கள் அந்த ஓலையை. பிறிதொன்றும் நான் உரைப்பதற்கில்லை” என்றார் ஜாம்பவதி.

“நன்று!” என்றபடி நான் எழுந்துகொண்டேன். ஜாம்பவதி உதடுகளை இறுக்கியபடி “நோக்குக! அரசியிடம் இருந்து ஆணை பெறாது உரையாடலை முடிக்கும் உரிமை உங்களுக்கில்லை. இதை நீங்கள் உங்கள் அரசியிடம் செய்யமாட்டீர்கள். நிஷாத குலத்து அரசி என்பதனால் இதை செய்கிறீர்கள். இப்போது உங்கள் உள்ளத்தில் இருப்பது என்னைவிட குடியில் முந்தியவர் என்னும் எண்ணம் மட்டுமே” என்று சொன்னார். அதை அவர் ஒரு படைக்கலமாகவே கையாள்கிறார் என்று உணர்ந்தேன். “அல்ல அரசி, தங்கள் அவைமுறைமைகளை பேணவே விழைகிறேன்” என்றேன். “எனில் அதை பேணியிருக்க வேண்டும்” என்றார். “பிழை நிகழ்ந்துவிட்டது, பொறுத்தருள்க!” என்றேன். “அப்பிழையை நிகழ்த்திய உளநிலையையே நான் சுட்டுகிறேன்” என்றார் ஜாம்பவதி.

“நான் எதுவும் சொல்வதற்கில்லை. இந்த உளநிலைகள் எல்லாம் இங்கு இளைய யாதவர் இருந்தபோது எங்கிருந்தன? ஒவ்வொருவரிலும் எழுந்திருக்கும் இந்த தெய்வங்கள் எல்லாம் அன்று எவ்வண்ணம் அடங்கிக்கிடந்தன? புரியவில்லை. மானுடருக்கு மேல் தெய்வங்களின் ஆட்சி என்பது கணந்தோறும் மாறிக்கொண்டிருப்பது என்பார்கள்” என்றபின் தலைவணங்கி கதவைத் திறந்து வெளியே சென்றேன்.