மாதம்: நவம்பர் 2019

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 52

பகுதி எட்டு : விண்நோக்கு – 2

முக்தவனத்தை அவர்கள் அடையும்போது பகல் அணைந்து அந்தி எழத்தொடங்கிவிட்டிருந்தது. பகல் முழுக்க வளைந்த பிரம்புக்கூரைக்குக் கீழே அசைந்தாடிய மஞ்சத்தில் உஜ்வலன் துயிலிலேயே இருந்தான். சுகோத்ரன் அவனருகே நீர்ப்பரப்பை நோக்கியபடி அமர்ந்திருந்தான். படகோட்டிகளின் கரிய முதுகுகள் வெயிலில் நெய்ப்பாறை என மின்னின. அவர்களின் மூச்சொலி சீராக எழுந்தது. படகின் விலாவில் அறைந்த அலைகளின் ஓசையுடன் அது இணைந்தது. அவ்வப்போது வெண்பறவைகள் வந்து பாய்மரக் கயிறுகளின் மேல் அமர்ந்து காற்றுக்கு வெவ்வேறு வகையாக சிறகு கலைத்து அடுக்கி சமன்கொண்டு பின் உந்தி எழுந்து பறந்தன.

படகு கரையணையும்போதுதான் உஜ்வலன் விழித்துக்கொண்டான். “எந்த இடம்?” என்றான். சுகோத்ரன் “முக்தவனம்” என்றான். “வந்துவிட்டதா?” என அவன் எழுந்தான். “நீர்ப்பயணம் மிக விரைவானது. நீர் மண்ணில் குறுக்குவழியை கண்டடைந்து வைத்திருக்கிறது” என எழுந்து கரையை நோக்கியபடி சோம்பல் முறித்தான். “நீங்கள் துயில்கொள்ளவில்லையா?” என்றான். “இல்லை” என்றான் சுகோத்ரன். “நாம் மிகவும் பிந்தி வந்திருக்கிறோம். நாளை காலை இங்கே நீர்க்கடன் நிகழ்கிறது எனில் இன்றிரவு இங்கே எவருக்கும் துயில் இருக்காது. ஆகவேதான் நான் மெய்மறந்து துயின்றேன்” என்றான் உஜ்வலன்.

படகுத்துறையிலிருந்து கொடியசைவால் ஆணை எழுந்ததும் அவர்களின் படகு கரையணைந்தது. சுகோத்ரன் அவன் படகிலிருந்து இறங்கியதும் அவனை எதிர்பார்த்து நின்றிருந்த யுயுத்ஸு விரைந்த காலடிகளுடன் அணுகி தாழ்ந்த குரலில் “நாளைக் காலை சடங்குகள் தொடங்குகின்றன. இக்கணம் வரை மெய்யாகவே சடங்குகள் தொடங்குமா என்று தெரிந்திருக்கவில்லை. இன்றிரவுதான் அனைத்தும் முடிவாகும். இன்னமும்கூட சிலரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றான். “வருக. உங்களுக்கான ஒருக்கங்கள் அனைத்தும் சித்தமாகியிருக்கின்றன!”

உஜ்வலன் “இத்தனை பெரிய இடமா?” என வியந்தான். “நான் நீர்க்கடன் என்னும்போது ஒரு மிகச் சிறிய நிகழ்வு என கருதினேன்.” யுயுத்ஸு அவனை நோக்கி புன்னகை செய்து “பொதுவாக அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் எந்நிகழ்வும் பெரிதாகிவிடுகிறது” என்றான். “இன்று இப்பொழுதுவரை நிகழ்வனவற்றைக்கொண்டு நோக்கினால் மெய்யாகவே இங்கே நாளை காலை நீர்க்கடன் நடக்குமா என்றே ஐயுறுகிறேன்” என்றான். சுகோத்ரன் “நடக்கும்” என்றான். யுயுத்ஸு திகைப்புடன் திரும்பி நோக்கி உடனே நகைத்து “ஆம், நீ நிமித்தநூல் கற்றவன் அல்லவா?” என்றான். “உன் தந்தை மட்டுமே ஷத்ரியகுடியில் நிமித்தநூல் கற்றவர் என்பார்கள். நீ கற்கச் சென்றதை இங்கே அனைவருமே மறந்துவிட்டிருக்கின்றனர்.”

மெல்லிய புன்னகையுடன் யுயுத்ஸு தொடர்ந்தான் “உண்மையில் உன் பெயர் எவருக்குமே நினைவில் இல்லை. நிமித்தநூல் கற்கச் சென்றவனை ஷத்ரியர் நினைவுகூர விழையவில்லை போலும்.” சுகோத்ரன் “அது இயல்பு” என்றான். “ஏன்?” என்றான் யுயுத்ஸு. “ஷத்ரிய இயல்பை கைவிடாமல் நிமித்தநூலை கற்க இயலாது.” யுயுத்ஸு ஒரு கணத்திற்குப் பின் “ஷத்ரிய இயல்பை கைவிடாமல் எந்நூலையும் கற்க இயலாது, அரசியல் நூல்களைக் கூட” என்றான். “ஏன்?” என்றான் உஜ்வலன். “ஏனென்றால் கற்றல் வெல்லுதலுக்கு எதிரானது. அறிதல் ஆட்கொள்ளலுக்கு மாற்றானது” என்று யுயுத்ஸு சொன்னான். உஜ்வலன் “எண்ணிநோக்குவதற்குரியதே” என்றான். அவன் சொற்கள் உள்ளடங்க தலை எடைகொண்டதுபோலத் தழைந்தது.

“உண்மையில் உன் பெயர் என் எண்ணத்துக்கு எப்படி வந்தது தெரியுமா? நேற்று முன்னாள் அரசர் யுதிஷ்டிரன் அவையமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அபிமன்யுவின் கருவில் எஞ்சுவதே குருகுலத்தின் ஒரே குருதித்துளி என்றார். அதை இந்நீர்க்கடனில் எவ்வண்ணமோ அறிவிக்கவேண்டும் என்றார். என்ன விந்தை என்றால் எனக்கும் அதுவே இயல்பாக உடனே தோன்றியது. அவை கலைந்து குடிலுக்கு நடக்கும்போதுதான் நான் இயல்பாக உன்னை நினைவுகூர்ந்தேன். வியந்து நின்றுவிட்டேன். எப்படி உன்னை மறந்தேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். மீண்டும் அரசரின் குடில்நோக்கி சென்றேன். அரசே ஒருவன் உயிருடன் இருக்கிறான். நீங்கள் அவனை மறந்துவிட்டீர்கள் என்றேன். உடனே அவருக்கும் உன் பெயர் நினைவுக்கு வர அவர் முகம் பதற்றம் கொண்டது.”

“உன் தந்தை அவையிலிருந்தார். அவர்கூட உன்னை நினைவுகூரவில்லை. நான் சொல்லக்கேட்டதும் அவர் உன்னை நினைவுகூர்ந்து நிலைகுலைவதுபோலத் தெரிந்தது. நானே உன் பெயரைச் சொல்லவேண்டும் என்பதுபோல அவர்கள் சொல்லின்றி அமர்ந்திருந்தனர். நான் நம் மைந்தன் சுகோத்ரன் இன்னமும் நலமாக இருக்கிறான். குருகுலத்தின் எஞ்சும் குருதி அவன் அல்லவா என்றேன். ஆம் என்று அரசர் முனகினார். பீமசேனன் ஆம், அவனே. அவன் வரட்டும், அவன் இளவரசனாக முடிகொள்ளட்டும் என்றார். பார்த்தன் ஒன்றும் சொல்லவில்லை. உன் தந்தை தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.”

“என்ன முடிவெடுப்பது என தெரியாமல் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். இதில் முடிவெடுக்க என்ன உள்ளது, மைந்தன் அஸ்தினபுரியின் குருகுலத்தின் எஞ்சும் குருதி என்பதை எவர் மறுக்க இயலும் என்று நான் கேட்டேன். ஆனால் ஏதோ ஒன்று அனைவரையும் தடுத்தது.” உஜ்வலன் உரத்த குரலில் “அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். தவறான முடிவை எடுத்துவிட்டாலும் நாம் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை உறுதியாக பற்றிக்கொள்கிறோம்” என்றான். “இருக்கலாம். நானே ஒரு வழி சொன்னேன். விதுரரிடம் உசாவலாம் என்றேன். அனைவரும் உடனே அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆம், விதுரர் முடிவெடுக்கட்டும் என்றார்கள்.”

“விதுரரிடம் நானே உசாவினேன். நீ வந்தாகவேண்டும் என்று அவர் சொன்னார். உனக்கு முறையான செய்தி அறிவிக்கப்படவில்லை என்பதையே அவர் அப்போதுதான் அறிந்தார். அவன் கல்விநிலைக்குச் சென்றமையால் அழைப்பு அளிப்பது குறித்த குழப்பம் வந்திருக்கலாம் என்றேன். கல்விநிலைக்கு அனுப்புவதில் இருமுறை உண்டு. குடித்தொடர்பும் குலநீட்சியும் முற்றறுத்து மைந்தனை ஒரு குருநிலைக்கு கொடையளித்தல் உண்டு. அது அதர்வவேத குருநிலைகள் கோரும் வழக்கம். அவர்களை மீண்டும் அழைக்கமுடியாது. வழக்கமாக கல்விநிலைகளுக்கு அனுப்புகையில் பூணூல் மாற்றி திரும்ப அழைத்துக்கொள்வதே நெறி. அவன் அவ்வண்ணம் மாணவனாகவே அனுப்பப்பட்டான். அவன் இக்குடிக்கும் குலத்திற்கும் உரியவன். அவன் வந்தாகவேண்டும் என்றார்.”

“நான் வந்தாகவேண்டும்” என்றான் சுகோத்ரன். “நீர்க்கடன் முடிக்க நீ இருப்பது இன்றியமையாதது… ஒருவேளை அதன்பொருட்டே உன்னை தெய்வங்கள் விட்டுவைத்துள்ளன போலும்” என்றான் யுயுத்ஸு. “வருக!” என அழைத்துச்சென்றான். செல்லும் வழியில் அங்கே நிகழந்தனவற்றை சொல்லிக்கொண்டே வந்தான். “இங்கே எவருமே இயல்பான உளநிலையில் இல்லை. அனைவரும் பித்தர்கள். அனைவரும் நோயுற்றவர்கள்” என்றான். “நோய் தொடங்கியது நெடுநாட்களுக்கு முன்னரே. அது இப்போதுதான் தெரிகிறது.” சுகோத்ரன் “எவருக்கும் முற்றிலும் தெரியாத ஊழ் என ஏதுமில்லை. அதுவே நிமித்தநூலின் அடிப்படை. ஊழ்க்கணிப்பு செய்யும்போது கேட்பவரின் உள்ளிருந்து அதை ஏற்றுக்கொள்ளும் ஒரு நுண்புலன் உள்ளது. அதை நோக்கியே நிமித்திகன் பேசுகிறான்” என்றான்.

அவர்களுக்காக காத்து நின்றிருந்த சிறிய தேரில் சுகோத்ரன் ஏறிக்கொண்டான். உஜ்வலன் அருகே ஏறி அமர்ந்தான். “அருகே தெரிகிறது குடில்நிரை. ஆயினும் நீங்கள் தேரில்தான் சென்றாகவேண்டும். அதுவே முறை” என்றான். யுயுத்ஸு “நான் புரவியில் உடன் வருகிறேன்” என்றபின் செல்க என தேர்ப்பாகனுக்கு கைகாட்டினான். தேர் கிளம்பி மரப்பலகை பரப்பப்பட்ட பாதையில் ஓசையுடன் சென்றது. குடில்தொகைகளிலிருந்து ஓசையும் புகைமணமும் எழத்தொடங்கின. உஜ்வலன் “அடுமனைப்புகையுடன் வேள்விப்புகை கலக்கும் சிற்றூர் என ஏதோ காவியத்தில் படித்த நினைவு” என்றான்.

சற்று அப்பால் கங்கை நோக்கி விழும் சிற்றோடை ஒன்றை அருவியாக்கி அதில் சுழலுருளையை அமைத்திருந்தனர். அது ஒன்றையே சொல்லிக்கொண்டு சுழல அதில் இணைக்கப்பட்ட கழுக்கோல்கள் தங்களைத் தாங்களே சுற்றிக்கொண்டு கிளம்பி அருகிருந்த குடிலுக்குள் சென்றன. “மாவரைக்கும் பொறி” என்று உஜ்வலன் சொன்னான். “மாளவத்தில் இவ்வாறு நான் கண்டதில்லை.” குடிலுக்குள் எடைமிக்க குழவிகள் சுழலும் ஒலி கேட்டது. “ஓர் மானுட உள்ளம், ஓயாத எண்ணச் சுழலோட்டம்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் அவன் பேச்சை கேட்டதுபோல் காட்டாமல் குடில்களின்மேல் பறந்த கொடிகளைப் பார்த்துக்கொண்டு சென்றான்.

“நீங்கள் இளவரசர். இங்கு வந்து நீங்கள் இறங்கும்போது முரசுகளும் கொம்புகளும் முழங்கியிருக்கவேண்டும்” என்றான் உஜ்வலன். “இது நீர்க்கடன் செய்யும் இடம், நகரல்ல” என்றான் சுகோத்ரன். “அது பொருட்டல்ல. யுதிஷ்டிரன் அவ்வண்ணம் முரசும் கொம்பும் இன்றி வந்திறங்குவாரா என்ன?” என்று உஜ்வலன் கேட்டான். “அரசர்கள் முறைமைகளால் உருவாக்கப்படுகிறார்கள். அதை மறக்கவேண்டியதில்லை.” சுகோத்ரன் ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் இவர் வந்தது நன்று… இவர் உங்களுக்கு தந்தை முறை கொண்டவர். இவர் வரவேற்றதனால் முறைமை ஓரளவு காக்கப்பட்டது என்று கொள்ளலாம்” என்று உஜ்வலன் சொன்னான்.

நீர்க்கடனுக்கான ஒருக்கங்கள் ஏறத்தாழ முடிந்துவிட்டிருந்தன. அந்திப்பொழுது ஆகி விட்டிருந்தமையால் பல்லாயிரம் நெய்விளக்குகளும் பந்தங்களும் எரிந்தன. கங்கையின் படித்துறை செஞ்சுடர் சரடுகளால் ஆனதாக இருந்தது. உஜ்வலன் அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். “விண்மீன்களைப்போல!” என்றான். “விண்மீன்கள் நீத்தாரின் விழிகள் என்பார்கள்… முடிவிலாக் கோடி. அத்தனைபேர் இங்கே மண்ணில் போரிட்டு மடிந்திருக்கிறார்கள்.” அவன் உரக்க நகைத்து “மண்ணின் துகள்களின் எண்ணிக்கையைவிட அது மிகுதி என்று படுகிறது” என்றான். சுகோத்ரன் புன்னகைத்தான்.

சுகோத்ரன் புன்னகைப்பதை உணர்ந்து திரும்பி நோக்கிய உஜ்வலன் “நான் மண் நாடுவதில் பொருளில்லை என்று சொல்லவில்லை. எதிலும் பொருளுண்டு. மண் ஆழ்ந்த பொருள் உடையது. இல்லையென்றால் இத்தனைபேர் அதற்காகப் பொருதி மடிந்திருக்க மாட்டார்கள்” என்றான். “உலகியலைத் துறக்க முயல்பவர்கள் எவருமே முழுமையாக வென்றதில்லை என்றுதான் நிமித்தநூல்கள் சொல்கின்றன. ஏனென்றால் மானுட உடல் அன்னத்தாலும் அனலாலும் ஆனது.”

அவனுக்கான குடில்வாயிலில் சகதேவன் நின்றிருந்தான். அவனை எதிர்பார்த்துத்தான் அவன் நின்றிருக்கிறான் என தெரிந்தது. ஆனால் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏவலனிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு குளம்போசை கேட்டு இயல்பாகத் திரும்புவதுபோல சுகோத்ரனை நோக்கி விழிகளை விரித்தான். சுகோத்ரனால் முதலில் அவனை அடையாளம் காண முடியவில்லை. அடையாளம் கண்டுகொண்டதும் அவன் உள்ளம் படபடத்தது. வண்டியிலிருந்து அருகே சென்று தந்தையின் காலடிகளைத் தொட்டு வணங்கினான். சகதேவன் முகம் ஒவ்வாமைகொண்டு சுளித்திருப்பதுபோல தோன்றியது. “நீடுவாழ்க! சிறப்புறுக!” என வாழ்த்தி திரும்பி உஜ்வலனை நோக்கி “இவர் யார்?” என்றான். “என் சாலைத்தோழர். மாளவத்து அந்தணர். கௌண்டின்ய குலத்து உஜ்வலன்” என்றான் சுகோத்ரன்.

“மாளவம் இப்போரில் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது” என்றான் சகதேவன். அவன் ஏன் அதைச் சொன்னான் என எண்ணி, பின் அவன் நிலைகுலைந்திருப்பதை சுகோத்ரன் உணர்ந்தான். நிலைகுலைகையில் மானுடர் தங்கள் மெய்யான இயல்புகளில் ஒன்றை பொய்யான நடிப்பினூடாக வெளிப்படுத்துகிறார்கள். உஜ்வலன் “ஆம், அஸ்தினபுரி வென்றது” என்றான். அச்சொற்களில் இருந்த கூர்மை சகதேவனை தைக்க அவன் உஜ்வலனை கூர்ந்து நோக்கி “நீங்கள் நிமித்தநூல் கற்பது ஏன், அந்தணரே?” என்றான். “எங்கள் குடியில் நிமித்தநூல் பயில்வது அமைச்சர்பணிக்கு இன்றியமையாதது என கருதப்படுகிறது” என்றான் உஜ்வலன்.

“ஆம், நிமித்தநூல் ஆட்சிநூலுக்கு இன்னொரு பக்கம் என்பார்கள்” என்றான் சகதேவன். “அந்தணருக்கும் பிறருக்கும் நிமித்தநூலின் பயன்கள் வேறு” என்றான் உஜ்வலன். “அந்தணர் நிமித்தநூலை படைக்கலமாகக் கொள்பவர்கள். பிறர் அதன் படைக்கலமாக தங்களை ஆக்கிக்கொள்கிறார்கள்.” சகதேவன் அவனிடம் மேலும் பேச விழையவில்லை. சுகோத்ரனிடம் “நீ இங்கே ஓய்வெடுக்கலாம்… முடிந்தால் பின்னிரவில் வந்து மூத்தவரைக் கண்டு வாழ்த்து பெற்றுக்கொள்… அவரும் உன்னைப் பார்க்க விழையக்கூடும்” என்றான்.

“நாங்கள் ஓய்வெடுக்க விழையவில்லை. உடனே வந்து அவரைப் பார்க்க எண்ணுகிறோம்” என்றான் உஜ்வலன். “ஏனென்றால் சில முடிவுகளை முன்னரே எடுக்க நாம் அவருக்கு பொழுதளிக்க வேண்டும்.” சகதேவன் “என்ன?” என்றான். உஜ்வலன் அவனை நேர்விழிகளால் நோக்கி “அஸ்தினபுரியின் குருகுலத்துக் குருதிவழியில் எஞ்சியிருக்கும் ஒரே இளவரசர் அஸ்தினபுரியின் எதிர்கால அரசரைப் பார்ப்பதற்கு உரிய பொழுது என்றும் சில உண்டு. நாளை காலை நாமகள்பொழுது முதல் நீர்க்கடனுக்காக கணிக்கப்பட்டுள்ளது. நீர்க்கடன் அன்றி பிறவற்றை எண்ணக்கூடாது” என்றான்.

சகதேவன் உஜ்வலனை சில கணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு “உங்கள் விருப்பப்படி நடக்கட்டும், உத்தமரே. இதில் நான் கூறவேண்டியது என ஏதுமில்லை” என்றபின் திரும்பிச் சென்றான். யுயுத்ஸு “இவர் நன்கு பேசுகிறார். அஸ்தினபுரிக்கே இவர் அமைச்சராகலாம்” என்றான். “நான் மாளவத்தின் தலைமை அமைச்சனாக ஆகப்போகிறவன்… அஸ்தினபுரி வாழும். ஆனால் மாளவமும் மகதமும் உடன் வாழும். அதை மறக்கவேண்டாம்” என்றான் உஜ்வலன். யுயுத்ஸு “இல்லை, நான் மறுத்து எதையும் சொல்லவில்லை” என்றான். உஜ்வலன் “நான் இவருடைய தோழராக இங்கே வந்தேன். அதை மட்டுமே இயற்றுகிறேன். அஸ்தினபுரியிலோ குருகுலத்திலோ எனக்கு ஆர்வமில்லை” என்றான்.

அவர்கள் நீராடி ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் உஜ்வலன் பேசிக்கொண்டே இருந்தான். “நாம் முடிவெடுக்கவேண்டிய நேரம் இது. அவர்கள் எப்படி உங்களை மறந்தார்கள்? நாம் எண்ண விழையாத ஒன்றையே மறக்கிறோம். நம் மறதியில் எப்போதுமே இருப்பது ஒவ்வாமை, அச்சம், துயரம் மூன்றும்தான். அவ்வண்ணம் அவர்கள் உங்களை ஒதுக்க எந்த அடிப்படையும் இங்கில்லை… நீங்கள் அரசகுடிப் பெண்ணுக்கு மைந்தராகப் பிறந்தீர்கள். பாண்டவர் குடியின் குருதிகொண்டவர். இதை எவரேனும் மறுக்கமுடியுமா?” சுகோத்ரன் அவன் சொற்களினூடாக அங்கே தன்னை நிகழவிட்டான்.

உஜ்வலனே ஏவலனிடம் “நாங்கள் மாமன்னர் யுதிஷ்டிரனை சந்திக்க விழைகிறோம். உகந்த பொழுதைக் கேட்டு வா” என்று ஆணையிட்டான். “இப்போதா?” என்று சுகோத்ரன் தயங்க “இனி பிந்தவேண்டியதில்லை” என்றான் உஜ்வலன்.

 

யுதிஷ்டிரனின் ஏவலன் வந்து பொழுதை அறிவித்தபோது சுகோத்ரன் ஆடைமாற்றிவிட்டிருந்தான். இன்நீர் வந்திருந்தது. உஜ்வலன் அதை ஓசையுடன் அருந்தினான். சுகோத்ரன் தன் மேலாடையைச் சீரமைத்தபடி கிளம்பினான். உஜ்வலன் வாயைக் கழுவியபின் உடன் வந்தான். அவன் புத்தெழுச்சி கொண்டதுபோல தோன்றியது. “நான் நன்கு துயின்றுவிட்டேன்… நீண்ட துயில்… இனி நீண்ட பகலுக்கும் நான் ஒருக்கமே” என்றான்.

அவனுடைய குரல் சுகோத்ரனை அழைத்துச்சென்றது. “எப்போதும் உங்கள் உள்ளம் என்ன என்று எனக்கு புரிந்ததே இல்லை. நான் ஒரு மலையோடை போலவும் நீங்கள் பாறை போலவும் எனக்குப் படும். உங்களைச் சூழ்ந்து கொந்தளித்து அலைகொண்டபடியே இருக்கிறேன்… ஆனால் உங்கள் சொற்களில் சிலவற்றை உண்மையில் என் சொற்களிலிருந்தே கண்டடைகிறீர்கள். காற்றில் விழும் ஆலம்பழ மழையில் ஒன்றிரண்டை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். நான் மிகையாகப் பேசுவது அதற்காகவே” என்றான்.

அவர்கள் செல்வதற்காக தேர் ஒருங்கியிருந்தது. “இப்போது உங்கள் உள்ளம் என் சொற்கள் வழியாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இல்லையா? மெய் கூறுக!” என்றான் உஜ்வலன். “ஆம்” என்றான் சுகோத்ரன். சிரித்தபடி “ஆம் என நானும் அறிவேன்… நீங்கள் என் சொற்களில் எவற்றை உங்கள் சொற்களென அறிகிறீர்கள் என்பதை மட்டுமே என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை… நன்று. அதற்கும் ஒரு வழி இருக்கும்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் பெருமூச்சுடன் “நான் அதற்கு எதையும் நம்பியிருக்கவில்லை. நம் ஊழ் எதிர்காலத்திலிருந்து ஊறிப்பெருகி வந்து நம்மை அறையும் ஒரு பேரலை. நான் அத்திசை நோக்கி செவிகூர்கிறேன்” என்றான்.

“அதுவும் நிமித்தநூலில் உள்ள வரிதான்” என்று உஜ்வலன் சொன்னான். “நிமித்தநூலில் எப்பொருளும் இல்லை. நான் கற்று அறிந்தது அது மட்டுமே… நாம் நம் விழைவுகளை அதன்மேல் ஏற்றிக்கொள்கிறோம்” என்றான். “அதை என்னால் நூறுமுறை சொல்லமுடியும். நிகழ்காலத்தை முடிவுசெய்ய எதிர்காலத்தை எதிர்பார்ப்பதில் எப்பொருளும் இல்லை. அது கற்பனை. இறந்தகாலமே மெய். நம்மால் எண்ணியோ பேசியோ மாற்றிவிடமுடியாத புறம் அது. அதன் நெறிகளை மட்டுமே கருதுக! அதையே அறிந்தோர் செய்வார்கள்.”

அவர்கள் யுதிஷ்டிரனின் குடிலை அடைந்தபோது வாயிலில் யுயுத்ஸு அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அவர்களை வந்து எதிர்கொண்டு “மூத்தவர் காத்திருக்கிறார். நீர்க்கடனுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன… அவர் சற்று பதற்றத்தில் இருக்கிறார். யாதவ அரசிக்கு ஏதோ ஆகிவிட்டிருக்கிறது. அது என்னவென்று அறிந்துவர மூத்தவர் அர்ஜுனன் நேரில் சென்றிருக்கிறார். என்ன நிகழவிருக்கிறதென்று எவருக்கும் தெரியவில்லை… சுருக்கமாகவே பேசிக்கொள்ளுங்கள்” என்றான். சுகோத்ரன் “ஆம்” என்றான். “நான் பேசுகிறேன்” என்று உஜ்வலன் சொன்னான். “சுருக்கமாகப் பேசுவது என் வழக்கம்… பேசிப்பேசி நான் சுருக்கிக்கொள்கிறேன்.”

அவர்கள் குடிலுக்குள் நுழைந்தார்கள். உள்ளே யுதிஷ்டிரன் மட்டும் தரையிலிட்ட பாயில் அமர்ந்திருந்தார். சிறிய மூங்கில்மேடையில் சுவடியை வைத்து படித்துக்கொண்டிருந்தார். ஏழு நெய்த்திரி இட்ட விளக்கு மலர்க்கொத்துபோல் அசைவிலாச் சுடர்களுடன் நின்றிருந்தது. அவர் நிமிர்ந்து நோக்கியபோது சுகோத்ரனை அடையாளம் காணவில்லை. அவருக்கு வருகையை அறிவித்திருந்தபோதும் உள்ளம் அதை தொடவில்லை. யுயுத்ஸு முன்னால் சென்று “இளைய பாண்டவர் சகதேவனின் மைந்தர் சுகோத்ரன் வந்துள்ளார். அவருடைய சாலைமாணாக்கரான உஜ்வலன் உடனிருக்கிறார்” என அறிமுகம் செய்தான்.

யுதிஷ்டிரன் புன்னகையுடன் சுகோத்ரனை நோக்கி வருக என கைகாட்டினார். அவர்கள் அருகே சென்றனர். சுகோத்ரன் குனிந்து யுதிஷ்டிரனின் கால்களைத் தொட்டு வணங்கினான். யுதிஷ்டிரன் “நீளாயுள் கொள்க! நிறைவுறுக!” என வாழ்த்தினார். உஜ்வலனை வணங்கி “உத்தமரே, இங்கே தங்கள் வருகை சிறப்புறுக!” என்றார். உஜ்வலன் அவரை கை தூக்கி வாழ்த்தினான். “இன்று மாலைதான் வந்து இறங்கினார்கள், மூத்தவரே. இரவு கடந்ததும் நீர்க்கடனுக்குரிய நேரம் உருவாகிவிடும் என்பதனால் இப்போதே வந்திருக்கிறார்கள்” என்றான் யுயுத்ஸு.

யுதிஷ்டிரன் சற்றே சலிப்புடன் “இன்றுவரை இந்நிகழ்ச்சி நடைபெறுமா என்ற ஐயம் நீடிக்கிறது. தடைகள் எழுந்தபடியே உள்ளன… கணித்தளிக்கும்படி உன் தந்தையிடம் கேட்டேன். அவனால் அவனுடைய ஊழை கணிக்கவியலாது என்றான்” என்றார் யுதிஷ்டிரன். “நீ கணிக்க முடியுமா பார்” என்று சுகோத்ரனிடம் சொன்னார். சுகோத்ரன் “இது என் ஊழும்கூட” என்றான். யுதிஷ்டிரன் “ஆம்” என்றார். உஜ்வலன் “அவருடைய ஊழை முடிவுசெய்யவேண்டிய தருணம் இது… அரசே, சுகோத்ரன் நாளை தன் மூதாதையருக்கும் உடன்பிறந்தாருக்கும் நீர்க்கடன் செய்யவிருக்கிறாரா?” என்றான். “ஆம், செய்யவேண்டியதுதான்… அதற்காகவே அவன் அழைக்கப்பட்டான்” என்றார் யுதிஷ்டிரன்.

“எனில் எவ்வண்ணம்? அஸ்தினபுரியின் இளவரசனாக கங்கணம் அணிந்துகொண்டா?” என்று உஜ்வலன் கேட்டான். “அதெப்படி? அவன் இன்னமும் தன் கல்விநிலையின் புரிநூலை கழற்றவில்லையே” என்றார் யுதிஷ்டிரன். “அதை கழற்றிவீசலாம். அவர் ஷத்ரியர்… அவருக்கு அப்படி நெறியெல்லாம் இல்லை” என்றான் உஜ்வலன். “அஸ்தினபுரியின் எஞ்சிய ஒரே இளவரசன் என்னும் நிலையில் அவருக்கு உரிமையுள்ளது அந்தக் கங்கணம்.” யுதிஷ்டிரன் விழிகள் மாறுபட உஜ்வலனை நோக்கி “இதைச் சொல்லவா வந்தீர்கள்?” என்றார். “ஆம், இது என் கடமை என்றே வந்தேன்” என்றான் உஜ்வலன்.

யுதிஷ்டிரன் சுகோத்ரனிடம் “நீ கல்விநிலைக்குச் செல்கையில் துறந்துசென்றாய் என எண்ணிக்கொண்டேன். இல்லை எனில் நீயே அம்முடிவை எடுக்கலாம். எனக்கு மாற்றுச்சொல் இல்லை” என்றார். சுகோத்ரன் சில கணங்கள் எண்ணிவிட்டு “நான் நாளை அந்த முடிவை சொல்கிறேன், தந்தையே” என்றான். “நாளை காலைக்குள் சொல்” என்றார் யுதிஷ்டிரன். சுகோத்ரன் தலைவணங்கி “ஆம்” என்றான். உஜ்வலன் “நாங்கள் வெளியே சென்று கலந்தாடி உடனே கூட வந்து சொல்லமுடியும்” என்றான். “இல்லை, பொழுதிருக்கிறது” என்றார் யுதிஷ்டிரன்.

தௌம்யரின் மாணவர்கள் இருவர் ஆணை கேட்க வெளியே வந்து நிற்பதாக ஏவலன் வந்து சொன்னான். யுதிஷ்டிரன் அவர்களை கையசைவால் உள்ளே அழைக்க சுகோத்ரனும் உஜ்வலனும் வணங்கி வெளியேறினர். வெளியே வந்ததுமே உஜ்வலன் “என்ன சொன்னீர்கள் என எண்ணித்தான் கூறினீர்களா? நாவில் உளம் அமையாத நீங்கள் கற்ற நிமித்தநூல்தான் என்ன?” என்று சீறினான். “நீங்கள் உறுதியாக ஏதும் சொல்லவில்லை என்பதே பிழையான ஒரு குறிப்பு. நாடு கைகொள்பவருக்கு முதலில் தேவை உறுதி…” என்றான்.

“நான் நாடு கைக்கொள்வேனா என்று சொல்லத் தெரியவில்லை” என்றான் சுகோத்ரன். “உங்கள் உள்ளம் நிமித்தநூலில் சிக்கிக் கிடக்கிறது. முதலில் அதை மறந்துவிடுங்கள்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் “என் இயல்பு அவ்வண்ணம் போலும்” என்றான். “இல்லை, அதில் நீங்கள் இறக்கிவிடப்பட்டிருக்கிறீர்கள். அது ஒரு சூழ்ச்சி என்றே எண்ணத்தோன்றுகிறது. எத்தனை நம்பிக்கையுடன் அரசர் ஆணையிடுகிறார், நாளை வரை பொழுதுள்ளது என்று. என்ன பொருள் அதற்கு? அவர் அறிந்திருக்கிறார், இதிலிருந்து மீள்வது எளிதல்ல என்று. ஷத்ரியரே, ஒன்று அறிக! மானுடன் தன் ஊழிலிருந்தும் உறவிலிருந்தும்கூட விடுபடலாம். தான் கற்றறிந்தவற்றிலிருந்து விடுபடுவது மிகமிகக் கடினம்…”

“ஏனென்றால் தானறிந்த கல்வி தான் அறிந்தது என்பதனாலேயே தன்னுடையதாகிவிடுகிறது. தன்னுடையது எதையும் நம்பிச் சூடிக்கொள்வதும் அதன்பொருட்டு நிலைகொள்வதும் மானுட இயல்பு. தான் அடைபட்ட கூண்டை தன் உடைமை என விலங்குகள் நினைக்கும் என்பார்கள்… மீறுக, வெளிவருக! அறிவென்பது கூண்டு. மெய்யறிவு என்பது அதிலிருந்து வெளியேறுவது” என்றான் உஜ்வலன். “வெளியேற ஒரே வழிதான். தன்னை கிழித்துக்கொண்டு அனைத்தையும் உடைத்துக்கொண்டு வெளியே பாய்தல். கணநேரத்தில் வெடித்தெழுதல். அறிவின் கூண்டில் இருந்து அறிவைக்கொண்டு வெளியேறலாம் என எண்ணும் அறிவின்மைதான் அறிவு அளிக்கும் மாயைகளில் முதன்மையானது. அறிந்து அறிந்து எவரும் அறிவை கடக்க முடியாது. அறிவைக் கடத்தல் என்பது ஓர் அறிதல்நிலை அல்ல. அது ஒரு மீறல். ஓர் ஆதல். வேறேதும் அல்ல.”

குடில்வரை அவர்கள் பேசிக்கொண்டே சென்றார்கள். உஜ்வலனால் பேசாமலிருக்க முடியவில்லை. அடுத்தநாள் செய்யவேண்டியவை என்னென்ன என அவன் சொற்களாலேயே வகுத்துக்கொண்டிருந்தான். அவர்கள் குடிலை அடைந்தபோது அவன் பேசிக் களைத்திருந்தான். உணவு உண்டபின் உடனே படுத்து அவன் துயில்கொள்ளலானான். சுகோத்ரன் திண்ணையில் இருளை நோக்கியபடி மடிமேல் கைகோத்து அமர்ந்திருந்தான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 51

பகுதி எட்டு : விண்நோக்கு – 1

ஹம்சகுண்டத்திலிருந்து சுகோத்ரன் கிளம்பியபோது அவனுடன் அவனுடைய இளைய சாலைமாணாக்கனாகிய உஜ்வலன் மட்டுமே இருந்தான். எட்டாண்டுகளுக்கு முன்பு அவன் அங்கே நிமித்தநூல் கற்கும்பொருட்டு வந்தபோது இளையவனாக அறிமுகமானவன். நிமித்தநூல் ஆசிரியரான ஃபலோதகரின் குருநிலையில் அவன் மட்டுமே ஷத்ரியன். பிற அனைவருமே நிமித்தநூல் நோக்கும் சூதர் குடியைச் சேர்ந்தவர். ஃபலோதகரும் சூதர்தான். ஆகவே அவனுக்கு அங்கே ஓர் அயல்தன்மை இருந்தது. அவனை பிற மாணவர்கள் மதிப்புடன் வணங்கி அகற்றினர். அங்கே உஜ்வலன் மட்டுமே அந்தணன். அவனும் விலக்கை உணர்ந்திருக்கவேண்டும். அதுவே அவர்களை இணைத்தது.

சுகோத்ரன் மிகக் குறைவாகவே பேசும் வழக்கம் கொண்டிருந்தான். உஜ்வலன் அவனுடன் பேசிக்கொண்டே இருப்பான். அவன் வெண்ணிறமான சிறிய உடலும் செந்தளிர் காதுகளும் கொண்டிருந்தான். மழிக்கப்பட்ட தலையில் சிறுகுடுமி சுருட்டிக் கட்டப்பட்டிருந்தது. சிவந்த உதடுகள். நீலம் கலந்த கண்கள். தாவித்தாவி நடக்கும் இயல்பு. அவன் குரல் சிறிய பறவையின் ஓசைபோல இடைவிடாது ஒலிப்பது. சுகோத்ரன் உயரமானவன். கரிய நிறம் கொண்டவன். அவன் கைகளிலும் கால்களிலும் மயிர்ப்பரவல் செறிந்திருந்தது. ஆறாண்டுகளுக்கு முன்னரே அவனுக்கு அடர்ந்த மீசையும் தாடியும் வந்துவிட்டிருந்தன. அவன் குரலும் கார்வை மிக்கதாக ஆகியிருந்தது. பேசும்போது அவனுடைய குரல்வளை ஏறியிறங்கியது. உஜ்வலன் குரல் எப்போதும் தன்னைச் சுற்றி ஒலிப்பதாகவே சுகோத்ரன் உணர்ந்தான்.

ஆசிரியர் ஃபலோதகரே ஒருமுறை அவனிடம் “நிமித்திகன் சொற்களை வீணடிக்கலாகாது. சொற்களில் திகழும் ஆழமே அவனுடைய ஊழ்கத்தின் களம். சொற்களை அளைபவன் ஆழத்தை இழக்கிறான்” என்றார். “என்னால் பேசாமலிருக்க முடியவில்லை. நான் என் இல்லத்தில் அன்னையிடம் ஓயாது பேசிக்கொண்டே இருந்தவன்” என்று உஜ்வலன் சொன்னான். “எனக்கு நிமித்தநூலில் ஆர்வமில்லை. ஆனால் மாளவத்தில் முதன்மை அமைச்சராக ஆகவேண்டிய தகுதிகளில் ஒன்று நிமித்தநூல் தேர்ந்திருப்பது. ஆகவே எந்தை என்னை இங்கே அனுப்பினார்.”

“பதினைந்து அகவைக்குப் பின்னரே நெறிநூல்களும் பின்னர் அரசநூல்களும் கற்கவேண்டும். இருபத்தி ஒன்றாம் அகவையில் அமைச்சராக நுழைந்து இருபத்தொரு ஆண்டுகள் ஏழு அமைச்சுநிலைகளில் பணியாற்றி நற்பெயர் ஈட்டிய பின்னரே முதன்மை அமைச்சராக முடியும். நான் தலைமை அமைச்சராக ஆகவேண்டும் என்பது தந்தையின் விழைவு. அதற்கு ஊழ் வேண்டும். நமக்கு முன்னாலிருக்கும் ஒரு சில அமைச்சர்களின் வாழ்க்கை வழியிலேயே முடியவேண்டும். ஆனால் அதற்கு வழியில்லை. அமைச்சர்களுக்கு நீளாயுள் என்பது மரபு” என்று அவன் சொன்னான். “உண்மையில் நிமித்தநூல் கற்றுத்தெளிந்தபின் நான் அத்தனை அமைச்சர்களின் வாழ்நாளையும் கணித்துப் பார்க்கவிருக்கிறேன். என் தந்தை உட்பட.”

சுகோத்ரன் அவன் பேச்சை விரும்பினான். ஆனால் எதிர்வினை ஆற்றுவதில்லை. உஜ்வலன் அதை பொருட்படுத்துவதுமில்லை. “நிமித்தநூலால் ஏதேனும் பயன் உண்டா என்பதே ஐயமாக இருக்கிறது. ஐயங்களை ஆறுதல்களாக ஆக்கிக்கொள்ளும் சில சொற்களை பயில்தலையே நிமித்தநூல் என்கிறோமா?” சுகோத்ரன் புன்னகைத்தான். “தங்கள் தந்தை நிமித்தநூல் தேர்ந்தவர். அதனாலென்ன? அவரால் அந்தக் குலத்தின் பூசலை சற்றேனும் தடுக்க முடிந்ததா என்ன? அவர் தன்னுடைய துயரையாயினும் குறைத்துக்கொண்டாரா? எதையும் எதுவும் செய்ய இயலாதென்றால் நிமித்தநூல் எதற்காக?” சுகோத்ரன் அதற்கும் புன்னகையையே அளித்தான்.

உஜ்வலன் அவனருகே நெருங்கி “சொல்லுங்கள் ஷத்ரியரே, நீங்கள் நிமித்தநூல் கற்கவந்தது எதன்பொருட்டு?” என்றான். “அதை நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக முடிவுசெய்கிறேன். ஆகவே சொல்லவேண்டியதில்லை என்பதே என் எண்ணம்” என்றான் சுகோத்ரன். “நீங்கள் அதைக் கற்பதற்கு வந்தது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. நிமித்தநூலின் பயன் என்பது அச்சத்தை அகற்றுவது. அச்சத்தை அகற்ற மிகச் சிறந்த வழி என்பது பொய்யே. ஏனென்றால் மெய் என்பது அச்சமூட்டுவது. இப்புடவியின் பேருரு, இதன் சிக்கலின் முடிவின்மை, காலமென்னும் எண்ணத்தொலையா பெருக்கு… எவருக்கும் அச்சம் இருக்கத்தான் செய்யும். இங்கே உயிர்களில் திகழும் முப்பெரும் உணர்வுகள் பசி, காமம் மற்றும் அச்சம்” என்றான் உஜ்வலன். “காமத்துக்கு காவியம். பசிக்கு அறநூல். அச்சத்துக்கு நிமித்திகம் என பொய்களை வகுத்து ஆறுதல்படுத்தியிருக்கிறார்கள் முன்னோர்.”

“நிமித்திகர் அரசர்கள் தெய்வங்கள் மேல் கொண்டுள்ள அச்சத்தை களையவேண்டும். குடிகளுக்கு அரசன் மேலுள்ள அச்சத்தை களையவேண்டும். அதற்கு அவர்கள் அரசர்களையும் குடிகளையும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கவேண்டும். அவர்களின் அச்சங்களைப் புரிந்துகொண்டு அவற்றை தொகுக்கவேண்டும். அதன்பொருட்டே அவர்கள் வாழவேண்டும். ஆகவேதான் நிமித்திகம் என்பது குலத்தொழில் என வகுத்தனர். அது நன்று. குலத்தொழிலைச் செய்பவர்கள் பிறிதொன்று அறிவதில்லை. இளம் அகவையிலேயே இயல்பாக அதை நோக்கி வந்துவிடுகிறார்கள். முட்டை விரித்து எழுந்த ஆமைக்குஞ்சு கடலை நோக்கிச் செல்வதுபோல. ஆகவே அவர்களுக்கு ஐயமிருப்பதில்லை. அதை ஒரு வாழ்க்கையென இயற்றி மறைகிறார்கள்.”

ஐயமில்லாது ஒலிக்கும் சொல்லையே அரசரும் குடிகளும் நாடுகிறார்கள். நிமித்தநூல் தேரும்போது அவர்களின் விழிகளை நான் நோக்கிக்கொண்டிருப்பேன். அவர்கள் நிமித்திகரின் கண்களையே நோக்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் நடிக்கிறார்களா பொய்  சொல்கிறார்களா என்று நோக்குவார்கள். கண்கள் பொய்யை காட்டிக்கொடுத்துவிடும். நம் கண்களை நோக்கி அமர்ந்திருக்கும் ஒருவரிடம் நம்மால் பொய் சொல்லமுடியாது. பொய்யை தானே நம்பிச் சொல்லும் நிமித்திகனே சிறந்தவன். அதற்கான பயிற்சியே நிமித்தநூல் கல்வி என்பது.

எண்ணுக, ஏன் இத்தனை நூல்கள்? ஏன் இவ்வளவு பயிற்சிகள்? இந்தக் களம், இந்தக் கவிடி? இந்தப் பிறவிநூல்கள் எல்லாம் எதன்பொருட்டு? நாம் ஒன்றை நம்பவேண்டுமென்றால் அதை புறவயமாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அகவயமான ஒன்றை நம்மால் நம்ப முடியாது. ஏனென்றால் நாம் எனும் விலங்கு புலன்களால் தொட்டறியாத எதையும் ஆழத்தில் மறுத்துக்கொண்டே இருக்கும். ஆகவே தெய்வங்களை கல்லுருவாக்குகிறோம். நெறிகளை நூல்களும் அடையாளங்களும் ஆக்குகிறோம். நெறிநூல்களுக்கு பொன்னில் சரடு அமைப்பது ஏன் என்று நான் ஒருமுறை தந்தையிடம் கேட்டேன். அதை பார்க்கையிலேயே அது ஒரு தெய்வச்சிலை என்று தோன்றவேண்டும் என்றார்.

“முற்காலங்களில் நெறிகளை கல்லில் பொறித்துவைத்தனர். ஏனென்றால் கல்லில் திகழ்வன எல்லாமே தெய்வம் என நம்பினர். இன்று ஏடுகள் அந்த இடத்தை அடைந்துவிட்டன. தொன்மையான ஏடு என்றால் மேலும் பெருமை உடையது. அதை படிக்கவே முடியலாகாது. ஏடு பழுத்து தொட்டால் உதிர்ந்துவிடவேண்டும். எழுத்துக்கள் மங்கிவிட்டிருக்கவேண்டும். மொழியே அயலாக இருந்தால் மேலும் நன்று. நெறியுரைக்க எப்போதும் ஒரு முதுமுதியவரை அவைக்குக் கொண்டுவருவது மாளவநாட்டு வழக்கம். அவர் ஐம்புலன்களும் மங்கலடைந்து இங்கிருந்து பெரும்பாலும் மறைந்துவிட்டவராகவே இருப்பார். என்ன ஏது என புரிந்துகொள்ளும் திறனை இழந்துவிட்டிருப்பார். ஆனால் அவர் ஒரு சிலை. தசையில் எழுந்த தெய்வச்சிலை. ஆகவே அவர் அவையில் அமர்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னால் அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். விந்தைதான். இங்கே நெறிகளை நிலைநாட்டுவன பெரும்பாலும் தனக்கென பொருளில்லாத வெற்றுப் பொருட்கள்… நான் என்ன சொல்லவந்தேன்?”

சுகோத்ரன் புன்னகைத்தான். “எப்போதுமே இப்படித்தான் சொல்லவருவனவற்றிலிருந்து விலகிச்செல்கிறேன்… ஆனால் விலகிச்செல்கையிலேயே நான் சொல்லவேண்டியவற்றை கண்டடைகிறேன்” என்றான் உஜ்வலன். “நான் சொல்லவந்தது இதுவே. நிமித்தநூல் என்பது அரசனும் மக்களும் கொண்ட அச்சங்களை களையும்பொருட்டு அளிக்கப்படும் உளமயக்கு. பொய் என்று சொன்னால் சற்று கூர்மையாக உள்ளது. உளமயக்கு என்பது மேலும் சரி. வலிகொண்டவர்களுக்கு உளமயக்கு அளிப்பது நலம் பயப்பது என மருத்துவர் சொல்கிறார்கள். அதுவன்றி பிறிதல்ல. அதை கேட்பவர் ஐயமில்லாது ஏற்கும்வண்ணம் சொல்வதற்கான பயிற்சியையே நிமித்தநூல் கற்றல் என்கிறோம். அவர்களிடமிருக்கும் அச்சத்தின் வகை அறியவேண்டும். அதற்குரிய சொற்களை சொல்லவேண்டும்.”

“மக்கள் மூவகை அச்சங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். தெய்வம், புறப்பொருட்கள், மானுடர் ஆகியோர் அளிக்கும் அச்சங்கள் என்கின்றன நூல்கள். நான் அதை மேலும் விரித்துக்கொள்வேன். தெய்வம் அளிக்கும் அச்சம் மூவகை. நிலையாமை, உட்பொருளில்லாமை, அறியமுடியாமை. இங்குள்ள ஒவ்வொன்றும் இவ்வண்ணம் தன்னைக் காட்டி மறுகணமே மாறிக்கொண்டிருப்பதை மானுடர் காண்கிறார்கள். மாறிக்கொண்டிருப்பவை காட்டும் எக்காட்சியும் மெய்யல்ல. ஏனென்றால் மெய்யென உணரும் கணம் அது தான் காட்டிய நிலையில் இருப்பதில்லை. ஆகவே எதையும் அறியமுடியாது என அவர்கள் உணர்கிறார்கள். அறியமுடியாமை ஏன் நிகழ்கிறது? ஏனென்றால் அறியக்கூடுவது என ஒன்றில்லை. அறியக்கூடுவது என ஒன்றிருந்தால் அது எந்நிலையிலாவது அறியப்பட்டே ஆகவேண்டும். அறியப்படவே இல்லை என்பதே அறிபடுமெய் என ஒன்றில்லை என்பதற்கான அறுதியான சான்று.”

பேசப்பேச உஜ்வலன் ஊக்கமடைந்தான். அவன் குரல் எழுந்தது. அவனுடைய அகவை குறுகிக்கொண்டே சென்றது. சிறுவனுக்குரிய கையசைவுகளும் சிறிய சொற்குழறலும் உருவாயின. “பொருட்கள் அளிக்கும் அச்சம் மிக எளிதானது. நாகம் கடிக்கிறது. பாறை உருண்டு விழுகிறது. வயல்கள் மலடாகின்றன. நதி வறண்டு போகிறது. நோய் வந்து சூழ்கிறது. ஆனால் இவை தெய்வங்களின் கைகளில் படைக்கலங்கள். ஆகவே இவை முதல் துயரின் கண்கூடான வடிவங்கள். ஆகவே மீட்பற்றவை” என்று அவன் சொன்னான். “ஆதிதெய்விகமே ஆதிபௌதிகமாக உருவாகிறது என்று ஒரு வணிகன் அன்று சொன்னான். அனைத்தும் அறிந்திருந்தான். அறிவிலிபோல இங்கே நிமித்தநூல் நோக்க வந்தான்…”

“நான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன? ஆம், ஆதிமானுடம். மனிதர்களால் அளிக்கப்படும் துயர். துயர்களில் முதன்மையாக நாம் அன்றாடம் அறிந்துகொண்டிருப்பது இது. எத்தனை காவியங்கள் விளக்கிவிட்டன! எத்தனை சூதர்கள் சொல்லியும் நடித்தும் காட்டிவிட்டனர்! எத்தனை நெறிநூல்கள் வகுத்துச் சொல்லிவிட்டன! இருந்தும் மானுடர் ஒருவருக்கொருவர் அறியமுடியாதவர்களாகவே நீடிக்கிறார்கள். ஏனென்றால் அதற்கும் ஆதிதெய்விகத்தையே சுட்டுவேன். இங்கே எதுவும் நிலையில்லை. மானுடரும்கூடத்தான். மானுடரைப் பற்றி நாம் அறிவன எல்லாமே அவர்களை நாம் அறியும் அக்கணத்துக்கு மட்டுமே பொருந்துவன. மானுடரை அவர்களின் முந்தைய கணம் வரையிலான வாழ்க்கையைக் கொண்டு புரிந்துகொண்டு மதிப்பிட்டு அடுத்த கணத்தை எதிர்கொள்கிறோம். மானுட உறவு என்பது கருதுவதும் ஏமாற்றம் கொள்வதும் மீண்டும் கருதுவதும் என ஓயாது அசையும் ஊசல் அன்றி வேறில்லை.”

ஆகவேதான் நிமித்தநூல் நமக்கு தேவையாகிறது. மூன்று துயர்களுக்கும் நிமித்தநூல் ஆறுதல் அளிக்கிறது. நிமித்தநூலின் மாபெரும் ஏமாற்றுச்செயல் பொழுது கணித்தல். மானுடன் என்றும் அறியும் ஒரு விந்தை உண்டு. ஒரு கணத்தில் அனைத்தும் மாறிவிடுகிறது. மலையுச்சியில் கால் வழுக்கும் கணத்திற்கு முந்தைய கணம் வரை வாழ்க்கை மற்றொன்று. ஆகவே கணத்தில் இருக்கிறது முடிச்சு. காலத்தின் உள்ளே மறைந்துள்ளன அனைத்து விடைகளும். நான் பலமுறை சொன்னதுண்டு, அறிவிலிகளே. இறந்தகாலத்தில் இல்லை நிகழ்காலம். நிகழ்காலம் எதிர்காலத்தை கருக்கொள்வதுமில்லை. அவ்வாறு எண்ணத்தலைப்படுவதே இப்புவியில் நாம் கொள்ளும் மாயம். இறந்தகாலம் தன்னை நிகழ்காலத்தினூடாக எதிர்காலமாக ஆக்கிக்கொள்கிறது எனில் காலமெனும் ஒழுக்கே நிகழவேண்டியதில்லையே. ஆம், சிறு மாறுதல் ஒன்று நிகழலாம் என்பார்கள். எனில் அந்த மாறுதல் மட்டுமே வாழ்க்கை என்று நான் சொல்வேன்.

காலக்கணம் குறித்த அந்த அச்சத்தை நிமித்தநூல் தன் படைக்கலமாகக் கையாள்கிறது. ஷத்ரியரே, எண்ணிநோக்குக! நம் மக்கள் கருதிக்கொள்வது என்ன? ஒன்று ஒரு கணத்தில் நிகழ்கிறது. ஏனென்றால் அக்கணமே அதன் பீடம். அதற்கு முந்தைய கணத்திலோ பிந்தைய கணத்திலோ அது இல்லை. ஆகவே நாம் முந்தைய கணத்திலோ பிந்தைய கணத்திலோ இருந்துவிட்டால் அந்நிகழ்வை ஒழியலாம். ஒரு கணம் முன்னதாக தலையை தாழ்த்திவிட்டால் வெட்ட வந்த வாள் கழுத்தை தவறவிடும். ஒரு நாழிகை முன்னதாகச் சென்றால் போர்த்தோல்வி கடந்துசென்றுவிடும். ஒரு நாள் முன்னதாக தொடங்கிவிட்டால் கெடுநிகழ்வு ஒன்று அதன் பெறுநரைக் காணாமல் திகைத்து அப்பால் சென்றுவிடும். என்ன ஒரு பொருளில்லாத நம்பிக்கை! ஆனால் காலந்தோறும் இதை நம்பியே நிமித்தநூல் இயங்கிக்கொண்டிருக்கிறது. பொழுது கணித்தளிப்பதற்காகவே நிமித்திகர் உலகமெங்கும் உள்ளனர்.

நிமித்தநூல் பயில்தல் அக்குலத்தாருக்கு வாழ்க்கை. அவர்கள் சொல்கேட்பவர்களுக்கு அது ஆறுதல். அந்தணருக்கும் ஷத்ரியர்களுக்கும் அதனால் என்ன பயன்? அந்தணருக்குப் பயனுண்டு, நிமித்தநூலின் எல்லைகளை அவர்கள் அறிந்துகொண்டால் நிமித்திகர்களை எங்கே வைப்பது என்று அறிந்துகொண்டதுபோல. நிமித்திகர் நிறுத்தும் இடத்திலிருந்து தொடங்குகிறது அந்தணரின் பணி. நிமித்திகர் இவை இவ்வண்ணம் வகுக்கப்பட்டுள்ளது எனவே இவற்றை இவ்வண்ணமே எதிர்கொள்ள முடியும் என்கிறார்கள். நன்று என்கிறான் அந்தணன். தன் மதிசூழ்கையால் நிகழ்வனவற்றை ஆள்கிறான். வருவனவற்றை வகுக்கிறான். அவனே அமைச்சன். ஆனால் ஷத்ரியர் நிமித்தநூல் கற்று ஆகப்போவது என்ன?

நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள் என எனக்கும் புரியவில்லை. அஸ்தினபுரியில் எழவிருக்கும் பெரும்போர் ஒன்றை உங்கள் தந்தை முன்கண்டு உங்களை இங்கே அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அது வெற்றுச்சொல்லாகக்கூட இருக்கலாம். இங்கே சொல்பவர்கள் எவரும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அல்ல. அச்சத்தால் வருபவரும் அல்ல நீங்கள். ஆனால் உங்கள் மேல் இங்கே எந்த மதிப்பும் இல்லை. தன் இயல்பு வழுவிய எவரையும் பொதுஉள்ளம் மதிப்பதில்லை. ஷத்ரியரே, நீங்கள் கடந்து செல்லவேண்டியது இதைத்தான். இந்த நிமித்தக்கல்வியை. இதனூடாக உங்கள் அகத்தே திரண்டுள்ள ஐயங்களையும் தயக்கங்களையும். அதன் பின்னரே உங்களை நீங்கள் கண்டடைவீர்கள்.

உஜ்வலன் உரத்த குரலில் “நான் இதை முன்னரும் பலமுறை சொல்லியிருக்கிறேன். நிமித்தக்கல்வி உங்களை செயலற்றவர் ஆக்கியிருக்கிறது எனில் அதை உதறி செயலூக்கம் கொள்க! செயலே ஷத்ரியனின் விடுதலைக்கான வழி என்கின்றன நூல்கள்…” சுகோத்ரன் புன்னகைத்து “எந்நூல்கள்?” என்றான். “நெறிநூல்கள்” என்றான் உஜ்வலன். “அவற்றைத்தானே சற்றுமுன் வேறுவகையான பொய்கள் என்றீர்?” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் திகைத்து பின் புன்னகைத்து “ஆம், நான் பேசிப்பேசி என்னையே தோற்கடித்துக்கொள்கிறேன்” என்றான். “ஆம், நீரே நீர் கேட்பன அனைத்துக்கும் மறுமொழியும் சொல்லிவிடுகிறீர்” என்றான் சுகோத்ரன்.

 

அவர்கள் முக்தவனத்திற்குக் கிளம்பவேண்டும் என்ற ஆணை வந்தபோது அவன் தன் குடிலில் இருந்தான். உஜ்வலன் நீளமாக பாடியபடி நூல் ஒன்றை நோக்கெழுதிக் கொண்டிருந்தான். சுகோத்ரன் வெளியே மரங்கள் காற்றிலாடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். ஏவலன் அந்த ஆணையை அளித்ததும் சுகோத்ரன் மஞ்சத்திலிருந்தே கிளம்பினான். “எங்கே?” என்றான் உஜ்வலன். “முக்தவனத்திற்கு…” என்றான் சுகோத்ரன். “ஆம், நீங்கள் செல்லவேண்டியிருக்கும் என்றனர். ஆனால் உடனே இப்படியே செல்வதா?” என்றான் உஜ்வலன். “இப்படியே செல்லவேண்டியதுதான். எனக்கு இங்கே ஏதும் இல்லை” என்றான் சுகோத்ரன். “எந்தையர் என்னை இங்கே அனுப்பியதே இதற்காகத்தான் என நினைக்கிறேன்.” அவன் தன் ஏட்டுக்கட்டை எடுத்துக்கொண்டான். “அது எதற்காக?” என்று உஜ்வலன் கேட்டான். “இது எந்தை எனக்கு அளித்த தொல்நூல். சூரியதேவரின் பிருஹதாங்கப் பிரதீபம்” என்றான் சுகோத்ரன். “இதைப்பற்றித்தான் நான் ஏதோ சொன்னதாக நினைவு” என உஜ்வலன் முணுமுணுத்தான்.

அவர்கள் ஃபலோதகரின் மையக்குடிலை அணுகினர். அங்கே நின்றிருந்த சூதர்குலத்து இளைஞர்கள் தலைவணங்கி விலகி நின்றனர். அவர்கள் வழியாகச் செல்லும்போது சுகோத்ரன் தன் உடலெங்கும் நோக்குகளை உணர்ந்தான். இவர்கள் அனைவருக்கும் இன்னும் பல தலைமுறைகள் தொடர்ந்து பயிலவேண்டிய ஒரு பெருநூல் என குருக்ஷேத்ரம் திகழும் என நினைத்துக்கொண்டான். நிமித்திகரும் கணியரும் புலவரும் ஆட்டரும் விறலியருமாக சேர்ந்து அதை எழுதி விரிப்பார்கள். அது விரிந்து பெருகி ஒரு அழியா நிலம் என ஆகி நின்றிருக்கும். அதில் வருந்தலைமுறைகள் வாழ்வார்கள். அங்கே அந்தப் போர் ஒருகணமும் ஒழியாது நிகழ்ந்துகொண்டிருக்கும்.

ஃபலோதகர் குடிலுக்குள் இருந்தார். அவர் முன் கற்றுச்சொல்லி அமர்ந்திருந்தான். அவன் உள்ளே சென்று வணங்கி “எனக்கான அழைப்பு வந்துவிட்டது” என்றான். அவர் அவனை கூர்ந்து நோக்கினார். அவர் மலைமகன்களில் இருந்து வந்தவர். மஞ்சள் முகம் சுருக்கங்கள் செறிந்திருந்தது. சிறிய கண்கள். வாய் சுருக்கிக் கட்டப்பட்ட பட்டுப் பைபோல. அவர் “நீ மீளவேண்டும்” என்றார். அவன் தலைவணங்கினான். “மீளவேண்டும் என்பதை உன் தெரிவாகவே வைத்துக்கொள்” என்று மீண்டும் அவர் சொன்னார். “ஆம்” என்று அவன் சொன்னான். அவர் அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார்.

உடன் உஜ்வலனும் வந்து வணங்கினான். அவர் சிறு ஒவ்வாமையுடன் நோக்கி “நீ எங்கே செல்கிறாய்?” என்றார். “அவருக்கு துணையாக… இங்கும் அவருக்கே துணையாக இருந்தேன்” என்றான் உஜ்வலன். “ஒரு கணக்கில் நன்று. அமைச்சர் எவரும் அறியவேண்டியவையே அங்கு நிகழவிருக்கின்றன. நீ செல்லலாம்” என்றார் ஃபலோதகர். உஜ்வலன் அவரை வணங்கி “அங்கே நிகழ்வனவற்றில் அமைச்சர்கள் கற்றுக்கொள்ள என்ன உள்ளன என்று அறியேன். நிமித்திகர்கள் கற்றுக்கொண்டதை மறப்பதற்கான இடம் அது” என்றான். அவர் முதற்கணம் சீற்றம் கொண்டாலும் உடனே நகைத்து “நன்று, அதுவே நிகழ்க!” என அவனை வாழ்த்தினார்.

படகுத்துறை வரை அவர்கள் நடந்தே வந்தனர். “நாம் ஏன் நடக்கவேண்டும்? நிமித்திகர் மஞ்சலில் ஏறலாமே” என்றான் உஜ்வலன். “நாம் இன்னமும் நிமித்திகர் ஆகவில்லை. நம் கல்விநிறைவை ஆசிரியர் அறிவிக்கவில்லை” என்றான் சுகோத்ரன். “ஏன் அவரிடம் கேட்டிருக்கலாமே? மெய்யாகச் சொல்கிறேன். இன்று அவரிடமிருந்து நீங்கள் கற்றறிய ஏதுமில்லை. நூல்களை அவர் உங்களிடமே கேட்டுக்கொள்கிறார். நூற்பொருளும் பல தருணங்களில் நீங்களே உரைக்கிறீர்கள்…” என்றான் உஜ்வலன். “நம் கல்விநிறைவை நாம் முடிவுசெய்ய முடியாது” என்றான் சுகோத்ரன். “நாம் அறிவோம் அல்லவா?” என்று உஜ்வலன் கேட்டான்.

“நாம் அறிவதுமில்லை… நம் ஆசிரியரே அறியமுடியும்” என்றான் சுகோத்ரன். “அவ்வாறல்ல. இந்த குருநிலைக்குப் பெருமையே புகழ்பெற்ற அஸ்தினபுரியின் இளவரசன் இங்கே கல்விபயில்கிறார் என்பதுதான். நீங்கள் இங்கே மெய்யாசிரியனாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து செல்வது உவப்பானதா என ஐயுறுகிறார். ஆகவேதான் தயங்குகிறார்” என்றான் உஜ்வலன். “கேட்டீர்கள் அல்லவா? மீண்டுவருக என்றார். என்ன பொருள் அதற்கு? வந்து இந்தக் குருநிலையிலேயே தொடர்க என்றுதானே?” என்று அவன் கேட்டான். சுகோத்ரன் மறுமொழி சொல்லவில்லை. உஜ்வலன் அவனுடன் நடந்தபடி பேசிக்கொண்டே வந்தான். “மஞ்சலில் செல்வது நன்று. ஆனால் அதைப்பற்றி நான் பேசவில்லை. நான் பேசுவது பிறிதொன்று…”

“நீங்கள் ஏன் திரும்பி வரவேண்டும்? இங்கே இனி கற்பதற்கும் ஒன்றுமில்லை. ஆசிரியர் அமர்ந்த அந்த சிறிய மணைப்பலகையில் அமரவேண்டுமா என்ன? உங்களுக்கு அங்கே அஸ்தினபுரியின் அரண்மனை அல்லவா காத்திருக்கிறது?” சுகோத்ரன் திரும்பி நோக்கவில்லை என்றாலும் அவனில் நிகழ்ந்த எண்ணத்தை உடல் காட்டியது. “ஆம், மெய்யாகவே அஸ்தினபுரியின் அரண்மனை. எண்ணி நோக்குக! இன்று குருகுலத்தில் எஞ்சியிருக்கும் ஒரே இளவரசர் நீங்கள் மட்டுமே… உங்களுக்கு இளவரசுப்பட்டம் கட்டினால் மட்டுமே அஸ்தினபுரியின் குருதிவழி நீடிக்கமுடியும்… வேறுவழியில்லை” என்றான் உஜ்வலன்.

“அவர் என்ன சொன்னார் தெரியுமா? நீங்கள் முடிதுறந்து மீண்டு வரவேண்டும் என்று. ஏன் முடிதுறக்கவேண்டும்? அஸ்தினபுரியின் அரசர் பாரதவர்ஷத்தின்மேல் மும்முடி சூடி அமர்ந்திருப்பவர் அல்லவா? நீங்கள்தான் அந்த முடிக்குரியவர் என ஊழ் முடிவெடுத்திருக்கிறது போலும். இல்லையேல் இவ்வண்ணம் ஏன் நிகழவேண்டும்? அதுதான் ஊழ் என்றால் நாம் ஏன் அதை தவிர்க்கவேண்டும்?” என்று உஜ்வலன் சொன்னான். சுகோத்ரன் அவனை திரும்பி நோக்கவில்லை. அவன் “நான் கேட்கவிழைவதை அங்கே கேட்டிருப்பேன். ஆனால் நாம் கிளம்பவேண்டியிருந்தது. நான் எங்கும் இதை கேட்பேன்… நீங்கள் அஸ்தினபுரியின் அரசர் என்பதை முடிவெடுக்கும்படி யுதிஷ்டிரனிடம் சொல்லவேண்டுமென்றால்கூட எனக்கு தயக்கமில்லை. அந்தணன் எதை அஞ்சவேண்டும்?” என்றான்.

படகில் ஏறி அமர்ந்ததுமே அவன் மடிமேல் கையை வைத்து விழிமூடி அமர்ந்தான். அவன் அருகே அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்த உஜ்வலன் “ஊழ்கத்தில் உங்கள் ஊழ் தெரிகிறதெனில் நன்று… ஒவ்வொன்றுக்கும் நாமறியாத பொருள் உண்டு என்றல்லவா நிமித்தநூல் சொல்கிறது? போர்வெறிகொண்டவர்கள் மாய்ந்தனர். நூல்கற்றவர் அரசேறவேண்டும் என்பதுதான் இந்நிகழ்வுகளின் மெய்ப்பொருள் என ஊழ்கமில்லாமலேயே எனக்குத் தெரிகிறது” என்றான். அவன் சற்றுநேரம் சுகோத்ரனை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் சலிப்புடன் நீர்ப்பரப்பை பார்க்கத் தொடங்கினான்.

ஆனால் நெடுநேரம் அவனால் அவ்வண்ணம் இருக்க இயலவில்லை. “இப்படி நீர்ப்பயணம் செல்கையில் ஒன்று தோன்றுகிறது. நாம் சென்றுகொண்டிருக்கிறோம். இவை எல்லாம் இங்கேயே இருந்துகொண்டிருக்கின்றன. நோக்கி நோக்கி கடந்துசெல்வதையே வாழ்க்கை என கொள்கிறோம். ஒன்றையும் நாம் தக்கவைக்க முடியாது. ஒன்றிலும் நாம் தங்கியிருக்கவும் இயலாது. எல்லாம் வீண்…” அதன்பின் தன் சொற்களின் முரண்பாட்டை அவனே உணர்ந்து “அதற்காக நான் எதையும் பொருளற்றது என்று சொல்லமாட்டேன். எதையாவது பற்றிக்கொள்ளாவிட்டால் நமக்கு வாழ்க்கை இல்லை. பற்றிக்கொள்ள பெரிதாக ஏதேனும் அமைந்தால் ஏன் அதை மறுக்கவேண்டும்?” என்றான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 50

பகுதி ஏழு : தீராச்சுழி – 6

பூர்ணை ஓர் ஒவ்வாமை உணர்வை அடைந்து அது என்ன என்று வியந்துகொண்டிருக்கையிலேயே தொலைவில் சகடத்தின் ஓசையை கேட்டாள். அது என்ன என்று உடனே அவளுக்குப் புரிந்தது. பதற்றத்துடன் எழுந்து நின்றாள். ஏவலன் புரவியிலிருந்து இறங்கி அருகே வந்து “வணங்குகிறேன், செவிலியே… முனிவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். அவள் “அரசியிடம் சொல்வதற்கு முன்னர் இளைய யாதவருக்கு தெரிவிக்கவேண்டும்” என்றாள். “ஆம், அதுதான் என் குழப்பம்… இவரை அழைத்துவரும் செய்தி இங்கே எவருக்கும் தெரியாது… நான் எங்கே கொண்டுசெல்வது?” என்றான் ஏவலன்.

பூர்ணை ஒருகணம் எண்ணிவிட்டு “நேராக கங்கைக்கரைக்கே கொண்டுசெல்லுங்கள். கங்கைப் படித்துறையில் அமரச்செய்யுங்கள்” என்றாள். “கங்கைப் படித்துறையிலா? இந்தப் பொழுதில் அங்கே…” என்று ஏவலன் தயங்க “முனிவர்கள் கங்கைப் படித்துறையில் இருப்பதில் விந்தை என ஏதும் தோன்றாது. இங்கு எங்கு அவர் இருந்தாலும் அது நோக்குகளை ஈர்ப்பதாகவே அமையும்” என்றாள். “எனில் நீங்களே அவரை அங்கே அழைத்துச்செல்லுங்கள். நான் சென்று இளைய யாதவரிடம் செய்தியை அறிவித்து வருகிறேன்” என்றான் ஏவலன். பூர்ணை அணுகிவந்த சகடத்தை நோக்கிவிட்டு “ஆகுக!” என்றாள்.

ஏவலன் புரவியில் ஏறி அகன்று சென்றான். அவள் கைகளைக் கூப்பியபடி நின்றிருக்க வண்டி அணுகியது. அதன் நுகத்தில் அமர்ந்திருந்த வண்டியோட்டி அவளைக் கண்டு தயங்க வண்டியை நிறுத்தும்படி அவள் கை காட்டினாள். வண்டி நின்றது. குதிரை செருக்கடித்து பிடரி சிலிர்த்துக்கொண்டது. வண்டியின் பின்பக்கத் திரையை விலக்கியபடி எட்டிப்பார்த்த சடைமுடித்தலைகொண்ட முனிவர் “எவர் என்னை எதிரேற்பது? நீ யார்?” என்றார். அவள் தொழுதபடி அருகணைந்து “நான் சிபிநாட்டு பணிப்பெண்ணான பூர்ணை. என் அரசியின் பொருட்டு தங்களை வணங்கி வரவேற்கிறேன்” என்றாள். “பணிப்பெண்ணா என்னை வரவேற்பது? என்னை அழைத்த யாதவ அரசர் எங்கே?” என்று அவர் கேட்டார்.

“பொறுத்தருள்க, தவத்தாரே! அவர் தங்களை இங்கே சந்திப்பது முறையாகாது என்று பட்டது. மங்கலம் பொலியும் இடங்களில்தான் அரசர்கள் தவமுனிவரை எதிர்கொள்ளவேண்டும் என்பது நெறி… இங்கே நீத்தார்ச்சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சுற்றியிருப்பது காடு. ஆகவே என்ன செய்வதென்று தெரியவில்லை. கங்கை அழியா மங்கலம் கொண்டவள். ஆகவே தங்களை அவர் கங்கைக்கரையில் சந்திக்கலாம் என்று எண்ணினேன்… தங்களை அங்கே அழைத்துச்செல்லலாம் என்று காத்து நின்றேன்” என்றாள் பூர்ணை. “எனக்கு அவ்வகை மங்கலங்கள் ஏதுமில்லை. நான் செய்யும் தவம் வேறு” என்று விகிர்தர் சொன்னார். “எனினும் நன்று. அரசர்கள் தங்கள் மங்கலங்களை பேணிக்கொள்ளவேண்டும். அதுவே நிலம் பொலியச் செய்வது.”

பூர்ணை அவர் கால்கள் படிந்த நிலத்தைத் தொட்டு வணங்க அவர் அவளை தொடாமல் “நலம் சூழ்க!” என வாழ்த்தினார். “வருக, அறத்தாரே!” என அவள் அவரை அழைத்த பின் ஓடிச்சென்று புலித்தோல் சுருள் ஒன்றை எடுத்துக்கொண்டு கங்கைக்கரை நோக்கி இட்டுச் சென்றாள். அவள் கையசைக்க இளம் ஏவற்பெண்டு ஒருத்தி அவளைத் தொடர்ந்து வந்தாள். கங்கையின் அப்பகுதியில் ஓரிரு ஏவலர்கள் மட்டுமே தென்பட்டனர். அது குடில்களில் தங்கும் பெண்கள் நீராடும் படித்துறைகள் அமைந்த பகுதி. ஏவற்பெண்கள் முன்னரே நீராடிவிட்டிருந்தனர். மறுநாள் புலரிக்கான நீராட்டு தொடங்கப்படவில்லை. மரப்பலகைகள் இடப்பட்ட பாதை வழியாக அவள் அவரை அழைத்துச்சென்றாள். அவருடைய குறடுகள் பலகைகளில் உரசி ஓசையிட்டன. அவருடைய ஒரு கால் சற்று முடம்கொண்டதாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டாள்.

அவர் அரையிருளிலேயே வண்டியிலிருந்து இறங்கினார். பந்தஒளி நோக்கி தன் முகத்தை கொண்டுசெல்லவுமில்லை. ஆகவே அவள் அவரை நிழலுரு போலவே பார்த்தாள். அவருடைய அசைவுகளில் ஓர் ஒத்திசைவின்மை இருந்தது. அவர் ஒரு பந்த ஒளிப்பகுதியை கடந்தபோது நிழல் எழுந்து அவள் முன் தெரிந்தது. அதில் அந்தக் கோணல் மேலும் பெரிதாகத் தெரிந்தது. அவள் உள்ளம் ஒவ்வாமை கொண்டு குமட்டுவதுபோல் உடலே அதிர்ந்தது. அவர் மூச்சிரைத்து நின்று “நெடுந்தொலைவோ?” என்றார். “இல்லை, அருகேதான்” என்றாள். “நீர்ப்பரப்பின் ஒளி அதோ தெரிகிறது.” அவர் “இந்தப் பகுதியே இருண்டு கிடக்கிறதே?” என்றார். அவள் ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். “என் பேச்சுக்கு மறுமொழி இல்லாமலிருப்பதை நான் விரும்புவதில்லை” என்று அவர் சொன்னார். “இங்கே சடங்குகள் ஏதுமில்லை, அறத்தாரே” என்றாள் பூர்ணை.

படிக்கட்டு கங்கைமேல் அறைந்து நிறுத்தப்பட்ட அடிமரங்களின்மேல் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்தது. பூர்ணை அதை அடைந்து முதல் படிமேல் புலித்தோலை விரித்து “அமர்க!” என்றாள். அவர் அமர்ந்தபோது மீண்டும் அந்தக் கோணல் தெரிந்தது. அவருடைய ஒரு கால் குறுகலாக இருந்தது. அவள் அவரை கூர்ந்து நோக்க அஞ்சினாள். “தாங்கள் அருந்துவதற்கு…” என்று அவள் சொல்ல “இன்நீர்… உண்பதற்கும் ஏதாவது” என்றார். “இன்கிழங்குகள் உள்ளன” என்றாள். “ஊனுணவு வேண்டும்… நான் ஊனின்றி உண்பதில்லை” என்றார் விகிர்தர். அவள் “அவ்வாறே” என்றபின் தன்னை தொடர்ந்து வந்த ஏவற்பெண்டிடம் அவருக்கு ஊனும் இன்நீரும் கொண்டுவரும்படி ஆணையிட்டாள்.

“என்னை எதற்காக அழைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் இளைய யாதவரை ஒரே ஒருமுறை தண்டகாரண்யத்தில் சந்தித்திருக்கிறேன்” என்றார். “தாங்கள் நீத்தோருடன் பேசும் ஆற்றல்கொண்டவர் என்றார்கள்” என்றாள். “நீத்தோரிடமா?” என அவர் சிரித்தார். “நீத்தோர் அனைவரிடமும் அல்ல. நீத்து இங்கேயே முந்தைய வாழ்வின் நீட்சி என இருப்போரிடம் மட்டுமே. அவர்கள் உடல்நீத்தோர் மட்டுமே, பிறவிநீத்தோர் அல்ல. இங்கே அவ்வண்ணம் பலநூறுபேர் சூழ்ந்திருக்கிறார்கள்.” பூர்ணை மெய்ப்பு கொண்டாள். “இங்கா?” என சூழவும் நோக்கியபின் “இங்கு அருகிலா?” என்றாள்.

அவர் சற்றே சலிப்புற்ற குரலில் “இங்கென்றால், நாம் அவர்களை எண்ணும் இச்சூழலில் என்று பொருள். அவர்களுக்கு காலமும் இடமும் இல்லை. ஆகவே இங்கென்றும் அங்கென்றும் இல்லை. எண்ணியோர் அருகே இருக்க இயலும். இங்கிருக்கையிலேயே அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ இருக்க இயலும். ஆனால் அவர்கள் உடல்வாழ்வு கொண்டிருந்தபோது இருந்த இடங்களில் மட்டுமே திகழ இயலும்…” என்றார். அவள் பெருமூச்சுவிட்டாள். “பல்லாயிரவர். இங்கே மானுட வாழ்க்கை நிகழத்தொடங்கியபின் இத்தனை உயிரெச்சங்கள் இப்படி வெறும்வெளியில் தவித்து நிறைந்திருப்பதை நான் கண்டதில்லை… கொடியது இப்போர்” என்றார் விகிர்தர்.

இன்நீரும் ஊனுணவும் வந்தது. அவள் அதை வாங்கி அவருக்கு படைத்தாள். அவர் அதன் அருகே அமர்ந்து ஒரு கையை ஊன்றிக்கொண்டார். அவர் உடல் ஒருபக்கமாகச் சாய்ந்திருந்தமையால் அது தேவைப்பட்டது. மெல்லிய முனகலோசையாக நுண்சொற்களைச் சொல்லி ஊனுணவிலும் இன்நீரிலும் சற்று எடுத்து இடப்பக்கமும் வலப்பக்கமும் இட்டார். பின்னர் அள்ளி உண்ணத் தொடங்கினார். அவருடைய நாவோசை கேட்டுக்கொண்டிருந்தது. “மாபெரும் அழிவுகளில் இப்படி நிகழுமென அறிந்திருக்கிறேன். நகர் எரிகொள்கையில், நிலம் நடுங்குகையில், பெருவெள்ளத்தில்… வாழ்வோரால் கைவிடப்பட்டவர்கள் மூச்சுலகில் அலைமோதுவார்கள். இப்போது மூச்சுலகமே திணறும்படி நிறைந்திருக்கிறார்கள்” என்றார்.

“நீத்தார் அனைவரிடமும் நீங்கள் பேசக்கூடுமா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அவர்கள் இங்கே நீர்க்கடன் முடிக்கப்பட்டு நிறைவுகொண்டு ஃபுவர்லோகத்திற்குச் சென்றுவிட்டிருக்கக் கூடாது.” அவள் தாழ்ந்த குரலில் “சூதர் மைந்தர்களுமா?” என்றாள். “ஏன், அவர்களும் உயிர்கள் அல்லவா? அனைத்துயிரும் இச்சுழற்சியிலேயே உள்ளன. ஆனால் பிற உயிர்கள் உடலால் மட்டுமே வாழ்பவை, உள்ளம் உடலின் ஒரு பகுதியென்றே இயங்குபவை. உடலழிந்ததுமே உளம் அழியும் ஊழ்கொண்டவை. மானுடர் உள்ளம்செலுத்தி சித்தம்திரட்டி வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உடலுக்கு அப்பால் எழும் உள்ளம் உள்ளது. உடல் அழிந்த பின்னரும் அது காற்றில் வாழ்கிறது.”

அவர் கைவிரல்களை ஒவ்வொன்றாக நக்கினார். அவள் பெருமூச்சுவிட்டாள். “அவர்கள் நம்மிடம் பேசலாம், நாமும் அவர்களிடம் பேசலாம். இரு உலகுக்கும் நடுவே இருக்கும் அந்தப் படலத்தில் எண்ணியிராது கிழிசல் விழுமென்றால் அது நிகழும். ஆனால் அது தற்செயலாகத்தான் நிகழ்கிறது. மிஞ்சி எழும் உணர்வுகளின் விசையாலும் நிகழலாம். ஆனால் எளியோருக்கு அது எண்ணினால் இயல்வதல்ல” என்றார். “நான் அத்தொழில் கற்றவன். அதை யோகமெனப் பயிலலாம் என்று எண்ணினேன். அது இப்புடவிநெசவின் முடிச்சுகள் சிலவற்றை அவிழ்க்குமென கணக்கிட்டேன்.” அவர் எண்ணியிராக் கணத்தில் உரக்க நகைத்தார். “பின்னர் அறிந்தேன், அவ்வண்ணம் எவரும் இப்புடவிநெசவை அறிந்துவிடமுடியாதென்று. அறிந்து விடுபடுவதைப்போல் பிழையான எண்ணம் வேறொன்றில்லை.”

“பின்னரும் இதை ஏன் தொடர்கிறேன் என்று எண்ணுகிறாயா? அறிந்ததை உதறுவது எளிதல்ல. அதற்கு அறிந்தவை அனைத்தையும் அழிக்கும் பேருணர்வொன்று தேவையாகிறது. அத்திசை நோக்கி என்னால் செல்ல இயலவில்லை. அதற்குத் தடையாக இருப்பது என்ன என்று அறிவாயா?” அவர் சூழ இருந்த இருளை நோக்கி கைவீசி “இவர்கள்… இதோ என்னருகே நின்றிருக்கும் இச்சூத இளைஞன். துயர்கொண்டிருக்கிறான். பேசவிழைகிறான். அவனுக்கான நீர்க்கடனைச் செலுத்தவேண்டியவர் அவன் நீத்தான் என்றே அறியாமலிருக்கிறார்” என்றார். பூர்ணை கைநீட்டி ஒரு சொல் எடுத்து அவரை நோக்கிச்சென்று தன்னை இறுக்கிக்கொண்டாள். அவர் கங்கைநீரில் கைகளை கழுவிக்கொண்டார். கங்கையிலேயே நீரை காறி உமிழ்ந்தார்.

மேலே விளக்கொளி அசைந்தது. இளைய யாதவர் வந்துகொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து சுபத்திரை வருவதை அதன் பின்னரே பூர்ணை கண்டாள். சுபத்திரை தன் தலைமேல் ஆடையை இழுத்துப் போர்த்தியிருந்தாள். இளைய யாதவர் புன்னகைத்துக்கொண்டிருப்பதுபோல அவ்வொளியில் தெரிந்தது. அது அவர் முகத்தின் இயல்பா? அன்றி நோக்குவோர் அதன்மேல் ஏற்றிவைக்கும் மாயையா? அவள் நோக்கிக்கொண்டே நிற்க விகிர்தர் “அவர்தான்… நான் அன்று நோக்கிய அதே வடிவில் இருக்கிறார்” என்று கூவினார். கங்கைவிளிம்பில் இருந்து மேலேறி வந்து கையை உதறியபடி “அவருடைய நோக்கம் என்னவென்று தெரியவில்லை. நீத்தாரிடம் பேச விழைகிறாரா? யாதவர்களில்தான் நீத்தார் மிகுதி. அவர்களைத் திரட்டி நீத்தாரால் ஒரு படைதிரட்ட எண்ணுகிறாரா?” என்றார்.

அவருடைய நகைப்போசை பூர்ணையை நடுங்கச் செய்தது. சுபத்திரை நின்றுவிட்டாள். இளைய யாதவர் சீராக காலடி வைத்து நடந்துவந்தார். அருகணைந்து “வணங்குகிறேன், விகிர்தரே… இத்தருணத்தில் மீண்டும் காண்போம் என அன்றே தோன்றியது” என்றார். “ஆம், அன்று சொன்னீர்கள். புதைந்ததை மீட்டெடுக்க மீண்டும் சந்திப்போம் என்று” என்றார் விகிர்தர். சுபத்திரையை நோக்கி திரும்பிய இளைய யாதவர் “சுபத்திரை, இவர் நான் கூறிய முனிவர். காலச்சுழிப்பை அறிந்தவர். கரைகளைக் கடக்கும் கலை தேர்ந்தவர்” என்றார். விகிர்தர் அதற்கும் பேரோசையுடன் நகைத்தார். சுபத்திரை அவரை முகம் சுளித்து நோக்கியபடி நின்றாள்.

பூர்ணை அப்போதுதான் அவரை முழுமையாக பார்த்தாள். அவர் உடலில் ஒரு பகுதி இன்னொரு பகுதியின் பாதியளவே இருந்தது. கால்கள், கைகள், தோள்கள் அனைத்திலுமே அந்த வேறுபாடு தெரிந்தது. முகமே அதனால் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது போலிருந்தது. ஒரு கண் மிகச் சிறிதாக நோக்கில்லாத செந்நிறக் குழியாக தெரிந்தது. இளைய யாதவர் “முனிவரை வணங்குக!” என்றார். சுபத்திரை முன்னால் வந்து அவரை வணங்க “நிறைவுறுக!” என்றார். அவள் நிமிர்ந்து அவரை நோக்கி “களம்பட்ட என் மைந்தனிடம் பேச உங்களால் இயலுமா?” என்றாள். “அவன் இங்கே இருக்கவேண்டும்… அவனுக்கு நீர்க்கடன் அளிக்கப்பட்டுவிட்டதென்றால் ஃபுவர்லோகம் புகுந்திருப்பான். அங்கே என் குரல் சென்றடையாது” என்றார். “ஃபுவர்லோகத்தில் சிலர் நெடுங்காலம் இருப்பார்கள். சிலர் மறுகணமே கருவறை புகவும்கூடும்.”

“உங்களால் இயலுமா? மெய்யாகவே இயலுமா?” என்று கூவியபடி சுபத்திரை அவர் அருகே மண்டியிட்டாள். “என் மைந்தன் அபிமன்யுவிடம் நான் பேசவேண்டும். அவன் களம்பட்டான். அவனுக்கு நீர்க்கடன் செய்யப்படவில்லை. அவன் இங்குதான் இருக்கிறான். அவனிடம் நான் பேசவேண்டும். அவனிடம் ஒன்று சொல்லவேண்டும்.” விகிர்தர் அவளை இரக்கத்துடன் நோக்குவது போலிருந்தது. “சொல்க, உனக்கு அவனிடம் பேசவேண்டிய தேவை என்ன?” அவள் “நான் அவனிடம் சொல்லவேண்டியது ஒன்று உண்டு. அவன் இங்கே சிக்கிக்கொண்ட சூழ்கை ஒன்றைப்பற்றி… அவனால் அதிலிருந்து வெளியேற இயலவில்லை. அவன் அதை அறிந்தாலே போதும். அறியாமல் அவன் இப்பிறவி நீங்கக்கூடாது” என்றாள்.

“அறிக அன்னையே, நீத்தார் சுமந்து செல்லும் எடை என்பதே இப்பிறவியில் எஞ்சுவதுதான்! அணையாத் துயர்கள், எஞ்சும் வஞ்சங்கள், தவறிய கடமைகள், வளரும் பற்றுக்கள்… அறிவும் கூட சுமையே. குறைவான சுமையுடன் அவர்களை இங்கிருந்து அனுப்புவதே நாம் அவர்களுக்குச் செய்யும் நல்லுதவி” என்றார் விகிர்தர். “எடை மிகக்கொண்டு செல்பவர்கள் விரைந்து கருவறை புகுந்துவிடுகிறார்கள்.” சுபத்திரை சீற்றத்துடன் “நான் நற்சொல் கேட்க எவரையும் நாடவில்லை. என் மைந்தனிடம் பேச எனக்கு உதவ இயலுமா? அதைமட்டுமே கேட்டேன்” என்றாள். “உன் தமையன் என் நண்பர். அவருக்காகவே இதற்கு ஒப்புக்கொண்டேன். இது எளிய செயல் அல்ல. தெய்வங்களின் ஆணைக்கு அறைகூவலிடுவது” என்றார் விகிர்தர். “நான் அறைகூவலிடுகிறேன். நான் அத்தனை தெய்வங்களையும் அறைகூவுகிறேன்” என்று உடைந்த குரலில் சுபத்திரை கூறினாள்.

“நீ என் மகள் என எண்ணி இதை சொல்கிறேன். நீ அவனுக்கு பெருந்தீங்கு இழைக்கக்கூடும்” என்றார் விகிர்தர். “நான் அவனிடம் பேசியாகவேண்டும்…” என்று அவள் இரு கைகளையும் மேலே தூக்கி கூச்சலிட்டாள். “எதுவாயினும் சரி, அவன் சிக்கிக்கொண்ட அந்தச் சூழ்கை என்ன என்று அவன் அறியவேண்டும். வெளியேறும் வழியை அறிந்த பின்னரே அவன் இப்பிறவி முடித்து விண்ணேகவேண்டும். இல்லையென்றால் இச்சூழ்கை அடுத்த பிறவியிலும் தொடரும். அங்கும் வெளியேறவியலாது என் மைந்தன் சிக்கிக்கொள்வான்… அவன் அடுத்த பிறவியிலாவது விடுபட்டாகவேண்டும்.” விகிர்தர் “எண்ணிக்கொள்க, அது அத்தனை எளிதல்ல!” என்றார். “எனக்கு இனி சொற்கள் தேவையில்லை” என்றாள் சுபத்திரை.

“யாதவரே, உமது ஆணை என்ன?” என்று விகிர்தர் கேட்டார். “அவள் விழைவு அது. ஆகவேதான் உங்களை வரவழைத்தேன்” என்றார் இளைய யாதவர். அவரை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் “நீர் விளையாடுவதென்ன என்று எனக்கு மெய்யாகவே புரியவில்லை. ஆனால் எனக்கு வேறுவழியில்லை என்று மட்டும் தெரிகிறது…” என்றபின் சுபத்திரையை நோக்கி “ஒன்றைமட்டும் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ஒரே ஒரு முறைதான். அதற்குள் கூறவேண்டியதை கூறிவிட வேண்டும். பிறகு என்னிடம் எதையும் கோரக்கூடாது” என்றார். “இல்லை, ஒருமுறை போதும்” என்றாள் சுபத்திரை. அவர் “மீண்டும் இறுதியாகச் சொல்கிறேன், இது நன்றல்ல” என்றார். “அளிகூருங்கள், முனிவரே. உங்கள் அடிபணிந்து கோருகிறேன்” என்று அவள் கைநீட்டி அழுதாள்.

“சரி” என்றபின் அவர் கங்கையை நோக்கி கண்களை மூடி ஊழ்கத்தில் அமர்ந்தார். தவிப்புடன் அவரைப் பார்த்தபடி சுபத்திரை அருகே அமர்ந்தாள். பூர்ணை பெருமூச்சை அடக்கிக்கொண்டாள். மார்பில் கைகளைக் கட்டியபடி இளைய யாதவர் அப்பால் நின்றார். கங்கை கரிய நெளிவென ஒழுகிக்கொண்டிருந்தது. நீண்ட பெருமூச்சுடன் விகிர்தர் கண்களை திறந்தார். சுபத்திரையை நோக்கி “உன் மைந்தனுக்கு நீர்க்கடன் அளித்தாகிவிட்டதே, அரசி. அவன் இப்போது இங்கே இல்லையே” என்றார். “யார்?” என்று அவள் அலறினாள். “இல்லை. நீர்க்கடன் இதுவரை அளிக்கப்படவில்லை. என் மைந்தனுக்கு எவரும் நீர்க்கடன் அளிக்கவில்லை.” மறுகணம் என்ன நடந்தது என்று அவளுக்குப் புரிந்தது. இளைய யாதவரை நோக்கி கைநீட்டி “அவர் அதை செய்திருக்கிறார். உங்கள் தோழர் அதை செய்திருக்கிறார். என்னை தோற்கடிக்க அவர் அதை செய்திருக்கிறார்” என்று கூவினாள்.

விகிர்தர் “ஆம், அவர் அதை செய்யக்கூடியவரே” என்றார். “என்ன செய்வது? முனிவரே, என்ன செய்வது? என் மேல் இரக்கம் கொள்ளுங்கள். எனக்கு ஒரு வழிகாட்டுங்கள்” என்று சுபத்திரை அழுதாள். “பொறு” என்றபடி விகிர்தர் மீண்டும் கண்களை மூடினார். சுபத்திரை தவிப்புடன் இளைய யாதவரை பார்த்தாள். விகிர்தர் கண்களை மூடி “நீர்க்கடன் முடித்து நெடும்பொழுது ஆகவில்லை. ஃபுவர்லோகத்தில் வாழ்பவர்களிடம் நாம் உரையாட இயலாது. ஆனால் நம் சொற்கள் சிலவற்றை அவர்களுக்கு அனுப்பிவிடமுடியும்” என்றார். கங்கை நீரில் இறங்கி கரையோரம் மலர்ந்துகிடந்த தாமரைகளையும் குவளைகளையும் பார்த்தபடி நின்றார். பின்னர் திரும்பி “உன் மைந்தன் ஏறும் கருபீடம் ஒருங்கிவிட்டது. அவன் அங்கே நிகழவிருக்கிறான்” என்றார்.

“எங்கே? எந்த வயிற்றில்?” என்று கை கூப்பியபடி பதறிய குரலில் சுபத்திரை கேட்டாள். “அது எவருக்கும் தெரியாது. மனிதனா மிருகமா பறவையா புழுவா என்று கூடக் கூற முடியாது” என்றார் விகிர்தர். “ஆசிரியரே, இப்போது என்ன செய்வது? எனக்கு ஒரு ஆறுதல் சொல்லுங்கள். என் மைந்தனிடம் ஒரு சொல்லேனும் நான் உரைக்கவேண்டும். இச்சூழ்கையின் மந்தணத்தை மட்டுமாவது சொல்லிவிடவேண்டும்” என்று சுபத்திரை சொன்னாள். “ஆத்மா தனக்குரிய முதல் உயிரணுவாகிய பார்த்திவப் பரமாணுவை ஏற்று அதனுடன் இணைவதுவரை வாய்ப்பிருக்கிறது. இணைந்துவிட்டால் இப்பிறவியுடனான அதன் தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும். பார்ப்போம்…”

விகிர்தர் நீரில் இறங்கி ஒரு தாமரை மலரை பறித்தார். அதை எடுத்து வந்து நெஞ்சோடணைத்து அவளிடம் நீட்டினார். “இதோ பார். இதில் உன் மைந்தன் இருக்கிறான்” என்றார். அவள் அதை வாங்கிக்கொண்டு அமர்ந்து மடியில் வைத்து குனிந்து கூர்ந்து நோக்கினாள். அந்தத் தாமரைப்பூவின் மகரந்த பீடத்தில் இரு சிறு வெண்புழுக்கள் நெளிந்தன. மெல்லிய நுனி துடித்து துவண்டு உந்த அவை நீந்தி நகர்ந்தன. “இது என் மாயக்காட்சி. உன் மகன் இருக்கும் கரு இந்த மலர். இதிலொன்று உன் மைந்தன். நீ அவனிடம் பேசு. ஆனால் இந்தத் தாமரை கூம்பிவிட்டால் பிறகு எதுவும் செய்யமுடியாது.” சுபத்திரை அதை கூர்ந்து நோக்கி மேலும் குனிந்தாள். “இதில் என் குழந்தை யார், ஆசிரியரே?” என்றாள். “இதோ இந்தச் சிறு வெண்புழு. அவர்கள் இரட்டையர்கள்” என்றார் விகிர்தர்.

சுபத்திரையின் முகம் மலர்ந்தது. உவகையால் எழுந்த பதற்றம் அவள் கைகளை நடுங்கச்செய்தது. எண்ணங்கள் எழாமல் முகம் உறைந்து உதடுகள் அசைவிழந்து விழிகள் நிலைத்து அமர்ந்திருந்தாள். பூர்ணை அந்தப் புழுவை நோக்கினாள். பட்டுத் தொட்டிலில் கைகால் உதைத்து நெளியும் சிறு மகவு போலிருந்தது. விகிர்தர் “விரைவு” என்றார். சுபத்திரையிடம் பேச்சே எழவில்லை. “பேசு பேசு” என்றார் விகிர்தர். “அபிமன்யு” என்று அவள் அழைத்தாள். தொண்டை அடைக்க “மைந்தா, அபிமன்யு” என்றாள். அந்தச் சிறு புழு அசைவற்று நின்றது. பிறகு அதன் தலை மேல்நோக்கி உயர்ந்தது. சிவந்த புள்ளிகள்போல அதன் கண்களை பூர்ணை கண்டாள்.

சுபத்திரையிடமிருந்து ஒரு விம்மலோசை வெளிப்பட்டது. “பேசு பேசு” என்று விகிர்தர் அதட்டினார். திடீரென்று அந்த இன்னொரு புழுவை சுபத்திரை பார்த்தாள். “ஆசிரியரே, இது யார்? அவனுடைய இரட்டைச் சகோதரன் யார்?” என்றாள். “அது எதற்கு உனக்கு? நீ உன் குழந்தையிடம் கூற வேண்டியதைக் கூறு” என்றார் விகிர்தர். “இல்லை. நான் அதை அறிந்தாக வேண்டும். அவன் யார்?” என்று அவள் கூவினாள். விகிர்தர் அலுப்புடன் “நீ தேவையற்றதை அறிய விழைகிறாய். அது ஊடுருவல். மானுடருக்கு அந்த உரிமை இல்லை” என்றார். “அவன் யார்? என் மைந்தனின் ஒற்றைக்குருதியினன் யார்? எனக்குத் தெரிந்தாகவேண்டும்” என்று அவள் கூச்சலிட்டாள்.

விகிர்தர் “என்ன இது, யாதவரே?” என்றார். “கூறுக!” என்றார் இளைய யாதவர். அவரை ஒருகணம் நோக்கிவிட்டு “நன்று, எனில் கூறுகிறேன்” என்றார் விகிர்தர். “அவன் பெயர் பிருஹத்பலன். கோசல மன்னனாக இருந்தவன்.” சுபத்திரை திகைத்து “கோசல மன்னனா? என் மகனால் போர்க்களத்தில் கொல்லப்பட்டவனா?” என்று கூவினாள். “ஆம். அவர்கள் இருவருக்கும் இடையே மாற்ற முடியாத ஓர் உறவு பிறவிகள்தோறும் தொடர்கிறது. அதன் தொடர்ச்சியை எவரும் அறிய முடியாது. நீ உன் குழந்தையிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிடு” என்றார் விகிர்தர்.

“அடுத்த பிறவியில் என்ன நிகழப்போகிறது?” என்றாள். “அது உனக்கு எதற்கு?” என்று விகிர்தர் எரிச்சலுடன் சொன்னார். சுபத்திரை “அபிமன்யு! அது கோசல மன்னன் பிருஹத்பலன். உன்னால் கொல்லப்பட்டவன். உன் இரட்டைச் சகோதரன் உன் எதிரி. மைந்தா, எச்சரிக்கை கொள். அவன் உன் எதிரி” என்று கூவினாள். விகிர்தர் சினத்துடன் “என்ன பேசுகிறாய் நீ?” என்று கூவினார். சுபத்திரை களைப்புடன் மூச்சிரைத்தாள். தாமரைச்சூழ்கை பற்றி அதுவரை கூறவில்லை என்று உணர்ந்தாள். “அபிமன்யு, இதோ பார். பத்மவியூகம்தான் உன் ஊழின் புதிர். அதிலிருந்து வெளியேறும் வழியை கூறுகிறேன்” என்றாள்.

ஆனால் தாமரை இதழ்கள் கூம்பத்தொடங்கின. “அபிமன்யு! அபிமன்யு!” என அவள் கூவிக்கொண்டே இருந்தாள். தாமரையை உலுக்கி திறக்க முயன்றாள். அது இறுகிய கைவிரல்கள் என மூடிவிட்டது. “ஆசிரியரே…” என்று கூவியபடி அதை பிரிக்க முயன்றாள். “பயனில்லை, அரசி. அவன் சென்றுவிட்டான்” என்றார் விகிர்தர். “ஆசிரியரே, என்னை காத்தருள்க! எனக்கு அருள்க!” என்று கதறியழுதபடி அவர் காலில் விழுந்தாள் சுபத்திரை. “எனக்கு அளிகூருக! என் குழந்தையிடம் மேலும் ஒரு சொல் பேசிக் கொள்கிறேன்… மேலும் ஒரு சொல்… ஒரே ஒரு சொல்!” என்று அவர் பாதங்களை பற்றிக்கொண்டாள்.

விகிர்தர் அவள் கைகளை மெல்ல உதறிவிட்டு அப்பால் நடந்தார். இளைய யாதவரை ஒருகணம் நோக்கி நின்றார். அவர் முகத்தில் ஒரு தவிப்பு தெரிந்தது. இளைய யாதவரின் முகம் புன்னகை மாறாமல் அப்படியே இருந்தது. சுபத்திரை கால் தளர படிகளில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து கதறிக் கதறி அழுதாள். இளைய யாதவர் அருகே சென்று குனிந்து அவள் தோளில் தன் கையை வைத்தார். “மூத்தவரே, அபிமன்யு… என் குழந்தை அபிமன்யு” என்று அவள் ஏங்கினாள். “வா, போகலாம். இனி ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் இளைய யாதவர். “என் குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லையே. தன் ஊழின் புதிரை சுமந்தபடி அவன் போகிறானே. நான் பழிகாரி, நான் கீழ்மகள், நான் இழிந்தோள்!” என்று சுபத்திரை கதறினாள்.

இளைய யாதவர் அவளைத் தூக்கி எழுப்பினார். “வா. அழுது என்ன பயன்?” “என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே” என்றாள் சுபத்திரை. “எவருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்?” என்றார் இளைய யாதவர். அவள் அச்சொற்களை செவிகொள்ளவில்லை. “என் குழந்தையின் ஊழ்தான் என்ன? அடுத்த பிறவியில் அவனுக்கு என்ன நேரிடும்?” இளைய யாதவர் புன்னகைத்து “தெரியவில்லை. ஆனால் அதன் தொடக்கம் மட்டும் இன்று தெரிந்தது” என்றார். “எப்படி?” என்று அவள் அவரைத் தொடர்ந்து ஓடியபடி கேட்டாள். இளைய யாதவர் “நான் அறியேன், சுபத்திரை. மெய்யுரைக்கவேண்டும் என்றால் நானும் இச்சூழ்கையில் சிக்கியிருப்பவனே…” என்றார்.

சுபத்திரை திகைத்தவள்போல நின்றுவிட்டாள். இளைய யாதவர் மேலே ஏறிச்சென்று ஏவலரிடம் முனிவரை அனுப்பும்படி கைகளால் ஆணையிடுவதை பூர்ணை கண்டாள். அருகே சென்று சுபத்திரையின் தோள்களைப் பற்றி அணைத்துக்கொண்டாள்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 49

பகுதி ஏழு : தீராச்சுழி – 5

பூர்ணை குடிலிலிருந்து வெளியே வந்து சில கணங்கள் வெறும் வெளியை நோக்கியபடி நின்றாள். பின்மாலையின் சாய்வெயிலில் மரக்கிளைகள் ஒளிகொண்டிருந்தன. காட்டுக்குள் சாய்ந்திருந்த ஒளிச்சட்டங்கள் அங்கு அசையா நெருப்பு நின்றிருப்பதுபோல் தோன்றச் செய்தன. பறவைகளின் ஒலிகள் மாறுபட்டு கான்முழக்கம் கார்வை கொண்டிருந்தது. குடில் நிரைகளில் இருந்த ஏவலர்கள் பேசும் ஒலிகளும் பின்முழக்கம் ஒன்றைச் சூடியிருந்தன. குடில் முன் நின்றிருந்த புரவி அரைத்துயிலில் தலையை நன்கு தாழ்த்தி ஏதோ எண்ணத்திலாழ்ந்திருந்ததுபோல் உறைந்திருந்தது.

அவள் அப்புரவியை நோக்கிக்கொண்டே நின்றாள். எண்ணம் விரைந்தோடும் போது விழிகளை எங்கேயாவது நாட்டி நிற்பது அவள் வழக்கம். எண்ணம் சென்று தொடும் முடிவு அவள் விழி நாட்டி இருக்கும் அப்பொருளுடன் தொடர்புள்ள வடிவிலேயே தோன்றும் விந்தையை அவள் முன்பே அறிந்திருந்தாள். எனவே விழித்தெழுந்தபோது அப்புரவி எவருடையது என்று எண்ணம் எழுந்ததும் அவள் வியப்படையவில்லை. சூழ நோக்கியபோது இளஞ்சேடி அப்பால் வந்தாள். அவளைக் கைகாட்டி அழைத்து “இப்புரவி எவருடையது?” என்றாள். அவள் கூர்ந்து நோக்கியபின் “இங்கு அரசர் இளைய பாண்டவர் ஒரு காவலனை நிறுத்தியிருந்தார், தேவையெனில் செய்தி கொண்டுசெல்வதற்கு” என்றாள்.

“அவருக்கா?” என்றாள் பூர்ணை. “ஆம்” என்றாள் அவள். “ஆனால் அரசி இதுவரை செய்தி என எதையும் அனுப்பவில்லை.” பூர்ணை “இப்போது அக்காவலன் எங்கே?” என்றாள். இளம் சேடி மெல்லிய தவிப்படைவதை பார்த்ததும் அவளுக்கு புரிந்தது. “அக்குடிலுக்கு பின்னால் அவன் நின்றிருக்கிறானா?” என்றாள். இளஞ்சேடி விழி தழைத்தாள். “அவனை வரச்சொல்க” என்று அவள் சொன்னாள். இளஞ்சேடி “இல்லை, நான்தான்… அவர்…” என்று சொல்லத்தொடங்க கூரிய குரலில் மறித்து “செல்க!” என்று பூர்ணை சொன்னாள். இளஞ்சேடி தலைவணங்கி சென்று குடிலுக்குப் பின்னால் அகன்று அங்கு நின்றிருந்த காவலனிடம் பேசினாள்.

அவர்களின் கசங்கிய பேச்சுக்குரல்கள் சொல்லின்றி ஒலித்தன. பின்னர் அவன் தயங்கியபடி அவள் அருகே வந்து நின்றான். அவள் நோக்கியதும் தலைவணங்கினான். அவள் அவனிடம் “இங்கு உன் பணி காவல்” என்றாள். “பொறுத்தருள்க, நான் உண்மையில்” என்று அவன் சொன்னான். இளஞ்சேடி “நான்தான்…” என ஊடே புக அவளை விழிகளால் அடக்கியபின் “சென்று இளைய பாண்டவர் பார்த்தனை இங்கே வரச்சொல்க. அவரை அவர் துணைவி பார்க்க விழைகிறார் என்று கூறுக” என்றாள். “ஆம், ஆணை” என்று அவன் புரவியை நோக்கிச்சென்று அதன் முதுகை தட்டி மேலேறி திரும்பி விரைந்தான்.

வால் சுழல, சிறுதாவல்களாகச் செல்லும் அந்த புரவியை அவள் நோக்கிக்கொண்டிருந்தாள். இளஞ்சேடி அவள் ஆணைக்காக காத்திருந்தாள். அவள் திரும்பி பார்த்தபோது தலைகுனிந்து நின்றாள். அவள் முகத்திலிருந்த பொலிவை, கைவிரல்கள் பதற்றத்துடன் ஒன்றையொன்று தொட்டு நிலையழிவதை பூர்ணை கண்டாள். ஒருகணம் சீற்றம் எழுந்தாலும் மறுகணம் புன்னகை வந்தது. அத்தனை துயரிலும் மானுடர் தங்கள் விழைவுகளை தொடர்கிறார்கள். இடுகாட்டில் பூக்கள் மலர்கின்றன என்ற சூதர் பாடல் நினைவு வந்தது. “செல்” என்றபின் சென்று குடில் திண்ணையில் அமர்ந்தாள்.

உடல் ஓய்வை நாடியது. மண் அவள் தசைகளை இழுத்தது. தன் எண்ணங்களை தொகுத்துக்கொள்ள முயன்றாள். எதன்பொருட்டு இளைய பாண்டவரை வரச்சொன்னோம் என்ற தெளிவே அவளுக்கு இருக்கவில்லை. அம்முடிவை எடுத்த பின்னரே அதை எவ்வண்ணம் கொண்டுசெல்ல போகிறோம் என்று எண்ணத்தொடங்கினாள். எப்போதும் அவள் இயல்பு அதுதான். எண்ணி எடுத்த முடிவுகள் எவையும் அவளுக்கு கைகொடுத்ததில்லை. அவை மீண்டும் எண்ணினால் நிகரான ஆற்றல் கொண்ட மறுதரப்பை உருவாக்கின. எண்ணாமல் எடுத்த முடிவுகள் அனைத்தும் எவ்வண்ணமோ ஊழுடனும் தெய்வங்களுடனும் தொடர்பு கொண்டிருந்தன.

எண்ணாமல் வாழும் உயிர்கள் ஊழுக்கு ஒப்புக்கொடுத்தவை. பேரொழுக்கில் நலுங்காது ஒழுகிச் செல்பவை. ஊழுடன் முரண்படுபவருக்கே துயர், ஆகவே தான் ஆற்றலுள்ளோர் அழிவை நாடுகின்றனர். தேடல் கொண்டோர் துயர் மிகுகிறார்கள். அவள் தேவிகையை சென்று பார்க்க வேண்டுமென்று விழைந்தாள். அவள் அன்றிரவு முழுக்க அங்குதான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. தேவிகை எந்நிலையில் இருக்கிறாள்? அவள் வந்திருக்கும் இடமாவது அவளுக்குத் தெரியுமா? அவள் தன் பீடத்தை மெல்ல தட்டியபோது இளஞ்சேடி வந்து நின்றாள்.

“நீ சென்று மத்ரநாட்டு சேடியிடம் சொல், இன்றிரவு நான் வரப்போவதில்லை என்று. இரு அரசியரையும் பேணும் பொறுப்பு அவளுக்குரியதென்று தெரிவித்துவிட்டு வா” என்றாள். அவள் தலைவணங்கி நடந்து சென்றாள். முற்றத்தின் விளிம்பை தாண்டுவது வரை இறுகிய உடலும் ஒடுங்கிய தோளுமாக சென்ற அவள் குறுங்காட்டினூடாக சென்ற பாதையில் ஏறியதுமே சிறுமிபோல் மெல்லிய துள்ளலுடன் கைகளை வீசி செல்வதை அவள் கண்டாள். புன்னகை விரிய அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மலர்கள் புன்னகையின் தூய வடிவங்கள். ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் புன்னகைகளால் தேவர்கள் இம்மண்ணை பொலிவுறச் செய்கிறார்கள் என்ற சூதர் வரியை நினைவுகூர்ந்தாள்.

தொலைவில் அர்ஜுனனின் புரவி வருவது தெரிந்தது. அது சுழன்று நிலமறையும் குளம்போசையுடன் பெருவிரைவில் வந்தது. அந்த விரைவை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. புரவி முற்றத்தில் வந்து வளைந்து நிற்க அர்ஜுனன் கால் சுழற்றி இறங்கி கடிவாளத்தை அதன் மேல் வீசியபடி அவளை நோக்கி வந்தான். அவன் முகம் பதற்றம் கொண்டிருந்தது. அவள் எழுந்து நின்று “கவலை கொள்வதற்கு ஒன்றுமில்லை, அரசே. அரசியை தாங்கள் பார்க்கலாமென நான் எண்ணினேன்” என்றாள். அர்ஜுனன் “அரசி என்னை பார்க்க விரும்புவதாக செய்தி வந்ததே” என்றான். “ஆம், அச்செய்தியை நான்தான் அனுப்பினேன். தாங்கள் அரசியை இத்தருணத்தில் பார்க்கவேண்டும், தாங்கள் சிலவற்றை அவர்களிடம் சொல்லியாக வேண்டும் என கருதினேன்” என்றாள்.

அர்ஜுனன் புருவம் சுருக்கினான். “தன் மைந்தனைப்பற்றி அவர்கள் உளம் கொதிக்கிறார்கள். தன் மைந்தனின் ஊழ் தன்னால் தவறாக வகுக்கப்பட்டுவிட்டது என்னும் குற்றஉணர்வு கொண்டு தவிக்கிறார்கள். அவ்வாறல்ல, அது தவிர்க்க முடியாத ஊழ் என்று நீங்கள் அவர்களிடம் கூறவேண்டும். அவர்கள் உளம் சற்றேனும் அடங்கவேண்டும்” என்றாள். அர்ஜுனன் எரிச்சலுடன் “ஊழ் குறித்து உரையாடுவதற்கா இத்தனை தொலைவு நான் வந்தேன்?” என்றான். “ஆம், தங்கள் மைந்தனின் ஊழ் குறித்து” என்ற பின் “உத்தரையைப்பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்” என்றாள்.

அவன் திடுக்கிட்டவன்போல் தலைதூக்கி “உத்தரையைப் பற்றியா?” என்று கேட்டான். “இங்கு அனைவரும் அறிந்ததுதான். அனைவரும் தயங்கிக்கொண்டிருப்பதும் கூட. நீங்கள் இருவரும் அதைப்பற்றி ஆழ்ந்து ஒரு சொல்லும் இதுவரை உரையாடியிருக்கமாட்டீர்கள். சொல்வதற்கு ஏதேனும் இருப்பின் அவற்றை சொல்லிவிடுங்கள். பிறகு என்றேனும் அவற்றை சொல்வதற்கான தருணம் வாய்க்காது போகும்” என்றாள். அர்ஜுனன் தவிப்புடன் “நான் என்ன கூறுவது?” என்றான். “அரசே, கூறவேண்டியது ஒன்று எஞ்சியுள்ளது. விராடநாட்டு அரசியின் கருவில் வளரும் மைந்தனைப்பற்றி” என்றாள்.

அர்ஜுனனின் விழிகள் தழைந்தன. அவன் கைகள் தவித்து ஒன்றையொன்று பற்றிக்கொண்டன. “தாங்கள் காமத்தை கடந்துவிட்டீர்கள் என்று இங்கே பேசிக்கொண்டிருந்தார்கள். எனில் அது உருவாக்கும் இடர்களிலிருந்தும் நீங்கள் வெளியேறியிருக்கவேண்டும். இதுவே அதைச் சொல்வதற்கான தருணம். சென்று கூறுக” என்றாள் பூர்ணை. “நான் அதிலிருந்து முழுக்க வெளியேறவில்லை என்று இப்போது உணர்கிறேன்” என்றான் அர்ஜுனன். “விழைவை கடந்துள்ளேன். அச்சங்களையும் தயக்கங்களையும் அல்ல.” பூர்ணை “தங்களால் வெளியேற முடியும். அதற்கான வாய்ப்பென்று இதைக் கொள்க. செல்க” என்று அழுத்தமாகச் சொன்னாள்.

 

அர்ஜுனன் உள்ளே செல்லத் தயங்கி வாயிலிலேயே நின்றான். பின்னர் “முழுமையான செய்திகளை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அரசகுடியினர் அனைவருடைய கருக்களும் கலைந்துள்ளன. முதற்குடியினரும் அணுக்கரும் ஐந்தாமவரும்கூட முழுமையாகவே கருக்குழவிகளை இழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குருகுலத்தின் கொடிவழியில் இன்று எஞ்சியிருப்பது உத்தரையின் கருவிலிருக்கும் குழவி மட்டுமே. அவன் நீளாயுள் கொண்ட மைந்தன் என்றும் முடிசூடி அமரும் ஊழ் கொண்டவன் என்றும் நிமித்திகர்கள் கூறினர். அவ்வண்ணம் ஒரு குழவி எஞ்சுவதென்பது ஊழ் என்பது ஒன்றே என்னை ஆறுதல்படுத்துகிறது” என்றான்.

“என்ன நிகழ்ந்தது எவ்வண்ணம் என்று நான் இப்போது விரித்துரைக்க தேவையில்லை. விராடரின் ஆணை அது. உத்தரையின் குழவி அரியணை அமரவேண்டும் என்று அவர் கூறினார். அதற்குரிய வாய்ப்புகள் அன்று இல்லை என்று தோன்றியது. அபிமன்யு அவன் தமையருக்கு அடங்கமாட்டான், தனி முடி நாடுவான் என்று அவர் எண்ணினார். எனக்கும் அவ்வண்ணமே தோன்றியது. அடுத்த தலைமுறையில் அது நிகழட்டும் என்று அப்போது எண்ணினேன். இன்று அந்த எண்ணம் அனைத்தும் உண்மையாகிவிட்டிருக்கிறது. இன்று அவள் குழவி இந்திரப்பிரஸ்தத்தையும் அஸ்தினபுரியையும் ஆளும் நிலை உள்ளது… இத்தருணத்தில்…” என்றான் அர்ஜுனன்.

“அதை அரசியிடம் சொல்லுங்கள்” என்றாள் பூர்ணை. “ஒருவேளை அவர்கள் அச்சொல்லால் உளம் அமையக்கூடும்.” அர்ஜுனன் “இல்லை, அவள் விரும்பமாட்டாள். அவள் உத்தரையை வெறுக்கிறாள்” என்றான். பூர்ணை “அது இயல்பு… ஆனால் வாழ்வது அவர் மைந்தனின் குருதி” என்றாள். அர்ஜுனன் தத்தளித்து “உத்தரை கருக்கொண்டிருப்பவன் முடிசூடும் அரசன் என நிமித்தச்சொல் உள்ளது அவளுக்குத் தெரியுமா?” என்றான். மீண்டும் “அது தன் மைந்தனின் குருதி என்று அவள் எண்ணுகிறாளா?” என்றான். மீண்டும் அவனே “அது அவளை ஆறுதல்படுத்துவதுதானா?” என்றான்.

“உண்மை அவர்களுக்கு தெரியும். ஆகவே தான் மீளும்வழி குறித்து பேசுகிறார்கள்” என்றாள் பூர்ணை. “அவர் சென்று சிக்கிக்கொண்டது என்பது என்ன என்று நன்கு அறிந்திருக்கிறார்.” அர்ஜுனன் “எனில் ஏன் இதை அவளிடம் சொல்லச் சொல்கிறாய்?” என்றான். “ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இடத்தில் புதைத்து வைத்திருப்பதனால் எதிலும் தெளிவில்லாமல் இருக்கிறார். அனைத்தும் பேசப்பட்டு முழுத் தருணம் அமையட்டும். அதன் பின்னர் என்ன எஞ்சுகிறதோ அதுவே மெய்மை என்றாகட்டும்” என்றாள் பூர்ணை.

“இத்தருணத்தில் இதை அவளிடம் சொல்லலாமா என்று தெரியவில்லை. நான் ஒரு சொல் இளைய யாதவரிடம் கேட்டுவிட்டு…” என்று அர்ஜுனன் சொல்ல அவள் தடுத்து “அவர் ஆணுடலில் இருக்கிறார். பரம்பொருளே ஆயினும் திகழும் சிலைக்கு கட்டுப்பட்டது என்பார்கள். பெண்ணுளம் அவர் அறியாதது” என்றாள். சற்றே கடும்குரலில் “சென்று அனைத்தையும் கூறுக, அரசே. எஞ்சாது அனைத்தையும் கிழித்து முன்வையுங்கள். பின்விளைவதென்ன என்று அவருக்கு தெரியட்டும். இன்று அவர்கள் எடுக்கும் முடிவுக்கு பின்பு வருந்த நேரக்கூடாது. அனைத்தும் அறிந்தபின் எடுத்த முடிவு என்று அவர்கள் தெளிவுற எண்ணட்டும்” என்றாள்.

அர்ஜுனன் சில கணங்கள் அவளை நோக்கிவிட்டு “உன்னை நம்பி இம்முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. உன் அகவையை. அரசியரை அணுகியறிந்த உன் வாழ்வை… எனக்கு வேறு வழியில்லை” என்றான். பின்னர் மெல்லத் தயங்கி “இது என்னை மட்டும் சார்ந்ததல்ல. உத்தரையையும் சார்ந்தது. குருகுலத்தின் அனைவரையும் ஒருவகையில் தொடர்புறுத்துவது” என்றான். “இத்தருணத்தில் இது உங்கள் இருவருக்கும் இடையே மட்டும் நிகழ்வது” என்றாள் பூர்ணை. தலைகுனிந்து அர்ஜுனன் உள்ளே சென்றான்.

பூர்ணை அக்குரல்கள் தனக்குக் கேட்கும்படியாக வாயிலுக்கு வெளியே நின்றாள். அர்ஜுனன் உள்ளே நுழைந்த பின் சிறிது நேரம் ஓசை எதுவும் கேட்கவில்லை. அவர்கள் சந்தித்துகொண்டார்களா என்று ஆவலுடன் பூர்ணை படலை திறந்து உள்ளே பார்த்தாள். மஞ்சத்தில் கண்களை மூடிக்கொண்டு சுபத்திரை படுத்திருப்பது தெரிந்தது. அவளை நோக்கியபடி அர்ஜுனன் நின்றிருந்தான். அவன் அவளை அழைக்கவில்லை. அவள் அவன் வந்ததை உணர்ந்திருக்கிறாள் என்று தோன்றவில்லை.

உள்ளே சென்று சுபத்திரையை எழுப்பவேண்டுமா என்று எண்ணியபோது சுபத்திரை தன்னுணர்வால் அவன் வந்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தாள். கையூன்றி எழுந்தமர்ந்து “யார்?” என்றாள். எழுந்து நின்றபோது அவள் அர்ஜுனனை விட உயரமாக இருந்தாள். அவன் உடலைவிட பெரிய உடல். “எப்போது வந்தீர்கள்?” என்றாள். “சற்று முன்னர்தான்” என்று அவன் சொன்னான். கனிந்த குரலில் “உன்னைப் பார்க்க வேண்டுமென்று வந்தேன். இறுதியாக உன்னிடம் சில சொல்ல வேண்டியுள்ளது. நீ சொல்வதை நானும் கேட்டாகவேண்டும்” என்றான்.

அவள் உணர்ச்சியற்ற குரலில் “உங்களிடம் எனக்கு சொல்வதற்கு எதுவுமில்லை. நமக்கிடையே இன்னும் உறவென்று ஏதும் எஞ்சியிருப்பதாகவும் நான் எண்ணவில்லை. நீங்கள் செல்லலாம்” என்றாள். “நம் மைந்தன்” என்று அவன் சொல்லத்தொடங்க “நம் மைந்தனுக்கும் நமக்குமான உறவு அறுந்துவிட்டது. அவனில்லை என்றாகிவிட்ட பிறகு உங்களுக்கும் எனக்கும் என்ன உறவு?” என்றபின் கைசுட்டி “நீங்கள் செல்லலாம்” என்றாள். “சுபத்திரை” என்று அவன் தளர்ந்த குரலில் அழைத்தான். “எதையும் பொறுப்பேற்றுக் கொள்ளும் தகுதிகொண்டவன் அல்ல நான். எனினும் உன் பொருட்டு அனைத்தையும் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அனைத்தும் என் பிழையே என்று ஒப்புக்கொள்கிறேன். அதற்கான பழிச்சொற்கள் எதையும் ஏற்கவும் சித்தமாக இருக்கிறேன்” என்றான்.

“பழி கொள்ள வேண்டியவர் எவரென்று எனக்குத் தெரியும்” என்று சுபத்திரை சொன்னாள். “நீங்கள் வெறும் கருவி. உங்களுக்கு எந்த உரிமையுமில்லை. ஆனால் வெறும் கருவிகளிடம் உரையாடும் நிலையில் நானில்லை. செல்க” என்றாள். “நான் நம் மைந்தனைப்பற்றி சில விஷயங்களை அறுதியாக கூற வந்தேன்” என்றான். “என் மைந்தனைப் பற்றி நீங்கள் என்னிடம் எதுவும் கூறவேண்டியதில்லை” என்று அவள் உரக்க கூறினாள். அவள் உடல் நடுங்கியது. முகம் சிவந்து மூச்சு சீறத்தொடங்கியது.

“சுபத்திரை, உன் தோற்றம் என்னை தளரச்செய்கிறது. இருமுறை வந்து உன்னை பார்த்து சென்றிருந்த போதும் கூட இத்தனை நெகிழ்ந்திருப்பாய் என்று எண்ணவில்லை” என்றபடி அர்ஜுனன் கைநீட்ட அவள் சீறல் ஒலியெழுப்பி பின்னகர்ந்து சுவர் சாய்ந்து நின்றாள். “என்னிடம் மறுசொல்லேதும் எடுக்க வேண்டியதில்லை. கிளம்புக” என்று உரக்க கூவினாள். எண்ணியிராதபடி சீற்றம்கொண்டு எழுந்து “எதன்பொருட்டு சினம்?” என்று அர்ஜுனன் கூச்சலிட்டான். “களத்தில் நான் ஆசிரியரையும் பிதாமகரையும் கொன்றேன். உடன்குருதியினர் அனைவரையும் கொன்றேன். குருதியில் நீராடி வெற்றிக்கென இறுமாப்பும் கொண்டேன். அதன் பொருட்டு வரும் தலைமுறைகள் என் மேல் பழி சுமத்தலாம். இழிமகன் என்று என்னை வகுத்துரைக்கட்டும். துணைவியென உன் முன் நின்று நான் சிறுமை கொள்வதற்கென்ன உள்ளது?”

அவன் கைசுட்டி கூவினான். “நம் மைந்தன் சிறுவனல்ல. குண்டலமணிந்து படைக்கலம் எடுத்தவன். களம்நின்று அவன் கொய்தெறிந்த தலைகள் நானும் நிகழ்த்தியதற்கு நிகரானவை. கொல்பவன் கொல்லப்படுவதற்கும் உரியவன். அவன் களம் எழுந்ததன் பொருட்டு நீ இத்தனை துயரடைகிறாய் என்பது அவனுக்கு இழிவு.” அவள் கண்ணீரைத் துடைத்து வஞ்சத்துடன் அவனை நோக்கினாள். வஞ்சம் அவளை கூர்கொள்ளச் செய்தது. “எனில் கூறுக, நீங்கள் இப்போது துயரடைவது எதன்பொருட்டு?” என்று அவள் கேட்டாள். அவன் விழி தாழ்த்தி “அனைத்துக்காகவும்” என்றான். துயர் தளர்த்திய குரலில் “களத்தில் இன்றி எரிந்தழிந்த என் மைந்தருக்காகவும்” என்றான்.

அவள் இதழ்கோட்டி “அவர்களுக்காகவும் அல்ல. துயர்கொள்வது பிறிதொன்றுக்காக. தன் பிழையொன்றிலாத இழப்பின் பொருட்டு மானுடர் நீடுதுயர் கொள்வதில்லை” என்றாள். அவன் முன்னடி வைத்து நெஞ்சைத் தொட்டு “என் பிழை என்ன?” என்று உரக்க கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல், என் பிழை என்ன?” என்று அவன் மீண்டும் கேட்டான். சுபத்திரை ஒன்றும் சொல்லாமல் இகழ்ச்சி தெரிய நோக்கிக்கொண்டு நின்றாள். “சொல் இழிமகளே, என் பிழை என்ன? சொல்” என்று அர்ஜுனன் கூவினான்.

பூர்ணை மெல்ல நகர்ந்து வெளிவந்து அகன்ற முற்றத்தில் நின்றாள். உள்ளே அவர்கள் இருவரும் உரத்த குரலில் மாறி மாறி கூச்சலிடுவது கேட்டது. அவள் வெறிகொண்டவள்போல “செல்க! செல்க!” என்று கூவிக்கொண்டிருந்தாள். “நான் சொல்வதைக் கேள்… ஒரு சொல் கேள்” என்று அர்ஜுனன் கூறுவது கேட்டது. பின்னர் ஓசையடங்கினர். தாழ்ந்த குரலில் அவள் ஏதோ சொன்னாள். அர்ஜுனன் திகைத்து அவளை நோக்கியபடி நிற்பதை அவளால் பார்க்க முடிந்தது.

பின்னர் அர்ஜுனன் கதவைத் திறந்து வெளிவந்து அவளைப் பார்த்தான். “அவள் கழுத்திலிருக்கும் அந்த வாளைத் தாழ்த்தும்படி சென்று சொல்” என்றான். “அவர் தாழ்த்திக்கொள்வார்” என்று பூர்ணை சொன்னாள். அர்ஜுனன் தலையை அசைத்து “ஒன்றும் புரியவில்லை… ஒருகாலத்தில் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள முடியுமென்று எண்ணியிருந்தேன். இன்று மானுடரால் எதையேனும் புரிந்துகொள்ள முடியுமா என்ற அயர்வை அடைந்துவிட்டேன்” என்றான்.

“தாங்கள் இப்போதேனும் கூறியது நன்றே” என்றாள் பூர்ணை. “நான் எதையும் கூறவில்லை. அவள் எதையும் செவிகொள்ளும் நிலையில் இல்லை” என்றான் அர்ஜுனன். “கூறிவிட்டீர்கள். இவ்வளவுதான் அவரிடம் கூறமுடியும். இதற்கப்பால் சொல்லெடுக்க இயலாது” என்று பூர்ணை சொன்னாள். அர்ஜுனன் சில கணங்கள் அவளைப் பார்த்துவிட்டு “இவையனைத்தும் இந்திரப்பிரஸ்தத்தில் குருகுலம் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஊழ் வகுத்த சூழ்கை என்று நேற்று மாலை இளைய யாதவர் என்னிடம் சொன்னார்” என்றான்.

“நிகழ்வன அனைத்தும் ஊழே என்பது ஒரு நல்ல எண்ணம். செல்வதற்கான வழி மிகத் தெளிவாக வகுக்கப்பட்டுவிடுகிறது” என்றாள். அர்ஜுனன் “இவள் எதற்காக காத்திருக்கிறாள்?” என்றான். “தன் மைந்தனிடம் பேசுவதற்காக. மலர்ச்சூழ்கையிலிருந்து வெளிவரும் வழியை தன் மைந்தனிடம் தெரிவித்துவிடவேண்டும் என்கிறார்கள். அதை அறியாமல் மைந்தன் விண்புகலாகாது என்று சொல்கிறார்கள்” என்றாள் பூர்ணை. “இறந்தவர்களிடம் பேசவைக்கும் முனிவர் ஒருவரை அழைத்துவருவதற்காக ஏவலன் ஒருவன் சென்றிருக்கிறான்.”

“இறந்தவரிடமா?” என்றபின் “மைந்தனிடமா?” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றாள் பூர்ணை. “என்ன பேசப்போகிறாள்?” என்று அர்ஜுனன் கேட்டான். அவள் சொற்களை அவன் செவிகொள்ளவில்லை என்று தெரிந்தது. “அவர் சென்று சிக்கிக்கொண்ட அந்த மலர்ச்சூழ்கையிலிருந்து எவ்வாறு வெளிவருவதென்று அவருக்கு தெரிந்தாகவேண்டுமாம். அதன் பின்னரே இங்கிருந்து அவர் மூச்சுலகிற்கு மீளவேண்டும் என்கிறார்.”

அர்ஜுனனின் முகம் மாறுபட்டது. “அந்த தாமரை மலர் பலநூறு இதழ்கொண்டது. அதில் ஒரு இதழ் இளைய யாதவர். பிறிதொன்று அவள். பிறிதொன்று நான். என்னுடன் என் உடன்பிறந்தார்கள், அவன் உடன்குருதியினர், துரியோதனன், கௌரவர், அங்கர், துரோணர், லட்சுமணன், துருமசேனன், ஜயத்ரதன் என இதழ்கள் ஏராளமாக உள்ளன. அவள் அவனுக்கு எதை சொல்லப்போகிறாள்? அந்த ஒவ்வொருவருடைய ஊழ் நெறியையும் சொல்லிவிடுவாளா என்ன? சொல்லி முடிக்க எத்தனை ஆண்டுகளாகும்?”

அவள் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் தன் தலையில் ஓங்கி அறைந்து “அறிவின்மை! முற்றிலும் அறிவின்மை!” என்றான். “அவள் அவனை இடருக்கே கொண்டுசெல்வாள். அதற்கு நான் விடப்போவதில்லை… அது நடவாது என்று அவளிடம் சொல்” என்றபின் அவன் புரவியை அணுகி அதிலேறி விரைந்து சென்று மறைந்தான். அவள் புரவி செல்வதை நோக்கியபடி நின்றபின் மீண்டும் சென்று திண்ணையில் அமர்ந்தாள்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 48

பகுதி ஏழு : தீராச்சுழி – 4

இளைய யாதவர் வரும்போது பூர்ணை சுபத்திரையின் குடில் வாயிலில் நின்றிருந்தாள். இளைய யாதவர் தேரில் வருவார் என்று அவள் எண்ணினாள். அவர் தொலைவில் நடந்து வருவதைக் கண்டதும் மெல்லிய திகைப்பு ஏற்பட்டது. அவர் களைத்து தனித்து வருவதாக முதலில் தோன்றியது. ஆனால் அணுகுந்தோறும் இளமை கொண்டு சிறுவனென்றாகிவிட்டதாக விழிகள் மயங்கின. தலையிலிருந்த பீலி காற்றில் அசைந்தது. இருபுறமும் நோக்கி, அவ்வப்போது நின்று கூர்ந்து பார்த்து, முகம் மலர தனக்குள் மகிழ்ந்து தலையசைத்து உள்ளே ஓடும் சொற்களை மெல்ல சொல்லிக்கொண்டு சிறுவனாகவே அவர் அணுகி வந்தார்.

ஒளிபட அவர் அணுகியபோது கருவறை தெய்வம் அகலொளியில் என அவர் முகத்திலிருந்த விரிந்த புன்னகையைக் கண்டு பூர்ணை படபடப்பு கொண்டாள். சொல்லெழாமல் கைகூப்பி நின்றாள். இளைய யாதவர் அருகணைந்து அவளிடம் “எப்படி இருக்கிறாள்?” என்றார். பூர்ணை அவ்விழிகளையும் புன்னகையையும் கண்டு சொல்மறந்து நெஞ்சில் கூப்பிய கைகள் மேலும் இறுகி நடுங்க நின்றாள். அவர் அவள் தோளில் கைவைத்து “உளம் தெளிந்திருக்கிறதா?” என்றார். அதன் பின்னரே அவள் சொல் மீண்டு “ஆம் அரசே, உளம் தெளிந்திருக்கிறார். தங்களிடம் பேச விரும்புகிறார்” என்றாள். “நன்று” என்றபின் அவர் குடிலுக்குள் சென்றார். உள்ளே நுழைய ஒப்புதல் கோரவில்லை. அவளைச் சொல்பெற்றுவர அனுப்பவுமில்லை.

பூர்ணை வாசலில் அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நின்றாள். இளைய யாதவர் திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு முகம் திருப்பிக்கொண்டார். அவர்கள் அவளை அகன்று போகச் சொல்லவில்லை என்பதனால் அவள் அங்கேயே நின்றாகவேண்டும் என உணர்ந்தாள். சுபத்திரை இளைய யாதவரைக் கண்டதும் எழுந்து மேலாடையை சீர்செய்து ஆடைமுனையை தலைக்கு மேல் சுழற்றி குழல் மறைத்து அமைத்தபடி தலைநிமிர்ந்து நின்றாள். அவள் முகமன் ஏதும் உரைக்கவில்லை. ஆனால் அவள் ஏதோ பேசிக் கொதிப்பதுபோல் முகம் நெளிந்துகொண்டிருந்தது.

இளைய யாதவர் “நான் இருமுறை வந்து உன்னைப் பார்த்துவிட்டு சென்றேன், சுபத்திரை. அன்று நீ துயின்றுகொண்டிருந்தாய். உன் முகம் மிகவும் கொந்தளித்துக்கொண்டிருந்தது. உடல் மிகவும் தளர்ந்துவிட்டிருந்தது. இன்று ஓரளவுக்கு தேறியிருக்கிறாய் என்று நினைக்கிறேன். நன்று, உளம் தேறினால் உடலும் தேறும்” என்றார். சுபத்திரை அவர் முகத்தை பார்த்து “உங்களுக்கு மலர்ச்சூழ்கையிலிருந்து வெளியேறும் வழி தெரியுமா?” என்றாள். அவர் புன்னகைத்து “நான் வெளியேறும் முறைகள் எதையும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எப்போதும் வெளியேதான் நின்றிருக்கிறேன். எதற்குள்ளும் நுழைவதில்லை” என்றார்.

அவள் சீற்றத்துடன் “இத்தகைய சொல்விளையாடல்களுக்கு எனக்கு பொழுதில்லை. என் மைந்தனுக்கு நீங்கள் உரைத்த மலர்ச்சூழ்கையை உடைத்து உள்ளே செல்லும் வழிதான் அவனை கொன்றது. அதிலிருந்து மீளும் வழியை நீங்கள் அவனுக்கு ஏன் சொல்லவில்லை?” என்றாள். “யாருக்கேனும் அது சொல்லப்படுகிறதா?” என்றார் இளைய யாதவர். “யாரேனும் வெளியேறியிருக்கிறார்களா?” என்று மீண்டும் கேட்டார். “என்னிடம் விளையாடவேண்டாம். இச்சொற்களுக்கு என்னிடம் எந்தப் பயனுமில்லை!” என்று உரத்த குரலில் சுபத்திரை சொன்னாள். “நான் என் மைந்தனைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அவனுக்கு மலர்ச்சூழ்கைக்குள் செல்லும் வழியை கற்பித்தீர்கள். மீளும் வழி கற்பிக்கப்படவில்லை. ஆகவேதான் அவன் அங்கேயே சிக்கிக்கொண்டான்.”

“இதெல்லாம் சூதர்கள் உருவாக்கும் கற்பனைகள். அவன் தனது அத்துமீறும் இயல்பினால் தனித்து அச்சூழ்கைக்குள் சென்று சிக்கிக்கொண்டான். போர் என்பது ஒத்திசைவால் மட்டுமே நிகழ்த்தப்படுவது. எந்நிலையிலும் தன் படைகளின் ஒரு பகுதியாக நிலைகொள்பவனே மெய்யான வீரன். இளமையின் துடுக்கும் புகழ் தேடவேண்டும் என்னும் மிகைவிழைவும் உன் மைந்தனை அலைக்கழித்தன. அவன் அவ்வாறு மீறிச்செல்வதை எவரும் எதிர்பார்க்கவில்லை. அவனும் எவரையும் திரும்பி நோக்கவில்லை. ஆகவே மலர்ச்சூழ்கையிலிருந்து அவனை மீட்கும் பொழுது பாண்டவப் படைகளுக்கு அமையவில்லை… மெய்யாகவே நிகழ்ந்தது இதுவே.”

“நடந்ததை நீயே உசாவி அறியலாம், அரசி” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அப்போது இளைய பாண்டவர்கள் இருவரும் வெவ்வேறு திசைகளிலிருந்தனர். அவர்கள் பலரை வென்று கடந்து வந்து அச்சூழ்கையை உடைக்கவேண்டியிருந்தது. அபிமன்யுவைக் களத்தில் சூழ்ந்து நின்றிருந்தவர்கள் அங்கரும் துரோணரும் ஜயத்ரதனும் என கௌரவத் தரப்பின் மாவீரர்கள். அவர்களே அம்மலரின் இதழ்கள். அவனால் அச்சூழ்கையை உடைத்து எப்படி வெளிவர இயலும்? வீண் கதைகளை உன் எண்ணத்தில் ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை” என்றார் இளைய யாதவர்.

“இல்லை! மீளும் வழி தெரிந்திருந்தால் என் மைந்தன் வந்திருப்பான். அவனை எவராலும் அவ்வண்ணம் சிறைப்படுத்தியிருக்க இயலாது!” என்று அவள் சொன்னாள். “அத்தனை மாவீரர்களையும் தன்னந்தனியாக நின்று அவன் எவ்வாறு எதிர்க்கமுடியும்?” என்றார் இளைய யாதவர். “அவன் எதிர்த்தான். பொருதி அவர்களை வென்றான். அவர்கள் ஒவ்வொருவரும் பின்னடைந்தனர்!” என்று சுபத்திரை சொன்னாள். “அவன் வெல்லற்கரியவன். தேவர்களுக்கு இனியவன். அவனை வென்றது ஊழ். இப்புவியில் எவருமல்ல, வெல்லற்கரிய ஊழ்” என்று அவள் கூவினாள். “நான் அறிவேன். அந்த ஊழின் திறவுகோல் உங்களிடமிருந்தது. அதை நீங்கள் அவனுக்கு அளிக்கவில்லை!”

அவர் பொறுமையுடன் “போருக்குப் பின் கதைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அங்கு என்ன நிகழ்ந்ததென்று எவர் கண்டது? அவனை எதிர்ப்பதில் அனைவருக்கும் தயக்கமிருந்தது என்பதே உண்மை. களத்தில் அவனைக் கொன்றாகவேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். எனில் மட்டுமே போர் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இயலும் என்பதை அறிந்திருந்தார்கள். ஆனால் அங்கர் தன் கையால் அவன் இறப்பதை விழையவில்லை. கிருபர் அவன் வீழ்த்தப்படவேண்டும் என்று மட்டுமே எண்ணினார். ஜயத்ரதன் கூட முழுமையாக போரிடவில்லை. துரியோதனன் அப்போரிலேயே இல்லை. மெய்யாகவே எதிர்த்தவர் துரோணர் மட்டுமே. அவரும் விரைவிலேயே பின்னடைந்து நம் மைந்தன் தப்பிப்போக முடியுமென்றால் செல்லட்டுமே என்ற முடிவை அடைந்தார்” என்றார்.

“அவனை தப்ப விடாது நின்று போரிட்டவன் லக்ஷ்மணனும் கோசல மன்னன் பிருஹத்பலனும் மட்டுமே. அவன் அவர்களைக் கொன்றான். அப்போது கூட அவனை அவர்கள் முழுமையாக சுற்றி வளைக்கவில்லை. அறுதியில் அவனை வீழ்த்தியவன் ஜயத்ரதன். அவனைக் கொன்றவன் துருமசேனன். இதுதான் நடந்தது…” அவள் தலையை இல்லை இல்லை என்று அசைத்தாள். “என் மைந்தனுக்கு வெளியேறும் வழி தெரிந்திருக்கவேண்டும். தெரிந்திருந்தால் அவன் இவ்வண்ணம் வீழ்ந்திருக்க மாட்டான். அது உங்கள் பிழை. எனது பிழை!” என்று கூவினாள். அவள் கண்கள் கலங்கி வெறித்திருந்தன. முகம் சிவந்து மூச்சு சீறியது. பிச்சி போலிருந்தாள்.

“அவன் உள்நுழைந்த சூழ்கைகள் என்னென்ன என்று நமக்கு தெரியாது. விண்ணிலிருந்து பார்க்கும் தேவராலும்கூட மண்ணில் மானுடர் புகுந்து ஆடும் சூழ்கைகளைப்பற்றி அறியமுடியாது…” என்றார் இளைய யாதவர். “நீங்கள் விண்ணிலிருந்து பார்ப்பவர். உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை” என்று சுபத்திரை சொன்னாள். “இப்பிறவியிலாவது அவன் அச்சூழ்கையை அறுத்து முன்னகர வேண்டும்… இங்கிருந்தாவது அவன் அதை கடந்துசெல்லவேண்டும்” என்று அவள் கூச்சலிட்டாள். முன்னால் வந்து இளைய யாதவரின் கைகளைப் பற்றிக்கொண்டு உலுக்கியபடி “அவன் விடுதலை பெற்றாகவேண்டும்… அவன் கடந்துசென்றாகவேண்டும்!” என்றாள்.

“உன் நாவிலிருந்து வந்தது ஓர் அரிய சொல். உணர்க. அவன் இச்சூழ்கைக்குள் சிக்கிக்கொண்டது இப்போது மட்டுமல்ல. ஒரு வாழ்வில் ஒருவர் அடையும் துன்பங்கள் அனைத்தும் முந்தைய பிறப்பின் தொடர்ச்சிகள் என்றும் அடுத்த பிறப்பின் தொடக்கங்கள் என்றும் உணர்வது ஒரு மெய்யறிதல். அச்சூழ்கைக்குள் அவன் பல பிறவிகளுக்கு முன்னரே நுழைந்துவிட்டிருந்தான். மீள மீள முயன்று ஒவ்வொன்றாக இழந்து ஒருசிலவற்றை ஈட்டி அவன் பிறவிச்சுழலில் சென்று கொண்டிருக்கிறான். வரும் பிறவிகளில் அவன் கண்டடைவான். அவன் மீளக்கூடும். அவன் ஊழ் அவனை அழைத்துச் செல்லும். அதுவே நெறி” என்று இளைய யாதவர் சொன்னார்.

“அனைத்திற்கும் மறுமொழியாக இதை சொல்கிறார்கள்!” என அவள் கசப்புடன் சொன்னாள். “ஊழ் ஊழ் ஊழ் என்று ஒரு சொல். எனக்கு அச்சொல் வெறுப்பை அளிக்கிறது… மானுடனின் அறியாமையையும் கீழ்மையையும் சிறுமையையும் அதைப்போல் வெளிப்படுத்தும் பிறிதொரு சொல் இல்லை.” இளைய யாதவர் “விரும்பியும் விரும்பாமலும் இங்கு அனைவரும் ஊழில்தான் அமர்ந்திருக்கிறார்கள். ஊழென்பது முன்னைவினை நிகழ்வினை பின்னைவினை என்று மும்முகம் கொண்டு நம்மை வந்து அடைகிறது. ஆனால் ஊழ் என்பது முன்னரே வகுத்துவைக்கப்பட்ட பாதை அல்ல. நிகழ்வன எழுதப்பட்ட நூலுமல்ல. அது ஒரு பயிற்சி. அதில் வென்று கடந்த உயிர்கள் முன் செல்கின்றன” என்றார்.

இளைய யாதவரின் குரல் கனிந்திருந்தது. சிறுமியிடம் பேசுவதுபோல் குனிந்து அவளிடம் சொன்னார் “அப்பயிற்சிக்கு குறுக்கு வழிகள் இல்லை, அரசி. குறுக்கு வழிகளால் வெல்பவன் எதையும் கற்றுக் கடந்து செல்வதில்லை. உன் மைந்தன் இங்கு முன்னரே அவனுக்கு வகுக்கப்பட்டிருந்த சூழ்கை ஒன்றில் உட்புகுந்து சிக்கிகொண்டான். அவனுக்காக வைக்கப்பட்ட அத்தேர்விலும் சிலவற்றை வென்றிருப்பான். சிலவற்றை ஈட்டியிருப்பான். அதுவே இனி அவனை கொண்டுசெல்லும் ஊர்தி. அவனுடைய வழிகாட்டி அது. அதை நீ இங்கிருந்து உணர முடியாது.” சுபத்திரை “அவன் என் கனவில் வந்தான். அச்சுழியிலிருந்து அவனை விடுவிக்கும்படி என்னிடம் கோரினான்” என்றாள்.

“உன் கனவில் வந்தானா? தன்னை விடுவிக்கும்படி அவன் கோரினானா?” என்று முதல்முறையாக குரல் கூர்மையடைய இளைய யாதவர் கேட்டார். “ஆம், அதனால்தான் நான் தவிக்கிறேன்” என்றாள் சுபத்திரை. அவர் மேலும் கூர்ந்து அவள் கண்களுக்குள் நோக்கி “நன்கு எண்ணிச்சொல். அவன் அவ்வாறு கூறினானா?” என்றார். “கூறினான்! அது கனவல்ல, மெய். நாங்கள் துவாரகையின் வட்டச்சுழல் பாதையில் வழி தவறினோம். அன்னையே உனக்கு மீளும் வழி தெரியுமா என்று அவன் கேட்டான்” என்றாள் சுபத்திரை.

இளைய யாதவர் புன்னகைத்து “உனக்கு மீளும் வழி தெரியுமா என்று மட்டுமே கேட்டிருக்கிறான்” என்றார். “அது அவ்வழியை அவனுக்கு நான் சொல்லவேண்டும் என்பதற்கான கோரிக்கை மட்டுமே. அவனை நான் அறிவேன்” என்றாள் சுபத்திரை. இளைய யாதவர் சற்றே சலிப்படைந்து “இவ்வெண்ணத்தை விட்டுவிடு, சுபத்திரை. இது நன்றல்ல. ஊழை அறிந்துகொள்ள முயல்வது என்பது அதை எதிர்த்து நிற்பதற்கு நிகர்தான். அந்த அத்துமீறலை ஊழ் சமைத்த ஆற்றல்கள் விரும்புவதில்லை. எதிர்த்து நிற்பவர்களுக்கு ஊழ் மேலும் ஆற்றல் கொண்டதாகிறது” என்றார்.

“நீ உன் உள்ளத்தில் செறிந்திருக்கும் ஆணவத்தால் ஊழை எதிர்க்கலாம் என்னும் எண்ணத்தை அடைகிறாய். உன்னால் எதுவும் முடியுமென்று எண்ணுகிறாய். நீ உன்னையே கூட இன்னும் அறியவில்லை. உன்னைச் சூழ்ந்தவற்றை கூட இன்னும் கடக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்கைகளுக்குள் சென்றுகொண்டிருக்கையில் பிறருக்கு வழிகாட்டுபவர் என எவருமில்லை. மைந்தருக்கும், சுற்றத்திற்கும், எளியவருக்கும், கற்றோருக்கும், சான்றோருக்கும், அந்தணருக்கும், முனிவருக்கும், தெய்வங்களுக்கும் நாம் அளிக்கும் அனைத்து கடமைகளும் நாம் வெளியேறும் பொருட்டு நாம் செய்வது மட்டுமே” என்றார் இளைய யாதவர்.

“இச்சொற்கள் எவற்றையும் நான் செவிகொள்ளப் போவதில்லை. இத்தகைய சொற்களால் என் வாழ்நாள் முழுக்க சித்தத்தை நிரப்பிவிட்டிருக்கிறேன். சற்றே எண்ணியிருந்தால் என் மைந்தனுக்கு வெளியேறும் வழியை நான் சொல்லியிருப்பேன். இனி அது நிகழலாகாது. அடுத்த பிறவியிலாவது அதை அவன் அறிந்தாகவேண்டும். என் மைந்தனுக்கு இன்னும் பொழுதில்லை. இன்றிரவுக்குள் அவனை நான் சந்திக்க வேண்டும். அவன் எங்கிருந்தாலும் என் முன் வரவேண்டும். அவனுக்கு நான் சொல்ல வேண்டும், அதிலிருந்து வெளியேறும் வழி என்ன என்று” என்றாள் சுபத்திரை. “சொல்லுங்கள், மலர்ச்சூழ்கையிலிருந்து வெளியேறும் வழி என்ன?”

இளைய யாதவர் “மலர்ச்சூழ்கையிலிருந்து வெளியேறும் வழி ஒன்றே” என்றார். “அதன் மிகவும் ஆற்றல் குறைந்த பகுதி அதன் குவிமுனைதான். அதன் இதழ்களை ஊடுருவி எவரும் வெளியேற முடியாது. ஆனால் இதழ்கள் வந்து கவ்வுவதனால் ஒவ்வொருவரும் அதை ஊடுருவவே முயல்வார்கள். எதிர்ப்போரை மட்டுமே எதிர்ப்பது என்பது போர்ச்சூழலில் நிகழும் உளமாயம். மலர்ச்சூழ்கையின் இதழ்கள் குவியும் இடத்தில் ஒரு சிறு வாயில் இருந்தே ஆகவேண்டும். ஒவ்வொரு இதழும் ஒன்றையொன்று அழுத்துவதனால் உருவாகும் சிறு துளை அது. இதழ்கள் விசை கொள்ளும்தோறும் அத்துளை மேலும் தெளிவடைகிறது. அதனூடாக அன்றி வேறெவ்வகையிலும் மலர்ச்சூழ்கையிலிருந்து வெளியேற இயலாது.”

சுபத்திரை “இதை என் மைந்தனிடம் சொல்லவேண்டும். நான் சொல்லவில்லையெனில் இப்பிறவியில் எந்நிறைவையும் அடையப்போவதில்லை. அன்னையென இங்கிருப்பது வீணென்றே உணர்வேன்” என்றாள். இளைய யாதவர் “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழ்கை. இப்பிறவியில் மலர்ச்சூழ்கை, அடுத்த பிறவியில் அவனுக்கு காத்திருப்பது எச்சூழ்கை என்று நீ எவ்வாறு அறிவாய்?” என்றார். சுபத்திரை “இதை அவன் அறிந்து செல்லட்டும். இப்பிறவியில் அவனுக்கொரு தெளிவிருக்கட்டும். இங்கிருந்து இத்தனை பெரிய விடையின்மையுடன் அவன் செல்லலாகாது” என்றாள்.

“நீ எண்ணுவதுதான் என்ன? அவனது மீட்பா? அல்லது இதனூடாக உன் பொறுப்பிலிருந்து நீ விடுவித்துக்கொண்டாய் எனும் நிறைவா?” என்று இளைய யாதவர் கேட்டார். சுபத்திரை திகைப்புடன் இளைய யாதவரை பார்த்தாள். பின் உரக்க கூவியபடி குடில் மூலையிலிருந்த வாளை எடுத்து உருவி தன் கழுத்தில் வைத்துக்கொண்டாள். “இக்கணம் நீங்கள் உரைக்கவேண்டும். என் மைந்தனுடன் நான் உரையாட முடியுமா? என் மைந்தனை என் முன் வரவழைக்க முடியுமா? என் எண்ணத்தை அவனிடம் சொல்ல முடியுமா? இல்லையெனில் மறுகணம் இதை இழுத்துக்கொள்வேன். இங்கு உயிர்வாழமாட்டேன்! உங்கள்மேல் ஆணை!”

“சுபத்திரை…” என்று கை நீட்டியபடி இளைய யாதவர் முன்னகர்ந்தார். “கூறுக, ஆமெனக் கூறுக” என அவள் கூவினாள். “நான் அறிவேன், உங்களால் இயலும் என. வேறெந்த சொல்லையும் ஏற்கமாட்டேன்.” இளைய யாதவர் “பொறு… பொறு… நான் நீ கோருவதைச் செய்கிறேன்… பொறு” என்றார். அவள் வாளை அழுத்தியபடி அவரை வெறி நிறைந்த விழிகளால் நோக்கினாள். “அவன் இங்குதான் இருக்கிறான். நீர்க்கடனுக்கு முன் உற்றாரை சூழ்ந்திருப்பது நீத்தாரின் இயல்பு” என்றார். “அவனிடம் நான் பேசியாக வேண்டும். அவனிடம் அனைத்தையும் கூறியாகவேண்டும்” என்றாள் சுபத்திரை.

“அவனை இங்கு வரவழைப்போம். அதற்கு நான் ஒருங்கு செய்கிறேன்” என்றார் இளைய யாதவர். சுபத்திரை கழுத்தில் பதித்த நடுங்கும் வாளுடன், நீர் நிறைந்து நிலைத்த விழிகளுடன், சிவந்து குருதி படிந்தவைபோல் மாறியிருந்த முகத்துடன் இளைய யாதவரை பார்த்துக்கொண்டிருந்தாள். “மெய்யாகவே அதை செய்யலாம். ஆணை… நம்பு” என்றார் இளைய யாதவர். “எனக்கு ஒரு முனிவரை தெரியும். நான் அவரை தண்டகாரண்யத்தில் ஒருமுறை கண்டேன். அவரை அழைத்து வரச் சொல்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார்.

அவள் வாளை ஓசையுடன் நிலத்திலிட்டு தன் இரு கைகளையும் தலையில் சேர்த்து பற்றிக்கொண்டு எடையுடன் மஞ்சத்தில் குனிந்து அமர்ந்தாள். இளைய யாதவர் “நீ செய்வதென்ன என்று உனக்குத் தெரியவில்லை. இந்நெறிகள் இரக்கமற்றவை. புவி முழுக்க உயிர்களை கட்டுப்படுத்துபவை என்பதனால் அவை அவ்வாறுதான் இருக்க இயலும். ஏனென்றால் இங்கு ஓர் உயிருக்கு காட்டும் இரக்கம் பல்லாயிரம் உயிர்களுக்கு இழைக்கும் கொடுமையாக மாறிவிடகூடும். இங்கு ஒரு நெறி முடிச்சவிழ்கையில் பல்லாயிரம் கோடி முடிச்சுகள் மேலும் இறுகக்கூடும். இதில் ஒரு அணுவையும் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. இவையனைத்தையும் படைத்து காக்கும் மும்மூர்த்திகளுக்கும் கூட” என்றார்.

“பரம்பொருளென்பது இப்பல்லாயிரம் கண்ணிகளால் தன்னை தொடுத்துக்கொண்டு புடவியெங்கும் நெறிகளென்றும், நிகழ்வுகள் என்றும் நிறைந்திருக்கும் ஒன்று. நீ அறிந்துகொள்ள முயல்வது முனிவர் ஊழ்க நிறைவில் அடைவதை. நீ எதிர்ப்பது உன்னுள்ளும் உறையும் அம்முடிவின்மையை” என்றார் இளைய யாதவர். “நான் எதையும் எண்ண விரும்பவில்லை. என் மைந்தன் என்னுடன் பேசவேண்டும். அவனிடம் நான் சொல்லியாக வேண்டும். அது ஒன்றே எனக்கு இப்போதைய தேவை” என்றாள் சுபத்திரை.

 

இளைய யாதவர் சுபத்திரையிடம் விடைபெறும் முகமாக “நன்று, நான் உரியன செய்கிறேன்… நீ பொறுத்திரு” என்று கூறி திரும்பியபோது அவர் முகத்தை பூர்ணை பார்த்தாள். அதில் அங்கு வரும்போது இருந்த அதே புன்னகை இருப்பதைக் கண்டு அவள் திகைத்தாள். இளைய யாதவர் அவளிடம் அதே புன்னகையுடன் “என் ஏவலன் வெளியே வந்துள்ளானா?” என்றார். அவள் திரும்பிப்பார்க்க வெளியே அவருடைய அணுக்க ஏவலனாகிய யாதவ இளைஞன் வந்திருப்பதை கண்டாள். “ஆம்” என்றாள்.

அவர் வெளியே வந்து அவனை அருகணையும்படி கைகாட்டினார். இயல்பாக அவன் தோளில் கைவைத்து தாழ்ந்த குரலில் பேசத்தொடங்கினார். அவன் அவர் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் தலைவணங்கி திரும்பிச் சென்றான். இளைய யாதவர் பூர்ணையிடம் “நான் அறிந்த முனிவர் இங்குள்ளார். அவர் நீத்தாரை வரவழைத்து அவர்களுடன் நம்மை பேச வைக்கும் ஆற்றல் கொண்டவர். அவரை ஒருமுறைதான் நேரில் கண்டிருக்கிறேன். ஆனால் அவர் ஆற்றலை உணர்ந்திருக்கிறேன். அவரை அழைத்துவரும்படி தூதனுப்பியிருக்கிறேன். அவர் மிக அருகேதான் இருக்கிறார். அதை நான் உணர்கிறேன். அங்குதான் அனுப்புகிறேன்” என்றார்.

அவள் தலையசைத்தாள். “சற்றுநேரத்திலேயே அவர் வந்துவிடுவார். அதுவரை நீ தங்கையுடன் இரு. அவள் உள்ளம் தளராது நோக்குக” என்றார். அவள் “அவர் உள்ள உறுதி கொண்டிருப்பதாகத்தானே தோன்றுகிறது?” என்றாள். “இல்லை. அது இன்னொரு வகையான தளர்வு” என்றபின் தலையசைத்துவிட்டு இளைய யாதவர் ஏவலன் கொண்டுவந்து நிறுத்தியிருந்த தன் புரவியை நோக்கி சென்றார். அதில் ஏறிக்கொண்டு மெல்லிய தாவல்நடையில் அவர் இருளுக்குள் செல்வதை அவள் நோக்கி நின்றாள். பின்னர் நீள்மூச்சுடன் திரும்பினாள்.

பூர்ணை சுபத்திரையை அணுகி “தாங்கள் ஏதேனும் அருந்தலாம், அரசி” என்றாள். “அவரால் இயலும். அவர் என் மைந்தனிடம் பேச வைப்பார். அவனுக்கு நான் இங்கு என்ன நிகழ்ந்ததென்று கூறுவேன். வெளியேறும் வழியை அவனுக்கு நான் கூறுவேன்… ஐயமில்லை” என்று அவள் சொன்னாள். “ஆம், உங்கள் உள்ளம் அதை அழுத்தமாக ஆணையிடுகிறது என்றால் அதை செய்க” என்றாள் பூர்ணை. “ஆனால் அது ஊழின் நெறியைக் குலைத்தல் என்றும் அது தீங்கை விளைவிக்கும் என்றும் இளையவர் கூறுகிறாரே?” என்று சுபத்திரை சொன்னாள். பூர்ணை புன்னகைத்து “அரசி, நாம் ஒன்றை நம் உயிரை மீறி செய்துவிடமுடியுமா?” என்றாள்.

அக்கோணத்தில் முதன்முறையாக எண்ணிய சுபத்திரை திகைப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். “நீங்கள் இவ்வண்ணம் எண்ணுவதும் இதை இயற்றுவதும் கூட மறைந்த இளவரசரின் ஊழின் ஒரு பகுதியோ என்னவோ. நம் உள்ளம் ஏவுவதை செய்வோம். நம் உள்ளத்தை ஏவுவது எவரென்றும் ஏனென்றும் நாம் அறிய முடியாதல்லவா?” என்றாள் பூர்ணை. “ஆம்” என்று சுபத்திரை பெருமூச்சுவிட்டாள். எழுந்து தன் விழிகளை துடைத்து மேலாடையை சீரமைத்தாள். அவள் வளையல்கள் ஒலித்தன. ஆடை சரசரத்தது.

பூர்ணை அவளை நோக்கினாள். அவள் கையில் நிறைந்திருந்த வளையல்கள் பெரிதாகி மணிக்கட்டிலிருந்து கழன்று நழுவி வெளியே விழும்படி தோன்றின. வெண்ணிறமான கைகளில் நீல நரம்புகள் புடைத்து பரவியிருந்தன. “நான் வேண்டுமென்றால் இளைய பாண்டவரை இங்கு வரச்சொல்கிறேன். தங்களிடம் அவர் முறைப்படி ஏதோ சொல்ல வேண்டுமென்று கூறப்பட்டது” என்றாள் பூர்ணை. “வேண்டாம்!” என்று உரக்க சுபத்திரை சொன்னாள். மூச்சுத் திணற பற்களைக் கடித்து “இத்தருணத்தில் நான் எவரையாவது சந்திப்பதை முற்றாக தவிர்க்கிறேன் என்றால் அவரைத்தான்” என்றாள்.

“அவர் துயருற்றிருக்கிறார். தாங்களும் துயருற்றிருக்கிறீர்கள். இத்தருணத்தில் நீங்கள் ஒருவரோடொருவர் கைமாறிக்கொள்ளும் சொற்கள் எவையாயினும் அவை நன்றே. வசையோ பழியோ கூட ஆறுதல் அளிப்பதுதான்” என்று பூர்ணை சொன்னாள். “வேண்டியதில்லை!” என்று அவள் உரக்க சொன்ன்னாள். “ஒருநாள் கூட அவரிடம் நான் எதையும் பகிர்ந்துகொண்டதில்லை. ஒருமுறை கூட அணுக்கமாக உணர்ந்ததும் இல்லை. அவருடன் எனக்கு இன்று எந்த உளத்தொடர்பும் இல்லை.”

“அவரை விரும்பி அவருடன் வந்தீர்கள்… அவர் தேரை நீங்கள் செலுத்திய கதையை சூதர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன்” என்றாள் பூர்ணை. “ஆம், அது ஒரு சிறு பொழுது… ஆனால்…” என்றபின் “இந்நகருக்குள் நுழைந்தபோதும் முதல் நாளிலேயே தெரிந்துகொண்டேன், அவர் உள்ளத்தில் வேறு பெண்களுக்கு இடமில்லை என்று” என்றாள் சுபத்திரை. “ஆனால்…” என்று பூர்ணை சொல்லத் தொடங்க “ஆம், பல பெண்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவருடைய வேறு வேறு வடிவங்களே. அவர்களும் அதை உணர்ந்து தங்களை அந்த வடிவங்களாக மாற்றிக்கொண்டு அவருக்கு அணுக்கமானார்கள். சில தருணங்களில் அவரை வென்றார்கள்” என்றாள் சுபத்திரை.

“நான் யாதவரின் தங்கை. துவராகையின் அரசி. பிறிதொருவரின் மாற்றுவடிவமாக மாறுவது என்னால் இயலாது. அவ்வாய்ப்பை முற்றாகவே தவிர்த்துவிட்டேன். ஆகவே ஒருபோதும் அவருக்குள் நுழையவுமில்லை, அவருக்கு அணுக்கமாக ஆகவும் இல்லை. ஓரிரவு ஓரிரு சொற்கள் அதற்கு மேல் எனக்கும் அவருக்கும் எவ்வுறவுமில்லை. இம்மைந்தன் அவருடன் நான் கொண்ட அன்புக்கான சான்றல்ல. நான் கொண்ட விலக்கத்தின் சான்று மட்டுமே. இது அவரிலிருந்து நான் அள்ளி எடுத்துக்கொண்ட எனக்குரிய வடிவம். இதில் திகழ்ந்த நான் சமைத்துக்கொண்ட இளைய பாண்டவர் அவன்” என்றாள் சுபத்திரை.

பூர்ணை “ஆம்” என்று பெருமூச்சுவிட்டாள். “அவன் நிலையற்றிருக்கிறான். துயருற்றிருக்கிறான். அத்துயர் எதனால் என்று என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை” என்றாள் சுபத்திரை. “நீர்க்கடனுக்கு முன் அத்தனை ஆத்மாக்களும் துயருறுகின்றன, நிலையழிகின்றன என்கிறார்கள்” என்றாள் பூர்ணை. “இருக்கலாம். என் மைந்தனின் துயர் அவ்வாறல்ல. அதற்கும் மேலான ஒன்று. அதற்கான தீர்வொன்றையே நான் காண்கிறேன்…” என்று சுபத்திரை சொன்னாள்.

பூர்ணை சில கணங்கள் அவளை நோக்கி அமர்ந்தபின் “தாங்கள் விராட இளவரசியை பார்த்தீர்களா?” என்று கேட்டாள். சுபத்திரை திகைத்து திரும்பி அவளைப் பார்த்தாள். அவள் உதடுகள் மெல்ல பிரிந்தன. மூச்சில் நெஞ்சு ஏறி இறங்கியது. “அங்கே துவாரகையில்தான் இருக்கிறார்கள்” என்றாள் பூர்ணை. “இல்லை” என்று அவள் சொன்னாள். முற்றாக நிலையழிந்து கைகளால் ஆடைமுனையைச் சுழற்ற தொடங்கினாள்.

சுபத்திரையை கூர்ந்து நோக்கி பூர்ணை சொன்னாள் “தாங்கள் முதலில் உங்கள் மூத்தவரிடமல்ல விராட இளவரசியிடம் அல்லவா பேசியிருக்க வேண்டும்?” சுபத்திரை தன் முழு உளவிசையையும் திரட்டி “தேவையில்லை!” என்று உரக்க கூவினாள். கைகளை காற்றில் விசிறிபோல வீசி “தேவையில்லை தேவையில்லை தேவையில்லை” என்றாள். அவள் குரல் உடைந்து ஒலித்தது. “நீ செல்லலாம்… வெளியே செல்லலாம்” என்று கைகாட்டினாள். பூர்ணை தலைவணங்கி குடிலிலிருந்து வெளிவந்தாள்.