மாதம்: ஒக்ரோபர் 2019

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 40

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 1

சகதேவன் கண்விழித்தபோது அருகே சுருதசேனன் நின்றுகொண்டிருந்தான். அவன் அசையாமல் மைந்தனை உணர்ந்தபடி படுத்திருந்தான். அவனுடைய உடலின் வெம்மை. மூச்சின் மெல்லிய ஓசை. அதற்கும் அப்பால் அருகே ஓர் உயிர் இருப்பதை உயிர் அறியும் நுண்ணுணர்வு. சற்றே அசைந்தால்கூட அக்கணம் கலைந்துவிடும் என அவன் அறிந்திருந்தான். கலைவதற்கு முன்புவரை அது முற்றிலும் உண்மை. கலைந்த கணமே கனவு அல்லது மாயை. இமையசைவுபோதும். அல்லது உள்ளம் அசைந்தாலே போதும்.

பெரும்பாலான நாட்களில் சுருதசேனன் அவனருகே தோன்றினான். துயில்விழித்தெழுகையில் எப்போதுமே அவனிடம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பு கூர்கொண்டிருந்தால் சுருதசேனன் தோன்றுவதில்லை. எண்ணி ஏங்கினால், எழுவான் என உறுதிகொண்டிருந்தால் அவன் வருவதில்லை. வெறுமையும் சலிப்பும் மிகுந்து உள்ளம் எண்ணங்களை கோக்கக்கூட ஆற்றல் அற்றிருக்கவேண்டும். வேறெங்கோ உளம்திரும்பியிருக்கவேண்டும். ஓர் ஆறுதல்மிக்க தொடுகைபோல அவன் தோன்றினான். மிக அருகே, ஒரே கணத்தில்.

இருப்பும் இன்மையும் ஒரே கணத்தில்தான் வேறுபடுகின்றன போலும். அவன் அணுகி வருவதில்லை. அகன்று மறைவதுமில்லை. அவன் தொலைவிலெங்கும் இல்லை. மிக அருகேதான் இருந்துகொண்டிருக்கிறான். உடனிருந்துகொண்டிருக்கிறான். ஒளி மாறுபடுகையில் வலமிருந்து இடமும் பின்பிருந்து முன்பும் தோன்றும் நிழல் என. அவன் பேசுவதில்லை. அவனிடம் அவன் ஒரு சொல்லும் உரைத்ததில்லை. அவன் நோக்கை எப்போதும் உடல்மேல் உணர்ந்திருந்தாலும் அவன் விழிகளை சந்தித்ததில்லை. அவன் முகத்தை ஏறிட்டதுகூட இல்லை.

இருமுறை அவன் காட்டில் தனித்திருக்கையில் அருகே எழுந்தான். ஒருமுறை கங்கைக்கரையினூடாக நடக்கையில் உடன் நடந்தான். ஒவ்வொரு முறை அவன் தோன்றும்போதும் சகதேவன் தன்னுள் இருந்து எடை முழுக்க எழுந்தகல்வதை உணர்ந்தான். கடுவலி நின்றுவிடுவதுபோல. அக்கணம் அகத்தில் இருக்கும் சொல் பொன்னொளி கொள்ளும். அது அனைத்தையும் ஒளிரச்செய்யும். புவியும் வானும் இனிதாகும். உயிர்க்குலங்கள் இனிதாகும். சென்றவையும் நிகழ்வனவும் வருவனவும் அமுதென்றாகும்.

முதல்முறை அவன் சுருதசேனனைக் கண்டது அங்கு வருவதற்கு முன்பு காட்டுக்குள் குடிலில் தங்கியிருந்தபோது. ஓயாது வீழ்ந்துகொண்டிருந்தது மழை. நின்று துளியுதிர்த்து பின் எண்ணிக்கொண்டு வீறிட்டெழுந்தது. குளிரில் குடில்சுவர்கள் விறைத்திருந்தன. நிலம் நனைந்து ஊறியிருந்தது. ஓயாது ஒற்றைச் சொல்லையே சொல்லிக்கொண்டிருந்தது உள்ளம். அச்சொல்லை நேருக்குநேர் கண்டு திகைத்து அதை உந்தி அப்பால் செலுத்தினால் மேலும் சில சொற்கள். சென்று தேய்ந்து ஒரு சொல்லில் முட்டி நின்று மீண்டும் அச்சொல்லே என திகழ்ந்தது அகம்.

சொல் பேய் என ஆகி அச்சுறுத்தியது. ஆறாத புண் என வலி அளித்தது. அனலென எரித்து எரித்து உள்ளிறங்கியது. எச்சொல்லும் நஞ்சே. உயிருள்ளவை அனைத்தும் ஒருநிலையில் நஞ்சாகக்கூடும் என்கின்றன நூல்கள். அழுகியவை அனைத்தும் நஞ்சே. செரிக்காத உணவு நஞ்சு. கருவறைக்குள் உயிர்துறக்கும் குழவி நஞ்சாகி அன்னையைக் கொல்லும். சொல்லின் உயிர் என்பது பொருள். பொருளிழந்த சொல் இலக்கற்றது, எழுந்த கருவறையைக் கொல்லும் நஞ்சென்று ஆவது.

அவன் துயின்று நாட்கணக்காகிவிட்டிருந்தது. துயில் துயில் என விழித்திருக்கும் கணமெல்லாம் சித்தம் தவித்தது. விழியிமைகள் இறங்க அகச்சொல் குழம்பித்தவிக்க நாகுழைய கைகள் தளர்ந்து சரிய துயில் எடைகொண்டு அவனை மூடியது. அழுந்தி நிலம்படிந்த கணமே கூரிய முள்ளால் குத்தியதுபோல் அவனை எழுப்பியது ஒன்று. திடுக்கிட்டு எழுந்து உடல்நடுங்குவான். அது என்ன என்று நெஞ்சை துழாவுவான். சிக்குவது பிறிதொரு சொல். பொருளிலாத சொல். மழை, மரம், மீன், நீர்… பொருளில்லாவிடில் சொற்களுக்கிடையே வேறுபாடென ஏதுமில்லை.

எழுந்ததும் கண்முன் பேருருக்கொண்டு நின்றிருக்கும் அச்சொல். வழிமறிக்கும் பாறைபோல் சித்தம் திகைக்கச் செய்யும். மீண்டும் துயில்கொள்ள நெடும்பொழுதாகும். துயிலவேண்டும் என எண்ணும்போதே அச்சொல் பெரிதாகத் தொடங்கும். சூழ்ந்துகொள்ளும். அச்சொல்லுடன் படுக்க இயலாது. படுத்து துயிலவே இயலாது. படுத்த கணமே உள்ளம் முழு விழிப்பை அடைந்துவிடும். மஞ்சத்திலேயே எழுந்து அமர்ந்திருப்பான். துயில் மேலோங்க சரிந்து மஞ்சத்தில் விழவேண்டும். கால்நாழிகைப்பொழுதுகூட துயில் நீடிக்காது. அது துயிலே அல்ல.

துயிலின்மையால் வாய் கசந்தது. கண்கள் எப்போதுமே வெம்மைகொண்டு நீர் பெருக்கின. பசியென்பதையே அறிய முடியவில்லை. உண்ணும் உணவு அழுகிய குருதியின் மணம் கொண்டிருந்தது. உடல் எப்போதும் நடுங்கிக்கொண்டே இருந்தது. கைகளில் சிறுபொருட்களைக்கூட வைத்திருக்க இயலவில்லை. நடப்பதும் கடினமாகியது. மூச்சிளைக்க நின்று, அவ்வப்போது நிலைதடுமாறி அருகிருப்பனவற்றை பற்றிக்கொண்டு மெல்லத்தான் செல்ல இயன்றது. மஞ்சத்தில் படுத்திருப்பதையே உடல் விழைந்தது. செயலிழந்து, மஞ்சத்துடன் ஒட்டிக்கொண்டு, பெரும்பகுதி உயிரிழந்ததுபோல் தன்னை இழந்திருக்க உடல் கிடப்பதை அவன் அதற்குள் ஒரு மெல்லிய தன்னுணர்வு என அமைந்து நோக்கிக்கொண்டிருந்தான்.

அன்று அந்தியில் மஞ்சத்தில் விழித்தெழுந்தபோது அவன் உணர்ந்தான், அவன் மைந்தர்களை எண்ணிக்கொள்ளவேயில்லை என்று. அவர்களின் முகங்களை நினைவில் திரட்ட முயன்றான். அவை தொலைவில் நின்றிருந்தன. அணுகும்தோறும் கலைந்தன. சுருதசேனனின் முகத்தையாவது அருகே கொண்டுவர முயன்றான். அது முழுமையாகவே மறைந்துவிட்டிருந்தது. எங்கிருக்கிறார்கள் அவர்கள்? உறுதியாக ஏன் முகம் காட்டுவதை மறுக்கிறார்கள்?

பின்னர் ஒரு நடுக்குடன் அவன் உணர்ந்தான், அவன் குருக்ஷேத்ரத்தையும் முற்றாகவே மறந்துவிட்டிருந்தான். எண்ணி எண்ணி முயன்றபோது குருக்ஷேத்ரப் போருக்குக் கிளம்பிவந்தது நினைவில் சில உதிரி ஓவியங்களாக தெளிந்தது. படைகளை அவனே நெடுந்தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருப்பதுபோல. ஒழுகும் மானுடப்பெருக்கு. பருப்பொருள் நீர்மைகொண்ட நெளிவும் அலைவும். பின்னர் பலகை விரிக்கப்பட்ட பாதைகள். அதன்மேல் சகடங்களின் ஒலி. குளம்புகளின் தாளம். போர்க்களம் என சொல்லிப்பார்த்தான். அது பொருளிலாச் சொல்லென திகழ்ந்தது. எந்தக் காட்சியையும் நினைவிலெழுப்பவில்லை. குருதி, சாவு, எரி, சிதை என சொல்லிச் சொல்லிப் பார்த்தான். அவையனைத்துமே வெற்றுச் சொற்களென்றே திகழ்ந்தன. எவ்வகையிலும் காட்சியாகவில்லை.

சலிப்புடன் அவன் எண்ணத் திசையை திருப்பிக்கொண்டான். கண்களை மூடி இமையின் அடிப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் ஒட்டுமொத்தமாகவே மறந்துவிட்டிருந்தான். மிகமிக எச்சரிக்கையாக உள்ளத்தின் ஆழத்தில் இருந்த நினைவுகளை எடுக்கத் தொடங்கினான். மைந்தர்களின் குழவிப்பருவம். அவர்கள் சிறுவர்களாகி கூச்சலிட்டு, பூசலிட்டு விளையாடிய காலம். அவற்றை அழுத்தி அழுத்தி அப்பால் என மறைத்திருந்தான். அவற்றில் ஒரு துளி மீண்டாலே உள்ளம் அழிந்து சாவு நிகழ்ந்துவிடும் என அஞ்சியிருந்தான். ஆனால் அவையும் மீண்டு எழவில்லை. சொற்கள் மட்டுமே எழுந்துவந்தன. நீரடியில் படிந்த வெற்றுச் சகதிச்சருகுகளைப்போல.

அன்று அவன் எழுந்து இருளில் விரைந்தான். தன் உள்ளமெங்கும் நிறைந்திருப்பவை வெறும் சொற்கள். அனைத்துச் சொற்களும் பொருளிழந்துவிட்டன. வெற்றோலமிட்டுச் சுழன்றலைகின்றன. அவனால் நின்றிருக்க இயலவில்லை. சுழலும் சொற்களை தன் உடலைச்சுற்றிப் பறப்பவையாகவே உணர்ந்தான். அவற்றைத் தொட்டு கைகளால் அள்ளிவிடமுடியும் என்பதுபோல. இது பித்து. இப்போது பித்து என இதை உணரும் தருணத்தில் இருக்கிறேன். மேலும் ஒரு அடி முன்னகர்ந்தால் போதும். ஒருகணம் போதும். அந்தத் தன்னுணர்வையும் இழந்துவிடுவேன். பின்னர் சொற்சுழல் என்னை தூக்கிக்கொண்டு செல்லும். என்னை மண்மீதெங்கும் அலைக்கழிக்கும்.

அவன் தானறிந்த பித்தர்களை நினைவுகூர்ந்தான். அவர்களின் நாவில் ஒலிப்பதே அப்போது தன் சித்தமென ஓடிக்கொண்டிருப்பதாக அறிந்தான். செல்லச்செல்ல அவன் காலடிகளில் விசை கூடியது. நடுக்காட்டில் சென்று நின்றான். அப்போது அவனுள் சொற்கள் மேலும் விசை கொண்டிருந்தன. என்னென்ன சொற்கள்! இவையெல்லாம் எங்கிருந்தன? எத்தனை பயனற்றவை சொற்கள்! இத்தனை சொற்களை ஏன் உருவாக்கினார்கள்? இவற்றை அள்ளித்திணித்து ஏன் உள்ளமென்று தொகுத்துக்கொண்டேன்?

அவன் தன் இடையிலிருந்து குறுவாளை எடுத்து கழுத்து நரம்பில் வைத்துக்கொண்டபோதுதான் அருகே ஓர் இருப்புணர்வென சுருதசேனனை உணர்ந்தான். திரும்பி நோக்க அஞ்சி நடுங்கும் கைகளுடன் அசையாமல் நின்றிருந்தான். மெல்லமெல்ல அத்தனை சொற்களும் அடங்கின. உள்ளம் விடுதலை கொண்டது. உடல் தளர்ந்தது. கைகள் இருமருங்கும் விழுந்தன. அவன் மைந்தனை உணர்ந்தபடி அங்கேயே நின்றிருந்தான். பின்னர் அந்த மரத்தடியிலேயே படுத்து ஆறுநாழிகை தன்னை மறந்து உறங்கினான்.

அதன்பின் சுருதசேனன் மீண்டும் மீண்டும் அவன் முன் தோன்றினான். அவன் தோன்றிய நாளில் அனைத்தும் எளிதாகவும் இனிதாகவும் அமையும். அவனை எக்கணமும் மீண்டும் கண்டுவிட முடியும் என்பதுபோல் ஓர் எண்ணம் எப்போதும் அகத்தே திகழும். காட்டுக்குள் சென்று அமர்ந்திருப்பான். கங்கை ஓட்டத்தை நாள் முழுக்க வெறுமனே நோக்கியபடி இருப்பான். மெல்ல மெல்ல உள்ளத்தில் சொல் ஊறத்தொடங்கும். சொல்பெருகும். சொற்பெருக்காகும். சொற்சுழிப்பு அவனை அள்ளிச்சென்று விசைகொள்கையில் மீண்டும் அவன் தோன்றுவான்.

சகதேவன் ஒரு சொல்லேனும் மைந்தனிடம் பேச விழைந்தான். ஒரு சொல், அது எச்சொல்லாக இருப்பினும் சரி. வேறென்ன சொல்? அவன் பெயர்போல் இனிய சொல் வேறில்லை. அவன் பெயர்போல் இனியது ஏதுமில்லை. அவன் “சுருதசேனா!” என்றான். அச்சொல்லே அனைத்தையும் கலைக்க அவன் எழுந்தமர்ந்தான். பெருமூச்சுவிட்டு குடிலை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து வெளியே சென்றான். உடலில் களைப்பு அகன்றிருந்தது. உள்ளத்தில் இனிய சலிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. அவன் கங்கையை அடைந்து கரையில் வெறுமனே நீரொழுக்கை நோக்கி அமர்ந்திருக்கவே விழைந்தான்.

அவனுக்காக ஏவலன் காத்து நின்றிருந்தான். தலைவணங்கி “தாங்கள் துயின்றுகொண்டிருந்தமையால் எழுப்பவேண்டாம் என எண்ணினேன், அரசே” என்றான். “சொல்” என்றான் சகதேவன். “அரசர் தங்களைக் காண விழைகிறார். உடனே வரச்சொல்லும்படி ஆணையிட்டார்” என்றான். அவன் மேலும் சொல்லும்பொருட்டு சகதேவன் காத்திருந்தான். “நேற்றிரவே இளைய அரசர் அர்ஜுனனும் பீமசேனனும் இளைய யாதவரும் மீண்டு வந்துவிட்டனர். உடன் யுயுத்ஸுவும் வந்தார். அவர்கள் அஸ்வத்தாமனின் அருமணியுடன் வந்தனர். ஆகவே நாளை முதல் நீர்க்கடன்கள் தொடங்கப்படும் என தெரிகிறது. அதன்பொருட்டுதான் அரசர் தங்களை அழைக்கிறார்.”

“அருமணியை இளையவர் வென்றாரா?” என்று சகதேவன் கேட்டான். “அஸ்வத்தாமனை வென்றவர் பார்த்தன். அருமணியுடன் வந்தவர் பீமசேனன். நேற்றிரவே அந்த மணியை கொண்டுசென்று அரசிக்கு அளித்திருக்கிறார். அதை நாளை நீர்க்கடனின்போது மைந்தர்களுக்கான படையலாக வைக்கும்படி அரசி ஆணையிட்டிருக்கிறார்” என்று ஏவலன் சொன்னான். சகதேவன் சலிப்புடன் “நன்று” என்றான். பின்னர் கைவீசி அவன் செல்லலாம் என்று காட்டினான். ஏவலன் தலைவணங்கி அகன்றான்.

 

சகதேவன் யுதிஷ்டிரனின் அவையை அடைந்தபோது அங்கே ஏற்கெனவே தௌம்யரும் மாணவர்களும் கூடியிருந்தனர். சகதேவனின் விழிகள் நகுலனை இயல்பாகத் தேடி கண்டுகொண்டன. நகுலன் யுதிஷ்டிரனுக்குப் பின்னால் மறைந்ததுபோல் நின்றிருந்தான். பீமனும் அர்ஜுனனும் இளைய யாதவரும் அங்கிருப்பார்கள் என அவன் எதிர்பார்த்தான். அவர்கள் இல்லை என்பது சற்று ஏமாற்றத்தை அளித்தது. நீராடி ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் எல்லாம் அவன் அவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் ஓர் அவையை கனவு கண்டிருந்தான்.

அவர்கள் அவனை திரும்பி நோக்கினர். யுதிஷ்டிரன் அவனைக் கண்டு முகம் மலர்ந்து ஏதோ சொல்ல தௌம்யர் புன்னகைத்தார். அவன் அணுகி வாழ்த்துரைத்தான். யுதிஷ்டிரன் அவ்வாழ்த்தை ஏற்றுக்கொண்டு அவனை கைதூக்கி வாழ்த்தியபின் சிப்பிமூடியிட்ட சிறுபேழையிலிருந்து அருமணி ஒன்றை எடுத்துக் காட்டி “இளையோனே, இதை பார்த்ததை நினைவுறுகிறாயா?” என்றார். சகதேவன் தலையசைத்தான். “அஸ்வத்தாமனின் நுதல்மணி. இளையோர் அவனை வென்று இதை கொண்டுவந்தார்கள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இனி நீர்க்கடன்களுக்கு எந்தத் தடையும் இல்லை” என்றார்.

தௌம்யர் “இத்தனை எளிதாக இது முடியுமென நான் எண்ணவில்லை. எதுவாயினும் நன்று…” என்றார். “எஞ்சும் பகையுடன் நீர்க்கடன் முடித்தோமென்னும் இழுக்கு இனி இல்லை. நோக்கினால் அரசி சொன்னதும் உண்மை. மைந்தரில் எவருக்கேனும் வஞ்சம் சிறிது எஞ்சியிருந்தாலும் நீர்க்கடன் வீணாகும்” என்றார். யுதிஷ்டிரன் “ஆம், நாம் அஞ்சிவிட்டிருந்தோம். இப்பெரும்போர் நம் அகத்தை தளர்த்திவிட்டிருந்தது. அவள் நெஞ்சு தளரவே இல்லை. ஐந்து மைந்தரை கண்முன் இழந்தும் அரசியென்றே நிமிர்ந்து நிற்கிறாள். ஐயமின்றி அவளே பாரதவர்ஷத்தை ஆளத் தக்கவள்” என்றார்.

சகதேவன் பெருமூச்சுடன் அந்த அருமணியை பார்த்தான். அதன் ஒளி குறைந்து கூழாங்கல் என மாறிவிட்டிருந்தது. உண்மையில் அதற்கிருந்த ஒளியெல்லாம் அஸ்வத்தாமனின் நுதலில் அது அமைந்திருந்தமையால்தானா? யுதிஷ்டிரன் “எங்கே இளையோர்?” என்றார். நகுலன் “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரன் எரிச்சலுடன் “எங்கே சென்றார்கள்?” என்றார். “பணிகள் மலைபோல் எஞ்சியிருக்கின்றன.” தௌம்யர் “பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. அரசியர் வந்துவிட்டார்கள். விதுரர் பொறுப்பேற்றுக்கொண்டுவிட்டார்” என்றார்.

சகதேவன் அப்பால் பீமன் வருவதை கண்டான். நோக்கிய முதற்கணத்திலேயே அவனிடமிருந்த மாற்றம் நெஞ்சில் அறைந்தது. பீமனிடம் கைவீசி யானைபோல அசைந்து வரும் அந்த வழக்கமான நடை மீண்டுவிட்டிருந்தது. அருகணைந்தபோது அவன் முகம் மலர்ந்திருப்பதை, இளமைந்தர்களுக்குரிய முறையில் அவன் இருபுறமும் காட்டை நோக்கியபடி வருவதை அவன் கண்டான். சிரித்தபடி “அசைந்தாடி வருகிறான், அறிவிலி” என்றார் யுதிஷ்டிரன். பீமன் வந்து பணிந்தபோது “நலம் சூழ்க!” என்று வாழ்த்தியபின் “நாம் நம் கடன்களை இயற்றவேண்டியிருக்கிறது, இளையோனே. அனைத்தும் ஒருங்கியாகவேண்டும்” என்றார்.

பீமன் “ஆம்” என ஆர்வமின்றி சொல்லி அப்பாலிருந்த பாறைமேல் அமர்ந்தான். தொலைவில் இளைய யாதவரும் அர்ஜுனனும் வருவது தெரிந்தது. அவர்களும் இயல்பான உடலசைவுகளுடன் மெல்லிய சொல்லாடலுடன் அணுகினர். சகதேவன் அர்ஜுனனை கூர்ந்து நோக்கினான். அவனிடம் என்ன நிகழ்ந்திருக்கிறது என்று உணர முடியவில்லை. அவன் பீமனைப்போல இளமைக்கு மீளவில்லை. முன்பிருந்த இயல்புகள் எவையும் அவனிடம் இல்லை. ஆனால் அவன் அசைவுகளில் விடுதலை இருந்தது. தன்னை முற்றாக காற்றுக்கு ஒப்புக்கொடுத்த சருகுகளில் இருக்கும் விடுதலை.

அவர்கள் வந்து யுதிஷ்டிரனைப் பணிந்து வாழ்த்து பெற்றனர். அவர்களை அழைக்கச் சென்றிருந்த யுயுத்ஸு அவர்களை தொடர்ந்து வந்து அப்பால் நின்றான். அர்ஜுனன் விலகிச் சென்று பீமனின் அருகே அமர இளைய யாதவர் யுதிஷ்டிரனின் அருகே அமர்ந்தார். யுதிஷ்டிரன் “நான் உங்களுக்காகவே காத்திருந்தேன். நாம் நீர்க்கடன் செய்ய இனி எந்தத் தடையும் இல்லை. தௌம்யரிடம் ஆணையிட்டுவிட்டேன். இனி நாம் ஒவ்வொருவரும் இங்கு நிகழும் எவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்பதை மட்டும் பிரித்துக்கொள்வோம். தௌம்யர் அவற்றை உரைக்கட்டும். அவர் சொல் என் ஆணை எனக் கொள்ளப்படும்” என்றார். இளைய யாதவர் “ஆம், பணிகளை தொடங்கவேண்டியதுதான். நமக்கு இன்னமும் ஒரு பகலும் ஓர் இரவுமே எஞ்சியிருக்கின்றன” என்றார்.

யுயுத்ஸு மெல்ல கனைத்தான். யுதிஷ்டிரன் திரும்பி அவனை பார்த்தார். அவன் தாழ்ந்த குரலில் “அதற்கு முன் ஒன்று எஞ்சியிருக்கிறது. மூத்தவர்கள் தங்கள் அரசியரிடம் ஒரு சொல்லேனும் பேசியாக வேண்டும்” என்றான். யுதிஷ்டிரன் சினத்துடன் “அனைத்தையும் பேசிவிட்டோமே? அரசியின் ஆணைப்படிதான் இங்கே அஸ்வத்தாமனின் நுதல்மணி வந்துள்ளது” என்றார். “ஆம், அது முதல் அரசியிடம் நாம் பேசியது. இன்னமும் பிற அரசியர் எஞ்சியிருக்கிறார்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். “அவர்கள் நேற்று மாலைதான் இங்கே வந்திறங்கியிருக்கிறார்கள். அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் இன்னமும் அறியோம்.”

“அவர்கள் இருக்கும் உளநிலையை அறிய பெரிய கற்பனை ஏதும் தேவையில்லை” என யுதிஷ்டிரன் எரிச்சலுடன் சொன்னார். “முறைப்படி அவர்களிடம் சொல்பெற்று நீர்க்கடன் நிகழட்டும். அவர்களிடம் சொல்பெற நாளை முதற்காலைப் பொழுதில் வருவோம் என்னும் செய்தியை மட்டும் அவர்களிடம் தெரிவிக்கலாம். மற்றபடி இப்போது நாம் செய்வதற்கொன்றுமில்லை.” அவர் ஏனென்றறியாமல் சீற்றம் கொண்டார். “ஒருவேளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் திரௌபதியைப்போல வஞ்சினங்கள் இருக்குமென்றாலும் இனி நாம் அவற்றை பொருட்படுத்தப்போவதில்லை.”

யுயுத்ஸு “அவர்களிடம் வஞ்சினம் இருக்கும், எதிரிகள் என நாம் அமைவோம்” என்றான். யுதிஷ்டிரன் சீறித்திரும்பி “என்ன சொல்கிறாய்?” என்றார். யுயுத்ஸு “அவர்களிடம் சில சொற்களேனும் நமக்கென இருக்கும். நாம் அவற்றை கேட்டாகவேண்டும். அரசே, நீங்களும் மூத்தவர்களும் தங்கள் பிற அரசியரையும் சந்தித்தாகவேண்டும். அதுவே முறை” என்றான். “ஒருவேளை அவர்கள் தீச்சொல்லிடலாம். எனில் நாம் அதைப் பெற்றே ஆகவேண்டும்.”

யுதிஷ்டிரன் “வீண்பேச்சு… இனி இதை நாம் தொடங்கினால் இந்த நீர்க்கடன் சடங்கு நிகழவே போவதில்லை” என்றார். “அவர்கள் இரண்டாமிடத்தில் இருப்பவர்களே. இப்போர் நிகழ்ந்தது திரௌபதிக்காக. வேறு எவருக்காக என்றாலும் இவை நிகழ்ந்திருக்காது. அதை அவர்களும் நன்கறிவார்கள்.” யுயுத்ஸு “அதையும் அவர்களிடமே சொல்லலாமே” என்றான். “நீ உன் இடமறிந்து பேசு… போதும்” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு “ஆம்” என தலைவணங்கினான்.

சகதேவன் அர்ஜுனனையே நோக்கிக்கொண்டிருந்தான். அவனிடம் இருக்கும் விடுதலை என்ன? எதிலிருந்து அடைந்த விடுதலை? அவன் அதுவரை அமர்ந்திருக்கும் கோலம் நினைவுக்கு வந்தது. தலைகுனிந்து முடிக்கற்றைகள் விழுந்து முகம் மறைக்க, விரல்கள் பின்னி நெளிந்துகொண்டே இருக்க, உதடுகள் வலிகொண்டவை என நெளிய, புருவங்கள் நெரிபட எக்கணமும் எழுந்து எதையோ சொல்லிவிடுபவன்போல, அல்லது எழுந்து அகன்றுவிடுபவன் என தோன்றுவான். அப்போது அவன் முழுதமைந்திருந்தான். அங்கிருக்கும் அந்தக் கல்லைப்போல குளிர்ந்து, பதிந்து, காலம் கடந்து.

ஒரு கணம் அவனுக்கு விந்தையானதோர் உணர்வு ஏற்பட்டது, அர்ஜுனன் ஒரு முனிவராக மாறிவிட்டதாக. நோக்க நோக்க அவ்வுணர்வு மீறி எழுந்தது. விழிவிலக்கி அவ்வெண்ணத்தை ஆராய்ந்து மீண்டும் நோக்கினான். அந்த எண்ணம் மேலும் வலுத்தது. அவனை யோகி என்பதுண்டு. வில்லை ஊழ்கமெனக் கொண்டவன். யோகியர் முனிவர்களாவது எப்போது? யோகமெனப் பயிலும் அந்தப் பாதையையும் அவர்கள் கடந்துவிடும்போதா?

யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் எழுந்துகொண்டு “அனைத்தும் இனி தௌம்யரின் எண்ணப்படி ஆகுக. நாளை காலை நம் குலத்து மாண்டோர் விண்புகுக!” என்றார். தௌம்யர் “ஆம், அனைத்தும் நிறைவுறுக!” என்றார். யுதிஷ்டிரன் விழிகளை அப்பால் வெயில் விரிந்த பாதை நோக்கி திருப்பிக்கொண்டு “நீ கூறுவதும் ஒருவகையில் சரிதான். நாம் அவர்களைச் சென்று நோக்கியாகவேண்டும்… இளையோர் தங்கள் மறுதுணைவியரைச் சென்று கண்டு சொல் பெறட்டும்” என்றார்.

பீமன் “அதற்கான தேவை உண்டா?” என்றான். யுதிஷ்டிரன் “உனக்கு தனியாக நான் ஆணையிடவேண்டுமா என்ன?” என்றார். பீமன் சலிப்புடன் தலையசைத்தான். நகுலன் “நாம் செய்யவேண்டியவைதான், மூத்தவரே” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் அமர்ந்திருக்க யுதிஷ்டிரன் அவனை ஒருகணம் நோக்கிவிட்டு மேலாடைக்காக கைநீட்டினார். ஏவலன் மேலாடையை எடுத்து அளிக்க அதை சுற்றிக்கொண்டு நடந்தார். நகுலனும் யுயுத்ஸுவும் அவருக்கு இருபுறமும் சென்றனர். பீமன் தனியாக நடக்க இளைய யாதவரும் அர்ஜுனனும் உடன் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து தௌம்யரும் மாணவர்களும் அகன்றனர்.

ஏவலரும் சென்றபின் சகதேவன் தலைகுனிந்து ஒரு சிறு குச்சியால் மண்ணை கீறியபடி அங்கேயே அமர்ந்திருந்தான். உள்ளத்தில் சொற்கள் ஊறிக்கொண்டிருந்தன. அர்ஜுனனின் நிறைவுமுகம். பீமனின் இளமை மீண்ட முகம். திரௌபதியின், யுதிஷ்டிரனின் முகம். அவன் சொற்கள் வழியாக சென்றுகொண்டிருந்தபோது அருகே மீண்டும் சுருதசேனனை உணர்ந்தான். அவன் உள்ளம் முற்றாக செயலிழந்திருக்கவில்லை. ஆகவே திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். சுருதசேனன் துயரம் நிறைந்த விழிகளுடன் நின்றிருந்தான்.

இது உளமயக்கல்ல, கனவும் அல்ல. இது மெய். இந்த மரங்களைப்போல, இந்த பாறைக்கல்லைப்போல. அவன் அவ்வுருவை கலைக்க எண்ணினான். ஏனென்றால் அது அவனை பதறச் செய்தது. அதன் அந்த வெளிப்படைத் தன்மையில் பிழை என ஏதோ தோன்றியது. “மைந்தா!” என்றான். “தந்தையே!” என்று சுருதசேனன் சொன்னான். “நீயா? நீ இங்குதான் இருக்கிறாயா?” சுருதசேனன் “ஆம் தந்தையே, நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்” என்றான்.

அவனுக்குப் பின்னால் நிர்மித்ரனும் யௌதேயனும் சுருதகீர்த்தியும் சர்வதனும் சுதசோமனும் தோன்றினார்கள். பிரதிவிந்தியன் சற்று அப்பால் நின்றிருந்தான். அவனுடன் சதானீகன் நின்றான். அபிமன்யுவுக்காக அவன் விழிகள் தேட சுருதசேனன் “அபிமன்யு எங்களுடன் இல்லை. அவனுடைய வழி வேறு” என்றான். “ஏன்?” என்றான் சகதேவன். “அவனுடைய அகம் நிறைவுறவில்லை” என்றான் சுருதசேனன். “நீங்கள் நிறைவுற்றீர்களா, மைந்தர்களே?” என்றான் சகதேவன்.

“நாங்கள் எதையும் விழையவில்லை. எதையும் எஞ்சவிட்டும் செல்லவில்லை” என்று சுருதசேனன் சொன்னான். “அபிமன்யு அங்கிருக்கிறான்” என்றான் சதானீகன். “எங்கே?” என்றான் சகதேவன். சதானீகன் மறுமொழி சொல்லவில்லை. “எங்கிருக்கிறான்?” என்று மீண்டும் சகதேவன் கேட்டான். “தந்தையே, இனி நாங்கள் தங்களை பார்க்க இயலாது. எவ்வகையிலும் உடனிருக்க இயலாது. இன்று பகலிரவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆகவேதான் வந்தோம்” என்றான் பிரதிவிந்தியன். “இந்தப் புவியின் ஐம்பருக்களுடனும் எங்களுக்கு இன்று தொடர்பில்லை. ஆயினும் இந்த உலகம் எங்களை பற்றிக்கொண்டிருக்கிறது” என்று சதானீகன் சொன்னான். “ஒவ்வொரு கணமும் துயரையே உணர்கிறோம். எனினும் எங்களால் விலக இயலவில்லை” என்றான் சுருதசேனன்.

சுருதகீர்த்தி “உண்மையில் இது ஓர் அலைக்கழிப்பு… எங்களை ஒவ்வொரு கணமும் கலைத்துக்கொண்டிருக்கிறது வெளி. நாங்கள் உருவெடுக்க, நிலைகொள்ள போராடுகிறோம்” என்றான். “உங்கள் துயரமே எங்களை இங்கே தக்க வைத்திருக்கிறது. உங்கள் உள்ளத்தில் எஞ்சும் வடிவையே நாங்கள் கொள்ளமுடிகிறது. நீங்கள் துயரழிகையில் நாங்கள் மறைந்துவிடுவோம்.” பிரதிவிந்தியன் “துயர்கொண்டவர்கள் அனைவருமே அத்துயரை எவ்வகையிலேனும் கரைத்தழிக்கவே முயல்கிறார்கள். நீங்களும் நாளை அதை கரைக்கத் தொடங்குவீர்கள். அந்நிகழ்வு ஒரு தொடக்கம். பற்பல தலைமுறைகளாக செய்யப்பட்டு பொருளேற்றம் கொண்டது. எங்களை உங்கள் அகத்திலிருந்து கரைத்துவிடுவீர்கள்” என்றான்.

“என்ன?” என்றபடி சகதேவன் எழுந்துகொண்டான். “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டபடி அவன் கையை நீட்டினான். “நாளை காலை நீர்க்கடன் அளித்து எங்களை விண்ணேற்றிவிடுவார்கள்” என்றான் நிர்மித்ரன். “அதன்பின்? அதன்பின்?” என்றான் சகதேவன். உடலெங்கும் பரவிய பதற்றத்துடன் “அதன்பின் எங்கிருப்பீர்கள்? என் மைந்தர்களே, அதன்பின் எங்கிருப்பீர்கள்?” என்றான். “அதன்பின் விண்ணில் இருப்போம். ஆனால் உருவழிந்து, தன்னிலை கரைந்து. தந்தையே, மண்ணிலிருந்து விண்ணிலெழும் எதுவும் அவ்வாறே ஆகிவிடுகிறது.”

“என் செல்லங்களே, என் தெய்வங்களே!” என சகதேவன் கதறினான். “உங்களை எப்படி நான் விடுவேன்? அதன்பின் இப்புவியில் எனக்கு எஞ்சியிருப்பது என்ன?” அவன் அவர்களை பிடிக்க முன்னகர அவர்கள் இயல்பாக பின்னடைந்தார்கள். சுருதசேனன் “நாங்கள் சென்றேயாக வேண்டும், தந்தையே. அதுவே மாறா நெறி” என்றான். “இல்லை, நான் ஒப்பமாட்டேன். நீர்க்கடன் நிகழ விடமாட்டேன்…” என்று சகதேவன் கூவியபடி மைந்தனைப் பிடிக்கத் தாவினான். அவர்கள் துயர் நிறைந்த முகத்துடன் மேலும் பின்னடைந்தார்கள். “சுருதசேனா, மைந்தா!” என்று கதறியபடி முகம்படிய மண்ணில் விழுந்து நினைவழிந்தான் சகதேவன்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 39

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 6

எப்போதுமே தனிமையை ஓர் அழுத்தமாகவே யுயுத்ஸு உணர்ந்து வந்தான். ஆனால் ஒன்று நிகழ்வதற்கு முன் அமையும் தனிமையை அவன் வியப்புடன் மீளமீள எண்ணிக்கொள்வதுண்டு. அப்போது மானுடர் அனைவருமே சற்று கைவிடப்பட்டவர்களாகத் தெரிவார்கள். அவர்களை ஆட்டுவித்த சரடுகள் அனைத்தும் தளர்ந்துவிட, செய்வதறியாமல் தளர்ந்து நின்றிருப்பார்கள். செயல் அவர்களில் விண்ணிலிருந்து மின் இறங்கி மரங்களைப் பற்றி எரியச்செய்வதுபோல நிகழ்கிறது. செயல்கள் அனைத்தையும் அவற்றுக்குரிய தெய்வங்களே இயற்றுகின்றன. பெருஞ்செயல்களை பெருந்தெய்வங்கள்.

அவன் அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் போருக்குரிய சடங்குகளைச் செய்வதை நோக்கி நின்றிருந்தான். அவர்கள் இருவருமே தளர்ந்துபோய், ஆர்வமற்றவர்களாகவே தெரிந்தனர். தொய்ந்த நடையில் சென்று கொற்றவையையும் பின்னர் பரசுராமரையும் வணங்கினர். இரு எல்லைகளிலாக நின்றுகொண்டனர். பரசுராமரின் மாணவர்கள் மேலும் விரிந்து அந்தக் களத்தை விரிவாக்கினர். பறவைகளின் ஒலி மட்டும் அங்கே கேட்டுக்கொண்டிருந்தது. அஸ்வத்தாமனின் வில் அவனுடைய தலைக்குமேல் புலியின் வால் என எழுந்து தெரிந்தது. காண்டீபம் அத்தனை உயரம் கொண்டதாக இருக்கவில்லை. இருவரும் கால் அகற்றி நிலைகொண்டனர்.

யுயுத்ஸு இருவரின் கால்களையும் நோக்கிக்கொண்டிருந்தான். வில்லவர்களின் கால்கள் பறவைக்கால்களைப்போல, மண்ணில் ஊன்றியிருந்தாலும் அவை மண்ணுக்குரியவை அல்ல. அவை காற்றிலெழும் கணம் தேடியே மண்ணில் தொட்டுத்தாவுகின்றன. பறவைக்கால்களால் மட்டுமே நடனமாட முடியும். அனைத்துப் பறவைகளும் நடனமாடுகின்றன. நடனமாடும் விலங்கு பறவையாகிவிடுகிறது. இந்த வில், இது விசைகொண்டு வளைந்த கிளை. அந்த அம்புகள் பறவைகள். பறவைகளை ஆள்பவர்கள் வில்லவர். அவர்கள் பறத்தலை உன்னி ஊழ்கம் செய்து தேர்ந்து தாங்களும் ஒருவகை பறவைகளாக ஆகிவிடுகிறார்கள்.

பரசுராமரின் மாணவர் லிகிதர் போருக்கான நெறிமுறைகளை அறிவித்தார். அதன்பின் பரசுராமரை வணங்கி வலப்பக்கம் சென்று நின்றார். பரசுராமர் போர் தொடங்குக என கைதூக்கினார். ஒரு சங்கொலி தேம்பி அணைந்தது. அவ்வொலி கேட்டு பறவைகள் கலைந்து வானில் எழுந்து கூச்சலிட்டபடி சுழன்றன. வானிலிருந்து மெல்லிய புலரொளி விழுந்து களமுற்றம் துலங்கியது. கூழாங்கற்கள் முழுத்து எழுந்து தெரிந்தன. இளங்காற்று ஒன்று கடந்துசென்றபோது மேலாடைகள் வண்ணங்களுடன் அசைந்தன. உதிர்ந்த சருகொன்று எழுந்து இடம் மாறியது.

இரு வில்லவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு அசையாமல் நின்றிருந்தார்கள். அவர்களுக்குள் விசை முனைகொண்டு விழிகளில் ஒளித்துளியாகியது. கைவிரல்கள் விற்களை மலர்த்தண்டை என பற்றியிருந்தன. கால்களில் தசைகள் இழுபட்டிருந்தன. எக்கணம் போர் நிகழும் என எவராலும் சொல்லிவிட முடியாது. எவர் அம்பு எடுப்பார் என்றும். அது நூறுமுறை ஆயிரம் முறை நோக்கினாலும் கணிப்புகள் அனைத்துக்கும் அப்பாற்பட்டது. அவர்களில் இப்போது நிகழ்வதென்ன? எவரோ வந்து அமர்ந்துகொள்வதற்கு முன்பிருக்கும் பீடத்தின் வெறுமையின் தவிப்பு.

போர் தொடங்கிவிட்டிருந்தது. அஸ்வத்தாமன் முதல் அம்பை அர்ஜுனனை நோக்கி தொடுக்க அர்ஜுனன் அதை இயல்பாக உடல்வளைந்து ஒழிந்தான். கூட்டத்திலிருந்து ஒரு மென்முழக்கம் எழுந்தமைந்தது. அர்ஜுனனின் அம்பை அஸ்வத்தாமன் ஒழிந்தான். அர்ஜுனனிடம் இருந்த பெண்மை லாஸ்யமென வெளிப்பட அஸ்வத்தாமனிடம் வெளிப்பட்டது தாண்டவம். இருவரும் தேர்ந்தவர்களாக இருக்கையில் நிகழ்வது அம்பு என்னும் வடிவுக்கும் மானுட உடலென்னும் வடிவுக்கும் இடையேயான போட்டிதான். அம்பின் நேர்ப்போக்கும் உடலின் வளைதலும். அம்பின் சீற்றமும் உடலின் நடனமும். உடல் ஒழியும் அம்புகளை நிலம் வாங்கிக்கொள்கிறது. நிலமே உடலென்பர் நூலோர். அன்னம் கொள்ளும் இரு வடிவங்கள்.

அம்புகள் மின்னி மின்னி காற்று சீறும் ஒலியுடன் கடந்து சென்றன. மண்ணில் தைத்து நின்று சிறகசைந்தன. நாற்றுநட்ட வயல் என ஆயிற்று அக்களம். அவற்றில் ஏதேனும் வடிவம் உள்ளதா? ஒழுங்கற்றவை எனத் தோன்றினாலும் வடிவமென ஒன்று இருந்தாகவேண்டும். அர்ஜுனனுக்குப் பின்னாலிருக்கும் இந்த அம்புகளின் வடிவம் அவன் உடலால் ஒழியப்பட்டது. அவன் உடலின் இந்நடனத்தின் நிழலுருவம் அதில் இருந்தாகவேண்டும்.

யுயுத்ஸு புன்னகைத்தான். அவனால் போரை உள்ளம் பெருகி ஓடாமல் நிகழ்த்த முடிவதே இல்லை. ஆகவேதான் அவன் மிகத் திறன் குறைந்த வில்லவனாக ஆனான். அவனுக்குப் பயிற்றுவித்த கிருபர் “உனக்குரியது சொல் மட்டுமே” என்றார். துரோணர் “நீ களத்திற்கே வரவேண்டியதில்லை. அரசநெறிகள் உசாவுகையில் மட்டும் வந்து அமர்ந்துகொள்” என்றார். அவன் குருக்ஷேத்ரத்திலும் சொல்பெருகும் உள்ளத்துடன்தான் நின்றிருந்தான்.

அவனை எந்த அம்பும் தாக்கவில்லை. ஏனென்றால் அவன் பெரும்பாலும் களத்திற்குப் பின்னணியிலேயே இருந்தான். யுதிஷ்டிரனும் அவனும் படைசூழவே நின்றிருந்தனர். அங்கும் அம்புகள் வந்து கவியத்தான் செய்தன. ஆனால் எந்த அம்பும் அவனை அடையவில்லை. சொல்பெருகி ஒரு அரண் என அம்புகளை தடுத்திருக்கலாம். அந்தப் படைப் பின்னணிநிரை என்பது ஓர் ஆழம். மேல்தட்டில் அம்புகள் கொந்தளித்தன. அவையே சொற்களென ஆகி அடித்தட்டில் படிந்துகொண்டே இருந்தன. சேறுபோல. குப்பைபோல. அவன் அங்கே திகழ்ந்தான். கடலடியின் கரிய அட்டைபோல. நீந்தல் அறியாதது. விழியிலாதது.

போர் விசைகொண்டபடியே சென்றது. இரு வில்லவர்களும் இரு எல்லைகளிலும் நின்று சுழன்றனர். விழிதொட முடியாத விரைவுகொண்டிருந்தன அவர்களின் கைகள். யாழ்க்கலைஞனின் விரல்கள்போல. அவை பருவடிவம் அழிந்து நீர்வடிவம் கொள்கின்றன. பின்னர் காற்றென்றே ஆகிவிடுகின்றன. அவன் இசை நுகர்பவன் அல்ல. ஆனால் இசையெனும் விந்தையை எப்போதுமே திகைப்புடன் நோக்கிவந்தான். மானுட உடல் தன் எல்லையை மீறும்போதே மெய்யான இசை எழுகிறது. அம்புகளும் அவ்வாறே. எந்தக் கலையும் அவ்வகையான மீறல் மட்டுமே.

எத்தனை முறை கண்டிருப்போம் இரு இணைவில்லவரின் போர்களை. இமையசைக்காமல் காலமில்லாமல் நோக்கி நின்றிருப்போம். அவை எழுகையில் வெவ்வேறு. முடியும்போது அறியமுடியாமை நிகழ்ந்து நின்ற கணம். ஆனால் நடுவே நிகழ்வென அவை ஒன்றே. ஒரே அசைவுகள், எழுப்பும் உணர்ச்சிகளும் ஒன்றே. ஆனாலும் அவை சலிப்பதில்லை. ஏனென்றால் அவற்றில் என் உள்ளமும் சென்று சேர்ந்துவிடுகிறது. இதோ இரண்டெனப் பிரிந்து நின்று போரிடுவது நானே. ஓர் எண்ணம் இன்னொரு எண்ணத்தை அறைவதுபோல. ஓர் உணர்வு இன்னொரு உணர்வால் அறைந்து சுழற்றப்படுவதுபோல.

நோக்க நோக்க சலிக்காதிருப்பது எதுவோ அதுவே இறைநிகழ்வு போலும். கடலோ காடோ முகிலோ யானையோ. இதில் சலிக்காதிருப்பது என்ன? விரைவா? கைசுழல கால்கள் தொட்டுத்தாவ நிகழும் எளிதான இயல்கையா? இரு மானுடர் இறகென அனலென ஆகிவிடும் விந்தையா? பிறிதொன்று. அவர்கள் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் கவ்விக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை எண்ணி எண்ணி உட்புகுந்து ஒருவர் பிறிதொருவராகவும் மாறி நின்று போரிட்டுக்கொள்கிறார்கள். உடலென்றும் உள்ளமென்றும் இருப்பென்றும் ஆன எல்லைகளை கடந்துசெல்கிறார்கள். உருவமே உடலின் எல்லை. உருவத்தை உதறிச்செல்ல அதற்கிருக்கும் ஒரே வழி விசைகொள்ளுதல்தான்…

யுயுத்ஸு அவனுடைய உள்ளத்தின் கட்டற்ற சொற்பெருக்கு அணைந்துகொண்டே இருப்பதை உணர்ந்தான். சொற்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு விசையழிந்தன. தேங்கிய சொற்கள் பிற சொற்களை தடுத்தன. சொற்கள் குழம்பிக்கொள்ள ஓர் ஓலமென ஆகியது அகம். பின்னர் ஒன்றும் நிகழவில்லை. ஓடி எழுந்து மலைவிளிம்பிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்துவிட்டதுபோல. அவன் அமைதியில் விழுந்து விழுந்து இறங்கிக்கொண்டே இருந்தான். அனைத்தும் ஒரு ரீங்காரமாக மாறி அகல முழுமையான அமைதி.

அவன் வேறெங்கோ நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அஸ்வத்தாமனின் தோற்றம் என கர்ணன் எழுந்துவிட்டிருப்பதை கண்டான். அழகிய கரிய நீளுருவம். நெளியும் பெருங்கைகள். கூரிய விழிகள். “அங்கர்! அங்கர்!” என கொந்தளித்துக் கூச்சலிடுவது யார்? அங்கரை எதிர்த்துப் போரிடுவது அர்ஜுனன் அல்ல என அவன் கண்டான். “பீஷ்மர்!” பிதாமகரின் கைகள் அமைதியாகச் சுழல அம்புகள் சீராக எழுந்துகொண்டிருந்தன. அவை கர்ணனின் அம்புகளை மணியோசையுடன் அறைந்து வீழ்த்தின. பீஷ்மரின் உடலை கர்ணனின் நீளம்பு ஒன்று தைத்தது. அவர் உறுமியபடி எடுத்துத் தொடுத்த அம்பு கர்ணனின் நெஞ்சிலறைந்து அவனை தூக்கி வீசியது.

கைஊன்றி புரண்டு தாவி எழுந்தவன் ஜயத்ரதன் என்று யுயுத்ஸு கண்டான். இது என்ன விந்தை, என் விழிமயக்கா என அவன் வியந்தான். ஆனால் அது நிகழ்ந்துகொண்டிருந்தது. ஜயத்ரதனை எதிர்ப்பது யார் என அவன் நோக்கினான். அர்ஜுனனின் உடல் மருவி பூரிசிரவஸாக தெரிந்தது. என்ன நிகழ்கிறது? நான் மயங்கி விழுந்துவிட்டேனா? அஸ்வத்தாமன் உடல் உருகி பிறிதொன்றாகியது. அங்கே துரோணரை அவன் கண்டான். அவரை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்தவர் கிருபர். அவன் அந்த உளமயக்கை உதறி மீள முயன்றான். ஆனால் அது உளமயக்கல்ல, விழிமுன் நிகழ்ந்துகொண்டிருந்தது.

ஒவ்வொரு உருவாக மாறி மாறி எழுந்தது. அஸ்வத்தாமனாக பீமன் எழ அவனை எதிர்த்து அர்ஜுனன் போரிட்டான். எவரை எதிர்த்து எவர் எழுகிறார்கள்? எவர் வெல்கிறார்கள்? கொல்பவரும் கொல்லப்படுபவரும் எவர்? அறுதியாக எழுந்த துரியோதனனை எதிர்ப்பவர் இளைய யாதவரா என்ன? அர்ஜுனன்தான், ஆனால் பீலி சூடியிருந்தான். முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.

யுயுத்ஸு தனிமையை மீண்டும் உணர்ந்தான். இதுவரை போர் தொடங்கவில்லை என்பதுபோல. இன்னும் போர் எழவிருக்கிறது என்பதுபோல. போர் உண்மையில் நிகழ்கிறதா? ஏதேனும் நூலில் படித்துக்கொண்டிருக்கிறேனா? எந்த நூல்? அவன் கனவில் ஒரு நூலை அடிக்கடி படிப்பதுண்டு. பல ஆயிரம் பாடல்கள் கொண்டது. வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளையும் உரைப்பது. அத்தனை எண்ணங்களையும் உள்ளடக்கியது. நெறிகளனைத்தையும் ஒன்றுவிடாமல் உரைப்பது. பிறிதொரு நூல் புவியில் தேவையில்லை என தான் நிலைகொள்வது.

அவன் மெய்ப்புகொண்டான். அந்நூலைத்தான் இதோ பார்த்துக்கொண்டிருக்கிறேன். இவை அந்நூலில் சொல்லெனத் திகழ்பவை. அப்பேராசிரியனின் கைபட்டு ஏட்டில் மலர்பவை. அவன் எழுதிக்கொண்டே இருக்கிறான். தலைமுறைகளுக்கு முன் அஸ்தினபுரியில் இருந்து மறைந்த வியாசனாகிய கிருஷ்ண துவைபாயனன் மறையவில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அவர் எங்கிருந்தோ அனைத்தையும் அறிகிறார். அனைத்தையும் எழுதிக்கொண்டிருக்கிறார். இங்கு நிகழும் ஒரு நிகழ்வுகூட மறையப்போவதில்லை. சொல்லப்படும் ஒரு சொல்கூட வீணாக ஆவதில்லை.

 

யுயுத்ஸு தன் எதிரே வியாசரை பார்த்தான். அவர் தர்ப்பைப்புல் விரிக்கப்பட்ட மரத்தாலான மேடையில் அமர்ந்திருந்தார். எதிரே பெரும்பள்ளத்தாக்கு கீழிறங்கி அலையென மடிந்தெழுந்து மலையடுக்குகளாக மேலேறிச் சென்று ஒளிரும் உச்சிப்பாறைகளை சூடியிருந்தது. முகில்கள் ஒளிகொண்டிருந்தன. அவர் கண்களை அவ்வெளி நோக்கி நிலைக்கவிட்டு கைகளால் தாடியை தடவிக்கொண்டிருந்தார்.

அவருடைய வலப்பக்கம் கரிய, பெருத்த உடல்கொண்ட ஓர் கற்றுச்சொல்லி அமர்ந்திருந்தான். மிக இளையவன். அவருக்கு முன்னால் நான்கு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். வைசம்பாயனன் அவர்களில் அகவை மூத்தவன். சுமந்து, ஜைமினி, பைலன் மூவரும் இளையோர். அப்பால் கையில் யாழுடன் தனித்து அமர்ந்திருப்பவன் அவருடைய சூத மாணவன்.

வியாசர் “சொல்க!” என்றார். “நான் எப்படி அதை சொல்லமுடியும்? நான் கவிஞன் அல்ல, சொல்வலனும் அல்ல” என்றான் யுயுத்ஸு. “நீ அதை விழிகளால் பார்த்தாய்” என்றார் வியாசர். “ஆம், நான் பார்த்தேன்” என யுயுத்ஸு பெருமூச்சுவிட்டான். “நீ உன் அகவிழிகளாலும் பார்த்தாய். நிகழ்வுகள் எளியவை. அவற்றின்மேல் சென்று படியும் அகமே அவற்றை பொருள்கொண்டவை என ஆக்குகிறது. பாறைமேல் பவளப்பூச்சிகள் பல்லாயிரமாண்டுகளாக படிகின்றன. ஒன்றின்மேல் இன்னொன்று படிகிறது. அவை படிகமாகி பவளமாகின்றன. பாறை அதற்கு அடியில் வெறும் முதல் வடிவம் என அமைந்துள்ளது” என்றார் வியாசர்.

“ஆம், நான் என் முழுச் சொற்களாலும் அந்நிகழ்வின்மேல் அறைந்தேன். என்னை சிதறடித்துக்கொண்டேன். நான் அறிந்தவற்றை, நான் என தொகுத்துக்கொண்டவற்றை… ஒரு துளி எஞ்சாமல் அங்கே இருந்தேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “அதுவே உன்னை சொல்லும் தகுதி கொண்டவனாக்குகிறது” என்றார் வியாசர். யுயுத்ஸு சொற்களை திரட்டிக்கொள்ள முயன்றான். முதற்சொல் என எழுவது எது? முதற்சொல்! முதற்சொல்! அவன் அகம் தவித்தது. பின்னர் சலித்தமைந்தது. சோர்ந்து என்னால் இயலாது என எண்ணிக்கொண்டான். அவன் பின்வாங்கிய கணம் ஒரு சொற்றொடர் அவனை வந்தடைந்தது.

“தெய்வம் மானுடனுக்கு அருள்கையில் அவனை தெய்வமாக்குகிறது. தெய்வத்தை ஒருகணம் மானுடனாக்கி அவ்வருளை மானுடன் பெற்றுக்கொள்கிறான்” என்று அவன் சொன்னான். வியாசரின் முகம் மலர்ந்தது. கனிந்த விழிகள் அவனை நோக்கின. மாணவர்களும் முகம் மலர்ந்து அவனை பார்த்தனர். அவன் தன் உள்ளம் சொற்பெருக்கென பொங்கி எழுவதை உணர்ந்தான். “ஆசிரியரே, நான் கண்டேன் அப்பெரும்போரை. நிகரிலாத பெரும்போர் ஒன்று முடிந்த பின்னர் அது நிகழ்ந்தது. அனால் அப்போரும் அதே விசைகொண்டிருந்தது. அதே அழிவையும் உருவாக்கியது” என அவன் சொல்லத் தொடங்கினான்.

அர்ஜுனன் போரிட்டுக்கொண்டிருக்கையிலேயே உருமாறி தெய்வங்களும் மானுடருமாக தோன்றி மறைவதை, மறுபக்கம் அஸ்வத்தாமன் அவ்வண்ணமே நிகர் உருமாற்றம் கொள்வதை நான் கண்டேன். எந்தப் போரும் இங்கு எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் போர் ஒன்றின் பகுதியே என்று உணர்ந்தேன். அப்போரை நான் நூறாக ஆயிரமாக உடைந்து பரவி பல்லாயிரம் விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தேன். எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற இடங்களில் அது நிகழ்ந்துகொண்டிருந்தது.

அஸ்வத்தாமன் தன் நெற்றியில் அணிந்த அந்த மூவிழி ஒளிகொண்டு சிவந்தபடியே செல்வதை கண்டேன். அது அவருக்குள் எரியும் பெருந்தழல் ஒன்று பீறிட்டு வெளிவரும் சிறுதுளை எனத் தோன்றியது. செஞ்சடைகள் கொழுந்துவிட்டெரிந்தன. அம்புகளைத் தொடுத்தபடி சுழன்ற கைகளில் மானும் மழுவும் தோன்றி மறைந்தன. முப்புரம் எரித்த வில் அவர் கையிலெழுந்தது. ஒற்றைக்கால் ஊன்றி மறுகால் தூக்கி சடை சுழன்று பறக்க அவர் எழுந்தாடியபோது ஊழித் தாண்டவத்தைக் கண்டேன்.

ஒரு கணத்தில் கைகளில் தோன்றி மறைந்தது பேரழிவின் முத்திரை. வடவை எழுந்தது. அழிகிறது புவி என ஓலமிட்டன பூதங்கள் ஐந்தும். ஆம் ஆம் ஆம் என முழங்கியது வானம். சூழ்ந்தமைந்த தேவர்கள் அஞ்சி ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டார்கள். வெற்புகள் பொடிபடும் என முழங்கிய இடியோசையை கேட்டேன். வெற்றுக்களியொடு பூதக்கூட்டம் பாடும் எக்காளம். துடியொடு முழவும் உடுக்கொலியுடன் இணையும் வெறிமிகு தாளம். ஆழியில் அலைஎழுவதுபோல் அனல்பொங்கி அணைவதை கண்டேன். எஞ்சாது இனி எதுவும் என எண்ணி உளம் சமைந்தேன்.

இவ்விந்தையை என்னால் விளக்க இயலாது. ஒற்றைக் காற்புள்ளியில் சுழலும் முக்கண்ணனின் உருவிலெழுந்தன அத்தனை தெய்வங்களும். அத்தனை தேவர்களும் முனிவரும் எழுந்தனர். மூதாதையர் முகங்கள் தோன்றின. மூதன்னையர் தோன்றினர். மறைந்த மாவீரர்கள், பேரரசர்கள் எழுந்தனர். கற்றோர் கலைதேர் சூதர் எழுந்தனர். ஆசிரியரே, நான் மீண்டுமொருமுறை கண்டேன். அத்தோற்றத்தில் கையில் வேய்குழலும் முடியில் பீலியும் புன்னகைக்கும் முகமும் சிறுவர்களுக்குரிய விழிகளுமாக அவரை.

அவரைக் கண்டதுமே திகைத்துத் துடித்து மறுபக்கம் அர்ஜுனனை நோக்கினேன். அவரும் உருமாறிவிட்டிருந்தார். மேலும் மேலும் அகவை பின்னடைய இளமையின் பொலிவும் அழகும் தோன்றிக்கொண்டிருந்தன. இளந்தோள்கள், இளைய மார்பு. இளையோருக்குரிய சிரிப்பு. விழிகளில் அச்சமின்மையின் ஒளி. அவர் பதினெட்டு அகவை கொண்டவராகத் தெரிந்தார். அவர் கையில் இருந்த வில் உருமாறிவிட்டிருந்தது. அது கரும்பாலான வில். அவர் அம்புகள் அனைத்தும் மலர்கள். உடலிலி அவர் உடலென எழுந்துவிட்டிருந்தான். தன் மெல்லிய விரல்களால் அவர் வெண்ணிற முல்லைமலர் ஒன்றை எடுத்து நாணில் தொடுத்து எய்தார்.

பேரலை என எழுந்து சுருண்டு அணுகிவந்த அனலை எதிர்கொண்டது குளிர்ந்த வெண்ணிற சிறுமலர். அக்கணம் அனல்பெருக்கு உறைந்தது. செந்நிற மலர்வெளி என மாறியது. அச்சுழி நடுவே நின்றிருந்த அஸ்வத்தாமனின் நுதலில் சுடர்ந்த எரிமணியும் ஒரு மலர் என ஆவதை கண்டேன். அவர் முகத்திலும் அனல் அணைந்தது. மென்முறுவல் எழுந்தது. அவர் தலையில் ஒரு வெண்சுடர் எழக்கண்டேன். அது கூனலிளம்பிறைக்கீற்று என தெளிந்தேன். அதன் குளிரொளி அவர் உடலெங்கும் வழிந்திறங்க அவர் மெய்ப்பு கொண்டார். கை தழைய வில் தாழ்ந்து நிலம் தொட்டது. ஆசிரியரே, அவர் உடலின் இடப்பகுதியில் பெண்மை எழுந்தது. இடக்கை அசைவு கொடியென மென்மைகொண்டது.

மறுபக்கம் அர்ஜுனனின் இளைய உடல் முதுமை கொள்வதை கண்டேன். தசைகள் வற்றிச் சுருங்கி கருமை கொண்டன. பின்னர் அவை தழல்கொண்டு எரியலாயின. அவர் தலையில் குழல்கற்றைகள் செந்தழலாக கொழுந்தாடின. காதுகளில் நாகங்கள் குண்டலங்களாக நெளிந்தன. ஆசிரியரே, அவர் நெற்றியில் ஓர் அனல்துளி விழிதிறந்தமைவதை கண்டேன். அவரிடம் என்றுமிருந்த பெண்மை முற்றிலும் அகன்றுவிட்டிருந்தது. கொடியொன்று மரமாகி வேர் இறுகி உறுதியடைந்ததுபோல.

 

அஸ்வத்தாமனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே எழுந்த பரசுராமர் இரு கைகளையும் விரித்து நின்றிருப்பதை யுயுத்ஸு கண்டான். இடமுணர்ந்து, பொழுதுணர்ந்து நடுக்குகொண்டு நின்றான். “இங்கு இப்போர் முடிகிறது. இருவரும் தொடுத்தவை இணையாற்றல் கொண்ட அம்புகள். அவை ஒன்றையொன்று நிகர் செய்துவிட்டன. இனி போரில்லை” என பரசுராமர் அறிவித்தார். “இருவரும் வென்றனர், இருவரும் தோற்றனர்” என்று அவர் கூறியதும் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் தலைவணங்கினர். “ஒருவரை ஒருவர் வணங்குக! ஒருவரில் எழுந்த தெய்வத்தை பிறிதொருவர் தொழுவதாகவே அதற்குப் பொருள்” என்று பரசுராமர் ஆணையிட்டார்.

அர்ஜுனன் சென்று அஸ்வத்தாமனின் அருகே காண்டீபத்தைத் தாழ்த்தி அவன் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தன் வில்லை அர்ஜுனன் முன் தாழ்த்தி அவன் கால்களைத் தொட்டு வணங்கினான். இருவரையும் வாழ்த்தி கூடியிருந்தவர்கள் குரலெழுப்பினர். இருவரும் சென்று பரசுராமரை வணங்கினர். அவர் இருவருக்கும் தலைதொட்டு வாழ்த்தளித்தார். “சில போர்கள் முடிவதில்லை என்று உணர்க! இப்போர் இனி உங்களிடையே நிகழலாகாது” என்றார் பரசுராமர். “ஆம்” என்று அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். அஸ்வத்தாமன் புன்னகைத்தான்.

அர்ஜுனன் தலைவணங்கி திரும்புகையில் அஸ்வத்தாமன் “நில், பார்த்தா” என்றான். தன் நெற்றியிலணிந்திருந்த அருமணியைக் கழற்றி நீட்டி “இதை உன்னிடம் அளிப்பதற்கே எந்தை உண்மையாக விழைந்தார். அதனால்தான் அதை நான் என் நெற்றியிலேயே சூடியாகவேண்டும் என உறுதி கொண்டிருந்தேன். இன்று இதை நான் கடந்துவிட்டிருக்கிறேன். இது உனக்குரியது” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “அது எனக்கு அரியது. ஆனால் அதைச் சூடும் தகுதியிலாதவன் நான்” என்று தலைவணங்கி பின்னடைந்தான்.

அக்கணம் முன்னால் எழுந்த பீமன் “நான் அதன்பொருட்டே வந்தேன். அந்த அருமணியை எனக்களியுங்கள், ஆசிரியரே” என்றான். அஸ்வத்தாமன் புன்னகையுடன் அதை அவனை நோக்கி வீச பீமன் பற்றிக்கொண்டான். அஸ்வத்தாமனின் நெற்றியில் அந்த அருமணியின் கூர் பதிந்திருந்த இடத்தில் கூரிய குருதிப்புண் ஒன்று தோன்றியிருந்தது. அது ஊறிக்கசிந்து நெற்றியில் வழிந்தது. அவன் இளைய யாதவரை ஒருகணம் நோக்கியபின் திரும்பி காட்டுக்குள் நடந்து மறைந்தான்.

யுயுத்ஸு அப்போதுதான் இளைய யாதவர் அங்கிருப்பதை உணர்ந்து அவரை பார்த்தான். அவர் அர்ஜுனன் தோளைத் தொட்டு செல்வோம் என உதடசைக்க அர்ஜுனன் தலை அசைத்து உடன் சென்றான். பரசுராமர் எழுந்து லிகிதருடன் நடந்து அகன்றார். பீமன் அந்த அருமணியை தன் கையில் வைத்து புரட்டி நோக்கிக்கொண்டு செல்வதை யுயுத்ஸு கண்டான். அந்நிகழ்வின் பொருளை வெவ்வேறு கோணங்களில் பேசியபடி அனைவரும் கலைந்துசென்ற பின்னரும் அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அந்நிகழ்வுக்கு முன்பிருந்த தனிமையை சென்றடைந்தான்.

அத்தருணத்தை ஒரு சிறுநூலாக ஆக்கவேண்டும். அதை வியாசரின் மாணவர்கள் எவரைக் கொண்டாவது படித்துப்பார்க்கச் செய்யவேண்டும். ஒரு நூல். அதன் பெயர் அவன் நினைவிலெழுந்தது. மல்லீஸ்வரவிஜயம். மலரம்பனின் வெற்றி. ஆனால் தன்னை அளித்து அடைவது வெற்றியா என்ன? தன்னை அளிக்காமல் வெற்றி என்பது உண்டா? அவன் அந்நூலை ஏற்கெனவே இயற்றி வியாசரிடமே படித்துக்காட்டிவிட்டதுபோல் உணர்ந்தான். அந்நூலின் முதல் வரிகூட நினைவில் இருந்தது. வானவில்போல வண்ணக்குழம்பலாக அது கரைந்துவிட்டிருந்தது. அவன் அதை நினைவிலிருந்து மீட்டெடுக்க முயன்றபடி நடந்தான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 38

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 5

குடிலை அடைந்து மரவுரி விரிக்கப்பட்ட மூங்கில் மஞ்சங்களில் அமர்வது வரை இளைய யாதவரும் அர்ஜுனனும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. கால்தளர்ந்து பரசுராமரின் முற்றத்தில் அமர்ந்து அழுத அர்ஜுனனை இளைய யாதவர் தோள்தழுவி அணைத்து அழைத்துவந்தார். அவன் விம்மிக்கொண்டே இருந்தான். அவர் ஆறுதாக ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவன் ஓய்ந்து மஞ்சத்தில் படுத்துக்கொண்டதும் “உன் அழுகை நன்று… சில எல்லைகளை கடந்துவிட்டாய் என்பதற்கான சான்று அது” என்றார்.

அர்ஜுனன் சீறி எழுந்து “வாயை மூடுங்கள்… இனி ஒருசொல்லும் கேட்கவேண்டியதில்லை… உங்கள் சொற்களால் என் ஆத்மா அழிந்தது. தீராப்பழிகொண்டவன் ஆனேன். போதும்” என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார். “இன்னும் பேசி என்னை கொல்லவேண்டாம், யாதவரே. அளிகூர்க, என்னை விட்டுவிடுக… நான் எளியவன். உங்கள் புதியவேதமும், அதிலிருந்து எழும் யுகமும் என் எண்ணம் சென்று எட்டாதவை. கண்ணும் காதும் சொல்லும் சித்தமும் தொட்டறியும் மெய்மையை மட்டுமே என்னால் உணரமுடியும். இதில் சிக்கி உழன்றுகொண்டிருக்கிறேன்… இதிலிருந்து உங்கள் சொற்கள் என்னை மீட்காதென்று அறிந்தேன்…” என அவன் அழுகையுடன் சொன்னான்.

“நானும் அவற்றில்தான் சிக்கியிருக்கிறேன். நானும் விழிநீர் வடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். “அதை நீ காணமுடியாது. ஏனென்றால் அது இங்கு நிகழவில்லை, அங்கே நான் இருளூழ்கத்தில் அமர்ந்திருக்கும் குகைக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.” அர்ஜுனன் திகைப்புடன் அவரை நோக்கினான். இளைய யாதவர் புன்னகைத்து “எண்ணி நோக்காதே, வந்தடைய மாட்டாய். விடு. இன்றிரவு நீ துயிலவேண்டும்” என்றார். “என்னால் துயில் கொள்ள முடியுமென எண்ணுகிறீர்களா?” என்றான் அர்ஜுனன்.

“எவரும் துயில்வதில்லை. ஏனென்றால் நீத்தார் அனைவருமே இன்னும் இங்குதான் இருக்கிறார்கள். நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். நீர்பெற்று அவர்கள் மூச்சுலகை அடைந்தபின்னரே எவருக்காயினும் துயில் அமையும்” என்றார் இளைய யாதவர். “என்னை துயிலவையுங்கள், யாதவரே. என்னை ஒரு இரவேனும் துயிலச்செய்யுங்கள்…” என்று அவன் இறைஞ்சினான். “நேற்றிரவும் அவர்களை கண்டேன். அருகே வந்து நின்றிருந்தனர். மூச்சொலியுடன உடல்வெம்மையுடன் விழிநோக்கின் ஒளியுடன்…. அவர்களை அகன்றுபோகச் செய்யுங்கள்.”

இளைய யாதவர் எழுந்து வந்து அர்ஜுனனின் நெற்றிப்பொட்டின்மேல் தன் கையை வைத்தார். “துயில்க!” என்றார். “அவர்கள் அகலமாட்டார்கள். ஆனால் அவர்கள் இனியவர்களாக முடியும்.” அவன் முகம் துயரில் நெளிந்துகொண்டே இருந்தது. விழிநீர் வழிந்து காதுகளை அடைந்தது. “துயில்க! துயில்க!” என அன்னைக்குரிய மென்குரலில் இளைய யாதவர் சொன்னார். “ஒவ்வொன்றாக பொருளிழந்து மறைக! கொண்டவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக! விழைபவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக! ஏற்றவை பொருளிழக்கட்டும். ஆம் அவ்வாறே ஆகுக! மறுப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம் அவ்வாறே ஆகுக! வெறுப்பவையும் சினப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம் அவ்வாறே ஆகுக! துறந்தவையும் கடந்தவையும் பொருளிழக்கட்டும். பொருளின்மையே திகழ்க! பொருளின்மையின் இனிமை நிறைக! ஆம் அவ்வாறே ஆகுக!”

அர்ஜுனன் துயில்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது. உதடுகளில் புன்னகை தெரிந்தது. அவன்முன் இனிய எவரோ நின்றிருந்தனர் என்று தோன்றியது. யுயுத்ஸு தானும் படுத்துக்கொள்வதற்காக மஞ்சத்தில் அமர்ந்தான். இளைய யாதவர் தன் மஞ்சத்தில் கால்மடித்து அமர்வதை கண்டான். அவர் ஊழ்கம் செய்யப்போகிறாரா? “துயிலவில்லையா தாங்கள்?” என்றான். “இல்லை, அவன் கொள்வது என் துயிலை” என்றார் இளைய யாதவர். யுயுத்ஸு அவரை புரியாமல் நோக்க அவர் புன்னகைத்து “துயில்க!” என்றார். அவன் படுத்துக்கொண்டான்.

அவனுக்கு அருகே காண்டீபம் நின்றிருந்தது. அது உயிருடன் நெளிகிறதா? அவன் ஆழ்துயிலில் மூழ்கியபோது அர்ஜுனன் சிரிப்பதை கேட்டான். கையூன்றி எழுந்து அர்ஜுனனை பார்த்தான். அர்ஜுனன் சிறுவன்போல சிரித்துக்கொண்டு புரண்டு படுத்தான். அவன் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். அவர் முகத்தைக் கண்டு திடுக்கிட்டான். அது கடுந்துயரில் நெளிந்துகொண்டிருந்தது. வலியில் இறுகிய உதடுகள், புடைத்த தசைகள். அவர் விரல்கள் தவித்துத் தவித்து ஒன்றை ஒன்று தொட்டு அலைந்தன.

அவன் கண்களை மூடிக்கொண்டான். நீத்தார் எங்கிருக்கிறார்கள்? துரியோதனனும் கர்ணனும் இளைய அரசர்களும் மைந்தர்களும்தான் அவனுக்கு அணுக்கமானவர்கள். அவர்கள் அவன் கனவில் ஒருமுறைகூட வந்ததில்லை. அவன் அவர்களை மறக்கவில்லை. நாளில் பலமுறை நினைவுகூர்ந்தான். அவன் முகமறிந்த எவரையும் போரில் கொல்லவில்லை. கொன்றவர்களுக்குத்தான் நீத்தார் தென்படுவார்களா என்ன? அர்ஜுனனின் சிரிப்பொலி கேட்டது.

அந்தியில் பரசுராமரின் மாணவர்கள் வேதம் ஓதும் ஒலி கேட்டது. வேள்விப்புகையின் மணத்தை அவன் உணர்ந்தான். எனில் இன்னமும் அந்திகூட ஆகவில்லை. பறவையோசை அவியவில்லை. அவன் மேலும் மேலுமென துயிலில் ஆழ்ந்தான். குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் நின்றிருந்தான். எரியெழுந்து களத்தை மூடியிருந்தது. புகையின் மூச்சடைக்கச்செய்யும் கெடுமணம். அதில் ஊன்நெய் உருகி அனல்கொண்டெழுவதன் குமட்டும் மணம். அலறல்கள், ஓலங்கள். அவன் விழித்துக்கொண்டபோது வேள்வியின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன.

மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். குருக்ஷேத்ரத்தில் தன்னந்தனியாக நின்றிருந்தான். அவனைச்சுற்றி நூற்றுவரும் இறந்துகிடந்தனர். இதை நீ முன்னரே அறிவாய் என்று துரியோதனன் சொன்னான். நீ என்னிடம் சொல்லவில்லை. ஏன்? அவன் வெறித்து நோக்கிக்கொண்டு நின்றான். பலமுறை சொல்லியிருக்கிறேன், மூத்தவரே. ஆனால் அதை அவன் சொல்லவில்லை. அவன் மேல் இருள் மூடி அழுத்தி ஆழத்திற்கு கொண்டுசென்றது.

விழித்துக்கொண்டபோது அர்ஜுனன் எழுந்து நின்றிருந்தான். “யாதவரே” என அவன் அழைக்க இளைய யாதவர் விழிதிறந்தார். “இன்று பிறந்தெழுந்ததுபோல் உணர்கிறேன். உள்ளம் இத்தனை தெளிந்து நான் அறிந்ததே இல்லை…” என்று அவன் சொன்னான். சிறுவன்போல கூச்சலிடும் குரலில் “விடுதலை எனில் இதுவே. அனைத்தையும் கடந்துவிட்டேன். அவர்கள் என் கனவில் வந்தனர். என் மைந்தர்கள் அனைவருமே வந்தனர். அரவானும் அபிமன்யுவும் திரௌபதி மைந்தரும் பிற மூவரும்… என்னைச்சூழ்ந்து விளையாடினர். இரவு முழுக்க அவர்களுடன் கொண்டாடினேன்.”

“ஆனால் அவர்கள் எல்லோருமே சிறுமதலைகளாக இருந்தனர். சொல் திருந்தாத குழவியர். நடைகூட அமையவில்லை. ஒற்றைப் பாற்பல் சிரிப்புகள். கண்களில் துள்ளிய ஒளி. அள்ளிக்கொள் அள்ளிக்கொள் என நீட்டிய கைகள்…” அவன் பேருவகையுடன் கைகளை விரித்தான். “அள்ளி அள்ளி என் மேல் சந்தனம்போல் பூசிக்கொண்டேன். முத்தமிட்டு முத்தமிட்டு சலிக்கவே இல்லை… ஒரு முழுப்பிறவியையும் வாழ்ந்துவிட்டேன், யாதவரே.” அவன் நிலைகொள்ளாமல் அறைக்குள் சுற்றிவந்தான். “தழுவி முத்தமிடுகையில் அவர்களின் இதழ் ஈரம் படும் மெய்ப்பு… மானுடன் பிறந்ததே அப்பேரின்பத்திற்காகத்தான்.”

“அதுவும் காமமே” என்று இளைய யாதவர் சொன்னார். “காமத்தின் மிகமிக உயர்ந்த நிலை. காமமெனும் பாற்கடலின் அமுது என்பார்கள் கவிஞர்.” அர்ஜுனன் அவரை திகைப்புடன் நோக்கினான். “இன்று நீ முடிவெடுக்கலாம். என்னுடன் சுனைக்கரைக்கு உன்னை அழைத்துச்செல்வதாக இருந்தேன். அங்கே உனக்கு ஊழ்கநிறைவை அளிக்க எண்ணியிருந்தேன். அதன்பின் உன் குண்டலினியிலிருந்து விழைவு முற்றொழியும். அதன்பின் இவ்வின்பத்தை நீ அடையவே இயலாது. இப்பிறவியில் அல்ல, இனி எப்பிறவியிலும். உன் நினைவிலிருக்கும் இன்பங்கள்கூட தடமில்லாது அழியும்.”

அர்ஜுனன் கைகள் தளர்ந்து தொங்க நோக்கியபடி நின்றான். “காமத்தின் உச்ச இன்பத்தை அறிந்துவிட்டாய். பருகும்தோறும் விடாய் மிகுவதே காமத்தின் இயல்பு. உன்னுள் பெருகுவது அலையும் அதன் நுரையும். சொல்க, ஊழ்கநிறைவுக்கு நீ சித்தமாக இருக்கிறாயா?” என்றார் இளைய யாதவர். “அதை அடையாமல் நீ உன் தந்தை அளித்த அம்பை பயன்படுத்த இயலாது. அந்த அம்பு இல்லாமல் நீ அஸ்வத்தாமனை எதிர்கொள்வதும் முடியாதது.”

அர்ஜுனனை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவர் தொடர்ந்தார். “காமத்தை ஒழியலாகாது என்றால் உன்முன் வழி ஒன்றே உள்ளது. பழிகொள்ளும் வஞ்சினத்தை கைவிடுக! உன்னால் இயலாதென்று கூறி மீள்க! காமத்தை அறியாத உயிர் இல்லை. காமத்தின் மெய்யுருவை அறிந்தோர் சிலரே. ஒருமுறை அதை அறிந்தவன் நல்லூழ் கொண்டவன். அவன் மேலும் மேலும் பெருகும் ஒரு அமுதத்துளியை பெற்றுக்கொண்டிருக்கிறான். நீ அடையக்கூடும் இன்பம் இங்கிருந்து தொடங்குகிறது.”

அர்ஜுனன் ஒருகணம் தன்னை இறுக்கிக்கொண்டான். பின்னர் “யாதவரே, அது மெய்மையும் மீட்பும் அளிக்கும் பேரின்பமே ஆயினும் நான் கொண்ட கடமையிலிருந்தும் கூறிய சொல்லிலிருந்தும் விலகமாட்டேன் என நீங்கள் அறிவீர்கள். இப்போதும் மற்றொன்றில்லை” என்றான். “நீ சற்று எண்ணிச்சூழலாம். நீ துறக்கவிருப்பது அன்பென்றும் காதலென்றும் பற்றென்றும் ஆகி உயிர்க்குலங்களைச் சூழும் அரிய இன்பத்தை. மெய்மையென்றாகும் பேரின்பத்தை. முழுமையைச் சென்றடையும் இன்பத்துக்கு அப்பாற்பட்ட நிலையைக்கூட கவிஞரும் முனிவரும் அதைக்கொண்டே விளக்கினர்” என்றார்.

“மானுடர் அவ்வின்பத்தை முழுதடையாமல் தடுக்கும் விசைகள் பல அவர்களுக்குள்ளேயே உறைகின்றன. காமத்தை ஆணவத்துடன் கலந்துகொள்கின்றனர் மானுடர். காமத்தையே ஆணவம் என்றும் ஆணவத்தையே காமம் என்றும் சமைத்துக்கொள்கின்றனர். ஆணவம் சென்று தொடும் அனைத்தையும் காமத்துடன் இணைத்துக்கொள்கின்றனர். பொருள்விழைவு, அடையாள நாட்டம், வெற்றித்துடிப்பு அனைத்தும் காமம் என்று உருமாறுகின்றன. காமம் என்னும் இனிமைப்பெருவெளி திரிபடைகிறது. காமத்தில் கோன்மை குடியேறுகிறது. கோன்மை கரவுக்கு வழிகோலுகிறது. கரவு தன்னிரக்கத்தை, கசப்பை, சினத்தை வஞ்சத்தை கொண்டுவருகிறது. ஆகவே இப்புவியில் மானுடர் காமம் என அடைவதெல்லாம் துன்பத்தை மட்டுமே.”

“நீ அவை அனைத்தையும் அடைந்து கடந்துவிட்டாய். குருக்ஷேத்ரத்திற்குப்பின் இனி இப்புவியில் நீ அறியவேண்டிய இருள் என ஏதுமில்லை. இருளை அறிந்தமையால் ஒளியின் பொருளையும் உணர்ந்துவிட்டாய். இனி நீ அடையும் காமம் தடைகள் அற்றது. தேவர்களும் விழைவது. அதை இழக்கவேண்டாம் என்பதே உன் உலகியல்தோழனாக நான் அளிக்கும் சொல்” என்றார் இளைய யாதவர். யுயுத்ஸு பரபரப்புடன் அர்ஜுனனை பார்த்தான். அர்ஜுனன் முகம் கூரிய உணர்வை மட்டுமே காட்டியது. “எண்ணிச்சொல்ல சற்றே பொழுதளிக்கிறேன். இக்குடிலில் நீ சற்றுபொழுது தனித்திருக்கலாம்” என்றார் இளைய யாதவர்.

“தேவையில்லை” என்றான் அர்ஜுனன். “தனிமையை அஞ்சாதே. எழுந்து வரும் எண்ணம் என நீயே நோக்கு” என்றபின் இளைய யாதவர் வெளியே சென்றார். யுயுத்ஸு அவரைத் தொடர்ந்து வெளியேறினான். இளைய யாதவர் முற்றத்தில் நின்றார். யுயுத்ஸு அவர் அருகே செல்லாமல் அகன்று நின்றான். அவரை நோக்க அவன் அஞ்சினான். புலரிமுன் இருள் சூழ்ந்திருந்தது முற்றத்தில். காடு இருள்வடிவில் ஓசையிட்டுக்கொண்டிருந்தது. எங்கோ ஒரு நரியின் ஊளை எழுந்தது.

இளைய யாதவர் அசைந்தபோது யுயுத்ஸு விழிப்பு கொண்டான். இளைய யாதவர் குடிலுக்குள் நுழைந்தார். அங்கே மஞ்சத்தில் அர்ஜுனன் காண்டீபத்துடன் அமர்ந்திருந்ந்தான். வீணையை மடியிலிட்டு மீட்டும் பாணனைப்போல என யுயுத்ஸு எண்ணினான். முகத்திலும் அந்த பாவனையே தெரிந்தது. இளைய யாதவர் அவனிடம் “என்ன முடிவெடுத்தாய்?” என்றார். அவன் புன்னகையுடன் “தனிமை நன்று. முழுதுற உளம்நோக்க முடிகிறது. பிறிதொரு சொல்கூட அகத்தே எழவில்லை. நான் கூறியதேதான். யாதவரே, என் கடமையையே தலைக்கொள்கிறேன்” என்றான்.

இளைய யாதவரும் அர்ஜுனனும் சென்றபின் யுயுத்ஸு குடிலில் தனித்திருந்தான். அவர்கள் காட்டுக்குள் நுழையும் எல்லைவரை சென்றபின் அவன் தயங்கிநின்றான். இளைய யாதவர் அவனை அழைக்கவில்லை. அவன் திரும்பிவந்தான். குடிலின் முகப்பில் மூங்கில் பீடத்தில் அமர்ந்தபடி இருளை நோக்கிக்கொண்டிருந்தான். மிருகண்டன் அவனை அணுகி “போருக்கான அனைத்தும் ஒருங்கிவிட்டன. அக்களத்தை தூய்மை செய்ய ஆசிரியர் ஆணையிட்டார். சற்றுமுன்னர்தான் அப்பணி முடிந்தது. ஆசிரியர் லிகிதருடன் நீராடச்சென்றிருக்கிறார்” என்றான்.

யுயுத்ஸு தலையசைத்தான். “காலைவேள்வி முதற்கதிருக்கு முன்னரே முடிவது இங்கே வழக்கம். இன்று அதை முதல்பறவைக்கு முன்னரே முடிக்க ஆணை” என்று மிருகண்டன் சொன்னான். “குருநிலையில் மாணவர் அனைவருமே போர்காண அங்கே வருகிறார்கள். இப்போர் நெடுங்காலம் நூல்களில் யாக்கப்படுவதாக அமையும் என்கிறார்கள்.” அவன் “ஆம்” என்றான். “பார்த்தரும் யாதவரும் நீராடச்சென்றார்கள் போலும்… அவர்களை அழைக்க நான் வருகிறேன்” என்றான். “தேவையில்லை, நாங்களே அங்கே வருகிறோம்” என்றான் யுயுத்ஸு.

மிருகண்டன் சென்றபின் அவன் பதற்றத்துடன் கண்மூடினான். மூடிய கண்களுக்கு அப்பால் எவரோ வருவதுபோலத் தெரிந்தது. விழிதிறந்தபோது புரவியை நிறுத்திவிட்டு பீமன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். அவனுடன் வந்த மிருகண்டன் “மூத்தபாண்டவர் வருகை முன்னரே அறிவிக்கப்படவில்லை. ஆசிரியரிடம் சொல்லி ஆணைபெறவும் இப்போது பொழுதில்லை. அவர் போரில் சான்று நின்றிருக்க வந்திருக்கிறார் போலும்” என்றான். ஆம் என யுயுத்ஸு தலையசைத்தான். பீமன் பொறுமையிழந்து அசைந்தான். மிருகண்டன் அவனை வியப்புடன் நோக்கிவிட்டு திரும்பிச் சென்றான்.

பீமன் உரத்தகுரலில் “எங்கே அவர்கள்? நிகழ்ந்தவற்றை அந்த மாணவன் சொன்னான். எங்கே இளையவன்?” என்றான். யுயுத்ஸு ‘அவர்கள் காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்” என்றான். “நான் அவர்களை பார்த்தாகவேண்டும்… உடனே” என்றபடி பீமன் திரும்ப யுயுத்ஸு “நில்லுங்கள், மூத்தவரே. வேண்டாம். அவர்கள் சென்றிருப்பது நீராடுவதற்காக அல்ல” என்றான். “பிறகு?” என்று அவன் கேட்டான். “யாதவர் இளையவருக்கு சொல் அளிக்கவிருக்கிறார். இந்திரனின் அம்பை கையாளும் முறையை” என்றான். “அதை இப்போதுதானா அறியப்போகிறான் அவன்? தந்தையின் அம்பைக் கையாள பிறிதொருவர் சொல் தேவையா அவனுக்கு?”

யுயுத்ஸு அழுத்தமான குரலில் “இதற்கு அப்பால் தங்களுக்கு அதை உரைக்க இயலாது, மூத்தவரே” என்றான். “ஆனால் அவர்களின் தனியுலகுக்குள் நீங்கள் நுழையவேண்டியதில்லை.” பீமன் சீற்றத்துடன் “நீயா என்னை தடுப்பது?” என்றான். “ஆம், நானேதான்” என்றான் யுயுத்ஸு. பீமன் “நான் அவனை அறைகூவிவிட்டே கிளம்பினேன். இளையவனுக்கு முன்னரே அவனை நான் அறைகூவிவிட்டேன்” என்று கூவினான். “அவர் நேரில் அறைகூவிவிட்டார். பரசுராமரின் முன் நாளும் பொழுதும் குறிக்கப்பட்டுவிட்டது” என்றான் யுயுத்ஸு. “அதை நான் ஏற்கவியலாது. என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது” என்று பீமன் கைகளை ஓங்கி அறைந்தான்.

“மூத்தவரே, அஸ்வத்தாமன் ஏற்றுக்கொண்டது இளையவரின் அறைகூவலை” என்று யுயுத்ஸு சொன்னான். “அதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அப்போர் முடியட்டும். நீங்கள் உங்கள் அறைகூவலை முன்வைக்கலாம். அவர் ஏற்றாரென்றால் போரிடலாம்.” பீமன் சலிப்புடன் அமர்ந்தான். “அவன் கைதளர்ந்திருந்தான். காண்டீபத்தையே மறந்துவிட்டிருந்தான். ஐவரில் போருக்கான ஊக்கம் கொண்டு எஞ்சுபவன் நான் மட்டுமே…” என்று தனக்குத்தானே சொன்னான். “அவனால் அஸ்வத்தாமனை எதிர்கொள்ளமுடியாது. அவன் அம்புக்கு இரையாகக்கூடும்.”

“அவருடன் இளைய யாதவர் இருக்கிறார்” என்றான் யுயுத்ஸு. “இப்போர் நீங்கள் எண்ணுவதுபோன்றது அல்ல…” பீமன் அவனை வெறித்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். “நீங்கள் நீராடி ஒருங்கலாம், மூத்தவரே. பொழுதில்லை” என்றான் யுயுத்ஸு. சற்றுநேரம் வெறுமனே நோக்கியபின் “ஆம்” என பீமன் எழுந்துகொண்டான். எடையுடன் அவனுக்கு நிகராக நடந்தபடி “என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. அவன் எப்படி களம்நிற்க இயலும்? போரில் அங்கன் வீழ்ந்ததுமே அவனும் வீழ்ந்துவிட்டான்” என்றான்.

“மூத்தவரே, இது அவர்களுக்குள் மட்டுமே நிகழ்ந்தாகவேண்டிய போர்” என்று யுயுத்ஸு சொன்னான். “இப்படி ஒரு போர் எஞ்சியிருந்தது. அவர்கள் பிறந்த கணம் முதல் இது ஒருங்கிக்கொண்டிருந்தது.” பீமன் “ஆம்” என்றான். பின்னர் பெருமூச்சுவிட்டு “ஊழின் கடன்களை முற்றாக முடித்துவிட்டே செல்வோம் போலும்” என்றான். “பொன்னின் உலையென்றாகவேண்டும் வாழ்க்கை என ஒரு சொல் உண்டு, வாசிஷ்டசூத்ரத்தில்” என்றான் யுயுத்ஸு. “அனைத்து மாசுகளையும் அகற்றி தூய்மைசெய்யவேண்டும். பொன் அனலென்றாகும்போதே அதிலுள்ள மாசுகள் மறைகின்றன.”

பீமன் சலிப்புடன் தலையை அசைத்தான். சுனையில் நீராடும்போது அவன் எண்ணி எண்ணி தலையை ஆட்டி முனகிக்கொண்டிருந்தான். குடிலுக்கு மீண்டு மரவுரி அணிந்துகொண்டிருக்கையில் மிருகண்டன் அவர்களை தேடிவந்தான். முற்றத்தில் நின்று “பாண்டவரே!” என்றான். யுயுத்ஸு வெளியே சென்றான். “களம் ஒருங்கிவிட்டிருக்கிறது. ஆசிரியர் சென்றுவிட்டார். இங்குள்ள மாணாக்கர் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள்.” யுயுத்ஸு “கிளம்புவோம்” என்றான். “அவர்கள் எங்கே?” என்று மிருகண்டன் கேட்டான். “அவர்கள் அங்கேயே வந்துவிடுவார்கள்” என்றான் யுயுத்ஸு

உரத்தகுரலில் “பொழுதுக்கு முன் அவர்கள் அணையவில்லை என்றால் நான் பொருதுகிறேன். நானும் அவனை அறைகூவியிருக்கிறேன்” என்றான் பீமன். மிருகண்டன் “அதை முடிவுசெய்யவேண்டியவர் ஆசிரியரே” என்றான். அவர்கள் முற்றத்தில் இறங்கினர். பீமன் கருக்கிருட்டை அண்ணாந்து நோக்கிவிட்டு கைகளை வீசியபடி நடந்தான். அவனுக்குப் பின்னால் மிருகண்டனும் யுயுத்ஸுவும் நடந்தார்கள்.

அக்களம் காட்டுக்குள் சற்று தள்ளி இருந்தது. அங்கே மண்ணுக்கு அடியில் மாபெரும் பாறை ஒன்று இருக்கக்கூடும். ஆகவே மரங்கள் ஏதும் முளைக்காமல் புல்வெளி உருவாகியிருந்தது. அங்கே பரசுராமரின் குருநிலையைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக விற்பயிற்சி கொள்வார்கள் என தெரிந்தது. குறிப்பலகைகளும் படைக்கலப்பெட்டிகளும் அமர்வதற்கான மூங்கில்பீடங்களும் அப்பகுதியெங்கும் பரவிக்கிடந்தன. பரசுராமரின் மாணவர்கள் அங்கே குழுமி வளைந்திருந்தனர். அவர்கள் அணுகியபோது அங்கே எழுந்துகொண்டிருந்த பேச்சுக்குரல் முழக்கம் அடங்கி மேலெழுந்தது.

களத்தின் தென்மேற்குமூலையில் கொற்றவையின் சிறு சிலை பீடத்தில் நிறுவப்பட்டிருந்தது. செம்பட்டு அணிந்து செங்காந்தள் மாலைசூடி செஞ்சுடர்கள் ஏழு எரிந்த இரு அடுக்குவிளக்குகளுக்கு நடுவே அன்னையின் சிறிய கருஞ்சிலை அமர்ந்திருந்தது. வெள்ளியாலான விழிகள் பதிக்கப்பட்ட முகம் அனலாட்டத்தில் உயிர்கொண்டிருந்தது. எதிரே பலிபீடத்தில் குருதிபலி கொடுக்கப்பட்ட வெள்ளாட்டின் தலை விழிகள் வெறித்திருக்க, நாக்கு நீண்டு சரிந்துதொங்க வைக்கப்பட்டிருந்தது. குருதியின் மணம் அப்பகுதியை சூழ்ந்திருந்தது.

கொற்றவைச் சிலைக்கு நேர் எதிராக வடகிழக்கு மூலையில் மரப்பீடத்தில் பரசுராமர் அமர்ந்திருந்தார். அவர் அருகே லிகிதர் நின்றார். மாணவர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். பீமன் அவரை அணுகி கால்தொட்டு வணங்கினான். அவர் அவனை தலை தொட்டு வாழ்த்தினார். பீமன் ஏதேனும் சொல்வான் என யுயுத்ஸு எதிர்பார்த்தான். ஆனால் அவன் அக்களத்தை நோக்கியதுமே உளம்குழம்பிவிட்டவன் போலிருந்தான். பரசுராமரின் அருகிலேயே பீமன் நின்றுகொண்டான். யுயுத்ஸு அருகே சென்று நின்றான்.

கொம்பொலி எழுந்ததும் அனைவரும் திரும்பி நோக்கினர். தனியாக கையில் வில்லுடன் அஸ்வத்தாமன் வந்தான். அவன் அணுகுந்தோறும் கூட்டத்தில் பேச்சொலி எழுந்து அவன் களத்திற்குள் புகுந்ததும் ஆழ்ந்த அமைதி உருவாகியது. அஸ்வத்தாமன் பரசுராமரை வணங்கிவிட்டு தன் வில்லை கொற்றவையின் முன் குருதிபீடத்தின்மேல் வைத்தான். தலைவணங்கிவிட்டு அன்னைசிலையின் வலப்பக்கமாக நின்றான். பீமனின் விழிகள் அஸ்வத்தாமனிலேயே பதிந்திருந்தன.

அஸ்வத்தாமனின் நெற்றியில் அந்தச் செந்நிற அருமணியை அப்போதுதான் யுயுத்ஸு கண்டான். முந்தைய நாள் அதைக் கண்டது நினைவுக்கு வரவில்லை. அப்போது அவனுடைய சடைக்கற்றைகள் முகத்தில் சரிந்து அதை மறைத்திருக்கலாம். அப்போது அவன் சடைகளை அள்ளி பின்னுக்குத்தள்ளி தோல்பட்டை ஒன்றை கட்டியிருந்தான். அந்த அருமணி ஒரு துளி அனல் என மின்னியது. நுதல்விழி. அவனுடைய குழல் எப்படி சடையாகியது என யுயுத்ஸு உணர்ந்தான். குருதிக்கூழ் முடியுடன் கலந்து அதை சடையென்று ஆக்கும் தன்மை கொண்டது.செஞ்சடையன்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 37

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 4

அன்று பகல் முழுக்க தேரில் அவர்கள் சென்றுகொண்டே இருந்தார்கள். அந்த திசையை ஏன் இளைய யாதவர் தெரிவுசெய்தார் என அவன் வியந்தான். கங்கைக்கு இணையாகவே அது சென்றது. நெடுந்தொலைவில் எங்கோ ஆறு இருந்தது. வழியிலோடிய ஓடைகள் அனைத்தும் அதை நோக்கியே சரிந்தன. பலகைகளைக்கொண்டு ஓடைகள்மேல் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுட்ட செங்கற்களால் காட்டாற்றின்மேல் பாலம் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு பாலத்தின் அருகிலும் மரத்தின்மேல் ஒரு காவல்மாடத்தில் சில காவலர் இருந்தார்கள்.

யுயுத்ஸு தேரை செலுத்திக்கொண்டிருக்கையிலேயே சூழ முழங்கிய முரசொலிகளை கேட்டான். அவை அர்ஜுனனின் போரெழுகையை அறிவித்தன. இளைய யாதவர் அவற்றை அறிவிக்கும்படி வழியிலேயே காவலரண்களில் இருந்த பாண்டவப் படையினருக்கு ஆணையிட்டிருந்தார். காட்டுக்குள் எத்தனை பாண்டவ ஒற்றர்களும் காவல்படையினரும் இருக்கிறார்கள் என்பதை அவன் அப்போதுதான் அறிந்தான். காடு மொத்தமாகவே முழக்கமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு பெரும் போர்முரசென அதன் பசுமைப்பரப்பு மாறிவிட்டிருந்ததுபோல. அஸ்வத்தாமன் எங்கிருந்தாலும் அதை கேட்டிருப்பார். ஒலிபோல் விரைந்து பரவுவது பிறிதில்லை.

அஸ்வத்தாமன் நெடுந்தொலைவு சென்றிருக்க வாய்ப்பில்லை. அவர் இருக்கும் நிலையில் தேரிலேறிச் செல்லமுடியாது. புரவியில் ஊர்வதற்குரிய உளநிலையும் அவரிடமிருக்காது. புரவியூர்பவர்களுக்கு சென்றடைய இலக்கு இருக்கவேண்டும். எங்கென்றில்லாமல் செல்பவர்கள் கால்களையே ஏவுகிறார்கள். அவன் அவர் காட்டுக்குள் நடந்துசெல்வதை கற்பனையால் கண்டான். புதர்களை ஊடுருவிச்செல்லும் வேங்கைபோல. ஏன் காடு? அவர் ஏன் ஊர்கள் வழியாக செல்லக்கூடாது? கங்கைப்படகுகளில் ஏறியிருக்கலாகாது? காட்டிலேயே அவர் செல்வார். அவரால் மானுடரை எதிர்கொள்ள முடியாது. மானுடரின் திகைக்கும் விழிகள் அவரை கொந்தளிக்கச் செய்யும். அவர் மானுடரைவிட மேலெழுந்துவிட்டவர். மானுடரைவிட மேலெழுந்தவர்கள் மானுடரை முடிவில்லாது பொறுத்தருளவேண்டும். அவர்கள்மேல் தீராத பேரளி கொண்டிருக்கவேண்டும்.

அவர்கள் அன்று மாலையில் காட்டின் நடுவே சாலையோரமாக எழுந்து தெரிந்த பாறை ஒன்றைக் கண்டடைந்து அதன்மேல் தங்கினார்கள். யுயுத்ஸு புரவிகளையும் பாறைக்குமேல் ஏற்றிக்கொண்டான். அவை குளம்புகள் பாறையில் பட்டு உரசி ஒலிக்க மூச்சிளைத்தபடி ஏறின. பாறைமேல் நெருப்பிட்டு அதைச் சூழ்ந்து அமர்ந்துகொண்டு ஒரு சொல்லும் உரைக்காமல் கொழுந்தாடலை நோக்கிக்கொண்டிருந்தார்கள். யுயுத்ஸு காட்டுக்குள் சென்று சேர்த்துவந்த கிழங்குகளையும் காய்களையும் சுட்டு அனலுடன் எடுத்து வைக்க இளைய யாதவர் அவற்றை எடுத்து உடைத்து உண்டார். ஓரிமுறை வாங்கி உண்டபின் அர்ஜுனன் வேண்டாம் என்றான். அவன் அவர்களுடன் இருப்பதாகவே தெரியவில்லை. முற்றிலும் சொல்லடங்கிவிட்டிருந்தான்.

அவன் மடியில் காண்டீபம் அமைந்திருந்தது. அவன் அதை காட்டுக்குள் ஒரு மரத்தின்மேல் வைத்திருந்தான். அந்த மரத்தின் அடியில் சென்று நின்றதும் அவன் தயங்கினான். பின் யுயுத்ஸுவிடம் “இளையோனே, அந்த வில்லைச் சென்று எடு” என ஆணையிட்டான். யுயுத்ஸு மரத்தில் ஏறி அதை எடுத்தான். எடையற்றது. இரும்பாலானது என்றாலும் மூங்கிலென்றே கைக்கு காட்டியது. மிகச் சிறியது. அதை சுருக்கவும் விரிக்கவும் இயலுமென அறிந்திருந்தாலும் அது அத்தனை சிறிதாக இருப்பது அவனுக்கு வியப்பை அளித்துக்கொண்டே இருந்தது. “கொண்டு வா” என்றபின் அதை கையில் வாங்காமல் அர்ஜுனன் தேரிலேறிக்கொண்டான்.

அன்று அப்பயணம் முழுக்க அவன் அருகில்தான் காண்டீபம் இருந்தது. அர்ஜுனன் அதை கையால் தொடவே இல்லை. இளைய யாதவர் அதைப்பற்றி எதையும் சொல்லவுமில்லை. அது அருகிருக்கும் உணர்வு யுயுத்ஸுவை அலைக்கழித்தது. பாரதவர்ஷத்தை வெற்றிகொண்ட வில். அது ஒரு தெய்வம். அது நெடுநாட்கள் ஆலயத்தில்தான் மையத்தெய்வமென கோயில்கொண்டிருந்தது. அவன் அதை திரும்பி நோக்கவோ தொடவோ அஞ்சினான். ஆனால் அதைப்பற்றி எண்ணிக்கொண்டே இருந்தான். மெல்லமெல்ல வியப்பு விலகி அச்சம் ஏற்பட்டது. அது குருதிகொள்ளும் கொலைத்தெய்வம். குருதிநீராடி சலிப்புறாதது. தெய்வங்கள் சலிப்புறுவதே இல்லை. ஏனென்றால் அவற்றுக்கு காலம் இல்லை.

அவன் அதை அருகே வைத்திருக்க அஞ்சினான். அதிலிருந்து கூடுமானவரை உடலை விலக்கிக்கொண்டான். ஆனால் உடலை பெருமளவுக்கு அசைக்க இயலவில்லை. உள்ளத்தால் மட்டுமே இடைவெளி விட முடிந்தது. தேர் நின்றதும் அவன் இயல்பாக என இறங்கி புரவிகளை அவிழ்த்தான். அவற்றை மேலே கொண்டுசென்று கட்டிவிட்டு கிழங்குகள் சேர்க்கச் சென்றான். அவன் மீண்டுவந்தபோது மடியில் காண்டீபத்துடன் அர்ஜுனன் தலைகுனிந்து அமர்ந்திருக்கக் கண்டான். அவன் மடியில் பாம்புபோல் அது கிடந்தது. அவன் கை அதை தொடவில்லை. அதுவே ஊர்ந்து அவன் மடிமேல் ஏறிக்கொண்டிருக்கவேண்டும் எனத் தோன்றியது.

புரவிகள் அப்பால் நின்று செருக்கடித்தன. அவற்றுக்கு தழைகளை வெட்டிப்போட்டிருந்தார்கள். அவ்வுணவு அவற்றுக்கு உகக்கவில்லை. இரவில் காட்டில் சென்று மேய விரும்பின. அவற்றின் ஓசை கேட்டு திரும்பி நோக்கிய இளைய யாதவர் “அவை காட்டுக்குள் செல்லட்டும்” என்றார். அவை அவரை நோக்கியே கனைத்தன. யுயுத்ஸு “இங்கே புலி இருக்கக் கூடும்” என்றான். “இருக்க வாய்ப்பில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “தொடர்ந்த போரொலியால் அவை நிலையழிந்திருக்கும். ஆகவே விட்டுச்சென்றிருக்கும்.” அவன் “நரிகளும் ஓநாய்களும்…” என சொல்லத் தொடங்க இளைய யாதவர் மறித்து “அவை எளிய மானுட ஊனை உண்டு பழகிவிட்டிருக்கும்” என்றார்.

அவன் துணுக்குற்றான். மேற்கொண்டு சொல்லெடுக்க இயலவில்லை. புரவிகளை காட்டுக்குள் செலுத்திவிட்டு பாறைமேல் படுத்துக்கொண்டான். அர்ஜுனன் மடியில் வில்லுடன் அமர்ந்திருந்தான். எரிகுழியில் கனலடங்கி புகைமணம் எழுந்தது. பின்னர் காற்று கனலை முற்றாக அணைத்தது. கனல்மணம் இருந்தாலே போதும், விலங்குகள் அணுகா. இளைய யாதவர் படுத்துக்கொண்டார். அப்பால் அர்ஜுனனும் படுத்தான். அவனருகே இணையாக காண்டீபம் கிடந்தது. அவன் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். இளைய யாதவரின் துயிலோசை கேட்டது. அர்ஜுனன் துயில்வதுபோல் தெரியவில்லை. அவன் திரும்பி நோக்கினான். அர்ஜுனனின் இரு கண்களும் வானோக்கி விரிந்து நீர்த்துளிபோல் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன.

அவன் துயில்வதே இல்லை என்பதை அவன் கேட்டிருந்தான். அது ஓர் அணிச்சொல் என்றே எண்ணியிருந்தான். மெய்யாகவே துயில்வதில்லையா? எனில் உள்ளம் எங்ஙனம் அடங்குகிறது? துயிலாதவனுக்கு பகலிரவு உண்டா? அவனுடைய காலம் பிறிதொன்றா? அவன் காணும் விண்ணிலிருப்பவை எவை? அவன் அர்ஜுனன் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தான். அசைவற்ற இரு பளிங்கு மணிகள். விண்மீன்களின் மறைந்து மறைந்து எழும் ஒளிகொண்டவை. அவன் காண்டீபத்தை நோக்கினான். அது உயிருள்ளதுபோல் தோன்றியது. மெல்ல நெளிவதுபோல். செவியறியாமல் ரீங்கரிப்பதுபோல்.

அவன் துயிலில் ஆழ்ந்தபோதுகூட உள்ளம் அஞ்சிக்கொண்டிருந்தது. துயிலில் அவன் உருண்டு சென்றான். அவனை சம்வகை பிடித்துக்கொண்டாள். “இங்கே பாறையின் விளிம்பு… ஆழம்” என்றாள். “அந்த நாகம், அது அவர் அருகே கிடக்கிறது” என்றான். “அது உங்களை அறியாது” என்று அவள் சொன்னாள். அவன் அதை நோக்கிவிட்டு “ஆம்” என்றான். “துயில்க!” அவள் புன்னகை இனிதாக இருந்தது. “நீ எப்படி இங்கே வந்தாய்?” அவள் புன்னகைத்துவிட்டு பின்னால் சென்றாள்.

அவன் விழித்துக்கொண்டபோது காற்று வீசிக்கொண்டிருந்தது. இளைய யாதவரின் மூச்சின் ஒலி கேட்டது. அர்ஜுனன் அவ்வண்ணமே விழித்த கண்களுடன் படுத்திருந்தான். யுயுத்ஸு எழுந்து அமர்ந்து விண்ணை நோக்கினான். விடிவெள்ளி எழுந்து இளஞ்செந்நிறமாக சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அவன் அதை நோக்கிக்கொண்டிருந்தான். காகங்களின் குழறலோசைகள். காடு விழித்தெழுந்து கொண்டிருந்தது. அவன் தலைக்குமேல் சிறகோசையுடன் வௌவால்கள் கடந்துசென்றன. அவன் எழுந்துசென்று பாறை விளிம்பில் நின்று கைகளை வாயில் சேர்த்து கூரிய ஒலியை எழுப்பினான். மீண்டும் மீண்டும் அவ்வோசையை எழுப்பிக்கொண்டிருந்தபோது புரவியின் செருக்கடிப்போசை அப்பால் கேட்டது. அவை இரண்டும் இணைந்தே புதர்களுக்குள் இருந்து வந்தன. அவை நன்கு உண்டு துயில்கொண்டிருப்பது தெரிந்தது.

அவன் நீராடி மீண்டான். இளைய யாதவரும் அர்ஜுனனும் நீராடச் சென்றிருந்தார்கள். அவன் புரவிகளை தேரில் பூட்டியபோது அவர்கள் நீராடிவிட்டு அணுகினார்கள். தேருக்குள் ஏறியமர்ந்தபோது அர்ஜுனன் காண்டீபத்தின் நாணை வீணை என விரல்களால் வருடி மீட்டிக்கொண்டிருப்பதை யுயுத்ஸு கண்டான். அர்ஜுனனின் முகம் மாறியிருந்தது. நெடுநாட்களுக்கு முன்பு கண்ட முகம். சில நாட்களாக முற்றாகவே மறந்துவிட்டிருந்த முகம்.

மாலையில்தான் ஒற்றன் ஒருவன் அவர்களை வந்து சந்தித்தான். சாலையின் ஓரமாக நின்றவன் கைச்செய்கை காட்டி அவனை அறிவித்தான். யுயுத்ஸு தேரை நிறுத்தி அவனை அருகே அழைத்தான். அருகணைந்து வணங்கி “அவர் இங்கேதான் இருக்கிறார். பரசுராமரின் தவக்குடிலில்” என்றான். யுயுத்ஸு வியப்புடன் “பரசுராமர் இங்கே இருக்கிறாரா?” என்றான். “ஆம், இது அவர்களின் நூற்றெட்டு தவக்குடில்களில் ஒன்று. இப்போதைய பரசுராமர் இங்கு வந்து தங்கியிருக்கிறார்.” யுயுத்ஸு “அவர் இங்கிருப்பதை உறுதிசெய்துகொண்டாயா?” என்றான். “ஆம், நானே நேரில் பார்த்தேன்” என்றான் ஒற்றன். “சில நாட்களுக்கு முன்னர்தான் அவர் இங்கே வந்திருக்கிறார். வந்த நாள் முதல் ஒரு மரக்குடிலில் தன்னந்தனிமையில் இருக்கிறார். அவருக்கும் பிறருக்கும் நடுவே ஒரு சொல்கூட பரிமாறப்படவில்லை. சொல்லப்போனால் அவர் பகலில் வெளியே வருவதே இல்லை. இரவில் மட்டும் ஒருமுறை காட்டுக்குச் சென்று மீள்கிறார்…”

“பரசுராமருக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்தவை என்ன?” என்று யுயுத்ஸு கேட்டான். “நானறிந்தவரை ஒன்றுமே இல்லை” என்றான் ஒற்றன். உள்ளிருந்து அர்ஜுனன் “மூத்தவர் அறிவாரா அஸ்வத்தாமன் இங்கிருப்பதை? அவர் இங்கே வந்தாரா?” என்றான். “இல்லை, இதுவரை அவர் இங்கே வந்துசேரவில்லை” என்றான் ஒற்றன். “நன்று… இனி அவர் வந்தால்கூட அவரிடம் பரசுராமருடன் அஸ்வத்தாமன் இருக்கும் செய்தியை தெரிவிக்க வேண்டியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். இளைய யாதவரிடம் “இப்போரை நான் நிகழ்த்துவேன், யாதவரே. நான் அதை பலமுறை உள்ளே நிகழ்த்திவிட்டேன். என் காண்டீபம் இப்போது எழுந்துவிட்டிருக்கிறது” என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார்.

யுயுத்ஸு தேரை காட்டுக்குள் பிரிந்துசென்ற சிறுபாதையில் செலுத்தினான். தேர் வேர்ப்புடைப்புகளிலும் கற்களிலும் ஏறியமைந்து ஊர்ந்துசென்றது. அவன் நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது. ஒருவேளை அர்ஜுனனின் இறப்பு இங்கே நிகழுமோ? அனைத்தும் இங்கே வந்து முடியும்பொருட்டுத்தான் இதுவரை கோக்கப்பட்டுள்ளனவா? அந்தப் போர் நிகழாமல் எதுவும் முடியாது என அவனுக்குத் தோன்றியது. முன்னால், மேலும் முன்னால் என சென்று நோக்கினால் அப்போர் தொடங்கியது அவர்களிடையே இருந்துதான். துருபதனை அர்ஜுனன் சிறுமைசெய்த இடத்திலிருந்து தொடங்குகிறது குருக்ஷேத்ரம் என ஒரு சூதன் பாடக் கேட்டான். அவரை அர்ஜுனன் சிறுமைசெய்தது அஸ்வத்தாமன் பொருட்டுத்தான். அவன் தலையை உலுக்கி அவ்வெண்ணங்களை அகற்றினான். அவ்வாறு எண்ணப் புகுந்தால் அதற்கு முடிவே இல்லை. ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. அனைத்துமே தொடக்கங்கள்தான்.

தேர் மேலும் செல்லாமல் நின்றுவிட்டது. அவர்கள் இறங்கிக்கொண்டார்கள். அவன் தேரை அருகே அவிழ்த்து புரவிகளை காட்டுக்குள் செலுத்தினான். காண்டீபத்துடன் அர்ஜுனன் நடக்க இளைய யாதவர் உடன் சென்றார். அவன் அவர்களுக்குப் பின்னால் நடந்தான். அவர்களைச் சூழ்ந்திருந்த காடு வெயில் படாத தழைச்செறிவு கொண்டிருந்தது. இலைநுனிகளிலிருந்து தவளைகள் துள்ளித்தெறித்தன. அருவிகள் பொழிந்து நிலைத்ததுபோல கொடிகள் தொங்கிய பெருமரங்கள் அடிவேர்களால் நிலத்தை அள்ளிப்பற்றி புடைத்த கைகளை விரித்து பசுங்கூரையை தாங்கி நின்றிருந்தன. மேலே பறவையோசை முழக்கமாக கேட்டுக்கொண்டிருந்தது. மிக அருகிலெங்கோ அருவி ஒன்று இருக்கக்கூடும் என ஓசை காட்டியது.

காட்டின் ஓரமாக பாறையொன்றின்மேல் அமர்ந்திருந்த ஒருவன் சருகு உதிர்வதுபோல ஓசையில்லாமல் இறங்கி “வருக பாண்டவரே, வருக யாதவரே, உங்களை அழைத்துவரும்படி ஆணை” என்றான். “என் பெயர் மிருகண்டன். பரசுராமரின் மாணவர்களில் ஒருவன். நீங்கள் வருவதாக எனக்கு சொல்லப்பட்டது” என்றான். இளைய யாதவர் புன்னகைத்து அவனை வணங்கி “மிருகண்டரே, எங்களை எதிர்பார்த்திருப்பீர்கள் என அறிவேன். நீங்கள் அனுப்பிய செய்தி கிடைத்தது” என்றார். மிருகண்டன் முனிவன்போல் சடைத்திரிகள் தொங்கும் தோள்களும் அடர்ந்த தாடியும் கொண்டிருந்தான். மெலிந்த வெண்ணிற உடலில் நீல நரம்புகள் புடைத்திருந்தன.

“ஆசிரியர் இங்குதான் இருக்கிறாரா?” என்றான் யுயுத்ஸு. “இக்காட்டில் எங்கள் குருநிலை ஆயிரமாண்டுகளாக உள்ளது. முதலாசிரியர் இங்கே வருவது அரிது. சென்ற ஒரு மாதமாக இங்குதான் இருக்கிறார்” என்றான் மிருகண்டன். “சொல்லப்போனால் குருக்ஷேத்ரப் போர் தொடங்குவதற்கு முந்தையநாள் அவர் இங்கே வந்தார்.” யுயுத்ஸு அதை எதிர்பார்த்திருந்தான். அவர்கள் காட்டுக்குள் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தார்கள். மிருகண்டன் அவர்களை பெரிதாக பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. புதர்களுக்கு அப்பால் பசுங்கொடிகள் படர்ந்து மண்மேடுகள் என்றே தோன்றிய குடில்கள் தெரியத் தொடங்கின. அவற்றிலிருந்து அடுமனைப்புகை எழுந்துகொண்டிருந்தது.

“தவக்குடிலின் மாணவர்கள் தேன் எடுக்கவும் உணவு சேர்க்கவும் ஊன் கொள்ளவும் காட்டுக்குள் சென்றுள்ளனர். கன்றுமேய்ப்பவர்களும் இனிமேல்தான் திரும்புவார்கள். இப்பொழுதில் குடில்வளாகம் அமைதியாகவே இருக்கும்” என்றான் மிருகண்டன். “இங்கே எத்தனை பேர் உள்ளனர்?” என்றான் யுயுத்ஸு. “எழுபது பேர்…” என்றான் மிருகண்டன். “இங்கே பொழுது மிக முன்னரே இருட்டிவிடும். ஆகவே அந்திப்பொழுதுக்கான வேள்விகளை தலைக்குமேல் பறவையோசைகள் அடங்குவதற்குள்ளேயே முடித்துவிடுவோம்” என்றான் மிருகண்டன். அவர்கள் குடில்வாயிலை நெருங்கியபோது உள்ளிருந்து கொம்போசை எழுந்தது. குடில்வாயிலுக்கு வந்த மாணவர்கள் மூவர் தலைவணங்கினர். அவர்களில் மூத்தவர் “பாண்டவருக்கும் யாதவருக்கும் நல்வரவு. என் பெயர் லிகிதன். உங்களை ஆசிரியரிடம் அழைத்துச்செல்ல அமர்த்தப்பட்டிருக்கிறேன்” என்றார்.

அந்தக் குடில்வளாகம் செங்குத்தாக எழுந்து செறிந்து நின்றிருந்த மூங்கில்மரங்களால் வேலியிடப்பட்டிருந்தது. குடில்வாயிலை கடந்துசெல்ல அமைக்கப்பட்டிருந்த பலகைக்கு அடியில் நீரோடை ஒன்று ஒலித்து ஒளிர்ந்து சென்றது. லிகிதர் அவர்களுக்குரிய குடிலை காட்டினார். “நீராடி ஆடைமாற்றி ஆசிரியரைக் காண தாங்கள் வரலாம்” என்றார். யுயுத்ஸு “நாங்கள் இங்கே துரோணரின் மைந்தர் அஸ்வத்தாமனை சந்திக்கும்பொருட்டு வந்திருக்கிறோம். அவரை போருக்கு அறைகூவ இளைய பாண்டவர் அர்ஜுனன் விழைகிறார்” என்றான். “அவருடைய விழைவின்பேரிலேயே நீங்கள் வந்துள்ளீர்கள். அவரை நீங்கள் ஆசிரியர் முன்னிலையில் சந்திக்கலாம்” என்றார் லிகிதர். “அவர் எந்நிலையில் இருக்கிறார்?” என்றான் யுயுத்ஸு. “போரிடும் நிலையில்தான்” என்றபின் லிகிதர் புன்னகைத்து தலைவணங்கினார்.

அவர்களை மிருகண்டன் அழைத்துச்சென்றான். குடில்கள் நடுவே ஓடிய ஓடையில் நீராடி குடிலுக்கு மீண்டு புதிய மரவுரிகளை அணிந்துகொண்டார்கள். அவர்களுக்கு மரக்குடுவைகளில் பழங்கள் இட்டு தேனும் பாலும் சேர்த்து சமைக்கப்பட்ட இன்கஞ்சி அளிக்கப்பட்டது. இளைய யாதவர் ஒரு சொல்லும் பேசவில்லை. அர்ஜுனன் தன் உள்ளே மிகவும் சென்றுவிட்டவன் போலிருந்தான். ஆனால் அவன் உடலென்றே மாறிவிட்டிருந்த காண்டீபத்தில் விரல்கள் ஓடிக்கொண்டே இருந்தன. யுயுத்ஸு ஒருவகையான திணறலை உணர்ந்தான். அங்கே எங்கோதான் அஸ்வத்தாமன் இருந்துகொண்டிருக்கிறார். ஏதோ இருண்ட குடிலுக்குள். தன்னந்தனிமையில். தனிமையில் அவர் பெருகியிருக்கக்கூடுமா அன்றி சிறுத்திருப்பாரா?

பரசுராமரின் குடில் அந்த வளாகத்தின் மையத்தில் இருந்தது. அது வட்டமாக கூம்பு என எழுந்த கூரையுடன் பெரிய கூடை எனத் தோன்றியது. பிருகுகுலத்தின் மழு முத்திரைகொண்ட கொடி மேலே பறந்துகொண்டிருந்தது. அவர்களை அழைத்துச்சென்ற மிருகண்டன் லிகிதரிடம் ஒப்படைத்துவிட்டு அகன்றான். லிகிதர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். அந்தக் குடில் வட்ட வடிவிலிருந்தமையால் உள்ளே அத்தனை இடமிருக்கக்கூடும் என உணரமுடியவில்லை. உட்பகுதி வட்டமான பெரிய முற்றம் என்றே தோன்றியது. அதன் சுவர்களில் வண்ணம் தீட்டப்பட்ட பாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. குடிலின் நடுவே கூரைக்கூம்பு முனையிலிருந்து தொங்கிய கொத்துவிளக்கு நூறு சுடர்கள் ஏற்றத்தக்கதாக இருந்தது. குடிலுக்குள் ஏழு சாளரங்களில் மூன்றினூடாக சாயும் ஒளி உள்ளே வந்து மென்மையாகப் பரவியிருந்தது.

அதன் மறு எல்லையில் மரத்தாலான மேடைமேல் புலித்தோல் விரிக்கப்பட்ட பீடத்தில் பரசுராமர் அமர்ந்திருந்தார். தூய வெண்ணிறமான குழல் தோளில் பரவியிருந்தது. வெண்ணிறத் தாடி மார்பில் விழுந்திருக்க முதுமையால் வளைந்த மூக்கு சிவந்து தெரிந்தது. ஆயினும் அவரை முதியவர் என எண்ண முடியவில்லை. சிறுவர்களுக்குரிய தெளிந்த விழிகளும் இளைஞர்களுக்குரிய முறுகிய தோள்களும் நரம்புகள் புடைத்த உறுதியான கைகளும் விரிந்த மார்பும் செறிந்தமைந்த வயிறும்தான் அப்படி எண்ணச்செய்கின்றன என யுயுத்ஸு உணர்ந்தான். அவர் மூவரில் எவரையும் பார்க்கவில்லை. மடியிலிருந்த ஏட்டுச்சுவடியை அப்பாலிருந்த சிறிய பீடத்தில் வைத்தார்.

லிகிதர் நின்று அவர்களை முறைப்படி அறிமுகம் செய்ய அர்ஜுனனும் யுயுத்ஸுவும் தலைவணங்கினர். அவர் அதை ஏற்றுக்கொண்டு இளைய யாதவரை நோக்கினார். இளைய யாதவர் தலைவணங்கவில்லை. அவர்களின் நோக்குகள் தொட்டுக்கொண்டன. மிக மெல்லிய ஒரு தலையசைப்பு பரசுராமரில் நிகழ்ந்தது. அல்ல, அவ்வாறு தோன்றும் ஓர் அசைவு விழிகளில் எழுந்தது. அல்ல, அவ்வாறு தோன்றும் முகநிகழ்வு. அதுகூட அல்ல, அது நிகழவே இல்லை. அது தன் உள்ளம் கொண்ட பதிவு. பிறிதொன்று நிகழ்ந்தது அவர்களுக்குள். அவன் இளைய யாதவரின் முகத்தை பார்த்தான். அங்கே எவ்வுணர்ச்சியும் இல்லை. மாறாப் புன்னகையுடன் என்றுமெனச் சமைந்திருந்தது அது. என்ன நிகழ்ந்தது? அவனால் அறியக்கூடாத ஒன்று. அறிந்தாலும் அறிந்த பிறிதொன்றாக அவன் எண்ணிக்கொள்வது.

பரசுராமர் “அமர்க!” என்றார். அர்ஜுனனும் இளைய யாதவரும் அமர்ந்துகொள்ள யுயுத்ஸு கைகட்டி அப்பால் நின்றான். பரசுராமர் “இங்கேதான் இருக்கிறார் துரோணரின் மைந்தர். அவர் விழைந்தால் நீங்கள் அவரை சந்திக்கலாம். உங்கள் வருகை அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார். யுயுத்ஸு “ஆசிரியரே, பாண்டவ மைந்தர்களை அவர் நெறிமீறி குடில்புகுந்து கொன்றார் என அறிந்திருப்பீர்கள். அரசநெறிப்படி அவரிடம் பழிநிகர் கொள்ள இளைய பாண்டவருக்கு உரிமை உள்ளது. அந்த அறைகூவலை அவருக்கு விடுக்கவே வந்துள்ளோம்” என்றான். பரசுராமர் புன்னகைத்து “இக்குருநிலை அறப்போருக்கு எப்போதும் எதிரானது அல்ல என அறிந்திருப்பீர்கள். வேதம் நிலைகொள்வதன் பொருட்டென்றால் அறம் கடந்து போரிடவும் இது தயங்கியதில்லை” என்றார்.

லிகிதர் உள்ளே வந்து தலைவணங்க அவரைக் கடந்து அஸ்வத்தாமன் உள்ளே வந்தான். லிகிதர் திகைத்து விலகினார். யுயுத்ஸு கைகளைக் கூப்பியபடி நகர்ந்தான். “யார் என்னை தேடி வந்தது?” என்றான் அஸ்வத்தாமன். அவன் காட்டாளன் போலிருந்தான். அழுக்கடைந்து கிழிந்த தோலாடை அவன் உடலில் நார்களாகத் தொங்கியது. உடலெங்கும் மண்ணும், சேறும், காட்டில் உதிர்ந்த மலர்ப்பொடிகளும், இலைத்துகள்களும், சிற்றுயிர்களின் இறகுகளும் படிந்திருந்தன. தலைமயிர் அதற்குள்ளாகவே சடைபோலாகி விழுதுகளாகத் தொங்கியது. தாடிமயிர்களும் நார்களாக ஆகிவிட்டிருந்தன. வலக்கையில் வில் வைத்திருந்தான். விழிகள் கலங்கி அலைபாய்ந்தன. “என்னை அறைகூவியவன் எவன்?” என்று அவன் கேட்டான். காட்டுவிலங்கொன்றின் உறுமல் போலிருந்தது அக்குரல்.

யுயுத்ஸு பேசமுற்படுவதற்குள் அர்ஜுனன் எழுந்து காண்டீபத்தை கையிலேந்தியபடி “நான், பாண்டவனாகிய பார்த்தன், உங்களை போருக்கு அறைகூவும்பொருட்டு வந்துள்ளேன். என் மைந்தரை நெறிமீறி குடில்புகுந்து துயிலில் கொன்ற பெரும்பழிக்கு நீங்கள் நிகர்செய்தாகவேண்டும், ஆசிரியர்மைந்தரே” என்றான். “நெறியா?” என்றபின் அவன் உரக்க நகைத்து “இவர்கள் இருவருக்கும் முன்னால் நின்று நெறியைப் பற்றியா பேசுகிறாய்? எவருடைய நெறி?” என்றான். “என் நெறி. என் அரசியின் சொல். அதையே நான் தலைக்கொள்கிறேன்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் என்னுடன் தனிப்போருக்கு வந்தாகவேண்டும். இறப்புவரை அப்போர் நிகழட்டும். இது என் அறைகூவல்.”

“அவர் சாவிலி என அறிவாயா?” என்றார் பரசுராமர். “ஆம், நான் பேசுவது என் சாவைப்பற்றி… இப்போரில் வென்றாலொழிய நான் மீளப் போவதில்லை” என்றான் அர்ஜுனன். “எனில் வருக, இப்போதே போரை நிகழ்த்துவோம். வருக!” என்றான் அஸ்வத்தாமன். பரசுராமர் “இல்லை, இந்தக் காட்டில் என்றால் எங்கள் நெறிகளின்படிதான் போர் நிகழமுடியும்… பொழுது எழுந்து பொழுது அணைவதற்கு நடுவேதான் போர் நிகழவேண்டும்” என்றார். அர்ஜுனன் “ஆசிரியரே, நீங்கள் வகுத்தளியுங்கள் பொழுதை” என்றான். “நாளை முதற்கதிர் எழும்போது” என்றார் பரசுராமர். “இக்காட்டிலுள்ள சுமஹரிதம் என்னும் புல்வெளியில்.” அர்ஜுனன் “ஆம்” என்றான். “ஆம்” என்றான் அஸ்வத்தாமன். “ஆசிரியரே, நீங்களே நடுவராக அமைந்து போரை நிகழ்த்துக!” என்றார் இளைய யாதவர். புன்னகையுடன் “அவ்வாறே” என்றார் பரசுராமர்.

தலைவணங்கி அஸ்வத்தாமன் திரும்பிச் சென்றான். இளைய யாதவர் எழுந்துகொள்ள அர்ஜுனனும் உடன் எழுந்தான். அவர்கள் பரசுராமருக்கு தலைவணங்கி வெளியே நடந்தனர். அர்ஜுனன் மீண்டும் அத்தனிமையை சென்றடைந்தான். யுயுத்ஸு தலைகுனிந்து உடன் சென்றான். அவர்கள் முற்றத்தை அடைந்ததும் எதிர்பாராத தருணத்தில் அர்ஜுனன் “நில்… கீழ்மகனே நில்!” என்று கூவியபடி அஸ்வத்தாமனை நோக்கி ஓடினான். “நில்! நில்! இழிபிறவியே நில்!” அவன் மூச்சுவாங்க ஓடி அஸ்வத்தாமன் முன் சென்று நின்றான். “நீ அன்னை வயிற்றில் பிறந்தவன் என்றால் சொல், நீ என் மைந்தரை எண்ணி வருந்தவில்லையா? உன் கைகளால் அவர்களைக் கொன்றதைப்பற்றி ஒரு கணமேனும் துயர்கொள்ளவில்லையா? சொல்!” அர்ஜுனன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. காண்டீபத்தை கைகள் இறுகப் பற்றியிருந்தன.

யுயுத்ஸு அருகே செல்ல விழைந்தான். ஆனால் உடலை அசைக்க முடியவில்லை. இளைய யாதவர் புன்னகையுடன் வெறுமேனே நோக்கி நின்றார். “நீ கொன்ற மைந்தரின்பொருட்டு வருந்துகிறாயா?” என்றான் அஸ்வத்தாமன். அர்ஜுனன் தளர்ந்து “ஆம், ஒவ்வொரு கணமும் அனலில் என எரிகிறேன். வாழ்வதென்பது இத்தனை பெரிய துயராக ஆகிவிடுமென ஒருபோதும் எண்ணியதில்லை. நான் வாழ்ந்துகொண்டிருப்பதே மானுடருக்கு அமையும் கொடுநரகம்!” என்றான். “ஏனென்றால் நீ கொன்ற பின்னரே இத்துயரை அடைந்தாய்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “நான் இத்துயர் அனைத்தையும் அடைந்து அதனூடாகக் கடந்துவந்து அவர்களைக் கொன்றேன்.” அர்ஜுனன் “என்ன சொல்கிறாய்?” என்றான்.

“ஒவ்வொரு கணமும் அறிந்திருந்தேன். அதோ அவன் அறிந்திருப்பதுபோல் அறிந்திருந்தேன். அவன் முயன்றதுபோலவே நானும் முயன்றேன். ஆகவே அவனைப்போலவே நானும் பெருந்துயருடன் எஞ்சுகிறேன்” என்றான் அஸ்வத்தாமன். அவன் விழிகள் பித்தனின் விழிகளைப்போல அலைபாய்ந்தன. அர்ஜுனன் பெருஞ்சீற்றத்துடன் “இழிமகனே, என் மைந்தர்களின்பொருட்டு உன்னை வெல்வேன். உன்னை தீராப் பெருநரகிற்கு தள்ளுவேன். இது என் வஞ்சம்! என் மைந்தருக்காக! என் மூதாதையருக்காக! என் தெய்வங்களின்மேல் ஆணை!” என்று கூவினான். அஸ்வத்தாமன் உதடுகளில் மெல்லிய புன்னகை எழுந்தது. ஒருமுறை இளைய யாதவரை நோக்கிவிட்டு அவன் திரும்பி நடந்தான். அர்ஜுனன் சீறலோசையுடன் அழுதபடி தலைகுனிந்து நின்றான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 36

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 3

தேர் கிளம்பியதுமே யுயுத்ஸு ஒன்றை உணர்ந்தான். அது போருக்குரிய தேரல்ல. சீரான நெடும்பாதையில் விரைந்து செல்லக்கூடியதும் அல்ல. இரட்டைப்புரவி கட்டப்பட்டது. மேடுபள்ளமான சிறிய தொலைவுக்கு செல்வதற்குரியது. அரசகுடியினர் பிறரறியாது ஊர்வதற்குரிய மூடுதிரைகள் அமைக்கப்பட்டது. அதன் நுகம் தோல்பட்டையால் தளர்வுற தேருடன் இணைக்கப்பட்டிருந்தது. சகடங்கள் மையக்கூடத்துடன் நெகிழ்வாக பொருத்தப்பட்டிருந்தன. அடியில் வளைந்த ஏந்துவிற்களுக்கு நடுவே இழுத்துk கட்டப்பட்ட தோல்பட்டைகளின் மேல் அதன் மேற்கூண்டு அமைந்திருந்தது. அதை தொட்டில் என்றே ஏவலர்கள் கூறினார்கள். வேர்களிலும் முழைக்கற்களிலும் ஏறி அமர்ந்து செல்கையில் அது படகென ஊசலாடியது. ஆனால் அதிர்வு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு செல்லாமல் தோல்பட்டை தடுத்தது.

காட்டுக்குள்ளிருந்து சிறிய சேற்றுப்பாதை வழியாக மையச்சாலைக்கு வந்து கங்கையிலிருந்து விலகிச்செல்லth தொடங்கியதும் யுயுத்ஸு அத்தேரின் ஆட்டம் நுகத்தையே உலைப்பதாக இருப்பதை உணர்ந்தான். தொட்டில் இருதூண்களிலும் முட்டியபடி ஊசலாட நுகம் அசைந்து புரவிகளின் ஒத்திசைந்த ஓட்டம் தடைபட்டது. புரவியின் விசையை குறைக்கலாமா என்றெண்ணி அவன் பின்னிருந்து ஆணை வரவேண்டுமென்று எதிர்பார்த்தான். இளைய யாதவரோ அர்ஜுனனோ எதுவும் சொல்லவில்லை என்று கண்டு சீரான விசையில் புரவியை செலுத்தியபடி திரும்பிப்பார்த்தான். தொட்டிலின் ஆட்டத்திற்கு தன் உடலை நிலைப்படுத்தும்பொருட்டு அர்ஜுனன் தூணைப்பற்றியிருந்தான். இளைய யாதவர் இருகைகளையும் மார்பில் கட்டி அந்த ஆட்டத்தையே விளையாட்டென மாற்றி மகிழ்பவர் போலிருந்தார்.

யுயுத்ஸு “நாம் எங்கு செல்கிறோம்?” என்று கேட்டான். “முதலில் கிளம்பிச்செல்வோம். நாம் செல்வதை அனைவரும் அறியட்டும். உரிய முறையில் நாம் அவரை சந்திக்க முடியும்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “மூத்தவரை தடுக்க வேண்டும். அவர் சென்று அஸ்வத்தாமன் முன் நின்றிருக்கக்கூடாது. அது ஒன்றே என் இலக்கு” என்றான். இளைய யாதவர் “அவர் தனிப்புரவியில் சென்றிருக்கிறார். அவரால் ஓடைகளை தாவ முடியும். ஒற்றை மரங்களின்மீதுகூட ஊர்ந்து செல்ல முடியும்” என்றார். “அவருக்குத் தெரியுமா அஸ்வத்தாமன் எங்கிருக்கிறார் என்று?” அர்ஜுனன் கேட்டான். “நாம் எண்ணுவதையே பீமசேனரும் எண்ணுவார். நாம் கிளம்பியிருக்கும் செய்தி அஸ்வத்தாமனுக்கு தெரியும். தன்னை எவரும் தேடி வருவதை அறிந்த பின்பு அவன் மறைந்திருக்கமாட்டான். அது அவனுடைய இயல்புக்கு மாறானது. அவனே நம்மைத் தேடி வருவான்” என்றார் இளைய யாதவர்.

“அவன் மூத்தவரை எதிர்கொள்ளக்கூடாது. மூத்தவரால் அவனை எதிர்த்துப் போரிட இயலாது” என்று அர்ஜுனன் மேலும் சொன்னான். “இன்றைய நிலையில் அவனை எவரும் எதிர்த்துப் போரிட இயலாது. குருக்ஷேத்ரத்தின் போர்க்களத்தில் அவனை நாம் வென்றோமெனில் தெய்வத்துக்குரிய படைக்கலங்கள் எதையும் மானுடருக்கெதிராக எடுக்கக்கூடாது என்று அவன் நன்கு எண்ணியிருந்தான் என்பதனால்தான். இன்று அவ்வாறல்ல, அனைத்து நெறிகளையும் மீறி அமர்ந்திருக்கிறான். இன்றைய அஸ்வத்தாமனை எதிர்கொள்வதற்கு முக்கண் முதல்வனே மண்ணிறங்கி வந்தாகவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார்.

“என்ன சொல்கிறீர்கள்? வெல்ல இயலாதெனில் இப்போருக்கு நாம் ஏன் எழுகிறோம்?” என்றான் அர்ஜுனன் “ஏனென்றால் இப்போருக்கு நாம் எழாமலிருக்க இயலாது” என்றார் இளைய யாதவர். “போருக்கெழ வேண்டாம் என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. ஆனால் பீமசேனர் எழுந்தபிறகு ஒன்றும் செய்வதற்கில்லை. நமது இலக்கு இப்போது பீமசேனரை மறிப்பது மட்டுமே” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்ற அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “ஆனால் என் அகம் நிலையழிந்துள்ளது” என்றான். “நாம் பீமசேனரை மறிப்பதற்குள் அஸ்வத்தாமன் அவரை மறிக்கக்கூடாது. அதற்கு ஒரே வழி நம்மை நோக்கி அஸ்வத்தாமனை இழுப்பது” என்றார் இளைய யாதவர்.

“ஆம்” என்ற பின் அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “ஒருவேளை அவனுடைய அம்பால் நான் கொல்லப்படுவேன் போலும். எனில் அதுவும் நன்று. பெருமைக்குரிய இறப்பு அது. இத்துயரிலிருந்தும் நிலையழிவிலிருந்தும் அவ்வண்ணம் விடுதலை அமையும் எனில் அதுவும் நன்றே” என்றான். யுயுத்ஸு மீண்டும் திரும்பிப்பார்த்தான். இளைய யாதவர் அவனை நோக்கி மீண்டும் புன்னகைத்தார். யுயுத்ஸு விழிகளை திருப்பிக்கொண்டான். அவன் உள்ளம் ஒரு கணம் சற்றே விலகி அச்செயலை விந்தையாக்கிக் காட்டியது. பாரதவர்ஷத்தின் மாவீரனுக்கு அவன் தேராளியாகச் செல்கிறான். அவனை வெல்லும் மாவீரனுடன் போரிட. பெருந்தேராளி தேரில் அமர்ந்திருக்கிறான். சூதர்கள் பாடவேண்டிய தருணம். ஆனால் சூதர்கள் பாடிப்பாடி சலித்துவிட்டார்கள். சொல் தீர்ந்து உளம் அமைந்துவிட்டார்கள்.

“நமது தேர் விரைவதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “இன்னமும் காடுகளில் அவர்களின் ஒற்றர்கள் இருக்கக்கூடும். அவர்கள் உறுதியாக அஸ்வத்தாமனிடம் அனைத்தையும் கூறுவார்கள். ஐயமே தேவையில்லை” என்றார். சலிப்பு தெரிந்த குரலில் “அவர்கள் மூத்தவர் செல்வதையும் சொல்லக்கூடும்” என்று அர்ஜுனன் சொன்னான். ‘அவன் நம்மை தெரிவு செய்தாகவேண்டுமென்பதில்லை. இன்றைய நிலையில் அவனுக்கு அந்த நெறியே இருக்க வாய்ப்பில்லை. மூத்தவரைக் கொன்றுவிட்டு நம்மை எதிர்கொள்ளலாம் என்று எண்ணினானென்றால்…” இளைய யாதவர் “நன்று எதிர்பார்ப்போம், அதுவன்றி ஒன்றும் நாம் செய்வதற்கில்லை” என்றார்.

பின்னர் நெடும்பொழுது அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. தேர்ச்சகட ஓசையே கேட்டுக்கொண்டிருந்தது. அர்ஜுனன் “யாதவரே, அவனிடம் இருக்கும் மிகப்பெரிய அம்பு எது?” என்றான். “அதை பிரம்மசிரஸ் என்கிறார்கள். அழிக்கும் ஆற்றலில் அதுவே முதன்மையான அம்பு. படைப்பிறைவனின் தலை என்று அதற்கு பெயரிட்டிருக்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். சிலகணங்களுக்குபின் உரக்க நகைத்து “அப்பெயரிட்டவன் கவிஞன். பெரும்பாலான தருணங்களில் போர்க்கலையிலேயே மெய்யான கவிதை திகழ்கிறது” என்றார்.

“நகைக்கும் தருணமல்ல இது!” என்று உரத்த குரலில் அர்ஜுனன் சொன்னான். தேரின் ஆட்டத்தில் அவன் குரல் அசைந்து முதுமை கொண்டது போல் தோன்றியது. இளைய யாதவரின் குரலோ அதே அசைவினால் துள்ளிவிளையாடும் குழந்தையின் குரலென்றாகியது. “அம்புகள் களிப்பாவைகள். பாவைகள் குழந்தைகளுக்குரியவை. சிரித்து மகிழ்வதற்குத் தகுந்தவை” என்றார் இளைய யாதவர் “ஊழித்தொடக்கத்தில் பிரம்மனின் தலைகள் ஐந்து என்பதை அறிந்திருப்பாய்” என்றார் இளைய யாதவர் “ஆம், நான்கு திசைகளுக்கும் ஒன்று. விண்ணோக்கியது ஐந்தாவது தலை” என்றான் அர்ஜுனன். “இது பராசர சம்ஹிதையிலுள்ள தொல்கதை” என இளைய யாதவர் சொன்னார். “முன்பு பிரம்மனுக்கு முகமோ வடிவோ இருக்கவில்லை. ஓங்காரமெனும் ஒலியாக அவன் விண்பொருளில் இருந்து எழுந்தான். ஓங்காரத்தை தன் சித்தத்தால் ஒளியென்று ஆக்கிக்கொண்டான். அவ்வொளியாலான உடல்கொண்டிருந்தான்.”

ஓங்காரம் அவனில் உறைந்தமையால் அவனில் ஆணவம் குடியேறியது. ஆணவம் தன்னை தான் பெருக்க விழைவது. தன்னைப் பெருக்கவேண்டுமென்றால் தனக்கொரு வடிவம் வேண்டும். ஆகவே அவன் விண்விரிந்த நீரில் தன் முகத்தை தானே நோக்கினான். ஒளியை விழிகளாகவும் ஓங்காரத்தை நாவாகவும் கொண்டு அவனுக்கு முகம் அமைந்தது. தன் ஆணவத்தை விரித்து விரித்து முடிவில்லா வண்ணவேறுபாடுகளாக ஆக்கி அவன் படைப்பை பெருக்கலானான். தன் அழகின் ஆயிரம்கோடி வடிவங்களை சமைத்தான். தன்னை தான் காமுறும்பொருட்டு தனக்கு எதிர்த்தன்மை கொண்ட தன்னை படைத்துப்பெருக்கினான். அவை பெண்ணென்று ஆயின. முடிவிலா அழகுகொண்ட அவ்வுருவை சதரூபி என்னும் பெண் என வகுத்தான்.

சதரூபியின் அழகைக் காண அவன் நான்கு திசைகளுக்கும் முகம் கொண்டான். விழிபெருக்கினான். நோக்கும்தோறும் பெண் அழகு கொள்கிறாள். அழகு கொள்ளும்தோறும் மாயம் கொள்கிறாள். அவள் அவனுடன் விளையாடினாள். அவன் தலைக்குமேல் சென்று மறைந்தாள். அவளை நோக்கும்பொருட்டு அவன் விண்நோக்கி ஒருவிழியை அடைந்தான். அவ்விழியால் அவன் கண்டது முடிவிலா வெறுமையை. திசைதிசையென பெருகும் பொருள்வெளியின் மையத்தில் அவ்வெறுமை இருப்பதைக்கண்டு அவன் திகைத்தான். இப்பொருட்கள் அனைத்தையும் ஆள்பவன் நான். வடிவங்களையும் வண்ணங்களையும் நிலைகளையும் செயல்களையும் இயல்புகளையும் வகுப்பவன். இவை என்றும், இவையல்ல என்றும், இவையென்று ஆகாத ஒன்று என்றும் அங்கு நின்றிருக்கும் அவ்வெறுமைதான் என்ன? அதை நிகழ்த்துபவன் எவன்? அந்த வினாவே அவனை ஆட்கொண்டது.

தன் நான்கு திசைமுகங்களையும் செயலற்றதாக்கி ஐந்தாவதையும் விழிமூடி ஊழ்கத்திலமிழ்த்து அவன் அப்பேராற்றலைக் கண்டான். ஒருகணம் ஆக்கத்தின் பேரெழிலும் மறுகணம் அழிவின் கொடுந்தோற்றமுமென அது மாறி மாறி திகழ்ந்துகொண்டிருக்க அதை நோக்கி அறைகூவினான். “இவையனைத்தையும் படைத்தவன் நானென்பதால் இவற்றுக்கு மேல் முழுதாளுமை எனக்கே உரியது. அவள் எனக்குரியவள். என்னிடம் அவளை அளியுங்கள்” என்றான். “அவள் உன்னிலெழுந்தவள். எனவே உன் மகள். அவள்மேல் நீ காமம் கொள்ளலாகாது” என்றது விண்விரிவு. “படைப்பவன் எவனும் தன் படைப்பின்மேல் முதல்பெருவிழைவு கொண்டவன். அவ்விழைவு அவன் தன்மேல் கொள்ளும் விழைவின் பெருந்தோற்றம். அதிலிருந்து எவரும் ஒழிய இயலாது” என்று பிரம்மன் சொன்னான்.

“எனில் உனக்குநிகரான ஒன்றைப் படைத்து இங்கு விடுக! அது அவளை அடையட்டும். அவர்கள் முயங்கி பெருகி முடிவிலிவரை செல்லட்டும். நீ அவளை அடைய இயலாது. அது இந்நெறியின் அடிப்படைக்கு எதிரானது” என்றது வெறுமை. “அவளை இங்கே விடுக… அன்றி என்னிடம் போர் புரிக!” என்று பிரம்மன் அறைகூவினான். வெறுமை அவனை நோக்கி புன்னகைத்தது. அங்கிருந்து குரல் எழுந்தது “மைந்தா, நாங்கள் இருக்கும் முடிவிலா காலத்தின் ஒரு கணமே நீ. ஏனெனில் பொருட்கள் அமைந்திருப்பது முப்பட்டை என பிரியும் பிளவுண்ட காலத்தில் என்று அறிக! முடிவிலியோ வெறுமையிலேயே அமைய இயலும்.”

“எனில் இவையனைத்தும் வெறுமையிலிருந்து பிறந்தவையா? எனில் இவையனைத்தும் வெறுமையை சென்றடைகின்றனவா? வெறுமையிலிருந்து வெறுமைக்கு செல்லும் ஒரு பழியிலிருக்கும் இச்சிற்றலைதானா இப்படைப்புலகம்? இதன் பொருட்டுதான் நான் இங்கு நான்முகம் கொண்டெழுந்து கலையென்றும் சொல்லென்றும் திகழ்ந்துகொண்டிருக்கிறேனா?” என்று பிரம்மன் சீறினான். “ஆம், ஆனால் அதன் முழுப்பொருளென்ன என்று நீ அறியமாட்டாய். படைப்பதொன்றே உன் தொழில். படைப்பு நோக்கத்தை அறியும் உரிமை உனக்கில்லை. எப்படைப்பாளிக்கும் அந்நோக்கு இருக்கலாகாது” என்று அக்குரல் கூறியது. “நீ படைத்த ஒன்று எவ்வண்ணம் வெறுமையை அடைந்து உன்னுடன் விளையாடுகிறது என நீ உணரவில்லையா? உன்னை அது எவ்வண்ணம் வெல்லமுடியும் என நீ எண்ணியதே இல்லையா? உன்னிடமிருந்து பிறந்தவை உன்னை வெல்கின்றன. ஏனென்றால் அவை மாயை. மாயை மெய்யிருப்பை விட பெரியது” என்றது விண்முழுமை.

“என்னிலிருந்து எழுந்தவை என்னை ஆளவியலாது. நான் அவற்றை முழுமையாக வெல்வேன். அவற்றை என் மறுபகுதி என்றே கொள்வேன். இதோ நான் என் படைப்பியக்கத்தை நிறுத்துகிறேன். அதை வெல்லாமல் நான் இனி படைக்கப்போவதில்லை!” என்று கூறி தன் நான்கு விழிகளையும் மூடி ஐந்தாவது விழி திறந்து அமைந்திருந்தான் பிரம்மன். “என் முன் எழுக அவ்வெறுமை! அதன் பின்னரே இங்கு படைப்பு எழும். இது உறுதி” என்றான். படைப்பு நின்றுவிட்டமையால் புடவிநெறி பிறழ்ந்தது. ஆயிரம் பல்லாயிரம் யுகங்களுக்குப்பின் விண்ணகம் கனிவுகொண்டது.

கடுவெளி வெறுமையிலிருந்து நீலச்சுடரென திரண்டெழுந்து, வெண்பிறை சூடி, மூவிழிகொண்டு, அனலாடை அணிந்து ,உடுக்கும் மழுவும் மானும் சூலமும் ஏந்தி பேருரு ஒன்றெழுந்தது. “வணங்குக என்னை! முடிவிலியை வணங்குக!” என்று அப்பெருங்குரல் ஒலித்தது. “நான் அறைகூவுகிறேன்! என்னிடம் போர் புரிக! அன்றி என் படைப்பை என்னிடமே அளித்துவிடுக!” என்று பிரம்மன் சொன்னான். “நீ இருக்கும் காலத்திற்கு வந்து உன்னுடன் போர் புரிய என்னால் இயலாது. நான் பெருவெளி” என்றது அவ்வுரு. “எனில் என்னை பெருவெளியாக்குக! அன்றி நீ இக்காலத்திற்குள் வந்து நின்று என்னிடம் போர் புரிக!” என்று பிரம்மன் அறைகூவினான்.

அப்பெருவெளி அவன் முன் ஒரு மலைவேடன் வடிவில் தோன்றியது. நெற்றியில் எழுந்த அனல்விழி. கைகளில் முப்புரிவேல். அவன் அவ்வேடனுடன் போரிட்டான். திசைகள் இடிபட, விண்ணகம் எதிரொலிக்க அப்போர் நிகழ்ந்தது. போரின் முடிவில் தன் கையால் பிரம்மனின் ஐந்தாம் தலையை திருகிப் பறித்து எடுத்தான் வேடன். ஐந்தாம் தலை அகன்றதும் திகைத்து நான்கு தலைகளும் விழி திறந்தன. இறைவனைக் கண்டு பணிந்தன. மீண்டும் படைப்பியக்கம் தொடங்கியது.

பிரம்மசிரஸ் இப்படைப்பியக்கத்தின் மறுபக்கம் என்று உணர்க! நான்கு திசைகளும் இத்துலாவில் ஒரு தட்டில் அமையுமெனில் மறுதட்டில் அமைவது அது. நான்கிலும் கலந்திருக்கும் வெறுமை தனித்தெழுந்தது. இங்கிருக்கும் அனைத்து ஆக்கங்களுக்கும் உள்ளே அழிவென அமைந்திருப்பது. அன்று தன் தலையை இழந்த பின்னர் பிரம்மன் தன் படைப்பில் உறைந்திருக்கும் அழிவை காண முடியாதவனானான். தன் படைப்பை என்றென்றும் வாழ்வதென்று எண்ணிக்கொண்டான். அழிவின்மை நோக்கி செல்லும் முடிவின்மைகளாகவே ஒவ்வொன்றையும் தன்னுள்ளிலிருந்து எடுத்தான்.

பார்த்தா இப்புவியில் கலையென, காவியமென, உலகியல் பொருள் என ஒவ்வொன்றையும் படைப்பவர்கள் அனைவருமே அந்த மாயையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்றென்றுமாக! எக்காலத்திற்குமாக!’ என்று அவர்கள் வெறிகொள்கிறார்கள். ‘நிலைகொள்க! நிலைகொள்க! என உச்சரித்துக்கொள்கிறார்கள். அந்த மாயை இல்லையேல் இங்கு படைப்பில்லை. படைப்பில் முழுமையை வேண்டி தவம் செய்யவைப்பது அதுதான். முழுமையென ஒன்றை கற்பனை செய்துகொள்ள வைப்பது அதுவே. என்றுமிருக்கும் கலை எனும் சொல் அளிக்கும் ஊக்கமே இங்கு நீ காணும் அனைத்தையும் படைத்தது என்று உணர்க! என்றுமிருப்பது என்று ஒன்றில்லை என்ற அறிவின் துளி எழுகையில் கலைஞனின் கை தழைகிறது. பிரம்மன் இன்று வரை சலிக்கவில்லை. பிரம்மனின் ஆணவம் பிறிதொரு விசையாக எழுந்தது. அதுவே ஆண் என அமைந்து சதரூபியை வென்றது. அவள் ஆக்க அவன் அழித்தான். அவனிடமிருந்து துளி எடுத்து அவள் மீண்டும் ஆக்கினாள். முடிவிலாத அந்த ஆடல் நிகழ புடவி பெருகியது.

“அந்த ஐந்தாம் தலை கிராதனென அமர்ந்த மூவிழியனின் கையில் ஒட்டிக்கொண்டது என்பார்கள். அதை திருவோடென ஆக்கி அவன் இல்லந்தோறும் இரந்தான். ஒருபோதும் நிறையாத பிச்சைக்கலமென அவன் கையில் அமைந்திருக்கிறது அது. ஏனெனில் அது வெறுமை. இப்புவியனைத்தையும் செலுத்தினாலும் சென்றடையாத அடியிலியின் திறப்பு. இப்புடவிகள் அனைத்தும் சென்று மறையும் கரும்பெரும் சுழி” என்றார் இளைய யாதவர். “பழியும் பெருமையும், நன்மையும் தீமையும், கீழ்மையும் தவமும், இருளும் ஒளியும் அதனுள் சென்று மறைந்துகொண்டிருக்கின்றன. உலகுக்கு அளிக்க விரிந்த அருட்கை கொண்டவனின் மறுகையில் கொடு கொடு என நீண்டிருக்கிறது அந்தக் கலம்.”

அர்ஜுனன் “அந்த அம்புக்கு அப்பேரிட்டவர் எவர்?” என்றான். “அது இங்கிருக்கும் அனைத்துப் பொருளிலும் உறையும் அழிவை மட்டுமே தான் எடுத்துக்கொண்டது. எப்பொருளையும் அது உடைத்து அழிப்பதில்லை. அப்பொருளிலேயே உறையும் அழிவை தூண்டி விடுவதே அதன் வழி. ஒவ்வொரு சதுரத்தையும் அது சென்று தொட்டதுமே வடிவிழந்து வட்டமென்றாகும் என்பார்கள். வட்டம் மையம் என்றாகும். மையம் இன்மையென்றாகும். இங்குள்ள ஒவ்வொன்றுக்குள்ளும் அதன் அழிவு என்ன என்பது பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வழிவின் தாழ்விசையை ஆக்கத்தின் எழுவிசையொன்று அழுத்தி ஆள்கிறது. அந்த அம்பு அந்த அழிவின் விசையை மேலெழச்செய்கிறது. ஆகவே ஒவ்வொன்றும் அழிவை நோக்கி செல்கின்றன. கருவிலேயே மானுடரில் சாவுக்கான விழைவு உறைகிறது. அது சென்று தொட்டால் கருக்குழவி தன்னை குருதிக்குழம்பல் என தானே கலைத்துக்கொள்ளும். ஆகவேதான் அதற்கு பிரம்மசிரஸ் என்று முனிவர்கள் பெயரிட்டனர்” என்றார் இளைய யாதவர்.

நெடுங்காலம் முன்னர் பரசுராமரிடமிருந்தது அந்த அம்பு. அவர் அதை எவர் மேலும் தொடுக்கவில்லை. ஏனெனில் படைப்புக்கு எதிரானது அச்செயல். அதை தொடங்கிவிட்டவன் பிரம்மனுக்கு நிகர் நின்று உலகை அழிப்பவன். அதன்பின் முடிச்சுகள் விழும்போதே அவிழும் ஒரு வீண்செயலென்றாகும் இப்புடவி. அவ்வண்ணம் ஒன்று உண்டு என முனிவர் எவரோ சொல்லக்கேட்டு அஸ்வத்தாமன் அறிந்தான். அதை பெற்றே ஆகவேண்டும் என்று முடிவு செய்து முக்கண்ணனை இறைஞ்சி தவம் செய்தான். ஏழாண்டுகள் பாஞ்சாலத்திற்கு அப்பால் இமயமலை அடிவாரத்திலிருந்த சூரியதாபம் எனும் மலைமுடி மேல அமர்ந்து அவன் செய்த தவத்தால் கனிந்து முக்கண் இறைவன் இறங்கிவந்தான்.

அனலில் தோன்றி “நீ கோருவதென்ன, பாஞ்சாலனே?” என்றான். “உன் கையிலமைந்த அந்தத் திருவோடு எனக்கு அம்பென வரவேண்டும்” என்று அஸ்வத்தாமன் இறைஞ்சினான். “இது முற்றழிப்பது. வெறுமையின் வடிவான ஐந்தாவது முகம் இது. நாற்திசை மையம். இதை மானுடர் ஏந்தலாகாது” என்றான் மூவிழியன். “இதை ஏந்தும் பொருட்டு நான் விண்ணவனாகிறேன். எந்நிலையிலும் என் புகழுக்காகவோ வெற்றிக்காகவோ இதை எதிராக செலுத்தமாட்டேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “எனில் இது உனக்கு எதற்கு?” என்றான் சிவன். “இதை நான் பெற்றேன் எனும் தருக்குக்காக. இங்குள அனைத்தையும் என்னால் அழிக்க இயலுமென்றாலும் என் அளியால் இவற்றை அழிக்க மாட்டேன் எனும் நிறைவுக்காக.”

“வென்றவனின் இரக்கமே தேவர்களுக்குரியது என்பார்கள். அது என்னை விண்ணேற்றட்டும்” என்று அஸ்வத்தாமன் கேட்டான். புன்னகைத்து “ஆகுக!” என்றுரைத்து அந்த அம்பை அவனுக்களித்து மீண்டான் கைலாயன். தொல்சூதர் கதையில் இருந்து பராசர சம்ஹிதைக்குச் சென்றது இது. தொல்நூல்கள் எதிலிருந்தேனும் அவன் அந்த அம்பை எடுத்திருக்கக்கூடும். அல்லது அவன் தந்தை அவனுக்கு அளித்திருக்கலாம். அவர் அதை தன் தந்தையிடமிருந்து பெற்றிருக்கலாம். பரத்வாஜரின் குருநிலை தொன்மையானது. ஆக்கத்தின் வழியறிந்த அவர்கள் அழிவின் நெறியும் அறிந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

“யாதவரே, அந்த அம்பு தன் உறையிலிருந்து ஒரு போதும் எழலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான். “அந்த அம்பு எழலாம். அதற்கு நிகராக நின்றிருக்கும் அம்பொன்று உன்னிடம் உள்ளது. இந்திரனின் வஜ்ரரேதஸ் என்னும் அம்பு” என்று இளைய யாதவர் சொன்னார். “உன் தந்தையால் உனக்கு அருளப்பட்டது அது.” அர்ஜுனன் “ஆம்” என்றான். “அது பாலையில் மழைபெருகச் செய்யும். பட்டமரம் தளிர்க்கவைக்கும். மலைகளை பூக்குவைகளாக ஆக்கும். அது சென்று தொட்ட இடமெங்கும் வசந்தம் எழும்…” என்றார் இளைய யாதவர் “இங்குள அனைத்திலும் காமமென்று திகழ்வது அது. சிறு புழுவை பிறிதொரு புழு நோக்கி இழுப்பது. மதயானைகளை மத்தகம் முட்டிக்கொள்ளச் செய்வது. குன்றாப் பெருவிசை. பார்த்தா, இங்கு ஒவ்வொரு கணமும் இறப்பை வென்றுகொண்டிருப்பது காமமே. அழிவனைத்திற்கும் நிகர் அது ஒன்றே. வலிகள் அனைத்தையும் கடந்துபோகும் பேரின்பம் பிறிதொன்றல்ல. அதை முன்வைத்து நீ போரிடுக!” என்றார்.

“களத்தில் ஒருமுறைகூட அதை எடுக்கும்படி நீங்கள் சொல்லவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், அந்த அம்பை உன்னிடமிருந்து எடுத்துச் செலுத்தும் அக்கணம் நீ காமமற்றவனாவாய்.” அர்ஜுனன் உள எழுச்சியுடன் “நான் விழைவது அது ஒன்றே. இதுநாள் வரை என்னை ஆட்டிப் படைக்கும் இந்த மூலவிசையிலிருந்து வெளிவர விரும்புகிறேன். போதும். செயல்விசை என்றும் விழைவென்றும் வெற்றிவிடாய் என்றும் என்னை இது தூக்கிச் சுழற்றியது” என்றான். ‘ஒன்று உணர்க! மூலாதாரத்தில் சிறு சுருள்நாகம் என உறையும் அது எழுந்து பிற தாமரைகளுக்குச் சென்றுவிட்டாலொழிய காமத்தை துறப்பது எவராலும் இயல்வதல்ல. உன் குண்டலினி இன்னமும் முற்றெழுந்து தன்விசை அழியவில்லை. நான் உன்னிலிருந்து அதை எழுப்ப இயலும். உன் மூலக்கனல் எழுந்து நாபியில் நெஞ்சில் நாவில் விழிகளில் திகழ்கையில் முற்றிலும் காமமற்றவனாவாய்.”

“அறிக, அது மீளமுடியா பயணம்! அதன் பின்பு இப்புவியில் உனக்கு ஐமபுலன்களின் இன்பங்களும் இல்லை. காவியத்தில் இனிமையில்லை. கலைகளில் அழகில்லை. மலர்களும் மழலைகளும் பெண்டிரும்கூட உன் கண்களுக்குமுன் அழகு கொள்ளமாட்டார்கள். இங்கிருக்கும் எதனுடனும் உனக்கு தொடர்பிருக்காது. சூழ்ந்திருக்கும் அனைத்தும் விலகி மாபெரும் ஓவியத்திரைச்சீலை என்றாகும். நீ அப்பால் நின்று வெறுமனே அதை பார்த்திருக்கவே இயலும்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் அவரை நோக்கி கைகூப்பி “ஆசிரியனே, என்னை எழுப்புக! என் வில்லுடன் சென்று நான் நிற்கிறேன். அவனை எதிர்கொள்கிறேன்!” என்று சொன்னான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 2

யுயுத்ஸு துயில்கொண்டுவிட்டான். என்ன, துயில்கிறோமே, அரசர் ஆணையிட்ட பணி எஞ்சியிருக்கிறதே என அவன் அத்துயில் மயக்கத்திற்குள்ளேயே எண்ணிக்கொண்டிருந்தான். அவன் பிடியிலிருந்து சித்தம் நழுவி நழுவிச் சென்றுகொண்டிருந்தது. மெல்ல அவனை நோக்கும் விழிகள் பிறருடையவை ஆயின. அவன் உடல்மேல் அந்நோக்குகள் பதிந்திருந்தன. விழிகளே தன்னை அலைக்கழிக்கின்றன. நோக்கும் விழிகள், விலகிக்கொள்ளும் விழிகள். ஒரு விழி மின்னி மறைந்தது. அருகணைந்து அகன்ற பின்னரும் அது எவருடையதென்று அறிய முடியவில்லை. அவ்வினாவே கரைந்தழிய அவன் தான் துயில்வதை தானே உணர்ந்துகொண்டிருந்தான்.

அஸ்தினபுரியில் என்றும் அவன் ஒரு தத்தளிப்பையே பிறருக்கு அளித்தான். சூதன், ஆனால் பேரரசரின் அன்புக்குரிய மைந்தன். அரசரால் தம்பியரில் ஒருவனாகவே எண்ணப்பட்டவன். ஆகவே இளவரசன். அவனிடம் எப்படி நடந்துகொள்வது என அந்தணரும் ஷத்ரியரும் வைசியரும் குழம்பினர். அவனுக்கு அவர்கள் மதிப்பளித்துப் பணிகையில் உடனிருப்போர் உள்ளங்களை எண்ணி அடையும் தவிப்பு அவர்களின் விழிகளில் வந்து மறைந்தது. இன்னொருவர் வணங்குகையில் அவர்கள் விழிகளில் இளிவரல் துளியிலும் துளியாக மின்னியது. அந்த முதற்கணக் குழப்பத்தை இறுதிவரை அவர்கள் கடக்கவே இல்லை. விழிகளில் அதை முதற்கணமே பார்த்துவிடும் வழக்கத்திலிருந்து அவன் மீளவும் இல்லை.

அஸ்தினபுரியின் அத்தனை விழிகளிலும் அது இருந்தது, அதை பொறாமை என்றோ, ஏளனம் என்றோ, அச்சம் என்றோ சொல்லமுடியும். விழிகளினூடாக அவன் சென்றுகொண்டிருந்தான். இயல்பாக அஸ்தினபுரியின் புதிய கோட்டைக்காவல்பெண்ணின் விழிகளை நினைவுகூர்ந்தான். போருக்குப் பின் அவன் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவள் அவனை எதிர்கொண்டாள். புரவியை தொலைவிலேயே காவல்பெண்டுகள் பார்த்துவிட்டிருந்தனர். அவர்களுக்கு அவன் எவர் என முதலில் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய குதிரையிலிருந்த இலச்சினையைக் கண்டமையால் அரசகுடியினன் என எண்ணினர். ஆகவே அவளுக்கு செய்தி தெரிவித்தனர்.

அவள் குறுகிய கோட்டைப்படிகளில் சிறிய வரையாட்டுக்குட்டி என இயல்பாக நடந்து இறங்கினாள். அந்தப் படிகளில் அன்றாடம் நூறுமுறை ஏறியிறங்கினாலொழிய அந்த நிலைக்கோள் அமைவதில்லை. சிறிய உடல் மேலும் மெலிந்து சிறுமியைப் போலவே இருந்தாள். கூரிய முகம், கூரிய மூக்கு. சற்றே பொன்மின்னும் கூந்தல். “வணங்குகிறேன், இளவரசே” என்றாள். அவன் அவள் விழிகளில் இருந்த அச்சமின்மையை நோக்கியபடி “நான் யுயுத்ஸு” என்றான்.

அவள் விழிகளில் எந்த மாறுதலும் உருவாகவில்லை. “பொறுத்தருள்க இளவரசே, நான் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்” என்றாள். அவன் அவள் விழிகளையே நோக்கியபடி “நான் போருக்குப் பின் இப்போதுதான் உள்ளே நுழைகிறேன்” என்றான். “அஸ்தினபுரிக்கு இப்போது இந்திரப்பிரஸ்தத்தின் தூதனாக வந்திருக்கிறேன்.” அவள் விழிகளில் ஏதேனும் மாறுதலை அவன் எதிர்பார்த்தான். அஸ்தினபுரியின் குடிகள் ஒவ்வொருவர் விழிகளிலும் எழும் ஒன்று. அதன் முதல் தீண்டல். அவன் அந்நகரைவிட்டுச் செல்கையில் அவனுக்குப் பின் அவை நச்சுமுள்காடு என செறிந்திருந்தன. அவள் விழிகள் சிறுமியின் விழிகள்போல் மாறாத கள்ளமின்மையுடன் இருந்தன. அவன் புன்னகையுடன் “என்னை சூதர்கள் விபீஷணன் என்கிறார்கள்” என சேர்த்துக்கொண்டான்.

அவள் “ஆம்” என்றாள். அது அவனை திடுக்கிடச் செய்தது. எனில் அவளுக்கு அனைத்தும் தெரியும். அது அறியாமையின் கள்ளமின்மை அல்ல. “ஆனால் இன்று இங்கே எவரும் அதையெல்லாம் எண்ணவில்லை. போர் அனைவரையும் நெடுந்தொலைவு கொண்டுவந்துவிட்டிருக்கிறது. போருக்குப் பின் நகர்க்குடிகள் பெரும்பாலானவர்கள் விட்டுச்சென்றுவிட்டனர். இங்கிருப்போருக்கு இன்று கடந்தகாலமே இல்லை என தோன்றுகிறது.” அவன் அச்சொற்களால் ஆறுதல் அடைந்தான். அவளிடம் அவன் எதிர்பார்த்ததே அச்சொல்தான். அதை அவள் அறிந்திருக்கிறாளா? அறிந்தே அதை சொன்னாள் என்றால் அவள் பிறர் உளம்புகும் ஆற்றல்கொண்டவள். அதைவிட பிறரை ஆற்றுப்படுத்தும் அளிகொண்டவள்.

“நீ என்ன நினைக்கிறாய்?” என்று அவன் நேரடியாகவே அவளிடம் கேட்டான். அவளைப்போன்ற ஒருத்தியிடம் ஏன் அதை கேட்கிறோம், துணுக்குறப்போகிறாள் என அவன் எண்ணினான். அவளை மேலும் அணுகி நோக்க விழைந்தானா? அல்லது அனலையும் ஆழத்தையும் எல்லைவிளிம்புவரை சென்று நோக்கும் விலங்கின் ஆர்வமா அது? அவன் அவ்வினாவை மீட்டு எடுத்துவிடமுடியுமா என ஏங்கினான். ஆனால் அவள் மறுமொழியை எதிர்பார்த்தான். முந்தைய ஆறுதல்மொழி வெறும் தற்செயலாக இருக்கலாம். நஞ்சுகொண்ட கூர் இம்முறை எழலாம். ஆனால் அவள் மிக இயல்பாக “நீங்கள் உங்கள் உள்ளத்தில் எழுந்த அறத்தின்பொருட்டு எடுத்த முடிவு அது. அதுவே உங்களுக்கு உகந்தது” என்றாள்.

அவன் அகத்தில் முடிச்சுகள் அவிழலாயின. அஸ்தினபுரிக்குக் கிளம்பிய கணம் முதல் அவனுள் பெருகி இறுகிக்கொண்டிருந்தவை அவை. மெய்யாகவே இவள் என்னை ஆற்றுகிறாள். இவள் அதை எண்ணாமலிருக்கலாம். இயல்பிலேயே பிறரை ஆற்றுபவளாக இவள் இருக்கலாம். அவ்வண்ணமும் பெண்கள் உண்டு. அரசி பானுமதியைப் போன்றவர்கள். “நான் எடுத்த முடிவில் ஐயமில்லாதவன் எனில் ஏன் இதை உன்னிடம் கேட்கிறேன்?” என்று அவன் கேட்டான். மீண்டும் ஓர் அடிவைத்து அணுகுகிறேன். எனக்கு உறுதிப்பாடு தேவையாக இருக்கிறது. இவளை உறுதிசெய்துகொண்டு எதை அடையவிருக்கிறேன்?

அவள் புன்னகைத்து “உங்கள் முடிவில் உங்களுக்கு ஐயமில்லை. அது உங்கள் விழிகளில் தயக்கமேதும் இல்லை என்பதனால் தெரிகிறது. நீங்கள் உள்ளூர வேறேதோ ஒன்றை எண்ணி குழம்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவேதான் என்னிடம் கேட்கிறீர்கள்” என்றாள். அப்போதுதான் அதை அவனே உணர்ந்து திடுக்கிட்டான். அஸ்தினபுரிக்கு வருவதற்காகக் கிளம்பிய பின் ஒரு கணம்கூட அவன் அன்னையைப்பற்றி எண்ணியிருக்கவில்லை. அஸ்தினபுரியை உதறிவிட்டு யுதிஷ்டிரனிடம் செல்லும் முடிவை அவன் அன்னையிடம் தெரிவித்தபோது அவள் சொல்லளிக்கவில்லை. அன்னை அவனிடமிருந்து அனைத்து வகையிலும் விலகி நெடுநாட்களாகிவிட்டிருந்தது. பின்னர் அதை எடுத்து நேராகச் சென்று துரியோதனனிடம் சொன்னான். அரண்மனையிலிருந்தே நகர்நீங்கினான்.

“நான் பேரரசி காந்தாரியை சந்திக்கவேண்டும்” என்று அவன் சொன்னான். “உங்கள் பணி சிறக்கட்டும்…” என அவள் தலைவணங்கினாள். “நீங்கள் அரண்மனைக்குச் செல்வதற்குள் உரியவற்றை நான் ஆணையிட்டிருப்பேன். நீங்கள் நீராடி ஆடைமாற்றிக்கொண்டு பேரரசியை சந்திக்கலாம். நீங்கள் இங்கே விட்டுச்சென்ற அறை அவ்வண்ணமே நீடிக்கிறது.” அவன் அவளை மீண்டும் உள அதிர்வுடன் நோக்கினான். “நீங்கள் விட்டுச்சென்ற எதுவும் அங்கே மாறியிருக்காது” என அவள் புன்னகையுடன் சொன்னாள். அவன் “ஆம், அது நன்று” என்றான். அவள் “இங்கே பெரும்பாலும் ஏவற்பெண்டுகள்தான். அவர்களில் பலருக்கு முறைமை அறியாத சிக்கல் உள்ளது” என்றாள்.

அவன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். அவளைப்பற்றி ஒற்றர்கள் சொல்லி அவன் அறிந்திருந்தான். அவளை நேரில் பார்ப்பதற்கு ஒரு கணத்திற்கு முன்னர்கூட அவள் பெயர் நினைவிலிருந்தது. அவளைக் கண்டபின் அவளைப்பற்றிய எண்ணங்களில் அப்பெயர் மறைந்தது. அவன் அகத்தின் ஒரு பகுதி அவள் பெயரை எண்ணி துழாவிக்கொண்டே இருந்தது. “உன் பெயர் என்ன?” என்றான். “சம்வகை” என்று அவள் சொன்னாள். “ஆம், சம்வகை. காற்றின் பெயர். நன்று” என்றபின் “நீ மச்சர்குலத்தவள் என்றார்கள்?” என்றான். “ஆம், அன்னைவழியில்” என்றாள். மேலும் என்ன பேசுவதெனத் தெரியாமல் குழம்பி “நன்று…” என அவன் திரும்பினான். மீண்டும் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி “நான் குழம்பியிருப்பதற்கு விடை கிடைத்தது” என்றான். அவள் புன்னகைக்க அவன் புரவியைச் செலுத்தினான்.

ஆழ்ந்த துயிலில் அவன் படுத்திருக்க அறைக்கதவைத் திறந்து திரௌபதி உள்ளே வந்ததை உணர்ந்தான். அவன் எழமுயன்றாலும் உடல் எடைகொண்டு படுக்கையோடு அழுந்தியிருந்தது. திரௌபதி அறைநடுவே ஓங்கி நின்று அவனை குனிந்து நோக்கினாள். விழிகள் நீர்மைகொண்டு சிவந்திருந்தன. சீற்றத்துடன் ஏதோ சொல்வதுபோன்ற முகம். அச்சத்தில் அவன் நடுங்கினான். உடலை அசைக்க முயன்றபோது அது கல்லென்று ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தான். அவள் திரும்பி நோக்கினாள். அறைவாயிலில் வேறொரு அசைவு. அவள் பின்வாங்கி பிறிதொரு வாயிலினூடாக மறைந்தாள். அங்கே ஒரு வாயில் இருக்கிறதா என்ன? இது அஸ்தினபுரியின் அரண்மனையில் அவன் அறை. பிறர் நுழையமுடியாத அறை. இத்தனிமையில் பிறர் கனவுகளாகவே நுழைய முடியும். அவ்வாயிலில் நிற்பவர் எவர்?

அவள் அவனருகே வந்தாள். அது சம்வகை என அவன் அடையாளம் கண்டான். அவள் எப்படி உள்ளே வந்தாள்? அவன் பேரரசி காந்தாரியை சந்திக்கச் செல்லவேண்டும். நீராடி ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். பேரரசி எவ்வண்ணம் இருக்கிறார் என எவரிடமேனும் கேட்க விழைந்தான். ஆனால் அரண்மனையில் அனைத்து ஏவல்முகங்களும் அவனறியாதவையாக இருந்தன. அவனையே பெரும்பாலும் எவருக்கும் தெரியவில்லை. பேரரசியை சந்திப்பதற்கு முன் அரசி பானுமதியை சந்திக்கலாம். ஆனால் அவள் விழிகளை நினைவுகூர்ந்ததுமே அவன் உள்ளம் பின்னடைந்தது. ஆனால் வேறுவழியில்லை, அவரை சந்தித்தேயாகவேண்டும். ஒன்றும் நிகழாது, நகுலன் அவரை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் அவர்களின் குருதி. களம்நின்று எதிர்த்த ஷத்ரியன். அவன் வேறு.

அவள் அவனருகே குனிந்து “செல்க!” என்றாள். அவன் “நீ எப்படி இங்கே வந்தாய்?” என்றான். “செல்க!” என்று அவள் சொன்னாள். “நான் அஞ்சுகிறேன்” என்று அவன் அவள் விழிகளை நோக்கியபடி சொன்னான். அவள் விழிகள் அளிநிறைந்திருந்தன. முலையூட்டும் அன்னையின் விழிகள் என. “நாம் கருவிகள்” என்று அவள் சொன்னாள். “நீங்கள் ஏந்தியிருப்பது ஒரு கொடியை.” அவன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “நாம் என்னவென்று அறியாதவற்றை செய்கிறோம். ஆகவே எதையும் அஞ்சவேண்டியதில்லை.” அவன் “ஆம்” என்றான். புன்னகைத்து “நான் நன்கறிந்தவையே. ஆனால் நீ சொல்லவேண்டியிருக்கிறது” என்றான்.

 

விழித்துக்கொண்டபோது அவன் உள்ளம் எளிதாகிவிட்டிருந்தது. நீண்ட இரவில் மெய்மறந்து துயின்று இளங்குளிர் நிறைந்த புலரியில் எழுந்துகொண்டதைப்போல. அவன் முகம் புன்னகை கொண்டிருந்தது. குடிலை விட்டு வெளிவந்து ஒரு கணம் நின்றான். உள்ளத்தால் பயணம் செய்து அர்ஜுனனின் குடிலை அடைந்து அங்கிருந்த ஏவலனிடம் அவர் இருக்கிறாரா என்று வினவினான். இல்லை என்று அறிந்து திரும்பி வந்தான். மீண்டும் ஒரு உளப்பயணம் வழியாக இளைய யாதவரின் குடிலை அடைந்து அங்கு அவர்கள் இருக்கிறார்களா என்று உசாவினான். அவர்கள் அங்கில்லை என்பதை அறிந்தபின் திரும்பி வந்தான்.

மீண்டுமொரு உளப்பயணம் தொடங்குவதற்குள்ளாகவே அவன் கிளம்பிச்சென்று தன் புரவியில் ஏறிக்கொண்டான். புரவியைச் செலுத்தி குடில்களைக் கடந்து குறுங்காட்டுக்குள் நுழைந்து ஊடே ஓடிய காலடிவழியில் குறும்புதர்களை ஊடுருவிச் சென்றான். கங்கை நோக்கி இறங்கும் சிற்றோடைகள் பரவியிருந்த அக்காட்டுக்குள் முயல்களும் கீரிகளும் நிரம்பியிருந்தன. குதிரைகளின் குளம்படியோசை கேட்டு அவை புதர்களை ஊடுருவிக் கலைந்தோடின. தலைக்கு மேல் பறவைகள் எழுந்தெழுந்து அமர்ந்தன. காட்டிற்குள் மாலை ஏற்கெனவே வந்துவிட்டிருந்தது. இலைத்தழைப்புகளுக்குள் இருந்து வந்த ஒளிக்குழாய்கள் சரிந்து நிலம் தொட்டிருந்தன. நீராவி நிறைந்திருந்த நிழலிருளுக்குள் அவ்வப்போது ஒளி பட்டு சுடர்ந்தும் அணைந்தும் அவன் சென்று கொண்டிருந்தான்.

பின்னர் காட்டிற்குள் சிற்றோடையொன்று சுழித்து சுனையாகப் பொங்கி எழுந்து விழுந்த சிறிய சரிவில் இளைய யாதவரும் அர்ஜுனனும் அமர்ந்திருப்பதை அவன் பார்த்தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல், ஒருவர் இருப்பதை பிறர் அறியாதவர்போல் இருந்தனர். இளைய யாதவர் கண்களை மூடி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். அர்ஜுனனின் கண்கள் விழித்திருந்தன. ஆனால் அவன் எதையும் பார்ப்பதுபோல் தெரியவில்லை. அவர்களைச் சூழ்ந்து நீரின் ஒலி நிறைந்திருந்தது. நீரின் ஒலி கொந்தளிப்பும் கொப்பளிப்பும் என கணந்தோறும் மாறுவது. ஆனால் கேட்டுக்கொண்டே இருக்கையில் மாறாச் சுதி கொண்ட ஒழுக்கு என எண்ணச்செய்வது.

மேலும் அணுகியபோது அவர்கள் இருவரின் உடல்களையும் அவன் கூர்ந்து பார்த்தான். அர்ஜுனனின் கையில் விரல்கள் அசைந்துகொண்டிருந்தன. காற்றில் எதையோ எடுப்பதுபோல. அறியாத எதையோ துழாவுவதுபோல. ஒன்றையொன்று தொட்டறிந்து கசந்து மீண்டும் தொடுவதுபோல. இளைய யாதவர் உடலில் விரல்கள் தளர்ந்து ஒன்றையொன்று தழுவிக்கோத்து மடியில் அமைந்திருந்தன. அவர் நெற்றியிலணிந்திருந்த பீலிவிழி மட்டும் காற்றில் நலுங்கிக்கொண்டிருந்தது. காற்றில் வரைந்துவைக்கப்பட்ட அழகிய ஓவியம்போல் தெரிந்தது அவருடைய தோற்றம்.

அவன் அந்த முகத்திலிருந்த அழகிய புன்னகையை பார்த்தான். விழி மூடி இருக்கையில் புன்னகைக்கும் முகங்கள் மிக அரிது. முற்றிலும் தன்னுள் ஆழ்ந்து இருக்கையிலும் புன்னகைப்பவர்கள் தங்களை வென்றவர்கள், துயரற்றவர்கள். மிக அரிதாக முனிவர்களிடம் மட்டுமே அப்புன்னகையை அவன் கண்டிருக்கிறான். இவ்வுலகனைத்தையும் கடந்தவர்கள், ஊழ்கத்தால் அறிவை அறிந்து அறிவைக் கடந்து அமைந்தவர்கள் அடைந்து முகம்சூடும் அந்தப் புன்னகையை இங்குள்ள அனைத்திலும் படர்ந்து அனைத்தையும் உணர்ந்து அனைத்தையும் கையாள்பவன் அணிந்திருக்கிறான். அறியாது ஒரு மெய்ப்பு வந்து அவன் உடலைக் கடந்து சென்றது, குளிர்ந்த நீர்த்துளி ஒன்று உடலில் விழுந்ததுபோல.

அவன் அணுக புரவியின் குளம்படிகளை அர்ஜுனன் கேட்டுவிட்டிருந்தான். ஆயினும் அவன் பார்வை வெறுமனே அவன் மேல் நிலைத்திருந்தது. புரவியை நிறுத்திவிட்டு இறங்கி அணுகிச் சென்று அவன் தலைவணங்கினான். அப்போதும்கூட அர்ஜுனன் அவனைப் பார்த்ததுபோல் தெரியவில்லை. மாறாக இளைய யாதவர் விழி திறந்து அவனைப் பார்த்து புன்னகைத்து “கூறுக இளவரசே, அஸ்தினபுரியில் அனைத்தும் சீராக அமைந்துள்ளன அல்லவா?” என்றார். அவனுக்கு அந்தத் தொடக்கம் உவப்பாக இருந்தது. “ஆம், சுரேசர் அனைத்துச் சரடுகளையும் ஒன்றோடொன்று பின்னி மீண்டும் அந்த அமைப்பை உருவாக்கிவிட்டார். அது தன் விசையால் தான் இயங்கத்தொடங்கிவிட்டது. இனி அதை மெல்ல விரிவுபடுத்தி தொலைநாடுகளுக்கும் அவர் கொண்டு செல்வார்” என்று யுயுத்ஸு சொன்னான்.

இளைய யாதவர் “ஷத்ரியர் அடங்காது குலைக்க அந்தணர் சலிக்காது கட்ட இது இவ்வண்ணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று புன்னகைத்தார். யுயுத்ஸுவும் புன்னகைத்து அர்ஜுனனை நோக்கினான். அவர் தன் சொற்களை கேட்கிறாரா? “நான் இன்று காலைதான் அஸ்தினபுரியிலிருந்து வந்தேன். அருகிலிருக்கும் கோட்டைகளுக்குச் சென்றுவிட்டு அஸ்தினாபுரிக்கு சென்றேன்” என்றான். “பேரரசியும் பேரரசரும் இங்கே வந்துவிட்டிருக்கிறார்கள். அங்கே அவர்களின் இன்மை எவ்வகையிலும் உணரப்படவில்லை. ஏனென்றால் நாள்தோறும் மக்கள் விலகிச்செல்ல அஸ்தினபுரி வற்றிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்தினர் அகல்கையிலும் மொத்த நகருமே நுட்பமாக உருமாறிக்கொண்டிருக்கிறது.”

“ஆம், அதன் அமைப்பும் உடனே உருமாறும்… சுரேசர் தொடர்ந்து அதை சீரமைத்தபடியே இருக்கவேண்டும்” என்ற இளைய யாதவர் இயல்பாக “பேரரசியை பார்த்தாயா?” என்றார். “இல்லை, இனிமேல்தான் பார்க்கவேண்டும்” என்றான் யுயுத்ஸு. “வந்ததுமே அரசரை பார்த்தேன். அவருடன் சென்று பாஞ்சாலத்து அரசியையும் பார்த்தேன்.” இளைய யாதவர் “அரசியிடமிருந்து செய்தியுடன் வந்திருக்கிறாயா?” என்று இயல்பாக கேட்டார். “ஆம், அரசி அரசருக்கு ஆணையிட்டார். அரசரின் ஆணையுடன் நான் இளையவரை பார்க்க வந்தேன்” என்றான். அர்ஜுனன் “கூறுக!” என்றான். அவன் கேட்டுக்கொண்டிருப்பதை அப்போதுதான் யுயுத்ஸு உணர்ந்தான். அவன் தயங்க இளைய யாதவர் “சொல்க!” என்றார்.

“அரசி போர் இன்னும் முடியவில்லை என்கிறார். வஞ்சம் ஒழியாமல் நீர்க்கடன் முடிக்க அவர் ஒப்பப்போவதில்லை என அறிவித்தார்.” அர்ஜுனன் முனகினான். “அஸ்வத்தாமனின் நெற்றிமணியுடன் வரவேண்டும் என்று அரசி ஆணையிட்டார். அதை இளையவருக்கு அரசர் ஆணையிடுகிறார்.” அர்ஜுனன் பெருமூச்சுடன் “இவர்களுக்கு விழைவும் வஞ்சமும் ஒருபோதும் ஓயப்போவதில்லை” என்றான். “விழைவு செல்லாத இடத்தில் வஞ்சத்தை ஊர்தியாக்கிக் கொள்கிறார்கள்.” இளைய யாதவர் சிரித்து “மானுடர் இரு வகை. குவிபவர்களுக்கு தாங்களே போதும். விரிபவர்களுக்கு உலகே வேண்டும்” என்றார். “இல்லை, அரசரிடம் சொல்க! நான் போருக்கு எழும்நிலையில் இல்லை. இனி எப்போதும் காண்டீபத்தை கையில் எடுக்கப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.

“அது மூத்தவரின் ஆணை” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், அதை அறிந்தே இதை சொல்கிறேன். இனி எவருடைய ஆணையையும் நான் தலைக்கொள்ளப் போவதில்லை” என்றான் அர்ஜுனன். “அரசி சொல் அளிக்கவில்லை என்றால் மைந்தருக்கு தந்தையர் என நீங்கள் ஐவரும் நீரளிக்க முடியாது” என்றான் யுயுத்ஸு. “எனில் அவர்கள் விண்ணுலகு அடையவேண்டியதில்லை. அவர்கள் இங்கேயே அலையட்டும். அது அவர்களின் அன்னையின் ஆணை என்றால் அவ்வண்னமே ஆகுக!” என்றான் அர்ஜுனன். கசப்புடன் “தன் வஞ்சத்தின்பொருட்டு உயிர்நீத்தவர்களையும் அவள் கருவியாக்குவாள் என்றால் அதை தெய்வங்களே கையாளட்டும். அவளை இனி மானுடர் நடத்த இயலாது” என்றான்.

யுயுத்ஸு “இது அரசியின்…” என சொல்லத் தொடங்க அர்ஜுனன் “அவளுடைய வஞ்சத்தால் அழிந்தது குருகுலம். பாரதவர்ஷமே குருதியால் மூடியது. இன்னும் வஞ்சம் கொண்டிருக்கிறாளா? இனி விண்ணுலகை அழிக்கவேண்டுமா அவளுக்கு? மூன்று தேவர்களும் போரிட்டு மறையவேண்டுமா?” என்று கூவினான். கசப்பும் துயரும் கலந்த உரத்த குரலில் “பெண்சொல் கேட்ட குலம் வாழ்ந்ததில்லை என்பது மெய்யே. ஏனென்றால் ஒன்றில் அமைந்தபின் அதிலிருந்து விலகாமலிருப்பது பெண்களின் இயல்பு. தங்கள் அடையாளங்களையும் முழுமையையும் வெளியே தேடுபவர்கள் அவர்கள். போதும், இனி என்னால் இயலாது. வீழ்த்திய குருதியைக் கழுவவே நான் இன்னும் செய்யவேண்டிய தவங்கள் பெரிது” என்றான்.

“நான் செல்கிறேன், இளையோனே” என்று பீமனின் குரல் கேட்ட பின்னரே யுயுத்ஸு அவனை கண்டான். மரத்திற்கு சற்று பின்னால் கையில் ஒரு மானுடன் பீமன் நின்றிருந்தான். “நான் பெண்சொல் கேட்டவன், அதன்பொருட்டு எவ்வகையிலும் துயரோ வருத்தமோ கொள்ளவில்லை. இது அன்னையர் நிலம். இங்கே பெண்சொல்லே என்றும் திகழ்க!” மானை கீழே விட்டபடி “நன்று, நான் இப்போதே இங்கிருந்தே கிளம்புகிறேன்” என்றான். “மூத்தவரே, என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் செல்வது அஸ்வத்தாமனை எதிர்த்து… அவனை வெல்ல இன்று மூவிழி அண்ணலால் மட்டுமே இயலும்” என்றான் அர்ஜுனன். “நீ அஞ்சுகிறாயா என்ன? நான் அஞ்சவில்லை. இனி எனக்கு அஞ்சுவதற்கென ஏதுமில்லை” என்றான் பீமன்.

“ஆம், நான் அஞ்சுகிறேன், எனக்காக அல்ல. உங்களுக்காக. வேண்டாம்… சொல்வதை கேளுங்கள்” என்று அர்ஜுனன் கூவியபடி எழுந்தான். “அது அவள் எனக்கிட்ட ஆணை” என்றபின் பீமன் திரும்பி காட்டுக்குள் சென்றான். “யாதவரே, அவரை தடுத்து நிறுத்துக!” என்று அர்ஜுனன் கூவினான். இளைய யாதவர் “அவர் எப்போதுமே அவ்வாறுதான்” என்று புன்னகைத்து “கல்யாண சௌகந்திகத்தின் நறுமணம்… அது எளிதில் மறைவதில்லை” என்றார். “அவரை செல்லவிடக்கூடாது. அவர் அஸ்வத்தாமனை எதிர்கொள்ளலாகாது” என அர்ஜுனன் பதறினான். “அதற்கு ஒரே வழி, நீ செல்வதுதான்… இது உன் போர்” என்று இளைய யாதவர் சொன்னார். “யாதவரே, என்னால் போரிட முடியாது. என் தோள் தளர்ந்திருக்கிறது. காண்டீபத்தை கைகள் மறந்தேவிட்டன!” என்றான் அர்ஜுனன். “எனில் அவரே அஸ்வத்தாமனை எதிர்கொள்ளட்டும்” என்றான் யுயுத்ஸு.

ஒரு கணம் தவித்தபின் “நான் கிளம்புகிறேன்… அஸ்வத்தாமனை நான் எதிர்கொள்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “மூத்தவரை தடுத்தாகவேண்டும்… அவரை முந்தவேண்டும்.” பீமன் தன் புரவியில் ஏறிக்கொண்டு காட்டுப்புதர்களை ஊடுருவிச்செல்லும் ஓசை கேட்டது. “என் தேர் ஒருங்குக… உடனே” என்றான் அர்ஜுனன். “இங்கிருந்தா?” என்று யுயுத்ஸு கேட்டான். அவன் உள்ளத்தில் எழுந்ததை உணர்ந்து “இக்காட்டுக்குள்தான் காண்டீபம் உள்ளது. இங்கிருந்து எடுத்துக்கொண்டு செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். யுயுத்ஸு தேர் நின்றிருக்கும் இடைவழி நோக்கி ஓடினான். இளைய யாதவரும் அர்ஜுனனும் அவனுக்குப் பின்னால் வந்தனர். “நீயே தேரை ஓட்டுக, இளவரசே” என்றார் இளைய யாதவர். “ஆணை” என்றான் யுயுத்ஸு.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 1

யுயுத்ஸு யுதிஷ்டிரனின் குடிலில் இருந்து வெளிவந்தபோது அதை உணரவில்லை. ஆனால் சில அடிகள் முன்னெடுத்து வைத்த பின்னரே பெருங்களைப்பை உணர்ந்தான். உடலில் பெரிய எடை ஏறி அமர்ந்திருப்பதுபோல. கால்களை முன்னெடுத்துவைக்க இயலவில்லை. கண்களை மூடியபடி முற்றத்திலேயே சில கணங்கள் நின்றான். நோக்குணர்வு ஒன்று வந்து தொட திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். அருகே எவருமில்லை என்று கண்டான். உடனடியாகச் சென்று அர்ஜுனனை பார்க்கவேண்டும் என்று யுதிஷ்டிரனால் பணிக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் உள்ளம் அதை மறுத்தது. சுவரில் முட்டிக்கொண்டதுபோல முழுமையாக திசைகள் மூடியிருந்தன.

தன் குடிலுக்குச் சென்று மீண்டுமொருமுறை ஆடைமாற்றிக்கொண்டு கிளம்பலாம் என்னும் எண்ணம் வந்தது. அது அவன் வழக்கம். ஒருநாளில் நாலைந்துமுறை அவன் ஆடையையும் தலைப்பாகையையும் மாற்றிக்கொள்வதுண்டு. அஸ்தினபுரியில் அவனுக்கு எப்போதுமே பணிச்சுமை மிகுதி. அரசமகன் என்றும் சூதனென்றும் ஒரே தருணத்தில் இருக்கையில் அனைவருக்குமே எதிர்பார்ப்பளிப்பவனாக ஆகிவிட்டிருந்தான். இடைசென்றால் பொழுதே நசுங்கிவிடும் என்பதுபோன்ற நாள்விரைவு என அவனே ஒருமுறை சொன்னான். பணிச்சுமை மிகும்போதோ ஒவ்வாப் பணி எதிர்நிற்கும்போதோ கால்நாழிகை ஓய்வெடுத்து நீராடி அல்லது முகம் கழுவி மற்றொரு ஆடை அணிந்து புதியவனாக எழுந்து வருவது அவன் வழக்கம். அதுவரை அவன் செய்துகொண்டிருந்த செயல்களிலிருந்து அவ்வாறு தன்னை முற்றாக துண்டித்துக்கொள்வான். அவை அளித்த களைப்பு அனைத்தையும் உதிர்த்துக்கொள்ளவும் முடியும்.

அவன் தன் குடிலை அடைந்து உள்ளே சென்று கதவுப்படலை மூடிக்கொண்டதும் தனியறைகளில் மட்டுமே அவன் அடையும் தற்தொகுப்புணர்வை அடைந்தான். அங்கே அவனை அவனே வெவ்வேறு கோணங்களில் கண்கள் எழுந்து நோக்கிக்கொண்டிருந்தான். அந்நோக்குகளுக்கு முன் தன்னை அமைத்துக்கொண்டான். அவன் அந்தக் குடிலில் ஓரிரு நாட்கள்தான் அந்தியுறங்கியிருந்தான். அதற்குள்ளேயே அதை அவனுடையதாக எண்ணத் தலைப்பட்டான். அதற்குள் வந்ததுமே அதை இன்னொருவர் பயன்படுத்தியிருப்பதாகத் தோன்ற அறையை கூர்ந்து நோக்கினான். எந்த அடையாளமும் தென்படவில்லை. ஆனாலும் அந்த உணர்வு இருந்தது. அவன் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

அவன் தன் அறைக்குள் பிறர் நுழைய விடுவதில்லை. அவனுடைய துணைவியர் சாந்தையும் சுகிர்தையும் அஸ்தினபுரியில் அவனுடைய தனியறைக்குள் நுழைவதில்லை. அவர்களை அவன் மணமுடித்த நாளில் அதை தெளிவுறச் சொல்லிவிட்டிருந்தான். அவர்கள் அவனை அஞ்சினர். அவன் அவர்கள் இருவரையும் நினைவுகூர்ந்தான். அன்னையை உடனே நினைவிலிருந்து எடுத்தான். அன்னையை எண்ணாமல் அவர்களைப்பற்றி எண்ணமுடிவதில்லை. அன்னையுடன் இணைந்தே அவர்களை அவன் பெரும்பாலும் பார்த்திருக்கிறான். அவர்களை தனியறைகளில் சந்திக்கும்போதுகூட மிக அருகிலெங்கோ அன்னை இருப்பதாகவே உணர்ந்திருக்கிறான்.

அவர்கள் அஸ்தினபுரியிலிருந்து அகன்று அப்பாலுள்ள சித்ரபீடம் என்னும் சிற்றூருக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். அவன் அஸ்தினபுரியிலிருந்து அகன்றபின் அவர்கள் அங்கே தங்க முடியவில்லை. அஸ்தினபுரியில் அவர்கள்மேல் கடும் சினம் எழுந்துவிட்டிருந்தது. அவர்களை மூடுதேரில் காவலுடன் வெளியே அனுப்பவேண்டியிருந்தது. அன்னை செல்வதில் பேரரசருக்கு விருப்பமில்லை. ஆனால் அன்னை அவர்களுடன் செல்லவே விரும்பினாள். அவர்கள் அங்கே சென்றுவிட்டதை அவன் அறிந்தான். அவர்களைச் சென்றுபார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. அவ்வப்போது அவர்களின் நினைவெழுந்தாலும் உடனே மறைந்தது. அன்று யுதிஷ்டிரன் அன்னையைப்பற்றி கேட்டமையால் இந்நினைவுகள் எழுந்து நின்றுள்ளன போலும்.

சாந்தை எளிய சூதர்குலத்துப் பெண். அஸ்தினபுரியின் தொல்சூதர் குடியில் பிறந்தவள். அவள் தந்தை புஷ்பகோஷ்டத்தில் அடுமனையாளராக இருந்தார். அவள் அன்னை காந்தாரியின் ஏவல்பெண்டு. சாந்தை அரண்மனைக்கு ஒரு நோன்புநிகழ்வுக்காகச் சென்றபோது சத்யசேனை அவளைக் கண்டு “அழகிய பெண்” என வியந்தாள். சாந்தை வெண்ணிறமான பருத்த உடலும் சிவந்த பருக்கள் கொண்ட வட்ட முகமும் கொண்டவள். நீல விழிகள் அவளை காந்தாரத்தின் குருதி கொண்டவள் என்று காட்டின. காந்தாரி அவளை அருகணையச்செய்து கைகளால் வருடிநோக்கினாள். “இவள் என் மைந்தனுக்கு மணமகள் ஆகுக!” என்று உரைத்தாள்.

அது ஆணை என்றே கொள்ளப்பட்டது. சத்யசேனை அவனை அரண்மனைக்கு அழைத்து பேரரசியின் ஆணையை சொன்னாள். அவனுக்கு மாற்றுச்சொல் இருக்கவில்லை. சாந்தையின் தந்தை அஞ்சினார். அவன் எளிய சூதன் அல்ல என்று அவர் அறிந்திருந்தார். “நமக்குரிய இடமல்ல. சுட்டுப்பழுத்த அடுமனைக்கலம் அது. நாம் அறிந்தது எனத் தோன்றும், தொட இயலாது” என்றார். ஆனால் அவள் அன்னைக்கு அந்த உறவு பேருவகையை அளித்தது. ஒரே நாளில் அவள் அரண்மனையில் தனித்தன்மை கொண்டவளாக ஆனாள். பிற சேடியர் அவளை அஞ்சவும் பணியவும் முற்பட்டனர். “செல்லுமிடத்திற்கு உரியவள் ஆவது பெண்ணின் இயல்பு. அடுமனைக்கலத்தை கையாளத் தெரியாதவள் பெண்ணே அல்ல” என்றாள்.

அச்செய்தியை அவன் அன்னை அறிந்தபோது அவள் முகம் சுருங்கியது. நெடுநேரம் அவள் ஒன்றும் சொல்லவில்லை. “அப்பெண்ணில் உங்களுக்கு நிறைவில்லையா, அன்னையே?” என்று யுயுத்ஸு கேட்டான். “என் கருத்திற்கு இங்கே என்ன இடம் உள்ளது?” என்று அன்னை சொன்னாள். “உங்கள் கருத்தை கேட்க விழைகிறேன்” என்றான் யுயுத்ஸு. “சரி, நான் வேண்டாம் என்கிறேன். பேரரசியின் ஆணையை மீறுவாயா நீ?” என்று அன்னை கேட்டாள். யுயுத்ஸு “மீற இயலாது, அது நன்றும் அல்ல” என்றான். “பிறகென்ன?” என்றாள் அன்னை. அவன் மேலும் ஏதும் கேட்கவில்லை. அவள் மேலும் சொல்ல விழைந்தாள், அவன் கடந்துசென்றான்.

அரண்மனையிலேயே அவனுடைய மணவிழவு நிகழ்ந்தது. பேரரசரும் விதுரரும் விழவுக்கு வந்திருந்தார்கள். அரசரும் உடன்பிறந்தார் அனைவரும் தங்கள் துணைவியருடன் பங்குகொண்டனர். அவன் அன்னைக்கு முறைமையும் வரிசையும் செய்து அரண்மனைக்கு அழைத்துச்சென்றார்கள். ஆனால் அவன் சாந்தையை மணந்தபோது அன்னையின் இடத்தில் அமைந்து சாந்தையின் கைபற்றி முறைச்சடங்குகளைச் செய்தவள் காந்தாரிதான். அவன் பேரரசியின் காலிலும் பின்னர் பேரரசரின் காலிலும் விழுந்து வாழ்த்துபெற்ற பின்னரே அன்னையின் அடிபணிந்தான். அந்த விழவு நகரெங்கும் நிகழ்ந்தது. ஏழு ஊட்டுபுரைகளில் விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் பொறாமையும் கூடவே மெல்லிய கசப்பும் அதன் விளைவான இளிவரலும் இருந்தன. சூதர்களில் மிகச் சிலர் பெருமைகொள்ள பெரும்பான்மையினர் உளம்சுருங்கினர்.

அன்னை அரண்மனையில் எந்த முகமாறுதலையும் காட்டவில்லை. ஆனால் அவள் தன் மாளிகைக்கு மீண்டதும் “நான் உனக்காக ஒரு பெண்ணை பார்த்துள்ளேன். நீ அவளையும் மணந்தாகவேண்டும். அவள் அன்னையையும் தந்தையையும் இங்கே வரச்சொல்லியிருக்கிறேன். நாளை வருவார்கள்” என்றாள். “எப்போது அவளைப் பார்த்து முடிவெடுத்தீர்கள்?” என்று யுயுத்ஸு கேட்டான். அவள் மறுமொழி சொல்லவில்லை. “சொல்க அன்னையே, எப்போது?” என்றான். அன்னை “எப்போதாக இருந்தாலென்ன?” என்று சீற்றம்கொண்டாள். “சொல்க, அவள் பெயர் என்ன?” என்றான். “அவள் பெயர் சுகிர்தை. இசைச்சூதர் குடியை சேர்ந்தவள்” என்றாள். “இசைச்சூதர் என்றால்?” என்றான். “அவள் அன்னை விறலி. அவள் தன் அன்னையுடன் இங்கே வந்தாள். அவள் அன்னையின் துணைவர் வேறு” என்றாள்.

அவன் வெறுமனே அவளை நோக்கிக்கொண்டிருந்தான். “அதனாலென்ன? நீ சூதகுடியினன் அல்லவா?” என்றாள். “ஆம்” என்று யுயுத்ஸு சொன்னான். “நான் அவளை மணக்க அவள் அன்னை ஒப்புக்கொண்டாளா?” அன்னை அவனை நோக்கி “ஆம், ஒப்புக்கொண்டாள். இன்று அவளிடம் பேசினேன்” என்றாள். “இன்றா?” என்றான் யுயுத்ஸு. “ஆம், இன்று அரண்மனையில் அவள் ஆடினாள், அவள் அன்னை பாடினாள்.” அவளை உடனே யுயுத்ஸு நினைவுகூர்ந்தான். மெலிந்த கரிய இளம்பெண். பெரிய விழிகள் கொண்டவள். வெண்கற்களாலான மாலை அணிந்திருந்தாள். ஆடும்போது அவள் பற்களின் ஒளியுடன் அவை இணைந்துகொண்டன.

அவன் உள்ளம் மெல்லிய கிளர்ச்சியை அடைந்தது. ஆனால் அவன் அதை கடந்தான். “அவளை அவள் அன்னை எளிதில் கைவிடமாட்டாள்” என்றான். “நான் அவளுக்குரியதை அளித்தேன்” என்றாள் அன்னை. “அன்னையே, இதன் வழியாக நீங்கள் அடைவதென்ன?” என்றான். அவள் “நான் அடைவதென்ன? என் மைந்தனுக்குரிய பெண்ணை தேடினேன்” என்றாள். “எனக்குரிய பெண்ணா?” என்றான் யுயுத்ஸு. “அறிவிலி, அந்தப் பெண் சாந்தை என்ன கல்வி அடைந்திருப்பாள்? நீ நூல்நவின்றவன். நெறியும் காவியமும் தேர்ந்தவன். அவள் அடுமனைக்கலைக்கு அப்பால் எதை அறிந்திருப்பாள்? அவளிடம் நீ நான்கு சொல் சேர்ந்து பேச முடியுமா?”

அவன் விழிகளைத் தாழ்த்தி “ஆம்” என்றான். “வேண்டுமென்றே உன்னை இந்த மணத்தில் கட்டினார்கள். நீ அடுமனையாட்டியின் கணவன் என்று ஆக்கிவிட்டார்கள்” என்று அவள் சொன்னாள். “அங்கர் மணந்ததும் அடுமனையாட்டியைத்தான்” என்று யுயுத்ஸு சொன்னான். அவள் சொல்லிழந்தாள். அந்தச் சீற்றத்தில் குரல் உயர “ஆகவேதான் உனக்கு இவளைத் தேடினேன். இவள் விறலி. காவியம் கற்றவள். உன்னுடன் சொல்லாட இயல்பவள்” என்றாள். யுயுத்ஸு “விறலியை மணந்தவன் என்று பெயர் அமையும்” என்றான். “ஆம், சூதர்களுக்கு அது பிழையல்ல என்கிறேன்” என்றாள்.

அந்த மணவிழவு அவன் அன்னையின் மாளிகையிலேயே நிகழ்ந்தது. விறலி தன் மகளுடன் வந்திருந்தாள். அவளுக்கு அங்கே என்ன நிகழ்கிறதென்று தெரியவில்லை என்று தோன்றியது. அவளிடம் ஆர்வம் மட்டுமே தெரிந்தது. நாணமும் அச்சமும் தயக்கமும் வெளிப்படவில்லை. தன் பெரிய கருவிழிகளைச் சுழற்றி சுற்றிலும் நோக்கி அந்த மாளிகையை வியந்துகொண்டிருந்தாள். அவளை சேடியர் அழைத்துச்சென்று ஆடைகளும் அணிகளும் பூட்டியபோது மகிழ்ந்து சிரித்தாள். அதை ஒரு கூத்து என்றே எண்ணுகிறாள்போலும் என அவன் நினைத்துக்கொண்டான். அவனை நேருக்குநேர் நோக்கி பெரிய வெண்பற்களைக் காட்டி சிரித்தாள். அவன் அதனால் சிறுமைகொள்ளவில்லை, மகிழ்ச்சியே ஏற்பட்டது. ஆனால் அன்னை முகம் சிவந்தாள். விறலியிடம் “அவளுக்கு மணமகளாக நடிப்பது எப்படி என்று கூடவா தெரியவில்லை?” என்றாள்.

பேரரசர் வந்தபோதுதான் அங்கே அவர் வரவிருப்பதை யுயுத்ஸு அறிந்தான். “பேரரசரா? அன்னையே, நீங்கள் இதை சொல்லியிருக்கவேண்டும்” என்றான். “சொன்னால் நீ பதற்றம் கொள்வாய்” என்றாள் அன்னை. “பேரரசர் அறிவாரா, இங்கே என்ன நிகழவிருக்கிறது என்று?” என்று அவன் கேட்டான். “அறியமாட்டார். ஆனால் அவரும் நானும் நின்று உனது இந்த மணநிகழ்வை நடத்தவேண்டும் என விழைந்தேன்” என்றாள் அன்னை. பேரரசர் சீற்றம் கொள்ளக்கூடும் என அவன் நினைத்தான். ஆனால் அன்னைக்கு அதை எப்படி முன்வைப்பது என்று தெரிந்திருந்தது. “அரசே, நேற்று புஷ்பகோஷ்டத்தில் ஆடிய இளம்பெண்ணை நினைவுகூர்கிறீர்களா?” என்றாள். “ஆம், அன்னைக்கு இனிய குரல். துள்ளும் சொற்கள்” என்று அவர் முகம் மலர்ந்தார். “அவளையும் மைந்தன் மணப்பது நன்று என எண்ணினேன்… இங்கே அவர்கள் இருக்கிறார்கள். மணநிகழ்வை நீங்களே நின்று நடத்தியளிக்கவேண்டும்” என்றாள்.

அவன் சாந்தையிடம் பெரிய ஈடுபாட்டை காட்டவில்லை. அவள் தன் அன்னையின் இல்லத்திலிருந்து அரசி அளித்த சீர்வரிசைச் செல்வங்களுடன் அவன் இல்லத்திற்கு வருவதற்குள்ளேயே அவன் சுகிர்தையை மணந்த செய்தியை அறிந்துவிட்டிருந்தாள். அவள் தன் வலக்காலை எடுத்துவைத்து நுழையும்போது விழிப்பீலிகளில் நீர்த்துளிகள் இருப்பதை அவன் கண்டான். அவன் உள்ளம் நிலையின்மை கொண்டு புரண்டபடியே இருந்தது. அன்னையிடம் “இன்னொரு துணைவியென முடிவெடுப்பதற்கு முன் அவளிடம் பேசியிருக்கவேண்டும், அன்னையே” என்றான். “இப்போது என்ன நிகழ்ந்துவிட்டது? அரசகுடியினரும் சூதரும் பல மகளிரை மணப்பது இயல்பு. வைசியருக்கு மட்டுமே ஒரு மணம் கொள்ளும் வழக்கம் உள்ளது” என்று அன்னை சொன்னாள்.

முதல்நாளிலேயே அவனுக்கு அவள் வெறும் அடுமனைப்பெண் மட்டுமே எனத் தெரிந்துவிட்டது. அவளுக்கு அவன் தனக்குரியவன் அல்ல என்னும் எண்ணம் முன்னரே இருந்தது. அவன் எண்ணியதுபோல அரசமாளிகையும், அரசமைந்தனின் மனைவி என்னும் இடமும் அவளை மகிழ்விக்கவில்லை. அனைத்துமே அவளுக்கு அறியாதவையாக, திகைக்கவைப்பவையாக, ஆகவே எந்த உவகையையும் அளிக்காதவையாக இருந்தன. அவளால் ஏவலர்களிடம் குரலெழுப்பி பேச முடியவில்லை. பணிந்த குரலில் மன்றாட்டென்றே அவர்களிடம் தன் தேவைகளை சொன்னாள். அவர்கள் அவளை இளிவரல் தெரியும் விழிகளுடன் நோக்கி மிகையான பணிவை காட்டினர். ஆனால் அவள் கோரிய எதையுமே செய்யவில்லை.

அவளை ஒவ்வொரு செயலாலும் சிறுமைசெய்தனர். அவளை சிறுமைசெய்வது எது என்பதை அவர்கள் நுட்பமாக உணர்ந்திருந்தனர். அவள் உண்ண அமர்ந்தால் இன்னுணவை அள்ளி அள்ளி அவளுக்கு வைத்து “உண்ணுக… உண்ணுக!” என்றாள் விறலி. அவள் உணவை கையால் அளைந்தபின் விழிதாழ்த்தி பசியுடன் எழுந்துசென்றாள். அவள் வெளியே செல்ல விழைந்தால் மிகப் பெரிய பல்லக்கை அவளுக்காக ஒருக்கினர். அவள் அவர்களை நோக்காமல் அதை ஒழிந்தாள். அவர்கள் அவளுடன் விளையாடுவதை ஒருவரோடொருவர் சொல்லிச்சொல்லி பெருக்கிக்கொண்டார்கள். அவளை அஞ்சுவதுபோல நடித்தனர். அவள் அகன்று அப்பால் சென்றதும் ஒரு மெல்லிய சிரிப்பொலித்துணுக்கை அவள் செவிகளுக்கென போட்டனர். அவள் கேட்க ஒரு சொல் உரையாடலில் இருந்து எழுந்து ஒலிக்கும். அது அவளுக்கு கூரிய பொருள் அளிப்பதாக இருக்கும்.

அவர்கள் அவளை வாய்தவறி “அரசி” என அழைத்தனர். அவள் அஸ்தினபுரியின் அரசியருடன் நின்றிருக்கையில் வேண்டுமென்றே அருகணைந்து தலைவணங்கி “ஆணை, அரசி” என்றனர். அவர்களில் எவரிடமிருந்தோ எழும் மெல்லிய நகைப்பு நச்சுக்கத்தி என அவளை கிழிக்கும் என அறிந்திருந்தனர். அவள் பதறி முகம் சிவந்து மூச்சிரைப்பாள். ஆனால் அவர்களை அழைத்துக் கண்டிக்க அவளால் இயல்வதில்லை. தன் தனியறையில் அமர்ந்து விம்மி அழுதாள். நாட்கணக்கில் தன் அறையிலேயே முடங்கிக்கிடந்தாள். அணிகொள்வதும் ஆடைமாற்றுவதும் ஒழிந்தாள். அதை பிரகதி கண்டித்தாள். “நீ அரசமைந்தனின் துணைவி. இங்கே உனக்கு ஆடையும் அணியும் குவிந்துள்ளன… நீ அவற்றுக்கு உரியவள்” என்றாள். அவள் விழிதழைத்து விம்மினாள்.

“அவளால் இங்கே இசைய முடியவில்லை” என்று அவன் சொன்னான். “அதெல்லாம் சின்னாட்களுக்கே. விரைவிலேயே அவள் கற்றுக்கொள்வாள்… நோக்குக! பெண்ணுக்கு பிறர்மேல் சொல்செலுத்துவதில் பெரும் ஈடுபாடு இருக்கும்” என்றாள் அன்னை. ஆனால் அவ்வண்ணம் நிகழவே இல்லை. அவள் எப்போதும் மாளிகையில் சிறைப்பட்டவளாகவே இருந்தாள். அவன் அவளை மகிழ்விக்க முயன்றான். அவன் அளித்த பரிசுகள் அவளுக்கு பயனற்றவை எனத் தோன்றின. அவன் உரைத்த இன்சொற்கள் வேறு எவரிடமோ என அவளுக்குக் கேட்டன. அவன் தன்னிலையில் இருந்தபோது அவளிடமிருந்து அயலானான். அவளுக்காக இறங்கிச்சென்றபோது அவள் அவன் இறங்குவதை உணர்ந்து ஒவ்வாமைகொண்டாள்.

ஒருநாள்கூட அவள் அவனுடன் உளம் கரைந்து இருக்கவில்லை. குளிர்ந்த செயலற்ற உடலையே அவன் எப்போதும் அடைந்தான். எவ்வகையிலும் உள்நுழைய வாயில் அற்ற மாளிகை. அவளை இயல்பாக்க முயன்றான். அவள் உள்ளத்தை மலர்விக்கவும் அவளிடமிருந்து புன்னகையும் சொல்லும் எழச்செய்யவும் பலவற்றை இயற்றினான். அத்தோல்வி அவனை சீற்றம்கொள்ளச் செய்தது. அது தன் மீதான புறக்கணிப்பு என எடுத்துக்கொண்டான். அவள் அச்சமென நடிக்கிறாள், ஆழத்திலுள்ளது வெறுப்பு என எண்ணிக்கொண்டான். அவளை வெறுக்கவும் அகலவும் அந்நம்பிக்கை தேவைப்பட்டது. அவள் அவனுடைய குழவி ஒன்றை பெற்றாள். அவன் அவளை அதன்பின் அக்குழவியின் அன்னை என்று மட்டுமே அறிந்தான்.

சுகிர்தை முதற்சில நாட்கள் அவனை அலைக்கழிக்கும் சுழலாக இருந்தாள். அவளுடைய உடல்வலிமையும் துள்ளலும் கட்டற்ற காட்டுக்குதிரை போலிருந்தன. எவர் மேலும் அவளுக்கு அச்சமோ தனிமதிப்போ இருக்கவில்லை. அவன் அன்னையை “முரசு” என்று சொன்னாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஓசையிடுகிறார்கள்!” என்று சொல்லி வாழைப்பூ நிறமான ஈறுகள் தெரிய சிரித்தாள். “ஏன்? உன்னை அவர் கண்டிக்கிறாரா?” என்றான். “ஓசையிட்டு நகைக்கக் கூடாது என்கிறார். அதைச் சொல்ல அவர் ஓசையிடுகிறார். கிழவி பழைய முரசுபோலிருக்கிறார். தோல்கிழிந்த முரசு.” அவள் உரக்க நகைக்க அவன் திகைத்தான். “மெல்ல” என்றான். “மெல்லவா?” என்றபின் அவள் பேரோசையிட்டு நகைத்தாள்.

அவள் பேசும் காவியம் அவனுக்குப் புரியவில்லை. அவளுக்கு காவியம் என்றாலே சொல்லழகுதான். அதை இசையுடன் இணைத்துக்கொண்டாள். இன்சொற்கள் என்றே அவள் காவியத்தை சொன்னாள். அவன் காவியம் கற்றதெல்லாம் அதிலுள்ள நெறிகளுக்காகத்தான். காவியத்தில் நெறிகள் சொல்லப்பட்டுள்ளன என்பதே அவளுக்குத் தெரியவில்லை. “காவியத்தில் சொல்லப்பட்ட நெறிகளின்படி வாழ்ந்த காவியநாயகர்கள் எவர்?” என்று அவள் அவனிடம் கேட்டாள். அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை.

அவளுடனான காமம் அவனுக்கு பெருங்கொண்டாட்டமாக இருந்தது. குதிரையை அவனால் வெல்லவே முடியவில்லை. அது அவனை வைத்து விளையாடியது. பின்னர் தூக்கி வீசிவிட்டு அப்பால் சென்றது. அவள் மிகச் சிலநாட்களிலேயே அவனிடமிருந்து விலகினாள். அதன்பின் மாளிகையிலிருந்தும் அகன்றாள். மாளிகைக்கு வெளியே ஒரு சிறு கொட்டகை அவள் இடமாகியது. அங்கே அவளை நாடி விறலியரும் பாணரும் வந்தனர். அவர்களுடன் அவள் சொல்லாடினாள். இல்லம் அதிர வெடித்து நகைத்தாள். அங்கே அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்டான். அன்னை “அது காட்டுவிலங்கு. இல்லத்தில் அடங்காது” என்றாள். “ஆம், அதை நான் முன்னரே உணர்ந்திருந்தேன். நீங்கள் எவரையோ பழிவாங்க எண்ணினீர்கள். பழிவாங்கிவிட்டீர்கள்” என்றான். அன்னை அவனை கூர்ந்து நோக்கினாள். சொல்லிழந்து நின்றுவிட்டு திரும்பிச் சென்றாள்.

அவன் அவளிடம் நெருங்க எண்ணினான். தன் கல்வியை, அரண்மனைப் பொறுப்பை கடந்து அவளிடம் சென்றுவிட விழைந்தான். ஆனால் அவனால் தன் எல்லையை கடக்கவே இயலாதென்று அறிந்திருந்தான். அவள் தன் ஆட்டர்களுடன் கொண்டாடுவதை நோக்கி நின்றிருந்தபோது ஒருமுறை ஓர் ஆட்டன் அவளை பின்னிருந்து அணைத்து ஆடுவதைக் கண்டான். அந்தத் தொடுகையின் பொருள் அவனுக்குப் புரிந்தது. அதன்பின் அவளை நோக்குவதையே அவன் தவிர்த்தான். புரவிக்கு இணை புரவியேதான் என அன்னையிடம் சொல்ல விழைந்தான்.

அன்னை அவன் உணர்ச்சிகள் அனைத்துக்கும் அப்பால் என திகழ்ந்தாள். இரு துணைவியர் அமைந்த பின்னரும் ஏன் அவன் மாளிகைக்கு வராமல் அரண்மனையிலேயே தங்கிவிடுகிறான் என அவள் கேட்டதில்லை. அவளுக்கு பேரரசர் திருதராஷ்டிரர் அளித்த அந்த மாளிகை அரண்மனையை ஒட்டியே இருந்தது. இளமையில் திருதராஷ்டிரர் அங்கே நாள்தோறும் வரும் வழக்கமிருந்தது. பெரும்பாலான நாட்களில் அன்னை தன் ஏவற்பெண்டுகளுடன், இசைக்கருவிகளுடன் புஷ்பகோஷ்டத்திற்கு செல்வாள். பேரரசரின் மாளிகையிலேயே தனியறை அவளுக்கு அளிக்கப்பட்டிருந்தது. பேரரசருக்கு முன் இசைமீட்டி பரிசில்கொள்ளும்பொருட்டு வெவ்வேறு ஊர்களிலிருந்து வரும் சூதர்களையும் விறலியரையும் அவள்தான் முதலில் எதிர்கொள்வாள். அவர்களின் திறனை தான் மதிப்பிட்டு அறிந்து அவர்களை பேரரசர் முன் அமர்த்துவாள்.

அவர்களைப்பற்றி அவள் பேரரசரிடம் கூறும்போது அவர்களுக்குள் சுருக்கமான சொற்பரிமாற்றமே நிகழும். பெரும்பாலும் திருதராஷ்டிரர் முனகலாகவே மறுமொழி உரைப்பார். அன்னையின் முகமும் ஏவலர்களுக்குரிய பணிவையும் அச்சத்தையும் விலக்கத்தையுமே காட்டும். ஆனால் அவள் விழிகள் கனிந்திருக்கும். அவள் சொற்களில் தனியான ஒரு மென்மை அமைந்திருக்கும். அவர் அவளிடம் சொல்லும் சொற்களில் வேறெவரிடமும் இல்லாத கனிதல் இருக்கும். அது தன் உளமயக்கா என அவன் எண்ணியதுண்டு. பலமுறை அவன் அதை உற்றுநோக்கினான். பின்னர் அந்தக் கனிவு அதேபோல சங்குலனிடம் அவர் பேசும்போது வெளிப்படுவதை கண்டான்.

அதை உணர்ந்தபோது தன்னுள் பொறாமைக்கு மாற்றாக ஓர் உவகைதான் எழுந்தது என்பதை அவனே விந்தையாக எண்ணிக்கொண்டான். அன்னையை அவன் நோக்கும் கோணமே மாறுபட்டது. ‘வைசியர்குலத்து அரசி’ என்னும் சொல் முன்னர் அவனுக்கு சற்றே ஒவ்வாததாக இருந்தது. அச்சொல் அதன்பின் ஒரு அழகு கொண்டுவிட்டதாகப் பட்டது. அவள் ஷத்ரியப்பெண் அல்ல. அரசகுடிப் பெண்கள் சூடிக்கொள்ளவேண்டிய அனைத்தையும் கழற்றிவிட்டு அவரை மேலும் அணுக்கமாகச் சென்று அறிய வாய்ப்பு கொண்டவள். அவள் ஷத்ரியக் குருதிகொண்டமையால் அவன் சூதன். அவள் அவன் அன்னையென்பதால் சூதப்பெண். சூதர்களுக்கு இசையும் கவிதையுமே மொழி.

அவர்கள் இசைகேட்கும்போதும் அவன் உடன் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பான். இசை நிகழ்ச்சி தொடங்கும்போது அன்னை பேரரசரையும் இசைக்கலைஞர்களையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருப்பாள். அவர்களின் இசையை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டுமே என அஞ்சுபவள்போல. திருதராஷ்டிரர் எல்லா இசையையும் முகம்சுளித்து விருப்பமில்லாதவர் போலத்தான் கேட்பார். மூக்கினூடாக அவர் மணம் முகர்வதுபோலத் தோன்றும். இசையறிவோரிடம் வெளிப்படும் முகமலர்வும் தலையசைப்பும் விரல்தாளமும் அவரிடம் வருவதில்லை. ஐயம்கொண்டவர் போலவோ உளவிலக்கம் அடைந்தவர் போலவோ தோன்றுவார். ஒரு தருணத்தில் அவரிடமிருந்து மெல்லிய முனகல் ஒன்று வெளிப்படும். அது அச்சூழலை ஒரே கணத்தில் மாற்றிவிடும். அன்னை முகம் மலர்வாள். இசைஞர்களும் அவ்வோசையை உணர்ந்துகொள்வது விந்தைதான். அனைவரும் இயல்பாகி, உடல் குழைய, முகம் மலர தங்கள் தன்னுணர்வுகளை இழந்து இசையில் ஆழ்வார்கள். பின்னர் அங்கே இசை மட்டுமே திகழும், பிறர் அதன் உறுப்புகளென்றிருப்பார்கள்.

அரிதாக திருதராஷ்டிரர் முனகலோசை எழுப்புவார். அது சில தருணங்களில் மெல்லிய கேவலோசையாகத் தோன்றும். வலிகொண்டவர் போலவோ எதையோ நினைவுகூர்ந்தவர் போலவோ எழமுயல்பவர் போலவோ. அத்தருணம் இசையின் உச்சமென அனைவருமே உணர்ந்திருப்பார்கள். இசை முடிந்தபின் திருதராஷ்டிரர் அசையாது அமர்ந்திருப்பார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்துகொண்டிருக்கும். அன்னை அனைவரையும் எழுந்துசெல்லும்படி கைகாட்டுவாள். அவர்கள் இசைக்கலங்களை அங்கேயே விட்டுவிட்டு விலகிச்செல்வார்கள். அன்னை மட்டுமே அவருடன் அப்போது இருப்பாள். அப்பால் சங்குலன் நின்றிருப்பான். வேறெவரும் அப்போது உடனிருக்க இயலாது. பேரரசி காந்தாரியோ, துரியோதனனோ, நூற்றுவர் மைந்தரோ, துச்சளையோ, அவனோ கூட. அத்தனை தனிமையான ஓர் இடம்.