மாதம்: ஒக்ரோபர் 2019

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 47

பகுதி ஏழு : தீராச்சுழி – 3

பூர்ணை குடிலுக்கு வெளியே முகமனுரையை கேட்டாள். “அரசியருக்கும் சேடியருக்கும் வணக்கம்” எனும் குரல் சற்று அயலாக ஒலிக்கவே சந்திரிகையிடம் விழிகளால் பார்த்துக்கொள் என்று காட்டிவிட்டு குடிலிலிருந்து வெளியே வந்தாள். அங்கு நின்றிருந்த மருத்துவர் அவளுக்கு முகமறியாதவராக இருந்தார். அவர் மீண்டும் தலைவணங்கி “நான் தங்களைத்தான் பார்க்க வந்தேன். அரசியர் இருக்கும் நிலையை நான் அறிவேன். தாங்கள் ஒருமுறை எங்கள் அரசியை வந்து பார்க்க இயலுமா?” என்றார். பூர்ணை திரும்பி நோக்கி “நான் இங்கே இருக்கவேண்டியிருக்கிறது. அவர்கள் உடல்கள் நைந்துகொண்டிருக்கின்றன. உள்ளமும் முற்றிலும் விசையழிந்து நின்றுவிட்டிருக்கிறது” என்றாள். “தாங்கள் எங்கள் அரசியரை நோக்கி ஏதேனும் சொல்லமுடியுமா?” என்று சற்றே குரல் தணித்து கேட்டாள்.

ரமிதன் “இனி நமக்குள் பேசிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை, செவிலியே. அவர்களை மீட்பது மிகவும் கடினம். உள்ளம் நின்றுவிட்ட பிறகு மெல்ல உடலும் நின்றுவிடுவதே நான் கண்டது. உள்ளத்தை செலுத்தும் கலை மருத்துவர்களிடமில்லை. அது முனிவர்களாலும் தேவர்களாலும் மட்டுமே இயல்வது” என்றார். “அவ்வுடல் மேலும் நைந்துபோகாமல் பார்த்துக்கொள்ளலாமல்லவா?” என்றாள் பூர்ணை. “ஆம், அதற்கு நிறைய மருத்துவமுறைகள் உள்ளன. ரத்தசந்தனம் தொடர்ச்சியாக பூசிக்கொண்டிருக்கலாம். நறுஞ்சுண்ணம் ஈரத்தைப் போக்கும். ஆனால் தோல் உலரவும் செய்யும். வேறு மருந்துகளும் உள்ளன. சோற்றுக்கற்றாழையால் செய்த குழம்பு ஒன்று என்னிடம் உள்ளது. அதை அளிக்கிறேன். ஆனால் நெடுங்கால அளவில் எதனாலும் எப்பயனுமில்லை என்பதே நான் இந்நாட்களில் கண்டுகொண்டது” என்றார் ரமிதன்.

பூர்ணை பெருமூச்சுவிட்டு தலையசைத்தாள். “இப்போது நான் வந்தது தாங்கள் ஒருமுறை வந்து யாதவ அரசியை பார்க்க முடியுமா என்று அழைப்பதற்காகத்தான்” என்றார் ரமிதன். “நானா? ஏன், யாதவ அரசியுடன் அவருடைய சேடியும் செவிலியரும் இருந்தனரே?” என்றாள் பூர்ணை. “இன்று காலை அவர்கள் இங்கிருந்து கிளம்பிச்சென்றுவிட்டிருக்கிறார்கள். முற்புலரியிலேயே சென்றுவிட்டார்கள் என்று அறிந்தேன்” என்றார் ரமிதன். பூர்ணை “சென்றுவிட்டார்களா? அரசியை கைவிட்டுவிட்டா?” என்றாள். “ஆம், இங்கு இருந்த அத்தனை யாதவர்களும் நேற்றிரவு கிளம்பிச்சென்றுவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ பேச்சு ஓடிக்கொண்டிருந்திருக்கிறது” என்று ரமிதன் சொன்னார். “தாங்கள் வந்து அரசியை பார்க்க வேண்டும்.”

“வருகிறேன்” என்றபின் அவள் தன் மேலாடையை சீரமைத்துக்கொண்டபடி அவருடன் நடந்தாள். அவளுடன் நடந்தபடி “நானும் யாதவன்தான். என் பெயர் ரமிதன், விருஷ்ணி குடியை சேர்ந்தவன்” என்றார். பூர்ணை அவர் மேலே பேசுவதற்காக தலையசைத்தபடி உடன் நடந்தாள். “நான் இளைய யாதவருக்கு என்னை அளித்தவன். அவரிடம் இன்றுவரை ஒரு சொல்கூட உரையாடியதில்லை. எந்தை மதுவனத்தில் பிறந்தார். இளைய யாதவருடன் துவாரகைக்கு குடிபெயர்ந்தார். மதுவனத்தில் சிறுமூங்கில் குடில்களில் வாழ்ந்தவர்கள் எங்கள் மூதாதையர். துவாரகையில் வெண்பளிங்குக் குன்று போன்ற மாளிகையில் நாங்கள் குடியிருந்தோம். எங்கள் வாழ்வு இளைய யாதவரால் அமைந்தது. ஆனால் அதை இன்று யாதவர்கள் மறந்துவிட்டிருக்கிறார்கள்” என்றார் ரமிதன்.

“நான் பிறந்தபோது எந்தை என்னை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு சென்று இளைய யாதவரின் தேர் செல்லும் வழியில் வைத்து காத்திருந்தார்” என்றார் ரமிதன். “தேர் நின்று இளைய யாதவர் தலை நீட்டி என்ன செய்கிறாய் என்று உரக்க கூவ தங்கள் கைகளால் என் மைந்தனை ஒருமுறை தொட வேண்டும், அவன் பிறவிக்கொரு இலக்கு இத்தருணத்தில் உருவாக்க வேண்டும் என்றார் எந்தை. அவன் பிறவியை வடிவமைக்க நீ யார் என்று இளைய யாதவர் கேட்டார். இலக்கிலாது வாழ்வது வீண் என்று அறிந்த தந்தை நான். பிறப்பதற்கு முன்னரே இலக்கு கொண்டவர்கள் நல்லூழ் கொண்டவர்கள், அவர்கள் தேடுவதற்கு ஒன்றுமில்லை. தலை கொடுப்பதற்கான பலிபீடம் முன்னரே ஒருங்கியிருக்கிறது என்றார் எந்தை.”

“இளைய யாதவர் இறங்கி எந்தை கையிலிருந்து என்னை வாங்கி என் புன்மயிர்த் தலையில் தன் உதடுகளால் முத்தமிட்டு வாழ்க என்றுரைத்து என் கைகளுக்குள் ஒரு சிறு கணையாழியை வைத்தபின் திரும்பி தேரிலேறிக்கொண்டார். அரசர் எனக்களித்த அந்தக் கணையாழி எந்தையிடமிருந்தது. எனக்கு பதினெட்டு ஆண்டு அகவை நிறைந்தபோது என் கைகளில் அதை வைத்து உன் கைக்கு இப்போதுதான் இது பொருந்துமாறாகியிருக்கிறது என்று கூறினார். இளமையிலிருந்து நான் இளைய யாதவரின் கதைகளன்றி பிறிதொன்றையும் கேட்டதில்லை. எந்தை விழைவுப்படி இலக்கு முன்னரே வகுக்கப்பட்டவனாகவே வாழ்ந்தேன். குருக்ஷேத்ரக் களத்திலும் அவ்வாறே இருந்தேன்.”

“என் தொழில் மருத்துவம். அதில் தேர்ச்சி கொள்வதே எனது போர். இக்கைகளின் வழியாக பலநூறு படைவீரர்களின் உயிரை காப்பாற்றினேன். அதைவிட பத்துமடங்கு வீரர்கள் வலியிலாது மண் நீங்க உதவினேன்” என்றார் ரமிதன். பூர்ணை “நன்று” என்று மட்டும் சொன்னாள். “போருக்குப் பின் யாதவர்களில் பெரும்பகுதியினர் கிளம்பி துவாரகைக்கும் மதுவனத்துக்கும் மதுராவுக்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள். போரில் பெரும்பாலான யாதவர்கள் அஸ்தினபுரியின் தரப்பிலிருந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இளைய யாதவருடன் நின்றவர்கள் தனிப்பட்ட முறையில் அவருடன் உளஇசைவு கொண்ட என்னைப்போன்ற சிலரே. இப்போரில் யாதவர்களில் படைக்கலம் எடுத்துவந்தவர்கள் முக்காலும் அழிந்தனர்.”

“போரில் எஞ்சியவர்கள் மிகச் சிலர். புண்பட்டவர்கள், உறுப்பிழந்தவர்கள், சித்தம் பிறழ்ந்தவர்கள், தப்பியோடி காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தவர்கள் என எஞ்சியிருந்த யாதவர்கள் அனைவரும் துளித்துளியாக திரளத்தொடங்கினர். காட்டுக்குள் இரு தரப்பிலிருந்தும் யாதவர்கள் சந்தித்து அக்கணமே பகைமறந்து ஒன்றாகத் திரண்டனர். அவர்களுக்கு சிறு சிறு தலைமைகள் உருவாயின. எவ்வண்ணம் இவ்வாறு ஒற்றை எண்ணம் உருவாகிறது என்பது விந்தையானது. இந்தப் போரே யாதவர்களை அழிக்கும்பொருட்டு உருவானது என்றும், அதை இரு தரப்பில் இருந்தவர்கள் கூடி அமைத்தார்கள் என்றும் ஒரு பேச்சு நிகழ்கிறது. யாதவர்களை அழிப்பதற்காக அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வார்களா என்ற எளிய வினாவைக்கூட யாரும் கேட்டுக்கொள்ளவில்லை.”

“வெறியுடன் ஒன்றை நம்பத்தொடங்கினால் மானுடர் முதலில் தங்கள் கல்வியையும் உசாவும் திறனையும் இழந்துவிடுகிறார்கள். அவற்றை சுருட்டிக்கட்டித் தூக்கி அப்பால் வீசிவிடுகிறார்கள் என்றுகூட சொல்லலாம். அந்நம்பிக்கை அவர்களை எவ்வகையிலோ காக்கிறது. கேடயமாகவும் ஊன்றுகோலாகவும் ஊர்தியாகவும் அதுவே ஆகிறது போலும். இன்று யாதவர்கள் நடுவே யாதவர்களை முற்றழிப்பதற்கான ஒரு சூழ்ச்சியே குருக்ஷேத்ரப் போர் என்றும், எஞ்சியிருப்பவர்கள்தான் யாதவ குலத்தை இப்புவியில் நிலைநாட்டும்பொருட்டு தெய்வங்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்றும் உறுதியான எண்ணம் நிலவுகிறது” என்றார் ரமிதன்.

பூர்ணை “உயிருடன் எஞ்சியவர்கள் அவ்வாறு தெய்வங்களையோ ஊழையோ துணைக்கொள்ளாமல் இப்புவியில் எவ்வாறு வாழமுடியும்?” என்று கேட்டாள். “அதைத்தான் நானும் எண்ணினேன்” என்று அவர் சொன்னார். “ஆனால் அதனூடாக அவர்கள் தங்களை மேலும் அழித்துக்கொள்ளக்கூடும் என்று தோன்றுகையில் அஞ்சவா நகைக்கவா என தெரியவில்லை.” பூர்ணை புன்னகைத்தாள். “அவர்கள் ஓடைகள் பெருகி நதியாவதுபோல இன்று பெரிய படையாக மாறிவிட்டிருக்கிறார்கள். யாதவ குலத்தை இனி காக்கும் ஆற்றல் கிருதவர்மன் ஒருவருக்கே உண்டென்றும், அவர் தன் நாட்டுக்கு சென்றுவிட்டாரென்றும், அங்கே யாதவர்கள் காடுகளிலிருந்து வந்து ஒரு பெரும்படையாக திரண்டுகொண்டிருக்கிறார்கள் என்றும் இங்கு செய்தி பரவியிருக்கிறது.”

“கிருதவர்மன் தனது படையுடன் கிளம்பிச்சென்று துவாரகையை கைப்பற்றி முடிசூடவிருக்கிறார் என்கிறார்கள். இங்கு அத்தனை ஷத்ரிய அரசுகளும் ஆற்றல் இழந்துகிடப்பதனால் துவாரகை முன்னிலும் விசைகொண்டு பேரரசென எழுந்து பாரதவர்ஷத்தை ஆளப்போகிறதென்று நேற்று ஒரு முதியவர் சொல்லிக்கொண்டிருந்தார். எனது பிழை, இந்தப் பொருளின்மை அனைத்தையும் எதிர்த்துப் பேசியதுதான். ஆகவே மெல்ல மெல்ல என்னை அவர்கள் தங்கள் வட்டத்திலிருந்து விலக்கினார்கள். அவர்களுக்குள் என்ன நிகழ்கிறதென்று எனக்கு முற்றிலும் தெரியாமலிருந்தது. இன்று புலரியில் அரசியின் குடிலிலிருந்து எனக்கு செய்தி வந்தது, அங்கே ஏவற்பெண்டுகள் எவருமில்லை என்று. அதன்பின்னரே நானும் அறிந்தேன், இங்கு முக்தவனத்திலிருந்த யாதவர்களில் ஏழு பேர் தவிர பிற அனைவருமே இங்கிருந்து கிளம்பிச்சென்றுவிட்டார்கள் என்று.”

“பிறிதொரு செய்தியும் இங்கு பரவிக்கொண்டிருக்கிறது. வடபுலம் சென்ற பலராமர் அங்கிருந்து ஒரு படையுடன் வந்துகொண்டிருப்பதாக. தனது முதல் மாணவர் துரியோதனனின் சாவுக்கு பழிநிகர் செய்யும்பொருட்டு அவர் வருகிறார் என்று சொல்லப்படுகிறது” என்றார். பூர்ணை “இப்போரிலிருந்து ஒருபோதும் மானுட உள்ளம் விலகாது போலும்” என்றாள். “ஆம், ஒரு பெரும்போர் போரின்மையை உருவாக்கும் என்று எண்ணுவோம். ஆனால் அது தற்கொலை எண்ணத்தையே உருவாக்குகிறது. இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்களை கொன்றுகொள்கிறார்கள். தனி மானுடர்கள் உளம் நைந்து உடல் இற்று உயிர் அழிவதை காண்கிறேன். இனி நாடுகளும் நகரங்களும் கூட அவ்வாறு அழியும்போலும்” என்றார்.

பின்னர் “நான் தங்களை அழைக்க வந்தது பிறிதொன்றுக்காக” என தொடர்ந்தார். “யாதவ அரசி எந்நிலையிலிருக்கிறார் என்பதை தாங்கள் கேட்டு அறிந்திருப்பீர்கள். மைந்தனை இழந்த பின்னர் பல நாட்கள் வெறிகொண்டவர்போல் கொதித்து கொந்தளித்துக்கொண்டிருந்தார். அவர் அருகே சென்ற அனைவரையும் கைகளாலும் படைக்கலங்களாலும் தாக்கினார். கூச்சலிட்டு அழுவதும் தன்னைத்தானே படைக்கலங்களால் புண்படுத்திக்கொள்வதும் வழக்கமாக இருந்தது. ஆகவேதான் தொடர்ந்து அகிபீனா மயக்கத்திலேயே வைக்க வேண்டியிருந்தது. நல்லவேளையாக அவர் துவாரகையில் இருந்தார். ஆனால் இப்போது நீர்க்கடனுக்கு இங்கே வந்தாகவேண்டியிருந்தது.”

“இங்கு வரும் வரைக்கும்கூட அவர் எங்கு வருகிறோம் என்பதை அறியாதவராக இருந்தார். ஆனால் இன்று காலை குடிலில் விழித்தபோது அவர் மிகவும் உளத்தெளிவோடு இருக்கிறார். அத்தெளிவுதான் அச்சுறுத்துகிறது. அவருடன் பேசுமளவுக்கு கல்வி கொண்ட எவரும் சேடியர் நிரையில் இல்லை. அரசியர் எவரும் பேசும் நிலையில் இல்லை. அப்போதுதான் உங்களைப்பற்றி சொன்னார்கள். சிபிநாட்டு பூர்ணை அரசியரைவிட உளத்தெளிவு கொண்டவள் என்றார்கள். ஆகவே உங்களை அழைத்துவர வந்தேன்” என்றார் ரமிதன். “அரசி அனைத்தையும் அறிந்தமைந்தவராக, அனைத்து உளக்கொந்தளிப்பையும் இழந்து தெளிந்தவராகத் தெரிகிறார்.”

“அரிய தருணங்களில் அகிபீனா அவ்வாறு நோயாளருக்கு உளத்தெளிவை அளிப்பதுண்டு” என்று பூர்ணை சொன்னாள். “இது அகிபீனாவிலிருந்து வந்த எதிர்வினை அல்ல. அவர் ஏதோ ஒரு தெளிவை அடைந்திருக்கிறார்” என்றார் ரமிதன். “தெளிவு நல்லதுதானே?” என்றாள் பூர்ணை. “ஆம், ஆனால் வாழவேண்டுமென்ற தெளிவெனில் மட்டுமே அது நன்று” என்றார் ரமிதன். “வாழ்வதற்கான விழைவு அதற்குரிய அனைத்து சொற்களையும் அதுவே படைத்துக்கொள்ளும். வாழ்வுமறுப்பும் அதற்கான சொற்களை உருவாக்கிக்கொள்ளும். விழிளைக் கொண்டோ நடத்தையைக் கொண்டோ அதை கணிக்க இயலாது. தவறாக கணித்தலும் ஆகும். இதை மருத்துவர்கள் நன்கு அறிவார்கள்” என்றார் ரமிதன்.

“மிக அரிதாக உளம் கலங்கிய நோயாளிகள் எண்ணியிராக் கணத்தில் தெளிவு கொள்கிறார்கள். மகிழ்ந்து பேசுபவர்கள் உண்டு. இயல்பு நிலைக்கு முற்றிலும் மீண்டவர்கள்கூட உண்டு. உற்றவர்களுக்கும் சூழ்ந்தவர்களுக்கும் உரிய அனைத்தையும் சீரான முறையில் முடித்துவிட்டு அவர்கள் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். அறியாத மருத்துவர்கள் அந்த விந்தையை எண்ணி திகைப்பார்கள். பல தற்சாவுகளில் நீங்கள் பார்த்திருக்கலாம், அதை கண்டிருந்த எளிய உள்ளம் கொண்டோர் சாவுக்கு முன் அவர்கள் மிகத் தெளிவடைந்திருந்ததாகவும் அனைத்தும் சீரடைந்துவிட்டதென்ற நம்பிகையை அளித்ததாகவும் ஆகவே சாவு முற்றிலும் நம்பமுடியாததாக உள்ளதாகவும் கூறுவார்கள். மருத்துவரோ அந்த ஒவ்வாத் தெளிவே அதற்கான சான்றென்று கொள்வார்கள்” என்றார் ரமிதன். பூர்ணை “ஆம், அதற்கான வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னாள்.

“நீங்கள் அவரிடம் பேசவேண்டும், செவிலியே” என்று ரமிதன் சொன்னார். “நீங்கள் இதை இளைய யாதவரிடம் கூறினீர்களா?” என்று கேட்டாள் பூர்ணை. “இல்லை, எனக்கு நேரிடையாக அவரிடம் பழக்கமில்லை. அவர் செல்லும்போது அகன்று பார்த்து நின்று வணங்குவது என் வழக்கம். அவரிடம் என்னால் முறையான சொற்களை எடுக்க முடியும் என்று தோன்றவில்லை. நான் தங்களை அழைத்தது அதன்பொருட்டும் கூடத்தான். நான் என்ன செய்யவேண்டும், எவரிடம் தெரிவிக்கவேண்டும் என்று நீங்களே கூறுக!” என்றார் ரமிதன். “நாம் அதை நம் உள்ளுணர்வின் பாற்பட்டே முடிவெடுக்கவேண்டும். இப்போது எண்ணித்தெளிவதெல்லாம் எவருக்கும் இயல்வதல்ல” என்றாள் பூர்ணை. “உள்ளுணர்வா? எனக்கு அது சாம்பல்மூடிக் கிடக்கிறது” என்றார் ரமிதன்.

ஒரு கணத்திற்குப்பின் பூர்ணை “இளைய பாண்டவர் பார்த்தன் வந்து யாதவ அரசியை பார்த்தாரா?” என்றாள். “ஒருமுறை” என்றார் ரமிதன். “பின்னிரவில் அவர் உள்ளே நுழையும்போது அங்கு இளைய அரசி மயக்கத்தில்தான் இருந்தார். மயங்கிய நிலையிலேயே அரசியைப் பார்த்துவிட்டு அவர் மீள்வது நன்றென்று நானும் எண்ணினேன். ஆனால் குடில் முற்றத்திற்கு அவர் வந்தபோது எவ்வகையிலோ அதை உணர்ந்தவர்போல் யாதவ அரசி எழுந்து உரக்க கூச்சலிட்டு அழுதார். மஞ்சத்திலிருந்து எழுந்து கதவை நோக்கி ஓடிவந்து அதை பிடித்து இழுத்து கட்டியிருந்த கயிறு தெறிக்க வெளியே பாய்ந்தார். இரு சேடியர் அவரை பற்றிக்கொள்ள இளைய பாண்டவர் பின்னடைந்து இருளுக்குள் புதைந்து தன் புரவியை நோக்கி சென்றார். அவர் புரவியிலேறி வெளியே செல்லவும் யாதவ அரசி சேடியரை உதறியபடி கூச்சலிட்டுக்கொண்டு ஓடி வந்து முற்றத்தில் முகம் அறைந்து விழுந்தார். அவர்கள் சந்தித்துக்கொள்ளவில்லை. அல்லது நாமறியாத எங்கோ அவர்கள் சந்தித்துக்கொண்டனர்.”

பூர்ணை நீள்மூச்செறிந்து “நான் செய்வதற்கொன்றுமில்லை என்றே தோன்றுகிறது. எனினும் முயல்கிறேன்” என்றாள். அதன்பின் அவர்கள் பேசவில்லை. அவர்களின் காலடியோசைகள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தன.

 

பூர்ணை சுபத்திரையின் குடிலை அடைந்தபோது அங்கே ஏற்கெனவே ஓர் இளம் சேடி நின்றிருந்தாள். அவள் பூர்ணையை நோக்கி விரைந்துவந்து “அரசி தன் மூத்தவரை பார்க்க வேண்டுமென்று கூறுகிறார். உடனடியாக அழைத்து வரும்படி ஆணை. அவ்வாணையை தலைக்கொள்வதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே அரசிக்குத் தெரியாமல் இங்கு நின்றிருக்கிறேன்” என்றாள். அவள் குரல் பதறிக்கொண்டிருந்தது. “அரசி இருக்கும் உளநிலை என்னவென்று அறியக்கூடவில்லை. நான் பாஞ்சாலத்து அரசியின் சேடி. இங்கு யாரும் இல்லையென்பதனால் என்னை இங்கு வர ஆணையிட்டார்கள். யாதவ அரசியை நான் ஓரிரு முறைதான் பார்த்திருக்கிறேன். என் முகமும் அவர்களுக்கு நினைவில்லை” என்றாள்.

பூர்ணை சில கணங்களுக்குப்பின் “நான் உள்ளே சென்று யாதவ அரசியிடம் பேசுகிறேன். அதுவரை நீ இங்கே வாயிலில் என்னை எதிர்பார்த்து அமர்ந்திரு. நீ சென்று இளைய யாதவரை அழைக்கவேண்டுமா என்பதை நான் கையசைவால் காட்டுகிறேன்” என்றாள். மருத்துவரிடம் விடைகொள்ளும் பொருட்டு தலையசைத்துவிட்டு பூர்ணை குடிலுக்குள் நுழைந்தாள். அவள் காலடி ஓசை கேட்டு தலைநிமிர்ந்த சுபத்திரையிடம் தலைவணங்கி “சிபிநாட்டு முதுசேடியாகிய என் பெயர் பூர்ணை. தங்கள் பணிக்காக இங்கு அமர்த்தப்பட்டுள்ளேன்” என்றாள். “பிறிதொருத்தி இங்கு வந்தாளே?” என்று சுபத்திரை கேட்டாள்.

அவள் குரல் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. எப்போதுமே அவள் குரல் சற்று தடித்தது. ஆயினும் தடித்த பெண்குரல்களுக்குரிய இனிமையும் அவளுக்கிருந்தது. தடித்த பெண்குரல் பெரியகுடம் கொண்ட வீணைக்குரிய கார்வையை சூடியிருப்பது. அவ்வினிமை முற்றாக மறைந்து ஆண்குரலாகவே அது அப்போது ஒலித்தது. மஞ்சத்தில் கால்களை சேர்த்து வைத்து மார்பில் கைகளை கட்டிக்கொண்டு நிமிர்ந்த தோள்களுடன் அவள் அமர்ந்திருந்தாள். பெரிய வெண்ணிற உடல், மற்போராளிகளுக்குரிய திரண்ட திண்தோள்கள். நீலநரம்போடிய பருத்த கைகள். கழுத்தில் ஒரு நரம்பு புடைத்து அசைந்தது. கன்னத்திலும் நீலநரம்புகள் தெரிந்தன. மின்நீலம் கலந்த சிறிய விழிகள். அவள் குழல்சுருள்கள் அவிழ்ந்து மஞ்சத்தில் விழுந்து கிடந்தன. அவள் மெலிந்திருந்தாலும்கூட பேருருக்கொண்டவளாகவே தோன்றினாள்.

“தங்கள் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள மூத்த சேடி நான். எனக்கு செய்தி வருவதற்கு முன் இங்குள்ள சிறு வேலைகள் செய்யும் பொருட்டு அவள் அமர்த்தப்பட்டாள்” என்றாள் பூர்ணை. “நீ தேவிகையின் செவிலியா?” என்று சுபத்திரை கேட்டாள். “அரசியின் மூத்த தோழி. அவர்கள் வரும்போது சிபி நாட்டிலிருந்து வந்தேன்” என்றாள் பூர்ணை. சுபத்திரை அவளை சிலகணங்கள் உற்று நோக்கியபின் “நான் என் மூத்தவரை உடனே சந்திக்கவேண்டும். அவ்விளைய பெண்ணிடம் சேதி சொன்னேன். அவளால் அவரை சந்தித்து அழைத்துவர முடியுமா என்று தெரியவில்லை. நீ சென்று அழைத்து வா” என்றாள். “ஆணை” என்றாள் பூர்ணை. “இத்தருணத்தில் மூத்தவரை சந்திப்பது அனைத்து வகையிலும் உகந்ததே.”

“ஆனால் இப்போது சற்று பதற்றத்தில் இருப்பார் என்பது மட்டும்தான் நான் கூறவேண்டியது. தாங்கள் அறிந்திருப்பீர்கள், இங்கிருந்த அனைத்து யாதவக் குடிகளும் இங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். அவர்கள் அனைவரும் இளைய யாதவரிடம் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கொண்டு இங்கு இத்தனை நாள் இருந்தவர்கள். இவ்வண்ணம் அவர்கள் இறுதிக் கணத்தில் விட்டுச்செல்வார்கள் என்பது உகந்த செய்தி அல்ல.” சுபத்திரை “அதை மூத்தவர் எவ்வகையிலேனும் பொருட்படுத்துவார் என்று எண்ணுகிறாயா?” என்றாள். “பொருட்படுத்தமாட்டார். அவருக்கு இதெல்லாமே விளையாட்டுதான். அவரிடம் நாம் எதையும் எப்போதும் சொல்லலாம்.”

“ஆயினும், விளையாட்டே என்றாலும்கூட அவருக்கு ஒரு நிலைகுலைவை உருவாக்கும் இச்செய்தி என்றே தோன்றுகிறது” என்றாள் பூர்ணை. “ஏனெனில், அவர்கள் இங்கிருந்து கிளம்பியதற்கு சொல்லப்படும் ஏதுக்களில் ஒன்று மூத்தவர் படையுடன் இங்கு வருகிறார் என்னும் செய்தி. அது மெய்யல்ல. எனக்கு அது தெரியும். மூத்தவர் ஒருபோதும் இளையவருக்கு எதிராக படையுடன் வரமாட்டார். ஆனாலும் அவ்வாறு ஒரு செய்தி எழுந்தமை உகந்தது அல்ல. கிருதவர்மன் பெரும்பகையுடன் யாதவர்களை ஒன்று திரட்டிக்கொண்டிருக்கிறார் என்பதும் வெறும் செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.”

“எனக்கு இந்தச் செய்திகளில் எந்த அக்கறையுமில்லை. நான் இங்கிருப்பது வேறொன்றுக்காக. நான் என் மைந்தனை நேற்று கனவில் பார்த்தேன்” என்றாள் சுபத்திரை. பூர்ணை “இங்கு அனைவருமே மைந்தர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில தருணங்களில் அது கனவென்றும் சில தருணங்களில் மெய்நிகர் என்றும் தோன்றுகிறது” என்றாள். சுபத்திரை மேலும் சொல்லெடுப்பதற்குள் பூர்ணை “இங்கு அவர்கள் நிறைந்திருக்கிறார்கள். நீர்க்கடனுக்கு முந்தைய நாள் அவர்கள் தங்கள் மூத்தவர்களை அறுதியாக தொடர்பு கொள்ள முயல்வார்கள் என்றும், விடைபெறும் சந்திப்பு அது என்றும் சொல்வார்கள்” என்றாள்.

“இது அவ்வாறல்ல” என்று சுபத்திரை சொன்னாள். “ஒவ்வொரு நாளும் அவனை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பலமுறை என் அருகே நின்றிருந்திருக்கிறான். என் கைகளை பற்றிக்கொண்டிருந்திருக்கிறான். விளையாட்டாக என்னை பலமுறை குடிலிலிருந்து வெளியே அழைத்துச் சென்றிருக்கிறான். ஒருமுறைகூட அவன் என்னிடம் உரையாடியதில்லை. நேற்று அவன் என்னிடம் உரையாடினான்.” உணர்வுகளைக் காட்டாமல் “கூறுக!” என்றாள் பூர்ணை. “அவன் குரலை நான் நினைவுறுகிறேன். அன்னையே உனக்கு அந்த தாமரைச்சூழ்கையிலிருந்து வெளியேறும் வழி தெரியுமா என்று அவன் கேட்டான்.” அவள் விழிகள் பித்துகொண்டோரின் நோக்கென அலைபாய்ந்தன.

“அவன் மிகச் சிறுவனாக இருந்தான். விளையாட்டுச் சிறுவன்… விளையாடும் சிறுவர்களிடம்தான் எத்தனை உளவிசை! எவ்வளவு உடலாற்றல்! அவர்கள் பேசுவதே இல்லை, கூச்சல்தான். நான் அவனை துரத்திக்கொண்டிருந்தேன். இருவரும் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மலர்ச்சூழ்கைக்குள் நுழைந்தோம். நீ அதை பார்த்திருக்க மாட்டாய். துவாரகையில் என் அரண்மனையின் மலர்த்தோட்டத்தில் அது அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச்செடிகளாலும் பாறைகளாலும் அமைக்கப்பட்ட வட்டச்சுழற்பாதை. பெண்டிர் விரும்பி விளையாடும் ஆடல். இளமையில் நான் அதிலிருந்து மிக எளிதில் வெளிவந்துவிடுவேன். ஏனென்றால் மேலிருந்து நோக்கி நோக்கி அதன் வழிகளை உளப்பாடம் செய்துவைத்திருந்தேன்.”

“அவன் உள்ளே ஓடினான். நான் துரத்திச்சென்றேன். அவனை பிடித்துவிட்டேன். இடையில் தூக்கி வைத்துக்கொண்டு அம்மலர்ச்சூழ்கையின் வட்டங்களுக்குள் நடந்து வெளிவர முயன்றேன். ஆனால் வழி குழம்பிவிட்டது. எங்கே என்று தெரியவில்லை, ஏதோ ஒரு வளைவில் ஒரே ஒரு சிறு பிழை செய்துவிட்டேன். என் உள்ளத்திலிருந்த வழிப்பாடம் இழை கலைந்துவிட்டது. நினைவுகூருந்தோறும் அது மேலும் குழம்பியது. பதற்றம் கொண்டபோது முற்றாகவே சிதறியது. திரும்பத் திரும்ப அதிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். என்னால் வழி கண்டுவிட முடியவில்லை. களைத்து சோர்ந்து அமர்ந்தேன். என்ன இது இவ்வளவு எளிய ஒரு வட்டத்திலிருந்து வெளிவர இயலவில்லை என்று எண்ணினேன்…”

“வளர்ந்த பின் நான் அதில் ஆடியதில்லை. சிறுவர்கள் விளையாடுவதை உப்பரிகையில் எனது அறையிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருப்பேன். மாடத்தில் இருந்து பார்க்கையில் அது மிக எளிய ஒரு சுழல்பாதை என தெரியும். அதில் வழி கண்டுபிடிப்பதற்காக குழந்தைகள் முட்டி மோதுவதை பார்க்கையில் தாள முடியாத சிரிப்பு எழும். மிக அருகில் வந்து திசைமாறிச் செல்வார்கள். நின்று ஒருமுறை எண்ணினாலே கண்டுபிடித்துவிடக்கூடும் வழியை தவறவிட்டு அதன் அருகிலேயே நின்று தயங்கி மீண்டும் இறுதி வரை தேடிக்கொண்டிருப்பார்கள். அஞ்சி அங்கேயே அமர்ந்து கூக்குரலிட்டு அழும் குழந்தைகள் உண்டு. வெறிகொண்டு அலைந்து களைத்து விழுந்துவிடும் குழந்தைகள் உண்டு. தற்செயலாக வெளியே வந்துவிட்டு அதில் திகைத்து உவகைக்கூச்சலிட்டு மீண்டும் உள்ளே சென்று சிக்கிக்கொள்ளும் குழ்ந்தைகளும் உண்டு.”

“தெய்வங்கள் விண்ணிலிருந்து பார்க்கையில் மானுட வாழ்க்கை அவ்வாறுதான் தோன்றும் என்று என் சேடி ஊர்மி ஒருமுறை சொன்னாள். அதில் நான் அவ்வாறு மீட்பின்றி சிக்கிக்கொள்வேன் என்று எண்ணவே இல்லை. மீண்டும் மீண்டும் பலமுறை முயன்ற பின்னர் களைத்து அமர்ந்தேன். இறுதியாக ஒருமுறை, இம்முறை மீண்டும் ஒருமுறை, இம்முறை நிகழும் என எண்ணி எண்ணி முயன்று சலித்தேன். மைந்தன் என் தோளைத்தட்டி என் கன்னத்தைப் பற்றி அசைத்து அன்னையே உங்களுக்கு மெய்யாகவே மீளும் வழி தெரியுமா என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் இதற்கு முன்பும் வந்தேன் என்றேன். எனக்கும் வழி தெரியவில்லை என்று அவன் சொன்னான்.”

“அதன் பின் நான் விழித்துக்கொண்டேன். அனைத்தும் தெளிவடைந்திருந்தது. இத்தனை நாள் எனக்குள் இருந்த கொந்தளிப்பென்ன என்று உணர்ந்தேன். ஆகவேதான் மூத்தவரை பார்க்க வேண்டுமென்று விழைந்தேன்” என்றாள். “அவர் அதற்கு என்ன செய்ய இயலும்?” என்று பூர்ணை கேட்டாள். “நீ கற்றறிந்தவள் என்று எண்ணுகிறேன். என் மைந்தன் இங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் மறைந்தவன். அவன் சிக்கிக்கொண்ட மலர்ச்சூழ்கைக்குள்ளிருந்து மீளும் வழி இப்போதும் அவனுக்குத் தெரியவில்லை. இப்புவியில் அத்தனை பெரிய வினாவை எஞ்சவிட்டு மறைந்தவன் எவ்வண்ணம் விண்புகமுடியும்? அவன் அடையவேண்டியவை இங்கேதானே உள்ளன? எனில் அவனுக்கு நீர்க்கடன் அளிப்பதென்றால் என்ன பொருள்?”

பூர்ணை “மண்ணில் வினை முடித்து எவருமே விண்புகுவதில்லை. ஊழ்கத்தில் நிறைவுகண்ட முனிவர்களைத் தவிர. எஞ்சும் கடன்களே மானுடரின் பிறவிச்சரடின் அடுத்த கண்ணியை முடிவுசெய்கின்றன” என்றாள். “ஆம், வாழ்வு அத்தனை இனியது. அத்தனை துயர் மிக்கது. அத்தனை சொல்லி முடியாத புதிர்களும் பதிலாக வினாக்களும் கொண்டது. அவை ஒவ்வொன்றையும் வரும் பிறவிகளில் மானுடர் மீட்க முடியும். ஆனால் இப்பிறவியில் இத்தனை பெரிய விடையின்மையுடன் ஒருவன் விண்புகுந்தானெனில் அவனுக்கு மறுபிறவியிலும் மீட்புண்டா? இதே விடையின்மை அவனை ஊழ் எனத் தொடரும். மறுபிறவியிலாவது அவன் மீட்படையவேண்டும். எனவே அவனிடம் இச்சூழ்கையிலிருந்து வெளிவரும் வழி இப்போதே சொல்லப்படவேண்டும்.”

“என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் பூர்ணை “இப்பிறவியில் அவன் அதை அறிந்துவிட்டு செல்லட்டும். இன்னும் அதற்கு ஒரு நாளே உள்ளது. இன்றிரவுக்குள் எவ்வண்ணமேனும் அவனுக்கு அதை தெரிவித்தாகவேண்டும். நாளை நீர்க்கடன் பெற்று அவன் மூச்சுலகில் கலக்கையில் இங்கு அவன் ஆடிய ஆட்டத்தை நிறைத்துவிட்டுச் செல்லட்டும்” என்றாள் சுபத்திரை. பூர்ணை “அரசி, வாழ்க்கையை வாழ்ந்துதான் அறியமுடியும். பிற அறிதல்கள் அனைத்தும் மேலும் வினாக்களையே உருவாக்கும்” என்று சொன்னாள். “நான் அதை அவரிடம் பேச விரும்புகிறேன். அவரால் இயலும்… அவர் வரட்டும்” என்று சுபத்திரை கூறினாள். “நன்று அரசி, நான் அவரிடமே அதை கூறுகிறேன்” என்றபின் பூர்ணை தலைவணங்கி வெளியே வந்தாள். அவளை நோக்கி நின்ற இளஞ்சேடிக்கு கைகாட்டினாள்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 46

பகுதி ஏழு : தீராச்சுழி – 2

யுதிஷ்டிரன் தேவிகையைப் பார்க்க வருகிறார் எனும் செய்தியை ஏவலன் வந்து அறிவித்தபோது அதை பூர்ணைதான் முதலில் கேட்டாள். அவள் குடில்வாயிலில் அமர்ந்திருந்தாள். ஏவலன் அவளிடம் செய்தியைச் சொன்னபோது “நான் அரசியிடம் தெரிவிக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “அரசியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டுமென்று ஆணை” என்று ஏவலன் கூறினான். பூர்ணை “அரசியிடம் நான் தெரிவித்துவிடுகிறேன்” என்றாள். ஏவலன் உறுதியுடன் “அரசுச் செய்திகள் அரசியிடம் நேரில் கூறப்படவேண்டியவை” என்று கூறினான். பூர்ணை சற்றே எரிச்சலுற்று “வருக!” என்று உள்ளே அழைத்துச் சென்றாள்.

குடிலின் உள்ளே மஞ்சத்தில் முகத்தின் மீது மேலாடையை முழுக்க இழுத்துவிட்டு அசைவிலாதிருந்த இரு அரசியரைக் காட்டி “அரசியர் தேவிகையும் விஜயையும் இங்குள்ளார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட செய்தியை இங்கு சொல்லலாம்” என்றாள் பூர்ணை. இருவரையும் மாறி மாறிப் பார்த்தபின் ஏவலன் “அவர்கள் நல்ல உளநிலையில் உள்ளார்களா?” என்றான். பூர்ணை “அதை அறியும் பொறுப்பு உங்களுக்குள்ளதா என்ன? உங்கள் செய்தியை மட்டும் கூறலாம்” என்றாள். அவன் “இவர்களில் சிபிநாட்டு அரசி யார்?” என்று தாழ்ந்த குரலில் கேட்டான். தேவிகையை சுட்டிக்காட்டி “கூறுக!” என்றாள் பூர்ணை. அச்சொற்களை தேவிகையோ விஜயையோ அறிந்ததாகவே தெரியவில்லை.

ஏவலன் தயங்கி அவளை நோக்கி பின் முடிவெடுத்து தலைவணங்கி “அரசி, அரசர் நாளை நிகழவிருக்கும் நீர்க்கடனுக்கு ஆணைபெறும்பொருட்டு தங்களைக் காண்பதற்காக இங்கு வரவுள்ளார். இன்னும் சற்று பொழுதில் இங்கு வந்து சேர்வார். தாங்கள் ஒருக்கமாகியிருக்கவேண்டும் என ஆணை” என்றான். தேவிகையிடமிருந்து மறுமொழி எதுவும் எழவில்லை. தத்தளிப்புடன் அவன் பூர்ணையை நோக்க அவள் தாழ்ந்த குரலில் “நூறுமுறை கூவினாலும் இதுவே எதிர்வினையாக இருக்கும்” என்றாள். ஏவலன் விடைபெறும் முகமாக தலைவணங்கி தயங்கிய காலடிகளுடன் வெளியே சென்றான். அவள் உடன் சென்றாள்.

ஏவலன் வெளியே நின்றான். அவள் அணுகியதும் “இங்கு காசிநாட்டு அரசி இல்லையா?” என்றான். “காசிநாட்டு அரசி பலந்தரை தன் உடன்பிறந்தாருடன் சென்றிருக்கிறார்” என்று பூர்ணை சொன்னாள். “அங்கா? அங்கு… அவர்கள்…” என்றபின் “அவர்கள் மூவரையும் அரசர்கள் சந்திப்பதாக திட்டம். அரசியர்களை அரசர்கள் சந்தித்து நாளை நீர்க்கடனின்போது அவர்கள் ஆற்ற வேண்டிய பணியைக் குறித்து கூறவேண்டுமென்பது தௌம்யரின் ஆணை. அதன் பொருட்டே அரசர் இங்கு வருகிறார். இவர்களிருவரும் ஒரே குடிலில் இருப்பதை நான் அறியவில்லை” என்றான். அவன் குழம்பிப்போயிருந்தான். “செய்தியை நான் கூறிவிட்டேன் என்று சொல்வதா?” என்று கேட்டான். பூர்ணை ஒன்றும் சொல்லவில்லை.

பிறிதொரு ஏவலன் அணுகி வந்து “மத்ரநாட்டு அரசி விஜயைக்கு அரசரின் தூதுடன் வந்துள்ளேன்” என்றான். முதல் ஏவலன் அவன் தோளில் தட்டி “ஏற்கெனவே நான் அறிவித்திருக்கிறேன்” என்றான். அவன் “என் பணி…” என்று குழம்ப “இவளிடம் சொன்னால் போதும்” என்றான் முதல் ஏவலன். “காசிநாட்டு அரசி பலந்தரையிடம் நீங்கள் உங்கள் செய்தியை அறிவிக்கலாம். அவர்கள் தங்கள் மூத்தவர்களுடன் அக்குடிலில் இருக்கிறார்கள்” என்று பூர்ணை சொன்னாள். “முறைப்படி அது அஸ்தினபுரியின் பகுதி. அங்கு இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலனாக நான் செல்ல அனுமதி உண்டா என்று தெரியவில்லை. இன்னமும் நமது அரசர் அஸ்தினபுரி ஆட்சியை முறைப்படி கைக்கொள்ளவில்லை. அஸ்தினபுரி பேரரசர் திருதராஷ்டிரர் ஆட்சியில்தான் உள்ளது” என்றான் ஏவலன்.

“இந்த முறைமைச்சிக்கல்களுக்கு நான் ஒன்றும் கூற முடியாது” என்று பூர்ணை சலிப்புடன் சொன்னாள். ஏவலன் “நன்று, நமக்குரிய பணியை ஆற்றிவிட்டோம். அரசர்களிடம் அதை தெரிவிப்போம்” என்று சொல்லிவிட்டு இன்னொருவனின் தோளில் தட்டினான். இருவரும் கிளம்பிச்சென்றார்கள். பூர்ணை உள்ளே சென்று அரசியரைப் பார்த்தாள். அவர்களின் முகங்கள் முகத்திரைகளுக்குள் விழித்திருப்பது தெரிந்தது. எப்படி இப்படி அமரமுடிகிறது? உளநலம் குன்றியவர்களால் மட்டுமே அப்படி நெடுநேரம் செங்குத்தாக அமரமுடியும். அவர்களின் உள்ளத்தின் இறுக்கம் உடலிலும் அமைந்துவிடுகிறது. அவர்களின் உள்ளம் ஓய்வுகொள்வதே இல்லை. அவள் அவர்களை நோக்கியபடி சற்று நேரம் நின்றாள். அவளுக்கு சிறு அச்சமொன்று ஏற்பட்டது. இள அகவையிலிருந்து அவள் அறிந்த அரசியல்ல அவள் என தோன்றியது.

பூர்ணை வெளிவந்து குடில் வாயிலில் சிறு மூங்கில் பீடத்தில் அமர்ந்தாள். ஒன்றும் நிகழாமல் பொழுது கடந்துகொண்டிருந்தது. வெயில் முற்றத்தில் நிறைந்து நின்றது. ஓசையின்றி வெயில் பொழிவதன் விந்தையை அவள் ஒரு கணத்தில் கண்டாள். மண்ணை வெம்மை கொள்ளச்செய்து, இலைகளை ஒளிரவைத்து, அனைத்து உயிர்களையும் துலங்க வைக்கும் பொழிவு முற்றிலும் ஓசையின்றி நிகழ்கிறது. முற்றிலும் ஓசையின்றி எனும் சொல்லை அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். முற்றிலும் ஓசையின்றி. முற்றிலும் ஓசையின்றி நிகழ்பவை மிகமிக மென்மையானவை. மென்மையானவை எங்கும் முரண்கொள்ளாதவை. எதிலும் உரசிக்கொள்ளாமல் எதிலும் முட்டிக்கொள்ளாமல் இயங்குபவை. உயவு போடப்பட்ட கதவுகள்போல. வெண்கலத்தாலான பொருட்களைப்போல. இது வெள்ளி. இது வெண்பளிங்கு.

வெயிலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தபோது அவள் உள்ளம் விரிந்து விரிந்து சென்று அமைதியடைந்தது. விரியும்போது அடர்த்தி குறைந்துவிடுகிறது. குவிகையில் கூர் எழுகிறது. எடை உருவாகிறது. செறிவு நிகழ்கிறது. விரிகையில் அனைத்தும் தளர்ந்து எடையிழந்துவிடுகின்றன. வெம்மையழிந்து குளிர்கொள்கின்றன. அவள் விழிகள் மெல்ல சரிந்தன. துயிலில் என தலை அசைந்தது. ஆனால் உள்ளம் ஓடிக்கொண்டேதான் இருந்தது. அவள் அங்கிருப்பதை அவளே நோக்கிக்கொண்டிருந்தாள். அவளுடைய இன்னொரு துளி சிபிநாட்டில் இருந்தது. அங்கே அவள் சிறுமியாக இருந்தாள். அங்கே எங்கும் வெயில்தான் நிரம்பி அலைகொண்டிருக்கும். வெயிலைப்பற்றித்தான் அவர்களின் மொழியில் பெரும்பாலான பழமொழிகள். அங்குள்ள மரங்களின் இலைகள் வெயிலில் வாடுவதில்லை. அங்குள்ள குழந்தைகள்கூட வெயிலில் துன்புறுவதில்லை. அந்த மண் வெயிலில் வறுபட்டுக்கொண்டே இருப்பது. ஆகவே மிகமிகத் தூய்மையானது. அங்கே எதையும் நீரில் கழுவுவதில்லை. ஆடைகளையும் கலங்களையும்கூட வெயிலில் வைத்து உலரச்செய்து புழுதிதட்டி எடுத்துக்கொள்வார்கள். அனைத்தையும் தூய்மைப்படுத்தும் பொழிவு அது.

இத்தனைக்குப் பிறகும் வெயில் பொழிந்துகொண்டுதான் இருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் புலரியின் இளவெயிலுக்காக அவள் ஏங்கினாள். இரவெல்லாம் தொடர்ந்து மழை பெய்து அரண்மனைச் சுவர்களும் முற்றமும் குளிர்ந்து விறைத்திருந்தன. அதற்கு முன்னரும் அவள் பெருமழைகளை கண்டதுண்டு என்றாலும் மழையிலிருந்து அத்தனை கடுங்குளிர் எழுமென்று அவள் அறிந்ததில்லை. மரவுரிகளை மேலும் மேலும் உடல் மேல் போர்த்திக்கொண்டாலும்கூட உள்ளிருந்து குளிர் வெளிவந்து தசைகளை விதிர்க்கச் செய்தது. எலும்புத்தண்டுகள் உலோகம் எனக் குளிர்ந்துவிட்டவை போலிருந்தன. குளிரில் விரல் மூட்டுகள் வலிகொண்டன. பற்கள் கிட்டித்துக்கொண்டு தாடை வலியெடுத்தது. பகலில்கூட நெடுநேரம் கதிரொளி எழவில்லை.

முதல் கதிர் எழுந்து சற்றே முற்றம் துலங்குகையில் அவள் சென்று அவ்வெயிலில் அமர்ந்துகொண்டாள். வெயில் அவள் மேல் பொழிந்து நெடுநேரத்திற்குப் பின்னரே மெல்லிய வெம்மையை உணரமுடிந்தது. அது குருதியை சூடாக்கியது. எண்ணங்களை அசைவு கொள்ளச்செய்தது. ஈரத்தை உதறி சிறகுகள் கொண்டு ஒவ்வொரு சொற்களாக முளைத்து எழுந்து பறக்கத்தொடங்கின. ஆனால் உடனே முகில்வாயில்கள் ஓசையிலாது மூடிக்கொள்ள வெயில் பொழிவு அறுபட்டது. ஒவ்வொரு இலையாக இருண்டமைய நிலம் கருமை கொண்டு மறைந்தது. தொடர்ந்து நின்று பெய்துகொண்டிருந்து மழை. ஒவ்வொரு துளி வெயிலுக்கும் அவள் முற்றத்திற்கு ஓடிவந்தாள். வெயிலில் அமர்ந்து விழிமூடிக்கொள்கையில் மெல்ல அனைத்திலிருந்தும் விடுபட்டாள்.

தேவிகை சிபிநாட்டில் இருந்திருந்தால் அவளை ஆடையின்றி வெயிலில் அமரச்செய்திருப்பார்கள் மூதன்னையர். வெயில் அனைத்தையும் உலரச்செய்யும். தூய்மைப்படுத்தும். விழியிமைகளினூடாக, தோலினூடாக உள்ளே செல்லும். அகத்தில் ஒளியாக நிறையும். வெயிலாட்டு சிபிநாட்டின் உவகைகளில் ஒன்று. அதுவே மருத்துவமும் கூட. அங்கே அத்தனை விலங்குகளும் வெயிலில் விழிசொக்கிக் கிடக்கும். சிபிநாட்டிலிருந்து வந்தபின் ஒருநாளாவது தேவிகை வெயிலில் அமர்ந்திருப்பாளா? இங்கே அரசியருக்கு திறந்த வானமே இல்லை. அவர்களை மாளிகைகளும் பல்லக்குகளும் பட்டுக்குடைகளும் முகத்திரைகளும் ஆடைகளும் அணிகலன்களும் மூடியிருக்கின்றன.

உபப்பிலாவ்யத்திலிருந்து அவர்கள் கிளம்புவதற்கு முந்தையநாள் வரை தொடர் மழைப்பொழிவு இருந்தது. முக்தவனத்திற்கு வந்தபின்னர்தான் பூர்ணை வெம்மையை பெருக்கும் வெயிலை பார்த்தாள். அவள் விழிதிறந்து சரியும் இமைகளுடன் வெயிலை நோக்கிக்கொண்டிருந்தாள். தரை வெம்மை கொண்டு கூழாங்கற்கள் ஒவ்வொன்றும் நிறம் மாறின. நிழல்கள் குறுகி அணைந்தன. காற்றில் பஞ்சுச் சருகுகளுடன் சிறிய விதைகள் பறந்தலைந்தன. மணியோசையுடன் ஏவலர்கள் இருவர் பசுக்களை கூட்டிச் சென்றனர். செவிகளை அடித்தபடி சிறுமணி ஓசையுடன் அவற்றின் கன்றுகளும் பின்னால் சென்றன. அவற்றின் மென்மையான மயிரடர்ந்த முதுகின்மேல் வெயில் எண்ணையென வழிந்து மெருகு காட்டியது. அவள் துயிலில் மேலும் மேலும் ஆழ்ந்தாள். அவளுக்குள் வெயில் நிறைந்திருந்தது.

 

அப்பாலிருந்து சங்கொலி கேட்க அவள் எழுந்து மேலாடையை சீர்செய்து மார்பின்மேல் கைகளைக் கோத்தபடி நின்றாள். ஒரு பல்லக்கு அசைந்து அருகணைந்தது. அதன் முகப்பில் சங்கொலியுடன் காவல்வீரன் ஒருவன் வந்தான். பல்லக்கின் பின்புறம் நான்கு வீரர்கள் கைகளில் வேலுடன் நடந்து வந்தனர். பல்லக்குத் திரைகள் நலுங்கி அசைந்தன. அதிலிருந்த மின்படைக்கொடி காற்றிலாது தொங்கிக்கிடந்தது. பல்லக்கு அருகணைந்து நிற்க அவள் கைகூப்பி தலைவணங்கினாள். பல்லக்கை மெல்ல தரையில் வைத்தனர் போகியர். ஒருவன் திரைவிலக்க உள்ளிருந்து சகதேவன் இறங்கினான். தொடர்ந்து யுதிஷ்டிரன் இறங்கி தன் மேலாடையை சீர்செய்தபடி குடிலை கூர்ந்து நோக்கினார்.

பூர்ணை முன்னால் சென்று தலைவணங்கி முகமன் ஏதும் உரைக்காமல் நின்றாள். “உன் பெயர்தான் பூர்ணையா?” என்றார். “ஆம் அரசே, நான் சிபிநாட்டவள். பேரரசியின் செவிலி. முன்பு பலமுறை தங்களைக் கண்டதுண்டு” என்றாள். யுதிஷ்டிரன் விழிகளைச் சுருக்கி “ஆம், உன் முகம் பார்த்ததும் உன்னை பலமுறை கண்டிருப்பதை நினைவுகூர்கிறேன். உன் பெயர் என் நினைவில் இல்லை” என்றார். “அரசிக்குரிய சீர்பொருட்களுடன் சிபிநாட்டிலிருந்து இங்கு வந்தவள் நான். அன்று அந்த சேடியர்நிரையை தலைமை கொண்டேன்” என்றாள். “ஆம், நினைவுள்ளது” என்று பொருட்டின்றி கூறிய யுதிஷ்டிரன் “அரசி எந்நிலையில் இருக்கிறாள்?” என்றார். “சொல்லறிகிறார்” என்றாள் பூர்ணை.

யுதிஷ்டிரன் அவளை கூர்ந்து நோக்கி “நீ நூல்கற்றவளா?” என்றார். “ஆம்” என்று பூர்ணை சொன்னாள். யுதிஷ்டிரன் திரும்பி சகதேவனிடம் “வருக!” என்று சொல்லி குடிலுக்குள் நுழைந்தார். சகதேவனும் உடன் நுழையப்போய் ஒருகணம் தயங்கி பூர்ணையிடம் “இரு அரசியரும் உள்ளே இருக்கிறார்களா?” என்றான். “ஆம், உள்ளே இருக்கிறார்கள்” என்றாள் பூர்ணை. யுதிஷ்டிரன் நின்று “வருக!” என்று கைகாட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். பூர்ணை முற்றத்திலேயே நின்றாள். சகதேவன் “அவர்கள் பேசுகிறார்களா?” என்றான். பூர்ணை “இல்லை” என்றாள். “நீயும் உள்ளே வா” என்றான் சகதேவன். அவள் உடன் நுழைந்து கதவோரமாக நின்றுகொண்டாள்.

யுதிஷ்டிரன் குடிலுக்குள் நுழைந்தபோது இரு அரசியரும் அதை அறியாதவர்போல் அமர்ந்திருந்தனர். ஒருகணம் அவர்களை அரசியரென்று உணராதவர்போல் யுதிஷ்டிரன் தடுமாறினார். திரும்பி பூர்ணையைப் பார்த்து “அவர்கள் நலமாக இருக்கிறார்களா?” என்றார். பூர்ணை விழிநிமிர்த்தி “மைந்தரை இழந்த அன்னையர் எவ்வண்ணம் இருக்க இயலுமோ அப்படி இருக்கிறார்கள்” என்றாள். அக்குரலிலிருந்த கூர்மை யுதிஷ்டிரனை திடுக்கிட வைத்தது. திரும்பி இரு அரசியரையும் பார்த்தார். அவர்களிருவரும் எழுந்து முகமன் உரைக்கவில்லை என்பதை அதன் பின்னரே அவர் உணர்ந்தார். அவரை அறியாமலேயே அவர் உடல் வெளியே செல்லும்பொருட்டு அசைவுகொண்டது. அதை உணர்ந்து அவரே தடுத்தார். அரைக்கணம் அவர் நோக்கு பூர்ணையை வந்து தொட்டது. அத்தடுமாற்றத்தை மறைக்க விரும்பி எதையாவது பேச விழைந்தார்.

“கரேணுமதி இங்கே வரவில்லையா?” என்றார். “அவர் சேதிநாட்டுக்குச் சென்று நெடுநாட்களாகின்றன. தான் எவரென்றே தெரியாதவராக நோயுற்றிருக்கிறார்” என்றாள் பூர்ணை. “ஆம், மறந்துவிட்டேன்… அவள் சென்று நீணாள் ஆகிறது” என தடுமாற்றத்துடன் யுதிஷ்டிரன் சொன்னார். “அங்கே உத்தரையும் இருக்கிறாள் இல்லையா?” என்றார். “அரசே, விராடநாட்டு இளவரசி துவராகையில் உடல்நலம் இல்லாமலிருக்கிறார்.” யுதிஷ்டிரன் “ஆம், செய்தி சொல்லப்பட்டது… அவள் கருவுற்றிருக்கிறாள். நீண்ட பயணம் நன்றல்ல… துவாரகையிலிருந்து சுபத்திரை வந்துவிட்டாளா?” என்றார். “நேற்றுமாலையே வந்துவிட்டார்… தனிக்குடிலில் இருக்கிறார்” என்றாள் பூர்ணை. அவருடைய தடுமாற்றம் அப்பேச்சால் மட்டுப்பட்டது. மீண்டும் அவர்களை நோக்கி தேவிகையை அடையாளம் கண்டுகொண்டு அவளருகே சென்று “அரசி” என்றார். தேவிகை அக்குரலை கேட்கவில்லை. மீண்டும் உரக்க “அரசி!” என்று அவர் அழைத்தார்.

பூர்ணை முன்சென்று தேவிகையின் தோளைப்பற்றி மெல்ல உலுக்கி “அரசி!” என்றாள். தேவிகை மெல்ல விழிப்புகொண்டு “யார்?” என்றாள். நீண்டநாட்களுக்குப் பின் அக்குரலைக் கேட்பதுபோல் உணர்ந்து பூர்ணை திடுக்கிட்டாள். “அரசர் தங்களை பார்க்க வந்திருக்கிறார்” என்று கூறி முகத்திலிட்ட திரையை பின்னால் இழுத்தாள். “அரசரா?” என்றபடி எழுந்த தேவிகை யுதிஷ்டிரனை ஒருகணம் நேருக்கு நேர் பார்த்தாள். யுதிஷ்டிரனும் அவள் முகத்தைப் பார்த்து வாய் திறந்து செயலற்று நின்றார். அவள் முகத்திரையை மீண்டும் இழுத்து தன் முகத்தின் மேல் விட்டுக்கொண்டு மஞ்சத்தில் மீண்டும் அமர்ந்தாள். இரு கைகளையும் விரல்கோத்து மடிமேல் வைத்துக்கொண்டு தோள்களை குறுக்கிக்கொண்டாள்.

யுதிஷ்டிரன் “அரசி!” என்றார். தேவிகை மறுமொழி கூறவில்லை. “என்ன ஆயிற்று அவளுக்கு? அவள் உள்ளம் நிலையில் இல்லையா?” என்றார். பூர்ணை “தாங்கள் வந்திருப்பது அரசமுறைமையின் பொருட்டென்றால் அதற்குரிய சொற்களை அரசியிடம் கூறலாம். அரசி இன்று இந்த நிலையில் தங்கள் முன் உள்ளார்” என்று கூறினாள். யுதிஷ்டிரன் அவள் முகத்தை சில கணங்கள் கூர்ந்து பார்த்துவிட்டு ஆம் என்பதுபோல் தலையசைத்தார். பின்னர் தேவிகையை நோக்கி “அரசி, இங்கு நாங்கள் நீர்க்கடனுக்கான நோன்பு பூண்டு அமர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்திருப்பாய். நமது மைந்தர் விண்ணேகும்பொருட்டு நாளை இங்கு நீர்க்கடன்கள் செய்யப்பட இருக்கின்றன. புலரியில் உன் கையிலிருந்து நீர் பெற்று சொல் கொண்டு செல்லும்பொருட்டு இங்கு வருவேன்” என்றார்.

“நமது மைந்தனைக் குறித்து…” என்றபின் மேற்கொண்டு என்ன சொல்லவேண்டுமென்று அறியாது திகைத்து பின் சொல்திரட்டி “நம் மைந்தன் வீரர்களுக்குரிய இறப்பை அடைந்தான். ஒளிர்ந்த வானை நோக்கி போர்க்களத்திலிருந்து எழுந்தான். மூச்சுலகில் நம் சொற்களுக்காக காத்திருக்கிறான். நம் கையிலிருந்து அன்னமும் நீரும் பெற்று மூதாதையர் உலகுக்கு செல்லவிருக்கிறான். அவன் அங்கு நிறைவுறுக! பிறவிச்சுழலில் அமைந்து முழுமையுற அன்னையென்றும் தந்தையென்றும் நின்று மைந்தனுக்கென நாம் ஆற்றுவதற்கிருப்பது இது மட்டுமே” என்றார். உரிய சொற்களை முறைப்படி கூறிவிட்ட நிறைவை அடைந்து பூர்ணையைப் பார்த்து “இச்சொற்களை அவர்கள் கேட்கிறார்களா?” என்றார்.

“ஆம் அரசே, அவர்கள் கேட்கிறார்கள்” என்று பூர்ணை சொன்னாள். எரிச்சலுடன் “பொருள் கொள்கிறார்களா?” என்றார் யுதிஷ்டிரன். பூர்ணை “பொருள் கொள்கிறார்கள். நீங்கள் எண்ணியவாறே பொருள் கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது” என்றாள். “எண்ணியவாறு சொற்களுக்கு பொருள் கொள்வதற்குப் பெயர்தான் உரையாடல் என்பது” என்றார் யுதிஷ்டிரன். பூர்ணை “எப்போதேனும் பெண்டிர் அவ்வண்ணம் பொருள் கொண்டிருக்கிறார்களா?” என்றாள். யுதிஷ்டிரன் அவள் கண்களையே நோக்கி நின்றார். “அல்லது அவர்களின் சொற்கள் உங்களால் பொருள் கொள்ளப்பட்டுள்ளனவா?” என்றாள்.

“நீ எவரிடம் பேசுகிறாய் என்று நினைவிருக்கிறதா?” என்று உரத்த குரலில் யுதிஷ்டிரன் கேட்டார். “ஆம். குருக்ஷேத்ரப் போரில் பெருவெற்றி கொண்டு இந்திரப்பிரஸ்தத்துக்கும் அஸ்தினபுரிக்கும் மணிமுடி சூடி அமரப்போகும் பாரதவர்ஷத்தின் முதற்பெரும் சக்ரவர்த்தியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். அக்குரலில் இருப்பதென்ன என்று அறியாமல் யுதிஷ்டிரன் சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “செல்க!” என்பதுபோல் கைவீசி திரும்பி சகதேவனிடம் “இளையோனே, உரிய சொற்களை நீயும் கூறிவிட்டு வருக! இதுவும் நமக்கு தெய்வங்கள் ஒருக்கிய ஒரு தருணம் போலும்” என்றார். சகதேவன் பூர்ணையை நோக்கிவிட்டு யுதிஷ்டிரனிடம் “ஆம்” என்றான்.

யுதிஷ்டிரன் வெளியேற சகதேவன் “விஜயை…” என்றான். விஜயை அசையாமல் அமர்ந்திருந்தாள். “விஜயை” என்று மீண்டும் அவன் அழைத்தான். “விஜயை, நான் உன்னிடம் பேசும்பொருட்டு வந்தேன். விஜயை, என் குரலை கேட்கிறாயா? விஜயை” என்றான். அவள் அசைவிலாது ஒலியிலாது அமர்ந்திருக்க அவன் தவிப்புடன் பூர்ணையை பார்த்தான். பின்னர் “அவளுடைய சேடி எங்கே?” என்றான். “இளஞ்சேடி ஒருத்தியே உடனிருக்கிறாள். அவள் அப்பால் நிற்கிறாள்” என்றாள் பூர்ணை. “அவளை அழைத்து என் வருகையைக் கூறு” என்றான். பூர்ணை அருகணைந்து விஜயையின் தோளைப் பற்றி மெல்ல உலுக்கி “அரசி” என்றாள். “ஆம்” என்று அவள் கூறினாள். “தங்கள் அரசர் தங்கள் சொல்பெறும்பொருட்டு வந்திருக்கிறார்” என்றாள் பூர்ணை. விஜயை “ஆம்” என்று மீண்டும் கூறினாள்.

சகதேவன் “விஜயை, நான் உன் துணைவன். உன்னிடம் கூற எனக்கு சொல்லெதுவும் இல்லை. நம் மைந்தனின் பொருட்டு நீ அடையும் துயரத்தை நானும் அடைகிறேன். சற்றும் குறைவிலாமல்… அதுவன்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்னிடம்” என்றான். சில கணங்கள் அவளுடைய எதிர்வினைக்காக எதிர்பார்த்துவிட்டு “நீ என்னை தீச்சொல்லிட விழைந்தால் அவ்வாறே செய்யலாம். பழியென ஏதேனும் கூற விரும்பினாலும் அதுவும் ஆகுக!” என்றான். மீண்டும் சில கணங்கள் காத்திருந்துவிட்டு “நீ அனலென எரிந்துகொண்டிருப்பாய் என்று எண்ணினேன்” என்றான்.

அவள் முகத்தை நோக்கி அவன் நின்றான். பின்னர் உடைந்த குரலில் “நான் முன்னரே இறந்துவிட்டவன்போல் உணர்கிறேன். ஒரு தருணத்திலும் உளம் மறந்து துயிலவில்லை. இப்பெருந்துயரில் மீட்பிலாது சிக்கியிருக்கிறேன். இப்புவியில் எவரிடமேனும் என் தன்னிலையை முற்றழித்து பேசமுடியும் என்றால் அது உன்னிடம்தான். ஒருபோதும் உன்னிடம் அவ்வாறு நான் பேசியதில்லை என்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன். இங்கெல்லாம் ஐவரில் ஒருவனாக மட்டுமே நின்றிருக்கிறேன். உன்முன் இப்போது முற்றிலும் தனிமையாக வந்து நின்றிருக்கிறேன்” என்றான்.

மீண்டும் சற்று நேரம் அவள் மறுமொழிக்காக எதிர்பார்த்துவிட்டு “இவ்வாறு உன்முன் வந்து நின்றுள்ளேன் என்பதையாவது நீ ஏற்றுக்கொள்க! இங்கு நின்றிருப்பவன் இறந்தகாலமும் எதிர்காலமும் இல்லாத எளிய மானுடன். துயர் மட்டுமே தனக்கென கொண்ட சிற்றுயிர். அதையாவது நீ அறிந்திருக்கிறாயா? அது மட்டும் நான் அறிய விரும்புகிறேன்” என்றான். உடலில் மெல்லிய நடுக்கத்துடன், நெஞ்சில் கூப்புவதுபோலக் குவிந்த கைகளுடன், அவன் விஜயையின் எதிர்வினைக்காக காத்து நின்றான். அவன் முகம் வலிப்புகொண்டதுபோல் இழுபட்டது. பற்கள் வெளித்தெரிந்தன. கண்ணீர் வழிந்து முகவாய் நுனியில் துளித்து நின்றது. “எச்சொற்களையும்விட நீ அளிக்கும் இந்த சொல்லின்மை கொடியது. நன்று, அதற்கு தகுதியானவனே. பிறிதொன்றில்லை” என்றபின் வெளியே சென்றான்.

விஜயை மெல்லிய முனகலோசை எழுப்பியதுபோல் தோன்ற திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தான். ஒரு சொல் எழக்கூடுமென்பதுபோல் எதிர்பார்த்து நின்றான். பின்னர் பூர்ணையைப் பார்த்து ஏதோ சொல்லெடுக்க வாய் திறந்தபின் திரும்பி வெளியே சென்றான். பூர்ணை விஜயையின் முகத்தின் மீது சரிந்திருந்த ஆடையை சீரமைத்துவிட்டு அவனுடன் வெளியே சென்றாள். அவன் செல்கையில் குடிலின் வாயில் மூங்கிலை பற்றிக்கொண்டு நின்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். அவன் உடல் அப்போதும் நடுங்கிக்கொண்டிருந்தது.

குடிலுக்கு வெளியே யுதிஷ்டிரன் அவனுக்காக காத்து நின்றிருந்தார். பூர்ணை வெளியே சென்று கைகளை நெஞ்சில் சேர்த்து நின்றாள். “இருவரும் இந்நிலையில்தான் அன்றும் இருந்தார்களா?” என்றார் யுதிஷ்டிரன். “ஆம் அரசே, நால்வரும் இவ்வாறுதான் இருக்கிறார்கள்” என்று அவள் சொன்னாள். “மைந்தரின் இறப்புக்குப் பின் இங்ஙனம் ஆனார்கள் போலும்” என்றார் யுதிஷ்டிரன். “இல்லை அரசே, அவர்கள் போர் தொடங்கும்போதே உளமழியத் தொடங்கிவிட்டிருந்தனர். அபிமன்யுவின் இறப்புநாளில் நால்வருமே முற்றிலும் சொல்லழிந்தனர்” என்றாள் பூர்ணை.

யுதிஷ்டிரன் வியப்பில் புருவங்கள் உயர அவளை பார்த்தார். பின்னர் “பலந்தரை எங்கே?” என்றார். “அவர்களும் நிலையழிந்தே இருந்தார்கள். இன்று வந்திறங்குகையில் மட்டுமே அவரிடம் சிறு மாற்றத்தை கண்டேன். தன் உடன்பிறந்தவரைக் காணும்பொருட்டு அங்கு கிளம்பிச்சென்றார்” என்றாள். “ஆம், கூறினார்கள். முறைப்படி திருதராஷ்டிரரின் ஒப்புதல் பெற்ற பின்னரே பீமன் அங்கு சென்று அவளை சந்திக்க இயலும். அவன் சென்று சந்திப்பான் என்று தோன்றவில்லை” என்றார். சகதேவன் “இளையவர் யாதவ அரசியை சென்று சந்திக்க வேண்டுமல்லவா?” என்றான். “ஆம், அதுவும் முறைதான்…” என்ற பின்னர் “அவள் எந்நிலையில் இருக்கிறாள் என்று தெரியவில்லை. பிறிதொரு நிலையிலிருக்க வாய்ப்பில்லை” என்று கூறி பல்லக்கை நோக்கி சென்றார்.

பூர்ணை கைகூப்பியபடி நின்றாள். அவர்கள் பல்லக்கிலேறிக்கொண்டு போகிகளின் மெல்லிய மூச்சொலிகளுடன் அகன்று செல்வதை நோக்கிக்கொண்டிருந்தாள். விஜயையின் சேடியான சந்திரிகை அருகே வந்து “அடுமனையிலிருந்து இன்நீர் கொண்டுவருவதற்காக சென்றிருந்தேன்” என்றாள். “நன்று. அவர்களுக்கு இப்போது தேவைப்படும். வருக!” என்றபடி பூர்ணை உள்ளே நுழைந்தாள். அவளுக்குப் பின்னால் வந்த சந்திரிகை “அரசர் வந்திருந்தபோது அரசியர் ஏதேனும் கூறினார்களா?” என்றாள். பூர்ணை “இல்லை” என்றாள்.

இன்நீரை சிறுகுவளையில் விட்டு விஜயையை அணுகி அவள் முகத்திரையை விலக்கி “அருந்துக, அரசி!” என்று கொடுத்தாள் சந்திரிகை. அவள் அதை உணரவில்லை. “அருந்துக, அரசி…” என்று கோப்பையை அவள் வாயருகே கொண்டுசென்றபோது விழிப்படைந்து இரு கைகளாலும் அதை பற்றிக்கொண்டு ஓரிரு மிடறுகள் உண்டாள். பின்னர் எஞ்சிய நீர் வாயிலிருந்து வழிய தலைகுனிந்தாள். “இன்னும் ஒரு மிடறு, அரசி” என்றாள் சந்திரிகை. பூர்ணை இன்நீர் கோப்பையுடன் தேவிகையின் தலையாடையை மெல்ல விலக்கியபோது அவள் உள்ளே உடல் இறுகி, கழுத்து நரம்புகள் புடைக்க, பற்கள் ஒன்றையொன்று இறுகக் கடித்திருக்க அமர்ந்திருப்பதை கண்டாள். அவள் கன்னத்தை தட்டி “அரசி! அரசி!” என்றாள். இன்நீர் கோப்பையின் விளிம்பையே அவள் பற்களுக்கிடையில் வைத்து நெம்பி வாயை திறந்தாள்.

தோளைப் பிடித்து பலமுறை உலுக்கியதும் தேவிகை உடல் தளர்ந்தது. “இன்நீர் அருந்துக, அரசி!” என்றாள் பூர்ணை. தேவிகையிடமிருந்து மறுமொழி எதுவும் வரவில்லை. கோப்பையை திரும்பி சந்திரிகையிடம் நீட்டியபின் தேவிகையின் இரு கைகளும் பற்றி தூக்கினாள். மெலிந்த விரல்கள் இறுக சுருண்டு நகங்கள் உள்ளங்கை சதைக்குள் ஆழப் புதைந்திருந்தன. “இன்நீர் ஊட்டுங்கள்” என்றாள் சந்திரிகை. “இப்போது உணவூட்டுவது நன்றல்ல. உடல் இறுகியிருக்கிறது. ஒருவேளை வலிப்பு வரக்கூடும்” என்று பூர்ணை கூறினாள். தேவிகையின் முதுகை வருடியபடி “இன்நீர்க் கலத்தை அங்கு வைத்துவிட்டுச் சென்று அகிபீனா கொண்டுவருக!” என்றாள். “ஆம்” என்றபின் சந்திரிகை வெளியே சென்றாள்.

வெண்முரசு விவாதங்கள்

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 45

பகுதி ஏழு : தீராச்சுழி – 1

முதுசேடி பூர்ணை தன் அரசி தேவிகையின் ஆடைகள் அடங்கிய மென்மரப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிவந்தாள். ஏவலன் அவளை நோக்கி ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டு தேரில் வைத்தான். தேவிகையும் பலந்தரையும் விஜயையும் அருகருகே நின்றிருந்தனர். மூவரின் முகங்களும் மேலாடையால் மூடப்பட்டிருந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. முகத்தின்மீது மேலாடையை இழுத்துவிட்டுக்கொள்வது பல நாட்களாகவே அவர்களின் வழக்கமாக ஆகிவிட்டிருந்தது. முகத்திரை சரிந்தாலே தலையும் குனிந்துவிடுகிறது. முகத்திரை அவர்களை புறஉலகத்திலிருந்து பிரித்தது. ஓசையில்லாமல் பொழிந்த அருவி ஒன்றிற்குள் நின்றிருப்பதுபோல. அவ்வப்போது அவர்கள் அதற்குள் இருந்து வெளிவந்து அறியா உலகைக் கண்டு திகைப்படைந்தனர்.

முற்றாகவே ஆடையால் மூடி அமர்ந்திருக்கையில் அது அவர்களை மண்ணுக்குள் புதைந்திருப்பதுபோல உணரச்செய்தது. வால்மீகி அமர்ந்த புற்று அது. அவர்களை உள்ளிட்டு மூடிக்கொண்ட வாயில் இல்லாச் சிறை. எவ்விழிகளையும் பார்க்க வேண்டியதில்லை, எவ்விழிகளும் அவர்களை பார்க்கப்போவதும் இல்லை. அந்தத் தனிமை துயரை பெருக்கியது. ஆனால் அது உகந்ததாகவும் இருந்தது. அத்திரைச்சீலையை இழுத்து அகற்றி தலைநிமிர்த்தி பிறரை நோக்கத் தொடங்கினால் அத்தனிமையை கடந்துவிடலாம். அதை அவர்களால் இயற்ற இயலவில்லை. அதற்குள் காலமிருக்கவில்லை. ஆகவே அவர்கள் பகலிரவுகளை அறியவில்லை. அத்திரை வெண்ணிற வான்வெளிபோல் அவர்களைச் சூழ்ந்திருந்தது. அவர்களிடம் சொல்லப்படும் சொற்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து அவர்களைச் சென்றடைந்தன.

நீர்க்கடனுக்கு அவர்கள் கிளம்பிச்செல்லவேண்டுமென்ற ஆணையுடன் துணையமைச்சர் சந்திரசேனர் வந்தணைந்தபோது உபப்பிலாவ்யத்தின் முகப்புக்கூடத்தில் அவர்கள் அமர்ந்திருந்தனர். சந்திரசேனர் அதைக் கூறி தலைவணங்கி இரண்டடி பின்வைத்தார். மூவரும் தங்கள் திரைகளுக்குள் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். நெடும்பொழுதுக்குப் பின் தேவிகை பெருமூச்சுவிட்டு அசைவுகொண்டாள். அவள் சொற்கள் என பூர்ணை “நன்று, இன்றே நாங்கள் கிளம்புகிறோம்” என்றாள். சந்திரசேனர் அச்சொற்களை தேவிகை பேசினாளா என திகைப்பவர்போல நோக்கிவிட்டு “இன்றல்ல, நாளை புலரியில்கூட கிளம்பலாம், பொழுதிருக்கிறது” என்றார்.

“இல்லை, இவ்வாணை வந்த பின்னர் இங்கே காத்திருப்பதுதான் கடினமானது” என்று பூர்ணை கூறினாள். “இங்கு காத்துக்கொண்டிருப்பதே எங்கள் ஊழென்றாகி நெடுநாட்களாகிறது. ஆயினும் இனிமேல் காத்திருக்க இயலாது.” சந்திரசேனர் திகைப்புடன் மீண்டும் அரசியரை நோக்கிவிட்டு “அவ்வாறே” என்று தலைவணங்கி வெளியே சென்றார். அதன் பின்னர் மூவரும் அவ்வறையில் அசைவிலாது அமர்ந்திருந்தனர். மீண்டும் நெடும்பொழுது கழிந்து பூர்ணை வேண்டுமென்றே காலடி ஓசை எழுப்பி அருகணைந்து தலைவணங்கினாள். விஜயை மூடுதிரையை விலக்கி சற்றே அவளை பார்த்தாள். “நாம் இங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும், அரசி. காவலர்தலைவரிடம் ஆணைகளை அளிக்கிறேன்” என்றாள். அவள் தலையசைத்தாள்.

ஏவற்பெண் சந்திரிகை வந்து தலைவணங்கினாள். “நாம் உடனே கிளம்புகிறோம். அனைத்து ஒருக்கங்களையும் செய்ய காவலர்தலைவரிடம் கூறுக!” என்றாள் பூர்ணை. “பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?” என்று சந்திரிகை கேட்டாள். பூர்ணை “பொருட்கள் என எதை எடுத்துக்கொள்வது?” என்றாள். சந்திரிகை “எப்படியும் ஆடைமாற்றியாகவேண்டும். மருத்துவப் பொருட்கள் உள்ளன… என்றாள். பூர்ணை தேவிகையை திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு அகிபீனா அளிக்கலாமா என்று அவள் மருத்துவரிடம் கேட்டபோது அவர் புன்னகைத்து “அகிபீனா உண்டு வரும் நிலையில்தான் இப்போதே இருக்கிறார்கள்” என்றார். தேவிகையின் உடலில் அசைவு ஏதும் தென்படவில்லை. அவள் வெளியே செல்ல அவர்கள் மூவரும் அசைவில்லாது அங்கேயே அமர்ந்திருந்தனர்.

சாளரத்துக்கு வெளியே வெயில் அணைந்து நிழல்கள் நீண்டு அறைக்குள் சரிந்தன. பூர்ணை உள்ளே வந்து “தேர்கள் ஒருங்கியிருக்கின்றன, அரசி. இங்கிருந்து உஜ்வலம் எனும் துறை வரை தேர். அங்கிருந்து படகில் முக்தவனம் வரை சென்றுவிடலாம்” என்றாள். விஜயை எழுந்து தன் அறைக்குச் செல்வதற்கென திரும்ப, தேவிகையும் எழுந்து உடன் சென்றாள். “பொருட்கள் அனைத்தும் தேரில் ஏற்றப்பட்டுவிட்டன, அரசி” என்றாள் பூர்ணை. தேவிகை நின்று திரும்பி அங்கிருந்தே தேர்முற்றத்தை நோக்கி சென்றாள். பலந்தரை எழுந்து தேவிகைக்குப் பின்னால் செல்ல விஜயை திரும்பி அவர்களைத் தொடர்ந்தாள். அவர்கள் நிழல்கள்போல நடந்தனர். அவர்களின் ஆடைகள் காற்றில் மெல்ல உலைந்தன.

அவர்கள் மூவரும் தேர்முற்றத்தில் நின்றிருந்த மூடுதிரையிட்ட தேரில் ஏறி மஞ்சங்களில் அமர்ந்தனர். பூர்ணை வெற்றிலைப் பேழையுடன் தேருக்குள் ஏறிக்கொண்டாள். திரைகள் சரிந்து அவர்களை மூடின. மூடுதிரையிட்ட தேருக்குள்ளும் அவர்கள் முகத்திரையுடனே இருந்தனர். அதை விலக்க வேண்டுமெனும் எண்ணம் அவர்களுக்கு எழவில்லை. அவர்களின் சொல்லின்மை பூர்ணையையும் பற்றிக்கொண்டது. நெடும்பொழுதுக்குப் பின் நீள்மூச்சுடன் கலைந்து தேரின் முகப்புத்திரையை விலக்கி அமரத்திலிருந்த ஏவலனை பார்த்தாள். “காவல் வீரர்கள் அணிநிரந்து கொண்டிருக்கிறார்கள், அரசி. இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடலாம்” என்று அவன் கூறினான். அவள் மறுமொழி எதுவும் சொல்லாமல் திரையை மூடினாள்.

தேர் திடுக்கிட்டு கிளம்புவது வரை அவர்கள் அங்கிலாததுபோல் இருந்தனர். தேரின் அசைவுகளுக்கு ஏற்ப அவர்கள் உடல் அசையத் தொடங்கியது. அதுவரை சொல்லின்றி இருந்த அவள் உள்ளமும் அசையத் தொடங்கியது. ஒன்றுடன் ஒன்று பொருந்தாத நினைவுகள் தொட்டுத் தொட்டு ஓடத்தொடங்கின. விஜயை நெடும்பொழுதுக்குப் பிறகு நீள்மூச்செறிந்து கால்களை நீட்டி கைகளை மார்பில் கட்டிக்கொண்டு தலையை தேர்த்திண்டில் சாய்த்தாள். தேவிகையும் உடலை எளிதாக்கிக்கொண்டாள். பலந்தரை தொடக்கம் முதலே மரப்பாவை என்று அமர்ந்திருந்தாள். தேர் குலுக்கிக்கொண்டபோது கூண்டுகளிலும் விளிம்புகளிலும் அவள் உடல்தான் மிகுதியாக முட்டிக்கொண்டது. அவள் அதை அறியவே இல்லை என்று தோன்றியது.

தேர் செல்லச் செல்ல அவர்கள் துயின்று ஆளுக்கொரு திசைக்கு சாய்ந்தனர். தேர் குழியொன்றில் விழுந்தெழுந்தபோது பலந்தரையின் நெற்றி விசையுடன் கூண்டில் மோதியது. அவள் கண்களை விழித்து பொருளின்றி அந்தக் கூண்டு விளிம்பை நோக்கியபின் விழிமூடிக்கொண்டாள். சற்று நேரத்தில் பிறிதொரு குழியில் சகடம் விழ தேவிகையின் தலை தேர்க்கூண்டில் மோதியது. அவள் அரைவிழி திறந்து நேர் நோக்கில் அவ்வண்ணமே நெடுநேரம் நிலைத்து மீண்டும் விழி மூடினாள். தேரின் மூங்கில்தூண்கள் கழிகளாகி அவர்களை அறைந்துகொண்டிருப்பதுபோல பூர்ணை எண்ணினாள். எண்மர் சூழ்ந்து நின்று அவர்களை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லின்றி ஒலியின்றி அவர்கள் அந்த அடிகளை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

மறுநாள் புலரியில் அவர்கள் கங்கைக்கரையை சென்றடைந்துவிட்டிருந்தனர். தேர் நின்றதும் ஏவலன் பின்னால் வந்து நின்று “அரசியருக்கு வணக்கம்” என்று மும்முறை கூறி தேர்க்கூண்டில் கையால் தட்டியபோது அவர்கள் விழித்துக்கொண்டார்கள். பூர்ணை முதலில் இறங்கினாள். தேவிகை மேலாடையை நன்றாக இழுத்துவிட்டு நிலத்தில் இறங்கி நின்றாள். பலந்தரையும் விஜயையும் இறங்கியபின் அவர்கள் ஒன்றும் சொல்லாமல் தேர் மேடையிலிருந்து நீர்முகப்பு நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அங்கே தொன்மையான படகுத்துறை இருந்தது. தடித்த மரங்களை கங்கைக்குள் நிறுத்தி அவற்றுக்கு மேல் மரப்பலகை வேய்ந்து அமைக்கப்பட்ட துறைமேடைக்கு அப்பால் அவர்கள் செல்ல வேண்டிய படகு பாய் தளர்த்தி நீரில் அசைந்தபடி நின்றது. அதன் படகோட்டிகள் துடுப்புகளுடன் படகில் நின்றிருக்க நான்கு காவலர்கள் துறைமேடையில் வேல்களுடன் நின்றனர்.

அவர்கள் அணுகியதும் ஒருவன் திரும்பி கொம்போசை எழுப்பினான். அவர்களுக்குப் பின்னால் வந்த ஏவலன் “அரசியர் ஓய்வெடுத்துக் கொள்வதென்றால்…” என்று திரும்பிச் சுட்டிக்காட்டி “இங்கே ஒரு சிறு ஓய்விடம் உள்ளது. மஞ்சங்களும் உள்ளன” என்றான். “தேவையில்லை” என்று பூர்ணை கையசைத்தாள். அவர்கள் படகில் ஏறிக்கொண்டதும் காவலர்களின் விரைவுப்படகு முன்னால் அலைகளில் ஏறிச் சென்றது. தொடர்ந்து அவர்களின் படகு பாய்விரித்து காற்றில் தன்னை தொடுத்துக்கொண்டது. படகின் அசைவுகளுக்கு ஏற்ப உடல் அசைய மூவரும் பலகைப் பீடத்தில் அமர்ந்தனர். தேவிகையும் விஜயையும் மீண்டும் துயில் கொண்டதுபோல் தோன்றியது. பலந்தரை தன் நெற்றியை தடவிக்கொண்டாள். பல இடங்களில் மூங்கிலில் முட்டிக்கொண்ட முழைகள் இருந்தன.

தேவிகை சற்று நேரத்திலேயே ஆழ்ந்துறங்க விஜயை தன் முகத்தின் மேல் படபடத்த மெல்லிய வெண்பட்டுத் திரைச்சீலையினூடாக காலைஒளி எழுந்து கொண்டிருந்த கங்கையை பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று பகல் முழுக்க அவர்கள் கங்கையிலேயே விழிநட்டு படகில் அமர்ந்திருந்தனர். ஏவலர் இன்நீர் கொண்டுவந்து அளித்தனர். பல நாட்களாகவே வெல்லமும் கருக வறுத்த பயறுமாவும் கலந்து காய்ச்சப்பட்ட கொழுவிய இன்நீரை மட்டுமே அவர்கள் உணவென அருந்திக்கொண்டிருந்தனர். அன்னம் உண்பது அவர்களால் எண்ணியும் பார்க்க இயலாததாகியிருந்தது. பலமுறை பூர்ணை உணவைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தாள். பெரும்பாலான தருணங்களில் அவர்களிடம் ஆழ்ந்த பசியும் இருந்தது. ஆனால் உணவு முன் அமர்ந்து அன்னத்தை கையில் எடுத்து வாயில் வைக்கும்போதே தொண்டை இறுகி அடைத்துக்கொண்டது. ஒருவாய் உணவைக்கூட உள்ளிறக்க இயலவில்லை.

பல நாட்களுக்கு முன் அபிமன்யு மறைந்த செய்தி வந்த அன்று உணவின் முன் அமர்ந்து அன்னத்தை வாயிலிட்ட தேவிகை தாலத்திலேயே அதை உமிழ்ந்துவிட்டு நெஞ்சடைக்க இருமி மூச்சுத்திணறி மயங்கி பக்கவாட்டில் விழுந்தாள். ஏவற்பெண்கள் அவளைத் தூக்கி அமர்த்தி வாய்திறந்து சங்கில் சிறிதளவு இன்னீரை அவள் தொண்டையில் ஊற்றி மூச்சை சீரமைத்து நினைவு மீளச்செய்தனர். அதன் பின்னர் வெவ்வேறு வகையான உணவுகளை அவர்கள் கொண்டுவந்து அவர்களுக்கு அளித்தனர். இன்கூழைக் கூட அவர்களால் உண்ண இயலவில்லை. இன்நீரை அருந்தும்போது கூட பெருவிடாயுடன் இரு கைகளாலும் குவளையை வாங்கி வாயிலழுத்தி சிலமுறை அருந்தி மூச்சுத் திணற கலத்தை கீழிறக்கினர். பிறிதொரு முறை பூர்ணை அவர்கள் முன் கலத்தை தூக்கி வாயில் பொருத்தி “அருந்துக, அரசி!” என்றாள். மீண்டும் இருமுறை விழுங்கிவிட்டு மூச்சு இரைக்க போதும் என்று கைகாட்டி நிறுத்தினார்கள்.

சில நாட்களிலேயே அவர்கள் உடற்தசைகள் வற்றி, கண்கள் மங்கலடைந்து குழிந்து, உதடுகள் மடிந்து வாய்க்குள் செல்ல, முதுமையும் நோய்மையும் வந்து மூட, முற்றிலும் பிறராக மாறிவிட்டிருந்தனர். உடலுக்குள் குடிகொள்ளும் தெய்வம் தனக்கேற்ப உடலை உருமாற்றிக் கொள்கிறதென்று சூதர் சொல்லி பூர்ணை கேட்டிருந்தாள். காதல் கொண்ட பெண் அழகில் பொலிந்தெழுவதுபோல் துயர் கொண்டவள் மெலிந்து உருகி உருமாறுகிறாள். கண்ணெதிரே அவர்கள் உயிரிழந்து மட்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவள் எண்ணினாள். முதுசெவிலி “உள்ளிருந்து உடலை உண்கின்றது ஒரு தெய்வம்” என்றாள். “அது நன்று, தெய்வங்களுக்கு அளிப்பதற்கு நம்மிடம் உடலாவது உள்ளதே” என்று இளம் சேடி ஒருத்தி சொன்னாள்.

பூர்ணை விஜயையின் முதுசேடியான அபயையை எண்ணிக்கொண்டாள். நச்சுநா கொண்டவள் என அவளை சொல்வார்கள். “பெண்டிர் அன்னத்தை அளிப்பவர்கள்” என்று அவள் சொல்வதுண்டு. “அல்குலை கணவர்களுக்கு. முலைப்பாலை மைந்தருக்கு. முழு உடலையும் அளித்தபின் விண்புகுகிறார்கள்.” இந்திரப்பிரஸ்தத்தின் அகத்தளத்தில் இருண்ட அறையொன்றில் உடல்நலிந்து மறைந்தாள். சாவின் கணத்தில் அவள் உடனிருந்தாள். “சேடியர் பரத்தையரைப்போல. உடலை எவரெவரோ உண்ணக்கொடுப்பவர்கள்” என்று அவள் சொன்னாள். “இறுதியாக வருபவன் இக்காதலன்” என்று அவள் புன்னகைத்தபோது அவளுடைய மட்கிய உடலின்மேல் அமைந்திருந்த வெற்றுக்கூடு போன்ற முகத்தில் பற்கள் வெளிப்பட்டன. கண்கள் விந்தையான குழிவிலங்குபோல் ஒளிகொண்டிருந்தன.

 

முக்தவனம் நெருங்கியதும் காவலர் படகிலிருந்து கொம்பொலி எழுந்தது. பூர்ணை தேவிகையை அணுகி தலைவணங்கி “முக்தவனம் அணைந்துள்ளது, அரசி” என்றாள். தேவிகை பாவைபோல் எழுந்துகொள்ள “இல்லை, இன்னும் படகு துறைமேடையை அணைய அரைநாழிகைக்கு மேலாகும். தாங்கள் அமரலாம்” என்றாள். தேவிகை மீண்டும் அமர்ந்துகொண்டாள். படகு துறைமேடையை அணுகியபோது அவர்கள் மூவரும் துயிலிலாழ்ந்ததுபோல் அமர்ந்திருந்தனர். பூர்ணை “அரசி! அரசி!” என்று பலமுறை அழைத்த பின்னரே தேவிகை கண் திறந்தாள். “படகுகள் துறையணைந்துவிட்டன. இறங்கும் பொழுது!” என்றதும் உணர்ச்சியற்ற விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். “தாங்கள் கரையிறங்கலாம், அரசி” என்றாள் பூர்ணை.

தேவிகை எழுந்து திரும்பி எவரையும் பார்க்காமல் படகு விளிம்பை அடைந்து துறைமேடை நோக்கி போடப்பட்டிருந்த பலகை மேல் நடந்து கரையணைந்தாள். அவளைத் தொடர்ந்து பலந்தரையும் விஜயையும் இறங்கினர். மூவரும் நிரையாக நடந்து செல்ல அவர்களை வரவேற்கும் பொருட்டு துறைமேடைக் காவல்மாடத்திலிருந்து சங்கொலி எழுந்தது. காவலர்தலைவன் வந்து வணங்கி “அரசியருக்கு வணக்கம். தங்களுக்குரிய குடில்கள் ஒருங்கியிருக்கின்றன. சற்று ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம். இன்நீரும் உணவும் உள்ளது…” என்றான். “அவர்கள் உடனே செல்லவே விரும்புகிறார்கள்” என்று பூர்ணை சொன்னாள். “தேர்கள் வந்துள்ளனவா?” காவலன் அவள் முந்திச்சொல்வதை விரும்பவில்லை “ஆம், ஒருங்கியிருக்கின்றன” என விழிநோக்காமல் சொன்னான்.

அரசியர் செல்லவேண்டிய எடையற்ற சிறிய வண்டி பாதையில் நின்றது. “அந்த வண்டிகள்தான், அரசி” என்றாள் பூர்ணை. தேவிகை திரும்பிப்பாராமல் நடந்துசென்று அதில் ஏறிக்கொள்ள பலந்தரையும் விஜயையும் தொடர்ந்து ஏறிக்கொண்டனர். தேர் கிளம்பி குடில்நிரைகளினூடாக சென்றபோது கூட அவர்கள் எதையும் பார்க்கவோ எங்கிருக்கிறோம் என்று உணரவோ இல்லை. தொலைவில் அஸ்தினபுரியின் கொடியைப் பார்த்ததும் பலந்தரை “இங்கு வண்டியை நிறுத்துங்கள்” என்றாள். தேர் நின்றதும் அவள் மறுமொழி கூறாமல் தேரிலிருந்து கீழிறங்கி ஏவலரிடம் “அது அஸ்தினபுரியின் அரசியரின் குடில் அல்லவா?” என்றாள். அவள் குரலை நெடுநாட்களுக்குப் பின்னர் கேட்கிறோம் என்று பூர்ணை எண்ணிக்கொண்டாள்.

“ஆம் அரசி, அங்குதான் அஸ்தினபுரியின் அரசி பானுமதியும் இளையவர் அசலையும் தங்கியிருக்கிறார்கள். அதற்கப்பால் உள்ள குடிகளில் கௌரவ அரசியரும் இளவரசியரும் தங்கியிருக்கிறார்கள்” என்றான் காவலர்தலைவன். “என்னை அங்கு அழைத்துச்செல்க!” என்று பலந்தரை கூறினாள். “அரசி, நீங்கள் செல்லவேண்டிய இடம் அது அல்ல” என்றாள் பூர்ணை. அவள் சொற்களை பலந்தரை கேட்காததுபோல் தோன்றியது. தேருக்குள்ளிருந்து தேவிகையும் விஜயையும் வெற்றுவிழிகளுடன் அவளை நோக்க பலந்தரை அவர்களை வெறுமனே நோக்கி ஏதோ சொல்வதற்கென இதழ்கள் அசைத்தபின் திரும்பிக்கொண்டாள்.

“தேர்” என்று ஏதோ சொல்ல காவலன் நாவெடுக்க “தேவையில்லை, நான் நடக்கிறேன். காசிநாட்டு அரசியரின் குடிலுக்கு என்னை அழைத்துச்செல்க!” என்று பலந்தரை சொன்னாள். அவள் நடந்தகல்வதை நோக்கியபடி தேவிகையும் விஜயையும் அமர்ந்திருந்தார்கள். “கிளம்பலாமா, அரசி?” என்று பாகன் கேட்டான். “கிளம்புக!” என்றாள் பூர்ணை. தேர் அசைவு கொண்டு முன்னால் சென்றது. தேவிகையும் விஜயையும் மீண்டும் விழிமூடி மெல்ல அசைந்து கொண்டிருந்தனர். பூர்ணை அவர்களின் முகங்களை திரைகளினூடாக நோக்க முயன்றாள். அவர்கள் உள்ளே இல்லை என்று தோன்றியது. உள்ளிருப்பது வேறெவரோ. இறந்து மட்கிய விழிகள் கொண்ட இரு உடல்கள்.

அவர்கள் இருவருக்கும் ஒரே குடில்தான் அளிக்கப்பட்டது. அவர்களுக்காக அது ஒருக்கப்பட்டிருக்கவில்லை. அங்கே குடில்கள் நிறைந்து புதிய குடில்கள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன. பூர்ணை குடிலுக்குள் நுழைந்து பார்த்தாள். அதன் செவ்வக வடிவ அறைக்குள் நெருக்கமாக இரு மூங்கில் மஞ்சங்கள் போடப்பட்டிருந்தன. பொருட்களை வைப்பதற்கான பீடங்கள் எதுவும் இல்லை. கூரையிலிருந்து தொங்கவிடப்பட்ட கொக்கிகளிலும் சரடுகளிலுமே அரசியரின் பெட்டிகளையும் ஆடைப்பொதிகளையும் தொங்கவிட வேண்டியிருந்தது. அறை நடுவே மேலிருந்து தொங்கிய சரடில் மண்ணாலான ஐந்து திரிகளிடப்பட்ட விளக்கு தொங்கியது. பகலில் அதில் ஒரு திரியில் மட்டும் சுடர் எரிந்தது.

பூர்ணை பொருட்களை உள்ளே கொண்டு வந்து வைத்தபின் “இங்கு குறைவான இடமே உள்ளது. ஆனால் நாம் இங்கு நெடுநாள் தங்கப்போவதில்லை. நாளை காலையிலேயே நீர்க்கடன்கள் தொடங்கும் என்கிறார்கள். எனில் நாளை மாலையே நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும்” என்றாள். தேவிகை மறுமொழி கூறாமல் மஞ்சத்தில் அமர்ந்து தலைகுனிந்து கைகளை மடியில் சேர்த்து அசைவிழந்தாள். பிறிதொரு மஞ்சத்தில் விஜயை அவ்வாறே அமர்ந்தாள். பூர்ணை “தங்களுக்கு இந்த அறை போதுமானது, இங்கே இருவரும் சேர்ந்திருப்பதே நன்று” என்றபின் “அருந்துவதற்கு இன்நீர் கொண்டுவருகிறேன்” என்றபடி வெளியே சென்றாள்.

அவர்களிருவரும் அசைவிலாது பாவைகளென அமர்ந்திருந்தனர். உள்ளமிலாதாகி அருகில் கேட்கும் ஒலியிலோ அசைவிலோ மீள்வதும் திகைப்பும் பதைப்புமென அவற்றை எதிர்கொள்வதும் மீண்டும் உட்புகுந்துகொண்டு அகமிலாதாகி அமைவதும் அவர்களின் வழக்கமாக இருந்தது. பூர்ணை வெளியே சென்றபோது விஜயையின் பணிப்பெண்ணாகிய சந்திரிகை வந்து நின்றிருந்தாள். “அரசியருக்கு இன்நீர் கொண்டுவருக!” என பூர்ணை ஆணையிட்டாள். சந்திரிகை சென்றபின் தேரில் எஞ்சிய பொருட்களை குடிலுக்குள் கொண்டுசென்று வைத்தாள்.

சந்திரிகை அவர்களுக்கு இன்நீர் கொண்டுவந்தாள். அதை வாங்கி பூர்ணை அவர்கள் இருவரையும் சில மிடறுகள் குடிக்க வைத்தாள். “தாங்கள் ஆடைமாற்றிக்கொள்ளலாம், அரசி” என்றாள் பூர்ணை. அதை பலமுறை அவள் சொன்ன பின்னரே தேவிகை உணர்ந்து தலையசைத்தபின் எழுந்து நின்றாள். பூர்ணை தேவிகையை கைபற்றி அழைத்துச் சென்று சிறிய மூங்கில் பீடத்தில் அமரச்செய்தாள். மரவுரியை குடில்சுவரிலிருந்து இழுத்துக்கட்டி சிறிய மறைப்பை உருவாக்கினாள். அவள் தேவிகையின் ஆடைகளை களைந்துகொண்டிருக்கையில் சந்திரிகை குடுவையில் கொதிக்கும் நீர் கொண்டுவந்து வைத்தாள். தேவிகையின் ஆடைகளை முழுமையாகக் களைந்து வெற்றுடலுடன் அமரச்செய்து மரவுரிச்சுருளை வெந்நீரில் முக்கி அவளை துடைத்தாள் பூர்ணை.

தேவிகையை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நீராட்டி பணிவிடை செய்யும் பழக்கம் கொண்டிருந்தவள் பூர்ணை. தேவிகையைவிட பதின்மூன்று ஆண்டுகள் மூத்தவள். தேவிகையை வயற்றாட்டி கொண்டுவந்து அகத்தளத்துப் பெண்டிருக்குக் காட்டுகையில் அவளும் இரு இடைகள் நடுவே புகுந்து நோக்கினாள். தன் கைகள் வழியாகவே அவ்வுடல் மாறி வந்திருப்பதை அவள் அறிந்தாள். யுதிஷ்டிரனின் அரசி என அஸ்தினபுரிக்கு அவள் வந்தபோது அவளும் உடன்வந்தாள். அன்று அவள் சிறிய தோள்களும், அடுக்கடுக்கான கழுத்தெலும்புகளும், விலாஎலும்புகள் நிரை கொண்ட மெலிந்த உடலும் கொண்டிருந்தாள். அவள் மிக மெலிந்திருக்கிறாள் என்று சிபி நாட்டில் பேச்சிருந்தது. அவளை அஸ்தினபுரிக்குக் கொண்டுவந்ததும் சாளரங்களில் குவிந்த பெண்களும் அப்படி பேசிக்கொண்டனர்.

எனினும் அவள் தோலில் உயிர் மெருகும், மென்மயிர்ப் பரவல்களில் பொன்மினுப்பும் இருந்தது. நீண்ட முகமும் செந்தளிர் நிறமும் கொண்டிருந்தாள். அவளை முதல்முறையாக நீராட்ட வந்த அஸ்தினபுரியின் முதுசெவிலி “அரசி, புதுமுளைகள் எழவிருக்கும் மூங்கில் போலிருக்கிறார்” என்றாள். அதுவே பெயர் என்றாகி அவளை அகத்தளப்பெண்டிர் மூங்கில் என்றே அழைத்தனர். பின்னர் அன்னையாகி தசைப்பூச்சு கொண்டதும் கழுத்தெலும்புகள் மறைந்தன. பொற்சங்கிலி தசைமேல் வரையப்பட்டதுபோல் பதிந்தது. முலைகள் திரண்டு ஒளிகொண்டன. முலைக்கண்கள் கருமை அடைந்தன. மைந்தன் பிறந்த பின் அவள் வயிற்றின் இருபுறமும் பூர்ஜமரத்தின்மேல் வரிகளென மென்கோடுகள் விழுந்தன. ஒவ்வொரு மாற்றமும் அவளை மேலும் மேலும் அழகியென்றாக்குவதாகவே அவளுக்கு தோன்றியிருந்தது.

பூர்ணையின் கைகள் அவள் உடலை தொடத் தயங்கி நடுங்கின. ஓரிரு நாட்களில் ஒரு மனித உடல் அவ்வாறு ஆகமுடியும் என்று அவள் எண்ணியதே இல்லை. முன்பு ஒருமுறை அவள் உறவினளான முதியவள் ஒருத்தி அவ்வாறு உடல் நைந்து இறந்ததை அவள் கண்டதுண்டு. அவ்வுடல் உயிர்நீத்த பின்னர் ஒரு நாள் முழுக்க காத்திருக்க வேண்டியிருந்தது. அன்று ஆடி மாத கருநிலவு நாள். சிபிநாட்டு வழக்கப்படி அந்நாளில் எவரையும் சிதையேற்றுவதில்லை. ஆகவே உடலை கொண்டுசென்று ஊருக்கு வெளியே ஒரு விடுதியில் வைத்து முழுநாளும் காத்திருந்தார்கள். உடலைச் சுற்றி தேவதாருப் பிசின் இட்டு புகையெழுப்பினார்கள். சூழ்ந்திருந்தவர்கள் நீத்த உடலை நாடிவரும் பாலைநிலத்துப் பேய்களை அகற்றும் பொருட்டு பாடிக்கொண்டிருந்தனர்.

அந்த உடல் மலைத்தேன் பூசப்பட்டு தாலிப்பனை பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. அது கண்ணெதிரே ஒவ்வொரு கணமுமென நைந்து நிறம் மாறிக்கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். மறுநாள் காலை உடலை சிதைக்கு கொண்டு செல்லும்போது அது மண்ணால் செய்யப்பட்டதுபோல் மாறிவிட்டிருந்தது. அதன் விழிகள் மட்கி உள்ளிழுத்துக் கொண்டிருந்தன. உதடுகள் வீங்கி சற்றே திறந்திருக்க உள்ளிருந்து பழுப்பேறிய பற்கள் நீட்டியிருந்தன. அது சற்று வீங்கியதுபோல், அதன் தோல் நைந்து உள்ளிருக்கும் நீர் வழியவிருப்பதுபோல் தோன்றியது. அதன் அனைத்து துளைகளிலிருந்தும் சேற்றுப்பிளவினூடாக எழும் மூச்சடைக்க வைக்கும் எரியாவி எழுந்தது. அவள் அன்று மயங்கிவிழுந்தாள். அவள் அந்த ஒருநாளை தன் சித்தத்திலிருந்து முற்றாக மறைத்துக்கொண்டிருந்தாள். ஒருபோதும் அதை அவள் நினைவுகூர்ந்ததில்லை. எப்போதேனும் கனவில் அது எழுகையில் திடுக்கிட்டு விழித்தெழுந்தாள்.

தேவிகையின் உடலும் தோலும் அவ்வாறாக மாறிக்கொண்டிருந்தன. கழுத்திலும் முலையிடுக்குகளிலும் தூள்பாசி போலவோ தேமல் போலவோ ஏதோ படிந்திருந்தது. உடலுக்குள் இருந்து தோல்நெய் ஊறி பரவவில்லை. ஆகவே தோலில் செதில்கள் எழுந்தன. உதடுகளின் இணைப்புகள் புண்ணாகியிருந்தன. செவிகளுக்குப் பின்னும் விரலிடுக்குகளிலும் புண் எழுந்திருந்தது. எலும்பு வளையங்களாக அடுக்கப்பட்ட கழுத்தும் புடைத்தெழுந்து தோலை கிழித்துவிடுமெனத் தோன்றிய விலாஎலும்புகளும் அவள் கைபடும் உணர்வைக்கூட அடையவில்லை. அவள் கைக்கு வந்த தொடுவுணர்வு அவ்வுடலை உயிருள்ளது என்று காட்டவில்லை.

நீரள்ளி விட்டு, காரமணலிட்டு தேய்த்துக் கழுவி நறுஞ்சுண்ணமிட்டு அவளை மீட்கமுடியுமென்று அப்போதும் தோன்றியது. அதுவரை இருந்தது அரண்மனையின் இருளில். நாளை வருவது அரசநிகழ்வு. ஆனால் அத்தருணத்தில் அதற்கான வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. உடலை அழுத்தித் தொடும்போது அது உடைந்துவிடுமென்ற அச்சம் ஏற்பட்டது. நீராட்டி துடைத்து மாற்றாடை அணிவித்து தேவிகையை கொண்டு சென்று மஞ்சத்தில் அமரச்செய்தாள். விஜயையின் ஏவல்மகள் சந்திரிகை அவளை கைபற்றி அழைத்துச் சென்றாள். அவளை நீராட்டும்போது பூர்ணை சென்று நோக்கினாள். அவள் உடலும் தேவிகையின் உடல்போலவே இருந்தது.

இருவரையும் மஞ்சத்தில் அமரவைத்த பின்னர் மீண்டும் ஒருமுறை இன்நீரளித்து அவர்கள் இருவரும் தலைவணங்கி வெளியே சென்றனர். தங்கள் குடில்களுக்குச் சென்று நீராடி ஆடைமாற்றி நெடும் பொழுது கழித்து அவர்கள் வந்து பார்த்தபோதும் இருவரும் மஞ்சத்திலேயே அசையாமலிருக்கக் கண்டனர். பூர்ணை தேவிகையை மெல்ல பற்றி சரித்து “படுத்துக்கொள்ளுங்கள், அரசி” என்றாள். அவள் கையில் உடல் தந்து தளர்ந்து சரிந்த தேவிகையை பற்றிச் சாய்த்து மஞ்சத்தில் படுக்க வைத்து தலையணையை தலையில் வைத்து மரவுரிப் போர்வையை இழுத்து போர்த்தினாள். விஜயையையும் அவ்வாறே அவள் படுக்க வைத்தாள். பின்னர் குடில்படலை மெல்ல சார்த்தி வெளியே வந்தாள். சந்திரிகை அவளுக்குப் பின்னால் காலடி ஒலிக்காமல் வெளியே வந்தாள்.

வெண்முரசு விவாதங்கள்

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 44

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 5

விதுரருடன் நடந்தபோது சகதேவன் தன் உள்ளம் ஒழிந்து கிடப்பதை உணர்ந்தான். ஒரு நினைவு கூட இன்றி, அடுத்த கணம் குறித்த ஒரு துளி எண்ணம் கூட இன்றி, வெறுமனே மின்னிக்கொண்டிருந்த இலைப்பரப்புகளையும், மரக்கூட்டங்களையும், ஒளி எழத் தொடங்கியிருந்த வானையும், எழுநிழல்களின் மேல் அமர்ந்திருந்த கூழாங்கற்களையும், பல்லாயிரம் பாதச்சுவடுகளாக விரிந்திருந்த செம்மண் நிலத்தையும் பார்த்துக்கொண்டு நடந்தான். அன்று காலை எழுந்த பின்னர் அத்தனை நிகழ்வுகள் ஒன்றன்மேல் ஒன்றென விழுந்து உள்ளத்தை அழுத்தி நிறைத்த பின்னரும் அவ்வெறுமை எழுந்தது வியப்புக்குரியது என்று தோன்றியது.

ஒன்று பிறிதொன்றை நிகர் செய்து இன்மையென்று ஆகிவிட்டதா என்று எண்ணினான். எண்ணங்களினூடாக பின்னால் சென்று காலை எழுந்தது முதல் நிகழ்ந்தவற்றை திரட்டிக்கொள்ள முயன்றான். நிகழ்ந்தவை அனைத்தும் ஒற்றைப் பெரும்பரப்பென கலந்துவிட்டிருந்தன. அவற்றின் முடிவிலாச் சுழியிலிருந்து எந்த ஒரு நிகழ்வையும் பிரித்தெடுக்க இயலாதென்று தோன்றியது. விதுரர் கைகளை பின்னுக்குக் கட்டி தலைகுனிந்து நடந்தார். அவருடைய நிழல் நீண்டு அவன் முன்னால் விழுந்தது. அதை மிதிக்கலாகாதென்று விலகி அவன் மறுபக்கத்தை அடைந்தான். அவ்வசைவை உணர்ந்து அவர் திரும்பிப்பார்த்து பின்னர் விழிகளை திருப்பிக்கொண்டார்.

அந்நோக்கில் ஏதோ ஒன்று தட்டுப்பட அவன் உள்ளம் விழித்தெழுந்தது. அதுவரை இருந்த இன்மை அகன்றதும் அதுவே ஊக்கத்தை அளிக்க அந்நோக்கில் இருந்ததென்ன என்று அவன் கூர்ந்தறிய முயன்றான். விதுரர் தோள்களைக் குறுக்கி நடந்ததும் யுதிஷ்டிரனின் சாயல் ஒன்று எழுந்தது. சிற்றடிகள், விசை கொண்ட உடலசைவுகள். அவர் தன்னை நோக்கியபோது எதையோ வினவ சொல்லெழுந்து அக்கணமே அடங்கியதுபோல் தோன்றியது. ஒருவர் ஓர் எண்ணத்தை உள்ளத்தில் அடக்கிக்கொள்ளும்போது அதை உடல் எப்படி தெளிவாக வெளிக்காட்டுகிறது என்பதை எண்ணி அவன் வியந்தான். விதுரர் அதை கேட்கப்போவதில்லை. எழுந்த ஓர் எண்ணத்தை அடக்குவாரெனில் எக்கணமும் விழித்து அதில் விழிப்புடன் இருக்கிறார் என்று பொருள். எழும் எண்ணத்திற்கு நிகராக பிறிதொரு எண்ணம் ஒருங்கி நின்றிருக்கிறது.

அவர் ஒருபோதும் அதை சொல்லாக்கிக் கொள்ளப்போவதில்லை. அது என்ன என்று அவன் எண்ணி, மேலே மேலே சென்று சலித்து, பின்னர் நின்றான். அக்கணத்தில் விதுரர் இயல்பாக “அன்னை எவ்வண்ணம் இருக்கிறார்?” என்றார். அக்கணமே அனைத்தும் தெளிவாக விரிய, அவன் நடை தளர்ந்தான். அவர் அவன் இரண்டடி பின்னகர்ந்ததை உணராமல் நடந்துகொண்டிருந்தார். விரைவுகொண்ட காலை எடுத்து வைத்து அவன் அருகணைந்து “அன்னை தன்னிலையில் இல்லை. அவ்விழப்பிலிருந்து அவர் மீளவே இல்லை” என்றான். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவருடைய நடையின் விசை குறையவுமில்லை.

அவர் எதிர்பார்ப்பதென்ன என்று அவனுக்குத் தெரியவில்லை. “நான் அறிந்த நாளிலிருந்தே அன்னை எப்பொழுதும் ஓர் ஆடலில்தான் இருந்தார். துயில்கையிலும் நாற்களத்தில் கரு நீக்கிக்கொண்டிருப்பார் என்று அவரைப்பற்றி மூத்தவர் கூறினார். அது உண்மை” என்றான். விதுரர் அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை. அது அவனை சீண்டியது. அவர் நின்று திரும்பி நோக்கி எதையாவது சொல்லவேண்டும் என்று எண்ணினான். அவரிலிருந்து பிறிதொரு சொல்லை பெயர்த்தெடுக்கும் கூர்மை கொண்ட ஒன்று தேவை. அவ்வாறு எண்ணியதுமே அது நினைவில் எழுந்தது. எப்பொழுதும் அத்தகைய படைக்கலங்கள் முன்னரே உள்ளங்களில் ஒளிந்திருப்பதை அவன் கண்டிருந்தான். தேவையானபோது உரிய பழிச்சொல்லோ இழிசொல்லோ நாவிலெழாத எவரேனும் இப்புவியில் இருக்கமுடியுமா என்ன?

அவன் அவ்வெண்ணத்தை ஒரு நச்சுப்படைக்கலத்தை ஆடைக்குள் கரந்திருப்பதுபோல் உணர்ந்தான். அவனிடமிருந்த வெறுமை அனைத்தும் அகன்றது. உள்ளம் ஆழத்தில் ஒரு மெல்லிய உவகையைக் கொண்டு தத்தளித்தது. “அன்னை கொண்டிருந்த விழிகளை நான் நினைவுகூர்கிறேன். நாங்கள் இளையோராக இருக்கையில் சௌவீரத்தின்மீது படையெடுத்துச் சென்றோம். சௌவீர மணிமுடியுடன் மூத்தவர் திரும்பி வந்தார். அவரை எதிர்கொள்வதற்காக அன்னை கோட்டை முகப்பிற்கு வந்திருந்தார். மூத்தவர் அப்போது என்ன எண்ணினார் என்று அறியேன், மணிமுடியை அன்னையின் காலடியில் வைத்தார். அன்னை பெருமிதத்துடன் சிரிக்க அவர் அதை எடுத்து அன்னையே இந்த மணிமுடியை சூடுக என்று அளித்தார். அன்னை என்ன செய்கிறாய், அறிவிலி, வேண்டாம் என்று கூவினார். பீமசேனன் அன்னையின் கைகளை பற்றிக்கொள்ள அவர் திமிறி கைவிலக்கி அந்த மணிமுடியை தள்ளிவிட முயன்றார். ஆனால் அன்னையின் விழிகள் ஒளிகொண்டிருந்தன” என்றான் சகதேவன். அவரிடம் எந்த அசைவும் வெளிப்படவில்லை. ஆனால் அச்சொற்கள் சென்றடைவதை அவனால் உணர முடிந்தது.

“மூத்தவர் பின்னர் ஒருமுறை அவருடைய உளநிலையை சொன்னார். அன்னை நாணி மறுத்து சிரித்து பின்னடைவார் என்று எதிர்ப்பார்த்தார். அது எனக்கு அப்போதே தெரியும். அறிவிலி வேண்டாம் விலகு என அன்னை சொன்னபோது அவர் உடல் அறியாது எழுந்து முன்னணைந்தது. அதிலொரு மலர்வு தெரிந்தது. தலையில் அணிந்திருந்த வெண்ணிற ஆடை பின்னால் சரிந்தது. மூத்தவர் அந்த மணிமுடியை அவருக்குச் சூட்டினார். அன்னை அதை தன் தலையில் சூடி இரு கைகளாலும் பற்றிக்கொண்டு விழுந்துவிடப்போகிறது மூடா என்று கூவினார். மெல்லிய பொற்கம்பிகளைக்கொண்டு பின்னி அதில் செங்கழுகின் இறகுகளை சீராகப் பொருத்தி செய்யப்பட்டிருந்த அந்த மணிமுடியை நினைவுகூர்கிறேன். நகர்மக்கள் வெற்றிக்குரல் எழுப்பி மலர்களை அள்ளி அவர்கள் மேல் வீசினர். சூழ்ந்து பொங்கிய உணர்ச்சிப்பெருக்கால் அன்னையும் கொண்டுசெல்லப்பட்டார். இரு கைகளையும் தூக்கி சௌவீர மணிமுடியை நெற்றிமேல் நன்றாக அணிந்து நிமிர்ந்த தலையுடன் அன்னை தேர்த்தட்டின்மீது நின்றார்.”

“நகருலாவின்போது அன்னை அந்த மணிமுடியை அடிக்கடி கையால் சீரமைத்துக்கொண்டே இருந்தார். நான் அருகே சென்றதும் அதை நன்கு பொருத்தி என் தலைக்கு சரியாக பொருந்துகிறது என்றார். அப்போது அவர் முகத்திலிருந்தது சிறுமிக்குரிய கூச்சமும் உவகையும் கொண்ட நகைப்பென்று அன்று தோன்றியது. பின்னர் அவ்வுள ஓவியம் மங்கலாகி கரைந்தழிய அக்கண்கள் மட்டும் அவ்வாறே நினைவில் உள்ளன. அக்கண்களைத்தான் அன்னை எப்போதும் கொண்டிருந்தார். எத்துயரிலும் அவை மணிமுடி சூடிய கண்கள்தான்” என்று சகதேவன் சொன்னான். சொல்லச்சொல்ல அந்நினைவுகளால் அவன் கொண்டுசெல்லப்பட்டான். “அன்று தாங்களும் அங்கிருந்தீர்கள் என அறிவேன். அன்னை மணிமுடி சூடியது அன்று அஸ்தினபுரியில் ஒரு கசப்பை உருவாக்கியது. உண்மையில் இந்த வஞ்சமும் பகைமையும் அன்று உருவானவை என்பார்கள்.”

“அன்று அன்னை எதையோ ஒன்றை வெளிக்காட்டிவிட்டார். அது எப்போதும் அவர் விழிகளில் இருந்தது. அன்றுதான் அவர்கள் அதை ஐயமற உணர்ந்தனர்” என்று சகதேவன் சொன்னான். விதுரரின் நடையில் மாற்றம் எதுவும் வரவில்லை. அவர் முகத்தை முன்னால் சென்று நின்று பார்க்கவேண்டும் என்று அவன் விழைந்தான். ஒருவர் தன் முகத்தை திருப்பிக்கொண்டாலும் அவர் உடல் முகமாக மாறி உணர்வுகளை அதுவே காட்டும். ஆனால் அப்போது உடலும் திரைகொண்டிருந்தது. அவன் “நாங்கள் காடுகளில் அலைந்திருக்கிறோம். வறண்ட பாலையில் உணவும் நீருமின்றி மயங்கியிருக்கிறோம். எத்தனையோ நாட்கள் மறுநாள் என்ன செய்வோம் என்று அறியாது இரவை கழித்திருக்கிறோம். எப்போதும் அன்னை கொண்டிருந்தவை அவ்விழிகளே” என்று தொடர்ந்தான்.

“அந்த அன்னை இன்றில்லை, அமைச்சரே. இங்கு வந்தபின் ஒருமுறை அன்னையை சென்று கண்டேன். அன்னை இப்போதெல்லாம் விழித்திருப்பதே இல்லை. விழிப்பு கொண்டதுமே இடமுணர்ந்து, தன்னிலை கொண்டு எழுந்தமர்ந்து இரு கைகளையும் விரித்து கூச்சலிட்டு அழத் தொடங்கிவிடுகிறார். நெடுநாட்களாக போதிய உணவின்றி இருப்பதனால் உடல் மெலிந்து, தசைகள் வற்றி, கைகால்கள் வலிப்புகொண்டவைபோல் இழுத்துக்கொண்டுள்ளன. விரல்கள் ஒன்றுக்கு மேல் ஒன்று ஏறியிருக்கின்றன. சொற்களில் பொருளும் இசைவும் அகன்றுவிட்டன. வெற்றொலியாக கூச்சலிட்டு உதடுகளை பற்களால் இறுகக்கடித்து குருதி வார விழுந்து மீண்டும் வலிப்புகொள்கிறார். உடனே மீண்டும் அகிபீனா அளிக்கப்படுகிறது. நான் குடில் வாயிலில் நின்று அன்னை அகிபீனாவை அருந்துவதை ஒருமுறை கண்டேன். கரைவந்த மீனின் தவிப்பு அவர் உடலில் இருந்தது. மூச்சுக்குத் துள்ளும் மீனென அவர் வாய் திறந்து மூடியது. அவ்விழிகள் நானறிந்த அன்னையுடையவை அல்ல. அவை இறந்த உடலில் உறைந்தவை எனத் தெரிந்தன.”

விதுரர் நின்று திரும்பி நோக்கி அவனிடம் ஏதோ சொல்ல நாவெடுத்தார். அவன் அவர் விழிகளை நோக்கி “தாங்கள் விழைந்தால் அன்னையை பார்க்கலாம், அமைச்சரே” என்று சொன்னான். விதுரர் விழி திருப்பிக்கொண்டார். அவன் மேலுமொரு அணுவிடை முன்னகர விழைந்தான். அக்கணமே அதற்கான நினைவு எழுந்தது. “முன்பொருநாள் தாங்கள் அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் உடனிருந்தேன்” என்றான். “அன்று தங்களைக் கண்டதும் அன்னை உளம் உடைந்து அழுததை நினைவுகூர்கிறேன். அன்னை அவ்வண்ணம் எவருமிலா பெண்ணென அழ முடியுமென்பதை அன்றுதான் கண்டேன். அன்று அவர் அழுதபோதும் அரசியென்றே இருந்தார். விழிகளில் ஒருகணமும் தணிவு எழவில்லை” என்றான்.

விதுரரின் விழிகள் மாறின. “அன்று உடனிருந்தவன் நகுலன்” என்றார். “ஆம், ஆனால் நாங்கள் ஒருவரே” என்று சகதேவன் தொடர்ந்தான். “அன்னை அன்று மீளும்போது முகம் தெளிந்து புன்னகை செய்துகொண்டிருந்தார்.” விதுரர் தலைகுனிந்து அசையாமல் நின்றார். அவன் சற்றே முன் சென்று திரும்பி அவர் முகத்தை பார்த்தான். அவர் ஏதேனும் சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்தான். பின்னர் “தாங்கள் விரும்பினால் அன்னையை சந்திக்கலாம், நான் அழைத்துச்செல்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை” என்று விதுரர் கூறினார். “ஒருவேளை அன்னை தங்களிடம் எதையேனும் சொல்லக்கூடும்” என்று அவன் கூறினான். இல்லை என்பதுபோல் தலையசைத்து விதுரர் திரும்பி நடந்தார்.

அவன் உடன் நடந்தபோது தனக்குத்தானே என புன்னகைத்துக்கொண்டான். அவர் நடை முற்றாக மாறிவிட்டிருந்தது. திருதராஷ்டிரரின் குடிலுக்குள்ளிருந்து வெளிவந்த போதிருந்த தற்கோப்பு முழுமையாக அழிந்து உள்ளம் பல திசைகளிலாக சிதறிப் பரவ, இலக்கில்லாதவர்போல் நடந்தார். காற்றில் அலைவதென கைகள் சுழன்றன. தன் குடில் வாயில் வரும்வரை அவர் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. குடிலுக்கு முன் நின்று அவர் விடைகோரும்பொருட்டு தலையசைத்தார். அவனும் தலைவணங்கி முன்னகர்ந்தான். குடில் முகப்பில் அவருடைய ஆணைக்காக ஏவலர்கள் காத்திருந்தனர். விதுரர் “மைந்தா” என்று பின்னால் அழைத்தார். அவன் திரும்பிப்பார்த்தான். “சற்று உள்ளே வந்து செல்க!” என்றார்.

அவர் உள்ளே நுழைய அவனும் உள்ளே நுழைந்தான். அங்கிருந்த ஏவலரிடம் தலையசைவால் வெளியேறும்படி ஆணையிட்டுவிட்டு விதுரர் தன் மஞ்சத்தில் அமர்ந்தார். அவன் எதிரே நின்றுகொண்டிருக்க “அமர்க!” என்று கைகாட்டினார். அவன் தயங்கி பின்னடைந்து தாழ்வான மஞ்சத்தில் அமர்ந்தான். அவர் கூறப்போவதென்ன என்பதை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். அத்தருணம் அவனால் உருவாக்கப்பட்டது. சதுரங்கத்தில் நாற்களத்தில் கருக்களை நகர்த்தி எதிரி கருவை திரும்ப முடியாத முனை மடிப்பு வரை கொண்டு சென்று நிறுத்துவதுபோல. அத்தகைய தருணங்களில் மானுடர் எவ்வண்ணம் செயல்படுகிறார்கள் என்பது அவர்களை காட்டுகிறது. எத்திசையிலும் நகர இயலாதென்று உணரும்போது பெரும்பாலானவர்கள் சீற்றம் கொண்டு தங்கள் நிறைநிலை அழிந்து சொல் தெறிக்கவிடுவார்கள். சிலர் உடைந்து மடிந்து அழுவார்கள். சிலர் ஆழந்த அமைதிகொள்வார்கள். மூன்றுமே அத்தருணத்தை தவிர்ப்பதற்கான வழிகள். அத்தருணத்தில் எழும் மாற்றமுடியாமை ஒன்றை உணர்பவர் சிலரே.

மெய்மையை மானுடர் தேடிக்கொண்டிருப்பதில்லை. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எதையோ ஒன்றை வைத்து அகற்றவே முயல்கிறார்கள். ஏதேனும் ஒரு வழியினூடாக அதிலிருந்து தப்பிச் செல்லவே தவிக்கிறார்கள். தவறி அதன்மேல் விழுபவர்கள் உண்டு. அறைபட்டு அதன்மேல் தூக்கி வீசப்படுபவர்கள் உண்டு. மெய்மைக்கு எதிரான அனைத்தாலும் கைவிடப்பட்டு மெய்மையுடன் தனித்து நின்றிருப்பவர்கள் உண்டு. மெய்மை வாழ்வுக்கு எதிரானது. வாழ்வின் உண்மைகள் அனைத்திற்கும் அப்பால் நின்றிருப்பதே மெய்மை. பொருட்களனைத்துக்கும் விசையும் எடையும் வடிவும் அளிப்பது வெறுமையே என்றொரு சொல் உண்டு.

விதுரர் நெடுநேரம் கைகளால் தாடியை துழாவியபடி தனித்து அமர்ந்திருந்தார். அவன் உடனிருப்பதை முற்றிலும் மறந்துவிட்டிருப்பதைப்போல தெரிந்தார். அவன் அவர் கைவிரல்களின் நிலையிலா அசைவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். முகம் நிமிர்த்தி அவர் முதலில் சொல்லக்கூடும் சொல் எதுவாக இருக்கும்? அவர் அன்னையை சென்று பார்க்கவே விழைவார். ஒருபோதும் அதை தவிர்க்கப் போவதில்லை. ஒருபோதும் அவரால் இதிலிருந்து விலக இயலாது. அவன் தன் உள்ளத்துள் புன்னகைத்தான். சற்று முன்னர் தன் மூத்தவருக்காகவே இங்கு திரும்பி வந்தேன் என்று அவர் சொன்னார். எவருக்காக அதை கூறியிருப்பார்? அது பொய்யல்ல, அத்தருணத்தில் அதை நம்பியே சொன்னார். அதை சொல்வதனூடாக நம்ப முயன்றார். அந்நம்பிக்கையினூடாக பிறிதொன்றை மறைக்க முயன்றார்.

எத்தனை எளியவர்கள் மானுடர்! அவர்கள் பெரியவர்களாகும்தோறும் அவர்களின் உணர்வுகளும் எண்ணங்களும் பெரிதாகின்றன. எனவே இடர்களும் சரிவுகளும் கூட பெரிதாகின்றன. பெரியவர்கள் தங்கள் இடர்களின் முன், சரிவுகளின்முன் மிகச் சிறியவர்களாகும் தருணங்கள் உண்டு. பெரியவர்கள் பெரும் சிறுமை கொள்ளாது ஒழியவே இயலாது. அவன் அவ்வெண்ணங்கள் எல்லாம் பன்னிரு களமாகவே தன்னுள் எழுவதை உணர்ந்தான். எல்லா களத்திலும் எதிரிக்கோள் எங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கோளும் பிறிதொன்றுக்கு எதிரி. நன்று தீதென ஏதுமில்லை. சுக்ரன் விழிநோக்க குலமழிந்தோரும் இருக்கலாகும்.

விதுரர் “நான் இறக்கும் தருணம் என்ன? இன்னும் உள்ள காலமென்ன? கணித்துக் கூறுக, மைந்தா!” என்றார். சகதேவன் திடுக்கிட்டு “தந்தையே, அத்தருணத்தில் தாங்கள் அவ்வாறு ஆணையிட்டதால் அதை செய்தேன். மெய்யாக அதை நான் செய்யலாகாது. நிமித்திகன் எவருக்கும் அவர்களின் இறப்புப் பொழுதையும் இறக்கும் முறையையும் உரைக்கலாகாதென்று நெறிகள் உரைக்கின்றன” என்றான். “இங்கு உன்னிடம் நான் தந்தையென்று இருந்து ஆணையிடுகிறேன், கூறுக!” என்றார் விதுரர். “அதை அறிவதனால் எப்பயனுமில்லை. இறப்பன்றி பிறிதிலாத ஒருவருக்குக் கூட அதில் சற்று பொருள் உள்ளது. நீடுநோயாளனுக்கு அதை கூறலாமென்று சூரியப் பிரதீபம் கூறுகிறது” என்றான் சகதேவன்.

“நான் நீடுநோயாளன். மாளாத் துயர் கொண்டவன்” என்று விதுரர் சொன்னார். சகதேவன் அவரை நிமிர்ந்து பார்த்தான். “மெய், ஒரு சொல்லும் மிகையல்ல. கூறுக!” என்று விதுரர் கூறினார். சகதேவன் சிலகணங்கள் அவரை நோக்கி இருந்துவிட்டு எழுந்து “பொறுத்தருள்க தந்தையே, என்னால் அது இயலாது!” என்றான். “ஏன்?” என்று விதுரர் கேட்டார். “தங்கள் துயரென்ன என்று அறியேன். ஆனால் இப்புவியில் துயரிலாத எவருமில்லை. புவித்துயருக்கு இறப்பு ஒரு முடிவும் அல்ல. இறப்புத் தருணத்தை அறிந்ததனால் எவ்வகையிலும் துயர் குறைவதும் இல்லை. என் நெறிநூல்கள் ஆணையிடுவதற்கப்பால் நான் அதை செய்யலாகாது. பொறுத்தருள்க!” என்றான்.

“என் துயரை உன்னிடம் எவ்வாறு அறிவிப்பேன்? துயரை அறியும் வழி என உன் நூல்கள் ஏதேனும் நவில்வதுண்டா?” என்றார் விதுரர். சகதேவன் “கொடுந்துயர் கொண்டவர்களின் உடலில் தொட்டறிய முடியாத நடுக்கு ஒன்று இருக்கும் என்பார்கள். அவர்கள் தொட்டால் தாலத்து நீர் நலுங்கும் என்று கேட்டிருக்கிறேன். முன்பு ஏழு முறை சாவின் கணத்தில் தாங்கொணாப் பெருவலியில் துடிக்கும் சிலரை அவ்வாறு தொட வைத்துப் பார்த்திருக்கிறேன்” என்றான். விதுரர் தன் மஞ்சத்தில் கையால் தட்ட ஏவலன் வந்து நின்றான். “அகன்ற தாலத்தில் நீர் கொண்டு வருக!” என்றார். தலைவணங்கி அவன் வெளியே சென்றபின் “நோக்குக! இப்புவியில் இன்றிருக்கும் எந்த மானுடரை விடவும் பெருந்துயர் என்னில் உள்ளது. என் உடலில் திகழ்கின்றது பெருவலி” என்றார்.

“தந்தையே, நீங்கள் அனைத்திலிருந்தும் ஒழிந்து அமர்ந்திருந்தீர்கள். நீங்கள் இங்கு நிகழ்ந்தவை எவற்றையுமே அறியவில்லை” என்று சகதேவன் சொன்னான். “ஆம், அது எவ்வகையிலும் தப்புதல் அல்ல” என்று விதுரர் கூறினார். “தாங்கள் குருதிச்சுற்றமென எவரையும் இழக்கவில்லை. தாங்கள் நம்பியிருந்தது எதுவும் உடையவும் இல்லை. தங்கள் நிலையில் எந்த மாறுதல் நிகழவுமில்லை” என்றான் சகதேவன். கசப்புடன் நகைத்து “ஒருவேளை அதனால்தானோ என்னவோ” என்று விதுரர் கூறினார். “ஏது இலாதது மாற்றிலாதது என ஆகிவிடுகிறது.” சகதேவன் “எனில் தாங்கள் ஆற்றிய ஊழ்கத்துக்கு என்ன பயன்?” என்றான். “ஊழ்கத்தினால் துயரிலிருந்து தப்ப முடியாதா என்ன?”

“ஊழ்கம் என் துயரை கூர்கொள்ளவே செய்தது போலும்” என்று விதுரர் கூறினார். ஏவலன் தாலத்தில் நீருடன் வந்து அவரருகே வைத்தான். விதுரர் தன் சுட்டுவிரலை நீட்டி அந்நீர்ப்பரப்பை தொடப்போனார். அதற்குள் கூரிய காற்றால் ஊதப்பட்டதுபோல் நீர் அலைவு கொண்டது. “தந்தையே…” என்று துயரம் நிறைந்த குரலில் சகதேவன் அழைத்தான். விதுரர் அவனை நோக்கி புன்னகைத்து “கூறுக, இன்னும் எத்தனை காலம் இப்பெருந்துயரை நான் தாங்க வேண்டும்?” என்றார். சகதேவன் சூழ நோக்கி அங்கிருந்த கரித்துண்டை எடுத்துவந்து ஏடெழுதும் பலகைப்பரப்பில் பன்னிரு களம் வரைந்து அவற்றில் எண்களைப் பொறித்து சுட்டுவிரலை அவற்றில் வைத்து ஒவ்வொன்றாகத் தாவி ஊழ்கத்தில் அமைந்தான்.

விழி திறந்தபோது தன் கை தொட்டுக்கொண்டிருக்கும் ராசிநிலையைப் பார்த்து நீள்மூச்செறிந்துவிட்டு “தங்களுக்கும் ஓராண்டே” என்றான். “அடுத்த நீர்க்கடன் வரை?” என்றார் விதுரர். “ஆம்” என்றான். “எவ்வண்ணம்?” என்று விதுரர் கேட்டார். “தாங்கள் இங்கிருந்து கனிந்து உதிர்வீர்கள். முனிவர்களுக்குரிய சாவு” என்று சகதேவன் சொன்னான். விதுரர் கண்களைச் சுருக்கி “மெய் கூறுக. அவ்வண்ணம் ஒன்று எனக்கு எவ்வாறு அமையக்கூடும்?” என்றார். “மெய்யாகவே அதைத்தான் காண்கிறேன். முனிவர்களுக்குரிய வகையில் விழிகளினூடாக உங்கள் உயிர் பிரியும். ஆனால்…” என்றபின் விரலை சற்றே நகர்த்தி பிறிதொரு ராசிநிலையைத் தொட்டு “அது முனிவர்களுக்குரிய சாவல்ல. இங்கு எஞ்சியிருக்கும் ஒரு பற்று உங்கள் உடனிருக்கும். உங்கள் அன்புக்குரிய ஒருவர் அருகிருப்பார். அனைத்தையும் துறந்து இங்கிருந்து செல்கையில் துறக்க விழையாத ஒன்றை அவருக்கு அளித்து அகல்வீர்கள். அந்தப் பற்றினால் கனிந்து விழுந்தாலும் அங்கு சென்றுசேரமாட்டீர்கள். பிறிதொரு பிறவி உண்டு. அதில் ஈடேறும் அனைத்தும்” என்றான்.

விதுரர் நீள்மூச்செறிந்து புன்னகைத்து “அது நன்று. அவ்வாறாகுமெனில் அது என் பேறு. என்னுள் எஞ்சுவதென்ன என்றறியேன். ஆனால் நான் ஒவ்வொன்றையும் உதற முயலும்போதும் உதற முடியாத ஒன்றை எங்கிருந்தோ உணர்கிறேன்” என்றார். பின்னர் எழுந்து கொண்டு “நன்று, மைந்தா. இச்சொற்களுக்காக நான் உன்னை வாழ்த்துகிறேன்” என்றார். சகதேவன் எழுந்துகொள்ள அவர் தன் எழுத்தாணி ஒன்றை எடுத்து அவனுக்கு அளித்து “இதை நிமித்திகனுக்குரிய காணிக்கையாகக் கொள்க!” என்றார். அவன் அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு “வாழ்த்துக, தந்தையே!” என்றான். அவர் தலையில் கைவைத்து “நலம் சூழ்க!” என்றார்.

 

சகதேவன் அவ்வெழுத்தாணியுடன் வெளியே சென்றான். அதை தன் இடைக்கச்சையில் செருகிவிட்டு தன் குடில் நோக்கி நடந்தான். குடிலை அணுகுந்தோறும் அவன் நடை தளர்ந்தது. இடையில் கைவைத்து நின்று குடிலையே நோக்கிக்கொண்டிருந்தான். அந்தக் குடில்வளாகம் முழுக்க ஏவலர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். வேள்விக்குரிய பொருட்களை அந்தணர்கள் கங்கைக்கரையில் அமைந்திருந்த வேள்விநிலத்திற்கு கொண்டுசென்றனர். வேள்விநிலத்தில் இடையில் கைவைத்தபடி நின்று தௌம்யர் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருப்பதை காண முடிந்தது. அவன் குடிலிலிருந்து விலகி கங்கைக்கரையோரமாக நடந்தான். குடில் நிரையின் ஓசை அகன்று அகன்று மறையும் வரை காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான். பின்னர் ஓசையற்று ஒளிப்பெருக்காக வழிந்துகொண்டிருந்த கங்கையை நோக்கியபடி ஒரு மண்மேட்டில் நின்றான்.

நெடுநேரமாக நின்றுகொண்டிருப்பதை கால்கள் உளைந்த போது உணர்ந்து அங்கே அமர்ந்தான். அதுவரை வெவ்வேறு உளமாடல்களினூடாக மறைக்கப்பட்டிருந்த அது வெளிவந்தது. மாறாதது. மலையென நின்றிருப்பது. கேட்டுணர்ந்த சொற்கள், கண்டுணர்ந்த உணர்வுகள், எண்ணிக்கொண்டவை, இயற்றியவை அனைத்தும் பொய்யே என்றுணர்ந்தான். மெய்யென்று அது மட்டுமே அருகில் நின்றது. அவன் உளம் கரைந்து நெஞ்சு விம்ம தேம்பி அழுதான். அழுகையின் இடையில் தலை தழைந்து முழங்கால் மூட்டில் நெற்றி பட்டது. தாள முடியா வலியால் என அவன் உடல் மடித்து நடுங்கிக்கொண்டிருந்தான். பின்னர் ஓர் எண்ணம் எழ நிமிர்ந்து கண்களை துடைத்துக்கொண்டான். தாடி நனைந்து மடியில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. கைகளால் நீவி அதை துடைத்தபின் அந்த எழுத்தாணி எடுத்து மண்ணில் பன்னிரு களம் ஒன்றை வரைந்தான். அதில் தனது ராசிக்களத்தில் முதற்புள்ளியிட்டு எழுத்தாணியால் தொட்டுத் தொட்டு சென்றான்.

ஆனால் ஊழ்கம் கூடவில்லை. கலைந்து மீண்டும் முயன்றான். ஏழு முறை முயன்றபோதும் உளம் கலைந்து சொல் திரளவில்லை. சினமெழுந்து அவ்வெழுத்தாணியை களத்தில் இட்டுவிட்டு பற்களைக் கடித்து தலையசைத்தபடி அமர்ந்திருந்தான். நிமித்திகன் ஒருபோதும் தனக்கென காலம் நோக்க இயலாது. தன் ஊழை கணிப்பவன் பிறர் ஊழை அறிய இயலாதவன். அவன் தன் ஆசிரியர்களை நினைவுகூர்ந்தான். நீள்மூச்சுடன் அண்ணாந்து இலைத்தழைப்புகளுக்கு அப்பாலிருந்து வந்த கதிரொளியை முகத்தில் வாங்கி கண்மூடி அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து இடையாடையையும் மேலாடையையும் களைந்து கரையிலிட்டுவிட்டு ஓடி பாய்ந்து கங்கை நீரில் விழுந்தான். மூழ்கி ஆழத்துக்கிறங்கினான். நெஞ்சு உடையும்படி மூச்சு இறுகி நின்றிருக்க நீருக்குள் சுழன்று சுழன்று நோக்கினான். பல்லாயிரம் நீர்மணிக் குமிழிகளைக் கண்டான். அவை விழிகளாயின. அறிந்த விழிகள். அவனிடம் உவகையும் துயரும் கொண்டு பேச முனையும் விழிகள்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 43

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 4

சங்குலன் திருதராஷ்டிரரின் அறையிலிருந்து வெளிவந்து, விதுரரை பார்த்ததும் நின்றான். அவர் அருகணைந்ததும் அவன் முகம் விரிந்து புன்னகையாகியது. தலைவணங்கி விலகி நின்றான். விதுரர் அவனருகே சென்று அவனுடைய தோளில் கைவைத்து புன்னகையுடன் “மெலிந்துவிட்டாய்” என்றார். அவன் நாணத்துடன் சிரித்து தலைகுனிந்து “போர் நாட்களில் மலையில் இருந்தேன். போதிய உணவில்லை” என்றான். அவர் அவன் தோளில் கைவிரல்களைச் சுருட்டி இருமுறை குத்தியபின் “அங்கும் வேட்டையாடி உண்டிருப்பாயே” என்றார். அவன் சிரித்தபோது சிறுவனாக மாறிவிட்டிருந்தான். அவர் அவன் உடலின் நெஞ்சக்கூட்டுக்குள்ளேயே அடங்கும் உடல்கொண்டிருந்தார். ஆனால் உணர்ச்சிகள் உடலசைவுகள் வழியாக அவர் பேருருக்கொண்டு தந்தையாக அவன் சிறுமகவாக மாறிவிட்டிருந்தான்.

“இருக்கிறாரா?” என்று விதுரர் கேட்டார். “ஆம், எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்று அவன் சொன்னான். “அவர் உடல்நிலை எவ்வண்ணம் உள்ளது?” என்றார் விதுரர். “நலம், காலையில் உள்ளமும் நிகர்நிலையில் உள்ளது” என்று அவன் சொன்னான். விதுரர் தலைகுனிந்து கைகூப்பியபடி குடிலுக்குள் நுழைந்தார். சங்குலனின் முகத்தில் விதுரருக்கு மட்டுமாக எழுந்த அப்புன்னகை அக்கணமே மறைந்து அவன் முகம் சிலையென்று ஆவதை சகதேவன் கண்டான். அவன் சென்று தன் பீடத்தில் அமர்ந்துகொள்ள சகதேவன் தாழ்ந்த குரலில் திரும்பி சஞ்சயனிடம் “உண்மையில் இரும்புப்பாவை என்பது இவன்தான்” என்றான். சஞ்சயன் இதழ்மட்டும் விரிய விழிகளுக்குள் புன்னகைத்தான். சகதேவன் “அவர் தனக்கு நிகராகப் போரிடும்பொருட்டு உருவாக்கிக் கொண்ட பாவை” என மீண்டும் சொன்னான்.

குடிலுக்குள் திருதராஷ்டிரர் மஞ்சத்தில் தலையணைகளை அடுக்கி அதில் சாய்ந்தவராக கால் நீட்டி அமர்ந்திருந்தார்.  வெண்ணிற மேலாடை தோளிலிருந்து வழிந்து நீண்டு அப்பால் கிடந்தது. கைகளைக் கோத்து மடியில் வைத்து தலையைத் தாழ்த்தி உதடுகளை இறுக்கி காலடியோசைகளை கேட்டுக்கொண்டிருந்தார். சற்று அப்பால் தாழ்ந்த பீடத்தில் காந்தாரி அமர்ந்திருந்தாள். பக்கத்து அறையிலிருந்து சத்யசேனை கதவுப் படலை திறந்து எட்டிப்பார்த்தாள். விதுரரின் காலடி ஓசைக்கு ஏற்ப உடலில் மெய்ப்பு அலைகளைக் கொண்டபடி விழிக்குமிழ்கள் உருள திருதராஷ்டிரர் முனகினார். அவருடைய பெரிய கரிய உடலில் மயிர்ப்புள்ளிகள் தோன்றி அமைவதை தொலைவிலிருந்தே சகதேவன் கண்டான்.

சஞ்சயன் அருகணைந்து “அமைச்சர் விதுரர் தங்களைக் காணும்பொருட்டு வந்திருக்கிறார், பேரரசே” என்றான். திருதராஷ்டிரர் ஒன்றும் கூறவில்லை. விதுரர் அருகணைந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார். திருதராஷ்டிரர் கைநீட்டி அவரை வாழ்த்தவில்லை. யானைமூச்சென பெருமூச்சு மட்டும் எழுந்தது. விதுரர் அவர் வாழ்த்தை எதிர்பார்க்காமல் எழுந்து சென்று காந்தாரியின் கால்களைத் தொட்டு வணங்கினார். காந்தாரி தன் வலக்கையை அவர் தலையில் வைத்து “சிறப்புறுக! நிறைவுறுக!” என்று வாழ்த்தினாள். சிற்றறையில் இருந்து வந்து நின்றிருந்த இளைய அரசியரை அணுகி மூப்பு முறையில் அவர்களை கால்தொட்டு வணங்கினார் விதுரர். அவர்கள் காந்தாரியைப்போலவே அவரை வாழ்த்தினர். சத்யசேனை மெல்ல விசும்பினாள். காந்தாரி திரும்பி கட்டப்பட்ட கண்களால் அவளை நோக்க சத்யவிரதையும் விசும்பி பின் தன் வாயை கைகளால் அழுத்திக்கொண்டாள். அரசியர் அனைவருமே விழிநீர் வடித்துக்கொண்டிருந்தனர்.

விதுரர் கைகளைக் கட்டியபடி திருதராஷ்டிரர் முன் நின்று “இன்று முழுக்க பணிகள் உள்ளன, மூத்தவரே. நீர்க்கடனை முறைப்படி ஆற்றி நிறைவு செய்யவேண்டிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இங்கு அமைச்சர்கள் பலர் வந்துவிட்டனர். அவர்களில் பலர் இளையோர். அவர்களுக்கு கற்றுத்தரவேண்டியிருக்கிறது” என்றார். “பிறர் எங்கே?” என்றார் திருதராஷ்டிரர். “ஓர் அரசர் நீங்கினால் அவருடைய அமைச்சர்கள் பணிநீங்குவது மரபு. பெரும்பாலும் அனைவருமே கானேகிவிட்டார்கள்.” திருதராஷ்டிரர் “ஆம், அறிந்தேன்” என்றார். அவர் ஏதோ எண்ணிக்கொண்டிருக்க முகம் ஒருகணம் கடும் சினம் கொண்டது போல், பின்னர் துயிலில் ஆழ்ந்தது போல், பின்னர் அழுகையில் இழுபட்டது போல் தோன்றியது.

விதுரர் “தங்களிடம் வாழ்த்துச் சொல் பெற்று திரும்ப வேண்டும் என்று எண்ணினேன். நேற்றே வந்துவிட்டேன். தாங்கள் துயின்றிருப்பீர்கள் என்று கூறினார்கள்” என்றார். “துயிலா?” என அவர் புன்னகைத்தார். “அல்லது ஒருவேளை இப்போதும்கூட துயின்றுகொண்டிருக்கிறேன் போலும்” என்று தனக்குத்தானே என கூறினார். கைகளை வீசி “எல்லாம் கனவு” என்றார். விதுரர் மறுமொழி ஏதும் கூறவில்லை. திருதராஷ்டிரர் எண்ணியிராத கணம் வெடித்தெழுந்து உரத்த குரலில் “செல்க! செல்க! உன்னை இங்கு யார் அழைத்தார்கள்? இங்கு எதைப்பார்க்க வந்தாய்?” என்றார். விதுரர் கைகள் கூப்புவதுபோல் நெஞ்சில் படிந்திருக்க நின்றார். “செல்க! நிற்காதே, செல்க!” என்று திருதராஷ்டிரர் மீண்டும் கூச்சலிட்டார். விதுரர் “திரும்பிவர எண்ணவில்லை. வராமலிருக்க இயலவில்லை” என்றார். “ஆம்” என்றார் திருதராஷ்டிரர். தொண்டை அடைப்பதுபோல கனைத்துக்கொண்டே இருந்தார். பலமுறை கனைத்தபிறகு சற்றே அமைதியடைந்தார்.

“நீ கிளம்பும்போது உண்மையில் ஓர் அகநிறைவை அடைந்திருந்தேன். எனக்குத் தெரிந்திருந்தது, இவையனைத்தும் இவ்வண்ணமே நிகழும் என்று. அதை அறியாத தந்தையர் இங்கு எவருமில்லை. ஆகவே அதற்குமுன் நீ கிளம்பியது நன்றென்றே எண்ணினேன்” என்றார். “ஆம், நான் கிளம்பியது மீளாமல் சென்று மறையும்பொருட்டே. ஆனால் நான் வந்தாகவேண்டும், உங்களிடம் இருந்தாகவேண்டும்” என்றார் விதுரர். “என்னுடனா?” என்று திருதராஷ்டிரர் தலை திருப்பினார். “எனக்காகவா திரும்பி வந்தாய்?” விதுரர் “ஆம் மூத்தவரே, உங்களால்தான். அந்தப்பற்றினால்தான் நான் எங்கும் செல்ல முடியாமல் ஆகியது” என்றார். “இல்லையெனில் எங்கு சென்றிருப்பாய்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “தொலைவு, நெடுந்தொலைவு” என்றார் விதுரர். “எங்கு என்று எனக்குத் தெரியாது. ஆனால் நெடுந்தொலைவாக அன்றே சென்றிருக்கக்கூடும்.”

திருதராஷ்டிரர் இருகைகளையும் கோத்துக்கொண்டார். தலையை குனிந்து சிலகணங்கள் அமர்ந்திருந்தபின் “சொல்க, நீ எதை அடைந்தாய்?” என்றார். விதுரர் ஒன்றும் சொல்லவில்லை. “இளையோனே, நீ செய்த ஊழ்கம் என்ன?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் புன்னகைத்து “அகன்றிருப்பதனால் பரப்பு மட்டுமே குறைகிறது என அறிந்தேன். பரப்பு குறைகையில் கூர்மை மிகுகிறது” என்றார். திருதராஷ்டிரர் அதை புரிந்துகொள்ளாமல் தலையை அசைத்தார். பின்னர் “அஸ்தினபுரியின் அந்த கைவிடுபடைகள் அனைத்தும் பொறிகளிலிருந்து எழுந்துவிட்டன, அறிவாயா?” என்றார். விதுரர் திடுக்கிடுவதை சகதேவன் கண்டான். அவர்களுக்குள் என்ன அறியாச்சொல் பரிமாறப்பட்டது என வியந்தான். “நீ சென்று அந்தக் கைவிடுபடைகளை பார்க்கலாம். நாணும் வில்லும் தளர்ந்து அவை அந்த மேடைகளில் அமைந்திருப்பதை நான் எண்ணிக்கொண்டேன்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் பெருமூச்சுவிட்டார். “நன்று, நீ அஸ்தினபுரிக்குச் செல்லாதொழிவதே உகந்தது” என்றார்.

விதுரர் மீண்டும் பெருமூச்செறிந்தார். “அவை நெடுங்காலமாக நின்றிருந்தன” என்ற திருதராஷ்டிரர் “அந்தக் கைவிடுபடைகளால் கொல்லப்பட்டவர்கள் எவர் என்று நான் எண்ணிக்கொள்வதுண்டு. அவர்களின் முப்பாட்டன்களின் காலத்தில் அவை அமைக்கப்பட்டிருக்கக் கூடும்…” அவர் புன்னகைத்து தலையைச் சுழற்றி “அவற்றை அமைத்தவர்களின் கொடிவழியினர்தான் கொல்லப்பட்டார்கள் என்று எண்ணிக்கொண்டேன். பொருளில்லாத கீழ்மைதான். ஆனால் அப்படி எண்ணவே தோன்றியது.” விதுரரிடமிருந்து ஆழ்ந்த மூச்சொலி வெளிப்பட்டது. திருதராஷ்டிரர் “சரி விடு. அதைப்பற்றி நாம் எண்ணவேண்டியதில்லை. அதை நான் உன்னிடம் சொல்லியிருக்கக் கூடாது” என்றார். விதுரர் “ஆம்” என்றார்.

திருதராஷ்டிரர் தன் கைகளை நீட்டி துழாவ விதுரர் முழந்தாளிட்டு அமர்ந்து தன் தலையை அங்கு வைத்தார். தலைமேல் திருதராஷ்டிரரின் பெரிய கைகள் அமைந்தன. குழலை வருடி கழுத்தை வளைத்து இழுத்து தன் மடிமேல் அமைத்துக்கொண்டு “நீ வந்திருக்க வேண்டியதில்லை. மீண்டு இங்கே வந்திராவிடில் இவ்வளவு பெரிய இழப்பையும் துயரையும் நீ அறிந்தே இருக்கமாட்டாய்” என்றார். “ஆனால் நான் வந்தாகவேண்டும்” என்று விதுரர் சற்றே உடைந்த குரலில் சொன்னார். “இதுவரை நான் ஒருகணம்கூட அகன்றதில்லை. உடனிருந்திருக்கிறேன். உடலாலும் உள்ளத்தாலும்” என்றார். அவரை தோள் சுழற்றித் தூக்கி தன் நெஞ்சோடணைத்தபடி திருதராஷ்டிரர் விழிநீர் வழிய உடல் குலுங்க அழத்தொடங்கினார்.

சகதேவன் எழுந்து வந்த நீள்மூச்சை அடக்கி பின்னடைந்து குடிலிலிருந்து வெளியே செல்லலாம் என்று முயன்றான். ஓரடி பின்னெடுத்து வைத்தபோது அங்கிருந்து செல்ல முடியாதென்று உணர்ந்து அங்கேயே நின்றான். அவ்வுணர்ச்சிகளுக்கு அப்பால் நிற்பவன்போல் சஞ்சயன் தோன்றினான். காந்தாரியின் கண்களில் கட்டப்பட்டிருந்த இளநீலத்துணி நனைந்து விழிநீர் வழிந்தது. திருதராஷ்டிரர் ஓசையின்றி அழுதுகொண்டிருந்தார். மழைக்காலத்தில் மண்ணும் விண்ணும் குளிர்ந்தபின் எழும் மழை போல ஓசையே இல்லாமல். அலைவின்றி, எழுவதோ வீழ்வதோ நிகழாமல், பளிங்குத்திரையென அசையாது நின்றுகொண்டிருக்கும் மழை. நிரைமழை எனப்படும் அதில் விண்ணும் மண்ணும் ஒன்றாகி தங்களை முற்றுமாக மறந்துவிடுகின்றன. அத்தனை நீண்ட பொழுது ஒருகணமும் குறையாது ஒரு அழுகை நிகழமுடியுமென்பதை சகதேவன் உணர்ந்ததில்லை. விதுரரும் அவ்வழுகையில் மூழ்கி முற்றழிந்து பிறிதெங்கோ இருந்தார்.

பின்னர் அவனுக்கு விந்தையானதோர் எண்ணம் ஏற்பட்டது. திருதராஷ்டிரரும் விதுரரும் மட்டுமே ஒரு கண்காணா வட்டத்திற்குள் சென்றுவிட்டதாக. அதற்கு வெளியேதான் அவனையும் சஞ்சயனையும் போல காந்தாரியும் நின்றிருப்பதாக. பின்னர் திருதராஷ்டிரர் மெல்ல தணிந்தார். இருகைகளாலும் கன்னங்களைத் துடைத்தபடி “நீ இங்கு வந்திருக்கவேண்டியதில்லை. இங்கு வந்து இத்துயரனைத்தையும் நீ அடையவேண்டியதுமில்லை” என்றார். “நான் துயரடைவதில் ஓர் அறம் இருக்கிறது. எங்கெங்கோ தருக்கியிருந்தேன். வஞ்சங்களையும் கீழ்மைகளையும் என் அகத்தில் சேர்த்துக்கொண்டிருந்தேன். என் பொருட்டு நீ இத்துயர் அனைத்தையும் அடைவதில் எப்பொருளுமில்லை.” விதுரர் “என்றும் தங்கள் பொருட்டே துயருறுகிறேன், மூத்தவரே” என்றார்.

திருதராஷ்டிரர் தலையைத் தாழ்த்தி இருகைகளிலும் நெற்றியைத் தாங்கி அமர்ந்து உடலை இறுக்கிக்கொண்டார். தலையின் எடையை தாளாதவர் போல் மேலும் தழைந்தார். மெல்லிய குரலில் “நீ இளையோனைப் பார்த்தாயா?” என்றார். விதுரர் “ஆம்” என்றார். அவர்கள் இருவரும் சில கணங்கள் சொல்லின்மையில் அமர்ந்திருந்தனர். திருதராஷ்டிரர் “நான் அவனை பார்த்தேன்” என்றார். விதுரர் “ஆம்” என்றார். “நேற்றிரவு… நேற்றிரவு அவன் என்னை…” என்றபின் தலைதூக்கி “சஞ்சயா!” என்றார். “பேரரசே!” என்றான் சஞ்சயன். “எங்கே அந்தப்பாவை?” என்று அவர் கேட்டார். “அதை சங்குலன் அறிவான்” என்று சஞ்சயன் சொன்னான். “அதை கொண்டுவருக! எங்கிருந்தாலும் அது இங்கு வந்தாகவேண்டும்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “பேரரசே அது நேற்று… என்று சஞ்சயன் சொல்லத்தொடங்க “அதை கொண்டுவருக!” என்றார். சஞ்சயன் தலைவணங்கி அறையைவிட்டு வெளியே சென்றான்.

திருதராஷ்டிரர் விதுரரின் கைகளை பற்றிக்கொண்டு “நேற்றிரவு… நேற்றிரவு நான் அவனை பார்த்தேன்” என்றார். விதுரர் ஒன்றும் கூறவில்லை. திருதராஷ்டிரர் “தெய்வங்களே!” என்று முனகியபடி நிமிர்ந்து கைகளை பின்னால் ஊன்றி மஞ்சத்தில் சாய்ந்தமர்ந்தார். தலையை மேல் நோக்கி தூக்கி விழியற்ற குருதிக்குழிகள் துள்ள “தெய்வங்களே! மூதாதையரே!” என்றார். விதுரர் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்றார். “இல்லை! ஓய்வு? ஓய்வென ஒன்று எனக்குண்டா? இனி என் உள்ளம் அமையும் தருணம் அமையுமா?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் ஒன்றும் கூறவில்லை. “இளையோனே, சொல்! என் நெஞ்சு ஆறுமா? துயர் மீண்டு ஒருநாளேனும் இனி நான் உயிருடன் இருப்பேனா?” என்றார். விதுரர் அதற்கும் மறுமொழி கூறவில்லை.

திருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்து வெடிப்போசை எழுப்பியபடி எழுந்தார். விதுரருக்கு மேல் பெருமரமென ஓங்கி நின்றார். தன் பெரிய கைகளை அவர் தோளில் ஊன்றியபடி குனிந்து “சொல்! ஒருகணமேனும் இனி எனக்கு இயல்பு வாழ்க்கை உண்டா? இருத்தலில் இன்பத்தை இனி எப்போதேனும் நான் அறிவேனா?” என்றார். விதுரர் “மெய் சொல்வதென்றால், இல்லை” என்றார். “சிறிய இடைவேளைகளில் உளமயக்கென வந்து செல்லும் இனிமைகள் இருக்கலாம். அவை துயரை பெருக்கிக்கொள்ளும்பொருட்டு எழுபவை மட்டுமே. ஒருபோதும் இனி நிறைவும் இன்பமும் இல்லை” என்றார். திருதராஷ்டிரரின் கைகள் அவர் தோளிலிருந்து விலகின. அவை உரசும் ஒலியுடன் இருபக்கமும் தழைந்தன. பின்னர் அவர் பின்னடைந்து மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தார். அவர் எடையில் மஞ்சம் முனகலோசை எழுப்பி அசைந்தது.

“அந்தச் சிறிய உவகை கூரியது. நம்பிக்கை அளிப்பது. சற்றுநேரம் அன்னை என தூக்கி இடையில் வைத்துக்கொள்வது. அதன் உச்சியை விரைவில் சென்று சேர்ந்துவிடமுடியும்” என்றார் விதுரர். “ஆனால் அது உடனே குற்றவுணர்ச்சியை உருவாக்கும். மேலும் துயரத்தை இழுத்துக்கொண்டுவரும். திமிறித்தவிக்காமல் துயரை அடையும்பொருட்டு உள்ளம் அதை உருவாக்குகிறது.”  திருதராஷ்டிரர் உறுமலோசை போல் முனகினார். “ஏனென்றால் துயரிலேயே உங்கள் இருத்தல் பொருள்கொள்கிறது. துயரின்மையில் நீங்கள் நின்றிருக்க நிலமே இல்லை” என விதுரர் தொடர்ந்தார். “இந்த ஊசலில் இருந்து இனி ஒருகணமும் வெளியேற இயலாது.” பெருமூச்சுடன் “ஆம்!” என்று திருதராஷ்டிரர் கூறினார். அவர்கள் அமைதிக்கு திரும்பினர். இளைய அரசியர் விழிநீர் வடித்தபடி மேலும் பின்னடைந்து சுவருடன் ஒட்டிக்கொண்டனர்.

திருதராஷ்டிரர் “இளையோனே, மானுடர் அனைவரும் காலத்தில் ஒழுகிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்களே? ஆகவே இங்குள்ள எதையும் நம்மால் உறுதியாக பற்றிக்கொள்ள முடியாதென்றும் இங்குள்ள எதுவும் நிலையாக நம்முடன் இருக்கப்போவதில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளதே” என்றார். “ஒவ்வொன்றும் அகன்று செல்லும் இந்த வெளியில் நான் மட்டும் இங்கே இவ்வுணர்வு வெளியில் அசையாமல் நின்றிருப்பேனா என்ன?” விதுரர் “ஆம், மூழ்கியவை இடம்பெயர்வதில்லை” என்றார் விதுரர். “இனி உங்களுக்கு காலம் என்பதும் இல்லை. இங்கு இவ்வண்ணமே இனி எப்போதும் இருப்பீர்கள்.” திருதராஷ்டிரர் “எப்போதும் என்றால்?” என்று கேட்டார். “நெடுநாட்களா? இன்னும் எத்தனை நாட்கள்?”  விதுரர் “அதை நான் எவ்வண்ணம் சொல்லமுடியும்?” என்றார்.

திருதராஷ்டிரர் திரும்பி சகதேவனை பார்த்தார். “இங்கு சகதேவன் இருக்கிறான். அவன் சொல்லட்டும்” என்றார். “இல்லை, நான்…” என்றபடி சகதேவன் அறையை விட்டு வெளியே சென்றான். திருதராஷ்டிரர் உரக்க “மைந்தா, அருகே வா” என்றார். “வேண்டாம், தந்தையே” என்று சகதேவன் சொன்னான். “இது என் ஆணை! அருகே வா!” என்று சொன்னார் திருதராஷ்டிரர். சகதேவன் தயங்கிய காலடி எடுத்து அவர் அருகே வந்தான். அவர் தன் கைகளை நீட்ட மேலும் அருகே சென்று அவர் காலடி தொட்டு வணங்கினான். அவர் தன் பெரிய கையை அவன் தலையில் வைத்து, பின்னர் தோள்களை வளைத்து தன் உடலோடு சேர்த்துக்கொண்டார்.

அவர் உடலிலிருந்து எழுந்த உப்புமணம் அவனுக்கு எப்போதுமே உள நிறைவை அளிப்பது.  சிறு மைந்தன் என்றாகி அவர்  உடலுடன் ஒட்டிக்கொள்வது போல் அமர்ந்தான். அவர் கைகள் அவன் தலைமயிரை, செவிகளை, தோள்களை, நெஞ்சைத் தொட்டு வருடி அலைந்தன. தொண்டையை கனைத்துக்கொண்டு “மைந்தா, கூறுக! இத்துயர் இன்னும் எத்தனை நாள்? நான் இருக்கப்போவது எத்தனை காலம்?” என்றார். “அதை நான் எவ்வண்ணம் கணிப்பேன்?” என்றான் சகதேவன். “கூறுக, உன்னால் கணிக்க முடியும்! எனது நாளும் விண்மீனும் உனக்குத் தெரியும். இங்கேயே களம் வரைந்து கணித்து சொல்க!” என்றார் திருதராஷ்டிரர். சகதேவன் விதுரரை பார்க்க அவர் “கணித்துக் கூறுக! இத்தருணத்தில் அது ஒன்றே மூத்தவருக்கு ஆறுதலை அளிப்பது” என்றார்.

சகதேவன் சூழ நோக்கி அப்பாலிருந்த சிறு குச்சியொன்றை எடுத்துக்கொண்டு வந்தான். குடிலுக்குள் தரையில் செம்மண் கருங்கல்லால் அறைந்து இறுக்கப்பட்டிருந்தது. அவன் அதில் அக்குச்சியால் கீறி பன்னிருகளத்தை வரைந்தான். அதற்குள் ராசிகளுக்குரிய எண்களையும் குறிகளையும் எழுதினான். கண்மூடி ஊழ்கத்தில் அமர்ந்து மெல்ல ஒவ்வொரு ராசியிலும் சுட்டுவிரல் தொட்டு எண்ணிச் சென்றான். பின்னர் விழிதிறந்து பதற்றத்துடன் எழுந்து “நான் அரசியை மறந்துவிட்டேன். பேரரசி, தங்கள் ஆணையின்றி இதை செய்யக்கூடாது. தாங்களும் அவருடன் பிணைந்தவர் என்பதை அறிந்திருப்பீர்கள்” என்றான். “எனது ஆணையும் கூட, நோக்குக! இன்னும் எத்தனை இரவுகளை நான் கடக்கவேண்டும்?” என்றாள் காந்தாரி.

காந்தாரியின் உடன் பிறந்த அரசியர் வந்து அவளுக்குப் பின்னால் நின்றனர். அவர்கள் அனைவர் முகங்களும் ஒன்றுபோலிருந்தன. விழிகள் அனைத்தும் சிவந்து தசை தளர்ந்து நோயுற்றிருந்தன. அனைவருமே கைகளை மார்பில் கட்டியிருந்தனர். உதடுகள் சுருங்கி குவிந்து முதுமை கொண்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தனர். சகதேவன் மீண்டும் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ராசிகள் ஒவ்வொன்றாக கையைத் தொட்டு நகர்த்தி கொண்டுசென்று பின் விழி திறந்தான். அவன் நோக்கில் அவர்கள் மிக அகன்று வெறும் விழிகளெனத் தெரிந்தனர். “இன்னும் ஓராண்டு” என்று சகதேவன் சொன்னான். “எப்போது?” என்று மீண்டும் கேட்டார் திருதராஷ்டிரர். “ஆண்டு நீர்க்கடன் முடிந்தபின் சில நாட்களில்” என்றான். “எங்கு?” என்று அவர் மீண்டும் கேட்டார். “வடகிழக்கே ஒரு காட்டில். அதை நான் கண்டேன்” என்றான்.

திருதராஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “எவ்வண்ணம்? நோயுற்றா?” என்று கேட்டார். “அனல்” என்று சகதேவன் சொன்னான். அவர் புன்னகைத்து “நன்று, அனல் நன்று!” என்றார். “இளையோனே, அனலைப் போல் என்னை அறிந்த பிறிந்தொன்று உண்டா?” என்று விதுரரிடம் கேட்டார். விதுரர் “ஆம், மூத்தவரே. அனல் நன்று” என்றார். திருதராஷ்டிரர் சிரித்தபடி திரும்பி காந்தாரியிடம் “அனல்! பெரும்பாலும் அது காட்டெரி” என்றார். சகதேவன் காந்தாரியின் முகம் மலர்வதை பார்த்தான். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இளைய அரசியர் அனைவரின் முகங்களும் மலர்ந்தன. அவர்கள் அடையும் உணர்வென்ன என்று அவனால் உணரமுடியவில்லை. அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்கள்போல், இழந்த அனைத்தையும் மீளப் பெற்றவர்கள் போல் அவர்கள் உவகை கொண்டனர். ஒருவரை ஒருவர் கைகளை பற்றிக்கொண்டனர்.

காந்தாரி “ஓர் ஆண்டு எனில் பன்னிரு மாதங்கள். நானூறு நாட்கள்கூட இல்லை” என்றாள். “ஓராண்டெனில் எவ்வாறு நானூறு நாட்களாகும்? நானூறுக்கு குறைவாகவே நாட்கள்… இல்லையா மைந்தா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “ஆம், நானூறு நாட்கள் இல்லை. குறைவாகவே” என்று சகதேவன் சொன்னான். “நன்று, மைந்தா. இந்நீண்டநாட்களில் என் செவியில் விழுந்த இன்சொல் இது. நீடுவாழ்க!” என்று திருதராஷ்டிரர் அவன் தலைமேல் கைவைத்து மீண்டும் வாழ்த்தினார். விதுரர் “அவ்வண்ணமே ஆகுக, மூத்தவரே!” என்றார். பின்னர் மீண்டும் தலைவணங்கி “நாங்கள் விடை கொள்கிறோம். எங்கள் பணிகள் மிகுந்துள்ளன” என்றார்.

“இளையோனே, இங்கு நீர்க்கடன் முடிந்தபின்னர் நீ கிளம்பலாம்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “ஆம், அவ்வண்ணம்தான் நான் எண்ணியிருக்கிறேன்” என்று விதுரர் கூறினார். “கிளம்புகையில் இதை எண்ணிக்கொள். என்னை முற்றிலும் கைவிட்டுச் செல்லும் உரிமையை நான் உனக்கு அளிக்கிறேன். என்னை மறந்துவிடுவதே நீ இனி செய்ய வேண்டியது” என்றார். விதுரர் “ஆம், அது ஒன்றே எஞ்சியுள்ளது” என்றார். பெருமூச்சுடன் “ஆனால் என்னால் அது இயலுமா என அறியேன்” என்றார். திருதராஷ்டிரர் உரக்க “மறந்துவிடுக, இங்கு நாம் இருவரும் சந்திப்பது இன்றே இறுதியாகட்டும்!” என்றார். “நாளை நீர்க்கடனின்போது நீ என் அருகில் இருக்கலாகாது. இந்நீர்க்கடன்கள் எதையும் நீ இயற்ற வேண்டாம். இவ்வனைத்திலிருந்தும் நீ விடுதலைகொள்க!” என்றார். விதுரர் உதடுகளை இறுக்கிக்கொண்டார்.

“இப்புவியில் உடன்பிறந்தார் என்று நாம் வாழ்ந்தது இன்றுடன் நிறைவுறுகிறது. என்றும் எனக்கினியவனாக இருந்தாய். ஒருகணமும் ஒரு செயலாலும் எனக்கு நீ உவப்பற்றவனாக ஆகவில்லை. மூத்தவன் என்று அமர்ந்து உன்னை வாழ்த்துகிறேன். இனி இது ஒன்றே உனக்கு நான் அளிக்கக்கூடியது” என்றார் திருதராஷ்டிரர்.  விதுரர் அவர் கால்களைத் தொட்டு வணங்க அவர் விதுரரின் தலைமேல் கைவைத்து “உளம் அமைக! மெய்மையின் ஒளி உன்னை தொடுக! விண்புகுந்து நிறைவுறுக!” என்றார். விதுரர் குனிந்து காந்தாரியின் கால்களைத் தொட்டு மீண்டும் வணங்க அவள் “அவ்வண்ணமே ஆகுக!” என்றாள்.

கைகளைக் கூப்பியபடி பின்னடி எடுத்து வைத்து விதுரர் விலகிச்சென்றார். சகதேவன் அவரைத் தொடர்ந்து வெளியே சென்றான். வாயிலுக்கு வெளியே சங்குலன் அந்த இரும்புப்பாவையுடன் வருவதை அவன் கண்டான். அது அவனுக்கு இணையாகவே நடந்து வந்தது. அதன் விழிகள் ஒளிகொண்டிருந்தன.  புன்னகைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது அதன் முகம்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 42

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 3

திருதராஷ்டிரரின் குடில் முன் சஞ்சயன் நின்றுகொண்டிருந்தான். அவர்கள் வருவதைக் கண்டு புன்னகையுடன் அருகணைந்து விதுரரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தலைமேல் கைகளை வைத்து வாழ்த்திய விதுரர் “எப்படி இருக்கிறார்?” என்றார். சஞ்சயன் “உடல்நிலை நலமாகவே இருக்கிறது” என்றான். சகதேவன் “மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றுதானே கேள்விப்பட்டேன்” என்றான். சஞ்சயன் “ஆம், அதை மகிழ்ச்சி என சொல்லலாம் என்றால் நேற்று மாலைவரைகூட மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்” என்றான்.

விதுரர் “சொல்க!” என்றார். “நீங்கள் அவரை சந்திக்க வந்திருக்கிறீர்கள்” என்றான் சஞ்சயன். “அவர் நிலையை அறிந்தபின் சந்திக்கிறேன்” என்றார் விதுரர். சஞ்சயன் “அதை நான் விளக்க முடியாது. நிகழ்ந்தவை என்ன என்று மட்டும் சொல்கிறேன்” என்றான். விதுரர் இயல்பாக நடந்து பக்கவாட்டிலிருந்த சஞ்சயனின் குடிலை நோக்கி சென்றார். சஞ்சயன் அவர் பின்னால் வந்தான். அவர் அங்கிருந்த மூங்கில் பீடத்தில் அமர்ந்துகொள்ள அவன் முன்னால் நின்றான். சகதேவன் அருகே சென்று நின்று அவர்கள் இருவரின் முகங்களையும் மாறிமாறி நோக்கினான்.

சஞ்சயன் “இங்கே அரசரும் இளையோரும் வந்து வாழ்த்துச்சொல் பெற்றுச் சென்றதை அறிந்திருப்பீர்கள். அந்நாளில் அக்கணங்களுக்கு முன்புவரை அவர் கொந்தளித்துக்கொண்டுதான் இருந்தார். சினமும் பழிவெறியும் ஒரு கணம் மீதெழும். மைந்தர் வாழவேண்டும், குடிசெழிக்கவேண்டும் என்னும் விழைவு அதை வெல்லும். அவர் எந்நிலையில் இருக்கிறார் என்பதை எவராலும் சொல்ல முடிந்ததில்லை. சுழற்காற்றில் அலையும் காற்றுத்திசைகாட்டிபோல விண்ணால் ஆட்டுவிக்கப்படுகிறார் என்று நான் எழுதிக்கொண்டேன்” என்றான்.

ஆனால் அன்று பாண்டவ உடன்பிறந்தார் ஐவரும் வந்து பணிந்து வாழ்த்துச்சொல் பெற்றபோது அவரிடமிருந்து தந்தையே மேலெழுந்தார். தன்னை ஒரு பெருந்தந்தை, குலமூதாதை என அவர் கண்டுகொண்டார். அது அவரை விடுதலை செய்தது. அனைத்து உளக்கசடுகளும் அகன்று தெளிந்தார். பேரன்பு நிறைந்தவராக ஆனார். அவர்கள் சென்றபின் அந்த இரும்புப் பாவையை அவரிடம் அளித்தார்கள். உண்மையில் அதை அவரிடம் அளிக்கும் எண்ணம் இளைய யாதவருக்கு இருக்கவில்லை. அதை திரும்பக்கொண்டுசெல்லவே அவர் சொல்லியிருந்தார். ஆனால் பேரரசர் அதை நினைவுகூர்ந்து அதை கொண்டுவரும்படி சொன்னார்.

நான் அப்போது அவர் அருகே இருந்தேன். “அது எதற்கு இப்போது?” என்று கேட்டேன். “அதை கொண்டு வா” என்று அவர் சொன்னபோது முகம் மலர்ந்திருந்தது. உளக்கிளர்ச்சி கொள்ளும்போது தலையை உருட்டியபடி உதடுகளை மெல்வது அவர் வழக்கம். “என் மைந்தனின் உடல் அது… என் மைந்தனைத் தழுவும் உணர்வு நான் அடைந்தது” என்றார். “அது பீமசேனனின் உடலுருவில் அமைக்கப்பட்டது அல்லவா?” என்றேன். “அது அவன் உடலும்கூடத்தான். அவர்கள் வெவ்வேறல்ல… கொண்டுவருக!” என்றார். அருகே இருந்த பேரரசி “அப்பாவையா? அது அவனைப்போலவா உள்ளது?” என்றார். அவர் முகமும் மலர்ந்திருந்தது.

நான் அது அவர்களுக்கு நல்ல உளநிலையை உருவாக்கும் களிப்பாவையாக அமையும் என எண்ணினேன். கலிங்கச் சிற்பிகளை வரச்சொல்லி அதை மீண்டும் பொருத்த முடியுமா என்று பார்த்தேன். அது எளிதில் பொருந்தும்படி சமைக்கப்பட்டது. ஆகவே அரைநாழிகைக்குள் அதை முன்பென அமைத்துவிட்டார்கள். பேரரசரிடம் அதை கொண்டு சென்றபோது அது வரும் ஒலியிலேயே உணர்ந்துவிட்டார். பாய்ந்தெழுந்து ஓடிவந்து இரு கைகளாலும் அதை அள்ளி எடுத்து நெஞ்சோடணைத்து வெறிகொண்டு முத்தமிட்டார். கண்ணீருடன் “மைந்தா! மைந்தா!” என்று புலம்பினார். அதை அணைத்துச் சுழற்றியபடி நடனமாடினார்.

என்ன வியப்பென்றால் அப்பாவையை தழுவியும் வருடியும் பேரரசியும் மகிழ்ந்ததுதான். அவர்கள் அதை தங்கள் மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சினார்கள். அழுகையும் கண்ணீரும் மறைந்தபின் சிரிப்பும் களிப்பும் வெளிப்பட்டது. அதை அவர்கள் மைந்தன் என்றே எண்ணினர். அதனுடன் உரையாடினர். ஊடியும் நகையாடியும் அதனுடனேயே இருந்தனர். அதுவும் நன்றே என நான் எண்ணினேன். அது அவர்களின் துயரத்தை தணிக்குமென்றால் ஆகுக என கருதினேன். அவ்வண்ணம்தான் இருந்தது, நேற்று அந்திவரை.

நேற்று அந்தியில் அவர்கள் இருவரும் குடிலுக்குள் மஞ்சத்திற்கு சென்றபோது இருவருக்கும் நடுவே அந்தப் பாவை இருந்தது. ஒவ்வொரு நாளும் அவ்வாறுதான் அவர்கள் இரவு உறங்குகிறார்கள். அது அவர்களுக்கு நடுவே படுத்திருக்கையில் ஏறத்தாழ பேரரசரின் அளவுக்கே பெரிதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் அதை நடத்தும் முறையில் நாமே அறியாது அது ஒரு கையளவு சிறிய குழவி என எண்ணத்தலைப்படுவோம். அதற்கு மரவுரிப் போர்வையை மெல்ல இழுத்து போர்த்துகையில் அரசியின் கையிலிருக்கும் அந்த மென்மையை, முகத்திலிருக்கும் கனிவைக் காண்கையில் அந்தப் பாவையும் அதை உணர்கிறதோ என்று தோன்றும்.

அமைச்சரே, அது உண்மையில் என்ன என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. தொலைவிலிருந்து பார்க்கையில் அவர்கள் அதை கொஞ்சி மகிழும்போது அதுவும் அவர்களுடன் விளையாடுகிறதோ என்ற எண்ணத்திலிருந்து அகல முடிவதில்லை. அவர்கள் அதை கைகளால் வருடுகையில் மெல்ல உடலை ஒடுக்கி கருக்குழவிபோல் சுருண்டு அவர்களிடம் ஒண்டிக்கொள்கிறது. அவர்கள் அதன் தலையை மடியில் வைத்து அமர்ந்துகொள்கையில் கால் மேல் கால் போட்டபடி அவர்களின் கைகளை எடுத்து விரல்களால் பற்றி நெஞ்சோடு வைத்துக்கொண்டு மென்மொழி பேசுவதுபோல் தோன்றுகிறது. குழவியரும் சிறுவரும் கொள்ளும் உடலசைவுகள் அனைத்தும் அதில் கூடுகின்றன.

இது என் விழிமயக்காக இருக்கலாம். ஆனால் மெய்யாகவே அதில் ஏதோ உள்ளது. பொருட்களில் கூடும் தெய்வங்கள் எவையோ அதில் கூடியுள்ளன. அது மறைந்த அரசரின் எஞ்சும் இருப்போ என நான் எண்ணியதுண்டு. ஆனால் அவர் உயிருடன் இருந்தபோதுகூட அதில் ஏதோ குடியிருந்தது. அவருடன் இணைநின்று போரிட்டது அதுதான். அவர் மறைந்தபின் குருக்ஷேத்ரத்தில் எழுந்து நின்றிருந்தது. இப்போது மைந்தனென, மகவென மாறி இங்கிருக்கிறது. நலம் நாடுவதா அன்றி வஞ்சம் கொண்டு பலி கோருவதா என்று அதை இன்று வகுக்க இயலவில்லை. அது தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டே இருப்பதுதான் தெய்வங்களின் இயல்புபோலும்.

அதன் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இரும்புப் பாவைமுகம். தசையென நெகிழாதது. உள்ளிருந்து எந்த ஒளியையும் வெளிக்கொணராதது. தலைக்கவசம் இட்டு ஒருவர் முன் வருகையில் அவரது முகம் மறைந்துவிடுவதை கண்டிருப்போம். ஆனால் தலைக்கவசமிட்ட ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கையில் மெல்ல மெல்ல அத்தலைக்கவசமே அவரது முகமாக மாறுவதை உணர்கிறோம். அது அவரது உணர்வுகளை காட்டத்தொடங்குகிறது. அதை நோக்கி நாம் அனைத்தையும் பேசத்தலைப்படுகிறோம். அதைப்போலத்தான் அந்தப் பாவையை அரசர் துரியோதனன் என்றே நானும் எண்ணினேன். அவ்வாறே அதை நடத்தினேன். அதன் முன் பணியாது ஒரு சொல்லும் நான் உரைத்ததில்லை. பொறுத்தருள்க அரசே என்று சொல்லாமல் அதை தொட்டதுமில்லை.

நேற்றிரவு சங்குலன் கதவை மூடி வெளிவரும்போது நான் வெளியே நின்றிருந்தேன். அவன் என்னைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கி அங்கிருந்த தாழ்வான பீடத்தில் அமர்ந்துகொண்டான். நான் என் மரவுரியை போர்த்திக்கொண்டு இக்குடிலுக்கு மீண்டேன். இரவு மட்டுமே நான் அரசரிடமிருந்து விலகியிருக்கிறேன். அதுவும் இப்போது அவர் பேரரசியுடன் இருப்பதால். அஸ்தினபுரியில் பெரும்பாலான இரவுகளில் நான் அவர் அருகிலேயே தரையில் படுத்துக்கொள்வது வழக்கம். அவர் இல்லாதபோதும் அவர் இருப்பை எப்போதும் உணர்பவன் நான்.

மஞ்சத்தில் படுத்து கண்களை மூடியபடி ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி எண்ணினேன். அவரிடம் மறுநாள் சொல்லி முடிக்கவேண்டியவற்றை. சொல்லத் தவறியவற்றை. பெரும்பாலான இரவுகளில் அவ்வண்ணம் விழிமூடி படுத்திருக்கையில் நான் அவரிடம் சொல்லாது தவிர்த்த சொற்களை உள்ளிருந்து வெளியே எடுப்பேன். அவ்விருளுக்குள் ஒவ்வொன்றாக வெளியே விடுவேன். அவை பறந்தும் தவழ்ந்தும் அவரை சென்றடைந்துவிடும் என்பதைப்போல். அவர் துயின்றபின் அவர் உள்ளத்துள் புகுந்து அங்கிருக்கும் என்பதுபோல். மறுநாள் காலையில் அவர் என்னிடம் பேசும்போது முந்தைய இரவில் நான் வெளிவிட்ட சொற்களுக்கான மறுமொழிகளும் உடன்பாடுகளும் இருப்பதை பார்த்திருக்கிறேன். நாங்கள் விழித்திருக்கையில் பேசுவது குறைவு. துயிலினூடாகவே கைமாறும் சொற்கள் மிகுதி.

அந்த அரைத்துயிலில் நான் அவரை மிக அருகில் எனக் கண்டேன். எனக்கு அம்முகத்தோற்றம் ஒரு பதற்றத்தை அளித்தது. பாண்டவ ஐவர் முன் அவர் பெருந்தந்தை என எழுந்த அத்தருணத்தில் அவருடன் இருந்தேன். உளம் நெகிழ்ந்து விழிநீர் சிந்தினேன். அவர் சென்றடைந்த அனைத்து உச்சிகளுக்கும் நானும் சென்றேன். அப்போதும் அந்தப் பேரரசர் நான் அறிந்தவரல்ல என்று தோன்றிக்கொண்டுதான் இருந்தது. இப்போதும் அந்த ஐயம் நீடிக்கிறது. சினவெறி கொண்டு கைகளை அறைந்துகொண்டு உறுமி கொந்தளித்து சுழன்று வரும் பேரரசரை கண்டிருக்கிறேன். அப்போதும் இதே உணர்வுதான், அது அவரல்ல பிறிதொன்று என்று. இவ்வாறும் அவ்வாறும் வெளிப்படும் இவ்விருவருக்கும் அப்பால் பிறிதொருவர் உண்டு என நான் எண்ணிக்கொள்கிறேன். அவ்வாறு ஒருவரை உருவாக்காமல் அவருடன் என்னால் இருக்க இயலாது.

அவர்களுக்கு நடுவே அந்தப் பாவை படுத்திருப்பதைப் பற்றி எண்ணிக்கொண்டேன். அது ஒரு தெய்வம் எனில் இப்போது எப்படி உணரும்? எவ்வாறு அது அவர்களை எண்ணும்? அங்கிருந்து எழுந்து இருளில் பேருருக்கொண்டு நின்று அவர்களை பார்த்துக்கொண்டிருக்கும் என எண்ணிக்கொண்டேன். இல்லை, அது வெறும் பொருள். மானுடரைக் கண்டு மானுடரைப்போல் உருவாக்கப்படுபவை பாவைகள். அவை மானுடருக்குரிய நிலையழிவுகள் ஏதும் இல்லாதவை என்பதனாலேயே அவை மானுடரைவிட மேம்பட்டவை ஆகிவிடுகின்றன. மானுடர் பிற மானுடரை என பாவைகளை எண்ணத்தலைப்படுகிறார்கள். பிற மானுடரை எப்போது அச்சத்துடனும் ஐயத்துடனுமே அவர்கள் அணுகுகிறார்கள் என்பதனால் பாவைகளையும் அவ்வாறே கருதுகிறார்கள். பாவைகளின் இரக்கமற்ற பிழையின்மையினால் அவர்களின் அச்சம் மேலும் மேலும் என பெருகுகிறது.

அது மானுடன் அல்ல. அது வெறும்பொருள். ஆனால் மானுடருடன் அவர்களைச் சூழ்ந்திருக்கும் அனைத்துப் பொருட்களும் விளையாடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பொருளிலும் ஒரு தெய்வம் உள்ளது. நம் காலைக் கிழிக்கும் கூழாங்கல், நாம் தலையில் இடித்துக் கொள்ளும் நிலைப்படி, நாம் கைநீட்டுகையில் சற்றே அகன்றுவிடும் கைப்பிடி அனைத்திலும் நம்முடன் விளையாடும் தெய்வங்கள் உள்ளன. இந்தப் பாவையில் இருக்கும் தெய்வம் எது? என்றேனும் எவரேனும் அதை முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா என்ன? ஏதேனும் தெய்வத்தை மானுடர் அவ்வாறு அறிந்து முழுமையாக வகுத்துள்ளார்களா? மானுடர் வகுத்துக்கொள்ளாதவற்றையே தெய்வம் என்று உணர்கிறோமா?

நான் துயின்றுவிட்டிருந்தேன். பின்னிரவில் கூச்சல்கள் கேட்டு எழுந்து வெளியே சென்றேன். பேரரசரின் குடிலின் கதவைத் திறந்து சங்குலன் உள்ளே செல்வதை கண்டேன். நானும் உடன் உள்ளே சென்று பார்த்தபோது பேரரசரை சங்குலன் தன் இரு பெரிய கைகளால் பற்றி இறுக்கி அள்ளித் தூக்கி அப்பால் கொண்டு செல்வதைக் கண்டேன். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அப்பாவையை அதன் பின்னரே கண்டு திடுக்கிட்டு பின்னடைந்தேன். அது இரு கைகளையும் விரித்து மற்போரிட சித்தமாக நின்றிருந்தது. சங்குலன் அவரை கொண்டு சென்று குடிலுக்குப் பின்னால் இருந்த வாயிலினூடாக அப்பால் மறைந்தான். அது தன் இரு கைகளையும் அறைந்தபடி விழியற்றதுபோல் தலையைச் சுழற்றியபடி குடிலை சுற்றி வந்தது.

நான் அதன் பின்னரே மஞ்சத்தில் அமர்ந்திருந்த பேரரசியைக் கண்டேன். அரசியின் விழிகள் அதை நோக்குவதுபோல் தெரிந்தது. அது சுழன்று வரும்போது அவர் தலைதிருப்பவில்லை. உறைந்ததுபோல் இரு கைகளையும் மடியில் கோத்து மஞ்சத்தில் அமர்ந்திருந்தார். எனினும் அதன் அசைவுகள் அனைத்தையும் அவர் உணர்ந்திருப்பார் என்று அவருடைய உடல்மெய்ப்பாடுகளிலிருந்து தோன்றியது. நான் அந்தப் பாவையை பற்றிநிறுத்த வேண்டுமென்று விரும்பினேன். எக்கணமும் அது தன் இரும்புக் கைகளால் பேரரசியை தாக்கிவிடக்கூடும் என்று தோன்றியது. அறைக்குள் அது கைநீட்டி துழாவியது.

அந்தப் பாவைக்கு நன்கு நோக்குணர்வு உண்டென்றும், அதைவிட மிகுதியாக செவியுணர்வு உண்டென்றும் அறிந்திருந்தேன். அப்போது அது விழியற்றதாகத் தோன்றியது ஏன் என வியந்தேன். அவரால் உடைக்கப்பட்டபோது அதன் விழிகள் பழுதுபட்டிருக்கலாம். ஆனால் முந்தையநாள் அதன் விழிகளை நான் பார்த்திருந்தேன். அவர்களுடன் அது இருந்தபோது நான் உள்ளே நுழைந்த அசைவைக் கண்டு சீற்றத்துடன் திரும்பி நோக்கியது. அதன் உணர்வுகள் என நான் கண்டுகொண்டவை முழுக்க அந்த விழியசைவுகளில் இருந்தே. அது கைகளை அறைந்துகொண்டது. உறுமியபடி நிலத்தை ஓங்கி மிதித்தது.

சங்குலன் கதவைத் திறந்து உள்ளே வந்து இயல்பாக நடந்து அதை அடைந்தான். அவனைக் கண்டதும் அது திகைத்து பின்னடைந்து அவனை போருக்கு அழைப்பதுபோல கைகளை விரித்தது. அவன் அதன் இரு கைகளையும் பற்றிச் சுழற்றி நிலத்தில் இட்டான். அது திமிறி எழ முயல தசைபுடைத்த தன் பெரும் கைகளால் அதைப் புரட்டி இரும்புக் கைகளை மடித்து பின்பக்கம் கொண்டுவந்து சேர்த்து தன் தலையில் சுற்றியிருந்த தலைப்பாகைத் துணியால் இறுகக் கட்டினான். அதைத் தூக்கி உருட்டி அப்பால் இட்டான். அது உறுமியபடி துள்ளி எழ முயல அவன் அதை அழுத்தி மண்ணோடு பற்றிக்கொண்டான். அது மெல்ல அடங்கி செயலிழந்தது.

அதற்குள் தோளால் உந்திக் கதவைத் திறந்து உள்ளே வந்த பேரரசர் “கொல் அவனை! கொல் அவனை!” என்று கூவினார். அவரது இரு கைகளும் பின்பக்கம் கட்டப்பட்டிருந்தன. “எங்கே? எங்கே அவன்?” என்று கேட்டபடி குடிலுக்குள் சுழன்று வந்தார். சங்குலன் எழுந்து அவரை மீண்டும் பிடித்துத் தூக்கி மஞ்சத்தில் அமர வைத்து “அமர்க!” என்றான். அவர் “விலகுக! அறிவிலி! விலகிச்செல்! இக்கணமே அவனை கொல்ல வேண்டும். எங்கே அவன்?” என்றபடி எழ முயல அவன் அவரை ஓங்கி கன்னத்தில் அறைந்தான்.

அந்த ஓசை கேட்டு என் உடல் உலுக்கிக்கொண்டது. கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது அவன் அவரை அறைவதை முன்பும் பலமுறை நான் கண்டதுண்டு. அது இரு மல்லர்களுக்கு போரில் நிகழும் தாக்குதல் என்றே எப்போதும் எனக்குத் தோன்றியிருக்கிறது. அறைபட்டதும் அவர் தன் தலையைத் தாழ்த்தி பற்களைக் கடித்துக்கொண்டு உடற்தசைகள் இறுகி நெகிழ்ந்து உருள திமிறினார். பின்னர் ஒரு கணத்தில் தளர்ந்து உறுமல்போல் ஒலியெழுப்பி அழுதபடி சரிந்து மஞ்சத்தில் விழுந்தார். சங்குலன் அவர் கைகளைக் கட்டியிருந்த மேலாடையை அவிழ்க்க அவர் தன் இரு கைகளாலும் தலையை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு கூவி அழுதார். முகம் தலையணையில் அறைய மஞ்சத்திலேயே குப்புற விழுந்தார்.

அந்தப் பொழுது முழுக்க வெறுமனே நோக்கியபடி பேரரசி அமர்ந்திருந்தார். பேரரசியின் கூரிய நோக்கை நான் முன்னரும் உணர்ந்திருந்தபோதும்கூட அதுபோல எப்போதும் அறிந்ததில்லை. அந்தக் காட்சியே ஒரு கனவோ எனத் தோன்றியது. பேரரசியின் முகம் ஒரு பளிங்குப் பாவை போலிருந்தது. இவர்கள் அனைவருக்குமே பாவை என ஆகும் உளநிலை உண்டு. பேரரசர் கருங்கல் சிற்பம் என ஆவார். துரியோதனனும் துச்சாதனனும் மட்டுமல்ல கௌரவ நூற்றுவரும் அமர்ந்த இடத்திலேயே அசைவிழந்து கல்லென ஆகும் கலை அறிந்தவர்கள்.

நான் குடிலின் படலை மெல்ல சார்த்தி வெளியே வந்தேன். என் குடிலுக்கு வந்து மஞ்சத்தில் அமர்ந்துகொண்டு கண்களை மூடி பேரரசரின் முகத்தை நினைவில் கொண்டுவர முயன்றேன். அமைச்சரே, அத்தருணத்தில் ஒன்று தோன்றியது. அப்போது அங்கே மஞ்சத்தில் படுத்து அழுதுகொண்டிருக்கும் பேரரசர்தான் மெய்யானவர் என்று. ஆனால் அவரை நானோ பேரரசியோ அணுக இயலாது. அவரை அணுகக்கூடியவன் சங்குலன் மட்டுமே.

சங்குலன் வெளிவந்து மீண்டும் தன் தாழ்ந்த மஞ்சத்தில் கால் நீட்டி அமர்ந்து கைகளை மடியில் கட்டி சுவரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். நான் இங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் சில கணங்களிலேயே துயின்று நீள்மூச்செறியத் தொடங்கினான். அவன் மூச்சொலியைக் கேட்டபடி நான் இங்கு அமர்ந்திருந்தேன். நெடும்பொழுது நான் துயிலவில்லை. என்னை அந்நிகழ்வு உலைத்துவிட்டது. அவ்வண்ணம் ஒரு நிகழ்வு உருவாகக்கூடும் என எண்ணியிருந்தேன். அது உருவானபோது வெறுமையை அடைந்தேன்.

என்ன நிகழ்ந்தது என்று இன்று காலை பேரரசியிடம் கேட்டேன். பேரரசி தனக்குத் தெரியவில்லை, பேரரசர் சொன்னதைத்தான் தன்னால் சொல்ல முடியும் என்றார். நள்ளிரவில் அந்தப் பாவை எழுந்து பேரரசரை கொல்ல முயன்றது. அவர் மேலேறி அமர்ந்து கால்களால் அவர் உடலை கவ்விக்கொண்டு கழுத்தை நெரித்து இறுக்கியது. அவர் அதை முழு உடல் விசையாலும் உந்தி அப்பாலிட்டு எழுந்து தாக்கினார். அவர்கள் இரு இணைமல்லர்கள்போல் போரிட்டுக்கொண்டனர். அதன் அடிகளை பேரரசரால் தாள முடியவில்லை. இருமுறை அது பேரரசரைத் தூக்கி அப்பால் வீசியது. அது அவரை கொன்றிருக்கும். அவரது அலறல் கேட்டு சங்குலன் உள்ளே வந்து அவரை காப்பாற்றினான் என்றார்.

சகதேவன் “அவர் மிக எளிதில் அதை உடைத்ததை நான் பார்த்தேன். அவர் தோள்களுக்கு அது இணையே அல்ல. அது துரியோதனன் தனக்கு நிகரான மல்லனாக உருவாக்கியது. மூத்தவர் பீமசேனன் வடிவில் அதை அமைத்தார் என்றும் மேலும் மேலும் மேம்படுத்தி அதை தன் வடிவிலேயே ஆக்கிக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் இருவருமே பேரரசரைவிட மிகச் சிறிய உடல் கொண்டவர்கள்” என்றான். விதுரர் “அது பேரரசரின் உடலையும் தான் எடுத்துக்கொண்டிருக்கலாம்” என்றார். “அது எங்ஙனம்?” என்றபின் “அது இயல்வதா என்ன?” என்று சகதேவன் கேட்டான். “அது தன் எதிரியின் ஆற்றலை கற்றுக்கொண்டு நிகரானதாக ஆகும் நுட்பம் கொண்டது” என்று விதுரர் சொன்னார்.

“அவ்வாறெனினும்கூட அவர்கள் ஒருமுறைகூட பொருதவில்லையே? அவர் அதை கொஞ்சி வருடி உவகைகொண்டபடி அல்லவா இருந்தார்?” என்று சகதேவன் கேட்டான். புன்னகையுடன் எழுந்துகொண்டு “நான் மூத்தவரை சந்திக்கிறேன்” என்று விதுரர் சொன்னார். சஞ்சயன் “அவர் பலமுறை நீங்கள் வந்துவிட்டீர்களா என்று கேட்டார். நேற்றே நீங்கள் வந்துவிட்டதை சொன்னேன். அழைத்து வரவா என்று கேட்டேன். வேண்டாம், அவனே வரட்டும் என்றார்” என்றான். விதுரர் “அவர் இன்று காலை எப்படி இருக்கிறார்?” என்றார். “நேற்று நிகழ்ந்தவற்றுக்குப் பின் அவர் சோர்வுற்றிருப்பார் என்றே எண்ணினேன். அவ்வண்ணமே இருக்கிறார். காலையில் எழுந்து அவரோ அரசியோ ஒரு சொல்கூட பேசிக்கொள்ளவில்லை” என்றான் சஞ்சயன்.

விதுரர் நடக்க சகதேவன் அவருக்குப் பின்னால் சென்றான். “இந்நாட்களில் நீ விந்தையான எதையாவது பார்த்தாயா அவரிடம்?” என்றார் விதுரர். “விந்தையா? இங்கே நிகழ்வன அனைத்துமே விந்தைதானே?” என்றான் சஞ்சயன். “நீ எண்ணாதது, முன்னர் நீ காணாதது” என விதுரர் மீண்டும் கேட்டார். “பல உள்ளன. எதை சொல்வேன்?” என்றான் சஞ்சயன். பின்னர் “இன்று காலை ஒரு புதிய பேச்சு எழுந்தது” என்றான். “சொல்க!” என விதுரர் சொன்னார்.

“இன்று காலை அவர் மறைந்த அரசியின் பெயரை சொன்னார்” என்றான் சஞ்சயன். “யார்?” என்றார் விதுரர். “இளைய அரசி சம்படையின் பெயரை சொன்னார்” என்றான் சஞ்சயன். “அவர் மறந்தும் ஒருமுறைகூட அப்பெயரை சொன்னதில்லை.” விதுரர் “அவர் என்ன சொன்னார்?” என்றார். “சம்படை என்றும் மட்டும் சொன்னார். தலைகுனிந்து அமர்ந்திருந்தார். தனக்குள் என ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொல் என்ன என நான் விழிகளால் அறிந்தேன். இளைய அரசி சம்படையின் பெயர்” என்றான் சஞ்சயன்.

விதுரர் அவனை புரியாதவர்போல சில கணங்கள் நோக்கி நின்றார். பின்னர் நடந்தார். சகதேவன் “அரசி சம்படைக்கு இங்கே நீர்க்கடன்கள் தேவை இல்லை அல்லவா? அவருக்குரிய அனைத்தும் பல்லாண்டுகளாக செய்யப்படுகின்றன” என்றான். விதுரர் ஒன்றும் சொல்லவில்லை. “அரசி விண்புகுந்திருப்பார்” என்றான் சகதேவன். விதுரர் தனக்குள் என “சிலர் விண்புகுவதே இல்லை” என்றார்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 41

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 2

சகதேவன் விதுரரின் குடில் நோக்கி மூச்சிரைக்க ஓடினான். அவனை வழியில் கண்ட ஏவலர்களும் இளம் அந்தணர்களும் திகைத்து விலகினார்கள். விதுரரின் குடில்முன் ஏவலர் சிலர் நின்றிருந்தார்கள். அவன் அவர்களிடம் ஒப்புதல் பெறாமல் குடிலுக்குள் நுழைந்து “அமைச்சரே” என்று கூவினான். விதுரர் அவனை திகைப்பில்லாமல் நோக்கி “அமர்க, அரசே!” என்றபின் பிறரிடம் வெளியேறும்படி கண்காட்டினார். சகதேவன் அவர் கைகளை பற்றிக்கொண்டு “இந்த நீர்ச்சடங்கு நிகழலாகாது… இதை எவ்வண்ணமேனும் தடுத்து நிறுத்தியாகவேண்டும்” என்றான்.

விதுரர் “பொறுங்கள்… உங்கள் உணர்வுகள் எனக்குப் புரியவில்லை” என்றார். “அமைச்சரே, நான் என் மைந்தர்களை பார்த்தேன். சற்றுமுன் அருகில் பார்த்தேன். அவர்களுடன் உரையாடினேன். அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள்” என்றான் சகதேவன். பதற்றத்துடன் “அவர்கள் நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். இச்சொற்களைக்கூட அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்…. அமைச்சரே, நாம் நீர்க்க்கடன் செய்து அவர்களை கங்கையில் கரைக்கிறோம். மண்ணிலிருந்து அறுத்து விண்ணுக்குச் செலுத்துகிறோம்… அதன்பின் அவர்கள் இங்கிருக்க இயலாது. அவர்களை நாம் முற்றாகவே இழந்துவிடுவோம்.”

அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார். தணிந்த குரலில் “அமர்க…. முதலில் அமர்க!” என்று அவன் கையைp பிடித்து பீடத்தில் அமரவைத்தார். “சுக்ரா” என அழைத்தபோது ஏவலன் தோன்றினான். “இன்நீர்” என்றார். அவன் தலைவணங்கி அகன்றான். சகதேவன் அவர் கைகளைப்பிடித்து அசைத்தபடி “அது வெறும் உளமயக்கு அல்ல. கனவு அல்ல. மெய். இதோ உங்களிடம் பேசுவதுபோல அவர்களிடம் பேசினேன். அவர்கள் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை. நம்முடன் இருக்க விரும்புகிறார்கள். அமைச்சரே, அவர்களுக்கு இப்புவி மீதான பற்று இன்னமும் அகலவில்லை”என்றான்.

“அது இயல்பு. அவர்கள் இங்கே வாழ்ந்து நிறையவில்லை. குருத்துக்களாகவே வீழ்ந்தவர்கள். ஆனால் அவர்கள் இவ்வுலகு சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு இனி இங்கே எந்த இன்பமும் இல்லை. நாம் அறிவதுபோல் வெறுமனே இருந்துகொண்டிருக்கலாம், அவ்வளவுதான்” என்றார் விதுரர். அவர் அவன் அருகே அமர்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். “சொல்லுங்கள் அரசே, நம் நலனுக்காக அவர்களை வெறுமனே இங்கே நிலைநிறுத்தியிருப்பது நன்றா?” சகதேவன் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். “கூறுக, அவர்கள் என்ன சொன்னார்கள்? அவர்கள் இங்கிருப்பது எப்படி? நம்மைச் சாராமல் அவர்களுக்கு இருப்பும் இன்பமும் உண்டா?”

“இல்லை” என்று சகதேவன் சொன்னான். அவன் உள்ளம் தவிக்கத்தொடங்கியது. விதுரர் “ஆம், அதையே முன்னோரும் சொல்லியிருக்கிறார்கள். நாம் இப்போது காணும் அவர்களின் உருவம் நம்மால் அளிக்கப்படுவது. இறுதியாக அவர்கள் நம் விழியிலும் உள்ளத்திலும் எஞ்சிய வடிவத்திலேயே அவர்கள் நம் முன் எழமுடியும். நாம் முதிர்வோம், அவர்களுக்கு அகவையும் மாற்றமும் இல்லை. நம் விழைவால் மட்டுமே அவர்கள் தோன்றமுடியும்” என்று விதுரர் சொன்னார். “ஆம்”என்றான் சகதேவன். “உண்மையில் சற்று அகவை முதிர்ந்த அனைவரும் அறிந்த உண்மைதான் இது.” சகதேவன் பெருமூச்சுவிட்டான்.

“அரசே, நாம் ஏன் அவர்களை எழுப்பிக்கொள்கிறோம்?” என்று விதுரர் கேட்டார். “அவர்கள் தோன்றவில்லை, நம் விழைவால் அவர்கள் திரட்டப்படுகிறார்கள். சொல்க, ஏன் அவர்களை திரட்டிக்கொள்கிறோம்?” சகதேவன் “எனக்குத் தெரியவில்லை, அமைச்சரே” என இடறிய குரலில் சொன்னான். விதுரர் “நாம் அவர்களிடமிருந்து அகன்று செல்கிறோம். நாம் பேரொழுக்கொன்றில் செல்பவர்கள். நம்மை மீறியது அது. அதை காலம் என்கிறோம். நம் உள்ளத்தில் சொற்பெருக்கென நிகழ்வது காலமே. நம் உடலில் அகவை முதிர்வென அது நிகழ்கிறது. அதைக்கடந்து உள்ளம் செலுத்த, கற்பனையை ஏவ எவராலும் இயலாது” என்றார்.

“ஆனால் அவர்கள் இப்பெருக்கின் கரைப்பாறைகள் என நின்றிருப்பவர்கள்” என விதுரர் தொடர்ந்தார். “அவர்களைவிட்டு நாம் அகன்றுசென்றே ஆகவேண்டும். வேறுவழியே இல்லை. ஆனால் அதில் நாம் குற்றவுணர்வு கொள்கிறோம். ஆகவே கற்பனையை திருப்பிச் செலுத்துகிறோம். சொற்களால் காலத்தை உந்துகிறோம். சொற்கள் அவ்விசையால் சிதைவுறுகின்றன. அவை தேங்கித் திகைத்து நிற்கையில் மட்டுமே அவர்களை அழைக்கிறோம்.” சகதேவன் “நான் அழைக்கவில்லை…” என்று கூவினான். “உங்கள் உள்ளம் அழைக்கவில்லை. ஆழம் அழைக்கிறது.”

சகதேவன் “வெறும் சொற்கள், இவற்றால் எதையும் விளக்கிவிடமுடியும். எந்த உண்மையையும் தொடமுடியாது” என்றான். “இவை உண்மை என நீங்களே அறிவீர்கள்” என்றார் விதுரர். “அவர்கள் எப்போது எழுகிறார்கள் என்பதை நோக்கினாலே உணரலாம். உங்கள் வழிகள் முட்டிக்கொள்ளும்போது. நீங்கள் சலித்து செயலற்றிருக்கையில்.” சகதேவன் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தான். அவன் உள்ளம் எரிச்சலடைந்தது. எழுந்து சென்றுவிடலாமெனத் தோன்றியது. ஆனால் அங்கிருந்து எழவும் உடல் உயரவில்லை.

“எண்ணுக, நாம் உளநெகிழ்ச்சிகளை அடைவதுகூட இவ்வாறுதான்!” என விதுரர் தொடர்ந்தார். “பொருளின்மையும் சலிப்பும் கொண்டு நம் அகம் செயலிழக்கையில் இயல்பாக நகர்ந்துசென்று கண்ணீர்துளிக்கும் ஒரு நெகிழ்ச்சியை அடைகிறோம். அதில் திளைக்கிறோம். அனைத்தையும் அதன் ஒளியில் விளக்கிக்கொள்கிறோம். ஆனால் அகத்தே ஒரு துளி ஐயம் எஞ்சியிருக்கிறது. மெல்லிய குருதித்தீற்றல் என அது உடன் வருகிறது. அது மேலெழுந்து நெகிழ்ச்சியை வெல்லும்போது அந்த்த் தோல்வியை ஒரு நகையாடலாக மாற்றிக்கொள்கிறோம். சிரித்து அதை கடக்கிறோம். நெகிழ்ச்சிக்குப்பின் எத்தனை விரைவில் நகையாடலுக்கு மீள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் அறிவார்ந்தவர்கள், நம்மை நாமே நோக்கும் நுண்ணுணர்வு கொண்டவர்கள். அவ்வாறுதான் இதுவும் நிகழ்கிறது….”

சகதேவன் பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டான். “அவர்கள் இங்கிருக்கும்வரை மட்டுமே நம்மவர். நம் குருதியிலிருந்து எழுந்தது அவர்களின் உடல் மட்டுமே. குருதியே நமக்கும் அவர்களுக்குமான உறவனைத்தையும் உருவாக்குகிறது. அவ்வுறவிலிருந்து எழும் அத்தனை உணர்ச்சிகளும் அக்குருதியாலானவை மட்டுமே” என விதுரர் தொடர்ந்தார். “ஆகவேதான் நாம் உடலை எரிக்கிறோம். அது உப்பாகி மண்ணில் கரைந்தழிக என எண்ணினர் மூதாதையர். இங்கு ஒவ்வொன்றும் எஞ்சாதொழிவதென்பது இயற்கைக்கு ஆணையிடும் தெய்வங்களின் நெறி. கண்ணெதிரே எஞ்சாதழிபவை கோடிகோடி. கைகூப்பி வணங்கும் சுடர் அணைந்த அக்கணமே இல்லை என்றாகிறது. மட்கி அழிகின்றன மாமரங்கள். மலைகளும் மறைந்துகொண்டிருக்கின்றன என்கின்றனர் நூலோர். எஞ்சாதழிவதை ஏற்றுக்கொள்வதொன்றே மானுடன் அடையும் மெய்மைகளில் தொன்மையானது.”

“யவனரும் பீதரும் காப்பிரிகளும் நீத்தாரை மண்ணிலிருந்து  நீங்கவிடுவதில்லை. நீத்தாருக்கு நினைவிடங்கள் அமைக்கிறார்கள். புதைக்கும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் உடன் வைக்கும் வழக்கம் அவர்களிடமுண்டு. இங்கு அரக்கர்களும் அசுரர்களும்கூட அதை செய்கிறார்கள். அதனால் என்ன பயன்? அவர்கள் செய்வது எத்தனை பெரிய அறிவின்மை! உயிருடன் இருந்தவர்களுக்கு நிகராக ஒரு பருப்பொருளை நிறுத்திக்கொள்வதனால் என்ன ஆகப்போகிறது? அப்பருப்பொருட்கள் அவர்கள் அல்ல, அவர்களின் அடையாளங்கள் மட்டுமே. அவ்வடையாளங்கள் நிறுவப்பட்ட கணம் முதல் பொருள் மாறுபடத் தொடங்குகின்றன. சொல்லிச்சொல்லி அவற்றை பிறிதொன்று ஆக்குவார்கள். எண்ணி எண்ணி புதிதென சமைப்பார்கள்”

“ஓராண்டுகாலம் அவை அன்றாட உணர்வென நீடிக்கும். ஏழாண்டுகாலம் அவை அவ்வப்போது எழும் நினைவென எஞ்சும். ஒருதலைமுறைக்காலம் அடையாளமென பேணப்படும். பின்னர் எவருடையதோ என ஆகி நின்றிருக்கும். இப்புவியிலுள்ள பொருட்பெருக்கில் ஒரு துளியென அமைந்திருக்கும்” என்றார் விதுரர். “நாமோ பெயரினை நீக்குகிறோம். சூரையங்காட்டிடைச் சுடுகிறோம். நீரில் மூழ்கி நினைப்பொழிகிறோம். அன்னமும் நீரும் அளித்து விண்செலுத்துகிறோம். மைந்தர் என அவர்களின் ஊன்வடிவம் மீண்டெழுவதில் முடிவிலாச்சுழற்சி ஒன்றைக் கண்டு அகம் நிறைகிறோம். பெயர்சூட்டி அவர்களை மீண்டும் நிகழச்செய்கிறோம். எதுவும் எஞ்சுவதில்லை என்றும் எதுவுமே அழிவதுமில்லை என்றும் ஒரே தருணத்தில் உணர்வதே நமக்கு வேதமெய்மை என அளிக்கப்பட்டுள்ளது.”

“அமைச்சரே” என இடறிய குரலில் அழைத்தான் சகதேவன். “அவர்கள் ஏன் இவ்வண்ணம் எஞ்சுகிறார்கள்? ஏன் நம் முன் தோன்றுகிறார்கள்?” விதுரர் “சுடர் அணைந்த பின்னர் விழிகளில் கணப்பொழுது எஞ்சும் பாவை போன்றவர்கள் அவர்கள்” என்றார். “அது நம் தோற்றம். சுடரென இங்கே வந்தது அதற்கு முன்பு இருந்தது. பின்பும் இருக்கும். நாம் சுடரென அதை நம் விழிகளில் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறோம்.” சகதேவன் கைகளில் முகத்தை வைத்து உடல்மடித்து அமர்ந்தான்.

விதுரர் மேலும் அவன் அருகே வந்து அவனுக்கு மட்டுமான குரலில் “அவர்கள் சென்றே ஆகவேண்டியவர்கள். இங்கிருந்து எஞ்சாமல் சென்றாலொழிய அவர்கள் மீண்டும் எழவியலாது” என்றார். திடுக்கிட்டவன் போல சகதேவன் அவரை நோக்கினான். “இங்கே துளியும் எஞ்சாமல் அவர்களை நாம் அனுப்பி வைப்பது அதன்பொருட்டே” என்றார் விதுரர். “அணிந்த ஆடைகளை முழுமையாகக் களைந்தாலொழிய அவர்களால் புத்தாடை அணிய இயலாது.” சகதேவன் விதுரரின் முகத்தை நோக்கி இமையசையாமல் அமர்ந்திருந்தான். அவர் முகம் அன்னையின் கனிவைக் கொண்டிருந்தது.

“அமைச்சரே, என் தந்தையின் இடத்தில் இருப்பவர் நீங்கள். கூறுக, மெய்யாகவே மறுபிறப்பு என ஏதேனும் உண்டா?” என்று சகதேவன் கேட்டான். “பிறவிச்சுழலில் இருக்கின்றன உயிர்க்குலங்கள் என நினைவறிந்த நாள் முதலே கற்பிக்கப்பட்டவன் நான். ஆனால் மெய்யாகவே உள்ளதா? அந்தச் சிறு ஐயம் என்னுள் இல்லாமலிருந்ததே இல்லை.” விதுரர் “அந்த ஐயம் இல்லாதவர்களே இல்லை, மைந்தா” என்றார். அவன் தலையைத் தொட்டு குழலில் கைசெலுத்தி நீவியபடி “ஏனென்றால் இங்கு, இப்போது, இவ்வண்ணம் என்றே மானுட அகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று பிடிகளால் நாம் இங்கே நிறுத்தப்பட்டுள்ளோம். இங்கு உயிருடன் உணர்வுடன் இருக்கும் வரை முந்தையபிறவியை நினைவுகூரவோ வரும்பிறவியை முன்னுணரவோ இயலாது. ஆகவே எந்நிலையிலும் பிறவிச்சுழல் என்பது சொல் என, எண்ணம் என மட்டுமே மானுடருக்குள் நின்றிருக்கும்.”

“ஆனால் அறிதலென அது ஆகும் தருணம் ஒன்றுண்டு” என்று விதுரர் தொடர்ந்தார். “அது ஓர் அறிதல். விண்ணிலிருந்து மின் என நம் மீது இறங்குதல். நெற்றியில் மூன்றாம் விழியொன்று எழுதல். நாமறிந்த அனைத்தும் மாறிவிட்டிருக்கும். அறிவு அறிவின்மையென்றும் மாயை மெய்மையென்றும் மாறிவிடக்கூடும். அதன்பின் நாம் அறிகிறோம், அது சொல் அல்ல, எண்ணமும் அல்ல. அது மெய்மை. மாற்றோ மறுப்போ இல்லாதது எதுவோ அதுவே மெய்மையென்றறிக! அது மெய்மை.” சகதேவன் அவர் கைகளை தன் நடுங்கும் கைகளால் பற்றியபடி “நீங்கள் அறிவீர்களா?”என்றான். “ஆம் நான் அறிந்தேன்”என்றார் விதுரர்.

சற்றுநேரம் சகதேவனால் ஒன்றும் பேச முடியவில்லை. விதுரர் மேலும் ஏதோ சொல்வார் என அவன் எதிர்பார்த்தான். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவன் முனகலாக “அவர்கள்…” என சொல்லத்தொடங்கி தயங்கினான். “எங்கு எவ்வண்ணம் மீண்டும் நிகழ்வார்கள் என நாம் அறியமுடியாது. அறியக்கூடுபவர்கள் உண்டு. அவர்களில் ஒருவரையேனும் நான் அறிவேன்” என்றார். சகதேவன் பெருமூச்சுவிட்டான். “அரசே, அதை விட்டுவிடுங்கள். அது உங்களை மேலும் துயர்கொள்ளவே செய்யும். இனியதாயினும் அழுகிய உணவு நஞ்சே” என்றார் விதுரர்.

“நான் துயரை விலக்க விரும்பவில்லை…” என்றான் சகதேவன். “அதுதான் உங்கள் உளச்சிக்கல். உங்கள் மைந்தரின்பொருட்டு குற்றவுணர்ச்சி கொள்கிறீர்கள். ஆகவே அவர்களை எண்ணி துயருற்றாகவேண்டும் என எண்ணுகிறீர்கள். துயருறுகையில் உண்மையில் அவர்களுக்கு எதையோ நீங்கள் அளிப்பதாகவே கருதிக்கொள்கிறீர்கள். அதைப்போல் அறிவின்மை வேறில்லை. இத்துயர் என்றல்ல, எத்துயரும் பொருளற்றதே. உயிரின் இயல்புநிலை மகிழ்ச்சி. துயர் என்பது திரிபு”என்றார் விதுரர். “இத்துயரால் எவருக்கும் எந்தப்பயனும் இல்லை. இது ஒரு வீண்நடிப்பு அன்றி வேறல்ல.”

சகதேவன் சீற்றத்துடன் முகம் தூக்க “எல்லைகடந்து நீடிக்கும் எந்தத் துயரும் நடிப்பே” என்றார் விதுரர். சகதேவன் எழப்போனான். விதுரர் அவன் கையை பிடித்துக்கொண்டார் . “எண்ணிநோக்குக! அதை நாம் ஏன் வளர்த்துக்கொள்கிறோம்? அது குறையும்போது ஏன் நிறைவின்மை கொள்கிறோம்? அது நாமறியாத பிறிதெதையோ நமக்கு அளிக்கிறது. எதையோ மறைக்கிறது. எதையோ நிகர்செய்கிறது. பிறிதொன்றின்பொருட்டு தான் நின்றிருக்கிறது” என்றார். சகதேவன் தளர்ந்து “ஆம்” என்றான்.

“நாம் ஏன் துயரை நேர்கொண்டு நோக்குவதே இல்லை? நாம் நேர்நோக்கினால் துயர் ஏன் கூச்சமடைந்து முகம்திருப்பிக்கொள்கிறது? சற்றே தொட்டால்கூட ஏன் சுருண்டுகொள்கிறது? துயர் என்பது எந்நிலையிலும் துயர் மட்டும் அல்ல” என்றார் விதுரர். சகதேவன் தலைகுனிந்து அமர்ந்திருக்க மீண்டும் அவன் தலையை வருடி “நீர்க்கடன்கள் நிகழட்டும், மைந்தா. நம் சிறுவர் விண்ணேகட்டும். இங்கு அவர்கள் ஒருதுளியும் எஞ்சாதொழியட்டும். எழுமுலகில் அவர்கள் நிறைவுகொள்ளட்டும். நம்மிலிருந்து அவர்கள் முற்றிலும் மறையட்டும். வான்பறவைத் தடம் போல் ஆகுக அவர்கள் சென்ற பாதை!” என்றார். சகதேவன் “ஆம்” என்றான்.

 

விதுரர் “நான் பேரரசரை சந்திக்கும்பொருட்டு செல்லவிருந்தேன்” என்றார். இன்நீரை அருந்தி முடித்து எழுந்துகொண்ட சகதேவன் “கிளம்புக!” என்றான். “இல்லை, நீயும் உடன்வரலாம்” என்றார். “நானா, எனக்குரிய பணிகள்…?” என்றான் சகதேவன். “இன்று இதுவே உனக்குரிய பணி. வருக!” என்று விதுரர் அவன் தோளை தட்டினார். சகதேவன் “அவரை தாங்கள் இன்னமும் சந்திக்கவில்லையா?” என்றான். “இல்லை, நான் நேற்று மாலைதான் வந்தேன். மூத்தவர் மாலையிலேயே துயில்கொள்வார் என்றனர். இன்று கிளம்புவதற்குள் தௌம்யர் அளித்த பணிகள் சூழ்ந்துகொண்டன” என்றார் விதுரர்.

அவர் தன் தலைப்பாகையை அணிந்து மேலாடையை சுற்றிக்கொண்டார். சகதேவன் அவருடன் கிளம்பினான். “நடந்தே செல்வோம். இப்பகுதியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. இதன் அமைப்பு தெரியாததனாலேயே என்னால் உரிய முறையில் பணியாணைகளை விடுக்க இயலவில்லை” என்றார் விதுரர். சகதேவன் “ஆம், இடத்தின் அளவுகளை அறியாமல் ஆணையிடமுடியாதென்பதை குருக்ஷேத்ரத்தில் அறிந்தேன். அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் என் அகத்தே இருந்தமையால் இயல்பாக ஆணையிட்டேன். குருக்ஷேத்ரத்தில் நான் இட்ட ஆணைகள் பிழையாக ஆனபோது ஒன்றை அறிந்தேன், நான் அந்நிலத்தைப்பற்றிய ஓர் உளப்பதிவையே மெய்யெனக் கொண்டிருந்தேன். அவ்வுளப்பதிவுக்கு எந்த அறிதற்பின்புலமும் இல்லை. சொற்களில் இருந்து எழுந்த வெறும் கற்பனை.”

விதுரர் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஒரு சில கணங்களுக்குப்பின் “நான் குருக்ஷேத்ரத்தைப் பற்றிப் பேசியதை நீங்கள் விரும்பவில்லையா, அமைச்சரே?” என்றான். “இல்லை” என்று விதுரர் சொன்னார். சகதேவன் “நீங்கள் செவிகொள்ளாமலிருந்திருக்க இயலாதே?” என்று சகதேவன் சொன்னான். “செவிகொள்ளாத இடத்தில் செவிகொள்ளாத வாழ்வில் இருந்தேன்” என்றார் விதுரர். “அங்கிருந்து கிளம்புவதற்குமுன் என்ன நிகழ்ந்தது என்று கேட்டறிந்தேன்.” சகதேவன் “ஒரே நாளிலா?” என்று திகைப்புடன் கேட்டான். “ஒருநாழிகையில்” என்றார் விதுரர். “பதினெட்டுநாள் போரையுமா?” என்றான் சகதேவன். “பதினெட்டு மானுடவாழ்வுக்காலம், பதினெட்டு யுகங்கள் என்கிறார்கள்…”

‘பதினெட்டு வரிகளுக்கு அப்பால் அதில் சொல்வதற்கொன்றுமில்லை” என்றார் விதுரர். “இறுதியில் என்ன எஞ்சியது என்று மட்டுமே கேட்டறிந்தேன்.” சகதேவன் “ஆம், அதுவும் உண்மையே” என்றான். “இப்போர் சொல்லிச்சொல்லிப் பெருகும் என்பதே என் எண்ணமாக இருந்தது. எண்ணி எண்ணிச் சுருங்கும் என்பதை கருதவில்லை.” பின்னர் “ஆனால் நான் எண்ணிக்கொண்டே இருக்கிறேன். எண்ணலாகாதென்று தடுத்தாலும் எண்ணம் எழுகிறது. நினைவுகூர்தல் சிலபோது. மெய்யென அதில் சென்று வாழ்தல் சிலபோது” என்றான்.

விதுரர் “அதை உன்னால் தவிர்க்க முடியாது” என்றார். “ஆம், இழப்புகள் எங்களை தொடர்கின்றன” என்றான் சகதேவன். “இழப்புகளை மானுடர் கடக்கவே விழைவார்கள், எளிதில் கடந்தும் விடுவார்கள்” என்றார் விதுரர். “உங்கள் வெற்றிகள் அதிலுள்ளன. வெற்றிகளை எவரும் மறப்பதில்லை. ஏனென்றால் வெற்றிகளினூடாக அவர்கள் வளர்கிறார்கள். பெருகி விரிகிறார்கள். பிறிதொருவரென்றாகிறார்கள். ஒவ்வொரு வெற்றியிலும் தாங்கள் என தாங்களறிந்த எல்லையை தாங்கள் கடந்திருப்பதை உணர்கிறார்கள். தங்களை கடத்தலையே மானுடர் பேரின்பம் என்று உணர்கிறார்கள். உள்ளமைந்து இறுகி சுவர்களை முட்டிக்கொண்டிருக்கும் ஆணவத்திற்கு மேலும் புழங்க இடம் கிடைக்கிறது. அது துள்ளிமகிழ்கிறது. அந்த இடத்தை மீண்டும் நிறைத்துக்கொள்கிறது.”

சகதேவன் “நான் அவ்வண்ணம் வளர்ந்தேன் என்கிறீர்களா?”என்றான். “சற்றுமுன் நீ சொன்னது அத்தகைய ஒரு வெற்றியை. அந்நிலத்தை சித்தத்தால் ஆளத்தொடங்கிய கணத்தை நீ மறக்கவில்லை. அவ்வண்ணம் பெரிதும் சிறிதுமாகிய பலநூறு கண்டடைதல்கள் அங்கே நிகழ்ந்திருக்கும். கண்டடைதல் இல்லாத வெற்றி இல்லை. வெற்றி நிகழாது கண்டடைதலும் நிகழ்வதில்லை. அறிதலென்பது கடந்து செல்லல் என்று அதனால்தான் சொல்லப்படுகிறது” என்றார் விதுரர். “நீங்கள் அங்கே மீண்டு சென்றுகொண்டேதான் இருப்பீர்கள். நீங்கள் புதுப்பிறவிகொண்டு எழுந்த கருவறை அது. இனி உங்களை அங்கிருந்துதான் தொடங்குவீர்கள்.”

சகதேவன் பேச்சை ஒழிய விழைந்தான். விதுரர் மாறிவிட்டிருந்தார். இனியவையே சொல்லும் அமைச்சரையே அவன் அறிந்திருந்தான். அத்தனை கூரிய சொற்களால் உள்கிழித்துச் செல்லும் நாவலரை அவன் கண்டிருக்கவில்லை. அவருக்கு என்ன ஆயிற்று? போரில் ஈடுபட்டவர்கள் அனலிடை புகுந்தவர்கள் என உருகி உருவழிந்து மீண்டும் எழுந்தனர். போரிலிருந்து அகலும்பொருட்டு ஐம்புலன்களையும் உள்ளிழுத்துக்கொண்டவரும் பிறிதொருவர் என்றாகிவிட்டிருக்கிறார்.

அவர்கள் குடில்நிரைகளின் ஊடாகச் சென்றனர். எதிரே வந்தவர்கள் தலைவணங்கி ஒதுங்கினர். விதுரர் அவர்கள் ஒவ்வொருவரையும் நின்று வாழ்த்தி முன் சென்றார். முன்பு அவர் தலைவணங்குபவர்களுக்கு உளமறியாத மறுவணக்கம் ஒன்றை அளிப்பார். அவன் அவரை அணுக்கமாக அறிந்த அந்நாட்களில் எப்போதும் அவர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பவர் எனத் தோன்றுவார். இரு இடங்களும் அவரிடமிருக்கும். அப்போது துயர் முழுத்திருந்த தன் மூத்தவரை சந்திக்கச் செல்கையிலும் செல்லுமிடத்தை மறந்துவிட்டவர் போலிருந்தார்.

“நீங்கள் ஊழ்கம் பயின்றீர்களா, அமைச்சரே?” என்று சகதேவன் கேட்டான். “இல்லை” என்றார் விதுரர். “ஊழ்கத்திலமர்ந்து அனைத்தையும் கடந்துசெல்ல என்னால் இயலுமென்று எண்ணியிருந்தேன். அதன்பொருட்டே சென்றேன். ஊழ்கம் எனக்குரியதல்ல என்று கண்டுகொண்டேன்.” சகதேவன் “பிறகென்ன செய்தீர்கள்?” என்றான். “வெறுமனே இருந்தேன். நினைவறிந்த நாள் முதல் அஸ்தினபுரியை இயற்றுபவன் நான் என எண்ணியிருந்தேன். அனைத்திலிருந்தும் ஒதுங்கியபின்பு என் அகம் மேலும் விசைகொண்டு அனைத்தையும் ஆற்றிக்கொண்டிருந்தது. அவற்றில் இருந்து அகன்றேன்.”

“இடத்தை அகற்றுவது உள்ளத்தை அகற்றுவதற்கு எளிய வழி என கண்டுகொண்டேன். சிறுகுடிலில் கிழங்குகளையும் கனிகளையும் மட்டுமே உண்டு எவரிடமும் சொல்லாடாமல் எவர் முகத்தையும் நோக்காமல் அமர்ந்திருந்தேன். நூல் நவிலவில்லை. இசைகேட்கவில்லை. என்ன செய்தேன் எனில் வெறுமனே அமர்ந்திருதேன். என் வாழ்நாளில் முதல்முறையாக.” அவர் புன்னகைத்து “வெறுமனே இருக்கையில் முதலில் உள்ளம் ஓலமிடுகிறது. வெளிச்செயலுக்கு அது ஆற்றிப்பழகிய எதிர்விசையை அளிக்கிறது. அக்கூச்சலே நம்மை வெறுமனே அமரவிடாமல் தடுக்கிறது. அது ஓய்ந்தபின் நம்மால் ஒன்றும் செய்யாமல் அமர முடியும்” என்றார்.

“ஆம்!” என்று சகதேவன் ஊக்கத்துடன சொன்னான். “குருக்ஷேத்ரப் போர்களத்தில் நான் அதை கண்டுகொண்டேன். சூழ்ந்திருக்கும் பேரோசைக்கு நிகரான ஓசை ஒன்றை எழுப்பியே நம் உள்ளம் நிகர்நிலை கொள்கிறது. அப்பேரோசைக்கு என் அகம் எதிரோசை எழுப்புவதை தவிர்த்தேன். ஒவ்வொரு நாளும் என அதை பயின்றேன். என் அகத்தின் ஓசை அவிந்ததும் புறவோசை கேட்காமலாகியது. புயலெனக் கொந்தளிக்கும் அந்தக் களத்தில் நான் முற்றிலும் நிகர்நிலை கொண்டிருந்தேன்.”

நகைத்தபடி அவன் தொடர்ந்தான். “ஓசைகளில் மிதப்பவர்கள் அங்கிருந்த வீரர்கள் அனைவருமே. ஓசையற்ற அகம் கொண்டவன் கொந்தளிக்கும் நீர் நடுவே நிலைத்த பாறை போன்றவன். போர்க்கொந்தளிப்பில் இருந்தவர்கள் என்னை வந்து வந்து அறைந்து மீண்டனர். அவர்கள் என் கண்களை சந்திக்கையில் அடைந்த திகைப்பை நினைவுகூர்கிறேன்.” விதுரர் அவனை திரும்பி நோக்கினார். சகதேவன் “புறம் என்பது ஓசையால் கோக்கப்பட்டிருக்கிறது. ஒசையில்லையேல் அவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. ஓசையற்ற குருக்ஷேத்ரம் அச்சமூட்டும் பெரும்பரப்பு அல்ல என்று கண்டேன். அது தனித்தனியாக அசையும் மானுடர்களும் விலங்குகளும் கொண்டது. அதை அறிந்தகணமே அச்சமொழிந்தேன்” என்றான்.

விதுரர் புன்னகைப்பதைக் கண்டு அவன் பேச்சை நிறுத்தினான். “என்ன எண்ணுகிறீர், அமைச்சரே?” என்றான். “கற்பது இனிது” என்ற விதுரர் “நாம் அணுகிவிட்டோம் அல்லவா?” என்று கேட்டார். “ஆம், இங்குதான்” என்றான் சகதேவன்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 40

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 1

சகதேவன் கண்விழித்தபோது அருகே சுருதசேனன் நின்றுகொண்டிருந்தான். அவன் அசையாமல் மைந்தனை உணர்ந்தபடி படுத்திருந்தான். அவனுடைய உடலின் வெம்மை. மூச்சின் மெல்லிய ஓசை. அதற்கும் அப்பால் அருகே ஓர் உயிர் இருப்பதை உயிர் அறியும் நுண்ணுணர்வு. சற்றே அசைந்தால்கூட அக்கணம் கலைந்துவிடும் என அவன் அறிந்திருந்தான். கலைவதற்கு முன்புவரை அது முற்றிலும் உண்மை. கலைந்த கணமே கனவு அல்லது மாயை. இமையசைவுபோதும். அல்லது உள்ளம் அசைந்தாலே போதும்.

பெரும்பாலான நாட்களில் சுருதசேனன் அவனருகே தோன்றினான். துயில்விழித்தெழுகையில் எப்போதுமே அவனிடம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பு கூர்கொண்டிருந்தால் சுருதசேனன் தோன்றுவதில்லை. எண்ணி ஏங்கினால், எழுவான் என உறுதிகொண்டிருந்தால் அவன் வருவதில்லை. வெறுமையும் சலிப்பும் மிகுந்து உள்ளம் எண்ணங்களை கோக்கக்கூட ஆற்றல் அற்றிருக்கவேண்டும். வேறெங்கோ உளம்திரும்பியிருக்கவேண்டும். ஓர் ஆறுதல்மிக்க தொடுகைபோல அவன் தோன்றினான். மிக அருகே, ஒரே கணத்தில்.

இருப்பும் இன்மையும் ஒரே கணத்தில்தான் வேறுபடுகின்றன போலும். அவன் அணுகி வருவதில்லை. அகன்று மறைவதுமில்லை. அவன் தொலைவிலெங்கும் இல்லை. மிக அருகேதான் இருந்துகொண்டிருக்கிறான். உடனிருந்துகொண்டிருக்கிறான். ஒளி மாறுபடுகையில் வலமிருந்து இடமும் பின்பிருந்து முன்பும் தோன்றும் நிழல் என. அவன் பேசுவதில்லை. அவனிடம் அவன் ஒரு சொல்லும் உரைத்ததில்லை. அவன் நோக்கை எப்போதும் உடல்மேல் உணர்ந்திருந்தாலும் அவன் விழிகளை சந்தித்ததில்லை. அவன் முகத்தை ஏறிட்டதுகூட இல்லை.

இருமுறை அவன் காட்டில் தனித்திருக்கையில் அருகே எழுந்தான். ஒருமுறை கங்கைக்கரையினூடாக நடக்கையில் உடன் நடந்தான். ஒவ்வொரு முறை அவன் தோன்றும்போதும் சகதேவன் தன்னுள் இருந்து எடை முழுக்க எழுந்தகல்வதை உணர்ந்தான். கடுவலி நின்றுவிடுவதுபோல. அக்கணம் அகத்தில் இருக்கும் சொல் பொன்னொளி கொள்ளும். அது அனைத்தையும் ஒளிரச்செய்யும். புவியும் வானும் இனிதாகும். உயிர்க்குலங்கள் இனிதாகும். சென்றவையும் நிகழ்வனவும் வருவனவும் அமுதென்றாகும்.

முதல்முறை அவன் சுருதசேனனைக் கண்டது அங்கு வருவதற்கு முன்பு காட்டுக்குள் குடிலில் தங்கியிருந்தபோது. ஓயாது வீழ்ந்துகொண்டிருந்தது மழை. நின்று துளியுதிர்த்து பின் எண்ணிக்கொண்டு வீறிட்டெழுந்தது. குளிரில் குடில்சுவர்கள் விறைத்திருந்தன. நிலம் நனைந்து ஊறியிருந்தது. ஓயாது ஒற்றைச் சொல்லையே சொல்லிக்கொண்டிருந்தது உள்ளம். அச்சொல்லை நேருக்குநேர் கண்டு திகைத்து அதை உந்தி அப்பால் செலுத்தினால் மேலும் சில சொற்கள். சென்று தேய்ந்து ஒரு சொல்லில் முட்டி நின்று மீண்டும் அச்சொல்லே என திகழ்ந்தது அகம்.

சொல் பேய் என ஆகி அச்சுறுத்தியது. ஆறாத புண் என வலி அளித்தது. அனலென எரித்து எரித்து உள்ளிறங்கியது. எச்சொல்லும் நஞ்சே. உயிருள்ளவை அனைத்தும் ஒருநிலையில் நஞ்சாகக்கூடும் என்கின்றன நூல்கள். அழுகியவை அனைத்தும் நஞ்சே. செரிக்காத உணவு நஞ்சு. கருவறைக்குள் உயிர்துறக்கும் குழவி நஞ்சாகி அன்னையைக் கொல்லும். சொல்லின் உயிர் என்பது பொருள். பொருளிழந்த சொல் இலக்கற்றது, எழுந்த கருவறையைக் கொல்லும் நஞ்சென்று ஆவது.

அவன் துயின்று நாட்கணக்காகிவிட்டிருந்தது. துயில் துயில் என விழித்திருக்கும் கணமெல்லாம் சித்தம் தவித்தது. விழியிமைகள் இறங்க அகச்சொல் குழம்பித்தவிக்க நாகுழைய கைகள் தளர்ந்து சரிய துயில் எடைகொண்டு அவனை மூடியது. அழுந்தி நிலம்படிந்த கணமே கூரிய முள்ளால் குத்தியதுபோல் அவனை எழுப்பியது ஒன்று. திடுக்கிட்டு எழுந்து உடல்நடுங்குவான். அது என்ன என்று நெஞ்சை துழாவுவான். சிக்குவது பிறிதொரு சொல். பொருளிலாத சொல். மழை, மரம், மீன், நீர்… பொருளில்லாவிடில் சொற்களுக்கிடையே வேறுபாடென ஏதுமில்லை.

எழுந்ததும் கண்முன் பேருருக்கொண்டு நின்றிருக்கும் அச்சொல். வழிமறிக்கும் பாறைபோல் சித்தம் திகைக்கச் செய்யும். மீண்டும் துயில்கொள்ள நெடும்பொழுதாகும். துயிலவேண்டும் என எண்ணும்போதே அச்சொல் பெரிதாகத் தொடங்கும். சூழ்ந்துகொள்ளும். அச்சொல்லுடன் படுக்க இயலாது. படுத்து துயிலவே இயலாது. படுத்த கணமே உள்ளம் முழு விழிப்பை அடைந்துவிடும். மஞ்சத்திலேயே எழுந்து அமர்ந்திருப்பான். துயில் மேலோங்க சரிந்து மஞ்சத்தில் விழவேண்டும். கால்நாழிகைப்பொழுதுகூட துயில் நீடிக்காது. அது துயிலே அல்ல.

துயிலின்மையால் வாய் கசந்தது. கண்கள் எப்போதுமே வெம்மைகொண்டு நீர் பெருக்கின. பசியென்பதையே அறிய முடியவில்லை. உண்ணும் உணவு அழுகிய குருதியின் மணம் கொண்டிருந்தது. உடல் எப்போதும் நடுங்கிக்கொண்டே இருந்தது. கைகளில் சிறுபொருட்களைக்கூட வைத்திருக்க இயலவில்லை. நடப்பதும் கடினமாகியது. மூச்சிளைக்க நின்று, அவ்வப்போது நிலைதடுமாறி அருகிருப்பனவற்றை பற்றிக்கொண்டு மெல்லத்தான் செல்ல இயன்றது. மஞ்சத்தில் படுத்திருப்பதையே உடல் விழைந்தது. செயலிழந்து, மஞ்சத்துடன் ஒட்டிக்கொண்டு, பெரும்பகுதி உயிரிழந்ததுபோல் தன்னை இழந்திருக்க உடல் கிடப்பதை அவன் அதற்குள் ஒரு மெல்லிய தன்னுணர்வு என அமைந்து நோக்கிக்கொண்டிருந்தான்.

அன்று அந்தியில் மஞ்சத்தில் விழித்தெழுந்தபோது அவன் உணர்ந்தான், அவன் மைந்தர்களை எண்ணிக்கொள்ளவேயில்லை என்று. அவர்களின் முகங்களை நினைவில் திரட்ட முயன்றான். அவை தொலைவில் நின்றிருந்தன. அணுகும்தோறும் கலைந்தன. சுருதசேனனின் முகத்தையாவது அருகே கொண்டுவர முயன்றான். அது முழுமையாகவே மறைந்துவிட்டிருந்தது. எங்கிருக்கிறார்கள் அவர்கள்? உறுதியாக ஏன் முகம் காட்டுவதை மறுக்கிறார்கள்?

பின்னர் ஒரு நடுக்குடன் அவன் உணர்ந்தான், அவன் குருக்ஷேத்ரத்தையும் முற்றாகவே மறந்துவிட்டிருந்தான். எண்ணி எண்ணி முயன்றபோது குருக்ஷேத்ரப் போருக்குக் கிளம்பிவந்தது நினைவில் சில உதிரி ஓவியங்களாக தெளிந்தது. படைகளை அவனே நெடுந்தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருப்பதுபோல. ஒழுகும் மானுடப்பெருக்கு. பருப்பொருள் நீர்மைகொண்ட நெளிவும் அலைவும். பின்னர் பலகை விரிக்கப்பட்ட பாதைகள். அதன்மேல் சகடங்களின் ஒலி. குளம்புகளின் தாளம். போர்க்களம் என சொல்லிப்பார்த்தான். அது பொருளிலாச் சொல்லென திகழ்ந்தது. எந்தக் காட்சியையும் நினைவிலெழுப்பவில்லை. குருதி, சாவு, எரி, சிதை என சொல்லிச் சொல்லிப் பார்த்தான். அவையனைத்துமே வெற்றுச் சொற்களென்றே திகழ்ந்தன. எவ்வகையிலும் காட்சியாகவில்லை.

சலிப்புடன் அவன் எண்ணத் திசையை திருப்பிக்கொண்டான். கண்களை மூடி இமையின் அடிப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் ஒட்டுமொத்தமாகவே மறந்துவிட்டிருந்தான். மிகமிக எச்சரிக்கையாக உள்ளத்தின் ஆழத்தில் இருந்த நினைவுகளை எடுக்கத் தொடங்கினான். மைந்தர்களின் குழவிப்பருவம். அவர்கள் சிறுவர்களாகி கூச்சலிட்டு, பூசலிட்டு விளையாடிய காலம். அவற்றை அழுத்தி அழுத்தி அப்பால் என மறைத்திருந்தான். அவற்றில் ஒரு துளி மீண்டாலே உள்ளம் அழிந்து சாவு நிகழ்ந்துவிடும் என அஞ்சியிருந்தான். ஆனால் அவையும் மீண்டு எழவில்லை. சொற்கள் மட்டுமே எழுந்துவந்தன. நீரடியில் படிந்த வெற்றுச் சகதிச்சருகுகளைப்போல.

அன்று அவன் எழுந்து இருளில் விரைந்தான். தன் உள்ளமெங்கும் நிறைந்திருப்பவை வெறும் சொற்கள். அனைத்துச் சொற்களும் பொருளிழந்துவிட்டன. வெற்றோலமிட்டுச் சுழன்றலைகின்றன. அவனால் நின்றிருக்க இயலவில்லை. சுழலும் சொற்களை தன் உடலைச்சுற்றிப் பறப்பவையாகவே உணர்ந்தான். அவற்றைத் தொட்டு கைகளால் அள்ளிவிடமுடியும் என்பதுபோல. இது பித்து. இப்போது பித்து என இதை உணரும் தருணத்தில் இருக்கிறேன். மேலும் ஒரு அடி முன்னகர்ந்தால் போதும். ஒருகணம் போதும். அந்தத் தன்னுணர்வையும் இழந்துவிடுவேன். பின்னர் சொற்சுழல் என்னை தூக்கிக்கொண்டு செல்லும். என்னை மண்மீதெங்கும் அலைக்கழிக்கும்.

அவன் தானறிந்த பித்தர்களை நினைவுகூர்ந்தான். அவர்களின் நாவில் ஒலிப்பதே அப்போது தன் சித்தமென ஓடிக்கொண்டிருப்பதாக அறிந்தான். செல்லச்செல்ல அவன் காலடிகளில் விசை கூடியது. நடுக்காட்டில் சென்று நின்றான். அப்போது அவனுள் சொற்கள் மேலும் விசை கொண்டிருந்தன. என்னென்ன சொற்கள்! இவையெல்லாம் எங்கிருந்தன? எத்தனை பயனற்றவை சொற்கள்! இத்தனை சொற்களை ஏன் உருவாக்கினார்கள்? இவற்றை அள்ளித்திணித்து ஏன் உள்ளமென்று தொகுத்துக்கொண்டேன்?

அவன் தன் இடையிலிருந்து குறுவாளை எடுத்து கழுத்து நரம்பில் வைத்துக்கொண்டபோதுதான் அருகே ஓர் இருப்புணர்வென சுருதசேனனை உணர்ந்தான். திரும்பி நோக்க அஞ்சி நடுங்கும் கைகளுடன் அசையாமல் நின்றிருந்தான். மெல்லமெல்ல அத்தனை சொற்களும் அடங்கின. உள்ளம் விடுதலை கொண்டது. உடல் தளர்ந்தது. கைகள் இருமருங்கும் விழுந்தன. அவன் மைந்தனை உணர்ந்தபடி அங்கேயே நின்றிருந்தான். பின்னர் அந்த மரத்தடியிலேயே படுத்து ஆறுநாழிகை தன்னை மறந்து உறங்கினான்.

அதன்பின் சுருதசேனன் மீண்டும் மீண்டும் அவன் முன் தோன்றினான். அவன் தோன்றிய நாளில் அனைத்தும் எளிதாகவும் இனிதாகவும் அமையும். அவனை எக்கணமும் மீண்டும் கண்டுவிட முடியும் என்பதுபோல் ஓர் எண்ணம் எப்போதும் அகத்தே திகழும். காட்டுக்குள் சென்று அமர்ந்திருப்பான். கங்கை ஓட்டத்தை நாள் முழுக்க வெறுமனே நோக்கியபடி இருப்பான். மெல்ல மெல்ல உள்ளத்தில் சொல் ஊறத்தொடங்கும். சொல்பெருகும். சொற்பெருக்காகும். சொற்சுழிப்பு அவனை அள்ளிச்சென்று விசைகொள்கையில் மீண்டும் அவன் தோன்றுவான்.

சகதேவன் ஒரு சொல்லேனும் மைந்தனிடம் பேச விழைந்தான். ஒரு சொல், அது எச்சொல்லாக இருப்பினும் சரி. வேறென்ன சொல்? அவன் பெயர்போல் இனிய சொல் வேறில்லை. அவன் பெயர்போல் இனியது ஏதுமில்லை. அவன் “சுருதசேனா!” என்றான். அச்சொல்லே அனைத்தையும் கலைக்க அவன் எழுந்தமர்ந்தான். பெருமூச்சுவிட்டு குடிலை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து வெளியே சென்றான். உடலில் களைப்பு அகன்றிருந்தது. உள்ளத்தில் இனிய சலிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. அவன் கங்கையை அடைந்து கரையில் வெறுமனே நீரொழுக்கை நோக்கி அமர்ந்திருக்கவே விழைந்தான்.

அவனுக்காக ஏவலன் காத்து நின்றிருந்தான். தலைவணங்கி “தாங்கள் துயின்றுகொண்டிருந்தமையால் எழுப்பவேண்டாம் என எண்ணினேன், அரசே” என்றான். “சொல்” என்றான் சகதேவன். “அரசர் தங்களைக் காண விழைகிறார். உடனே வரச்சொல்லும்படி ஆணையிட்டார்” என்றான். அவன் மேலும் சொல்லும்பொருட்டு சகதேவன் காத்திருந்தான். “நேற்றிரவே இளைய அரசர் அர்ஜுனனும் பீமசேனனும் இளைய யாதவரும் மீண்டு வந்துவிட்டனர். உடன் யுயுத்ஸுவும் வந்தார். அவர்கள் அஸ்வத்தாமனின் அருமணியுடன் வந்தனர். ஆகவே நாளை முதல் நீர்க்கடன்கள் தொடங்கப்படும் என தெரிகிறது. அதன்பொருட்டுதான் அரசர் தங்களை அழைக்கிறார்.”

“அருமணியை இளையவர் வென்றாரா?” என்று சகதேவன் கேட்டான். “அஸ்வத்தாமனை வென்றவர் பார்த்தன். அருமணியுடன் வந்தவர் பீமசேனன். நேற்றிரவே அந்த மணியை கொண்டுசென்று அரசிக்கு அளித்திருக்கிறார். அதை நாளை நீர்க்கடனின்போது மைந்தர்களுக்கான படையலாக வைக்கும்படி அரசி ஆணையிட்டிருக்கிறார்” என்று ஏவலன் சொன்னான். சகதேவன் சலிப்புடன் “நன்று” என்றான். பின்னர் கைவீசி அவன் செல்லலாம் என்று காட்டினான். ஏவலன் தலைவணங்கி அகன்றான்.

 

சகதேவன் யுதிஷ்டிரனின் அவையை அடைந்தபோது அங்கே ஏற்கெனவே தௌம்யரும் மாணவர்களும் கூடியிருந்தனர். சகதேவனின் விழிகள் நகுலனை இயல்பாகத் தேடி கண்டுகொண்டன. நகுலன் யுதிஷ்டிரனுக்குப் பின்னால் மறைந்ததுபோல் நின்றிருந்தான். பீமனும் அர்ஜுனனும் இளைய யாதவரும் அங்கிருப்பார்கள் என அவன் எதிர்பார்த்தான். அவர்கள் இல்லை என்பது சற்று ஏமாற்றத்தை அளித்தது. நீராடி ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் எல்லாம் அவன் அவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் ஓர் அவையை கனவு கண்டிருந்தான்.

அவர்கள் அவனை திரும்பி நோக்கினர். யுதிஷ்டிரன் அவனைக் கண்டு முகம் மலர்ந்து ஏதோ சொல்ல தௌம்யர் புன்னகைத்தார். அவன் அணுகி வாழ்த்துரைத்தான். யுதிஷ்டிரன் அவ்வாழ்த்தை ஏற்றுக்கொண்டு அவனை கைதூக்கி வாழ்த்தியபின் சிப்பிமூடியிட்ட சிறுபேழையிலிருந்து அருமணி ஒன்றை எடுத்துக் காட்டி “இளையோனே, இதை பார்த்ததை நினைவுறுகிறாயா?” என்றார். சகதேவன் தலையசைத்தான். “அஸ்வத்தாமனின் நுதல்மணி. இளையோர் அவனை வென்று இதை கொண்டுவந்தார்கள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இனி நீர்க்கடன்களுக்கு எந்தத் தடையும் இல்லை” என்றார்.

தௌம்யர் “இத்தனை எளிதாக இது முடியுமென நான் எண்ணவில்லை. எதுவாயினும் நன்று…” என்றார். “எஞ்சும் பகையுடன் நீர்க்கடன் முடித்தோமென்னும் இழுக்கு இனி இல்லை. நோக்கினால் அரசி சொன்னதும் உண்மை. மைந்தரில் எவருக்கேனும் வஞ்சம் சிறிது எஞ்சியிருந்தாலும் நீர்க்கடன் வீணாகும்” என்றார். யுதிஷ்டிரன் “ஆம், நாம் அஞ்சிவிட்டிருந்தோம். இப்பெரும்போர் நம் அகத்தை தளர்த்திவிட்டிருந்தது. அவள் நெஞ்சு தளரவே இல்லை. ஐந்து மைந்தரை கண்முன் இழந்தும் அரசியென்றே நிமிர்ந்து நிற்கிறாள். ஐயமின்றி அவளே பாரதவர்ஷத்தை ஆளத் தக்கவள்” என்றார்.

சகதேவன் பெருமூச்சுடன் அந்த அருமணியை பார்த்தான். அதன் ஒளி குறைந்து கூழாங்கல் என மாறிவிட்டிருந்தது. உண்மையில் அதற்கிருந்த ஒளியெல்லாம் அஸ்வத்தாமனின் நுதலில் அது அமைந்திருந்தமையால்தானா? யுதிஷ்டிரன் “எங்கே இளையோர்?” என்றார். நகுலன் “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரன் எரிச்சலுடன் “எங்கே சென்றார்கள்?” என்றார். “பணிகள் மலைபோல் எஞ்சியிருக்கின்றன.” தௌம்யர் “பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. அரசியர் வந்துவிட்டார்கள். விதுரர் பொறுப்பேற்றுக்கொண்டுவிட்டார்” என்றார்.

சகதேவன் அப்பால் பீமன் வருவதை கண்டான். நோக்கிய முதற்கணத்திலேயே அவனிடமிருந்த மாற்றம் நெஞ்சில் அறைந்தது. பீமனிடம் கைவீசி யானைபோல அசைந்து வரும் அந்த வழக்கமான நடை மீண்டுவிட்டிருந்தது. அருகணைந்தபோது அவன் முகம் மலர்ந்திருப்பதை, இளமைந்தர்களுக்குரிய முறையில் அவன் இருபுறமும் காட்டை நோக்கியபடி வருவதை அவன் கண்டான். சிரித்தபடி “அசைந்தாடி வருகிறான், அறிவிலி” என்றார் யுதிஷ்டிரன். பீமன் வந்து பணிந்தபோது “நலம் சூழ்க!” என்று வாழ்த்தியபின் “நாம் நம் கடன்களை இயற்றவேண்டியிருக்கிறது, இளையோனே. அனைத்தும் ஒருங்கியாகவேண்டும்” என்றார்.

பீமன் “ஆம்” என ஆர்வமின்றி சொல்லி அப்பாலிருந்த பாறைமேல் அமர்ந்தான். தொலைவில் இளைய யாதவரும் அர்ஜுனனும் வருவது தெரிந்தது. அவர்களும் இயல்பான உடலசைவுகளுடன் மெல்லிய சொல்லாடலுடன் அணுகினர். சகதேவன் அர்ஜுனனை கூர்ந்து நோக்கினான். அவனிடம் என்ன நிகழ்ந்திருக்கிறது என்று உணர முடியவில்லை. அவன் பீமனைப்போல இளமைக்கு மீளவில்லை. முன்பிருந்த இயல்புகள் எவையும் அவனிடம் இல்லை. ஆனால் அவன் அசைவுகளில் விடுதலை இருந்தது. தன்னை முற்றாக காற்றுக்கு ஒப்புக்கொடுத்த சருகுகளில் இருக்கும் விடுதலை.

அவர்கள் வந்து யுதிஷ்டிரனைப் பணிந்து வாழ்த்து பெற்றனர். அவர்களை அழைக்கச் சென்றிருந்த யுயுத்ஸு அவர்களை தொடர்ந்து வந்து அப்பால் நின்றான். அர்ஜுனன் விலகிச் சென்று பீமனின் அருகே அமர இளைய யாதவர் யுதிஷ்டிரனின் அருகே அமர்ந்தார். யுதிஷ்டிரன் “நான் உங்களுக்காகவே காத்திருந்தேன். நாம் நீர்க்கடன் செய்ய இனி எந்தத் தடையும் இல்லை. தௌம்யரிடம் ஆணையிட்டுவிட்டேன். இனி நாம் ஒவ்வொருவரும் இங்கு நிகழும் எவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்பதை மட்டும் பிரித்துக்கொள்வோம். தௌம்யர் அவற்றை உரைக்கட்டும். அவர் சொல் என் ஆணை எனக் கொள்ளப்படும்” என்றார். இளைய யாதவர் “ஆம், பணிகளை தொடங்கவேண்டியதுதான். நமக்கு இன்னமும் ஒரு பகலும் ஓர் இரவுமே எஞ்சியிருக்கின்றன” என்றார்.

யுயுத்ஸு மெல்ல கனைத்தான். யுதிஷ்டிரன் திரும்பி அவனை பார்த்தார். அவன் தாழ்ந்த குரலில் “அதற்கு முன் ஒன்று எஞ்சியிருக்கிறது. மூத்தவர்கள் தங்கள் அரசியரிடம் ஒரு சொல்லேனும் பேசியாக வேண்டும்” என்றான். யுதிஷ்டிரன் சினத்துடன் “அனைத்தையும் பேசிவிட்டோமே? அரசியின் ஆணைப்படிதான் இங்கே அஸ்வத்தாமனின் நுதல்மணி வந்துள்ளது” என்றார். “ஆம், அது முதல் அரசியிடம் நாம் பேசியது. இன்னமும் பிற அரசியர் எஞ்சியிருக்கிறார்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். “அவர்கள் நேற்று மாலைதான் இங்கே வந்திறங்கியிருக்கிறார்கள். அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் இன்னமும் அறியோம்.”

“அவர்கள் இருக்கும் உளநிலையை அறிய பெரிய கற்பனை ஏதும் தேவையில்லை” என யுதிஷ்டிரன் எரிச்சலுடன் சொன்னார். “முறைப்படி அவர்களிடம் சொல்பெற்று நீர்க்கடன் நிகழட்டும். அவர்களிடம் சொல்பெற நாளை முதற்காலைப் பொழுதில் வருவோம் என்னும் செய்தியை மட்டும் அவர்களிடம் தெரிவிக்கலாம். மற்றபடி இப்போது நாம் செய்வதற்கொன்றுமில்லை.” அவர் ஏனென்றறியாமல் சீற்றம் கொண்டார். “ஒருவேளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் திரௌபதியைப்போல வஞ்சினங்கள் இருக்குமென்றாலும் இனி நாம் அவற்றை பொருட்படுத்தப்போவதில்லை.”

யுயுத்ஸு “அவர்களிடம் வஞ்சினம் இருக்கும், எதிரிகள் என நாம் அமைவோம்” என்றான். யுதிஷ்டிரன் சீறித்திரும்பி “என்ன சொல்கிறாய்?” என்றார். யுயுத்ஸு “அவர்களிடம் சில சொற்களேனும் நமக்கென இருக்கும். நாம் அவற்றை கேட்டாகவேண்டும். அரசே, நீங்களும் மூத்தவர்களும் தங்கள் பிற அரசியரையும் சந்தித்தாகவேண்டும். அதுவே முறை” என்றான். “ஒருவேளை அவர்கள் தீச்சொல்லிடலாம். எனில் நாம் அதைப் பெற்றே ஆகவேண்டும்.”

யுதிஷ்டிரன் “வீண்பேச்சு… இனி இதை நாம் தொடங்கினால் இந்த நீர்க்கடன் சடங்கு நிகழவே போவதில்லை” என்றார். “அவர்கள் இரண்டாமிடத்தில் இருப்பவர்களே. இப்போர் நிகழ்ந்தது திரௌபதிக்காக. வேறு எவருக்காக என்றாலும் இவை நிகழ்ந்திருக்காது. அதை அவர்களும் நன்கறிவார்கள்.” யுயுத்ஸு “அதையும் அவர்களிடமே சொல்லலாமே” என்றான். “நீ உன் இடமறிந்து பேசு… போதும்” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு “ஆம்” என தலைவணங்கினான்.

சகதேவன் அர்ஜுனனையே நோக்கிக்கொண்டிருந்தான். அவனிடம் இருக்கும் விடுதலை என்ன? எதிலிருந்து அடைந்த விடுதலை? அவன் அதுவரை அமர்ந்திருக்கும் கோலம் நினைவுக்கு வந்தது. தலைகுனிந்து முடிக்கற்றைகள் விழுந்து முகம் மறைக்க, விரல்கள் பின்னி நெளிந்துகொண்டே இருக்க, உதடுகள் வலிகொண்டவை என நெளிய, புருவங்கள் நெரிபட எக்கணமும் எழுந்து எதையோ சொல்லிவிடுபவன்போல, அல்லது எழுந்து அகன்றுவிடுபவன் என தோன்றுவான். அப்போது அவன் முழுதமைந்திருந்தான். அங்கிருக்கும் அந்தக் கல்லைப்போல குளிர்ந்து, பதிந்து, காலம் கடந்து.

ஒரு கணம் அவனுக்கு விந்தையானதோர் உணர்வு ஏற்பட்டது, அர்ஜுனன் ஒரு முனிவராக மாறிவிட்டதாக. நோக்க நோக்க அவ்வுணர்வு மீறி எழுந்தது. விழிவிலக்கி அவ்வெண்ணத்தை ஆராய்ந்து மீண்டும் நோக்கினான். அந்த எண்ணம் மேலும் வலுத்தது. அவனை யோகி என்பதுண்டு. வில்லை ஊழ்கமெனக் கொண்டவன். யோகியர் முனிவர்களாவது எப்போது? யோகமெனப் பயிலும் அந்தப் பாதையையும் அவர்கள் கடந்துவிடும்போதா?

யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் எழுந்துகொண்டு “அனைத்தும் இனி தௌம்யரின் எண்ணப்படி ஆகுக. நாளை காலை நம் குலத்து மாண்டோர் விண்புகுக!” என்றார். தௌம்யர் “ஆம், அனைத்தும் நிறைவுறுக!” என்றார். யுதிஷ்டிரன் விழிகளை அப்பால் வெயில் விரிந்த பாதை நோக்கி திருப்பிக்கொண்டு “நீ கூறுவதும் ஒருவகையில் சரிதான். நாம் அவர்களைச் சென்று நோக்கியாகவேண்டும்… இளையோர் தங்கள் மறுதுணைவியரைச் சென்று கண்டு சொல் பெறட்டும்” என்றார்.

பீமன் “அதற்கான தேவை உண்டா?” என்றான். யுதிஷ்டிரன் “உனக்கு தனியாக நான் ஆணையிடவேண்டுமா என்ன?” என்றார். பீமன் சலிப்புடன் தலையசைத்தான். நகுலன் “நாம் செய்யவேண்டியவைதான், மூத்தவரே” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் அமர்ந்திருக்க யுதிஷ்டிரன் அவனை ஒருகணம் நோக்கிவிட்டு மேலாடைக்காக கைநீட்டினார். ஏவலன் மேலாடையை எடுத்து அளிக்க அதை சுற்றிக்கொண்டு நடந்தார். நகுலனும் யுயுத்ஸுவும் அவருக்கு இருபுறமும் சென்றனர். பீமன் தனியாக நடக்க இளைய யாதவரும் அர்ஜுனனும் உடன் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து தௌம்யரும் மாணவர்களும் அகன்றனர்.

ஏவலரும் சென்றபின் சகதேவன் தலைகுனிந்து ஒரு சிறு குச்சியால் மண்ணை கீறியபடி அங்கேயே அமர்ந்திருந்தான். உள்ளத்தில் சொற்கள் ஊறிக்கொண்டிருந்தன. அர்ஜுனனின் நிறைவுமுகம். பீமனின் இளமை மீண்ட முகம். திரௌபதியின், யுதிஷ்டிரனின் முகம். அவன் சொற்கள் வழியாக சென்றுகொண்டிருந்தபோது அருகே மீண்டும் சுருதசேனனை உணர்ந்தான். அவன் உள்ளம் முற்றாக செயலிழந்திருக்கவில்லை. ஆகவே திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். சுருதசேனன் துயரம் நிறைந்த விழிகளுடன் நின்றிருந்தான்.

இது உளமயக்கல்ல, கனவும் அல்ல. இது மெய். இந்த மரங்களைப்போல, இந்த பாறைக்கல்லைப்போல. அவன் அவ்வுருவை கலைக்க எண்ணினான். ஏனென்றால் அது அவனை பதறச் செய்தது. அதன் அந்த வெளிப்படைத் தன்மையில் பிழை என ஏதோ தோன்றியது. “மைந்தா!” என்றான். “தந்தையே!” என்று சுருதசேனன் சொன்னான். “நீயா? நீ இங்குதான் இருக்கிறாயா?” சுருதசேனன் “ஆம் தந்தையே, நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்” என்றான்.

அவனுக்குப் பின்னால் நிர்மித்ரனும் யௌதேயனும் சுருதகீர்த்தியும் சர்வதனும் சுதசோமனும் தோன்றினார்கள். பிரதிவிந்தியன் சற்று அப்பால் நின்றிருந்தான். அவனுடன் சதானீகன் நின்றான். அபிமன்யுவுக்காக அவன் விழிகள் தேட சுருதசேனன் “அபிமன்யு எங்களுடன் இல்லை. அவனுடைய வழி வேறு” என்றான். “ஏன்?” என்றான் சகதேவன். “அவனுடைய அகம் நிறைவுறவில்லை” என்றான் சுருதசேனன். “நீங்கள் நிறைவுற்றீர்களா, மைந்தர்களே?” என்றான் சகதேவன்.

“நாங்கள் எதையும் விழையவில்லை. எதையும் எஞ்சவிட்டும் செல்லவில்லை” என்று சுருதசேனன் சொன்னான். “அபிமன்யு அங்கிருக்கிறான்” என்றான் சதானீகன். “எங்கே?” என்றான் சகதேவன். சதானீகன் மறுமொழி சொல்லவில்லை. “எங்கிருக்கிறான்?” என்று மீண்டும் சகதேவன் கேட்டான். “தந்தையே, இனி நாங்கள் தங்களை பார்க்க இயலாது. எவ்வகையிலும் உடனிருக்க இயலாது. இன்று பகலிரவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆகவேதான் வந்தோம்” என்றான் பிரதிவிந்தியன். “இந்தப் புவியின் ஐம்பருக்களுடனும் எங்களுக்கு இன்று தொடர்பில்லை. ஆயினும் இந்த உலகம் எங்களை பற்றிக்கொண்டிருக்கிறது” என்று சதானீகன் சொன்னான். “ஒவ்வொரு கணமும் துயரையே உணர்கிறோம். எனினும் எங்களால் விலக இயலவில்லை” என்றான் சுருதசேனன்.

சுருதகீர்த்தி “உண்மையில் இது ஓர் அலைக்கழிப்பு… எங்களை ஒவ்வொரு கணமும் கலைத்துக்கொண்டிருக்கிறது வெளி. நாங்கள் உருவெடுக்க, நிலைகொள்ள போராடுகிறோம்” என்றான். “உங்கள் துயரமே எங்களை இங்கே தக்க வைத்திருக்கிறது. உங்கள் உள்ளத்தில் எஞ்சும் வடிவையே நாங்கள் கொள்ளமுடிகிறது. நீங்கள் துயரழிகையில் நாங்கள் மறைந்துவிடுவோம்.” பிரதிவிந்தியன் “துயர்கொண்டவர்கள் அனைவருமே அத்துயரை எவ்வகையிலேனும் கரைத்தழிக்கவே முயல்கிறார்கள். நீங்களும் நாளை அதை கரைக்கத் தொடங்குவீர்கள். அந்நிகழ்வு ஒரு தொடக்கம். பற்பல தலைமுறைகளாக செய்யப்பட்டு பொருளேற்றம் கொண்டது. எங்களை உங்கள் அகத்திலிருந்து கரைத்துவிடுவீர்கள்” என்றான்.

“என்ன?” என்றபடி சகதேவன் எழுந்துகொண்டான். “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டபடி அவன் கையை நீட்டினான். “நாளை காலை நீர்க்கடன் அளித்து எங்களை விண்ணேற்றிவிடுவார்கள்” என்றான் நிர்மித்ரன். “அதன்பின்? அதன்பின்?” என்றான் சகதேவன். உடலெங்கும் பரவிய பதற்றத்துடன் “அதன்பின் எங்கிருப்பீர்கள்? என் மைந்தர்களே, அதன்பின் எங்கிருப்பீர்கள்?” என்றான். “அதன்பின் விண்ணில் இருப்போம். ஆனால் உருவழிந்து, தன்னிலை கரைந்து. தந்தையே, மண்ணிலிருந்து விண்ணிலெழும் எதுவும் அவ்வாறே ஆகிவிடுகிறது.”

“என் செல்லங்களே, என் தெய்வங்களே!” என சகதேவன் கதறினான். “உங்களை எப்படி நான் விடுவேன்? அதன்பின் இப்புவியில் எனக்கு எஞ்சியிருப்பது என்ன?” அவன் அவர்களை பிடிக்க முன்னகர அவர்கள் இயல்பாக பின்னடைந்தார்கள். சுருதசேனன் “நாங்கள் சென்றேயாக வேண்டும், தந்தையே. அதுவே மாறா நெறி” என்றான். “இல்லை, நான் ஒப்பமாட்டேன். நீர்க்கடன் நிகழ விடமாட்டேன்…” என்று சகதேவன் கூவியபடி மைந்தனைப் பிடிக்கத் தாவினான். அவர்கள் துயர் நிறைந்த முகத்துடன் மேலும் பின்னடைந்தார்கள். “சுருதசேனா, மைந்தா!” என்று கதறியபடி முகம்படிய மண்ணில் விழுந்து நினைவழிந்தான் சகதேவன்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 39

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 6

எப்போதுமே தனிமையை ஓர் அழுத்தமாகவே யுயுத்ஸு உணர்ந்து வந்தான். ஆனால் ஒன்று நிகழ்வதற்கு முன் அமையும் தனிமையை அவன் வியப்புடன் மீளமீள எண்ணிக்கொள்வதுண்டு. அப்போது மானுடர் அனைவருமே சற்று கைவிடப்பட்டவர்களாகத் தெரிவார்கள். அவர்களை ஆட்டுவித்த சரடுகள் அனைத்தும் தளர்ந்துவிட, செய்வதறியாமல் தளர்ந்து நின்றிருப்பார்கள். செயல் அவர்களில் விண்ணிலிருந்து மின் இறங்கி மரங்களைப் பற்றி எரியச்செய்வதுபோல நிகழ்கிறது. செயல்கள் அனைத்தையும் அவற்றுக்குரிய தெய்வங்களே இயற்றுகின்றன. பெருஞ்செயல்களை பெருந்தெய்வங்கள்.

அவன் அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் போருக்குரிய சடங்குகளைச் செய்வதை நோக்கி நின்றிருந்தான். அவர்கள் இருவருமே தளர்ந்துபோய், ஆர்வமற்றவர்களாகவே தெரிந்தனர். தொய்ந்த நடையில் சென்று கொற்றவையையும் பின்னர் பரசுராமரையும் வணங்கினர். இரு எல்லைகளிலாக நின்றுகொண்டனர். பரசுராமரின் மாணவர்கள் மேலும் விரிந்து அந்தக் களத்தை விரிவாக்கினர். பறவைகளின் ஒலி மட்டும் அங்கே கேட்டுக்கொண்டிருந்தது. அஸ்வத்தாமனின் வில் அவனுடைய தலைக்குமேல் புலியின் வால் என எழுந்து தெரிந்தது. காண்டீபம் அத்தனை உயரம் கொண்டதாக இருக்கவில்லை. இருவரும் கால் அகற்றி நிலைகொண்டனர்.

யுயுத்ஸு இருவரின் கால்களையும் நோக்கிக்கொண்டிருந்தான். வில்லவர்களின் கால்கள் பறவைக்கால்களைப்போல, மண்ணில் ஊன்றியிருந்தாலும் அவை மண்ணுக்குரியவை அல்ல. அவை காற்றிலெழும் கணம் தேடியே மண்ணில் தொட்டுத்தாவுகின்றன. பறவைக்கால்களால் மட்டுமே நடனமாட முடியும். அனைத்துப் பறவைகளும் நடனமாடுகின்றன. நடனமாடும் விலங்கு பறவையாகிவிடுகிறது. இந்த வில், இது விசைகொண்டு வளைந்த கிளை. அந்த அம்புகள் பறவைகள். பறவைகளை ஆள்பவர்கள் வில்லவர். அவர்கள் பறத்தலை உன்னி ஊழ்கம் செய்து தேர்ந்து தாங்களும் ஒருவகை பறவைகளாக ஆகிவிடுகிறார்கள்.

பரசுராமரின் மாணவர் லிகிதர் போருக்கான நெறிமுறைகளை அறிவித்தார். அதன்பின் பரசுராமரை வணங்கி வலப்பக்கம் சென்று நின்றார். பரசுராமர் போர் தொடங்குக என கைதூக்கினார். ஒரு சங்கொலி தேம்பி அணைந்தது. அவ்வொலி கேட்டு பறவைகள் கலைந்து வானில் எழுந்து கூச்சலிட்டபடி சுழன்றன. வானிலிருந்து மெல்லிய புலரொளி விழுந்து களமுற்றம் துலங்கியது. கூழாங்கற்கள் முழுத்து எழுந்து தெரிந்தன. இளங்காற்று ஒன்று கடந்துசென்றபோது மேலாடைகள் வண்ணங்களுடன் அசைந்தன. உதிர்ந்த சருகொன்று எழுந்து இடம் மாறியது.

இரு வில்லவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு அசையாமல் நின்றிருந்தார்கள். அவர்களுக்குள் விசை முனைகொண்டு விழிகளில் ஒளித்துளியாகியது. கைவிரல்கள் விற்களை மலர்த்தண்டை என பற்றியிருந்தன. கால்களில் தசைகள் இழுபட்டிருந்தன. எக்கணம் போர் நிகழும் என எவராலும் சொல்லிவிட முடியாது. எவர் அம்பு எடுப்பார் என்றும். அது நூறுமுறை ஆயிரம் முறை நோக்கினாலும் கணிப்புகள் அனைத்துக்கும் அப்பாற்பட்டது. அவர்களில் இப்போது நிகழ்வதென்ன? எவரோ வந்து அமர்ந்துகொள்வதற்கு முன்பிருக்கும் பீடத்தின் வெறுமையின் தவிப்பு.

போர் தொடங்கிவிட்டிருந்தது. அஸ்வத்தாமன் முதல் அம்பை அர்ஜுனனை நோக்கி தொடுக்க அர்ஜுனன் அதை இயல்பாக உடல்வளைந்து ஒழிந்தான். கூட்டத்திலிருந்து ஒரு மென்முழக்கம் எழுந்தமைந்தது. அர்ஜுனனின் அம்பை அஸ்வத்தாமன் ஒழிந்தான். அர்ஜுனனிடம் இருந்த பெண்மை லாஸ்யமென வெளிப்பட அஸ்வத்தாமனிடம் வெளிப்பட்டது தாண்டவம். இருவரும் தேர்ந்தவர்களாக இருக்கையில் நிகழ்வது அம்பு என்னும் வடிவுக்கும் மானுட உடலென்னும் வடிவுக்கும் இடையேயான போட்டிதான். அம்பின் நேர்ப்போக்கும் உடலின் வளைதலும். அம்பின் சீற்றமும் உடலின் நடனமும். உடல் ஒழியும் அம்புகளை நிலம் வாங்கிக்கொள்கிறது. நிலமே உடலென்பர் நூலோர். அன்னம் கொள்ளும் இரு வடிவங்கள்.

அம்புகள் மின்னி மின்னி காற்று சீறும் ஒலியுடன் கடந்து சென்றன. மண்ணில் தைத்து நின்று சிறகசைந்தன. நாற்றுநட்ட வயல் என ஆயிற்று அக்களம். அவற்றில் ஏதேனும் வடிவம் உள்ளதா? ஒழுங்கற்றவை எனத் தோன்றினாலும் வடிவமென ஒன்று இருந்தாகவேண்டும். அர்ஜுனனுக்குப் பின்னாலிருக்கும் இந்த அம்புகளின் வடிவம் அவன் உடலால் ஒழியப்பட்டது. அவன் உடலின் இந்நடனத்தின் நிழலுருவம் அதில் இருந்தாகவேண்டும்.

யுயுத்ஸு புன்னகைத்தான். அவனால் போரை உள்ளம் பெருகி ஓடாமல் நிகழ்த்த முடிவதே இல்லை. ஆகவேதான் அவன் மிகத் திறன் குறைந்த வில்லவனாக ஆனான். அவனுக்குப் பயிற்றுவித்த கிருபர் “உனக்குரியது சொல் மட்டுமே” என்றார். துரோணர் “நீ களத்திற்கே வரவேண்டியதில்லை. அரசநெறிகள் உசாவுகையில் மட்டும் வந்து அமர்ந்துகொள்” என்றார். அவன் குருக்ஷேத்ரத்திலும் சொல்பெருகும் உள்ளத்துடன்தான் நின்றிருந்தான்.

அவனை எந்த அம்பும் தாக்கவில்லை. ஏனென்றால் அவன் பெரும்பாலும் களத்திற்குப் பின்னணியிலேயே இருந்தான். யுதிஷ்டிரனும் அவனும் படைசூழவே நின்றிருந்தனர். அங்கும் அம்புகள் வந்து கவியத்தான் செய்தன. ஆனால் எந்த அம்பும் அவனை அடையவில்லை. சொல்பெருகி ஒரு அரண் என அம்புகளை தடுத்திருக்கலாம். அந்தப் படைப் பின்னணிநிரை என்பது ஓர் ஆழம். மேல்தட்டில் அம்புகள் கொந்தளித்தன. அவையே சொற்களென ஆகி அடித்தட்டில் படிந்துகொண்டே இருந்தன. சேறுபோல. குப்பைபோல. அவன் அங்கே திகழ்ந்தான். கடலடியின் கரிய அட்டைபோல. நீந்தல் அறியாதது. விழியிலாதது.

போர் விசைகொண்டபடியே சென்றது. இரு வில்லவர்களும் இரு எல்லைகளிலும் நின்று சுழன்றனர். விழிதொட முடியாத விரைவுகொண்டிருந்தன அவர்களின் கைகள். யாழ்க்கலைஞனின் விரல்கள்போல. அவை பருவடிவம் அழிந்து நீர்வடிவம் கொள்கின்றன. பின்னர் காற்றென்றே ஆகிவிடுகின்றன. அவன் இசை நுகர்பவன் அல்ல. ஆனால் இசையெனும் விந்தையை எப்போதுமே திகைப்புடன் நோக்கிவந்தான். மானுட உடல் தன் எல்லையை மீறும்போதே மெய்யான இசை எழுகிறது. அம்புகளும் அவ்வாறே. எந்தக் கலையும் அவ்வகையான மீறல் மட்டுமே.

எத்தனை முறை கண்டிருப்போம் இரு இணைவில்லவரின் போர்களை. இமையசைக்காமல் காலமில்லாமல் நோக்கி நின்றிருப்போம். அவை எழுகையில் வெவ்வேறு. முடியும்போது அறியமுடியாமை நிகழ்ந்து நின்ற கணம். ஆனால் நடுவே நிகழ்வென அவை ஒன்றே. ஒரே அசைவுகள், எழுப்பும் உணர்ச்சிகளும் ஒன்றே. ஆனாலும் அவை சலிப்பதில்லை. ஏனென்றால் அவற்றில் என் உள்ளமும் சென்று சேர்ந்துவிடுகிறது. இதோ இரண்டெனப் பிரிந்து நின்று போரிடுவது நானே. ஓர் எண்ணம் இன்னொரு எண்ணத்தை அறைவதுபோல. ஓர் உணர்வு இன்னொரு உணர்வால் அறைந்து சுழற்றப்படுவதுபோல.

நோக்க நோக்க சலிக்காதிருப்பது எதுவோ அதுவே இறைநிகழ்வு போலும். கடலோ காடோ முகிலோ யானையோ. இதில் சலிக்காதிருப்பது என்ன? விரைவா? கைசுழல கால்கள் தொட்டுத்தாவ நிகழும் எளிதான இயல்கையா? இரு மானுடர் இறகென அனலென ஆகிவிடும் விந்தையா? பிறிதொன்று. அவர்கள் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் கவ்விக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை எண்ணி எண்ணி உட்புகுந்து ஒருவர் பிறிதொருவராகவும் மாறி நின்று போரிட்டுக்கொள்கிறார்கள். உடலென்றும் உள்ளமென்றும் இருப்பென்றும் ஆன எல்லைகளை கடந்துசெல்கிறார்கள். உருவமே உடலின் எல்லை. உருவத்தை உதறிச்செல்ல அதற்கிருக்கும் ஒரே வழி விசைகொள்ளுதல்தான்…

யுயுத்ஸு அவனுடைய உள்ளத்தின் கட்டற்ற சொற்பெருக்கு அணைந்துகொண்டே இருப்பதை உணர்ந்தான். சொற்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு விசையழிந்தன. தேங்கிய சொற்கள் பிற சொற்களை தடுத்தன. சொற்கள் குழம்பிக்கொள்ள ஓர் ஓலமென ஆகியது அகம். பின்னர் ஒன்றும் நிகழவில்லை. ஓடி எழுந்து மலைவிளிம்பிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்துவிட்டதுபோல. அவன் அமைதியில் விழுந்து விழுந்து இறங்கிக்கொண்டே இருந்தான். அனைத்தும் ஒரு ரீங்காரமாக மாறி அகல முழுமையான அமைதி.

அவன் வேறெங்கோ நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அஸ்வத்தாமனின் தோற்றம் என கர்ணன் எழுந்துவிட்டிருப்பதை கண்டான். அழகிய கரிய நீளுருவம். நெளியும் பெருங்கைகள். கூரிய விழிகள். “அங்கர்! அங்கர்!” என கொந்தளித்துக் கூச்சலிடுவது யார்? அங்கரை எதிர்த்துப் போரிடுவது அர்ஜுனன் அல்ல என அவன் கண்டான். “பீஷ்மர்!” பிதாமகரின் கைகள் அமைதியாகச் சுழல அம்புகள் சீராக எழுந்துகொண்டிருந்தன. அவை கர்ணனின் அம்புகளை மணியோசையுடன் அறைந்து வீழ்த்தின. பீஷ்மரின் உடலை கர்ணனின் நீளம்பு ஒன்று தைத்தது. அவர் உறுமியபடி எடுத்துத் தொடுத்த அம்பு கர்ணனின் நெஞ்சிலறைந்து அவனை தூக்கி வீசியது.

கைஊன்றி புரண்டு தாவி எழுந்தவன் ஜயத்ரதன் என்று யுயுத்ஸு கண்டான். இது என்ன விந்தை, என் விழிமயக்கா என அவன் வியந்தான். ஆனால் அது நிகழ்ந்துகொண்டிருந்தது. ஜயத்ரதனை எதிர்ப்பது யார் என அவன் நோக்கினான். அர்ஜுனனின் உடல் மருவி பூரிசிரவஸாக தெரிந்தது. என்ன நிகழ்கிறது? நான் மயங்கி விழுந்துவிட்டேனா? அஸ்வத்தாமன் உடல் உருகி பிறிதொன்றாகியது. அங்கே துரோணரை அவன் கண்டான். அவரை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்தவர் கிருபர். அவன் அந்த உளமயக்கை உதறி மீள முயன்றான். ஆனால் அது உளமயக்கல்ல, விழிமுன் நிகழ்ந்துகொண்டிருந்தது.

ஒவ்வொரு உருவாக மாறி மாறி எழுந்தது. அஸ்வத்தாமனாக பீமன் எழ அவனை எதிர்த்து அர்ஜுனன் போரிட்டான். எவரை எதிர்த்து எவர் எழுகிறார்கள்? எவர் வெல்கிறார்கள்? கொல்பவரும் கொல்லப்படுபவரும் எவர்? அறுதியாக எழுந்த துரியோதனனை எதிர்ப்பவர் இளைய யாதவரா என்ன? அர்ஜுனன்தான், ஆனால் பீலி சூடியிருந்தான். முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.

யுயுத்ஸு தனிமையை மீண்டும் உணர்ந்தான். இதுவரை போர் தொடங்கவில்லை என்பதுபோல. இன்னும் போர் எழவிருக்கிறது என்பதுபோல. போர் உண்மையில் நிகழ்கிறதா? ஏதேனும் நூலில் படித்துக்கொண்டிருக்கிறேனா? எந்த நூல்? அவன் கனவில் ஒரு நூலை அடிக்கடி படிப்பதுண்டு. பல ஆயிரம் பாடல்கள் கொண்டது. வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளையும் உரைப்பது. அத்தனை எண்ணங்களையும் உள்ளடக்கியது. நெறிகளனைத்தையும் ஒன்றுவிடாமல் உரைப்பது. பிறிதொரு நூல் புவியில் தேவையில்லை என தான் நிலைகொள்வது.

அவன் மெய்ப்புகொண்டான். அந்நூலைத்தான் இதோ பார்த்துக்கொண்டிருக்கிறேன். இவை அந்நூலில் சொல்லெனத் திகழ்பவை. அப்பேராசிரியனின் கைபட்டு ஏட்டில் மலர்பவை. அவன் எழுதிக்கொண்டே இருக்கிறான். தலைமுறைகளுக்கு முன் அஸ்தினபுரியில் இருந்து மறைந்த வியாசனாகிய கிருஷ்ண துவைபாயனன் மறையவில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அவர் எங்கிருந்தோ அனைத்தையும் அறிகிறார். அனைத்தையும் எழுதிக்கொண்டிருக்கிறார். இங்கு நிகழும் ஒரு நிகழ்வுகூட மறையப்போவதில்லை. சொல்லப்படும் ஒரு சொல்கூட வீணாக ஆவதில்லை.

 

யுயுத்ஸு தன் எதிரே வியாசரை பார்த்தான். அவர் தர்ப்பைப்புல் விரிக்கப்பட்ட மரத்தாலான மேடையில் அமர்ந்திருந்தார். எதிரே பெரும்பள்ளத்தாக்கு கீழிறங்கி அலையென மடிந்தெழுந்து மலையடுக்குகளாக மேலேறிச் சென்று ஒளிரும் உச்சிப்பாறைகளை சூடியிருந்தது. முகில்கள் ஒளிகொண்டிருந்தன. அவர் கண்களை அவ்வெளி நோக்கி நிலைக்கவிட்டு கைகளால் தாடியை தடவிக்கொண்டிருந்தார்.

அவருடைய வலப்பக்கம் கரிய, பெருத்த உடல்கொண்ட ஓர் கற்றுச்சொல்லி அமர்ந்திருந்தான். மிக இளையவன். அவருக்கு முன்னால் நான்கு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். வைசம்பாயனன் அவர்களில் அகவை மூத்தவன். சுமந்து, ஜைமினி, பைலன் மூவரும் இளையோர். அப்பால் கையில் யாழுடன் தனித்து அமர்ந்திருப்பவன் அவருடைய சூத மாணவன்.

வியாசர் “சொல்க!” என்றார். “நான் எப்படி அதை சொல்லமுடியும்? நான் கவிஞன் அல்ல, சொல்வலனும் அல்ல” என்றான் யுயுத்ஸு. “நீ அதை விழிகளால் பார்த்தாய்” என்றார் வியாசர். “ஆம், நான் பார்த்தேன்” என யுயுத்ஸு பெருமூச்சுவிட்டான். “நீ உன் அகவிழிகளாலும் பார்த்தாய். நிகழ்வுகள் எளியவை. அவற்றின்மேல் சென்று படியும் அகமே அவற்றை பொருள்கொண்டவை என ஆக்குகிறது. பாறைமேல் பவளப்பூச்சிகள் பல்லாயிரமாண்டுகளாக படிகின்றன. ஒன்றின்மேல் இன்னொன்று படிகிறது. அவை படிகமாகி பவளமாகின்றன. பாறை அதற்கு அடியில் வெறும் முதல் வடிவம் என அமைந்துள்ளது” என்றார் வியாசர்.

“ஆம், நான் என் முழுச் சொற்களாலும் அந்நிகழ்வின்மேல் அறைந்தேன். என்னை சிதறடித்துக்கொண்டேன். நான் அறிந்தவற்றை, நான் என தொகுத்துக்கொண்டவற்றை… ஒரு துளி எஞ்சாமல் அங்கே இருந்தேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “அதுவே உன்னை சொல்லும் தகுதி கொண்டவனாக்குகிறது” என்றார் வியாசர். யுயுத்ஸு சொற்களை திரட்டிக்கொள்ள முயன்றான். முதற்சொல் என எழுவது எது? முதற்சொல்! முதற்சொல்! அவன் அகம் தவித்தது. பின்னர் சலித்தமைந்தது. சோர்ந்து என்னால் இயலாது என எண்ணிக்கொண்டான். அவன் பின்வாங்கிய கணம் ஒரு சொற்றொடர் அவனை வந்தடைந்தது.

“தெய்வம் மானுடனுக்கு அருள்கையில் அவனை தெய்வமாக்குகிறது. தெய்வத்தை ஒருகணம் மானுடனாக்கி அவ்வருளை மானுடன் பெற்றுக்கொள்கிறான்” என்று அவன் சொன்னான். வியாசரின் முகம் மலர்ந்தது. கனிந்த விழிகள் அவனை நோக்கின. மாணவர்களும் முகம் மலர்ந்து அவனை பார்த்தனர். அவன் தன் உள்ளம் சொற்பெருக்கென பொங்கி எழுவதை உணர்ந்தான். “ஆசிரியரே, நான் கண்டேன் அப்பெரும்போரை. நிகரிலாத பெரும்போர் ஒன்று முடிந்த பின்னர் அது நிகழ்ந்தது. அனால் அப்போரும் அதே விசைகொண்டிருந்தது. அதே அழிவையும் உருவாக்கியது” என அவன் சொல்லத் தொடங்கினான்.

அர்ஜுனன் போரிட்டுக்கொண்டிருக்கையிலேயே உருமாறி தெய்வங்களும் மானுடருமாக தோன்றி மறைவதை, மறுபக்கம் அஸ்வத்தாமன் அவ்வண்ணமே நிகர் உருமாற்றம் கொள்வதை நான் கண்டேன். எந்தப் போரும் இங்கு எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் போர் ஒன்றின் பகுதியே என்று உணர்ந்தேன். அப்போரை நான் நூறாக ஆயிரமாக உடைந்து பரவி பல்லாயிரம் விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தேன். எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற இடங்களில் அது நிகழ்ந்துகொண்டிருந்தது.

அஸ்வத்தாமன் தன் நெற்றியில் அணிந்த அந்த மூவிழி ஒளிகொண்டு சிவந்தபடியே செல்வதை கண்டேன். அது அவருக்குள் எரியும் பெருந்தழல் ஒன்று பீறிட்டு வெளிவரும் சிறுதுளை எனத் தோன்றியது. செஞ்சடைகள் கொழுந்துவிட்டெரிந்தன. அம்புகளைத் தொடுத்தபடி சுழன்ற கைகளில் மானும் மழுவும் தோன்றி மறைந்தன. முப்புரம் எரித்த வில் அவர் கையிலெழுந்தது. ஒற்றைக்கால் ஊன்றி மறுகால் தூக்கி சடை சுழன்று பறக்க அவர் எழுந்தாடியபோது ஊழித் தாண்டவத்தைக் கண்டேன்.

ஒரு கணத்தில் கைகளில் தோன்றி மறைந்தது பேரழிவின் முத்திரை. வடவை எழுந்தது. அழிகிறது புவி என ஓலமிட்டன பூதங்கள் ஐந்தும். ஆம் ஆம் ஆம் என முழங்கியது வானம். சூழ்ந்தமைந்த தேவர்கள் அஞ்சி ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டார்கள். வெற்புகள் பொடிபடும் என முழங்கிய இடியோசையை கேட்டேன். வெற்றுக்களியொடு பூதக்கூட்டம் பாடும் எக்காளம். துடியொடு முழவும் உடுக்கொலியுடன் இணையும் வெறிமிகு தாளம். ஆழியில் அலைஎழுவதுபோல் அனல்பொங்கி அணைவதை கண்டேன். எஞ்சாது இனி எதுவும் என எண்ணி உளம் சமைந்தேன்.

இவ்விந்தையை என்னால் விளக்க இயலாது. ஒற்றைக் காற்புள்ளியில் சுழலும் முக்கண்ணனின் உருவிலெழுந்தன அத்தனை தெய்வங்களும். அத்தனை தேவர்களும் முனிவரும் எழுந்தனர். மூதாதையர் முகங்கள் தோன்றின. மூதன்னையர் தோன்றினர். மறைந்த மாவீரர்கள், பேரரசர்கள் எழுந்தனர். கற்றோர் கலைதேர் சூதர் எழுந்தனர். ஆசிரியரே, நான் மீண்டுமொருமுறை கண்டேன். அத்தோற்றத்தில் கையில் வேய்குழலும் முடியில் பீலியும் புன்னகைக்கும் முகமும் சிறுவர்களுக்குரிய விழிகளுமாக அவரை.

அவரைக் கண்டதுமே திகைத்துத் துடித்து மறுபக்கம் அர்ஜுனனை நோக்கினேன். அவரும் உருமாறிவிட்டிருந்தார். மேலும் மேலும் அகவை பின்னடைய இளமையின் பொலிவும் அழகும் தோன்றிக்கொண்டிருந்தன. இளந்தோள்கள், இளைய மார்பு. இளையோருக்குரிய சிரிப்பு. விழிகளில் அச்சமின்மையின் ஒளி. அவர் பதினெட்டு அகவை கொண்டவராகத் தெரிந்தார். அவர் கையில் இருந்த வில் உருமாறிவிட்டிருந்தது. அது கரும்பாலான வில். அவர் அம்புகள் அனைத்தும் மலர்கள். உடலிலி அவர் உடலென எழுந்துவிட்டிருந்தான். தன் மெல்லிய விரல்களால் அவர் வெண்ணிற முல்லைமலர் ஒன்றை எடுத்து நாணில் தொடுத்து எய்தார்.

பேரலை என எழுந்து சுருண்டு அணுகிவந்த அனலை எதிர்கொண்டது குளிர்ந்த வெண்ணிற சிறுமலர். அக்கணம் அனல்பெருக்கு உறைந்தது. செந்நிற மலர்வெளி என மாறியது. அச்சுழி நடுவே நின்றிருந்த அஸ்வத்தாமனின் நுதலில் சுடர்ந்த எரிமணியும் ஒரு மலர் என ஆவதை கண்டேன். அவர் முகத்திலும் அனல் அணைந்தது. மென்முறுவல் எழுந்தது. அவர் தலையில் ஒரு வெண்சுடர் எழக்கண்டேன். அது கூனலிளம்பிறைக்கீற்று என தெளிந்தேன். அதன் குளிரொளி அவர் உடலெங்கும் வழிந்திறங்க அவர் மெய்ப்பு கொண்டார். கை தழைய வில் தாழ்ந்து நிலம் தொட்டது. ஆசிரியரே, அவர் உடலின் இடப்பகுதியில் பெண்மை எழுந்தது. இடக்கை அசைவு கொடியென மென்மைகொண்டது.

மறுபக்கம் அர்ஜுனனின் இளைய உடல் முதுமை கொள்வதை கண்டேன். தசைகள் வற்றிச் சுருங்கி கருமை கொண்டன. பின்னர் அவை தழல்கொண்டு எரியலாயின. அவர் தலையில் குழல்கற்றைகள் செந்தழலாக கொழுந்தாடின. காதுகளில் நாகங்கள் குண்டலங்களாக நெளிந்தன. ஆசிரியரே, அவர் நெற்றியில் ஓர் அனல்துளி விழிதிறந்தமைவதை கண்டேன். அவரிடம் என்றுமிருந்த பெண்மை முற்றிலும் அகன்றுவிட்டிருந்தது. கொடியொன்று மரமாகி வேர் இறுகி உறுதியடைந்ததுபோல.

 

அஸ்வத்தாமனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே எழுந்த பரசுராமர் இரு கைகளையும் விரித்து நின்றிருப்பதை யுயுத்ஸு கண்டான். இடமுணர்ந்து, பொழுதுணர்ந்து நடுக்குகொண்டு நின்றான். “இங்கு இப்போர் முடிகிறது. இருவரும் தொடுத்தவை இணையாற்றல் கொண்ட அம்புகள். அவை ஒன்றையொன்று நிகர் செய்துவிட்டன. இனி போரில்லை” என பரசுராமர் அறிவித்தார். “இருவரும் வென்றனர், இருவரும் தோற்றனர்” என்று அவர் கூறியதும் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் தலைவணங்கினர். “ஒருவரை ஒருவர் வணங்குக! ஒருவரில் எழுந்த தெய்வத்தை பிறிதொருவர் தொழுவதாகவே அதற்குப் பொருள்” என்று பரசுராமர் ஆணையிட்டார்.

அர்ஜுனன் சென்று அஸ்வத்தாமனின் அருகே காண்டீபத்தைத் தாழ்த்தி அவன் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தன் வில்லை அர்ஜுனன் முன் தாழ்த்தி அவன் கால்களைத் தொட்டு வணங்கினான். இருவரையும் வாழ்த்தி கூடியிருந்தவர்கள் குரலெழுப்பினர். இருவரும் சென்று பரசுராமரை வணங்கினர். அவர் இருவருக்கும் தலைதொட்டு வாழ்த்தளித்தார். “சில போர்கள் முடிவதில்லை என்று உணர்க! இப்போர் இனி உங்களிடையே நிகழலாகாது” என்றார் பரசுராமர். “ஆம்” என்று அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். அஸ்வத்தாமன் புன்னகைத்தான்.

அர்ஜுனன் தலைவணங்கி திரும்புகையில் அஸ்வத்தாமன் “நில், பார்த்தா” என்றான். தன் நெற்றியிலணிந்திருந்த அருமணியைக் கழற்றி நீட்டி “இதை உன்னிடம் அளிப்பதற்கே எந்தை உண்மையாக விழைந்தார். அதனால்தான் அதை நான் என் நெற்றியிலேயே சூடியாகவேண்டும் என உறுதி கொண்டிருந்தேன். இன்று இதை நான் கடந்துவிட்டிருக்கிறேன். இது உனக்குரியது” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “அது எனக்கு அரியது. ஆனால் அதைச் சூடும் தகுதியிலாதவன் நான்” என்று தலைவணங்கி பின்னடைந்தான்.

அக்கணம் முன்னால் எழுந்த பீமன் “நான் அதன்பொருட்டே வந்தேன். அந்த அருமணியை எனக்களியுங்கள், ஆசிரியரே” என்றான். அஸ்வத்தாமன் புன்னகையுடன் அதை அவனை நோக்கி வீச பீமன் பற்றிக்கொண்டான். அஸ்வத்தாமனின் நெற்றியில் அந்த அருமணியின் கூர் பதிந்திருந்த இடத்தில் கூரிய குருதிப்புண் ஒன்று தோன்றியிருந்தது. அது ஊறிக்கசிந்து நெற்றியில் வழிந்தது. அவன் இளைய யாதவரை ஒருகணம் நோக்கியபின் திரும்பி காட்டுக்குள் நடந்து மறைந்தான்.

யுயுத்ஸு அப்போதுதான் இளைய யாதவர் அங்கிருப்பதை உணர்ந்து அவரை பார்த்தான். அவர் அர்ஜுனன் தோளைத் தொட்டு செல்வோம் என உதடசைக்க அர்ஜுனன் தலை அசைத்து உடன் சென்றான். பரசுராமர் எழுந்து லிகிதருடன் நடந்து அகன்றார். பீமன் அந்த அருமணியை தன் கையில் வைத்து புரட்டி நோக்கிக்கொண்டு செல்வதை யுயுத்ஸு கண்டான். அந்நிகழ்வின் பொருளை வெவ்வேறு கோணங்களில் பேசியபடி அனைவரும் கலைந்துசென்ற பின்னரும் அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அந்நிகழ்வுக்கு முன்பிருந்த தனிமையை சென்றடைந்தான்.

அத்தருணத்தை ஒரு சிறுநூலாக ஆக்கவேண்டும். அதை வியாசரின் மாணவர்கள் எவரைக் கொண்டாவது படித்துப்பார்க்கச் செய்யவேண்டும். ஒரு நூல். அதன் பெயர் அவன் நினைவிலெழுந்தது. மல்லீஸ்வரவிஜயம். மலரம்பனின் வெற்றி. ஆனால் தன்னை அளித்து அடைவது வெற்றியா என்ன? தன்னை அளிக்காமல் வெற்றி என்பது உண்டா? அவன் அந்நூலை ஏற்கெனவே இயற்றி வியாசரிடமே படித்துக்காட்டிவிட்டதுபோல் உணர்ந்தான். அந்நூலின் முதல் வரிகூட நினைவில் இருந்தது. வானவில்போல வண்ணக்குழம்பலாக அது கரைந்துவிட்டிருந்தது. அவன் அதை நினைவிலிருந்து மீட்டெடுக்க முயன்றபடி நடந்தான்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 38

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 5

குடிலை அடைந்து மரவுரி விரிக்கப்பட்ட மூங்கில் மஞ்சங்களில் அமர்வது வரை இளைய யாதவரும் அர்ஜுனனும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. கால்தளர்ந்து பரசுராமரின் முற்றத்தில் அமர்ந்து அழுத அர்ஜுனனை இளைய யாதவர் தோள்தழுவி அணைத்து அழைத்துவந்தார். அவன் விம்மிக்கொண்டே இருந்தான். அவர் ஆறுதாக ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவன் ஓய்ந்து மஞ்சத்தில் படுத்துக்கொண்டதும் “உன் அழுகை நன்று… சில எல்லைகளை கடந்துவிட்டாய் என்பதற்கான சான்று அது” என்றார்.

அர்ஜுனன் சீறி எழுந்து “வாயை மூடுங்கள்… இனி ஒருசொல்லும் கேட்கவேண்டியதில்லை… உங்கள் சொற்களால் என் ஆத்மா அழிந்தது. தீராப்பழிகொண்டவன் ஆனேன். போதும்” என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார். “இன்னும் பேசி என்னை கொல்லவேண்டாம், யாதவரே. அளிகூர்க, என்னை விட்டுவிடுக… நான் எளியவன். உங்கள் புதியவேதமும், அதிலிருந்து எழும் யுகமும் என் எண்ணம் சென்று எட்டாதவை. கண்ணும் காதும் சொல்லும் சித்தமும் தொட்டறியும் மெய்மையை மட்டுமே என்னால் உணரமுடியும். இதில் சிக்கி உழன்றுகொண்டிருக்கிறேன்… இதிலிருந்து உங்கள் சொற்கள் என்னை மீட்காதென்று அறிந்தேன்…” என அவன் அழுகையுடன் சொன்னான்.

“நானும் அவற்றில்தான் சிக்கியிருக்கிறேன். நானும் விழிநீர் வடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். “அதை நீ காணமுடியாது. ஏனென்றால் அது இங்கு நிகழவில்லை, அங்கே நான் இருளூழ்கத்தில் அமர்ந்திருக்கும் குகைக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.” அர்ஜுனன் திகைப்புடன் அவரை நோக்கினான். இளைய யாதவர் புன்னகைத்து “எண்ணி நோக்காதே, வந்தடைய மாட்டாய். விடு. இன்றிரவு நீ துயிலவேண்டும்” என்றார். “என்னால் துயில் கொள்ள முடியுமென எண்ணுகிறீர்களா?” என்றான் அர்ஜுனன்.

“எவரும் துயில்வதில்லை. ஏனென்றால் நீத்தார் அனைவருமே இன்னும் இங்குதான் இருக்கிறார்கள். நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். நீர்பெற்று அவர்கள் மூச்சுலகை அடைந்தபின்னரே எவருக்காயினும் துயில் அமையும்” என்றார் இளைய யாதவர். “என்னை துயிலவையுங்கள், யாதவரே. என்னை ஒரு இரவேனும் துயிலச்செய்யுங்கள்…” என்று அவன் இறைஞ்சினான். “நேற்றிரவும் அவர்களை கண்டேன். அருகே வந்து நின்றிருந்தனர். மூச்சொலியுடன உடல்வெம்மையுடன் விழிநோக்கின் ஒளியுடன்…. அவர்களை அகன்றுபோகச் செய்யுங்கள்.”

இளைய யாதவர் எழுந்து வந்து அர்ஜுனனின் நெற்றிப்பொட்டின்மேல் தன் கையை வைத்தார். “துயில்க!” என்றார். “அவர்கள் அகலமாட்டார்கள். ஆனால் அவர்கள் இனியவர்களாக முடியும்.” அவன் முகம் துயரில் நெளிந்துகொண்டே இருந்தது. விழிநீர் வழிந்து காதுகளை அடைந்தது. “துயில்க! துயில்க!” என அன்னைக்குரிய மென்குரலில் இளைய யாதவர் சொன்னார். “ஒவ்வொன்றாக பொருளிழந்து மறைக! கொண்டவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக! விழைபவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக! ஏற்றவை பொருளிழக்கட்டும். ஆம் அவ்வாறே ஆகுக! மறுப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம் அவ்வாறே ஆகுக! வெறுப்பவையும் சினப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம் அவ்வாறே ஆகுக! துறந்தவையும் கடந்தவையும் பொருளிழக்கட்டும். பொருளின்மையே திகழ்க! பொருளின்மையின் இனிமை நிறைக! ஆம் அவ்வாறே ஆகுக!”

அர்ஜுனன் துயில்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது. உதடுகளில் புன்னகை தெரிந்தது. அவன்முன் இனிய எவரோ நின்றிருந்தனர் என்று தோன்றியது. யுயுத்ஸு தானும் படுத்துக்கொள்வதற்காக மஞ்சத்தில் அமர்ந்தான். இளைய யாதவர் தன் மஞ்சத்தில் கால்மடித்து அமர்வதை கண்டான். அவர் ஊழ்கம் செய்யப்போகிறாரா? “துயிலவில்லையா தாங்கள்?” என்றான். “இல்லை, அவன் கொள்வது என் துயிலை” என்றார் இளைய யாதவர். யுயுத்ஸு அவரை புரியாமல் நோக்க அவர் புன்னகைத்து “துயில்க!” என்றார். அவன் படுத்துக்கொண்டான்.

அவனுக்கு அருகே காண்டீபம் நின்றிருந்தது. அது உயிருடன் நெளிகிறதா? அவன் ஆழ்துயிலில் மூழ்கியபோது அர்ஜுனன் சிரிப்பதை கேட்டான். கையூன்றி எழுந்து அர்ஜுனனை பார்த்தான். அர்ஜுனன் சிறுவன்போல சிரித்துக்கொண்டு புரண்டு படுத்தான். அவன் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். அவர் முகத்தைக் கண்டு திடுக்கிட்டான். அது கடுந்துயரில் நெளிந்துகொண்டிருந்தது. வலியில் இறுகிய உதடுகள், புடைத்த தசைகள். அவர் விரல்கள் தவித்துத் தவித்து ஒன்றை ஒன்று தொட்டு அலைந்தன.

அவன் கண்களை மூடிக்கொண்டான். நீத்தார் எங்கிருக்கிறார்கள்? துரியோதனனும் கர்ணனும் இளைய அரசர்களும் மைந்தர்களும்தான் அவனுக்கு அணுக்கமானவர்கள். அவர்கள் அவன் கனவில் ஒருமுறைகூட வந்ததில்லை. அவன் அவர்களை மறக்கவில்லை. நாளில் பலமுறை நினைவுகூர்ந்தான். அவன் முகமறிந்த எவரையும் போரில் கொல்லவில்லை. கொன்றவர்களுக்குத்தான் நீத்தார் தென்படுவார்களா என்ன? அர்ஜுனனின் சிரிப்பொலி கேட்டது.

அந்தியில் பரசுராமரின் மாணவர்கள் வேதம் ஓதும் ஒலி கேட்டது. வேள்விப்புகையின் மணத்தை அவன் உணர்ந்தான். எனில் இன்னமும் அந்திகூட ஆகவில்லை. பறவையோசை அவியவில்லை. அவன் மேலும் மேலுமென துயிலில் ஆழ்ந்தான். குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் நின்றிருந்தான். எரியெழுந்து களத்தை மூடியிருந்தது. புகையின் மூச்சடைக்கச்செய்யும் கெடுமணம். அதில் ஊன்நெய் உருகி அனல்கொண்டெழுவதன் குமட்டும் மணம். அலறல்கள், ஓலங்கள். அவன் விழித்துக்கொண்டபோது வேள்வியின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன.

மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். குருக்ஷேத்ரத்தில் தன்னந்தனியாக நின்றிருந்தான். அவனைச்சுற்றி நூற்றுவரும் இறந்துகிடந்தனர். இதை நீ முன்னரே அறிவாய் என்று துரியோதனன் சொன்னான். நீ என்னிடம் சொல்லவில்லை. ஏன்? அவன் வெறித்து நோக்கிக்கொண்டு நின்றான். பலமுறை சொல்லியிருக்கிறேன், மூத்தவரே. ஆனால் அதை அவன் சொல்லவில்லை. அவன் மேல் இருள் மூடி அழுத்தி ஆழத்திற்கு கொண்டுசென்றது.

விழித்துக்கொண்டபோது அர்ஜுனன் எழுந்து நின்றிருந்தான். “யாதவரே” என அவன் அழைக்க இளைய யாதவர் விழிதிறந்தார். “இன்று பிறந்தெழுந்ததுபோல் உணர்கிறேன். உள்ளம் இத்தனை தெளிந்து நான் அறிந்ததே இல்லை…” என்று அவன் சொன்னான். சிறுவன்போல கூச்சலிடும் குரலில் “விடுதலை எனில் இதுவே. அனைத்தையும் கடந்துவிட்டேன். அவர்கள் என் கனவில் வந்தனர். என் மைந்தர்கள் அனைவருமே வந்தனர். அரவானும் அபிமன்யுவும் திரௌபதி மைந்தரும் பிற மூவரும்… என்னைச்சூழ்ந்து விளையாடினர். இரவு முழுக்க அவர்களுடன் கொண்டாடினேன்.”

“ஆனால் அவர்கள் எல்லோருமே சிறுமதலைகளாக இருந்தனர். சொல் திருந்தாத குழவியர். நடைகூட அமையவில்லை. ஒற்றைப் பாற்பல் சிரிப்புகள். கண்களில் துள்ளிய ஒளி. அள்ளிக்கொள் அள்ளிக்கொள் என நீட்டிய கைகள்…” அவன் பேருவகையுடன் கைகளை விரித்தான். “அள்ளி அள்ளி என் மேல் சந்தனம்போல் பூசிக்கொண்டேன். முத்தமிட்டு முத்தமிட்டு சலிக்கவே இல்லை… ஒரு முழுப்பிறவியையும் வாழ்ந்துவிட்டேன், யாதவரே.” அவன் நிலைகொள்ளாமல் அறைக்குள் சுற்றிவந்தான். “தழுவி முத்தமிடுகையில் அவர்களின் இதழ் ஈரம் படும் மெய்ப்பு… மானுடன் பிறந்ததே அப்பேரின்பத்திற்காகத்தான்.”

“அதுவும் காமமே” என்று இளைய யாதவர் சொன்னார். “காமத்தின் மிகமிக உயர்ந்த நிலை. காமமெனும் பாற்கடலின் அமுது என்பார்கள் கவிஞர்.” அர்ஜுனன் அவரை திகைப்புடன் நோக்கினான். “இன்று நீ முடிவெடுக்கலாம். என்னுடன் சுனைக்கரைக்கு உன்னை அழைத்துச்செல்வதாக இருந்தேன். அங்கே உனக்கு ஊழ்கநிறைவை அளிக்க எண்ணியிருந்தேன். அதன்பின் உன் குண்டலினியிலிருந்து விழைவு முற்றொழியும். அதன்பின் இவ்வின்பத்தை நீ அடையவே இயலாது. இப்பிறவியில் அல்ல, இனி எப்பிறவியிலும். உன் நினைவிலிருக்கும் இன்பங்கள்கூட தடமில்லாது அழியும்.”

அர்ஜுனன் கைகள் தளர்ந்து தொங்க நோக்கியபடி நின்றான். “காமத்தின் உச்ச இன்பத்தை அறிந்துவிட்டாய். பருகும்தோறும் விடாய் மிகுவதே காமத்தின் இயல்பு. உன்னுள் பெருகுவது அலையும் அதன் நுரையும். சொல்க, ஊழ்கநிறைவுக்கு நீ சித்தமாக இருக்கிறாயா?” என்றார் இளைய யாதவர். “அதை அடையாமல் நீ உன் தந்தை அளித்த அம்பை பயன்படுத்த இயலாது. அந்த அம்பு இல்லாமல் நீ அஸ்வத்தாமனை எதிர்கொள்வதும் முடியாதது.”

அர்ஜுனனை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவர் தொடர்ந்தார். “காமத்தை ஒழியலாகாது என்றால் உன்முன் வழி ஒன்றே உள்ளது. பழிகொள்ளும் வஞ்சினத்தை கைவிடுக! உன்னால் இயலாதென்று கூறி மீள்க! காமத்தை அறியாத உயிர் இல்லை. காமத்தின் மெய்யுருவை அறிந்தோர் சிலரே. ஒருமுறை அதை அறிந்தவன் நல்லூழ் கொண்டவன். அவன் மேலும் மேலும் பெருகும் ஒரு அமுதத்துளியை பெற்றுக்கொண்டிருக்கிறான். நீ அடையக்கூடும் இன்பம் இங்கிருந்து தொடங்குகிறது.”

அர்ஜுனன் ஒருகணம் தன்னை இறுக்கிக்கொண்டான். பின்னர் “யாதவரே, அது மெய்மையும் மீட்பும் அளிக்கும் பேரின்பமே ஆயினும் நான் கொண்ட கடமையிலிருந்தும் கூறிய சொல்லிலிருந்தும் விலகமாட்டேன் என நீங்கள் அறிவீர்கள். இப்போதும் மற்றொன்றில்லை” என்றான். “நீ சற்று எண்ணிச்சூழலாம். நீ துறக்கவிருப்பது அன்பென்றும் காதலென்றும் பற்றென்றும் ஆகி உயிர்க்குலங்களைச் சூழும் அரிய இன்பத்தை. மெய்மையென்றாகும் பேரின்பத்தை. முழுமையைச் சென்றடையும் இன்பத்துக்கு அப்பாற்பட்ட நிலையைக்கூட கவிஞரும் முனிவரும் அதைக்கொண்டே விளக்கினர்” என்றார்.

“மானுடர் அவ்வின்பத்தை முழுதடையாமல் தடுக்கும் விசைகள் பல அவர்களுக்குள்ளேயே உறைகின்றன. காமத்தை ஆணவத்துடன் கலந்துகொள்கின்றனர் மானுடர். காமத்தையே ஆணவம் என்றும் ஆணவத்தையே காமம் என்றும் சமைத்துக்கொள்கின்றனர். ஆணவம் சென்று தொடும் அனைத்தையும் காமத்துடன் இணைத்துக்கொள்கின்றனர். பொருள்விழைவு, அடையாள நாட்டம், வெற்றித்துடிப்பு அனைத்தும் காமம் என்று உருமாறுகின்றன. காமம் என்னும் இனிமைப்பெருவெளி திரிபடைகிறது. காமத்தில் கோன்மை குடியேறுகிறது. கோன்மை கரவுக்கு வழிகோலுகிறது. கரவு தன்னிரக்கத்தை, கசப்பை, சினத்தை வஞ்சத்தை கொண்டுவருகிறது. ஆகவே இப்புவியில் மானுடர் காமம் என அடைவதெல்லாம் துன்பத்தை மட்டுமே.”

“நீ அவை அனைத்தையும் அடைந்து கடந்துவிட்டாய். குருக்ஷேத்ரத்திற்குப்பின் இனி இப்புவியில் நீ அறியவேண்டிய இருள் என ஏதுமில்லை. இருளை அறிந்தமையால் ஒளியின் பொருளையும் உணர்ந்துவிட்டாய். இனி நீ அடையும் காமம் தடைகள் அற்றது. தேவர்களும் விழைவது. அதை இழக்கவேண்டாம் என்பதே உன் உலகியல்தோழனாக நான் அளிக்கும் சொல்” என்றார் இளைய யாதவர். யுயுத்ஸு பரபரப்புடன் அர்ஜுனனை பார்த்தான். அர்ஜுனன் முகம் கூரிய உணர்வை மட்டுமே காட்டியது. “எண்ணிச்சொல்ல சற்றே பொழுதளிக்கிறேன். இக்குடிலில் நீ சற்றுபொழுது தனித்திருக்கலாம்” என்றார் இளைய யாதவர்.

“தேவையில்லை” என்றான் அர்ஜுனன். “தனிமையை அஞ்சாதே. எழுந்து வரும் எண்ணம் என நீயே நோக்கு” என்றபின் இளைய யாதவர் வெளியே சென்றார். யுயுத்ஸு அவரைத் தொடர்ந்து வெளியேறினான். இளைய யாதவர் முற்றத்தில் நின்றார். யுயுத்ஸு அவர் அருகே செல்லாமல் அகன்று நின்றான். அவரை நோக்க அவன் அஞ்சினான். புலரிமுன் இருள் சூழ்ந்திருந்தது முற்றத்தில். காடு இருள்வடிவில் ஓசையிட்டுக்கொண்டிருந்தது. எங்கோ ஒரு நரியின் ஊளை எழுந்தது.

இளைய யாதவர் அசைந்தபோது யுயுத்ஸு விழிப்பு கொண்டான். இளைய யாதவர் குடிலுக்குள் நுழைந்தார். அங்கே மஞ்சத்தில் அர்ஜுனன் காண்டீபத்துடன் அமர்ந்திருந்ந்தான். வீணையை மடியிலிட்டு மீட்டும் பாணனைப்போல என யுயுத்ஸு எண்ணினான். முகத்திலும் அந்த பாவனையே தெரிந்தது. இளைய யாதவர் அவனிடம் “என்ன முடிவெடுத்தாய்?” என்றார். அவன் புன்னகையுடன் “தனிமை நன்று. முழுதுற உளம்நோக்க முடிகிறது. பிறிதொரு சொல்கூட அகத்தே எழவில்லை. நான் கூறியதேதான். யாதவரே, என் கடமையையே தலைக்கொள்கிறேன்” என்றான்.

இளைய யாதவரும் அர்ஜுனனும் சென்றபின் யுயுத்ஸு குடிலில் தனித்திருந்தான். அவர்கள் காட்டுக்குள் நுழையும் எல்லைவரை சென்றபின் அவன் தயங்கிநின்றான். இளைய யாதவர் அவனை அழைக்கவில்லை. அவன் திரும்பிவந்தான். குடிலின் முகப்பில் மூங்கில் பீடத்தில் அமர்ந்தபடி இருளை நோக்கிக்கொண்டிருந்தான். மிருகண்டன் அவனை அணுகி “போருக்கான அனைத்தும் ஒருங்கிவிட்டன. அக்களத்தை தூய்மை செய்ய ஆசிரியர் ஆணையிட்டார். சற்றுமுன்னர்தான் அப்பணி முடிந்தது. ஆசிரியர் லிகிதருடன் நீராடச்சென்றிருக்கிறார்” என்றான்.

யுயுத்ஸு தலையசைத்தான். “காலைவேள்வி முதற்கதிருக்கு முன்னரே முடிவது இங்கே வழக்கம். இன்று அதை முதல்பறவைக்கு முன்னரே முடிக்க ஆணை” என்று மிருகண்டன் சொன்னான். “குருநிலையில் மாணவர் அனைவருமே போர்காண அங்கே வருகிறார்கள். இப்போர் நெடுங்காலம் நூல்களில் யாக்கப்படுவதாக அமையும் என்கிறார்கள்.” அவன் “ஆம்” என்றான். “பார்த்தரும் யாதவரும் நீராடச்சென்றார்கள் போலும்… அவர்களை அழைக்க நான் வருகிறேன்” என்றான். “தேவையில்லை, நாங்களே அங்கே வருகிறோம்” என்றான் யுயுத்ஸு.

மிருகண்டன் சென்றபின் அவன் பதற்றத்துடன் கண்மூடினான். மூடிய கண்களுக்கு அப்பால் எவரோ வருவதுபோலத் தெரிந்தது. விழிதிறந்தபோது புரவியை நிறுத்திவிட்டு பீமன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். அவனுடன் வந்த மிருகண்டன் “மூத்தபாண்டவர் வருகை முன்னரே அறிவிக்கப்படவில்லை. ஆசிரியரிடம் சொல்லி ஆணைபெறவும் இப்போது பொழுதில்லை. அவர் போரில் சான்று நின்றிருக்க வந்திருக்கிறார் போலும்” என்றான். ஆம் என யுயுத்ஸு தலையசைத்தான். பீமன் பொறுமையிழந்து அசைந்தான். மிருகண்டன் அவனை வியப்புடன் நோக்கிவிட்டு திரும்பிச் சென்றான்.

பீமன் உரத்தகுரலில் “எங்கே அவர்கள்? நிகழ்ந்தவற்றை அந்த மாணவன் சொன்னான். எங்கே இளையவன்?” என்றான். யுயுத்ஸு ‘அவர்கள் காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்” என்றான். “நான் அவர்களை பார்த்தாகவேண்டும்… உடனே” என்றபடி பீமன் திரும்ப யுயுத்ஸு “நில்லுங்கள், மூத்தவரே. வேண்டாம். அவர்கள் சென்றிருப்பது நீராடுவதற்காக அல்ல” என்றான். “பிறகு?” என்று அவன் கேட்டான். “யாதவர் இளையவருக்கு சொல் அளிக்கவிருக்கிறார். இந்திரனின் அம்பை கையாளும் முறையை” என்றான். “அதை இப்போதுதானா அறியப்போகிறான் அவன்? தந்தையின் அம்பைக் கையாள பிறிதொருவர் சொல் தேவையா அவனுக்கு?”

யுயுத்ஸு அழுத்தமான குரலில் “இதற்கு அப்பால் தங்களுக்கு அதை உரைக்க இயலாது, மூத்தவரே” என்றான். “ஆனால் அவர்களின் தனியுலகுக்குள் நீங்கள் நுழையவேண்டியதில்லை.” பீமன் சீற்றத்துடன் “நீயா என்னை தடுப்பது?” என்றான். “ஆம், நானேதான்” என்றான் யுயுத்ஸு. பீமன் “நான் அவனை அறைகூவிவிட்டே கிளம்பினேன். இளையவனுக்கு முன்னரே அவனை நான் அறைகூவிவிட்டேன்” என்று கூவினான். “அவர் நேரில் அறைகூவிவிட்டார். பரசுராமரின் முன் நாளும் பொழுதும் குறிக்கப்பட்டுவிட்டது” என்றான் யுயுத்ஸு. “அதை நான் ஏற்கவியலாது. என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது” என்று பீமன் கைகளை ஓங்கி அறைந்தான்.

“மூத்தவரே, அஸ்வத்தாமன் ஏற்றுக்கொண்டது இளையவரின் அறைகூவலை” என்று யுயுத்ஸு சொன்னான். “அதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அப்போர் முடியட்டும். நீங்கள் உங்கள் அறைகூவலை முன்வைக்கலாம். அவர் ஏற்றாரென்றால் போரிடலாம்.” பீமன் சலிப்புடன் அமர்ந்தான். “அவன் கைதளர்ந்திருந்தான். காண்டீபத்தையே மறந்துவிட்டிருந்தான். ஐவரில் போருக்கான ஊக்கம் கொண்டு எஞ்சுபவன் நான் மட்டுமே…” என்று தனக்குத்தானே சொன்னான். “அவனால் அஸ்வத்தாமனை எதிர்கொள்ளமுடியாது. அவன் அம்புக்கு இரையாகக்கூடும்.”

“அவருடன் இளைய யாதவர் இருக்கிறார்” என்றான் யுயுத்ஸு. “இப்போர் நீங்கள் எண்ணுவதுபோன்றது அல்ல…” பீமன் அவனை வெறித்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். “நீங்கள் நீராடி ஒருங்கலாம், மூத்தவரே. பொழுதில்லை” என்றான் யுயுத்ஸு. சற்றுநேரம் வெறுமனே நோக்கியபின் “ஆம்” என பீமன் எழுந்துகொண்டான். எடையுடன் அவனுக்கு நிகராக நடந்தபடி “என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. அவன் எப்படி களம்நிற்க இயலும்? போரில் அங்கன் வீழ்ந்ததுமே அவனும் வீழ்ந்துவிட்டான்” என்றான்.

“மூத்தவரே, இது அவர்களுக்குள் மட்டுமே நிகழ்ந்தாகவேண்டிய போர்” என்று யுயுத்ஸு சொன்னான். “இப்படி ஒரு போர் எஞ்சியிருந்தது. அவர்கள் பிறந்த கணம் முதல் இது ஒருங்கிக்கொண்டிருந்தது.” பீமன் “ஆம்” என்றான். பின்னர் பெருமூச்சுவிட்டு “ஊழின் கடன்களை முற்றாக முடித்துவிட்டே செல்வோம் போலும்” என்றான். “பொன்னின் உலையென்றாகவேண்டும் வாழ்க்கை என ஒரு சொல் உண்டு, வாசிஷ்டசூத்ரத்தில்” என்றான் யுயுத்ஸு. “அனைத்து மாசுகளையும் அகற்றி தூய்மைசெய்யவேண்டும். பொன் அனலென்றாகும்போதே அதிலுள்ள மாசுகள் மறைகின்றன.”

பீமன் சலிப்புடன் தலையை அசைத்தான். சுனையில் நீராடும்போது அவன் எண்ணி எண்ணி தலையை ஆட்டி முனகிக்கொண்டிருந்தான். குடிலுக்கு மீண்டு மரவுரி அணிந்துகொண்டிருக்கையில் மிருகண்டன் அவர்களை தேடிவந்தான். முற்றத்தில் நின்று “பாண்டவரே!” என்றான். யுயுத்ஸு வெளியே சென்றான். “களம் ஒருங்கிவிட்டிருக்கிறது. ஆசிரியர் சென்றுவிட்டார். இங்குள்ள மாணாக்கர் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள்.” யுயுத்ஸு “கிளம்புவோம்” என்றான். “அவர்கள் எங்கே?” என்று மிருகண்டன் கேட்டான். “அவர்கள் அங்கேயே வந்துவிடுவார்கள்” என்றான் யுயுத்ஸு

உரத்தகுரலில் “பொழுதுக்கு முன் அவர்கள் அணையவில்லை என்றால் நான் பொருதுகிறேன். நானும் அவனை அறைகூவியிருக்கிறேன்” என்றான் பீமன். மிருகண்டன் “அதை முடிவுசெய்யவேண்டியவர் ஆசிரியரே” என்றான். அவர்கள் முற்றத்தில் இறங்கினர். பீமன் கருக்கிருட்டை அண்ணாந்து நோக்கிவிட்டு கைகளை வீசியபடி நடந்தான். அவனுக்குப் பின்னால் மிருகண்டனும் யுயுத்ஸுவும் நடந்தார்கள்.

அக்களம் காட்டுக்குள் சற்று தள்ளி இருந்தது. அங்கே மண்ணுக்கு அடியில் மாபெரும் பாறை ஒன்று இருக்கக்கூடும். ஆகவே மரங்கள் ஏதும் முளைக்காமல் புல்வெளி உருவாகியிருந்தது. அங்கே பரசுராமரின் குருநிலையைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக விற்பயிற்சி கொள்வார்கள் என தெரிந்தது. குறிப்பலகைகளும் படைக்கலப்பெட்டிகளும் அமர்வதற்கான மூங்கில்பீடங்களும் அப்பகுதியெங்கும் பரவிக்கிடந்தன. பரசுராமரின் மாணவர்கள் அங்கே குழுமி வளைந்திருந்தனர். அவர்கள் அணுகியபோது அங்கே எழுந்துகொண்டிருந்த பேச்சுக்குரல் முழக்கம் அடங்கி மேலெழுந்தது.

களத்தின் தென்மேற்குமூலையில் கொற்றவையின் சிறு சிலை பீடத்தில் நிறுவப்பட்டிருந்தது. செம்பட்டு அணிந்து செங்காந்தள் மாலைசூடி செஞ்சுடர்கள் ஏழு எரிந்த இரு அடுக்குவிளக்குகளுக்கு நடுவே அன்னையின் சிறிய கருஞ்சிலை அமர்ந்திருந்தது. வெள்ளியாலான விழிகள் பதிக்கப்பட்ட முகம் அனலாட்டத்தில் உயிர்கொண்டிருந்தது. எதிரே பலிபீடத்தில் குருதிபலி கொடுக்கப்பட்ட வெள்ளாட்டின் தலை விழிகள் வெறித்திருக்க, நாக்கு நீண்டு சரிந்துதொங்க வைக்கப்பட்டிருந்தது. குருதியின் மணம் அப்பகுதியை சூழ்ந்திருந்தது.

கொற்றவைச் சிலைக்கு நேர் எதிராக வடகிழக்கு மூலையில் மரப்பீடத்தில் பரசுராமர் அமர்ந்திருந்தார். அவர் அருகே லிகிதர் நின்றார். மாணவர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். பீமன் அவரை அணுகி கால்தொட்டு வணங்கினான். அவர் அவனை தலை தொட்டு வாழ்த்தினார். பீமன் ஏதேனும் சொல்வான் என யுயுத்ஸு எதிர்பார்த்தான். ஆனால் அவன் அக்களத்தை நோக்கியதுமே உளம்குழம்பிவிட்டவன் போலிருந்தான். பரசுராமரின் அருகிலேயே பீமன் நின்றுகொண்டான். யுயுத்ஸு அருகே சென்று நின்றான்.

கொம்பொலி எழுந்ததும் அனைவரும் திரும்பி நோக்கினர். தனியாக கையில் வில்லுடன் அஸ்வத்தாமன் வந்தான். அவன் அணுகுந்தோறும் கூட்டத்தில் பேச்சொலி எழுந்து அவன் களத்திற்குள் புகுந்ததும் ஆழ்ந்த அமைதி உருவாகியது. அஸ்வத்தாமன் பரசுராமரை வணங்கிவிட்டு தன் வில்லை கொற்றவையின் முன் குருதிபீடத்தின்மேல் வைத்தான். தலைவணங்கிவிட்டு அன்னைசிலையின் வலப்பக்கமாக நின்றான். பீமனின் விழிகள் அஸ்வத்தாமனிலேயே பதிந்திருந்தன.

அஸ்வத்தாமனின் நெற்றியில் அந்தச் செந்நிற அருமணியை அப்போதுதான் யுயுத்ஸு கண்டான். முந்தைய நாள் அதைக் கண்டது நினைவுக்கு வரவில்லை. அப்போது அவனுடைய சடைக்கற்றைகள் முகத்தில் சரிந்து அதை மறைத்திருக்கலாம். அப்போது அவன் சடைகளை அள்ளி பின்னுக்குத்தள்ளி தோல்பட்டை ஒன்றை கட்டியிருந்தான். அந்த அருமணி ஒரு துளி அனல் என மின்னியது. நுதல்விழி. அவனுடைய குழல் எப்படி சடையாகியது என யுயுத்ஸு உணர்ந்தான். குருதிக்கூழ் முடியுடன் கலந்து அதை சடையென்று ஆக்கும் தன்மை கொண்டது.செஞ்சடையன்.