மாதம்: செப்ரெம்பர் 2019

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 16

பகுதி மூன்று : பலிநீர் – 3

கோட்டைக்கு வெளியே செல்லும்போதுகூட கருக்கிருள் அகன்றிருக்கவில்லை. கோட்டை முகப்பின் முற்றம் நிறைய ஏராளமான மக்கள் சிறிய துணிக்கூடாரங்களிலும், பாளைகளையும் இலைகளையும் கொண்டு செய்யப்பட்ட குடில்களிலும் தங்கியிருந்தனர். அவர்களில் பலர் முன்னரே கிளம்பிச்சென்றுவிட்டிருந்தமையால் அவை ஒழிந்து கிடந்தன. பலர் அப்போதுதான் விழித்தெழுந்து கிளம்பிக்கொண்டிருந்தனர். இருளுக்குள் அவர்களின் கலைந்த குரல்களின் முழக்கம் எழுந்து சூழ்ந்திருந்தது. விண்ணில் தொலைவில் ஒளிமிக்க சில விண்மீன்கள் மட்டும் துலங்கின. கைப்பிடி அளவிற்கு உப்புப் பரல்களை எடுத்து வீசி எறிந்ததுபோல் என்று தோன்றியது. அவற்றை அடையாளம் காணவோ வடிவு வகுத்துக்கொள்ளவோ கனகரால் இயலவில்லை.

முகப்பில் சென்ற காவல்படையினர் சாலையெங்கும் நிறைத்து சென்றுகொண்டிருந்த மக்கள்திரளை அகற்றி வழி உருவாக்கி அவற்றினூடாக அரசியரின் தேர்களை செல்லவைத்தனர். அந்நிரையின் இறுதித் தேர் மிகப் பின்னால் அப்பொழுதும் அஸ்தினபுரியின் கோட்டைக்கு உள்ளே இருந்தது. கனகர் தன் புரவியில் உடல் தளர அமர்ந்து, இடக்கையால் கடிவாளத்தை பற்றிக்கொண்டு துயிலில் எடைகொண்டு கீழ்சரிந்த இமைகளுடன், ஒன்றையொன்று தொட்டுத் தொட்டுச் செல்லும் எண்ணங்களுடன் அமர்ந்திருந்தார். உடலின் அசைவில் அங்கு மீண்டு வந்து, சூழலை உணர்ந்து வியப்புற்று, நீள்மூச்சுடன் விழிசுழற்றி நோக்கி, மீண்டும் எங்கோ அமிழ்ந்து, எங்கோ எழுந்து, நினைவுகளையோ பொருளிலா எண்ணங்களையோ தொட்டு மயங்கிக்கொண்டிருந்த சித்தத்துடன் சென்றுகொண்டிருந்தார்.

சாலையோரங்களை நிரப்பி சென்றுகொண்டிருந்த அந்த மக்கள்திரள் இருளுக்குள் ஓசைகளாக, நிழலசைவுகளாக, விழிமின்னாக, உலோகங்களின் மிளிர்வாக, விலங்குகளின் செருக்கடிப்போசையாக, பலநூறு குளம்படி ஓசைகளாக தோன்றியது. பந்தங்களின் வெளிச்சம் அவர்களின் மீது பட்டபோது அச்சுறுத்தும் யவன ஓவியங்களிலென முகங்கள் தெளிந்து பின் இருளில் அமிழ்ந்தன. எந்த முகமும் இயல்பான உணர்வுநிலை கொண்டிருக்கவில்லை. உச்ச சினத்தில் சீறி எழுந்தவைபோல், வசைச் சொல்லொன்றை கூவியபடி நெஞ்சில் அறைந்து அலறவிருப்பதன் முந்தைய கணத்தில் நின்றுவிட்டவைபோல், கனவில் எதையோ கண்டு அஞ்சி விதிர்ப்பு கொண்டவைபோல், நோயுற்று வலிப்புகொண்டவைபோல், பெருவலியில் இழுத்துச் சுழித்தவைபோல் தோன்றின. பேரெடையொன்றை தலைக்குமேல் தூக்கி கொண்டுசெல்பவைபோல் கன்னத்தசைகளும் கழுத்து நரம்புகளும் இறுகிய பற்களும் கொண்டவை.

ஒவ்வொரு முகமும் தனக்கெதிரான வஞ்சமொன்றை கரந்திருப்பதாக கனகருக்குத் தோன்றியது. பந்த வெளிச்சத்தில் முகங்களைப் பார்த்ததுமே அவர் கடிவாளத்தை இழுத்து தன் புரவியை பின்னடையச்செய்து இரு பந்தங்களுக்கு நடுவே இருக்கும் குறைவான ஒளிகொண்ட பகுதிக்கு சென்றார். ஆயினும் சீறி முட்டிமோதிக்கொண்டிருந்த அக்கூட்டத்தின் நடுவே சீரான ஒழுக்காக வண்டிகள் செல்ல இயலவில்லை. முன்னால் சென்ற தேரோ வண்டியோ எங்கேனும் முட்டி நின்றுவிட்டால் அங்கிருந்து ஏவல்பெண்டுகள் அகல்சுடரை சுழற்றியும், கொம்போசை எழுப்பியும் ஆணைகளை இட்டனர். அந்த ஆணை பின்னிருப்போரால் பெற்று கையளிக்கப்பட்டு வண்டிநிரையின் இறுதி வரை காற்றில் பறந்து சென்றது. அதற்கேற்ப அனைத்து வண்டிகளும் கடிவாளங்கள் இழுக்கப்பட்டு, சகடக்கட்டைகள் இறுக்கப்பட்டு, மரம் உரசும் ஒலியும் அச்சு சுழன்று இறுகும் ஒலியுமாக முனகலும் அலறலும் விம்மலும் விதும்பலுமாக தேங்கி நின்றன. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் தலை திருப்பி மூச்சிரைத்தன. காளைகள் தலை தாழ்த்தி கொம்புகளால் நுகத்தை தட்டின. குளம்புகளால் தரையை அறைந்து மூச்சு சீறலோசை எழுப்பின. அந்தத் தேங்கலில் பந்த ஒளியில் மீண்டும் அச்சமூட்டும் முகங்கள் தெரிந்தன.

அம்முகங்களை பார்க்காமல் இருக்கவும் இயலவில்லை. மீண்டும் மீண்டும் அவற்றை பார்த்தபோது மெல்ல அம்முகங்களை அவரால் அடையாளம் காண இயன்றது. குலப்பெண்டிர். முதுமகளிர். முதியவர்கள். உழவரும் ஆயரும் நெசவாளரும் குயவரும் என எளிய மக்கள். பெண்கள் தங்கள் தோள்களில் கட்டிய தூளிகளில் குழந்தைகளை தொங்கவிட்டிருந்தனர். முதியவர்களின் தோள்களில் தலையைப் பற்றியபடி குழந்தைகள் உடல்துவள துயின்றுகொண்டிருந்தன. முதுமக்கள் சில குழந்தைகளை நடக்க வைத்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். பெரும்பாலான குழந்தைகள் துயிலில் இருந்தன. நடக்கும்போதே துயிலில் துவண்டு முட்டிமோதின. வெறித்திருந்த விழிகள் எவற்றிலும் ஒரு சொல்கூட இல்லை. கல்விழிகள். வடுக்கள்போல, வண்டுகள்போல, கூர்முனைகள்போல வெறும்விழிகள். ஒரு சிறுவனின் விழிகளை அருகே கண்டு அவர் திடுக்கிட்டார். குழந்தைவிழி அவ்வண்ணம் வெறுமைகொள்ள இயலுமென அவர் எண்ணியதே இல்லை.

இத்தனைபேர் அஸ்தினபுரியைவிட்டு ஒவ்வொரு நாளும் அகன்று சென்றுகொண்டிருக்கிறார்களா என்ன? அஸ்தினபுரியின் அமைச்சரென அங்கு அமர்ந்திருந்தபோது இதை ஏன் அறியாமலிருந்தேன்? அவர் கடிவாளத்தை இழுத்து வண்டி ஒன்றைக் கடந்து தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ஒற்றனிடம் “எங்கு செல்கிறார்கள் இவர்கள்?” என்றார். அவன் புரவியில் அமர்ந்தபடியே துயின்றுகொண்டிருந்தவன் போலிருந்தான். அவருடைய கேள்வியை சற்று பிந்தியே அவன் உளம் வாங்கியது. கடிவாளத்தை இழுத்து புரவியை விசையழியச்செய்து கையால் முகத்தையும் வாயையும் துடைத்தபின் “என்ன கேட்டீர்கள், உத்தமரே?” என்றான். “இத்தனை குடிமக்கள் எங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்?” என்றார் கனகர். அவன் “ஆம்” என திரும்பி நோக்கினான். மீண்டும் முகத்தை துடைத்தான். “ஏராளமானவர்கள்!” என்றான்.
“ஆம், அவர்கள் செல்வது எங்கே?” என்றார் கனகர் எரிச்சலுடன்.

“இவர்கள் ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள், உத்தமரே. இன்று பதினாறாம் நாள். ஆகவே நீர்க்கடனுக்காக கங்கைக்கரைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “எவருக்கு?” என்று கனகர் கேட்டார். அவன் அவரை திகைப்புடன் சில கணங்கள் பார்த்துவிட்டு “போரில் உயிர் நீத்தவர்களுக்கு” என்றான். “ஏழாம் நாள் நீர்க்கடன் அளிப்பவர்கள் சிலர் உண்டு. பதினாறாம் நாள் நீர்க்கடன் சிலருக்கு… அரிதாக சிலருக்கு நாற்பத்தோராம் நாள். உடல் கிடைக்காதவர்களுக்கு நூற்றெட்டாம் நாளில் நீர்க்கடன் செய்யலாம் என்பது மரபு” என்றான். “இவர்களில் பெரும்பாலானவர்கள் நாற்பத்தொன்றாம் நாள் வரை அங்கு கங்கைக்கரையிலேயே தங்கிவிட்டு அதன் பின்னரே அஸ்தினபுரி திரும்புவார்கள் என தோன்றுகிறது.”

கனகர் மீண்டும் பந்தங்களின் ஒளியில் துலங்கி துலங்கி இருளில் மூழ்கிய பேய்த்தோற்றம் கொண்ட முகங்களைப் பார்த்தபின் “அவர்களின் வஞ்சத்தைப் பார்த்தால் மீண்டும் அஸ்தினபுரிக்கு வருவார்கள் என்பதே ஐயம்தான்” என்றார். பெருமூச்சுடன் ஒற்றன் “மெய்யாகவே அவர்களில் பலர் திரும்பி வருவதில்லை. கங்கைக்கரையிலிருந்து அப்படியே படகுகளில் ஏறி பிற நாடுகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். நானே பலமுறை இதை தங்களிடம் வந்து உரைத்திருக்கிறேன், அமைச்சரே” என்றான். “ஆம், ஆம் நினைவிருக்கிறது” என்று கனகர் கூறினார். “இது பழிபடர்ந்த நிலம் என நினைக்கிறார்கள். தெற்கே புதிய நிலங்கள் உள்ளன என்று இவர்கள் இடையே ஒரு சொல் உலவுகிறது. அங்கே சென்றுகொண்டிருக்கிறார்கள்.” கனகர் “மெய்யாகவே இருக்கிறதோ என்னவோ” என்றார். அவன் புன்னகைத்து “ஆம், ஆனால் இவர்கள் சென்றால் அங்கும் சில தலைமுறைகளுக்குள் குருக்ஷேத்ரம் எழும்” என்றான். கனகரும் புன்னகைத்தார்.

வண்டிநிரை முனகலோசை எழுப்பி தேங்கியது. வண்டியோட்டிகளின் கூச்சல்களும் சவுக்கோசைகளும் குளம்புகளின் மிதிபடும் ஒலிகளும் எழுந்தன. காந்தாரியின் தேர் முன்புறம் தயங்கி நின்றிருந்தது. அங்கிருந்து கனகருக்கான அழைப்பு ஒளியசைவாக வந்தது. கனகர் தன் புரவியைத் தட்டி ஊக்கி பெருநடையில் வண்டிகளுக்கு இணையாகவே சென்றார். சென்றுகொண்டிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் உடைமைகள் ஏதும் இல்லாமல் இருப்பதை அவர் கண்டார். உடைமைகள் இல்லாமல் கிளம்புகிறார்கள் என்றால் அவர்கள் திரும்பி வரும் எண்ணத்துடன்தான் அஸ்தினபுரியிலிருந்து வெளிவருகிறார்கள் என்று பொருள். கங்கைக்கரைக்குச் சென்று நீர்க்கடன் முடித்த பின்னர்தான் அவர்களுக்குத் தோன்றுகிறது திரும்பிச் செல்லவேண்டாம் என்று. உள்ளிருந்து ஏதோ ஆணை எழுகிறது. அன்றி, உயிர்நீத்தோர் வந்து அவ்வண்ணம் அவர்களிடம் சொல்கிறார்களா என்ன?

அவர் புரவிக்குக் குறுக்காக ஒருவன் விழுந்தான். புரவியை இழுத்து விசையழியச் செய்தார். தனக்கு குறுக்காக வந்த முதியவர் ஒருவரை தோளில் தொட்டு “மண்நோக்கி காலெடுத்து வையுங்கள், மூத்தவரே” என்றார். முதியவர் சீற்றத்துடன் திரும்பி “சீ! கையை எடு, இழிமகனே! எவ்வுரிமையில் நீ என்னை தொடுகிறாய்?” என்றார். கனகர் திகைத்து கையெடுத்து பின்னர் “முதியவரே, நான்…” என்றார். “நீ யாரென்று தெரியும் எனக்கு. நீ உயிருடன் இருப்பதே நீ கீழ்மகன் என்பதற்கான சான்று” என்றார் முதியவர். இன்னொரு முதியவர் “இங்கு உயிருடன் இருக்கும் அத்தனை மானுடரும் கீழ்மக்களே. நானும் கீழ்மகனே. உயிருடன் இருப்பதே மாபெரும் கீழ்மை என்று ஆக்கிவிட்டு களத்தில் விழுந்தனர் என் மக்கள்” என்றார். “ஆம், அவர்கள் மேலே சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து காறி உமிழ்கிறார்கள். இந்த மண்ணை மேலும் மலப்பெருக்காக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் முதல் முதியவர். கைகளை விரித்து “மலம்! நாற்றமெடுக்கும் மலம்… மலப்புழுக்கள். புழுத்த மலத்தில் நெளியும் உயிர்கள் நாம்!” என்றார்.

அவர்களின் உளம் கலங்கியிருப்பதை முகம் காட்டியது. கண்கள் அலைபாய்ந்தன. முகம் துடித்துக்கொண்டே இருந்தது. “ஆம்” என்றபடி அவர் புரவியை முன்னால் செலுத்த பல கைகள் அவர் புரவியை பற்றிக்கொண்டன. “நில்! எங்கே செல்கிறாய்? எங்கள் கேள்விக்கு மறுமொழி கூறிவிட்டுச் செல்!” என்று கூவின. “நில்! நில்! பிடி அந்த அந்தணனை!” ஒருவன் அருகே வந்து வெறிப்புகொண்ட முகத்துடன் கூவினான். “இத்தனை பேரின் சாவுக்கு விளக்கம் கூறாமல் நீ சென்றுவிடுவாயா என்ன? உன்னால்தான் என் குடி அழிந்தது. உனது சொற்களால்தான் இப்பேரழிவு…” ஒருவர் கைநீட்டி அருகே வந்தார். “உனது சொற்கள் இங்கே நிறுவப்படவேண்டுமெனில் எங்கள் மைந்தர் களம் விழவேண்டுமா என்ன?”

இன்னொருவர் நெஞ்சில் ஓங்கி அறைந்தபடி கனகரை நோக்கி வந்தார். எலும்புருவான உடல். நரம்புகள் புடைத்த கழுத்து. கண்கள் குழிக்குள் மின்னிக்கொண்டிருந்தன. வெறியுடன் துள்ளிய உடல். வலக்கையால் ஓங்கி ஓங்கி நெஞ்சில் அறைந்தார். “கீழ்மகனே! கீழ்மகனே! உன் ஆணவத்திற்கு என் மைந்தரை பலி கொடுத்தேன்! என் இளமைந்தரை பலி கொடுத்தேன்! என் பெயர்மைந்தர் அனைவரையும் பலிகொடுத்தேன்! இன்று இதோ ஏழு பெண்களுடன் குருதி வழியில் ஓர் உயிர்கூட எஞ்சாமல் கருகிய மரம்போல் இங்கு நின்றிருக்கிறேன். நிறைவுற்றாயா நீ? இப்போது உன் சொல் ஒளிகொண்டதா? ஒளி குறைகிறதென்றால் சொல், வந்து உன் சொற்களுக்கு மேல் என் கழுத்தறுத்து விழுகிறேன்.” “கீழ்மகன்! இழிதகையன்!” என்று கூச்சல்கள் எழுந்து சூழ்ந்தன.

அப்பகுதி எங்கும் இருந்து முதியவர்கள் அனைவரும் அங்கே கூடத்தொடங்கினர். தன்னைச் சுற்றி முகங்கள் செறிந்ததை கனகர் கண்டார். அனைத்து முகங்களிலும் வெறியாட்டு எழும் பூசகனின் முகத்தில் தோன்றும் சீற்றம் நிறைந்திருந்தது. “நீ விழைவதென்ன சொல்? இன்னும் எவ்வளவு குருதி வேண்டும் உனக்கு? இதோ!” என்றபடி ஒரு முதியவர் தன் அருகே நின்றிருந்த முதுமகளிடமிருந்து கைக்குழந்தை ஒன்றைப் பிடுங்கி அதன் கால்கள் காற்றில் பறக்கச் சுழற்றி தலைக்கு மேல் தூக்கினார். “இதை பலிகொடுக்கவா? இதை உன் காலடியில் வீசவா? கீழ்மகனே, இதோ இதன் சங்கறுத்து குருதி குடி! அடங்கட்டும் உனது விடாய்! இதோ!” எதிர்பாராத ஒருகணத்தில் அவர் அக்குழவியை கனகரை நோக்கி வீசினார். கனகர் திகைத்து அலறி பின்னடைய அவர் அருகே நின்ற ஒற்றன் தன் பயின்ற கரங்களால் குழவியை பற்றிக்கொண்டான். அது விழித்துக்கொண்டு கதறி அழத்தொடங்கியது.

அப்பாலிருந்த முதுமகள் ஒருத்தி “நீ மானுடனல்ல… நீ மண்ணுக்கடியிலிருந்து ஊறி வந்த ஏதோ கீழ்த்தெய்வம். மானுட குலத்தை அழித்து குருதிகொண்டு நிறைவுற வந்தவன் நீ. பல்லாயிரம் ஆண்டுகள் அங்கு காத்திருந்தவன்… எந்த கெடுபிறப்போ உன் துயிலை எழுப்பினான். எந்த இழிசினனோ உன்னை இக்காலகட்டத்துக்கு கொண்டு வந்தான். எங்கள் குடியழித்தாய்! கொடிய நோயெனப் பரவி எங்கள் கொடிவழிகளையும் அழிக்கிறாய்! இனி எங்களுக்கு விண்ணிலும் தெய்வங்கள் இல்லை. உன்னை விண்ணிறங்கி வந்த தெய்வம் என்று நம்பியதனால் அங்கிருக்கும் தெய்வங்களாலும் கைவிடப்பட்டோம்!” என்று கூவினாள். “உனக்கு சங்கறுத்து குடித்த குருதி போதவில்லை. விடாய் கொண்டு எங்கள் மகளிரின் கருச்சிதைத்து உண்கிறாய்… நீ ஆழிருள்தெய்வம்… அடங்காப் பழிகொண்ட கீழமைத்தேவன்.”

ஒருகணத்தில் மெல்லிய உலுக்கலென அவர்கள் எவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கனகர் புரிந்துகொண்டார். அவருடைய உள்ளம் விந்தையானதோர் நிறைவை அடைந்தது. அவரே ஒன்று பலவாக பிரிந்து சூழ்ந்து அச்சொற்களை கூவிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. கனகர் ஒற்றனை நோக்கி கைகாட்ட அவன் தன் புரவியை முன்னால் செலுத்தி கனகரை சூழ்ந்துகொண்டு கொப்பளித்த அக்கூட்டத்தின் நடுவே புரவியைச் செலுத்தி அதைப் பிளந்து ஒரு வழியை உருவாக்கினான். அதனூடாக தன் புரவியைச் செலுத்தி அவனை அணுக்கமாக தொடர்ந்து அவர்களைக் கடந்து அவர் சென்றார். அவரது ஆடையை எவரோ பற்றினார்கள். புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி ஓடி வந்த ஒரு முதியவர் கீழே விழுந்தார். குழவிகள் கூவி அழுதன. முதுமக்கள் பழிச்சொற்களை கூவி உரைத்தபடி ஓடி உடன்வந்தனர்.

“கீழ்மகனே! கீழ்மகனே! உன் குடி அழியும்! எங்கள் குடியென உன் குடியும் ஒருவர் எஞ்சாது அழியும்! உன் நகர் அழியும்! உன் கொடி பறக்க விண் இலாதாகும்! உன் குருதி முளைக்க மண் இலாதாகும்! நீ என்றென்றும் அழியாப் பெரும்பழி கொண்டு இனி எங்கள் கொடிவழியினரால் நினைக்கப்படுவாய்! அழிக! அழிக! நீ அழிக! உன் குலம் அழிக! உன் சொல் அழிக! உன் புகழ் எஞ்சாதொழிக!” அக்குரல்பெருக்கு ஒற்றைமொழியென எவ்வண்ணம் ஆகிறது? அதில் ஒவ்வொரு சொல்லும் எப்படி துலங்குகிறது?

குதிரையின் கழுத்தின்மேல் தன் தலையைத் தாழ்த்தி அமைத்து, உடலை இறுக்கி, தசைகள் அனைத்தையும் குறுக்கியபடி அமர்ந்திருந்த கனகர் மெல்ல மெல்ல தளர்ந்து பெருமூச்சுவிட்டு வியர்வை குளிர்ந்த உடலுடன் மூச்சிரைக்க மீண்டு வந்தார். கண்களில் குருதியின் அனல் பறந்தது. சூழ நோக்கியபடி புரவியில் அமர்ந்திருந்தபோது அவர் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. காந்தாரியின் தேர் நின்றிருக்க அதைச் சூழ்ந்து கூச்சலிட்ட மக்களை வேல்வீரர்கள் உந்தி அகற்றிக்கொண்டிருந்தார்கள். தேரை அணுகியதும் அவர் மேலாடையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தார். பின்னர் குழலை நீவி குடுமியாக முடிச்சிட்டு தேரை அணுகி “வணங்குகிறேன், அரசி!” என்று உரக்க சொன்னார்.

தேரின் திரை விலக சத்யசேனை வெளியே பார்த்து “அமைச்சரே, என்ன நிகழ்கிறது? இதோ திரண்டு சென்றுகொண்டிருக்கும் இவர்களெல்லாம் யார்?” என்றாள். “அரசி, இவர்கள் அனைவரும் நீர்க்கடன் பொருட்டு கங்கைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார் கனகர். “நீர்க்கடன்! ஆம்!” என்று குழப்பமாக முனகிக்கொண்ட சத்யசேனை காந்தாரியின் செவிகளில் அதை சொன்னாள். பின்னர் திரும்பி “அவர்கள் சொல்லும் பழிச்சொற்கள் பேரரசியின் காதில் விழுகின்றன. அவர்கள் பழிப்பது எவரை என்று அறிய விரும்புகிறார்” என்றாள். கனகர் ஒன்றும் சொல்லவில்லை. “அரசியின் உசாவல் அது” என்று சற்று கூரிய குரலில் சத்யசேனை சொன்னாள். “அரசி, அவர்கள் பழிப்பது இளைய யாதவரை என்று தோன்றுகிறது” என்று அவர் சொன்னார்.

சத்யசேனை பெருமூச்சுடன் “ஆம், நானும் எண்ணினேன். ஆனால் அவர்கள் எவரும் பெயர் சொல்லவில்லை. இங்கே காற்றில் இருளென சூழ்ந்திருப்பது அவரே என்று எண்ணுகிறார்கள் போலும். எல்லாத் திசைகளையும் நோக்கி அச்சொற்களை கூவுகிறார்கள்” என்றாள். “ஆம், அரசி. இன்று அவரை எவரும் ஒரு மானுடர் என்று எண்ணவில்லை. தெய்வம் என்றாகிவிட்டிருக்கிறார். முன்னரும் அவரை இவர்கள் தெய்வமென்றே எண்ணினார்கள். ஆனால் அதில் சிறு ஐயமிருந்தது. இன்று அந்த ஐயம் விலகிவிட்டிருக்கிறது” என்றார் கனகர். “ஏனென்றால் இப்பெரும்பலியை தெய்வங்களன்றி மானுடர் கொள்ள இயலாது என்று எண்ணுகிறார்கள்.”

சத்யசேனை “அது அவர்களுடைய சொற்கள் அல்ல, உங்கள் சொற்கள் என்று தோன்றுகிறது” என்றாள். “நானும் அவர்களில் ஒருவனே” என்று கனகர் சொன்னார். சத்யசேனை “பேரரசி சோர்வுற்றிருக்கிறார். இந்த நீண்ட பயணம் அவர் உடலுக்கு களைப்பை அளிக்கிறது. அதைவிட இருபுறமும் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த வெறுப்பும் பழிப்பும் பேரரசியின் அகம் சோரச் செய்கிறது” என்றாள். கனகர் “இதை நாம் முன்னரே எண்ணியிருக்க வேண்டும். ஒற்றர்கள் ஏற்கெனவே என்னிடம் சொன்னார்கள். அஸ்தினபுரியின் அத்தனை பெண்டிரும் இளைய யாதவரை இப்போது வெறுக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் பழிச்சொல் பெருகிக்கொண்டிருக்கிறது” என்றார்.

பெருமூச்சுடன் தலையசைத்துவிட்டு சத்யசேனை அதை காந்தாரியிடம் சொன்னாள். காந்தாரி இரு கைகளையும் கூப்பி “அப்பழிச்சொற்கள் என் செவியில் விழலாகாது. ஆயிரம் பழிச்சொற்களில் ஒன்றாக அறியாதேனும் என் நெஞ்சில் ஒரு பழிச்சொல் எழுந்துவிடலாகாது. அதை கூறவே தங்களை அழைத்தேன்” என்றாள். கனகர் தேரின் விளிம்பைப் பற்றியபடி நெஞ்சு தளர்ந்து வாய் சற்றே திறந்திருக்க அவளை பார்த்துக்கொண்டிருந்தார். “அனைத்தும் அறிந்தவன்! மண்ணில் இறையுருவென எழுந்தவன்! இந்த யுகத்தை ஒரு மென்பீலியென சூடியவன்! ஆக்குவதும் அழிப்பதும் அவனுடைய விளையாட்டு. அதை அறிவதும் வகுப்பதும் நமக்கு இயல்வதல்ல. ஆகவே அவனை போற்றுவதும் பழிப்பதும் நமது பணியுமல்ல. ஆட்படுவதொன்றே அடியவர் செய்யக்கூடியது” என்றாள் காந்தாரி.

கனகர் புரவியில் அமர்ந்தபடி தேருக்கு இணையாக ஒழுகிச்சென்றுகொண்டிருந்த பந்தங்களின் ஒளியில் மின்னி மின்னி அணைந்த காந்தாரியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். காந்தாரி “இவையனைத்தும் அவன் விழைவு. அது பெருகி மலையிறங்கும் கங்கை போன்றது. கடலிலிருந்து எழுந்து நிலம் நிறைக்கும் பெருங்காற்றுபோல விசை கொண்டது. தன் திசையை தான் மட்டுமே அறிந்தது. நாம் சிற்றெறும்புகள். ஒழுகும் சிறுசருகுகள். அவ்விசைக்கு ஆட்படுவதன்றி வேறெந்தத் தெரிவும் இல்லாதவர்கள்” என்றாள். கனகர் எண்ணியிராக் கணத்தில் தன் உள்ளிலெழும் சீற்றத்தை உணர்ந்தார். அதை கட்டுப்படுத்த வேண்டுமென எண்ணி இரு கைகளாலும் கடிவாளத்தையும் தேர் முனையையும் அழுந்தப் பிடித்த அக்கணத்திலேயே அவருடைய வாய் எல்லை கடந்து சொற்களை கொட்டத்தொடங்கியது.

“ஆம், தெய்வங்கள் இரு வகை. அழிக்கும் தெய்வங்கள், ஆக்கும் தெய்வங்கள். அழிக்கும் தெய்வங்களுக்கு எதிராகவே ஆக்கும் தெய்வங்களை சரணடைகிறோம். நோயும் தெய்வம், இறப்பும் தெய்வம், பேரழிவும் தெய்வம்தான். ஆனால் எந்த ஆலயத்திலும் மிருத்யுவையோ வியாதியையோ காலதேவனையோ வைத்து வணங்குவதில்லை. பொலியும் திருமகளையும் சொல்லாயும் கலைமகளையும் அச்சம் கொல்லும் பாய்கலைப்பாவையையும் மட்டுமே வணங்குகிறோம். மங்கலப்பேருருவென எழுந்த மூன்று தெய்வங்களை வணங்குகிறோம்… இவன் யார்? இவன் கலியுகத்தின் தெய்வம்! தெய்வமுகம் கொண்டு வந்த இருள். மெய்யென மாற்றுருக்கொண்ட மருள். ஆக்கமென மயங்க வைக்கும் அழிவு…”

“போதும்! இனி ஒரு சொல் அவனைப் பழித்தெடுத்தால் உமது தலைகொய்து இங்கிட ஆணையிடுவேன்” என்று காந்தாரி கூவினாள். மூச்சிரைக்க “அகல்க… இனி என் முன் நில்லாதொழிக!” என்றாள். “நீங்கள் அன்னையென அமைந்து அனைவரையும் வாழ்த்தலாம். தெய்வமென இருந்து அவன் செயலையும் புரிந்துகொள்ளலாம். நான் எளிய மானுடன். என் தலைவன் அங்கு தொடையறைந்து கொல்லப்பட்ட செய்திக்குப் பின் என்னால் எந்த நெறியையும் பேண இயலாது. இச்சொற்களின்பொருட்டு என் தலை இங்கு உருளுமென்றால் அதுவும் நன்று” என்றார் கனகர். “பேரரசி, சில நாட்களாகவே என் தலையை தாங்க இவ்வுடலால் இயலவில்லை. எங்கேனும் இது உடைந்து தெறிக்குமென்றால் விடுபடுவேன். இந்த உடலுக்குள் கொதிக்கும் குருதியனைத்தையும் கொட்டிச் சிதறினாலொழிய என்னால் அமைதியடைய இயலாது… அளிகூர்ந்து அந்த வாளை எடுத்து என் தலையை வெட்டி எறியச் சொல்லுங்கள்.”

பாய்ந்து புரவியிலிருந்து எழுந்து தேருக்குள் புகவிருப்பவர்போல் எழுந்தார். “எனக்கு தெய்வம் ஒன்றே! நான் தலைகொண்ட அரசன்! அவனுக்களித்த என் சொல்! பிறருக்கு அச்சொல்லை அளிக்க என்னால் இயலாது. அஸ்தினபுரியின் அரசனை அழித்த அவன் என் இன்சொல்லுக்கு உரியவன் அல்ல. எதன் பொருட்டு என் தலைவன் கொல்லப்பட்டான்? மண்ணாசையின் பொருட்டு! மண் விழைவில்லாத மன்னனென ஒருவன் உண்டா? நெறிகளை மீறி என் அரசனைக் கொன்றவன் தெய்வமே எனினும் அவன் எனது எதிரியே… அவனை நான் தீச்சொல்லிடுகிறேன். அந்தணன் என நின்று என் முப்புரிநூல்பற்றி வேதச்சொல் சான்றாக்கி சொல்கிறேன். அவன் மைந்தர்துயரால் அழிவான்… அவன் குடி கல்பொரு சிறுநுரை என மெல்ல மெல்ல இல்லாதாகும்.”

காந்தாரி அவரை நோக்கிக்கொண்டு சிலகணங்கள் அமைந்தபின் பெருமூச்சுவிட்டாள். “உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன், அமைச்சரே. இங்கிருக்கும் அனைத்து உணர்வுகளையும் நான் அறிவேன். ஆயினும் கார்வண்ணனே நீயே அறிவாய், உனக்கே அடைக்கலம், நீயன்றி பிறிதில்லை. நான் உன் அடித்தூளியன்றி வேறிலை எனும் சொற்களையன்றி வேறெதுவும் உரைப்பதாக இல்லை. அந்தணரே, அச்சொற்களை உங்கள் நாவும் உரைக்கட்டும். அதுவன்றி எதுவும் உங்களை விடுதலை செய்யப்போவதில்லை. அதிலன்றி எதிலும் நீங்கள் மெய்யை அறியப்போவதுமில்லை” என்றாள்.

கனகர் தேரிலிருந்து தன் கையைவிட்டு இரு கைகளால் கடிவாளத்தை பற்றிக்கொண்டார். தேர் நகர்ந்து முன்னால் சென்றது. அவருடைய புரவி நின்றுகொண்டே இருக்க இடப்புறம் அஸ்தினபுரியின் மக்கள்திரள் பொருளிலா வசைச்சொற்கள் கலந்த கூச்சலுடன் அவரைக் கடந்து ஒழுகிக்கொண்டிருந்தது.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 15

பகுதி மூன்று : பலிநீர் – 2

கனகர் முதற்புலரியில் தன்னை எழுப்பும்படி ஏவலரிடம் ஆணையிட்டுவிட்டுதான் படுத்தார். ஏவலன் விழிகளில் தெரிந்த நம்பிக்கையின்மையைக்கண்டு உரத்த குரலில் ”என்ன?” என்றார். அவன் இல்லை என்று தலையசைத்தான். ”முதற்புலரியில், கருக்கிருளிலேயே!” என்றார். அவன் ஆம் என்று தலையசைத்தான். ”ஒளியெழுவதற்குள் இங்கிருந்து அனைவரும் கிளம்பிவிட வேண்டும். முதல் நாழிகைக்குள் நகரிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென்று நிமித்திகர் கூற்று. அதற்குள் நான் நீராடி ஒருங்க வேண்டும். செல்வதற்கு முன் ஒற்றர்களை சந்தித்து ஆணைகளை பிறப்பிக்கவேண்டும். இயற்றுவதற்கு பணிகள் மிகுந்துள்ளன” என்றார். ”ஆம், அமைச்சரே” என்றான் ஏவலன். “ஒன்று தவறினாலும் நாளெல்லாம் நான் இடர்ப்படவேண்டியிருக்கும்” என்றார். அதை அவர் தனக்கேதான் சொல்லிக்கொண்டார். அவனும் அதை உணர்ந்திருந்தான் என்று தோன்றியது.

செல்க என்று கையசைத்துவிட்டு கனகர் தன் மஞ்சத்தறைக்குள் சென்றார். மேலாடையைத் தூக்கி சிறு பீடத்தில் வீசிவிட்டு கைகளை சோம்பல் முறித்தபின் மஞ்சத்தில் அமர்ந்தார். தலை எடை கொண்டிருந்தது. வாய் கசந்தது. அன்று பகல் முழுக்க அவர் இனிப்பு கலந்த மாவுக்கூழை மட்டுமே அருந்தியிருந்தார். அதுவும் ஒவ்வொரு முறையும் அரைக்குடுவை மட்டுமே. ஓரிரு வாய் உள்ளே சென்றதுமே வயிறு குமட்டி உடல் உலுக்கிக்கொண்டிருந்தது. துயில் அமைந்தால் அனைத்திலிருந்தும் விடுபட்டுவிடலாம். ஆனால் கணம்நூறு அலை வந்து அறைந்தாலும் கரையாத கடற்பாறை போலிருந்தது தன்னுணர்வு. அகிபீனாவின் துயில் உள்ளத்தை மட்டுமே கரைந்தழியச் செய்யும். ஆனால் காலையிலெழுந்தால் உடல் நெடும்பொழுது உழைத்து சலித்ததுபோல் களைத்திருக்கும்.

ஒருவேளை மஞ்சத்திலேயே துயிலில் புரண்டுகொண்டும் கைகால்களை அசைத்தபடியும் இருக்கிறோமோ? இருமுறை அவர் ஏவலரிடம் ”நான் இரவில் எப்படி துயில்கிறேன்?” என்று கேட்டிருக்கிறார். அவர்கள் விழிகளில் எந்த உணர்வும் தெரியவில்லை. ”நன்கு துயில்கிறேனா? கேட்ட வினாவுக்கு மறுமொழி சொல்க!” என்று உரக்க கேட்டபோது ஏவலன் தயக்கமாக “நிறைய பேசுகிறீர்கள்” என்றான். அவர் ”என்ன பேசுகிறேன்?” என்றபோது அவன் “கூச்சலிடுகிறீர்கள்” என்று மேலும் தாழ்ந்த குரலில் சொன்னான். அவர் ஐயத்துடன் “என்ன கூச்சலிடுகிறேன்?” என்றார். ”தெரியவில்லை. நான் உள்ளே வருவதில்லை. குழறலாகப் பேசுவதால் சொற்களும் புரிவதில்லை. நீங்கள் என்னை அழைக்கிறீர்களா என்று மட்டும்தான் பார்ப்பேன். இல்லையெனில் விலகிவிடுவேன்” என்று அவன் சொன்னான்.

”என்ன கூச்சலிட்டேன்? எவரிடம் கூச்சலிட்டேன்? சொல்!” என்று அவர் மீண்டும் கேட்டார். அவன் பேசாமல் நிற்க ”சொல்!” என்றார். ”உத்தமரே, நீங்கள் இரவில் தெய்வங்களிடம் பேசுவதுபோல் இருந்தது” என்றான். ”தெய்வங்களுடனா?” என்று அவர் கேட்டார். “ஆம், நீங்கள் பேசும் ஒலியும் மொழியும் தெய்வங்களிடம் பேசுவதுபோலத்தான் இருந்தது” என்றான். “விலகிச்செல்லுங்கள்! விட்டுவிடுங்கள்!” என்று அவன் சொல்லிக்காட்டினான். அவர் வெறுமனே நோக்கினார். “மன்றாடி கூச்சலிடுவதுபோல் தோன்றியது” என்றான். அவர் கண்களைக் கூர்ந்து அருகே வந்து “ நன்கு எண்ணிச்சொல், தெய்வங்களிடமா இல்லை உயிர் நீத்தாரிடமா?” என்றார். ”அதை என்னால் அறியக்கூடுவதில்லை. ஆனால் பெரும்பாலும் விட்டுவிடுங்கள், விட்டு அகன்றுவிடுங்கள் என்று மன்றாடினீர்கள். சில முறை அழுதீர்கள். சில முறை நெஞ்சில் ஓங்கி அறைந்துகொண்டு அலறினீர்கள். ஓரிருமுறை எழுந்து அறைக்குள் சுழன்று ஓடுவது போலவும் விழுவது போலவும் கூட தோன்றியது” என்றான்.

“ஒரே ஒருமுறை மஞ்சம் ஓசையிட்டபோது நான் உள்ளே வந்து பார்த்தேன். நீங்கள் மஞ்சத்தின் விளிம்பில் மோதி அதன் காலடியிலேயே விழுந்து கிடந்தீர்கள். உங்களைத் தூக்கி படுக்க வைத்தேன்” என்றான். ”நீ என்ன கேட்டாய்? சொல், நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” என்றார். ”விட்டுப்போங்கள் என்று மட்டும்தான்” என்றான். அவர் அவன் விழிகளை மேலும் அணுக்கமாக நோக்கினார். “அல்ல, அதற்கு மேல் ஏதோ சொன்னேன். உன் விழிகளில் தெரிகிறது அது” என்றார். அவன் விழி தாழ்த்தி தனக்குள் என “நீங்கள் அவர்களை வசை பாடினீர்கள்” என்றான். “நானா?” என்று அவர் கேட்டார். ”ஆம், மிகக்கீழ்மை நிறைந்த சொற்கள்…” என்றான். “கீழ்மை நிறைந்த சொற்கள் என்றால்?” என்று அவர் கேட்டார். “அந்தணர் நாவிலிருந்து ஒருபோதும் எழுந்துவருமென நான் கேட்டிராத சொற்கள். ஆகவேதான் அவை உங்களுடையதல்ல என்று தெளிந்தேன்.”

பெருமூச்சுவிட்டு கனகர் அவரிடம் “செல்க!” என்றார். அவன் சென்றபின் அந்த அறையை அச்சத்துடன் நோக்கினார். இந்த அறைக்குள் அத்தெய்வ உருவங்கள் இருக்கின்றனவா? நீத்தாரா? என்னை வந்து சூழ்ந்துகொள்ளும் அளவுக்கு எவரும் அக்களத்தில் உயிரிழக்கவில்லை. அரசர்களுக்கு என் முகமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எனில் எவர்? எங்கும் எவரும் உயிரிழக்கும்படி நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. உண்மையில் வாழ்நாளெல்லாம் முடிவென எதையுமே எடுத்ததில்லை. பிறர் முடிவுகளை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். பிறர் முடிவுகளுக்கு ஏற்ப துணை முடிவுகளை எடுக்கிறேன். என்வாழ்வை குறித்துக்கூட எந்த முடிவையும் எடுத்ததில்லை. எந்த முடிவையும் எடுக்காதவர்கள் இப்புவியில் எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்களை எந்த தெய்வமும் முனியப்போவதில்லை.

ஆனால் எவரும் அவர்களை மதிப்பதுமில்லை. எவரிடமிருந்தும் நன்றியில் விழி நனைந்த ஒரு சொல்லை கேட்டதில்லை. எவரும் அடைக்கலமென வந்து முன் நின்றதும் இல்லை. எவரும் உளம் கனிந்து தோளில் தொட்டு ஒரு நற்சொல் உரைத்ததில்லை. இயற்றும் செயல் பிழையானால் மட்டுமே அவர் ஒருவர் இருப்பது அவர்களுக்கு தெரிகிறது. அப்பிழைக்கென அவரை கடிந்துகொள்கையில் மட்டுமே விழிநோக்கி சொல்லெடுக்கிறார்கள். எண்ணியிராக்கணத்தில் அவருடைய உளம் உருகி, தன்னிரக்கம் பெருகி கண்ணீர் வழியத்தொடங்கியது. அவர் அகிபீனா கலந்த லேகியத்தை எடுத்து அதிலிருந்து ஒரு உருளையை உள்ளங்கையில் உருட்டிக்கொண்டார்.

அதை வாயிலிடுவதற்குமுன் வேண்டியதில்லை என்று அவருக்குள்ளிருந்து ஒரு குரல் எழுந்தது. இதை உண்டால் நாளை புலரியில் என்னால் எழ முடியாது. அகிபீனா சித்தத்தை மயங்க வைக்கிறது. உள்ளே உறையும் அனைத்துக் குரல்களையும் எழுப்பி ஒன்றுடன் ஒன்று போராட வைக்கிறது. உள்ளம் கொப்பளித்து நுரையடங்குகையில்தான் அவற்றுக்குமேல் படியும் ஓர் இருள் என துயில் அணைகிறது. அதற்கு நெடுநேரம் ஆகும். பெரும்பாலும் புலரியிலேயே ஆழ்ந்த துயில் அமைகிறது. எழும்போது முகம் உறைந்தது போல், வாய் உலர்ந்து ஒட்டிக்கொண்டது போல் தொண்டையில் மணல் சிக்கிக்கொண்டது போல், கைகால்கள் தளர்ந்து மூட்டுகள் குடைச்சலெடுத்து விழிகள் எரிய காய்ச்சல் கண்டது போல் தோன்றவைக்கிறது. அகிபீனா உண்டு துயின்றெழுந்தால் ஒருநாழிகைப்பொழுது உடல் ஒன்றுடன் ஒன்று ஒத்திசையாத உறுப்புகளின் தொகையாக இருக்கும், உள்ளம் சொற்களின் பெருக்காக இருக்கும். வேண்டியதில்லை. அவர் அந்த லேகியக்குளிகையை மீண்டும் புட்டிக்குள் போட்டு மூடி அப்பால் வைத்தார் கால்களை நீட்டி மஞ்சத்தில் படுத்துக்கொண்டார்.

அவ்வறை மிதந்ததுபோல் அசையலாயிற்று. கூரை மிகத்தாழ்ந்து வந்து அருகே நின்றது. அவர் கண்களை மூடிக்கொண்டபோது சுவர்கள் அனைத்திலுமிருந்த வெவ்வேறு வடிவம்கொண்ட கறைகள் மட்டும் பிரிந்து அவரைச்சூழ்ந்தன. அவை கண்களாயின. மீன்களென துடிக்கத்தொடங்கின. பின்னர் மிகச்சிறிய குழந்தைகளாயின. குருதியிலிருந்து எடுத்த குழந்தைகள். சற்றே பெரிய புழுக்கள். புழுக்களுக்கு மட்டும் ஏன் விழிகள் இத்தனை பெரிதாக இருக்கின்றன? ஏன் அவை இமைக்காமல் வெறித்து உலகை நோக்குகின்றன? அருகணைந்து கூர்ந்து நோக்குகின்றன என்னை. ஓசையிடும் புழுக்களுண்டா? அவற்றுக்கு குரலில்லையா? குரலின்மையால்தான் அத்தனை பெரிய விழிகளை அடைந்தனவா? அவர் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்துகொண்டார். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

எழுந்து சென்று நடுங்கும் கைகளால் புட்டியைத்திறந்து ஒரு குளிகையை எடுத்து வாயிலிட்டார். நீரை அருந்திவிட்டு கண்களை மூடி அமர்ந்திருந்தார். குருதியின் மணம் வரத்தொடங்கியது. இவ்வறைக்குள்ளிருந்தா? அவர் சூழ நோக்கினார். அறை அவரை இறுக அணைக்க விழைவதுபோல் அதிரும் சுவர்களுடன் நின்றிருந்தது. அவர் கண்களை மூடியபடி விழுவதுபோல படுத்தார். கண்கள் சுழலும் பம்பரத்தின் மையச்சுழி என தோன்றின. குமட்டல் எடுக்க கண்களை திறந்தார். சுவர்மூலையில் குருதியைக்கண்டார். எழுந்து அமர்ந்து ”குருதியா?” என்றார். மீண்டும் அருகே சென்று பார்த்தபோது அது தரையில் விழுந்த சிறிய நீர்க்கறை என்று தெரிந்தது. காலால் அதை தொட்டுப்பார்த்தார். ஆனால் குருதியின் மணம் இருக்கிறது. பசுங்குருதியின் மணம். இது புண்குருதியல்ல, புதுக்குருதியல்ல. கருக்குருதி. இது பிறிதொரு மணம் கொண்டது. அதில் நீந்தும் உயிர்களின் மணம். மெல்லிய குமிழ்கள் வெடிக்க உயிர் கொண்டு தளும்புவது. செம்மண்ணில் உதிர்ந்து மணிகளெனச் சுருண்டு கிடக்கையில்கூட உள்ளே சிறு உயிரின் துடிப்பு இருந்தது.

அறிவின்மை. வெறும் உளமயக்கு. பித்து. வெறுங்குருதியில் உயிரா? ஆனால் வெறுங்குருதியில்தான் உயிர்கள் முளைக்கின்றன. குருதிக்குள் வாழும் உயிர்கள். அவர் தலையை இரு கைகளாலும் இறுக பற்றிக்கொண்டார். அங்கே களத்தில் பெருகியது ஆண்களின் குருதி. இங்கு பெருகுகின்றது பெண்களின் குருதி. ஒரு துளிப் பெண்குருதி நூறாயிரம் ஆண்களின் குருதிக்கு நிகர். ஆண்குருதியில் உயிர்களில்லை .பெண்குருதி விதைத்தொகுதி போல. அவர் எழுந்து அக்குடுவையை எடுத்து மேலும் மேலுமென மூன்று குளிகைகளை அருந்தினார். மீண்டும் சென்று படுத்தபோது வாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சிக்கொண்ட நிறைவு எழுந்தது. இதோ என் குருதி வழிந்து வெளியேறுகிறது. மஞ்சம் முழுக்க என் குருதி பரவுகிறது. மஞ்சம் நனைந்து சேறென ஆகிறது. சேற்றில் புழுவென நான் படுத்திருக்கிறேன். இல்லை. தேனில் எழுந்த புழு. சிறகுகளை கனவுகாண்பது. இதோ மென்குருதி என்னை ஏந்தித் திரிகிறது. இளவெம்மையுடன் மென்மையாக அணைத்திருக்கிறது. குருதி ஒரு போர்வை போல். மெத்தை போல். இளங்காற்று போல்…

இதுவே எனது துயர். இப்போரில் எனது குருதி விழவில்லை. நான் குருதி வீழ்த்தியிருக்க வேண்டும். எனது குருதியை, எனது மைந்தர்களின் குருதியை, எனது உற்றாரின் குருதியை நான் வீழ்த்தியிருக்கவேண்டும். இந்நகரில் எந்த அந்தணரேனும் இவ்வுணர்விலாது இன்று இருக்க முடியுமா? குருதி வீழ்த்தியவர்கள் நல்லூழ் செய்தவர்கள். இழக்கையில் ஏற்படும் நிறைவை அடைந்தவர்கள். இழக்காதவர்கள் இழக்கப்படாத அனைத்தையும் தன்னுள் கொண்டவர்கள். அழுகிய உடல் உறுப்பு போல் அகற்றவும் கொள்ளவும் இயலாது அது ஒட்டியிருக்கிறது. அவர் எப்போது துயின்றார் என்று தெரியவில்லை. ஏவலன் அவரை உலுக்கி, பின்னர் நன்றாகவே அறைந்து எழுப்பியபோது ன் அவர் விழிப்பு கொண்டு எழுந்து அமர்ந்தார். குருதியில் இருந்த அவரை எவரோ தூக்கி எடுத்தது போலத் தோன்றியது. அவர் அகன்றபின்னரும் அக்குருதி பெருஞ்சுனையின் சுழியாக விசையுடன் சுழன்றுகொண்டிருந்தது. அதன் மையத்தில் ஆழ்ந்த இருண்ட பிலம் ஒன்றிருந்தது. அவர் அதை நோக்கி சுழன்றபடி சென்றுகொண்டிருந்தார்.

வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்த அவரிடம் ”பொழுது எழுந்துவிட்டது, அமைச்சரே. ஒவ்வொருவரும் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறீர்கள்” என்றான் ஏவலன். ”ஏன்? முன்னால் எழுப்புவதற்கென்ன?” என்றபடி அவர் எழுந்தார். ஆனால் உடல் நிலையழிய பிடித்து தள்ளப்பட்டவர்போல் ஒருபக்கமாக சென்று விழுந்தார். ஏவலன் அவரை பிடிப்பதற்குள் தரையில் உடல் அறைபட முகம் மரப்பலகையில் பட்டது. உதடுகளில் கிழிசல் விழுந்து குருதி சுவைக்க அவர் மீண்டும் தன்னிலையழிந்தார். ஏவலன் குனிந்து அவரைப்பிடித்துத் தூக்கி உலுக்கினான். அருகிருந்த குவளையிலிருந்த இன்நீரை எடுத்து அளித்து அதட்டலாக “அருந்துக!” என்றான். இருகைகளாலும் அதைப்பற்றி அருந்தினார். உடலுக்குள் இன்நீர் சென்று நிறைந்தபோது மெல்ல தவிப்படங்கி உடலெங்கும் நூற்றுக்கணக்கான குருதிக் குமிழிகள் வெடித்தமைய, கண்களுக்குள் சிற்றலைகள் பரவி விசையழிய, மூச்சு தளர உடலில் வியர்வை குளிரத்தொடங்க அவர் மீண்டு வந்தார்.

 

கனகர் நீராடி ஆடையணிந்து தலைப்பாகையை அழுத்திப் பிடித்தபடி உடல் தசைகள் குலுங்க ஓடி அரண்மனை முகப்பை அடைந்தபோது அங்கு ஏற்கெனவே பந்தங்களின் ஒளி நிறைந்திருந்தது. ஏவற்பெண்டுகள் அணிநிரந்து நின்றிருந்தன.ர் முகப்பில் நின்றிருந்த முதிய காவற்பெண்டு விழிகளைச் சுழற்றி அவரை தேடிக்கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் அவள் கண்களில் தெரிந்த சினம் அவரை குன்றவைத்தது. உடல் விசையழிய, கால்கள் தரையில் உரசி நீள, அவர் நோக்கைத் திருப்பி மெல்ல நடந்து வந்தார். அவளருகே சென்றதும் அவள் “அரசி தங்களை பல முறை கேட்டுவிட்டார், அமைச்சரே” என்றாள். “ஆம், நான் சில ஒற்றர்களை சந்திக்க வேண்டியிருந்தது. நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார். “ஒற்றர்களும் தங்களை தேடினார்கள்” என்றாள். அவர் சீற்றத்துடன் அவளை திரும்பிப்பார்க்க அவள் அவரைக்கூர்ந்து நோக்கியபடி “அமைச்சர்கள் ஆற்றக்கூடாத சில உள்ளன” என்றாள். “நீ எனக்கு அறிவுரை சொல்கிறாயா?” என்றார். “ஆம், அறிவுரையேதான்” என்று அவள் சொன்னாள்.

அவர் அவளிடமிருந்து விலகி பற்களைக்கடித்தபடி உள்ளே சென்றார். அவருக்குப் பின்னால் அவளுடைய ஆணை எழ காவற்பெண்டுகள் வாள்களையும் வேல்களையும் தூக்கி தோள்களிலும் கைகளிலும் வைத்தபடி நெடுநிலை கொண்டனர். ஆணைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. தேர்கள் ஒருங்கி நின்றிருந்தன. அவர் படிகள் மேல் ஏறி இடைநாழியினூடாக பேரரசியின் அறை நோக்கி சென்றார். தன் உடலில் இருந்த தள்ளாட்டமும் நடுக்கும் வெளித்தெரிகிறதா என்று ஐயுற்றார். அந்த காவற்பெண்டின் முகம் நினைவுக்கு வந்தது. ஒருபோதும் ஒரு காவலர்தலைவன் அவ்வாறு பேசுவதில்லை. முதிய பெண்டிர் ஓர் அகவைக்குப் பின் தங்களை எங்கும் அன்னையராக உணர்கிறார்கள். எவரையும் அவர்களால் குறைசொல்லவும் திருத்த முயலவும் முடியும். எதற்கும் அவர்கள் அஞ்சுவதும் இல்லை. உண்மையில் அச்சொற்களை ஒரு காவலர் தலைவன் சொல்லியிருந்தால் அதற்குள் அவனை சிறைப்பிடிக்கவே ஆணையிட்டிருப்பார். அன்னைக்கு எதிராக சொல்லெடுக்க இயல்வதில்லை.

அவர் ஏதேனும் ஒரு ஆடியில் தன்னை பார்த்துக்கொள்ள விழைந்தார். நீராடிக்கொண்டிருக்கையிலேயே அவர் ஆடி நோக்க விழைவுகொண்டிருந்தார். முகம் எவ்வண்ணம் இருக்கிறது என்று நோக்கி நெடுநாட்கள் ஆகிவிட்டிருந்தன. ஆடை அணியும்போதும் அவர் இரு கைகளாலும் சுவடிகளைப் பிரித்து ஒற்றுச் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சொல்லும் சித்தத்தில் ஏறவில்லை. பின்னர் சுவடிகள் அனைத்தையுமே சுரேசர் பார்த்திருப்பார் என்ற எண்ணம் வந்தது. அவற்றை அப்படியே அடுக்கி அருகிருந்த ஏவலன் கையில் கொடுத்துவிட்டு தலைப்பாகையை கையில் வாங்கி தானே தலையில் அழுத்தியபடி கிளம்பினார். அரண்மனை இடைநாழிகள் எங்கும் ஆடிகள் இல்லை. ஆடி நோக்குவது அத்தருணத்தில் உகந்ததுதானா என்றும் தெரியவில்லை முற்றிலும் அறியாத பிறர் ஒருவரைக் கண்டு திகைத்துவிடக்கூடும்.

அவர் முகப்புக்கூடத்திற்குள் நுழைந்தபோது அங்கு வாயிலில் நின்றிருந்த சத்யசேனை அவரைப்பார்த்து சினத்துடன் பற்களைக் கடித்து ”வருக!” என்றாள். அவர் அருகணைந்து “ஒற்றர்களின் செய்திகள் வந்துகொண்டிருந்தன, அரசி. அனைத்தையும் தொகுத்து சில ஆணைகளை…” என்று தொடங்க கையமர்த்தி “சுரேசர் அரசியுடன் இருக்கிறார்” என்றாள். அவர் தலைவணங்கி உடலைக் குறுக்கியபடி உள்ளே சென்றார். காந்தாரி அகன்ற பீடத்தில் அமர்ந்திருக்க அவர் அருகே சுரேசர் அமர்ந்திருந்தார். துணையரசிகள் அப்பால் நின்றனர். அவர் அருகணைந்து தலைவணங்கினார். காந்தாரி அவரை ஓசையால் அடையாளம் கண்டு “தாங்கள் கிளம்ப பொழுதாகும் என்றார்கள்” என்றாள். “இல்லை, நான் ஒற்றர் செய்திகள்…” என்றபின் அவர் சுரேசரை பார்த்தார். சுரேசர் “இன்னும் பொழுதாகவில்லை. நாம் கிளம்புவதற்கு உரிய தருணம் இது” என்றார். கனகர் ஆறுதல் அடைந்தார். சுரேசர் “மேலும், இளவரசியருக்கு நாம் சற்று பொழுதளிக்கவேண்டியிருந்தது. அவர்களில் சிலர் உடல் நலம் குன்றியிருக்கிறார்கள். அவர்களுடன் மருத்துவப் பெண்டிரும் வரவேண்டுமென்று நான் ஆணையிட்டிருந்தேன். அவர்கள் ஒவ்வொருவராக இப்பொழுதுதான் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

காந்தாரி “கிளம்புவோம்” என்றபடி எழுந்தாள். பின்னர் “பயணம் செய்ய முடியாத நிலையில் எவரேனும் உள்ளனரா?” என்றாள். ”அப்படி எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அனைவருமே குருதிவார்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் எவரும் நிலை மறந்தவர்களாகவோ எழமுடியாதவர்களாகவோ இல்லை” என்று சுரேசர் சொன்னார். சத்யசேனை “எவ்வண்ணமிருப்பினும் அவர்கள் அங்கு சென்றாக வேண்டும். அவர்கள் அங்கு இயற்றப்போகும் சடங்குகளினூடாகவே அவர்களின் கொழுநர்கள் அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்கிறார்கள். அவர்களும் கொழுநர்களிடமிருந்து விடுபடுகிறார்கள்” என்றாள். சத்யவிரதை “கொழுநர்களிடமிருந்து விடுபடுவது இன்றியமையாதது. அது இரும்பு நங்கூரம்போல் அவர்களை துயரத்தில் ஆழ்த்துகிறது” என்றாள்.

காந்தாரி ”விடுபட இயன்றால் நன்று” என்றாள். சுரேசர் பேச முற்படுவதற்குள் கனகர் “பெண்டிர் கைம்மைத்துயரிலிருந்து எளிதில் விடுபடுவார்கள் என்று நூல்கள் சொல்கின்றன. ஆகவே அவர்களுக்கு நோன்புகளை அத்தனை கடுமையாக விடுத்து அமைத்திருக்கிறார்கள். பிறிதொரு ஆணின் துணையிருந்தால் முந்தைய ஆணை முற்றாக மறக்க அவர்களால் இயலும். ஏனெனில் படித்துறைகளில் தன்னை முற்றாக புதிய பேருடன் புதிய நீருடன் அடையாளப்படுத்திக்கொள்வது நதிகளின் இயல்பு” என்றார். சத்யசேனை மீண்டும் சீற்றத்துடன் பற்களைக் கடித்து அவரை பார்த்தாள். தான் ஏதேனும் பிழையாக சொல்லிவிட்டோமா என்று கனகர் குழம்பினார். பெருமூச்சின் ஒலியில் “செல்வோம்” என்றபடி காந்தாரி எழுந்தாள்.

அரண்மனை முற்றத்திற்கு கனகர் மீண்டும் வந்தபோது அங்கே கௌரவ இளவரசியர் ஒவ்வொருவராக வந்து கூடியிருந்தனர். முற்றம் முழுக்க அவர்களின் மங்கலான ஆடைகளால் நிரம்பியிருந்தது. அவற்றில் பந்த வெளிச்சம் பட்டு அங்கு செந்நிறப் புகை நிரம்பியிருப்பதுபோல் தோன்றியது. புகையின் மெல்லிய அசைவுகள் அங்கே ஒரு சிதை எரிகிறதோ என்ற எண்ணத்தை எழுப்பின. அந்த எண்ணம் எழுந்ததும் அவ்வெண்ணத்தை அவரே திகைப்புடன் துறந்தார். மேலும் அரசியர் உள்ளிருந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர் குருதியின் மணத்தை உணரத்தொடங்கினார். கொழுங்குருதி. உயிர்கள் நிறைந்த குருதி. என்னால் ஆகாது. இவ்வெண்ணம்தான் என்னை உணவுண்ணவிடாது தடுக்கிறது, பித்தனாக்குகிறது, துயிலொழியச் செய்கிறது. ஆனால் குருதி மணம் கூடியபடியே வந்தது. குருதி வழிந்து பளிங்குத் தரை வழுக்குவதுபோல. சுவர்களில் கையை வைத்து குருதி வழிவதை உணர்ந்து திடுக்கிட்டு விலக்கிக்கொண்டார். பின்னர் அது பந்தங்களின் செவ்வொளிதான் என்று தெரிந்தது.

இளவரசிகளின் முகங்கள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் நெளிந்து அசைந்துகொண்டிருந்தன. எவரும் அணிகள் பூண்டிருக்கவில்லை. பொற்பின்னல்கள் இல்லாத வெளிர்நிறம் கொண்ட ஆடைகளை அணிந்திருந்தார்கள். வெண்ணீல, இளமஞ்சள் வண்ணம் கொண்டவை. பலர் மரவுரி ஆடைகளை அணிந்திருந்தார்கள். அனைவருமே தலைகுனிந்து தங்களில் ஆழ்ந்து அமர்ந்திருந்தனர். அவர் காவற்பெண்டிடம் சென்று “கிளம்ப வேண்டியதுதான்” என்றார். அவள் அதே பகைமை விழிகளில் தெரிய “ஆம்” என்றாள். கனகர் முன்னால் சென்று வழிநோக்கியிடம் “சாலை ஒழிந்துள்ளதல்லவா?” என்றார். “ஆம், ஆணைகளை பிறப்பித்துவிட்டேன்” என்று அவன் சொன்னான். கனகர் கையசைக்க முதற்காவல் மாடத்திலிருந்து முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. அஸ்தினபுரியின் ஒழிந்த தெருக்களில் இருந்த காவல் மாடங்களில் முரசுகள் ஒலித்தன. மிகத்தொலைவில் கோட்டை முகப்பிலிருந்து முரசு ஒலித்தது. நகரம் ஒரு யானைபோல் ஒலி எழுப்புவதாகப் பட்ட்து. நோயுற்ற யானை. உயிர்பிரிந்துகொண்டிருக்கும் யானை.

காவற்பெண்டு அவரிடம் கேளாமலேயே தன் இடையில் இருந்த கொம்பை எடுத்து ஊதினாள். அஞ்சித் துயிலெழுந்த பறவைகளின் ஓசைபோல கொம்பொலி எழுந்தது. படைவீரர்களும் காவல்பெண்டுகளும் வாள்களையும் வேல்களையும் தூக்கி நிலத்திலும் தோளிலும் வைத்துக்கொண்டனர். முதற்படை கிளம்பி முற்றத்தை அடைந்தது. அதைத் தொடர்ந்து புரவி வீரர்கள் சென்றனர். காந்தாரியும் உடன் பிறந்தோர் நால்வரும் சென்று முதற் தேரில் அமைவு கொண்டனர். தொடர்ந்து வந்த கூண்டு வண்டிகளில் பிற அரசியரும் ஏறிக்கொண்டனர். ஒவ்வொருவரும் தளர்ந்திருந்தனர். பிறர் தோளைப்பற்றியபடி எடைகொண்ட உடல்களை மெல்ல அசைத்து ஏறினர். அவர்களின் எடை தாளாதவை போல தேர்கள் முனகின.

பானுமதி காந்தாரியைப்போலவே ஆகிவிட்டதாகத் தோன்றியது. அவளுடல் எடை மிகுந்து, கால்கள் மிகச்சிறுத்து நடை தள்ளாடியது. உடலுக்குள் நீர் நிரம்பியிருப்பதுபோல ததும்பியபடி அவள் தேரில் ஏறிக்கொண்டாள். அசலை அவள் அருகில் அமர்ந்தாள். தேர்கள் கிளம்பி சாலையில் செல்ல கனகர் தன் புரவியிலேறிக்கொண்டு தொடர்ந்து சென்றார். சுரேசர் அவருக்குப் பின்னால் வந்து கைகாட்ட புரவியை நிறுத்தினார். சுரேசர் அருகே வந்து “தாங்கள் இன்று புலரியில் அமைச்சுக்கு வந்து இறுதியான ஆணைகளை அளித்துவிட்டுச் செல்வீர்கள் என்று எண்ணினேன்” என்றார். “நான் சற்று துயின்றுவிட்டேன்” என்று அவர் சொன்னார். “சொன்னார்கள். ஆகவே ஆணைகள் அனைத்தையும் நானே பிறப்பித்துவிட்டேன். தங்களுக்கான செய்திகள் அனைத்தையும் ஓலையில் எழுதி இப்பெட்டியில் வைத்துள்ளேன். தங்களிடம் இருக்கட்டும்” என்றார் சுரேசர்.

கனகர் அதை வாங்கி தன் புரவியில் கொக்கியில் மாட்டியபின் அவரை நோக்காமல் “அங்கு எனக்கு பெரிய பணிகள் ஏதுமில்லை. அங்கு அனைத்தையும் நோக்குவதற்கு இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்கள் இருப்பார்கள்” என்றார். “ஆம். ஆனால் அஸ்தினபுரியின் அமைச்சர் நீங்கள். அரசியருக்கு நீங்களே இன்னும் அமைச்சராகத் தெரிவீர்கள். அரசியருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் அவையினருக்குமான தொடர்பு உங்கள் வழியாகத்தான் நிகழவேண்டும்” என்றார் சுரேசர். “ஆம்” என்று கனகர் தலையசைத்தார். ”கருதுக! எப்போதும் விழிப்பு நிலையில் உடனிருங்கள்” என்றார். சீற்றத்துடன் திரும்பி அவர் கண்களைப் பார்த்தபின் அவரை புண்படுத்தும்படி ஏதேனும் சொல்ல விரும்பினார் கனகர். சீற்றம் எழுந்ததே ஒழிய சொல் எதுவும் எழவில்லை.

பின்னர் திரும்பிக்கொண்டு “என்னால் நன்கு துயில இயலவில்லை” என்றார். சுரேசர் ”அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ இன்று இயல்பாகத் துயில்பவர் இன்று எவருமில்லை” என்றார். “நான் யோகம் பயின்றவன் அல்ல, எளிய அமைச்சன்” என்று கனகர் சொன்னார். “மேலும் இவ்வுடலுக்குள் நான் சேர்த்த குருதி நிறைந்திருக்கிறது. அதில் ஒரு துளியையேனும் வீழ்த்தினால் நிறைவுற்று என்னால் விண்ணுலகம் செல்ல இயலும்”. சுரேசரின் விழிகள் மாறுபட்டன. அக்கணமே தான் சொல்லவேண்டியதென்ன என்பது அவருக்கு தெரிந்தது. ”இப்போரின் அழிவுகளைக் காண்கையில் நானும் உடன் அழியவேண்டியவன் என்றே என் மனம் உணர்கிறது. நான் நிரப்பிக்கொள்ள வேண்டிய வெற்றிடத்தைக் கண்ட நிறைவு எனக்கில்லை” என்றார். சுரேசரின் கண்களில் கடும் சீற்றமெழ முகம் சிவந்து உதடுகள் விரிவதைக் கண்டார். புரவியைத் தட்டி முன்னால் செலுத்தி அஸ்தினபுரியின் மையச்சாலையை சென்றடைந்தார்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 14

பகுதி மூன்று : பலிநீர் –

அஸ்தினபுரியில் கனகரின் பித்து தொட்டுத்தொட்டு படர்ந்து செறிந்துகொண்டிருந்தது. போர் தொடங்கியபோதே எழுந்தது அது. ஒருநாளில் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத நூறு பணிகள் அவர்மேல் வந்து விழுந்தன. நாழிகைக்கு நூறு ஆணைகளை இடவேண்டியிருந்தது. ஆனால் அவற்றை இயற்றும் அமைப்பு முழுமையாகவே அழிந்துவிட்டிருந்தது. நாளும் வந்துகொண்டிருந்த ஒற்றர்களில் பெரும்பாலானவர்களை அவர் முன்னர் நேரில் சந்தித்திருக்கவில்லை. ஏவலர்கள் அனைவருமே புதியவர்கள். அமைச்சர்களிலேயே பெரும்பாலும் அனைவரும் காடேகிவிட்டிருந்தனர். துரியோதனனுக்கு கங்கைநீர் தொட்டு சொல்லுறுதி எடுத்துக்கொண்டவர்கள் அவர்கள். குடிகளிலேயே ஒரு பகுதியினர் அஸ்தினபுரியைத் துறந்து அயல்நிலங்களுக்குச் சென்றுவிட்டிருந்தனர். கானேகிய அமைச்சர்களின் அடுத்த தலைமுறையினரான இளம் அந்தணர்கள் தந்தையரின் இடங்களில் அமைச்சர்களாக பணியாற்றினர்.

ஆகவே அவர் தன்னிடம் வந்த அத்தனை சொற்களையும் பலமுறை கேட்டு புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதைவிட தன் ஆணைகளை சொல்லிச்சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தது. எனினும் ஒவ்வொன்றும் சற்றுப் பிழையாகவே நிகழ்ந்தன. ஆனால் அப்பிழைகளின் எதிர்வினைகள் பெரியவையாக இருந்தன. அவர் ஒவ்வொருநாளும் சலித்துக் களைத்து உள்ளம் பொருளற்ற சொற்களின் கிடங்காக மாறிவிட்டிருக்க பின்னிரவில் படுக்கச் சென்றார். அதன் பின்னரும் துயில நெடும்பொழுதாகியது. மங்கலான விளக்கொளியில் ஏடுகளை வாசித்துப்பார்த்தார். அந்தியை அணுகும்போது வெந்நீரில் நீராடி பசும்பால் அருந்திப்பார்த்தார். துயில் அணையவில்லை. ஆகவே மருத்துவரிடம் கேட்டார். “அந்தணர் மது அருந்தலாகாது, அமைச்சரே. ஆனால் சிவமூலி அவர்களுக்கும் உரியதே” என்றார் மருத்துவர்.

கனகர் “சிவமூலியா?” என்று தயங்கினார். “எனில் சற்றே ஃபாங்கம் அருந்தலாம்… மயக்கம் அளிக்கும். உள்ளத்தில் சொற்சுழல் அடங்கினால் துயில்கொள்ள முடியும்” என்றார் மருத்துவர். “நான் உள்ளத்தை வைத்து விளையாடவேண்டியவன்… இந்த மயக்கப்பொருட்கள் அகத்தை மழுங்கடித்துவிடுபவை” என்றார் கனகர். ஆனால் அவரால் அதைக் கடக்கமுடியவில்லை. ஏழெட்டு நாட்களுக்குப் பின் அவரே மருத்துவரிடம் “சற்றே ஃபாங்கம் கொண்டுவருக. ஆனால் அது வேறொரு மருந்தின் வடிவிலிருக்கவேண்டும். எவர் செவிக்கும் செய்தி சென்றுவிடக்கூடாது” என்று ஆணையிட்டார். “அதை அறிவேன். நான் அதை லேகியத்தின் வடிவில் அளிக்கிறேன். மணம்கூட நெல்லிக்காயுடையதாகவே இருக்கும்” என்றார் மருத்துவர். “முன்பும் அமைச்சர்கள் ஃபாங்கம் உண்டது உண்டு… அதற்குரிய நோன்புநிகர்ச் சடங்குகள் உள்ளன.”

உண்மையில் சுவையிலும் வேறுபாடு தெரியவில்லை. அதில் ஓர் உருளையை விழுங்கிவிட்டு படுத்தபோது எந்த வேறுபாடும் தெரியவில்லை. தன்னில் என்ன நிகழ்கிறது என்று கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றுமே நிகழவில்லை. தன் உள்ளத்திற்கு அதனால் பயனில்லை போலும் என எண்ணிக்கொண்டார். ஆனால் மறுநாள் எண்ணிநோக்கியபோதுதான் ஆழ்ந்து உறங்கியிருப்பதை அறிந்தார். இறுதியாக நெடும்பொழுது அகல்சுடரை வெறித்துக்கொண்டே இருந்ததும், அது கிளம்பி மிக அருகே வந்து காற்றில் தொங்கிநிற்பதுபோல நின்று அசைந்ததும் நினைவிலெழுந்தது. மறுநாள் மெல்லிய ஆர்வத்துடன் அதை உண்டார். சுடரை நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றும் நிகழவில்லை. அது வெறும் உளமயக்கா? ஆனால் மெல்ல சித்தம் கரைந்தபோது சுடர் அவர் அருகே நின்றிருந்தது. விழித்தெழுந்தபோது வாயிலில் ஏவலன் காலைக்கடனுக்குரிய மரவுரியும் நறுமணப்பொருட்களுமாக நின்றிருந்தான்.

பின்னர் ஒவ்வொருநாளும் அவருக்கு அந்தியிலேயே அந்த உளக்கிளர்ச்சி உருவாகத் தொடங்கியது. எப்போது பணிகளை முடிப்போம், அறைக்குள் சென்று லேகியத்தை உண்போம் என உள்ளம் துழாவிக்கொண்டே இருந்தது. அப்படி ஒரு பிறர் அறியாச் செயல் இருப்பதே இனிமையாக இருந்தது. இளஅகவைக்குப் பின் அவரிடம் பிறர் அறியாத தனிச்செயல் என ஒன்று இருந்ததில்லை. பின்னர் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அது ஆகியது. ஆனால் ஃபாங்கம் அவரை துயிலச் செய்தாலும் அவருடைய காலைகள் ஊக்கமளிப்பவையாக விடியவில்லை. கண்ணிமைகள் தடித்து தொங்க, வாய் உலர்ந்து உயிரில்லாதது போலிருக்க, எச்சிலில் சற்றே கசப்பு மிஞ்சியிருக்க, தசைகளிலும் எலும்புப்பூட்டுகளிலும் உளைச்சலுடன் காலையில் எழுந்தார். நடை தள்ளாட நீராட்டறைக்குச் சென்றார். “நான் ஒவ்வொரு துயிலிலும் சற்றே இறந்துவிடுகிறேன் எனத் தோன்றுகிறது, மருத்துவரே” என்றார் கனகர்.

மருத்துவர் “இனிப்பு உண்க, காலையில் இனிமையால் நாவை நிறையுங்கள். உடலுக்குள் அகிபீனாவின் தேவனாகிய ருத்ரன் எழவேண்டும். அவனுக்கான படையல் அது” என்றார். அவர் காலையிலேயே ஆலயத்திலிருந்து வெல்லமிட்ட பொங்கல் கொண்டுவரும்படி சொல்லி உண்டார். அது அவரை மீட்டது. மெல்லமெல்ல அவருடைய ஊக்கம் மிகுந்து வந்தது. சித்தம் முன்னைவிடக் கூர்மை கொண்டது. ஆனால் அவ்வளவு கூர்கொள்ளும்தோறும் அவருக்கு அமைச்சுச் செயல்பாடுகள் பொருளற்றவையாகத் தோன்றின. பெரும்பாலானவற்றை பிறரிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை விடுவித்துக்கொண்டார்.

வஜ்ரநாகினி அன்னையின் பூசனை முடிந்த மறுநாள் பாண்டவர்களின் அமைச்சரான சுரேசர் அஸ்தினபுரிக்கு வந்தார். யுயுத்ஸுவுடன் இயல்பாக அவர் வந்தாலும் அது ஒரு ஆட்சிமாற்றச் சடங்கு என கனகர் அறிந்திருந்தார். யுயுத்ஸு தேரிலிருந்து இறங்கிய பின் உடன்வந்த தேரை நோக்கி நின்றபோதுதான் கனகர் அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்தார். சுரேசர் இறங்கியதும் கனகரைப் பார்த்து வணங்கி இன்முகத்துடன் முகமன் சொன்னார். யுயுத்ஸு “இங்குள்ள பணிகளை இனிமேல் தங்களுடன் சுரேசர் பகிர்ந்துகொள்வார்” என்றான். கனகர் தலைவணங்கினார். முதலில் தோன்றிய எண்ணம் பூசனைநிகழ்வுகள் குறித்து யுயுத்ஸு உசாவக்கூடும் என்பது. ஆனால் அவன் அதை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் ஒற்றர் அமைப்பு வலுவிழந்திருக்கக்கூடும். அல்லது அவர்கள் ஆர்வமிழந்திருக்கலாம்.

“இங்கே அனைத்தையும் மீண்டும் தொடங்கவேண்டியிருக்கிறது. அவையும் அங்காடியும் புதிதாக ஒருங்கவேண்டும். தெய்வச்சடங்குகளேகூட ஏராளமாக உள்ளன. அதை நீங்கள் தனியாகச் செய்ய இயலாது. சுரேசர் உடனிருப்பார்” என்றான் யுயுத்ஸு. கனகர் அனைத்தையும் உடனே புரிந்துகொண்டார். பூசனைச்செய்தி அவர்களைச் சென்றடைந்துவிட்டிருக்கிறது. அது அவர்களுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அதை தங்கள் அறிதலுக்கு அப்பால் நிகழ்வதை விரும்பவில்லை. அவர் சுரேசரிடம் “வருக” என்றார். யுயுத்ஸு முறைப்படி வரவேற்கப்பட்டு அரண்மனைக்குள் கொண்டுசெல்லப்பட்டான்.

இடைநாழியில் நடக்கையில் சுரேசர் புன்னகையுடன் “தங்கள் மைந்தர் கானேகிய செய்தியை அறிந்தேன், கனகரே. என்னைவிட மூன்று அகவை இளையவன்… நாங்கள் ஒரு சாலை மாணாக்கர்” என்றார். அதை அவர் ஏன் சொன்னார் என்று கனகர் குழம்பினார். தன்னை எவ்வகையிலேனும் சீண்டுகிறாரா? நிலைகுலைவேன் என எண்ணுகிறாரா? ஆனால் அதை அவர் இயல்பாகக்கூடக் கேட்டிருக்கலாம். என் உள்ளம்தான் திரிபடைந்திருக்கிறது. அவர் மங்கலாகப் புன்னகைத்து “ஆம், அறிவேன். அவன் இருக்குமிடம் தெரியவில்லை. நன்று நிகழ்க அவனுக்கு என்று வாழ்த்துவதன்றி தந்தையென நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றார். “குடியில் ஒருவர் துறவுகொள்வது தெய்வங்களின் ஆணை. மூதாதையர் விழைவு” என்றார் சுரேசர். கனகர் “ஆம்” என்றபின் நீள்மூச்செறிந்தார். அவ்வுரையாடல் அவர்களை அணுக்கமாக்குவதற்கு மாறாக மேலும் விலக்கியது.

முதலிரு நாட்கள் அவருக்கு சோர்வும் கசப்பும் இருந்தது. அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு விதுரர் வாழ்ந்த குடிலுக்குச் சென்றுவிடலாமா என்றுகூட அவர் எண்ணிப்பார்த்தார். ஆனால் அது தன்னால் இயலாதென்றும் அறிந்திருந்தார். அந்த இடமும் பொறுப்புமே அவருடைய அடையாளமாக இருந்தன. அவை இல்லையேல் எஞ்சுவது ஒன்றுமில்லை. விதுரருக்கு அமைச்சுப்பொறுப்பு ஆடை, எனக்கு உடல் என அவர் சொல்லிக்கொண்டார். அவர் அரண்மனையிலேயே வளர்ந்தவர். பாம்பு தோலை உரிக்கும், ஆமை ஓட்டுக்குள்ளேயே இறக்கும் என்று எண்ணி அவரே பெருமூச்செறிந்தார்.

சுரேசர் கடுமையாகவும் இளக்காரமாகவும் தன்னை நடத்துவதைப்போல கற்பனைசெய்துகொண்டு வெவ்வேறு நிலைகளில் சீற்றமும் தன்னிரக்கமும் விலக்கமும் கொண்டார். அவ்வாறு அவர் தன்னை நடத்திவிட்டதாகவே நடந்துகொண்டார். ஆனால் சுரேசர் மிக மிக நுண்ணுணர்வுடனும் பொறுப்புடனும் நடந்துகொண்டார். அவர் எல்லா ஆணைகளையும் கனகரிடம் ஒரு வேண்டுகோளாக முன்வைத்து அவருடைய சொற்களினூடாக அது வெளிப்படும்படி செய்தார். தன் கருத்துக்களை பரிந்துரைகளாக முன்வைத்தார். பிறர் முன்னால் ஒருபோதும் கனகரிடம் மாற்றுக்கருத்து சொல்லவில்லை. எப்போதும் பணிவுடனும் முகமலர்வுடனும் மட்டுமே பேசினார். மெல்லமெல்ல கனகர் எல்லா பொறுப்பையும் சுரேசரிடமே விட்டார். “நீங்களே முடிவெடுங்கள், உத்தமரே. நீங்கள் இளையவர், எனில் என்னை விடவும் கற்றவர்” என்றார். “இவ்வரண்மனையின் பொறுப்பு உங்களுக்கு அஸ்தினபுரியின் பேரமைச்சரால் அளிக்கப்பட்டது. அந்த கணையாழி உங்களிடமே உள்ளது. நான் தங்கள் பணியாளன் மட்டிலுமே” என்றார் சுரேசர்.

ஆனால் சுரேசர் அரண்மனையின் அனைத்து நடத்துகையையும் ஒருசில நாட்களிலேயே கையிலெடுத்துக்கொண்டார். மெல்லமெல்ல நாடெங்குமிருந்து வந்துகொண்டிருந்த ஒற்றர்செய்திகளை முறைப்படுத்தினார். தான் செய்யத் தவறியது என்ன என அதன் பின்னரே கனகர் அறிந்தார். ஒற்றர்கள் மேல்கீழ் அடுக்குகளினால் ஆனவர்கள். கீழ்நிலை ஒற்றர்கள் அனைத்துச் செய்திகளையுமே மேலே அனுப்புகிறார்கள். மேலே உள்ள ஒற்றர்கள் அவற்றில் உரியவற்றை மட்டும் தனக்கு மேலே அனுப்புகிறார்கள். பல செய்திகளை தொகுத்து ஒற்றைச்செய்திகளாக்குகிறார்கள். செய்திகளுடன் தங்கள் கருத்துக்களையும் இணைக்கிறார்கள். போர்க்காலத்தில் தலைமை ஒற்றர்கள் கொல்லப்பட கீழிருந்தவர்கள் மேலேறியபோது அவர்களில் பலரால் மேலிருந்து செயல்பட இயலவில்லை. ஆகவே அவர்முன் ஒற்றுசெய்திகள் நாளும் மலையெனக் குவிந்தன. அவர் அனைத்தையும் படித்தறிய இயலாமல் சீற்றம்கொண்டார். எரிச்சலுடன் பெரும்பாலானவற்றை படிக்காமல் ஒதுக்கினார். படித்தவற்றை மட்டும்கொண்டு கருத்துக்களை உருவாக்கினார். அவை பிழையாக ஆயின.

சுரேசர் ஒற்றர்களில் எவர் மேலே அமையும் தகுதிகொண்டவர் என கணித்தார். அவர்களை மேலே கொண்டுவந்து பதவியளித்தார். அவர்களுக்கு இணையான நிலையிலிருந்த ஆனால் அத்தகைய திறன் இல்லாத ஒற்றர்களுக்கு ஏதேனும் பட்டத்தையோ பரிசையோ கொடுத்து நிறைவுசெய்தார். ஓரிரு நாளிலேயே ஒற்றர்களின் மேல்கீழ் அமைப்பு ஒழுங்குகொண்டது. ஏவலர்கள் அனைவருமே இளைஞர்கள், முன்னர் பணியாற்றிய பட்டறிதல் அற்றவர்கள். ஆகவே அவர்கள் ஒவ்வொன்றுக்கும் செய்வதறியாது குழம்பினர். ஆளுக்கொரு முடிவெடுத்து ஒருவரோடொருவர் மோதிக்கொண்டனர். அவர்கள் முடிவெடுக்க முடியாமல் இருக்கையில்கூட சற்றே உள்ளொழுங்கு நிலைகொண்டது. சிறந்த முடிவுகளை எடுத்துவிட்டால் அம்முடிவுகள் விசையுடன் மோதிக்கொண்டன. முடிவெடுத்தவர்கள் தங்கள் ஆணவங்களையே முன்வைத்தனர்.

பட்டறிவின் பயன் என்ன என்பதை அப்போதுதான் கனகர் புரிந்துகொண்டார். பட்டறிவு முன்னர் நிகழ்ந்து நல்விளைவை உருவாக்கிய முடிவையும் செயல்பாட்டையும் நினைவுகூர்கிறது. அதையே மீண்டும் பரிந்துரைக்கிறது. அரசு என்பது மீளமீள நிகழ்வது. மீளமீள நிகழ்கையிலேயே அரசு உறுதியாக இருக்கிறது. மாற்றமின்மையே அரசின் ஆற்றலை உருவாக்குகிறது. ஏனென்றால் அரசு என்பது அதன் குடிகளிடம் திகழும் ஒரு நம்பிக்கையின் குவிமையம். மாற்றமில்லாமையையே மக்கள் விழைகிறார்கள். ஆலயக்கருவறையில் இருக்கும் தெய்வம் என்ன என்று அறிந்திருப்பதுபோல. எது எவ்வண்ணம் மாறினாலும் அது அவ்வண்ணம் இருக்கும் என்னும் நம்பிக்கையே ஆலயத்தெய்வத்தின் அருள் எனக் கருதப்படுகிறது. அரசுச் செயல்பாடுகள் எண்ணியபடியே நிகழ்கையில் குடிகள் நிறைவடைகிறார்கள். ஊழியர்கள் இயல்பாக இருக்கிறார்கள். மேலாளர்கள் சுமையில்லாமல் செயல்படுகிறார்கள்.

ஒரு சிறு புதிய செயல்பாடுகூட அரசை நிலைகுலையச் செய்கிறது. விசையுடன் ஒன்றுடன் ஒன்று கவ்விச் சுழலும் பற்சகடங்களின் நடுவே சிறு கல் ஒன்று சிக்கிக்கொண்டதுபோல ஓசையும் அனலும் உருவாகிறது. அனைத்தும் நிலைகுலைகின்றன. ஆனால் புதியவர்களுக்கு முன்பு நிகழ்ந்தவை எதுவும் தெரிந்திருக்கவில்லை. முறைமைகள் பொருளற்றவையாகத் தோன்றின. பெரும்பாலானவர்கள் பதினாறு அகவைகூட ஆகாத சிறுவர்கள். கல்விநிலையிலிருந்து நேரடியாகவே அமைச்சுப்பணிக்கு வந்தவர்கள். ஆணைகளையே மும்முறை சொல்லவேண்டியிருந்தது. அந்த ஆணை நிறைவேற்றப்பட்டதா என மீண்டும் நோக்கவேண்டியிருந்தது. அதன் பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்து. அவை ஏன் பிழைகள் என அவர்களுக்குப் புரியவைக்கவும் வேண்டியிருந்தது. ஆயினும் குடிகள் திகைப்படைந்தனர். அவர்கள் முன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து இன்னொருவரிடம் உசாவும் அரசுப்பணியாளன் அவர்களைக் கைவிடும் ஒரு தெய்வத்தின் விழித்தோற்றம். அரசு முடிவெடுக்காது என எண்ணியபோது அவர்களின் சிக்கல்கள் மேலும் பெருகின.

ஒவ்வொரு முடிவும் பிறிதொன்றுடன் முரண்பட பல நாட்கள் அஸ்தினபுரியே உறைந்துகிடந்தது. போர்நாட்களில் அவ்வாறு இருக்கவில்லை. அப்போது பானுமதி ஊக்கத்துடன் இருந்தாள். ஒவ்வொன்றுக்கும் அவளிடமிருந்து ஆணைகள் வந்தன. அன்று நகரம் மிகமிகச் சிறிதாகச் சுருங்கிவிட்டிருந்தது. நகரில் வணிகமும் தொழிலும் பெரும்பாலும் இல்லாமலாகிவிட்டிருந்தன. சிறுபூசல்கள் அனைத்தும் நின்று அனைவருமே போரை எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் போர்முடிந்ததும் அனைத்தும் முன்னைவிட விசையுடன் எழுந்தன. ஒவ்வொன்றிலும் புதிய சிக்கல்கள் உருவாயின. “அஸ்தினபுரியையே மீண்டும் புதிதாக கட்டி எழுப்பவேண்டியிருக்கிறது என தோன்றுகிறது” என்று கனகர் சொன்னார். பழைய வணிகர்கள் வராமலானார்கள். வந்துசேர்ந்த புதிய வணிகர்களுக்கு அங்காடியில் நெடுங்காலமாக அமைந்திருந்த முறைமைகள் ஏதும் தெரியவில்லை. ஆயர்களும் வேளாண்குடிகளும் மீண்டு வந்து தொழில்தொடங்கியபோது பூசல்கள் நாளும் நூறு ஆயிரமென வெடித்துப் பெருகின.

முன்பே அளிக்கப்பட்டிருந்த சொற்களை நினைவுகூர்வோர் சிலரே இருந்தனர். நீர்க்கடன்கள் செய்வதிலிருந்து மாண்டவரின் உடைமைகளை கைக்கொள்வது வரை ஒவ்வொரு குடியிலும் மோதல்கள் உருவாயின. அரசவையில் பானுமதி அமரவில்லை. ஆகவே அறுதிச்சொல் இன்றி பலநூறு வழக்குகள் காத்து நின்றிருந்தன. “நான் என்ன செய்யக்கூடும்?” என்பதே கனகரின் சொல்லாக இருந்தது. “இது இன்று அரசரில்லா நிலம். நீர்க்கடன்கள் கழிந்து அரசர் நகர்புகுந்து அவையமரவேண்டும். கோல் நிலைகொள்ளவேண்டும். குடியவை நிறையவேண்டும். அதன் பின்னரே ஒவ்வொன்றும் ஒருங்க முடியும். அதுவரை இதை இவ்வண்ணம் உருட்டிக் கொண்டுசெல்வதே என் பணி.” சுரேசர் வந்த மறுநாளே நிலைமையை உணர்ந்துகொண்டார். அதற்கான வழியையும் அவர் கண்டடைந்தார். “மகளிர் இந்நகரை ஆண்டிருக்கிறார்கள். முதுமகளிருக்கு இங்குள்ள முறைமைகள் அனைத்தும் தெரியும். பட்டறிதலின் வளம் அவர்களிடம் உண்டு” என்றார்.

“ஆனால் ஆண்கள் பெண்களின் சொற்களை ஏற்கமாட்டார்கள்… இது அன்னைவழி ஆளும் நாடல்ல” என்றார் கனகர். “ஆம், மைந்தரே பொறுப்பிலிருக்கட்டும். ஒவ்வொரு மைந்தனுக்கும் துணைக்கு பட்டறிவு மிக்க மூதன்னையர் அமைந்த ஒரு சிறு சொல்லவை துணைநிற்கட்டும்” என்றார் சுரேசர். அன்னையர் பொறுப்பேற்றுக்கொண்டதும் இரண்டு நாட்களிலேயே ஒவ்வொன்றும் தெளிவுகொண்டன. மிகச் சிக்கலான நூல்கண்டை ஓரிரு இழுப்புகளில் தனித்தனியாகப் பிரித்து நேர்செய்வதுபோல சுரேசர் அனைத்தையும் சீரமைத்தார். கனகர் தன்னிடமிருந்து எல்லா பொறுப்பும் அகன்றுவிட்டதை பத்து நாட்களுக்குள் உணர்ந்தார். ஆனால் எல்லா ஓலைகளும் அவர் பெயருடனேயே சென்றன. அவர்தான் ஒவ்வொருநாளும் பானுமதியைச் சந்தித்து நிகழ்வனவற்றை சுருக்கிச் சொன்னார்.

பானுமதி எதையும் செவிகொள்ளவில்லை. அவள் ஒவ்வொருநாளும் மெலிந்துகொண்டிருந்தாள். அத்தனை விரைவாக மானுடர் உருவழியமுடியுமா என்பதே அவருக்கு எண்ணத்தொலையாததாக இருந்தது. அவளுடைய முகத்தசைகள் சுருங்கி, பற்கள் உந்தி வெளிவந்தன. கண்கள் குழிந்ததும் முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்தது. புன்னகைத்தாலும் முகம் மலராமல் ஆகியது. தலைமுடியில் நரை தோன்றியது. பெரும்பாலான பொழுதுகளில் அவள் தன் தனியறையிலேயே இருந்தாள். வெண்ணிற ஆடை அணிந்து மங்கலங்கள் ஏதுமின்றி மரவுரியிட்ட பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவர் அரசுச்செய்திகளைச் சொல்லி முடித்ததும் மிக மெல்லிய குரலில் ஓரிரு ஆணைகளை மட்டும் பிறப்பித்தாள். அவளருகே அவளைப் போலவே தோன்றிய அசலையும் இருந்தாள். அவள் எச்சொற்களையும் செவிகொள்ளவில்லை. சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவர்கள் உள்ளத்தால் அங்கிருந்து நெடுநாட்களுக்கு முன்னரே கிளம்பிவிட்டிருந்தார்கள். போர்குறித்த எச்செய்தியையும் கேட்க அவர்கள் விரும்பவில்லை. அன்றாடச் செய்திகளை மட்டுமே அறித்தால் போதுமென அரசியின் ஆணை இருந்தது.

பானுமதி ஒரே ஒருமுறை மட்டும் “நீர்க்கடன்கள் முடிய எத்தனை காலமாகும்?” என்றாள். “நீர்க்கடன்களுக்கு நூல்கள் வகுத்த நெறிகள் உள்ளன அரசி. பிராமணர் பத்து நாட்களிலும் ஷத்ரியர் பன்னிரண்டு நாட்களிலும் வைசியர் பதினைந்து நாட்களிலும் சூத்திரர் ஒரு மாதத்திலும் இறப்புத்தீட்டு அழிகிறார்கள் என்பது நூல்வகுப்பு. அங்கே விதுரர் இருக்கிறார். அவருக்கும் நீர்க்கடன் பொறுப்பு உண்டு. ஆகவே ஒரு மாதமாகலாம்” என்று கனகர் சொன்னார். பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. சற்றுநேரம் காத்துவிட்டு “பேரரசர் திருதராஷ்டிரர் நீர்க்கடன் முடிந்து பதினொரு நாட்கள் கடந்தபின் நகரணையக்கூடும். தங்கள் முடிப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிடலாம். அவரிடமிருந்து பாண்டவ அரசர் பெற்றுக்கொள்வார்” என்றார். “நான் நீர்க்கடன் முடிந்து பேரரசர் இங்கே வந்த அன்றே காசிக்குக் கிளம்பவேண்டும். அனைத்தும் ஒருங்கியிருக்கட்டும். என் நோக்கம் அவர்களுக்கும் அறியப்படுத்தப்பட வேண்டும்” என்று பானுமதி சொன்னாள். “முடிசூட்டுவிழாவுக்கு…” என்று கனகர் சொல்ல “எந்த விழாவிலும் நான் பங்கெடுக்கக்கூடாது…” என்று பானுமதி சொன்னாள். கனகர் தலைவணங்கினார்.

யுயுத்ஸு மூன்று நாட்களுக்கு ஒருமுறை கங்கைக்கரையில் அஸ்தினபுரிக்கு வந்து ஒருநாள் தங்கி மறுநாள் கிளம்பிச் சென்றான். அவனுடைய வருகையால்தான் அஸ்தினபுரி அரசர் என ஒருவர் எங்கோ இருக்கும் உணர்வை அடைந்தது. அவனிடமிருந்து எழுவன யுதிஷ்டிரன் சொல்லும் சொற்கள் என்று கனகர் எண்ணினார். சுரேசரும் அதையே சொன்னார். அவன் மொழியும் சாயலும் யுதிஷ்டிரன் போலவே இருந்தன. அவன் எப்போதுமே யுதிஷ்டிரனை எண்ணிக்கொண்டிருந்தவன். அருகமைந்தபோது விழிகளாலும் அள்ளி உள்ளே அமைத்துக்கொண்டுவிட்டிருந்தான். யுதிஷ்டிரனின் மெல்லிய கூன்கூட யுயுத்ஸுவுக்கும் வந்திருக்கிறது என இளம் அமைச்சரான சூர்யசேனன் சொன்னார். கனகர் “சொற்களை அமைச்சன் வீணடிக்கக் கூடாது. தனக்குள்ளேயே கூட எண்ணித்தான் பேசவேண்டும்” என அவரைக் கடிந்துகொண்டாலும் அது மெய் என்றே உள்ளத்துள் உணர்ந்தார்.

அஸ்தினபுரியின் அரசப்பொறுப்பை யுதிஷ்டிரன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் பாண்டவர்களிடமிருந்து நேரடியாக ஆணைகள் எவையும் அஸ்தினபுரிக்கு வந்துசேரவில்லை. யுதிஷ்டிரன் உளம் சோர்ந்து சொல்லவிந்து ஒதுங்கியிருப்பதாகவும், நாற்பத்தொருநாள் நீளும் கடுநோன்பு கொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது. யுதிஷ்டிரனின் ஆணை என யுயுத்ஸுவின் சொற்களே கொள்ளப்பட்டன. பிறிதொன்று எண்ணமுடியாதபடி அவை நெறிசூழ்ந்தவையாகவும் நடைமுறைக்கு உகந்தவையாகவும் இருந்தன.

வஜ்ரநாகினி அன்னையின் பூசனை முடிந்து தன் அறைக்குத் திரும்பிய அன்றுதான் கனகர் முதல்முறையாக பகலில் அகிபீனா குளிகைகளை உண்டார். தன் உடலெங்கும் குருதி வாடை அடிப்பதாக எழுந்த உணர்விலிருந்து அவரால் தப்பவே முடியவில்லை. அன்று சாலையில் புரவியில் வருகையில் செம்புழுதி குருதிச்சேறென்று தோன்றியது. புரவிக்கால்கள் மென்பூழியில் விழுந்தபோது நைந்து துவைந்தவை கருக்குழவிகளின் மெல்லுடல்கள் என தோன்ற அவர் விதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தார். பற்கள் கிட்டித்து கண்கள் கலங்கி வழிந்தன. தன் மாளிகையை அடைந்ததும் அவர் நழுவி விழுவதுபோல் புரவியிலிருந்து கீழிறங்கினார். தரையில் கையூன்றி அமர்ந்து தலைதாழ்த்தி வாயுமிழ்ந்தார். ஏவலர் அவரை உள்ளே கொண்டுசென்றனர்.

அவர் மஞ்சத்தறைக்குச் சென்றார். குருதியின் கெடுமணம் உடலெங்கும் பரவியிருப்பதாகத் தோன்ற நீராட்டறைக்குச் செல்ல ஆணையிட்டார். நீராடி நறுஞ்சுண்ணம் பூசி வந்து அமர்ந்தபோது ஏவலர் உணவு பரிமாறினர். ஆவிபறந்த அப்பத்தை கையில் எடுத்தார். அது உயிருள்ள சிறு குழந்தை என நெளிந்தது. மெல்லிய முனகலோசையை அவர் கேட்டார். அலறி அதை வீசிவிட்டு எழுந்து நின்றார். ஏவலர் அவரைக் கூர்ந்து நோக்கியபடி நின்றனர். அவர் கையை உதறியபடி சுவர் அருகே சென்றார். பின்னர் இடையைப்பற்றியபடி அமர்ந்து வாயுமிழ்ந்தார். வயிற்றுக்குள் நீரன்றி ஏதுமிருக்கவில்லை. அவர் வாயுமிழ்ந்தபடியே இருந்தார். பின்னர் விழிகள் வழிய சோர்ந்து அப்பால் அமர்ந்தார்.

அவர்கள் அவரை தூக்கி கொண்டுசென்று படுக்கச்செய்தார்கள். அவர் வலிகண்டவர்போல புரண்டபடியே இருந்தார். ஏவலன் ஒரு கிண்ணத்தில் இன்கூழ் கொண்டுவந்தான். அதைப் பார்த்ததும் மீண்டும் உடல் உலுக்கிக்கொண்டது. “வேண்டாம்!” என்றார். பின்னர் எழுந்து அமர்ந்து அப்பாலிருந்த கலத்தைச் சுட்டி “அதைக் கொண்டுவா” என்றார். “இது…” தயங்கிய ஏவலன் “பகலில்…” என்றான். “கொண்டுவா” என அவர் ஆணையிட்டார். அவன் அதை எடுத்துக்கொண்டுவர இரு உருளைகளை விழுங்கிய பின் மல்லாந்து படுத்துக்கொண்டார். மீண்டும் மீண்டும் வாயுமிழ்வதுபோல உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. குருதியின் வாடை அவர் மூக்கருகே இருந்து எழுந்தது. அல்லது உடலுக்குள் இருந்து. ஆனால் அவர் துயில்கொண்டுவிட்டிருந்தார்.

அதன்பின் பகல்பொழுதிலும் சற்றே ஃபாங்கம் கலந்த லேகியத்தை உண்ணும் வழக்கம் கனகரிடம் உருவாகியது. சுரேசர் அனைத்தையும் ஒருங்கிணைத்து சீர்ப்படுத்தி தானே செயலாக்கிக்கொண்டும் இருந்தார். காலையில் அமைச்சுநிலைக்கு வந்தால் ஓரிரு ஒற்றுச்செய்திகளை கேட்டபின் வெறுமனே கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பார். அவ்வப்போது கோழி என விழிசரிந்து வாய் விழுந்து அரைத்துயிலில் ஆழ்ந்து திடுக்கிட்டு விழித்துக்கொள்வார். வெறுமனே அமர்ந்திருக்கையில் எல்லாம் ஃபாங்கம் நினைவிலெழுந்தது. அமைச்சுநிலையில் அதை உண்ணுவது பெரிய குற்றம் என முன்னரே வகுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உண்ட பலரை அவர் தண்டனைக்கு அனுப்பியதுமுண்டு. ஓரிரு நாட்கள் போராடிய பின் அவர் சற்றே லேகியத்தை சிறிய வெள்ளிச்சிமிழில் கொண்டுவரத் தொடங்கினார். அதை வெற்றிலையுடன் வைத்து வாயிலிட்டு மென்று விழுங்கினால் சிறிது நேரத்திலேயே உடலில் அனைத்து கட்டுகளும் அவிழும். அத்தனை தசைகளும் தளரும். உள்ளத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் ஊசலாடிக்கொண்டிருக்கும். அலைநீர்ப்பரப்பில் நெற்றுகள்போல ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற ஒருவகை ஆடல்.

சுரேசர் அமைச்சுநிலைக்குள் புகுந்தபோது கனகர் துயின்றுகொண்டிருந்தார். அவர் இருமுறை அழைத்த பின்னரே விழித்துக்கொண்டார். வாயைத் துடைத்தபடி “என்ன?” என்றார். “பேரமைச்சர் விதுரர் நாளைக் காலை முக்தவனத்தை வந்தடைகிறார். தாங்கள் அங்கே செல்லவேண்டும் என ஆணை வந்துள்ளது” என்றார் சுரேசர். திகைப்புடன் “நானா?” என்றார். “ஆம், தங்களைத்தான் வரச்சொல்லியிருக்கிறார்” என்றார் சுரேசர். “ஆனால் இங்கே…” என கனகர் தயங்க “இங்குள்ள பணிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். தாங்கள் செல்லலாம்… அரசு ஆணைக்கு நிகர் அமைச்சரின் ஆணை” என்றார் சுரேசர். “ஆம்” என்றபின் கனகர் “நான் நாளை புலரியிலேயே கிளம்புகிறேன்” என்றார். சுரேசர் மேலும் ஏதோ சொல்ல விழைந்து பின்னர் அதை ஒழிந்து தலைவணங்கி அகன்றார்.

அவர் செல்லும்போது சொல்லாக எழாத உதட்டு அசைவை கனகர் எண்ணிக்கொண்டிருந்தார். அவர் சொல்ல வந்தது என்ன? அவர் எழுந்துசென்று வாயை கழுவிவிட்டு வெற்றிலைச்செல்லத்தை திறந்தார். உள்ளே வெள்ளிச்சிமிழ் இருந்தது. அவருக்கு சுரேசர் சொல்லவந்தது புரிந்தது. அவரைப் பார்த்ததுமே விதுரர் உணர்ந்துவிடக்கூடும். அவர் அச்சத்தால் அடித்துக்கொண்ட நெஞ்சுடன் அந்த வெள்ளிச்சிமிழிலிருந்த ஃபாங்கத்தை வழித்து சாளரம் வழியாக வெளியே வீசினார். சிமிழை தூக்கி உள்ளறைக்குள் போட்டார். உடல் வியர்வைகொண்டிருந்தது. பின்னர் மெல்ல எண்ணங்கள் தெளிந்தன. அவர் முகம் களைத்திருக்கிறது. கண்கள் நீர்மைகொண்டிருக்கின்றன. கையில் நடுக்கு இருக்கிறது. குரலிலேயே கூட இடறல் தெரியலாம். ஆனால் அதெல்லாம் அஸ்தினபுரியில் அனைவரிடமும் இருக்கும் இயல்புகள். இந்தப் போருக்குப் பின் இங்கே தன்னிலையில் இருப்பவர் எவர்? திடுக்கிட்டு எழாது, கொடுங்கனவு இல்லாது துயில்கொள்பவர் எவர்?

அவர் பெருமூச்சுவிட்டார். “ஒன்றுமில்லை… வீண் அச்சம். அவருக்குத் தெரியும்” என எவரிடமோ என தன்னுள் சொல்லிக்கொண்டார். “நான் மட்டுமா? இங்கு அனைவருமேதான்” என்றார். “சொல்வது எளிது, இங்கிருப்பது மேலும் கடினம்… இதுவும் ஒரு போர்க்களம். இங்கே போர் இன்னும் முடியவில்லை” என்றார். சீற்றத்துடன் “விட்டுவிட்டு ஓடியவருக்கு இதைக் கேட்கும் தகுதி உண்டா?” என்றார். கையை ஆட்டி முகம்சுளித்து சினத்துடன் “இங்கே நாங்கள் மட்கி அழிந்துகொண்டிருக்கிறோம். எரிந்தழிவது மிக எளிது!” என்றார். பின்னர் எழுந்து ஏவலனிடம் “நான் கிளம்பி என் மாளிகைக்குச் செல்கிறேன். சுரேசரிடம் சொல்” என்று கூறிவிட்டு இடைநாழியினூடாக நடந்தார். செல்லச்செல்ல அவர் நடை விசைகொண்டது. முகம் மலர்ந்தது. மூச்சுவாங்க தன் மாளிகையை அடைந்து மஞ்சத்தறைக்குள் நுழைந்து லேகியம் இருந்த கலத்தை திறந்து பெரிய உருளைகளாக இரண்டு எடுத்து விழுங்கினார். அருகே இருந்த குவளையிலிருந்து நீரை குடித்துவிட்டு மஞ்சத்தில் கால்நீட்டி படுத்துக்கொண்டார். கண்களை மூடியபோது வழக்கமான சுடர் தெரிந்தது, அணுகி வரலாயிற்று.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 13

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 7

அணிவகுத்தபடி வந்த அரசியர்நிரை தன்னை அணுகியபோது கனகர் குருதியின் கூரிய கெடுமணத்தை உணர்ந்தார். அது அலையென எழுந்து சூழ்ந்துகொள்ளும் மணம் அல்ல. சிறிய பளபளக்கும் ஊசிபோல மென்மையானது. அறிதற்கரியது, ஆயினும் தைத்து உட்புகுந்து அங்கிருப்பது. பசியின்போது உணவின் மணம்போல அனைத்துப்புலன்களும் சென்று தொட்டு ஏற்றுக்கொள்ளும் மணம் அது. ஆனால் எப்போதும் புலன்கள் அதை பெருகிச்சென்று பெற்றுக்கொள்கின்றன. எனில்  எப்போதும் அகம் அதை காத்திருக்கிறதா? ஒவ்வொரு நீர்த்துளியும் இன்னொரு நீர்த்துளியை காத்திருக்கிறது. உடலுள் தேங்கிய குருதி குருதிக்காக நோற்றிருக்கிறதா?

முதலில் தன்னுள் எண்ணங்கள் குருதியை மையமாகக் கொண்டவையாக மாறிவிட்டிருப்பதையே அவர் உணர்ந்தார். எத்தொடர்பும் இன்றி சிற்றாலயங்களில் அன்னை தெய்வங்களுக்கு கொடுக்கும் குருதிபலி பற்றி அவர் எண்ணிக்கொண்டிருந்தார். ஊடாக மருத்துவநிலையில் தசையை குருதிவழிய அறுக்கும் ஒரு நினைவு வந்தது. பின்னர் அங்கு கொடுக்க வேண்டிய  குருதி பலிக்கான விலங்குகள் கொண்டுவரப்பட்டனவா என்னும் எண்ணத்தை அடைந்து சூழநோக்கினார். அதன் பின்னரே அங்கு குருதிபலி கொடுக்கப்படவேண்டியதில்லை என்று தீர்க்கசியாமர் குறிப்பிட்டதை  நினைவு கூர்ந்தார். அவ்வெண்ணம் தனக்கு ஏன் ஏற்பட்டது என்று எண்ணியபின்னரே தன்னுள் குருதி பலியின் காட்சிகள் நிறைந்திருப்பதை அறிந்தார். அக்காட்சிகளை எழுப்பும் கூரிய குருதி மணத்தை பிரித்தறிந்தார்.

அது அணுகிக்கொண்டிருக்கும் இளவரசிகளின் நிரையிலிருந்து எழுகிறது என்று எண்ணியபோது அவர் உடல் மெய்ப்பு கொண்டது. அவர்கள் அப்போதும் தொலைவிலேயே தெரிந்தனர். அங்கிருந்து காற்றும் அவரை நோக்கி வீசவில்லை. எனினும் அந்தக் கெடுமணம் அணுகி உள் நுழைகிறதெனில் அது மிக வலுத்ததாகவே இருக்கவேண்டும். ஒருவர் இருவரில் அல்ல அவர்கள் அனைவரிடமிருந்தும் அது எழுந்திருக்க வேண்டும். அவர் அரசிகளையும் இளவரசிகளையும் விழிவிரித்து நோக்கிக்கொண்டிருந்தார்.  அவர்கள் அனைவருமே மிக மெல்ல காலடி எடுத்து வைத்து நடந்தனர். எடுத்த காலை  வைத்து உறுதியாக நிலைகொண்டு அதன்பின் அடுத்த காலை எடுப்பதுபோல் தோன்றியது.

முன்பும் அவர் அவ்வண்ணம் அரசியரும் இளவரசியரும் பெருநிரையாக  விழவுச் சடங்குகளுக்கு வருவதை கண்டிருந்தார். அஸ்தினபுரியின் துர்க்கை வழிபாட்டு நாளிலும் முடிசூட்டு விழாவின்போதும் அவர்கள் அனைவருமே வந்தாகவேண்டும். அனைவரும் ஒளிரும் பட்டுகளாலும் அருமணி நகைகளாலும் அழகு செய்யப்பட்டிருப்பார்கள். பொன்னுருகி சிற்றலைகொள்வதுபோல் என்று சூதர்கள் அவர்களின் வருகையை பாடுவார்கள்.  “அவ்வலையின் மீது கதிரொளி நடமிடுவதைப்போல் அருமணியின் அசைவுகள். அவற்றுடன் இணையும் விழிமணி மின்னல்கள். எயிற்றொளி நகைப்புக்கள். தெய்வங்கள் கீழே நோக்கி திகைக்கின்றன. இங்கு எழுந்த இப்பொன்னலை எது என்று!” சூதர்கள் பாடிப்பாடி ஒரு கனவென்றே அதை மாற்றியிருந்தார்கள். கண்ணேறு விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களில் ஒரு இளவரசியுடன், கரிய உடையணிந்து ஒரு சேடிப்பெண்ணையும் அனுப்புவதுண்டு. அவளை சூதன் பொன்னணியும் அருமணியும் சூடிய முகத்தின் அழகை நிறைவுகொள்ளச் செய்யும் கரித்துளிப்பொட்டு என்றான். இனிய பண்ணின் தாளமுடிப்பு என்றான்.

அஸ்தினபுரியின் பெண்டிர் அரசியர் கொலுவமையும் காட்சியை தவறவிடுவதில்லை.  அரசியர் எழுந்தருள்வதை அறிவிக்கும்  முரசுகள்  தொலைவில் ஒலிக்கத்தொடங்கியதுமே பெண்டிர் ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு இறுகி மெல்லிய அசைவு கொண்டு பாதையின் இருமருங்கும் ததும்புவார்கள். மூச்சொலிகளும் சிறு பேச்சொலிகளும் கேட்டுக்கொண்டிருக்கும். அரசியர்நிரை மிகத்தொலைவில் தெரிந்ததுமே ஒற்றை வியப்பொலியாக திரள் தன்னை வெளிப்படுத்தும். அணுகிவரும்போது அந்நிரையே ஒரு பொன்னணி என்றே தோன்றும். பட்டுகள் பொன்னுடன் இணையக்கற்றவை. பொன்னை துணியாக்கியதே பட்டு. ஆடையும் அணியும் ஒன்றானது அது. பொன்னும் பட்டும் அணிந்திருக்கையில் பெண்டிர் முகங்களில் பிறிதேதோ ஒன்று வந்து அமைந்துவிடுகிறது. அவர்கள் விழிகள் சிவந்து கள்மயக்கிலென நோக்கு மறைந்து காற்றிலோ சூழொளியிலோ மிதந்து கொண்டிருப்பவர்கள்போல் தோன்றுகிறார்கள். அவர்களின் தலைநிமிர்வில், கழுத்து ஒசிவில், தோள்குழைவில் முழுதணிகொள்ளுகையில் மட்டுமே பெண்களில் எழும் தெய்வங்கள் தோன்றுகின்றன.

அரசியர் அணுகும்போது சூழ்ந்திருக்கும் பெண்டிர் மூச்சொலியால், மூச்சென ஒலிக்கும் ஒற்றைச்சொல்லொலியால் தங்களை வெளிப்படுத்துவார்கள். கனன்ற விறகின் மேல் நீர்த்துளி பட்டதுபோல். அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்வார்கள். தோள்களையும் கைகளையும் பற்றி இறுக்கிக்கொள்வார்கள். அவர்களின் விழிகளிலும் முகங்களிலும்  முதலில் தெரிவது வியப்பு, பின் வெறுப்பு. அது சினமென்றும் கசப்பென்றும் தோன்றும். அரசியர் அணுகி கடந்து சென்று அவையமர்ந்த பின்னர் திரும்பி நோக்குகையில் அங்கிருக்கும் அனைத்துப் பெண்களின் விழிகளிலும் அவர்களின் விழிகளில் அமைந்த அதே வெறிமயக்கு நிகழ்ந்திருப்பதை அவர் காண்பதுண்டு. அவர்கள் அனைவரும் அவ்வரசிகளாக மாறி நடித்து தங்களுள் அத்தெய்வத்தை தங்களுள் ஊற்றி நிறைத்துக்கொண்டிருப்பார்கள்.

அங்குள்ள அனைத்துப் பெண்களிலும் பரவி நிறைந்து ததும்பி எழுந்து தோன்றும் அத்தெய்வம் இம்மண்மேல் ஒரு விண்துளியென எப்போதோ விழுந்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் இங்கு விழைவென்றும் செல்வமென்றும் உடைமை என்றும் எதுவும் இருந்திருக்காது. அத்துளி மண்ணில் ஆழ்ந்திறங்கி, சேற்றின் அடுக்குகளையும் பாறைப்படிவுகளையும் கடந்து சென்று  அங்கே துயின்ற பொன்னை தொட்டு எழுப்பியது. “எழுக! நீ என் ஊர்தி!” என்றது. அருமணிகளை உலுப்பி விழிக்கச்செய்தது. “எழுக! எழுக! நீங்கள் என் வண்ணப்புரவிகள்” என்றது. ஒன்பது புரவிகள் இழுக்கும் புலரி வண்ணத்தேர் புவி மீது சுழன்றோடுகிறது. அரசபாதைகளில், ஊழின் மறைவழிகளில், நாகக்களம் என பின்னிவிளையாடும் புதிர்ச்சுழிப்புகளில். பெண்டிர் அதை நன்கறிந்திருக்கிறார்கள். பேரரசர்கள் அந்த மாயத்தால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். அரியணைகள், மணிமுடிகள், களஞ்சியங்கள், கருவூலங்கள் அனைத்தையும் ஆள்வது அது. அவைக்கூடங்களில் முழங்குகிறது. படைக்கல அறைகளில் ஆழ்ந்த அமைதியாக நிறைந்திருக்கிறது. முடிசூடி அமர்ந்த அரசர்கள் பதற்றம் கொள்வதை, அருகமர்ந்த அரசியர் நகைதிகழ நிறைந்திருப்பதை அவர் எப்போதும் காண்பதுண்டு. அது பெண்டிர் மட்டுமே நேருக்குநேர் கண்டு அறியும் பெருந்தெய்வம்.

அணுகி வந்து விழிக்கு நன்கு தெளியும்வரை அந்த அரசியர்நிரையும் அணிகொண்டு ஒளி  பொலிவதாகவே இருக்குமென்று கனகர் எவ்வண்ணமோ உளப்பதிவு கொண்டிருந்தார். காந்தாரி எளிய மென்வண்ணப் பட்டாடை அணிந்து அணிகளில்லாத தோற்றம் கொண்டிருப்பதை ஒருகணம் கழித்தே அவர் உணர்ந்தார். பேரரசியாக அஸ்தினபுரியின் அரசவைக்கு வருகையில்கூட குறைவாகவே அணிபூண்பவள் என்பதனால் அவ்வேறுபாடு முதலில் அவருக்குத் தெரியவில்லை. பின்னர் உடன் வந்த துணைப்பேரரசியரை பார்த்தபோதுதான் அவர்களும் அணிகளேதும் அணிந்திருக்கவில்லை என்பதை அவர் கண்டார். தொடர்ந்து வந்துகொண்டிருந்த அரசியர் நூற்றுவரும் ஆயிரத்தவரின் இளவரசியரும் அணியாடைகள் கொண்டிருக்கவில்லை. அனைவருமே வெளிறிய வண்ணம்கொண்ட ஆடைகள் அணிந்திருந்தனர். புகைச்சுருளின் அசைவென அவர்களின் வருகை தெரிந்தது.

அவர்கள் முறைப்படி இன்னும் கைம்மை நோன்பு கொள்ளவில்லை. தொல்முறைப்படி இருப்போர் நீர்க்கடன்கள் செய்து விண்ணேற்றிய பின்னரே மாண்டவரின் இறப்பு முழுமையடைகிறது. அதன்பின்னரே துணைவியர் கைம்மை நோன்பு கொள்ளவேண்டும். அதுவரை அணிகள் பூண்பதிலோ ஆடைஅணிவதிலோ தடையேதுமில்லை. மரபின்படி அவர்கள் ஆடையும் மலர்களும் அணிந்தாகவேண்டும். மாண்டவர் அருகிருந்து அவ்வழகை இறுதியாகக் கண்டு மகிழ்வார்கள் என்பதுண்டு. ஆயினும் அவர்கள் அனைவருமே அகத்தால் கைம்பெண்களாகிவிட்டிருந்தனர். அவர்களின் உடல்களும் முகமும் வெளிறிவிட்டிருந்தன. விழிகள் விழிநீர் ஒழிந்து வெறும் மலர்ச்சருகுகளெனத் தெரிந்தன.

அவர்கள் எவரும் அழுதுகொண்டிருக்கவில்லை. வெறித்த முகங்களில் எங்கிருக்கிறோம் என்னும் தன்னுணர்வே இருக்கவில்லை. பலரால் நடக்க இயலவில்லை என்பதை அவர் கண்டார். அவர்களை இருபுறமும் தோழியரோ சேடியரோ பற்றிக்கொண்டிருந்தனர். எவரேனும் நின்று சற்று தயங்குகையில் பிறரும் விரைவழிந்தனர். அப்பகுதியில் நிரை பிரிந்து  இடைவெளிவிட முன்னால் சென்றவர்கள் மெல்ல நின்று அவர்கள் வந்து சேர்வதற்காக காத்திருந்தனர். மீண்டும் இணைந்துகொண்டு நிரை வகுத்தனர். ஆடையின் ஓசை எவரோ மந்தணம் உரைப்பதுபோல் கேட்டது. காலடியோசைகள் வேறேதோ மொழியின் சொல்லாடல்கள் போல.

காந்தாரியும் சத்யவிரதையும் சத்யசேனையும் அருகணைந்தபோது கனகர் முன்னால் சென்று வாழ்த்துச் சொற்கள் இன்றி தலைவணங்கினார். காந்தாரி அவர் வருவதை அறியவில்லை. சத்யசேனை மெல்லிய குரலில் “பூசனைக்கான அனைத்தும் ஒருக்கப்பட்டுவிட்டனவா?” என்றாள். அவர் மெல்லிய தசையசைவால் ஆமென்று உரைத்தார். பின்னர் அணி நிரையிலிருந்து சற்றே விலகியபடி அவர்களை வழி நடத்தியபடி  அவர் நடக்க அவர்கள் உடன் வந்தனர். சரிந்த மண்  பரப்பில் அவர்கள் இறங்கிச் செல்வதற்காக மரப்பலகைகள் அடுக்கி வழி அமைக்கப்பட்டிருந்தது. அதனூடாக ஒவ்வொருவராக மிக மெல்ல இறங்கி கீழே சென்றனர். பூழிப்பரப்பில் அவர்கள் அமர்வதற்காக முற்றம் ஒருங்கியிருந்தது. அங்கே இருந்த ஏவற்பெண்டிர் எழுந்து அகன்று அவர்களுக்கு வழியமைத்தனர்.

அவர்கள்  ஆலயமுற்றத்தை அடைந்தபோது அங்கு களம் வரைந்துகொண்டிருந்த சூதப்பெண்கள் நிமிர்ந்து அவர்களை பார்த்தனர். அவர்களில் ஒருத்தி தனக்குள் என புன்னகை செய்வதைக் கண்டு கனகர் அஞ்சியதுபோல் கால்தளர்ந்து நின்றுவிட்டார். பிறிதொருத்தி  நிமிர்ந்து அவர்களை நேர்நோக்கி புன்னகைத்தாள். பின்னர் களம் வரைந்து கொண்டிருந்த ஏழு சூதப்பெண்களும் இளவரசியரையும் அரசியரையும் நோக்கி புன்னகைத்தனர். அக்களத்தில் எழுந்திருந்த வஜ்ரநாகினி தேவியின் முகத்திலும் அதே புன்னகை இருப்பதை கனகர் கண்டார். முதிய சூதப்பெண் அருகே வந்து சொல்லின்றி கையசைவால் அரசியர் எவ்வாறு எங்கே அமரவேண்டுமென்று சொன்னாள். அரைப்பிறை வடிவில் அரசியர் அமர அவர்கள் நடுவில் மூதரசி அமர்ந்தாள். அவள் அமர்வதற்கு மிகவும் இடர்ப்பட்டாள். பெண்டிர் அவளைப் பற்றி அவள் எடையை கைகளில் தாங்கி அமரவைக்க வேண்டியிருந்தது.

தன்னைச் சூழ்ந்திருந்த குருதிவாடை மிகுந்திருப்பதை உணர்ந்து கனகர் சுற்றிலும் பார்த்தார். மூக்கைச்சுளித்தபடி அரசியரையும் ஏவற்பெண்டுகளையும் நோக்கினார். ஒருவேளை வஜ்ரநாகினிக்கு ஊன்பலி கொடுத்திருப்பார்களோ என எண்ணினார். ஆனால் அது புதுக்குருதி மணம் அல்ல. சம்வகை புரவியிலிருந்து இறங்கி அவர் அருகே வந்தாள். “நான் தேர்க்கொட்டடிக்குச் சென்று மீண்டேன்” என்றாள். “எங்கிருந்து வருகிறது இந்தக்குருதிமணம்?” என்றார் கனகர். அவள் “அவர்கள் அனைவருமே குருதி வார்ந்துகொண்டிருக்கிறர்கள். பலருக்கு குருதிப் பெருக்கு மிகையாகவே உள்ளது என்றுபடுகிறது. இத்தருணத்தில் அவர்கள் மஞ்சத்திலிருந்து எழவே கூடாது” என்றாள்.

கனகர் “ஆனால் அவர்களின் உயிர்களை காப்பதற்கேனும் இச்சடங்கு தேவையாகிறது” என்றார். சம்வகை விழிகளைச் சுருக்கி அவர்களை பார்த்தாள். “இக்குடி முற்றழியலாகாது. ஒருதுளியெனும் இங்கே எஞ்சவேண்டும். தெய்வங்களிடம் அக்கோரிக்கையை முன் வைப்பதற்குத்தான் இப்பூசனை” என்று கனகர் மீண்டும் சொன்னார். அவள் தாழ்ந்த குரலில்  “இக்குடி வாழ்வதில் அவர்களுக்கு என்ன நன்மை?” என்றாள். கனகர் திகைப்புடன் அவளை திரும்பிப் பார்த்தார். “இக்குடி வாழும்பொருட்டே அவர்கள் வாழ்கிறார்களா என்ன?” என்றாள் சம்வகை. அவள் என்ன சொல்கிறாள் என்று அவருக்கு புரியவில்லை. “அவர்களை இங்கிருந்து அவர்களின் பிறந்த நாடுகளுக்கு அனுப்பலாம். அவர்களில் பெரும்பாலானவர்கள் நிஷாதர்களும் கிராதர்களும் மச்சர்களும்தான். அக்குடிகளில் கொழுநன் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள்ளேயே மறுமணம் செய்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் குடியை பெருக்கட்டும். மைந்தரால் பொலியட்டும். இங்கு இந்நகரில் ஏன் குருதிவீழ்த்தி உடல் நலிய வேண்டும்?” என்றாள் சம்வகை.

தன்னுள் எழுந்த பெருஞ்சினத்தை கனகர் உணர்ந்தார். ஆனால் உதடுகளை இறுக்கியபடி அசையாமல் நின்றார். அவள் கனகரிடம் “அவர்களில் எவரேனும் உடல் நலிந்து மறைந்தால் அப்பழியையும் அஸ்தினபுரி பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கும். அதை எண்ணுக!” என்றாள். கனகர் தன் உடலெங்கும் குருதி வடிந்து தோள்கள் தளர்ந்து மூச்சு குளிர்வதை உணர்ந்தார். இவளிடம் ஒரு சொல்லேனும் உகுக்கும் ஆற்றல் எனக்கில்லை. இவள் பேசுவனவற்றை நானே அங்கிருந்து பேசிக்கொண்டிருக்கிறேன் போலும். அவள் “பூசனைகள் விரைந்து முடியவேண்டும், அமைச்சரே. அப்பெண்களால் நெடும்பொழுது அமர்ந்திருக்க இயலாது. அவர்கள் தேரிலேயே அரண்மனை திரும்பட்டும். இங்கே தேர்கள் குறைவு. ஆகவே அஸ்தினபுரியில் எஞ்சியிருக்கும் அனைத்துத் தேர்களையும் இங்கு கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன். நகரிலும் சூழ்ந்திருக்கும் சிற்றூர்களிலும் இருக்கும் அனைத்து மருத்துவச்சிகளையும் அரண்மனைக்கு கொண்டு வரவேண்டுமென்றும் ஆணையிட்டிருக்கிறேன். பூசனை முடிந்து அரண்மனைகளுக்குச் சென்றதுமே அவர்கள் மஞ்சங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய முறையில் மருத்துவம் பார்க்கப்பட வேண்டும்” என்றாள்.

கனகர் புன்னகைத்து  “நன்று, ஆணையிட்டிருக்கிறாய் அல்லவா?” என்றார். அந்த இளிவரலை அவள் உணர்ந்து “கோட்டைக் காவலர்தலைவியாக ஆணையிடும் உரிமை எனக்குண்டு”என்றாள். கனகர்  “உனது ஆணைகளை இங்குள்ளோர் தலைமேற்கொண்டார்களென்றால் நீ ஆணையிடும் உரிமையை கொண்டிருக்கிறாய் என்றுதான் பொருள்” என்றார். அவள் அவர் சொன்னதென்ன என்பதை விழிசுருக்கி ஒருகணம் கூர்ந்து நோக்கி புரிந்துகொண்டபின் திரும்பிச்சென்று தன் புரவியில் ஏறிக்கொண்டாள். இவளிடம் ஒருபோதும் ஒரு சொல்லும் மீறிச்சொல்ல தன்னால் இயலாது என்று அவர் எண்ணிக்கொண்டார். இந்நகரில் எவரேனும் எதையேனும் அவளிடம் மறுத்துச் சொல்கிறார்களா என்று வியந்தார்.

 

கனகர் அங்கு நிகழும் பூசனைகளை நோக்க விரும்பவில்லை. அதிலிருந்து விலகி நெடுந்தொலைவு சென்று குருதிமணமில்லாத காற்றில் நின்றிருக்க வேண்டுமென்று விரும்பினார். இயல்பாகவே சில அடிகள் எடுத்து வைத்து மண்சாலையில் நடந்தபின்  நின்றார். கூர்ந்து  தரையை பார்த்தபோது நீர்த்துளிகள் உதிர்ந்திருப்பதுபோல் தோன்றியது. நீர்த்துளிகளா என்று உளம் வியந்தபோது அவை குருதியாக இருக்கலாம் என்று தோன்றியது. அவர் அவற்றில் கால் படாமல் சாலையின் ஓரமாக நகர்ந்தார். நீர்த்துளிகள்தான். அவர்கள் நீராடி வந்திருக்கலாம். கூந்தலில் இருந்து சொட்டியிருக்கலாம். ஆனால் இத்தனை தொலைவுக்கா? இளவெயிலில் வந்த வியர்வையாக இருக்கலாம். அல்ல, எனக்கு நன்கு தெரிகிறது. அவை கொழுவிய குருதித்துளிகள். செம்மண்ணில் உருண்டு அவை மணிகள் போலிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குழவி. ஒவ்வொன்றும் விழைவும் கனவுகளும் கொண்டெழுந்து மண் திகழவிருந்தது.

அவர் அருகிருந்த மரத்தை பற்றிக்கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். விழி தொடும் தொலைவு வரை நீண்டுகிடந்த செம்மண் பூழி பரவிய அந்தச் சாலையை மாறி மாறி நோக்கினார். பல்லாயிரம் உடல்கள் விழுந்த செந்நிறக் களம் அது. குருக்ஷேத்ரத்தைப் பற்றி சூதர்களும் ஒற்றர்களும் சொன்னவை அவர் உள்ளத்தில் எழுந்தன. இதுவும் குருக்ஷேத்ரம்தான் போலும். இவ்வண்ணம் நூறுநூறு போர்க்களங்கள் பாரதவர்ஷமெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஆறுகளும் ஓசைகளும் கடல் சேர்வது போல அவை அங்கு சென்று சேர்கின்றன. அங்கே நேற்றும் செத்துக்குவிந்தனர். இனியும் அங்கே இறந்து பரவி நிறைவர் மானுடர். இந்த செம்மண்பூழிக்களம்… பிறக்காதவர்கள் போரிட்டு மடிந்து விழுந்த நிலம் இது.

அவர் மீண்டும் திரும்பி சடங்கு நடக்குமிடத்திற்கே வந்தார். அங்கு நின்றால் புறத்தே நிகழ்வனவற்றை விழிகள் தொட்டுத்தொட்டு அள்ளிக்கொள்கின்றன. புறத்தே நிகழ்வதை உள்ளம் முற்றாக புறக்கணிக்க முடிவதே இல்லை. எவ்வண்ணமோ அது உளப்பெருக்கை தடைசெய்கிறது. ஒழுங்குபடுத்துகிறது, ஆற்றுப்படுத்துகிறது. புறத்தே ஒன்றும் நிகழாதிருக்கையில் உள்ளம் அனைத்து எல்லைகளையும் மீறி பரவி பித்துகொள்கிறது. களத்தில் முரசு முழங்கியது. உறுமி தேம்பிக்கொண்டிருந்தது. உடன் ஒலித்தன குடமேளங்கள். இலைத்தாளங்கள் அதிர்ந்தன. அவ்வோசை அலறல் எனவும், கதறல் எனவும், உறுமல் எனவும், தேம்பல் எனவும், விம்மல் எனவும், முனகல் எனவும், ஓலம் எனவும் ஒலித்தது. இணைந்து ஒற்றைப் பெருங்குரலென நிறைந்திருந்தது.

கருவறைக்குள் இருந்த தெய்வம் செம்மலர்களால் முழுமையாக மூடப்பட்டிருந்தது. அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த பூசனையை அவர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அனைத்துப் பூசனைகளும் ஒன்றே. அசைவுகளில் நுண்சொற்களில் சில மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைத்து தெய்வப் பூசனைகளும் ஒன்றே. அது பசிகொண்டு நா சுழற்றி உறுமியபடி எழுந்து வரும் வேங்கையின் முன் பணிந்து உடலீந்து தன் குடியினரை விட்டுவிடும்படி இரக்கும் சிற்றுயிரொன்றின் மன்றாட்டு மட்டுமே. தன்னளிப்பில்லாத பூசனை எதுவுமில்லை. பூசனை என்பது ஓர் அடிபணிதல் அன்றி வேறேதுமல்ல.

பூசனையினூடாக தன் ஆணவத்தை மண்ணோடு பரப்பிக்கொள்கிறார்கள். நான் என்பது இல்லை, நான் எவருமில்லை, எனக்கினி எதுவுமில்லை என்கிறார்கள். இன்னும் கூறுக, இன்னும் அடிபணிக, ஒரு துளி எஞ்சாதொழிக என்கின்றன தெய்வங்கள். ஒருதுளியுமில்லை, இங்கு வாழ்வதற்குரிய ஒரு துளியன்றி வேறெதுவுமில்லை என்கிறார்கள். எச்சமின்றி, ஓர் அணுவும் எச்சமின்றி என்கின்றன தெய்வங்கள். பணிந்து மேலும் பணிந்து பணிவையே குறுக்கி சுருக்கி துளியென்றாக்கி முன்னால் விழுந்து கிடக்கிறார்கள். பணிந்தவன் மேல் பேருருக்கொண்டு எழுகின்றன தெய்வங்கள். குனிந்து நோக்கி நீ இப்பணிவை என்றும் கொள்க என்கின்றன. முன்பு நீ நிமிர்ந்தாய் அல்லவா அதனால்தான்  என்கின்றன. இனி நீ நிமிரக்கூடும் என்பதனால்தான் என்கின்றன. தெய்வங்களுக்கு மனிதரை முழுமையாக தோற்கடித்து எழுகையிலேயே தெய்வத்தன்மை கை கூடுகிறது.

அருவருப்புடன் அவர் விழிதிருப்பிக்கொண்டார். தெய்வங்களிடமிருந்து அரசர்கள்முன் வருகிறார்கள். அங்கும் அதே போல பணிந்து வழிபடுகிறார்கள். பின்னர் முனிவர்கள். அதன்பின் அந்தணர். அதன்பின் சான்றோர். அதன்பின் மூத்தோர். தந்தை, கணவன்…  பணிந்து பணிந்து, அளித்து அளித்து, எச்சமின்றி ஆகி இவர்கள் அடைவதென்ன? வெறும் இருத்தல். வெறும் இருத்தலுக்காக இருத்தலையே இறுதித் துளி வரை அளித்து மீள்கிறார்கள். வழிபட்டு மீள்பவர்களின் கண்களில் இருக்கும் விடுதலையை அவர் எப்போதும் பார்த்ததுண்டு. எதிலிருந்து விடுதலை? அது பெற்றதனால் வரும் விடுதலை அல்ல. அளித்ததனால் வரும் விடுதலை. தான் என்பதை அளித்து விடுகிறார்கள் போலும். அது தன்னதென்று எதுவும் எஞ்சாமையின் விடுதலை போலும்.

ஆண்களைவிட பெண்களே மேலும் நன்றாக வழிபடுகிறார்கள். ஆண் வழிபடும்தோறும் பெண்ணென்றாகிறான். பெண்கள் முற்றிலும் இன்மையை அடைந்து மீள்கிறார்கள். அங்கிருக்கும் ஒவ்வொரு இளவரசியின் முகத்தையும் அவர் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் கைகூப்பி  விழிநீர் வடித்து தோள்குறுக்கி தலை தாழ்த்தி அமர்ந்திருந்தனர். பலர் பிறிதொருவர் மேல் சாய்ந்து உடலதிர அழுதுகொண்டிருந்தனர். காந்தாரியின் கண்களில் நீலத்துணி நனைந்து நீர் வழிந்தது. ஆனால் அவளுடைய வெண்ணிற முகமும் உடலும் அந்தக் காலையொளியில் மிளிர்வுகொண்டிருந்தன. ஒரு மாபெரும் வெண்தாமரைபோல. ஆம், அதுவே சரியான ஒப்புமை. இந்நீர்த்துளிகள்கூட அதற்கு அழகே. என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்! பித்தன் போல. ஆம், பித்தேதான்.

கருவறைக்குள்ளிருந்து பூசகி கையில் செம்மலர்கள்களுடன் வீறிட்டலறியபடி பாய்ந்து வெளியே வந்தாள். அம்மலர்களை அள்ளிஅள்ளி அரசியர் மேல் வீசினாள். இருகைகளையும் விரித்து வெறியாட்டு கொண்டு துள்ளத்தொடங்கினாள். அக்கணம் சென்று தொட்டு பற்றிக்கொள்ளச்செய்ய களம் வரைந்துகொண்டிருந்த ஏழு சூதப்பெண்கள் தாங்களும் வெறியாட்டு கொண்டனர். தலைமுடியைச் சுழற்றி அங்கிருந்த மலர்க்களத்தை அழிக்கத்தொடங்கினர். ஏழு மூலைகளிலிருந்தும் அவ்வோவியம் தன்னைத்தானே கலைத்து வெறும் வண்ணங்களாக ஆக்கிக்கொண்டது. அவர் நோக்கியிருக்கையில்  முற்றாக கரைந்து மறைந்தது. அவ்வண்ணங்களின்மேல் விழுந்து நெளிந்து வலிப்பு கொண்டு ஏழு பெண்டிரும் துள்ளி ஆர்ப்பரித்துச் சுழன்றனர்.

பூசகி பாய்ந்து ஓடி கருவறைக்குள் புகுந்தாள். அங்கிருந்து அவள் உரத்த குரலில் “பேரரசி வருக! பேரரசி இங்கணைக!” என்றாள். சத்யசேனை காந்தாரியைப் பற்றி தூக்கமுயல  “வேண்டாம்” என அவள் விலக்கினாள். காந்தாரி நடந்து கருவறையை அடைந்து முழந்தாளிட்டு அதன் படிகளுக்குக் கீழே அமர்ந்தாள். உள்ளிருந்து பூசகி எழுந்து காந்தாரியின் தலைமேல் கைவைத்தாள். அவள் கைகள் குருதியால் மூடியிருந்தன. காந்தாரியின் வெண்ணிறக் கழுத்திலும் தோளிலும் கோடென இறங்கியது குருதி. காந்தாரியின் தலையை இழுத்து தன் வாயருகே கொண்டு வந்து அவள் செவியில் அவள் ஏதோ சொன்னாள். காந்தாரி கைகளை கூப்பிக்கொண்டாள். தலைகுனிந்து விழிகள்மூடி ஊழ்கத்தில் என அமர்ந்து அதை கேட்டாள்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 12

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 6

களம் ஒருங்கி வஜ்ரநாகினியின் உருவம் முழுமையாகவே எழுந்துவிட்டிருந்தது. அதை மலர்களில் அமைப்பது ஏன் என கனகர் எண்ணிக்கொண்டார். அவள் காட்டில் விரிந்த மலர்ப்பரப்பில் இயல்பான வண்ணங்களாக தோன்றியிருக்கக்கூடும். ஒரு மெல்லிய சாயலாக. அதைக் கண்ட யாரோ ஒரு மூதன்னை அதை மீண்டும் தன் கைகளால் களமுற்றத்தில் அமைத்திருக்கக்கூடும். தொல்நாகர் குலத்து அன்னை. வஜ்ரநாகினி அன்னை புவியின் உயிர்க்குலங்கள் அனைத்தையும் படைத்த முதலன்னை கத்ருவின் மகள் குரோதவசையின் மகளான புஷ்டியின் நூற்றெட்டு மகள்களில் ஒருத்தி. கருக்குழவிகளை காப்பவள். கருவறைக்குள் சிறிய நாகக்குழவியெனச் சென்று தானும் உடனிருந்து அவற்றுடன் விளையாடுபவள். கருவுற்ற பெண்கள் அவளை கனவில் காண்கிறார்கள். எட்டு மாதம் கடந்த பின் அசைவென அவளை வயிற்றில் உணர்கிறார்கள்.

பத்து தலைகொண்ட நாகங்களின் பீடத்தில் அன்னை சுருளுடல் படிந்து அமர்ந்திருந்தாள். பாரதவர்ஷமெங்கும் மகவுப்பேறுக்குரிய தெய்வங்கள் அனைத்தும் நாகங்களே. பேராலயங்களின் புறச்சுற்றில் கல்பீடத்தில் அவை அமர்த்தப்பட்டுள்ளன. விண்ணளந்தோனும் விடமுண்டவனும் கதிரோனும் மின்னோனும் மைந்தனும் கரிமுகனும் மூவன்னையரும் அங்கே கோயில்கொண்டு அமர்ந்திருந்தாலும் அன்னையரும் கன்னியரும் நாகங்களை வணங்காது கடந்துசெல்வதே இல்லை. நாகங்களை மட்டும் வணங்கி மீள்பவர்களும் உண்டு. நாகபஞ்சமி நாளில் பிறிதொரு தெய்வத்தை எண்ணவும் கூடாதென்கின்றன நெறிகள். பிறவிநூலில் நாகக்குறை இருக்குமென்றால் அது காமத்தில், கருவுறுதலில், குடிப்பெருகுதலில் தீங்கென வெளிப்படும் என்று நிமித்திகர் கூறுகிறார்கள்.

இப்புவியே ஒருகாலத்தில் நாகங்களால் நிறைந்திருந்தது என்று சொல்லும் நூல்களை அவர் படித்திருந்தார். அவையன்றி வேறு உயிர்களே இல்லை. அன்று ஆண் என்று எவருமில்லை. நாகங்கள் அனைத்தும் ஆண்களே. அவை தங்களுடன் தாங்களே விளையாட தங்கள் வால்முனைகளை ஆண்களாக்கிக்கொண்டன. வால்களை வாயால் கவ்வி விழுங்கி தங்களைத் தாங்களே புணர்ந்தன. அவ்விளையாட்டின் விளைவாக தங்களுள் ஊறிய தனியுணர்வுகள் சிலவற்றை ஆண்களுக்கு அளித்தன. அவ்வியல்புகள் கூர்கொண்டு திரண்டு விலங்குகள் ஆயின. பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் ஆயின. மானுடர் ஆயின. நிமிர்வு யானையாகியது. சீற்றம் சிம்மம் ஆகியது. நிலைகொள்ளாமை குரங்காகியது. சுடர்வு பருந்தாகியது. தண்மை மயிலாகியது. அவை நாகங்களுடன் புணர்ந்து மேலும் விலங்குகளை ஆக்கின. விலங்குகள் பெருகிப்பெருகி நாகங்களை வென்றன. அவற்றுடன் பொருதி வெல்ல நாகங்களால் இயலவில்லை. ஏனென்றால் அவையனைத்துமே நாகங்களின் குழவிகள்.

மானுடனாகியது எது? ஞானமுழுமைக்கான தேடலே மானுடனை நாகங்களில் இருந்து உருதிரட்டி எழச்செய்தது என்று நூல்கள் கூறின. அறிவை உணர்ந்ததுமே அறியாமையை கண்டடைந்தான். கனிவை அறிந்ததும் கசப்பை. பணிதலை உணர்ந்ததும் சீற்றத்தை. மானுடன் எப்போதும் நாகமென தன்னை உணர்ந்தபடியும் இருக்கிறான். ஆகவேதான் துயர்களில் சுருண்டுகொள்கிறான். வலியில் நெளிகிறான். துயரில் துவள்கிறான். உவகையில் குழைந்தாடுகிறான். மானுடப்பெண்கள் அனைவரும் நாகினிகளே. பெண்ணில் அவள் ஆழமெழுகையில் அவள் நாகமாகிறாள். விழிவெறித்து உடல்மெழுக்குகொண்டு நெளிய மூச்சு சீறி எழுகிறாள். நாகங்களையே ஆண்கள் புணர்கிறார்கள். நாகங்களுடன் போரிடுகிறார்கள். நாகங்களை வென்று நிலைகொள்கிறார்கள். செயலற்றவர்களாக நாகங்களிடமே மன்றாடவும் செய்கிறார்கள்.

சிற்றமைச்சர் சூரியசேனர் விரைந்து வந்து கனகரிடம் “அரசியர் அரண்மனையிலிருந்து கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்கள் புறப்பட்டுவிட்டன” என்றார். கனகர் சீற்றத்துடன் அவரை நோக்கி பற்களைக் கடித்தபடி  “அரைநாழிகைக்கு ஒருமுறை எவரேனும் என்னிடம் வந்து இதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்… அவர்கள் கிளம்பிவிட்டார்களா என்று எவரேனும் பார்த்தார்களா?” என்றார். சூரியசேனர் விழிகளிலும் சீற்றம் தெரிந்தது. ஆயினும் தணிந்த குரலில் “நான் எனக்கு கூறப்பட்டதைத்தான் இங்கு கூற முடியும். உரைக்க வேண்டியதில்லை என்று ஆணையிலிருந்தால் அதை கூறுக!” என்றார்.

கனகர் துயில்நீப்பால் சிவந்த விழிகளால் அவரை பார்த்தார். அவர் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகளை மடித்து கடித்திருந்தார். சூரியசேனரும் தன் விழிகளை விலக்கவில்லை. மிக இளையவர். முகத்தில் தாடி மென்மையாக படிந்திருந்தது. பெண்களுடையவை போன்ற உதடுகள். ஒளி ஊடுருவும் காதுமடல்கள். மார்பில் அகல்விளக்கின் மேல் கரி படிந்ததுபோல் கரிய மயிர்த்தீற்றல். அவர் சாதுவனை நினைவுகூர்ந்தார். அவரால் இளம் அகவை கொண்டவர்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு பழக முடிவதில்லை. சில தருணங்களில் மிகைநெகிழ்வு, சிலதருணங்களில் அதை மறைக்கும் பொருளிலாச் சீற்றம்.

கனகர் பெருமூச்சுடன் தளர்ந்தார். “செய்யும் பணியை முறையாகச் செய்க… சொல்லொடு சொல் நிற்பதற்கு அமைச்சுத்தகுதி வேண்டியதில்லை” என வேறெங்கோ நோக்கியபடி சொன்னார். மேலும் கூர்மையாக ஏதேனும் சொல்லலாம் என்று எண்ணினார். ஆனால் சொல்லவேண்டிய சொற்கள் எவையும் எழவில்லை. அவர் உள்ளம் களைத்து துவண்டிருந்தது. அத்துடன் தன்  சீற்றத்தின் பொருளின்மையும் அவருக்கு எப்போதும் தெரிந்துகொண்டுதானிருந்தது. சற்று முன்பு வரை அரசியர் அங்கிருந்து கிளம்பவில்லை என்ற செய்திதான் அவருக்கு வந்துகொண்டிருந்தது. “கிளம்பிவிட்டார்களா இல்லையா? அங்கே என்ன செய்கிறார்கள் அமைச்சர்கள்?” என அவர்தான் ஏவற்பெண்டிடம் கூச்சலிட்டார்.

எந்நிலையிலும் எவரிடமும் சீற்றம் கொள்பவராக அவர் ஆகிவிட்டிருந்தார். அச்சீற்றம் பொருட்களின்மீது கூட திரும்பியது. அன்று காலையில்கூட அவர் ஒரு கலத்தை தூக்கி வீசி உடைத்தார். ஏவலனை வசைபாடி கையோங்கி அறையச் சென்றார். அவரிடம் பேசவே ஏவலர் அஞ்சினர். அவர் அறைகளுக்குள் நுழைந்ததும் பேச்சை நிறுத்திவிட்டு காத்திருந்தார்கள். கனகர் எவரிடமென்றில்லாமல் “அறிவிலிகள்!” என்று உறுமிவிட்டு  திரும்பி ஆலயத்தை நோக்கி சென்றார். செல்லும் வழியிலேயே வாயில் ஏதோ புகுந்ததுபோல் இரு பக்கமும் துப்பிக்கொண்டார்.  அவர் காலில் கல் ஒன்று இடறியது. காலில் அணிந்திருந்த குறடு அப்பால் தெறித்தது. அவர் வலியுடன் பல்லைக் கடித்தபடி நின்றார்.

அருகே நின்ற ஏவல்பெண்டு ஓடிவந்து கால்குறடை எடுத்து அவர் காலில் அணிவிக்க குனிய அவர் “உம்” என அவளை விலக்கினார். அவள் அவ்வொலியின் பொருள் புரியாமல் மீண்டும் குறடை அவர் காலடியில் அணிவிக்க முயல கனகர் “விலகு…” என்றார். அவள் அதை அவருடைய சினமாக எடுத்துக்கொண்டு முகம் சுருங்கினாள். “நான் ஷத்ரியன் அல்ல. அந்தணர் மனைவி மைந்தர் மாணவர் ஆகியோரிடமிருந்து அன்றி பிறரிடமிருந்து ஏவல்பணியை பெற்றுக்கொள்ளலாகாது…” என்றார். அவள் தலையில் கைவைத்து “மைந்தர் பெருகுக!” என்றார். அவள் விசும்பி அழுதபோதுதான் அவர் அவளை பார்த்தார். நாற்பது அகவைக்குமேல் சென்ற பேரிளம்பெண். மெலிந்து வறண்ட உடலும் குழிந்த விழிகளும் கொண்டிருந்தாள்.

தான் ஏன் அதை சொன்னோம் என அவருக்கு திகைப்பு எழுந்தது. ஆனால் அவள் தலையை பிறிதொரு முறை தொட்டு “என் நாவில் ஏன் அச்சொல் எழுந்தது என அறியேன். ஆனால் அது அந்தணன் வாழ்த்து, அதை கடைக்கொள்ளவேண்டியவை அவன் வணங்கும் தெய்வங்கள். நீ மக்களால் சிறப்பாய், குடிமுதல் அன்னையென அமைவாய்…” என்றார். அவள் விசும்பி அழுதுகொண்டிருந்தாள். கொழுநனை இழந்தவள் எனத் தெரிந்தது. மைந்தரையும் இழந்திருக்கக்கூடும். “அவர்கள் மீண்டு வருவார்கள், பெண்ணே. நீ ஒரு வாயில் அவர்களுக்கு. அதை நினைவில்கொள்க!” என்றபின் மூன்றாம்முறை அவள் தலையைத் தொட்டு வாழ்த்தியபின் நடந்தார்.

புரவியில் வந்திறங்கிய பிறிதொரு சூதக் காவல்பெண்டு “அரசியர் அணுகிக்கொண்டிருக்கிறார்கள், அரண்மனை முகப்பை கடந்துவிட்டனர்” என்றாள். அதுவரைக்கும் அவர்கள் தேரில்தான் வந்துகொண்டிருக்கிறர்கள் என்ற உளப்பதிவு கனகரிடம் இருந்தது. அப்பதிவு ஏன் தன்னுள் உருவாயிற்று என்று அவர் வியந்தார். அவர்கள் தேரில் வரவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். தேரில் வரலாகாது என்ற ஆணையை அவர்தான் அளித்திருந்தார். நடந்து வரவேண்டும் என முதுநாகினி ஆணையிட்டிருந்தாள். அவர் மேலாடையை சீரமைத்தபடி சரிவில் ஏறிச்சென்று பெருஞ்சாலையிலிருந்து மண்பாதை பிரியுமிடத்தில் நின்றார். அள்ளிக்கொட்டிய பச்சைச்செம்மண் பரவிய பாதை உருவி நீட்டிபோட்ட குருதிக்குடல்போல கிடந்தது. அதில் நூற்றுக்கணக்கான காலடிகள் பதிந்திருந்தன.

தொலைவில் ஒரு புரவிவீரன் சீரான விசையில் வருவது தெரிந்தது. அவர் அருகே வந்து புரவியை நிறுத்தி கால் சுழற்றி இறங்கி அவரை அணுகி  “அரசியர் அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இச்சாலையை  இறுதியாக ஒருமுறை பார்த்துவிடலாம் என்று வந்தேன்” என்றான். அது பெண் என்பதை அவர் கண்டார். எங்கோ அறிந்த முகம். “உன் பெயர் என்ன?” என்றார். சம்வகை “நான்தான், அமைச்சரே” என்றாள். அவர் “ஆம், நீதான்…” என்றபின் “இச்சாலையை காக்கவேண்டுமென்பதில்லை. இங்கு அரசியரை வாழ்த்துவதற்கும் வசைபாடுவதற்கும் எவருமில்லை” என்றார். “என் பொறுப்பு எதுவோ அதை பழுதின்றி ஆற்றுவது என் இயல்பு” என்று அவள் மீண்டும் சொன்னாள். சிறிய புன்னகையுடன் மீண்டும் புரவியிலேறி திரும்பிச்சென்றாள்.

அவர் அவள் செல்வதை நோக்கிக்கொண்டு நின்றார். தீர்க்கசியாமர் மீண்டும் ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தில் அமர்ந்துவிட்டாரா என அறிய விழைந்தார். ஆனால் அவள் விழிகளிலிருந்து மறைந்திருந்தாள். ஓசைகள் எதுவும் எழவில்லை. ஆனால் சாலையிலிருந்து காகங்கள் சில பறந்து அகன்றன. புரவிகள் திரும்பி நோக்கின. மீண்டும் அவள் சாலையின் எல்லையில் தோன்றினாள். அவள் சீரான விசையில் உடல் பெருக அணுகிவந்தாள். அவளுக்குப் பின்னால் தொலைவில் ஏழு சேடியர் கையில் மலர்த்தாலங்களுடன் வருவதை அவர் கண்டார். அவர்களுக்குப் பின்னால் ஒரு விறலி கையில் சங்குடன் வந்தாள். அவர்கள் அனைவருமே இளஞ்செந்நிற ஆடை அணிந்திருந்தனர். மலைவெள்ளம் அணுகுவதுபோல என அவர் எண்ணினார்.

சேடியரின் அணிநிரைக்குப்  பின்னால் காந்தாரி வருவதை கனகர் கண்டார். காந்தாரி அவ்வாறு நடக்க இயலுமென்பதையே  அவர் முன்பு கற்பனை செய்திருக்கவில்லை. அரண்மனையில் இடைநாழியில் நடக்கையில்கூட இருபுறமும் உடன்பிறந்த அரசியர் அவளை தோள்பற்றி எடைநிகர் செய்வதுண்டு. அவள் கால்கள் மிகச் சிறியவை. அப்பேருடலின் எடையை அவை தாங்குவதில்லை. இரு கைகளையும் சிறகுகள்போல சற்றே விரித்து காற்றில் துழாவி அவள் நடக்கையில் ஒரு திரைச்சீலை ஓவியம் காற்றில் நின்று நெளிவதாகவே தோன்றும். அவள் ஓர் இடைநாழியை கடப்பதற்கு கால் நாழிகைப்பொழுது தேவைப்படும். அவள் நடப்பதை நோக்கி நிற்கையில் உள்ளம் பலமுறை  நடந்து இலக்கை எய்தி பின் திரும்பி வந்து அவளுக்காக சலித்துக் காத்து நிற்பதாகத் தோன்றும்.

ஆனால் அப்பொழுது அவள் உறுதியான காலடிகளுடன், சீரான விசையில் வந்துகொண்டிருப்பதை கண்டார். பிடியானையின் நடை. அவள் கைகள் இரண்டும் சீராக அசைந்து அவள் உடலை முன் செலுத்தின. துதிக்கையை நீட்டி நீட்டி தலையை தொட்டுத் தொட்டெடுத்துச் செல்லும் யானைபோல.  அவளைத் தொடர்ந்து வந்த உடன் பிறந்த அரசியரும் அதேபோல சீர்நடை கொண்டிருந்தனர். அவர்கள் முகங்கள் தொலைவிலிருந்து பார்க்கையில் பாவைகளென உணர்வுகளற்றுத் தெரிந்தன. அவர்களுக்குப் பின்னால் பானுமதியும் அசலையும் வந்தனர். கௌரவஅரசியர் அவர்களுக்குப் பின்னால் நான்கு நிரைகளாக வந்துகொண்டிருந்தனர். அவ்வரிசையின் மறுஎல்லை சாலைவளைவுக்கு அப்பால் சென்றிருந்தது.

மகாநிஷாதகுலத்து அரசியர் ஒழிய பிறர் அங்கு வந்திருக்கிறார்கள் என்று கனகர் உணர்ந்தார்.  அங்கு அரண்மனையில் சாளரத்தருகே பித்தெழுந்த விழிகளுடன் அமர்ந்திருக்கும் மகாநிஷாதகுலத்து இளவரசியரை நினைத்துக்கொண்டார். அவர்கள் கருவுற்றிருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து கௌரவமைந்தரின் இளந்துணைவியர் வரத்தொடங்கினர். பெரும்பாலானோர் சிறுமியர். ஓரிருவர் பன்னிரு அகவை கூட அமையாதவர். போர் அறிவித்த பின்னர்தான் கௌரவமைந்தருக்கு மணநிகழ்வுகள் நடந்தன. பல்வேறு குடிகளிலிருந்து பெண்டிர் பரிசில் பணம் கொடுத்தும் நிகர்ச்சடங்குகள் செய்தும் கொள்ளப்பட்டனர். எஞ்சிய கௌரவமைந்தர்கள் சிறுகுழுக்களாகச் சென்று பெண் கவர்ந்து வந்தனர். படைகள் போருக்கு எழுவதற்கு முந்தையநாள் இரவில்கூட நாற்பத்தொன்பது கௌரவமைந்தருக்கு மணநிகழ்வு  ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ஆறு மாதங்களுக்குமுன் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் போர் நிகழக்கூடும் என்ற சூழல் இருந்தபோது கௌரவமைந்தரில்  போருக்குச் செல்லும் அனைவரும் மணம்புரிந்தாகவேண்டும் என்று அந்தணர் கூறினர். போர்ப்பயில்கை முடித்து கூந்தல் திருத்தி குண்டலமணிந்து வாளுரிமை பெற்ற பின்னரே போருக்குச் செல்ல முடியுமென்பது ஷத்ரிய நெறி. கௌரவமைந்தருக்கு மகளிரை அளிக்க அப்போது ஷத்ரிய அரசர்கள் போட்டியிட்டனர். போர் அணுகுந்தோறும் அவ்விசை குறைந்தது. இளைய அரசர்களுக்கு பெண்களை அளிக்க  ஷத்ரியர் எவரும் ஒருங்கவில்லை. எவ்வண்ணமாயினும் போர் அணுகிக்கொண்டிருக்கிறது, போருக்குப்பின் உரிய சடங்குகளுடனும் களியாட்டுகளுடனும் அந்த மணநிகழ்வை நிகழ்த்துவதே சரியாகும் என்ற மறுமொழியே வந்தது. “நம் மைந்தர் களம் மீளமாட்டார்கள் என எண்ணுகிறார்களா?” என்று துச்சாதனன் கூச்சலிட்டான். “அவர்கள் நிமித்திகரை உசாவியிருப்பார்கள்” என்றார் விதுரர். துச்சாதனன்  சொல்லடங்கி வெறுமனே நோக்கிவிட்டு கைவீசி அப்பேச்சை ஒழிந்தான்.

ஆயிரத்தவரில் இறுதி மைந்தனாகிய சுபத்ரனுக்கு பதினாறு அகவை ஆகியிருந்தது. பதினெட்டு அகவை நிறையாதபோது முடிகளைந்து குண்டலமணிந்து வாள் கைக்கொள்ளும் வழக்கமில்லை என்று படைக்கலம் பயிற்றுவித்த கிருபரின் மாணவர் சுகிர்தர் சொன்னார். “நான் முடிவெடுத்துவிட்டேன்.  போருக்குச் செல்லாது ஒழியப்போவதில்லை. உடன்பிறந்தார் போருக்குச் செல்ல நான் மட்டும் இங்கு எஞ்சினேன் எனில் அது சாவை விடக்கொடியது எனக்கு” என்று அவன் சொன்னான். கிருபர் “அவன் படைக்கலம் கொள்ளட்டும். அகவை நிறையாவிடினும்  மைந்தன் சொல்லுறுதி கொள்வானெனில் வாள் கொள்ளலாம் என்ற நெறி நூல்களில் உள்ளது” என்றார். “என் உள்ளம் உறுதிகொண்டிருக்கிறது. நான் படைக்கலம் எடுத்து களம்புகுவேன். மூத்தோரும் ஆசிரியரும் வாழ்த்தி நான் சென்றால் நன்று” என்றான் சுபத்ரன்.

வாளேற்புச் சடங்குகள் முடிந்தபின் அவனும் நான்கு உடன்பிறந்தவர்களுமாக கிளம்பிச்சென்று மச்சர் குலத்திலிருந்து பெண்களை கவர்ந்துகொண்டு வந்தனர். அது மெய்யான பெண்கவர்தல் அல்ல என்று அனைவரும் அறிந்திருந்திருந்தனர். அவர்கள் கொள்ள வேண்டிய பெண்களை மட்டும் நீர்வெளிக்கு மீன்கொள்ள அனுப்பிவிட்டு பிற பெண்களை தங்கள் குடில்களுக்குள் ஒளித்துவைத்தனர் மச்சர். முலை குவியாத சிறுமியரான அப்பெண்கள் முதிய பெண்டிருடன் தனிப்படகில் மீன் கொள்ள  வந்தார்கள். அவர்களில் இளையவளாகிய சந்திரைக்கு பன்னிரு அகவை. அவளுக்கு நிகழவிருப்பது என்னவென்று அவள் அறிந்திருக்கவில்லை. மெல்லிய எடைகொண்ட விரைவுப்படகுகளில் வந்த கௌரவமைந்தர்கள் அம்புகளால் அம்மீன்படகின் பாய்மரத்தைக் கிழித்து அதை திசையழியச் செய்து பறந்தணைவதுபோல அதை அணுகி அச்சிறுமியை தோள்பற்றித் தூக்கி தங்கள் படகில் எடுத்துக்கொண்டனர். பிற பெண்கள் கூச்சலிட்டனர். அவர்களை வேல்காட்டி அச்சுறுத்தி  தங்கள் படகில் வரச்செய்தனர்.

சந்திரை கூச்சலிட்டு கதறி அழுதபோது வாயை துணியால் கட்டி கைகளை பின்புறம் பிணைத்து படகில் இட்டனர். அஸ்தினபுரிக்கு வந்து இறங்கும்போது அவள் மயங்கிவிட்டிருந்தாள். அரண்மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆலயத்தில் அவளை இறக்கி அங்கே மணம் புரிந்துகொண்டான் சுபத்ரன். மயங்கி விழுந்த பெண்ணை கொண்டுசென்று அரண்மனை சேர்த்தபோது அரண்மனைப்பெண்டிர் வாயிலில் கூடி நின்று குரவையொலி எழுப்பினர். அரசியர் உரக்க நகைத்துக்கொண்டிருந்தனர். தன்னினைவு கொண்ட இளவரசி  எழுந்தமர்ந்து அனைவரையும் நோக்கி மீண்டும் அஞ்சி கூச்சலிட்டு அழத்தொடங்கினாள். சுபத்ரனின் அன்னை சாந்தை வந்து அவள் தோள் பற்றி “அஞ்சாதே, நீ அரசியாகிவிட்டிருக்கிறாய். அஸ்தினபுரியின் மைந்தனின் துணைவி நீ. உன் குடி இங்கு நிலைகொண்டு வாழும். உன் குருதியிலிருந்து அரசகுடி பிறக்கும்” என்றாள். அச்சொற்களை அவள் உள்வாங்காமல் மீண்டும்  மீண்டும் கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்தாள். அவளைப் பற்றி தூக்கி உள்ளே கொண்டுசெல்கையில் மீண்டும் நினைவழிந்து நிலத்தில் சரிந்தாள். அன்னையும் சேடியருமாக அவளை தூக்கிக்கொண்டனர்.

அரசியரைத் தொடர்ந்து  வந்துகொண்டிருந்த இளவரசியர் நிரையில் அவள் இருக்கிறாளா என்று கனகர் விழிகளால் துழாவினார். அவளை இறுதி நிரையில் கண்டுகொண்டார். இரு பெண்களால் தாங்கப்பட்டவளாக, ஆற்றல் இழந்த உடல்  துணிப்பாவைபோல் தொய்ந்து இழுபட, அவள் வந்துகொண்டிருந்தாள். அவள் கால்கள் அவ்வப்போது தரையில் உரசி இழுபடுகின்றன என்று கண்டார். அவள் பெயரென்ன என்று தன் உள்ளத்தை துழாவினார். சித்திரை, சில்பை, அல்ல சிவதை… சிவாங்கியா?  பின்னர் அதை கைகளால் தொடுவதுபோல் அசைத்து விலக்கினார். அப்பெயரை ஒருபோதும் சென்றடையமுடியாது. எந்தப் பெயர் கூறினாலும் ஆயிரத்தவரின் துணைவியர் அப்பெயரில் இருப்பார்கள் என்ற இளிவரல் அரண்மனைச் சூழலில் உண்டு. அப்பெயர்கள் எவருக்கேனும் நினைவிருக்குமா? காந்தாரியோ பானுமதியோ எண்ணிச்சொல்லிவிடமுடியுமா?

அவர்களின் கொழுநர் அறிந்திருப்பார்கள். அப்பெயரை நெஞ்சிலேற்றிச் சென்றிருப்பார்கள். போரில் களம்படும்போது சிலர்  அதை சொல்லியிருப்பார்கள். அறுதியாக எண்ணி நெஞ்சை பற்றிக்கொண்டிருப்பார்கள். இப்பொழுது இவ்வாயிரம் பேரில் நுண்வடிவில் அவர்களும் வந்துகொண்டிருப்பார்களா? தங்கள் துணைவியரை விட்டுப் பிரிந்ததை இப்போதுதான் முழுத் துயருடன் உணரத்தொடங்கியிருப்பார்கள். போருக்குச் செல்கையில் அவர்கள் அத்துணைவியரை திரும்பியும் பார்க்கவில்லை. அவர்கள் அனைவரும் களியாடிக்கொண்டிருந்தனர். கூச்சலிட்டு ஆர்ப்பரித்து காற்றில் படைக்கலங்களை வீசி நடனமிட்டனர். கரிய முகங்களில் வெண்ணிறப் பற்களும் வெண்விழிகளும் முற்றம் நிறைத்து தென்பட்டன. அது முன்புலர்காலை. கைகளில் சிற்றகல்களுடன் ஆயிரம் இளவரசியரும் அவ்வீரர்களின்  நூறுஅன்னையரும் அரண்மனை முற்றத்தில் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் கொழுநரை நோக்கிக்கொண்டிருந்தனர். கொழுநர்களோ அவர்களை ஒற்றைத் திரளென, ஒளிவிளக்குகளின் நிரையென மட்டுமே கண்டனர்.

அவர்கள் ஒற்றை உடலெனத் திரண்டவர்கள். ஒற்றை உள்ளமென்றானவர்கள். அவர்களில் ஒருவன்கூட தனியெண்ணம் கொண்டு தன் துணைவியை எண்ணியிருக்க வாய்ப்பில்லை. முன்னால் நின்றிருந்த துருமசேனன் தன் இடையிலிருந்து கொம்பை எடுத்து ஊதி “கிளம்புக!” என்று ஆணையிட்டதும் வாள்களை உருவி தலைக்குமேல் சுழற்றி “வெற்றிவேல்! வீரவேல்! அஸ்தினபுரி வெல்க! அமுதகலம் வெல்க! அரசர் துரியோதனன் வெல்க!” என்று கூச்சலிட்டபடி அவர்கள் தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். குளம்படிகள் மலையிடிந்து கூழாங்கற்களாகப் பொழிவதுபோல் ஒலித்தது. படை நிரைகொண்டு நீண்டு முனைகொண்டு தெருவை அடைந்து அப்பாதையினூடாக வளைந்து வழிந்தோடி மறைந்தது.

கைகளில் சுடர்களுடனிருந்த இளவரசியர் அனைவரும் விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தனர். அச்சுடர்கள்  அவர்கள் உடல் குலுங்கி அழுகையில் அசைந்து நீரில் என அலைகொண்டன.  அனைவரின் முகங்களும் ஒன்றாகத் தெரிந்தன. முகமிலாதவர்கள், பெயரில்லாதவர்கள். தங்கள் இல்லங்களில் அன்னையருக்கு இனியவளாக இருந்திருப்பார்கள். அவ்வரண்மனைகளில் தலைவியராக வலம் வந்திருப்பார்கள். ஆணையிட்டிருப்பார்கள். தாங்கள் பிறிதொரு நிகர் இலாதவர்கள் என்று உணர்ந்திருப்பார்கள். பின் நிரையிலிருந்து சில இளவரசிகள் மயங்கி விழுந்தார்கள். கீழே விழுந்த சுடர்கள் மேல் கால்கள் பதிந்தன. சிலர் எண்ணையில் வழுக்கி நிலையழிந்தனர். அவர்களை தூக்கும்பொருட்டு சேடியர் பிற இளவரசியரை விலக்கினர். சுடர்நிரை குழம்பி கலைந்து மின்மினிச் சுழல்போல் ஆயிற்று.

அவர்கள் உள்ளே செல்லலாம் என்று அரசி பானுமதி ஆணையிட்டாள். பின் நிரையிலிருந்து ஒவ்வொருவராக அகன்று உள்ளே செல்லத்தொடங்கினர். அக்கலைவோசையின் உள்ளே விம்மல்களையும் அழுகையொலியையும் அவர் கேட்டார். முதல் அழுகையொலி எழுந்ததுமே அனைவருமே அழத்தொடங்கிவிட்டிருந்தனர். சற்று நேரத்தில் அழுது கூச்சலிட்டபடி உடல் தளர்ந்து நிலத்தில் அமர்ந்தனர். சிலர் நினைவழிந்து படுத்தனர். உடல் குழைந்து நழுவிய இளவரசியரை சேடியர் ஒவ்வொருவராக தோள்பற்றி தூக்கி உள்ளே கொண்டுசென்றனர். அவர்கள் விட்டுச்சென்ற அகல் விளக்குகளால் அரண்மனை முகப்பு ஒளித்துளிகளாக சிதறிக்  கிடந்தது. எரிசுடரின் செம்மை சிந்திய எண்ணைத்தீற்றல்களை குருதியோ என எண்ணச்செய்தது.

கனகர் நீர்வழிவென ஓசையில்லாமல் வந்துகொண்டிருந்த அவ்வரசியரை பார்த்தார். அவர்களில்  அவர் அறிந்த முகம் ஒன்று இருக்கிறதா என்று விழிகளால் துழாவினார். அனைத்து முகங்களும் ஒன்றென்றே தோன்றின. திரளாக ஆவதுபோல் மானுடரை பொருளற்றவர்களாக ஆக்குவது பிறிதில்லை. அவர்களில் தனித்தன்மையை நிறுவும் அவர்களுக்குரிய தெய்வம் ஒன்று அகன்றுவிடுகிறது. அவர்களைப் பெற்ற அன்னையரேகூட தனித்தறிய முடிவதில்லை. அந்த இறுதி மச்சநாட்டு இளவரசியின் முகம் மட்டுமே அவர் நினைவில் இருந்தது. அவர்கள் அணுகி வந்துகொண்டிருந்தார்கள். அணிகளேதும்  அவர்களின் உடல்களில் இல்லை. கால்களில் குறடுகளும் இல்லை. ஆகவே மெல்லிய ஆடைச்சரசரப்பு மட்டுமே கேட்டது. இலைகள் செறிந்த குறுங்காட்டுக்குள் நீர் வருவதுபோன்ற ஓசை. அவள் பெயர் சந்திரை. அவள் முகம் சிறியது, கூரிய மூக்கும் எழுந்த நெற்றியும் கொண்டது.

மேலும் அந்த நிரை அணுகியபோது புலர்காலையில் மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகத்தை கண்டார். அது வெளிறி சற்றே வீங்கி களிமண்ணால் ஆனதுபோல் உயிரற்றுத் தெரிந்தது.  ஒருகணத் திடுக்கிடலுடன் அது ஓர் இறந்த உடல் என்று அவர் எண்ணிக்கொண்டார். இளவரசியர் எத்தனை பேர் கருவழிந்திருக்கிறார்கள்? நாநூற்று எண்பத்தைந்து? அல்ல நாநூற்று தொண்ணூற்றாறு? எது இறுதி எண்ணிக்கை? ஐநூறா? ஐநூறு குருதிக்குமிழிகள். ஐநூறு ஆத்மாக்கள். அவை இங்கு நுண்வடிவில் உடன் வந்துகொண்டிருக்கின்றன. அவர்களை அவர்களின் தந்தையர் அறிவார்களா? அன்றி, தந்தையருடன் கை கோத்தபடி அவர்கள் இங்கே வந்து கொண்டிருக்கிறார்களா?

சம்வகை அருகே வந்து கையில் ஏந்தியிருந்த வேலைத் தாழ்த்தி தலைவணங்கி அப்பால் சென்றாள். அணிநிரை அருகே வந்தது. கனகர் ஒவ்வொரு முகத்தையாக வெறித்து நோக்கியபடி நின்றிருந்தார். அவை அவரை நோக்காமல் கடந்து சென்றுகொண்டே இருந்தன. அவர் அன்று காலை வந்த செய்தியை நினைவுகூர்ந்தார். பாண்டவர்களின் காட்டில் குடிகள் திரண்டுவிட்டார்கள். தௌம்யர் அங்கே சென்றுவிட்டிருக்கிறார். நீர்க்கடன் செய்வதற்குரிய முறைமைகள் அன்றே வகுக்கப்படும். அங்கும் இதேபோல பெண்களின் நிரை எழும். இறந்தவை போன்ற முகங்கள். அப்பால் எதையோ நோக்கி வெறித்த விழிகள். எந்த வேறுபாடும் இருக்காது.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 11

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 5

வஜ்ரநாகினி அன்னையின் சிற்றாலயத்தின் அருகே மண் சரிவாக செதுக்கப்பட்டு ஆழத்திற்கு இறங்கிச் சென்றது. ஐந்தடி உயரமான சிறிய கல்ஆலயத்திற்குள் ஒரு முழ உயரத்தில் நின்றிருந்த அன்னையின் உருவம் சந்தன காப்பிடப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதற்குள் கால் மடித்து அமர்ந்திருந்த முதிய சூதப்பெண்மணி அணிகளை முழுமை செய்துகொண்டிருந்தார். ஆலயத்திற்கு முன்பு மண் வெட்டி அகற்றப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த நீள்சதுர வடிவ முற்றத்தில் மலர்களால் களம் அமைக்கப்பட்டிருந்தது. சிவந்த மலர்களாலும் நீல மலர்களாலும் அமைக்கப்பட்டிருந்த களத்தின் ஓரம் அப்போதும் முழுமை அடையவில்லை. நாக தேவியின் அந்த உருவை அருகணைந்து இடையில் கைவைத்தபடி கனகர் பார்த்து நின்றார்.

பத்து நாகங்கள் ஒன்றுடன் ஒன்று உடல் பின்னிப்பிணைந்து ஒரு பரப்பென ஆகி நடுவே தங்கள் வாலுடல்களால் ஒரு மலர்ப்பீடத்தை அமைத்து அதில் தேவியை அமரச்செய்திருந்தன. சுழிவட்டத்தின் விளிம்பு நாகத்தின் படமெடுத்த தலைகளால் ஆனதாக இருந்தது. அத்தனை சிக்கலான ஒரு உருவத்தை மலர்களால் உருவாக்கிவிட முடியும் என்பது அவருக்கு விந்தையாக இருந்தது. சூதப்பெண்கள் பணி தொடங்குகையில் அது மிக எளிய ஒரு மலர்க்கோலமாக இருக்கும் என்று அவர் எண்ணியிருந்தார். ஆவணி மாதத்தில் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு முன் மலர்க்களங்களை அமைப்பதை அவர் பார்த்திருந்தார்.

இளவேனில் மலர்க்களங்கள் நெடுங்காலமாக செய்து செய்து கைகளிலேயே அசைவென அமைந்திருந்தவை. பேசிச் சிரித்தபடியும் அவ்வப்போது எழுந்து சென்று வெவ்வேறு இடங்களில் அமர்ந்தும், சில தருணங்களில் பூசலிட்டபடியும் அவர்கள் அதை வரைந்து முடிப்பார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஒற்றை உருவம் எப்படி அமைந்துள்ளது என அவர்களே அறிந்திருக்கவில்லை. பெரும்பாலும் வசந்தத்தின் தெய்வமாகிய இந்திரன். மின்படையும் யானையூர்தியும் கொண்டவன். செங்கழுகுகளால் சூழப்பட்டவன். அதை முடித்த பின்னர் அது அவர்களின் தெய்வமாக ஆகிவிட்டிருப்பதனால் அதை வியந்து நோக்கவும் அவர்களால் இயல்வதில்லை.

கொற்றவை அன்னையின் ஆலயத்தின் பூசனைக்கு வண்ணக்களமெழுதும் விறலியர் ஓர் ஓரத்திலிருந்து முழுமையாகவே அம்மாபெரும் ஓவியத்தை வரைந்து செல்வதை அவர் கண்டிருக்கிறார். முதன்மைக் கோட்டு வரைவு உருவாக்கப்படுவதில்லை. அதற்குள் வண்ணங்கள் தீற்றப்படுவதும் இல்லை. முழுக்களத்தையும் ஒரு முறை நோக்கிய பின்னர் தென்மேற்கு மூலையில் ஒரு செம்மலரை வைப்பார்கள். அதைச் சுற்றி சிவந்த வண்ணத்தைக் கொண்டு ஒரு சுழல் வட்டம் போடுவார்கள். அங்கிருந்து மண் எனும் திரையை இழுத்து அகற்றி அடியில் பதிந்திருக்கும் ஓவியத்தை வெளியே எடுப்பதுபோல் அக்களம் எழுந்து வரும். தேவியின் முகத்தில் புன்னகை கனிந்திருக்கும். சிம்மமும் பூத கணங்களும் வெவ்வேறு கொடுந்தோற்றத்திலிருக்கும். சீறுபவை, சினப்பவை, வெறிப்பவை, அப்பாலென ஊழ்கத்திலமர்ந்தவை.

இறுதிக்கோட்டை விறலி வரைந்து முடிப்பதற்குள் முதலில் அமர்ந்திருக்கும் விறலிக்கு தெய்வமெழுந்தாகவேண்டும் என்பது நெறி. அக்கோடு வண்ணப்பொடியாக உதிர்ந்து முழுமையடையும் கணத்தில் அறியாப் பெருவிலங்கொன்றின் உறுமல்போல் ஓசையெழுப்பி விறலி வெறியெழுந்து நடுக்கு கொள்வாள். நோக்கி நிற்கையில் ஏற்படும் அத்தருணத்து மெய்ப்பு கொள்ளல் அவருக்கு இறையெழும் தருணமாகவே எப்போதும் இருந்திருக்கிறது. ஆண்டோடு ஆண்டு நிகழ்ந்து நிகழ்வது என்னவென்று நன்கு அறிந்திருந்த போதும்கூட அவருக்கு அது அகப்பெருக்கையே அளித்தது. அவர் கால் நடுங்கி உடல் விதிர்க்க கைகளைக் கூப்பி இறுக்கியபடி நீர்கோத்த விழிகளுடன் நோக்கி நின்றிருப்பார்.

விறலி துள்ளி அதிர்ந்து சுழன்று தலைமுடியைச் சுழற்றி வரைந்த புள்ளியிலிருந்து அந்த ஓவியக்களத்தை அழிக்கத் தொடங்குவாள். வண்ணங்கள் கரைந்து குழம்பி முகில் தீற்றல்கள் என்றாகி நீர்க் குழம்பல் என்று மாறிப் பரவ அதில் தரையில் பிடித்திட்ட மீனென விறலி கிடந்து நெளிந்து துடிப்பாள். கண்ணெதிரில் அந்த ஓவியம் கலைந்து மறையும். முகிலில் விழிமயக்கோ என தோன்றி மறையும் தெய்வ உருவங்கள்போல. அதன் முழு உருவை எவரும் காணக்கூடாதென்பது நெறி. முழுதுருவைக் கண்டவர்கள் இல்லம் திரும்ப இயலாது. முழுதுரு விண்ணிலிருந்து இறங்கும் ஆகாய கங்கை போன்றது. விரிசடையரால் மட்டுமே அதை ஏந்த இயலும். பேரழகும் பெருங்கனிவும் முற்றிலும் துறந்த முனிவர்களாலன்றி பிறருக்கு அறிய ஒண்ணாதவை.

சூதர் பெண்டிரில் அத்தனை பெரிய களமெழுத்து கலை திகழும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சம்வகையுடன் புலரியில் அவர் சூதர்தெருக்களுக்குச் சென்றார். அங்கிருந்த முதிய சூதர்பெண்களிடம் சம்வகை நிகழ்ந்ததைச் சொன்னபோது அவர்கள் அனைவருமே அச்சமுற்றனர். “இல்லை தேவி, நாங்கள் எவரும் அத்தகைய தேவியை அறிந்ததில்லை. அதன் பூசனைமுறைகள் எவையும் நாங்கள் அறிந்திராதவை” என்று முதுசூதப்பெண் சொன்னாள். “மேலும் அறியாத் தெய்வத்திற்கு நாங்கள் பூசனை செய்யக்கூடாது… அது எங்கள் குடித்தெய்வங்களாலும் குலதெய்வங்களாலும் மூதாதையராலும் ஏற்கப்படுவது அல்ல.”

“அரசாணை என்று சொல்” என அப்பால் நின்றிருந்த கனகர் உறுமினார். “எவருடைய ஆணையாயினும் நெறிகளை நாங்கள் மீறக்கூடாது…” என்று முதுமகள் சொன்னாள். “நீங்கள்தான் இப்பூசனையை செய்திருக்கிறீர்கள். தீர்க்கசியாமரில் எழுந்த அழியாச் சொல் அதை கூறியது” என்றார் கனகர். “அச்சொல்லே எழுந்துவந்து எங்களுக்கு ஆணையிடவேண்டும்… நாங்கள் அறியாததை எப்படி செய்யமுடியும்?” என்றாள் முதுமகள். கனகர் ஏதோ சொல்வதற்குள் அருகணைந்த சம்வகை “நாம் ஒன்று செய்யலாம். இம்மகளிர் அனைவரும் வந்து அன்னையை வணங்கவேண்டும் என ஆணையிடலாம். அதை அவர்கள் தட்டமாட்டார்கள். அன்னையின் விழி பட்டால் அவர்களில் வெறியாட்டு எழக்கூடும்” என்றாள்.

“அது எங்ஙனம்…?” என கனகர் தயங்க “வெறியாட்டெழவேண்டிய உள்ளத்தை தெய்வங்களே முடிவுசெய்கின்றன” என்றாள் சம்வகை. “இப்படி ஒரு தெய்வம் இங்கிருந்தது என்றால் இவர்கள் அறியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை” என்று கனகர் சொன்னார். “ஆம், ஆனால் தெய்வம் புதைந்து கிடந்தது. ஆகவே அவர்களின் நினைவில் அல்ல கனவிலேயே அது வாழ்ந்திருக்கக்கூடும். அதை அவர்கள் நேரில் பார்க்கட்டும். அவர்களின் கனவுகள் திறந்துகொள்ளட்டும்” என்றாள் சம்வகை. “வரவர உன்னிடமிருந்து நான் ஆணைபெற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன்” என முணுமுணுத்த கனகர் “அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவர்கள் அனைவரும் மலர்த்தாலங்களுடன் வந்து அன்னையை வழிபடவேண்டும் என கனகரின் ஆணை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கலைந்த குரலில் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். குழம்பியும் பதற்றம்கொண்டும் அவர்கள் ஓயாது சொல்லாடிக்கொண்டே இருந்தனர். “எவ்வகையில் வழிபடுவது?” என முதுமகள் கேட்க “வெறும் அகல்விளக்கே போதும்” என்றாள் சம்வகை. அவர்கள் முடிவெடுத்து சிற்றகல்களில் சுடருடன் நிரைவகுத்து வஜ்ரநாகினி அன்னையின் சிற்றாலயம் நோக்கி சென்றார்கள்.

அந்த ஆலயம் என்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட முழக்கத்துடன் அவர்கள் சம்வகையைத் தொடர்ந்து சென்றார்கள். ஆனால் தென்மேற்குக் கோட்டைமுனையை அடைந்தபோது அவர்களின் நடை தளர்ந்தது. ஒரு முதுமகள் “எனக்கு தலைசுழல்கிறது” என்றாள். ஒரு சில இளம்பெண்கள் அழத்தொடங்கிவிட்டிருந்தனர். பலர் மெய்ப்புகொண்டு கழுத்தில் தசைகள் இறுகியிருக்க கைகளை சுருட்டிப்பற்றியபடி நடந்தனர். ஆலயத்தை தொலைவில் பார்த்ததுமே முதுமகள் “இந்த ஆலயம்… இந்த ஆலயம்!” என்று கூவினாள். பின்னர் அவர்கள் அந்த ஆலயம் நோக்கி கூச்சலிட்டபடி ஓடத்தொடங்கினர். சரிவிலிறங்கி அதனருகே சென்று விழுந்து வணங்கினர். “அன்னையே அன்னையே” என கூச்சலிட்டனர்.

முதுமகள் திரும்பி கனகரிடம் “எங்களுடன் ஒரு நாகசூத முதுமகள் இருக்கிறாள். முன்பு இங்கே வந்தவள், இங்கேயே தங்கிவிட்டவள். இல்லமற்றவள். உறவும் இல்லாதவள்… அவளுக்குத் தெரியும் இந்த ஆலயத்தின் பூசனைமுறைகள்… அவளை அழைத்துவருக!” என்றாள். சம்வகை “எனக்குத் தெரியும் அவளை” என்றபின் “நான் அழைத்துவர ஆணையிடுகிறேன்” என்றாள். கனகர் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று வந்து இணைந்துகொள்ளும் விந்தையை உணர்ந்தபடி நின்றிருந்தார். சூதப்பெண்கள் அந்தக் களமுற்றத்திலேயே அமர்ந்துவிட்டனர். கைகூப்பி அழுதபடியும் அரற்றியபடியும் ஒருவரை ஒருவர் தழுவியபடியும் அங்கிருந்தனர்.

சற்றுநேரத்திலேயே குனிந்த உடலுடன் கைகளை காலென வீசியபடி முதுமகள் வந்தாள். சம்வகை அருகே சென்று “அன்னையே, இந்த ஆலயத்தின் பூசனைகளை நீங்கள் அறிவீர்களா?” என்றாள். அவள் ஒன்றும் சொல்லாமல் ஆலயத்தை நடுங்கும் தலையுடன் நோக்கினாள். பின்னர் மெல்ல நடந்து ஆலயத்தருகே சென்று உள்ளே பார்த்தாள். அவள் முகம் புன்னகையால் மலர்ந்தது. திரும்பி சம்வகையிடம் “அன்னைக்கான பூசனைகளை நான் இயற்றுகிறேன்…” என்றாள். “நான் நாள்தோறும் செய்யும் பூசனைகள்தான் அவை…” கனகர் என்ன சொல்கிறாள் என கையசைவால் கேட்டார். சம்வகை பிறகு சொல்கிறேன் என விழிகாட்டினாள்.

நாகசூத முதுமகளின் ஆணைப்படி பூசனைகள் ஒருக்கப்பட்டன. அனைத்தும் ஒருங்கியதும் அரசிக்கு செய்தியறிவிக்க சிற்றமைச்சர் சூரியசேனரை அனுப்பிவிட்டு கனகர் ஓரமாக மரநிழலில் அமர்ந்தார். சூதப்பெண்கள் காட்டுக்குள் சென்று மலர் கொண்டுவந்தனர். அவர்களிடம் முதுமகள் மெல்லிய குரலில் ஆணையிட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் மலர்க்களம் அமைக்கப்போகிறார்கள் என்பதே சற்றுப்பொழுது கழித்துத்தான் அவருக்குப் புரிந்தது. சம்வகை அருகே வந்து “அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். என்ன சொல்கிறார்கள் என்ன புரிந்துகொள்கிறார்கள் எதுவும் புரியவில்லை” என்றாள். “அரசியர் கிளம்பிவருவதற்கு முன் இவை முடியவேண்டும்” என்றார் கனகர்.

மலர்க்குடலைகளுடன் சூதப்பெண்கள் கூடினர். மலர்களை விரித்த பாயில் குவித்தனர். முதுநாகினி நீராடி ஈர ஆடையுடன் கண்களை மூடியபடி நடுக்குற்ற உடலும் அசைந்தாடும் கால்களுமாக நடந்துவந்தாள். அவள் குனிந்து நடக்கையிலேயே அத்தனை விசையும் நிமிர்வும் எப்படி உருவாகிறது என்று அவர் வியந்துகொண்டிருந்தார். அங்கு ஒலித்துக்கொண்டிருந்த குறுமுழவுகளும் சிறுமுரசும் எழுப்பிய தாளமே அவ்வசைவை உருவாக்குகிறது போலும். அன்றி உடலசைவிலிருந்து அத்தாளத்தை பெறுகிறார்களா? உறுமி தேம்பலோசை எழுப்பி அதிர்ந்துகொண்டிருக்க முதுநாகினி வந்து அக்களத்தின் சரிவிலிறங்கி முற்றத்தை அடைந்து உள்ளிருக்கும் தேவி சிலையை நோக்கி நின்றாள்.

அவள் சிற்றுடல் அதிர்ந்து துள்ளிக்கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் நோக்கியபின் வலப்பக்கத்தில் பெரிய கூடையில் நிறைத்து வைத்திருந்த செம்மலர்களை நோக்கி சென்று அள்ளி இரு கைகளாலும் எடுத்து அம்மலர்களை களத்தில் வீசினாள். அவை பறந்து சென்று விழுந்தன. மும்முறை மூன்று வண்ணங்களில் மலர்களை வீசிய பின்னர் அவள் சென்று தென்மேற்கு மூலையில் அமர்ந்துகொண்டாள். அவளுடைய இரு கைகளுக்கும் அருகே மலர்க்கூடைகளை கொண்டு வைத்தனர். அவற்றை அள்ளி அள்ளி மண்ணில் போடத்தொடங்கினாள். என்ன நிகழ்கிறதென்று கனகர் திகைப்புடன் பார்த்திருந்தார்.

மலர்களை அள்ளி வெறுமனே வீசுவது போலவும் குவிப்பது போலவும்தான் தோன்றியது. ஆனால் சற்று நேரத்திலேயே நீலநிற நாகம் செவ்விழிகளுடன் முகம் தெளிந்தது. மேலும் மேலும் சூதப்பெண்டிர் சன்னதம் கொண்டு உடல் நடுக்குற்று அக்களத்தின் வெவ்வேறு மூலைகளில் அமர்ந்து மலர்களை அள்ளி நிலம்பரப்பத் தொடங்கினர். களம் விரிந்து பரவிக்கொண்டிருந்தது. அதில் நாகபடங்கள் தெளிந்தன. தேவியின் காலடிகள் துலங்கின. அவள் சடையென விரிந்த நாகச்சுருள்கள் உருவாகி வந்தன.

அரண்மனையிலிருந்து எப்போது அரசியர் எழவேண்டும் என்று ஏவல்பெண்டு வந்து கேட்டாள். அக்களம் எப்போது முடியும் என்று தெரியாததனால் கனகர் “பொழுது அணைகையில் நான் ஆணையிடுகிறேன்” என்றார். அதற்குள் பூசனைக்குரிய பொருட்களுடன் ஒரு வண்டி அங்கே வந்தது. அதை ஓட்டி வந்த காவற்பெண்டிடம் ஆணையிட்டுவிட்டு அவர் மீண்டு வந்து பார்த்தபோது வட்டமலரின் இதழ்கள்போல நாகங்களில் ஏழு தலைகள் எழுந்துவிட்டிருந்தன. அவரால் அவற்றை நோக்க முடியவில்லை. பின்னர் அவர் உள்ளத்தில் அந்நாகங்கள் நெளிந்துகொண்டே இருந்தன என்றாலும் அவர் திரும்பி களத்தை பார்க்கவே இல்லை. இரண்டாவது தூதன் வந்து “நிமித்திகர் குறித்துக் கொடுத்த பொழுதுக்கு இன்னும் இரண்டு நாழிகையே உள்ளது. அரசியர் அனைவரும் ஒருங்கியிருக்கிறார்கள். அவர்கள் கிளம்பலாமா என்று கேட்டுவரும்படி அரசி ஆணையிட்டார்” என்றான். கனகர் வந்து களத்தை பார்த்தபோது பெரும்பகுதி பணி முடிந்திருந்தது. அவர் திறந்த வாயுடன் எண்ணங்களற்று நின்றார். ஒற்றன் அருகே வந்து “அமைச்சரே” என்றான். கனகர் திரும்பி நோக்கி “அவர்களுக்குத்தான் பொழுது குறித்துக் கொடுத்திருக்கிறோமே? அதன்பிறகும் ஏன் திரும்பத் திரும்ப நம்மை உசாவிக்கொண்டிருக்கிறார்கள்? அரசிக்கு எண்ணமிருந்தால் குறித்த நேரத்தில் கிளம்பட்டும். அதற்கு மேல் நானொன்றும் சொல்வதற்கில்லை” என்றார். அச்சினத்தை நோக்கி திகைத்த ஒற்றன் தலைவணங்கி அகன்றான்.

கனகர் அந்த நாகச்சுருள் ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு வலுத்த காற்றில் மலர்களில் அவ்வுருவம் அப்படியே மறைந்து வண்ணச்சிதறலாக மாறிவிடக்கூடும். எனில் அறியாத பிறிதொரு காற்றால் இம்மலர்கள் தொகுக்கப்பட்டு இவ்வடிவம் உருவாகி வந்திருக்கின்றதா? இப்பெண்டிரின் கைகளைப் பற்றி இயக்கும் காற்று. மரக்கிளைகளையும் இலைகளையும் ஆள்வதுபோல் அது இவர்களைக்கொண்டு தன்னை நிகழ்த்துகிறது. காற்றை ஆள்பவள் அவள்தான் போலும்.

சில நாட்களாகவே தன்னிலெழும் எண்ணங்கள் அனைத்துமே பிறிதொருமுறை நோக்குகையில் பித்தெனத் தெரிபவை. ஆனால் தன்னுள் ஓடும் எண்ணங்களை அவரால் நிறுத்த முடியவில்லை. உள்ளிருந்து ஒருவர் காய்ச்சல் வெறியில் அவற்றை சொல்லிக்கொண்டிருப்பதைப்போல. அச்சொற்களினூடாக அவர் உள்ளிருக்கும் அனைத்தையும் கலைத்து பிறிதொன்றாக்கி அடுக்குகிறார். அவர் சொன்ன அனைத்தையும் அள்ளி ஓரமாக தள்ளிவிட்டே அவர் அன்றாடத்தில் புழங்க முடிந்தது. அமைச்சுப் பணிகளை ஆற்ற முடிந்தது. வெளியே இருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் அந்த அடுக்குகளை சிதைக்கின்றன. அவரை எரிச்சல்கொண்டு கூச்சலிடச்செய்கின்றன.

கீழிருந்து இளம் சூதப்பெண்ணொருத்தி மேலே ஏறி வந்து “களம் வரைந்து முடிக்கப்பட்டுவிட்டது. அறுதி மலர் வைக்கப்படவில்லை. அது வைக்கப்படும்போது இந்த ஓவியமும் கலைக்கப்படத் தொடங்கிவிடவேண்டும் என்பது நெறி. ஆகவே அரசியர் வரலாம்” என்றாள். அவளுக்கு அந்தச் சடங்கில் ஓவியம் கலையும் என எவ்வண்ணம் தெரியும் என்று கனகர் எண்ணினார். அவர்கள் முன்பு அக்களத்தை வரைந்ததே இல்லை. ஆனால் எங்கோ அவர்கள் எவருமறியாமல் அக்களத்தை வரைந்து கொண்டிருந்திருக்கிறார்கள். வெளியே பருவடிவான முற்றத்தில் வரைந்திருக்கலாம். கனவுகளில் வரைந்திருக்கலாம்.

சூதப்பெண் “பூசனைக்கு தாங்கள் ஆணையிடவேண்டும், அமைச்சரே” என்று உரத்த குரலில் சொன்னாள். “ஆம், பூசனைகள் தொடங்கட்டும்… அரசியர் இந்நேரம் கிளம்பிவிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றபின் திரும்பிச்சென்று சாலை விளிம்பில் நின்ற சூதனிடம் “என்ன செய்கிறாய் இங்கே? அரசியர் கிளம்பிவிட்டார்களா? செய்தி தெரியுமா உனக்கு?” என்றார். “அறியேன், அமைச்சரே” என்று அவன் சொன்னான். “பிறகென்ன செய்கிறாய் நீ? அறிவிலி!” என்றார் கனகர். அவன் ஏற்கெனவே பலமுறை அவரிடம் சினச்சொல் பெற்று சலிப்புடன் இருந்தான். “என் பணியை நான் செய்கிறேன். சென்று உசாவி வரவேண்டுமென்றால் என் காவலுக்கு பிறரை அனுப்புக!” என்றான்.

“என்ன சொல்கிறாய்?” என்று கனகர் சீற்றத்துடன் கையை ஓங்க அவன் “இல்லையெனில் நீங்கள் இங்கே வாளேந்தி காவல் நிற்கலாம்” என்றான். “இழிமகனே!” என்றார் கனகர். “அதை திரும்ப நான் சொல்ல நெடும்பொழுது ஆகாது. நான் அவ்வாறு சொல்வதில்லை. குடிப்பிறப்பும் நெறியும் என்னை ஆள்கின்றன” என்றான். கனகர் தளர்ந்து அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அவன் அவரைப் பார்த்து முகம் கனிந்து “இங்கு அனைவருமே பித்துநிலையில்தான் இருக்கிறோம், அமைச்சரே. பித்தை உள்ளொடுக்கித்தான் புழங்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து இங்கே விழுந்து கிடப்போம்” என்றான்.

கனகர் பற்களைக் கடித்து அவனை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தார். அவன் அவர் விழிகளை நேர்நோக்கி “இங்கே எவரும் இன்னொருவரை கொல்வதற்கு இரண்டாம் முறை எண்ணும் நிலையில் இல்லை. சற்றுமுன் இந்த வாளால் உங்கள் கழுத்தை வெட்டினேன். அவ்வாறு நிகழவில்லை என்பதை அடுத்த கணம்தான் உணர்ந்தேன்” என்றபின் சலிப்புடன் “வேண்டாம். சொல் காக்க! செயல் காக்க!” என்றபின் தலையசைத்தான். “ஆம்” என்றார் கனகர். “பொறுத்துக்கொள்க… நான் நிலையில் இல்லை.” அவன் “நானும்தான்… நான் கிடந்து துயின்று பதினைந்துநாள் கடந்துவிட்டது” என்றான்.

கனகர் எடை மிக்க உடலை உந்தித் திருப்பி அப்பால் நடந்து சென்றார். அவரில் ஆழ்ந்த சலிப்பு ஒன்று எழுந்தது. அழுத்தமான மெழுக்குபோல, பசைபோல அது அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் பற்றிக்கொண்டது. ஒவ்வொன்றும் அசைவிழந்தன. உடற்தசைகள்கூட இறுகி நின்றன. நோக்கில் தெரிந்த அத்தனை அசைவுகளும் மிக மெல்ல நிகழ்வதுபோல, அப்பசையிலிருந்து விடுவித்துக்கொள்ளும் முயற்சியே அசைவுகளாக மாறியவைபோலத் தோன்றின. ஒவ்வொரு செயலுக்கு அடியிலும் இருப்பது சலிப்பே. எழுந்து பறந்து சுழன்று சுழித்தாலும் அமையவேண்டியது அதில்தான். சலிப்பு மட்டுமே மெய். பிற அனைத்தும் அந்த மெய்யை அஞ்சி சென்று அடைக்கலம் புகுந்துகொள்ளும் பொய்கள்.

ஒன்றுமே நிகழாதபோது எழும் சலிப்பை அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு கணமும் எண்ணியிராதவை நிகழ்ந்துகொண்டிருக்க, ஒவ்வொரு செயலையும் புதியதெனக் கண்டடைந்து செய்யவேண்டியிருக்க எழும் அந்தச் சலிப்பை அதற்கு முன் அறிந்ததில்லை. அதுதான் மெய்யான சலிப்பு. எப்போதுமுள்ள சலிப்பு. ஒரு கண்டடைதல்போல் அவர் ஒன்றை உணர்ந்தார். அச்சலிப்பு அவர் உணர்ந்த அச்சமின்மையிலிருந்து எழுந்தது. குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அச்செய்திகள் வருந்தோறும் அவர் தன் இறப்பையே எண்ணிக்கொண்டிருந்தார். தான் இறக்கக்கூடும் என. இறந்தால் என்ன ஆகும் என. பின் இறப்பின் வெவ்வேறு தருணங்களை உள்ளத்தால் நடித்தார். நாளுக்கு நூறுமுறை இறந்தார்.

இறப்பு முதலில் அச்சமூட்டி சிலிர்க்கச் செய்தது. எடையுடன் மூடிய சலிப்பிலிருந்து கிழித்து வெளிவரச் செய்தது. ஆகவே மீண்டும் மீண்டும் அதை கற்பனையில் நிகழ்த்தினார். பின்னர் அந்த அச்சம் மறைந்தது. கழிவிரக்கம் உருவாகியது. கழிவிரக்கம் இன்னொரு வகையில் அலுப்பை இல்லாமலாக்கியது. எண்ணி எண்ணி இரங்கி விழிநீர் வார்த்து ஏங்கி படுத்திருக்கையில் எழும் நிறைவு இனிதாக இருந்தது. ஆனால் அதுவும் சின்னாட்களுக்கே. பின்னர் சாவு குறித்த எண்ணம் இயல்பான ஒரு கீற்று என வந்துசென்றது. ஒவ்வொரு எண்ணத்துடனும் அது இணைந்துகொண்டது. அதிலிருந்து அச்சமும் துயரும் மறைந்தபோது அது ஓர் உறுதிப்பாடாயிற்று. சாகவில்லை. ஆனால் செத்ததற்கு நிகர்தான்.

அந்த உச்ச உளச்சோர்வு செயல்பட்ட முறையிலிருந்த விந்தைகளையும் அவர் நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றும் செய்வதற்கு உளம்கூடவில்லை. கண்ணெதிரே ஓலைகளில் பணி குவிந்திருந்தது. அவற்றை வெறுமனே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். எந்த எண்ணமும் கோவையாக உருக்கொள்ளவில்லை. ஆகவே பெரும்பாலான பொழுதுகளில் வெறித்த விழிகளுடன் அமர்ந்திருந்தார். ஆனால் அது துயிலை கொண்டுவரவில்லை. அமர்ந்திருக்கையில் துயில்வந்து அழுத்திச் சாய்த்தது. சற்றே துயின்று விழித்துக்கொண்டால் உள்ளம் விசைகொண்டு சொற்களைப் பெருக்கியது. சோர்வே ஓய்வுக்கு எதிரானதாக ஆகக்கூடும் என அவர் அப்போதுதான் அறிந்தார்.

சாவு குறித்த அச்சம் அகன்றபோதுதான் சலிப்பு மேலும் அழுத்தம் கொண்டது என அவர் புரிந்துகொண்டார். அச்சம் அகன்ற சாவென்பது சாவே அல்ல. அச்சமே அலுப்பை வெல்ல மானுடருக்கிருக்கும் ஒரே வழி. ஆகவேதான் உயிரை வைத்து போராடுகிறார்கள். ஆணவத்துக்காக, பெண்ணுக்காக, நிலத்துக்காக, உரிமைக்காக, தெய்வங்களுக்காக கொல்லவும் சாகவும் துணிகிறார்கள். சாவின் விளிம்பில் நின்றிருக்கையில் அச்சம் பேருருக்கொண்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது மட்டுமே அலுப்பென்பது இல்லை. இழப்பும் நோயும் சிறுமைப்படுத்தப்படலும் சிறிய இறப்புக்கள். இறப்பை எண்ணி எண்ணி பேருருவம் கொள்ளச் செய்கிறார்கள். அது அச்சத்தை கடலெனப் பெருக்கி அவர்களுக்கு அளிக்கிறது. அதில் முடிவிலாது திளைக்கிறார்கள்.

மானுடரின் அச்சமே போர்களின் அடிப்படை. அஞ்சியே நிகழ்கின்றன போர்கள். பெரியோனை அஞ்சி, எளியோனை வென்று உண்டு வலுப்பெற முயல்கிறார்கள். செல்வம் சேர்க்கிறார்கள். அறிவை குவிக்கிறார்கள். நினைவை தொகுத்துவைக்கிறார்கள். சற்று சலித்தால், ஒருகணம் உளம் ஓய்ந்தால் வந்து கவ்விவிடும் சாவு குறித்த அச்சமில்லையேல் இந்நகர் இல்லை. இக்கோட்டைகள் இல்லை. அரண்மனையும் கருவூலங்களும் அறநூல்களும் அவைகளும் இல்லை. இப்போர் என்னை அச்சமில்லாதவனாக ஆக்கிவிட்டிருக்கிறது. தொழுநோயாளி வலியுணர்வை இழப்பதுபோல. கைகால்கள்போல உதிர்கின்றன. உடல் மட்கி அழிகிறது.

எண்ணி எண்ணிப் பெருக்கி எழுப்பி எழுப்பி நிறைத்து சலித்து அழித்துச் சிதைத்து வெறுமைகொண்டு அவ்வெறுமையை அஞ்சி மீண்டும்  எண்ணி எண்ணிப் பெருக்கி எழுப்பி எழுப்பி நிறைத்து சலிப்பை நாடும் இந்த ஓயாச் சுழற்சியில் ஒருதுளி. அச்சுழற்சியைக் காணும் கண்கொண்ட தீயூழினன். கனகர் மீண்டும் சிறுதுயில் ஒன்றில் மூழ்கி திடுக்கிட்டு எழுந்தார். எவரேனும் பார்க்கிறார்களா என நோக்கினார். அப்போது தோன்றியது அத்தனை பேரும் அவ்வண்ணமே இருக்கிறார்கள் என. அந்தக் காவலன். அந்த ஏவல்பெண்டு. அந்தப் புரவி. அஸ்தினபுரியின் மாளிகைகளும் காவல்நிலைகளும்கூட சோர்ந்து அரைத்துயிலில் என நின்றிருந்தன.

புரவியில் வந்திறங்கிய காவல்பெண் “அரசியர் கிளம்பிவிட்டார்கள்” என்றாள். கனகர் “முழவு ஒலிகள் எழவில்லையே?” என்றார். அவள் “எந்த ஓசையும் இன்றி இங்கு வரவேண்டுமென்பது சடங்கு. அதை தாங்களே மும்முறை என்னிடமும் கூறினீர்கள்” என்றாள். கனகர் “ஆம், எந்த ஓசையும் இருக்கலாகாது. ஓட்டைக்கலத்திலிருந்து நீரொழுகிப் போவதுபோல் அரண்மனைவிட்டு வரவேண்டும் என்று நாகினி கூறினாள்” என்றார். “வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவள் கூறினாள். கனகர் திரும்பி வந்து அங்கு நின்றிருந்த சூதப்பெண்ணிடம் “பூசனைகள் நிகழட்டும். இன்னும் அரை நாழிகைக்குள் அரசியர் இங்கு வந்துவிடுவார்கள்” என்றார்.

அவள் தலையசைத்து இறங்கிச் சென்று சிற்றாலயத்திற்குள் இருந்த முதிய சூதப்பெண்ணிடம் அச்செய்தியை கூறினாள். முழவுகள் ஓய்ந்தன. சூதப்பெண்ணொருத்தி வலம்புரிச்சங்கை உதடுகளில் பொருத்தி ஓம் ஒலி எழுப்பினாள். ஆலயமுகப்பில் செந்நிறப் பட்டுத் திரைச்சீலையொன்று போடப்பட்டது. உள்ளே சூதப்பெண் செய்யும் சடங்குகளில் ஒரு சிற்றகல் சுழல்வது மட்டும் வெளியே தெரிந்தது. கனகர் அதை நோக்கி நின்றார்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 10

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 4

தீர்க்கசியாமர் பாடிக்கொண்டிருந்தபோதே அப்பாலிருந்த முதிய சேடி ஓலைச்சுவடியில் அதிலிருந்த செய்திகளை பொறித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய எழுத்தாணியின் ஓசை யாழின் கார்வையுடன் இணைந்தே கேட்டது. யாழிசை பறந்துகொண்டிருக்க அது நிலத்தில் அழுந்த ஊர்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றியது. கனகர் அந்த எழுத்தாணியையும் தீர்க்கசியாமரின் யாழையும் மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தார். அவை இரண்டும் ஒன்றையொன்று தொட முயன்றபடி சுழன்றுவந்துகொண்டிருக்கின்றன என்று எண்ணிக்கொண்டார்.

“அன்னைக்கு அரிசிப்பொடியும் மஞ்சள்பொடியும் வேம்பின்தளிரும் செம்மலர்களும் கொண்டு பூசனை செய்க! ஐந்து கான்மங்கலங்களும் எட்டு இல்மங்கலங்களும் அன்னைக்கு படைக்கப்படுக! அன்னையின் களமுற்றத்தில் அவள் மலர்வடிவென எழுக!” என அவர் கூறிக்கொண்டே சென்றார். “அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் திகழும் அன்னையின் ஆலயத்தில் பூசனை எழட்டும். முழங்குக முழவுகள்! ஓங்குக சங்கங்கள்! அன்னையை வாழ்த்தி எழுக மகளிர் குரல்கள்! முன்பு செய்ததுபோல் பூசனைகள் நிகழ்க! அப்பூசனை செய்த சூதர்மகளிரே இப்பூசனையையும் நிறைவுற இயற்றுக! நலமே நிகழ்க! ஆம், நன்றே நிகழ்க! ஆம், மங்கலமே எஞ்சுக! ஆம்! ஆம்! ஆம்!”

அவர் பாடி முடித்ததும் கனகர் “ஆனால் அங்கே அவ்வண்ணம் ஓர் ஆலயம் இல்லை” என்றார். காந்தாரி அதை கேட்டதுபோலத் தெரியவில்லை. கனகர் மேலும் உரக்க “அங்கே அவ்வண்ணம் ஓர் ஆலயம் இல்லை, சூதரே” என்றார். தீர்க்கசியாமர் திகைப்புடன் திரும்பி நோக்கி “எங்கே?” என்றார். “நீங்கள் சொன்ன இடத்தில் வஜ்ரநாகினியின் ஆலயம் ஏதுமில்லை… நான் நன்கறிவேன்.” தீர்க்கசியாமர் “நான் என்ன சொன்னேன்?” என்றார். அவர் விழிகளை நோக்கியபின் பேசுவதில் பொருளில்லை என உணர்ந்து கனகர் அமைதியானார். “எந்த ஆலயம்?” என தீர்க்கசியாமர் மீண்டும் கேட்டார். கனகர் ஒன்றும் சொல்லவில்லை.

சத்யசேனை “மெய்யாகவே அங்கே அவ்வண்ணம் ஆலயம் ஏதுமில்லையா?” என்று கேட்க முதிய சேடி “இல்லை அரசி, அங்கே அப்படி எந்த ஆலயமும் இல்லை” என்றாள். இன்னொரு முதுசேடி “அவ்வாறு ஓர் ஆலயம் இந்நகரிலேயே இல்லை. அவ்வண்ணம் ஒரு தெய்வத்தை கேள்விப்பட்டதே இல்லை” என்றாள்.  “ஆம்” என இணைந்த குரலில் சேடியர் சொன்னார்கள். “அழிந்திருக்கும். இவர் சொல்வது தொல்பழங்காலத்துக் கதையை” என்று சத்யவிரதை சொன்னாள். “எனில் அவ்வண்ணம் ஒன்றை அமைக்கவேண்டும்… உடனே அமைக்கத் தொடங்கினால்கூட…” என்று சத்யசேனை சொல்ல சத்யவிரதை “அது எளிதா என்ன? நாம் பூசனையை நாளையே செய்வதென்றாலும்கூட…” என்றாள்.

“ஏன் கல்லிலோ மண்ணிலோதான் அமைக்கவேண்டுமா? மரத்தாலோ துணியாலோகூட அமைக்கலாமே” என்றாள் சத்யசேனை. காந்தாரி “இல்லை, அவர் ஆலயத்தை அமைப்பதைப்பற்றி சொல்லவில்லை. அது அங்கிருக்கிறது என்றார்” என்று மெல்லிய குரலில் சொன்னாள். “அங்கே அது இல்லை என்பதில் ஐயமில்லை. வேண்டுமென்றால் சற்றே இடம் மாறிக்கூட இருக்கலாம். தேடும்படி ஒற்றர்களிடம் ஆணையிடலாம், அரசி” என்றார் கனகர். “வேண்டாம்… அது மண்ணுக்கு அடியில் இருக்கலாம்… இவரை அழைத்துச்செல்க! இவர் காட்டும் இடத்திலேயே குழிதோண்டிப் பாருங்கள்…” என்று காந்தாரி சொன்னாள். “இவர் பாடுகையில் கருவடிவில் சுருண்டு புதைந்திருக்கும் அன்னை என்றுதான் சொன்னார்… பெரும்பாலும் அவ்வாலயம் மண்ணுக்கு அடியில்தான் இருக்கும்.”

அவ்வண்ணம்தான் இருக்குமென உடனே தோன்றினாலும் கனகர் வீணாக அதை எதிர்த்தார். “இவர் மிக இளையவர், கேட்ட கதைகளை பாடுபவர். இவருக்கு தன் நாவிலெழுவதென்ன என்றுகூட தெரிந்திருக்கவில்லை.” காந்தாரி “அவர் அனைத்தும் அறிந்த ஆழம்கொண்டவர்” என்றாள். கனகர் சலிப்புடன்  “தங்கள் ஆணைப்படி” என்றார். காந்தாரி “சூதரே, அந்த அன்னையின் ஆலயமிருக்கும் இடத்தை காட்டுக!” என்றாள். “எந்த அன்னை?” என்று தீர்க்கசியாமர் கேட்டார். “ஆலயம் என்றால் எங்குள்ளது?”  கனகர் “நான் உரைத்தேனே அரசி, அவர் உளம்குழம்பிப்போன இளையவர். அவருள் வாழும் கதைகளுக்கு அவரே பொறுப்பல்ல” என்றார்.

காந்தாரி “சூதரே கூறுக, உங்கள் உள்ளத்தை சூழ்ந்துநோக்கி சொல்லுங்கள். எங்கே அந்த ஆலயம் உள்ளது? தென்மேற்கிலா? அன்றி வேறெங்கிலுமா?” என்றாள். தீர்க்கசியாமர் பற்கள் தெரிய புன்னகைத்து “நான் என்ன சொன்னேன் என இவர்கள் எவரேனும் என்னிடம் மீளவும் சொல்லமுடியுமா?” என்றார். காந்தாரி கைநீட்டி  “அருகே வருக!” என்றாள். “என்ன?” என்றார் தீர்க்கசியாமர். “அருகே வருக, நான் உம்மை தொட்டறியவேண்டும்” என்றாள் காந்தாரி. “நான் எப்படி?” என்றார் தீர்க்கசியாமர். சத்யசேனை அருகணைந்து அவர் கையை பற்றினாள். “இது அரசி அல்ல… இது விழிகொண்டவரின் கை” என்றார் தீர்க்கசியாமர்.

சத்யசேனை அவரை கொண்டுசென்று காந்தாரியின் அருகே நிறுத்தினாள். அவர் கைநீட்ட அக்கையை காந்தாரி பற்றிக்கொண்டாள். “ஆம், இது அரசியின் கை” என்றார் தீர்க்கசியாமர். இரு கைகளும் நடுங்குவதுபோல கனகர் எண்ணினார். காந்தாரியின் முகம் கூர்கொள்ள உதடுகள் அழுந்தியிருந்தன. காந்தாரி பெருமூச்சுவிட்டாள். பின்னர் கைகளை விலக்கிக்கொண்டாள். “பேரரசி அழகாக இருக்கிறார்கள்” என்றார் தீர்க்கசியாமர். காந்தாரி “வெளியே நின்றிருக்கும் யானையை தொடர்ந்துசெல்க… அது சென்று நின்றிருக்கும் இடத்தை அகழ்ந்து நோக்குக!” என்றாள். கனகர் திகைப்புடன் இருவரையும் மாறிமாறி நோக்கினார். பின்னர் “ஆணை, அரசி!” என்றார்.

 

தீர்க்கசியாமரை அனுப்பிவிட்டு கனகர் வெளியே விரைந்தார். அங்கே சம்வகை நின்றிருக்கவேண்டும் என அவர் விழைந்தார். அவளில்லாமல் அப்பணியை செய்யமுடியாதென்று தோன்றியது. அவளிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டுச் சென்று படுத்துவிடவேண்டும். எச்சமில்லாமல் கரைந்து அழிந்துவிடவேண்டும். அவர் வியர்வையுடன் அங்குமிங்கும் நோக்க ஏவலன் “காவல்பெண்டு இங்குதான் இருக்கிறார்கள். தாங்கள் தேடினால் கூறும்படி உரைத்தார்கள்” என்றான். “நான் உன்னிடம் கேட்டேனா? கேட்டேனா?” என கனகர் கூவினார். “அறிவிலி… உன் பணியை நீ நோக்கு. சவுக்கால் உடலை வரிவரியாக இழைக்க ஆணையிடுவேன்… கீழ்மகனே.”

அவன் பேசாமல் நின்றான். கனகர் மூச்சிளைக்க “அவளை வரச்சொல்” என்றார். அவன் தலைவணங்கி அகன்றான். அவர் எங்கேனும் அமர விழைந்து சூழ நோக்கினார். சம்வகை அருகே வந்து வணங்கியதும் உரக்க “இங்கே பணியாற்றுவதைவிட யானைக்கீழ் தலையை கொடுக்கலாம்” என்று கூவினார். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “என்ன பேசாமல் நிற்கிறாய்?” என்றார். “கொடுக்கலாம்” என அவள் சொன்னாள். அவர் சீற்றம் அடங்கி புன்னகைத்து “ஏளனம் செய்கிறாயா? நான் இப்போது சேற்றில் சிக்கிய யானை. தவளைகள் ஏறி விளையாடுகின்றன” என்றார். பின்னர் “அரசியின் ஆணை. அந்த வெறியெழுந்த பிடியானையை கொண்டுசென்று தென்மேற்கு கோட்டைப்பகுதியை துழாவவேண்டும். அது நமக்கு மண்ணுக்குள் புதைந்த ஆலயம் ஒன்றை கண்டறிந்து அளிக்கும்” என்றார்.

சம்வகை “ஆணை” என்றாள். “என்ன ஆணை? உனக்கு என்ன செய்வதென்று புரிகிறதா? அந்த பிடியானைக்கு பித்து எழுந்துள்ளது. அது மைந்தரையும் சுற்றத்தையும் இழந்துள்ளது… அது எப்படி…” என்றபின் சலிப்புடன் கையசைத்து “நமக்கென்ன? நாம் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றார். எழுந்துகொண்டு “அதன் பாகன் என எவரேனும் இருக்கிறார்களா என்று பார்” என ஆணையிட்டார். “தேவையில்லை. நான் நன்கறிந்த யானைதான் அது…” என்றாள் சம்வகை. “ஆம், நீ யானைப்பாகர் குலத்தவளாயிற்றே… நீயே அதை நடத்து” என்ற கனகர் “நானே வியந்துகொண்டிருதேன், நீ இதை இயற்றுவாய் என எனக்கு ஏன் தோன்றியது என… செல்க!” என்றார்.

சம்வகை திரும்பிச்செல்ல “துரட்டி, குத்துக்கம்பு எதுவும் வேண்டியதில்லையா என்ன?” என்றபடி கனகர் உடன் சென்றார். “தேவையில்லை. நான் யானைக்கு ஆணையிடப் போவதில்லை. யானைமேல் ஊர்வதும் இயல்வதல்ல…” என்றாள் சம்வகை. அவர்கள் காந்தாரியின் மாளிகையை ஒட்டிய முற்றத்தை அடைந்தனர். அவர்களின் வருகையை மணத்தால் உணர்ந்த யானை செவிமடித்து கூர்ந்தது. அதன் துதிக்கை நீண்டு வந்து காற்றை அள்ளியது. சம்வகை திகைப்புடன் நின்று “அது நோக்கிழந்திருக்கிறது!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றார் கனகர். “அது துதிக்கையை நீட்டும்போதே தெரிகிறது.”

கனகர் “ஆனால் அது போருக்குச் சென்ற யானை” என்றார். “அங்கிருந்து திரும்பும்போதே நோக்கை இழந்திருக்கலாம். நாம் அதை உணரவில்லை” என்றாள் சம்வகை. “யானைகள் நோக்கிழந்தால் நன்கு உற்று ஆராய்ந்தாலொழிய கண்டறிய இயல்வதில்லை.” அவள் அதனருகே சென்றாள். அவர் தள்ளி நின்று நோக்கிக்கொண்டிருந்தார். அவள் கையை நீட்டியபடி மெல்லிய குரலில் ஏதோ சொல்லியபடி அருகணைந்தாள். யானை துதிக்கையை நீட்ட அவளுடைய கையும் நீண்டு செல்ல இரண்டு நுனிகளுக்கும் நடுவே இருந்த வெளி அச்சொற்களால் அதிர்வதுபோலிருந்தது. மெல்லமெல்ல இடைவெளி குறைந்தது. இரு முனைகளும் தொட்டுக்கொண்டன.

சம்வகை அருகே சென்று யானையின் செவியை வருடினாள். அதனிடம் ஏதோ சொன்னாள். யானை செவிமடித்து ஒலிகூர்வதை அவர் கண்டார். பின்னர் அது காலெடுத்துவைத்து நடக்கத்தொடங்கியது. அவள் அதனுடன் செல்ல கனகர் பின்னால் சென்றார். தன்னைத் தொடர்ந்த ஏவலனிடம் மெல்லிய குரலில் “ஐம்பது பேர்கொண்ட ஏவலர்படை ஒன்று பின்தொடர்ந்து வரவேண்டும். அங்கே ஆழமாக தோண்டவேண்டியிருக்கும்… செல்க!” என ஆணையிட்டார். முதிய ஏவலனின் ஒருங்கிணைப்பில் மண் அகழும் கருவிகளுடன் ஏவல்பெண்டுகளின் படை ஒன்று வந்தது. அவர்களின் காலடியோசைகளன்றி வேறேதும் ஒலிக்கவில்லை. அவர்கள் பெருகிக்கொண்டே இருந்தனர்.

யானை சூதர்தெருக்களினூடாகச் சென்றது. அங்கே அவ்வேளையில் எவருமிருக்கவில்லை. தெருக்களில் குழந்தைகள் ஒன்றிரண்டு புழுதியில் விளையாடிக்கொண்டிருந்தன. கனகர் சாலையின் ஓரமாக சிறிய சந்து ஒன்றின் முகப்பில் அந்தக் கூன்விழுந்த முதிய சூதப்பெண்ணை பார்த்தார். அவள் மங்கலடைந்த விழிகளால் யானையை பார்த்தபின் திரும்பிக்கொண்டு விலங்குபோல் மடிந்து நடந்து அப்பால் சென்றாள். தென்மேற்கு கோட்டைமடிப்பை நோக்கி யானை சென்றது. அதன் உடல் ஊசலாடிக்கொண்டே இருந்தது. அது நின்று நாற்புறமும் மோப்பம் கொண்டது. மீண்டும் துதிக்கையை வீசியபடி நடந்தது. அதன் நடை தளர்ந்தது. கோட்டையருகே இருந்த சிறிய புதர்க்காடு ஒன்றை நோக்கி சென்றது. அங்கிருந்த சிறிய சிதல்புற்றின் அருகே நின்றது. மும்முறை அந்தப் புற்றை தொடமுயன்று துதிக்கை விலக்கிக்கொண்டது. பின்னர் தலைமேல் துதி வளைத்து பிளிறியது.

சம்வகை “இந்த இடம்தான்” என்று திரும்பி கனகரிடம் சொன்னாள். கனகர் திரும்பி கைகாட்ட காவலர்கள் அருகே சென்று அப்பகுதியை நோக்கினர். சம்வகை யானையை அகற்றிக்கொண்டுசென்றாள். “பாம்பு உள்ளது” என்றான் ஒரு காவலன். சம்வகை “அகழ்க, பாம்பு அகன்றால் நன்று! சீறிப்படமெடுத்தால் என்ன செய்வதென்று எண்ணிப்பார்ப்போம்” என்றாள். கனகரை ஏவலர் நோக்க அவ்வண்ணமே செய்க என அவர் கைகாட்டினார். அந்த இடத்தில் மண்ணுக்கு அடியில் ஓர் ஆலயமிருக்கிறது என்ற எண்ணமே சிறிய பதற்றத்தை உருவாக்கியது. அங்கே உள்ளே ஏதுமிருக்கக் கூடாது என அவர் விழைந்தார். அந்த எண்ணம் ஏன் ஏற்படுகிறது என அவரால் கண்டடைய இயலவில்லை.

யானையை இரு ஏவலர் அகற்றி கொண்டுசென்றார்கள். அதன் உடலில் தசை விதிர்த்துக்கொண்டே இருந்தது. நோயுற்றதுபோல அது அவ்வப்போது உறுமிக்கொண்டது. அது அகன்றுசெல்வதை கனகர் வெறுமனே நோக்கினார். ஏவல்பெண்டுகள் அந்தப் புற்றை மண்வெட்டியால் வெட்ட உள்ளிருந்து நாகம் சீறி மேலெழுந்தது. அவர்கள் பின்னடைந்தனர். நாகம் அவர்களை நோக்குவதுபோல தலைதிருப்பியபின் வழிந்து இறங்கி நெளிவுகளாக அலைகொண்டு அப்பால் சென்று புதர்களுக்குள் மறைந்தது. “தோண்டுக!” என்று அவர் ஆணையிட்டார். அவர்கள் ஐயத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அகழத் தொடங்கினர்.

புற்றுக்குள் பாம்பின் முட்டைகள் இருந்தன. சுண்ணக்கற்கள்போல விந்தையான கோடுகளும் வடிவங்களும் கொண்ட சிறிய உருளைகள். “அவற்றை எடுத்து அப்பால் வையுங்கள். ஒன்றுகூட உடையக்கூடாது” என்றார் கனகர். அவர்கள் முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று மிகத் தொலைவிலிருந்த சிறிய புதருக்குள் வைத்தனர்.  பதினெட்டு முட்டைகள் இருந்தன. அதன்பின் புற்றை அவர்கள் தோண்டி அகற்றத்தொடங்கினர். உள்ளே வெண்ணிறமான சிதல்கள் நிறைந்திருந்தன. அரிசிமணிகள்போல அவை ஊர்ந்தன. தோண்டி விலக்கி அகற்றிக்கொண்டிருந்த ஏவல்மகளிர் நின்று “அமைச்சரே” என்றார்கள்.

கனகர் சற்று முன்னால் சென்று நோக்கினார். ஒரு கல்முகடு தெரிந்தது. மண்படிந்து சற்றே பெரிய உருளைக்கல் என்றுதான் அது தோன்றியது. ஆனால் சற்று நோக்கியபோதே அதன் மேலிருந்த கல்செதுக்குகள் புலப்பட்டன. அது ஒரு ஆலயத்தின் உச்சிகோபுரக்குடம் என அவருக்கு தெரிந்தது. “மெல்ல அகழ்ந்தெடுங்கள்… கல்லில் இரும்பு பட்டுவிடக்கூடாது” என்றார். ஏவல்பெண்டுகள் மெல்லிய குரலில் பேசியபடி தோண்டத் தொடங்கினர். மெல்ல நீரிலிருந்து எழுவதுபோல் சிறிய கோபுரம் ஒன்று தோன்றியது.

கனகர் பெருமூச்சுடன் சம்வகையின் அருகே வந்தார். “இங்கே ஆலயங்கள் இல்லாத இடமே இருக்காது. இந்நகரமே முன்னர் இருந்த இன்னொரு நகர்மேல் எழுந்தது என்று சொல்லப்படுவதுண்டு… அறிந்திருப்பாய். இங்கேதான் குருநகரி இருந்தது. மாமன்னர் யயாதி ஆண்டது. அது ஏழுமுறை அழிந்து மீண்டும் கட்டப்பட்டது என்கிறார்கள். மாமன்னர் ஹஸ்தி இங்கே தன் நகரைக் கட்டியது இது அவருடைய தொல்நிலம் என்பதனால்தான்” என்றார். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “இந்த தெய்வம் என்ன, இதன் இயல்புகள் என்ன என்று எவருக்கும் தெரியாது. ஆனால் நீள்துயிலில் இருந்து அதை எழுப்பிவிட்டோம்” என்றார் கனகர். “நாம் வரலாறெங்கணும் செய்வது இதுதான். அறியாத் தெய்வங்களை எழுப்பிக்கொள்வது.”

“அது அன்னைதெய்வம்… எந்நிலையிலும் அது நலம்பயப்பதே” என்று சம்வகை சொன்னாள். “ஆம்” என்றபின் கனகர் “ஆனால் நாகினி” என்றார். “பேரன்னையர் கத்ருவும் வினதையும் நாகினியரே. அவர்களிடமிருந்தே புடவி பிறந்தது” என்று அவள் சொன்னாள். அவர் அவளை கூர்ந்து நோக்கியபின் விலகிச் சென்று நின்றார். அங்கே நின்றிருக்க அவர் விழையவில்லை. ஆனால் அங்கிருந்து அகலவும் முடியவில்லை. ஏவல்பெண்டுகள் மூச்சிரைப்பின் ஒலியில் ஒத்திசைவுக்குரிய சொற்களை உரைத்தபடி கூடைகளில் மண்ணை அள்ளி அப்பால் கொட்டினர். மண் சிறு குன்றென மேலே எழ உள்ளிருந்த ஆலயம் துலங்கி உருவம் காட்டியது.

நெடுங்காலம் அது விதையென புதைந்து அங்கு கிடந்திருக்கிறது.  அதை அகழ்ந்து விண்ணை காட்டுகிறார்கள். இனி அதனுள் கருவென வாழும் அன்னைக்கு பூசனைகள் நிகழும். சடங்குகளால், ஊழ்கநுண்சொற்களால் விதை முளைத்தெழப்போகிறது. விதையுறைகள் வெடித்து உள்ளிருந்து புது ஈரிலை முளை என அன்னை எழப்போகிறாள். விழியிழந்த அன்னை. அவர் ஒரு புதிய எண்ணத்தை அடைந்து திகைப்புகொண்டு சூழ நோக்கினார். விழியுடையோர்  எதையும் காணாதவர்களாக ஆக விழியிலாதோரால் அனைத்தும் முடிவுசெய்யப்படுகின்றனவா இங்கே? விழியின்மையால் அறியும் நகரம் ஒன்று இந்நகருக்குள் இருந்திருக்கிறது.

அவர் மீண்டும் சலிப்பை அடைந்தார். எத்தனை தெய்வங்கள்! அழிப்பவை, ஆக்குபவை, ஊட்டுபவை, கொல்பவை, கனிபவை, சினப்பவை… இத்தனை தெய்வங்களை அகற்றிவிட்டு எங்கேனும் ஏதேனுமின்றி வாழும் நிலை ஒன்று அமைந்தால் நன்று. ஒவ்வொரு கணமும் ஏதேனும் ஒரு தெய்வத்திற்கு நாம் அளிக்கும் திறை என்று சூதர்கள் சொல்வதுண்டு. அவ்வாறே இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கணமும் ஒரு தெய்வத்தை உணர்ந்தபடி வாழ்வதுபோல் எடைமிக்க வாழ்வு பிறிதில்லை. யானை ஒன்றை தோளில் சுமந்துகொண்டிருப்பதைப்போல். ஒவ்வொரு காலடியும் யானைக்குரியது. ஒவ்வொரு கால் பிறழ்வும் யானைக்குரியது. ஒவ்வொரு வீழ்ச்சியும் யானைக்குரியது. எண்ணங்களும் விழிகளும் மட்டும் மானுடர்க்குரியவை.

இன்னும் எத்தனை நூறு தெய்வங்கள் இந்த மண்ணுக்குள் புதைந்துகிடக்கக்கூடும்! இந்த மரங்களின் வேர்கள் தொட்டறியும் தெய்வங்கள் இருக்கலாம். இவ்விலைகள் அனைத்திலும் திகழ்வது அவற்றின் நுண்சொற்களாக இருக்கலாம். இந்த இல்லங்கள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைபவை.  இந்த அரண்மனை கோட்டை அனைத்தும் அவற்றின்மேல் அமைந்தவை. இந்நகரே ஒரு மாபெரும் தெய்வத்தின் உடல்மேல் எழுந்த சிறு கொப்புளமாக இருக்கலாம். விண்ணிலிருந்து நோக்கும் தெய்வங்கள் கோடி. காற்றென்றும் ஒளியென்றும் மணமென்றும் இங்குலாவும் தெய்வங்கள் வேறு. இங்கு இத்தருணத்தில் எத்தனை தெய்வங்கள் செறிந்திருக்கின்றன என்று எவருக்குத் தெரியும்? தெய்வங்கள் ஊசி முனையில் ஒருகோடி என வசிக்கக் கற்றவை எனில் இப்புடவி எவ்வளவு தெய்வங்களின் இருப்பிடம்!

அவர் திரும்பச்சென்று துயில்கொள்ள விழைந்தார். சம்வகையிடம் கைகளால் ஆணையிட்டுவிட்டு தன் புரவியில் ஏறிக்கொண்டார். மாளிகைக்குச் செல்ல விரும்பினாலும் ஒற்றர் செய்திகளை நோக்கி நெடும்பொழுதாகிறது என உணர்ந்து தன் அமைச்சு அறைக்குத்தான் திரும்பினார். ஒற்றுச்செய்திகள் குவிந்துகிடந்தன. அவர் இலக்கில்லாமல் ஓலைகளை அள்ளிப் படித்தார். சின்னாட்களாகவே அவர் செய்திகளை அவ்வாறுதான் புரிந்துகொண்டார். கையில் தற்செயலாகச் சிக்கும் ஓலைகளிலிருந்து உருவாகும் உளச்சித்திரத்தையே அவர் மெய்மை எனக்கொண்டார். அதில் பிழைகள் நிகழவில்லை. உண்மையில் பிழை என ஏதேனும் உண்டா என்ன? ஏனென்றால் சரி என ஏதும் இங்கில்லை.

ஒருவேளை காலையில் பூசனை செய்ய சூதர்மகளிர் தேவைப்படலாம். ஆனால் சூதர்மகளிருக்கு இப்பூசனை முறை தெரிந்திருக்கவேண்டும். நாகசூதர்கள் ஒருவேளை பூசனையை ஆற்றக்கூடும். நாகசூதர்கள் நகரில் வாழ்வதில்லை. அவர்கள் வந்து செல்பவர்கள். இமையா விழிகள் கொண்டவர்கள் அவர்கள். நாகசூதர்கள் எங்கேனும் இருந்தால் தேடிவரச் சொல்லலாம். ஆனால் இனிமேல் பொழுதில்லை. நாளையே பூசனைகள் நிகழ்ந்தாகவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் ஆணைக்கு காத்திருக்கிறது அஸ்தினபுரி. சூதர்பெண்கள் பூசனை செய்வார்கள் என்றார் தீர்க்கசியாமர். அவருடைய சொற்களையே தொடர்ந்துசெல்லலாம். அது ஒன்றே செய்யக்கூடுவது.

களைத்து பீடத்திலேயே பின்னால் சரிந்து அவர் துயில்கொண்டார். நெடுநேரம் கழித்து உணர்வடைந்தபோது இருண்ட அமைச்சு அறையில் பீடத்திலிருந்து விழுந்து தரையில் கிடந்தார். அறைக்குள் எவரேனும் இருக்கிறார்களா என எண்ணி எழுந்தமர்ந்தார். எவரோ உடனிருக்கும் உணர்வு ஏற்பட்டது. ஆனால் இவ்வரண்மனையில் எல்லா இடங்களிலும் அவ்வுணர்வே நிறைந்திருக்கிறது. இந்நகரெங்கும் அவ்வுணர்வு திகழ்கிறது. அவர் எழுந்து உடைகளை சீரமைத்துக்கொண்டு வெளியே வந்தார். முன்புலரி எனத் தெரிந்தது. விண்மீன்கள் இடம் மாறியிருந்தன.

அவர் புரவியை அணுகி அதன்மேல் ஏறிக்கொண்டார். அதன் மென்மயிர்ப்பரப்பு குளிர்ந்து ஈரம் படிந்திருந்தது. அவருடைய தொடுகையில் அது நடுக்கு கொண்டது. அவர் ஏறிக்கொண்டதும் அவர் எங்கெனச் சொல்லாமலேயே செல்லத்தொடங்கியது. அவர் மீண்டும் துயில்கொண்டுவிட்டிருந்தார். குதிரை நின்றபோது விழித்தார். அது அந்த ஆலயமிருக்கும் இடத்தை அடைந்து நின்றிருந்தது. அவரை அணுகி வந்த சம்வகை “அகழ்வுப்பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது, அமைச்சரே. சிறிய ஆலயம். ஓர் ஆள் உயரம்தான். கல்லால் கட்டப்பட்டது” என்றாள்.

அவர் இறங்கி அதை நோக்கியபடி நின்றார். சிறிய ஆலயம், விதைபோல. இதை இங்கிருந்து கொண்டுசென்று எங்கேனும் விதைத்தால் கல்பெருகி மாளிகைகளும் அரண்மனைகளும் ஆலயங்களும் கோட்டைகளுமாகி நகர் என முளைக்கும். “அமைச்சரே!” என்று ஏவல்பெண்டு சொன்னாள். சம்வகை அருகே செல்ல சற்று தயங்கியபடி கனகர் கூடவே சென்றார். வெட்டி அகற்றப்பட்ட மண்ணின் மணம். அவருடைய காலடிகள் புதைந்தன. சரிவில் இறங்கி அருகணைந்தனர். ஆலயத்தின் வாயில் திறந்திருந்தது. முதிய சூதப்பெண் உள்ளிருந்து கைகளால் மண்ணை அள்ளி அகற்றினாள். உள்ளிருக்கும் சிறிய கற்சிலை தெரியத் தொடங்கியது.

மண்திரை விலக விலக சிலை தெளிவுகொண்டது. வழுவழுப்பான கரிய கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. இடக்கையில் மின்படை. வலக்கையில் ஒரு சிறிய கலம். அமுதகலமா? அமர்ந்த கோலம். அப்பீடத்தில் நாகம் பத்திவிரித்திருந்தது. தலைக்குமேல் பத்துதலை நாகம். நாகவிழிகள் அனைத்தும் நோக்கு கொண்டிருந்தன. ஆனால் அன்னையின் முகம் நோக்கிலா விழிகளுடன் தன்னுள் ஆழ்ந்திருந்தது. உதடுகளில் புன்னகை இருந்தமையால் அவள் ஏதோ ஆழ்ந்த இனிய நினைவில் இருப்பதுபோலத் தோன்றியது.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 9

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 3

கனகர் தீர்க்கசியாமரை புரவியில் அமரச்செய்து சம்வகையின் புரவியில் தான் அமர்ந்து அரண்மனைக்கு அழைத்துச்சென்றார். சம்வகை உடன் நடந்து வந்தாள். தீர்க்கசியாமர் தன் மகரயாழை மடியில் அமைத்து அதன் தந்திகளின்மேல் வெறுமனே விரலை வைத்திருந்தார். விந்தையான ஒரு சிறு விலங்கு என அவருடைய விரல் தந்திகளின்மேல் அமைந்திருந்தது. அதன் கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் இணைக்கும் தசை கிழிக்கப்பட்டிருந்தமையால் விரல்கள் மிக விலகி மிக நீண்டு தெரிந்தன. அவர் தலையைச் சுழற்றி உதடுகளை கூப்பியபடி மகிழ்ச்சியுடன் நகைத்து “இந்த வழியே நான் வந்திருக்கிறேன். இது அரண்மனைக்குச் செல்லும் வழி” என்றார். தன்னை அறியாமல் கனகர் “எப்படி0 0தெரியும்? மணம், ஒலி அனைத்துமே மாறிவிட்டிருக்கிறதே?” என்றார். “நான் மணத்தாலும் ஒலியாலும் உணர்வதில்லை” என்றார் தீர்க்கசியாமர். “பின்?” என்றார் கனகர். தீர்க்கசியாமர் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் எப்படி வழியறிகிறார் என்று கனகர் எண்ணிக்கொண்டிருந்தார். பறவைகள் திசையறிவதற்கு தலைக்குள் ஒரு நுண்விழியை கொண்டிருக்கின்றன. ஆகவேதான் வெட்டவெளியென விரிந்த வானில் வலசை செல்கின்றன. அவருடைய நெற்றிக்குப் பின்னாலும் அவ்வண்ணம் ஓர் அறிவிழி உள்ளதா? தீர்க்கசியாமர் “அரசியும் நம்முடன் வருகிறார்கள் அல்லவா?” என்றார். கனகர் “எவர்?” என்றார். “அரசி” என அவர் சம்வகையை சுட்டிக்காட்டினார். “அவள் அரசி அல்ல, என் ஏவல்பெண்டு” என்றார் கனகர். “ஆம், கூறினீர்கள்” என தலையைச் சுழற்றி தீர்க்கசியாமர் புன்னகைத்தார்.

முதலில் சம்வகையை அவர் அரசி என அழைத்ததும் கனகர் சினம்கொண்டார். இந்தச் சூதன் தன்னை அரசியர் சந்திக்கவருவதாக பகற்கனவு கண்டு அமர்ந்திருக்கிறான் போலும் என எண்ணிக்கொண்டார். “இவள் அரசியல்ல, என் காவல்பெண்டு சம்வகை” என்றார். சம்வகை குழப்பத்துடன் அகலே நின்றுவிட்டாள். “நன்று… நீங்கள் யார்?” என்று தீர்க்கசியாமர் கேட்டார். “நான் அஸ்தினபுரியின் தலைமை அமைச்சன் கனகன். நீங்கள் என்னை பார்த்திருக்கிறீர்கள்.” தீர்க்கசியாமர் அதை செவிகொள்ளாமல் “நாம் அரண்மனைக்குச் செல்கிறோமா?” என்றார். “எங்கே அரசி? அவர் நடந்தா வருகிறார்?” என தலை திருப்பினார்.

“ஆம், நாம் புரவியிலேயே செல்வோம். என் ஏவல்பெண் சம்வகை உடன் வந்திருக்கிறாள். அவள் காவலுக்கு வருவாள்… புரவியில் ஏறுவீர்கள் அல்லவா?” தீர்க்கசியாமர் “ஆம், நான் புரவி ஊர்ந்தது உண்டு… ஆனால் அத்திரி என்றால் மேலும் நன்று” என்றார். கனகர் சம்வகையிடம் சினத்துடன் “புரவியில் அவரை ஏற்றி அமரச்செய்” என்றார். தீர்க்கசியாமர் “நாம் அரண்மனைக்கு எதன்பொருட்டு செல்கிறோம்?” என்றார். “அரசியே உசாவுவார்கள்…” என்றார் கனகர். தீர்க்கசியாமர் “அரண்மனைகளுக்குள் நறுமணங்கள் நிறைந்திருக்கும். யாழின் இசை ஒலிக்கும். நான் அறிவேன்” என்றார். பின்னர் மீண்டும் வெண்பற்களைக் காட்டி நகைத்து “அரசி ஏன் ஒன்றும் பேசாமல் உடன்வருகிறார்?” என்றார்.

இந்த விழியிலாதோன் உண்மையில் உலகறியாதவனாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டார். அவன் கூறும் தொடர்பற்ற சொற்களுக்கு கேட்பவர்கள் விழைந்த பொருளை அளிக்கிறார்கள் போலும். அவ்வப்போது குறிசொல்பவர்கள், வரும்பொருளுரைப்பவர்கள் என சிலர் அஸ்தினபுரியில் அவ்வாறு கிளம்புவதுண்டு. பானுமதி உடனே அசலையுடன் அவர்களை பார்க்கச் செல்வாள். அவருக்கு அதில் நம்பிக்கையே வந்ததில்லை. பெரும்பாலும் அவை பிழையாகவே இருக்கும். ஓரிரு ஆண்டுகளிலேயே அவர்கள் பொய்யர்களாக தெளிவார்கள். ஆனால் பானுமதிக்கோ அசலைக்கோ அது பொருட்டாகத் தெரிவதில்லை. அவர்கள் இன்னொருவரை நாடிச் சென்றுவிட்டிருப்பார்கள்.

அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வளரும் பதற்றம் ஒன்றிருந்தது போலும். பல கவலைகள் கொண்டவர்கள் மிகுதியாக நிமித்திகர்களை நாடுவதில்லை. மாறாத ஒற்றைக்கவலை கொண்டவர்கள் மீளமீள நிமித்திகர் சொல்லும் நம்பிக்கைச்சொற்களை நாடிக்கொண்டிருக்கிறார்கள். நிமித்திகர்களின் சொற்களில் வாழ்ந்துகொண்டிருந்தது அஸ்தினபுரி. நிமித்திகர்கள் அஸ்தினபுரியைவிட சில அடி தொலைவு முன்னால் சென்று அங்கிருந்து அவர்களை அழைத்தனர். அவர்கள் எச்சரிக்கையுடன் எண்ணி காலடி வைத்து பின்தொடர்ந்தனர். அவர்களின் ஒவ்வொரு நிகழ்செயலும் நினைவுகளால் இறந்தகாலத்துடனும் அச்சங்களால் எதிர்காலத்துடனும் இணைந்திருந்தன.

தெருவில் செல்கையில் தீர்க்கசியாமர் “இனி போர் இல்லை” என்றார். “இனி நீணாள் போர்கள் இல்லை” என்று தலையசைத்துக்கொண்டே சொன்னார். “அது அனைவருக்கும் தெரிந்ததே” என்றார் கனகர். “இனி மகதமும் கூர்ஜரமும் இல்லை. எனில் எதிரியென ஏதுமில்லை” என்று மேலும் சொன்னார். “மகதம் என்றால்?” என்று தீர்க்கசியாமர் கேட்டார். கனகர் புன்னகைத்து “அது ஒரு நாடு” என்றார். “இரட்டையுடல்கொண்டவனின் குடி அழியாது. அது பெருகும்… கங்கைக்கரையில் ஆயிரம் கால்கள் கொண்ட துறைமுகம் அமையும். அவர்களின் கொடி பறக்கும். ஐநூறாண்டுகள் அவர்களின் முடி நிலைக்கும்” என்றார் தீர்க்கசியாமர். கனகர் சற்றே திகைத்தபின் “சூதரே, அக்கொடியின் அடையாளம் என்ன?” என்றார். “யானைக்கொடி…” என்றார் தீர்க்கசியாமர். “ஆனால் கீழே சக்கரம் ஒன்றுள்ளது.”

கனகர் என்ன சொல்வதென்று அறியாமல் வெறுமனே நோக்கிக்கொண்டு சென்றார். சம்வகை “அவர் கூறுவதைப் பார்த்தால் வங்கம் பேராற்றல்கொண்டு எழும்” என்றாள். கனகர் கையை வீசி அப்பேச்சை தவிர்த்தார். சம்வகை அரசியல் பேசுவதை தன் அகம் ஏன் வெறுக்கிறது என எண்ணிக்கொண்டார். எந்த உளநிலையில் இந்த சூதர்குலத்துப் பெண்ணிடம் நான் அமைச்சுத்தொழில் குறித்து பேசத்தொடங்கினேன்? ஏதோ அறியா விசை அதை பேசச் செய்ததா என்ன? தீர்க்கசியாமர் “கட்டடங்கள் அனைத்திலிருந்தும் சீழ்மணம் எழுகிறது… புதுச் சீழின் மணம்” என்றார். கனகர் பற்களை கடித்துக்கொண்டார். “வானில் முகில்கள் நிறைந்துள்ளன” என்றார் தீர்க்கசியாமர். “முகில்களைக் கீறியபடி பறவைகள் செல்கின்றன.” கனகர் எரிச்சலுடன் உரக்க “நீங்கள் எதை பார்த்தீர்கள்?” என்றார். “நான் பார்ப்பதில்லை” என்று தீர்க்கசியாமர் சொன்னார். “அவை பாடல்போல என்னுள் எழுகின்றன.”

அரண்மனை முற்றத்தை அடைந்ததும் தீர்க்கசியாமர் உரக்க “அரண்மனை முற்றம்!” என்றார். மூக்கைச் சுளித்து “குருதிமணம்… இங்கென்ன போர் நிகழ்ந்ததா?” என்றார். கனகர் ஒன்றும் சொல்லவில்லை. “இங்கே செம்புழுதியின் மணமும் எழுகிறது… வெயிலில் வெந்த பாலைநிலப் புழுதிபோல.” கனகர் எரிச்சலுடன் “நீங்கள் பாலைநிலத்தை எங்கே பார்த்தீர்கள்?” என்றார். “நான் நூல்களில் பயின்றேன்…” என்றார் தீர்க்கசியாமர். “நூல்களிலா?” என்றர் கனகர் இகழ்ச்சியுடன். “எனக்கு நேர் அறிவும் நூலறிவும் ஒன்றுதான். இரண்டுமே சொற்கள்” என்றார் தீர்க்கசியாமர்.

கனகர் சீற்றம்கொண்டு கைகளை இறுக்கிக்கொண்டார். அந்தக் காலையிளவெயில் அவரை வியர்வை வழியச்செய்தது. மயக்கம் வந்து விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. தீர்க்கசியாமர் “இந்த இடத்தில் குழந்தைகளின் ஒலிகள் நிறைந்துள்ளன. அனைத்துக் குழந்தைகளும் அழுதுகொண்டிருக்கின்றன” என்றார். கனகர் “செல்வோம், சூதரே” என்றார். தீர்க்கசியாமர் அரண்மனை முற்றத்தைச் சுற்றி நோக்கி மூக்கைச் சுளித்து புரவிபோல் மணம்பிடித்தார். “என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்றார். கனகர் “என்ன?” என்றார். “இங்கே ஏன் நின்றிருக்கிறீர்கள்?” என்றார் தீர்க்கசியாமர். கனகர் “என்ன?” என்றார். சம்வகை “அழைத்துச்செல்க, அமைச்சரே!” என்றாள். அவளை வெறுமனே நோக்கிவிட்டு கனகர் “செல்வோம்” என தீர்க்கசியாமரை தொட்டார்.

அரண்மனைக்குள் செல்லும்போது அந்தச் சூழலுக்கே பொருந்தாதபடி தீர்க்கசியாமர் வேறெங்கோ நோக்கி புன்னகை புரிந்துகொண்டிருந்தார். அவருடைய முகத்தில் விழிகள் உருண்டுகொண்டே இருந்தன. அவை இரு குருதியுருளைகள் என எண்ணியதுமே கனகர் திடுக்கிட்டார். அமைச்சுநிலையிலிருந்து சொல்லறிவர் தீர்க்கசியாமரைக் கண்டு ஓடி அருகே வந்தார். “வருக சூதரே, தங்களுக்காகவே காத்திருந்தோம். தங்கள் மூதாதையரில் ஒருவர்தான் இங்கே எழுந்த இடர் ஒன்றுக்கு முன்பு செல்வழி கண்டு சொல்லியிருக்கிறார். ஆகவே தாங்கள் உதவக்கூடும் என நான் அமைச்சரிடம் சொன்னேன்” என்றார். “நான் எவருக்கும் வழி ஏதும் சொல்வதில்லையே?” என்று தீர்க்கசியாமர் சொன்னார். “வழிகாட்டுவது உங்கள் கடமை…” என்றார் சொல்லறிவர். தீர்க்கசியாமர் “நான் எனக்கு தோன்றும் சொற்களைச் சொல்கிறேன்” என்றார்.

இடைநாழிகளினூடாகச் செல்கையில் “முன்பு இங்கே வந்திருக்கிறேன்” என்றார். “ஆம், அரசியைப் பார்க்க வந்துள்ளீர்கள்” என்றார் கனகர். “முன்பொருமுறை வந்தபோது ஓர் அரசி மகவொன்றை ஈன்றார். பேருருவ மகவு… எடைமிக்கது. வாய்முழுக்க பற்கள் கொண்டது… தலையில் கருமயிர்ச் சுருள்கள்… அதை நான் பார்த்தேன்” என்றார் தீர்க்கசியாமர். “நீங்களா?” என்றார் கனகர். “ஆம், அதை கண்களாலேயே பார்த்தேன்.” கனகர் “நாம் அரசியின் அறையை அடைந்துவிட்டோம்…” என்றார். “அரசியிடம் நீங்கள் மிகையாக பேசவேண்டியதில்லை. அவர் உசாவுவனவற்றுக்கு மட்டும் சொல்லெடுத்தால் போதும். இங்கே நீங்கள் அரசப்பணிக்காகவே வந்திருக்கிறீர்கள்.”

தீர்க்கசியாமர் “நான் எப்போதுமே கேள்விகளுக்கு மறுமொழி சொல்வதில்லை…” என்றார். “நான் என்ன பேசுகிறேன் என்பதை என்னாலேயே சொல்லிவிட முடியாது…” என்றபின் சுற்றிலும் நோக்கி “எங்கே அரசி?” என்றார். “அரசி வெளியே வருவதில்லை. அவர் கைம்மைநோன்பு கொண்டிருக்கிறார்” என்றார் கனகர். “நான் என்னை சற்றுமுன் புரவியில் வந்து சந்தித்த அரசியை சொன்னேன்” என்றார் தீர்க்கசியாமர். “அவள் அரசி அல்ல… அதை இருமுறை சொல்லிவிட்டேன். அவள் காவலர்தலைவி மட்டிலுமே” என்று கனகர் எரிச்சலுடன் சொன்னார். தீர்க்கசியாமர் “ஆம், சொன்னீர்கள்… மறந்துவிட்டேன்” என்றார். “இந்த அறைக்குள் ஏன் குருதிமணம் நிறைந்திருக்கிறது? தரையெங்கும் வற்றிய ஏரிப்பரப்பில் மீன்கள் துள்ளுவதுபோல விழிகள்…” என்றார். கால்களை நீட்டி வைத்தபடி “இந்த அரண்மனை மிதந்துகொண்டிருக்கிறது. இதன் அடியில் இருக்கும் இருள் செறிவுகொண்டு பெருகி ஒழுகி மேலே வந்துகொண்டிருக்கிறது… இது அவ்விருளிலேயே மூழ்கிவிடவும்கூடும்” என முணுமுணுத்தார்.

காந்தாரியின் அவைவாயிலில் நின்றிருந்த சத்யசேனை தீர்க்கசியாமரைக் கண்டதும் திகைத்து “இவர்…” என்றபின் “அவருடைய அதே உருவம்…” என்றாள். “மானுடர் அழிவதில்லை” என்று கனகர் சொன்னார். சத்யசேனை “வருக, சூதரே” என்றாள். தீர்க்கசியாமர் “நான் இங்கே வந்திருக்கிறேன்… கீழே ஒரு யானை நின்றிருந்தது…” என்றார். சத்யசேனை “ஆம், பிடியானை… இரு நாட்களாகவே நிலையழிந்து நின்றிருக்கிறது” என்றாள். தீர்க்கசியாமர் “அல்ல, அது களிறு. பெருங்களிறு அது… அன்றே அது உயிரிழந்தது. அதை அப்பால் புராணகங்கையில் புதைத்தனர்” என்றார். “என்ன சொல்கிறார்?” என்று சத்யசேனை பதற்றத்துடன் கனகரிடம் கேட்டாள். “அவர் பேசுவது எனக்கும் பெரும்பாலும் புரியவில்லை…” என்ற கனகர் “பேரரசியிடம் தெரிவியுங்கள்” என்றார். தீர்க்கசியாமர் “பெருங்களிறு, முதியது. விழிநோக்கும் செவிக்கூரும் மங்கிப்போனது. ஆனால் அது குருதியை அறிந்துவிட்டிருந்தது” என்றார்.

அவள் குழப்பத்துடன் மீண்டும் தீர்க்கசியாமரை நோக்கியபின் உள்ளே சென்றாள். தீர்க்கசியாமர் “கொழுங்குருதி மணம்… கருவறைக் குருதி… அந்த அறையிலிருந்து இடைநாழிவரைக்கும் அது தெறித்துப் பரவியது” என்றார். சத்யசேனை வந்து தலைவணங்கினாள். “உள்ளே செல்லலாம், சூதரே” என்றார் கனகர். அவர்கள் உள்ளே நுழைந்தனர். காந்தாரி தாழ்வான அகன்ற பீடத்தில் வெண்பட்டாடை அணிந்து கைகளை மடியில் கோத்துவைத்தபடி அமர்ந்திருந்தாள். இளைய அரசியர் அறுவர் சற்று அப்பால் தரையில் விரிக்கப்பட்ட கம்பளங்களில் அமர்ந்திருந்தனர். இருவர் நின்றிருந்தனர். சத்யசேனை மெல்லிய குரலில் “சூதர்” என அவர் வருகையை அறிவிக்க தீர்க்கசியாமர் அருகணைந்து “பேரரசியை வணங்குகிறேன். பெருந்துயரில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் என்றும் கண்டுவந்த கனவுதான் இது என்பதனால் அத்துயரை உங்களால் தாங்கிக்கொள்ளவும் இயல்கிறது” என்றார்.

“ஆம், நான் கண்டுவந்த கனவுதான்” என்றாள் காந்தாரி. தீர்க்கசியாமர் சிரிப்புபோல முகம் சுளித்து “முதல்நாளே அக்கனவை கண்டீர்கள்… அன்று அஸ்தினபுரியில் இருள் நிறைந்திருந்தது. காகங்கள் மரங்களை நிறைத்திருந்தன… எங்கும் நரிகளின் ஓலம்…” என்றார். “ஆம்” என்று காந்தாரி சொன்னாள். “அன்றே தொடங்கிவிட்டது…” என்றார் தீர்க்கசியாமர். “அமர்க, சூதரே!” என்றாள் காந்தாரி. அவர் பீடத்தில் அமர்ந்து கையிலிருந்த யாழை மடியில் வைத்துக்கொண்டார். “இங்கே நிகழ்வதென்ன என அறிந்திருப்பீர்கள்” என்றாள் காந்தாரி. “ஆம், அறிவேன்… இதோ இந்த அறையில் குருதி வழியும் உடலுடன் குழந்தைகள் நிறைந்திருக்கிறார்கள். சுவர்களிலெல்லாம் பழுத்த கனிகள்போல் தொங்கிக்கிடக்கிறார்கள். சாளரம் வழியாக உள்ளே வந்துகொண்டே இருக்கிறார்கள்.”

கனகர் மெய்ப்பு கொண்டார். “நிறைய குழவியர்… அங்கே முற்றம் எங்கும் அவர்களே… சில மகவுகளுக்கு கையளவே உடல்” என்றார் தீர்க்கசியாமர். “ஆம் சூதரே… சொல்க. நாங்கள் என்ன செய்வது? இங்கே அத்தனை கருக்களும் கலைந்துவிட்டன. இந்நகரில் கருவுற்ற பெண்டிர் அனைவருமே குருதிபெருக்கி அழிகின்றனர். கருக்குருதி பலிகொள்ளும் பதினொரு ருத்ரர்கள் நகர்புகுந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களை இந்நகர்விட்டு அகற்றும் வழியென்ன?” என்றாள். கனகர் “முன்னரும் இது நிகழ்ந்துள்ளது…” என்பதற்குள் தீர்க்கசியாமர் “ஆம், ருக்‌ஷரின் ஆட்சிக்காலத்தில். அன்று நான் ஒரு வழி சொன்னேன். அதையே இப்போதும் சொல்வேன்” என்றார்.

“நீங்கள்…” என சத்யவிரதை பதற்றத்துடன் சொல்லத்தொடங்க அவளை கையசைத்து காந்தாரி விலக்கினாள். “என்ன சொன்னீர்கள்? சொல்க!” என்று காந்தாரி சொன்னாள். தீர்க்கசியாமர் தன் தசைகிழிந்து விலகிய கைவிரல்களை யாழின்மேல் செலுத்தினார். இரு விரல்களும் விந்தையாக விரிந்து நீண்டு நண்டு நடப்பதுபோல் அசைந்தன. யாழ் விம்மியது. அதன் தந்திகள் துடித்தன. விரல்கள் ஒரே கணத்தில் பட்டாம்பூச்சிகளின் சிறகுகள்போல் ஆயின. அவை தந்திகளின்மேல் தாவி அலைய யாழ் ரீங்கரிக்கத் தொடங்கியது. அவருடைய குரல் இணைந்துகொண்டது. அறியாத தொன்மொழியில் அவர் உடனிணைந்து பாடத்தொடங்கினார்.

அவரை வெறித்து நோக்கியபடி அரசியர் அமர்ந்திருந்தார்கள். அந்த மொழி அவர் முன்னரே அறிந்ததாகவும் தோன்றியது. அதைத்தான் மலைக்குடிகள் பேசுகிறார்களா? ஆனால் வேறென்றும் ஒலித்தது. அது செம்மொழியின் ஓசை கொண்டிருந்தது. அதற்கப்பால் ஒன்று ஒலித்தது. வண்டுகள் முரலும், கிளிகள் மிழற்றும் மொழி ஒன்று. பின் அதில் சொல் தெளிந்தது. ஓரிரு அறிந்த சொற்கள். அவர் நீர்ப்பரப்பில் பாறைமுனைகளை மிதித்துக் கடப்பதுபோல் அச்சொற்களை தொட்டுத்தொட்டுச் சென்றார். அவை பெருகின. அறிந்த சொற்களால் ஆன பாடலாக அது மாறியது.

“அன்னையை வணங்குக! இடிமின்னலை கையிலேந்திய வஜ்ரநாகினியின் அருளை நாடுக! முடிவிலா அலைநெளிவுகள் என உடல்கொண்டவள். ஐந்து தலையெழுந்த நாகபடம் கொண்டவள். அணையா ஒளிவிழிகளும் தழல்பறக்கும் நாவுகளும் கொண்டவள். அன்னை, கருவெனச் சுருண்டு ஆழ்புனத்திற்குள் உறைபவள். புயலெனச் சீறி எழுந்து பெருகி கருமுகிலென படம்தூக்கி வானை நிறைப்பவள். அன்னையை வணங்குக! அன்னையின் அருள் பொழிக!”

 

தீர்க்கசியாமரின் சொற்களில் வஜ்ரநாகினி அன்னையின் கதை ஒலித்தது. கரு வடிவில் சுருண்டு புதைந்திருக்கும் அன்னையை வணங்குக! வஜ்ரயோகினி அன்னையை வணங்குக! அவள் கதை என்றும் அழியாத மொழியில் முளைத்து முளைத்தெழும் நாவுகளில் வளர்க! கேளுங்கள் இக்கதையை. தொல்யுகமொன்றில் மண்ணும் விண்ணும் நாகங்களால் நிறைந்திருந்தது. விண்பேருருவ நாக அன்னையர் மாமலைகளை முட்டைகளாக ஈன்ற காலம் அது. அவர்கள் கடல்களை நிரப்பி அலைகளாக படமெடுத்து தரையை அறைந்த காலம். பின்னர் அவர்களின் அசைவுகளையே கடல்நீர் தன்னுடையதெனக் கொண்டது. நதி தன் நெளிவென நடித்தது. மரங்கள் தங்கள் அடித்தடிகளென அமைத்துக்கொண்டது நாகங்களையே.

அந்நாளில் மிருண்மயி என்னும் நாகஅன்னை பன்னிரண்டாயிரத்து எட்டு முட்டைகளை ஈன்றாள். அவற்றை தன் உடலின் பன்னிரண்டாயிரத்து எட்டு சுருள்களால் அணைத்து வெம்மையளித்து அடைகாத்தாள். உயிர்வளர்ந்துகொண்டிருந்த முட்டைகளுக்குமேல் அன்னை இமையா விழியுடன் தவமிருந்தாள். அப்போது மழைக்கார் இருண்டது. விண்ணில் மின்னல்கள் வெட்டித்துடித்தன. விண்ணில் கருமுகில் யானைமேல் இந்திரன் தோன்றினான். அவன் கையில் மின்படைக்கலம் சாட்டைபோல் நெளிந்தது. கதைபோல் விண்முகில்களை அறைந்து பேரோசை எழுப்பியது. வாள் என திசைகளை வெட்டிச்சென்றது. ஒளியதிர்ந்து அடங்கியபோது உள்ளிருந்து அஞ்சிய நாகக்குழவிகளில் ஒன்று நெளிய அந்த முட்டைமட்டும் அன்னையின் அணைப்பிலிருந்து உருண்டு நிலச்சரிவில் ஓடி அப்பால் சென்றது. அறிக, பன்னிரண்டாயிரத்தில் ஒரு குழவிக்கு ஊழுடன் விளையாடுவது உவப்பாக உள்ளது! அது தெய்வங்களுக்கு உகந்த குழவி.

இந்திரனின் அருகே செம்பருந்தின் வடிவில் வந்த இந்திரமைந்தனாகிய ஜயந்தன் அதைக் கண்டு விழைவுகொண்டான். சிறகு விரித்துப் பாய்ந்திறங்கி அவன் அந்த முட்டையை கவ்விக்கொண்டு வானில் எழுந்தான். அன்னை சீறி எழுந்து விண்ணில் பாய்ந்தாள். அப்பருந்தை துரத்திச்சென்றாள். இந்திரன் அவளிடமிருந்து தப்ப மலைகளுக்குமேல் பறந்தான். அன்னை அவனைத் தொடர்ந்து சென்றாள். இந்திரன் விண்ணில் நிறைந்திருந்த கருமுகில்களில் ஒளிந்தான். அன்னை அவனை விடாது துரத்தினாள். அவன் தேவகுருவாகிய பிரஹஸ்பதியை அணுகி அவருக்குப் பின்னால் மறைந்துகொண்டான்.

அவரை அணுகிய அன்னை “என் குழவியை கொடுக்க ஆணையிடுங்கள், பிரஜாபதியே… இல்லையேல் என் நஞ்சால் இவ்விண்ணுலகை அழிப்பேன்… என் உடலின் குருதியனைத்தையும் நஞ்சாக்குவேன் என்று அறிக! என் குருதியில் நிறைந்திருக்கும் பலகோடி திரளாத முட்டைகள் அனைத்தும் இங்கே நச்சுக்குமிழிகள் என வெடிக்கும். விதைகளென எழும். அவை இவ்வுலகை முற்றழிக்கும்… ஐயம் வேண்டாம்” என்றாள். “அன்னையின் பகை அவள் குருதியிலுறங்கும் எழுதலைமுறைகளின் வஞ்சம் என நான் அறிவேன்… ஆனால் தாய் வேட்டையாடிப்பெற்ற உணவை ஒழிய எந்தப் பறவையும் ஒப்பாது… அது அப்பறவையின் வீரத்திற்கு இழுக்கு. உன்னிடம் இருக்கும் பன்னிரண்டாயிரம் முட்டைகளில் ஒன்று மட்டுமே இது… மீள்க! அந்த முட்டைகளில் முளைக்கும் அனைத்து நாகங்களும் பேருடல்கொண்டு எழும் என நான் உன்னை வாழ்த்துகிறேன். என் தவ வல்லமையை அதன்பொருட்டு அளிக்கிறேன்” என்றார்.

“நான் இந்த ஒரு மைந்தனுக்காகவே வந்தேன். அதற்குள் அவன் தன் அன்னை தனக்காக வருவாள் என நம்பி அமைந்திருக்கிறான். அவன்பொருட்டு உயிர்கொடுப்பதும், வேண்டுமென்றால் மூவுலகையும் அழிப்பதும் என் கடன் என்றே உணர்கிறேன்” என்றாள் அன்னை. “உன் முட்டைகள் அனைத்தும் அங்கே பாதுகாப்பில்லாமல் உள்ளன… நீ அவற்றை இழப்பாய்” என்றார் பிரஹஸ்பதி. “அவற்றை என் மூதன்னையர் காக்கட்டும்… நான் இந்த முட்டைக்காகவே போரிடுவேன்… பிறிதொன்றும் எண்ணமாட்டேன்” என்று அன்னை சொன்னாள். “குழவியர் முட்டைக்குள் இருப்பதுவரை என்னால் காக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் விண்ணை நோக்கிவிட்டார்கள் என்றால் மூதன்னையரால் காக்கப்படுபவர்கள்.”

“எனில் நீ இந்தச் செம்பருந்துடன் போரிடுக… அவனை வென்றால் நீ முட்டையுடன் மீள்வாய்” என்றார். செம்பருந்து தன் இரையை அப்பால் வைத்துவிட்டு சிவந்த சிறகுகளை அந்திமுகிலென திசைதொட விரித்து போருக்கிறங்கியது. அன்னை சீற்றத்துடன் அவனுடன் போரிட்டாள். ஆனால் செம்பருந்தின் கூருகிர்கள் வாள்கள் என அவள் உடலை கிழித்தன. அதன் அலகு அவள் தசையை குதறியது. அவள் உடலில் இருந்து வழிந்த குருதியால் வான்பரப்பு செம்மைகொண்டது. ஆயினும் ஒரு கணமும் அன்னை பின்னடையவில்லை. வாலால் செம்பருந்தை அறைந்தாள். தன் நச்சுப்பல்லால் அதை கவ்வ முயன்றாள். உடலால் அதை பன்னிரண்டாயிரம்முறை சுற்றி இறுக்க முயன்றாள்.

அவள் இரு விழிகளையும் செம்பருந்து கொத்தி குருடாக்கியது. நோக்கிழந்து கரிய அலைகளென விண்ணில் நெளிந்த அன்னை “மூதன்னையரே, காத்தருள்க!” என்று கூவினாள். “நீ திரும்பிச்செல்வாய் என்றால் உன்னை விட்டுவிடுவேன்… உன் பிற மைந்தருக்கும் அன்னையென அமைவாய்” என்று செம்பருந்து கூறியது. “இந்த ஒரு மைந்தன் அன்றி எனக்கு முப்புடவியும் இல்லை” என்றாள் அன்னை. மீண்டும் போர் நிகழ்ந்தது. அன்னை ஒவ்வொரு கணமும் என உயிரிழந்துகொண்டிருந்தாள். அப்போது விண்ணில் இந்திரனின் மின்னல்படை நெளிந்தாடியது. விழியிலாதவரும் நோக்கும் பேரொளி கொண்டிருந்தது அது. விண்ணாளும் தேவர்களுமே அஞ்சும்படி அது சுடர்துடித்தது. ஆனால் அன்னை அது என்னவென்று அறியாமலேயே பாய்ந்து தன் வாயால் கவ்விக்கொண்டாள்.

அவள் வாயில் அது நூறு நாகநாவுகளாக மாறியது. அதை படைக்கலமாகச் சுழற்றி ஜயந்தனை அடித்தாள். அவன் இடச்சிறகு வெட்டுண்டு மண்ணில் விழுந்து அங்கே மாபெரும் காட்டெரியாக பரவியது. வலச்சிறகு வெட்டுண்டு விழுந்து கடலை செவ்வண்ணம் கொள்ளச்செய்தது. அவன் பேரொலியுடன் மண்ணில் விழுந்து ஒரு மாமலையானான். ஜயந்தம் என்னும் அந்த மலையின் உச்சியில் திகைத்த விழிகள் இரு குகைகள் என திறந்திருக்க அவன் தலை ஒரு பாறைமுகடு என எழுந்து விண்ணில் நின்றது. பன்னிரண்டாயிரம் யுகம் தவம் செய்து மீண்டும் விண்ணுக்குச் செல்ல அவன் அங்கே அமைந்தான்.

“அன்னை தன் முட்டையை வாலில் சுருட்டி எடுத்துக்கொண்டு திரும்பிவந்தாள். மின்படையை வாயில் கவ்வியிருந்தாள். அங்கே அவளுடைய பன்னிரண்டாயிரத்துக்கு ஒன்று குறையும் முட்டைகளை மூன்று அன்னைதெய்வங்களும் நாகங்களாக வந்தமைந்து காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். மின்படையுடன் வந்த அன்னையைக் கண்டு புன்னகைத்து அவர்கள் மீண்டு சென்றனர். அந்தப் பன்னிரண்டாயிரம் நாகங்களிலிருந்து பெருகிய நாகர்குலத்தோர் அன்னையை வஜ்ரநாகினி என தங்கள் ஆலயங்களில் அமைத்தனர். இடக்கையில் மின்படையும் வலக்கையில் கருமுட்டையும் கொண்டு அமர்ந்திருக்கும் அன்னை கருவிலெழும் குழவியருக்குக் காப்பு என்றனர். அன்னைக்கு படையலிட்டு வணங்கி அருள்பெற்று மைந்தரை ஈன்று பொலிந்தனர். மின்படையன்னை வெல்க! அவள் அருள் பெண்டிரின் அடிவயிற்றுக்கு காப்பாகுக! ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்றார் தீர்க்கசியாமர்.

“அஸ்தினபுரியில் மாமன்னர் ஹஸ்தி நூற்றெட்டு நாகஅன்னையரைக் கொண்டு களம்வரைந்து பூசனைசெய்து எழுப்பிய வஜ்ரநாகினி அன்னை அங்கேயே கோயில்கொண்டமைந்தாள். அவர் கட்டிய சிற்றாலயத்தில் வலக்கையில் முட்டையும் இடக்கையில் மின்படையும் நோக்கில்லா விழிகளும் அலைசுழன்ற வாலுடலும் அன்னைமுலைகளுமாக கல்வடிவில் தோன்றினாள். அங்கே அமைந்த பேரன்னையால் இந்நகர் மைந்தரால் பொலிந்தது. இந்நகரில் குழவியர் கருவுக்குள் கண் அமைந்ததுமே அவளைத்தான் முதலில் கண்டு புன்னகைத்தனர். அவள் அவர்களுக்கு மட்டுமே விழிகள்கொண்டவள் என இருந்தாள். அன்னையின் வால்நுனியை சிறுவிரலென்று வாயிலிட்டு நுணைந்தனர் மைந்தர். முலைப்பாலுக்கும் முந்தைய முதற்சுவையென அவள் எழுந்தாள். அஸ்தினபுரியின் தென்மேற்கே அமைந்த அவ்வாலயத்தில் கருவுறக்கம் கொள்ளும் அன்னை வெல்க! அவள் அருளால் நகர் பொலிக!”

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 8

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 2

புரவி அருகணையும் ஒலி கேட்டு கனகர் திரும்பி நோக்கினார். புரவிமேல் அமர்ந்திருந்த இளம்வீரனை அவரால் அடையாளம் காணமுடியவில்லை. புரவி புண்பட்டு ஒரு கால் உடைந்திருந்தது. ஆனால் சற்றே தேறி அந்தக் காலை சாய்வாக எடுத்துவைத்து நடந்து வந்தது. அதன்மேல் அமர்ந்திருந்தவன் உடலிலும் அந்தக் கோணல் தெரிந்தது. அருகணையும்தோறும் அவன் மிகவும் இளையோனாகத் தோன்றினான். புரவி நின்று அவன் கால்சுழற்றி இறங்கி அவரை அணுகியபோது அவன் பெண் என அவர் உணர்ந்தார். ஏற்கெனவே எங்கோ கண்டிருந்த முகம். அவர் உள்ளம் வழக்கம்போல் எங்கே என துழாவித் தவிக்கவில்லை. வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார்.

அவள் அணுகி தலைவணங்கி “வணங்குகிறேன் உத்தமரே, தங்களை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை. என் உதவி தேவையாகுமா?” என்றாள். “நீ யார்?” என்று கனகர் கேட்டார். “என் பெயர் சம்வகை… கோட்டைக்காவலர்தலைவி” என்றாள். “ஆம், நாம் பார்த்திருக்கிறோம்…” என்ற கனகர் “நான் இங்கே ஒருவரைத் தேடி வந்தேன். ஒற்றர்களை அனுப்பி அவரை கொண்டுவரச் சொல்லியிருக்கலாம். ஆனால் எனக்கே கிளம்பவேண்டும் எனத் தோன்றியது. அரண்மனையில் அமர்ந்து அமர்ந்து உடலும் உள்ளமும் சலித்துவிட்டன… நான் புரவியேறியும் நெடுநாட்களாகின்றன. அது பிழை என உணர்கிறேன். என்னால் இங்கே வழி கண்டடைய முடியவில்லை” என்றார்.

“நான் தங்களை விழையுமிடத்திற்கு கொண்டுசெல்கிறேன், உத்தமரே” என்றாள் சம்வகை. “நீ இங்கே இருக்கும் சூதர்களை அறிவாயா?” என்று அவர் கேட்டார். “போருக்குமுன் நான் நகரில் உலவியது மிகக் குறைவு. என் தந்தையுடன் யானைக்கொட்டிலுக்குச் சென்றுள்ளேன். அங்காடிகளுக்கும் விழவுகளுக்கும் சென்றுள்ளேன். நகரை முழுக்க பார்த்ததில்லை. நகர்குறித்த உளப்படிவமும் என்னிடமில்லை. ஆனால் இந்தச் சில நாட்களில் இந்நகரை இரவும்பகலும் சுற்றிவருகிறேன். நானறியாத இடங்கள் இங்கே அரிதென்றே எண்ணுகிறேன்” என்றாள். கனகர் “நான் பார்க்கவிழைபவர் ஒரு நிமித்திகர், சூதர். அவர் பெயர் தீர்க்கசியாமர்” என்றார். “விழியிலாதவரா?” என்றாள் சம்வகை.

“ஆம்” என்று வியப்புடன் கனகர் சொன்னார். “அவரை நான் அறிவேன். இங்கே ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தின் முகப்புத்திண்ணையில் குடியிருக்கிறார்…” என்று சம்வகை சொன்னாள். “முன்பு இங்கே தீர்க்கசியாமர் என்னும் சூதர் வாழ்ந்திருக்கிறார். அவருக்காக எழுப்பப்பட்ட ஆலயம் அது. அது ஹிரண்யாக்ஷர் ஆலயம் என பின்னர் அழைக்கப்பட்டது. அங்குதான் சூதர்கள் தங்கள் மைந்தர்களை இசைப்பயிற்சி தொடங்கும்பொருட்டு கொண்டு வந்து அமர்த்தி முதற்கோல் கொடுக்கிறார்கள்.” கனகர் “அங்கிருப்பவரை நீ எப்போது பார்த்தாய்?” என்றார். “இன்று காலைகூட தொலைவிலிருந்து பார்த்தேன்… இசைச்சூதர்கள் அனைவருமே போர்க்களம் சென்றபின் அவ்வாலயம் ஒழிந்துகிடக்கிறது. விழியிழந்த சூதர் ஒருவர் மட்டுமே அங்கே தங்கியிருக்கிறார். விழியில்லாவிட்டாலும் அவர் கோயில்கொண்டிருக்கும் ஹிரண்யாக்ஷருக்குரிய எல்லா பூசனைகளையும் செய்கிறார். சூதர்குடிப் பெண்கள் அவருக்கு உணவும் பூசனைக்குரிய பொருட்களும் அளிக்கிறார்கள். அவர் பெயரும் தீர்க்கசியாமர்தான்” என்றாள்.

“அவரேதான்” என்று கனகர் சொன்னார். “அவரை அரண்மனைக்கு அழைத்துச்செல்லவேண்டும்… அவர் குறிநோக்கிச் சொல்ல சில சடங்குகளை இயற்றவேண்டும்… அரசியின் ஆணை.” சம்வகை “அவரிடம் நான் அழைத்துச் செல்கிறேன்” என்றாள். அவர்கள் புரவியில் ஏறிக்கொண்டனர். சீரான நடையில் சூதர்தெருக்களினூடாகச் சென்றனர். “இங்கே எல்லா குடிகளிலும் ஆண்களில்லாமலாகிவிட்டிருக்கின்றனர். போரில் மறவர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள் என்று எண்ணியிருந்தேன். ஆயரும் உழவரும்கூட போருக்குச் செல்வார்கள் என்று இப்போதுதான் காண்கிறேன்…” என்றாள் சம்வகை.  “இது பெரும்போர்” என்று கனகர் சொன்னார். “ஆம், இறுதிப்படைக்கலம்கூட எடுக்கப்பட்டுவிட்டது” என்றாள் சம்வகை. அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என அவருக்குப் புரியவில்லை.

சம்வகை “இங்கே ஆயர்குடியிலும் உழவர்குடியிலும் பட்டினி இல்லை. அவர்களால் உணவை சேர்த்துவைக்கவும் எஞ்சியவற்றால் வாழவும் முடிகிறது. வணிகர்களுக்கு கரந்துவைக்கும் கலை கைவந்தது. உணவில்லாமல் அழிபவர்கள் சூதர்கள். அவர்கள் ஒருநாளுக்கு அப்பால் எதிர்காலம் இல்லை என்னும் எண்ணத்தில் வாழ்ந்தவர்கள்போல் தோன்றுகிறார்கள்” என்றாள். “சூழ்ந்திருக்கும் காடுதான் இன்னமும் உணவை அளிக்கிறது… ஆனால் அதுவும் சின்னாட்களில் ஒழிந்துவிடக்கூடும். அஸ்தினபுரி பாரதவர்ஷத்திலேயே செழிப்பான பெருநகர். ஒரு மாதத்திற்குள் இங்ஙனம் முற்றொழியும் என்பது எண்ணவும் விந்தையே.” அவள் தன்னை அமைச்சராக நடத்தாமல் இயல்பான தோழமையுடன் பேசுவது குறித்து கனகர் முதலில் வியப்பும் பின்னர் எரிச்சலும் அடைந்தார். ஆகவே அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள், அமைச்சரே? அரண்மனையிலிருந்து நீங்கள் வேறுவகையில் நோக்கக்கூடும்” என்றாள் சம்வகை. அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவருடைய சொல்லின்மையில் தெரிந்த மறுப்பை புரிந்துகொள்ள அவளால் இயலவில்லை. “எனக்குத் தோன்றுகிறது அஸ்தினபுரியைப்பற்றிய புகழ்மொழிகள்தான் அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அறிவை மறைப்பவையாக ஆகிவிட்டன என்று. முடிவில்லாது செல்வம் ஊறும் சுனை என இந்நகரை சூதர்கள் பாடிக்கொண்டிருப்பதை இளமை முதல் நான் கண்டிருக்கிறேன். நானும் அவ்வாறே நம்பினேன். அது சூதர்களின் கற்பனை. அவர்கள் அவ்வாறு நம்ப விழைந்தனர். அந்நம்பிக்கையால்தான் அவர்கள் இங்கே வந்துகொண்டிருந்தனர். அந்நம்பிக்கையை அரசர்களிடம் நிலைநாட்டியமையால்தான் அவர்கள் பொன் பெற்றனர். மேலும் பொன் பெற சூதர்களை ஆற்றுப்படுத்தினர்.”

“ஆம்” என்று அறியாமல் கனகர் சொன்னார். “இந்த நகரம் வரும்செல்வத்தில் பெரும்பகுதியை கொடையென்று அள்ளிக்கொடுத்துக் கொண்டிருந்தது. உண்மையில் வருஞ்செல்வத்தை கணக்கிடுவதைப்போல் பிழை என ஏதுமில்லை. செல்வம் வருவது நிகுதிகளிலிருந்து. சுங்கநிகுதி முதன்மையாக. பிற நிகுதிகள் எழுபத்திரண்டு உள்ளன. ஆனால் அந்நிகுதியை அளிக்கும் நிலத்தைப் பேணுவதென்பது பெருஞ்செலவுகொண்டது. அந்நிகுதியை சேர்த்து தொகுத்து கருவூலம்வரை கொண்டுவருவதென்பது அதனினும் செலவேறியது. வேலிகட்டவும் அறுவடைசெய்யவும் விளைச்சலின் பெரும்பகுதியைச் செலவிடும் வேளாண்மை போன்றது அரசாள்கை.”

அவருக்கே அவருடைய அப்பேச்சு விந்தையாக இருந்தது. ஆனால் பேசத்தொடங்கியதுமே அவர் இயல்படைந்தார். இதுவரை தன்னுள் அனைத்துச் சொற்களும் அலையடித்தமை இதனால்தான். நாவால் தொடர்ச்சியாகப் பேசி நெடுநாட்களாகின்றன. ஆனால் ஏன் இந்த அறியாப் பெண்ணிடம் பேசவேண்டும்? அறியாப் பெண்ணிடமே பேசமுடியும். அறிந்த எவரிடமும் இப்படி சொல்பெருக்க இயலாது. “காவல்பணிக்கு பெரிய படை தேவைப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கை பெருகுந்தோறும் ஒரு விந்தை நிகழ்கிறது… கீழ்நிலைப் படைவீரர்களின் எண்ணிக்கை கூடும்போது அவர்களை ஆட்சிசெய்ய தகுதிவாய்ந்த தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கு பலமடங்கு ஊதியம் அளிக்கப்படவேண்டும். கீழ்நிலைப் படைகளுக்கான செலவு மிகுந்தோறும் மேல்நிலைப் படைகளுக்கான செலவு மேலும் ஒருமடங்கு பெருகும்.”

“இன்னுமொரு விந்தை உள்ளது, இவற்றை நான் ஒரு சிறு நூலாகவே எழுதிவிடலாமென எண்ணுகிறேன்” என்று கனகர் சொன்னார். “நிலம் பெருகும்போது படைவீரர்களின் எண்ணிக்கை பெருகுகிறது. அவர்களின் எண்ணிக்கை மேலும் செலவை கோருகிறது. நிலம் நிலையான அளவில் இருக்கும். அதிலிருந்து வருவாயும் வளர்வதில்லை. ஆனால் படை வளர்ந்தபடியேதான் இருக்கும். ஆகவே நிலத்தை பெருக்கியாகவேண்டும். அதற்கு படையெடுப்புகள் தேவையாகின்றன. படையெடுப்புக்கு செலவு மிகுதி. அதற்காக மேலும் நிலம் தேவைப்படுகிறது. நாம் படையெடுக்கக்கூடும் என்றாலே அண்டைநகர்கள் அஞ்சுகின்றன. ஆகவே அவர்கள் படைகளை பெருக்குகிறார்கள். அவர்கள் நம்மீது படையெடுக்கக்கூடும் என்னும் அச்சத்தால் நாம் மேலும் படைபெருக்குகிறோம். அப்படைக்குரிய செலவுக்காக நிலம் நிலம் என வெறிகொள்கிறோம். அதாவது எந்த அரசும் ஒன்று இரண்டு என பெருகமுடியாது. ஒன்று பத்து நூறு ஆயிரம் என்றே பெருகமுடியும்…”

“ஆகவே பெருகும் நகரம் மிக விரைவிலேயே அதன் அறுதியெல்லையை சென்றடையும். மகதமும் வங்கமும் அவ்வண்ணம் நம் கண்முன் அழிந்தன. முன்பு அழிந்த பலநகரங்களின் கதைகளை நாம் அறிவோம். அஸ்தினபுரி இவ்வண்ணம் இதுவரை நீடித்தது இதன் அரசர்களின் போர்வல்லமையால்தான். பிரதீபரின் காலம்வரை அத்தனை அரசர்களும் வெல்லற்கரிய போர்வீரர்களாகவே திகழ்ந்தனர். நாம் ஆண்டுக்கு இரண்டு அயல்படையெடுப்புகளை செய்தோம். தொலைநாடுகளை கொள்ளையிட்டு பெரும்செல்வத்துடன் திரும்பினோம். அதைக்கொண்டு இந்நகரை பேணினோம். பீஷ்மரும் படைகொண்டு சென்று வென்று பொருள் கொண்டுவந்திருக்கிறார். பாண்டவர்கள் சௌவீரர்களை வென்று பொருள் கொண்டுவந்தனர். அங்கர் படைத்தலைமை ஏற்றபின் நாம் பதினெட்டு போர்களில் வென்று திறைச்செல்வம் கொண்டுவந்தோம்.”

அவள் அவ்வாறு அவர் பேசுவதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் முகம் விரிந்து விழிகள் நிலைத்தன. கரிய பெரிய உதடுகள் விரிந்து பற்களின் கீழ்நுனிகள் தெரிய அவரை நோக்கிக்கொண்டு வந்தாள். “ஆனால் இப்போர்களுக்கெல்லாம் எல்லை உள்ளது. காட்டில் புலி மான்களை வேட்டையாடி உண்ணும். மான்கள் புல் உண்ணும். புல் வறண்டால் புலிக்கு உணவின்றி ஆகும். நாம் வென்ற அரசர்கள் அனைவரும் சிற்றரசர்களை வென்று திறைகொண்டவர்கள். சிற்றரசர்கள் காடுகளில் வாழும் நிஷாதர்களையும் கிராதர்களையும் வென்று திறைகொண்டவர்கள். இந்நகரம் இங்கே இவ்வண்ணம் செழித்திருக்க காடுகளிலும் தொலைநிலங்களிலும் நூறுமடங்கு ஆயிரம்மடங்கு நிஷாதரும் கிராதரும் அசுரரும் அரக்கரும் சிறுவாழ்க்கை வாழ்ந்தாகவேண்டும்” என்றார் கனகர்.

“ஆனால் இன்று நிலை மாறிவிட்டிருக்கிறது. கிராதர்களும் நிஷாதர்களும் அரசர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நாடுகள் வெல்லற்கரியவையாக மாறிவிட்டன. அசுரர்களும் அரக்கர்களும்கூட ஆற்றல் பெற்று எழுந்துவிட்டனர். ஆகவே வேறுவழியே இல்லை, வென்றுவாழும் அரசர்கள் சுருங்கியாகவேண்டும்… அதை தவிர்ப்பதற்கான அறுதிப்போர் இப்போது நிகழ்ந்தது. அதில் நாம் தோற்றுவிட்டோம். அவர்களே வென்றிருக்கிறார்கள். இனி அவர்களின் காலம் எழவிருக்கிறது. அவர்களிலிருந்து பேரரசுகள்கூட எழலாம்… ஷத்ரியர்நாடுகள் தேய்ந்து மறைந்தாகவேண்டும்… அஸ்தினபுரியும்கூட அதை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது” என்றார் கனகர். “காட்டில் புல் வறளும்போது பெரும்புலிகள் தங்கள் குட்டிகளை கொன்றுவிடும் என்கிறார்கள். அதுதான் நிகழ்ந்ததோ என நான் அஞ்சுகிறேன். ஷத்ரிய குலமே ஒன்றையொன்று கொன்று அழிந்துவிட்டிருக்கிறது… பிறிதொரு யுகத்திற்காக பாரதவர்ஷம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது.”

சம்வகையால் அவர் சொல்வதை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் அவள் அகம் கொந்தளித்துக்கொண்டிருப்பதை முகம் காட்டியது. அவளால் புரவியில் அமர்ந்திருக்கவே இயலவில்லை. “நீ சொல்வது உண்மை. புகழ்மொழிகளால் அரசரின் விழிகள் மறைந்துவிட்டிருந்தன. இந்நகரம் தன் இயல்பை மீறி பெரிதாகிவிட்டிருக்கிறது. இதன் கருவூலம் இதன் நிலத்தை ஆள்வதற்கு போதுமானது அல்ல. ஆனால் அஸ்தினபுரியின் அரசர்கள் கணக்கு பார்ப்பதில்லை. கணக்கிடுவதே இழிவென எண்ணுகிறார்கள். அரசரோ அவர் என்றுமென இங்கே அமைந்திருப்பவர் என எண்ணினார். ஆகவே செல்வத்தை மேலும் மக்களுக்காக அள்ளிச் செலவழித்தார். பாதைகளை அமைத்தார். நீர்நிலைகளை சமைத்தார். நகர்களுக்கு கோட்டைகளை கட்டினார். கழனி பெருக்கினார். கல்விச்சாலைகளை அமைத்தார். கருவூலம் ஒழிந்திருக்கையில் எழுந்தது இப்பெரும்போர். இத்தகைய போருக்குத் தேவையான செல்வம் நம்மிடம் இருக்கவில்லை.”

“ஆனால் போர் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆகவே வேறுவழியில்லை. கொலைக்களத்திற்குக் கொண்டுசெல்லப்படும் பசுவை ஒட்டக்கறப்பதுபோல அஸ்தினபுரியை நிகுதியிட்டு பிழிந்தெடுத்தோம். எத்தனை பொருள்கொண்டுவந்தாலும் போதவில்லை. பாரதவர்ஷத்தின் படைத்தலைமை என்றால் அது செல்வத்தால்தான் இயல்வது. அடியிலாப் பிலத்தில் அஸ்தினபுரியின் செல்வத்தை கொட்டிக்கொண்டே இருந்தோம்” என்றார் கனகர். “உண்மையில் வரி கொள்வது என்பது கொள்ளையேதான். நூறு பொன்னுக்கு ஐந்து பொன் என்ற மேனிக்குத்தான் அறுவடை களம்வந்துசேரும். ஒன்றும் செய்ய முடியாது. நிகழ்ந்ததை அரசர்வரை கொண்டுசெல்லாமலிருக்க முடிந்தது நன்று. போர் முடிவெடுத்தபின் குடியவையைக் கூட்டுவதை தவிர்த்தோம். பேரமைச்சர் விதுரர் இருந்திருந்தால் அவையிலேயே இவை பேசப்பட்டிருக்கும். அவர் இல்லாமலிருந்தது அனைத்து வகையிலும் நலம் பயந்தது.”

அதையெல்லாம் அவர் வேறுஎவரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார் என உணர்ந்தார். சம்வகை “இனி என்ன நிகழும், அமைச்சரே? ஒழிந்த ஓடெனத் திகழும் அஸ்தினபுரியை வென்றிருக்கிறார்கள் பாண்டவர்கள்” என்றாள். அப்போதுதான் அவளை அவர் ஏறிட்டு நோக்கினார். அவளிடம் பேசிக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தவராக திகைத்தார். “அவர்கள் இந்நகரை எப்படி மீட்டெடுக்கப்போகிறார்கள்?” என்று அவள் கேட்டாள். அவ்வினாவே அவள் அனைத்தையும் நுணுக்கமாக சொல்தொடர்வதை காட்டியது. ஆகவே அவரால் மேலும் பேசாமலிருக்க இயலவில்லை. “ஆம், மெய்தான். அவர்களிடம் சென்றுசேரும் நகரம் ஒழிந்த கலம்தான்” என்றார். “அதை அவர்கள் நிறைப்பதற்கு இரண்டு வழிகளே உள்ளன” என்றார் கனகர்.

“தொலைநிலங்களில் சிற்றரசுகளாகத் திரண்டிருக்கும் கிராதரையும் நிஷாதரையும் வெல்வது. அவர்களைப் பிழிந்து திறைகொள்வது. அதைச் செய்ய அவர்களால் இயலாது. ஏனென்றால் அவர்களைத் துணைகொண்டே வென்றிருக்கிறார்கள். எனில் எஞ்சியிருப்பது அவர்களிடம் திறைகொள்ளும் பிற ஷத்ரியர்களை வென்றழிப்பது. திறைகொள்ள பாரதவர்ஷத்தில் பிற நாடு இல்லாமலாக்குவது. எனில் அஸ்தினபுரி மேலும் சிலகாலம் முடிபெருகி நீடிக்கும். ஆனால் இருந்த பெருமையை இனி ஒருபோதும் அது சென்றடையாது. பாண்டவர் நால்வரும் திசைவெற்றிகொண்டு திறைசுமந்து வந்தார்களென்றால் ஒரு தலைமுறைக்காலம் அது செல்வம்கொண்டு பொலியும்… ஆனால் அது நீடிக்காது.”

“ஷத்ரியர்களால் வென்று திறைகொள்ளப்படாத நிஷாதரும் கிராதரும் பிறரும் வளர்ந்து ஆற்றல்பெறுவார்கள். அவர்களிடம் திறைகொள்ளும் ஆற்றலும் அஸ்தினபுரிக்கு இருக்காது. அவர்களிடமிருந்து பேரரசுகள் தோன்றலாம். அப்போது அஸ்தினபுரி வெறும் சொல் என மாறி பாரதவர்ஷத்தின் நினைவில் மறையலாம். காவியங்களில் மட்டும் எஞ்சலாம்… இதை இப்போது சொல்லமுடியாது. எனில் நாம் இவ்வண்ணம் கணிக்கமுடியும்…” என்று கனகர் சொன்னார். சம்வகை அவரை நோக்காமல் தலையைத் தாழ்த்தி எண்ணங்களில் மூழ்கியபடி வந்தாள். எளிய சூதர்குலத்துப் பெண். ஆனால் சூதர்களில் இந்த ஆற்றல் நிகழ்வதில்லை. இவள் பிற குடியின் கலப்புள்ளவள். ஆயினும் அரசியலை இவள் எவ்வண்ணம் புரிந்துகொள்ள முடியும்?

அவர் அவளையே நோக்கிக்கொண்டு சென்றார். தான் சொன்னதையெல்லாம் அவள் எவ்வண்ணம் புரிந்துகொள்கிறாள் என்னும் வியப்பு அவருக்கு ஏற்பட்டது. வேறு ஏதோ ஒருவகையில், அவரால் எண்ணமுடியாதபடி, அவள் அவற்றை விளக்கிக்கொண்டிருக்கிறாள். ஒருவேளை எளிய குழந்தைக்கதையாக. அதற்கே வாய்ப்பு மிகுதி. அவள் சிறுமியென்றே தோன்றினாள். அஸ்தினபுரி போருக்குச் சென்று ஆண்களை இழந்திராவிட்டால் அவளால் இப்படி புரவியில் ஊர்ந்திருக்கமுடியாது. சாலையில் இவ்வண்ணம் சென்றிருக்கவும் முடியாது. அவள் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி திரும்பி “எனில் துவாரகை என்ன ஆகும்?” என்றாள். “ஏன்?” என்று அவர் கேட்டார். “துவாரகையால் தொலைநிலங்களை வென்று கொள்ளைச்செல்வம் அடைய முடியாது. அவர்களிடம் திசைவெல்லும் ஆற்றலும் இல்லை” என்று அவள் சொன்னாள்.

“அவர்களிடம் வணிகம் உள்ளது. கடல்வணிகத்தால் ஈட்டியதே அவர்களின் செல்வம்.” கனகர் மெல்லிய எரிச்சலுடன் அதை சொன்னார். அவள் அவர் சொன்னவற்றை புரிந்துகொண்டிருந்ததே அவரை சீற்றம் கொள்ளச்செய்தது. அது அவரை சிறுமைப்படுத்துவதுபோலத் தோன்றியது. அவளிடம் எது தன்னை பேசவைத்தது? பேசவேண்டியிருந்த உளத்தனிமை மட்டும் அல்ல. அவளிடம் அவரைப் பேசவைக்கும் எதுவோ இருந்தது. அவள் “கடல்வணிகம் நெடுநாள் நீடிக்காது. புதிய அரசுகள் வீறுடன் எழுந்துவரும். கடலோரம் அமைந்த அரசுகளும் இனி திறைச்செல்வம் திரளாதென உணர்ந்து கடல்வணிகத்தில் கருத்தூன்றலாம். துவாரகையில் இளைய யாதவரின் மைந்தர் திறனற்றவர்கள் என்கிறார்கள். அதைவிட அவர்களிடம் ஒற்றுமையும் இல்லை. அங்கே அவர்களுக்குள் ஒரு போர் நிகழ்ந்தால், அயல்வணிகர் ஒருமுறை தாக்கப்பட்டால், அனைவரும் துவாரகையை கைவிடுவார்கள்” என்றாள்.

கனகர் “அதனாலென்ன ஆகும்?” என்றார். “இல்லை” என அவள் தயங்கினாள். “சொல்” என்றார் கனகர். “துவாரகை அழியும் என்று சொல்லப்படுகிறது” என்றாள். “எவர் சொன்னது?” என்றார் கனகர். “நாம் காணப்போகும் தீர்க்கசியாமர் அதைச் சொன்னதாக சொல்லப்படுகிறது… நான் அவரைப் பார்க்கச்சென்றபோது அவ்வாறு கேள்விப்பட்டேன்.” கனகர் “வெறும்கதை… யாதவர்கள் வந்து அவரிடம் குறிகேட்டனரா என்ன?” என்றார். “இல்லை…” என அவள் மேலும் தயங்கி “அமைச்சரே, இன்று அஸ்தினபுரியின் பெண்டிரால் மிகமிக வெறுக்கப்படுபவர் இளைய யாதவரே என அறிந்திருப்பீர்கள்” என்றார். அதை ஒற்றர்வழி பலமுறை கேட்டிருந்தபோதிலும் கனகர் திகைப்படைந்தார். அது ஒரு பெண்ணின் குரல்வழியாக வந்ததனால்தான் எனத் தெரிந்தது.

“இங்கே ஒவ்வொரு இடத்திலும் அன்னையரும் கன்னியரும் அவரை வசைபாடுகிறார்கள். உளமுடைந்து தீச்சொல்லிடுகிறார்கள். இங்கு பல இல்லங்களில் அவருடைய நினைவாக நீலச் சோழிக்கற்களை வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது என அறிந்திருப்பீர்கள். அவற்றைத் தூக்கி வந்து வெளியே வீசினார்கள். தெருவெங்கும் அவை இறைந்துகிடந்தன. நான் உணவுதிரட்ட காட்டுக்குச் சென்றபோது ஒரு மைந்தன் உதிர்ந்துகிடந்த மயில்பீலி ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு ஓடிவந்து அன்னையிடம் காட்டினான். அன்னை சீறி அதைப்  பிடுங்கி அப்பால் வீசி மைந்தனை அறைந்தாள். அந்த இழிபொருளை இனி கையாலும் தொடுவாயா என கூச்சலிட்டாள். அமைச்சரே, இங்கே அன்னையர் மயில்களைக் கண்டாலே கற்களால் அறைந்து துரத்துகிறார்கள். அவை இங்குள்ளோரால் தெய்வமெனவே வழிபடப்பட்டவை. இன்று அஞ்சி காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டன.”

“ஆம்” என்றார் கனகர். “மூதன்னை ஒருத்தி தன் குடியின் பதினேழு மைந்தரை போரில் இழந்தாள். அவளுடைய குடியில் எஞ்சிய ஒற்றைக்கருவும் குருதியெனக் கரைந்தது. அவள் சீறியபடி தன் காலடி மண்ணை இடக்கையில் எடுத்தபடி ஓடி ஹிரண்யாக்ஷரின் ஆலயமுகப்புக்கு வந்தாள். அங்கிருந்த அஜபாகரின் சிற்றாலயத்திற்கு முன்னால் நின்று இளைய யாதவரின் குடி முற்றழியும்படி தீச்சொல்லிடுவதற்கு கையை தூக்கியபோது அப்பாலிருந்த தீர்க்கசியாமர் கூவி அதை தடுத்தார். அந்த மூதன்னையுடன் இணைந்து நூறு மூதன்னையர் அதேபோல காலடி மண்ணை இடக்கையில் எடுத்தபடி வந்தனர். அனைவரும் திகைத்து நிற்க தீர்க்கசியாமர் உங்கள் சொல் அவரை அழிக்கும், அன்னையரே. ஆனால் தீச்சொற்கள் இடும் உரிமை தெய்வங்களுக்கே உரியது. மானுடர் தீச்சொல்லிட்டால் அவர்கள் அதை தங்களை நோக்கியும் ஏவிக்கொள்கிறார்கள் என்று அறிக என்றார். அனைவரும் தயங்கி கைதாழ்த்தினர். தெய்வங்களின் நெறியே அவருக்கு அழிவை அளிக்கும். அவர் குடி எச்சமில்லாமல் முற்றழிவதை அவர் காண்பார். அவர் நகரில் ஒரு கல்லேனும் எஞ்சாது என்று அறிக என்றார். அன்னையர் திகைத்து பின்னர் ஓலமிட்டனர்.”

“மானுடராயினும் தெய்வமாயினும் இங்கே மண்மீதிலங்குகையில் மண்ணுக்குரிய நெறிகளாலேயே ஆளப்படுவார்கள் என்று தீர்க்கசியாமர் கூறியதாகச் சொல்வார்கள்” என்று அவள் சொன்னாள். “அச்செய்தியைக் கேட்டபின் அன்னையர் சோர்ந்து அழுதபடி ஆங்காங்கே அமர்ந்துவிட்டார்களாம். அவர்களால் மீண்டும் தங்கள் இல்லம்வரை நடப்பதுகூட இயலவில்லை என்றார்கள்.” கனகர் நீள்மூச்செறிந்தபடி புரவியில் அமர்ந்திருந்தார். “அது மெய்யென்றாகவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்” என்று சம்வகை சொன்னாள். “அவருடைய புகழ் கேட்டே நான் வளர்ந்தேன். தெய்வமென்றே என்னுள் அவர் திகழ்கிறார். ஆனால் இப்பேரழிவுக்குப் பின் அவர் அதன் விளைவை அடையவில்லை என்றால் இப்புவியின் நெறிகளில் பிழை நிகழ்கிறது. அவர் பிறருடைய அழிவை நிகழ்த்தியவர். தனக்கும் அதையே நிகழ்த்திய பின் அவர் விண்மீண்டாலொழிய இது முழுமையடைவதில்லை.”

கனகர் ஒன்றும் சொல்லவில்லை. அவளும் சொல்லடங்கி புரவியிலேயே அமர்ந்திருந்தாள். அவர்கள் ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தை அடைந்தார்கள். இசைச்சூதர்களின் நான்கு தெருக்கள் முட்டிக்கொள்ளும் முனையில் அமைந்த ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தருகே  புழுதி மண்டிக்கிடந்தது. கனகர்  புரவியை கடிவாளத்தை சற்றே இழுத்து நிறுத்தினார். அங்கே  சூதர்குலச் சிறுவர்களுக்கு யாழ் தொட்டளிக்கும் சடங்கு நிகழும் மேடையில் ஒரு அங்காடி நாய் படுத்திருந்தது. ஆலயம் திறந்திருந்தது. கருவறையில் பொன்னாலான விழிகளுடன் கையில் யாழுடன் ஹிரண்யாக்ஷர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் அரியும் மலரும் பொரியும் வெல்லமும் படைக்கப்படும் பெரிய பலிமேடையில் ஒற்றை எண்ணைவிளக்கு மட்டும் எரிய கைப்பிடி அன்னம் படைக்கப்பட்டிருந்தது.

ஆலயத்திற்கு வலப்பக்கமாக அஜபாகரின் சிறிய மண்சிலை இருந்தது. அதற்குச் சூட்டப்பட்ட மலர்மாலைகள் சருகுகளாகிவிட்டிருந்தன. அவர் விழிகளால் தீர்க்கசியாமரை தேடினார். சில கணங்களுக்குப் பின்னர்தான் உயிருள்ள விழிகளைத் தேடுகிறோம் என்று உணர்ந்தார். நோக்கை விலக்கி மீண்டும் நோக்கியபோது தூணில் ஒட்டியபடி  கிழிபட்ட கட்டைவிரல்கள் கொண்ட கையால் மடியில் வைத்த பேரியாழை வருடியபடி அமர்ந்திருந்த தீர்க்கசியாமரை கண்டார். அவர் தலைமயிர் வளர்ந்து சுருள்கற்றைகளாக பின்னால் சரிந்திருந்தது. அவற்றில் சடைத்திரிகளும் இருந்தன. ஓரிரு நரைமயிர்கள் தெரிந்தன. அவருடைய தோள்கள் குறுகி முன்னால் வளைந்து மேலும் கூனல் விழுந்திருந்தது. மூக்கு முதுகழுகின் அலகுபோல கூர்ந்து வளைந்திருக்க உதடுகள் உள்ளடங்கியிருந்தன.

புரவிக்குளம்படிகளை அவர் முன்னரே கேட்டிருந்தார். அவர்கள் இறங்கியதும் திரும்பி அவர்களை தன் செவ்விழிக்கோளங்களால் நோக்கினார். கனகர் கடிவாளத்தை புரவியின்மேல் வீசிவிட்டு அவரை நோக்கி நடந்தார். தீர்க்கசியாமர் புன்னகை செய்து “வருக அரசி, அமைச்சருக்கும் நல்வரவு” என்றார்.

நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 7

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 1

கனகர் வழிதவறிவிட்டிருந்தார். அதை தெற்குக் கோட்டையின் கரிய பெருஞ்சுவரில் முட்டிக்கொண்டு நின்றபோதுதான் அவர் உணர்ந்தார். முதலில் அவர் அதை கோட்டை என்றே உணரவில்லை. இருளென்றே எண்ணினார். அணுகுந்தோறும் இருள் அவ்வண்ணமே நின்றிருப்பதுகூட விழிகளுக்கு விந்தையாகப் படவில்லை. மிக அருகே சென்று அவ்விருள் பரப்பின் பருபருப்பை விழிகளால் உணர்ந்த பின்னரே அது சுவரென அறிந்து புரவியை நிறுத்தினார். மூச்சிரைத்தபடி அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். சுவர் காற்றில் திரைச்சீலை என ஆடுவதாகத் தோன்றியது. அது தன் களைப்பால் தோன்றுவது என உணர்ந்து கண்களை மூடிக்கொண்டார். கண்களுக்குள்ளும் அவ்விருள் தேங்கியிருந்தது.

அது எந்த இடம் என உய்த்தறிய அவர் முயன்றார். ஆனால் எத்தனை எண்ணியும் சித்தம் திகைத்து திசைகளில் முட்டி நின்றிருந்தது. தெற்குதிசைக்கு கிளம்பியதை எண்ணி எண்ணித்தான் நினைவிலிருந்து எடுத்தார். எனில் இது தெற்குக் கோட்டை. தென்மேற்கா தென்கிழக்கா? எந்த அடையாளங்களும் தென்படவில்லை. அங்கிருந்த குறுங்காடும், அச்சாலையின் இருபுறங்களிலும் இருந்த கைவிடப்பட்ட சிறுவீடுகளும் கல்லால் ஆன சிறிய துர்க்கையன்னையின் ஆலயமும் எந்தச் செய்தியையும் அளிக்கவில்லை. ஏதேனும் ஓர் அடையாளத்திற்காக அவர் விழிகளை சுழற்றினார். அனைத்துமே நன்கறிந்தவை, ஆனால் எந்தத் தனியடையாளமும் அற்றவை.

அஸ்தினபுரியின் ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு இல்லமும் ஒவ்வொரு சாலையும் பிறிதொன்றைப்போலவே உள்ளன. சிதல்கள் தங்கள் கூடுகளை எப்படி ஒன்று பிறிதைப்போலவே கட்டிக்கொள்கின்றன, ஏன் அத்தனை தேன்கூடுகளும் ஒன்றென்றே தோன்றுகின்றன என்று அவர் வியந்ததுண்டு. அவற்றின் உடலென்றான அகம் பிறிதொன்றை இயற்றும் ஆற்றல்கொண்டது அல்ல. மானுட உள்ளம் உடலைக் கடந்து தானெழுவது, உடலை ஆள்வது என்று அவரே அதற்கு விளக்கமும் அளித்துக்கொண்டிருந்தார். ஆனால் மானுடரும் அனைத்தையும் ஒன்றுபிறிதென்றே அமைத்துக்கொள்கிறார்கள். இந்த இல்லம் அஸ்தினபுரியின் அத்தனை இல்லங்களையும் போலத்தான் இருக்கிறது. தனியடையாளம் என்று நாம் எண்ணுவதெல்லாம் மிகமிகச் சிறிய வேறுபாடுகளைத்தான்.

மானுடரால் அவ்வண்ணம்தான் இயலும். ஒரே காலகட்டத்தில் அமைவன ஒன்றுபோலிருக்கின்றன. ஒரே இடத்திலமைபவை ஒன்றுபோலிருக்கின்றன. அகன்று நோக்கினால் அந்நகரமே ஒன்றுபோல் அமைந்தவற்றாலானது. மலைமேல் நின்று நோக்கினால் அனைத்து நகரங்களும் ஒன்றுபோலவே தோன்றக்கூடும். விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு அனைத்து மானுட அமைப்புக்களும் ஒன்றே என்று தோன்றக்கூடும். அனைத்து மானுட முகங்களும் ஒன்றென்றே தோன்றக்கூடுமா என்ன? அனைத்து மானுடரும் ஒற்றை உருவம் கொண்டவர்கள்தானா?

எதிரே ஒரு சூதர் தலையாட்டி பாடியபடியே வந்தார். கனகர் அவரிடம் “சூதரே, இது எந்த இடம்?” என்றார். அவர் மகிழ்ச்சியுடன் தலையசைத்து “நன்று… நாம் ஒன்றாக உண்போம். ஒன்றாகப் புணர்வோம். ஒன்றாக இருப்பதே நம்மை மகிழ்ச்சியாக்கும்… ஏன் தனிமைகொள்ளவேண்டும்?” என்றார். கனகர் திகைத்து பின் அவருடைய பதறும் விழிகளை கூர்ந்து நோக்கி “இது அரசாணை. இந்த இடம் என்னவென்று சொல்லுங்கள்” என்றார். “ஏன் என்றால் நாம் ஆணவம் கொண்டிருக்கிறோம். நாம் வைத்திருக்கும் அந்தச் சிறிய உறுப்பைக்கொண்டு உலகையே அளக்க விழைகிறோம்.”

அவர் காற்றோசையுடன் நகைத்து “சுங்கச்சாவடியில் முத்திரையிடும் மரத்துண்டு அது என எண்ணுகிறார்கள் சில ஆண்கள். அதைக்கொண்டு ஒருமுறை அழுத்தி எடுத்தால் அந்தப் பெண் அவனுக்குரியதாகிவிடுவாளாம்… எனில் அந்த மாளிகையை அதைக்கொண்டு முத்திரையிடு, மூடா!” என்றார். கனகர் சலிப்புடன் தலையசைத்தார். “அரசே, போரில் எத்தனை ஆயிரம் முத்திரைக்கோல்கள் அவ்வண்ணம் மண்படிந்திருக்கும்? அவற்றைப்பற்றி ஏதேனும் செய்தி உண்டா?” என்றார். “செல்க!” என்றார் கனகர். “வெடிப்பொருளைப் பற்றவைக்கும் கரிய சிறு திரிபோல் அது மானுடரில் அமைந்துள்ளது என்று என் ஆசிரியன் சொன்னான். அது சிதையேறி அனல் பற்றிக்கொள்ளும்போது நீலச்சுடர் எரிவதுண்டா?”

அவருடைய முகம் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. வாயில் மாறாத இளிப்பு தங்கியிருந்தது. கைகள் எதையோ காற்றில் சுழித்துச் சுழித்து அலைபாய்ந்தன. “தேவர்கள் மானுடரை விழிகளைக்கொண்டு அடையாளம் காண்கிறார்கள் என்பார்கள். ஆனால் நான் அறிவேன், பாதாளமூர்த்திகள் மானுடரை அவர்களின் காமச்சிற்றுறுப்பைக்கொண்டே அடையாளம் காண்கிறார்கள். அது மெய்யாகவே ஒரு சிறு கைப்பிடி. அதைப் பிடித்துத் தூக்கி எடுக்கிறார்கள்… ஆம்!” அவர் மீண்டும் நகைத்தார். “அது எப்போதுமே அவர்களை அறிந்திருந்தது… அது மானுட உடலில் இருந்தாலும் அவர்களுக்கு உரியது… ஏனென்றால்…”

கனகர் அத்தனை பொழுது அந்தப் பித்தை ஏன் அப்படி நின்று செவிகொண்டோம் என தன்னை எண்ணியே வியந்தார். புரவியைத் திருப்பி வந்த வழியிலேயே செல்லத் தொடங்கினார். அவர் பின்னாலிருந்து உரக்க கூவினார் “பல்லாயிரம் பேரின் காமச்சிற்றுறுப்புகள்… பல லட்சம். அவற்றை மட்டும் வெட்டிக் கொண்டுவந்திருக்கலாம். அவற்றை இந்நகரில் நடலாம். கருணைக்கிழங்கின் முளைக்கண் போன்றவை அவை. இங்கே அவை முளைத்தெழும். நான் அறிவேன், அகன்ற தளிரிலைகளுடன் அவை முளைக்கும். கருணைக்கிழங்கின் தண்டுபோலவே இருக்கும். ஆனால் கரியவை… அவை பெருமரங்களாக இந்த நகரில் பெருகி நிழல் பரப்பும். இங்கே நாங்களெல்லாம் அதன்கீழ் அமர்ந்து…”

கனகர் தன் உடல் வியர்வைகொண்டிருப்பதை கண்டார். என்ன ஆயிற்று? அச்சொற்கள் தானறியாத எங்கோ சென்று தொடுகின்றன. எதையோ அசைத்துவிட்டிருக்கின்றன. இல்லை, இப்போது நான் தேடுவது வழியை மட்டுமே. ஆனால் வழிகள் என எதுவுமே அகத்தே எழவில்லை. அவர் அஸ்தினபுரியில் எப்போதுமே வழிகளை நினைவுகூர்ந்தவர் அல்ல. கால்கள் நடக்கத்தொடங்கிய நாட்கள் முதல் அந்நகரின் தெருக்கள் அவருக்குரியவையாக இருந்தன. இளமையில் மொத்த நகரிலும் அவர்கள் ஒளிந்து விளையாடுவதுண்டு. வேள்விச்சாலைகள் முதல் அங்காடிகளின் இருண்ட சிறுசந்துகளுக்குள் வரை ஒளிந்துகொள்வார்கள். ஒளிந்துகொள்பவனை தேடிச்சென்று பிடிப்பதில் அவர் தேர்ச்சி கொண்டிருந்தார். ஒளிந்துகொள்பவனாக நின்று அந்நகரை அவர் தன்னுள் எழுப்பிக்கொள்வார். அவன் சென்றவழி நத்தையின் ஒளித்தடம் என தெரியும். அங்கே சென்று அவனை பற்றிக்கொள்வார்.

ஒரு கட்டத்தில் அவர் நகரை உணர்வதையே மறந்துவிட்டிருந்தார். செல்லவேண்டிய இடம் தோன்றியதுமே கால்கள் வழியை தெரிவுசெய்துவிடும். நினைத்தபோது சென்றெய்தும் அந்த நகருக்கு அப்பால் அவருடைய சித்தம் சென்றதுமில்லை. சிறுவர்கள் வழிதேடுவதே இல்லை. அவர்களின் உவகையும் கொப்பளிப்பும் வழிகளை அளிக்கின்றன. காற்றுக்கு கதவுகள் திறப்பதுபோல. இச்சாலைகளில் ஏன் ஒரு குழந்தைகூட இல்லை? சிறுவர்கள் இல்லாமல் இச்சாலைகளை நான் கண்டதே இல்லை. ஏனென்றறியாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள். எண்ணியிராமல் கூச்சலிடுவார்கள். அவர்களெல்லாம் எங்கே? உணவுதேட அன்னையருடன் காடுகளுக்குள் சென்றுவிட்டிருக்கக் கூடும்.

இத்தெருக்களில் கட்டடங்களும் தூண்களும் அவ்வண்ணமே உள்ளன. மண்ணும் கல்லும் மாறவில்லை. ஆனால் அவை அனைத்துமே பிறிதாக ஆகிவிட்டிருந்தன. இவற்றை சமைத்திருந்தவர் மானுடரே. பொருட்கள் மானுடரால்தான் தங்களைக் கோத்து தெருவென்றும் நகரென்றும் துலக்கிக்கொண்டன. இந்நகர் இத்தனை ஒழிந்து கிடக்குமென என் அகம் எண்ணியதே இல்லை. இதை எதிர்கொள்ள இயலாது அது உள்வாங்கிக்கொண்டுவிட்டிருக்கிறது. இதை நோக்குவதையே மறுக்கிறது. எனவேதான் எந்த அடையாளத்தையும் பெற்றுக்கொள்வதில்லை.

முதிரா இளமையில் அந்நகரின் பரத்தையர் இல்லங்கள் வழியாக உலவிக்கொண்டிருந்தது அவர் அகம். கற்கையிலும் பணியாற்றுகையிலும் அவர் அகத்தில் ஒரு தன்னுணர்வு அப்பாதைகளை சிக்கலான நூலிழைகளை பிரித்து நீவி எடுப்பதுபோல ஆராய்ந்துகொண்டிருந்தது. கொடிகளைப் பற்றியபடி சென்று கிழங்கைக் கண்டடைவதுபோல அங்குள்ள சாலைகளை தொட்டுத்தொட்டுச் சென்று அவற்றின் இறுதியில் உகந்த பெண்ணை கண்டடைவார்.

அப்பெண்ணை விழவுகளில் கண்டிருப்பார். சாலைகளில் கடந்திருப்பார். அங்காடியில் பொருட்களுக்கு நடுவே பார்த்திருப்பார். மிதக்கும் முகங்களின் அலைகளில் ஒரு துளி. ஓர் அசைவின் கீற்று. ஒரு விழிமின். ஆனால் வழி ஒன்று உள்ளே தெளியும். அதனூடாகச் சென்று அவளை அடைந்த பின்னரே கால்கள் கிளம்பும். அவளைச் சென்றடையும்போது அவள் எப்படி வந்தீர்கள் என்று எப்போதுமே கேட்பாள். இந்நகரில் நானறியாத ஏதுமில்லை என்று அவர் மறுமொழி சொல்வார். அவள் நகைத்து முழு நகரையுமா என்பாள். இந்நகரென்றானது என் அகம் என்று அவர் மறுமொழி சொல்வார்.

சென்ற பிறப்பில் இந்நகரில் ஒரு பூனையாக இருந்தேன். பூனையறியாத பாதைகள் இல்லை. குதிரையின் வழி கண்களில். நாயின் வழி மூக்கில். பசுவின் வழி செவிகளில். பூனையின் வழி இருப்பது அதன் ஆத்மாவில். ஆகவே அதன் வழியை அதுவேகூட அறிந்திருக்காது. முந்தைய கணத்தை வைத்து அடுத்த கணம் அது எங்கிருக்கும் என கணிக்க முடியாது. விலங்குகள் அந்தந்த கணங்களில் வாழ்பவை. பூனை அடுத்த கணத்தில் வாழும் சித்தம் கொண்டது. அதன் உடல் அக்கணத்திலிருந்து அடுத்த கணம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அவர் சுட்டிக்காட்டியதும் மஞ்சத்தறையில் இருந்த பூனை எழுந்து நாவால் மூக்கை நக்கி மெல்லிய ஓசை எழுப்பியது.

பரத்தையர் இல்லங்களில் பூனைகள் ஏன் பெருகியிருக்கின்றன என அவர் எண்ணிக்கொண்டார். அவர் பூனைகளில்லாத பரத்தையர் இல்லங்களை கண்டதே இல்லை. நாய்கள் இருப்பதையும் கண்டதில்லை. கண்டதை கண்டதுமே கூவியறிவிக்கும் நாய்களை பரத்தையர் வெறுப்பதில் பொருளுண்டு. அயலாரை வெறுப்பவை அவை. ஆனால் பூனைகளுக்கு அயலாரும் அணுக்கரும் என எவருமில்லை. அவை மானுடரை உண்மையில் பார்க்கின்றனவா என்றே ஐயம் எழும். அவை வாழும் உலகம் மானுடரின் உலகுக்கு நடுவே மானுடர் அறியாமல் பின்னப்பட்டிருக்கிறது.

அவர்களுக்கு அந்தச் சிறுவிலங்கின் மென்மை பிடித்திருக்கலாம். எங்கும் நழுவும் உடலும் ஓசையற்ற நடையும் உகந்ததாக இருக்கலாம். எந்நிலையிலும் நான்கு கால்களில் நிலம் வந்துசேரும் உடலை அவர்கள் விரும்பக்கூடும். இருளிலும் ஒளிவிடும் அவற்றின் விழிகள் அவர்களுக்கு எப்போதும் துணையெனத் தோன்றலாம். பகலில் அவ்விழிகள் நீண்டு வெறிப்பு எனத் தோன்றுவது நிறைவளிக்கலாம். நோக்குக, அதன் முன்கால் ஒரு கணம் முன்னாலிருக்கிறது! அது நிகழ்கணத்தில் பின்னங்காலையும் நெளியும் வாலையுமே வைத்திருக்கிறது. அந்த வால் எப்போதுமே தவித்துக்கொண்டிருக்கிறது. அது இங்கே இக்கணத்தில் இருக்க விழையவில்லை என்று சொல்கிறது…

பரத்தையர்தெருவின் பெண்களுக்கு அத்தகைய பேச்சுக்கள் பிடிக்கும் என அவர் அறிந்திருந்தார். அவர்கள் ஒருவர் போலவே இன்னொருவரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள். முகங்களை நினைவுகூராதவர்கள். தனித்தெழுபவன் அவர்களில் ஆர்வத்தை உருவாக்குகிறான். தனித்தெழுபவர்கள் இரு வகை என ஒருமுறை ஒருத்தி அவரிடம் சொன்னாள். வன்முறையும் குற்றமும் கொண்டவர்கள். பெரும்பாலும் திருடர்கள். திருடர்களில் சூதாடிகளல்லாதவர்கள் பெரும்பாலும் எவருமில்லை. அன்றி பித்தர்கள். நான் இருவரில் எவன் என்று அவர் கேட்டார். பித்து உள்ளே கரந்த சூதாடி என்று அவள் சொல்லி நகைத்தாள்.

அவர் அந்த இடத்தை அடையாளம் கண்டுகொண்டார். அது முன்பு சுமமாலிகை என்னும் பரத்தையின் இல்லம். அவள் இனிய புன்னகை கொண்டவள். அறிவிலாது பேசும் மைந்தரை நோக்கி உள்ளே நகைக்கும் அன்னையின் முகம் கொண்டிருந்தாள். பேசவைப்பதற்குத் தெரிந்தவள். பேசும் ஆண் தன்னை புனைந்து புனைந்து முழுமைகொள்கையில் வென்றதாகவே எண்ணிக்கொள்கிறான். அதை அவள் அறிந்துவிட்டிருக்கிறாள். அதை ஏற்றுக்கொள்கிறாள் எனத் தோன்றுகிறாள். ஆனால் பேதையல்ல என்றும் தெரிகிறாள். ஆகவே மேலும் சொல்லெடுக்கத் தூண்டும் புன்னகையாக காட்சியளிக்கிறாள். அவளிடம் அவர் நெடுங்காலம் பித்துப்பிடித்து கிடந்ததுண்டு. முதல் மைந்தன் பிறப்பது வரை அந்த மையல் நீடித்தது.

இது தெற்குவாயிலை ஒட்டிய பரத்தையர் தெரு என்றால் நிமித்தச் சூதர்தெரு இதற்கு அப்பால்தான். அவர் தேடிச்செல்லும் இடம் அதற்கு அப்பால்தான். அவர் புரவியை நிறுத்தி அந்த இல்லத்தை நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். சுமமாலிகை அங்கிருக்கக் கூடுமா? அவள்தானா அது? இல்லத்தின் உள்ளிருந்து வந்த இளம்பெண் மெலிந்து எலும்புருவாக இருந்தாள். தோல் நிறம் மங்கி விழிகள் உட்குவிந்து வாய் உலர்ந்து நோய்ப்படுக்கையிலிருந்து எழுந்தவள்போல. நடுக்கு கொண்ட கால்களுடன் அவள் அணுகி வந்தாள். “வருக, உத்தமரே! இவ்வில்லம் காத்திருக்கிறது” என்றாள்.

“சுமமாலிகை…” என்று அவர் கேட்டார். “என் அன்னைதான்… சென்ற வாரம் அன்னை இறந்துவிட்டார்கள்… உள்ளே நுழைக, உத்தமரே! இது இனிய இல்லம்” என்றாள் அவள். அவர் அவளை வெறித்து நோக்கிக்கொண்டு நின்றார். “அன்னை எப்படி மறைந்தாள்?” என்றார். “நோய்” என்று அவள் சொன்னாள். “உடன் பசியும் உளச்சோர்வும்.” கனகர் “நீ அவள் மகளா? உன் பெயரென்ன?” என்றார். “ராகினி என்பார்கள்… நான் ஆடலும் பாடலும் பயின்றவள்” என்று அவள் சொன்னாள். “உனக்கும் உடல்நலமில்லையா?” என்று அவர் கேட்டார். “ஆம், இந்நகரில் ஆடவர் என எவருமில்லை. ஆகவே இங்கே எவருமே வருவதில்லை. நாங்கள் உண்பதற்கு ஏதுமில்லை… இங்குள்ள எல்லா இல்லங்களிலும் அடுப்புகள் எரிவதில்லை.”

கனகர் எண்ணியதை அவள் சொன்னாள். “இங்கே எங்களிடம் செல்வமென்றும் ஏதுமில்லை.” கனகர் “ஏன்?” என்றார். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்க, ஈட்டியவை எங்கே சென்றன?” அவள் எரிச்சலுடன் “ஈட்டிய செல்வத்தால் இன்புற்றிருந்த பரத்தையர் எவரையேனும் நீங்கள் இதற்கு முன் அறிந்ததுண்டா?” என்றாள். கனகர் திகைத்தார். “அவை பறிக்கப்பட்டுவிடும்… இம்முறை அரசே பறித்துக்கொண்டது. இறுதிப்பொன் வரை. போர்நிகுதி… அள்ளிக்கொடுத்தவர்களுக்கு அடி விழுந்தது. அவர்களிடம் மேலும் கேட்டார்கள். கரந்துவைத்தவர்களுக்கு மேலும் அடி விழுந்தது. அவர்கள் மேலும் கரந்திருப்பார்கள் என கருதினார்கள்.”

கனகர் விழிகளை திருப்பிக்கொண்டார். “படைவீரர்கள் இல்லங்களுக்குள் நுழைந்து சுவர்களையும் தரையையும்கூட அகழ்ந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் சென்றபின் மறுவேளை உணவுக்காக நாங்கள் அலைமோதத் தொடங்கிவிட்டோம்.” அவள் உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தன. “எல்லா போர்களும் குலமகள்களுக்கு எதிராக நிகழ்பவை என்பார்கள். அது முழு உண்மையல்ல. போர் தொடங்குவதற்கு முன்னரே பரத்தையர் தோற்கடிக்கப்பட்டுவிடுவார்கள்…”

கனகர் புரவியை மெல்ல தட்டினார். அது முன்கால் எடுத்துவைத்தது. “இச்சொற்களுக்காகவேனும் ஏதேனும் அளித்துச்செல்க, அந்தணரே!” என்றாள் அவள். அவர் ஒரு வெள்ளிநாணயத்தை எடுத்து நீட்ட இயல்புக்கு மீறிய விசையுடன் வந்து அவள் அதை பற்றிக்கொண்டாள். இடையாடையில் அதை முடிந்து செருகிக்கொண்டபோது அவள் முகம் மலர்ந்து விழிகள் ஒளிகொண்டன. “படைவீரர்களையும் சொல்லிப் பயனில்லை. அவர்களுக்கு ஆணையிடப்பட்ட செல்வத்தை அவர்கள் வரியாக சேர்த்தேயாகவேண்டும். அந்தணருக்கு வரி இல்லை. ஆயரிடமிருந்து விலங்குகளும் உழவரிடமிருந்து நெல்லுமே கொள்ளத்தக்கவை. பொன்னிருப்பது வணிகர்களிடமும் எங்களிடமும்தான். அவர்கள் வணிகர்களை எலிகள் என்றனர். எங்களை தேனீக்கள் என்று. வரப்புகளை தோண்டியும் கிளைகளில் ஏறியும் புதையலெடுக்கிறோம் என்று ஒரு வீரன் சொன்னான்…” என்றாள்.

“சூதர்களிடமும் அவர்கள் அடித்துப்பிடுங்கினர் என்றார்கள்” என்று அவள் தொடர்ந்தாள். “அவர்கள் இங்கே நகரிலிருந்து எடுத்துக்கொண்டவற்றில் சிறுபகுதியே கருவூலத்திற்குச் சென்றிருக்கும். அரசர்கள் அறிவது அதை மட்டுமே. எத்தனை கூரிய ஆட்சியாளனும் ஆட்சி நிகழும் முழுத் தோற்றத்தை அறிந்துவிட முடியாது. அவர்களுக்கு அது சொல்லப்படுவதில்லை. அவர்கள் அமர்ந்திருக்கும் அரியணையிலிருந்து அதை காணவும் முடியாது. அவர்கள் காணவிரும்பும் வடிவிலேயே ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்துகிறது அரசு.” அவள் “உள்ளே வருக, அந்தணரே… வாயிலிலேயே நின்றிருக்கவேண்டாம்” என்றாள்.

அவர் “இல்லை” என்றார். அவர் செல்லவிரும்பினார். ஆனால் அவள் பேச்சு அவரை தடுத்து நிறுத்தியிருந்தது. அதை அறிந்து அவள் அப்பேச்சையே நீட்டித்தாள். “அன்றாட நெறியின்மைகளினூடாக இயங்குவதே அரசு என்று என் அன்னை சொல்வதுண்டு. அதை காணும் கண்கொண்ட அரசன் கோல்கொண்டு அரியணை அமர முடியாது. தானறிந்த சிறு வட்டத்திற்குள் நெறிநின்று ஆட்சிபுரப்பதாகவே அவன் எண்ணிக்கொள்ளவேண்டும். அது ஒன்றே வழி…” என்றாள். “போர்நிகுதிக்கு ஆணையிடப்பட்டதுமே கொள்ளை தொடங்கிவிட்டது. வேலோடு நின்றான் இடு என்பதும் கோலோடு நின்றவன் கொடு என்பதும் நிகரே.”

“நகரின் செல்வத்தில் பெரும்பகுதி வேல்முனையில் கொள்ளப்பட்டுவிட்டது. அவற்றில் பெரும்பகுதி இந்நகரிலேயே எங்கெங்கோ புதைக்கப்பட்டிருக்கும். போருக்குப் பின் திரும்பிவந்து வாழ்வதற்கு அவை தேவை என வீரர்கள் எண்ணியிருக்கலாம். போருக்குப் பின் திரும்பி வருவோம் என்னும் நம்பிக்கை இல்லாது படையில் சென்ற எவரும் இருக்க முடியாது. அச்செல்வம் இந்நகருக்கு அடியில் கூறப்படாத சொல் என இனி பல நூறாண்டுகள் இருக்கும். உணவில்லாவிட்டாலென்ன, நாமனைவரும் செல்வத்தின் மேல் அல்லவா நடமாடிக்கொண்டிருக்கிறோம்.”

கனகர் எண்ணியிராதபடி சினம்கொண்டார். அவர் விழிகளில் அதைப் பார்த்த அவள் “அவர்களும் எதுவும் செய்யமுடியாதுதான்…” என்றாள். கனகர் “எவரும் எதுவும் செய்யமுடியாது. அவர்களுக்கு ஆணையிட்டவர்களுக்கும் வேறுவழியில்லை. இத்தகைய போர்நகர்வுக்கு எல்லையில்லாத செல்வம் தேவையாகிறது… அஸ்தினபுரியே அத்தனை படைகளுக்கும் செலவிட வேண்டியிருந்தது” என்றார். “எவரையும் குறைசொல்ல முடியாது… அவரவர் ஊழ்நெறிப்படி இயங்கினர்” என்ற ராகினி “நீங்கள் விழைந்தால் இல்லத்திற்குள் வந்து…” என்றாள். “தாழ்வில்லை… நான் சூதர்தெருவில் ஓர் இடத்தை தேடிச்செல்கிறேன், சற்றே வழிதவறி வந்தேன்” என்றார்.

“எனக்கு இந்நகரில் எந்த வழிகளும் தெரியாது. எல்லா வழிகளினூடாகவும் இங்கே வந்துகொண்டிருப்பார்கள். நாங்கள் எங்கும் செல்வதில்லை. கருவறைத் தெய்வங்களும் பரத்தையரும் நிகர் என்பார்கள்” என்று அவள் சொன்னாள். சிரித்தபடி “போர் சூழத் தொடங்கியதுமே பெருவணிகர் இடம்பெயர்ந்துவிட்டனர். செல்வங்களை ஒளித்துக்கொண்டனர். எங்களுக்கும் வரவிருப்பதென்ன என்று தெரியும். ஆனால் இந்த வீடுகளை விட்டு எங்கும் செல்லமுடியாது. ஈமத்தாழியை தன் உடலெனச் சுமந்தலையும் ஆமைகள் போன்றவர்கள் நாங்கள்” என்றாள் ராகினி.

கனகர் மீண்டும் புரவியை தட்டியபின் “இங்கே பூனைகள் நிறைய இருந்தனவே?” என்றார். “ஒருநாள் உணவில்லாமல் ஆனதுமே அவை கிளம்பி காடுகளுக்குள் சென்றுவிட்டன…” என்று ராகினி சொன்னாள். “அங்கே காடுகளில் இருளில் மின்மினிகள்போல் அவற்றின் விழிகள் ஒளிவிடுவதாகச் சொன்னார்கள்.” கனகர் உளம்நடுங்க புரவியை முன்னே செலுத்தினார். அவள் பின்னால் வந்தபடி “இங்கே ஆண்கள் வரத்தொடங்க இன்னமும் ஒரு தலைமுறைக்காலம் ஆகும், அந்தணரே. நாங்கள் இந்த இல்லங்களுக்குள்ளேயே மடிந்து மட்கி அமைவோம். இன்றுள்ள இளையோர் வளர்ந்து தங்கள் காமத்தைக் கண்டடையும்போது எங்கள் வெள்ளெலும்புகளிலிருந்து பெண்கள் முளைத்தெழக்கூடும்… வெண்ணிற காளான்களைப் போன்று…” என்றாள். அவருடைய புரவி சென்றுகொண்டே இருந்தது. அவள் அதன் கடிவாளத்தைப் பற்றியபடி “நீங்கள் உள்ளே வரலாமே” என்றாள். கனகர் அவள் கையை விலக்கி “இல்லை, நான் சென்றாகவேண்டும்” என்று புரவியை செலுத்தினார்.

திகைத்தவர்போல அவர் புரவியில் அமர்ந்திருந்தார். என்ன இடர் என ஒருவாறாகப் புரிந்தது. அவர் புரவியூர்வதே இல்லை. எப்போதும் தேரிலேயே நகரில் சென்றுகொண்டிருந்தார். புரவியூர்கையில் உள்ளே இருக்கும் தன்னுணர்வு அதில் அமரவில்லை. அது தேரை செலுத்துகிறது. புரவியின் கழுத்தைத் தடவிக்கொண்டிருந்தார். அது உடலைச் சிலிர்த்தபடி சென்றது. அந்தச் சூதனின் சொற்கள் நினைவிலெழுந்தன. அவை ஒரு பெரிய சொல்லொழுக்கின் துளிகள். அவன் என்னதான் சொல்லிக்கொண்டிருந்தான்? எவரிடம்? அவனுடன் வந்தபடி ஏதேனும் தெய்வங்கள் அதை செவிகொண்டனவா?

சூதர்தெரு முற்றொழிந்ததுபோல் கிடந்தது. ஆண்கள் என எவருமே கண்ணுக்குப்படவில்லை. சில திண்ணைகளில் சோர்ந்த குழந்தைகள் படுத்திருந்தன. அவற்றைப் பேணும் சிறுமியர் வெறித்த விழிகளுடன் அவரை நோக்கினர். போர்முறைமைகள் தொடங்கி எத்தனை நாட்களாகியிருக்கும்? மூன்றுமாதம் கடந்திருக்கவில்லை. அதற்குள் நகரிலிருந்து பொலிவனைத்தையும் உறிஞ்சி அகற்றிவிட்டிருக்கிறது. தெருக்களில் சருகும் குப்பையும் குவிந்து கிடந்தன. காற்று அள்ளிக் குவித்த புழுதி அத்தனை சுவர்களுக்குக் கீழேயும் எழுந்து கிடந்தது. பல இல்லங்களில் எவருமிருக்கவில்லை. காற்று வீசுகையில் குடுமிகளில் முனகிச்சுழலும் கதவுகளுடன் அவை அகன்று வாய்திறந்து கிடந்தன. அவருடைய புரவியின் குளம்படியோசை அவற்றின் அறைகளுக்குள் இருந்து எதிரொலித்தது.

எதிரில் ஒரு கிழவி கூன்விழுந்து மடிந்த முதுகுடன் கைகளையும் கால்களைப் போலவே வீசியபடி பசுபோல நடந்து வந்தாள். புரவியைக் கண்டதும் கண்களைச் சுருக்கியபடி நின்று நோக்கினாள். இரு விழிகளும் இரு வெண்புள்ளிகள்போலத் தெரிந்தன. வாய் சுருங்கி குவிந்திருந்தது. அவருடைய புரவி அருகணைந்ததும் இயல்பாக கைநீட்டி இரந்தாள். அவர் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தினார். சூதர்குடியினர் இரந்ததை அவர் கண்டதே இல்லை. சிலகணங்களுக்குப் பின் அவர் ஒரு வெள்ளிநாணயத்தை எடுத்து அவளை நோக்கி நீட்டினார். அவள் விசையுடன் அருகே வந்து அதை வாங்கி அப்படியே வாய்க்குள் போட்டுக்கொண்டாள்.

அவர் திடுக்கிட்டு நெஞ்சதிர்ந்தார். என்ன செய்கிறாள்? அவள் அந்த நாணயத்தை குதப்பிக்கொண்டிருப்பதை கண்டார். புரவியைத் தட்டி முன்செலுத்தியபோது அவர் வியர்த்திருந்தார். என்ன நிகழ்ந்தது? கரை உடைந்து நீர்வெளியேறுவதுபோல இந்நகரிலிருந்து அனைத்தும் வெளியேறிவிட்டிருக்கின்றன. மானுடர், செல்வம், மொழி, ஓசைகள். போர்கள் என்றுமென நிகழ்பவை. அவை ஆண்டுதோறும் காட்டிலெழும் எரிபோல. அழிவது மேலும் எழுவதற்காக. பழையன கழிந்து புதியன எழுவதற்காக. இது ஊழித்தீ. எஞ்சியது என்ன? எஞ்சுவதிலிருந்து எழுவது எது?

அவர் மீண்டும் கரிய சுவரை சென்றடைந்துவிட்டிருந்தார். அது நேர்முன்னால் பெருகிச்சூழ்ந்து நின்றிருந்தது. அதன் விரிசல்கள், பொருக்குகள், கருகிய பாறைப்பாசிப் பரவல்கள். உள்ளத்தில் ஒரு சொல்லும் எஞ்சாமல் அவர் அதை நோக்கிக்கொண்டு நின்றிருந்தார்.