மாதம்: ஜூலை 2019

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 24

ஆர்ஷியின் அமைதி முதல் நாள் சகுனியை கொந்தளிக்கச் செய்தது. அன்று இரவு முழுக்க அவளிடம் அவர் மன்றாடினார். தன்னால் கெஞ்சமுடியும் என்றும் குழையமுடியும் என்றும் அன்று அறிந்தார். “நான் பிழை செய்திருக்கலாம். ஆனால் அது உன் மீதான பெருங்காதலால் என்று உணர்க! நான் விழைவதை அடையும் இடத்தில் இருப்பவன். இளவரசிகளை மணக்கும் வாய்ப்புள்ளவன். எந்தப் பெண்ணாலும் கவரப்படவில்லை. உன்னில் பித்தானேன் என்றால் அது இறைவிருப்பம் என்றே சொல்வேன். நீ ஒரு பெண். உன்மேல் கொண்ட இப்பெருவிழைவை மட்டுமாவது உன்னால் புரிந்துகொள்ள முடியும். இது உரிமைகொள்ளல் அல்ல. முற்றளித்தல், அடிபணிதல்.”

சொல்லச்சொல்ல அவருக்கு சொற்கள் பெருகின. அவள்மேல் தான் கொண்ட பித்தை, அவளுக்கு தன்னை முற்றளிப்பதை சொல்லிச்சொல்லி உளம் உருகி ஒரு தருணத்தில் விழிநீர் உகுக்கத் தொடங்கினார். அவளிடம் தான் கோரத் தொடங்கியது காதலை, கோரிக் கொண்டிருப்பது இரக்கத்தை என உணர்ந்ததும் திகைத்து சொல்லிழந்தார். மறுகணம் சீற்றம்கொண்டு அவளை ஓங்கி அறைந்தார். “என்ன நினைக்கிறாய் என்னை? உன்னை இக்கணமே வெட்டிப்போழ்ந்து வீசமுடியும் என்னால். உன் குடியையே பெயரும் எஞ்சாமல் ஆக்கமுடியும். உன்னை என் காலடியில் விழுந்து கதறச்செய்ய முடியும்” என்று கூவினார். மூச்சிரைக்க ஓய்ந்தபோது அது இன்னும் பெரிய முரண்பாடு எனத் தெரிந்தது. அன்பை பெறும்பொருட்டு சினத்தை பெருக்குகிறேன்.

அவளை நோக்கிக்கொண்டு நின்றார். அவர் பேசப்பேச அவள் வென்றுகொண்டே செல்வதுபோல் தெரிந்தது. அவள் பேசாமலிருந்தது அச்சத்தாலோ துயரத்தாலோ சீற்றத்தாலோ எழுந்த இயல்பான எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் அதுவே அவரை எதிர்ப்பதற்கான படைக்கலம் என கண்டுகொண்டுவிட்டாள். “நீ என்னை வெல்ல நினைக்கலாம். அதற்கு நீ ஏதும் செய்யவேண்டியதில்லை. நீ என்னை முற்றாக வென்ற பின்னரே இங்கே வந்திருக்கிறாய்” என்றார். மேலும் ஏதோ சொல்ல எண்ணி தவித்து பின்னர் அவளை அவ்வண்ணமே விட்டுவிட்டு வெளியேறினார். தன் அறைக்குச் சென்று மூக்கு வழிய மதுவருந்தினார். பின்னர் சூதுப்பலகையை விரித்து விடியும்வரை அமர்ந்திருந்தார்.

மீண்டும் மீண்டும் அந்த உச்சமும் வீழ்ச்சியும் நிகழ்ந்துகொண்டிருந்தது. அவள் மேலும் மேலும் இறுகிப்போய் பளிங்குச்சிலை என ஆனாள். மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர் கணிகரிடம் நிகழ்ந்ததை சொன்னார். அவர் வெடித்துச் சிரித்து “இன்னமும் நீங்கள் அவளுக்கு கணவன் என்றாகவில்லை அல்லவா?” என்றார். “ஆம்” என்று சகுனி சொன்னார். “அதுதான் அத்தனைக்கும் ஊற்று. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இந்த மோதல் அனைத்து உயிர்களிடமும் உள்ளதே. உங்களிடமிருப்பது செல்வம், அரசு, வீரம் என மானுடர் விழைவன அனைத்தும். களத்தில் அவள் நிகரான ஒன்றை வைத்தாகவேண்டும் அல்லவா? அவள் ஆணவத்தை வைக்கிறாள்… அதன் எடை இப்போது ஒரு படி விஞ்சியிருக்கிறது என்றே பொருள்.”

“எந்நிலையிலாயினும் காமத்தில் பெண் கீழிறங்குகிறாள். அவள் உடல் ஆளப்படுகிறது. முற்றாக மாற்றப்படுகிறது. ஆகவேதான் காமம் அவள் ஆணவத்தை சீண்டுகிறது. அவள் ஆழம் சீற்றம்கொள்கிறது. ஆண் அடிபணிவதுவரை, துளியும் எஞ்சாமலாவது வரை வணங்கமாட்டேன் என அவளை நிமிரச்செய்கிறது. அதை ஆணும் அறிவான். ஆகவேதான் அடிபணிகிறான், எஞ்சாமல் அவள்முன் வைக்கிறான். அவளை முழுமையாக வெல்வதற்கான தொடக்கம் என அவன் அறிந்திருக்கிறான். முதல் தோல்வி அவனுக்கும் முழுத் தோல்வி தனக்கும் என அவளும் அறிந்திருக்கிறாள். ஆகவே அவனும் அவளும் இக்களத்தில் நின்று நிகராடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கணிகர் சொன்னார்.

“அவள் தருக்குகிறாள். அவளுடைய தருக்கை எதுவரை ஒப்புவது என்று அறியாமல் அவன் தடுமாறுகிறான். அவன் அலைபாயும்தோறும் அவள் நிலைகொள்கிறாள். உள்ளங்கள் கூர்முனைகொண்டு போரிட்டுக்கொள்கின்றன. வெல்லாது அடங்கமாட்டேன் என்கின்றன. உடல் இணையவே விழைகிறது. உடல் இணையும்தோறும் உள்ளத்தை அது மழுங்கச் செய்கிறது” என்றார் கணிகர். “அவள் உடலை வெல்க! அவள் உடலில் உங்கள் உடல் திகழத் தொடங்கட்டும். அவள் அதை முதலில் வெறுக்கலாம். இல்லையென்றே எண்ணத் தலைப்படலாம். ஆனால் அவள் அகம் அறியும் அவ்வுடல் உங்களுடையது என்று. இரவும்பகலும் துயிலிலும் விழிப்பிலும் உடல் அவளிடம் அதை சொல்லிக்கொண்டிருக்கும். ஆம், அது ஒன்றே வழி. நெடுங்காலமாக மூதாதையர் கையாண்ட வழி. இன்னும் எஞ்சும் வழி. ஏனென்றால் மானுடரும் எளிய விலங்குகளே என ஐயமறக் காட்டும் ஒரு செயலே காமம்.”

அதையே சகுனி எண்ணிக்கொண்டிருந்தார். முதலில் அது அவரை கசப்படையச் செய்தது. அவர் பிறிதொருவனாகும் பொருட்டே அவளை அணுகினார். அவள்முன் பிறனாக நின்றார். அக்களியாட்டை விழைந்தே அவள்முன் வளைந்தார். அதை இழந்து அவளை அடைவதைப்போல் பொருளற்றது பிறிதில்லை. எண்ணி எண்ணி சிறுமைகொண்டு அதை உள்ளத்திலிருந்தே ஒழிந்தார். ஆனால் ஒருநாள் அவளிடம் இரந்து, பின் இரங்கி விழிநீர் கசிந்து, பின் சினந்து, சீற்றம்கொண்டு கூவி, மீண்டும் தணிந்து, நற்சொல் உரைத்து, தன் தனிமையில் அமைந்து புலம்பி மீண்டும் அவளை நோக்கி அங்கே அந்த ஆழ்ந்த அமைதியே எஞ்சியிருப்பதைக் கண்டபோது எழுந்த கண்ணிலாத வெறியில் அவளைத் தாக்கி இழுத்து மஞ்சத்தில் தள்ளி அவளை புணர்ந்தார்.

அவள் உடல் கைக்குச் சிக்கியதுமே உணர்ந்தார், அவள் தன்னை அவருக்கு அளிக்கவேயில்லை என. பாவை என மஞ்சத்தில் கிடந்த அவளை நோக்கியபடி அமர்ந்திருந்தபின் எழுந்து சென்று தன் அறைக்குள் அமர்ந்து மதுக்குடுவையை எடுத்தார். “ஆம், அவள் தோல்வியுறும் இடம் அது. அவர்கள் எப்போதும் தன்னை இறுக்கிக் கொள்வார்கள். உடலில் இருந்து பிரித்துக்கொண்டு உள்ளே ஒடுங்கிக்கொள்வார்கள். ஆனால் ஆத்மா மீளமீள அறியும் ஒன்றுண்டு, உடலே அதன் வடிவம். உடலினூடாகவே அது இப்புவியை அறியமுடியும். உடலல்ல தான் என்றும் உடலின்றி தானில்லை என்றும் உணரும் இருநிலையே ஆத்மாவின் அழியா அலைக்கழிப்பு. உடலில் நிகழ்ந்தது ஆத்மாவில் நிலைகொள்ளும். ஐயமே தேவையில்லை, இப்புவியில் இன்றுவரை வாழ்ந்த அத்தனை பெண்களும் சென்றமையும் இடம் அதுவே.”

அப்போதே அது அவ்வாறல்ல என்று சகுனி உணர்ந்தார். அவ்வாறுதான் அனைத்துப் பெண்டிரும். ஆனால் ஆர்ஷி அவ்வாறானவள் அல்ல. அவள் தன் உடலை அவருக்கு மறுக்கவில்லை. ஒரு துளி எதிர்ப்பையும் ஒரு தசைகூட அவருக்குக் காட்டவில்லை. ஆனால் அவள் அதில் இல்லை என்பதையும் அவர் அறிந்தார். அவர் அணுகியதுமே அவள் விழிகளில் எழுந்த வெறிப்பைக் கண்டதும் அவருள் ஒன்று அனல்பட்டதுபோல் சுருங்கிக்கொள்ளும். மறுகணமே அரவெனச் சீறி எழும். அவளை அவர் விலங்கெனப் புணர்ந்தார், அவள் உடலை துன்புறுத்தினார். பின் உளமுருகி அழுதார். ஈராண்டுகளுக்குப் பின்னரும்கூட அவளிடம் அவர் இரங்கி தாழ்சொல் உரைத்தார். அவள் மிகமிக அப்பாலிருந்தாள்.

அவள் கருவுற்றபோது கணிகர் “இதுவே அவள் எல்லை” என்றார். “தெய்வங்கள் இதுவரைக்கும்தான் அவளை ஓடவிடும். அவளுக்குள் வளரும் கரு உங்கள் உயிர்த்துளி. ஆனால் அது அவள் உடலும்கூட. பெண்மேல் ஆண்கொள்ளும் அறுதியான வெற்றி அது. காந்தாரரே, அக்குழவி உங்கள் முகமும் உடலும் கொண்டதாயின் அவள் பணிந்தேயாகவேண்டும். தெய்வங்களை அவள் ஏய்க்க இயலாது.” சகுனி “அவள் இயல்பானவள் அல்ல. அவளிடமிருப்பது அவள் அன்னையின் அசுரக்குருதி. அசுரர்களிடமிருக்கும் ஆழ்ந்த அமைதியை காட்டுவிலங்குகளிடம் மட்டுமே காணமுடியும். நாம் அவர்களை அணுகலாம், அகத்தே கடக்கவே இயலாது” என்றார். “அவர்கள் தங்கள் மொழியையே சொல்லின்மைமேல் கட்டிவைத்திருக்கிறார்கள். சொல்கரக்கும் பெரிய விழிகள் அவர்களுக்கு.” ஆனால் கணிகர் “அவளுக்குள் கரு வளர்கையில் அவள் மாறுவதை காண்பீர்” என்றார்.

கருவுற்று வயிறு வளர்வதை அவள் அறிந்தாளா என்பதே ஐயமாக இருந்தது. தன்னை நோக்குகையில் மட்டுமல்ல அரண்மனையில் பிறரிடமும் அந்த வெற்றுவிழியையும் சொல்லின்மையையுமே அவள் அளிக்கிறாள் என்பதை அவர் கண்டார். மைந்தன் பிறந்தபோது செவிலியர் அவரிடம் வந்து சொன்னார்கள். பதறும் காலடிகளுடன் அவர் ஈற்றறை முகப்புக்குச் சென்றார். வயற்றாட்டி கொண்டுவந்து காட்டிய குழவி செந்நிறக் கனிபோலிருந்தது. வெள்ளிமணிக் கண்கள். “உங்கள் சிற்றுரு, காந்தாரரே” என்றாள் வயற்றாட்டி. சகுனி உளம்விம்மி விழிநீர் மல்கினார். “இப்புவியில் மைந்தர் வடிவிலேயே மானுடர் அழிவின்மை கொள்கிறார்கள்” என்றாள் முதிய மருத்துவச்சி. சகுனி தொண்டையை அடைத்த மூச்சை ஆற்றிக்கொண்டு “எவ்வண்ணம் இருக்கிறாள்?” என்றார். “நலமாக… நீங்கள் விழைந்தால் நோக்கலாம்” என்றாள்.

அவர் உள்ளே சென்று அவளை கண்டார். மஞ்சத்தில் உடல்வெளுத்து விழிமூடிப் படுத்திருந்தாள். முகம் மெழுகாலானது போலிருந்தது. இரு வாடிய மலரிதழ்கள் என விழிகள். அவர் அருகணைந்து அவள் கைகளை தொட்டபோது விழித்துக்கொண்டு அவரை நோக்கினாள். “நலமுற ஈன்றுவிட்டாய்” என்றார். அவள் விழிகள் ஒன்றும் சொல்லவில்லை. “இக்கணத்திலாவது ஒரு சொல் என்னிடம் பேசு… ஒருமுறையேனும் என்னை ஏற்றுக்கொள்” என்று அவர் சொன்னார். அந்த விழிகள் தெய்வங்களுக்குரிய இரக்கமின்மை கொண்டிருந்தன. “நான் இழைத்த தீங்கு என்ன? எளிய ஆண்கள் எப்போதும் இழைக்கும் பிழை அது. அரசர்கள் இயல்பாகச் செய்வது. அது நானே முன்னெடுத்ததும் அல்ல” என்று சகுனி சொன்னார். “உன்னிடம் நான் இரப்பது அது ஒன்றே… இப்புவியில் எவரிடமும் நான் இவ்வண்ணம் இழிந்தமைந்ததில்லை.”

அவள் கண்களை மூடிக்கொண்டாள். எவ்வுணர்ச்சியும் அதில் வெளிப்படவில்லை. அவர் அந்த முகத்தில் ஒரு தசையேனும் அசையக்கூடும் என எதிர்பார்த்து நோக்கி நின்றார். அப்போது ஒரு வசைச்சொல்லோ வெறுப்புச்சாயலோகூட போதும் என்று தோன்றியது. பின்னர் நீள்மூச்சுடன் மைந்தன் காலை ஒருமுறை தொட்டுவிட்டு திரும்பி நடந்தபோது அறைக்குள் நின்றிருந்த முதிய சேடியை பார்த்தார். அவள் அவரையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவர் மீண்டும் ஒருமுறை அவளை நோக்கிவிட்டு காலடிவைத்தபோதுதான் அவள் யார் என தெரிந்தது. “நீதானா?” என்றார். “ஆம், காந்தாரரே” என்று அவள் சொன்னாள். அவர் வெளியே சென்றபோது அவளும் உடன்வந்தாள்.

“வென்றுவிட்டாய், நீ எண்ணியது நிகழ்ந்தது” என்றார் சகுனி. “அதை எண்ணி பெருமிதம் கொள்ளும் அகவையை நெடுநாட்களுக்கு முன்னரே கடந்துவிட்டேன். இப்புவியிலுள்ள அனைவருக்காகவும் துயருறுகிறேன். அனைவரிடமும் கனிகிறேன்” என்று அவள் சொன்னாள். அவள் விழிகளை நோக்கியபோது அவர் உள்ளம் நெகிழ்ந்து விழிகள் நீர்கொண்டன. “உன் பெயர்கூட நினைவில் இல்லை. ஆனால் உன்னை நான் நினைக்காத நாளில்லை” என்றார். அவள்  “என் பெயரை நான் சொல்லவே இல்லை” என்றாள். “நான் நினைத்ததை நீ அறிவாயா? அன்னையிடம் சிறுமைந்தன் என உன்னை நோக்கி வந்துகொண்டே இருந்தேன்” என்றார். “ஆம், அறிவேன்” என்று அவள் சொன்னாள். “அனைவருமே அவ்வண்ணம் என்னிடம் வருகிறார்கள்.”

“சொல், இதற்கிணையான பிழை என நான் இயற்றியதுதான் என்ன?” என்றார் சகுனி. “ஆணவம் கொண்டேனா? ஆணவமில்லாத ஆண்மகன் உண்டா?” அவள் புன்னகைத்தபோது முதுமையில் பேரழகு எழமுடியும் என்பதை அவர் கண்டார். “ஆணவம் அல்ல” என்று அவள் சொன்னாள். “துலாவின் மறுபக்கம் இன்னொரு எடை இருந்தாகவேண்டும் என எண்ணுகையில்தான் நாம் புடவியை புரிந்துகொள்ளாதவர்களாக ஆகிறோம்.” சகுனி “வேறென்ன? நான் செய்யவேண்டியதுதான் என்ன?” என்றார். “இது இவ்வண்ணம் நிகழ்ந்தது என்றன்றி வேறெவ்வகையிலும் எண்ண வேண்டியதில்லை” என்று அவள் சொன்னாள். “இதன் துயரமும் ஒரு கொடையே என எண்ணுக! வேறெவ்வகை எண்ணத்திற்கும் எப்பொருளும் இல்லை.”

ஆர்ஷி அம்மைந்தனுக்கு முலையூட்டினாள். அவனை நெஞ்சோடணைத்து துயின்றாள். தோளிலும் மடியிலும் அமர்த்தி விளையாடினாள். அவனுக்கு மட்டுமே கேட்கும்படி சொல்லாடினாள். ஆனால் அவரிடம் அவ்வண்ணமே இருந்தாள். “அவள் மடியில் வளர்வது நீங்கள். அவளுக்குள்ளும் நீங்கள் வளர்வீர்கள்” என்றார் கணிகர். முதல்முறையாக சகுனி சீற்றத்துடன் எழுந்துகொண்டு “வாயை மூடு, அறிவிலி” என்றார். கணிகரின் வாய் திறந்தபடி நிற்க விழிகளில் திகைப்பு தெரிந்தது. “பெண்ணைப்பற்றி நீ அறிந்தது ஒன்றுமில்லை” என்றபின் சகுனி வெளியேறினார். அதன்பின் கணிகர் அவரிடம் அவளைப்பற்றி ஒருசொல்லும் பேசவில்லை.

அவள் மேலும் ஈராண்டு அரண்மனையில் இருந்தாள். முதல் மைந்தனுக்கு உலூகன் என பெயரிட்டபோது அணிகள் பூண்டு அவையமர்ந்தாள். அவனுக்கு முதல் அன்னம் ஊட்டப்பட்டபோது முகம் மலர்ந்து ஆலயத்தில் இருந்தாள். அவரைப் போலவே உலூகன் மெல்லிய சிறிய உடலும் செந்நிற முடியும் சிறிய குருதிக்கோடுபோல உதடுகளும் பளிங்குமணிக் கண்களும் கொண்டிருந்தான். அவன் எழுந்து நடந்தபோது அந்த நிலைகொள்ளா நடையிலேயே தன் நடையின் சாயல் இருப்பதாக சகுனி எண்ணினார். அவன் தனித்தமர்ந்து நெஞ்சில் எச்சில் வழிய நெடுநேரம் பாவைகளுடன் விளையாடினான். அவன் சூதாடுகிறான் என சேடியர் நகைத்தனர். அவள் அவனை நோக்கியபடி அமர்ந்திருப்பதை ஒருமுறை அவர் கண்டார். அவ்விழிகளில் இருந்தது அன்னையின் அன்பு என்பதை உணர்ந்தார். அவரைக் கண்டு விழிதூக்கியபோது அவள் விழிகள் எப்போதும் என ஒழிந்துகிடந்தன.

ஆர்ஷி மீண்டும் கருவுற்றாள். அக்கரு அவளில் தோன்றியபோதே அவள் இயல்புகளில் மாறுதல்கள் தெரியலாயின. அவள் உடல் கருமை கொண்டது. விழிகளுக்குக் கீழ் நிழல் பரவியது. உதடுகள் நீலம் பூத்தன. உடலின் எடை மிகுந்திருப்பதுபோல் தோன்றியது. நடை மாறுபட்டது. கைகளை வீசி கால்களை தூக்கி வைத்து வயிற்றை அசைத்தபடி அவள் நடக்கையில் பெண்ணுருவில் ஆண் எனத் தோன்றினாள். அவர் அப்போது அவளிடமிருந்து விலகிவிட்டிருந்தார். அஸ்தினபுரியின் நிகழ்வுகளும் படையெடுப்புகளும் அவரை முற்றாகவே அடித்துச்செல்ல அவ்வண்ணம் ஒருத்தி இருப்பதையே மறந்துவிட்டவர் போலிருந்தார். ஒருமுறை அவளை நேரில் கண்டபோது முதற்கணம் அடையாளம் கண்டுகொள்ளவே அவரால் இயலவில்லை.

அவளை நோக்கிய மருத்துவர் “அசுரக் கருவின் இலக்கணம் கொண்டிருக்கிறார்கள் அரசி” என்றார்கள். “அவர் குலத்தில் அசுரக்குருதி உண்டு. அது அவர்களில் திரண்டிருக்கிறது.” சகுனி “அவள் விழைந்திருக்கலாம்…” என்று மட்டும் சொன்னார். அவர் படையெடுப்பு ஒன்றிலிருந்து திரும்பி வந்தபோது மைந்தன் பிறந்து எட்டுநாட்களான செய்தியை அவரிடம் சொன்னார்கள். அவர் ஈற்றறைக்குச் சென்று மைந்தனை பார்த்தார். குழவி கரிய வண்ணத்தில், பெரிய தலை முழுக்க அடர்ந்த மயிருடன் வாயில் நான்கு பற்களுடன், விழித்த கருங்கண்களுடன் இருந்தது. இருமடங்கு பெரிய உடல்கொண்டிருந்தது. பிறந்த குழவிக்கு அத்தனை பெரிய புருவங்கள் இருக்கும் என அவர் அப்போதுதான் கண்டார். திகைப்புடன் பின்னடைந்தார். அவள் அவரை நிமிர்ந்து நோக்கி புன்னகைத்தாள்.

சகுனி அரைக்கணம்கூட அப்புன்னகையை நோக்கவில்லை. வெளியே விரைந்து மூச்சிரைக்க நின்றார். “என்ன இளவரசே?” என்று வினவியபடி அருகணைந்த மருத்துவச்சிகளை தவிர்த்து விரைந்து ஓடி தன் அறையை அடைந்தார். “மது கொண்டுவருக… பீதர் மது!” என ஆணையிட்டார். இரவும் பகலும் என மூன்று நாட்கள் குடித்துக்கொண்டே இருந்தார். உளம்மயங்கி விழுந்து துயின்று எழுந்து மீண்டும் குடித்தார். மூன்றாம் நாள் செவிலி வந்து மைந்தனை எடுத்துக்கொண்டு ஆர்ஷி அரண்மனையிலிருந்து அகன்றுவிட்டாள் என்று சொன்னதும் நிறைவைத்தான் அடைந்தார். ஓரிரு நாட்களில் முற்றாகவே அவளிடமிருந்து விடுபட்டார். அவருக்காக நாற்களம் கருக்களுடன் காத்திருந்தது.

உலூகனை காந்தார நாட்டுக்கு அனுப்பினார்கள். அதன் பின்னர் சுபலர் காந்தாரத்திலிருந்து சபரியையும் சுதமையையும் அவருக்கு மனைவியராக அனுப்பி வைத்தார். அவர்களிடம் அவர் மேலும் மைந்தரைப் பெற்றார். விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும் விந்தனும் உத்பவனும் பிறந்தனர். அவர்களும் காந்தார நாட்டுக்கே கொண்டுசெல்லப்பட்டனர். அஸ்தினபுரியில் அரசப்பொறுப்பு மிகுந்தபோது அவர் தன் அரசியரையும் காந்தாரத்திற்கே அனுப்பிவைத்தார். பிறகெப்போதும் அவர்களை அவர் எண்ணியதில்லை. காட்டுக்கு மீண்ட ஆர்ஷியை உளவறிந்து வரலாமா என ஒற்றர்கள் கோரியபோது தேவையில்லை என மறுத்தார். அச்செய்தியை தன்னிடம் எவரும் சொல்லவும் ஆகாது என ஆணையிட்டார்.

போர்எழுகை அறிவிக்கப்பட்டபோது காந்தாரத்திலிருந்து மைந்தர்கள் அஸ்தினபுரிக்கு வந்தனர். அவர் துரியோதனனிடம் மாடத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது ஏவலன் வந்து காந்தார இளவரசர்கள் வந்திருப்பதை அறிவித்தான். அவர் அவர்களை மேலே வர ஆணையிட்டார். ஏவலன் அறிவித்த பின் உள்ளே வந்து நின்றவனைக் கண்டு ஒருகணம் அவர் திகைத்தார். அவர் உருவமே இளமைகொண்டு நின்றதைப்போல் இருந்தான் உலூகன். துரியோதனன் வெடித்து நகைத்தபடி எழுந்து “மாதுலரின் தனியுருவம்! அதே தோற்றம்!” என்று சொல்லி உலூகனை அள்ளி தோளுடன் சேர்த்து அணைத்து முதுகில் அறைந்தான். துச்சாதனனிடம் “மாதுலரையே ஒருமையில் அழைத்து வசைபாடுவதற்கான வாய்ப்பு, இளையோனே” என்றான்.

துச்சாதனன் சிரிக்க கௌரவர் உடன் இணைந்துகொண்டார்கள். விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும் விந்தனும் உத்பவனும் உள்ளே வந்தனர். “மாதுலர் ஆடியில் பெருகிவிட்டாரா என்ன?” என்றான் துரியோதனன். “ஆடியில் பெருகுவதற்கான உரிமை நமக்கு மட்டும் உள்ளதல்ல” என்றான் சுபாகு. மைந்தர்களை கௌரவர்கள் அள்ளித் தழுவிக்கொண்டனர். துர்மதனும் துச்சலனும் சேர்ந்து விந்தனை தூக்கி வீச துச்சகனும் துர்மர்ஷணனும் சேர்ந்து பிடித்துக்கொண்டார்கள். “மது! யவன மது!” என்று துர்முகன் கூச்சலிட்டான். “அவர்கள் இளையோர்” என்று சுபாகு சொன்னான். “ஆம், ஆகவேதான் யவன மது… முதிர்ந்தவர்களுக்கெல்லாம் பீதர் மது” என்றான் துர்முகன். “இன்று இவர்பொருட்டு நாம் உண்போம். இவர்களுடன் உண்போம்! நம் மாதுலர் விழுந்து உடைந்து எட்டு துண்டுகளாகிவிட்டார்.” கௌரவர்கள் ஓசையெழுப்பி நகைத்தனர்.

சகுனி திகைத்துப்போயிருந்தார். அக்கணம் மகிழ்வுக்குரியதாகக்கூட தோன்றவில்லை. ஒருவகையான பதைப்பே உள்ளத்தை நிறைத்திருந்தது. தீயது எதையோ எதிர்நோக்குபவர்போல. உலூகன் அவரை குனிந்து வணங்கினான். சகுனி அவன் தலையை வெறுமனே தொட்டார். மைந்தர்கள் ஒவ்வொருவராக வணங்க ஒன்றே மீளமீள நிகழ்வதுபோலத் தோன்றியது. அவர் உள்ளம் தவித்துக்கொண்டே இருந்தது. “மகிழலாம், மாதுலரே. நீங்களொன்றும் காம ஒறுப்பு கொண்ட முனிவர் அல்ல. அவர்களை ஈன்றது பழியும் அல்ல” என்றான் துரியோதனன். அவர் உதடுகள் நெளிய பொய்ப்புன்னகை கோட்டினார். அன்று உணவுக்களியாட்டில் அவர் கலந்துகொள்ளவில்லை. “இன்று எனக்கு பணிகள் இருக்கின்றன. மைந்தருடன் நீங்கள் களியாடுங்கள்” என்றபடி தன் அரண்மனைக்கு திரும்பினார். கணிகரை சந்திக்கலாம் என எண்ணியே வந்தார். ஆனால் அவரை சந்திக்கத் தோன்றவில்லை.

தன் தனியறைக்குச் சென்று அடைத்துக்கொண்ட பின்னரே ஆறுதலை உணர்ந்தார். என்ன நிகழ்கிறது என தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். ஏன் அஞ்சுகிறேன்? மிகக் கொடியது ஒன்று உடனெழுந்து வந்துகொண்டிருப்பதுபோல். ஒன்றுமில்லை. வெறும் அச்சம். நான் உள்ளூர அச்சம்கொண்டவனே. அதை பிற எவரைவிடவும் நான் அறிவேன். ஒன்றுமில்லை. அன்று அவர் மஞ்சத்தில் படுத்துக்கொண்டு அறையின் இருளை நோக்கிக்கொண்டிருந்தார். கணிகரின் நினைவெழுந்தது. உடனே உள்ளம் உலுக்கிக்கொண்டது. அவர்களை அரண்மனைக்கு வரவழைக்கலாகாது என முடிவெடுத்தார். அவர்களை கணிகர் பார்க்கலாகாது. அவர்கள் கணிகரை அறியவேகூடாது.

மறுநாளே அவர் தன் மைந்தர்கள் அஸ்தினபுரியின் மறுபக்கச் சோலையில் இளைய கௌரவர்களுடன் தங்கவேண்டும் என்று ஆணையிட்டார். அதன்பின் அவர் அவர்களை பார்க்கவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என உசாவவும் இல்லை. அவர்கள் கௌரவ மைந்தர்களுடன் இணைந்து போர்பயில்கிறார்கள், விளையாடுகிறார்கள் என்று செய்தி வந்தது. அவருடைய உள்ளத்தை மீண்டும் அரசியல் முழுமையாக ஆட்கொண்டது. எப்போதேனும் அவர்களைப் பற்றி துரியோதனனோ துச்சாதனனோ பேசுகையில் அவர் அச்சொற்களை கேட்காதவர்போல் இருந்தார். ஒருசொல்லும் பேசப்படவில்லை என்றாலும் கணிகர் அவர் உள்ளத்தை அறிந்தார். அவர் மைந்தரைப் பற்றி எதுவுமே உசாவவில்லை.

பின்னர் ஒருநாள் அவனை அவர் அப்பால் நோக்கினார். அவனும் இளையோரும் புரவிகளில் சென்றுகொண்டிருந்தனர். அவனை நோக்கும்போதெல்லாம் ஏன் தன் உள்ளம் அதிர்வடைகிறது என அவர் வியந்தார். பொழுதில்லை என்னும் எண்ணம் உடனே உருவாகியது. பிறிதொருமுறை இவனை இவ்வண்ணம் நான் பார்க்கவியலாமல் ஆகக்கூடும். இன்று பேசாமல் விட்டவை என்றுமே சொல்கொள்ளாமலாகக்கூடும். ஏவலனை அனுப்பி அவனை வரவழைத்தார். “நீயும் இளையோரும் இனி என்னுடன் இருங்கள்” என்றார். அவன் மறுமொழியாக தலைவணங்கினான். அன்றே ஏவலரிடம் கணிகர் அரண்மனைக்கு வரவேண்டியதில்லை என்றும் தேவையென்றால் அமைச்சுநிலையில் அவரை தானே சந்திப்பதாகவும் ஆணையிட்டார்.

அதன்பின் மைந்தர்கள் அவருடைய அரண்மனையிலேயே இருந்தனர். அவர் அவர்களுடன் பொழுது செலவிட விழைந்தார். உரையாட எண்ணினார். ஆனால் அதற்கான சூழலே அமையவில்லை. ஆயினும் அரண்மனையில் அவ்வப்போது அவர்கள் கண்களில் ஊடாடுவதே அவருக்கு நிறைவளிப்பதாக இருந்தது. இரவில் துயில்கையில் ஒவ்வொருமுறையும் அவர்களின் நினைவெழுந்தது. அருகே அவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வது உள்ளத்தை மென்மையாக்கியது. அவர்களை எண்ணிக்கொண்டிருக்கையில் தன் முகம் புன்னகைப்பதை அவர் உதடுகளின் விரிவிலிருந்து உணர்வார்.

உலூகனின் அமைதியை உணர்ந்தபின் ஒருநாள் அவர் அவனிடம் “நீ உன் அன்னையை நினைவுறுகிறாயா?” என்றார். அவன் இல்லை என தலையசைத்தான். “நினைவிலெங்கும் அவள் முகம் இல்லையா?” என்றார். அவன் இல்லை என்று மீண்டும் தலையசைத்தான். “அறிவிலி, நீ நாவெடுத்தே எனக்கு மறுமொழி உரைக்கலாம்!” என்று சகுனி கூவினார். அவன் உறைந்த விழிகளுடன் நின்றான். அவர் மெல்ல தணிந்து “உன் அன்னையின் சொல்லின்மை உன்னில் கூடியிருக்கிறது…” என்றார். அவன் விழிகளில் மாற்றம் ஏதும் இருக்கவில்லை. “உன் உடல் என்னுடையது. அதற்குள் தன்னை நிரப்பி என்னிடம் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறாள் அவள்” என்றார் சகுனி. அவனுடைய வெற்றுவிழிகளை சிலகணங்கள் நோக்கிவிட்டு “செல்க!” என்றார். அவன் தலைவணங்கி வெளியே சென்றான்.

அவன் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய அதே உடல். அதே அசைவுகள். ஆனால் அவன் அவர் அல்ல. ஒருகணம் அவன்மேல் எழுந்த வெறுப்பைக் கண்டு அவருடைய அகம் அஞ்சியது. உடனே அவன்மேல் பேரன்பு எழுந்து மூடிக்கொண்டது. அவனை அருகே அழைத்து நெஞ்சோடு தழுவிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. அவன் சென்று மறைந்தபின் அவன் காலடி பட்ட தரை என தன் நெஞ்சை உணர்ந்தார்.

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 23

சகுனி களத்தில் தேரில் நின்று அம்புதொடுத்து போரிட்டபடி தன்னை இருபுறமும் பின்தொடர்ந்து காத்து வந்த மைந்தர்களை பார்த்தார். வலப்பக்கம் விருகனும் இடப்பக்கம் உலூகனும் வழிநடத்த மைந்தர்கள் விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும் விந்தனும் உத்பவனும் வந்துகொண்டிருந்தனர். அவர்களின் அம்புகளால் அமைக்கப்பட்ட வேலிக்குள் அவர் சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த அம்புகளில் பெரும்பாலானவை அவருடைய மைந்தரின் அம்புகளால் தடுக்கப்பட்டன. உலூகனின் அம்புகள் விசையும் விரைவும் கொண்டவை. விருகனின் அம்புகள் எடைமிக்கவை. அவை எதிரம்புகளை வெல்வதன் சிறிய மணியோசைகள் அவரை சூழ்ந்திருந்தன.

களத்திற்கு வந்த முதல் நாளே அவர் தன் மைந்தர்களை தன் பாசறைக்கு அழைத்து அவர்கள் தன் மெய்க்காவலராகவோ புறங்காப்பவராகவோ எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும் என்று ஆணையிட்டார். பெரும்பாலான பொழுதுகளில் படைகளுக்குப் பின்புறம் முழுப் படையையும் நோக்கி ஆணையிடும் இடத்தில் அவர் இருந்தமையால் அவர்களும் போர்முனைக்கு அரிதாகவே சென்றனர். ஆகவே பதினேழு நாள் போரிலும் அவர்கள் உயிர்பிழைத்திருந்தனர்.  ஒருவர்கூட உடற்குறை இல்லாமல் எஞ்சினர். ஆனால் அவர்கள் அக்களத்தில் இருப்பதை கௌரவப் படையில் எவருமே தனித்துணரவில்லை. சகுனியின் நிழல்கள் என்றே அவர்கள் தோன்றினார்கள். ஒருமுறையேனும் அவர்கள் அவைகளில் தங்களை காட்டியதில்லை. களத்திலும் தனித்து வில்லுடன் எழவும் இல்லை.

முதல் நாளுக்குப்பின் சகுனியே அவர்களை முற்றாக மறந்தார். அவர்கள் அவரிடமிருந்து தனி ஆணைகள் எதையும் பெறவில்லை. ஒவ்வொரு நாளும் போர் முடிந்து அவர் தேர் திருப்பி கௌரவப் படைகளுக்குள் நுழையும்போது உடன் வந்து அவருடைய பாசறைக்கு அருகிலேயே நின்று பின்னர் திரும்பி தங்கள் பாசறைகளுக்கு சென்றனர். எப்போதுமே அவரிடம் சொல்ல அவர்களிடம் ஏதுமிருக்கவில்லை. பதினேழாம் நாள் போர் முடிந்த அன்று இருளில், மழையின் ஈரத்தில் கால்பழக்கத்தால் தன் பாசறை இருந்த இடம் நோக்கி சென்று தன்னியல்பாக அங்கு பீடத்தை தேடிய பின்னரே வெற்றிருளை சூழ உணர்ந்து திடுக்கிட்டபோது சகுனி தன் மைந்தரை நினைவுகூர்ந்தார். அவர் உடலுக்குள் இருந்து ஓர் உடல் எழுந்து வந்து அருகே நிற்பதைப்போல அவ்வெண்ணம் அருகே இருப்புணர்த்தியது.

விழிகளை சூழ ஓட்டி இருளுக்குள் மெல்லிய முழக்கமென நிறைந்திருந்த கௌரவப் படையை கூர்ந்து நோக்கினார். அதற்குள் அவர்கள் இருக்கிறார்களா என்று உள்ளம் துழாவியது. முந்தைய நாள் அவர் போர்முகப்பிலிருந்து திரும்பியபோது அவர்கள் உடனிருந்தார்களா என்று அவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவேளை முந்தைய நாட்களிலேயே அவர்களில் சிலர் களம்பட்டிருக்கவும் கூடும் என்ற எண்ணம் எழுந்ததும் அவர் உளம் அதிர்ந்தார். பின்னரே அது எவ்வளவு பொருத்தமற்ற உளஓட்டம் என்று உணர்ந்து நீள்மூச்செறிந்தார். மைந்தர்களில் எவரேனும் களம்பட்டிருந்தால் உறுதியாக அவரிடம் அவர்கள் தெரிவித்திருப்பார்கள். அவர்களுக்கு நீர்க்கடனும் அனற்கடனும் ஆற்ற அவரை அணுகியிருப்பார்கள்.

அவ்வெண்ணம் எழுந்ததும் மீண்டும் அவர் உடல் மெய்ப்பு கொண்டது. பதினேழாம் நாள் போரின் அந்தியில் களத்திலிருந்தவர்கள் எவரின் பெயர்களும் தனித்து உரைக்கப்படவும் இல்லை, அவர்களின் உடல்கள் தனித்து அறியப்படவும் இல்லை. களம் நிறைத்து கொழுந்தாடி எழுந்த பெருஞ்சிதையில் அவருடைய மைந்தர்களும் ஆகுதியாகியிருக்கக்கூடும். அந்த இரவு அவ்வெண்ணத்துடன் அவரால் அமர்ந்திருக்க இயலவில்லை. எழுந்து இருளுக்குள்ளேயே தலையை அசைத்தபடியும் சுட்டு விரல் அசைத்தும் தனக்குத்தானே பேசியபடியும் சுற்றி நடந்தார். அப்போது தன் மைந்தரை தன்னை வந்து சந்திக்கும்படி ஆணையிட எந்த வழியும் இல்லை. ஒலிகள் எதுவும் கேட்கப்படவில்லை. ஒளியால் இடப்படும் ஆணைகளை எவரேனும் நோக்குகிறார்களா என்றும் தெரியவில்லை.

வேறு வழியில்லை. மறுநாள் போருக்கெழும் வரை காத்திருந்தே ஆகவேண்டும். மீண்டும் சென்று அமர்ந்துகொண்டு தலையை அசைத்தார். சற்று நேரம் கழித்தே இல்லை இல்லை என்று தான் தலையசைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். கண்களை மூடி இமைகளுக்குள்ளும் அதே இருளை உணர்ந்தார். என் மைந்தருக்காக அஞ்சுகிறேனா என்ன? இக்களத்தில் பல்லாயிரம் பல்லாயிரம் இளைஞர் களம்பட்டனர். அரசமைந்தர் வீழ்ந்தனர். என் நெஞ்சிலும் தோளிலும் தூக்கி வளர்த்த கௌரவர்களும் அவர்களின் மைந்தர்களும் வீழ்ந்தனர். எவருடைய இறப்பும் என்னை துயரடையச் செய்யவில்லை. ஓர் இறப்புச் செய்தி செவியில் விழுந்ததுமே அதன் பொருட்டு எவர் எவ்வண்ணம் உணரக்கூடும், படைகளில் அதன் விளைவு என்னவாக இருக்கக்கூடும் என்பதையன்றி பிறிதொன்றை நான் எண்ணியதே இல்லை.

துரியோதனனுக்கு நிகராக அவர் உள்ளத்தில் நிறைந்திருந்த துச்சாதனனின் இறப்புகூட சற்றும் உள உலைவை உருவாக்கவில்லை. இறந்த துச்சாதனனை நினைவுகூரும்போதுகூட அவன் எங்கோ இருந்துகொண்டிருக்கிறான் என்ற உள மயக்கை அடைந்தார். அக்களத்தில் அவர்கள் அனைவரும் விழக்கூடும் என்று முன்னரே தெரிந்திருக்குமோ தனக்கு என்று ஒரு முறை அவர் எண்ணியதுண்டு. அது எப்படி தெரியக்கூடும் என்று உள்ளம் வியந்தாலும் இல்லை மெய்யாகவே தோன்றியிருந்தது என்று பிறிதுளம் அழுந்த மென்குரலில் கூறிக்கொண்டும் இருந்தது. இவர்களை வைத்து ஆடினேன். இழப்பெனத் தெரிந்தே. என் எல்லையை காணும்பொருட்டு. இல்லை அவன் எல்லையை காணும்பொருட்டு. இவ்விழப்புகளை அமைத்தவன் அவன்.

ஆனால் என் மைந்தருக்காக துயர்கொள்கிறேன். என் மைந்தர்! என் மைந்தர்! என் மைந்தர்! இன்று என் அகத்தே அரற்றிக்கொண்டிருக்கிறேன். முன்பு இச்சொற்கள் என் மூச்சுக்கு அடியில் ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தன. என் மைந்தர். அவர்கள் இறந்தபின் நான் வாழ முடியாது. ஏனென்றால் அவர்களே நான். எத்தனை இழிவு! அளவிலாச் சிறுமை இவ்வெண்ணம். ஆனால் இச்சிறுமை இல்லாத எவரேனும் உள்ளனரா என்ன? இப்போரே இங்கே இருக்க, ஆழப் பதிய, என்னை அறிய, என்னைக் கடக்க, எஞ்சவிட்டுச்செல்ல நான் நிகழ்த்துவது. நான் நான் நான் என நான் அரற்றாத நாளில்லை. நான் என்பதன் மறுவடிவல்லவா என் மைந்தர். மைந்தரையும் களமிறக்கிப் பொருதுபவன் தன்னைவிடப் பெரிய ஒன்றின்பொருட்டு நிலைகொள்பவன். எனில் துரியோதனன் அத்தகையவனா என்ன?

அத்தகைய உளப்பிளவுகளும் அகத்திசையழிவுகளும் நிகழ்கையில் உடனடியாக எழுந்து உடலை விரித்து காலை சற்றே அசைத்து முன்னால் நீட்டி வைப்பது அவருடைய பழக்கம். காலின் புண்ணிலிருந்து எழுந்து அலையலையாக உடலைத் தாக்கும் வலி அவருக்குள் இருக்கும் உளக்குலைவு அனைத்தையும் தொகுத்து கூர்கொள்ளச் செய்துவிடும். நீரில் வீசப்படும் வலை ஒற்றைச்சரடில் இழுபட்டு அம்புமுனை எனக் குவிந்து எழுவதுபோல. வலி ஓர் ஊழ்க நுண்சொல் என அவர் உள்ளத்தை ஒருங்கிணைத்தது. அதன் தாளம் அவர் எண்ணங்களின் ஒழுங்காக மாறியது. இந்த வலி என் தோழன். என் வழிகாட்டி. என்னுடன் உருமாறி வந்து அமைந்திருக்கும் எனக்குரிய தெய்வம்.

என்றேனும் இந்த வலி அகலுமென்றால் உளம் சிதறி நான் பித்தனாகிவிடக்கூடும். விண்ணுலகு செல்கையில் அனைத்து வலிகளும் அகன்றுவிடும் என்பார்கள். இவ்வலி இன்றி அங்கு பிறிதொருவனாக இருப்பேன். என் முகத்தில் எப்போதும் இருக்கும் இந்தச் சுளிப்பு மறைந்திருக்கும். நறுமணங்களையும், இனிய வண்ணங்களையும், மெல்லிசையையும், இன்சுவைகளையும், நுண்ணிய அழகுகளையும், உயர்ந்த எண்ணங்களையும் அறிபவனாக மாறியிருப்பேன். ஆனால் இப்போதுபோல இலக்கு தேரும் அம்பென முந்தும்கூர் கொண்டிருக்க மாட்டேன். சிதறிப்பரவி வெற்று அலையென்றாகி இருப்பேன். அது சகுனி அல்ல. சகுனி என எழுந்தமைக்கு முன்பிருந்த வடிவம். சகுனி இங்கே இவ்வண்ணம் திரண்டவன். அரவுப் பல்லில் ஆலம் திரண்டதுபோல். இன்று நான் என எண்ணுவது என் குவியத்தை. என் இலக்கு அது. என் பசி அது. கரிய மூக்கு நுனியால் இழுத்துச் செல்லப்படும் குருதிமணம் பெற்ற பாலைவன ஓநாய் நான்.

தன்னுள்ளிருந்த அந்த நஞ்சை ஓநாய் எனக்கு அளித்துவிட்டிருக்கிறது. அதன் வயிற்றில் எரியென கொதித்து, நாவில் நீரென ஊறுவது. பற்களில் ஒளி கொள்வது. கண்களில் கூர் கொள்வது. செவிகளில் குவிந்து நுனியசைவது. வாலில் நெளிவது. கால்களில் காற்றை அறியச் செய்வது. அவர் அந்த ஓநாயை அருகிலெனக் கண்டார். அது இருளுக்குள் அவரை நோக்கியபடி நின்றிருந்தது. அதன் மயிர்ப்பிசிறுகள் காற்றில் அலைபாய்ந்தன. மிக மெல்ல அது முனகியது, யாழ்நரம்பு காற்றில் அதிர்வதுபோல கேட்கும் கேளாச் சிற்றொலி. அதன் நஞ்சு என்னை வாழவைக்கிறது. அதன் அருள் என்னை ஆற்றல்கொண்டவனாக ஆக்கியது. இப்புவியை நஞ்சுகளே ஆக்கி ஆட்டுவிக்கின்றன. விண்ணூர்பவனின் துயில் தாங்கும் நஞ்சு. ஆலகாலனின் கழுத்தமைந்த நஞ்சு. வாசுகியின் நா நிறைத்த நஞ்சு. நான்முகனின் எழுத்தாணிக்கூரிலும் அந்நஞ்சே வாழ்கிறது.

தன்னை புறவயப்படுத்திக்கொள்ளும் பொருட்டு சூதாடுவது அவர் வழக்கம். நிலையழியும் போதெல்லாம் நாற்களத்தைப் பரப்பி கரு நிரத்துவார். பருவடிவில் நாற்களமும் கருக்களும் இல்லாதபோது விழி மூடி எண்ணத்திலேயே களம் பரப்பி காய்விரித்து முழுமையாக ஆட அவரால் இயலும். போர் சூழ்ந்தபின் நாற்களமாடல் முற்றாகவே அவர் உள்ளத்திலிருந்து மறைந்துவிட்டது. முதல்முறையாக குருக்ஷேத்ரத்தைப் பார்த்த அக்கணமே அது அகன்றது என எண்ணிக்கொண்டார். மீண்டும் எண்ணி எண்ணி அதை எடுக்கையில்கூட ஆழத்திலிருந்து வெறுமனே அச்சொல் மட்டுமே எழுந்து வந்தது. எப்பொருளும் அளிக்காத ஓர் ஒலியென அது அவர்முன் கிடந்தது.

அவர் மீண்டும் தன் மைந்தரை நினைவுகூர்ந்தார். அவர்கள் எப்படி அவர் விழிகளுக்குத் தெரியாதவர்களாக ஆனார்கள்? அவர் அவர்களிடம் பேசுவதே இல்லை. அவர்களும் பேசாதபோது நடுவே திரண்ட அமைதி இரு சாராரிலும் குடியேறியது. விழிகளும் முகமுமே அவர்கள் பேசிக்கொள்ள போதுமானதாக ஆகியது. உலூகனின் ஓசையின்மையை அவர் முதலில் உணர்ந்தது ஒருமுறை அவனுடன் காட்டிற்குள் வேட்டைக்குச் செல்கையில். கங்கைக்கரைக் காட்டில் அவர் புரவியில் அம்புடன் ஒரு சிறுத்தையைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். அது அவரை முன்னரே உணர்ந்துவிட்டிருந்தது. ஆகவே முழுமையாகவே புதர்களுக்குள் உடல்மறைத்து புழுவைப்போல ஊர்ந்து சென்றது. செவிகூர்ந்தால் மட்டுமே அதன் உடல் மண்ணில் உரசும் ஒலி கேட்டது. அது அவரையும் ஓசையற்றவராக ஆக்கியது.

ஒருகணத்தில் முற்றிலும் தனிமையை உணர்ந்து திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தபோது உலூகன் தன் பின்னால் உடனிருப்பதை கண்டார். மைந்தன் உடனிருக்கையில் தந்தை உணரும் தனிமை ஒன்று உண்டென்பதை அப்போது உணர்ந்தார். அவன் விழிகளை பார்த்தபோது அதிலும் தன் இருப்பை காண இயலாது திகைத்து பின்னர் “நீ உடனிருந்தாயா?” என்றார். ஆம் என அவன் முகக்குறி காட்டினான். “உன் புரவிக்குளம்படிகளைக்கூட நான் கேட்கவில்லை” என்றார். அதற்கும் அவன் மறுமொழி ஏதும் சொல்லவில்லை. பின்னர் திரும்பி புரவியை ஓட்டியபோது அவன் உடன் வருகிறானா என செவி கூர்ந்தார். புரவிக்குளம்படியின் சீரான தாளம் மட்டுமே இருந்தது. ஒரு மானுடன் தொடர்வதன் உளப்பதிவு எதுவும் உருவாகவில்லை.

விந்தைதான்! இது என் உள மயக்கு போலும். மானுடர் இருப்பை மானுடர் உணரும் நுண்புலன் ஒன்று உண்டு. முற்றிருளில், முற்றிலும் ஓசையின்றி, மணமின்றி, காற்றசைவின்றி ஒருவர் அணுகினால்கூட மானுடர் எவ்வண்ணமோ அதை உணர்ந்துவிடமுடிகிறது. இவனை என்னால் உணர முடியவில்லை என்றால் இவன் பயின்றிருப்பது ஏதோ ஒன்று உண்டு. இவன் குடியில் அசுரக் குருதி உள்ளது. அசுரர்களும் அரக்கர்களும் கந்தர்வர்களிடமிருந்து கற்ற கலைகளில் ஒன்று அறியாது தொடர்தல், மறைந்து அருகிருத்தல். எனில் எப்போதும் இவன் என்னுடன் இருக்கிறானா? நான் சற்றுமறியாமல்?

அன்று மீளமீள காட்டிற்குள் அவன் இன்மையென தன்னுடன் இருப்பதை பல கோணங்களில் அவர் உய்த்தறிந்துகொண்டிருந்தார். பின்னர் உளச்சோர்வும் விலக்கமுமாக அதை உறுதி செய்தார். அவன் இன்மை என்றே ஆகக் கற்றவன். பின்னர் பல முறை தனியறைகளில், அவைகளில் இன்மை என்றே அவன் இருப்பதை உணர்ந்தபின் ஒருமுறை அவனிடம் கேட்டார் “நீ முற்றமைதி கொண்டிருக்கிறாய். உன் விழிகளாலேயே பெரும்பாலும் பேசுகிறாய். ஏன்?” அவன் தலைவணங்கி உதட்டசைவால் அறியேன் என்றான். “நீ உடனிருப்பதை நான் உணர்வதே இல்லை.” உலூகன் அதற்கும் விழிக்குறியே காட்டினான். “நீ என்னை தொடர்கிறாயா? என்னை ஒற்றறிகிறாயா?” அவன் வெறுமனே நோக்க அவர் அவன் விழிகளை சிலகணங்கள் நோக்கிவிட்டு விழிவிலக்கிக் கொண்டார்.

அதன் பின்னர் ஒருநாள் அவனுடைய முகக்குறி நினைவிலெழுந்தபோது அது மிக அணுக்கமானது என்பதை உணர்ந்தார். மிக நன்கறிந்தது அது. ஆம், அதுதான். ஏன் அதை இத்தனை நாள் உணராமல் போனேன்? அந்த அமைதி அவன் அன்னையிடமிருந்து வந்தது. அவளில் எஞ்சியிருப்பது.

 

உலூகனின் அன்னையை ஒருமுறை கங்கைக்கரையில் வேட்டைக்குச் சென்றபோது அவர் பார்த்தார். அதுவரை அவருக்கு பெண்கள் எப்போதாவது தேவைப்படும் இளைப்பாறலாக மட்டுமே இருந்தனர். அவருடைய மஞ்சத்தறைக்கு வந்து சென்ற பெண்களின் முகங்களை அவர் நினைவுகூர்ந்ததே இல்லை. வேறெப்போதாவது அவர்களை நேரில் பார்க்கையில் அவர்களின் விழிகள் கணம் ஒளிர்ந்து மறையும் அறிமுகம்கூட அவருக்கு எதையும் நினைவுறுத்துவதில்லை.

ஒருமுறை அவருடன் இருந்த பரத்தை முன்னரே பலமுறை அவர் அவளிடம் வந்ததைப்பற்றி கூறியபோது துணுக்குற்று “உன்னிடமா? எப்போது?” என்று அவளிடம் கேட்டார். அவளை அச்சொற்கள் புண்படுத்த அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். “சொல், உன்னிடமா? நானா?” என்றார். அவள் துயருற்றவள் என புன்னகைத்தாள். அவர் ஏளனமாக நகைத்து “எனக்கு உன் ஆத்மா தேவையில்லை. அதை நான் புணரமுடியாது” என்றார். அவள் விழிகளில் மிக மெல்லிய நஞ்சு குடியேறியது. அப்போது அவர் அதை உணரவில்லை. அவள் புன்னகைக்கிறாள் என்று தோன்றியது. புன்னகை அவள் முகத்தில் இல்லை என்றும் தெரிந்தது. பின்னர் அதை பேசுகையில் கணிகர் சொன்னார் “பெண்டிரிடம் உள்ளது அந்த நச்சுப்பூமுள். பரத்தையர் அதை படைக்கலமாக்கும் கலையை பயின்றவர்கள்.”

அவர் “ஏன் நகைக்கிறாய்?” என்றார். அதன் பின்னரே அவள் புன்னகைத்தாள். “சொல்” என்றார். “இவ்வண்ணம் சொல்பவர்கள் பெண்களின் உடல் சலித்து ஆத்மாவை தேடி அலைவார்கள். பெண்ணுக்கு முன் மண்டியிடுவார்கள். அவள் காலடியை தலைசூடுவார்கள்.” சகுனி ஒருகணம் திகைத்தபின் உரக்க நகைத்து “தீச்சொல் இடுகிறாய் அல்லவா?” என்றார். “இல்லை, அவ்வாறு நிகழ்கையில் என்னை நினைவுகூர்க!” என்றாள். அவர் அவளை கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்தார். “உடலைப் புணரவே இயலாது காந்தாரரே, ஆத்மாவை மட்டுமே புணரமுடியும். ஒருகணமேனும் பெண் ஆத்மாவை உங்களுக்கு அளிக்கவேண்டும். உடலை மட்டுமே புணர நேர்ந்தால் ஆண்கள் தங்கள் உடலை வெறுப்பார்கள். கசந்து தசையுருகி அழிவார்கள்” என்றாள்.

சகுனி ஏளனத்துடன் “உன் ஆத்மாவைத்தான் அனைவருக்கும் பகிர்கிறாயா என்ன?” என்றார். “ஆம், ஒரு துளியையேனும்… அவ்வாறன்றி இவ்வாழ்வில் சித்தம் பிறழாமல் திகழமுடியாதென்று புரிந்துகொண்டேன்” என்றாள் அவள். சகுனி “நன்று. ஊருணி என உன் ஆத்மாவை உணர்கிறாய் போலும்” என்றார். “ஆம், அல்லது முலையூட்டும் அன்னை என” என்றாள். சகுனி அவளை மேலும் ஏளனம் செய்ய எண்ணினார். ஆனால் சொற்கள் எழவில்லை. அவள் அவர்மேல் முழு வெற்றியை விழைந்தாள். “சென்றமுறை வந்தபோது நீங்கள் பின்னிரவில் வலியால் முனகினீர்கள். அறைக்குள் ஓர் ஓநாய் இருப்பதாக கனவில் உரைத்தீர்கள். அன்று நான் அடைந்த கனிவாலேயே உங்களை இன்று நினைவுகூர்ந்தேன்.”

அந்நிகழ்வை அவர் மறந்துவிட்டார். ஏனென்றால் அது பெண்ணின் ஆணவம் சிறுமைகொண்டமையால் எழுந்த சொல் என அவரிடம் கணிகர் சொன்னார். “மெய்யாகவே அப்பெண் சற்றே அன்னை. இல்லையேல் உங்களை என்றுமென கசந்துபோகச் செய்யவும் அவளால் இயலும்.” சகுனி பெண்கள் தன் வாழ்வில் ஒருபோதும் ஊடுருவப்போவதில்லை என்றே எண்ணியிருந்தார். புராணகங்கைக்குள் தனித்து வேட்டைக்குச் செல்வது அவருடைய இயல்பு. அப்போது அவருடைய உள்ளம் பறப்பதை போலிருக்கும். தன் உள்ளத்தை எப்போதும் எடைமிக்க பாறாங்கல்லென தன் உடலை அழுத்தி மண்ணோடு நிறுத்தியிருக்கும் ஒன்றாகவே அவர் உணர்ந்திருந்தார். புரவியில் விசைகொண்டு செல்கையில் மட்டும் அது உடலிலிருந்து எழுந்து மேலாடைபோல் காற்றில் பறக்கும். பின்னர் நெடுந்தொலைவுக்கு அப்பாலென சென்று சிறகடித்து உடன்வரும். அவ்வப்போது அவரை விட்டுவிலகி எங்கோ சென்றுவிடும்.

உள்ளம் இல்லாதிருக்கும் அத்தருணங்களின் விடுதலைக்காகவே அவர் புரவியை அதன் உச்சவிசையில் செலுத்த விழைந்தார். ஆனால் அஸ்தினபுரியின் எத்தெருவிலும் அவரால் அவ்வண்ணம் புரவியில் செல்ல இயல்வதில்லை. நகரம் பல்லாயிரம் கண்களுடன் அவரை நோக்கிக்கொண்டிருந்தது. புராணகங்கையின் காந்தாரக் குடியிருப்புகளுக்கு அப்பால் அதன் புல்வெளிப்பரப்பும் மென்சதுப்பு நிலமும் முற்றாகவே விழிகள் அற்றவை. புரவியில் விரைந்து சென்று அது காலோய்ந்து நிற்கையில் தானும் மூச்சிரைக்க மீண்டு வரும்போது காலிலிருந்து வலி மாறா ஊழ்கநுண்சொல் என ஒலிக்கத்தொடங்கும். அத்தனை பொழுது அது தன்னை கைவிட்டிருந்தது என்றுணர்கையில் நிறைவும் ஏக்கமும் ஒருங்கே எழும்.

அவ்வாறு கங்கையின் கரையில் புரவி ஓய்ந்தது. அதை மென்சேற்றில் நடக்கவிட்டு நாணற்பரப்பைக் கடந்து கரைப்பாறையொன்றின் மேல் ஏறி நின்றார். வியர்வை சொட்டும் புரவிமீது உடல் அனல் அடங்க அமர்ந்திருந்தபோது எதிரில் சதுப்புக் கரையில் தூண்டில் வீசி அமர்ந்து மெல்ல பாடிக்கொண்டிருந்த இளம்பெண்ணொருத்தியை அவர் கண்டார். புரவியின் காலடி ஓசைகளைக்கூட கேட்காமல் அவள் தன் பாட்டில் ஆழ்ந்திருந்தாள். பொருள் துலங்காத காட்டுமொழிப் பாடல். அவளிட்ட தூண்டில்மிதவை சற்றே தழைந்தது. அவள் “ஓ! ஓ!” என ஒலியெழுப்பி கழை தழைத்து மீன் இரைவிழுங்கி அகல இடமளித்தாள். பின்னர் கழையை இழுத்தபடி எழுந்தாள். கழை சுழன்றெழ வெள்ளி மீனொன்று காற்றில் துள்ளித் துள்ளிப் பறந்து சேற்றில் வந்து விழுந்து வாலை அறைந்து எழுந்து நடமிட்டது.

அவள் எழுந்து சிறுமியைப்போல் கைவீசி நடனமிட்டாள். கூச்சலிட்டு நகைத்தாள். பின்னர் அந்த மீனை எடுத்து வாலைப்பற்றி வெயிலில் காட்டி திருப்பிப் திருப்பிப் பார்த்து சிரித்தாள். அவள் முழங்கை அளவுக்குப் பெரிய மீன். வெள்ளிவாளுறை போன்ற செதுக்குகள் கொண்டது. இரு நீலமணிகள் என விழிகள். அதை கூடையில் வைக்கும்பொருட்டு திரும்பியபோது பாறை மேலிருந்த அவரைக் கண்டு புருவம் சுருங்க கூர்ந்து நோக்கியபின் மீனை மூங்கில் கூடையில் இட்டுவிட்டு “யார்?” என்றாள். அஸ்தினபுரியில் ஒருவர் அவ்வாறு தன்னை கேட்க முடியுமென்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார். “நீ யார்?” என்று அவர் அவளிடம் கேட்டார். “நான் நீங்கள் யாரென்று முதலில் கேட்டேன்” என்று அவள் சொன்னாள். தூண்டிலையும் கூடையையும் எடுத்துக்கொண்டு சரிவில் மேலேறி வந்து நின்று “இந்தக் காட்டிற்குள் புரவியில் எவரும் வருவதில்லை” என்றாள்.

“நீ இங்கிருக்கிறாயா?” என்றார். “ஆம், என் அன்னை இக்காட்டில் இருக்கிறார்.” அவர் அவளுடைய வெண்ணிறத் தோலையும் வெள்ளி மின்னிய கண்களையும் பார்த்து “நீ காந்தாரக் குடியை சேர்ந்தவளா?” என்றார். “என் தந்தை காந்தாரர், அன்னை அசுரகுடியினள்” என்றாள். “உன் தந்தை காந்தாரப் படையில் இருக்கிறாரா?” என்று அவர் கேட்டார். அவள் “அவர் மறைந்துவிட்டார். சௌவீரர்களுடனான போரில் கொல்லப்பட்டார்” என்றபின் “நீங்கள் காந்தாரர் என்று எண்ணுகிறேன். உங்கள் தாடி பொன்னிறத்தில் உள்ளது” என்றாள். சகுனி புன்னகைத்து “உன் பெயரென்ன?” என்றார். “என்னை ஆர்ஷி என்பார்கள்” என்றபின் “என் தந்தை காந்தாரத்தில் பிங்கலசிலை என்னும் ஊரைச் சேர்ந்தவர். அங்கிருந்து காந்தாரப் படைகளுடன் இங்கு வந்தார். என் அன்னையை இங்குதான் மணந்துகொண்டார்” என்றாள்.

“உன் தந்தை பெயரென்ன?” என்று சகுனி கேட்டார். அவள் மீண்டும் நகைத்து “இப்போதும் நீங்கள் யாரென்று சொல்லவில்லை” என்றாள். “என் பெயர் சகுனி. நான் காந்தாரத்தின் இளவரசன்” என்றார். “இளவரசர் முதிய அகவை கொண்டிருக்கிறீர்கள்” என்று அவள் நகைத்தாள். தன்னை அவள் நம்பவில்லையென்று தெரிந்ததும் சகுனியின் புன்னகை பெரிதாகியது. அவ்வாறு பிறிதொருவராக அவள் முன் நிற்பதில் விந்தையான ஒரு விடுதலையை அவர் உணர்ந்தார். அவர் என அவர் எண்ணிய எதுவும் அவள் முன் நின்றிருக்கவில்லை. அவரே அல்ல என அவர் எண்ணிய அவ்வுடல் மட்டுமே அவளால் அறியப்பட்டது. “நான் காந்தாரப் படையிலிருக்கிறேன். என்னை உன் தந்தைக்கு தெரிந்திருக்ககூடும். உன் தந்தை பெயரென்ன?” என்று அவர் மீண்டும் கேட்டார்.

“கிலஜ குலத்தைச் சேர்ந்தவரான வஜ்ரபாகு” என்று அவள் சொன்னாள். “யானைக்கொட்டிலை அவர்தான் பேணினார்… அவருக்கு யானைமேல் பித்து மிகுதி என என் அன்னை சொன்னார். மதம்கொண்டு காணாமலான ஓர் யானையைத் தேடி காட்டுக்குள் வந்தபோதுதான் என் அன்னையை அவர் பார்த்தாராம்” என்றாள். சகுனி சிரித்து “காந்தாரர்கள் யானை மேல் தீராப் பித்து கொண்டவர்கள்” என்றார். “ஆம், இங்கிருந்து காந்தாரத்திற்கு ஆண்டுதோறும் யானைகளை கூட்டம் கூட்டமாக கொண்டு செல்வார்கள் என்று தந்தை சொன்னார். ஓரிரு ஆண்டுகளிலேயே அவை மெலிந்து தோற்கூடாரம் போலாகிவிடும். அவை இறந்த பின்னர் தோலை உரித்து கூடாரங்களாக மாற்றிவிடுவார்கள். அந்த இடத்திற்கு புதிய யானைகள் வந்து சேரும்.”

அவள் பேசுவதில் விழைவுமிகுந்தவளாகத் தெரிந்தாள். சொல்பொழிந்துகொண்டே இருந்தாள். “யானைகளுக்கு இலையும் தழையும் அன்னமும் உணவாக அளித்தால் மட்டும் போதாது. அவற்றின் கண்களுக்கு பசுமையை காட்ட வேண்டும், அவற்றின் விழிகளில் மழைக்கார் நிறைந்த வானம் தெரியவேண்டும் என்று காந்தாரர்களுக்கு புரிந்ததே இல்லை என்றார் தந்தை.” சகுனி புன்னகைத்து “உண்மை, அது இங்கு வந்த பின்னர்தான் தெரிகிறது” என்றார். “ஆனால் காந்தாரத்து ஓநாய் மழைநனைந்தால் இறந்துவிடும்.” அவள் அதை செவிகொள்ளாமல் தனக்குத்தானே சிரித்து “இங்கிருந்து செல்லும் யானைகள் அங்குள்ள கூடாரங்களைக் கண்டு யானைகள் என எண்ணி அஞ்சுவதும் அழைப்பதும் உண்டாம். யானைத்தோல் கூடாரங்கள் விழிதொடும் எல்லைவரை அங்கே விரிந்திருக்கும் என்று தந்தை சொன்னார். காற்றில் அவை உப்பித்தணிகையில் யானைகள் அசைவதுபோலத் தோன்றுமாம்” என்றாள்.

சகுனி ஓர் ஒவ்வாமையை உணர்ந்தார். அவள் அதை உணராமல் “அவர் நன்றாகப் பேசுபவர். யானைகள் அவ்வண்ணம் காந்தாரத்தில் அழிவின்மையை எய்துகின்றன என்றார்” என்றாள். அவருடைய புரவி அவர் உள்ளத்தை உணர்ந்து தும்மியபடி பிடரி சிலிர்த்துக்கொண்டு கீழிறங்கலாயிற்று. அவர் புன்னகைத்து “நன்று, என் புரவி விடாய்கொண்டிருக்கிறது” என்றார். அவள் “வருகிறேன், நானும் செல்லவேண்டும்…” என்றாள். அவர் புரவியை சரிவிலிறக்கி கங்கை நோக்கி சென்றார். அவள் துள்ளி குதித்து தனக்குத்தானே பாடியபடி காட்டிற்குள் சென்று மறைவதைக் கண்டார். தன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதை நீர் அள்ளக் குனிந்தபோது உணர்ந்தார்.

காட்டில் இருந்து திரும்பும்போது அவர் அவளையே நினைத்துக்கொண்டிருந்தார். அவளைப்பற்றிய எண்ணங்கள் தன்னிடமிருந்து விலகவே இல்லை என்பதை அஸ்தினபுரிக்குள் நுழைந்தபின் உணர்ந்தார். அவ்வெண்ணங்களை கூர்ந்து நோக்கியபோது அவை பொருளில்லாதவை, மிகச் சிறியவை, மீளமீள நிகழ்பவை எனக் கண்டார். ஆகவே அவை உடனே விலகிவிடும் என கருதினார். ஆனால் மிகப் பெரிய எண்ணங்கள், மிக ஆழமான உணர்வுகளே அவ்வண்ணம் விரைந்து அகல்கின்றன என்று பின்னர் உணர்ந்தார். பெரியவையும் ஆழமானவையும் முழுக்க நிகழ்ந்துவிடுகின்றன. பெய்து வெளுத்துவிடுகின்றன. சிறியவை பூமுள் என பதிந்தவை. உள்ளத்தால் வருடி வருடி வளர்க்கப்படுபவை.

ஒரு மாதம் அவர் அவளைப்பற்றிய எண்ணங்களுடன் போராடினார். போராடும்போது அது வளர்வதை உணர்ந்து உளம் ஒழிந்தார். அப்போது அது அறியாமல் பேருருக்கொண்டு எதிர்பாராதபடி எதிர்வந்து நின்றது. அவளை மீண்டும் கண்டால் அது ஒழியும் என புராணகங்கைக்குள் சென்றார். அவளைக் கண்டறிய இயலவில்லை. காணாதபோது அவள் உருவம் மேலும் தெளிவடைந்தது. ஒருவேளை இனிமேல் காணவே முடியாதோ என எண்ணியபோது தொடலாம் போலும் என அருகணைந்து நின்றது. அவள் உண்மையில் இல்லையோ, அது வெறும் விழிமயக்கோ என எண்ணியபோது பேருருக் கொண்டது. ஒரு நிலையில் அவர் வேறு எண்ணமேதும் அற்றவராக ஆனார்.

அவர் உடல் நலிந்தது. விழிகள் உள்நோக்கியவையாக ஆயின. செவிகள் சொல்கேளாமல் மூடிக்கொண்டன. அவருடைய வாயில்கள் மூடிக்கொண்டே செல்வதை கணிகர் கண்டார். “காந்தாரரே, உங்கள் உள்ளத்தில் இருப்பவள் ஒரு பெண். அவள் எவர் என்று மட்டும் சொல்லுங்கள்” என்று அவர் கேட்டார். அவர் விழிகளை நோக்கியபின் தயங்கி “அவள் பெயர் ஆர்ஷி” என்றார். அச்சொல்லை அவர் நாவால் உரைப்பது அதுவே முதல்முறை என அறிந்தார். முகம் சிவக்க மூச்சுத் திணற “அவள் பெயர் ஆர்ஷி” என மீண்டும் சொன்னார். கணிகர் நகைத்து “நன்று, சில மரங்கள் அடித்தடி முற்றிய பின் பூவிடுகின்றன” என்றார். சகுனி நாணி செவிகள் சிவந்து விழிகள் ஈரம்கொள்ள தலைதாழ்த்தினார். பின்னர் எழுந்து அங்கிருந்து அகன்றார்.

ஆனால் அன்று மாலையே அவர் கணிகரைச் சென்று கண்டார். “வருவீர்கள் என அறிவேன்… சொல்க!” என்றார் கணிகர். அவர் அனைத்தையும் சொன்னார். “என்னால் இதை கடக்க முடியவில்லை. கடந்தேயாக வேண்டும். நீங்களே ஒரு வழி சொல்லவேண்டும்” என்றார். “அவளை கொண்டுவருக! அவளை புணர்க! வேறு எந்த வழியும் இல்லை. மானுடர்களுக்கு மட்டுமல்ல தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும்கூட அதுவே வழி” என்றார் கணிகர். சீற்றத்துடன் “விளையாடாதீர்கள்” என்றார் சகுனி. “மெய்யாகவே அது ஒன்றே வழி… வேறு ஏதும் செய்ய இயலாது” என்றார் கணிகர். “சிறுமைசெய்கிறீர்கள்” என்றபடி சகுனி எழுந்து அகன்றார்.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின் அவரே உணர்ந்தார், அதுவே மெய் என. அவருடைய அகம் அவரை புதிதாகக் கண்டடைந்த தருணம் அது. அங்கே அவள் முன் அவ்வண்ணம் நின்றிருந்த சகுனியை அவரால் உதறவே முடியாது. அவராக அமைந்து வாழ்ந்தாலொழிய அது தீராது. அவரால் அந்த சகுனியை ஒப்ப இயலவில்லை. ஆனால் அவர் தானில்லை என எண்ணவும் இயலவில்லை. அந்த சகுனி விடுதலைபெற்றவராக இருந்தார். முகம் மலர்ந்தவராக, தனக்குத்தானே இனிய சொல் பேசிக்கொள்பவராக. முன்பொருநாள் அவர் இவ்வாறாக ஆகும்பொருட்டு திரும்பிய பாதைமுனையில் இன்னொரு வழியில் திரும்பியிருந்தால் அவ்வண்ணம் ஆகியிருக்கக்கூடும்.

மூன்றாம் நாள் அவர் தன் மஞ்சத்தறைக்குள் நுழைந்தபோது உள்ளே ஒரு பெண் எழுந்து அஞ்சி அறைமூலைக்குச் சென்று நிற்பதை கண்டார். “யாரது? நான் ஆணையிடவில்லையே. யார்?” என்று அவர் கூவினார். ஏவலன் வந்து பணிந்து நிற்க “யார் இவளை கொண்டுவந்தது?” என்றார். “கணிகரின் ஆணை” என்றான் ஏவலன். அதற்குள் அவர் உள்ளம் உணர்ந்துவிட்டிருந்தது, அது அவளே என. அவருள் பிறிதொருவன் எழுந்தான். அவர் அவளருகே சென்றார். அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். அவர் அவளுடைய முகத்திரையைப் பற்றி அகற்றினார். விழிநீர் திரண்ட அவள் முகத்தை நோக்கி “ஆர்ஷி” என அழைத்தார். புன்னகையுடன் “நீ இருக்கவேண்டிய இடம் இதுவே. இங்கு நீ விழைவதை அடையலாம்” என்றார்.

அவள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. “சொல், உனக்கு என்ன வேண்டும்?” என்று அவர் கேட்டார். “இந்நகரில் நீ முதன்மை அரசியருக்கு நிகரானவள். காந்தாரத்தில் நீயே அரசி” என்றார். அவள் நிமிர்ந்து அவர் விழிகளை நோக்கினாள். அவள் நோக்கில் ஒரு சொல் இருந்தது. அவர் அதை அறிந்ததும் குன்றினார். அவர் உடல் நடுங்கத் தொடங்கியது. “சொல், நீ ஆணையிடுவது என்ன? என்னை உன் அடியவனாகவே கொள். உன்னையன்றி இந்நாட்களில் நான் நினைத்தது ஏதுமில்லை” என்றார். அவள் விழிதாழ்த்திக்கொண்டாள். அவ்விழியில் எழுந்ததே அவள் அவரிடம் உரைத்த இறுதிச்சொல். அதன்பின் அவள் முற்றாக அணைந்து தன்னை வெறும்பாவையென ஆக்கிக்கொண்டாள். அவருடைய இரு மைந்தரை அவள் ஈன்றாள். ஆயினும் அவள் விழிகளில் எப்போதும் சொல்லின்மையே திகழ்ந்தது.

உலூகனின் விழிகளிலும் அதையே சகுனி கண்டார். அதை தெளிவாக உணர்ந்த அன்று அவர் நீள்மூச்சுகள்விட்டபடி தன் மஞ்சத்திலேயே நெடும்பொழுது படுத்திருந்தார். இருள் அவரை சூழ்ந்திருந்தது. மிக அப்பாலிருக்கும் ஓசைகளை எல்லாம் அள்ளிக் கொண்டுவந்து அருகே நிறைத்து வைக்கும் இருள்.

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 22

யுதிஷ்டிரன் திசையழிந்தவராக சரிந்துகிடந்த தேர்த்தட்டு ஒன்றை பற்றியபடி நின்றார். இளைய யாதவர் தேரிலிருந்து இறங்கி அவர் அருகே ஓடிவந்தார். “யாதவனே” என யுதிஷ்டிரன் விம்மினார். “என் கொடுங்கனவுகளில் எல்லாம் நான் கண்டது இதைத்தான். நான் அஞ்சியது இதை மட்டும்தான். என் மைந்தரும் உடன்பிறந்தாரும் மறைந்து நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். நகுலனும் சகதேவனும்…” என்று இளைய யாதவரின் தோளைப் பற்றியபடி அரற்றினார். “அஞ்சற்க, அரசே. அவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை” என்றார் இளைய யாதவர். “என்ன சொல்கிறாய்? நானே கண்டேன்! என் இளையோர் வீழ்ந்ததை என் கண்களாலேயே கண்டேன்!” என்றார் யுதிஷ்டிரன்.

“அவர்களின் பணி முடியவில்லை” என்றார் இளைய யாதவர். “அவர்கள் எழுந்தாகவேண்டும்.” யுதிஷ்டிரன் “அவர்கள் இறக்கவில்லையா? மெய்யாகவே இறக்கவில்லையா? தெய்வமென நின்று சொல்க யாதவனே, அவர்கள் இறக்கவில்லையா?” என்று கூவினார். “அவர்கள் இறக்காமல் இக்களம் முடிவடையாது. பெருநிகழ்வுகளுக்கும் அருஞ்செயல்களுக்கும் பின் அந்த மானுடர் இறந்தாகவேண்டும் என்பது தெய்வங்களின் நெறி. முற்றிறப்புக்கு மாற்றாக சிற்றிறப்பு நன்று. உடற்குறையும் இறப்பே. உற்றாரின் இறப்பு, நம்பிக்கையின் இறப்பு, ஆணவத்தின் இறப்பு என இறப்புகள் பலவகை. ஆத்மாவின் இறப்பே எஞ்சாத இறப்பு என்பார்கள். இங்கு இறந்து மீளாத வரை அவர்களால் இனி வாழமுடியாது.” யுதிஷ்டிரன் “தெய்வங்களே!” என நெஞ்சில் கைசேர்த்து விம்மினார்.

“அவர்கள் உடலில் பாய்ந்த நஞ்சு முகில்களில் இருந்து மலைப்பாறைகளை அடைந்தது. தங்கள் அம்புகளை அத்தகைய நச்சுப்பாறைகளில் தீட்டித்தீட்டி அவர்கள் உருவாக்குகிறார்கள். நரம்புகளில் பாயும் அந்த அம்பு கொல்லும்திறன் வாய்ந்தது. ஆனால் இந்தக் களம் இன்று ஈரமாக உள்ளது. மண் தசையென மாறி அனைத்து உடல்களையும் ஒன்றாக இணைத்துள்ளது. அந்நஞ்சு ஓர் உடலிலிருந்து களம் முழுக்க பரவுகிறது. ஆகவே ஆற்றலிழக்கிறது.” யுதிஷ்டிரன் துடிப்புடன் “அவர்கள் உயிரிழக்கவில்லை என்றால்…” என்றார். கையைத் தூக்கி ஏதோ சொல்லமுயன்று வாய் இழுபட தத்தளித்தார். பின்னர் உளம் கிழிபட விம்மியழுதபடி நிலத்தில் அமர்ந்தார். “தெய்வங்களே! தெய்வங்களே!” என்றார்.

“நமக்கு பொழுதில்லை. அவர்களை களத்திலிருந்து மீட்டாகவேண்டும். மாற்று செய்தாகவேண்டும்” என்றார் இளைய யாதவர். “என்ன செய்யவேண்டும்? என் உயிரின் ஒரு பகுதியை அளிப்பதென்றாலும் செய்கிறேன்” என்றார் யுதிஷ்டிரன்.  “வருக!” என இளைய யாதவர் அவரை அழைத்துச்சென்றார். களத்தில் மிகப் பெரும்பாலானவர்கள் வீழ்ந்துவிட்டிருந்தார்கள். குவிந்து கிடந்த உடல்களை மிதித்தபடி அவர்கள் சென்றனர். யுதிஷ்டிரன் “எங்கிருக்கிறார்கள்? யாதவனே, எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என்றார். “அவர்கள் விழுந்தபோதே அந்த இடங்களைத்தான் நான் அடையாளம் கண்டு நினைவில் நட்டுக்கொண்டேன்” என்றார் இளைய யாதவர். தேரில் நின்றிருந்த அர்ஜுனனை நோக்கி “என்ன செய்கிறாய், பார்த்தா? வருக!” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அவர் குரலை அர்ஜுனன் கேட்டதாகவே தெரியவில்லை. “அவரை அழைக்கவேண்டாம். அவர் இக்களத்தின் இறுதிக்கணத்தில் இருக்கிறார்” என்றார் இளைய யாதவர்.

“இதோ!” என்று யுதிஷ்டிரன் கூவினார். “மந்தன்! மந்தன்!” என்று கைகளை விரித்து அலறினார். இடையிலிருந்து சங்கை எடுத்து ஊதினார். “எங்கே ஏவலர்? ஏவலர் வருக! மருத்துவர்கள் வருக!” இளைய யாதவர் “அவர்கள் எவரும் இப்போது உயிருடன் இல்லை” என்றார். யுதிஷ்டிரன் திகைத்து சூழ நோக்கி “ஆம். கால்களில் நிலைகொள்பவர் எவருமே இங்கில்லை” என்றார். சூழ நோக்கி “எவருமில்லையா? எவருமில்லையா? மருத்துவர்களே” என்றார். கீழே குவிந்துகிடந்த உடல்களிலிருந்து ஒரு முதியவர் கையூன்றி எழுந்தார். “அரசே!” என்றார். “நீர் மருத்துவரா?” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், நான் மருத்துவனாகவே இக்களத்திற்கு வந்தேன்” என்றார் அவர். “என் பெயர் சியாமளன்… அஸ்தினபுரியின் மருத்துவன் நான்.”

யுதிஷ்டிரன் “சியாமளரே, என் இளையோனை காப்பாற்றுங்கள்…” என்று குனிந்து விழிநீருடன் கூவினார். சியாமளர் எழுந்து நின்று அருகே கிடந்த இருவரை கால்களால் உதைத்தார். “எழுக… எழுக” என்றார். அவர்கள் ஆழ்துயிலில் இருந்து என எழுந்தனர். “ஆசிரியரே” என்றனர். “எழுக… இளவரசர்களை காக்கும்படி ஆணை” என்றார் சியாமளர். “அறத்தோனின் ஆணையை தலைக்கொள்க, எழுக!” அவர்கள் கையூன்றி எழுந்தனர். அவர்களின் விழிகள் வெறித்திருந்தன. உடலெங்கும் நரம்புகள் கரிய மண்ணில் கரிய வேர்கள் என புடைத்திருந்தன. கரிய உடல்களின் பரப்பிலிருந்து அவர்கள் முளைத்து தனித்து எழுந்தவர்கள் போலிருந்தார்கள். எழுந்தபோது அவர்களின் உடலில் இருந்து ஆவி எழுந்தது. சேறு வழிந்து சொட்டியது. தள்ளாடி நடந்தபடி “எங்கே அவர்கள்?” என்றார் சியாமளர். “இங்கிருக்கிறார்கள்” என்று அவருடைய மாணவன் சொன்னான்.

இளைய யாதவர் உடல்களை அகற்றி பீமனின் உடலைத் தொட்டு புரட்டினார். அவன் வாயில் பற்கள் இறுகி கிட்டித்திருந்தன. விழிகள் துறித்து இரு வெண்சிப்பிகள் போலிருந்தன. உடலெங்கும் நரம்புகள் இறுகி, கழுத்தில் தசைநார்கள் இழுபட்டு, பற்கள் இளித்திருக்க தலைகீழாக தொங்குபவன் போலிருந்தான். “நரம்புகளை மின்நஞ்சு தாக்கியிருக்கிறது… மின்னற்கொடி வானிறங்கி மானுடரைத் தாக்குவதற்கு நிகர் அது” என்றார் சியாமளர். “அந்த மின்னம்புகளில் இரண்டு தேவை… தேடி எடுங்கள்.” அதற்குள் யுதிஷ்டிரனே இரண்டு அம்புகளை எடுத்து நீட்டினார். “ஆம், இவைதான். இந்த நீல முனைகளில் உள்ளது மின்னலின் நஞ்சு” என்றார் சியாமளர். இரு நீல முனைகளையும் ஒன்றுடன் ஒன்று உரசினார். பின்னர் அவற்றை பீமனின் இரு காதுகளிலும் வைத்தார். அவன் உடல் தீ பட்டதுபோல் துள்ளியது.

இருமுறை துள்ளி அடங்கியதும் அவன் இமைகள் அசைந்தன. முகம் உயிர்ப்பு கொண்டது. மூச்சு ஓடத் தொடங்கியது. அவனைப் பிடித்து உலுக்கி “மந்தா! மந்தா!” என்று யுதிஷ்டிரன் கூவினார். “மந்தா, எழுக! எழுக, மந்தா! நீ சாகவில்லை… மந்தா, எழுக!” என்று அழுகையில் உடைந்த குரலில் அழைத்தார். பீமனின் வாய் அசைந்தது. நாக்கு கடைவாயில் துழாவ தொண்டைமுழை ஏறியிறங்கியது. அவன் வாயோரம் கோழை வழிய விழிநீர் கன்னங்களில் கரிய சேற்றில் கோடிட்டது. அவனை உலுக்கி “மந்தா! மந்தா!” என கூவிக்கொண்டிருந்தார் யுதிஷ்டிரன். ஒரு கணத்தில் அவன் யுதிஷ்டிரனின் குரலை கேட்டான். “மூத்தவரே” என்றான். மறுகணமே கைகளை ஊன்றி எழுந்தமர்ந்தான். “என்ன ஆயிற்று? எங்கே மைந்தர்?” என்றான். “அவர்களையும் மீட்கவேண்டும்… சல்யர் கொல்லப்பட்டார்” என்றார் இளைய யாதவர். பீமன் தன் உடலில் தைத்திருந்த அம்புகளின் தண்டுகளை பிடுங்கி எறிந்தான். அவற்றின் பொருத்துவாய்களில் சேறு படிந்து குருதி நின்றுவிட்டிருந்தது.

“அரசே, இனி பீமசேனனே போதும்… நீங்கள் அப்பால் அமர்ந்திருங்கள்.” யுதிஷ்டிரன் “என் மைந்தர்… எங்கிருக்கிறார்கள்…” என்றார். “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்… நீங்கள் அமர்ந்திருங்கள்” என்றான் பீமன். யுதிஷ்டிரன் “அவர்களை நான் கண்டடைகிறேன்” என்று பதறினார். “உங்கள் பதற்றமே எங்களுக்கு தடை… அமர்க!” என பீமன் உரத்த குரலில் சொல்ல யுதிஷ்டிரன் பின்னடைந்து தளர்ந்து கவிழ்ந்த தேரின் சகடங்களில் அமர்ந்தார். வெறித்த விழிகளால் அவர்கள் மைந்தர்களை உடல்களிலிருந்து அகழ்ந்து எடுப்பதை கண்டார். “நகுலன்… நகுலன்!” என்று கைசுட்டி கூவினார். “ஆம், பார்த்துவிட்டோம்” என்று பீமன் சொன்னான். சுருதகீர்த்தியின் நெஞ்சில் பாய்ந்திருந்த அம்பிலேயே சல்யரின் மின்னம்புகளைத் தொட்டு உடலை அதிரச்செய்தார் சியாமளர்.

மருத்துவர்கள் தொட்டுப் புரட்டி மின்தொடுகை அளிக்க அவர்கள் ஒவ்வொருவராக எழுந்தனர். நகுலன் எழுந்ததுமே சூழுணர்ந்து திடுக்கிட்டு “எங்கே இளையவன்?” என்றான். மறுகணமே துள்ளி எழுந்து “அவன் அங்கே வீழ்ந்தான்… அங்கே” என்று ஓடினான். அவர்கள் அனைவரும் மீண்டு எழுந்துவிட்டதை யுதிஷ்டிரன் கண்டார். ஒருவரை ஒருவர் மெல்ல தொட்டுக்கொண்டனர். நகுலன் சகதேவனை தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டான். சர்வதனின் தலையை மெல்ல வருடி சுதசோமனின் தோளை தொட்ட பின் அவர்களை நோக்காமல், ஒரு சொல்லும் உரைக்காமல் பீமன் அப்பால் சென்றான். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் உடலை நீட்டி கைதூக்கினர். சிகண்டி எழுந்து களைப்படைந்தவர்போல கவிழ்ந்த தேரின் குடம் மேல் அமர்ந்து நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தார்.

சகதேவன் சூழ நோக்கிய பின் “போர் முடிந்துவிட்டது, யாதவரே. களத்தில் எவருமே இல்லை…” என்றான். “அங்கே போர் நிகழ்கிறது இன்னமும்” என்றார் இளைய யாதவர். அவர் சுட்டிக்காட்டிய இரு எல்லைகளிலும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. “சகுனி இன்னமும் களத்தில் இருக்கிறார். அவர் இருக்கும் வரை துரியோதனனும் இருப்பார்” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் சீற்றத்துடன் எழுந்துகொண்டு “அவ்விழிமகனை நானே கொல்கிறேன்” என்றார். இளைய யாதவர் “அவரிடம் உங்கள் அம்புகள் விசைகொள்ளா” என்றார். “ஏன்?” என்றார் யுதிஷ்டிரன். “ஏனென்றால் அவரும் நீங்களும் வேறல்ல.” யுதிஷ்டிரன் திகைத்து பின் தளர்ந்து தலைகுனிந்தார். இளைய யாதவர் “நகுலனும் சகதேவனும் அவரை வெல்லட்டும்… பீமசேனன் துரியோதனனை வெல்லட்டும்… இன்னும் ஒரு நாழிகையில் இங்கே போர் முடிந்துவிடும்” என்றார்.

யுதிஷ்டிரன் களத்தை நோக்கினார். சியாமளர் மண்சிலை நீர்பட்டு கரைந்து உருவழிவதுபோல மடிந்து சேற்றில் அமர்ந்தார். அவருக்கு அப்பால் அவருடைய மாணவர்களும் அவ்வாறே தளர்ந்து தொய்ந்தனர். யுதிஷ்டிரன் அச்சத்துடன் அவர்களின் உடல்களை பார்த்தார். சியாமளரின் இடைக்குக் கீழே உடலே இருக்கவில்லை என்று தோன்றியது. அவருடைய மாணவர்களும் உடல் சிதைந்திருந்தனர். அவர்கள் விழுந்து விழிநிலைத்து அங்கே நெளிந்தசைந்த உடல்பரப்பில் பதிந்து விழிக்கு அறியாதவர்களாக ஆனார்கள். அது ஒரு கொடுங்கனவு. ஆனால் அவர்கள் எழுந்து வந்தனர். உயிரளித்தனர். அவர்களில் ஏறிவந்தவை பாதாளதெய்வங்களா என்ன? அவர்கள் எழுந்து வந்த அதே இடத்தில் விழிப்பதற்கு முன் இருந்த அதே வடிவில் மீண்டும் சென்றமைந்துவிட்டதாக யுதிஷ்டிரன் எண்ணினார்.

“மூத்தவரே, நீங்கள் பின்னடைந்து ஓய்வெடுங்கள்… மைந்தர் உங்களுடன் இருக்கட்டும்” என்றான் சகதேவன். “இளையோனே, சகுனி வஞ்சம் கொண்டவர்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “ஆம், ஆனால் இப்போது அவர் என்றும் இருந்ததைவிட நாங்கள் வஞ்சம் கொண்டிருக்கிறோம்” என்றான் சகதேவன். இளைய யாதவர் தேரிலேறிக்கொள்ள நகுலன் அதில் ஏறி நின்றான். யுதிஷ்டிரன் “அர்ஜுனன் எங்கே?” என்று கேட்டார். அவன் அப்பால் பின்பக்கம் நோக்கி நிற்பதை கண்டார். நகுலன் “செல்க! செல்க!” என்று ஆணையிட தேர் எழுந்து உடல்களின்மேல் ஏறிவிழுந்து அகன்றது. சுருதகீர்த்தியும் சுருதசேனனும் நகுலனுடன் சென்றனர். பீமனுடன் அவன் மைந்தர்கள் செல்ல பிரதிவிந்தியனும் யௌதேயனும் சாத்யகியை தொடர்ந்தனர்.

அவர்கள் செல்வதை யுதிஷ்டிரன் நோக்கிக்கொண்டிருந்தார். விண்ணில் முகில்கள் எழுந்து திரண்டுகொண்டிருக்க ஒளி அணைந்துகொண்டிருந்தது. வடமேற்கே சென்ற முகில்கள் எடைகொண்டு நிலைகொள்ள தென்கிழக்கிலிருந்து எழுந்தவை அவற்றை முட்டிமுட்டிச் செறிந்தன. கரிய உருவங்கள் மேலும் கருமைகொள்ள காற்றில் நீர்த்துளிகள் பொழியத் தொடங்கின. தெற்கிலிருந்து வீசிய குளிர்காற்று நடுங்கச் செய்தது. வானிலிருந்து ஓங்கி ஊதியதுபோல ஒரு காற்றலை வந்து அறைந்து சுழித்து அகன்றபோது சிலகணங்கள் அங்கே நிறைந்திருந்த அழுகலின் கெடுமணம் அகன்றது. பின் வெம்மையலை என வந்து மூக்கை அறைந்தது.

அர்ஜுனன் குனிந்து களத்தில் விழுந்த வீரன் ஒருவனின் தோலாடையை கிழித்தெடுத்து தான் அணிந்தான். அவன் கவசங்களை ஒவ்வொன்றாக எடுத்து அணிந்தான். அவன் அசைவுகளிலிருந்த துயில்தன்மையை யுதிஷ்டிரன் வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். அவனுள் வேறேதோ கனவு ஓடிக்கொண்டிருக்கிறது என்று தோன்றியது. “இளையோனே” என்றார். அக்கனவை கலைக்கலாமா என்ற ஐயம் எழுந்தது. ஆனால் அக்கனவு நீடிக்கலாகாது என்றும் தோன்றியது. அது உளைச்சேறு போன்ற கனவு. மிகமிக மென்மையானது. பற்றிக்கொண்டால் யானையும் தப்பமுடியாத பேராற்றல் கொண்டது. எது கொல்லுமோ அதை விழையச் செய்வது. எது துன்பமோ அதை சுவை சுவையென காட்டுவது. அவர் கைகளை வீசி “இளையோனே, நோக்குக! இளையோனே” என கூவினார்.

அர்ஜுனன் செய்வதை அதன் பின்னரே அவர் கண்டார். அவன் ஆடைகளை அணிந்து அவற்றின்மேல் கவசங்களை அணிந்தபின் மேலும் கவசங்களை அணிந்தான். அவற்றின் மேல் ஆடைகளை அணிந்தான். கையில் கிடைத்த அனைத்துக் கவசங்களையும் ஆடைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக அணிந்துகொண்டிருந்தான். அவை அனைத்துமே கரிய சேற்றால் ஆனவை போலிருந்தன. அவன் உடல் கருமையாக வீங்கிப்பெருப்பதுபோல் தோன்றியது. “இளையோனே, என்ன செய்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் கூவினார். “இளையோனே, நோக்கு. நீ செய்வதென்ன?” அர்ஜுனன் அவரை நோக்கிவிட்டு அவர் உருவம் உள்ளத்தில் பதியாமல் குனிந்து கீழே கிடந்த ஆடை ஒன்றை எடுத்தான். அது ஆடை அல்ல, ஆடை பதிந்த தடம். ஆனால் அவனால் அது ஆடையல்ல என்று உணர முடியவில்லை. சேற்றை விரல்களால் அள்ளிக்கொண்டே இருந்தான். “இளையோனே! இளையோனே” என யுதிஷ்டிரன் கூவினார்.

அர்ஜுனன் திரும்பி நோக்கியபோது அந்த விழிகளைக் கண்டு அவர் அஞ்சினார். அவை முற்றிலும் அயலானவையாக இருந்தன. மானுடரில் மாண்டோர் எழும்போது மட்டுமே அந்த நோக்கை அவர் கண்டிருக்கிறார். “இளையோனே, என்ன செய்கிறாய்?” அர்ஜுனன் அவரை நோக்கி புன்னகைத்தான். யுதிஷ்டிரன் எழுந்து அவனை அணுகி தோளைப் பற்றி உலுக்கினார். “என்ன செய்கிறாய்? நீ கவசங்கள் அணிந்துவிட்டாய். மீண்டும் மீண்டும் ஏன் அணிகிறாய்?” அர்ஜுனன் தன் உடலை தானே நோக்கினான். “ஆம்” என முனகினான். பின்னர் “ஆம்” என சொல்லிக்கொண்டு தலையை அசைத்தான். “கழற்று அதை” என்றார் யுதிஷ்டிரன். அவன் மீண்டும் தன் உடலை நோக்கிய பின் சலிப்புடன் “வேண்டாம், மூத்தவரே” என்றான்.

யுதிஷ்டிரன் “நீ அடைந்த வெற்றி இந்த ஞாலம் உள்ளளவும் புகழப்படுவது. அந்தக் கண்ணேறு இன்று கழிந்தது என்று கொள்க… நீ தெய்வங்கள் விழைந்ததை அளித்துவிட்டாய். இளைய யாதவன் சொன்னதை நான் சொல்கிறேன்” என்றார். “தெய்வங்களிடம் சொல்க, ஆம் நான் வெறும் மானுடனே! அதை உணர்ந்துவிட்டேன் என்று சொல்க! அதன்பின் நிகழ்ந்ததை முற்றாக மறந்துவிட்டு இங்கு மீள்க! இனி ஒரு வாழ்க்கை எஞ்சியிருக்கிறது. இது ஒரு பிறந்தெழல் என கூட்டுக!” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் பொருள்கொண்டானா என்று எண்ண முடியவில்லை. “இளையோனே, போர் முடிகிறது. இன்னும் ஒரு நாழிகைப் பொழுதுதான். நாம் பேரிழப்புகளை அடைந்தோம். ஆனால் நம் மைந்தரும் உடன்பிறந்தாரும் எஞ்சியிருக்கிறார்கள். அவ்வண்ணமாவது தெய்வங்கள் நம்மிடம் கனிந்தன.”

அர்ஜுனன் தலையசைத்தான். அவன் பேசியபோது அக்குரலே அவர் அறிந்ததாக இருக்கவில்லை. “ஆம், தெய்வங்கள் கனிவுகொள்பவை. இறுதித்துளி ஆணவத்தையும் பெற்றுக்கொண்டு தங்கள் கொடைகளை அளிக்கின்றன.” அவன் உரக்க நகைத்து “நாக்கை பிடுங்கிவிட்டு நற்சுவையை அளிப்பதைப்போல” என்றான். “நீ இக்கசப்பையே வெல்லவேண்டும்…” என்று யுதிஷ்டிரன் முகம்சுளித்தபடி சொன்னார். “இந்தத் தருணத்திலிருந்து உன்னில் முளைவிட்டு வளரப்போவது இது. இதை வெல்க… வேறுவழியே இல்லை, இதை வென்றாகவேண்டும்.” அர்ஜுனன் சூழ நோக்கி “அவர்கள் எங்கே?” என்றான். “சகுனியை வெல்லச் சென்றிருக்கிறார்கள்” என்றார் யுதிஷ்டிரன்.  “அவர் ஒரு நாழிகைக்குள் வீழ்வார் என்றும் அவர் வீழ்ந்தபின் துரியோதனன் களம்நிற்கப்போவதில்லை என்றும் யாதவன் சொல்கிறான்.”

“சகதேவன் சகுனியை கொல்வான், ஐயமில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். மீண்டும் வெற்று நகைப்புடன் “சூதாடிகளில் ஒருவரையேனும் அவன் கொல்லட்டும். அகம் அடங்கி இங்கிருந்து மீள்வான்” என்றான். யுதிஷ்டிரன் விழிகள் தாழ்த்தி தலையை அசைத்தார். அர்ஜுனன் சென்று ஒரு தேர்த்தட்டில் அமர்ந்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக்கொண்டான். “அவர் என் தேரிலிருந்து இறங்கிவிட்டார். அவன் தேரை ஓட்டுகிறார். அவன் இப்போது அர்ஜுனன் ஆவான். அவன் கையில் இருக்கும் வில் காண்டீபமும் ஆகும்” என்றான். “இதை நிகழ்த்தி அவர் அடைவதுதான் என்ன? மூத்தவரே, தெய்வங்கள் ஏன் இத்தனை இரக்கமற்றவையாக இருக்கின்றன?” யுதிஷ்டிரன் அவனை திகைத்த விழிகளால் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். அர்ஜுனன் மீண்டும் உரக்க வெற்றுநகைப்பை எழுப்பினான். முகம் நகைக்கையில் விழிகள் ஒழிந்துகிடந்தன.

“இக்களத்திலிருந்து இறக்காமல் மீள்பவர் தற்கொலை செய்துகொள்வார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “நாம் மண்மேல் நிலைகொள்ளவில்லை. இங்குள்ள ஒவ்வொன்றுக்கும் நாம் அளித்துள்ள பொருள்மேல் நிலைகொண்டிருக்கிறோம். பதினெட்டு நாட்களில் அத்தனை பொருட்களையும் முற்றாக அழித்துவிட்டோம்.” யுதிஷ்டிரன் “ஆம்” என்றார். அர்ஜுனன் “அவர் இந்தக் களத்தை மெழுகிப்பூசிவிட்டார். இனி அவருக்கு உரியதை இதன்மேல் எழுதுவார்” என்றான். யுதிஷ்டிரன் “நாம் இப்பேச்சை விடுவோம்… இன்னும் சற்றுநேரம்…” என்றார். அச்சொல் சென்று ஏதோ நரம்பை தொட்டதுபோல அர்ஜுனன் விதிர்ப்புற்று எழுந்தான். கீழிருந்து கூரிய அம்பொன்றை எடுத்து தன் கழுத்தை நோக்கி கொண்டுசெல்ல யுதிஷ்டிரன் பாய்ந்து அவன் கையை பற்றிக்கொண்டார். “இளையோனே வேண்டாம், இது என் ஆணை! என் ஆணை, இளையோனே!”

அம்பை வீசிவிட்டு அர்ஜுனன் விம்மி அழுதான். தலையை ஓங்கி அறைந்தபடி குவிந்திருந்த பிணங்கள் மீதே அமர்ந்தான். யுதிஷ்டிரன் அவன் உடல்குலுங்க அழுவதை நோக்கிக்கொண்டு நின்றார். பின்னர் ஒரு சொல்லும் உரைக்காமல் பின்னடைந்து தானும் அமர்ந்தார். அவன் அழுது ஓய்ந்து மெல்ல மீள்வதை நோக்கிக்கொண்டிருந்தார். மிக அப்பால் சங்கொலி கேட்டது. அது சாத்யகியின் அறிவிப்பு என அவர் உணர்ந்தார். மெல்லிய துடிப்புடன் எழுந்தமர்ந்தார். மீண்டும் செவிகொண்ட பின் “கிருதவர்மன் வீழ்ந்தான்… கிருதவர்மனை சாத்யகி வீழ்த்திவிட்டான்” என்றார். அர்ஜுனன் அதை செவிகொள்ளவில்லை. யுதிஷ்டிரன் நிலையழிந்து உடல் ததும்பினார். “ஒரு வாழ்த்தொலிகூட இல்லாத சாவு… இங்கே சாவு முற்றாக பொருளழிந்துவிட்டது” என்றார்.

மீண்டும் ஒரு சங்கொலி எழுந்ததும் அவ்வொலி கேட்ட திசைநோக்கி சற்று சென்று இடையில் கைவைத்து நின்று “அது திருஷ்டத்யும்னனின் கொம்பொலி. வீழ்ந்தவர் கிருபர்!” என்றார். “கிருபரை பாஞ்சாலன் வீழ்த்த முடியுமா என்ன? ஆனால் இக்களத்தில் மாணவர்கள் ஆசிரியரை வென்றுகொண்டிருக்கிறார்கள்.” அவர் கைகள் பதறி அசைய “வீழ்த்தப்பட்டுவிட்டார்… ஓர் எளிய அறிவிப்பை அளிக்கக்கூட நம்மிடம் எவருமில்லை” என்றார். “இனி எஞ்சியிருப்பவர் அஸ்வத்தாமன்… அவரை எவர் வெல்லமுடியும்? அவரே களம்விட்டு செல்லவேண்டும்…” சங்கொலி எழுந்தது. “சிகண்டி! சிகண்டி!” என்றார் யுதிஷ்டிரன். “அஸ்வத்தாமனை அவர் வீழ்த்திவிட்டாரா என்ன?” செவிகூர்ந்து “அஸ்வத்தாமனை சிகண்டி புறம்கண்டார். அஸ்வத்தாமன் களம்விட்டு அகன்றார்” என்றார்.

யுதிஷ்டிரன் கொந்தளிப்புடன் திரும்ப வந்து அர்ஜுனனிடம் “இளையோனே, முழு வெற்றி… முழு வெற்றி அணுகி வருகிறது. இனி எஞ்சுபவர் சகுனி… அதன்பின் இக்களத்தில் துரியோதனன் தனித்து நிற்பான்!” என்றார். அர்ஜுனன் வேறெங்கோ இருந்தான். “இளையோனே, அஸ்வத்தாமனே வெல்லப்பட்டார்!” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவனை தன் சொற்கள் சென்றடையவில்லை என உணர்ந்து அவன் ஆணவத்தை சென்று தொடும் சொல்லை எடுத்தார். “உன்னால்கூட வெல்லப்பட இயலாதவர், பாஞ்சாலரின் வில் முன் பணிந்தார்.” மீண்டும் கூர்ந்து நோக்கி “பீஷ்மரை வென்ற புகழுடன் இதுவும் அவருக்கு அமையும்” என்றார். அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கவில்லை. யுதிஷ்டிரன் சோர்வுடன் தலையசைத்து “இங்கே தனித்து நின்றிருக்கிறேன்… முற்றிலும் தனித்து நின்றுள்ளேன்” என்றார்.

அர்ஜுனன் நீள்மூச்சுகளுடன் நிலைமீண்டான். தலையை உலுக்கி தன்னிடமிருந்தே விடுபட்டான். பின்னர் நிமிர்ந்து யுதிஷ்டிரனை நோக்கி “நான் மீண்டும் அவரை பார்க்க விழைகிறேன், மூத்தவரே” என்றான். “அவர் சொன்ன அத்தனை சொற்களும் என்னுள் மறைந்துவிட்டிருக்கின்றன. சொன்ன அந்த முகம் மட்டுமே நினைவில் எஞ்சுகிறது. மீண்டும் அவர் அதை சொல்லவேண்டும் என விழைகிறேன்.” யுதிஷ்டிரன் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்து எழுந்து அகன்றுவிடவேண்டும் என்னும் தவிப்பே அவரிடம் எஞ்சியிருந்தது. அவனை அவர் உள்ளாழத்தில் அஞ்சினார்.

“ஒருவேளை இனி பல்லாயிரம் முறை பல்லாயிரம் பல்லாயிரம் முறை அது சொல்லப்படக்கூடும்” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் அதன் ஒவ்வொரு சொல்லும் இப்போது பொருள்மாறுபாடு கொண்டுவிட்டது. இக்களத்தில் நின்று அதை மீண்டும் ஒவ்வொரு ஒலித்துளியாக நினைவுகூர வேண்டும். ஒவ்வொன்றிலும் உறையும் தெய்வங்களை மீட்டெடுக்க வேண்டும். அவ்வண்ணம் காலமடிப்பு தோறும் அதை கண்டெடுக்க வேண்டும் போலும்.” யுதிஷ்டிரன் “ஆம், இளையோனே. இங்கே இளைய யாதவனின் அழியாச் சொல் நிலைநாட்டப்பட்டுவிட்டது. இந்த யுகத்திற்கான பொருள் நிறைவுகொண்டது” என்றார். இரு கைகளையும் விரித்து “இக்களத்திலிருந்து ஒரு படைவீரன்கூட எஞ்சப்போவதில்லை. இதோ இன்னும் அரைநாழிகைப் பொழுதில் இப்போர் இங்கே முடியும்… அனைத்தும் இங்கேயே நிறைவுறும்” என்றார்.

கீழே கிடந்த உடல்களில் ஒன்று விழிதிறந்து “இன்னும் இல்லை” என்றது. “என்ன?” என்று யுதிஷ்டிரன் அதட்டினார். “இங்கல்ல” என்றது அது. “யார்? யார்?” என்றார் யுதிஷ்டிரன். அந்த உடல் வலியின் நெளிவை காட்டியது. முகம்சுளித்து பற்கள் உதடுகளை கடித்து இறுக்க மெல்ல அதிர்ந்து பின் விடுபட்டது. “யார்? யார் அது?” என யுதிஷ்டிரன் கூவினார். நிமிர்ந்து அர்ஜுனனை நோக்கியபோது அவன் அவரை திகைப்புடன் நோக்கிக்கொண்டிருப்பதை கண்டார். மீண்டும் அந்த முகத்தை நோக்கினார். அது இறந்து நெடுநேரம் ஆயிற்று என்றே தோன்றியது.

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 21

சல்யர் யுதிஷ்டிரனின் வில்லையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். முதலில் அந்த வில் போருக்கு எழும் என்பதையே அவரால் உணரமுடியவில்லை. அதன் அம்புகளின் விசையை மெல்ல மெல்ல அவர் உணர்ந்தபோது ஒரு கணத்தில் அது தன் மூதாதையின் வில் என்பது நினைவிலெழ திகைப்புற்றார். அக்கணம் அவர் கையிலிருந்து வில் தழைந்தது. அவருடைய நெஞ்சிலும் தோளிலும் யுதிஷ்டிரனின் அம்புகள் தைத்தன. அவர் நிலையழிந்து தேர்த்தூணை பற்றிக்கொள்ள அவருடைய பாகன் அவரை மீட்டு அலைகொண்ட படைகளுக்குப் பின்பக்கம் அழைத்துச்சென்றான்.

தான் பின்னடைகிறோம் என்பதை அதன்பின்னரே சல்யர் உணர்ந்தார். “எழுக! முன்னெழுக!” என்று கூவியபடி பாகனை ஓங்கி மிதித்தார். “முன் செல்க! விசைகொள்க!” என்று கூச்சலிட்டார். பாகன் தேரை அதைச் சூழ்ந்து முட்டிமோதிய மானுட உடல்களிலிருந்து மீட்டு உந்தி முன்னால் செலுத்தினான். அதன் புரவிகள் நிலையழிந்தன. ஒரு புரவி உரக்க கனைத்தது. இன்னொரு புரவி தன்மேல் வந்து விழுந்த வெட்டுண்ட உடலை தலையால் உந்தி அப்பாலிட்டது. உடல்களின் மேல் தேர் ஏறி அலைபாய்ந்து கவிழுமோ எனச் சரிந்து பின் மீண்டு முன்னெழுந்தது.

“நில்லுங்கள், கீழ்மக்களே! நில்லுங்கள்!” என்று சல்யர் கூவினார். “இது என் மைந்தனுக்காக. நான் அவையெழுந்து சொல்லாமல் விட்ட ஒற்றைச் சொல்லுக்காக!” அவருடைய அம்புகளின் விசை பலமடங்காக கூடியது. அதன் அடிகள் வந்து தாக்க சகதேவன் தேரில் நின்று தள்ளாடினான். ஓர் அம்பு அவன் கவசத்தை பிளந்தது. இன்னொன்று அவன் தோளில் பாய்ந்தது. நெஞ்சை நாடிவந்த அம்பு தேர் நிலையழிந்தமையால் தோளிலேயே மீண்டும் தாக்க அவன் தேரிலிருந்து தூக்கி வீசப்பட்டான். “இழிமகனே! இழிமகனே!” என வெறுப்புடன் கூவியபடி அவனைக் கொல்ல பிறையம்பு ஒன்றை எடுத்தார் சல்யர்.

அக்கணம் மிக அப்பாலிருந்து சாத்யகி தன் அம்பால் அவர் எடுத்த அம்பை சிதறடித்தான். விலங்குபோலக் கூச்சலிட்டபடி அவன் அவரை நோக்கி தேரில் வந்தான். மறுபக்கம் திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி வந்தான். நகுலன் சகதேவனை அணுகி அவனை தன் தேரில் ஏற்றிக்கொண்டான். சல்யரை வென்றுவிட்டதாக எண்ணி பின்னடைந்த யுதிஷ்டிரன் அவர் விசைகொண்டு மீண்டு வருவதைக் கண்டு திகைப்புடன் நிற்க “விலகுக! விலகுக! இவரை இன்றே வீழ்த்தியாகவேண்டும்” என்று சாத்யகி கூவினான். “இவரை என் கைகளால் கொல்வேன்!” என்று திருஷ்டத்யும்னன் அறைகூவினான். “வருக… வருக… என் அம்புகளின் நஞ்சுக்கு இவ்வுலகே சிறிது” என்று சல்யர் கூவினார்.

அவருடைய அம்புகளின் முனைகள் நீல நிறம் கொண்டிருந்தன. அவை சென்று உரசியபோது தேர்முகடுகள் பொறியெழ பற்றிக்கொண்டன. கவசங்களில் அந்த அம்புகள் பட்டபோது உடலில் மின்னல் பாய்ந்ததுபோல் உணர்ந்தனர் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும். சல்யரின் அம்புகள் அவர்களின் புரவிகளின் உடல்களில் பாய்ந்தபோது அவை அதிர்ந்து உடல்துடித்து வலிப்பெழுந்து சரிந்தன. அந்த வலிப்பசைவு தேரிலும் அங்கிருந்து அவர்களின் உடல்களிலும் பரவியது. திருஷ்டத்யும்னன் கவசங்கள் உடைந்து வில்முறிந்து தேரிலிருந்து சரிந்தான். அவன் உடல் கரிய உடற்குழைவலைகளுக்குள் விழுந்து புதைந்தது.

சாத்யகி சல்யரை எதிர்த்தபடியே பின்னடைந்தான். அவருடைய பெருகும் ஆற்றலை அவனால் மதிப்பிட முடியவில்லை. அவர் அவனுடைய அனைத்து அம்புகளையும் சிதறடித்தார். நோக்காமலேயே அவர் தொடுத்த அம்புகள் தாங்களே விழியும் உள்ளமும் கொண்டவை என அவன் அம்புகளைத் தேடிவந்து வானில் அறைந்து வீழ்த்தின. அவன் மலைத்து வில்தாழ்த்த அவன் வில்லை சல்யர் உடைத்தார். அவன் தேரிலிருந்து இறங்கி பின்னால் பாய்ந்து தப்பி ஓடுவதற்குள் அவர் அவன் கவசங்களை அறைந்தார். அவன் விழுந்து உருண்டதும் அவன் மேல் அவர் அம்புகள் தைத்தன. அவன் உடல் வலிப்பு கொண்டது. பற்கள் வெளித்தெரிய இளித்த அவன் முகம் கரிய சேற்றுக்குள் மறைந்தது.

நகுலன் “மூத்தவரே, பின்னடைக! பின்னடைக!” என்று யுதிஷ்டிரனை நோக்கி கூவினான். “அவர் உங்களை இலக்காக்குகிறார். அவர் உங்களை வீழ்த்திவிடலாகாது!” அந்த எச்சரிக்கையால் அறியாமலேயே யுதிஷ்டிரன் வில்தாழ்த்த அவருடைய பாகன் தேரை மேலும் மேலும் பின்னடையச் செய்தான். அவரை துரத்தியபடி வந்த சல்யரை சுருதகீர்த்தியும் சுருதசேனனும் எதிர்கொண்டார்கள். அவர்களை சல்யர் மிக விரைவாகவே வீழ்த்தினார். சுருதகீர்த்தி முன்னரே புண்பட்டு ஒரு கையும் காலும் தளர்ந்திருந்தான். தேரில் தூண்சாய்ந்து நின்று அவன் போரிட்டான். சல்யரின் அம்பு அவனை அறைந்து வீழ்த்தியது. “மூத்தவரே!” என்று சுருதசேனன் கூவினான். அவனும் சல்யரால் வீழ்த்தப்பட்டான்.

“மைந்தர் வீழ்ந்தனர்! மைந்தர் வீழ்ந்தனர்!” என்று யுதிஷ்டிரன் கண்ணீருடன் கூவினார். “எங்கே அர்ஜுனன்? பீமனை அழையுங்கள். வேறெவரும் அவரை தடுத்து நிறுத்த முடியாது…” சிகண்டி சல்யரை தடுத்தார். சிகண்டியின் அம்புகள் சல்யரை சற்றே நிலைகொள்ளச் செய்தன. ஆனால் அது அவரை மேலும் வெறியேற்றியது. “வீணர்களே! வீணர்களே!” என்று அலறியபடி அவர் மேலும் மேலும் பெரிய அம்புகளை எடுத்து எய்தார். சிகண்டி கைதளர்ந்து நிகழ்வதை நம்பமுடியாதவராக உளம் அசைவிழக்க நின்ற கணத்தில் ஏழு அம்புகள் அவர் கவசங்களை உடைத்து அவரை வீழ்த்தின.

சல்யர் “நில்… யுதிஷ்டிரா, நில்!” என்று கூவியபடி தேரை செலுத்தி விசைமிகுந்தபடியே அணுகினார். “மைந்தர் சென்றபின் நான் அடைவதற்கொன்றுமில்லை, சல்யரே” என்றபடி வில்லை விட்டுவிட்டு கைதூக்கினார் யுதிஷ்டிரன். அவரை நோக்கி சல்யர் குறிவைத்த அம்பை நகுலன் தன் அம்பால் முறித்தான். அவன் தன் உடலில் பாய்ந்த அம்புகளால் மயக்கமுற்று மங்கலடைந்த விழிகளும் எடைகொண்டு தள்ளாடும் உடலுமாக தேரில் நின்றிருந்தான். அவனை சல்யர் தன் எட்டு அம்புகளால் அடித்து வீழ்த்தினார்.

அவர் யுதிஷ்டிரனை அணுகுவதற்குள் சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் துணைக்க பீமன் துரியோதனனை விட்டுவிட்டு வந்து அவரை செறுத்தான். அவர்களின் அம்புகள் சல்யரை சூழ்ந்துகொண்டன. ஆனால் அவர் அனலால் உடல்கொண்டவராக மாறிவிட்டவர் போலிருந்தார். அவர்கள் செலுத்திய அனைத்து அம்புகளும் அவரை புகைப்படலத்தை என கடந்துசென்றதைப்போல் தோன்றியது. கார்த்தவீரியன் என அவருடைய கைகள் பெருகிவிட்டிருந்தன. கண்கள் எழுந்து ஒன்று நூறு ஆயிரமெனப் பெருகி அவரைச் சூழ்ந்து தேனீக்கூட்டம் என பறப்பதுபோலத் தோன்றியது.

சர்வதன் அவருடைய அம்புகளால் துடித்து விழுவதை பீமன் கண்டான். சுதசோமனின் புரவிகள் அனல்பட்டவை என பாய்ந்து குளம்புகளை உதறிக் கனைத்து துள்ளிச்சரிந்தன. அவன் தேரிலிருந்து சரிந்து விழ அவனை வண்டுகள்போல் மொய்த்து முட்டிமுட்டி மண்ணுடன் சேர்த்தன சல்யரின் அம்புகள். பீமன் வெறிக்கூச்சலுடன் கதையை தூக்கிக்கொண்டு தேரிலிருந்து பாய்ந்து மேலெழுந்தபோது அவனை தேடிச்சென்று அறைந்தன. விண்ணிலிருந்து என அவன் தரையில் விழுந்தான். அவன்மேல் மேலும் மேலும் உடல்கள் விழ அந்த உடல்களையும் அம்புகளால் வெறியுடன் தாக்கிக்கொண்டே இருந்தார் சல்யர்.

பீமனின் உடல் முற்றாகச் செயலிழந்து அவன் விழிகள் மட்டுமாக கிடந்தான். அவருடைய தேர் தன்னை அணுகி வருவதைக் கண்டும் அவனால் இமைகளைக்கூட அசைக்க முடியவில்லை. உடலுக்குள் குருதி ஈயம்போல் எடைகொண்டுவிட்டதாகத் தோன்றியது. அவனை அவர் காணவில்லை என்றே தோன்றியது. அவருடைய தேரின் புரவிகள் குளம்பறைந்து அவன்மேல் கடந்துசென்றன. அத்தேரின் சகடங்கள் அவன் நெஞ்சின் மேல் ஏறி அப்பால் அகன்றன. அவன் விழிகளில் நீர் வழிய விண்ணை நோக்கியபடி மண்ணில் எழுந்த நீள்மேடு என கிடந்தான்.

யுதிஷ்டிரன் முற்றிலும் அகம் செயலற்று கால்கள் தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தார். பாகன் அவர் தேரை மேலும் பின்னடையச்செய்ய முயன்றபோது அது சேற்றில் என விழுந்த உடல்களில் சிக்கிக்கொண்டிருப்பதை கண்டான். மெல்லிய முனகலுடன் யுதிஷ்டிரன் நினைவழிந்து தேர்த்தட்டிலேயே படுத்தார். பாகன் தன் சங்கை ஒலிக்க அப்பால் அஸ்வத்தாமனுடன் போரிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனன் திரும்பி நோக்கி திகைத்து நின்றான். அவனுடைய தேர் உடல்குவைகளுக்கும் உடைந்த தேர்களுக்கும் அப்பால் இருந்தது. அந்தத் தடைகளைக் கடந்து அது அணுகமுடியாதென்று தெரிந்தது.

இளைய யாதவர் ஒரு சொல் உரைத்தபடி தேரிலிருந்து எழுந்து முட்டி மோதிக்கொண்டிருந்தவர்களின் தோள்களிலும் சரிந்த தேர்களின் முகடுகளிலும் கால்வைத்துப் பாய்ந்து சல்யரை நோக்கி சென்றார். அதைத் தொடர்ந்து அவ்வண்ணமே காண்டீபத்துடனும் அம்புத்தூளியுடனும் அர்ஜுனனும் வந்தான். இளைய யாதவர் சென்று பீமனின் தேரில் பாகனின் பீடத்தில் அமர அர்ஜுனன் தொடர்ந்து வந்து தேர்த்தட்டில் நின்றான். அவனுடைய நாணொலி கேட்டு சல்யர் திரும்பி நோக்கினார்.

அவர் முகம் அங்கே செத்துக்கிடந்தவர்களின் முகங்களில் இருந்த அதே வலிப்பெனும் இளிப்பை அடைந்தது. “வருக! உன்னைக் கொல்லவே இன்று களம்புகுந்தேன்” என்றார். “இழிமகனே, நீ அறிந்த அத்தனை நெறியின்மையையும் இங்கு காட்டுக! என்னை உன் கீழ்மை வெல்லமுடியுமா என்று பார்.” வெறிகொண்ட நகைப்புடன் “என் மலைக்குடிகளின் நஞ்சனைத்தும் இதோ என் அம்புத்தூளியில் உள்ளது. பனிமலைமுகடிலிருந்து வழிந்திறங்கி வந்த நஞ்சு. ஆண்டுக்கொருமுறை கொடுநோவென ஆயிரம் காலம் என் குடியை வேட்டையாடிய நஞ்சு. நிகர்நிலத்து மக்களுக்காக நாங்கள் கரந்துவைத்தது” என்றார்.

அர்ஜுனன் தன் அகத்தே அனைத்து எண்ணங்களும் தளர்ந்து கிடப்பதை கண்டான். உணர்ச்சிகளால் அறைந்து அறைந்து எழுப்பியபோதும் அவன் உடல் விசைகொள்ளவில்லை. சல்யரின் அம்புகளை அவன் அம்புகள் விண்ணிலேயே தடுத்தன.  அவன் அம்புகள் தொட்டதும் சல்யரின் அம்புகளிலிருந்து நுண்ணிய மின்னல் தெறித்தது. அவை உதிர்ந்த இடத்தில் கிடந்த செத்துறைந்த உடல்கள்கூட ஒரு கணம் உயிர்கொண்டவைபோல் அதிர்ந்து வலிப்படைந்தன. அவர் அம்புகள் வந்து தொட்டபோது அவன் ஊர்ந்த தேர் சுடர்கொண்டு அதிர்ந்தது. தேரிலிருந்து நுண்ணிய அதிர்வு அவன் உடலெங்கும் பாய்ந்தது. அறைபடும் இரும்புக்கம்பியின் மறுஎல்லையை பற்றியிருப்பதுபோல் அவன் உணர்ந்தான்.

சல்யர் “கீழ்மகனே! கீழ்மகனே! கீழ்மகனே!” என கூவிக்கொண்டே அம்புகளை தொடுத்தார். அவை அர்ஜுனனின் நெஞ்சிலும் தோளிலும் கவசங்களை அறைந்து அனல்கொள்ளச் செய்தன. அவன் ஏந்திய காண்டீபத்தின் நாண் அறுந்தது. அவன் ஆவநாழியை நோக்கி நீட்டிய கையைத் தாக்கிய அம்பு கைக்கவசத்தை உடைத்தது. இன்னொரு அம்பு அவன் ஆவநாழியை உடைத்து அம்புகளை பொழியச்செய்தது. தேர்த்தட்டு சுட்டுப்பழுத்துவிட்டதுபோல் அர்ஜுனன் நின்று துள்ளி கால்மாற்றிக்கொண்டிருந்தான்.

இளைய யாதவர் “யுதிஷ்டிரன் எழுக! இப்போர் உங்களுடையது. உங்களால் மட்டுமே இளையோரை மீட்க முடியும்!” என்று கூவினார். யுதிஷ்டிரன் திகைப்புடன் அதைக் கேட்டு எழுந்து நின்றார். “எழுக! எழுக! உங்கள் போர் இது” என இளைய யாதவர் கூவிக்கொண்டிருந்தார். யுதிஷ்டிரன் சல்யரின் அம்புகள் பெற்று தள்ளாடிக்கொண்டிருந்த அர்ஜுனனை நோக்கினார். “இளையோனே” என்று வீறிட்டபடி தயையை எடுத்துக்கொண்டு எழுந்து நின்று பாகனிடம் “செல்க! செல்க!” என்று கூவினார். அவருடைய தேர் அணுகி வர தயையில் இருந்து எழுந்த அம்புகள் சல்யரை சூழ்ந்தன.

அந்த அம்புகளின் விசை சல்யரை தயங்கச்செய்தது. “அரசே, விலகுக! இது உங்கள் போர் அல்ல” என்று அவர் கூவினார். “இது என் உடன்பிறந்தவருக்காக நான் எடுக்கும் போர். அவர்கள் இல்லா உலகில் எனக்கு இடமில்லை” என்று கண்ணீருடன் கூவியபடி யுதிஷ்டிரன் சல்யரை தாக்கினார். சல்யர் அந்த அம்புகளால் விசையழிந்தார். பின்னர் மெல்ல பின்னடைந்தார். இளைய யாதவர் அர்ஜுனன் ஊர்ந்த தேரை பின்னடையச் செய்ய அவன் “முன்செலுத்துக தேரை… யாதவரே, மூத்தவரை அவ்வண்ணம் விட்டுவிட இயலாது” என்றான்.

“இது உன் போர் அல்ல. உன்னால் அவரை எதிர்கொள்ள இயலாது” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “அவரை வெல்வேன்… புவி வெல்லும் காண்டீபம் உண்டு என் கையில்” என்றான். இளைய யாதவர் “கூர்கொள்ளும்போது பொருட்கள் பிறிதொரு வண்ணமும் வடிவமும் கொள்கின்றன. கூர்கொள்ளும் மானுடரில் உள்ளே உறையும் பிறிதொருவர் எழுகிறார். அவரில் எழுபவன் அங்கன்… அதை நீ அறிவாய். ஆகவேதான் அவரைக் கண்டதும் உன் கைகள் தளர்கின்றன” என்றார். அர்ஜுனன் உளம் தளர்ந்து “தெய்வங்களே!” என்றான். “அவரை எதிர்கொண்டால் நீ கொல்லப்படுவாய். அங்கனில் கனிந்ததே அவரில் கசந்துள்ளது” என்றார் இளைய யாதவர்.

சல்யர் யுதிஷ்டிரனின் அம்புகளின் வட்டத்தை விட்டு பின்னால் சென்று மீண்டும் விசைதிரட்டிக்கொண்டு முன்னெழுந்து வந்தார். அவருடைய அம்புகள் வந்தறைய யுதிஷ்டிரன் தயங்கி பின்னடையலானார். “மூத்தவரை தனித்து நிற்கவிடமாட்டேன்” என்று அர்ஜுனன் கூவினான்.  “செல்க! சல்யர் முன் செல்க!” இளைய யாதவர் தேரைச்செலுத்த காண்டீபத்தை மீண்டும் நாண்பூட்டி அம்புகளை பறக்கவிட்டபடி அர்ஜுனன் சல்யரை நோக்கி சென்றான். யுதிஷ்டிரன் கையில் இருந்து தயை துள்ளி திமிறியது. அம்புகள் சீறியெழ அவர் சல்யரை அறைந்து பின்னடையச்செய்தார்.

“அவர் பின்னடையலாகாது…  அவருடைய தேர் பின்னடையும் இடத்திலிருக்கும் தேர்களை வீழ்த்துக! அவர் பின்னடையாது தடுத்து நிறுத்துக!” என இளைய யாதவர் ஆணையிட்டார். அர்ஜுனன் சல்யரின் தேருக்குப் பின்னால் நின்றிருந்த யானைகளை அம்புகளால் அறைந்து வீழ்த்த சல்யரின் தேர் அதில் முட்டி நின்றது. அர்ஜுனன் சல்யரின் மூன்று புரவிகளை கழுத்தறுத்தான். அவர் தேர்ப்பாகனை கொன்று வீழ்த்தினான். யுதிஷ்டிரனின் அம்புகள் சல்யரின் கவசங்களை உடைத்தன.

சல்யர் நிலைகுலைவதுபோலத் தோன்றியது. ஒருகணம்தான். வெடித்தெழுவதற்கு முன் தழையும் அனலின் தோற்றம் அதுவென பின்னர் தெளிந்தது. அவர் விலங்குபோல் ஓசையிட்டபடி எழுந்து யுதிஷ்டிரனை நீளம்புகளால் அறைந்தார். அவர் தேரின் புரவிகள் ஒவ்வொன்றாக கழுத்தறுந்தன. தேர்ப்பாகன் நீளம்பால் நுகத்திலேயே அறைந்து நிறுத்தப்பட்டான். தேர் விசையழிந்து நின்றது. யுதிஷ்டிரன் அசைவற்ற தேரில் நின்று தயங்க சல்யர் அம்பு தொடுத்து தன் தேரின் இறந்த புரவிகளை அறுத்து உதிரச்செய்து எஞ்சிய இரு புரவிகளின் கடிவாளங்களை காலால் பற்றியபடி செலுத்தி அப்பால் வந்துகொண்டிருந்த அர்ஜுனனை நோக்கி சென்றார்.

சல்யரும் அர்ஜுனனும் போர்புரிவதை யுதிஷ்டிரன் வெறுமனே நோக்கி நின்றார். அவருடைய அம்புகள் எட்டாத தொலைவில் அது நிகழ அவர் செய்வதறியாது உடல்தவித்து பின் தளர்ந்து தேர்த்தட்டிலேயே அமர்ந்தார். உளமழிந்து விழிநீர் வழிய தலையை முழங்கால்களில் சேர்த்துக்கொண்டார். சல்யர் அர்ஜுனனை எதிர்கொண்டபோது மீண்டும் பேருருக்கொண்டு எழுந்தார். அவருடைய அம்புகள் அவன் தலைக்கவசத்தை உடைத்தெறிந்தன. நெஞ்சக்கவசமும் தோள்கவசங்களும் சிதைந்தன. அவன் தொடைச்செறிகள் துண்டுகளாக தெறிப்பதை யுதிஷ்டிரன் கண்டார்.

வெறியுடன் காறி உமிழ்ந்து “பேடி! ஆணிலி! கீழ்பிறப்பு” என வசைபாடியபடி சல்யர் அர்ஜுனனை அம்புகளால் சிதறடித்தார். அவன் உடலில் இருந்து கவசங்களும் அணிகளும் துண்டுகளாக தெறித்தன. இடையில் கட்டிய தோல்கச்சையும் தோலால் ஆன சிற்றாடையும் மட்டுமே எஞ்சின. யுதிஷ்டிரன் திகைப்புடன் எழுந்து நின்று  “மாதுலரே!” என்று சல்யரை நோக்கி கூச்சலிட்டார். சல்யர்  “நோக்குக, உன் இளையோனை! புவியறிந்தவர்களில் பெருவீரனை!” என்று கூறி ஓங்கித் துப்பியபடி அவன் இடைக்கச்சையை அம்பால் அறைந்தார். அதன் முடிச்சு அவிழ அவன் அள்ளிப்பற்றினான். அவன் தோளில் பட்ட அம்பின் அதிர்வில் கைகள் துடித்து விலகின. ஆடை நழுவி கீழே சரிய அவன் வெற்றுடலுடன் தேர்த்தட்டில் நின்றான்.

“சிறுமதியாளனே” என்று கூச்சலிட்டபடி தயையை ஏந்திக்கொண்டு யுதிஷ்டிரன் பாய்ந்து தேரிலிருந்து இறங்கி பிணங்களையும் உடைசல்களையும் மிதித்துக்கொண்டு ஓடிவந்தார். அவர் செலுத்திய அம்புகளால் சல்யரின் புரவிகள் விழுந்தன. அவருடைய அத்தனை அம்புகளையும் யுதிஷ்டிரன் சிதறடித்தார். சல்யரின் மார்புக்கவசம் உடைந்தது. கைக்காப்புகளும் தலைக்கவசங்களும் உடைந்தன. அவருடைய வில் உடைந்தது. தேர்மகுடமும் தேர்த்தூண்களும் யுதிஷ்டிரனின் அம்புகள் பட்டு அதிர்ந்தன. உடைந்து பொழிந்தன.

தயை சேற்றில் மூழ்கி கரிய புழுபோல ஆகிவிட்டிருந்தது. அவர் கையில் இருந்து அது நெளிந்து வழுக்கியது. நழுவி இறங்கிச் சென்றுவிட விழைவதுபோல. மண்ணுள் நிறைந்த நாகங்களில் ஒன்றென ஆக விழைவதுபோல. அவர் அதை இறுகப்பற்றி நாணை இழுத்து அம்புகளைப் பூட்டினார். அது செலுத்திய அம்பு விண்ணிலெழுந்து சல்யரின் தேரின்மேல் பறந்த சிம்மக்கொடியை உடைத்து மண்ணில் வீசியது. சல்யரின் நெஞ்சிலணிந்திருந்த அருங்கல் மாலையை அறுத்தெறிந்தது. அவருடைய கைகளின் கங்கணங்களை உடைத்து வீசியது. அவருடைய நெற்றியில் பச்சைகுத்தப்பட்டிருந்த குலக்குறியை சீவிச்சென்றது ஒரு பிறையம்பு.

தயை மேலும் மேலும் விசைகொள்வதை யுதிஷ்டிரன் கண்டார். அது தன் போரை முழுதுற நிகழ்த்தத் தொடங்கிவிட்டிருந்தது. தன் ஆவநாழியில் அத்தனை அம்புகள் இருக்கின்றனவா? எப்போதுமே அவருடைய ஆவநாழி எடையென்றே இருப்புணர்த்தும். அதை தொட்டுத் துழாவுகையில் அங்கிருக்கும் அம்புகள் அறியாதவை என துணுக்குறச் செய்யும். ஆனால் எடுக்க எடுக்க அம்புகள் வந்துகொண்டே இருந்தன அன்று. ஏதோ காணாத் தெய்வம் பின்னால் நின்று ஆவநாழியை நிறைத்துக்கொண்டே இருப்பதுபோல.

சல்யர் தேரிலிருந்து பாய்ந்திறங்கி கரிய சேற்றில் விழுந்தெழுந்து விரைய முயல துரத்திச்சென்று அவரை அம்புகளால் தாக்கினார் யுதிஷ்டிரன். சல்யரின் தோளிலும் விலாவிலும் யுதிஷ்டிரனின் அம்புகள் பாய்ந்தன. அவர் தரையில் கிடந்த நீண்ட ஈட்டி ஒன்றை எடுத்தபடி திரும்பி யுதிஷ்டிரனை நோக்கி வீசினார். ஈட்டி வருவதைக் கண்டு பின்னடைந்த யுதிஷ்டிரன் பிணங்களில் கால்தடுமாறி பின்னடைந்து அதிலிருந்து தப்பினார். தரையிலிருந்து பிறிதொரு வேலை எடுத்து சல்யர் வீசினார். அதை ஒழிந்த யுதிஷ்டிரன் நிலையழிந்து சேற்றில் விழுந்தார். புரண்டு எழுவதற்குள் கருங்குழம்பால் மூழ்கடிக்கப்பட்டார். விழிகளை மறைத்த கருஞ்சேற்றை வழித்தபடி பற்கள் தெரிய இளித்தபடி இன்னொரு ஈட்டியுடன் தாக்கவந்த சல்யரை நோக்கினார்.

சல்யர் அவர் அருகே வந்து ஓங்கி ஈட்டியை வீச அது குறி தவறி நிலத்தில் பாய்ந்தது. விழுந்த உடலில் இருந்து பிறிதொரு ஈட்டியை உருவி எடுத்து மீண்டும் குறி பார்த்து யுதிஷ்டிரன் மேல் எய்தார். சேற்றில் சறுக்கி விழுந்து புரண்டெழுவதற்குள் கருமையில் மூழ்கி அங்கிருந்த பல நூறு புழு உருவங்களில் ஒன்றாக மாறினார் யுதிஷ்டிரன். அவருடைய கையிலிருந்து தயை நழுவி அப்பால் விழுந்து கிடந்தது. “நீ என் மூதாதை! உன்னையும் கொல்லவேண்டும் என்பது ஊழென்றால் அதுவே ஆகுக!” என்று கூவியபடி சல்யர் ஈட்டியை வீசியபடி அணுகி வந்தார்.

யுதிஷ்டிரன் கைகளை அகலவிரித்து துழாவியபடி எழ முயல அவர் இடதுகையில் தயை தட்டுப்பட்டது. அதை எடுத்தபோது நாண் அறுந்து நீண்ட மூங்கில் கழியென்றே தோன்றியது. பிணங்களில் மிதித்துத் தள்ளாடியபடி அணுகிய சல்யரை நோக்கியபடி எம்பி எம்பி பின்னடைந்தவண்ணம் யுதிஷ்டிரன் தயங்கினார். சல்யரின் ஈட்டி அவர் அருகே விம்மியபடி சுழன்று சென்றது. தயையின் இருமுனைகளும் ஈட்டிக்கூர்போல உலோகக்கூம்பு கொண்டவை என்பதை அவர் கண்டார். “இளையோனே!” என கூவியபடி திரும்பி நோக்கி மறுகணத்தில் வெறிகொண்டு பற்களைக் கடித்து முழு விசையுடன் சல்யரை நோக்கி எறிந்தார்.

கால்கள் தள்ளாடி ஒருகணம் சல்யர் செயலிழந்து நிற்க யுதிஷ்டிரன் வீசிய வில்லின் ஈட்டிமுனை அவர் நெஞ்சில் பாய்ந்து மறு புறம் வந்தது. மல்லாந்து விழுந்து நெஞ்சில் கோத்த ஈட்டியுடன் ஒருக்களித்து தயையை வலக்கையால் பற்றியபடி உடலதிர்ந்து சல்யர் உயிர் துறந்தார். யுதிஷ்டிரன் கையூன்றி எழுந்து திகைப்புடன் சல்யரை நோக்கிக்கொண்டு நின்றார். பிரதிவிந்தியன் அப்பாலிருந்து “சல்யர் விழுந்தார்! கௌரவப் படைத்தலைமை வீழ்ந்தது!” என்று கூவினான். நகுலன் “கௌரவப் படைத்தலைமை வீழ்ந்தது! சல்யர் வீழ்ந்தார்!” என்று உரக்க கூவினான். ஆனால் அங்கு சூழ்ந்திருந்த படைகள் அவர்களை அறியவில்லை. அவர்கள் பிறிதொரு உலகில் பிறிதொரு காலத்தில் போர்புரிந்துகொண்டிருந்தனர்.

இரு படைகளிலும் அங்குமிங்குமாக ஓரிருவரே எஞ்சியிருப்பது தெரிந்தது. அவர்கள் நிகழ்வன எதையும் அறியவில்லை. அவர்களில் எவர் எந்தத் தரப்பு என்றும் தெரியவில்லை. அவர்கள் தாங்களே எந்தத் தரப்பு என்பதையும் மறந்துவிட்டிருந்தார்கள். பிரதிவிந்தியன் தன் தேரின்மீது ஏறி கொடியை அசைத்து “சல்யர் விழுந்தார்! கௌரவப் படைத்தலைவர் வீழ்ந்தார்!” என்று கூவி அறிவித்தான். கௌரவப் படையிலிருந்து எவரும் அதை அறியவில்லை. அங்கே போரிட்டுக்கொண்டிருந்த துரியோதனன், சகுனி, கிருதவர்மனும்கூட அதை கேட்டதாகத் தெரியவில்லை. யுதிஷ்டிரன் திரும்பி நோக்கியபோது தேர்த்தட்டில் விழிகளிலிருந்து நீர்வழிய ஆடையில்லா உடலுடன் வெற்றுக்கைகளுடன் நின்றிருந்த அர்ஜுனனை பார்த்தார்.

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 20

யுதிஷ்டிரன் அந்தப் போரை தனக்கும் தன் வில்லுக்கும் இடையேயான முரண்பாடாகவே உணர்ந்தார். தயை மிக மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருந்தது. அதன் நாண் இறுகக்கட்டிய யாழின் தந்திபோல் விரலுக்கு வாள்முனையென்றே தன்னை காட்டியது. அதில் ஏற்றப்பட்டதும் அம்புகள் அதிலிருந்தே ஆணையை பெற்றுக்கொண்டன. அதில் உறைந்த விசையை தங்களுக்குள் நிறைத்துக்கொண்டன. இலக்கை மட்டுமே அவர் தெரிவுசெய்ய வேண்டியிருந்தது. அம்புகள் ஒற்றைச்சொல்லை உரைத்தபடி வானிலெழுந்தன.

அது போர்க்களத்திற்கு பயனற்றது என அவர் உணர்ந்திருந்தார். அஸ்தினபுரிக்கு அவர் அந்த வில்லுடன் வந்தபோது அதன் கதையை அறிந்து அதை நோக்க படைவீரர்களும் குடிகளும் கோட்டைமுகப்புக்கே திரளாக வந்தனர். அவர் தேரில் இருந்து அவ்வில்லுடன் இறங்கியதும் அஸ்தினபுரியின் குடிகள் “அறச்செல்வர் வாழ்க! அஸ்தினபுரியைக் காக்கும் நிகரில்லா வில் வெல்க!” என வாழ்த்தொலி எழுப்பினர். அந்நகரை தேவர்களும் வெல்லமுடியாததாக ஆக்கும் அந்த வில்லைப்பற்றி அதற்குள் சூதர்கள் கவிதைகள் பாடிவிட்டிருந்தனர். அவர் அந்த வில்லுடன் திறந்த தேரில் நின்றவராக நகர்வலம் வந்தார்.

துரியோதனனின் அரசவையில் துரோணர் அந்த வில்லை முதலில் கையில் வாங்கினார். அவர் முகத்தில் ஒரு மெல்லிய கோணல்புன்னகை இருந்ததோ என யுதிஷ்டிரன் எண்ணினான். “எங்கே அந்த வில்? வில்லுக்கு தயை என்று பெயரா? அறிந்ததே இல்லை” என கைநீட்டினார். அதை அவர் கையில் அளிக்க யுதிஷ்டிரன் தயங்கினான். “கைபட்டு வில் கரைவதில்லை… அதற்கென்று கற்பும் இல்லை” என்று சொன்ன துரோணர் அதை வாங்கி திருப்பித்திருப்பி நோக்கி “எளிமையான மூங்கில் வில். அக்காலத்தில் இத்தகைய விற்களை சற்று முயன்று தேடி உரிய மூங்கில்களை கண்டடைந்து அமைத்தார்கள். நாமறியாத பதப்படுத்தும் முறைமையும் அன்று இருந்துள்ளது” என்றார்.

அதன் நாணை இருமுறை சுண்டி ஒலியெழுப்பி “ஆனால் இது இன்றைய அம்புகளை செலுத்துமா என்று ஐயுறுகிறேன்” என்றார். “இன்று நாம் உலோகம் மிகுதியாக உள்ள அம்புகளை பயன்படுத்துகிறோம். அவற்றின் நீளமும் மிகுதி. இது கையளவே உள்ள மூங்கில் அம்புகளை மட்டுமே செலுத்துமென எண்ணுகிறேன்.” சகுனி அதை வாங்கிப் பார்த்துவிட்டு “சில குறிப்பிட்ட பணிகளுக்கு இது பயன்படக்கூடும்” என்றார். ஒவ்வொருவராக அதை வாங்கிப் பார்த்தனர். கிருபர் “பூசைப்பொருள்போல் தோன்றுகிறது, படைக்கலமா என ஐயம் எழுகிறது” என்றார். பீஷ்மர் மட்டும் அதை கையால் தொடத் தயங்கி வெறுமனே விழிகளால் நோக்கினார்.

திருதராஷ்டிரர் “மைந்தா, அதைக்கொண்டு அம்பு தொடுத்துக் காட்டு” என்றார். யுதிஷ்டிரன் அதை அங்கு வருவதற்குள் நன்கு பழகியிருந்தான். மத்ரநாட்டின் குறுங்காட்டில் அவன் மர உச்சியிலிருந்த இலைகளைக்கூட அம்புகளால் அடித்து வீழ்த்தியிருந்தான். ஆகவே தன்னம்பிக்கையுடன் அதை எடுத்துக் குலைத்து அம்பு தொடுத்தான். “அந்தத் திரைமுடிச்சை இலக்காக்குக!” என்றார் திருதராஷ்டிரர். யுதிஷ்டிரன் அம்புதொடுக்க அது பக்கவாட்டில் துள்ளி அகன்றது. அவையில் ஒரு மெல்லிய ஓசை மட்டும் எழுந்தது. “தாழ்வில்லை, மறுமுறை முயல்க!” என்றார் திருதராஷ்டிரர். ஏழுமுறை யுதிஷ்டிரன் அம்புகளை தொடுத்தான். எவையுமே இலக்கடையவில்லை. திருதராஷ்டிரர் “இன்று பயணக்களைப்பில் இருக்கிறாய் போலும்” என்றார்.

ஆனால் அவை நகைக்கத் தொடங்கியிருந்தது. துரோணர் தாடியை கைகளால் நீவியபடி உரக்கவே சிரித்துக்கொண்டிருந்தார். பீஷ்மர் மட்டும் சினம் கொண்டவர்போல விழிகள் உறுத்து நோக்கிக்கொண்டிருந்தார். அர்ஜுனன் சீற்றத்துடன் அவையை நோக்கி “அது அவைகளுக்குரிய களிப்பாவை அல்ல. அதன் ஆற்றல் என்ன என்று நான் அறிவேன்” என்றான். துரோணர் “ஆம், அது தவச்சாலைகளுக்குரியது. அங்கே முனிவர்கள் பிற எவரும் அறியாமல் அதில் அம்பு பழகுவார்கள். அந்த அம்புகள் பருவடிவு கொண்ட எந்த இலக்கையும் தொடுவதில்லை” என்றார். மேலும் நகைத்தபடி “உண்மையில் அவை எங்கு தொடுகின்றனவோ அவையே அவற்றின் இலக்குகள்” என்றார்.

யுதிஷ்டிரன் அந்நகைப்புகளை நோக்கியபடி விழிகளில் நீருடன் நின்றான். நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. ஒருகணத்தில் தன்னை மீறி எழுந்த விசையுடன் அதை நிலத்தில் வீசிவிட்டு அவையை விட்டு வெளியே செல்ல திரும்பினான். துரியோதனன் முன்னால் வந்து தயையை கீழிருந்து எடுத்து அக்கணமே அம்பு தொடுத்து மேலிருந்த திரைமுடிச்சை அவிழ்த்தான். அச்சரடு உதிர்வதற்குள் அதை மேலும் அடித்துத் தூக்கி சேர்த்து மரச்சட்டத்தில் அறைந்து திரை சரியாமல் காத்தான். ஏழு அம்புகளால் திரைகளை அவிழ்த்து மீண்டும் அறைந்து நிறுத்தினான். அவை அமைதிகொண்டது.

“போர்க்களத்திற்கும் இது உதவும், ஆசிரியரே” என்று துரியோதனன் துரோணரிடம் சொன்னான். “இத்தகைய ஆற்றல்கொண்ட வில்லை நான் இதுவரை தொட்டதே இல்லை. ஒவ்வொன்றையும் அது முன்னரே அறிந்திருப்பதாகத் தோன்றுகிறது” என்றான். திருதராஷ்டிரர் “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன்” என்றபடி கைநீட்டினார். துரியோதனன் அதை அவரிடம் அளிக்க அவர் அதை தன் மடியில் யாழ் என வைத்து அதன் நாணில் கையோட்டினார். பின்னர் மெல்ல சுண்டி மீட்டினார். யாழ் எனவே அது இசைக்கத் தொடங்கியது. அதிலிருந்து காயத்ரியின் சந்தம் ஒலிக்கத் தொடங்கியது. ஆழ்ந்த கார்வைகொண்ட பேரியாழிலிருந்து எழுவதுபோல்.

விழிகள் உருள பற்கள் ஒளிர புன்னகைத்தபடி “துரோணரே, உயர்ந்த வில் நல்லிசை எழுப்புவது என தனுர்வேதம் உரைக்கிறது. தெய்வத்தன்மை கொண்ட வில்லில் வேதச் சந்தம் எழும் என்கிறது. உங்கள் வில்லில் வேதம் ஒலித்ததுண்டா?” என்றார். துரோணர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “இது காயத்ரி” என்றார் திருதராஷ்டிரர். பீஷ்மர் பெருமூச்சுடன் எழுந்து அவையிலிருந்து வெளியே நடந்தார். திகைப்புடன் அமர்ந்திருந்த அவை அவரை திரும்பி நோக்கியது. அதை செவிகூர்ந்தபின் திரும்பி யுதிஷ்டிரனை நோக்கிய திருதராஷ்டிரர் “மைந்தா, இது உனக்குரிய வில். ஆசிரியர் கூற்றே உண்மை, இது தெய்வத்தன்மை கொண்டது. ஆகவே வழிபாட்டுக்குரியது. வேள்விக்கரண்டியை அடுமனைக்கு கொண்டுசெல்லலாகாது. எங்கு போரே வழிபாடென ஆகிறதோ அங்கே மட்டுமே இது நாணொலி எழுப்பும்போலும்” என்றார்.

அவர் அதை அளிக்க யுதிஷ்டிரன் பணிந்து பெற்றுக்கொண்டான். அதை தன் தோளில் இட்டபடி அவையை வணங்கினான். அதைப்பற்றிய பெருமிதம் அவனில் நிறைந்திருந்தது. ஆனால் அன்று அவனை தனியறையில் சந்தித்த குந்தி “அதை ஏன் தோளில் இட்டுத் திரிகிறாய்? கொண்டுசென்று கருவூலத்தில் வை” என்றாள். அவன் “அன்னையே…” என தொடங்க “அது பயனற்றது. அவையில் உன்னை சிறுமைசெய்யவேண்டாம் என உன் பெரிய தந்தையும் அவர் மைந்தரும் நடத்திய நாடகம் அது. அதனால் உனக்கு உண்மையான பெருமை ஏதும் இல்லை” என்று குந்தி சொன்னாள். “களத்திலோ போட்டியிலோ வெல்லமுடியாத வில்லால் என்ன பயன்? அது ஒரு வெறும் அணிகலன். தேவையானபோது எடுக்கலாம். நீ அரியணை அமர்கையில் குடிகளை நம்பவைக்க பயன்படும்” என்றாள்.

அவன் உளம்சோர்ந்து அதை கீழே வைத்தான். அது கருவூலத்திற்கே சென்றது. அதன்பின் அந்த வில்லை அவன் பார்த்தது குறைவான தருணங்களிலேயே. அதை சென்று எடுத்து பயில அவன் விரும்பினான். ஆனால் அது கேலிக்குரியதாகக்கூடும் என்றும் அஞ்சினான். ஆண்டுக்கொருமுறை மணிமுடிநாளில் உடன்பிறந்தாருடன் கொலுவமர்கையில் மட்டுமே அதை வெளியே எடுத்தார்கள். அதை மலரிட்டு வணங்கி குங்குமம் தொட்டு அவனிடம் அளித்தனர். அதை தோளிலிட்டபடி அவன் அரியணை அருகே நின்றான். குடிகள் அதை பார்க்கையில் அவர்களிடமிருப்பது என்ன உணர்வு என அவனால் உய்த்துணர இயலவில்லை. பெண்கள் அதை மெய்யாகவே அஞ்சி வணங்கினர். படைவில்லவர்களின் விழிகளில் ஏளனம் தெரிந்தது.

யுதிஷ்டிரன் எப்போதும் தன் வில் என அதையே எண்ணிக்கொண்டிருந்தான். பிற மூங்கில்விற்களை ஏந்தும்போதெல்லாம் தன் கையில் தயை இருப்பதாகவே எண்ணிக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு உளம்கூர்ந்தால் மெல்லமெல்ல அந்த மூங்கில் வில் தயை என உருமாறுவதை அவனால் உணரமுடிந்தது. அது தன் கையில் எழுந்ததுமே உடல் முழுக்க அதை உணர்வான். தன்னை அது ஆள்வதற்கு ஒப்புக்கொடுப்பான். அது எப்போதும் அவனுடைய தனிமையிலேயே முழுதுருக்கொண்டது. அதிலிருந்து அம்புகள் தொடுத்து அவனால் மரக்கிளையில் கூண்டில் இருக்கும் குருவிக்குஞ்சு தவறி விழுந்து மண்ணை அடைவதற்குள் தாங்கிப்பிடித்து மெல்ல இறக்க முடிந்தது. அதன் மெல்லிறகு நலுங்காமல் மேலே கொண்டு சென்று வைக்க முடிந்தது. மலரை உதிர்த்து அது நிலம் தொடுவதற்குள் இன்னொரு அம்பால் தொட்டு எடுக்க முடிந்தது.

அதை அவன் எவரிடமும் சொன்னதில்லை. சொல்வது கேலிக்குரியதாகும் என அவன் நன்கறிந்திருந்தான். ஆனால் அர்ஜுனன் அதை அறிந்திருந்தான். ஒருமுறை அம்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது “வேள்விப்புகையை பிளக்க அம்புகளால் முடியும். எந்த அம்பாலாவது பிரிந்த புகைச்சுருள்களை சேர்த்து இணைக்க முடியுமா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “ஆம், முடியும். மூத்தவரின் வில்லில் இருந்து எழும் அம்புகளுக்கு அத்திறன் இருக்கக்கூடும்” என்று அர்ஜுனன் சொன்னான். பிற மாணவர்களின் விழிகளில் ஏளனம் எழுந்தது. அஸ்வத்தாமன் அர்ஜுனனின் விழிகளில் இருந்த உறுதியை கண்டபின் யுதிஷ்டிரனை திரும்பி நோக்கினான்.

குருக்ஷேத்ரத்திற்கு போருக்கு எழும்போது அந்த வில்லை அவர் எடுத்துக்கொள்ளவேண்டும் என விழைந்தார். அவர்கள் அஸ்தினபுரியில் இருந்து சென்று இந்திரப்பிரஸ்தம் அமைத்தபோது அவர் அதை அங்கே கொண்டுசென்று மூதாதையருக்கான அறையில் வழிபாட்டுக்கு வைத்திருந்தார். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து அதை எடுத்துவரவேண்டும் என அவர் சொன்னபோது அர்ஜுனன் “அதை அவர்கள் ஒப்பமாட்டார்கள். அதன் ஆற்றல் என்ன என்று துரியோதனனுக்குத் தெரியும்” என்றான். யுதிஷ்டிரன் “விதுரரிடம் கோருவோம்” என்றார். பீமன் “அவர்கள் மறுப்பார்கள். காவலும் போடுவார்கள். இன்று அது காவலின்றிக் கிடக்கிறது. உகந்த வழி ஒற்றர்கள் வழியாக திருடிக்கொண்டு வருவதே” என்றான்.  “என் உடைமை அது. நானே அதை திருடுவதா?” என்று சீற்றத்துடன் யுதிஷ்டிரன் சொன்னார்.

“அதை கேட்போம்… வேறு வழியில்லை” என்றான் அர்ஜுனன். சகதேவன் “அது இப்போது தேவைப்படாதென்று படுகிறது. போருக்குப் பின் மூத்தவர் அரசமரும்போது தேவைப்படும். அப்போது அது நம்மிடமே இருக்கும்” என்றான். இளைய யாதவர் “அது போரில் தேவையாகும்” என்றார். அர்ஜுனன் அவரை சில கணங்கள் நோக்கியபின் “நன்று, தூது செல்லலாம்” என்றான். யுயுத்ஸுவையே தூதனுப்பலாம் என முடிவுசெய்தார்கள். “அந்த வில்லுக்கு யுதிஷ்டிரருக்கே உரிமை உள்ளது என்று அஸ்தினபுரியின் அரசரிடம் சொல். அவரை வென்றபின் அஸ்தினபுரியின் அரண்மனையில் அந்த வில்லுடன் அவர் அமர்வார் என்று அவையில் கூறுக!” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் திகைப்புடன் இளைய யாதவரை நோக்கினான், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

யுயுத்ஸு தூதுப்படையுடன் அஸ்தினபுரிக்கு கிளம்பினான். “அவர் ஒருபோதும் வில்லை அளிக்கமாட்டார்” என்று சகதேவன் சொன்னான். அர்ஜுனனும்  “அவ்வண்ணமே நானும் எண்ணுகிறேன்” என்றான். யுதிஷ்டிரன்  “நாம் கோரவேண்டும். அவன் அளிக்காவிட்டால் அது அவனுக்கே தீது. அந்த தெய்வவில்லின் தீச்சொல் அவன்மேல் எழும்” என்றார். பீமன் மட்டும்  “அவன் அளிக்கக்கூடும்” என்று சொன்னான். “ஏன்?” என்று சகதேவன் கேட்டான். பீமன் “தெரியவில்லை. நான் அவன் என்றால் அளித்துவிடுவேன்” என்றான். யுதிஷ்டிரன் புன்னகைத்து “நீ அவனேதான், மந்தா” என்றார். “அதை அவர் அஞ்சுவார்” என்றான் நகுலன். பீமன் “அந்த வில்லை அவன் அஞ்சுவான் என நான் நினைக்கவில்லை” என்றான். “ஏனென்றால் உள்ளூர அவன் அதை நன்கறிந்திருப்பான். அறிந்தவற்றை மானுடர் அஞ்சுவதில்லை.”

யுயுத்ஸு திரும்ப வந்தபோது தயை அவனுடன் இருந்தது.  “அவையில் என்ன சொன்னாய்?” என்று அர்ஜுனன் கேட்டான். “மூத்த பாண்டவரின் வில்லாகிய தயை இந்திரப்பிரஸ்தத்தில் உள்ளது, அதை அவர் கோருகிறார். போரில் அவருடைய படைக்கலம் அது என்று சொன்னேன்” என்றான் யுயுத்ஸு. “இளைய யாதவர் என்னிடம் உரைத்த சொற்களை அவையில் கூறியபோது அவை சீற்றம்கொள்வதைப்போல் உணர்ந்தேன். பலர் முரலலோசை எழுப்பினர். பீஷ்மர் கைகளை கோத்துக்கொண்டு உடலைத் திருப்பி அமர்ந்திருந்தார்.” யுதிஷ்டிரன் “அங்கே நிகழ்ந்ததை முழுமையாகச் சொல்க!” என்றார்.

யுயுத்ஸு சொன்னான். சகுனி என் கூற்றை முதன்மையாக எதிர்த்தார். “இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரியின் உடைமை. நாற்களப் போரில் தோற்று பாண்டவர் நாடிழந்தபோதே அனைத்து உடைமைகளும் அஸ்தினபுரியின் அரசருக்கு உரிமையானவை ஆகிவிட்டன. ஆகவே அதிலுள்ள எப்பொருளையும் யுதிஷ்டிரன் எவ்வகையிலும் உரிமை கோரமுடியாது” என்று சொன்னார். “அந்த வில் அவருக்கு தெய்வ உரிமையாக வந்தது. மானுடமாக வந்த உரிமைகளையே மானுடர் மறுக்க முடியும்” என்று நான் சொன்னேன்.

சகுனி ஏளனமாக நகைத்தார். “மருகனே, அது தெய்வ உரிமை என்பது ஒரு பொய். அஸ்தினபுரியின் அரசனாக ஆவதற்குரிய அறத்தகுதி யுதிஷ்டிரனுக்கே உண்டு என்பதற்காக மத்ரர் சமைத்தது. குந்தியால் நிலைநிறுத்தப்பட்டது. இப்போரே அவர்கள் சமைத்த அந்தப் பொய்க்குவைக்கு எதிராகத்தான் நிகழ்கிறது” என்று அவர் சொன்னார்.  “அது மெய்யாகவே தெய்வ உரிமை என்றால் அதை மானுடர் தடுக்கவும் முடியாது என்று அவரிடம் சொல்க!”

அவையமர்ந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார் துரியோதனன். அவர் என்ன எண்ணுகிறார் என என்னால் உய்த்துணர இயலவில்லை. அவர் விழிகள் மங்கலடைந்தவை போலிருந்தன. அறுதி முடிவுக்காக அனைவரும் அவரை நோக்கினர். துரியோதனன் “அதை அவருக்கே அளிப்போம், மாதுலரே. அவர் உடைமை அது” என்றபின் என்னிடம் “கொடுக்கச் சொல்கிறேன், கொண்டுசெல்க!” என்றார். சகுனி திகைப்புடன் “அரசே” என்றார். “இங்கிருக்கையில் அது பொருளற்றது. வெறும் மூங்கில்” என்றார் அரசர். “அவர் கையில் அது எவ்வகையிலேனும் பொருள்கொள்ளும் என்றால் அதை மறுப்பதே நமக்கு நல்லது” என்று சகுனி சொன்னார். “வீணாக இளைய யாதவர் இவனை இத்தனை தொலைவு அனுப்பியிருக்கமாட்டார் என்று உணர்க!”

“நான் அதை எப்போதும் ஆர்வத்துடன் நோக்கி வந்திருக்கிறேன்” என்று அரசர் சொன்னார்.  “பலமுறை கருவூலத்திலிருந்து அதை எடுத்துப் பயின்றிருக்கிறேன். முன்பு அது என் கையில் பழகிய பறவை என அமர்ந்திருந்தது. பின்னர் இந்திரப்பிரஸ்தத்தின் கருவூலத்திலிருந்து கொண்டுவரப்பட்டபோது என் ஆவல் மேலும் கூடியது. என் கையை அது மறுக்கும் என எண்ணினேன்.” அவருடைய புன்னகையை அவை வியப்புடன் நோக்கியது. “அது இப்போதும் என் கைக்கு உகந்ததாகவே உள்ளது. என் இலக்குகள் பிழைப்பதில்லை. ஆனால் அது எனக்கு உதவாது என தெளிந்தேன். ஆகவே அதை நான் கையில் எடுக்கவில்லை” என்று அவர் சொன்னார்.

சகுனி “ஆனால் அதை அவருக்கு அளிப்பதென்பது…” எனத் தொடங்க “பார்ப்போம், அது செய்யப்போவது என்ன என்று. அது அவர் கையில் எப்படி உருமாறுகிறது என்று” என்று அரசர் புன்னகைத்தார். “அவருக்கு அது தன்னைக் கண்டடைதலாக அமையும். எனக்கும் அவ்வண்ணமே ஒரு கண்டடைதலை அளிக்கும்.” சகுனி “அரசே, ஓர் அரசர் இன்னொருவருக்கு படைக்கலத்தை அளிப்பதென்பது வெற்றியை அளிப்பதாகவே பொருள்படும். அதிலும் வில்லையும் உடைவாளையும் அளிப்பது முடியளிப்பதற்கு நிகர்” என்றார். “ஆம், அறிவேன். முடி அவ்வில்லைத் தொடர்ந்து செல்கிறதா என்று பார்க்கிறேன்” என்று அரசர் சொன்னார். சகுனி பின்னர் ஒன்றும் சொல்லவில்லை.

இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து அந்த வில் ஏற்கெனவே அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அது அங்கிருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. போருக்குக் கிளம்புவதற்கு முன் கொற்றவை அன்னைக்கு பலிபூசனை செய்கையில் அந்த வில்லும் அன்னை முன் படைக்கப்படவேண்டும் என அன்னை காந்தாரி ஆணையிட்டதாக சொன்னார்கள். அந்த வில் பூசனைக்கு வைக்கப்பட்ட பின்னர் அரசரின் தெய்வமாகிய கலிதேவனின் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே வைக்கப்பட்டு பூசனை செய்யப்பட்டது.

அதை அவைக்குக் கொண்டுவர அரசர் ஆணையிட்டபோது அவையில் எழுந்த உணர்வுகளையே நான் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தேன். பலர் அந்த வில்லை முற்றாக மறந்துவிட்டிருந்தார்கள் என்பதை அது ஏவலரால் செம்பட்டில் பொதியப்பட்டு அவைக்குக் கொண்டுவரப்பட்டபோது எழுந்த ஒலிகளிலிருந்து உணர்ந்தேன். அது அவைக்கு வந்து அறுபதாண்டுகள் கடந்துவிட்டிருந்தன. சொல்லிச் சொல்லி பெருக்கியமையால் அது பேருருக் கொண்டுவிட்டிருந்தது. பேராலயங்களின் கருவறைத்தெய்வங்கள் நமக்கு மிகச் சிறிதாகவே தோன்றுகின்றன. அதன் ஆற்றல்களும் மிகைப்படுத்தப்பட்டிருந்தன. பட்டை விலக்கியதும் மிக எளிய மூங்கில் வில் தோன்றியபோது அவையில் நகைப்பொலியே எழுந்தது.

அது அத்தனை சிறியதாக இருக்கும் என அவர்கள் எண்ணியிருக்கவில்லை. துரோணர் வெளிப்படையாகவே “இதுதானா? மிகச் சிறிதாக இருக்கிறதே?” என்றார். அரசர் சிரித்தபடி “விற்களில் இது முனிவர். முனிவர் சிற்றுடலர் ஆவதே நெறி” என்றார். அவையினர் அதற்கு சிரித்தபோது பீஷ்மர் மட்டும் கசப்புடன் முகம்சுளித்தார். அந்த வில் அத்தனை எளியதாக இருப்பதைக் கண்டபோது அவையினர் நிறைவடைந்தனர். அதை அரசர் என்னிடம் அளிக்க முடிவெடுத்ததை ஒட்டி அவர்களில் எழுந்த அச்சம் மறைந்தது.

ஆனால் அந்த வில்லைக் கண்டதுமே நான் மெய்ப்படைந்தேன். அரசே, நான் அதை முன்னர் கண்டதே இல்லை. எப்போதும் கொலுபீடத்தில் மலர்களால் மறைக்கப்பட்டே அது தோன்றியிருக்கிறது. அதனுடன் வைக்கப்படும் மாபெரும் விற்களின் நடுவே சிறுத்து பொருளிழந்து ஓரமாக அமைந்திருக்கும். அங்கே அது தவத்தின் உறுதியென தெரிந்தது. அரசர் கூறியதை விட சிறந்த சொல் ஒன்றுமில்லை, அது விற்களில் முனிவர். வீரர்களில் மாவீரர்கள் முனிவர்களே என நாம் அறிந்திருக்கிறோம்.

அரசர் அதை தொடவில்லை. விதுரரிடம் “அமைச்சரே, அதை எடுத்து இளையோனிடம் அளியுங்கள்” என்றார். விதுரர் அவையில் ஒரு சொல் உரைக்காமல் அமர்ந்திருந்தார். அரசரின் ஆணை எழுந்ததும் வந்து அதை எடுத்து என்னிடம் அளித்தார். அவர் அதை என்னிடம் அளித்தபோது சற்றுநேரம் கைநீட்டி வாங்கமுடியாமல் தவித்து நின்றிருந்தேன். விதுரர் புன்னகைத்து “பெற்றுக்கொள்க!” என்றார். நான் அதை வாங்கிக்கொண்டேன். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அரசர் என்னிடம் “அவரிடமிருந்து அதை பெறும் தகுதியும் உனக்குண்டு, இளையோனே. இது உனக்கும் சேர்த்தே நான் அளிப்பது” என்றார். நான் தலைவணங்கினேன்.

“நான் இவ்வில்லுடன் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியபோது அந்நகரத்தின் மக்கள் என்னுடன் வாயில் வரை வந்தனர். பலர் வாழ்த்தொலி கூவினர். ஒரு முதுசூதன் அதோ செல்கிறது அஸ்தினபுரியின் வெற்றி. ஆன்றோர் அருளிய அறம் என்று கூச்சலிட்டார். அச்சொற்கள் என்னை மெய்சிலிர்க்கச் செய்தன” என்று யுயுத்ஸு சொன்னான்.

யுதிஷ்டிரன் தயையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு “நெடுநாட்களாகின்றன இதைத் தொட்டு. ஆனால் எப்போதும் இதனுடன் இருப்பதாகவே உணர்கிறேன். நான் ஏந்திய பலநூறு விற்கள் அனைத்தும் இந்த வில்லின் நிழலுருக்களே” என்றார். அம்பை எடுத்து அதில் தொடுத்தபின் சற்று தயங்கி “ஆனால் அந்த நூறுநூறு அம்புகள் வழியாக நெடுந்தொலைவுக்கு விலகி வந்துவிட்டிருக்கிறேன்…” என்றார்.

குருக்ஷேத்ரத்திற்கு அவர் தயையுடன் வந்தார். முதல்நாள் களமெழுவதுவரை அதில் அம்பு தொடுத்துப் பயிலவில்லை. பலமுறை கையில் எடுத்தும் தவிர்க்கவே தோன்றியது. முதல்நாள் போர் தொடங்கிய பின்னரும்கூட அவர் தன் வில்லில் இருந்து ஓர் அம்பைக்கூட செலுத்தவில்லை. ஆனால் சகதேவனை நோக்கி ஓர் அம்பு எழக் கண்டதும் அவரை அறியாமலேயே அந்த வில் எழுந்து அம்பு தொடுத்து அதை முறித்தது. இருமுறை அதைக்கொண்டு எதிர்ப்படையினரை கொல்ல முயன்றார். அவருடைய போர்முயற்சிகள் எல்லாமே அவருக்கே அவரை கேலிப்பொருளாக்கின.

அந்த வில்லுடன் அவர் களத்தில் தனித்து நின்றிருந்தார். அவர் குறிநோக்கி செலுத்திய அம்புகள் எவையும் இலக்கடையவில்லை. அவரால் அதை ஆளமுடியவில்லை. அந்த வில் அப்போரை மறுத்து பிறிதொரு போருக்காகக் காத்திருப்பதுபோலத் தோன்றியது. பின்னர் அதை தேர்த்தூணில் பொருத்திவிட்டு இன்னொரு வில்லை எடுத்துக்கொண்டார். அதுவும் தயையே என்று தோன்றியது. ஆனால் அல்ல என்று அந்த வில் அறிந்திருந்தது.

சல்யரை எதிர்கொள்ள அவர் எழுந்ததும் கைகளால் துழாவி இயல்பாகவே அவர் தயையை எடுத்துக்கொண்டார். அவரிடம் இருந்த வில் சேறு தெறித்து வழுக்கிக்கொண்டிருந்ததனால் அவ்வாறு செய்தார். ஆனால் அது களமெழுந்து போரிடத் தொடங்கியபோதுதான் அதுவே அவ்வாறு ஆணையிட்டதுபோலும் என எண்ணிக்கொண்டார். அது அக்களத்தில் ஆற்றவிருப்பதை அது அறிந்திருக்கிறது. அவர் அந்த வில்லின் எளிய கருவிமட்டுமே.

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19

யுதிஷ்டிரன் சல்யரை நோக்கியபடி வில்லுடன் தேரில் முன்சென்றார். சல்யரின் சீற்றம் அவருக்கு உயிரச்சத்தை உருவாக்கவில்லை. ஆனால் ஓரிரு அம்புகள் வந்தறைந்த விசையைக் கண்டதும் அவர் நகுலனுக்காகவும் சகதேவனுக்காகவும் அஞ்சினார். “இளையோரே விலகுக… அவர் வெறிகொண்டிருக்கிறார்” என்றார். அப்போதுதான் அவர் அம்புபட்டு உயிரிழந்துகிடந்தவர்களின் முகங்களின்  வெறிப்பை அடையாளம் கண்டார். “இளையோனே, இது மத்ரநாட்டுப் பாறை நஞ்சு… இதை நான் அறிவேன். நரம்புகளைத் தொடுவது… விலகுக!” என்று கூவினார்.

நகுலன் “நாங்கள் போரிடுகிறோம் மூத்தவரே, நீங்கள் அம்பு எல்லைக்கு அப்பால் நில்லுங்கள்” என்றான். சகதேவன் “ஆம் மூத்தவரே, அவர் உங்களுக்கு உகந்தவர் அல்ல…” என்றான். “எனக்கு இளைய யாதவரின் ஆணை உள்ளது. ஆயிரம் கவசங்களால் காக்கப்பட்டிருப்பதற்கு நிகர் அது… நீங்கள் அகலுங்கள். இது உங்களுக்கான போர் அல்ல” என்றார் யுதிஷ்டிரன். வில்லுடன் முன்னால் எழுந்து நாணொலி எழுப்பி “மத்ரரே, இது நமது போர்! என்னுடன் பொருதுக!” என்று யுதிஷ்டிரன் கூவினார். சல்யர்  சீற்றத்துடன் கூவியபடி நகுலனுக்கு எதிராக எடுத்த அம்பு ஒருகணம் அசைவிலாது நிற்க “அறச்செல்வனே, உன்னுடன் நான் பொருத இயலாது. செல்க!” என்றார்.

“இக்களத்தில் இது எனது போர்! உங்கள் வில் எனக்கு எதிராக எழுக!” என்று யுதிஷ்டிரன் கூவினார். ”உன் அன்னையின் பொருட்டு நான் உன்னை கொல்லக்கூடாது. இவர்கள் இருவரையும் கொல்வதற்கு மட்டுமே எனக்கு உரிமை உள்ளது. செல்க!” என்றார் சல்யர். யுதிஷ்டிரன் ”களத்தில் உறவுகளென ஏதுமில்லை, கடன்களும் ஏதுமில்லை. அறமிருந்தது, அதுவும் இன்றில்லை… எழுக!” என்றபடி அம்புகளால் சல்யரை அறைந்தார். அக்களத்தில் எழுந்தபின்னர் ஒருநாளும் அவர் அத்தனை உளவிசையுடன் போரிட்டதில்லை. அவருடைய கையில் வில் அவரை புதிதாக கண்டடைந்துகொண்டது. அவரே அறியாத அவருக்குள் இருந்து ஆணைகளை பெற்றுக்கொண்டது.

அவருடைய அம்புகள் முழுஆற்றலுடன் நாணிழுக்கப்பட்டன. கூர்நோக்கி இலக்கு அமைக்கப்பட்டன. குன்றாத் தோள்வல்லமையுடன் செலுத்தவும் பட்டன. ஆனால் யுதிஷ்டிரனுக்கு போரில் உளவிலக்கம் இருந்தது. அம்புடன் அவர் உள்ளம் எழவில்லை. ஒவ்வொரு அம்புக்கும் உரிய சொல் ஒரு கணம் பிந்தியே எழுந்தது. அந்த ஒற்றைக்கணம் ஐயத்தால் ஆனதாக இருந்தது. ஆகவே வெற்று உலோகத்துண்டுகளே அந்த வில்லில் இருந்து எழுந்தன. அவை வஞ்சினத்துடன் முனகவில்லை. காற்றை வீசிக்கிழிக்கவில்லை. இலக்கடைந்தபோது சினத்துடன் அதிரவில்லை. இலக்கு பிழைத்தபோது ஆற்றாமையுடன் துள்ளவில்லை. ஆயினும் அவை சல்யரை வியப்படையச் செய்தன. அத்தகைய போரூக்கத்தை அவர் யுதிஷ்டிரனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.

சல்யர் அந்த அம்புகளை  தொடர்ந்து தடுத்தபடியே பின்னடைந்தார். திகைத்த விழிகளுடன் அவர் யுதிஷ்டிரனை நோக்கிக்கொண்டிருந்தார். யுதிஷ்டிரனின் கையிலிருந்த அந்த வில் அவரால் தொட்டு எடுத்து அளிக்கப்பட்டது. இளமையில் மத்ரநாட்டில் கானாடலுக்காக அவர்கள் வந்திருந்தனர். அவர்கள் அர்ஜுனனின் வில்திறன் குறித்தே பேசிக்கொண்டிருந்தனர். மத்ரநாட்டு இளைஞர்கள் அனைவரும் அர்ஜுனனைச் சுற்றி நெருக்கியடித்து அமர்ந்தனர். அவன் சொற்களை அவர்கள் விழிகளாலும், முழு உடலாலும் கேட்டனர். ருக்மாங்கதனும் ருக்மரதனும்  அர்ஜுனனின் உடலை தொட்டபடி நிற்பதற்காக முட்டி மோதினர்.

அங்கு வருவதற்கு முந்தையநாள் அர்ஜுனன் அஸ்தினபுரிக்கு வந்து அறைகூவி அங்குள்ள விற்கலையை சிறுமை செய்த கலிங்கநாட்டு வில்லவனாகிய கலிகனை துரோணரின் ஆணைப்படி எதிர்கொண்டு வென்றான். ஏழு அம்புகளால் அறைந்து இடைக்கச்சையை அறுத்து வீழ்த்தினான். நாணம் கொண்ட கலிகன் சீற்றத்துடன் கொலைப்போர் புரிய அவன் அம்புகள் ஒவ்வொன்றையும் அவன் நிகர் அம்பால் வீழ்த்தி இறுதி அம்பால் அவன் மீசையை சீவி எறிந்தான். திகைத்து நின்ற கலிகனை அணுகி அவன் கால்களைத் தொட்டு வணங்கி “வாழ்த்துக வில்லவரே, வில்லை எனக்கு முன்னரே தொடும் வாய்ப்பு பெற்றவர் நீங்கள். என்னை மாணவனாகக் கொள்க! நான் அறியாத விற்கலை ஏதும் உண்டென்றால் எனக்கு சொல்க!” என்றான்.

கலிகன் உளநெகிழ்வுற்று குனிந்து அர்ஜுனனின் தலையைத் தொட்டு “நல்லூழ் பெருகுக! வெற்றியும் புகழும் சூழ்க! நான் அறிந்து நீ அறியாத கலை ஒன்று உண்டு. அதை உனக்கு இங்கு தங்கி கற்பிப்பேன்” என்றான். துரோணரை அர்ஜுனன் தாள்பணிந்தபோது அவர் அவனை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொண்டு விழிநீர் உகுத்தார். திருதராஷ்டிரர் கலிகனுக்கு ஆயிரம்பொன்னும் அர்ஜுனனுக்கு அருமணி பதித்த நெஞ்சாரமும் பரிசளித்தார். அப்பரிசை கலிகனுக்கு ஆசிரியக்கொடையாக அளித்து பணிந்தான் அர்ஜுனன். கலிகன் அந்த ஆயிரம் பொன்னை துரோணருக்கு ஆசிரியக்கொடையாக அளித்து அவரிடம் மாணவனாக சேர்ந்தான்.

ஒவ்வொருவரும் உவகையில் குரல் எழ ஓசையிட்டு பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் யுதிஷ்டிரன் மட்டும் விழிசுருங்கி சோர்வுற்றிருந்தான். குடிலுக்குத் திரும்பும்போது துரோணரிடம் “ஆசிரியரே, இது திறன்காட்டும் களிப்போர். இதில் ஏன் அவன் அக்கலிங்கரின் ஆடையை அறுக்கவேண்டும்?” என்றான். துரோணர் “களிப்போரில் கொல்லலாகாது என்று மட்டுமே நெறி உள்ளது” என்றார். “ஆனால் அவரை கொல்லும் எல்லை வரை தள்ளினான். அவர் கொன்றிருந்தால் அவரை கொன்றிருப்போம்” என்றான் யுதிஷ்டிரன். “ஆம், களிப்போரில் கொலை அடிக்கடி நிகழ்வதே” என்றார் துரோணர். ”ஏன் நிகழ்கிறது என்று இன்று புரிந்தது. எதன்பொருட்டு அவன் அவர் கச்சையை வெட்டினான்? அவனுக்கு களவெற்றி போதவில்லை. ஆணவ வெற்றி தேவையாக இருந்தது” என்று யுதிஷ்டிரன் சொன்னான்.

“ஆணவமில்லாமல் போரிட இயலுமா என்ன?” என்று துரோணர் சொன்னார். “போரிடுபவர்கள் முனிவர்கள் அல்ல. ஷத்ரியர்கள். ஆணவமே அவர்களின் இயல்பு. ஆணவமில்லாதவர் எவர்? கல்வியால் ஆணவம் கொள்பவர் அந்தணர். வீரத்தால் ஷத்ரியர். செல்வத்தால் வைசியர். சூத்திரர் நிலத்தால் ஆணவம் கொள்கின்றனர்.” யுதிஷ்டிரன் எரிச்சலுடன் “நான் அதை சொல்லவில்லை. அந்த ஆணவத்தை அடக்கமுடியவில்லை என்றால் அவன் வீரனா என்ன?” என்றான். துரோணர் நகைத்து “ஆணவம் சற்றே மடங்கியிருந்தாலும் அவன் களத்தில் கலிகனால் வீழ்த்தப்பட்டிருப்பான். ஒவ்வொரு அம்பையும் விண்ணில் செலுத்தியது வில் மட்டும் அல்ல, ஆணவமும்கூடத்தான்” என்றார்.

யுதிஷ்டிரன் நிறைவின்மையுடன் முனகினான். “கச்சையை ஏன் அறுத்தான் என்று கேட்டாய் அல்லவா? அவன் இங்கு வந்து அறைகூவியபோது என்ன சொன்னான்? அஸ்தினபுரியில் வில்லறிந்த ஆண்கள் எவரேனும் உள்ளனரா என்றான். அந்த ஆணவமே அவன் கையில் வில்லென அமைந்திருந்தது. கச்சையை வெட்டியபோது அர்ஜுனன் அறுத்தது அதைத்தான். ஆணவம் சிதைந்தமையால்தான் அவன் சினமுற்றான். சினத்தால் கூரிழந்தான். அவனை கொன்று வெல்லலாம். அன்றி ஆணவம் அழித்து வெல்லலாம். வேறு வழியே இல்லை” என்றார் துரோணர். யுதிஷ்டிரனின் தோளைத் தொட்டு புன்னகைத்து “எல்லாப் போரும் கல்வியே. எல்லா கல்வியிலும் சற்றேனும் போர் இருந்தாகவேண்டும்” என்று துரோணர் சொன்னார்.

யுதிஷ்டிரன் மறுமொழி சொல்லவில்லை. ஆனால் அவனுடைய நிறைவின்மை அவ்வண்ணமே இருந்தது. அரண்மனையில் இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் கலிகனின் கச்சையை வெட்டி மீசையைச் சீவிய கதையை நகுலன் சொன்னபோது இளவரசர்கள் உரக்க நகைத்து கூச்சலிட்டனர். ஒவ்வாமையுடன் முகம் சுளித்து “என்ன சிரிப்பு? வீரன் ஒருவனின் ஆடையை அறுத்திடுவதில் அத்தனை மகிழ்வதற்கு என்ன உள்ளது?” என்றான். இளவரசர்கள் அமைதியடைந்தனர். அர்ஜுனன் சினத்துடன் “மூத்தவரே, இது போர். உங்கள் சொல்விளையாட்டு அல்ல” என்றான். யுதிஷ்டிரன் உளச்சிறுமை கொண்டு “ஆம், நான் போரை அறியாதவனே. ஆனால் அறமும் நெறியும் அறிந்தவன்” என்றான். “அந்த அறமும் நெறியும் வில்லால் வேலியிடப்படுபவை” என்றான் அர்ஜுனன்.

யுதிஷ்டிரன் முகம்சிவக்க எழுந்துகொண்டு “கீழ்மையால் தாங்கிநிறுத்தப்படுவது ஒருநாளும் அறமாவதில்லை” என்றான். அர்ஜுனன் “உங்கள் நூல்களை உசாவ நான் ஒருநாளும் வந்ததில்லை. அவை அரண்மனையில் காக்கப்பட்ட அந்தணர்களால் உருவாக்கப்பட்டவை. அச்சொற்களைக் கொண்டு நீங்கள் அடையும் ஆணவத்தின் ஒரு துளியைக்கூட வில்லவர் அடைவதில்லை” என்றான். “எங்கள் சொற்களால் எவரையும் ஆடை களைந்ததில்லை” என்றான் யுதிஷ்டிரன். “சொற்களில் சலிக்கையில் நீங்கள் அவற்றை கருவாக்கி நாற்களம் பரப்புகிறீர்கள். அவற்றில் உங்கள் சொற்களே சூதாகின்றன. அவை ஆடைபறிக்கும். உயிரும் குடிக்கும். வீரர் எண்ணவும் அஞ்சும் சிறுமைகளை உங்கள் சொற்கள் இயற்றும்” என்றான் அர்ஜுனன்.

அறைக்குள் குளிர்ந்த காற்று நுழைந்ததுபோல் ஓர் அமைதி உருவாகியது. யுதிஷ்டிரன் மேலாடையைச் சுழற்றி அணிந்தபடி அறையைவிட்டு வெளியே சென்றான். ஒவ்வொருவராக எழுந்து அகன்றனர். அங்கே என்ன நிகழ்ந்தது என வியந்தபடி சல்யரும் அகன்றார். அன்று இரவு எப்போதோ விழித்துக்கொண்டபோது அந்தத் தருணம் மீண்டும் நினைவில் எழுந்தது. என்ன நிகழ்ந்தது என அவர் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். விழியறியாத தீயதெய்வம் ஒன்று அவ்வறைக்குள் புகுந்து அவர்கள் நடுவே அமர்ந்துகொண்டது போலும். அத்தனிமையில் இருளில் அவர் அச்சம் கொண்டு உடல்சிலிர்த்தார்.

மறுநாள் படைக்கலப் பயிற்சிநிலைக்கு வந்தபோது அர்ஜுனன், யுதிஷ்டிரன் இருவர் முகங்களும் சற்றே இமை வீங்கி துயில் அகலாதவை போலிருந்தன. இருவருமே ஒருவரை ஒருவர் நோக்கிக்கொள்ளவில்லை. அவர்களும் இரவில் விழித்துக்கொண்டு அந்நிகழ்வை எண்ணிக்கொண்டு இருந்திருப்பார்களா என்ன என சல்யர் வியந்தார். பீமனும் நகுலனும் சகதேவனும் அவர்களை நோக்காமல் உளம்கூர்ந்துகொண்டிருந்தனர். ருக்மரதனும் ருக்மாங்கதனும் அடிக்கடி அவர்களை நோக்கிக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு தருணத்தில் அந்த மெல்லிய படலம் கிழிபடப்போகிறது, ஒவ்வாதன நிகழப்போகிறது, நிகழாமல் இருக்காது, இல்லையென்றால் இது இவ்வண்ணம் ஒருங்கமையாது.

அது நிகழ்ந்தமை அத்தனை கூர்மையுடன் இருந்தது. வில்லால் ஓர் இலக்கை அடித்தபின் அர்ஜுனன் “’நான் ஆணவத்தால் இதை அடித்தேன். இனி ஆணவமின்மையால் இதை மூத்தவர் இயற்றுவார்” என்றான். வில்லை கையில் எடுத்த யுதிஷ்டிரன் திகைத்து நின்றான். வில் கையில் இருந்து நடுங்கியது. அவன் ஏதோ மறுமொழி சொல்ல விழைந்தான். அதை தவிர்த்து இலக்கை நோக்கி அம்பை செலுத்தினான். அது பிழைத்தபோது மீண்டும் அம்பு செலுத்தினான். அம்புகள் தொடர்ந்து இலக்குபிழைக்க அர்ஜுனன் “சற்று இடைவெளி விடுங்கள், மூத்தவரே. அவர்கள் உதிர்ந்தவற்றை பொறுக்கிக்கொள்ளட்டும்” என்றான். கண்ணீருடன் வில்லை கீழே போட்டுவிட்டான் யுதிஷ்டிரன்.

ருக்மாங்கதன் “நீங்கள் வில்லை உறுதியாக பற்றுகிறீர்கள், மூத்தவரே. ஆகவே உங்கள் கையின் அதிர்வனைத்தையும் வில் பெற்றுக்கொள்கிறது” என்றான். யுதிஷ்டிரன் சினத்துடன் அவனிடம் “செல்க!” என்றான். ருக்மரதன் அதை புரிந்துகொள்ளாமல் “விற்கலையில் முதல்பாடம் அது என்பார்கள். வில்லை மிக மெல்லவே பற்றவேண்டும்” என்றான். குரல்தாழ்த்தி “போதும்” என்றான் யுதிஷ்டிரன். அர்ஜுனன் “இளையோனே, உள்ளத்தில் நடுக்கம் இருந்தால் நாம் அருகே சென்றாலே வில்லும் அந்நடுக்கத்தை அடையும். வில் என்பது உள்ளத்தின் பருவடிவு. வில்பயில்தல் என்பது அச்சத்தையும் தயக்கத்தையும் கடந்து நம்மை நாம் கூர்ப்படுத்திக்கொள்ளல் மட்டுமே” என்றான்.

யுதிஷ்டிரன் களத்திலிருந்து அகலும்பொருட்டு திரும்ப அர்ஜுனன் “மூத்தவரே, மெய்யாகவே சொல்கிறேன், நீங்கள் சற்று ஆணவத்தை கைக்கொள்ளலாம். உங்கள் வில் நிலைகொள்ளும். அம்புகள் இலக்கடையும்” என்றான். யுதிஷ்டிரன் சீற்றத்துடன் திரும்பி “உன் அம்பு பிழைக்கும் ஓர் இடம் இருக்கும். அங்கே என் அம்பு வெல்லும்” என்றான். “எனில் ஒரே ஒருமுறை என் அம்பு வெல்லாத இலக்கை நீங்கள் வென்று காட்டுங்கள். நான் பணிகிறேன்” என்றான் அர்ஜுனன். “அவ்வண்ணம் ஓர் இலக்கு இருக்கும்… எங்கோ இருக்கும். ஆணவமின்மையால் சென்றடையவேண்டிய இலக்கு” என்று யுதிஷ்டிரன் கூவினான். “கண்டடையுங்கள்… எனக்கு காட்டுங்கள்” என்றான் அர்ஜுனன். யுதிஷ்டிரன் திரும்பிப்பார்க்காமல் நடந்தான்.

அன்று மாலை சோலையில் தனித்திருந்த யுதிஷ்டிரர்னை சல்யர் தன் அரண்மனையின் உப்பரிகையில் இருந்து பார்த்தார். அத்தனை தொலைவிலேயே அவன் அழுதுகொண்டிருப்பதாக தோன்றியது. இறங்கி ஓசையின்றி அணுகினார். அருகணைந்தபின்னர் தயங்கி நின்றார். விழிநீரை துடைத்தபடி திரும்பிய யுதிஷ்டிரன் “நான் தனித்திருக்க விழைகிறேன்” என்றான். “இத்தருணத்தில் நீங்கள் தனித்திருக்கலாகாது, இளவரசே” என்றார் சல்யர். யுதிஷ்டிரன் “நான் சொல்வதற்கொன்றும் இல்லை” என்றான். “சொல்லுங்கள்” என்றபடி அருகே அமர்ந்தார் சல்யர். தலைகுனிந்து சற்று அமர்ந்திருந்தபின் யுதிஷ்டிரன் “நான் வெல்லுமிடம் ஒன்றேனும் இருக்குமா மாதுலரே” என்றான்.

“ஆம், இருக்கும். இன்று மாலைக்குள் அதை சொல்கிறேன். நாளையே அவனை நீங்கள் வெல்லலாம்” என்று சல்யர் சொன்னார். அன்று பகல் முழுக்க மலைச்சரிவில் தன் புரவியில் உலவிக்கொண்டிருந்தார். அவர் உள்ளம் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டு அவ்வினாவை உசாவிக்கொண்டிருந்தது. பின்னர் அதை அவர் மறந்தார். விழிகள் மட்டும் தேடிக்கொண்டிருந்தன. அன்று காலை பிறந்த கன்று ஒன்றை நோக்கியபடி நின்றிருந்தபோது அதை ஏன் அத்தனை நேரம் நோக்குகிறோம் என்று புரிந்தது. புரவியை விரையச்செய்து திரும்பி வந்தார். நேராக இளவரசர்கள் தங்கியிருந்த அரண்மனையை அடைந்து யுதிஷ்டிரரை அழைத்து “நாளை நீங்கள் போட்டியை அறிவிக்கலாம், இளவரசே” என்றார்.

மறுநாள் காலையில் சல்யர் அர்ஜுனனையும் யுதிஷ்டிரனையும் பிறமைந்தரையும் கானுலாவுக்கு அழைத்துச் சென்றார். யுதிஷ்டிரன் என்ன நிகழவிருக்கிறது என்னும் உணர்வில்லாமல் அவனுடைய இயல்பின்படி சல்யரை முழுமையாக நம்பி உடன்சென்றான். காட்டில் சதுப்பு ஒன்றை கடந்து சென்றபோது அங்கே அன்றுபிறந்த கன்று ஒன்று சேற்றின் நடுவே கொடி ஒன்றில் கால்சிக்கி நின்று கொண்டிருந்தது. காலை இழுத்தபடி அது அஞ்சி கூச்சலிட அதன் அன்னையர் திரள் அப்பால் கரையில் நின்று ஓலமிட்டது. காலை இழுக்கும்தோறும் அது சேற்றில் மூழ்கிக்கொண்டிருந்தது. சல்யர் “அர்ஜுனா அந்தக் கொடியை அறுத்து கன்றை விடுவி” என ஆணையிட்டார்.

சகதேவன் “அது உகந்தது அல்ல. கன்றின்மேல் அம்பு பட்டுவிடக்கூடும். சேற்றில் இறங்கிச்சென்று அதை விடுவிப்பதே நன்று” என புரவியில் இருந்து இறங்கினான். “நம்மைக் கண்டால் கன்று மேலும் அஞ்சும். நாம் அருகணைந்தால் துள்ளும். சேற்றில் மேலும் அது மூழ்கக்கூடும்… சேற்றைக்கடந்து கன்றை அணுகுவதும் நெடும்பொழுது எடுக்கும்” என்றார் சல்யர். அர்ஜுனன் வில்லை எடுத்து அம்பு பூட்டி கூர் நோக்கினான். இருமுறை கூர் நோக்கியபின் வில்லை தணித்து தன் முகத்தை கையால் வருடியபின் மீண்டும் கூர்நோக்கி அம்பை செலுத்தினான். அம்பு மிக விலகிச்சென்று சேற்றில் விழுந்து மறைந்தது. கன்று திடுக்கிட்டு துள்ளி விழுந்து எழ அதன் உடல் விதிர்ப்பு கொண்டது.

யுதிஷ்டிரன் “அறிவிலி, நீயே அதை கொன்றுவிடுவாய் போலுள்ளது” என்று சீறியபடி அவன் கையிலிருந்து வில்லைப்பிடுங்கி அம்பை எடுத்து தொடுத்தான். கொடி அவிழ கன்று துள்ளிப் பாய்ந்து சேற்றில் நீந்தி மறுகரையை அடைந்தது. அதன் அன்னை ஓடிவந்து அதை தலையால் தழுவிக்கொள்ள மற்ற அன்னையர் சூழ்ந்து நின்று உவகைக் கூச்சலிட்டன. சல்யர் அர்ஜுனனிடம் “போட்டி முடிந்துவிட்டது, இளைய பாண்டவனே” என்றார். அர்ஜுனன் திடுக்கிட்டு திரும்பி நோக்கி பின் தணிந்து “ஆம்” என்றான். யுதிஷ்டிரன் அதை அறியாமல் “தப்பிவிட்டது. இனி சேற்றில் எச்சரிக்கையாக இருக்கும்” என்றான். சகதேவனும் நகுலனும் புன்னகைத்தனர்.

அர்ஜுனன் பெருமூச்சுடன் “எல்லாம் உங்கள் திட்டம் அல்லவா?” என்றான். “ஆம், நேற்று மாலை ஒரு கன்றை பார்த்ததும் இவ்வெண்ணம் வந்தது. என் ஏவலரை அனுப்பி இக்காட்சியை அமைத்தேன்” என்றார் சல்யர். யுதிஷ்டிரன் திரும்பி நோக்கி “எதை?” என்றான். சகதேவன் “மூத்தவரே, இளையவர் விடுத்த அறைகூவலை கடந்துவிட்டீர்கள். அவர் தோற்ற இடத்தில் வென்றுவிட்டீர்கள்” என்றான். அப்போதுதான் அதை உணர்ந்த யுதிஷ்டிரன் “ஆம்!” என்று திகைப்புடன சொன்னான். “எவ்வண்ணம் நிகழ்ந்தது இது?” வியப்புடன் நோக்கி ”அத்தனை சிறிய இலக்கு. அக்கன்று துள்ளிக்கொண்டும் இருந்தது… அதை நான் எவ்வண்ணம் அறுத்தேன்!” என்றாரன்.

“நீங்கள் அதை காக்கவேண்டும் என்று மட்டுமே எண்ணினீர்கள். உங்கள் திறனை எண்ணவில்லை.” என்றார் சல்யர். “அந்த ஆணவமின்மையால் நீங்கள் வென்றீர்கள். ஆனால் அம்பு தொடுத்தகணமே அர்ஜுனன் தன் திறனை கணக்கிடத் தொடங்கினான். ஒரு சிறு பிழை நிகழ்ந்தாலும் அக்கன்று உயிர்துறக்கக்கூடும் என அஞ்சினான். அவன் இலக்கு பிழைத்தது. நீங்கள் அக்கன்றின் புன்மயிர்த் தலையை வருடுவதுபோல் உளம்குழைந்து அம்பு தொடுத்தீர்கள். ஆகவே எதையும் எண்ணாமல் இயற்றி வென்றீர்கள்.”

யுதிஷ்டிரன் சற்றே குன்றி “அது என்னால் இயற்றப்பட்டது அல்ல… எனக்கு விற்தொழிலே தெரியாது. அக்கன்றைக் காக்க நினைத்த ஏதோ தெய்வம் இயற்றியது அதை” என்றான். “ஆகவே எவ்வகையிலும் அவ்வெற்றியை என்னுடையது எனக் கொள்ள இயலாது. நான் எந்நிலையிலும் இளையோனை வெல்லவுமில்லை. அவனை வெல்ல மானுடர் எவராலும் இயலாது” என்றான். அர்ஜுனன் “ஆம், மூத்தவரே. வென்றது அறம்” என்றான்.

அவன் முகம் கலங்கியிருப்பதைக் கண்டு தோள் வளைத்து அவனைத் தழுவி “என்ன இது? இது வெறும் தற்செயல்… தற்செயல்கள் தெய்வங்களின் ஆடல்கள். அதன்பொருட்டு உளம்குன்றலாமா நீ?” என்றான் யுதிஷ்டிரன். “உளம் குன்றவில்லை, மூத்தவரே. உரிய மெய்மை ஒன்றை கற்று உளம் விரிந்துள்ளேன்” என்றான் அர்ஜுனன். குனிந்து யுதிஷ்டிரனின் கால்களைத் தொட்டு “இனி ஒருநாளும் என் தன்னிலை உங்களுக்குமேல் எழாது என உறுதிகொள்கிறேன். என் வில்லும் உள்ளமும் உங்களை வணங்கும்பொருட்டே” என்றான்.

அன்று மாலை யுதிஷ்டிரனை தனியாக அழைத்த சல்யர் ”இளவரசே, உங்களுக்கு ஒரு பரிசை அளிக்கவிருக்கிறேன். வருக!” என அழைத்துச் சென்றார். தன் அரண்மனையின் கருவூலம் நோக்கி செல்கையில் அவர் சொன்னார் “இந்நிலத்தைத் திருத்தி  மத்ரநாட்டை அமைத்தவர் எங்கள் முதல்மூதாதையான மத்ரர். அவர் யயாதியின் கொடிவழியில் எழுந்த அனுவின் குலத்தில் பிறந்த மாமன்னர் சிபியின் குருதியில் வந்தவர். சிபியின் மைந்தரான அனு அறச்செல்வர். மூதாதையரின் பெயரைத் தாங்கும் மைந்தர் இளமையிலேயே உளமுதுமையை அடைந்துவிடுகிறார்கள். மைந்தனாக உணராமலேயே தந்தையென ஆகிறார்கள். முழுக்குலத்திற்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள்.

அன்று ஷத்ரியர்கள் போர்த்திறனாலேயே அடையாளம் காணப்பட்டார்கள். ஆனால் இளமையியிலேயே போர்க்கலைகளில் ஆர்வமற்றவராக இருந்தார் அனு. அவருடைய அம்புகள் ஒன்றுகூட இலக்கடையவில்லை என்கிறார்கள். நூல்நவில்வதிலும் அறமுணர்வதிலுமே நாட்டம் கொண்டிருந்தார். ஆகவே பிற ஷத்ரிய இளையோரால் பேடி என்றும் வலியிலி என்றும் ஏளனம் செய்யப்பட்டார். ஆனால் அவர்களை தன் மைந்தர்களென்றே நோக்கும் விரிவுளமும் அளியியல்பும் கொண்டிருந்தார் அனு.

ஒருமுறை இளவரசர்களுக்கான போர்ப்பயிற்சியில் மைந்தரின் கைத்திறன் நோக்க மாமன்னர் சிபி வந்தமர்ந்தார். இளையோரான சினியும் மதுவும் மனுவும் எல்லா அம்புகளையும் இலக்கடையச்செய்தனர். ஆனால் அனு நூற்றெட்டு அம்புகள் தொடுத்து அனைத்துமே இலக்கழிந்து விழுந்ததை தந்தை சிபி கண்டார். அவை இலக்கழிந்தமைகூட அவரை நிலையழியச் செய்யவில்லை. அதனால் எந்த வகையிலும் அனு உளம்குன்றவில்லை என்பதை, அவர் முகம் மலர்ந்தே இருந்தது என்பதைக் கண்டு அவர் சீற்றம்கொண்டார். கைநீட்டி கூவியபடி எழுந்து ஆணையிட்டார் “இனி இவன் இங்கிருக்கலாகாது. இவ்வண்ணம் ஒருவன் நம் குலத்தில் பிறந்தான் என்னும் செய்தியே எதிரிகளிடம் ஏளனத்திற்குரியதாக ஆகும். இவன் இன்றே என் மண்ணிலிருந்து அகலவேண்டும்.”

மன்னரின் ஆணையை மீற அமைச்சரும் உடன்படவில்லை. தான் இட்ட சொல்லை பின்னெடுக்க அரசரும் துணியவில்லை. ஆனால் அனு அவ்வாணையை முகம் மலர்ந்து தலைக்கொண்டார். “உங்கள் குருதியைச் சொல்லும் உரிமையும், உங்களுக்கு நீர்க்கடன் இயற்றும் உரிமையும் மட்டும் போதும், தந்தையே” என்று சொல்லி வணங்கி நகர்நீங்கினார். அவர்மேல் நம்பிக்கைகொண்ட நூற்றெட்டு வீரர்களும் பதினெட்டு குடியினரும் துணைசெல்ல அனு நாடுகடந்தார். அரசகுடியினர் ஆகையால் பிற மன்னர்கள் எவருடைய மண்ணிலும் அவர் மூன்றுநாட்களுக்குமேல் தங்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஆகவே மேலும் மேலும் வடக்கே வந்து அன்று மானுடரே இல்லாது ஒழிந்துகிடந்த இமையமலைச்சாரலை அடைந்தார்.

அங்கே அன்று வேளாண்நிலம் இருக்கவில்லை. நீர் நில்லா பெருஞ்சரிவு. ஆண்டுக்கு மும்மாதம் வெண்பனி சூடும் நிலம் என்பதனால் விளைமரங்களும் இல்லை. விலங்கென இருந்தவை மலையணில்களும் மான்களும் மட்டுமே. அங்கே மலைக்குகைகளில் அவர்கள் தங்கினர். மரப்பட்டைகளைக்கொண்டு பின்னர் கூடாரங்கள் அமைத்துக்கொண்டனர். மண்ணில் புதைந்து ஆழத்திற்குச் சென்றுவிட்டவர்கள் போல் உணர்ந்தனர். அனு அங்கும் தன் அகநிறைவுடனேயே இருந்தார். அவர் குடிகளும் வீரரும் அவருடைய அறச்சான்றின்மேல் தெய்வத்தின்மேல் என நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஒருநாள் காட்டில் சென்றுகொண்டிருக்கையில் படைவீரர்களில் ஒருவன் காட்டில் மேய்ந்து நின்ற மான் ஒன்றைநோக்கி அம்புகூர்க்க அவனை கைகாட்டித் தடுத்தார் அனு. அவர்கள் உணவுண்டு பலநாட்களாகியிருந்தன. ஆகவே அவன் அச்செயலை புரிந்துகொள்ளாமல் திகைப்புடன் நோக்கினான். “அந்தப் பெண் மான் புல்லை உண்ணவில்லை. மெல்ல சப்பிக்கொண்டிருக்கிறது. ஆகவே அது இனிய நினைவொன்றில் ஆழ்ந்திருக்கிறது எனத் தெரிகிறது” என்றார் அனு. “அதன் உடலுக்குள் கரு குடியேறியிருக்கிறது. அன்னையின் உள்ளத்தில் அத்தகைய கனவை நிறைக்க கருக்குழவியால் மட்டுமே இயலும்.” வீரன் வில்தாழ்த்த அவர்கள் அங்கிருந்து அகன்றனர்.

அதை அங்கே நுண்வடிவில் தவம்செய்துகொண்டிருந்த அத்ரி முனிவர் கேட்டார்.  அவர்கள் கடந்துசென்ற இடத்தில் நின்றிருந்த விரிந்த வெண்மலர் அத்ரிமுனிவர் என அவர்கள் அறியவில்லை. மலரிலிருந்து உடல்கொண்டு எழுந்த அத்ரி முனிவர் அவர்களை அணுகி தன்னை அறிமுகம் செய்துகொண்டார் “நான் ஊழ்கத்தில் அமர்ந்திருந்தபோது உன் சொல்லை கேட்டேன். அந்த மான் இன்னமும் ஆணுடன் கூடவில்லை. அதன் உடலில் கரு குடியேறவுமில்லை. பருவடிவமாக கரு அன்னை உடலில் குடியேறுவதற்கு முன் எண்ணவடிவமாக மலர்கிறது. அதன் கனவு அவ்வாறு எழுந்ததே. எழவிருக்கும் கருவுக்கும் அருளிய நீ யார்?” என்றார்.

அனு தன்னை அவருக்கு அறிமுகம் செய்துகொண்டார். “நான் ஊழ்கத்தின் கீழ்அலைவளைவின் சோர்விலிருந்தபோது உன் சொல்லை கேட்டேன். நீ எனக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அருளினாய். உன் குடி பெருகுக!” என்று அத்ரி வாழ்த்தினார். “என் மகள்களில் ஒருத்தியை உனக்கு அளிக்கிறேன்” என்றபின் அருகே நின்ற புல்லின் மணிகள்செறிந்த கதிர் ஒன்றைத் தொட்டு “மத்ரை எழுக!” என்றார். அங்கே அழகிய இளநங்கை கைகூப்பி நின்றாள். “இவள் என் மகள் மத்ரை. இவளை கொள்க! இவள் வயிற்றில் நீ கொண்ட பேரறம் பொலிந்து எழுக… உன் குடி பெருகுக!” என அத்ரி முனிவர் வாழ்த்தினார். மகள்கொடையாக அனுவுக்கு ஒரு வில்லை அளித்தார். மகளுக்கு குறையா நிறைவுகொண்ட ஒரு பொற்கலத்தை.

மத்ரையை மணந்து தன் குடிலுக்கு கொண்டுசென்றார் அனு. அவர்களை மலைமாடுகளும் ஆடுகளும் தேடிவந்து பெருகி மந்தை ஆயின. அவள் கால்பட்ட இடமெல்லாம் கழனி ஆகியது. செல்வம் பெருகி அந்நிலம் ஓர் ஊராகியது. நகராகியது. அவள் குருதியில் பிறந்த மைந்தர் அவள் மைந்தர் என்னும் அடையாளத்துடன் மத்ரர் என்றே அழைக்கப்பட்டார். விற்தொழில் தேர்ந்தவர், போர்த்திறன் மிகுந்தவர், அரியணை ஆளப்பிறந்தவர் மத்ரர். அவர்தான் அனைத்து நலன்களும் கொண்ட அந்த நகரை கோட்டை கட்டி பெருக்கி சகலபுரி என பெயர்சூட்டியவர். அவருடைய கொடிவழியினர் என்பதனால் நாங்கள் மத்ரர்கள் என்றும் எங்கள் நாடு மத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் அன்னை மத்ரையின் தூய உடல் என்றே எங்கள் பூசகர்களால் வழிபடப்படுகிறது.

”அனு தன் வாழ்நாளெல்லாம் படைக்கலமேந்தி போரிட்டதில்லை என்கிறார்கள். ஆனால் அரசருக்குரிய முறையில் வில் ஒன்றை அவர் கொண்டிருந்தார். அத்ரி முனிவர் மகள்கொடையாக அவருக்கு அளித்த அந்த வில் தயை என அழைக்கப்பட்டது. பொன்னாலான அந்த வில் எங்கள் கருவூலத்தில் உள்ளது. அனுவுக்குப்பின் அவர் மைந்தர் மத்ரர் தனக்கென சுகீர்த்தி என்னும் வில்லை சமைத்துக்கொண்டார். அதன்பின் மத்ரநாட்டரசர்கள் அந்த வில்லாலேயே போரிட்டனர். என் வில்லும் அதுவே. மூதாதையருக்கான ஆண்டுக்கொடையின்போது மட்டும் தயை கருவூலத்திலிருந்து எடுக்கப்பட்டு மக்களின் காட்சிக்கு வைக்கப்படும். அதற்கு மலரிட்டு வணங்கி மீண்டும் கருவூலத்திற்கே கொண்டுசெல்வோம்” என்று சல்யர் சொன்னார்.

அவர்கள் கருவூலத்திற்குள் நுழைந்தார்கள். அங்கே சல்யரின் ஆணைப்படி தயை எடுத்து வைக்கப்பட்டிருந்தது. எடையற்ற சிறிய மூங்கில் வில் அது. இரு முனைகளிலும் கைப்பிடிகளிலும் பொன்பணி செய்யப்பட்டிருந்தது. “மிகச்சிறிது” என்று யுதிஷ்டிரன் சொன்னான். “ஆம், நம்மை ஆளாமல் நம்மால் ஆளப்படுவது” என்ற சல்யர் அதை சுட்டிக்காட்டி “இது உங்கள் வில்லென ஆகுக, இளவரசே! நானறிந்தவரை இவ்வில்லை சூடும் தகைமைகொண்ட வேறெவரும் இன்றில்லை. தீப்பட்ட என் தங்கைக்கு நான் அளிக்கும் இறுதி மகள்கொடையாக இது அமைக!” என்றார்

யுதிஷ்டிரன் அந்த வில்லை குனிந்து தொட்டான். முகம் மலர்ந்து “அது என்னை முன்னரே அறிந்திருக்கிறது” என்றான். கையில் எடுத்து எளிதாக நாணேற்றி “என் கை அதற்கு மிகவும் பழகியிருக்கிறது” என்றான். சல்யர் “அது உங்களுக்காக நூற்றெட்டு தலைமுறைக்காலம் காத்திருந்திருக்கிறது” என்றார்.

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18

சல்யரை அத்தனை வீச்சுடன் களத்தில் ஒருபோதும் அர்ஜுனன் பார்த்ததில்லை. குருக்ஷேத்ரத்தில் பத்து முறைக்கு மேல் அவன் சல்யரை அம்புகளுடன் எதிர்கொண்டிருக்கிறான். எத்தகைய வில்லவர் அவர் என்பதை அவன் அறிந்திருந்தான். மலைவில்லவர்களுக்கு உரியமுறையில் நெடுந்தொலைவை நோக்கவும் அம்புகளால் தாக்கவும் அவரால் இயலும். அவர்களின் அம்புகளை மலைப்பறவைகள் என்றனர். அவை தொலைவுகளை விழிகளால் கடப்பவை.

மத்ரர்களின் வில் ஒப்புநோக்க சிறியது. அம்புகளும் சிறியவை. ஆனால் பயிறு இலையில் என தண்டு செருகும் இடம் உள்வாங்க ஆனால் கூரின் இருபுறமும் சற்றே பின்னால் நீண்டு கழுகின் உகிர் என வளைந்தவை. தசைக்குள் கூர் நேர்த்திசையிலும் கீழுகிர்கள் எதிர்த்திசையிலும் புதைவதனால் தைத்த இடங்களிலிருந்து அவற்றைப் பிடுங்குவது அரிது. அவற்றில் மலையின் உப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட நஞ்சு பூசப்பட்டிருக்கும். அவற்றைப் பிடுங்குவதற்குள் நஞ்சு உடலில் ஊறிவிடும். குருக்ஷேத்ரத்தின் நெறிகளின்படி நஞ்சுள்ள அம்புகளுக்கு முதற்சில நாட்கள் ஒப்புதல் இருக்கவில்லை. அதன்பின் மத்ரர்கள் பறக்கும் நாகப்பற்களாலேயே போரிடலாயினர்.

தடித்த இமைகள் கொண்ட அவர்களின் விழிகள் மிகையொளிக்கு பழகியவை. குறைவான ஒளிக்கு பாதிமூடிக்கொண்டு கூர்கொள்பவை. பறக்கும் பருந்தின் கண்களை நோக்கி அம்புசெலுத்துபவர்கள் அவர்கள் என சொல்லப்படுவதுண்டு. நெடுந்தொலைவிலிருந்தே நரம்புமுடிச்சுகளை நோக்கி அங்கேயே அம்புகளால் அறைந்தனர். அம்புபட்டதுமே உடலில் ஒரு துடிப்பு உருவாகும். வீரர்கள் உதடுகள் கோணலாகி இழுத்துக்கொள்ள எச்சில்நுரை ஒழுக கைகால்கள் தளர்ந்து சரிவார்கள். மத்ரர்கள் எதிரிகளின் விழிகளையே பெரும்பாலும் இலக்காக்கினர். மலையில் பனிப்புகை சூழ்ந்த வெள்ளை இருளில் அவர்களின் வேட்டைவிலங்குகள் கண்களாக மட்டுமே அப்பால் தெரிபவை.

சல்யர் போரிடுகையில் தேரில் நின்று அண்ணாந்து வானைப்பார்ப்பது போலிருக்கும். அம்புகள் மேல்நோக்கி எழுந்து காற்றில் சிறகு விரிக்கும். வேறுதிசை நோக்கி திரும்பி காற்றில் நீந்தி நீள்வளைவாக வந்து எண்ணியிராக் கணத்தில் சரிந்திறங்கி சரியான இலக்கை தாக்கும். அவை மேல் நோக்கி எழுவதனாலேயே காற்றை தங்களைத் தாங்கும் விசையென மாற்றிகொள்கின்றன் என்பதை அர்ஜுனன் கண்டான். அவற்றை திசைமாற்றுவதும் காற்றே. ஓர் அம்பின்மேல் உரசிக்கொள்ளும்படி இன்னொரு அம்பை அனுப்பி இரண்டையும் திசை மாற்றிச் செலுத்த அவரால் இயன்றது.

சல்யருடன் முதல் நாள் போரிட்டபோது அவனது கவசங்களும் காப்புகளும் உடைந்து, தேர் நிலையழிய உயிர்தப்பும்பொருட்டு  பின்னடைய வேண்டியிருந்தது. மத்ரநாட்டு வீரர்கள் உரக்க வாழ்த்துக் குரலெழுப்பி வெற்றி கொண்டாடினர். மீண்டும் அவரை களத்தில் சந்திக்கும்போது அவருடைய அம்புகள் வரும் திசையை ஓரளவுக்கு உய்த்து அவற்றை தவிர்க்க முயன்றாலும்கூட பல அம்புகள் இலக்கடைந்து அவனை அறைந்தன. அவன் கவசங்களை உடைத்து ஓர் அம்பு தோளில் தைத்தது. உடலில் நீர்மைகள் கலங்க விழிகளுக்குள் அலையலையென வண்ணங்கள் எழுந்தன. அவன் தள்ளாடி தேர்த்தூணைப்பற்றியபடி நின்றான். இளைய யாதவர் தேரை பின்னிழுத்துக்கொண்டுசென்று அவனை காத்தார்.

அவன் பின்னடைந்ததும் மருத்துவ ஏவலர்கள் பாய்ந்து அணுகி அவனை படுக்கவைத்து அந்த அம்பு தைத்த இடத்தை தசையுடன் கிழித்தெடுத்து கந்தகநீரால் கழுவினார்கள். அவன் வாய் கிட்டித்து தாடை இறுகி கழுத்து நரம்புகள் எடைதூக்குபவன் போலிருந்தன. மருத்துவ ஏவலர் குறுவாளால் அவன் பற்களை நெம்பித்திறந்து முறிமருந்தை தொண்டைக்குள் செலுத்தி குழாயால் ஊதி உள்ளே செலுத்தினர். அவன் மூக்கிலும் உடற்பின்வழியிலும் மருந்து உள்ளே செலுத்தப்பட்டது. மெல்ல அவன் மீண்டான். காட்சி நெளிந்து நெளிந்து அமைய முகங்கள் தெளிந்தபோதுதான் என்ன நிகழ்கிறது என உணர்ந்தான்.  அதன்பின்னரும் அந்தப்புண் ஆற மூன்றுநாட்களாகியது.

“அவருடைய நச்சு அம்புகளைத் தவிர்க்க ஒரே வழிதான் உள்ளது, விழிகளை தூக்காதே. நிழல்நோக்கிப் போரிடு” என்றார் இளைய யாதவர். சல்யர் போரிட்டுச்சென்ற வழியெங்கும் வெவ்வேறு வகையில் இளித்தும் வலித்தும் கிடந்த படைவீரர்களின் உடல்களை அவன் கண்டான். பெரும்பாலானவர்களின் கண்களுக்குள் அம்புகள் நுழைந்துவிட்டிருந்தன. அவன் அவரை அதன்பின் நேர் நோக்கவேயில்லை. நிழல்நோக்கிப் போரிடுவது மேலும் எளிதென்றும் கண்டுகொண்டான். வானின் காற்று அடுக்குகளில் நிகழ்வனவற்றை நிழல் தரையில் எளிய வரைபடம் என நிகழ்த்திக் காட்டியது.

மூன்றாம் முறை போரிடுகையில்தான் அவன் ஒன்றை கண்டான். சல்யர் முதலில் எடையிலாத சிறு அம்பொன்றை வில்லில் எய்கிறார். அந்த அம்பை விழிகளால் தொடர்ந்து அதை காற்று எவ்வண்ணம் தாங்கிச் செல்கிறது என்பதை கணித்து அதைத்தொடர்ந்து கொல்லும் அம்புகளை எய்கிறார். சிட்டுக்குருவியால் உளவறிந்து வழிநடத்தப்படும் வல்லூறுகள். அதன் பின் அந்த முதல் அம்பு எழுந்ததுமே அவன் அதை தன் அம்பால் அடித்துச் சிதறடித்தான். மீண்டும் மீண்டும் சிற்றம்புகளை எய்து காற்றை கணிக்க சல்யர் முயல அதற்கான தருணத்தை அவருக்கு அளிக்காமல் தொடர்ந்து அவரைத் தாக்கி பின்னடையச் செய்தான்.

சல்யரிடம் போர்வீரர்களுக்குரிய தற்குவியம் இருக்கவில்லை. உணர்ச்சிகளை அவர் நான்குபக்கமும் கட்டவிழ்த்து சிதறவிட்டிருந்தார். ஒவ்வொரு முறை அம்புகள் இலக்கு தவறுகையிலும் சீற்றம் கொண்டார். அர்ஜுனன் அவருடைய சிட்டுகளை வீழ்த்தியபோது வசைபாடியபடி காலால் ஓங்கி தேர்த்தூண்களை உதைத்தார். வில்லால் தேர்த்தட்டை அறைந்தபடியும் தேரோட்டும் பாகனின் தலையில் உதைத்தபடியும் கூச்சலிட்டார். வெறியுடன் நெஞ்சில் அறைந்துகொண்டார். வாளை உருவிக்கொண்டு நுகம் வழியாக பாய்ந்து களத்தில் இறங்கி அனைத்து பாதுகாப்பு எல்லைகளையும் மீறி அவனை நோக்கி ஓடிவந்தார். பலமுறை அவரை கொக்கிகளை வீசி பற்றி இழுத்து மீட்டுக்கொண்டனர் கௌரவர். கொக்கிகள் இழுக்க பின்னடைகையில் மலைப்பள்ளத்தில் மல்லாந்து விழுபவர்போல கைவிரித்து வெறிக்கூச்சலிட்டபடி செல்லும் அவர் முகம் அவரை எண்ணுகையில் எல்லாம் அவனுக்கு நினைவு வந்தது.

அந்த நிலைகொள்ளாமையும் சீற்றமுமே ஒவ்வொரு முறையும் அவரை போரில் தோற்கடித்தது. அதை உணர்ந்து அவர் படையெழுகையில் தன்னை முற்றாக தொகுத்துக்கொண்டு வந்தார். ஆனால் ஒரு நாழிகைகூட அந்த தற்பிடித்தம் நீடிப்பதில்லை. ஆனால் அன்று களத்தில் எழுந்தபோது அவர் சிலைபோலிருந்தார். இருகால்களையும் பரப்பிவைத்து நீண்ட வில்லை  ஊன்றி நிறுத்தி அசைவில்லாது நின்று போரிட்டார். போர் நீள நீள மேலும் மேலும் அசைவின்மை கொண்டார். அவரில் பீஷ்மர் எழுந்ததுபோல் தோன்றியது. அவருடைய  அம்புகள் ஒவ்வொன்றும் உறுமியபடி வந்து அர்ஜுனனின் தேரை தாக்கின. அவன் தேர்மகுடம் உடைந்தது. அவன் கவசங்கள் இருமுறை உடைய அவன் நிலத்தில் படிந்து புதுக்கவசத்தை அணிந்தபடி எழுந்தான். அவனுடைய புரவிகளில் ஒன்று கழுத்து அறுந்து விழுந்தது. இருமுறை வலிப்படைந்து நாக்கு வெளியே தொங்க உடனே உயிர்விட்டது.

மேலும் வந்தறைந்த அம்புகளில் இருந்து காத்து இளைய யாதவர் அவனை பின்னெடுத்துச் சென்றார். புரவிகளை மாற்றுவதற்கு பொழுது அளிக்காமல் சல்யர் அவனை விடாது தொடர்ந்து வந்தார். வஞ்சினம் கூறவில்லை, அறைகூவி அழைக்கவுமில்லை. கூரிய விழிகளுடன் தேரில் நின்று போரிட்டுக்கொண்டிருந்தார். அவருடைய அம்புகள் வந்து அறைந்தபடியே இருந்தன. இறந்த புரவியை நுகத்திலிருந்து அறுத்து விடுவித்துக்கொண்டு எஞ்சிய புரவிகளுடன் தேரைத் திருப்பி மீண்டும் சல்யர்முன் அர்ஜுனனை கொண்டுவந்தார் இளைய யாதவர். அர்ஜுனன் இளைய யாதவர் இயற்றிய எதையுமே அறியாமல் சல்யரின் அம்புகளை தன் அம்புகளால் தடுத்தபடி போரிட்டுக்கொண்டிருந்தான். ஒற்றை அம்புகூட அவனை வீழ்த்திவிடும். ஓர் அம்பின் நுனித்தொடுகை போதும்.

அம்புகளின் ஊடாக சுழன்று வந்த தேரில் அமர்ந்திருந்த சல்யரின் முகம் கற்சிலை என சமைந்திருந்தது. ஒருமுறை மிக அண்மையிலென சல்யரின் விழிகளை பார்த்தபோது அவன் அஞ்சி வில் தாழ்த்திவிட்டான். நிழலில் அதைக்கண்டு இளைய யாதவர் ”அஞ்சாதே. அவர் அகச்சீற்றம் கொண்டிருக்கிறார். ஆகவே அவர் களத்தில் தோற்பது உறுதி” என்றார். “அகத்தில் அவர் கொண்ட அச்சீற்றம் அவர் உதடுகளில் தெரிகிறது. அவை இயல்பாக ஒட்டியிருக்கவில்லை. இறுக அழுந்தியிருக்கின்றன. அகச்சீற்றத்தை எவரும் நெடும்பொழுது கட்டுப்படுத்த முடியாது. அகமும் குலையாமல் போரிடுகையிலேயே நிறைநிலை அமைகிறது.வெல்லற்கரிய நிலை அதுவே. இது வெறும் தன்நடிப்பு” இளைய யாதவர் தொடர்ந்தார். “தளும்பாது என ஐயுற்றால் கலம் தளும்பியே தீரும். மறக்கப்பட்ட கலமோ நுனிவட்டம் வரை நிறைந்தும் துளிதளும்பாது நீர்நடனமிடும்.”

அம்புகளைத் தொடுத்தபடி  மூச்சிரைக்க ”அவரில் எழுந்துள்ளது வெறும் போர்ச்சீற்றமல்ல” என்று  அர்ஜுனன் சொன்னான். ”’ஆம்,  அது பிறிதொன்று” என்று இளைய யாதவர் சொன்னார். நகைத்தபடி “தந்தை மைந்தனுக்கும் மைந்தர் தந்தைக்கும் கொடுக்கும் மிகப்பெரிய பரிசென்பது குற்றவுணர்வுதான் போலும்” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்றான் அர்ஜுனன். “நீ அவரை அஞ்சுகிறாய்” என்றார் இளைய யாதவர். “யார் நானா? இந்த மலைமகனையா?” என்றான் அர்ஜுனன். அவனை ஆடியில் நோக்காமல் ”அவரை நீ எதிர்கொள்ள இயலாது. அவர் தோற்பார் ஆனால் உன்னிடம் அல்ல” என்றார் இளைய யாதவர். ”ஏன்?” என்று அர்ஜுனன் சீற்றத்துடன் கேட்டான். “நான் வென்றவர்களுக்கு முன்னால் இவர் மிகமிக எளியவர்”.

இளைய யாதவர் “ஆம், அன்று உன் தோள்களில் மட்டுமே களைப்பு இருந்தது. அங்கனைக் கொன்றபின் உன் உள்ளமும் களைத்துவிட்டது. உன்னால் இனி பெருவில்வலர் எவரையும் கொல்ல இயலாது” என்றார். அர்ஜுனன் மேலும் சீற்றம் கொண்டு “இதோ கொல்கிறேன்… இப்போதே இவரை வீழ்த்துகிறேன்” என்றான். “எனில் இத்தருணத்தில் இம்மலைமகனை கொன்று வீழ்த்துக! இல்லையேல் எப்போதும் அவரை நீ வெல்ல இயலாது. ஏனென்றால் நீ அவரிடம் போரிடும்போது அவர் ஆற்றல் மிகுந்தபடியே செல்வார். நீ இழக்கும் அனைத்தையும் அவர் பெற்றுக்கொண்டிருக்கிறார்” என்றார் இளைய யாதவர். “பார்த்தா, இப்போரில் அவர் உன்னை மட்டுமே கொல்லவேண்டும் என உளம்கொண்டிருக்கிறார். அவரில் எழுந்த நஞ்சு அந்த அம்புகள் அனைத்திலும் ஒளிக்கூர் கொண்டிருக்கிறது.”

அர்ஜுனன் உரத்தகுரலில் “வென்று காட்டுகிறேன். இதோ இக்களத்தில் அவரை வீழ்த்திக் காட்டுகிறேன்”என்று கூவினான்.  “உன் சீற்றம் அவரை மேலும் சீற்றம் அடையச்செய்யும். உன் ஆற்றலிலிருந்து அவர் தன் ஆற்றலை பெறுவார். ஏனெனில் அவர் தன் மைந்தன் பொருட்டு வந்திருக்கிறார்” என்றார் இளைய யாதவர். அச்சொல் உள்ளத்தை தாக்க அர்ஜுனன் வில் தாழ்ந்தது.  சல்யரின் அம்புகளால் கவசங்கள் அறைபட தள்ளாடி நின்ற அர்ஜுனன் “ஆம், என்னால் இயலவில்லை” என்றான். அக்கணத்தில் சல்யரின் அம்பு வந்து அவன் கழுத்துக்கும் தோளுக்கும் நடுவே தாக்க அவன் உடலின் எல்லா நரம்புகளும் அதிர்ந்தன. அவன் ஒற்றைச்செவி அடைத்துக்கொண்டது.  அப்பக்கம் உடல் இரும்பாலானதுபோல் எடைகொள்ள அவன் தேரிலேயே கவசங்கள் ஓசையிட விழுந்தான்.

அக்கணத்தை முன்னரே உணர்ந்திருந்தவர்போல இளையயாதவர் தேரைத் திருப்பி படைகளுக்கு பின்புறமாக கொண்டு சென்றார். அவர் புதையப்புதைய கரியசேறென மானுட உடல்கள் எழுந்து வந்து அவர்களிடையே நிறைய சல்யரின் தேர் அதில் சிக்கி நிலையழிந்தது. சல்யர் அவர்களை அம்புகளால் அறைந்து அறைந்து வீழ்த்தினார். ஆனால் அவர்கள் எவரும் அஞ்சி விலகவில்லை. அவர்கள் அம்புகளையே அறியவில்லை. கொந்தளித்தபடி வந்து செத்து ஒருவர் மேல் ஒருவர் உதிர்ந்து சுவரென்றாகி வழியை முற்றாகவே மறித்தனர். சல்யர் பொறுமையை இழந்து “விலகுக! விலகுக!’ என்று கூவினார். வெறிகொண்டு கூச்சலிட்டார்.

அர்ஜுனனின் தேரின் குரங்குக்கொடி மட்டும் அப்பால் தெரிந்தது. சல்யர்  “நில்! இழிமகனே நில்!” என்று கூவியபடி வில்லைத் தூக்கி அர்ஜுனனை நோக்கி அம்புகளை வானில் எழுப்பி சரிந்து விழச்செய்தார். இளைய யாதவர் கைகளை அசைக்க சுருதகீர்த்தியும் சுருதசேனனும் இருபுறத்தில் எழுந்து வந்து செறுத்து நின்று சல்யரை எதிர்கொண்டார்கள். சல்யர் அவர்கள் இருவரையும் தன் வில்லால் தாக்கியபடி “விலகிச்செல்க… என் வஞ்சம் அவனிடம் மட்டுமே. நெறிநீங்கி அருங்கொலை செய்தவனின் குருதிக்காக களமெழுந்தவன் நான்… விலகுக!” என்று கூவினார். ”விலகுக! என் வஞ்சம் கொள்ளாதொழிக! என் நஞ்சுக்குமுன் நில்லாமல் அகல்க!”

மருத்துவ ஏவலர்கள் அர்ஜுனனின் உடலில் நரம்புமுடிச்சுகளில் கீறி அங்கே மருந்து நனைத்த துணிகளை வைத்து அழுத்தினர். அவன் வாய் கோணலாகி முகம் இழுபட்டிருந்தது. ஒரு விழி துடித்தபடியே இருந்தது. இளைய யாதவர் சல்யரை நோக்கி புன்னகைத்து “கூச்சலிடுகிறார். நிலையழியத் தொடங்கிவிட்டார் என்று பொருள் அதற்கு” என்றார். ”அவர் தன் சீற்றத்தை வில்லிலும் அம்பிலும் மட்டுமே காட்டும் வரை மட்டுமே அவரை வெல்ல இயலாது… அவர் உடையட்டும். கூச்சலிடும் மலைமகன் உள்ளம் சிதறியவன்.” சுருதகீர்த்தியின் அம்புகளால் சல்யரின் கவசம் உடைய “இழிபிறப்பே, நீ அவன் குருதியினன்” என்று பற்களை நெரித்தபடி அவர் அவனை தாக்கினார்.

அர்ஜுனன் இடக்கையை ஊன்றி எழமுயல “வேண்டாம்” என்றார் இளைய யாதவர். “அவர் அவர்களை நச்சம்புகளால் தாக்க மாட்டார்… அது அவருக்குப் பீடு அன்று.” அர்ஜுனன் எழுந்து சற்று தள்ளாடிவிட்டு தேரில் மீண்டும் ஏறிக்கொண்டான். இளைய யாதவர் தேர்த்தட்டில் ஏறி அதை தெளித்தபோது அது பின்னடைந்து படைக்கொப்பளிப்புக்கு அப்பால் சென்றது. அர்ஜுனன் “முகப்புக்கு… முகப்புக்கு” என்று கூவினான். “இல்லை, இது உன் போர் அல்ல…” என்றார் இளைய யாதவர். “இளையோரிடம் நச்சம்பை தொடுக்கிறாரா என்று பார்த்தேன்… இல்லை. ஆகவே அவர்கள் அவரை எதிர்கொள்ளட்டும்.” அர்ஜுனன் “நான் தோற்று ஓட விரும்பவில்லை” என்றான். “சுருதகீர்த்தி நீயேதான்” என்றார் இளைய யாதவர்.

நகுலனும் சகதேவனும் அவர்களை நோக்கி தேரில் விரைந்து வந்தனர். இளைய யாதவர் ”நீங்கள் சென்று சல்யரை எதிர்கொள்ளுங்கள். சல்யர் உங்களால் கொல்லப்படவேண்டும்” என்றார். ”எங்களாலா?” என்றான் நகுலன். ”ஆம், உங்களால் மட்டுமே அவரை எதிர்கொள்ள இயலும். உங்களை எதிர்நின்று போரிடுகையில் அவருடைய கைகள் தளர்கின்றன. நீங்கள் அவருடைய குலம். அவரோ தன் குலக்குருதியால் கட்டப்பட்ட முதற்தாதை” என்றார் இளைய யாதவர். நகுலன் “அவர் அவ்வெல்லையை மீறி அப்பக்கம் சென்றவர்” என்றான். “ஆம், அதற்கான அடிப்படை இப்போது மறைந்துவிட்டது. செல்க! மைந்தர் கைதளர்வதற்குள் அவர்களுக்கு துணைநில்லுங்கள்”

சகதேவனும் நகுலனும் விரைந்து சென்று சல்யரை எதிர்கொண்டனர். சல்யரின் அம்புகள் நெஞ்சிலும் விலாவிலும் தைக்க தேர்த்தட்டிலிருந்து சுருதசேனன் விழுந்துவிட்டிருந்தான்.  பாய்ந்துசென்று அவனை பற்றித்தூக்கிய சகதேவன் தன் தேரில் ஏற்றிக்கொண்டான். சுருதகீர்த்தி கவசங்கள் உடைந்து தோளிலும் இடையிலும் அம்புகள் தைத்திருக்க குருதிவழிய தேர்த்தட்டில் அமர்ந்திருக்க பாகன் அவன் தேரை பின்னடையச் செய்தான். சல்யர் விலங்குபோல் உறுமியபடி நகுலனையும் சகதேவனையும் எதிர்த்தார். அவருடய அம்புகள் பட்டு சகதேவனின் தேர்ப்பாகன் வீழ்ந்தான். நகுலனின் இரு புரவிகள் இறந்தன. அவர்களுக்கு நடுவே நீர்ச்சுழியில் மீன்கள் என அம்புகளின் வெள்ளித்திளைப்பு நிறைந்திருந்தது.

அப்போரை நோக்கிக்கொண்டிருந்த இளைய யாதவர் “இல்லை, அவர் மெல்ல மெல்ல நகுலனையும் சகதேவனையும் எதிர்க்கும் உளநிலையை உருவாக்கிக்கொள்கிறார்” என்றார். “மேலும் மேலும் பெரிய அம்புகளை எடுக்கிறார். எக்கணமும் நச்சம்புகளை அவர் கை நாடக்கூடும்.” அர்ஜுனன் “நான் செல்கிறேன்” என்றான். இளைய யாதவர் “அவரால் எதிர்கொள்ள இயலாதவர் யுதிஷ்டிரன் மட்டுமே. யுதிஷ்டிரன் முன்னெழட்டும்” என்றார். திகைப்புடன் ”யாதவரே, உரிய போர்ப்பயிற்சி உடையவரல்ல மூத்தவர். அவரால் சல்யர் போன்ற மாவீரரை எதிர்கொள்ள இயலாது” என்று அர்ஜுனன் சொன்னான். “வேண்டாம்… நான் செல்கிறேன். இத்தனை பொழுது மூத்தவரை காத்தோம்…”

“அவரே சல்யரை எதிர்கொள்ள முடியும். உன் முன் வில்லுடன் பேருருக்கொள்ளும் சல்யர் யுதிஷ்டிரன் முன் சிறுத்து நிலம்படிவதை காண்பாய்” என்றார் இளைய யாதவர். “வஞ்சமே அவருடைய விசை. நஞ்சுதான் படைக்கலம். அவற்றை அவர் யுதிஷ்டிரன் முன் இழப்பார்.” அர்ஜுனன் “அவர் தன் எல்லையை கடந்தார் என்றால் மூத்தவரை நாம் இழப்போம்” என்றான். “மலைமக்கள் கடக்கமுடியாதது குருதி. அதை கடந்தாலும் கடக்கமுடியாதது நெறி” என்றார் இளைய யாதவர். “நெறியிலாத இக்களத்தில்கூட மலைமகனாகவே எஞ்சுபவர் மத்ரர். அவருடைய வில் தழையும். ஐயமே இல்லை.” அர்ஜுனன் “வீண்முயற்சி வேண்டாம்… அவரை நான் எதிர்கொள்கிறேன்” என்று கூவ இளைய யாதவர் அதை பொருட்படுத்தாமல் தேரை அப்பால் மைந்தரால் துணைக்கப்பட்டு நின்றிருந்த யுதிஷ்டிரரை நோக்கிச் செலுத்தினார்.

இளைய யாதவர் “அரசே, முன்செல்க! சல்யரை எதிர்கொள்க! இது உங்கள் போர்” என்று யுதிஷ்டிரரிடம் சொன்னார். யுதிஷ்டிரன் “ஆம், அவரை நான் வென்றாக வேண்டும்” என்றார். அவர் ஏன் அதை சொன்னார் என அர்ஜுனன் வியந்தான். “நான் மூத்தவருக்கு துணைசெல்கிறேன்” என்றான். இளைய யாதவர் “அவர் தனியாகவே செல்லட்டும். இப்போர் அவருடையது மட்டுமே” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அர்ஜுனன் கேட்டான். “போர்கள் பல!” என்று இளைய யாதவர் புன்னகைத்தார். “சில போர்களில் உரியவர்கள் வென்றாலொழிய பொருளில்லை.” அர்ஜுனன் திகைத்து நோக்கினான். யுதிஷ்டிரன் “செல்க!” என பாகனுக்கு ஆணையிட்டார்.

நகுலனும் சகதேவனும் பின்னடைந்தபடியே சல்யரை எதிர்த்துக்கொண்டிருக்க அவர்களுக்கு நடுவே யுதிஷ்டிரரின் தேர் சென்றது. பிரதிவிந்தியனும் யௌதேயனும் யுதிஷ்டிரரின் இருபுறமும் காத்து சென்றனர். அவர்கள் சூழ்ந்துகொண்டு  சல்யரை எதிர்கொண்டார்கள்.  போரிட்டுக்கொண்டே வந்த சல்யர் அவருடைய தேரை யுதிஷ்டிரரின் அம்புகள் சென்று அறைய திரும்பி நோக்கி ஒருகணம் தயங்கி நின்றார். அக்கணத்தில் இருபுறத்திலிருந்தும் நகுலனும் சகதேவனும் சல்யரை தாக்கினார்கள். சல்யர் இகழ்ச்சியுடன் திரும்பி நகுலனை நோக்கி “அறிவிலி, திரும்பிச்செல்!” என்றார். நகுலன் “உங்களை வென்றே தீர்வோம், மாதுலரே” என்று கூவினான். “அறிவிலி! அறிவிலி!” என்று சல்யர் கூச்சலிட்டார்.

இளைய யாதவர் கையைத்தூக்கி அசைத்து ஆணையிட அதைக் கண்டு உணர்ந்த நகுலன் சகதேவனை நோக்கி ”அவருடைய குடிமைந்தர்களை முதலில் கொல்லும்படி ஆணை. அவர் உளம் தளரவேண்டும்” என்றான். நகுலன் சல்யரை நோக்கி அம்புகளை தொடுத்தபடி முன்சென்று எண்ணியிராக் கணத்தில் தேரை வளைந்து கடந்து பக்கவாட்டில் சென்று அம்புகளைத் தொடுத்து சல்யருக்கு இருபுறமும் படைத்துணையாக வந்துகொண்டிருந்த சல்யரின் குடிமைந்தர்கள் ரிஷபனையும் மகரனையும் கொன்று வீழ்த்தினான். மறுபக்கம் சகதேவன் அஜனையும் அஸ்வனையும் கொன்றான்.

மைந்தர்கள் அலறிச் சரிவதைக்கண்டு சல்யர் இருபுறமும் நோக்கி கூச்சலிட்டார். அதுவரை அவரில் எஞ்சிய நிலைக்கோளும் இல்லாமல் ஆயிற்று. ஓங்கி  நெஞ்சில் அறைந்துகொண்டு வீறிட்டார். ”கீழ்மகன்களே! வில்லுக்குப் புறம்சென்று தாக்கும் நெறியிலிகளே!” என்று கூவியபடி அம்புகளால் நகுலனையும் சகதேவனையும் தாக்கினார். “மேலும் மேலும் நெறிபிறழுங்கள்… அவருடைய சினம் எல்லை மீறட்டும்” என்று இளைய யாதவரின் ஆணை வந்தது. நகுலன் அவருடைய தேருக்குப் பின்பக்கம் சென்று ஆவக்காவலனை கொன்றான். அம்புகளால் அவருடைய குடிமைந்தன் ஒருவனைக் கொன்று அவன் தலையைத் தூக்கி அவர் தேர்மேல் இட்டான். சல்யர் நிலைமறந்து பித்தன்போல் கூவிக்கொண்டிருந்தார்.

”யுதிஷ்டிரன் முன்னெழுக! யுதிஷ்டிரன் முன்னெழுக!” என இளைய யாதவர் ஆணையிட்டார். யுதிஷ்டிரரின் தேர் முன்னாலெழுந்து சல்யரை எதிர்கொள்ளச் செல்ல, இளைய யாதவர் அர்ஜுனனின் தேரை பின்னெடுத்துச் சென்று சல்யரை துணை செய்யும்பொருட்டு தன் தேரில் நாணொலி எழுப்பியபடி வந்த சகுனியை எதிர்கொண்டார். சகுனிக்கும் அர்ஜுனனுக்கும் இடையே போர் மூண்டது. சகுனி  “மத்ரரை துணை செய்க! மத்ரர் சூழ்ந்துகொள்ளப்பட்டார்!”  என்று ஆணையிட்டார். ஆனால் அவர் ஆணை அப்பால் சிகண்டியுடன் பொருதிக்கொண்டிருந்த கிருதவர்மனை சென்றடையவில்லை.

மறுஎல்லையில் துரியோதனனை திருஷ்டத்யும்னன் தடுத்து நிறுத்தியிருந்தான். கிருபர் போர்க்களத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. களம் முழுக்க நிகழ்ந்துகொண்டிருந்த போர் விசையழிந்து அந்தியின் நிழலாட்டம்போல மிக மெல்ல நிகழ்ந்துகொண்டிருந்தது. சல்யர் தன் தேரில் நின்று கூச்சலிட்டு கண்ணீருடன் வெறியாடிக்கொண்டிருந்தார். “கீழ்மகன்களே, நெறியிலிகளே, வீணர்களே” என்று கூவினார். இளைய யாதவரின் எண்ணம் அர்ஜுனனுக்குப் புரிந்தது. சல்யர் தன் எல்லையைக் கடந்து நகுலனையும் சகதேவனையும் நோக்கி கொலைவிழைவுகொண்டு எழவேண்டும். அப்போதுதான் யுதிஷ்டிரன் மெய்யாகவே போருக்கு எழுவார்.

அவன் உள்ளம் பதைத்தது. யுதிஷ்டிரரிடம் சல்யர் தன் எல்லையை மீறிவிட்டாரென்றால்… அவன் அவ்வண்ணம் எண்ணியதுமே இளைய யாதவர் “அவரால் இயலாது… வேறுவழியே இல்லை” என்றார். அர்ஜுனன் சகுனியை செறுத்துக்கொண்டே அவர் துணைக்கு வந்த கிருதவர்மனையும் தடுத்தான். யுதிஷ்டிரன் நகுலனுக்கும் சகதேவனுக்கும் நடுவே தன் தேரைச் செலுத்தி சல்யருக்கு முன்னால் சென்றதை அவன் கண்டான். நகுலனும் சகதேவனும் இருபுறமும் விசையுடன் போரிட அவர்களால் காக்கப்பட்டவர் போலிருந்தார் யுதிஷ்டிரன். ஆனால் எக்கணமும் அவர்கள் இருவரும் சரியக்கூடும்.

ஒருகணம் அவன் உடல் வெம்மையலை பட்டதுபோல் நடுங்கி பின் வியர்வைகொண்டது. அவர்கள் தனக்கு அத்தனை அணுக்கமானவர்களா என்ன? தன் அகம் அவர்களை அத்தனை பொருட்படுத்துகிறதா? அவர்களை எண்ணுவதே இல்லை. அவர்கள் என் உளம் அல்ல, என் உடல். ஐவரால் ஆனது என் ஊன்.  உடலை மீறியே எழுகிறது உள்ளம். உடலை மறக்கவும் கடக்கவும் விழைகிறது. உடலில்லாமல் தன்னை நிறுத்திக்கொள்கிறது. ஆனால் அது உடலின் ஒரு பகுதியே. மலரின் மணம் என. அவன் உள்ளம் தளர்ந்தபடியே வந்தது. பழக்கத்தால் கைகள் போரிட்டன. எப்பொருளும் இல்லாமல் அகம் உருகி உருகி கண்ணீர்கொண்டது.

எதுவும் நிகழப்போவதில்லை. இவர் அறியாத ஒன்றில்லை. இவரை நம்புவதன்றி இங்கு நான் இயற்றுவதும் ஒன்றில்லை. அதை அறிந்திருந்தும் நான் நெஞ்சு கலுழ்கிறேன். அவன் தன் விழிகளிலிருந்து நீர் வழிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். என் உள்ளம் இப்போது பிறிதொன்றென ஆகிவிட்டிருக்கிறது.  அது தொட்டதுமே உருமாறும் நீர்மை கொண்டுவிட்டிருக்கிறது. முதுமையில் உடல்நலிகையில் உள்ளம் அவ்வாறு நைந்துவிடுவதை அவன் கண்டிருக்கிறான். எளிய நினைவுகளில் முதியோர் அழுவார்கள். நான் அவ்வண்ணம் ஆகிவிட்டேனா என்ன? எதன்பொருட்டு இங்கு நின்று நெகிழ்கிறேன்?

அது கர்ணனின் நினைவால் என ஓர் எண்ணம் அவன் மேல் எவரோ சாட்டையால் ஓங்கி அறைந்ததுபோல் எழுந்தது. கர்ணனைக் கொன்றபின்னர் என் காண்டீபம் முழுநாண் கொள்ளவே இல்லை. நான் உள்ளே உருகிக்கொண்டே இருக்கிறேன். ஏன்? என் குலமகளை சிறுமைசெய்தவன். என் குடியழித்தவனின் தோழன். ஆணவமே உருவானவன். தன் தோற்றத்தால் என்னை சிறியவனாக்கியவன். என் இனிய மைந்தனின் இறப்பை வகுத்தவன். அவன் தன்னையே சவுக்கால் அறைந்துகொண்டான். இன்னும் இன்னும் என உள்ளம் எழுந்தது. என் துணைவியின் அகத்தில் வாழ்பவன். ஐவராகி அவளை புணர்பவன். ஆனால் அதன்பின்னரும் உள்ளம் தொய்ந்தே கிடந்தது.

முயன்று வெறிக்கூச்சலிட்டுக்கொண்டு அர்ஜுனன் கிருதவர்மனை அம்புகளால் அறைந்தான். கிருதவர்மனின் விழிகளில் வந்துசென்ற அச்சத்தைக் கண்டதும் அவன் உள்ளம் கிளர்ச்சி அடைந்தது. மேலும் மேலும் கூச்சலிட்டபடி சகுனியையும் கிருதவர்மனையும் தாக்கினான். அரைக்கணம் சகுனியின் விழிகளை அவன் விழிகள் தொட்டன. அவை இளைய யாதவரிலேயே ஊன்றியிருந்தன. அவருடைய் எதிரி இவர் மட்டுமா? பிற எவருமே அவருக்கொரு பொருட்டு அல்லவா? இங்குள்ள அனைவருமே இவருக்கு எதிரிகள். அங்குள்ளோர் மட்டுமல்ல, இங்குள்ளோரும்கூட. இந்த யுகமே இவருக்கு எதிரி. இப்பேரழிவை விளையாட்டென நிகழ்த்தி அமர்ந்திருக்கும் இவர்…

அவனுள் காட்டெரி என சினம் பற்றிக்கொண்டது. காண்டீபம் நாணிறுகி துள்ளி எழுந்தது. அம்புகள் விம்மிக்கொண்டு எழுந்து சென்றன.  அவை சென்று தொட்ட இடங்கள் சிதறித்தெறித்தன. வசைச்சொற்கள் என. வெடித்தெழும் விம்மல்கள் என. தனிமையின் பெருமூச்சுகள் என.