மாதம்: ஜூன் 2019

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 59

அர்ஜுனன் அம்புகளால் கர்ணனை தாக்கியபடி களத்தில் முன்னெழுந்தான். “அவனை அல்ல, அவன் தேரை தாக்குக!” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் தேர் இருக்கும் வரை அவனை வெல்லமுடியாதென்று உணர்க! தேரில் முதலில் கொடியை உடைக்கவேண்டும். கொடியில்லாத தேருக்கு எந்த விசையிழப்பும் இல்லை. ஆனால் தன் தேரின் கொடி வெட்டப்பட்டுவிட்டதை உணர்ந்த வீரன் நிலையழிகிறான். கொடியில்லாத தேரில் நின்றிருக்கிறோம் என்னும் உணர்வை அவன் கடக்கவே இயல்வதில்லை.” இளைய யாதவர் அவனுடைய தேர்த்தூண் வளைவில் வந்து ஆணையிட்டார். அவர் முகத்தில் அதே மலர்வு. அது ஆலயச்சிலையின் உதட்டிலிருக்கும் கற்புன்னகை. அது எந்நிலையிலும் மாறுவதில்லை. தருணத்திற்கு ஏற்ப ஏளனம் என்றும் சினம் என்றும் கனிவு என்றும் வஞ்சம் என்றும் விலக்கம் என்றும் தோற்றம் கொள்கிறது.

“தேர்த்தூண்களை தொடர்ந்து அறைக! தூண்கள் அறையப்படுகையில் வீரன் அதை தவிர்க்கும்பொருட்டு அசைகிறான். அது தேரை உலையச் செய்கிறது. தேர் தொடர்ந்து உலையுமென்றால் தேர்ப்பாகன் பதற்றம் கொள்கிறான். அவன் கைகள் வழியாக புரவிகள் பதற்றம் கொள்கின்றன. தேரை நிலைகுலையச் செய். அது வீரனின் வில்லை நிலையழியச் செய்யும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் தன் இலக்கை நோக்கும் கணத்தில் வில்லை மறக்கிறான். தேர்ந்த வில்லவன் இலக்கு நோக்குவது அரைக்கணம்தான். அந்தப் பொழுதில் சென்றறைந்து உன் அம்பு அவன் வில்லின் நாணை உடைக்கட்டும். அவனுடைய தேரில் நாண் எடுத்து அளிக்க ஆவக்காவலன் இப்போதில்லை.”

“அதற்கும் அப்பால் அவனை செயலிழக்கச் செய்யவேண்டும். அவன் செயலிழந்த கணமே அது அவன் உடலில் வெளிப்படும். முகம் அதை தெரிவிக்கும். அப்போது எழவேண்டும் உன் அம்பு. அவனை கொல்வதற்குரிய அஞ்சலிகாஸ்திரம். அது உன் தந்தையால் முன்பு விருத்திரனைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட அம்பிலிருந்து உருவானது.” அர்ஜுனன் விழிகளால் “ஆம்” என்றான். அங்கே போருக்கு எழுவது வரை அவன் அந்த அம்பை நினைவுகூரவில்லை. உபப்பிலாவ்யத்தில் இருந்து கிளம்புகையில் இளைய யாதவர் அவனிடம் அந்த அம்புமுனையை கொடுத்தார். கல்லால் ஆன சிறுபேழைக்குள் செதுக்கப்பட்ட பள்ளத்தில் அது பதிந்திருந்தது. தெய்வவிழிபோல மின்னிக்கொண்டிருந்தது. “இது இக்களத்திற்காக காத்திருந்தது” என அவர் சொன்னார்.

அர்ஜுனன் அந்த அம்பை மாகேந்திர வேள்வியில் உருக்கியெடுத்ததை நினைவுகூர்ந்தான். இந்திரப்பிரஸ்தத்திற்குக் கிழக்கே இருந்த தேவவனத்தில் அந்த வேள்வி நடந்தது. தென்னாட்டிலிருந்து வந்த அதர்வ வைதிகர்களாலான அந்தணர் குழு ஒன்று அதை நிகழ்த்தியது. நாற்பத்தொரு நாள் நடந்த அந்த வேள்வியில் எரிமலைப் பிளவிலிருந்து எடுத்த கரிக்கல்லால் அம்புமுனை வடிவில் செதுக்கப்பட்ட சிற்பம் ஒன்று முதல்நாளே எரிகுளத்தில் இடப்பட்டது. அதை கருங்கல்லில் செதுக்கி எடுத்த சிற்பி தொடுவதற்குமுன் அது இரும்பாலானது என்று நம்பும் அளவுக்கு கூருடன் அமைத்திருந்தான். அதில் ஒரு பக்கம் அர்ஜுனனின் குரங்குக்கொடியும் மறுபக்கம் இந்திரப்பிரஸ்தத்தின் மின்படை முத்திரையும் இருந்தன.

நூற்றெட்டு அவிப்பொருட்கள் அனலில் இடப்பட்டன. அன்னமும் நெய்யும் விறகும் மங்கலங்களும் மட்டுமல்லாது நூற்றெட்டு வேதிப்பொருட்களும் அனலூட்டப்பட்டன. மஞ்சள், நீலம், செந்நீலம், பச்சை, சிவப்பு என பல வண்ணங்களில் எழுந்தது புகை. இந்திரப்பிரஸ்தத்தையே மூச்சடைத்து இருமித் திணறச்செய்தது. நாற்பத்தொன்றாம் நாள் எரிகுளம் அவிந்தபோது அந்த கல்லால் ஆன அம்புமுனையின் பின்பகுதி படிகமென்றாகி பளிங்குபோல் ஒளிகடக்கும் தெளிவுகொண்டிருந்தது. முனைப்பகுதி நீலநிற ஒளிகொண்டிருந்தது. அதை இரும்புக் கிடுக்கியால் எடுத்து வெளியே வைத்தார் வைதிகர். முதலில் அது நீராலானது என்னும் எண்ணம் ஏற்பட்டது. வேள்விச்சாலையின் கூரை அதன்மேல் பாவையாகியிருந்தது. அசைவில் அப்பாவை நலுங்கி பலநூறு பாவைகள் என பெருகியது.

“நீங்கள் விழைந்ததை இதைக் கொண்டு உருவாக்குக! இது இந்திரன் விருத்திரனைக் கொன்ற அம்பின் துளி” என்றார் தலைமை வைதிகர். அதை அவர் ஒரு கல்தாலத்தில் வைத்து அளிக்க இளைய யாதவர் அர்ஜுனனிடம் “பெற்றுக்கொள்” என்றார். அர்ஜுனன் அதை வாங்கிக்கொண்டான். “இது மாய வல்லமை கொண்ட அரக்கர்களை வெல்லுதற்குரியது. மானுடர் என்றேனும் தேவர்களுடன் போரிடுவார்கள் என்றால் அவர்களின் படைக்கலமாகத் தக்கது. வேள்வியால் உறுதிப்பட்டது” என்று வைதிகர்தலைவர் சொன்னார். “இந்த அம்பு அனைத்து உலோகங்களையும் மென்சேற்றுப்பரப்பையும் பட்டுத்துணியையும் என கிழித்துச்செல்லும். மலைப்பாறைகளை பிளக்கும். மண்ணைத் துளைத்து ஆழுலகு வரை செல்லும். அறிக! அனைத்து உலோகங்களும் உச்சத்தில் பொன்னென்று ஆகின்றன. அனைத்து கற்களும் வைரமென்றாகின்றன. கனிந்து ஒளிகொள்வது பொன். சினம்கொண்டு இறுகி ஒளிகொள்வது வைரம். இனியில்லை என செறிவுகொள்வது. கற்களுக்குள் வைரமே தெய்வம்.”

அர்ஜுனன் இளைய யாதவரிடம் “யாதவரே, இத்தகைய அம்பு எதற்காக? நான் ஏதேனும் பேருருவ அரக்கனுடன் பொருதவிருக்கிறேனா?” என்றான். இளைய யாதவர் “பேருருவர்கள் அரக்கர்களாகத்தான் இருக்கவேண்டுமா?” என்றார். “அன்றி தேவர்களா? மூன்று முதற்தெய்வங்களா?” என்றான் அர்ஜுனன். இளைய யாதவர் நகைத்து “பொருதற்கரிய எதிரி… நீ உன்னுடனேயே போரிடவிருக்கிறாய்” என்றார். “அதை உன் படைக்கலநிலையில் தெய்வமென நிறுவுக! ஒவ்வொருநாளும் மலரும் அரியுமிட்டு பூசை செய்க! அதில் வாழும் உபேந்திரன் ஒருகணமும் அகலக்கூடாது. தெய்வம் குடிகொள்ளும் அந்த அம்பு ஒருமுறைதான் போருக்கு எழும். வென்றபின் மீண்டும் மண்ணுக்கே மீளும்…” என்றார்.

கர்ணனை தாக்கவேண்டிய அம்புகளின் நிரையை ஒரே கணத்தில் தன் உள்ளம் வகுத்துவிட்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். எரியை பற்றவைப்பதுபோலத்தான் அது. முதல் அம்பாக அவன் மாகேந்திரம் என்னும் அம்பை தொடுத்தான். அது சென்று அறைந்து கர்ணனின் தேரை நிலைகுலையச் செய்தது. அந்த நிலைகுலைவை தக்கவைப்பதற்கென்று இடைவிடாது கந்தர்வாஸ்திரங்களை தொடுத்தான். கர்ணனின் அம்புகளை ஒரு அம்பால் நிறுத்தி மறுஅம்பால் அவன் தேரை அறைந்துகொண்டே இருந்தான். இருகை வில்லவன் என தன்னை அழைப்பதன் மெய்ப்பொருளை அப்போதுதான் உணர்ந்தான். ஒரே கணத்தில் இரு அம்புகள் இரு வேறு இலக்குகளுடன் அவனிடமிருந்து எழுந்தன. கர்ணனின் தேர் அசைந்து நிலையழிந்தது.

கர்ணன் பிருத்விசக்ரம் என்னும் அம்பால் அர்ஜுனனை அறைந்தான். இளைய யாதவர் தேரைத் திருப்பி அதை ஒழிந்தார். அடுத்த அம்பை அவன் எடுக்கும் கணத்தில் அவன் தேரின் கொடியை அர்ஜுனன் அறுத்தான். கர்ணனின் முகத்தில் எவ்வுணர்வும் வெளிப்படவில்லை. எரிந்தபடி எக்காள ஒலியெழுப்பி வந்து அறைந்த காபாலிகம், காளாமுகம் என்னும் அம்புகளால் அவன் அர்ஜுனனை தாக்கினான். மீண்டுமொரு இமைக்கண இடைவெளியில் அர்ஜுனன் கர்ணனின் வில்லின் நாணை அறுத்தான். முதல்முறையாக கர்ணனின் முகத்தில் சினம் தெரிந்தது. அறைகூவுகையிலும் வஞ்சினம் உரைக்கையிலும்கூட குளிர்ந்திருக்கும் அவன் விழிகளில் வெம்மை எழுவதை அர்ஜுனன் கண்டான். அவன் தொடுத்த காலகாலம் என்னும் அம்பு வந்து அர்ஜுனனின் தேரை நீரில் தக்கை என துள்ளச்செய்தது.

“தயங்காமல் தாக்கிக்கொண்டே இரு… அவனுடைய சினம் நற்குறியே” என்றார் இளைய யாதவர். கர்ணன் உதடுகளை மடித்துக் கடித்தபடி, கூர்கொண்ட விழிகள் அர்ஜுனன் மேல் ஊன்றியிருக்க அம்புகளால் அவன் கவசங்களை உடைத்தான். தோளிலைகளும் நெஞ்சக்கவசமும் உடைய அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து பிறிதொன்றை அணிந்துகொண்டான். “அவன் சீற்றத்தை பொருட்படுத்தாதே. உன் கவசங்கள் உடைவதைப்பற்றி அச்சமும் கொள்ளாதே. எட்டுக்கு ஒன்றென்றேனும் உன் அம்புகள் அவனை அறைந்தாகவேண்டும் என்று மட்டும் கொள்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் கர்ணனின் நெஞ்சக்கவசத்தை அறைந்து விரிசலிடச் செய்தான். மீண்டுமொரு அம்பால் தோளிலைகளை உடைத்தான். கர்ணன் அர்ஜுனனை அம்புகளால் அடித்து அடித்து கவசங்களையும் அணிகளையும் அகற்றிக்கொண்டிருந்தான். கர்ணனின் நெஞ்சக்கவசம் உடைந்துவிழுந்தபோது அர்ஜுனன் இடைக்கச்சையும் தோலாடையும் மட்டும் அணிந்து தேரில் நின்றிருந்தான்.

கதிர் சிவந்து நிழல்கள் நீளத்தொடங்கிவிட்டிருந்தன. களம் முற்றமைதி கொண்டிருந்தது. “இனி அவனை நேருக்குநேர் நோக்காதே. அவன் தேரின் நிழலை மட்டும் நோக்கி அவனை அம்புகளால் தாக்கு. அந்நிழல் மேலும் தெளிவுற்று வருவதை காண்பாய்.” அர்ஜுனன் கர்ணனின் தேரின் நிழலை நோக்கியபடி அம்புகளை தொடுத்தான். அதில் அமர்ந்திருந்தவன் அந்நிழலில் தெரியவில்லை. அந்நிழல் கருமை விலகி செம்மை கொண்டது. பின்னர் ஒரு நீண்ட குருதிக்கறைத்தடம் என்றே தோன்றியது. சரிந்து சரிந்து தொடுவான்வரை செல்லும் ஒரு குருதிவிரல் என நீண்டது. அதன் வண்ணம் மாறிக்கொண்டே இருப்பதை அர்ஜுனன் கண்டான். ஏன் அவ்வண்ணம் நிழல்வண்ணம் மாறுகிறது என வியந்தான்.

பின்னர் ஒன்றை உணர்ந்தான். அந்திக்கதிரவன் கர்ணனின் தலைக்குப் பின்னால் இருந்தான். பிற அனைத்து நிழல்களும் கிழக்கு நோக்கி நீண்டு சென்றிருந்தன. கர்ணனின் தேரின் நிழல் மட்டும் மேற்குநோக்கி நீண்டிருந்தது. அவன் விழிவிலக்கி கர்ணனை நோக்கவேண்டும் என விழைவுகொண்ட கணமே இளைய யாதவரின் குரல் எழுந்தது. “நோக்காதே!” அவன் அத்தேரின் தூண்களை அறைந்து உடைத்தான். அதன் தட்டுமுழுக்க அம்புகளால் நிறைத்தான். பின்னர் ஹலாஸ்திரத்தால் அதன் மகுடத்தை உடைத்தான். கர்ணன் உறுமியதை அவன் கேட்டான். தன் தேரை வந்தறைந்த சந்திராஸ்திரம் பம்பரம்போல அதை சுழலச்செய்து அப்பால் வீசியதை உணர்ந்தான். மீண்டு நோக்கு நிலைத்ததும் கர்ணனின் தேர்ப்பாகனின் நெஞ்சத்தை கவசத்துடன் துளைத்தான். ஓசையின்றி விருஷநந்தனன் நுகமேடையிலிருந்து வலப்புறமாக சரிந்து விழுந்தான்.

கர்ணன் கால் நீட்டி கடிவாளத்தை வலக்கால் விரல்களால் பற்றிக்கொண்டான். கடிவாளக் கற்றையை தன் கணுக்காலில் சுழற்றி சுற்றிக்கொண்டு அதை இழுத்து தேரை தானே செலுத்தினான். அர்ஜுனனின் அம்புகள் வந்து அவன் புரவிகள்மேல் பதிய அவை கூச்சலிட்டன. “இழிமகனே, இன்றே உன் இறுதி நாள்!” வெறியுடன் கூவியபடி கர்ணன் மகாருத்ராஸ்திரத்தை எடுத்தான். அவ்வொளியை அவனை நோக்காமலேயே சூழ்ந்திருந்த அனைத்துப் பொருட்களிலும் எழுந்த செவ்வலையால் அர்ஜுனன் அறிந்தான். இளைய யாதவர் தேரைத் திருப்பியபடி விரைந்து அகன்றார். கர்ணன் “நில்! நில், இழிமகனே” என கூவியபடி துரத்திச்சென்றான். குருக்ஷேத்ரக் களத்தை வகுந்தபடி புற்பரப்பில் நாகமென இளைய யாதவரின் தேர் விரைந்தது. அந்தத் தடத்தை ஒட்டி இன்னொரு தடமென பிளந்துகொண்டு கர்ணனின் தேர் துரத்திச்சென்றது.

கர்ணனின் உடல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் சினம்கொள்ளக் கொள்ள ஒளி மிகுந்து வந்தது. கரிய வைரம் என. பின் ஒளி ஊடுருவும் படிகம் என. பின் கனல் என. அவன் அருணனின் தேரிலேறி களம் வந்த நாளவன் எனத் தோன்றினான். அவன் கடந்துசென்றபோது அணுக்கத்தில் நோக்கிய வீரர்கள் சற்றுநேரம் ஒளியிருளால் விழியிழந்தோர் ஆயினர். அவன் தேர் சென்ற வழியில் ஓடும் பந்தத்தைச் சுற்றி என அவர்களின் நீள்நிழல்கள் நடனமிட்டு சுழன்றுவந்தன. “செங்கதிரோன்!” என்று ஒரு வீரன் கூவினான். “அனல்கொண்டு எழுந்தவன்!” என்றான் இன்னொருவன். அந்தியொளியில் அங்கிருந்த ஒவ்வொன்றும் செஞ்சுடர் கொண்டிருந்தன. வேல்நுனிகளும் வாள்விளிம்புகளும் இளங்குருதியென கதிரொளியில் நனைந்திருந்தன.

இளைய யாதவர் குருக்ஷேத்ரத்தின் வடக்கு எல்லைவரை முழு விரைவில் தேரை ஓட்டிச்சென்றார். கர்ணன் அவரை தொடர்ந்து சென்றான். ஓர் எல்லையில் இளைய யாதவர் தேரை திருப்பிக்கொண்டு அர்ஜுனன் கர்ணனை எதிர்கொள்ளச் செய்தார். விரைந்தோடும் தேரில் நின்றபடியே கர்ணனை அம்புகளால் தாக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் தேர் அவனை நோக்கி திரும்பியதும் மேலும் விசைகொண்டு கர்ணனின் கவசங்களை உடைத்தான். நெஞ்சிலும் தோளிலும் கவசங்கள் உடைந்துவிழ கர்ணன் பிளிறலோசை எழுப்பியபடி ஏழு அம்புகளால் அர்ஜுனனை தாக்கினான். அவற்றை அர்ஜுனன் தன் அம்புகளால் காற்றுவெளியிலேயே தடுத்தாலும் அவை உடைந்த துண்டுகள் வந்து பாய்ந்து அவன் உடலில் எஞ்சியிருந்த ஆடைகளையும் அறுத்தன. இடைக்கச்சை அவிழ இறுதி ஆடையும் காலுக்கு நழுவியது.

அர்ஜுனன் உடல்குன்றி தத்தளித்தபோது “தயங்காதே… ஆடையின்றியே நில். அவனை மானுடர் வெல்லவியலாது என்பது அவன் ஆசிரியரின் நற்கூற்று. தேவனாகுக! மானுடர் அளித்த அனைத்தையும் உன் உடலில் இருந்து அகற்றுக!” என்றார் இளைய யாதவர். “உன் குண்டலங்களையும் வெட்டி வீசு. கங்கணங்களும் அகலட்டும். குலக்குறியோ தெய்வக்காப்போ ஒன்றும் எஞ்சலாகாது உன் உடலில்… பிறந்த தோற்றத்தில் நிலைகொள்க!” அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து தன் குண்டலங்களை அறுத்தெறிந்தான். கங்கணங்களை, தோளில் அணிந்திருந்த காப்புத்தாலியை, இடையில் கட்டியிருந்த அரைக்காப்பை அறுத்தான். கர்ணன் வெறிக்கூச்சலிட்டபடி ஏவிய பாசாஸ்திரம் நெளிந்து வளைந்து நீரில் செல்லும் நாகமென வந்து அவன் தேரை தாக்கிச் சுழன்றது. அவனைத் தேடிக் கண்டடைய இயலாததுபோல் அப்பால் சென்றது.

கர்ணன் தன் தேரை அரைவட்டமாக திருப்பி உரக்க நகைத்தபடி திரிகாலாஸ்திரத்தை  வில்லில் தொடுத்தபடி அர்ஜுனனை நோக்கி வந்தான். திகைத்தவனாக அர்ஜுனனையும் அவனுக்குத் தேரோட்டிய இளைய யாதவரையும் நோக்கினான். அந்த அம்புக்கான நுண்சொல்லை அவன் உள்ளம் மறந்துவிட்டிருந்தது. மீளமீள அவன் அச்சொற்களுக்காகத் துழாவ மேலும் மேலும் உள்ளம் ஒழிந்து வெறுமைகொண்டது. அவன் வில்தாழ்த்தியபோது வில்லின் நிழல் நேர்முன்னால் நீண்டு விழுந்தது. அதை ஏந்திய கையும் விழிமுன் பெருக அவன் அந்த நுண்சொல்லை நினைவுகூர்ந்தான். ஆனால் தலைதாழ்த்தி “கொள்க, ஆசிரியரே!” என்றான். அவன் வில் தாழ்ந்தமையின்  நிழலை தங்கள் முன்னால் பார்த்த புரவிகள் உடல் தளர்ந்து மூச்சுவிட்டபடி நிற்க அவன் தேர் வலப்பக்கமாக சாய்ந்தது. குருக்ஷேத்ரத்தின் பிலங்களில் ஒன்றின் வாய் திறந்து அவன் தேரின் சகடத்தைக் கவ்வி உள்ளிழுத்துக்கொண்டது.

தேர் அசைவிழந்து மேலும் மேலும் அழுந்த கர்ணன் விஜயத்தை தேர்த்தட்டில் விட்டுவிட்டு பாய்ந்து மண்ணில் இறங்கி தேரின் சகடத்தை நோக்கி சென்றான். “ஒருகணம்தான். ஏவுக அஞ்சலிகத்தை!” என்றார் இளைய யாதவர். “அவர் படைக்கலம் இல்லாமலிருக்கிறார்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், இதுவே அவன் புதைவுக்கணம். அவன் இதோ மீண்டுவிடுவான். ஏவுக அம்பை!” என்றார் இளைய யாதவர். “படைக்கலம் இன்றி இருக்கையிலா?” என்றான் அர்ஜுனன். “படைக்கலம் இன்றி மட்டுமே அவனை கொல்ல இயலும் என்று உணர்க… ஏவுக!” என்றார் இளைய யாதவர். “யாதவரே!” என்று அர்ஜுனன் உளமுடைந்து கூவினான். “இது என் ஆணை! கொல் அவனை. இக்கணமே கொல்!” என்றார் இளைய யாதவர்.

அர்ஜுனன் மண்ணில் நீண்டுகிடந்த கர்ணனின் நிழலை நோக்கினான். அது இளநீல நிறமாக அதிர்ந்துகொண்டிருந்தது. காண்டீபம் சண்டிக்குதிரை என நின்று துள்ள அதன் நாண் தழைந்து கிடந்தது. அதில் ஓர் அம்பை ஏவும் விசைகூடுமா என அவன் ஐயம் கொண்டான். “யாதவரே, என் வில்…” என்று கூவினான். “ஏவுக! இக்கணமே அம்பை ஏவுக!” என அவன் தேரின் அத்தனை ஒளிவளைவுகளிலும் தோன்றி இளைய யாதவர் ஆணையிட்டார். அவன் கை சென்று அம்பறாத்தூணியில் தொட்டதுமே அஞ்சலிகம் பாய்ந்து விரல்களில் ஏறிக்கொண்டது. அதுவே காண்டீபத்திலமர்ந்தது. நாணை இழுத்து தன்னை இறுக்கிக்கொண்டது. வீறிட்டலறும் ஒலியுடன் எழுந்து மின்னல் என ஒளிவீசியபடி கர்ணனை நோக்கி சென்று அவன் நெஞ்சை தாக்கியது.

கர்ணனின் கவசம் பிளந்து நெஞ்சுக்குள் ஆழ்ந்திறங்கியது அஞ்சலிகம். அவன் வலப்பக்கம் சரிந்து மண்ணில் கையூன்றி உடல் அதிர்ந்தான். இடக்கையையும் ஊன்றியபோது தலை முன்பக்கம் குனிந்து மூக்கிலிருந்து குருதி நெஞ்சில் கொட்டியது. நெஞ்சப் புண்ணில் இருந்து வழிந்த குருதி மடியில் விழுந்து ஆடையை நனைத்து நிலத்தில் ஊறிப்பரவியது. அர்ஜுனன் காண்டீபத்தை தேர்த்தட்டில் வைத்துவிட்டு தலையைப் பற்றியபடி தேரில் அமர்ந்தான். இளைய யாதவர் தேரை பின்திருப்பி பாண்டவப் படைகளுக்குள் கொண்டுசென்றார். படைகள் விலகிப்பிரிந்து அவருக்கு வழிவிட்டன. வாழ்த்தொலிகள் எழவில்லை. அங்கு படைகள் இருப்பதையே செவிகளால் உணரமுடியவில்லை.

மேற்கே சூரியனின் ஒளிவட்டம் எடைமிகுந்து தொடுவான்கோட்டில் அழுந்தியது. கிழித்து மூழ்கத் தொடங்கியது. விரிந்த கதிர்களை ஒவ்வொன்றாக இழுத்துக்கொண்டு நாளவன் மறைய நிழல்கள் கரைந்து மறைந்தன. தேர்மகுடங்களின் உலோகப் பரப்புகளில் மட்டும் வான்வெளிச்சம் எஞ்சியிருந்தது. கதிரணைதலை நோக்கியபடி அனைவரும் அசைவிலாது நின்றிருந்தனர். கதிர்வட்டத்தின் மேல்விளிம்பு அறுதியாக மறைய அக்கணத்தைக் கொண்டாடும் பறவைகள் அப்பால் குருக்ஷேத்ரக் காட்டுக்குள் செங்குத்தாக வானிலெழுந்து சுழன்றமைந்து கூவின. காடெங்கும் பறவையோசைகள் கேட்கத் தொடங்கின. ஒரு பறவை கர்ணனின் தேருக்குமேல் கூவியபடி பறந்தது.

முதிய வீரன் ஒருவன் மெல்ல நடந்து அருகணைந்து குனிந்து கர்ணனை நோக்கினான். பின்னர் கைகூப்பி தொழுது “அங்கர் விண்புகுந்தார்” என்றான். மறு எல்லையிலிருந்து கௌரவ வீரர்கள் சிலர் ஓடிவந்தனர். “கதிர்மைந்தர் விண்புகுந்தார்” என்று முதிய வீரன் உரக்க அறிவித்தான். அவர்கள் கைகூப்பியபடி அருகணைந்து கர்ணனின் காலடியில் நின்றனர். பின்னர் கைவீசி தங்கள் படையினருக்கு கர்ணன் விண்புகுந்ததை அறிவித்தனர். கௌரவப் படையிலிருந்து ஆங்காங்கே சில வாழ்த்தொலிகள்தான் எழுந்தன. அவர்கள் மிகச் சிலரே எஞ்சியிருந்தனர். அவர்களும் ஆங்காங்கே சிதறிப்பரவியிருந்தனர். அவர்கள் வழியாக அச்செய்தி படர்ந்துசெல்வதை காணமுடிந்தது.

முரசுகள் கர்ணனின் விண்ணேற்றத்தை அறிவித்தபடி முழங்கத் தொடங்கின. “அங்கர் விண்புகுந்தார். கதிர்மைந்தர் நிறைவடைந்தார். கர்ண வசுஷேணர் வீழ்ந்தார். எழுக அவர் புகழ்! வெல்க அவர் பெயர்!” ஆனால் கௌரவப் படையில் அது ஒரு கலைவை மட்டுமே உருவாக்கியது. அந்தியை அறிவித்து முரசுகள் முழங்கின. போர் ஏற்கெனவே நின்றுவிட்டிருந்தமையால் இரு படைகளும் பின்னடைந்து விலக குருக்ஷேத்ரம் ஒழிந்து விரிந்து அகன்றது. பாண்டவப் படையினர் ஒரு சொல்லும் இல்லாமல் படைக்கலங்களை ஊன்றியபடி தளர்ந்த நடையுடன் பின்னடைந்தனர். கர்ணனை கொண்டுசெல்வதற்காக பலகைமஞ்சத்துடன் எட்டு படைவீரர்கள் ஓடிவந்தனர். அஸ்வத்தாமனும் கிருபரும் புரவியில் வந்திறங்கி அவர்களுக்குப் பின்னால் வந்தனர்.

அஸ்வத்தாமன் வந்து கர்ணன் அருகே குனிந்து நோக்கினான். கர்ணனின் விழிகள் அரையிமை மூடியிருக்க உதடுகள் புன்னகையிலென திறந்திருந்தன. அஸ்வத்தாமன் அமர்ந்து கர்ணனின் உடலை தொட்டுப்பார்த்தான். இளவெம்மையை உணர்ந்ததும் அவன் இரு கைகளையும் பற்றி ஒன்றன்மேல் ஒன்றென வைத்து ஊழ்க அமைவை உருவாக்க முயன்றான். ஆனால் அவை நழுவி இருபுறமும் சரிந்து விரல்கள் விரிய திறந்து விழுந்தன. இல்லை என்பதுபோல. இருமுறை பற்றி வைத்தும் அவை சரிய கிருபர் “அவை அவ்வண்ணமே இருக்கட்டும்…” என்றார். அஸ்வத்தாமன் நிமிர்ந்து அவரை நோக்கிவிட்டு “ஆம்” என்றான்.

ஏவலர் மரவுரியை விரித்து அதன்மேல் கர்ணனின் உடலை சரித்து படுக்கவைத்தனர். அதை நாற்புறமும் பற்றித் தூக்கி பலகைமேல் வைத்தனர். அவன் இரு கைகளும் இருபுறமும் தொங்கின. அஸ்வத்தாமன் கிருபரை நோக்கிவிட்டு எழுந்துகொண்டான். அவர்கள் அவனை தூக்கிக்கொண்டு சென்றபோது ஆங்காங்கே அமர்ந்தும் விழுந்தும் கிடந்த கௌரவப் படைவீரர்கள் வெறுமனே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தனர்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 58

ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து விட்டனர். கௌரவப் படையினர் கர்ணனையும் மைந்தரையும் விட்டு பின்னகர்ந்தனர். இருவரும் தாங்களே பலவாகி பெருகி அம்புகளென ஆகி விண்ணிலெழுந்து மோதிக்கொண்டனர். வெடித்து அனலுமிழ்ந்தனர். சுழித்து குருதிச்சகதிப் புழுதிக்குப்பையை அள்ளி சுழற்றிவீசினர். உறுமியபடி சென்று ஒவ்வொன்றையும் பற்றி உலுக்கினர். ஆற்றாது திரும்பி வந்தனர். மீண்டும் சீறி எழுந்தனர்.

ஒவ்வொரு அம்பும் ஓர் அகச்சொல். ஒரு சொல்லா உணர்வு. மானஸாஸ்திரம் கர்ணனை இரவுதோறும் சூழ்ந்த சொற்களை தன்னிலேற்றிக்கொண்டிருந்தது. செல்லும் வழியெங்கும் வெடித்து அனல்பாதையொன்றை காற்றில் சமைத்தது. அவன் சொல்லிச் சொல்லி அகற்றியவை. கனவில் கண்டு அதிர்ந்தவை. நினைவுகூரக் கசந்தவை. தன்னியல்பாக எழுகையில் தலையிலறைந்து கண்ணீர்விட்டவை. மறந்துவிட்டவை. மறதியிலிருந்து புளித்து நஞ்சென்றானவை. நாவிலெழும் சொற்களில் ஒட்டிக்கொண்டு எழுந்தவை. அவைகளில் நின்று கனன்றவை. அவனை திகைப்பூட்டி திரும்பி நோக்கி நகைத்தவை. அஞ்சி ஓடச்செய்தவை. அவன் சென்றணைந்த இருளுக்குள் உடனிருந்தவை. செவிகளில் முணுமுணுத்தவை. “அகலோம்” என்றவை. “கொண்டே செல்வோம்” என்றவை. “நீ நாங்களே” என்றவை. “நீயே நாங்கள்” என வீறிட்டவை.

அர்ஜுனனைச் சூழ்ந்து தீப்பறக்கச் செய்தது அது. பல்லாயிரம் விண்மீன்பெருக்கென அவனை வளைத்துக்கொண்டது. அர்ஜுனன் அவற்றை நோக்கி தன் அம்புகளால் அறைந்து கை சலித்து உளம் சோர்ந்தபோது இளைய யாதவர் “போரிட வேண்டாம். அவற்றை நோக்கவே வேண்டியதில்லை. அவை இல்லையென்றே எண்ணுக!” என்றார். அர்ஜுனன் வில் தாழ்த்தியதுமே அவை இலக்கழிந்து நிலம் பொழியலாயின. ஒவ்வொன்றும் ஒன்றை உரைத்து உதிர்வதாக அர்ஜுனன் எண்ணினான். அனைத்தும் ஒற்றைச்சொல்லே என பின்னர் கண்டான். ஒற்றைச்சொல்லின் ஒரு கோடி உச்சரிப்புகள். ஊழ்கநுண்சொல்லா அது? நாம் சென்று பற்றிக்கொள்வது ஊழ்கநுண்சொல். நம்மை வந்து பற்றிக்கொள்ளும் சொல் தெய்வங்களின் தீச்சொல் போலும்.

மானஸாஸ்திரம் ஒளியிருண்டது. நீலமாகியது. சாம்பலாகியது. இருளென்றாகியது. அவனை சுற்றிச்சுழன்று களத்தில் அலைந்தது. அத்தனை பருப்பொருட்கள் மீதும் விழியற்ற யானை எனச் சென்று மோதியது. அனைத்தையும் முட்டிமுட்டி உலுக்கியது. மறுமொழி ஒன்றை தேடுவதுபோல. பின்னர் சலித்து நிலத்திலமைந்தது. எடைமிக்க கருநாகம் என ஊர்ந்து நெளிந்தது. படம் விரித்து அறைந்தது. சீறி மீண்டும் எழுந்தது. வளைந்து கொந்தளித்தபடி கர்ணனையே சென்றடைந்தது. அவன் தேரை அறைந்து உலுக்கியது. அவன் தலையை சுற்றிக் கவ்வியது. உடலைப் பற்றி கைகளை செயலிழக்கச் செய்தது. அவன் ஒற்றைச் சொல்லால் அதை சிறிதாக்கினான். தன் தலையணியில் ஒரு கரிய அருமணி என அதை அணிந்துகொண்டான். துயர்கொண்ட ஒற்றைவிழி என அது அங்கிருந்தது.

கைசுழற்றி அவன் எடுத்துத் தொடுத்த ஸ்வப்னாஸ்திரம் கர்ணன் கொண்ட விழைவுகளை சூடியிருந்தது. அது பொன்னென மின்னும் உடல்கொண்டிருந்தது. சுழன்று திரும்புகையில் அதன் பொன்னரிந்த மடிப்புகளின் ஒளி நூறுநூறு அம்புகளென ஆகி அதை சூழ்ந்தது. அவன் அதை எடுக்கையில் முதிர்ந்தவனாகத் தெரிந்தான். தொடுக்கையில் இளையவன் ஆனான். விடுகையில் அகவை குறைந்தான். எழுந்த அம்புக்கு அப்பால் நின்று விழிமலர்ந்து சிரித்து மகிழும் சிறுவனை அர்ஜுனன் கண்டான். அவனுடைய அம்புகள் எவையும் அதை தொடவில்லை. “அதை சிரித்தபடி எதிர்கொள்க… அஞ்சாதே” என்று இளைய யாதவர் சொன்னார். “அது முதன்முதலாக மானுடரைக் கண்டு விளையாடவரும் வேங்கைக்குருளை. அதற்கு துளிக்குருதியின் மணம் கிடைப்பதுவரை அது குழந்தை. அதை நோக்கி புன்னகை செய். அதை குழவியென்றே நினை. ஒருபோதும் அதன் ஒரு நகக்கீறலும் உன்மேல் விழ இடமளிக்காதே.”

சித்தாஸ்திரம் இடித்தொடர்களை எழுப்பியது. வானம் இருண்டு கருமைகொண்டு வளைந்த தகடுபோலாகியது. அதில் மின்னல்கள் நெளிந்தன. நூறுநூறு முகங்கள் தெளிந்து தெளிந்து அணைந்தன. உறுமல்கள். ஓலங்கள். விந்தைமொழியிலமைந்த கூக்குரல்கள். இருண்ட சிறகுகளுடன் விழிகள் மின்ன பறந்தன கழுகுகள். நெளிந்து நெளிந்து நிறைந்தன நாகங்கள். விழிகளெரியும் பேயுருவங்கள் வெண்பற்களைக் காட்டி நகைத்தன. சிறகுகள் எழுந்த, கைகள் பெருகிய, நச்சுக்கொடுக்குகள் கொண்ட பாதாளமூர்த்திகள் பறந்தணைந்தன. “அஞ்சாதே. ஒருகணமும் அஞ்சாதே. அதில் உன்னை பார். உன்னுருவை அங்கே கண்டால் அதில் உன்னை பொருத்திக்கொள்.”

அர்ஜுனன் விழிகளை ஓட்டி அந்தக் கொடிய வெளியை நோக்கினான். கோள்கள் சுழலும் கடுவெளி. உருகிமறைந்தன உலகுகள். தெளிந்தெழுந்தன புதிய உலகங்கள். இருண்ட நீர்கள். எல்லையற்ற இருளில் எழுந்து எழுந்து அமைந்தன எரிவிண்மீன்கள். எத்தனை முகங்கள்! எத்தனை முகங்கள்! எவரெவர் இவர்? என் மூதாதையரா? என் ஆசிரியர்களா? என் எதிரிகளா? என் குடிக்கு விந்து அளித்தவர்கள் போலும். என் குடிக்குரிய சொல்லளித்தவர்கள் போலும். என் முகம் எது? இதோ எந்தை முகம். அது என் மூத்தவரின் முகம். அதோ பீமன். அதோ நகுலனும் சகதேவனும். கனிந்து புன்னகைத்து வருபவன் துரியோதனன். உடனிருப்பவர்கள் அவன் இளையோர். பீஷ்மர் மணிமுடி சூடியிருக்கிறார். துரோணர் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கிறார். பள்ளிகொண்டிருக்கிறார் சல்யர். நான் யார்?

அவன் பதைப்புடன் விழியலைத்து தேடினான். பொழுது செல்கிறது. இது ஒருகணம். கனவுகள் எல்லாமே ஒரு கணங்கள். அவர் சொன்னதும் நான் கேட்டதும். நான் தேடுவதும் தேடத்தேட இவ்வெளி விரிந்தகல்வதும். யார் நான்? அதோ அக்கரிய உடல். ஆம், அது நான். அவன் அதை நோக்கி பாய்ந்து செல்வதற்குள் உணர்ந்தான் அது கர்ணன் என. ஆனால் அங்கு சென்று கர்ணனாக நின்று திரும்பி நோக்கினான். அங்கே காண்டீபம் ஏந்தி நின்றிருந்த கரிய உடல்கொண்ட அர்ஜுனனை கண்டான். “கீழ்மகனே!” என்று கூவியபடி தன் அம்புகளால் அவனை அறைந்தான். அர்ஜுனனின் தலையை கொய்துசென்றது சித்தாஸ்திரம். கூந்தல் வேர்களென நிலத்தில் பரவ தலை கிடந்தது. “ஆம், நீ அதை வென்றாய்!” என்றார் இளைய யாதவர்.

துரியாஸ்திரம் ஓசையற்றிருந்தது. உருவமும் இல்லாமலிருந்தது. ஒரு விழியதிர்வென மட்டுமே அதை உணரமுடிந்தது. “அதை நோக்காதே. அதை நாவோ செவியோ அறியலாகாது. அது நஞ்சு. ஒரு துளியால் மாமலைகளை கரைத்தழிக்கும் ஆற்றல்கொண்டது. அதை வெல்லும் வழி ஒன்றே. கருக்குழவி என சுருண்டுகொள். உன் கைவிரலை வாய்க்குள் விட்டு உன்னையே சுவைத்து உன்னை மட்டுமே அறிந்து பிறிதொன்றிலாது இரு!” அத்தேரே கருப்பை என்றாக அர்ஜுனன் சுருண்டு விழுந்தான். தன்னை அன்றி வேறெதையும் அறியாதவனானான். மீண்டெழுந்தபோது அனைத்தும் வெளுத்திருந்தது. புன்னகையுடன் இளைய யாதவர் சொன்னார் “நச்சுக்கொடியால் உணவூட்டப்படுவது கருக்குழவி. நஞ்சை வென்று உயிரெழும் வழி அறிந்தது அது மட்டுமே.”

சூதரே, மாகதரே, நான் கண்டேன். அங்கே வடவைப் பேரனல் எழுந்திருந்தது. அனைத்தையும் உண்டு உண்ன உண்ண பசிகொண்டு எழும் ருத்ரன். இங்குள்ள ஒவ்வொன்றும் தங்கள் ஆழத்தில் அவனுடைய ஒரு துளியை கொண்டுள்ளன. அதற்கு எதிராக அவை கொண்டுள்ள ஈரமே உயிர் என்க! ருத்ரனை வாழ்த்துக! மூவிழியன் நுதலென விளங்கும் அவனை வணங்குக!

 

கர்ணனும் அர்ஜுனனும் போரிட அவர்களின் மைந்தர்கள் இருபுறமும் நின்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். விருஷகேதுவும் சுஷேணனும் சத்ருஞ்ஜயனும் திவிபதனும் பாணசேனனும் அரைவட்டமாக நின்று சுருதகீர்த்தியையும் சுருதசேனனையும் எதிர்த்தார்கள். சுருதசேனனின் உடலில் அபிமன்யு தோன்றினான். “செல்க! கொன்று வீழ்த்துக!” என அவன் ஆணையிட சுருதசேனனின் வில்திறன் பெருகிக்கொண்டே சென்றது. சுருதகீர்த்தி சினம்கொண்டிருந்தான். அது தன்மேல் அவன் கொண்ட சினம். தன்மீதான சினத்தை வெல்ல மானுடர் அதை பிறர்மேல் பெருக்கிக்கொள்கிறார்கள். சுருதகீர்த்தியின் விழிமுன் விருஷசேனனின் உருவாகவே கர்ணனின் மைந்தர் நின்றிருந்தனர். கொல்லும் வெறியுடன் அவன் அவர்களை அம்புகளால் அறைந்தான். விருஷகேது பின்னடைய மெல்ல தேர்மாறி அங்கே திவிபதன் வந்தமைந்தான். திவிபதனின் அம்புகள் சுருதகீர்த்தியை நிகர்செய்தன. சுருதசேனனை எதிர்த்துச்சென்ற சத்ருஞ்சயனும் பாணசேனனும் பின்னடைய அவர்களுக்கு சுஷேணன் சென்று துணையளித்தான்.

கர்ணனின் அம்புகள் விசையெழுந்தபடியே வந்தன. அர்ஜுனன் அணுவணுவென பின்னடைந்தான். அம்புகளால் ஒரு வேலியை எழுப்பியதுபோல் அவனை வளைத்துக்கொண்டிருந்தான் கர்ணன். அர்ஜுனன் வீழ்ந்துகிடந்த யானை ஒன்றை நோக்கியபோதுதான் அவன் எத்தனை பின்னடைந்திருந்தான் என்பதை உணர்ந்தான். எஞ்சிய வெறியை திரட்டிக்கொண்டு கர்ணனை கருடாஸ்திரத்தால் தாக்கினான். அதை அவன் கிரௌஞ்சாஸ்திரத்தால் உடைத்தான். சீற்றத்துடன் பற்களை நெரித்தபடி அர்ஜுனன் வருணபாஷாஸ்திரத்தை எடுத்தான். அது நகைப்பொலி எழுப்பியபடி அலையலையெனச் சென்று கர்ணனை தாக்கியது. அவன் தாபாஸ்திரத்தால் அதை பல துண்டுகளாக பிளந்தான்.

வெறியுடன் அஞ்சலிகாஸ்திரத்தை அர்ஜுனன் எடுக்க இளைய யாதவர் கைநீட்டி அவனை தடுத்தார். “அந்த அம்பை வீணாக்காதே. அது இப்போது அவனை கொல்லாது. ஆற்றல்மிக்க அவனுடைய அம்புகள் அனைத்தும் வெளிவரட்டும். அதிலுறையும் தெய்வத்தை வணங்கி மீண்டும் ஆவநாழியில் வை.” அர்ஜுனன் “எழுந்த தெய்வமே அமைக! உங்கள் இலக்கு துலங்குவது வரை என் ஆவநாழியில் கோயில்கொண்டமர்க!” என்று சொல்லி அதை மீண்டும் வைத்தான். கர்ணனின் துவஷ்டாஸ்திரமும் பர்வதாஸ்திரமும் வந்து அவனை அறைந்தன. அவன் தேர் அலைகளிலென துள்ளி நிலைமறிந்தது. புரவிகளை ஆணையிட்டு தாவவும் அமையவும் வைத்து அந்தக் கொந்தளிப்பை இளைய யாதவர் தவிர்த்தார்.

“அவன் இறப்பை தேரவேண்டும்… விழையாது உயிர்துறப்பதில்லை சான்றோர்…” என்று இளைய யாதவர் கூறினார். “அவன் இனி இழக்க இருப்பது மைந்தர்செல்வத்தை மட்டுமே. அதை வெல்க!” அர்ஜுனன் “நமது மைந்தர்கள் களம் நின்றிருக்கிறார்கள்” என்றான். “அவன் நம் மைந்தரை கொல்லப்போவதில்லை” என்றார் இளைய யாதவர். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “கொல்வதென்றால் முன்னரே அவனால் கொன்றிருக்க முடியும்” என்றார் இளைய யாதவர். “அவன் மைந்தர் சினந்தெழுந்து நம் மைந்தரை கொல்லக்கூடும்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர்கள் அவன் உள்ளத்தின் ஆணையை கடக்கமாட்டார்கள்” என்றார் இளைய யாதவர். “மைந்தர் என அவன் பெருகியிருக்கிறான். ஒவ்வொரு மைந்தர் இறக்கையிலும் ஒருமுறை அவன் இறப்பான். இறந்து இறந்து இறப்பு நோக்கி வருவான்… கொல்க!”

அர்ஜுனன் கர்ணனை கௌமோதகம் என்னும் அம்பால் அறைந்தான். அதை வெல்ல கர்ணன் சூர்யாஸ்திரத்தை தொடுத்தான். நீலநிறமான சுடர்வெடித்து களம் ஒளியால் இருண்ட கணத்தில் முன்னரே இடம்குறித்து உளத்தில் பதித்துவைத்திருந்த அர்ஜுனன் சாம்பவி என்னும் அம்பால் திவிபதனை தாக்கினான். ஒளிக்குள் ஒளியென அவன் தேர் வெடித்து எழுந்து தெறித்தது. ஒளியிருண்டு உலகென மாறியபோது எரிந்துகொண்டிருந்த திவிபதனின் தேர் உடல்பற்றிக்கொண்ட புரவிகளுடன் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. அள்ளி வீசப்பட்ட திவிபதனின் உடல் துண்டுகளென நிலத்தில் கிடந்தது. கால்கள் வலிப்புற வெட்டுண்ட இடைக்கீழ் உடல் துள்ளியது.

“அங்கனே, இக்களத்தில் இதோ நீ மீண்டும் இறந்தாய்” என்று கூவியபடி அர்ஜுனன் கர்ணனை அசனி என்னும் பெருமுழக்கமிடும் அம்பால் அறைந்தான். திவாகராஸ்திரத்தால் அதை உடைத்தெறிந்தான் கர்ணன். அவன் சினம்கொள்ளவில்லை என்பதை, சிறுநடுக்குகூட அவன் உடலில் எழவில்லை என்பதை அர்ஜுனன் கண்டான். “அதை கருதாதே… அவன் சினந்தால், அழுதால் அது வெளியேறுகிறது. இப்போது அது உள்நுழைந்து இறுகுகிறது. அவன் மைந்தர்களை வீழ்த்து” என்று இளைய யாதவர் கூறினார். திரண்டு எழுந்து தாக்க வந்த விருஷகேதுவையும் சுஷேணனையும் சுருதகீர்த்தி தன் முழு விசையாலும் அறைந்து தடுத்தான். சத்ருஞ்ஜயனும் பாணசேனனும் சுருதசேனனால் தடுக்கப்பட்டார்கள். அப்பால் வட்டமிட்டு நின்றிருந்த படைவீரர்கள் சொல்லடங்கி விழிகளென்று நின்றிருக்க அங்கே அவர்கள் சிறிய சுழல்காற்றென ஒருவரையொருவர் சுற்றிக்கொண்டு போரிட்டனர். அவர்களின் வட்டத்திற்குமேல் அம்புகள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முட்டி அங்கேயே உதிர்ந்துகொண்டிருந்தன.

அர்ஜுனன் கர்ணனை நோக்கி வித்யுத் என்னும் அம்பை தொடுத்தான். விழியதிர அது மின்னி கர்ணனை தாக்க அவன் பானு என்னும் அம்பால் அதை தடுத்தான். ஒளியை ஒளி தடுக்க உருவான கணப்பொழுதில் அர்ஜுனன் துஜாஸ்திரத்தால் விருஷகேதுவை தாக்கினான். வெடித்தெழுந்த தேரிலிருந்து விருஷகேதுவின் உடல் தெறித்து விழுந்தது. கர்ணன் அரைக்கணம் விழிதிருப்ப அந்த இடைத்தருணத்தில் அர்ஜுனன் இருண்ட அலையெனச் சுருண்டெழுந்து உறுமிச்சென்று தாக்கிய வாரிதாஸ்திரத்தால் சுஷேணனை தாக்கி கொன்றான். இருளகன்றபோது கவிழ்ந்த தேரின் கீழ் சுஷேணன் மண்ணில் விழுந்து கிடந்தான். விழிமீண்டு திகைத்த புரவிகள் தேரை இழுத்தபடி அப்பால் செல்ல உயிரிழந்த பாகனின் உடல் இழுபட்டபடி பின்னால் சென்றது.

கர்ணன் மோகனாஸ்திரத்தை ஏவினான். அக்கணமே அங்கிருந்த அனைத்துக் காட்சிகளும் மறைந்தன. “அவன் அஞ்சிவிட்டான். எஞ்சிய மைந்தரை காக்க எண்ணுகிறான். அவ்வச்சமே நமக்கெனத் திறந்த வாயில். அதில் நுழைக!” என்று இளைய யாதவர் கூவினார். “சம்மோஹனாஸ்திரத்தை ஏவுக… அது நாம் விழைந்த காட்சியை இம்மாயையில் உருவாக்கி அளிக்கும்…” சம்மோஹனாஸ்திரத்தால் தெளிந்த காட்சியில் கர்ணன் ஒளிரும் அருமணிகள் கொண்ட மும்முடி சூடி பொற்தேரில் நின்றிருந்தான். அவனுக்கு இருபுறமும் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் படைத்துணைவர்களாக வந்தனர். கர்ணனின் அம்பு வந்து அர்ஜுனனின் தேரை அறைந்து அதிரச்செய்தது.

அந்த உலுக்கலில் அர்ஜுனன் அக்கனவிலிருந்து வேறெங்கோ விழித்தெழுந்தான். அங்கே சித்ரகூடத்தின் ஏரிக்கரையில் அவன் தன் நீர்ப்பாவையை நோக்கி அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தான். அருகணைந்த முனிவர் ஒருவர் அவனிடம் “ஆம், அவ்வாறே. தன்னை வெல்பவனே அறுதியாக கடந்துசெல்கிறான்” என்றார். அது கனவென உணர்ந்து அவன் உலுக்கிக்கொண்டபோது கர்ணனின் அம்புகளால் உடைந்து அதிர்ந்துகொண்டிருந்த தேரில் குருக்ஷேத்ரத்தில் நின்றிருந்தான். மீண்டுமொரு உளப்புரளல் வழியாக அவன் மாயைக்குள் நுழைந்தான். வெறியுடன் கூச்சலிட்டபடி சுருதகீர்த்தியையும் சுருதசேனனையும் தாக்கினான்.

கூரிய அம்புகளால் அவர்களை அவன் அறைந்தான். “தந்தையே! தந்தையே!” என அவர்கள் கூச்சலிட்டார்கள். கவசங்கள் உடைந்து தெறித்தன. தோளிலைகளும் தொடைக்காப்புகளும் சிதறின. தலைக்கவசம் பிளந்தது. நெஞ்சில் பாய்ந்த அம்புடன் சுருதசேனன் தேரிலிருந்து பின்னால் விழுந்தான். அவன் தேர்ப்பாகன் தேரை இழுத்து நிறுத்த தேரின் தூணில் சிக்கிய வில்லுடன் அவன் உடல் இழுபட்டு வந்தது. சுருதகீர்த்தி “தந்தையே! வேண்டாம்!” என்றான். அவன் இளமைந்தனாக தெரிந்தான். அர்ஜுனன் நாணை செவிவரை இழுத்து அம்புதொடுத்து அவன் தலையை துண்டித்தான். மூளியுடல் ஆடி முன்விழ தலை பின்னால் விழுந்து தேரிலிருந்து உருண்டது.

அர்ஜுனன் தள்ளாடியபடி தேரில் பின்னடைந்து தூணை பற்றிக்கொண்டான். விழிகள் மீண்டபோது சத்ருஞ்சுருசயனும் பாணசேனனும் தேரிலிருந்து விழுந்துவிட்டிருப்பதை கண்டான். கர்ணனின் விழிகளை சந்தித்தபோது அவன் உள்ளம் திகைப்படைந்தது. அவை கனிந்திருந்தன. நோயுற்ற குழவியை நோக்கும் அன்னைபோல. அவன் கைகள் காண்டீபத்திலிருந்து நழுவின. “கொல்க அவனை… எதிர்த்து நில். உளம் பின்னடைகிறது உனக்கு. எழுக… எதிர்த்து எழுக!” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் விழிகளை நோக்காதொழிக… அவனை எந்நிலையிலும் நேர்விழிகொண்டு பார்க்காதே… அவன் கைகளை நோக்கு. நீ பிளக்கவேண்டிய அவன் நெஞ்சை மட்டும் நோக்கு.” அர்ஜுனன் அப்போதும் உள்ளம் செயலற்றிருந்தான்.

அவன்மேல் தாக்கவந்த அம்புகளை தேர்சுழற்றி ஒழிந்தபடி இளைய யாதவர் சொன்னார் “மைந்தர் விலகிச் செல்லட்டும்… மைந்தருக்கு இனி இங்கு போரில்லை. இது உங்கள் இருவருக்குமான போர் மட்டுமே.” சுருதகீர்த்தியும் சுருதசேனனும் அர்ஜுனனின் கையின் ஆணைக்கேற்ப பின்னடைந்தனர். சுருதகீர்த்தியின் முகம் கசப்புகொண்டு சுருங்கியிருந்ததை அர்ஜுனன் கண்டான். வில்லை தேர்த்தட்டில் ஓங்கி வீசிவிட்டு அவன் தேர்ப்பீடத்தில் அமர்ந்தான். சுருதசேனன் களைத்தவனாக தேரிலிருந்து இறங்கி தள்ளாடி நடந்து கீழே விழுந்தான். ஏவலர் அவனை நோக்கி ஓடிவந்து தூக்கிச் சென்றார்கள்.

அர்ஜுனன் கர்ணனை அம்புகளால் அறைந்தபடியே இருந்தான். ஒரு கட்டத்தில் மலையை நோக்கி அம்புகளைத் தொடுப்பதாக உளமயக்கு தோன்றியது. அல்லது நீரில் தெரியும் மலையின் பாவை நோக்கி. அவன் செலுத்திய அவனுடைய அனைத்து அம்புகளும் வீணாகிக்கொண்டிருந்தன. அவன் மீண்டும் அஞ்சலிகா அம்பை எடுக்க முயல அதை முன்னுணர்ந்து இளைய யாதவர் கூவினார் “வேண்டாம். வேழம் உளைச்சேற்றில் சிக்கவேண்டும்… இப்போது உன்னிடமிருக்கும் எந்த அம்பும் வீணாகிவிடும்…” அர்ஜுனன் ஐராவதாஸ்திரத்தால் கர்ணனை அறைந்தான். மத்தகத்தால் முட்டப்பட்டதுபோல் கர்ணனின் தேர் அதிர்ந்து நிலைகொண்டது. தேரைச் செலுத்திக்கொண்டிருந்த கர்ணனின் குடிமைந்தன் சம்பரன் அர்ஜுனனின் அம்புகள் பட்டு விழுந்தான். அவனுடைய இளையோனாகிய விருஷநந்தனன் அக்கணமே பாய்ந்து தேரிலேறிக்கொண்டு கடிவாளத்தை இழுத்துப்பிடித்து மீண்டும் செலுத்தினான்.

அர்ஜுனன் ஒவ்வொரு அம்பாக செலுத்தியபடி மேலும் மேலுமென பின்னடைந்தான். கர்ணன் ஊழ்கத்தில் இருப்பதுபோலத் தோன்றினான். அவனுடைய கைகள் சுழன்று அம்புகளை தொடுத்தன. அவை வந்து அறைந்து அர்ஜுனனின் அம்புகளை சிதறடித்தன. கர்ணன் பார்கவாஸ்திரத்தை எடுத்தபோது இளைய யாதவர் “தேரில் தலைகுனிந்து அமர்க… தேரில் அமர்க!” என்று கூவினார். அந்த அம்பை எடுத்தபோது கர்ணன் வஞ்சினம் உரைக்கவில்லை. அவன் விழிகளிலும் சினம் தெரியவில்லை. ஆகவே அர்ஜுனன் அதை முற்றுணரவில்லை. “விரைந்து அகல்வதொன்றே வழி… அமைந்துகொள்க!” என்று கூவியபடி இளைய யாதவர் தேரை பின்னடையச் செய்து திருப்பி விரைந்தோட வைத்தார்.

பார்க்கவாஸ்திரம் அவர்களை துரத்தி வந்தது. புயல் அணுகுவதுபோல் அது எழுந்து வந்து அலையலையாக நிலத்தை அறைந்தது. துணிப்படலம்போல் நிலம் நெளிந்து வளைந்தது. அலைகடல்மேல் நின்றிருக்கும் கலங்கள்போல் அங்கிருந்த தேர்களெல்லாம் எழுந்தமைந்தன. “பிறிதொரு தேருக்கு பாய்ந்துவிடு… செல்” என இளைய யாதவர் கூவினார். அர்ஜுனன் காண்டீபத்தை ஊன்றி எழுந்து பாய்ந்து அப்பால் நின்ற போராளி இல்லாத பாகனில்லாது ஒழிந்த தேரில் தொற்றிக்கொண்ட கணத்தில் பார்க்கவாஸ்திரம் தேரை அறைந்தது. தேர் எழுந்து விண்ணுக்கென பாய்ந்து மேலேறி அதே விசையில் கீழே விழுந்தது. இளைய யாதவரின் உடல் எரிபடர்ந்து தழல்கொண்டது. செங்கனலென அவர் உருவம் தெரிந்தது.

“யாதவரே!” என அர்ஜுனன் கூவினான். விழுந்த தேரிலிருந்து புரவிகள் நான்கு பக்கமும் சிதறிப்பரந்தன. அமரத்தில் அமர்ந்திருந்த இளைய யாதவர் பொன்னுருக்கி வடிக்கப்பட்ட சிலைபோல் தோன்றினார். “யாதவரே” என்று கூவியபடி அர்ஜுனன் அவரை நோக்கி ஓடினான். பொன்வடிவமாக இளைய யாதவர் சிரித்தார். “இனி அவனிடம் அரிய அம்புகள் இல்லை” என்றார். “யாதவரே… நீங்கள்தானா இது?” என்றான் அர்ஜுனன். “ஏறிக்கொள்க!” என்றார் இளைய யாதவர். அவர் குளிர்ந்து மெய்வண்ணம் கொண்டபடியிருந்தார். புரவிகள் எழுந்து உடலை உதறிக்கொண்டு கனைத்தன. “இனி அவனை எதிர்கொள்க… இனி எஞ்சியிருப்பது அஞ்சலிகாஸ்திரம் ஒன்றே” என்று இளைய யாதவர் சொன்னார்.

அர்ஜுனன் தேரிலேறிக்கொண்டான். இளைய யாதவர் சவுக்கை காற்றில் சுழற்றி ஆணையிட புரவிகள் விசைகொண்டு முன்னேறின. விஜயத்தை நிலையூன்றி அம்புகளைத் தொடுத்தபடி அணுகிய கர்ணனை நோக்கி அர்ஜுனன் சென்றான். முதல்முறையாக அவன் உள்ளத்தில் கர்ணனை கொல்லமுடியும் என்னும் உறுதி எழுந்தது.

 

நான் அந்தப் போரை பார்த்துக்கொண்டிருந்தேன், தோழர்களே. விழியிழந்தோன் பார்க்கும் போருக்கு நிகரென ஏது இங்கு நிகழமுடியும்? பொருள்மயக்கு அளிக்கும் பொருட்களேதும் அங்கில்லை. பொருளென்று மட்டுமே பொருட்கள் அமைந்த அவ்வெளியில் பொருள்கொள்ளாத ஒன்றும் இல்லை. நான் அப்போரை கண்டேன். விண்ணில் திகழ்ந்த சூரியனும் இந்திரனும் தவிப்பதை நோக்கினேன். தேவர்களும் மூதாதையரும் நின்று பதைப்பதை கண்டேன். யயாதி முதலாய சந்திரகுலத்தவர் அனைவரையும் கண்டேன். பிரதீபனை சந்தனுவை விசித்திரவீரியனை கண்டேன். பாண்டுவை கண்டேன்.

தோழரே, அங்கே நான் சத்யவதியை கண்டேன். அம்பிகையை அம்பாலிகையை பார்த்தேன். தழலென குழல் எரிந்துகொண்டு நின்றிருந்த அம்பையையும் கண்டேன். சுனந்தையை, தபதியை கண்டேன். அவர்களுக்குப் பின்னால் நின்றிருப்பவர் எவர்? ஆம், அவர்கள் விண்ணுறை தேவியர். நான்முகி, எரிவிழியள், இளையோள், ஆழியள், பன்றியள், தேவதேவி, மண்டைமாலையள். தோழரே, தந்தையரும் தேவரும் தவிப்பு கொண்டிருக்க அன்னையரும் தேவியரும் மட்டும் வஞ்சம் எரியும் விழிகளுடன் நின்றிருப்பது ஏன்? அவர்களின் நாவுகளில் குருதிவிடாயை காண்கிறேன். அவர்கள் அனைவரையும் தன்னிலேந்தியவள்போல் நின்றிருக்கும் பேருருக்கொண்ட அவள் யார்?

எங்கு கண்டுள்ளேன் அவளை? ஆயிரம் தலைகொண்டவள். பல்லாயிரம் கைகொண்டவள். உடலெங்கும் முலைகள் கனிந்து செறிந்தவள். அவள் புவிமகள். அவளை இங்ஙனம் கண்டதில்லை. அளிபெருகும் இன்விழிகொண்டவள் அல்லவா? குருதிவிடாய்கொண்ட நாவு அவளுக்கும் உண்டா? இங்கு அனைவருடனும் போரிட்டுக்கொண்டிருந்தவள் அவள்தானா? அனைவரும் போரிட்டது அவளுடன்தானா? அனைவரும் சென்றுவிழுந்தது அவள் மீதா? தோழரே, இக்குருதிப்பெருக்கை எல்லாம் குடித்துக்குடித்து களிகொண்டவள் அவளா என்ன?

உறுமி மீது மூங்கிலோட்டி கும்பகர் பாடினார். “கதிர் அணையும் போர். இடியெழுந்து மின்னல்சூடி வென்று நின்றிடும் போர். எஞ்சாது ஒளியழிய இருள்சூடி புவிமகள் நின்றிருக்கும் போர்… என்றுமுள்ள பெரும்போர். நான் காண்கிறேன். அதை இதோ நான் காண்கிறேன்!”

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 57

பதினொன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான கும்பகர் பெரிய மண் கலத்தின் வாயில் மெல்லிய ஆட்டுத்தோலை இழுத்துக் கட்டி உருவாக்கப்பட்டிருந்த உறுமியின்மீது மென்மையான மூங்கில் கழிகளை மெல்ல உரசி மயில் அகவும் ஒலியையும் நாகணவாய் புள்ளின் கூவலையும் எழுப்பி அதனுடன் இணைந்துகொண்ட தன் ஆழ்ந்த குரலில் கர்ணன் அர்ஜுனனை எதிர்கொண்ட போர்க்களத்தின் இறுதிக் காட்சியை சொல்லில் வடிக்கலானார். சூதர்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள ஒருவர் விட்ட சொல்லை பிறிதொருவர் எடுக்க ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் தகைமைகொண்ட சொற்கள் காட்சிகளென மாறி எழுந்தன.

கும்பகர் விழியிழந்தவர். அவருடைய இரு கண்களும் செங்குழிகளாக அவர் சொற்களுக்கேற்ப அசைந்தன. அவை வெளித்தெரியா சிலவற்றை எங்கோ நோக்குபவைபோல. “இரு குருதிக்குழிகளால் நோக்குகிறேன் இக்களத்தை. குருதியின் செவ்வொளி கொண்ட கண்களால். சூதரே, மாகதரே, இக்குருக்ஷேத்ரப் பெருங்களத்தை வேறெங்ஙனம் நோக்க இயலும்?” என்று அவர் சொன்னார். “எந்தையும் விழியிழந்தவர். பரசுராமரின் ஐங்குருதிக் குளத்தை அழகுறச் சொன்னவர் அவர். அவர் சொல்லி அமர்ந்த அந்தப் பாறையை ஐங்குருதிச்சொல் என இன்றும் தெற்கே வழிபடுகிறார்கள். பரசுராமரின் குருதிக்குளத்தை பாதாளதெய்வங்கள் கடைந்தபோது எழுந்த வெண்ணெய் அது என்கிறார்கள்.”

“குருதி கடைந்து நெய்யெடுக்கும் சூதர்களில் ஒருவன். குருதிநெய்யை வஹ்னிக்கு அளித்து தேவர்களை எழுப்புபவன். சொல்லில் எழும் தேவர்களை சொல்லனலில் அவியாக்கி வடவையை எழுப்புபவன். முக்கண்ணனின் முனிவெனத் திகழும் வடவை அமைந்த என் சொற்களை செவிகொள்க! இவை அத்தனை சொற்களையும் உரசி அனலெழச் செய்க! ஆம், அவ்வாறே ஆகுக!” கூடியிருந்த சூதர்கள் கைகளைத் தூக்கி சொல்பிரியா கார்வை என “ஆம், அவ்வாறே ஆகுக!” என ஏற்பொலி எழுப்பினர்.

சூதரே, மாகதரே, இங்குள்ள பருப்பொருட்கள் அனைத்தும், அவற்றை ஆளும் நெறிகள் அனைத்தும், அவற்றிலிருந்து எழும் உணர்வுகள், எண்ணங்கள், மெய்மைகளும் வெறுமைகளும் கூட சொல்லிலிருந்து எழுந்தவை. அவையனைத்தும் தங்கள் ஆடல் முடித்து மீண்டும் சொல்லுக்கே திரும்புகின்றன. ஒவ்வொரு சொல்லும் ஒரு புடவி. ஒவ்வொரு சொல்லும் ஒரு தனி தெய்வம். ஒவ்வொரு சொல்லும் ஒரு கடுவெளி. சொற்களை இணைக்கின்றது இசைவு. இசைவில் தன்னை வெளிப்படுத்துகிறது பிரம்மம். இசைவென்று ஆன ஒன்றை இங்கு வழுத்துக!

இங்கிருந்து சொல்லெடுக்கும் நான் குருக்ஷேத்ரப் பெருங்களத்தை ஊன்விழிகளால் பார்த்ததே இல்லை. பிறர் உரைக்கும் சொற்களைக்கொண்டு அவற்றை நான் வரைகிறேன். பார்த்துச் சொல்வது எல்லை கொண்டது. பாராதது முடிவிலாது விரிவது. சூதரே, நாம் இக்களத்தினை அகன்று நின்று பார்க்கிறோம். அங்குள்ள ஒவ்வொருவரிலும் கூடு பாய்ந்து அங்கே நிகழ்கிறோம். கொல்பவனும் கொல்லப்படுபவனும் ஆகிறோம். அச்சமும் வஞ்சமும் துயரமும் ஐயமும் வெறுமையும் என அனைத்து உணர்வுகளையும் அடைகிறோம்.

இப்போர்க்களத்தில் இங்கு நிகழாத பல போர்களை நாம் நிகழ்த்துகிறோம். ஒன்றுக்கு மேல் ஒன்றென புடவிகளை அடுக்கி அடுக்கி மேல் செல்பவர்கள் நாமெல்லாம். நாம் சொன்னவை நம்முள் வளர்கின்றன. நம்மிலிருந்து எழுந்து பரந்து நம்மை சூழ்கின்றன. நம்மை அள்ளித்தூக்கி கொண்டுசென்று தங்கள் உலகை நமக்கு காட்டுகின்றன. எது நிகழ்ந்தது என நாம் அறிவதில்லை. எவரும் எது நிகழ்ந்ததென்று அறியப்போவதும் இல்லை. இங்கு நிகழ்ந்த போர் இங்கிருந்த முடிவிலா படைப்பெருக்கின் ஒவ்வொரு வீரனின் விழிக்கும் ஒவ்வொன்று. சூதரே, அவன் விழி காணும் ஒவ்வொரு கணத்திலும் அது ஒவ்வொன்று.

ஒருவராலும் காணப்படாத ஒரு போர் அங்கு நிகழ்ந்து முடிந்திருக்குமா? இருவர் கண்ட ஒரே போர் ஒன்று என்று எங்கு நிகழ்ந்திருக்கும்? இங்கிருந்து நம் சொல்லில் முளைத்துச் செல்லும் இப்போர் இனியெத்தனை வடிவங்கள் எடுக்கும்! அவ்வடிவங்களினூடாக என்றேனும் எவரேனும் இப்போரை வந்தணைய இயலுமா என்ன? எனில் இங்கு அமர்ந்து எப்போரை நாம் பாடுகிறோம்? ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் நிகழும் போரை அல்லவா சொல்லடுக்கி எழுப்புகிறோம்? இதை கேட்கும் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் குருக்ஷேத்ரக் களம் அமைக்கிறார்கள் அல்லவா?

போர் ஒழியா குருநிலம் வாழ்க! அழியாது நிலைகொள்க இந்த அறநிலம்! என்றும் ஒழியாது நிகழ்க இங்கு இந்தப் போர்! இம்மண்ணில், இக்குருதியில், இவ்வனலில் இங்கு எழுந்தவை என்றுமென உள்ளங்களில் தெளிக! வாளுழுது குருதிபாய்ச்சி பதம்வந்த புது மண்ணில் வேர் விட்டெழுக பூத்து கனியாகி விதைகொண்டு பெருகும் புதிய வேதச்சொல்! ஆம், அவ்வாறே ஆகுக!

கும்பகர் சொன்னார்: குருக்ஷேத்ரக் களத்தில் கர்ணன் அர்ஜுனனை எதிர்த்து போர்புரிந்து கொண்டிருந்தான். அக்காட்சியை மெல்ல மெல்ல களத்திலிருந்த ஒவ்வொருவரும் காணத்தொடங்கினர். படைக்கலம் தாழ்த்தி தேர்களில் திகைத்து நின்று அவர்கள் அவ்விருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவ்விருவரின் உடலிலும் அவர்கள் சொல்லில் அறிந்ததும் விழி நோக்கி தெரிந்ததுமாகிய அனைத்து மாவீரர்களும் எழுந்து வருவதை அவர்கள் கண்டனர். ஒருகணம் அர்ஜுனன் சரத்வானாக மாறி மழைத்துளிகளென அம்பு பெருக செய்தான். பரசுராமரென உருக்கொண்டு நின்று அவனை எதிர்த்தான் கர்ணன். உருவழிந்து உருக்கொண்டு அக்னிவேசர் என நின்றான் அர்ஜுனன். அங்கே கர்ணன் வில் பெருகும் பரத்வாஜர் என மாறினான். அர்ஜுனன் துரோணராக எழுந்தபோது கர்ணன் பீஷ்மர் என நின்றான். பின்னர் இந்திரனென அர்ஜுனன் ஒளிகொள்ள சூரியனென கர்ணன் கதிர்விரிந்தான்.

மைந்தர்களின் போர் காண இருபுறமும் அவர்களின் தந்தையர் வந்து நின்றனர். மேற்கே சரிந்த வான் வளைவில் நீலஒளிவட்டமென அதிர்ந்தான் நாளவன். விளிம்புகள் வெண்ணிறக் கதிர்ச் சுடர்கள் பெருக சுழன்றான். கிழக்குச் சரிவில் முட்டி மோதி மேலெழுந்து வந்த கருமுகில்களுக்கு நடுவே எழுந்த ஏழு வண்ண வில்லென இந்திரன் தோன்றினான். வெயிலும் மழையும் அக்களத்தில் நிகழ்ந்தன. கிழக்கிலிருந்து இடியோசையும் மின்னலும் எழுந்தது. அருமணிகளை வீசியதுபோல் மழைக்கற்கள் வந்தறைந்து குருக்ஷேத்ரக் களத்தை துளிகொதிக்கச் செய்தன. மேற்கிலிருந்து நூறாயிரம் மடைகள் திறந்து ஒளியே வெள்ளமென பெருகிப் பாய்ந்ததுபோல் குருக்ஷேத்ரத்தை நிரப்பியது கதிரவனின் உருகுதல்.

அம்புப்படுக்கையில் பீஷ்மர் மெல்ல முனகினார். அருகணைந்த மருத்துவனிடம் “என்ன நிகழ்கிறது?” என்றார். “பிதாமகரே, உங்கள் உடலில் புண்கள் சீழ்கட்டாமல் மருந்துகொண்டு நிறுத்தியிருக்கிறோம். ஆயினும் உடலில் காய்ச்சல் கண்டிருக்கிறது. கைகால்களில் வீக்கமும் இணைவுகளில் நெறியும் கட்டியிருக்கிறது. தோல் சிவந்துள்ளது. உடலில் நீர் மிகலாகாதென்பதனால் மிகக் குறைவாகவே உங்களுக்கு நீருணவு அளித்துக்கொண்டிருக்கிறோம்” என்று அவன் சொன்னான். “ஆனால் உங்கள் உடல் ஆற்றல் குன்றாமலேயே இருக்கிறது.”

பீஷ்மர் சலிப்புடன் உதடுகளைச் சுளித்து “நான் கேட்பது களத்தில் என்ன நிகழ்கிறது என்று” என்றார். “அதை நாங்கள் அறியோம். களத்தை நோக்கவோ எண்ணவோ கூடாது என்பது எங்கள் நெறிகளில் தலையாயது” என்றான் அவன். பீஷ்மர் “களம் முனைப்புகொண்டிருக்கிறது” என முனகினார். “ஆனால் ஓசை அடங்கிவிட்டிருக்கிறது” என்றான் மருத்துவன். “ஓசையடங்குகையிலேயே போர் கூர் அடைகிறது” என்று பீஷ்மர் சொன்னார். “நீ அதை நோக்கி சொல்… என்ன நிகழ்கிறது? அங்கன் என்னவானான்?” மருத்துவன் உறுதியான குரலில் “என்னால் இயலாது, பிதாமகரே. எந்நிலையிலும் என் தொழிலின் நெறிகளை நான் கைவிடுவதில்லை” என்றான்.

பீஷ்மர் அவனை சலிப்புடன் நோக்கினார். பின்னர் “எனில் அவ்வோசைகள் எனக்கு நன்கு கேட்கும்படி செய். ஓசைகளே எனக்குப் போதுமானவை” என்றார். “அதை எவ்வண்ணம் செய்வது?” என்றான் மருத்துவன். பீஷ்மர் சுற்றும் நோக்கி “அந்த வேலை எடுத்து அருகே நாட்டு. அதன்மேல் அந்த விரிந்த யானத்தை கவிழ்த்து வை. அதன் உலோகப்பரப்பு ஒலிகளை வாங்கும். அதன்மேல் தொட்டுக்கொண்டிருக்கும்படி ஒரு உலோகக் குறுவேலை வைத்து அதன் மறுமுனையை என் வாயருகே கொண்டுவந்து காட்டு” என்றார். அவன் அவ்வண்ணமே செய்ததும் பீஷ்மர் அதனை தன் பற்களால் கவ்விக்கொண்டார். ஓசைகள் அவர் தலைக்குள் நிறைந்தன. விழிகளை மூடிக்கொண்டதும் அவை காட்சிகளாயின. அவர் களத்தை அருகில் இருந்து என நோக்கத் தொடங்கினார்.

மலைச்சரிவில் நோக்குமாடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் சஞ்சயனிடம் “சஞ்சயா, என்ன நிகழ்கிறது களத்தில்? கர்ணனும் அர்ஜுனனும் போரிடுகையில் எவர் நிலை ஓங்கியிருக்கிறது?” என்றார். சஞ்சயன் தன் தொலையாடியை குவித்தும் அகற்றியும் நோக்கிவிட்டு “அரசே, அங்கே இணையிணையென நிகழ்ந்துகொண்டிருக்கிறது போர். எவர் கை ஓங்குகிறது எவர் கை தாழ்கிறது என அவர்கள் இருவர் மட்டுமே அறியமுடியும். அது கணந்தோறும் மாறிக்கொண்டும் இருக்கிறது. பிறர் தங்கள் விழைவுகளையே அக்காட்சிமேல் ஏற்றிச் சொல்லமுடியும்” என்றான்.

திருதராஷ்டிரர் உறுமினார். அவர் சுபாகுவின் இறப்பை ஒரு சொல் எனக்கூட பொருட்படுத்தவில்லை என்பதை சஞ்சயன் கண்டிருந்தான். மைந்தர்களின் இறப்புக்கு அவர் பழகியிருந்தார். மைந்தர் மறையும் செய்திகள் வருகையில் முதலில் கடுந்துயர் கொண்டார். பின்னர் சீற்றமும் வெறியும் அடைந்தார். பின்னர் ஆழ்ந்த அகத்துயர் அடைந்து சொல்லிழந்தவரானார். பின்னர் அதிலிருந்து வெளியேறும் வாயில் ஒன்றை திறந்தார். அந்தப் போரை வெறுமொரு ஆடலாகக் கண்டார். தன்னை காலம் கடந்து எங்கோ நின்று கதையிலென அதை காண்பவனாக ஆக்கிக்கொண்டார். ஆடலின் வெறி மட்டுமே அவரை இயக்கியது. வெற்றியும் தோல்வியும் மட்டுமே அவர் அறிய விழைவதாக இருந்தது.

“ஆனால் ஒன்றுண்டு, அரசே. ஊழ் இளைய பாண்டவரை ஆதரிக்கிறது. நிமித்திகர் அதைக் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள்” என்று சஞ்சயன் சொன்னான். “இத்தனை தொலைவிலிருந்து நோக்குகையில் அங்கிருக்கும் ஒவ்வொருவரும் அங்கு நிகழ்வதென்ன என்று அறிந்திருக்கிறார்கள் என்றே உணர்கிறேன். இளைய பாண்டவர் வென்றுகொண்டிருக்கிறார். மைந்தன் தன் நெஞ்சிலேறி மிதிக்க அதில் மகிழ்ந்து கொண்டாடும் தந்தையைப்போல் கர்ணன் அந்த வெற்றியை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அந்த ஆடலை சொல்லின்றி, செயலின்றி நிகழ்த்திக்கொண்டு தேரின் அமரத்தில் அமர்ந்திருக்கிறார் இளைய யாதவர்.” திருதராஷ்டிரர் மீண்டும் உறுமினார்.

ஏகாக்ஷரிடம் காந்தாரி கேட்டாள். “என்ன நிகழ்கிறது? உத்தமரே, என் மைந்தன் கர்ணன் வெல்லப்போகிறான் அல்லவா?” ஏகாக்ஷர் களம் மீது கவடி நிரத்தி கலைத்து அடுக்கி ஒற்றை விழிதூக்கி நோக்கினார். “அங்கே எழுந்துகொண்டிருப்பது நான்காம் அனல். வடவை. ருத்ரவிழி. அதை வெல்ல எவராலும் இயலாது” என்றார். காந்தாரி “என் மைந்தன் எங்கும் வெல்வான்” என்றாள். ஏகாக்ஷர் “ஆனால் கவடி காட்டுவது மேலும் ஒன்று. அங்கே ஆழியும் வெண்சங்கும் ஏந்திய விண்ணோன் எழுந்துள்ளான். பதினொரு உருத்திரர்களும் வணங்கும் பெரியோன். அனலை அணைப்பது அவனுடைய பாற்கடல்” என்றார். காந்தாரி நீள்மூச்செறிந்தாள்.

நாகர்குலத்தின் களத்தில் அமைந்த அரவானின் தலை சொன்னது. “கூட்டரே, குலத்தோரே, நான் காண்பது அரவுகள் செறிந்த பெருங்களத்தை. மண்ணுக்கு அடியில் பெருநாகங்கள் படம்தூக்கி எழுகின்றன. அவற்றின் மூச்சுக்கள் களமெங்கும் எழுந்துகொண்டிருக்கின்றன. நாகபாசன் தன் அம்புகளுடன் களத்தில் நின்றிருக்கிறான். அவனுக்கு எதிர்நின்றிருக்கிறது இடிமின்னல்களின் அரசனின் பெரும்படை.”

 

குருக்ஷேத்ரப் பெருங்களத்தின் ஒவ்வொரு மூலையிலும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு படைவீரரும் தங்கள் உச்சத்தில் நின்று பொருதிக்கொண்டிருந்தனர். அத்தனை நாள் நிகழ்ந்த போரிலிருந்து அக்கணத்திற்கான விசையை அவர்கள் திரட்டிக்கொண்டிருப்பதுபோல. அங்கிருந்து முடிவிலாக் காலம் வரை ஒருவரிலிருந்து ஒருவரிடம் தொற்றிக்கொண்டு அந்தப் போர் சென்றுகொண்டே இருக்கும் என்பதுபோல. நிலமெனத் தாங்கி பிறவிக்களமென்றாகி உணவென்றும் இருந்த அன்னத்தின்மேல் நெளியும் புழுக்களைப்போல. அன்னம் ஒழிய ஒன்றையொன்று உண்டாலொழிய அவை உயிர்வாழ முடியாமலாகிவிட்டதுபோல.

போர்களில் பழகியவர்கள் அல்ல அவர்களில் பெரும்பாலானவர்கள். எளிய ஏவலரும் காவலருமென பணியாற்றியவர்கள். போர்களை அவர்கள் கற்பனை செய்து கொண்டதும் இல்லை. நேரில் கண்ட தருணத்திலேயே அஞ்சி உள்ளொதுங்கிக் கொண்டவர்கள். ஆனால் அவ்வாறு அச்சமும் விலக்கமும் கொள்கையிலேயே தங்கள் உள்ளிருந்து ஒன்று எழுந்து போரில் ஈடுபடுவதை, வஞ்சம் கொள்வதை, குருதிக் கூத்தாடுவதை கண்டுகொண்டிருந்தனர். ஒவ்வொருநாளும் பணி முடிந்த பின்னர் அமர்ந்து அவர்கள் போரைப்பற்றியே பேசினர். பேசிப்பேசி பெரிதாக்கிய போருடன் தாங்களும் வீங்கிப் பெருகினர். போரின் ஓசையில் துயின்றபோது கனவுகளில் உருமாறி நின்று போரிட்டனர்.

அவர்களும் போருக்கு எழவேண்டுமென்ற ஆணை அளிக்கப்பட்டபோது முதற்கணத் திகைப்புக்குப் பின் அச்சம் எழுந்து உடலை நடுங்க வைக்கையில் அதன் ஆழத்திலிருந்து கிளர்ச்சி ஒன்றெழுந்து முகங்களை விரியச்செய்தது. அச்சத்தை பகிர்ந்துகொள்பவர்கள்போல அவர்கள் அக்கிளர்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சலித்துக்கொள்பவர்கள்போல் உவகையை வெளிப்படுத்தினர். போரில் எழுந்து முதல் அம்பை தொடுத்ததும் அது உளம்சூடிச் சென்று தங்கள் எதிரியை கொன்று மீண்டது கண்டு மெய்ப்பு கொண்டனர். வேலேந்தி எதிரியின் மெல்லுடலுக்குள் செலுத்தியவர்கள் அக்கணத்தில் முதல் காமத்தை அறிந்தவர்கள்போல் உடல் திளைத்தனர்.

கொன்று கொன்று மேலெழுகையில் பல மடங்கு மேலும் மேலும் கொன்று கொன்று மேலெழும் உளமொன்று தங்களுக்குள் எழுந்திருப்பதைக் கண்டு தாங்கள் தங்களை எண்ணியதைவிட பேருருவர்கள் என்று எண்ணி தருக்கினர். போர் தங்களை விராட உருவம் கொள்ளச்செய்கிறது. ஒருவரோடொருவர் தொடுத்துக்கொண்டு களமெங்கும் பரவச் செய்கிறது. களத்திலிருந்த படைவீரர் அனைவரும் தன் உடலென்று ஆகி விண்ணளாவ தலைநிமிர்ந்து கை சுழற்றிச் செல்ல இயல்கிறது. முதல்நாள் போர் முடிந்து திரும்புகையிலேயே அவ்வுடலுக்குள் அவர்கள் மீண்டும் பிறந்து எழுந்துவிட்டிருந்தனர். விழிகள் கூர்கொள்ள சொல்லடங்கி அவர்கள் அழுத்தம் மிக்கவர்களாக ஆயினர். நிலம்பதிந்த கால் அழுந்த எடைமிக்கவர்கள் ஆகிவிட்டதுபோல் மயங்கினர்.

போர்க்களத்தின் எல்லையில் கிருபரும் சாத்யகியும் பொருதிக்கொண்டிருந்தனர். அஸ்வத்தாமனும் திருஷ்டத்யும்னனும் அனல் கொண்டு போரிட்டனர். பீமனும் துரியோதனனும் எழுந்தும் பின்னடைந்தும் மீண்டெழுந்தும் போரிட்டுக்கொண்டிருந்தனர். கர்ணனும் அர்ஜுனனும் பிறரில்லா வெளியொன்றில் ஒருவரையொருவர் அம்புகளால் தாக்கி ஒருவரையொருவர் வென்று மீண்டும் வென்று சென்றுகொண்டிருந்தனர். இருவரின் தேர்களும் காதல் கொண்ட இரு வண்டுகள்போல் ஒன்றையொன்று சுற்றி வந்தன. அர்ஜுனனின் வெள்ளித்தேர் கர்ணனின் பொற்தேருடன் ஒரு விழிதுலங்கா மென்சரடால் இணைக்கப்பட்டிருந்ததுபோல் தோன்றியது.

சல்யர் இறங்கிச்சென்ற பின் கர்ணனின் குடிமைந்தன் சபரன் பாகனென ஏறி நின்று தேரை செலுத்தினான். கர்ணனிடமிருந்து தேர்க்கலையை கற்றவன் அவன். குருதியில் அதிரதனின் சவுக்கு இருந்தது. சல்யருக்கு நிகராகவே அவனால் தேரை ஓட்ட இயன்றது. தந்தைக்கு மைந்தனே மிகச் சிறந்த பாகன் என்று அக்களத்தில் அவன் காட்டினான் . கர்ணன் பஞ்சராத்திர அஸ்திரத்தால் அர்ஜுனனை அறைந்தான். வைஸ்வாநர அஸ்திரத்தால் அதை அர்ஜுனன் தடுத்தான். அம்புகளால் கிழிபட்டு அவர்களைச் சூழ்ந்திருந்த வெளி அதிர்வதையே விழிகளால் பார்க்க முடிந்தது. கர்ணனின் அம்புகளுக்கு நிகரான அம்பு அர்ஜுனனின் அம்பறாத்தூணியிலிருந்து தானே உந்தி எழுந்தது. அர்ஜுனனின் அம்பை சந்தித்த கர்ணனின் அம்பு அதை முன்னரே அறிந்திருந்தது.

எங்கோ எழுந்த முரசு பீமனால் சுபாகு கொல்லப்பட்டதை அறிவித்தது. செய்தியறிந்த துரியோதனன் ஒருகணம் திகைத்தான். வெறிகொண்டு தேர்த்தட்டை ஓங்கி உதைத்தான். “செல்க! செல்க!” என ஏவியபடி சீற்றத்துடன் படைகளை ஊடுருவிச்சென்று பீமனை சந்தித்தான். சுபாகுவின் குருதியை உடலெங்கும் பூசிக்கொண்டு அமலையாடி வந்த பீமனைக் கண்டு பிளிறியபடி கதையுடன் பாய்ந்தான் துரியோதனன். பீமனும் தன் கதையை தூக்கிக்கொண்டு நிலத்தில் பாய்ந்து துரியோதனனை எதிர்த்தான். “உன் இளையோனின் குருதி இது. உன் குருதி அதில் கலக்கட்டும்… எழுக, இழிமகனே!” என பீமன் கூச்சலிட்டான். மத்தகம் முட்டும் வேழங்கள் என அவர்கள் கதை பொருதிக்கொண்டார்கள்.

கர்ணனின் அம்புகளின் ஆற்றல் மிகுந்து வருவதை இளைய யாதவர் கண்டார். கந்தர்வாஸ்திரங்கள் நூற்றுக்கணக்கான வெண்மலர்கள் என வெடித்தன. கின்னராஸ்திரங்கள் செவிநிறைக்கும் முழக்கத்தை எழுப்பின. அர்ஜுனன் தோள்தளர்ந்த கணத்தில் இளைய யாதவர் தேரை பின்னிழுத்து படைகளுக்குள் மறைத்தார். கவசப்படை எழுந்து வந்து அர்ஜுனனை மறைக்க கர்ணன் ஏளனத்துடன் “நில்… ஆணிலியே, நின்று பொருது… ஏன் ஒளிந்தோடுகிறாய்?” என்று கூவினான். கவசப்படையின் கதவு திறந்து மறுபக்கமிருந்து கோசலத்தின் இளையமன்னன் விசோகன் நாணொலி எழுப்பியபடி கர்ணனை நோக்கி வந்தான். “என்னுடன் பொருது! பொருது என்னுடன், சூதனே” என்று கூவியபடி அவன் கர்ணனை எதிர்கொண்டான்.

“விலகிச்செல், சிறியோனே. இது உனது போரல்ல” என்று கர்ணன் கூவினான். “ஆம், எனது போரல்ல இது என்று அறிவேன். இனி இக்களத்திலிருந்து புகழையன்றி பிறிதொன்றை ஈட்டி திரும்பிச்செல்ல இயலாதென்று அறிந்திருக்கிறேன். அங்கனே, இப்போரில் உன் அம்பினால் நான் களம்பட்டேன் எனில் நீயும் பார்த்தனும் பொருதும் கதையைப் பாடும் ஒவ்வொரு சூதர் நாவிலும் நின்றிருப்பேன். அதுவே என் வீடுபேறு” என்றான் விசோகன். அவன் கவசங்களை அறைந்து உடைத்து “உன்னை கொல்லும் எண்ணம் எனக்கில்லை… விலகுக!” என்றபின் கர்ணன் திரும்பி அர்ஜுனனை மறைத்து அரணெழுப்பிய கவசப்படையை நோக்கி மதங்காஸ்திரத்தை ஏவினான்.

ஒன்று நூறென பெருகிச்சென்று உலோகப்பரப்புகளை அறைந்து சிதறடித்தது அந்த அம்பு. அதைத் தொடர்ந்து எழுந்த மாருதாஸ்திரம் புயல் காற்றுபோல் அப்பகுதியை அள்ளிச் சுழற்றியது. விசோகன் தன் பெரிய அம்புகளால் கர்ணனின் தேரை அறைந்தான். “என்னுடன் பொருது… கீழ்மகனே, பொருது என்னுடன்” என்று கண்ணீர் வழியக் கூவினான். கர்ணன் உதடுகளைச் சுழித்தபடி திரும்பி அவன் தேர்ப்புரவிகளில் ஒன்றின் கழுத்தை அறுத்தான். சலிக்காது அம்புகள் தொடுத்தபடி அவன் முன்னெழுந்து வர “விலகு, அறிவிலி” என்று கர்ணன் கூவினான். விசோகனின் அம்பு ஒன்று வந்து கர்ணனின் கவசத்தை அறைந்து ஓசை எழுப்பியது.

கணம் துடித்த சினத்தால் கர்ணன் திரும்பி கட்காஸ்திரத்தை எடுத்து ஒரே வீச்சில் விசோகனின் கழுத்தை அறுத்து அப்பாலிட்டான். கையில் எடுத்த அம்புடன் நின்று தடுமாறி தேர்த்தட்டில் விழுந்து விசோகன் துடித்து உயிர் துறந்தான். அவனை ஒருமுறைகூட திரும்பி நோக்காமல் உடைந்து அகன்ற கவசப்படையினூடாகக் கடந்து பாண்டவப் படைக்குள் நுழைந்து கர்ணன் அறைகூவினான். “எங்கே பார்த்தன்? எங்கே உங்கள் வில்விஜயன்? ஆண்மைகொண்டவன் எனில் இக்கணமே இங்கு எழுக… இன்றே இந்த ஆடல் முடிவடைக…”

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 56

சிகண்டி தன்னை வெறிகொண்டு எதிர்த்த கிருதவர்மனை விழிதூக்கி நோக்கவில்லை. அப்போர்க்களத்தில் அவர் பீஷ்மரைத் தவிர எவரையுமே நோக்கவில்லை. பீஷ்மரை எதிர்த்துநின்றபோது முதற்கணம் அவருடைய விற்தொழிலும் உடலசைவும் உள்ளம் செல்லும் வழிகளும் முன்னரே நன்கறிந்திருந்தவை எனத் தோன்றின. முதல் நாள் முதல் அம்பில் அவர் பீஷ்மரின் கால்களை அடித்தார். அத்தனை ஆண்டுகாலம் அவர் தவம்செய்திருந்த வடிவம். அவர் அணுவணுவாக தன்னுள் நிகழ்த்திக்கொண்ட போர்.

ஆனால் ஒவ்வொருநாளும் பீஷ்மர் அவர் அறிந்தவற்றிலிருந்து எழுந்து வளர்ந்தபடியே சென்றார். அவர் அவருடன் சேர்ந்து வளர்ந்தார். எங்கு எவரிடம் போரிட்டாலும் அவர் பீஷ்மரிடமே போரிட்டார். எல்லா அம்புகளையும் அவர்மீதே ஏவினார். அவர் தன் முடிவில்லாச் சலிப்பில் திளைத்துக்கொண்டே எவ்வண்ணம் அவ்வாறு மீண்டும் மீண்டும் புதியவர் எனப் பிறந்தெழுகிறார் என்பதை எண்ணி எண்ணி வியந்தார். அச்சலிப்பிலிருந்து மீளும்பொருட்டு ஒவ்வொரு கணத்தையும் அள்ளிப்பற்றிக் கொள்கிறார் போலும். அக்கணம் அதே சலிப்பில் கரைந்தழிய பிறிதொன்று. அச்சலிப்பே அவரை அனைத்திலிருந்தும் விலக்கியது. அவ்விலக்கத்தால் அவர் முழுமைநோக்கு கொண்டவர் ஆனார். அதிலிருந்து எழுந்தது அவர் ஆற்றல். அந்தப் படைப்பெருக்கு ஓர் ஆலயமென விரிந்திருக்க அதன் கோபுரமுகடு என அவர் நிலைகொண்டிருந்தார்.

பீஷ்மர் களம்பட்ட பத்தாம்நாள் இரவில் சிகண்டி அச்சலிப்பை தானும் உணர்ந்தார். அவரிடமிருந்து எழுந்து வந்து சிகண்டியை பற்றிக்கொண்டது அது. அவரைப் பின்தொடர்ந்து சென்றபடியே இருந்த அவர் வாழ்க்கையில் ஒருகணமும் வீணாகவில்லை. ஒரு அம்பும் கற்பிக்காமல் சென்றதில்லை. அவருக்குப் பின் சிகண்டி முழுமையாக கைவிடப்பட்டவரானார். குருக்ஷேத்ரப் படைக்களத்திலிருந்து கிளம்பி எங்கேனும் சென்றுவிடவேண்டும் என விழைந்தார். பின்னிரவின் குளிரில் அவர் தன் வில்லை மட்டும் எடுத்துக்கொண்டு குறுங்காட்டுக்குள் நுழைந்தார். புதர்களை விலக்கி சென்றுகொண்டே இருந்தார். இருளில் ஓர் உறுமல் ஓசையைக் கேட்டு நின்றார்.

அவர் முன் அந்த அன்னைப்பன்றி நின்றிருந்தது. அவர் அதன் எரியும் விழித்துளிகளை நோக்கியபடி நின்றார். அது தலைதாழ்த்தி பிடரிமுட்கள் சிலிர்க்க முன்வலக்காலால் நிலத்தைச் சுரண்டியபடி மீண்டும் உறுமியது. அவர் “ஆம்” என்று சொன்னார். “ஆம்” என மீண்டும் ஒருமுறை சொன்னபின் வில்லுடன் திரும்பி நடந்தார். தன் குடிலுக்கு வந்து அதன் வாயிலில் அமர்ந்துகொண்டார். கருக்கிருளை நோக்கிக்கொண்டிருந்தார். அசைவிலாது சிலைபோல் இருளில் இரவெல்லாம் அமர்ந்திருப்பது அவர் வழக்கம். இருளை விழியிமைக்காமல் நோக்குவதையே அவர் ஊழ்கமெனக் கொண்டிருந்தார். அது தமோயோகம் என்று சொல்லப்பட்டது.

நாள்தொடங்கும் முரசுகள் எழுந்தன. அவர் எழுந்துகொண்டபோது புரவியில் திருஷ்டத்யும்னன் வந்திறங்கினான். அவரை அணுகி அப்பால் என நின்றான். சிகண்டி விழிதிருப்பாமல் “ம்” என உறுமினார். “தாங்கள் நேற்று கிளம்பிச்சென்றீர்கள் என அறிந்தேன். ஒற்றர் செய்தி உடனே வந்தது. தடை செய்யவேண்டாம் என ஆணையிட்டேன்.” சிகண்டி “ம்” என்றார். “நீங்கள் செல்லலாம், மூத்தவரே. உங்கள் பணி இப்போரில் முடிந்துவிட்டது. இங்கே நீங்கள் ஆற்றுவதற்கொன்றும் இல்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இந்த அரசியலில் உங்கள் உள்ளம் ஈடுபடவில்லை. இங்கே நீங்கள் கொள்வதற்கும் கொடுப்பதற்கும் ஏதுமில்லை.”

சிகண்டி “ம்” என்றார். பின்னர் “அன்னையின் ஆணை” என்றார். திருஷ்டத்யும்னன் நோக்க “அவள் சொன்னாள். இங்கே ஒரு சொல் எஞ்சியிருக்கிறது” என்றார். திருஷ்டத்யும்னன் “ம்?” என்றான். “அவள் பழி. அவள் என் அன்னையின் பழிமுடிக்க அங்கே நுழைந்தவள்.” சற்று நேரம் கழித்து திருஷ்டத்யும்னன் “நன்று” என்றபின் தலைவணங்கி திரும்பிச்சென்றான். அவன் செல்வதை சிகண்டி நோக்கி அமர்ந்திருந்தார். திருஷ்டத்யும்னன் மேலும் ஏதோ கேட்க விழைந்தான் என சிகண்டி அறிந்திருந்தார். அக்கேள்வியுடன் அவன் மண்மறைவான் என்றும். நீண்ட மூச்சுடன் எழுந்து தன் குடிலுக்குள் சென்று போர்முகப்பு செல்வதற்கான ஒருக்கங்களை தொடங்கினார்.

அக்களத்தில் அதன்பின் எதிர்கொண்ட அத்தனை பேரும் பீஷ்மரே என உளமயக்களித்தனர். அவர் அவர்களை சீற்றம்கொண்டு எதிர்த்தார். பின்னர் அவர்கள் எவரும் பீஷ்மர் அல்ல என்று தனக்கே தெளிவுசெய்துகொண்டார். அவர்கள் பீஷ்மரல்லாமல் ஆனதுமே அவர்களிடம் அவரால் போரிட இயலாமலாயிற்று. ஆகவே அவர்களை நோக்குவதை ஒழிந்தார். அவர்களென்றாகி நின்று தன்னுடன் தான் போரிடலானார். ஒவ்வொரு முறையும் தன்னை தான் வென்றார். தன்னிடம் தானே தோற்று மீண்டார். ஒவ்வொருநாள் இரவிலும் இருளில் தனித்தமர்ந்து நெடுந்தொலைவில் தெரிந்த பீஷ்மர்படுகளத்தின் பந்த வெளிச்சத்தை நோக்கிக்கொண்டிருந்தார்.

கிருதவர்மன் “இழிவிலங்கே, உன் அம்புடன் அகல்க! இன்று உன்னைக் கொன்று என் அம்புக்கு இழிவு தேடிக்கொள்ள விழையவில்லை நான்!” என்று கூவியபடி அம்புகளால் சிகண்டியை அறைந்தான். சிகண்டியை அச்சொற்கள் சீண்டவில்லை என்று கண்டு “ஈருடலனே, பெண்ணென்று ஆகி உயிர்கோரி நில். உன்னை விடுவிக்கிறேன். அல்லது ஆணென்று நின்று என்னிடம் போரிடு” என்று கிருதவர்மன் மேலும் கூவினான். சிகண்டி தொடுத்த அம்புகளை ஒழிந்தபடி அவன் வில்லாடிக்கொண்டிருந்தபோது ஒரு கணத்தில் ஏதோ ஒன்றில் உளம் சென்று தொட திடுக்கிட்டான். எதிரில் நின்று போரிட்டுக்கொண்டிருப்பதும் தானே என உணர்ந்து கைகள் நடுங்க வில் தழைய தேரில் நின்றான். சிகண்டி தொடுத்த அம்பு வந்து அவன் நெஞ்சை அறைந்து உலுக்கி விடுவித்தது.

அவனாகி எழுந்த சிகண்டி “யாதவனே, வஞ்சத்தைச் சுமந்து நலிந்திருக்கிறது உன் உடல். நஞ்சுகொண்டிருக்கிறது உன் ஆழம். இக்களம் ஒரு தவநிலம். வஞ்சத்தை மும்முறை கையொழிந்து பின்னடைக! உன் விடுதலையை இங்கே ஈட்டிக்கொள்க!” என்றார். கிருதவர்மன் கசப்புடன் பல் தெரியச் சிரித்து “வஞ்சத்தை கைவிடுவதைப்பற்றி நீ எனக்கு சொல்கிறாயா? நன்று!” என்றான். “பெருவஞ்சத்தின் பின்னுள்ள வெறுமையை நானன்றி எவரும் உனக்கு சொல்ல இயலாது. அறிவிலி, விலகிச்செல்” என்று சிகண்டி சொன்னார். “வஞ்சத்துடன் வாழ்வது கணந்தோறும் எரிந்துகொண்டிருப்பது. அதை நான் அறிவேன்” என்றான் கிருதவர்மன். “ஆம், ஆனால் வஞ்சத்திற்குப் பிந்தைய வெறுமைக்கு அது மேல்… செல்க!” என்று சிகண்டி சொன்னார்.

“நான் உன்னை அஞ்சவில்லை, பேடியே!” என்று கிருதவர்மன் கூவினான். “உன் சொற்களிலிருக்கும் அந்த இரக்கத்தைக் கண்டு சீற்றம் கொள்கிறேன். இதன்பொருட்டே உன் தலைகொய்து இங்கிருந்து செல்லவேண்டும் என விழைகிறேன்.” அம்புகளைத் தொடுத்தபடி அவன் சிகண்டியின் எல்லைக்குள் நுழைந்தான். அவனுடன் வந்த யாதவப் படையினர் அவனைச் சூழ்ந்து அம்புகளால் காற்றை நிறைத்தனர். அவனுக்குப் பின்னால் அவன் மைந்தன் பாலி வில்லுடன் நின்று புறம் காத்தான். சிகண்டி அவன் அம்புகளை மிக எளிதில் தடுத்தார். அவர் வில்லில் இருந்து எழுந்த அம்புகள் கிருதவர்மனின் கவசங்களை பிளந்தன. அவன் தலைக்கவசம் கீழே விழுந்தது. அது தலை விழுந்ததுபோல் தோன்ற யாதவப் படையினர் கூச்சலிட்டனர். தன் தலை விழுந்ததை தானே கண்டவன்போல் கிருதவர்மன் திடுக்கிட்டான்.

அவன் செவியோர மயிரை அம்புகளால் சீவி எறிந்தார் சிகண்டி. “செல்க! செல்க!” என்று கூவினார். அம்புகளுடன் தந்தையைக் காக்க வந்த பாலியின் கவசங்களை அறைந்து உடைத்தார். அவன் திறந்த நெஞ்சுடன் தேரில் நின்றிருக்க அம்பைத் திருப்பி நாணிலேற்றி அவன் நெஞ்சை அறைந்தார். அம்புபட்டு தேரிலிருந்து பாலி தூக்கி வீசப்பட்டான். தரையில் விழுந்து அங்கிருந்த இறந்த உடல்களுடன் அவன் உடல் மறைய யாதவர்கள் அலறினர். கிருதவர்மன் தன் மைந்தனின் சாவையும் மெய்யென உணர்ந்தான். யாதவப் படை கூச்சலிட்டுச் சிதற “ஒருங்குகொள்க! கூடுக!” என்று கூவியபடி அவன் பின்னடைந்தான். பாலி எழுந்து அப்பால் விலகிச்சென்று புரவியொன்றில் ஏறிக்கொள்வதை கண்டான். நெஞ்சிலிருந்த அச்சமும் விரல்களில் துடித்த பதற்றமும் ஓய பெருமூச்சுவிட்டு மெல்ல தளர்ந்தான். அதற்குள் நாணொலித்தபடி சிகண்டி அப்பால் விலகிச்சென்றுவிட்டிருந்தார்.

சிகண்டி திரும்பி அவந்தியின் படைப்பிரிவை நோக்கி சென்றார். தங்களை சிறிய குழுவென ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த அவர்கள் பாண்டவப் படைக்குள் ஊடுருவிச் சென்றுவிட்டிருந்தார்கள். ஒருகணம் எரிச்சல் எழ அவர் காறித் துப்பினார். அலுப்பிலிருந்து எழுவது அந்த எரிச்சல் என புரிந்துகொண்டார். ஏமாற்றம் கொண்டதுபோல ஆழம் பொருமிக்கொண்டே இருந்தது. ஏன் ஏன் என அவர் ஆழத்தின் இன்னொரு கூர்முனை துழாவியது. ஏன் சலிப்பு? ஏன் ஏமாற்றம்? அவர் ஒருகணம் பீஷ்மரென ஆகி போர்முகப்பில் நின்றிருந்தார். இன்னமும் குருக்ஷேத்ரம் தொடங்கப்படவே இல்லை. நிகழவிருக்கும் அனைத்தும் விழிநிலை வடிவென இரு படைகளாகி விரிந்திருந்தன. அவர் படைகளை நோக்கவில்லை. படைகளுக்குமேல் கவிந்திருந்த வெளியை, தொடுவான் வில்வளைவை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் சலிப்புற்றிருந்தார். ஏனென்றால் அவர் போரின் முடிவை நோக்கிவிட்டிருந்தார்.

 

தொலைவில் சிகண்டியை கௌரவப் படையிலிருந்த அவந்தியின் படைத்தலைவர்கள் கம்சனும் கௌமாரனும் தங்கள் வில்லவர்திரளுடன் எதிர்த்தனர். அவந்தியின் படைசூழ சிகண்டி நின்றிருந்த இடம் சுழியெனத் தெரிந்தது. மிக விரைவிலேயே கம்சனும் கௌமாரனும் கொல்லப்பட்டதை முரசுகள் அறிவித்தன. செயலற்றவன்போல் சற்றுநேரம் நோக்கி நின்றிருந்த கிருதவர்மன் தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து வீறிட்டபடி தேர்ப்பாகனை நோக்கி கூச்சலிட்டான். “செல்க! செல்க, பாஞ்சாலனை நோக்கி!” தேர்ப்பாகன் “அரசே!” என்றான். “இன்று இத்தோல்வியுடன் மீளப்போவதில்லை. பாஞ்சாலனை நோக்கி செல்க… இக்கணமே செல்க!”

திரிகர்த்த நாட்டு இணையரசன் மித்ரவர்மன் அர்ஜுனனால் கொல்லப்பட்டதை அறிவித்தது முரசு. ஒவ்வொரு அரசராக இறப்புகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. படைகள் அழிந்துகொண்டே இருந்தமையால் அரசர்கள் காப்பற்றவர்களாக சென்று போர்முனையில் நின்று உயிர்துறந்துகொண்டிருந்தார்கள் என்று தோன்றியது. “செல்க! செல்க!” என்று கிருதவர்மன் பாகனை நோக்கி கூவினான். வில்லுடன் திரும்பிய சிகண்டி அவனை கண்டார். “கீழ்பிறப்பே, எடு உன் வில்லை” என்று கூவியபடி கிருதவர்மன் அவரை தாக்கினான். முற்றிலும் சினமற்றவராக சிகண்டி அவனை தாக்கினார். அவர் அம்புகள் வந்து கிருதவர்மனின் தேரை தாக்கின. அவனுக்குப் பின் அவன் மைந்தன் பாலி “தந்தையே, வலப்புறம் நோக்குக! வலம் பேணிக்கொள்க!” என்று கூவியபடி வந்துசேர்ந்துகொண்டான்.

களமெங்கும் அந்நாள்வரை நிகழாத பெரும்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. கர்ணனை விட்டு விலகிச்சென்றுவிட்ட அர்ஜுனன் திரிகர்த்தர்களை கொன்றழித்தான். உசிநாரர்களும் பால்ஹிகர்களும் அவன் அம்புகளால் கொன்றுகுவிக்கப்பட்டனர். கர்ணனின் முன்னாலிருந்து வில்தாழ்த்தி ஒழியவேண்டியிருந்தமையின் சீற்றத்தை முழுக்க அவன் கௌரவப் படையை அழிப்பதில் செலவிட்டான். காந்தாரர்களும் கூர்ஜரர்களும் மாளவர்களும் அவனுக்கு பலியாயினர். அக்குருதியை சூடிக்கொண்டு தன்னை வெறியேற்றிக்கொண்டு மீண்டும் கர்ணனை எதிர்கொண்டான். கர்ணனை அதுவரை இணைநின்று தடுத்து நிறுத்தியிருந்த சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் விலகிக்கொள்ள அவர்களிடையே அந்த முடிவிலாப் போர் மீண்டும் தொடங்கியது.

சிகண்டியின் அம்புகள் கிருதவர்மனை அறைந்து அறைந்து பின்னால் செலுத்தின. சிகண்டியின் பேரம்பு ஒன்று தன்னை தாக்க வருகிறது என எண்ணி கிருதவர்மன் தேரிலிருந்து பாய்ந்து நிலம்படிந்தான். அவன் தேரைக் கடந்துசென்று பாலியின் தேரை அறைந்து மண்ணிலிருந்து தூக்கி வெடிக்கச்செய்தது அந்த வாளி. விழி மயங்கச்செய்யும் பொன்னிற ஒளி. மூச்சை நிறைத்த எரிமணம். அவன் பாலியின் தலை துண்டுபட்டு சுழன்று சென்று விழுவதை கனவுக்குள் கண்டான். திடுக்கிட்டு விழித்தபோது அக்கனவின் தொடர்ச்சியென அவன் தலை நிலம்தொடுவதை கண்டான். தன் தொடை நடுங்கி துள்ளிக்கொண்டிருப்பதை, தன் இரு கைகளும் வலிப்பெடுத்தவைபோல இழுபட்டு விறைத்து நின்றிருப்பதை உணர்ந்தான். “இழிமகனே! இழிமகனே!” என்று கூவியபடி பாய்ந்துசென்று தேரிலேறிக்கொண்டான். சிகண்டியை நோக்கி சென்று அம்புகளால் அவரை அறைந்தபடி கூச்சலிட்டான்.

பித்தன் போலிருந்தான் கிருதவர்மன். “இழிமகனே, உன்னுடன் போரிட்டு தலைகொடுக்கவே வந்துள்ளேன். என்னை கொன்று செல்க… இனி இக்களத்தில் என்னிடம் எஞ்சுவது ஒன்றுமில்லை. கொல்க!” என்று அவன் கூவினான். அவன் தேரை உடைத்தெறிந்தது சிகண்டியின் அம்பு. தன் ஆவநாழியிலிருந்து பேரம்பு ஒன்றை எடுத்து “இந்த அம்பால் உன் தலை கொய்வேன்!” என்று கூவியபடி அவன் நாணேற்றுகையில் சிகண்டியின் உடலில் சலிப்பு தெரியும் அசைவை கண்டான். அந்த அசைவு தன் மைந்தனைக் கொன்ற எரியம்புக்கு முன்னரும் அவ்வாறு அவர் உடலில் எழுந்தது என உணர்ந்து அவன் உள்ளம் செயலழிந்தது. அவனை நோக்கி வந்த சிகண்டியின் அம்பு காட்டெரிபோல் உறுமியது. எரிமலை வாய் திறந்து அனற்குழம்பு பீறிடுவதுபோல் அணுகியது. அவன் தேரின் தூண்களும் தட்டும் சகடங்களும் பற்றிக்கொண்டன.

அவன் தேரிலிருந்து பாய்ந்து இறங்கி நிலத்தில் விழுந்து ஓடினான். அவன் உடலில் தீ நின்றெரிந்தது. அவன் தன் தோலாடைகளை கழற்றி வீசினான். ஆடையற்ற உடலில் மயிரைப் பொசுக்கியபடி எரி நின்றது. மண்ணில் விழுந்து குருதிச்சேற்றில் அவன் புரண்டான். தன் தேர் தழலுருவாக எரிந்தோடுவதை, புரவிகள் உடலெங்கும் தீ எரிய கனைத்தபடி ஓடி கால்தளர்ந்து விழுந்து துள்ளிச்சுழன்று எழுந்தமைவதை அவன் கண்டான். அவனைச் சூழ்ந்து எரி வெள்ளமென அலையடித்தது. எரிநதிப்பெருக்கின் அடியில் மூழ்கிவிட்டவன்போல் உணர்ந்தான். இரு கைகளையும் தலைமேல் வைத்து குனிந்து உடல்குறுக்கி அமர்ந்தான். அவன்மேல் எரி உறுமியது, சீறியது, வெடிப்பொலியுடன் மேலெழுந்தது.

பின்னர் அவன் எழுந்தபோது அவனைச் சூழ்ந்து கருகிய களம் பரந்திருந்தது. கன்மதத்தின் குமட்டும் வாடை. வெந்த ஊனும் பொசுங்கிய தோலும் நெஞ்சடைக்கச் செய்தன. கரி படிந்த மண்ணில் புதுக்குருதியின் குமிழிகள் எழுந்துகொண்டிருந்தன. உலோகப்பரப்புகள் வெம்மைகொண்டு முனகிக்கொண்டிருந்தன. நெடுந்தொலைவில் சிகண்டியை கிருபர் எதிர்கொண்டதைக் கூறி முரசுகள் ஒலித்தன. கேகய இளையமன்னன் விசோகனுக்கும் பீமனுக்குமான போரை அறிவித்து விசோகனை துணைசெய்யும்படி முரசு வீணே மன்றாடிக்கொண்டிருந்தது. அவன் உள்ளம் வெறுமை கொண்டிருந்தது. அதுவரை உள்ளத்தின் பெரும்பகுதியை நிறைத்திருந்த இறந்தகாலமும் எதிர்காலமும் மறைந்தன. ஆகவே ஒளிகொண்ட பெருவெளியில் நிகழ்காலத்து எண்ணங்கள் விசையின்றி தனித்தனியாக தெளிந்தெழுந்தன. அத்தனை அமைதியை அவன் அறிந்ததே இல்லை.

பெருமூச்சுடன் எழுந்து நின்ற கிருதவர்மன் தன் ஆடையற்ற உடல் கருகி தோல் உருகி வழிந்துகொண்டிருப்பதை கண்டான். கைதூக்கி நோக்கியபோது நகங்கள் அனைத்தும் வெந்து உதிர்ந்துவிட்டிருந்தன. மலையருவி பெருகி விழ ஏந்திக்கொள்ளும் அடிப்பக்க மரம் என உடலின் அனைத்து உறுப்புகளும் அதிர்ந்துகொண்டிருந்தன. கால்களைத் தூக்கி வைத்து அவன் வெந்து கிழிந்து சிதைந்து பரவிய உடல்களினூடாக நடந்தான். கால்தடுக்கி அவன் விழுந்தான். மீண்டும் கையூன்றி எழுந்து நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை பொசுங்கிக்கொண்டிருக்கும் உடல்கள் மட்டுமே தெரிந்தன. அவ்விரிவில் பாலியின் உடலை தன் விழிகள் தேடுவதை உணர்ந்தான். மெல்ல மெல்ல உடலை உந்தி நடந்தான். கால்மடிந்து விழுந்து மீண்டும் எழுந்தான். அனலின் ஓசை மிக அருகே எனக் கேட்டது. திரும்பி நோக்கியபோது விழிகளுக்குள் அனல்விழுந்ததுபோல் ஓர் அம்பு வெடித்ததை கண்டான். மண்மதத்தின் கெடுமணம் அணுகி வந்தது.

அது தன்னை கடந்துசெல்ல விட்டு அவன் மீண்டும் கண்விழித்தான். நான்கு புலன்கள் அத்தனை கூர்கொண்டுவிட்டிருந்தன. செவிகள், விழிகள், மூச்சு, நாக்கு. ஏனென்றால் தோல் முற்றாகவே உணர்வழிந்துவிட்டிருந்தது. புலனறிதல்களில் பெரும்பகுதியை அடைத்துக்கொண்டிருப்பது அதுவே என அப்போது தெரிந்தது. அவன் உடலில் வலியே இருக்கவில்லை. தொடைகளில் தோலுரிந்து வெண்தசை தெரிந்தது. கையூன்றி எழுந்தபோது வயிற்றுத் தோல் வழன்று அகல உள்ளே நரம்புகள் வேயப்பட்ட வெந்த தசை தெரிந்தது. ஆனால் உடலென ஒன்றிருப்பதையே உணரமுடியவில்லை.

அவன் அங்கே நின்றிருந்த புரவி ஒன்றின்மேல் தொற்றி ஏறினான். அதன் கருகிய உடலின் மீதிருந்து வெந்த தோல் கைபட உரிந்து வந்தது. அது வலியை உணரவில்லை. எதையுமே உணராததுபோல் தசைகள் விதிர்க்க நின்றிருந்தது. அதன் மேல் சேணங்களோ கடிவாளமோ இருக்கவில்லை. ஆடையற்ற உடலுடன் அணியற்ற புரவிமேல் அவன் அமர்ந்து சென்றான். வெவ்வேறு இடங்களில் புரவிகள் விதிர்த்துக்கொண்டிருக்கும் உடலுடன் நின்றிருந்தன. சில புரவிகள் தலைதாழ்த்திச் சீறின. சில முன்கால்களால் தரையை அறைந்தன. நின்றிருந்த புரவி ஒன்று அறுந்துவிழுவதுபோலச் சரிந்து பக்கவாட்டில் விழுந்து குளம்புகளை உதைத்துக்கொண்டு உயிர்விட்டது. அவன் ஊர்ந்த புரவி மெல்ல முனகியது. அவன் கடந்துசென்றபோது பின்புறம் இன்னொரு புரவி விழும் ஓசையை கேட்டான்.

செல்லும் தரையெங்கும் பொசுங்கியதும் கருகியதுமான தசைத்துண்டுகள் கிடந்தன. பின்னர் அவன் கண்டான், அவையெல்லாம் பறவைகள் என. காகங்கள், மைனாக்கள், நாரைகள், சிறுகுருவிகள். சிறகுபொசுங்கி விழுந்து உயிர்விட்டிருந்தன. சில பறவைகள் அப்போதும் அலகை தரையிலூன்றி வட்டமிட்டுச் சுழன்று இறகிலாச் சிறகை அடித்து துடித்தன. அனல் அத்தனை உயரத்திற்கா எழுந்தது? நிலமெங்கும் சிறுபூச்சிகள் கருகி விழுந்துகிடந்தன. பின்னர் அவன் தரை விழுந்துகிடந்த பூச்சிகளால் இடைவெளியில்லாமல் நிரம்பியிருப்பதை கண்டான்.

படைகளின் பின்பகுதியை அடைந்தான். அங்கே எவருமிருக்கவில்லை. அந்த வெறுமை அவனை திகைக்கச் செய்தது. திரும்பி படைமுகப்பை நோக்கினான். அது கடலலையின் நுரைவிளிம்பென கொப்பளித்துக்கொண்டிருந்தது. அங்கே அனல்குமிழிகள் எழுந்து எழுந்து அணைந்தன. கௌரவப் படை என எஞ்சுவது போர்முகத்தில் ஆங்காங்கே நின்றிருக்கும் சிறுகுழுக்கள் மட்டுமே என்று உணர்ந்தபோது அவன் அகம் நடுக்கு கொண்டது. அன்று காலை அவன் கண்ட திரள் அப்படியே சென்று ஆழ்ந்த பிலமொன்றில் புகுந்து மறைந்துவிட்டதுபோல. அவன் அங்கிருந்து நோக்கியபோது ஒரு கொடிகூட தென்படவில்லை. அனைத்தும் அனலில் பொசுங்கிவிட்டிருந்தன. அத்தனை தேர்களும் சிதைந்தும் எரிந்தும் மறைந்துவிட்டிருந்தன.

இன்னும் சற்றுநேரத்தில் இங்கே போரிட எவருமிருக்க மாட்டார்கள். முற்றழிவு. இத்தகைய முற்றழிவு இயல்வதுதானா? இது இத்தனை நாள் எங்கிருந்தது? மானுட உள்ளத்திற்குள். மெய்யறிந்தோர் அதை உணர்ந்திருப்பர். அவர்களின் சொல்லில் இருந்து திறனாளர் கற்றிருப்பர். சிற்பிகள் வனைந்திருப்பர். இத்தனை பெரிய அனல் சொல்லில் உறங்கியிருக்கிறது. சித்தவெளியில் நிலைகொண்டிருக்கிறது. வெட்டவெளியில் நிறைந்திருக்கிறது. தன்னை முற்றழித்துக்கொள்ளும் வாய்ப்புடன்தான் இங்கே என்றும் மானுடம் வாழ்ந்திருக்கிறது. தன் கனவுகளில் அதை விழைந்திருக்கிறது. அஞ்சியிருக்கிறது. தற்கொலையை பகற்கனவு காணாத மானுடர் இல்லை. காமமும் ஆணவமும்கூட அதைப்போல் இனியவை அல்ல. மானுடமும் அப்பகற்கனவை மீட்டிக்கொண்டுதான் இருந்திருக்கிறது.

பேரோசையுடன் வானில் விரிந்தது ஒரு மஞ்சள்நிற வெடிப்பு. செவிகள் அதிர்ந்து பற்கள் கூச சீழ்க்கை ஒலி கடந்துசென்றது. விம் என வயிறு அதிர்ந்தது. அதன்பின் அலையலையாக காற்றில் வெம்மை எழுந்து வந்து அறைந்து கடந்துசென்றது. அவன் ஊர்ந்த புரவி ஓசையே இல்லாமல் முகம் மண்ணில் ஊன்ற முன்பக்கம் சரிந்து விழுந்து ஒரு குளம்படியோசைகூட இல்லாமல் உயிர்விட்டது. அதற்கு அடியிலிருந்து தன் உடலை உருவி எடுத்துக்கொண்டு அவன் மெல்ல நடந்தான். மீண்டுமொரு மஞ்சள் வெடிப்பில் அவனுடைய நிழல் நீண்டு துடிதுடித்து வான்வரை சென்று நீலநிறமாகி அணைந்தது. விண்ணிலிருந்து வலையொன்று இறங்குவதுபோல கரிப் படலம் மெல்ல மண்ணை வந்தடைந்தது.

வளைந்து அதிர்ந்துகொண்டிருந்த உடலுடன் அவன் தன் கூடாரம் இருந்த இடத்தை அடைந்தான். அருகிலிருந்த கூடாரத்தின் யானைத்தோல்கூரை பொசுங்கி புகையெழுந்துகொண்டிருந்தது. அவன் கூடாரம் கரித்தடமாக மாறிவிட்டிருந்தது. அதற்குள் பிறிதொரு கரித்தடமாக அவனுடைய மஞ்சம் தெரிந்தது. வெடித்துத் தெறித்த எரிதுளிகளால் அங்கிருந்த அனைத்துக் கூடாரங்களும் புகைவிட்டுப் பொசுங்கி சுருங்கிக்கொண்டிருந்தன. புரவிகள் செல்வதற்கான பாதைப்பலகைகள் பற்றி எரிந்தன. அவற்றில் பட்டு உலர்ந்திருந்த நிணநெய் அவற்றை நின்றெரியச் செய்தது. களஞ்சியங்கள் எரிந்து கரும்புகை எழுந்து வானில் ஊன்றி நின்றிருந்தது.

அவன் தன் கூடாரமிருந்த இடத்தில் தன் படுக்கையின் வடிவிலிருந்த கரிப் பரப்பில் அமர்ந்தான். அப்பால் கிடந்த தாலம் கனல்கொண்டிருந்தது. தன் தலையில் கைவைத்தபோது முற்றாகவே மயிர்பொசுங்கி தலை கலம்போல் தட்டுபட்டது. கால்களை மடித்து அதன்மேல் தலையை வைத்து அவன் அமர்ந்தான். உள்ளிருந்து ஒரு விம்மலென அழுகை எழுந்து வந்து நெஞ்சை உலுக்கியது. அவன் ஓசையில்லாமல் அழத் தொடங்கினான். அவனைச் சூழ்ந்து கனன்றுகொண்டிருந்தது காந்தள் வண்ணம்கொண்ட சிதையெரி.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 55

போர் தொடங்குவதற்கான முரசு ஒலித்ததும் தன்னை அறியாமலேயே “எழுக! எழுக!” என கையசைத்து அம்புகளைத் தொடுத்தபடி சுபாகு பாண்டவப் படைகளுக்குள் ஊடுருவிச்சென்றான். அவனை எதிர்த்து வந்த பாஞ்சால இளவரசர்களை அம்புகளால் அடித்து பின்னடையச் செய்தான். தன்னியல்பாகவே அது நிகழ்ந்தது. தன் கைகளால் அவன் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்துவந்த படைவீரகள் இயல்பாக அவன் உடலென ஆகிவிட்டிருந்தனர். அவனே படையென தன்னை எண்ணத் தொடங்கியிருந்தான். போர் மூண்ட சில கணங்களுக்குள் அங்கே அவ்வாறு என்றும் போரிட்டுக்கொண்டிருந்ததே தன் வாழ்வும் இருப்பும் என அவன் அகம் நம்பத் தலைப்பட்டது எனத் தோன்றியது.

பாஞ்சாலர்கள் களைத்திருந்தார்கள். துயிலில் என அவர்கள் போர்புரிந்தார்கள். எவராலோ இயக்கப்படும் நாற்களக் கருக்கள் என. கொல்பவர்களிடம் வெறி வெளிப்படவில்லை. இறந்தவர்களிடம் அச்சமோ வலியோ வெளிப்படவில்லை. கனவிலென நிகழ்ந்துகொண்டிருந்தன அனைத்தும். அக்குருதியும் அனலும்கூட மாயைகள்தானா? அவர்கள் மீண்டும் எழுந்து உடலை உதறிக்கொண்டு இன்னொரு கனவுக்குள் நுழையப்போகிறார்களா? பின்னணியில் போர்முரசு ஒலித்துக்கொண்டே இருந்தது. “எழுக… ஏழு கதிர்களும் எருதை ஊடுருவிச் செல்க! ஏழு துண்டுகளாக்குக!” சகுனி ஒரு கதிரை நடத்தி களமுகப்பில் இருந்தார். அவருடைய ஆணைகளை அவர் உடலில் இருந்து பெற்று பின்னணியில் இருந்த காவல்மாடம் கூவி அறிவித்துக்கொண்டிருந்தது. சகுனி ஈருடல் கொண்டு அங்கும் பின்னணியிலும் நின்றிருந்தார்.

“வெல்க! வெல்க! வென்று செல்க!” என முரசுகள் கூவிக்கொண்டிருந்தன. எத்தனை நம்பிக்கை! முரசுகள் மட்டும் நம்பிக்கையை இழப்பதே இல்லை போலும். அவன் முந்தையநாள் இரவு முழுக்க நிலையில்லாது அலைந்துகொண்டிருந்தான். படைகளினூடாகச் செல்கையில் அதைப் படையென ஏற்கவே உள்ளம் ஒருங்கவில்லை. ஆங்காங்கே சிறுகுழுக்களாக அமர்ந்தும் சரிந்தும் துயின்றுகொண்டிருந்தனர். அவன் தன் தலைக்குமேல் நோக்குணர்வை அடைந்து அண்ணாந்து நோக்கினான். காவல்மாடத்தின்மேல் பார்பாரிகன் அமர்ந்திருந்தான். அனைவராலும் முற்றாக மறக்கப்பட்டிருந்தான். அங்கிருக்கிறானா? அன்றி உயிரிழந்த உடலா?

விந்தையுணர்வுடன் அவன் மேலேறினான். பேருடலன் விழிகள் திறந்திருக்க அமர்ந்திருந்தான். அவன் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. அருகே எவருமிருக்கவில்லை. பெருமுரசு மட்டும் வானின் ஒளியைப் பெற்று தோல்வட்டம் மிளிர அமைந்திருந்தது. அவன் என்ன சொல்கிறான் என உற்றுகேட்டான். ஒலியெழவில்லை. உதடுகளைக் கூர்ந்து நோக்கினான். அவன் வாயசைவைக் கொண்டும் எதையும் உணர இயலவில்லை. எதை காண்கிறான்? எதை சொல்லிக்கொண்டிருக்கிறான்? அவன் திகைப்புடன் நோக்கிக்கொண்டு நின்றான். விம் என்னும் ஓசை கேட்டது. அருகிலிருந்த முரசை திரும்பி நோக்கினான். அதன் தோற்பரப்பு காற்றில் அதிர்வுகொண்டிருந்தது. சுட்டுவிரலால் அதை தொட்டான். அதன் அதிர்வை தன் உடலெங்கும் உணர்ந்தான்.

பின்னர் திரும்பி பார்பாரிகனின் உடலை தொட்டான். அதுவும் தோல்பரப்பின் அதிர்வை கொண்டிருந்தது. மெல்லமெல்ல அவனுக்கு அந்நாவில் ஒலித்த சொற்கள் தெளிவாகத் தெரியலாயின. “சாரஸ்வதராகிய உலூகர், சௌவீரரான சத்ருஞ்சயர், பாண்டியன் மலையத்வஜன், விதேகராகிய நிமி.” போர்க்களத்தில் வீழ்ந்த அரசர்களின் பெயர்கள். அவர்கள் கொல்லப்பட்ட சித்திரங்களை இறுகக் கட்டப்பட்ட அரக்கர்மொழிச் சொற்களால் அவன் சொல்லிக்கொண்டிருந்தான். “அவந்தியரான ஜயசேனர் தன் மைந்தர்கள் விந்தனும் அனுவிந்தனும் உடன் விழ களம்பட்டார். காம்போஜரான சுதக்ஷிணர் வேல்பாய்ந்து விழுந்தார். அதோ கோசல மன்னன் பிருஹத்பலனும் தட்சிண திரிகர்த்தத்தின் சுசர்மரும், அபிசார மன்னர் சுபத்ரரும், அரேவாக மன்னர் சிம்மவக்த்ரரும் வீழ்ந்தனர். அபிசாரர்களின் இளவரசர்கள் நிசந்திரன், மிருதபன், சுவிஷ்டன் ஆகியோர் விண்புகுந்தனர். கேகய மன்னர் திருஷ்டகேதுவும் மாளவ மன்னர் இந்திரசேனரும் கூர்ஜர சக்ரதனுஸும் சைப்ய நாட்டு கோவாசனரும் சால்வநாட்டு த்யுமந்தசேனரும் ஆஃபிரநாட்டின் உக்ரதர்சனரும் வீழ்ந்தனர். தட்சிண மல்லநட்டு சம்புகர் துரியோதனரால் தலையுடைத்து கொல்லப்பட்டார்”

“வங்கத்தின் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் வீழ்ந்தனர். மாகிஷ்மதியின் நீலரின் உடல் கிடக்கிறது. சௌராஷ்டிர நாட்டின் ருஷார்திகரும் காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தியும் வீழ்ந்தனர்.” அவன் நாவில் பெயர்கள் எழுந்துகொண்டே இருந்தன. காலதேவனின் திறந்த வாய் என மண்மறைந்தவர்களின் பெருக்கு முடிவிலாது சென்றது. “ஆந்திரர், ஆபிசாரர், அம்பஸ்தர், அஸ்வாடகர், அஜநேயர், ஆபிரர், அரட்டர், ஆரிவேகர், கர்ணப்பிரவர்ணர், கிதவர், குந்தலர், குலூதர், கசுத்ரகர், காசர், கோவாசனர், சிச்சிலர், சீனர், சுச்சுபர், துஷாரர், துண்டிகேரர், தார்விகர், தசமேயர், நாராயர், பஞ்சநதர், பல்லவர், பானிபத்ரகர், பாரதகர், புளிந்தர், பிரஸ்தலர், மாகிஷ்மதர், முண்டர், மேகலர், லலித்தர், வங்கர், வனாயர், வசாதியர், வடாதனர், விக்ரமர், விகுஞ்சர், வேனிகர், சூரர், சுரசேனர், சம்ஸ்தானர், சிங்களர், சுரஸ்திரர், ஹம்சமார்கர்…”

சுபாகு சலிப்புற்று திரும்பியபோது தன் பெயரை கேட்டான். விதிர்ப்புடன் அவ்வுதடுகளை நோக்கினான். அது செவிமயக்கா? “தனாயு நாட்டரசராகிய மணிமான் கர்ணனால் கொல்லப்பட்டார். மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனையும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவையும் களத்தில் காண்கிறேன். கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் மண் வாங்கிக்கொண்டது. உத்தரமல்லநாட்டு தீர்க்கபிரக்யர் வீழ்ந்தார். அசுரகுலத்து அரசர் ஹிரண்யகட்கர் அதோ கொல்லப்பட்டார். காரூஷ நிஷாதகுடித் தலைவர் அஷ்டஹஸ்தர்  வீழ்ந்தார். அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷரும் அசுரர் குடித்தலைவர் காகரும் இக்களத்தில் கொல்லப்பட்டனர். பாணாசுரரின் மைந்தனான அக்னிசக்ரன் தலையுடைந்து வீழ்ந்தார்.  சம்பராசுரரின் மைந்தன் கீர்த்திமானும் வீழ்ந்தான். நிஷாதர்குலத்து படைத்தலைவன் கூர்மரை கொன்றவன் கௌரவனாகிய சுபாகு.”

மீண்டும் சுபாகு நெஞ்சதிர்ந்தான். களத்தில் கிராதமன்னர் கூர்மரை அவன் எதிர்கொண்ட நினைவே இல்லை. அவன் தொடுத்த அம்புகளில் எவையேனும் சென்று தைத்திருக்கலாம். அவன் உள்ளம் மலைத்து சொல்லிழந்திருக்க கீழிறங்கினான். பார்பாரிகன் சொல்லிக்கொண்டிருப்பது வீழ்ந்தோர் பட்டியல். அதில் எத்தரப்பு என்றில்லை. வென்றதும் தோற்றதும் இல்லை. வீரம் வியக்கப்படவில்லை. மிக அப்பால் நின்றுநோக்கும் ஒருவனின் பார்வை அது. அதில் மானுடரின் வேறுபாடுகளுக்கு இடமில்லை. வீழ்ந்தவர் மட்டுமே கணக்கு. தேவர்களின் நோக்கா அது? அல்ல, அவன் மண் என பரந்திருக்கிறான். அவன் அரக்கன். மண்ணிலிருந்து எழுந்து மண்ணுக்குச் செல்பவர்கள் அரக்கர்கள். அவர்களின் தெய்வங்கள் மண்ணுக்குள் வேர்கள் என உறைபவை. அவர்களின் மூதாதையர் மண்ணில் உப்பென ஆகிறவர்கள். வெற்றிதோல்வியை எண்ணிக் கணக்கிடுபவர்கள் தேவர்கள். மண்ணுக்கு அதில் விழுபவர்கள் மட்டுமே கணக்கு.

 

சுபாகு பாண்டவப் படையை எதிர்த்து பிளந்து முன்னேறிக்கொண்டிருந்தான். களத்தில் அதுவரை எஞ்சிய அரசர் குடியினர் ஒவ்வொருவராக மண்பட்டுக்கொண்டிருந்தனர். கிராத அரசர்கள் பெரும்பாலும் அனைவருமே மறைந்துவிட்டிருந்தனர். ஷத்ரிய மன்னர்களில் எவர் எஞ்சியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒவ்வொருவரும் களம்படும் செய்தியை முரசறிவிக்கையில் படைகளிடம் ஆரவாரமும் வாழ்த்தொலியும் எழுவது வழக்கம். ஆனால் முன்பிருந்த செவிக்கூர்மை சில நாட்களாகவே முற்றாக மறைந்துவிட்டிருந்தது. புளிந்த நாட்டு இளவரசன் அபூர்வவீர்யன் இறந்தான் என்னும் செய்தி எழுந்தபோது இன்னமுமா அவன் எஞ்சியிருக்கிறான் என்னும் வியப்பே எழுந்தது. நாராய நாட்டு அரசன் அஜபாலன் வீழ்ந்தான் என்னும் செய்தி முற்றிலும் பொருளற்றிருந்தது. தோல்வியும் இறப்பும் அழிவும் வெறும் சொற்கள். கேட்கப்படாமல் உதிர்பவை.

இன்னும் இப்போர் தொடர்வதைப்போல் விந்தை எதுவுமில்லை. ஒவ்வொரு எல்லையாக மீறி மீறி வந்து அனைத்து நெறிகளையும் கடந்து வெறும் வெறியாட்டு மட்டுமென அங்கு போர் எஞ்சியது. போரிட்ட அனைவருமே துயிலில் என தெரிந்தனர். அவர்கள் விழிகள் வெறித்திருந்தன. வாய்கள் உறைந்த சொற்களுடன் திறந்திருந்தன. சிலர் விழிமூடியே தெரிந்தனர். அவர்கள் துயிலில்தான் போரிட்டனர். அதை கண்டபோது சுபாகு திகைத்து மீளமீள நோக்கினான். பெரும்பாலான படைவீரர்கள் அவ்வப்போது முற்றிலும் விழிமூடி சற்று நேரம் ஆழ்ந்துறங்கி பின் மீண்டுகொண்டிருந்தனர். அந்த ஆழுறக்கத்திலும் அவர்கள் உடல்கள் போரிட்டன. நானும் அவ்வப்போது துயிலுக்குச் சென்று மீள்கிறேன். ஒற்றை அலை என நீண்ட காலப்பரப்பு ஒன்று என்னுள் நிகழ்ந்து மீள விழித்தெழுகிறேன். ஆனால் போர் ஒருகணமும் ஓயவில்லை. போரை நிகழ்த்தி நிகழ்த்தி பழகியவை அக்கைகளும் கால்களும். போரில் உழன்று கூர்கொண்டவை அங்கே ஆடிச்சுழன்ற படைக்கலங்கள்.

சுபாகு அப்படைக்கலங்களை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கு பயன்படுத்தப்பட்ட படைக்கலங்களில் எவையுமே புதியவை அல்ல. ஓரிரு நாட்களுக்கு முன்னரே படைக்கல நிலைகள் முற்றொழிந்துவிட்டன. களத்திலிருந்து பொறுக்கி எடுத்து சேர்த்து பின்புறம் இயங்கிக்கொண்டிருந்த கொல்லரின் உலைகளுக்கு கொண்டு சென்று காய்ச்சி அடித்து கூராக்கி மீண்டும் கொண்டுவரப்பட்ட வேல்களையும் வில்களையும் அம்புகளையும் வாள்களையுமே போர் முன்னெழுந்தோறும் வீரர்கள் பயன்படுத்தினர். பின்னர் கொல்லரின் உலைக்களங்கள் மூடப்பட்டு அவர்களும் படைகளில் சேர்க்கப்பட்டனர். உலைக்களங்களுக்குரிய விறகுகள் அடுமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இறுதி நாட்களில் உடைந்த வேல்களும் வளைந்த வாள்களும் கூரிழந்த அம்புகளுமாக வீரர்கள் களத்திற்கு சென்றனர். அங்கு கொந்தளித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு படைக்கலமும் களத்தில் வீழ்ந்து அந்தியில் மீண்டும் எழுந்தது.

படைக்கலங்களைப்பற்றி அவன் படித்தது உண்டு. பல நூறாண்டுகளாக மானுடர் போரிட்டுப் போரிட்டு உருவாக்கிக்கொண்டவை அவற்றின் வடிவங்கள். தாழைஇலைபோல காற்றில் வீசி வீசி அடைந்தது வாளின் வளைவு. பறந்து பறந்து காற்றை அறிந்து அம்பு நிகர்நிலை கொண்டது. ஊன்றியும் எழுந்தும் வேல் அந்நீளத்தை அடைந்தது. ஆனால் போர்க்களத்துக்கு வந்த உடனே ஒவ்வொன்றும் உருமாறத் தொடங்குகின்றன. அம்புகள் முனைமடிகின்றன. வாள்கள் வளைகின்றன. வேல்கள் உடைந்து உடல் குறுகுகின்றன. எனில் அவை கொண்ட வடிவம் மானுடர் உள்ளத்தில் நிகழும் போரில் இருந்து எழுந்தது. இங்கு நிகழும் இப்போரில் ஒவ்வொரு படைக்கலமும் தன் தனிவடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

அன்றுபோல் ஒருநாளும் படைக்களத்தில் தான் இரண்டாகப் பிரிந்து நின்று போரிட்டதில்லை என அவன் உணர்ந்தான். “செல்க! செல்க!” என்று அவன் தன் படைகளை ஊக்கினான். அப்பால் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் நிகழ்ந்துகொண்டிருந்த போரை இடியும் மின்னலும் சூழ்ந்த சமவெளியை மலை உச்சியிலிருந்து பார்ப்பதுபோல் அவன் பார்த்தான். அங்கு கரும்புகை அடுக்கடுக்காக பேருருவ தேவகாந்தார மரங்களைப்போல எழுந்து வானில் நின்றது. கரைந்து முகில் திரள்களாக மாறி வானில் பரவியது. அங்கிருந்து அனல் வெம்மை கொண்ட காற்று அலைகளாக வந்து அறைந்தது. காற்றே வாளென மாறியதுபோல். பேருருவ வீரனொருவன் சுழற்றும் நுண்வடிவ வாள். அரிந்து சீவிக் கடந்துசென்றது அது.

பீமனுக்கும் துரியோதனனுக்கும் போர் நடந்துகொண்டிருப்பதை தொலைவில் எழுந்த முரசுகளினூடாக அவன் அறிந்தான். பீமன் யுதிஷ்டிரனை காக்கும் பொருட்டு செல்ல துரியோதனன் அவனை தடுத்து போரிட்டான். துரியோதனனின் தாக்குதலிலிருந்து தன் மைந்தருடன் பின்னடைந்து மேலும் பின்னடைந்து மையப் படைக்குள் சென்று பீமன் மறைய துரியோதனன் மறுபக்கமிருந்து எழுந்து வந்த பாஞ்சாலப் படைகளை எதிர்கொண்டான். கிருபரும் திருஷ்டத்யும்னனும் போரிட்டார்கள். அஸ்வத்தாமனும் சிகண்டியும். சாத்யகியும் கிருதவர்மனும். அதைப்போல முழுப் போரையும் உள்ளத்தில் வாங்கி களம்திகழ்ந்ததுமில்லை. போர்வெளி மிகச் சிறிதாகிவிட்டிருந்தது. பாரதவர்ஷமே எழுந்தது போலிருந்த போர்க்களம் குறுகி குடிகளுக்குள் நிகழும் போரென்றாகி இப்போது குடிக்குள் நிகழும் போர் என சிறுத்துவிட்டது. இனி ஒரு குடும்பப் பூசலாக அது ஆகும் போலும். பாரதவர்ஷம் இதைப்போல் ஒரு குடும்பமென இதற்குமுன் ஆனதே இல்லை.

“தட்சிண மல்லநட்டு சம்புகர் துரியோதனரால் தலையுடைத்துக் கொல்லப்பட்டார்” என்றது முரசொலி. அதை மறுமுறை கேட்டபோது அவன் திடுக்கிட்டான். இப்போதா? காலையில் இச்சொற்களை கேட்டேன். அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.  “தட்சிண மல்லநட்டு சம்புகர் துரியோதனரால் தலையுடைத்துக் கொல்லப்பட்டார்” என. அரக்கன்மகன் நிகழ்ந்ததை சொல்லவில்லை. நிகழ்வில் அவன் அமர்ந்திருக்கவில்லை. அவன் என்றுமுள காலமிலியில் அமர்ந்திருக்கிறான். விண் கணம்தோறும் மாறுவது. மண் மாறிலி. அதில் பருவங்கள் என, நாட்கள் என, கணங்கள் என நிகழ்வது விண்ணே. அவன் வியர்வையில் நனைந்துவிட்டான். அரக்கனின் சொற்களில் நான் ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கிறேன். மண் என்னை வாங்கிக்கொண்டுவிட்டது. எனக்கான கதை என்னை தேடி வந்துகொண்டிருக்கிறது.

என் தலையுடன் மோதும் அந்த கதை. அது உள்ளீடற்றது என்று குண்டாசி சொன்னான். அது பிழை. அது உள்நிறை கொண்டது. உள்ளே செல்லுந்தோறும் இரும்பு மேலும் செறிகிறது. இரும்பின் வெளிக்கோளமே நசுங்குகிறது. உள்ளே அதன் மையம் நலுங்காமல் இருக்கிறது. வெளிவளைவு அறைகிறது. நசுங்குகிறது. குருதிபூசிக்கொள்கிறது. உலர்ந்து கருமையாகி ஆடைபட்டுத் தோலாகி உரிந்து அகல்கிறது. ஆழம் குளிர்ந்து உறைந்து சொல்லின்மையில் நிலைகொள்கிறது. மண்ணுக்கு அடியிலும் விண்ணுக்கு அப்பாலும் இருக்கும் தெய்வங்களைப்போல. அவன் தன் முன் புரவியில் எதிரே வந்த பெண்ணைப் பார்த்தான். அவள் கரிய ஆடை அணிந்திருந்தாள். முகம் கற்சிலை என இறுகியிருந்தது. ஆனால் விழிகள் கனிந்து ஒளிகொண்டிருந்தன. “அன்னையே!” என அவன் அழைத்தான்.

அவன் வியர்வை குளிர மெல்ல மீண்டு வந்தான். தலை உடைந்து திறந்துவிட்டதுபோலவே தோன்றியது. கபாலமோக்ஷம். தலைதிறத்தல். நூற்றுவரும் தலைதிறந்து விண்புகுந்தனர். யோகியருடன் அவர்கள் அங்கே நின்றிருப்பார்கள். இக்காலகட்டத்தில் இப்புவியில் வாழ்ந்து எழுந்தவர்களில் அவர்களைப்போல வஞ்சம் அற்ற உள்ளம் கொண்டவர்கள் எவர்? அவர்களைப்போல் துளியும் பழியேற்காமல் இங்கு உலவிச்சென்றவர்கள் வேறு உண்டா? தெய்வங்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றிருக்கும். யோகியர் அவர்களை தழுவி மகிழ்ந்திருப்பார்கள். கீழே நோக்கி அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். மின்னும் பெரிய கண்கள். ஒளிரும் பற்கள் கொண்ட சிரிப்புகள். அவர்களின் முகத்தோற்றம் மாறியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவை தேவர்களின் முகங்கள். தேவர்கள் அனைவருக்கும் முலைமணம் மாறா குழந்தைகளின் முகங்கள் என்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய முகங்கள்தான்.

சுபாகு தன்னைத் தொடர்ந்து வந்த கௌரவப் படைச்சரடு மெலிந்துவிட்டிருப்பதை கண்டான். பாண்டவப் படை சிறுகுழுக்களாக சிதறியது. பின்னர் அதையே ஒரு போர்முறை என ஒருவன் கண்டுகொண்டான். பயிலாத ஏவலன். ஆனால் கல்வியின்மையாலேயே அவனால் வகுக்கப்பட்ட வழிகளை கடக்க முடிந்தது. சிறுகுழுவாக விரைந்து வந்து தாக்கி படைச்சரடு வளைந்து அவனை கவ்வ வருவதற்குள் பின்னடைந்தான். “விசைகொண்டு தாக்கி பின்னகர்ந்துவிடுக…” என அவன் தன் வழியை பிறருக்கு கூவி அறிவித்தான். அடுமனையாளன். சூதன். ஆனால் அவனிலிருந்து பெரும்படைத்தலைவன் ஒருவன் எழுந்துவிட்டிருந்தான்.

கைகளை வீசி அவன் ஆணைகளை இட்டான். அதை மற்ற படைக்குழுக்களிலிருந்த அடுமனைச்சூதர்கள் புரிந்துகொண்டார்கள். அது அடுமனை குழூஉக்குறி போலும். “குளவி எனச் சென்று கொட்டிவிட்டு பறந்தகல்க! குளவிக்கூட்டங்கள் எழுக!” அதற்குள் அவன் அதை சூழ்கை என ஆக்கிவிட்டிருந்தான். அதற்கு பெயர் அமைந்துவிட்டது. படைசூழ்கைகள் இப்படித்தான் அமைகின்றனவா? “நாகம் குளவியை கவ்வும் விசையற்றது… நீளுடல் நமக்கென கிடக்கிறது” அவன் ஆணையிட்டுக்கொண்டே இருந்தான். குளவிகள் வந்து நாகத்தை கொட்டின, நாகம் சீறி வளைந்தது. அதன் படம் ஒரு குளவியை கவ்விச் சிதறடித்தபோது உடலெங்கும் நூறு குளவிகள் கொட்டி அதை துடிக்கச்செய்தன.

நாகம் உடல் சிதறிக்கொண்டிருந்தது. தானும் நாகங்களென ஆகவேண்டும். ஆனால் அதற்கான இடம் அங்கே இருக்கவில்லை. பின்னகர்ந்து நாகத்தின் உடல்பகுதிகளை தொகுத்து ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு ஒற்றைச்சரடென மாற்றுவதே ஒரே வழி. “பின்னகர்க! மேலும் பின்னகர்க!” நாகம் பின்னகரும்தோறும் குளவிகள் கொட்டிக்கொண்டே இருந்தன. அவன் அந்தச் சூதனையே நோக்கிக்கொண்டிருந்தான். குளவியின் கொடுக்குபோல் நுண்ணியது பிறிதில்லை. நுண்மை பிறக்கும் கணம். நுண்மையில் நிகழ்வதே பேருருவாகிறது. அவர்களை எதிர்கொள்ள தேர்வில்லவர்களால் இயலவில்லை. அத்தனை அணுக்கத்தில் அம்புகள் எழுந்தமைய வெளி இல்லை. வேலர்களை முன்னிறுத்த அவன் ஆணையிட்டான். ஆனால் அவர்களால் தேர்களின் இடைவெளிகளினூடாக முன்னகர முடியவில்லை. கண்ணெதிரே அவன் படை அழிந்துகொண்டிருந்தது. ஓர் அடுமனைச்சூதனால்.

அடுமனைச்சூதன் அல்ல. இவன் பெரும்படைத்தலைவன். இக்களத்திலிருந்து இவன் வெளியே செல்லவில்லை என்றாலும், இப்போதே இறந்துவிழுந்தாலும் இவன் இங்கே இருப்பான். எங்கோ சூதன் விழிகள் இவனை நோக்கிக்கொண்டிருக்கும். இவனில் எழுந்த நுண்விதை வளர்ந்து பேருருக்கொள்ளும். ஆலமரத்தின் விதையை அத்தனை சிறிதாக்கியது எந்த தெய்வம்? சிட்டுக்குருவி எச்சத்தில் அது மலைமுகடுக்கு செல்லக்கூடுக என வகுத்தது அது. அவனையே சுபாகு நோக்கிக்கொண்டிருந்தான். பேருருவன். வெல்லற்கரியவன். போரில் எழும் போருக்கு அப்பாற்பட்டவன். போர்சூழ்கைகளை அவர்களே வகுக்கிறார்கள். அவன் அச்சூதனை அஸ்வத்தாமன் எதிர்கொள்ளவேண்டுமென விழைந்தான்.

ஒருகணத்தில் அவன் திரும்பி சுபாகுவை நோக்கி வந்தான். மறுகணத்தில் இருவரும் அம்புகளால் சந்தித்துக்கொண்டார்கள். அவனுடைய அம்புகளின் விசையும் கூர்மையும் சுபாகுவை வியக்கச் செய்தன. நிஷாதகுலத்தவன். வேட்டைக்கு மட்டுமே அம்புகளை கையாண்டவன். ஆனால் போரில் அவன் ஒவ்வொன்றையும் அறிந்திருந்தான். அம்புகொண்டு அம்பை தடுத்தான். அம்புகளை ஒழிந்தான். இலக்கு மறைத்து தாக்கி எதிர்பாரா கணத்தில் நேர்நின்று அடித்தான். அவனுடன் போரிடப்போரிட தன்னை சுபாகு கண்டடைந்துகொண்டிருந்தான். தன் வில்திறனை. முதலில் அதன் எல்லையை. பின்னர் அதன் வாய்ப்பை.

நிஷாதன் சுபாகுவின் தேர்த்தூண்களை உடைத்தான். அவன் கவசங்களை சிதைத்தெறிந்தான். ஒருதருணத்தில் தன்னுள் அவனைப்பற்றி இருந்த குறைவுமதிப்பீட்டால்தான் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என சுபாகு அறிந்தான். எக்கணமும் தன் உயிர் பிரியக்கூடும். இவன் என் முன் எழுந்த பார்த்தன். இவன் வில் ஒரு காண்டீபம். ஆம், இவன் பாடப்படாத சவ்யசாசி. அவன் தன் முழு உளவிசையாலும் அம்புகளைத் தொடுத்தபடி முன்னெழுந்தான். பேரம்பு ஒன்றை அறைய அதை நிஷாதன் உடைத்தெறிந்தான். அவனிலிருந்து நிஷாதர்களுக்குரிய இயல்பான உவகை வெளிப்பட்டது. அது அவனுடைய விழிகளை சற்றே விலக்கிய கணத்தில் அடுத்த அம்பால் அவன் கழுத்து நரம்பை சுபாகு வெட்டினான். குருதி சீறி சரடென எழ அவன் தள்ளாடி பக்கவாட்டில் விழுந்தான்.

வில்லுடன் சுபாகு திரும்பிக்கொண்டான். அவள் உள்ளம் மலைப்பு கொண்டிருந்தது. அதை எவரேனும் கண்டார்களா? ஒரு முரசேனும் அவனுக்காக ஒலிக்குமா? அவன் சூழ நோக்கியபோது நிஷாதர்கள் சிதறிப்பரந்து அகன்றுகொண்டிருந்தனர். எவரும் திரும்பி நோக்கவில்லை. ஒருவன் மட்டும் ஓடிவந்து குனிந்து விழுந்துகிடந்த நிஷாதனை நோக்கிவிட்டு திரும்பி ஓடினான். சுபாகு தன் அம்பால் அவன் காலை அடித்து வீழ்த்தினான். தேரை முன்செலுத்தி அவனருகே சென்று “சொல், வீழ்ந்தவன் பெயர் என்ன?” என்றான். அவன் சொல்வதற்குள்ளாகவே அறிந்திருந்தான், அவன் கூர்மன்.

நீள்மூச்சுடன் அவன் திரும்பி நோக்கினான். முற்றழிந்திருந்தது அவன் படை . ஒருவர்கூட எஞ்சாமல். அவன் முழுமையாக பின்வாங்கும் பொருட்டு தன் தேரை பின்னிழுக்கத் தொடங்கியபோது நேரெதிரில் பீமன் தோன்றினான். ஒருகணம் அவனுக்கு விடுதலை உணர்வே ஏற்பட்டது. அவன் பீமனையே விழிகூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். உடன்பிறந்தார் அனைவரையும் கொன்ற கைகள். நூற்றுக்கணக்கான கௌரவ மைந்தரின் குருதி கண்ட கைகள். மூத்தவரே, உங்கள் கைகளில் இன்னமும் என் மைந்தர்களின் துடிப்பு எஞ்சியிருக்கிறதா? பீமன் அவனை பார்த்துவிட்டான். அவன் படையிழந்து தனித்து நிற்பதை உணர்ந்ததும் பிளிறலோசை எழுப்பியபடி அணுகி வந்தான்.

எப்போதும் பீமனின் உடல் சுபாகுவை உளம் மலரச்செய்து வந்தது. விரிந்த தோள்கள். பரந்து அகன்ற நெஞ்சு. பாறையில் கொடிகளென பச்சை நரம்புகள் அவற்றில் படர்ந்திருக்கும். நாகம் சுற்றிய அடிமரம் என கைகள். அவனை நோக்கும்போதே உள்ளம் செயலிழக்கும். பின்னர் ஒருமுறை அவன் உணர்ந்தான், அது துரியோதனனின் உடலும்கூட என. துரியோதனனின் உடல் மேலும் எடைகொண்டது. யானை உடல்போல் தசைபூசப்பட்டது. துலா நிகர்த்த அசைவுகள் கொண்டது. ஆயினும் அவன் துரியோதனனை நினைவுகூரவைத்தான். எதில்? பீமனின் முகம் அருகணைந்தது. வானிலிருந்து பொழிந்து இறங்கி அணுகிவருவதுபோல. மஞ்சள் முகம். மங்கலான சிறுவிழிகள். மூத்தவரின் நெஞ்சு பிழுது குருதி அருந்தியது அந்த வாய். அவ்வுடலுக்குள் அக்குருதி இன்னும் இருக்கக்கூடும்.

ஒருகணம் உடல் கூச, பற்கள் கிட்டித்துக்கொள்ள, விழிகளில் நீர் படிய, கூரிய எண்ணம் ஒன்று அவனுக்குள் வந்தது. பீமனின் உடலே தன்னுடல் என்று. தன் உடன்பிறந்தார் உறையும் இல்லம் அது. அவ்வுடலுக்குள் தானும் குருதியும் நிணமுமென புகுந்துவிடவேண்டும். உண்ணுக என்னை! மூத்தவரே, உண்ணுக என்னை! மூத்தவரே, இதோ என் உடல். தன் உடலுக்குள் இருந்து நெஞ்சக்குலை எம்பித் துடிப்பதை அவன் உணர்ந்தான். என் உடல் திறந்து, உள்ளே எம்பித் துடிக்கும் இக்குலையை பிழுதெடுங்கள். இதைப் பிழிந்து கொதித்து வழியும் என் குருதியை அருந்துங்கள். மூத்தவரே, உங்கள் உடலென்றாகி உடன் இருக்கிறோம். நாங்கள் நூற்றுவரும் உங்கள் உடலென்றே என்றும் உணர்ந்திருக்கிறோம். நாம் ஒற்றை உடல். மூத்தவரே, நீங்கள் உங்களை உண்ணுகிறீர்கள்.

அவன் பீமனின் உடலை அத்தனை அணுக்கமாக முன்னொருபோதும் பார்த்ததில்லை. ஒவ்வொரு மயிர்க்காலையும் அவனால் பார்க்க முடிந்தது. விழிகளை மிக அருகிலென, பிற மானுடர் எவரையும் அத்தனை அணுக்கமாக பார்த்ததில்லை. உடல் இணைத்து காதல்கொண்ட பெண்டிரின் கண்களைக்கூட அப்படி ஒட்டிச்சென்று நோக்கியதில்லை. பீமன் தன் தேரிலிருந்து கதையுடன் காற்றில் தாவி எழுவதை, விழுந்துகிடந்த தேர் மகுடம் ஒன்றில் மிதித்து தாவி எழுந்து தன் புரவிக்கு மேல் காலூன்றி நின்று வலக்கையால் ஏந்திய கதையை தூக்கி பற்றிச் சுழற்றி அறைவதை, கணங்களாக கணங்களின் துளிகளாக அவன் பார்த்துக்கொண்டிருந்தான். தன் தலை பாறையொன்றில் சென்று அறைந்து திறந்துகொள்வதை உணர்ந்தான். உள்ளுக்குள் இறுகி இறுகிச் செறிந்து புறங்களை முட்டிக்கொண்டிருந்த விசைகள் அனைத்தும் பீறிட்டு வெளிக்கிளம்பி வெளியென்று வெடித்து வானில் கரைந்தழிந்து மறைய இறுதிக் கணத்தில் அவன் ஒரு மாபெரும் விடுதலையை உணர்ந்தான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 54

அஸ்தினபுரியின் வில்லவர் படையொன்றை தலைமை தாங்கி தேர்த்தட்டில் வில்லுடன் நின்று பாண்டவப் படையை நோக்கிக்கொண்டிருந்தபோது சுபாகு தன்னை அறியாமலேயே விந்தையான ஓர் உளமலர்வை அடைந்தான். சிற்றகவையிலேயே அவன் உள்ளத்தில் இருந்த ஆழ்கனவு அது. படைமுகப்பில் நின்று ஒருகையில் வில்லும் மறுகையில் அம்புமென போர்முகம் செல்வது. தன் ஆணைக்கு ஏற்ப பின்புறம் படையொன்று பெருகி வந்துகொண்டிருப்பது. அது உடல் பெருகி பேருருவம் கொள்வதே தான். ஆனால் ஒருபோதும் அந்த வாய்ப்பு அவனுக்கு அமையவில்லை. கௌரவ நூற்றுவரில் அவனை ஒரு போர்வீரன் என எவரும் மதித்ததில்லை. எப்போதும் மூத்தவர்களுக்கு அணுக்கனாக இணையனாகவோ பின்துணையாகவோதான் அவன் களம் வர நேர்ந்தது.

அன்று எழுகதிர் சூழ்கையின் ஒரு கதிரை அவன் தலைமை தாங்கி நடத்த வேண்டுமென்று அஸ்வத்தாமன் வகுத்து அவனிடம் ஆணையிட்டபோது முதலில் அது எவ்வகையிலும் உள்ளத்தை வந்தடையவில்லை. அவன் விழி சுருக்கி “நம்மிடம் வில்லவர் படை எவ்வளவு எஞ்சியுள்ளது?” என்று கேட்டான். அஸ்வத்தாமன் கசப்பு கொண்ட புன்னகையுடன் “வில்லேந்தியவர்கள் அனைவரையும் வில்லவர்கள் என்று கொள்ளவேண்டியதுதான்” என்றான். பின்னர் புன்னகை விரிய “இப்பொழுது படைகள் மிகவும் குறுகிவிட்டன. அம்புகள் செல்லவேண்டிய தொலைவும் குறைவே” என்றான். சுபாகு அதன் பின் மறுமொழி எதுவும் கூறாமல் “நன்று” என்று தலைவணங்கினான். “கவலைவேண்டாம் கௌரவரே, இங்கே அம்பேற்க வருபவர்களுக்கும் நெஞ்சுகாட்டுவதன்றி ஒன்றும் தெரியாது” என்றபின் அஸ்வத்தாமன் வெடித்துச் சிரித்தான்.

படைமுகப்பிற்கு வந்து தன் பாகனை பார்த்தபோதுகூட அவன் தலைமை தாங்கச் செல்வதாகவே எண்ணவில்லை. வழக்கம்போல மூத்தவர்களுக்கு அணுக்கனாக உடன்செல்லும் உளநிலையிலேயே இருந்தான். பாகன் அருகணைந்து தலைவணங்கி “தாங்கள் இக்கதிர் வடிவின் முகப்பில் நின்றிருக்கவேண்டும் என்பது அஸ்வத்தாமனின் ஆணை” என்றான். அச்சொற்கள் புரியாமல் சுபாகு நோக்க “தங்களுக்கு முன்னால் ஏழு தேர்கள் முகப்புக்காவலுக்கென நிலைக்கேடயங்களுடன் செல்லும். தங்களுக்கு இருபுறமும் இவ்வில்லவர்கள் அணிவகுப்பார்கள்” என்றான். அப்போதுதான் முழுக்க புரிந்துகொண்டு சுபாகு உளம் அதிர்ந்தான். பின்னர் அவ்வதிர்வு ஏன் அத்தனை விசைகொண்டிருக்கிறது என புரிந்துகொண்டான். கௌரவர்களில் அவன் மட்டுமே மூத்தவருக்கு இளையோனாக எஞ்சியிருக்கிறான்.

அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். பாகன் “நூறு தேர்வில்லவர்கள், முந்நூறு புரவிவில்லவர், வேலேந்திய காலாட்கள் ஐந்நூறு. ஆயிரமென தகைக்க முயன்றார்கள். படைவீரர்கள் இங்கே மிகக் குறைவு, அரசே” என்றான். தேரில் நின்ற வில்லவர்கள் அனைவருமே ஒவ்வாத கவசங்களை அணிந்திருந்தனர். பலர் பிழையாக அணிந்திருந்தனர். விற்களும் அவர்களுடையவை அல்ல என்று தெரிந்தது. எவருக்குமே ஆவக்காவலர்கள் இல்லை. தேர்ப்பாகன்கள் பலர் சிறுவர்களாகத் தெரிந்தனர். பலர் தலைக்கவசங்களை கையிலேயே வைத்திருந்தார்கள். தேர்களின் கொடிகள்கூட கீழே விழுந்தவற்றை எடுத்து உதறி கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆகவே அவை குருதியும் சேறும் படிந்து ஆட்டுக்காதுகள்போல் தொங்கிக்கொண்டிருந்தன.

அவர்கள் அனைவருமே அரைத்துயிலில் இருப்பதுபோல் தோன்ற சுபாகு “இவர்கள் அஸ்தினபுரியில் போர் பயின்றவர்களா என்ன?” என்றான். “இப்போது அந்த எல்லைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. மிகச் சில படைக்குழுக்களே நாட்டுக் கொடியுடனும் குலக் குறிகளுடனும் எஞ்சியுள்ளன. மற்றவர்கள் அனைவரும் பல வகையிலும் படைகளிலிருந்து உயிர் எஞ்சியவர்கள். எழுந்து நடக்க ஆற்றல் கொண்டவர்கள் அனைவரையுமே படைக்கு கொண்டுவந்தோம். புரவியூரத் தெரிந்தவர்கள் அனைவருமே வில்லேந்தினர். ஷத்ரியர்கள் அனைவருமே தேர் ஏறினர். வில்லேந்தும் பயிற்சி கொண்டவர்கள் சிலர். அல்லாதவர்களும் இங்குள்ளனர். இவர்களிடையே எந்த பொதுத்தன்மையும் இன்றில்லை” என்றான் பாகன்.

மேலும் அதை பேச விரும்பாமல் கையசைத்துவிட்டு சுபாகு தேரில் ஏறிக்கொண்டான். தேர் அவனுக்காக காத்து நின்றது. அவன் ஏறிக்கொண்டதும் புரவிகள் பொறுமையிழந்தவைபோல் முன்னும் பின்னும் உடலசைத்து குளம்புகளால் நிலத்தை தட்டின. அதற்கேற்ப தேர் பொறுமையிழப்பை தானும் காட்டியது. தேர்த்தட்டில் நின்று வில்லை எடுத்து அருகே ஊன்றியபோது அவ்வில்லுக்கும் தனக்குமிடையே எத்தனை தொலைவு என்பதை சுபாகு உணர்ந்தான்.

வில்லவனாக வேண்டுமென்ற கனவு இளமையிலேயே அவனை விட்டு அகன்றுசென்றது. தன் உடன்பிறந்தாரைப்போல் பெருமல்லராக வேண்டுமென்று பின்னர் விழைந்தான். பல முறை பயிற்சிக்களத்தில் தூக்கி நிலத்தில் அடிக்கப்பட்ட பின்னர் மெல்ல பின்னகர்ந்து போர்க்கலைகளை தவிர்க்கலானான்.

அதன் பின்னர் புரவியூர்தலில் மட்டுமே ஆர்வம் எஞ்சியிருந்தது. புரவியில் உடல் உருகி காற்றென ஆகி மறையும்படி விசையும் விரைவுமாக பாய்வதை அவன் விழைந்தான். அப்போது அடுக்கப்பட்ட எண்ணங்கள் கலைந்து தேவையற்ற அனைத்தும் பின்சிதறி தெறிக்க எஞ்சியவை கூர்கொண்டு ஒளி கொண்டு நின்றிருக்கும். தன் சிறந்த சொல்லாட்சிகளை எல்லாம் அவன் புரவிப்பாய்ச்சலுக்குப் பின்னரே அறிந்தான். மூச்சிளைக்க உடல் வியர்த்துவழிய முகம்மலர்ந்து நின்றிருக்கையில் அச்சொற்றொடர் அந்த விரைவில் எப்புள்ளியில் தன்னை வந்தடைந்தது என எண்ணி வியந்துகொள்வான். ஆயினும் வேட்டையை அவன் வெறுத்தான். அங்கே வேட்டையாடுபவனின் திசையை வேட்டை விலங்கு முடிவுசெய்கிறது. கொல்லப்பட்டு கிடக்கும் விலங்கு கொன்றவனை இறுதியாக வென்றுவிடுகிறது.

நூல்கற்றோன் எனும் அடையாளம் தனக்கு உகந்ததாக அமையக்கூடும் என்று எப்போது புரிந்துகொண்டோம் என்று அவனுக்கு தெரியவில்லை. என்றோ ஒருநாள் சூதரோ நிமித்திகரோ கூறிய எளிய கூற்றொன்றை உடன்பிறந்தார் சூழ்ந்த அவையில் அவன் கூறியபோது துரியோதனன் திகைத்து இரு கைகளையும் விரித்து அவனைப் பார்த்த பின்னர் எழுந்து வந்து அள்ளி நெஞ்சோடணைத்து, முதுகில் தன் பெருங்கையால் ஓங்கி அறைந்து நகைத்து “இவன் நம்மில் அறிஞன். நம்மில் ஓர் அறிஞன் எழுந்துளான்! நோக்குக, நம்மில் ஒரு அறிஞன்!” என்றான். உடன்பிறந்தவர்கள் அனைவரும் கைதூக்கி கூச்சலிட்டு நகைத்தனர். துச்சாதனன் பெருமிதம் ததும்பும் முகத்துடன் அவனை தோள் பற்றி இழுத்து தன் தசைதிரண்ட கைகளால் நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டான்.

துரியோதனன் “சொல்க இளையோனே, இவர்கள் அறிய மீண்டும் சொல்க!” என்று கூவினான். “எளிய கருத்துதான்” என அவன் நாணி முகம்சிவக்க “எளிய கருத்தா? நீ அதை சொன்னபோது அது அரிதென்று மட்டுமே எனக்கு புரிந்தது. எங்களுக்குப் புரியும்படி மீளச் சொல் என்று கேட்கிறேன்” என்றான் துரியோதனன். கைகளைத் தட்டி “அனைவரும் செவிகொள்க… செவிகொள்க அனைவரும்… இளையோன் அரிய கருத்தை மீண்டும் சொல்லவிருக்கிறான்” என்றான். சுபாகு மேலும் நாணி “ஒரு படை அதன் விலங்குகளை எப்படி நடத்துகிறது என்பதிலுள்ளது அதன் பயிற்சி. விலங்குகளை வன்மையாக நடத்தும் படை முழுக்கப் பயிலாதது. முதற்கட்ட எழுச்சிக்குப் பின் எளிதில் உளம் தழைந்து பின்னடைவது” என்றான்.

“ஏன்?” என்று துச்சாதனன் கேட்டான். “அதையும் அவனே சொல்வான். நீ முந்தாதே” என்றான் துரியோதனன். “அவ்வளவுதான் அக்கருத்து” என்றான் சுபாகு. “ஏன்? அதை சொல்” என்று துரியோதனன் கேட்டான். “விலங்குகள் பிழை செய்தால் என்ன செய்வது?” என்றான் துர்மதன். “விலங்குகள் போலவே ஏவலரும் பிழைகள் செய்கிறார்கள்” என்றான் துச்சகன். “அனைவரும் பிழை செய்தால் அதன்பொருள் நீ பிழையறச் சொல்லவில்லை என்பதே” என்றான் துர்முகன். “அனைவருமே பிழைகள்தான் செய்கிறார்கள். பிழைகள் இணைந்து பெரும்பிழையென படை ஒழுகிச்செல்கிறது” என்று சுஜாதன் சொன்னபோது அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அவன் சொன்னதும் புரியாமல் திரும்பி சுபாகுவிடம் “ஏன் விலங்குகளை அன்பாக நடத்தவேண்டும்?” என்று துச்சலன் கேட்டான். “இரு, அவனே சொல்வான். அதன்படி நாம் நடந்துகொள்வோம்…” என்றான் துச்சாதனன்.

அவர்களுக்கு தான் சொல்வது சற்றும் புரியவில்லை என்று உணர்ந்து சுபாகு சலிப்படைந்தான். ஆனால் அதை கடந்துசென்று “நான் இவ்வாறு நினைக்கிறேன். பிழையென்றும் இருக்கலாம். விலங்குகளிடமும் பொருட்களிடமும் வன்மையை காட்டுவதென்பது நம்முள் திகழும் வன்மை அறியாமல் வெளிப்படுவதே. பயிலா உள்ளம்தான் அவ்வாறு இலக்கில்லாமல் வன்மையை வெளிக்காட்டும். பயிற்சி என்பது தேவையானபோது தேவையான இடத்தில் தேவையான அளவுக்கு மட்டுமே வன்மையை காட்டுவது. தேவையில்லாமல் வெளிப்படும் வன்மை வீணாகும் உள ஆற்றலே. அடக்காமல், மறைக்காமல், தவிர்க்காமல் உள்ளத்தில் வன்மையை எல்லைகட்டி நிறுத்துபவனையே வீரன் என்கிறோம்…” என்றான்.

“எனில் நம்மில் எவர் வீரன்?” என்று துச்சகன் கேட்டான். அவனால் ஒரு சொல்லையும் புரிந்துகொள்ள முடியவில்லை என எண்ணி சுபாகு பேசாமல் நின்றான். “இனி எவரும் விலங்குகள்மேல் வன்மையை செலுத்தலாகாது. இது என் ஆணை” என்றான் துச்சாதனன். “ஆம், அதை அவன் சொன்னபோதே நான் முடிவுசெய்துவிட்டேன். அந்த இழிவுயிர்கள் என்ன செய்தாலும் பக்கத்திலுள்ள சுவரில் தலையை முட்டிக்கொள்வேனே ஒழிய அடிக்கவோ துன்புறுத்தவோ மாட்டேன்” என்றான் துர்மதன். சுபாகு சலிப்பைக் கடந்து புன்னகையை சென்றடைந்தான். ஒருகணத்தில் அங்கிருந்த நூற்றுவரையும் உள்ளத்தால் அள்ளி ஆரத்தழுவிக்கொண்டான்.

துரியோதனன் “அடக்காமல், மறைக்காமல், தவிர்க்காமல் வன்மையை என்ன செய்ய இயலும், இளையோனே?” என்றான். அவன் முழுக்க உள்வாங்கிக்கொண்டதை உணர்ந்த சுபாகு திடுக்கிட்டான். மூத்தவர் நூற்றுவரில் ஒருவரல்ல என எப்போதுமே அவனுக்கு தோன்றிக்கொண்டிருந்தது. அவர் அவர்களில் ஒருவராக இயல்பாக தன்னை ஆக்கிக்கொள்கிறார். வேறு எங்கிருந்தோ அவர்களை கனிந்து நோக்கிக்கொண்டும் இருக்கிறார். சற்றுமுன் நானும் அவ்வாறே அவர்களை நோக்கினேன். அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். “மூத்தவரே, நஞ்சை அமுதாக்கும் முறையையே கல்வி என்றும் ஊழ்கம் என்றும் சொல்கிறார்கள்” என்று சுபாகு சொன்னான். துரியோதனன் “ஆம்” என்றான். “படைக்கலப்பயிற்சி கலை என ஆவது அவ்வாறுதான். போர் காவியமாவது அதைப்போலவே” என்றான் சுபாகு. துரியோதனன் பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து “அது அனைவருக்கும் இயல்வதா எனத் தெரியவில்லை. ஆனால் அதுவே கல்வியும் தவமும் என தெளிகிறது” என்றான்.

அன்று திரும்பிச்செல்கையில் அவன் உள்ளம் மலர்ந்து உடலில் அதை ஒரு மதர்ப்பாக உணர்ந்தான். எங்காவது புரவியில் விரையவேண்டும் என்று, பெண்ணுடன் உடல்கலக்கவேண்டும் என்று தினவெழுந்தது. இடைநாழியில் அவன் குண்டாசியை கண்டான். அவன் “நன்று மூத்தவரே, நூல்நவிலத் தொடங்கிவிட்டீர்கள்” என்றான். அவன் மது அருந்தியிருந்தான். “முதிரா அகவையிலேயே மது எல்லைமீறுகிறது உனக்கு” என்றான் சுபாகு. “ஆம், நீங்கள் கல்வியை நான் மதுவை தெரிவுசெய்துள்ளோம்” என்ற குண்டாசி. “நீங்கள் பேசுவதை கேட்டேன். நான் வெளியே நின்றிருந்தேன். அவைபுகுந்து பேச என்னால் இயலாது” என்றான். “நன்கு சொன்னீர்கள். துரோணர் கல்விச்சாலையில் சொன்னவை வேறு சொற்களில் எழுந்தது போலிருந்தது.”

சுபாகு சீற்றம் கொண்டான். “எங்களை சிறுமைசெய்வதற்கான உன் திறனை நெடுநாட்களாகவே பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றான். குண்டாசி “என்னை சிறுமைசெய்ய எனக்கு வேறென்ன வழி?” என்றான். “நீங்கள் சொன்னது உயரிய கருத்து. கூரியது. ஆனால் கூரிய கருத்துக்கள் கூரிய அவைகளில் மட்டுமே பயன்தருபவை. அவற்றைக்கொண்டு படைநடத்த இயலாது. போர் வெல்ல இயலாது. ஏனென்றால்… ஏனென்றால்…” அவன் சொல் திக்கும்போது முதிராச் சிறுவனாக ஆவதை சுபாகு கண்டிருந்தான். அதைக் கண்டதுமே அவன் உள்ளம் சினமடங்கி நெகிழ்ந்தது. “ஏனென்றால் பொற்கொல்லனின் பணிக்கலங்களை போருக்கு கொண்டுசெல்ல இயலாது.”

முகம் மலர்ந்து குண்டாசி சொன்னான் “அரிய ஒப்புமை! நானும் இப்போது மெய்யறிந்தோரைப்போல் எண்ணம் ஓட்டுகிறேன். நான் சான்றோன் ஆகிவிட்டேன். இனி மெல்லமெல்ல வளர்ந்து சூதனாகவும் ஆகக்கூடும். நல்லூழ்தான்!” சுபாகு சிரித்து “நன்று, நான் செல்லவேண்டும். பணிகள் நிறைந்துள்ளன” என்றான். “மூத்தவரே, இதைமட்டும் கேட்டுவிட்டுச் செல்க! நுண்ணிய கருத்துக்களின் ஆற்றல் என்னவென்றால் அவை நுண்ணிய கருத்துக்களை திறமையாக எதிர்கொள்ளும் என்பதே. ஆனால் போர்க்களத்தில் வன்மையான கருத்துக்களே படைக்கலங்களாகி வருகின்றன. அவற்றை நுண்மையான கருத்துக்கள் எதிர்கொள்ள நேர்ந்தால் ஒற்றை அடியிலேயே முனைமடிந்து நசுங்கிவிடும்…” சுபாகு அவன் தோளில் தட்டிவிட்டு முன்னால் சென்றான்.

குண்டாசி “இத்தனை எண்ணங்கள் செறிந்த உங்கள் அரிய மண்டையை ஒரு எடைமிக்க கதை வந்து அறைந்தால் அக்கருத்துக்கள் என்ன ஆகும்? அவையும் எல்லா கருத்துக்களையும்போல உடைந்து வெண்கூழாக மண்ணில் சிதறிக்கிடக்கும்…” என்றான். சுபாகு அவனை திரும்பிப்பார்க்காமல் நடந்தான். குண்டாசி கூவியபடி பின்னால் வந்தான். “நோக்குக மூத்தவரே, கதை என்பது என்ன? அது ஒரு மண்டை. இரும்பு மண்டை. அதன் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? அது உள்ளீடற்றது என்பதனால்தான். அதற்கு உள்ளேயும் இரும்புதான். மானுட மண்டைபோல் வெளியே முகம் ஒன்று வைத்து உள்ளே அகம் வேறொன்று வைத்து விளையாடுவது அல்ல கதை. மண்டையை உடைப்பதற்கென்றே இப்படி ஒரு படைக்கலனை கண்டடைந்தவர்கள் மானுடரை நன்கறிந்தவர்கள். அல்லது மண்டையை எங்கேனும் முட்டி உடைக்க விழைந்தவர்கள்.”

அவன் மூச்சிரைக்க நின்றுவிட்டான். “நான் ஒரு படைக்கலம் கண்டுபிடிப்பேன். அது மண்டைகளை பின்னாலிருந்து உடைக்கும். முகம் உடைபடக்கூடாது. பின்பக்கத்தை மட்டும் திறந்துவிடும். உள்ளிருப்பவை பின்பக்க வாயிலினூடாக ஒழுகிச்செல்ல முன்பக்கம் முகம் என்னவாக இருக்கும்? தெரியுமா, என்னவாக இருக்கும்? சொல்கிறேன், நில்லுங்கள். அது ஆழ்ந்த ஊழ்கத்திலிருக்கும். ஆம், முனிவரின் முகம்போல் தெளிந்திருக்கும், மனிதர்களை விடுதலைசெய்ய சிறந்த வழி என்பது அதுவே. கபாலமோக்ஷம். ஆகவேதான் யோகியரை மண்டையை உடைத்து சமாதியில் அமரச்செய்கிறார்கள். மண்டை உடையாமல் எவருக்கும் விடுதலை இல்லை… ஆகவே” அவன் குரலை அவன் நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தான். தன் மஞ்சத்தறைக்கு வந்த பின்னரும்.

அன்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டபோது சொற்கள் குழம்பி ஒன்றோடொன்று முட்டிச் சலித்து புரண்டு படுத்தான். அக்கணம் ஒன்றை உணர்ந்தான், அவன் முகம் மலர்ந்திருந்தது. அவன் தன்னை கண்டுகொண்டிருந்தான். கருத்துக்கள் மிக எளியவை. பெரும்பாலும் ஓரிரு மையங்கள் கொண்டவை. அவற்றை எடுத்து பயன்படுத்துவதையே அறிவுச்செயல்பாடு என்கிறார்கள். களஞ்சியத்திலிருந்து பொருட்களைப் பெற்று அவற்றை சமைத்து அன்னமாக்குதல். அமைச்சர்கள் அதை செய்கிறார்கள். ஆனால் அதை தானும் செய்யாத அரசன் அமைச்சர்களின் நூலாட்டுபாவை என்று ஆவான். கௌரவர்களில் மூத்தவர் அனைத்தையும் கடந்துசென்று அறிபவர். அதை அமைச்சர்கள் அறிவார்கள். அவருக்கு உரிய சொல்லெடுத்து அளிப்பதே தன் பணி.

அதன் பின் உடன்பிறந்தார் அவையில் நூல்குறிப்பை எடுத்துக் கூறுவதற்கென்றே அவன் பயிலத்தொடங்கினான். பயிலும்தோறும் நூல்களில் ஆர்வம் மிகுந்தது. படைசூழ்கை நூல்களை முதலில் விரும்பிக் கற்றான். ஆனால் படைசூழ்கைகளில் விரைவிலேயே அவன் சுவையிழந்தான். படைசூழ்கைகள் மெய்யாகவே வகுக்கப்படுகின்றனவா, எப்போர்க்களத்திலாவது அவை பயனளிக்கின்றனவா என்ற ஐயம் அவனுக்கு எழுந்தது. போர் ஒழிந்த நாள் பாரதவர்ஷத்தில் இல்லை, என்றாலும் ஒவ்வொரு அரசருக்கும் ஓரிரு ஆண்டுகளுக்கொருமுறை மட்டுமே களம்புகும் வாய்ப்பு அமைகிறது. அவையும் பெரும்பாலும் விரைந்து தாக்கி மீளும் கொள்ளைகளும் ஊடுருவல்களும் மட்டுமே. விரிநிலத்தில் படை நிரத்தி, சூழ்கை அமைத்து, நெறி சமைத்து நின்று பொருதி அந்தியில் மீளும் போர் என்பது பாரதவர்ஷத்தில் முன்பெங்கோ நிகழ்ந்ததுபோல், கதைகளில் எழுந்ததுபோல் அத்தனை அகன்றிருந்தது. ஆகவே எஞ்சிய நேரமெல்லாம் போரை எண்ணி எண்ணி கற்பனையில் சூழ்கைகளை வகுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று தோன்றியது.

அச்சூழ்கைகளையே பின்னர் நாற்களச் சூழ்கைகளாக மாற்றிக்கொண்டனர். மேலும் மேலும் குறுக்கி சிறிய களத்திற்குள் பொருத்தி அல்லும் பகலும் அமர்ந்தாடினர். எதனாலோ அவனுக்கு நாற்களம் சலிப்பை அளித்தது. அதில் எவ்வகையிலும் தன்னைக் கண்டடைதல் இல்லை. அதில் சொற்களே இல்லை. சொற்கள் குறுகி சில அடையாளங்களாகி பொருட்களாகி களத்தில் பரவியிருக்கின்றன. அவன் போரென முதலில் பார்த்தது சகுனியும் யுதிஷ்டிரனும் அமர்ந்து ஆடிய நாற்களமாடலைத்தான். அங்கு ஒவ்வொரு போர்ச்சூழ்கையும் ஆட்டவடிவு கொண்டெழுவதைக் கண்டான். போர்க்களத்தில் படைகளை நிரத்தி சூழ்கையை அமைத்து அமைத்து அறிந்து பின்னர் சூழ்கையை மட்டும் அவற்றிலிருந்து எடுத்து படைகளை தவிர்த்துவிட்டு கருக்களென அவற்றை நிரத்தி களம்பரப்பி விளையாடினர். வென்றனர் தோற்றனர். ஊழை ஒவ்வொருநாளும் தங்கள் முன் வந்து அமரச்செய்தனர். காடுகளை விதைகளாக்கி உள்ளங்கைக்குள் வைத்திருந்தனர்.

நாற்களத்திலன்றி சூழ்கைகளுக்கு பொருளில்லை என்று உணர்ந்த பின்னர் அவன் ஆட்சிநெறிகளை பயிலத் தொடங்கினான். அது அவனை முற்றாக இழுத்து உள்ளே கொண்டுசென்றது. மானுடர் கட்டற்ற விழைவுகளாலும், மூண்டெழும் சினத்தாலும், வெளியே புலப்படாத அச்சங்களாலும் ஆட்டுவிக்கப்படுபவர்கள். அம்மூன்றையும் சற்றும் கருத்தில் கொள்ளாது அவர்களை பெருந்திரளென மட்டுமே கண்டு வகுக்கப்பட்டவை அறநெறிகள். அவ்வாறன்றி வேறெவ்வகையிலும் நெறிகளை வகுக்க இயலாது. ஏனெனில் மானுடரை திரளென ஆக்கும் பொருட்டும் அத்திரளை ஆளும் பொருட்டும் மட்டுமே நெறிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆகவே நெறிகளுக்கும் அடிப்படை உணர்வுகளுக்கும் இடையே ஓயாத பூசலிருந்தது. விழைவுகளுக்கும் உச்சங்களுக்கும் சினங்களுக்குமிடையே இருந்த பூசலுக்குமேல் அப்பெரும்பூசல் அமைந்திருந்தது. நெறியவை என்பது அப்பூசல்களுக்குள் பூசல்களுக்குள் பூசல் என நிகழும் இயக்கத்தின் நடுவே ஒரு நடைமுறைப்புள்ளியை கண்டடைவது. நெறிக்கான எந்தத் தீர்வும் அத்தருணத்திற்குரியது மட்டுமே. ஏனென்றால் நெறியென்பதே அத்தருணத்திற்காகத்தான். அதை உணர்ந்தபின் பதற்றம் கொள்ளாமல் அவையமர இயன்றது.

அஸ்தினபுரியில் பதினைந்து ஆண்டு காலம் அவை அமர்ந்து நெறி நடத்தியவன் அவனே. துரியோதனன் ஒவ்வொரு முறையும் அரியணையில் அமர்ந்து நெறியவையை தொடங்கி வைத்து குடிகளின் கூற்றுகளை செவிகொண்ட பின்னர் “இளையோனே, இதை நீ நடத்து. இனி உன் சொல் இங்கு திகழ்க!” என்று சொல்லி எழுந்து கைகூப்பி “என் இளையோன் என் வடிவாக இங்கிருந்து உங்களுக்கு முறை செய்வான். அவனைவிடச் சிறந்த சொல்லை அஸ்தினபுரியில் எந்தை மட்டுமே எடுக்க இயலும்” என்றபின் அவையை விட்டு நீங்கினான்.

அரியணைக்கு இணையாக போடப்பட்ட சிறிய பீடத்தில் அமர்ந்து சுபாகு நெறியவையை நடத்தினான். அங்கிருந்து அவன் ஒவ்வொருநாளும் கற்றுக்கொண்டான். ஒவ்வொருவரும் தங்கள் உளக்குறைகளை சொல்லும்போது தங்கள் உறவுகளால், சுற்றத்தால், புவியிலுள்ள மானுடரால், தெய்வங்களால் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாகவே கூறினார்கள். கைவிடப்பட்டவர்களின் கண்ணீர் எனவே எல்லா முறைப்பாடுகளும் இருந்தன. உலகனைத்தையும் எதிர்தரப்பில் நிறுத்தி தன்னந்தனியாக மறுதரப்பில் நின்று விழிநீர் உகுத்தனர். நெறிநின்று அறம் புரந்த தனக்கு மீறியவர்களால் தீங்கிழைக்கப்பட்டதாக கூறியவர்கள் பெரும்பிழை செய்தவர்களாகவும் பழிகொண்டவர்களாகவும் தெளிந்து வந்தனர்.

முதல் சில ஆண்டுகளில் அவர்களின் நடிப்பு அது என்று எண்ணி அவன் சினம் கொண்டதுண்டு. பின்னர் உணர்ந்தான், நடிப்புகள் உச்சம் அடைவது நடிப்பவன் அதை நம்பும்போதுதான் என. ஒரு கூற்று முழுமையாக முன்வைக்கப்பட்டு இறுதிச் சொற்கள் மழை நின்றபின் சாரலென முன்பின் தொடர்பிலாது உதிர, முறைப்பாடு விடுத்தவன் உளம் பின்னடையத் தொடங்குகையில் அவன் உடல்மொழியை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பான் சுபாகு. தன்னைத் தொகுத்து விசையுடன் முன்வைத்தவன் அனைத்தையும் சொல்லி முடித்ததுமே தன்னை அறியாமல் மறு எல்லைக்குச் சென்று தன் உணர்வுகளையும் சொற்களையும் ஐயம் கொள்வதை அவன் முகமே காட்டும். ஊசல் மறு எல்லைக்குச் சென்றுவிடும். அக்கணத்தில் அவன் சொன்னவற்றின் மெய்மையும் பெறுமதியும் துலங்கி எழும். அங்கிருந்து முடிவுகளுக்குச் செல்வது மிக மிக எளிது.

சுபாகு நெறியவையில் பகல் முழுக்க கழித்தான். பெரும்பாலான நாட்களின் அந்தியிலும் பின்னிரவிலும்கூட நெறியவைகளை நடத்தினான். ‘அஸ்தினபுரியில் எட்டுமுறை சீர்த்தூக்கி சொல்லப்படும் அறச்சொல்லே அரசாள்கிறது’ என்னும் கூற்று அவனால் அங்கு நிறுவப்பட்டது. நெறிசூழ் அவையில் அமரும்தோறும் அவன் பூசல்களில், போர்களில் ஆர்வமிழந்தான். படைக்கலங்களை வெறுத்தான். மற்போரிடும் உடல்களை காண்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உளம் ஒவ்வாது விழிதிருப்பி பின்னடைந்தான். தெய்வங்களுக்கு முன் இம்மானுடர் உடலை உந்தி உந்தி முன்வைக்கிறார்கள். உடலே நான் என கூவுகிறார்கள். ஆம் என்கிறது பொறுமையிழந்த தெய்வம். பலிகொள்ளத் தொடங்குகிறது. போரென்றும் பிணியென்றும் வற்கடம் என்றும் வந்துசூழ்கிறது.

“சொற்களால் மானுடர் உயிர் வாழ்கிறார்கள். உடலென்பதும் ஒரு சொல்லே” என்று ஒருமுறை அவன் துரியோதனனிடம் சொன்னான். அவன் சொல்வதை புரிந்துகொள்ளாமல் வியப்பால் விரிந்த விழிகளுடன் நோக்கிய துரியோதனன் உரக்க நகைத்து “அரிய சொல்! இளையோரே கேளுங்கள்! இவன் மீண்டும் ஒரு அரிய கூற்றை முன் வைத்திருக்கிறான்! நாம் எண்ணவேண்டியது! சீர் தூக்கி தெளிய வேண்டியது!” என்றான். ஊன்தடியை கடித்து இழுத்து மென்றபடி “ஆம், மெய்மையின் கூற்று” என்று துர்மதன் சொன்னான். துச்சகன் உரக்க “ஆனால் நாம் போரிட்டதை எண்ணி சீர்தூக்கி முடிவெடுக்கும் பொறுப்பை அவனிடமே விட்டுவிடலாம். இங்கு மதுக்குடங்களும் ஊன்கலங்களும் நமக்காகக் காத்திருக்கின்றன” என்றான்.

தொடைகளில் அறைந்து வெடித்து நகைத்த துரியோதனன் “ஆம், அதுவே சிறந்த வழி. இளையோனே, உனது இக்கூற்றை நீயே மேற்கொண்டு எண்ணி இறுதியை சென்றடைக! அதுவே எங்கள் முடிவென்று ஆகுக!” என்றான். உரக்க நகைத்து கொந்தளித்தது உடன்பிறந்தார் நிறைந்த அஸ்தினபுரியின் அரண்மனை உள்ளவை. “நாம் இவனையே நமது நாவென அமைத்துக்கொள்ளலாம்” என்றான் துச்சகன். “ஆனால் இவனுக்கு சுவை தெரியாதே? சொற்சுவை அறிந்தவன் ஊன்சுவையை அறிவதில்லை” என்றான் துர்மதன். அவை சிரிப்பால் அதிர்ந்ததைக் கண்டு கர்ணன் உள்ளே வந்து “என்ன நிகழ்கிறது?” என்றான். “ஒன்றுமில்லை மூத்தவரே, யானையின் மிக மென்மையான உறுப்பு எது என சொல்லாடினோம். நாவு என இவன் சொன்னான்… அதை சுட்டுத்தரச் சொன்னோம்” என்றான் துச்சலன். மீண்டும் நகைப்பு.

கர்ணன் “உங்கள் நகைப்பை புரிந்துகொண்டால் நான் பிரம்மத்தை புரிந்துகொண்டவன் ஆவேன்” என்றான். “கள்ளமற்றோர் புரிந்துகொள்ள இயல்வதே இரண்டும்” என்றான் துரியோதனன். “யானையின் நாக்கு!” என கள்மயக்கில் துச்சலன் கைதூக்கினான். “மிக மென்மையானது… ஆம்.” அவன் கை காற்றில் அசைந்தது. “ஏன் என்றால் யானை பேசுவதில்லை…” அவனே குழப்பம் அடைந்து சிவந்த கண்களால் நோக்கி “ஆம், ஆனால் யானை தன் பெருவயிற்றால் நேரடியாக பேசுகிறது” என்றான். “அவன் மேலும் பெரிய கொள்கைகளை நோக்கி செல்கிறான். அவனுக்கு ஒரு குடம் கள்ளை ஊற்று” என்றான் துரியோதனன். “அதைவிட இது எளிது” என துச்சாதனன் ஓங்கி அவன் மண்டையை அறைந்தான். “ஆனால் நாக்கு…” என்னும் சொற்றொடர் அறுந்து துச்சலன் கீழே விழுந்தான். அவை சிரிப்பில் கொந்தளித்தது.

சுபாகு விழிகளிலிருந்து நீர் பெருக தேர்த்தட்டில் நின்றான். எங்கு சென்றுவந்தேன்? எவ்வுலகில் வாழ்ந்து மீண்டேன்? அவன் உள்ளம் விம்மிக்கொண்டிருந்தது. அன்று தான் களம் மீளப் போவதில்லை. நான் ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கிறேன். இன்று மாலை என் மூத்தவர் தன் குடிலில் தனித்திருப்பார். நினைவறிந்த நாள் முதல் தனித்திருக்காதவர். “எந்தையே, என் இறையே, இன்றிரவு என் உடன்பிறந்தாருடன் நுண்வடிவில் உங்களை வந்தடைவேன். உங்களை இருளென சூழ்ந்திருப்போம், தன்னந்தனியனாக நாளை இக்களத்தில் எழுவீர்கள். ஒருவேளை இந்த மண்ணில் தனித்து உடல் உடைந்து இறந்துகிடப்பதுதான் உங்கள் ஊழ் போலும். அதன் பொருட்டுத்தான் நூறு தலைகொண்டவராக, இருநூறு கைகள் எழுந்தவராக உங்களை மூதாதையர் நிலத்தில் வாழவைத்தனர் போலும்.” அவன் விழிநீர் பெருக களமுகப்பை நோக்கியபடி நின்றான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 53

அஸ்வத்தாமனின் பாகன் திரும்பி நோக்கி “முன்னேறவா, அரசே?” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். “முன்னேறுக!” பாகனின் விழிகள் மங்கலடைந்திருந்தன. அவன் ஆழ்ந்த துயிலில் இருப்பதுபோல் குரலும் கம்மியிருந்தது. இவன் எப்படி தேர்நடத்த முடியும் என்று அஸ்வத்தாமன் ஒருகணம் எண்ணினான். ஆனால் புரவிகள் அவன் கையின் அசைவால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. சொல்லப்படுவதற்குள்ளேயே உடலசைவுகளிலிருந்தும் முகத்தின் மெய்ப்பாடுகளிடமிருந்துமேகூட அவன் ஆணைகளை பெற்றுக்கொண்டான். ஆடிவளைவில் தன்னை நோக்கிக்கொண்டிருக்கும் பாகன் எந்த வில்லவனுக்கும் தெய்வத்துணைபோல.

பாகனுடன் உடலால், விழியால், சொல்லால் உரையாடிக்கொண்டே இருக்கிறான் படைவீரன். அது தன்னுடன் தானே உரையாடுவதுபோல. அவன் காலையில் சொன்னது நினைவிலெழ “காலையில் ஒரு சொல் எஞ்சவிட்டாய்… என்ன அது?” என்றான். “என்ன?” என்றான் பாகன். “நீ காலையில் சொன்ன சொல்.” பாகன் “நினைவில்லை, அரசே” என்றான். “நீ சொன்ன சொல்… அது உண்டு செரிக்காத உணவுபோல் நஞ்சு என்றாய்.” பாகன் “நினைவில்லை…” என்றான். அஸ்வத்தாமன் சலிப்புடன் “செல்க!” என்றான். அப்பால் பாண்டவப் படையிலிருந்து அம்புகள் எழுந்து வந்து சூழ்ந்தன. “செல்க!” என அஸ்வத்தாமன் கைநீட்டி ஆணையிட்டான்.

அஸ்வத்தாமன் தன் படையை நோக்கி “விரைக! விரைக! எழுக!” என ஆணையிட்டபடி தேரில் படைமுகப்பு நோக்கி சென்றான். சிகண்டியை அவன் விழிகள் தேடின. படைகள் அதற்குள் சுழன்று திசைமாறிவிட்டிருந்தமையால் அவன் சென்றணைந்த முகப்பில் விராடநாட்டுப் படைகளே இருந்தன. அவற்றை தலைமை தாங்கி நடத்திய சாத்யகியை நாண்முழக்கியபடி அஸ்வத்தாமன் சந்தித்தான். இருவரும் கைபறக்க அம்புகளால் தாக்கிக்கொண்டனர்.

விராடப் படைகள் அக்களத்திற்கு வரும்போது போர்க்களப் பயிற்சியற்றவையாக இருந்தன. அவர்களில் சற்றேனும் படைப்பயிற்சி பெற்றவர்கள் முதலிலேயே போருக்கு வந்து பீஷ்மராலும் பின்பு துரோணராலும் முற்றழிக்கப்பட்டனர். பாண்டவப் படையின் ஏவலர்களும் தொழும்பர்களும் பெரும்பகுதியினர் விராட நாட்டிலிருந்தே வந்திருந்தனர். போர் விசைமிகுந்தோறும் மேலும் மேலும் ஏவலரும் படைதொழும்பரும் தேவைப்படவே படைகளை அனுப்பி விராட நாட்டிலிருந்து நிஷாதரையும் கிராதரையும் திரட்டிக்கொண்டு வந்திருந்தனர். அவர்கள் முதலில் விறகு கொண்டுவருபவர்களாகவும் வண்டிகளை இழுப்பவர்களாகவும் உடல்களை கொண்டுசென்று தென்புலம் சேர்ப்பவர்களாகவும் பணியாற்றினர். பின்னர் படைகள் குறையக்குறைய அவர்கள் படைகளென மாற்றப்பட்டு போர்முகப்புக்கு அனுப்பப்பட்டனர்.

வெறும் வில்லுக்கு உணவென்றே அவர்கள் கருதப்பட்டனராயினும் அவர்கள் அங்கு வந்த அச்சிறு நாட்களிலேயே போரெனில் என்ன என்று கற்றிருந்தனர். விராடநாட்டிலிருந்து வந்த போர்க்கலை பயின்ற வீரர்கள் விரைந்திறங்கி ஊர்களைத் தாக்கி மீளும் மலைப்போரிலேயே பயிற்சி பெற்றிருந்தார்கள். அவர்களுக்கு விரிநிலத்தில் நிகழ்ந்த குருக்ஷேத்ரப் போரில் பொருதி நிற்க இயலவில்லை. கைசலிக்க கைசலிக்க பீஷ்மரும் துரோணரும் அவர்களைக் கொன்று களத்தில் பரப்பினர். ஆனால் எந்தப் பயிற்சியும் இன்றி அங்கு வந்து, ஒவ்வொரு நாளும் போரைப் பார்த்த நிஷாதருக்கும் கிராதருக்கும் அவர்கள் விழிகளால் பெற்றுக்கொண்ட பயிற்சியே களம்நிற்க போதுமானதாக இருந்தது.

பல்லாயிரம் பேர் திரண்டெழுந்து மோதிக்கொள்ளும் போர்க்களத்தில் தேர்ந்த வில்லவர்கள்கூட குறிவைத்து இலக்கை தாக்குவது அரிதென்று இருந்தது. விற்களை நிரைவகுத்து விண்ணில் அம்புமழை எழுப்புவதே போரில் தேவைப்பட்டது. நிஷாதரும் கிராதரும் தங்கள் காடுகளில் வேட்டைக்கென பயின்றிருந்த விற்பயிற்சி அதற்கு போதுமானதாக அமைந்தது. களத்தில் உளம் பதறாது நிற்க அவர்கள் பயின்றிருந்தனர். பல நாட்கள் போர் முடிந்தபின் களமுகப்பிலிருந்து சிதைந்த உடல்களையும் எஞ்சும் உயிருடன் கூச்சலிடும் வீரர்களையும் அள்ளிக் கொண்டுசென்று தென்புலத்திற்கும் மருத்துவமனைக்கும் சேர்த்து பின்னர் உடலெங்கும் குருதியுடன் இரவைக் கடந்து எழும் போரின் பேரோசையைக் கேட்டு கனவுகளாக சமைத்தபடி அரைத்துயிலில் பகல் கடந்து மீண்டும் குருதியில் விழித்தெழுந்து அவர்கள் தங்கள் உள்ளத்திற்குள் பல நூறு போர்களை நிகழ்த்திவிட்டிருந்தனர். விழிகள் காணாதவற்றையே உள்ளம் கண்டது. மானுடர் உணராதவற்றை உள்ளுறையும் விலங்குணர்ந்தது. ஆகவே பாஞ்சாலப் படைகளைவிட களத்தில் தேர்ச்சி கொண்டவர்களாக இருந்தனர் விராடநாட்டு நிஷாதர்.

அவர்களின் அம்புகள் பட்டு உத்தரபாஞ்சாலத்தின் வீரர்கள் தேர்களிலிருந்து அலறி வீழ்ந்துகொண்டிருந்தனர். அவர்கள் அகன்ற இடத்தை ஈடுசெய்யும்பொருட்டு பின்னிருந்து படைகள் ஒழிவிலாது வரவேண்டுமென்று அஸ்வத்தாமன் கையசைவால் ஆணையிட்டான். அம்புகளை இடைமுறியாது அனுப்பியபடி சாத்யகியை அவன் எதிர்கொண்டான். சாத்யகி அஸ்வத்தாமனின் அம்புகளை நிகரம்பால் தடுத்தபடி கிராதரும் நிஷாதரும் அடங்கிய படைகளை பிறைவடிவில் விரியச்செய்து உத்தரபாஞ்சாலத்துப் படைகளை சூழ்ந்துகொள்ளும்படி அனுப்பினான். அப்பால் கிருதவர்மனும் கிருபரும் சேர்ந்து சிகண்டியை எதிர்ப்பதை அஸ்வத்தாமன் கண்டான். சிகண்டியின் வில்லை, விழியிலாத முகத்தைக் கண்டு மீண்டும் எங்கோ ஓர் ஆற்றங்கரையில் அவனுடன் அமர்ந்து சொல்லாடி விழிப்புகொண்டான்.

சாத்யகி போரில் உளம்சலிக்காதவனாக இருந்தான். சினத்தையும் எதிர்பார்ப்பையும் கடந்துவிட்டிருந்தான். ஆற்றுவனவற்றை செம்மையுறச் செய்வது அறிவிற்குறைந்தவர்கள் சிலரின் இயல்பு. அவர்கள் புறத்தை ஒழுங்கமைப்பதனூடாக தங்களை திரட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் சலிப்படைவதே இல்லை. இன்னும் பல்லாண்டுகாலம் அவ்வண்ணம் அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தாலும் இவன் பின்னடையப் போவதில்லை. வெல்லும் அம்பு ஓர் எண்ணத்தால் மேலெழுந்தது. தோல்வி ஒரு கணச் சலிப்பால் விடப்படும் இடைவெளியில் நிகழ்வது. இவன் சலிக்காத கடல். வேறு வழியில்லை என உணர்ந்து அஸ்வத்தாமன் பிரம்மாண்டாஸ்திரத்தை எடுத்தான். அதைக் கண்டதுமே சாத்யகி தன் தேரைத் திருப்பி பின்னால் கொண்டு செல்லும்படி ஆணையிட்டான்.

அவன் தேர் வளைந்து பின்னகர்வதற்குள் அஸ்வத்தாமனின் பிரம்மாண்டாஸ்திரம் சென்று அவன் தேரை தாக்கியது. சற்றே இலக்கு பிழைத்து தேருக்கு மிக அருகே அது தரையை அறைந்தது. ஆயினும் மண்ணும் புழுதியுமாக வெடித்து மலர்ந்தது. தேர் சிதைந்து துண்டுகளாக சிதற புரவிகள் ஊன் கீற்றுகளாக பறந்து எழுந்து பின்னர் பொழிந்தன. அம்பின் விசையில் சாத்யகி தேரிலிருந்து தூக்கி காற்றில் வீசப்பட்டான். நாற்புறமும் உடல்களெனத் தெறித்து அகன்ற கிராதப் படைகளின் நடுவே சிதைந்து கிடந்த யானையுடல் ஒன்றின்மீது சென்று விழுந்தான். அவன் உடலில் இருந்த கவசங்கள் அனல்கொண்டு பழுத்திருந்தன. யானை உடலின் நிணக்கூழில் விழுந்து புரண்டெழுந்தமையால் அவை உறுமலோசை எழுப்பியபடி வெப்பமழிந்தன. அவன் உடலிலிருந்து குருதிநீர் கொதித்த ஆவியெழுந்தது.

கொக்கிகளை வீசி அவனை கவர்ந்தெடுத்து பின்னால் கொண்டு சென்றனர் படைவீரர்கள். பிரம்மாண்ட அஸ்திரத்தால் கொன்று வீசப்பட்ட கிராதர்களின் உடல்கள் விண்ணிலிருந்து ஒவ்வொன்றாக நிலத்தை வந்தறைந்துகொண்டிருந்தன. சாத்யகி அப்பால் கொண்டுசெல்லப்படுவதை அஸ்வத்தாமன் கண்டான். அம்பின் வெடிப்புவிசையாலேயே அவன் அம்பின் அனலிலிருந்து அகற்றப்பட்டான். வெம்மையிலிருந்து அவனைக் காக்க ஊறித்திரண்டு காத்திருந்தது யானை. அறியா வல்லமை ஒன்றால் அவன் காக்கப்படுவதுபோல. அக்கணம் அஸ்வத்தாமன் உணர்ந்தான், அப்போரில் சாத்யகி கொல்லப்படப்போவதில்லை. அவனுக்கு வேறு களம் காத்திருக்கிறது. “செல்க! முன்செல்க!” என ஆணையிட்டு அந்தச் சிதைவுகளினூடாக தேர் செலுத்தி முன்னால் சென்றான் அஸ்வத்தாமன்.

அவனுக்குப் பின்னால் கூச்சலிட்டபடி உத்தரபாஞ்சாலத்தின் படைகள் முன்னெழுந்து வந்தன. சற்று முன்பு வரை கிராதர்களின் அம்புகளால் தங்கள் தோழர்கள் வீழ்ந்ததைக் கண்டு அவர்கள் அச்சம் கொண்டிருந்தனர். அவ்வாறு அஞ்சியதை எண்ணி அப்போது சீற்றம் கொண்டனர். விழுந்து கிடந்து துடித்த கிராதர்களின் கழுத்தை வெட்டி தலைகளைத் தூக்கி அப்பால் எறிந்தனர். வேல்களை ஓங்கி அவர்களின் நெஞ்சுகளில் குத்தி உடல் பற்றிச் சுழன்று அப்பால் தாவினர். அஸ்வத்தாமன் தனக்கு சுற்றும் உத்தரபாஞ்சாலப் படைவீரர்கள் கொந்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். போர் மூண்டு அத்தனை நாட்களாகியும்கூட வெறிகொண்டு அமலையாட அவர்களால் இயல்கிறது. உள்ளிருந்து குருதி கேட்கும் அத்தெய்வம் ஒருகணமும் விடாயடங்கவில்லை.

அங்கு வந்த படைகளில் எஞ்சும் சிலரே தாங்கள் என்ற உணர்வு அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. அக்களத்திலிருந்து உயிருடன் செல்லப்போவதில்லை என்றும் தெரியவில்லை. இருப்பு என்பது முடிவிலாச் சுருள் என அவர்களின் அகம் நம்பியது. இன்மையின் முந்தைய கணம் அது என தோன்றவில்லை. இப்புவியில் எவ்வுயிருக்கேனும் தாங்கள் யாரென்று தெரியுமா? இயற்றுவது என்ன என்று எவ்வுயிராவது அறிந்திருக்குமா? சொல் பெருக்கிக்கொண்டிருக்கும் மானுடரோ சொல்லின்மையில் நெளிந்து கொண்டிருக்கும் சிறுபுழுவோ? சித்தத்தில் சற்றேனும் வேறுபாடு அவற்றுக்குள் இருக்குமா? வீழ்ந்த தலைகளை உதைத்து விளையாடிக்கொண்டிருந்தவர்களின் முகங்களில் வெறிக்களிப்பு நிறைந்திருந்தது. அவர்களிலெழுந்த தெய்வங்கள் குருதிக்களியாட்டு கொண்டிருந்தன.

அஸ்வத்தாமனின் படை பாண்டவப் படையைப் பிளந்து முன்னெழுந்து சென்றது. மறுபுறம் சூரியனின் ஏழு கதிர்களில் கிருதவர்மனின் கதிரும் கிருபரின் கதிரும் தயங்கி நின்றுவிட துரியோதனனும் சுபாகுவும் நடத்திய கதிர்கள் பாண்டவப் படையை பிளந்து சென்றன. சகுனி நடத்திய படையை எதிர்கொள்ள திருஷ்டத்யும்னன் விரைந்தான். மேலும் மேலும் ஊடுருவி உள் சென்றுகொண்டிருந்த அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனும் சிகண்டியும் இருபுறங்களிலாக விலகியபோது ஏற்பட்ட வெற்றிடத்தினூடாக சென்று யுதிஷ்டிரனை சந்தித்தான். எதிர்பாராது திரை விலக மேடையில் தோன்றிய பயிலா நடிகனென திகைத்து மறுகணம் தன்னை திரட்டிக்கொண்டு “எழுக! படை எழுக!” என்று ஆணையிட்டபடி அம்புகளைத் தொடுத்து அஸ்வத்தாமனை நோக்கி வந்தார் யுதிஷ்டிரன்.

அவருடைய இரு மைந்தர்களும் தயங்கிய அம்புகளுடன் அவரைத் தொடர்ந்து வந்தனர். அஸ்வத்தாமன் யுதிஷ்டிரனை வியப்புடன் பார்த்தான். அவர் சற்றும் அஞ்சவில்லை என்று தெரிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் அஞ்சுகிறார் என்றே போருக்குப் பின் களநோக்கர்களால் கூறப்பட்டது. அதை நம்ப அவர்கள் அனைவரும் விழைந்தனர். களத்தில் நிகழும் மறத்தை கணிப்புகள் வழியாக அரசர்கள் வெல்வதை உணர்ந்திருந்தமையால் ஒவ்வொருவரும் அதை அஞ்சினர், வெறுத்தனர். யுதிஷ்டிரனையும் சகுனியையும் வெறுக்காத எப்படைவீரரும் இரு தரப்பிலும் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இருவரையுமே கோழைகளென மீண்டும் மீண்டும் சொல்லி நிறுவிக்கொண்டனர். அஸ்வத்தாமனுக்கும் அவ்வெண்ணம் இருந்தது. ஆகவே அவருடைய தெளிந்த விழிகள் அவனை திகைப்படையச் செய்தன.

எவ்வகையிலும் அஸ்வத்தாமனுக்கு தான் இணையல்ல என்றும் ஐந்து அம்புகளுக்கு மேல் அவன் முன் வில்லுடன் நின்றிருக்க இயலாதென்றும் அறிந்திருந்தார் எனத் தெரிந்தது. அவருடைய முதல் தயக்கம் அச்சத்தினால் அல்ல என்று அவருடைய முகத்திலிருந்தும் உடலசைவிலிருந்தும் அஸ்வத்தாமன் உணர்ந்தான். அது பிறிதொன்று. போரெனும் நிகழ்வையே ஒவ்வாமையுடன் விலக்கும் ஒன்று அவருள் உள்ளது. ஒவ்வொருமுறையும் அதை மிதித்துக்கடந்தே அவர் போருக்கு எழுகிறார். அஸ்வத்தாமன் அவருடைய எல்லையை அறிய விழைந்தான். எக்கணத்தில் அவர் பின்னடைவார்? எத்தருணம் உடைவிற்குரியது?

யுதிஷ்டிரனின் மெய்க்காவல் படை அரசகாவலுக்கென்று அர்ஜுனனால் உருவாக்கப்பட்டது. விராடநாட்டிலிருந்தும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்தும் தன் முதன்மை மாணவர்களை தெரிவு செய்து பயிற்றுவித்து அப்படையை அர்ஜுனன் அமைத்தான். யுதிஷ்டிரனை போர்க்களத்தில் காத்து நின்ற அப்படை முந்தைய நாள் கர்ணனால் பெரும்பகுதி அழிக்கப்பட்டது. அன்று காலை திருஷ்டத்யும்னன் எஞ்சிய பாண்டவப் படையின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் சிறந்த வில்வீரர்களை தேர்வு செய்து மீண்டும் அக்காவல் படையை ஒருங்கிணைத்தான். ஆயிரத்தெட்டுபேர் கொண்ட அப்படை நூறு தேர்களும் ஒவ்வொரு தேருக்கும் பத்து புரவி வில்லவர்களும் கொண்டது.

மெய்க்காவல் படையினர் விந்தையான தனிக் குழுவினர். ஒரு படையின் ஆற்றல்மிக்கவர் அவர்கள். ஆனால் பெரும்பாலும் போரை வெறுமனே நோக்கி நின்றிருக்க ஆணையிடப்பட்டவர்கள். ஒவ்வொரு கணமும் உள்ளத்தால் போர்புரிந்தபடி களத்தில் நின்றிருப்பவர்கள். அஸ்வத்தாமன் அணுகிவருவதை அவர்கள் விரும்பினார்கள். துடிப்புடன் முன்னெழுந்து யுதிஷ்டிரனை சூழ்ந்துகொண்டு “அரசே, இப்போரை எங்களுக்கு அளியுங்கள்… இதை நாங்கள் நிகழ்த்துகிறோம்!” என்று கூவினர். அஸ்வத்தாமன் உரக்க நகைத்து “யுதிஷ்டிரரே, வேளக்காரப் படைக்குப் பின் ஒளிந்துகொள்க! கோட்டைக்குள் அரண்மனையில் அமைந்து கொள்வது அதைவிடவும் நன்று” என்று கூவினான்.

அவனுடைய ஏளனத்தால் யுதிஷ்டிரன் சினமுறவில்லை “ஆசிரியர்மைந்தரே, நான் என்றும் இறப்புக்கு அஞ்சவில்லை. இனி சிறுமைக்கும் அஞ்சுபவன் அல்ல. என்னை சிறுமைசெய்பவனுக்கே அச்சிறுமைகளை அளித்து அப்பால் நின்றிருக்க நேற்று கற்றேன். எக்களத்திலும் நான் விரும்பிப் பின்னடைந்ததில்லை. என்னை பணயப்பொருளாக கைப்பற்றுவதை ஒழிதலின் பொருட்டே பின்னிற்கிறேன்” என்றார். “வில்தேராதவனே நான். ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு சிறுபடைக்கலனையாவது தெய்வங்கள் அளித்துள்ளன” என்றபடி வில்குலைத்து அவனை நோக்கி வந்தார். அவருடைய அம்புகள் எழுந்து வந்து அஸ்வத்தாமனின் தேருக்குமேலும் தேரைச்சூழ்ந்தும் பறந்தமைந்தன.

இருபுறமும் சூழ்ந்திருந்த குதிரைப்படையினர் அஸ்வத்தாமனை தொடர்ந்து வந்த உத்தரபாஞ்சாலத்தின் படைவீரர்களை தங்கள் திறன்மிக்க அம்புகளால் தொலைவிலேயே தடுத்து நிறுத்திவிட அஸ்வத்தாமன் மட்டும் தன் தேரில் முன்னகர்ந்து பாஞ்சாலப் படைவீரர்களிடமிருந்து அகன்று பாண்டவப் படைகளால் முற்றிலும் சூழப்பட்டான். இலக்கு பிழைக்காத அவனுடைய அம்புகள் பட்டு பாண்டவர்களின் மெய்க்காவல் படையின் வில்லவர்கள் அலறிவிழுந்தனர். ஆக்னேயாஸ்திரத்தால் அறைந்து தேர்களை பற்றி எரிய வைத்தான். மாருதாஸ்திரத்தால் தேர்களை தூக்கி கவிழ்த்தான். வாரணாஸ்திரத்தால் அவற்றை அள்ளிச்சுழற்றி அப்பால் விசிறினான்.

அவனுடைய அம்புகளை தடுக்கவியலாதென்று அவர்கள் உணர்ந்திருந்தனர். அவர்களின் தலைவன் “அரசே, பின்னடைக! இப்போரை நாங்கள் நடத்துகிறோம்! பின்னடைக!” என்று கூவினான். “உயிர்கொடுங்கள்! அரசருக்கு உயிர்கொடுங்கள்!” என்று துணைப்படைத்தலைவன் கூவ இருபுறத்திலிருந்தும் மெய்க்காவலர்கள் வெறியுடன் கூவியபடி திரண்டு யுதிஷ்டிரனை மறைத்தனர். யுதிஷ்டிரன் “விலகுக! இது என் ஆணை. விலகுக!” என்றார். “அரசே, எங்கள் கடன் இது” என்று மெய்க்காவல் படைத்தலைவன் கூவ “இந்திரப்பிரஸ்தத்தின் அரசனின் ஆணை இது. என் பொருட்டு பிறர் முன்னின்று உயிர்துறக்க நான் ஒப்பேன். விலகுக!” என்று யுதிஷ்டிரன் ஆணையிட்டார்.

அவன் தலைவணங்கி விலகாமல் நிற்க அஸ்வத்தாமன் “அஞ்சவேண்டியதில்லை. அவர்களை நானே விலக்குகிறேன்” என மகராஸ்திரத்தை தொடுத்தான். அது ஒன்று நூறாயிரமெனப் பெருகி அவர்களை கொன்று வீழ்த்தியது. உடைந்த தேர்களாலும் சரிந்த புரவிகளாலும் யுதிஷ்டிரன் வரம்பு கட்டப்பட எஞ்சிய மெய்க்காவலர் படையினர் சுற்றிவர முயன்றனர். தேடித்தேடி அவர்களைக் கொன்றபின் “வருக, அரசே!” என்றான் அஸ்வத்தாமன். “உங்கள் விற்தொழில் காட்டுக!” தன் மெய்க்காவலர்கள் மடிந்ததை நோக்கி நீள்மூச்செறிந்த பின் “ஆம், இதோ” என அம்புகளைத் தொடுத்தபடி யுதிஷ்டிரன் முன்னெழுந்து வந்தார்.

யுதிஷ்டிரனின் ஒவ்வொரு அம்பையும் உலர்ந்த சுள்ளியை ஒடித்தெறிவதுபோல் அஸ்வத்தாமன் அறைந்து வீழ்த்தினான். பிரதிவிந்தியனும் யௌதேயனும் ஊர்ந்த தேர்களை அவன் அம்புகளால் அறைந்து அச்சுகளையும் சகடங்களையும் ஒடித்து ஒருபக்கம் சாய்ந்து குடை நிலம்தொட விழச் செய்தான். அவர்கள் தேரிலிருந்து தாவி இறங்கி ஓட அம்புகளால் அடித்து புழுதி கிளப்பி அவர்கள் மேல் பொழியச் செய்தான். அவர்களின் தலைக்கவசங்களை உடைத்தான். மார்புக்கவசங்களும் தோள்கவசங்களும் உடைய வெற்றுடலுடன் அவர்கள் களத்தில் திகைத்து நின்றார்கள். யுதிஷ்டிரனிடம் “மைந்தர் உயிர்காப்பதென்றால் மணிமுடியைக் கழற்றி மண்ணில் வையுங்கள்” என்று அஸ்வத்தாமன் ஆணையிட்டான். “இக்கணமே… இல்லையேல் இருவரின் தலை உதிர்வதை காண்பீர்கள்.”

யுதிஷ்டிரன் அவர்களை ஒருகணம் நோக்கிவிட்டு “என் இறந்த உடலிலிருந்து அதை நீர் எடுத்துக்கொள்ளலாம்” என்றார். படைப்பின்னணியில் “அரசரை காத்துக்கொள்க! அரசரின் உயிர் காக்க எழுக!” என்று பாண்டவப் படையின் முரசுகள் முழங்கின. ஆனால் அர்ஜுனன் கர்ணனால், பீமன் துரியோதனனால், சாத்யகி கிருதவர்மனால், திருஷ்டத்யும்னன் சகுனியால், சிகண்டி கிருபரால் முற்றாக தடுக்கப்பட்டுவிட்டிருந்தனர். யுதிஷ்டிரன் அம்புகளை தொடுத்த பின் “இதுவே போர்முடிவென்பது தெய்வங்களின் எண்ணமெனில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. போரிடுக!” என்று கூவினார். அவருடைய அம்புகள் அஸ்வத்தாமனின் கவசங்களில் பட்டு தெறித்தன. தேர்த்தூண்களை வந்தடைந்து உதிர்ந்தன.

அஸ்வத்தாமன் தன் முகத்தருகே வந்த அம்பை கையிலிருந்த அம்பால் தட்டி தெறிக்கவிட்டு யுதிஷ்டிரனின் தேரை அறைந்து உடைத்தான். அவருடைய தேர்ப்பாகன் தேருடன் அலறியபடி சரிய புரவிகள் கட்டவிழ்ந்து கனைத்தபடி தாவி அகன்றன. அம்புகளுடன் குறுக்கே விழுந்த ஏழு புரவி வில்லவர்களை வீழ்த்தி ஏகாஸ்திரத்தால் யுதிஷ்டிரன் வில்லை அறுத்தான். தங்கள் தேர்களுடன் இருபுறத்திலிருந்தும் வந்து யுதிஷ்டிரனை காக்க முயன்ற வில்லவர்களை வீழ்த்தி அவர்களின் தேர்களை மண்ணிலிருந்து தூக்கி அறைந்தான். மேலும் முன்னகர்ந்து யுதிஷ்டிரனின் நெஞ்சக்கவசத்தையும் தோளிலைகளையும் உடைத்தான். “மணிமுடியை கழற்றி வையுங்கள், யுதிஷ்டிரரே. இனி போரில்லை… சிறுமைகொண்டு களம்நிற்பதை ஒழிக… மணிமுடியை கழற்றி வையுங்கள்.”

அமைதியான குரலில் “என் துண்டான தலையில் இருந்து அதை எடுத்துக்கொள்க, பாஞ்சாலரே! அதில் அறப்பிழையும் இல்லை. ஷத்ரியர்களுக்குரிய நெறி அது. உம் தந்தை நெறி மீறி இக்களத்தில் கொல்லப்பட்டதற்கு ஈடு செய்யலுமாகும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். வில்தாழ்த்தி சில கணங்கள் நோக்கியபின் அஸ்வத்தாமன் “அரசே, முடிசூடிய அரசன் நடந்து கொள்வதற்கு சில நெறிகள் உண்டு. இக்கணம் வரை களத்தில் நெறிமீறாதவன் நான் ஒருவனே. இனியும் நெறிகளைப் பேணவே விழைகிறேன். இக்களம் எங்களால் முற்றும் வெல்லப்பட்டபின் முறைப்படி அந்த மணிமுடியை உங்கள் தலையிலிருந்து பெற்றுக்கொள்வோம். செல்க!” என்றான்.

“பாஞ்சாலரே, இது உயிர்க்கொடை எனில் நான் இதை ஏற்க இயலாது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நான் பேரரசன். எவரிடமிருந்தும் கொடைபெறலாகாது.” அஸ்வத்தாமன் வியப்புடன் நோக்கி பின் புன்னகைத்து “அளியால் அல்ல, நெறிநின்று மட்டுமே இதை சொல்கிறேன்” என்றான். “தாங்கள் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசர். நான் உத்தரபாஞ்சாலத்தின் சிற்றரசன். நான் இப்போது மணிமுடியை பறித்தால் அது தனித்து வந்த அரசனிடம் கொள்ளையடித்ததாகவே ஆகும். அது கிராதரும் நிஷாதரும் கொள்ளும் வழிமுறை. உங்கள் படையை வென்று கொடிமுறித்த பின்னரே நான் அம்மணிமுடியை முறைப்படி கொள்ளவேண்டும்” என்றான்.

“எனில் சிற்றரசனென எனக்கு தலைவணங்கி பணிந்து பின்னகர்க!” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அன்றி என் தலை கொய்து இம்மணிமுடியுடன் செல்க… நீர் என்னை களம்வென்றீர் என்றே என் குடி கருதுமென சொல்லளிக்கிறேன்” என்றார். அஸ்வத்தாமன் ஒருகணம் சொல்லிழந்தபின் மீண்டு “வணங்குகிறேன், பேரரசே!” என்று தலைகுனிந்தபின் தேர்ப்பாகனிடம் “தேரை பின்செலுத்துக!” என்று ஆணையிட்டான். தேர் பின்னூர்ந்து கௌரவப் படைகளுடன் இணைந்து கொண்டது.

தேர்த்தட்டில் தளர்ந்து அமர்ந்த அஸ்வத்தாமனை நோக்கி முதிய தேர்ப்பாகன் திரும்பி “தங்கள் ஆணைக்கு கட்டுப்பட்டவன் எனினும் இதை நான் சொல்லியாகவேண்டும், அரசே” என்றான். ஒருபோதும் அத்தகைய சொல்லையோ நோக்கையோ அவனிடம் கண்டிராத அஸ்வத்தாமன் திகைத்தபடி நோக்க “ஒன்றை அளிப்பவன் நிகரான ஒன்றை எதிர்பார்க்கிறான். அது அளிக்கப்படாவிடில் சினமடைகிறான். ஆறாப் பெருஞ்சினமொன்றின் விதை உங்கள் நெஞ்சில் ஊன்றப்பட்டுவிட்டது” என்றான் பாகன்.

“என்ன சொல்கிறாய்?” என்று கூவியபடி முன்னகர்ந்த அஸ்வத்தாமன் “யார் நீ?” என்றான். பாகன் “வஞ்சம் மீதூறலாம். அதன்பொருட்டே நீங்கள் நெறிமீறவும்கூடும்” என்றான். “யார்? யார் நீ?” என்று அஸ்வத்தாமன் கூச்சலிட்டான். பாகனின் கண்கள் இறந்த உடலில் விழித்திருப்பவை போலிருந்தன. “அறப்பெருஞ்செல்வன் முன்னால் நின்று தருக்கிவிட்டீர்கள். சொற்களைக் கேட்கும் தெய்வங்கள் சூழ்ந்திருக்கும் இப்பெருங்களத்தில் நின்று அதை சொல்லிவிட்டீர்கள்.” அஸ்வத்தாமன் உடைந்த குரலில் “யார்? யார்?” என்றான். “எவருக்கும் விலக்கில்லை” என்றான் பாகன். “என்ன?” என்றான் அஸ்வத்தாமன்.

அதற்குள் வலப்பக்கமிருந்து பறந்து வந்த பிறைஅம்பொன்று பாகனின் தலையை கொய்து சென்றது. தலையறுந்த உடல் வெறியாட்டெழுந்த பூசகன் என நடுக்கு கொண்டு அவன்முன் அமர்ந்து பின் கால்கள் இழுத்துக்கொண்டு துடிக்க தலை அப்பால் விழுந்து கீழே பெருகிப் பரந்திருந்த தலையுடல்கால்நெஞ்சுதொடைகளின் பரப்பில் மறைந்தது. அறியாமல் தலைக்கென விழிதேடிய பின் தலைதிருப்பி நோக்கியபோது குருதி குமிழியிட்டெழ பாகனின் உடல் அமரத்திலிருந்து மறுபக்கமாக சரிந்தது.