மாதம்: மே 2019

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 52

பத்தாவது களத்தில் அமர்ந்திருந்த கும்பீரர் என்னும் சூதர் சுரைக்குடுக்கையின் மேல் கட்டிய மூங்கிலில் முதலைத் தோல் வார்ந்து உலர்த்தி இழுத்துக் கட்டி உருவாக்கிய மூன்று இழை குடயாழை மடியிலமர்த்தி அதை வலக்கையின் சிறுவிரலாலும் கட்டைவிரலாலும் நடுவிரலாலும் மீட்டி இடக்கையால் அருகில் இருந்த சிறுமுழவைத் தட்டி தாளமிட்டபடி கர்ணன் போருக்கெழுந்த களத்தின் காட்சியை கூறலானார். அவருடன் பிற சூதர்களும் இணைந்துகொண்டனர். பின்னிரவு அணைந்துகொண்டிருந்தமையால் காட்டுக்குள் இலைகளில் இருந்து பனித்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. முற்புலரியின் பறவைக்குரல்கள் சில எழுந்தன. ஆயினும் சிதைகளனைத்தும் மூண்டெழுந்து அனல் உறும புகை எழுந்தாட ஊன்நெய் உருகும் வாடையுடன் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

தோழர்களே, நான் குருக்ஷேத்ரக் களத்தின் தென்மேற்கு மூலையில் நோக்குமாடத்தில் அமர்ந்திருந்தேன். தென்னாட்டிலிருந்து களம்பாட அழைத்து வரப்பட்ட சூதன் நான். எனது முன்னோர்களில் எவரோ இக்குருக்ஷேத்ரக் களத்தில் அமர்ந்து இந்திரனும் விருத்திரனும் இயற்றிய பெரும்போரை கண்டனர். சொற்களில் அதை பொறித்தனர். உள்ளங்களில் அதை நிலைநிறுத்திச் சென்றனர். என் தலைவழியில் எவரோ இங்கு வந்து பரசுராமர் ஐந்து குளங்களை குருதியால் நிரப்பிய காட்சியை கண்டனர். என் மைந்தர் இங்கு காணப்போவதென்ன என்பதை இக்குருக்ஷேத்ரம் மட்டுமே அறியும். என் குருதியில் இருந்து முளைத்தெழுந்து இங்கே களம்பாட வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கே இறப்பவர்களும் இவ்வாறு பிறந்து பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். வலசைப்பறவைகள் வந்தமைகையில் மீன்களும் நண்டுகளும் முட்டை விரித்து வெளிவந்து பெருகி நிறைகின்றன.

குருக்ஷேத்ரம் குருதியால் கழுவப்படுகிறது. குருதியை உண்டு குருதிவண்ணம் கொள்கிறது. இங்கே ஒவ்வொரு சிற்றுயிரும் குருதியை அறிந்திருக்கின்றது. குருதியைத் தேடி பறவைகள் அணைகின்றன. குருதிக்கென மண்ணின் ஆழத்திலிருந்து நுண்ணுயிர்கள் முளைத்தெழுகின்றன. இங்கே ஒவ்வொரு கூழாங்கல்லிலும் குருதிவிழையும் தெய்வங்கள் உறைகின்றன. ஒவ்வொரு கல்லும் தெய்வச்சிலையான இம்மண்ணை வணங்குக! இதை அறநிலை என வகுத்த முன்னோரை போற்றுக! போர் வெங்குருதியின்றி அமையாதென்று நூல்கள் உரைக்கின்றன. துர்க்கை அன்னைக்கும் மகவீன்ற வேங்கைக்கும் குருதியே உகந்ததென்றறிக! குருதி தூயது. குருதியிலோடுகின்றன உயிர்க்குலங்களின் நினைவுகள். குருதியில் வாழ்கின்றன தெய்வங்கள் இட்ட ஆணைகள். குருதியாகி நின்றிருக்கிறது விண் நிறைத்துள்ள தழல். குருதி வெல்க! குருதி நிறைவுறுக! குருதி முடிவிலாது முளைத்து எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!

தோழரே, குருக்ஷேத்ரக் களத்தில் கர்ணன் அர்ஜுனனை எதிர்கொண்டு அம்புகளால் அறைந்து போரிட்டு நின்றிருக்க நான் தொலைவிலிருந்து கண்டவை இவை. ஓங்கி தாழ்த்தப்படும் வாளில் எஞ்சுவதென்ன? பெரும்பாறை உருண்டு வந்து மூடிய விதையில் காத்திருப்பதென்ன? முதிர்ந்த நாகம் தன் நஞ்சை அருமணியாக்கும் விந்தைதான் என்ன? இக்களத்தில் நிகழ்ந்தவை கோடி. நிகழக் காத்திருந்தவை கோடி கோடி. சூதரே, நிகழாது எஞ்சியவை முடிவிலாக் கோடி. எங்குள்ளன அவை? எவ்வண்ணம் எழுந்து வரும் அவை? புவிமேல் முளைக்காத புல்விதைகள் கோடிகளின்கோடி அல்லவா? அவற்றை ஆளும் தெய்வங்கள் எதற்கு பணிக்கப்பட்டிருக்கின்றன?

 

குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அன்று களமெழுந்ததுமே அஸ்வத்தாமன் தீய குறிகளை கண்டான். இடமிருந்து வலமாக சிறு கரிச்சான் கீச்சொலி எழுப்பி கடந்து சென்றது. அவன் குடிலில் இருந்து முதற்காலடி எடுத்து வைத்த இடத்தில் ஒரு சிறுகல் வலக்காலில் தடுக்கியது. புரவியில் ஏறி அமர்ந்து அதை கிளப்பியபோது வழக்கத்திற்கு மாறாக அது இடக்காலெடுத்து வைத்து முன்னால் எழுந்தது. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட புரவி. அது வலக்காலை மட்டுமே முதலில் எடுத்துவைக்கும். அவன் அதன் கழுத்தில் தட்டியபடி குனிந்து நோக்கினான். அவனுடைய தேர்ப்பாகன் அருகே நின்றிருந்தான். “பிழை இயற்றிவிட்டது, அரசே. பிறிதொரு புரவியை…” என அவன் தொடங்க அஸ்வத்தாமன் கைநீட்டி அவனை சொல்தடுத்தான். “தாங்கள் ஏறுவதற்கு முன்னரே ஏறிவிட்டீர்கள் என்று ஓர் உடற்குறி எழுந்தது. அது வலக்காலை எடுத்துவைத்துவிட்டது. ஏறிய பின் இடக்காலை…” என்றான் தேர்ப்பாகன். அஸ்வத்தாமன் அவனை வெற்றுவிழிகளுடன் நோக்கினான். தன் உடலில் அப்படி ஒரு அசைவு எழுந்ததா?

அவன் முகக்குறியில் சினமிருந்திருக்கலாம். மிகையாக சொல்லிவிட்டோமா என்று அஞ்சிய தேர்ப்பாகன் “என் விழிமயக்காகவும் இருக்கலாம்” என்றான். சினம் தன்னுள் இல்லை என அஸ்வத்தாமன் உணர்ந்தான். துயில்நீத்து களைத்து தசைகள் தொய்ந்த முகம் உள்ளத்துத் துயரையும் சலிப்பையும் சினத்தையும் மிகையாக வெளிப்படுத்துகிறது. “அதன் குறிப்பொருள் என்ன?” என்றான். அவன் “நான்…” என்றான். “சொல்க, புரவிகளைக் கொண்டு குறிப்பொருள் உரைக்கும் வழக்கும் குதிரைச்சூதர்களுக்கு உண்டு அல்லவா?” அவன் தயங்கி “அரசே, ஓங்கி அமையும் கை” என்றான். “சொல்” என்றான் அஸ்வத்தாமன். “அது உண்டு செரிக்காத உணவுபோல் நஞ்சு” என்றான் சூதன். அஸ்வத்தாமன் பொருள் விளங்காத விழிகளுடன் நோக்கிவிட்டு தலையை மட்டும் அசைத்தான்.

அன்று நிகழப்போவதென்ன என்னும் விந்தை உணர்வை அஸ்வத்தாமன் அடைந்தான். அன்று களம்படப் போகிறோமா என்ன? அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் புன்னகைத்தான். இறப்பிலி என்று அவனை தந்தை வாழ்த்தியிருந்தார். இறப்பிலி என்று மைந்தரை வாழ்த்தாத தந்தையர் எவருளர்? ஆனால் தன் தவத்தை முழுதும் திரட்டி அவனுக்கு இறவாமை என அளித்துச் சென்றிருந்தார் தந்தை. தவத்தை அவனுக்கு அளித்துவிட்டு வஞ்சத்தை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டார். தலையில் ஓர் அருமணியென அவன் அந்த இறவாமையை சூடியிருந்தான். அதன் எடைக்குக் கீழ் எப்போதும் வாழ்ந்திருந்தான். மின்மினி தன் ஒளியால் ஏந்திச்செல்லப்படுவதுபோல் அது அவனை கொண்டுசென்றது.

இறவாதொழிதல். மலைகளைப்போல் காலமிலாது எஞ்சுதல். வானம்போல் அனைத்திற்கும் மேல் சொல்லின்றிப் படர்ந்திருத்தல். பிறந்த நாளிலிருந்தே இறப்பிலி என்னும் சொல்லை அவன் கேட்டிருந்தாலும் ஒருமுறைகூட அதன் முழுப் பொருள்விரிவு அவன் உளத்தில் எழுந்ததில்லை. முதல்முறையாக அன்று குருக்ஷேத்ரக் களமுகப்பு நோக்கி புரவியில் செல்லும்போது அந்தச் சொல்லின் முழுவிரிவும் வந்து அவனை சூழ்ந்தது. அன்று அக்களத்தில் அவன் வீழ்ந்துபட விழைந்தான். எஞ்சுவது ஒன்றுமில்லை என்றான பின்னர் உயிர் மிஞ்சி இருப்பதில் பொருளில்லை. இறப்பென்பது ஒவ்வொன்றுக்கும் பொருள் அளிக்கும் இறுதிச் சொல். அது உரைக்கப்படாதபோது அனைத்துச் சொற்களும் வெற்றொலிகளாகி விரிந்த முடிவிலா வெளியே அவனை சூழ்ந்திருந்தது.

தன் படைசூழ்கையை அவன் ஒரு நாழிகைக்குள் முற்றாக நோக்கி முடித்து களமுகப்பிற்கு சென்றான். அங்கு படைசூழ்கை அமைக்கத் தொடங்கிய நாள் முழுப் படையையும் விழிகளால் தொட முடியாது என்பதனால் பன்னிரு காவல்மாடங்களின் மீதேறி அங்கு பாகைமானியை பதித்து ஒவ்வொரு பாகைக்கும் விழிகளால் திசைஎல்லை வரை கோடிழுத்து கணக்கிட்டு பலகையில் சுண்ணக்கட்டியால் குறித்து தொகுத்து தான் அளித்த சூழ்கைத்திட்டம் பருவடிவம் கொண்டிருப்பதை உறுதிசெய்தபின் மீள்வது வழக்கமாக இருந்தது. எத்தனை நோக்கிய பின்னரும் உள்ளம் நிறைவுறாமல் மீண்டும் மீண்டும் காவல்மாடங்களில் ஏறி நோக்குவான். ஒரு பகுதியை உளம்போனபோக்கில் தெரிவுசெய்து அதை நுணுக்கமாக வரைவுடன் ஒப்பிடுவான். ஆனால் அன்று புரவிமேல் கால் வளையங்களில் பாதம் ஊன்றி உடலெழுப்பி நின்று நோக்கினாலே முழுப் படையையும் பார்க்கமுடியும்போல் தோன்றியது.

ஒருமுறை சுற்றி வந்தபோது அத்தனை படைவீரர்களின் முகங்களிலும் ஒற்றை உணர்வே எஞ்சுவதுபோல் தெரிந்தது. அது என்ன என்ன என்று தொட்டுத் தொட்டுத் தவித்த உள்ளம் படைமுகப்பை சென்றடைந்தபோது தெளிந்தது. அது அக்களத்தில் இறக்க வேண்டுமெனும் விழைவே. ஒவ்வொரு கண்களிலும் முகக்குறியிலும் சாவு சாவு சாவு என்னும் ஊழ்கச்சொல் திகழ்ந்தது. அந்தப் படைவிரிவிலிருந்து அவ்வுணர்வு தனக்கு வந்ததா? அன்றி ஆடிப்பெருக்கில் தன் முகம் தெரிவதுபோல் அதுவே எழுந்து படையெனத் தெரிகிறதா? உளச்சோர்வு சாவுக்கான விழைவை உருவாக்குகிறது. உளச்சோர்வு பிழையுணர்விலிருந்து எழுகிறது. பிழையுணர்வு பொருளிலாச் செயலின் விளைவு. சாவினூடாக அப்பொருளின்மையை கடந்துவிட இயலுமென எண்ணுகிறது உள்ளம். சாவால் அனைத்தையும் முழுமையாக்கிவிட முடியும். பிசிறுகளை களைந்து அனைத்து முடிச்சுகளையும் இட்டு ஓர் அழகிய வடிவை உருவாக்கிக்கொள்ள முடியும்.

படைமுகப்பில் காம்பில்யத்தின் படைகள் மறுபுறம் படைக்கலங்கள் ஏந்தி அணி நிரந்து நின்றிருப்பதைப் பார்த்தபடி தன் தேரில் வில்லேந்தி நின்றபோது அஸ்வத்தாமன் ஓரிரு கணங்கள் துயிலுக்குள் சென்று எங்கெங்கோ திகழ்ந்து மீண்டான். அங்கிருந்த அத்தனை படைவீரர்களும் துயிலிலிருந்து எழுந்து மீண்டும் வழுக்கி வழுக்கி துயிலுக்குள் விழுபவர்கள்போல் தோன்றினார்கள். இப்போரை முடித்து வைக்கப்போவது துயில்தான். பிற அனைத்தையும்விட துயிலே பெரிதென உடல் முடிவுசெய்யும் தருணம். ஒத்தி வைக்கப்பட்ட துயில்கள், எஞ்சவிட்ட துயில்கள் அனைத்தும் ஒன்றெனத் திரண்டு பெருந்துயிலென மாறி வந்து சூழ்ந்துகொள்ளவிருக்கிறது. போர் முடிந்து திரும்புகையில் இறந்து கிடப்பவர்களைக் கண்டு அவர்கள் ஆழ்துயில்கொண்டிருக்கிறார்கள் என எண்ணி அத்துயிலுக்காக ஒருகணம் ஏங்கி திகைத்து மீளாத எவரும் அங்கில்லை.

அவன் ஒவ்வொருவர் விழிகளாக பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு சிறு துணுக்குறலுடன் திரும்பி தனது படையை பார்த்தான். உத்தர பாஞ்சாலத்தின் படையினரும் காம்பில்யப் படையினரும் ஆடிப்பாவைகள் என ஒருவரையொருவர் காட்டினர். பதினேழு நாள் போரில் குருதியும் புழுதியும் பட்டு வண்ணம் மறைந்து ஆடைகள் ஒன்றென ஆகிவிட்டிருந்தன. போர்க்களத்தில் திகழ்ந்து, இரவு துயில்புகுந்து ஆழங்களில் அலைந்து உள்ளங்கள் ஒன்றென மாறிவிட்டிருந்தன. விழிகளை தொட்டுத் தொட்டுச் செல்ல அத்தனை விழிகளும் ஒன்றே என்று கண்டு சலிப்புடன் அவன் தலையசைத்தான். ஒரு நிலத்தவர். ஒற்றைப் பெருங்குடியைச் சேர்ந்தவர்கள். இரு அரசர்களால் எதிரெதிரென பகுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு நின்றிருக்கும் படையினர் அனைவருமே ஒருகுடியர் ஒருநிலத்தர் அல்லவா? அனைவருமே பாரதவர்ஷத்தவர் அல்லவா?

ஒருமுறைகூட களத்தில் அவ்வாறு உள்ளம் நிலைகொள்ளாது எழுந்ததில்லை என்று அஸ்வத்தாமன் உணர்ந்தான். அத்தகைய எண்ணங்களை எப்போதும் அவன் இகழ்ந்தே வந்திருந்தான். அவ்வாறு சொற்கூட்டி விளையாடுவதில் தந்தைக்கு விருப்பம் இருந்தது. யுதிஷ்டிரன் பெருவிழைவுடன் அதில் ஈடுபடுவதுண்டு. அரிதாக அர்ஜுனனும் அதில் கலந்துகொள்வான். அப்பொழுதெல்லாம் சலிப்புடன் “இது அந்தி வெயிலில் தன்னுரு பார்த்து மகிழும் குழந்தைக்கு நிகரான பேதைமை. ஒவ்வொன்றும் நீள்நிழல் கொண்டிருக்கும் வெளி இது. ஒவ்வொன்றுக்கும் தெய்வங்கள் அளித்த அளவும் எடையும் மதிப்பும் மட்டுமுள்ள உலகிலேயே நான் வாழ விழைகிறேன்” என்றான். துரோணர் நகைத்து “ஒவ்வொன்றுக்கும் உருமாறும் நிழல்களை அளித்த தெய்வங்கள் அறிவிலிகள் அல்ல” என்றார்.

“முடிவிலாத ஆடிப்பாவைகளும் தெய்வங்களே சமைப்பதுதான். அவற்றில் தெய்வங்களே விளையாடி மகிழட்டும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். இதோ நான் நிழல்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறேன். இது அந்தி. மீளும் இரவு. நிழல்கள் நீண்டு நீண்டு மேலும் நீள முடியாமல் ஆகி நிலைத்து கரைந்து மறைகின்றன ஒற்றைப்பெருநிழலில். அப்பெருவெளிக்கருமையை அஞ்சுகிறது தனிநிழல். படம்விரித்து எழுந்து பொருட்களை, பொருள்வய உலகை சுற்றி வளைத்து நொறுக்கி விழுங்கி தன் வயிற்றில் அடக்கிக்கொள்கிறது. அவனுடைய எண்ணங்களை அறுத்தபடி முரசுகள் முழங்கத்தொடங்கின. “எழுக! எழுக!” என கைதூக்கி ஆணையிட்டு வில் குலைத்தபடி அவன் பாண்டவப் படைப்பெருக்கை நோக்கி பாய்ந்துசென்றான்.

 

சிகண்டி முன்னின்று நடத்திய பாஞ்சாலப் படையை அஸ்வத்தாமன் சந்தித்தான். சிகண்டியின் வில் வல்லமையைக் குறித்து அவன் கதைகளெனக் கேட்டிருந்தான். போர்நாட்களில் ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் அறிந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு மதிப்பீட்டையும் சிகண்டி கடந்து செல்வதை கண்டான். பின்னர் அறிந்தான், அப்போர்க்களத்தில் வஞ்சம் துளியும் இன்றி, வெற்றி தோல்வி என ஒருகணமும் கருதாது, போர்புரிபவர் அவர் என்று. அந்நிலையில் போர் வெறும் பயிற்சி என்றாகிவிடுகிறது. ஒவ்வொரு அம்பும் அதை தொடுப்பவனை பயிற்றுவிக்கிறது. ஒரு மெய்த்துளியை அம்பறாத்தூணியில் எஞ்சவிட்டே அது எழுந்து செல்கிறது. பயின்று தேர்ந்து கணம் தோறும் வளர்ந்து அவர் நின்றிருந்தார்.

சிகண்டியை அம்புகளால் எதிர்கொள்ளத் தொடங்கியபோதே அன்று புதிதெனப் பிறந்து அவர் வந்திருப்பதை அஸ்வத்தாமன் உணர்ந்தான். அவருடைய ஒவ்வொரு அம்பையும் தன் அம்பால் அறைந்து வீழ்த்திக்கொண்டிருக்கையிலேயே போர் நெடும்பொழுது நீடிக்க இயலாதென்று அவனுக்கு தெரிந்தது. சிகண்டியின் அம்புகள் அவன் தொடுத்த அம்புகளுக்கு நிகரான விசையும் எடையும் கொண்டிருந்தன. எனில் தன் அம்புகள் ஒவ்வொன்றையும் முற்றாக கணிக்க இயல்கிறது அவரால். ஒற்றை அம்புகூட முன்கணிக்கப்படாது வெற்றுப்பயிற்சியின் விசையால் தொடுக்கப்படவில்லை. எவ்வண்ணம் அதை கணிக்கிறார்? எங்கே திறந்திருக்கிறது என் வாயில்? அஸ்வத்தாமன் ஒவ்வொரு வழியாக உளம் செலுத்தி தன்னை தொகுத்து மூடிக்கொண்டான். ஆயினும் சிகண்டி அவன் அருகிலென, அகத்தே என திகழ்ந்து அவனை அறிந்திருந்தார்.

ஒவ்வொரு அம்புக்கும் எதிரம்பு தொடுத்தபடி சிகண்டியை கூர்ந்து நோக்கிக்கொண்டு போர் புரிந்தான் அஸ்வத்தாமன். எவ்வண்ணம் கணிக்கிறார்? அவன் உள்ளம் எங்கோ முட்டித் தவித்தது. தன் முன் நின்று போரிடுவது ஒரு மனிதரல்ல, சிலை என்று ஆழம் உணர்ந்தமையின் தவிப்பு அது என சித்தம் கண்டடைந்தது. பின்பு ஒரு தண்தொடுகை என அவன் அறிந்தான், சிகண்டி தன் விழிகளை நோக்கவில்லை என்று. விழிகளின்மை அவரை சிலையென்றாக்கியது. விழிகளன்றி மானுடனை அறியும் வழி பிறிதொன்றுண்டா என்ன? சிகண்டியின் விழிகளை நோக்க இயன்றால் அவர் எண்ணுவதென்ன என்று உணர்ந்துகொள்ளலாம். விழிகள் விழிகள் விழிகள்… விழிகளில்லா முகம்போல் மூடப்பட்ட பிறிதொன்றில்லை.

சிகண்டி பாதி விழி மூடி துயில்பவர் போலிருந்தார். அவருடைய மெலிந்து நீண்ட இரு கைகளும் கொடிநடனம்போல் சுழன்று அம்புகளை தொடுத்தன. எவ்வண்ணம் என்னுள் நுழைகிறார்? எவ்வண்ணம் என்னை அறிகிறார்? அஸ்வத்தாமன் உள்ளம் அலைக்கழிந்தது. இரு படைகளும் அம்புகளால் தொடுத்துக்கொண்டு இரு முள்ளம்பன்றிகள் முட்களைக் கொண்டு போரிடுவதுபோல் போரிட்டன. உலோகங்கள் உரசிக்கொள்ளும் ஓசைகள் அங்கு ஒரு பெரும்சமையல் நிகழ்வதுபோல கனவுக்குள் மாயம் காட்டின. அங்கிருந்த அனைவருமே சிலகணங்கள் கனவுக்குள் சென்றனர். உடல்கள் முந்தைய கணத்தின் அசைவையும் விசையையும் முன்னெடுக்க அவர்கள் இன்னுணவு நறுமணம் கொண்டுநிறைந்த உண்டாட்டில் திளைத்துக் கூச்சலிட்டு திடுக்கிட்டு மீண்டனர்.

தன்னுணர்வு கொண்டபோது வியர்வை முளைத்திருந்தது. மெல்லிய குமட்டலும் எழுந்தது. முள்காடு காற்றில் உலைவதுபோல் வேல்களும் வாள்களும் சுழன்றன. உருகிவழிந்த வெயில் கண்களை கூசச் செய்தது. சென்று முட்டிய ஒரு கணத்தில் அஸ்வத்தாமன் உணர்ந்தான், சிகண்டி எவ்வண்ணம் தன் உள்ளத்தை உணர்கிறார் என்று. தன்னைப் பகுத்து ஒரு பகுதியை பிறரென்றாக்கி எதிர்நிறுத்தி போரிட்டுக்கொண்டிருக்கிறார். இப்போது எதிர் முனையில் அஸ்வத்தாமனாக அவரே நின்று பொருதிக்கொண்டிருக்கிறார். அவரை நோக்கி எதிர்வினையாற்றுவதனால் அவன் அவரால் நிகழ்த்தப்பட்டான். அவனேயாகி நின்று அவர் தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தார். தன்னுடன் தான் பொருதுபவர் தன்னுடைய விழைவால் மட்டுமே தோல்வி அடைவார்.

அஸ்வத்தாமன் அவ்வுணர்வால் மேலும் மேலும் சீற்றம் கொண்டு விசை மிக்க அம்புகளால் சிகண்டியை அடித்தான். வியாஹ்ராஸ்திரம் நிலமறைந்து வாள்பற்கள் காட்டி மீசை விடைக்க உறுமும் வேங்கை என ஓசையிட்டபடி சென்றது. மிருகாஸ்திரம் காற்றில் பாயும் கலைமான் என ஊளையிட்டபடி பறந்து சென்று தாக்கியது. பஸ்மாஸ்திரம் புழுதி கிளப்பி திரையிட அதை மின்நெளிவென துளைத்துச்சென்று அறைந்தது வஜ்ராஸ்திரம். அனைத்து அம்புகளையும் அவற்றுக்கு ஈடான அம்பால் சிகண்டி தடுத்தார். ஒரு துளி சிந்தாமல் ஒரு புட்டியிலிருந்து இன்னொன்றுக்கு மதுவை செலுத்துவதுபோல. ஒரு சொல் துளியும் பொருள்குன்றாமல் புரிந்துகொள்ளப்பட்டதுபோல.

எவ்வண்ணம் அவ்வாறு முற்றாக பகுத்துக்கொள்ள இயல்கிறது? மானுடர்க்கு இயல்வதுதானா அது? ஏனெனில் அவர் ஒருவர் அல்ல, இருவர். ஆணும் பெண்ணும் ஓருடலில் குவிந்தவர். ஆணென்றும் பெண்ணென்றும் நின்று வாழ்ந்தவர். ஆணும் பெண்ணும் போரிட்டும் முயங்கியும் திகழும் களம் அவர் உடல். இங்கு ஒருமுனை நிறுத்தி மறுமுனையை எந்த எல்லை வரைக்கும் கொண்டு செல்ல அவரால் இயலும். பெண்ணொருபாகம் வைத்த பெருமானே இங்கு வந்தால் மட்டுமே இவரிடம் போரிட இயலும். முப்புரம் எரித்த அம்புகளுடன் அவர் எழுந்தாகவேண்டும். உமை தேரோட்டவேண்டும். மூவிழி அனல்வடிவுகொண்டு அம்புகளிலெழவேண்டும்.

இடியோசை எழுப்பிய பர்ஜன்யாஸ்திரம் நிலத்தை அறைந்து புழுதி கிளப்பியது. சுழன்று சுழன்று அறைந்தது வாயுவாஸ்திரம். சிகண்டி ஒருகணமும் உளமொழியவில்லை. தன் கை தளர்வதை அஸ்வத்தாமன் உணர்ந்தான். ஆனால் பின்னடைதல் தன் இயல்புக்கு ஒவ்வாதது. உயிர்கொடுப்பதே வழி. ஆனால் இறவாதவனை வெல்ல எவரால் இயலும்? ஈருடலனே இயன்றால் என்னை கொல்! உன்னை விழைந்து கேட்பதொன்றே, கொல்க என்னை! உன் அருந்தவத்தால் என்னை வெல்க! ஆற்றி அகன்று நின்றிருக்கும் உனது ஊழ்கத்தால் என்னை அழித்துச்செல்க! உன் அணைந்த வஞ்சம் இறுகிய கரும்பாறையால் அறைந்து என்னை விடுதலை செய்க!

அஸ்வத்தாமன் மேல் மேலும் மேலும் அம்புகளைத் தொடுத்தபடி சிகண்டி முன்னெழுந்து சென்றார். இருபுறங்களிலும் இருந்து திருஷ்டத்யும்னனின் படைவீரர்கள் வந்து சேர்ந்துகொள்ள சிகண்டி இரு கைகளையும் விரித்து முன்னால் வரும் கடல் நண்டுபோல் கௌரவப் படையை அணைக்க வந்தார். சகுனியின் ஆணை பின்னிருந்து ஒலித்தது. “உத்தரபாஞ்சாலர் பின்னடைக! படைகளை காத்துக்கொள்க! படைகள் அழியலாகாது! உத்தரபாஞ்சாலப் படைகளை மீட்டுக்கொண்டு பின்னடைக!” அஸ்வத்தாமன் இருபுறமும் திரும்பிப் பார்த்தான். கௌரவப் படை பாஞ்சாலர்களின் வில்லுக்கு முன் சிதறி அழிந்து நிலம் தழுவிக்கொண்டிருந்தது. “பின்னடைக!” என்று கைகாட்டியபடி மூச்சை இழுத்து வில் தாழ்த்தினான்.

அவனது தேர்ப்பாகன் தேரை இழுத்து பின்னடையச் செய்ய கௌரவப் படைவீரர்கள் கூச்சலிட்டபடி ஒருவரோடொருவர் முட்டிக் கலைந்து பின்னடைந்தனர். நிலைக்கேடயங்களைத் தூக்கி ஒன்றுடன் ஒன்று ஒட்ட வைத்து இரும்புச் சுவரொன்றை சமைத்தபடி பின்நீங்கத் தொடங்கினர். தேரிலமர்ந்து பின்னடைந்து செல்கையில் அஸ்வத்தாமன் சிகண்டியின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அங்கு ஒருகணமாவது வெற்றியின் உவகை எழுந்தால் நான் வென்றேன். ஒருகணம் விழி தூக்கி பின்னடையும் என் முகத்தை அவர் நோக்கினால் இத்தருணத்தை கடந்தேன். ஆனால் அஸ்வத்தாமன் தன் முன் நின்றிருப்பதையே சிகண்டி அறியவில்லை. தன் முன் எழுந்து பொருதி மீள்பவன் எவனென்றே உணரவில்லை. எங்கோ ஏதோ களத்தில் அவர் தன் ஆடிப்பாவையுடன் போர்புரிந்துகொண்டிருந்தார்.

கௌரவப் படைகள் முற்றாக விலகி படைமுகப்பு ஒழிய இருபுறத்திலிருந்தும் கிருபரும் கிருதவர்மனும் நடத்திய கேடயப்படை வந்து முகப்பை மூடிக்கொண்டது. தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்த அஸ்வத்தாமன் ஒருகணம் அன்றைய போரின் தொடக்கத்தில் தான் பீஷ்மரை எண்ணிக்கொண்டதை நினைவுகூர்ந்தான். காலை அரையிருளில் படைமுகப்பில் நின்று தன் முன் விரிந்திருந்த பாண்டவப் படைவிரிவை பார்த்தபடி, தனக்குப் பின் எழுந்த கௌரவப் படையின் சூழ்கையை உள்ளத்தால் தொட்டுத் தொட்டு மீண்டும் ஒருமுறை சீர்நோக்கிக்கொண்டிருந்தபோது அப்போர்க்களத்தின் வெற்றிதோல்விக்கு அப்பால் சென்று உளம் சலிப்புற்று அவன் நின்றிருந்தான். அப்போது குருக்ஷேத்ரத்தின் போர் தொடங்கிய முதல் நாள் பீஷ்மரைக் கண்டதை நினைவுகூர்ந்தான்.

இருபுறமும் திசைதொடும் பெருக்கென படைகள் விரிந்திருக்க, போர் போர் என ஒவ்வொரு படைக்கலமும் துடித்துக்கொண்டிருக்க, படைமுகப்பில் நின்றிருந்த பீஷ்மர் விலக்கமும் சலிப்பும் கொண்டிருந்தார். அவர் உடலில் இருந்த தசைகள் அனைத்தும் தளர்ந்திருந்தன. கை தொங்கி தொடையை தொட்டுக்கொண்டிருந்தது. அதை உணர்ந்த கணம் தானும் அவ்வாறே நின்றிருப்பதாகத் தோன்றியது. இயல்பாக விழிதிருப்பி நோக்கியபோது கர்ணனின் மைந்தன் விருஷசேனனை பார்த்தான். கர்ணன் தேர்த்தட்டில் விஜயத்தை ஏந்தி வலக்கையால் மீசையை சுழித்தபடி நின்றிருந்தான். தளர்ந்த தோள்களுடன் சற்றே சாய்ந்த வில்லுடன் தேர்த்தட்டில் விருஷசேனன் நின்றிருந்தான். இருவருமே ஒன்றின் வடிவங்களென தோன்றியது. விருஷசேனனிலிருந்து வளர்ந்து எழுந்தவன் போலிருந்தான் கர்ணன். அன்றி பின்னடைந்து விருஷசேனனை வந்தடைவன்போல்.

முரசுகள் முழங்க விருஷசேனனின் இறப்பு அறிவிக்கப்பட்டது. “அங்கநாட்டு பட்டத்து இளவரசன் விருஷசேனன் மறைந்தார்! அங்கநாட்டு இளவரசர் மறைந்தார்! இளைய அங்கர் வாழ்க! விண்புகுக, மாவீரர்!” ஒருகணம் அந்த முரசொலியை அஸ்வத்தாமன் செவிகொண்டான். பின்னர் “எழுக படை! எழுக!” என ஆணையிட்டு தன் வில்லவர் படையை தொகுத்து போர்முகம் நோக்கி எழுந்தான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 51

கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரையொருவர் மீண்டும் அம்புமுனைகளால் சந்தித்துக்கொண்டனர். கால மடிப்புகளில் மீளமீள அவ்வாறு சந்தித்துக்கொண்டே இருப்பதைப்போல இருவரும் உணர்ந்தனர். நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் ஒவ்வொரு முறையும் உணர்ந்ததுபோல் அது அங்கு தொடங்கவில்லை, எவ்வண்ணமும் அங்கு முடியப்போவதுமில்லை என்ற உணர்வை அவர்கள் அடைந்தனர். எஞ்சியிருப்பது அத்தருணம் மட்டுமே. அதில் வெல்வது எவர் எனும் வினா. வென்ற பின் தொடர்வதென்ன என்பதை அவர்கள் அறியவியலாது. வெல்வது எதன் தொடர்ச்சி என்பதையும் அறியவியலாது. இருபுறமும் அறியமுடியாமைகளின் பெருவெளி அவர்களை இரு கைகளென அள்ளி அழுத்தி அருகணையச் செய்தது. இருவரும் பின்பக்கம் உணர்ந்த பெருவிசையை மறுகணமே முன்பக்கம் ஈர்ப்பென அறிந்தனர். அத்தனை நாளும் தாங்கள் ஒருவரை ஒருவர் கவர்ந்திழுப்பதாக எண்ணி மயங்கியது அவ்விசையையே எனத் தெளிந்தனர்.

அம்பு தொடுத்து ஒருவரையொருவர் எதிர்கொண்டதுமே அக்கணம் முடிவிலா கணங்களின் ஒழுக்கின் ஒரு துளி என ஆயிற்று. ஒவ்வொரு கணத்திலும் எவர் வெல்கிறார் என்பதே வினா. ஒவ்வொரு அம்பிலும் எந்த அம்பு முந்துகிறது என்பது. முந்தும் ஒரு அம்பு விண் நிறைந்திருக்கும் புடவிகள் அனைத்தையும் ஆளும் பெருநெறி ஒன்றின் துளி. அவ்வண்ணமே ஆகுக என்று பணிக்கப்பட்டவர்கள் அவர்கள். அவ்வண்ணமே தன்னை நிகழ்த்திவிட்டு இன்மை நோக்கி செல்பவர்கள். நிகழ்கின்றனவா கனவிலெங்கோ அலைகொள்கின்றனவா என்றறியாத களம். கொன்று கொன்று குவித்தனர் மானுடர். ஒன்றுள் ஒன்று புகுந்தன படைகள். மானுடர் ஒருவரை ஒருவர் எவ்வெல்லை வரை கொன்றழிக்க முடியும்? இரு பாம்புகள் ஒன்றை ஒன்று விழுங்கி இரண்டுமில்லாமல் ஆகிவிடக்கூடுமா என்ன?

ஒவ்வொரு அம்பும் தன் எதிர்அம்பை முன்னரே அறிந்திருந்தது. முன்பு நிகழ்ந்த பல்லாயிரம் களங்களில் அவை சந்தித்துக்கொண்டிருந்தன. உலோக முனைகள் முட்டி ஒலித்த மணியோசை முந்தைய கணங்களுடன் இணைந்து ஒரு ரீங்காரமென மாறி, ஊழி முதல் ஊழி வரை காலமிலி என்றே ஆகி, ஒலிக்குமொரு ஒலிக்கோடு. பல்லாயிரம் ஒலிக்கோடுகள். அவை ஒன்றையொன்று அறிவதே இல்லை. ஒருகணத்திலிருந்து மறுகணம் வரை விரிந்திருக்கும் யுகங்களில் அவை சென்றுகொண்டே இருந்தன. ஒவ்வொரு இடிமின்னலும், ஒவ்வொரு எரிகுமிழியும், ஒவ்வொரு புழுதிமலர்வும், ஒவ்வொரு மண்ணதிர்வும், ஒவ்வொரு குருதிநிணப்பொழிவும் அவ்வண்ணமே முன்னரே நிகழ்ந்திருந்தது. மீண்டும் நிகழவிருந்தது.

அக்களத்தில் ஒருவரையொருவர் விழிகளால் தொடுத்துக்கொண்டு பிறர் உளரென்றே அறியாமல் அவர்களிருவரும் போரிட்டனர். அர்ஜுனனுக்குப் பின்னால் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் புறத்துணை அளித்தனர். அர்ஜுனனின் வண்ணநிழல்கள் என நின்று போரிட்டு அவர்கள் கர்ணனுக்குப் பின்னால் அரைவட்ட வடிவில் துணைப்புறம் சேர்த்த கர்ணனின் மைந்தர்களை தாக்கினர். விருஷசேனனின் அம்புகளால் சுருதகீர்த்தி முற்றாகவே தடுக்கப்பட்டான். திவிபதன் சுருதசேனனை தடுத்தான். எஞ்சிய கர்ணனின் மைந்தர்கள் இரு சரடுகளென முன் நீண்டு வந்து அர்ஜுனனைத் தொடர்ந்து எழுந்து வந்த பாஞ்சாலத்து வில்லவர் படையை எதிர்கொண்டனர்.

தேர்முகப்பில் அமர்ந்திருந்த இளைய யாதவர் அரைவிழி மூடி, இசைமயக்கில் அமர்ந்து யாழ் மீட்டுபவர் போலிருந்தார். ஒற்றைக்கையில் அவர் பற்றியிருந்த ஏழு கடிவாளச்சரடுகளும் ஏழு ஸ்வரங்களைச் சூடிய யாழ்நரம்புகள். அவற்றை அவர் சுண்டவில்லை. இழுக்கவும் இல்லை. இயல்பாக பற்றி மடியில் வைத்திருப்பது போலிருந்தார். ஆனால் அவற்றில் ஓடிய விரல்களின் வழியாக ஒவ்வொரு புரவியும் அவர் ஆணையை அறிந்தது. ஒவ்வொன்றும் தனித்தனியாக தங்கள் ஆணையை இயற்ற அவ்வசைவுகள் ஒன்றெனக் கூடி தேரை செலுத்தின. அத்தேர் மலர்களில் அமர்ந்து இலைச்செறிவில் ஊடாடி அலையும் வண்டுபோல் பறந்தது. சரிந்து சுழன்று எழுந்து வளைந்து முன்னெழுந்து பின்னமைந்தது.

இளைய யாதவரின் வலக்கையில் அமைந்த சவுக்கு காற்றில் வெறுமனே நெளிந்தது. அதன் நுனியிலிருந்த தோற்சரடு காற்றில் வளைந்து வளைந்து உருவாக்கிய வடிவங்கள் பின்நிற்கும் படையினருக்கான ஆணைகள் என்பதை சல்யர் உணர்ந்தார். அர்ஜுனனின் தேர் கர்ணனின் அம்புகளிலிருந்து ஒழிந்து எழுந்து அகன்று எதிரம்பை உமிழ்ந்தது. அது நாகமொன்றின் தலை. பின்புறம் அலைநெளியும் உடலே தொடரும் படை. அத்தேர் ஒரு சிறு ஆடி என்றும் அதிலிருந்து எழும் அம்புகள் ஒளிக்கதிர்கள் என்றும் தோன்றின. அவற்றை நோக்கி செல்லும் அம்புகள் அவ்வண்ணமே திரும்பி வந்தன. அர்ஜுனன் அத்தேரின் உலோகவளைவுகளில் நின்று நெளிந்தாடும் பாவை போலிருந்தான். அவன் முகத்தில் கணம்தோறும் மாறிக்கொண்டிருந்த உணர்வுகள் அக்களத்தின் எதிரொளிப்பு.

 

சல்யர் தன் தேர்த்தட்டில் அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். “சூழ்க! அவனை சூழ்ந்துகொள்க! இத்தருணம் இனி அமையப் போவதில்லை. இக்களத்தில் இதுவே உங்கள் இறுதிச் சந்திப்பு என்று அமையட்டும். அங்கனே, அவன் இடப்புறத்தை அடி. இதுவரை நோக்கியதில் அவன் இடப்புறமே காப்பு தளர்ந்தது எனத் தெரிகிறது. ஆகவேதான் அத்தேர் எப்பொழுதும் இடப்புறம் காட்டாது வலம் சுழிக்கிறது. இடப்புறத்தில் அடி. இடப்புறத்தில் அவன் தேரை உடை!” தேர்வலர்களின் எல்லைகளைக் கடந்து அவரே அப்போரை நிகழ்த்துபவர் என அவர் கொந்தளித்தார். “எளிய அம்புகள் இனி உதவாது. எல்லா எல்லைகளும் கடக்கப்பட்டுவிட்டன. ஐம்பருக்களின் மதம் கொண்ட அம்புகளை எடு… இதோ!” என்று கூவினார்.

கர்ணன் “ஆம், இதோ!” என்று கூறி ருத்ராஸ்திரத்தால் அர்ஜுனனின் தேரை தாக்கினான். அதிலிருந்து சுழற்காற்று எழுந்து அப்பகுதியை மூடியது. பல்லாயிரம் கைகள் என அது அனைத்தையும் பிடித்து உலுக்கியது. மலையிறங்கும் பெருநதியிலெழுந்த சுழி என அள்ளித் தூக்கி சுழற்றியது. காவல்மாடங்களில் நின்றிருந்தவர்கள் அங்கே ஒரு ஆழி சுழன்று செல்வதை கண்டனர். தரையிலிருந்து புழுதியும் குருதிச்சிதர்களும் எழுந்து பக்கவாட்டில் வீசிஅறையும் மழைச்சாரல் என அவர்கள் மேல் பாய்ந்தன. அந்த ஆழியின் விளிம்பிலமைந்தவை தூக்கி அப்பால் வீசப்பட்டன. அதன் நடுவிலமைந்தவை மேலே தூக்கப்பட்டு மையக்குழியில் விழுந்து குவிந்தன. யானைகள் அடிபதற, புரவிகள் தெறித்துவிழ, தேர்கள் உலைந்து சரிய அச்சுழல்காற்று கடந்து சென்றது.

அதன் பின்னரே அதன் வெம்மையை ஒவ்வொருவரும் உணர்ந்தனர். புரவிகளின் குஞ்சிமயிர்கள் பொசுங்கின. கொடிகள் பற்றிக்கொண்டன. அன்றைய போர் அனலாடல் என அறிந்திருந்தமையால் ஒவ்வொருவரும் தோலாடைகளையே அணிந்து வந்திருந்தனர். துணியாடை அணிந்தவர்கள் அவை பற்றிக்கொள்ள நிலத்தில் படுத்து வெந்த ஊனில், உருகிய நிணத்தில், கொதிக்கும் சோரியில் புரண்டு ஆடையற்ற செவ்வுடலுடன் மண்ணின் கருவறைக்குள் இருந்து வருபவர்கள் என எழுந்தனர். ஆடையின்மையைக் கண்டு நாண அவர்களுக்கு பொழுதில்லை. விண்ணிலிருந்து பொழிந்தவற்றால் அவர்கள் மீண்டும் மண்ணுடன் சேர்த்து அறையப்பட்டனர். எரிகாற்று பல்லாயிரம் நரிகளின் கூட்டமென ஊளையிட்டபடி சூழ்ந்தது. உலோகப்பரப்புகள் ஒவ்வொன்றும் அனல்கொண்டன. அவற்றின்மேல் விழுந்த குருதித்துளிகள் தேனீக்கள் என ரீங்கரித்தபடி உலர்ந்து கருகின. ஊன்துண்டுகள் வெந்து உருகி சறுக்கி விழுந்தன.

“ருத்ரனின் மூன்றாம் விழி!” என்று வீரர்கள் கூவினர். அர்ஜுனன் மகேஸ்வராஸ்திரத்தால் அதை எதிர்த்தான். அனலுக்கு அனலே காப்பு என அனலெழுந்து அனலை தடுத்தது. கர்ணன் தொடுத்த மாருதாஸ்திரங்கள் சிறு சிறு புயல்காற்றுகளென குருக்ஷேத்ரக்களத்தில் வெடித்து, குமிழ்த்து எழுந்தும் அலைத்துப் பரவியும் வெளியை அதிரச்செய்தன. புரவிகளின் செவிப்பறைகள் அதிர அவை கனைத்தபடி நிலையழிந்து சுற்றின. தேர்கள் அவ்விசையில் குடைசாய்ந்தன. அவற்றை வந்தறைந்த மாருதவாளிகள் அவற்றை தரையிலிருந்து தூக்கி குப்புற கவிழச்செய்தன. குளம்புகள் காற்றில் உதைபட புரவிகள் முதுகு நிலத்திலறைய விழுந்தன. அவற்றின் அடிவயிறுகள் வெளிறித் தெரிய மேலிருந்து விழுந்த சிம்புகளும் உலோகத் துகள்களும் அவற்றை தாக்கின. அடுத்த அம்பில் அவை வெட்டுண்டு தனித்தனிப் புரவிகளாக விண்ணில் தெறித்து சுழன்று தலை ஒடிந்து மடிய நிலமறைந்து விழுந்தன. உடல் திறந்து குருதிக் கலங்களென சிதறின.

தேர்களை ஓட்டிய வீரர்கள் புரவிகளின் உடலுடன் இணைந்து சிதறிப்பரவினர். கன்மதமும் மண்மதமும் நீர்மதமும் காற்றுமதமும் சூடிய அம்புகள் வெடித்தன. கன்மதம் வெடித்து அனலென்றாகி அணைந்த பின்னர் கந்தகப் புகை மண்டியிருந்தது களத்தில். மண்மதம் அழுகும் ஊன் என கெடுமணம் கொண்டிருந்தது. நீர்மதம் தேங்கலின் தைலவாடையை. காற்றுமதம் குமட்டவைக்கும் ஆவியுடனிருந்தது. பருப்பொருள் ஒவ்வொன்றிலும் உறையும் வஞ்சத்தை வாற்றி எடுத்து ஊற்றிச்செய்த அம்புகள் அங்கே அப்பருப்பொருட்களாகி நின்று உறுமி ஆர்ப்பரித்தன. ஒவ்வொன்றும் பிறவற்றின்மேல் சீற்றம்கொண்டிருந்தது. நீர் அறைந்தது கல்லை. மண் மேல் மோதியது கல். நீருடன் முரண்கொண்டது காற்று. தோழரே, மானுடர் தங்கள் போருக்கென இயற்கைப் பெருவல்லமைகளை துணைக்கழைக்கிறார்கள். குனிந்து ஒரு கல்லை எடுக்கும் காட்டாளனில் தொடங்கியது அது. நதியோரங்களில் படிந்த செம்பும் மண்ணாழத்தில் புதைந்த இரும்பும் அவர்களின் வஞ்சத்தால் தங்கள் காலத்துயில் கலைந்து எழுந்தன. உருகி படைக்கலங்களாயின. குருதிகுடித்து கூர்கொண்டன. படைக்கலநிலைகளில் தெய்வங்கள் என அமர்ந்து பலி கோரின. வஞ்சம் வஞ்சம் என தவமிருந்தன. களம் களம் என காத்திருந்தன. எழுந்து வெறியாடுகையில் மானுடனை தங்கள் படைக்கலங்கள் என ஏந்திக்கொண்டன.

மானுடன் மேலும் மேலும் என வஞ்சமும் சீற்றமும் கொள்ள இன்னும் இன்னும் என எழுந்து வருகின்றன பருப்பொருட்களின் மதங்கள். கல்லில் எழுந்தது கன்மதம். பின் ஒவ்வொன்றிலும் எழுந்தன மதங்கள். உண்ணும் அன்னம் மதம்கொண்டு நஞ்சாகிறது. இனி மலரிலிருந்து எழும் போலும் கொல்லும் பெருவஞ்சம். வஞ்சம் கொண்ட பருப்பொருள் தன் வடிவத்தால் மறைக்கப்பட்ட நஞ்சை வெளியே எடுக்கிறது. சுருளவிழ்ந்து நாகம் நச்சுநா நீட்டுவதுபோல. கல்லின் கண் மின்னுவதை நான் கண்டதுண்டு. நிலம் முனகி எழுவதை, நீர் சீறி படமெடுப்பதை, காற்று இடியோசை கொள்வதை நான் கண்டதுண்டு. வஞ்சம் பருப்பொருட்களின் எல்லைகளை அழிக்கிறது. பருப்பொருட்கள் என்பவை பிரம்மத்தின் ஆணையால் எழும் ஏழாயிரம் தளைகளைப் பூண்டு நிலைகொண்ட ஆற்றல்கள். அவை வெறிகொண்டு தங்கள் வடிவத்தை களைகின்றன. தங்கள் உடலை அழித்து நெருப்பென்றும் நஞ்சென்றும் எழுகின்றன.

பிரம்மாண்டாஸ்திரம் இங்குள்ள அனைத்துப் பருப்பொருட்களையும் தளையறுத்துவிடுகிறது. பிரம்மாஸ்திரம் அவற்றை ஆளும் அனைத்து நெறிகளையும் சிதறடிக்கிறது. கட்டற்று எழுகின்றன பெருவல்லமைகள். மானுடனை ஆக்கிய ஐம்பருக்களும் கிளர்ந்தெழுந்து பிணைப்பறுத்து உருவழிந்து உடல்கரைத்து அவற்றுடன் கலக்கின்றன. இங்கே பின்னர் எஞ்சுவது அனல்கொந்தளிப்பு. ஒளிக்குழம்பல். ஓசையின்மை. வெறுமை. இருந்தவை எண்ணங்களில்கூட எஞ்சாத இன்மை. இருந்தவை சென்றொடுங்கும் பிரம்மம். இருந்தவற்றின் இருப்புகளையும் இழுத்து தன்னகத்தே கொண்டு சுருளும் வெறுஞ்சுழி. ஒவ்வொன்றையும் உருவழித்து வெறுமையின் இறுதிச்சுழியைச் சென்றடையும் தவத்தோர் கண்ட கனவுகளிலிருந்து சிதறி எழுந்த படைக்கலங்கள் அவை.

 

அர்ஜுனன் உளம் தளர்வதை சல்யர் கண்டார். அது அவரை வெறிகொள்ளச் செய்ய “அறை அவனை! இத்தருணத்திலேயே அவனை அறைந்து கொல்!” என்று கூவினார். அர்ஜுனன் தன் தேருடன் பின்னடைந்ததும் அலைசுருண்டு பின்வளைவு கொள்வதுபோல் பாண்டவப் படை மடிந்தது. கர்ணனின் அம்புகள் அந்த இடைவெளியை சென்றறைந்து வெடித்துக்கொண்டிருந்தன. “அவன் ஆற்றல் மிக்க அம்பை எடுப்பான்… அவன் பின்னடைவது அதற்காகவே!” என்று சல்யர் கூவினார். கர்ணன் “அவனிடமிருக்கும் அம்புகள் எவை என பார்க்கிறேன்” என நகைத்தபடி அம்புகளை தொடுத்தான்.

அர்ஜுனனின் கை பின்னால் சென்றது. அவன் விழிகளில் சினம் ஒளிகொண்டது. அவன் பர்வதாஸ்திரத்தை எடுத்தான். அத்தருணத்திலேயே அதை உய்த்துணர்ந்த சல்யர் தன் புரவியின் அனைத்துக் கடிவாளங்களையும் ஓங்கி இழுத்து உரத்த கூச்சலுடன் தேரிலிருந்து தரையில் பாய்ந்தார். கர்ணனின் தேரில் கட்டப்பட்டிருந்த ஏழு மத்ரநாட்டுப் புரவிகளில் வலப்பக்கப் புரவிகள் நான்கும் கால்களை வயிற்றோடு மடித்து நிலத்தில் அமைய இடப்புறப் புரவிகள் மூன்றும் கால்களை நிலத்தில் அறைந்து விசைகொடுத்து மேலே தாவின. தேர் முழுமையாகவே கவிழ்ந்து உருண்டுகொண்டிருந்த சகடங்களின் விசை தரையிலிருந்த உடல்களை குருதிச் சிதைவுகளென தெறிக்க வைக்க முன்னால் சென்றது. நுகத்தில் கட்டப்பட்டிருந்த புரவிகள் கால்களை உதைத்தபடி காற்றில் நீந்தி பறப்பவைபோல் வளைந்து சென்று நிலத்தில் குளம்புகள் அறைபட தொட்டு உந்தி எழுந்து முன்னால் சென்றன.

கர்ணனின் தேர் நிலத்தில் படிந்து ஓடி எழுந்த அந்தக் கணத்தில் அர்ஜுனன் தொடுத்த மலையம்பு வெடியோசையும் விழிமறைக்கும் மஞ்சள்நிற ஒளியும் கந்தகம் எரியும் மணமும் கொண்டு எழுந்து வந்து கர்ணனின் தேரை மகுடத்தை உரசியபடி அப்பால் சென்றது. அத்தொடுகையில் கர்ணனின் தேர்முகடு கனன்று செங்குழம்புபோல் மாறியது. சரிந்த தேரின் தூணை பற்றிக்கொண்டு ஒடுங்கி நின்ற கர்ணன் அதிலிருந்து பிடிவிட்டு தாவி ஓடி அப்பால் சென்றான். விண்ணில் எழுந்து வளைந்து உறுமியபடி மீண்டும் அணுகியது அர்ஜுனனின் மலையம்பு. சல்யர் அருகிருந்த கவிழ்ந்த தேரொன்றை தன் தேரால் மோதி அதை தன் தேர்மகுடத்தின்மேல் தூக்கியபடி தேரை நிமிரச்செய்தார். கர்ணனின் தேர் மேலெழுந்த தேரை அறைந்து பல நூறு எரிதுண்டுகளாக விண்ணிலிருந்து பொழியவைத்தபடி மீண்டும் கடந்து சென்றது. காற்றில் வளைந்து ஓசை கொப்பளித்து ஒளி சீறியெழ மீண்டும் அணுகியது.

கர்ணன் நிலத்தில் அமர்ந்து அருணாஸ்திரத்தால் அறைந்தான். ஏழு வண்ணக் கதிர்கள் சிதற எழுந்த அந்த அம்பு குறி தவறி விண்ணில் ஊடுருவிப் பாய்ந்து எழுந்து வளைந்து திரும்பி வந்து கௌரவப் படையிலேயே விழுந்து வெடித்து மூன்று தேர்களை புரவிகளுடன் தெறிக்க வைத்தது. சினம்கொண்ட பருந்தென அறைதலோசை எழுப்பியபடி கர்ணனை மீண்டும் அணுகியது அர்ஜுனனின் பர்வதாஸ்திரம். சல்யர் “விழிகளால் அதை நோக்காதொழிக! அதன் ஒளியே அதன் திரையென்று உணர்க!” என்று கூவினார். கர்ணன் பாய்ந்து நிலம் படிய விழுந்து உருண்டு எழுந்து நிலத்தில் நெளிந்து வளைந்து சுழன்ற தேர்களின் நிழல்களைக் கொண்டு அம்பின் இடத்தை உய்த்தறிந்து சூரியாஸ்திரத்தால் அதை அறைந்தான். எக்காள ஓசையுடன் எழுந்த அவ்வம்பு சென்று அறைந்து பர்வதாஸ்திரத்தை சிதறடித்தது.

இரு அம்புகளும் குருக்ஷேத்ரக்களம் முழுக்க படைவீரர்களின் பற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, செவிப்பறை அடைக்க, முதுகெலும்பு கூசச்செய்து, உடற்திரவங்கள் வயிற்றில் குளிர்ந்து அழுத்த குறுகி அமர்ந்து நடுங்கவைக்கும் அதிர்வை எழுப்பியபடி கீழே வந்தன. விழிகள் வெண்ணிருளால் முற்றாக நிறைய, மூச்சு கரும்புகையால் அடைபட, வெடித்து நீண்ட சீழ்க்கை ஒலிகளென மாறி மெல்ல ஓசை அவிந்தன. விண்ணிலிருந்து குளிர்காற்று மழைபோல குப்புறப் பொழிந்து அங்கிருந்த அனைத்து குருதிச்சகதிப் புழுதியையும் அள்ளிச் சுழற்றி அப்பால் வீசி மீண்டும் ஓசைகளை துலங்கச்செய்தது. செவிகளை கைகளால் பற்றி இறுக்கி தலைகளைக் கவிழ்த்து உடல் வளைத்து நின்றிருந்த வீரர்கள் அனைவரும் கனவிலிருந்தென மீண்டெழுந்தனர். இடம் சூழல் அறிந்து இருப்புணர்ந்து போர்க்கூச்சலுடன் படைக்கலங்களை எடுத்து முன்னால் பாய்ந்தனர்.

சல்யர் தேர் நுகத்திலேறி அமர்ந்து கடிவாளத்தை சுழற்றி இழுத்து புரவிகளை விசையுடன் குளம்பொலிக்க விரையச்செய்து தேரை நிமிரவைத்தார். பேரலையில் எழும் நாவாய் என தேர் நிமிர்வுகொள்ள கர்ணன் பாய்ந்து தேர்த்தட்டில் ஏறிக்கொண்டான். சல்யர் உரத்த குரலில் “இனி அவனிடம் இருக்கும் அம்புகளென்ன என்று நம்மால் கூற இயலாது. இன்னும் ஆற்றல் கொண்ட அம்புகள் சில இருக்கும் என்பதில் ஐயம் வேண்டியதில்லை. இக்களத்தில் இன்னமும் வீரர்கள் எஞ்சுகின்றனர் என்பதனால் அம்புகளை வைத்திருப்பான். எந்த வீரனும் ஓர் இறுதி அம்பை கருதியிருப்பான். அதை அவன் எடுக்கலாகாது. உன்னிடமிருக்கும் ஆற்றல் மிக்க அம்பு நாகபாணம். எடு அதை! இதுவே தருணம். எடு அதை!” என்றார்.

கர்ணன் அதை கேளாதவனாக த்வஷ்டாஸ்திரத்தை அர்ஜுனனை நோக்கி தொடுத்தான். பிளிறலோசையுடன் சென்று அர்ஜுனனின் தேரருகே நிலத்தில் பதிந்து பெரிய குழி ஒன்றை உருவாக்கி புழுதி எழச்செய்தது. அதை அவன் எடுத்தபோதே உணர்ந்து தேரை திருப்பி அர்ஜுனனை காத்த இளைய யாதவர் தேரின் சகடங்கள் அக்குழியில் சரிய தேர் நிலையழிந்தபோது அர்ஜுனனிடம் ஏதோ கூற அர்ஜுனன் அதற்கிணையான கருடாஸ்திரத்தால் கர்ணனை அறைந்தான். தேரை சிட்டுக்குருவிபோல் தாவும் சுதியில் முன்னெடுத்து அதை ஒழிந்தார் சல்யர். பருந்தென எழுந்து வட்டமிட்டு அது திரும்பி வர கர்ணன் சாரங்காஸ்திரத்தால் அதை விண்ணிலேயே அடித்து வீழ்த்தினான். இரு அம்புகளும் முழங்கியபடி எரிவிண்மீன்கள் என வானில் சரிந்து அகன்றன.

கர்ணன் தொடுத்த அஸ்வாஸ்திரத்தை சிறுத்தையின் பாய்ச்சலுக்கு இணையான வியாஹ்ரகதியில் தேரைச் செலுத்தி இளைய யாதவர் தவிர்த்தார். “எடு நாகபாணத்தை! அது ஒன்றே இத்தருணத்தில அவனை அழிப்பதென்று அறிக! எடு அதை!” என்று சல்யர் கூவினார். “அதற்கு மட்டுமே அவனைக் கொல்லும் ஆற்றலுண்டு. ஏனெனில் அதற்கு தானே தன் இலக்கு தேரும் திறனுண்டு. தேரை யாதவர் எப்படி திருப்பினாலும் அது அவனை தாக்கும். எடு நாக அம்பை!” கர்ணன் “மத்ரரே, ஒருமுறைக்குமேல் அதை அவன் மேல் தொடுப்பதில்லை என்று நான் சொல் அளித்திருக்கிறேன்” என்றான். “எவருக்கு? எவருக்கு அந்தச் சொல் அளிக்கப்பட்டது?” என்று கூவியபடி திரும்பினார் சல்யர். உடனே உணர்ந்துகொண்டு “அவ்விழிமகளுக்கா? உன் உயிர் கொண்டு சென்றிருக்கிறாள் அவள். அன்னைவிலங்கின் நிகரற்ற இரக்கமின்மையை அறியாதவனா நீ? முதல் குட்டியைத் தின்று எஞ்சும் குட்டிகளுக்கு அமுதூட்டுவது குருதி உண்ணும் விலங்குகளின் வழக்கம். உன்னை தின்கிறாள் அவள். இத்தருணத்தில் நீ கடந்து போகவேண்டியது அவளை மட்டுமே” என்றார்.

“குருதியை கடக்கலாம். முலைப்பாலைக் கடப்பது எளிதல்ல” என்று கர்ணன் சொன்னான். “நன்கு எண்ணுக… இத்தருணத்தில் உன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நீ அவனை தவிர்த்தால் உன் மைந்தரை கொண்டுசென்று அவன் அம்புகளுக்கு முன்னால் நிறுத்துகிறாய்… எண்ணிக்கொள், உன் மைந்தர் இக்களத்தில் நிலம்பட்டார்களெனில் அதன் முழுப் பொறுப்பும் உனக்கே. நீ அவளுக்கு அளித்த அச்சொல் உன் குடிக்கு நஞ்சு என்று உணர்க!” என்றார் சல்யர். கர்ணன் “இச்சொற்கள் அனைத்தையும் நீங்கள் முன்னரே உரைத்துவிட்டீர்கள், மத்ரரே. இவை அனைத்தையும் நானே எனக்கு உரைத்தும்விட்டேன். அதற்கப்பால் என்னுள்ளம் இதையே ஆணையிடுகிறது” என்றான். எரிச்சலும் துயருமாக “உன்னை கைவிட்டவளுக்காகவா உன் குடியை பலிகொடுக்கிறாய்?” என்று சல்யர் கூவினார். “கைவிட்டவர்களுக்காக அளிக்கையில்தானே கொடை மேலும் பொருள் கொள்கிறது?” என்று கர்ணன் சொன்னான்.

“தாய்மையைப்போல் பெரும்பொய் ஒன்றில்லை” என்று சல்யர் கூவினார். “உறவுகளில் பொய்யானது அதுவே. ஏனென்றால் அது மிகை. முழுப் பொய்யைவிடப் பெரிய பொய்யே மிகை என்பது. பெண்ணை இல்லத்தில் கட்டுறுத்த முந்தையோர் சொன்ன பொய் அது… அதை ஏற்கும் பெண் இற்செறிப்பாள். நம்பும் ஆண் பெண்ணால் ஏமாற்றப்படுவான்.” கர்ணன் “இப்புவிவாழ்க்கையே மாபெரும் பொய்யென்று இக்கணம் அறிகிறேன். அப்பொய்களில் முதன்மையானது தாய்மை. அதை தழுவி நின்றிருக்கையிலேயே இப்புவி வாழும். இதை உடைத்த பின் இங்கு உருக்கொண்டு நின்றிருக்கும் கருத்தென எதுவும் எஞ்சாது” என்றான். “கீழ்மை! கீழ்மை!” என்று சல்யர் தன் சவுக்கால் தன் தலையில் அறைந்தார். “எடு உன் நாகவாளியை! இது உன் தந்தையின் ஆணை! உன் குருதித்தந்தையின் ஆணை இது!” என்று நெஞ்சிலறைந்தபடி ஓலமிட்டார்.

“என் அன்னை உங்கள் பெயரை சொல்வது வரை நீங்கள் எனக்கு தந்தையல்ல, மத்ரரே” என்று சல்யரை நேர்நோக்கி கர்ணன் சொன்னான். தளர்ந்து “முற்றாக அழித்துவிட்டாள் உன்னை. ஒரு துளி எஞ்சாமல் உண்டுவிட்டுச் சென்றுவிட்டாள்” என்றார் சல்யர். அத்தருணத்தில் சிம்மமென உறுமியபடி வந்த அம்பு ஒன்று கர்ணனின் இடப்புறம் காத்து நின்ற சுதமன் மேல் விழுந்தது. அவன் தேருடன் உடைந்து துண்டுகளாக தெறித்தான். கர்ணன் திகைத்து உடல் பதற திரும்பி நோக்கினான். சல்யர் “நோக்குக, உன் மைந்தர்…” என்று கூவுவதற்குள் அடுத்த அம்பை அர்ஜுனன் எடுத்தான். விருஷசேனன் “பின்னடைக! பின்னடைக, இளையோரே” என்று கூவியபடி தன் அம்புகளை அர்ஜுனன் மேல் தொடுத்தபடி முன்னடைந்தான். அவனுடைய அம்புகளைச் சிதறடித்தபடி வந்த அர்ஜுனனின் அம்பு அவன் நெஞ்சில் பாய்ந்து கவசத்தை உடைத்து உட்புகுந்தது. அவ்விசையில் அவன் தேர்த்தூண்கள் உடைந்து துண்டுகளாகச் சிதற புரவிகள் நிலையழிந்து ஒன்றையொன்று முட்டி தேரை சரித்தன. நெஞ்சில் பாய்ந்த நீளம்புடன் அவன் நிலத்தில் விழுந்து துடித்து ஓய்ந்தான்.

சல்யர் “அவனைக் கொன்றவன் நீ! உன் மைந்தனை உன் அன்னைக்கு பலியாக்குகிறாய்! குருதிகொள் கொற்றவை உன் குலத்தை உண்கிறாள்! அறிவிலி! அறிவிலி! அறிவிலி!” என்று கைநீட்டி கூவினார். கர்ணன் ஒருகணம் தன் இரு மைந்தரையும் விழிதிருப்பி நோக்கினான். உதடுகளை இறுகக் கடித்து முகத்தில் எழுந்த அனைத்து உணர்வுகளையும் உறைய வைத்து பாவகாஸ்திரத்தை எடுத்து தேர்த்தட்டில் நின்று துள்ளிய விஜயத்தின்மேல் தொடுத்து நாண் இழுத்து ஓங்கி அர்ஜுனனை அறைந்தான். அதை எண்ணியவர்போல் இளைய யாதவர் அவன் தேரை மேலும் மேலும் பின்னடைய வைத்தார். நீரில் மூழ்கி ஆழத்தில் மறையும் பெரிய மீன் என அர்ஜுனனின் தேர் பாண்டவப் படைகளுக்குள் மறைந்தது. அவனைச் சூழ்ந்து வந்த வில்லவர்களும் இருபுறமும் துணையமைத்த மைந்தர்களும் பெரிய வளையமென ஆகி அகன்று விலகினர்.

கர்ணனின் சினம் அனைத்தையும் அள்ளி வந்த பாவகாஸ்திரம் நிலத்தில் அறைந்து வெடித்து நீண்ட அமைதியொன்றை களத்தில் உருவாக்கி பின்னர் செவிகளனைத்திலும் தனித்தனியாக வெடித்து ஒலியின்மையை மீட்டி விழியின்மையில் அனைவரையும் உள்ளணையச் செய்து பின்பு எழுப்பியது. பலர் நிலத்தில் அமர்ந்து வாயுமிழ்ந்தனர். நிலத்தில் தலையைச் சேர்த்து உடல் நடுக்குற அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மேல் விண்ணுக்கு எழுந்த சிதைந்த உடல்களும் தேர்த்துண்டுகளும் குருதிச் சிதைவுகளும் மழையெனப் பொழிந்தன.

சல்யர் தன் கடிவாளக்கற்றையை ஓங்கி தேர்த்தட்டில் வீசினார். “போதும்! இதற்கு மேல் இப்போரை நான் நடத்தலாகாது. நீ உயிர்கொடுக்கச் செல்கிறாய். உன்னை அதற்கு அழைத்துச்சென்றேன் என்னும் பழியுடன் இக்களத்திலிருந்து நான் மீள மாட்டேன். என் குடிமைந்தர் களம் விழுந்தமைக்கு நானே பொறுப்பென்று நாளை என் கொடிவழியினர் எண்ணலாகாது. இனி உன் தேரை நான் தெளிக்கப் போவதில்லை” என்று சொல்லி தேரிலிருந்து பாய்ந்து இறங்கினார். கர்ணன் “வாழ்த்திச் செல்க, மத்ரரே!” என்றான். சல்யர் நின்று திரும்பி அவனை பார்த்தார். உள்ளிருந்து எழும் ஒரு சொல் அவர் முகத்தை உருகச் செய்தது. உடலெங்கும் அது தவிப்பென வெளிப்பட்டது. ஆயினும் அதை கூறாமல் நடந்து படையின் பின்புறம் நோக்கி சென்றார்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 50

அனல் பெருகிநின்ற குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் விஜயத்தை கையிலேந்தியவனாக அர்ஜுனன்மேல் அம்புடன் எழும்பொருட்டு திரும்பிய கர்ணனிடம் சல்யர் துயரும் ஆற்றாமையுமாக சொன்னார் “மைந்தா, என் சொற்களை கேள். நான் பெரிதும் கற்றறிந்தவன் அல்ல. நான் ஈட்டியவையும் குறைவே. ஆனால் எத்தனை எளியோன் ஆயினும் ஒவ்வொரு தந்தையும் தன் மைந்தனுக்கு அளிக்கும் பிறிதில்லாத மெய்மை என ஒன்று உண்டு. அதை நான் உனக்கு அளிக்கிறேன். கேள்.”

கர்ணன் நாணொலி எழுப்பி “செல்க… அவனை இன்றே கொல்கிறேன், செல்க!” என்றான். “அவன் தன் சாவு நோக்கி வந்துகொண்டிருக்கிறான். வல்லமைகொண்ட என் அம்புகளில் அவன் உயிர்குடிக்கவிருப்பது எது என பார்க்கிறேன்” என்று அறைகூவினான். சல்யர் “இது இக்களத்தை வகுக்கவிருக்கும் அறுதிப்போர் என நான் உணர்கிறேன். என்னிலெழும் சொற்களை நான் சொல்லியாகவேண்டும்… இவற்றை நான் பிற எங்கும் சொல்ல இயலாது போகலாம். தேர்ப்பாகனாக அமர்ந்து மட்டுமே சொல்லத்தக்கவை இவை எனத் தோன்றுகிறது” என்றார்.

“எனில் தேரை அவனை நோக்கி செலுத்துக… அவனை என் முன் நிறுத்துக… செல்லும் வழியில் நான் தடையென எழுந்துவரும் இப்படைகளை அழித்துக்கொண்டிருக்கையில் உங்கள் சொற்களை என்னிடம் சொல்லுங்கள்” என்று கர்ணன் சொன்னான். “ஆம், அவ்வாறே” என்றார் சல்யர். மூச்சுத்திணறலுடன் “என்னில் எழும் இச்சொற்களை எப்படி வகுப்பதென்று அறியேன். நூல்நவின்றுள்ளேன், எனினும் நூல்முறைமைகள் எவையும் மெய்வாழ்வின் தருணத்தில் சொல்லெடுத்துத் தருவதில்லை என்றும் அறிகிறேன்” என்றார். “நீ இப்போது வஞ்சினம் உரைத்து கிளம்புகிறாய். வெற்றி உறுதி என உனக்கே சொல்லிக்கொள்கிறாய். ஆனால் உன் நாணொலியில் நான் ஒரு தயக்கத்தை உணர்கிறேன். ஒருகணம், ஒரு மாத்திரை அது தொய்வடைந்துள்ளது.”

“அந்தத் தொய்வால்தான் நீ அவர்களுக்கு உயிர் அளித்தாய். எவ்வண்ணமேனும் வெற்றி, வெற்றிக்குக் குறைவாக ஏதுமில்லை என்பதே வீரன் கொள்ளும் முழுவிசை நிலை. அது உன்னில் இன்னமும் அமையவில்லை. அந்த ஒருகணத்தால் நீ வெல்லப்படுவாய் என நான் அஞ்சுகிறேன். ஆகவே இதை சொல்கிறேன்” என்று சல்யர் சொன்னார். அவர்களுக்குமேல் வெண்ணிற முகில்திரள் ஒன்று வந்து நின்றது. உச்சிநெருங்கும் பொழுது என்பதனால் அது மாபெரும் வெண்வைரம் என சுடர்விட்டது. அதன்மேல் ஏறிநின்று தேவர்கள் கீழே நோக்கினர். அவர்களின் மணிமுடிகளின் ஒளிர்வால் முகில்திரளின் விளிம்புகள் கூர்மின் கொண்டன. வானில் இடியோசை எழுந்தமைந்தது.

சல்யர் இடைவெளியில்லாது பேசிக்கொண்டிருந்தார். பேசப்பேச அவரிடமிருந்து சொற்கள் ஊறிக்கொண்டே இருந்தன. அவர் அதுநாள் வரை தன்னுள் பேசிய அனைத்தும் அவரிடமிருந்து எழுவதுபோலத் தோன்றியது. “நீ கொண்ட இழிவுகள் அனைத்தையும் நான் அறிவேன். துரோணரால் துரத்தப்பட்டாய். உன் ஆசிரியரால் தீச்சொல்லிடப்பட்டாய். உன் உடன்பிறந்தாரால் அவையிழிவு செய்யப்பட்டாய். உன் பிதாமகரால் சிறுமை செய்யப்பட்டாய். உன் அரசவையிலேயே ஷத்ரியர் உன்னை மதிக்காமல் அமர்ந்திருந்தனர். உன் குடிக்கு இன்னமும்கூட ஷத்ரியத் தகுதி இல்லை…” கைகளை வீசி மூச்சிரைக்க அவர் உரக்க சொன்னார். “ஆனால் அதை எண்ணி வருந்தினால் நீ ஆண்மகனல்ல. எவருக்கு இருந்தது அந்தத் தகுதி? ராவண மகாப்பிரபு அரக்கர்குலத்தில் பிறந்தவர் அல்லவா? யாதவர் அல்லவா கார்த்தவீரியர்?”

“ஏன், அதோ எதிரில் வெல்லற்கரியவனாக அமர்ந்திருக்கும் இளைய யாதவன் அவைமுன்பனாக அமைந்து நடத்தியதல்லவா யுதிஷ்டிரனின் ராஜசூயம்? அங்கே அத்தனை ஷத்ரியர்களும் சென்று அவனை வணங்கி மங்கலஅரிசி கொண்டு வேள்விநிறைவு செய்தார்கள் அல்லவா? எங்ஙனம்? அவன் தன் ஆழியை எடுத்தான். எதிர்கொள்வோர் எழுக என்றான். அதை எதிர்க்கும் ஆற்றல் எந்த ஷத்ரியனுக்கும் இருக்கவில்லை” என்றார் சல்யர். “கர்ணா, உன் விஜயம் அந்த ஆழியைப்போல் எழவேண்டிய தருணம் இது. வேள்விக்களத்திலும் போர்க்களத்திலும் முடிவாகிறது குலமூப்பு என உணர்க! அறைகூவி நில். எதிர்கொண்டு எழு. பணியாதோரைக் கொன்று முன்செல்… உனக்கு நான் சொல்வதற்கு பிறிதொன்றில்லை. இது தெய்வங்கள் உனக்கு அளிக்கும் களம்…”

அவர் நெஞ்சில் கைவைத்து கண்ணீர் நிறைந்த விழிகளுடன் திரும்பினார். “உனக்கு நானன்றி இதைச் சொல்ல எவருமில்லை என்று உணர்க! பிறர் உன் பெருமையையோ சிறுமையையோ மட்டுமே காண்பார்கள். இரண்டையும் காண்பவன் நான் மட்டுமே. பிறர் உன்மேல் கொண்ட அன்பில் துளியிலும் துளியேனும் தன்னலம் இருக்கும். உனக்காக உயிரையும் கொடுக்க இயல்பாக எழுபவன் நான் மட்டுமே.” அவர் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. “கேள், மானுடர் அனைவருக்கும் தெய்வங்கள் ஒரு வினைவட்டத்தை அளிக்கின்றன. ஆம், ஒரே ஒரு வினைவட்டத்தை மட்டுமே அளிக்கின்றன. அதை கர்மமண்டலம் என்கின்றனர் நூலோர். முன்வினை வந்து உறுவது, நிகழ்வினை கூர்கொள்வது, வருவினை தொடங்குவது அப்புள்ளியில்தான். பிரார்த்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்ற மூன்றும் அறுதியாகக் குவியும் அப்புள்ளியை கர்மபிந்து என்கின்றனர். நீ நின்றிருப்பது அங்கு. அதை தெளிக!”

“தன் வினைவட்டத்தை உணர்பவன், தன் வினைமையத்தில் உச்சவிசையுடன் எழுபவன் மட்டுமே தெய்வங்களுக்குரியவன். அவன் செல்வினையின் பயன்முடிக்கிறான். நிகழ்வினையை நிறைவுசெய்கிறான். வருவினையை தன் தோள்வலியால் உளவிசையால் வகுக்கிறான். மண்ணில் அனைத்தையும் அடைகிறான். விண்ணில் தேவர்களுடன் சென்றமர்கிறான். இந்த குருக்ஷேத்ரம் பல்லாயிரம்பேரின் கர்மபிந்து. இங்கு உச்சம்கொள்ளவேண்டியவர்கள் நீயும் அர்ஜுனனும். ஒருகணம் நீ பிந்தினால் அவன் எழுவான். ஒரு எண்ணம் உன்னில் தயங்கினால் நீ அனைத்தையும் இழப்பாய். இத்தருணத்தை வென்றெழுக!”

“மைந்தா, இக்கணத்தை தெய்வங்களுக்கு உகந்ததாக ஆக்குக! களம் ஒரு வேள்வி. இங்கே ஆற்றலே வேதம். அளியின்மையே சங்கல்பம். அம்புகள் நெய்க்கரண்டி. குருதியே நெய். உயிர்கள் ஆகுதியாகின்றன. இனியவனே, இங்கே வெற்றியே வேள்விப்பயன் என்று தெளிக!” என்றார் சல்யர். சொல்லிச்சொல்லி அவரிடம் சொல் ஒருமைகொண்டது. சொல்லொருமைகளில் வந்தமையும் காலம்கடந்து நின்றிருக்கும் மெய்மைகள் அதில் கூடின. அச்சொற்களை அவரும் நன்கறியவில்லை. அவரினூடாக அவை நிகழ்ந்தன. “அங்கனே, மீட்பென்பது தன்னிடமே என சொல்கின்றன வேதமுடிபின் நூல்கள். தானென்றுணர்தலே மெய்மையிலமர்தல். அதன்பொருட்டு கணந்தோறும் வாயில்களை தட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. திறக்கும் கணமும் வாயிலும் ஒருங்கமையும் என்றால் மீட்பு நிகழ்கிறது.”

“கணந்தோறும் என நிகழும் ஆயிரம்கோடி அறிதல்களில் ஒன்றில் உள்ளது நமக்கான மெய்மை. அது கல்லில் தெய்வமென எழுந்து நம்மை ஆட்கொள்வதே விடுதலை. அங்கனே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக் குழப்பம். நீ எளியோர் என துயர்கொள்கிறாய். அறிந்தோர்போல் பேசுகிறாய். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும்! இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர். உனக்கு வகுக்கப்பட்ட இக்களம் உனக்கான வாய்ப்பென்று கொள்க! உனக்கு அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உன் வாழ்க்கையை உருவாக்க முடியும். நீ இன்று இக்கணத்தை மட்டுமே ஆள இயலும். எழும்காலம் உன்னிடமில்லை. அது உன்னை எவ்வண்ணம் வகுக்கும் என நீ அறியவே இயலாது. வரும்புகழுக்காக இக்கணத்தை தவறவிட்டால் நீ தெய்வங்களுக்கு முன் இளிவரலுக்கு உரியவனாய். நீ மானுடன். மானுடனுக்குரிய அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவை. எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பாய்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவாய்.”

“உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே இருப்பது வெற்றியும் தோல்வியும் அல்ல. தன்னிறைவு. தன் செயலை முழுமைசெய்தவன் தெய்வங்களை அறைகூவி தனக்குரியவற்றை கோரலாம். ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை. வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உனக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உன் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க! எழுக… தயக்கங்களை களைக!”

“இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை. அங்கனே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழு விசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை. வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.”

“ஆகவே, போர்புரிக! விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறாய் என்பதனால் செயலாற்றுக!” என்றார் சல்யர். “அங்கனே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். நீ அடைந்த துயரை உடைமையென இடையில் சுமந்திருக்கிறாய். இழிவுகளை தொட்டுத்தொட்டு பெருக்கிக் கொள்கிறாய்.. கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே. நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. செயலை அறுதியாக தளரச்செய்வது தேவையற்ற இரக்கம். தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.”

“எழுக! உன் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உன் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவாய். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவாய். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும். ஆகவே, போர்புரிக!” என்று சல்யர் சொன்னார். விண்ணின் கிழக்குச்சரிவில் மீண்டும் ஓர் இடிமுழக்கம் எழுந்து எதிரொலித்தொடராக மேற்குவான்சரிவுவரை சென்று அமைந்தது.

 

கர்ணன் சல்யரின் சொற்களை செவிகொண்டான். நெஞ்சில் கைவைத்து தலைவணங்கியபடி அவன் கேட்டான். “மத்ரரே, எல்லா வகையிலும் என் தந்தைக்கு நிகரானவர் நீங்கள். உங்கள் சொற்களைக் கடக்க விழைபவன் அல்ல நான். ஆயினும் ஒன்றை கேட்கிறேன். ஒருவன் தன் வாழ்நாளெல்லாம் கொண்டிருக்கும் அனைத்தையும் தன் வினைமையத்தில் துறந்தாகவேண்டுமா? அளிகொண்டவன் அளியை. கொடைபழகியவன் கொடையை. அறம்நிற்பவன் அறத்தை? அவ்வண்ணம் உச்சத்தில் கைவிடவேண்டியவை அவை என்றால் ஏன் மானுடனுக்கு அவை ஆணையிடப்பட்டுள்ளன? ஏன் அவற்றை மானுடன் வாழ்நாளெல்லாம் பயிலவேண்டும்?”

சல்யரின் முகம் கனிந்தது. “நான் இங்கு சொல்வன அனைத்தும் என் வாழ்நாளில் அறிந்தவை. தந்தையர் மைந்தரிடம் நூலில் கற்றவற்றை, பிறர் சொல்லி அறிந்தவற்றை சொல்வதில்லை. பட்டு உணர்ந்தவையே அவர்களிடம் சொற்களாகின்றன. இவை தந்தைசொல் என உளம்கொள்! நான் இவற்றை என்னுள் இருந்தே அறிந்திருக்கிறேன். நான் கொண்ட நடிப்புகள், நான் பூண்ட மாற்றுருக்கள், நான் வெளிப்பட்ட தருணங்கள் வழியாக நான் உணர்ந்தமைந்த மெய்மைகள் இவை. இவற்றை குருதிகொடுத்து அறிந்திருக்கிறேன். கண்ணீருடன் எனக்குள் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். அவ்வண்ணம் சொல்ல சில இல்லாத தந்தையர் இல்லை.”

“மைந்தா, மானுடரிடம் அவ்வாறு மாறாத தன்னிலை என ஒன்றில்லை. இங்கிருப்பது ஒரு மாபெரும் உரையாடல். உரையாடலில் நாம் பிறரை புரிந்துகொள்ள முயல்கிறோம். ஆகவே அறிந்த சிலவற்றைக்கொண்டு அவர்களை வகுக்கிறோம். அவ்வாறு வகுக்கப்பட்ட அவர்களுக்கு எதிர்வினையாக நம்மை வகுத்துக்கொள்கிறோம். அவர்களும் நம்மை வகுக்கிறார்கள், விளைவாக தங்களை வகுக்கிறார்கள். இருபுறமும் நின்று நம்மை நாமே சமைத்துக்கொள்கிறோம். எந்த உரையாடலையும் கூர்ந்து நோக்கு, அது நீளும்தோறும் ஒவ்வொருவரும் முற்றாக வரையறை செய்யப்பட்டிருப்பதையே காண்பாய். இங்கே நாம் என நாம் எண்ணிக்கொள்ளும் அனைத்தும் நம் மீது நம்மாலும் சூழலாலும் ஏற்றப்பட்டவையே. என்னை நோக்குக! ஆணவமும் மிடுக்கும் கொண்ட மலைமகன் என என்னை வரையறை செய்துகொண்டேன். பின்னர் அரசுக்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதை தலைமைதாங்கும் அரசியல்திறனாளனாக. பேரரசு ஒன்றை உருவாக்கும் தொடக்கவிசையாக. பின்னர் மெல்லமெல்ல குடிப்பெருமிதமும், குடிகளைப்பற்றிய பொறுமையின்மையும், குடிகளின் எதிர்காலம்பற்றிய பதற்றமும் கொண்ட பெருந்தந்தையாக.”

“இவற்றின் நடுவே நான் யார்? ஓர் உரு இன்னொன்றாக ஆகும்போது முந்தையது எங்கே செல்கிறது? எவராலும் சொல்ல இயலாது? நீர்நிழலை நதி எனக் கொள்ளலாமா? நீரோட்டத்தையே நதி எனக் கொள்ளலாமா? இல்லை இரு கரைகளை கொள்ளக்கூடுமா? நதி என்பதுதான் என்ன?” என்று சல்யர் சொன்னார். “நாம் கொண்டுள்ள அத்தனை அடையாளங்களும் விடைகள் என்று உணர்க! நம்மிடம் பிறர் கேட்பதற்கான விடைகள். நாமே நம்மிடம் கேட்டுக்கொள்வதற்குரிய விடைகள். அவ்வினாக்களே விடைகளை வடிவமைக்கின்றன. வினாக்கள் திட்டவட்டமான புலங்களிலிருந்து உருவாகின்றன. அறுதியான வடிவம் கொண்டிருக்கின்றன. விடைக்கான வாய்ப்புகள் என்னும் வடிவில் விடையையே உள்ளடக்கியிருக்கின்றன. அவ்வினாக்களை உருவாக்கும் புலங்களால் நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம் எனில் அந்த வரையறை அறுதியானதா என்ன? அந்தப் புலங்களுக்கு அப்பால் அவற்றுக்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்?”

“எண்ணுக, நீ கொடையாளி! நீ சொல்பிறழாதவன். நீ அளிகொண்டவன். நீ அறம்தவறாத வீரன்… ஆம், இவையனைத்தும் நீயே. ஆனால் இவை நீ எவருக்கு அளிக்கும் விடைகள்? எந்தப் புலங்களில் நின்று உன்னை நீ வகுத்துக்கொண்டவை இவை? எந்தத் துலாவின் மறுதட்டில் இதை நிகரெடை என வைத்தாய்?” என்று சல்யர் கேட்டார். “தயங்காமல் உன்னை கிழித்துச்சென்று இதை உணர்க! இந்த உருவங்களை எவர்பொருட்டு சூடிக்கொள்கிறாய்? அனைத்து உருவங்களும் மானுடன் மூடிக்கொள்ளும் திரைகள்தான். இந்த உடலும் முகமும்கூட. நாம் பதுங்கி மறைந்திருக்கும் திரைகளை நாம் அஞ்சுகிறோம். ஏனென்றால் அவற்றை நம்மால் எளிதில் விலக்கிவிட முடியாது. திரையிட்டுக்கொண்டமைக்கு நாணுகிறோம், ஏனென்றால் அது சிறுமை என நாம் அகத்தால் அறிந்திருக்கிறோம்.”

“திரையிட்டுக்கொண்டவன் தெய்வங்களை ஏமாற்றுபவன். திரையணிந்தவனுக்கு ஊழ்கமில்லை. ஊழ்கம் முதிர்கையில் யோகம். யோகமில்லாமல் மெய்யறிதல் இல்லை. மெய்யறிவே விடுதலை. கர்ணா, யோகமென்பது அகத்தமைவதும் புறத்தமைவதும் ஒன்றென ஆதல். இருமுனை இசைவையே யோகம் என்றனர் நூலோர். யோகமில்லாதவனுக்குள் இருந்து அவன் ஆழம் தவிக்கிறது. ஆழ்கிணற்றில் நீர் நலுங்கிக்கொண்டிருக்கிறது. அது வான் தேடுகிறது. அந்த அமைதியின்மையால் நாம் திரைகளை அணிகளென்று ஆக்கிக்கொள்கிறோம். உடலுக்கு அணிபூட்டுகிறோம். உடலையே அணியென்று ஆக்கிக்கொள்கிறோம். உடல்சூடும் அனைத்தையும் அணியென்றே உணர்கிறோம். அனைத்து அடையாளங்களும் நம் அணிகளென்று உருமாறிக்கொள்கின்றன. ஆணவமும் அணியே. கர்ணா, அனைத்து அணிகளும் ஆணவத்தின் அழகுத்தோற்றங்களே.”

“அடையாளங்கள் பாதுகாக்கின்றன. அடையாளங்கள் வாயில்களை திறக்கின்றன, அவையில் அமரச்செய்கின்றன, முறைமைச் சொற்களாகின்றன. குடியில், குலத்தில், நாட்டில் நம்மை நிறுத்துகின்றன. அடையாளம் துறந்து உலகியலில் வாழ எவராலும் இயலாது. அடையாளம் துறப்பதே துறவு. இவ்வுலகு அளித்த அடையாளங்களைத் துறப்பதன் உருவகமே ஆடைதுறத்தல். தன்னிலெழுந்த அடையாளங்களைத் துறப்பதன் உருவகமே மயிர்துறத்தல். அனைத்து அடையாளங்களையும் துறப்பவன் தெய்வங்களுக்குமுன் நிற்கிறான். தெய்வம் என்பது அடையாளமாகி வந்த அடையாளமின்மை என்றனர் நூலோர். இங்குள்ள ஒவ்வொருவரும் அறியப்படும் அடையாளங்களே. அரசன் என்பவன் அடையாளங்களின் மையமாக அமைந்த அடையாளம்.”

“ஆனால் அடையாளங்களை நாம் சுமக்கலாகாது, கர்ணா. கவசங்களால் நடக்கமுடியாமலாவது போன்றது அது. அணிகள் மின்னலாம், விழிகளுக்கு அவை மாற்று என ஆகாது. அடையாளங்களை அணிகளாக்கிக் கொள்பவன் ஆணவம் கொள்கிறான். அது அவனை அழிக்கும். ஆணவம் காயில் இனித்து கனியில் கசப்பது. நீ கொண்டுள்ள இவ்வடையாளங்கள் அல்ல நீ. இவையனைத்தும் உன்னை தளையிடுகின்றன என்று உணர்க! நீ வாழ்நாளெல்லாம் இயற்றியது என்பதனால் ஒன்று உன் வாழ்க்கையென்றாவதில்லை. நீ சுமந்தவை என்பதனால் தளைகள் உன் உடைமைகளும் அல்ல” என்றார் சல்யர். “இத்தருணம் ஓர் அறைகூவல். ஒரு வினா. இதற்கு இங்கே நீ அளிக்கும் விடை என்ன என்பதே உன்னை வடிவமைக்கட்டும். வாழ்வின் வினைமையங்கள் அனைத்தும் ஒற்றைவினாக்களே. அதற்கான விடையாக தன்னை அக்கணம் உருக்கி உருமாற்றிக்கொண்டு எழுபவனே வெல்கிறான்.”

“நம்மை எப்போதும் சிறப்பாக ஏமாற்றுபவர்கள் நாமே. ஒவ்வொரு உருவும் எங்கோ உள்ள ஒரு தெய்வத்தின் உருவம்தான் என்கின்றன நூல்கள். கடுவெளியில் கருத்துருவாக உள்ள அவை எங்கோ எவரோ கொண்ட கனவில் உருவம்கொள்கின்றன. பின்னர் இங்கு இப்புவியில் தங்களை நிகழ்த்த அவ்வுருவையே கருவியெனக் கொள்கின்றன. நாம் அணிந்த மாற்றுருக்களுக்குரிய தெய்வங்கள் நம்முடன் எப்போதும் உள்ளன. அவ்வுருவே நாம் என நம்மிடம் சொல்கின்றன. ஒவ்வொரு உருவுக்கும் அவற்றுக்குரிய இயல்புகள் உண்டு. அவ்வியல்புகளை அவை நமக்கு அளிக்கின்றன. அவற்றையே நாம் என நாம் மயங்கும்படி செய்கின்றன. தெய்வங்களிடமிருந்து மானுடர் எளிதில் விடுபட இயலாது.”

“அங்கனே, இதை நீயே அறிந்திருப்பாய். அறியாதோர் எவருளர் இங்கு? தீமையில் ஊறிய ஆணவம் எளிமையானது. அது தீயது என அறியும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. நன்மையில் விளையும் ஆணவம் மேலும் கொடியது. அது நாம் வெளியேறும் வாய்ப்புகள் அனைத்தையும் மூடிவிடுகிறது. அன்னை என்னும் ஆணவம் தன் உடலே மைந்தர் என எண்ணச் செய்கிறது. தந்தை எனும் ஆணவம் மைந்தர் வடிவில் தான் வாழவிருப்பதாக நம்பவைக்கிறது. பிதாமகன் என்னும் ஆணவம் குடியை தன் மைந்தர் என கருதச்செய்கிறது. அறத்தோன் என உணர்பவன் அளியிலாதவன் ஆகிறான். கொடையாளி என உணர்பவன் மடமையை தன் பெருமை எனக் கொள்கிறான். அவை ஒவ்வொன்றின்பொருட்டும் மானுடர் உயிர்துறக்கிறார்கள். மைந்தா, மெய்மையறியாமல் மயங்கி துறக்கப்படும் உயிர் வீணானதே. உடலில் உயிர் குடிகொள்வதே அறிதலென ஆகி மெய்மையில் அமையும்பொருட்டு என்கின்றன நூல்கள். ஆணவத்தின்பொருட்டு அதைத் துறப்பவன் எவ்வகையிலும் தன் இலக்கை எட்டாதவனே.”

“அளிகொண்டவனின் கீழ்நிலை ஒன்றுண்டு, தகுதியற்றவனிடம் இரக்கம் காட்டுவது. கொடையாளியின் சிறுமை ஒன்றுண்டு, கோரப்படாதபோது அளிப்பது. பசிக்காதபோது உண்ணப்படும் உணவும் நோயிலாதபொழுது உண்ணப்படும் மருந்தும் உசாவப்படாதபோது சொல்லப்படும் உண்மையும்போல அது நஞ்சென்று ஆகும். அளிப்பவனுக்கும் பெறுபவனுக்கும் அழிவை கொண்டுவரும்” என்று சல்யர் சொன்னார். “நீ அளித்த சொற்கள் உனது ஆணவத்தின் வெளிப்பாடு. நீ கொடுத்தவை உனது வீண்தருக்கையே காட்டுவன. அதை இப்போதேனும் உணர்ந்தால் நீ விடுபடுவாய். இத்தருணத்தை இன்று புதிதெனப் பிறந்தாய் என எண்ணி எதிர்கொள்க! உலைக்குள் நுழையும் இரும்பிலிருந்து அழுக்கும் துருவும் அகல்கின்றன. அனல்கொள்கையில் அதுவும் அனலாகின்றது.”

“அங்கனே, இக்களம் உன்னை எவ்வண்ணம் வடிவமைக்கிறது? உணர்க, இங்கு நீ வில்கொண்டு எழுந்த வீரன்! பரசுராமரின் அம்புகளை தோளிலேற்றியவன். வென்று முன்செல்லவேண்டியவன். இத்தருணத்தை மறைக்கும்படி உன்னில் எழும் நேற்றைய உன் வடிவங்கள் அனைத்தும் தடைகளே. நேற்று அளித்த சொற்கள், நேற்று கொண்ட உணர்வுகள் அனைத்தும் உன்னை இதிலிருந்து பின்னிழுக்கின்றன. எளிய மானுடருக்கு பெருவெற்றிகள் இல்லை என அறிக! எளிய மானுடரை ஆளும் உணர்வுகளிலிருந்து எழுந்தவர்களே பேருருவர்கள்” என்றார் சல்யர். “நோக்குக, மறுபுறம் எழுந்து வருபவனை! நாளை அவனை அருஞ்செயல்புரிந்தவன் என காவியங்கள் பாடும். அவன் தன் ஆசிரியரை கொன்றான். தன் பிதாமகரை கொன்றான். அவன் வில் தழையவில்லை. அம்புகள் இலக்கு பிறழவுமில்லை. ஏனென்றால் அவனுக்கு அவனுடைய தேர்ப்பாகனால் வெற்றிக்கான சொல் உரைக்கப்பட்டிருக்கிறது.”

“ஆகவே, போர்புரிக! பேரறத்தை எவரும் ஐயமின்றி உணரவியலாது. பேரறத்தில் எப்பகுதியில் பொருத்திக்கொள்வதென்று உணர்தல் அதனினும் அரிது. அறம் உசாவுபவன் செயலாற்றுவதில்லை. செயலாற்றாதவனின் உள்ளம் இருளும் தூசும் தேங்கி நாற்றம் கொள்கிறது. மானுடர் அறியக்கூடுவது தன்னறம் ஒன்றையே. தன்னறத்தில் எவருக்கும் ஐயமிருப்பதில்லை. செயலாற்றுக! செயலாற்றுவதற்குரிய ஒரே வழி அதுவே. தன்னறம் நின்று செய்யும் போரைவிட உயர்ந்த நன்மை அரசர்க்கில்லை. தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது இத்தருணம். இதில் முதன்மைகொண்டு எழுக!” என்று சல்யர் சொன்னார்.

கர்ணன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் பெருமூச்சுடன் “நீங்கள் சொல்லும் இச்சொற்களை என்னுள் அமர்ந்து எவரோ சொல்வதுபோல், நான் என்றென்றும் அறிந்திருப்பதுபோல் உணர்கிறேன். இச்சொற்களை இங்ஙனம் பரிந்து எனக்கு இப்புவியில் பிற எவரும் சொல்லப்போவதில்லை என்றும் அறிவேன். ஆயினும் நான் நிலைகொள்ளவில்லை. என் வில்லுக்கே அனைத்தையும் விட்டுவிடுகிறேன். அது களத்தில் முடிவெடுக்கட்டும்” என்றான். சல்யர் “மீண்டும் என் சொற்களை எண்ணுக! அவை உன்னுள்ளத்தில் நிலைகொள்ளட்டும்” என்றார்.

மறுபக்கம் அர்ஜுனனின் தேர் நடுவே இருந்த கௌரவப் படையின் சுவரை உடைத்துக்கொண்டு தோன்றியது. வெடித்து புகைமரங்கள் என எழுந்து முகிலென மாறி விண்ணில் பரவிய எரியம்புகளின் நடுவே அவன் தேர்மகுடம் மின்னி மின்னி அணைந்தது. செம்புகைத்திரை காற்றில் அள்ளப்பட்டு அகல வெளித்த இடையில் அவனுடைய தேர் உச்சிவானின் ஒளியில் சுடர்ந்தபடி உதிர்ந்து பரவிய பிணங்களின்மேல் ஊர்ந்து உலைந்தாடியபடி வந்தது. அதன் ஏழு புரவிகளும் குஞ்சிமயிர் அனலென பறக்க, கவசங்களில் பாவைச்செவ்வெரி அலைபாய, புகைக்கு மூக்குவிரித்து கனைப்பில் பல்தெரிய வாய்திறந்து விழிகள் வெறித்து உருண்டிருக்க குளம்புகளால் மிதித்து உந்தி ஏறி அமைந்து அணுகின.

அத்தேரின் அமரத்தில் ஒரு கையால் கடிவாளக் கற்றைகளைப் பற்றியபடி அமர்ந்திருந்த இளைய யாதவர் மறுகையைச் சுட்டி அர்ஜுனனிடம் சொல்லாடிக்கொண்டிருந்தார். அவருடைய சொற்களை செவிகொண்டபடி காண்டீபத்துடன் நின்றிருந்த அர்ஜுனனின் விழிகள் கனவிலென மயங்கியிருந்தன. இளைய யாதவரின் தலையில் சூடப்பட்டிருந்த பீலி காற்றில் நலுங்கியது. நோக்கா விழி என நீலம் கொண்டிருந்தது.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 49

ஒன்பதாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான சார்ங்கர் தன் கையிலிருந்த பித்தளைக் கம்பியை வளைத்துச் செய்ததுபோன்ற சிறிய இசைக்கலனை உதடுகளுடன் பொருத்தி, நாவாலும் உதடாலும் அதை மீட்டி, சிறு தவளைகள் போலவும் வண்டுகள் சேர்ந்து விம்மலோசை எழுப்புவது போலவும் அதை இசைத்து, போர்க்களத்தின் காட்சியை விரித்துரைக்கலானார். பிற சூதர்கள் அவருடன் இணைந்துகொண்டனர். அங்கு குருக்ஷேத்ரத்தின் பதினேழாவது நாள் போர்க்களம் மீண்டும் நிகழ்வதுபோல் தொட்டுவிரிந்து அகன்று அலைகொள்ளும் காட்சிகளென விரிந்தது. அவர்களின் சொற்களின் நடுவே பந்தங்களின் ஒளியில் உடலெங்கும் அணிச்சுடர்கள் நிறைந்திருக்க கர்ணன் கிடந்தான். பனியில் அணிகளின் ஒளி சற்று நனைந்திருப்பதுபோல் தோன்றியது. அங்கே ஒலித்த பாடலின் சொற்கள் அக்குளிரில் நடுக்கு கொண்டவை போலிருந்தன.

சூதரே, மாகதரே, கேளுங்கள். நான் குருக்ஷேத்ரப் பெருங்களத்தை பார்க்கிறேன். அங்கு முட்டி மோதும் உடல்களும் படைக்கலங்களும் ஒற்றை விசையொன்றின் பல்லாயிரம் நெளிவுகளெனத் தோன்றுகின்றன. விசைகொண்டோடும் நாகம் போலவோ, தன்னில் தான் களித்து துள்ளிக் குதித்து சுழன்றாடும் குட்டிப்புரவி போலவோ, ஒற்றை உடலே எங்கும் நின்று கொந்தளித்துக் கொண்டிருந்தது. மேலிருந்து நோக்குகையில் படைக்கலங்களின் மின்களால் நிறைந்திருந்தது அது. கீழிருந்து நோக்குகையில் உதிர்ந்த உடல்களுக்குமேல் தாவிச்செல்லும் கால்களால் மூடியிருந்தது. அனலெழுந்து பெய்துகொண்டிருந்த அக்களத்தின் மீது முகில்பிளந்த ஒளி பெய்துகொண்டிருந்தது.

அன்றைய போர் ஐந்தனல்களின் போர் என்று அறிந்தேன். நான் அக்களத்தில் எரி எழுந்த காட்டின் பெருந்தழல்கள் என அசைந்த செங்கொப்பளிப்பையே கண்டேன். இரண்டாவது அனலோனாகிய வஹ்னி கர்ணனின் அம்புகளில் ஏறிப்பாய்ந்தான். மண்ணிலறைந்து வெடித்தெழுந்தான். தேர்களை அள்ளிப்பற்றி கொழுந்தாடினான். யானை உடல்களைச் சுட்டு அவற்றை அலறி சரியச்செய்தான். படைக்கலங்கள் கூட அனல் துண்டுகளென கனல் கொண்டன. அர்ஜுனனும் கர்ணனும் எதிரெதிர் நின்று தழலம்புகளால் போராடினர். ஒருகணம் பிந்தவில்லை, ஒருகணம் முந்தவும் இல்லை. அவர்களின் அம்புகளால் இரு படைகளின் பொருதுமுனை செவ்வனல் ஒழுகும் ஆறு எனத் தெரிகிறது. செங்குருதி தோய்ந்த வாளின் வளைந்த முனை. இரு படைகளும் இரும்புத்தகடுகளென உரசிக்கொண்டு அனலெழுப்புகின்றனவா?

சூதரே, இங்கிருந்து பார்க்கையில் இரு படைகளும் விட்டில்கள்போல் அவ்வனல்பரப்பை நோக்கி வந்து பெருந்திரளென விழுந்து பொசுங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. இன்றுடன் முற்றாக அழிந்துவிட விரும்புபவைபோல. சிறகுகொண்டதே அனலுக்கு உணவாவதற்கு என்பதுபோல. போர் தொடங்கிய இச்சிறுபொழுதுக்குள்ளேயே பெரும்பகுதியினர் எரிந்தழிந்துவிட்டிருக்கின்றனர். இருபுறமும் முகப்புப்படையிலிருந்து எவரும் பின்னடையவில்லை. முன்னுந்தி எழுவதற்குப் பின்னால் படைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இரு படைகளுக்கும் பின்பகுதி சிதறுண்டு அலைக்கழியும் படைவீரர்களும் தேர்களும் உதிரி வண்டிகளும் நிறைந்ததாக தெரிகிறது. இதோ எரியம்பு விழுந்து சாலையென அமைக்கப்பட்ட பலகைகள் பற்றிக்கொள்கின்றன. நெருப்பு அவற்றினூடாக ஓடை நீர் என வழிந்தோடி பின்பகுதியை அடைகிறது. எழுந்து மிகத் தொலைவில் சென்றுவிழுந்த எரியம்புகளால் கூடாரங்கள் பற்றிக்கொள்கின்றன. வைக்கோற்போர்களும் அன்னக்களஞ்சியங்களும்கூட அனல்கொண்டுவிட்டன. இரு படைகளும் இப்போது எல்லாப்புறமும் எரியால் சூழப்பட்டிருக்கின்றன. எரி நடுவே நின்று கொந்தளிக்கின்றது மானுட உடற்பெருக்கு.

கர்ணனின் அம்புகளிலிருந்து எழுந்த அனல் நுண்ணுருக்கொண்டு அங்கே எழுந்த பெருந்தவளை ஒன்றின் நீள்நாக்கு என பாய்ந்தும் மாறிமாறிச் சுழன்றும் படைகளை நக்கி உண்டது. இன்றுடன் போரிடுவதற்கு இரு தரப்பிலும் எவரும் எஞ்சப்போவதில்லை என்ற எண்ணத்தை போரிட்டுக்கொண்டிருந்த படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தனர். திரும்பித்திரும்பி நோக்கி உளமழிந்தனர். போர்க்களத்தில் எரி ஏன் தடுக்கப்பட்டிருந்தது என அறிந்தனர். எரியை எழுப்புவது வரைதான் அது மானுடக் கைகளுக்குரியது. எழுந்த பின் எரி தன் வழியை தானே கண்டுகொள்கிறது. தன் இலக்கை வெறிகொண்டு சென்றடைகிறது. இப்புவியில் தானன்றி வேறேதும் எஞ்சலாகாது என எண்ணுகின்றதா அது? தானுண்ணும் அன்னம் அழிந்து தானும் அழிந்து வெறுமையை உருவாக்கிச் செல்ல ஆணையிடப்பட்டுள்ளதா? பேரழகு கொண்டது அனல். அழிவின் பேரழகு. மின்னி மின்னி அணையும் மாபெரும் மலர்வுகளை பார்க்கிறேன். வெண்வெடிப்பு மஞ்சள் இதழ்களென்றாகி சிவந்து நுனிகருகி நீலம்கொண்டு விரிந்தமைய மையத்தில் மீண்டும் எழுகிறது இருள். இவ்வொளி எங்கிருந்தோ இருளை உறிஞ்சி இங்கே துப்பிக்கொண்டிருக்கிறது.

வெந்து கருகி குவிந்த உடல்களுக்கு மேல் எழுந்து சென்றன தேர்கள். அலைகளிலென தடுமாறின. நிலையழிந்து ஒன்றுடன் ஒன்று முட்டிமோதின. கருகிய கொடிகளைக் கொண்டு எவர் எவரென அறிய இயலவில்லை. ஆணையிடும் கொடிகளும் கருகியணைந்தன. வெடிப்பொலியில் முரசொலிகள் மறைந்தன. ஒளிக்குறிகள் அனுப்ப இயலவில்லை. ஆணையிடும் கைகளை நோக்க இயலாது புகை திரையிட்டது. சகுனியின் ஆணை “எரியெழுகையை ஒழிக… எரியெழும் இடத்தை உய்த்து விலகிக்கொள்க!” என முழங்கிக்கொண்டிருந்தது. அதன் ஊடே புகுந்த வெடிப்போசைகள் அவற்றை சொற்திரிபு செய்தன. “எரிக்கு உணவாகுக! எரியே ஆகுக! எரிக்கு அடிபணிக!” என அச்சொற்கள் முழங்குவதுபோலக் கேட்டு சில படைவீரர்கள் திகைத்தனர். “எரிமலர் சூடுக… எரியால் மூடுக!” என முரசுகள் முழக்கமிட்டன. ஒவ்வொருவரும் அத்தருணத்தில் புகையால் முழுமையாக போர்த்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களின் செவிகள் கூர்கொண்டன. கேட்காமலேயே சொல்லுணரும் திறன் கொண்டன. அந்தப் படை அனைத்துவகை தொடர்புறுத்தல்களையும் இழந்து அகங்களை ஆளும் அச்சம், வெறி எனும் உணர்வுகளாலேயே ஒன்றென நிறுத்தப்பட்டது.

 

சகதேவன் தன் தேரை நோக்கி ஒடுவதைக்கண்ட சல்யர் கைநீட்டி அமரத்திலிருந்து எழுந்து கூச்சலிட்டார் “விடாதே! அவனை கொல்! கொல்! கொல் அவனை!” கர்ணனை நோக்கி முற்றிலும் திரும்பி “என்ன செய்கிறாய்? எங்கே திரும்புகிறாய்? இதுவே தருணம்! கொல்” என்று கூவினார். கர்ணன் இடது பக்கம் தேர் திரும்பும்பொருட்டு கைகாட்டினான். சல்யர் திகைப்புற்று “என்ன செய்கிறாய்? அவன் இக்களத்தில் உன் எதிரி. களத்தில் மறமொன்றே நெறி. அளியும் கொடையும் அங்கு பழி சேர்ப்பது. துறப்பது இளிவரலாவது. அறிவிலி! கொல் அவனை!” என்றார். வாயோரம் நுரையெழ “இப்போதே கொல்… ஓர் அம்பு போதும்… கொல் அவனை!” என்றார்.

கர்ணன் அச்சொற்களை செவிகொள்ளவில்லை. சல்யர் “கொல் அவனை! கொல்! அறிவிலி!” என்று வெறிகொண்டவராக கூவிக்கொண்டிருந்தார். கர்ணனின் கையசைவுக்கு ஏற்ப அவனைச் சூழ்ந்து வந்த படைகள் அவன் ஆணைக்கு கட்டுப்பட்டு அரைவட்டமெனத் திரும்பியமையால் சல்யராலும் தன் தேரை திருப்பாமலிக்க இயலவில்லை. எழுகதிர் வடிவமென அமைந்த சூழ்கை சற்றே வளைந்து பாஞ்சாலர்களின் வில்லவர்ப் பெருக்கை எதிர்கொண்டது. கர்ணன் காலில் கட்டை விரலாலும் நுனி விரலாலும் பற்றிய விஜயத்தின் நுனியை அசைவிலாது தேரில் நிறுத்தி செவி வரை நாணிழுத்து ஒன்றின் சீற்றத்தை ஒன்று ஏற்க, ஒன்றின் காற்றசைவை இன்னொன்று பெற, தன் அம்புகளை தொடுத்தான். அனலேந்திய அம்புகள் சூல்கொண்ட நாகமென பருத்திருந்தன. அவை வில்விட்டு மேலேறுகையில் விம்மலோசை எழுந்தது. அனல்சூல் கொண்ட அம்பு விண்ணில் சீறியதுமே சிறியதோர் அம்பு மேலும் விசையுடன் தொடர்ந்து சென்று அதை அறைந்தது. அனல்கருவைச் சூடிய முதல் அம்பு வெடித்து விழிஇருளச் செய்யும் மின்னொளியை வானில் நிறைத்து வெங்காற்று வளையங்களை உருவாக்கி அனல் அலையலையெனப் பெருகியது. அதிலிருந்து நூற்றுக்கணக்கான அனல்துகள்கள் வீசுவலையென குடைவிரிந்து வளைந்து இறங்கின.

சல்யர் ஒரு கையால் கடிவாளத்தைப் பற்றியபடி திரும்பி நோக்கி பற்களை இறுகக் கடித்து “நீ அவனை தப்பவிட்டாய்… நீ அவனை வேண்டுமென்றே தப்பவிட்டாய்” என்றார். கர்ணன் “ஆம்” என்றான். “அவனுக்கு உயிர் அளிப்பதற்கு நீ யார்? போர்க்களத்தில் உயிர்க்கொடை அளிக்கும் உரிமை அப்போரை அறைகூவி முன்னெடுத்த அரசனுக்கு மட்டுமே உண்டு. பிற எவருக்கும் தங்கள் உயிர்மீதே உரிமை இல்லை என்பதை அறியாதவனா நீ?” என்று சல்யர் கூவினார். “சகதேவன் என் மருகன். என் தங்கையின் வயிற்றில் எழுந்தவன். என் தோள்களில் வளர்ந்தவன். ஆனால் இக்களத்தில் அவனை என் எதிரி என்றே கொள்கிறேன். அவனை கொல்லவேண்டும் என உன்னை தூண்டுகிறேன். ஏனென்றால் நான் போர்நெறிகளை அறிந்தவன். போர்முனையில் தனிநோக்கங்களும் தனிவிழைவுகளும் பழி என அறிந்தவன்.”

பின்னர் அவர் மூச்சிளைப்புடன் தளர்ந்தார். அமரத்தில் அமர்ந்துகொண்டு இரு வளைவாடிகளில் தோன்றி அவனிடம் சொன்னார். “இப்போரில் அவனை நீ கொன்றிருந்தால் பாண்டவர்களின் உளஉறுதி இன்றே அவிந்திருக்கும். இக்கணம் வரை அவர்கள் தளராமல் நின்று பொருதுவதற்கு ஒன்றே அடிப்படை என்று கொள்க! அவர்கள் ஐவரில் எவரும் இன்னும் உயிர் துறக்கவில்லை. அவர்களில் எவர் ஒழிந்தாலும் பிறர் உயிர் வாழ எண்ணமாட்டார்கள் என்பது உறுதி. இன்னும் பிந்தவில்லை, இன்னும் வாய்ப்புள்ளது. செல்க, அவன் தன் தேரில் ஏறிக்கொண்டிருக்கிறான். விழுந்த பிணங்களின் மேல் அவன் தேர் அலைமோதிக்கொண்டிருக்கிறது. அவனை இப்போதுகூட உன்னால் நீளம்பால் அறைய முடியும். எரியம்புகளால் அவனை தொடரமுடியும். சற்று விசை கூடினால் முன் சென்று அவனை மறித்துவிடவும் கூடும்.”

கர்ணன் அவர் சொற்களை கேளாதவன்போல் தன் எதிரில் எழுந்துவந்த படைகளை நோக்கி அம்புகளை செலுத்திக்கொண்டிருந்தான். சல்யர் “என்னை சிறுமைசெய்கிறாய். என் சொற்களை விலக்குகிறாய்!” என்று கூச்சலிட்டுக்கொண்டே முழுப் படையும் செல்லும் திசைக்கே தேரை செலுத்தினார். “இதன்பொருட்டு வருந்துவாய்… அவன் உன்னை பழித்துவிட்டுச் செல்கிறான். அவனை நீ உயிர்தப்பவிட்டாய் என்பதை நீ மட்டுமே அறிவாய்.” கர்ணன் அவருக்கு மறுமொழி சொல்லவில்லை. “வெல்க… இன்று வெல்வதனூடாக நீ இழந்த அனைத்தையும் அடைவாய்! பாரதவர்ஷத்தின் மாமன்னனுக்கு மும்முடி சூட்டியவன் நீ என்றாவாய். குலமும் புகழும் தேடி வரும்… இதுவே இறுதி வெற்றி. இவ்வெற்றிக்கென்றே நீ இதுவரை தோற்றாய்…” கர்ணனை அவருடைய சொற்கள் சென்றடைவதாகத் தெரியவில்லை. இரு தூண்களின் ஆடிவளைவுகளில் மாறிமாறித் தோன்றி அவர் கூவினார். “வெல்க! வெல்க!”

எழுசுடர்ச் சூழ்கையிலிருந்து ஏழு நேர்கதிர்களாக எழுந்த கௌரவ வில்லவர்படை காளையின் உடலை தாக்கியது. அதை ஏழு பிரிவுகளாகப் பிரிந்து ஊடுருவியது. ஏழு நாகங்களாக மாறி பாண்டவப் படையை துண்டுகளாக்கியது. அதன் கிளைகள் விரியும் தோறும் மீண்டும் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ளும் பொருட்டு பாண்டவப் படை பின்நகரலாயிற்று. “அவர்களை பின்னடைய விடலாகாது. பின்னடைந்து ஒருங்கிணைந்தால் மீண்டும் ஒற்றைக்காளை உருவென ஆவார்கள். அவர்களை துண்டுபடுத்தும்பொருட்டு நாம் ஏழு சரடுகளாக மாறியிருக்கிறோம். அவர்கள் பின்னடைந்தால் அவர்கள் ஒன்றாவார்கள். நாம் பல துண்டுகளாக அவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முன்னகர்க! முன்னகர்க!” என்று சல்யர் கூவினார்.

கர்ணனின் அம்புகளுக்கு ஏற்ப, அவன் எண்ணுவதற்கு ஒருகணம் முன்னரே சல்யரின் கடிவாளங்களால் இயக்கப்பட்ட புரவிகள் தேரைத் திருப்பின. “உன்னை எதிர்கொள்ளும் படைகளை முற்றாக அழி. ஒருவர்கூட எஞ்சியிருக்கலாகாது. நமது இரு சரடுகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட படை முற்றழிந்தால் இரு சரடுகளும் ஒன்றிணைந்து மேலும் விசை கொள்ள முடியும்” என்றார். கர்ணன் “ஆம். ஒருவர் கூட எஞ்சமாட்டார்கள். ஐயம் வேண்டாம்” என்றபடி அம்புகளை தொடுத்தான். இரு கதிர்ச்சரடுகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட பாண்டவப் படை நொறுங்கியது. அதன் முகப்புமுனையில் கர்ணனின் எரியம்புகள் அறைந்து அனலெழுப்பின. பின்வாங்க முடியாமல் பின்பக்கம் கௌரவப் படைச் சரடு மறித்தது. அதற்கப்பாலிருந்த பகுதியில் இருந்து சகதேவனும் மறுபக்கம் நகுலனும் அச்சரடுகளை தாக்கினர். அதை உடைத்து இடைவெளியை உருவாக்கி பாண்டவப் படையை பின்னடையச் செய்ய முயன்றனர். கர்ணனின் அனலம்புகளிலிருந்து பாண்டவப் படை பின்னடைந்தது. “அதோ மீண்டும் அவர்கள் வந்திருக்கிறார்கள். இச்சரடுகள் உருவாக்கிய வழியினூடாகச் சென்று அவர்களை கொல். இக்கணமே அவர்களை கொல்” என்று சல்யர் கூவினார். கர்ணன் ஆணையிடுவதற்குள்ளாகவே தன் புரவிகளை சவுக்கால் சொடுக்கி விசைகொள்ளச் செய்தார். “அவர்களில் ஒருவர் இப்போது வீழ்ந்தாலும் வெற்றி தொடங்கிவிட்டதென்றே பொருள். அறிக, அவர்களில் ஒருவராவது வீழ்வதுவரை எவரைக் கொன்றாலும் அவர்கள் தோற்பதில்லை!”

கர்ணனால் கொல்லப்பட்ட உடல்கள் இடைவெளியின்றி விழுந்து பரவி உருவான களவெளியினூடாக சல்யரின் தேர் சென்றது. உளைச்சேற்றில் என சகடங்கள் புதைந்து தேர் அசைந்தாடியது. கர்ணன் இரு கால்களும் தேர்த்தட்டில் உருக்கி ஒட்டப்பட்டவைபோல நின்று உடலில் சற்றும் உலைவில்லாது விஜயத்தை இயக்கி பாண்டவப் படையை அழித்தபடி முன்னால் சென்றான். அனல் நீரென மாறி பெருகி நின்றிருந்தது களத்தில். மழைத்திரையென எழுந்து உலைந்தாடியது. வலுவுடன் வீசி புகைத்திரையை அள்ளி அகற்றிய காற்றுக்குப் பின் ஒருகணம் மிக அருகே நகுலனை கர்ணன் கண்டான். “அதோ! அதோ!” என்று கூவியபடி சல்யர் எழுந்தார். “அதோ அவன்! அவனை கொல்! இக்கணமே கொல்!” என்று வீறிட்டார். புகைத்திரைக்குள் கர்ணனைக் கண்டுவிட்ட நகுலன் தன் படைகள் பின்னடைய சங்கொலி எழுப்பியபடி தான் அம்புகளை ஏவியபடி முன்னெழுந்து வந்தான்.

அர்ஜுனன் நகுலனையும் சகதேவனையும் காக்கும்பொருட்டு சங்கொலியுடன் எழுந்துவர அவனை கிருதவர்மனின் தலைமையிலான கௌரவப் படையின் கதிர் தடுத்தது. அவர்கள் போரில் தொடுத்துக்கொண்டு நிகராற்றலுடன் களம்நின்றனர். மறுமுனையில் நகுலனையும் சகதேவனையும் காக்கும்பொருட்டு பீமன் எழுந்துவர அஸ்வத்தாமனின் படைக்கதிர் அவனை தடுத்தது. இரு சுவர்களால் அவர்கள் பிரிக்கப்பட்டுவிட நகுலனும் சகதேவனும் தங்கள் படையுடன் கர்ணன் முன் நின்றனர். நகுலன் சற்றும் அஞ்சாமல் அம்புகளைத் தொடுத்தபடி அவனை எதிர்கொண்டான். கர்ணனின் எரியம்புகளை விண்ணிலேயே தடுத்து உடைத்து எரிமழையாக வீழ்த்தினான்.

சல்யர் அமரத்தில் இருந்து கொந்தளித்தார். “அனலம்பை எடு! அவனை தேருடன் தூக்கி வீசு! இக்கணமே அவர்களில் ஒருவன் கொல்லப்பட்டாக வேண்டும். அவர்கள் உயிருடன் மீண்டால் உன்னை வென்றுவிட்டதாகவே பொருள்… இருவரையும் கொல். அன்றி ஒருவரையாவது கொல்!” என்று சல்யர் கூச்சலிட்டார். “அவர்களில் ஒருவனைக் கொல்வது இன்னொருவனையும் கொல்வதற்கு நிகர். அவர்கள் ஈருடல்கொண்ட ஒருவர்… கொல்!” கர்ணனின் அம்புகள் சென்று அறைந்து வெடிக்க நிலம் அதிர்ந்தது. நகுலனின் தேருக்கடியில் சென்று வெடித்த அம்பு அவனை தேர்த்தட்டிலிருந்து தூக்கி வீசியது. புரவிகள் உடல் உடைந்து நாற்புறமும் தெறிக்க புழுதி எழுந்து மழையென விழுந்தது. அவன் படைக்களத்தில் தெறித்து விழ அவன் மேல் விண்ணிலிருந்து எரிபற்றிக்கொண்ட தேர்ச் சிம்புகள் விழுந்தன. உடல் முழுக்க செம்புழுதியும் குருதியும் படிந்திருக்க நிலத்தில் புரண்டெழுந்து அவன் சகதேவனை நோக்கி ஓடினான்.

“கொல் அவனை! இக்கணமே கொல்!” என்று சல்யர் கூவினார். ஆனால் தன் படைப்பிரிவை வலப்பக்கம் திரும்புவதற்கு கர்ணன் ஆணையிட்டான். சகதேவன் தன் தேரை முன்னால் கொண்டு வந்து நகுலனை அதில் ஏற்றிக்கொண்டு திரும்பி பின்னடைவதை சல்யர் கண்டார். சவுக்கை ஓங்கி தேர்த்தட்டில் வீசிவிட்டு எழுந்து திரும்பி கர்ணனை நோக்கி “யார் நீ? சொல்! யார் நீ? எதன்பொருட்டு இங்கே வந்தாய்? யாருக்காக போர்புரிகிறாய்?” என தொண்டை புடைக்க கூவினார். “உன்னை தன் உயிர்த்தோழன் என்று எண்ணியிருக்கும் அஸ்தினபுரியின் அரசருக்கு வஞ்சம் செய்கிறாய். இழிமகனே, உன்னை தோள்சேர்த்தணைத்து அவர் விடைகொடுத்து இன்னும் இருநாழிகைகூட ஆகவில்லை. அதற்குள் அவருக்கு இரண்டகம் செய்கிறாய்!” மூச்சிரைக்க அவர் “நீ எண்ணுவதென்ன? போர்புரியாமல் பின்னடைகிறாயா? சொல், தேரைத் திருப்புகிறேன்” என்றார்.

சல்யரை நேருக்குநேர் நோக்கி கர்ணன் “அர்ஜுனனை அன்றி பிறரை நான் கொல்லப்போவதில்லை, மத்ரரே” என்றான். “ஏன்?” என்று சல்யர் கேட்டார். “அவனை அன்றி பிறரை கொல்லமாட்டேன் என உறுதிகொண்டிருக்கிறேன்.” சல்யர் விழிகள் மாற “அவளுக்கு சொல் கொடுத்தாயா?” என்றார். “ஆம்” என்று கர்ணன் சொன்னான். “அறிவிலி! ஆண்மகனா நீ? சூழ்ச்சிக்காரப் பெண்ணொருத்தி வந்து உன் உயிரை உன்னிடமிருந்து பெற்றுச்சென்றிருக்கிறாள். உன் வெற்றியை, பெருமையை அனைத்தையும் பெற்றுச்சென்றிருக்கிறாள். அதைக்கூட உணராதவனா நீ?” கர்ணன் “அது நான் அளித்த சொல்” என்று தணிந்த குரலில் சொன்னான். சல்யர் தலையில் ஓங்கி அறைந்தபடி “அச்சொல் உன்னை கொல்லும். அச்சொல்லால் உன் உயிரை அவள் பெற்றுச்சென்றுவிட்டாள்” என்றார். “அதற்கு அவளுக்கு ஏது உரிமை? உனக்கு அவள் ஒருதுளி முலைப்பாலேனும் அளித்திருக்கிறாளா? சொல்…”

“அவளுடையது என் குருதி” என்று கர்ணன் சொன்னான். “மூடா, நீ இன்னமும் உளம் முதிராதவன். இப்புவியில் நூல்கள் உருவாக்கிய அனைத்துப் பொய்களிலும் பெரிய பொய் தாய்மை. பெண்ணை இல்லம்தேக்கிவைக்க, அவள் மேல் குடியைக் கட்டி எழுப்ப மூத்தோர் அதை சமைத்தனர். சொல்லிச் சொல்லி அதில் பெண்ணை தளையிட்டனர். அத்தளையிலிருந்து விடுபடும் சூழ்ச்சித்திறன் கொண்ட பெண் அது மறுஎல்லைக்குத் திரும்பி ஆண்கள் அனைவரையும் சிறையிடும் ஆற்றல்கொண்டது என உணர்கிறாள். அதை தன் படைக்கலமாகக் கொண்டவள் வெல்லமுடியாதவள்” என்றார் சல்யர். “நீ அறியாத கதையா? இந்தப் போரே சத்யவதி என்னும் அன்னையின் சிறுமையால் எழுந்தது. இவள் கொண்ட பெருஞ்சிறுமையால் வளர்ந்தது… இங்கு பெய்யும் இக்குருதியின் ஒவ்வொரு துளிக்கும் அவளே பொறுப்பு… அவளுக்கு அளித்த சொல் உன்னை கட்டுப்படுத்தாது. நான் சொல்கிறேன், அது உன்னை கட்டுப்படுத்தாது. இதோ நான் என் சொல்லால் அத்தளையை உடைக்கிறேன்.”

“சொல்பிறழ்வது என் வழக்கம் அல்ல” என்று கர்ணன் சொன்னான். “செல்க!” என கைகாட்டினான். “நீ சொல்பிறழ்வதனால் வரும் அனைத்துப் பழியையும் நான் சூடுகிறேன். நீ கொள்ளும் அனைத்துப் பழிகளையும் சூடும் முறைகொண்டவன் நான்…” என்று சல்யர் சொன்னார். அவர் விழிகள் நீரணிந்தன. “அவள் சொல்லவேண்டும். அவள் சொல்லாமல் நான் சொல்ல நெறியில்லை… அவளுக்குக் கட்டுண்டிருக்கின்றன தெய்வங்களும்” என்றபோது அவர் குரல் உடைந்தது. “வேண்டாம். செல்க, முன்னெழுந்து செல்க! உன் வில்திறனால் பாண்டவர் ஐவரையும் வெல்க… ஒருவரை கொன்றால் நால்வரும் அடிபணிவார்கள்… நான் சொல்வதை கேள். ஐயம்கொள்ளாதே.”

கர்ணன் “மத்ரரே, என் ஆற்றலால் இப்போரை நான் வெல்ல இயலும்” என்றான். சல்யர் சீற்றம்கொண்டு கூச்சலிட்டார் “இந்தப் போரை நீ வெல்ல இயலாது. அறிவிலி, இந்தப் போரில் நாம் வெல்ல முடியாது. ஏனென்றால் இது ஏற்கெனவே தோற்றுவிட்டது. தொடங்குவதற்கு முன்னரே தோற்றுவிட்ட போர் இது. இதை அறியாத ஒருவரும் இப்படையில் இல்லை. என்று மறுபுறம் துவாரகையின் யாதவன் தேர்த்தட்டில் அமர்ந்தானோ அப்போதே நாம் தோற்றுவிட்டோம். முற்றழிவை நோக்கி ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருக்கிறோம். அவன் முடிவெடுத்துவிட்டான், நம்மை அழிப்பது என்று. உருளும் மலைப்பாறைக்குக் கீழே ஒரு கல் என ஒன்றை வைக்கச் சொல்கிறேன். இப்போரை இன்று நிறுத்திவிட்டால்கூட நீ உயிருடன் மீளமுடியும். நான் எண்ணுவது அதை மட்டுமே. அவர்களில் ஒருவரை கொல். பாண்டவர் உளம்தளர்ந்து யாதவனிடம் சென்று போரை நிறுத்தும்படி கோருவார்கள். நம்முன் இருக்கும் வழி இது ஒன்றே.”

கர்ணன் “என் வில்மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. என் ஆசிரியரின் சொல் உடன் உள்ளது. நான் இக்களத்தை வெல்வேன். யுதிஷ்டிரனை வென்று அஸ்தினபுரியின் முடியை என் தோழனுக்கு அளிப்பேன்… உயிருடனிருந்து அதை நோக்குக!” என்றான். சல்யர் சலிப்புடன் “நீ இங்கு இயற்றுவது என்னவென்று அறிவாயா? இது கொடையல்ல, வெற்று ஆணவம். இந்த ஆணவம் உன்னுள் இருக்கும் தாழ்வுணர்விலிருந்து எழுவது. அனைத்து ஆணவங்களுக்கும் அடியிலிருப்பது தற்சிறுமையே. உன்னை இங்கு நிறுவிக்கொள்ள முயல்கிறாய். கொடையாளன் என்றும், வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டவன் என்றும் உன்னைப்பற்றி சூதர்கள் பாடவேண்டும் என்று விரும்புகிறாய். ஆகவேதான் வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளையும் நீயே தவிர்க்கிறாய்” என்று சல்யர் சொன்னார். “வீரர்களில் ஒருசிலரை கவ்விக்கொள்ளும் மாயை இது. வெற்றியைவிட தோல்வியே பெரும்புகழ்சேர்ப்பது என அவர்கள் எண்ணத்தலைப்படுவார்கள். துயரப்பாடல்களைப் பாடும் சூதர்களின் நாவில் அவலநாயகனாக என்றென்றும் வாழலாமென எண்ணமுயல்வார்கள்…”

கர்ணன் பற்களைக் கடித்து “போதும், இங்கே சொல்லாட நான் வரவில்லை” என்றான். “நான் சொல்லியாகவேண்டும். நோய்கொண்டவர்களிடம் இறப்பை நோக்கிய விழைவை உருவாக்குகிறது ஒரு தெய்வம். பொருதுபவர்களிடம் தோல்வியை நோக்கிய ஈர்ப்பை வளர்க்கிறது. ஆழங்களை எட்டிப்பார்ப்பவர்களிடம் பாய்ந்துவிடு எனச் சொல்கிறது. அதன் பெயர் விஷாதை. அது வியாமோகை என்னும் பிறிதொரு தோற்றம் கொண்டு அணுகுகிறது… அந்தத் தெய்வம் இப்புவியில் இதுவரை பல்லாயிரம் ஆடல்களை நிகழ்த்தியிருக்கிறது. களத்தில் வீரன் இறுதியாக வெல்லவேண்டியது அதையே. அதை வெல்க… இந்த உளமயக்கு உனக்கு பேரழிவை அளிப்பது. இதை வெல்க!” என்றார் சல்யர். அப்பால் அர்ஜுனனின் நாணொலியை கர்ணன் கேட்டான். “செல்க… செல்க… அவனை நான் எதிர்கொள்ளவேண்டும்” என்று கூவினான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 48

படைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த எச்சரிக்கையை பயிற்றுநர்கள் அளித்திருந்தார்கள். சொல்லிச்சொல்லி விழிகளில் அந்தக் கூர்வு எப்போதுமே இருந்தது. காட்டுமரங்களுக்கு அப்பால் செவ்வானத்தை கண்டால்கூட உள்ளம் பற்றிக்கொள்ளும் அளவுக்கு. ஒருகணத்திற்குப்பின் அகம் அமைந்தபோதும் அது எரி என்றே தோன்றியது. நாணிழுத்து அம்புகளைத் தொடுத்தபடியே அவன் மீண்டும் நோக்கியபோது எரிமுகில் ஒரு முகம் சூடியிருப்பதுபோலத் தோன்றியது.

மழை முற்றாக நின்றுவிட்டிருந்தது. மேலும் மேலும் களத்தில் ஒளி பெருகி நிறைந்தது. புழுதியை மென்மழை முற்றாக அகற்றி விட்டிருந்தமையால் ஒவ்வொன்றும் மும்முறை கழுவப்பட்டவை என துலங்கின. யானைகள் மின்னும் கருமை கொண்டிருந்தன. கொடிகள் புதியவை என படபடத்தன. வண்ணங்கள் மேலும் துலங்க வடிவங்கள் மேலும் அண்மை கொள்ள படைக்கலங்கள் அனைத்தும் கண்களை மின்னிச்சுழன்றன. “முன்னேறுக! முன்னேறுக! வெல்க! வென்று மேலும் செல்க!” என்று முரசு ஆணையிட்டுக்கொண்டிருந்தது. மழை நின்றபின் ஒலிகளும் கழுவப்பட்டு தெளிவுகொண்டிருந்தன. ஒவ்வொரு வாளுரசல்களும் நாண்முறுகல்களும் வில்நெரிவுகளும் அம்புத்தொடுகைகளும் தனித்தனியாக செவியில் விழுந்தன.

கர்ணனின் கையசைவுகளுக்கு ஏற்ப அவனைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த ஆணை முரசர்கள் ஓசையிட அதற்கேற்ப அவனை பின்தொடர்ந்து சென்ற படைகள் களத்தில் இயங்கின. சூரிய வியூகத்தின் மையத்தில் எரியும் நீல வட்டமென கர்ணன் விளங்கினான். சூழ்ந்து சென்ற படைவீரர்கள் கதிர்களைப்போல் அரைவட்டமாக விரிந்து அவனை பாதுகாத்து சென்றனர். கர்ணன் கை நீட்டி அர்ஜுனனை நோக்கி செல்ல ஆணையிடுவதை விருஷசேனன் கண்டான். அவன் எண்ணியதைவிட விரைவில் அர்ஜுனனும் கர்ணனும் அம்புகளால் சந்தித்துக்கொண்டார்கள். சென்ற முறை எங்கு நிறுத்தினார்களோ அங்கிருந்து போரை அவர்கள் தொடங்குவதுபோல் தோன்றியது.

திவிபதன் மறுபுறத்திலிருந்து கையை அசைத்து “நான் இளைய பாண்டவர்களில் ஒருவனை இன்று கொல்வேன்!” என்றான். விருஷசேனன் “நமது பணி இன்று தந்தையின் புறம் காப்பது மட்டுமே” என்று கூறினான். திவிபதன் “இந்தப்போரில் எனக்கென வெற்றி ஒன்றாவது வேண்டும், மூத்தவரே” என்றான். கர்ணனின் விசை கௌரவப்படையில் எதிரொலித்தது. படையினர் கூச்சலிட்டபடி திரண்டுசென்று தாக்கினர். அம்புகள் எழுந்தமைவதிலேயே படைகளின் ஊக்கம் தென்படும் என்பதை விருஷசேனன் கண்டிருந்தான். ஊக்கம் கொண்ட படையின் அம்புகள் நெடுந்தொலைவு மேலெழுந்து வளையும். அவை சீரான பேரலைகள் என தெரியும். ஊக்கமிழந்த படையிலிருந்து எழும் அம்புகள் சிதறுண்ட சிறிய கொப்பளிப்புகளெனத் தெரியும்.

பாண்டவப்படை காளை வடிவில் அணிவகுத்திருந்தது. காளையின் இரு கொம்புகளாக பீமனும் அர்ஜுனனும் திகழ்ந்தனர். விருஷசேனன் படைமுகப்பில் அர்ஜுனன் இடியென முழங்கும் அம்புகளால் கௌரவப்படையை அறைந்து பின்னடையச் செய்வதை பார்த்தான் அவனுடைய அம்புகள் கண்ணைப்பறிக்கும் மஞ்சள் ஒளியுடன் வெடித்தெழுந்து, ஓசையுடன் நிலத்தை அறைந்து, அனல் வளையங்களை எழுப்பின. மும்முறை வெடித்து தீப்பொறிகளை சீறவைத்து அமைந்தன. அவை விழுந்த ஒவ்வோரிடத்திலும் பூத்த மலர்க்கொன்றை ஒன்று முளைத்து சில கணங்களில் விண்ணில் திகழ்ந்து மறைவதுபோல் தோன்றியது. முதற்கணத்திலேயே தன்னிலிருக்கும் ஆற்றல்மிக்க அம்புகளை எடுக்கிறார். எனில் அஞ்சியிருக்கிறாரா? அல்லது, பாண்டவப்படைகள் அஞ்சியிருக்கின்றன, அவ்வச்சத்தை போக்க எண்ணுகிறார்.

கர்ணனைச் சூழ்ந்து வந்து விழுந்து வெடித்து தேர்வில்லவர்களை சிதறடித்தன அர்ஜுனனின் எரியம்புகள். கர்ணனை நேருக்குநேர் அம்புகளால் தாக்க இயலாது என அறிந்திருந்தமையால் அவ்வாறு செய்கிறார். கர்ணனை அவன் பின்னணிப் படையிலிருந்து தனித்து பிரித்துக்கொண்டு போவதே அர்ஜுனனின் நோக்கம் என்று தெரிந்தது. கர்ணன் மையப்படையிலிருந்து விடுபட்டு பாண்டவப் படைகளுக்குள் சென்றுவிட்டால் காளையின் இரு கால்களென சற்று அப்பால் நின்றிருக்கும் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் முன்னெழுந்து அவனை வளைத்துக்கொள்வார்கள். காளையின் கொம்புகளெனத் திகழும் அர்ஜுனனும் பீமனும் இருபுறமும் போரிட சாத்யகியாலும் திருஷ்டத்யும்னனாலும் வளைக்கப்படுகையில் கர்ணன் முற்றிலும் செயலிழந்து சிக்கிக்கொள்ளக்கூடும்.

ஆனால் அத்தகைய கணக்குகளின் பொருளின்மை என்ன என்பதை விருஷசேனன் ஒவ்வொரு முறையும் களத்தில் பார்த்தான். சிலந்தி வலைகள் சிறுபூச்சிகளுக்குரியவை. வண்டுகள் வலையில் சிக்குகையில் சிலந்தியே அவற்றை அறுத்து விடுவிக்கின்றது. அத்தகைய சூழ்கைகளின் பயன் ஒன்றே, நம்பிப்போரிட ஒரு முறைமை அமைகிறது. வல்லவர்கள் சூழ்கைகளை முறிக்கவும் கடக்கவும் கற்றிருப்பார்கள். அம்முறை பாண்டவர்கள் ஐவருமே கர்ணனை மிகவும் அஞ்சிக்கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் முகங்களிலிருந்து காண முடிந்தது. அவர்கள் அனைவருமே அவன் மேல் உச்சநிலை வஞ்சமும் சினமும் கொண்டிருந்தார்கள். நேற்றிரவு அவர்களில் எவரும் துயின்றிருக்க வாய்ப்பில்லை. களத்தில் அவர்களை இறப்புக்கு நிகரான ஆணவ அழிப்புக்கு கொண்டு சென்றிருந்தார் தந்தை. அவர்கள் இன்று வெறிகொண்ட இருள்தெய்வங்களென உருமாறியிருக்கிறார்கள்.

ஆணவம் புண்படுகையில் மானுடரில் நிகழ்வது விழிச்சாவு. அதன்பின் முன்னர் இருந்த விழிகள் அவர்களுக்கு அமைவதே இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அந்த ஆணவ முறிவை மிக ஆழத்தில், மிக தனிமையில் அடைந்திருப்பார்கள். ஆணவம் அழிந்த நிலையில் தென்படும் உண்மைகள் எப்பொழுதும் கசப்பானவை, அவை அவர்களுக்கே தெரியாமல் ஆழத்தில் மறைந்திருக்கையில் மட்டுமே வாழ்க்கை இயல்பாக முன்செல்ல இயலும். ஆணவமென்பது அதன் பொருட்டே உருவாகிறது, அது ஒரு பெருந்திரை. புண்ணுக்குமேல் தோல் தடித்து காய்ப்பு கொள்வது போல். அதை இழந்தவர்கள் ஒவ்வொரு கல்லிலும் முள்ளிலும் உரசிப் புண்பட்டு தவிக்கிறார்கள்.

அவர்களது விழிகளின் வெறிப்பு அவன் உள்ளத்தை இளகச்செய்தது. அர்ஜுனன் “சூதன் மகனே, இன்று இக்களத்திலிருந்து நீ செல்ல மாட்டாய். இல்லையேல் நான் செல்லமாட்டேன். அவ்வஞ்ச்சினத்துடன்தான் வில்லெடுத்து வந்தேன்!” என்று கூவினான். கர்ணன் புன்னகையுடன் “இக்களத்திலிருந்து வெற்றியுடன் மீள்வேன் என்று நான் அறிவேன்” என்றான். “விண்ணிலிருந்து நம் தந்தையர் இறங்கி வந்து நோக்கட்டும் இந்தப் போரை. இது என்றுமென நிகழும் போர். எவர் வென்றாலும் இங்கு இது முடியப்போவதில்லை” என்று அர்ஜுனன் அறைகூவினான். போர்வஞ்சினங்களையும் அறைகூவல்களையும் ஏன் அத்தனை உரக்க கூச்சலிடுகிறார்கள்? அவை அவர்களுக்கே சொல்லிக்கொள்பவை. அவர்களின் ஆழம் அவர்களின் நாவிலிருந்து அத்தனை தொலைவிலா உள்ளது?

அர்ஜுனனின் எரியம்புகளை கர்ணன் விண்ணிலேயே தடுத்தான். காற்றிலேயே வெடித்து அனல் மழையென அவை படைகள் மீதிறங்கின. யானைகளின் கவசங்கள் மேல் வெடித்து சிறு சுடர்கள் என துள்ளி எரிமலர்களென பொழிந்தன. கர்ணனின் அம்புகள் இடியோசையுடன் எழுந்த விசையிலேயே ஒன்று நான்கு எட்டு பதினாறெனப் பெருகி பாண்டவப்படைகளின் மேல் விழுந்தன. விழுந்த இடங்களில் நிலம் வெடித்ததுபோல் படைவீரர்களும் புரவிகளும் உடல் சிதறித் தெறித்தனர். யானைகளும் தேர்களும்கூட உடைந்து சிதறின. கர்ணனின் அம்புகளை இளைய யாதவர் திறமையுடன் தேர் திருப்பி தவிர்த்தார். அர்ஜுனனின் அம்புகள் அதற்கிணையான தேர் நுட்பத்துடன் சல்யரால் தவிர்க்கப்பட்டன.

அந்தப்போர் எரியுமிழும் அரிய அம்புகளால் ஆனதென்பதனால் தேர்வலர்களின் கைத்திறமையாலேயே நிகழ்த்தப்படுவதாக இருந்தது. அவற்றில் ஒரு அம்பு ஒருவர் மேல் விழுந்தால்கூட அக்கணமே போர் நின்றுவிடும். ஒவ்வொருவரும் அதை மயிரிழை இடையில் தவிர்த்துக்கொண்டிருந்தனர். மிகச்சிறிய இடைவெளிகளுக்குள் சல்யர் தேரை கொண்டு சென்றார். அவருடைய புரவிகள் மண்ணில் கால் தொடுவன போலவே தோன்றவில்லை. தேர் ஒற்றைச்சகடத்தில் விழுந்துவிடுவதுபோல் சரிந்து இரு யானைகளுக்கு நடுவே சென்று அப்பால் சென்று நிலை கொள்ளமுடியுமென்பதை, யானை திரும்பும் இடம்கூட இல்லாத இடத்தில் ஏழு புரவிகளும் குளம்படி மாற்ற தேர் நேர் எதிர் திசைக்கு திரும்பி வட்டமிட்டு அகலமுடியுமென்பதை, விழுந்து கிடந்த யானைகளின் மேல் தேர் ஏறிச்சென்று அப்பால் சென்று இறங்க முடியுமென்பதை, சீறி எழும் அம்பொன்றுக்கு தன்னை ஒழிந்துகொள்ளும்பொருட்டு அனைத்துப் புரவிகளும் ஒருகணத்தில் கால் மடித்து நிலத்தில் அமைய தேர் முற்றாகவே சரிந்து நிலம் தொட்டு அதன் சகடங்கள் காற்றில் சுழல சற்று நேரம் சென்று புரவிகள் எழுந்து பாய்ந்து செல்ல அவ்விசையில் மீண்டும் எழ முடியுமென்பதை அதற்கு முன் விருஷசேனன் எண்ணி நோக்கியதே இல்லை. இளைய யாதவரே அவ்வப்போது சல்யரின் தேர்த்திறன் நோக்கி உளம் மலைத்தவர் போலிருந்தார்.

புகையடங்கி காட்சிகள் தெளிந்து மீண்டும் புகையெழும் இடைவெளியில் அர்ஜுனனைச் சூழ்ந்திருந்த பாஞ்சாலப் படை வீரர்கள் களமெங்கும் சிறு துண்டுகளாகி தெறித்திருந்தனர். அர்ஜுனன் தன் படைத்திரளிலிருந்து தனித்து கர்ணன் முன் தோன்றாமலிருக்கும் பொருட்டு அம்புகளால் அறைந்தபடி மேலும் மேலும் பின்னடைந்துகொண்டிருந்தான். அவனை தனித்து விடக்கூடாதென்பதற்காக பின்னிருந்து ஆணைகள் எழ இருபுறத்திலிருந்தும் பாஞ்சாலப் படைகள் தொடர்ந்து வந்து இறந்தவர்களின் இடைவெளிகளை நிரப்பின.

கர்ணன் அனலம்பால் அர்ஜுனனை அறைந்தான். அவன் வில்லே அனல்கொடியாலானதுபோல் தோன்றியது. விண்ணில் துடிக்கும் மின்கதிர்போல் தேரில் நின்றதிர்ந்தது. அதிலிருந்து எழுந்த ஒவ்வொரு அம்பும் எழுகையிலேயே பற்றிக்கொண்டது. அனல் பெருகி முழங்கியபடி சென்று பாண்டவப்படைகள் மேல் விழுந்தது. மேலும் மேலும் அர்ஜுனனை பின்னடையச்செய்து கர்ணனின் தாக்குதல்களிலிருந்து அவனை காத்தார் இளைய யாதவர். “சூழ்ந்துகொள்க! இளைய பாண்டவரை சூழ்ந்துகொள்க! இடைவெளி விடாதொழிக!” என்று பாண்டவப்படைகளின் பின்னாலிருந்து திருஷ்டத்யும்னின் எச்சரிக்கை வந்துகொண்டே இருந்தது.

என்ன நிகழ்கிறதென்று நோக்க இயலாதபடி புகையும் தூசும் நிறைத்திருந்தன களத்தை. அம்புகள் சென்றறைந்த மண்ணிலிருந்து செம்புழுதி குமிழியெனக் கிளம்பி, இதழ்களென மலர்ந்து, நிலத்திலமைந்தது. புகை எழுந்து வானில் கரைந்து சாம்பல் நிற நீர்போல் பரவி களத்தை மூடியது. அதற்குள் எரியம்புகள் சென்னிற மலர்வுகள் என எழுந்தெழுந்து அமைந்தன. உடல் உருகி விழுந்தவர்களின் அலறல்கள் சூழ்ந்தன. உடைந்து சிதறிய தேர்களில் மரத்தூண்களும் பீடங்களும் பற்றிக்கொண்டு எழுந்த தழல்களும், அலறி நிலையழிந்து சுழன்று விழுந்த யானைகளின் முழக்கங்களும் செவிகளையும் விழிகளையும் நிறைத்திருந்தன.

அர்ஜுனனின் இரு மைந்தர்களும் ஒருகணம்கூட பின்னடையாது தந்தையைக்காத்து பொருதி நின்றிருந்தனர். இருபுறத்திலிருந்தும் வில்லவர்களை இருகைகளென ஆக்கி கர்ணனின் பின்னணிப் படையை உடைக்க திருஷ்டத்யும்னன் முயன்றான். வலப்பக்கமிருந்தும் இடப்பக்கமிருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்த எரியம்புகளை விருஷசேனனும் திவிபதனும் பிற மைந்தர்களும் தடுத்தனர். சுருதகீர்த்தியின் அம்புகள் விசைமிகுந்து வந்து வலப்பக்கம் தாக்க விருஷசேனன் அவனை நோக்கி திரும்பி தாக்கினான். அவன் அம்புகளை தடுக்கமுடியாமல் சுருதகீர்த்தி பின்னடைந்தான்.

கர்ணனின் அம்புகளில் எழுந்த அனலை விருஷசேனன் வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். அதற்குமுன் எங்கும் அத்தகைய பேரனலை பார்க்க நேர்ந்ததில்லை. ஒருகணத்தில் காட்டெரி எழுந்து முழுப்படையையும் சூழ்ந்துகொண்டது போலிருந்தது. எரி வானை முழுமையாக நிரப்பி கூரைபோல மூடியது. எரிக்குள் இருந்து எரி எழுந்தது. எரி முகில்கள்போல குமிழ்த்தது, கரும்புகை போல இருண்டது. உடனே அதை ஏந்தியபடி செம்முகில் என அடுத்த அனல் வெடிப்பு எழுந்தது. செந்தழலுக்குள் மலைவெள்ளப்பெருக்கில் சருகுகள் தெரிவதுபோல மானுட உருவங்கள் தோன்றித்தோன்றி மறைந்தன. யானைகளும் தேர்களும் தெரிந்தன. வானிலிருந்து உடற்துண்டுகளும் சிதைந்த தேர்ச்சிம்புகளும் பொழிந்தன. தன்னருகே வந்து விழுந்த ஒரு பித்தளைத் தேர்மகுடம் உருகி உருவழிந்திருப்பதை விருஷசேனன் கண்டான்.

எரியெழுந்த போர் அங்கே துரோணரின் வஞ்சம்கொண்ட அம்புகளில் இருந்தே தோன்றியது. முதல்நாள் அந்த எரியம்புகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். எரி எவ்வாறு எழுகிறது என ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டார்கள். “எரி அல்ல அது. நம் உளமயக்கே” என்றார் ஒருவர். “நம்மை அந்த அம்புகள் கனவுக்குள் நிறுத்திவிடுகின்றன. அக்கனவில் நாம் கதைகளை நேரில் காண்கிறோம்.” இன்னொருவர் “களமெங்கும் வெந்து கிடக்கும் உடல்களும் கனவா என்ன?” என்றார். “கனவுகளில் இருந்து நாம் விடுபடுவது எளிதல்ல” என்றார் முதலில் சொன்னவர்.

படுகளத்தில் படைவீரர்களின் உடல்கள் வெந்து தசையுருகி, எலும்புகள் வெளித்தெரிய கிடப்பதை விருஷசேனன் பார்த்தான். பற்கள் வெறித்து அவற்றில் பல முகங்கள் இளிப்பு கொண்டிருந்தன. பொசுங்கும் தசையின் குமட்டும் கெடுமணம். உயிர் எஞ்சியவர்கள் உரிந்து கழன்றுகிடந்த தோலுடன் பொசுங்கிய மயிர்களுடன் கதறிக்கொண்டிருந்தனர். “கொல்க! என்னைக் கொல்க! மூத்தவரே, மைந்தரே, என்னைக் கொல்க…” என்று மன்றாடினர். “நீர்! நீர்!” என நா நீட்டி கதறினர். நாவுகள் வெந்து வாயை நிறைத்திருந்தன.

அந்தக்களத்தில் நீரெனக் கிடைத்தது புரவிகளின் குருதி மட்டுமே. எரியும் உடல்களுக்குமேல் குருதியையும் கொழுநிணத்தையும் அள்ளிச் சொரிந்தனர். குருதிச்சேற்றில் கிடந்து வெந்த உடல்கள் புளைந்தன. கவசங்கள் உருகி வளைந்திருந்தன. ஆடைகள் பொசுங்கி அகல பெரும்பாலானவர்கள் வெற்றுடலுடன் கிடந்தனர். ஓரு முதிய வீரர் “இது போரல்ல… போரின் எந்நெறியும் இதை ஒப்புவதில்லை” என்று கூவினார். “போரே ஒரு மாபெரும் நெறியழிவு” என்று எவரோ சொன்னார்கள்.

அத்தனை பெரிய அனல் எங்குள்ளது? எதில் அது பற்றி எரிகிறது? “அனைத்திலும் அனல் உள்ளது. அனலம்பு காற்றில் ஒளிந்திருக்கும் அனலை எழுப்புகிறது. நீரிலும் பனிக்கட்டியிலும் குளிர்பாறையிலும்கூட அனலை எழுப்ப இயலும்” என்றார் ஒரு முதிய வீரர். “அனல் எழக்காத்திருக்கிறது… இந்த மானுட உடல்களைப் பொசுக்கிய அனல் எங்கிருந்து எழுகிறது? இது இவ்வுடல்களுக்குள்ளேயே உள்ளது. உடலுக்குள் நீராலும் அன்னத்தாலும் அது நிகர்செய்யப்பட்டுள்ளது. வெளியே இருந்து வந்து தொடும் அனல் உள்ளிருக்கும் நிகர்நிலையை அழிக்கிறது. கட்டுண்ட அனல்கள் எல்லைகடந்து எழுகின்றன.”

அவன் எரிந்த உடல்களை பார்த்துக்கொண்டிருக்கையில் தெற்குக்காட்டின் சிதைகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தான். முதலிருநாட்கள்தான் அங்கே சிதைகூட்ட விறகுகள் தேவைப்பட்டன. எரி நிலைகொண்ட பின்னர் உடல்களே உடல்களுக்கு விறகாயின. உடலில் இருக்கும் நெய் முதலில் எரிகிறது. வெம்மை தசைகளையும் நெய்யாக்குகிறது. உடல்கள் தங்களைத் தாங்களே கொளுத்திக்கொண்டன. தங்களைத்தாங்களே எரித்தழித்து சாம்பலாயின.

“அங்கே சிதையில் எரியும் அனல் கிரவ்யாதன். அதுவே வைஸ்வாநரன் என்ற பேரில் மானுட உடல்களில் எரிகிறது. வயிற்றில் அது பசி. நாவில் அது ருசி. எண்ணத்தில் அது விழைவு. தசைகளில் அது ஆற்றல். குருதியில் வெம்மை” என்றார் முதியசூதர். “அன்னத்தை உண்டு அன்னம் வாழ்கிறது. அன்னத்தை முற்றெரிக்கும் அனலே அன்னம் என்று நூல்கள் சொல்கின்றன. வேட்டை விலங்கின் சினமே அதன் வயிற்றின் அமிலம். இங்கு எரிவதும் அந்த எரிதான் எனக்கொள்க!”

அனலம்புகளைத் தொடுக்க முதல் அனல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்தாகவேண்டும் என்றார் முதிய வில்வீரரான சுவீர்யர். “அகத்தில் இல்லாத அம்பு எதையும் கைகளில் எடுக்க இயலாது. துரோணரில் எழுந்தது புல்லின் தழல். அங்கரில் எழுவது புரவிச்சவுக்கின் சீற்றம். ஆனால் அர்ஜுனனில் எழுவது சொல்லின் அனல். சொல்லனல் கூரியது, ஆனால் வஞ்சத்தின் சீற்றத்தின் அனல்போல மூண்டெழுவது அல்ல. முற்றழிப்பதும் அல்ல.”

மீண்டும் விழிதூக்கி மேலே பார்த்தான். அந்த முகம் அசைவிலாது கீழே நோக்கி நின்றிருந்தது. ஆனால் ஊழ்கத்திலென கனவுநிறைந்த அமைதி அதில் தெரிந்தது. தேர் வட்டமாக சுற்றிச் செல்ல நோக்குகோணம் மாறியபோது அது பூத்த கொன்றை என உருமாறியது. யார்? வேதச் சொல்லில் எழும் ஜாதவேதனா? அன்னத்தை அனலாக்கி வானாக்கி இன்மையாக்கி பிரம்மத்திடம் கொண்டுசேர்க்கும் தூதனா? இன்று ஏன் வானை அடிக்கடி நோக்கிக்கொண்டிருக்கிறேன்? முன்பெப்போதும் இப்படி வானை நோக்கியதில்லை. களத்தில் வானை நோக்குதல் பிழை என்பார்கள். போருக்குரியவை மண்ணாழத்திலிருந்து காட்டின் இருளில் இருந்து எழுந்துவரும் கொடுந்தெய்வங்கள். மேலே நோக்குபவன் விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் தேவர்களின் விழிகளை சந்திக்கநேரும். அக்கணமே அனைத்தும் பொருளின்மை கொள்ளும். புண்பட்டுவிழுந்தவர்கள் விண்நோக்குவார்கள் எனப்படுவதுண்டு. விண்ணில் தேவர்களும் மூதாதையரும் நிரந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். ஆனால் நான் இன்னமும் புண்படவில்லை.

அம்புகளில் இருந்து அனல் தெறித்து எழுந்தது. பல்லாயிரம் நாக்குகள் என்றாகியது. பெருகிப்பெருகி எழும் கைகள் என்றாகியது. அள்ளி அணைத்து இறுக்கியது. பற்றி நிறுத்தி பொசுக்கியது. நக்கி உண்டது. அறைந்து சிதறடித்தது. மேலும் மேலும் உடல்கள் சிதறிவிழ இளைய யாதவர் அர்ஜுனனின் தேரை பின்னுக்கிழுத்து அம்புகளின் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்றார். கர்ணன் அர்ஜுனனை துரத்திச்செல்ல அவர்கள் நடுவே எழுந்த எரிபரப்பும் தரையை நிரப்பியிருந்த உடல்களும் உடைவுகளும் அரண் என்றாயின. தேர்த்தட்டில் அர்ஜுனன் தளர்ந்து அமர்வதை புகையலைவின் இடைவெளியினூடாக ஒருகணக் காட்சிமின்னல் என காணமுடிந்தது.

கர்ணன் கைகாட்ட சல்யர் தேரை பின்னுக்கிழுத்தார். அவருடைய புரவிகள் முன்னால் செல்லும் அதே விசையில் பின்னடி எடுத்து வைத்தன. அவர் அதே விரைவில் தேரை பின்னெடுக்க விருஷசேனனும் தம்பியரும் தங்கள் தேர்களை பின்னால் கொண்டுசென்றார்கள். கௌரவப்படையும் உடன் சேர்ந்து விலக எதிர்பாராத வெறியுடன் சகதேவன் அம்புகளைத் தொடுத்தபடி முன்னோக்கி வந்து அந்த இடைவெளியில் புகுந்துகொண்டான். “சூதன் மகனே, கொல் என்னை… உன் அம்புகளுக்கு ஆற்றலிருந்தால் என்னை கொல்!” என்று கூவினான். “என் மூத்தவர்களை நீ சிறுமைசெய்தாய். நான் வீணே நோக்கி நின்றேன் என்னும் பழி அகலட்டும்… கொல் என்னை ! கீழ்பிறப்பே கொல் என்னை!”

கர்ணனின் அம்புகள் அவனை எதிர்கொண்டன. சகதேவனின் இருபுறமும் எரியம்புகள் சென்று அறைந்து அனற்புழுதி கிளப்பின. ஆனால் அவன் இறப்பதற்கென்று முடிவெடுத்து அங்கே வந்ததுபோல் தோன்றினான். அது ஒரு கண எழுச்சி என விருஷசேனன் உணர்ந்தான். முந்தைய நாள் யுதிஷ்டிரனும் பீமனும் களத்தில் சிறுமைசெய்யப்பட்டதை அவர் வெவ்வேறு சொற்களினூடாக கடந்துசென்றிருப்பார். நேற்று அவையில் உணர்வெழுச்சிகள் வெளிப்பட்டிருக்கலாம். பழிச்சொற்கள் எழுந்திருக்கலாம். அனைத்தையும் மேலும் மேலும் எடைமிக்க சொற்களைக் கொண்டு மூடியிருக்கலாம். ஒரு தருணத்தில் அந்த விசை தடைகளை உடைத்து எழுந்துவிட்டிருக்கிறது.

கர்ணன் சகதேவனை தொடர்ச்சியாக அம்புகளால் அறைந்தாலும் அவற்றை எல்லாம் விண்ணிலேயே தடுத்து பொறிமழையென உதிரச்செய்ய சகதேவனால் இயன்றது. அவன் வெறியாலேயே ஆற்றல் கொண்டுவிட்டிருந்தான். அவன் புலன்கள் ஒவ்வொன்றும் பலமடங்கு கூர்கொண்டன. கர்ணனின் அம்புகள் அவனை தொடவில்லை. ஆனால் அந்த விசை சற்றுநேரமே நீடிக்கும் என அனைவரும் அறிந்திருந்தனர். அதை உணர்ந்தவன்போல சுருதகீர்த்தியும் சுருதசேனனும் இருபக்கங்களிலும் இருந்து அம்புகளைச் செலுத்தியபடி அணுகினர்.

கர்ணன் அக்கணத்தில் சற்றே திரும்பி அகல, இடைவெளியில் விசையுடன் முன்னெழுந்த சுருதகீர்த்தி மிகவும் நெருங்கி வந்துவிட்டான். தன் ஆவநாழியிலிருந்து எரியம்பு ஒன்றை எடுத்தகணம் மிக அருகே சுருதகீர்த்தியை விருஷசேனன் பார்த்தான். அவனுடைய எரியம்பின் மிக அணுக்கவளையத்திற்குள். ஊதியே அவனை சாம்பலாக்கிவிடக்கூடும் என்பதைப்போல். ஒருகணம் அவன் உள்ளம் வெறிகொண்டு எழுந்தது. “மூத்தவரே, கொல்லுங்கள் அவனை! கொல்லுங்கள்!” என திவிபதன் கூச்சலிட்டான். அதே தருணம் அப்பால் சகதேவனின் தேரை தன் எரியம்பால் அடித்து இருபுறமும் பிளந்துவிழச்செய்தான் கர்ணன். தேரிலிருந்து பாய்ந்திறங்கி நின்ற சகதேவன் வெறும் கைகளுடன் திகைத்து விழிகள் வெறிக்க நின்றான். கர்ணன் அவனை நோக்காதவன்போல திரும்பிக்கொண்டான்.

சுருதகீர்த்தியை நோக்காதவன்போல விருஷசேனன் திரும்பிக்கொண்டான். “மூத்தவரே…” என்று கூவிய திவிபதன் விருஷசேனனின் விழிகளைக் கண்டு சொல் அமைந்தான். நாணொலி எழுப்பியபடி முன்னால் சென்ற கர்ணனை அம்புகளால் வேலியிட்டபடி விருஷசேனன் தொடர்ந்தான். வில்தாழ்த்தி தேர்த்தட்டில் நின்றிருந்த சுருதகீர்த்தியை பாகன் பின்னால் கொண்டு செல்ல அப்பால் சகதேவன் தளர்ந்த நடையுடன் பாண்டவப்படை நோக்கி சென்று அங்கு வந்த தேர் ஒன்றில் தொற்றி ஏறிக்கொண்டான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 47

சல்யர் தன்னை மிகையாக காட்டிக்கொள்வதை விருஷசேனன் நோக்கினான். கைகளை வீசி உரத்த குரலில் “யாரங்கே? பின்சகடத்தின் ஆரத்தை இன்னொருமுறை பார்க்கச் சொன்னேனே? அடேய் சம்புகா, நான் வந்தேனென்றால் குதிரைச்சவுக்கு உனக்காகத்தான்” என்று கூவினார். “அறிவிலிகள், பிறவியிலேயே மூடர்கள்” என்று முனகியபடி திரும்பி வந்து ஒவ்வொரு புரவியின் வாயாக பிடித்து பிளந்து நாக்கை பார்த்தார். அவற்றின் கழுத்தை தட்டியபடி “புரவிகள் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று மலைமது வரட்டும்” என்றார். அதைக் கேட்டு இரு ஏவலர் விரைந்ததைக் கண்டபின்னரும் “அடேய்! மலைமது என்று சொன்னேன். எங்கு பார்க்கிறாய்? விழிக்கிறான். உன்னையெல்லாம் படைக்குக் கொண்டுவந்தவன் எவன்?” என்றார்.

அந்தத் தருணத்தில் சல்யரின் கூச்சலும் வசைகளும் ஒவ்வாமையை உருவாக்கின. அவன் பார்வை சென்று தைக்க அவர் விருஷசேனனைப் பார்த்து, “என்ன செய்கிறாய்? உனது புரவிகளை பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை” என்று அவன் சொன்னான். “எங்கு போர்க்கலை கற்றாய் நீ? வில்லவன் தேரிலேறுவதற்கு முன் தன் தேரில் கட்டப்பட்டிருக்கும் புரவிகளை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். அவற்றுடன் பேச வேண்டும். அவை அவனை புரிந்துகொள்ள வேண்டும். யாருக்காக போர் புரியவேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை அவற்றுக்கு உண்டு. உனக்கும் புரவிக்குமிடையே ஒரு உரையாடல் நடந்தாலொழிய தேரில் நின்றிருக்கும் உன்னை அவை அறியப்போவதில்லை. அவை எண்ணப்போவதென்ன என்று உனக்கும் தெரியாது” என்றார்.

விருஷசேனன் முதல் கணம் தன்னுள்ளிருந்து எரிச்சல் பொங்கி வருவதை உணர்ந்தான். ஆனால் ஒரு சொல்லும் பேசாமல் தலை திருப்பிகொண்டு புரவிகளை அணுகி அவற்றின் கழுத்தையும் காதுகளையும் தொட்டு மெல்ல இழுத்தான். தந்தை எப்போதுமே சல்யரிடம் புரிந்துகொள்ள இயலாத பணிவு ஒன்றை கொண்டிருப்பதை அவன் அறிந்திருந்தான். அவருடைய அந்தச் சிறுமைகளை அவர் விரும்புவதுபோலக்கூடத் தோன்றும். மீண்டும் திரும்பியபோது சல்யர் என்ன செய்வதென்றறியாமல் சகடத்தின் பட்டையை கைகளால் நீவிப்பார்ப்பதை கண்டான். ஒருகணத்தில் அவனுக்கு அவருடைய உளநிலை புரிந்து புன்னகை வந்தது. அவர் தன் வாழ்வின் உச்சதருணமொன்றில் இருக்கிறார். உச்ச தருணங்களில் இளிவரல் கூத்தர்போல் நடிக்கத் தொடங்கிவிடுபவர்களே மிகுதி. அப்போது என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எவருக்கும் தெரிவதில்லை. அவர்கள் செய்வதெல்லாமே எண்ணிச்செய்பவை. செயற்கையாக இயற்றப்படும் அனைத்துமே ஒவ்வாமையை உருவாக்குகின்றன. மிகையாக, பொருத்தமற்றவையாக, பிழையானவையாக ஆகிவிடுகின்றன.

அத்தருணத்தில் தானும் அவ்வாறு மிகையாக நடந்துகொள்ளக்கூடுமோ என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவன் உள்ளம் முற்றாக சொல்லணைந்து படிந்துகிடந்தது. ஒரு வகையிலும் எழுச்சி கொள்ளவில்லை என்பதை நோக்கும்தோறும் உணர்ந்தான். என்ன ஆயிற்று எனக்கு? முதல் நாள் தந்தையுடன் போருக்கு வந்தபோதிருந்த கொந்தளிப்பில் துளிகூட இப்போதில்லை. தந்தையுடன் போருக்கு வந்தபோது அன்றே போர் முடியுமென்று அவன் நம்பினான். தந்தையின் அம்புகளுக்கு நிகராக எவரும் நின்றிருக்க இயலாது. அவரை வென்று கடந்து செல்வதென்பது பரசுராமர் ஒருவருக்கே இயல்வது. ஒருவேளை மறுபுறம் தேரோட்டி அமர்ந்திருக்கும் இளைய யாதவர் எண்ணினால் அவருக்கு நிகர் நிற்க இயல்வதாகும். வெல்லவும் கூடும். அவரோ படைக்கலம் எடுப்பதில்லை என நோன்பு கொண்டிருக்கிறார்.

ஆனால் களத்தில் ஒவ்வொன்றும் அவன் எண்ணியதற்கு மாறாகவே நிகழ்ந்தது. ஒவ்வொரு நிகழ்வும் வேறெங்கோ எவரோ முன்னரே முடிவு செய்து தன் வழியினூடாக கொண்டு செலுத்தி அமைப்பது போல் தோன்றியது. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உருவாகும் வெறுமையை, சலிப்பை, அதிலிருந்து உந்தி உந்தி நம்பிக்கையை மீட்டுக்கொள்ளும் தவிப்பை உணர்ந்த பின்னர் போர்க்களத்திற்கு எழுகையில் அவன் எந்த நம்பிக்கையையும் பேணிக்கொள்ளவில்லை. முதல்நாள் போரிலிருந்து மீள்கையில் அவன் ஏழுமுறை தேர் ஏறிச்சென்ற நாகம்போல மண்ணோடு மண்ணாக வெறும் தோல்சக்கைபோல தான் மாறிவிட்டிருப்பதாக உணர்ந்தான். இளையோரின் முகங்களை நோக்கிய பின்னர்தான் தன் கடனை உணர்ந்து “இன்று நாம் அவர்களை பெரும்பாலும் அழித்துள்ளோம். நாளை முழுவெற்றி, ஐயம் வேண்டாம்” என்றான்.

மறுநாள் “இன்று நாம் பாண்டவ மணிமுடியை வெல்வோம். தந்தை அதை அரசரின் தலையில் சூட்டுவார்” என்று தம்பியரிடம் சொன்னான். அவர்கள் அச்சொற்கள் முறைமைக்கென உரைக்கப்படுவன என அறிந்திருந்தார்கள். ஆயினும் அவர்களை அவை ஊக்கமூட்டி எழச்செய்தன. ஆனால் இருநாட்களில் அவன் அந்தச் சொற்களையும் இழந்தான். அடுத்தநாள் காலை களமெழுகையில் அவன் “இன்று களம் புகுகிறேன், இன்று என் உயிர் எஞ்சும் வரை தந்தையை காத்து நிற்பேன். இதற்கப்பால் எனக்கென்று இலக்குகளில்லை. இன்றுக்கு அப்பால் எனக்கு திட்டங்களுமில்லை” என்று திவிபதனிடம் சொன்னான். “நமது பணி அதுவே. இது ஒன்றே நம்மை காக்கும். இங்கு முரண்படும் அறங்கள் போரிடுகின்றன. நம்முடையதல்லா அரசுகள் முட்டிக்கொள்கின்றன. வெல்பவர்களும் வீழ்பவர்களும் நமக்கொரு பொருட்டு அல்ல. இந்த ஆடலில் நாம் இல்லை.”

திவிபதன் “அவ்வாறு நம்மை விலக்கிக்கொள்ள முடியுமா என்ன?” என்றான். “முடியும். ஆகவேதான் இதை சொல்கிறேன். இச்சொற்களை மீள மீள நமக்கே சொல்லிக்கொள்க! நம்மிடம் நாமே சொல்வதனைத்தையும் நாம் ஏற்று அறியாமலே அடிபணிகிறோம் என்பதை சொல்லிப்பார்ப்பவர்கள் உணர்வார்கள்” என்றான். திவிபதன் “ஆம் செய்து பார்க்கிறேன்” என்றபின் “இப்போர் என்னுடையதல்ல. இதன் வெற்றி தோல்விகள் எனக்கொரு பொருட்டல்ல. எந்தையைக் காத்து நிற்பதென்பதே எனது பணி” என்றான். பின்னர் “மூத்தவரே. இதை நாம் கிளம்பும்போது கூட்டு உறுதிப்பாடென சொல்லிக்கொண்டால் என்ன?” என்றான்.

விருஷசேனன் அவ்வெண்ணத்தை உடனே பெற்றுக்கொண்டு “ஆம், நன்று. அதை நாம் செய்வோம்” என்றான். படைகள கிளம்புவதற்கு முன்பு வாளை உருவி நீட்டி அவன் அவ்வரிகளை சொன்னான். இளையோர் அனைவரும் தங்கள் வாள்களை உருவி நீட்டி அவ்வரிகளை ஏற்றுச் சொன்னார்கள். வாளுடன் சொல்லப்படும் வரி வாளே நாவென்றாக எழுவது. வாளென உடனிருப்பது. வாள் போல் கூர்மை கொண்டு படைக்கலமாவது. பின்னர் நிகழ்ந்த போர்களில் அவ்வுறுதிப்பாடு அவர்களை காத்தது. அவர்கள் எதற்கும் தயங்க வேண்டாம் எனும் நிலை ஏற்பட்டது. திரும்பி வருகையில் தங்கள் குருதிச் சுற்றத்தின் இழப்பை அன்றி எதைப் பற்றியும் அவர்கள் எண்ணிக்கொள்ளவில்லை. அவ்விழப்புகளைக்கூட அந்தியின் கூடுகையில் ஓரிரு சொற்களினூடாக கடந்து சென்றார்கள்.

அன்று காலை தன் குடிலுக்கு இளையோர் வந்தபோது விருஷசேனன் கவசங்கள் அணிந்துகொண்டிருந்தான். திவிபதன் அவனிடம் வந்து தலைவணங்கி நின்றான். பிற இளையோருக்காக விருஷசேனன் விழி தூக்கினான். அவர்கள் ஒவ்வொருவராக புரவியில் வந்து அருகே நின்றனர். “கிளம்புவோம்” என்றபடி அவன் எழுந்தான். அவன் இடைக்கச்சையை ஏவலன் இறுக்கிக்கட்டினான். தன் உடைவாளை கையிலெடுத்தபின் அவன் அவர்கள் விழிகளை பார்த்தான். பின்னர் “இன்று அவ்வுறுதிமொழியை நாம் எடுக்கவேண்டியதில்லை” என்றான். “ஏன்?” என்று திவிபதன் கேட்டான். “தேவையில்லை என்று தோன்றுகிறது. அச்சொல் நம் உளம்சென்று அமைந்துவிட்டது” என்றபின் செல்வோம் என கைகாட்டி அவன் தன் தேரை நோக்கி சென்றான்.

தேரின் அருகில் சென்றதும் ஏன் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவில்லை என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அன்று காலை முதல் நெடுநேரம் அவன் உள்ளம் முற்றாக ஓய்ந்துகிடந்தது. துயிலெழுந்து நெடுநேரம் இருளை வெறித்துக்கொண்டிருந்தான். புலரியில் துயில் விழிப்பில் எந்த முகமும் நினைவிலெழவில்லை. முந்தைய நாள் துயிலில் எஞ்சிய எண்ணம் எழுந்து தொடர்வதும் நிகழவில்லை. வெளியிலிருக்கும் இருளே உள்ளும் நிறைந்திருந்தது. அப்போது அறிந்த பொருளின்மையை அவன் முன்பு எப்போதும் அறிந்ததில்லை. அப்பொருளின்மை அந்தக் காலையை நிறைத்திருந்தது. தெளிநீர்ப்பரப்பில் மலர் என அக்காலை அவ்வெறுமை மேலேயே விடிந்தது.

மிக அரிதாக ஏதோ ஒரு பொருளின்மையில் சென்று அவன் உளம் தொடுவதுண்டு. அது இப்புவியிலுள்ள எந்த நிகழ்வுகளுடனும் தொடர்புகள் அற்றது. கற்றோ எண்ணிச்சூழ்ந்தோ அடைவதல்ல. புரிந்துகொள்ள முடியாத ஒரு பொருள் விண்ணிலிருந்து விழுந்து முன் கிடப்பது போல் புலரி முதல் விழிப்பில் வந்து உள்ளம் நிறைப்பது. அகம் ஏங்கி விழிநீர் வடித்துக்கொண்டிருப்பான். கண்ணீர் காது மடல்களை நோக்கி வழியும். அதிலிருந்து அறுத்துக்கொண்டு எழுந்து முகம் துடைத்து கைகளை நீட்டி சோம்பல் முறிக்கையில் அவ்வெறுமை மெல்லிய தித்திப்பு கொண்டிருக்கும். இரும்பை மெல்ல நாவால் நக்கிக்கொண்டதுபோல பொருளற்ற தித்திப்பு.

ஆனால் அன்று அறிந்த வெறுமை விழிநீருக்கும் இடமற்றதாக இருந்தது. நீர்த்துளியை இழுத்து இன்மையென்றாக்கும் வான் பெருவெளி போல். ஏவலன் வந்து கதவு மடலை மெல்ல தட்டி ஓசையெழுப்பாவிடில் அவன் அந்த முடிவிலியில் சென்று மறைந்திருக்கவும் கூடும். அந்த வெறுமை அவனை அன்று சொல்லற்றவனாக்கியது. நாவால் சொற்களை உரைப்பதுகூட அகத்துடன் தொடர்பற்று வேறெங்கோ நிகழ்வதுபோல் தோன்றியது. அவ்வுறுதிமொழி உரைக்கப்பட்டால் அது நெடுந்தொலைவில் எங்கோ கேட்கும். அவ்வளவு தொலைவுக்கு அதை விலக்கிவிட்டால் ஒருவேளை அதன் மீதிருக்கும் நம்பிக்கையை அவன் இழக்கவும் கூடும்.

சல்யர் கர்ணனிடம் “பொழுதாகிறது. தாங்கள் தேரில் ஏறிக்கொள்ளும் நேரம் இது. படைகள் முகம் திரண்டுவிட்டன. நமது தேர் சென்று முன்னில் நிற்கையில்தான் அவர்கள் தலைமையை விழிகளால் காண்பார்கள். போருக்கு அது இன்றியமையாதது” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் கிழக்கு நோக்கி நிலம் தொட்டுத் தொழுது சென்னி சூடி வணங்கி தன் தேர் நோக்கி சென்றான். விருஷசேனன் சற்று அப்பால் சகட ஓசை எழுவதைக்கேட்டு திரும்பிப்பார்த்து துரியோதனனின் தேர் அணுகுவதை கண்டான். திரும்பி தந்தையிடம் “பேரரசர்!” என்றான். கர்ணன் திரும்பி நின்று துரியோதனனின் விரைவுத்தேர் சகடப்பாதையினூடாக விசையுடன் ஒலித்தபடி அணுகுவதை பார்த்தான். தேர் நின்றதும் அங்கு நின்றிருந்த படைவீரர்கள் “பேரரசர் வெல்க! அமுதகலக்கொடி வெல்க! கௌரவ குலம் வெல்க! அஸ்தினபுரி வெல்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர்.

தேருக்குள்ளிருந்து துரியோதனன் இறங்கி அவர்கள் அனைவரையும் நோக்கி வணங்கிவிட்டு கர்ணனை நோக்கி வந்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது. விழிகள் சிறுவவர்களுடையவைபோல் ஒளிகொண்டிருந்தன. நேராக வந்து இருகைகளையும் விரித்தபடி ஒருசொல்லும் இன்றி கர்ணனின் தோள்களைப்பற்றி தன் நெஞ்சோடணைத்து தழுவிக்கொண்டான். கர்ணனும் தன் நீண்ட பெருங்கைகளால் அவன் உடலை தழுவினான். இருவரும் மிக அரிதாகவே அவ்வாறு தழுவிக்கொள்வார்கள் என்பதை விருஷசேனன் அறிவான். அவர்கள் தொடும்போதுகூட ஒரு ஒவ்வாமை இருப்பதுபோல் தோன்றும். தழுவிக்கொள்கையில் இரு வேழங்கள் கொம்புகளை மெல்ல உரசிக்கொண்டு விலகுவதுபோல் இருக்கும். தொடுவதில் அவர்களுக்கு தயக்கம் இருந்தது. என்றாவது நெஞ்சோடு நெஞ்சு இறுகத் தழுவிக்கொள்வார்களா என்று அவன் எண்ணியதுகூட உண்டு.

அத்தருணத்தில் அவர்களின் உடல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்துவிட்டதுபோல் தோன்றினார்கள். சூழ்ந்திருந்த படைப்பெருக்கை, திகைப்புடனும், மகிழ்வுடனும் சற்றே விலக்கத்துடனும் அவர்களை நோக்கிநின்ற பல நூறு விழிகளை, அத்தருணத்தில் எழவிருக்கும் போரை முற்றாக மறந்ததுபோல் தெரிந்தார்கள். விருஷசேனன் அவர்களின் தழுவல் நீண்டு செல்வதைக்கண்டு பொறுமையிழந்தான். அவர்களை எவ்வண்ணம் விலக்குவது என தயங்கினான். விலக்கியாகவேண்டும் என்று தோன்றியது. உச்சநிலைகளில் ஏன் அவற்றிலிருந்து விலகிவிடவேண்டும் என்ற தவிப்பு ஏற்படுகிறது? போதும் போதும் என ஏன் உள்ளம் தவிக்கிறது? ஏன் அஞ்சுகிறது? மானுட அகம் அன்றாடங்களில்தான் இயல்புநிலை கொள்ளக்கூடியதா என்ன? தன் உச்சநிலையில் காலம் மறந்துவிடக்கூடும். பிறர் கொள்ளும் உச்சநிலைகளில் காலம் இழுபட்டு நீண்டு விடுகிறது. சூழ்ந்திருப்பவர்களால் அங்கே நிற்கவே முடிவதில்லை. அங்கிருந்த அனைவரும் அப்படித்தான் தவித்துக்கொண்டிருந்தனர் என விழிகள் காட்டின.

தன்னிலை உணர்ந்து அவர்கள் ஒருவரிலிருந்து ஒருவர் விலகி, ஆடைகளையும் அணிகளையும் சீரமைத்தபடி, உடல்கள் நிறைவுடனும் பிரிவால் உணர்ந்த தனிமையுடனும் ததும்ப, சற்றே அகன்று, அல்லது அகல்வெனக் காட்டும் ஓர் அசைவை எழுப்பி, அருகிருப்பவர்களிடம் ஏதேனும் பொருளற்ற சொற்களைச் சொல்லி, ஏதேனும் ஆணைகளை இட்டு, அல்லது ஏதேனும் சிறு செயலினூடாக நிலை மீள்வார்கள் என்று அவன் எண்ணினான். அந்நிகழ்வை அவன் உள்ளத்தால் கண்டுவிட்டிருந்தமையால் அவர்களின் அத்தழுவல் நீண்டு நீண்டு நெடும்பொழுதாக சென்றுகொண்டிருப்பதுபோல் தோன்றியது. மேலும் மேலும் பொழுதாகிக் கொண்டிருந்தது. அவன் பெருமூச்சு எழ அதை நெஞ்சுக்குள் அடக்கினான்.

சல்யர் உரத்த குரலில் “பொழுதாகிறது! போர்முரசுகள் எக்கணமும் ஒலிக்கும். விண் வெளுக்கலாயிற்று” என்றார். விருஷசேனன் அவர் முகத்தை பார்த்தபோது அது சிவந்து, கண்கள் கலங்கி, கழுத்து நரம்புகள் இழுபட்டு, உச்சகட்ட சினத்துடன் தெரிவதை கண்டான். அவன் பார்ப்பதை அவருடைய விழிகள் வந்து சந்தித்ததும் நாணுவதற்கு மாறாக மேலும் அவர் சினம் கொண்டார். “நமது உணர்வுகளைக் காட்டும் இடமல்ல இது. ஆற்றலும் நம்பிக்கையும் வெளிப்பட்டாகவேண்டிய இடம்” என்று கூவினார். அத்தருணத்தின் அனைத்து உணர்வுகளையும் வாள் என வெட்டியது அவர் குரல்.

துரியோதனன் கர்ணனை தன் அணைப்பிலிருந்து விடுவித்து பின்னகர்ந்து தன் மேலாடையை சீரமைத்து திரும்பி விருஷசேனனிடம் “பார்த்துக்கொள்” என்றான். கர்ணன் விலகி தன் ஆடையை சீரமைத்து குழல்கற்றைகளை அள்ளி பின்னால் தள்ளி சல்யரிடம் “மெய்தான், மத்ரரே” என்றான். சல்யர் மேலும் சினம் கொண்டு “இப்போது எதற்காக இங்கு அரசர் வரவேண்டும்? இங்கிருந்த உணர்வுகள் அனைத்தையும் கீழிறக்கிவிட்டார். இன்றுடன் இப்போர் முடியவேண்டும். வில் விஜயனையும் அவன் உடன் பிறந்தோரையும் கொன்று மீளும் நாள் இது. அனல்தொட்டு வஞ்சினம் உரைத்து நீஙகள் வில்லெடுக்க வேண்டிய பொழுது இது” என்றார்.

துரியோதனன் “பொறுத்தருள்க மத்ரரே, நான் முழு நம்பிக்கையோடும் உவகை நிறைந்த உள்ளத்தோடும்தான் இங்கு வந்தேன்” என்றான். “இதற்கு முன் அங்கர் போருக்குச் செல்லும் நாளிலெல்லாம் வந்து தழுவிக்கொண்டிருக்கிறீர்களா என்ன?” என்றார் சல்யர். சல்யரின் உடல் முழுக்க இருந்த நடுக்கம் அவருடைய கழுத்தின் தசையில் அதிர்ந்துகொண்டிருந்தது. பேசும் போதே பற்களை இறுகக் கடித்திருந்ததும் விருஷசேனனுக்கும் இளையோருக்கும் விந்தையாக இருந்தது. அவர்கள் விழிளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டனர்.

துரியோதனன் சிறுவன் என விழிதாழ்த்தி “ இல்லை. ஆனால் இன்று புலரியில் நான் ஒரு கனவு கண்டேன். அது என்னை மீட்டது. நான் என் அரண்மனை அறைக்குள் நோயுற்று படுத்திருக்கிறேன். மிக இளமைந்தனாக இருக்கிறேன். இரவெல்லாம் என் அரண்மனை வாயிலுக்கு வெளியே அங்கர் எனக்காக காத்திருக்கிறார். அங்கரும் மிக இளமைந்தர். பின்னர் அங்கர் வந்து என் மஞ்சத்தறை கதவை தட்டினார். அந்த ஓசையைக் கேட்டு அக்கணமே என்னிலிருந்த அனைத்து வலிகளும் அகன்றன. நோய் நீங்கி பாய்ந்தெழுந்து கதவை நான் திறந்தேன். இருவரும் ஆரத்தழுவிக்கொண்டோம். இறுக முயங்கி நெடுநேரம் நின்றோம்” என்றான். அவன் முகம் நாணத்தால் சிவந்து அகல்கொண்டதுபோல் ஆகியது.

“பின்னர் கைகளைக் கோத்தபடி பாய்ந்து ஓடினோம். அது ஒரு அணிச்சோலை. பொற்கொன்றை மரங்கள் பூத்து நின்றிருந்தன. பொன்னிற ஒளி கொண்டிருந்தது அக்காற்று. பொன்மலர்களை அள்ளி விரித்த தரையில் நாங்கள் ஓடிச்சென்று ஒளிததும்பி பெருகி ஒழுகிக்கொண்டிருந்த ஆற்றில் குதித்தோம். கூச்சலிட்டு நீரை அள்ளி வீசி சிரித்து களியாடிக்கொண்டிருக்கையில் நான் விழித்துக்கொண்டேன். என் உள்ளம் மலர்ந்திருந்தது. முந்தைய நாள்வரை என்னைத் தொடர்ந்த எந்நினைவும் எத்துயரும் ஒரு துளியும் எஞ்சவில்லை. இந்தக்காலை இப்போது தொடங்கியதுபோலிருந்தது. இப்போது என்னிடமிருக்கும் நம்பிக்கையும் ஆற்றலும் அக்கனவிலிருந்து வந்தது. என் படைமுகத்துக்குச் செல்லும்போது கனவில் நான் அங்கரை தழுவிக்கொண்டதை நினைவு கூர்ந்தேன். ஆகவேதான் வந்து தழுவிக்கொள்ளவேண்டுமென்று தோன்றியது.”

சல்யர் “படைமுகப்பில் இவ்வாறு உணர்வுகளைக் காட்டுவதற்கு வேறு பொருள்கள் உண்டு” என்று தணிந்த குரலில் சொன்னார். “ஏதேதோ எண்ணிக்கொள்வார்கள் படைவீரர்கள். அறிக, தலைவர்களையும் அரசர்களையும் ஒவ்வொரு படைவீரனும் நோக்கிக்கொண்டிருக்கிறான். அவர்கள் உடலில் ஒரு தசை தளர்வதையும், ஓர் எண்ணம் அவர்களில் எழுந்தமைவதையும்கூட முழுப்படையும் அறியும்.” தலைதாழ்த்தி “ஆம்” என்றபின் துரியோதனன் திரும்பி கர்ணனிடம் “படைமுகம் கொள்க, அங்கரே! வெற்றியுடன் மீள்க!” என்றான். கர்ணன் “நன்று! படைமுகம் கொள்ளவிருந்தேன. நீங்கள் வந்தது மேலும் ஊக்கமளிக்கிறது” என்றபின் தலைவணங்கி தன் வில்லுக்காக கை நீட்டினான். அப்பால் நின்றிருந்த இரு ஏவலர்கள் விஜயத்தை கொண்டு வந்து அவன் கையில் அளித்தனர். அதை வாங்கிக்கொண்டு நடந்து தேரில் ஏறினான்.

தேரில் ஏறுகையில் படிகளில் கால் வைக்காது தட்டிலேயே நீண்டகாலை வைத்து ஏறிக்கொள்வது கர்ணனின் வழக்கம். அது நிலத்திலிருந்து ஒருகணத்தில் அவன் மேலெழுந்து தோன்றுவதுபோல் விழிமயக்களிக்கும். துரியோதனன் புன்னகையுடன் கர்ணன் தேரிலேறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். சல்யர் விருஷசேனனிடம் “பிறகென்ன? நீங்களும் தேரில் ஏறிக்கொள்ள வேண்டியதுதானே?” என்றபின் துரியோதனனை நோக்கி தலைவணங்கினார். துரியோதனன் “நன்று மத்ரரே, வெற்றியுடன் அந்தியில் பார்ப்போம்” என்றபின் தலைவணங்கி திரும்பிச்சென்று தன் தேரில் ஏறிக்கொண்டான்.

மத்ரர் அலுப்புடன் தலையசைத்து “நாடகங்கள்! எல்லோருக்குமே நாடகங்கள் பிடித்திருக்கின்றன” என்று பற்களைக் கடித்தபடி தலையசைத்து தனக்குத்தானே என சொன்னார். பின்னர் திரும்பி அப்பால் நின்ற சூதர்களிடம் “அங்கு என்ன செய்கிறீர்கள்? அறிவிலிகளே, விலகிச்செல்லுங்கள். தேர் கிளம்பவிருக்கிறதல்லவா?” என்று கூவினார். அவர்கள் தலைவணங்கி திரும்பிச் சென்றனர். புரவிகளை மீண்டும் தொட்டுத் தடவி செவி பற்றி இழுத்து ஓரிரு இன்சொற்கள் கூறிய பின்னர் கையூன்றி அமரத்தில் அமர்ந்து கடிவாளக் கற்றையை தன் கையிலெடுத்துக்கொண்டு சாய்ந்தமர்ந்தார் சல்யர்.

விருஷசேனன் தன் தேரிலேறி நின்றான். திவிபதனும் இளையவர்களும் தேரிலேறிக்கொண்டார்கள். அங்கிருந்து நோக்கியபோது கௌரவப்படை முற்றிலும் ஒருங்கமைந்துவிட்டிருப்பதை காண முடிந்தது. சகுனியின் முரசு பின்பக்கம் தணிந்த குரலில் “ஒருங்கிணைக! அணிமுழுமை கொள்க! ஒருங்கிணைக!” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்தது. விருஷசேனன் பாண்டவத் தரப்பை பார்த்தான். இருபுறமும் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் பின்துணையென அமைய அர்ஜுனன் தேரில் நின்றிருந்தான். காற்று நின்றுவிட்டிருந்தமையால் குரங்குக்கொடி தளர்ந்துகிடந்தது. காண்டீபத்தை ஊன்றி வானத்தொலைவை நோக்குவதுபோல் விழிதூக்கி அசைவிலாது நின்றிருந்தான் அர்ஜுனன். அவன் தேரிலும் அசைவில்லை. புரவிகள்கூட அசைவிழந்தது செவிகளைக்கூட திருப்பாமல் நின்றிருப்பதுபோல் தோன்றின.

தேர்முகப்பில் தலையில் சூடிய மயிலிறகு விழிகொண்டிருக்க கால்களை மடித்து அமர்ந்து கைகளை மடியில் தளரவைத்து அரைவிழி மூடி ஊழ்கத்திலென இளைய யாதவர் இருந்தார்.

பாண்டவப்படையின் வலப்புறம் சாத்யகியும் இடப்புறம் திருஷ்டத்யும்னனும் அணிவகுத்திருந்தனர். வடக்கு எல்லையில் சுதசோமனும் சர்வதனும் இருபுறமும் துணையிருக்க பீமன் நின்றிருந்தான். இடது எல்லையில் நகுலனும் சகதேவனும் துணை நிற்க யுதிஷ்டிரன் படைமுகம் வந்திருந்தார்.  அவர்களின் முகங்களும் மண்பாவை என உறைந்த உணர்வுகளுடன் இருந்தன. பிற அனைத்தையும்விட அப்போது அவர்களை ஆள்வது துயிலே எனத் தோன்றியது. அவர்கள் நற்துயில்கொண்டு பதினேழு நாட்களாகிவிட்டிருந்தன. அமைதியான பொழுதில் குளிர் என துயில்வந்து உள்ளங்களை கவ்வி மூடியது. உளைசேற்றில் என எண்ணங்கள் சிக்கி அசைவிழந்தன.

படைகள் எழுபொழுதிற்காக காத்திருந்தன. ஒவ்வொரு படைவீரனும் முன்னும் பின்னுமின்றி அத்தருணத்தில் மட்டும் உளம் நட்டு நின்றிருக்கும் பொழுது. முன்னோர்களும் தெய்வங்களும் அவனை சூழ்ந்திருக்கவேண்டிய தருணம். தன் உளம் ஏன் அவ்வாறு முற்றிலும் ஓய்ந்துகிடக்கிறதென்று விருஷசேனன் வியந்தான். அதை எவ்வுணர்வால் எச்சொற்களால் உந்தி முன் செலுத்துவது? வானம் நன்கு வெளுத்துவிட்டிருந்தது. முகில் நிரைகள் வடமேற்கே மிக அப்பால் விலகிச்சென்றுவிட்டிருந்தன. தென்கிழக்கில் புதிய முகில்கள் எழுந்து வரவுமில்லை. கதிரொளி எத்தருணத்திலும் எழக்கூடும். எக்கணமும் முரசொலி எழும். இத்தனை ஆயிரம்பேரும் துயிலில் இருந்து விழித்தெழுவார்கள். அனைவருமே குறுங்கனவுகளுக்குள் இருப்பார்கள். அவை தனிக்கனவுகள். இந்த மாபெரும் பொதுக்கனவுக்குள் விழித்தெழுவார்கள்.

தன் புரவி தலை திருப்பி செருக்கடித்த கணத்தில் விருஷசேனனின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. துரியோதனன் சொன்ன சொல் என்ன? தன்னிடம் அவர் என்ன சொன்னார்? அச்சொல்லுக்காக அவன் உள்ளம் தவித்து அலைந்தது. என்ன சொன்னார்? என்ன சொன்னார்? பல்வேறு நினைவுமூலைகளில் முட்டிமோதியபின் அதை அவன் கண்டுகொண்டான். அவன் உள்ளம் அனைத்து விசைகளையும் இழந்து நிலைத்தது. பின்னர் எங்கிருந்தோ என விசை எழுந்து அவன் தோள்கள் இறுகின. கண்கள் அனல் கொள்ளும் அளவுக்கு உள்ளம் பொங்கி எழுந்தது.

அத்தருணத்தில் போர் முரசு முழங்கியது. “வெற்றிவேல்! வீரவேல்!” எனக்கூவியபடி கௌரவப்படை எழுந்து பாண்டவப்படையை தாக்கலாயிற்று. கர்ணன் ஒளி சுடர எழுந்து பாண்டவப்படையை நோக்கி அம்புகளைச் செலுத்தியபடி சென்றான். “வெற்றிவேல்! வீரவேல்!” என்று தன் அகமே பல்லாயிரம் நாவென்று மாறி அப்படைக்களத்தில் ஒலித்துக்கொண்டிருப்பதாக விருஷசேனன் உணர்ந்தான்.

நூல் இருபத்தொன்று – இருட்கனி – 46

மென்மழை நின்றுகொண்டிருந்த குருக்ஷேத்ரக் களத்தில் கௌரவப்படைகள் அணிவகுத்து சூழ்கை அமைத்தன. படைக்கலங்களும் தேர்களின் உலோகமுகடுகளும் ஒளியென்றும் மெல்லிருளென்றும் மாறி மாறி விழிமாயம் காட்டிய நீர்த்திரைக்குள் மின்னி திரும்பின. புரவிகளின் குளம்படி ஓசைகளும் சகட ஒலிகளும் ஆணைகளின் பொருட்டு எழுந்த கொம்பொலிகளும் சங்கொலிகளும் நீர்த்திரையால் மூடப்பட்டு மழுங்கி கேட்டன. கூரையிடப்பட்ட காவல்மாடங்களில் எழுந்த முரசொலிகள் இடியோசைகளுடன் கலந்து ஒலித்தன.

முரசுத்தோற்பரப்பு சாரல் ஈரத்தில் மென்மை கொள்ளாதிருக்கும்பொருட்டு காவல் மாடத்தில் அனல்சட்டிகளை கொளுத்தி தோலை காய்ச்சிக்கொண்டிருந்தார்கள். மழைக்குள் நூற்றுக்கணக்கான காவல் மாடங்களில் எரிந்த பந்தங்களின் ஒளி எரிவிண்மீன் நிரைகள் எனத் தெரிந்தது. அனலொளி மழைச்சாரலில் குருதிபோல் கரைந்து பரவுவதுபோலத் தோன்றியது. படைகள் இடம்மாறிக்கொண்டிருக்கையில் நின்றுகொண்டிருப்பன போன்றும் சென்றுகொண்டிருப்பன போன்றும் விழிமயக்கு ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கட்டற்ற முட்டிமோதலாகவும் ஒவ்வொன்றும் சென்றமைகையில் முன்னரே வகுக்கப்பட்ட வடிவம் என்றும் தன்னை காட்டியது படை. பெருந்திரள் வடிவம் கொள்கையிலேயே அது இயற்கை என்று ஆகி இயற்கையின் இயங்குமுறையையே தானும் கொண்டுவிட்டிருந்தது.

விருஷசேனன் தன் புரவியிலிருந்து இறங்கி கர்ணனின் குடில் வாயிலில் காத்து நின்றான். மழையின் ஈரத்தில் தரையில் காலடித்தடங்கள் நீர்ச்சுவடுகளாக மாறி ஒளிகொண்டிருந்தன. அங்கிருந்த புரவிச்சுவடு சல்யருடையது என அவன் எண்ணினான். அவர் வந்து சுழன்று நின்று இறங்கிச்சென்றதை அதிலேயே பார்க்கமுடிந்தது. அப்பகுதியில் வயல்சேறென நிலம் கலக்கப்பட்டிருந்தது. எடைமிக்க குறடொலி கேட்டது. அவன் நன்கறிந்த ஓசை. மெல்லிய மெய்ப்புடன் அவன் உடல்நீட்டி நின்றான். கவசங்கள் அணிந்து முழுதணிக்கோலத்தில் குடிலில் இருந்து வெளிவந்த கர்ணன் கிழக்கு நோக்கி கைகூப்பி வணங்கிவிட்டு மைந்தனை அணுகினான். இயல்பாக அவன் கை வந்து விருஷசேனனின் தோளில் பதிந்தது.

விருஷசேனன் உளஎழுச்சி அடைந்து மெல்ல நடுக்கம் கொண்டான். சிறு குழந்தையென அவன் தோள்கள் முன் வளைந்தன. கர்ணன் அவனைத் தொடுவது மிக அரிது. இளநாட்களில் நீர்விளையாடும்பொழுது அவன் மைந்தர்களை தூக்கி வீசுவதுண்டு. கானாடச் செல்கையில் மரங்களில் கை பிடித்து ஏற்றுவதுண்டு. அம்பு பயில்கையில் பிழை நிகழும்போது மட்டும் கண்களில் சிறு சினம் தெரிய எழுந்து வந்து கைபற்றி வில்லுடன் சேர்த்து திருத்துவது வழக்கம். அத்தனை தொடுகைகளும் விருஷசேனனுக்கு நன்கு நினைவிருந்தன. ஒருகணத்தில் அத்தனை தொடுகைகளுமே நினைவிலெழ அவன் மேலும் மேலும் அகம் நெகிழ்ந்தபடியே சென்றான்.

கர்ணன் அவனை நோக்கி வந்தபோது முகத்தில் இருந்த உணர்வு அவன் எதையோ சொல்லப்போவதுபோல் தோன்றியது. ஆனால் தோளைத் தொட்டதுமே அனைத்துச் சொற்களையும் மறந்துவிட்டவன்போல அவன் முன்னால் சென்றான். விருஷசேனன் தொடர்ந்தான். கர்ணன் தன் புரவியை அணுகி அதன் கழுத்தை தடவிவிட்டு கால் வளையத்தில் மிதித்து மறுகால் சுழற்றி அமர்ந்தான். மீண்டும் அவன் எதையோ சொல்லப்போகிறான் என்ற எண்ணத்தை விருஷசேனன் அடைந்தான். ஆனால் கர்ணன் புரவியை மெல்ல தட்டி செல்லும்படி பணித்தான்.

மழை ஓங்குவதுபோல் ஓசை எழுந்தது. ஆனால் விசையுடன் தெற்கிலிருந்து வீசிய காற்று மழைப்பிசிறுகள் அனைத்தையும் ஒற்றை அலையென அள்ளிச் சுழற்றி வடமேற்காக கொண்டு சென்றது. பின்னர் ஒரு குளிர்காற்று மேலும் சுழல்விசையுடன் வந்து அனைத்துக் கொடிகளையும் படபடக்கச்செய்து கூடாரத்தோல்கள் உப்பி எழுந்து உடனே வளையும்படிசெய்து, தேர்மணிகளையும் புரவிகளின் கவசங்களையும் மணிக்குச்சங்களையும் குலுங்க வைத்து கடந்து சென்றது.

காற்றில் ஒரு நீர்ப்பிசிறுகூட இல்லை என்பதை விருஷசேனன் கண்டான். அங்கு அதுவரை இளம்ழை பெய்ததற்கான தடயங்கள் தரைச் சேற்றில் மட்டுமே இருந்தன. புரவிக்குளம்புகள் பதிந்த பள்ளங்களில் தேங்கிய நீர் மான்விழிகள் போல் ஒளி கொண்டிருந்தது. பல்லாயிரம் விழிகள் எழுந்து குருக்ஷேத்ரம் அவர்களை நோக்கிக்கொண்டிருந்தது. மழை நின்றதும் அனைத்து ஒலிகளும் கூர்மை கொள்ள அதுவரை அங்கிலாத பெரும் படையொன்று வந்து தன்னை சூழ்ந்துகொண்டதைப்போல விருஷசேனன் உணர்ந்தான். அந்த ஒலியே குளம்புக்குழிவிழிகளில் நீரின் நலுங்கல் என உள்ளம் மயங்கியது.

கர்ணன் புரவியைத் தட்டி ஊக்கி மென்நடையில் மரப்பலகை பாதை மீது எழுந்தான். நோக்கியிருக்கவே அனைத்து வண்ணங்களும் மேலும் துலங்கி புடைப்புகொண்டு எழுவதுபோல் விருஷசேனன் உணர்ந்தான். காட்சி கூர்கொண்டபோது அதையே உள்ளமென போலிசெய்துகொண்டிருந்த அகமும் தெளிவடைந்தது. சூழ நோக்கியபோது யானைகளின் கவசங்களும் முகபடாம்களும் சுடர் கொண்டிருந்தன. கொடிகள் முற்றாக ஈரத்தை இழந்து படபடத்தன. படைவீரர்கள் அந்தக் காற்றால் அதுவரை இருந்த உளஅமைப்பு மாறுபட நகைத்தபடியும் சிறுசொற்கள் பேசிக் களியாடியபடியும் சென்றுகொண்டிருந்தனர்.

அவன் அண்ணாந்து நோக்கியபோது வானம் மிக மெல்ல பிளவுபடுவதை கண்டான். கருமுகில் திரை விலகி வானின் பெரும்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கிழக்கு வானில் திறந்த பெருவாயிலினூடாக கண்கூசாத இனிய ஒளி குருக்ஷேத்ரத்தின்மேல் பெய்தது. படைகளின் வியப்பொலியைக் கேட்டு அவன் திரும்பிப்பார்த்தபோது ஒரு கணம் மெய்ப்பு கொண்டு அறியாது கடிவாளத்தை இழுத்தான். அவன் புரவி தயங்கி நிற்க கர்ணன் மட்டும் காற்றில் மிதந்து செல்வதுபோல் மரப்பலகை பாவிய பாதையில் சென்றான்.

கர்ணன் மீது விண்ணிலிருந்து பொன்னிற ஒளி ஒன்று இறங்கியிருந்தது. அவன் அணிந்திருந்த கவசங்களும் அணிகளும் விழிமலைக்கும்படி மின் கொண்டிருந்தன. அவன் புரவியின் கடிவாள மணிகளும் சேணத்தின் பித்தளை வளையங்களும் அது அணிந்திருந்த வெள்ளி அணிகளும்கூட பொற்சுடர் பெற்றிருந்தன. புரவியின் கால்கள் நிலம் தொடுவதுபோல் தோன்றவில்லை. அவை காற்றைத் துழாவி சென்றுகொண்டிருந்தன. முகில் ஊர்வது போல் அவன் படைகளின் நடுவே சென்றான்.

படைவீரர்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை. ஆனால் இயல்பாக அவர்கள் வாயிலிருந்து எழுந்த வியப்பொலிகளும் மகிழ்ச்சிக் கூச்சல்களும் கலந்து பெரும் கார்வையென கர்ணனை சூழ்ந்திருந்தது. விருஷசேனன் நடுங்கிக்கொண்டிருந்தான். கண்களிலிருந்து நீர் வழிந்து மார்பில் சொட்டியது. இருகைகளையும் கூப்பி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

கூடி நின்ற படைவீரர்களில் எவனோ ஒருவன் தன் வேலை தூக்கி வானிலெறிந்து பற்றி வெடிப்புறு பெருங்குரலில் “மணிக்குண்டலன் வாழ்க! கதிர்க்கவசத்தோன் வாழ்க! விண்ணூர்பவன் மைந்தன் வாழ்க! வெற்றிகொள் வேந்தன் வாழ்க!” என்று கூவினான். “மணிக்குண்டலன் வாழ்க! ஒளிக்கவசன் வாழ்க! கதிர்மைந்தன் வாழ்க!” என்று சூழ்ந்திருந்த கௌரவப்படையினர் கைவீசி ஆர்ப்பரித்தனர். திகைப்புடன் திரும்பி கர்ணனின் உடலை விருஷசேனன் பார்த்தான். சற்று முன் அவன் அணிந்திருந்த அதே இரும்புக்கவசங்களும் வழக்கமான அருமணிக் குண்டலங்களும்தான் தெரிந்தன.

தேவதேவனுக்கு அளிக்கப்பட்ட மணிக்குண்டலங்களும் கதிர்க்கவசமும் மீண்டு வந்துவிட்டனவா? இப்படை வீரர்கள் எதை பார்க்கிறார்கள்? அவன் புரவியைத்தட்டி தந்தையின் அருகே சென்றான். விழிகளால் தந்தையின் உடலையும் சூழ்ந்து அவனை நோக்கி படைக்கலங்களை வீசி துள்ளி குதித்தெழுந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த படைகளையும் மாறி மாறி பார்த்தான். இவர்கள் பார்ப்பதென்ன? இவர்கள் உணர்வதென்ன? ஏன் அதை நான் பார்க்கவில்லை? இவர்கள் பார்ப்பதை பார்க்கும் அளவுக்கு எனக்கு அயல்கை இல்லையா? அறியாமை இல்லையா? அல்லது அது அணுக்கமும் அறிவும்தானா?

பின்னர் நீள்மூச்சுடன் அவன் மெல்ல தளர்ந்து அமைந்தான். ‘ஆம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். மானுடம் எனும் அழியாப் பெரும்திரைச்சீலையில் வரையப்பட்ட கதிர்மைந்தனின் ஓவியத்தை எவர் அழிக்க இயலும்? என்றும் அது அங்குதான் இருக்கும். அதைத்தான் இந்திரன் அச்சுனைக்கரையில் நின்று சொன்னான். அது என்றென்றும் அழியாது அங்கு இருக்கும்.

 

போர் முனையில் சல்யர் நின்றிருந்தார். தொலைவிலேயே அவரை விருஷசேனன் கண்டான். கைகளை விசையுடன் ஆட்டி ஏவலர்களுக்கும் சூதர்களுக்கும் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். படையில் எழுந்த ஆரவாரத்தை அவர் அறியவில்லை. தன்னைச் சூழ்ந்திருந்த அனைவரும் தன் ஆணைகளை முற்றாகவே கேட்பதை நிறுத்திவிட்டு விழிநட்டு நோக்கும் திசையை உணர்ந்தபின்னர் அவர் திகைப்புடன் திரும்பிப் பார்த்தார். கர்ணனைக் கண்டதும் அவர் கையிலிருந்த சவுக்கு மெல்ல தாழ்ந்தது. முதிய முகம் வியப்பில் விரிய வாய் திறந்து கண்கள் நிலைத்தன. கர்ணன் புரவியில் அவரை அணுகும் வரை அவர் சொல்லிழந்து செயலற்று நின்றார்.

கர்ணன் புரவியிலிருந்து கால் சுழற்றி இறங்கியதும் சல்யர் உயிர்கொண்டு சிறிய தாவல்களுடன் அவனை நோக்கி வந்து “பிந்திவிட்டாய்! சற்று பிந்திவிட்டாய்!” என்றார். கர்ணன் “ஆம், மத்ரரே. சற்று பிந்திவிட்டேன். இங்கு விரைந்து வர எண்ணினேன், இயலவில்லை” என்றான். சல்யர் “நீ அணியூர்வலம்போல வந்தாய்… உன் இயல்பாகவே அது ஆகிவிட்டது. நீ அழகன் என அனைவரும் சொல்லிச்சொல்லி உன்னில் ஆணவத்தை ஏற்றிவிட்டனர். அவர்களின் விழிகளுக்கு முன் நடிக்கிறாய்” என்றார்.

கர்ணன் “பொறுத்தருளவேண்டும்” என்று மட்டும் சொன்னான். சல்யர் “ஆயிரம் விழிகளில் ஒருவிழி நச்சுவிழி என்றாலே போதும்… இவர்கள் அத்தனை பேரும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அல்ல” என்றபின் மீண்டும் தன்னை தொகுத்துக்கொண்டு “சரி, வெகுவாக பிந்தவில்லை. இன்னும் பொழுதிருக்கிறது. நமது படைகள் ஒருங்கமைந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது எஞ்சியிருக்கும் படைகளில் திறன் மிகுந்த வில்லவர்கள் இருப்பது காந்தாரர்களிடம்தான். அவர்களை நமக்குப் பின்னால் நிறுத்தியிருக்கிறேன். அஸ்தினபுரியின் காலாட்படையினர் நமது நிரையின் இருபுறமும் இரு கைகளென வருவார்கள். உனது மைந்தர் உனக்குப் பின்னால் பிறை வடிவுகொண்டு புறம் காக்கட்டும்” என்றார்.

கர்ணன் “ஆம், தங்கள் ஆணைப்படி” என்றான். சல்யர் “இன்று நம்மை எவரும் நிறுத்தப்போவதில்லை. பாண்டவப்படைகளை ஊடுருவிச் செல்லவிருக்கிறோம். ஐவரும் இன்று அடிபணிந்தாகவேண்டும். அன்றேல் யுதிஷ்டிரனின் தலைகொண்டு மீள்வோம். அர்ஜுனனின் நெஞ்சு பிளந்த பின்னரே அது ஆகுமெனில் அவ்வாறே ஆகட்டும்” என்றார். கொந்தளிப்புடன் கைகளைத் தூக்கி அசைத்து “இன்றுடன் இப்போர் முடிந்தாகவேண்டும். அது நம் கடமை” என்று கூவினார். கர்ணன் “ஆம், அவ்வாறே ஆகுக, மத்ரரே!” என்றான்.

அந்த அழைப்பு சல்யரின் விழிகளில் சிறிய ஒளி ஒன்றை அணையச் செய்வதை விருஷசேனன் கண்டான். சல்யரின் உடலசைவு, பேச்சு, தோற்றம் என எதிலும் கர்ணனின் எந்தச் சாயலும் இல்லை என்றாலும் எவ்வகையிலோ அவர் அவனுக்கு கர்ணனை நினைவுறுத்திக்கொண்டே இருந்தார். அது ஏனென்று அப்போதும் அவனால் உணரமுடியவில்லை. சல்யர் சவுக்கால் தன் தொடைக்கவசத்தை தட்டியபடி ஏவலர்களிடம் “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள், அங்கே? அனைத்துக் குளம்புகளையும் இறுதியாக சரிபார்த்துவிட்டீர்களா? “என்றார்.

புரவிக்குளம்புகளை தரையிலமர்ந்து நோக்கிக்கொண்டிருந்த ஏவலன் “பார்த்துவிட்டோம், அரசே” என்றான். கர்ணன் இடையில் கைவைத்து நின்று புரவிகளைப் பார்த்து ‘சற்று சிறியவை” என்றான். “ஆம், சிறியவை. ஏற்கெனவே இங்கு கட்டப்பட்டிருந்த புரவிகள் நீண்ட பேருடல் கொண்டவை. அப்புரவிகளால் இந்தத் தேரை மிகுந்த விசையுடன் இழுத்துச்செல்ல முடியும். ஆனால் நெடுநேரம் அவை செல்வதில்லை விரைவிலேயே அவை களைத்துவிடுவதை பார்க்கலாம். ஏனெனில் அவை கடுகிச்செல்பவை. இவை மலைப்புரவிகள். இவற்றால் அந்த அளவுக்கு விரைவுகூட்ட இயலாது. ஆனால் நிகர்நிலத்தில் இன்று அந்திவரை ஒருகணமும் கால்தளராமல் நுரை கக்காமல் தேரை இழுக்க முடியும்.”

“ஏனென்றால் எடைகளுடன் மலையேறிச்செல்லும் தொடைவல்லமை கொண்ட புரவிகள் இவை. என் கைகளில் பிறந்து வளர்ந்தவை. ஒவ்வொன்றையும் கருப்பையிலேயே இலக்கணம் நோக்கி தெரிவு செய்து ஒன்றுடன் ஒன்று இசைவுபடும்படி பயிற்றுவித்து வளர்த்தேன். நோக்குக, என் ஆணை பிறந்ததும் இவ்வேழு புரவிகளும் ஒன்றென்றாகும்! ஒற்றை எண்ணமும் இயல்பும் மட்டுமே கொண்டவை ஆக மாறும். இந்தத் தேர் அவற்றுக்குப் பின்னால் தெய்வங்களால் உள்ளங்கையில் ஏந்திச்செல்லப்படுவது போல செல்லும்” என்றார் சல்யர். உள ஊக்கம் எழ கைதூக்கி “ ஐயம் வேண்டாம், இன்று இந்தக்களத்தில் நானே சிறந்த தேர்ப்பாகன்” என கூவினார்.

கர்ணன் “நன்று, மத்ரரே. இந்நாளில் வெற்றி நம் அரசருடன் நிலைகொள்க!” என்றபடி தேரை நோக்கி சென்றான். விருஷசேனன் சூழ்ந்திருந்த கௌரவப்படையை பார்த்தான். எழுகதிரோன் வடிவத்தில் சூழ்கை அமைக்கப்பட்டிருந்தது. புரவியில் அமர்ந்தவாறே படையின் இரு எல்லைகளையும் பார்க்க இயன்றது. வலது எல்லையில் கிருபர் தன் பின்னால் அஸ்தினபுரியின் படைப்பிரிவுகளுடன் நின்றார். இடது எல்லையில் கிருதவர்மன் யாதவபடைப்பிரிவுகளுடன் நின்றான். இருபுறமும் அஸ்வத்தாமனும் சுபாகுவும் அணிவகுத்து நின்றிருந்தனர். கதிரோனின் நீல மையம் என கர்ணன நின்றிருக்க அவனிலிருந்து எழும் கதிர்களின் வடிவில் கௌரவப்படைப்பிரிவுகள் அமைந்திருந்தன.

விருஷசேனன் துரியோதனன் படைமுகப்புக்கு வந்துவிட்டாரா என்று பார்த்தான். அவர் காலையில் புத்துணர்வுடன் துயிலெழுந்துவிட்டார் என்றும் படைபயிற்சி எடுத்துவிட்டு உணவு அருந்திக்கொண்டிருக்கிறார் என்றும் தந்தையின் குடில் நோக்கிச் செல்லும்போது ஏவலன் சொல்லி அறிந்திருந்தான். புத்துணர்ச்சியுடன் எழுவதா என்று ஒருகணம் தோன்றினாலும் துரியோதனனின் இயல்பை அறிந்திருந்தமையால் அது நிகழக்கூடியதே என்றும் தோன்றியது.

படைசூழ்கை முழுமையடைந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு படைப்பிரிவும் அதற்குரிய இடத்தில் வந்து பொருந்த, தேர்ந்த ஓவியன் தூரிகையில் வண்ணம் தொட்டு வரையும் ஓவியம் உருதிரண்டு முழுமை கொள்வதுபோல் படைசூழ்கை தெளிந்து வந்தது. எத்தனை முறை இப்படி படைசூழ்கைகள் துளிகளென இணைந்து ஒருங்கமைவதை பார்த்திருக்கிறோம் என்று விருஷசேனன் எண்ணிக்கொண்டான். முதல் நாள் படைசூழ்கை அவ்வாறு ஒத்திசைவதைக் கண்டபோது எழுந்த உளஎழுச்சியை நினைவு கூர்ந்தான். அன்று அவன் தேர்ப்பாகனாக இருந்தான். அணிவித்தொருக்கிக்கொண்டிருந்த தேரின் மேல் நின்று படைசூழ்கையை பார்த்தான்.

பல்லாயிரம் மானுடரை அவ்வாறு ஒரு பெரிய போர்ப் பொறியாக ஆக்க முடியும். ஒற்றைச் சொல்லில் இயக்க முடியும். பெரும்பூதம் போல் ஆணைகளுக்கு அது கட்டுப்படும். ஒருகட்டத்தில் ஆணையிடுபவன் உள்ளத்தையே உணர்ந்து பல்லாயிரம் கைகளும் படைக்கலங்களுமாக நின்று போரிடும். எண்ண எண்ண அன்று உள்ளம் கொந்தளித்தது. படைசூழ்கையே மானுடர் வகுத்தவற்றில் தலை சிறந்தது என்று அவன் நூல்களில் பயின்றிருந்தான். மானுடர் குடிகளை அமைத்தனர். குலங்களென திரண்டனர். அரசுகளாயினர். நகரங்களை அமைத்தனர். அவை அனைத்திலுமிருந்து கற்றவற்றைக் கொண்டு படைசூழ்கையை வடிவமைத்தனர். படையில் வெளிப்படும் செயல்கூர்மையும் ஒழுங்கமைவும் மானுடர் கூடிச்செயல்படும் வேறெங்கும் வெளிப்படுவதில்லை.

மானுடர் படைகளில் மட்டுமே முழுமையாக தானற்றவர்களாகிறார்கள். தாங்கள் என்று உணராமல் தன்னை அப்பேருருவென்று முற்றிலும் எண்ணி மயங்குகிறார்கள். படைகளில் தன்னழிவு கொள்ளும் வீரன் புடவியில் தன்னைக் கரைத்து அமரும் முனிவருக்கு நிகரானவன். பிறிதொரு இடத்திலும் அப்பேருருவை அவன் அடைய இயலாது என்பதனால்தான் பெரும்போரில் உயிர் பிழைத்தவர்கள்கூட மீண்டும் போருக்கெழ விழைகிறார்கள். போரை எப்போதும் கனவு காண்கிறார்கள். போரிலேயே மானுடனின் அனைத்து உச்சங்களும் வெளிப்படுகின்றன என்பதனால்தான் கவிஞர்கள் எழுதிய காவியங்கள் அனைத்துமே போரைப்பற்றி அமைந்துள்ளன.

ஆனால் அன்று அந்தப் படைசூழ்கை அவனை சிறிய ஏமாற்றத்தை நோக்கி கொண்டுசென்றது. போர் தொடங்கியதுமே அப்படைசூழ்கை பொருளற்றதாகிவிடுவதை அவன் கண்டான். ஒரு படைசூழ்கையை நிகரான இன்னொரு படைசூழ்கையால் தாக்கமுடியும் என்றால், படைசூழ்கையை தக்க வைப்பதே அதை அமைத்தவர்களின் முழுப்பொறுப்பாக போரின்போது ஆகிவிடுமெனில் அதனால் என்ன பயன்? ஒழுங்கின்மையை படைத்துப் பரப்பியிருக்கும் பிரம்மத்தின் முன் ஒழுங்கு ஒன்றை அமைத்துக்காட்டி தானும் படைப்பாளியே என்று தருக்குகிறான் மானுடன். அல்லது பிரம்மத்தின் பேரொழுங்கிற்கு மாற்றாக தன் சிற்றொழுங்கை முன்வைக்கிறான். ஒழுங்கின்மை என பேருருக் கொண்டெழுந்த மலைகளுக்குக் கீழே சிறிய ஒரு மாளிகையை கட்டுபவன் போல். கட்டற்ற காட்டைத் திருத்தி சதுரக் கழனியாக்குபவன் போல.

அது மானுடனின் எல்லையை மட்டுமே காட்டுகிறது. அதன் செயலின்மை அவன் சிறுமைக்கு சான்று. போர் படைசூழ்கைகளால் நிகழ்வதில்லை. சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் கோடி மானுடரின் உள விழைவுகளால், தெய்வங்களின் ஊடாட்டங்களால், ஐம்பெரும் பருக்களின் ஆடலால், அவையனைத்தையும் ஆட்டுவிக்கும் பிறிதொன்றின் விருப்பத்தால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது உள்ளங்கையில் ஏந்தி உற்று நோக்கும் சிறு குமிழி மட்டுமே.

முதல் நாள் போர் முனையில் புலரி எழுவதற்குமுன் அவன் மயிர்ப்புகொண்டு உடல் தசைகள் இறுகி உச்சத்தில் நின்றிருந்தான். எக்கணம் முரசுத்தோலில் கோல் விழும் என அவன் கைகால்கள் வலிப்புற்று நின்றன. இதோ இதோ இதோ என அக்கணம் நீண்டுகொண்டிருந்தது. அங்கு சென்றிருந்த அத்தனை படைவீரர்களும் அவ்வண்ணமே நாண் ஏற்றிய அம்பின் இறுக்கத்துடன் அசைவற்றிருந்தனர் அவன் விழி சுழற்றி நோக்கியபோது அப்பால் பீஷ்மபிதாமக்ர் தேரில் நின்றிருக்கக் கண்டான். அவர் மட்டுமே அந்தக்களத்தில் அச்சூழ்கைக்கு அப்பாலென நின்றிருந்தார். அங்கிருந்த எதையுமே உணராதவர் போல். அப்போரிலேயே ஆர்வமற்றவர் போல்.

அவன் அணிவித்த தேரை ஊர்ந்த கலிங்க நாட்டு படைத்தலைவனாகிய பர்ஜன்யன் “எங்கு நோக்குகிறாய், அறிவிலி?” என்றான். ஒன்றுமில்லை என்பதுபோல் அவன் தலைவணங்கினான். மீண்டும் பீஷ்மரின் முகத்தை நோக்கியபோது அதுவரை எழுந்த உளஎழுச்சி முற்றணைந்து சலிப்பும், பின் சினமும் ஏற்பட்டது. இத்தனை பெரிய உளக்கொந்தளிப்பை எழுப்பி, பல்லாயிரம் பேரில் நிரப்பி, அதைக்கொண்டு அவர்களை தொடுத்து, ஒற்றை விசையென்றாக்கி களத்தில் கொண்டு வந்து நிறுத்தியபின் அதன் தலைமையில் சற்றும் உளம் குவியாத முதியவர் ஒருவரை கொண்டுவந்து நிலைகொள்ள வைத்த அறிவின்மையை அவன் எண்ணி வியந்தான்.

இங்கு நின்றிருக்கும் இப்பல்லாயிரவரின் உணர்வெழுச்சியில் ஒரு துளி கூட அவரை சென்றடையவில்லை. எனில் அவரிலிருந்து ஒரு துளி ஊக்கத்தை கூட இப்படையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. இது ஓர் உரையாடல் என்று அவன் நூல்களில் பயின்றிருந்தான். படையினர் படைத்தலைவனை நடத்துகிறார்கள், படைத்தலைவன் படையினரை ஆள்கிறான். இன்னும் சற்று நேரத்தில் அவர் உடலிலிருந்து அந்த ஆர்வமின்மையை கௌரவப்படைகளும் பெற்றுக்கொள்ளும். அவருடைய சலிப்பே படைகளின் ஒவ்வொரு வாள்வீச்சிலும் ஒவ்வொரு போர்க்கூச்சலிலும் வெளிப்படும்.

அவன் பீஷ்மரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் ஓர் அடையாளம். இத்தனை பெரிய படையும், இத்தனை உளக்கொந்தளிப்பும் அறுதியாக தோல்வியடையும் என அவர் காட்டுகிறாரா என்ன? அவரை அறியாமல் அவர் ஆழம் அதை முன்னுணர்ந்துவிட்டதா? பர்ஜன்யன் “எங்கு நோக்குகிறாய்? பிறிதொரு முறை புரவிகளின் குளம்புகளை நோக்கு” என்று ஆணையிட்டான். அத்தருணத்தில் அந்த ஆணை அத்தனை உவப்பானதாகத் தோன்றியது. விழிதாழ்த்தி புரவிகளின் குளம்புகளை பிறிதொரு முறை பார்த்தான். அவை பொறுமையிழந்து நிலத்தை தட்டிக்கொண்டிருந்தன. மிக அப்பால் முரசுத்தோல்மேல் கழிகள் அதே போல் பொறுமையிழந்து தொட்டுக்கொண்டிருக்கின்றன.

அவனால் மீண்டும் விழிதூக்கி பீஷ்மரை நோக்காமலிருக்க முடியவில்லை. பீஷ்மரின் வில்லின் நாண் தளர்ந்திருப்பதை அப்போதுதான் பார்த்தான். இன்னமும் வில்லை நாண் இழுத்து பூட்டக்கூட இல்லை இம்முதியவர். இவர் பெருவீரர் என்றே ஆகுக! இக்களத்தில் இவர் எவரும் நிகழ்த்தாத விந்தையை காட்டுவார் என்றே ஆகுக! ஆயினும் இறுதியில் எஞ்சப்போவது இந்த ஆர்வமின்மையே. இத்துளியே இக்களத்தில் கௌரவரை வீழ்த்தும் நஞ்சு. இதையே அவர்கள் அறுதியில் தங்கள் போர்ப்பரிசென பெறுவார்கள்.

இல்லை, இவ்வாறு எண்ணக்கூடாது. இது வீண் எண்ண ஓட்டம். இது தோல்வியை வரிந்துகொள்ளும் முயற்சி. ஆனால் இச்சலிப்பும் அவரிடமிருந்தே வந்தது. விழிகளால் அவரிடமிருந்து நஞ்சை தொட்டெடுக்கிறேன். தன் உடலிலிருந்து அவர் அதை பரப்பிக்கொண்டிருக்கிறார். அத்தருணத்தில் போர் முரசு ஒலித்தது. படைகள் ஒருகணம் திகைத்து அசைவிழந்து நின்றன. எங்கிருந்தோ “வெற்றிவேல்! வீரவேல்! அமுதகலக்கொடி வெல்க! கௌரவப்படை வெல்க!” என்று வாழ்த்தொலி எழுந்தது. மலையிறங்கும் வெள்ளமென கௌரவப்படை பெருகி பாண்டவப்படை நோக்கி சென்றது.

கலிங்கப் படைத்தலைவன் பர்ஜன்யனின் தேரை விட்டு விலகி உடல் குனித்து முன்னேறி வந்த படைகளின் இடைவெளியினூடாக சென்று விருஷசேனன் படைகளின் பின்நிரையை அடைந்தான். அங்கு நின்று நோக்கியபோது அவனுக்கு முன்னால் படைக்கலங்களும் மானுட உடல்களும் புரவிகளும் யானைகளும் தேர்களும் கலந்து கொப்பளித்த பெரும் திரையை பார்த்தான். அதுவரை படையென்றும் போரென்றும் அவன் உருவாக்கிக்கொண்டிருந்த அத்தனை உளஓவியங்களும் கலைந்தன. அவன் முற்றிலும் அறியாத பிறிதொன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. எவ்வகையிலும் எச்சொற்களாலும் பொருள் அளிக்க இயலாத ஒன்று.

விருஷசேனன் நீள்மூச்சுடன் தன்னைச்சூழ்ந்து முழுமைகொண்டுவிட்ட கௌரவப்படையின் அமைப்பை பார்த்தான். கதிர்முகச் சூழ்கை பழுதற அமைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றியது. முழுப்படையையும் கொண்டு முதல்நாள் பெரும்படை சூழ்கை அமைத்த அஸ்வத்தாமனின் பணி ஒப்பு நோக்க எளிது என்று தோன்றியது. இது இன்னும் கடினமானது. வறுமையில் ஐந்தறைப் பெட்டியில் எஞ்சும் பொருட்களைக் கொண்டு கையளவு அரிசியை களைந்து அடிசில் சமைக்கும் இல்லத்தரசியின் பொறுமை அதற்கு தேவை. அவன் அஸ்வத்தாமனை விழிகளால் தேடினான். அஸ்வத்தாமனின் உருவத்தைக் கண்டதும் முதற்கணம் அவன் உள்ளம் அதிர்வு கொண்டது. அவன் அதில் பீஷ்மரின் அதே உடல் மொழியை கண்டான்.