மாதம்: மார்ச் 2019

நூல் இருபது – கார்கடல் – 81

ele1அர்ஜுனன் மண்ணில் விழுந்து புரண்டு கூச்சலிட அவனை நோக்கி ஓடிவந்த மருத்துவ ஏவலர் “அவர் உடலின் அனலை அணையுங்கள்… நீர்! நீர் எங்கே?” என்று கூவினார். இடப்பக்கமிருந்து நகுலனும் வலப்பக்கமிருந்து சகதேவனும் அவனை நோக்கி ஓடிவந்தனர். சகதேவன் அர்ஜுனனை அணுகி குனிந்தான். நகுலனிடம் “நீர் கொண்டுவருக! நீர்!” என்று கூச்சலிட்டார் ஏவலர். நகுலன் அக்கணமே திரும்பி அருகே நின்றிருந்த வெண்புரவியின் கழுத்தை தன் உடைவாளால் வெட்டி அதை கால்பற்றி கவிழ்த்துத் தூக்கி குடம்போலச் சரித்து செங்கொப்புளங்களுடன் உப்புமணம் கொண்ட வெம்மையுடன் ஊறிக்கொட்டிய குருதியை அர்ஜுனனின் மேல் ஊற்றினான். “நன்கு ஊற்றுக… அனைத்து இடங்களிலும்!” என்று முதிய மருத்துவர் காதரர் ஓடிவந்தபடியே கூவினார். “கவசங்கள் மேலும் ஊற்றுக… அவை அனல்கொண்டு பழுத்திருக்கும்.” வெம்மையேறிய கலத்தில் விழுந்ததுபோல் குருதி புகைந்து ஓசையிட்டது. கீழே கிடந்த குதிரைகளின் உடல்களில் அசைவிருந்தவற்றை எல்லாம் தூக்கி வெட்டி அவன் மேல் குருதிபொழியச் செய்தனர்.

அனல் அவிந்ததும் அர்ஜுனன் முனகியபடி ஏதோ சொன்னான். அவன் உடலெங்கும் மயிர் பொசுங்கியிருந்தது. அவன் தாடியின் ஒரு புறம் கருகி கன்னத்துடன் ஒட்டியிருக்க குழல் கற்றைகள் எரிந்து சுருண்டிருந்தன. இமைப்பீலிகள்கூட கருகி மறைந்திருந்தன. முகத்தோல் சிவந்து அழன்று கழுத்திலும் காதுக்குப் பின்னும் கொப்புளங்கள் எழுந்துகொண்டிருந்தன. அவனை தொடப்போன மருத்துவ உதவியாளரை நோக்கி முதிய மருத்துவர் காதரர் “கருதுக! மிகக் கருதுக! கைகள் சிவந்த தோலில் பட்டுவிடலாகாது. தோல் வழன்றுவிடக்கூடாது” என்றார். “பட்டு அல்லது இலை. வேறெதிலும் அவர் உடல் படக்கூடாது… பட்டு கொண்டுவருக… ஓடிச்சென்று பட்டு கொண்டுவருக!” இரு ஏவலர் விரைவதற்குள் சகதேவன் நிலத்தில் கொடிக்கம்பம் சரிய விழுந்து பரவியிருந்த பட்டுக்கொடியை எடுத்துவந்தான். அர்ஜுனன் உடல் அளவுக்கே அது பெரிதாக இருந்தது.

காதரர் அர்ஜுனனை மெல்லப்புரட்டி அதில் இட்டுத் தூக்கி அப்பால் கொண்டுசென்றார். அதற்குள் மருத்துவப்பொருட்களுடன் சகடம் அணுகி வந்தது. அதிலிருந்த கொப்பரையில் மூலிகைகள் சேர்த்து வற்றவைத்த குழம்புடன் கலந்த தேன்விழுது நிறைந்திருந்தது. அதை மயிற்பீலிகளால் தொட்டு அவன் முகத்திலும் கழுத்திலும் தோளிலும் பூசினர். “குருதி நன்று… தேனும் ஒரு குருதியே” என்றார் காதரர். அர்ஜுனன் தேன்குருதி விழுதால் மூடப்பட்டு கருமைகொண்டான். ஏவலர் அவன் கவசங்களைக் கழற்றி அகற்றி உள்ளிருந்த ஆடைகளை மெல்ல கிழித்தெடுத்தனர். ஆடை பொசுங்கி உடலுடன் ஒட்டியிருந்தது. காதரர் “மெல்ல, தோல் உடன் வந்துவிடலாகாது. தோலுடன் ஆடை இணைந்திருந்தால் அவ்வண்ணமே விடுக… பொருக்காக பின்னர் எழட்டும்” என்றார். கைகால்கள் நடுங்க குனிந்து நோக்கிய சகதேவனிடம் “கவசங்களிருந்தமையால் உடல் முற்றிலும் வெந்து போகாது தப்பினார்… கவசங்களை உடலுடன் இணைத்த மரவுரிப்பஞ்சுகள் காத்தன” என்றார்.

இளைய யாதவர் மெல்லிய நடையில் ஓசையிலாமல் வந்து அவன் அருகே இடையில் கைவைத்து கூர்ந்து நோக்கியபடி நின்றார். அவர் நோக்கு பட்டதனால் என அர்ஜுனனின் விழியிமைகள் அதிர்ந்தன. முகம் சொல்லுக்கெழுவதுபோல் அசைவுகொண்டது. கண்களைத் திறந்து இளைய யாதவரை சில கணங்கள் நோக்கினான். மீண்டும் இமைகள் மூடின. துடிப்பு கொண்டு திறந்தன. அவன் சகதேவனிடம் “மூத்தவர் எப்படி இருக்கிறார்?” என்றான். “அங்கர் முன்னிருந்து அவர் அம்புகள் பட்டு பின்வாங்கிவிட்டார்” என்றான் சகதேவன். “அங்கரை இப்போது எவர் எதிர்கொள்கிறார்?” என்றான் அர்ஜுனன். சகதேவன் “இப்போது அவரை எவரும் எதிர்கொள்ளவில்லை, மூத்தவரே…” என்றான்.

அவனை சொல்விளங்காததுபோல் சற்றுநேரம் பார்த்த பின் அர்ஜுனன் உரக்க “கர்ணன் நம் படைகளை…” என்றபடி கையூன்றி எழமுயன்று கையில் வலியை உணர்ந்து திரும்பப் படுத்தான். “ஆம் மூத்தவரே, கர்ணனும் துரோணரும் எந்தத் தடையுமிலாதவர்களாக நமது படைகளை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து விலகி ஓடுவதொன்றையே போரென இப்போது நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்” என்று சகதேவன் கசப்புடன் சொன்னான். “அத்தனை விசை மிக்க அம்புகளை இதுவரை எவரும் களத்தில் எழுப்பவில்லை. அவை அம்புகளே அல்ல, அனல்குவைகள், நச்சுப்பெருக்குகள். நம் படைகள் எரிந்தழிகின்றன” என்று நகுலன் சொன்னான்.

அர்ஜுனன் மெல்லிய விதிர்ப்புடன் நினைவுகூர்ந்து “நிர்மித்ரன், சர்வதன்… அவர்களிருவரும் என்ன ஆனார்கள்?” என்றான். “இருவரும் அனல் பட்டு தோல் வெந்திருக்கிறார்கள். இருவருக்கும் நினைவு மீளவில்லை. செய்தி அறிந்து அரசர் அங்கு சென்றிருக்கிறார்” என்று சகதேவன் கூறினான். “யாதவரே, என்ன நிகழ்கிறது? இன்றுடன் இப்போர் முடிவடைந்துவிடுமா?” என்று அர்ஜுனன் கேட்டான். இளைய யாதவர் “போர் முடிவுற வேண்டுமெனில் நீங்கள் ஐவரும் இறக்க வேண்டும். ஐவரும் ஐவர் மைந்தரும் இன்னும் உயிருடன்தான் எஞ்சுகிறீர்கள்” என்றார். “ஆனால் முயல்களைப்போல் படைப்பிரிவுகளுக்குப் பின்னால் வந்து பதுங்கிக்கொண்டிருக்கிறோம். உலர்ந்த நாணல் போலிருக்கிறது இப்படை. அதை எரித்தழித்தபடி வந்துகொண்டிருக்கிறார்கள். நெடும்பொழுது இங்கு இவ்வண்ணம் ஒளிந்திருக்க இயலாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

“உனது அம்புகள் என்ன ஆயின?” என்று இளைய யாதவர் கேட்டார். “நீ உன்னிடம் எஞ்சுவது என எதையும் உணரவில்லையா?” என்றார். அர்ஜுனன் விழி தாழ்த்தி “எஞ்சியது இருந்தது. அது எப்போரிலும் படைக்கலமென நான் எடுக்கவேண்டியதல்ல என்று உணர்ந்தேன்” என்றான். இளைய யாதவர் புன்னகையுடன் அவனை பார்த்துக்கொண்டிருக்க அவன் விழிகளை மூடி பெருமூச்சுவிட்டான். சகதேவன் “இனி என்ன செய்வது?” என்றான். “அவரை நாம் களத்தில் வென்றாகவேண்டும். இல்லையேல் இன்றுடன் போர் முடியக்கூடும். எப்பொழுதிலும் துரோணர் படையணிகளை கடந்துவந்து நம் ஐவரில் ஒருவரை சிறைபற்றக்கூடும். பலமுறை மூத்தவரை பிணைகொள்ள அவர் முயன்றிருக்கிறார். அவரைப் பிணைத்து திருஷ்டத்யும்னனைப்போல் தேர்க்காலில் கட்டி இழுத்தாரெனில் அதன் பின் நாம் இப்புவி முழுதையும் வென்றாலும் இழிவு குறைவதில்லை.”

இளைய யாதவர் “போருக்கென எழுந்தபின் எதிரியை களவெற்றியால் மட்டுமே கடக்க இயலும். ஒவ்வொருவரிடமும் எஞ்சியிருக்கும் ஆற்றலென்ன என்று பாருங்கள். அவற்றைக்கொண்டு அவரை எதிர்த்து நில்லுங்கள்” என்றார். சகதேவன் தலையசைத்து “எங்கள் எவரிடமும் அவரை எதிர்கொள்ள எந்த அம்பும் இல்லை. மூத்தவரிடம் இல்லாத அம்பு எதையும் நாங்கள் எப்போதுமே கொண்டிருக்கவில்லை. அவரை நம்பியே களம்புகுந்தோம்” என்றான். பின்னர் கசப்புடன் “இனி ஒன்றே செய்வதற்குள்ளது, ஆட்கொண்டு, பலி பெற்று, குடி முற்றழித்து, நெஞ்சில் ஆடும் அக்கொடுந்தெய்வத்தை எதிர்கொள்ள பூசகர் அம்முறையையே நாடுகிறார்கள். சென்று வணங்கி அதனிடமே அதை வென்று அகற்ற நாம் செய்ய வேண்டியதென்ன என்று கேட்பது. ஆசிரியர் என துரோணர் அவரே உளம் கனிந்து நமக்கு வாழ்வளித்தால் மட்டுமே இனி மீட்சி” என்றான்.

இளைய யாதவர் “அவர் அதை முன்னரே அளித்துவிட்டார். நாம் இப்போரை தொடங்குவதற்கு முன்பு அவரைப் பணிந்து அச்சொல்லை பெற்றுவிட்டோம்” என்றார். திடுக்கிட்டவனாக சகதேவன் திரும்பிப்பார்த்தான். “அவர் அன்று சொன்ன சொற்களை நினைவுகூர்க!” என்றார் இளைய யாதவர். சகதேவனின் விழிகள் மாறின. அர்ஜுனன் கையூன்றி எழுந்தமர்ந்து “ஆம், அச்சொற்களை நான் நினைவுகூர்கிறேன். ஆனால்…” என்றபின் திகைப்பில் சற்றே வாய் திறந்து உறைந்து பின்னர் மீண்டு “அஸ்வத்தாமனா?” என்றான். “ஆம், ஆனால்…” என்றபின் உரக்க “வேண்டாம், அது எளிதல்ல. ஆசிரியரின் அனைத்து ஆற்றல்களும் கொண்டவன் அவன். அதற்கப்பால் அவன் ஈட்டிக்கொண்ட சில பேரம்புகளும் அவனிடம் இருக்கக்கூடும். அவனை உடனே வெல்வது நம்மால் இயலாது” என்றான்.

“முழுமையாக அஸ்வத்தாமனை வெல்ல இப்புவியில் எவராலும் இயலாதென்று உணர்க!” என்று இளைய யாதவர் சொன்னார். “ஏனென்றால் அவனில் கூர்கொண்டிருப்பது துரோணர். துரோணரின் அலைபாய்தல்கள் இல்லாத துரோணர் அஸ்வத்தாமன். மைந்தரில் தந்தையின் பிழைகள் பெருகி எழுவதுண்டு. பிழைகளை திருத்திக்கொண்டு தந்தையின் அகம் திகழ்வதுமுண்டு.” தயக்கத்துடன் “அவ்வாறெனில்…” என்று சகதேவன் சொல்ல “மாளவர்களின் யானை ஒன்று உள்ளது… அதன் பெயர் அஸ்வத்தாமன்” என்று இளைய யாதவர் சொன்னார். அவரது திட்டத்தை புரிந்துகொண்டு இருவரும் அமைதி அடைந்தனர். சகதேவன் “அதை கொன்று அவரிடம் அஸ்வத்தாமர் இறந்துவிட்டாரென்றும் உரைக்கலாம். ஆனால் அவர் அதை ஏற்கப்போவதில்லை. களத்தில் மிக எளிய செயல் அது. ஒரு தூதனை அனுப்பி அஸ்வத்தாமன் எங்கிருக்கிறான் என்று நோக்கினால் மட்டும் போதும். ஒரு முரசொலியே போதும்” என்றான்.

இளைய யாதவர் “நமக்குத் தேவை கால்நாழிகைப் பொழுது” என்றார். “அவர் வில்தாழ்த்தி அமைந்தால் போதும்…” சகதேவன் “அதை அவரே உரைத்தார். அம்பு முனைகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி கள நிமித்தம் நோக்கும் கலை வழியாக அவர் அதை உணர்ந்திருந்ததாக சொன்னார்.” இளைய யாதவர் “அஸ்வத்தாமனை நகுலனும் சகதேவனும் சாத்யகியும் இணைந்து களத்தில் மறு எல்லை நோக்கி அகற்றிக்கொண்டு செல்க! அங்கிருந்து செய்தி வர அரை நாழிகைப்பொழுதேனும் ஆகும்” என்றார். “ஆனால்…” என்று மீண்டும் சொல்லெடுத்த சகதேவனிடம் “அவர் நகுலனையோ பார்த்தனையோ நம்ப மாட்டார். நீ சொன்னால் நம்பக்கூடும்” என்றார். பின்னர் “ஒருவேளை உன்னையும் நம்பாமலாகலாம். முழுமையாக இப்புவியில் அவர் நம்புபவர் ஒருவரே” என்றார்.

அர்ஜுனன் “மூத்தவர் பொய்யுரைக்க மாட்டார்” என்றான். சகதேவன் “ஆம், அப்பழியை நாம் அவருக்கு அளிக்கலாகாது” என்றான். இளைய யாதவர் “அவர் பொய்யுரைக்கலாகாது என்பதன் பொருட்டே அந்த யானையை கொல்கிறோம். அவர் உரைப்பது அஸ்வத்தாமனெனும் யானையின் இறப்பையே” என்றார். சகதேவன் சொல்லெடுக்க முயல இடைமறித்து “அஸ்வத்தாமன் களம்பட்டான் என்றுரைத்த பின் துரோணர் செவிகொள்ளா கீழ்ஒலியில் மாளவர்களின் யானையாகிய அஸ்வத்தாமன் என்று அவர் சேர்த்துக்கொள்ளட்டும். அது பொய்யல்ல” என்றார். சகதேவன் மெல்ல நகைத்து “பொய்யையும் மெய்யையும் அறிபவை நெடுந்தொலைவில் உள்ள தெய்வங்கள் அல்ல, ஒவ்வொருவரின் உள்ளத்தில் அமைந்தவை” என்றான்.

நகுலன் உரக்க “பிறிதொரு வழியில்லை” என்றான். இளைய யாதவர் “அஸ்வத்தாமனின் இறப்பை அவர் யுதிஷ்டிரரின் நாவிலிருந்து கேட்பாரெனில் அம்பு தாழ்த்தி தேர்த்தட்டில் அமர்வார். அவ்வாறல்ல என்று அவருக்கு செய்தி வந்து சேர அரைநாழிகைப் பொழுதாகும். அது போதும் அவரை வென்றெழுவதற்கு. இத்தருணத்தில் பார்த்தன் செய்வதற்கு பிறிதொன்றில்லை” என்றார். “சற்று முன் அவரை வெல்ல பிறிதொரு வழியை உரைத்தீர்கள், யாதவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், அவரைவிட மேலெழுந்து வெல்லும்படி சொன்னேன். அது உன்னால் இயலவில்லை. எனவே அவரைவிட கீழே இழிந்து கொல்லும்படி இப்போது சொல்லுகிறேன். கொன்றே ஆகவேண்டுமெனில் இவ்விரண்டு வழியே உள்ளது” என்றார் இளைய யாதவர்.

அர்ஜுனன் இரு கைகளையும் கோத்து முறுகப் பற்றியபடி வெறுமனே அவரை நோக்கி அமர்ந்திருந்தான். “அவரை கொன்றோமெனில் இப்போரில் வெல்வோம். இதுவரை நாம் கொன்ற அனைவரையும் அவ்வெற்றியால் நிறைவுறச் செய்வோம். இங்கு தோற்றோமெனில் பீஷ்மரை வீழ்த்தியதும் நமக்கு பழியென்றேயாகும். பாதி வழி சென்ற பின் மீள்வது முழுச் செலவின் துயரையும் இழிவையும் ஏற்றுக்கொள்வதே” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “ஆனால் அவர் என் ஆசிரியர்” என்றான். “இப்போது அவர் உன் ஆசிரியர் அல்ல. அவர் கற்பித்த அனைத்தையும் நீ திருப்பி அளித்துவிட்டாய். அவருடைய ஒரு சொல்லும் உன்னிடம் இல்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “அவரை கால் தொட்டு வணங்காமல் என் நாட்களை நான் தொடங்கியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “முதல் நாள் முதல் அம்பை எடுக்கையிலும் அவர் காலை என் அகம் வணங்கியது.”

புன்னகை விரிய “இறுதி அம்பைத் தொடுக்கையிலும் அவ்வாறே அவர் கால் உன் நெஞ்சில் நிற்கட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “பார்த்தா, இந்தக் களத்தில் அடையும் அனைத்து தத்தளிப்புகளும் வெறும் ஆணவம் என்றுணர்க! பீஷ்ம பிதாமகரை வீழ்த்திய பின்னர் நீ அஞ்சும் பழியென இப்புவியில் வேறொன்று உள்ளதா?” சகதேவன் “ஆம் மூத்தவரே, நாம் இனி எதன் முன்னும் தயங்கி நிற்க வேண்டியதில்லை. உடல் பொசுங்கி வெறும் தசைக்குவியலென இக்களம் நிறைத்து படுத்திருக்கும் நமது படைவீரர்களின் பொருட்டே நாம் இனி எழவேண்டும். இவர்கள் அனைவரும் நம் அம்புகளையும் ஆற்றலையும் நம்பி இங்கு வந்தவர்கள். அவர்களுக்கு நாம் செய்யும் கடன் ஒன்றுண்டு” என்றான்.

அர்ஜுனன் எரிச்சலுடன் கைவீசி “என்ன சொல்கிறாய்? மூத்தவர் இதற்கு ஒப்புவாரா?” என்றான். “அவர் ஒப்புவார்” என்று சகதேவன் சொன்னான். “என்ன சொல்கிறாய்?” என்று பற்களை இறுக்கியபடி அர்ஜுனன் கேட்டான். “இதுவரை எதற்கும் அவர் ஒப்புதல் அளிக்காமலிருந்ததில்லை. அறுதியாக அவரை ஆளும் ஒன்றே பிற அனைத்தையும் வென்று நிற்கிறது. பல்லாயிரம் முறை துணியால் சுற்றப்பட்டிருந்தாலும் உள்ளிருக்கும் கூர்வாள் ஒருகணத்தில் வெளிவந்துவிடுமென்று ஒரு காவியச்சொல் உள்ளது” என்றான் சகதேவன். அர்ஜுனன் “இதை நீயே அவரிடம் சொல்” என்றான். “நான் சொல்கிறேன். என் சொற்களை அவர் செவிகொள்வார்” என்ற பின் சகதேவன் புன்னகைத்து “அவருக்கு ஒவ்வாதனவற்றை நான் சொன்னால் பிறிதொருவருடன் உசாவுவார்” என்றான்.

“அவரே இங்கு வந்துகொண்டிருக்கிறார்” என்று இளைய யாதவர் சொன்னார். “செய்தி வந்ததா?” என்று சகதேவன் கேட்டான். “அவர் தன் மைந்தரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். துரோணரால் உடல் வெந்து கிடக்கும் தன் மைந்தரை பார்த்த பின் அவர் பிறிதெங்கும் செல்லமாட்டார். சினமும் அழுகையுமாக இங்குதான் வருவார்” என்று இளைய யாதவர் சொன்னார். தொலைவில் தேரின் ஓசை கேட்டது. சகதேவன் புன்னகையுடன் “ஆம், இங்குதான் வந்துகொண்டிருக்கிறார். தேரோசையிலேயே அவருடைய சீற்றம் தெரிகிறது” என்றான்.

யுதிஷ்டிரர் குதித்து இறங்கி ஓடி அவர்களை நோக்கி வந்தார். “யாதவனே, நாம் என்ன செய்யப்போகிறோம்? இவ்வண்ணம் நம் மைந்தரை அனலில் வேகவிடப்போகிறோமா? நாங்கள் வில்லெடுத்தது எங்களுக்காக அல்ல, உனக்காக. உன் ஆற்றலை நம்பியே இங்கே போர்புரிகிறோம். எங்களை கைவிட்டுவிட்டாயா? எங்கள் தோல்வியிலிருந்து எழுந்து நீ எங்கே செல்லமுடியும்?” என்றார். அர்ஜுனனை அணுகி “பார்த்தா, அரிய அம்புகள் கொண்டிருக்கிறாய் என்று உன்னை நம்பினேன். நீ அருகிருந்தும் என் மைந்தர் அங்கே வெந்துகிடக்கிறார்கள். நீ இங்கே கிடக்கிறாய். நான் நம்பியவர்கள் எல்லாம் என்னை கைவிட்டால் எங்கு செல்வேன்? இந்தக் களத்தில் நான் அழிந்தால் தாழ்வில்லை, என் மைந்தர்கள் வெந்துகிடக்கிறார்கள். என்னால் என் மைந்தர் அழியவிருக்கிறார்கள்” என்றார்.

இளைய யாதவர் “அரசே, நாம் துரோணரை கொன்றாகவேண்டும்” என்றார். “ஆம், கொன்றே ஆகவேண்டும். இன்று. இன்னும் ஒரு நாழிகைக்குள். இனி அவருடைய அம்பால் நம் படைகள் உருகி அழியக்கூடாது. நம் மைந்தர்கள் இறந்துவிடக்கூடாது” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அரசே, அவரை வெல்ல உங்கள் இளையவரால் மட்டுமே இயலும். ஆகவே இவரை களம்கொண்டு சென்றேன். இவர் ஆவநாழியிலுள்ள அனைத்து அம்புகளும் ஒழிந்தன. இவரால் அவரை எதிர்கொள்ள முடியவில்லை” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று யுதிஷ்டிரர் தளர்ந்தார். “அவரை எதிர்கொள்ள முடியாது. ஆசிரியர் கடல், மாணவர் அலைகள் என்பார்கள்.” இளைய யாதவர் “ஆசிரியரை மாணவர் வெல்லும் தருணங்கள் உண்டு” என்றார். “ஆசிரியரை கடந்துசெல்லவேண்டும். பெருமையால், இயலாதெனின் சிறுமையால்.” யுதிஷ்டிரர் “எவ்வண்ணமேனும் அவரை கொன்றாகவேண்டும்… உடனே கொன்றாகவேண்டும்” என்றார். “உங்கள் இளையவரால் அவரை மீறி மேலெழ இயலவில்லை. கீழிறங்கி வெல்லும் வழி ஒன்று உள்ளது. அதை சொல்லிக்கொண்டிருந்தேன்.”

“என்ன?” என குரல் தாழ விழி சுருங்க யுதிஷ்டிரர் கேட்டார். “அரசே, நீங்கள் நினைவுகூர்வீர்கள் என நினைக்கிறேன். நாம் போருக்கு முன் சென்று பிதாமகரையும் ஆசிரியர்களையும் வணங்கி சொல்கொண்டோம். அப்போது ஆசிரியர் உரைத்தது என்ன?” யுதிஷ்டிரர் சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “யானை தன் உணவை நிறுத்திக்கொள்ளும் ஒரு தருணம் உண்டு என்றார் ஆசிரியர்” என்றார். “ஆம், யானை தன் உணவை நிறுத்திக்கொள்ளும் தருணம்… அது எப்போது?” அருகே நின்றிருந்த நகுலன் “தீரமுடியாத நோய் கொள்ளும்போது. அல்லது தாளவொண்ணா துயர் அணுகும்போது” என்றான். “அதையே அவரை வெல்லும் வழி என கொள்ளலாம். அவர் தன் போரை தானே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றால் அவர் நோயுறவேண்டும். அது நம்மால் இயலாது. துயருறவேண்டும். அது நம்மால் இயலும்.”

“எவ்வண்ணம்?” என யுதிஷ்டிரர் கேட்டார். “நீங்கள் உள்ளூர உணர்ந்துவிட்டீர்கள், அரசே” என்றார் இளைய யாதவர். “அவரை பெருந்துயர் கொள்ளச்செய்வது ஒன்றே.” யுதிஷ்டிரர் ”ஆனால் நம்மால் அஸ்வத்தாமனை எளிதில் வெல்லமுடியாது…” என்றார். “வெல்லவே முடியாதென்றே கொள்க!” என்றார் இளைய யாதவர். “ஆகவே நாம் பிறிதொரு அஸ்வத்தாமனை கொல்வோம். அவன் இறப்பை அறிவிப்போம்.” யுதிஷ்டிரர் “யார்?” என்றார். “மாளவர்களின் யானை” என்றார் இளைய யாதவர். “அது இத்தருணத்திற்காகவே அப்பெயருடன் பிறந்து வளர்ந்து இக்களம் வரை வந்துள்ளது.” யுதிஷ்டிரர் “ஆனால்…” என்றார். “நீங்கள் அந்த யானையின் இறப்பை களத்தில் அறிவிக்கவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “தன் மைந்தனின் இறப்பு அது என துரோணர் எண்ணினால் அது நம் பிழை அல்ல.” யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “அது கருதாப் பிழை என்றே கருதப்படும். பழி என்றல்ல.”

“ஆற்றுவதை அறிந்திருப்பதே பழியை அளிப்பது, எனக்கு சொல்நெறியை கற்பிக்கவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “வேறு வழியில்லை மூத்தவரே, நம் படைகள் பொசுங்கி அழிகின்றன. இன்னும் சற்றுபொழுதில் நாம் எஞ்சுவோமா என்றே தெரியவில்லை” என்றான் சகதேவன். நகுலன் அருகணைந்து “எங்களுக்காக அல்ல, நமது படைகளுக்காக, மைந்தருக்காக” என்றான். யுதிஷ்டிரர் எண்ணியிராக் கணத்தில் “நான் சொல்கிறேன்” என்றார். சகதேவன் சற்று திகைத்து பின் “அதனால் உங்கள் உள்ளம் எத்தனை துயருறும் என அறிவோம்” என்றான். “இல்லை, என் உள்ளம் சற்றும் துயருறவில்லை. உண்மையில் துயருக்காகவும் ஒவ்வாமைக்காகவும் நான் என் உள்ளத்தையே கூர்ந்து நோக்கினேன். அது குளிர்ந்து அசைவிழந்து கிடக்கிறது. துரோணர் களம்படுவார் என்றால் நாம் தப்பிவிடக்கூடும் என்னும் எண்ணம் ஆறுதலையே அளிக்கிறது” என்றார் யுதிஷ்டிரர்.

பின்னர் இளைய யாதவரிடம் “நான் அனைத்தையும் இழந்துவிட்டேனா, யாதவனே?” என்றார். “சில திரைகளை கிழித்துக்கொண்டு எழுகிறீர்கள்” என்றார் இளைய யாதவர். “நான் நெறிபிழைப்பதில் மகிழ்வுறுபவனாகவும் ஆகக்கூடும்…” என்றார் யுதிஷ்டிரர். “அது நிகழாது…” என்று இளைய யாதவர் சொன்னார். “கடந்துசெல்வதெப்படி என்று கற்றுக்கொள்வீர்கள். அரசே, இப்புவியில் மானுடர் கற்றுக்கொள்ளும் அனைத்து அறிதல்களையும் கடந்துசெல்லும் வழி என்னும் ஒற்றை சொல்லில் வகுத்துவிடலாம்.”

“ஆம்” என யுதிஷ்டிரர் நீள்மூச்செறிந்தார். “நாம் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம்.” நகுலனிடம் திரும்பி “உன் உளமென்ன, இளையோனே?” என்றார். “மூத்தவரே, இனி என்னால் உங்கள் சங்கையே அறுக்கமுடியும். இளைய யாதவரையே முதுகில் குத்தி வீழ்த்த முடியும். இக்களத்தில் இனி நான் செய்யக்கூடாதது என ஏதுமில்லை” என நகுலன் சொன்னான். முகம்சுளிக்க வலிப்பென கழுத்துத் தசைகள் இழுபட “நான் இப்பிறவியில் இயற்றக்கூடிய கீழ்மையின் எல்லையை சற்றுமுன் சென்றடைந்தேன். நின்றிருந்த புரவியின் கழுத்தை வெட்டி அதன் குருதியால் மூத்தவரின் உடல் அனலை ஆற்றினேன். அஸ்வமேதம் என ஏன் வைத்தார்கள் என்று இன்று புரிகிறது. தான் ஊரும் பட்டத்துப்புரவியை வெட்டி தெய்வங்களுக்கு அளிப்பவன் இங்குள்ள அனைத்தையும் கடந்துசெல்கிறான். பின்னர் அவன் இங்கே அஞ்சுவதற்கும் இழப்பதற்கும் ஏதுமில்லை” என்ற நகுலன் வாயில் ஊறிய மிச்சிலை துப்பிய பின் திரும்பிச்சென்றான்.

நூல் இருபது – கார்கடல் – 80

ele1ஆவக்காவலரை நோக்கி “எனது ஆவநாழியை…” என்று சொன்னபடி திரும்பிய அர்ஜுனன் தன் கால்களுக்குக் கீழே நிலம் இழுபட்டதுபோல் உணர்ந்து மண்ணை நோக்கி சென்றான். நெடுந்தொலைவு கீழிறங்கிக்கொண்டே இருக்கும் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. மண் சுவர்போல் எழுந்துவந்து அவன் முகத்தை அறைந்தது. ஒருகணம் நினைவிழந்திருக்கக்கூடும். இளைய யாதவரும் சகதேவனும் சேர்ந்து அவனை மெல்ல தூக்கி அமரச்செய்வதை அவன் உணர்ந்தான். நகுலன் கொண்டுவந்த நீரை அவன் முகத்தில் அள்ளி வீசினார் இளைய யாதவர். அவன் விழித்துக்கொண்டு “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என்றபடி எழுந்தான். சகதேவன் “துயில்நீப்பு” என்றான்.

இளைய யாதவர் “ஆம், துயில் இல்லாதவனுக்கும் துயில்நீப்பின் களைப்பு உண்டு” என்றார். அவர் முகத்திலிருந்த புன்னகையை திடுக்கிட்டு ஒருகணம் திரும்பிப்பார்த்த பின் அர்ஜுனன் உரக்க நகைத்தான். “அந்த அம்பின் விசை உன் உடலில் இன்னமும் எஞ்சியிருக்கிறது. இங்குள்ள அனைவரையும் அது அதிரச்செய்திருக்கும்” என்று இளைய யாதவர் சொன்னார். “நம் உடல் நீர்ப்பை. உள்ளே நீர் நலுங்கிக்கொண்டே இருக்கிறது. மண்ணில் பரவவும் விண்ணில் திரளவும் விழைகிறது. அந்த அம்பு நம் நீர்மையை நிலையழியச் செய்துவிட்டது.”

அர்ஜுனன் கைகளை நீட்டி தலைக்குமேல் குவித்து முதுகெலும்பை நிமிர்த்தியபடி “எனது ஆவநாழியை நிரப்புக!” என்றான். “மீண்டும் அவரை எதிர்கொள்ளச் செல்கிறாயா?” என்று இளைய யாதவர் கேட்டார். “ஆம், அவரை எதிர்கொண்டே ஆகவேண்டும். தனது ஆவநாழியிலிருந்து அவர் விசை மிக்க அம்புகளை எடுத்துக்கொண்டே இருக்கிறார். இன்று அவரையும் அங்கரையும் எதிர்கொள்ளாது இங்கு நாம் போர் நிகழ்த்தவே இயலாது” என்றான் அர்ஜுனன். “அவர் முன் எவரும் தனித்துச் செல்லவேண்டாம். மைந்தர்கள் அவரிடமிருந்து அகன்றே நிற்கட்டும்” என்று சகதேவன் சொன்னான். “அவர் இன்று மைந்தர்கொலை செய்யும் உளநிலையில் இருக்கிறார்.”

அப்பாலிருந்து செய்திஏவலன் பாய்ந்து வந்து புரவியிலிருந்து இறங்கி அணுகி அர்ஜுனனை வணங்கி “ஆசிரியர் பேரழிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார், இளவரசே. விசை மிக்க புதிய அம்புகளை அவர் எடுக்கிறார். நாகத்திரள்போல் நூறு புகைச்சுருள்களுடன் வரும் காலாஸ்திரம். அனல் கக்கி வரும் ஆக்னேயாஸ்திரம். சுழல்களை உருவாக்கியபடி வரும் வாருணாஸ்திரம்…” என்று அவன் சொன்னான். “இடியோசைபோல் வெடிப்பவை, மண்ணிலும் காற்றிலும் அனல் பரப்புபவை. சற்று முன் மூன்று அம்புகளை அவர் அறைந்தார். நமது படைவீரர்கள் அனைவரும் நிலநடுக்கம் உருவானதைப்போல் உணர்ந்தனர். பலர் உடல் நடுக்குற்று கீழே விழுந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வாயுமிழ்ந்து இன்னமும் விழி ஒருமை கூடாதவர்களாக கிடக்கிறார்கள்.”

அர்ஜுனன் “இப்போது அவரை யார் எதிர்கொள்கிறார்கள்?” என்றான். “இளவரசர்கள் சுருதகீர்த்தியும் சர்வதரும் இருபுறத்திலாக நின்று அவரை தாக்கினார்கள். இப்போது அவர் முன் எவருமில்லை” என்று செய்திக்காவலன் சொன்னான். “செல்வோம்” என்றபடி அர்ஜுனன் தன் தேரை நோக்கி சென்றான். புதிய புரவிகளுடன் வந்து நின்ற தேர்க்காவலன் அவனை தலைவணங்கி மேலேறுவதற்கான படியை வைத்தான். அர்ஜுனன் அதில் தாவி ஏறிக்கொண்டதும் அருகணைந்து கடிவாளக்கற்றையை இடக்கையால் பற்றி வலக்கையால் அமரத்தின் இருக்கையை தொட்டபடி இளைய யாதவர் கேட்டார் “அவரிடம் போர்புரிவதெப்படி என்று அறிவாயா?” அர்ஜுனன் “அவருக்குள் நுழைவதற்கான சிறு பழுது ஒன்றை சென்ற முறை கண்டேன் என்று நினைக்கிறேன்” என்றான். “ஆம், நமது எதிரியை நாம் வெல்வது நாம் அறிந்த அவருடைய சிறுமை ஒன்றினூடாகவே. ஒவ்வொரு சிறுமையும் ஒரு விரிசல். ஒரு திறந்திட்ட வாயில். ஒரு சிறுமையினூடாக பல்லாயிரம் சிறுமைகளை அம்பெய்து அம்பெய்து கண்டுபிடிக்க முடியும்.”

“வளைதேடும் நாகங்கள்போல் நமது சித்தம் எதிரியின் ஆளுமையில் முட்டி முட்டித் தவிக்கிறது. பல்லாயிரம் அம்புகள் சென்று அறைந்து வீணாகி உதிர்கையில் ஒன்று எப்படியோ உள்ளே செல்கிறது. அது அறிந்த வழியை பிறிதொன்று சென்று பெரிதாக்குகிறது. வழிகள் திறக்க திறக்க அவர் வீழ்ச்சியடைகிறார். நீ முதல் நுழைவுக்கான வழியை மட்டுமே கண்டடைந்திருக்கிறாய். அது அவரை நீ எதிர்த்து நிற்பதற்கான ஓர் அடித்தளம் மட்டுமே. அதனூடாக களத்தில் அவர் மேல் ஓர் அம்பை நீ செலுத்த இயலும்” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “ஆம்” என்றான். இளைய யாதவர் “பார்த்தா, ஒருவரை நீ வெல்கிறாய் எனில் அதன் பொருள் அவரைவிட ஒரு அணுவளவேனும் நீ முழுமையாக மேலெழுந்திருக்கிறாய் என்பதே. உன் ஆசிரியரைவிட நீ உயர்ந்தாலொழிய இக்களத்தில் அவரை கொல்ல இயலாது” என்றார்.

அர்ஜுனன் “நான் அவரைவிட சிறியவன். அவரது காலடியில் அமர்ந்து அவர் கொடையென அளித்தவற்றைப் பெற்று எழுந்தவன். ஆகவே ஒரு நிலையிலும் அவரை என்னால் கடந்து எழ இயலாது. இக்களத்தில் நான் உணர்ந்தது அதைத்தான். என் அம்புகள் அதனாலேயே அவர் அம்புகளுக்கு முன் மடிந்தன” என்றான். இளைய யாதவர் புன்னகை விரிய “ஆனால் நீ எங்கு அவரைவிட மேலானவன் ஆனாய் என்று அவர் அறிவார்” என்றார். அர்ஜுனன் விழிகள் சுருங்கி கூர்ந்து நோக்க “அதைத்தான் அவர் தன் வாயால் சொன்னார். தன்னிடமிருந்து கிளம்பிய அந்த மாணவனை அவர் அறிவார். ஆனால் அதற்குப் பின்னர் மேலெழுந்து நீ பெற்றதென்ன எனும் திகைப்பு அவரில் உள்ளது. அதை இக்களத்தில் காட்டு என்று அறைகூவினார். அது என்ன என்று அறியும் தவிப்பே அச்சொல்லில் உள்ளது” என்றார் இளைய யாதவர்.

“யாதவரே, நான் அவரிடமிருந்து எழுந்து விலகி அலைந்து தவம்புரிந்து பெற்றவை பல உண்டு. அவரிடமிருந்து நான் உளவிலக்கம் கொண்டதே மேலும் கற்கும்பொருட்டு ஊழ் என்னை உந்தியதால்தான் என எண்ணியதுமுண்டு. ஆனால் இன்று அறிகிறேன், எவையுமே அவரிலிருந்து அகன்று நான் அறிந்தவை அல்ல. அவர் அளித்த அடித்தளத்தின் மீது நான் அமைத்துக்கொண்டவையே அனைத்தும். மூவிழியனின் மலையுச்சியில் நான் பெற்ற பாசுபதம்கூட” என்றான். “உன்னில் ஒரு துளியேனும் எஞ்சுவதென ஏதுமில்லையா?” என்றார் இளைய யாதவர். “எதையும் என்னால் உணர இயலவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “எனில் செல்க! களமெழுந்து அவருடன் பொருதுகையில் அவர் அளித்த ஒவ்வொன்றையும் திருப்பிக்கொடு. அவரை நோக்கி எழும் ஒவ்வொரு அம்பும் முன்னர் உனக்கு அவர் அளித்ததாக இருக்கட்டும். பிறிதொரு முறை அதை நீ கையிலெடுக்கக் கூடாது. ஆசிரியரே இதோ இதை உங்களுக்கு அளிக்கிறேன். இதை மீளப் பெற்றுக்கொண்டு என்னை வாழ்த்துக என்று உரைத்து அம்பு தொடு.”

“ஒவ்வொரு அம்பாக செல்லட்டும். எய்து எய்து உன் ஆவநாழி முற்றொழியட்டும். அவர் அளிக்காத ஒரு அம்பு உன்னிடம் எஞ்சுமெனில் அதைக்கொண்டு நீ அவரை வெல்ல இயலும்” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “அதன் பின் என்னிடம் எஞ்சுவதென்ன? அவர் அளித்தவற்றால் நிறைந்திருப்பவன் நான்” என்றான். “அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களின் கொடையால் நிறைந்தவர்களே. ஆயினும் ஆசிரியர் அளிக்காத ஒன்றிலிருந்தே அவர்கள் தன்னைக் கண்டு எழ இயலும். அதனூடாகவே முழுமை கொள்ளவும் கூடும். இது தவமென்று எண்ணுக!” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் தலைவணங்கி தன் காண்டீபத்தை எடுத்துக்கொண்டான்.

ele1அர்ஜுனன் தேரில் சென்றுகொண்டிருக்கையிலேயே எதிரில் வந்த செய்திக்காவலன் “இளவரசே, துரோணர் பேரழிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். பன்னிரு மாயஅம்புகளால் அவர் களத்தை அறைந்தார். விண்ணிலிருந்து மலைகள் என பாறைகள் நம் படைகள் மேல் விழுந்தன. மண் அதிர்ந்து பெரும்குழியென்றாகி அங்கே நீர் பெருகிக்கொண்டிருக்கிறது. இறந்த உடல்கள் அனைத்தும் உடல் அதிர்ந்து செவிகள் வெடித்து குருதி வழிய முகம் வலித்து கிடக்கின்றன. அவருக்கு எதிர் நிற்க இயலாமல் நம் வீரர்கள் அனைவரும் பின்னடைந்துவிட்டனர். இப்போது வில்லவர் எவராலும் எதிர்க்கப்படாமல் அவர் களம் நின்று பொருதிக்கொண்டிருக்கிறார்” என்று கூவினான். “திருஷ்டத்யும்னர் என்ன செய்கிறார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அவர் இன்னும் எழவில்லை. உடலில் ஆழ்ந்த புண்கள் உள்ளன. கட்டுகள் போட்டு அகிபீனா அளித்து படுக்க வைத்திருக்கிறார்கள். நம் இளவரசர்கள் சுருதகீர்த்தியும் சுதசோமரும் சர்வதரும் புண்பட்டு பின் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். சாத்யகி சற்று முன்னர் களத்தில் புண்பட்டு வீழ்ந்தார். சிகண்டி தன்னினைவின்றி மருத்துவர் நடுவே கிடக்கிறார்” என்றான் செய்திக்காவலன்.

இளைய யாதவர் “இளையவர் மீண்டும் எப்போது அவரிடம் போருக்கு சென்றார்கள்?” என்றார். “களமுகப்பில் எவருமில்லை என்று கண்டு சர்வதரும் சுதசோமரும் சுருதசேனரும் சேர்ந்து அவரை எதிர்த்தனர். அரைநாழிகை பொழுதுகூட அவர் முன் நிற்க இயலவில்லை. அவர் எடுத்த மாய அம்பினால் யானை துதிக்கையால் தூக்கிச் சுழற்றப்பட்டதுபோல் சர்வதர் சென்று பின்னணியிலெங்கோ விழுந்தார். இரு கைகளாலும் தலையையும் காதுகளையும் அழுந்த பற்றிக்கொண்டு சுதசோமர் தேர்த்தட்டில் விழுந்து தன் தலையை ஓங்கி அறைந்துகொண்டு மயங்கினார். சுருதசேனர் வாயிலும் மூக்கிலும் செவியிலும் குருதி வழிய தேரிலிருந்து தாவி கீழே விழுந்து நினைவழிந்தார்” என்று செய்திக்காவலன் சொன்னான்.

இளைய யாதவரை நோக்கி “செல்க! முன்செல்க!” என்று வெறியுடன் அர்ஜுனன் கூவினான். “உன் போர்த்திட்டத்தை வகுத்துவிட்டாயா?” என்று இளைய யாதவர் கேட்டார். “எனது திட்டம் ஒன்றே. யாதவரே, நான் என் எஞ்சும் துளியை அவர் முன் வைக்கப்போகிறேன். அது என் ஆணவம் எனில் ஆணவம். நஞ்செனில் நஞ்சு. கீழ்மை எனில் கீழ்மை. அவர் காலடியை விழிசூடியே இன்றும் புலரி எழுகிறேன். ஆனால் அவரை விஞ்சிச்சென்றுவிட வேண்டுமென்ற ஆணவத்தாலேயே அவரிலிருந்து விலகி எழுந்தேன். அத்துளியை பெருக்கிக்கொள்ள வேண்டுமென்பதனாலேயே மலைகளிலும் பாலை நிலங்களிலும் அலைந்தேன். அவருக்கு மேல் என அடுக்கி வைக்கவே அரிய அம்புகளை பெற்றேன். அந்த ஆணவத்தைக்கொண்டு அவர் முன் நிறுத்துகிறேன். அது ஒன்றே என்னில் எஞ்சி நிற்பது” என்று அர்ஜுனன் கூவினான்.

இரு புறத்திலும் நகுலனும் சகதேவனும் தேரில் அவனை பின்தொடர்ந்து வந்தனர். சகதேவன் “இளையவரே, அவர் அரிய அம்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடன் தாங்கள் தனித்துப் போரிட வேண்டாம். தங்கள் சகடக்காவலென நாங்களிருவரும் வருகிறோம்” என்றான். அர்ஜுனன் “வருக!” என்று கைகாட்டிவிட்டு படைகளினூடாகச் சென்றான். ஆனால் சற்று நேரத்திலேயே முரசுகள் ஓசையிடத் தொடங்கின. “அங்கரை எதிர்கொள்க! பீமசேனர் தனித்திருக்கிறார்! அங்கரை எதிர்கொள்ள நம் படைகள் எழுக!” அர்ஜுனன் திரும்பி சகதேவனிடம் “நீங்களிருவரும் சென்று மூத்தவருக்கு துணை நில்லுங்கள். அங்கரால் அவர் வீழக்கூடாது” என்றான். நகுலன் “நாங்கள்…” என்று ஏதோ சொல்ல “இது என் ஆணை. செல்க! சென்று அவருக்கு துணை நில்லுங்கள்!” என்றான் அர்ஜுனன்.

சகதேவன் “சகடக்காவலர்கள் இருவரும் இன்றி தாங்கள் ஆசிரியர் முன் சென்று நிற்பது நன்றல்ல. தாங்கள் தனியர். இருபுறத்திலிருந்தும் சுழன்று வந்து தாக்கும் அம்புகளை அவர் கொண்டிருக்கிறார்” என்றான். அர்ஜுனன் “நான் எஞ்சியுள்ள இளமைந்தரை கூட்டிச்செல்கிறேன். செல்க!” என்றான். தலைவணங்கி நகுலனும் சகதேவனும் சென்றபின் அர்ஜுனனின் தேர் முன்னால் சென்றது. அர்ஜுனன் தேரில் நின்றபடியே கையசைத்து தன்னைத் தொடர்ந்து வந்த ஆணைக்காவலரிடம் “எஞ்சும் மைந்தர்கள் என்னுடன் எழுக! இருவர் உடன் எனக்கு ஆவக்காவலராக வருக!” என்றான். ஏவலர்கள் அவனிடமிருந்து விலகிச்சென்றனர். மிகத்தொலைவில் வெண்குடைபோல் புகை எழுந்து விண்ணில் கவிந்தது. பின் அது காற்றால் கரைத்து உருவழித்து அள்ளிச்செல்லப்பட்டது. அதன் பின்னரே செவி நடுக்குறும் அதன் வெடியோசை எழுந்தது. ஒருகணம் கழித்து வெட்டுண்ட கால் ஒன்று பெருந்தொடையுடன் வந்து அவர்களின் தேர் மகுடத்தில் விழுந்து குருதிச்சேற்றில் வழுக்கி கீழே உதிர்ந்தது.

அர்ஜுனன் “போரில் இதுகாறும் எவரும் இத்தகைய அம்புகளை எடுத்ததில்லை… இது மானுடருடன் போரிடவேண்டிய அம்பு அல்ல” என்றான். இளைய யாதவர் “தோளிலும் நாணிலும் நம்பிக்கை இழக்கும்போது இத்தகைய பேரம்புகள் எழுந்து வருகின்றன. பார்த்தா, அவரைக் கொல்லும் அம்பு உன் தோளிலிருந்து மட்டுமே விசையேற்றுக் கொண்டிருக்கவேண்டும்” என்றார். ஆணைக்காவலன் விரைந்தோடி வந்து “அரசமைந்தர்கள் நிர்மித்ரரும் சர்வதரும் மட்டுமே இங்கிருக்கிறார்கள். சதானீகர் பீமசேனருடன் துணை நின்று போரிடுகிறார். பிரதிவிந்தியர் தந்தையுடன் நின்றிருக்கிறார்” என்றான். “எனில் அவர்கள் வரட்டும். அவர்கள் உடன் வருக!” என்றபடி அர்ஜுனன் மேலும் விரைவைக் கூட்டி முன்னால் சென்றான். “சர்வதர் களைத்திருக்கிறார்… புண்பட்டிருக்கிறார்” என்றான் ஆணைக்காவலன். “வேறு வழியில்லை” என்றான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் தேர் துரோணரை அணுகியபோது பின்னணியில் இருந்த படைப்பெருக்கிலிருந்து விசைகொண்ட தேர்களில் நிர்மித்ரனும் சர்வதனும் வந்து அவனுடன் இணைந்துகொண்டனர். “இருவரும் என் இரு பக்கங்களையும் காத்துக்கொள்க! நான் அறியாத அம்புகள் எவையேனும் இரு திசைகளிலுமிருந்து என்னை அணுகுமென்றால் அவற்றை அறைந்து வீழ்த்துக! முன்னால் வரவேண்டாம். ஆசிரியரின் அம்பு எல்லைக்குள் நுழையவேண்டாம்” என்று அர்ஜுனன் ஆணையிட்டான். அம்புகளை விடாது தொடுத்தபடி சென்று துரோணரின் போர்வளையத்திற்குள் நுழைந்தான். அவனுடைய சகட ஓசை உரக்க எழ அஞ்சி கூச்சலிட்டு சிதறி ஓடிக்கொண்டிருந்த பாண்டவ வீரர்கள் கூச்சலிட்டனர்.

அப்பால் நாண் துடிக்க அம்புகளை செலுத்தி பாண்டவப் படையை கொன்று வீழ்த்திக்கொண்டிருந்த துரோணர் அதை கேட்டார். திரும்பி உரக்க நகைத்தபடி “மீண்டு வந்துள்ளாயா? எடு உன் அரிய அம்புகளை. எடு, மூடா” என்று கூவினார். கைசுட்டி தன் முன் கருகி புகைந்து கொண்டிருந்த களத்தை காட்டி “இதைப்போல் என் களத்தை எரியவைக்கும் அம்பிருந்தால் எடு!” என்று கூவினார். அவரைச் சூழ்ந்து கிடந்த மானுட உடல்கள் ஒன்றுகூட முழுவடிவில் இல்லையென்பதை அர்ஜுனன் கண்டான். ஆயிரம் வாள்களால் கொத்தி துண்டுகளாக்கி வானிலிருந்து அள்ளி வீசப்பட்டதுபோல் கிடந்தன கைகளும் கால்களும் நெஞ்சுகளும் தலைகளும். அவன் உடல் குளிர்ந்து செயலழிந்தது. உள்ளம் விசைகொண்டு எழுந்து உடற்தசைகளை அறைந்தது. அவன் விலங்குபோல வெறிக்கூச்சலிட்டான்.

ஆவநாழியில் கைவிட்டெடுத்த முதல் அம்பை அர்ஜுனன் நினைவுகூர்ந்தான். கிருபரின் பயிற்சிநிலைக்கு படைக்கலப் பூசனை நாளில் வந்த துரோணரை கால்தொட்டு வணங்கி எழுந்தபோது அவர் புன்னகையுடன் குனிந்து அவனுக்கு அளித்த முதல் அம்பு அது. அவன் அதன் முனையை தொடப்போக “அம்புமுனையை விழிகளாலேயே தொடவேண்டும்” என்று அவர் சொன்னார். அர்ஜுனன் அம்பை நாணில் பொருத்தி இழுத்துச் சிரித்தபடி சுழன்று மூன்று திசையிலும் இலக்குகளுக்காக தேடினான். அங்கு நின்றிருந்த குந்தியும் திருதராஷ்டிரரும் பீஷ்மரும் படைத்தலைவர்களும் உரக்க நகைத்து அஞ்சுவதுபோல் கைகாட்டி பின்னடைந்தனர். திருதராஷ்டிரர் “குறி பார்க்கிறானா? மைந்தா, இதோ என்னை குறி பார். என் நெஞ்சுக்கு வருக உன் அம்பு!” என்று சிரித்தபடி தலையை அசைத்தார்.

அர்ஜுனன் திரும்பி பீஷ்மரை நோக்கி அம்பை ஏவினான். கிளை உலுக்கி எழுந்து செல்லும் சிறிய பறவைபோல் அது அவரை நோக்கி செல்ல அவர் சிரித்தபடி வலக்கையால் அந்த அம்பை காற்றிலேயே பற்றி கையிலெடுத்தார். “நீங்கள் அளித்த முதல் அம்பு, பெரும்பாலும் இலக்கடைந்துவிட்டது, துரோணரே” என்றார். “தந்தை நெஞ்சில் உதைக்காமல் தாவ இயலுமா?” என்றார் கிருபர். துரோணர் உரக்க நகைத்து இன்னொரு அம்பை அவனிடம் கொடுத்து “இது இன்னும் பெரியது… இதை ஏவுக!” என்றார். அவ்விரண்டாவது அம்பை அவன் துரோணரை நோக்கி செலுத்த அவர் அதை கையால் பற்றினார். கிருபர் புன்னகையுடன் “நன்று. ஆசிரியரின் நெஞ்சை நோக்கி முதல் அம்பை எய்பவன் அவரைக் கடந்து செல்வான்” என்றார்.

அந்த இரண்டாவது அம்பு கையில் திகழ்வதை அர்ஜுனன் அறிந்தான். அவர் சொன்னவை ஒவ்வொரு சொல்லாக அம்பென எழுந்துகொண்டிருந்தன. அவர் உரைத்த கொள்கைகள், தோள்தொட்டு வில்நிறுத்தி தழுவியதுபோல் அவனுக்குப் பின்னால் நின்று செவியிலெனச் சொன்ன மந்தணங்கள், அந்திக் கருக்கிருளில் அருகிருத்தி மரவுரியால் அவனையும் தன்னையும் போர்த்தி செவியில் உரைத்த நுண்சொற்கள். இருளுருகி ஓடும் கங்கையில் நீந்துகையில், தலைதுவட்டுகையில், ஆடை பிழிந்து உலர்த்துகையில், வீசும் புலரிக்காற்றில் உடல் நடுக்குற திரும்பி வருகையில், முதற்புலரி ஒளியில் குடில் முற்றத்தில் அமர்ந்து சொல்லாய்கையில் அவர் கூறிய ஒவ்வொரு அம்பையும் அவரை நோக்கி அவன் எய்தான்.

ஆசிரியரே, இது உங்களுக்கு. ஆசிரியரே, இவற்றை கொள்க! இனி இவை என்னில் எஞ்சவேண்டியதில்லை! ஆசிரியரே, இதோ என் கடன்கள் ஒவ்வொன்றையும் தீர்க்கிறேன். ஆசிரியரே, தாங்கள் அளித்த ஒவ்வொன்றும் இதோ மீள்கின்றன. உங்களுக்குள் இருந்து என்னை இழுத்து அகற்றுக! அவ்விடத்தில் இந்த அம்பை நிறைத்துக்கொள்க! நூறு அம்புகள். ஒவ்வொரு அம்பும் வினாவாகி எழுப்பிய பல்லாயிரம் பல்லாயிரம் அம்புகள். ஒவ்வொரு விடையும் வளர்ந்து பெருகிய பல இலக்கம் அம்புகள். அம்புநிலம், அதில் வாழ்ந்தேன். அம்புவானம், அதில் எழுந்தேன். அம்புகளின் காடு. அம்புகள் இலைகளென எழுந்த மரத்தடியில் ஊழ்கம் செய்தேன். ஆசிரியரே, இவற்றை உங்களால் எளிதில் முறித்தெறிய இயலும். எஞ்சுவதொன்று உண்டு. நீங்கள் மறுமொழி இயற்ற முடியாத வினா அது. நீங்கள் ஒருபோதும் அறிந்திராத அர்ஜுனனை காட்டும் அம்பு.

அவன் துயில்கையில் அருகணைந்து குனிந்து செவிகளில் அவர் சொன்ன அம்புகள். அவன் கனவுக்குள் எழுந்து அவர் கற்பித்த அம்புகள். அவன் அகன்றிருக்கையில் அஸ்வத்தாமனுக்கு மட்டுமென அவர் கற்பித்தவை. அப்போது அவன் அங்கிருக்க வேண்டுமென ஆழுளம் விழைய அவ்விழைவை தொட்டெழுப்பி அவன் அங்கு செல்லாமலேயே எங்கிருந்தோ உணர்ந்துகொண்டவை. அவர் உடலசைவுகளில், கைக்கரவுகளில் இருந்து கற்பதறியாமலே அவன் கற்றுக்கொண்டவை. தன்னிடம் உள்ளதென்றே அவன் அறிந்திராதவை. என்று வந்தது, எங்கிருந்தது, எவரிடம் இருந்து பெற்றது என்று அறியாமல் எழுபவை. ஆசிரியரே, இவை ஒவ்வொன்றும் உங்களுக்குரியவை. உங்களுக்குள் இவை இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொன்றும் நீங்கள் உங்களை அறியும் கணங்கள் என்று அமைக!

துரோணர் அவ்வம்புகளை முதலில் புன்னகையுடன், பின்னர் எரிச்சலுடன், பின்னர் மெல்லிய சலிப்புடன் எதிர்கொண்டார். அறியா அம்புகள் முன் சற்றே திகைத்தார். வியப்புற்று, பின் சீற்றமடைந்து, பின்னர் சினம் பெருக உடல் துடிக்க அவற்றை அறைந்து வீழ்த்தினார். அர்ஜுனன் தன் ஆவநாழியில் கைவிட்டு திகைத்து அசையாமல் நின்றான். “எடு அதை. எய்து வீழ்த்து. இதோ அத்தருணம்!” என்று துரோணரை கைசுட்டி இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனனின் உடல் கண்ணுக்குத் தெரியா சரடுகளால் கட்டுண்டதுபோல் அசைவிழந்து அதிர்ந்தது. துரோணர் உரக்க நகைத்தபடி “அவ்வளவுதானா? இனி எஞ்சுவது ஒன்றில்லையா? நீ கற்றது பிறிதென்ன?” என்று கூவினார். வெறியுடன் நகைத்தபடி “மூடா, இதோ என்னில் எஞ்சியுள்ளது நீ அறியாத ஓர் அம்பு. எந்த ஆசிரியனும் தனக்கென கரந்துவைக்கும் ஒரு துளி. இந்த அம்பின் பெயர் என்னவென்று இன்னமும் தெய்வங்கள் முடிவு செய்யவில்லை!” என்று அவனை நோக்கி அம்பொன்றை எய்தார்.

அர்ஜுனனின் தேருக்கடியில் பாய்ந்து சென்று பேரோசையுடன் வெடித்து தேரை மண்ணிலிருந்து ஆளுயரத்திற்குத் தூக்கி அப்பால் வீசியது அது. இளைய யாதவர் தேரிலிருந்து மறுதிசை நோக்கி பாய்ந்தெழுந்து அப்பால் சென்று கால் பதித்து விழுந்து சுழன்றெழுந்தார். தேருடன் அர்ஜுனன் விழுந்து அதன் முறிவுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டான். அவனை நோக்கி வில்லுடன் பாய முற்பட்ட நிர்மித்ரனை துரோணர் அம்பால் அறைந்து தூக்கி அப்பாலிட்டார். சர்வதனை அறைந்து மண்ணில் வீழ்த்தினார். பேரம்பொன்றை எடுத்து அர்ஜுனனை நோக்கி குறிவைத்து “இது என் மூதாதையரும் அறியாதது. இது என்னை ஆக்கிய தெய்வங்களும் அறியாதது. இதை மண்ணில் எவரும் எதிர்கொள்ள இயலாது. எய்தபின் நானே தடுக்க இயலாது” என்றபின் விலங்குபோல் ஓசையிட்டபடி அதை அவனை நோக்கி எய்தார்.

இளைய யாதவர் “அஸ்வத்தாமன் என்று கூவு! அஸ்வத்தாமன் என்று கூவு!” என்று அர்ஜுனனை நோக்கி குரலெழுப்பினார். அர்ஜுனன் “அஸ்வத்தாமன்! அஸ்வத்தாமன்!” என்று கூறினான். அந்த அம்பு தேரை மீண்டும் தாக்கி தூக்கி அப்பால் வீச அதிலிருந்து உதிர்பவன்போல் அர்ஜுனன் நிலத்தில் விழுந்தான். அவன் கவசங்களைக் கட்டிய தோல்பட்டைகளும் ஆடைகளும் தீப்பற்றிக்கொண்டன. அவன் பாய்ந்து ஓடி குருதிச் சேற்றில் விழுந்துருண்டு அதை அணைத்தான். பொசுங்கி புகையெழுந்த உடலுடன் அவன் பாண்டவப் படைவிரிவை நோக்கி ஓட துரோணர் தன் முகத்தில் படிந்த புழுதியை உதடுகுவித்து துப்பிவிட்டு வில்லைத் தூக்கியபடி மறுபுறம் திரும்பிக்கொண்டார். தேரை கைவிட்டுவிட்டு இளைய யாதவர் அவர் செல்வதை நோக்கி இடையில் கைவைத்து நின்றார்.

நூல் இருபது – கார்கடல் – 79

ele1முதல் அம்பிலேயே துரோணர் தன் முழு ஆற்றலையும் காட்டினார். அந்த நீளம்பு சென்று அறைந்த பாஞ்சால வில்லவன் தேரிலிருந்து தெறித்து பின்னால் சென்றுவிழ அவனை நிலத்துடன் குத்தி நிறுத்தி ஆடியது அது. பாஞ்சால வீரர்கள் ஒருகணம் திகைத்த பின்னர் வெறியுடன் கூச்சலிட்டபடி துரோணரை நோக்கி பாய்ந்தார்கள். துரோணர் அன்று முற்றிலும் வேறொருவராக எழுந்திருந்தார். அவர் பற்கள் தெரியச் சிரிப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவருடைய கைகளில் இருந்து எழுந்த அம்புகளில் முன்பெப்போதும் இல்லாத விசை இருந்தது. அவை சென்று அறைந்த தேர்கள் சிம்புகளாக தெறித்தன. புரவிகளின் உடலில் பாய்ந்த அம்புகள் மறுபக்கம் செந்நிற மீன் என முனைநீட்டின. மத்தகம் ஒன்றில் சென்று தறைத்த அம்பு அந்த யானையை தூண்கள் சரிந்த கல்மண்டபம் என அசையச்செய்து பக்கவாட்டில் சரித்தது.

“செல்க… சூழ்ந்துகொள்க!” என்று கூவியபடி திருஷ்டத்யும்னன் துரோணரை தாக்கினான். அவனுள் அத்தனை நாண்களும் தளர்ந்து அவிழ்ந்துகிடந்தன. அங்கே தலைகொடுத்து விழப்போவதாகவே தோன்றியது. “கொல்க! ஆசிரியரல்ல அவர், நம் அரசரின் குருதிகுடித்த பேயுரு. நம் குலக்கொழுந்துகளை கொன்றழித்த அரக்கன்… கொல்லுங்கள்… கொன்று முன்னேறுங்கள்!” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். அக்கூச்சலை அவனுள் உறைந்த புண்கள் ஏற்றுவாங்கி எரிந்தேறின. அவன் நரம்புகள் அமிலம் கொண்டன. தசைகள் முறுக்கேறி துடிக்க அவன் நீளம்புகளை எடுத்து துரோணரை அறைந்தான். “கொல்லுங்கள்! கொன்றுசெல்லுங்கள்!” என கூவிக்கொண்டே இருந்தான்.

துரோணரை எதிர்த்து அம்புகளை பெய்தபடி “எந்தையின் குருதிக்கென வந்துள்ளேன்… நீ அந்தணன் என்றால் இரந்துபெறுக உன் உயிரை!” என்று கூவினான். “பொன்னுக்கும் மண்ணுக்கும் விழைவுகொண்டு வேதச்சொல் துறந்த கீழ்மகன் நீ. உன் குருதியிலாடிய என் அம்பை உருக்கி வேள்விக்கரண்டி செய்வேன். எங்கள் நாட்டு வேள்விகளில் பன்னீராயிரம் முறை அவியில் நெய்யூற்றி அது உனது கடன் கழிக்கும்… கீழ்மகனே, எழுக உன் ஆண்மை… உனது தெய்வங்களால் கைவிடப்படுவதை நீ காண்பாய்…” என்று திருஷ்டத்யும்னன் கூவினான்.

அந்த ஒவ்வொரு பழியுரையும் அவன் சினத்தை மேலும் மேலும் கிளர்த்தி உச்சவெறிகொண்டு எழச்செய்தது. அதனூடாக அவன் தன்னை பெருக்கிக்கொண்டான். கைகளாயிரம் விழிகள் பல்லாயிரமென களத்தில் எழுந்தான். ஆனால் பிறிதோரிடத்தில் அவனுள் உள்ளம் சுருண்டு பின்னடைந்துகொண்டே இருந்தது. “நேற்று உன் தந்தையைக் கொன்ற அம்பின் உடன்பிறப்பு என் ஆவநாழியில் உள்ளது. உன்னை அந்த அம்பால் கொல்கிறேன். உன் குடியில் எஞ்சிய மைந்தனை என் மைந்தன் கொன்றழிப்பான். கீழ்பிறப்பே, நீ யார்? அனலிடைப் பிறந்தவன் என்றால் என் அம்புக்கு எதிர்நில். காட்டரக்கர் வீசிச்சென்ற மைந்தன் என்றால் தப்பி ஓடு” என்று துரோணர் கூவினார்.

அந்தக் குரலில் இருந்த வெறியிலிருந்து திருஷ்டத்யும்னன் ஒன்றை உணர்ந்தான், அவரும் தன்னைப்போலவே உள்ளம் சுருண்டுவிட்டிருக்கிறார். சொல்லிச்சொல்லி அனலை ஏற்றிக்கொள்கிறார். அது அவனுக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. “நான் இக்களத்தில் உன்னை கொல்வேன். இரந்து பெற்ற மண்ணை ஆளும் உனது மைந்தனை நாளை கொல்வேன். பாஞ்சாலம் விடுதலைகொள்ளும்… எங்கள் மண்சூடிய இழிவு அகலும்” என்று திருஷ்டத்யும்னன் கூச்சலிட்டான். “இரந்து பெற்ற மண்ணை ஆளும் அந்த நெறியிலா அந்தணனால் கறைபடிந்த மண்ணை உனது குடியின் குருதிகொண்டு கழுவுகிறேன்…”

அஸ்வத்தாமனைப் பற்றிய குறிப்பு துரோணரை உச்சவெறிகொண்டு எழச்செய்தது. “ஆணிலியே, கீழ்மகனே” என்று கூவியபடி அவர் மேலும் மேலும் அம்புகளால் திருஷ்டத்யும்னனை தாக்கினார். அவன் அந்த அம்புகளை அம்புகளால் முறித்தான். அவருடைய கவசங்கள் மேல் அம்புகளால் அறைந்தான். அவருடைய தேர்ப்புரவிகளில் ஒன்றின் கழுத்தை அறுத்தான். அவனுடைய வெறிக்கு இடம்கொடுத்து அவர் மேலும் மேலும் பின்னடைந்தார். அவர் பின்னடைவது இயல்பாக இல்லை என உணர்ந்தாலும் அவனை அது கிளர்ச்சிகொள்ளச் செய்தது. அவரை அறைந்து கவசங்களை உடைத்தான். அவர் இருமுறை அவன் அம்புகளிலிருந்து தப்ப தாவிப் பின்னடைந்து தேரிலிருந்து தொங்கிச்சுழன்று மேலெழுந்தார். ஒரு புள்ளியில் அவன் உள்ளம் அதுவே எல்லை என உணர்ந்த கணமே அவருடைய அம்பு வந்து அவனை அறைந்தது. அவன் அந்த அதிர்வில் நிலைகுலைந்த கணம் மேலும் மேலும் அம்புகள் வந்து அவன் கவசங்களை பிளந்தன.

பாகன் தேரை பின்னெடுக்க “மூடா! முன்னேறு… முன்னேறு… இன்றே இவனைக் கொன்று திரும்புவேன்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். தேரைத் திருப்பவா வேண்டாமா என பாகன் தயங்க “முன்னேறு… முன்னேறு” என்று திருஷ்டத்யும்னன் அவனை உதைத்தான். பாகன் தேரை முன்னெடுத்த கணத்தில் பிறையம்பால் அவன் தலையை அறுத்தெறிந்தார் துரோணர். புரவிகளில் ஒன்று வெட்டுண்டு சரிந்தது. பிற புரவிகள் நிலையழிய தேர் சரிந்தபடி சென்றது. அவன் தாவுவதற்குள் வில்லின் நாண் அறுந்தது. அவன் ஆவக்காவலன் அலறியபடி விழுந்தான். அவன் தன் கதையை எடுத்துக்கொண்டு அலறியபடி முட்டிமோதிய புரவிகளின் முதுகில் கால்வைத்து தாவி நிலத்தில் இறங்கிய கணம் அவன் கழுத்தருகே துரோணரின் மெல்லிய அம்பு ஒன்று தைத்தது.

திருஷ்டத்யும்னனின் உடல் குளிர்கொண்டது. அத்தனை நரம்புகளும் இழுத்துக்கொண்டு அதிர செவிகளில் மூளலோசையை கேட்டான். மூக்கில் முடிபொசுங்கும் கெடுமணம் எழுந்தது. கண்களில் தெரிந்த காட்சிகள் வண்ண அலைகளாயின. அவன் கையை ஊன்றி எழ முயன்றான். அவ்வெண்ணத்தை அவன் உடல் அறியவேயில்லை. அச்சத்துடன் அவன் தன் உடலை உள்ளத்தால் உலுக்கினான். கால்களையும் கைகளையும் அறைந்து கொண்டான். உடல் பிணமெனக் குளிர்ந்துகிடக்க அதில் சிக்கிக்கொண்ட மெல்லிய ஆடைபோல் சித்தம் தவித்துப் பறந்தது. துரோணர் கொக்கி அம்பு ஒன்றை ஏவி அவன் கவசத்தில் அதை சிக்கவைத்தார். அதனுடன் இணைந்த சரடைப்பற்றி இழுத்து அவனை அருகில் கொண்டு சென்றார். கையால் சரடைப்பற்றிச் சுழற்றி தன் தேர்த்தூணில் கட்டினார்.

திருஷ்டத்யும்னன் சிக்கிக்கொண்டதைக் கண்டு வில்லுடன் வந்த பாஞ்சால வீரர்களை அம்புகளால் அறைந்து அறைந்து வீழ்த்தியபடி தேரைப் பின்னிழுத்து கொண்டுசென்றார். அவன் தேர்க்காலில் கட்டப்பட்டு தரையில் இழுபட்டு உடன்சென்றான். தன் உடல் உடைந்த சகடங்கள்மேலும் விழுந்துகிடந்த உடல்கள் மீதும் முட்டி மோதி எழுந்தமைந்து செல்வதை அவ்வுடலுக்குள் இருந்தபடி அவன் பதைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். “துரோணரே, என்னை கொல்லுங்கள்… என்னை கொல்லுங்கள்! வீரனுக்குரிய இறப்பை எனக்கு அளியுங்கள்!” என்று அவன் கூவினான். அவன் நா அச்சொற்களை அறியவில்லை. அவனால் தன் மூச்சையே அசைக்க முடியவில்லை. “என்னை கொல்க! என்னை கொல்க!” என அவன் கூவிக்கொண்டே இருந்தான்.

ele1அப்பால் சிகண்டியின் சங்கொலி எழுந்ததை துரோணர் கேட்டார். “பாஞ்சாலர் சிகண்டி!” என எவரோ கூச்சலிட்டார்கள். வாய்விட்டு நகைத்தபடி துரோணர் திரும்பி சிகண்டியை எதிர்கொண்டார். “ஆசிரியரே, இது முறையல்ல. தாங்கள் இயற்றக்கூடும் செயலல்ல இது… அவனை விட்டுவிடுங்கள்!” என்று சிகண்டி கூவினார். “அவன் தன் சொற்களின் பொருளென்ன என்று உணரட்டும். இது ஒரு நல்ல ஊழ்கம்” என்று துரோணர் கூவி நகைத்தார். சிகண்டி அவரை நீளம்புகளால் அறைந்தார். அத்தனை அம்புகளையும் துரோணர் தன் அம்புகளால் எதிர்த்து உடைத்தெறிந்தார். அவருடைய அம்புவளையத்திற்குள் ஓர் அம்பைக்கூடச் செலுத்த சிகண்டியால் இயலவில்லை. துரோணரின் தேர் முன்னெழுந்து செல்ல தேர்க்காலில் இழுபட்ட திருஷ்டத்யும்னனின் உடல் துவண்டு துணிச்சுருள்போல அலைக்கழிந்தது.

“ஆசிரியரே, இது அறமல்ல. இதன் இழிவு உங்களை என்றும் தொடரும்… வேண்டாம். அவனை விட்டுவிடுங்கள்!” என்று சிகண்டி அழுகையுடன் கூவினார். “அறத்தை நீ எனக்குக் கற்பிக்கிறாயா? கீழ்மகனே, உன் அறத்தின் சான்றென அங்கே கிடக்கிறார் குருகுலத்துப் பிதாமகர்” என்று துரோணர் சொன்னார். சிகண்டி “அதன் கதை முழுக்க நீங்களே அறிவீர்கள், ஆசிரியரே. இது அதுவல்ல. கீழே கிடப்பவன் உங்கள் மாணவன், உங்கள் உளமைந்தன்” என்றார். அச்சொல் துரோணரை மேலும் சினம்கொள்ளச் செய்தது. “அச்சமிருந்தால் ஓடிவிலகு, ஆணிலி. இளையோன் உயிருக்கெனக் கெஞ்சி பேடியருக்கும் பழிசேர்க்காதே” என்றார்.

சிகண்டி பன்றிபோல் உறுமலோசை எழுப்பியபடி வில்குலைத்து அம்புகளால் அவரைத் தாக்கியபடி முன்னெழுந்தார். அவருடைய அம்புகள் அவர் உடலெங்கும் தைத்தன. தலையைத் தாழ்த்தி முகத்தை நீட்டி அணுகிய அவர் சிலிர்த்த முட்பன்றி எனத் தோன்றினார். அவருடைய அம்புகளால் துரோணரின் தேர்த்தூண்கள் உடைந்தன. அவருடைய கவசங்கள் தெறித்தன. வில் உடைந்தபோது துரோணர் பாய்ந்து பின்னடைந்து பிறிதொரு வில்லுடன் எழுந்தார். சிகண்டி அவருடைய வெறியால் மிக அருகே வந்துவிட்டிருந்தார். அவருடைய அம்புகளின் விசையால் துரோணரின் தேர் அசைந்தது. துரோணர் அந்த அணுக்கத்தால் சற்று நிலையழிய சிகண்டி அவர் வில்லை முறித்தார். ஆவக்காவலன் தலையறுந்து விழுந்தான். தேர்ப்பாகன் நெஞ்சில் பாய்ந்த அம்புடன் சரிய துரோணர் பாய்ந்து ஓடி இன்னொரு தேரிலேறிக்கொண்டார்.

சிகண்டி குனிந்து தேர்க்காலில் கட்டுண்டிருந்த திருஷ்டத்யும்னனை விடுவிக்க முயன்றபோது அவர் கைகளை துரோணர் அம்புகளால் அறைந்தார். சிகண்டியின் நெஞ்சிலும் தோளிலும் துரோணரின் அம்புகள் பாய்ந்தன. சிகண்டி தேரிலிருந்து தரையில் விழுந்து சடலமொன்றை அள்ளி தன்மேல் இட்டுக்கொண்டார். அதன்மேல் அம்புகள் வந்து தறைத்து நின்றன. அப்பாலிருந்து கொக்கிக் கயிற்றை வீசி சிகண்டியை பற்றி இழுத்து எடுத்தனர். அவர் உடலில் இருந்து குருதிவழிய நினைவழிந்திருந்தார். துரோணர் அம்புகளைத் தொடுத்து பாஞ்சாலர்களை அப்பால் நிறுத்தியபடி திருஷ்டத்யும்னனை எவரும் அணுகாமல் காத்து நின்றார்.

தொலைவில் பாண்டவ முரசுகள் ஒலித்தன. “பாஞ்சாலத்து இளவரசனைக் காக்க படைகள் எழுக! முதன்மை வில்லவர் களம்புகுக!” இருபுறத்திலிருந்தும் சுருதகீர்த்தியும் சாத்யகியும் அம்புகளை பெருக்கியபடி துரோணரை நோக்கி வந்தனர். துரோணர் தன் அம்புகளால் சுருதகீர்த்தியின் அம்புகளை தடுக்க அவரை வலமிருந்து சாத்யகி தாக்கினான். அம்புகள் எழுந்து எழுந்து அறைய, காற்றுவெளியெங்கும் உலோகமின்னொளிகள் மணியோசையுடன் நிறைந்திருக்க துரோணர் மெல்ல சுருதகீர்த்தி அர்ஜுனனுக்கு நிகரானவன் என்று உணர்ந்தார். இளமையின் கட்டின்மை அவனை மேலும் விசைகொண்டவனாக ஆக்கியது. அவருடைய எந்த அம்பும் அவனை சென்றடையவில்லை. அவன் செலுத்திய அம்புகளால் அவர் தேர் உடைந்துகொண்டிருந்தது.

அவனுடன் போரிட்டுக்கொண்டிருக்கையில் மெல்ல மெல்ல இளமை என்றால் என்ன என்று துரோணர் உணர்ந்தார். அர்ஜுனனைப்போன்ற தெய்வத்தன்மைகொண்ட வில்லவனே எனினும் அவன் வில்லின் கணக்குகளை உய்த்துணர முடியும். கரை உயர்ந்த நிகர்நிலத்துப் பெருநதிபோன்றவன் அவன். சுருதகீர்த்தி மலையிறங்கும் காட்டாறு. ஒவ்வொரு கணமும் அவன் புதிதெனத் திகழ்ந்தான். அனைத்து வழிகளினூடாகவும் பெருக்கெடுத்தான். ஒவ்வொரு அம்பினாலும் அவன் அவரை திகைக்கச்செய்தான். அவர் முதலில் சாத்யகிக்கும் அவனுக்கும் தன் விழிகளையும் உள்ளத்தையும் பகிர்ந்து அளித்திருந்தார். மெல்ல மெல்ல அவருடைய முழுதுளமும் அவனை நோக்கி திரும்பியது. இரு கைகளாலும் அவனை அவர் எதிர்கொண்டார்.

அவர் அவனை அம்புகளால் புரிந்துகொள்ள முயன்றார். ஒவ்வொரு அம்பும் ஒரு வினா என எழுந்தது. ஆனால் ஒவ்வொரு விடையும் முன்பிலாததாக வந்தது. அவற்றிலிருந்து அவனைச் சென்றடையும் வழியை அவரால் தொகுத்துக்கொள்ள இயலவில்லை. அவர் உள்ளம் அதனால் சீற்றம்கொண்டது. சலியாத அம்புகளால் அவனை அறைந்தார். பின்னர் உணர்ந்தார், அவன் உள்ளம் செயல்படும் ஒழுங்கை கண்டடைவதற்கு முயன்றமையாலேயே அவர் தோற்றுச்சரிகிறார் என. அவன் உள்ளத்தில் எந்த ஒழுங்கும் இல்லை. அவனைச் சென்றடைவதற்குரிய வழியை தானாகவே உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான் இயல்வது. அவர் தன் அம்புப்பெருக்கில் தான் உருவாக்கிக்கொண்ட ஒழுங்கு ஒன்றை தொட்டறிய முயன்றார். ஆற்றுப்பெருக்கை பாறைகளினூடாகக் கடக்கையில் விழி சமைத்துக்கொள்ளும் காலடிப்பாதை என. பல்லாயிரம் அம்புகளினூடாக ஒரு நீள் சரடு சென்று அவனை தொட்டது.

அவர் உள்ளம் எக்களிப்படைந்தது. அதனூடாக அவர் அவன் உருவாக்கிய அம்புவளையத்தை உடைத்து உட்புகுந்தார். அவனை அறைந்து நிலைகுலையச் செய்தார். அவன் கவசங்கள் உடைந்தன. அவன் திகைத்து பின்னடைய அவர் உள்ளம் எக்களிப்பில் எழுந்தது. அத்தனை இளையோரும் துவாரகையின் யாதவனே. இதோ நான் அவனை வென்றுவிட்டிருக்கிறேன். நான் உன்னை வென்றேன். யாதவனே, ஒருகணமும் முன்பிலாதபடி திகழும் உன் மாயத்தை வென்றுவிட்டிருக்கிறேன். என் முதுமையின் தொலைவைக் கடந்து உன்னை வந்தடைந்துவிட்டேன். இதோ இதோ இதோ. அக்கணத்தை பயன்படுத்திக்கொண்டு சாத்யகி அவரை அறைந்தான். அவருடைய தேர்ப்பாகன் அம்புபட்டு விழ புரவிகளில் ஒன்று சரிந்தது. சாத்யகி தேரிலிருந்து பாய்ந்திறங்கி தலைகுனிந்தபடி ஓடி தன் வாளால் திருஷ்டத்யும்னன் கட்டப்பட்டிருந்த சரடை வெட்டி அறுத்து அவனைத் தூக்கித் தன் தோளிலிட்டபடி தேரை நோக்கி ஓடினான். துரோணர் அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் சுருதகீர்த்தியை நோக்கி அம்புகளை செலுத்திக்கொண்டிருந்தன. சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் தேரிலேறிக்கொண்டு பின்னடைய கவசப்படை எழுந்து வந்து அவன் தேரை மூடிக்கொண்டது.

தேர்த்தட்டில் முழங்காலிட்டு விழுந்த சுருதகீர்த்தியின் தலைக்கவசத்தை துரோணர் உடைத்தார். “இளையோனே, சென்று சொல் உன் தந்தையிடம். வில்லுடன் அவனை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன் என்று. அவனிலெழுந்து அவனை முந்திய உன்னை இதோ வென்றிருக்கிறேன். உனக்கு உயிர்க்கொடை அளித்திருக்கிறேன். செல்க, உன் தந்தையிடம் சொல்க, அவனுக்கு நான் உயிர்க்கொடை அளிக்கப்போவதில்லை என!” என்றார் துரோணர். அவருடைய அம்புகள் அறைந்து அறைந்து சுருதகீர்த்தியை தேர்த்தட்டிலிருந்து எழமுடியாமலாக்கின. அவன் பாகன் தேரை பின்னுக்குக் கொண்டுசென்று மையப்படைக்குள் புதைந்துகொண்டான். நாணொலி எழுப்பியபடி துரோணர் அர்ஜுனனை நோக்கி சென்றார்.

ele1அர்ஜுனன் தொலைவிலேயே துரோணரின் நாணொலியை கேட்டான். “பார்த்தா, ஆசிரியர் முழுவிசையுடன் எழுந்திருக்கிறார்” என்று இளைய யாதவர் சொன்னார். “எதிர்கொள்க… இன்றே அதற்குரிய நாள்!” அர்ஜுனன் நாணொலி எழுப்பியபடி துரோணரை நோக்கி சென்றான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணுகுவதைக் கண்டு இரு தரப்பின் வீரர்களும் வாழ்த்தொலி எழுப்பி படைக்கலங்களை வீசினர். சங்குகளும் முழவுகளும் முழங்கின. அவர்களின் விரைவுக்கு மேல் எழுந்தது அவர்களின் உள்ளம். உள்ளத்திலிருந்து தெறித்தவை என இரு அம்புகள் வானிலெழுந்து ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. ஒன்றை ஒன்று நுனிக்கூர் தொட்டு அறிந்தன. இரு பொருட்கள் தொட்டுக்கொள்வதிலேயே குறைந்த இடத்தில். விண்ணவரே உணருமளவுக்கு சிறுபுள்ளியில். குறைந்தஅளவு தொட்டுக்கொள்வனவே முழுமையாக உணர்கின்றன போலும்.

அரசே, நான் இப்போது அவர்களின் போரின் உச்சநிலையையே காண்கிறேன். அது உச்சநிலையிலேயே தொடங்கியது. ஓர் அணுவும் முன்னகர இயலாது அங்கேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சரபஞ்சரம் என்று நூலோர் சொல்லும் அம்புவலைக்கூடு. அதற்குள் அவர்கள் இருவரும் கைகள் சிறகுகளாக வீச பறந்து சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அர்ஜுனன் தன் ஒவ்வொரு அம்பை எடுக்கும்போதும் அதை அவர் முதலில் கற்பித்த தருணத்தை நினைவுகூர்ந்தான். அந்தச் சொற்கள், அவ்விழிகள், அப்பொழுதின் தண்மை, அதன் ஒளி. ஒவ்வொன்றும் அத்தருணத்தில் முழுமை கொண்டன. அதன்பொருட்டே அந்த முதல் தருணத்தில் எழுந்திருக்கின்றன. அவன் சிட்டுக்குருவி அலகுகொண்ட அம்புகளால் அவர் நரம்புகளை அடித்தான். மீன்கொத்தி அம்புகளால் அவர் குருதிக்குழாய்களை உடைக்க முயன்றான். வாத்துஅலகு கொண்ட அம்புகளால் அவர் தசைகளை வெட்ட முயன்றான். ஒவ்வொரு அம்பு எழுவதற்குள்ளும் அதற்கான மறு அம்புகள் எழுந்தன. சிட்டு சிட்டால் வீழ்த்தப்பட்டது. மீன்கொத்தி மீன்கொத்தியால். வாத்து வாத்தால்.

அக்கணம் அவன் அறிந்தான், கங்கைக் கரையின் முற்புலரியில் கருக்கிருளின் குளிரில் நீராடும்போதும் ஈர மரவுரியுடன் திரும்பும்போதும் அவர் அம்புத்தொழில் கற்பித்த கணங்களிலேயே அப்போர் தொடங்கிவிட்டிருந்தது என்று. தன்னிடம் உரைத்த ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் மறு சொல் ஒன்றை உட்கரந்திருந்தார். ஒவ்வொரு சூழ்கைக்கும் மறுசூழ்கை வைத்திருந்தார். அவன் அறிந்த ஒவ்வொன்றும் முன்னரே அவரிடமிருந்தது. அவரைக் கடந்து அவன் அறிந்த ஒன்றில்லை. தன்னைக் கடக்க ஒப்பும் ஆசிரியர் எவர்? அவர் தன்னை ஏற்கெனவே கடந்தவராக இருப்பார். துரோணரின் அம்புகள் அவனிடம் நீ நீ நீ என்று சொல்லிச் சென்றன. நீ என் மைந்தன். நீ என் மாணவன். நீ என் இனியன். நீ எனக்கு அணுக்கன். அவன் அந்த அம்புகளுக்கு நிகர் நின்றான். அணுவிடையும் குன்றாதிருந்தான். ஆனால் அவற்றின்முன் அவன் தோற்றுக்கொண்டும் இருந்தான்.

தன்னை வெல்வது எது என அவன் ஓர் மெல்லிய எண்ணமென உணர்ந்தான். அதனுடன் முழுத் தன்னிலையும் வெகுண்டெழுந்து போராடியது. அதனூடாக அதை ஆழ நிறுவிக்கொண்டது. அவர் அந்த அம்புகளை அவனுக்களித்தபோது அவன் அவரை பணிந்தான். அந்தப் பணிவாலேயே அவன் தோற்றுக்கொண்டிருந்தான். அவன் அடுத்த அம்பை எடுத்தபோது தன் உள்ளமெங்கும் சீற்றத்தை நிறைத்துக்கொண்டான். அந்த அம்பை துரோணர் முறித்து வீசியபோது அது சீற்றமல்ல, வெறும் நடிப்பே என்று உணர்ந்தான். அவரை வசையுரைத்தால், சிறுமைசெய்யும் ஒரு சொல் உள்ளத்திலூறி நாவிலெழுந்தால் வெல்வேன். அவன் அம்புகள் ஒவ்வொன்றும் எழுந்து சீறிச்சென்று அவர் அம்பின் முன் தலைவணங்கிக்கொண்டிருந்தன.

அவன் ஆழம் அவரை வெறுத்த தருணங்களுக்காக துழாவியது. துருபதரை இழுத்துச்சென்று காலடியில் கிடத்தியபோது அவரிலெழுந்த அப்புன்னகை, ஏகலவ்யனின் கட்டைவிரலை கேட்டுப் பெற்றேன் என்றபோது அவரிலிருந்த விலக்கம், அஸ்தினபுரியின் அவையில் திரௌபதி சிறுமை செய்யப்பட்டபோது அவரிலிருந்த அமைதி. அவன் உள்ளம் தொட்டுத்தொட்டுச் சென்றது. அபிமன்யுவின் அம்புதுளைத்த உடல் அருகே எனத் தெரிந்தது. அதன் மேலிருந்த அம்புகளில் பெரும்பாலானவை அவருடையவை என்று உடலை ஒருக்கிய பாஞ்சாலத்து முதியவன் சொன்னான். ஒரு நடுக்குபோல அவனில் வஞ்சம் எழுந்தது. பற்களைக் கடித்தபடி அவன் எடுத்த அம்பு அதிர்ந்தது. ஆனால் அதை நாணில் இழுத்தபோது அவரை பழிக்கும் சொல் அவன் நெஞ்சில் எழவில்லை. சோர்ந்து எழுந்த அம்பு துரோணரின் அம்பின் அறைவாங்கி சிதறிவிழுந்தது.

துரோணரின் முகத்தில் எக்களிப்பை அவன் கண்டான். அவர் சிரித்துக்கொண்டிருந்தார். மெய்யாகவா? அது சிரிப்பேதானா? அச்சிரிப்பை அவர் முகத்தில் அவன் முன்னர் கண்டதே இல்லை. இது துருபதன் காலில் விழுந்தபோது எழுந்த சிரிப்பு அல்ல. அதில் துயரமும் இருந்தது என அப்போது தெரிந்தது. இது வெறும் சிரிப்பு. வேறேதோ அறியாத் தெய்வம் ஒன்று அந்த முகத்தில் குடியேறியிருக்கிறது. அவன் அதை நோக்கி உளம் மலைத்தான். அவன் கைகளிலெழுந்த அந்தச் சிறிய தளர்வினூடாக துரோணர் உட்புகுந்தார். அவனை அவர் அம்புகளால் அறைந்தார். அவன் கவசங்களை உடைத்தார். தேர் உடைந்து சிதறிக்கொண்டிருந்தது. தலைக்கவசம் உடைய இளைய யாதவர் தேரை பின்னடையச் செய்தார். அவன் அவரை திகைத்து நோக்கிக்கொண்டிருக்க அவன் கைகள் அவருடன் போரிட்டன. அவன் அம்புவளையத்தைக் கடந்துவந்த துரோணரின் அம்பு அவன் தோளிலும் விலாவிலும் பாய்ந்தது. அவன் தன் குருதியின் மணத்தை உணர்ந்தான். அவன் உடல் வழியாக குருதி வெம்மையுடன் வழிந்தது.

இளைய யாதவர் தேரைத் திருப்பி மேலும் பின்னடையச் செய்தார். “நில், உன் மைந்தனுடன் செல்ல உன்னை அனுப்புகிறேன்” என்று துரோணர் கூவினார். “நீ கற்றவற்றை எல்லாம் இன்று கண்டேன். இனி உன்னிடம் இருப்பவை என்ன என்று காட்டு.” வெறியுடன் நகைத்து அவர் கூச்சலிட்டார். “அறிவிலி… நீ காடுமலை ஏறிச்சென்று அடைந்த அம்புகள் எங்கே? அவற்றின் திறமென்ன என்று எனக்கு காட்டு…” அர்ஜுனன் தன் உள்ளத்தில் அம்புபட்டதுபோல் உணர்ந்தான். அவர் விழிகளை கூர்ந்து நோக்கினான். அவன் நோக்கை சந்தித்து கரவுமறைந்து அவை திரும்பிக்கொண்டன. அவன் அவருக்குள் புகுந்து ஆழத்திலிருந்த ஒன்றை கண்டான். அக்கணமே அம்பை எடுத்து அவர் நெஞ்சில் அறைந்தான். அதன் விசையால் பின்னடைந்த துரோணர் ஆவநாழியிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து அவன்மேல் ஏவினார். இடிமுழக்கத்துடன் மின்னொளிச் சிதறல்களுடன் எழுந்த அது பிரம்மாஸ்திரம் என அவன் உணர்ந்தான். தேரிலிருந்து இறங்கி அப்பால் பாய்ந்தான். எரியுமிழ்ந்து தேரை ஓங்கி அறைந்தது அது.

எரிந்த தேருடன் இளைய யாதவர் புரவிகளை அறைந்து அறைந்து ஓட்ட அவை தேரை இழுத்தபடி சுழன்றன. தழல்கொழுந்துகள் எழுந்து வெடித்து நீலச்சுடருடன் கொப்பளித்தன. அர்ஜுனன் பாண்டவப் படையின் விளிம்பில் ஒதுங்கி நின்றிருந்த தேரை நோக்கி ஓடினான். அவனை நோக்கி மீண்டும் வந்த படைப்போன்அம்பு அவன் நின்ற மண்ணை அறைந்து வெடித்தெழுந்தது. செம்புழுதித் திரைக்கு அப்பால் அவன் ஓட எரியும் தேருடன் அவனை நோக்கி வந்த இளைய யாதவர் “இதில் ஏறிக்கொள்… இந்தத் தழலே உனக்குக் கவசம்” என்றார். அவன் அதில் பாய்ந்தேறிக்கொள்ள மீண்டுமொருமுறை மண்ணை அறைந்து இடியோசை முழக்கியது முதலோன்வாளி. துரோணர் “நில்… பேடியே, நில்” என்று கூவினார். “அமர்ந்துகொள்க… அனலைக் கடந்து அந்த அம்பு வரவியலாது” என்று இளைய யாதவர் சொன்னார். அவன் தழல்களின் நிழலில் அமர்ந்தான்.

அனல்வெம்மையால் கனைத்தபடி தேரை இழுத்துக்கொண்டு முன்னேறி விரைந்தன புரவிகள். பாண்டவப் படை அனல் கண்டு விலகி விட்ட வழியினூடாக ஓடி முழங்கால் மடிந்து விழுந்தன. தேரைச் சூழ்ந்துகொண்டது அனல். நகுலனும் சகதேவனும் தங்கள் தேர்களில் அந்தத் தேர் நோக்கி விரைந்தனர். தேர் மேலுமொருமுறை வெடித்து கொழுந்தாடியது. பாண்டவப் படைக்குள் நுழைந்ததும் இளைய யாதவர் பாய்ந்து விலக உடன் பாய்ந்து அர்ஜுனனும் அப்பால் சென்றான். தேரில் எழுந்த அனல் உறுமலோசையுடன் நின்று எரிந்தது. ஏவலர் ஓடிவந்து புரவிகளை சரடுகளை வெட்டி விடுவித்தனர். புன்னகையுடன் அதை நோக்கிநின்ற இளைய யாதவரை நோக்கியபடி அர்ஜுனன் நின்றான்.

நூல் இருபது – கார்கடல் – 78

ele1தலைக்குமேல்  இருளில் வௌவால்கள் சிறகடித்துச் சுழன்றுகொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். அங்கே போர் தொடங்கிய பின்னர் அவ்வாறு வௌவால்கள் களத்தில் எழுந்து சுழன்றதை அவன் உணர்ந்ததில்லை. எங்கும் குமட்டலெடுக்கச் செய்யும் உப்புவாடை நிறைந்திருந்தது. வியர்வையும் குருதியும் கலந்தது. காற்றில் அசைவே இல்லை. எப்போதும் இரவில் குருக்ஷேத்ரத்தை நிறைத்திருக்கும் வலிமுனகல்களும் அழுகைகளும் இல்லை. இருளுக்குள் படைப்பெருக்கு முற்றாக அடங்கி துயில்கொண்டிருந்தது.

பாண்டவப் படைகளின் நடுவே சிறு மரப்பெட்டி மீது கால்களை விரித்து கைகளை இருபுறமும் ஏவலர்களிடம் அளித்து அமர்ந்திருந்தான். ஏவலர்கள் அவன் உடலில் குருதிப் பிசினுடன் சேர்ந்து இறுகி ஒட்டியிருந்த தோல்பட்டிகளை அவிழ்த்து மெல்ல கவசங்களை விடுவித்தனர். கவசங்கள் ஆடைகளுடன் ஒட்டியிருந்தன. ஆடைகளை அம்புமுனைகள் தசைகளுடன் சேர்த்து தைத்திருந்தன. கவசங்களை கழற்றுவதில் அதற்குள் நன்கு தேர்ந்துவிட்டிருந்த ஏவலர் முதலில் அம்பு பதிந்திருந்த இடங்களைச் சுற்றி ஆடைகளைக் கிழித்து கவசங்களை அப்பால் எடுத்து வைத்தனர். கந்தகமருந்துடன் கலந்து உருக்கிய தேன்மெழுகில் முக்கி எடுத்த மரவுரியை வலக்கையில் வைத்துக்கொண்டு இடக்கையால் அம்பு முனைகளை தசையிலிருந்து பிடுங்கி எடுத்தனர். குருதி சற்றே வரவிட்டு இருமுறை மரவுரியால் துடைத்தபின் மெழுகுடன் சேர்த்து புண்ணின் மேல் வைத்து துணியால் சுற்றி கட்டினர்.

அவன் உடலெங்கும் குருதி உலர்ந்து பொருக்கோடியிருந்தது. மரவுரியை தைலம் கலந்த நீரில் முக்கி அவன் உடலை அழுத்தித் துடைத்தனர் மருத்துவ ஏவலர். அவன் கையுறைகளை வாளால் கிழித்து அகற்றினர். உலர்ந்த புண்ணிலிருந்து அகல்வதுபோல் குருதியுடன் பொருக்கு பிரிந்து தோலுறைகள் அகல அவன் கைகள் வெளுத்து சுருங்கி தெரிந்தன. காலில் அணிந்திருந்த இரும்புக்குறடுகளை இரு ஏவலர் கழற்றினர். பின்னர் அக்குறடுகளை அருகிருந்த மரவுரியால் அழுந்தத் துடைத்து குருதிப் பொருக்குகளை நீக்கி நறுமணச் சுண்ணத்தால் கால்களைத் துடைத்து பின்னர் மீண்டும் குறடுகளை அணிவித்தனர். ஒவ்வொரு கவசத்தை கழற்றுகையிலும் அவன் வலியுடன் முகம் சுளித்தான். அம்புகள் பிடுங்கப்படும்போது மெல்ல முனகினான்.

அவன் உடலைத் துடைத்தபின் கவசங்களை மரவுரியால் துடைத்து உடைந்திருந்த பகுதிகளை அகற்றி புதியன சேர்த்து மீண்டும் அவனுக்கு அணிவித்தனர். தோல்பட்டிகளை இறுக்கி முடிச்சுகளைப் போட்டு கவசங்களை உரிய இடங்களில் பொருத்தினர். கவசங்கள் தசைகளின்மீது வலுவுடன் அறையாமலிருக்கும் பொருட்டு உள்ளே அழுத்தப்பட்டு தகடுகளாக மாறிய மரவுரிச் சுருள்களை உரிய இடங்களில் வைத்து இறுக்கினர். பின்னர் தலைமை ஏவலன் சற்றே விலகி தலைவணங்க திருஷ்டத்யும்னன் எழுந்து நின்று இரு கைகளையும் விரித்தான். புதிய கையுறைகளை அவன் கைகளில் அணிவித்தனர். விரல்களை விரித்து நீட்டி அவற்றை நோக்கியபின் அவன் அருகே தன் தேர் ஒருங்கிக்கொண்டிருப்பதை பார்த்தான். அதன் ஓசை அத்தனை நேரம் கேட்டுக்கொண்டிருந்தது, அவன் அதை ஓடும் தேரின் ஒலியென எண்ணிக்கொண்டிருந்தான்.

புண்பட்டிருந்த புரவிகள் அகற்றப்பட்டு புதிய புரவிகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் உடலில் தோல்பட்டைகளும் நுகமும் உரிய முறையில் பொருந்தியிருக்கிறதா என்று பாகன் இழுத்தும் அசைத்தும் நோக்கிக்கொண்டிருந்தான். இரு ஏவலர்கள் சகடங்களை ஆய்ந்து அச்சாணி உரிய முறையில் சுழல்கிறதா என்று நோக்கினார்கள். இறுகிய சகடம் தேரில் அசைவுகளை மிகுதியாக்கும். இறுக்கமற்ற சகடம் பள்ளங்களில் தேரை நிலைகுலையச் செய்யும். இரண்டுக்கும் நடுவில் ஓரிடம் அவர்கள் உள்ளத்தில் இருந்தது. ஒவ்வொரு முறை தேரை சீரமைக்கையிலும் மீண்டும் மீண்டும் இறுக்கி அதை ஒருக்கிக்கொண்டே இருப்பது தேர்வலர்கள் வழக்கம். போருக்கு எழும் வீரர் தேர்த்தட்டில் அமர்ந்த பின்னரும், அமரத்தில் ஏறி அமர்ந்து பாகன் கிளம்பலாமா என்று கேட்ட பின்னரும் அவர்கள் சகடத்தையும் அச்சையும் சீர்நோக்கிக்கொண்டிருப்பார்கள். ஒருகணம் இன்னும் ஒருகணம் என்று தேர்ப்பாகனிடம் கோருவார்கள்.

திருஷ்டத்யும்னனை நோக்கி புரவியில் வந்திறங்கிய சாத்யகி “நாம் இன்று வெறும் நாற்களச்சூழ்கைதான் அமைக்கப்போகிறோமா?” என்று கேட்டான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்று உரைத்து திரும்பிப்பார்த்தான். அருகே நின்ற ஏவலன் குறிப்பை உணர்ந்து தன் கையிலிருந்த அம்பை நீட்டினான். அதை தலைகீழாகப் பிடித்து தரையில் கோடுகளை வரைந்து சூழ்கையை சாத்யகிக்கு காட்டினான் திருஷ்டத்யும்னன். சாத்யகி குனிந்து சற்று கூர்ந்து நோக்கியபின் தலையசைத்தான். பொழுது சற்று ஒளிகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது. இருமுறை கௌரவப் படைகளிலிருந்து முரசொலி எழுந்தது. “அவர்கள் தங்கள் படைகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்… எப்பொழுது வேண்டுமென்றாலும் கௌரவப் படை எழுந்து வந்து நம்மை தாக்கக்கூடும்” என்று சாத்யகி சொன்னான்.

“நமது படைகள் ஒருங்கிவிட்டனவா?” என்றான் திருஷ்டத்யும்னன். “பெரும்பாலானவர்கள் இன்னும் துயிலெழவில்லை. உண்மையில் இது போர்க்களம் என்றே தோன்றவில்லை. நேற்று பகலிலிருந்து களம்பட்ட அனைவர் உடல்களும் சிதறி பரந்து கிடக்கின்றன. இன்றைய போர் அவ்வுடல்களின்மீது நின்றே நிகழ்த்தப்படவுள்ளது” என்ற சாத்யகி கோணலாக நகைத்து “பிணங்களின்மேல் காபாலிகர் நடனமிடுவார்கள் எனக் கேட்டிருக்கிறேன். போர்கள் நிகழ்ந்தனவா என கேட்டுப்பார்க்க வேண்டும்” என்றான். திருஷ்டத்யும்னன் “நாம் ஒருங்கியிருக்கவேண்டும். எக்கணமும் அவர்கள் நம்மை தாக்கக்கூடும். நேற்று அவர்கள் நமக்கு பேரிழப்பை உருவாக்கியிருக்கிறார்கள். நாம் உளம் சோர்ந்திருப்போம் என்று கருதி அச்சோர்வை வெல்ல திட்டமிடுவார்கள். இன்னும் அரைநாழிகைக்குள் நமது படைகள் அனைவரும் எழுந்தாகவேண்டும்” என்றான். சாத்யகி “பலமுறை போர்முரசு ஒலித்தாகிவிட்டது. நூற்றுவர்வரை படைகளை எழுப்பும்பொருட்டு ஆணைகளை கொண்டு சேர்த்துவிட்டேன். ஆனால் எவர் துயில்கிறார்கள், எவர் இறந்திருக்கிறார்கள் என்றுகூட பிரித்தறிய முடியாத இந்தக் களத்தில் எப்படி படைகளை எழுப்புவது?” என்றான்.

திருஷ்டத்யும்னன் சலிப்புடன் தலையை அசைத்து “போர் நிகழட்டும். சகடங்களும் புரவிக்குளம்புகளும் கால்களும் மிதித்துச் செல்லும்போது தங்களை உயிருடன் இருப்பதாக உணர்பவர்கள் எழுந்துகொள்வார்கள்” என்றான். பின்னர் சிரித்து “பிறிதொன்றையும் செய்வதற்கில்லை… எழுந்து சாவதா கிடந்தே சாவதா என அவர்கள் முடிவெடுக்கட்டும்” என்றான். சாத்யகி “இன்று நீங்கள் ஆற்றப்போவதென்ன என்று பாண்டவப் படையே காத்திருக்கிறது” என்றான். திருஷ்டத்யும்னன் முகம் மாறினான். “பிறவிப்பொறுப்பு…” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “பிறப்பிலேயே பெரும்பாலும் வாழ்க்கை முடிந்துவிடுகிறது அனைவருக்கும்” என்றான். சாத்யகி “நான் என் வாழ்க்கையை தெரிவுசெய்தேன்” என்றான். திருஷ்டத்யும்னன் அவனை கூர்ந்து நோக்கி “என்ன வேறுபாடு?” என்றான். சாத்யகி திகைப்புடன் நோக்கினான். “நாம் நம்மை படைக்க பலிபீடங்களை கொண்டிருக்கிறோம். எனக்கு அது தந்தையால் அளிக்கப்பட்டது. நீர் அதை ஈட்டிக்கொண்டீர்.”

சாத்யகி “ஆம்” என்றான். தலையசைத்து “எண்ணிப்பார்க்கலாகாது” என்று சொல்லி தலைவணங்கிவிட்டு கிளம்பிச் செல்ல திருஷ்டத்யும்னன் பாகனிடம் “என் தேரை போர்முனைக்கு கொண்டு செல்க!” என்று ஆணையிட்டபின் திரும்பிப்பார்த்து ஏவலரிடம் புரவிக்காக கைகாட்டினான். ஏவலர் அவனருகே கொண்டுசென்ற புரவியில் ஏறிக்கொண்டு படைகளினூடாகச் சென்றான். பாண்டவப் படை பெரும்பகுதி நிலம்படிந்து கிடப்பதை கண்டான். ஆங்காங்கே சிலர் எழுந்து அமர்ந்து சூழ்ந்திருந்த இளவெயிலில் கண்கள் கூச முகம் பொத்தி குனிந்திருந்தனர். அவர்களின் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. அதை கைகளால் துடைத்தபோது உறைந்த குருதி கரைந்து அது புதுச்சோரி என தெரிந்தது. சிலர் குளம்படி ஓசையைக் கேட்டு உடல் விதிர்க்க திகைத்து நோக்கினர். எவரும் உளநிலை தெளிவுடன் இல்லை என்பதை அவன் உணர்ந்தான். படைகளினூடாகச் சென்று யுதிஷ்டிரரின் நிலையை அடைந்தபோது அங்கு நகுலனும் சகதேவனும் நின்றிருப்பதை கண்டான். யுதிஷ்டிரர் தேர் மறைவில் கவசங்களை அணிந்துகொண்டிருந்தார்.

புரவியிலிருந்து அவன் இறங்கியதும் சகதேவன் “உளவுச்செய்தி வந்துள்ளது. அவர்கள் நம்மை தாக்கவே எண்ணுகிறார்கள்” என்றான். “புலரி எழுந்துவிட்டது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “அவர்களும் நம்மைப்போலவே நிலம்படிந்து துயின்றுகொண்டிருக்கிறார்கள். நம்மைப்போலவே தங்களது படைகளை முரசுகொட்டி எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறார்கள். இப்போது எவர் முதலில் எழுவார்கள் என்பதுதான் எவர் படைகொண்டு வருவார்கள் என்பதை முடிவு செய்கிறது.” யுதிஷ்டிரர் தேருக்குப் பின்னாலிருந்து புதிய கவசங்களுடன் வந்து “பாஞ்சாலனே, இன்றைய போர் உன்னுடையது. நேற்று உன் தந்தை களம்பட்டதற்கு இன்று நீ பழிநிகர் செய்தாகவேண்டும். இங்குள்ள அத்தனை படைவீரர்களும் அதை எதிர்பார்க்கிறார்கள். உன் குடிதெய்வங்களும் மூதாதையரும் விண்ணில் காத்திருக்கிறார்கள்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “ஆம், என் கடன் அது” என்றான். “துரோணர் படைமுகப்பில் எழுவாராயின் நமது வில்லவர் இருவர் உனக்கு துணை வருவார்கள். சாத்யகியையும் சுருதகீர்த்தியையும் நீ சேர்த்துக்கொள். அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கு. அவருக்கு படையுதவிக்கு வர இன்று அங்கு அங்கனும் அஸ்வத்தாமனும் மட்டுமே உள்ளனர். அங்கனை அர்ஜுனன் எதிர்கொள்ளட்டும். அஸ்வத்தாமனை மந்தன் எதிர்கொள்ளட்டும். இன்றைய நாளே துரோணர் களம்பட்டாகவேண்டும். இல்லையேல் இப்போர் முடிவுறவில்லை என்றே பொருள்” என்றார். திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான். அவன் வஞ்சினம் ஏதேனும் உரைப்பான் என்று எதிர்பார்த்தவர்போல் யுதிஷ்டிரர் முகம் நோக்கி நின்றார். அந்த அமைதியை உணர்ந்து திருஷ்டத்யும்னன் தலைதூக்கி “பழிநிகர் கொள்ளவே நான் பிறந்திருக்கிறேன், அரசே. நன்குணர்ந்திருக்கிறேன். இது என் நாள்” என்றான்.

“நமது படைகளை எழுப்பவேண்டும்” என்று சகதேவன் சொன்னான். யுதிஷ்டிரர் “ஏன்?” என்றார். “அரசே, அனைவரும் துயில்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சகதேவன். “வெயில் எழவிருக்கிறது” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அவர்களை வெயிலே எழுப்பும்.” திருஷ்டத்யும்னன் “இளையவர் பீமசேனர் எழுந்துவிட்டாரா?” என்றான். “எழுந்துவிட்டார்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “அவன் தென்காட்டுக்குச் சென்று அகிபீனா உண்டு படுத்தான். ஆனால் அரைநாழிகைகூட துயில்கொள்ளவில்லை. நான் சென்று அவனிடம் பேசலாம் என்று எண்ணினேன்… வேண்டாம் என இவன் தடுத்துவிட்டான்” என்றார். திருஷ்டத்யும்னன் “அரசியிடம் செய்தி சொல்லப்பட்டதா?” என்றான். “ஆம், நேற்றே தூதன் சென்று உரைத்துவிட்டான்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “நம் குடியில் களம்படும் மூன்றாவது மைந்தன் கடோத்கஜன். ஆனால் அன்னைக்கு அவனே முதல் பெயர்மைந்தன். செய்தி அறிந்தால் உளம்தாங்கமாட்டார்கள் என எண்ணினேன். ஆனால் ஒரு சொல்லும் உரைக்காமல் வெறித்த விழிகளுடன் கேட்டிருந்தார்கள், பின்னர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்கள் என்று தூதன் சொன்னான்” என்றார்.

“ஒன்றும் உரைக்கவில்லையா?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “அவன் களம்படுவான் என அன்னைக்குத் தெரிந்திருக்கும்… அவனுக்கு அரசகுருதியில் மணம்புரிந்து வைத்ததேகூட அதன்பொருட்டே என இப்போது தோன்றுகிறது” என்றார் யுதிஷ்டிரர். “நான் எண்ணிப்பார்த்தேன், கடோத்கஜன் இக்களத்தில் இவ்வாறு இறப்பதே நன்று. அக்குடி முற்றாக மாறிவிட்டது. அவர்களின் குடியின் இறுதி அரக்கர்கள் இக்களத்தில் மடிந்தவர்கள்… இன்று பாரதவர்ஷத்தின் மாவீரனாக சூதர்கள் பாட அவன் விண்ணேகினான்.” திருஷ்டத்யும்னன் சலிப்புடன் எழுந்துகொண்டு “நான் களத்திற்குச் செல்கிறேன்” என்றான். “உன் வஞ்சினம் வெல்க!” என்றார் யுதிஷ்டிரர். திருஷ்டத்யும்னன் தலைவணங்கி விடைபெற்றான்.

ele1புலரிவெயில் ஒளிகொண்டு மெல்ல நிமிர்ந்துகொண்டிருந்தது. நிழல்கள் குறுகி தங்கள் பொருட்களை நோக்கி சென்றுகொண்டிருந்தன. திருஷ்டத்யும்னன் தன் புரவியில் படைமுகப்பிற்கு வந்து நின்றான். எங்கும் பூத்திருந்த ஒளி அவனை உளமெழச் செய்தது. புலரிவெளிச்சத்தைப் பார்த்து நெடுநாட்களாயிற்று என்று எண்ணினான். ஒளி ஒரு நீர்மைபோல் முகில்களின் இடைவெளிகளினூடாக நீண்ட சட்டங்களாகி போர்க்களத்தில் விழுந்திருந்தது. களம் நிறைத்து படுத்திருந்த உடல்களின் ஆவி அதில் பொற்புகை என மெல்ல நெளிந்தது. பல்லாயிரம் சிறு பூச்சிகள் அவ்வொளியில் அனல்பொறிகளென சுடர்கொண்டு சுழன்றன. அருகிருந்த காடுகளிலிருந்து பறவைக்கூட்டங்கள் வானில் தங்களை விசிறிக்கொண்டு அலைகளாகச் சுழன்று பின் ஐயம் தணிந்து கீழிறங்கி விழுந்துகிடந்த உடல்கள் மேல் எழுந்து அமர்ந்து கொத்தி சிறகடித்து குரலெழுப்பி ஒளி துழாவி மீண்டும் வந்தமர்ந்தன.

இறப்பின் வெளிக்கு மேல் எரிந்து நின்றிருந்தது எனினும் ஒளி அவையனைத்திற்கும் அப்பாற்பட்ட பிறிதொன்றென்றே தோன்றியது. துஞ்சியும் துயின்றும் கிடந்திருந்த ஒவ்வொருவரையும் வானிலிருந்து வந்து தொட்டு எழுப்ப முயலும் கைகள். அங்கிருந்தோர் விழித்துக்கொண்டால் கனவின் அரைமயக்கில் அச்சாய்ந்த ஒளிப்பாதைகளினூடாக நடந்து விண்ணிலேறிவிட முடியும். எத்தனை தூயது ஒளி. நெருப்பு என்றும் தூயது என்கிறார்கள். நெருப்புக்கும் புகையுண்டு. கெடுமணமும் உண்டு. ஒளியே தூயது. மண்ணைக் கட்டும் எதுவும் ஒளிக்கு இல்லை. காலமில்லை, தொலைவில்லை. அது இங்குள்ளதே அல்ல. ஐம்பெரும்பருக்களுக்கும் அயலானது. அது விண்ணுக்குரியது. ஆனால் அது தொட்டாலொழிய இங்குள்ள எதற்கும் உருவில்லை, வண்ணம் இல்லை. இங்குள்ள அழகனைத்தும் ஒளியின் மாறுதோற்றங்களே. ஒளி நாம் அறிந்திருப்பது அல்ல. நாமறிவது ஒளியின் விழித்தோற்றத்தை மட்டுமே. விழியும் பருப்பொருளே. அங்கே விண்ணில் விழிகளுக்கு அப்பாற்பட்ட சிதாகாயத்தில் ஒளி பிறிதொன்று. அது பிரம்மம்.

அவன் தானிருக்கும் இடத்தையும் பொறுப்பையும் மறந்து அவ்வொளியின் வடிவங்களை பார்த்துக்கொண்டிருந்தான். முகில்களின் விளிம்புகள் கண் கூசும் அளவுக்கு வெண்ணிற எரி சூடியிருந்தன. காலை காலை என்று உள்ளம் கூத்திட்டது. காம்பில்யத்தின் தெருக்களில் புலரியில் எழும் ஒளியில் புரவிச் சாணமும் யானைப் பிண்டமும் எழுப்பும் மெல்லிய நீராவி அலையுறும். புரவியில் தெருக்களினூடாகச் செல்கையில் எங்கும் பசுஞ்சாணத்தின் மணமே நிறைந்திருக்கும். ஆலயமுகப்புகள், இல்லமுகப்புகள் எங்கும் சாணியைக் கரைத்து தெளித்திருப்பார்கள். ஆற்றை நோக்கி இறங்கும் சரிவில் கொட்டில்களிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட பசுக்கள் கூட்டம் கூட்டமாக இறங்கிச் சென்றுகொண்டிருக்கும். அவற்றைச் சூழ்ந்து பறக்கும் சிற்றுயிர்கள் மின்மினிகள் என வெயிலில் ஒளிவிடும்.

நாளும் புலரியில் எழுவதை அவன் தவிர்க்கக்கூடா நோன்பாகக் கொண்டிருந்தான். காம்பில்யத்தின் அரச குடியினர் எவரும் புலரியில் எழுவதில்லை. துருபதர் இரவு துயில்வதற்கு நெடுநேரமாகும். அவை கூடி அமைச்சர்களை அனுப்பிய பின்னர் அணுக்கர்களுடன் நாற்களமாட அமர்வார். இரவெல்லாம் அவருடன் அமர்பவர் அமைச்சரான பத்ரர். ஒவ்வொரு வெற்றியும் மேலும் வெல்வதற்கான வெறியையும் ஒவ்வொரு தோல்வியும் இன்னும் இன்னும் என வஞ்சத்தையும் உருவாக்கும். உடல் தளர்ந்து கைகளிலிருந்து காய்கள் நழுவுவது வரை ஆடிக்கொண்டிருப்பார். எனவே அவர் புலரியொளியை பார்ப்பதே இல்லை. திருஷ்டத்யும்னன் அரிதாகவே மது அருந்துவான். எனவே அவை கூடி முடிந்ததுமே துயின்று முதற்பறவை ஒளியிலேயே எழுந்துவிடுவான். எழுந்ததுமே முதல் எண்ணம் ஆற்றின் குளிர்நீரொழுக்குதான்.

காலைஒளி விரிந்த ஆற்றில் நீராடுவது அன்றைய நாள் முழுக்க உவகையை அளித்துவிடுகிறது என்று துரோணர் முதல்நாளிலேயே அவனிடம் சொன்னார். துரோணரின் குருநிலையில் முதல்ஒளி நோக்கி நீரள்ளி விட்டு அதர்வ வேதம் உரைத்து எழுகையில் அன்றைய கல்வி பெரும்பாலும் முடிந்திருக்கும். அதன் பின்னர் நூல்பயில்தலும் காடுகளுக்குள் உலாவுதலும் தோழர்களுடன் உரையாடுவதும் அவரவர் விருப்பப்படியே நிகழும். “புலரியில் எழும் தெய்வங்கள் மானுடரிடம் சொல்கின்றன, இங்குள்ள அனைத்தும் புதியவை என்று. நோக்கு விழிதொட்டு விலகும் கணத்திலேயே இங்கு ஒவ்வொன்றும் பழையதாகிக்கொண்டிருக்கிறது. மலர்கள் வாடத்தொடங்கிவிடுகின்றன பனித்துளிகள் உதிரத்தொடங்கிவிடுகின்றன. முகில்கள் எரிந்து எழுகின்றன. புதிய உலகு புதிய எண்ணங்களுடன் நம்முன் வருகிறது. புதிய கனவுகளை அளிக்கிறது. புலரியில் எழுபவன் ஒவ்வொரு நாளும் புதியவனாக பிறந்தெழுகிறான்.”

துரோணர் என்றும் கூரிய அம்பின் ஒளியைப் பார்த்தபடி கண்விழித்தார். அவருடைய மஞ்சத்திற்கு அருகே கூர்மின்னும் அம்பு வைக்கப்பட்டிருக்கும். அவன் முன்னரே சென்று குடில்வாயிலில் நின்றிருப்பான். அவர் மெல்லிய குரலில் தன் ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னபடி விழித்தெழுவார். கண்களைத் திறக்காமல் கைநீட்டி அந்த அம்பை எடுத்து கண்ணெதிரே கொண்டுவந்து விழிதிறந்து அதன் ஒளியை சிலகணங்கள் நோக்கி நுண்சொற்களால் அதை வாழ்த்தியபின் எழுந்து அவனை நோக்குவார். ஒருமுறை அவன் அதைப்பற்றி அவரிடம் கேட்டான். “படைக்கலத்தில் விழிதிறக்கிறீர்கள், ஆசிரியரே, நான் பிறிதெவரும் இவ்வாறு செய்வதை கேள்விப்பட்டதே இல்லை.” துரோணர் புன்னகையுடன் மலர்களை நோக்கி நடந்தபடி “பிறிதெதை நோக்கவேண்டும் என எண்ணுகிறாய்?” என்றார். “இந்த மலர்களை. இளந்தளிர்களை” என்று அவன் சொன்னான். “அந்தணர் சுடரொளியை நோக்குவர். துர்வாசர் மெல்லிய இறகுகளை முதலில் நோக்குவார்.”

“அம்பு ஒரு அகல்சுடர் அல்லவா?” என்றார் துரோணர். “அழகிய மலரிதழ். இளந்தளிரின் கூர் அம்புக்கு உண்டு. இறகின் மென்மையும் அம்பிலுண்டு.” அவன் அவரை நோக்கிக்கொண்டு நடந்தான். “அம்பு வெறும் படைக்கலம் அல்ல. அது ஒரு கருவியென இங்கே தோன்றியது. மானுடனைக் காத்தது, உணவூட்டியது, அவன் கையும் நாவும் கண்ணும் நகமும் பல்லும் ஆனது. அவன் குடிபெருகச் செய்தது. அவனுடன் உறக்கிலும் விழிப்பிலும் இருந்தது. அதை தவமென இயற்றினர் நம் முன்னோர். தவம் சென்றுபடியும் செயல் கலையாகிறது. கலை அழகை உருவாக்குகிறது. அழகின்பொருட்டு அது சுற்றிலும் தேடுகிறது. தொட்டுத்தொட்டு அனைத்து அழகுகளையும் அறிந்து அதை தான் நடிக்கிறது” என்று துரோணர் சொன்னார். “கலை முதிர்கையில் அது வேதமாகிறது. கலை என்பது நிகழ்வு. நிகழ்வின் நெறிகளை மட்டும் தொட்டுச் சேர்த்தால் அது சொல். சொல்லிச் சொல்லி கூர்கொண்ட சொல் வேதம்.”

குருக்ஷேத்ரக் களத்தில் ஒவ்வொரு நாளும் கருக்கிருளிலேயே எழுந்து அவைசூழ்ந்து களம் வந்து முதலொளியிலேயே படைக்கலம் எடுத்து வெற்றிமுழக்கமிட்டு போர்நிகழ்த்தத் தொடங்கினாலும் ஒரு நாளும் புலரியாடவில்லை. இக்களம் வந்தபின் இதுவே முதல் புலரி. அச்சொல் எழுந்ததுமே அவன் மெய்ப்பு கொண்டான். புலரி, முதற்புலரி. இனி ஒரு புலரி இல்லை எனில் இதன் மதிப்பு என்ன? அருமணிகள் புலரியின் சிறு துளிகள். இது அருமணிகளின் பெருங்கடல். அவன் மீண்டும் மீண்டும் மெய்ப்பு கொண்டான். வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் அங்கு நின்று நினைவுகூரமுடியும் எனத் தோன்றியது. அவன் உடல் குளிரில் நடுங்கியது. குளிர்தான், கொடிகள் எழுந்து பறக்க தென்காற்று வந்து அவனை தழுவிச் சுழன்றது. மணிகள் ஓசையிட்டன. குதிரைகள் கனைத்தன. காற்று மேலும் விசைகொண்டு கடந்துசெல்ல கவசங்களுக்குள் காதில் ஓசை சீறியது.

அக்கணம் கௌரவப் படைகளில் இருந்து அலை எழுவதுபோல் ஓசை புறப்பட்டது. வில்லையும் அம்பையும் கையிலெடுத்தபடி அவன் திரும்பி நோக்க கௌரவப் படையின் தென்கிழக்கு மூலையிலிருந்து மறுஎல்லை நோக்கி ஓர் அலை சுருண்டு செல்வதை கண்டான். படையினர் எழுந்தமர்ந்து ஓலமிட்டனர். தலையை பற்றிக்கொண்டு குனிந்தும் எழுந்தும் அவர்கள் தவிப்பதைக் கண்டு திகைத்து கண்கள்மேல் கை வைத்து நோக்குகூர்ந்தான். கொடுந்தெய்வமொன்றின் மூச்சுக்காற்று அவர்கள் மேல் பட்டதுபோல. அல்லது அனலெழுந்து பரவுகிறது. சகுனியின் போர்முரசு நடைமாறி வெறிகொண்டு ஒலிக்கத் தொடங்கியது. எழுந்தவர்கள் அவ்வொலியை கேட்டனர். ஒருவரோடொருவர் முட்டி மோதினர். பின்னர் தென்கிழக்கு மூலையிலிருந்து கௌரவப் படை நெளிந்து ஓர் அலையென்றாகி எழுந்துவந்து பாண்டவப் படையை தாக்கத் தொடங்கியது. நீண்ட ஆடை ஒன்றின் ஒரு மூலையைப் பற்றி இழுப்பதுபோல எனத் தோன்றியது.

பாண்டவப் படையின் முகப்பில் மிகச் சிலரே எழுந்து நின்றிருந்தனர். பலர் படைக்களத்தில் அமர்ந்திருந்தனர். கௌரவப் படை வந்து அறைந்து எழுந்தவர்களின் தலைகளை கொய்தெடுத்தது. மிதிபட்டு அலறியவர்களை வேல்களால் குத்தி சுழற்றியிட்டனர். திருஷ்டத்யும்னன் தன் இடது கால் துடித்துக்கொண்டிருக்க வில்லை இறுகப் பற்றியபடி பாண்டவப் படையை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களை எழுப்புவதற்கு எந்த வழியுமில்லை. பிறிதொன்று அங்கு நிகழவேண்டும். விண்ணிலிருந்து அவர்கள் அனைவர் கனவுக்குள்ளும் சென்று முழங்கும் முரசொலியுடன் தெய்வமொன்று எழவேண்டும். தன் விழிகள் கற்பனையை நனவெனக் காட்டுகின்றனவா என்று ஐயுறும்படி பாண்டவப் படை பின்வாங்கி சுருண்டு பின்னர் ஓர் அலைவளைவென்றாகி எழுந்து வந்து கௌரவப் படையை எதிர்கொள்வதை கண்டான்.

பல்லாயிரம் படைவீரர்கள் களத்தில் விழுந்து துயின்றுகொண்டிருந்த நிலையிலிருந்தே வேல்களையும் வாள்களையும் விற்களையும் எடுத்தபடி களம் புகுந்தனர். தேர்களிலும் புரவிகளிலும் ஏறிக்கொண்டனர். யானைகளையும் அத்திரிகளையும் பற்றி வழிநடத்தினர். எந்த ஆணையுமிலாது பாண்டவப் படை முந்தைய நாள் போர் முடியும்போதிருந்த அதே சூழ்கையை தான் அடைவதை அவன் கண்டான். அச்சூழ்கை ஒரு நுண்வடிவென அவர்களுக்குள் இருந்தது போலும். அச்சூழ்கையிலேயே அவர்கள் துயில்கொண்டிருந்தார்கள். அவர்கள் உலவிய அக்கனவுகளிலும் அச்சூழ்கை இருந்தது. விழித்து எழுந்த கணமே மறுஎண்ணமின்றி அச்சூழ்கையில் தங்களிடத்தில் சென்று அமைந்தனர்.

திருஷ்டத்யும்னன் தன் கையை உயர்த்தி “தாக்குங்கள்! எழுந்து போரிடுங்கள்! பின்னடைய வேண்டாம்! ஒருகணமும் தயங்க வேண்டாம்! வெற்றி நம்முடையதே! வெற்றிவேல்! வீரவேல்!” என்று ஆணையிட்டபடி பாண்டவப் படைகளின் முகப்பில் நின்று கௌரவர்களை எதிர்கொண்டான். இரு படைகளும் ஊடுகலந்து போரிடத் தொடங்கியபோது சில கணங்களிலேயே அந்தப் போர் முந்தையநாள் அந்தியில் நிகழ்ந்ததன் நீட்சி என்று தோன்றியது. நடுவே ஓர் இரவு கடந்து சென்றதே மறந்துவிட்டதுபோல.

படைமுகப்பில் துரோணரின் தேர் எழுந்து அணுகுவதை திருஷ்டத்யும்னன் கண்டான். எதிரே இருந்து எழுந்த காலை ஒளியில் அவருடைய தாடி அனல்விழுதுகளென சுடர்ந்து நெளிந்தது. அவருடைய கவசங்களில் செம்மை தளும்பியது. அவர் தொடுத்த அம்புகள் மின்னி மின்னி எழுந்து வந்து பாண்டவப் படைகளை அறைந்தன. அவன் தன்னை மறந்து அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவருடைய பறந்து சுழன்ற கைகளை. விழிதாழ்த்தி அவர் கால்களை பார்த்தான். பின்னந்தியில் அவர் துயில்கொள்கையில் அக்கால்களை அவன் மெல்ல வருடிக்கொண்டிருப்பான். அழுத்துவது அவருக்கு பிடிக்காது. மெல்லிறகால் என நீவிவிடவேண்டும். அவன் உள்ளத்தால் அக்கால்களை வருடினான். பின்னர் தன் வில்லைக் குலைத்து நாணேற்றி முதல் அம்பை அவரை நோக்கி தொடுத்தான்.

நூல் இருபது – கார்கடல் – 77

ele1குருக்ஷேத்ரம் எங்கும் இடைவெளியே இல்லாமல் பரவி துயின்றுகொண்டிருந்த கௌரவப் படைவீரர்களின் நடுவே புரவியில் பெருநடையில் சென்றான் அஸ்வத்தாமன். புரவி குளம்புகளை எடுத்துவைத்துச் செல்வதற்கும் இடமில்லாதபடி மரப்பலகைப் பாதையின் மீதும் வீரர்கள் துயின்றுகொண்டிருந்தனர். சில இடங்களில் தயங்கி நின்று, உடலை கிளையிலிருந்து எழ விழையும் பறவைபோல் முன்பின் என உலைத்து பின் இடைவெளி கண்டு, தாவி எழுந்து முன்காலூன்றி பின்காலையும் அந்த இடத்திலேயே ஊன்றி நின்று மீண்டும் தாவிச் சென்றது அஸ்வத்தாமனின் பழகிய குதிரை. கீழே கிடந்த உடல்களில் பாதிக்கும் மேலானவை ஏற்கெனவே இறந்துவிட்டவை. எஞ்சியவை உயிர் மட்டும் தங்கியிருப்பவை. கூர்ந்து நோக்கியபோது அவற்றில் எந்த வேறுபாட்டையும் கண்டுபிடிக்க இயலவில்லை. இறந்த உடல்களும் விழி திறந்து பற்கள் தெரிய படைக்கலங்களை இறுகப் பற்றியபடி உணர்ச்சிக் குவியம் ஒன்றில் உறைந்திருந்தன. துயிலும் முகங்களிலும் அதேபோல உணர்வெழுச்சி சிலைகொண்டிருந்தது.

சில கணங்களுக்குப் பின்னரே துயிலும் முகங்கள் மெல்ல மாறிக்கொண்டிருப்பதை அவனால் உணரமுடிந்தது. பலர் முனகியபடி திரும்பிப் படுத்தனர். ஓரிரு சொற்களை சிலர் உரைத்தனர். மெல்லிய விதிர்ப்பொன்று சில உடல்களில் குடியேறியது. ஆயினும்கூட துயின்றுகொண்டிருக்கிறான் போலும் என்று எண்ணிய ஒரு முகத்திற்குக் கீழிருந்த உடலில் இரு கால்களும் வெட்டுண்டிருப்பதை, உடலென்று எண்ணிய ஒருவன் அசைந்து மெல்ல முனகி புரண்டுபடுப்பதைக் கண்டு உள்ளம் திடுக்கிட்டபடியே இருந்தது. இத்தனை உடல்கள்! ஒவ்வொரு உடலும் குருதிக்குமிழி என தோன்றி அன்னை உடலை உறிஞ்சி உண்டு உயிர்பெற்று வளர்ந்து உலகுக்கு வந்தது. விழிதிறந்து வானை நோக்கி மகிழ்ந்தது. ஆடியோடி மண்ணை அறிந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தால் ஊர்தி எனக் கொள்ளப்பட்டது. வெட்டிக்குவித்து அள்ளிக் கூட்டி கொண்டுசென்று அனலுக்கும் மண்ணுக்கும் அளித்தபின் அக்கணமே மறந்துவிடுகிறார்கள். அந்த தெய்வங்கள் காற்றில் நின்று துடிக்கின்றன. பின்னர் அவையும் மறந்து பிறிதொரு கரு புகுகின்றன.

அஸ்வத்தாமன் துரோணரின் குடிலை அடைந்ததும் அங்கு காத்து நின்ற ஏவலன் அருகே வந்து தலைவணங்கி “துயில்கிறார்” என்றான். அஸ்வத்தாமன் சற்று தயங்கினான். பின்னர் “நன்று, அவர் துயில் கொள்ளட்டும்” என்று புரவியை திருப்பினான். அதற்குள் குடிலுக்குள்ளிருந்து வெளிவந்த இன்னொரு காவலன் “ஆசிரியர் தங்களை அழைக்கிறார், அரசே” என்றான். “நான் வந்தது எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான். “தங்கள் புரவியோசை கேட்டு விழித்துக்கொண்டார்” என்றான். அஸ்வத்தாமன் புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு இறங்கி கால்குறடுகளை அவிழ்த்துவிட்டு மெதுவாக நடந்தான். அந்தப் புரவியில் அவன் சற்று முன்னர்தான் முதல்முறையாக ஏறியிருந்தான். போர் முடிந்த பின்னர் தேரிலிருந்து இறங்கி அங்கு படைத்தலைவன் ஒருவன் கொல்லப்பட்டுவிட்டபின் களத்தில் நிலையழிந்து திரிந்துகொண்டிருந்த புரவியொன்றின் மேலேறி அவன் தந்தையை பார்க்க வந்தான். அவன் உள்ளத்தின் தாளத்தை தந்தை அறிந்திருக்கிறார். அந்தத் தாளம் எப்படி அவனிலிருந்து அப்புரவியின் குளம்புகளுக்கு செல்கிறது?

அவன் குடில் வாயிலில் நின்று “வணங்குகிறேன், தந்தையே” என்றான். அவர் “நீடுவாழ்க!” என எடைமிக்க குரலில் சொன்னார். அவன் குனிந்து உள்ளே சென்றபோது மரவுரி மெத்தைமேல் துரோணர் எழுந்து கால்மடித்து அமர்ந்திருந்தார். அவரது உடலில் கவசங்கள் கழற்றப்படாமல் இருந்தன. கையுறைகள் கூட உடலுடன் சேர்ந்து ஒட்டி பொருக்கடைந்து இருந்தன. அஸ்வத்தாமன் அவர் முன் பணிந்து வணங்கி சற்று அப்பால் அமர்ந்தான். அவர் எப்போதுமே அவனை நேர்விழி கொண்டு நோக்குவதில்லை. அவனிடம் பேசும்போது விழிதாழ்த்தி கைகளால் எதையேனும் செய்துகொண்டிருப்பார். அம்புகளை கூர்மைப்படுத்துவார். வில் திருத்துவார். அன்றி சுவடிகளை பொருளில்லாமல் அடுக்கியோ பிரித்தோ கட்டியோ விரல் உலாவிக்கொண்டிருப்பார். அவனிடமிருந்து எதையோ மறைக்க முயல்பவர்போல. பிழையோ இழிவோ ஆற்றிவிட்டவர்போல.

“சொல்” என்று துரோணர் சொன்னார். அஸ்வத்தாமன் “தாங்கள் அறிந்திருப்பீர்கள், முழுப் படையும் நின்ற இடத்திலேயே விழுந்து துயின்றுகொண்டிருக்கிறது. இன்று உடல்கள் எவையும் களத்திலிருந்து அகற்றப்படவில்லை. ஒவ்வொரு உடலாக நோக்கி அகற்றுவதும் எளிதல்ல. புண்பட்டவர்கள் கூட களத்திலிருந்து கொண்டு செல்லப்படவில்லை. களம் அலறல்களும் முனகல்களும் நிரம்பி ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்றான். “ஆம், இங்கு படுத்திருக்கையிலேயே அந்த முழக்கத்தை கேட்க இயல்கிறது” என்று துரோணர் சொன்னார். “இன்று இனிமேல் ஒரு போரை நிகழ்த்த இயலாது. இன்று பகல் இவர்கள் இவ்வண்ணமே துயிலட்டும் என்று விட்டுவிடுவதே உகந்தது” என்று அஸ்வத்தாமன் சொன்னான். துரோணர் “அந்த முடிவை நான் எடுக்க இயலாது” என்றார்.

“தாங்கள்தான் எடுக்கவேண்டும். இப்போது இப்படைகள் அனைத்திற்கும் தாங்களே தலைவர்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இவர்களை எழுப்பி பாடிவீட்டுக்கு சென்று துயிலச் சொல்லக்கூட இன்று நம்மிடம் செய்திமுறை இல்லை. இன்னும் சற்று நேரத்தில் பொழுது விடிந்துவிடும். வெயில் எழுகையில் அவர்கள் விழித்தெழக் கூடும். விழித்தெழுபவர்கள் ஒவ்வொருவராக பாடிவீட்டுக்கு திரும்பட்டும். மதுவருந்தி படுத்து துயில்கொள்ளட்டும். எழுந்து செல்லாமல் கிடப்பவர்கள் புண்பட்டவர்களா உயிர்நீத்தவர்களா என்று முடிவு செய்து அவர்களை அங்கிருந்து அகற்றலாம். பின் மாலையில் களம் ஒழுங்கு செய்யப்படும்.” அவன் அவர் முகம் என்ன உணர்வுகொண்டிருக்கிறது என்று உய்த்தறிய முயன்றான். அவர் விழிகள் அலைபாய்ந்தன. கைவிரல்கள் காற்றில் எதையோ இயற்றின. என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்? எவரிடம்? “நாம் இன்று பகல் முழுக்க போரிட இயலாது” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

துரோணர் எங்கோ நோக்கி “எனில் இன்னொரு இரவுப்போரா?” என்றார். “இரவுப்போரல்ல, இது பேரழிவு. இது போரே அல்ல, அருங்கொலை. நமது படைகளின் பெரும்பகுதி இன்றுடன் அழிந்தது. எஞ்சியவர்களைக்கொண்டு நாம் பாண்டவர்களுடன் போரிடவே இயலாது. இப்போது இருக்கும் கணக்குகள் என்ன என்று தெரியவில்லை. ஆனால் வெறும் விழிநோக்கிலேயே நம்மைவிட இருமடங்கு பெரியது பாண்டவர்களின் படை எனத் தெரிகிறது. அரக்கன் நேற்றிரவு நம்மை சூறையாடிவிட்டான்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். துரோணர் வேறெங்கோ நோக்கி தலையசைத்தார். போரைப்பற்றி அவனுடன் பேசுவதை அவர் விரும்பவில்லை என்று தோன்றியது. ஆனால் அவன் அருகிலிருக்கும்போது மட்டும் அவர் முகத்திலிருக்கும் விழிக்கனிவும் முகப்பொலிவும் தெரிந்தது. அவன் எழுந்து செல்ல எண்ணினான். ஆயினும் அவரிடமிருந்து ஒரு சொல் எழவேண்டும் என்றும் தோன்றியது.

“தந்தையே, இப்போரை இப்போது நம்மால் முடித்துவைக்க இயலாது. இன்று இப்போர் நிகழ்வது களத்தில் நிகழ்ந்த கொலைகளில் இருந்து எழுந்த வஞ்சத்திற்காகவே. இது முழுமையாக ஓடிச் சுழன்று பின்னரே நிற்கும். ஆனால் இங்கு விழுந்து கிடக்கும் வீரர்களிடம் நமக்கொரு பொறுப்புள்ளது. இவர்களை நாம் துயில அனுமதிப்பதொன்றே இன்று செய்யக்கூடுவது. அதற்கு தங்கள் ஒப்புதலை கோரியே நான் வந்தேன்” என்றான். “என் ஒப்புதல் உண்டு” என்று துரோணர் சொன்னார். “அதை தங்கள் ஆணை என்று நான் அரசரிடம் சொல்லிக்கொள்கிறேன்” என்றான். “நன்று” என்று துரோணர் சொன்னார். அஸ்வத்தாமன் எழுந்துகொண்டு “நேற்று அரக்கர் இளவரசன் விழுந்தான். பீமன் உளந்தளர்ந்திருக்கிறார் என்ற செய்தி வந்திருக்கிறது” என்றான். துரோணர் “அல்லது அவன் வஞ்சினம் பூண்டிருக்கலாம்” என்று சொன்னார். “ஆம், ஆனால் தன் மைந்தனைக் கொன்ற கர்ணனை ஒருபோதும் அவரால் வெல்லவோ பழியீடு செய்யவோ இயலாது. இன்று களத்தில் அவர் அதை உணர்ந்திருப்பார் எனில் மேலும் சோர்ந்து போர் மேல் நம்பிக்கை இழப்பார். அது நமக்கு வெற்றிதான்” என்றான் அஸ்வத்தாமன்.

துரோணர் “அவனும் கொன்றவனை விட்டுவிட்டு பிறிதெவரோ ஒருவன்மேல் பழிசுமத்தி அவனைக் கொன்று நிறைவடையலாம். அர்ஜுனனைப்போல” என்றார். அஸ்வத்தாமன் ஒருகணம் துரோணரின் விழிகளை சந்தித்து திரும்பிக்கொண்டான். அவன் உடல் நடுக்குகொள்ளத் தொடங்கியது. ஏன் என்று தெரியாமல் அங்கிருப்பதை ஒருகணமும் தன்னால் தாள இயலாது என்று அவனுக்குத் தோன்றியது. தலை வணங்கி அக்குடிலை விட்டு வெளியே வந்தான். குளிர்காற்று வந்து மூச்சை நிறைக்க ஆறுதலை உணர்ந்து நீள்மூச்செறிந்தான். இரு கைகளையும் விரித்து நெஞ்சை நிமிர்த்தி மேலும் மேலும் நன்மூச்சை இழுத்தபடி நடந்து புரவியிலேறிக்கொண்டான். காவலனிடம் “பிறிதெவரும் அவரை சந்திக்க வேண்டியதில்லை. ஒருநாழிகையேனும் அவர் துயில்கொள்ளட்டும்” என்ற பின் புரவியை கிளப்பிச்சென்றான்.

புரவியில் படைகளினூடாகச் சென்றுகொண்டிருக்கும்போது அஸ்வத்தாமன் தன் உள்ளம் நிலையழிந்து வெற்றுச்சொற்கள் பீறிட்டெழ பொருளிழந்த ஓலமாக இருப்பதை உணர்ந்தான். புரவி அவனை அறியாமலேயே விரைவுகொண்டது. உள்ளத்தின் விசையை புரவி எவ்வாறு அறிகிறது என்று உணர்ந்ததும் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தினான். தலையை சிலமுறை உதறிக்கொண்டு மெல்லிய ஒளி எழத்தொடங்கிய கீழ்வானை பார்த்தான். என்ன நிகழ்ந்தது? அங்கு செல்வது வரை இக்கொந்தளிப்பு எனக்கு இருக்கவில்லை. இவ்வுளமழிதல் இங்கு துஞ்சியும் துயின்றும் விழுந்துகிடக்கும் மானுட உடல்களைக் கண்டுமல்ல. பிறிதொன்றினால் துயருறுகிறேன். துயரல்ல, சீற்றமும் கொள்கிறேன். அல்ல, இது பிறிதொன்று. இது ஓர் ஏமாற்றம். அல்ல, அதுவும் அல்ல. வெறும் கசப்பு. எவர் மீதென்றிலாத கசப்பு.

அவன் மீண்டும் புரவியைத் தட்டி கிளப்பியபோது தன்னிடமென கூரிய வினாவொன்றை எழுப்பிக்கொண்டான். தெளிவாக கண்முன் தெரிவதொன்றை தவிர்க்கும்பொருட்டு ஏன் இத்தனை உள ஓட்டங்கள்? எதன்பொருட்டு நிலைகுலைந்திருக்கிறது என் உள்ளம்? அவர் விழிகளில் தெரிந்த சிறுமை கண்டு. ஆசிரியர் என்றிலாது, அந்தணர் என்றிலாது, தந்தையென்றும் இலாது வெறும் போரில் திளைக்கும் சிற்றுயிராக அவர் ஆகியிருந்தார். எதிரிமேல் வஞ்சத்தை ஏளனமாகவும் வெறுப்பாகவும் மாற்றிக்கொண்டு அதில் அமர்ந்திருக்கிறார். அங்கிருப்பவர் பிறிதொருவர். நினைவறிந்த நாள் முதல் தந்தையென்றும் ஆசிரியரென்றும் தெய்வமென்றும் வணங்கிய மானுடரல்ல. அவன் இருமுறை மூச்சை இழுத்து விட்டபோது உள்ளம் சற்று ஆறுதல் கொண்டது. புரவி நடை சீரடைந்தது. இந்தக் களத்தில் சிலர் மேலெழுகிறார்கள். சிலர் கீழிறங்குகிறார்கள். சிலர் அறிகிறார்கள். சிலர் அறிந்ததை கைவிடுகிறார்கள்.

இதை நான் முன்னரே அறிவேன். இவரை இவ்வண்ணம் முன்னரே பலமுறை சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இவரை உந்தி அகற்றி நான் உருவாக்கி என் குகையறையில் நிறுவியிருந்த பிறிதொருவரைக் கொண்டு அங்கு நிறுத்தியிருக்கிறேன். என்றும் இவர் இவ்வாறே இருந்தார். பாஞ்சால போர்க்களத்தில் துருபதனை இழுத்து வந்து தன் காலடியில் அர்ஜுனன் வீழ்த்தியபோது அங்கே நின்றார். திரௌபதி அவை நடுவே சிறுமைகொண்டு நின்றிருந்தபோது அங்கு அமர்ந்திருந்தார். எத்தனையோ முறை இவரை பார்த்திருக்கிறேன். நான் நன்கு அறிந்தவர். நான் அறிந்தவரிலேயே மிக அணுக்கமானவர். அர்ஜுனனைத் தவிர்த்து எனக்கு மட்டும் அரிய கலைகளை கற்பிக்க முனைந்தவர். நான் கொல்லப்படலாகாது என அர்ஜுனனிடம் சொல்பெறுகையில் அர்ஜுனனை கொல்லமாட்டேன் என்னும் சொல்லை என்னிடமிருந்து பெறாதவர்.

புரவி சீராக ஓட தன் உடல் மெல்லிய வியர்வை கொண்டு குளிர்ந்துவருவதை உணர்ந்தான். நான் அஞ்சுவது இவரைத்தானா? நான் அவ்வுடலிலிருந்து இவ்வுடலை பெற்றுக்கொண்டிருக்கிறேன். அவ்வுள்ளத்தின் ஒரு துளியையே என் அகமென வளர்த்து வைத்திருக்கிறேன். எனில் இவரும் என்னுள் வாழ்கிறார். ஒரு தருணத்தில் எழுவார், எளிய வஞ்சங்களால் ஆட்டுவிக்கப்படுவார். இவரில் இருக்கும் ஒரு துளி என்னில் அழியாமல் எஞ்சும். அறிவதனைத்தும் அறிந்த பின்னரும் இவ்வுலகை கவ்விக்கொண்டிருக்கும் ஒன்று. அரிய ஆசிரியர்களின் அடிசூடி அமர்ந்து மெய்யறிந்த பின்னரும் இவ்வுலக வஞ்சங்களிலேயே என்றென்றுமென சிக்கிக்கொண்டது. ஒருபோதும் இங்குள பின்னல்களிலிருந்து விடுபட்டு விண்ணிலெழ இயலாதவராக அவரை ஆக்குவது. அவ்வண்ணம் ஒருவன் என்னுள் வாழ்கிறான் எனில் நான் கொண்ட கல்வியும் ஆற்றிய தவமும் எதன் பொருட்டு?

இவ்வெண்ணங்கள் இத்தருணத்தில் என்னை மேலும் சோர்வுறச் செய்கின்றன. உள்ளம் சோர்வுற விரும்பும்போது அதற்குரிய எண்ணங்களை உருவாக்கிக்கொள்கிறது. இனி வெறுமைக்கும் அங்கிருந்து கழிவிரக்கத்திற்கும் அங்கிருந்து ஆழ்ந்த செயலின்மைக்கும்தான் இது செல்லும். எதிரியின் முன் தலை தாழ்த்தி கொடுக்கும். இக்கழிவிரக்கத்தை விரட்ட நான் செய்ய வேண்டுவது ஒன்றே. என்னை தருக்கி நிமிரச்செய்ய வேண்டும். வெறிகொண்டு எதிரியை வெறுக்க வேண்டும். அதைத்தான் தந்தையும் செய்துகொண்டிருக்கிறாரா? அல்ல, அவரில் எழுந்தது வெறி அல்ல. அது ஒரு வகை களிப்பு. மிக மென்மையானது, எவருமறியாதது என்பதனாலேயே உண்மையானது. வெறியும் சினமும் எந்நிலையிலும் சற்றேனும் நடிப்பு கொண்டவை. ஏனென்றால் அவை பிறருக்கானவை. பிறர் காணவியலா இடத்தில் முழுமையாக அவை வெளிப்படுவதே இல்லை. இக்களிப்பு தனித்திருக்கையில் பேருருக் கொள்வது. தன் தெய்வம் மட்டுமே அறிவது.

ele1அவன் துரியோதனனின் பாடி வீட்டை அடைந்ததை உணர்ந்தான். அங்கு துரியோதனன் துயின்றிருக்க மாட்டான் என்று எண்ணியிருந்தாலும் துச்சாதனனும் சகுனியும் கர்ணனும் அருகிருக்க குடில் முற்றத்தில் துரியோதனன் அமர்ந்திருக்கக் கண்டு திகைத்து கடிவாளத்தை பிடித்திழுத்தான். தொலைவிலேயே அவனை திரும்பிப் பார்த்துவிட்ட சகுனி புன்னகையுடன் கைசுட்டி ஏதோ சொன்னார். துரியோதனன் அவனை நோக்கி கைகாட்டி அருகே அழைத்தான். புரவி தயங்கி காலடி வைப்பதை உணர்ந்தான். எக்கணமும் அது திரும்பி விசைகொண்டு ஓடத்தொடங்கிவிடும் என்று தோன்றியது. அதை குதிமுள்ளால் குத்தியும் கழுத்தில் கைகளால் தட்டியும் அவன் முன்செல்ல ஊக்கினான். புரவி சென்று நின்றதும் இறங்கி நடந்து காவலனின் வணக்கத்தை ஏற்று துரியோதனன் அருகே சென்று சகுனிக்கும் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் தலை வணங்கிவிட்டு சிறிய பெட்டி மேல் அமர்ந்தான்.

சகுனி “இப்போர் எப்படி தொடரவேண்டும் என்பதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், பாஞ்சாலரே. உங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தோம்” என்றார். துரியோதனன் உரத்த குரலில் “இன்றைய பகல்போரை தவிர்த்துவிடுவோம் என்று அங்கர் எண்ணுகிறார். படைகள் துயின்றுகொண்டிருக்கின்றன, அவர்களை எழுப்பி போருக்கு செலுத்த இயலாதென்கிறார்” என்றான். “ஆம், நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். அது தந்தையின் ஆணையும்கூட” என்றான். ஆனால் துரியோதனனின் சொற்களிலேயே அவன் அந்த எண்ணம் கொண்டிருக்கவில்லை என உணர்ந்து உள்ளம் சலித்தான். “அவரிடம் நான் கூறுகிறேன். இப்போர் தொடர்ந்தாகவேண்டும். ஐயம் தேவையில்லை, இப்போர் இப்போதே தொடர்ந்தாக வேண்டும்” என்று துரியோதனன் சொன்னான். “அரசே” என்று தயக்கத்துடன் அஸ்வத்தாமன் கூற “அங்கு அவர்களின் படையில் நிஷாதரும் கிராதரும் முழுமையாக வீழ்ந்துவிட்டனர். நேற்று இரவு அங்கர் செலுத்திய நச்சுஅம்புகள் அவர்கள் அனைவரையும் மயங்கி விழவைத்திருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று உச்சிப்பொழுதுக்குள் எழுந்துவிடுவார்கள். மீண்டும் படைக்கலம் எடுத்து அவர்கள் போருக்கெழுவதற்கு முன்னர் நாம் அவர்களை முற்றழித்துவிடவேண்டும். ஆம், இன்று உச்சிப்பொழுதுக்குள் போர் முடிந்துவிடவேண்டும்” என்று துரியோதனன் சொன்னான்.

அஸ்வத்தாமன் அவன் விழிகளை பார்த்தான். அதிலிருந்த உறுதியும் நம்பிக்கையும் அவன் உள்ளத்தில் ஒரு நடுக்கை உருவாக்கின. திரும்பி அவன் கர்ணனை பார்த்தான். கர்ணன் “அவர் கூறுவது உண்மை. என் அம்புகளின் மயக்கு இன்னும் சில நாழிகைக்கே நீடிக்கும்” என்றான். “ஆனால்” என்று அஸ்வத்தாமன் சொல்லெடுக்க துரியோதனன் எழுந்து கைநீட்டி “எல்லாச் சொற்களுக்கும் ஆனால் என்பதை உடன் சேர்த்துக்கொள்ளலாம். ஆம், நமக்கு பல தடைகள் உள்ளன. நமது படைகளை எழவைக்க இயலாது. ஆனால் அவர்கள் எழுந்தாகவேண்டும், போர்புரிந்தாகவேண்டும். அவர்களிடம் சொல்வோம் நாம் வெற்றிகொள்ளப் போகிறோம் என்று” என்றான். அஸ்வத்தாமன் என்ன சொல்வதென்று அறியாமல் அவன் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அது களிப்பில் வெறிப்பு கொண்டிருந்தது. விழிகள் எதையும் நோக்காதவைபோல துறித்து நின்றன.

அருகே நின்றிருந்த துச்சாதனனை விழிதூக்கி நோக்கி அடையாளம் காணாமல் விழிவிலக்கி உடனே திடுக்கிட்டு மீண்டும் நோக்கினான். அது துச்சாதனனேதான். ஆனால் முற்றிலும் பிறிதொருவனாகத் தெரிந்தான். என்ன ஆயிற்று அவனுக்கு? முகத்தில் புண்ணோ நெருப்போ பட்டு தோற்றமே மாறிவிட்டதா? ஆனால் முகம் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அவன் ஆழ்ந்து துயில்பவன் போலிருந்தான். அஸ்வத்தாமன் விழிகளை விலக்கிக்கொண்டான். அவன் முகம் கண்ணுக்குள் நின்றது. அவன் உள்ளம் திடுக்கிட்டது. இன்று துருமசேனன் களம்பட்டான். ஆம், மைந்தனை இழந்தவன். ஆனால் அந்த முகத்தில் துயரே இல்லை. முனிவர்களின் முகம். முலையூட்டும் அன்னையரின் முகம். அவன் மீண்டும் துச்சாதனனை நோக்கினான். மிகையாக அகிபீனா கொண்டுவிட்டானா? ஆனால் அது களிமயக்கு அல்ல. தெளிந்தவன் போலிருந்தான். தன்னுள் இருந்த பெருஞ்சுமை ஒன்றை அகற்றியவன்போல. நஞ்சை முழுக்க உமிழ்ந்துவிட்டவன்போல. அந்த மைந்தனிடம் அவன் அணுக்கம் காட்டியதை அஸ்வத்தாமன் கண்டதே இல்லை. அணுக்கம் காட்டக்கூட முடியாத அளவுக்கு அகம்குழைந்திருந்த உறவுபோலும் அது. எனில் அவன் இழந்ததுதான் என்ன?

“சற்று முன் நான் துயின்றுகொண்டிருந்தேன். அனைத்தையும் இழந்துவிட்டேன் என்று துயிலுக்குள் நான் ஓலமிட்டேன்” என்று துரியோதனன் சொன்னான். “யாரோ என்னைத் துரத்த வெறிகொண்டு தப்பியோடி கரிய சுவரொன்றில் முட்டி மல்லாந்து விழுந்தேன். அச்சுவர் பேருருக்கொண்டு எழுந்து என் முன்னால் நின்றது. அது கன்னங்கரிய கலிதேவனின் உருவம். நீ இன்று வெல்வாய் என் மைந்தா என்றது. இன்னும் ஒருபகல் உன் வெற்றிக்கு என்று எந்தை சொன்னார். அக்குரல் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஐயம் தேவையில்லை, இன்று உச்சிப்பொழுதுக்குள் கௌரவப் படை முழு வெற்றியை அடையும். இன்று களத்தில் பாண்டவர் ஐவரையும் கொன்று வீழ்த்துவோம்.” இரு கைகளையும் ஓங்கித்தட்டி வெறியுடன் நகைத்து “இன்று களத்தில் நான் முடிசூடுவேன். அவ்விழிமகன்களின் குருதியில் ஐந்துமுறை நீராட்டிய மணிமுடியை. ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் சூடிய முடியை… ஆம்! இது எந்தையின் ஆணை!” என்றான்.

இயல்பாகத் திரும்பி அஸ்வத்தாமன் சகுனியை பார்க்க சகுனி அவன் கண்களை சந்தித்தபின் வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். அஸ்வத்தாமன் முடிவெடுத்து உரத்த குரலில் “அரசே, உங்கள் கனவும் நம்பிக்கையும் நீங்கள் கையறு நிலையிலிருப்பதால் உருவாவதாக இருக்கலாம். தெய்வங்கள் அவ்வாறு மானுடருடன் ஆடுவதுண்டு” என்றான். கர்ணனும் சகுனியும் அவன் நேர் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார்கள். ஆனால் துரியோதனன் மேலும் உரக்க நகைத்து கோணலாக இழுபட்ட உதடுகளுடன் “இதை நீங்கள் சொல்வீர்கள் என எனக்குத் தெரியும். என் கனவு எழுந்தபோதே நான் உணர்ந்தேன், என்னைச் சுற்றியுள்ள அனைவரும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்று. அனைத்தும் முடிந்துவிட்டதென்ற எதிர்நம்பிக்கையை பிற அனைவரும் அடைந்துவிட்டார்கள் என்று. இவ்வெற்றி எனது நம்பிக்கையால், எனது தளரா ஊக்கத்தால், என் தெய்வத்தின் அருளால் மட்டுமே அடையப்படுவது. இன்று வெற்றியை காண்பீர்கள். ஐயம் வேண்டாம்” என்றான்.

“உத்தர பாஞ்சாலரே, இன்று முழு வெற்றி நிகழும். இச்சோர்வும் பின்னடைவும் உளத்தளர்வும் நம்பிக்கையிழப்பும் அனைத்தும் இன்றைய வெற்றியை நோக்கி நாம் செல்வதற்காகவே. தெய்வங்கள் நமது இறுதி எல்லையை காட்டுகின்றன. இதிலிருந்து எழுவாயெனில் வெற்றி உனக்கல்லவா என்று என் தெய்வம் என்னிடம் சொல்கிறது. எழுந்து காட்டுகிறேன். இன்று என் தெய்வத்தின் முன் நின்று காட்டுகிறேன். இன்று போர் நிகழ்ந்தாகவேண்டும். இப்பொழுதே என் படைகள் எழுந்தாகவேண்டும்” என்றான் துரியோதனன். அஸ்வத்தாமன் பெருமூச்சுடன் தளர்ந்து தலையசைத்து “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் நமது படைகளை இப்பொழுது எழுப்ப முடியாது என்றாவது புரிந்துகொள்ளுங்கள். இறந்தவர்களும் துயில்பவர்களும் வேறுபாடின்றி நிரம்பிக் கிடக்கிறார்கள்” என்றான்.

துரியோதனன் “அவ்வண்ணமே மறுபக்கமும் கிடக்கிறார்கள். நாம் நம்மவரை எழுப்பிவிட்டோமென்றால் விழுந்துகிடப்பவர்கள் மேல் சென்று வெற்றியை அடைவோம்” என்றான். “அந்த ஒரு சிறு வாய்ப்பை நானும் காண்கிறேன். அவர்களால் தங்கள் படையை எழுப்ப முடியவில்லை. நாம் நமது படையை எழுப்பிவிட்டோமெனில் அதுவே வெற்றிக்கான வழியாக அமையக்கூடும்” என்றான். அஸ்வத்தாமன் திகைப்புடன் திரும்பி சகுனியை பார்த்தான். சகுனியின் கண்களில் துரியோதனனின் கண்களில் தெரிந்த அதே வெறி மெல்ல தொடங்கிவிட்டிருப்பதை கண்டான். ஒருவரிலிருந்து ஒருவர் பற்ற வைத்துக்கொள்கிறார்கள் என்று தோன்றியது. சலிப்புடன் “எப்படி எழுப்புவோம்? நமது படையை இத்தருணத்தில் எழுப்ப நம்மால் இயலாது. முற்புலரி என்பது நித்ரா தேவியின் களம். மரங்களையும் மலைப்பாறைகளையும்கூட துயில வைக்கும் ஆற்றலை இப்பொழுதில் நித்ராதேவி பெறுகிறாள்” என்றான்.

“இன்னும் சற்று நேரத்தில் புலரும். கதிரொளி படுகையில் மட்டுமே நம் படைவீரர்கள் எழுவார்கள். அதற்குப் பின் அவர்களைத் தொகுத்தொரு அணிவகுப்பதற்கே இரண்டு நாழிகை ஆகிவிடும்” என்றான் கர்ணன். “அணிவகுக்க வேண்டியதில்லை. அவர்கள் எழுந்து அந்நிலையிலேயே போர் தொடங்கட்டும். அவர்கள் எழுந்து அவர்கள் விழுகையில் என்ன அணி இருந்ததோ அந்த அணியே இருக்கட்டும்” என்றான் துரியோதனன். “நேற்று அவர்கள் விழுகையில் நம்மிடம் எச்சூழ்கையும் இல்லை. அரக்கனால் மத்தென கடையப்பட்டு வெறும் குழுக்களாகவும் ஒற்றை வீரர்களாகவும் சிதறிப்பரந்து இக்களத்தில் நின்றோம். இன்று வரும்போது நிலம் நிறைத்துக்கிடக்கும் உடல்களைப் பார்த்தபடி வந்தேன். புயலுக்குப்பின் சருகுகள்போல கிடக்கிறார்கள். எந்த ஒழுங்கும் இல்லை” என்றான் அஸ்வத்தாமன்.

துரியோதனன் “இன்று ஒழுங்கை என் தெய்வம் அமைக்கட்டும். இப்பதினான்கு நாளும் நாம் படைசூழ்கை அமைத்தோம். இன்று அதை தெய்வத்திற்கே விட்டுவிடுவோம். எழுந்து போர்புரியுங்கள் என்ற ஆணையை மட்டுமே அனுப்புவோம். இவர்கள் அனைவர் உள்ளத்திற்குள்ளும் புகுந்து அவர்களை ஒருங்கிணைக்கவைக்கும் என் தெய்வத்தை இன்று காண்போம். இன்றைய போர் முழுமையாகவே அவருக்கு விட்டுவிடப்படட்டும்” என்றான். கைகளை விரித்து பெருங்குரலில் “இன்று கலி தெய்வம் வென்றாகவேண்டும். பெருயுகம் ஒன்று எழவிருக்கிறது. அது என் தேவனின் யுகம்” என்றான். துரியோதனனின் முகமும் உடலும் முற்றாக மாறிவிட்டிருப்பதை அஸ்வத்தாமன் கண்டான். “அங்கரே” என்றான்.

கர்ணன் “அவர் கூறுவது ஒரு வாய்ப்பு என்றே எனக்கும் படுகிறது. இல்லையேல் அத்தனை ஆழ்ந்த நம்பிக்கை எழுந்திருக்காது அவருக்கு” என்றான். “எப்படி எழுப்புவோம் அவர்களை?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். கர்ணன் “அது எனக்குத் தெரியவில்லை. அவர்களில் வாழும் தெய்வம் அவர்களை எழுப்பட்டும். அரசரின் தெய்வம் களத்திலெழட்டும்” என்றான். சகுனி “அவர்களை எழுப்புவதற்கு ஒரு வழி உண்டென்று எனக்குத் தோன்றுகிறது” என்றார். அஸ்வத்தாமன் வெறுமனே நோக்க “ஆம், தெய்வம் வழிகாட்டும் என்று எனக்குத் தெரியும். சொல்க!” என்று துரியோதனன் கூவினான். “இன்னும் சற்று நேரத்தில் புலரிக்காற்று வீசத்தொடங்கும்” என்று சகுனி சொன்னார். கர்ணன் உடனே அதை உணர்ந்துகொண்டு எழுந்து “ஆம், புலரிக்காற்று நம் படைகளை நோக்கியே வீசும். அது விசை மிக்கது. எப்போதும் அந்தி சரிவதற்கு முன்பும் கதிரெழுவதற்கு முன்பும் மண்ணை தெய்வமெழுவதற்காக தூய்மைப்படுத்த அக்காற்று எழுகிறதென்று சொல் உண்டு” என்றான்.

சகுனி “நமது படைகளின் தெற்கு எல்லையில் நாம் சென்று நிற்போம். அங்கிருந்து முரசொலியை எழுப்பினால் காற்று அதை நம் படைகளின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டுசென்று சேர்க்கும். எழுக எழுக என்று அதுவே ஒவ்வொருவரின் செவிகளிலும் முழக்கும்” என்றார். கர்ணன் “ஆனால் இப்போதிருக்கும் துயிலில் அவர்கள் அதை கேட்பதற்கு வாய்ப்பில்லை. துயிலரசி செவிகளில் விழும் அனைத்தையும் பிறிதொன்றென விளக்கி அவர்கள் அகத்திற்கு காட்டும் ஆற்றல் கொண்டவள்” என்றான். “துயிலரசி உள்ளத்தை மட்டுமே ஆளமுடியும். உடல்களை உலுக்கி எழுப்புவோம்” என்றபடி சகுனி எழுந்தார். காலின் வலி முகம் சுளிக்க வைக்க துரியோதனனின் தோளைப் பற்றியபடி நின்று “தென்கிழக்குக் காவல்மாடங்களின் அருகே மேலும் நான்கு காவல்மாடங்களை இழுத்து வைப்போம். காவல்மாடத்திலிருந்து எரியும் மிளகுத்தூளை அக்காற்றில் கலந்து வீசுவோம். ஒவ்வொருவரின் மூக்குக்குள்ளும் அது சென்று அவர்களை தும்ம வைக்கும். உடலை உலுக்கி எழுப்பும். அப்போது நமது போர்முரசு ஒலிக்கட்டும்” என்றார்.

“விளையாடுகிறீர்களா? அவ்வாறு எழுப்பப்படும் வீரர்கள் எவ்வாறு போர்புரிவார்கள்? அவர்கள் கண்களிலும் அந்த எரிபொடியே நிறைந்திருக்கும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம், சற்று நேரம் அவர்களின் விழிகளிலும் எரிச்சல் இருக்கும். அதுவும் நன்று. யானைகளும் புரவிகளும்கூட வெறி கொள்ளும். நமக்குத் தேவை முதல் எழுச்சியின் விசைதான். முழுப் படையையும் எழுப்பவேண்டியதில்லை. முதல் படை எழுந்துவிட்டதென்றால் அதை உடலால் உணர்ந்து எஞ்சிய படையும் எழுந்துவிடும்” என்றார் சகுனி. “கீழ்மை” என்றான் அஸ்வத்தாமன். “அவர்கள் விழிப்பதற்குள் நமது படை கடந்து உள்ளே சென்றிருக்கும். நமது சகடங்களால் அறைபட்டு பெரும்பாலான கிராதர்கள் இறந்திருப்பார்கள்” என்று சகுனி சொன்னார். “இதைத்தான் நானும் எண்ணினேன். இது என் ஆணை!” என்று துரியோதனன் கூவினான்.

“அரசே, தந்தையின் ஆணை பிறிதொன்று. இன்று படைகள் போருக்கெழ வேண்டாம் என்று அவர் ஆணையிட்டார். அவ்வாணையுடன் நான் இங்கு வந்தேன்” என்றான் அஸ்வத்தாமன். “அரசன் என்ற வகையில் அவ்வாணையை நான் மீறுகிறேன்” என்றான் துரியோதனன். “அவர் நமது படைத்தலைவர்” என்றான் அஸ்வத்தாமன். “எனில் அவர் படைத்தலைவர் அல்ல என்று அறிவிக்கிறேன்” என்று துரியோதனன் சொன்னான். அவன் விழிகள் விரிந்து பித்துகொண்டு அலைந்தன. துச்சாதனனிடம் திரும்பி “செல்க! சென்று படைமுகப்புக்கு வரும்படி ஆணையிடுக! அவர் மறுத்தாரெனில் அவரை படைத்தலைவர் பொறுப்பிலிருந்து நான் நீக்கியிருக்கிறேன் என்று கூறுக! நமது படைகள் எழட்டும். ஒருகணமும் பிந்த வேண்டியதில்லை” என்றான்.

நூல் இருபது – கார்கடல் – 76

ele1திருஷ்டத்யும்னன் விராடர் களம்பட்ட செய்தியைத்தான் முதலில் அறிந்தான். காலைக் கருக்கிருளுக்குள் அனைத்து ஒளிகளும் புதைந்தடங்கின. கைகளால் தொட்டு வழித்தெடுத்துவிடலாம் என்பதுபோல் இருள் சூழ்ந்திருந்த அப்பொழுதில் படைவெளியில் இருந்த ஒவ்வொருவரையும்போல எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பதையே மறந்தவனாக அவன் இருந்தான். படைக்களம் முழுக்க வெம்மையான ஆவி நிறைந்திருந்தது. குருதியிலிருந்தோ மானுட உடல்களிலிருந்தோ எழுவது. தெற்கிலிருந்து சிற்றலைகளாக அடித்த காற்று குளிராக இருந்தது. அக்குளிரைக் கடந்து சென்றபோது வெப்பம் பிறிதொரு அலையாக வந்து செவிமடல்களை தொட்டது. எங்கும் நிறைந்திருந்த முழக்கமும் குருதிவீச்சமும் கலந்து அனைத்துப் புலன்களையும் நிறைத்திருந்தன.

குருதிவீச்சத்தை குளிராக உடலால் உணரமுடியும் என்பதுபோல், ஏற்ற இறக்கமின்றி கார்வை கொண்டு சூழ்ந்திருந்த ஓசையை இருளலைகளாக விழிகளால் பார்க்க முடியுமென்பதுபோல் தோன்றியது. தேர் வளைவொன்றில் திரும்பியபோது நோக்கும் நிலையும் முரண்பட திருஷ்டத்யும்னன் தடுமாறி தேர்த்தூணை ஒரு கையால் பற்றிக்கொண்டு வயிறு குமட்டி வாயுமிழ்ந்தான். இருமுறை உடல் துள்ள வாயுமிழ்ந்த பின்னர் கண்களை மூடி திறந்து எழுந்து நின்றபோது விரைந்து அணுகி வந்த வீரன் “இளவரசே, விராடர் களம்பட்டார்” என்றான். அவன் வாய்க்குள் கசப்பு நிறைந்திருந்தது. கண்களை இருமுறை மூடித்திறந்து “நன்று” என்றான். அச்சொல்லிலிருந்த பொருத்தமின்மையை உணர்ந்து “அவருக்கு விண்ணுலகம் அமைக! மைந்தருடன் அங்கு மகிழ்ந்திருக்கட்டும்!” என்றான்.

“அங்கே முரசுகள் முழங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் நமது படைகளிலிருந்து ஒற்றை வாழ்த்தொலி போலும் எழவில்லை. ஆகவேதான் படைத்தலைவர் தங்களைப் பார்க்க அனுப்பினார்” என்று வீரன் சொன்னான். திருஷ்டத்யும்னன் எரிச்சலுடன் “படைகள் என்ன நிலையிலிருக்கின்றன என்று பார்த்தாயல்லவா? எவரும் தன்னிலையில் இல்லை. இவர்களிடம் எந்த ஆணையையும் இப்போது நான் விடுக்க இயலாது. செல்க!” என்றான். பிறிதொருமுறை குமட்டி உமிழ்ந்துவிட்டு நெஞ்சு எரிவதை உணர்ந்து மெல்லத் தணிந்து “சரி, சிறப்பு முரசொலி முழங்க ஆணையிடுகிறேன்” என்றான். அவன் தலைவணங்கித் திரும்பியபோது பிறிதொரு வீரன் புரவியில் அணுகுவதைக் கண்டான். தன் ஏவலரை கைசுட்டி அழைத்து “மறைந்த விராட அரசருக்காக சிறப்பு முரசுகள் முழங்கட்டும். நமது வீரர்கள் சிலரேனும் அவருக்கு வாழ்த்து முழக்கமிடச் சொல்க!” என்றான்.

ஏவலன் தலைவணங்கி புரவியில் திரும்பிச்செல்ல வீரன் அருகணைந்து இறங்கி “அரசே, பாஞ்சாலத்து அரசர் விண்ணடைந்தார்” என்றான். திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப் பின் குமட்டி அக்கசப்பை நாவெங்கும் உணர்ந்தபடி “யார்? எங்கு?” என்றான். “சற்றுமுன்னர் அவர் ஆசிரியர் துரோணருடன் பொருதினார். துரோணரை ஏழுமுறை தேர்த்தட்டில் விழவைத்தார். வென்றுவிடுவார் என்றெண்ணிய கணத்தில் தெய்வங்கள் பிறிதொன்று கருதின” என்று வீரன் சொன்னான். திருஷ்டத்யும்னன் காறி உமிழ்ந்துவிட்டு அணுக்க வீரனை நோக்கி நீர் என கைகாட்டினான். “செல்க, நானும் வருகிறேன்!” என்றான். வீரன் விழிகளைக் கண்டதும் அவன் எண்ணுவதென்ன என்று புரிந்துகொண்டு தன் வில்லையும் அம்பையும் எடுத்தபடி சீற்றத்துடன் “எந்தையைக் கொன்ற அம்முதுமகனை இக்களத்திலேயே கொல்வேன். அவன் குருதியாடி மீள்வேன்!” என்றான்.

“பொழுது எழவிருக்கிறது” என்று வீரன் சொன்னான். அவன் என்ன எண்ணினான் என்பது முகத்தில் தெரியவில்லை. சற்று முன் விராடருக்காக தான் உரைத்த சொற்களை நினைவுகூர்ந்து திருஷ்டத்யும்னன் அகத்தில் ஒரு தளர்வை உணர்ந்தான். “தந்தை விண்ணேகும்பொருட்டு முரசுகள் முழங்கட்டும். பாஞ்சாலத்து வீரர்கள் வாழ்த்தொலி எழுப்ப வேண்டுமென்று நூற்றுவர் தலைவர் அனைவருக்கும் தனித்தனியாக ஆணை செல்லட்டும்” என்றான். தலைவணங்கி வீரன் சென்றதும் தேரை துருபதர் விழுந்த இடத்திற்குச் செலுத்தும்படி பாகனிடம் சொல்லிவிட்டு மெல்ல தேர்த்தட்டில் அமர்ந்தான். மீண்டும் நினைத்துக்கொண்டு எழுந்து தன்னைத் தொடர்ந்து வந்த ஏவலனிடம் “மூத்தவர் சிகண்டிக்கு செய்தி அறிவிக்கப்பட்டுவிட்டதா? அவர்தான் இனி நம் குடிக்கு தலைவர்” என்றான். ஏவலன் தலைவணங்கி திரும்பி விரைந்து புரவியிலேறிச் சென்றான்.

திருஷ்டத்யும்னன் மீண்டும் அமர்ந்தான். உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தமையால் அமர இயலவில்லை. மீண்டும் எழுந்து நின்றான். எஞ்சிய படைவீரர்கள் எவருடன் எதற்கு பொருதுகிறோம் என்றறியாமல் போரிக்கொண்டிருந்தார்கள். இயல்பாக விழிதிருப்பி நோக்கியபோது அது போர் என்றே தோன்றவில்லை. கூத்தில் நிகழும் போர்நடிப்பு போலத் தெரிந்தது. அவர்கள் இருக்கும் அவ்வுலகில் காலம் அழுத்திச் சுருட்டப்பட்டிருக்கிறது. பொழுது சென்று கொண்டிருப்பதை அறியாதவர்கள்போல என்றென்றும் அவ்வண்ணமே என நின்று பொருதிக்கொண்டிருப்பவர்கள்போல் தோன்றினார்கள். அவன் தலை சுழன்று ஆழத்தில் விழும் உணர்வை அடைந்தான். மீண்டும் தொடையில் கையூன்றி தேரிலிருந்து வெளியே வாயுமிழ்ந்தான். இப்போர் இன்று முடிவதற்கு ஒரு வழியே உள்ளது, இக்களத்திற்கு வெளியிலிருந்து ஏதேனும் நிகழவேண்டும். தெய்வ ஆணைபோல. இறுதியில் தெய்வங்களிடம்தான் செல்லவேண்டியிருக்கிறது.

திருஷ்டத்யும்னன் துருபதரின் படுகளத்திற்குச் சென்றுசேர்ந்தபோது அங்கு பாஞ்சால வீரர்கள் பெரிய வளையமாகச் சூழ்ந்து நின்றிருந்தனர். ஆனால் எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லை. தேர் அணுகும்போது திருஷ்டத்யும்னன் எழுந்து தேர்த்தூண்களை பற்றியபடி நின்று பார்த்தான். அவர்கள் ஒவ்வொருவரின் விழிகளிலும் விந்தையானதோர் இளிப்பு தென்பட்டது. முன்பொருமுறை ஐந்தாவது பிரயாகையின் கரையில் அடர்காட்டுக்குள் இருந்த ஆலயம் ஒன்றிற்கு அவன் தந்தையுடன் சென்றிருந்தான். தந்தை பிறர் அறியாத கொடுந்தெய்வங்களுக்கு பலிபூசனை செய்துகொண்டிருந்த காலம் அது. எழுயுகத்தின் தலைத்தெய்வமாகிய கலியின் பெண்வடிவமான கலிகையின் ஆலயம் அது என்று மிகப் பின்னர் அவன் அறிந்துகொண்டான்.

கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்ட நீள்வட்ட வடிவமான அந்த ஆலயத்தின் கருவறைக்குள் கலிகை முழங்காலளவு உயரமான கரிய கற்சிலையாக அமர்ந்திருந்தாள். காகக்கொடியும் கழுதைஊர்தியும் வெறித்த கண்களும் சொல்லொன்று எழும்பொருட்டு சற்றே திறந்த உதடுகளுமாக. அந்த வெறிப்பில் ஒரு புன்னகை இருப்பதாகத் தோன்ற அவன் நடுங்கி அருகே நின்றிருந்த இளைய தந்தை சத்யஜித்தின் ஆடையை பற்றிக்கொண்டான். அவர் தன் கைகளால் அவனை முழங்காலொடு சேர்த்து “வணங்குக, மைந்தா!” என்றார். அவன் கைகூப்பி வணங்கியபின் விழிமூடிக்கொண்டான். பின்னர் திறந்தபோது மேலும் முகங்களைக் கண்டான்.

அந்த ஆலயத்திற்குச் சுற்றும் நூற்றெட்டு பெருஞ்சிலைகள் இருந்தன. அவர்கள் கலிகை அன்னையின் ஊர்திகளென மண்ணிலெழப்போகும் அரசர்கள் என்று அமைச்சர் சுமந்திரர் சொன்னார். அவர்கள் கலிதேவனின் படைத்தலைவர்கள். ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு விரல் முத்திரை காட்டிக்கொண்டிருந்தது. ஒன்றென்றும் இரண்டென்றும் மூன்று என்றும். பேரழிவென்றும் வெறுமையென்றும், அனலென்றும் புனலென்றும். ஆனால் அனைத்து விழிகளும் வெறித்து உள்ளிருக்கும் மையத்தெய்வத்தின் அதே ஏளன நகைப்பை கொண்டிருந்தன. ஒவ்வொரு முகத்திலும் அந்தச் சொல் இருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். தன் உளம் குழம்பி நிகழ்வதும் கனவும் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொரு உலகில் இருப்பதை அவன் நெடுநேரமாக உணர்ந்துகொண்டிருந்தான். எனினும் அவ்விழிகளின் வெறிப்பும் உதடுகளின் இளிப்பும் சித்தத்தால் மோதி மாற்ற முடியாத வெளியுண்மைகள் என்றே தோன்றியது.

அவன் தேரிலிருந்து இறங்கியதும் அனைத்துப் படைகளும் விழிதிருப்பி அவனை பார்த்தன. எவரும் வாழ்த்துரைக்கவில்லை. அனைத்துக் கைகளிலும் படைக்கலங்கள் எழுந்தும் நீட்டியும் இருந்தன. அவன் செல்வதற்காக ஏவலர்கள் அவ்வீரர்களை உந்தி வழி உருவாக்கினர். அவன் எவரென்றே அவர்கள் உணரவில்லை என்று தோன்றியது. இடைவெளி வழியாகச் சென்று நோக்கியபோது வெறுந்தரையில் துருபதரின் உடல் குப்புறக் கிடந்ததைக் கண்டான். மண்ணை ஆரத்தழுவ முயல்வதுபோல. அப்பால் அவரது தலை அவ்வுடலுக்கு தொடர்பற்றதுபோல அண்ணாந்து வானை வெறித்துக்கொண்டிருந்தது. உதடுகள் விரியத் திறந்து, பற்கள் தெரிய, நகைப்பு சூடியிருந்தது. சற்று அப்பால் விராடரின் உடல் கருக்குழவிபோல் ஒருக்களித்து முழங்கால் மடித்து நெஞ்சோடு சேர்த்து சுருண்டுகிடந்தது. இரு கைகளும் மடித்து மார்பில் வைக்கப்பட்டிருந்தன. அவருடைய தலை மண்ணை முத்தமிடுவதுபோல் குப்புறக் கிடந்தது.

அங்கிருந்த அனைவரும் அவ்விரு உடல்களையும் மகிழ்ந்து நோக்கிக்கொண்டிருப்பதாக தோன்ற திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்கி சீற்றத்துடன் “இங்கே ஏவலர்கள் எவருமில்லையா? உடல்களை முறைப்படி எடுத்து வைக்க தெரிந்தவர்கள் எங்கே?” என்றான். முதிய ஏவலன் ஒருவன் “ஆணைகளை எவரும் பிறப்பிக்கவில்லை” என்றான். அவன் விழிகளை பார்த்தபோது அங்கும் அதே வெறிப்பும் இளிப்பும் தெரிய திருஷ்டத்யும்னன் உளம் நடுங்கினான். படைத்தலைவன் “இங்கே ஆயிரத்தவர் தலைவன் யார்?” என்றான். அப்பால் நின்ற புரவியிலிருந்து கூடி நின்றவர்களை விலக்கி உள்ளே வந்த படைத்தலைவன் “வணங்குகிறேன், இளவரசே. என் பெயர் கூர்மன், இங்கு ஆயிரத்தவர் தலைவன்” என்றான். “தந்தையின் உடல் முறைப்படி தென்னிலைக்கு கொண்டுசெல்லப்படட்டும். விராடரின் படைத்தலைவர் ஒருவரை அழைத்து வந்து அவர்களின் முறைப்படி அவ்வுடலையும் தெற்கே கொண்டுசெல்ல ஒருக்கங்கள் செய்க!” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

கூர்மன் “மூத்தவர் சிகண்டிக்கு செய்தி அறிவித்துவிட்டோம். இன்னும் சற்று நேரத்தில் அவர் இங்கு வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றான். “எனில் நன்று” என்று சொன்ன பின் திருஷ்டத்யும்னன் களைப்புடன் நீள்மூச்சுவிட்டு கால்களை நீட்டி வைத்து தன் தேரை நோக்கி நடந்தான். தேரின் பிடியைப்பற்றி உடலைத் தூக்கி தேர்த்தட்டு வரை கொண்டுசெல்ல அவனால் இயலவில்லை. மூன்று முறை கால்களால் எம்பியும் உடலின் எடைமிகுந்து அவனால் மேலெழ இயலவில்லை. பின்னர் முழு மூச்சையும் திரட்டி தேரிலெழுந்து அமர்ந்தான். “செல்க!” என்று அவன் சொன்னான். அவன் எண்ணத்தை அறியாமல் தேர்ப்பாகன் திரும்பிப்பார்த்தான். “அரசரிடம் செல்க, மூடா!” என்று திருஷ்டத்யும்னன் உரக்க கூவினான். “அறிவிலி! ஒவ்வொன்றையும் சொல்லித் தெரியவேண்டுமா உனக்கு?” என்று கைகளை வீசி உடைந்த குரலில் கூச்சலிட்டான்.

தேர் எழுந்து விசைகொண்டு காற்று அவன் முகத்தில் மோதியபோது மீண்டும் ஆறுதல் அடைந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். உடலெங்கும் வியர்வை பூத்திருந்தது. இரு கைகளாலும் நெற்றியை பற்றிக்கொண்டபோது இரு புழுக்கள் ஒட்டியிருப்பதுபோல் இருபுறமும் நரம்புகள் அதிர்வதை உணரமுடிந்தது. கண்களை மூடியதும் குருதிக்குமிழிகள் வெடித்துச் சுழன்றன. உடலெங்கும் நரம்புகள் துடித்து பின்னர் மெல்ல அசைவழிந்துகொண்டிருந்தன. அவன் ஒற்றைச் சொல்லொன்றை சென்று பற்றிக்கொண்டான். அச்சொல் என்னவென்று அவன் அறியும்முன்னரே சித்தம் முழுதறிந்திருந்தது. தேர் உலுக்கலுடன் நின்று “அரசே! இளவரசே!” என்று பாகன் அழைத்தபோதுதான் அவன் தன்னிலை மீண்டான். எழுந்து கையுறைகளை இழுத்துவிட்டபடி படிகளில் கால் வைத்து இறங்கி யுதிஷ்டிரரின் தேரை நோக்கி சென்றான்.

யுதிஷ்டிரரின் தேரைச் சூழ்ந்து பாஞ்சால படைவீரர்கள் காவல் நின்றனர். அவர் இரு கைகளையும் வீசி ஆணைகளைக் கூவிக்கொண்டிருந்தார். அவரது ஆணைகள் எவையும் முழவொலிகளாகவோ கொம்பொலிகளாகவோ ஒளியசைவுகளாகவோ மாறி அங்கிருந்து எழுந்து பரவவில்லை என்பதை அவர் உணரவில்லை. திருஷ்டத்யும்னன் அருகே சென்று தலைவணங்கினான். அவனை திரும்பிப் பார்த்து “என்ன நிகழ்கிறது?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். அவர் செய்தியை அறிந்திருக்கவில்லை என்று உணர்ந்து “விராடர் களம்பட்டார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். பின்னர் “எந்தையும் சற்று முன் துரோணரால் கொல்லப்பட்டார்” என்றான். அச்செய்தி யுதிஷ்டிரரில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. அவருடைய உள்ளம் அத்தருணத்திற்குரிய சொற்களைத் தேடி உழல்வதை அவனால் விழிகளில் காண முடிந்தது. “எந்தை பல்லாண்டுகளுக்கு முன் எடுத்த வஞ்சத்தை நிகழ்த்தினார். களத்தில் துரோணரை மண்டியிட வைத்தார். அதன் விளைவாக தன்னுயிர் அளித்தார்” என்று அவன் சொன்னான்.

அதற்குள் யுதிஷ்டிரர் உரிய சொற்களை கண்டடைந்திருந்தார். “ஆம், இப்பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார். விழைந்ததை நோக்கி செல்வதென்பது ஒரு நோன்பு. அவர் வாழ்வு நிறைவடைக! உளமகிழ்வுடன் அவர் விண்ணேகுக! அங்கு மூதாதையருடனும் மைந்தருடனும் மகிழ்ந்திருக்கட்டும் அவர்” என்றார். திருஷ்டத்யும்னன் “மெய், அங்கு இளையோரும் மைந்தரும் முன்னதாக சென்று அவருக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். அச்சொற்களில் ஏளனம் உள்ளதா என்று உடனே அவனுக்குத் தோன்றியது. யுதிஷ்டிரர் அத்தகைய முறைமைச் சொற்களில் முழுதுளத்தால் ஈடுபடுபவர், அவருக்கு அவற்றின் உணர்வுகளில் ஐயமெழுவதில்லை. “விராடரும் நிறைவடைந்தார். இங்கு அவர் மைந்தர் தங்களை ஈந்து நம் வெற்றிக்கு வழிகோலினர். மைந்தரின் இறப்புக்கு வஞ்சம் தீர்க்கும் பொருட்டே அவர் வாழ்நாள் கொண்டிருந்தார். அவரும் விண்ணில் மைந்தருடன் அமர்ந்திருக்கட்டும்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “அவர்கள் இருவரையும் தென்னிலைக்கு கொண்டுசெல்ல ஆணையிட்டுவிட்டேன்” என்றான். தென்னிலை எனும் சொல் யுதிஷ்டிரரை தொட்டு உலுக்க அவர் உரத்த குரலில் “என் மைந்தனை தென்னிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பதினெட்டு பேர் அவனுடலை சுமந்துகொண்டு சென்றார்கள் என்று சற்றுமுன் ஏவலன் சொன்னான். என் குடியின் முதல் மைந்தன். அவன் குருதிக்கு அதோ படைகொண்டு வந்திருக்கும் அக்கீழ்மகன்கள் மறுமொழி சொல்லியாகவேண்டும். அவர்கள் தங்கள் குருதியால் தங்கள் கொடிவழிகளின் குருதியால் அதற்கு நூறு முறை நிகரீடு செய்யவேண்டும்” என்று கூவினார். பதறும் கைகளை நீட்டி “செல்க! அங்கன் இன்றே களத்தில் விழுந்தாகவேண்டும்!” என்றார்.

திருஷ்டத்யும்னன் “அவரை நமது படைகள் சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றான். “சூழ்ந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு கணமும் எனக்கு செய்தி வந்தாகவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவன் இக்களத்தில் கொல்லப்பட்டாகவேண்டும். இக்களத்தில் அவன் குருதியை என் விழிகளால் நான் பார்த்தாகவேண்டும். இது என் வஞ்சினம்! என் தெய்வங்களின் மேல் தொட்டு நான் ஆணையிடும் சொல் இது” என்றார். கண்ணீர் வழிய உடல் துடிக்க கைகளை வீசி “என் அன்னை இக்கணம் எவ்வண்ணம் உணர்வார் என்று என்னால் அறியமுடிகிறது. அவர் தொட்டணைத்து நெஞ்சோடு சேர்த்து இன்சொல் உரைத்த முதல் மைந்தன் இடும்பன். அவனைக் கொன்றவன் எங்கள் குடிக்கு ஒருபோதும் அணையாத அனலொன்றை அளித்திருக்கிறான். அவன் அதற்கு ஈடு சொல்லியாக வேண்டும்…” என்றார். “செல்க! போர் தொடர்க! செல்க!” என்று கூச்சலிட்டார்.

திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் தேரை களம் நோக்கி திருப்ப ஆணையிட்டபோது தன் முன்னிருந்த தேர்த்தூணின் இரும்புக் கவச வளைவில் ஒரு மெல்லிய ஒளியை பார்த்தான். அங்கு வெவ்வேறு ஒளிகள் உலாவிக்கொண்டிருந்த போதிலும் கூட அதன் மின்னை பிறிதொன்றென அவன் உள்ளம் அறிந்தது. ஒரு சிறு பறவை சிறகடித்தெழுந்தது என தோன்றியது அது. திரும்பி வானை நோக்கியபோது அது புலரியின் முதற்கதிர் என்று உணர்ந்தான். தொலைவில் புலரியை அறிவித்து முரசுகள் முழங்கத் தொடங்கின. அன்று புலரிக்கு முன்னர் எழவேண்டிய முதற்காற்று வீசவில்லை என்று நினைத்துக்கொண்டான். கொடிகள் ஓய்ந்து கிடந்தன. பெரும்பாலான படைவீரர்கள் விழுந்து துயின்றுகொண்டிருந்த களத்தில் புலரிமுரசு எழுப்பிய ஒலி வழிதவறியதென அலைந்தது.

அதை எதிர்பார்த்திருந்தவர்கள்போல பாண்டவர் தரப்பிலும் கௌரவர் தரப்பிலும் படைக்கலங்களுடன் எஞ்சிய அனைவரும் போர் நிறுத்தி கைஓய்ந்தனர். எந்த ஆணையும் விடப்படாமலேயே ஒன்றிலிருந்து ஒன்று எனப் பிரிந்து இரு கரைகள் என மாறி அகலத் தொடங்கின படைகள். மறுபுறம் சகுனியின் முரசு முழங்கிக்கொண்டிருப்பதை அவன் கேட்டான். படைகளை மீண்டும் ஒருங்கிணைய அது ஆணையிடுகிறதென்று புரிந்துகொண்டான். புரவியில் அவனிடம் விரைந்து வந்த காவலன் “அரசே, நமது ஆணை என்ன?” என்றான். “அவர்களின் படை என்ன செய்கிறதென்று பார்ப்போம். அதுவரைக்கும் நம்மிடமிருந்து ஆணைகள் எழவேண்டியதில்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டே இருக்க கௌரவப் படை முழுமையாகவே பின்னடைந்தது. வற்றும் எரியின் விளிம்பென அது உள்வாங்கி அகன்று செல்ல மானுட உடல்களால் ஆன பரப்பென குருக்ஷேத்ரம் தெளிந்து பரந்தெழலாயிற்று.

பாண்டவப் படைகளும் பின்னடைய போர்முகப்பிலிருந்து அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சாத்யகியும் பின்னோக்கி வரத்தொடங்கினர். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனின் தேரை நோக்கி சென்றான். அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து காண்டீபத்தை ஆவக்காவலனிடம் அளித்துவிட்டு தன் கையுறைகளை கழற்றி அருகே வைத்துக்கொண்டிருந்தான். திருஷ்டத்யும்னனைக் கண்டதும் விழிகளால் ஒருமுறை சந்தித்துவிட்டு தலை தாழ்த்திக்கொண்டான். திருஷ்டத்யும்னன் இளைய யாதவரிடம் “துவாரகையின் அரசே, எந்தை களம்பட்டார். விராடரும் உடன் விழுந்தார்” என்றான். “ஆம், அவர்களுக்கு உகந்த இறப்பு” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார். பின்னர் ஒரு சொல்லும் உரைக்காமல் இரு தேர்களும் இணையாக ஓடின.

தேர் படைகளின் உள்ளடுக்கு நோக்கி சென்றதும் அப்பாலிருந்து பீமனின் தேர் வருவதை திருஷ்டத்யும்னன் பார்த்தான். தேர் நிற்பதற்குள்ளாகவே பீமன் அதிலிருந்து பாய்ந்திறங்கி வந்தான். “என் மைந்தனை தெற்கே அனுப்பிய பின் வருகிறேன்… யாதவரே அவனைக் கொன்றவனின் குருதி எனக்கு வேண்டும்… அவனை கொல்லாமல் இக்களம்விட்டு நான் அகலப்போவதில்லை” என்று கூவினான். இளைய யாதவர் மறுமொழி சொல்லாமல் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “என் மைந்தனை அவன் கொன்று வீழ்த்தினான். அவனை களத்தில் நான் கொன்றாகவேண்டும். அக்குருதிக்கு நிகர் செய்யாது இப்புவியில் நான் உயிர் வாழ்ந்து பொருளில்லை. நான்…” என்று அவன் கைதூக்க “பொறுங்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “வஞ்சினங்களை நாம் வணங்கும் தெய்வங்களுடன் இணைந்தே எடுக்க வேண்டும். நம் இயல்புக்கு மீறிய பெருவஞ்சினங்கள் நம்மை தோற்கடித்து இளிவரல் தேடித்தரும்.”

“அந்த சூதன்மகன் என் கண்முன் என் மைந்தனைக் கொன்று வீழ்த்தினான். இக்குடியின் முதல் மைந்தன் அவன்…” என்று பீமன் சொன்னான். “அதற்குரிய பழிநிகரை உங்கள் குடியிலிருந்தே செய்யலாம்” என்று சொல்லி அர்ஜுனனை கைகாட்டினார் இளைய யாதவர். பீமன் தோள்கள் தளர விசும்பல் ஒலியொன்றை எழுப்பி திரும்பிக்கொண்டான். கழுத்திலும் தோளிலும் அவன் தசை இறுகி நெளிவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவன் இளைய யாதவரை நோக்கித் திரும்பி “இடும்பர் எனக்கு இளையவர். அவர் முகம் என் நெஞ்சை விட்டு அகலவில்லை” என்றான். “அவன் இறப்பு பிறிதொன்றை ஈடுசெய்கிறது” என்று இளைய யாதவர் அதே புன்னகை மாறா முகத்துடன் சொன்னார். “அவன் இறந்தாலொழிய ஈடு செய்ய முடியாத ஒன்று அது. அந்த ஈடு செய்யப்பட வேண்டுமென்று பெரும் வேண்டுதலொன்று தெய்வங்களிடம் ஒவ்வொரு கணமும் முன்வைக்கப்பட்டது. தெய்வங்கள் அதை செவி கொள்ளவில்லை.” சீற்றத்துடன் திரும்பி “யார்? யாருடைய வேண்டுதல்?” என்று உரக்க கேட்டான் பீமன். இளைய யாதவர் புன்னகைத்தார். பீமன் தலையை அசைத்து தாள முடியாத வலியில் துடிப்பவன்போல் உடல் நெளிய நின்றபின் திரும்பி தன் தேரில் பாய்ந்து ஏறிக்கொண்டு கிளம்பிச்சென்றான். திருஷ்டத்யும்னன் ஏவலரிடம் “அவரைக் கொண்டுசென்று படுக்க வையுங்கள். அகிபீனா அளியுங்கள். அவர் துயிலட்டும்” என்றான். அவர்கள் பீமனைத் தொடர்ந்து சென்றனர்.

திருஷ்டத்யும்னன் “இடும்பனின் வீழ்ச்சி நம் படைகளை சோர்வடையச் செய்துள்ளது” என்றான். இளைய யாதவர் “அல்ல. நம் தரப்பு ஷத்ரியர்கள் இன்றொரு நாள் கடந்தால் உளம் தேர்வார்கள். இன்றைய போரில் இங்குள்ள ஷத்ரியர் எவருக்கும் அவன் ஈடல்ல என்பதை அவன் காட்டிவிட்டான். அவன் வாழ்ந்தால் இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் என அவனை அமரச்செய்யவேண்டும் என்னும் குரல் எழும். அவன் அதை விரும்பாது தன் நகருக்கே மீண்டால்கூட நாளை அவன் கொடிவழியினர் அவ்வாறு எழக்கூடும். இப்போரால் எழவிருக்கும் யுகத்தில் அரக்கர்கள் முதன்மை கொள்வார்களோ என்று ஷத்ரியரும் அந்தணரும் யாதவரும் ஐயம் கொண்டிருப்பார்கள். அரக்கர்களை நிகர்செய்யும் ஆற்றல் என்ன என்பதை இவ்விறப்பு காட்டியிருக்கிறது. இனி அவர்கள் உளம் அமைவார்கள்” என்றார். திருஷ்டத்யும்னன் நீள்மூச்செறிந்து “எழவிருக்கும் யுகத்தில் ஆளப்போகிறவர் எவர்?” என்றான். “கலியுகத்தில் கூட்டே வல்லமை எனப்படும்” என்றார் இளைய யாதவர்.

யுதிஷ்டிரர் விரைந்து வந்து தேரிலிருந்து இறங்கி அவனை நோக்கி ஓடி வந்தார். “போர் நின்றுவிட்டது. எவரது ஆணை இது? எழுந்து சென்று தாக்கவேண்டும் என்றல்லவா நான் ஆணையிட்டிருந்தேன்” என்றார். திருஷ்டத்யும்னன் “எவரது ஆணையையும் கேட்கும் நிலையில் படைகள் இல்லை, அரசே. முன்னரே பெரும்பாலானவர்கள் நின்ற இடத்திலேயே விழுந்து துயில்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தனர். எஞ்சியோர் இதோ படைக்கலங்களை தாழ்த்தி பின்னடைகிறார்கள். இந்த இரவுப்போர் முடிகிறது. இவர்கள் சற்றேனும் துயில்கொள்ளாமல் மீண்டும் இங்கு போர் நிகழாது” என்றான். யுதிஷ்டிரர் “இக்களத்திலிருந்து வெற்றி கூவி அவன் திரும்பிச்செல்வானெனில் நாம் அரசன் என்றும் அரச குடியினரென்றும் தருக்கி நிற்பதில் பொருளில்லை. காண்டீபமும் மந்தனின் கதையும் வெறும் களிப்பாவைகள் என்றே பொருள்” என்றார்.

யுதிஷ்டிரரின் முகத்தை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவர் “என்ன இருந்தாலும் கடோத்கஜன் அரக்கன்” என்றார். “என்ன சொன்னாய்?” என்றபடி யுதிஷ்டிரர் முன்னெழுந்து வந்தார். “ஆம், அவன் அரக்க குடியினன். அவன் இறந்தாகவேண்டும். பழுத்த சருகு உதிர்ந்தேயாகவேண்டும் என்பதைபோல. அவன் குடியில் ஷத்ரியப் பண்புகள்கொண்ட புதிய மைந்தர் எழுந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து புதிய அரச மரபுகள் தோன்றவிருக்கின்றன. மண்ணில் நடக்கும் ஆற்றலற்றவனும் மரக்கிளைகளில் இயல்பாக அமைபவனுமாகிய இவ்வரக்கன் முதுமைகொண்டு பயனற்றவனாகிப் படுத்து நோயுற்று இறப்பதைப்போல கீழ்மை பிறிதுண்டா? இன்று அரக்கர் குலத்துக்கு பெருமை சேர்த்து பெருங்காவியங்களில் சொல் பெற்று களம்பட்டிருக்கிறான். உகந்த இறப்பு இதுவன்றி வேறென்ன?” என்றார் இளைய யாதவர்.

“உன் சொற்களில் இருக்கும் நஞ்சு மட்டும் எனக்கு புரிகிறது, யாதவனே” என்றார் யுதிஷ்டிரர். விம்மலை மூச்சென ஆக்கி “கொடு நஞ்சு… ஆலகாலம்” என்றார். “ஒவ்வொரு சொல்லிலும் இந்த யுகத்தை முடிக்கும் நஞ்சை நான் கொண்டிருக்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். அப்பாலிருந்து படைத்தலைவன் வந்து “படைகள் முற்றாக விலகிவிட்டன” என்று திருஷ்டத்யும்னனிடம் சொன்னான். “படைகள் அமையட்டும். எந்த அறிவிப்பும் தேவையில்லை” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.

நூல் இருபது – கார்கடல் – 75

ele1அம்முறை துரோணரை நேருக்குநேர் எதிர்கொண்ட தருணத்திலேயே துருபதர் உணர்ந்தார், அது தன் இறுதிப் போர் என. ஒவ்வொரு முறை துரோணரை களத்தில் எதிர்க்கையிலும் வஞ்சமும் அதற்கு அப்பாற்பட்ட பேருணர்வொன்றும் எழுந்து அவர் உடலை அதிரச்செய்யும். சொற்கள் கலைந்தெழுந்து உள்ளம் பெருங்கொந்தளிப்பாக ஆகி ஒவ்வொரு அம்பிலும் ஒவ்வொரு சொல்லும் குடியேறி அகன்று அகன்று செல்ல இறுதியில் முற்றடங்கி வெறுமையும் தனிமையும் கொண்டு களத்தில் நின்றிருப்பார். போரிலிருந்து துரோணரே எப்போதும் பின்னடைந்தார். மிக இயல்பாக அப்பால் எதையோ கண்டு அதை எதிர்க்கும்பொருட்டு எழுபவர்போல.

துரோணரின் தேர் அவரை ஒதுக்கித் திரும்பும் கணத்தில் துருபதர் ஓர் உளஅசைவை உணர்வார். “நில்லுங்கள், துரோணரே! இக்கதையை முடித்துவிட்டுச் செல்லுங்கள்!” என்று பின்னால் நின்று கூவ எண்ணுவார். மேலும் மேலும் அம்புகளுடன் துரோணரை பின்தொடர்ந்து சென்று அறைய வேண்டும் என்று உளம் பொங்கும். இயல்பாக கை சென்று ஆவநாழியை தொடுகையில் அங்கு அம்பென எதுவும் எஞ்சவில்லை என்றுணர்ந்து திடுக்கிடுவார். தன் ஆவநாழியின் அம்புகளை முற்றறிந்த ஒருவரிடம் ஒவ்வொரு முறையும் சென்று தலைகொடுத்து போரிடுகிறோம். அவருடைய இறுதி அம்பும் தீர்ந்துவிட்டதென்று உணர்ந்தபின் துரோணர் ஓர் அம்பையும் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அவருக்கு உயிர்க்கொடை அளித்து முற்றாக தோற்கடித்து திருப்பி அனுப்பினார்.

“என் முகத்தில் காறி உமிழ்கிறீர்கள்! என் நெஞ்சில் எட்டி உதைக்கிறீர்கள்! நீங்கள் எனக்கிழைத்த கீழ்மைகளின் உச்சம் இக்களத்தில் நீங்கள் எனக்களிக்கும் உயிர்க்கொடையே. ஆசிரியரே, என்னை கொல்க! உங்கள் அம்பொன்றால் என் நெஞ்சை பிளந்திடுக! இப்புவியில் நான் கொண்ட வஞ்சம் என் வாழ்க்கையை முற்றிலும் நிறைத்துவிட்டது. உங்கள் அம்பு வந்து என் நெஞ்சைப் பிளந்து உட்செல்லுமெனில் அங்கு கொதிக்கும் அனலை அறிந்து உருகி நீராகும் என்று அறிக!” அவருடைய சொற்களின் பொருளின்மை அவரை கண்ணீர் மல்கச் செய்யும். ஒவ்வொரு முறை துரோணரிடமிருந்து திரும்புகையிலும் உடல் சோர்ந்து, தலை தளர்ந்து, விழிநீர் வழிய தேர்த்தட்டில் அமர்ந்திருப்பார்.

மறுமுறை துரோணரை சந்திக்கும் கணத்தைப் பற்றிய மெல்லிய கற்பனை எழுகையில் உள்ளிருந்து உயிர்த்துளி ஒன்று தோன்றும். அது வளர்ந்து மீண்டும் வஞ்சம் என்றாகி அவர் உடலை காற்று திரைச்சீலையை என ஊதி எழுப்பி நிறுத்தும். மறுமுறை இன்னும் கூரம்புகளுடன் இன்னும் பழிச்சொற்களுடன் அவர் முன் நிற்பேன். இன்னொரு முறை வெல்வேன். தெய்வங்கள் அறியட்டும், இவ்வாழ்நாளே இதன்பொருட்டே என. என் உளம் எரிவதை அறிந்து அவை கனியும் என்றால் அவரிடமிருக்கும் அம்புகளைவிட ஓர் அம்பை எனக்கு மிகுதியாக அளிக்கட்டும். ஓர் அம்பு போதும், அவர் நெஞ்சை சென்று தொடும் ஒற்றை ஓர் அம்பே என் வாழ்நாளை முழுமை செய்யும். தெய்வங்களே, ஒற்றை அம்பு! இதுநாள் வரை நான் அளித்த பெருங்கொடைகள், வேள்விகள், தன்னந்தனிமையில் இருளில் வீழ்த்திய விழிநீர், இறைத்து இறைத்து என் வழியை நிரப்பிய பல்லாயிரம் கோடி சொற்கள் அனைத்திற்கும் ஈடென நான் கேட்பது ஒற்றை அம்பை மட்டுமே.

அன்று அவர் அம்பறாத்தூணியில் அம்புகள் நிறைந்திருந்தன. ஏழு முறை கௌரவப் படைகளுக்குள் சென்று போரிட்டு புண்களுடன் மீண்டு சற்றே ஓய்வெடுத்து ஆவநாழியை நிறைத்தபின் அவர் களத்திற்கு வந்தார். அலம்புஷரின் படைகளையும் அதன்பின் கேகயப் படைகளையும் எதிர்கொண்டு போரிட்டு பின்னடையச் செய்து திரும்பியபோது நேர்எதிரில் துரோணர் நின்றிருப்பதை கண்டார். எப்போதும் எத்தொலைவிலும் துரோணரின் அசைவை அவரால் முதற்கணத்திலேயே உணர முடியும். பெருந்திரளில் துரோணரன்றி பிற எவரையும் காணாதொழியும் நோக்கும் அவருக்குண்டு. அன்று துரோணர் இருளிலும் தனித்துத் தெரிந்தார். அவர் விழிகளின் சிறு மின்னை நோக்க இயன்றது. நாணொலி எழுப்பியபடி துருபதர் துரோணரை நோக்கி சென்றார்.

துரோணர் சலிப்புற்றவர்போல் தெரிந்தார். ஒவ்வொரு முறை துருபதரை நேரில் பார்க்கையிலும் நெடுநாள் பிரிவுக்குப் பின் அணுக்கமான ஒருவரை பார்க்கும் புன்னகை அவரிலெழ அதை அக்கணமே ஏளனமென மாற்றிக்கொள்வார். அவரை நகையாடும் சொற்கள் சிலவற்றை உதிர்ப்பார். எப்போதும் அவரை நோக்கி எழுப்பும் முதல் அம்பு துருபதரின் இடத்தோளை ஒரே புள்ளியில் வந்தறைந்து செல்லும். அவர்கள் குருகுலத்தில் சேர்ந்து பயிலும் காலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கையில் துரோணர் தன் வலக்கையால் அவர் இடத்தோளில் அறைவதுபோல் கைகாட்டுவார். அது ஒருவகை முகமன். அந்த அறையை மெய்யாகவே தோளில் உணர்ந்து துருபதர் சிரிப்பார். முதல் அம்பு தன் இடத்தோளில் கவசத்தில் மணியோசை என ஒலித்து உதிர்கையில் துருபதர் உளம்குன்றுவார். அதை உணர்ந்து அனைத்துச் சொற்களையும் திரட்டி தன்னை வஞ்ச விசை கொண்டவராக மாற்றிக்கொள்வார்.

போரிடுந்தோறும் பெருகுவது அவர்களின் சினம். மெல்லமெல்ல வெம்மைகொண்டு சிவக்கும் இரும்பென்று ஆவார் துருபதர். அவர் எழுந்து தாக்கத் தாக்க துரோணரின் புன்னகை மறையத் தொடங்கும். எங்கோ ஒருகணத்தில் ஓர் அம்பில் துரோணரின் விழிகளில் சீற்றம் எழுந்து உடனே அணையும். அதுவே தன் வெற்றி என்று துருபதர் உளமெழுவார். மீண்டும் மீண்டும் அந்தப் புள்ளியைத் தாக்கி சினமெழச்செய்ய முயல்வார். பலமுறை எழுந்து அணைந்த துரோணரின் சினம் மெல்லமெல்ல அனலாகும். அவர் தன் உதடுகளை உள்மடித்துக் கடிக்கும்போது அவர் எரியத் தொடங்கிவிட்டதை துருபதர் உணர்வார். பிறகு எழும் அனைத்து அம்புகளிலும் துரோணரின் சீற்றம் இருக்கும். ஆனால் அம்புகள் அவரை மெய்யான விசையுடன் வந்து அறையுந்தோறும் முகம் தளரத்தொடங்கும். விழிகள் அமைதிகொள்ளத் தொடங்கும். சில தருணங்களில் புன்னகைகூட அவர் உதடுகளில் எழும்.

அந்தப் புன்னகை தன்னை சீண்டுவதற்கே என துருபதர் எண்ணுவார். சீற்றம்கொண்டு தாக்கி மீண்டும் அவ்விழிகளில் சினம் எழுப்புவதற்கு முயல்வார். ஆனால் அவருடைய அம்புகள் பெருகுந்தோறும் துரோணரின் புன்னகை விரிந்துகொண்டே செல்லும். அவர் வாய்விட்டு நகைப்பதுகூட சில தருணங்களில் தெரியும். அது அவரை கொந்தளித்து எழச்செய்யும். அம்புகளால் துரோணரை அறைந்தபடி தாக்கு வளையத்தைக் கடந்து அருகணைவார். அவருடைய அம்புகளை மிக எளிதாக ஒழிந்தும் முறித்தும் களத்தில் நின்றிருக்கும் துரோணர் மிக இயல்பாக ஒரு தருணத்தில் திரும்பி பிறிதொரு இலக்கை நோக்கி அம்புவிட்டபடி செல்வார். உள்ளமும் ஆவநாழியும் ஒழிந்து துருபதர் நின்றிருப்பார்.

அம்முறை துருபதரின் நாணொலியைக் கேட்டதும் துரோணர் அதை எதிர்பாராததுபோல் திரும்பி நோக்கி எரிச்சலும் சீற்றமும் கொண்ட முகத்துடன் கைவீசி “விலகிச்செல், வீணனே. நான் அவ்வரக்கனை தேடிச் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றார். “நாம் மீண்டும் சந்திக்கப்போவதில்லை, துரோணரே. இம்முறை நம்மில் ஒருவரே மீளவிருக்கிறோம்” என்றபடி துருபதர் தொடர்ந்த அம்புகளால் துரோணரின் தேரை தாக்கினார். இயல்பாக எழுந்து அம்பு தொடுத்து துருபதரின் அம்புகளை முறித்து தெறிக்க வைக்கும் துரோணர் “விலகு! விலகிச்செல்! உன்னுடன் விளையாடுவதற்கு எனக்குப் பொழுதில்லை. என்னை களத்தில் வீழ்த்திய அவ்வரக்கனைக் கொன்று குருதிகொண்டே நான் மீள்வேன். வழி தடுக்காதே. உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. விலகு!” என்று கூவினார்.

அவர் கொண்ட அந்தப் பதற்றம் துருபதரை உவகைகொள்ளச் செய்தது. “ஆசிரியரே, என் கையால் இறந்தால் உங்களுக்கும் விடுதலை. இப்புவியில் உங்களைக் கட்டிவைக்கும் ஒரு சரடை அறுத்துவிடுகிறீர்கள். பிறப்பறுத்து விண்ணெழுவீர்கள்” என்றபடி உரக்க நகைத்து துரோணரை வில்லால் அறைந்தார். அந்த அம்புகளில் ஒன்று சென்று துரோணரின் நெஞ்சை அறைய சீற்றத்துடன் திரும்பி “அறிவிலி! அறிவிலிகளுக்கே உரிய நாணமின்மை கொண்டவன் நீ” என்று கூவியபடி அவர் தன் அம்புகளால் துருபதரை அறைந்தார். துரோணரின் அம்புகளில் இருந்த சினம் மேலும் மேலுமென துருபதரை கொந்தளிக்கச் செய்தது. ஆம்! ஆம்! ஆம்! என அவர் உள்ளம் பெருகி எழுந்தது. துரோணர் துருபதரின் கவசங்களை உடைத்தார். பிறிதொரு பேரம்பை எடுத்து “கடந்து செல்! இது என் இறுதிச்சொல்!” என்றார். “இறுதிக்கணத்தைக் கண்ட பின்னரே இனி கடந்து செல்லப் போகிறேன்” என்றபடி அந்த அம்பை தன் அம்பால் முறித்தார் துருபதர். “உன் ஊழ் இதுவெனில் ஆகுக!” என்று சினத்துடன் சிரித்தபடி துரோணர் துருபதரை அம்புகளால் அறைந்தார்.

அந்த அம்புகள் வந்து தன்னைச் சூழ்ந்து தேர்த்தூண்களிலும் தேர்த்தட்டிலும் பதிந்து நின்று சிறகதிர ஒரு கணத்தில் துருபதர் உளம் மலைத்தார். அதன் பின் அவரால் அம்புகளை தடுக்க இயலவில்லை. அனைத்து திசைகளிலுமிருந்து வந்து அவர் தேர்த்தட்டை உடைத்து சிதறவைத்து எங்கும் நாணல் எனப் பெருகி நின்றன. கவசங்கள் சிதைந்தன. இருபுறத்திலிருந்தும் பாஞ்சாலப் படைத்தலைவர்கள் சிம்ஹனும், கிரதனும், சம்புவும், கௌணபனும் வில்லேந்தி அம்பு பெய்தபடி வந்து அவருக்கு துணை நின்றனர். துரோணரின் அம்புகள் சம்புவையும் சிம்ஹனையும் கொன்றுவீழ்த்தின. அப்பாலிருந்து சத்யஜித் பாய்ந்து வருவதை அவர் கண்டார். “நீ துணைவர வேண்டியதில்லை… செல்க!” என்று கூவினார். ஆனால் சத்யஜித் அம்புகளைத் தொடுத்தபடியே விரைந்து வந்தார். “செல்க! விலகிச்செல்க!” என்று துருபதர் கூவிக்கொண்டே இருந்தார்.

துரோணர் மேலும் மேலும் உருகி உருவழிந்து பிறிதொருவராக ஆகிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவருடைய அம்புபட்டு கிரதன் தேர்த்தட்டில் விழுந்தான். அரைக்கணம் அவனை நோக்கி அவர் திரும்புவதற்குள் இடப்பக்கம் கௌணபன் அலறி விழுந்தான். துருபதர் செயலற்று நின்றார். சத்யஜித் அவரை நோக்கி வந்துகொண்டிருக்க அவரை நோக்கி துரோணரின் வில் எழுவதை, அம்பு சென்று அவர் நெஞ்சை துளைத்து தேரிலிருந்து தூக்கி வீசுவதை துருபதர் கண்டார். “இளையோனே” என்று அலறியபடி அவர் தன் வில்லை எடுத்து உடல் பற்றிஎரிவதுபோன்ற வெறியுடன் துரோணரை அம்புகளால் தாக்கினார். துரோணர் அந்த அம்புகளை தன் அம்புகளால் தடுத்து அவரை மெல்லமெல்ல பின்னடையச் செய்தார். துருபதர் தன் உடலெங்கும் தைத்து நின்றிருந்த அம்புகளுடன் தேரில் நின்று தள்ளாடினார். அவர் கவசத்திற்குள் வெம்மையுடன் ஊறிய குருதி வழிந்து கால்களை அடைந்து தேர்த்தட்டில் பரவி குளிர்ந்தது. அவர் கால் மாற்றியபோது குறடுகளில் வழுக்கியது.

துரோணரின் விழிகள் சுருங்கி கூர்கொண்டு துருபதர்மேல் நிலைத்திருந்தன. சினம்கொண்டு எழுந்து உச்சத்தில் இடமும்காலமும் மறந்து பின்னர் மெல்ல இறங்கி அச்சம்கொண்டு தனிமையை உணர்ந்து செயலற்றுக்கொண்டிருந்த துருபதரின் உள்ளம் அவ்விழிகளை அருகில் கண்டு எதிர்பாராதபடி களிப்படைந்தது. அவ்விழிகளில் இருந்த சினமும் வெறியும் அவர் ஒருபோதும் அறிந்ததல்ல. ஆசிரியரே, இதோ உங்களை பிறிதொருவராக்கிவிட்டேன். இனி உங்களை வெல்வது எளிது. என் அம்புகள் சென்றடையும் இலக்குகள் தெளிகின்றன. இந்தக் களத்தில் நான் உங்களை கொல்வேன். மெய், நீங்கள் நிகரற்ற வில்லவர். ஆனால் நீங்களும் கொல்லப்படக்கூடியவரே. ஏனென்றால் இதோ சினம்கொள்கிறீர்கள். இதோ எனது அம்புகள் உங்கள் ஆழத்தில் நீங்கள் கரந்து வைத்த அனைத்தையும் தேடி வருகின்றன.

அந்த உளஎழுச்சி மீண்டும் அவர் கைகளில் விசையை ஏற்றியது. துருபதர் அம்புகளால் அறைந்து துரோணரின் தோளிலைகளை உடைத்து தெறிக்கவிட்டார். நெஞ்சக்கவசத்தை உடைத்தார். துரோணரின் ஒவ்வொரு அம்பையும் விண்ணிலேயே முறித்தார். துரோணரின் விழிகளில் அச்சம் மின்னிச் சென்றதைக் கண்டு இரு கைகளையும் விரித்து வெறிகொண்டு கூச்சலிட்டார். துரோணரின் கொடி உடைந்து மண்ணில் விழுந்தது. துரோணரின் புரவிகளில் ஒன்று அம்புபட்டு கனைத்து தலையை உதறியபடி நிலையழிய அவருடைய பாகன் தன் முதுகுக்கவசம் தெரிய குப்புற விழுந்து அதை இழுத்து தேரை நிலைமீட்க முயன்றான். அத்தருணத்தில் துருபதர் துரோணரின் ஆவக்காவலன் நெஞ்சில் அம்பால் அறைந்து அலறி பின்னால் விழச்செய்தார். திகைப்புடன் திரும்பிப்பார்த்த துரோணர் எடுத்த பேரம்பை அவர் கையிலேயே உடைத்து துண்டாக்கினார். துரோணர் அவர் தொடுத்த அடுத்த அம்பை ஒழியும் பொருட்டு தேர்த்தட்டில் முழங்கால் மடித்து அமர அவர் தன்முன் மண்டியிட்டு வணங்குவதுபோல் உணர்ந்து தன் அம்பால் அவர் தலைமுடி கட்டியிருந்த கொண்டையை வெட்டியெறிந்தார்.

துரோணர் பற்களைக் கடித்து உறுமியபடி அம்புகளை எடுத்து அவர் மேல் அறைய ஒவ்வொரு அம்பையாக விண்ணில் முறித்தபடி “இன்று குருதிகொள்வேன்! இன்று உங்கள் குருதிகொள்வேன்!” என்று துருபதர் கூவினார். துரோணரின் கைகள் நடுங்கின. அவர் அம்புகளை எடுத்து அறைந்துகொண்டே இருந்தார். அவருடைய அம்புகள் இலக்கிழப்பது பெருகிவந்தது. துருபதரின் அம்புகள் விசைகொண்டு இலக்கை சென்றடைந்தன. துரோணரின் நெஞ்சக் கவசத்தை உடைத்து மீண்டுமொரு அம்பால் துரோணரை அடிக்க நாணிழுத்தபோது துரோணரின் விழிகளை அருகிலெனக் கண்டார். அதில் இருந்த அந்நோக்குக்குரியவனை அவர் மிக நன்கு அறிந்திருந்தார். அவர் கைகள் ஒருகணம் தளர்ந்தன.

அவரிடம் துர்வாசர் சொன்னார் “பகைமை ஒரு நோன்பு. வஞ்சம் ஒரு தவம். அதனூடாக நாம் தெய்வங்களை விரைந்து அணுக இயலும். அசுரர்கள் அத்தவத்தினூடாகவே தெய்வத்தை அணுகி முழுமை பெற்றார்கள் என்று தொல்கதைகள் சொல்கின்றன. துருபதனே, வாழ்நாளெலாம் நீ உன் முதன்மைப் பகைவனையே நோற்றிருக்கிறாய். ஒருநாள் ஒருகணத்தில் நீ அவனென்றாவாய். அன்று விடுபடுவாய்.” குடிலின் தரையில் ஓங்கி அறைந்தபடி துருபதர் எழுந்தார். “இல்லை, இது என்னை சிறுமைப்படுத்தும் சொல். நான் வெறுக்கும் ஒருவனாக ஆவதல்ல எனது நோன்பு” என்று கூவியபடி கைகளை விரித்து அசைத்தார். “நான் கொன்று அழிப்பதற்கு வஞ்சம் உரைத்தவன். அவரில் ஒருதுளியும் எஞ்சலாகாதென்று எழுந்தவன்.”

துர்வாசர் புலித்தோல் இருக்கையில் மலரமர்வில் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் எப்போதுமிருக்கும் அந்த கசப்பு கலந்த புன்னகை. அது கசப்பு அல்ல என்று துருபதர் அறிந்திருந்தார். அது ஏளனம். அவருடைய முகத்தசைகளின் தொய்வால் அது கசப்பெனத் தோற்றம் கொண்டது. எக்கணமும் பெருஞ்சினமாக வெடித்தெழும் ஒவ்வாமையிலிருந்து எழுவது அது. விடுபட்ட பின்னரும் மானுடர் நடுவே வாழ்வதன் வெளிப்பாடு. “நீங்கள் என்னை சினமூட்டும் சொல் அது என்று அறிந்திருக்கிறீர்கள். என்னை சிறுமை செய்கிறீர்கள்” என்றார் துருபதர். “எவரையும் சினமூட்டி நான் அடையவேண்டியதொன்றில்லை. எங்கும் உண்மையெதுவோ அதைக் கூற கடமைப்பட்டவன் நான். இங்கிருந்து செல்வது வரை…” என்று துர்வாசர் கூறினார். “நீ முதல் நாள் முதல் கணம் அவரைப் பார்த்ததும் பெருங்காதல் கொண்டாய். அவருக்கு அடிபணிந்து ஏவல் புரிந்தாய். அவரே என உன்னை எண்ணிக்கொண்டாய். அவரைச் சென்றடைய முடியும் என்று நம்பியதனால் அவருக்கு நிழலென்றானாய். அந்த ஒருமையுணர்வால் அவரிடமிருந்து அனைத்தையுமே பெற்றுக்கொள்ள உன்னால் இயன்றது.”

“பின்னர் விடைகொண்டு வந்து முடிசூட்டிக்கொண்ட பின்னர் நீ ஒன்றை அறிந்தாய், நீ அவரல்ல என்று. தன் கலையின் பொருட்டு விழைவுகளை ஒடுக்கி தவமிருந்தவர் அவர். உன் குருதியின் தேவைகளை வென்று உன்னைக் கடக்க உன்னால் இயலவில்லை. ஆகவே எஞ்சிய நாளில் ஒவ்வொரு செயல் வழியாகவும் நீ அவரை துறந்தாய். உன்னிலிருந்து குருதியும் கண்ணீருமாக அவரை பிடுங்கி அகற்றினாய். அகற்ற அகற்ற எஞ்சுவதைக் கண்டு சீற்றம்கொண்டாய். இறுதியாக அவர் உன் முன் வந்து நின்றபோது அவரை சிறுமைப்படுத்தி துரத்தி உன்னை விடுவித்துக்கொண்டாய். அத்துடன் நீ முற்றிலும் உன்னில் எஞ்சி உன் உடல் கூறுவதை இயற்றி உன் மூதாதையர்போல் உழன்று உங்களுக்கு மட்டுமே உரிய விண்ணுலகை அடைவாய் என்று எண்ணினாய்.”

துருபதர் கால்தளர்ந்து மீண்டும் அமர்ந்தார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கைகளில் தலையை ஏந்திக்கொண்டார். எழாக் குரலில் “அது அரசருக்கு உகந்த வழியே. அப்பாதையில் சென்று வென்ற பலர் உண்டு. ஆனால் அரசே, நீ ஒரு அடி முன்னெடுத்து வைத்துவிட்டாய். ஒரு சொல் கூடுதலாக உரைத்துவிட்டாய். அந்த ஒரு துளி ஒரு விதையென எழுந்து பெருகி உன்னை எதிர்த்து வந்தது. நீ அவர்களுக்கிழைத்த வஞ்சம் அவர் உன்னை மறக்கலாகதென்பதற்காக அல்லவா? உன்னை ஒருபொருட்டென எண்ணாது எங்கோ தன் விற்தவத்துடன் அவர் தனித்திருந்தார் என்று உணர்ந்தமையால் அல்லவா? ஒரு குவளை பால் மட்டும்தானா நான் உனக்கு என்று நீ அவரிடம் கேட்டாய்” என்றார் துர்வாசர்.

துருபதர் உரத்த குரலில் “இல்லை. இவ்வண்ணம் எதையும் விளக்கிக்கொள்ள இயலும். இதுவல்ல உண்மை. உண்மையை நீங்கள் பொய்யினூடாக சமைத்துக்கொள்ள எண்ணுகிறீர்கள்” என்றார். துர்வாசரின் விழிகள் அவர் மீது அசையாது பதிந்திருந்தன. துருபதர் மட்டும் கேட்கும் குரலில் அவர் சொன்னார் “எங்கோ அவர் உன்னை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதை நீ தனிமையில் உணர்ந்தாய். உன் படையெடுப்புகளில், அரசுசூழ்தல்களில், காமங்களில், சினங்களில் நாளெல்லாம் கழித்த பின்னர் உனக்கு மட்டுமென எஞ்சும் சிறு பொழுதில் முதலில் உன் எண்ணத்திலெழுவது அவர்தான். உன்னை எந்நிலையிலும் அவர் மறக்க இயலாதென்ற நிறைவை நீ ஒருதுளியேனும் உணர்ந்ததில்லையா? உன் வஞ்சம் பிறிதெங்கிருந்து எழுந்தது?”

மெல்ல நகைத்து துர்வாசர் சொன்னார் “அவர் பேருருக்கொண்டு எழுந்து உன்னை வென்று இழுத்து தன் காலடியில் இட்டார். நீ அளித்ததையே உனக்கு திருப்பி அளித்தார். எஞ்சிய வாழ்நாளெல்லாம் நீ தன்னை நினைக்கும்படி செய்தார். துருபதனே, நீ அர்ஜுனனால் அழைத்துச் செல்லப்பட்டு அவர் காலடியில் வீசப்பட்டாய். கையூன்றி நிமிர்ந்து அவர் விழிகளை பார்த்தபோது நீ அங்கு ஒருவனை கண்டாய். யார் அவன்? அவனுக்கெதிராகத்தான் நீ வஞ்சம் கொண்டாய். மைந்தரை ஈன்று வாழ்நாள் நோன்பொன்றை மேற்கொண்டாய். உன் படைக்கலப்புரையில் அத்தனை அம்புகளும் கூர்கொள்வது அவன் ஒருவனுக்காக அல்லவா?”

துரோணரின் அம்புகள் வந்துவந்து அறைந்து துருபதரை தேர்த்தட்டில் வீழ்த்தின. தொடையிலும் தோளிலும் இடையிலும் அம்புகள் தைக்க அவர் தேர்த்தட்டில் கால்மடித்து விழுந்து கையூன்றி எழமுயன்று குருதியில் வழுக்கி மீண்டும் எழுந்து அக்கண்களில் தெரிந்தவனை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவனா? அவன்தானா? இறுதிப் பேரம்பை எடுத்து நாணேற்றி இழுத்து அவரை நோக்கிய துரோணர் துருபதரின் விழிகளில் பிறிதொருவனை கண்டுகொண்டார். நீயா என்று அவர் உதடுகள் பிரிந்து சொல்லெழுவதை துருபதர் கண்டார். துரோணர் தன் முழு விசையாலும் உடலை இழுத்து கையின் ஆற்றலென்றாக்கி நாணிழுத்து அம்பை செலுத்தினார். சீறிவரும் அந்த அம்பின் பிறை வளைவின் ஒளியை துருபதர் கண்டார். அது தன் தலையை அறுத்து வீசுவதை உணர்ந்தார். தன் தலை தேர்த்தட்டில் வந்து அறைவதன் ஓசையை அவர் கேட்டார். தன் உடல் சற்று அசைந்து மறுபக்கமாக விழுந்ததை, இரு கைகளும் விதிர்த்து வில்லையும் அம்பையும் கைவிடுவதை பார்த்தார். ஒருகணம் தன்னுடலையும் தலையையும் மாறி மாறி நோக்கிய பின் உடல் தளர்ந்து வில் தாழ்த்தி துரோணர் தேர்த்தட்டில் அமர்வதையும் நோக்கினார்.

அத்தருணத்தில் மறுபக்கம் விராடர் நாணோசை எழுப்பியபடி வந்து துரோணரை எதிர்கொண்டார். “கீழ்மகனே, என்னோடு போரிடு… நில்… என்னுடன் போரிடு” என்று விராடர் கூவினார். “என்னை கொன்றேன் என எண்ணாதே… இறந்தாலும் அழியாதது என் வஞ்சம்… நான் மீண்டும் வருவேன்” என நகைத்தார். துரோணர் திகைப்புடன் திரும்பி வெட்டுண்டு கிடந்த துருபதரின் தலையில் திறந்திருந்த விழிகளை நோக்கினார். அவ்விழிகளை சந்தித்து துருபதர் புன்னகைத்தார். விராடர் “எடு உன் வில்லை… நான் உன் குருதிக்கென வந்தவன்… இதோ இங்கு கிடக்கும் அத்தனை உடல்களில் இருந்தும் நான் எழுவேன்… எடு வில்லை!” என்று கூவியபடி அம்புகளை தொடுத்தார். அவருடைய கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. மீதூறிப்போன மதுமயக்கும் துயில்நீப்பும் கலந்து அவரை பித்தன் என்றே ஆக்கியிருந்தன.

துரோணர் தன் ஆவநாழியிலிருந்து பிறையம்பு ஒன்றை எடுத்து குறிபார்க்காமலேயே தொடுத்து விராடரின் தலையை கொய்தெறிந்தார். தலை நிலத்தில் விழ விராடரின் உடல் நின்று அசைந்து பக்கவாட்டில் சரிந்தது. அதை திரும்பிப்பார்க்காமல் “செல்க! செல்க, அறிவிலி… விரைந்துசெல்க!” என்று துரோணர் பாகனை ஏவினார். பின்னர் வில்தாழ்த்தி கைகளில் தலையை வைத்து விழிமூடி அமர்ந்தார்.