மாதம்: மார்ச் 2019

நூல் இருபது – கார்கடல் – 88

ele1சஞ்சயன் சொன்னான்: அரசே, குருக்ஷேத்ரக் களத்தில் பொடியும் புகையும் மெல்ல அடங்கிக்கொண்டிருப்பதை இப்போது பார்க்கிறேன். முகில்கள் பெய்தொழிந்து வான் வெளுப்பதுபோல் அங்கே ஒவ்வொரு வீரராக தோன்றுகிறார்கள். அதுவரை அங்கு படைகள் மோதிக்கொண்டிருந்தன. அப்படைகளுக்குள் ஒவ்வொரு வீரனும் பிறிதொரு வீரனை விழியால் நோக்காது தன்னந்தனிமையில் போரிட்டுக்கொண்டிருந்தான். சூழல்வெளிக்க தன்னைச் சூழ்ந்து ஒரு பெருங்களம் இருப்பதை, பல்லாயிரம் பேர் படைக்கலங்களுடன் முட்டிமோதுவதை, மேலும் பல்லாயிரம் பேர் உடல் சிதைந்தும் தலையறுந்தும் இறந்தும் உயிரெஞ்சியும் நிலம் நிறைத்து விழுந்துகிடப்பதை அப்போதுதான் பார்த்தவன்போல் ஒவ்வொரு படைவீரனும் திகைப்பதை பார்க்கிறேன். அத்தனை பொழுது எவரிடம் போரிட்டுக்கொண்டிருந்தோம் என்று அவன் அகம் மலைக்கிறது. தன்னந்தனியாக அப்பெருந்திரளுடன் மோதிக்கொண்டிருந்தேனா என அவன் வினவிக்கொள்கிறான். அத்தனை பொழுது தன்னிடம் போரிட்டுக்கொண்டிருந்த அந்த எதிரிவீரன் யார் என்று எண்ணி எண்ணி உளம் அழிகிறான். அவன் எங்கிருந்தெழுந்தான்? சூழ்ந்திருந்த அப்பெருந்திரளில் இருந்தானா? அன்றி தன்னுள்ளிருந்தே எழுந்தானா?

வாள் தாழ்த்தி, வில் நிலத்திலூன்றி, வேல்களை கைவிட்டு, சூழ விழியோட்டியபடி சொல்லழிந்த உதடுகளுடன் நின்றிருக்கிறார்கள் கௌரவர்களும் பாண்டவர்களும். அந்தப் படைக்களத்தில் முதல் சொல் எழுவதுபோல் முரசொலிகள் முழங்கத்தொடங்கின. துரோணர் களம் பட்டார் எனும் செய்தியை அப்போதுதான் அவர்களில் பலர் உணர்கிறார்கள். அன்று நிலம் சேர்ந்தவர்களின் நிரையை முரசுகள் இருதரப்பிலிருந்தும் அறிவிக்கின்றன. அவர்கள் முதலில் தாங்கள் எந்தத் தரப்பை சேர்ந்தவர்கள் என்பதையே உணரவில்லை. தன்னியல்பான எழுச்சியால் படைக்கலங்களைத் தூக்கி மாண்டவர்களுக்கு வாழ்த்தொலி எழுப்பினர். துரோணருக்கு பாண்டவர் தரப்பும் கௌரவர் தரப்பும் வாழ்த்தொலி எழுப்பின. ஒலிகள் கலங்க  களம் பட்ட அனைவருக்கும் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர். தாங்களே கொன்று தாங்களே வாழ்த்திக்கொண்டனர். அவ்வாழ்த்தொலிகளின் பொருளை உளம் உணராதவர்கள் போல. அவ்வாழ்த்தொலிகளை அவர்கள் தாங்கள் உயிருடன் எஞ்சியதன் பொருட்டே எழுப்பிக்கொள்பவர்கள் போல.

இருதரப்பிலும் படைகள் மிகவும் குறைந்துவிட்டிருந்தன. இருதரப்புப் படைவீரர்களும் நின்றிருக்க இடமில்லாது உடல்களின் நடுவே இடைவெளிகளில் கால் வைத்து தள்ளாடினார்கள். பின்னர் அந்தி முரசு ஒலிக்கத்தொடங்கியது. உண்மையில் இன்னும் கதிரவன் மேற்கே முற்றழியவில்லை. முழுவட்டமென புகைக்கும் முகில்களுக்கும் அப்பால் ததும்பிக்கொண்டிருந்தது கதிர்முகம். களம் புழுதியால் இருண்டும் பின்னர் காற்றால் வெளுத்தும் குருதியால் செம்மை பெருக்கியும் ஒளி கண்கூச விரிந்தும் திகழ்ந்துகொண்டிருந்தது. எவர் முடிவெடுத்ததென்றறியாமல் ஓர் அந்தி முரசு முழங்கத்தொடங்கியதும் பிற முரசுகளும் முழங்கின. கௌரவர்களும் பாண்டவர்களும் இருபக்கமும் பிரிந்து தளர்நடைகளில் தங்கள் பாடிவீடுகளுக்கு திரும்பத்தொடங்கினர். அவர்கள் இறந்த உடல்களின்மேல் தாவினர். உடல்களின் இடுக்குகளில் கால்களையும் வேல்களையும் ஊன்றினர். பின்னர் வேறுவழியில்லாமல் உடல்கள் மீது நடக்கலாயினர்.

மென்மையான உயிர் விதிர்க்கும் தசைகள். அவர்களின் உடலில் உறையும் ஒன்றை பதறச்செய்தன அக்கால்தொடுகைகள். அரசே, உயிருடல்மேல் தொட கால்கள் கொள்ளும் கூச்சம் எந்த தெய்வத்தின் ஆணை? வைத்த கால் அதிர எடுத்து மீண்டும் பிறிதொரு உடல்மேல் வைத்து தாவிச்சென்றுகொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் அரியதோர் கனவு நிலையை அடைந்தனர். நிலமென மாறி பரந்துகிடந்த மானுட உடல்களின் மீது என்றும் அவ்வாறே அவர்கள் நடந்துகொண்டிருப்பதுபோல் உணர்ந்தனர். சிற்றகவையில் மூதாதையரின் நெஞ்சிலும் வயிற்றிலும் நடந்தது போல். வான் மழை பெய்து நெகிழ்ந்த மண்ணில் பாய்ந்து களித்தது போல். உழுது புரட்டி நீர் சேர்த்து மரமோட்டி விரித்திட்ட சேற்றுவயல்கள் மேல் துழாவி நடந்தது போல். பெருவெள்ளம் வற்றியபின் கங்கைக்கரைச்சேற்றில் களியாடுவது போல். எவ்வகையிலும் எண்ணவியலாத உவகையொன்றை அவர்கள் அடைந்தனர். ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டபடி பொருளற்ற வார்த்தைகளை உரக்கக் கூவியபடி அவர்கள் விழுந்துகிடந்த உடல்களின் மேல் நடனமிட்டுச் சென்றனர்.

அக்களிப்பு எளிதில் பரவுவது. அரசே எண்ணம் அனலென பரவும். எண்ணமில்லா பித்து காற்றெனப் பரவும். சிலர் வெறியோலமிட்டனர். சிலர் ஈட்டிகளையும் வேல்களையும் வில்களையும் தலைக்குமேல் தூக்கி அமலையாடினர். அவர்கள் முகங்களில் வெறிப்பா இளிப்பா என்று வியக்கவைக்கும் நகைப்பொன்று தோன்றியது. எங்கும் பற்களும் துறித்த கண்களும் தெரிகின்றன. அவர்களின் சிரிப்புடன் கீழே மல்லாந்துகிடந்த பல்லாயிரம் துறித்த கண்களில், உயிர் பிரியும் கணத்து வலிப்பில் உறைந்த முகங்களில், இளித்துத் திறந்த வாய்களில் பதிந்திருந்த சிரிப்பும் இணைந்துகொண்டது. இங்கிருந்து பார்க்கையில் பல்லாயிரம் சிரிப்புகளுக்கு அவர்கள் நின்றாடுவதைப்போல் தோன்றுகிறது. அந்நிலமும் சிரிப்பது போல். அச்சிரிப்பை நான் இதற்கு முன்னரும் பலமுறை கண்டிருக்கிறேனா? எப்போதும் இவ்வண்ணமே இச்சிரிப்பு திகழ்ந்திருக்கிறதா? ஓசையற்ற சிரிப்பை போல் வந்தறைந்து நெஞ்சை நிறைப்பது பிறிதொன்றில்லை. ஆலயச் சிற்பங்களின் சிரிப்பு அது. கருவறையமர்ந்த கொடுந்தெய்வத்தின் பொருள்கடந்த சிரிப்பு.

சஞ்சயன் சொன்னான், அமலையாடி பாடிவீட்டுக்குத் திரும்பும் அவ்வீரர்களின் மீது மேலும் மேலுமென வானம் தெளிந்துவருகிறது. இன்றைய போர் முடிந்தது, அரசே. இது பதினைந்தாவது நாள் போர். பதினைந்து காலகட்டங்கள். பதினைந்து கொடுங்கனவுகள். அரசே, அறமும் மறமும் தங்கள் எல்லை கண்டு திகைத்த பதினைந்து நாடகங்கள். பதினைந்து யுகங்கள் அவை.

திருதராஷ்டிரர் இருகைகளையும் தலைக்குமேல் குவித்து தசைக்குமிழிகளென விழிகள் துடித்தலைய விழிநீர் பாய்ந்து மார்பில் வழிந்துகொண்டிருக்க விம்மல் ஓசை எழுப்பினார். அது நீள்மூச்சென மாற “தெய்வங்களே! மூதாதையரே!” என்றார்.

ele1ஏகாக்ஷர் சொன்னார்: அரசி, இப்போது துரியோதனனின் பாடிவீட்டுக்கு முன்னால் சிறுமுற்றத்தில் இருண்டு வரும் அந்தியில் செவ்வொளி அலையும் பந்தங்களின் அருகே அங்கரும் துச்சாதனனும் சகுனியும் சல்யரும் மட்டும் அமர்ந்திருக்கிறார்கள். இருகைகளையும் விரல்கோத்து  முழங்கால் மேல் வைத்து, தலை கவிழ்ந்து, முடிச்சுருள்கள் கலைந்து முகம் மீது அலைய துரியோதனன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு முன் கர்ணன் மார்பில் கைகளைக்கட்டி விழிகளைத்தழைத்து நிலம் நோக்கி அமர்ந்திருக்கிறான். சல்யரும் சகுனியும் தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கி ஏதோ சொற்களை உரைப்பவர்கள்போல உதடுகள் அசைய அமர்ந்திருக்கிறார்கள்.

தன் புண்பட்ட காலை மெல்ல அசைத்து நீக்கி வைத்து முனகலோசை எழுப்பிய சகுனி “இங்கு இன்னமும் போர் முடியவில்லை” என்றார். அவர் அதை தன்னிடமே சொல்லிக்கொண்டார். துரியோதனன் விழிதூக்கி அவரை பார்த்தான். “துரோணர் களம் படுவார் என்பதை நாம் முன்னரே அறிந்திருக்க வேண்டும்” என்று சகுனி சொன்னார். “தன் மாணவனை அவர் கொன்றிருந்தாரெனில் அது இதுநாள் வரை இங்கு வாழ்ந்து, சொல்தவமும் விரல்தவமும் இயற்றி, விற்கலை ஒன்றை இப்புவியில் நிறுவியதை அவரே அழித்துவிட்டுச் செல்வது போல. எந்த ஆசிரியனும் சென்று சேரும் இடர் அது. தன்னை வெல்ல வைப்பதா, தான் வளர்த்தெடுத்த கலையை நிலைநிறுத்துவதா என்பது. பெரும் ஆசிரியர்கள் தன் கலையை நிலைநிறுத்தி விடை கொள்ளவே விழைவார்கள். துரோணரும் அதையே செய்தார். அர்ஜுனன் வடிவில் அவரது விற்கலை இங்கு நிற்கும். அவர் வாழ்ந்தது முழுமையடையும். அர்ஜுனனை வெல்லக்கூடியவர் அவர், வஞ்சத்தாலேயே அவர் வீழ்ந்தார் என்பது களத்தில் நிறுவப்பட்டமையால் அவர் தோற்கவும் இல்லை” என்றார்.

துரியோதனன் தாழ்ந்த குரலில் “இவ்வண்ணம் எதையேனும் சொல்லி நிறுவி அதை நாமே ஏற்றுக்கொள்வதில் என்ன பயன் உள்ளது? நம் தரப்பில் பெருவில்லவர்களில் ஒருவர் இன்றில்லை. அது மட்டுமே உண்மை” என்றான். “அவர் நமது படைகளை வெல்ல வைத்தார். அரசே, பாண்டவர் தரப்பில் அவர் உருவாக்கிய அழிவென்ன என்று சற்று முன்னர்தான் காவல் மாடத்தில் ஏறி நின்று பார்த்தேன். அவர்களில் இன்று எஞ்சியிருப்பவர் மிகச்சிலரே. இன்னொரு நாள் போரில் நமது முழுவிசையையும் திரட்டி தாக்குவோமெனில் அவர்கள் எஞ்சப்போவதில்லை” என்றார் சகுனி. துரியோதனன் விழிதூக்கி நோக்க சகுனி சொன்னார். “நோக்குக, நம் தரப்பின் முதன்மை வீரர் இன்று நம்முடன் இருக்கிறார்! ஒருவேளை இவ்வெற்றி அவருக்குரியதென முன்னரே தெய்வங்கள் வகுத்திருக்கும் போலும். ஆகவேதான் பீஷ்மரும் துரோணரும் களம் பட்டார்கள். அங்கர் கையால் பாண்டவர்கள் கொல்லப்படவும் உனக்கு மணிமுடி சூட்டப்படுவும் ஊழ் பாதை வகுத்துள்ளது. நாம் இன்னும் போரிட இயலும்.”

“அரசே, சல்யரும் கிருபரும் உடனிருக்க அங்கர் படையெழுந்தாரெனில் உடல் வெந்து உளம் சிதறி நைந்துகிடக்கும் பாண்டவர்களை வெல்ல நமக்கு ஓர் புலரியும் அந்தியும் மட்டும் போதும். ஐயம் வேண்டாம், நாளை பொழுது நாம் போர் முடித்து வெற்றியுடன் பாடிவீடு திரும்புவோம்” என்றார் சகுனி. துரியோதனன் விழி திருப்பி கர்ணனை பார்த்தான். கர்ணன் “ஆம், நான் படைத்தலைமை கொள்கிறேன். என்னுடன் நீங்கள் இருந்தால் போதும். வெற்றியை ஈட்ட என்னால் இயலும்” என்றான். “அர்ஜுனன் இன்று புண்பட்டு திரும்பிச் சென்றிருக்கிறான். அவன் உடல் வெந்துவிட்டதென்கிறார்கள். அவன் உளம் நலிவுற்றிருக்கும். நாளை போருக்கு அவன் எவ்வண்ணம் எழுவான் என்று தெரியவில்லை என்று நமது உளவுச்செய்திகள் சொல்கின்றன. அங்கர் உளம் கொண்டாரெனில் நாளையே பாண்டவப் படைகளை முற்றழிக்க இயலும்” என்றார் சகுனி. “நாம் வெல்வோம். ஐயமே வேண்டாம், நாம் இக்களத்தில் வெல்வோம். அது எந்தையின் வெற்றி. இது இனிமேல் கதிர்விரித்தெழும் சூரியனின் போர்” என்று கர்ணன் சொன்னான்.

“பிறகென்ன? ஐயம் களைக! இந்தத் தெய்வம் நமக்கான வெற்றியை இறுதி எல்லைக்கோட்டுக்கு அப்பால் வைத்துள்ளது. அரசே எந்த்த் தெய்வமும் நற்கொடையை எளிதில் அளித்துவிடுவதில்லை என்று கொள்க! நீ கோருவதென்ன? பாரதவர்ஷத்தின் முதன்மை மணிமுடி. மும்முடி சூடி ஆள ஐம்பத்தாறு மன்னர்கள் கோலூன்றி அமர்ந்த விரிநிலத்தை கோருகிறாய். அதை அளிப்பதற்கு முன் தெய்வங்கள் கோருமல்லவா, நீ எதுவரை செல்வாய் என்று? இறுதிக்கணம் வரை நின்றிருப்பாயா என்று? ஆம் என்று அவர்களிடம் சொல்லி செயலில் காட்டுவோம். அரசே, நாளை பதினைந்து நாள் போரையும் மறந்து அன்றெழுந்ததுபோல் வில்லேந்தி முடி ஒளிர கவசங்கள் மின்ன சென்று களம் நிற்க! தெய்வங்கள் பார்க்கட்டும், துரியோதனன் ஒருபோதும் மானுடரிடம் தோற்பதில்லை என்று” என்றார் சகுனி. அவர் குரல் ஓங்கியது.

“தெய்வங்கள் தங்கள் அடியவனை நோக்கி அவனுக்கு முற்றிலும் நிகரான, அவன் தன் முழு ஆற்றலால் எழுந்தாலொழிய கடந்து செல்ல இயலாத மானுட எதிரிகளை அனுப்புகின்றன. வஞ்சத்துடன் பகைமையுடன் கீழ்மைகளுடன் அவன் போரிடும்படி செய்கின்றன. மானுடரால் வெல்லப்படக்கூடிய ஒருவனுக்கு தங்கள் அருங்கொடையை அளிப்பதில்லை என்று அவை முடிவு செய்துள்ளன. எந்த மானுடரும் எவ்வகையிலும் வெல்ல முடியாத ஒருவனைக் கண்டே விண்ணிழிந்து வந்து அவை கைவிரித்து நெஞ்சோடு தழுவிக்கொள்கின்றன. வேண்டும் வரம் அளித்து புவித்தலைமை என நிறுத்துகின்றன. நீ வெல்ல இயலாதவனென்றுணர்க! அரசே, இதோ இப்போரில் எத்தனை பேர் களம்பட்டனர்! பீஷ்மரும் துரோணரும் வீழ்ந்தனர். ஜயத்ரதரும் பகதத்தரும் விழுந்தார்கள். பிதாமகர் பால்ஹிகர் களம்பட்டார். இளையோன் பூரிசிரவஸ் மறைந்தான். நீ எஞ்சியிருக்கிறாய். இன்னமும் வெல்லப்படாதவனாக தலை தருக்கியிருக்கிறாய். இதுவே சான்றல்லவா, நாளை நாம் வெல்வோம். நாமே வெல்ல இயலுமென்று தெய்வங்களுக்கு நாளை காட்டுவோம்” என்றார் சகுனி.

துரியோதனன் எழுந்து இருகைகளையும் விரித்து “ஆம், அதுவே என் முடிவு. இன்று ஆசிரியர் களம் பட்ட செய்தியை நான் அறிந்த அக்கணம் என் உள்ளம் கொண்ட உணர்வென்ன என்று நானே கூர்ந்துநோக்கிக்கொண்டிருந்தேன். அடிவிழுந்தோறும் சீறி படமெடுக்கும் அரவுபோல் என்னை உணர்ந்தேன். என் கொடியில் ஆடும் அரவை நான் கண்முன்னிலெனக் கண்டேன். என் தன்முனைப்பும் சினமும் தணியவில்லை. இந்த இழப்பே இருமடங்கு சீற்றத்துடன் எழுவதற்கான ஆணை என்றுதான் என் அகம் சொல்கிறது. சோர்வூட்டும் சொற்கள் எனக்கு சுற்றும் ஒலித்துக்கொண்டிருந்தபோதுகூட என் அகத்தில் ஒருபகுதி கல்லென உறைந்தே இருந்தது. மாதுலரே, என் உணர்வுகளையே சொல்லாக்கியிருக்கிறீர். ஆயினும் உங்கள் சொற்களுக்கு அப்பால் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் வணங்கும் தெய்வங்களே என்னை கையொழிந்தாலும் சரி, உளம் சோரப்போவதில்லை. என் தெய்வமே வில்லெடுத்து எனக்கெதிராக வந்து நின்றாலும் சரி, களம் நில்லாதொழியப்போவதில்லை” என்றான்.

“இச்சொற்களையே மூதாதையர் உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். உன் தெய்வங்கள் உன் நாவில் இவை எழக் காத்திருக்கின்றன. கூரிய சொற்கள் திகழும் நாவு வாயை வேள்விக்குளம் என்றாக்குகிறது, தெய்வங்கள் அங்கே அவி கொள்கின்றன என்று அசுர வேதம் சொல்லுண்டு” என்று சகுனி சொன்னார். “ஆம், மீண்டெழுவோம். நாளை புலரியில் அங்கர் தலைமை கொள்ள போர் தொடரட்டும்” என்று துரியோதனன் ஆணையிட்டான். “இளையோனே, உடனே இச்செய்தி நம் படைகளில் முரசறைவிக்கப்படட்டும்.” துச்சாதனன் தலைவணங்கினான். “நாம் பீஷ்ம பிதாமகரை வணங்கி சொல்கொள்வோம்” என்றார் கிருபர். “துரோணர் களம் பட்ட செய்தி அவருக்கு சென்று சேர்ந்திருக்க வாய்ப்பில்லை” என்றார் சல்யர். “ஆம், அரசர் ஆணையிடாது எச்செய்தியும் அவருக்கு செல்ல வேண்டியதில்லை என்று முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது” என்றார் சகுனி.

ஏகாக்ஷர் தன் காய்களை கலந்து மீண்டும் ஏழாகப் பகுத்து “அரசி நாளை போர் தொடரும். இதுவரை நிகழ்ந்த போர் அனைத்தும் இன்றிரவோடு முற்றாக மறக்கப்படும். ஏழு முறை மடித்து ஏழாயிரம் முறை இறுக்கி சுற்றிக் கட்டி இருண்ட ஆழத்திற்கு அனைத்து நினைவுகளும் தள்ளப்படும். நாளை கதிர்மைந்தனின் நாள்” என்றார். காந்தாரி இருகைகளையும் கூப்பி “ஆம்” என்றாள். பிற அரசியர் நீர்மின்னும் கண்களுடன் நோக்கி நின்றிருந்தார்கள்.

ele1பார்பாரிகன் சொன்னான்: கூட்டரே, அந்தி எழுந்து படையெங்கும் பந்தங்கள் ஒளி பெற்றுவிட்டிருந்த பொழுதில் மூன்று தேர்களில் துரியோதனனும் கர்ணனும் சல்யரும் சகுனியும் கிருபரும் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்த படுகளத்தின் முகப்பிற்கு வந்து சேர்ந்தனர். அங்கு நெய்ப்பந்தங்கள் படபடத்து காற்றிற்கு ஆடும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. மிகத்தொலைவில் கௌரவப்படைப்பெருக்கு பாடிவீடுகளில் அமைந்துகொண்டிருக்கும் ஓசை முழக்கமெனச் சூழ்ந்திருந்தது. புண்பட்ட யானைகளும் புரவிகளும் பிளிறிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் இருந்தன. ஆனால் அச்சூழல் தன்னை போர்க்களத்திலிருந்து வெட்டி அகற்றிக்கொண்டிருந்தமையால் அவ்வொலிகளுக்கும் முற்றாக அகன்று அதை வெறும் பின்னணிக் கார்வையென மாற்றிக்கொண்டுவிட்டிருந்தது.

முதல் தேரிலிருந்து துரியோதனனும் கர்ணனும் இறங்கி நின்றனர். தேரிலிருந்து சகுனி தன் புண்பட்ட காலை மெல்ல நீட்டி வைத்து உடல் சரித்து நடந்துவந்தார். கிருபரும் சல்யரும் இன்னொரு தேரிலிருந்து இறங்கினர். அவர்கள் அணுகும் செய்தி சென்றதும் பீஷ்மரின் படுகளத்திற்கு காவல் நின்றிருந்த மருத்துவ ஏவலர்களான சாத்தனும் ஆதனும் வந்து துரியோதனனைப் பணிந்து முகமன் உரைத்தனர். பிறிதொரு மருத்துவ ஏவலன் உள்ளே சென்று முதிய மருத்துவர் வஜ்ரரை செய்தி அறிவித்து வெளியே கூட்டிவந்தான். துரியோதனன் வஜ்ரரிடம் “எவ்வண்ணம் இருக்கிறார்?’ என்றான். “அவ்வண்ணமே” என்று அவர் மறுமொழி சொன்னார். திரும்பி கர்ணனை நோக்கி “வருக!” என்றபின் துரியோதனன் உள்ளே சென்றான்.

அப்பாலிருந்த ஒளி கடந்து வந்தமையால் அம்புப் படுக்கையின் மீது பீஷ்மர் காற்றில் மிதந்தவர்போல் கிடப்பதாகத் தெரிந்தது. அம்புகளும் நிழல்களும் கலந்து பின்னி வலையாக மிதந்து வானில் நின்றிருக்கும் எண்கால் சிலந்தியென அவரை துரியோதனன் எண்ணினான். அருகணைந்து அவர் கால்களில் தலைவைத்து வணங்கினான். உரத்த குரலில் “பிதாமகரே, நாளை போரில் அங்கர் களமிறங்குகிறார். கௌரவப்படை முன்பினும் விசைகொண்டு பாண்டவரை தாக்கவிருக்கிறது. நாளை வெற்றியென என் நெஞ்சு கூறுகிறது. என்னையும் அங்கரையும் நம் படையினரையும் வாழ்த்துக!” என்றான். பின்னர் “பிதாமகரே, ஆசிரியர் துரோணர் இன்று களம்பட்டார். அர்ஜுனனால் அவர் வஞ்சக்கொலை செய்யப்பட்டார்” என்றான்.

பீஷ்மர் அதை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. இமைகள் அசைவற்றிருந்தன. சற்றே திறந்த உதடுகள் உலர்ந்து விரிசலிட்டிருந்தன. கிருபர் சென்று வணங்கியபின் பீஷ்மரின் காதருகே முழந்தாளிட்டு “பிதாமகரே, துரோணர் களம்பட்டார்” என்றார். பீஷ்மரின் முகத்தில் உயிரசைவு தென்படாமையால் மீண்டும் சற்று வாயை அணுக்கமாக்கி “பிதாமகரே, அறிக! ஆசிரியர் துரோணர் களம் பட்டார்! ஆசிரியர் துரோணர் பாண்டவ இளையவன் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்!” என்றார். பீஷ்மரின் இமைகள் அசைந்தன. “ஆம்” என்று உதடுகளிலிருந்து ஓசை எழுந்தது. மேலும் ஒரு சொல்லுக்காக அவர்கள் காத்து நின்றிருந்தனர். பின்னர் கிருபர் எழுந்து சென்று சொல்லின்றி பீஷ்மரை கால் தொட்டு வணங்கி பின்னடைந்தார். சல்யரும் சகுனியும் பீஷ்மரின் கால்தொட்டு வணங்கி மீண்டனர்.

கர்ணன் முன்னால் சென்று பீஷ்மரின் காலில் தலைவைத்து “வாழ்த்துக, பிதாமகரே! நான் களத்தலைமை கொள்ள உங்கள் ஒப்புதலை அளியுங்கள்” என்றான். பீஷ்மரின் உதடுகள் அசைந்தன. இருபுறங்களிலும் அம்புக்கூர்கள் மேல் அமைந்த கைகளில் விரல்கள் நடுக்குற்றன. உடலெங்கும் உயிர்ப்பின் மெல்லிய அசைவொன்று கடந்து சென்றது. கர்ணன் மீண்டும் இருமுறை அவர் கால்களில் தலைவத்து வணங்கினான். அவன் எழுந்த கணம் பீஷ்மரின் குரல் ஒலித்தது. “புகழ் சூடுக!” கர்ணன் முகம் மலர்ந்து மீண்டும் தலைவணங்கினான். அச்சொல் அவர் முகத்திலிருந்துதான் எழுந்ததா என்று திகைப்புடன் துரியோதனன் கூர்ந்து நோக்கினான். பின்னர் சகுனியை பார்த்தான். கர்ணன் “விழைந்த சொல்லை பெற்றுவிட்டேன். செல்வோம் “என்றான். மீண்டும் அவர்கள் பீஷ்மரை வணங்கி படுகளத்திலிருந்து வெளியே நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் பீஷ்மர் “ஆம், துரோணரே” என்றார். துணுக்குற்றுத் திரும்பிய துரியோதனன் அதை எவர் சொன்னதென்று அறியாமல் மாறி மாறி நோக்கியபின் நடந்தான்.

ele1அரவான் சொன்னான்: துரியோதனனிடமிருந்து விடைகொண்டு தன் பாடிவீட்டுக்கு கர்ணன் திரும்பும்போது தனக்குப்பின்னால் ஆயிரம் இருண்ட சுருள்களாக நாகமொன்று நெளிந்தெழுவதைக் கண்டான். விழிதிருப்பி நோக்கினால் அது மறைந்துவிடும் என்றறிந்தவனாக அவ்விருக்கும் உணர்வையே அதுவெனக் கொண்டு தளர்நடையில் பாடிவிட்டுக்குச் சென்று நின்றான் .அங்கிருந்த இரு காவலர்களும் எழுந்து தலைவணங்கினர். “மஞ்சம் ஒருக்குக!” என்று அவன் சொன்னான். “உணவு ஒருங்கியுள்ளது” என்று ஏவலன் கூற “இன்று எதுவும் தேவையில்லை” என்றான். “போருக்குப்பின் உணவொழிவது நன்றல்ல, வழக்கமுமல்ல” என்று இன்னொரு ஏவலன் சொன்னான். கைவீசி அவனை தவிர்த்துவிட்டு கர்ணன் பாடிவீட்டுக்குள் நுழைந்தான்.

நார் மரவுரியை தூண்களில் இறுக்கிக் கட்டிய மஞ்சம் அவனுக்காக ஒருக்கப்பட்டிருந்தது. அவன் சிறிய மரப்பெட்டியில் அமர்ந்ததும் இரு ஏவலர் வந்து கால்குறடுகளைக் கழற்றி கவசங்களையும் ஆடைகளையும் அகற்றினர். அவன் எழுந்து நின்றபோது மென்மரவுரிக் குச்சத்தால் அவனுடலை வீசித்துடைத்து புதிய மரவுரி அணிவித்தனர். அவன் கையுறைகள் குருதியுடன் சேர்ந்து தோல் பொருக்கென ஒட்டியிருந்தன. அவற்றை வாளால் கிழித்து அகற்ற வேண்டியிருந்தது. கையுறை படிந்திருந்த இடத்தை அவன் கை நிறம் மாறி பிறிதொரு உடல் அவ்வுடலுக்குள் ஒளிந்திருப்பது போல் தோன்றச்செய்தது. அவர்கள் அவன் கைகளை நீரால் கழுவினர். மணலால் கால்களை தூய்மை செய்தனர்.

கர்ணன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டு அவர்கள் வெளியேறும்படி கையசைத்தான். அவர்கள் ஓசையில்லாது வெளியே சென்று குடிலின் படலை மெல்ல மூடினர். வெளியே இருந்து வந்த பந்த ஒளி மறைந்ததும் உள்ளே இருள் செறிந்தது. பின்னர் இருள் வெளிறலாயிற்று. இருளலைகள் உடலெனத் திரள ஒரு நாகம் அவன் கால்மாட்டிலிருந்து எழுந்து ஏழு தலைவிரித்து நின்றது. கர்ணன் வெறுமனே அதை பார்த்துக்கொண்டிருந்தான். அதன் கண்கள் மின் கொண்டன. நாக்கு சீறலோசையுடன் பறந்தது. “என் வஞ்சம் இலக்கு தவறியது” என்று அது கூறியது. “அறிக, இலக்கு தவறும் வஞ்சங்கள் ஏழு மடங்காகும்! எண்ணி எண்ணிப் பெருகி ஏழாயிரம் மடங்காகும். என் நஞ்சு நுரைகொள்கிறது…”

கர்ணன் அதன் இமையா விழிகளை பார்த்துக்கொண்டிருந்தான் “உன்னுடன் இங்கிருப்பேன். உன் ஆவநாழியை ஒழியாது நிறைப்பேன்” என்றது மணிகர்ணன். “உன்னை உணராத நாளில்லை” என்று கர்ணன் சொன்னான். “தட்சனது மைந்தனின் அவ்வஞ்சத்தை நான் விழுங்கினேன்” என்றபோது நாகத்தின் முகத்தில் ஒரு சிரிப்பை அவன் பார்த்தான். “தன் உற்றாரை தானே விழுங்கி செரித்து வளர்வது நாகங்களின் இயல்பென்று அறிந்திருப்பாய்.” அது சீறி நகைத்தது. “நான் பிற நாகங்களை மட்டுமே உணவாகக்கொள்ளும் அரசநாகம். நான் உண்டவர்கள் அனைவரும் என்னுள் விதையென்றாகி பெருகி நிறைந்துள்ளனர். என் தலையென நீ காண்பவை நான் உண்ட பெருநாகங்கள்.”

பின்னர் அது குனிந்து அவன் நெஞ்சின் மேல் தன் முழு எடையையும் வைத்து முகத்தருகே வந்தது. “துயில்க! இன்று இரவு உன் கலத்தில் என் நஞ்சு புளித்து நுரை கொண்டு நிறையும்.” பின்னர் பின்விலகி வளைந்து படம் சொடுக்கி அவன் உதடுகளில் ஓங்கி கொத்தியது. கர்ணனின் உடல் விதிர்ப்பு கொண்டது. நரம்புகள் உடைபட்டு புடைத்தெழ வலிப்பு எழுந்து வாயில் நுரை பெருகி ஒழுக அவன் துடித்துக்கொண்டிருந்தான். பின்னர் மெல்ல தசைகள் இளகி நரம்புகள் நெகிழ உடல் தளர்ந்து மஞ்சத்தில் படுத்தான். விழிகள் மூடி சீரான மூச்சு ஒலிக்கலாயிற்று. அவன் உடலிலிருந்து உள்ளம் மெல்ல நழுவி இருண்ட ஆழத்தில் கரிய துளியென சொட்டியது. அங்கே பல்லாயிரம் கோடி நாகங்கள் அலைகளென கொப்பளிப்பென கொந்தளிப்பென சுழிப்பென நிரம்பி பரந்திருந்தன.

[கார்கடல் நிறைவு]

நூல் இருபது – கார்கடல் – 87

ele1அஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கூவினார். “காத்திருப்போம்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “அவர் போர்முகம் கொண்டு வருகையில் அமைந்திருந்தேன் என்னும் பெயர் எனக்குத் தேவை இல்லை…. நாம் முன்னெழுந்து செல்வோம்” என்றான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் “அறிவிலி… அவன் சொல்வதை கேள். உன் எண்ணத்தை இங்கே எவரும் கோரவில்லை” என்றார். அர்ஜுனன் “எழுக! முன்னெழுக!” என்று கூவினான். இளைய யாதவர் தேரை முன்னெடுக்க யுதிஷ்டிரர் “யாதவனே…” என்றார். “நான் பாகன், வீரனின் ஆணைக்கு கட்டுப்பட்டவன்” என்றார் இளைய யாதவர்.

யுதிஷ்டிரர் “வேண்டாம்… அந்தப் புரவிக்கனைப்பொலியே அச்சமூட்டுகிறது” என்றார். சகதேவன் “அவர் கொண்டிருக்கும் அம்புகள் என்ன என்று தெரிந்த பின்னர் எழுவோம், யாதவரே” என்றான். பீமன் “எதை அஞ்சுகிறீர்கள்? உங்கள் பழியின் வடிவென எழுந்து வருகிறதா அந்த வாளி? அவ்வண்ணம் என்றால் அதன் முன் ஆண்மையுடன் சென்று பணிவதே முறை. ஆம், நாம் பெரும்பழி செய்தவர்கள். வேறெவ்வண்ணமும் நம்மை கற்பனையில் வடிவமைத்துக்கொள்ள வேண்டியதில்லை” என்றான். “மந்தா, நீ உன் வாயை மூடு… இனி நீ பேசினால் என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் “அது புரவிக்கனைப்பொலி அல்ல” என்றான், “ஊழித்தீ எழுகையில் புரவிக்கனைப்பொலியாகவும் பரவுகையில் யானைப்பிளிறல் போலவும் அமைகையில் சிம்மக்குரல் எனவும் ஒலிக்கும் என்று நூல்கள் சொல்கின்றன.”

அர்ஜுனனின் தேர் முன்னால் செல்ல யுதிஷ்டிரர் கண்ணீருடன் “என்ன நிகழவிருக்கிறது? இன்றுடன் நம் குடி அழிகிறதா?” என்றார். சகதேவனிடம் “அவனை எவ்வண்ணமேனும் தடு… செல்க… அவனை தடுத்து நிறுத்துக!” என்று பதறினார். சகதேவன் முன்னால் செல்ல “வேண்டாம்… அவனுடன் செல்லாதே… இங்கேயே நில்” என்றர். “மந்தா, நீ செல்… உன் இளையோனுடன் நில்” என்றபின் “வேண்டாம், உனக்கும் விற்கலை தேர்ச்சி இல்லை. நீ ஒன்றும் செய்ய முடியாது” என்றார். “மூத்தவரே, ஏதேனும் செய்யமுடியும் என்றால் இளைய யாதவரால் மட்டுமே… அவரிடம் நம்மை அளித்து காத்திருப்போம்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “எவரேனும் அப்படி காத்திருக்க இயலுமா? வருவது குடியழிவு… பெருந்தழல்…” என்றார். “ஆம், தெய்வத்திற்கு தன்னை அளித்து முற்றாக உளம் இன்றி அமர்ந்திருக்கும் அடியார் எவர்? அவ்வண்ணம் உளமடங்கியோருக்கு துயர் என ஏதேனும் உண்டா?” என்றான் பீமன். “மந்தா” என யுதிஷ்டிரர் கூவினார்.

அஸ்வத்தாமன் தோன்றுவதற்கு முன்னரே அவனை அவர்கள் கண்டுவிட்டிருந்தார்கள். அவன் வந்த வழியில் அலறல்களும் கூச்சல்களும் எழுந்தன. புயல்காற்று காட்டை விலக்கி வகுந்து அணைவதுபோல அவன் படைநடுவே வரும் வழி தெரிந்தது. யுதிஷ்டிரர் “தெய்வங்களே, மூதாதையரே, காத்துகொள்க… பிழை பொறுத்து எங்களுடன் நிலைகொள்க!” என்று கூவினார். பீமன் விழிசுருக்கி நோக்கியபடி நின்றான். சகதேவன் அறியாமல் தன் வில்லை எடுத்தபடி முன்னே செல்ல நகுலனும் தொடர்ந்தான். “என்ன செய்கிறாய்? அறிவிலி, நில்” என்று யுதிஷ்டிரர் கூவினார். “இங்கே நின்றிருப்பது என்னை கூசவைக்கிறது. நான் மூத்தவருடன் நின்றிருக்கவேண்டும்” என்றபடி சகதேவன் முன்னால் செல்ல நகுலன் தொடர்ந்தான். “நீ செல்… மந்தா, நீயும் செல்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அதனால் எப்பயனும் இல்லை” என்றான் பீமன்.

அஸ்வத்தாமன் இடிவிழுந்து எரிந்துகொண்டிருக்கும் மரம் என தேரில் தோன்றினான். அவன் தேரின் புரவிகள் வெறிகொண்டவைபோல பற்களை இளித்து கழுத்துக்களை வெவ்வேறு கோணங்களில் தூக்கி திமிறிக்கொண்டிருந்தன. அவற்றின் குளம்புக்கால்கள் தரையை ஓங்கி ஓங்கி அறைந்தன. தரையின் அதிர்வில் தேர்களிலிருந்து புழுதி உதிர்ந்தது. யானைகள் அஞ்சி உடலதிர பிளிறலோசை எழுப்பி பின்னடைந்தன. அஸ்வத்தாமனின் உடலின் ஒளி எதனால் என பீமன் உடனே கண்டடைந்தான். அது அவன் தலையில் இருந்த அருமணி ஒன்றிலிருந்து எழுந்தது. அது நெய்க்குடம் வெடித்து எரிவதுபோல சுடர்விட்டது. அந்த ஒளியில் அவன் குழல்கற்றைகள் தழல்களாயின. முகம் கனலென்று சீற, தாடி கொழுந்துவிட்டு பறந்தது. . அவன் விழிகளும் இரு மணிகளென எரிந்தன.

“அது அவன் தந்தை அளித்த மணி” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அந்தச் சிரோமணியுடன் அவன் பிறந்தான் என்று நிமித்திகர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அது ருத்ரமணி. அனல்வண்ணனின் நுதல்விழி மண்ணில் எழுந்தது.  அவனை காலருத்ரனாக ஆக்கும் ஆற்றல் கொண்டது. இளையோனே, சிவவடிவென எழுந்து வருகிறான். அவனை எதிர்கொண்டு வெல்ல எவராலும் இயலாது. அவனிடம் சென்று அடிபணிவது ஒன்றே நாம் செய்யக்கூடுவது…” பீமன் “அடிபணிந்து என்ன சொல்வது? அறப்பிழை செய்தோம், பொறுத்தருள்க என்றா? அவனால் கொல்லப்படுவோம் என்றால் அதுவே நாம் விண்ணேகும் வழி… அதுவே நிகழ்க!” என்றான். யுதிஷ்டிரர் “நான் என்ன செய்வேன்! தெய்வங்களே! மூதாதையரே…” என்று கூவினார். அஸ்வத்தாமனின் தேர் மலைமேலிருந்து பாறை உருண்டு விழுவதுபோல் அணைந்தது. விழிகளை மின்னல் ஒன்று நிரப்ப வெண்ணிறவிழியின்மையால் அனைவரும் திசையழிந்தவர்களானார்கள். அவர்களைச் சூழ்ந்தது செவிகளை முற்றழித்த இடியோசைத்தொடர்.

ele1பார்பாரிகன் சொன்னான்: அஸ்வத்தாமன் தன் உடல் ஒளிகொண்டிருப்பதை தேரின் உலோகப்பரப்பில் விழுந்த தன் பாவையின் செந்நிற மின்னில் இருந்தே உணர்ந்தான். ஒருகணம் தன்னுடன் பிற எவரோ இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. வலப்பக்கமும் இடப்பக்கமும் அவனை அனல்வண்ண ருத்ரர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்கள் நின்று கொழுந்தாடினர், மாபெரும் நாவுகள் என. பின்னர் அவன் தன் நெற்றியில் சூடிய தலைமணியின் ஒளியே அது என புரிந்துகொண்டான். அவன் உள்ளம் பெருகி எழுந்தது. சிவசிவசிவ! சிவமே யாம்! சிவமே யாம்! சிவமே யாம்! என அவன் அகம் கூவி ஆர்ப்பரித்தது. ஹரஹரஹர மகாதேவ்! அழிப்பவனே, பெருந்தேவனே! முழுமுதலே, மூவிழியனே! இதோ நான். இதோ நீ!

அவன் பிறந்தபோதே அந்தத் தலைமணி அவன் நெற்றியில் இருந்தது என்று கதைகள் சொல்லின. அவன் அன்னை குனிந்து பிறந்த மைந்தனைப் பார்த்தபோது நெற்றியில் இருந்த சிறிய பள்ளத்தை நோக்கி “என்ன ஆயிற்று? எவர் நகமேனும் பட்டதா?” என்றாள். அது நகக்கீறல் போலவும் தோன்றியது. “அல்ல, அன்னையே. அது மைந்தரின் பிறப்பியல்பு” என்றாள் வயற்றாட்டி. துரோணரிடம் அவன் அளிக்கப்பட் போது “என்ன இது, மைந்தனேதானா? நான் ஏதோ குதிரைக்குட்டி பிறந்துள்ளது என்றல்லவா எண்ணினேன்?” என்று நகைத்தபடி குனிந்து நோக்கி “இது என்ன? நெற்றியில்? செந்தூரம் அணிவித்தீர்களா? அவ்வழக்கம் உண்டா?” என்றார். “அது அவர் தலையில் பிறப்பிலேயே இருந்தது. குழவிகளுக்கு அவ்வண்ணம் பிறப்புத்தடங்கள் பல அமைவதுண்டு” என்றாள் வயற்றாட்டி.

நிமித்திகரை வரவழைத்து நோக்கச் செய்தார் துரோணர். “அந்தணரே, இம்மைந்தன் சிவக்கூறு. சூரியனின் கதிர்பட்ட வைரம். இது அவன் நுதல்விழி” என்று நிமித்திகர் சொன்னார். “பதினெட்டு நாட்களில் இது மறைந்துவிடும். ஆனால் எப்போதும் இருந்துகொண்டுமிருக்கும்… இவரை வெல்ல மண்ணில் எவராலும் இயலாது. என்றும் குன்றா இளமை இவர் தோள்களில் திகழும்.” துரோணர் நிலையழிவுடன் சற்று தயங்கி “ஆனால்…” என்றார். அவர் கேட்க வருவதை உணர்ந்த நிமித்திகர் “ஆம், அழிக்கப்பிறந்தவர்” என்றார். “எவரை?” என்றார் துரோணர். “அதை நாம் அறிய இயலாது. அது மேலும் பல்லாயிரவர் பிறவிநூல்களுடன் தொடர்புள்ளது” என்று முது நிமித்திகர் சொன்னார். தந்தை அவனிடம் அதை ஒருமுறை சொன்னார். “ஒவ்வொருவருக்கும் பிறவிப்பணி ஒன்றுள்ளது. உன் பணி உன் நெற்றியில் உறங்கெரி வடிவில் உறைகிறது.”

அஸ்வத்தாமன் எப்போதுமே அந்த எரிநெற்றியை தன்னில் உணர்ந்திருந்தான். சினமெழுகையில் இரு புருவங்களுக்கு நடுவே ஒரு எரிகுளம் உருவாவதுபோல். உடலெங்கும் அதன் வெம்மை பரவுவதுபோல. அது தன்னை முற்றாக நிலை மாற்றுவதை கண்டான். கல்வியும் பிறவிப்பண்புகளும் அகன்று வெற்றுவிலங்கு என நின்றிருக்கச் செய்தது அது. அவன் அர்ஜுனனிடம் இறுதியாக அம்புகோத்துக்கொண்ட அந்நாளில் அவனுக்கென எழுந்த அர்ஜுனனின் அம்புபட்டு அந்த யானைக்குழவி அலறியபடி நீரில் விழுந்ததைக் கண்டபோது அவனுக்குள் அந்த அனல் முற்றணைந்தது. அவன் உடல் குளிர்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தது.

அவன் அன்று மாலை அந்த யானையைக் காண கொட்டிலுக்குச் சென்றிருந்தான். அவன் காலடியோசை கேட்டு அது அஞ்சி ஓலமிட்டது. “அது மிக அஞ்சியிருக்கிறது, உத்தமரே. எவரும் அருகணைய இயலாது” என்றார் யானைக்கொட்டில் காவலரான சூர மதங்கர். அவன் யானையை நோக்கியபடி நின்றான். அதன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது, நீர்ப்பரப்பில் காற்று விழுவதுபோல. “இதற்கு பெயர் என்ன?” என்றான். மதங்கர் தயங்கினார் “ஏன்?” என்றான் அஸ்வத்தாமன். “அதாவது…” என அவர் மேலும் தயங்க அருகே நின்றிருந்த இளம் மதங்கன் “தங்கள் பெயர்தான்… இதுவும் இளமையில் குதிரைபோல் கனைத்தது” என்றான். அவன் தன் உடல்மேல் ஒரு குளிர்ந்த அறை விழுந்ததுபோல் அதை உணர்ந்தான். பற்கள் கிட்டித்துக்கொண்டன. விழிகள் நீர்கோக்குமளவுக்கு உடல் விதிர்ப்பு கொண்டு கூசியது. அங்கிருந்து உடனே திரும்பி விட்டான்.

அதன்பின் அந்த எரியை அவன் அஞ்சினான். தன் ஊழ்கமனைத்தைக்கொண்டும் அதை அணைக்கவே முயன்றான். அம்பு பயில்தலையே அவன் தன் ஊழ்கச்செயல் என கொண்டிருந்தான். மிகக்கூரிய அம்புகளால் மிகமிக நுண்ணிய இலக்குகளை அடித்து அடித்து தன் அகத்தை தீட்டிக்கொண்டே சென்றான். அதை மறந்தான், கடந்து அப்பால் சென்றான். ஆடியில் அவன் தன்னை நோக்கிக்கொள்வதே இல்லை. விழிமூடாமல் நீர்ப்பரப்பை நோக்கி குனிவதுமில்லை. ஆயினும் என்றேனும் அவன் தன்னை அறியாது மென்பரப்பில் நோக்கிக் கொண்டால் அவன் விழிகள் நுதல்மையத்தையே நாடின. அங்கே சிறிய குழியாக அந்தத் தலைமணியை அவன் உணர்ந்தான். நெஞ்சு திடுக்கிட விழிவிலக்கிக்கொண்டான். அதிலிருந்து தனக்கு மீட்பில்லை என பின்னர் அறிந்துகொண்டான்.

அவன் உத்தரபாஞ்சாலத்தின் அரசனாக அரியணை அமர்ந்த அன்று அவன் தந்தை ஓர் அருமணிகட்டிய சரடை அவனிடம் அளித்தார். அது இளஞ்செம்மை நிறத்தில் எளிய கல்போல தோன்றியது. “இது உன் அன்னைவழி தாதை சரத்வான் உன் அன்னைக்கு அளித்தது. மைந்தன் பிறந்தால் அவனுக்குரியது என அவர் கூறியிருந்தார். எங்களுக்கு எவ்வகையிலும் இது பயனற்றது என்பதனால் குடுக்கைக்குள் இருந்து எடுத்து நோக்கியதே இல்லை. உன் அன்னை இதை அஞ்சினாள். இது உன்னை அறத்திலிருந்து வழுவச்செய்யும் என்று அவளுக்கு ஐயம். அருமணி சூட அந்தணர்க்கு உரிமை இல்லை. நீ ஷத்ரியன் ஆவதை அவள் வெறுக்கிறாள்” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “உனக்குரியது இது. இதைச்சூடுக!” என்றார் துரோணர். “இது துவாரகையின் சியமந்தகத்திற்கு நிகரானது. பிறிதொன்றிலா அருமணி அரசர்களுக்கு பெருமை சேர்ப்பது.”

அவன் அந்த அருமணியை சூடியபடி மணிமுடி சூட்டிக்கொண்டான். அதை ஆராய்ந்த மணிதேருநர் “அரசே, இது செந்நிற மணி. ஷாத்ர குணம் கொண்டது. மண்வெல்வது, குருதி கோருவது, ஒருபோதும் விழைவடங்காதது. இதற்கு நிகராக பொற்குவைகளும் மணித்திரள்களும் வைக்கப்பட்டாகவேண்டும்” என்றார்கள். பூசகர்கள் “இது ருத்ரமணி. இதை சிவ வடிவெனக் கண்டு நாளும் பூசை செய்யவேண்டும். மலரும் நீரும் அன்னமும் கொண்டு நிறைவுசெய்யவேண்டும்” என்றார்கள். ருத்ரமணி உத்தர பாஞ்சாலத்தில் ஆலயம் ஒன்றில் வைக்கப்பட்டது. அதற்கு மூவேளை பூசெய்கை நிகழ்ந்தது. ஒவ்வொரு கருநிலவு நாளிலும் அவனே சென்று அதை வணங்கி மீண்டான்.

போருக்கென எழுந்தபோது அவன் தந்தையின் தூதுடன் வந்த மாணவனாகிய சுதமன் “ஆசிரியர் தாங்கள் தந்தை அளித்த தலைமணியை அணிந்து வரவேண்டுமென விழைகிறார்” என்றான். அஸ்வத்தாமன் திடுக்கிட்டான். “ஆனால் அது இங்கே பூசனைத்தெய்வமாக உள்ளது” என்றான். “அதைத்தான் ஆசிரியர் சொன்னார், பூசனைத்தெய்வம் படைக்கலமாகும் தருணம் இது என உங்களிடம் சொல்லும்படி சொன்னார்.” அவன் அமைச்சர்களிடம் கேட்டான். “ஆம் அரசே, காவல்தெய்வமெனத் திகழும் அருமணிகளை போர்க்களத்தில் சூடிச்செல்லும் மரபுண்டு. அவற்றில் எழும் தெய்வம் நம் குடியை காக்கும்” என்றார் அமைச்சர். அவன் அதை தன்னுடன் கொண்டு வந்தான். ஆனால் எங்கும் அணிந்துகொள்ளவில்லை.

குருக்ஷேத்ரத்தில் அவன் போருக்கெழுந்தபோது துரோணர் “அந்தத் தலைமணியை அணிந்துகொள்” என்றார். அவன் பேசாமல் நின்றான். “அது உனக்கு காவல்” என்றார். பின்னர் “உன்னைக் காக்க அதனால் மட்டுமே இயலும்” என்று சேர்த்துக்கொண்டார். அவன் மீண்டும் பேசாமல் நின்றிருக்க “இது என் ஆணை” என்றார். அவன் முதல்நாள் போரில் தலையில் அதை அணிந்திருந்தான். ஆனால் எளிய கல் எனத் திகழ்ந்த அது எவர் விழிகளையும் கவரவில்லை. அவனே இருநாட்களில் அதை முற்றாக மறந்துவிட்டிருந்தான். கிருபர் மட்டுமே ஒருமுறை அதை நோக்கினார். “அது ருத்ரமணி அல்லவா?” என்றார். “ஆம்” என்றான். “அதில் ருத்ரன் எழாமலேயே இப்போர் முடிவடைக!” என்றார்.

ele1ஏகாக்ஷர் சொன்னார்: அரசி, நான் களத்தில் பெருந்தழல் என எரிந்தெழும் அஸ்வத்தாமனை காண்கிறேன். அவனைக் கண்டு அஞ்சி பாண்டவப் படைகள் சிதறி விரிந்தகல எதிரில் காண்டீபத்துடன் அர்ஜுனன் மட்டும் நின்றிருந்தான். அவனை துணைக்க தேரில் வந்த நகுலனும் சகதேவனும் அவ்வனலுரு கண்டு அஞ்சி பின்னடைந்தார்கள். அஸ்வத்தாமன் வெறிக்குரலில் “சொல்லும் வில்லும் அளித்த ஆசிரியனை வஞ்சத்தால் வீழ்த்தியவன் எவன்? ஆண்மையிருந்தால் நான் எனச்சொல்லி அவன் எழுக!” என்றான். அர்ஜுனன் “நான்! நான் அதை செய்தேன்” என கைதூக்கி கூவினான். “இந்த காண்டீபத்தால் அவரை நான் கொன்றேன். என் குலக்கொடி அடைந்த அவைச்சிறுமைக்கு அவரும் பொறுப்பே என்பதனால். என் ஆசிரியனின் மெய்வேதம் இங்கு திகழ அவர் தடை என்பதனால்” என்றான்.

“அறப்பிழையால் நிலை நிறுத்தப்படுவதா உன் வேதம்?” என்றான் அஸ்வத்தாமன், “உன் குலத்திற்கு இழைக்கப்பட்ட சிறுமையை பிறருக்கு சிறுமையிழைத்தா நீ நிகர்செய்வாய்? கீழ்மகனே, உன் குடிக்கு தீராப்பழி சேர்ந்தது இப்போது… எடு வில்லை. உன்னை அறம் எரித்தழிப்பதை நான் காட்டுகிறேன்.” அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கி “ஆம், நாம் இறுதியாக இக்களத்தில் எதிர்நிற்கிறோம். ஓங்கிய வாளும் இலக்குநோக்கப்பட்ட அம்பும் தாம் மறப்பதில்லை” என்றான். “பேசாதே” என்றபடி அஸ்வத்தாமன் அவனை அனலம்பால் அறைந்தான். அதை நீரம்பால் அர்ஜுனன் முறித்தான். சிம்மத்தை யானை எதிர்கொண்டது. கூகையை செம்பருந்து. இடியை சிதறடித்தது புயல். மின்னலை மூடியது முகில்.  அவர்களின் போர் எரிந்து எரிந்து எழுந்தது. அர்ஜுனனின் கை எழுந்தது.

“அழிக உன் குலம்! அழிக உன் குடி!” என்று கூவியபடி அஸ்வத்தாமன் நாராயணாஸ்திரத்தை எடுத்தான். அவன் கைவிரல்கள் அலைமுத்திரை கொண்டபோதே ஆழிவாளி எழுகிறதென்பதை அனைவரும் கண்டனர். விண்ணில் இடித்தொடர் எழுந்தது. மின்னல் சாட்டைகள் சுழன்று சுழன்று ஒளிர்ந்தன. அவர்களை எரியும் புகைமுகில்களும் முற்றாகச் சூழ்ந்தன. அஸ்வத்தாமன் “விண்ணில் இருக்கும் எந்தையே, இதோ உங்கள் வஞ்சத்திற்காக…. உங்கள் அழல் அவிக! உங்கள் விழைவென எழுக இவ்வாளி!” என்று கூவினான். அவன் கையில் அலையம்பு எழுந்தபோது அங்கிருந்த அனைவரும் விழிமயங்கினர். அவர்களின் கண்முன் காற்று சிற்றலைகளாகியது. கண்களை மூடி செவிகளை பொத்திக்கொண்டு தலை தாழ்த்தி அவர்கள் கூச்சலிட்டனர். பலர் மயங்கி விழுந்தனர். செவிகள் உடைந்து குருதி வழிய, மூச்சுத் திணறி துடித்தனர். மூக்கிலும் வாயிலும் குருதி பெருக விழுந்து வலிப்பு கொண்டனர். நிலத்தில் தலையை அறைந்து அறைந்து ஓலமிட்டனர்.

நுண்சொல்லை உரைத்து அஸ்வத்தாமன் நாராயணவாளியை எடுத்ததும் இளைய யாதவர் உரக்க “அனைவரும் படைக்கலங்களை கைவிடுக! தேர்களில் இருந்தும் விலங்குகளிலிருந்தும் இறங்குக! நிலத்தில் மண்டியிடுக…” என்று கூவினார். அவர் சொற்களை நகுலனின் கையசைவால் அறிந்து திருஷ்டத்யும்னனின் முரசுகள் வானில் நிறைத்தன. படைவீரர்கள் தேர்களிலிருந்தும் புரவிகளில் இருந்தும் யானைகளில் இருந்தும் மண்ணில் பாய்ந்தனர். வேல்களையும் விற்களையும் அம்புத்தூளிகளையும் வீசினர். “சிறு படைக்கலம்கூட எஞ்சக்கூடாது…. இது ஆணை. சிறு படைக்கலம் கூட எஞ்சலாகாது” என முரசுகள் ஆணையிட்டன. குறுவாட்களையும் கத்திகளையும் பொய்நகங்களையும் கொக்கிப்பிடிகளையும்கூட எடுத்து வீசினர். கைமுட்களையும் கால்கூர்களையும் அகற்றினர். அவை உலோக ஓசையுடன் மண்ணில் சிதறின.

யுதிஷ்டிரர் படைக்கலங்களை வீசிவிட்டு நிலத்தில் குப்புற விழுந்தார். அப்பால் நகுலனும் சகதேவனும் விழுந்தனர். அர்ஜுனன் காண்டீபத்தை வீசிவிட்டு ஓடிச்சென்று மண்ணில் முழந்தாளிட்டான். இளைய யாதவர் கடிவாளங்களை வீசிவிட்டு வெறுங்கையுடன் நின்றார். யுதிஷ்டிரர் பீமன் கையில் கதையுடன் அசைவிலாது நிற்பதை கண்டார். “மந்தா, அறிவிலி, என்ன செய்கிறாய்?” என்று அவர் கூவினார். “நகுலா, அவனிடம் சொல். படைக்கலங்களை வீசிவிட்டு மண்ணில் விழச்சொல்” என்று கதறினார். நகுலன் “அவர் ஆசிரியருக்கு தலைகொடுக்க துணிந்துவிட்டார், மூத்தவரே” என்றான். “மந்தா! அறிவிலி… படைக்கலம் துறந்து மண்ணில் விழு… இது என் ஆணை! மந்தா!” என்று யுதிஷ்டிரர் கண்ணீருடன் அலறினார்.

செம்மண் புயல் சுழித்தெழுவதுபோல வந்தது நாராயணாஸ்திரம். ஆனால் அது தொட்ட தேர்களெல்லாம் அனல்கொண்டு கொழுந்துவிட்டன. கொடிகள் சருகுகள்போல் பற்றிக்கொண்டன. உலோகத் தேர்மகுடங்கள் மெழுகென உருகி உருவழிந்தன. படைக்கலங்கள் அனைத்தும் வெயிலில் புழுக்கள்போல உருகி நெளிந்தன. வெங்காற்றின் சுழலுக்குள் செம்மண் சுழிப்பு. அதன் உச்சியில் புழுதியும் புகையும் இணைந்த வளையம். அச்சுழிப்புக்குள்  ஆயிரம் சிறு மின்னல்கள் அதிர்ந்தன. உச்சியில் இடியோசை எழுந்து எதிரொலிகளாக பெருகியது. அச்சுழிப்பின் மையம் அனல்தூணாலானது. காற்று வளையம் பற்றி எரிந்த தேர்களை தூக்கிச் சுழற்றி மேலெழுப்பி மண்ணில் வீசியது.

“ஆசிரியர் துரோணரை வாழ்த்துக… ஆசிரியர் அடிபணிக!” என்று இளைய யாதவரின் ஆணை எழுந்தது. படைவீரர்கள் அனைவரும் திரண்ட பெருங்குரலில் “ஆசிரியர் வாழ்க! பரத்வாஜர் மைந்தர் வாழ்க! எந்தையே, சொல்லளித்த வள்ளலே, விண்வாழும் மெய்வடிவனே, எங்கள்மேல் சினம் ஒழிக! எங்கள் பிழைகளை பொறுத்தருள்க!” என்று கூவினர். அர்ஜுனன் கைகூப்பி கண்ணீருடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். திருஷ்டத்யும்னனும் நிலத்தில் தலைசேர்த்து கண்களை மூடி உதடுகளை இறுக்கி உள்ளத்தால் “ஆசிரியரே, பொறுத்தருள்க! ஆசிரியரே, உங்கள் மாணவனுக்கு அருள்க!” என்று கூவிக்கொண்டிருந்தான். பீமன் மட்டும் கதையை தோளில் வைத்து இடையில் மறுகை ஊன்றி நிமிர்ந்த தலையுடன் வெறித்து நோக்கியபடி நின்றான்.

“மந்தா! மந்தா!” என யுதிஷ்டிரர் கூவினார். அவரை புழுதிப்புயல் சூழ்ந்துகொண்டது. அவர் கண்களும் வாயும் புழுதியால் நிறைந்தன. மூச்செங்கும் புழுதி நிறைய அவர் ஓங்கி இருமினார். அவர் செவிகளை கொதிக்கச் செய்தபடி, புருவத்தையும் தாடிமயிர்ப் பிசிறுகளையும் பொசுக்கியபடி அனல் கடந்து சென்றது. “மந்தா! என் மைந்தா!” என்று கூவியபடி அவர் பீமன் நின்றிருந்த திசை நோக்கி ஓடினார். கால் தடுக்கி விழுந்து எழுந்து மீண்டும் ஓடினார். புயல்சுழிப்பு களமெங்கும் சுழன்று மெல்ல விசை அவிந்து இளைய யாதவரை அணுகி அவர் காலடியில் மெல்லிய புழுதிச்சுழிப்பாக மாறி அணைந்தது. குழியானையின் கூடுபோன்ற அந்தச் சின்னஞ்சிறிய மென்புழுதிக்குழியை நோக்கியபடி புன்னகையுடன் இளைய யாதவர் நின்றிருந்தார்.

யுதிஷ்டிரர் “மந்தா!” என்று கூவியபடி பீமனை நோக்கி சென்றார். அவன் தலைமயிர் பொன்னிறமாக ஒளிவிடுவதைக் கண்டு திகைத்து நின்றார். அது எரிதழல் எனக்கண்டு “மந்தா!” என்று கூவியபடி அருகே ஓடினார். அவன் உடல் மெல்லிய நீலநிறத் தழலால் மூடப்பட்டிருந்தது. அவன் தோலாடை எரிந்து கரிப்படிவாக தெரிந்தது. தோல்பட்டைகள் எரிய நெகிழ்ந்து இறங்கிய கவசங்கள் உருகி நெளிவும் வழிவும் குமிழ்வுமாக புகைவிட்டுக்கொண்டிருந்தன. அவன் எதையும் அறியாதவன்போல அஸ்வத்தாமனை நோக்கிக்கொண்டிருந்தான்.

யுதிஷ்டிரர் “மந்தா…” என கூவியபடி அவனை அணுகி அவன் கைகளை தொடப்போனார் “தொடவேண்டாம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவர் உடலில் நுண்ணனல் கூடியிருக்கிறது… நீங்கள் அதை தாளமாட்டீர்கள்.” இளைய யாதவரை நோக்கி ஓடிய யுதிஷ்டிரர் “யாதவனே, என் மைந்தன்… என் இளையோன்” என்று கண்ணீருடன் கூவினார். “அஞ்சவேண்டாம், அவரை அது ஆற்றல்கொண்டவராக்கும். அது ஆசிரியரின் நல்வாழ்த்து. இக்களத்தில் துரோணர் உளம்குழைந்து வாழ்த்தியது அவரைத்தான்” என்றார் இளைய யாதவர்.

ele1அரவான் சொன்னான்: குருக்ஷேத்ரக்களத்தில் இருந்து தேரைத் திருப்பி விரைந்த அஸ்வத்தாமனைத் தொடர்ந்து சென்றனர் பதினொரு ருத்ரர்கள். அனல்போல் எரிந்த உரு கொண்டவர்கள். அஸ்வத்தாமனின் ஆடிப்பாவை என்றே வடிவம் எடுத்தவர்கள். சினம் கொண்ட ரைவதன், சூலம் ஏந்திய அஜன், புலித்தோல் அணிந்த பவன், நுதல்விழிகொண்ட பமன், உடுக்கொலிக்கும் வாமன், நாகம் அணிந்த உக்ரன், சடை விரித்த வ்ருஷாகபி, மான் ஏந்திய அஜைகபாத், மழு சூடிய அஹிர்புத்ன்யன், மண்டையோட்டு மாலையுடன் பஹுரூபன், சாம்பல் மூடிய மஹான்.

“மீண்டு செல்… மீண்டுமொருமுறை அந்த அம்பை ஏவுக…. நாங்கள் அழிக்கிறோம் இவ்வுலகை” என்றான் அஜன். “எங்கள் சினம் ஆறவில்லை. நாங்கள் களமெழுந்தாகவேண்டும்” என்றான் பவன். “உன் தந்தையால் நாங்கள் கட்டுண்டோம்… எங்களை விடுவித்து போர்க்களம் மீள்க!” என்றான் அஜைகபாத். “இனி எங்களுக்கு தருணம் இல்லை” என்றான் வாமன். “உன் சினம் கொண்டு எழுக! உன் வஞ்சத்தால் களம் மீள்க!” என்றான் உக்ரன். “உன் தந்தையைக் கடந்து செல்க… உனக்காக வில்லெடுத்து நிலைகொள்க!” என்றான் பஹுரூபன்.

அஸ்வத்தாமன் அவர்களை மாறிமாறி பார்த்தான். பின்னர் தன் வில்லை தேரில் ஓங்கி அறைந்து வீசியபின் ‘செல்க… விலகிச்செல்க!” என்று தன் பாகனுக்கு ஆணையிட்டான். அவனுக்குப் பின்னால் பாண்டவப்படைகளின் உவகைக்கூச்சல்கள் முழக்கமாக எழுந்து அலைபெருகிக்கொண்டிருந்தன. அவன் தேர்த்தட்டில் இறுகிய உடலுடன் வெறித்த நோக்குடன் நின்றிருந்தான்.

நூல் இருபது – கார்கடல் – 86

ele1துரோணர் வீழ்ந்ததும் படைகள் எழுப்பிய வாழ்த்தொலி பொய்யென்று ஒலித்தது. முழவேந்தியவர்களும் கொம்பூதியவர்களும் எழுதிவைத்து படிப்பவர்கள்போல் கூவினர். ஆனால் அவ்வோசை செவிகளில் விழ விழ அவர்களின் வெறி மிகுந்தது. “வீழ்ந்தார் எரிவில்லவர்! மண்பட்டார் திரிபந்தணர்!” என வசைச்சொற்களும் எழத்தொடங்கின. ஆனால் யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் அந்த வாழ்த்தொலிகள் சோர்வுறச்செய்தன. அவ்வொலியால் அள்ளிக்குவிக்கப்பட்டவர்கள்போல் அவர்கள் படைகளுக்குப் பின்புறம் ஒருங்கிணைந்தார்கள். அர்ஜுனனின் தேரை நோக்கி யுதிஷ்டிரர் வந்து இறங்கினார். சகதேவனும் நகுலனும் வந்திறங்கினர்.

ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. தேர்த்தட்டில் வில்லை மடியில் வைத்து தலைகுனிந்து அர்ஜுனன் அமர்ந்திருந்தான். யுதிஷ்டிரர் “என்ன இது? வசைகூவுகிறார்கள்!” என முனகிக்கொண்டார். பின்னர் “வசையினூடாக வெறுப்பை திரட்டிக்கொள்கிறார்கள். வெறுக்காமல் இத்தருணத்தை கடந்துசெல்ல முடியாதுபோலும்” என்றார். இளைய யாதவர் இறங்கி புரவிகளின் நெகிழ்ந்திருந்த கடிவாளங்களையும் நுகக்கட்டுகளையும் சீர்படுத்தினார். சகடத்தை சுற்றிப்பார்த்து அச்சாணியை கையால் அறைந்து இறுக்கினார். நகுலன் இடையில் கைவைத்து நின்று சுற்றிலும் சிதறிக் கிடந்த பாண்டவப்படை கொடிகளை ஆட்டி கூச்சலிட்டுக்கொண்டிருந்ததை பார்த்தான். பின்னர் புரவிமேல் ஏறி அகன்று சென்று படைகளை ஒருங்கிணைக்க முயன்றான். இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊதி ஆணைகளை இட்டான்.

அர்ஜுனன்தான் முதல்முதலாக அந்த ஓசையை கேட்டான். அவன் திடுக்கிட்டு திரும்பிநோக்கி “அஸ்வத்தாமர் எழுகிறார்!” என்றான். சூழ ஒலித்துக்கொண்டிருந்த வாழ்த்தொலிகள் கூச்சல்கள் நடுவே அந்த ஓசையை மற்றவர்கள் கேட்கவில்லை. யுதிஷ்டிரர் சற்று அப்பால் புரவியில் நின்றுகொண்டிருந்த நகுலனை நோக்கி “வா இங்கே” என்று கூவினார். தேவையற்ற சீற்றத்துடன் “விரைந்து வா!” என்று கைகாட்டினார். இளைய யாதவர் புரவிகளை மெல்ல தட்டியபடி நின்றார். சகதேவன் மட்டுமே அர்ஜுனன் சொன்னதை கேட்டான். “நான் அவரைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன், மூத்தவரே” என்றான். அர்ஜுனன் “அவர் இப்போரில் இதுவரை முழுதுளத்துடன் கலந்துகொள்ளவில்லை. நாம் அறிந்த அவருடைய அம்புகள் ஆற்றல்மிக்கவை. நாமறியா அம்புகள் அவரிடமுண்டு” என்றார்.

நகுலன் வந்திறங்க யுதிஷ்டிரர் “அறிவிலி, உன்னிடம் நான் மைந்தரைச் சென்று பார்க்கச் சொன்னேன்” என்றார். “அங்கிருந்துதான் வந்தேன்” என்றான் நகுலன். மேலும் சீற்றத்துடன் “இத்தனை பொழுது அங்கே என்ன செய்தாய்?” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் “மைந்தரின் அனல்புண்ணுக்கு மருத்துவம் செய்யப்படுகிறது. அவர்கள் நினைவழிந்திருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் பற்களைக் கடித்து “உம்” என்றபின் எதையோ உதறுவதுபோல தலையை அசைத்தார். நகுலன் “அவர்களின் தோல்கள் முற்றாக வெந்துவிட்டன. நினைவழிந்திருப்பது மிகுதியாக அகிபீனா அளிக்கப்பட்டமையால். அது நன்று, நினைவிருந்தால் அந்த வலியை தாளமுடியாது என்றார்கள் மருத்துவர்கள்” என்றான்.

சகதேவன் “இப்போது தெளிவாகக் கேட்கிறது!” என்றான். யுதிஷ்டிரர் விழிகளைச் சுருக்கி “என்ன?” என்றார். “அஸ்வத்தாமரின் படைகள் எழும் ஓசை…” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் அச்சத்துடன் திரும்பி “யாதவனே, அவனிடம் இவ்வுலகையே அழித்துவிடும் ஆற்றல்கொண்ட அம்புகள் உள்ளன என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், உள்ளன” என்றார். “யாதவனே, என் இளையவனுக்கு நீயே காவல்!” என்றார் யுதிஷ்டிரர். அர்ஜுனன் “என் செயலுக்கு எதிர்வினையாக வரும் எதையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும், அதற்கு நான் ஒருக்கமே” என்றான். யுதிஷ்டிரர் பரபரப்புடன் “எண்ணினால் பீமனும் பெரும்பிழை செய்திருக்கிறான். அவன் தனியாகச் சென்று சிக்கிக்கொள்ளப் போகிறான். நகுலா, அவன் உடனே இங்கு வந்தாகவேண்டும். முழவு ஒலிக்கட்டும்” என்றார்.

நகுலன் தலைவணங்கி விலக சகதேவனிடம் “நாம் ஐவரும் ஓரிடத்தில் இருக்கவேண்டும். நம்மை அவன் தனித்தனியாக எதிர்கொள்ளக் கூடாது. நாம் இளைய யாதவன் விழிதொடும் தொலைவில் இருக்கவேண்டும்” என்றார். “எங்கே பாஞ்சாலன்? அவனை நாம் காக்கவேண்டும். அஸ்வத்தாமனின் வஞ்சம் அவன்மேல்தான் முதலில் எழும்… நகுலனிடம் அவனையும் உடனே இங்கு வரச்சொல்லி முழவொலிக்க ஆணையிடுக!” ஓர் ஏவலன் தலைவணங்கி நகுலனை நோக்கி ஓட யுதிஷ்டிரர் “நாம் நம் பிழைக்கு விலையளிக்கப்போகிறோம். தெய்வங்கள் நம்மை விடப்போவதில்லை… மூதாதையர் நம்மை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்றார். “என்ன பிழை செய்தோம்?” என்று சகதேவன் பற்களைக் கடித்தபடி கேட்டான். “பிழைசெய்யாமலா இங்கே வந்து எலிகளைப்போல் ஒளிந்திருக்கிறோம்? நெஞ்சுவிரித்து நாம் ஏன் களத்தில் நிற்கவில்லை? எவரை அஞ்சுகிறோம்?” என்றார் யுதிஷ்டிரர்.

சகதேவன் உரத்தகுரலில் “முதன்மைப்பிழை ஆற்றியவர் நீங்கள்” என்றான். யுதிஷ்டிரர் ஒருகணம் அவனை நோக்கிவிட்டு “அதை நான் எண்ணியிருக்கவில்லை என நினைத்தாயா? ஆம், நீங்கள் இயற்றியவை பிழைகள். நான் ஆற்றியது பழி. என் குடிகளும் கொடிவழிகளும்கூட ஈடுசெய்யவேண்டியது. பிறவி பல கடந்து நான் விண்ணுலகு செல்வதற்கு முன் நிகர்செய்தாக வேண்டியது. அதை எண்ணி இனி துயருறுவதில்லை என்று நான் எண்ணிவிட்டேன்” என்றபின் இளைய யாதவரிடம் “யாதவனே, இக்களத்தில் போருக்கு வந்தபோது என்னை இப்புவியிலேயே அறமறிந்து ஒழுகுபவன் என எண்ணிக்கொண்டிருந்தேன். இந்நிலத்தில் என் தேர் சகடம் தொடாது நீந்துவதுபோலவே உணர்ந்தேன். இன்று சற்றுமுன் தேரில்வருகையில் மண்ணின் ஒவ்வொரு பள்ளமும் கல்லும் தடையும் என் உடலை அறைந்து திடுக்கிட வைத்தன. என் சகடங்கள் நிலத்தில் உருளத்தொடங்கிவிட்டன” என்றார்.

“அது நன்று” என்று இளைய யாதவர் புன்னகைசெய்தார். “அரசனின் தேர்ச்சகடங்கள் மண்ணில் மட்டும்தான் உருளவேண்டும்.” யுதிஷ்டிரர் “என் இளையோர் இப்பழியை சுமக்கவேண்டியதில்லை. அவர்களையும் பாஞ்சாலனையும் காத்துநிற்க! நீ எவர் என என் கனவில் அறிந்திருக்கிறேன். உன்னை அடிபணிந்தபின் எவரும் எதையும் அஞ்சவேண்டியதில்லை” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “என்னை காக்கும்பொருட்டு இனி உன்னிடம் அல்ல எந்த தெய்வத்திடமும் நான் கோரப்போவதில்லை. தெய்வ அருளுக்குரிய அனைத்துத் தகுதிகளையும் இழந்துவிட்டவன் நான். இக்களத்தில் அஸ்வத்தாமனின் அம்புகளால் எரித்தழிக்கப்படுவேன் என்றாலும் அதில் பிழையில்லை.” இளைய யாதவர் “நீங்கள் அவனால் எரித்தழிக்கப்பட மாட்டீர்கள், அரசே” என்றார். “ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே எரிபுகுந்து மீண்டவர்.”

யுதிஷ்டிரர் துயருடன் “தவம்பெற்று பேறடைந்தபின் மண்ணுக்கு வந்த எவரும் அப்பேறால் நலமடைந்ததில்லை. அது விண்ணுக்குச் செல்லும் பாதை மட்டுமே” என்றார். “எத்தனை முனிவர்களின் கதைகள்! ஆயினும் நான் மீண்டுவந்தேன். என் இளையோருக்காக.” இளைய யாதவர் வாய்விட்டு நகைத்து “ஒவ்வொருவரும் இங்கே ஒவ்வொருவரால் கட்டப்பட்டுள்ளார்கள்” என்றார். பின்னர் அர்ஜுனனை நோக்கி “பார்த்தா, ஒருவர் எதன்பொருட்டு அறம்பிழைப்பாரோ அதுவே அவரை புவியில் கட்டியிருக்கும் தளை என்றுணர்க!” என்றார். அர்ஜுனன் “நாம் களமெழவேண்டியதுதான். அவர் நம்மை அணுகிக்கொண்டிருக்கிறார்” என்றான். இளைய யாதவர் “அரசர் சொன்னதே சரி, இனி இன்றையபோரில் நாம் இணைந்து நின்றாகவேண்டும்” என்றார். அர்ஜுனன் “அதனால் என்ன பயன்?” என்றான். இளைய யாதவர் “ஒருவர் பொருட்டு காக்கப்பட்டாலும் நாமனைவரும் தப்பக்கூடும் அல்லவா?” என்றார்.

பீமன் புரவியில் வந்து இறங்கினான். அவன் களைத்துச் சலித்திருந்தான். யுதிஷ்டிரர் பரபரப்புடன் “மந்தா, நீ இளைய யாதவருடன் நின்றிரு. எதன்பொருட்டும் தனித்துச் செல்லாதே. அறைகூவல்கள் இழிவுபடுத்தல்கள் எவற்றையும் பொருட்டெனக் கருதவேண்டாம். இது என் ஆணை” என்றார். பீமன் மறுமொழி சொல்லாமல் அர்ஜுனனிடம் “வருகிறானா?” என்றான். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். பீமன் மேலும் பேசாமல் கைகளைத் தூக்கி அலுப்பறுத்தான். அவன் எலும்புகளின் ஓசை கேட்டது. “மந்தா, நான் சொன்னதை நீ செவிகொள்ளவில்லை” என்றார் யுதிஷ்டிரர். எதிர்பாராத எரிச்சலுடன் பீமன் “மூத்தவரே, பதுங்கி இருப்பதற்காக நான் படைக்கு வரவில்லை. உயிரை எண்ணிஎண்ணிப் போரிடவும் இல்லை” என்றான்.

“நீ அறிவிலாது பேசுகிறாய். நீ இன்றிருக்கும் நிலை என்னவென்று அறிவாயா?” என்று யுதிஷ்டிரர் கூவினார். “நன்கறிவேன், நம் படைகளை அவன் முற்றழிப்பான் என்கிறார்கள். அவர்கள் நடுவே இறந்து கிடக்கவே விரும்புவேன். ஓடி ஒளிந்து உயிர்தப்புவதற்கல்ல” என்றான் பீமன். “மந்தா, இது வெறும் ஆணவம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “ஆணவமா? இனி என்ன ஆணவம் எஞ்சியிருக்கிறது? வெற்றுவிலங்குக்கு ஆணவம் உண்டா என்ன?” என்றான் பீமன். முகத்தில் புழுதி படிந்திருப்பதுபோல கையால் உரசித்துடைத்து காறித்துப்பினான். “அவன் என்னை கொல்வான் என்றால் எனக்கு உகந்ததை இயற்றுகிறான். நான் பிழையீடு செய்து விண்ணேகுவேன்” என்றான். “மந்தா, நீ உளம்தளர்ந்திருக்கிறாய்…” என்றார் யுதிஷ்டிரர்.

“ஆம், உள்ளம் என்று ஒன்று இத்தனை எடைகொண்டு என்னை அழுத்தியதே இல்லை” என்றான் பீமன். “நான் தூக்கி வளர்த்த கௌரவமைந்தரை கொன்றிருக்கிறேன். பிதாமகரின் தலையை அடித்து உடைத்திருக்கிறேன். அப்போது உள்ளூர அறிந்ததெல்லாம் ஒரு கல்லின் உணர்வின்மையை மட்டுமே. ஆனால் இன்று வெறும் தசைக்குவையாக உணர்கிறேன்.” மீண்டும் நிலத்தில் துப்பி “அந்த யானை என்னிடம் போருக்கு எழவில்லை. அது என்னை பார்க்கவே இல்லை. களத்தில் அஞ்சி நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தது” என்றான். சகதேவன் “அது களத்திற்கு வந்துவிட்டது” என்றான். பீமன் “அது மானுடர்மேல் நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தது. அதன் ஐயத்தை நான் உறுதிசெய்தேன்” என்றான். சகதேவன் குரல்தாழ்த்தி “நமக்கு வேறுவழியில்லை” என்றான். பீமன் வெடித்து உயர்ந்த குரலில் “எத்தனை வேறுவழிகளை நோக்கினோம்? சொல், எத்தனை வழிகளில் முயன்றோம்?” என்றான்.

யுதிஷ்டிரர் “அதை இப்போது சொல்கிறாயா? உன் முன்னால்தான் முடிவெடுக்கப்பட்டது, அப்போது சொல்லியிருக்கவேண்டும் நீ” என்றார். “அப்போதும் இப்போதும் அதை நான் செய்திருக்கக் கூடாதென்று சொல்லவில்லை. செய்யாவிட்டாலும் நான் இழிசெயல் செய்தவன். செய்தமையால் அதை உறுதிசெய்திருக்கிறேன். களம்பட்ட ஆசிரியர் எழுந்து வந்தால் நான் மட்டுமே விழிநோக்கி பேசமுடியும். ஆம் ஆசிரியரே, நான் பீமன். வெறும் விலங்கு. ஒருபோதும் பிறிதொன்றாக என்னை சொல்லிக்கொள்ளாதவன் என்பேன். ஆசிரியர் என் தலையைத் தொட்டு குழலை வருடி சொல்வார் ஆம், மைந்தா. இப்பிறவியில் இவ்வாறு ஆனாய். உன் பிழைகளை புழுவென இழிவிலங்கென நூறுமுறை பிறந்து ஈடுசெய்தபின் ஒருநாள் விடுதலைகொள்வாய் என” பீமன் குரல் இடறியது. “அவர் அறிவார் என்னை… அவர் எனக்கு கதைதொட்டு அளித்தார். அதைக்கொண்டு நான் இன்று அவரை கொன்றேன்.”

“நீ…” என சொல்லமுயன்ற யுதிஷ்டிரரை கையமர்த்தி பீமன் உரத்த குரலில் “அந்த யானைமேல் விழுந்ததும் அவர் மீதான அடிதான்!” என்றான். “நீ உளம் கலங்கியிருக்கிறாய்!” என்றார் யுதிஷ்டிரர். ‘யாதவனே, ஏதேனும் சொல்க! இதென்ன, ஒவ்வொருவரும் பித்தர்கள்போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்! உத்தரபாஞ்சாலனின் அம்புகளுக்கு முன் தலைகொண்டுசென்று வைப்பார்கள் போலிருக்கிறது இவர்களின் சொற்களைக் கேட்டால்” என்றார். தேரில் வந்திறங்கிய திருஷ்டத்யும்னன் “அரசே, உத்தரபாஞ்சாலர் நம்மைத் தேடி வந்துகொண்டிருக்கிறார். எதிர்ப்படும் படைகளை வில்லால் அறைந்து சிதறடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சற்றுநேரத்தில் அணுகிவிடுவார்” என்றபின் திரும்பி பீமனிடம் “நம் படைசூழ்கை என்ன?” என்றான். “சற்றுமுன் மூத்தவரே சொன்னார், சென்று தலைகொடுத்தல். அதுமட்டும்தான்” என்றான் பீமன்.

திருஷ்டத்யும்னன் எரிச்சல் கொண்டு “தலைகொடுத்தல் என்னும் எண்ணம் வந்தாலே தலைகொடுத்ததுபோலத்தான். எனில் எவருக்காக இப்போர்? இத்தனை மானுடர் உயிரிழந்தது எதன்பொருட்டு? இவர்களுடையதும் அந்த அந்தண ஆசிரியனுக்கு நிகரான உயிர்தான். உடலில் உயிரை ஆள் நோக்கி அளந்து ஊற்றவில்லை தெய்வங்கள்” என்றான். பீமன் அமைதியிழந்தவனாக தலையை திருப்பிக்கொண்டான். குளம்போசை ஒலிக்க புரவியில் வந்திறங்கிய சாத்யகி “என்ன நிகழ்கிறது இங்கே? அரசே, நான் நெடுநேரமாக முரசொலியால் வினவிக்கொண்டிருக்கிறேன். நாம் படைமுகம் கொள்வதற்குரிய சூழ்கை என்ன? நம் படைகள் முற்றாகச் சிதறிப்பரந்துவிட்டிருக்கின்றன. இங்கே இன்றிருப்பவை சிறு சிறு வீரர்குழுக்கள். கௌரவர்களும் உளம்சோர்ந்திருப்பதனால் இப்போது நாம் எஞ்சியிருக்கிறோம்” என்றான்.

படபடப்புடன் கைகளை வீசியபடி “ஆனால் இது இவ்வண்ணமே தொடரவேண்டுமென்பதில்லை. எக்கணமும் அஸ்வத்தாமர் இங்கே வரலாம். அவருடைய சீற்றத்தையும் ஆற்றலையும் கண்டால் கௌரவப்படை எழும். எனில் நமக்கு முற்றழிவே” என்றான். “நமது படைகள் இருக்கும் உளநிலை அவர்களின் படைக்கலங்களுக்கு முன்னால் தலைகொண்டு சென்று வைத்து உயிர்விட சித்தம் கொண்டிருக்கிறது.” திருஷ்டத்யும்னன் “தலைவர்களின் உளநிலையும் அதுவே” என்றான். சாத்யகி அவனை முற்றாகவே தவிர்த்து யுதிஷ்டிரரிடம் “அரசே, படைசூழ்கைக்கு ஆணையிடுக!” என்றான். யுதிஷ்டிரர் “நான் படைசூழ்கை வகுக்க வல்லவன் அல்ல…. என்னால் சொல்லக்கூடுவதொன்றே, என் இளையோர் இளைய யாதவரின் விழிநீழலில் நின்றிருக்கவேண்டும்” என்றார்.

சாத்யகி “இளையவரே, ஆணையிடுக!” என்றான். அர்ஜுனன் விழிதாழ்த்தி அமர்ந்திருக்க சாத்யகி இளைய யாதவரிடம் “அரசே, சொல்க! நான் செய்யவேண்டியதென்ன?” என்றான். சகதேவன் “அவர் ஒரு சொல்லும் உரைக்கப்போவதில்லை. இது நமது போர்” என்றான். பீமன் “நான் செல்கிறேன். இங்கு நின்றிருந்தால் என் நரம்புகள் உடைந்துவிடும்” என்றான். “மந்தா, நான் சொன்னதை நீ மறந்துவிட்டாய்!” என்றார் யுதிஷ்டிரர் “ஆம், மறந்துவிட்டேன். மூத்தவரே, அஸ்வத்தாமன் படைக்கலம் கொண்டுவந்தால் நான் என் தலையை அளிப்பேன். ஐயமே வேண்டாம். அவனுக்கு தலைக்கடன் கொண்டிருக்கிறேன்” என்றபின் கைகளை வீசியபடி நடந்து அகன்றான். “சகதேவா, அந்த அறிவிலியிடம் சென்று சொல்” என்று யுதிஷ்டிரர் கூவினார். சகதேவன் ஒன்றும் சொல்லாமல் வேறுதிசை நோக்கி நின்றிருக்க யுதிஷ்டிரர் தன் தலையில் ஓங்கி அறைந்துகொண்டு உரக்க கூச்சலிட்டார். “நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்? நான் சென்று உயிர்கொடுக்கிறேன். நான் சென்று அவன் முன் நெஞ்சுகாட்டுகிறேன். போதுமல்லவா?”

சாத்யகி “நீங்கள் ஏன் உயிர்கொடுக்கவேண்டும்? இவன் செல்லட்டும்… நெறிமீறி ஆசிரியரின் தலையை அறுத்த இச்சிறுமையாளன் செல்லட்டும்” என்றான். திருஷ்டத்யும்னன் ஒருகணம் திகைத்து பின் சினவெறிகொண்டு கையை ஓங்கியபடி முன்னால் பாய்ந்தான். “வாயை மூடு! கீழ்மகனே, என்னடா சொன்னாய்? சிறுமையாளனா? எவன்? யோகத்திலமர்ந்திருந்த மலைமகனின் தலையை அறுத்த நீயா பேசுகிறாய்?” என்றான். “ஆம், அவன் தலையை அறுத்தேன். அவனால் கொல்லப்பட்ட என் பத்து மைந்தர் விண்ணுலகில் உளம் ஆறவேண்டும் என்பதற்காக… அவன் எனக்கு எவருமல்ல. நீ மடியிருத்தி சொல்லும் வில்லும் தந்த ஆசிரியனை தலையறுத்தவன்… உன்னால் அழியவிருக்கிறது இப்படை… இக்குலமே குருதிகொடுக்கப்போகிறது உன் பழிக்காக.”

திருஷ்டத்யும்னன் கூச்சலிட்டபோது தொண்டை உடைந்து குரல் அடைத்துக்கொண்டது. “ஆம், ஆசிரியனை கொன்றேன். அவர் மைந்தனையும் முடிந்தால் கொல்வேன். அன்றி அவன் தேரடியில் அம்புபட்டு விழுவேன். துளியும் எனக்கு வருத்தமில்லை. நான் எனக்கு உகந்ததையே செய்தேன். எந்தைக்காகவே நான் பிறந்தேன். இதோ எதன்பொருட்டு உத்தர பாஞ்சாலன் வருகிறானோ அதே உணர்வே எனக்கும்…” சாத்யகி “நீ ஆண்மகன் என்றால் அவரை எதிர்த்து கொன்றிருக்கவேண்டும். நெஞ்சில் அம்புபாய்ந்தவரின் தலையை வெட்டி பழிதீர்க்கிறாயா, கீழ்மகனே?” என்றான். சகதேவன் “போதும்… செவிகூசுகின்றது. நிறுத்துங்கள்” என்றான். யுதிஷ்டிரர் ‘யாதவனே, இவர்களின் சொற்களை நிறுத்துக… போதும் இந்தக்கீழ்மை” என்றார். இளைய யாதவரும் அர்ஜுனனும் அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை.

திருஷ்டத்யும்னன் “ஆம், நான் நெஞ்சில் அம்புபாய்ந்த முதியவரை கொன்றேன். நீ என்ன செய்தாய்? கையறுந்து ஊழ்கத்தில் அமர்ந்தவனை கொன்றாய்… உன் குடிக்கே உரிய கீழ்மையை செய்தாய்… நீ ஆணென்றால் எடு வில்லை. உன் குடியை ஷத்ரியர் எவ்வண்ணம் நடத்துவார்கள் என்று காட்டுகிறேன்” என்றான். யுதிஷ்டிரர் திரும்பி நகுலனிடம் “என்ன செய்கிறாய் அங்கே? அறிவிலி… நிறுத்து இவர்களை…” என்று கூச்சலிட்டார். சாத்யகி “உன் உள்ளத்து இருள் வெளிவந்துள்ளது. நீயா குலம் பற்றி பேசுகிறாய்? யாதவர்களின் ஆண்மையைப் பற்றி தெரிந்தாகவேண்டும் என்றால் உன் உடன்பிறந்தாளிடம் கேள். ஐந்து மடங்கு மறுமொழி சொல்வாள்…” என்றான். “அறிவிலி… வாயை மூடு!” என்று யுதிஷ்டிரர் கூவி நிற்கமுடியாமல் தேர்த்தட்டை பற்றிக்கொண்டார்.

“முதலில் இந்தக் கீழ்மகனின் இழிந்த நாவை நிறுத்த ஆணையிடுங்கள். உங்கள் சொற்களை அவன் ஒரு பொருட்டெனக் கருதுகிறானா என்று பாருங்கள். அதன்பின்னர் என்னிடம் நெறிபேசலாம்” என்று கூவியபடி சாத்யகி யுதிஷ்டிரரை நோக்கி அடிக்கச் செல்பவன்போல சென்றான். “நீங்கள் கேட்டு நிற்பது உங்கள் குடியை கீழ்மைசெய்பவனின் சொற்களை. ஆணிலிகளுக்குரிய நாணமின்மையுடன் நின்றிருக்கிறீர்கள். நான் உங்கள் அடிமை அல்ல. உங்களுக்காக பணிபுரிய வந்தவனும் அல்ல. உங்களுக்காக என் மைந்தரை இழந்தவன்.” யுதிஷ்டிரர் தலையைப் பற்றியபடி பின்னடைந்து உடைந்த தேரின் முகடொன்றில் அமர்ந்து முழங்கால்களில் முகம் வைத்துக்கொண்டார். திருஷ்டத்யும்னன் வாளை உருவி சாத்யகியை நோக்கி வீச அதை ஒழிந்து தன் வாளுறையால் அவன் வாளை அறைந்து தெறிக்கவிட்ட சாத்யகி “ஆணிலி என்றதும் உனக்கு சினம் வருகிறதா? இழிமகனே” என்றான்.

திருஷ்டத்யும்னன் கைகள் நடுங்க விழிகள் நீர்கொள்ள நின்று தவித்தான். சாத்யகி தொண்டை நரம்புகள் புடைக்க கூச்சலிட்டான். “நீ ஆணென்றால் சென்று சொல் அஸ்வத்தாமனின் அம்புகளால் அழியவிருக்கும் பாண்டவப்படைகளிடம், நீ அவர்களுக்காக உயிர்கொடுப்பாய் என்று. நெஞ்சு விரித்துச் சென்று அவன் அம்புகள் முன் நின்று செத்து விழு… உன்னை சாவிலிருந்து காத்தமைக்காக நானும் வந்து அந்த அம்புகள் நடுவே விழுகிறேன்.” சாத்யகி நிலத்தில் ஓங்கித் துப்பினான். “நீ ஏன் துரோணரை கழுத்தறுத்தாய் என்று அறியாதோர் எவர் இங்கே? உன் தந்தைக்காகவா? தந்தைக்காக நீ கொண்ட உணர்ச்சிகளை விஞ்சியது உன் உள்ளம்கொண்ட சிறுமை. சொல் கீழ்மகனே, அவர் உன்னை தேர்க்காலில் கட்டி இழுக்காவிட்டால் நீ அவரை அவ்வண்ணம் வெட்டியிருப்பாயா? நீ ஆடிய அமலை உன் ஆணவத்திற்காக, உன் தந்தைக்காக அல்ல. இல்லை என்றால் சொல். உன் தந்தைமேல் ஆணையிட்டுச் சொல்!”

திருஷ்டத்யும்னன் தவித்து திணறி பின்னர் “நீ முதலில் செல்… யோகத்தில் அமைந்தவனை வெட்டிய பழிக்காக சென்று உன் மூதாதையர் முன் சங்கறுத்துவிழு” என்றான். அந்தத் தளர்வு சாத்யகியை மேலும் வெறிகொள்ளச் செய்தது. “ஆம், யோகத்திலமர்ந்தவனைத்தான் வெட்டினேன். மேலும் வெட்டுவேன். அவன் என் எதிரி…” என்றான். திருஷ்டத்யும்னன் எங்கோ எதையோ சென்று தொட்டு ஒருகணத்தில் ஆற்றல்கொண்டான். தாழ்ந்த அழுத்தமான குரலில் “நீ ஆணையிட்டுச் சொல், அவன் உன் எதிரி என்று. சொல், அவன் உன் எதிரியா? அவன் உனக்கு உன் மைந்தர்களைவிட அணுக்கமானவன். உன் அகம்பகிர்ந்துகொண்டவன்… இல்லை என்றால் சொல்” என்றான். கையை நீட்டியபடி முன்னால் சென்று “அவனை நீ ஏன் கொன்றாய் என உள்ளம் தொட்டுச் சொல். சொல் கீழ்மகனே, உன் தெய்வங்களை எண்ணி ஆணையிட்டுச் சொல்!”

சாத்யகி சொல்லிழந்தான். திருஷ்டத்யும்னன் உளம் தளர்ந்து தோள் தொய்ந்து முழங்கால் வளைய விழப்போனான். பின் ஓங்கி நெஞ்சில் அறைந்து அழுகைக்குரலில் “அனைத்துப் பழிகளையும் நானே சுமக்கிறேன். ஆம், எவரும் என் பொருட்டு சாகவேண்டியதில்லை. நான் சென்று அவன் முன் நிற்கிறேன்” என்றான். அவன் விம்மியழத் தொடங்க யுதிஷ்டிரர் உடைந்தகுரலில் “நான் என்ன செய்யவேண்டும், யாதவனே?” என்றார். அர்ஜுனன் “முன்னரே சொல்லிவிட்டீர்கள் மூத்தவரே, நாம் யாதவரைச் சார்ந்தே நிற்போம். நமக்கு வேறுவழியில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், நாம் அவனை நம்பியே இங்கு நின்றிருக்கிறோம்” என்றார். “அவர் ஏந்திய அந்த மந்தர மலையே நமக்கும் குடையாகுக!”

சாத்யகி “அது என்ன ஓசை!” என்றான். “குதிரைக்கனைப்பு!” என்றான் திருஷ்டத்யும்னன். இளைய யாதவர் “அது அஸ்வத்தாமனின் வில்லின் ஓசை. அதில் வடவைநெருப்பு குடியேறிவிட்டிருக்கிறது” என்றார். யுதிஷ்டிரர் “ஆம், நிமித்திகக் கூற்றின்படி இந்தக் களத்தில் வடநெருப்பின் கனைப்பொலி எழும்” என்றார். திருஷ்டத்யும்னன் ஒருகணத்தில் விசைகொண்டு எழுந்து குரலும் உடலசைவும் முற்றாக மாறுபட “நான் நமது படைகளை ஐவிரல்குவிகை சூழ்கையில் நிறுத்துகிறேன். நம்மால் செய்யக்கூடுவது இப்போது அது ஒன்றே. நமது அனைத்துப்படைகளும் இப்புள்ளியில் வந்து இணையட்டும். நம் முழுவல்லமையாலும் அவரை எதிர்ப்போம்” என்றான். சாத்யகி “அங்கரை சிகண்டியும் சுருதகீர்த்தியும் எதிர்த்து நின்றிருக்கிறார்கள். கிருதவர்மனை சுருதசேனன் எதிர்க்கிறான்… நான் சென்று துரியோதனனையும் இளையோரையும் நிறுத்துகிறேன். இளையவரே, அனைத்துவிசையாலும் ஆசிரியர் மைந்தரை எதிர்கொள்க!” என்று கூவியபடி தன் தேர் நோக்கி ஓடினான்.

இளைய யாதவர் புன்னகையுடன் அர்ஜுனனிடம் “நாம் கிளம்பலாம் அல்லவா?” என்றார். யுதிஷ்டிரர் “என்ன இது, யாதவனே? இவர்கள் கக்கிய இந்நஞ்சு எங்கிருந்தது?” என்றார். “அணுக்கமானவர்களிடையே திரள்வது, அன்புக்கு அடியில் தேங்கியிருப்பது” என்ற இளைய யாதவர் புரவிமேல் கைவைத்து அமரத்தில் பாய்ந்தேறிக்கொண்டு சவுக்கால் தொட்டார். புரவிகள் கனைத்தபடி முன்னெழுந்தன. “யாதவனே, மந்தன் உடனிருக்கட்டும்… அவன் நம்முடனே இருக்கட்டும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். இளைய யாதவர் புன்னகையுடன் “அவரைக் காக்கும் தெய்வங்கள் முற்றிலும் வேறு” என்றார். தேர் எழுந்து முன்னால் சென்றபோது அர்ஜுனன் “எதன்பொருட்டு இந்த உளநாடகம், யாதவரே!” என்றான். “உமிழ்வனவற்றை நாம் அகற்றிவிடுகிறோம்” என்றபின் வாய்விட்டு நகைத்து “தெய்வங்களுக்கு முன்னால்தான் மானுடர் மிகச்சிறப்பாக நடிக்கிறார்கள்” என்றார்.

நூல் இருபது – கார்கடல் – 85

ele1கிருபர் தனியாக தேரில் சென்று அஸ்வத்தாமன் போரிட்டுக்கொண்டிருந்த களத்தை அடைந்து இறங்கியபோது தொலைவில் அம்புகள் பறவைக்கூட்டங்கள்போல் சிறகோசையுடன் வானை நிறைத்திருப்பதை கண்டார். சகுனியும் அஸ்வத்தாமனும் இணைந்து மறுபுறம் முழு ஆற்றலுடன் போரிட்டுக்கொண்டிருந்த சிகண்டியை எதிர்கொண்டிருந்தனர். கிருபர் வருவதை சகுனிதான் முதலில் பார்த்தார். முன்னரே துரோணர் களம்பட்டிருந்த செய்தியை அவர் அறிந்திருந்தமையால் தன் பாகனுக்கு கையசைவால் ஆணையிட்டுப் பின்னடைந்து தேரிலிருந்து இறங்கிக்கொண்டு விழிகளை இமைத்தும் தலையை உலுக்கியும் தன்னிலையை மீட்டார். புண்பட்ட காலை நீட்டி வைத்து மெல்ல தேர்ச்சகடத்திலேயே அமர்ந்தார்.

கிருபர் தேரிலிருந்து இறங்கி சகுனியை நோக்கி சென்று “காந்தாரரே, நான் என் மருகன் அஸ்வத்தாமனிடம் சொல் உரைக்க வந்தேன், செய்தியை அறிந்திருப்பீர்கள்” என்றார். “ஆம், தாங்களே செய்தியை உரைக்கவேண்டுமென்று எனக்கும் தோன்றியது… என்னால் இங்கிருந்து அகலமுடியவில்லை” என்றார். “அவன் இன்னும் அறிந்திருக்கவில்லையா?” என்று கிருபர் கேட்டார். “இல்லை. சிகண்டி எத்துணை ஆற்றல் மிக்கவர் என்பதையே ஒவ்வொரு கணமாக உணர்ந்துகொண்டிருந்தோம் இருவரும். அவருடைய அம்புகள் எங்கள் உள்ளத்தில் ஒரு சொல்லும் எழாதபடி ஆக்கிவிட்டன. நாகத்தால் உற்று நோக்கப்படும் தவளைபோல் இத்தனை பொழுது மயங்கியிருந்தோம். உண்மையில் தங்கள் தேரொலியே என்னை மீட்டது” என்று சகுனி சொன்னார்.

கிருபர் “நான் சென்று எதிர்கொள்கிறேன். சிகண்டியை என்னால் தடுக்க இயலும்” என்றார். சகுனி “ஆசிரியரே, சிகண்டி தன் முதலெதிரியை நாளும் எண்ணி ஊழ்கம் செய்து பயின்றவர். பெரிய எதிரிகளைக் கொள்பவர் அவரளவுக்கே பெரிதாகிறார் என்பதற்கான சான்று அவர். சில தருணங்களில் எதிர்நின்று பொருதுபவர் பீஷ்ம பிதாமகரேதானோ என உளம் மயங்கினேன். அம்புகளின் விசையும் கோணமும் மட்டும் அல்ல. அந்த ஆணிலியுடலில் பேராண்மை மிக்க பீஷ்மரின் அசைவுகள் எழுவதை என் விழிகளால் கண்டேன்” என்றார். கிருபர் “ஆம், நானும் அவரில் பீஷ்மரை கண்டேன்” என்றார். சகுனி “பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டவர்களிடம் கேட்கவேண்டும், அவரில் சிகண்டி எழுந்த தருணங்கள் உண்டா என” என்றார் சகுனி. பின்னர் திரும்பி கண்களைச் சுருக்கி அஸ்வத்தாமனை நோக்கி “பீஷ்மரில் எழுபவள் அம்பையாகவும் இருக்கக்கூடும்…” என்றார்.

கிருபர் அப்பேச்சை கடக்க எண்ணினார். அதற்குள் அஸ்வத்தாமன் ஓர் அடித்தொலைவுக்கு தன் தேரை பின்னடையச் செய்து பேரம்பொன்றை எடுத்து தேர்ச்சகடத்தின் விசையுடன் தோல்பட்டையால் இணைக்கப்பட்டிருந்த பெருவில்லை வளைத்து நாண்பூட்டி அதை சிகண்டியை நோக்கி எய்தான். இடியோசையுடன் எழுந்து அனல் விரித்து சுழன்று சென்று சிகண்டியை தாக்கியது அந்த அம்பு. அது எழும் கணத்திலேயே தேரிலிருந்து பாய்ந்து அப்பால் விழுந்து எழுந்து ஓடி பிறிதொரு புரவி மேல் ஏறிக்கொண்டார் சிகண்டி. அவருடைய தேர் நிலத்திலிருந்து விண்ணுக்கு தூக்கிவீசப்பட்டு எரிந்து தழல்கொண்ட துண்டுகளாக தெறித்து நிலத்தில் விழுந்தது. புரவிகளின் உடல்கள் தசைச்செதில்களாக மாறி வானிலிருந்து பொழிந்தன. நாணொலி எழுப்பியபடி மேலும் மூன்று பேரம்புகளால் படைகளை சிதறடித்தான் அஸ்வத்தாமன்.

“இனி சிகண்டி எழ நெடும்பொழுதாகும். இதுவே தருணம்” என சகுனி சொன்னார். சிகண்டி படைகளுக்குள் ஓடி மறைய அஸ்வத்தாமன் பிறிதொரு பேரம்பை எடுத்து வில்லில் பொருத்த கிருபர் “அஸ்வத்தாமா” என்று கூவி அழைத்தபடி அஸ்வத்தாமனின் தேரை நோக்கி சென்றார். கையில் அம்பு நிலைக்க அஸ்வத்தாமன் திரும்பிப்பார்த்தான். பாண்டவப் படைகள் ஒருங்கு திரண்டு கோட்டையென மாறுவதை ஒருகணம் பார்த்தபின் “சொல்லுங்கள், மாதுலரே” என்றான். அதன் பின்னரே தொலைவில் முழங்கிக்கொண்டிருந்த முரசொலி அவன் காதில் பட்டது. முகம் இறுக “தந்தையா?” என்றான். “ஆம்” என்று கிருபர் சொன்னார். “யார்?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “அர்ஜுனன். அதன் பின் திருஷ்டத்யும்னன்” என்று கிருபர் சொன்னார்.

அஸ்வத்தாமன் “ஆம்” என்றபின் வில்லையும் அம்பையும் தேர்த்தட்டில் வைத்துவிட்டு தேரின் படிகளினூடாக இறங்கி கிருபரை நோக்கி வந்தான். “உன்னிடம் உண்மையை உரைக்கும்பொருட்டு அரசர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்” என்றார் கிருபர். அஸ்வத்தாமன் கண்கள் இடுங்க நோக்கினான். “அஸ்வத்தாமா, இறுதியாகப் போரிட்டபோது உன் தந்தை அனைத்து நெறிகளையும் மீறினார். பிறிதொருவராக மாறி களத்தில் நின்றார். மானுடருக்கு எதிராக ஒருபோதும் கைக்கொள்ளலாகாதென்று நூல்கள் விலக்கிய அனலம்புகளையும் இடியம்புகளையும் மின்னம்புகளையும் ஏவி பாண்டவப் பெருந்திரளை அழித்தார். வெந்த உடல்களின் கெடுநாற்றத்தாலேயே நமது படையினர் பின்னடைந்தனர் என்கிறார்கள்.”

“துருபதனை அவர் கொன்றார். அவர் மைந்தன் திருஷ்டத்யும்னனை தேர்க்காலில் கட்டி இழுத்தார்” என்று கிருபர் தொடர்ந்தார். “ஷத்ரியனை தேர்க்காலில் கட்டி இழுப்பதென்பது ஏழு தலைமுறைக்கு நீளும் பெரும்பழியை சேர்ப்பது. அரக்கர் அதை செய்ததுண்டு, அந்தணர் அதை இயற்றுவது இதுவே முதல்முறை. திருஷ்டத்யும்னனை சாத்யகி காப்பாற்றினான். அவன் உடல்வெந்து அமிலநீராடியவன்போல் கிடந்தான். எதிர்த்துவந்த அர்ஜுனனை அவர் அனலால் எரித்தார். பாண்டவ மைந்தர்களையும் உடல் வெந்து விலகியோடச் செய்தார்.” அஸ்வத்தாமன் “அறிந்தேன்” என்றான்.

“அஸ்வத்தாமா, பீஷ்ம பிதாமகரை வென்றது போலவே ஒரு வஞ்சத்தால்தான் உன் தந்தையும் வீழ்த்தப்பட்டிருக்கிறார். அவர்களுக்கும் வேறுவழியில்லை. உன் தந்தையை அரைநாழிகைக்குள் கொல்லவில்லை என்றால் படையுடன், குடியுடன் அவர்கள் வெந்து வெறும் தசைக்குழம்பென குருக்ஷேத்ரத்தில் பரவியிருப்பார்கள்” என்றார் கிருபர். “சொல்க!” என்று சொல்லி தலைகுனிந்து நிலம்நோக்கினான் அஸ்வத்தாமன். “மருகனே, உன் மேல் துரோணர் கொண்டிருந்த பேரன்பை அறிந்திருப்பாய். மாளவர்களின் படையிலிருந்த அஸ்வத்தாமன் எனும் யானை பீமனால் கொல்லப்பட்டது. அச்செய்தியை அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற சொற்களால் பாண்டவர்கள் உன் தந்தையிடம் சொன்னார்கள்.”

அஸ்வத்தாமன் கை நீட்டி கிருபரைத் தடுத்து “யார் சொன்னது? யுதிஷ்டிரர் சொன்னாரா?” என்று கேட்டான். “ஆம்” என்று கிருபர் சொன்னார். அஸ்வத்தாமனின் நீட்டிய கை அசைவிலாது நின்றது. “யுதிஷ்டிரன் சொல்லியிராவிட்டால் தந்தை நம்பியிருக்கமாட்டார்” என்று கிருபர் தொடர்ந்தார். “உன் தந்தை செயலிழந்து வில் தாழ்த்தி தேர்த்தட்டில் அமர்ந்தார். அர்ஜுனன் அரிய அம்பொன்றால் அவர் நெஞ்சை பிளந்தான். அவர் தேர்த்தட்டில் விழுந்த பின்னர் தேரில் பாய்ந்தேறிய திருஷ்டத்யும்னன் அவர் நெஞ்சில் உதைத்து முடி பற்றி தூக்கி வாளால் கழுத்தை வெட்டி தலையை துண்டாக்கி எடுத்தான். அதை பிறருக்கு காட்டி அமலையாடினான். இழிசொல்லுரைத்து தூக்கி களத்தில் வீசினான்.”

அஸ்வத்தாமனின் உடலில் மெல்லிய அசைவொன்று நிகழ்ந்தது. “அதைக் கண்டு பாண்டவர்களே களத்தில் சொல்லிழந்து நின்றனர். அர்ஜுனன் வேண்டாம் பாஞ்சாலரே என்று உளம் உடைந்து கூவினான். அங்கிருந்த மூத்த வீரர்கள் அனைவரும் உரக்க அழுது கண்ணீர்விட்டனர். பாண்டவ வீரர்களில் மூத்தவர் எழுவர் திருஷ்டத்யும்னன் மேல் தீச்சொல்லிட்டபடி வந்து தலைகொடுத்து வீழ்ந்தனர். பாண்டவப் படையிலிருந்து ஆசிரியர் வெல்க, பரத்வாஜரின் மைந்தர் சிறப்புறுக என்று வாழ்த்தொலி எழுந்த பின்னரே நமது படைகளும் வாழ்த்தொலிக்கத் தொடங்கின” என்றார் கிருபர்.

அஸ்வத்தாமன் இரு கைகளையும் முறுக்கி பற்களைக் கடித்து குனிந்து நின்றான். பின்னர் “ஆசிரியரே, அவன் தந்தையை நோக்கி எய்த அந்த அம்பின் பெயரென்ன?” என்றான். கிருபர் “நான் அதை அறிவேன். அது ஸ்வம் என்று அழைக்கப்படுகிறது. மிகச் சிறிய அம்பாக ஒரு வீரனுக்கு கிடைக்கும் என்கிறார்கள். ஒரு சிறு புழு வடிவில், அல்லது ஒரு துரும்பு அளவிற்கு. அதை முதலில் பார்க்கையில் பேரழகு கொண்டிருக்கும். காலையொளியில் வைரம்போல் சுடர்விடும். சுட்டுவிரலால் அதை தொட்டெடுத்தால் நறுமணம் கொண்டிருக்கும். அதை தன் ஆவநாழிக்குள் அவன் வைத்துக்கொள்ள வேண்டும். அது எப்போதும் அங்கிருக்கும், ஆனால் ஆவநாழியை வெளியே கொட்டி தேடினாலும் அதை கண்டடைய இயலாது. அது அங்கிருப்பதையே உணராமலும் போகக்கூடும், என்றோ ஒருநாள் கைபோனபோக்கில் துழாவுகையில், பிறிதொன்றுக்கெனத் தேடுகையில் அதைத் தொட்டு திடுக்கிட்டு கைவிலக்கிக் கொள்வான்.”

“அனைத்து அம்புகளும் ஒழிந்தபின் ஆவநாழியில் அது தோன்றும்” என கிருபர் தொடர்ந்தார். “ஒருமுறை அதற்கு இடமளித்துவிட்டால் பின்னர் அதை மீளக் கண்டடைந்து தன்னிலிருந்து விலக்குவது எளிதல்ல. அதற்கு நீடுநாள் தவம் தேவையாகும். முழுக்கக் கனிந்த தவத்தால்கூட ஒருவேளை அதைக் கடக்க இயலாமலும் ஆகும். அம்பறாத்தூணிக்குள் அறியாது வளர்கிறது. ஆவநாழியிலிருந்து எழும் ஒவ்வொரு அம்பையும் அது நோக்கிக்கொண்டிருக்கிறது. வெல்லும் அம்புகளில் துள்ளுகிறது. வீழும் அம்புகளில் துவள்கிறது. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னரும் இருமடங்கு வளர்கிறது. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் மும்மடங்கு வளர்கிறது. தொடும்போது நூறு மடங்காகிறது. எடுக்கையில் ஆயிரம் மடங்கு. ஏவுகையில் பல்லாயிரம் மடங்கு. அது வெற்புகளை உடைத்தழிக்கும் ஆற்றல் கொண்டது. பெருங்கடல்களை அனலாக்கும் நஞ்சு கொண்டது. அத்தனை தெய்வங்களும் அஞ்சும் பேராற்றல் கொண்டது.”

அவர் விழிகளை நோக்காமல் “அத்தகைய ஒன்று என்னிலும் உள்ளது. நாளும் வளர்வது, இன்மையென்று இருப்புணர்த்தி உடனமைவது” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அதன் பெயர் நாராயணாஸ்திரம். தந்தை எனக்கு அதை அளித்தார். ஒரு இளங்காலை வேளை. அர்ஜுனன் எங்கள் குருநிலையிலிருந்து கிளம்பி சௌவீரநாட்டுப் படையெடுப்புக்கு சென்றிருந்தான். நான் அவருடன் தனித்திருந்தபோது என் செவிகளில் அந்த அம்பை நுண்சொற்களாக உரைத்தார். தந்தையே இது என்னை இப்புவியில் எப்போதைக்குமென கட்டிப்போட்டுவிடுமல்லவா என்று கேட்டேன். ஒருபோதும் இதிலிருந்து மீண்டு நான் என் மூதாதையரிடமும் என்னை ஆளும் தெய்வங்களிடமும் சென்றுசேர முடியாதல்லவா என்றேன். ஆம், ஆனால் மண்ணில் உன்னை எவரும் வெல்லமுடியாதவனாக்கும், எந்நிலையிலும் அழிவற்றவனாக்கும் என்று தந்தை சொன்னார்.”

“மைந்தா, நான் என் விற்கலையின் முழுமையால் கற்றுக்கொண்டது. இது கடல் எனில் நான் பிறருக்கு அளித்த அனைத்தும் துளிகளே. இது உன்னிடமிருக்க எங்கும் நீ தலைவணங்க நேராது. எந்த அவையிலும் எவரும் உன்னை தனக்கு கீழென்றோ நிகரென்றோ கொண்டு கூட ஒரு சொல்லுரைக்க மாட்டார்கள் என்றார் தந்தை” என்றான் அஸ்வத்தாமன். “அவர் குரல் இடறியதை நினைவுறுகிறேன். அஸ்வத்தாமா, உன் தந்தை அவைகளில் அறிந்த சிறுமையை உன் வாழ்நாளில் ஒருபோதும் அடையமாட்டாய். ஆனால் நீ கூறியதுபோல் இது இப்புவியில் உன்னை என்றென்றுமெனத் தளைத்திடும் காப்பு. நீ விழையாவிடில் இதை இப்போதே உதறிவிடலாம். உன் விழைவின் பொருட்டு மட்டுமே இது உன்னுடன் வரவேண்டும் என்றார்.”

“அவர் என்னிடம் சொன்னபின் அதை என்னால் மறக்கவியலாது என உணர்ந்துகொண்டேன். ஆசிரியரே, நாட்கணக்கில் ஆண்டுக்கணக்கில் என் நெஞ்சினுள் மூச்சு ஓடுவதுபோல அச்சொல் ஓடிக்கொண்டிருந்தது. அவர் அதை நாராயணாஸ்திரம் என்று சொன்னார். ஆழம் அசைவிலாதிருக்க அலைகள் கொந்தளித்துக்கொண்டே இருப்பது. அகன்று எங்கோ இருக்க கணந்தோறும் வந்து அறைந்துகொண்டே இருப்பது. பேரமைதியின் ஓயாத ஓசை. நான் அதை அஞ்சினேன், ஆனால் அதற்கு முற்றாக அடிபணிந்தேன். பின்னர் அது என்னை ஆளத் தொடங்கியது” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“ஆம், அதை நான் அறிவேன்” என்று கிருபர் சொன்னார். “உன்னை நானே நேரில் வந்து சந்திப்பது அதை அஞ்சியே.” அஸ்வத்தாமன் “ஆசிரியரே, என்னிடம் உள்ள இந்த நாராயணாஸ்திரம் கடல். இப்புவி என்பது ஆழி தன் உள்ளங்கையில் ஏந்தியிருக்கும் ஒரு சிறு துளியே என்று அறிவீர். வைரத்தில் ஒளித்தொலைவு மடிந்து சுருண்டிருப்பதுபோல இதற்குள் முடிவிலா விசை அமைந்துள்ளது. இப்புவியையே அழிக்கும் ஆற்றல் கொண்டது. குருக்ஷேத்ரம் இதற்கு புயல்முன் புல்முனை நீர்த்துளி” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இது என்னை ஆளும் கொடுந்தெய்வம். என்னை பீடமாகக் கொண்டு எழுந்து பேருருக்கொண்டு இன்று என்னை தன் படைக்கலமாகச் சூடி நின்றுள்ளது.”

“ஒவ்வொருவரும் அவ்வாறு பிறிதொன்றால் ஆளப்படுகிறார்கள்” என்று கிருபர் சொன்னார். “கைவிட்டு எழுந்து சென்ற அம்புகளை நாம் ஆளவியலாது. ஆனால் அனைத்து அம்புகளுக்கும் நாம் பொறுப்பேற்றே ஆகவேண்டும். அர்ஜுனனின் செயல்பற்றி நான் உன்னிடம் சொல்லவந்ததும் இதுவே.” அஸ்வத்தாமன் தத்தளிப்புடன் “ஆசிரியரே, இக்களத்தில் பல்லாயிரம் முறை என் கையில் அந்த அம்பு தட்டுப்பட்டது. ஒவ்வொரு முறையும் அந்த அம்பைத் தவிர்த்தே பிறிதொன்றை எடுக்கிறேன். என்னிடமிருந்து எழும் ஒவ்வொரு அம்பிலும் அந்த அம்பின் துளி உள்ளது” என்றான். கிருபர் “நீ பழிநிகர் செய்தாகவேண்டும், அது மைந்தனின் கடன். ஆனால் நினைவுறுக, பழியை மாத்திரை குறையாமல் எண்ணி அமைத்துள்ளன தெய்வங்கள்! அதற்குப் பழிநிகர் செய்யும்போது வஞ்சத்திலோ விசையிலோ விளைவிலோ ஒரு மாத்திரை மிகுந்தால்கூட நீ அதை பழி எனக் கொள்வாய். அது உன்னை துரத்தத் தொடங்கிவிடும்” என்றார்.

அஸ்வத்தாமன் பெருமூச்சுவிட்டு “நான் என்ன செய்யவேண்டும், ஆசிரியரே?” என்றான். “திருஷ்டத்யும்னன் பழிநிகர் செய்தது சரியானதே. ஆனால் வில்தொட்டு தன்னிடம் அளித்த நல்லாசிரியனின் தலையை தூக்கி வீசியவன் தெய்வங்கள் வகுத்த எல்லையை மீறிவிட்டான். தன் ஆசிரியனைக் கொன்ற அர்ஜுனன் பழிசூடிவிட்டான். ஆசிரியருக்கு முன் பொய்யுரைத்த யுதிஷ்டிரனும் பீமனும் இளையோரும் பிழைசெய்தவர்கள். அவர்களை கொல்க! அவர்கள்பொருட்டு போருக்கெழுபவர்களை கொல்க! அப்பால்கடந்து செய்யும் ஒவ்வொரு செயலும் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் உன் பழிக்கணக்கில் அமையும் என்பதை கருத்தில் கொள்க!” என்றார் கிருபர்.

ஆனால் அஸ்வத்தாமன் பழிநிகர் என்னும் சொல் வேறெங்கோ சென்று தொட கொந்தளிப்படைந்தான். பற்களைக் கடித்து “இப்போது அறிகிறேன், எந்தை எனக்கு ஏன் அளித்தாரென்று. இவ்வாறு கீழ்மையுற்று களம்படுவோம் என்று அவர் அறிந்திருந்தார். அதன் பொருட்டு பழிநிகர் கொள்ளவே இதை அளித்திருக்கிறார்” என்றான். அவன் சிவந்து சினம் மிகுந்தபடியே சென்றான். “நான் அவராக நின்று எண்ணியதே இல்லை. ஏனென்றால் உடலுடன் அவர் இங்கிருந்தார். இன்று அவர் ஒழிந்த இந்நிலத்தில் அவரென எஞ்சியிருப்பவன் நானே. மாதுலரே, அவர் கொண்ட சிறுமைகளின் நிரையை தொட்டுத்தொட்டு எழுகிறது என் உள்ளம். பரத்வாஜரின் குருகுலத்திலிருந்து இதோ வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டு தலைவெட்டி வீசப்பட்டு களத்தில் கிடப்பது வரை. அவருடைய அனலுக்கு நான் பொறுப்பேற்கவேண்டும். முதன்மையாக இங்கு என் கடன் அதுவே.”

தன் ஆவநாழியை இயல்பாக நாடிய கை திடுக்கிட “இங்கிருக்கிறது… ஆசிரியரே, அது மட்டுமே என் ஆவநாழியில் எஞ்சியிருக்கிறது. நான் அதை நாணில் தொடுக்கும் பொழுது அணைந்துவிட்டது” என்றான். கிருபர் “மருகனே, நன்கு எண்ணி இயற்றவேண்டிய செயல் அது. செயல்முந்தினால் நீ அடைவது பெரும்பழி” என்றார். ஆனால் அஸ்வத்தாமனின் நெற்றியில் நீலநரம்புகள் புடைத்தன. “இல்லை ஆசிரியரே, எந்தையின் விழிகள் ஒவ்வொரு தருணமாக நினைவிலெழுகின்றன. ஷத்ரிய அவைகளில் அவர் தோள்குறுகி அமர்ந்திருப்பார். பீஷ்மரை ஒட்டியே இருக்கை அமைத்துக்கொள்வார். ஷத்ரியர் எவரேனும் சிறுமைசெய்து பேசிவிடக்கூடும் என்பதனாலேயே சொல்லடக்கிக் கொள்வார். மாதுலரே, எத்தனை அவைகளில் அனல்கொண்டு அமர்ந்திருந்தாரென்றால் தவம் பொலிந்து பிறந்த தன் மைந்தனை அந்தணனல்ல ஷத்ரியன் என்று அறிவிக்கக் துணிந்திருப்பார்! வஞ்சம் சூடி நிலம் வென்று என்னை அரியணை அமர்த்தியிருப்பார்!”

“அவர் இழந்தவை பல. என்னை ஷத்ரியன் என்று ஆக்கியதை ஏற்க முடியாமல் என் அன்னை அவரை பிரிந்தார். அவருடைய முகத்தையே மறந்து பிறிதொருவரென்றானார். அதன் பின்னரும் இதோ ஷத்ரியக் கீழ்மகன் ஒருவனால் வஞ்சத்தால் நெஞ்சுபிளக்கப்பட்டிருக்கிறார். பிறிதொருவனால் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.” சொல்லச்சொல்ல உணர்ச்சி மீதூற அவன் விழிநீர் பெருக்கினான். பற்களை இறுகக் கடித்து முகம் வலிப்புகொள்ள மூச்சு சீறும் ஒலியில் சொன்னான் “அவர்களை அவர் தன் நெஞ்சிலேற்றி வைத்திருந்தார். அர்ஜுனனை தன் முதல் மாணவனென்று அறிவித்தார். பாஞ்சாலனை தன் மைந்தனென்றே நடத்தினார். அம்புதொட்டு நிமித்தம் நோக்கக் கற்ற அவருக்குத் தெரியாதா இவர்கள் இயற்றப்போவது என்ன என்று? ஆசிரியர் என தன் மெய்மையனைத்தையும் அள்ளி அவர்களுக்கு அவர் ஏன் அளித்தார்?”

“இல்லை ஆசிரியரே, பழிநிகர் செய்யவில்லையென்றால் தந்தை என் மேல் நிறைவு கொள்ளமாட்டார். இவர்களை முற்றாக அழிக்கவேண்டும்… இதோ தன் ஆசிரியனை மாணவர்கள் கொன்றதை வெற்றிக்குரலெழுப்பிக் கொண்டாடும் ஒவ்வொருவரும் மண்ணிலிருந்து முற்றாக அழிக்கப்படவேண்டியவர்களே. இவர்களின் குடிகள், குருதிவழிகள், எழும்தலைமுறைகளும் அழிக்கப்படவேண்டியவர்களே.” அஸ்வத்தாமன் உடல் நடுக்கு கொள்ள தொடங்கியது. “இப்போது உணர்கிறேன், எந்தை விண்ணில் எரிவிண்மீன் என நின்றிருக்கிறார். இடியோசைகள் என அவருடைய வஞ்சக் குரல் கடுவெளியை நிறைத்துள்ளது. நான் எவருமல்ல, அவருடைய தொடர்ச்சி மட்டுமே. அவர் இங்கே விட்டுச்சென்றவற்றுக்காக மட்டுமே நான் இங்கு இருக்கிறேன்.”

“உன் சினத்தை ஆள்க… உன் நலன் கருதி தந்தையென நின்று இதை சொல்லவேண்டியவன் நான்” என்றார் கிருபர். “ஆழிவாளியின் விசை என்ன என்று இன்னமும் நீ அறிய மாட்டாய்… அது கௌரவர்களையும் முற்றழிக்கக்கூடும். இப்புவியையே அழிக்கக்கூடும்” என்று கிருபர் சொன்னார். “அழியட்டும்… நான் அந்த அம்பை எந்தையின் வஞ்சத்தின் படைக்கலம் ஆக்குகிறேன். அவர் விழைவது குருக்ஷேத்ரமே முற்றழிவதுதான் என்றால் அது நிகழட்டும். இப்புவியே வெந்தழிவதுதான் என்றால் அதுவே ஆகுக… இங்குளோர் அவருக்கு இழைத்தமைக்காக இப்புவியை அழிக்கும் உரிமையும் அவருக்குண்டு” என்றான் அஸ்வத்தாமன். கிருபர் “எஞ்சும் பழியும் மிஞ்சும் விழைவுமே இப்புவியில் மானுடரை கட்டிப்போடுவன. பெருவிழைவு சூடற்க! கொடும்பழி ஆற்றுதலும் ஒழிக…” என்றார்.

“இப்புவியில் எஞ்சுகிறேன்… என் பழி தீருமட்டும் இங்கே வாழ்கிறேன்” என்று அஸ்வத்தாமன் கூவினான். “எண்ணிச் சொல்… நீ சொல்வதை இங்கே ககனவெளியில் சூழ்ந்திருக்கும் எந்த ஒரு தெய்வம் கேட்டு விழியொளிர்ந்தாலும் அக்கணமே தீராத் தீயூழில் சிக்கியவனாகிறாய். மைந்தா, மானுடருக்கு தெய்வங்கள் அளிக்கும் தீச்சொற்களில் கொடியது உணர்வழியாமல் நீடுவாழியாவது மட்டுமே…” அஸ்வத்தாமன் “என் தந்தையின் வஞ்சம் இப்புவியினும், இங்கு சூழும் காலத்தினும் பெரிதென்றால் அவர்பொருட்டு இங்கே நீடுவாழி ஆகிறேன். அவ்வஞ்சம் சுமந்து வடமலைகளைப்போல் நின்றிருக்கிறேன்!” என்றான். கிருபர் அறியாது கைகூப்பிவிட்டார். “வேண்டாம்… எண்ணவும் திகைக்கச் செய்கிறது அது. பெரும்பழி ஈட்டி அதற்கு ஈடுசெய்ய ஒண்ணாமல் புவியில் நீடுவாழியாவது… வேண்டாம், மைந்தா” என்றார்.

அஸ்வத்தாமன் அவர் உணர்வுகளுக்கு மிக அப்பாலிருந்தான். “என் ஊழ் அதுவென்றால் ஆகுக! எந்தைக்கு நான் ஆற்றும் கடன் அதுவென்றால் அது எனக்கு உகந்ததே… மாதுலரே, இங்கு வாழ்ந்த மைந்தர்களில் தந்தைக்கு எண்ணித்தொடமுடியா பெருங்கொடை அளித்தவன் நான் என்றே ஆகுக!” என்றான். கிருபர் ஏனென்றறியாமல் மெய்ப்புகொண்டார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. பலமுறை பெருமூச்சுவிட்டு மெல்ல உளம்அடங்கி “இனி ஊழ் நடத்துக உன்னை!” என்றார். “உன் தந்தையை நான் நன்கறிவேன். இவையனைத்தையும் அறிந்தவராக அவர் இருக்கிறார் என்றும் அறிவேன். அஸ்வத்தாமா, நீர்வெளியம்பை நீ எடுப்பாய் எனில் உன் தந்தையிடமும் ஒரு சொல் கேட்டுக்கொள்.”

“அவர் எண்ணம் என்ன என்பதை நான் நன்கறிவேன்… அவர் சொல் ஒவ்வொருநாளும் செவியில் விழுந்தபடி இருக்கத்தான் நான் வாழ்ந்திருக்கிறேன்” என்றபின் அஸ்வத்தாமன் தலைவணங்கி கிருபரின் வாழ்த்துக்காக காத்திருக்காமல் தன் தேரை நோக்கி சென்றான். கிருபர் சொல்லணைந்தவராக அவனை நோக்கிக்கொண்டிருந்தார். “எழுக உத்தரபாஞ்சாலப் படைகள்! ஆசிரியர் களவீழ்ச்சிக்கு பழிநிகர் கொள்ள எழுகிறார் அஸ்வத்தாமர்!” என சகுனியின் முரசொலி அறைகூவிக்கொண்டிருந்ததை கேட்டார். திரும்பி தன்னைச் சூழ்ந்து அலையடிக்கும் படைகளை நோக்கினார். காற்றில் சுடர் அணைவதுபோல் அந்தக் களமே இல்லாமலாகிவிடக்கூடும் என அவர் நன்கறிந்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. துயரமோ எழுச்சியோ கொள்ளும் திறனை தன் உள்ளம் முற்றாக இழந்துவிட்டது என்று அவருக்குத் தோன்றியது.

ele1பார்பாரிகன் சொன்னான்: அங்கு மெல்ல மெல்ல வஞ்சம் திரண்டெழுவதை நான் காண்கிறேன். ஒவ்வொருவரும் துரோணரின் களவீழ்ச்சியையும் அதிலிருந்த வஞ்சகத்தையும் உணர்ந்துகொண்டிருந்தனர். சொல்லிச் சொல்லி பெருக்கினர். எண்ணி எண்ணி பன்மடங்காக்கினர். அவர்களின் அச்சங்களை, ஐயங்களை, துயர்களை, வஞ்சங்களை அந்தச் சீற்றம் இழுத்து தானாக்கிக் கொண்டு வளர்ந்தது. அஸ்வத்தாமனிடமிருந்து அது அவர்களுக்கு பற்றிக்கொண்டதோ என்று ஒருகணம் தோன்றியது. அவர்களிடமிருந்து குவியம்கொண்டு அவனைச் சென்றடைகிறது என்று மறுகணம் தோன்றுகிறது.

தன் தேரிலேறிக்கொண்டு வில்லை நோக்கி விழிதிருப்பிய அஸ்வத்தாமன் திடுக்கிட்டான். அது உலையில் வைத்து பழுக்கக் காய்ச்சியதுபோல் ஒளிகொண்டிருந்தது. வெட்டியிட்ட தசைத்துண்டு என உயிர்கொண்டு துள்ளிக்கொண்டிருந்தது. அவன் குனிந்து அதை நோக்கி கைநீட்டுவதற்குள்ளாகவே பாய்ந்தெழுந்து அவன் கையை வந்தடைந்தது. சீறிப்பாய விழையும் புரவி என அவன் கையிலிருந்து அது துள்ளியது. கடிவாளம் பற்றி அதை நிறுத்துபவன்போல அவன் நாணை இழுத்தான். உடலை எழுப்பி நாணேற்றிக்கொண்டு “செல்க!” என அவன் ஆணையிட்டதும் பாகன் சாட்டையால் புரவிகளின்மேல் சொடுக்க அவை மூச்சொலி சீற முன்கால்களை அறைந்து துள்ளி பாய்ந்தெழுந்தன. தேர் சகட ஓசை விசைகொண்ட முழவுத்தாளமென ஒலிக்க முன்சென்றது.

தொலைவில் பாண்டவப் படையின் விரிவை அஸ்வத்தாமன் கண்டான். “எழுக! எழுக!” என அவன் கைவீச அந்த ஆணையை முழவுகளும் முரசுகளும் பெருக்கி அவன் தலைக்கு மேலிருந்த வானில் பேருருக் கொண்டு எழச்செய்தன. அஸ்வத்தாமன் அர்ஜுனனின் தேரை கண்டான். அதன் அமரமுனையில் அமர்ந்திருந்த இளைய யாதவரின் பீலியை நீலச்சுடர் என அறிந்தான். இருபுறமும் பீமனும் நகுலனும் நின்றிருந்தனர். அப்பால் சகதேவனால் காக்கப்பட்ட யுதிஷ்டிரரின் தேர் தெரிந்தது. அவன் தன் வில்நாணைச் சுண்டியபோது அதுவரை அவன் கேட்டிராத பேரொலி எழுந்தது. விண்ணளாவ உடல்கொண்டு எழுந்த புரவி ஒன்றின் கனைப்பு போலிருந்தது அது.

அவ்வோசை கேட்டு பாண்டவப் படையினர் அஞ்சி பின்னடைந்தனர். யானைகள் செவி நிலைத்து உடல் விதிர்க்க புரவிகள் திகைத்து நின்றன. அந்தப் புரவிக் கனைப்பொலி அஸ்வத்தாமனை மெய்ப்பு கொள்ளச்செய்தது. தன் தேர் மண்ணிலிருந்து எழுந்து விண்ணில் ஊரத்தொடங்கிவிட்டதுபோல் உணர்ந்தான். “எந்தையே, இதோ உங்கள் வஞ்சம்! எந்தையே, இதோ உங்களுக்கான பழிநிகர்!” என்று அவன் கூவினான். “எந்தையே, எழுக! எந்தையே, உங்கள் சொல் எழுக!” ஆனால் அவனைச் சூழ்ந்திருந்த வானம் சொல்லின்மைகொண்டு இறுகி புலப்படாப் பாறை போலிருந்தது. அவன் உள்ளம் இன்மையெனச் சுருங்கிவிட்டிருந்தது. “எந்தையே! எந்தையே! எழுக உங்கள் சொல்! எந்தையே!” என்று அஸ்வத்தாமன் கூவினான்.

வில்லின் புரவிக்கனைப்பொலி மேலும் மேலும் உரத்தது. வெறிகொண்ட புரவி. விண்ணுருவப் பெரும்புரவி. அவன் அந்த அறைதலோசையால் முன்னெடுத்துச் செல்லப்பட்டான்.

நூல் இருபது – கார்கடல் – 84

ele1துரியோதனன் அந்தக் கணத்தை பின்னரும் பலமுறை எண்ணி எண்ணி வியந்தான். மச்சர்களுடன் நிகர் நின்று பொருதிக்கொண்டிருந்தபோது எண்ணம் ஏதும் இன்றி அவன் வில் தாழ்த்தி செயலிழந்தான். உள்ளத்தில் ஒரு சொல் எஞ்சவில்லை. உடலெங்கும் ஒரு விதிர்ப்பு கடந்து சென்றது. வானில் இடியிடிக்கையில் அரண்மனையின் சிற்றறைகளுக்குள் கார்வை முழங்குவது போன்று அவனுள் அலைகொண்டு அடங்கியது. என்ன அது என தன்னுணர்வு கொண்டபோது இடத்தொடை துடிக்கத்தொடங்கியது. அதிர்ந்துகொண்டிருந்த கையில் வில் நடுங்கியது. பற்கள் இறுக கிட்டித்திருந்தன. கண்கள் கலங்கி நீரணிந்திருந்தன.

என்ன என்ன என்று அவன் உள்ளம் பதறி எழ, தொலைவில் “ஆசிரியர் துரோணர் வீழ்ந்தார்! பரத்வாஜரின் மைந்தர் துரோணர் களம்பட்டார்! விண்புகுந்தார் நல்லாசிரியர்! துரோணர் முழுமை கொண்டார்! புகழ்பெறுக துரோணரின் பெயர்! நீடுவாழ்க துரோணரின் குடி!” என்று வாழ்த்தொலிகள் பரவி அணுகி வந்தன. முதல் கணம் அந்தச் செய்தி செவியில் விழுந்ததுமே எழுந்தது ஒரு தளர்வுதான். அது விந்தையானதோர் நிறைவை ஒத்திருந்தது. நெடுநாள் எதிர்பார்த்திருந்த செய்தியொன்று வந்தடைந்ததுபோல். எதிர்பார்த்திருந்தேனா, இதையா, என்று பிறிதொரு உள்ளம் வியந்தெழ அப்பால் ஓர் உள்ளம் செயலற்று அந்த உளக்கொந்தளிப்பை வெறுமனே நோக்கிக்கொண்டிருக்க துரியோதனன் தேர்த்தூணை பற்றிக்கொண்டான். மெல்ல பின்னடைந்து தேர்த்தட்டில் அமர்ந்து வில்லை மடியில் வைத்துக்கொண்டான்.

அவனுடைய பாகன் தேரை பின்னுக்கிழுத்து கௌரவப் படைகளுக்குள் கொண்டுவர கவசப்படை வீரர்கள் முன்னெழுந்து அரணமைத்து அவனை படைமுகப்பிலிருந்து விலக்கினார்கள். புரவியில் வந்து இறங்கிய துச்சாதனன் மூச்சிரைக்க “மூத்தவரே!” என்றான். அவனை வெற்று விழிகளால் திரும்பிப்பார்த்தபின் நோக்கு திருப்பிக்கொண்டான் துரியோதனன். துச்சகன் அவனைத் தொடர்ந்து வந்திறங்கி “ஆசிரியர் களம்பட்டார்!” என்றான். துரியோதனன் வில்லை ஓங்கி தேர்த்தட்டில் எறிந்துவிட்டு எழுந்தான். “அஸ்வத்தாமரிடம் இன்னமும் முறைப்படி செய்தி சொல்லவில்லை. நானே சென்று சொல்கிறேன். இக்கணமே” என்று தேரிலிருந்து பாய்ந்திறங்கி புரவிக்கு கை காட்டினான்.

துச்சாதனன் திகைத்து நோக்க புரவியில் வந்திறங்கிய சுபாகு “பொறுங்கள், மூத்தவரே! ஒருகணம் பொறுங்கள்!” என்றான். துரியோதனன் “இதற்கு பழிநிகர் கொள்ளவேண்டியவர் அஸ்வத்தாமர். அஸ்வத்தாமரிடம் சென்று செய்தி சொல்கிறேன். இக்களத்தில் ஆசிரியரின் குருதிக்கு நிகராக ஐவரின் குருதியை கொள்ளுங்கள்… பழி வெல்லுங்கள் என்று கேட்கிறேன்” என்றான் துரியோதனன். சுபாகு “பொறுங்கள். ஒருகணம் பொறுங்கள். எதுவாயினும் எண்ணிச்செய்வோம்” என்றான். “என்ன எண்ணுவதற்குள்ளது? இனி எண்ணிச்செய்ய பொழுதில்லை நமக்கு… ஆசிரியரின் பலி நமக்காக… பழிகொள்ளும் பொறுப்பும் நமக்குரியதே” என்று துரியோதனன் கூவினான்.

“ஆசிரியர் துரோணர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் இன்னமும் முழுதறியவில்லை, மூத்தவரே” என்று சுபாகு சொன்னான். “பேடியை முன்னிறுத்தி பிதாமகரை வீழ்த்தியதைப் போலவே இக்கொலையையும் புரிந்திருக்கிறார்கள் பாண்டவர்கள்.” துரியோதனன் திகைத்து “அறப்பிழையாகவா? நெறி மீறியா கொன்றனர் ஆசிரியரை? அர்ஜுனனா அதை செய்தான்?” என்றான். “ஆம், அஸ்வத்தாமர் கொல்லப்பட்டாரெனும் பொய்ச்செய்தியை ஆசிரியரிடம் சொன்னார்கள். பீமன் அஸ்வத்தாமரை கொன்றுவிட்டான் என முரசறைந்து அறிவித்தார்கள். மைந்தன் மடிந்தான் என ஆசிரியர் உளம் உடைந்து வில் தாழ்த்தி தேரில் அமர்ந்திருக்கிறார். அத்தருணத்தில் அர்ஜுனன் அம்பெய்து அவர் நெஞ்சை பிளந்திருக்கிறான்” என்றான் சுபாகு.

“அர்ஜுனனா? அவருடைய முதல் மாணவன் அல்லவா அவன்?” என்றான் துரியோதனன். சுபாகு “வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டார், நேர்நின்று வெல்லப்படவில்லை என்பது ஆசிரியருக்குப் பெருமைதானே? அதை முதல் மாணவன் அன்றி எவர் அளிக்க முடியும்?” என்றான். “கீழ்மை!” என்றான் துரியோதனன். “ஆசிரியர் அதை எவ்வண்ணம் ஏற்றார்? அஸ்வத்தாமரைக் கொல்ல பீமனால் இயலாதென்று அறியாதவரா அவர்?” சுபாகு “ஆம், ஆனால் யுதிஷ்டிரர் தன் வாயால் அதை சொன்னால் நீங்களாயினும் நம்பியிருப்பீர்கள்” என்றான். பெருமூச்சுடன் துரியோதனன் “இந்தக் களத்தில் ஒவ்வொருநாளும் கொல்லப்படுவது அறம்தான். இப்போருக்குப் பின் எவருக்கும் சொல்ல எதுவும் எஞ்சப்போவதில்லை” என்றான்.

“அதன்பின்னர் நிகழ்ந்தது மேலும் கீழ்மை” என சுபாகு தொடர்ந்தான். “திருஷ்டத்யும்னன் தேரில் பாய்ந்தேறி அவர் நெஞ்சில் உதைத்து தலையை வெட்டி முடிபற்றிச் சுருட்டி மேலேற்றிக் காட்டி கூச்சலிட்டு அமலையாடியிருக்கிறான். அவர் தலையை தூக்கி களத்தில் வீசியிருக்கிறான். தரையை நிறைத்துக்கிடந்த உடல்களிலிருந்து அவர் தலையை சற்றுமுன்னர்தான் எடுத்தார்கள்.” துரியோதனன் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். அச்சொற்கள் அவன் உள்ளத்தை அடையவில்லை என்று தோன்றியது. சுபாகு “முழுச் செய்தியையும் அஸ்வத்தாமர் இன்னமும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சிகண்டியை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிறார். அவரிடம் செய்தியின் முழுமையை அறிவிக்க எவரும் செல்லவேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு நான் வந்தேன்” என்றான்.

துரியோதனன் வெறுமனே உதடுகளை அசைத்தான். “மூத்தவரே, அவர் பழிநிகர் கொள்ளும் வெறியை அடைவார் எனில் நமக்கு நன்று. பாண்டவத் திரளுக்கெதிராக தன் அரிய படைக்கலங்களுடன் எழுவாரெனில் நாம் வெல்வோம். ஆனால் இது உளச்சோர்வின் நாள். நோக்குக! நமது படைகள் முழுமையாகவே சோர்ந்து கால் தளர்ந்து நின்றிருக்கின்றன. உத்தர பாஞ்சாலத்தின் படைகளின் பெரும்பகுதி அழிந்தும்விட்டது. உளச்சோர்வு திரளிலிருந்து தனிஉள்ளத்திற்கு எளிதில் முனைகொள்ளக்கூடியது. தலைவனில் சுழிமையமென எழும் விசை அது. ஒருகணச் சோர்வில் அஸ்வத்தாமர் அம்பெடுத்து தன் கழுத்தில் தானே வைத்துக்கொண்டாரெனில் நாம் பிறிதொரு பெருந்தீரனையும் இழந்தவர்களாவோம்” என்று சுபாகு சொன்னான்.

துச்சாதனன் “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது. இப்போருக்கு அஸ்வத்தாமர் எழுந்ததே தந்தையின் ஆணையினால்தான். அவருக்கு இப்போரில் அடைவதற்கு என எதுவுமில்லை. இங்கு தீர்த்துக்கொள்ள வேண்டிய வஞ்சங்களும் ஏதுமில்லை. மூத்தவரே, அவர் உத்தரபாஞ்சால நிலத்தின் மேலும் பற்றுகொண்டவர் அல்ல. தந்தையின்பொருட்டே அங்கே முடி சூடி இருக்கிறார். அனைத்தையும் துறந்து காடேகும் விழைவுகொண்டவர். உள்ளத்தால் அவர் முனிவர் என்கிறார்கள்” என்றான். “அனைத்திற்கும் மேலாக நெடுநாட்களாக அவர் கொடுங்கனவுகளால் துயருறுகிறார்” என்று துச்சகன் சொன்னான். “என்னிடம் அவர் தனியாக அதை சொல்லியிருக்கிறார். இப்போர் மைந்தர்களின் அழிவில் முடியுமென்றும் ஆகவே எந்நிலையில் போரை நிறுத்திக்கொண்டாலும் இரு குடியினருக்கும் அது நலம் பயக்குமென்றும் சொன்னார். இப்போரில் அவர் சினம் மீதூறி இளமைந்தரை கொல்லக்கூடும் என அஞ்சுகிறார். மூத்தவரே, பலமுறை கனவில் அந்த அறிவிப்பு அவருக்கு வந்துவிட்டது. அவர் அஞ்சிக்கொண்டிருப்பது தன்னுடைய பெருஞ்சினத்தைத்தான். அவர் உள்ளம் மேலும் போருக்கு எழாமல் ஒழியவே வாய்ப்பு மிகுதி.”

மூச்சின் ஒலியில் துரியோதனன் “பிறகென்ன செய்வது?” என்றான். “மூத்தவரே, இத்தருணத்தில் நன்கு உளம் தெளிந்து சொல் கூர்கொண்டுள்ள ஒருவர் சென்று அஸ்வத்தாமரிடம் செய்தியை சொல்லட்டும். எவ்வண்ணம் உரைக்கவேண்டுமோ அவ்வண்ணம் கூறவேண்டியுள்ளது. நாம் வெற்றுணர்ச்சிகளையே வெளிப்படுத்துவோம். அவை நம்மை மீறி சொற்கொந்தளிப்பாகவே வெளிப்படும்” என்றான் சுபாகு. துரியோதனன் “இக்களத்தில் இப்போது உளம் தெளிந்தவர் யார் உள்ளனர்?” என்றான். சுபாகு “கிருபர் எந்நிலையிலும் கலங்கா உளம்கொண்டவராகவே இருக்கிறார். இப்போரில் எந்த அழிவும் இன்று வரை அவரை உளம் தளரச்செய்யவில்லை. அவர் வேள்வி இயற்றும் அந்தணரின் ஊழ்கநிலை கொண்டு போரிட்டுக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்” என்றான். “அவர் அஸ்வத்தாமரை இளமையிலேயே அறிந்தவர், தோள் சுமந்து வளர்த்தவர். அவர் சென்று உரைக்கட்டும் அஸ்வத்தாமரிடம்.” துரியோதனன் “ஆம், அவர் உகந்தவர்” என்றான். “ஆனால் தாங்கள் எவரிடமேனும் பேசியாகவேண்டும். எனவே தாங்கள் சென்று கிருபரிடம் உரையுங்கள். தங்கள் உணர்வுகளை அவர் அடையட்டும்” என்று சுபாகு சொன்னான்.

“ஆம், அதுவே வழி” என்றபின் துரியோதனன் கையூன்றி தாவி குதிரையிலேறிக்கொண்டான். அதை தூண்டி நிலம்பரவி இடையின்றி விழுந்து கிடந்த உடல்களை கடந்து தாவி அவன் விரைந்து செல்ல அவனைத் தொடர்ந்து துச்சாதனனும் சுபாகுவும் சென்றனர். துச்சாதனன் திரும்பி துச்சகனிடம் “களத்தை ஒருக்குக! களம் பின்னடையக்கூடாது” என்றபின் முன்னால் சென்றான். துச்சகன் அவர்கள் செல்வதை நோக்கியபின் கைதூக்கி “முன்னேகுக! ஒருங்குசேர்க! அணிகுலையாதமைக!” என ஆணையிட்டான். மிக அப்பால் கர்ணனின் முரசொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.

ele1துரியோதனனும் இளையோரும் கிருபர் போரிட்டுக்கொண்டிருந்த இடத்தை அடைந்தபோது ஏற்கெனவே முரசொலிகளினூடாக செய்தியை அறிந்து கிருபர் வில்தாழ்த்தி பின்னடைந்திருந்தார். துரியோதனன் புரவியிலிருந்து பாய்ந்திறங்கி கிருபரை நோக்கி செல்லும்போதே மீண்டும் உணர்வெழுச்சி கொண்டு கைகள் விரிய உரத்த குரலில் “ஆசிரியரே! மூத்த ஆசிரியர் களம்பட்டார். வஞ்சத்தால் வீழ்ந்தார்! கீழ்மையால் வெல்லப்பட்டார்!” என்று கூவினான். கிருபர் வில்லையும் அம்பறாத்தூணியையும் தேர்த்தட்டில் வைத்துவிட்டு படியினூடாக கால்வைத்து மெல்ல இறங்கி “என்ன நிகழ்ந்தது?” என்றார். “பாண்டவ வீணர்கள் ஆசிரியரை கொன்று வீழ்த்தினார்கள். ஆசிரியரே, நெறிமறந்து அனைத்து எல்லைகளையும் கடந்து அவரை கொன்றார்கள்” என்று துரியோதனன் சொன்னான். “இக்களத்தில் இதைப்போல் ஒரு கீழ்மை இதுவரை நிகழ்ந்ததில்லை.”

இடையில் கைவைத்து நின்று எழாக் குரலில் “சொல்க!” என்றார் கிருபர். “ஆசிரியரே, அஸ்வத்தாமர் களம்பட்டார் எனும் பொய்ச்செய்தியை அவருக்கு உரைத்திருக்கிறார்கள். அஸ்வத்தாமன் என அவர்கள் சொன்னது மாளவனின் யானையை. அதைக் கேட்டு ஆசிரியர் உளம் அழிந்து வில் தாழ்த்தியபோது அர்ஜுனன் நீளம்புகளால் அவர் நெஞ்சை துளைத்தான். துருபதன் மைந்தன் தேரில் பாய்ந்தேறி அவர் நெஞ்சில் உதைத்து வீழ்த்தி வாளால் தலையை அறுத்து தூக்கி வீசி பந்தாடினான். குருதி உடலெங்கும் வீழ்த்திக்கொண்டு அமலை கொண்டாடினான்” என்றான் துரியோதனன். கிருபர் “யார் கூறியது அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான் என்று?” என்றார். “அனைவரும்! அனைவருமே கூறியிருக்கிறார்கள்” என்று துரியோதனன் சொல்ல அவனுக்குப் பின்னால் நின்ற சுபாகு “யுதிஷ்டிரர் தன் வாயால் கூறியிருக்கிறார்” என்றான்.

துரியோதனன் “ஆம்! சொன்னவன் சொல்பிழைக்காதவன் என புகழீட்டிய யுதிஷ்டிரன். கீழ்மையின் உச்சத்தில் நின்றிருக்கிறான் இங்கு… ஆசிரியரே, இக்களத்தில் இன்று முழுமையாக தோற்றுவிட்டவன் அவனே” என்றான். “அவன் சொன்னாலன்றி மூத்த ஆசிரியர் அதை நம்பியிருக்க மாட்டார்” என்ற கிருபர் இரு கைகளையும் விரித்து “இனி இக்களத்தில் உடைந்து சரிய ஏதேனும் எஞ்சியுள்ளதா என்ன?” என்றார். “அவர்கள் அறத்தின் முன் தங்களை முற்றாகவே வீழ்த்திக்கொண்டு பல நாட்களாகிவிட்டன. பிதாமகரை வீழ்த்த பேடியை துணைக்கொண்டபோதே அனைத்துச் சொற்களையும் அவர்கள் கடந்துவிட்டார்கள். இரவுப்போர் புரிய முடிவெடுத்தபோது அரக்கர்களாகவே ஆகிவிட்டார்கள்” என்று துரியோதனன் கூவினான். “இனி அவர்களை நாம் எவ்வகையிலும் வெல்லலாம். அனலிடலாம். புனல்பெருக்கை உருவாக்கலாம். நச்சு பரப்பலாம். நோய்கொண்டு நிரப்பலாம். வஞ்சமும் பொய்மையும் புன்மைச்செயல்கள் அனைத்தும் இங்கே ஏற்கப்பட்டுவிட்டன.”

நெஞ்சில் அறைந்தபடி துரியோதனன் கூவினான் “ஆசிரியரே, எவ்வகையிலேனும் இப்புவிமீதிருந்து அழித்து மறைக்கப்படவேண்டிய பெருந்தீங்குகளென பாண்டவர்கள் இதோ மாறிவிட்டார்கள். அவர்களில் பீமன் கொடியவன் என்று இன்றுவரை எண்ணியிருந்தேன். அவனது கீழ்மை அவனாலேயே வெளிப்படுத்தப்படுவதென்பதனால் சற்று கள்ளமற்றது என்று இன்று தோன்றுகிறது. அறச்சொற்களை முகத்திலணிந்து நின்றிருக்கும் யுதிஷ்டிரனே இக்களம் கண்ட கீழ்மைகளின் உச்சம். ஆசிரியரே, இக்களத்தில் யுதிஷ்டிரர் கொன்று வீழ்த்தப்பட்டால் வெல்வது நாம் மட்டுமல்ல, நமது தந்தையர் சொல்லும்தான்.” துரியோதனன் விழிகள் உறுத்து நிற்க நெஞ்சில் மீண்டும் மீண்டும் அறைந்தபடி கூச்சலிட்டான் “ஆசிரியரே, ஒன்று கொள்க! யுதிஷ்டிரன் இங்கே வென்றால் பிறிதொரு யுகம் பிறக்கிறது. இருளின் காலம். கீழ்மையின் காலம். எங்கும் எதுவும் நிலைகொள்ளாத பிறிதொரு யுகம்.”

துரியோதனன் வெறியுடன் கைகளை வீசினான். அவன் வாய் இழுபட உதடுகளின் ஓரம் நுரை எழுந்தது. “இத்தனை நாள் இங்கு நிமித்திகர் கூறிக்கொண்டிருந்தார்கள் இனி எழுவது கலியுகம் என்று. இருளின் இறையெழும் காலம் என்று. ஆகவே நான் மகிழ்ந்தேன் என் தெய்வம் எழுகிறது என. என் இறையின் அருளால் நானே வெல்வேன் என்று கற்பனை செய்தேன். இன்று உணர்கிறேன் மெய்யாகவே கலியுகம் எழுவது யுதிஷ்டிரன் வெல்லும்போதுதான். எழும் கலியுகத்தில் அவனையே அறச்செல்வன் என முன்னிறுத்துவார்கள். அவனுடைய வெற்றியை அறத்தின் வெற்றியென்று புனைந்துரைப்பார்கள். கலியுகத்தில் அறமின்மை அறத்தின் மாற்றுரு பூண்டுதான் எழும். அறமென தன்னை எதிர்ப்பவருக்கும் அறம்கடந்த தன்னலமே என தன்னவருக்கும் அது முகம் காட்டும். ஆசிரியரே, அதை எவரும் பேசி வெல்லமுடியாது. விளக்கி அகற்ற முடியாது. சொல்லுக்கு அடங்காத ஒன்றை வெல்ல தெய்வங்களாலும் இயலாது.”

“ஆசிரியரே, அவன் காட்டுவது என்ன? உயர்ந்த நெறிகளைக் கொண்ட சொற்களை கூறலாம், ஆனால் இடரெழும் உச்சநிலைகளில் மேலும் சொற்களைப் பெய்து அந்நெறிகள் அனைத்தையும் கடந்து செல்லலாம். ஒரு குற்றவுணர்வுநடிப்பால் அதை முற்றாக மறக்கலாம். அடைந்தவற்றில் ஒருதுளியைக் கொண்டு அங்கு வந்தடைந்த வழியில் இயற்றிய அனைத்துக்கும் பிழையீடு செய்யலாம். அறமென்பதும் நெறியென்பதும் எதிரில்லாதபோது காட்டும் தன்நடிப்புகளே என்று அவன் உலகுக்கு காட்டியிருக்கிறான். அவை வெறும் அழகுச்சொற்கள் மட்டுமே, அறுதி வரை உடன் நின்றிருக்கும் கட்டுகளல்ல என்று அவன் நிறுவிவிட்டிருக்கிறான். இனி எழவிருக்கும் யுகத்தில் படைவீரர்கள் பீமனைப் போலிருப்பார்கள், வஞ்சத்தால் அடையும் விழியின்மையையே ஆற்றலெனக் கொண்டிருப்பார்கள். அரசர்கள் அர்ஜுனனைப்போல் கொல்லும் கூர்மையை மட்டுமே சென்றடைவார்கள். நெறிகற்றோர் யுதிஷ்டிரனைப்போல அனைத்தையும் சொல்லி நிறுவும் வெறும் நாவலராகவே எஞ்சுவார்கள்.”

“கலியுகம் இம்மூவரையே தங்கள் முற்காட்டாக கொள்ளப்போகிறது. ஆசிரியரே, இத்தருணத்தில் அவர்கள் மூவரும் கொன்றொழிக்கப்படுவது நமக்காக அல்ல. நாமும் கொன்றழிக்கப்படக்கூடும். ஒரு வீரன் கூட கௌரவர் தரப்பில் எஞ்சாமலாகவும் கூடும். ஆயினும் அவர்கள் அழிக்கப்படவேண்டும். அது நம் தலைமுறைகளின் நன்மைக்காக. எழும் யுகத்தில் சற்றேனும் நெறியும் அறமும் விளங்க வேண்டும் என்பதற்காக. அது உங்கள் கடமை. அஸ்வத்தாமரின் கடமையும் அதுவே” என்றான் துரியோதனன். அவனை மீறி எழுந்த அச்சொற்களை முழுதுற அவனே உணர்ந்து திகைத்துச் சொல்லிழந்து இளையோரை நோக்கியபின் “நான் வேறொன்றும் சொல்வதற்கில்லை…” என்று உடைந்த குரலில் சொல்லி கைகூப்பினான்.

கிருபர் நிலைமாறாத விழிகளுடன் தாழ்ந்த ஒலியில் “அஸ்வத்தாமனுக்கு சொல்லப்படவில்லையா?” என்றார். “இல்லை. தாங்களே சென்று அஸ்வத்தாமரிடம் சொல்லுங்கள். தங்கள் சொற்களிலிருந்து அவர் அதை முறையாக அறியவேண்டும். நாங்கள் வெற்றுணர்ச்சிகளால் அவரை கிளர்ந்தெழச் செய்துவிடுவோம். ஆம், அவரும் உளம் கிளர வேண்டும். ஆனால் தன் கடமையையும் இப்புவிக்கு தான் ஆற்ற வேண்டிய பணியையும் அவர் உணர வேண்டும். வெற்று உணர்வெழுச்சியாக அவர் எழக்கூடாது, வெல்லும் விசைகொண்டிருக்கவேண்டும். அதைச் சொல்லி நிகழ்த்த தங்களால் மட்டுமே முடியும்” என்று சுபாகு சொன்னான்.

கிருபர் புன்னகைத்து “அவனிடம் நாராயணாஸ்திரம் உள்ளது என்று அறிவீர்களா?” என்றார். “ஆம், அறிந்துள்ளோம்” என்றான் சுபாகு. “அதன் வரலாற்றை அறிவீர்களா?” என்று கிருபர் கேட்டார். சுபாகு “முன்பொருமுறை துரோணர் வேள்வியில் விண்ணின் நீர்வெளியில் பள்ளிகொண்ட பெருமானை அழைத்து எழுப்பினார். அவரிடமிருந்து அவர் பெற்றது அந்த அம்பு. அது இப்புவியிலுள்ள அனைத்து அம்புகளையும்விட நூறு மடங்கு ஆற்றல்கொண்டது. அதை அவர் தன் மைந்தனுக்கு அளித்தார். இப்புவியை முற்றழிக்கும் ஆற்றலை அவ்வண்ணம் அவருக்கு அளித்தார் என்று அறிந்துள்ளேன்” என்றான்.

கிருபர் “அம்புகளின் பெயர்களை நோக்குக! பிரம்மம், இந்திரம், வைஷ்ணவம், காலம், வாருணம், பினாகம், ஆக்னேயம், வாயவம், சைவம், பாசுபதம், நாராயணம்… இவை அனைத்தும் இங்குள்ள வெவ்வேறு மெய்வழிகள் என்று உணர்க! ஒவ்வொரு மெய்வழியும் எண்ணித்தொடமுடியாத தொன்மை கொண்டது. ஒன்றுக்குப் பிறிதொன்று இளையது அல்ல. ஒன்றை பிறிதொன்று இணைத்துக்கொள்கையிலேயே பிறிதொன்றைவிட பெரிதாகிறது. அனைத்து ஆறுகளும் கடல்சேர்வதுபோல் அவையனைத்தும் மெய்மைப் பெருவிரிவையே சென்றடைகின்றன என்கிறது உபநிடதம்” என்றார். “தாங்கள் அறிந்த மெய்மையை தொல்முனிவர் அனைத்திலும் கண்டடைந்தனர். அனைத்திலும் வெளிப்படுத்தினர். சொல்லில் அது வேதம். கல்லில் அது சிலை. வில்லில் அது அம்பு. எண்ணிறந்த பொருட்களில் எண்ணிறந்த வடிவில் அது நின்றுள்ளது. ஒன்றில் அதை கண்டடைவது யோகம், எங்குமென அறிந்தமைவது ஞானம்.”

“நாராயணம் என்பது நீர்வெளியில் இருந்து எழுந்த மெய்மை என்று தெளிக!” என்று கிருபர் தொடர்ந்தார். “இங்கு அசைவிலாதவையும் ஊர்வனவும் விரைவனவும் பறப்பனவும் அனைத்தும் குடிகொள்ளும் நாமறியா பெரும்பரப்பே கடல். புவி நனவெனில் கடல் கனவும் ஆழமும் கடந்த முடிவிலியும் ஆகும். கடலறிந்து மானுட உள்ளத்திற்கு அளித்த மெய்மையே நாராயணம். அது சொல்லில் நாராயணவேதம். கல்லில் அது நாராயணன் என்னும் சிலை. சுழி அவன் ஆழி. கடலோசை அவன் சங்கு. அலை அவன் கதை. கௌரவரே, எழும் ஒளியே அவன் கையில் தாமரை. நாராயணமே அஸ்வத்தாமனிடம் நுண்சொல் என தந்தையால் அளிக்கப்பட்டது.”

“அது பாற்கடல். அமுதையும் நஞ்சையும் எடுக்கும் உரிமை அவனுக்குரியது” என்று கிருபர் தொடர்ந்தார். “நான் சென்று அவனில் இச்சினத்தை விதைத்தேன் என்றால் அவனில் எழுவது ஆயிரம்தலைகொண்டு மும்மடிப்பாக சுருண்டிருக்கும் முடிவிலோனின் நஞ்சாகவே இருக்கும்.” துரியோதனன் “ஆம், இன்று எழவேண்டியது அதுவே. அவர்கள் அழிக்கப்பட்டாகவேண்டும். ஆசிரியரே, அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். இன்று பொய் பொய்யென்றும் தீமை தீமை என்றும் தன்னலம் தன்னலமே என்றும் நின்றுள்ளது. அவை மெய்யென்றும் நன்மையென்றும் அறமென்றும் மயங்கி நின்றிருக்கும் காலம் எழலாகாது. நாராயணம் நச்சுருக்கொண்டு எழுந்து அவர்களை அழிக்கட்டும். நம் மைந்தரை, கொடிவழிகளை அது காக்கட்டும்” என்றான்.

“அழிவை உருவாக்குபவனுக்கு நிகராகவே சொல்லிக் கிளப்புபவனும் தெய்வங்கள் முன் பொறுப்பேற்க வேண்டும்” என்றார் கிருபர். “ஆம், ஆனால் இந்தக் களத்தில் நினைத்தற்கரிய கீழ்மை இயற்றிய பாண்டவர்களுக்கெதிராக நாராயணத்தை எழுப்புகிறோம். அஸ்வத்தாமர் இறையம்பைச் சூடவேண்டிய தருணம் இது” என்று துரியோதனன் சொன்னான். “இது இனிமேல் இரு குலங்களுக்கிடையே, இரு நாடுகளுக்கிடையே நிகழும் போரல்ல. இது எழுயுகத்தில் சற்றேனும் அறம் எஞ்சவேண்டும் என எண்ணுபவர்களுக்கும் எவ்வகையிலேனும் வெல்வதே இலக்கென்று எண்ணுபவர்களுக்கும் இடையேயான போர். நீங்கள் இங்கு என்ன செய்தாலும் தெய்வங்களால் வாழ்த்தப்படுவீர்கள்.”

கிருபர் “ஆம்” என நெடுமூச்செறிந்தார். “ஆனால் நீ தெளிவுகொண்டிருப்பதுபோல் நான் உறுதிகொண்டிருக்கவில்லை. அறமும் அல்லதும் ஏற்கெனவே முற்றாக கலந்துவிட்டன. இந்த குருக்ஷேத்ரம் மந்தரமலையால் பாற்கடல் என கடையப்படுகிறது. எழுவது அமுதா நஞ்சா என்றே இங்குள்ள எவருக்கும் தெரியாது” என்றார். “எனக்கு நான் செய்யவேண்டியதில் முழு நம்பிக்கை வரவில்லை. எவர் எதிரி என்றும் எவர் நட்பென்றும் அறியாமல் வில்லேந்தியிருக்கிறேன், அரசே. களமெழுந்துவிட்டமையால் போரிடுகிறேன், அவ்வளவே.” பேச நாவெடுத்த துரியோதனனை அடக்கி “இக்களத்தில் அவன் நாராயணத்தை எடுப்பானென்றால் அழிவது பாண்டவர்கள் மட்டுமே என எவர் உறுதிசொல்வார்கள்?” என்றார். துரியோதனன் திகைக்க “ஒருவேளை கௌரவர்களும் அழியலாம். படைக்கலமேந்தி இந்தக் களத்தில் வந்த அனைவரும் அழியக்கூடும்” என்றார் கிருபர்.

துரியோதனன் உரத்த குரலில் “அவ்வாறு அழிய நேர்ந்தாலும் அது நன்றே” என்று கூவினான். “இங்கு அறம் முற்றழிந்துவிட்டது. தொல்மூதாதையர் சொல் சொல்லெனத் திரட்டி எடுத்த நெறிகள் அனைத்தும் பொருளிழந்துவிட்டன. இனி நாம் எஞ்சினால் என்ன, முற்றழிந்தால் என்ன? இங்கு பரவியிருப்பது ஒரு கொடுநோய். இது அவர்களிலிருந்து எழுந்துள்ளது. ஆம், நம்மையும் தொற்றியுள்ளது. நாமும் முற்றழிவோம். இக்களத்திலிருந்து அந்நோய் தொற்றிய ஓர் உயிரும் வெளிச்செல்லலாகாது. அனைவரும் முற்றழிந்தாலும் சரி, இச்செயலால் வென்றோம் எனத் தருக்கி அவர்கள் இங்கிருந்து சென்றார்கள் எனில் இப்புவியில் இனி மானுடர் நம்பி பற்றிக்கொண்டிருப்பதற்கு ஒன்றுமே இல்லை. அதன் பின் தெய்வங்கள் வந்தமர இங்கு ஒரு பீடமும் எஞ்சாது. ஆசிரியரே, இது உங்கள் கடன்.”

கிருபர் “என் கடனை நான் எவ்வண்ணம் முடிவெடுப்பது?” என்றார். “செயலின் விளைவுகளை முற்றிலும் உணரமுடியவில்லை. அவை நினைப்பெட்டா தொலைவில் எங்கோ உள்ளன. முந்தையோர் சொல் ஒன்றே இத்தருணத்திற்கு வழிகாட்டியென அமைவது. அதுவோ பின்னால் எங்கோ மறைந்துவிட நெடுந்தொலைவு விலகி வந்துவிட்டிருக்கிறோம். இங்கே எவருக்கும் செய்வதென்ன என்று உளத்தெளிவில்லை. விலங்குகள்போல் உள்ளிருந்து எழும் உயிரியல்பால் போரிடுகிறார்கள். எண்ணுபவர்கள் வஞ்சங்களை பெருக்கிக்கொள்கிறார்கள்” என்றார். துரியோதனன் அவர் கைகளை பற்றிக்கொண்டான். நெகிழ்ந்த குரலில் “ஆசிரியரே, நான் இங்கு வரும்வரை கொண்டிருந்த உணர்ச்சிகள் வேறு. நீங்கள் கூறியதுபோல விலங்குணர்வும் வஞ்சமும் மட்டுமே என்னிடமிருந்தன. ஆனால் இங்கே உங்களிடம் பேசிய சொற்கள் என்னைக் கடந்து எழுந்தவை. அவற்றை திரும்பிப் பார்க்கையில் என்னை ஆளும் மூதாதையர் குரலென்றே உணர்கிறேன்” என்றான்.

“ஆம், அவை நெடுந்தொலைவிலிருந்து எழுந்து என்னை வந்தடைகின்றன. நான் முற்றிலும் உளம்தெளிந்து நின்று அவற்றை கேட்கிறேன். இது காலச்சுழி. இதில் வென்று மிகுந்தெழுவது பாண்டவர்கள் உருவாக்கிய அறமயக்கங்களாக இருக்கலாகாது” என்றான் துரியோதனன். “அரசே, அறப்பிழை தொடங்கியது நீ அவையில் பெண்ணை சிறுமை செய்தபோது என உணர்கிறாயா?” என்றார் கிருபர். “ஆம், ஆனால் அது அறப்பிழை. ஆசிரியரே, அறப்பிழைகள் நமக்கு நெடுங்காலம் பின்னால் உள்ளன. சென்ற யுகங்களிலிருந்து நம்மை வந்தடைந்தவை அவை. அறமும் அல்லதும் தெளிந்திருந்தபோது விழைவால், ஆணவத்தால், வஞ்சத்தால் அறத்தை மீறிச்சென்றவர்கள் அன்றிருந்தனர். என்னிலெழுந்தவர்கள் அவர்களே. ஹிரண்யனும் ராவணனும் கார்த்தவீரியனும்.”

“ஆசிரியரே, அவர்கள் அறமென எழுந்த தெய்வப்பேருருக்களால் அழிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் அறமிலிகள் அல்ல. இவர்கள் வருயுகத்தின் வடிவங்கள். அறமயக்கங்களை உருவாக்குபவர்கள். நூல்துணையும் தெய்வத்துணையும் கொண்டு அழிவை நிகழ்த்துபவர்கள். இவர்களை எதிர்த்து இனி தெய்வமும் எழப்போவதில்லை. கலியுகத்தில் வேதம் காக்க விண்ணளந்தோன் எழமாட்டான் என்கின்றன நூல்கள். இவர்களை இன்று வென்றாகவேண்டும். ஒருவேளை நாராயணம் அஸ்வத்தாமரின் கைக்கு வந்ததே இக்கடன் முடிக்கத்தானோ என்னவோ?” என்றான் துரியோதனன்.

கிருபர் நீள்மூச்சுவிட்டு “ஆம், எவ்வகையிலாயினும் இதை அவனிடம் சொல்ல வேண்டும். நீங்கள் எவரும் சொல்வதைவிட நான் கூறுவதே உகந்ததென்று தோன்றுகிறது. அவன் முடிவெடுக்கட்டும், அல்லது அந்த நாராயணமே முடிவெடுக்கட்டும்” என்றார்.

நூல் இருபது – கார்கடல் – 83

ele1அர்ஜுனன் தேரில் தலைதாழ்த்தி அமர்ந்திருக்க இளைய யாதவர் அவனை நோக்கி “உன் உள்ளம் இன்னும் விசைகொள்ளவில்லை” என்றார். “யாதவரே, நான் அந்த யானையை பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். இளைய யாதவர் “ஆம், நானும் எண்ணினேன்” என்றார். “அதற்கும் எனக்கும் ஒரே அகவை. அஸ்வத்தாமனும் நானும் இணையகவை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “எங்களுக்கிடையே அது எவ்வண்ணமோ வந்துவிட்டது.” இளைய யாதவர் சொல் என்பது போல நோக்கினார். “நெடுங்காலம் முன்னர், நானும் அவரும் ஆசிரியரின் குருநிலையில் சாலைத்தோழர்களாக பயின்றபோது…” என அர்ஜுனன் தொடர்ந்தான். “அன்று நான் அவர் மேல் போட்டியுணர்வும் காழ்ப்பும் கொண்டிருந்தேன். எனக்கு அளிக்காத எதையோ அவருக்கு ஆசிரியர் அளிக்கிறார் என்ற ஐயத்தால் ஒவ்வொரு கணமும் துடித்துக்கொண்டிருந்தேன்.”

“அஸ்வத்தாமருக்கும் எனக்கும் முதல் நெடும்போர் அன்று கங்கைக்கரையில் நிகழ்ந்தது” என அர்ஜுனன் சொன்னான். “அதுவரை நூறுமுறை ஓங்கி தாழ்த்திய வில். ஆயிரம் முறை இலக்கடையாது உள்ளத்திலேயே அமைந்த அம்புகள். போர் எவ்வண்ணம் தொடங்கியது என நினைவில்லை. ஆசிரியருக்கு பணிவிடைகள் செய்வதில் நான் முன்னிற்பதனால் அவன் சினம்கொண்டான். ஆனால் நீராடச் செல்கையில் அதை ஆசிரியரின் சிறுமை என காட்டினான். அரசகுடியினருக்கு பணிவிடை செய்ய ஆசிரியர்களுக்கும் தெரியும் என்றான். அச்சொல்லால் சீண்டப்பட்டேன். நாங்கள் போரிட்டோம். அவனை கொல்லும்பொருட்டு அம்பு ஒன்றை எடுத்தேன். அதை எய்தபோது நடுவே ஓர் யானைக்குட்டி நீரிலிருந்து எழுந்தது. அதன்மேல் அம்பு பாய்ந்தது.”

“அந்த யானையின் பெயர் அஸ்வத்தாமன் என பின்னர் அறிந்தேன்” என்றான் அர்ஜுனன். “பிறந்ததும் குதிரைக்குட்டிபோல ஒலியெழுப்பியமையால் முதுமாதங்கர் அதற்கு அஸ்வத்தாமன் என்று பெயரிட்டிருந்தனர். அன்றுவரை மானுடரிலிருந்து அன்பை மட்டுமே அறிந்துவந்தது அந்த வேழம். மானுடரிலிருந்து முதல் புண்ணைப் பெற்றதும் அதன் உள்ளம் திரிந்துவிட்டது. அந்தப் பிழையை நிகர்செய்யும்பொருட்டு நான் யானைமுகக் கடவுளுக்கு நோன்பிருந்தேன். நோன்புகள் என்பவை உண்மையில் நமது பிழைகளை நாமே கடக்கும்பொருட்டு எண்ணிக்கொள்பவை மட்டுமே. அந்நோன்பினூடாக நான் அதை முற்றாக மறந்தேன். அந்த யானை பெருஞ்சினமும் கட்டின்மையும் கொண்டதாக வளர்ந்தது. பின்னர் வேண்டுமென்றே அதை மாளவ அரசனுக்கு கொடையாக அஸ்தினபுரியில் இருந்து அளித்தனர் என தெரிந்துகொண்டேன்.”

“யாதவரே, இதோ அதை கொல்லப்போகிறார் மூத்தவர். அதை நான் கொல்லத்தொடங்கி ஐம்பதாண்டுகள் கடந்துவிட்டன. ஒவ்வொரு நாளுமெனக் கொன்று இதோ கொன்று முடிக்கவிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஊழால் அனைத்து உயிர்களும் பின்னப்பட்டிருக்கின்றன” என்றார் இளைய யாதவர். “உன் ஆவநாழியில் அந்த இறுதி அம்பு ஒருங்கியிருக்கிறதல்லவா?” அர்ஜுனன் “அதை நான் எடுத்தால் என்னிடம் அம்பென ஏதும் எஞ்சாது. காண்டீபத்தை கீழே வைத்துவிடவேண்டியிருக்கும்” என்றான். “சுனையை முற்றிறைத்தாலொழிய புதிய நீர் ஊறுவதில்லை” என்றார் இளைய யாதவர். “அது அரியது… மிக மிக கூரியது. யாதவரே, தளிர்க்கொடி முனைபோல் மென்மையானது. ஒருபோதும் நெஞ்சத்து இருளிலிருந்து நான் வெளியே எடுக்காதது. அதை எடுத்துவிட்டால் அதன்பின் நான் எஞ்சமாட்டேன். அது என் இறப்பு” என்றான் அர்ஜுனன். உரக்க நகைத்தபடி இளைய யாதவர் சொன்னார் “பார்த்தா, இறக்காதவர் பிறப்பதில்லை.”

அர்ஜுனன் மேலும் சொல்லெடுக்காமல் அமர்ந்திருந்தான். தேர் படைகளினூடாகச் சென்றது. புகை சூழ்ந்திருந்த போர்முகப்புக்குள் நுழைந்தது. அர்ஜுனன் இருமி துப்பினான். அவன் விழிகளை புகை மறைத்தது. “என்னால் இயலாதென்றே தோன்றுகிறது, யாதவரே” என்றான். “எனில் உயிர்விடுக! நீ செய்வதற்கு வேறொன்றில்லை” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அஸ்வத்தாமன் என்னும் யானையை நான் வென்ற மறுநாள்தான் என்னை பரத்வாஜ குருநிரையின் முதன்மை மாணவனாகவும் தன் கலையனைத்திற்கும் வழித்தோன்றலாகவும் ஆசிரியர் அறிவித்தார்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஒருபோதும் எனக்கு நிகராக இன்னொருவனை அவர் வைக்கப்போவதில்லை என்றார். என்னை தன் வடிவமாகவே கண்டு வணங்குக என ஆணையிட்டார். எனக்கு எதிராக சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் அவரை நோக்கியே, என் மேல் எழும் ஒவ்வொரு வில்லும் அவருக்கு எதிராகவே என வஞ்சினம் உரைத்தார்.”

“அதற்கு முன் உன்னிடம் சொல்பெற்றுக்கொண்டார்” என்றார் இளைய யாதவர். “ஆம், ஒரு தருணத்திலும் நான் அவர் மைந்தனை கொல்லலாகாது, எதன் பொருட்டும் என்று ஆணையிட்டார். அவர் குரல் நடுங்கியதை உணர்கிறேன். ஒருவேளை மானுடர் கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் அறப்பிழையை அஸ்வத்தாமர் செய்தாலும் என் வில் எழலாகாது என்றார். அவர் குரலை சொல் சொல்லென நினைவுறுகிறேன். அத்தனை பெரிய நாள் அது என அன்று எண்ணியிருக்கவில்லை. நாளை என் குலத்துக்கும் உனக்கும் பெரும்பழியை அவன் அளித்தாலும், உன் பிதாமகர்களையும் அன்னையரையும் உடன்பிறந்தாரையும் மைந்தர்களையும் உன் கண்ணெதிரே அவன் கொன்றாலும் உன் கை அவனை கொல்லக்கூடாது… அவர் விழிகளை நினைவுகூர்கிறேன். நான் மூதாதையரும் மும்மூர்த்திகளும் ஆணையிட்டாலும் மீறமாட்டேன் என அவருக்கு சொல்லளித்தேன்.” அர்ஜுனன் “யாதவரே, அன்று அவர் விழிகளில் பிறிதொருவரை கண்டேன். அவர்தான் இதோ அனைத்து அறங்களையும் மீறி களம்நின்றிருக்கும் ஆசிரியர்” என்றான். “வந்தடைந்துவிட்டாய்…” என களம் நடுவே தேரை கொண்டுசென்று நிறுத்தினார் இளைய யாதவர்.

ele1துரோணரை நோக்கி சென்றபோது அர்ஜுனன் தன்னுள்ளிருந்து ஒரு புதிய ஆற்றல் எழுவதை உணர்ந்தான். அவர் முன்னிருந்து தோற்று தேர் எரிய விலகிச் சென்றபோது அவர் வெல்லமுடியாதவர் என்றும் அவர் முன் முற்றாக தோற்றுவிட்டதாகவும் அவன் உணர்ந்தான். ஆனால் மீண்டும் அணுகியபோது எரிச்சலும் கசப்பும் முற்றாக விலகி உள்ளம் அமைதி கொண்டது. அவன் அவருடைய புதிய விழிகளையே எண்ணிக்கொண்டிருந்தான். எத்தனை பழகிய நோக்கு! எத்தனை ஆயிரம் முறை எண்ணத்தில் எழுந்தது! அதை அழுத்தி அழுத்தி ஆழத்தில் செலுத்திக்கொண்டுவிட்டிருக்கிறான். இங்கு இவ்வண்ணம் எழுந்து தோன்றுவதற்காகவே அவை அங்கே இருந்திருக்கின்றன. இதோ இக்களத்தில் வில்கொண்டு நின்றிருப்பவர் என்னுள் இருந்து எழுந்தவரா என்ன?

அவன் தேர் போர்முனைக்கு சென்று நின்றது. நகுலனும் சகதேவனும் அவனுக்கு சகடத்துணையாக வந்தனர். ஆனால் சூழ்ந்திருந்த புகைமூட்டத்தால் அவர்கள் அகற்றப்பட்டார்கள். விழுந்து எரிந்துகொண்டிருந்தனர் பாண்டவப் படையினர். தேர்கள் கொழுந்தாடி வெடித்துக்கொண்டிருந்தன. புழுதியும் புகையும் சூழ்ந்து காற்றில் அலைப்புண்டன. வாழ்த்தொலிகளை எழுப்ப எவரும் அங்கிருப்பதாக தெரியவில்லை. மிக அப்பால் சாத்யகியின் ஆணைகள் வானில் அலைந்து வீணாகி சிதறிக்கொண்டிருந்தன. எந்த ஓசையும் இல்லாமல் அவர்கள் போர்முகம் கொண்டனர். தெய்வங்கள் நோக்குகின்றனவா விண்ணிலிருந்து? இப்புகைப்பரப்புக்குள் கந்தர்வர்கள் உலவுகின்றனரா?

அவனைக் கண்டதும் தொலைவிலிருந்தே துரோணர் உரக்க எக்காள ஒலி எழுப்பினார். பற்கள் தெரிய நகைத்தபடி “செல்க! செல்க!” என்று கைசுட்டி ஆணையிட்டார். வில்லும் குடுவையும் கொண்ட கொடி காற்றில் எழுந்து பறக்க அவருடைய தேர் அவனை நோக்கி வந்தது. அவன் காண்டீபத்தை ஊன்றியபடி அவரை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவருடைய விழிகளை சந்திக்க விழைந்தான். அவை அணுகி அணுகி வந்தன. நோக்கு மட்டுமென திகழ்ந்து இரு புள்ளிகளாகி ஒருகணத்தில் விழிக்கூரை அவன் விழி சந்தித்தது. அவன் மெய்ப்பு கொண்டான். சற்று நேரத்தில் கொல்லப்படவிருப்பவர் அவர் என்பது அக்கணமே அவனுள் உறுதியாகியது.

சூழ்ந்திருந்த வீரர்கள் அவர்கள் போரிடுவதை அறியவில்லை. புகையால் புழுதியால் அனலால் அவர்கள் மூடப்பட்டிருந்தனர். அவர்கள் பிறிதெவரும் இல்லாத விரிந்த வான்வெளியில், சூழ்ந்த வெறுமைக்குள் நின்றுகொண்டிருந்தனர். பிற விழிகள் அறியாத போர். அது மெய்யாகவே நிகழ்கிறதா? அன்றி தன் அகத்துக்குள், கனவின் ஆழத்திலா? என்றும் அது அங்கு அவ்வண்ணம் நிகழ்ந்துகொண்டே இருந்ததா? இது இங்கு முடியப்போவதில்லையா? கனவில் எழும் அம்புகள் எவரையும் கொல்வதில்லை. எனில் அவை ஏன் எழுகின்றன? அவை சென்று தைப்பது எவரை?

முதல் அம்பை எடுத்து அவரை நோக்கி தொடுத்த கணமே அவன் உணர்ந்தான், அவனுக்கு அந்நம்பிக்கை ஆற்றலை அளித்தது அவன் ஒன்றை கரந்திருக்கிறான் என்பதுதான். ஒன்றை கரந்திருப்பவன் பிறர் அறியாத படைக்கலமொன்றை கொண்டவன். ஆகவே பிறரைவிட ஆற்றல் மிக்கவன். நீங்கள் என்னை முழுதறியவில்லை என்று இவ்வுலகனைத்திடமும் சொல்லும்போது மட்டுமே மானுடன் தன் ஆற்றலின் உச்சத்தை அடைகிறான் போலும். வருக! வருக, ஆசிரியரே! நீங்கள் அறியாத ஒருவனிடம் போரிட வந்திருக்கிறீர். கரவினூடாக உங்களைக் கடந்த ஒருவனிடம். அணுகுக! அணுகுக! அவர் அவன் அம்புவட்டத்திற்குள் வந்ததும் அவன் நாணிழுத்து முதல் அம்பை தொடுத்தான். அவருடைய அம்பு எழுந்து அதை முறித்தது. அந்த ஒலியுடன் இணைந்தே அடுத்த அடும்பு வந்து அவன் தேர்க்குவைமுகடை அடித்தது.

தான் தொடுத்த ஒவ்வொரு அம்பும் தன்னுள் வாழ்ந்த அக்கரவிலிருந்து எழுந்தது என அர்ஜுனன் அறிந்திருந்தான். ஆகவே ஒவ்வொன்றிலும் துரோணர் அறியாத ஒன்று கூடியிருந்தது. ஒரு திரும்பல், ஓர் அசைவு, ஒரு துள்ளல், ஒரு சிறு முழக்கம். அது துரோணரை எச்சரிக்கை கொள்ளச்செய்தது. அவனை நோக்கி அவர் எய்த அம்பு வெடிப்போசை எழுப்பியபடி மேலெழ அக்கணமே அதை தன் அம்பால் விண்ணிலேயே வெடித்துச் சிதற வைத்தான். விண்மீன்கள் தெறிப்பதுபோல் வானெங்கும் தீப்பொறிகளை பரப்பியபடி அது ஒளிர்ந்து கருகி அடங்கியது. சீற்றம் கொண்டு பற்களைக் கடித்தபடி, உறுமியபடி, பொறுமையிழந்து கூச்சலிட்டபடி துரோணரும் மேலும் மேலும் அம்புகளை அவன் மேல் எய்தார். ஒவ்வொரு அம்பையும் அவன் மண்ணுக்கு வருவதற்கு முன்னரே அறைந்து தெறிக்கவிட்டான். அவர் அவன் ஆவக்காவலனை கொன்றார். அவனுடைய தேர்மகுடமும் கொடியும் உடைந்தன. அவர்களின் போரைக் கேட்டு மெல்ல எழுந்து சூழ்ந்தனர் பாண்டவப் படையினர்.

பின்னர் துரோணர் மெல்ல பின்னடைந்தார். அது மேலும் ஆற்றல் கொண்ட அம்புகளை எடுப்பதற்காகவே என்று அவன் உணர்ந்தான். அவருடைய விழிகள் தன் முகத்தை துழாவுவதை அறிந்தான். அவன் கொண்ட அந்த ஆற்றல் என்ன என்று அவர் எண்ணுகிறார். அவன் கரந்திருப்பது ஒன்று உண்டென்று கண்டுகொண்டிருக்கிறார். அவருடைய அத்தனை அம்புகளையும் அந்தக் கரவின் எதிர்பாராத தன்மை பொருளிழக்கச் செய்தது. ஓர் அணுவிடை திசை மாற்றியது. ஒரு கணம் பிந்த வைத்தது. ஒரு துளி ஆற்றல் குறையச் செய்தது. அந்த அணுக்கணத்தின் துளித்துமியில் புகுந்து அவரை அவன் வென்றுகொண்டிருந்தான். முற்றிலும் நிகர்நிலைகொண்ட போர் என்றே சூழ்ந்திருந்தவர்கள் எண்ணினர். அவர்கள் அறிந்திருந்தனர், அம்புகள் நிகழ்த்தும் அந்த உரையாடலில் ஒரு சொல் அவனிடம் மிகுந்திருப்பதை.

துரோணர் மெல்ல அந்த தன்னம்பிக்கை நிறைந்த சிரிப்பை அடக்கி விழிகூர்ந்தார். தொங்கிய இமைகளிலும் மடிந்த உதடுகளிலும் மீண்டும் முதுமை வந்து படிந்தது. ஆனால் அவன் அறிந்த அந்தக் கனிவும் மென்மையும் அங்கு முற்றாகவே தென்படவில்லை. கற்பிக்கையில் மட்டுமே அவை அவர் முகத்தில் எழுகின்றன. சொல்திரள்கையில் மட்டுமே அவர் ஆசிரியர். அப்போது அவரில் புதிய எண்ணங்கள் எழுகின்றன. ஆயிரம் கைகளால் தன் மாணவரின் தலை தொட்டு வாழ்த்துகிறார். முலையூட்டும் அன்னையென, தலையில் மைந்தரை தூக்கி வைத்திருக்கும் தந்தையென, நெஞ்சிலேற்றி விளையாடும் மூதாதையென, உடலெங்கும் முளை எழுந்து காடாகிச் சூழும் நீத்தோரென மாறுகிறார். கரவின்றி அளிக்கிறார். எல்லையின்றி வாழ்த்துகிறார். இதோ வில்லெடுத்து என்னை எய்பவர் பிறிதொருவர். அச்சமும் தனிமையும் கொண்டவர்.

தன் அம்புகளால் அவருடைய அம்புகளை அறைந்து ஒவ்வொரு கணமாக எதிர்கொள்கையில் அவன் அவருடைய வீச்சும் விசையும் மிகுந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். எதிர்நிற்பவரின் விசை மிகுவது நன்று. அது அதில் வீழ்ச்சியும் உண்டென்பதற்கான சான்று. எழுதலும் விழுதலுமின்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வில்திறனே வெல்லற்கரியது. இவர் சினம் கொள்கிறார். எனில் எழும் அம்பை கணக்கிடுகிறார், தவறும் அம்பைக் கண்டு உளம் பதைக்கிறார். நிகழ்வனவற்றில் இல்லை அவருடைய உள்ளம். அது முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழில் நின்றிருப்பதே யோகம். முந்துவதும் பிந்துவதுபோலவே பிழைதான். பிழைகள் ஆற்றலை அழிக்கின்றன. பிழையின்மையே யோகம். வெல்லமுடியாதவன் யோகி மட்டுமே. பிற அனைவரும் வில்லில் இருந்து வானுக்கு எழும் அம்புகள் போல. அவர்கள் எத்தனை விசைகொண்டிருந்தாலும் விழுந்தாகவேண்டும். யோகி ஒளி. அவன் சென்றுகொண்டே இருப்பவன்.

அவர் உள்ளத்தின் ஒரு நுனி வேறெங்கோ இருக்கிறது. காற்றில் பறக்கத் துடிக்கும் பட்டின் ஒரு முனை முட்கூரில் சிக்கிக்கொண்டதுபோல். அது என்ன? அந்தணன் எனப் பிறந்த இவரை மண்விழைவென வந்து பற்றிக்கொண்ட தெய்வம் எது? இங்கு இவ்வாறு ஆட்டிவைப்பதுதான் என்ன? மைந்தன்மேல் கொண்ட பற்றா? ஆனால் மானுடருக்கு மைந்தர் விலங்குகளுக்கு குழவிகள்போல் இயல்பான குருதிநீட்சி அல்ல. பொருளேற்றப்பட்ட சொற்கள் அவர்கள். அவருக்கு அஸ்வத்தாமன் யார்? அவன் அவருடன் கணம்கணமென போரிட்டுக்கொண்டிருந்தான். அவனுள் விலகிநின்று அவரை கூர்ந்து நோக்கிக்கொண்டும் இருந்தான். ஒருபோதும் அப்படி அவரை அணுகியறிய முயன்றதில்லை. அவருக்கு இனியவனாக கால்வருடி பணிசெய்து குருநிலையில் இருந்தபோதும்கூட. இருளுக்குள் அவர் குரல்மட்டுமே ஒலிக்க கங்கைக்கு செல்லும்போதுகூட.

ஓர் அம்பு அவரை கடந்து செல்ல துரோணர் உடல் வளைத்து எழுந்து பிறிதொரு அம்பால் அவனை அறைந்தார். அது முழக்கமிட்டபடி வந்து தன் தேர்த்தூணை உடைத்து தேர் முகடை சரியவைத்தபோது அக்கணத்தில் அவ்வசைவில் உடைத்து திறக்கப்பட்டதுபோல் அவன் ஒன்றை உணர்ந்தான். இளமையில் எங்கோ, சிறுவன் என வாழ்ந்த தொடக்க நாளில் உள்ளத்தில் பட்ட ஒரு வடுவிலிருந்தே அனைத்தும் முளைத்தெழுந்துள்ளன. அவருடைய ஆற்றல்களுக்கு அதுவே ஊற்று. எனில் அந்த ஆற்றலுக்கு எல்லை வகுப்பதும் அதுவே. விதையிலிருந்து பெற்ற நஞ்சிலிருந்து பெருமரங்களும் விடுதலை கொள்ள இயல்வதில்லை. அதுவே நிலம் மீதான பற்று. அதுவே மைந்தன் மேலான சார்பு. அதுவே இப்புவியில் கட்டி நிறுத்தும் தளை.

“இன்று உங்களை விடுபடச்செய்கிறேன், ஆசிரியரே” என்று அவன் கூவினான். துரோணரின் கை அதிர்வதை, விழி துடித்து அமைவதை அவன் கண்டான். “இன்று உங்கள் தளைகளை அறுக்கிறேன். ஆம், இன்று உங்களை முற்றாக விடுவிக்கிறேன்!” என்று மீண்டும் மீண்டும் கூவினான். உதடசைவாகவே அவரை சென்றடைந்த அச்சொல் அவரை நிலையழியச் செய்வதை உணர்ந்து உரக்க நகைத்தபடி மீண்டும் மீண்டும் சொன்னான். “நீங்கள் எனக்களித்த அத்தனை சொற்களுக்காகவும் இதை நான் உங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். இது என் கொடை! ஆசிரியரே, இதைப் பெற்று என்னை வாழ்த்துக! இது என் பரிசில்.” அவன் அவர் விழிகளை நோக்கி கூச்சலிட்டான் “இன்று விடுதலைகொள்வீர், ஆசிரியரே! என்னை அதற்கென்றே இயற்றினீர்!”

துரோணர் “என்ன சொல்கிறாய், அறிவிலி? என்ன சொல்கிறாய்?” என்றார். “இதன் பொருட்டே என்னை மைந்தனுக்கு நிகராக வளர்த்தீர்கள். இதன்பொருட்டே எனக்கு வில்லளித்தீர்கள். ஆசிரியரே, இங்கிருந்து உங்களை விடுவிப்பது நான். அங்கு உங்களை அன்னமும் நீரும் அளித்து நிலைநிறுத்துவது அவன். புத் எனும் நரகுலகுக்கு செல்லாது உங்களைக் காப்பவன் அவன். புவி எனும் நரகத்திலிருந்து உங்களை மீட்பவன் நான்!” துரோணர் அவன் உளச்சொற்களை துளி மிஞ்சாமல் கேட்டார் “கீழ்மகனே! அறிவிலி!” என்று கூவியபடி அவனை அம்புகளால் மேலும் மேலும் அறைந்தார். அவனைச் சூழ்ந்து கூகைகள்போல், பருந்துகள்போல் கூச்சலிட்டபடி சென்றன அம்புகள். பன்றிகள்போல், எருதுகள்போல் உறுமின. சிம்மக்குரல் எழுப்பின. நரிகளைப்போல் ஊளையிட்டன.

அப்போது தொலைவில் முரசொலி எழுந்தது. அவ்வோசையைக் கேட்டதுமே துரோணரின் வில் நின்றது. கைகள் நடுங்க வில் நின்று அதிர்வதை காணமுடிந்தது. பாண்டவர் தரப்பிலிருந்து “வீழ்ந்தார் அஸ்வத்தாமர்! அஸ்வத்தாமர் வீழ்ந்தார்! விண்ணேகினார் அஸ்வத்தாமர்!” என்று திரளொலிகள் எழுந்தன. அர்ஜுனன் உரக்க நகைத்து “ஆம், இதோ களம்பட்டார் உங்கள் மைந்தர். இனி விண்ணிலிருக்கும் உங்களுக்கு நீர்க்கடன் அளிக்கவேண்டியவனும் நானே!” என்றான். உடல்பதற அங்குமிங்கும் நோக்கியபடி துரோணர் தேரில் நின்றார். கௌரவப் படையின் ஒலிகள் எழுந்தன. “பரத்வாஜ குடியின் அஸ்வத்தாமர் களம்பட்டார்! உத்தரபாஞ்சாலர் களம்பட்டார்! துரோணாசிரியர் மைந்தர் வீழ்ந்தார்! வெல்க மாவீரர்! விண்ணேகுக பெருவில்லவர்!” துரோணர் கால்கள் தளர தேரின் தூணை பற்றிக்கொண்டார்.

“ஆசிரியரே, உங்கள் மைந்தர் களம்பட்டார். அஸ்வத்தாமர் மூத்தவர் பீமசேனரால் கொல்லப்பட்டார். கதையால் தலையறைந்து கொல்லப்பட்டார்! இதோ முழங்குகின்றன முரசுகள்! இதோ கேளுங்கள் கூக்குரல்களை!” என்றான் சகதேவன். “இல்லை. அவனைக் கொல்ல பீமனால் இயலாது” என்றபின் தன் தேரை திருப்பி அப்பால் நின்ற யுதிஷ்டிரரை நோக்கி சென்றார் துரோணர். “யுதிஷ்டிரா, நீ சொல். ஒருபோதும் பொய்யுரைக்காத உன் நாவால் கூறுக, அஸ்வத்தாமன் களம்பட்டானா?” என்றார். யுதிஷ்டிரர் ஒருகணம் அவரை நோக்கிய பின் நாவால் உதடுகளை நனைத்து மூச்சிழுத்து “ஆம் ஆசிரியரே, அஸ்வத்தாமன் பீமனால் கொல்லப்பட்டான்” என்றார்.

தன் கையிலிருந்த அம்பை கீழே வீழ்த்தி, வில்லை மடியில் வைத்து தேர்த்தட்டில் காலோய்ந்து அமர்ந்து கண்களை மூடினார் துரோணர். “ஒரு கணம்தான்! இதோ இக்கணம். பார்த்தா, அவர்கள் செய்தி உணர்ந்து மறுஅறிவிப்பு எழுப்புவதற்குள் உன் வில் எழுக!” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் தன் ஆவநாழிக்குள் கைவிட்டபோது ஒற்றை அம்புமட்டுமே அங்கே எஞ்சுவதை உணர்ந்தான். அவன் உடல் மெய்ப்பு கொண்டது. அதை எடுத்தபோது இருமடங்காகியது. நாண் இழுத்துப் பூட்டியபோது பத்துமடங்கெனப் பெருகியது. துரோணரின் நெஞ்சை நோக்கி குறிவைத்துச் செலுத்தியபோது நூறு சிம்மங்களின் ஓசையை எழுப்பியபடி சென்று சென்று அவர் நெஞ்சில் அறைந்தது.

துரோணரின் கவசம் இரண்டாக உடைந்து விழ அவர் நெஞ்சில் ஆழ இறங்கி நின்று சிறகதிர்ந்தது அர்ஜுனனின் அம்பு. துரோணர் மல்லாந்து தேர்த்தட்டில் விழுந்தார். கால்கள் இழுத்து துடித்தன, கைகள் தேர்த்தட்டில் கிடந்து அதிர்ந்தன. ஒருகணம் அவர் எழ முயல்வதுபோலத் தோன்ற அர்ஜுனன் இயல்பாக தன் ஆவநாழியை நாடி கையை கொண்டுசென்று அது நிறைந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அதன் எடை மிகுந்தபடியே வந்தது. தோள் தாளாமலாக அவன் ஆவநாழியைக் கழற்றி தேர்த்தட்டிலிட்டான். அவன் நோக்கி நிற்க அது பெருகிக்கொண்டிருந்தது. அவன் அவருக்கு திருப்பி அளித்த அம்புகள் அனைத்தும் அதற்கே மீண்டு வந்தன. அவன் வில்லை தேர்த்தட்டில் இட்டு இரு கைகளையும் கூப்பினான். விழிகள் நிறைந்து முகத்தில் வழிந்து நெஞ்சில் சொட்ட நின்றான்.

சூழ்ந்திருந்த படைகள் சொல்லவிந்து விழிகளாக மாறி நின்றிருந்தன. அத்தருணத்தில் படைகளுக்குப் பின்னாலிருந்து புரவியில் விரைந்தோடிவந்த திருஷ்டத்யும்னன் அதே விசையில் குதித்து துரோணரின் தேர்த்தட்டில் ஏறினான். “என்ன செய்கிறான்! அடேய் அறிவிலி, நில்!” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அவனை தடு… நகுலா, அவனை பிடி… இளையோனே, அவனை அம்புதொடுத்து வீழ்த்து!” திருஷ்டத்யும்னன் தோல்பட்டையால் கொண்டையாகக் கட்டப்பட்ட தலைமுடியை தன் கையால் பற்றி வலக்கையிலிருந்த வாளால் ஓங்கி அவர் தலையை வெட்டி தூக்கி எடுத்தான். அதை மேலே காட்டியபடி “துருபதரின் வஞ்சம்! இதோ துருபதரின் வஞ்சம்! பாஞ்சாலத்தின் வஞ்சம் இதோ! பழி கொண்டது பாஞ்சாலக்குருதி! பழி கொண்டது பிருஷதனின் குருதிமரபு!” என்று கூவினான்.

பாண்டவப் படையிலிருந்து முதிய வீரன் ஒருவன் “கீழ்மகன்!” என்று கூவி திருஷ்டத்யும்னனை நோக்கி ஓங்கி துப்பினான். “இழிமகனே, உனக்கும் உன் குலத்திற்குமாக இது!” என்று கூவியபடி ஓடிவந்து தன் கழுத்தை வாளால் வெட்டிக்கொண்டு முகம் திரும்ப கால்கள் மடிந்து உடல் முன்படிந்து விழ துடித்தான். “கீழ்மகனே, கீழ்மகனே” என்று கூவியபடி இன்னொரு வீரன் அவ்வண்ணமே ஓடிவந்து தன் தலை கொய்து வீழ்ந்தான். “பழிகொள்க! உன் குடி அழியா பழிகொள்க!” என்று கூவியபடி மேலும் மேலும் பாண்டவ வீரர்கள் வந்து தலைகொடுத்து விழுந்தனர். திகைத்து நின்ற திருஷ்டத்யும்னன் “ஆம், நான் பழிகொள்கிறேன்! இப்பழியை நானே கொள்கிறேன்! நான் இதன்பொருட்டே பிறந்தேன். எந்தை என்னை ஈன்றதும் வளர்த்ததும் இதற்காகவே!” என்று கூவினான்.

அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து தன் தலையை இரு கைகளாலும் அழுந்தப் பற்றிக்கொண்டான். யுதிஷ்டிரர் தேரில் நினைவிழந்து சரிய நகுலன் பாய்ந்து அவரை பற்றிக்கொண்டான். திருஷ்டத்யும்னன் வெட்டுண்ட தலையைத் தூக்கி தன் முகத்திலும் மார்பிலும் குருதியை வீழ்த்தியபடி அமலையாடினான். “நான் காலன்! நான் ருத்ரன்! நான் காளன், சண்டன், பிரசண்டன்!” என்று ஆர்ப்பரித்தான். “என் குடி அழிக! என் கொடிவழி முற்றழிக! என் முன்னோர் பழிசூடுக! என் தெய்வங்கள் எரிந்தெழுந்து அகல்க! நான் நாணவில்லை. இது எந்தைக்காக என் கடன்!” என்று கூவினான். துரோணரின் தலையை தூக்கி வீசிவிட்டு தேரிலிருந்து இறங்கி தன் புரவிநோக்கி சென்றான்.

நூல் இருபது – கார்கடல் – 82

ele1வெடியோசைகள் எழுந்து எதிரொலித்துக்கொண்டிருந்த களத்தில் திருஷ்டத்யும்னனை அகற்றி உள்ளே கொண்டுசெல்ல முயன்றுகொண்டிருந்தனர் மருத்துவர். பீமன் தன் தேரிலிருந்து இறங்கி திருஷ்டத்யும்னனை நோக்கி ஓடினான். சாத்யகி திருஷ்டத்யும்னன் மேல் அருகே கிடந்த தேர்ப்பலகை ஒன்றை எடுத்து வைத்தான். அருகே பற்றி எரிந்துகொண்டிருந்த தேர் வெடித்து எரிய பீமன் உடல் தாழ்த்தி ஒழிந்து அருகே அணைந்தான். அவர்களுக்கு அருகே வந்து விழுந்த துரோணரின் எரிவாளி வெடித்து நான்கு புறமும் வீரர்களின் உடல்கள் உடைந்து தெறித்தன. புகையும் புழுதியும் கலந்து குடையென எழுந்து சுருண்டு சிவந்த மரம்போல் வானில் பறந்து காற்றில் அள்ளிச் சிதறடிக்கப்பட்டு முகில்களை நோக்கி எழுந்தன. அவர்களின் மேல் மண்ணும் புழுதியும் பொழிய உடல் வளைத்து நிலம் நோக்கி குனிந்து அதிலிருந்து தப்பினர்.

கற்களும் சிதைந்த தசைச் சிதர்களும் உடல் உறுப்புகளும் அவர்கள் மேல் விழுந்தன. மருத்துவர் திருஷ்டத்யும்னனை மரவுரியால் மூடி மேலும் உள்ளே இழுத்துச்சென்றனர். பீமன் தன் தோள் மேல் விழுந்த சிதைந்த கையொன்றை பற்றி எடுத்து நோக்கிய பின் அப்பால் எறிந்துவிட்டு உதட்டில் படிந்த புழுதியை துப்பியபடி அருகணைந்து “யுயுதானரே, என்ன நிகழ்கிறது இங்கே?” என்றான். இருமியபடி “நேற்று நம் மைந்தன் அவர்களை அழித்தான். இன்றுடன் இவர் நம் படையை முற்றழித்துவிடுவார் போலும்” என்று கூவினான். சாத்யகி “பார்த்துக் கொள்ளுங்கள்… நான் படைமுகப்புக்குச் சென்று நம் படைகளை ஒருங்கிணைத்து பின்னிழுக்க முயல்கிறேன்” என்றபின் எழுந்து புழுதிக்குவைக்குள் ஓடி அகன்றான். மருத்துவ ஏவலர் “இங்கிருந்து மேலும் அகற்றவேண்டும். வெந்த உடலில் புழுதி ஆழப் பதிந்தால் மிகத் தீங்கு” என்றார்.

மாபெரும் கரிய போர்வையைத் தூக்கி அவர்கள்மேல் மூடியதுபோல இருள் பரவியது. யானைத்தோல் கூடாரக் கூரை என வானம் அண்மையில் வளைந்திருந்தது. கருமைக்குள் நூற்றுக்கணக்கான செம்மலர்கள் என துரோணரின் வாளிகள் வெடித்தன. அலறல்கள் நீருக்குள் என கேட்டன. நிலம் அதிர பீமன் மல்லாந்து விழுந்தான். அவன்மேல் மேலும் சிலர் விழுந்தனர். யானை ஒன்று அலறியபடி தன்னைத்தான் சுழன்றது. கையூன்றி எழுந்தபோது பீமனின் உடலுக்குள் நீர்மை குலுங்கிக்கொண்டிருந்தது. மருத்துவ ஏவலர் திருஷ்டத்யும்னனின் உடலில் கொக்கிச் சரடை தொடுக்க அதை உள்ளிருந்து பாண்டவப் படையினர் இழுத்தனர். அவன் மேலும் மேலும் அப்பால் கொண்டுசெல்லப்பட்டான்.

பீமன் கண்களை மூடிக்கொண்டு அந்தப் புழுதியாலான இருளை தன்னுள் இருந்து அகற்றினான். ஒலிகளாலேயே களத்தை அறிந்தான். எதிர்த்திசையில் ஓடி அங்கிருந்த இடைவெளியினூடாக பாய்ந்தான். விழிதிறந்தபோது அவன் விட்டுவந்த பகுதி பெரிய குடைபோல் புழுதியால் மூடப்பட்டிருந்தது. அதற்குள் நெருப்பு எரிந்து தழலாட நிழல்கள் எழுந்து புழுதியாலான வானில் அசைந்தன. உள்ளிருந்து வில்லுடன் நகுலனும் சகதேவனும் ஓடிவந்தனர். சகதேவன் பீமனை நோக்கி “மூத்தவரே, இளையவர் மீண்டும் துரோணரை எதிர்க்கக் கிளம்பியிருக்கிறார்… நாம் அனைவரும் இணைந்து அவருக்கு படைத்துணை அளிக்கவேண்டும் என மூத்தவரின் ஆணை” என்றான். செம்புழுதி அவர்களை மூடியிருந்தது. நகுலன் இருமி துப்பிக்கொண்டிருந்தான். “அவரிடம் அனலம்புகள் நிறைந்திருக்கின்றன… அவனால் அவரை எதிர்க்கமுடியாது” என்றான் பீமன்.

பீமன் சகட ஓசை கேட்டு திரும்பிப்பார்த்தான். இளைய யாதவர் ஓட்டிய தேரில் வில்லேந்தியபடி வந்த அர்ஜுனனை நோக்கி பீமன் திகைத்தான். கன்னங்கரிய சேற்றில் மூழ்கி எழுந்தவன் போலிருந்தான். “என்ன ஆயிற்று? இளையோனே!” என்று கூவினான். “எரிக்கு மருந்து… புரவிக்குருதி” என்றான் அர்ஜுனன். தேர் விசையழிய அவன் “பாஞ்சாலர் எங்கே?” என்றான். “படைப்பின்புலத்திற்குள் இழுத்துச்சென்றுவிட்டார்கள்.” அர்ஜுனன் “உயிர் எஞ்சுமா?” என்றான். “வாய்ப்பில்லை. நினைவு எழவில்லை. உடல் முற்றாகவே வெந்துள்ளது. புழுதியில் இழுபட்டு குருதியும் புண்ணும் சேறாகிவிட்டிருக்கின்றன. தொடைகளில் வெள்ளெலும்பு தெரிகிறது.” அப்பால் சாத்யகியின் கொம்போசை எழுந்தது. “யாதவர் படைகளை ஒருங்கு திரட்ட முயல்கிறார். ஆனால் நம் படைகளின் செவிப்புலன்கள் முற்றாகவே அழிந்துவிட்டிருக்கின்றன. வெடியோசைகள் உடற்குகைக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன” என்றான் பீமன்.

வலப்பக்கமிருந்து விரையும் தேரில் அவர்களை நோக்கி வந்த யுதிஷ்டிரர் செவிகளை கைகளால் பொத்தியபடி உடல்நரம்புகள் புடைக்க “என்ன நடக்கிறது இங்கு? இளைய யாதவனே, இத்தகைய மாயங்கள் எதற்கும் இப்போரில் இடமில்லையென்றல்லவா போருக்கு முன்னெழுந்த சொல்?” என்றார். பீமன் திரும்பி “போருக்கு முன்னெழுந்த சொற்கள் இங்கு முறையாக பேணப்படுகின்றனவா என்ன?” என்றான். யுதிஷ்டிரர் தத்தளித்து திரும்பிப் பார்க்கையில் பிறிதொரு அம்பு சென்று விழுந்து வெடிக்க வீரர்களின் உடல்களும் புரவிகளின் உடல்களும் தேர்களின் மரத்துண்டுகளும் வானில் சிதறி நாற்புறமும் வளைந்து சென்று விழுந்தன. புகைமுகில்களை நோக்கிய பின் “இது போரே அல்ல! இது தெய்வங்களின் தீச்சொல்லுக்கு நிகரானது. இது எவ்வகையிலும் அறமல்ல. நான் நேரில் சென்று அவர் முன் நிற்கிறேன். என் நெஞ்சு காட்டி நிற்கிறேன். இது அறமல்ல ஆசிரியரே என்று அவரிடம் கூறுகிறேன்” என்றார்.

பீமன் “அனைத்து நெறிகளையும் கடந்து உங்களை சிறைகொண்டு செல்ல மும்முறை முயன்றவர் அவர். இதோ துருபதரின் மைந்தனை தன் தேர்க்காலில் கட்டி இழுத்தார். அவன் உடலை சற்றே உயிர் எஞ்சியிருக்க மீட்டுக்கொண்டு வந்திருக்கிறோம்” என்றான். அர்ஜுனனை திரும்பிப் பார்த்த பின் யுதிஷ்டிரர் “தேர்க்காலிலா?” என்று கேட்டார். “ஆம், தேர்க்காலிலேதான். இப்போது களத்திலிருக்கும் துரோணர் நாம் அறிந்தவரே அல்ல. அவர் முகத்தில் தெரியும் நகைப்பைப் பற்றி வீரர்கள் சொன்னார்கள். அது அவரில் பிறிதொரு தெய்வம் குடியேறியதால் எழுந்தது என்கிறார்கள்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் “துண்டுகளாக சிதறிக்கிடக்கிறார்கள் நம் படைவீரர்கள். எந்த உடலையும் தனித்தனியாக மீட்க இயலாதென்றனர்” என்றார். செவிகளைப் பற்றியபடி “என் தலைக்குள் முழக்கம் நிறைந்திருக்கிறது. என்னால் நிலைகொள்ள இயலவில்லை” என்று சொல்லி தேர்த்தட்டில் அமர்ந்தார்.

இளைய யாதவர் “பீமசேனரே, துரோணரை நாம் இப்போதே வென்றாக வேண்டும். அரைநாழிகைக்குள். அதாவது மேலும் ஐம்பது அம்புகளை அவர் ஏவுவதற்குள். அதற்குப் பிந்தினால் இங்கு படைகளுமிருக்காது, பாண்டவ ஐவரும் மைந்தரும்கூட எஞ்சமாட்டார்கள்” என்றார். “என்ன செய்வது அதற்கு?” என்றபின் சீற்றத்துடன் பற்களைக் கடித்தபடி திரும்பிய பீமன் அர்ஜுனனை நோக்கி பொருளில்லாத கோபம் பெருக “இவனால் என்ன செய்ய முடியும்? அதோ மறு எல்லையில் அங்கன் நமது படைகளை அழித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிர் நிற்க இயலாமல் சிகண்டியும் சாத்யகியும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவன் அங்கனிடமும் தோற்றவன். இங்கே இவர் முன்னாலிருந்தும் ஓடிவந்தவன்” என்றான்.

சகதேவன் “மூத்தவரே…” என்றான். “அப்பால் போ!” என அவனை நோக்கி கூச்சலிட்டான் பீமன். “இவனால் அவரை கொல்ல இயலாது… இவனால் அங்கனையும் வெல்ல இயலாது. அதை கண்ணெதிரே கண்டோம். இவன் வில் ஆற்றல் மிக்கது. உள்ளம் ஒவ்வொருவர் முன்பும் முன்னரே மண்டியிட்டுவிடுகிறது.” சினத்துடன் உடலெழுந்த அர்ஜுனனை கையசைவால் இளைய யாதவர் தடுக்க யுதிஷ்டிரர் “இவன் அவரை கொல்வான். அவ்வாறு நிமித்திகர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றார். பீமன் வெறுப்புடன் பல்தெரிய நகைத்து “அதாவது நிமித்த நூலை நோக்கிய பின்புதான் களம் புகுந்தீர்கள், இல்லையா?” என்றான். யுதிஷ்டிரர் விழிதாழ்த்தி “மெய், என்னால் நோக்காமலிருக்க இயலவில்லை. நான் கடையன். ஆனால் இவன் தன் ஆசிரியனை கொல்வான் என்று கண்டேன்” என்றார்.

இளைய யாதவர் “ஆசிரியனை கொல்லாதவனுக்கு தனது மெய்மை சிக்குவதில்லை என்பார்கள்” என்றபின் உரக்க நகைத்து அர்ஜுனனைப் பார்த்து “செல்க, உன் ஆசிரியனின் நெஞ்சுக்கு அம்புகளை செலுத்துக!” என்றார். அர்ஜுனன் “அதற்கு எனக்கு தயக்கமேதுமில்லை, யாதவரே. அத்தயக்கம் எனக்கு சற்றேனும் வரக்கூடாதென்பதற்காகத்தான் போலும் தெய்வங்கள் அவரை இத்தனை கீழிறங்கச் செய்கின்றன. இதோ என் குடியினர் இறுதிச்சடங்குக்கும் உடல் எஞ்சாமல் குருதிச்சிதறல்களாக கிடக்கிறார்கள். இப்போது என் ஆசிரியரின் முகத்தில் காண்பது நானறிந்த ஆசிரியரை அல்ல. அக்கீழ்மகனின் சிரிப்பை நோக்கி அம்பெய்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்றான். “பிறகென்ன, எழுக!” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆனால்…” என்றபின் “என்னிடம் எஞ்சுவது ஒற்றை அம்பு” என்றான் அர்ஜுனன்.

மீண்டும் வெடியோசை எழ அவர்கள் மேல் புழுதியும் சிதைந்த உடற்தசைகளும் துண்டுபட்ட உறுப்புகளும் பொழிய அவர்கள் குனிந்து நிலம்படிந்தனர். அர்ஜுனன் உடலெங்கும் புழுதிமூட அமர்ந்திருந்தான். நிமிர்ந்து உடலையும் ஆடைகளையும் சீரமைத்த பின்னர் இளைய யாதவர் “எழுக!” என்றார். அர்ஜுனன் அசைவிலாதிருந்தான். “எழுக, இதுவே தருணம்!” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் உடலில் படிந்த புழுதி அவன் மேலிருந்த தேன்மெழுக்கில் நனைந்து சேறாகிக்கொண்டிருந்தது. பீமன் “அவரை இவன் நேர்நின்று வெல்ல இயலாது, யாதவரே. இவனை இவ்வாறு போருக்கு அனுப்புவது பெரும்பிழை” என்றான். “நாமனைவரும் சென்று சூழ்ந்துகொள்வோம். நேருக்குநேர் நின்று போரிடுவோம். அவரை நாம் கொன்றால் நம் படைகள் உயிர் பிழைப்பர். நம்மை அவர் கொன்றால் இப்போர் நின்றுவிடும்” என்றான்.

“அவரை நாமனைவரும் சேர்ந்தாலும் வெல்ல இயலாது” என்றார் இளைய யாதவர். “அவருடைய அம்புகளுக்கு மாற்று அம்பு நம் எவரிடமும் இப்போதில்லை.” பீமன் தளர்ந்து “எனில் நாம் முற்றாக அழிவதுதானா ஒரே வழி?” என்றான். உடனே வீம்புகொண்டு “அதுவே ஊழ் எனில் செல்வோம். அவர் அம்புகளால் களம்படுவோம். அது ஆண்மை. இங்கே புகைக்கும் புழுதிக்கும் நடுவே ஒளிந்து நின்றிருக்கும் கீழ்மையால் எப்பொருளும் இல்லை” என்றான். உறுதியான குரலில் “நாம் வென்றாகவேண்டும்” என்றார் இளைய யாதவர். “எப்படி?” என்றான் பீமன். இளைய யாதவர் “அவர் சற்றேனும் தளரவேண்டும். வில் தாழ்த்தி அமரவேண்டும். அன்றி அவரை வெல்ல இயலாது. அதற்கு ஒரு வழி மட்டுமே உள்ளது” என்றார். “சொல்க!” என்று பீமன் முன்னெழுந்தான். “எதுவாயினும் இனி நமக்கு வேறுவழி இல்லை… இந்தக் கொலைக்களத்தில் இனி நெறிகளே இல்லை.”

“முன்னர் யுதிஷ்டிரர் சென்று வணங்கியபோது அவரே உரைத்தது அந்த வழி” என்று இளைய யாதவர் சொன்னார். அப்பேச்சை அப்போது புதிதாகக் கேட்பதுபோல யுதிஷ்டிரர் விழி அதிர்ந்து நோக்கை விலக்கிக்கொண்டார். “அதை அவர் நம்மிடம் சொன்னதனாலேயே இப்போது நாம் அதைச் செய்வதை அவர் ஏற்கிறார் என்றுதான் பொருள்” என்றார் இளைய யாதவர். குழப்பத்துடன் அவரையும் அர்ஜுனனையும் பார்த்தபடி “என்ன?” என்று பீமன் கேட்டான். “யானை உணவுண்பதை நிறுத்திக்கொள்வதைப் பற்றி சொன்னார்” என்ற இளைய யாதவர் பீமன் பேசுவதற்குள்ளாகவே “தன் மைந்தன் இறந்தால் பின்னர் அவர் வாழமாட்டார். அக்கணமே அம்பு தாழ்த்தி வில் வைத்து அமர்வார். அவர் வில் ஒருமுறை தாழ்ந்தால் போதும். அவர் நெஞ்சறுத்து உயிர் பறிக்க பார்த்தனால் இயலும்” என்றார்.

“ஆனால் அஸ்வத்தாமனை கொல்வது அவரைக் கொல்வதைவிட கடினம். தன் அனைத்து அம்புகளாலும் அவர் அவனுக்கு காவலிட்டிருக்கிறார்” என்று பீமன் சொன்னான். “மேலும் அர்ஜுனன் அவனை கொல்வதில்லை என்று தன் ஆசிரியருக்கு சொல்லளித்திருக்கிறான். அவன் அளித்த சொல் நம்மையும் ஆள்வதே.” சகதேவன் உரக்க “சொற்கள் அனைத்தும் காற்றில் பறக்கும் தருணம் இது. தொல்நூலின் சொற்களின்படியா அவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள்? இதோ எழும் அனல் போர்நெறியா என்ன?” என்றான். பீமன் அவனை நோக்கிய பின் “ஆம், நாம் அஸ்வத்தாமனை சூழ்ந்துகொள்வோம். இக்களத்திலேயே அவனை கொல்வோம்” என்றான்.

“அஸ்வத்தாமனை கொல்வதும் நம்மால் இயல்வதே” என்றார் இளைய யாதவர். “ஆனால் ஒரு நாழிகைக்குள் அல்ல. இன்று அந்திவரைக்கும் கூட ஆகலாம். முதலில் கௌரவர்களின் பெருவீரர்களிடமிருந்து அவரை தனியாக பிரித்துக்கொண்டு வரவேண்டும். நம் தரப்பினரின் அனைத்து வீரர்களும் அவரை சூழ்ந்துகொள்ள வேண்டும்.” பீமனை கூர்ந்து நோக்கி “ஆனால் மைந்தன் சூழ்ந்துகொள்ளப்பட்டதை அறிந்து தன் கையிலிருக்கும் எரியம்புகளுடன் துரோணர் வருவாரெனில் அது இயல்வதல்ல” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று பீமன் தளர்ந்தான். அவர் முகத்திலிருந்து விழிவிலக்கியதுமே அவர் விழிகள் தன்னுள் எழ அவருள் ஓடும் எண்ணத்தின் நுனியை சென்று தொட்டு விழிதூக்கி அவர் முகத்தை சில கணங்கள் நோக்கிய பின் “தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், யாதவரே?” என்றான்.

“அஸ்வத்தாமன் இறந்தான் எனும் செய்தி அவர் செவிக்குச் சென்று விழுந்தால் போதும். அஸ்வத்தாமன் எனும் பெயரில் அவர் மைந்தன் மட்டும் இருக்க வேண்டியதில்லை” என்றார் இளைய யாதவர். “அஸ்வத்தாமன் எனும் பெயர் பிற எவருக்குமில்லை. அது அவர் தன் மைந்தனுக்கிட்ட விந்தைப் பெயர். அது இங்கு அனைவருக்கும் தெரியும்” என்றான் பீமன். “அதே விந்தையுணர்வுடன் முன்பொரு யானைக்கும் அப்பெயரிடப்பட்டது” என்றார் இளைய யாதவர். பீமன் ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டு ஓர் அடி எடுத்து இளைய யாதவரை அணுகி “ஆம், அந்த யானையை நான் அறிவேன். விழிநோக்கு குறைந்தது. இளஅகவையிலேயே புண்பட்டு மானுடர் மேல் ஐயமும் வெறுப்பும் அடைந்தது. ஆகவே எப்போதும் எரிச்சலுடன் நிலைகொள்ளாதிருக்கும். இப்போது மாளவப் படைகளில் உள்ளது அந்த யானை. இருமுறை இக்களத்திலேயே அதை எதிர்கொண்டிருக்கிறேன்” என்றான்.

“அதை கொல்ல உங்களால் இயலுமல்லவா?” என்று இளைய யாதவர் கேட்டார். கைதூக்கி “அரை நாழிகை போதும்” என்றான் பீமன். “அதன் விழிப்பிழையை நான் நன்கு அறிவேன். அதற்கு போக்குகாட்டி எழுந்து அணுகி தலை அறைந்து பிளப்பேன்.” இளைய யாதவர் “அவ்வண்ணம் நிகழ்க! களத்தில் பார்த்தன் துரோணருடன் நின்று போரிடுகையில் அஸ்வத்தாமன் இறந்தான் எனும் செய்தியை உங்கள் தூதர் வந்து அறிவிக்கட்டும். நமது படைமுரசுகள் முழங்கட்டும். அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான் எனும் கூச்சலும் வாழ்த்தொலிகளும் எழட்டும். வெற்றிக்கூச்சல் நமதாகவும் வாழ்த்தொலிகள் கௌரவர்களுடையதாகவும் தோன்றட்டும்” என்றார். ஐயத்துடன் “அது அத்தனை எளிதென்று எண்ணுகிறீரா, யாதவரே?” என்றான் பீமன். “நாம் களத்தில் செய்த போர்சூழ்ச்சிகள் பல. அதிலொன்றே இது என துரோணர் எண்ணுவார்.”

“ஆம், நீங்களோ உங்கள் இளையோரோ சொன்னால் அவ்வண்ணமே எண்ணுவார். சொல்லவேண்டியவர் உங்கள் மூத்தவர் யுதிஷ்டிரர். அவர் சொன்னால் ஆசிரியர் நம்புவார்.” யுதிஷ்டிரர் எதிர்பாராத சீற்றத்துடன் “நான் எந்நாவால் இதுவரை பொய்யுரைத்ததில்லை” என்றார். மூச்சுவாங்க கைகளை வீசி “இல்லை, இதற்கு நான் உடன்படமாட்டேன். இது என் அறுதி முடிவு… இதற்கு எவ்வகையிலும் நான் துணைநிற்கமாட்டேன்” என்றார். அத்தருணத்தில் அதை அறிந்தவராகத் தோன்றினார். “என் நாவில் அச்சொல் எழாது… ஆம், என்னால் இயலாது.” மூச்சிரைக்க “பொய்யுரைத்து வென்ற நாட்டை ஆளவேண்டுமா நான்? என் குருதியினருக்கு அதைவிடப் பெரிய இழுக்கென ஏதுள்ளது? அது என்னால் இயலாது” என்றபோது அவர் குரல் உடைந்தது. அழுவதுபோல் முகம் நெரிபட “என்னை அவ்விழிவுக்கு செலுத்தவேண்டாம், இளையோனே” என்றார்.

பீமன் “இக்களத்தில் இதுவரை முற்றிலும் அறம்நின்றுதான் நாம் போரிட்டோமா? அறவழுவுக்கு நீங்கள் ஒப்புதலே அளிக்கவில்லையா?” என்றான். “ஒவ்வொன்றுக்கும் ஒரு நெறியை நாம் கண்டடைந்திருக்கிறோம். அவ்வண்ணமே இப்போதும் காண்போம்.” சீற்றத்துடன் கைநீட்டி “மந்தா!” என கூவி யுதிஷ்டிரர் நடுங்கினார். இளைய யாதவர் “அரசே, இன்னும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஆசிரியர் களம்படவில்லையெனில் நாம் எஞ்சப்போவதில்லை. உங்கள் இளையோர் எஞ்சமாட்டார்கள். மைந்தர்கள் வாழமாட்டார்கள். இக்களத்தில் பாண்டவர் என ஒருவரும் எஞ்சமாட்டார்கள். உங்களை நம்பி வந்த இக்குடிகள் அனைத்தும் முற்றழியும். நோக்குக!” என கை சுட்டிய இடத்தில் வானளாவ எழுந்த புகைத்தூண்கள் காட்டின் அடிமரங்கள் என நின்றிருந்தன. அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்து சொல்லமைந்து நின்றார் யுதிஷ்டிரர். “இன்னும் இவ்வண்ணம் நூறு அம்புகள் செலுத்தப்படுமெனில் இங்கு எவர் எஞ்சுவார்?” என்றார் இளைய யாதவர்.

“ஆனால் அதன் பொருட்டு பொய் சொல்வதென்றால்…” என்று சொன்ன யுதிஷ்டிரர் நெடுந்தொலைவு தன்னுள் ஓடிச் சென்று நின்று மூச்சிரைக்க முடிவெடுத்து விழிநீர் வழிய “இல்லை. நான் பொய் சொல்லப்போவதில்லை. எந்நிலையிலும் அதை சொல்லப்போவதில்லை” என்றார். பீமன் சலிப்புடன் “நீங்கள் எதை நிறுவிக்கொள்ள முயல்கிறீர், மூத்தவரே? எவருக்கு முன்?” என்றான். யுதிஷ்டிரர் கைகளை நெஞ்சில்கூப்பி உடல்குனித்து “நான் எதையும் நிறுவவில்லை. இந்தக் களத்தில் கீழ்மகனாக, சிறுமையாளனாக நின்றிருக்க எனக்கு இனி எத்தயக்கமும் இல்லை. நான் அஞ்சுவது இதை அல்ல” என்றார். “மைந்தா, நான் இந்தப் பொய்யை சொல்லப்போவதில்லை. இதை எங்கேனும் நிறுத்தியாகவேண்டும். சற்றுமுன் நகுலனிடம் பேசியபோது நான் இதை உணர்ந்தேன். வரும் வழியில் என் உள்ளம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் நெஞ்சில் கதையால் அறைபட்டதுபோல் ஓர் உண்மையை தெளிந்தேன்.”

“கீழ்மை எதுவும் தனித்து அணைவதல்ல. ஒரு கீழ்மை நம்மை சற்றே தாழ்த்துகிறது. அங்கே மேலும் கீழ்மை வந்தமைகிறது. ஒரு சிறு கீழ்மைக்கு இடமளித்தவன் அத்தனை கீழ்மைகளுக்கும் ஒப்புதல் அளிக்கிறான். அறுதியாக நாம் முற்றிலும் பிறிதொருவராக, நம்மால் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றைச் செய்தவராக மாறி நின்றிருப்போம்” என்றார் யுதிஷ்டிரர். “இதோ நின்றிருக்கிறான், என் இளையோன் நகுலன். இப்புவியில் புரவிக்கிணையாக எதையுமே கருதாதவன். தன் தெய்வத்தை புரவியில் கண்டுகொண்டவன். இனி அவனால் ஒரு புரவியை உளம்நிறைந்து தொட இயலுமா? அன்னையின் கையை மகவு என அதை இனி புரவிகள் ஏற்றுக்கொள்ளுமா? புரவியை இழந்தபின் இனி அவனுக்கு இந்தப் புவியில் அடைவதற்கு ஏதுள்ளது?”

நகுலன் இறுகிய முகத்துடன் நின்றான். மிக அப்பால் சாத்யகியின் கொம்போசை எழுந்து மன்றாடிக்கொண்டிருந்தது. இளைய யாதவர் “நான் இனி ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். பீமன் “நமக்கு வேறு வழியில்லை. அஸ்வத்தாமன் எனும் யானை இறக்கட்டும். அச்செய்தி பாண்டவர்களால் களத்தில் அறிவிக்கப்படட்டும். களத்தில் தன் முன் நிற்கும் துரோணரிடம் அதை உறுதி செய்யும் பொறுப்பை நாம் அரசருக்கே விடுவோம். அவர் இங்கு சொன்ன முடிவை அங்கு நின்றும் எடுக்கட்டும். தன் மைந்தரையும் குடியினரையும் படையினரையும் கைவிட்டு பொய் சொல்லா நெறியையே தலைக்கொள்ள அவர் முடிவெடுக்கிறார் எனில் அவ்வண்ணம் ஆகுக! இக்களத்தில் அவர் சொல்லின்பொருட்டு இறப்பது நமக்கு பெருமையே. அன்றி நம்மை காக்க வேண்டுமென்னும் பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டாரெனில் நாம் வெல்வோம், வாழ்வோம்” என்றான்.

“இது என்ன? என்னை பேரிடருக்கு முன் நிறுத்துகிறீர்கள்!” என்று யுதிஷ்டிரர் கூவினார். “ஆம் மூத்தவரே, நாங்கள் வாழ்வதும் இறப்பதும் உங்கள் சொல்லால் முடிவெடுக்கப்படட்டும். அதுவே உகந்தது” என்றான் பீமன். “ஆம், அதை செய்வோம்” என்றபின் இளைய யாதவரிடம் சகதேவன் “இனி சொற்கள் வேண்டியதில்லை, யாதவரே” என்றான்.  அர்ஜுனனிடம் “ஏறிக்கொள்க, தனஞ்ஜயா!” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் தன் தேரில் மீண்டும் ஏறிக்கொள்ள அவர் கையூன்றி தாவி அமரத்திலேறி அமர்ந்து கடிவாளத்தை எடுத்துக்கொண்டார். மெல்லிய சீழ்க்கை ஒலியால் புரவிகளை விதிர்த்து செவி பின்னடையச்செய்து பிறிதொரு சீழ்க்கை ஒலியால் அவற்றை முன்னோட்டிச் சென்றார். பீமன் யுதிஷ்டிரரிடம் “இதுவரைக்கும் முடிவுகளின் பொறுப்பு எதையும் தாங்கள் ஏற்றுக்கொண்டதில்லை, மூத்தவரே. இம்முறை அதை சூடுங்கள்” என்றபின் தன் தேரை நோக்கி சென்றான்.

நூல் இருபது – கார்கடல் – 81

ele1அர்ஜுனன் மண்ணில் விழுந்து புரண்டு கூச்சலிட அவனை நோக்கி ஓடிவந்த மருத்துவ ஏவலர் “அவர் உடலின் அனலை அணையுங்கள்… நீர்! நீர் எங்கே?” என்று கூவினார். இடப்பக்கமிருந்து நகுலனும் வலப்பக்கமிருந்து சகதேவனும் அவனை நோக்கி ஓடிவந்தனர். சகதேவன் அர்ஜுனனை அணுகி குனிந்தான். நகுலனிடம் “நீர் கொண்டுவருக! நீர்!” என்று கூச்சலிட்டார் ஏவலர். நகுலன் அக்கணமே திரும்பி அருகே நின்றிருந்த வெண்புரவியின் கழுத்தை தன் உடைவாளால் வெட்டி அதை கால்பற்றி கவிழ்த்துத் தூக்கி குடம்போலச் சரித்து செங்கொப்புளங்களுடன் உப்புமணம் கொண்ட வெம்மையுடன் ஊறிக்கொட்டிய குருதியை அர்ஜுனனின் மேல் ஊற்றினான். “நன்கு ஊற்றுக… அனைத்து இடங்களிலும்!” என்று முதிய மருத்துவர் காதரர் ஓடிவந்தபடியே கூவினார். “கவசங்கள் மேலும் ஊற்றுக… அவை அனல்கொண்டு பழுத்திருக்கும்.” வெம்மையேறிய கலத்தில் விழுந்ததுபோல் குருதி புகைந்து ஓசையிட்டது. கீழே கிடந்த குதிரைகளின் உடல்களில் அசைவிருந்தவற்றை எல்லாம் தூக்கி வெட்டி அவன் மேல் குருதிபொழியச் செய்தனர்.

அனல் அவிந்ததும் அர்ஜுனன் முனகியபடி ஏதோ சொன்னான். அவன் உடலெங்கும் மயிர் பொசுங்கியிருந்தது. அவன் தாடியின் ஒரு புறம் கருகி கன்னத்துடன் ஒட்டியிருக்க குழல் கற்றைகள் எரிந்து சுருண்டிருந்தன. இமைப்பீலிகள்கூட கருகி மறைந்திருந்தன. முகத்தோல் சிவந்து அழன்று கழுத்திலும் காதுக்குப் பின்னும் கொப்புளங்கள் எழுந்துகொண்டிருந்தன. அவனை தொடப்போன மருத்துவ உதவியாளரை நோக்கி முதிய மருத்துவர் காதரர் “கருதுக! மிகக் கருதுக! கைகள் சிவந்த தோலில் பட்டுவிடலாகாது. தோல் வழன்றுவிடக்கூடாது” என்றார். “பட்டு அல்லது இலை. வேறெதிலும் அவர் உடல் படக்கூடாது… பட்டு கொண்டுவருக… ஓடிச்சென்று பட்டு கொண்டுவருக!” இரு ஏவலர் விரைவதற்குள் சகதேவன் நிலத்தில் கொடிக்கம்பம் சரிய விழுந்து பரவியிருந்த பட்டுக்கொடியை எடுத்துவந்தான். அர்ஜுனன் உடல் அளவுக்கே அது பெரிதாக இருந்தது.

காதரர் அர்ஜுனனை மெல்லப்புரட்டி அதில் இட்டுத் தூக்கி அப்பால் கொண்டுசென்றார். அதற்குள் மருத்துவப்பொருட்களுடன் சகடம் அணுகி வந்தது. அதிலிருந்த கொப்பரையில் மூலிகைகள் சேர்த்து வற்றவைத்த குழம்புடன் கலந்த தேன்விழுது நிறைந்திருந்தது. அதை மயிற்பீலிகளால் தொட்டு அவன் முகத்திலும் கழுத்திலும் தோளிலும் பூசினர். “குருதி நன்று… தேனும் ஒரு குருதியே” என்றார் காதரர். அர்ஜுனன் தேன்குருதி விழுதால் மூடப்பட்டு கருமைகொண்டான். ஏவலர் அவன் கவசங்களைக் கழற்றி அகற்றி உள்ளிருந்த ஆடைகளை மெல்ல கிழித்தெடுத்தனர். ஆடை பொசுங்கி உடலுடன் ஒட்டியிருந்தது. காதரர் “மெல்ல, தோல் உடன் வந்துவிடலாகாது. தோலுடன் ஆடை இணைந்திருந்தால் அவ்வண்ணமே விடுக… பொருக்காக பின்னர் எழட்டும்” என்றார். கைகால்கள் நடுங்க குனிந்து நோக்கிய சகதேவனிடம் “கவசங்களிருந்தமையால் உடல் முற்றிலும் வெந்து போகாது தப்பினார்… கவசங்களை உடலுடன் இணைத்த மரவுரிப்பஞ்சுகள் காத்தன” என்றார்.

இளைய யாதவர் மெல்லிய நடையில் ஓசையிலாமல் வந்து அவன் அருகே இடையில் கைவைத்து கூர்ந்து நோக்கியபடி நின்றார். அவர் நோக்கு பட்டதனால் என அர்ஜுனனின் விழியிமைகள் அதிர்ந்தன. முகம் சொல்லுக்கெழுவதுபோல் அசைவுகொண்டது. கண்களைத் திறந்து இளைய யாதவரை சில கணங்கள் நோக்கினான். மீண்டும் இமைகள் மூடின. துடிப்பு கொண்டு திறந்தன. அவன் சகதேவனிடம் “மூத்தவர் எப்படி இருக்கிறார்?” என்றான். “அங்கர் முன்னிருந்து அவர் அம்புகள் பட்டு பின்வாங்கிவிட்டார்” என்றான் சகதேவன். “அங்கரை இப்போது எவர் எதிர்கொள்கிறார்?” என்றான் அர்ஜுனன். சகதேவன் “இப்போது அவரை எவரும் எதிர்கொள்ளவில்லை, மூத்தவரே…” என்றான்.

அவனை சொல்விளங்காததுபோல் சற்றுநேரம் பார்த்த பின் அர்ஜுனன் உரக்க “கர்ணன் நம் படைகளை…” என்றபடி கையூன்றி எழமுயன்று கையில் வலியை உணர்ந்து திரும்பப் படுத்தான். “ஆம் மூத்தவரே, கர்ணனும் துரோணரும் எந்தத் தடையுமிலாதவர்களாக நமது படைகளை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து விலகி ஓடுவதொன்றையே போரென இப்போது நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்” என்று சகதேவன் கசப்புடன் சொன்னான். “அத்தனை விசை மிக்க அம்புகளை இதுவரை எவரும் களத்தில் எழுப்பவில்லை. அவை அம்புகளே அல்ல, அனல்குவைகள், நச்சுப்பெருக்குகள். நம் படைகள் எரிந்தழிகின்றன” என்று நகுலன் சொன்னான்.

அர்ஜுனன் மெல்லிய விதிர்ப்புடன் நினைவுகூர்ந்து “நிர்மித்ரன், சர்வதன்… அவர்களிருவரும் என்ன ஆனார்கள்?” என்றான். “இருவரும் அனல் பட்டு தோல் வெந்திருக்கிறார்கள். இருவருக்கும் நினைவு மீளவில்லை. செய்தி அறிந்து அரசர் அங்கு சென்றிருக்கிறார்” என்று சகதேவன் கூறினான். “யாதவரே, என்ன நிகழ்கிறது? இன்றுடன் இப்போர் முடிவடைந்துவிடுமா?” என்று அர்ஜுனன் கேட்டான். இளைய யாதவர் “போர் முடிவுற வேண்டுமெனில் நீங்கள் ஐவரும் இறக்க வேண்டும். ஐவரும் ஐவர் மைந்தரும் இன்னும் உயிருடன்தான் எஞ்சுகிறீர்கள்” என்றார். “ஆனால் முயல்களைப்போல் படைப்பிரிவுகளுக்குப் பின்னால் வந்து பதுங்கிக்கொண்டிருக்கிறோம். உலர்ந்த நாணல் போலிருக்கிறது இப்படை. அதை எரித்தழித்தபடி வந்துகொண்டிருக்கிறார்கள். நெடும்பொழுது இங்கு இவ்வண்ணம் ஒளிந்திருக்க இயலாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

“உனது அம்புகள் என்ன ஆயின?” என்று இளைய யாதவர் கேட்டார். “நீ உன்னிடம் எஞ்சுவது என எதையும் உணரவில்லையா?” என்றார். அர்ஜுனன் விழி தாழ்த்தி “எஞ்சியது இருந்தது. அது எப்போரிலும் படைக்கலமென நான் எடுக்கவேண்டியதல்ல என்று உணர்ந்தேன்” என்றான். இளைய யாதவர் புன்னகையுடன் அவனை பார்த்துக்கொண்டிருக்க அவன் விழிகளை மூடி பெருமூச்சுவிட்டான். சகதேவன் “இனி என்ன செய்வது?” என்றான். “அவரை நாம் களத்தில் வென்றாகவேண்டும். இல்லையேல் இன்றுடன் போர் முடியக்கூடும். எப்பொழுதிலும் துரோணர் படையணிகளை கடந்துவந்து நம் ஐவரில் ஒருவரை சிறைபற்றக்கூடும். பலமுறை மூத்தவரை பிணைகொள்ள அவர் முயன்றிருக்கிறார். அவரைப் பிணைத்து திருஷ்டத்யும்னனைப்போல் தேர்க்காலில் கட்டி இழுத்தாரெனில் அதன் பின் நாம் இப்புவி முழுதையும் வென்றாலும் இழிவு குறைவதில்லை.”

இளைய யாதவர் “போருக்கென எழுந்தபின் எதிரியை களவெற்றியால் மட்டுமே கடக்க இயலும். ஒவ்வொருவரிடமும் எஞ்சியிருக்கும் ஆற்றலென்ன என்று பாருங்கள். அவற்றைக்கொண்டு அவரை எதிர்த்து நில்லுங்கள்” என்றார். சகதேவன் தலையசைத்து “எங்கள் எவரிடமும் அவரை எதிர்கொள்ள எந்த அம்பும் இல்லை. மூத்தவரிடம் இல்லாத அம்பு எதையும் நாங்கள் எப்போதுமே கொண்டிருக்கவில்லை. அவரை நம்பியே களம்புகுந்தோம்” என்றான். பின்னர் கசப்புடன் “இனி ஒன்றே செய்வதற்குள்ளது, ஆட்கொண்டு, பலி பெற்று, குடி முற்றழித்து, நெஞ்சில் ஆடும் அக்கொடுந்தெய்வத்தை எதிர்கொள்ள பூசகர் அம்முறையையே நாடுகிறார்கள். சென்று வணங்கி அதனிடமே அதை வென்று அகற்ற நாம் செய்ய வேண்டியதென்ன என்று கேட்பது. ஆசிரியர் என துரோணர் அவரே உளம் கனிந்து நமக்கு வாழ்வளித்தால் மட்டுமே இனி மீட்சி” என்றான்.

இளைய யாதவர் “அவர் அதை முன்னரே அளித்துவிட்டார். நாம் இப்போரை தொடங்குவதற்கு முன்பு அவரைப் பணிந்து அச்சொல்லை பெற்றுவிட்டோம்” என்றார். திடுக்கிட்டவனாக சகதேவன் திரும்பிப்பார்த்தான். “அவர் அன்று சொன்ன சொற்களை நினைவுகூர்க!” என்றார் இளைய யாதவர். சகதேவனின் விழிகள் மாறின. அர்ஜுனன் கையூன்றி எழுந்தமர்ந்து “ஆம், அச்சொற்களை நான் நினைவுகூர்கிறேன். ஆனால்…” என்றபின் திகைப்பில் சற்றே வாய் திறந்து உறைந்து பின்னர் மீண்டு “அஸ்வத்தாமனா?” என்றான். “ஆம், ஆனால்…” என்றபின் உரக்க “வேண்டாம், அது எளிதல்ல. ஆசிரியரின் அனைத்து ஆற்றல்களும் கொண்டவன் அவன். அதற்கப்பால் அவன் ஈட்டிக்கொண்ட சில பேரம்புகளும் அவனிடம் இருக்கக்கூடும். அவனை உடனே வெல்வது நம்மால் இயலாது” என்றான்.

“முழுமையாக அஸ்வத்தாமனை வெல்ல இப்புவியில் எவராலும் இயலாதென்று உணர்க!” என்று இளைய யாதவர் சொன்னார். “ஏனென்றால் அவனில் கூர்கொண்டிருப்பது துரோணர். துரோணரின் அலைபாய்தல்கள் இல்லாத துரோணர் அஸ்வத்தாமன். மைந்தரில் தந்தையின் பிழைகள் பெருகி எழுவதுண்டு. பிழைகளை திருத்திக்கொண்டு தந்தையின் அகம் திகழ்வதுமுண்டு.” தயக்கத்துடன் “அவ்வாறெனில்…” என்று சகதேவன் சொல்ல “மாளவர்களின் யானை ஒன்று உள்ளது… அதன் பெயர் அஸ்வத்தாமன்” என்று இளைய யாதவர் சொன்னார். அவரது திட்டத்தை புரிந்துகொண்டு இருவரும் அமைதி அடைந்தனர். சகதேவன் “அதை கொன்று அவரிடம் அஸ்வத்தாமர் இறந்துவிட்டாரென்றும் உரைக்கலாம். ஆனால் அவர் அதை ஏற்கப்போவதில்லை. களத்தில் மிக எளிய செயல் அது. ஒரு தூதனை அனுப்பி அஸ்வத்தாமன் எங்கிருக்கிறான் என்று நோக்கினால் மட்டும் போதும். ஒரு முரசொலியே போதும்” என்றான்.

இளைய யாதவர் “நமக்குத் தேவை கால்நாழிகைப் பொழுது” என்றார். “அவர் வில்தாழ்த்தி அமைந்தால் போதும்…” சகதேவன் “அதை அவரே உரைத்தார். அம்பு முனைகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி கள நிமித்தம் நோக்கும் கலை வழியாக அவர் அதை உணர்ந்திருந்ததாக சொன்னார்.” இளைய யாதவர் “அஸ்வத்தாமனை நகுலனும் சகதேவனும் சாத்யகியும் இணைந்து களத்தில் மறு எல்லை நோக்கி அகற்றிக்கொண்டு செல்க! அங்கிருந்து செய்தி வர அரை நாழிகைப்பொழுதேனும் ஆகும்” என்றார். “ஆனால்…” என்று மீண்டும் சொல்லெடுத்த சகதேவனிடம் “அவர் நகுலனையோ பார்த்தனையோ நம்ப மாட்டார். நீ சொன்னால் நம்பக்கூடும்” என்றார். பின்னர் “ஒருவேளை உன்னையும் நம்பாமலாகலாம். முழுமையாக இப்புவியில் அவர் நம்புபவர் ஒருவரே” என்றார்.

அர்ஜுனன் “மூத்தவர் பொய்யுரைக்க மாட்டார்” என்றான். சகதேவன் “ஆம், அப்பழியை நாம் அவருக்கு அளிக்கலாகாது” என்றான். இளைய யாதவர் “அவர் பொய்யுரைக்கலாகாது என்பதன் பொருட்டே அந்த யானையை கொல்கிறோம். அவர் உரைப்பது அஸ்வத்தாமனெனும் யானையின் இறப்பையே” என்றார். சகதேவன் சொல்லெடுக்க முயல இடைமறித்து “அஸ்வத்தாமன் களம்பட்டான் என்றுரைத்த பின் துரோணர் செவிகொள்ளா கீழ்ஒலியில் மாளவர்களின் யானையாகிய அஸ்வத்தாமன் என்று அவர் சேர்த்துக்கொள்ளட்டும். அது பொய்யல்ல” என்றார். சகதேவன் மெல்ல நகைத்து “பொய்யையும் மெய்யையும் அறிபவை நெடுந்தொலைவில் உள்ள தெய்வங்கள் அல்ல, ஒவ்வொருவரின் உள்ளத்தில் அமைந்தவை” என்றான்.

நகுலன் உரக்க “பிறிதொரு வழியில்லை” என்றான். இளைய யாதவர் “அஸ்வத்தாமனின் இறப்பை அவர் யுதிஷ்டிரரின் நாவிலிருந்து கேட்பாரெனில் அம்பு தாழ்த்தி தேர்த்தட்டில் அமர்வார். அவ்வாறல்ல என்று அவருக்கு செய்தி வந்து சேர அரைநாழிகைப் பொழுதாகும். அது போதும் அவரை வென்றெழுவதற்கு. இத்தருணத்தில் பார்த்தன் செய்வதற்கு பிறிதொன்றில்லை” என்றார். “சற்று முன் அவரை வெல்ல பிறிதொரு வழியை உரைத்தீர்கள், யாதவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், அவரைவிட மேலெழுந்து வெல்லும்படி சொன்னேன். அது உன்னால் இயலவில்லை. எனவே அவரைவிட கீழே இழிந்து கொல்லும்படி இப்போது சொல்லுகிறேன். கொன்றே ஆகவேண்டுமெனில் இவ்விரண்டு வழியே உள்ளது” என்றார் இளைய யாதவர்.

அர்ஜுனன் இரு கைகளையும் கோத்து முறுகப் பற்றியபடி வெறுமனே அவரை நோக்கி அமர்ந்திருந்தான். “அவரை கொன்றோமெனில் இப்போரில் வெல்வோம். இதுவரை நாம் கொன்ற அனைவரையும் அவ்வெற்றியால் நிறைவுறச் செய்வோம். இங்கு தோற்றோமெனில் பீஷ்மரை வீழ்த்தியதும் நமக்கு பழியென்றேயாகும். பாதி வழி சென்ற பின் மீள்வது முழுச் செலவின் துயரையும் இழிவையும் ஏற்றுக்கொள்வதே” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “ஆனால் அவர் என் ஆசிரியர்” என்றான். “இப்போது அவர் உன் ஆசிரியர் அல்ல. அவர் கற்பித்த அனைத்தையும் நீ திருப்பி அளித்துவிட்டாய். அவருடைய ஒரு சொல்லும் உன்னிடம் இல்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “அவரை கால் தொட்டு வணங்காமல் என் நாட்களை நான் தொடங்கியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “முதல் நாள் முதல் அம்பை எடுக்கையிலும் அவர் காலை என் அகம் வணங்கியது.”

புன்னகை விரிய “இறுதி அம்பைத் தொடுக்கையிலும் அவ்வாறே அவர் கால் உன் நெஞ்சில் நிற்கட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “பார்த்தா, இந்தக் களத்தில் அடையும் அனைத்து தத்தளிப்புகளும் வெறும் ஆணவம் என்றுணர்க! பீஷ்ம பிதாமகரை வீழ்த்திய பின்னர் நீ அஞ்சும் பழியென இப்புவியில் வேறொன்று உள்ளதா?” சகதேவன் “ஆம் மூத்தவரே, நாம் இனி எதன் முன்னும் தயங்கி நிற்க வேண்டியதில்லை. உடல் பொசுங்கி வெறும் தசைக்குவியலென இக்களம் நிறைத்து படுத்திருக்கும் நமது படைவீரர்களின் பொருட்டே நாம் இனி எழவேண்டும். இவர்கள் அனைவரும் நம் அம்புகளையும் ஆற்றலையும் நம்பி இங்கு வந்தவர்கள். அவர்களுக்கு நாம் செய்யும் கடன் ஒன்றுண்டு” என்றான்.

அர்ஜுனன் எரிச்சலுடன் கைவீசி “என்ன சொல்கிறாய்? மூத்தவர் இதற்கு ஒப்புவாரா?” என்றான். “அவர் ஒப்புவார்” என்று சகதேவன் சொன்னான். “என்ன சொல்கிறாய்?” என்று பற்களை இறுக்கியபடி அர்ஜுனன் கேட்டான். “இதுவரை எதற்கும் அவர் ஒப்புதல் அளிக்காமலிருந்ததில்லை. அறுதியாக அவரை ஆளும் ஒன்றே பிற அனைத்தையும் வென்று நிற்கிறது. பல்லாயிரம் முறை துணியால் சுற்றப்பட்டிருந்தாலும் உள்ளிருக்கும் கூர்வாள் ஒருகணத்தில் வெளிவந்துவிடுமென்று ஒரு காவியச்சொல் உள்ளது” என்றான் சகதேவன். அர்ஜுனன் “இதை நீயே அவரிடம் சொல்” என்றான். “நான் சொல்கிறேன். என் சொற்களை அவர் செவிகொள்வார்” என்ற பின் சகதேவன் புன்னகைத்து “அவருக்கு ஒவ்வாதனவற்றை நான் சொன்னால் பிறிதொருவருடன் உசாவுவார்” என்றான்.

“அவரே இங்கு வந்துகொண்டிருக்கிறார்” என்று இளைய யாதவர் சொன்னார். “செய்தி வந்ததா?” என்று சகதேவன் கேட்டான். “அவர் தன் மைந்தரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். துரோணரால் உடல் வெந்து கிடக்கும் தன் மைந்தரை பார்த்த பின் அவர் பிறிதெங்கும் செல்லமாட்டார். சினமும் அழுகையுமாக இங்குதான் வருவார்” என்று இளைய யாதவர் சொன்னார். தொலைவில் தேரின் ஓசை கேட்டது. சகதேவன் புன்னகையுடன் “ஆம், இங்குதான் வந்துகொண்டிருக்கிறார். தேரோசையிலேயே அவருடைய சீற்றம் தெரிகிறது” என்றான்.

யுதிஷ்டிரர் குதித்து இறங்கி ஓடி அவர்களை நோக்கி வந்தார். “யாதவனே, நாம் என்ன செய்யப்போகிறோம்? இவ்வண்ணம் நம் மைந்தரை அனலில் வேகவிடப்போகிறோமா? நாங்கள் வில்லெடுத்தது எங்களுக்காக அல்ல, உனக்காக. உன் ஆற்றலை நம்பியே இங்கே போர்புரிகிறோம். எங்களை கைவிட்டுவிட்டாயா? எங்கள் தோல்வியிலிருந்து எழுந்து நீ எங்கே செல்லமுடியும்?” என்றார். அர்ஜுனனை அணுகி “பார்த்தா, அரிய அம்புகள் கொண்டிருக்கிறாய் என்று உன்னை நம்பினேன். நீ அருகிருந்தும் என் மைந்தர் அங்கே வெந்துகிடக்கிறார்கள். நீ இங்கே கிடக்கிறாய். நான் நம்பியவர்கள் எல்லாம் என்னை கைவிட்டால் எங்கு செல்வேன்? இந்தக் களத்தில் நான் அழிந்தால் தாழ்வில்லை, என் மைந்தர்கள் வெந்துகிடக்கிறார்கள். என்னால் என் மைந்தர் அழியவிருக்கிறார்கள்” என்றார்.

இளைய யாதவர் “அரசே, நாம் துரோணரை கொன்றாகவேண்டும்” என்றார். “ஆம், கொன்றே ஆகவேண்டும். இன்று. இன்னும் ஒரு நாழிகைக்குள். இனி அவருடைய அம்பால் நம் படைகள் உருகி அழியக்கூடாது. நம் மைந்தர்கள் இறந்துவிடக்கூடாது” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அரசே, அவரை வெல்ல உங்கள் இளையவரால் மட்டுமே இயலும். ஆகவே இவரை களம்கொண்டு சென்றேன். இவர் ஆவநாழியிலுள்ள அனைத்து அம்புகளும் ஒழிந்தன. இவரால் அவரை எதிர்கொள்ள முடியவில்லை” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று யுதிஷ்டிரர் தளர்ந்தார். “அவரை எதிர்கொள்ள முடியாது. ஆசிரியர் கடல், மாணவர் அலைகள் என்பார்கள்.” இளைய யாதவர் “ஆசிரியரை மாணவர் வெல்லும் தருணங்கள் உண்டு” என்றார். “ஆசிரியரை கடந்துசெல்லவேண்டும். பெருமையால், இயலாதெனின் சிறுமையால்.” யுதிஷ்டிரர் “எவ்வண்ணமேனும் அவரை கொன்றாகவேண்டும்… உடனே கொன்றாகவேண்டும்” என்றார். “உங்கள் இளையவரால் அவரை மீறி மேலெழ இயலவில்லை. கீழிறங்கி வெல்லும் வழி ஒன்று உள்ளது. அதை சொல்லிக்கொண்டிருந்தேன்.”

“என்ன?” என குரல் தாழ விழி சுருங்க யுதிஷ்டிரர் கேட்டார். “அரசே, நீங்கள் நினைவுகூர்வீர்கள் என நினைக்கிறேன். நாம் போருக்கு முன் சென்று பிதாமகரையும் ஆசிரியர்களையும் வணங்கி சொல்கொண்டோம். அப்போது ஆசிரியர் உரைத்தது என்ன?” யுதிஷ்டிரர் சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “யானை தன் உணவை நிறுத்திக்கொள்ளும் ஒரு தருணம் உண்டு என்றார் ஆசிரியர்” என்றார். “ஆம், யானை தன் உணவை நிறுத்திக்கொள்ளும் தருணம்… அது எப்போது?” அருகே நின்றிருந்த நகுலன் “தீரமுடியாத நோய் கொள்ளும்போது. அல்லது தாளவொண்ணா துயர் அணுகும்போது” என்றான். “அதையே அவரை வெல்லும் வழி என கொள்ளலாம். அவர் தன் போரை தானே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றால் அவர் நோயுறவேண்டும். அது நம்மால் இயலாது. துயருறவேண்டும். அது நம்மால் இயலும்.”

“எவ்வண்ணம்?” என யுதிஷ்டிரர் கேட்டார். “நீங்கள் உள்ளூர உணர்ந்துவிட்டீர்கள், அரசே” என்றார் இளைய யாதவர். “அவரை பெருந்துயர் கொள்ளச்செய்வது ஒன்றே.” யுதிஷ்டிரர் ”ஆனால் நம்மால் அஸ்வத்தாமனை எளிதில் வெல்லமுடியாது…” என்றார். “வெல்லவே முடியாதென்றே கொள்க!” என்றார் இளைய யாதவர். “ஆகவே நாம் பிறிதொரு அஸ்வத்தாமனை கொல்வோம். அவன் இறப்பை அறிவிப்போம்.” யுதிஷ்டிரர் “யார்?” என்றார். “மாளவர்களின் யானை” என்றார் இளைய யாதவர். “அது இத்தருணத்திற்காகவே அப்பெயருடன் பிறந்து வளர்ந்து இக்களம் வரை வந்துள்ளது.” யுதிஷ்டிரர் “ஆனால்…” என்றார். “நீங்கள் அந்த யானையின் இறப்பை களத்தில் அறிவிக்கவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “தன் மைந்தனின் இறப்பு அது என துரோணர் எண்ணினால் அது நம் பிழை அல்ல.” யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “அது கருதாப் பிழை என்றே கருதப்படும். பழி என்றல்ல.”

“ஆற்றுவதை அறிந்திருப்பதே பழியை அளிப்பது, எனக்கு சொல்நெறியை கற்பிக்கவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “வேறு வழியில்லை மூத்தவரே, நம் படைகள் பொசுங்கி அழிகின்றன. இன்னும் சற்றுபொழுதில் நாம் எஞ்சுவோமா என்றே தெரியவில்லை” என்றான் சகதேவன். நகுலன் அருகணைந்து “எங்களுக்காக அல்ல, நமது படைகளுக்காக, மைந்தருக்காக” என்றான். யுதிஷ்டிரர் எண்ணியிராக் கணத்தில் “நான் சொல்கிறேன்” என்றார். சகதேவன் சற்று திகைத்து பின் “அதனால் உங்கள் உள்ளம் எத்தனை துயருறும் என அறிவோம்” என்றான். “இல்லை, என் உள்ளம் சற்றும் துயருறவில்லை. உண்மையில் துயருக்காகவும் ஒவ்வாமைக்காகவும் நான் என் உள்ளத்தையே கூர்ந்து நோக்கினேன். அது குளிர்ந்து அசைவிழந்து கிடக்கிறது. துரோணர் களம்படுவார் என்றால் நாம் தப்பிவிடக்கூடும் என்னும் எண்ணம் ஆறுதலையே அளிக்கிறது” என்றார் யுதிஷ்டிரர்.

பின்னர் இளைய யாதவரிடம் “நான் அனைத்தையும் இழந்துவிட்டேனா, யாதவனே?” என்றார். “சில திரைகளை கிழித்துக்கொண்டு எழுகிறீர்கள்” என்றார் இளைய யாதவர். “நான் நெறிபிழைப்பதில் மகிழ்வுறுபவனாகவும் ஆகக்கூடும்…” என்றார் யுதிஷ்டிரர். “அது நிகழாது…” என்று இளைய யாதவர் சொன்னார். “கடந்துசெல்வதெப்படி என்று கற்றுக்கொள்வீர்கள். அரசே, இப்புவியில் மானுடர் கற்றுக்கொள்ளும் அனைத்து அறிதல்களையும் கடந்துசெல்லும் வழி என்னும் ஒற்றை சொல்லில் வகுத்துவிடலாம்.”

“ஆம்” என யுதிஷ்டிரர் நீள்மூச்செறிந்தார். “நாம் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம்.” நகுலனிடம் திரும்பி “உன் உளமென்ன, இளையோனே?” என்றார். “மூத்தவரே, இனி என்னால் உங்கள் சங்கையே அறுக்கமுடியும். இளைய யாதவரையே முதுகில் குத்தி வீழ்த்த முடியும். இக்களத்தில் இனி நான் செய்யக்கூடாதது என ஏதுமில்லை” என நகுலன் சொன்னான். முகம்சுளிக்க வலிப்பென கழுத்துத் தசைகள் இழுபட “நான் இப்பிறவியில் இயற்றக்கூடிய கீழ்மையின் எல்லையை சற்றுமுன் சென்றடைந்தேன். நின்றிருந்த புரவியின் கழுத்தை வெட்டி அதன் குருதியால் மூத்தவரின் உடல் அனலை ஆற்றினேன். அஸ்வமேதம் என ஏன் வைத்தார்கள் என்று இன்று புரிகிறது. தான் ஊரும் பட்டத்துப்புரவியை வெட்டி தெய்வங்களுக்கு அளிப்பவன் இங்குள்ள அனைத்தையும் கடந்துசெல்கிறான். பின்னர் அவன் இங்கே அஞ்சுவதற்கும் இழப்பதற்கும் ஏதுமில்லை” என்ற நகுலன் வாயில் ஊறிய மிச்சிலை துப்பிய பின் திரும்பிச்சென்றான்.

நூல் இருபது – கார்கடல் – 80

ele1ஆவக்காவலரை நோக்கி “எனது ஆவநாழியை…” என்று சொன்னபடி திரும்பிய அர்ஜுனன் தன் கால்களுக்குக் கீழே நிலம் இழுபட்டதுபோல் உணர்ந்து மண்ணை நோக்கி சென்றான். நெடுந்தொலைவு கீழிறங்கிக்கொண்டே இருக்கும் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. மண் சுவர்போல் எழுந்துவந்து அவன் முகத்தை அறைந்தது. ஒருகணம் நினைவிழந்திருக்கக்கூடும். இளைய யாதவரும் சகதேவனும் சேர்ந்து அவனை மெல்ல தூக்கி அமரச்செய்வதை அவன் உணர்ந்தான். நகுலன் கொண்டுவந்த நீரை அவன் முகத்தில் அள்ளி வீசினார் இளைய யாதவர். அவன் விழித்துக்கொண்டு “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என்றபடி எழுந்தான். சகதேவன் “துயில்நீப்பு” என்றான்.

இளைய யாதவர் “ஆம், துயில் இல்லாதவனுக்கும் துயில்நீப்பின் களைப்பு உண்டு” என்றார். அவர் முகத்திலிருந்த புன்னகையை திடுக்கிட்டு ஒருகணம் திரும்பிப்பார்த்த பின் அர்ஜுனன் உரக்க நகைத்தான். “அந்த அம்பின் விசை உன் உடலில் இன்னமும் எஞ்சியிருக்கிறது. இங்குள்ள அனைவரையும் அது அதிரச்செய்திருக்கும்” என்று இளைய யாதவர் சொன்னார். “நம் உடல் நீர்ப்பை. உள்ளே நீர் நலுங்கிக்கொண்டே இருக்கிறது. மண்ணில் பரவவும் விண்ணில் திரளவும் விழைகிறது. அந்த அம்பு நம் நீர்மையை நிலையழியச் செய்துவிட்டது.”

அர்ஜுனன் கைகளை நீட்டி தலைக்குமேல் குவித்து முதுகெலும்பை நிமிர்த்தியபடி “எனது ஆவநாழியை நிரப்புக!” என்றான். “மீண்டும் அவரை எதிர்கொள்ளச் செல்கிறாயா?” என்று இளைய யாதவர் கேட்டார். “ஆம், அவரை எதிர்கொண்டே ஆகவேண்டும். தனது ஆவநாழியிலிருந்து அவர் விசை மிக்க அம்புகளை எடுத்துக்கொண்டே இருக்கிறார். இன்று அவரையும் அங்கரையும் எதிர்கொள்ளாது இங்கு நாம் போர் நிகழ்த்தவே இயலாது” என்றான் அர்ஜுனன். “அவர் முன் எவரும் தனித்துச் செல்லவேண்டாம். மைந்தர்கள் அவரிடமிருந்து அகன்றே நிற்கட்டும்” என்று சகதேவன் சொன்னான். “அவர் இன்று மைந்தர்கொலை செய்யும் உளநிலையில் இருக்கிறார்.”

அப்பாலிருந்து செய்திஏவலன் பாய்ந்து வந்து புரவியிலிருந்து இறங்கி அணுகி அர்ஜுனனை வணங்கி “ஆசிரியர் பேரழிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார், இளவரசே. விசை மிக்க புதிய அம்புகளை அவர் எடுக்கிறார். நாகத்திரள்போல் நூறு புகைச்சுருள்களுடன் வரும் காலாஸ்திரம். அனல் கக்கி வரும் ஆக்னேயாஸ்திரம். சுழல்களை உருவாக்கியபடி வரும் வாருணாஸ்திரம்…” என்று அவன் சொன்னான். “இடியோசைபோல் வெடிப்பவை, மண்ணிலும் காற்றிலும் அனல் பரப்புபவை. சற்று முன் மூன்று அம்புகளை அவர் அறைந்தார். நமது படைவீரர்கள் அனைவரும் நிலநடுக்கம் உருவானதைப்போல் உணர்ந்தனர். பலர் உடல் நடுக்குற்று கீழே விழுந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வாயுமிழ்ந்து இன்னமும் விழி ஒருமை கூடாதவர்களாக கிடக்கிறார்கள்.”

அர்ஜுனன் “இப்போது அவரை யார் எதிர்கொள்கிறார்கள்?” என்றான். “இளவரசர்கள் சுருதகீர்த்தியும் சர்வதரும் இருபுறத்திலாக நின்று அவரை தாக்கினார்கள். இப்போது அவர் முன் எவருமில்லை” என்று செய்திக்காவலன் சொன்னான். “செல்வோம்” என்றபடி அர்ஜுனன் தன் தேரை நோக்கி சென்றான். புதிய புரவிகளுடன் வந்து நின்ற தேர்க்காவலன் அவனை தலைவணங்கி மேலேறுவதற்கான படியை வைத்தான். அர்ஜுனன் அதில் தாவி ஏறிக்கொண்டதும் அருகணைந்து கடிவாளக்கற்றையை இடக்கையால் பற்றி வலக்கையால் அமரத்தின் இருக்கையை தொட்டபடி இளைய யாதவர் கேட்டார் “அவரிடம் போர்புரிவதெப்படி என்று அறிவாயா?” அர்ஜுனன் “அவருக்குள் நுழைவதற்கான சிறு பழுது ஒன்றை சென்ற முறை கண்டேன் என்று நினைக்கிறேன்” என்றான். “ஆம், நமது எதிரியை நாம் வெல்வது நாம் அறிந்த அவருடைய சிறுமை ஒன்றினூடாகவே. ஒவ்வொரு சிறுமையும் ஒரு விரிசல். ஒரு திறந்திட்ட வாயில். ஒரு சிறுமையினூடாக பல்லாயிரம் சிறுமைகளை அம்பெய்து அம்பெய்து கண்டுபிடிக்க முடியும்.”

“வளைதேடும் நாகங்கள்போல் நமது சித்தம் எதிரியின் ஆளுமையில் முட்டி முட்டித் தவிக்கிறது. பல்லாயிரம் அம்புகள் சென்று அறைந்து வீணாகி உதிர்கையில் ஒன்று எப்படியோ உள்ளே செல்கிறது. அது அறிந்த வழியை பிறிதொன்று சென்று பெரிதாக்குகிறது. வழிகள் திறக்க திறக்க அவர் வீழ்ச்சியடைகிறார். நீ முதல் நுழைவுக்கான வழியை மட்டுமே கண்டடைந்திருக்கிறாய். அது அவரை நீ எதிர்த்து நிற்பதற்கான ஓர் அடித்தளம் மட்டுமே. அதனூடாக களத்தில் அவர் மேல் ஓர் அம்பை நீ செலுத்த இயலும்” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “ஆம்” என்றான். இளைய யாதவர் “பார்த்தா, ஒருவரை நீ வெல்கிறாய் எனில் அதன் பொருள் அவரைவிட ஒரு அணுவளவேனும் நீ முழுமையாக மேலெழுந்திருக்கிறாய் என்பதே. உன் ஆசிரியரைவிட நீ உயர்ந்தாலொழிய இக்களத்தில் அவரை கொல்ல இயலாது” என்றார்.

அர்ஜுனன் “நான் அவரைவிட சிறியவன். அவரது காலடியில் அமர்ந்து அவர் கொடையென அளித்தவற்றைப் பெற்று எழுந்தவன். ஆகவே ஒரு நிலையிலும் அவரை என்னால் கடந்து எழ இயலாது. இக்களத்தில் நான் உணர்ந்தது அதைத்தான். என் அம்புகள் அதனாலேயே அவர் அம்புகளுக்கு முன் மடிந்தன” என்றான். இளைய யாதவர் புன்னகை விரிய “ஆனால் நீ எங்கு அவரைவிட மேலானவன் ஆனாய் என்று அவர் அறிவார்” என்றார். அர்ஜுனன் விழிகள் சுருங்கி கூர்ந்து நோக்க “அதைத்தான் அவர் தன் வாயால் சொன்னார். தன்னிடமிருந்து கிளம்பிய அந்த மாணவனை அவர் அறிவார். ஆனால் அதற்குப் பின்னர் மேலெழுந்து நீ பெற்றதென்ன எனும் திகைப்பு அவரில் உள்ளது. அதை இக்களத்தில் காட்டு என்று அறைகூவினார். அது என்ன என்று அறியும் தவிப்பே அச்சொல்லில் உள்ளது” என்றார் இளைய யாதவர்.

“யாதவரே, நான் அவரிடமிருந்து எழுந்து விலகி அலைந்து தவம்புரிந்து பெற்றவை பல உண்டு. அவரிடமிருந்து நான் உளவிலக்கம் கொண்டதே மேலும் கற்கும்பொருட்டு ஊழ் என்னை உந்தியதால்தான் என எண்ணியதுமுண்டு. ஆனால் இன்று அறிகிறேன், எவையுமே அவரிலிருந்து அகன்று நான் அறிந்தவை அல்ல. அவர் அளித்த அடித்தளத்தின் மீது நான் அமைத்துக்கொண்டவையே அனைத்தும். மூவிழியனின் மலையுச்சியில் நான் பெற்ற பாசுபதம்கூட” என்றான். “உன்னில் ஒரு துளியேனும் எஞ்சுவதென ஏதுமில்லையா?” என்றார் இளைய யாதவர். “எதையும் என்னால் உணர இயலவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “எனில் செல்க! களமெழுந்து அவருடன் பொருதுகையில் அவர் அளித்த ஒவ்வொன்றையும் திருப்பிக்கொடு. அவரை நோக்கி எழும் ஒவ்வொரு அம்பும் முன்னர் உனக்கு அவர் அளித்ததாக இருக்கட்டும். பிறிதொரு முறை அதை நீ கையிலெடுக்கக் கூடாது. ஆசிரியரே இதோ இதை உங்களுக்கு அளிக்கிறேன். இதை மீளப் பெற்றுக்கொண்டு என்னை வாழ்த்துக என்று உரைத்து அம்பு தொடு.”

“ஒவ்வொரு அம்பாக செல்லட்டும். எய்து எய்து உன் ஆவநாழி முற்றொழியட்டும். அவர் அளிக்காத ஒரு அம்பு உன்னிடம் எஞ்சுமெனில் அதைக்கொண்டு நீ அவரை வெல்ல இயலும்” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “அதன் பின் என்னிடம் எஞ்சுவதென்ன? அவர் அளித்தவற்றால் நிறைந்திருப்பவன் நான்” என்றான். “அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களின் கொடையால் நிறைந்தவர்களே. ஆயினும் ஆசிரியர் அளிக்காத ஒன்றிலிருந்தே அவர்கள் தன்னைக் கண்டு எழ இயலும். அதனூடாகவே முழுமை கொள்ளவும் கூடும். இது தவமென்று எண்ணுக!” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் தலைவணங்கி தன் காண்டீபத்தை எடுத்துக்கொண்டான்.

ele1அர்ஜுனன் தேரில் சென்றுகொண்டிருக்கையிலேயே எதிரில் வந்த செய்திக்காவலன் “இளவரசே, துரோணர் பேரழிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். பன்னிரு மாயஅம்புகளால் அவர் களத்தை அறைந்தார். விண்ணிலிருந்து மலைகள் என பாறைகள் நம் படைகள் மேல் விழுந்தன. மண் அதிர்ந்து பெரும்குழியென்றாகி அங்கே நீர் பெருகிக்கொண்டிருக்கிறது. இறந்த உடல்கள் அனைத்தும் உடல் அதிர்ந்து செவிகள் வெடித்து குருதி வழிய முகம் வலித்து கிடக்கின்றன. அவருக்கு எதிர் நிற்க இயலாமல் நம் வீரர்கள் அனைவரும் பின்னடைந்துவிட்டனர். இப்போது வில்லவர் எவராலும் எதிர்க்கப்படாமல் அவர் களம் நின்று பொருதிக்கொண்டிருக்கிறார்” என்று கூவினான். “திருஷ்டத்யும்னர் என்ன செய்கிறார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அவர் இன்னும் எழவில்லை. உடலில் ஆழ்ந்த புண்கள் உள்ளன. கட்டுகள் போட்டு அகிபீனா அளித்து படுக்க வைத்திருக்கிறார்கள். நம் இளவரசர்கள் சுருதகீர்த்தியும் சுதசோமரும் சர்வதரும் புண்பட்டு பின் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். சாத்யகி சற்று முன்னர் களத்தில் புண்பட்டு வீழ்ந்தார். சிகண்டி தன்னினைவின்றி மருத்துவர் நடுவே கிடக்கிறார்” என்றான் செய்திக்காவலன்.

இளைய யாதவர் “இளையவர் மீண்டும் எப்போது அவரிடம் போருக்கு சென்றார்கள்?” என்றார். “களமுகப்பில் எவருமில்லை என்று கண்டு சர்வதரும் சுதசோமரும் சுருதசேனரும் சேர்ந்து அவரை எதிர்த்தனர். அரைநாழிகை பொழுதுகூட அவர் முன் நிற்க இயலவில்லை. அவர் எடுத்த மாய அம்பினால் யானை துதிக்கையால் தூக்கிச் சுழற்றப்பட்டதுபோல் சர்வதர் சென்று பின்னணியிலெங்கோ விழுந்தார். இரு கைகளாலும் தலையையும் காதுகளையும் அழுந்த பற்றிக்கொண்டு சுதசோமர் தேர்த்தட்டில் விழுந்து தன் தலையை ஓங்கி அறைந்துகொண்டு மயங்கினார். சுருதசேனர் வாயிலும் மூக்கிலும் செவியிலும் குருதி வழிய தேரிலிருந்து தாவி கீழே விழுந்து நினைவழிந்தார்” என்று செய்திக்காவலன் சொன்னான்.

இளைய யாதவரை நோக்கி “செல்க! முன்செல்க!” என்று வெறியுடன் அர்ஜுனன் கூவினான். “உன் போர்த்திட்டத்தை வகுத்துவிட்டாயா?” என்று இளைய யாதவர் கேட்டார். “எனது திட்டம் ஒன்றே. யாதவரே, நான் என் எஞ்சும் துளியை அவர் முன் வைக்கப்போகிறேன். அது என் ஆணவம் எனில் ஆணவம். நஞ்செனில் நஞ்சு. கீழ்மை எனில் கீழ்மை. அவர் காலடியை விழிசூடியே இன்றும் புலரி எழுகிறேன். ஆனால் அவரை விஞ்சிச்சென்றுவிட வேண்டுமென்ற ஆணவத்தாலேயே அவரிலிருந்து விலகி எழுந்தேன். அத்துளியை பெருக்கிக்கொள்ள வேண்டுமென்பதனாலேயே மலைகளிலும் பாலை நிலங்களிலும் அலைந்தேன். அவருக்கு மேல் என அடுக்கி வைக்கவே அரிய அம்புகளை பெற்றேன். அந்த ஆணவத்தைக்கொண்டு அவர் முன் நிறுத்துகிறேன். அது ஒன்றே என்னில் எஞ்சி நிற்பது” என்று அர்ஜுனன் கூவினான்.

இரு புறத்திலும் நகுலனும் சகதேவனும் தேரில் அவனை பின்தொடர்ந்து வந்தனர். சகதேவன் “இளையவரே, அவர் அரிய அம்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடன் தாங்கள் தனித்துப் போரிட வேண்டாம். தங்கள் சகடக்காவலென நாங்களிருவரும் வருகிறோம்” என்றான். அர்ஜுனன் “வருக!” என்று கைகாட்டிவிட்டு படைகளினூடாகச் சென்றான். ஆனால் சற்று நேரத்திலேயே முரசுகள் ஓசையிடத் தொடங்கின. “அங்கரை எதிர்கொள்க! பீமசேனர் தனித்திருக்கிறார்! அங்கரை எதிர்கொள்ள நம் படைகள் எழுக!” அர்ஜுனன் திரும்பி சகதேவனிடம் “நீங்களிருவரும் சென்று மூத்தவருக்கு துணை நில்லுங்கள். அங்கரால் அவர் வீழக்கூடாது” என்றான். நகுலன் “நாங்கள்…” என்று ஏதோ சொல்ல “இது என் ஆணை. செல்க! சென்று அவருக்கு துணை நில்லுங்கள்!” என்றான் அர்ஜுனன்.

சகதேவன் “சகடக்காவலர்கள் இருவரும் இன்றி தாங்கள் ஆசிரியர் முன் சென்று நிற்பது நன்றல்ல. தாங்கள் தனியர். இருபுறத்திலிருந்தும் சுழன்று வந்து தாக்கும் அம்புகளை அவர் கொண்டிருக்கிறார்” என்றான். அர்ஜுனன் “நான் எஞ்சியுள்ள இளமைந்தரை கூட்டிச்செல்கிறேன். செல்க!” என்றான். தலைவணங்கி நகுலனும் சகதேவனும் சென்றபின் அர்ஜுனனின் தேர் முன்னால் சென்றது. அர்ஜுனன் தேரில் நின்றபடியே கையசைத்து தன்னைத் தொடர்ந்து வந்த ஆணைக்காவலரிடம் “எஞ்சும் மைந்தர்கள் என்னுடன் எழுக! இருவர் உடன் எனக்கு ஆவக்காவலராக வருக!” என்றான். ஏவலர்கள் அவனிடமிருந்து விலகிச்சென்றனர். மிகத்தொலைவில் வெண்குடைபோல் புகை எழுந்து விண்ணில் கவிந்தது. பின் அது காற்றால் கரைத்து உருவழித்து அள்ளிச்செல்லப்பட்டது. அதன் பின்னரே செவி நடுக்குறும் அதன் வெடியோசை எழுந்தது. ஒருகணம் கழித்து வெட்டுண்ட கால் ஒன்று பெருந்தொடையுடன் வந்து அவர்களின் தேர் மகுடத்தில் விழுந்து குருதிச்சேற்றில் வழுக்கி கீழே உதிர்ந்தது.

அர்ஜுனன் “போரில் இதுகாறும் எவரும் இத்தகைய அம்புகளை எடுத்ததில்லை… இது மானுடருடன் போரிடவேண்டிய அம்பு அல்ல” என்றான். இளைய யாதவர் “தோளிலும் நாணிலும் நம்பிக்கை இழக்கும்போது இத்தகைய பேரம்புகள் எழுந்து வருகின்றன. பார்த்தா, அவரைக் கொல்லும் அம்பு உன் தோளிலிருந்து மட்டுமே விசையேற்றுக் கொண்டிருக்கவேண்டும்” என்றார். ஆணைக்காவலன் விரைந்தோடி வந்து “அரசமைந்தர்கள் நிர்மித்ரரும் சர்வதரும் மட்டுமே இங்கிருக்கிறார்கள். சதானீகர் பீமசேனருடன் துணை நின்று போரிடுகிறார். பிரதிவிந்தியர் தந்தையுடன் நின்றிருக்கிறார்” என்றான். “எனில் அவர்கள் வரட்டும். அவர்கள் உடன் வருக!” என்றபடி அர்ஜுனன் மேலும் விரைவைக் கூட்டி முன்னால் சென்றான். “சர்வதர் களைத்திருக்கிறார்… புண்பட்டிருக்கிறார்” என்றான் ஆணைக்காவலன். “வேறு வழியில்லை” என்றான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் தேர் துரோணரை அணுகியபோது பின்னணியில் இருந்த படைப்பெருக்கிலிருந்து விசைகொண்ட தேர்களில் நிர்மித்ரனும் சர்வதனும் வந்து அவனுடன் இணைந்துகொண்டனர். “இருவரும் என் இரு பக்கங்களையும் காத்துக்கொள்க! நான் அறியாத அம்புகள் எவையேனும் இரு திசைகளிலுமிருந்து என்னை அணுகுமென்றால் அவற்றை அறைந்து வீழ்த்துக! முன்னால் வரவேண்டாம். ஆசிரியரின் அம்பு எல்லைக்குள் நுழையவேண்டாம்” என்று அர்ஜுனன் ஆணையிட்டான். அம்புகளை விடாது தொடுத்தபடி சென்று துரோணரின் போர்வளையத்திற்குள் நுழைந்தான். அவனுடைய சகட ஓசை உரக்க எழ அஞ்சி கூச்சலிட்டு சிதறி ஓடிக்கொண்டிருந்த பாண்டவ வீரர்கள் கூச்சலிட்டனர்.

அப்பால் நாண் துடிக்க அம்புகளை செலுத்தி பாண்டவப் படையை கொன்று வீழ்த்திக்கொண்டிருந்த துரோணர் அதை கேட்டார். திரும்பி உரக்க நகைத்தபடி “மீண்டு வந்துள்ளாயா? எடு உன் அரிய அம்புகளை. எடு, மூடா” என்று கூவினார். கைசுட்டி தன் முன் கருகி புகைந்து கொண்டிருந்த களத்தை காட்டி “இதைப்போல் என் களத்தை எரியவைக்கும் அம்பிருந்தால் எடு!” என்று கூவினார். அவரைச் சூழ்ந்து கிடந்த மானுட உடல்கள் ஒன்றுகூட முழுவடிவில் இல்லையென்பதை அர்ஜுனன் கண்டான். ஆயிரம் வாள்களால் கொத்தி துண்டுகளாக்கி வானிலிருந்து அள்ளி வீசப்பட்டதுபோல் கிடந்தன கைகளும் கால்களும் நெஞ்சுகளும் தலைகளும். அவன் உடல் குளிர்ந்து செயலழிந்தது. உள்ளம் விசைகொண்டு எழுந்து உடற்தசைகளை அறைந்தது. அவன் விலங்குபோல வெறிக்கூச்சலிட்டான்.

ஆவநாழியில் கைவிட்டெடுத்த முதல் அம்பை அர்ஜுனன் நினைவுகூர்ந்தான். கிருபரின் பயிற்சிநிலைக்கு படைக்கலப் பூசனை நாளில் வந்த துரோணரை கால்தொட்டு வணங்கி எழுந்தபோது அவர் புன்னகையுடன் குனிந்து அவனுக்கு அளித்த முதல் அம்பு அது. அவன் அதன் முனையை தொடப்போக “அம்புமுனையை விழிகளாலேயே தொடவேண்டும்” என்று அவர் சொன்னார். அர்ஜுனன் அம்பை நாணில் பொருத்தி இழுத்துச் சிரித்தபடி சுழன்று மூன்று திசையிலும் இலக்குகளுக்காக தேடினான். அங்கு நின்றிருந்த குந்தியும் திருதராஷ்டிரரும் பீஷ்மரும் படைத்தலைவர்களும் உரக்க நகைத்து அஞ்சுவதுபோல் கைகாட்டி பின்னடைந்தனர். திருதராஷ்டிரர் “குறி பார்க்கிறானா? மைந்தா, இதோ என்னை குறி பார். என் நெஞ்சுக்கு வருக உன் அம்பு!” என்று சிரித்தபடி தலையை அசைத்தார்.

அர்ஜுனன் திரும்பி பீஷ்மரை நோக்கி அம்பை ஏவினான். கிளை உலுக்கி எழுந்து செல்லும் சிறிய பறவைபோல் அது அவரை நோக்கி செல்ல அவர் சிரித்தபடி வலக்கையால் அந்த அம்பை காற்றிலேயே பற்றி கையிலெடுத்தார். “நீங்கள் அளித்த முதல் அம்பு, பெரும்பாலும் இலக்கடைந்துவிட்டது, துரோணரே” என்றார். “தந்தை நெஞ்சில் உதைக்காமல் தாவ இயலுமா?” என்றார் கிருபர். துரோணர் உரக்க நகைத்து இன்னொரு அம்பை அவனிடம் கொடுத்து “இது இன்னும் பெரியது… இதை ஏவுக!” என்றார். அவ்விரண்டாவது அம்பை அவன் துரோணரை நோக்கி செலுத்த அவர் அதை கையால் பற்றினார். கிருபர் புன்னகையுடன் “நன்று. ஆசிரியரின் நெஞ்சை நோக்கி முதல் அம்பை எய்பவன் அவரைக் கடந்து செல்வான்” என்றார்.

அந்த இரண்டாவது அம்பு கையில் திகழ்வதை அர்ஜுனன் அறிந்தான். அவர் சொன்னவை ஒவ்வொரு சொல்லாக அம்பென எழுந்துகொண்டிருந்தன. அவர் உரைத்த கொள்கைகள், தோள்தொட்டு வில்நிறுத்தி தழுவியதுபோல் அவனுக்குப் பின்னால் நின்று செவியிலெனச் சொன்ன மந்தணங்கள், அந்திக் கருக்கிருளில் அருகிருத்தி மரவுரியால் அவனையும் தன்னையும் போர்த்தி செவியில் உரைத்த நுண்சொற்கள். இருளுருகி ஓடும் கங்கையில் நீந்துகையில், தலைதுவட்டுகையில், ஆடை பிழிந்து உலர்த்துகையில், வீசும் புலரிக்காற்றில் உடல் நடுக்குற திரும்பி வருகையில், முதற்புலரி ஒளியில் குடில் முற்றத்தில் அமர்ந்து சொல்லாய்கையில் அவர் கூறிய ஒவ்வொரு அம்பையும் அவரை நோக்கி அவன் எய்தான்.

ஆசிரியரே, இது உங்களுக்கு. ஆசிரியரே, இவற்றை கொள்க! இனி இவை என்னில் எஞ்சவேண்டியதில்லை! ஆசிரியரே, இதோ என் கடன்கள் ஒவ்வொன்றையும் தீர்க்கிறேன். ஆசிரியரே, தாங்கள் அளித்த ஒவ்வொன்றும் இதோ மீள்கின்றன. உங்களுக்குள் இருந்து என்னை இழுத்து அகற்றுக! அவ்விடத்தில் இந்த அம்பை நிறைத்துக்கொள்க! நூறு அம்புகள். ஒவ்வொரு அம்பும் வினாவாகி எழுப்பிய பல்லாயிரம் பல்லாயிரம் அம்புகள். ஒவ்வொரு விடையும் வளர்ந்து பெருகிய பல இலக்கம் அம்புகள். அம்புநிலம், அதில் வாழ்ந்தேன். அம்புவானம், அதில் எழுந்தேன். அம்புகளின் காடு. அம்புகள் இலைகளென எழுந்த மரத்தடியில் ஊழ்கம் செய்தேன். ஆசிரியரே, இவற்றை உங்களால் எளிதில் முறித்தெறிய இயலும். எஞ்சுவதொன்று உண்டு. நீங்கள் மறுமொழி இயற்ற முடியாத வினா அது. நீங்கள் ஒருபோதும் அறிந்திராத அர்ஜுனனை காட்டும் அம்பு.

அவன் துயில்கையில் அருகணைந்து குனிந்து செவிகளில் அவர் சொன்ன அம்புகள். அவன் கனவுக்குள் எழுந்து அவர் கற்பித்த அம்புகள். அவன் அகன்றிருக்கையில் அஸ்வத்தாமனுக்கு மட்டுமென அவர் கற்பித்தவை. அப்போது அவன் அங்கிருக்க வேண்டுமென ஆழுளம் விழைய அவ்விழைவை தொட்டெழுப்பி அவன் அங்கு செல்லாமலேயே எங்கிருந்தோ உணர்ந்துகொண்டவை. அவர் உடலசைவுகளில், கைக்கரவுகளில் இருந்து கற்பதறியாமலே அவன் கற்றுக்கொண்டவை. தன்னிடம் உள்ளதென்றே அவன் அறிந்திராதவை. என்று வந்தது, எங்கிருந்தது, எவரிடம் இருந்து பெற்றது என்று அறியாமல் எழுபவை. ஆசிரியரே, இவை ஒவ்வொன்றும் உங்களுக்குரியவை. உங்களுக்குள் இவை இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொன்றும் நீங்கள் உங்களை அறியும் கணங்கள் என்று அமைக!

துரோணர் அவ்வம்புகளை முதலில் புன்னகையுடன், பின்னர் எரிச்சலுடன், பின்னர் மெல்லிய சலிப்புடன் எதிர்கொண்டார். அறியா அம்புகள் முன் சற்றே திகைத்தார். வியப்புற்று, பின் சீற்றமடைந்து, பின்னர் சினம் பெருக உடல் துடிக்க அவற்றை அறைந்து வீழ்த்தினார். அர்ஜுனன் தன் ஆவநாழியில் கைவிட்டு திகைத்து அசையாமல் நின்றான். “எடு அதை. எய்து வீழ்த்து. இதோ அத்தருணம்!” என்று துரோணரை கைசுட்டி இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனனின் உடல் கண்ணுக்குத் தெரியா சரடுகளால் கட்டுண்டதுபோல் அசைவிழந்து அதிர்ந்தது. துரோணர் உரக்க நகைத்தபடி “அவ்வளவுதானா? இனி எஞ்சுவது ஒன்றில்லையா? நீ கற்றது பிறிதென்ன?” என்று கூவினார். வெறியுடன் நகைத்தபடி “மூடா, இதோ என்னில் எஞ்சியுள்ளது நீ அறியாத ஓர் அம்பு. எந்த ஆசிரியனும் தனக்கென கரந்துவைக்கும் ஒரு துளி. இந்த அம்பின் பெயர் என்னவென்று இன்னமும் தெய்வங்கள் முடிவு செய்யவில்லை!” என்று அவனை நோக்கி அம்பொன்றை எய்தார்.

அர்ஜுனனின் தேருக்கடியில் பாய்ந்து சென்று பேரோசையுடன் வெடித்து தேரை மண்ணிலிருந்து ஆளுயரத்திற்குத் தூக்கி அப்பால் வீசியது அது. இளைய யாதவர் தேரிலிருந்து மறுதிசை நோக்கி பாய்ந்தெழுந்து அப்பால் சென்று கால் பதித்து விழுந்து சுழன்றெழுந்தார். தேருடன் அர்ஜுனன் விழுந்து அதன் முறிவுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டான். அவனை நோக்கி வில்லுடன் பாய முற்பட்ட நிர்மித்ரனை துரோணர் அம்பால் அறைந்து தூக்கி அப்பாலிட்டார். சர்வதனை அறைந்து மண்ணில் வீழ்த்தினார். பேரம்பொன்றை எடுத்து அர்ஜுனனை நோக்கி குறிவைத்து “இது என் மூதாதையரும் அறியாதது. இது என்னை ஆக்கிய தெய்வங்களும் அறியாதது. இதை மண்ணில் எவரும் எதிர்கொள்ள இயலாது. எய்தபின் நானே தடுக்க இயலாது” என்றபின் விலங்குபோல் ஓசையிட்டபடி அதை அவனை நோக்கி எய்தார்.

இளைய யாதவர் “அஸ்வத்தாமன் என்று கூவு! அஸ்வத்தாமன் என்று கூவு!” என்று அர்ஜுனனை நோக்கி குரலெழுப்பினார். அர்ஜுனன் “அஸ்வத்தாமன்! அஸ்வத்தாமன்!” என்று கூறினான். அந்த அம்பு தேரை மீண்டும் தாக்கி தூக்கி அப்பால் வீச அதிலிருந்து உதிர்பவன்போல் அர்ஜுனன் நிலத்தில் விழுந்தான். அவன் கவசங்களைக் கட்டிய தோல்பட்டைகளும் ஆடைகளும் தீப்பற்றிக்கொண்டன. அவன் பாய்ந்து ஓடி குருதிச் சேற்றில் விழுந்துருண்டு அதை அணைத்தான். பொசுங்கி புகையெழுந்த உடலுடன் அவன் பாண்டவப் படைவிரிவை நோக்கி ஓட துரோணர் தன் முகத்தில் படிந்த புழுதியை உதடுகுவித்து துப்பிவிட்டு வில்லைத் தூக்கியபடி மறுபுறம் திரும்பிக்கொண்டார். தேரை கைவிட்டுவிட்டு இளைய யாதவர் அவர் செல்வதை நோக்கி இடையில் கைவைத்து நின்றார்.

நூல் இருபது – கார்கடல் – 79

ele1முதல் அம்பிலேயே துரோணர் தன் முழு ஆற்றலையும் காட்டினார். அந்த நீளம்பு சென்று அறைந்த பாஞ்சால வில்லவன் தேரிலிருந்து தெறித்து பின்னால் சென்றுவிழ அவனை நிலத்துடன் குத்தி நிறுத்தி ஆடியது அது. பாஞ்சால வீரர்கள் ஒருகணம் திகைத்த பின்னர் வெறியுடன் கூச்சலிட்டபடி துரோணரை நோக்கி பாய்ந்தார்கள். துரோணர் அன்று முற்றிலும் வேறொருவராக எழுந்திருந்தார். அவர் பற்கள் தெரியச் சிரிப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவருடைய கைகளில் இருந்து எழுந்த அம்புகளில் முன்பெப்போதும் இல்லாத விசை இருந்தது. அவை சென்று அறைந்த தேர்கள் சிம்புகளாக தெறித்தன. புரவிகளின் உடலில் பாய்ந்த அம்புகள் மறுபக்கம் செந்நிற மீன் என முனைநீட்டின. மத்தகம் ஒன்றில் சென்று தறைத்த அம்பு அந்த யானையை தூண்கள் சரிந்த கல்மண்டபம் என அசையச்செய்து பக்கவாட்டில் சரித்தது.

“செல்க… சூழ்ந்துகொள்க!” என்று கூவியபடி திருஷ்டத்யும்னன் துரோணரை தாக்கினான். அவனுள் அத்தனை நாண்களும் தளர்ந்து அவிழ்ந்துகிடந்தன. அங்கே தலைகொடுத்து விழப்போவதாகவே தோன்றியது. “கொல்க! ஆசிரியரல்ல அவர், நம் அரசரின் குருதிகுடித்த பேயுரு. நம் குலக்கொழுந்துகளை கொன்றழித்த அரக்கன்… கொல்லுங்கள்… கொன்று முன்னேறுங்கள்!” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். அக்கூச்சலை அவனுள் உறைந்த புண்கள் ஏற்றுவாங்கி எரிந்தேறின. அவன் நரம்புகள் அமிலம் கொண்டன. தசைகள் முறுக்கேறி துடிக்க அவன் நீளம்புகளை எடுத்து துரோணரை அறைந்தான். “கொல்லுங்கள்! கொன்றுசெல்லுங்கள்!” என கூவிக்கொண்டே இருந்தான்.

துரோணரை எதிர்த்து அம்புகளை பெய்தபடி “எந்தையின் குருதிக்கென வந்துள்ளேன்… நீ அந்தணன் என்றால் இரந்துபெறுக உன் உயிரை!” என்று கூவினான். “பொன்னுக்கும் மண்ணுக்கும் விழைவுகொண்டு வேதச்சொல் துறந்த கீழ்மகன் நீ. உன் குருதியிலாடிய என் அம்பை உருக்கி வேள்விக்கரண்டி செய்வேன். எங்கள் நாட்டு வேள்விகளில் பன்னீராயிரம் முறை அவியில் நெய்யூற்றி அது உனது கடன் கழிக்கும்… கீழ்மகனே, எழுக உன் ஆண்மை… உனது தெய்வங்களால் கைவிடப்படுவதை நீ காண்பாய்…” என்று திருஷ்டத்யும்னன் கூவினான்.

அந்த ஒவ்வொரு பழியுரையும் அவன் சினத்தை மேலும் மேலும் கிளர்த்தி உச்சவெறிகொண்டு எழச்செய்தது. அதனூடாக அவன் தன்னை பெருக்கிக்கொண்டான். கைகளாயிரம் விழிகள் பல்லாயிரமென களத்தில் எழுந்தான். ஆனால் பிறிதோரிடத்தில் அவனுள் உள்ளம் சுருண்டு பின்னடைந்துகொண்டே இருந்தது. “நேற்று உன் தந்தையைக் கொன்ற அம்பின் உடன்பிறப்பு என் ஆவநாழியில் உள்ளது. உன்னை அந்த அம்பால் கொல்கிறேன். உன் குடியில் எஞ்சிய மைந்தனை என் மைந்தன் கொன்றழிப்பான். கீழ்பிறப்பே, நீ யார்? அனலிடைப் பிறந்தவன் என்றால் என் அம்புக்கு எதிர்நில். காட்டரக்கர் வீசிச்சென்ற மைந்தன் என்றால் தப்பி ஓடு” என்று துரோணர் கூவினார்.

அந்தக் குரலில் இருந்த வெறியிலிருந்து திருஷ்டத்யும்னன் ஒன்றை உணர்ந்தான், அவரும் தன்னைப்போலவே உள்ளம் சுருண்டுவிட்டிருக்கிறார். சொல்லிச்சொல்லி அனலை ஏற்றிக்கொள்கிறார். அது அவனுக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. “நான் இக்களத்தில் உன்னை கொல்வேன். இரந்து பெற்ற மண்ணை ஆளும் உனது மைந்தனை நாளை கொல்வேன். பாஞ்சாலம் விடுதலைகொள்ளும்… எங்கள் மண்சூடிய இழிவு அகலும்” என்று திருஷ்டத்யும்னன் கூச்சலிட்டான். “இரந்து பெற்ற மண்ணை ஆளும் அந்த நெறியிலா அந்தணனால் கறைபடிந்த மண்ணை உனது குடியின் குருதிகொண்டு கழுவுகிறேன்…”

அஸ்வத்தாமனைப் பற்றிய குறிப்பு துரோணரை உச்சவெறிகொண்டு எழச்செய்தது. “ஆணிலியே, கீழ்மகனே” என்று கூவியபடி அவர் மேலும் மேலும் அம்புகளால் திருஷ்டத்யும்னனை தாக்கினார். அவன் அந்த அம்புகளை அம்புகளால் முறித்தான். அவருடைய கவசங்கள் மேல் அம்புகளால் அறைந்தான். அவருடைய தேர்ப்புரவிகளில் ஒன்றின் கழுத்தை அறுத்தான். அவனுடைய வெறிக்கு இடம்கொடுத்து அவர் மேலும் மேலும் பின்னடைந்தார். அவர் பின்னடைவது இயல்பாக இல்லை என உணர்ந்தாலும் அவனை அது கிளர்ச்சிகொள்ளச் செய்தது. அவரை அறைந்து கவசங்களை உடைத்தான். அவர் இருமுறை அவன் அம்புகளிலிருந்து தப்ப தாவிப் பின்னடைந்து தேரிலிருந்து தொங்கிச்சுழன்று மேலெழுந்தார். ஒரு புள்ளியில் அவன் உள்ளம் அதுவே எல்லை என உணர்ந்த கணமே அவருடைய அம்பு வந்து அவனை அறைந்தது. அவன் அந்த அதிர்வில் நிலைகுலைந்த கணம் மேலும் மேலும் அம்புகள் வந்து அவன் கவசங்களை பிளந்தன.

பாகன் தேரை பின்னெடுக்க “மூடா! முன்னேறு… முன்னேறு… இன்றே இவனைக் கொன்று திரும்புவேன்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். தேரைத் திருப்பவா வேண்டாமா என பாகன் தயங்க “முன்னேறு… முன்னேறு” என்று திருஷ்டத்யும்னன் அவனை உதைத்தான். பாகன் தேரை முன்னெடுத்த கணத்தில் பிறையம்பால் அவன் தலையை அறுத்தெறிந்தார் துரோணர். புரவிகளில் ஒன்று வெட்டுண்டு சரிந்தது. பிற புரவிகள் நிலையழிய தேர் சரிந்தபடி சென்றது. அவன் தாவுவதற்குள் வில்லின் நாண் அறுந்தது. அவன் ஆவக்காவலன் அலறியபடி விழுந்தான். அவன் தன் கதையை எடுத்துக்கொண்டு அலறியபடி முட்டிமோதிய புரவிகளின் முதுகில் கால்வைத்து தாவி நிலத்தில் இறங்கிய கணம் அவன் கழுத்தருகே துரோணரின் மெல்லிய அம்பு ஒன்று தைத்தது.

திருஷ்டத்யும்னனின் உடல் குளிர்கொண்டது. அத்தனை நரம்புகளும் இழுத்துக்கொண்டு அதிர செவிகளில் மூளலோசையை கேட்டான். மூக்கில் முடிபொசுங்கும் கெடுமணம் எழுந்தது. கண்களில் தெரிந்த காட்சிகள் வண்ண அலைகளாயின. அவன் கையை ஊன்றி எழ முயன்றான். அவ்வெண்ணத்தை அவன் உடல் அறியவேயில்லை. அச்சத்துடன் அவன் தன் உடலை உள்ளத்தால் உலுக்கினான். கால்களையும் கைகளையும் அறைந்து கொண்டான். உடல் பிணமெனக் குளிர்ந்துகிடக்க அதில் சிக்கிக்கொண்ட மெல்லிய ஆடைபோல் சித்தம் தவித்துப் பறந்தது. துரோணர் கொக்கி அம்பு ஒன்றை ஏவி அவன் கவசத்தில் அதை சிக்கவைத்தார். அதனுடன் இணைந்த சரடைப்பற்றி இழுத்து அவனை அருகில் கொண்டு சென்றார். கையால் சரடைப்பற்றிச் சுழற்றி தன் தேர்த்தூணில் கட்டினார்.

திருஷ்டத்யும்னன் சிக்கிக்கொண்டதைக் கண்டு வில்லுடன் வந்த பாஞ்சால வீரர்களை அம்புகளால் அறைந்து அறைந்து வீழ்த்தியபடி தேரைப் பின்னிழுத்து கொண்டுசென்றார். அவன் தேர்க்காலில் கட்டப்பட்டு தரையில் இழுபட்டு உடன்சென்றான். தன் உடல் உடைந்த சகடங்கள்மேலும் விழுந்துகிடந்த உடல்கள் மீதும் முட்டி மோதி எழுந்தமைந்து செல்வதை அவ்வுடலுக்குள் இருந்தபடி அவன் பதைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். “துரோணரே, என்னை கொல்லுங்கள்… என்னை கொல்லுங்கள்! வீரனுக்குரிய இறப்பை எனக்கு அளியுங்கள்!” என்று அவன் கூவினான். அவன் நா அச்சொற்களை அறியவில்லை. அவனால் தன் மூச்சையே அசைக்க முடியவில்லை. “என்னை கொல்க! என்னை கொல்க!” என அவன் கூவிக்கொண்டே இருந்தான்.

ele1அப்பால் சிகண்டியின் சங்கொலி எழுந்ததை துரோணர் கேட்டார். “பாஞ்சாலர் சிகண்டி!” என எவரோ கூச்சலிட்டார்கள். வாய்விட்டு நகைத்தபடி துரோணர் திரும்பி சிகண்டியை எதிர்கொண்டார். “ஆசிரியரே, இது முறையல்ல. தாங்கள் இயற்றக்கூடும் செயலல்ல இது… அவனை விட்டுவிடுங்கள்!” என்று சிகண்டி கூவினார். “அவன் தன் சொற்களின் பொருளென்ன என்று உணரட்டும். இது ஒரு நல்ல ஊழ்கம்” என்று துரோணர் கூவி நகைத்தார். சிகண்டி அவரை நீளம்புகளால் அறைந்தார். அத்தனை அம்புகளையும் துரோணர் தன் அம்புகளால் எதிர்த்து உடைத்தெறிந்தார். அவருடைய அம்புவளையத்திற்குள் ஓர் அம்பைக்கூடச் செலுத்த சிகண்டியால் இயலவில்லை. துரோணரின் தேர் முன்னெழுந்து செல்ல தேர்க்காலில் இழுபட்ட திருஷ்டத்யும்னனின் உடல் துவண்டு துணிச்சுருள்போல அலைக்கழிந்தது.

“ஆசிரியரே, இது அறமல்ல. இதன் இழிவு உங்களை என்றும் தொடரும்… வேண்டாம். அவனை விட்டுவிடுங்கள்!” என்று சிகண்டி அழுகையுடன் கூவினார். “அறத்தை நீ எனக்குக் கற்பிக்கிறாயா? கீழ்மகனே, உன் அறத்தின் சான்றென அங்கே கிடக்கிறார் குருகுலத்துப் பிதாமகர்” என்று துரோணர் சொன்னார். சிகண்டி “அதன் கதை முழுக்க நீங்களே அறிவீர்கள், ஆசிரியரே. இது அதுவல்ல. கீழே கிடப்பவன் உங்கள் மாணவன், உங்கள் உளமைந்தன்” என்றார். அச்சொல் துரோணரை மேலும் சினம்கொள்ளச் செய்தது. “அச்சமிருந்தால் ஓடிவிலகு, ஆணிலி. இளையோன் உயிருக்கெனக் கெஞ்சி பேடியருக்கும் பழிசேர்க்காதே” என்றார்.

சிகண்டி பன்றிபோல் உறுமலோசை எழுப்பியபடி வில்குலைத்து அம்புகளால் அவரைத் தாக்கியபடி முன்னெழுந்தார். அவருடைய அம்புகள் அவர் உடலெங்கும் தைத்தன. தலையைத் தாழ்த்தி முகத்தை நீட்டி அணுகிய அவர் சிலிர்த்த முட்பன்றி எனத் தோன்றினார். அவருடைய அம்புகளால் துரோணரின் தேர்த்தூண்கள் உடைந்தன. அவருடைய கவசங்கள் தெறித்தன. வில் உடைந்தபோது துரோணர் பாய்ந்து பின்னடைந்து பிறிதொரு வில்லுடன் எழுந்தார். சிகண்டி அவருடைய வெறியால் மிக அருகே வந்துவிட்டிருந்தார். அவருடைய அம்புகளின் விசையால் துரோணரின் தேர் அசைந்தது. துரோணர் அந்த அணுக்கத்தால் சற்று நிலையழிய சிகண்டி அவர் வில்லை முறித்தார். ஆவக்காவலன் தலையறுந்து விழுந்தான். தேர்ப்பாகன் நெஞ்சில் பாய்ந்த அம்புடன் சரிய துரோணர் பாய்ந்து ஓடி இன்னொரு தேரிலேறிக்கொண்டார்.

சிகண்டி குனிந்து தேர்க்காலில் கட்டுண்டிருந்த திருஷ்டத்யும்னனை விடுவிக்க முயன்றபோது அவர் கைகளை துரோணர் அம்புகளால் அறைந்தார். சிகண்டியின் நெஞ்சிலும் தோளிலும் துரோணரின் அம்புகள் பாய்ந்தன. சிகண்டி தேரிலிருந்து தரையில் விழுந்து சடலமொன்றை அள்ளி தன்மேல் இட்டுக்கொண்டார். அதன்மேல் அம்புகள் வந்து தறைத்து நின்றன. அப்பாலிருந்து கொக்கிக் கயிற்றை வீசி சிகண்டியை பற்றி இழுத்து எடுத்தனர். அவர் உடலில் இருந்து குருதிவழிய நினைவழிந்திருந்தார். துரோணர் அம்புகளைத் தொடுத்து பாஞ்சாலர்களை அப்பால் நிறுத்தியபடி திருஷ்டத்யும்னனை எவரும் அணுகாமல் காத்து நின்றார்.

தொலைவில் பாண்டவ முரசுகள் ஒலித்தன. “பாஞ்சாலத்து இளவரசனைக் காக்க படைகள் எழுக! முதன்மை வில்லவர் களம்புகுக!” இருபுறத்திலிருந்தும் சுருதகீர்த்தியும் சாத்யகியும் அம்புகளை பெருக்கியபடி துரோணரை நோக்கி வந்தனர். துரோணர் தன் அம்புகளால் சுருதகீர்த்தியின் அம்புகளை தடுக்க அவரை வலமிருந்து சாத்யகி தாக்கினான். அம்புகள் எழுந்து எழுந்து அறைய, காற்றுவெளியெங்கும் உலோகமின்னொளிகள் மணியோசையுடன் நிறைந்திருக்க துரோணர் மெல்ல சுருதகீர்த்தி அர்ஜுனனுக்கு நிகரானவன் என்று உணர்ந்தார். இளமையின் கட்டின்மை அவனை மேலும் விசைகொண்டவனாக ஆக்கியது. அவருடைய எந்த அம்பும் அவனை சென்றடையவில்லை. அவன் செலுத்திய அம்புகளால் அவர் தேர் உடைந்துகொண்டிருந்தது.

அவனுடன் போரிட்டுக்கொண்டிருக்கையில் மெல்ல மெல்ல இளமை என்றால் என்ன என்று துரோணர் உணர்ந்தார். அர்ஜுனனைப்போன்ற தெய்வத்தன்மைகொண்ட வில்லவனே எனினும் அவன் வில்லின் கணக்குகளை உய்த்துணர முடியும். கரை உயர்ந்த நிகர்நிலத்துப் பெருநதிபோன்றவன் அவன். சுருதகீர்த்தி மலையிறங்கும் காட்டாறு. ஒவ்வொரு கணமும் அவன் புதிதெனத் திகழ்ந்தான். அனைத்து வழிகளினூடாகவும் பெருக்கெடுத்தான். ஒவ்வொரு அம்பினாலும் அவன் அவரை திகைக்கச்செய்தான். அவர் முதலில் சாத்யகிக்கும் அவனுக்கும் தன் விழிகளையும் உள்ளத்தையும் பகிர்ந்து அளித்திருந்தார். மெல்ல மெல்ல அவருடைய முழுதுளமும் அவனை நோக்கி திரும்பியது. இரு கைகளாலும் அவனை அவர் எதிர்கொண்டார்.

அவர் அவனை அம்புகளால் புரிந்துகொள்ள முயன்றார். ஒவ்வொரு அம்பும் ஒரு வினா என எழுந்தது. ஆனால் ஒவ்வொரு விடையும் முன்பிலாததாக வந்தது. அவற்றிலிருந்து அவனைச் சென்றடையும் வழியை அவரால் தொகுத்துக்கொள்ள இயலவில்லை. அவர் உள்ளம் அதனால் சீற்றம்கொண்டது. சலியாத அம்புகளால் அவனை அறைந்தார். பின்னர் உணர்ந்தார், அவன் உள்ளம் செயல்படும் ஒழுங்கை கண்டடைவதற்கு முயன்றமையாலேயே அவர் தோற்றுச்சரிகிறார் என. அவன் உள்ளத்தில் எந்த ஒழுங்கும் இல்லை. அவனைச் சென்றடைவதற்குரிய வழியை தானாகவே உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான் இயல்வது. அவர் தன் அம்புப்பெருக்கில் தான் உருவாக்கிக்கொண்ட ஒழுங்கு ஒன்றை தொட்டறிய முயன்றார். ஆற்றுப்பெருக்கை பாறைகளினூடாகக் கடக்கையில் விழி சமைத்துக்கொள்ளும் காலடிப்பாதை என. பல்லாயிரம் அம்புகளினூடாக ஒரு நீள் சரடு சென்று அவனை தொட்டது.

அவர் உள்ளம் எக்களிப்படைந்தது. அதனூடாக அவர் அவன் உருவாக்கிய அம்புவளையத்தை உடைத்து உட்புகுந்தார். அவனை அறைந்து நிலைகுலையச் செய்தார். அவன் கவசங்கள் உடைந்தன. அவன் திகைத்து பின்னடைய அவர் உள்ளம் எக்களிப்பில் எழுந்தது. அத்தனை இளையோரும் துவாரகையின் யாதவனே. இதோ நான் அவனை வென்றுவிட்டிருக்கிறேன். நான் உன்னை வென்றேன். யாதவனே, ஒருகணமும் முன்பிலாதபடி திகழும் உன் மாயத்தை வென்றுவிட்டிருக்கிறேன். என் முதுமையின் தொலைவைக் கடந்து உன்னை வந்தடைந்துவிட்டேன். இதோ இதோ இதோ. அக்கணத்தை பயன்படுத்திக்கொண்டு சாத்யகி அவரை அறைந்தான். அவருடைய தேர்ப்பாகன் அம்புபட்டு விழ புரவிகளில் ஒன்று சரிந்தது. சாத்யகி தேரிலிருந்து பாய்ந்திறங்கி தலைகுனிந்தபடி ஓடி தன் வாளால் திருஷ்டத்யும்னன் கட்டப்பட்டிருந்த சரடை வெட்டி அறுத்து அவனைத் தூக்கித் தன் தோளிலிட்டபடி தேரை நோக்கி ஓடினான். துரோணர் அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் சுருதகீர்த்தியை நோக்கி அம்புகளை செலுத்திக்கொண்டிருந்தன. சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் தேரிலேறிக்கொண்டு பின்னடைய கவசப்படை எழுந்து வந்து அவன் தேரை மூடிக்கொண்டது.

தேர்த்தட்டில் முழங்காலிட்டு விழுந்த சுருதகீர்த்தியின் தலைக்கவசத்தை துரோணர் உடைத்தார். “இளையோனே, சென்று சொல் உன் தந்தையிடம். வில்லுடன் அவனை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன் என்று. அவனிலெழுந்து அவனை முந்திய உன்னை இதோ வென்றிருக்கிறேன். உனக்கு உயிர்க்கொடை அளித்திருக்கிறேன். செல்க, உன் தந்தையிடம் சொல்க, அவனுக்கு நான் உயிர்க்கொடை அளிக்கப்போவதில்லை என!” என்றார் துரோணர். அவருடைய அம்புகள் அறைந்து அறைந்து சுருதகீர்த்தியை தேர்த்தட்டிலிருந்து எழமுடியாமலாக்கின. அவன் பாகன் தேரை பின்னுக்குக் கொண்டுசென்று மையப்படைக்குள் புதைந்துகொண்டான். நாணொலி எழுப்பியபடி துரோணர் அர்ஜுனனை நோக்கி சென்றார்.

ele1அர்ஜுனன் தொலைவிலேயே துரோணரின் நாணொலியை கேட்டான். “பார்த்தா, ஆசிரியர் முழுவிசையுடன் எழுந்திருக்கிறார்” என்று இளைய யாதவர் சொன்னார். “எதிர்கொள்க… இன்றே அதற்குரிய நாள்!” அர்ஜுனன் நாணொலி எழுப்பியபடி துரோணரை நோக்கி சென்றான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணுகுவதைக் கண்டு இரு தரப்பின் வீரர்களும் வாழ்த்தொலி எழுப்பி படைக்கலங்களை வீசினர். சங்குகளும் முழவுகளும் முழங்கின. அவர்களின் விரைவுக்கு மேல் எழுந்தது அவர்களின் உள்ளம். உள்ளத்திலிருந்து தெறித்தவை என இரு அம்புகள் வானிலெழுந்து ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. ஒன்றை ஒன்று நுனிக்கூர் தொட்டு அறிந்தன. இரு பொருட்கள் தொட்டுக்கொள்வதிலேயே குறைந்த இடத்தில். விண்ணவரே உணருமளவுக்கு சிறுபுள்ளியில். குறைந்தஅளவு தொட்டுக்கொள்வனவே முழுமையாக உணர்கின்றன போலும்.

அரசே, நான் இப்போது அவர்களின் போரின் உச்சநிலையையே காண்கிறேன். அது உச்சநிலையிலேயே தொடங்கியது. ஓர் அணுவும் முன்னகர இயலாது அங்கேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சரபஞ்சரம் என்று நூலோர் சொல்லும் அம்புவலைக்கூடு. அதற்குள் அவர்கள் இருவரும் கைகள் சிறகுகளாக வீச பறந்து சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அர்ஜுனன் தன் ஒவ்வொரு அம்பை எடுக்கும்போதும் அதை அவர் முதலில் கற்பித்த தருணத்தை நினைவுகூர்ந்தான். அந்தச் சொற்கள், அவ்விழிகள், அப்பொழுதின் தண்மை, அதன் ஒளி. ஒவ்வொன்றும் அத்தருணத்தில் முழுமை கொண்டன. அதன்பொருட்டே அந்த முதல் தருணத்தில் எழுந்திருக்கின்றன. அவன் சிட்டுக்குருவி அலகுகொண்ட அம்புகளால் அவர் நரம்புகளை அடித்தான். மீன்கொத்தி அம்புகளால் அவர் குருதிக்குழாய்களை உடைக்க முயன்றான். வாத்துஅலகு கொண்ட அம்புகளால் அவர் தசைகளை வெட்ட முயன்றான். ஒவ்வொரு அம்பு எழுவதற்குள்ளும் அதற்கான மறு அம்புகள் எழுந்தன. சிட்டு சிட்டால் வீழ்த்தப்பட்டது. மீன்கொத்தி மீன்கொத்தியால். வாத்து வாத்தால்.

அக்கணம் அவன் அறிந்தான், கங்கைக் கரையின் முற்புலரியில் கருக்கிருளின் குளிரில் நீராடும்போதும் ஈர மரவுரியுடன் திரும்பும்போதும் அவர் அம்புத்தொழில் கற்பித்த கணங்களிலேயே அப்போர் தொடங்கிவிட்டிருந்தது என்று. தன்னிடம் உரைத்த ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் மறு சொல் ஒன்றை உட்கரந்திருந்தார். ஒவ்வொரு சூழ்கைக்கும் மறுசூழ்கை வைத்திருந்தார். அவன் அறிந்த ஒவ்வொன்றும் முன்னரே அவரிடமிருந்தது. அவரைக் கடந்து அவன் அறிந்த ஒன்றில்லை. தன்னைக் கடக்க ஒப்பும் ஆசிரியர் எவர்? அவர் தன்னை ஏற்கெனவே கடந்தவராக இருப்பார். துரோணரின் அம்புகள் அவனிடம் நீ நீ நீ என்று சொல்லிச் சென்றன. நீ என் மைந்தன். நீ என் மாணவன். நீ என் இனியன். நீ எனக்கு அணுக்கன். அவன் அந்த அம்புகளுக்கு நிகர் நின்றான். அணுவிடையும் குன்றாதிருந்தான். ஆனால் அவற்றின்முன் அவன் தோற்றுக்கொண்டும் இருந்தான்.

தன்னை வெல்வது எது என அவன் ஓர் மெல்லிய எண்ணமென உணர்ந்தான். அதனுடன் முழுத் தன்னிலையும் வெகுண்டெழுந்து போராடியது. அதனூடாக அதை ஆழ நிறுவிக்கொண்டது. அவர் அந்த அம்புகளை அவனுக்களித்தபோது அவன் அவரை பணிந்தான். அந்தப் பணிவாலேயே அவன் தோற்றுக்கொண்டிருந்தான். அவன் அடுத்த அம்பை எடுத்தபோது தன் உள்ளமெங்கும் சீற்றத்தை நிறைத்துக்கொண்டான். அந்த அம்பை துரோணர் முறித்து வீசியபோது அது சீற்றமல்ல, வெறும் நடிப்பே என்று உணர்ந்தான். அவரை வசையுரைத்தால், சிறுமைசெய்யும் ஒரு சொல் உள்ளத்திலூறி நாவிலெழுந்தால் வெல்வேன். அவன் அம்புகள் ஒவ்வொன்றும் எழுந்து சீறிச்சென்று அவர் அம்பின் முன் தலைவணங்கிக்கொண்டிருந்தன.

அவன் ஆழம் அவரை வெறுத்த தருணங்களுக்காக துழாவியது. துருபதரை இழுத்துச்சென்று காலடியில் கிடத்தியபோது அவரிலெழுந்த அப்புன்னகை, ஏகலவ்யனின் கட்டைவிரலை கேட்டுப் பெற்றேன் என்றபோது அவரிலிருந்த விலக்கம், அஸ்தினபுரியின் அவையில் திரௌபதி சிறுமை செய்யப்பட்டபோது அவரிலிருந்த அமைதி. அவன் உள்ளம் தொட்டுத்தொட்டுச் சென்றது. அபிமன்யுவின் அம்புதுளைத்த உடல் அருகே எனத் தெரிந்தது. அதன் மேலிருந்த அம்புகளில் பெரும்பாலானவை அவருடையவை என்று உடலை ஒருக்கிய பாஞ்சாலத்து முதியவன் சொன்னான். ஒரு நடுக்குபோல அவனில் வஞ்சம் எழுந்தது. பற்களைக் கடித்தபடி அவன் எடுத்த அம்பு அதிர்ந்தது. ஆனால் அதை நாணில் இழுத்தபோது அவரை பழிக்கும் சொல் அவன் நெஞ்சில் எழவில்லை. சோர்ந்து எழுந்த அம்பு துரோணரின் அம்பின் அறைவாங்கி சிதறிவிழுந்தது.

துரோணரின் முகத்தில் எக்களிப்பை அவன் கண்டான். அவர் சிரித்துக்கொண்டிருந்தார். மெய்யாகவா? அது சிரிப்பேதானா? அச்சிரிப்பை அவர் முகத்தில் அவன் முன்னர் கண்டதே இல்லை. இது துருபதன் காலில் விழுந்தபோது எழுந்த சிரிப்பு அல்ல. அதில் துயரமும் இருந்தது என அப்போது தெரிந்தது. இது வெறும் சிரிப்பு. வேறேதோ அறியாத் தெய்வம் ஒன்று அந்த முகத்தில் குடியேறியிருக்கிறது. அவன் அதை நோக்கி உளம் மலைத்தான். அவன் கைகளிலெழுந்த அந்தச் சிறிய தளர்வினூடாக துரோணர் உட்புகுந்தார். அவனை அவர் அம்புகளால் அறைந்தார். அவன் கவசங்களை உடைத்தார். தேர் உடைந்து சிதறிக்கொண்டிருந்தது. தலைக்கவசம் உடைய இளைய யாதவர் தேரை பின்னடையச் செய்தார். அவன் அவரை திகைத்து நோக்கிக்கொண்டிருக்க அவன் கைகள் அவருடன் போரிட்டன. அவன் அம்புவளையத்தைக் கடந்துவந்த துரோணரின் அம்பு அவன் தோளிலும் விலாவிலும் பாய்ந்தது. அவன் தன் குருதியின் மணத்தை உணர்ந்தான். அவன் உடல் வழியாக குருதி வெம்மையுடன் வழிந்தது.

இளைய யாதவர் தேரைத் திருப்பி மேலும் பின்னடையச் செய்தார். “நில், உன் மைந்தனுடன் செல்ல உன்னை அனுப்புகிறேன்” என்று துரோணர் கூவினார். “நீ கற்றவற்றை எல்லாம் இன்று கண்டேன். இனி உன்னிடம் இருப்பவை என்ன என்று காட்டு.” வெறியுடன் நகைத்து அவர் கூச்சலிட்டார். “அறிவிலி… நீ காடுமலை ஏறிச்சென்று அடைந்த அம்புகள் எங்கே? அவற்றின் திறமென்ன என்று எனக்கு காட்டு…” அர்ஜுனன் தன் உள்ளத்தில் அம்புபட்டதுபோல் உணர்ந்தான். அவர் விழிகளை கூர்ந்து நோக்கினான். அவன் நோக்கை சந்தித்து கரவுமறைந்து அவை திரும்பிக்கொண்டன. அவன் அவருக்குள் புகுந்து ஆழத்திலிருந்த ஒன்றை கண்டான். அக்கணமே அம்பை எடுத்து அவர் நெஞ்சில் அறைந்தான். அதன் விசையால் பின்னடைந்த துரோணர் ஆவநாழியிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து அவன்மேல் ஏவினார். இடிமுழக்கத்துடன் மின்னொளிச் சிதறல்களுடன் எழுந்த அது பிரம்மாஸ்திரம் என அவன் உணர்ந்தான். தேரிலிருந்து இறங்கி அப்பால் பாய்ந்தான். எரியுமிழ்ந்து தேரை ஓங்கி அறைந்தது அது.

எரிந்த தேருடன் இளைய யாதவர் புரவிகளை அறைந்து அறைந்து ஓட்ட அவை தேரை இழுத்தபடி சுழன்றன. தழல்கொழுந்துகள் எழுந்து வெடித்து நீலச்சுடருடன் கொப்பளித்தன. அர்ஜுனன் பாண்டவப் படையின் விளிம்பில் ஒதுங்கி நின்றிருந்த தேரை நோக்கி ஓடினான். அவனை நோக்கி மீண்டும் வந்த படைப்போன்அம்பு அவன் நின்ற மண்ணை அறைந்து வெடித்தெழுந்தது. செம்புழுதித் திரைக்கு அப்பால் அவன் ஓட எரியும் தேருடன் அவனை நோக்கி வந்த இளைய யாதவர் “இதில் ஏறிக்கொள்… இந்தத் தழலே உனக்குக் கவசம்” என்றார். அவன் அதில் பாய்ந்தேறிக்கொள்ள மீண்டுமொருமுறை மண்ணை அறைந்து இடியோசை முழக்கியது முதலோன்வாளி. துரோணர் “நில்… பேடியே, நில்” என்று கூவினார். “அமர்ந்துகொள்க… அனலைக் கடந்து அந்த அம்பு வரவியலாது” என்று இளைய யாதவர் சொன்னார். அவன் தழல்களின் நிழலில் அமர்ந்தான்.

அனல்வெம்மையால் கனைத்தபடி தேரை இழுத்துக்கொண்டு முன்னேறி விரைந்தன புரவிகள். பாண்டவப் படை அனல் கண்டு விலகி விட்ட வழியினூடாக ஓடி முழங்கால் மடிந்து விழுந்தன. தேரைச் சூழ்ந்துகொண்டது அனல். நகுலனும் சகதேவனும் தங்கள் தேர்களில் அந்தத் தேர் நோக்கி விரைந்தனர். தேர் மேலுமொருமுறை வெடித்து கொழுந்தாடியது. பாண்டவப் படைக்குள் நுழைந்ததும் இளைய யாதவர் பாய்ந்து விலக உடன் பாய்ந்து அர்ஜுனனும் அப்பால் சென்றான். தேரில் எழுந்த அனல் உறுமலோசையுடன் நின்று எரிந்தது. ஏவலர் ஓடிவந்து புரவிகளை சரடுகளை வெட்டி விடுவித்தனர். புன்னகையுடன் அதை நோக்கிநின்ற இளைய யாதவரை நோக்கியபடி அர்ஜுனன் நின்றான்.