மாதம்: பிப்ரவரி 2019

நூல் இருபது – கார்கடல் – 66

ele1கர்ணனின் தேர் போர்முனையிலிருந்து பின்னடைந்து சுழித்துக்கொண்டிருந்த இரண்டாம்நிரையை அடைந்து நின்றது. புரவியில் இருந்தபடியே அத்தேரின் புரவிக்கடிவாளங்களைப் பற்றி அதை செலுத்திவந்த அங்கநாட்டுத் தேர்வலனாகிய சக்ரன் அதை நிறுத்திவிட்டு சங்கு எடுத்து முழக்க மருத்துவஏவலர் வந்து தலை அறுந்து ஒருக்களித்து விழுந்துகிடந்த துருமனின் உடலை எடுத்து நிலத்திலிட்டனர். அவன் தலைக்காக தேரின் அடியில் நோக்கியபின் உடலை மட்டும் தூக்கி அப்பால் கொண்டுசென்றனர். தேர்த்தட்டில் தளர்ந்து அமர்ந்தவனாக கர்ணன் அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். சக்ரன் “புரவிகளை மாற்றவேண்டும், மூத்தவரே. இரு புரவிகள் கழுத்து அறுபட்டு குருதி வார்கின்றன” என்றான். கர்ணன் தலையசைத்தான்.

சக்ரன் மீண்டும் சங்கொலி எழுப்ப இரு புதிய புரவிகளுடன் ஏவலர் வந்தனர். நுகத்திலிருந்து புரவிகளை அவிழ்த்து அப்பாலிட்டனர். அவை மெல்லிய உடல்துடிப்புடன் அப்போதும் ஓடிக்கொண்டிருப்பவைபோல கால்களை அசைத்தன. வால் நிலத்தில் கிடந்து சுழன்றது. குருதி பெருகி மண்ணை நனைப்பதை இருளிலும் நோக்க முடிந்தது. புதிய புரவிகள் குருதிவார்ந்துகொண்டிருந்த புரவிகளைக் கண்டு விழியுருட்டி நீள்மூச்செறிந்தன. கால்தயங்க நின்ற அவற்றை அடித்து முன்செலுத்தி நுகத்தில் கட்டினர். அவை மூக்குவிடைத்து ஒன்றையொன்று முகர்ந்து நீள்மூச்செறிந்தன. புரவிகளை கட்டி முடித்ததும் “முடிந்தது, மூத்தவரே” என்றான் சக்ரன். கர்ணன் “ஆம்” என்றான். ஆனால் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். “கிளம்புவதா?” என்றான் சக்ரன். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் கழுத்துத்தசை மட்டும் மெல்ல அசைந்தமைந்தது. சக்ரன் அவன் சொல்லுக்காக காத்திருந்தான்.

கர்ணனை நோக்கி தேரில் வந்து பாய்ந்திறங்கிய துரியோதனன் “என்ன நிகழ்ந்தது? அங்கரே, உங்கள் இலக்கு பிழைத்தது என்று அறிந்தேன்” என்றான். கர்ணன் நிமிர்ந்து நோக்கி பெருமூச்சுவிட்டான். “நீங்கள் அவனை உயிருடன் விட்டுவிட்டீர்கள் என்கிறார்கள். நாகபாசம் குறிபிழைக்க வாய்ப்பே இல்லை என்றார்கள்” என்றான் துரியோதனன். கர்ணன் நோயுற்றவன்போல தாழ்ந்த குரலில் “என்ன நிகழ்ந்தது என்று அறியேன். அவனுடைய மூத்தோரின் நற்செயல்களின் பயன் வந்து அவனைக் காத்தது என்றே தோன்றுகிறது. அவன் தேரின் சகடம் பிலத்தில் ஆழ்ந்து தேர் சரிந்தது. என் அம்பு குறி தவறியது” என்றான். “அவர் இயற்றியதுதான் அது. ஐயமே இல்லை… அவர் தேரை பிலத்தில் இறக்கினார்” என்றான் துரியோதனன். “அவர் நோக்கவில்லை, அவர் விழிகள் தேர்ப்புரவிகளில் இருந்தன” என்று கர்ணன் சொன்னான். “அவர் நோக்காமல் இங்கு எதுவும் நிகழ்வதில்லை” என்றான் துரியோதனன்.

தேரில் அருகணைந்த துச்சாதனன் “மூத்தவரே, கடோத்கஜனின் படைகளை நம்மால் தடுக்க முடியவில்லை. நம் தரப்பின் அரக்கர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர்” என்றான். துரியோதனன் கர்ணனிடம் “உங்கள் அரவம்பு எழுக… இன்றே அர்ஜுனன் களம்பட்டாகவேண்டும்” என்றான். கர்ணன் “அவன் ஊழ் அவனை காக்கிறது… என் ஊழ் என்னை தடுப்பதுபோல” என்றான். துரியோதனன் சினத்துடன் “எந்தப் போரும் ஊழுக்கு எதிரானதே. ஊழே வெல்லும் என்றால் நிமித்திகர்களே எவர் நாடாள்வது என்று முடிவெடுத்தால் போதும்” என்றான். கர்ணன் “நான் நிலைகுலைந்துள்ளேன். என் இலக்கு இன்றுவரை பிழைத்ததில்லை. அரவம்பு இலக்கு பிழைத்தது என்றால் அவனுடன் தெய்வங்கள் உள்ளன என்றே பொருள்” என்றான். “எனில் தெய்வங்களுடன் பொருதுவோம்” என்று துரியோதனன் கூவினான்.

மறுபக்கம் தேரில் அருகணைந்த கிருபர் “இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? அர்ஜுனனும் பீமனும் முழுவிசைகொண்டு நம் படைகளை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். விழியிழந்தவர்கள்போல் நமது படைகள் முட்டிமோதிக்கொண்டிருக்க அம்புகளால் கொன்றுகுவிக்கிறார்கள்… சாத்யகியும் திருஷ்டத்யும்னனும்கூட தடுக்கவியலாதவர்களாக ஆகிவிட்டனர்… நம்மை வழிநடத்திய அரக்கர்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள். நமது படைசூழ்கையை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது” என்றார். துச்சாதனன் “நம்மில் இரவுவிழி கொண்டவர் அங்கர் மட்டுமே. அவர் முன்னின்று நடத்தவேண்டும் இப்போரை” என்றான். துரியோதனன் “அங்கரே, நாங்கள் உங்களுக்கு அடைக்கலம். எங்களை காத்தருள்க!” என்றான். கர்ணன் பற்களைக் கடித்து விஜயத்தைத் தூக்கி “இது என் வஞ்சினம். நான் எழுகிறேன். அறிக, இப்போரில் பாண்டவர் ஐவரையும் வெல்வேன்! இன்று போர்முடிந்தால் அவர்கள் படைக்கலம் எடுக்கமாட்டார்கள்… இன்று என் அரவம்பு பலிகொள்ளும்!” என்றான்.

கிருபர் வாய்விட்டு நகைத்து “அங்கனே, சற்றுமுன் நீ போர்புரிந்ததை நான் என் விழிகளால் நோக்கினேன். உன் கைகள் சீறி எழுகின்றன. எதிர்ப்பைக் கண்டதும் மெல்ல மெல்ல தாழ்கின்றன. அந்தணர் சொல்லால் வீரர், வணிகர் சூழ்ச்சியால் வீரர், சூதர் கனவுகளில் வீரர் என்று கூற்று உண்டு. நீ உன் ஆணவப்பேச்சை நிறுத்தி ஊன்விழிகளால் களத்தை பார். அதன்பின் உன் ஆற்றலை உணர்ந்து எதிரியை கணக்கிட்டு களம்நின்று போரிடு” என்றார். கர்ணன் “என்ன சொன்னீர்?” என்று கூவியபடி கையில் அம்புடன் அவரை நோக்கி திரும்பினான். “என் வீரத்தை இழிவுசெய்வோர் எவரையும் எதிரி என்றே கருதுவேன்… எவரும் எனக்கு ஒரு பொருட்டு அல்ல” என்றான். “வீரமா? உனக்கா? எண்ணிப்பார், எத்தனை களங்களில் நீ தோற்றோடியிருக்கிறாய் என. அறிவிலி, விராடநாட்டுப் போரில் அர்ஜுனன் ஒருவனே உன்னை தோற்றுப் பின்னடையச் செய்தான். இங்கே பாண்டவர் ஐவரும் சிகண்டியும் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் கடோத்கஜனும் இணைந்து வந்துள்ளனர்…” என்றார்.

கர்ணன் உடல்பதற சொல்லிழந்து நின்றான். பின்னர் உடைந்த குரலில் “நச்சுநா கொண்ட அந்தணர் நீர். அவையமர்ந்து இழிசொல் உரைத்து இரந்துண்டு வாழும் கீழ்மகன். உயிருக்குத் துணிந்து இச்சொற்களை என்னிடம் சொன்னீர். உங்கள் உணர்வென்ன என்று புரிந்துகொள்கிறேன். அதற்குப் பெயர் அச்சம். அதற்கு அடிப்படை கோழையுள்ளம். பரிசில் பெற்று வாழும் பிறவிகொண்ட நீர் இங்கே எழும் அம்புகளைக் கண்டு அஞ்சிவிட்டீர். உயிர்பிழைத்து ஓடுவதைப்பற்றி திட்டமிடுகிறீர். பாண்டவர்கள் வென்றால் அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களின் அவையிலமர்ந்து இழிசொல் உரைத்து இரந்துண்டு வாழ எண்ணுகிறீர். ஆகவே இங்கே அரசர் முன் அவர்களை புகழ்ந்து பேசுகிறீர்” என்றான். நாணிழுத்து ஓசையெழுப்பி “கேளுங்கள், இந்த நாணோசை இனி இந்தக் களத்தை நிறைக்கும். இன்றே அவர்கள் ஐவரையும் வெல்வேன். அந்த அரக்கப்பிறவியை களத்தில் கொல்வேன். ஆணை!” என்றான்.

கிருபர் “நீ சொன்னவற்றை இன்றுவரை செய்ததில்லை… செய்தபின் வா, உன் சொல்லை செவிகொள்கிறேன்” என்று திரும்பிச் சென்றார். கர்ணன் திரும்பி துரியோதனனிடம் “அரசே, இழிசொல் உரைக்கிறார். என் வீரத்தை களத்தில் இகழ்கிறார். இவருடைய உள்ளம் செல்லும் திசையை உணர்க!” என்றான். துரியோதனன் “இன்று இக்களத்தில் பெரும்பாலானவர்கள் எண்ணுவது அவருடைய சொற்களையே” என்றபின் தன் தேரை திருப்பினான். அத்தருணத்தில் நாணோசையுடன் அவர்களை நோக்கி வந்த அஸ்வத்தாமன் கர்ணனை நோக்கி “கீழ்மகனே, உன் நா எல்லை மீறியது என்று கேட்டேன். சாகத் துணிந்து நீ சொல்லெடுத்திருக்கிறாய். அந்தணர்குலத்து ஆசிரியரை இழித்துரைக்க உனக்கு என்ன தகுதி? பேடியல்ல என்றால் எடு உன் வில்லை. இக்களத்திலேயே காட்டுகிறேன் நீ ஒரு வெற்றுச்சொல்வீரன் என்று. மண்ணில் இழையும் புழு நாகமென படமெடுக்க முயல்வதே உன் வீரம் என்று உனக்கே தெரியச் செய்கிறேன்… எடடா அம்பை” என்றான்.

கர்ணன் “நீ யார்? அந்தணனா? நிலம் விரும்பி வில்லெடுத்த நீ அந்தணனும் அல்ல. அந்தணக்கொடையாக மண்பெற்று ஆள்வதனால் ஷத்ரியனும் அல்ல. குலமிலாதவன் நீதான்… உன்னை கொன்றுவிட்டு உன் உடல்நோக்கி காறி உமிழ்கையில் சொல்கிறேன் நீ கேட்டதற்கு மறுமொழியை” என்று தன் வில்லை தூக்கினான். துச்சாதனன் பாய்ந்து கர்ணனின் தேரிலேறி வில்லை பற்றிக்கொண்டான். “மூத்தவரே, நாம் நமக்குள் போரிட்டுக்கொள்ளவா இந்தக் களத்திற்கு வந்தோம்? இங்கே நீங்கள் ஒருவருக்கொருவர் பாய்ச்சிக்கொள்ளும் ஒவ்வொரு அம்பும் சென்று தைப்பது என் தமையனின் நெஞ்சில் என்று உணருங்கள்.” கர்ணனின் வில் தாழ்ந்தது. அஸ்வத்தாமன் “இவ்விழிமகனின் நாவை அறுக்காமல் நின்றிருந்தால் என் குலம் என்னை பழிக்கும். என் தந்தைக்கு முன் இழிவுகொண்டவன் ஆவேன்” என்றான்.

“இங்கே நாம் அனைவருமே நிலைகுலைந்திருக்கிறோம்… நாம் ஒவ்வொருவரும் தோற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறோம். அதுவே நம்மை கீழ்ச்சொல் பேசச் செய்கிறது” என்றான் துச்சாதனன். “எவர் சொன்னார் நான் தோற்றேன் என? எங்கு நான் தோற்றேன்? சொல்!” என்று அஸ்வத்தாமன் கூவினான். “தோற்றவன் இந்தச் சூதன்மகன். இவன் கூறிய அத்தனை சொற்களும் வீண் என களத்தில் காட்டிவிட்டு தன் தம்பியர் அனைவரையும் களத்தில் பலியிட்டுவிட்டு இதோ வந்து நின்றிருக்கிறான்…” கர்ணன் “நீ வென்றவர்களின் பெயரை சொல்… இரந்து நாடுபெற்று ஆண்டு தருக்கும் கீழ்மகனே, சொல். நீ களத்தில் கொன்றவர் எவர்?” என்று கூவினான். அஸ்வத்தாமன் திகைத்தான். பின்னர் “கொல்கிறேன். இன்றே கொன்றுகுவிக்கிறேன்… நீ உன் விழிகளால் நோக்கு” என்றான். “சொல்லாதே, செய்துகாட்டு. அதன்பின் என் முன் எழு” என்றான் கர்ணன்.

அஸ்வத்தாமன் வில் தாழ்த்தி பெருமூச்சுவிட்டான். கர்ணன் “நான் உயிருடன் எஞ்சினால் உன்னைத் தேடி வருவேன். நீ இப்போது சொன்ன சொற்களுக்காக உன் நாக்கை அறுக்க எழுவேன்… இப்போது செல்” என்றான். அஸ்வத்தாமன் “நான் சொல்வதும் அதையே. உன் நாவுக்காக நான் வருவேன்… எண்ணிக்கொள்க!” என்றான். “மூத்தவரே, நீங்கள் களமெழுந்தாகவேண்டும். இக்களத்தில் விழிகொண்டோர் இன்று நீங்களும் உத்தரபாஞ்சாலரும் மட்டுமே. இருவரும் இங்கே போரிட்டுக்கொண்டிருந்தால் நம் படைகளை நாம் அர்ஜுனனின் அம்புகளுக்கு பலிகொடுக்கிறோம் என்று மட்டுமே பொருள்” என்றான் துச்சாதனன். கர்ணன் “ஆம், நான் ஐவருக்கும் இன்று குருதிச்சுவையை காட்டுகிறேன். அருள்க தெய்வங்கள்!” என்றபின் வில்லை எடுத்தபடி களமையம் நோக்கி சென்றான்.

ele1சஞ்சயன் தொடர்ந்தான்: போர்க்களத்தில் இவ்வாறு தங்களுக்குள் பூசலிட்டுக்கொள்வதும் இழந்துகொண்டிருக்கும் அகவிசையை மீட்டுக்கொள்ளும் சூழ்ச்சியே. ஒருவரை ஒருவர் சிறுமைசெய்து சினமூட்டி அச்சினத்தை பகைவர்மேல் திரட்டிக்கொண்டு களமெழுந்தனர். தளர்ந்த நரம்புகளை மீண்டும் முறுக்கிக்கொண்டனர். அவர்கள் அறிந்து அதை செய்யவில்லை, ஆனால் எதைச் செய்து எழவேண்டும் எனத் தவித்த அவர்களின் அகம் அதை கண்டுகொண்டது. கிருபரும் அஸ்வத்தாமனும் சினத்தால் விரல்நுனிகள் அதிர பற்கள் உரசும் ஒலி காதுகளில் ஒலிக்க களம் நோக்கி சென்றனர். தன் இளையோர் இறந்த உளத்தளர்விலிருந்து மீண்டு காலால் ஓங்கி தேர்த்தட்டை மிதித்து செல்க செல்க என ஆணையிட்டு கர்ணன் போர்க்களம் சென்றுசேர்ந்தான்.

அஸ்வத்தாமன் தொலைவிலேயே திருஷ்டத்யும்னன் முழுவீச்சுடன் கௌரவப் படையினரை வென்று பின்னடையச் செய்தபடி வருவதை கண்டான். நாணொலி எழுப்பியபடி சென்று அவனை எதிர்கொண்டான். கர்ணனிடம் சொல்ல எஞ்சியிருந்த சொற்கள் அவன் நாவிலிருந்து எழுந்தன. “கீழ்மகனே, நீ ஆண்மையற்றவன் என்று அறிந்திருந்தேன்… வில்லெடுத்து எளிய வீரரைக் கொன்று உன் ஆண்மையை நீ நிறுவமுடியாது… என் வில்லுக்கு எதிர் நில்” என்றான். மிகச் சரியாக பாஞ்சாலனிடம் எச்சொல்லை சொல்லவேண்டும் என தான் அறிந்திருப்பதை அவனே வியந்தான். எளிய வம்புகளுக்கு அவன் ஒருநாளும் செவிகொடுத்ததில்லை. ஆனால் ஒரு சொல்விடாமல் அனைத்தும் எவ்வகையிலோ உள்ளே சென்று சேர்ந்துள்ளன. அந்த ஆவநாழியை அவன் அறிந்ததே இல்லை. ஆனால் நா அறிந்திருந்தது. தேவையென்றபோது இயல்பாகச் சென்று உரியதைத் தொட்டு எடுத்தது. கொலைநச்சு கொண்டது. எரிந்து எரிந்து எழுவது.

இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பற்றியும் உரிய சொற்களை வைத்திருக்கின்றனர் என அஸ்வத்தாமன் எண்ணிக்கொண்டான். தோழர்களுக்கு, உடன்பிறந்தாருக்கு, ஆசிரியர்களுக்கு, பிதாமகர்களுக்கு. ஒருகணத்தில் அந்தக் களத்தில் ஒவ்வொருவரும் பிறர்நோக்கி உமிழ்ந்த சொற்களை அவன் நினைவுகூர்ந்தான். நஞ்சுகொண்ட ஒரு சொல்லும் ஆவநாழியில் இல்லாத ஒருவர் இக்களத்தில் இருப்பாரா? யுதிஷ்டிரர் இருக்கக்கூடும். அதனால்தான் அவர் எதிரிகள் ஒவ்வொருவரையும் அஞ்சுகிறார். தன்னவர் ஒவ்வொருவரைப் பற்றியும் அச்சம்கொண்டிருக்கிறார். இந்தக் களத்தில் வஞ்சினம் என்றும் உளச்சோர்வென்றும் ஒரு இழிசொல்கூட உரைக்காதவர் அவர் மட்டுமே. இக்களத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் தெய்வங்கள் வருந்துமென்றால், கொல்பவரின் குடிமேல் தீராப் பழி சேருமென்றால் அது யுதிஷ்டிரர் மட்டும்தான்.

திருஷ்டத்யும்னன் அஸ்வத்தாமனின் சொற்களால் தன் சினத்தை எரித்து பெருக்கிக்கொண்டான். கைநீட்டி இளிவரலும் வெறுப்பும் நிறைந்த முகத்துடன் “அளிக்கொடையெனக் கிடைத்த நிலத்தை ஆளும் நீயா ஆண்மைகொண்டவன்? செல்க, இன்னும் சில ஷத்ரியர்களுக்கு மலம்கழுவிவிடுக! அவர்கள் அளிக்கும் மண்பொருக்குகளை கூட்டிவைத்து மன்னன் என்று அமர்க!” என்றான். அச்சொல் அதுவரை அங்கே பேசப்பட்ட அனைத்திலும் கீழ்மை என உணர்ந்து அஸ்வத்தாமன் உடல்நடுங்கினான். சிலகணங்கள் சொல்லே எழவில்லை. ஆனால் தான் அங்கே எதிர்பார்த்தது அதுவே என அவனுடைய அகம் அறிந்திருந்தது. அப்போரில் கௌரவர் வெல்லப்போவதில்லை என அகம் அறிந்திருந்தது. வஞ்சமென்றும் எதுவும் எஞ்சவில்லை. எரிந்தேறும் சினமில்லையேல் அக்களத்தில் வில்லுடன் எழ முடியாது.

“இழிமகனே, இதன்பொருட்டே உன் தலையை உதைத்து விளையாடுவேன். பேடி! நீ ஆண்மகன் என்றால் உன் நிலத்தை ஆண்டுகொண்டிருந்த என்மேல் படைகொண்டு வந்திருக்கவேண்டும்” என்று அஸ்வத்தாமன் கூவினான். அச்சொற்களில் கீழ்மை போதவில்லை என உணர்ந்த அகம் உடனே மேலும் சொற்களை அள்ளிக்கொண்டது. “நிலம் ஷத்ரியனுக்கு மனைவியைப்போல. தன் துணைவியை பிறன் பெண்டாள நோக்கியிருப்பவன் பேடி மட்டும் அல்ல, பேடியின் மைந்தனும்கூட.” திருஷ்டத்யும்னன் “கீழ்பிறப்பே…” என்று கூவியபடி அம்புகளால் அஸ்வத்தாமனை அறைந்தான். அதே வெறியுடன் அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனை அறைந்தான். ஒவ்வொரு சொல்லுக்கும் அவர்கள் வசைபாடிக்கொண்டார்கள். வசைகளே வில்லென்றாகி நாண் என உள்ளத்தை இழுத்து இறுக்கி அந்த அம்புகளை ஏவின.

அவர்கள் இருவரும் புரிந்த போர் அதன் இயல்கையின் எல்லையில் தொடங்கியது. எனவே ஒவ்வொரு அம்பும் உச்சவிசைகொண்டு சென்று எதிரியின் தேரை அறைந்தது. ஆனால் ஒவ்வொரு அம்பாக அவர்களை உளவிசை தளரச்செய்தது. அம்புகள் எழுந்தோறும் அகம் ஓய்ந்தனர். அஸ்வத்தாமன் அதுவரை திருஷ்டத்யும்னனை பார்க்கவில்லை என பார்வை மெல்ல மெல்லத் தெளிந்தபோது உணரத்தொடங்கினான். அவனுடைய தோற்றம் அணுக்கமாகத் தெரிந்தது. அவன் உடற்தசைகள், நரம்புப்புடைப்புகள், விழியலைவுகள், உதடுகளின் அசைவுகள். அவனை இக்கணம்தான் முதல்முறையாக பார்க்கிறேன். இதுவரை பார்த்திருந்த நூறாயிரம் வடிவங்களுடன் சென்று இணைத்துக்கொள்கிறேன். இத்தனை இனியவனாகவே அவன் முன்பும் இருந்திருக்கிறான். அவனை என் உடன்பிறந்தான் என்றே என்றும் நான் உணர்ந்திருக்கிறேன். விழிமூடிவிடாமலிருந்தால் அவனை நோக்கி நான் அம்புகளை பெய்திருக்கப் போவதில்லை. என் கைகளால் இவன் இறந்தால் நான் என்னில் ஒரு பகுதியை கொன்றழிக்கிறேன்.

சினம்கொண்டிருக்கையில் பார்வையே முதலில் இல்லாமலாகிவிடுகிறது. பார்ப்பவை அனைத்தும் இலக்குகள் மட்டுமாக பிரிந்து சிதறிவிடுகின்றன. இன்னும் இன்னும் என உள்ளம் எழுகிறது. சினமும் உடலில் இருந்து ஒருவகை வெளியேற்றம் மட்டுமே. ஐந்து உடல்மலங்களைப்போல நுண்ணுருக்கொண்ட ஒன்று. வெளியேறும் மலம் உடலை தூய்மைப்படுத்துகிறது. வெளியேறவேண்டும் என்னும் அதன் துடிப்பே உந்துதலாக ஆகிறது. எத்தனை வெறியுடன், விசையுடன் அது உடலைவிட்டு நீங்குகிறது! வில்லில் இருந்து எழும் அம்புகளைப்போல. மலத்தை உமிழ்கிறது உடல். மலத்தை வீசியடிக்கிறது. மலம் உடலுக்குரியது அல்ல. அதை உடலைவிட மலம் நன்கறிந்திருக்கிறது. அது மண்ணுக்குரியது. மண் அதை மீண்டும் அமுதெனச் சமைக்கிறது. மலம் இழந்த உடல் வெறுமையை அல்ல நிறைவையே உணர்கிறது. மலமிருந்த இடத்தில் வந்தமைவது உடலுக்குள் வாழும் இனிமைகள். ஆகவேதான் மலவெளியேற்றம் மானுட உடலின் இன்பங்களில் ஒன்றென அமைந்திருக்கிறது. முற்றொழியவேண்டும். ஒரு துளிகூட எஞ்சாமல். இச்சினமெனும் அழுக்கு நீங்கி நான் இங்கே எடையில்லாது நின்றிருக்கவேண்டும்.

அஸ்வத்தாமன் தன் வில்லை திருப்பிக்கொண்டு அப்பால் செல்ல அக்கணத்தை முன்பறிந்திருந்தவன்போல திருஷ்டத்யும்னன் உடல்தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். அவன் நெஞ்சிலும் தோளிலும் தொடையிலும் கவசங்கள் உடைந்த இடைவெளிகளில் அம்புகள் தைத்திருந்தன. அவன் தேர் உடைந்து காற்று சீறிக்கொண்டிருந்தது. அவன் உளநிலையை அறிந்தவனாக பாகன் தேரை பின்னிழுத்து கொண்டுசென்றான்.

ele1வில்லுடன் எழுந்த கர்ணன் படைப்பிரிவுகளினூடாக அர்ஜுனனை தேடிச்சென்றான். இரவுக்குள் பாண்டவப் படைகளும் கௌரவப் படைகளும் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தன. முழுப் படையையும் நோக்கும் விழிகள் இல்லாமலாகிவிட்டிருந்தமையால் ஒவ்வொருவரும் ஒற்றை இலக்கை தெரிந்தெடுத்து அது ஒன்றே போர் என எண்ணி களம்நின்றனர். சல்யர் விராடருடன் போரில் ஈடுபட்டிருந்தார். விராடர் சல்யரின் அம்புகளை ஏற்று பின்னடைந்துகொண்டிருந்தார். வில்லைக் குலைத்தபடி எழுந்து சென்று ஒரே அம்பில் விராடரின் நெஞ்சை துளைக்கவேண்டும் என கர்ணனின் உள்ளத்தில் வெறியெழுந்தது. விஜயத்தை இறுகப்பற்றி அந்த எழுச்சியை அடக்கிக்கொண்டு “முன்னேறுக! முன்செல்க!” என்று தேர்ப்பாகனாக அமர்ந்த தன் குடியிளையோனாகிய சக்ரனிடம் சொன்னான். நூறுமுறை விராடரை கொன்றுகொன்று கணங்களினூடாக முன்னால் சென்றான்.

சாத்யகி தேரில் நின்றபடி பால்ஹிகனாகிய பூரியுடன் போரிட்டுக்கொண்டிருந்தான். நகுலன் சகுனியுடனும் கிருபர் சிகண்டியுடனும் போரிட்டனர். ஒவ்வொரு போரும் உச்சத்தில் நிகழ்ந்தது. கர்ணன் தன் உள்ளத்தால் ஒவ்வொருவருடனும் சென்று போரிட்டான். சிகண்டியின் தலையை வீழ்த்தி தேர்ச்சகடத்தை அவர் உடல்மேல் ஓட்டிச்சென்றான். சாத்யகியை அம்புகளால் அறைந்து வீழ்த்தி அவன் தலையைக் கொய்து வானில் நிறுத்தினான். நகுலனை அம்புகளால் அடித்து தேர்த்தூணுடன் சேர்த்து பொருத்தினான். அவர்களின் குருதியில் நனைந்தான். தன் உடலெங்கும் மிதப்பென, விழி நனையச்செய்யும் கூச்சமென எழுந்த சினத்தை வெல்ல கைவிரல்களை இறுக்கிக் கொண்டான். பற்களைக் கடித்து மூச்சை இழுத்து வெளிவிட்டான். இச்சினம் அவனுக்குரியது. அவனை இப்போதே இக்களத்திலேயே கொல்வேன். ஆம், நான் அளித்த சொல்லால் ஆளப்படுகிறேன். இதோ அதை கடப்பேன். என் எல்லைகள் அனைத்தையும் கடப்பேன். முதல் எல்லை அச்சொல். என் தெய்வங்களின் முகத்தில் காறியுமிழ்வேன். இன்று அவன் குருதியாடாது திரும்பமாட்டேன். எழுக என் நச்சம்பு… என் வஞ்சத்தின் கடுங்கசப்பு!

அவன் தொலைவில் அர்ஜுனனை பார்த்தான். “செல்க, அர்ஜுனனை நோக்கி செல்க!” என ஆணையிட்டான். அந்த ஆணையால் சக்ரன் ஊக்கமடைந்தது தெரிந்தது. தேரை விசைகூட்டி அவன் அர்ஜுனனை நோக்கி சென்றான். ஆனால் துரோணருடன் போரிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனன் அவனை பார்ப்பதற்குள் இளைய யாதவர் தேரை பின்னாலிழுத்து பாண்டவப் படைகளுக்குள் கொண்டுசென்றார். பாஞ்சாலர்களின் வில்லவர் நிரை துரோணரை எதிர்கொண்டது. மறுபக்கத்திலிருந்து துருபதர் நாணொலி எழுப்பியபடி வந்து துரோணரை சந்தித்தார். “அர்ஜுனனை தொடர்க… அர்ஜுனனின் இடத்தை கண்டறிக!” என்று கர்ணன் ஆணையிட்டான். என் சினம்நிறைந்த கலம் தளும்புகிறது. ஒரு துளியும் சிந்தாமல் இதை காக்கவேண்டும். இது இன்று அவனை கொல்லும் விசையென்றாகி எழுக! நாகங்களே, என்னைச் சூழ்ந்தெழுக! நச்சுப்படங்களின் நிழல் என்மேல் எழுக! வஞ்சம்கொண்ட நிலைக்காத வால்கள் எழுக! இமையா விழிகள் எழுக! பிளவுண்ட நாவுகள் எழுக!

அர்ஜுனன் மிக அப்பால் படைகளுக்குள் இருந்து வெளிப்பட்டான். “செல்க… அர்ஜுனனை எதிர்கொள்க!” என்று கர்ணன் தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டான். அவனுடைய தேர் அர்ஜுனனை நோக்கி செல்ல சிகண்டியும் சாத்யகியும் இருபுறமும் எழுந்து வந்து அவனை சந்தித்தனர். அவன் இருவரையும் அம்புகளால் எதிர்த்தான். சாத்யகி தேரில் விழுந்தான். சிகண்டி அம்புகளால் அறைபட்டு பின்னால் நகர்ந்தார். அவர் நெஞ்சில் அறைந்த கர்ணனின் வாளி அவரைத் தூக்கி அப்பாலிட்டது. வில்லுடன் திரும்பிய கர்ணன் அர்ஜுனன் மறைந்துவிட்டிருப்பதை கண்டான். விழிகளால் துழாவி இளைய யாதவர் அப்பால் தேரை கொண்டுசெல்வதைக் கண்டான். பாண்டவப் படை எழுந்து காட்சியை மூடியது. “அவனை நீங்கள் காக்க இயலாது, யாதவரே” என அவன் தனக்குள் கூவினான். “செல்க, அர்ஜுனனை தேடிச் செல்க!” என அவன் சக்ரனுக்கு ஆணையிட்டான்.

அவனுடைய தேர் படைமுகப்பினூடாகச் செல்கையில் எதிரில் சகதேவன் தேரில் தோன்றினான். “நில்லுங்கள் அங்கரே, உங்களை நேரில் சந்திக்கவென்று வந்தேன்” என்று நாணொலி எழுப்பியபடி கூவினான். “செல்க சிறுவனே, இது உன் போர் அல்ல” என்று சொல்லி அர்ஜுனனுக்காக விழிகளால் துழாவினான் கர்ணன். “ஆம், நான் சிறுவனே. பாண்டவ ஐவரில் நானும் என் இணைபிறந்தோனும் மட்டுமே உங்களை வெல்லாதுள்ளோம். அந்தப் புகழ் நாடியே வந்தேன்” என்றான் சகதேவன். கர்ணனின் உள்ளே பொங்கிக்கொண்டிருந்த சீற்றத்தை அச்சொல் அவனை நோக்கி பீறிட்டெழச் செய்தது. “என்ன சொன்னாய்? யாரிடம் பேசுகிறாய் என அறிவாயா? உன் தலையை மண்ணில் உருட்டிவிட்டு மீள்வேன்” என்றான் கர்ணன். “உங்களைக் கொல்லும் தருணம் வந்தும் இரு மூத்தவரும் விட்டுவிட்டனர். எனக்கு அவ்வாய்ப்பை அவர்கள் அளித்திருக்கின்றனர்” என்றான் சகதேவன்.

கர்ணன் உறுமியபடி சகதேவனை அம்புகளால் அறைந்தான். அவன் எண்ணியதற்கு மாறாக சகதேவன் தன் அம்புகளால் கர்ணனை நிகராக எதிர்த்து நின்றான். அவன் அம்புகள் அனைத்தையும் விண்ணிலேயே அறைந்து வீழ்த்தினான். கர்ணனின் நெஞ்சக்கவசத்தை அவன் அம்புகள் வந்தறைந்து உடைத்தன. கர்ணன் அதன் பின்னரே தன் முழுஆற்றலையும் திரட்டி சகதேவனை தாக்கினான். அவன் தேர்ப்புரவிகளை கொன்றான். பாகனின் தலையை அறுத்தான். தேர்மகுடத்தையும் தூண்களையும் உடைத்தான். அவன் கவசங்களை சிதைத்தான். தேரிலிருந்து பாய்ந்திறங்கிய சகதேவன் அப்போதும் பின்னடையாமல் கதையுடன் கர்ணனை எதிர்க்கும்பொருட்டு பாய்ந்தான். கர்ணன் தன் கதையுடன் எழுந்து புரவிகள்மேல் பாய்ந்து அவனை அணுகி ஏழுமுறை சுழன்று பதினெட்டாவது அறையில் அவன் கதையை உடைத்தெறிந்தான். சகதேவன் தேர்ச்சகடம் ஒன்றை எடுத்து கர்ணனை அறையவந்தான். தன் கதையால் அதை உடைத்து வீசினான் கர்ணன்.

வெற்றுடலுடன் படைக்கலமில்லாத கைகளுடன் நின்ற சகதேவனிடம் “செல்க, நீ மாத்ரியின் மைந்தன்! அவளுக்கு காட்டில் உன்னை பரிசளித்தவன் எவன் எனத் தெரியுமென்றால் அவனை எண்ணிக்கொள்க! ஒருவேளை அவன் கிராதனோ நிஷாதனோ என்றால் கீழ்பிறப்பினன் ஒருவனிடம் நிகர்நின்று பொருதிக் கொன்றேன் என்னும் பழி எனக்கு வரலாகாது என்று அஞ்சி உனக்கு உயிர்க்கொடை அளிக்கிறேன். ஓடி ஒளிந்துகொள்” என்றான். சகதேவன் நீர்வழியும் கண்களுடன் நோக்கி நின்றான். அவன் முகத்தில் மிக மெல்லிய நீரலைபோல் அர்ஜுனன் சாயல் வந்துசென்றது. “ஓடு கீழ்மகனே, நீ ஓடுவதைக் கொண்டு முடிவெடுக்கிறேன் காட்டில் உன் அன்னையைப் புணர்ந்தவன் எவன் என” என்றான் கர்ணன். சகதேவன் ஒருகணத்தில் குனிந்து தன் காலடியில் கிடந்த அம்பொன்றை எடுத்து தன் கழுத்தில் வைத்தான். கர்ணன் உரக்க நகைத்து “நன்று, நான் சொன்ன உண்மையால் உயிர்விட்டாய் என்று சூதர் பாடுக!” என்றான்.

சகதேவன் கையை தழைத்து தலைதாழ்த்தி விம்மினான். கர்ணன் மாறிய குரலில் “செல்க! செல்க, இளையோனே! சென்று ஓய்வுகொண்டு மீண்டும் களத்திற்கு வருக!” என்றான். திரும்பிக்கொண்டு “என் குருதிகண்டு மகிழும் வாய்ப்பு உனக்கு அமைக!” என்றபின் தேரைத் திருப்பி கொண்டுசெல்ல ஆணையிட்டான். அங்கிருந்து அகன்றபோது சொற்கள் அனைத்தும் ஒழுகி அகல மீண்டும் உடல்தளர்ந்து கைசோர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். மிக அப்பால் அர்ஜுனனும் கிருபரும் போரில் ஈடுபட்டிருப்பதை கண்டான். வெறுமனே அவர்களின் தேரை நோக்கிக்கொண்டிருந்தான். தேர்முகப்பில் அமர்ந்திருந்தவனின் பீலிவிழியை அங்கிருந்தே காணமுடியும் என்று தோன்றியது.

நூல் இருபது – கார்கடல் – 65

ele1சஞ்சயன் சொன்னான்: அரசே, இது முன்னரே எழுதப்பட்டுவிட்ட கதை. இது ஒரு பெருங்காவியத்தின் வரிகள். அந்த ஆசிரியனாக அமர்ந்து அதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதன் வரிகளில் விழியோட்டிக்கொண்டிருக்கிறேன். அதை தனிப்பயணி என மலையடுக்குகள் சூழ்ந்த பாதையில் பாடிக்கொண்டு செல்கிறேன். அந்தத் தொல்கதைக்குள் அமர்ந்து இக்கதையை உங்களுக்கு சொல்லிக்கொண்டுமிருக்கிறேன்.

இருளில் அர்ஜுனன் மேலும் கைகளும் வில்லும் பெருகியவன் போலிருந்தான். அவன் அம்புகள் அனைத்து திசைகளிலிருந்தும் எழுந்து சீறல் ஓசையுடன் வந்து அறைந்தன. கர்ணன் அர்ஜுனனை எதிர்கொண்ட முதற்சில கணங்கள் அந்த ஓசைகளும் அரையிருளில் அவை மின்னி வந்த காட்சிகளும் ஒன்றுடன் ஒன்று இணையாமல் திகைத்தான். இரண்டு அம்புகள் அவன் தேர்த்தூணில் வந்து அறைந்தன. ஒன்று அவன் வலத்தோள் கவசத்தை அறைந்து ஓசையுடன் அப்பால் சென்று விழுந்தது. பிறிதொரு அம்பு முழங்கியபடி அவன் தலைக்கு குறி கொண்டு அணைய இயல்பாக உடல் திருப்பி அதை ஒழிந்து சுழன்றெழுந்தபோது அறியாக் கணமொன்றில் அவன் விழி முற்றாக மறைந்து செவி காட்சித் திறன் கொண்டது.

பின்னர் அக்களத்திலிருக்கும் அனைத்து அம்புகளையும் அவன் பார்த்தான். அனைத்து அம்புகளையும் தன் அம்புகளால் அறைய முடியுமென்பதை அறிந்தான். காட்சி விரைவானது. ஆகவே அது தான் காண்பவற்றை விரைந்து தொடுத்து மின்னிமின்னிப் பெருகும் புடவி ஒன்றைப் படைத்து சூழ நிறுத்தியது. ஓசை விரைவு குறைந்தது. ஆகவே ஓசைகளால் சமைக்கப்பட்ட உலகு தளர முடையப்பட்டதாக இருந்தது. அதில் ஒவ்வொரு அம்பும் தனி அடையாளம் கொண்டிருந்தது. தனக்கென ஒரு சொல் கொண்டிருந்தது. சீறியது, சலித்துக்கொண்டது, தேடியது, சென்றறைந்து எக்களித்தது, உதிர்கையில் நீள்மூச்செறிந்தது. விழுந்து கிடக்கையில் ஆமென தன்னை அமைத்துக்கொண்டது.

அர்ஜுனனை தன் செவிகளால் பார்த்தபோது பெருகும் அவன் கைகளை கண்டான். இருபுறமும் பதினாறு கைகள் கிளைபிரிந்து தனித்தனியாக இயங்க மறுபக்கம் இருந்து அவன் ஆவக்காவலனின் கைகளும் பெருகி அத்தனை கைகளுக்கும் அம்பு தேர்ந்து அளித்தன. காண்டீபம் துள்ளித் துள்ளி ஒன்றிலிருந்து ஒன்றெனப் பிறந்து பதினாறும் அதன் பன்னிரு மடங்கும் அதன் பன்னிரு மடங்குமென பெருகி ஒரு திரும்பலில் ஒன்றுடன் ஒன்று படிந்து மீண்டும் ஒன்றென்றாகி சுழன்று மீண்டும் எழுந்தது. அதை அறிய அறிய தானும் அவ்வண்ணமே பெருகுவதை கர்ணன் அறிந்தான். பெருகிப்பெருகி வானளாவி இருளில் நிறைந்து அவனும் அர்ஜுனனுடன் போரிட்டான். எப்போதும் எழும் அந்த உளப்பெருக்கு. அவன் நானே என்னும் எண்ணமாக அதை அவன் மாற்றிக்கொண்டிருந்தான். ஒருவருக்கு ஒருவர் ஆடிப்பாவை என உருவாக்கிப் பெருக்கி களம் நின்றிருக்கிறோம். அவன் தோள்கள், அவன் கைகள், அவன் உடலின் அந்த நடனம். அவனுடைய அசைவின்மை நான். எனது அசைவு அவன்.

பின்னர் எங்கோ ஒரு புள்ளியில், அணுவிடையில், அதற்கும் குறைவான சிற்றணுவிடையில், மெல்லிய பூமுள்ளை நாவால் தொட்டறியும் நுண்ணிய அறிதலென ஒன்றை உணர்ந்தான். அது ஆணவமா, கசப்பா, விலக்கமா, அனைத்தாலும் உணர முடியாத பிறிதொன்றா? அவனால் அதை அத்தருணத்தில் வகுத்தறிய இயலவில்லை. ஆனால் அத்தனை போர்நடனத்திற்கு அடியில் அது என்ன என்று உள்ளம் தொட்டுத் தேடி தவித்துக்கொண்டும் இருந்தது. அது ஒரு தன்னுணர்வு மட்டுமே என்று ஒரு கணத்தில் எண்ணினான். அது ஒரு அச்சம் என்று அக்கணமே உருமாறியது. அது தன்னுணர்வு கரைவதைக் குறித்த அச்சமா என்ற ஐயமாக உருவெழுந்தது. அவன் தன் ஆவநாழியிலிருந்து அம்பொன்றை எடுத்து கூர் உணர்ந்து நாணிழுத்து எய்து அது விண்ணில் எழுந்த கணத்தில் அறிந்தான், அவ்வுணர்வே அந்த அம்பென்றாகி எழுந்தது என்று.

தன்னிலிருந்து அகன்று செல்லும் அதை பருப்பொருளென பார்த்தபோது அது என்னவென்று உணர்ந்தான். அது அவனை அர்ஜுனனிலிருந்து முற்றாகப் பிரித்தது. அர்ஜுனனைக் கொன்றாலொழிய தான் இல்லை என்று அவனுக்கு சொன்னது. அர்ஜுனன் அழிந்து பின்னர் எழுந்த தான் ஒன்றிலேயே தன்னால் முழுதமைய முடியுமென்று அறிந்தது. பின்னர் அவன் ஆவநாழியிலிருந்த அனைத்து அம்புகளும் அவ்வுணர்வை ஏற்று பற்றிக்கொண்டன. அவன் உடலுக்குள் எங்கோ எண்ணமென்றிருந்து, குருதிக்கசப்பென்று ஊறி, கால்விரல்களை அதிரச்செய்து, வயிற்றில் கொப்பளித்து, மூச்சில் அனல்கொண்டு, கைவிரல்களை பதறச்செய்து, உதடுகளை உலரவைத்து, விழிகளை எரியச்செய்து, முகம் கனல நெற்றிப்பொட்டில் மோதி கூர்கொண்டது அது. கொல் கொல் கொல் கொல் கொல் என அது கூவிக்கொண்டிருந்தது. அவன் காற்றையும் வானையும் அச்சொல்லால் நிறைத்தது. கொல்க அவனை! கொன்றெழுக அவனை! கொன்று விஞ்சுக! கொன்று நிலைகொள்க!

அர்ஜுனனைக் கொன்று எஞ்சவேண்டுமென மட்டுமே உளம்கொண்டவனாக அவன் அம்புகளை அறைந்தான். இதோ இதோ என அவன் உடலிலிருந்து ஆயிரம் நச்சு நாகங்கள் எழுந்து படம் விரித்து அம்புகளை செலுத்தின. அவனை வந்தறைந்த அர்ஜுனனின் அம்புகளிலிருந்து தான் செலுத்திய அதே அம்புகள் அவை என உணர்ந்தான். சென்றவையே அவ்வடிவிலேயே மீள்கின்றன என்பதுபோல் அவனுடைய ஆவநாழியிலிருந்து கிளம்பியபோதிருந்த அதே வஞ்சத்துடன், அதே மாறா விசையுடன் அவை திரும்பி வந்தன. அத்தனை அம்புகளையும் நான் எனக்கே என செலுத்திக்கொள்கிறேனா? என் ஆவநாழியே அவன் தோளிலும் தொங்குகிறதா? இல்லை, நான் விஞ்சும் ஒரு துளி நஞ்சு கொண்டவன். அவனை ஏழுமுறை பொசுக்கும் கருநஞ்சு என் அம்புத்தூளியில் பொறுமையிழந்து நெளிகிறது.

ஆனால் அதை அவனால் தொடமுடியவில்லை. கை அதை நோக்கி செல்லவில்லை. எண்ண எண்ண கை நெளிந்து அகன்றதுபோல. நான் இன்னும் எண்ணவில்லை. எண்ணமென்றே ஆகாத வஞ்சமென்றிருக்கிறதா? அவன் உரக்க “கீழ்மகனே, உன்னைக் கொன்றாலன்றி தீராத தழல் இது” என்று கூவினான். சொற்களென எழுந்ததுமே அவ்வெண்ணம் பருவடிவு கொண்டது. பருவிசையென கையை எடுத்துக்கொண்டது. அவன் கை சுழன்று ஆவநாழிக்குள் சென்று அரவம்பின் மேல் தொட்டது. அவன் தன் உடலுக்குள் குளிர்ந்த வேல் ஆழப்பதிந்து நின்றதுபோல் உணர்ந்தான். அவன் அரைக்கணத்திற்கும் குறைவாகவே செயலற்றிருக்கக்கூடும். அதற்குள் அர்ஜுனனின் ஏழு அம்புகள் வந்து அறைந்து அவனை தேர்த்தட்டில் வீழ்த்தின.

ele1கர்ணனின் தேரை ஓட்டிய அவன் குலத்து இளையோனாகிய துருமன் கடிவாளங்களை இழுத்து பக்கவாட்டில் திருப்பி கர்ணனின் தோளில் இருந்த கவசத்தை முன்னால் காட்டச் செய்து மேலும் எழுந்த அம்புகளிலிருந்து அவனை காத்தான். தோள்கவசங்களை அறைந்து உதிர்ந்த அர்ஜுனனின் அம்புகள் அவனைச் சூழ்ந்து தெறித்தன. தேரைத் திருப்பி கர்ணனை மீட்டு அப்பால் கொண்டுசென்றபோது அவன் நோயுற்றவன்போல் நடுங்கிக்கொண்டிருப்பதை துருமன் கண்டான். “மூத்தவரே! மூத்தவரே!” என்று அவன் கூவினான். தாழ்ந்த குரலில் “செல்க! செல்க!” என்று கர்ணன் சொன்னான். பெருவிடாய் கொண்டவன்போல் தளர்ந்திருந்தது அவன் குரல். “மூத்தவரே” என்றான் துருமன். “செல்க, படைமுகம் செல்க!” என்றான் கர்ணன். துருமன் கடிவாளத்தை தளர்த்தி சவுக்கோசை எழுப்பி புரவிகளை முன்செலுத்தினான்.

அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே முன்பெனவே போர் மூண்டெழுந்தபோது துருமன் கர்ணனிடமிருந்த கை நடுக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கர்ணனின் கால்கள் தேர்த்தட்டில் வழுக்குவதுபோல் தோன்றின. ஒருகணம் அவன் விழுந்துவிட்டான் என்ற உணர்வையே துருமன் அடைந்தான். தன் விசை அனைத்தையும் திரட்டிக்கொண்டு கர்ணன் மீண்டும் எழுந்து அர்ஜுனனை தாக்கத் தொடங்கினான். அவர்களிடையே போர் கணம் குறையா நிகர்விசையுடன் நிகழ்ந்தபோது துருமன் முதற்கணம் ஆறுதல் அடைந்தான். இதோ எழுந்து அறைந்து வெல்வார், இதோ விஞ்சுகிறார், இதோ பேருருக்கொள்கிறார், இக்கணம் இப்போர் முடிவடையும், இன்னும் சில கணங்கள்… ஆனால் அவன் அகத்திலிருந்த அடுத்த ஐயம் எழுந்துவந்து அசைவிலா தூண் என முன்னால் நின்றது. அறியா விசையொன்றால் கர்ணன் கைபற்றி நிறுத்தப்படுவதை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். ஒருகணம்தான், ஆனால் அர்ஜுனனுடனான போரில் அதுவே பெரும் பின்னடைவாகிறது.

கர்ணனின் அம்புகள் எழுந்து அர்ஜுனன் பின்னடையத் தொடங்கியபோது நேர்மாறாக துருமனின் உள்ளம் சுருங்கிக்கொண்டிருந்தது. கர்ணனால் ஒருபோதும் பாண்டவ ஐவரையும் கொல்ல இயலாது என்று அவன் உறுதியாக உணர்ந்தான். அர்ஜுனனை கர்ணன் தன் அம்புகளால் அறைந்து அறைந்து பின்னடையச்செய்து பாண்டவப் பின்னணிப் படைகளின் மேல் அழுத்தி விசையழியச் செய்தான். அர்ஜுனனுக்குப் பின்னால் விழுந்து கிடந்த இரண்டு யானைகளின் உடலால் அவன் தேர் தடுக்கப்பட இளைய யாதவர் தேரைத் திருப்பி அர்ஜுனனை கர்ணனின் அம்புகளிலிருந்து அகற்ற முயன்றபோது மீண்டும் கர்ணனின் உடலில் அந்தத் துடிப்பு குடியேறுவதை துருமன் உணர்ந்தான். இழுத்துக்கட்டிய பாய்மரத்தில் காற்றதிர்வதுபோல் அதிர்வுகொள்ள வைத்தது அத்துடிப்பு. இக்கணம் இக்கணம் என்று அவன் உள்ளம் பொங்கியெழுந்தது. இதோ அர்ஜுனன் நச்சு தீண்டி விழப்போகிறான். இதோ போர் முடியப்போகிறது. இதோ அனைத்தும் அழியப்போகிறது. இக்கணம்! இக்கணத்தில் நான் வாழ்கிறேன். மறுகணத்தில் இறந்தால்கூட இக்கணத்தை இனி எவரும் நினைவுகூரவில்லையென்றால்கூட இக்கணத்தில் வாழ்வதனூடாகவே இந்த யுகத்தை அறிந்திருக்கிறேன். ஆம் இக்கணம்!

ஆனால் மீண்டும் கர்ணன் தேர்த்தட்டில் உடல் தளர்ந்து அப்பால் சரிந்தான். அவன் தோள் சென்று தேர்த்தட்டில் ஒரு தூணை அறைந்தது. துருமன் வலப்புரவியை பிடித்திழுத்து தேர் அடைந்த அச்சரிவை தவிர்த்து அதை வளைத்து கொண்டுசெல்ல அர்ஜுனனின் அம்புகள் அவன் தோள்மேலும் தலைக்கவசத்தின் மேலும் அறைந்தன. தேர்த்தட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொற்தகடுகள் மூடிய தூண்களை அம்புகள் வந்து அறைந்து பொறிபறக்கச் செய்தன. கர்ணன் நீள்மூச்சு விடுவதை துருமன் கேட்டான். அவன் புண்பட்டிருக்கிறான் என முதல் எண்ணம் எழுந்தது. உடனே பதற்றம்கொண்டு ஆடிகளில் நோக்கி அவ்வாறல்ல என உணர்ந்தான். தேரைத் திருப்பவா என எண்ணியபோது கர்ணன் மூச்சை இழுத்து மீண்டும் எழுவதை கண்டான். அவன் உள்ளத்தில் முதல் முறையாக கர்ணனின் மேல் ஒருதுளி வெறுப்பு எழுந்தது.

துருமன் கர்ணனை தன் தந்தை வடிவாகவே அறிந்திருந்தான். மறு எண்ணமில்லாத பணிவையே அவனிடம் கொண்டிருந்தான். அது குடிமூத்தான் என்பதனால் மட்டும் அல்ல. அவன் அறிந்த மானுடரில் முதன்மையானவன் கர்ணனே என்பதில் அவனுக்கு ஐயமிருக்கவில்லை. இளமைமுதல் அவன் கர்ணனைக் கண்டு வழிபட்டு வளர்ந்தான். கர்ணனின் தந்தை அதிரதரின் இளையோன் உக்ரரதரின் மூன்றாவது மைந்தன் அவன். அதிரதர் உக்ரரதரைவிட பதினெட்டு அகவை மூத்தவர். அதிரதரின் தந்தை மகாரதரின் நான்காவது துணைவியின் மைந்தன் உக்ரரதர். அவர்களின் குடிக்கு மூத்தவராகிய அதிரதர் இளமையிலேயே உள்ளத்தால் முதியவராகிவிட்டவர். அங்கநாட்டில் தேர்ப்படையின் பகுதியாக அவர்களின் குடி இருந்தது. அச்சிறுநகரில் ஒருபோதும் படைப்புறப்பாடுகளை அறிந்திராத தேர்ப்படையில் அவர்களின் நான்கு தலைமுறைகள் வளர்ச்சியின்றி வாழ்ந்தனர். களத்தில் நின்று பொருதவோ நெடுந்தொலைவிற்கு தேர்களை கொண்டுசெல்லவோ தங்களால் இயலுமென்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

மகாரதர் இறந்ததும் அவரது முதற்துணைவி பார்ஸ்வையின் மைந்தனாகிய அதிரதர் அவர்கள் குடிக்கு மூத்தவரானார். தந்தையிடமிருந்து அமரத்தில் அமர்ந்து புரவிகளை சவுக்கால் அறைந்து ஓட்டுவது, அவற்றை காலையில் நீராட்டுவது, இலைகளால் உடலுருவி விடுவது, பயிற்சியோட்டம் அளிப்பது என்னும் எளிய பணிகளுக்கு அப்பால் அதிரதர் புரவிக்கலைகள் எதையுமே அறிந்திருக்கவில்லை. மூத்தவர் என்றே வளர்ந்தமையால் எப்போதும் கவலைகொண்ட பாவனையும் தற்பெருமையும் மேட்டிமைப்பேச்சும் அவரிடமிருந்தது. அங்கநாட்டின் புரவிக்கொட்டிலின் பொறுப்பாளராக அவர் ஆனபோது தன்னை தன்னைவிடப் பெரிய இடத்தில் நிறுத்திக்கொண்டார். மேலும் மிதப்பும் நடிப்பும் கொண்டவராக ஆனார். ஆனால் பெருமிதத்தால் சிறுத்து கேலிப்பொருளாவோர் உண்டு. பெருமிதத்தால் தங்களை வளர்த்து எண்ணியவாறே பெருகுபவரும் உண்டு. அதிரதர் புரவிக்கொட்டிலுக்கு பொறுப்பான பின்னரே புரவி நூல்களை பயிலத்தொடங்கினார். இரவும் பகலும் புரவிகளுடன் இருந்தார். கற்றவற்றை கண்ணால் பார்த்தார். அவற்றை தன் குடியினருக்கு கற்பித்தார். ஒவ்வொரு நாளுமென அறிதல் பெருகி புரவிகளின் உள்ளறிந்தவரானார். தேரின் விசைகளை கடிவாளங்களால் உணர்பவர் என மாறினார்.

“அதிரதரின் கையில் தேர் ஒரு யாழ். கடிவாளங்கள் அதன் நரம்புகள். அவரது தேரில் ஊர்வது இனிய இசையொன்றின் ஒழுக்கில் செல்வது” என்று மன்னர் அவரை ஒருமுறை புகழ்ந்தார். தன் இளையோர், மைந்தர் அனைவரையுமே அதிரதர் அங்கநாட்டுப் படைகளுக்குள் கொண்டு வந்தார். அவரது ஏழு இளையவர்களுக்கும் மைந்தர்கள் பிறந்தனர். அவருக்கு மட்டும் மைந்தர்கள் அமையவே இல்லை. இளையோரின் மைந்தர்களையே தன் மைந்தர்கள் என்று அவர் கொண்டார். அவர்களுக்கு கற்பித்தார், பேணி வழிகாட்டினார். பின்னர் அவருக்கு யமுனையின் பெருக்கில் வந்த மைந்தன் ஒருவன் கிடைத்தபோது அதை தன் இளையோரின் மைந்தர் மீது கொண்டுள்ள பேரன்பின் கனிவென்றே கருதினார்.

“மைந்தர்கள் பிறக்காதவர்கள் உளம் சுருங்குகிறார்கள். பிற மைந்தர்களையெல்லாம் தனக்கு மறுக்கப்பட்ட மைந்தர்கள் என்றே எண்ணுகிறார்கள். அவர்கள் மேல் வெறுப்பும் அகல்வும் கொண்டு அகம் இறுகிவிடுகிறார்கள். இறுகிய அகம் என்பது விரல் மூடி குவிக்கப்பட்ட கைகள் போன்றது. மேலிருந்து அதில் ஈய நினைக்கும் தேவர்கள் தயங்கி தங்கள் கையை பின்னெடுத்துக்கொள்கிறார்கள். பிற மைந்தர் அனைவரையும் தனக்குப் பிறக்காத தன் மைந்தர் என்றே எண்ணி உளம் விரிபவன் கைகளை தெய்வத்தை நோக்கி விரித்து நீட்டுபவன். அந்த ஏந்திய கைகளுக்கு பரிசளிக்காதிருக்க தெய்வங்களால் இயலாது. என் இளையோன் மைந்தர் மீது நான் கொண்ட பேரன்பினால் இம்மைந்தன் எனக்கு நீரன்னையால் அளிக்கப்பட்டான். இவன் நிழலில் என் மைந்தர் பெருகுவார்கள்” என்றார் அதிரதர்.

கர்ணன் தன் உடன்குருதியினர் அனைவருக்கும் இனியவனாக இருந்தான். அங்கநாட்டிலிருந்து அஸ்தினபுரிக்குச் சென்ற அதிரதர் தன் இளையோரையும் இளையோர் மைந்தரையும் அஸ்தினபுரிக்கு அழைத்துக்கொண்டார். ஒவ்வொருவரையும் பெருந்தேர் வல்லவர்களாக பயிற்றுவித்தார். கர்ணன் அங்கநாட்டுக்கு அரசனானதும் அரச குடியினருக்குரிய தலையணி உரிமை, இடைக்கச்சை உரிமை, மணியணியும் தகுதி ஆகியவற்றைப் பெற்று துருமனும் அவன் தந்தையும் குடிகளும் அங்கநாட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு அரசனும் தந்தையும் தெய்வ உருவுமாகவே கர்ணன் இருந்தான். கர்ணனுக்குத் தேரோட்டிகளாகவும் வில்துணைவராகவும் அதிரதரின் குலத்து மைந்தர்கள் அமைந்தனர். முதல்நாள் முதல் போர்க்களத்தில் ஒவ்வொருவராக மறைகையில் பிறர் அவ்வாய்ப்பு தனக்கு அமைகிறதென்றே எண்ணினர்.

அன்று கர்ணன் துருமனை நோக்கி “இளையோனே, இன்று நீ என் தேரை தெளி” என்று கூறியபோது தன் வாழ்வின் முதன்மைப் பெருந்தருணம் அமைகிறதென்று எண்ணி துருமன் தலைவணங்கி விழிநீர் கோத்தான். தேர்த்தட்டில் ஏறி அமர்ந்து அமரத்தை தொட்டு வணங்கி கடிவாளக் கற்றையை கையிலெடுத்தபோது “மூதாதையரே! தெய்வங்களே!” என்று உள்ளத்தால் கூவினான். ஒருவேளை இதுவே அந்நாளாக இருக்கக்கூடும். இத்தருணமே அதுவரை அவன் குலம் கொண்டுள்ள நீடுதவத்தின் விளைவென அமையலாம். இன்று அங்கர் போர்வென்று அஸ்தினபுரியின் அரசனுக்கு முடிசூட்டி மீளலாம்.

அன்று களத்தில் கர்ணன் முழு ஆற்றலுடன் வெளிப்பட்டபோது துருமன் “இன்று என் இறைவனின் பொழுது. எழுகதிரவனின் தருணம்!” என்று உளம் எழுந்தான். ஆனால் அர்ஜுனனுடன் அவன் பொருதுகையில் கர்ணனிடம் உருவாகும் அறியாத தவிப்பொன்றை அவன் உணர்ந்தான். விசை கொண்டெழும் ஒன்று, அதை எதிர்த்து சற்றே மேலெழும் பிறிதொன்று என தேர்த்தட்டில் நின்று கர்ணன் நிலையழிவதை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அவனுக்கு இருபுறமும் இருந்த ஆடிகளில் அவன் ஓரவிழிகள் கர்ணனை பார்த்துக்கொண்டிருந்தன. அவன் முகக்குறிகளால், கையசைவுகளால் ஆணைகளை பெற்றன. அவ்வொத்திசைவும் மெல்ல மெல்ல அணைந்து ஒருகணத்தில் அவனே தேர்த்தட்டில் நிற்பவனாகவும் ஆகி போர் புரிந்தான். தேர் உடலென்றாகி அதற்குள் உயிரென்று கர்ணனும் உளமென்று தானும் மாறிவிட்டதுபோல். அத்தேரே தயங்கியும் வளைந்தும் பாய்ந்தும் ஒழிந்தும் தன் போரை நிகழ்த்துவதுபோல்.

கர்ணன் பாண்டவ இளையோரையோ அர்ஜுனனையோ கொல்லக்கூடுமென்ற நம்பிக்கையை துருமன் இழந்துகொண்டே இருந்தான். ஆனால் அத்தருணத்தில் கர்ணன் மேலும் மேலுமென விசைகொண்டு உறுமி அர்ஜுனனை அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தான். அர்ஜுனனின் தேர்மகுடம் உடைந்து தெறித்தது. அவன் தலைக்கவசம் சிதைந்தது. தோளிலைகள் ஒவ்வொன்றாக பறந்து அப்பால் விழுந்தன. அவன் தேர்த்தட்டெங்கும் கர்ணனின் அம்புகள் அறைந்து விழ ஏழுமுறை தேரில் விழுந்தும் ஒருமுறை தேரிலிருந்து வெளியே தாவி ஓடி பிறிதொரு புரவிமேல் பாய்ந்து மீண்டும் தேர்த்தட்டில் வந்தமைந்தும் அர்ஜுனன் தன்னை காத்துக்கொண்டான். அவன் நெஞ்சிலும் தோள்களிலும் அம்புகள் பாய்ந்தறைந்தன. எக்கணமும் பேரம்பொன்றால் கர்ணன் அர்ஜுனனின் நெஞ்சு பிளக்கக்கூடும் என்று துருமனின் உளம் எண்ணினாலும் ஆழத்தில் பிறிதொரு குரல் அல்ல அல்ல என்று முணுமுணுத்தது.

அவனுள் அனைத்து முடிச்சுகளும் தளர்ந்து உள்ளம் முற்றமைந்துகொண்டே இருந்தது. கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஒரே முகம் என்பதை இளமையிலேயே அவர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். அது ஏன் என்பதை ஒரு முணுமுணுப்பாக அவர்கள் குடிக்குள் பெண்டிர் பேசிக்கொண்டும் இருந்தனர். ஆனால் அந்தக் களம் என்பது ஒவ்வொருவரும் தன் உடன்பிறந்தாருக்கெதிராக நிகழ்த்தும் போர். கௌரவ பாண்டவ குடிகள் மட்டுமன்றி அங்கிருக்கும் அத்தனை ஷத்ரியருமே எவ்வகையிலோ உடன்குருதி உறவு கொண்டவர்கள். உடன்குருதியினரை கொல்வதே அக்களத்தின் வெற்றியின் உச்சமென்றாயிற்று. அவ்வெல்லையைக் கடந்தவனே அங்கு வெல்லவும் மீளவும் முடியுமென்று அமைந்தது. நூற்றுவரைக் கொல்வேன் என்று வஞ்சினம் உரைத்து பெரும்பகுதியினரின் குருதியாடி நின்றிருந்தான் பீமன். கொன்றவர்கள் நுண்ணிய எல்லைக்கோடொன்றை கடந்துசென்று பிறிதொருவர் ஆயினர். அவர்கள் எதை இழந்தனர் என அவர்களே அறிந்தனர். அவர்கள் தளரா போர்வல்லமையை ஈட்டினர்.

கர்ணனும் கொல்லக்கூடும் என்று துருமன் முன்னர் எண்ணியிருந்தான். கொல்வேன் என்று வஞ்சினம் உரைத்து அன்று காலை கர்ணன் எழுந்தபோது “ஆம்!” என்று அவனுளமும் பொங்கியெழுந்தது. உடல் மெய்ப்பு கொள்ள விழிநீர் படர்ந்தது. தேரில் எழுகையில் அன்று அது நிகழும் என்று எதிர்பார்த்தான். நான்கு முறை நகுலனையும் சகதேவனையும் கர்ணன் அக்களத்தில் எதிர்கொண்டான். ஒருமுறை பீமனை. இருமுறை யுதிஷ்டிரரை. ஒவ்வொரு முறையும் அம்புகளால் அவர்களை அறைந்து கொல்லும் தருணம் வரை சென்று இயல்பாக திரும்பிக்கொண்டு அவர்களை விடுவித்தான். ஒருமுறை யுதிஷ்டிரரிடம் “செல்க! இங்கு வீணாக தலைகொடுத்து அழியவேண்டாம். அந்தத் தலை குருதிபடிந்த இம்மண்ணில் உருளும் அளவுக்கு எடைகொண்டது அல்ல” என்று ஏளனம் உரைத்த பின்னரே எடுத்த அம்பை மீள வைத்தான். யுதிஷ்டிரர் கண்களில் சீற்றத்துடன் பற்களைக் கடித்து ஒரு கையில் வில்லும் இன்னொரு கையில் அம்பும் செயலற்றிருக்க நோக்கியபின் தலைகுனிந்து பாகனிடம் தன் தேரை திருப்பும்படி ஆணையிட்டார்.

கர்ணன் அர்ஜுனனுக்காக தன் இறுதி நஞ்சையும் திரட்டுவதாக துருமன் எண்ணினான். ஆனால் அர்ஜுனனுடனான போரில் இறுதித் தருணத்திலும் அவன் வில் தழைவதை கண்டான். நம்பிக்கையிழந்து அவன் அகம் தளர்ந்திருந்தபோது கர்ணன் மேலெழுந்து அர்ஜுனனை வென்று சென்றுகொண்டிருந்தான். அதை அறிந்ததும் அவன் உள்ளம் மீண்டும் எழுந்தது. ஒரு தருணத்தில் விழிகளுக்கும் செவிகளுக்கும் அப்பால் பிறிதொன்றால் அவன் கர்ணனை உணரத்தொடங்கினான். கர்ணனின் எண்ணங்களுக்கும் எடுத்த அம்புகளுக்கும் முன்பு இருந்த தருணங்களையும் தயக்கங்களையும் தானென்று உணர்ந்தான். அம்புகளைக்கொண்டு அர்ஜுனனை அறைந்தறைந்து பின்செலுத்திக் கொண்டிருந்தான். அர்ஜுனன் அனைத்துக் கவசங்களும் சிதற இடைக்குமேல் கவசங்களே இல்லாத வெற்றுடலுடன் திகைத்தவன்போல் தன் தேரில் நின்றிருந்தான்.

பெருங்கூச்சலுடன் வஞ்சினச் சொல்லுரைத்தபடி கர்ணன் தன் நாகபாசத்தை எடுத்தான். உடல் கல்லென்றாகி அனைத்து அசைவுகளும் அழிய, அக்கணம் மட்டுமே முன்னால் விரிந்திருக்க துருமன் தேர்த்தட்டில் அமர்ந்திருந்தான். வில்லிலிருந்து கிளம்பிய நாகபாசம் எட்டு சிறகுகளை விரித்தது. நீல நச்சுத் துளியொன்றை அலகென சூடி முழங்கியபடி அர்ஜுனனை நோக்கி பாய்ந்தது. இளைய யாதவர் தேரை முன் தெளித்து விந்தையான முறையில் சற்றே முன்திருப்ப அதன் இடப்பக்கச் சகடம் மண்ணில் இறங்கி புதைந்து தேர் பக்கவாட்டில் கவிழ்வதுபோல் குடை சாய்ந்தது. அர்ஜுனனின் தலைக்கு மேலாக காற்றைச் சீவியபடி உறுமிச்சென்ற நாகபாசம் அப்பால் சுழன்று மேலெழுந்து ஏழுமுறை வட்டமிட்டு சிறகோசையுடன் மீண்டும் கர்ணனிடம் வந்தது. அதைப் பிடித்து கையிலெடுத்தபோது கர்ணனிடம் நீள்மூச்சொன்று எழுந்தது.

இளைய யாதவர் சவுக்கால் வலப்பக்கப் புரவியை அறைந்து தேரை முன்னெடுத்து மீட்டு வளைத்து அப்பால் கொண்டுசென்றார். மீண்டும் கர்ணன் நாகபாசத்தை ஏவுவான் என எதிர்பார்த்து, உடல் துடிக்க திரும்பி, கர்ணன் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து பெருமூச்சுடன் தானும் உளம் தளர்ந்தான் துருமன். பின்னர் அவன் உள்ளத்தில் அக்கணம் ஒவ்வொரு தனியசைவாக விரியத் தொடங்கியது. அக்களத்தில் எங்கும் ஆழ்ந்த பிலங்கள் உண்டென்று அவன் அறிந்திருந்தான். அவற்றில் மென்மணல் பொருக்கு மூடியிருக்கையில் தேர்ச்சகடங்கள் ஆழ்வது பலமுறை நிகழ்ந்திருந்தது. எந்தத் திறன்கொண்ட தேராளியும் மறைந்திருக்கும் அந்த ஆழ்வெடிப்புகளை முன்னுணர இயலாது. எனினும் அத்தருணத்தின் ஒத்திசைவு அவனை உளம் வியந்து அமையச்செய்தது. தெய்வங்கள் அமைத்த ஒரு கணம். அல்லது அத்தேரின் அமரத்தில் தெய்வமே அமர்ந்திருக்கிறது.

அவன் விழிமலைக்க இளைய யாதவரை நோக்கிக்கொண்டிருந்தான். ஒருகணம் அறிந்தான் தன் தேரில் தன் வடிவில் அமர்ந்திருப்பதும் அவரே என. அத்தருணத்தில் அர்ஜுனனின் அம்பு எழுந்து வந்து அவன் தலையை கொய்தெறிந்தது.

நூல் இருபது – கார்கடல் – 64

ele1சஞ்சயன் சொன்னான்: அரசே, எவருடைய கண்களால் நான் பார்க்கிறேன் என்று தெரியவில்லை. நான் எங்கோ இக்கதையை ஓர் அரக்கர் கூட்டத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். மறு சொற்றொடரை நாகர்களுக்கு சொல்கிறேன். ஆழ்ந்த கனவென அக்காட்சி திரும்புகையில் அரண்மனையில் காந்தாரப் பேரரசியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது இதை சொல்லும்போது நான் எங்கோ ஒரு வழிச்சாவடியில் வணிகர் நடுவே விழியிலாத சூதனாக அமர்ந்து இக்கதையை பாடுவதாக உணர்கிறேன்.

படைகளுக்கு மேல் இரும்புக்கவசம் இருளில் விண்மீன் ஒளியில் மின்னும் சுனைநீர்போல அலைகொள்ள பால்ஹிகர் சென்றுகொண்டிருப்பதை துரியோதனன் பார்த்தான். முதலில் அது என்ன அசைவென்று அவனுக்கு தெரியவில்லை. அப்பால் ஒரு செய்தி அறிவிப்பு பந்தம் எழுந்து சுழன்றபோது கோட்டுருவில் அது யானைமேல் செல்லும் பால்ஹிகர் என்று புரிந்துகொண்டு “பிதாமகரா! அவர் களம்காண வேண்டியதில்லை என்று சென்று சொல்” என்று கூவினான். “அவர் இரவில் நோக்கும் விழி கொண்டவரல்ல. ஒளிச்செய்திகளையோ ஒலிச்செய்திகளையோ கேட்டு போரிடவும் அறிந்தவர் அல்ல.”

பால்ஹிகர் முகில்களின் மேல் கால்வைத்து நடப்பவர்போல் தோன்றினார். அங்காரகனின் கவசங்கள் கரியவையாக இருந்தமையால் அது முற்றாகவே இருளுக்குள் மறைந்துவிட்டிருந்தது. பால்ஹிகரை நோக்கியபின் கீழே நோக்கியபோது இருளின் புரளலாக யானை தெரிந்தது. இருளின் ஓர் அலைமேல் பால்ஹிகர் செல்வதுபோல. “அவர் படைமுகம் செல்லக்கூடாது… என் ஆணை” என்றான் துரியோதனன். சுபாகு புரவியில் ஏறிக்கொண்டு பாறைப்பகுதியின் ஆறுபோல முட்டிமோதிச் சுழன்ற கௌரவப் படையினூடாக பிளந்து சென்றான். வழிவிடும்பொருட்டு அவன் கூச்சலிட்டுப் பார்த்தான். ஆனால் எவ்வொலியும் எவர் செவிகளிலும் விழவில்லை என உணர்ந்தபின் வீரர்களை பிடித்துத் தள்ளியும் இடைவெளிகள் வழியாக சிட்டுக்குருவி என வளைந்து சுழன்றும் அவன் முன் சென்றான்.

விண்ணிலிருந்து அரக்கர்களும் அசுரர்களும் வௌவால்கள்போல் இறங்கி தாக்கி அலறல்களையும் கூச்சல்களையும் எஞ்சவிட்டு மீண்டும் எழுந்தகன்றுகொண்டிருந்தனர். நிஷாதர்களும் கிராதர்களும் எய்த அம்புகள் குறி பிழைக்காது வந்து ஷத்ரியர்களை அலறி விழச்செய்தன. நீண்ட கழைகளை ஊன்றி விண்ணில் தாவி எழுந்து எடையுடன் இறங்கிய இடும்பர்கள் கையிலிருந்த நீண்ட சாட்டை நுனியில் கட்டப்பட்ட கூர்முனை கொண்ட இரும்புவட்டை வீசி வீரர்களின் கழுத்துகளை வெட்டி மீண்டும் கழைகளை ஊன்றி எழுந்தகன்றனர். கௌரவப் படைகள் அணிகுலைந்து ஒன்றையொன்று முட்டி நெருக்கி சில இடங்களில் விரிந்தகன்று குழம்பி அலைகொண்டிருந்தன. அவற்றின் நடுவே சுழியில் சிக்கிக்கொண்ட பெருங்கலம்போல் தயங்கியும் சுழன்றும் நிலையழிந்து நின்றிருந்தது அங்காரகன். அதைச் சூழ்ந்து கௌரவப் படை வட்டமிட்டது.

சுழிபிளந்து அங்காரகனை அணுகிய சுபாகு புரவி மேல் எழுந்து நின்று “பிதாமகரே! தாங்கள் பின்னடைய வேண்டுமென்று ஆணை! தாங்கள் போருக்கெழ வேண்டியதில்லை! பின்னடைக!” என்று கூறினான். பால்ஹிகர் தனது கதையைச் சுழற்றி அறைந்தபடி “மேலும்! மேலும்!” என யானையை முன்செலுத்த முயன்றுகொண்டிருந்தார். அங்காரகன் நான்கு அடி முன் சென்று சுழன்று திரும்பி மூன்றடி பின் வந்து மீண்டும் முன்சென்றது. பால்ஹிகரின் கதைச்சுழற்சியில் அவரைச் சூழ்ந்திருந்த கௌரவ வீரர்களே பெரும்பாலும் அறைபட்டு விழுந்தனர். தன் முன் சீறலொலியுடன் கதை உருளை கடந்து செல்ல சுபாகு தலைகுனிந்து அதிலிருந்து தப்பினான். உரத்த குரலில் “பிதாமகரே, தாங்கள் இப்போரை நிகழ்த்த இயலாது. செல்க! பின்திரும்பிச் செல்க!” என்று கூவினான். “பின் திரும்புக! அரசாணை! பின் திரும்புக!”

பின்னர் உணர்ந்தான், அப்போர் தொடங்கிய நாள் முதல் அவரிடம் எவருமே உரையாடியதில்லை என்று. ஒரு சொல்லும் உரைக்கப்படாதவராக, பிறரை நோக்கி ஒரு சொல்லும் உரைக்காதவராக அந்தப் பதினான்கு நாட்களும் அவர் குருக்ஷேத்ரக் களத்தில் இருந்தார். அவர் அறிந்தது புலரியில் ஒலிக்கும் போர்முரசின் அறைகூவலை மட்டுமே. அந்தியில் போர்முடிவுக்குப் பின்னரும்கூட பெரும்பாலான நாட்களில் அவர் கதைசுழற்றி போரில் மூழ்கித்தான் இருந்தார். சூழ்ந்திருந்த படைகள் விலகி பின்னடையத் தொடங்குகையில் அதைக் கண்டு அங்காரகனே முடிவெடுத்து பின்னடையத் தொடங்கும். தன் பாடிவீட்டை அடைந்ததும் அவர் யானையிலிருந்து இறங்கி எடை மிக்க கவசங்கள் குலுங்கி ஒலிக்க தன் குடிலுக்கு முன்னால் சென்று வெறுந்தரையில் கால் நீட்டி அமர்வார். ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை புதிதெனக் கண்டு துணுக்குறுபவர்போல் அவர் தோன்றுவார்.

யானை அவர் அருகிலேயே நின்றிருக்கும். அதை யானைக்கொட்டிலுக்கு கொண்டுசெல்ல முயன்றபின் அதன் மறுப்பை உணர்ந்து பாகர்கள் கைவிட்டனர். அங்காரகனை பாகர்கள் எவரும் அணுகவோ ஆணையிடவோ இயலவில்லை. அத்திரிகள் இழுக்கும் வண்டிகளில் அதற்கான உணவு கொண்டுவரப்பட்டது. உப்புநீர் நனைத்த வைக்கோலும், காட்டுத்தழையும், கிழங்குகளுடன் வேகவைத்து உருட்டிய புல்லரிசிச்சோற்றுக் கவளங்களும் அதன் முன் விரித்த ஈச்சைப்பாயில் குவிக்கப்பட்டன. அங்காரகன் உடலை அசைத்தபடி சீரான துதிக்கைச் சுழற்சிகளுடன் அவ்வுணவை உண்டது. அருகே பால்ஹிகருக்கும் கூடைகளில் அப்பங்களும், ஊன்துண்டுகள் நிறைந்த கொப்பரைகளும், மதுக்குடங்களும் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அவர்கள் இருவரும் உண்பதை அப்பால் நின்று கௌரவப் படைவீரர்கள் பார்த்தனர். தொன்மையான வேள்விச்சடங்கு ஒன்றை பார்ப்பதுபோல் சிலர் அறியாது கைகூப்பினர்.

அங்கே பல்லாயிரம் பேர் சூழ்ந்திருந்த போதிலும்கூட அவர்களிருவரும் முற்றிலும் தனிமையில் இருப்பதை பலமுறை அங்கே நின்று சுபாகு பார்த்ததுண்டு. அவர்களிடையேகூட எதுவும் பேசப்படுவதில்லை. யானையிலிருந்து இறங்கியதுமே பால்ஹிகர் யானையையும் அறியாதவரானார். அவர் எப்போதுமே கவசங்களை கழற்றுவதில்லை என்பதை முதல்நாளுக்குப் பின் அப்படையில் அனைவருமே அறிந்திருந்தனர். தலைக்கவசத்தை உணவுக்குப் பின் மீண்டும் அணிந்துகொண்டு வெறுந்தரையில் கைகால்களை விரித்து அவர் படுத்திருக்கையில் அப்பால் நின்று நோக்கும்போது இரும்புக்கலங்கள் நீட்டி அடுக்கப்பட்டதாகவே தோன்றும். இரவில் பந்தங்களின் ஒளி கவசங்களின் வளைவுகளில் நெளிந்துகொண்டிருக்கும். பின்னிரவில் நிலவொளியில் நனைந்து அங்கே ஒரு நீர்ச்சுனை ஊறியிருப்பதுபோல் தோன்றும். அவர் குறட்டை விடுவதில்லை. துயிலில் புரண்டுபடுப்பதுமில்லை. அந்தக் கவசங்களுக்குள் அப்போது ஒரு மானுட உடல் இருப்பதாகவே தோன்றாது.

அங்காரகனும் கவசங்களை கழற்றுவதில்லை. அதன் இரும்புக் கவசங்கள் பிறிதொரு யானை அளவுக்கே எடை கொண்டவை. துதிக்கையின் அடுக்குக்கவசங்களை கழற்றாமல் உணவை அள்ளிச்சுருட்டி உண்ண பிற யானைகளால் இயல்வதில்லை. அங்காரகன் தன் துதிக்கையை சரித்து வளைத்து கவசங்களுடன் உண்ணவும் கற்றுக்கொண்டிருந்தது. அதன் அசைவில் உலோகப் பொருட்கள் நிறைந்த வண்டி மேடுபள்ளங்களில் செல்வதுபோல் கவசத் தகடுகள் உராய்ந்து ஒலியெழுப்பின. அதன் காதுகள் அசைகையில் நுனிகளில் கட்டப்பட்ட மணியோசை வண்டிமாடுகள் செல்வதுபோல் கேட்டது. அங்காரகன் பால்ஹிகரைப் போலவே குரலற்றது. படைமுழுக்க பிற யானைகள் முழக்கமிடும்போதுகூட அங்காரகன் அவ்வொலியுடன் கலந்துகொள்வதில்லை. மலையுச்சிப் பாறைபோல விழியருகில் நெடுந்தொலைவில் இருப்பது. குளிர்ந்தது. அவ்வப்போது முழுமையாகவே வானில் மறைந்துவிடுவது.

முதல் இருநாட்களில் அவ்விருவரும் கௌரவப் படையினருக்கு பெருவிந்தையென இருந்தனர். மிக விரைவிலேயே அவ்விந்தையும் பழகியது. கதையுருளையிலிருந்து தெறித்த குருதி வழிந்து உறைந்து பிசுக்காகி, அரக்காகி, பொருக்காகி படிந்த கவசங்களுடன் மாபெரும் இரும்புப்பாவை என நின்றிருந்த அங்காரகன் சற்றும் அறியாமல் அவ்வழியாகச் செல்லலாயினர் படையினர். அவர்களின் உடலிலிருந்து அச்செய்தியை பெற்றுக்கொண்ட அத்திரிகளும் கழுதைகளும் புரவிகளும்கூட அதை ஒரு இரும்பு மண்டபம் என்றோ கற்பாறை என்றோ எண்ணியவைபோல் நடந்துகொண்டன. பறவைகள் இயல்பாக அதன்மேல் வந்தமர்ந்து எழுந்துசென்றன. எப்போதேனும் பாகர்கள் அருகே வந்து உணவு வைத்துச் செல்கையில் அதன் சிறிய விழிகளை அருகே கண்டு உளம் அதிர்ந்தனர். ஒருவன் அலறியபடி பின்னால் சரிந்து விழுந்து உடல்நடுங்கி எழுந்து அப்பால் சென்று மீண்டும் விழுந்தான். அவன் மீண்டும் உளம்மீளவே இல்லை. அங்காரகனுக்குள் வாழும் தெய்வத்தை அவன் கண்டுவிட்டான் என்றனர்.

பால்ஹிகர் முழுக் கவசத்துடன் காலையில் எழுந்தார். தலைக்கவசத்தையும் இடைக்கவசத்தையும் மட்டும் கழற்றி முகத்தைக் கழுவி காலைக்கடன் முடித்தார். உணவை உண்டு மீண்டும் கையுறைகளை அணிந்தபடி காத்திருந்தார். அங்காரகன் அந்தப் பெருங்கதையுருளையை தன் துதிக்கையில் சுருட்டித் தூக்கியபடி சீரான அசைவுகளுடன் வந்து அவர்முன் நின்றதும் ஏறி அமர்ந்துகொண்டார். அங்காரகன் செவிகளை மட்டும் அசைத்தபடி முரசொலிக்காக காத்திருந்தது. அதன் கவசங்களுக்கிடையே பாறைவெடிப்புக்குள் பொன்வண்டு என விழிகள் ஒளிகொண்டிருந்தன. படைநகர்வு தொடங்கியதுமே எறும்புகளால் இழுத்துச் செல்லப்படும் வண்டுபோல் நிரைக்குள் நுழைந்து படைமுகப்பை நோக்கி சென்றது. போர்முரசு எழுந்ததும் பிளிறலோ தலைகுலுக்குதலோ இல்லாமல் கதையைச் சுழற்றியபடி எதிரிப்படைக்குள் புகுந்து சென்றது. நீரில் மூழ்கும் இரும்புருளைபோல.

“அவர் போரிடவில்லை. இங்கு நிகழ்வது எதையும் அவர் புரிந்துகொள்ளவும் இல்லை. அவர் பிறிதொன்றை செய்து கொண்டிருக்கிறார். அவர் மானுட உயிர் என்பதையே அறிந்திருக்கவில்லை” என்று கௌரவப் படைவீரர்கள் சொன்னார்கள். “தொல்நிலத்தின் கொடுந்தெய்வம் ஒன்றை மானுட உடலில் ஏற்றி கொண்டுவந்திருக்கிறார்கள். லட்சம் தலைகளை உடைத்து குருதிபலி கொண்ட பின்னரே அது மண் நீங்கும்” என்று பாண்டவர் தரப்பில் கூறினார்கள். முதல் சில நாட்களுக்குப் பின்னர் எவ்வகையிலும் பால்ஹிகரை எதிர்கொள்ள இயலாதென்று பாண்டவப் படையினர் உணர்ந்தனர். பாண்டவப் படையில் பீமனும் கடோத்கஜனும் மட்டுமே அவரை சற்றேனும் எதிர்கொண்டு செறுத்தனர். அவர்களும் அவர் பெருங்கதையின் வீச்சை ஒழிந்தும் தவிர்த்தும் களமாடி அவரை தாங்கள் எண்ணிய இடத்தில் நிலைகொள்ளச் செய்வதையே போர்முறையென்று கொண்டிருந்தனர்.

பீமனும் கடோத்கஜனும் பின்னடையும்போது பாண்டவப் படைகளுக்குள் புகுந்த அங்காரகன் கதை வீசி தேர்களையும் யானைகளையும் மானுடத் திரளையும் உடைத்துச் சிதைத்தழித்தபடி ஊடுருவிச்சென்று சுழன்று மீண்டது. அங்காரகனைப் பார்த்ததுமே படைவீரர்கள் சிதறி அகன்று வழிவிட, காற்றுச் சருகுகளை ஊதி விலக்குவதுபோல் வெற்றிடத்தை உருவாக்கியபடி அவர் பாண்டவப் படைகளுக்குள் சுழன்று வந்தார். யானைகளும் புரவிகளும்கூட இயல்பாக அகன்றோடி அவரை தவிர்த்தன. ஆனால் அணிநிறைந்த படை எங்கோ ஓரிடத்தில் சுழித்து அசைவிலாது சிக்கிக்கொள்ள நேர்ந்தது. அப்போது அதன் மேல் பறந்த கதை குருதி உண்டு விண்ணில் சுழன்றது. படைவீரர்கள் அஞ்சிச் சிதறி ஓடினர். வழி மூடிக்கொண்டபோது விழிமூடி உடலை இறுக்கி தலைகொடுத்து விழுந்தனர். சில தருணங்களில் ஆட்கொள்ளப்பட்டவர்கள்போல வீரர்கள் அப்பாலிருந்து படைக்கலங்களை எறிந்துவிட்டு “பிதாமகரே, என்னை கொள்க!” என கூச்சலிட்டபடி வந்து அவர்முன் மண்டியிட்டு தலையை அக்கதைக்கு அளித்து சிதறிவிழுந்தனர்.

தொலைவிலிருந்து போர்புரியும் பால்ஹிகரை பார்க்கையில் அக்கவசங்களுக்குள் ஒரு மானுட உடல் இருப்பதே தெரியவில்லை. அவர் தன் கதைச்சுழற்சியை எவ்வகையிலும் மாற்றிக்கொள்ளவில்லை. விசைகூட்டவோ குறைக்கவோ செய்யவில்லை. வென்று களிப்புறவோ, பின்வாங்கி சீற்றம் அடையவோ, இலக்கு தேடி செல்லவோ, தவறும் இலக்குகளை குறிவைத்து தொடரவோ இல்லை. அந்த விலக்கமே பேரச்சத்தை உருவாக்குவதாக இருந்தது. அவர் படைகளை வழிநடத்தவில்லை. ஆனால் யானை சென்ற வழியே சென்றுமேயும் மான்கூட்டங்கள் என கௌரவப் படை அவரைச் சூழ்ந்து பின்தொடர்ந்தது. அவர் செல்லும் வழியை தங்களுக்கான திறப்பாக பயன்படுத்திக் கொண்டது. அவர் அனைத்து ஆணைகளுக்கும் அப்பாலிருந்தார்.

அவரிடம் எச்சொல்லும் சென்றடையாதென்று உணர்ந்தபின் சுபாகு புரவியை திருப்பி பின்னடைந்தான். எதிரில் வந்துகொண்டிருந்த துர்முகனை நோக்கி “எப்போதும் பிதாமகரின் இருபுறமும் கௌரவர்கள் ஐவர் நிலைகொள்க! அவர் இப்போது தனித்து பாண்டவப் படைக்குள் சென்றுவிடலாகாது. அவரை கிராதர்கள் சூழாது நோக்குக!” என்று ஆணையிட்டான். துர்முகன் தலைவணங்கி கைவீசி பிற உடன்பிறந்தாருக்கு ஆணையிட்டபடி பால்ஹிகரை நோக்கி சென்றான். சுபாகு புரவியில் திரும்பி துரியோதனனை வந்தடைந்தான். கர்ணனும் துரோணரும் அஸ்வத்தாமனும் மூன்று முனைகளில் பாண்டவர்களின் படையெழுச்சியைத் தடுத்து பின்னடையச் செய்துகொண்டிருந்தனர். கிராத படைத்தலைவரும் வெவ்வேறு முனைகளிலிருந்து எதிர்பாராத தருணத்தில் தோன்றி அவர்களை அறைந்து அக்கணமே அலையென பின்வாங்கி மறைந்து மீண்டும் தோன்றி தாக்கினர்.

துரியோதனனை அணுகிய சுபாகு “மூத்தவரே, பிதாமகரை எவ்வகையிலும் நம்மால் கட்டுப்படுத்த இயலாது. நம்மிடமிருந்து ஒரு சொல்லும் அவரை நோக்கி செல்வதில்லை” என்றான். ஒரு கணத்திற்குப்பின் அவன் சொல்வதை புரிந்துகொண்ட துரியோதனன் “ஆம், உண்மை. நானும் அதை முன்னரே பலமுறை உணர்ந்திருக்கிறேன்” என்றான். பின்னர் “ஒன்று செய்க, அவரது யானையுடன் நம்மால் உரையாடமுடியும்! அங்காரகனிடம் கூறுக!” என்றான். “அங்காரகனிடமா?” என்று சுபாகு கேட்டான். “ஆம், அது நம் சொற்களை கேட்கும். பிதாமகர் நாமறியாத நிலத்திலிருந்து இங்கே எழுந்தவர். அங்காரகன் நம்முடன் குழவியாக இருந்து வளர்ந்தது. இங்கு பட்டத்து யானையாக பழகியது. அதனுடன் பேசுக! அதற்கு ஆணையிடுக! உளம் கொண்டால் அது கேட்கக்கூடும்” என்றான்.

“மூத்தவரே, அது மதம் கொண்டதுபோல் தோன்றுகிறது. சூழ மானுடர் இருப்பதையே உணராததுபோல் இருக்கிறது. அவர் முற்றமைந்து அதை ஆள்கிறார். தான் வாழும் விண்ணுலகிலிருந்து அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றான். “முறையிடுக! அதை நோக்கி ஓயாது பேசிக் கொண்டிரு. ஓரிரு சொற்களையேனும் அது ஏற்கக்கூடும். செல்க!” என்று துரியோதனன் சொன்னான். “இன்று இரவு பிதாமகர் இக்களத்திலிருந்து மீண்டாக வேண்டும். நாம் அவரை முன்னரே களமெழாது செய்திருக்க வேண்டும். பெரும்பிழை செய்துவிட்டோம் என்று என் உள்ளம் பதைக்கிறது. செல்க!” என்றான்.

அக்கணம் விண்ணிலிருந்து அவன் முன் இறங்கிய இடும்பன் ஒருவன் தன் இரு கைகளிலும் இருந்த நீண்ட வாள்களால் அவனை அறைந்தான். வில்லின் கணையால் இரு வாள்முனைகளையும் தடுத்து “பின்னடைக! பின்னடைக!” என்று பாகனுக்குச் சொல்லி தேரை பின்னடையச் செய்தபின் தன் வாளை உருவியபடி அவ்வரக்கனை எதிர்த்துப் போரிட்டான் துரியோதனன். ஒரு வாள் உடைந்து பிறிதொரு வாளை துரியோதனன் மேல் வீசி எறிந்தான் இடும்பன். தலை தணித்து அதை தவிர்த்து தன் இடையிலிருந்த வேலை எடுத்து இடும்பனை நோக்கி எறிந்தான். இடும்பன் வௌவால்போல் ஒலி எழுப்பிச் சிதறி மல்லாந்து விழ பிறிதொரு இடும்பன் வந்திறங்கி கதையோடு அவனை நெருங்கினான். அவனிடம் கதையால் போரிடத் தொடங்கினான் துரியோதனன்.

சுபாகு தன் புரவியை திருப்பிக்கொண்டு விண்ணிலிருந்து இறங்கி பொருதி மீண்டு ஏறிச் சென்றுகொண்டிருந்த இடும்பர்களையும் மண்ணிலிருந்து முளைப்பதெனத் தோன்றிய கிராதர்களையும் ஒழிந்து விழுந்துகிடந்த பிணங்களின் மேல் தாவி நிலைகெட்டு சுழன்று கொண்டிருந்த யானைகளினூடாக வளைந்து பால்ஹிகர் போரிட்டுக்கொண்டிருந்த இடம் நோக்கி சென்றான். சங்கொலி எழக் கேட்டு திரும்பிப்பார்த்தபோது கடோத்கஜனும் கர்ணனும் எதிர்நின்று போரிடுவதைக் கண்டான். அவர்களின் அசைவுகளுக்கேற்ப விளக்கொளிகள் சுழன்று அப்போரை விண்ணில் ஒளியாடலென ஆக்கிக்கொண்டிருந்தன. பல்லாயிரம் நாகங்கள் செந்நா பறக்க படமெடுத்து சீறி, அறைந்து வால்பின்னி நெளிய இருளெல்லாம் நிறைந்து போரிடுவது போலிருந்தன அவை.

சுபாகு புரவியைத் தூண்டி பால்ஹிகரை நோக்கி சென்றான். பால்ஹிகரின் இருமருங்கும் நின்றிருந்த கௌரவப் படையினர் திரைபோல் மூடியிருந்த இருளுக்குள் இலக்கிலாது அம்புகளை தொடர்ந்து செலுத்தி அங்கிருந்து இடும்பர்கள் வந்திறங்காது செய்தனர். “பிதாமகரின் கதை சுழலும் எல்லைக்குள் நமது படைவீரர்கள் எவரும் செல்ல வேண்டியதில்லை… விலகுங்கள்!” என்று துர்முகன் ஆணையிட்டுக்கொண்டிருந்தான். சுபாகு பால்ஹிகரை அணுகி அங்காரகனின் செவியசைவுக்கு நேராக சென்று நின்று “அங்காரகன் அறிக! அங்காரகன் அறிக! பின்னடைக! பின்னடைக!” என்றான். “மூத்தவரே, என்ன செய்கிறீர்கள்?” என்று துர்முகன் கூவினான். “அங்காரகனிடம் சொல்க! பின்னடையும்படி அதனிடம் ஆணையிடுக! இப்போர் அவருடையதல்ல என்று அதனிடம் விளக்குக!” என்று சுபாகு சொன்னான். “யானையிடமா?” என்று துர்மர்ஷணன் கேட்டான். “ஆம், நம்முடன் வளர்ந்தது அது. நம் மொழி அதற்கு தெரியும். சொல்க!” என்றபின் “அங்காரகன் அறிக! பின்னடைக! பின்னடைக! என்று சுபாகு கூறினான்.

அத்தருணத்தில் இரு யானைகளின் மேல் காகங்கள்போல் மொய்த்து ஊர்ந்து வந்த இடும்பர்கள் அதன் விலாக்களிலிருந்து சிறகுகொண்டு எழுந்து காற்றில் பாய்ந்து வந்து அங்காரகனை தாக்கினர். அங்காரகனின் துதிக்கையால் தூக்கி சுழற்றப்பட்ட பெருங்கதை அவர்களை அறைந்து சிதறடிக்க யானைகள் அலறி விழுந்தன. “பின்னடைக! பின்னடைக!” என்று சுபாகு சொல்லிக்கொண்டிருந்தான். யானையின் செவிகள் அவன் குரலை கேட்டதாகத் தோன்றவில்லை. “அம்புகள் ஓயவேண்டியதில்லை. அம்புகளால் வேலியிடுங்கள்!” என்று துர்முகன் கூவிக்கொண்டிருந்தான். அங்காரகன் கதையுடன் பாண்டவப் படையை அழுத்தி முன்னால் சென்றது. இடும்பர்கள் கூச்சலிட்டபடி வானில் எழ பாண்டவப் படையினர் இருளில் முட்டிமோதிச் சிதறினர். சிலர் கீழே விழுந்தனர். எழக்கூடாதென அவர்களுக்கு தெரிந்திருந்தும் எழுந்து தலையறையப்பட்டு உயிர்விட்டனர்.

தொலைவில் பீமனின் தேர் வருவதை சுழலும் விளக்கொளி அறிவித்தது. “பீமசேனர் இங்கு வருகிறார். அவர் பால்ஹிகரை எதிர்கொள்ளக் கூடாது. பின்னடையச் செய்யுங்கள்!” என்று சுபாகு சொன்னான். ஆனால் தன்னெதிரில் வந்த இடும்பர்களை அறைந்து வீழ்த்தியபடி அங்காரகன் மேலும் முன்னடைந்தது. “இறையுருவே, செவி கொள்க! பின்னடைக! இப்போர் உனக்குரியதல்ல! பின்னடைக! பின்னடைக!” என்று சுபாகு கூவிக்கொண்டிருந்தான். ஒருகணம் யானையின் செவிகள் அசைவிழப்பதை அவன் கண்டான். மெய்யாகவே அது நிகழ்கிறதா என அவன் உள்ளம் துணுக்குற்றது. பின்னர் ஆம் என்று அவன் அகம் கொந்தளித்தது. “அங்காரகனே, அறிக! பின்னடைக! இப்போரிலிருந்து பின்னடைக!” என்று அவன் கைகளை வீசியபடி கூவினான்.

யானை தலைதிருப்பி அவனை பார்த்தது. அடுக்கடுக்காக அமைந்த இரும்புக்கவசங்களுக்கிடையே அதன் விழிகள் எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆயினும் சுபாகு அதன் பார்வையை உணர்ந்தான். “பின்னடைக, தேவா! பின்னடைக!” என்று இறைஞ்சிக் கூவினான். இரு கால்களையும் ஊன்றி உடலை முன்னும் பின்னும் அசைத்து புல்முனை நீர்த்துளிபோல் அசைந்தது அங்காரகன். பின்னர் அது முன்வலக்காலை பின்னெடுத்து வைத்தது. “பின்னடைகிறது! யானை பின்னடைகிறது!” என்று சுபாகு உவகையுடன் கூறினான். அங்காரகன் மேலும் மேலும் கால்களை எடுத்து வைத்து பின்னடைந்தது. கதாயுதத்தை நிலத்திலிட்டு இழுத்தபடி கௌரவப் படைகளுக்குள் புதைந்தது. சுபாகு “நான் அதை வழிநடத்தி கொண்டுசென்று படைப் பின்னணியில் அமரச்செய்கிறேன். யானை எழவில்லையென்றால் பிதாமகரும் போருக்கெழமாட்டார்” என்றான்.

புரவியில் ஏறி யானைக்குப் பின்னால் சென்றபடி அவன் கூவினான். “பெருகி வரும் எதிரிகளை இங்கு நின்று எதிர்கொள்ளுங்கள். வந்துகொண்டிருப்பவர் பீமசேனர் என நினைவில் கொள்க! அவர் ஒலிகளை விழிகளாக்கும் திறனற்றவர். வழிகாட்டி வரும் இடும்பர்களை அறைந்து வீழ்த்துங்கள். அவர்களின் விளக்கடையாளங்களை நோக்கி அம்புகளை குறிவையுங்கள்.” சுபாகு புரவிமேல் எழுந்து யானையின் காதை நோக்கி “பின்னடைக! அங்காரகனே, பின்னடைக! பின்னடைக!” என்றான். யானை பின்னடைவதன் விசை மேலும் கூடியது. கௌரவப் படைகளின் முகப்பு மீண்டும் ஒன்றாக இணைந்து பால்ஹிகரை முழுக்க மூடிக்கொண்டது. தன் யானை பின்னடைவதைக்கூட உணராதவராக பால்ஹிகர் இருந்தார். யானையின் விழிகளின் மின்னை ஒருகணம் சுபாகு கண்டான். கண்டோமா என மறுகணம் ஐயுற்றான்.

மறுபக்கம் பாண்டவப் படைமுகப்பில் இடும்பர்களால் வழிகாட்டப்பட்டு பீமன் தோன்றினான். இரு இடும்பர்கள் ஓங்கி ஊன்றிய கழைக்கோல் வழியாக எழுந்து கௌரவப் படையின் முகப்பில் பாய்ந்திறங்க அவர்களுக்குப் பின்னால் பீமனின் தேர் விரைந்து வந்தது. நீளம்பொன்றை எடுத்து அவன் அங்காரகன் நெற்றி நோக்கி அறைந்தான். அம்பு அங்காரகனின் தலைக்கவசத்தின் மேல் மணியோசை எழுப்பியபடி அறைந்து உதிர்வதை சுபாகு கேட்டான். “பின்னடைக! இது உங்கள் போரல்ல! அங்காரகனே, பின்னடைக!” என்று அவன் கூவினான். மீண்டும் மீண்டும் பீமனின் அம்புகள் வந்து அங்காரகனை அறைந்தன. அங்காரகன் அவ்வம்புகளை பொருட்படுத்தாமல் பின்னடி வைத்து திரும்பிச் செல்வதற்காக திரும்பிய கணம் அம்பு ஒன்று வந்து அதன் கவச இடுக்குக்குள் நுழைந்தது. உரக்கப் பிளிறியபடி அங்காரகன் திரும்பியது.

“வேண்டாம், அங்காரகனே! வேண்டாம்! நில்லுங்கள், இறையுருவே! கரியே, நில்லுங்கள்!” என்று சுபாகு கூவினான். ஆனால் பிளிறலோசையுடன் மீண்டும் பெருங்கதையைத் தூக்கிச் சுழற்றியபடி பீமனை நோக்கி அங்காரகன் சென்றது. அங்காரகனின் கதையால் அறைபட்டு இடும்பர்கள் சிதறி விலகிய வழியினூடாக அது வெறிகொண்ட பிளிறலுடன் பீமனை நோக்கி சென்றது. போர்க்களத்தில் அதன் குரல் முதன்முறையாக எழுவதை சுபாகு கேட்டான். பீமன் தன் தேரிலிருந்து பாய்ந்திறங்கிய கணமே அங்காரகனின் பெருங்கதை பீமனின் தேரை அறைந்து துண்டுகளாக சிதறடித்தது. சூழ்ந்திருந்த இடும்பர்கள் சிதறி விலக கதை அப்பகுதியெங்கும் விம்மலோசை எழுப்பியபடி சுழன்றெழுந்தது. அது தொட்ட இடங்களெல்லாம் உடைந்து தெறித்தன. யானை ஒன்று குருதி சிதற சிதைந்து மண்ணில் விழுந்து துடிப்பதை சுபாகு கண்டான்.

பீமன் பாய்ந்து புரவியொன்றின் மேலேறி அங்காரகனை நோக்கி வந்தான். அங்காரகனின் கதைச்சுழற்சியை புரவியிலமர்ந்தபடி மிக எளிதாக ஒழிந்து அதை அணுகி கையிலிருந்த நீள்வேலை அதை நோக்கி எறிந்தான். அங்காரகனின் அலறல் கேட்டதுமே மீண்டும் கவச இடைவெளியினூடாக வேல் உள்ளே சென்றுவிட்டதென்பதை சுபாகு உணர்ந்தான். பீமன் புரவியில் பின்னடைந்து தன்னை நோக்கி வந்த இடும்பர்களிடமிருந்து பிறிதொரு நீள்வேலை வாங்கி ஓங்கி வீச அந்த வேலும் அங்காரகனின் அதே கவச இடைவெளியில் பாய்ந்தது. அங்காரகன் அலறியபடி உடலை ஊசலாட்டி தன்னைத்தானே சுழற்றியது. என்ன நிகழ்கிறது என்பதை சுபாகு புரிந்துகொண்டான். பகலில் விழிகளால் இலக்குகள் சிதறடிக்கப்பட்டு அங்காரகனின் கவசத்தை கடந்து அம்புகள் செல்லாதொழிந்தன. இரவில் ஒலிகளையே இலக்காக்கி தாக்குவதனால் முதல் இலக்கு தற்செயலாகப் பட்ட அதே புள்ளிக்கு மீண்டும் மீண்டும் அம்புகளையும் வேலையும் செலுத்த பீமனால் முடிந்தது.

சுழலும் யானையின் உடலில் அந்த இலக்கை எப்படி அறிகிறான்? மீண்டும் ஒரு வேலால் பீமன் அங்காரகனை அதே இலக்கில் அறைந்தான். சுழலும் யானையை கவசங்களின் உரசல் ஒலியாக மட்டுமே பீமன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவ்வொலியை மிக அருகிலென பார்க்க இயல்கிறது. ஒளியாலான இலக்குகள் தொலைவால் மங்கலடைகின்றன. ஒலியாலான காட்சிகளுக்கு அண்மையும் சேய்மையும் இல்லை. கைகளால் தொட்டு உணர்வதுபோல் இலக்குகளை அறிய முடிகிறது. மீண்டுமொரு வேல் அங்காரகனின் அதே இலக்கை தாக்க சுழன்று அலைபாய்ந்த யானையின் செவிப் பள்ளத்தில் புதைந்திருந்த ஏழு வேல்களை சுபாகு பார்த்தான். “அங்காரகனை காத்துக்கொள்க! சூழ்ந்துகொள்க!” என்று அவன் கௌரவர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் தங்கள் விற்களுடன் அங்காரகனைச் சூழ்ந்து வந்து பீமனை தாக்கினர். பீமனைச் சூழ்ந்துவந்த ஷத்ரியர்கள் விற்களால் கௌரவப் படைகளை தாக்கினர்.

பீமன் அங்காரகனுடன் போர்புரிந்துகொண்டே எதிர்பாராத கணத்தில் புரவியிலிருந்து எழுந்து தாவி வந்து கதாயுதத்தால் துர்மர்ஷணனை அறைந்து கொன்றான். திகைத்துப் பின்னடைந்த துர்தர்ஷனையும் ஊர்ணநாபனையும் கொன்றான். சுபாகு பின்னடைந்து “விலகுக! விலகுக!” என்று கூவிக்கொண்டிருக்கையில் பாய்ந்து அங்காரகனின் அந்த செவிப் பள்ளத்தில் மீண்டுமொரு வேலால் அறைந்தான். அங்காரகனின் கையிலிருந்து பெருங்கதை நழுவி தரையில் விழுந்தது. சங்கிலி உருவி வளையங்களாகி அதன்மேல் பொழிந்தது. யானை உடலை முன்னும் பின்னும் ஊசலாட்டி துதிக்கையைச் சுருட்டி தலைகுலுக்கி உரக்க பிளிறியது. காற்றில் பாய்மரம் உலைவதுபோல் ஆடி கவசத்தின் இரும்புப் பலகைகளும் சங்கிலிகளும் உராய்ந்து எழுந்த குவியலோசையுடன் பக்கவாட்டில் விழுந்தது. கவசங்களின் எடையால் அந்த வீழ்வொலி நிலத்தை அதிரச் செய்தது. பீமன் பாய்ந்து அங்காரகனின் மேலேறி அதன் செவிப் பள்ளத்தில் பாய்ந்திருந்த வேலின்மேல் கதையால் ஓங்கி அறைந்து இறக்கினான்.

யானையின் உடலுடன் சேர்ந்து விழுந்து ஒரு கால் யானைக்கு அடியில் சிக்கிக்கொள்ள கையூன்றி எழ முயன்றுகொண்டிருந்த பால்ஹிகரை அணுகி தன் கதையால் அவர் தலையை ஓங்கி அறைந்தான் பீமன். தலைக்கவசம் உடைந்து தெறிக்க பால்ஹிகர் நிமிர்ந்து பீமனை பார்த்தார். மறுமுறை கதையைச் சுழற்றி பால்ஹிகரின் தலையை அறைந்து மண்டை ஓடு உடைந்து அகலச் செய்தான். மீண்டும் இருமுறை அறைந்து தலைக்கூழ் அப்பகுதியெங்கும் சிதறச் செய்தபின் தன் கதையை தலைக்குமேல் தூக்கினான். சூழ்ந்திருந்த இடும்பர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி வெற்றிக்குரலெழுப்ப அவ்வோசை பாண்டவப் படைகளுக்குள் பரவிச்சென்றது. சுபாகுவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. புரவியைத் தட்டி செலுத்த அவனால் இயலவில்லை. அவன் உணர்வுகளை புரிந்துகொண்டதைப்போல் புரவி பின்னடைந்து பாய்ந்து விலகி கௌரவப் படைகளுக்குள் புகுந்து ஓடியது. அவனைச் சூழ்ந்து “பிதாமகர் விண்புகுந்தார்! விண்ணேகுக மூதாதை! விண்திகழ்க பெருந்தந்தை!” என வாழ்த்தொலிகள் எழுந்து பரவிக்கொண்டிருந்தன.

நூல் இருபது – கார்கடல் – 63

ele1பார்பாரிகன் சொன்னான்: அலாயுதன் இடும்பர்கள் விண்ணிலிருந்து விழுந்தெழுந்து தாக்குவதை கண்டான். அவனுடைய படைவீரர்கள் ஆணையிடாமலேயே தங்கள் நீண்ட வேல்களை மேல்நோக்கி கூர் நின்றிருக்க பிடித்து கீழே விழும் இடும்பர்களுக்கு நேராகக் காட்டி அவர்களை குத்திப் புரட்டி குருதிக்கலத்திற்குள் உள்தசைகள் உடைந்து சிக்க சுழற்றி பிழுதெடுத்து வெங்குருதியுடன் தூக்கி ஆட்டினர். குருதி தங்கள் உடலில் சிந்த நடனமாடினர். களத்திற்கு வந்த அப்பதினான்கு நாட்களில் அவர்கள் முதல்முறையாக போரில் ஈடுபட்டனர். போரிடுபவனின் தனிப்பட்ட வஞ்சத்தை, அச்சத்தை, களிப்பை மீறி எழும் ஒற்றைப்பேருணர்வொன்றை முதல்முறையாக அறிந்தனர். அனைத்துப் போர்களையும் நிகழ்த்துவது அதுவே என்றும், மொழியிலும் கனவிலும் புகுந்துகொண்டு போரை ஆழத்தில் அழியாது வாழச்செய்வதும் அதுவே என்றும் அவர்கள் அறிந்தனர்.

அவனுடன் வந்த பன்னிரண்டாயிரம் படைவீரர்களில் எண்ணூறுபேர்தான் அப்போது உயிருடன் எஞ்சியிருந்தனர். அவர்களை எட்டு குழுக்களாகப் பிரித்து எட்டு ஷத்ரியப் படையினருக்கு வழிகாட்டுக்குழுக்களாக அனுப்ப சகுனி ஆணையிட்டிருந்தார். ஷத்ரியப் படைகள் நடுவே ஒளியாலான தொடர்புவலை இருந்தது. அசுரரும் அரக்கரும் தங்கள் செவிகளுக்கு மட்டுமே பொருளென்றாகும் குறுமுழவொலிகளையும் சிற்றூதல் ஒலிகளையும் கொண்டிருந்தனர். அலாயுதனின் குடி உதட்டைக் குவித்து மெல்லிய சீழ்க்கை ஒன்றை எழுப்பி ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டது. அமைதியான அடர்காட்டில் வேட்டையாடுகையில்கூட அந்த ஓசை விலங்குகளை எச்சரிக்கை கொள்ளச் செய்வதில்லை. அதை பிறர் கேட்டால் சீவிடின் ஒலி சற்று சுதிகூடி எழுவதாகவே எண்ணுவார்கள். அவர்களின் குடியில் பிறந்து வளர்ந்து பிற குடிகளுடன் உரையாடலே இன்றி வாழ்பவர்களுக்கு மட்டுமே அது மொழியென்றாகியது.

அலாயுதனின் படைவீரர்கள் அனைவருமே வாய் குவித்து ஒலி எழுப்பியபடியேதான் போரிட்டனர். மிக அருகே கேட்கும் ஒலியுடன் தங்கள் ஒலியை அவர்கள் இணைத்துக்கொண்டனர். இணைந்து இணைந்து அவ்வோசை அங்கிருக்கும் அவர்களின் குடியை முழுமையாக ஒன்றாக்கி எழுந்தது. அதற்குள் ஒவ்வொருவரின் தனிக் குரலும் இணைந்தது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் மேலே எழுந்து தெய்வ ஆணை என அது அவர்களை ஆட்சி செய்தது. அந்தப் பொது ஒலியை உண்மையில் எழுப்புவது யார் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அது மண்மறைந்த மூதாதையர் வாழும் உலகிலிருந்து எழுவதாக நம்பினர். அவர்கள் எவரிடமும் இல்லாத பேரறிவும் நுண்நோக்கும் கொண்டிருந்தது அது. அவர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிந்துமிருந்தது.

களத்தில் அது எழுவதற்கு சற்று பிந்தும். தலைவனின் ஓசையே முதலில் எழும். பின்னர் அதனுடன் பிறருடைய ஓசைகள் இணைந்துகொள்ளும். ஒவ்வொரு ஓசையும் முந்தைய ஓசையுடன் சற்றே விலக்கம் கொண்டிருக்கும். சேக்கேறுவதற்கு முன்னர் வானில் கலைந்து அலையும் பறவைகள்போல் அவ்வோசைகள் பூசலிடும். பின்னர் ஒரு கணத்தில் அனைத்து ஓசைகளும் ஒத்திசைந்து அந்த முழுமையோசை எழத் தொடங்கும். அது அத்தலைவனாலும் ஆள முடியாததாக, அங்கிருக்கும் எதனாலும் திசைதிருப்பவியலாததாக இருக்கும். அது எழுந்த பின்னர் அவர்கள் அதை தனித்தறிவதில்லை. ஏனென்றால் அப்போது அவர்கள் எவருக்கும் தனியுள்ளம் இருப்பதில்லை. வேட்டையோ போரோ முடிந்த பின் விண்ணில் தூக்கிச் சுழற்றிய சுழல்காற்று ஒன்றிலிருந்து விழுவதுபோல் ஒவ்வொருவராக அதிலிருந்து பிரிந்து மீண்ட பின்னர் நினைவிலிருந்து அதை மீட்டு எடுப்பார்கள். அப்போது நிகழ்ந்ததென்ன என்றோ எவ்வாறு நிகழ்ந்தது என்றோ அவர்களால் அறியமுடியாது. அது நிகழ்ந்தது என்று மட்டுமே அவர்கள் அறிந்திருப்பார்கள்.

குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் வந்த நாளில் அவர்கள் அந்த ஒலியை எழுப்ப முயன்றனர். அவர்கள் அதற்கு முன்பு அடர்காட்டுக்கு வெளியே போரிட்டதில்லை. போர் தொடங்கிய முதற்கணம் எழுந்த பெருமுழக்கம் புயல் வந்து புழுதியை அள்ளிச்செல்வதுபோல தங்கள் மொழியை கொண்டுசெல்வதையே கண்டனர். போரில் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே நின்றனர். மூக்குத்திறனை இழந்துவிட்ட வேட்டைநாய்களைப்போல் முட்டிமோதித் தடுமாறினர். பின்னடைய இயலாமல் பின்னிருந்து வந்துகொண்டே இருந்த படைகளால் அவர்கள் களமையத்தின் அம்புப்பெருக்கை நோக்கி கொண்டுசெல்லப்பட்டார்கள். அம்புகள் பாய்ந்து ஒருவர்மேல் ஒருவரென விழுந்து தேர்ச்சகடங்களாலும் யானைக்கால்களாலும் அரைக்கப்பட்டு உடற்குவியலாக ஆனார்கள். அவர்களை பெரிய மூங்கில்கழைகளால் உந்தி களத்திலிருந்து பெயர்த்து உருட்டி ஒற்றைக் குவியலென எடுத்து வண்டிகளில் இட்டு தசைக்குப்பையாக பிலங்களுக்குள் போட்டனர் சுடலைக்காரர்கள்.

ஒவ்வொருநாளும் களத்தில் எஞ்சியவர்கள் எவ்வகையிலேனும் படைப்பின்னணியில் நின்றுவிட்டவர்களே. ஆகவே ஒவ்வொருமுறையும் அவர்கள் போர்முனையில் என்ன நிகழுமென்று அறியாமலேயே களத்திற்கு வந்தனர். தங்கள் திரள் குறைந்து மறைந்துகொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அதைப்பற்றிப் பேசுவதற்கு அஞ்சினர். இரவுகளில் இருள் வந்து சூழ்ந்துகொள்ளும்போது மெல்லிய ஓசையாக இறந்தவர்கள் எழுந்து வந்து அவர்களருகே நின்றிருந்தனர். மெல்லிய வெம்மையாக, மூச்சுக்காற்றின் தொடுகையாக அவர்களை உணர்ந்தனர். அவர்களின் விழிகள் இருளுக்குள் மின்மினிகளாக செறிந்திருந்தன. துயில்கொண்டால் கனவில் அவர்கள் உடல்சூடி அருகணைந்து சொல்லாடினர். அப்போது அவர்களின் நிலத்தில் நீலமலைகளுக்கு அடியில் ஓசையிடும் மலையாறுகளின் கரையில் பசுங்காடு சூழ்ந்திருக்க அவர்கள் அமர்ந்திருந்தனர்.

அன்றிரவு அவர்கள் படைமுகப்புக்கு வருவது வரை அச்சமும் தயக்கமும்தான் கொண்டிருந்தார்கள். அலாயுதனின் கூரிய ஓசையை முதலில் கேட்ட படைவீரர்கள் கடுங்குளிர் கொண்ட மலைக்காற்று வந்து அணைத்துக்கொண்டதுபோல மெய்ப்பு கொண்டனர். அவர்களை அறியாமல் அவர்களுக்குள் இருந்து எழுந்த சீழ்க்கையோசையை கேட்டு அச்சமும் கிளர்ச்சியும் அடைந்தனர். பின்னர் தங்கள் ஒலிகளால் பெருக்கொன்றை உருவாக்கி அதில் தாங்களும் ஒழுகினர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி எண்ணமும் இலக்கும் களிப்பும் இருந்தது. ஆழத்தில் அவர்கள் ஒன்றென்று இணைந்தும் இருந்தனர். இடும்பர்களின் வேல்களால் குத்தப்பட்டோ கதைகளால் அறையப்பட்டோ அவர்கள் உயிர்விடுகையில் அக்கணத்திற்கு முன் அந்தப் பெரும்பெருக்கிலிருந்து அவர்கள் உதிர்ந்திருந்தனர். ஆகவே இறப்பவர்களை அப்பெருக்கு அறியவே இல்லை. நீரள்ளிய பள்ளம் நிறைவதென அவர்களின் இடத்தை அப்பெருக்கு அக்கணமே நிரப்பிக்கொண்டது.

போர் விசைகொண்ட சற்றுநேரத்திலேயே இடும்பர்களை வெல்ல அரக்கர்களால் மட்டுமே இயலும் என்று உணர்ந்துகொண்ட சகுனி நேரடியாக அலாயுதனிடமும் அலம்புஷரிடமும் ஆணையிட்டு அவர்களை மேலும் மேலும் முன்னே செலுத்தினார். கௌரவப் படையின் வலது எல்லையில் கர்ணன் போரிட்டுக்கொண்டிருக்க அவனைச் சூழ்ந்து சென்ற படைகளில் இருந்து மேலெழுந்துசென்ற அலம்புஷர் படைகள் இடும்பர்களை முழுமையாகவே தடுத்து நிறுத்திவிட்டன. இடது எல்லையில் துரோணரால் இடும்பர்களை எதிர்கொள்ள இயலவில்லை. சகுனி “இடது எல்லைக்குச் செல்க! இடும்பர்களை எதிர்கொள்க!” என்று அலாயுதனுக்கு ஆணையிட்டார். அலாயுதன் தன் படைகளுடன் துரியோதனனும் அஸ்வத்தாமனும் போரிட்டுக்கொண்டிருந்த படைமையத்திலிருந்து இடது எல்லை நோக்கி சென்றான்.

இடும்பர்களை விண்ணிலேயே அலாயுதனின் குலத்து அரக்கர்கள் கண்டுகொண்டார்கள். அவர்கள் இருளில் மறைந்த பின்னரும் எஞ்சும் இருட்தடமும் அவர்களே என்று உணர்ந்திருந்தமையே அவர்களின் வெற்றியை அமைத்தது. அத்தடங்களை வேலாலும் வாளாலும் தாக்கினால் அந்த இடும்பன் அலறி அப்பால் விழுவதை அவர்கள் கண்டனர். அவர்கள் அங்கே களத்திற்கு வந்தபின்னர்தான் பிற மக்களை அணுக்கமாக கண்டு அறிந்தனர். ஷத்ரியர்கள் தங்களை ஒரு பொருட்டென எண்ணவில்லை என்பதை முதல்நாளிலேயே அறிந்தனர். ஒவ்வொருவரிடமும் ஒரு ஷத்ரியனாவது ஒருமுறையாவது “என்றேனும் ஒருநாள் உங்களை நாங்கள் போரில் கொல்வோம்” என்று சொல்லாமல் இருந்ததுமில்லை. அவர்கள் அனைவருக்குமே ஷத்ரியர்கள்மேல் ஒவ்வாமை எழுந்து வெறுப்பு என திரண்டிருந்தது. போரில் ஒரு ஷத்ரியன் விழக்கண்டால் அவர்களின் உள்ளம் மகிழ்ந்தது. ஒரு ஷத்ரியனை தங்கள் படைக்கலத்தால் வீழ்த்தினால் உவகைகொண்டாடினர். அன்றைய போர் தொடங்கியதுமே அவர்கள் எலிகளை வேட்டையாடுவதுபோல் ஷத்ரியர்களைக் கொன்று மகிழ்ந்தாடினர். ஆனால் மிக விரைவிலேயே அது அவர்களுக்கு சலிப்பூட்டியது. இடும்பர்களை எதிர்கொண்டபோதே அவர்கள் தங்களுக்குள் நிறைவை அடைந்தனர்.

இடும்பர்கள் தாங்களே என அவர்களின் அகம் அறிந்தது. தங்களுக்குத் தாங்களே போரிடுகையில் மட்டுமே போருக்குரிய தெய்வங்கள் மகிழ்கின்றன என உணர்ந்தனர். விண்ணில் இருள் முகிழ்த்து எழும் இடும்பன் ஒருவனைக் கண்டு தங்கள் நீள்கழியில் பாய்ந்தெழுந்து இருள்நிறைந்த வெளியில் அவனை சந்தித்து படைக்கலம் முட்டிக்கொண்டு போரிட்டு இறங்கி சுழன்று எழுந்து அறைந்து விழுந்து மீள எழுந்து பொருதி வென்று எழுகையில் அவர்களுக்குள் இருந்து மூதாதையர் கொப்பளித்தனர். இடும்பர்களும் அவர்களையே நாடிவந்தனர். மிக விரைவிலேயே அக்களத்தில் போர் அரக்கர்களுக்குள் மட்டுமே நிகழ்வதென ஆகியது.

கடோத்கஜனுடன் கதைமுட்டிக்கொண்டு துள்ளி விலகி கொம்புநீட்டிச் சுற்றிவரும் காட்டெருமைகள்போல் சுழன்று வந்துகொண்டிருந்த அலாயுதன் மறுபக்கம் தன்னை நோக்கியபடி சுழன்றுவருவதும் தானே என்றுணர்ந்தான். அந்தக் காலடிகள், அந்தக் கையசைவு, அந்தக் கூர்நோக்கு அவனுடையதே. அவன் பாய்ந்த அக்கணமே கடோத்கஜனும் பாய இருவரும் இருளில் மிதித்து ஏறி விண்மீன் பெருகிக்கிடந்த கரிய வானில் சந்தித்துக்கொண்டனர். கதை தெறிக்க அறைந்து மூச்சொலியுடன் இறங்கி அக்கணமே மீண்டும் இருளில் ஏறினர். அறைதலும் தடுத்தலும் ஒன்றேயான சுழற்சி. கதைகள் முட்டிக்கொள்கையில் இருளில் பரவிய அதிர்வு யானைகளை விழிசுருங்கச் செய்தது. கடோத்கஜன் ஏழுமுறை பாய்ந்துவந்து அலாயுதனை அறைந்தான். ஏழு அறைகளும் ஏழு அறைகளால் நிறுத்தப்பட விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவி இறங்கிச் சுழன்றான். மேலும் மேலுமென விசைதிரட்டி இருவரும் அறைந்துகொண்டனர். பதினேழு அறைகள் ஒற்றை காலப்புள்ளியின் திகைப்பு மட்டுமே என்றான பின்னர் பதினெட்டாவது புள்ளியில் அவர்கள் காட்டில் ஓர் ஓடைக்கரையில் சந்தித்துக்கொண்டார்கள்.

கடோத்கஜன் அலாயுதனை தோளைப்பற்றி அழைத்துச்சென்றான். அவர்களின் காலடியில் ஓடை ஓசையிலாது பெருகி மிக ஆழத்தில் அருவியென விழுந்தது. அது புகையென மாறிச் சென்றடைந்த பரப்பு பச்சைநிறம் செறிந்து நீலம்கொண்டதாக, முகில்புகை மூடியதாக அலைகளில்லாத நிகர்வெளியாக தொடுவான் வில் வரை நிரம்பியிருந்தது. “இளையோனே, நீ எவருக்காக போரிடுகிறாய்?” என்று கடோத்கஜன் கேட்டான். “என் குடித்தலைவனைக் கொன்றவனுக்கு எதிராக. நம் குருதி மூத்தோனின் பழியை ஈடுசெய்ய” என்று அலாயுதன் சொன்னான். கடோத்கஜன் “நாம் ஏன் இப்படி வஞ்சங்களால் அலைக்கழிக்கப்படுகிறோம்? அன்பின் பொருட்டு நாம் ஏன் போரிடுவதில்லை? இளையோனே, உலகப்பற்றின்பொருட்டு போரிட்டால்கூட அதுவும் நன்றல்லவா? நாம் வஞ்சம் சூட பழி தேடி அலைகிறோமா? அகழ்ந்து அகழ்ந்து சினங்களைத் தேடிச்சேர்த்துக் கொள்கிறோமா?” என்றான்.

அவன் கையை உதறி விலகி “நீங்கள் எதற்காகப் போரிடுகிறீர்கள், மூத்தவரே?” என்றான் அலாயுதன். “நீ வஞ்சம்கொண்டிருப்பவர் என் தந்தை. அவருக்காக பொருதிக் காத்துநின்றிருப்பது என் கடன். அவர்மீது நான் கொண்டுள்ள பேரன்பின்பொருட்டே களம்நிற்கிறேன்” என்று கடோத்கஜன் கூறினான். அலாயுதன் சினத்துடன் “அரக்கருக்கு மானுடர் தந்தையல்ல. இப்புவியாளும் பெற்றிகொண்ட அரக்கர்கள் மானுடரால் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டவர்கள். அறிக, ஒருநாள் இப்புவிமேல் அரக்கர்களின் அரசு எழும்! அன்று பிரகலாதனும் விபீஷணனும்போல நீங்களும் குலவஞ்சகன் என்றும், நெறிபிழைத்து மூதாதையரின் பழி கொண்டவன் என்றும் அறியப்படுவீர்கள்” என்று சொன்னான். “ராகவராமனை வணங்கி அவன் ஆற்றலை துணைகொண்டதனால் வாழ்ந்தது அரக்கர்குலம். அவன் வாழ்த்துபெற்று பெருகியது வானரர்குடி. அவர்கள் அழிந்தது தங்களுக்குள் பூசலிட்டும் பகைமைகளை புளிக்கப் புளிக்கப் பெருக்கி நஞ்சாக்கி உளம்நிறைத்துக்கொண்டும். தலைமுறைகளாக நிகழ்ந்த குலப்போரில் அழிந்தவர் நாம்” என்றான் கடோத்கஜன்.

“அடிபணிந்து ஆற்றல்பெறும் நிலையில் இல்லை அரக்கர். அவர்கள் இந்தத் தொல்பாறைகளைப்போல என்றுமிருப்பவர்கள். இப்புவி சுழல்காற்றில் சுருண்டு எழுந்து பறக்காமலிருக்க தெய்வங்கள் வைத்த எடை அவர்கள். முகில்கள் பாறைகளை மூடக்கூடும். நூறுமடங்கு பெரிதெனக் காட்டி விழிமலைக்கச் செய்யவும்கூடும். மூத்தவரே, பாறைகள் முகில்களால் கரைக்கப்படுவதில்லை” என்றான் அலாயுதன். “இனி அந்த மூதன்னைக்கதைகள் இங்கு வாழாது என்றறிக! தன்னிழிவை தற்பெருமையால் மறைத்துக்கொண்டு கதைகளில் வாழும் வாழ்க்கையிலிருந்து வெளியேறுக! இனியேனும் அரசியலை அறிந்துகொள்க!” என்று கடோத்கஜன் சொன்னான். “இனி ஒருபோதும் அரக்கர்கள் பிறரில்லாத நிலத்தை ஆளமாட்டார்கள். இனி எந்நிலமும் எவருக்கும் முழுதுரிமையாக இருக்காது. அதை அறிவுளோர் அறிந்துகொண்டுவிட்டனர். அந்த மெய்யை அறிந்தோருக்கும் அறியாதோருக்கும் இடையே நிகழ்வது இப்போர்.”

“எங்கள் மண், எங்கள் குருதி, அது எந்நிலையிலும் அழியாதது, எதையும் கடந்து ஓங்குவது. என் முன்னோரின் சொற்கள் அதை எனக்கு கற்பித்தன. என்றும் என் உள்ளம் அதிலிருந்து விலகாது” என்றான் அலாயுதன். அவன் தோளை கைநீட்டி தொடவந்த கடோத்கஜனை அவன் விலக்கி பின்னகர்ந்தான். கை நீண்டு நிற்க கடோத்கஜன் சொன்னான் “நான் கூறுவதை சற்றேனும் உளம்கொள்க! ஷத்ரியராயினும் அரக்கராயினும் அசுரரும் கிராதருமாயினும் பிறரைக் கலந்து அனைத்துத் திறன்களையும் உள்ளிழுத்துக்கொண்டு வேர்பரவி எழுபவர்களே இனி கிளைவிரித்து உலகாள்வார்கள். எத்துணை ஆற்றல்கொண்டவர் எனினும் தனித்தமைவோர் அழிவையே சென்றடைவார்கள். இதோ தங்கள் தூயகுருதியின்பொருட்டு படைகொண்டெழுந்திருக்கும் இவர்கள் வெறும் பெயரென, நினைவென எஞ்சும் காலம் அணுகிக்கொண்டிருக்கிறது.”

சீற்றத்துடன் அலாயுதன் கைநீட்டியபடி முன்னகர்ந்தான். “நான் உங்கள் நெஞ்சுநோக்கிக் கேட்கிறேன், நீங்கள் எவருக்காக படைகொண்டு வந்திருக்கிறீர்கள்? நீங்கள் வந்திருப்பது இப்புவி முழுதாளும் வேட்கைகொண்ட யாதவர்களின் பொருட்டுதானே? ஷத்ரியர்களை வெல்ல யாதவர்களை துணைப்பதுதான் உங்கள் கடனா?” என்றான். “நீ எதன்பொருட்டு வந்தாலும் போரிடுவது ஷத்ரியர்களுக்காக. உன்னால் அவர்கள் வென்றால் இங்கு காட்டெரிபோல் பரவி மண்ணை கைப்பற்றி முழுதாள்வார்கள். அவர்களின் படைக்கலங்களால் அரக்கர்குலம் முற்றழியும். அரக்கர்களின் தொல்நிலங்கள் உருவழிந்து அவர்களின் நாடுகளென்றாகும். என் தந்தையும் அவரை ஆளும் மெய்யாசிரியனும் வென்றால் அரக்கர்களும் பிறரும் கலந்து ஒன்றென்றாகி இங்கு பொலிவார்கள். யாதவர் நிலமாள முடியும் என்னும் நெறியெழுந்தால் நாளை அரக்கரோ அசுரரோ நாடாள்வதும் அந்நெறியால் இயல்வதாகும். அந்நெறிக்கு எதிராக படைக்கலம் தூக்கியவர்களை காக்க நீ நின்றிருக்கிறாய்.”

“அறிக, அரக்கர் குருதி மானுடர் குருதியுடன் கலக்கத் தொடங்கிவிட்டது! இனி மானுடர்களில் அரக்கர் எழுவார்கள். அரக்கர்களில் மானுடம் திகழும். வெற்றிகொள்வீரன் நீ. எழும் ஒரு புது உலகுக்காக வருக! உன் வீரத்தை நாளை முளைத்தெழும் நம் குடிகள் புகழ்ந்து பாடுவார்கள். அறியாமையால் பிழை இயற்றாதொழிக!” என்றான் கடோத்கஜன். ஒரு கணத்தில் சினம் எரிந்தேற அலாயுதன் ஓங்கி கடோத்கஜனின் முகத்தில் துப்பினான். “அறிவிலி நீ. பெருவஞ்சகன் ஒருவனின் படைக்கலம் என ஆனவன்” என்று கூவினான். “நீயே என் முதல் எதிரி. உனைக் கொன்று உன் உடல்மேல் எழுந்து நின்று மூதாதையரை நோக்கி கூவுவேன், எந்தையரே, நீங்கள் விரும்பும் குருதிப்பலி இது, கொள்க என்று…”

கடோத்கஜன் தன் முகத்தை துடைத்தபடி கசப்பு நிறைந்த சிரிப்புடன் “இது சென்றகாலப் போர். இரணியனுக்கும் பிரகலாதனுக்கும், விபீஷணனுக்கும் கும்பகர்ணனுக்கும், வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நிகழ்ந்தது. இன்று அது முடிவடையப்போகிறது” என்றான். “நம்மால் எளிய காலவட்டத்திற்கப்பால் நோக்க இயல்வதில்லை. நம் தந்தையர் சொன்னவற்றையே மீள நாமும் சொல்கிறோம். காலம் கடந்து நோக்கும் விழிகொண்டவன் ஒருவனின் அடிபணிந்து அவன் சொல்லை ஏற்பதொன்றே நாம் இயற்றக்கூடும் நன்று. தந்தையர் சொல் மெய்மை, ஆனால் அதுவே முழு மெய்மை அல்ல. ஏற்பதற்கு நிகராகவே உடைத்தெழுவதும் நிகழும் குடிகளே வென்று இங்கு வாழ்கின்றன. நோக்குக, இதோ இப்பால் சம்பராசுரரின் குடியும் பாணாசுரரின் குடியும் படைகொண்டு நின்றிருக்கிறார்கள்! நிஷாதரும் கிராதரும் படைகொண்டு போரிடுகிறார்கள். எது அவர்களை இணைக்கிறதோ அது மேலும் ஆற்றல்பெற்றெழும். காலம்கடந்த நோக்கை பீலிவிழி எனச் சூடியவனின் அழியாச் சொல்.”

“செல்க… என் முன்னாலிருந்து செல்க… நான் பாய்ந்து உன் குருதிகுடிக்க முற்படுவதற்கு முன் அகல்க!” என்றான் கடோத்கஜன். “உன் தோற்றம் என் உள்ளத்தை உருக்குகிறது. என் உடன்பிறந்தான் நீ எனக் காட்டுகின்றன உன் தோள்கள். உன் விழிகள் எனக்கு என் மைந்தரை காட்டுகின்றன. இக்களத்தில் உன்னைக் கொன்றால் இதன் பொருட்டு ஏழு பிறப்பிலும் நான் துயருறுவேன். புரிந்துகொள்க, இப்போர் நமக்குள் நிகழலாகாது! இது ஷத்ரியர்களின் மாறாமைக்கும் எழுயுகத்தின் மாறும் தன்மைக்குமிடையே நிகழ்வது. அழியாச் சொல்லிலிருந்து அறச் சொல்லொன்று பிறக்கும்பொருட்டு நிகழ்வது. நாம் அதன் அறுவடையை கொய்பவர்கள் மட்டுமென நின்றிருப்போம்” என்று கடோத்கஜன் சொன்னான். “இழிமகனே!” என்று கூவியபடி பாய்ந்த அலாயுதன் கடோத்கஜனின் நெஞ்சில் எட்டி மிதித்தான்.

ஒரு கணத்திற்குள் அவ்வுரையாடல் நிகழ்ந்து முடிய இருவரும் கதைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சுழன்றனர். அவர்களின் போரைக் காண வந்தமைந்தன போர்த்தெய்வங்கள். மத்தகங்களை ஆளும் கஜன், எருதுக்கொம்புகளில் குடியிருக்கும் ரிஷபன், மான்நெற்றிகளில் வாழும் மிருகன், முதலைவாலில் எழும் மகரன், துதிக்கைகளின் ஆற்றலான கரன், கரடிக்கைகளில் குடியிருக்கும் ஜாம்பன், குரங்குக்கால்களின் தெய்வமான மர்க்கடன், மலைப்பாம்புகளை கைகளாகக் கொண்ட பன்னகன். குரங்குப்பிடியை உடைத்தெழுந்தது எருது. முட்டி அதிர்ந்து பின்னடைந்து மீண்டும் பாய்ந்தன மத்தகங்கள். இறுகப்பற்றிய கரடியை வாலால் அறைந்து தூக்கி வீசியது முதலை. மான்கள் அறைந்துகொண்ட ஓசையில் காடு விதிர்த்தது. தழுவிப் போரிட்டன துதிக்கைகள். ஒன்றென்றே ஆகி முறுகி நிலத்திலுருண்டன மலையரவுகள்.

இருவர் கதைகளும் தெறித்து அப்பால் சென்று விழ விலகி நிலத்தில் அறைந்து போர்க்கூச்சல் எழுப்பியபடி எழுந்து நெஞ்சில் அடித்துக் கூவியபடி அலாயுதன் கடோத்கஜனின் மேல் பாய்ந்தான். கடோத்கஜன் அவன் உடலை தன் உடலால் மோதித் தடுத்தான். பெருங்கைகளால் இருவரும் அறைந்துகொண்டனர். கால்களால், நெஞ்சினால் முட்டி ஓசையெழுப்பினர். இரு களிறுகள் கொம்பு கோத்து சுழற்றுவதுபோல் ஒருவரை ஒருவர் தோள்பற்றி இறுக்கி புரட்ட முயன்றனர். முதலைகள்போல் கால்களால் அறைந்தனர். காட்டெருமைகள்போல் தலைகளால் முட்டிக்கொண்டனர். ஒருவர் பற்களை இறுகக் கடித்த ஓசை பிறிதொருவருக்கு கேட்டது. ஒருவரின் எலும்புகள் உரசிக்கொண்ட ஓசையை இன்னொருவர் அறிந்தார். தசைகள் இறுகும் ஒலி அக்களமெங்கும் ஒலித்தது.

பின்னர் இருவரும் தெறித்து விலகி கால்களால் நிலத்தை அறைந்து எருதுகள்போல் சுரைமாந்தி மீண்டும் எழுந்து தாக்கினர். இருவரும் தழுவி நிலத்தில் விழுந்து உருண்டு அவ்வண்ணமே எழுந்தனர். ஓருடலாக இருளுக்குள் களமெங்கும் ததும்பினர். பின்னர் அலாயுதன் கடோத்கஜனை தலைக்குமேல் தூக்கி நிலத்தில் அறைந்தான். உடற்தசைகள் அதிர நிலத்தில் விழுந்த கடோத்கஜன்மேல் அவன் துள்ளி நெஞ்சுமேல் பாய கடோத்கஜன் கால்களைத் தூக்கி அவன் வயிற்றை மிதித்து அப்பாலிட்டு கையறைந்து எழுந்து அவன் மேல் பாய்ந்து இரு தோள்களையும் பற்றித் தூக்கி ஓங்கி முழங்கால்களால் அறைந்து அவன் விலா எலும்பை உடைத்தான். அலாயுதன் இருமி குருதி துப்பி கடோத்கஜனை உந்தி புரண்டெழுந்து அப்பால் சென்றான். கடோத்கஜன் எழுவதற்குள் அலாயுதன் அவன் மேல் பாய்ந்து அருல் கிடந்த கதையை எடுத்து அவன் தலையை ஓங்கி அறைந்தான். கணநேரத்தில் ஒழிந்து புரண்டதால் அவ்வறை நிலத்தில் விழ மண் பொடியெழ அங்கொரு குழி உருவாயிற்று. கடோத்கஜன் வெட்டுண்டு விழுந்துகிடந்த களிறொன்றின் காலை எடுத்து அலாயுதனை அறைந்தான். அதை ஓங்கி வலக்கையால் அறைந்து அப்பால் சரித்த பின் நின்றிருந்த தேர்ச்சகடம் ஒன்றைத் தூக்கி கடோத்கஜனை அறைந்தான் அலாயுதன்.

எழுந்து விண்ணில் நெஞ்சு முட்டிக்கொண்டு இருவரும் மண்ணில் விழுந்தனர். அலாயுதன் தலை கடோத்கஜனின் தலையுடன் முட்டியது. ஒருகணம் கடோத்கஜனின் விழிகளை அலாயுதனின் விழிகள் சந்தித்தன. கடோத்கஜனின் நோக்கில் இருந்த தெளிந்த நிலையுறுதி அலாயுதனின் உள்ளத்தை அசைத்தது. என்ன நிகழ்ந்தது என அறியாமல் அவன் உடலெங்கும் தசைகள் ஒருகணம் தளர்வுற்றன. அந்த கண இடைவெளியில் கடோத்கஜன் அவன் வலக்காலையும் இடக்கையையும் பற்றித்தூக்கி சுழற்றி மண்ணில் அறைந்தான். மலைத்து அசைவிழந்த அவன் உடல்மேல் பாய்ந்து நெஞ்சின்மேல் அமர்ந்து தன் கைகளால் ஓங்கி அவன் தலையைப்பற்றி திருப்பி கழுத்தெலும்பை உடைத்தான். தசைக்குள் எலும்பு உடையும் ஓசை நீருக்குள் எனக் கேட்டது. மிகமிக மந்தணமாகச் சொல்லப்பட்ட ஒரு சொல் என.

அலாயுதனின் உடல் துடித்தது. கட்டைவிரல் விலகி அதிர, பற்கள் கிட்டிக்க, விழிகள் மேலேறி மறைய, கைவிரல்கள் விரிந்து விரிந்து நெளிய கழுத்துத்தசைகள் இழுபட்டு விதிர்க்க அலாயுதன் அடங்கினான். அத்துடிப்பு தன் உடலிலும் குடியேற பற்களை இறுகக்கடித்து இரு கைகளையும் விரல் சுருட்டி மடித்து அமர்ந்திருந்தான் கடோத்கஜன். எலும்புகள் உடலெங்கும் உரசிக்கொள்ளும் ஓசை தலைக்குள் கேட்டது. பின்னர் குருதிக்குமிழிகள் கண்களுக்குள் மெல்ல மிதந்து கீழிறங்கத் தொடங்கின. அவன் எழுந்து திரும்பிப்பார்க்காமல் அகன்றான். அவர்களைச் சூழ்ந்து நின்றிருந்த இரு குடியின் அரக்கர்களும் திகைத்த விழிகளுடன் வெறுமனே நோக்கினர். எவரும் இறந்தவனுக்காக வாழ்த்தொலி எழுப்பவில்லை. எவரும் வெற்றிக்கூச்சலும் முழக்கவில்லை. கைகளிலிருந்து தளர்ந்த படைக்கலங்களை முறுகப்பற்றியபடி அவர்கள் நிலைமீண்டபோது மீண்டும் போருக்கு அழைக்கும் ஓசைகளை கேட்டனர். தளர்ந்த கால்களுடன், தாழ்ந்த தலையுடன் அவர்கள் பிரிந்து அகன்றனர்.

நூல் இருபது – கார்கடல் – 62

ele1அரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர் கட்செவி யோகத்தை கற்றுக்கொண்டார். நாகர்களால் அந்த நுண்ணறிதல் அங்கநாட்டு அரசர் கர்ணனுக்கு வழங்கப்பட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் போர்புரிந்த அவ்விரவில் விழிகொண்டவர்களாக அங்கு திகழ்ந்தவர்கள் அவர்கள் இருவருமே. துரோணர் ஒலிகளைக்கொண்டு போரிடும் சப்தஸ்புடம் என்னும் கலையை அறிந்தவர். அதை அவரிடமிருந்து அஸ்வத்தாமர் அறிந்திருந்தார். அன்றைய இரவுப்போரில் ஷத்ரியப் படைகளில் அந்நால்வர் மட்டிலுமே நோக்குகொண்டவர்கள்.

அரசகுடியினர் அனைவருமே அந்நால்வருக்கும் பின் அணிநிரந்தனர். அர்ஜுனரின் தேருக்குப் பின்னால் பதினெட்டு ஒளிச்செய்தியாளர்களை நிறுத்தினார் திருஷ்டத்யும்னர். அர்ஜுனரின் கையசைவை, வில்லசைவை, அம்பெழு திசைகளை அருகே நின்று நோக்கி அவற்றை ஒளியசைவுகளென இருட்திரையில் நிகழ்த்துவது அவர்களின் பணி. பாண்டவர்களின் தரப்பிலிருந்த ஷத்ரியப் படையினர் அனைவருக்கும் அவ்வசைவுகளே ஆணையெனச் சென்றன. ஒவ்வொரு ஷத்ரியப் படைப்பிரிவிலும் அந்த ஒளியசைவுகளைக் கண்டு ஆணைகளைப் பெற்று தங்களுக்குரிய ஆணைகளாக மாற்றும் இரண்டாம் நிலை ஒளிச்செய்தியாளர்கள் இருந்தனர். முதல் ஒளி நீலநிறத்திலும் இரண்டாவது ஒளி செந்நிறத்திலும் அமைந்திருந்தது. ஒவ்வொரு படைப்பிரிவிலும் இருளில் விழி துலங்கும் அசுரரோ அரக்கரோ நிஷாதரோ கிராதரோ படைமுகம்கொண்டு நின்றிருந்தனர்.

அவ்வண்ணமே கௌரவப் படைப்பிரிவுகளிலும் அரக்கர்களின் சிறு குழுக்கள் இருந்தன. அங்கநாட்டரசர் கர்ணனுக்குப் பின்னால் நாற்பத்தெட்டு ஒளிச்செய்தியாளர்கள் நின்று அவரது ஒவ்வொரு அசைவையும் ஆணையென்றாக்கி கௌரவப் படைகளுக்கு அளித்தனர். துரோணருக்குப் பின்னால் நால்வரும் அஸ்வத்தாமருக்குப் பின்னால் நால்வரும் ஒளிகளுடன் நின்றனர். கௌரவர்கள் மஞ்சள்நிற முதன்மை ஒளியையும் பச்சைநிற இரண்டாம் ஒளியையும் கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து பார்க்கையில் மின்மினிகள் சுழன்று பூசலிட்டுக்கொள்வதுபோல் குருக்ஷேத்ரம் தோற்றமளித்தது. போர் தொடங்குவதற்கு முன்னரே ஒளிகள் போரிடத் தொடங்கிவிட்டிருந்தன. ஏனென்றால் அவை அங்கிருந்தோரின் உள்ளத்துடன் நேர்தொடர்பு கொண்டிருந்தன.

இரு தரப்பினரும் இருளுக்குள் கருநாகம் சுருளவிழ்ந்து படமெடுப்பதுபோல அணிவகுத்து சூழ்கைஅமைத்து முகம்கொண்டனர். ஒருவரை ஒருவர் இருளுக்குள் உணர்ந்தபடி காத்து நின்றனர். “இருளுக்குள் யானையை எதிர்கொள்வதுபோல” என்று ஒருவன் சொன்னான். “ஆம், இருளெல்லாம் யானையென்றாகிறது” என்றான் இன்னொருவன். இருளுக்குள் எதிர்ப்படை நோக்குகொள்வதை அவர்களால் உணரமுடிந்தது. “அவர்கள் ஒவ்வொருவரின் நோக்கையும் உணர்கிறேன். பகலில் இந்நோக்குகள் எழுவதில்லையே!” என்று ஒரு வீரன் கேட்டான். “பகலில் நாம் நோக்குகிறோம்” என்று ஒருவன் மறுமொழி சொன்னான். “இருளுக்கு ஒரு கரவொளி இருக்கிறது. கரியவை அனைத்தையும்போல அதுவும் வளைவுகளில் மின்னுகிறது” என்றான் ஒருவன். “எதற்காகக் காத்திருக்கிறோம்!” என ஓர் இளைஞன் எவரிடமென்றிலாது கேட்டான். “இப்போது நிலவு போரை வகுக்கவிருக்கிறது” என்றது ஒரு குரல்.

கருநிலவுக்கு முந்தைய நாள் ஆகையால் விழியால் காணமுடியாத பிறை அன்று எழுந்தது. அதை பொழுதுகணக்கிட்டு கணித்த நிமித்திகர்“பிறைநிலவு!” என அறிவிக்க பாண்டவர்களின் தரப்பிலிருந்து ஒற்றைப்போர்முரசு ஒலித்தது. கடோத்கஜன் தலைமைகொண்டு நடத்திய இடும்பர்களின் படையிலிருந்து நூற்றுக்கணக்கான முழவொலிகள் எழுந்தன. சிம்மவால் குரங்குக் கூட்டத்தின் ஓசைகள்போல அவை வானில் நிறைந்தன. குரங்குத்திரள் கிளைகளினூடாக எழுந்து அணைவதுபோல் ஒலிக்க பாண்டவப் படை இருளில் இருளலை என பெருகி வந்து இருள்வெள்ளமென நின்றிருந்த கௌரவப் படையை அறைய இரவுப்போர் தொடங்கியது. இரு படைகளும் இருளுக்குள் மோதிக்கொண்டபோது அம்புகளின் ஓசை மேலும் செவிகிழிக்கும் அரம்கொண்டு ஒலித்தது. யானைகளின் பிளிறல் மண்ணுக்கடியில் பாறைகள் புரள்வது போலிருந்தது. புரவிகளின் கனைப்பொலி உலோகத்தகடுகள் உரசுவதுபோலிருந்தது. வாள்வீச்சொலியை பற்களின் கூச்சமென, நாணிழுமும் ஒலியை நரம்புகளின் உலுக்கல் எனக் கேட்க முடிந்தது.

குருக்ஷேத்ரம் எத்தனை ஓசை நிறைந்தது என்பதை அப்போதுதான் அதுநாள் வரை அங்கு போர்புரிந்துகொண்டிருந்தவர்களே உணர்ந்தனர். அம்பை அம்பு அறைகையில் காட்டில் கிளைமுறியும் ஒலி. அம்புமுனை கவசங்களை அறைகையில் மணியோசை. அம்புமுனையை அம்புமுனை சந்திக்கையில் உலோகமணி கல்தரையில் உதிரும் கூரிய ஒலி. அம்புகளின் இறகுகள் அதிரும் ஓசை கழுகுச் சிறகொலிபோல், விசிறப்படும் பட்டுத்துணிபோல், உதறிக்கொள்ளும் புரவிவாலின் ஒலிபோல் வெவ்வேறு வகையில் எழுந்தது. தேர்ச்சகடங்கள் மரப்பலகைப் பரப்புகள் மேல் அதிர்ந்தன, இணைப்புகளில் திடுக்கிட்டன, உருண்டோடி தயங்கி முனகித் திரும்பின. அச்சுகளில் ஆணிகள் எண்ணைப்பிசின் பரப்பில் வழுக்கிச் சுழலும் ஓசையைக்கூட கேட்கமுடிந்தது. யானைச்சங்கிலிகளின் குலுங்கலில் எடை தெரிந்தது.

காற்று பல அடுக்குகளென்றாகியது. ஒலிகள் தங்கள் அடர்த்திகளுக்கேற்ப தங்கள் காற்றுவெளியை தெரிவுசெய்துகொண்டன. ஆவியும் எண்ணையும் நீரும் கசடும் ஒற்றைப் பளிங்குக் குடுவைக்குள் அடுக்கப்பட்டு தெரிவதைப்போல. புரவிக்குளம்புத் தாளங்கள், கனைப்புகள், ஆணைகள், செய்திக்கூவல்கள் ஓர் அடுக்கில் பெருகி அலைத்தன. சங்குகள், கொம்புகள், முழவுகள், சிற்றூதல்கள் வேறொரு காற்றில் நிறைந்து ஒன்றுடன் ஒன்று பின்னிப் பரவின. புண்பட்ட அலறல்கள், சாவுக்கூக்குரல்கள், வெறிக்கூச்சல்கள், எக்களிப்புகள், வலியழுகைகள் பிறிதொரு காற்றில் நிறைந்திருந்தன. குருக்ஷேத்ரமெனும் கலம் குலுக்கப்பட்டது, கவிழ்ந்தெழுந்தது, ஒளிகள் ஒன்றுடன் ஒன்று ஊடுருவிக் கலந்தன. தோழரே, வண்ண ஒளிச்சரடுகளைக் கொண்டு முடைந்த பெரும்பாய்போல களம் தோன்றியது.

போர் தொடங்கிய சற்று நேரத்திலேயே இருளுக்குள் முட்டி மோதி போரிட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் தங்களை அறியாமலேயே செவியை விழியென மாற்றிக்கொள்ளத் தொடங்கினர். தொலைவில் தெரிந்த ஒளியாணைகளை மட்டுமே கண்டு, உடன் வந்த அரக்கர் குழுவினால் வழிகாட்டப்பட்டு போரிட்டனர். ஓசைகளுக்கும் அவ்வொளிகளுக்கும் இடையே ஒத்திசைவை கண்டுகொண்டதும் அவை ஒன்றாயின. போர் உளம்கூர்தலின் வெளி. உள்ளம் புலன்களை சமைக்கிறது. அங்கு ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிரப்பிக்கொண்டு ஒத்திசைவை அடைகின்றன. இரு நாழிகைக்குப் பின் அங்கு போர்க்களத்தில் அத்தனை வீரர்களும் கட்செவி கொண்டவர்கள்போல் மாறினர். ஒளிபெய்யும் நடுப்பகலில் போர்புரியும் அதே இயல்புத்தன்மையுடன் அவர்கள் அம்புகளை எய்தனர், வேல்களை வீசினர். கதைகளையும் வாள்களையும் சுழற்றி ஒருவரோடொருவர் போரிட்டனர். தாங்கள் விழிநோக்கிழந்து செவிகளால் பார்த்துக்கொண்டிருப்பதையே அவர்கள் அறியவில்லை.

ஆனால் அவர்களைவிட மும்மடங்கு ஆற்றல் கொண்டிருந்தனர் நிஷாதர்களும், கிராதர்களும், அரக்கர்களும், அசுரர்களும். அவர்களிலேயேகூட இடும்பர்கள் விண்ணவருக்கு இணையான விசையும் கரவும் கொண்டிருந்தனர். நூலேணிகளில் என இருளில் கால்வைத்து ஏறி வானில் மறைந்தனர். இருள் அலைவுறும் இடியோசையுடன் மீண்டும் தோன்றினர். எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து பேரொலி எழுப்பி நகைத்தனர். முழவுகளை முழக்கியபடி, உடல்களில் அறைந்து வெடிப்பொலி எழுப்பியபடி தலைக்குமேல் பறவைகளைப்போல் வந்து தாக்கினர். மண்ணில் விழுந்து முற்றாக மறைந்து போயினர். ஒவ்வொரு கௌரவ வீரனும் தனக்கு மிக அருகே இடும்பன் ஒருவன் இருப்பதுபோல் உணர்ந்தான். தன்னுடன் நின்ற படைவீரர்கள் தாங்களே தங்கள் சங்கறுத்து விழுவதைப்போல் விழுந்து துடித்து உயிர்விடுவதை அவர்கள் கண்டனர். மின்னி வந்த வாளுக்குப் பின்னால் கைகளோ உடலோ இருக்கவில்லை. சுழன்றறைந்து சென்ற கதை அதற்குள் தெய்வம் குடியேறி பறப்பதுபோல் தோன்றியது.

“எங்குளர்? இருளில் கரைந்துவிட்டார்களா என்ன?” என்று ஒருவன் கூவினான். “ஆம்! இருள் முழுத்து எழுகிறார்கள், இருளென்றாகி மறைகிறார்கள்!” என்றான் இன்னொருவன். “இருள் தசை புழுத்து எழுந்த நெளிவுகள்!” என்று ஒருவன் கூவினான். அவர்களின் வீசுகொக்கிகளில் சிக்கி கௌரவ வீரர்கள் இருண்ட வானில் எழுந்து சென்றனர். வானில் அலறி குருதி மழைத்துளி சிதற மண்ணில் அறைந்து விழுந்தனர். “முகில்களில் ஊர்கிறார்கள்!” என்று எங்கோ ஓர் அலறல் எழுந்தது. “வௌவால்கள்! கூகைகள்!” என எவரோ கூச்சலிட்டார்கள். “விழிகள்! விழிகளை நோக்கியே அம்புகள் எழுகின்றன! விழிகளைக் கொத்தி அணைத்துவிடுகின்றன!” விழிகளில் பாய்ந்த அம்புகளுடன் வீரர்கள் சுழன்று நிலையழிய அவர்களை பொதிந்து வீழ்த்தி மேலும் மேலுமென வந்து தறைத்தன அம்புகள். விழிநடுப்புள்ளியை நாடி வந்து தலைக்கவசத்தை உடைத்து உட்புகுந்தன எடைமிக்க எறிவேல்கள்.

அரக்கரும் அசுரரும் விண்ணிலெழுந்தமைந்து போரிட்டபோது நிஷாதரும் கிராதரும் உடலை மண்ணுடன் மண்ணென தழைத்து ஓசையில்லாது ஊர்ந்து வந்து எழுந்து போரிட்டனர். எண்ணியிராத இடங்களில் மண்ணிலிருந்து ஊற்று பீறிட்டெழுவதுபோல் அவர்கள் தோன்றினர். தரைக்கு அடியில் சென்றுவிட்டவர்கள்போல் அவர்கள் விழிகளில் இருந்து மறைந்துவிட்டனர். “அவர்கள் உரகங்களில் இருந்து பிறந்தவர்கள். நீரில் வாழ்பவை அவர்களின் தெய்வங்கள். ஓசையின்மையே அவர்களின் ஆற்றல்” என்று படைத்தலைவன் கூவினான். “வேல்களை தலைகீழாகப் பிடியுங்கள். விற்களை நிலம் நோக்கியும் தணியுங்கள். தரையில் எந்த அசைவெழுந்தாலும் தாக்குங்கள்.”

துரியோதனன் புரவியில் பாய்ந்து துரோணரை நோக்கிச்சென்று “ஆசிரியரே, இவர்கள் இப்போது தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். இல்லையேல் இன்றுடன் நமது படை முற்றழியக்கூடும்” என்றான். “அவர்கள் தங்களின் ஆற்றலை காட்டட்டும். அதை புரிந்துகொண்ட பின்னரே அவர்களை நாம் வெல்லமுடியும்” என்றார் துரோணர். “இப்போதுதான் அவர்களின் சூழ்கையும் போர்முறையும் தெரியவருகிறது. இப்படையின் மையம் கடோத்கஜன். நான் அவனை சுற்றிவளைக்க முயன்றுகொண்டிருக்கிறேன்” என்றார். “அடிமரத்தை நாடி அதை முறிக்கவேண்டும். கிளைகளை வெட்டமுயல்வதில் பொருளில்லை…”

துரியோதனன் சீற்றத்துடன் “அவனை சுற்றிவளைக்க இயலாது, ஆசிரியரே. அவன் எங்குமிருக்கிறான். எண்ணுகையில் நமது படையில் பின்பகுதியில்கூட அவனிருக்கிறான் என்று தோன்றுகிறது. அங்கிருந்தும் அலறல்கள் எழுகின்றன…” என்றான். “அவர்கள் சரடுகளினூடாக பறப்பவர்கள். ஆனால் அத்தனை சரடுகளுக்கும் மைய முடிச்சென்று ஒன்று இருக்கும். அவர்கள் இப்படையெங்கும் பரவி போரிடும் வடிவத்திலிருந்தே குறுக்கிச்சென்று அம்மையத்தை அடையமுடியும். வலைச்சரடினூடாக மையத்தை அடைந்து அதை தாக்குவோம்” என்று துரோணர் சொன்னார். “போர் இன்னும் நான்கு நாழிகைக்குள் முடிந்தாகவேண்டும், ஆசிரியரே. நம் படைகள் அழிந்துகொண்டிருக்கின்றன” என்றபின் துரியோதனன் திரும்பிச்சென்றான்.

கிராதர்களும் நிஷாதர்களும் அசுரர்களும் விழிகளைக் கொண்டு உடல்வடிவம் சமைக்கும் அக்ஷரூபம் என்னும் கலையை கற்றவர்கள். வேட்டைவிலங்கின் விழிமின் துளிகளை மட்டுமே இருளில் அவர்கள் பார்ப்பார்கள். அவ்விழிகளின் ஒளியையும், அவை அமைந்திருக்கும் உயரத்தையும், அவற்றுக்கிடையான தொலைவையும் கொண்டு அவற்றின் தலையை உள்ளத்தால் வரைந்தெடுப்பார்கள். அவற்றுக்குப் பின் உடலை முழுமை செய்து கொள்வார்கள். தலைதிருப்புகையில் விழிகள் கொள்ளும் கோண மாறுபாடு, விழிகளின் விரைவு, விழிகள் மேலெழுந்து தாழும் வளைவு என பன்னிரண்டு அசைவுகளைக் கொண்டு எதிரில் வருவது எவ்விலங்கு என்று கணித்து அவற்றின் உடலில் எப்பகுதியிலும் அம்பெய்ய அவர்களால் இயலும்.

அக்ஷரூபக் கலையின்படி களத்தில் எதிரிகளின் விழிகளே அசுரர்களுக்கு அனைத்தையும் காட்டித் தந்தன. பகல்போர்களில் முழுக் களமும், எதிரியின் முழுதுடலும் தெரிகையில் அவர்கள் ஆற்றலற்ற போர்வீரர்களாக இருந்தனர். அவ்வுடலில் இலக்கு தேர்வதற்குள் அவர்களின் விழிகள் மலைத்தன. உடல்களுடன் உடல்கள் பின்னி, காட்சிகள் மேல் காட்சிகள் படிந்து கொந்தளிப்பு கொள்ளும் பெருவெளியில் இலக்கு தெரிவு செய்யத் தெரியாமல் அவர்கள் இழுத்த நாணில் அம்புடன் எப்போதும் தடுமாறினர். “உடல்களை இழுத்துப் பின்னி பாய் முடைந்ததுபோல் உள்ளது இப்போர்க்களம்” என்று இளைய கிராத இளவரசன் கம்றன் சொன்னது அவர்களுக்கிடையே புகழ்பெற்ற வரியாக இருந்தது. உடல்களின் வேர்ப்பின்னல், உடல்களின் முள்வேலி, உடல்களின் இலைத்தழைப்பு என அதை சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொண்டனர். அவ்வுடல்களை நோக்கி இலக்கின்றி அம்பெய்வதையே எப்போதும் இயற்றி வந்தனர்.

ஆனால் அவர்களை நாடிவந்த ஷத்ரியர்களின் அம்புகள் இலக்கு கொண்டிருந்தன. அவர்கள் அணிந்திருந்த யானைத்தோல் கவசங்களின் இடுக்குகளை, உடலின் நரம்பு முடிச்சுகளை, உயிர்நிலைகளை நாடியே அவை வந்தன. குருதி குடித்து நின்று அதிர்ந்தன. அவர்களை ஷத்ரியர்கள் கலைந்து முட்டிமோதி அதனாலேயே எளிய இலக்குகளென்றாகும் மான்கூட்டங்களும் பறவைத்திரள்களுமென்று எண்ணினர். இரு படையினரும் ஷத்ரியர்களுக்கு முன்னால் இழுத்துவிட வேண்டிய புதர்த் திரைகளாகவோ ஷத்ரிய விசைக்கு எதிரான சகடத் தடைகளாகவோதான் அவர்களை பயன்படுத்தினர். வேல்களாலும் வாள்களாலும் வெட்டிக்குவிக்கப்பட்டு, அம்புகளால் அறைந்து வீழ்த்தப்பட்டு, யானைகளாலும் புரவிகளாலும் மிதிக்கப்பட்டு எவராலும் அறியப்படாதவர்களாக விழுந்து குருக்ஷேத்ரத்தின் பிலங்களுக்குள் மறைவதே அவர்களின் போராக அமைந்திருந்தது. அவர்களைக் கொன்ற ஷத்ரியர்கள்கூட ஒருகணம் ஏறிட்டு தங்கள் இரைகளின் முகத்தை நோக்கவில்லை.

ஆனால் இருளுக்குள் அவர்களுக்கு இலக்குகள் நன்கமைந்தன. “இருள் தேவையற்ற அனைத்தையும் மறைத்துவிட்டது. தேவையானவற்றை மட்டும் தெரிவு செய்துகொள்ள இடமளித்தது. இருளில் நாம் மறைந்துகொள்கிறோம். நம்மை தாக்குபவர்கள் நாம் ஒளியில் தவிப்பதுபோல் இருளில் முட்டித் தவிக்கிறார்கள். நமக்கு இலக்கென்று வெட்டவெளியில் நின்றிருக்கிறார்கள்” என்றார் கிராதர் குலத்தலைவர் சம்புகர். “நம் தெய்வங்கள் அவர்களை ஏற்கெனவே இலக்கு வைத்துவிட்டன. குருதி அளிப்பது மட்டுமே நமது பணி…” அவர்கள் முதல்முறையாக போர்வெறி கொண்டனர். கொல்லுந்தோறும் பெருகும் அவ்வெறியை அவர்களில் பலர் முன்னர் அறிந்திருக்கவில்லை. அவர்களில் பலர் போர்க்களத்தில் நின்று பொருதியதே இல்லை. வேட்டைவிலங்கை கொன்றபின் எழும் துயரம் போர்க்களத்தில் இல்லை என்பதை அவர்கள் கண்டனர். அங்கே உயிர்விடும் விழிகளின் இறுதி ஒளி எழுந்து கொன்றவனின் உள்ளத்தில் கூரின் சுடர் என குடியேறுவதில்லை. அதை அணையச்செய்ய தெய்வங்களை வழிபட்டு எழுப்ப வேண்டியதில்லை.

கிராதர்களும் நிஷாதர்களும் அசுரர்களும் வேட்டைவிலங்குகள் இருளில் தங்களை காணாமலிருக்கும்பொருட்டு விழிகளை கிழே தாழ்த்தி இமைகளை பெரும்பாலும் மூடிக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். அவர்களின் அம்புமுனைகள் கூர்தீட்டப்பட்ட பின்னர் கரி கலந்த அரக்கில் மூழ்க்கி எடுக்கப்பட்டு மின்னிலாதிருந்தன. அவர்களின் விற்களும் கவசங்களும்கூட கரிய அரக்கு பூசப்பட்டிருந்தன. கால்களில் அவர்கள் மரப்பட்டைகளைச் சதைத்து உருவாக்கப்பட்ட மென்மையான குறடுகளை அணிந்திருந்தனர். அவர்களின் விற்கள் நாணொலி எழுப்புவதில்லை. எனவே இருளில் முற்றாக மறைந்து தடமின்றி எழுந்து வர அவர்களால் இயன்றது. கொன்று மீள்கையில் தாங்கள் வந்ததையும் கொன்றதையும் அவர்கள் மட்டுமே அறிந்தனர்.

மாறாக ஷத்ரியர்கள் மின்னும் கவசங்கள் அணிந்திருந்தனர். ஒலிக்கும் குறடுகளும் சுடர் சூடிய படைக்கல கூர்களும் கவச வளைவுகளும் கொண்டிருந்தனர். அவர்களின் அஞ்சித் திகைத்த விழிகள் வெறித்து “இங்குளோம்! இவ்வாறுள்ளோம்” என்று காட்டின. கிராதர்களும் நிஷாதர்களும் அசுரரும் அரக்கரும் கள்ளிச்செடிகளையும் காட்டுக்கற்றாழைகளையும் என ஷத்ரியர்களை வெட்டி வீழ்த்தினர். “இத்தனை எளிதாக நான் வேட்டையாடியதே இல்லை. விழிகள் ஒளிக்கு மயங்கிய எலிகளைப்போல் அம்புபட்டுச் சாகிறார்கள்” என்று கிராத குல இளவரசனாகிய பூதன் சொன்னான். “நெருங்கி காய்த்து குலை செறிந்து கிளைதாழ்ந்த மாமரக் கிளையில் கல்லெறிவது போலுள்ளது” என்று நகைத்தான் அசுரர்குடி இளவரசனாகிய காமிதன். சுழற்காற்றில் ஆலமரம் காயுதிர்ப்பதுபோல் ஷத்ரியர்கள் குருக்ஷேத்ரக் களமெங்கும் விழுந்தனர்.

அர்ஜுனனும் கர்ணனும் இருபுறத்திலிருந்தும் வழிகாட்டிய படைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் அம்பு கோத்துப் போரிட அப்போரின் நிழல்பெருகிய வானசைவுபோல பாண்டவ கௌரவப் படைகள் போரிட்டன. அர்ஜுனனின் ஆவத்தூளியிலிருந்து எழும் அம்பின் ஓசையை கர்ணன் கேட்டான். அதற்கு நிகரான அம்பெடுத்து இருளில் வந்த அதன் ஒலிச்சீற்றத்தை இரண்டென முறித்தான். கர்ணனின் நாண் இழுபடும் ஓசையிலேயே அவ்வம்பின் விரைவை அர்ஜுனன் அறிந்தான். முன்னவர்களின் அம்புகள் ஒன்றையொன்று தாக்கி வீழ்த்த படையினர் எய்த விழியற்ற அம்புப்பெருக்கு அலை எழுந்து அலையை அறைந்து நுரை எழுப்பி சிதறுவதுபோல் படைகளின் தலைக்குமேல் கொந்தளித்தது. அம்புகள் பட்டு அலறிச் சரிந்தவர்களின் உடல்களிலும் குருதிக்குழம்பிலும் பிறர் முட்டித்தடுமாறினார்.

அப்பால் எரிந்த அறிவிப்பு விளக்குகளின் மெல்லிய ஒளியில் அனலென சுடர் கொண்டிருந்தது கர்ணனின் தேர். அவன் நெஞ்சக்கவசம் உருகும் பொன் என நெளிந்தணைவதை, அவன் குண்டலங்கள் இரு விண்மீன் துளிகள் என அசைவதை அர்ஜுனன் ஒருகணம் கண்டான். ஒருவரை ஒருவர் ஓர் அணுவிடையும் குறையாது எதிர்க்கும் அப்போரில் எப்போதுமென இருவரும் பிறராகி நின்று பொருதினர். அம்புகளால் கவ்விக்கொண்டு முடிவிலா சுழலொன்றில் சுற்றிவந்தனர். அந்த அம்புகளில் எழுந்தனர் நீத்தவர்கள், நினைவானவர்கள், நெஞ்சக்கதுப்பில் புதைந்து காத்திருந்தவர்கள். அபிமன்யு அர்ஜுனனின் அம்பில் எழுந்து கர்ணனை நோக்கி சீறிச் சென்றான். அவனை நோக்கி பாய்ந்து வந்தான் ஜயத்ரதன். ஏகலவ்யன் கர்ணனின் அம்பில் முழக்கமிட்டான். அர்ஜுனனில் இருந்து எழுந்து வந்தான் அரவான். பீஷ்மரும் பரசுராமரும் அங்கே போரிட்டனர். பின்னர் காற்றில் எழுந்த குந்தியை ராதை எதிர்கொண்டாள். அவர்களின் வஞ்சம் பிற அனைத்தையும் தன் படைக்கலமாகக் கொண்டு காற்றில் திகழ்ந்தது.

ele1அவ்விரவுப்போர் கடோத்கஜனுக்கு உரியதாக இருந்தது என்று அரவான் சொன்னான். அவனை எதிர்க்க எவராலும் இயலவில்லை. துரோணர் சிலந்திவலையை இருளில் தொட்டுணர்வதுபோல மெல்ல மெல்ல அவனுடைய தாக்குதலின் சுழிமையத்தை உய்த்துணர முயன்றார். தன் செவிவிழியால் அம்புகள் எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன என்று கணித்தார். இடும்பர்கள் எத்திசையில் தாவி தாக்கி எவ்வண்ணம் நிலைமீள்கிறார்கள் என்று உணர்ந்து மெல்ல மெல்ல அந்த சுழிமையத்தை நோக்கி தன்னைச் சூழ்ந்திருந்த படைவீரர்களை கொண்டுசென்றார். சல்யரும் அஸ்வத்தாமரும் இருபுறத்திலிருந்தும் அவரை துணைத்தனர். தாக்குதலின் கொண்டாட்டத்திலிருந்த இடும்பர்கள் துரோணரின் பொறி கைகளை விரித்துச் சூழ்வதை உணரவில்லை. கௌரவப் படைவீரர்கள் கடோத்கஜனை அவனறியாமலேயே நெருக்கி ஒற்றைப் புள்ளியை நோக்கி கொண்டுசென்றனர்.

வளைகழை முனையில் எழுந்து வண்டெனத் தெறித்து இருளில் மிதந்து சென்று தூண்டில் முனைபோல் இறங்கி காந்தார தேர்ப்படைகளைத் தாக்கி உடைத்துச் சிதறடித்துவிட்டு துள்ளி இருளினூடாக எழுந்த இடத்திற்கே கடோத்கஜன் வந்திறங்கினான். தேர்மகுடங்களின்மேல் விண்ணிலிருந்து பெரும்பாறைகள் உதிர்வதுபோல் இறங்கி அவ்விசையிலேயே கதைகளால் அடித்து உடைத்து சிதர்களாக தெறிக்கச் செய்து, வில்லேந்திய வீரர்களையும் மழுவும் கதையும் பாசமும் ஏந்திய மல்லர்களையும் தலையுடைத்தும் உடல் சிதைத்தும் கொன்று, என்ன நிகழ்கிறது என்று அவர்கள் உணர்ந்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்குள் மீண்டும் கழை பற்றி ஏறி தன்னை தெறிக்கச்செய்து மையநிலைக்கே மீண்டு, ஒருவரோடொருவர் ஒலியிலா ஒற்றைச்சொல்லில் மீண்டு வந்ததை அறிவித்து, மறுபடியும் நாற்புறமும் தங்களை எய்துகொண்டனர் இடும்பர்.

பொறிகளை சிதறடித்தபடி சுழன்று செல்லும் அனலுருளை போலிருந்தது அவர்களின் வட்டம். அதன் மையத்தில் கடோத்கஜன் வந்திறங்கி நிலைகொண்டதும் எட்டுத் திசையிலிருந்தும் இடும்பர்கள் மீண்டு வந்து அங்கு தங்கள் உடல்களைப் பொழிந்துகொண்டு வளையமாயினர். “எவரும் இழப்பில்லை! செல்க!” என்று கடோத்கஜன் சொன்னதும் அவர்கள் மீண்டும் இருளில் எழுந்தனர். கடோத்கஜன் கழைவளைக்கவிருந்த கணத்தில் அங்கே துரோணர் தன் படைகளுடன் தோன்றினார். போர்க்கூச்சலிட்டபடி அசுரர்களால் நடத்தப்பட்ட கௌரவப் படைகள் அம்மையத்தை முழுமையாக சூழ்ந்துகொண்டன. “இலக்கு நோக்க வேண்டியதில்லை! இடைவெளியில்லாமல் அம்புகளால் அறையுங்கள்! விண்ணை நோக்க வேண்டாம்! விண் அவர்களின் மாயவெளி என்று உணர்க! அம்மையத்தின் மண்நிலையிலேயே அறைக! ஒருமுறையேனும் அம்மையத்தில் காலூன்றாமல் அவர்களால் எழ இயலாது” என்று துரோணர் கூவினார்.

பாஞ்சாலர்களும் விராடர்களும் இந்திரப்பிரஸ்தத்தின் வீரர்களும் பாண்டவப் படையின் முகப்பில் அரைவட்டமெனத் திரண்டு இருமுனைகளும் அகன்று துரோணரின் சூழ்கையை எதிர்த்து அது முழு வளையம் என்று ஆகாமல் தடுத்தனர். காந்தாரர்களும் உத்தரபாஞ்சாலர்களும் சைந்தவர்களும் கேகயர்களும் மகதர்களும் கோசலர்களும் கலிங்கர்களும் அங்கர்களும் வங்கர்களும் அடங்கிய கௌரவப் படை சீற்றத்துடன் அவர்களை அம்புகளால் அறைந்து விரித்து இடும்பர்களை முற்றாக வளைக்க முயன்றது. எழுந்து சென்ற அதே விசையில் மீண்டும் அங்கே வந்தாகவேண்டும் என்ற வடிவ ஒழுங்கு இடும்பர்களுக்கு எதிரியாக அமைந்தது. சுழன்றறைந்து குருதி சூடிய உடம்புடன் இருளிலெழுந்து அவர்கள் சீறிப் பாய்ந்த அம்புகளால் நிறைந்திருந்த அந்தச் சுழிமையத்திற்குள்ளேயே வந்து விழுந்தனர். உடம்பெங்கும் அம்புகள் தைக்க அலறியபடி ஒருவர் மேல் ஒருவர் உதிர்ந்தனர்.

அவர்கள் மேல் வந்திறங்கிய கடோத்கஜனின் உடலில் துரோணரின் பதினெட்டு அம்புகள் வந்து தைத்தன. பேரெடை கொண்ட தன் உடல் மண்ணில் அறைந்து விழுந்ததுமே நிகழ்வதென்ன என்று அவன் தெரிந்துகொண்டான். நாணொலிக்க வில்நின்று வெறியாட்டுகொள்ள விழிகூட அசையாமல் கைமட்டும் சுழல போரிட்டுக்கொண்டிருந்த துரோணரை தொலைவிலேயே அவன் கண்டான். தன் பாசக்கொடியை துரோணரின் தேர் மேல் ஏவி அதனூடாக பறந்தெழுந்து சிலந்தியென அவர் தேர் மேல் இறங்கினான். தன் கதையால் துரோணரின் தேர்ப்பாகனின் தலையறைந்து கொன்றான். இன்னொரு அறையால் தலைகாக்க வளைந்தொழிந்த துரோணரின் தேர்த்தூணை உடைத்தான். மீண்டும் அவனுடைய கதை சுழன்று வருவதற்குள் துரோணர் தேர்த்தட்டிலிருந்து பின்னால் தாவி இறங்கி தன் வில்லுடன் ஓடி அங்கு ஊர்பவன் விழ தயங்கிச் சுழன்றுகொண்டிருந்த புரவியொன்றின்மேல் ஏறிக்கொண்டார். கடோத்கஜன் காற்றில் தாவி எழுந்து விழுந்துகிடந்த தேர்களினூடாக நிலையழிந்து கனைத்துச்சுழன்ற குதிரைகளின் மீதாக பாய்ந்து சென்று துரோணரை தாக்கினான்.

கடோத்கஜனின் கதையின் வீச்சை தவிர்க்க அம்புகளால் தொடர்ந்து அறைந்தபடி துரோணர் கௌரவப் படைகளுக்குள் பின்வாங்கிச் சென்றார். கடோத்கஜனின் கதை அவன் கையிலிருந்து நெடுந்தொலைவுக்கு எழுந்து வந்து அறைந்து மீண்டது. நின்ற இடத்திலேயே கரைந்து எதிர்ப்புறத்தில் அவன் தோன்றினான். அவன் அறைகள் ஒவ்வொன்றும் சூழ்ந்திருந்தோர் காதுமடல்களை குளிரச்செய்யும் காற்றுவிசை கொண்டிருந்தன. துரோணர் புரவியிலேயே துள்ளி அகன்று அவன் கதை விசையைத் தவிர்க்க அந்த அறைகள் கௌரவர்களின் தேர்கள் மீதும் யானைகள் மீதும் புரவிகள் மீதும் பட்டு குருதி சிதறச்செய்தன. துரோணர் வெம்மைகொண்ட குருதிமழையில் நனைந்தார். இரவுக்காற்றில் குருதி குளிர நடுக்கு கொண்டார். அரக்கனின் விழிமின்களை அருகிலெனக் கண்டார். அம்பை எடுப்பதற்குள் அவை இரு மின்மினிகளென்றாகி அகல்வதை உணர்ந்தார்.

துரோணரின் புரவியின் மேல் கடோத்கஜனின் அடி விழ அது அலறவும் வாயிலாது தெறித்து அப்பால் விழுந்தது. அதற்கு அடியில் அவர் உடல் சிக்கிக்கொண்டது. கையூன்றி அவர் எழுவதற்குள் விண்ணிலிருந்து பாய்ந்து அவர் மேல் இறங்கினான் கடோத்கஜன். துரோணர் வானிலென அவன் முகத்தை கண்டார். அவன் கதாயுதத்தைச் சுழற்றி அவர் தலையை அறைந்துடைக்க முயன்றபோது இருளுக்குள் பாய்ந்து வந்த அலாயுதன் கடோத்கஜனை தன் கதாயுதத்தால் அறைந்து அப்பால் வீழ்த்தினான். இரு அரக்கர்களும் பேரொலியுடன் தங்கள் கதைகளை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பொறி தெறிக்க மோதிச் சுழன்றெழுந்து மீண்டும் அறைந்தனர். உறுமல்களும், பெருமூச்சொலிகளும், பற்களைக் கடிக்கும் ஓசையும், தொடையிலறைந்து வஞ்சினம் காட்டும் ஓசையும் எழ அரக்கர்கள் இருவரும் மண்ணிலும் விண்ணிலுமென பொருதினர். இருளை மிதித்துத் தாவி விண்ணிலெழுந்து அங்கேயே அறைந்துகொண்டனர். மலையிலிருந்து பாறைகள் உதிர்வதுபோல் நிலத்தில் விழுந்து சுழன்றெழுந்து மீண்டும் அறைந்தனர். நிகர்வீரர் போர்புரிவதைக் காண எழும் தெய்வங்கள் ஒவ்வொருவராக விண்ணில் தோன்றலாயினர்.

நூல் இருபது – கார்கடல் – 61

ele1பார்பாரிகன் சொன்னான்: விந்தியமலைக்கு அப்பால், ஜனஸ்தானத்தை தலைநகராகக் கொண்டு அமைந்திருந்த நாடு அரக்கர்களின் தொல்நிலமாகிய தண்டகம். முன்பு அது தண்டகப்பெருங்காடு என அழைக்கப்பட்டிருந்தது. அங்கே அரக்கர் குலத்தின் பதினெட்டு குடிகள் வாழ்ந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஆற்றல்மிக்க அரசு என்றாக்கியவர் தொல்லரக்க மன்னர் கரனும் அவருடைய இளையோராகிய தூஷணரும் திரிசிரஸும். இலங்கையை ஆண்ட அரக்கர்குலப் பேரரசர் ராவணனுக்கு உடன்குருதியர் அவர்கள். அலைகள் என எழுந்தும் பின் அமைந்தும் மீண்டும் எழுந்தும் கொண்டிருக்கும் அரக்கர்களின் வரலாற்றில் எழுந்த பேரலை அவர்களின் ஆட்சிக்காலம்.

இக்கதையை மூத்தோர் கூறுகின்றனர். பிரம்மனின் மைந்தர் புலஸ்தியர். அவரில் பிறந்த பிரஜாபதி விஸ்ரவஸ். விஸ்ரவஸ் அரக்கர்தெய்வமாகிய குபேரனை பெற்றார். குபேரன் மண்ணில் இருந்தும் கல்லில் இருந்தும் பொன்னில் இருந்தும் மூன்று அழகிய மகளிரை படைத்தார். மண்ணில் எழுந்தவள் மாலினி. கல்லில் பிறந்தவள் ராகை. பொன்னில் உருவானவள் புஷ்போஷ்கடை. அவர்கள் மண்ணால் ஆன பூமிகை என்னும் காட்டிலும் கல்லால் ஆன சிலாதலம் என்னும் காட்டிலும் பொன்னாலான ஹிரண்யம் என்னும் காட்டிலும் வாழ்ந்தனர். விஸ்ரவஸ் அவர்களின் காட்டுக்குச் சென்று அவர்களை மணந்து மைந்தர்களை பெற்றார். புஷ்போஷ்கடைக்கு ராவணனும் கும்பகர்ணனும் மைந்தனாகப் பிறந்தனர். மாலினியில் பிறந்தவர் விபீஷணர். ராகைக்கு கரனும் சூர்ப்பனகையும் பிறந்தனர்.

தன் ஏழு அகவை வரை கரன் அன்னையிடம் வளர்ந்தார். பின்னர் தந்தையிடம் சென்றுசேர்ந்தார். தந்தைக்குப் பணிவிடை செய்து மூன்று சொற்கொடைகளை பெற்றார். ஒருமுறை கேட்ட சொல்லை மறப்பதில்லை, ஒற்றை அம்பில் உள்ளத்தின் அனைத்துச் சொற்களையும் குவிக்க இயலும், உள்ளத்தில் சொல் என ஆவநாழி ஓயாமலிருக்கும். “நீ உன் உள்ளம் ஒழியும் ஒருவரைக் காணும்போது ஆவநாழியும் ஒழிந்து அவரிடம் தோற்பாய்” என்றார் தந்தை. “தந்தையே, மானுடருக்கும் அரக்கருக்கும் அசுரருக்கும் உள்ளத்தில் சொல் ஓயும் தருணம் உண்டா?” என்றார் கரன். “ஆம், உள்ளத்தில் சொல் எழுவது மெய்மையென்னும் இலக்கு நோக்கி செல்வதற்காகவே. இலக்கில்லாச் சொற்களும் இல்லை, இலக்கடையும் சொற்களும் இல்லை. பல்லாயிரம்கோடிச் சொற்கள் இலக்கு பிறழ்ந்து உதிர்கின்றன. அச்சொற்களின் பூசலே உள்ளம் என்பது” என்றார் விஸ்ரவஸ்.

“உளம் ஓயும் கணம் அமைவது மெய்மையை நாடிச்சென்று அடையும்போது மட்டுமே” என்றார் விஸ்ரவஸ். “நாடாதோர்க்கு அது அருளப்படுமா?” என்றார் கரன். “மெய்மை அவர்களை நாடிவரவும்கூடும்” என்றார் விஸ்ரவஸ். “நான் நாடப்போவதில்லை. எனவே என் உள்ளத்தில் சொல்லும் ஆவநாழியில் அம்பும் ஒருபோதும் ஒழியாது” என்றார் கரன். அன்னை அவருக்கு அரக்கர்குலம் மீண்டெழவேண்டும் என்னும் கனவை அளித்தாள். “எழுவதனூடாகவே அரக்கர் வாழ்கிறார்கள். அமைவதன் மெய்மை அவர்களுக்குரியதல்ல” என்றாள் ராகை. விஸ்ரவஸின் குருதியில் ராகையின் நீர்ப்பாவைத் தோற்றமான அனுராகைக்குப் பிறந்தவர் தூஷணர். ராகையின் நிழலுருவான சுராகையை விஸ்ரவஸ் புணர்ந்து பெற்றவர் திரிசிரஸ். கரன் தன் பதினெட்டாவது அகவையில் அரக்கர்குலங்கள் வாழும் நிலத்தைத் தேடி தெற்கே சென்றார். விந்தியனைக் கடந்து தண்டகத்தை அடைந்தார்.

ராகையின் மைந்தன் கல்லால் ஆன உடல்கொண்டிருந்தார். அவரை எதிர்க்க எவராலும் இயலவில்லை. தொல்லரக்கர்குடியின் அனைத்து மல்லர்களையும் வென்று அவர் அனைவருக்கும் தலைமைகொண்டார். அனைத்துக் குடிகளையும் தண்டகத்தில் ஓடும் மாலினி என்னும் நதியின் கரையில் கூடச்செய்து தனக்கு முடிசூடவைத்தார். அந்த இடம் பின்னர் ஜனஸ்தானம் என்னும் ஊராகியது. அதைச்சுற்றி மரங்களாலான பெருங்கோட்டை ஒன்றை அவர் அமைத்தார். உள்ளே மாளிகைகளும் கடைவீதிகளும் அமைந்தன. அரக்கர்குலம் அவர் தலைமையில் வெல்லற்கரியதாகியது. வெற்றியால் செல்வம் நிறைந்ததாக மாறியது. ஜனஸ்தானம் பெருநகரென வளர்ந்தது.

தூஷணர் நகர்க்காவலர். திரிசிரஸ் மலைக்காவலர். அவர்களால் தண்டகம் எதிரிகள் எண்ணவும் அஞ்சும் பெற்றியை அடைந்தது. அந்நாளில் அயோத்தியின் அரசமைந்தனாகிய ராகவராமன் தன் துணைவியுடன் தென்காடு புக்கு அங்கே பஞ்சவடி என்னும் காட்டுக்குள் குடியிருந்தார். கரனின் தங்கையான சூர்ப்பனகை அவரை சிறையெடுத்துவர முயன்று மூக்கும் முலையும் அறுக்கப்பட்டாள். சினந்தெழுந்த கரன் ராகவராமனுடன் போருக்குச் சென்றார். ஒழியா அம்புகளுடன் ராமனுக்கு எதிர்நின்று போரிட்டபோது ஒரு கணத்தில் தன் உள்ளத்தில் சொல்லும் ஆவநாழியில் அம்பும் இல்லாததை உணர்ந்தார். அவர் நெஞ்சு துளைத்துச் சென்றது ராகவராமனின் அம்பு.

தண்டகம் சிதைவுற்று பெருமையழிந்தது. மீண்டும் பலதலைமுறைக்காலம் பதினெட்டு அரக்கர்குடிகளும் சிதறிப்பரந்து மலைமக்களாக உருமாறி வறுமைகொண்டு வாழ்ந்தனர். நெடுங்காலம் அவர்களை பிற ஷத்ரிய அரசர்கள் வேட்டையாடி மேலும் மேலும் உள்காடுகளுக்குள் செலுத்தினர். அவர்கள் ஆண்ட ஆற்றுவழிகளின் மேல் கட்டுப்பாட்டை இழந்தனர். மலைவழிகளையும் பிறர் கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் அவர்களைப்பற்றிய அனைத்துச் சொற்களும் நினைவிலிருந்து அழிந்தன. ஷத்ரிய அரசர்களும் அவர்களால் காக்கப்பட்ட வணிகர்களும் அவர்களை அறியாதோர் ஆயினர்.

ஆனால் அவர்கள் மட்டும் தங்கள் இறந்தகாலத்தை அறிந்திருந்தனர். அவர்களின் நூற்றெட்டு ஊர்களிலும் கரனுக்கும் இரு இளையோருக்கும் கல்பதிட்டைகள் இருந்தன. மாதந்தோறும் ஊன்பலிகொண்டு அவர்கள் குடிகளை வாழ்த்தினர். ஆண்டுக்கொருமுறை அரக்கர்கோன் ராவணனுக்கும் இளையோருக்கும் ஊன்பலியும் பெருஞ்சோற்றுக்கொடையும் அளித்து விழவெடுத்தனர். அவர்களின் இளையோர் தங்கள் குலக்கதைகளைக் கேட்டு வளர்ந்தனர். பின்னர் அக்கதைகள் பெருகி வெற்றுக் கற்பனைகள் என்றாயின. இளையோர் அவற்றை இளமையின் மகிழ்ச்சிகளில் ஒன்றென எண்ணி கடந்துசென்றனர்.

அந்நாளில் ஒருமுறை அக்காட்டினூடாக ரிஷ்யசிருங்கர் என்னும் முனிவர் கடந்துசென்றார். அவர் விபாண்டகர் என்னும் முனிவரின் மைந்தர். அங்கநாட்டை அதன் பெரும்பஞ்சத்திலிருந்து மீட்டு அந்நாட்டை ஆண்ட ரோமபாதன் என்னும் அரசனின் மகள் சாந்தையை மணந்தவர். முனிவர்களும் வணங்கும் மாமுனிவர். தண்டகக் காட்டைக் கடக்கையில் வழிதவறி நீரில்லா வறண்ட நிலத்தினூடாக அலைந்து கற்பாறை ஒன்றின்மேல் அவர் நினைவிழந்து விழுந்துகிடந்தார். அங்கே அவரைக் கண்டடைந்த அரக்கர்குலமகள் ருதிரை அவரைத் தூக்கி தன் குடிலுக்கு கொண்டுவந்தாள். அவளுக்கு என்ன கைம்மாறு செய்யவேண்டும் என கேட்ட முனிவரிடம் தனக்கு ஒரு மைந்தனை அளிக்கவேண்டும் என்றும், அவன் அரக்கர்குலத்தை முழுதாளவேண்டும் என்றும் அவள் கோரினாள்.

ருதிரைக்கு ரிஷ்யசிருங்கரில் மைந்தனாகப் பிறந்தவர் மாமன்னர் அலம்புஷர். அவர் வடக்கே அரக்கர்குடியை மீட்டெழுப்பிய பகாசுரரின் உதவியுடன் அரக்கர்குடியை ஒருங்குதிரட்டினார். பகாசுரரின் செல்வத்தைப் பெற்று தொன்மையான ஜனஸ்தானத்தை மீட்டுக் கட்டினார். இம்முறை மலைப்பாறைகளை அடுக்கி உருவாக்கப்பட்ட கோட்டையாக அது அமைந்தது. பகாசுரரின் படைகளை கடன்பெற்றுச் சென்று தங்கள் நீர்வழிகளையும் மலைப்பாதைகளையும் மீண்டும் கைப்பற்றி மலையுச்சிகளில் காவல்நிலைகளை அமைத்து உரிமைகொண்டார். மீண்டும் ஜனஸ்தானம் செல்வமும் பெருமையும் கொண்டது.

அசுரமன்னர் பகன் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் அலம்புஷர் உளம்கொதித்தார். உடனே படைகொண்டு சென்று பழி தீர்க்கவேண்டுமென எழுந்தார். அமைச்சர்கள் அவரை சினம்காக்கச் செய்தனர். “பகாசுரரைக் கொன்றவர் எவர் என நாம் இன்னமும் முழுதறியோம். பாண்டவ இளையவரால் கொல்லப்பட்டார் என்கிறார்கள்… அவரை நாம் இப்போது தேடிக் கண்டடைய இயலாது” என்றனர். “எனில் அவர்களின் நகரமாகிய அஸ்தினபுரியை அழிப்போம்” என்றார் அலம்புஷர். “அரசே, அஸ்தினபுரியிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அஸ்தினபுரிக்கு எதிரிகளாகவும்கூடும்… அவ்வண்ணம் நிகழுமென்றால் நாம் அஸ்தினபுரியுடன் இணைந்து சென்று அசுரமன்னர் பகனின் இறப்புக்கு பழியீடு செய்வோம்” என்றார் அமைச்சர்.

அலம்புஷர் காத்திருந்தார். அசுரமன்னர் பகனுக்கு அவருடைய நகரத்தின் நடுவே நடுகல் ஒன்றை நாட்டி நாள்தோறும் குருதிபலி கொடுத்தார். பழியீடு செய்து அவரைக் கொன்றவனின் குருதியில் நனைத்த ஆடையை கொண்டுவந்து அங்கே வைத்து வணங்குவதுவரை அந்த பலிக்கொடை நீடிக்கும் என்று வஞ்சினம் உரைத்தார். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் இடையேயான பூசல்களை ஒவ்வொருநாளும் ஒற்றர்களினூடாக அறிந்துகொண்டிருந்தார். அஸ்தினபுரி படையெழுந்ததும் தாங்களும் சேர்ந்துகொள்வதாக செய்தி அனுப்பினார்.

படைகள் திரண்டுகொண்டிருக்கையில் இளைய யாதவரின் செய்தியுடன் பாணாசுரரின் மைந்தர் சக்ரரும் மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவும் ஜனஸ்தானத்திற்கு வந்தனர். “அரக்கர்க்கரசே, இதுவே நாம் ஒருங்கிணைவதற்கான முதன்மைத் தருணம். இப்போது எளிய பகைமைகளையும் வஞ்சங்களையும் சுமந்துகொண்டு உளம்பிரிவோமாயின் நம் கொடிவழிகள் நம்மை பழிக்கும்…” என்று சக்ரர் சொன்னார். “என் தந்தை இளைய யாதவருடன் போரிட்டு கையிழந்தார் என அறிந்திருப்பீர்கள். ஆனால் இன்று நாங்கள் யாதவர்களுக்கு மகற்கொடை கொடுத்த குடி என அறியப்படுகிறோம். எங்கள் குலமகள் உஷை இன்று துவாரகைக்கு அரசியாக அமர்ந்திருக்கிறாள்.”

“இளைய யாதவருக்கு குருதியுறவுகொண்டவர்கள் அசுரர்கள் என பாரதவர்ஷமே இன்று அறியும்” என்று சக்ரர் தொடர்ந்தார். “இங்கு அவர் சொல் வாழுமென்றால் நாமும் வாழ்வோம். இனி அசுரர்களுக்கும் பிறருக்குமான போர்கள் இல்லை. அசுரகுடியினருக்கும் பிறருக்குமான கூட்டில் புதிய அரசகுடிகள் இங்கே எழும். குடியால் அல்ல, ஆற்றலாலும் அறத்தாலும் அரசுகள் அமையும்…” மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபன் “புதிய அறம் ஒன்று இங்கே எழும். அதை சொல்லில் அமைத்த புதியவேதம் நிலைகொள்ளும். இது அதற்கான போர்… ஆகவேதான் இதில் அரக்கரும் அசுரரும் நிஷாதரும் கிராதரும் பாண்டவர்களின் பக்கம் அணிதிரண்டிருக்கிறார்கள்” என்றார்.

“ஆனால் என் வஞ்சம் இளைய பாண்டவரிடம்” என்று அலம்புஷர் சொன்னார். “அதை நாங்கள் அறிவோம். அதை கடந்து வருக என உங்களை அழைக்கவே நேரில் வந்தோம்” என்றார் சக்ரர். “இந்தப் போரில் பாண்டவர் தரப்பில் வந்துகூடியிருக்கும் அத்தனை நிஷாதருக்கும் கிராதருக்கும் அசுரருக்கும் அரக்கருக்கும் அவ்வண்ணம் பழைய பழியின் கதைகள் பலநூறு உள்ளன. நமக்கும் அவர்களுக்குமான போர் என்பது இந்த யுகத்தில் தொடங்கியது அல்ல. ஆனால் வரும் யுகத்தில் அது மறைவதற்கு வாய்ப்புள்ளது. அதன்பொருட்டு களமிறங்குவோம். அதை வென்று நம் கொடிவழியினருக்கு அளிப்போம்.”

அலம்புஷரின் அமைச்சர் “அவ்வண்ணம் மறையும் பகையா அது? நமது தெய்வங்கள் வேறு. நமது வேதம் வேறு. நமது மூதாதையர் வாழும் உலகம் முற்றிலும் வேறு” என்றார். “அமைச்சரே, நம் குடியில் பிறந்தவர்களே அவர்கள் வணங்கும் தெய்வங்களான வருணனும் இந்திரனும் யமனும் குபேரனும் என நூல்கள் சொல்கின்றன. வேள்வியில் அவிகொண்டு அவர்கள் தேவர்களாயினர். அரக்கர் குடியில் பிறந்த இடும்பியின் மைந்தர் கடோத்கஜர் இன்று அரசகுடி மங்கையை மணந்திருக்கிறார். அவர் குடியில் நாளைய பெரும்புகழ்கொள்ளும் அரசகுடி எழும் என்கின்றனர் நிமித்திகர். நாமறிந்த காலம் கதைகளில் வாழ்வது. வரவிருப்பதோ தெய்வங்களின் கனவில் எழுவது…” என்றார் சக்ரர்.

அமைச்சர் “குருதி ஒருபோதும் எல்லைகளை மீறாது” என்றார். “இல்லை அமைச்சரே, குருதி கங்கையைப்போல. அது இணைப்பெருக்குகள் வழியாகவே ஆற்றல்கொள்கிறது. கிளைப்பெருக்குகளாக விரிந்து மண்ணாள்கிறது” என்றார் ஹிரண்யநாபன். “இங்குள்ள ஷத்ரியர் அனைவரின் குலவழியிலும் தொல்லரக்கரான விருஷபர்வனின் குருதி உள்ளது என்று உணர்க! அவர்களனைவரும் தொல்லன்னை சர்மிஷ்டையின் மைந்தர்கள் என்று நாம் அறிந்துள்ளோம்.” அமைச்சர் “அவையெல்லாம் கதைகள்” என்றார். “இவையும் கதைகளாகும். கதைகளே விதைகள், அவற்றிலிருந்தே வாழ்வு முளைத்தெழுகிறது” என்றார் சக்ரர்.

“நான் சொல்லிழந்துள்ளேன் சக்ரரே… என்ன முடிவெடுப்பதென்று அறியாதவனாகி விட்டேன்” என்றார் அலம்புஷர். அமைச்சர் “நாம் நம் தெய்வங்களிடமே கோருவோம்… அவர்கள் முடிவுசெய்க!” என்றார். “ஆம், அதுவே அரக்கர்களின் வழி” என்றார் அலம்புஷர். “மூதாதையர் நல்ல முடிவை எடுக்கட்டும்… எதிர்பார்த்திருக்கிறோம்” என்றபின் சக்ரரும் நிஷாத அரசர்களும் திரும்பிச்சென்றார்கள். அலம்புஷர் அமைதியிழந்து அரண்மனைக்குள் அலைந்தார். அமைச்சர் “நாம் நம் தெய்வங்களிடமே கோருவோம்… தெய்வங்கள் முடிவெடுத்தால் மட்டுமே நம் குடிகள் அச்சொல்லுக்கு கட்டுப்படும்” என்றார். “நம் முடிவு தலைமுறைத் தொடர்களுக்கு அப்பால் வருங்காலத்தைய மைந்தருக்கும் உரியது. அதை நாம் எண்ணி எடுக்க முடியாது. எண்ணாது எடுக்கவேண்டுமென்றால் தெய்வமெழவேண்டும்.”

அமைச்சர் குடித்தலைவர்களை அழைத்து பெருங்குழு ஒன்றை கூட்டினார். அதன்படி மூதாதையருக்கு பெருஞ்சோற்றுக் கொடைவிழா ஒன்று ஒருங்கமைக்கப்பட்டது. அரக்கர்களின் குடிகள் மலைப்பாதைகளினூடாக எறும்புநிரைகளாக வந்து குழுமினர். ஊர்மையத்தில் அமைந்திருந்த மூதாதையர் ஆலயத்தில் அரக்கர்கோன் ராவணனுக்கும் தம்பியருக்கும் அவர்களின் குடிமூத்தவரான கரனுக்கும் தூஷணருக்கும் திரிசிரஸுக்கும் ஏழு முழுத்த எருமைகளை வெட்டிப் பலியிட்டு பூசைசெய்தனர். ஊனும் கள்ளும் அன்னமும் மலரும் படைத்து வணங்கினர். முழவுகள் “எழு எழு எழு” என முழங்கிக்கொண்டிருந்தன. கொம்புகள் “ஆகுக! ஆகுக!” என இறைஞ்சின.

முதற்பூசகரில் வெறியாட்டுகொண்டு எழுந்தார் அரக்கர்கோன் ராவணன். “என் மைந்தரே, நீங்கள் ஆழியும் சங்கும் ஏந்தியவனின் அடிபணிக! அவன் குடிகளென்றாகுக! அவனுடன் நின்றுபொருதுக! உங்கள் கொடிவழியினரில் அவன் ஆணை திகழ்க! உங்கள் வேதங்களில் அவன் சொல் முளைவிட்டு எழுக!” என்று ஆணையிட்டார். கும்பகர்ணனும் விபீஷணனும் பூசகரில் எழுந்து அவ்வாணையையே அளித்தனர். பின்னர் கரன் எழுந்தார். “ஆம், குருதி விரிந்தெழுக! மலைப்பனைபோல் நம் விதைகள் காடெங்கும் பரவுக! இந்நிலமெங்கும் நம் சொல்லே முளைவிடுக!” என்றார். தூஷணரும் திரிசிரஸும் அவர்களில் எழுந்து அவ்வாணையை மேலும் உரைத்தனர்.

அப்போது முதல் பூசகரில் எழுந்த ராவணப்பிரபுவை மீறி எழுந்தது பகாசுரரின் குரல். “என் வஞ்சம் அணையாது… என் வஞ்சம் என்றுமிருக்கும். எனக்காக அளிக்கப்பட்ட சொல்லை ஒருபோதும் நான் கைவிடப்போவதில்லை.” மண்ணிலிருந்து துள்ளி எழுந்து வெறிகொண்டாடி கூச்சலிட்டார் பூசகர். “என் பழிக்கு மறுநிகர் இல்லை… எனக்களிக்கப்பட்ட சொல்லை நிறைவேற்றுங்கள்… இல்லையேல் இக்குடியை அழிப்பேன். இங்குள்ள விளைநிலங்களில் நஞ்சாவேன். கருவறைகளில் நோயாவேன். பசுக்களில் அனலென ஊறுவேன். என்னை நிறைவடையச்செய்க! என் பழியை நிகர்செய்க!”

பிற தெய்வங்கள் ஒவ்வொன்றாக விழுந்து மலையேற பகாசுரர் மட்டும் நின்று ஆடினார். இரு கைகளிலும் பந்தங்களை ஏந்திச் சுழன்றார். அவரை நோக்கி நின்றிருந்த அரக்கர்கள் தன்னுணர்வு கொண்டு “வஞ்சம் எழுக! பெருவஞ்சமே எழுக! ஆம், பழிநிகர் செய்வோம்! பழிநிகர் செய்ய உயிரளிப்போம்!” என தங்கள் கதைகளையும் விற்களையும் வாள்களையும் வேல்களையும் தூக்கி ஆட்டி கூச்சலிட்டனர். கைகூப்பியபடி எரிதழல்சூடி ஆடிக்கொண்டிருந்த பகாசுரரை நோக்கிக்கொண்டிருந்த அலம்புஷர் “ஆம்!” என தலைவணங்கினார்.

ele1அலம்புஷரின் படைகள் கௌரவப் படைகளை சென்றடைந்தன. அங்கிருந்த மூன்று அலம்புஷர்களில் ஒருவர் கடோத்கஜரால் கொல்லப்பட்டார். ஜடாசுரரின் குலமைந்தரான இரண்டாமவர் சாத்யகியால் கொல்லப்பட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் உயிர்விடுகையில் அலம்புஷரைத் தேடி சக்ரரின் சொல் வந்தது. “இந்தக் களத்தில் வீணே உயிர்விடவேண்டியதில்லை, அரக்கர்க்கரசே. இங்கே பிற எவரும் வெல்லப்போவதில்லை. வெல்லும் சொல்லை நம் குடிக்குரியதாக்குக! இன்னமும்கூட உங்களுக்கு வாய்ப்புள்ளது.” அலம்புஷர் “நான் சொல்லுக்கு கட்டுப்பட்டவன்” என சொல்லி அனுப்பினார். “மூன்று சொற்களுக்கு அரக்கர்குடியினர் கட்டுப்பட்டவர்கள். நெறிநூல்களின் சொற்களைவிட மும்மடங்கு மூதாதையர் சொற்களுக்கு. மூதாதையர் சொற்களைவிட மும்மடங்கு தான் உரைத்த சொற்களுக்கு. என் சொற்களுடன் இறுதிவரை களத்தில் நின்றிருப்பேன்.”

இரவுப்போருக்கு முடிவெடுக்கப்பட்டதும் சகுனியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவர் தன் இரு படைத்தலைவர்களுடன் சகுனியின் பாடிவீட்டுக்குச் சென்றபோது அங்கே அஸ்வத்தாமர் இருந்தார். அருகே காககுலத்து அரக்கனான அலாயுதனும் இருந்தான். காகச்சிறகுகள் கொண்ட தலையணியும் கரிய யானைத்தோலாடையும் அணிந்து கல்மணி மாலைகள் அணிந்திருந்த அலாயுதன் எழுந்து அவரை வரவேற்றான். அவனை பலமுறை சந்தித்திருந்தாலும் அலம்புஷர் அணுக்கம்கொள்ள விழைந்ததில்லை. அறியாமையும் ஆணவமும் கொண்ட இளைஞன் என்னும் உளப்பதிவே அவனைப்பற்றி இருந்தது. அலாயுதன் கன்னங்கரிய நிறமும், நரம்புகள் ஓடிய பெரிய கைகளும், முன்னுந்திய தாடையும், மின்னும் சிறிய விழிகளும்கொண்டு விலங்கியல்பைக் காட்டுபவனாக தோன்றினான். அவன் அலம்புஷரை வணங்கி “இன்று நமது நாள், அரக்கர்க்கரசே” என்றான். அலம்புஷர் “ஆம்” என்று மட்டும் சொன்னார்.

அஸ்வத்தாமர் எழுந்து வந்து அலம்புஷரை தோள்தழுவி வரவேற்று “வருக, அரக்கர்க்கரசே! இன்று நாம் அரக்கர்குலத்தவரை நம்பியே போரிடவேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றார். அன்று இரவுப்போர் நிகழக்கூடும் என்னும் சொல் படைகளிடையே புழங்கிக்கொண்டிருப்பதை அலம்புஷர் கேட்டிருந்தார். சகுனி “இன்றிரவு அவர்கள் தாக்குவார்கள் என உறுதியாகியிருக்கிறது. கடோத்கஜன் தலைமையில் அவர்கள் எழவிருக்கிறார்கள். இரவில் கடோத்கஜன் ஏழுமடங்கு ஆற்றல்கொண்டவனாக ஆவான் என்கிறார்கள். நாங்கள் இரவில் விழியற்றவர்கள் என அறிந்திருப்பீர்கள். உங்கள் விழிகளை எங்களுக்குக் கொடுங்கள்” என்றார். அலம்புஷர் “இருளில் நாங்கள் எங்கள் தெய்வங்களின் துணையையும் பெறுகிறோம்” என்றார். “உங்கள் இருவரின் படைகளும் பன்னிரு பிரிவுகளாகப் பிரிந்து களத்தில் நிற்கவேண்டும்… உங்களால் நாங்கள் வழிநடத்தப்படவேண்டும்” என்றார் அஸ்வத்தாமர்.

அலாயுதன் “நான் என் படைகளை ஒரே ஒரு சுடர்ச்செய்கை வழியாக அணிபிரித்துவிட முடியும்” என்றான். அலம்புஷர் “இன்றுதான் மூதாதையர் குறித்த நாள்போலும்” என்றார். “என் வஞ்சத்தை நான் இன்று தீர்க்கவேண்டும். இளைய பாண்டவர் பீமசேனரை இன்று கொன்று குருதிகொள்வேன். பகாசுரருக்கு அளித்த சொல்லை நிறைவுசெய்வேன்.” அவரை குறுக்கே மறித்த அலாயுதன் “நானும் பீமசேனரை கொல்வேன் என்று வஞ்சம் உரைத்து இங்கு வந்தேன்” என்றான். எரிச்சலுடன் விழிசுருக்கி “எதன்பொருட்டு?” என்றார் அலம்புஷர். “என் குடியின் மூத்தவராகிய பகாசுரரை பீமசேனர் அறைந்துகொன்றார்… குருதிப்பழி ஒருபோதும் தீர்க்கப்படாது விடப்படலாகாது என்றார் என் அன்னை. நான் அன்னைக்கு அளித்த சொல்லின்பொருட்டே இங்கு வந்தேன்” என்று அலாயுதன் சொன்னான். அலம்புஷர் ஏதோ சொல்ல வாயெடுத்த பின் விழிவிலக்கி அதை தவிர்த்தார்.

அஸ்வத்தாமர் “இன்று களத்தில் பீமசேனர் ஆற்றலற்றவர். உங்கள் கதைகள் அவரைத் தேடிச் செல்லட்டும். உங்களில் எவருக்கு பழிநிகர் செய்யும் வாய்ப்பை அருள்கின்றன தெய்வங்கள் என்று பார்ப்போம்” என்றார். அலம்புஷர் “நான் பீமசேனரைக் கொன்று பழி தீர்ப்பேன். என் சொல் இந்த இரவில் வெறியாட்டுகொண்டு எழும் தெய்வம்போல் நின்றுள்ளது” என்றார். “ஆம், இன்றுதான் என்று என் அகம் எழுகிறது” என்றான் அலாயுதன். “உங்கள் படைகள் களமெழுக!” என்று சகுனி ஆணையிட்டார். தலைவணங்கி அலம்புஷர் எழுந்தபோது அலாயுதனும் எழுந்துகொண்டான். சகுனியும் அஸ்வத்தாமரும் அவர்களுக்கு விடைகொடுத்தனர். அஸ்வத்தாமர் சில அடி உடன் வந்து “மன்னர் சிதைக்களம் சென்றிருக்கிறார். அங்கிருந்து படைமுகம் செல்வார். நீங்கள் அவரை அங்கே சந்திக்கலாம்” என்றார்.

அவர்கள் இருவரும் வெளியே வந்தனர். அலம்புஷர் தன் உடலின் எடைகூடி கணுக்கால்களை அழுத்துவதுபோல் உணர்ந்தார். ஆனால் அலாயுதன் உணர்வுக்கொந்தளிப்பு அடைந்திருந்தான். “இன்று போர் நிறைவுறும்… இன்றுடன் தெரியும் நாம் நூறு ஷத்ரியர்களுக்கு நிகரானவர்கள் என” என்றான். கௌரவப் படைகளுக்குள் சிறிய அகல்சுடர்கள் அலைவதை அலம்புஷர் பார்த்தார். இருளுக்குள் படைகள் இடம்மாறிக் கொண்டிருப்பதை உணரமுடிந்தது. கீற்றுநிலா முழுமையாகவே முகில்களுக்குள் அமைந்திருந்தது. அலாயுதன் “இரவுப்போருக்காகவே காத்திருந்தேன். இவர்களின் போர்நெறிகள் அனைத்தும் தங்களுக்குள் போர்புரிவதன் பொருட்டு இவர்கள் உருவாக்கிக் கொண்டவை. வெட்டவெளியில் வெளிச்சம் நிறைந்த பொழுதில் முறையாக முரசறைவித்து வஞ்சினம் கூறி படைநெறிகளின்படி பொருதிக்கொள்கிறார்கள். இந்த அறிவின்மைக்கு நாம் ஏன் உடன்படவேண்டும் என்றே நான் உசாவிக்கொண்டிருந்தேன். காலில்லாதவர்களின் ஊரில் கைகளால் நடந்து போரிடும்படி நெறியிருக்கும்… அறிவின்மை… இன்றேனும் நாம் நமது வழிகளின்படி போரிடுவோம்…” என்றான்.

“இது அவர்களின் போர்” என்றார் அலம்புஷர். “மெய், ஆனால் இதற்குள் நாம் நமது போரை நிகழ்த்தும்பொருட்டே வந்துள்ளோம்” என்று அலாயுதன் சொன்னான். அலம்புஷர் “இல்லை, அவர்களின் போரில் ஊடுகலந்து போரிடவே நம்மால் இன்று இயலும். நம்மால் நேரடியாக பீமசேனரையோ பாண்டவர்களையோ வெல்ல இயலாது என்பதனாலேயே இங்கு வந்துள்ளோம்” என்றார். அலாயுதன் இளையோருக்கே உரிய முறையில் பொறுமையற்று தலையை அசைத்தான். “நாம் தோற்கடிக்கப்படுவது அவர்களால் அல்ல, நம்மை எதிர்க்க அங்கே சூழ்ந்திருக்கும் அரக்கர்களால்தான். நான் இரவில் பலமுறை விண்ணிலெழுந்து பாண்டவப் படைகளுக்குள் செல்ல முயன்றேன். இருளிலேயே பாண்டவரை கொன்று மீளமுடியுமா என்று பார்த்தேன். அங்கே காவலுக்கிருப்பவர்கள் இடும்பர்கள். காட்டுநாய்களை மோப்பம் பிடிக்கும் நாட்டுநாய்கள் அவர்கள்.”

அவன் தரையில் துப்பி “நான் இத்தருணத்திற்காகவே காத்திருந்தேன். இரவு என்னை பெருகிஎழச் செய்கிறது. இன்று நான் பாண்டவர்குலத்து வீணனை களத்தில் வீழ்த்துவேன். பகாசுரருக்காக பழிநிகர் செய்தேன் என என் குடியால் புகழப்படுவேன்” என்றான். அலைகளில் படகுபோல நிலைகொள்ளாமல் அசைந்த அவன் உடலை நோக்கியபின் அலம்புஷர் “விந்தைதான்… நான் மட்டுமே பகாசுரருக்காக வஞ்சினம் உரைத்துள்ளேன் என எண்ணினேன்” என்றார். “அரசே, இங்கு மட்டும் ஏழு அரக்கர்குலத்து வீரர்கள் பகாசுரரின் பழியை ஈடுசெய்வதற்காக களம்புகுந்துள்ளனர்” என்றான் அலாயுதன். அலம்புஷர் “ஆனால் பகாசுரருக்கு நேரடிக் குருதிவழி என ஏதுமில்லை” என்றார். “ஆம், ஆனால் நாம் அனைவருமே ஒற்றைக்குருதி” என்றான் அலாயுதன். அவனுடைய பெரிய கைகள் ஒவ்வொரு சொல்லுக்கும் அசைந்தன. அவற்றைக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவன் போலிருந்தன அவன் அசைவுகள். கைகளை கோத்துக்கொண்டான். தலையை தடவினான். முகவாயை வருடிக்கொண்டான். மார்பில் கட்டிக்கொண்டு உடனே விலக்கினான்.

அலம்புஷர் தன்னைச் சூழ்ந்திருந்த கௌரவப் படைப்பெருக்கை நோக்கியபின் “நாம் மட்டும்தான் வஞ்சங்களை இப்படி பெருக்கிக்கொள்கிறோமா? வஞ்சத்தால் வாழ்கிறது நம் குடி என்பார்கள் மூதாதையர். ஆனால் இப்போது நோக்குகையில் நாம் வஞ்சங்களால் அழிகிறோமா என்னும் எண்ணம் ஏற்படுகிறது” என்றார். படைகளைச் சுட்டி “பார், இவர்கள் போரிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். போர்க்களத்திலிருந்து வஞ்சங்களை கொண்டுசெல்வார்கள் என்றால் இவர்களின் ஒவ்வொரு குடியிலும் பல்லாயிரம் வஞ்சினங்கள் உரைக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீரனுக்கும் ஆயிரம் வஞ்சங்களேனும் வந்து சேர்ந்திருக்கும். கொடுந்தெய்வங்களைப்போல அவர்களை அவை ஆட்டிவைத்திருக்கும். அவர்களால் வேறெதையும் எண்ணியிருக்க முடியாது. அறமோ நெறியோ அவர்களில் எழுவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.

அலாயுதன் “ஆம், நான் அதை எண்ணியதுண்டு. பீமசேனனால் கொல்லப்பட்ட மகதத்தின் அரசர் ஜராசந்தனின் கொடிவழியினர் அங்கே பாண்டவர்களுடன் நின்று போரிடுகிறார்கள்” என்றான். “இழிமக்கள், இறந்தவர்களின் உணர்ச்சிகளை மறந்து இருப்பவர்கள் வெற்றுஉடல்களென வாழ்கிறார்கள். விலங்குகளே வஞ்சமற்றவை. வஞ்சத்தை கற்றுக்கொண்ட விலங்கே மானுடன். அரக்கர்க்கரசே, நாம் வஞ்சங்களால்தான் குடிகளாக தொகுத்துக்கொள்கிறோம். குலங்களாக இணைகிறோம். வஞ்சமே நம் மூதாதையரை நம்முடன் இணைக்கிறது. நம் வழியாக நம் கொடிவழியினருக்கு சென்றுசேர்கிறது. வஞ்சச்சரடால் கோக்கப்பட்ட மணிகளே நாம் என்கின்றன தொல்லுரைகள்.” அவன் மீண்டும் ஓங்கி துப்பி “கீழ்மக்கள். விலங்குகளைப்போல் நுகர்வதே இன்பமென்று எண்ணுபவர்கள். இப்போருடன் இவர்கள் முற்றழிவார்கள் என்றால் களைகள் எரிந்தணைந்த மண்ணில் விளைகள் பெருகுவதுபோல் அரக்கர் குடி வளர்ந்தெழுந்து மண் நிறைக்கும்” என்றான்.

“ஆம், இவர்கள் போர்க்கள வஞ்சங்களை வளர்ப்பதில்லை. அவற்றை களத்தை ஆளும் தெய்வங்களுக்கு அளித்த பின் வெறுமையை மட்டுமே இங்கிருந்து பெற்றுக்கொண்டு மீள்கிறார்கள். எல்லா வெறுமையும் ஏதோ ஒரு மெய்மையின் புறவடிவம்தான். ஆகவேதான் இவர்கள் போர்க்களத்தை அறநிலம் என்றும் மெய்மையின் ஊற்று என்றும் புகழ்கிறார்கள்” என்றார் அலம்புஷர். “இவர்களிடமிருக்கும் அத்தனை மெய்மைகளும் வெவ்வேறு போர்க்களங்களிலிருந்து இவர்கள் பெற்றுக்கொண்டவை போலும். அந்நெறிகளால்தான் இவர்கள் மேலும் மேலும் ஆற்றல்கொண்டவர்களாக ஆகிறார்கள்.” அலாயுதன் “என்ன வீண்பேச்சு இது? இவர்களுக்கு களத்தில் அச்சமும் ஐயமும் அன்றி நெறியென்று ஏதுமில்லை என அறியாதவரா நீங்கள்?” என்றான்.

“ஆம், களமெழுவதற்கு முன் நெறிகளை வகுத்துக்கொள்கிறார்கள். களம் அமைந்ததுமே நெறிகளை மீறுகிறார்கள். ஆனால் அந்நெறிகள் முந்தைய களங்களால் அடையப்பட்டவை. இக்களத்தில் அவை உடைபடுவது இயல்பே. ஆனால் இக்களத்தில் அவர்கள் அடையும் நெறி இன்னொரு பெரும்போர் வரை இவர்களை ஆளும்” என்று அலம்புஷர் சொன்னார். “அங்கே இளைய யாதவன் உருவாக்கும் சொல் என்பது இப்போரில் திரண்டெழும் நெறிகளால் உலகியலென வகுக்கப்படலாம். இங்கே அது பல்லாயிரம் தலைமுறைக்காலம் நின்று ஆட்சிசெய்யலாம்.”

“வீண்பேச்சு! வீண்பேச்சு!” என்று அலாயுதன் கூவினான். “இவர்கள் வஞ்சம் கொள்ளாதிருப்பது அனைத்தையும் மறந்துவிடுவதனால்தான். இவர்கள் பழிகளையும் பிழைகளையும்கூட மறந்துவிடுவது ஒன்றின்பொருட்டே, நிலம். நிலம் மட்டுமே இவர்களின் இலக்கு. நெறியெனக் கொள்வது அதை வெல்லும் வழிகளை மட்டுமே. அதை மறைக்கவே சொல்பெருக்குகிறார்கள். இவர்களை பலிகொண்டு நிறையாத குருதித்தெய்வமென ஆட்டிவைக்கிறது நிலம். நிலத்தை பகுத்துப்பெறுவதற்காக பெற்ற தந்தையை கொல்பவர்கள் இவர்களில் உண்டு. போரில் மைந்தரையும் தந்தையரையும் குடி முழுதையும் இழந்தாலும் கையளவு நிலம்பெற்றால் மகிழ்ந்து நிறைவுறும் கீழோர்” என்றான் அலாயுதன்.

“நாம் அவர்களிடமிருந்து அதைத்தான் கற்றுக்கொள்ளவேண்டுமா என்ன?” என்றார் அலம்புஷர். “என்ன சொல்கிறீர்கள்? நிலத்தையா? நிலத்தின்பொருட்டு நாம் நம் குலநெறிகளை குருதிவஞ்சங்களை கைவிடவேண்டும் என்கிறீர்களா?” என்றான் அலாயுதன். “யானை பெரும்பசி கொண்டது, ஆகவே அது உணவையே ஊழ்கப்பொருளாகக் கொண்டுள்ளது என்று சொல்வார்கள். இவர்கள் நிலம்மீது கொண்டிருக்கும் பற்றும் வெறியும் இவர்களுக்குள் தெய்வங்கள் பொறித்ததாக இருக்கலாம். இவர்களின் தெய்வங்கள் இவர்களுக்கு பரவுக, எங்கும் நிறைக என ஆணையிடுகின்றன போலும்” என்றார் அலம்புஷர். “நோக்குக, இவர்களின் நெறிகளும் விழைவுகளும் எதுவானாலும் ஆகுக! இவர்கள் பாரதவர்ஷத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு போருக்குப் பின்னரும் மும்மடங்கு ஆற்றல்கொண்டவர்களாக ஆகிறார்கள். பேரழிவுகள் இவர்களை பெருகச்செய்கின்றன. எண்ணிக் கொள்க, இப்பெரும்போருக்குப் பின் இவர்கள் மேலும் பொலிவடைவார்கள்! இந்நிலத்தை முற்றாக நிறைத்துப் பொங்கி வெளியேயும் செல்வார்கள்.”

“ஆனால் நாம் வஞ்சமெனும் தெய்வத்திற்கு குருதிபலி கொடுத்துக்கொண்டிருக்கிறோம்” என அலம்புஷர் சொன்னார். அவர் சொல்வது புரியாமல் எரிச்சலுடன் மேலே சொல்லவந்த அலாயுதனை கையமர்த்தித் தடுத்து “ஆம், நானும் அதன்பொருட்டே வந்தேன். இக்கணம் வரை என் தெய்வங்களின் மேல் ஐயமற்றவனாகவே இருந்தேன். ஆனால் இப்போது தனித்து நின்றிருக்கிறேன். துணையற்ற, உறவற்ற வெளியில் நிலைகொள்வதைவிட பெரிய வெறுமை தெய்வங்களற்ற வெளியில் நின்றிருப்பது” என்றார். உரக்க நகைத்து “நன்று, எவ்வெறுமையும் மெய்மையின் மறுவடிவே என்றுதான் சொல்லப்பட்டுள்ளது” என்றபின் தன் புரவி நோக்கி நடந்தார்.

நூல் இருபது – கார்கடல் – 60

ele1துரியோதனன் புரவியில் பாய்ந்து சென்று படைமுகப்பை அடைந்து கர்ணனின் அருகே புரவியிலிருந்து இறங்கி மூச்சிரைக்க அவன் தேரை அணுகினான். அவனுக்குப் பின்னால் வந்த துச்சாதனன் அவனை கூவி நிறுத்தவேண்டுமா என எண்ணிக்குழம்பி தவிப்புடன் உடன் இறங்கி கூடவே சென்றான். தொடையில் அறைந்து வெடிப்பொலி எழுப்பிய துரியோதனன் உடைந்த பெருங்குரலில் “இங்கு ஏன் வந்து நின்றிருக்கிறீர்கள், அங்கரே? தாங்கள் தங்கள் பாசறைக்கே மீளலாம். கதிரவன் மைந்தருக்கு இரவில் என்ன வேலை? இன்று பகல் முழுக்க எனக்காக போரிட்டிருக்கிறீர்கள். பாண்டவ குலத்து இளையோனின் அம்புகளை ஏற்று உங்கள் உடல் களைத்திருக்கிறது. செல்க, சென்று மருத்துவம் செய்துகொள்ளுங்கள்! மதுவருந்தி ஓய்வெடுங்கள். நாளை இங்கு எவரேனும் எஞ்சினால் வந்து சேர்ந்துகொள்ளுங்கள். எங்களுக்காக நீங்கள் உங்களை வருத்திக்கொள்ள வேண்டியதில்லை” என்றான்.

அச்சொற்கள் கர்ணனை துணுக்குறச் செய்தாலும் அவன் உடனே தன்னை திரட்டிக்கொண்டான். அவன் விழிகள் துரியோதனனை வந்து தொட்டதுமே அவனது உணர்வுகள் என்ன என்று புரிந்துகொண்டான். அவன் சற்று விழி சுருங்க உதடுகள் அசைந்து அரைச்சொல்லொன்றை எழுப்ப முயன்றன. ஆனால் அவனால் பேசமுடியவில்லை. அவனை மறித்த துரியோதனன் “நீங்கள் சொல்லவிருப்பதென்ன என்று எனக்கு புரிகிறது. எனக்காக வந்திருக்கிறீர்கள். அங்கநாட்டுப் படையனைத்தையும் திரட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்காக. நண்பன் என்று தோள்தழுவி என்னுடன் களத்தில் நின்றிருப்பதற்காக. இதோ அதை உலகோர் அனைவரும் பார்த்துவிட்டார்கள். சூதர்கள் அனைவரும் பாடத்தொடங்கிவிட்டார்கள். பொற்தேரில் நீங்கள் களத்திற்கு வந்து நின்றதே ஒரு காவியத்திற்கு போதுமானது. முதல் நாள் போரில் வெல்லற்கரியவராக இங்கேயே நின்று பெருகியதும் காவியத் தருணங்களே. உங்கள் புகழ் நீடுவாழ்வதற்கு அதுவே போதும். செல்க!” என்றான்.

உரத்த குரலில் பெரிய கைகளை விரித்தபடி “இனி என்ன? இதோ எஞ்சியிருக்கும் இளையோருடன் நான் இக்களத்தில் நின்று அக்கீழ்மகன்களின் அம்பினால் உயிர்துறக்கிறேன். அது பிறிதொரு காவியம். அதைப் பாடும் சூதர்களுக்கு எங்கும் அவை அளிக்கப்படாது. அவர்களுக்கு பொன்னும் வெள்ளியும் ஈவதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். ஆயினும் அவர்கள் பாடுவார்கள். புறநகர்களின் மதுவிடுதிகளில், காட்டாளரின் குடியிருப்புகளில் முழவொலித்து அவர்கள் என்னை பாடுவார்கள். ஒலிக்கும் இடத்தை இருளச்செய்யும் மங்கலமழிந்த காவியம். நம்பிய ஆசிரியர்களாலும் தோழர்களாலும் கைவிடப்பட்டு ஓர் அறிவிலா அரசன் களத்தில் மடிந்ததை சொல்வது. அக்காவியம் உங்கள் புகழ்க்காவியத்துடன் கலக்காமலிருக்கட்டும். கிளம்புக!” என்றான்.

“நீங்கள் நிலைகுலைந்திருக்கிறீர்க்ள், அரசே” என்றான் கர்ணன். “ஆம், நிலைகுலைந்திருக்கிறேன். ஏனெனில் சற்று முன்னர் என் அணுக்கனாகிய இளையோனை அனலில் இட்டுவிட்டு இங்கு வந்தேன். அவன் எரியத்தொடங்குகையில் உணர்ந்துகொண்டேன், உங்கள் உள்ளம் என்னவென்று. அவன் உள்ளம் எப்போது திரிந்தது தெரியும் அல்லவா? அவர்கள் வாரணவதத்தில் எரிந்ததாக செய்தி வந்த அன்று. அன்று முதல் அவன் எனக்கு தம்பியல்லாதானான். என்னை வெறுத்து அழித்து தன்னுள் எழுந்த எதையோ நிகர் செய்துகொள்ள துடித்தான். அது தன்னால் இயலாதென்று கண்ட பின்னர் தன்னையே அழித்துக்கொள்ளலானான். இன்று இதோ எலும்புக்குவையென சிதையிலிருந்து எரிகிறான். என் இளையோன். என் நெஞ்சில் வளர்ந்த மைந்தன். அவனில் எரிந்த அனலும் நானே… அவனிலிருந்து என்னை வெறுத்தவனும் நானே.”

“அங்கரே, அன்றுதான் உங்கள் விழிகளிலும் நான் ஒன்றை பார்த்தேன். அவன் விழிகளில் எழுந்த ஒன்று. அதுதான் உங்களை இத்தனை உளம் திரிபடையச் செய்திருக்கிறது. அவனும் நீங்களும் ஒன்றே. அவன் என்னை வெறுக்க எண்ணி இயலாதவனானான். நீங்கள் என்னை விரும்ப எண்ணி இயலாதான ஒருவர். இன்று இக்களத்தில் என்னை பழி தீர்க்கிறீர்கள். எதற்கு பழி தீர்க்கிறீர்கள் என்பதை நீங்களும் அறிவீர், நானும் அறிவேன். என் பிணம் மீது நின்று தருக்குங்கள். என் முகத்தில் உமிழ்ந்து உங்கள் அழல் களைந்துகொள்ளுங்கள். அதன் பின்னர் நீங்கள் உங்களை வெறுக்காமல் விண்ணுலகுக்கு ஏறிச்செல்ல முடியும்…” என்றான் துரியோதனன். “இத்தகைய பேச்சுகளுக்கான இடம் அல்ல இது, அரசே. நாம் சொற்களால் இங்கு ஒருவரை ஒருவர் புண்படுத்திக்கொண்டு அடையப்போவதென்ன? அவர்கள் இரவுத்தாக்குதலுக்கு வரக்கூடும் என்று அஸ்வத்தாமர் ஆணையிட்டதன் பேரில் இங்கு நான் வந்திருக்கிறேன். இன்றைய படைசூழ்கையை இன்னமும் நாம் வகுக்கவில்லை. எவ்வண்ணம் அவர்கள் எழப்போகிறார்கள் என்று அறிந்த பின்னரே அதை வகுக்க முடியும். அதற்கு குறைவான பொழுதே இருக்கிறது” என்றான் கர்ணன்.

“எத்தனை படைசூழ்கை அமைத்தாலும் அதில் நின்று போரிடுபவர் உளம் கொண்டாலொழிய அது வெற்றியென்று ஆவதில்லை” என்று துரியோதனன் சொன்னான். “இன்று பகல் முழுக்க நீங்கள் போரிட்டது வெற்றிக்காகவா? சொல்க!படைசூழ்கைக்கு உங்கள் பங்குதான் என்ன? அனைத்துப் போர்முனைகளிலும் ஏன் தோற்று பின்னடைந்தீர்கள்? பீமசேனனை வெல்ல இயலாத வில்லவரென்றால் பரசுராமரிடம் நீங்கள் பெற்றதுதான் என்ன? உங்கள் பேராற்றல் மிக்க அம்புகள் எங்கு போயின? அங்கரே, இன்று அந்திப்போருக்கு அவர்கள் ஏன் எழுகிறார்கள்? ஏனென்றால் பகல் போரில் உங்களை வென்று புறந்தள்ளியிருக்கிறார்கள். வில்லவனென்று ஒருபோதும் அறியப்படாத ஒருவனால் ஏழுமுறை அம்பால் அடித்து பின்னடையச் செய்யப்பட்டிருக்கிறீர்கள். இன்று அர்ஜுனன் வில்லுடன் எழுகையில் நீங்கள் அஞ்சிய முயலென சிதறி ஓடுவீர்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.”

கர்ணன் கொந்தளிப்புடன் கைதூக்க தன் கையசைவால் தடுத்து “அது உண்மை! அது உண்மை!” என துரியோதனன் கூச்சலிட்டான். “நீங்கள் அஞ்சுகிறீர்கள் என்று நான் எண்ணவில்லை. ஆம், அங்கர் அஞ்சமாட்டார் என்பதை பிற எவரையும்விட நான் அறிவேன். ஆனால் அங்கர் என்மேல் வஞ்சம் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். என்னை பழி தீர்க்கவே களத்தில் நின்றிருக்கிறார் என்பதை தெள்ளிதின் அறிவேன்.” கர்ணன் “அரசே, நம் நட்பு எல்லைகடந்தது என்றாலும் சொல்லெடுப்பதற்கு ஓர் எல்லையுண்டு” என்று சீற்றத்துடன் கூவினான். “ஆம், எல்லையுண்டு. அதனால்தான் இதுநாள்வரை இச்சொற்களை நான் சொன்னதில்லை. இன்று இறப்பின் கணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இனி எனக்கு எந்த அணுக்கமும் இல்லை. எவரிடமும் எனக்கு தயக்கமும் இல்லை. நீங்கள் என்னை கைவிட்டது வஞ்சத்தினால்தான். வஞ்சத்தினாலேயேதான். வேறில்லை. வேறெதுவும் இல்லை.”

“நான் அறிவிலி. நட்பும் அன்பும் நெறிகளும் நன்றியும் அனைத்தும் குருதிமுன் பொருளற்றவையாகுமென்பதை அறியாத அடுமடையன். குருதி மட்டுமே இக்களத்தை ஆள்கிறது. எந்நிலையிலும் என்னுடன் நின்று மடிந்து சிதையில் எரிபவர்கள் குருதியால் என்னுடன் கட்டப்பட்டவர்கள் மட்டும்தான். அச்சரடை அறுப்பதற்காக தன் வாழ்நாளெல்லாம் சொல்திரட்டி வஞ்சம் கூட்டியவன் அறுக்க இயலாத குருதியை களத்தில் சிந்தி தன் உடன்பிறந்தாருடன் கட்டித்தழுவி அங்கு எரிந்துகொண்டிருக்கிறான். அதையன்றி பிறிதெதையும் நான் நம்பியிருக்கலாகாது. அதையன்றி பிற அனைத்தையும் நம்பியதால்தான் யாருமின்றி இக்களத்தில் நின்றிருக்கிறேன். கைவிடப்பட்டவனாக, வஞ்சிக்கப்பட்டவனாக, இழிவடைந்தவனாக, தன்னந்தனியனாக நின்றிருக்கிறேன்.”

கர்ணன் உதடுகள் துடிக்க கைகளால் விஜயத்தை இறுகப் பற்றியபடி “அரசே, என் சொற்களை செவிகொள்ளுங்கள். இன்றேனும் நான் முழுதுளம் திறக்க ஒப்புக!” என்றான். “உளம் திறக்க உங்களால் இயலாது. வாழ்நாள் முழுக்க எப்போதேனும் எவரிடமேனும் உளம் திறந்திருக்கிறீர்களா? உங்கள் துணைவியரிடமோ மைந்தரிடமோ? உங்கள் உயிர்பகிர்வதாக நீங்கள் சொன்ன என்னிடமோ? நீங்கள் ஏன் களத்தில் பின்னடைகிறீர்கள் என்று அறியாமல் நான் இங்கு அரியணை அமர்ந்திருக்கவில்லை. உங்களை வந்து சந்தித்தது யார் என்றும் நீங்கள் அவர்களுக்கு அளித்த சொல்லுறுதி என்னவென்றும் நான் அறிவேன்” என்றான் துரியோதனன். “ஆம், நான் நன்கறிவேன். நீங்களே அதை என்னிடம் வந்து சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். சொல்லமாட்டீர்கள் என பின்னர் உணர்ந்தேன். சொல்லாதொழிய உங்களுக்கு உரிமை உண்டு என என்னை அமைதிப்படுத்திக்கொண்டேன்.”

கர்ணன் நடுங்கத்தொடங்கினான். “முதலில் அதை ஒற்றர்கள் சொன்னபோது அவ்வாறு சொல்லளிக்கும் உரிமை உங்களுக்கு உண்டென்றும் அதை தடுக்கலாகாதென்றும்தான் என் ஆழம் சொன்னது. ஏனெனில் அளித்துப் பழகிய கைகள் உங்களுடையவை. அளிகொண்ட நெஞ்சத்தவர் நீங்கள். வாழ்நாள் முழுக்க நீங்கள் உளம் நிறைத்து வழிபட்ட ஒருவர் வந்து கேட்கும்போது இறுதித்துளிவரை அளிக்காமலிருக்க உங்களால் இயலாது. இதோ நின்றிருக்கிறான் என் இளையோன், உடனே திரும்பி இவனிடம் நான் சொன்னேன், எங்கு இறுதியாக வென்று நிமிர வேண்டுமோ அங்கு வென்றுவிட்டார் அங்கர் என்று. உடன் வென்று எழுந்தவன் நண்பனாகிய நானே என்று. ஆனால்…” என்றபின் குரல் மீண்டும் உடைந்து தழைய, விழிநீர் கோக்க துரியோதனன் சொன்னான் “என் உடன்பிறந்தார் ஒவ்வொருவராக களம்படுகையில் அவர்களுக்கு வில்வேலியென நின்றிருப்பீர்கள் என்று நான் நம்பிய நீங்கள் தோற்றுப் பின்னடைகையில் என்னால் பிறிதெதையும் எண்ண இயலவில்லை, அங்கரே. என்னை பொறுத்தருள்க!”

விழிநீரைத் துடைத்தபின் துரியோதனன் தொடர்ந்தான் “நீங்கள் அளித்த சொல் எதுவாயினும் ஆகுக! ஆனால் களத்தில் பின்னடையாதீர்கள். அளிகூர்ந்து இச்சொல்லை கொள்க, களத்தில் விழவேண்டாம்! நின்று பொருதுக! வேண்டுமென்றால் உயிர் கொடுங்கள். கதிரவன்போல் கைகள்கொண்ட வள்ளலுக்கு அதுவும் உகந்ததே. அருள்கூர்ந்து இழிவடையாதீர்கள். உங்கள் இழிவால் ஏழுமுறை இழிவடைபவர்கள் நானும் என் தம்பியரும்” என்றபின் “திரும்புக!” என்று அருகே நின்ற துச்சாதனனிடம் சொல்லி புரவியை திருப்பினான். கர்ணன் பின்னால் அழைத்த குரலை அவன் கேட்கவில்லை. புரவி விரைய அவன் குழல்கற்றைகள் அவிழ்ந்து பறந்தன. அவன் உடல் தளர்ந்து நிலையழிய புரவியின் கழுத்தை பற்றிக்கொண்டான்.

விரைவுத்தேரில் அவனை நோக்கி வந்த அஸ்வத்தாமன் வளைந்து நிலைத்து உடன்வந்தபடி “அனைத்தும் ஒருங்கிவிட்டன, அரசே. அங்கருக்கும் தந்தைக்கும் எனக்கும் மட்டும்தான் இருளில் ஒலியால் போர்செய்யும் சப்தஸ்புடம் எனும் கலை தெரியும். ஆகவே எங்களுடன் அசுரர்களின் நிரை தேவையில்லை. பிற அனைத்துப் படைப்பிரிவுகளுடனும் அசுரர்கள் பிரிந்து இணைந்துகொள்ளும்படி அமைத்துவிட்டேன். அசுரர்களின் முழவோசை கேட்டும் ஒளியாணையைக் கண்டும் ஷத்ரியர்கள் போரிடவேண்டும். நிலவு கீழ்த்திசையிலுள்ளது. அது மேலெழுகையில் பாண்டவர்கள் தாக்குவார்கள் என்று எண்ணுகிறேன்” என்றான். “உங்கள் தந்தை இப்போரை ஏற்கிறாரா?” என்று துரியோதனன் கேட்டான். “ஆம், அவரிடம் பேசிவிட்டேன்” என்றான் அஸ்வத்தாமன்.

“நன்கு தெளிவுறுக! களமெழுந்தபின் அவர் நெறிபேசக்கூடும். எவரைக் கொல்வதென்றும் எவரைப் பேணுவதென்றும் அங்கு நின்று முடிவுகள் எடுக்கக்கூடும்” என்று துரியோதனன் சொன்னான். அதிலிருந்த சினக்குறிப்பை புரிந்துகொண்டு அஸ்வத்தாமன் சீற்றம்கொண்டு “தாங்கள் பேசுவது எனக்கு புரிகிறது. ஆனால் இப்போரை இங்கு முன்நின்று நடத்திக்கொண்டிருப்பவர் தந்தை. அதை மறக்கவேண்டாம்” என்றான். “ஆம், மறக்கவில்லை. அவர் ஒவ்வொருநாளும் இங்கு புகழ்பெற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய எதிரியை பலமுறை வென்றுவிட்டார். அவனுக்கு உயிர்க்கொடை அளித்து மேலும் பெருகிவிட்டார். பிறர் கொல்லப்பட்டால் அவருக்கென்ன?” என்றான் துரியோதனன். “நான் அவருடன் பேசியாகவேண்டும். உடனே பேசியாகவேண்டும்.”

அஸ்வத்தாமன் குரல் மாறுபட்டு “வேண்டாம், பொறுங்கள்!” என்றான். துரியோதனன் புரவியை முடுக்கி படைகளினூடாக பாய்ந்து சென்று துரோணரை அணுகினான். அஸ்வத்தாமனும் துச்சாதனனும் அவனுக்குப் பின்னால் வந்தனர். சுபாகு மேலும் பின்னிலிருந்து விசைகூட்டி அருகே வந்து “அங்கரிடம் பேசுகையிலேயே உங்கள் நிலையை முற்றாக இழந்துவிட்டீர்கள், மூத்தவரே. அரசர் பேசும் சொற்களல்ல அவை” என்றான். “ஆம், இவை கீழ்மகன் பேசுபவை, கல்லாக் களிமகனோ காட்டு அசுரனோ பேசுபவை. அரசனாக நின்று சலித்துவிட்டேன். என் ஆழத்தில் நான் எவனோ அவன் எழட்டும். சில சொற்களை அவரிடம் சொல்லாமல் நான் செல்லலாகாது” என்றான் துரியோதனன். “அவை என் தம்பியருக்காக… அவற்றை அவர் செவிகொண்டே ஆகவேண்டும்.” அஸ்வத்தாமன் துயருடன் தளர்ந்து புரவிமேல் அமர்ந்தான்.

குதிமுள்ளை அழுத்தி புரவியை கனைத்துப் பாயச்செய்து துரோணரை அணுகிய துரியோதனன் உரத்த குரலில் “ஆசிரியரே, இன்று இரவுப்போரிலும் உங்கள் முன் எழப்போகிறவன் உங்கள் அன்புக்குரிய மாணவனே. உங்களால் அவனை எதிர்க்க இயலாது எனில் எதற்கு இந்தப் போர்க்கோலம்? செல்க, இப்போரை நாங்களே நடத்திக்கொள்கிறோம்!” என்றான். துரோணர் திடுக்கிட்டு “என்ன சொல்கிறாய்?” என்றார். துரியோதனன் “நான் சொல்ல விரும்பியது இதுவே. செல்க, இப்போரை நீங்கள் நடத்த வேண்டியதில்லை! நீங்கள் நடத்துவீர்கள் என்றால் ஒவ்வொரு கணமும் அர்ஜுனன் முன் நமது படைகள் ஆற்றல் இழந்து மடிவதையே நான் காணவேண்டியிருக்கும். செல்க, இப்போரை நாங்கள் நிகழ்த்துகிறோம்! நாங்கள் வென்றாலும் தோற்றாலும் அது எங்கள் இறுதிக்குருதி வரை போரிட்டதாகவே இருக்கும். எங்கள் மேல் அகல்வு கொண்டவரை நம்பி நெஞ்சுடைந்து களத்திலிறந்தால் வீண்பேயுருவாக விண்ணிலெழுவோம். செல்க!” என்று கூவினான்.

“நீ நிலைமறந்து பேசுகிறாய்!” என்று சினத்தை அடக்கியபடி துரோணர் சொன்னார். “நிலை என ஒன்று இப்போது எனக்கில்லை. இதோ என் இளையோனின் சிதையின் அருகிலிருந்து இங்கு வருகிறேன். என் தங்கைகொழுநன் இன்று களம்பட்டான். என் நெஞ்சுக்கினிய பூரிசிரவஸ் கொல்லப்பட்டான். இன்று களத்தில் இப்புவியில் இனியோரென நான் கருதிய அனைவருமே மறைந்துவிட்டார்களென்று உணர்கிறேன். அவர்களுக்கு அங்கரையும் உங்களையும்தான் வேலியென்று அமைத்திருந்தேன். வேலி நெகிழ்ந்து எதிரிக்கு இடம்கொடுக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை.” துரோணர் சீற்றத்துடன் “நீ அறிவாய், முழு விசையுடன், சினத்துடன் நான் இன்று போரிட்டிருக்கிறேன்” என்றார். “வஞ்சம்கொண்டு எழுந்து அனைத்து நெறிகளையும் மீறிச்சென்று பொருதியிருக்கிறேன்.”

“இல்லை. நீங்கள் கொள்ளும் சீற்றம் எதிரியிடமல்ல, உங்களிடம்தான். உங்கள்மேல்தான். ஏனென்றால் உங்களால் உங்கள் முதல் மாணவனை வெல்ல இயலவில்லை. அவனை நீங்கள் வென்றால் நீங்கள் அளித்த கல்வியை வெல்கிறீர்கள். நீங்கள் ஆசிரியரென தோற்கிறீர்கள். இங்கு களத்தில் உங்களுக்கு இருக்கும் உளப்போராட்டம் வீரனென வெல்வதா ஆசிரியனென வெல்வதா என்பதே. ஆசிரியரென்றே உங்கள் உள்ளம் உங்களை தேர்வு செய்கிறது. ஒருபோதும் உங்கள் முதல் மாணவனை நீங்கள் கொல்லப்போவதில்லை. முதல் மாணவனை என்ன, இளைய பாஞ்சாலனையே உங்களால் கொல்ல இயலவில்லை. நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், எத்தனை முறை திருஷ்டத்யும்னன் உங்கள் முன் வந்தான்? ஒருமுறையாவது அவனைக் கொல்லும் அம்பை அவன் முன் எடுத்தீர்களா? இல்லை, பொய்யுரைக்க வேண்டாம். உங்கள் விழிகளில் நான் காண்கிறேன், உங்களால் அவனை கொல்ல இயலாது. நீங்கள் கொல்லப்போவதில்லை.”

குரல் தழைய “அவனை நான் கொல்கிறேன்” என்றார் துரோணர். “கொல்லமாட்டீர்கள். எந்நிலையிலும் அவனுக்கெதிராக உங்கள் பேரம்புகள் எழா. இதை அறியாத எவரும் இந்தப் படையில் இல்லை” என்று துரியோதனன் உரக்கக் கூவினான். “இன்று உங்கள் கையில் வில்லிருந்தும் ஏன் ஜயத்ரதன் களத்தில் விழுந்தான்? ஏன் பூரிசிரவஸ் கையறுந்து இறந்தான்? என் இளையோர் ஏன் மண்படிந்து கிடந்தனர்? உங்கள் உளம் எங்களுக்காக கனியவில்லை. உங்கள் உள்ளாழத்தில் நீங்கள் எங்களுடன் இல்லை. இன்றல்ல, மாணவனாக உங்கள் குருநிலையில் பயில வந்தபோதே நான் உணர்ந்த ஒன்று, நான் உங்கள் உள்ளத்தில் இல்லை என்பது. இந்தப் போரில் கௌரவர் வெல்வதனால் நீங்கள் அடையப்போவது எதுவும் இல்லை. போருக்குப் பின் மைந்தனுக்காக உத்தரபாஞ்சாலத்தை பேசி வாங்குவதற்கு உங்களால் இயலும். கைம்மாறு செய்ய உங்கள் மாணவர்கள் உங்களுடன் நிற்பார்கள்” என்றான்.

துரோணர் கடும்சினத்துடன் வில்லை எறிந்து “அறிவிலி! இச்சொற்களுக்காக உன் நாவை அறுப்பேன்!” என்றார். “ஆம், இது ஒன்றைத்தான் எதிர்பார்த்தேன். இத்தனை வஞ்சக் கரவுடன் என் தரப்பில் நின்று போரிடுவதைவிட வில்லெடுத்து என்னை எதிர்த்து வாருங்கள். என் நெஞ்சக்குலை பிழுதெடுத்து வீசுங்கள். அதுவே உங்கள் மாணவனுக்கும் உகந்ததாக இருக்கும்” என்று சொன்னபடி நெஞ்சு நிமிர்த்தி துரோணருக்கு எதிராக சென்றான் துரியோதனன். “மூத்தவரே!” என்று தோள்பற்றிய துச்சாதனனை தட்டிவிட்டுவிட்டு “நீங்கள் என்னை கொல்லலாம். ஆனால் என் உள்ளத்தில் எழுந்த இந்தச் சொற்கள் உங்கள் ஆத்மாவை அறைந்தபடிதான் இருக்கும். உங்கள் ஆற்றலின்மையால் அல்ல, உங்கள் அன்பின்மையால் கொல்லப்பட்டவர்கள் என் இளையோரும் ஜயத்ரதனும் பூரிசிரவஸும். உங்கள் மாணவர்கள் வென்றெழ வேண்டுமென்று உங்களால் கைவிடப்பட்டவர்கள் அவர்கள்” என்றான்.

“இதோ எதுவும் நடவாதவர்போல் நீள்தாடியை நீவியபடி தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். இந்த நடிப்பு எதற்காக? இது போர்! இங்கு ஒருகணத்தில் அனைத்தும் திரை கலைந்துவிடுகின்றன. உங்கள் தவமும் சீற்றமும் இருவகை நடிப்பென்று காட்டிக்கொடுத்துவிடுகின்றது உங்கள் தயக்கம்” என்றான் துரியோதனன். “என்னை இழிவு செய்யும்பொருட்டு இங்கு வந்திருக்கிறாயென்று எண்ணுகின்றேன். அவ்விழிவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. செல்க!” என்றார் துரோணர். “எவருக்கும் இழிவு செய்ய நான் வரவில்லை. இங்கு நான் வணங்கும் அனைவரும் என்னை இழிவு செய்வது எப்படி என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்று துரியோதனன் கூவினான். “சொல்லுங்கள்! உங்களை மீறி இன்றைய அழிவுகள் நிகழ்ந்ததென்றால் நீங்கள் கற்ற விற்கல்வியின் பொருள் என்ன? உளம்தொட்டுச் சொல்லுங்கள், இங்கே அஸ்வத்தாமன் அம்புபட்டு வீழ்ந்திருந்தால் உங்கள் நிலை இப்படியா இருந்திருக்கும்?”

அவன் அவரை நோக்கிச் சென்று நெஞ்சை நிமிர்த்தி “என் விழிதொட்டுச் சொல்லுங்கள் ஆசிரியரே, அஸ்வத்தாமனைக் கொல்வதில்லை எனும் சொல்லை நீங்கள் இளைய பாண்டவனிடமிருந்து பெற்றீர்களா இல்லையா?” என்றான். “ஆம், பெற்றேன்” என்றார் துரோணர். சினத்துடன் முன்னெழுந்து வந்த அஸ்வத்தாமன் “தந்தையே, என்ன இது! நீங்கள் வாழ்நாள் முழுக்க என்னைத் தொடரும் பெரும் சிறுமையை என்மேல் ஏற்றிவிட்டீர்கள்” என்றான். “ஆம், நான் தந்தை. தந்தையன்றி பிறிதேதுமில்லை. நாடும் கலையும் நெறியும் தெய்வங்களும்கூட என் மைந்தனுக்குப் பின்னரே எனக்கு ஒரு பொருட்டு. இப்போருக்கு எழுவதற்கு முன்னரே அவனிடம் சொல்பெற்றேன், ஒருபோதும் அவன் என் மைந்தனை கொல்லலாகாதென்று. ஒருநாள் அவர்கள் இருவரும் களம்நின்று போரிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆகவே நான் அதை கோரிப்பெற்றேன்” என்றார் துரோணர்.

துரியோதனன் “அதற்கு மாறாக நீங்கள் அவனுக்கு அள்ளி அள்ளி அளித்துக்கொண்டிருக்கிறீர்கள் இக்களத்தில். எங்கள் உயிரை, உங்கள் இனியவர்களின் உயிரை, இந்தப் படைப்பிரிவின் அத்தனை பேரையும் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். எங்கள் அத்தனை பேரையும் அந்த அடியிலாத பெரும்பிளவில் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றான். துரோணர் “இல்லை, அதற்கு நிகராக நான் எதுவும் அவனுக்கு சொல்லளிக்கவில்லை” என்று கூவினார். “இந்தப் பெரும்பழியை நீ என் மேல் சுமத்தலாகாது. நான் தந்தையென்றே இக்களத்தில் நிற்கிறேன். என் மைந்தனை காத்துக்கொண்டே போரிடுகிறேன். ஆம், பிற எவரையும்விட என் மைந்தன் எனக்கு முதன்மையானவனே. ஆனால் ஒருகணமும் இப்போரில் நான் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. என் முழு ஆற்றலுடன் இக்களத்தில் நிற்கிறேன். நீயே அறிவாய் இந்த இரு நாட்களில் நான் இழைத்த அழிவு என்னவென்று.”

“நீங்கள் ஒரு பெருவீரனைக்கூட அவர்கள் தரப்பில் கொல்லவில்லை” என்று துரியோதனன் சொன்னான். “துருபதரையோ திருஷ்டத்யும்னனையோ பாண்டவர்களில் ஐவரில் ஒருவரையோ. ஏன் சாத்யகியையோ சிகண்டியையோகூட. ஆசிரியரே, பாண்டவ மைந்தரில் ஒருவர்கூட உங்கள் கைகளால் கொல்லப்படவில்லை. சாத்யகியிடம் தோற்று நீங்கள் பின்னடைந்த செய்தியை கேட்டதுமே எண்ணினேன், அது சாத்யகியின் வெற்றி அல்ல உங்கள் தோல்வி என்று. நீங்கள் தோற்றது உங்கள் உளவீழ்ச்சியின் முன்” என்றான். “சாத்யகியிடம் நான் தோற்கவில்லை” என்று துரோணர் சொன்னார். “அவனை அப்போதே நான் கொன்றிருக்க முடியும். ஆனால் அவன் விழிகளில் இருந்த நீர் என்னை தடுத்தது. அவன் தன் மைந்தருக்காக அழுதுகொண்டிருந்தான்.”

துரியோதனன் “எதுவானாலும் பின்னடைந்தீர்கள் என்பதே உண்மை. சாத்யகியிடம் துரோணர் தோற்றுவிட்டார் என்றால் அவர்கள் எதைத்தான் இனி அஞ்சவேண்டும்?” என்றான். அஸ்வத்தாமன் உரத்த குரலில் ஊடே புகுந்தான். “அரசே, தந்தை அளித்த அச்சொல்லைப் பற்றி எனக்குத் தெரியாது. அச்சொல்லால் நூறுமுறை சிறுமைகொண்டு கீழ்மகனென நின்றிருக்கிறேன். இது என் வஞ்சம், இப்போரில் இனி நான் நெறியென்றும் அளியென்றும் எதையும் எண்ணப்போவதில்லை. எப்பழி கொண்டாலும் தயங்கப்போவதில்லை” என்றான். “மைந்தா!” என்றபடி அவன் சொற்களை தடுத்தார் துரோணர். “வஞ்சினங்கள் உரைக்காதே. வஞ்சினங்களுக்கப்பால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது இப்போர்” என்றார். அஸ்வத்தாமன் தளர்ந்து “என் வஞ்சம் ஒருநாளும் அழியாது. என் மேல் என் தந்தை சுமத்திய கீழ்மையை இறவாதொழிந்து பிறவாது நிலைத்து இந்நிலத்தில் நின்று நீக்கிக்கொண்டிருப்பேன்” என்றபின் தலைகுனிந்து கண்களை அழுத்தி விழிநீரைத் துடைத்து தேரைத் திருப்பி விரைந்து சென்றான்.

துரோணர் “நான் உன்னிடம் என்னதான் சொல்வது? இந்தப் போரில் நான் என் இறுதி அம்புடன் போரிடுவேன். இங்கு திருஷ்டத்யும்னனையும் துருபதனையும் கொல்வேன். இக்களத்தில் ஓர் அம்பையும் மிச்சம் வைக்கமாட்டேன். இதற்கப்பால் ஒரு சொல்லை உனக்கு நான் அளிப்பதற்கில்லை” என்றார். துரியோதனன் உடல் தளர்ந்து “சொற்கள் எதையும் நம்பும் நிலையில் நானில்லை. அனைத்துச் சொற்களிலிருந்தும் உயிரை உறிஞ்சிக்கொள்கிறது இக்களம். வெற்றுச் சொற்கள், வெற்றுத் திட்டங்கள், வெற்றுக் கனவுகள். வீண், இக்களத்தில் நான் கொண்ட அனைத்தும் வீணாகிக் கிடக்கின்றன” என்றபின் புரவியைத் திருப்பி விரைந்து சென்றான். துச்சாதனனும் சுபாகுவும் அவனை தொடர்ந்தனர்.

தொலைவிலிருந்து அவனை நோக்கி வந்த கர்ணன் தேரைத் திருப்பி எதிரே நின்று “அரசே, உங்கள் சொற்கள் எந்த அனலிலிருந்து எழுந்தன என்று எனக்குத் தெரியும். நான் ஒன்றே சொல்வதற்கிருக்கிறது” என்று உரத்த குரலில் சொன்னான். “ஆம், நான் அளித்த சொற்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன். ஆகவேதான் களத்தில் தோற்றேன். இம்முறை முழுதூக்கத்துடன் எழுவேன். இன்று பாண்டவர்களை களத்தில் வெல்வேன். அர்ஜுனனை இன்று கொல்வேன். இன்றே என் நச்சம்பை கையிலெடுப்பேன். இது என் ஆணை!” என்றான்.

துரியோதனன் “நான் உங்களை மீறிய சொல்லெதையும் உங்களிடமிருந்து பெற விரும்பவில்லை” என்றான். “இல்லை. இது என் உளம் எழுந்து நான் அளிப்பது. நானே சினந்து எடுக்கும் வஞ்சினம். இன்றைய போரில் நான் என் முழு அம்புகளுடன் வெளிப்படுவேன். இன்று பாண்டவர் களத்தில் தாங்கள் ஒருநாளும் காணாத பேரழிவை காண்பார்கள்” என்றான். துரியோதனன் திரும்பி நேர்விழியால் நோக்கி “இன்று உங்கள் அரவம்பு எழுமா?” என்று கேட்டான். “ஆம், எழும். ஐயமே வேண்டாம், இன்று அரவம்பு எழும்” என்றபின் கர்ணன் திரும்பிச்சென்றான்.