மாதம்: ஜனவரி 2019

நூல் இருபது – கார்கடல் – 31

ele1பாண்டவர்களின் படைவிரிவை நோக்கியபடி காவல்மாடம் ஒன்றின் உச்சியில் இளைய யாதவர் நின்றிருந்தார். பிறைசூழ்கை மிக எளியது. அனைத்துப் படையினரும் இணையாக நின்றிருப்பது அது. அவ்வாறு நின்றிருக்கையில் பிறைவடிவம் இயல்பாகவே உருவாகி வரும். இரு விளிம்புகளும் எழுந்து வருகையில் பின்பக்கமாக வளையும் பிறை. திருஷ்டத்யும்னன் பிறைசூழ்கையை அமைத்தபோது துருபதர் நிறைவுகொள்ளவில்லை. “இது மிக எளியது…” என்றார்.

“எளிய சூழ்கைகளும் ஆற்றல்மிக்கவையே. கடினமான சூழ்கையை அமைக்கையில் நாம் அடையும் நிறைவை அவை அளிப்பதில்லை என்பதனால் அவை பயனற்றவை என்றாவதில்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இயற்கையில் உள்ள வடிவுகளிலிருந்து எழும் சூழ்கைகள் எளிய அமைப்பு கொண்டிருக்கும். ஆனால் அவற்றுக்குப் பின்னால் அவ்வடிவுகளை சமைக்கும் இயற்கைவிசைகளின் ஆற்றல் அமைந்துள்ளது.”

துருபதர் “மலர்ச்சூழ்கை எளியதே” என்றார். “அவ்வாறு தோன்றுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. எளிய வடிவங்களை ஒன்றன் மேல் ஒன்றென அமைத்து சிக்கலை உருவாக்கிக் கொள்கிறது இயற்கை. மலர்களின் தொடுப்பு எளிய வட்டமே. ஒன்றன்மேல் ஒன்றென மலரடுக்கு அமைந்து புல்லிவட்டத்தில் இணைகையில் அது சிக்கலானதாக ஆகிறது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சாத்யகி “நாம் மலர்சூழ்கையை அமைக்கலாமே?” என்று கேட்டான். “தாமரைச்சூழ்கை மிகமிக ஆற்றல்கொண்ட பொறி என்பார்கள்.”

திருஷ்டத்யும்னன் “ஏன்?” என்றான். “அவர்கள் நம் அரசரை கவர முயல்வார்கள் என்று அறிவோம். அவரையே தாமரைச்சூழ்கையின் நடுவே நிறுத்துவோம். அரசரைக் கவர அங்கர் வருவார்… நம் முதன்மை எதிரி அவரே. அனைவரும் சூழ்ந்து அவரை வீழ்த்துவோம்.” திருஷ்டத்யும்னன் “அவர் அவர்களில் முதன்மையானவர். ஆனால்…” என்றான். சாத்யகி “அவரே அவர்களின் முதன்மை ஆற்றல். நேற்றைய போரில் நம்மை முழுமையாக தோற்கடித்தவர். இன்று இளைய பாண்டவர் படைக்கு எழவியலா நிலையில் இருக்கிறார். நாம் உளம்சோர்ந்திருக்கிறோம். இன்று பிற அனைவரும் சேர்ந்து அங்கரை வீழ்த்தினோம் என்றால் நாம் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்வோம். நாளை இளைய பாண்டவர் எழுந்தால் மூச்சை ஊதியே கௌரவப் படையை சரித்துவிடுவார்” என்றான்.

பீமன் “அது தேவையில்லை” என்றான். “ஒருவனை அனைவரும் சூழ்ந்து தாக்குவதென்பது நம் அனைவருக்கும் இழிவு.” சாத்யகி “அவர் ஒருவரே நம் அனைவரையும் தாக்கி அழிப்பதைவிட அது குறைவான இழிவே” என்றான். “வெல்லமுடியாவிடில் சாவது மேல். சூழ்ந்து தாக்குவதை ஒழிக! அவ்வாறு வென்று என் தமையன் அரியணை அமரவேண்டியதில்லை” என்றான் பீமன். சாத்யகி “நாம் நேற்று சிதறடிக்கப்பட்டோம். இன்று என்ன நிகழுமென்று தெரியவில்லை. நம் முதன்மைவீரர் அம்புபட்டு கிடக்கிறார்” என்றான். பீமன் “நான் களத்தில் எந்த இரக்கத்தையும் காட்டப்போவதில்லை. ஆனால் ஒருவனை சூழ்ந்துகொண்டு அனைவரும் தாக்கினோம் என்னும் இழிவை எனக்காக சூடிக்கொள்ள மாட்டேன்” என்றான்.

யுதிஷ்டிரர் “அவன் சொல்வதும் மெய்யே. அத்தகைய சூழ்கை நமக்குத் தேவையில்லை. பிறைசூழ்கையே சிறப்பாக உள்ளது” என்றார். திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் தன் எண்ணத்தை சொல்லட்டும்” என்றான். “எல்லா சூழ்கைகளும் நன்றே” என்றபின் இளைய யாதவர் எழுந்துகொண்டு “நான் செல்லவேண்டியிருக்கிறது” என்று சால்வையை சுற்றிக்கொண்டார். “பிறைசூழ்கையே போதும்” என்றார் யுதிஷ்டிரர். அவையில் இருந்து ஏற்பொலிகள் எழுந்தன. பீமன் “நாம் உளம்சோர வேண்டியதில்லை. நமக்கு அவன் யார் என இப்போது தெரிந்திருக்கிறது. இன்று நான் அவனை நேருக்குநேர் எதிர்கொள்வேன். எண்ணிக்கொள்க, அவர்கள் இன்று பெருந்தோல்வியுடனேயே திரும்பிச்செல்வார்கள்!” என்றான்.

இளைய யாதவர் குறுகிய மூங்கில் கணுப்படிகளினூடாக வண்டுபோல் தொற்றி கீழிறங்கி வந்தார். அவரது மேலாடை காற்றில் பறந்தமையால் விண்ணிலிருந்து இறகு விரித்துப் பறந்து இறங்கி மண்ணில் நிற்பவர் போலிருந்தார். அங்கு காத்து நின்றிருந்த ஏவலன் அவரை அணுகி “அரசி தன் மாளிகை மீண்டுவிட்டார்” என்றான். “சொல்” என்று இளைய யாதவர் சொல்ல ஏவலன் அரசியின் சொற்களை மெல்ல முணுமுணுத்தபடி அவருடன் வந்தான். அவர் நின்று அவன் செல்லலாம் என்று கைகாட்டினார்.

இருளில் புரவியில் ஏறிக்கொண்டு தனியாக சீர்நடையில் சென்று அர்ஜுனனின் மருத்துவநிலையை அடைந்தார். வாயிலில் அரைத்துயிலில் இருந்த மருத்துவ ஏவலர்கள் காலடியோசை கேட்டு விழித்து திரும்பி அவரைப் பார்த்து பதறி எழுந்து நின்று தலைவணங்கினர். இளைய யாதவர் அணுகி வந்து தாழ்ந்த குரலில் “எப்படியிருக்கிறார்?” என்றார். “இன்னும் அதே நிலையில்தான்” என்று இளமருத்துவன் சொன்னான். முதிய மருத்துவர் உள்ளிருந்து பேச்சொலி கேட்டு எழுந்து வெளிவந்தார். தலைவணங்கி “இளைய யாதவருக்கு வணக்கம். நான் கலிககுலத்தோனாகிய கர்வடன், இங்கே தலைமை மருத்துவன். அரசே, இளைய பாண்டவரின் நான்கு மலர்களும் இன்னமும் இதழ் குவிந்தே உள்ளன” என்றார். இளைய யாதவர் தலையசைத்து அவரை வெளியே செல்லும்படி கைகாட்டினார். மருத்துவர்கள் வெளிவர அவர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

அர்ஜுனனின் அருகணைந்து அவர் தலையருகே அமர்ந்தார். அர்ஜுனனின் முகம் வெந்ததுபோல் காய்ச்சல் கொண்டிருந்தது. உதடுகள் உலர்ந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்தன. மூடிய இமைகள் வீங்கி ஆற்றுருளைக்கல்போல் தெரிந்தன. தாடிமயிர்கள் நனைந்து திரிகளாக படிந்திருக்க வாய் சற்றே திறந்து மெல்லிய மூச்சு ஓட அதுவரை ஒருவிளிப்பாடு அகலே காத்து நின்றிருந்த முதுமை அவ்வுடலில் வந்து முழுமையாக படிந்திருப்பதுபோல் தோன்றியது. இளைய யாதவர் அர்ஜுனனின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு குனிந்து அவன் காதில் “பார்த்தா!” என்று அழைத்தார். அர்ஜுனன் அதை கேட்கவில்லை. “பார்த்தா!” என்று அவர் மீண்டும் ஒருமுறை அழைத்தபோது அவனுக்குள்ளிருந்து மெல்லிய சுடரொன்று நடுங்கியது. “பார்த்தா!” என்று அவர் மூன்றாம் முறை அழைத்தபோது இமைகள் நலுங்கின. அவன் “ம்ம்” என்று மறுவிளி கேட்டான்.

காலஇடங்களுக்கு அப்பால் ஓரிடத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அது காளிந்தியின் கரை. கரிய பாறை மேல் மலரமர்வில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார். கீழே சிறுபாறை மீது கைகளை மார்பின்மீது கட்டியபடி அவரை நோக்கி அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்களைச் சூழ்ந்து நீரோசையும் காற்றோசையும் நிறைந்திருந்தன. “இது பிறிதொரு காலம், பாண்டவனே” என்று இளைய யாதவர் சொன்னார். “அன்று சென்று நின்று நான் இதை உன்னிடம் கேட்கிறேன். நீ எழ விழைகிறாயா? இங்கு இன்னும் எஞ்சியுள்ளதா?” என்றார். “ஆம். எனக்கு ஆணையிடப்பட்டதை நான் இன்னும் முடிக்கவில்லை” என்றான் அர்ஜுனன். “அனைத்தையும் செய்து முடித்தவன் ஆவநாழி ஒழிந்தவனும்கூட” என்று இளைய யாதவர் சொன்னார். “ஒழிந்து இங்கு அனைத்திலிருந்தும் பறந்தெழவே விழைகிறேன். இப்பிறவியில் இங்கு எச்சமென எதுவும் இருக்கலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

“நோக்குக, இவ்வினிய நீர்! இவ்விளங்காலை. இக்குளிர்காற்று. இங்கு அனைத்தும் எத்தனை இனிமை கொண்டுள்ளன! அமுதென்பதென்ன, புலன்கள் தொடுகையில் ஐம்பருக்களும் கொள்ளும் கனிவுதான் அது. மானுடன் உணரும் இன்பத்தையே விண்ணில் அமுதென வாற்றி வைத்திருக்கிறார்கள். பாற்கடல் என்பது என்ன? இவ்வனைத்திலும் பிரம்மத்தை உணரும் ஒருவனின் உள்ளப்பெருக்கு அல்லவா அது? அதை கடைந்தெடுக்கும் சுவை தெய்வங்களுக்கு உகந்தது. தேவர்களை அழிவற்றவர்களாக்குவது. பாண்டவனே அறிக, அந்த அமுது இங்கு அனைத்திலும் உள்ளது! மரத்தில் வேர்முதல் இலைவரை தேன் மறைந்திருப்பதைப்போல” யாதவரின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் “ஆம்” என்றான்.

“சிறிய வாழ்வில் புழங்குந்தோறும் இன்பமும் துன்பமும் இனிமையும் கசப்புமென இவ்வுலகு நிலைமாறி அலைகொள்கிறது. இங்கு செயல்யோகியென ஒருவன் மாறுகையில் துன்பங்கள் மீதும் கசப்பின் மீதும் ஆளுகை கொள்கிறான். இன்பத்தை தனித்தறியத் தொடங்குகிறான். ஞானத்தால் தவத்தால் அவன் வீடுபேறடையுந்தோறும் இனிமை மட்டுமே எஞ்சுகிறது. அமுதொன்றே எஞ்சும் ஒரு நிலையும் உண்டு. அதில் அமர்ந்தோர் யோகிகள். அவ்வமுதனைத்தையும் உதறி இங்கிருந்து செல்பவனே வீடுபேறடைபவன்” என்றார் இளைய யாதவர். “உன் நெற்றியின் ஊற்றுக்கண் திறந்து இனிமைப் பெருக்கு எழுந்து உடலின் ஒவ்வொரு கணுவும் உவகை கொள்ளும் தருணம் ஒன்றிலிருந்து முற்றிலும் உதறி மேலெழ இயலுமா உன்னால்?”

“ஆம், இக்கணம் அதை என்னால் உறுதியாக சொல்ல இயலும். இங்கிருக்கும் பேரின்பங்கள் அனைத்தும் திரண்டு ஒரு துளியென ஆகி என் நாவிற்கு எட்டும் தொலைவில் முழுத்திருந்தாலும் ஒதுக்கிவிட்டு முன்செல்லவே விழைவேன்.” இளைய யாதவர் நகைத்து “எனில் சொல்க, மீண்டெழ விழைகிறாயா? இப்போது இறப்பின் விளிம்பிலிருக்கிறாய். உன் ஒரு சொல்லில் வாழ்வையோ இறப்பையோ நீ தெரிவுசெய்ய இயலும், சொல்க!” என்றார். தயக்கமில்லாமல் “மீண்டெழவே விரும்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “இனிய மலர். தெய்வங்கள் அமர்ந்தருளும் நறுமணப்பீடம் கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் இதழ்களால் சூழப்பட்டது. உள்ளே செல்லும் வழி விரியத் திறந்திருக்கிறது. அதனுள் உள்ளன அனைத்து அழகுகளும் இனிமைகளும். காற்றில் எழுந்து பரவி அனைத்து சித்தங்களுக்குள்ளும் நுழைந்து அருகே இழுக்கின்றது அதன் நறுமணம்.”

“உள்ளே நுழைவது எளிது. அங்கு நுழைந்துள்ளது இனிய மது. பார்த்தா, உள்நுழைவோரில் பல்லாயிரத்தில், பல லட்சங்களில், பல கோடிகளில் ஒருவரே வெளியேற இயல்கிறது. மீண்டும் உள்நுழைய விழைகிறாயா?” என்றார் இளைய யாதவர். “ஆம், இன்னும் சில அம்புகள் எஞ்சியுள்ளன. யாதவனே, உனது அருளிருந்தால் நான் வெளியேறுவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க! நான் வெளியேறும் வழி எது?” இளைய யாதவர் அவனருகே குனிந்து “அங்கு உனது ஒரு துளியை நீ எஞ்சவிட்டுச் செல்லவேண்டும். பல்லி தன் வாலை அறுத்து உதிர்த்துவிட்டுத் தப்புவதுபோல. அதுவே ஒரே வழி” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “உனது மிகச் சிறந்த பகுதியை. நீ மிக விரும்பும் ஒரு பகுதியை” என்றார் இளைய யாதவர். “அது உனக்கு பிறிதொரு இறப்பென்றே ஆகும். அப்பேரிழப்பால் நீ அதை கடந்து செல்ல இயலும்.”

அர்ஜுனன் “ஆம், நான் அதற்கு ஒருக்கமே” என்றான். “எனில் எழுக!” என்று சொல்லி இளைய யாதவர் அவன் நெற்றிப்பொட்டை தன் கைவிரலால் தொட்டார். அவன் வலக்கால் இழுத்துக்கொண்டது. முகம் கோணலாகி உதடு வளைந்து எச்சில் வழியத்தொடங்கியது. உடலெங்கும் சென்ற வலிப்பு மேலும் மிகவே அவனிடமிருந்து முனகலோசை ஒன்று எழுந்தது. இளைய யாதவர் எழுந்து தன் ஆடையை சீர் செய்து கதவைத் திறந்து வெளிவந்தார். முதிய மருத்துவர் எழுந்து வணங்கி நிற்க “விழித்துக்கொண்டார். புலரி எழுகையில் எழுந்து படைமுகப்பிற்கும் வருவார். உரிய மருந்தும் உணவும் கொடுங்கள்” என்றபின் நடந்தார்.

ele1துரோணர் முந்தைய நாளிரவு முற்றிலும் துயில்நீத்திருந்தார். பருந்துச்சூழ்கையின் இடச்சிறகில் அதன் இறகுமுனைகளில் ஒன்றாக தன் தேர்மேல் நின்றிருக்கையில் அவ்வப்போது வெண்முகில்போல அவருடைய தன்னுணர்வின் மேல் துயில் வந்து மூடி மெல்ல கடந்துசென்றது. தன்னுணர்வை தக்கவைத்துக்கொள்ள அவர் முயன்றபோது குளிரலைபோல வந்து அறைந்து தூக்கி கொண்டுசென்று பிறதெங்கோ நிறுத்தி திகைப்புற்று மீளச் செய்தது.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வாழ்வில் திகழ்ந்து மீள்வதை அவரே விழித்தெழுகையில் வியப்புடன் நோக்கினார். நூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த மலைச்சிற்றூரான பிரமதத்திற்கு அவர் கிருபியுடன் வந்திறங்கினார். மலையில் வெட்டி எடுக்கப்படும் கல்லுப்பை ஏற்றிக்கொண்டு வந்து கிராமங்கள் தோறும் விற்கும் வணிகனான கலிகன். தேன்மெழுகு பூசிய ஈச்சம்பாய்களால் பொதியப்பட்ட உப்புக்குவை மீது அமர்ந்து கங்கையின் பெருக்கை நோக்கியபடி ஒழுகி வந்தபோது கரையோரமாக விலகிச்சென்ற ஒவ்வொரு ஊரிலும் அவர் சற்றுநேரம் வாழ்ந்து வாழ்ந்து மீண்டார். “என்ன எண்ணம்?” என்றாள் கிருபி. துரோணர் “மானுடனுக்கு ஒரு வாழ்க்கை மட்டும்தானே அளிக்கப்பட்டுள்ளது?” என்றார். கிருபி நகைத்துக்கொண்டு அவர் கைகளைப்பற்றி “ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது” என்றாள்.

கிருபியை அவர் அவளுடைய சிற்றூரின் குடிலில் சந்தித்தார். அவள் முதுமையால் இறுகிவிட்டிருந்தாள். அவர் உத்தரபாஞ்சாலத்தில் அவளுடைய ஊரைத் தேடி வந்திருந்தார். தன் குடில்வாயிலில் விறகுகளை பிளந்துகொண்டிருந்த அவளைக் கண்டதும் அவர் நடைதளர்ந்தார். முறத்தில் காய்கள் உலரவைக்கப்பட்டிருந்தன. அப்பால் மூங்கில்பாயில் நெல் காய்ந்தது. காகங்களை ஓட்டும்பொருட்டு கரிய மரவுரி ஒன்றை கழுகுவடிவில் செய்து நிறுத்தியிருந்தாள். அவர் அணுகுவதன் நிழலசைவைக் கண்டு நிமிர்ந்தாள். அவரைக் கண்டதும் முகத்தில் எந்த உணர்வுமாற்றமும் உருவாகவில்லை. அவர் முற்றத்தில் ஏறியதும் “வருக!” என்றாள்.

அவர் சாணிமெழுகிய திண்ணையில் களைப்புடன் அமர்ந்தார். அவள் உள்ளே சென்று கொப்பரையில் இன்நீருடன் வந்தாள். அவர் அதை வாங்கி அருந்தியபோது அந்தச் சுவை எத்தனை பழகியதாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டார். அவள் அவரைவிட்டுப் பிரிந்து நெடுநாட்களாகிவிட்டிருந்தது. அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலத்தின் அரசனானதுமே அவள் அவனுடன் சென்றாள். அங்கிருந்து சில ஆண்டுகளிலேயே அச்சிற்றூருக்குச் சென்றுவிட்டாள். அஸ்வத்தாமன் அவளை அரண்மனையில் தங்கவைக்க விழைந்தான். “நான் அரசி அல்ல, அந்தணப்பெண். அரசியாவது என்னால் இயலாது. ஆவேன் எனில் அது வீழ்ச்சி” என கிருபி சொன்னாள்.

அஸ்வத்தாமன் அவளுக்கு அளித்த எதையுமே அவள் பெற்றுக்கொள்ளவில்லை. தன்னந்தனியாக கிளம்பி அவன் அமைத்துக்கொடுத்த அக்குடிலுக்கு சென்றாள். அங்கே தனியாகவே தங்கினாள். அச்சிற்றூரின் தலைவர் அவளுக்குத் தேவையானவற்றை கொண்டுவந்து அளித்தார். அவள் அங்கே சிற்றூரின் சிறுமியருக்கு நெறிநூல்களை கற்பித்தும் பெண்களுக்குரிய வேள்விகளை இயற்றியும் வாழ்ந்தாள். அஸ்வத்தாமன் அவ்வப்போது வந்து அவளைப் பார்த்து மீண்டான். துரோணர் அவளை பார்க்கச்செல்வது குறைந்தது. அவர் வருவதை அவள் விரும்பவில்லை என்று தோன்றும். அவள் கண்களில் கனிவு இருக்காது. வாழ்க்கையை கடந்துசென்றுவிட்ட முதுமகள்களுக்கு விழிகளில் ஒரு கடுமை தோன்றுவதுண்டு. புருவங்களில் இருந்த நரைமயிர்கள் விழிகள்மேல் விழுந்துகிடக்க அவள் அவர் அறியாத நோக்கொன்றை கொண்டிருந்தாள்.

“நான் வரும்போது எண்ணிக்கொண்டேன், முன்பு நீ சொன்னதை. ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது என்று” என்றார். கிருபி “வாழ்க்கையை ஒரு துளியைக் கொண்டே நிறைத்துவிடமுடியும்” என்றாள். “ஆம், இங்கு வரும்போதெல்லாம் நான் அதையே உணர்கிறேன். இங்கே வந்து தங்கவேண்டும் நான்” என்றார் துரோணர். “இங்கே வில்லுடன் தங்க இயலாது” என்று கிருபி சொன்னாள். “ஆம், அதை உதறிவிட்டு வரவேண்டும்” என்று துரோணர் சொன்னார். “வில் உங்கள் கைப்பழக்கம்” என்று கிருபி சொன்னாள். அவர் திடுக்கிட்டு நோக்கினார். தன்முன் விரிந்திருந்த பாண்டவப் படைகளை உணர்ந்ததும் சற்றே நிலைநழுவியிருந்த வில்லை இறுகப்பற்றிக்கொண்டார்.

இத்தருணத்தில் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்கிறோமா? ஒரு வஞ்சத்தின் பொருட்டு இவையனைத்தையும் இழந்திருக்கிறோம். வஞ்சம் கொள்பவரிடம் தெய்வங்கள் கேட்கின்றன, எத்தனை? எவ்வளவு? எதுவரை? ஒவ்வொன்றும், அனைத்தும், இறுதிவரை என்று உரைக்கில் மட்டுமே வஞ்சத்தில் வெற்றியை அளிக்கின்றன. வஞ்சநிறைவின் இனிமையை அளிக்கின்றன. வஞ்சநிறைவு என்பது மூக்குற்றிப்பூவின் தேன். துளியினும் துளி. சிறுதேனீயால் மட்டுமே அதை அறிந்து தொட்டு எடுக்கமுடியும். வஞ்சம் கொண்டவனுக்கு வஞ்சமன்றி பிறிதெதுவும் எஞ்சுவதில்லை. வஞ்சத்திற்கு பின் வஞ்சமும் எஞ்சுவதில்லை. எத்தனை நூல்கள் மீளமீளச் சொல்கின்றன இவற்றை. எவரேனும் உளம்கொள்கிறார்களா? இயலாமையால் அன்றி எதன்பொருட்டேனும் வஞ்சத்தைக் கைவிட்ட மானுடர் உண்டா?

வஞ்சமும் இல்லையேல் எதைக்கொண்டு என் வாழ்க்கையை நிறைத்துக்கொள்வேன்? அந்தணனாக வாழவியலாதா என்ன? அதை கிருபி உணர்ந்திருந்தாளா? அன்று அவள் குடிலின் திண்ணையில் அமர்ந்திருந்தபோது பெருஞ்சினம் மூண்டெழ நீ உரைத்த ஒரு சொல்லில் இருந்து எழுந்தது என் ஆறாப் பெருவஞ்சம் என்று சொல்ல எண்ணினார். ஆனால் அச்சொல்லில் இருந்த சிறுமையை அவரால் தாளமுடியவில்லை. ஒரு பசுவுக்காகவா நீ துருபதனை தேடிச்சென்றாய் என்று அவள் கேட்கக்கூடும். கேட்பவள்தான் அவள். அவரால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. நெடுந்தொலைவு கடந்து அங்கே வந்திருந்தார். ஆனால் உடனே திரும்பிவிடவேண்டும் என்று தோன்றியது. கிளம்புகிறேன் என அவர் சொன்னபோது கிருபி ஒன்றும் சொல்லவுமில்லை. அவர் திரும்பி அந்த பொய்க்கழுகை பார்த்தார். புன்னகையுடன் நடந்தார்.

வானில் முகில்கள் ஒளிகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தன. கரிய இரும்பு உரசப்பட்டு மெருகேறுவதுபோல. கீழ்வானில் சில பறவைகளின் சிறகசைவு. அவர் பெருமூச்சுடன் இத்தனை மெல்ல காலம் ஒழுகும் ஒரு தருணத்தை முன்பு உணர்ந்ததே இல்லை என எண்ணிக்கொண்டார். இது இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதியின் கரையில் பிலக்ஷவனம் என்னும் காடு. இந்த இடைவழியில் இந்தக் காலையில் பதியும் முதற்காலடி என்னுடையதா என்ன? மழை பெய்துகொண்டிருந்தது. ஆஷாட மாதத்து இளமழை. சரத்வானின் மலைக்குடிலுக்கு நேர்கீழே திருஷ்டாவதி அருவியாகப் பெய்திறங்கி மலைப்பாறைகளில் சிதறி நுரைத்து நாணல்கூட்டங்களுக்கு நடுவே வழிந்தோடியது.

கண்ணீர் வழியும் முகத்தைத் தூக்கி துரோணர் கேட்டார் “என்னுள்ளும் அத்தகைய வஞ்சம் குடியேறுமா என்ன? அனலை கருக்கொண்ட கந்தகமலையாக நானும் ஆவேனா? என் காயத்ரி எனக்குள்ளேயே கருகிப்போவதுதான் அதைவெல்லும் ஒரே வழியா?” அவர் தோளை மெல்ல தொட்டு இளைய யாதவன் சொன்னான் “வில் என்பது ஒரு புல் மட்டுமே. என்றும் தனுர்வேதமென்பது புல்லை அறிந்துகொள்ளும் ஞானம்.” அவர் திகைப்புடன் அவனை நோக்கி “என்ன சொல்கிறாய்? நீ எப்படி இங்கே வந்தாய்?” என்றார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்?” என்றான் இளைய யாதவன். துரோணர் “ஏனென்றால் இந்த பூமியென்பது புல்லால் ஆனது” என்றார்.

மீண்டுமொரு கணம் விழித்துக்கொண்டு அப்போதும் புலரிமுரசு முழங்கவில்லை என்று உணர்ந்தார். எங்கிருக்கிறேன்? இது குருக்ஷேத்ரம். ஆனால் நான் இதோ என் மைந்தனுடன் இளவெயிலில் அம்பு பயின்றுகொண்டிருக்கிறேன். பொன்வெளிச்சத்தில் காலையிலெழுந்த சிறுபூச்சிகள் சுடர்களாக சுழல்கின்றன. இலைப்பரப்புகள் பளபளத்து அசைகின்றன. மிக அப்பால் ஆலயமணியின் ஓசை எழுகிறது. அம்புபயிலும் இளையோரின் சிரிப்பொலிகள். அவ்வண்ணம் சிரிக்க அதன்பின் எப்போதுமே மாணவர்களால் இயல்வதில்லை. மாணவர்களுடன் இருப்பதே என் உவகை. மாணவர்களுக்கு அளிக்கையில் நான் ஆசிரியன். மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கையில் நான் தந்தை. ஆசிரியன் என்பவன் என்றும் இளமை மாறாத மைந்தரின் தந்தை.

மாணவருடன் சிறு சொல்லாடி நகைத்தபடி ஆலமரத்தடியில் அமர்ந்தார். “அம்பைத் தொட்டதுமே அதை உணர்பவன் அதமன். அவன் உடல் பயிற்சியை பெற்றிருக்கிறது. அம்பருகே கைசென்றதுமே அதை உணர்ந்துகொள்பவன் மத்திமன். பயிற்சியை அவன் அகமும் பெற்றிருக்கிறது. அம்பென எண்ணியதுமே அம்பை அறிபவன் உத்தமன். அவன் ஆன்மாவில் தனுர்வேதம் குடியேறியிருக்கிறது.” அவர் முன் அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் கர்ணனும் ஏகலவ்யனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களை நோக்கியபடி அவர் சொன்னார். “எந்த ஞானமும் உபாசனையால் அடையப்படுவதே. அதன் நிலைகள் மூன்று. ஞானதேவியிடம் இறைஞ்சி அவளை தோன்றச்செய்தல் உபாசனை. அவளை கனியச்செய்து தோழியாகவும் தாயாகவும் தெய்வமாகவும் தன்னுடன் இருக்கச்செய்தல் ஆவாகம். முழுமை என்பதுதான் அவளேயாதல். அதை தன்மயம் என்றனர் மூதாதையர்.”

விழித்துக்கொண்டு அது கனவென்று உணர்ந்தார். “தந்தையே!” என்று அம்புடன் வந்த மைந்தனிடம் “செல்க!” என்று படபடப்புடன் சொன்னார். “இது பெரும்போர்க்களம். நான் புலரியில்  வில்லுடன் காத்து நின்றிருப்பதாக உணர்கிறேன்.” அஸ்வத்தாமன் திகைப்புடன் ஏறிட்டுப் பார்த்தான். எவர் எவரிடம் போரிடுகிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. வலப்பக்கம் நின்றிருந்த துருபதனை திரும்பி நோக்கி “இது எந்தப் போர்?” என்றார். துருபதன் நகைத்து “போருக்கு எழுந்த பின்னரும் போரை அறியாமல் இருக்கிறீர், துரோணரே. இது தேவர்களும் அசுரர்களும் அமுதின் பொருட்டு நிகழ்த்தும் பெரும்போர்” என்றான். “அது முன்பு நிகழ்ந்ததல்லவா?” என்று அவர் கேட்டார். “அது என்றும் நிகழ்வது. முடிவற்றது” என்று துருபதன் சொன்னான்.

“பாஞ்சாலனே சொல்க, நாம் எவர் தரப்பில் நின்று போரிடுகிறோம்? நாம் யார்?” என்று துரோணர் உரக்க கேட்டார். “இதிலென்ன ஐயம்? நாம் அசுரர்களின் பொருட்டு போரிடுகிறோம். அதோ நம்முன் பெருகி நின்றிருப்பவர்கள் தேவர்கள். அமுது அங்கிருக்கிறது. இன்னமும் அது எவராலும் முழுக்க வெல்லப்படவில்லை” என்றான் துருபதன். போர்முரசுகள் முழங்கத்தொடங்கின. துரோணர் தன் வில்லை கையிலெடுத்து துருபதனிடம் “நீ என்னருகே நில். நீ உடனிருந்தால் நான் வெல்லப்பட இயலாதவன்” என்றார். “நான் உங்கள் வலது கை என என்றும் உடனிருப்பேன்” என்று துருபதன் கூறினான். முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. அவர் விழித்துக்கொண்டு காற்றில் பறந்த தன் மேலாடையை எடுத்து சுற்றிகொண்டார். ஆனால் கவசங்கள் எடையுடன் உடலை அழுத்துவதாக உணர்ந்தார். அது அவருடைய கொடியின் படபடப்பென உணர்ந்ததும் விழிப்பு முழுமையாகியது.

கையுறைகளை இழுத்து சீரமைத்தார். என்ன கனவு அது? அதை முழுக்க தொகுக்க இயலவில்லை. கனவுகளின் பொருளின்மை எப்போதுமே துணுக்குறச் செய்கிறது. பொருந்தா பெருந்தொலைவுகளை அவை பறந்து தாவிச் சென்று இணைத்துவிடுகின்றன. இனிய நாட்களை நினைவுறுகிறேனா? அல்லது அவ்வினிய நாட்களில் எய்தாது எஞ்சியிருந்த சிலவற்றையா? அவர் தன் இடக்கையருகே ஒருவர் நின்றிருப்பதை உணர்ந்தார். எப்போது அவ்வுரு தன் தேரிலேறிக்கொண்டது என்று திகைத்து “யார்?” என்றார். அது ஒரு பெண் என்று உணர்ந்ததும் “இப்போர்க்களத்தில் எப்படி வந்தாய்? விலகு!” என்றார். அவள் தன் கையிலிருந்த கரிய சிறு மொந்தையை அவரை நோக்கி நீட்டினாள். “இது என்ன?” என்று அவர் கேட்டார். “இது அமுது. என்றும் நீங்கள் விழைந்தது” என்றாள்.

“இல்லை, நான் விழைந்தது இது அல்ல!” என்று அவர் சொன்னார். “இதுதான். இதை மூத்த அமுது என்பார்கள். உங்களுக்குரியது இதுவே” என்று அவள் அதை அவரிடம் நீட்டினாள். அதை கைகளில் வாங்கிக்கொண்டார். “உன்னை பார்த்திருக்கிறேன்… நீ யார்?” என்று அவர் கேட்டார். “என்ன சொல்கிறீர், ஆசிரியரே?” என்ற திரிகர்த்த நாட்டு அரசன் சுசர்மனின் குரல் கேட்டு அவர் விழித்துக்கொண்டார். சுசர்மன் தன் கையிலும் ஒரு மொந்தையை வைத்திருந்தான். “அகிஃபீனா கலந்த இனிய மது. போரில் ஊக்கத்தை அளிக்கும்” என்றான். “தாங்கள் தேர்தட்டில் சோர்ந்திருப்பதாகத் தோன்றியது ஆகவே அமுதுடன் நானே வந்தேன்.”

துரோணர் அந்த மதுவை அருந்தினார். அதில் கந்தகமணம் இருப்பது போலிருந்தது. “எரிமணம்” என்றார். “ஆம், நம் குருதியை எரியச்செய்யும்” என்றான் சுசர்மன். “ஆசிரியரே, உங்கள் வஞ்சம் அனலாகட்டும். இன்று அறம், நெறி, முறை என எதையும் நீங்கள் கருத்தில் கொள்வதில்லை என்று சொன்னதைப்போல எங்களை ஊக்கமடையச் செய்யும் பிறிதொன்றில்லை. அதையே எங்களுக்கும் சொல்லிக்கொண்டோம். அர்ஜுனன் இன்று படைமுகம் எழப்போவதில்லை. ஒருவேளை அவன் வந்தாலும் பதறாக் காலில் நின்று அசையா வில் கொள்ளப்போவதில்லை. இன்று நாம் அவன் உயிரை கொள்வோம்.” அவன் மதுக்கலத்தைத் தூக்கி அருந்தி “இன்று பாரதவர்ஷத்தின் பெருவீரனின் கதை முடிகிறது. அவனை பயிற்றுவித்த ஆசிரியராலேயே அவன் அழிகிறான்” என்றான்.

துரோணர் “ஆம்” என்றார். மொந்தையைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு “இன்று நான் பிறிதொருவன். மூத்தவளின் அருள் என்னுடன் திகழ்க!” என்றார். சுசர்மன் களிமயக்கில் உரக்க நகைத்து கைகளைத் தூக்கி தன் தம்பியரை நோக்கி “மூத்தவள் துணையெழுக! மூத்தவள் அருள்க!” என்றான். சம்சப்தர்கள் அவனுடன் சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டு நகைத்தார்கள்.

நூல் இருபது – கார்கடல் – 30

ele1அஸ்வத்தாமன் காவல்மாடத்தின் மேல் நின்று கருடச்சூழ்கை உருப்பெறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு சூழ்கை அவன் உள்ளத்தில் எப்போதும் மிக எளிய ஓர் எண்ணமாகவே எழுவது வழக்கம். முதல்நாள் போர் முடிந்ததுமே அன்றைய நிகழ்வுகள் என்ன, அதை நிகர்செய்யவோ நீட்டிச்செல்லவோ மறுநாள் ஆற்றப்படவேண்டிய பணி என்ன என்னும் வினாக்கள் அவன் உள்ளத்தில் எழுந்து முட்டிமோதும். ஒவ்வொருநாளும் போர் முடிந்த மறுகணமே அவன் உள்ளத்தில் எழுவது அவ்வெண்ணம்தான். அவன் நேராக காவல்மாடங்களை நோக்கியே செல்வான். தன் புண்களுக்கு மருந்திட்டுக்கொள்வதுகூட அங்கே அமர்ந்துதான். அவனுடன் மருத்துவ ஏவலரும் ஏறிவர மேலே அமர்ந்து அவன் நோக்கிக்கொண்டிருப்பான்.

படைகள் திரும்பிச்செல்வதை பார்த்துக்கொண்டிருக்கையில் அவன் உள்ளம் மெல்லமெல்ல எண்ணமொழிந்து கூர்மட்டும் கொண்டதாக ஆகும். அவர்களின் சோர்வும் எழுச்சியும் குலைவும் பிறிதொரு வகை ஒருங்கிணைதலும் அவன்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும். அதிலேயே அவன் அமைக்கவேண்டிய சூழ்கை என்ன என்ற செய்தி இருக்கும். மணல்மேல் காற்று தன் வடிவை வரைந்து காட்டுவதுபோல போரை ஆளும் தெய்வம் ஒன்று தான் விழையும் சூழ்கையை அவனுக்கு எழுதிக் காட்டும். அது தன் உளமயக்கு என அவன் அறிந்திருந்தாலும் உள்ளம் அவ்வாறு பருப்பொருளில் சில தோற்றப்பாவைகளாகவே எழமுடியும் என்று எண்ணினான்.

மழைநீர் பிரிந்தும் இணைந்தும் ஓடுவதுபோன்றது படைகள் பிரிந்துசெல்வது. தோல்வியை உணர்ந்தார்கள் என்றால் அவர்கள் தனிமானுடர்களாக சிதறிச்சிதறிப் பரவுவார்கள். பின்னர் சிறுசிறு குழுக்களாக மாறுவார்கள். ஓசையும் கொந்தளிப்பும் இருக்காது. நனைந்த ஆடை நிலத்தில் படிந்தமைவதுபோல படை களத்தில் நிலைகொள்ளும். ஈரவிறகு என அவன் எண்ணிக்கொள்வான். இதை பற்றவைக்கவேண்டும். இதன் செவிகளில் முரசறையவேண்டும். இதன் வாலை ஒடித்து முறுக்கவேண்டும். அவ்வெண்ணத்துடன் நோக்கியிருக்கையில் அந்தப் படையின் உருமாற்றங்களில் ஒன்றில் அவன் தன் சூழ்கையை காண்பான்.

பீஷ்மர் களத்தில் விழுந்த நாளில் துயரும் கசப்பும் கொண்டிருந்த கௌரவப் படை களத்தில் அமைந்த பின் மதுவண்டிகள் அதன் ஊடே விரிசல்கள்போல் பரவிய பாதைகளினூடாக செல்லத்தொடங்கின. மாட்டின் முடிப்பரப்புக்குள் உண்ணிகள் செல்வதுபோல என எண்ணியபடி அவன் பார்த்துநின்றான். மெல்லமெல்ல கௌரவப் படை ஊக்கம் கொள்ளத் தொடங்குவதை அவன் கண்டான். எங்கிருந்தோ பாடல் ஒன்று எழுந்தது. அந்த ஒலி மேலே கேட்கவில்லை, ஆனால் அதை ஏற்றுப்பாடியவர்களின் உடலசைவுகள் சேர்ந்தெழுந்த அலை கண்ணுக்குத் தெரிந்தது. அலை பரவி விரிந்து படையை மூடியது. அவன் அந்த ஊக்கம் எதனால் என வியந்தான். ஏவலனிடம் கேட்க நாவெடுத்தபோது அவனுக்கே தெளிந்தது, கர்ணன் களமெழவிருக்கிறான்.

அந்தச் செய்தி ஒரு சுடர் எனத் தோன்றியது. அந்தப் படைப்பெருக்கு அச்செய்தியெனும் கனலை பேணிக்கொண்டாகவேண்டும். அவன் வெறித்து நோக்கிக்கொண்டிருக்கையில் படைகளில் சுடரை அணையாது காக்கும் பீதர்நாட்டுக் கூண்டை கண்டான். ஆம், அரணிட்டுக் காக்கவேண்டும். அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் அதை சூழ்கையாக மாற்றிக்கொண்டான். கூண்டு. கூண்டு வண்டி. வண்டிச்சூழ்கை. மறுநாளுக்குரிய சூழ்கையை அங்கிருந்தே அவன் தோல்சுருளில் வண்ண மையால் வரையத் தொடங்கினான். வரைந்து முடித்ததுமே தோல்வியின் சலிப்பும் கசப்பும் அகன்று அவன் முகம் பொலிவுற்றது. கண்மூங்கில் வழியாக தொற்றி கீழிறங்கி தன் புரவியை நோக்கி ஓடினான்.

முந்தையநாள் படைகள் கொப்பளித்துக்கொண்டிருந்தன. வெற்றியை அவை அருகென கண்டுவிட்டிருந்தன. பாறைச்செறிவுக்குள் வந்தறைந்து கொப்பளித்து நுரைபெருக்கும் கடல் அலைகள் போலிருந்தன படைகள். ஒருதிசை நோக்கி பெருகிச்சென்ற படைப்பிரிவு ஒன்று இன்னொன்றுடன் முட்டி நுரைபோலவே கொந்தளித்து மீண்டும் பிரிந்தது. அவன் அந்த அலைக்கழிவை நோக்கிக்கொண்டிருந்தபோது இரு சிறகுகள் எழுந்து அணைவதை ஒருகணம் கண்டான். கருடச்சூழ்கையை உடனே உள்ளத்தில் உருவாக்கிக்கொண்டான். “எங்கே சுவடிச்சுருள்?” என்று கேட்டான். அதற்காக ஒருங்கி நின்றிருந்த ஏவலன் சுவடியை நீட்டினான். அவன் கைவிரல்களிலிருந்து விரிந்த சிறகுடன், கூரலகுடன் பருந்து எழுந்து வந்தது.

ஓர் எண்ணம் கைகள் வழியாக காட்சிவடிவாவது இன்மையிலிருந்து பொருள் ஒன்று எழுவதுபோல. அந்தப் பொருள் விதையாகி முளைத்து காடாவதுபோல அது சூழ்கையென்றாவது. அவன் சூழ்கையை இறுதிசெய்ததுமே அதை பூரிசிரவஸிடம் அளித்துவிடுவான். அவன் அதை பல உறுப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்குரிய படைப்பிரிவுகளை அமைப்பான். அந்தப் படைப்பிரிவுகளை பலபகுதிகளாக பிரித்து அவற்றுக்கான ஆணைகளை உருவாக்குவான். அகச்சொற்களில் இருந்து திரட்டி தான் உருவாக்கிய வரைவுச்சிற்பம் மீண்டும் உருவழிந்து சொற்களாக ஆவதை அஸ்வத்தாமன் வியப்புடன் நோக்கி நிற்பான். “உங்கள் சூழ்கை இப்போது எண்பத்தெட்டு ஆணைகளாக மாறிவிட்டது, பாஞ்சாலரே” என்று பூரிசிரவஸ் சொல்வான்.

அந்த ஆணை இருளுக்குள் புரவித் தூதர்கள் வழியாக படைகளுக்குள் பரவிச்செல்லும். தன் குடிலில் துயில்கொள்ள படுத்திருக்கும்போது அந்த ஆணைத்தொகை ஓசையில்லாமல் வலைபோல படைகளுக்குள் ஊடுருவி மூடிக்கொண்டிருப்பதை உள்ளத்தால் உருக்கொடுத்து நோக்கிக்கொண்டிருப்பான். முதன்மைப் படைத்தலைவர்களுக்கு மட்டுமே பூரிசிரவஸின் ஆணைகள் செல்லும். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆணைகளை மேலும் சிறு ஆணைகளாகப் பிரித்து ஆயிரத்தவர்களுக்கு அனுப்புவார்கள். ஆயிரத்தவர் அவற்றை நூற்றுவருக்கு அளிப்பார்கள்.

நீரில் புல்விதைகள் பரவுவதுபோல ஆணைகள் படைகளில் விரிந்தன. பின்னர் நீரில் உப்பு என கரைந்து அவை மறைந்தன. சொற்கள் மீண்டும் எண்ணமென்றாயின. தன்னுள் எண்ணமென இருந்தவை. சொல்லாகி வடிவமென்றாகி மீண்டும் சொல்லாகி சிதறி எண்ணமென்றாகி அமைந்துவிட்டன. தன் உடலே விரிந்து பரவி படை என ஆகி குருக்ஷேத்ரத்தில் கிடப்பதுபோல் நினைத்துக்கொள்வான். தன் உடலின் பேருரு. அதில் படைசூழ்கை ஒரு வியனுருவ எண்ணம். அந்நினைப்பு அவனை நிறைவுகொண்டு விழிசரியச் செய்யும்.

விழித்துக்கொண்டதுமே முதல் எண்ணமென எழுவது இறுதியாக உள்ளத்தில் கரைந்தழிந்த எண்ணத்தின் எஞ்சிய பருத்துளிதான். முகம் கழுவி இன்னீர் அருந்தியதுமே புரவியில் ஏறிக்கொண்டு காவல்மாடங்கள்தோறும் செல்லத்தொடங்குவான். துயிலெழுவதற்கான முரசுகள் ஒலித்ததுமே படைப்பரப்பு தேனீக்கூட்டம் கலையும் முழக்கத்துடன் உயிர்கொள்ளும். காலைக்கடன்களுக்கு விளக்குகளை கொளுத்தலாகாது என்பது ஆணை. பந்தங்களின் பொதுவான ஒளி மட்டுமே இருக்கும். பல்லாயிரம் கூழாங்கற்களில், கூரைப்பரப்புகளில் பட்டு அது களமெங்கும் பரவியிருக்கும். அந்த ஒளியே விழிதெளிய போதுமானது. படைவீரகள் கவசங்களும் படைக்கலங்களும் கொண்டு ஒருங்குவதை இருளுக்குள் நிழலசைவுகளாக காணமுடியும்.

கொம்புகள் எழுவதற்குள் அனைவரும் ஒருங்கி முடித்தாக வேண்டும். ஆயிரத்தவர் தலைவர்களின் கொம்போசைகள் இருளுக்குள் மாபெரும் யானைக்கூட்டம் ஒன்று நின்று ஒன்றோடொன்று செய்தி பரப்புவதுபோல எழுந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு படைப்பிரிவும் தனித்தனியாகத் திரள்வது இருள் அலைகொண்டு பருவடிவுகளாக மாறுவதுபோல தெரியும். ஆயிரத்தவர் தலைவர்கள் தங்கள் படைகள் சென்று நிலைகொள்ளவேண்டிய இடங்களை களத்தில் அடையாளப்படுத்தி அங்கே சிறிய நெய்விளக்குகளை ஏற்றிவைத்திருப்பார்கள். விளக்குகளின் எண்ணிக்கை, செறிவின் வழியாக அவை எழுத்துக்களாக ஆகிவிட்டிருக்கும். அவற்றை நோக்கி படைவீரர்கள் தங்களுக்கென வகுக்கப்பட்ட இடங்களில் சென்றமைவார்கள்.

ஒவ்வொருவரும் தங்களுக்குரிய இடங்களில் அமையும்தோறும் விழிநிறைக்கும் வடிவென படைசூழ்கை எழுந்துவரும். முந்தையநாள் தோல்சுருளில் அவன் வரைந்த வடிவின் வானுருத்தோற்றம். காலையொளியில் கண்துலங்கத் துலங்க அவ்வடிவைப் பார்ப்பது தெய்வமெழுகை என அவனை நெஞ்சுநிறையச் செய்யும். அந்தச் சூழ்கை அவனால் உருவாக்கப்பட்டது என்று எண்ணத் தோன்றாது. அவனை வாயிலாக்கி எங்கிருந்தோ வந்தது. பல்லாயிரம் உள்ளங்களினூடாக பல்லாயிரம் உடல்களில் தன்னை நிகழ்த்திக்கொண்டது. மண்ணிலுள்ள பேருருக்கள் எல்லாம் எங்கோ விண்ணில் துளியென அணுவென இருந்துகொண்டிருப்பவை. ஏதோ தெய்வத்தின் கனவில் ஒரு கணம் இது.

அவன் சிறகுவிரித்து நின்றிருந்த பருந்தை பார்த்துக்கொண்டிருந்தான். அதன் தலையில் அலகு இன்னும் கூர்கொள்ளவில்லை. விழிமணிகள் ஒளிகொள்ளவில்லை. ஆனால் இறகுகளை திரட்டிக்கொண்டு அது மேலும் மேலும் பெருகிக்கொண்டிருந்தது. எழுந்து வானில் பறந்துவிடக்கூடும். அவனுக்கு மெல்லிய புன்னகை எழுப்பும் எண்ணம் ஒன்று எழுந்தது. அவ்வாறு பறந்து எழுந்து அகன்றுவிட்டால் என்ன ஆகும்? கௌரவப் படையே அகன்றுவிட்டால்? எங்கோ வானிலெழுந்து விண்முகில்களில் ஒன்றில் சென்று அமர்ந்துவிட்டால்? அவன் அருகே நின்றிருந்த ஏவலன் “அரசே” என்றான். ஒன்றுமில்லை என அவன் கையசைத்தான்.

காவல்மாடத்திலிருந்து இறங்கி அவன் புரவிநோக்கி சென்றான். ஏறி அமர்ந்து கடிவாளத்தை சுண்டியபோது எதிரே பூரிசிரவஸ் புரவியில் வருவதைக்கண்டு இழுத்து நிறுத்தினான். அருகே வந்த பூரிசிரவஸ் இருளுக்குள் வெண்பற்கள் மின்ன “படை முற்றொருங்கிவிட்டது, பாஞ்சாலரே” என்றான். “இது தன் இரையை கவ்விக் கவரும் என்பதில் ஐயமில்லை.” அஸ்வத்தாமன் படைசூழ்கை முழுமை பெறுந்தோறும் அதன் குறைகளை மட்டுமே பார்க்கும் விழி கொண்டவனாக மாறுவது வழக்கம். பூரிசிரவஸின் சொற்களால் அவன் தன் கனவிலிருந்து மீண்டான். “அங்கே வட எல்லையில் காந்தாரப் படைகளின் மூன்றாவது பிரிவு இன்னமும் ஓசை அடங்கவில்லை. அங்கு சென்று நிகழ்வதென்ன என்று பாருங்கள். ஒருங்கமையவில்லை என்றால் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்” என்றான். “ஆணை” என்று தலைவணங்கி பூரிசிரவஸ் கடந்து சென்றான்.

அஸ்வத்தாமன் புரவியில் சீர்நடையாக படைகளின் நடுவே சென்றான். பிறிதொரு காவல் மாடத்தின் மீதேறி அதன் உச்சிக்குச் சென்று அங்கிருந்து படைசூழ்கையை பார்த்தான். அது தன் இறகுகளை பாண்டவப் படை நோக்கி விரித்திருந்தது. அதன் கூரலகில் கர்ணனின் பொற்தேர் வந்து நிற்பதை அவன் கண்டான். அதன் தேர்த்தட்டில் கர்ணன் இரு கைகளையும் மார்பில் கட்டியபடி நின்றிருந்தான். அத்தனை தொலைவில் அவனை பார்த்ததுமேகூட அஸ்வத்தாமன் சிறு அமைதியின்மை ஒன்றை அடைந்தான். கர்ணனிடம் அவன் ஏதோ ஒரு மாற்றத்தை கண்டான்.

படிகளில் இறங்கும்போது தன்னுடன் வந்த ஏவலனிடம் “சந்திரகீர்த்தியை என்னை வந்து பார்க்கச் சொல்” என ஆணையிட்டான். அவன் அடுத்த காவல்மாடத்திற்கு செல்வதற்குள் சந்திரகீர்த்தி அங்கே வந்திருந்தான். அவனுடைய அஞ்சிய தயக்கம்கொண்ட உடலைக் கண்டதும் அவன் அமைதியின்மை பெருகியது. எரிச்சலாக அது மாறியது. “என்ன?” என்றான். சந்திரகீர்த்தி “ஒவ்வாச் செய்திதான். உறுதிப்படுத்திய பின் சொல்லலாம் என எண்ணினேன். மேலும் படைகளெழும் இத்தருணத்திற்குரியதா அது என்னும் ஐயமும் கொண்டேன்” என்றான். “சொல்க!” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் முழுதுளத்துடன் இருக்கிறாரா?”

அவன் கேட்பதை புரிந்துகொண்டு சந்திரகீர்த்தி சொல்காத்தான். “அவர் கைகளை மார்பில் கட்டியிருக்கிறார். நேற்று விஜயத்தை ஊன்றி நாணேற்றி அதைப் பற்றி தலைநிமிர்ந்து நின்றிருந்தார்” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி சில கணங்களுக்குப் பின் “நேற்று அவரை சந்திக்க எவரோ வந்திருக்கிறார்கள்” என்றான். அஸ்வத்தாமன் திகைத்து “அங்கரை சந்திக்கவா? எங்கிருந்து? சம்பாபுரியிலிருந்தா?” என்றான். “அல்ல. பாண்டவப் படைகளில் இருந்தும் அல்ல. வேறு எங்கிருந்தோ” என்று சந்திரகீர்த்தி சொன்னான். “மிக மந்தணமான வருகை அது. அங்கே எப்படி அவர்கள் வந்தார்கள் என்பதே புரியவில்லை.”

“இச்செய்தி அரசருக்கு அறிவிக்கப்பட்டதா?” என்றான் அஸ்வத்தாமன். “இல்லை. இது எனக்கே சற்று முன்னர்தான் தெரியவந்தது. இன்னமும் உறுதி செய்யப்படாத செய்திதான். வந்தவர் எவரென்றும் தெளிவில்லை. இருவர் பெண்கள் என்றனர்.” அஸ்வத்தாமன் “சம்பாபுரியிலிருந்தா?” என்று உரக்க கேட்டான். “எங்கிருந்தென்று தெரியவில்லை. நமது படை எல்லையை அவர்கள் கடந்ததை மட்டுமே என் ஒற்றன் பார்த்திருக்கிறான். மேலும் செய்திகளை திரட்டி அனுப்பும்படி சற்று முன்னர்தான் என் படையினருக்கு செய்தி அனுப்பியிருக்கிறேன். ஏதேனும் உறுதியான செய்தி வந்த பின்னர் அதை அரசருக்கு அறிவிக்கலாம் என்று எண்ணினேன்” என்றான் சந்திரகீர்த்தி.

அஸ்வத்தாமன் சினத்துடன் “அறிவிலிகள்! அறிவிலிகள்!” என்றான். “படைக்குள் இருவர் வந்து சென்றதைக்கூட நோக்கவில்லை என்றால் ஒற்றர்வலை எதன் பொருட்டு?” சந்திரகீர்த்தி மறுமொழி சொல்லாமல் உடன் வந்தான். “இப்போதே செல்க! இன்னும் சற்று நேரத்தில் வந்தது யார், என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரிந்தாகவேண்டும்” என்றான். “ஆணை” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் தணிந்து “என்ன நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது இப்பெரும்பிழை?” என்றான். “நேற்று நம் படைகள் அனைத்துமே கள்வெறியில் இருந்தன. அங்கரும் இரவு நெடுநேரம் படைகளுடன் அமர்ந்து மதுவருந்தி களித்திருக்கிறார். கௌரவ படைப்பிரிவில் மதுக்களியின்றி துயின்ற எவரும் நேற்று இருந்திருக்க வாய்ப்பில்லை” என்றான் சந்திரகீர்த்தி.

“அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று அஸ்வத்தாமன் உரக்க சொன்னான். “அரசே, அது அங்கரை பார்க்க வந்த இரு நாகர்கள் என்று தோன்றுகிறது” என்று சந்திரகீர்த்தி சொன்னான். “அப்பகுதியிலிருந்த நம் புரவிகள் இரவெல்லாம் அமைதியிழந்திருக்கின்றன. அவை நாகங்களை மட்டுமே அவ்வாறு அஞ்சுபவை. அவர்களால் மட்டுமே அத்தனை ஓசையின்றி நுழையமுடியும்” என்றான். அஸ்வத்தாமன் “ஆனால்…” என்றான். சந்திரகீர்த்தி பணிவுடன் இடைமறித்து “அரசே, அவருக்கும் நாகர்களுக்குமான உறவு நாம் அறிந்ததைவிட ஆழம் கொண்டது. அவரை நாகர்கள் தொடர்ந்து வந்து சந்திக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது” என்றான்.

“அங்கே சிபிரத்தின் மாளிகையில் இருந்து அவர் கிளம்பும்போதுகூட யாரோ ஒரு நாகன் வந்து அவரை சந்தித்திருக்கிறான். தன் தோளில் பெரிய மூங்கில் கூடை ஏந்திய ஓங்கிய உடல்கொண்ட முதிய நாகன். அவன் தோன்றியதை வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். மறைந்ததை பார்க்கவில்லை. எவ்வண்ணம் அரண்மனையில் எழுந்தான் என்று எவருக்கும் தெரியவில்லை. இப்போர்க்களம் நாகர்களின் நிலமும்கூட. நாம் நின்றிருக்கும் காலடிக்குக் கீழே அவர்களின் கரவுப்பாதைகள் செறிந்துள்ளன. நினைத்த இடத்தில் எழ இயல்வதனால்தான் அவர்களை இன்னமும் முற்றழிக்க இயலவில்லை என்றார்கள்.”

அஸ்வத்தாமன் “வந்தது நாகர்கள் அல்ல, ஐயமில்லை” என்றான். சந்திரகீர்த்தி விழிசுருக்கி நோக்க “அறிவிலி! நாகங்களுக்கு நிலஎல்லையோ படைஎல்லையோ இல்லை. நினைத்த இடத்தில் விதை முளைத்தெழுவதுபோல் மண் கீறி எழுபவர்கள் அவர்கள். வந்தவர்கள் நமது எதிரித் தரப்பை சார்ந்தவர்கள். நம் எல்லைக்கு அப்பால் இருப்பவர்கள். எல்லையைக் கடந்து கரந்து உள்ளே வந்திருக்கிறார்கள்” என்றான். பின்னர் “பெரும்பாலும் வந்தவர்கள் பெண்கள்” என்றான்.

சந்திரகீர்த்தி “அதை எவரும் உறுதிப்படுத்தவில்லை” என்றான். “வந்தவர்கள் இத்தனை மந்தணமாக வரமுடியுமென்றால் பெண்களாகவே இருக்க முடியும். நமது படைப்பிரிவில் எங்கு அஸ்தினபுரியின் தொன்மையான ஷத்ரிய படைப்பிரிவினர் இருந்தார்களென்று பாருங்கள். அஸ்தினபுரியின் அரசகுடியினர் எவரேனும் வந்து அறுதி ஆணையிட்டால் அதை நம் படைப்பிரிவினராயினும் அவர்களால் மீற இயலாது. அவ்வாறு அறுதி ஆணையிடும் தகைமை இப்போது இப்போர்க்களத்திற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இயலும். பெண்களே இப்போது போருக்கு வெளியில் இருக்கிறார்கள். திருதராஷ்டிரர் ஆணையிடலாம். ஆனால் அவர் உடலை எவரும் அறிவார். ஆகவே…”

சந்திரகீர்த்தி திகைத்து நின்று திரும்பி “யாதவப் பேரரசி! ஐயமில்லை! யாதவப் பேரரசியேதான்!” என்றான். அஸ்வத்தாமன் “ஆம்” என்றான். சந்திரகீர்த்தி “அவர்களைப் பார்த்த ஐவரை அழைத்து வரச்சொல்லியிருக்கிறேன்” என்றான். “அவர்களிடம் ஒன்றை மட்டும் உசாவுக! வந்தவர்கள் சிறிய உடல் கொண்டவர்களாக இருந்தார்களா? வெள்ளை ஆடையால் முகம் மறைத்திருந்தார்களா? அங்கரின் குடிலுக்குள் அவர்கள் எத்தனை பொழுது இருந்தார்கள்?” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி தலைவணங்கினான். “செல்க!” என்று கைகாட்டிவிட்டு அஸ்வத்தாமன் தன் புரவியில் முன்னால் சென்றான்.

மேலும் இரு காவல்மாடங்களின் மீதேறி படைசூழ்கையை நோக்கிவிட்டு அஸ்வத்தாமன் வளைந்து துரியோதனன் தலைமை வகித்த சிறகின் முனையை அடைந்தான். இருபுறமும் துச்சாதனனும் துச்சகனும் நின்றிருக்க துரியோதனன் கையில் இருந்த கதையை பொறுமையிழந்து மெல்ல சுழற்றியபடி தேர்த்தட்டில் நின்றிருந்தான். அருகணைந்து கர்ணனை முந்தைய நாள் குந்தி சந்தித்திருக்கக் கூடுமென்பதை கூறலாமா என்று அஸ்வத்தாமன் எண்ணினான். ஆனால் அதனால் எப்பயனுமில்லை என்று தோன்றியது. துரியோதனன் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் குறைப்பதை அன்றி வேறெதையும் அது இயற்றாது.

தன் எண்ணத்தை தானே விலக்கும் பொருட்டு கைவீசி தலையை அசைத்தபடி புரவியின் கடிவாளத்தை இழுத்து திருப்பினான். அவனுக்கு எதிரே புரவியில் வந்த சந்திரகீர்த்தி அருகே வந்து தலைவணங்கினான். கடிவாளத்தை இழுத்து புரவியை சற்றே திருப்பி நின்று “சொல்” என்றான் அஸ்வத்தாமன். “அரசே, நேற்று வந்தவர் இந்திரப்பிரஸ்தத்தின் யாதவ அரசியாகவே இருக்க வாய்ப்பு. குற்றுடல் கொண்டவர். வெள்ளையாடை அணிந்தவர். அவர்கள் ஒரு விரைவுத்தேரில் வந்து குறுங்காட்டில் இறங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து அவர்களை எவரோ ஒருவர் நம் எல்லைக்கு கொண்டுவந்திருக்கிறார். எல்லையிலிருந்த காவல்வீரர்கள் அவரை முழுதுறப் பணிந்து உள்ளே வரவிட்டிருக்கிறார்கள்.”

அஸ்வத்தாமன் பெருமூச்சுவிட்டு “எத்தனை பொழுது அவர்கள் உள்ளிருந்தார்கள்?” என்றான். “ஒருநாழிகைப் பொழுது. அதற்கு மேலில்லை.” அஸ்வத்தாமன் “எப்படி திரும்பிச்சென்றார்கள்?” என்றான். “வந்தது போலவே, மெல்லிய வெண்ணிழலாக, எந்தத் தடயமும் எஞ்சாமல்” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் “அங்கர் அவரை பின் தொடர்ந்து சென்று வழியனுப்பினாரா?” என்று கேட்டான். “ஆம், தன் குடில் வாயில் வரைக்கும் அவர் வந்தார்.” அஸ்வத்தாமன் “குடிலின் படிகளில் இறங்கினாரா?” என்றான். “இல்லை அரசே, குடில் வாயிலிலேயே நின்றார்” என்றான் சந்திரகீர்த்தி. “அரசி திரும்பிச்செல்கையில் மீண்டுமொருமுறை திரும்பி நோக்கி விடைபெற்றாரா?”

சந்திரகீர்த்தி “நிகழ்ந்த அனைத்தையும் சொல் சொல்லென உரைக்கக் கேட்டேன். அவர்கள் உவகையுடன் பிரிந்தனர்” என்றான். “அங்கர் பின்னால் சென்றிருக்கக் கூடுமா?” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் அந்த வாயிலிலேயே நின்றிருந்தார், கட்டுண்டவர்போல்” என்றான் சந்திரகீர்த்தி. “ஆம், கட்டுண்டு” என்று அஸ்வத்தாமன் சொன்னான். அவன் முகம் மலர்ந்தது. “நன்று, நாம் அஞ்சவேண்டியது எதுவுமில்லை என்று எண்ணுகிறேன்” என்றான்.

சந்திரகீர்த்தி ஆறுதல் கொண்டு “இத்தனை பெரிய உளவுப்பிழை என் தொழிலில் நிகழுமென்று எண்ணியதே இல்லை. இதன் விளைவென்ன என்று எண்ணுகையில் உளம் பதைக்கிறது. அரசே, இப்போரில் உயிர் கொடுத்தாலொழிய என் அகம் அடங்காது” என்றான். அவன் தோளைத் தட்டி “அஞ்சற்க! இது நமது எண்ணத்திற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகளால் ஆன வெளி. இங்கு ஒவ்வொருவரும் களம்படுகிறோம். அதற்கு முன் முற்றாக ஆணவம் அழிகிறோம். தெய்வங்களுக்கு முன் தோற்ற பின்னரே மானுடர் மானுடரிடம் தோற்கிறார்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றான். சந்திரகீர்த்தி பெருமூச்செறிந்தான்.

அஸ்வத்தாமன் புரவியை இழுத்து செல்கையில் “அரசே…” என்று சந்திரகீர்த்தி மீண்டும் அழைத்தான். அஸ்வத்தாமன் திரும்பிப் பார்த்தான். “இதை ஒரு வீரன் மட்டும் தயங்கியும் குழம்பியும் ஐயத்துடன் சொன்னான். அந்த அறைக்குள் பிறிதொருவர் இருந்ததாகவும் அங்கர் சிலமுறை அறியாது விழிதிருப்பி உள்ளிருந்தவரை பார்த்ததாகவும் அவன் உணர்ந்திருக்கிறான்.” அவனை சில கணங்கள் நோக்கியபின் மறுமொழி கூறாமல் அஸ்வத்தாமன் புரவியை திருப்பி கடந்து சென்றான்.

மெல்ல மெல்ல அவன் படைகளில் அமிழ்ந்துகொண்டிருந்தான். அதை மேலிருந்து பார்த்த நினைவு அவனில் எஞ்சியிருந்தது. அது குறைந்து குறைந்து அவன் படைகளில் ஒருவனாக ஆனான். படையின் முழுமை அவன் சித்தத்திலிருந்து மறைந்தது. இனி அந்திமுரசு கொட்டும்வரை அவன் அப்படைசூழ்கையின் ஒரு சிறு உறுப்பு மட்டும்தான். அவனுக்கு ஆணையிடப்படுவதை அவன் ஆற்றுவான். தான் வரைந்த தெய்வத்திற்கு பூசகனாக தானே ஆவதுபோல. அத்தெய்வம் அவன் மேல் வெறியாட்டுகொண்டு எழுவதுபோல.

அஸ்வத்தாமன் கௌரவப் படைகளின் முகப்பிற்கு சென்றான். வலச்சிறகில் அவனுடைய இடம் ஜயத்ரதனுக்கு அருகே இருந்தது. புரவியிலிருந்து இறங்கி தேர்மேல் ஏறிக்கொண்டான். எதிரே விரிந்திருந்த பாண்டவப் படையை பார்த்தான். பிறை நிலவு இருபுறமும் இழுபட்டு நீண்டு மெல்ல வளைந்துகொண்டிருந்தது. அவனுக்கு யானையின் இரு தந்தங்கள் என்று தோன்றியது அது. நடுவே யானையின் மத்தகம். இரு நீர்த்துளி விழிகள். வில்லை ஏந்தி நிலைநிறுத்திய பின் முரசொலிக்காக செவிகூர்ந்து நின்றான்.

நூல் இருபது – கார்கடல் – 29

ele1குடில் கதவின் படலில் கை வைத்த குந்தி அரவுமணம் பெற்ற புரவிபோல் உடல் சிலிர்த்து நின்றாள். “இங்கே எவரோ இருக்கிறார்கள்” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “இந்த அறைக்கு அடியில் நிலவறை ஏதேனும் உள்ளதா?” என்றாள் குந்தி. “அன்னையே, இது குருக்ஷேத்ரக் களம்… இது பாடிவீடு” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இங்கே எவரோ இருக்கிறார்கள். காலடியில். ஆழத்தில்” என்றாள் குந்தி. கர்ணன் வெறும் நோக்குடன் நின்றான். “இங்கே மறைந்திருப்பவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு உன்மேல் ஆதிக்கம் இருக்கிறது. அவர்கள் எனக்கெதிராக உன்னை சிறைகட்டி வைத்திருக்கிறார்கள்” என்று அவள் சொன்னாள்.

அவன் அதற்கும் மறுமொழி சொல்லாமல் நின்றது அவளில் சீற்றத்தை உருவாக்கியது. “நீ என்னிடமிருந்து மறைப்பது என்ன?” என்றாள். அவன் முகம் மாறவில்லை. “என்மேல் கொண்ட வஞ்சத்தை நீ மறைக்கவில்லை. அதற்கப்பால் என்ன?” என்று அவள் மீண்டும் கேட்டாள். கர்ணன் “இதற்கெல்லாம் நான் என்ன மறுமொழி சொல்ல முடியும்? நான் எதையும் மறைக்கவில்லை. ஆனால் ஆழங்களில் திகழ்பவை என்ன என்று அவை வெளிவரும்போது மட்டுமே நாமனைவரும் அறிகிறோம்” என்றான். குந்தி சீற்றம் கொண்டபோது அவள் புன்னகைப்பதுபோல தோன்றியது. “வஞ்சப்பேச்சை சகுனியிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பாய்” என்றாள்.

அவள் மெல்ல உருமாறுவதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவள் விழிகளில் அவன் அதுவரை அறிந்திராத கூர்மை எழுந்தது. களிப்பாவை கோரி அழுதுசீறும் சிறுமி போலவும் மானுடம் மேல் காழ்ப்புகொண்ட முதுமகள் போலவும் ஒரேதருணத்தில் தோன்றினாள். “நான் எதையும் பெறாமல் கிளம்பிச்செல்கிறேன் என எண்ணி நீ ஆறுதல் கொண்டாய் அல்லவா?” என்றாள். கர்ணன் “நீங்கள் துன்புற்று என்னையும் துன்புறுத்த விழைகிறீர்கள்” என்றான். “நான் உன்மேல் தீச்சொல்லிடுவேன் என்றபோது நீ அகத்தே ஏளனம் கொண்டாய் அல்லவா?” என அவள் கேட்டாள்.

கர்ணன் துயரம் நிறைந்த விழிகளால் நோக்க “நீ அவ்வாறுதான் எண்ணுவாய். ஏனென்றால் நீ பெண்களின் உள்ளத்தை அறிந்ததே இல்லை. உன் இரு துணைவியரும் உன்னை இருவகையில் துறந்தனர். உன் வளர்ப்பன்னையுடன் உனக்கு உளஒருமை இல்லை. நீ விழையும் பெண் உன்னை கடும்வெறுப்புடனன்றி எண்ணமுடியாதவள்” என்றாள். கர்ணனின் உடல் நடுங்கத் தொடங்கியது. அவன் உதடுகள் சொல்லின்றி மெல்ல அசைந்தன. “ஏனென்றால் நீ உன்னைப் பற்றி அன்றி எதையும் எண்ணியதில்லை. நீ உன் தோழனுக்காக இவ்வாறு நிலைகொள்வதாக சொல்லிக்கொள்கிறாய். அது பொய். நீ எண்ணுவதெல்லாம் உன்னைப்பற்றி மட்டுமே.”

கர்ணன் கால் தளர்ந்தவன்போல் சற்றே பின்னடைய குந்தி திரும்பி அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாள். “நீ பிறனைப் பற்றியும் எண்ணுபவன் என்றால் சொல், எத்தனை முறை உன் மைந்தரைப் பற்றி எண்ணினாய்? என் குருதியிலெழுந்த உன் மைந்தரை சூதர்களென அடிமைப்பணிக்கு அனுப்பியபோது ஒருநாளேனும் அவர்களின் உள்ளத்தைப் பற்றி எண்ணினாயா? எண்ணியிருக்கமாட்டாய்” என்று குந்தி சொன்னாள். “முலையூட்டாத அன்னையை குழந்தை வெறுப்பதுபோல் தன்னில் ஒரு பகுதியை உருக்கி தனக்கு அளிக்காத ஆண்மகனை பெண் வெறுக்கிறாள். நீ உன்னில் ஒரு துளியையும் விட்டதில்லை. இரும்பில் வார்த்த சிலை என இத்தனை காலமும் இருந்திருக்கிறாய். நீ என்னை புரிந்துகொள்ளமாட்டாய் என நானும் அறிந்திருந்தேன். ஏனென்றால் நீ எவரையுமே புரிந்துகொள்ளவில்லை.”

கர்ணன் மெல்ல முனகினான். குந்தி “அறிந்துகொள், நீ இந்த குருக்ஷேத்ரக் களம்விட்டு மீளமாட்டாய். ஏனென்றால் நீ எவரேனும் ஆகுக, நீ பொருதிக்கொண்டிருப்பது இந்த யுகத்தின் தலைமகனிடம். நாளைய யுகத்தின் படைப்பாளனிடம். நீ வெல்லவே முடியாது. எவரும் வெல்லமுடியாது. எதுவும் தடைநிற்க இயலாது. நான் பதைப்பது அவன் வெல்லவேண்டும் என்பதற்காக அல்ல. அவன் வெல்வான். என் தவிப்பு அந்த வேள்வியில் என் மைந்தர் அவிப்பொருளாகிவிடக்கூடாது என்பதற்காக. ஆனால் நீ அழிவாய். இந்த குருக்ஷேத்ர மண்ணில் நெஞ்சுடைந்து விழுவாய். அப்போது அறிவாய், நீ ஒருநாள்கூட வாழவில்லை என. அன்பையே நீ அறிந்ததில்லை. மைந்தரின்பத்தையும் அறியவில்லை. உன் வாழ்நாளெல்லாம் நீ உன்னையே சமைத்துக்கொண்டிருந்தாய்” என்றாள்.

“தருணங்களுக்கேற்ப உருமாறியும் உருப்பெற்றும் கடந்துவருவதே மானுட இயற்கை. நீ அத்தனை தருணங்களிலும் உன்னை மாறாது அமைத்துக்கொண்டாய். ஆகவே தளிர்க்காத பூக்காத கல்மரமாக நின்றாய்” என்று குந்தி சொன்னாள். “உன்னைப்போலவே துணியை ஊசி என வாழ்க்கையை கடந்துசென்றவர் பீஷ்மர். அவர் அதோ அம்புப் படுக்கையில் கிடக்கிறார். அத்தனை அம்புகளும் அவரே அவர்மேல் எய்துகொண்டவை. ஒவ்வொன்றையாக எண்ணி எண்ணி உணர்ந்து நாள்கணித்து வான்நோக்கி படுத்திருக்கிறார். எண்ணிக்கொள், உனக்கும் அதுவே இறுதி. குருக்ஷேத்ரத்தில் வந்து முடிவதற்காகவே நீ இதுவரை கடந்துவந்தாய்.”

குந்தி தன் சொற்களின் விசையால் உடல் இறுக இரு கைகளையும் விரல்கோத்து பற்களைக் கடித்தபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். பின்னர் பெருமூச்சுடன் அவள் தணிந்தாள். விழிதிருப்பி குடில்சுவர்களை நோக்கினாள். “இங்கே எவரோ இருக்கிறார்கள்” என்றாள். அவன் பெருமூச்சுடன் தானும் தணிந்தான். இருவரும் அவர்கள் சென்ற அந்த உச்சத்திலிருந்து இரண்டு வழிகளினூடாக மெல்ல இறங்கினார்கள். மீண்டும் அவன் பெருமூச்சுவிட்டபோது குந்தியும் நீள்மூச்செறிந்தாள். “நீள்பொழுதாகிறது. எனக்காக தேர் காத்திருக்கும்” என்று அவள் சொன்னாள்.

நிலைமீண்டு அவள் உள்ளம் அனைத்தையும் தொட்டுத்துழாவத் தொடங்கிவிட்டதை அவன் உணர்ந்தான். எண்ணியிராத கணத்தில் “நீ உன் தோழனுக்கு அளித்த சொல் என்ன?” என்றாள். “நான் கூறிவிட்டேன், அன்னையே” என்றான். “மிகச் சரியாக சொல். உன் தோழனுக்கு நீ அளித்த சொல் என்ன?” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “துரியோதனனுக்கு நீ என்ன சொல்லுறுதியை அளித்தாய்? இறுதியாக நீ அவனிடம் சொன்ன சொற்கள் என்ன?” என்றாள் குந்தி. கர்ணன் “அர்ஜுனனை களத்தில் வெல்வேன். களம்வென்று அவர் மும்முடிசூடி அஸ்தினபுரியின் அரியணையில் அமரும்படி செய்வேன் என்று வாளுருவி வஞ்சினம் உரைத்தேன்” என்றான்.

“நன்கு நோக்கு. அர்ஜுனனை கொல்வேன் என்று மட்டுமே நீ கூறியிருக்கிறாய்” என்று குந்தி சொன்னாள். கர்ணன் குழப்பத்துடன் “ஆம், ஆனால் அவரை அரியணை அமர்த்துவேன் என்று சொன்னபோது நான் எண்ணியது…” என தொடங்க அவள் கையமர்த்தி “நீ சொன்ன சொற்களுக்கு மட்டுமே பொறுப்பாவாய்” என்றாள். “ஏனென்றால் அத்தருணத்தில் அச்சொற்களை சொல்ல வைப்பவை தெய்வங்கள். சொற்களின் பொருளையும் அவையே வகுக்கின்றன.” கையை நீட்டி “நீ அர்ஜுனனை மட்டுமே கொல்வேன் என அவனிடம் சொல்லுறுதி அளித்தாய். ஆகவே பிற நால்வரையும் கொல்ல மாட்டேன் எனும் சொல்லை எனக்களி” என்றாள்.

“அன்னையே…” என்றான் கர்ணன். “இனி உன் தோழனின் பெயரைச் சொல்லி நான் கோருவதை நீ ஒழிய இயலாது. தோழனுக்கு நீ அர்ஜுனனை மட்டும்தான் கொல்வேன் என்று சொல்லளித்திருக்கிறாய் என நீயே சொன்னாய்” என்றாள் குந்தி. கர்ணன் திகைத்து உடலெங்கும் பரவிய பதற்றத்துடன் நிற்க நீட்டிய கையை அசைத்து “சொல்லுறுதி அளி… உன் உள்ளத்தில் சற்றேனும் என்னை கருதினாய் என்றால் உன் சொல் எழுக!” என்றாள். அவன் எண்ணமற்றவன்போல விழி வெறித்திருக்க “அன்னையே…” என்றான். அவள் அவன் கையைப்பற்றி தன் கைமேல் வைத்து “சொல்” என்றாள். அவன் கை நடுங்கியது. அது வெம்மைகொண்டிருந்தது. குந்தி “சொல்… உன் நாவால் சொல்” என்றாள். “ஆம், சொல்கிறேன்” என்றான். “அர்ஜுனனை அன்றி பிற நால்வரையும் எந்நிலையிலும் கொல்லமாட்டேன் என்று சொல்” என்றாள் குந்தி. அவன் “அர்ஜுனனை அன்றி பிற நால்வரையும் எந்நிலையிலும் கொல்லமாட்டேன்” என்றான்.

குந்தி அவன் கையை விடாது பற்றிக்கொண்டு “அர்ஜுனனை கொல்ல முயல்வாய் என்றுதான் நீ சொல்லளித்திருக்கிறாய்” என்றாள். அவன் சொல்ல வாயெடுப்பதற்குள் “அதை நீ கடைக்கொள்ளலாம்” என்றாள். அவன் கை நடுங்கிக்கொண்டிருந்தது. “நீ உன்னிடமிருக்கும் நாகபாசத்தால் அர்ஜுனனை கொல்ல முயல்வாய் அல்லவா?” என்றாள். “ஆம்” என்று கர்ணன் சொன்னான். “அதில் காண்டவக்காட்டிலிருந்து தப்பிய தட்சன் என்னும் நாகம் அவனுக்காக காத்திருக்கிறது என்றார்கள். என்றேனும் பழிதீர்க்கும் பொருட்டு உன் ஆவநாழியில் உறங்குகிறது அது” என்றாள் குந்தி. கர்ணன் “அதிலிருந்து அவன் தப்ப முடியாது… மூவுலகில் எங்கு சென்று ஒளிந்தாலும் அது அவனை தேடிவரும். எனென்றால் அது அவனே எஞ்சவிட்ட நஞ்சு” என்றான்.

“ஒவ்வொருவரும் அவ்வாறு எதையோ விதைக்கிறார்கள்” என்று குந்தி சொன்னாள். கர்ணன் “ஆம்” என்றான். அவள் சொல்லவருவதென்ன என அவன் எண்ண முயன்றான். ஆனால் அவளுடைய அண்மையும் அருகிலெழுந்த நீர்விழிகளும் அவனை உளம்குவிய முடியாமல் ஆக்கின. குந்தி “அதை நீ அவன்மீது ஏவாதொழிய இயலாது. ஆனால் உன் தோழனுக்களித்த சொல் அதை நீ அவன்மேல் ஏவுவாய் என்றுதான். அதை நீ மீள மீள ஏவுவாய் என்றல்ல” என்றாள் குந்தி. “நீ அர்ஜுனனை வெல்வாய் என்ற சொல்லின் பொருள் அந்த அம்பை ஏவுவாய் என்று மட்டுமே. ஏவுக! ஆனால் ஒருமுறை மட்டுமே ஏவுக!” என்று தொடர்ந்தாள். “இல்லை” என்று கர்ணன் சொல்ல அவள் இடைமறித்து “உன் தோழனுக்கு அளித்த சொல்லை மறுக்காமல் நீ எனக்களிக்கக் கூடியது இது ஒன்றே. ஒருமுறை மட்டும் அரவம்பை அர்ஜுனன் மீது ஏவுக! பிறிதொருமுறை அதை அவன் மீது ஏவாதொழிக!” என்றாள்.

“ஆனால் அது எவ்வாறு…” என்று கர்ணன் முனகலாகக் கேட்க “நீ அளித்த சொல்லை மீறாது எனக்களிக்கும் கொடை அது ஒன்றுதான். நீ அதை எனக்கு அளித்தாகவேண்டும். இதை ஒழிந்தாயெனில் நீ என்னை புறந்தள்ளுகிறாய் என்றே பொருள்” என்றாள் குந்தி. கர்ணன் சலிப்புடன் சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். குந்தி அவனை அணுகி “அதில் எவ்வகையிலும் சொல் மீறல் இல்லை. உன் சொல்லுக்கு நீ முழுமையாகவே இருக்கிறாய்” என்றாள். “அந்நாகபாசம் எந்நிலையிலும் எவரையும் தப்பவிடாது என்றால் அதை மறுமுறை செலுத்தவேண்டிய தேவைதான் என்ன?” கர்ணன் “அது வில்லில் இருந்து எழுந்தால் குறிபார்க்கப்பட்டவரை கொல்லாது மீளாது, ஐயமே தேவையில்லை” என்றான். “பிறகென்ன?” என்று குந்தி கேட்டாள். “நீ அதை அவன்மேல் ஏவினால் அவன் தப்ப முடியாது.”

“அவ்வாறெனில் அச்சொல்லுறுதி உங்களுக்கு எதற்காக?” என்றான் கர்ணன். “உனக்காகத்தான். முதல்முறை நீ அதை ஏவுவது உன் தோழனுக்கு நீ அளித்த சொல்லுக்காக. அப்பழி உன்னை மறுபிறவிகளில் தொடராது. ஆனால் நீ அதை மீண்டும் செலுத்தினால் உன் தனிவஞ்சம் அதில் இருக்கும். அதனூடாக அவன் இறந்தால் உனக்கு அவ்வுலகிலும் இடமிருக்காது. உன் கொடிவழியினரிலும் அப்பழி நீடிக்கும்.” கர்ணன் குழம்பிய விழிகளுடன் நோக்கினான். “நான் எண்ணுவது உன்னைப்பற்றி மட்டுமே” என்றாள் குந்தி. கர்ணன் பெருமூச்சுடன் “அவ்வாறே ஆகுக!” என்றான். “இது நீ எனக்களிக்கும் சொல்லுறுதி. அரவம்பை ஒருமுறைக்குமேல் நீ ஏவமாட்டாய்” என்றாள் குந்தி. “ஆம்” என்று கர்ணன் சொன்னான்.

குந்தி நீள்மூச்செறிந்து “நான் எண்ணிவந்தது நிகழவில்லை. ஆனால் எனக்கென இவ்வளவேனும் நீ உளம்கனிந்ததில் நிறைவுகொள்கிறேன்” என்றாள். கர்ணன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் “அன்னையே, நான் ஒன்று கேட்கலாமா?” என்றான். “சொல்” என்றாள். “நீங்கள் சொன்னீர்கள், நான் கல்மரம் என்று.” குந்தி சிலகணங்கள் அவனை நோக்கியபின் “சினத்தால் அவ்வாறு சொன்னேன், சினமில்லையேல் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் அது உண்மை” என்றாள். “என்னை நீங்கள் சந்தித்ததே இல்லை. ஆனால் மிகமிக அணுக்கமாக என்னை அறிந்திருக்கிறீர்கள்” என்று கர்ணன் சொன்னான். “அதிலென்ன வியப்பு? நான் உன்னை உளம்தொடர்ந்துகொண்டே இருந்தேன்” என்றாள் குந்தி.

“அதனால்தான் உங்கள் வெறுப்பும் அத்தனை கூர்கொண்டிருந்தது. அச்சொற்களிலிருந்து நான் இனிமேல் மீளவே முடியாதென எண்ணுகிறேன்” என்று கர்ணன் சொன்னான். “சொல்க, அன்னையே! நான் தன்மையநோக்கும் ஆணவமும் கொண்டவன் என்றீர்கள். முற்றிலும் உண்மை அது. நான் ஏன் அவ்வாறு இருக்கிறேன்?” குந்தி “உன் இயல்பு அது” என்றாள். “அன்னையே, என்னை முலையூட்டி வளர்த்த ராதையின் உள்ளம் என்னுடன் இல்லை. என்னை இன்றும் அணைத்துக்கொள்கிறார். அமுதூட்டுகிறார். ஆனால் அவர் என்னைத் தொட்டால், என் விழிகளை அண்மையில் அவர் விழிகள் சந்தித்தால் அறிகிறேன் அவர் அகன்றுவிட்டிருப்பதை” என்று கர்ணன் சொன்னான்.

“அது இயல்புதான். வைரம் எங்கும் முழுமையாக ஒட்டாது என்று சொல்வார்கள்” என்றாள் குந்தி. கர்ணன் “நான் ஏன் இப்படி ஒருதுளியும் பிறழாதவன் ஆனேன்? நீங்கள் என்னை வளர்க்காததனாலா?” என்றான். “நான் சில தருணங்களில் எண்ணிக்கொள்வதுண்டு. பாலைநிலத்து விதைகளைப்போல உடையாத ஓடு கொண்டவன் ஆகிவிட்டேன் என்று.” குந்தி “நீ எண்ணித் துயருறவேண்டும் என்றால் இவ்வழியே செல்லலாம். ஆனால் அது உண்மை அல்ல. உண்மை மிகச் சிக்கலானதாகவே இருந்தாகவேண்டும் என்பதில்லை. அது மிகமிக எளிதானதாகவே இருக்கலாம். உச்சநிலை மெய்மைகள் மிகமிக உலகியல்சார்ந்ததாக, மிக அன்றாடத்தன்மை கொண்டதாக இருக்கலாம். அது பெண்களுக்கே புரியும். ஆண்கள் அடுமனைக்குச் செல்லவே ஏழுமலை கொண்ட காட்டுப்பாதையை தெரிவுசெய்வார்கள் என நாங்கள் பெண்கள் சொல்லிக்கொள்வதுண்டு” என்றாள்.

“சொல்க, என் இயல்பு ஏன் இவ்வாறாயிற்று?” என்று கர்ணன் மீண்டும் கேட்டான். “ஏன் நீ அர்ஜுனனை உள்ளூர அருவருக்கிறாய்?” என்று குந்தி கேட்டாள். “அன்னையே…” என்றான் கர்ணன். “சொல்க” என்றாள் குந்தி. கர்ணன் “நான் அருவருக்கவில்லை” என்றான். “சரி, இவ்வண்ணம் கேட்கிறேன். நீ அவனுடன் களம்பொருதுகையில் எந்தச் சொல்லால் பழித்துரைத்தாய்?” கர்ணன் சற்று தயங்கி “பேடி என” என்றான். “ஆம், அதுவே உன் அருவருப்பு” என்றாள் குந்தி. அவன் தலைகுனிந்து “ஆம், அவனிடமிருக்கும் பெண்மையை நான் வெறுக்கிறேன்” என்றான். குந்தி “அந்த ஒவ்வாமையை இளைய யாதவனிடமும் அடைகிறாயா?” என்றாள். “ஆம், அதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை” என்றான்.

குந்தி “நீ துரியோதனனுடன் ஏன் அணுக்கமாக உணர்கிறாய்?” என்றாள். கர்ணன் “நான் இதை எவ்வண்ணம் சொல்வது?” என்றான். “அதையும் இவ்வாறே எண்ணுக! நீ துரியோதனனை எப்போது வெறுப்பாய்?” கர்ணன் “இப்படி கேட்டால்…” என்று சொல்ல “நீ வினவியமைக்கு விடை தேடுகிறேன். சொல்!” என்றாள். “மிக அரிதாகத்தான்” என்றான் கர்ணன். “ஒரு தருணத்தை நினைவுகூர்க!” என்றாள் குந்தி. “அவன் தன் மகள் கிருஷ்ணையை அருகணைத்து இன்சொல் பேசும் ஒரு தருணத்தில் அருகிருந்தேன். அப்போது அவன் முகத்திலும் மொழியிலும் கூடிவந்த மென்மையை என்னால் தாளமுடியவில்லை. என் ஒவ்வாமையை வெளிக்காட்டாது அறையிலிருந்து அகன்றேன்” என்றான் கர்ணன்.

“அதுவேதான். மைந்தா, நீ வெறுப்பது பெண்மையின் இயல்புகளை” என்று குந்தி சொன்னாள். “ஏனென்றால் நீ முழுமையான ஆண்மகன். உன் உடலே உன்னை அவ்வாறு ஆக்குகிறது. உன் தோள்களும் கைகளும் நெஞ்சும் முற்றிலும் நிகர்நிலை கொண்டவை. உன் ஒவ்வொரு உறுப்பும் பிழையிலா முழுமைகொண்டது. உன் ஆண்மைப்பேரெழில் உன் தெய்வத்தின் கொடை. உன்னை நோக்குபவர் அனைவரும் விழிமலைப்பது அதனால்தான். நீ களமெழுந்தால் படைப்பெருக்கு கொந்தளித்து எழுகிறது. ஒவ்வொரு ஆண்மகனும் ஆகவிழையும் வடிவம் நீ. பல்லாயிரம் பெண்கள் உன்னை நோக்கி நோக்கி விழிநிறைத்திருப்பார்கள். ஆனால் என்னைப்போல் எவரும் உன்னை கண்களால் வழிபட்டிருக்க மாட்டார்கள்.”

“ஆனால் அந்த முழுமை மானுடருக்குரியதல்ல” என்று குந்தி தொடர்ந்தாள். “அந்த முழுமையே ஒரு குறைதான். அது ஊசலின் ஒருதிசை ஆட்டம்போல. ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணுமென்றே மானுட உடலும் உள்ளமும் நிறைவுகொள்கின்றன. அர்ஜுனனிடம் இருக்கும் பெண்மையின் கூறுகளால்தான் அவன் பெண்களுக்கு அணுக்கமாகிறான். பெண் ஆணை அணுகுவது அவனிடமிருக்கும் பெண்மையினூடாகவே இயலும். அவனைப்போன்றவனே இளைய யாதவனும். நீ மூத்த கௌரவனால் கவரப்படுவது அவனும் உன்னைப்போல் வெறும் ஆண்மை என்பதனால்தான். உங்களுக்கு மறுதரப்புகள் தெரிவதில்லை. உள்ளத்தில் நெகிழ்வுகளும் பிசிறுகளும் இல்லை. நீங்கள் சிற்பங்களைப்போல மாறா முகமும் உணர்வும் கொண்டவர்கள்.”

“உன்னை பெண்கள் நோக்கி நோக்கி நெஞ்சழிவார்கள். அவர்கள் உன்னை வந்தடையவே இயலாது. எவ்வாறேனும் உன்னை அணுகுபவர்கள் உன்னால் எரித்தழிக்கப்படுவார்கள். கதிரவனுக்கும் மலர்களுக்குமான உறவைப்போல” என்று குந்தி சொன்னாள். கர்ணன் பெருமூச்சுவிட்டான். “நீ அவளை விரும்பியதுகூட அவளிலுள்ள ஆண்மையின் கூறைக் கண்டுதான்” என்றாள் குந்தி. “அன்னையே, நாம் அதைப்பற்றி இனிமேல் பேசவேண்டாமே” என்று கர்ணன் சொன்னான். “மெய்யாகவே இங்கு வருகையில் நான் எண்ணிவந்தது அதுதான். அவளும் நீயும் நிறைவடையக்கூடும் என. அவளை அடைந்தால் உனக்கு மூத்த கௌரவன் தேவைப்படமாட்டான் என்று” என்றாள் குந்தி. “வேண்டாம், அன்னையே” என்றான் கர்ணன். “சரி” என குந்தி சொன்னாள். கர்ணன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். ஆனால் அவன் முகம் தெளிவடைந்திருந்தது.

குந்தி எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன். இத்தனை பொழுதாகுமென நான் எண்ணவே இல்லை” என்றாள். கர்ணன் சிரித்தபடி “அன்னையே, பெண்கள் அணுகமுடியாதவனாகிய என்னை நீங்கள் எப்படி இத்தனை எளிதாக அணுகி வென்றீர்கள்?” என்றான். குந்தி நகைத்தபோது அவளுடைய வெண்பல்நிரை தெரிய அவள் இளமையின் அழகு கொண்டாள். “அது அவ்வாறுதான். ஆண்மைமுழுத்தவர்கள் பெரும்பாலும் அன்னையரின் குழவிகள்” என்றாள். கர்ணன் நகைத்து “விந்தைதான்” என்றான். “நீ என் மடியில் வளர்ந்திருந்தால் உலகையே வெல்லும் அடிமை ஒருவனை பெற்றவளாக இருந்திருப்பேன்” என்றாள். உளம்நெகிழ்ந்து அவன் தலையில் கைவைத்து “சிறப்புறுக! மேன்மை கொள்க!” என வாழ்த்தினாள்.

கர்ணன் அவள் கால்தொட்டு சென்னி சூடி “இங்கே என் வாழ்வு நிறைவடைகிறது, அன்னையே” என்றான். அவள் “ஏன் இப்படி நெடுமரம்போல் ஆனாய் என்று வியக்கிறேன்” என்று அவன் தோளை அறைந்தாள். அவன் வெடித்து நகைத்து “நானும் பல தருணங்களில் அதை எண்ணிக்கொள்வதுண்டு. பெரும்பாலான மானுடரை அவர்களின் தலைமுடியைக் கொண்டே அடையாளம் காண்கிறேன்” என்றான். குந்தி வாய்பொத்தி சிரித்து “கீழிருந்து நோக்கினால் உன் முகவாய் மிகத் தொலைவில் விந்தையாகத் தெரிகிறது” என்றாள். அவன் வெடித்துச் சிரிக்க அவளும் உடன் இணைந்து சிரித்தாள். பலமுறை முயன்றும் இருவராலும் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை. பின்னர் குந்தி கண்ணீர் வழிய ஆடைநுனியால் வாய்மூடி சிரிப்பை அடக்கி “நான் செல்லவேண்டும்” என்றாள். கர்ணன் சிரிப்பின் மூச்சிளைப்புடன் “இவ்வண்ணம் நகைத்து நெடுநாட்களாகின்றது” என்றான். “ஆம், நானும் சிரிப்பதேயில்லை” என்று அவள் சொன்னாள்.

அத்தருணத்தின் உளவிடுதலையையே சிரிப்பாகக் கொண்டோம் என கர்ணன் நினைத்துக்கொண்டான். பொருளில்லாத சிரிப்புதான் மெய்யாகவே சிரிப்பு போலும். அவள் மீண்டும் ஒருமுறை அவன் தலைமேல் கையை வைத்து வாழ்த்தியபின் “விடைகொள்கிறேன்” என்றாள். அவன் அவளுடன் நடந்தான். அவள் கை இயல்பாக நீண்டு அவன் கையை பற்றியது. அவள் கை அவனுடைய பெரிய விரல்களுக்குள் சிறுமியின் கை போலிருந்தது. கைகளைப் பற்றியபடி அவர்கள் குடிலை விட்டு வெளியே வந்தனர். “நான் விடைகொள்கிறேன்” என்று குந்தி மீண்டும் சொன்னாள். அவள் குரல் மிகத் தாழ்ந்திருந்தது. “சென்றுவருக, அன்னையே!” என்றான் கர்ணன்.

அவள் தன் கையை அவன் கைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு மெல்ல நடந்து சேடியை அடைந்தாள். சேடியிடம் ஒரு சொல் உரைத்துவிட்டு நடந்தாள். எத்தனை மெலிந்திருக்கிறாள், எவ்வளவு சோர்ந்திருக்கிறாள் என்று கர்ணன் எண்ணிக்கொண்டான். அவள் திரும்பி நோக்கியபோது அந்த இருளிலும் அவள் விழிகளை சந்திக்க முடிந்தது. மீண்டும் திரும்பி நோக்கியபோது நோக்கில்லாமலேயே விழிகளை சந்திக்க முடிந்தது. அவளுடைய வெண்ணிற உருவம் இருளில் மறைந்த பின்னரும் விழியில் சற்றுநேரம் எஞ்சியிருந்தது.

நூல் இருபது – கார்கடல் – 28

ele1குந்தி சற்றே அமைதியிழந்து “இந்த அறைக்குள் வேறு எவரேனும் இருக்கிறார்களா?” என்றாள். கர்ணன் “நீங்களே பார்க்கிறீர்கள், இங்கே நம்மைத் தவிர மானுடர் எவருமில்லை” என்றான். “எவரோ கேட்கிறார்கள். எவரோ என்னை நோக்குகிறார்கள். என் உட்புலன் பதற்றம் கொள்கிறது” என்று குந்தி சொன்னாள். கர்ணன் “இங்கிருந்து ஒரு சொல்லும் பிற மானுடர் செவிகளுக்குச் செல்லாது” என்றான்.

குந்தி “நான் என்ன சொல்லவேண்டுமோ அதை சொல்லிவிட்டேன், மைந்தா” என்றாள். “நன்று அரசி, உங்கள் விழிநீரை எனக்கு காட்டிவிட்டீர்கள். என் விழிநீரை உங்களுக்கல்ல, எவருக்கும் காட்டும் எண்ணம் எனக்கில்லை” என்று கர்ணன் சொன்னான். குந்தி “அவர்கள் ஐவரும் உனது தம்பியர். உன் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு கனிவென அதை நீயும் உணர்ந்திருப்பாய்” என்றாள். கர்ணன் “அவ்வுணர்ச்சிகளுக்கு எப்பொருளும் இல்லை” என்றான். குந்தி “உறவுகளுக்கு ஏதேனும் பொருள் உண்டு என்றால் அன்னையின் உறவுக்கும் உடன்பிறந்தார் உறவுக்கும் மட்டுமே. அவை மட்டுமே குருதியாலானவை. குருதி தெய்வங்களால் ஆளப்படுவது” என்றாள்.

கர்ணன் தலையை அசைத்தான். அவன் மேலும் ஏதோ சொல்ல நாவெடுப்பதை உணர்ந்து அதை தடுக்கும்பொருட்டு முந்திக்கொண்டு “நான் சொல்லவந்ததை முழுமையாக சொல்லிவிடுகிறேன்” என குந்தி தொடர்ந்தாள். “உன்னை என் மைந்தன் என நான் அறிவித்தால் என் குருதிமைந்தரில் நீயே முதல்வன். இந்திரப்பிரஸ்தத்தின் முடியுரிமை உனக்குரியது.” கர்ணன் அறியாமல் மெல்ல நகைக்க குந்தி மேலும் விசைகொண்ட சொற்களால் தொடர்ந்தாள் “குருகுலத்து மைந்தர் நூற்றைவருக்கும் நீ முதல்வனாவாய். எனவே அஸ்தினபுரிக்கும் நீயே அரசுரிமை கொண்டவன். உன் முடியுரிமையை யுதிஷ்டிரன் மறுக்கமாட்டான். எந்நிலையிலும் துரியோதனனும் தம்பியரும் உன்னை மறுக்கமாட்டார்கள். அவர்கள் ஏற்றார்கள் என்றால் குடித்தலைவர்களும் மறுசொல் உரைக்கவியலாது.”

“கௌரவரும் பாண்டவரும் இருபுறமும் துணைக்க நீ அஸ்தினபுரியின் அரியணையில் அமரமுடியும். துரியோதனனும் பீமனும் அர்ஜுனனும் உன் பெரும்படைத்தலைவர்களாக நிற்பார்கள் என்றால் விரல் சுட்டும் நிலமெல்லாம் உன்னுடையதாகும். பாரதவர்ஷத்தின் பேரரசனாக மும்முடி சூடி நீ அமர இயலும்” என்றாள் குந்தி. கர்ணன் சலிப்புடன் எழுந்துகொண்டு “நல்ல சொற்கள், அரசி. பிறிதொரு தருணத்திலென்றால் என் உள்ளம் எழுச்சிகொண்டிருக்கும். இந்நாள் வரை என் மீது பெய்யப்பட்ட சொற்கள் அனைத்துக்கும் இது உகந்த மறுமொழி. என் மைந்தர் மீதும் வரவிருக்கும் கொடிவழியினர் மீதும் அமரும் அனைத்துச் சிறுமைகளும் நீங்கும். ஆனால் என் உள்ளம் தணிந்து கிடக்கிறது. இச்சொற்களால் ஓர் அணுவிடைகூட என் அகம் அசைவுகொள்ளவில்லை” என்றான்.

“நான் முடிசூடி அமர விழைந்த அரியணைகள் பல. இன்று அவை அனைத்தும் எனக்கு பொருளிழந்து போய்விட்டிருக்கின்றன. போர்க்களத்திற்கு வரும் வீரன் வெளியே இருக்கும் அனைத்தும் பொருளிழப்பதை உணர்வான். அரசி, நான் குருக்ஷேத்ரத்திற்குள் நுழைவதற்கு முந்தைய கணம் என் விழைவுகளையும் கனவுகளையும் முற்றாகவே உதறிவிட்டேன்” என்று சொன்னபடி கர்ணன் சிற்றறைக்குள் நிலையழிந்து நடந்தான். அவன் தலை கூரையில் முட்டவே மீண்டும் அமர்ந்துகொண்டான். “இன்று நான் நாடுவதென்ன என்று எனக்கே தெரியவில்லை. அவைமதிப்பை நாடியதுண்டு. புகழை விழைந்ததுண்டு. வஞ்சங்களை எண்ணியதுண்டு. இன்று எங்கோ ஓர் இடத்தில் அனைத்தையும் அகலவிட்டு அமர்ந்துவிடவேண்டும் என்று மட்டுமே தோன்றுகிறது.” அவன் நகைத்து “போர்க்களம் ஒரு தவச்சாலை என்பார்கள். எனில் இது துறவே” என்றான்.

குந்தி மெல்ல முன்னகர்ந்தபோது அவள் தலையிலிருந்து ஆடை நழுவ முகம் விளக்கொளியில் துலங்கியது. சற்றே நீர்மை பரவிய விழிகளால் அவனை கூர்ந்து நோக்கியபடி “ஆயினும் ஓர் விழைவு எஞ்சியிருக்கும். அதை பெண்ணென நான் அருகிருந்து உணர்கிறேன். வசுஷேணா, நீ மும்முடி சூடி அரியணையில் அமர்ந்தால் உன்னருகே திரௌபதி அமர்ந்திருப்பாள்” என்றாள். கர்ணன் அறியாது எழுந்து பின் தன்னிலை உணர்ந்து மீண்டும் அமர்ந்து தலையை வெறுமனே அசைத்தான். குந்தி மேலும் குரல் தாழ்த்தி “மைந்தா, பெண் மீது கொள்ளும் வஞ்சமும் காமத்தின் பிறிதொரு வடிவே” என்றாள். “பத்தாண்டு முதிர்ந்த உணவு களிப்பூட்டும் மதுவாகிறது. நூறாண்டு முற்றிய மது நஞ்சாகிறது என்பார்கள். பெருவிழைவு கொல்லும் நஞ்சு. அடைந்து கடப்பதொன்றே அதை வெல்லும் வழி.”

“ஆம், ஆனால் அதற்கும் பொழுதுகடந்துவிட்டது, அரசி. இது அதற்கான தருணமும் அல்ல” என்று கர்ணன் சொன்னான். “ஏன்?” என்றாள் குந்தி. “இப்போரை இன்றிரவே நிறுத்த இயலும். நான் சென்று என் மைந்தரிடம் சொல்கிறேன். அங்கிருந்து தொழுத கையுடன் யுதிஷ்டிரனும் தம்பியரும் இங்கு வருவார்கள். துரோணரிடமும் கிருபரிடமும் உண்மையை உரைப்பார்கள். உடன் நானும் வருகிறேன். அஸ்தினபுரியின் அரசனிடமும் தம்பியரிடமும் நான் உரைக்கிறேன். பிதாமகர் பால்ஹிகர் முடி தொட்டெடுத்து உனக்கு சூட்டட்டும். நாளை புலரியில் இப்பெரும்போர் நின்றுவிட்டதென்று படைகளுக்கு அறிவிப்போம். எஞ்சியவர்களாவது தங்கள் மனைவியரிடமும் மைந்தரிடமும் சென்று சேரட்டும். தந்தையரும் மைந்தர் மீள்வதைக் கண்டு மகிழட்டும். போதும் இந்த அழிவு! இத்தனை குருதியை அளித்த பின்னராவது நமக்கு சற்று அறிவெஞ்சியதென்று உலகு அறியட்டும்.”

குந்தி அவ்வுணர்ச்சியை கண்டுகொண்டு “என் பொருட்டு அல்ல, என் மைந்தர் பொருட்டும் அல்ல, இப்போர் நின்றால் உயிர் பிழைக்கும் பல்லாயிரவர் பொருட்டு நீ என்னை எண்ணலாகாதா?” என்றாள். கர்ணன் “இங்கிருந்து உயிர் எஞ்சி மீண்டுசெல்பவர்கள் உயிரளித்த அனைவருக்கும் கடன்பட்டவர்கள். அக்கடனிலிருந்து அவர்கள் மீள இயலுமா என்ன?” என்றான். “அரசி, ஒரு போர் எந்த நஞ்சினால் தொடங்கப்பட்டதோ அது முற்றழியாமல் ஒருபோதும் முடிவடையாது. இப்போரை இன்று இவ்வண்ணம் சில சூழ்ச்சிகளினூடாக நிறுத்துவோமெனில் அந்நஞ்சு எஞ்சியிருக்கும். ஆழத்தில் புளித்து நுரைத்து பொங்கும். என்றேனும் மேலும் விசை கொண்ட ஒரு பெரும்போர் இங்கே எழும். இது உடலில் ஊறிய நஞ்சு. கட்டியென்று ஆகி பழுத்து சீழாகி உடைந்து வெளியேறட்டும். உடல் நலம்பெற அது ஒன்றே நாம் செய்யக்கூடியது.”

குந்தி “நீ போர்வெறி கொண்டிருக்கிறாய். இப்போரில் வென்று பெருவீரனென புகழ்பெறக்கூடும் என்று எண்ணுகிறாய். நோக்கு, இப்போரில் வென்றாலும் நீ சூதனே. எந்நிலையிலும் உனக்காக அஸ்வமேதமோ ராஜசூயமோ செய்ய அந்தணர் வரப்போவதில்லை. உன் அரசும் கொடிவழியினரும் என்றும் அஸ்தினபுரிக்கு அடிபணிந்தே வாழவேண்டியிருக்கும். உன் களமறத்தை பாடிநிறுத்துவார்கள் என்று எண்ணுகிறாய். அது நிகழப்போவதில்லை. அனைவரும் அறிவார், இப்புவியில் பிறந்த வீரர்களில் நீயே முதன்மையானவன் என்று. ஆனால் அதை சூதர் மட்டுமே பாடுவார்கள். சூதர் பாடல் என்பது அன்றாடம் அலைக்கும் காற்று. புலவர் சொல்லே என்றுமிருக்கும் மலைத்தொடர்” என்றாள்.

“நீ ஒருபோதும் புலவரால் பாடப்படமாட்டாய். சூத்திரனும் சூதனும் அசுரனும் அரக்கனும் நிஷாதனும் கிராதனும் முதன்மை வீரர்கள் என்று அமைவதை ஒருபோதும் காவியகர்த்தர்கள் விரும்புவதில்லை. நீ ஆற்றும் அனைத்து வீரமும், நீ கொள்ளும் அனைத்து வெற்றியும் வெறும் சொற்களென இருமுறை செவிகொள்ளப்படும். மூன்றாம் தலைமுறையில் முற்றழியும். இன்றுவரை சூத்திரன் என்று பிறந்து காவியத்தலைவனான எவர் உளர்? இனி என்று ஒரு சூத்திரன் காவியத்தலைவனாகப் போகிறான்? இயலாது. என் சொல்லில் மட்டுமே உன் பெரும்புகழும் உள்ளது. அதை உணர்க!” என்றாள்.

“அதையும் நான் அறிவேன். அரசி, புகழையும் நான் நாடவில்லை. இக்களத்திற்கு வெளியே என்னைப்பற்றி ஒரு சொல் எஞ்சவில்லையெனினும் எவ்விழப்பும் இல்லை என்று என் நெஞ்சைத்தொட்டு இன்று உங்களிடம் சொல்கிறேன்” என்றான் கர்ணன். “பின் எதற்காக? ஏன் இந்த வீண் உறுதி?” என்று குந்தி சீற்றத்துடன் கேட்டாள். “அரசி, ஆயிரம் சல்லடைகளால் அரிக்கப்பட்டு எஞ்சுவதே களத்தில் நம்முடன் இருக்கிறது. பீஷ்ம பிதாமகர் குலநெறி என வந்தடைந்தார். நான் அதை செஞ்சோற்றுக்கடன் என்று உரைப்பேன்” என்றான் கர்ணன்.

“பாலையில் வழி தவறி தன் தசைகளையும் குருதியையும் ஜடரை அன்னைக்கு பலியென அளித்து இறுதி சித்தத்துளி உலர்ந்தழியும் கணத்தில் நின்றிக்கும் ஒருவனுக்கு அளிக்கப்படும் ஒரு குவளை நீருக்கு நிகராகாது மூன்று தெய்வங்களும் அளிக்கும் விண்ணுலகு. அவன்முன் விண்ணவனோ மூவிழியனோ படைத்தவனோகூட ஒரு குவளை நீராக அன்றி வேறு வடிவில் எழ இயலாது” என கர்ணன் சொன்னான். “அந்த நீரென எனக்கு முன் வந்து நின்றவன் என் தோழன். அவன் எனக்கு அளித்தது என்ன என்று என்னையன்றி எவரிடமும் என்னால் சொல்லி புரியவைக்க இயலவில்லை. என் துணைவியர், மைந்தர் எவரிடமும் அதை நான் சொல்லி புரியவைக்க முடியவில்லை.”

“நீ சிறுமைப்படுத்தப்பட்டபோது உன் தோள்தழுவி நின்று உன்னை காத்தான். உன்னை அரசன் என்றாக்கினான். ஆனால் அதை ஒரு போர்சூழ்ச்சியென்றே செய்திருக்கக்கூடும். என் மைந்தனின் விற்திறன் கண்டு அஞ்சி இணையான வில்லவன் ஒருவனுக்காக காத்துக்கொண்டிருந்தவன் அவன். உன்னைக் கண்டதும் அச்சம் நீங்கி வந்து அணைத்துக்கொண்டான். உன்னை அருகிருத்துகையிலேயே பாரதவர்ஷத்தை வெல்ல முடியும் என்று கண்டுகொண்டான். உன்னை வெல்வதற்கு மிக எளிய வழி அத்தருணத்தில் நீ விழையும் ஒரு எளிய ஒப்புதலை உனக்களிப்பது மட்டுமே என்று அறிந்தவன் அவன். ஒரு கைப்பிடி சோற்றை பலியாக அளித்து தெய்வத்தை உடன்நிறுத்துவதுபோல் தன்னுடன் நிறுத்திக்கொண்டான்” என்றாள் குந்தி.

எழுந்து அவனருகே வந்து குனிந்து “அவன் உன்னை முதன்மையாகக் கருதினான் எனில் அரசரவையிலும் வேள்விகளிலும் நீ சிறுமைப்படுத்தப்பட்டபோது அவன் குரல் ஏன் எழவில்லை? உன்னை படைவிலக்கம் செய்து பீஷ்மர் ஆணையிட்டபோது அனைத்தையும்விட மேலென உனக்காக ஏன் அவன் பேசவில்லை? அப்போது அவன் உள்ளத்தில் ஓங்கி நின்றவை எவை? அவற்றுக்காகவே அவன் இன்று போரிடுகிறான். தன் முடியும் நாடும் புகழுமன்றி பிறிதொன்றும் அவன் எண்ணத்தில் இல்லை. அவற்றை அடைவதற்கான படைக்கருவி என மட்டுமே அவன் உன்னை கண்டிருக்கிறான். இதை உணரவில்லை எனில் நீ அறிவிலி அல்ல. ஆணவத்தால் அறிவை இழந்த கீழ்மகன்” என்றாள் குந்தி.

“என் தோழனின் பிழைகளை கணக்கெடுப்பது என் இயல்பல்ல. பிற அனைவரையும்விட அவனை நான் அறிவேன். மண்விழைவு மிகுந்தவன். அதைவிட தன் தம்பியர் மேல் பற்று மிகுந்தவன். அரசி, என்றேனும் தம்பியர் நூற்றுவரில் எவருக்கேனும் நான் தீங்கிழைத்திருந்தால் அஸ்தினபுரியின் அரசன் என்ன செய்திருப்பான்? ஒருகணமும் தயங்காமல் வாளேந்தி என்னை கொல்ல வந்திருப்பான். என் குருதி கொண்டே அடங்கியிருப்பான். அதை நான் அறியேனா என்ன? இப்புவியில் அவன் உள்ளத்தில் எனக்கு எத்தனை படிகளில் இடம் என்று எந்நிலையிலும் கணக்கெடுக்க மாட்டேன். அன்பை அளவிடுபவர் ஒருபோதும் அன்பை அறிவதில்லை.”

“அவனுக்கு நான் யார் என்பதல்ல, எனக்கு அவன் யார் என்பதே நான் எண்ணுவது. எனக்கு அவனே முதன்மையானவன். என் உடன்பிறந்தாரைவிட, அன்னையைவிட, என் துணைவியரையும்விட, மைந்தரையும்விட, என் குடித்தெய்வங்களையும்விட அவனே எனக்கு வேண்டியவன். அவனை கைவிடும்படி என் தந்தைவடிவான கதிரவனே வந்து கோரினாலும் ஒப்பமாட்டேன். என் கவசத்தையும் குண்டலங்களையும் குருதிவார பிடுங்கி எறியவே துணிவேன். அவன் பொருட்டு களத்தில் உயிர் விடுவதே இப்பிறவியில் நான் ஆற்றக்கூடிய முதற்கடன்” என்றான் கர்ணன்.

குந்தி சீற்றத்துடன் சொன்னாள் “இப்போது நீ பேசுவது ஷத்ரியனின் குரலில் அல்ல. மண்ணையும் முடியையும் வான்சிறப்பையும் குடிப்பெருக்கையும் விழைபவனே ஷத்ரியன். அவற்றை பிற அனைத்தையும்விட முதன்மையாகக் கருதுபவன். தெய்வங்களையும் மூதாதையரையும் நெறிகளையும் அவன் பேணுவதுகூட அந்நான்கு விழைவுகளின் பொருட்டே. அன்னமிட்ட கையை முத்தமிட்டு அடிபணிபவன் சூத்திரன். ஏவிய கையை இறையெனக் கொண்டாகவேண்டிய தெய்வ ஆணை அவனுக்கே.” இகழ்ச்சியால் வாய் கோணலாக “சூதன் வளர்ப்பினால் உன் உள்ளத்தில் புகுந்த எண்ணம் அது. அதை உதறி உன் குருதிக்கு மீள்க! அதுவே உனக்கு சிறப்பளிக்கும்” என்றாள்.

கர்ணன் புன்னகைத்து “உங்கள் உள்ளம் எவ்வகையில் எழுமென்று இச்சொற்களினூடாக அறிந்தேன். அரசி, நான் சூதனாகிய அதிரதனையும் சூதன் மனைவியாகிய ராதையையுமே என் தாயும் தந்தையும் என்று கருதுகிறேன். என்னில் ஓடும் சூத்திர இயல்பை நான் உதறுவது அவர்களிருவரையும் உதறுவதற்கு நிகர். எந்நிலையிலும் அவர்களை மறுத்து ஒரு சொல் என் உள்ளத்திலோ நாவிலோ எழாதென்று அறிக! நான் அருந்திய முலைப்பால் அவருடையது. நீங்கள் எனக்களித்த குருதி கசந்து கசந்து அளித்தது. அவர் அளித்த முலைப்பால் இனித்து இனித்து ஊட்டப்பட்டது. அதுவே என் குருதியில் ஓடுகிறது. என் நாவில் சொற்களாகவும் என் உள்ளத்தில் எண்ணங்களாகவும் அதுவே நிறைகிறது.”

வெறுப்புடன் “சூதன்மகன் என்னும் தகுதியையே தலைக்கொள்கிறாயா?” என்று குந்தி கேட்டாள். “ஆம், எந்த அரங்கிலும் நீங்கள் உங்கள் மகன் என்று என்னை சொல்லலாம். நீங்கள் சொல்லிமுடித்த மறுகணமே நான் எழுந்து நான் சூதன்மகனென வளர்ந்தவன் என்பேன். சூதனுக்கு என் மைந்தர்கள் நீர்க்கடன் அளிப்பார்கள். என் கொடிவழியினரின் மூதாதையர் நிரையில் அவர் பெயரும் அவர் தந்தையர் பெயருமே இருக்கும். அரசி, அச்சூதன் மனைவியையே ஒவ்வொரு முறை வில்தொட்டு எடுக்கையிலும் எண்ணி உளத்தில் வணங்குகிறேன்” என்றான் கர்ணன்.

குந்தி மூச்சிரைப்புடன், சீற்றம் கொண்ட விழிகளில் நீர்நிறைய அவனை நோக்கி அமர்ந்திருந்தாள். “சொல்லுங்கள் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி, உங்களுக்கிணையான அரியணையில் ராதையை உங்களால் அமரச்செய்ய இயலுமென்றால் சொல்க! உங்களை அன்னையென்று நானும் அவையில் ஏற்றுக்கொள்கிறேன். அன்றி எந்த அவையிலும் நான் உங்களை அன்னையென்று சொல்லப் போவதில்லை” என்றான் கர்ணன். குந்தி மெய் தளர்ந்து “இதை நான் எதிர்பார்க்கவில்லை. நீ என்னை அன்னையென்று இரு கை விரித்து ஏற்பாய் என்று எண்ணினேன். பெருங்கொடையென்று என் சொற்களைக் கொள்வாய் என்று நம்பினேன்” என்றாள்.

“அரசி, இரு கை விரித்து உங்களை ஏற்கிறேன். பெருங்கொடை என்றே உங்கள் சொற்களை கொள்கிறேன். நீங்கள் இங்கு வருவதற்கு முன் எவரேனும் என்னிடம் கேட்டிருந்தால் இவ்வாழ்க்கையில் நான் முதன்மையாக நாடுவது அதையே என்று சொல்லியிருக்கவும் கூடும். ஆனால் என் உள்ளம் அதை நாடவில்லை என அது சொல்லப்பட்ட பின்னரே உணர்கிறேன். இத்தருணத்தில் என்னை மீளமீளப் பொருத்தித்தான் என்னை நானே கண்டடைகிறேன்” என்றான் கர்ணன். “எவையெல்லாம் என்னை ஆக்கினவோ அவையனைத்தையும் உதறி உங்கள் மைந்தன் மட்டுமே என்று ஆவது என்னால் இயலாது. அவ்வண்ணம் ஆவேன் எனில் நான் நெறியற்றவன். என் ஆசிரியர்களுக்கும் மூத்தோருக்கும் தெய்வங்களுக்கும் உகக்காதவன். அவ்வண்ணம் ஒரு மைந்தனைக்கொண்டு நீங்கள் இயற்றப்போவதென்ன?”

“என் பொருட்டு நீ படையொழிய முடியுமா, அதை மட்டும் சொல்” என்று குந்தி கேட்டாள். “அதை மட்டுமே நாடி வந்தீர்கள் எனில் மாற்றொரு சொல்லில்லை. இயலாது. என் தோழனின் படைக்கலமாக மட்டுமே என்னை காண்கிறேன். வில்லேந்தி போரில் வென்று அவனை பாரதவர்ஷத்தின் மும்முடி சூட்டி அமரச்செய்வது மட்டுமே என் கடன். பிறிதொரு எண்ணம் எழப்போவதில்லை” என்று கர்ணன் சொன்னான். குந்தி நீள்மூச்சுடன் எழப்போனாள். கர்ணன் மெல்ல எழுந்து அவளருகே வந்து முழந்தாளிட்டு அமர்ந்தான். “உங்களிடம் நான் கோருவதொன்றே. உங்கள் காலில் என் தலையை வைக்கிறேன். உளம் நிறைந்து உங்கள் கைகளை என் தலையில் வைத்து வாழ்த்துக!” என்றான்.

குந்தி வெறுமை நிறைந்த கண்களால் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். “அன்னையே, என் இளமையில் நான் எண்ணித் துயருற்ற ஒன்றுண்டு. என்னைக் கருவுற்றபோது என் அன்னை எத்தனை முறை என்னை கசந்திருப்பாள், எப்படியெல்லாம் என்னைத் துறந்து சொல்பெருக்கியிருப்பாள், நான் பிறந்தபோது நோயுற்ற உடல் உறுப்பொன்றை வெட்டி அகற்றுவதுபோல் என்னை அகற்றியிருப்பாள் என்று. அவ்வெறுப்பை எண்ண எண்ண என் உடலும் உள்ளமும் இருப்பும் கசக்கும். விழிநீர் வடித்து இருளுக்குள் தனித்து படுத்திருக்கிறேன். அத்துயர் என் எண்ணங்களிலிருந்து அகன்று என் ஆழத்திலெங்கோ ஒருதுளி நஞ்சென எஞ்சியுள்ளது. இன்று நீங்கள் என்னை உளமுவந்து வாழ்த்துவீர்கள் எனில் அத்துயரிலிருந்து விடுபடுவேன்” என்றான் கர்ணன்.

குந்தி தன் இரு கைகளையும் அவன் தலையில் வைத்து “புகழ் கொள்க! சிறப்புறுக!” என்று வாழ்த்தினாள். கர்ணன் கண்கள் நிறைய முகம் தூக்கி “இது போதும். இப்புவியில் இதற்கப்பால் நான் விழைவது பிறிதொன்றுமில்லை” என்றான். குந்தி “நான் உன்னிலிருந்து விழைவன சில உள்ளன” என்றாள். “சொல்லுங்கள், அன்னையே” என்றான் கர்ணன். “நீ போரிலிருந்து ஒழியலாகாதா? இறுதியாக நான் கேட்பது அதையே” என்றாள். “இல்லை அன்னையே, என்னால் இயலாது” என்று கர்ணன் சொன்னான். “எனில் என் மைந்தர் ஐவரையும் உன் அம்புகள் கொல்லலாகாது என்னும் உறுதியையாவது எனக்குக் கொடு” என்று அவள் கேட்டாள்.

சிறுமியருக்குரிய வீம்புடன் சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்து புன்னகைத்து கர்ணன் “அன்னையே, இப்போதும் என் மைந்தர் ஐவரென்றே சொன்னீர்கள்” என்றான். “ஆம், நீ என் மைந்தனென்னும் நிலையைத் துறந்து இங்கு நின்றிருக்கிறாய். உன் அன்னையென்று அச்சூதமகளை சொன்னாய்” என்று குந்தி சொன்னாள். “ஆம், நான் மறுத்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் என் தோழனின்பொருட்டு இங்கு களம் வந்து நின்றிருக்கிறேன். அவர்களின் முதன்மை எதிரிகள் தங்கள் மைந்தர் ஐவர். அவர்களை கொல்லமாட்டேன் என்னும் சொல்லை நான் அளித்தால் அச்சொல்லை துறந்தேன் என்று மட்டுமே பொருள். அது என்னால் இயலாது.”

“அன்னையென நீ எனக்கு அளிப்பது ஒன்றுமே இல்லையா?” என்றாள் குந்தி. “கேளுங்கள், அன்னையே. இப்போருக்குப் பின் உங்கள் களமுற்றத்தில் வந்து சங்கறுத்து விழுவதென்றால் அவ்வாறே ஆகுக! நான் என்னிலிருக்கும் எதையும் உங்களுக்காக அளிப்பேன். ஆனால் இதை அளிக்க இயலாது. ஏனெனில் ஏற்கெனவே இதை என் தோழனுக்கு அளித்துவிட்டேன். இதை அளிக்கவேண்டியவன் அவன். நீங்கள் விழைந்தால் நாளை அவனிடம் சென்று இவ்வண்ணம் என் அன்னையாகிய நீங்கள் கோருகிறீர்கள் என்று சொல்லி அவன் அளித்தால் உங்களுக்கு அளிக்கிறேன்” என்றான் கர்ணன்.

கூரிய குரலில் “வேண்டாம்” என்று குந்தி சொன்னாள். “என் மைந்தரை நீ கொல்லலாகாது. இதையன்றி வேறெதையும் நான் விரும்பவில்லை. இதை அளிக்கவில்லை எனில் நான் கோரியதை அளிக்காது திருப்பி அனுப்பினாய் என்று மட்டுமே கொள்வேன். ஆம், உன்னை நான் கருவில் கசந்தேன். பின்னர் ஒவ்வொரு கணமும் இனித்தினித்து எண்ணிக்கொண்டிருந்தேன். தெய்வங்கள் அறிக, உன்னை எண்ணாது ஒரு நாள் கடந்து சென்றதில்லை! உன் முகத்தை கனவில் காணாது நான் ஒருகாலைகூட விழித்துக்கொண்டதே இல்லை” என்று குந்தி சொன்னாள். “ஆனால் இன்று இங்கிருந்து கடந்தால் உன்னை வெறுத்தபடியேதான் செல்வேன். இனி ஒருதுளியும் இனிமை எஞ்சாத கசப்பாகவே நீ என்னுள் எஞ்சுவாய்.” அவள் குரல் சீற்றத்துடன் எழுந்தது. “இந்தப் படி கடந்து செல்கையில் உன்மேல் தீச்சொல்லிடுவேன். உன்னைப் பழித்து உரைத்த பின்னரே இங்கிருந்து நீங்குவேன்.”

கர்ணன் துயருடன் அவள் கையைப்பற்ற தன் கையை நீட்டினான். அந்தக் கையை பின்னால் இழுத்தபடி “வீண்சொல் எதுவும் எனக்குத் தேவையில்லை. உறுதியென ஏதேனுமிருந்தால் சொல்” என்றாள். “அன்னையே, நான் நீங்கள் கோருவதை அளிக்க இயலாது. வேண்டுமெனில் ஒன்று செய்கிறேன். நீங்கள் இங்கிருந்து நீங்குவதற்குள் இங்கேயே இறந்துவிழுகிறேன். உங்கள் பழிச்சொல் பெறுவதிலிருந்து அவ்வண்ணம் தப்பிக்கிறேன்” என்றான் கர்ணன். “இங்கே நீ இறந்து விழுந்தாலும் என் பழிச்சொல்லிலிருந்து தப்ப மாட்டாய். உன் குருதியைத் தொட்டு சொல்வேன். உன்னை வெறுக்கிறேன், உன் வருபிறவிகளிலும் நீ என் வெறுப்புக்குரியவன், உன் குடிகளும் கொடிவழியும் பழிச்சொல் சுமக்கட்டும் என்று” என்று குந்தி சொன்னாள்.

திகைப்புடன் கர்ணன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் “இதுநாள்வரை பழியும் தீச்சொல்லும் ஏளனமும் சூடியே என் வாழ்க்கை சென்றது. இனியும் அவ்வாறே எனில் அது நிகழ்க! வருபிறவிகளிலும் அதுவே என் ஊழ் எனில் அவ்வாறே ஆகுக! எனக்கு வேறு வழியில்லை, அன்னையே” என்றான். “நீ நான் சொல்வதை இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. என் உள்ளத்து அனலை நீ உணரவில்லை” என்றாள் குந்தி. “என் மைந்தர் இறப்பதைப் பற்றி மட்டும் நான் கவலை கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் தமையன் கையால் உயிர்விடுவதைப் பற்றியே கருதுகிறேன். அப்பெரும்பழியை என் மைந்தனாக நீ சூடுவதைப்பற்றி அஞ்சுகிறேன்.”

கர்ணன் “அதை முற்றுணர்கிறேன், அன்னையே. உங்கள் சொல் என்னையும் என் கொடிவழியினரையும் கொடுந்தெய்வம் எனச் சூழ்ந்து தொடருமென்று அறிவேன். ஆயினும் நான் இதையே சொல்கிறேன், இப்பழியும் இழிவும் நான் என் தோழனுக்கு அளிக்கும் கொடை எனில் நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றான். பின்னர் புன்னகைத்து “உயிர் அளிப்பது தற்கொடைகளில் உச்சம் என்பர். அதற்கும் மேல் புகழை அளிப்பது. அதற்கும் மேல் பெருங்கொடை என ஒன்றுண்டு என்று இப்போது அறிந்தேன். வீடுபேற்றை, கொடிவழியினரின் வாழ்க்கையை அளிப்பது” என்றான்.

“பெறுவதில் நான் நிறைவுற்றதில்லை. எனவே கொடுப்பதில் அதை கண்டுகொண்டேன். எதையெல்லாமோ உவந்து கொடுத்திருக்கிறேன். இதையும் கொடுக்க என்னால் இயலுமா என்று என்னிடம் கேட்கின்றன போலும் தெய்வங்கள். ஆமென்று சொல்வதொன்றே என் முன் உள்ள வழி” என்றான் கர்ணன். “என்னிடம் இனி எஞ்சுவதொன்றுமில்லை, அன்னையே. ஒருவேளை இதுவே என் வீடுபேறு போலும்.”

குந்தி எழுந்து சலிப்புடன் தலையசைத்து “நீ என்னை புறக்கணிக்கிறாய் என்றே கொள்கிறேன். இப்புவியில் என்னைவிட பிற அனைவரும் மேல் என்று என்னிடம் சொல்கிறாய்” என்றாள். அவள் விழிகளில் நீர் நிறைந்தது. “அதை சொல்ல முழு உரிமை உனக்கு உண்டு. நான் அதை கேட்கவேண்டியவளும்கூட” என்றாள். கர்ணன் “இவ்வண்ணம் உணர்கிறீர்கள் எனில் நான் என்ன சொல்வது, அன்னையே?” என்றான். குந்தி “ஆனால் இத்தருணம் நன்றே. இந்த ஒருநாழிகைப் பொழுதில் நான் நூறு இருளுலகத் தண்டனைகளை அடைந்தேன். நான் செய்த அனைத்தையும் நிகர் செய்துவிட்டேன்” என்றாள்.

அவள் நடக்க கர்ணன் தொய்ந்த தோள்களும் தளர்ந்த நடையுமாக உடன் சென்றான். “நலம் சூழ்க!” என அவனை வாழ்த்திவிட்டு குந்தி குடில் கதவை திறந்தாள்.

நூல் இருபது – கார்கடல் – 27

ele1குந்தி நிழல் என ஓசையின்றி அணுகிவந்தாள். கர்ணன் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசிக்கு நல்வரவு. இப்பொழுதில் இவ்வெளியேனின் தனிக்குடிலுக்கு தாங்கள் வந்தது முறையல்ல எனினும் என் குடிக்கும் எனக்கும் நற்பெயர் என்று உணர்கிறேன். தங்கள் வரவின் அருள் எனக்கு அமையட்டும்” என்றான். குந்தி தன் வலக்கையைத் தூக்கி அவனை வாழ்த்தி “நலம் சூழ்க!” என்றாள். தணிந்த குரலில் “நான் உன்னை பார்க்கவேண்டுமென்று வந்தேன்” என்று சொன்னாள்.

அந்தப் பொருளிலாச் சொல் அவள் உளம் குழம்பியிருப்பதை காட்டியது. கர்ணன் “அது என் நல்லூழ். வருக, அரசி!” என்று உள்ளே அழைத்துச் சென்றான். விழிகளால் ஏவலனிடம் பிற எவரும் நுழையலாகாது என்று ஆணையிட்ட பின் கதவை மூடி “அமர்க, பேரரசி!” என்று சிறுபீடத்தை காட்டினான். “இது பாடி வீடு. இங்கு பீடங்கள் ஏதுமில்லை, பலபயனுக்குரிய இந்தப் பெட்டியே பீடமென்றாகிறது” என்றான். குந்தி மறுமொழி சொல்லாமல் பெட்டி மேல் அமர்ந்தாள். கர்ணன் சற்று அப்பால் ஒரு சிறிய பெட்டியை இழுத்து அதன் மேல் அமர்ந்து முழங்கால்களில் கையூன்றி விரல்களைக் கோத்த பின் “நான் அஸ்தினபுரியில் பலமுறை தங்களை பார்த்துளேன். இப்போது அகவை முதிர்ந்து மெலிந்து உடல் சிறுத்திருக்கிறீர்கள். ஆயினும் அன்றுணர்ந்த அதே சொல் ஒன்றை இப்போதும் என் உள்ளத்தில் உணர்கிறேன்” என்றான்.

குந்தி புன்னகைத்தாள். கர்ணன் “அரசகுடியினர் பெருங்கவிஞன் ஒருவனின் கவிதைச்சொல்போல சொல்லில் செறிவுகொண்டவர்கள் என்று ஒரு சூதர்சொல் உண்டு. தாங்களோ ஓர் ஊழ்கநுண்சொல்லின் ஆழம் கொண்டவர்கள். இப்போது அச்சொல் மேலும் ஒலியின்மை நோக்கி சென்றுள்ளது” என்றான். குந்தி பெருமூச்சுவிட்டு “நான் உன்னிடம் சிலவற்றை தனியாக பேசவேண்டுமென்று வந்தேன்” என்றாள்.

கர்ணன் குந்தியை மீண்டும் வணங்கி “சொல்லுங்கள், அரசி. அடியவனால் தங்களுக்கு ஆகவேண்டியது என்ன? எதுவாயினும் தலைகொடுக்கிறேன்” என்றான். “நான் உன்னிடம் சிலவற்றை பேச விழைந்தேன்” என்று மீண்டும் சொன்ன குந்தி அவ்வுணர்விலிருந்து மெல்ல வழுவி தயங்கி பின்னடைந்தாள். நேரடியாக தான் எண்ணியதை சொல்ல இயலாதென்று உணர்ந்து “நான் என் மைந்தன் அர்ஜுனனின் மருத்துவநிலையிலிருந்து வருகிறேன்” என்றாள். தற்செயலாக என சரியான இடத்தில் தொடங்கிவிட்டதை உணர்ந்து அவள் உளம் கூர்கொண்டது.

கர்ணன் அச்சொற்களால் உளம் அணைந்து, தயங்கிய குரலில் “எவ்வண்ணம் இருக்கிறார்? அவர் உடல்நிலை…” என்று சொல்ல குந்தி “மீண்டுவிடுவான். நாளை காலையில் எழுவான். ஒருவேளை நாளை மறுநாள் களம் வரவும் கூடும்” என்றாள். கர்ணன் முகம் மலர்ந்து “நன்று” என்றான். “நான் நிலைகுலைந்திருந்தேன், அரசி. இன்று சற்று மிகையாகவே மதுவருந்தியிருக்கிறேன். என் நிலைகுலைவு எதனால் என்று இப்போதுதான் அறிகிறேன். என் கணை பட்டு இளைய பாண்டவர் களத்தில் விழுந்தார். வீரனாக அது என் வெற்றி. ஆனால் ஆழத்திலிருந்து அதை நான் விரும்பவில்லை.”

“அது ஏன் என்று தெரியுமா?” என்று குந்தி நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். கர்ணன் தன் அனைத்து எண்ணங்களையும் அசைவறச் செய்து வெற்றுவிழிகளால் அவளை நோக்கியபடி “அறியேன். எவ்வண்ணமோ அவரே நான் என்று உணர்கிறேன். என் தோற்றமும் அவர் தோற்றமும் ஒன்றுபோல் இருப்பதாக சூதர் சொல்வதுண்டு. தசைச்சிற்பத்தால் அல்ல, அசைவாலோ நோக்காலோ, அப்பாலுள்ள பிறிதொன்றினாலோ நான் அவரே என்று நானும் உணர்ந்துள்ளேன். அதனாலாக இருக்கலாம்” என்றான். குந்தி “ஆம், உன் தோற்றமும் அவன் தோற்றமும் ஒன்றே” என்றாள். மீண்டும் குரல் தாழ்த்தி “அது ஏன் என்று தெரியுமா?” என்று கேட்டாள்.

கர்ணன் “அதை தாங்கள் அறிந்திருக்கக்கூடும்” என்றான். “நீயும் அறிவாய். உள்ளாழத்தில் அதை அறியாத யாரும் அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ இருக்க வாய்ப்பில்லை” என்றாள் குந்தி. கர்ணன் “பேரரசி, மெய்மையை சற்றே அறியாதோரும் இல்லை. வாழ்வில் அதை முழுதுணர்ந்தோரும் இல்லை என்பார்கள்” என்று சொன்னான். அதிலிருந்த மெல்லிய நகையாட்டு அத்தருணத்தின் கூர்மையை தவிர்க்கும்பொருட்டு அவனிடம் எழுந்தது என்று உணர்ந்த குந்தி “உன்னிடம் மெய்மை பற்றிச் சொல்லாட நான் இங்கு வரவில்லை” என கடுமையாகச் சொன்னாள். “நாமிருவருமே நன்கறிந்த ஒன்றை மீண்டும் உன்னிடம் அழுத்திச் சொல்லவே வந்தேன். அவன் உன் இளையோன். நீ என் மைந்தன். என் வயிற்றில் என் குருதியில் ஊறி பிறந்தவன்” என்றாள்.

கர்ணன் சிலகணங்கள் அசைவற்று விழிநட்டு அவளை நோக்கியபின் இமைதாழ்த்தி விரல்களை மாற்றி கோத்துக்கொண்டான். அவன் இரு தோள்களிலும் தசைகள் இறுகி அசைந்து நெகிழ்ந்தன. நீள்மூச்சுடன் அவன் “ஆம்” என்றான். அவள் அவன் மேலும் ஏதேனும் சொல்லக்கூடும் என காத்தாள். அவன் விழிகள் சரிந்தே இருந்தன. முகம் சிலையென அமைந்திருந்தது. அவள் அவன் தலையை கைநீட்டி தொட விழைந்தாள். ஆனால் கைகள் எழவில்லை. தொண்டையைச் செருமி குரலை எழுப்பி “நான் உன்னை ஈன்றேன்” என்றாள். அதை ஒட்டி மேலும் சொல்லெடுக்க முடியாமல் பின்னடைந்து “உன் அன்னை உன்னை யமுனையில் கண்டெடுத்தாள் என அறிந்திருப்பாய்” என்றாள்.

“ஆம்” என்று கர்ணன் சொன்னான். “கன்னிச்சோலையில் நான் வாழ்ந்த நாளில் உன்னை பெற்றேன். பழிக்கு அஞ்சி உன்னை கைவிட்டேன்.” அவன் விழிதூக்கி அவளை நோக்க “ஆம், என் குடியில் அது பழி சேர்ப்பதல்ல. ஆனால் நான் ஷத்ரியக்குடி ஒன்றுக்கு மணம்முடித்துச் செல்ல விழைவுகொண்டிருந்தேன். பாரதவர்ஷத்தை ஆள திட்டமிட்டிருந்தேன்” என்று குந்தி சொன்னாள். “என் விழைவால் உன்னைத் துறந்தேன். அதை என்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒளித்ததில்லை. ஆகவே உன்னிடமும் மறைக்கவேண்டியதில்லை. நான் பிறப்பால் யாதவப்பெண் எனினும் அகத்தால் ஷத்ரியக்குடியினள். விழைவே ஷத்ரியர்களை உருவாக்கும் விசை.”

“பின்னரும் மும்முறை உன்னை என்னிடமிருந்து நான் விலக்கினேன். சதசிருங்கத்திலிருந்து மீள்கையில் உன்னை என் மைந்தன் என நான் அறிவித்திருக்கலாம். உன்னை அங்கநாட்டிலிருந்து கொண்டுவந்து துரோணரின் மாணவனாக ஆக்கியபோது அதை செய்திருக்கலாம். நீ வில்லுடன் பயிற்சிக்களத்தில் எழுந்தபோது கூறியிருக்கலாம். ஒவ்வொருமுறையும் என்னைத் தடுத்தது என் விழைவே. நான் முடிசூடவேண்டும் என்னும் பெருவிழைவு. என் மைந்தர் அரசாளவேண்டும் என்னும் இயல்பான எண்ணம்…” என்றாள் குந்தி.

“நீ என் மைந்தன் என நான் முன்னரே அறிவித்திருந்தால் விரும்பாதன நிகழ்ந்திருக்கலாம். ஏற்கெனவே என் யாதவகுடிப் பிறப்பை அஸ்தினபுரியின் ஷத்ரியர் விரும்பவில்லை. உன்னை முதல் மைந்தன் என்று சொல்லியிருந்தால் அதன்பொருட்டே நானும் என் மைந்தரும் விலக்கப்பட்டிருப்போம். பாண்டுவின் மைந்தன் என்பதே யுதிஷ்டிரனின் தகுதியாக இன்றும் உள்ளது” என்றாள் குந்தி. “அத்துடன் நான் பீஷ்மரை அஞ்சிக்கொண்டிருந்தேன். அவர் உள்ளம் குருதித்தூய்மையில், குடிச்சிறப்பில் ஊன்றியது. அவர் ஒருபோதும் உன்னை ஏற்கமாட்டார் என அறிந்திருந்தேன்.”

கர்ணன் திகைப்புடன் விழிதூக்கி “அவரா?” என்றான். “ஆம், அவரே. அவரை நான் நன்கறிவேன். அவருக்கு என்மேல் ஒருபோதும் மதிப்பு இருந்ததில்லை. அவர் உன்னையும் குடி சொல்லிப் பழித்தார்” என்றாள் குந்தி. கர்ணன் சில கணங்கள் அவளை உற்று நோக்கியபின் புன்னகை செய்தான். “ஏன் புன்னகைக்கிறாய்?” என்று குந்தி கேட்டாள். “இல்லை” என்றான். “சொல்” என அவள் சுருங்கிய விழிகளுடன் சொன்னாள். “ஒன்றுமில்லை, அரசி…” என்றான் கர்ணன்.

குந்தி சற்றுநேரம் அவனை நோக்கிக்கொண்டிருந்துவிட்டு “நீ என் மைந்தன் என எப்போதேனும் அகத்தால் உணர்ந்திருக்கிறாயா?” என்றாள். கர்ணன் வலிகொண்டவன்போல் முகம் சுளித்து ஏறிட்டு நோக்கி “ஆம்” என்றான். “என்னை பார்க்க விழைந்துள்ளாயா? என்னை உள்ளத்தால் அணுகியிருக்கிறாயா?” என்று அவள் ஆவலுடன் சற்றே முன்நகர்ந்து கேட்டாள். “ஆம்” என்று அவன் சொன்னான். அவன் விழிகள் சரிந்தன. அவள் அவன் துயில்கொள்வதாகவே எண்ணினாள். “பலமுறை நான் உங்களை கனவில் கண்டிருக்கிறேன்.”

குந்தி பரபரப்புடன் “எத்தகைய கனவுகள்? சொல்க, எப்படிப்பட்டவை அவை?” என்றாள். கர்ணன் துயிலில் என உடல் மெல்ல ஆட, தாழ்ந்த குரலில் “பல கனவுகள். இறுதியாக வந்த கனவில் நீங்கள் ஒரு சிறிய உப்பரிகையில் இருளுக்குள் நின்று விடிவெள்ளியை நோக்கிக்கொண்டிருக்கிறீர்கள். கையில் மயிலிறகு விசிறியை வைத்திருக்கிறீர்கள். விடிவெள்ளியை ஒரு முகில் மறைத்தபோது நீங்கள் விம்மி அழுதீர்கள். நான் அந்த ஒலியைக் கேட்டு உளம் அதிர்ந்தேன். மிகமிக அமைதியில் கேட்கும் விம்மலோசைபோல உளமுலைப்பது பிறிதொன்றில்லை. எந்தப் பேரோலத்தைவிடவும் விண்ணைச் சென்றடைவது அது. நான் நடந்து அருகே வந்து உங்கள் தோளை தொட்டேன்” என்றான்.

“ஆம்! ஆம்!” என சொல்லி குந்தி எழுந்துகொண்டாள். “இது நிகழ்ந்தது. உபப்பிலாவ்யத்தின் உப்பரிகையில் நான் அவ்வாறு நின்றிருந்தேன். விடிவெள்ளி நோக்கி ஏங்கினேன். எனக்குப் பின்னால் காலடியோசை கேட்பதுபோலத் தோன்றி திரும்பி நோக்கினேன்.” அவள் கைநீட்டி அவன் முழங்காலை தொட்டாள். “மைந்தா, நீ என் அருகே நின்றிருக்கிறாய். எப்போதும் எனக்கு மிக அணுக்கமாக இருந்திருக்கிறாய்.” கர்ணன் “அஸ்தினபுரியில் நான் பெரும்பாலும் உங்கள் கால்களையே நோக்கியிருக்கிறேன். அவை என் கனவில் எப்போதும் வந்துகொண்டிருக்கும்” என்றான். “தென்னகக் காட்டில் அலைகையில் நான் இறையுரு என எந்தையை எண்ணுவேன். அன்னை என உங்கள் கால்களையே எண்ணுவேன். இரு வெண்கற்களை எடுத்துவைத்து உங்கள் கால்கள் என எண்ணி மலரிட்டு வணங்குவேன்.”

குந்தி உதடுகளை அழுத்திக்கொண்டு மெல்ல அமர்ந்தாள். அவள் கழுத்துத் தசைகள் அதிர்ந்தன. மெல்லிய விசும்பலோசையுடன் அவள் அழுதாள். அதை அறியாதவனாக கர்ணன் தொடர்ந்தான். “மீளமீள வரும் கனவுகள் சில உண்டு. பிறிதொரு உப்பரிகையில் நின்று நீங்கள் உங்கள் முலைப்பாலைப் பிழிந்து வெளியே ஊற்றுகிறீர்கள். கீழே ஒரு நாய் என நின்று நான் அந்த இனிய அமுதை நா நீட்டிச் சுவைத்து உண்கிறேன். அக்கனவின் பொருள் என்ன என்று எனக்கு புரிந்ததே இல்லை. அச்சமூட்டும் பிறிதொரு கனவில் நான் ஒரு சுனைக்கு அடியில் மூழ்கி விளையாடிக்கொண்டிருக்கிறேன். குழவியாக இருக்கிறது என் உடல். நீங்கள் நீருக்குமேல் வாளுடன் வருவதைக் கண்டு அன்னையே, வேண்டாம் வேண்டாம் என கூச்சலிடுகிறேன். என் அலறல்கள் குமிழிகளாக எழுந்து வெடிக்கின்றன.”

“போதும்” என்று குந்தி சொன்னாள். அதை கேளாதவனாக கர்ணன் தொடர்ந்தான். “நீங்கள் கொடுஞ்சிரிப்புடன் வாளால் என்னை வெட்டினீர்கள். துண்டுதுண்டாக மாறி அந்தச் சுனையின் வெய்யநீரில் நான் மிதக்கிறேன். குருதிக்குமிழிகளுடன் அந்தச் சுனை கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.” குந்தி “போதும்” என உரக்கச் சொன்னாள். கர்ணன் திடுக்கிட்டவன்போல் அவளை நோக்கினான். அவள் மூச்சிரைக்க தலைகுனிந்தாள். தலையாடை சரிந்து முகத்தை மூடியது. அவன் “உங்களைப்பற்றிய கனவுகள், அரசி” என்றான். “பிறிதொருமுறை நீங்கள் ஒரு குடிலில் எவருடனோ பேசிக்கொண்டிருந்தீர்கள். நான் சோலையில் நடந்து அங்கே வந்தேன். குடிலுக்குள் இருந்து நீங்கள் என் காலடியோசை கேட்டு வெளிவந்தபோது முகம் வெளிறி அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தீர்கள். குடிலுக்குள்…”

குந்தி சீற்றத்துடன் “நிறுத்து, மூடா!” என்றாள். அவன் தன் சொற்களை தானே உணர்ந்தவனாக திகைத்து விழிமலைத்து நோக்கினான். அவளுடைய மூச்சிளைப்பின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. நெடுநேரம் என காலம் நீண்டது. அவள் மெல்ல மீண்டு “ஆம், நான் அஞ்சிக்கொண்டிருந்தேன்” என்றாள். “எல்லா அன்னையரும் மூத்த மகனை அஞ்சுகிறார்கள்” என்று மேலும் தாழ்ந்த குரலில் சொல்லிக்கொண்டாள். எழுந்து சென்றுவிட விழைபவள்போல் ஓர் அசைவு அவளில் உருவாகியது. அதை உள்ளத்தால் வென்று அமர்ந்து “நான் உன்னிடம் அரசியல் பேச வந்தேன்” என்றாள். அச்சொல்லால் அவனும் நிலைமீண்டு “சொல்க, அரசி!” என்றான்.

“நீ என் மைந்தன் என என்னால் எளிதில் நிறுவ முடியும். அச்சேடியின் மகள் மார்த்திகாவதியில் இன்னும் உயிருடன் இருக்கிறாள். உன்னை இளமையிலேயே அறிந்த என் மூத்தவர் வசுதேவர் மதுராவில் இருக்கிறார். நான் எந்த அவையிலும் நீ என் மகன் எனச் சொல்வேன். அதற்கான உளத்துணிவை அடைந்துவிட்டேன்” என்றாள் குந்தி. கர்ணன் விழிதூக்கி “சான்றுகள் தேவைப்படுமா என்ன?” என்றான். “ஆம், தேவையில்லை. எந்த அவையிலும் நீ வந்து நின்றாலே போதும். அவைதோறும் உன்னை சூதன்மகனென்றும் இழிபிறப்பாளனென்றும் சொன்ன அத்தனை பேரும் அதை உணர்ந்ததனால்தான் அவ்வாறு சொன்னார்கள். ஷத்ரியனென நீ அவை நின்றால் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களும் உனக்கு முடிதாழ்த்த வேண்டியிருக்குமென்று அறியாத எவரும் இங்கில்லை” என்றாள் குந்தி.

கர்ணன் கைவீசி விலக்கி “அதை இனி நாம் பேசவேண்டியதில்லை, அரசி” என்றான். “அன்னை என்று அழைக்கமாட்டாயா?” என்று அவள் கேட்டாள். “அறைக்குள் அவ்வாறு அழைத்தென்ன பயன்? இருளுக்குள், ஆழத்திற்குள் அவ்வாறு நூறு முறை அழைத்திருக்கிறேன். அதை நா ஒலிக்க வேண்டுமெனில் உலகு அதை ஏற்க வேண்டும்” என்றான் கர்ணன். “ஏற்க வைக்கிறேன், பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் கூடிய அவையில் எழுந்து சொல்கிறேன் நீ என் மைந்தன் என்று. நீ என் மைந்தனாவது என் ஒரு சொல்லில்தான் உள்ளது. நான் அச்சொல்லை உரைப்பேனா என்று இத்தனை ஆண்டுகள் அவர்கள் அஞ்சியிருந்தார்கள். அதை நான் உரைத்துவிட்டால் தெய்வங்களும் அதை மறுக்க இயலாது” என்றாள் குந்தி.

அவளை கூர்ந்து நோக்கியபடி “என் தந்தை எவரென கேட்பார்கள்” என்றான் கர்ணன். அவள் அவன் முகத்தில் இருந்த மெல்லிய விலக்கத்தை, அதன் விளைவான ஏளனத்தை கண்டுகொள்ளவில்லை. அவள் வேறெங்கோ உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்தாள். “சூரியன்! விண்ணிலிருந்து கதிர்பெருக்கென இறங்கி சுனையொன்றில் எழுந்தவன். நான் நியோகமுறைப்படி உன்னை பெற்றேன். ஷத்ரிய நெறிப்படி அதற்கு அப்பால் எதுவும் கேட்கப்படலாகாது. யாதவப் பெண்ணிடம் அதையும் கேட்கலாகாது” என்று உரக்கச் சொன்னாள்.

கர்ணன் சட்டென்று சலிப்புகொண்டவன் ஆனான். கைவீசி அப்பேச்சை விலக்கி “இப்போது இந்தக் களத்தில் இதை நாம் ஏன் பேசுகிறோம்? நீங்கள் என்னை உங்கள் மைந்தன் என்று அறிவிக்கவேண்டிய பல அவைகள் கடந்துசென்றுவிட்டன, அரசி” என்றான். அவள் அவன் உணர்ச்சிகளையே அறியவில்லை. உள எழுச்சியுடன் “ஆம், நான் அறிவேன். ஒவ்வொரு அவையிலும் இவன் என் மைந்தன், இவன் பாண்டவர்களில் மூத்தோன் என்று எழுந்து கூச்சலிடும் கணத்திற்கு முந்தைய கணத்தில் என்னை அனைத்துச் சரடுகளாலும் கட்டி நிறுத்தி இக்கணம் வரை வந்துள்ளேன். அது என் விழைவால். அச்சத்தால். அதைத்தான் உன்னிடம் இப்போது சொன்னேன். அதைக் கடந்து என்னால் எழ இயலவில்லை. அது ஊழென்றோ தெய்வங்களின் விழைவென்றோ எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்” என்றாள்.

“ஆனால் இத்தருணத்தில் அதை நான் உரைக்காவிடில் ஒவ்வொன்றும் என் கைகளிலிருந்து அகலும். தீராப் பழி கொண்டு நான் இருளில் அணைவேன். அன்னையென இனி நான் இப்புவியில் ஏதேனும் செய்வதற்கு எஞ்சியிருக்கிறதென்றால் அது இது மட்டுமே. அதை உணர்ந்துதான் இங்கு வந்தேன்” என்று குந்தி சொன்னாள். கர்ணன் புன்னகையுடன் நோக்கி “சொல்லவந்ததை அடைந்துவிட்டீர்கள், அரசி” என்றான். குந்தியும் தன் உணர்வலைகளிலிருந்து மீண்டாள். அவன் விழிகளிலிருந்த நகைப்பின் ஒளியைக் கண்டு உள்ளம் நிலையழிந்தாலும் சொற்களை திரட்டிக்கொண்டாள். “கர்ணா, உன் கையால் என் மைந்தர் களத்தில் உயிர் துறப்பார்கள். நாளை புலர்ந்து போர் எழுகையில் என் மைந்தர் உன் முன் வெறும்பலியாடுகளென நிற்க வேண்டியிருக்கும். இந்த ஒரு நாள் போரிலேயே இதை அனைவரும் உணர்ந்துகொண்டிருப்பார்கள்” என்றாள்.

“ஆம், அதை உணர்ந்துகொண்ட ஒருவரால் நீங்கள் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறீர்கள்” என்று கர்ணன் சொன்னான். அவள் தயங்காமல் “உண்மை. சற்று முன் இளைய யாதவன் என்னை பார்க்க வந்தான். அர்ஜுனனின் நிலையை அறியும்பொருட்டு துயிலாமல் செய்திக்காக காத்திருந்தேன். நாழிகைக்கு ஒருமுறை புறா வந்து அவன் நிலை அவ்வண்ணமே தொடர்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவனே வந்திருப்பதை ஏவலன் வந்து சொன்னான். அவனே வந்துள்ளான் என்று கேட்டதும் முதல் எண்ணமாக என்னுள் எழுந்தது அமங்கலக் கணிப்பு ஒன்றுதான். என் உடல் நடுங்கியது. விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. இளைய யாதவன் துயர்கொண்டுள்ளானா என்றுதான் ஏவலனிடம் கேட்டேன். இல்லை அரசி, வழக்கம்போல்தான் இருக்கிறார் என்றான். எப்போதும் அவன் வழக்கம்போலத்தான் இருப்பான் என்னும் எண்ணம் வந்தது. என் மைந்தனின் பொருட்டு அவன் ஒருகணம்கூட துயர்கொள்ளமாட்டான் என எண்ணியதும் அவன்மேல் கடும் காழ்ப்பை அடைந்தேன். அவனைக் கண்டு நஞ்சு கக்க வேண்டுமென உள்ளம் எழுந்தது” என்றாள்.

“அரண்மனைக்குள் வர இளைய யாதவன் விழையவில்லை. அரண்மனைக்குள் இருந்து செய்தி வெளியேறிவிடும் என அஞ்சினான். அரண்மனைக்குப் பின்னாலிருந்த புரவிச்சாலையில் என்னை அழைத்து அங்கே நின்று என்னிடம் உரையாடினான். என் மைந்தரைக் காக்க எனக்கிருக்கும் இறுதி வழி இது ஒன்றே என்றான். ஆற்றவேண்டிய அனைத்தையும் வகுத்தளித்தான். இங்கு என்னுருவில் வந்திருப்பது அவன்தான் என்றே கொள்க! அவன் எதற்கும் அஞ்சாதவன் என அறிவேன். அவனே என்னைத் தேடிவந்து அதை சொன்னபோதுதான் என் மைந்தர் இருக்கும் நிலைமையை நான் நன்குணர்ந்தேன்” என்றாள் குந்தி.

மெல்லிய கசப்புடன் “அவருடைய சூழ்ச்சிக்கு அளவே இல்லை” என்றான் கர்ணன். குந்தி “எனக்கு நிகராகவே என் மைந்தர் மேல் பற்றுகொண்டவன் அவன். நேரில் அவனைப் பார்த்து பேசியபோது குரலும் விழிகளும் இயல்பாகவே இருப்பதைத்தான் உணர்ந்தேன். ஆனால் அவனிடமிருந்து ஆழ்ந்த துயர் ஒன்று எழுந்ததை என் அகம் உணர்ந்தது. அது என் உள்ளத்தை உருக்கியது. அவனை தந்தை என்றல்ல அன்னை என்றே எண்ணினேன். தன் திறனையும் அறிவையும் நம்பும் தருக்கை முற்றிலும் இழந்து வெறும் பேதை என்று அவன் நின்றிருப்பதாக உணர்ந்தேன்” என்றாள்.

எங்களுக்குள் ஒருபோதும் சொல்லென எடுத்திராத ஒன்று இது. உன் பெயரை அவன் என்னிடம் ஒருபோதும் சொன்னதில்லை. நானும் நாமறந்தும் உன்னைப்பற்றி அவனிடம் பேசியதில்லை. ஆனால் அவன் அறிவான் என நான் அறிந்திருந்தேன். அவன் தந்தைக்குத் தெரியும் என்பதனால் அல்ல. அவன் அறியாத ஒன்று இப்புவியில் இருக்காது என்பதனால். மைந்தன் என்றும் தெய்வமென்றும் ஓருருவே முன் நின்று விளையாடுகையில் அதனுடன் இணையாக விளையாட காதல்கொண்ட கன்னியரால்தான் இயலும். அன்னையர் உள்ளம் பேதலித்துவிடும். நானோ தேவகியோ யசோதையோ அவனுடன் அணுகியும் அகன்றும் நிலைக்காத ஊசலொன்றில்தான் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறோம்.

அவன் அப்போதுகூட என்னை விழிதொட்டுப் பேச நாணினான். இருளை நோக்கிக்கொண்டு என்னிடம் சொன்னான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி, இத்தருணத்தில் பாண்டவர்களைக் காக்க உங்களால்தான் இயலும். அவர்களை அழிக்கும் பேராற்றல் கொண்டவன் உங்கள் முதல் மைந்தன். அவனிடம் செல்க! அவன் தம்பியரின் உயிரை இரந்து பெறுக! அவன் கடமை அவர்களைக் காப்பது என்று உணர்த்துக! இத்தருணத்தில் வேறு வழியே இல்லை.” நான் அவன் சொற்களை அப்போது முழுமையாக உள்வாங்கவில்லை. “அவன் அளிக்காமல் உங்கள் மைந்தருக்கு வாழ்க்கையில்லை என்று சொல்லுங்கள், அத்தை” என்று அவன் சொன்னான்.

கால் தளர்ந்து நான் கொட்டடியின் சட்டத்தின்மேல் அமர்ந்துவிட்டேன். எங்கள் நடுவே காற்று குளிராக சுழன்றடித்துக்கொண்டிருந்தது. பலமுறை சொல்லெடுக்க நெஞ்சுகூட்டினேன் என்றாலும் என்னால் இயலவில்லை. பின்னர் ஒருகணத்தில் என் உள்ளத்தில் மிகப் பெரிய எடையின்மையை உணர்ந்தேன். அனைத்து வாயில்களையும் திறந்திட்டு வெட்டவெளியில் நின்றிருப்பதுபோல. எவரிடமேனும் அவ்வாறு எல்லையழிந்து நின்றிருப்பேன் எனில் அது அவனிடம் அல்லவா? இப்புவியில் என்னை அணுக்கமாக அறிந்த பிறன் யார்?

அவனை நானறியேன். அவனை எவரும் அறியமாட்டார். ஆனால் அவன் அனைவரையும் அறிவான். அனைவரையும் அறிந்த ஒருவனால் எவர்மேலும் சினமோ ஏளனமோ கொள்ள இயலாது. எவரையும் அவர்களின் பிழைகளின் பொருட்டோ தீமைகளின் பொருட்டோ பழிக்க இயலாது. அவன் காலடியில் விழுந்துவிடவேண்டும் என எண்ணினேன். அவனைத் தழுவி கண்ணீர்விடவேண்டுமென உளமெழுந்தேன். ஆனால் நான் அன்னை. அவன் என் முன் மழலை பேசிய மைந்தன். நெஞ்சைப் பற்றியபடி உடல்குறுக்கி அமர்ந்திருப்பதொன்றே என்னால் இயன்றது.

அவன் என்னை நோக்காமல் இருளில் விழி செலுத்தியபடி “அரசி, வருநாள் போரில் பாண்டவர் இறப்பாரெனில் இப்புவியில் எனக்கும் இயற்றுவதற்கு ஒன்றும் எஞ்சியிருக்காது” என்றான். “இவ்விரவில் நான் உணர்ந்தேன், என் தோழனின் உயிரன்றி இப்புவியில் என்னை நிறுத்தும் விசை பிறிதொன்றில்லை என்று. அது உங்கள் கையில் உள்ளது. இதற்கு மேலும் ஆணவம் கொண்டு ஒழிந்தீர்கள் எனில் உங்களை நீங்களே நீரும் அன்னமும் வந்து சேரா காரிருளில் செலுத்துகிறீர்கள். உங்கள் மைந்தரை நிறைவுறாத உயிர்களென மூச்சுவெளியில் அலைய வைக்கிறீர்கள்” என்றான்.

உணர்வுகளில்லாத குரல். ஆனால் நான் கதறி அழுதபடி அங்கேயே அமர்ந்துவிட்டேன். “இல்லை மைந்தா, இதோ செல்கிறேன். சென்று அவன் கால்களில் விழுகிறேன் என் மைந்தனின் உயிரை அளிக்கும்படி கோருகிறேன்” என்றேன். அங்கிருந்தே கிளம்பி நேரடியாகவே இங்கே வந்தேன். உன்னைக் கண்டு என் கோரிக்கையை முன்வைக்க. இதில் எந்தக் கரவும் நுணுக்கமும் இல்லை. இது ஓர் அன்னையின் எளிய விண்ணப்பம் மட்டுமே.

“கோர உங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது, அரசி. அங்கன் என்றோ, அரசன் என்றோ அல்ல, உங்கள் மைந்தனென்று சொல்லி அதை சொல்லுங்கள்” என்றான் கர்ணன்.

நூல் இருபது – கார்கடல் – 26

ele1இரவுக்குரிய ஆடைகளை கர்ணனுக்கு அணிவித்துவிட்டு தலைவணங்கி ஏவலன் மெதுவாக பின்னடி வைத்துச் சென்று குடிலின் கதவை மூடினான். கர்ணன் கைகளை மேலே நீட்டமுடியாதபடி அந்த மரக்குடிலின் அறை உயரம் குறைவானதாக இருந்தது. கொடிகளை இழுத்துக்கட்டி உருவாக்கப்பட்ட நீண்ட மஞ்சத்தில் உடலை அமைத்து அமர்ந்து கைகளை நீட்டி உடலை வளைத்தான். சிலகணங்கள் அந்த நாளை முழுமையாக நினைவில் மீட்டியபடி அமர்ந்திருந்த பின் பெருமூச்சுடன் படுத்து கால்களை நீட்டி கைகளை மார்புடன் கோத்துக்கொண்டான். மீண்டும் பெருமூச்சுவிட்டு உடலை எளிதாக்கினான்.

துயில்கையில் எப்போதும் இரு கைகளையும் மார்பிலமைத்து நேர்நிலையில் மல்லாந்து படுப்பதே அவன் வழக்கம். இரவில் ஒருமுறைகூட அவன் புரள்வதில்லை. அவன் மூச்சொலி நாகச்சீறல் என சீராக எழுந்துகொண்டிருக்கும். துயிலின் நடுவே பிற ஓசைகள் எதுவும் அவனிடமிருந்து எழுவதில்லை. அவன் துணைவியர் அவன் துயில்கிறானா ஊழ்கத்திலிருக்கிறானா என்ற ஐயத்தை அடைவதுண்டு. அரிதாக இரவில் அவனைத் தொட்டு எழுப்புகையில் அவர்கள் அவன் மிக அப்பாலெங்கிருந்தோ எழுந்து வருவதுபோல் உணர்வார்கள். முதல் சிலகணங்கள் அவன் எவரையும் அடையாளம் காண்பதில்லை. முதல் வினா “எவர்?” என்றே இருக்கும். படம் எடுத்த நாகத்தின் சீறல் என அது ஒலிக்கும்.

மஞ்சத்தறையில் அவனுடன் அரசியர் துயில்வதில்லை. அவர்கள் அவனுடன் இருக்கையில்கூட சற்று விழிமயங்கி விழித்துக்கொண்டால் அவ்வறைக்குள் பிறிதொருவரும் இருக்கும் உணர்வை அடைவார்கள். முதல்நாள் உடன்மஞ்சம் கொண்ட விருஷாலி நள்ளிரவில் எழுந்து அமர்ந்து உடல் நடுங்கி அறைக்குள் விழியோட்டினாள். அவளுடைய அரைக்கனவில் அவ்வறைக்குள் பேருடல் கொண்ட நாகம் ஒன்று சுற்றி வளைத்து தன் உடல்மேலேயே தலை வைத்து இமையா விழிகளுடன் இருப்பதை கண்டாள். அது மெய்யென்றே அவள் உள்ளம் அறிவுறுத்த உளறலுடன் எழுந்தமர்ந்தாள். மூச்சை இழுத்துவிட்டு தன்னை மெல்லமெல்ல மீட்டுத் தொகுத்துக்கொண்டாள்.

நெஞ்சை நீவியபடி அறைக்குள் மெல்ல நடந்து பார்த்தாள். சாளரத்தைத் திறந்து வெளியே நோக்கினாள். பின்னர் கதவை மெல்லத் திறந்து வெளியே காவல் நின்ற ஏவல்பெண்டிடம் “இங்கு ஏதேனும் அசைவு தெரிந்ததா?” என்றாள். அவள் வெறித்த விழிகளுடன் “இல்லையே, அரசி” என்றாள். கதவை மூடி மீண்டும் மஞ்சத்தில் வந்து அமர்ந்த விருஷாலி பதற்றத்துடன் தன் ஆடையை கசக்கி முடிந்து அவிழ்த்து விரல்கள் நிலையழிந்து கொண்டிருக்க அலைபாயும் விழிகளுடன் அமர்ந்திருந்தாள். நோக்குவன அனைத்தும் நாகமென நெளிந்தன. அனைத்துப் பொருளையும் நெளியச்செய்யும் ஒன்றால் அழியாது நெளியவைக்கப்பட்டவையா நாகங்கள்? நெளிவென எழுந்த தெய்வமொன்றின் புலனறிவடிவங்களா அவை?

மறுநாள் கர்ணனிடம் அவள் அதை சொன்னாள். அப்போது அவள் அச்சம் மறைந்திருந்தது. பகலொளியில் நாகங்கள் அனைத்திலிருந்தும் மறைந்துவிட்டிருந்தன. அப்போது ஒரு நாகம் கண்முன் எழுந்தால்கூட அதை கோலென்றோ கயிறென்றோ மூங்கிற்குழலென்றோதான் எண்ணத்தோன்றும். அவன் புன்னகையுடன் “என் அன்னையும் இதை சொன்னதுண்டு, என் அருகே பிறிதொரு இருப்பை அவர் உணர்வதாக. அதனால்தான்போலும், நினைவறிந்த நாள் முதல் எப்போதும் நான் தனியாகவே துயின்று வருகிறேன்” என்றான். “மெய்யாகவே ஒரு நாகம் உங்களுடன் இருக்கிறதா?” என்று அவள் கேட்டாள்.

கர்ணன் சிலகணங்களுக்குப் பின் “அது உளமயக்கா என்று நான் அறியேன். ஆனால் பலமுறை என்னைத் தொடர்ந்து வரும் பெரிய நாகம் ஒன்றை கண்டிருக்கிறேன். நான் பிறக்கும்போதே அதுவும் உடன் வந்தது என்று அன்னை சொல்வதுண்டு” என்றான். விருஷாலி அச்சத்துடன் விழியோட்டி “உங்கள் அறைக்குள் நான் துயிலமாட்டேன். அதை நேரில் ஒருமுறை பார்த்துவிட்டேன் என்றால் உங்களை அணுகவே என்னால் இயலாது” என்றாள். அதன்பின் ஒவ்வொரு முறையும் அவனுடன் கூடிவிட்டு அவள் மெல்ல கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

சுப்ரியை மட்டும் சிலநாள் அவனுடன் அறைக்குள் பிறிதொரு மஞ்சத்தில் துயின்றாள். அவளும் ஒருநாள் அந்த மாநாகத்தை பார்த்தாள். அவள் தன் கையிலிருந்த தலையணைகளையும் அருகிருந்த நீர்க்குடுவையையும் எடுத்து அதன் மேல் எறிந்து வீறிட்டதைக் கேட்டு கர்ணன் விழித்தெழுந்து “யார்? என்ன?” என்றான். “நாகம்! மாநாகம்!” என்று அவள் கூவினாள். “எங்கே?” என்று அவன் கேட்டான். எழுந்து சென்று ஐந்து சுடர் எரிந்த விளக்கைத் தூண்டி அறையை ஒளியேற்றி சுழிந்து நோக்கி “எங்கே?” என்றான். “இந்த அறைக்குள்! நான் மெய்யாகவே பார்த்தேன்!” என்று அவள் சொன்னாள்.

அவன் அவள் தலைமயிரை கையால் தடவி “அது விழிமயக்கு. அன்றேல் கனவு. நினைப்பொழிக!” என்றான். “இல்லை. கனவில் அந்த நாகத்தை மிக அருகிலே கண்டேன். திகைத்து விழித்தெழுந்தபோது உங்கள் மஞ்சத்திற்கு அடியில் அது கிடப்பதை பார்த்தேன். மிகத் தெளிவாக. மண்ணில் அதுதான் மிகப்பெரும் நாகமென்று எண்ணுகின்றேன். உங்கள் உடலளவுக்கே தடிமனானது. பன்னிரு சுருள்களாக உங்கள் மஞ்சத்துக்கு அடியில் அது கிடந்தது. பொன்னிறக் காசுகள் அடுக்கியதுபோன்ற அதன் பெரிய தலை மானுடத் தலையை விடவும் பெரிது. நெடுநேரம் அதை என்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர்தான் அழைத்தேன்” என்றாள்.

“எனில் அது எங்கே?” என்றான் கர்ணன். “மறைந்துவிட்டது. நான் உங்களை அழைத்தபோதே சுருள்களை இழுத்து அப்பால் சென்றது” என்றாள் சுப்ரியை. கர்ணன் நகைத்து “நோக்கு, அப்பால் சுவர்தான் இருக்கிறது. அத்தனை பெரிய ஒன்று அச்சுவரினூடாக கடந்துசெல்ல இயலாது” என்றான். அவள் எழுந்து “இனி நான் இந்த அறைக்குள் தங்கமாட்டேன். இந்த அறைக்குள் எவரும் தங்க இயலாது” என்றாள். “நன்று, கதைகளிலிருந்து மெய் உருவாகிறது. மெய்யிலிருந்து கதைகள் மீண்டும் பிறக்கின்றன என்பார்கள்” என்றபின் அவன் அவள் தோளைத்தட்டி “செல்க!” என்றான்.

அவள் உடல் நுண்ணிதின் நடுங்கிக்கொண்டிருப்பதை அத்தொடுகையில் அவன் உணர்ந்தான். இடைவளைத்து அவளை தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு “அஞ்சாதே!” என்றான். அவள் அவன் நெஞ்சில் தலையை சாய்த்து மெல்ல விம்மினாள். கழுத்தில் மென்தசைகள் அதிர்ந்தன. அவ்வதிர்வின்மேல் அவன் மீண்டும் முத்தமிட்டு “அஞ்சாதே. அவ்வண்ணம் ஒரு நாகமிருந்தால்கூட அது எனக்கும் என் கொடிவழியினருக்கும் காவலாகவே அமையும்” என்றான்.

அவள் சிறு சீற்றத்துடன் தலை நிமிர்ந்து “நீங்கள் கதிரவனின் மைந்தர் என்கிறார்கள். எனில் எங்கிருந்து வந்தது அந்தப் பாதாள நாகம்?” என்றாள். “அதுவும் கதிரவனின் மைந்தனாக இருக்கக்கூடும். கதிரொளி சென்று தொடாத இடமுண்டா என்ன?” என்று கர்ணன் சொன்னான். அவள் மேலும் சினம்கொண்டு “வேடிக்கை அல்ல இது. அந்த நாகம் ஏன் உங்களுடன் வருகிறது? அவ்வாறெனில் நீங்கள் மெய்யாகவே யார்?” என்றாள். கர்ணன் “அதற்கு எவரேனும் உறுதியான மறுமொழியை சொல்லிவிட முடியுமா என்ன?” என்றான். சிரித்து “நான் எவரென்று ஒவ்வொரு நாளும் அறிந்து முன் சென்று கொண்டிருக்கிறேன். ஒருவேளை இறுதிக்கணத்தில் முற்றறிவேன் போலும். நன்று, நீ சென்று வேறு மஞ்சத்தில் துயிலலாம்” என்றான்.

அவள் கடும்சீற்றத்துடன் அவன் கையை பற்றிக்கொண்டு உலுக்கி “அது பாதாள தெய்வம்! பாதாள தெய்வங்கள் ஒருபோதும் மானுடனை பொருட்படுத்துபவை அல்ல. அவை முடிவிலாது பலிகொள்பவை. சிறுபிழையும் பொறுக்காதவை. ஊரும் ஊர்தியை உண்டபின்னரே தங்கள் இடம் மீள்பவை. இருள்தெய்வங்களை வழிபட்டோர் குடி வாழ்ந்ததில்லை என்பார்கள். அது உங்களைத் தொடர்வது காக்கும் பொருட்டு அல்ல, உரிமை கொள்ளும் பொருட்டே” என்றாள். கர்ணன் “இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய இயலும்? அதிலிருந்து தப்ப இயலுமா என்ன?” என்றான்.

“தப்ப வேண்டும். உங்கள் தந்தையை தாள் பணிக! இவ்விருளின் சுழல்களை நாம் ஓட்டுவோம்” என்றாள். அவன் “ஆம், செய்வோம்” என்றான். அவனுடைய ஆர்வமின்மையால் அவள் மேலும் சீண்டப்பட்டாள். “கலிங்கத்தில் நாங்கள் நகரில் எங்கும் ஒரு அரவுகூட வாழ ஒப்புவதில்லை. ஒரு நெளிவு கண்ணில்பட்டால்கூட நாகவேள்வியால் அதை துரத்துவோம்” என்றாள். கர்ணன் நகைக்க “இங்கு நாம் வேத வேள்விகள் நிகழ்த்துவோம். ஒவ்வொரு நாளும் இங்கு அவிப்புகை எழட்டும். இந்த இருள்உலக தெய்வங்களை அண்டாது அகற்றும் வல்லமை வேதச்சொல்லுக்கும் புகைக்கும் உண்டு” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று கர்ணன் சொல்லி அவளைத் தட்டி “செல்க! ஒய்வெடு” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “வேள்விப்புகை மண்ணுக்குள் செல்லுமா என்ன?” என்றான். “அங்கே அவை வாழட்டும். நாம் வாழும் உலகில் அவை எழவேண்டியதில்லை. ஆழத்திலுள்ளவை ஆழத்திலேயே இருந்தாகவேண்டும்” என்றாள். கர்ணன் அதற்கும் நகைத்தான்.

சுப்ரியை “நான் உறுதியாகவே சொல்கிறேன். இனி அது உங்களைத் தொடராது ஒழிய வேண்டும். நீங்கள் அதை அகற்றியே ஆகவேண்டும். நாம் வேதவேள்விகளை இயற்றுவோம். அங்க நாட்டுக்கு நாம் வந்தபிறகு அறிந்தேன், இங்கு பெருவேள்விகள் எதுவும் நிகழ்ந்ததில்லை என்று. உங்களுக்கு அந்தணருக்கு பொன்னள்ளிக் கொடுக்க கையெழாது என்று சூதர்கள் சொன்னார்கள். உங்கள் உள்ளத்தில் அந்த மறுப்பை உருவாக்கி நிலைநிறுத்துவதே இந்த ஆழத்து நாகம்தான். உளம் ஒருங்குங்கள். இங்கு ஏழு நாடுகளிலிருந்தும் அந்தணர்கள் வரட்டும். வேள்விச்சாலை உருவாகட்டும். ஒருகணம் முறியாது இங்கு வேதப்பேரொலி எழுந்து பன்னிரு ஆண்டுகள் நீடிக்குமென்றால் பாதாள தெய்வங்கள் உங்களை முற்றாகவே கையொழியும். அது உங்களுக்கும் என் குடிக்கும் விடுதலை” என்றாள்.

கர்ணன் அப்பேச்சை ஒழியும்பொருட்டு “நன்று. அதை நான் எண்ணுகிறேன்” என்று அவள் தோளைத் தட்டி மெல்ல அழைத்துச்சென்று கதவைத் திறந்து அங்கு நின்றிருந்த சேடிப்பெண்ணிடம் “தேவிக்கு பிறிதொரு மஞ்சத்தறையை காட்டுக!” என்றான். அவள் செல்லும்போது சீற்றத்துடன் தலையை அசைத்துக்கொண்டிருந்தாள். அவள் அதை பலநாட்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தாள். மைந்தர் பிறந்த பின்னர் அவள் அச்சமும் சீற்றமும் பெருகியது. மைந்தர் பிறப்புக்குரிய வேள்விச்சடங்குகள் எதையும் அவன் செய்யவில்லை. அவள் பலமுறை கூறி மன்றாடி அழுது சீற்றம்கொண்ட பின்னரும் அவன் இளகவில்லை. அவனிடமிருந்து உளம் விலகும்தோறும் அவளுடைய குரலில் சினம் ஓங்கியது.

ஒரு தருணத்தில் சீற்றம் கரைமீற அவன் அவளிடம் “நோக்குக, என் ஊழை நான் வகுக்க இயலாதென்பதே இதுநாள் வரை நான் கற்றுக்கொண்டது! என் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டிருக்கிறது. ஊழுக்கெதிராக போராடிச் சலித்த பின்னரே இவ்வடிவை எடுத்துள்ளேன்” என்றான். “ஊழை வேதத்தால் வெல்லலாம். முன்னோர் அறிவுறுத்தியது அது” என்று அவள் சொன்னாள். “வெல்பவர் இருக்கலாம். என்னால் இயலுமென்று தோன்றவில்லை” என்றான் கர்ணன். “இங்கு வேள்வி நிகழட்டும், என் ஆணை” என்று அவள் சொன்னாள். “நான் நிகழ்த்துகிறேன். அனைத்தையும் நானே ஒருக்குகிறேன். நீங்கள் மாற்றுச் சொல்லுரைக்காமலிருந்தால் மட்டும் போதும்.”

கர்ணன் “அவ்வேள்வியில் செங்கோலேந்தி வேள்விக்காவலனாக அமரவிருப்பவன் யார்?” என்று கேட்டான். அவள் அவன் சொல்வதை உணர்ந்து “அந்தணர் எவரை ஏற்கிறார்களோ அவர்” என்றாள். “அந்தணர் என்னை ஏற்க மாட்டார்கள். என் குருதிமைந்தர்களில் உன் வயிற்றில் பிறந்தவர்களை மட்டுமே ஏற்பார்கள்” என்றான். “அவன் என்னை தன் தந்தையல்ல என்று அறிவிக்கும் மூன்று சடங்குகளை செய்யவேண்டும். நீரால், அனலால், வேதச்சொல்லால் என்னை விலக்க வேண்டும். விண்ணவர்களில் ஒருவரை தன் தந்தையென ஏற்று அவர் பெயரை தன் பெயருடன் சூட வேண்டும். அவன் கொடிவழியில் எழுபவர்கள் பின்னர் அத்தெய்வத்தின் வழித்தொடர்களாகவே அறியப்படுவார்கள். என் கோலும் முடியும் அக்கணமே என்னிலிருந்து விலகும். பின்னர் அங்கநாட்டுச் சொல்வழியில் வசுஷேணனின் பெயர் இருக்காது.”

கசப்புடன் சிரித்து “நன்று! அது அவ்வாறு இருக்கவேண்டும் என்றும் நான் எண்ணவில்லை. ஆனால் சூதனாகிய அதிரதனின் பெயர் இருந்தாகவேண்டும். சொல்க, உனது அந்தணர்கள் எவரேனும் அதிரதனின் பெயரை வேள்வித்தலைவனென அமர்ந்து நான் உரைப்பதை ஏற்பார்களா என்ன? அவ்வண்ணம் ஏற்கும் அந்தணர் எவரேனும் இருந்தால் அழைத்து வரச்சொல், இங்கே வேள்வி நிகழட்டும்” என்றான். அவள் சொல்லமைந்து சற்று நேரம் இருந்தபின் “இவ்வண்ணமே அஸ்தினபுரியின் அடிமை நாடென அமையப்போகிறோமா நாம்? என்றேனும் தனி முடியும் கோலும் கொண்டு எழ மாட்டோமா? அன்று நாம் வேள்வி செய்தாகவேண்டும் அல்லவா?” என்றாள்.

கர்ணன் அவளை கூர்ந்து நோக்கி “ஆகவே?” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “ஆகவே?” என உரத்த குரலில் அவன் மீண்டும் கேட்டான். அவள் சீற்றத்துடன் விழிதூக்கி “நமக்கு வேறு வழியில்லை” என்றாள். “என்னை துறக்கும்படி என் மைந்தருக்கு நாமே ஆணையிடவேண்டும் என்கிறாய் அல்லவா?” என்றான். அவள் சொல்லின்றி இருந்தாள். “எண்ணுக! உன் மைந்தனுக்கு இன்னும் ஐந்தாண்டுகூட அகவை ஆகவில்லை.” பின்னர் அவன் முகம் வஞ்சப்புன்னகையில் விரிந்தது. “ஐந்து அகவை கொண்ட மைந்தனை அரியணை அமர்த்தி அவனுக்குப் பின்னால் நீ செங்கோலேந்தி அமர்ந்திருக்கலாம் அல்லவா?” என்றான். அவளும் சீற்றத்துடன் உதடு சுழித்து “ஏன், அப்படி எத்தனையோ ஆட்சிகள் இங்கு நிகழ்ந்துள்ளன. அரியணை அமர்ந்து ஆள்வதற்கான குலமும் பயிற்சியும் கொண்டவள்தான் நான்” என்றாள்.

கர்ணன் “நன்று! உன் மைந்தன் தோள்விரிந்தெழட்டும். வில்லேந்தி அவன் நிலம் வெல்லட்டும். அவன் வென்ற நிலத்தை ஆள்வதற்கு முழுதுரிமை உனக்குண்டு” என்றான். அவள் தன் மேலாடையை இழுத்தெடுத்து சுற்றிக்கொண்டு எழுந்து நின்று “அவ்வண்ணம்தான் நிகழவிருக்கிறது. என் மைந்தன் இவ்வரியணை அமர்ந்து ஆள்வான். அனைத்து வேள்விகளையும் செய்வான். அப்போது உங்களை இங்கிருந்து அகற்ற வேண்டிய பணி எனக்கு இருக்காது. அதை நீங்கள் வழிபடும் இந்த நாகபூதமே செய்யும். உங்களை கவ்வி இழுத்து அது அடியிலா இருளாழத்திற்கு கொண்டு செல்லும். அங்கிருந்து நீங்கள் அனைத்தையும் பார்க்கலாம்” என்றபின் வெளியே சென்று திரும்பி நோக்கி “இங்கிருந்து உங்கள் மைந்தர்கள் அனுப்பும் எள்ளும் நீரும்கூட வந்து சேராத அடியாழம் அது. செல்ல விழைவது அங்குதான் எனில் அவ்வாறே ஆகுக” என்று சொன்னபின் அகன்றாள்.

கர்ணன் அவளால் வீசி அறையப்பட்ட கதவு ஓசையுடன் மோதித் திறந்து குடுமி முனகியொலிக்க அசைந்துகொண்டிருப்பதை பார்த்தான். பின்னர் தன் மீசையை கைகளால் நீவியபடி தலைகுனிந்து, விழிசரித்து, தன்னில் ஓடும் எண்ணங்களை கட்டில்லாது பெருகவிட்டு அமர்ந்திருந்தான். சிவதரும் அவன் அணுக்கர்களும்கூட அந்த நாகத்தை பலமுறை பார்த்திருந்தார்கள். அது அவர்களுக்கு பழகி ஒருகட்டத்தில் இன்னொருவர் என்ற சொல்லால் அதை சொல்லத் தொடங்கிவிட்டிருந்தனர். இன்னொருவர் எழும் நாள்கூட அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இன்னொருவரை தொடர்பிலாத எவரும் பார்த்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் உளம் நாட்டினார்கள். பேச்சில் இயல்பாகவே இன்னொருவர் என்று கர்ணனிடம் சொன்னார்கள்.

அஸ்தினபுரிக்கு கர்ணன் கிளம்பிச்சென்றபோது சிவதர் அவனிடம் தனியாக “அரசே, இன்னொருவரும் உடன் வருவார். அங்கு அவையிலும் எவ்வடிவிலோ அவர் இருப்பார்” என்றார். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. மஞ்சத்துப் போர்வைகளை நீவி வைத்தபடி “அங்கு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் கேட்டுக்கொண்டிருப்பார் என்பதை உணருங்கள். அவருக்கு உகக்காத ஒன்றை நீங்கள் செய்ய இயலாது என்பதையும் தெளிக!” என்றார். “உகக்காத எதை நான் அங்கு சொல்லவிருக்கிறேன்?” என்றான் கர்ணன்.

சிவதர் “நட்பின்பொருட்டு அடிமையாதல். அன்பின் பொருட்டு அனைத்தையும் விட்டுக்கொடுத்தல். கொடை என்பது ஓர் உளநிலை. கொடுக்கத் தொடங்கியவர் அனைத்தையுமே கொடுத்துவிடுவார். எஞ்சுவது அனைத்தும் சுமையென ஆகும். எஞ்சாது ஒழிவதே விடுதலை எனத் தோன்றும்”  என்றார். கர்ணன் “அது வேள்விப் பேரவை. அங்கு…” என்றதும் சிவதர் “அனைத்து வேள்விகளிலும் அவர்களும் இருக்கிறார்கள். நிழலாடாது நெருப்பு எப்படி எரியும்?” என்றார். “மெய்” என்று கர்ணன் சொன்னான். “நோக்குக, அரசே! இங்கு நாம் வாழும் வாழ்க்கை நமது தெய்வங்களுக்கு அளிக்கும் முடிவிலாப் பெருங்கொடை. இன்னொருவர் உங்களை கைவிட்டால் உடனிருப்பவர் எவருமில்லை” என்றபின் சிவதர் வெளியே சென்றார்.

அஸ்தினபுரியின் வேள்விச்சாலையில் சிறுமைப்பட்டு அவையிலிருந்து வெளியேறி வருகையில் சிவதர் “இன்றிரவு இன்னொருவர் உங்கள் அறையில் எழுவார். அவர் சீற்றம் கொண்டிருப்பார். ஐயமே இல்லை” என்றார். கர்ணன் “என்னால் இயல்வது ஒன்றுமில்லை” என்றான். “இன்று வேள்விச்சாலையிலும் முன்னர் அவையிலும் நீங்கள் அரசரைப்போல் பேசவில்லை. அடிபணிந்தீர்கள். அனைத்தையும் அள்ளி முன்வைத்தீர்கள். இடக்காலால் அந்த அவை உங்களைத் தட்டி வெளியே தள்ளியபோது ஒரு சொல்லும் உரைக்காமல்  எழுந்து மீண்டீர்கள்” என்றார் சிவதர். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். அவன் தன் அறைக்குள் சென்றதும் சிவதர் “நன்று! எந்நிலையிலும் தன் மைந்தரிடம்  தந்தை உள்ளாழத்தில் முனிவதில்லை. அதை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும்” என்றார்.

அன்றிரவு அரைத்துயிலில் கர்ணன் தன் மஞ்சத்திற்கு அடியில் அந்த மாநாகத்தை உணர்ந்தான். அறைக்குள் எங்கிருந்தோ கரிய நீரோடை வந்து சுழித்து மையம் கொள்வதுபோல் அதன் பேருடல் வளைந்து கொண்டிருந்தது. அம்மஞ்சத்தை மெல்ல காற்றில் மேலே தூக்கியது. அவன் கண்விழித்தபோது அதன் பெரும்படத்தை தன் முன் கண்டான். இமையா விழிகள் இரு மின்மினிகள்போல், இரு தொலைவான விண்மீன்கள்போல், அவனை நோக்கிக்கொண்டிருந்தன. அவன் மார்பின் மேல் வைத்த கையை எடுத்துக் கூப்பியடி அதை பார்த்துக்கொண்டிருந்தான்.

“எந்தையே” என பெருமூச்சுடன் வணங்கிவிட்டு கர்ணன் கண்களை மூடி மெல்ல உடல் தசைகளை தளர்த்தி நீள்மூச்சுவிட்டு துயிலத்தொடங்கினான். அறைக்குள் மெல்லிய அசைவொலி எழுந்தது. செதில்தோல் தரையை உரசும் ஓசை. செதில்கள் ஒன்றுடன் ஒன்று வழுக்கிச்செல்லும் ஓசை. மரப்பட்டைகள் உரசுவதுபோல் எனத்தோன்றும். பட்டுத்துணியின் உரசலோ என மெல்லென்றிருக்கும். பின்னர் யானையின் மூச்சுபோல் சீறலோசை. கண் விழிக்காமலேயே அவன் தன் மஞ்சத்துக்கு அடியில் பெருகி வளைந்து சுழிமையத்துக்கு மேல் தலைவைத்துப் படுத்திருக்கும் மாநாகத்தை கண்டான். அதன் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான்.

வெளியே கதவு தட்டப்பட்டது. கர்ணன் எழுந்து சென்று கதவைத் திறந்தான். “அரசே, தங்களை சந்திக்க அன்னை எழுந்துள்ளார்” என்று ஏவலன் சொன்னான். “எங்கே?” என்று அவன் திரும்பிப்பார்த்தான். “வெளியே உள்ளார்” என ஏவலன் கதவை திறந்தான். அவன் வெளியே காலெடுத்துவைத்தான். அங்கு இருளுக்குள் மண்ணிலிருந்து விண்தொட எழுந்த பேருருவ நாகமொன்றை கண்டான். அதன் உடற்சுருட்கள் ஒன்றின்மேல் ஒன்றென வளைந்து எழுந்திருந்தன. இருளாழத்தில் உடல்நுனி சென்று மறைந்திருந்தது. இரு விழிகளும் எரிவிண்மீன்போல் வானில் எழுந்திருந்தன. விரிந்துகொண்டிருந்த படத்தில் மணிமாலை போன்ற செதில்வளைவுகள் அசைந்தன.

“எவர்?” என்று கர்ணன் நடுங்கும் குரலில் கேட்டான். “அன்னை தன்னை கத்ரு என்று உரைத்தார்கள்” என்று ஏவலன் சொன்னான். கர்ணன் குடிலிலிருந்து வெளியே இறங்கி அவளை நோக்கி சென்று “தாங்களா?” என்றான். “ஆம், நான் உன் மூதன்னை” என்று நாகம் சொன்னது. கதவு மீண்டும் தட்டப்பட்டபோது கர்ணன் முழுவிழிப்பு கொண்டு எழுந்து அமர்ந்தான். அவன் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. ஏவலன் கதவை தொடர்ந்து பல முறை தட்டியிருக்கவேண்டும். அவன் குரல் உரத்து ஒலித்தது. “அரசே! அரசே! முதன்மைச் செய்தியொன்று வந்துள்ளது. அரசே!” என்றான். அவன் ஏவலனின் குரலை அடையாளம் கண்டான். அதிலிருந்த பதற்றத்தை உணர்ந்ததும் இடையிலிருந்த ஆடையை செம்மை செய்து எழுந்தான்.

அக்கணமே மஞ்சத்திற்கு அடியிலிருந்து மாநாகம் எழுந்து அவன் கால்களை வலுவாக சுற்றிக்கொண்டது. நிற்க இயலாமல் கர்ணன் தடுமாறினான். விழுந்துவிடுவோம் என்று எண்ணி கைநீட்டி கட்டில்நிலையை பிடித்தான். கால்களை விடுவித்துவிட முயலுந்தோறும் அதன் பிடி மேலும் இறுகியது. அதன் உடல் வளைந்து மேலெழுந்து அவன் தலைக்குமேல் நின்றது. அதன் முகம் அவன் முகத்துக்கு நேரே வந்தது. தன் விழிகளால் அவனுடன் அது உரையாடியது. “வேண்டாம், துயில்க! வாசல் திறவாதொழிக!” என்றது.

கர்ணன் தள்ளாடி நிலையழிந்து பதறிய கைகளை நீட்டி குடிலின் தூணைப் பற்ற முயல அதன் சுருள்கள் மேலும் மேலும் எழுந்து அவன் கைகளைப்பற்றி உடலோடு இறுக்கின. “அன்னை!” என்று அவன் சொன்னான். “இவ்விரவைக் கடந்து செல்க! இவ்விரவை மட்டும் கடந்து செல்க!” என்று நாகம் சொன்னது. “எவ்வண்ணம் என்னால் இயலும்?” என்று அவன் கேட்டான். “வந்திருப்பவள் என் அன்னை!” நாகம் “அன்னை அல்ல அவள், மூடா!” என்று சீறியது. “குளிர்ந்த நஞ்சுடன் வந்துள்ள தமக்கை அவள். ஆயிரம் பல்லாயிரம் கோடி முகம்கொண்டு இப்புவியெங்கும் நிறைந்திருப்பவள்.” கர்ணன் “அன்னை! அன்னை!” என்றான். “இவ்விரவை மட்டும் எவ்வண்ணமேனும் கடந்து செல்க! இந்தக் கணத்தை மட்டும் கடந்து செல்க! நீ வெல்வாய். இங்கு மட்டுமேனும் நீ வெல்வாய்!”

கர்ணன் “என்னால் இயலாது! என்னால் அது இயலாது!” என்றான். “என் அமுதை அருந்துக! என்னுள் ஊறிய ஒரு துளி அமுது உன்னை ஆற்றல்கொண்டவனாக்கும். கூர்வாளென இவ்விரவைப் போழ்ந்து கடக்கச்செய்யும்” என்றது நாகம். கர்ணன் ஒருகணத்தில் தன்னுடலை அதிலிருந்து உதறி மீண்டான். பிடிதளர்ந்த நாகத்தை இரு கைகளாலும் அள்ளி அப்பால் வீசினான். பேரோசையுடன் அது தரையில் அறைபட்டு விழுந்து செதில்கள் உரசும் ஒலியுடன் புரண்டு சுருண்டெழுந்து சீறி “நீ என்னை புறந்தள்ளுகிறாய். என்னை சிறுமைசெய்கிறாய்!” என்றது. “அன்னை வெளியே எனக்காக காத்து நிற்கிறார்” என்று சொல்லி அவன் வெளியே ஓடினான்.

“அவள் கொண்டுவந்திருப்பது என்ன என்று அறியமுடியாதவனா நீ?” என்றது நாகம். “நான் அவருக்கு முதற்கடன் பட்டவன்” என்று கர்ணன் சொன்னான். “என்னை நீ புறந்தள்ளுகிறாய்! என்னை நீ புறந்தள்ளுகிறாய்! என்னை நீ புறந்தள்ளுகிறாய்!” என்று நாகம் வீறிட்டது. “வேறு வழியில்லை. இருவரில் ஒருவரையே இத்தருணத்தில் நான் ஏற்கமுடியும்” என்றபின் கர்ணன் சென்று கதவை திறந்தான். ஏவலன் தலைவணங்கி “அரசே, இந்திரப்பிரஸ்தத்தின் யாதவஅரசி தங்களை பார்க்க விழைந்து இங்கு வந்திருக்கிறார்” என்றான். கர்ணன் அப்போதுதான் முழு தன்னினைவை அடைந்து “யார்?” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் யாதவஅரசி குந்திதேவி தங்களை பிறரறியாது பார்க்கவேண்டுமென்று இங்கு வந்திருக்கிறார்” என்றான் ஏவலன்.

“எங்கு?” என்றான் கர்ணன் உளம்கலங்கியவனாக. “இதோ இங்கு” என்று சற்று அப்பால் சேடி ஒருத்தி துணை நிற்க வெண்ணிற ஆடையால் முகத்தை முற்றிலும் மறைத்து தலைகுனிந்து உடல் குறுக்கி நின்றிருந்த சிற்றுருவத்தை ஏவலன் சுட்டிக்காட்டினான். கர்ணன் மூச்சுத்திணறுவதுபோல், கைகால்கள் உதறுவதுபோல் உணர்ந்தான். சிலகணங்கள் அவளை நோக்கி நின்றபின் “வரச்சொல்க!” என்றான். ஏவலன் சென்று குந்தியிடம் பணிந்து அவன் வரவொப்புதல் அளித்ததைச் சொல்ல குந்தி சிறிய அடிகளை எடுத்து வைத்து நிழல் நகர்வதுபோல் ஓசையின்றி அவனை அணுகினாள்.

வெண்முரசு விவாதங்கள்

நூல் இருபது – கார்கடல் – 25

ele1துச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன் கால்களை சேற்றிலென சிக்க வைத்தது. உடலின் அத்தனை தசைகளும் நனைந்த ஆடைகள் என எலும்புகள் மேல் தொங்கிக்கிடந்தன. உள்ளமும் ஒரு நனைந்த மென்பட்டாடை என படிந்திருந்தது. நாக்கு உலர்ந்த மென்தளிர் என வாய்க்குள் ஒட்டியிருந்தது. ஒரு சொல்லை எடுப்பதென்றால்கூட முழுதுடலாலும் உந்தி ஊறச்செய்து நாவுக்குக் கொண்டுவந்தாகவேண்டும். நா அச்சொல்லை தன்னதென்று ஏற்கவேண்டும். அச்சொல் நாவை பற்றவைக்கவேண்டும்.

கர்ணனும் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. சீரான காலடிகளுடன் அவன் நடந்துகொண்டிருந்தான். அவனுக்குரிய வழக்கமான நடை அல்ல அது என்பதனால் துச்சாதனன் உடன் செல்ல முடிந்தது. அவர்களைச் சூழ்ந்து கௌரவப் படைகள் கொண்டாட்டமிட்டுக் கொண்டிருந்தன. கேடயங்களிலும் தலைக்கவசங்களிலும் அடித்துத் தாளமிட்டபடி நெருப்பைச் சுற்றி படைவீரர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். நிழல்கள் எழுந்து வானிலாடின. துச்சாதனன் பெருமூச்சுவிட்டான். கர்ணன் நின்று அந்தச் செந்நிற அலைகளை நோக்கினான். பின்னர் விண்ணிலெழுந்திருந்த மீன்களை பார்த்தான். மீண்டும் திரும்பும்போதுதான் அவன் துச்சாதனனை பார்த்தான். “நீ சென்று ஓய்வெடு, இளையோனே” என்றான்.

“இல்லை, தங்களை குடில்வரை கொண்டுசென்று ஆக்குகிறேன்” என்றான் துச்சாதனன். “வா” என்றபடி கர்ணன் நடந்தான். இம்முறை அவன் நடை விசைகொண்டிருந்தது. “மூத்தவரே” என்று துச்சாதனன் மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்” என்றான் கர்ணன். “இன்று களத்தில் உங்கள் கையிலிருந்தது பாதாளநாகம் என்றனர். மணிகர்ணன் என்னும் பாதாளநாகமே உங்கள் கையில் எழுந்து நடனமிட்டது என்றும் நாகங்களே உங்கள் அம்புகளாகச் சென்று பாண்டவர்களை வென்றது என்றும் சொல்கின்றனர்” என்றான். கர்ணன் புன்னகையுடன் அவன் தோளில் தட்டினான். “நான் உங்கள் போரை பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் சொல்வதில் மெய்யுள்ளது என்றே எனக்கும் படுகிறது” என்றான் துச்சாதனன்.

“பிறகென்ன?” என்றான் கர்ணன். “அதை நீங்களும் சொல்லவேண்டும். உண்மையிலேயே உங்கள் ஆவமும் வில்லும் நாகங்களா என்ன?” என்றான் துச்சாதனன். “இளையோனே, இந்த மண்ணில் எதுவும் புதிதாக நிகழ இயலாது என்று உணர்க! இங்கு நிகழும் எந்தப் போரும் முன்பு நிகழ்ந்த போரின் நீட்சிகளே. ஏனென்றால் இங்கு நிகழும் அத்தனை வேள்விகளும் முன்பு நிகழ்ந்த வேள்விகளின் எச்சங்கள்தான்” என்று கர்ணன் சொன்னான். “நாகர்கள் இங்கே வெல்லப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் வஞ்சத்தால் வெல்லப்பட்டார்கள். பின்னர் ஒருங்கிணைவால் வெல்லப்பட்டார்கள். இறுதியாக மெய்யறிவால் வெல்லப்பட்டார்கள். வரலாற்றில் எப்போதுமே வெற்றி அம்மூன்று நிலைகளில் அவ்வரிசையில்தான் நிகழ்கிறது.”

“ஆம், நாகர்களின் வஞ்சத்தைப் பற்றி நான் அறிவேன்” என்றான் துச்சாதனன். மேலும் அவன் சொல்லத் துடித்தான். ஆனால் முதற்சொல் எழுந்ததுமே சொல்லவேண்டாம் என்னும் எண்ணத்தை அடைந்தான். அதை உணர்ந்த கர்ணன் “சொல்” என்றான். துச்சாதனன் நிலையழிந்து “எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை, மூத்தவரே. நான் எவரிடமும் எதையும் பகிர்ந்து அறியேன்” என்றான். “சொல்” என கர்ணன் மீண்டும் சொன்னான். “நான் இன்று காலை ஒரு கனவு கண்டேன்… சில நாட்களாகவே துயில் நீப்பு. நீங்கள் வருகிறீர்களா என்னும் பதற்றத்தில் நேற்றெல்லாம் அமரக்கூட இல்லை. களைப்பில் விழித்திருக்கையிலேயே எனக்கு கனவுகள் வந்துசெல்கின்றன.”

“ஆம்” என்று கர்ணன் சொன்னான். “இப்போது களத்தில் நின்றிருக்கும் அத்தனைபேரும் அப்படித்தான் இருப்பார்கள். இப்போர் நனவிலும் கனவிலுமாகவே நிகழும்…” சிரித்து “செல்லச் செல்ல முழுக் கனவென்றே ஆகும். தெய்வங்களும் பேய்களும் நாகங்களும் விளையாடும் வெளியில் நிகழும்” என்றான். துச்சாதனன் “என் கனவில் இதுவரை நான் காணாத தெய்வமொன்றை கண்டேன். பின்னர் உணர்ந்தேன், அவள் மூத்தவள் என” என்றான். கர்ணன் “தவ்வை அரக்கர்களின் களியாட்டுத்தெய்வம். இன்று அவையில் சுசர்மர் அவளைப்பற்றி சொன்னார்” என்றான். “ஆம், ஆனால் அவளை அவர்கள் நாட்டப்பட்ட கல்லாக மட்டுமே வழிபடுகிறார்கள். முழுதுருவில் நான் கண்டதேயில்லை” என்றான் துச்சாதனன். “அரிதாகவே அவள் முழுதுருவை வரைகிறார்கள்” என்றான் கர்ணன். “அவ்வன்னையின் கையிலிருந்து நானும் அவர்கள் சொன்ன அந்த அமுதை உண்டேன்” என்றான் துச்சாதனன்.

கர்ணன் வெறுமனே நோக்கினான். “அதற்கு என்ன பொருள் என எனக்குத் தெரியவில்லை. எதுவானாலும் ஆகுக மூத்தவரே, தெய்வங்களை நோக்கத் தொடங்குவது ஒருவன் இங்கிருந்து செல்லும் தருவாய் அணுகிவிட்டது என்பதற்கான சான்று என்பார்கள். எனக்கும் அவ்வாறே என தோன்றுகிறது. அதில் எனக்கு மாற்று விழைவும் இல்லை. இப்போரிலிருந்து உயிருடன் மீளமாட்டேன் என்பது நான் எனக்கே சொல்லிக்கொண்ட வஞ்சம். இப்போர் வென்று என் மூத்தவர் மீளும்வரை மட்டுமே உடனிருப்பேன். குருக்ஷேத்ரத்திலிருந்து அவர் கிளம்பும்போது நான் இங்கேயே விழுந்திருப்பேன்.”

“ஏனென்றால் அதுவே முறை” என்று துச்சாதனன் தொடர்ந்தான். “இனிவரும் தலைமுறைகளிலும் அஸ்தினபுரியின் அவை பேசப்படும். அங்கே குலமகள் சிறுமைசெய்யப்பட்டதை சூதர்கள் பாடிப்பெருக்குவார்கள். அதை கேட்கும் நம் குலக்கொடியினர் அவர்களுக்கு அறம் காப்பென எழுந்து வரும் என உணரவேண்டும். நான் கிளம்பும்போது அசலையிடம் அதைத்தான் சொல்லிவிட்டு வந்தேன்.” கர்ணன் “இது களத்திலெழும் சோர்வு. இத்தகைய உளநிலைகளை வெல்வதும் போரின் பகுதியே” என்றான். “இருக்கலாம். ஆனால் நான் சோர்வடையவில்லை. அன்னையைக் கண்டதை ஒரு நல்லூழ் என்றே நினைக்கிறேன்” என்றான் துச்சாதனன்.

“ஏனென்றால், நான் அன்று அவையில் திரௌபதியை சிறுமைசெய்து மீண்டு என் அறைக்குச் சென்று நீராடும்பொருட்டு ஆடைகளை கழற்றிக்கொண்டிருந்தபோது அவளை கண்டேன்” என்று அவன் தொடர்ந்தான். “நான் களைத்திருந்தேன். என் அறைக்குச் செல்கையில் நடக்கவே இயலவில்லை. என் உள்ளத்தில் வினாக்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு நின்றன. ஏன் நான் அதை செய்தேன்? என் மூத்தவரின் ஆணைக்கு மாறாக நான் எதையும் எண்ணுபவன் அல்ல. என் அன்னையையோ மனைவியையோ அவ்வண்ணம் இழுத்துவந்து அவைச்சிறுமை செய்ய அவர் ஆணையிட்டிருந்தாலும் அதை செய்திருப்பேன் என்பதில் எனக்கு ஐயமே இருக்கவில்லை. ஆனால் அது மட்டும் அல்ல. பிறிதொன்றும் இருந்தது.”

“மூத்தவரே, நான் அச்செயலில் ஆழத்தில் எங்கோ மகிழ்ந்தேன். மிக மிக ஆழத்தில். ஏன் என்று தெரியவில்லை. அந்த மகிழ்ச்சியை எண்ணவும் எனக்கு கூசுகிறது. அமிலம்போல் எரிக்கிறது என்னை. ஆனால் நான் மகிழ்ந்தேன்” என்றான் துச்சாதனன். “கையுறைகளை கழற்றிக்கொண்டிருக்கையில் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வண்ணம் அசைந்தது. திரும்பி நோக்கியபோது என் அறையிலிருந்து ஒருத்தி வெளியே செல்வதை கண்டேன். பேரழகி. முதற்கணமே அவள் மானுடப்பெண் அல்ல என புரிந்தது. யார் என நடுங்கும் குரலில் கேட்டேன். நில் நில் எனக் கூவியபடி பின்னால் சென்றேன். ஆனால் அவள் வெளியே சென்று மறைந்துவிட்டாள். என் குரலைக் கேட்டபடி ஏவலன் மட்டும் அங்கே வந்து நின்றிருந்தான்.”

“நான் செயலிழந்து அமர்ந்தேன். அந்நிகழ்வை எவரிடமும் சொல்லவில்லை. நூறுநூறுமுறை எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன். அந்நிகழ்வின் பொருள் என்ன? அந்த தேவி எவர்? எவரிடமாவது கேட்கவேண்டுமென நினைப்பேன். அஞ்சி தவிர்ப்பேன். பின்னர் அதை திட்டமிட்டே மறந்தேன். இன்று அக்கையைக் கண்டபோது ஒன்றை உண்ர்ந்தேன், அவள்தான் அன்று என்னைவிட்டுச் சென்றவள். அன்று சென்றபோது அவள் பேரழகியாக இருந்தாள். இன்று கொடுந்தோற்றம் கொண்டிருந்தாள், ஆனால் அவள்தான். ஐயமே இல்லை. அவள் எனக்களித்த அமுதின் பொருள் என்ன? அந்த அமுது குளிர்ந்திருந்தது. முதற்சுவை கடும்கசப்பு. கடுமையால் கசப்பே இனிப்பென்றும் தோன்றுமே அப்படி அதை உணர்ந்தேன். அதன் பொருள் என்ன?”

கர்ணன் “நான் இத்தகைய உளஓட்டங்களை கூர்ந்து நோக்கி ஆராய்வதில்லை” என்று சொன்னான். “ஏனென்றால் புகையை நாழியால் முகக்கும் பணிக்கு நிகர் உள்ளப்பெருக்கை மதிப்பிடுவது என என்னிடம் ஒருமுறை பரசுராமர் சொன்னார். அன்று உதறிய வழக்கம் இது. என் உள்ளம் ஓடிக்கொண்டே இருப்பதை எப்போதேனும் உணர்வேன். துணுக்குற்று விழித்தெழுந்து அக்கணமே என்னை விலக்கிக்கொள்வேன்” என்றான் கர்ணன். பின்னர் நின்று “அங்கே சென்று அவர்களுடன் கலந்துகொள்வோம்” என்றான். அவன் கைசுட்டிய இடத்தை நோக்கிய துச்சாதனன் “எளிய வேல்படைவீரர்கள்… அனைவருமே முழுக் களிமயக்கில் இருக்கிறார்கள்” என்றான். “அது நன்று. நாமும் களிமயக்கடைவோம். கொதிக்கும் சித்தத்தை மதுவிட்டு நனைக்காமல் இனி குடிலுக்குச் சென்று துயில முடியாது” என்றான் கர்ணன்.

ele1அவர்கள் அனலைச் சூழ்ந்தமர்ந்து குடித்து நகையாடிக்கொண்டிருந்த குழுவை நோக்கி சென்றபோது ஒரு வீரன் களிமயக்கில் சரிந்த விழிகளுடன் “யார்? நெட்டையனா?” என்றான். இன்னொருவன் கர்ணனை உணர்ந்து பாய்ந்தெழுந்து “அரசே!” என்றான். “குடிக்கலாமென வந்தோம்… சற்றுநேரம் களியாடலாமென்று” என்றபடி கர்ணன் அமர்ந்தான். துச்சாதனன் தயங்கி நிற்க “அமர்க!” என்றான் கர்ணன். அவனை கைபற்றி இழுத்து அமரச்செய்தான். துச்சாதனன் நிலையழிந்தவனாக உடல் கோட்டி அமர்ந்தான். “என்னை நினைவிருக்கிறதா, அங்கநாட்டரசே? முன்பு மகதப்போரில் நீங்கள் எங்களுடன் மதுவாடினீர்” என்றான் ஒரு வீரன். “ஆ! நினைவுறுகிறேன். பூதநாதரே, நலம்தானே? இன்னுமா உயிருடன் இருக்கிறீர்?” என்றான் கர்ணன். “இந்தப் போரில் சென்றுவிடுவேன். செல்வதற்கு உகந்த போர்” என்றான் பூதநாதன்.

“செல்லும் போரை கொண்டாடும்பொருட்டு ஒரு மொந்தை!” என்றான் கர்ணன். படைவீரர்கள் வெடித்து நகைத்தார்கள். கர்ணன் தன்னிடம் அளிக்கப்பட்ட மொந்தையை துச்சாதனனிடம் அளித்தான். “குடி… இன்றிரவு நன்றாகத் துயில்வாய்.” துச்சாதனன் அதை தயக்கத்துடன் வாங்கிக்கொண்டான். கர்ணன் மூன்று மொந்தைக் கள்ளை அருந்தி ஏப்பம்விட்டு மீசையை நீவியபடி “நல்ல கள். குளிர்ந்தது” என்றான். “இது அங்கே அரக்கர்களிடமிருந்து வந்தது. அவர்கள் அக்கையை நிறுவி இதை அருந்துகிறார்கள்” என்றான் பூதநாதன். “அக்கை! அஹஹஹஹா! அக்கை!” என்று ஒருவன் தொடையிலறைந்து வெடித்துச் சிரித்தான். கர்ணன் ஏப்பங்கள் விட்டபடி “இவனுக்கு ஒரு சிக்கல்… இவன் மூத்தவளை பார்த்துவிட்டான்!” என்றான். “அவருமா! ஆஹாஹாஹா!” என அவன் நகைக்க பூதநாதன் “அரசே, இங்கே பலர் அவளை பார்த்திருக்கிறார்கள்” என்றான்.

“அவள் தோன்றுவதன் பொருளென்ன?” என்று கர்ணன் கேட்டான். “அவள் அனைவரையும் அள்ளிக் கொண்டு செல்லப் போகிறாள். வேறென்ன?” என்று ஒருவன் சொன்னான். கர்ணன் இன்னொரு மொந்தைக்கு கைநீட்டி “அது எவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவன் முன்னர் ஒருமுறை அவளை பார்த்திருக்கிறான். அன்று அவள் இவனிடமிருந்து கிளம்பிச்சென்றுகொண்டிருந்தாள்” என்றான். பூதநாதன் “மெய்யாகவா? அக்கை செல்வதுபோல் கனவு வரக்கூடாது. அத்தனை செல்வங்களும் உடன் செல்லும். செல்பவள் பேரழகியெனத் தெரிவாள்” என்றான். சற்றே மயக்கு ஏறியிருந்த துச்சாதனன் பாய்ந்து கையூன்றி முன்சென்று “ஆம், பேரழகி! அப்படித்தான் இருந்தாள்” என்றான்.

“அவளை மீண்டும் கண்டீர்களா? ஒருமுறை சென்றபின் அவள் காட்சி கொடுப்பதே இல்லையே?” என்றான் பூதநாதன். “வீரரே, நான் அவளை மீண்டும் கண்டேன். என்னை நோக்கி வந்து எனக்கு அமுதளித்துச்சென்றாள்.” பூதநாதன் “நன்று… அவள் உங்களுக்கு அருளியிருக்கிறாள். முன்பு நீங்கள் ஆற்றிய அறமின்மை ஒன்றின்பொருட்டு உங்கள்மேல் முனிந்தவள். இன்று உங்களுக்கு மீண்டும் அருளியிருக்கிறாள். நீங்கள் அவளால் மீட்கப்பட்டுவிட்டீர்கள்” என்றான். துச்சாதனன் உரத்த கேவலோசையுடன் அழுதான். கர்ணன் அவன் தோளைத்தட்டி “என்ன இது? அறிவிலி…” என்றான். “இல்லை… இல்லை” என துச்சாதனன் உடல்குலுங்க அழுது முகத்தை நிலம்நோக்கி தாழ்த்தினான்.

கர்ணன் கைகாட்ட மேலும் மது வந்தது. “குடி… குடி இதை. நான் சொல்கிறேன்” என கர்ணன் அதை துச்சாதனனுக்கு நீட்டினான். அவன் இரு கைகளாலும் அதை வாங்கி இளங்குழவிபோல் அருந்தினான். ஏப்பம் விட்டபின் “என் அன்னை! என் குலமகள்!” என்றான். பூதநாதன் “கதைகளின்படி இரணியனின் துணைவி கியாதி, இராவணப்பிரபுவின் அரசி மண்டோதரி என பேரரக்கர் அனைவருக்கும் துணைவியென எழுந்தவள் அக்கையே” என்றான். துச்சாதனன் “என் குலமகள்… என் குலமகள் அசலை” என விசும்பினான். “ஒன்று செய்யலாம். இவருடைய முற்பிறப்பு நிலை என்ன என்று உசாவலாம். இங்கு அதற்கு ஒருவர் இருக்கிறார். சாதர் என்று பெயர். ஊரில் இவர் காளிகை அன்னையின் பூசகராக இருந்தார்.”

“அவரால் எழமுடியுமெனத் தோன்றவில்லை. அரசநாகத்தால் கடியுண்டவர்போல் நஞ்சேறிக் கிடக்கிறார்” என்று ஒருவன் சொன்னான். “அது நன்று… எழுப்புக!!” என்றான் பூதநாதன். இருவர் சாதரை உலுக்கி எழுப்ப அவர் எழுந்தமர்ந்து உரக்க ஏப்பம்விட்டு மீண்டும் கள்ளுக்காக கை நீட்டினார். “சாதரே, எழுக! அங்கநாட்டரசர் கர்ணன் வந்துள்ளார். உங்களிடம் சில வினாக்களை எழுப்புகிறார்” என்றான் பூதநாதன். “அவரை நான் அறிவேன். நாங்கள் இணைந்து வங்கப்போர்க்களத்தில் மதுவருந்தி…” என்றபின் கர்ணனைப் பார்த்து “வணங்குகிறேன், அரசே” என்றார் சாதர்.

“சாதரே, உங்களை நினைவுறுகிறேன். அன்று நீங்கள் இன்னொருவனிடம் பூசலிட்டீர்கள். அவன் பெயர் சம்பு” என்றான் கர்ணன். “ஆம், நல்லவன். இறந்துவிட்டான்” என்ற சாதர் “என்ன கேட்கவிருக்கிறீர்கள்?” என்றார். “இவன் கேட்கிறான். இவன் யார்? இவனை ஏன் அக்கை தொடர்கிறாள்?” என்று கர்ணன் கேட்டான். “என் குலமகள்… அவளை நான் தொடவே இல்லை” என்று துச்சாதனன் விசும்பி அழுதான். சாதர் “உசாவுகிறேன். என் தெய்வங்களை எழுப்புகிறேன்” என்றபின் கையூன்றி தவழ்ந்து நெருப்பருகே வந்தார். நன்கு அமர்ந்து நெருப்பொளியில் சிவந்து தெரிந்த தரையில் ஒரு களத்தை சுட்டுவிரலால் வரைந்தார். அதில் ஏழு கூழாங்கற்களை வைத்தார். மிக மெல்ல அவற்றை நகர்த்தினார். அச்செய்கையாலேயே மயக்குற்றவர்போல அதை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தார்.

பின்னர் “ஆம்” என்றார். “எவர்? எவர்?” என்றார். கர்ணன் துச்சாதனனின் ஒரு மயிரிழையைப் பறித்து அந்தக் களத்தில் வைத்தான். அவர் உடலில் ஒரு சிறிய விதிர்ப்பு கடந்துசென்றது. பின்னர் ஆழ்ந்த மூச்செறிதல்கள் வெளிப்பட்டன. குரல் பிறிதெங்கிருந்தோ என ஒலித்தது. “இவர் விண்ணிலிருந்து ஆளும் கலிதேவனின் கொடியாக அமைந்த காகம். தன் விழைவால் காகன் என்னும் அசுரன் எனப் பிறந்தார். மண்ணில் ஆயிரமாண்டுகாலம் அரசனாக ஆண்ட பின்னர் காகமென்று வடிவுகொண்டு காட்டில் வாழ்ந்தார்.”

“முன்பு விண்பேருருவன் இங்கே ராகவராமனாக அயோத்தியில் பிறந்து மிதிலையின் இளவரசியை மணந்து தந்தையின் சொல்கேட்டு கானேகி மந்தாகினி என்னும் ஆற்றின் கரையில் அவளுடன் தனித்திருந்தான். இனிய காற்றில் அவன் அவள் மடிமேல் தலைவைத்து துயின்றான். அப்போது காற்றில் ஆடை விலக சீதையின் இடத்தொடை வெளிப்பட்டது. தொடையின் அழகை மேலே மரக்கிளையில் இருந்து இடதுவிழியால் கண்ட காகாசுரன் கீழிறங்கி வந்து அந்த மென்தொடையை தன் கூரிய கரிய அலகால் கொத்தினான்.”

“தன் கணவனின் துயில் கலையலாகாது என்று அன்னை அதை பொறுத்துக்கொண்டாள். குருதி வழிந்து கன்னத்தை நனைக்க விழித்தெழுந்த ராமன் என்ன நிகழ்ந்தது என்று அறிந்து சினம்கொண்டான். காகத்தை நோக்கி அவன் சினந்தபோது அது இருள்விரிந்ததுபோல் எழுந்து பேருருக் காட்டியது. ராமன் அருகிருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அதை நோக்கி வீசினான். அது பெரும்புயலென பெருகி வருவதைக் கண்டு காகாசுரன் பறந்து தப்பினான். அந்த தர்ப்பபாசம் அவனை ஏழுலகங்களுக்கும் துரத்தியது. எங்கும் நிலைகொள்ளாமல் அவன் பறந்தான். அவன் வழிபட்ட குலதெய்வங்கள் அனைத்தும் அவனை கைவிட்டன. வேறுவழியில்லாமல் அவன் வந்து ராமனின் காலடியில் விழுந்து தன்னை காக்கும்படி கோரினான்.”

“அடியார்க்குநல்லானாகிய பெருமான் காகாசுரனின் பிழைபொறுத்து ஏற்றுக்கொண்டான். தன் தேவியின் காலடியில் மும்முறை வணங்கி அருள்பெறும்படி கோரினான். காகாசுரன் வணங்க அன்னை அவன் கழுத்தை தடவினாள். அவள் கையிலிருந்த குருதியின் ஈரம் பட்ட அந்த இடம் மட்டும் மென்வண்ணம் கொண்டது. அன்னையின் அழகை நோக்கிய அவன் ஒருகண் மட்டும் நோக்கிழந்தது. அன்றுமுதல் காகங்கள் கழுத்து வெளிறி, அரைநோக்கு கொண்டன” என்றார் சாதர். “காகன் மீண்டும் விண்ணேகி கலிதேவனின் துணைவனாக அமர்ந்தான். கலி மண்பிறக்க முடிவெடுத்தபோது தானும் உடன்வந்தான். அஸ்தினபுரியின் அரசன் என கலிதேவன் எழுந்தான். உடன் துச்சாதனன் என்னும் பேரில் காகன் பிறந்தான்.”

“அரசே, முற்பிறப்பில் செய்தவற்றையே மீண்டும் அவன் செய்தான். எப்பிழையும் ஏழுமுறை செய்யப்படும் என்று உணர்க! முதல்முறை அது பொறுத்தருளப்படும். பின்னர் அறிவுறுத்தப்படும். அதன்பின்னர் தண்டிக்கப்படும். ஏழுமுறை இயற்றப்பட்டு அதனூடாக ஏழுவகை அறிதல்களாக அது மாறும். ஏழாம்முறை விண்ணிலுறையும் தூய மெய்யறிவென்று தெளியும். அதனூடாக அப்பிழைசெய்பவன் வீடுபேறடைவான். பிழைகளனைத்தும் தவங்களே. பிழைகளினூடாகவே உயிர்கள் நிறைவடைந்து விண்மீள்கின்றன” என்றார் சாதர்.

துச்சாதனன் “என் குலமகள்! என் அரசி!” என விசும்பிக்கொண்டிருந்தான். கர்ணன் அவன் தோளை மெல்ல தட்டினான். பின்னர் எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன். நாளை போரில் எழுவோம்” என்றான். ஒற்றைக்கையால் துச்சாதனனின் எடைமிக்க பேருருவை சிறுகுழவி என தூக்கினான். அவனை நோக்கிக்கொண்டிருந்த சாதர் “நீங்கள் நாகர்” என்றார். துச்சாதனன் அரைவிழிப்பில் “ஆம், அவர் நாகபாசர். பாதாளனாகிய மணிகர்ணன் அவர் வில்லென்று நின்று நடமிடுகிறது” என்றான். சாதர் “நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும், அங்கரே” என்றார். அவர் விழிகள் நாகங்களுக்குரிய இமையா மணித்தன்மையை அடைந்துவிட்டிருந்தன. “சொல்க!” என்றான் கர்ணன். சாதரின் குரல் சீறலென மாறிவிட்டிருந்தது.

நாகர்களிடம் ஒரு கதை உள்ளது. முன்பு இங்குள்ள அத்தனை நாகங்களும் வான்நிறைத்து பறந்துகொண்டிருந்தன. காசியபரின் குருதியில் தட்சனின் மகள்களில் பிறந்த மாநாகங்கள் அனைத்தும் பெருஞ்சிறகுகள் கொண்டிருந்தன. அவை முதலில் வருணனாலும் பின்னர் சூரியனாலும் இறுதியில் இந்திரனாலும் முற்றாக தோற்கடிக்கப்பட்டன. மேலும் மேலும் அவியூட்டி வருணனையும் சூரியனையும் இந்திரனையும் ஆற்றல்மிக்கவர்களாக ஆக்கினர் அந்தணர். நூற்றெட்டுமுறை விண்ணிலும் நூற்றெட்டுமுறை மண்ணிலும் நாகர்கள் வெல்லப்பட்டனர். அஞ்சி அஞ்சி நிலையொழிந்து அவை பின்வாங்கின. ஆகவேதான் மண்நாகங்கள் இன்றும் மழையையும் வெயிலையும் ஒழிகின்றன. இடியோசையை அஞ்சுகின்றன.

மூன்று தேவர்களிடமும் நாகங்கள் இறுதி எல்லை வரை என நின்று போரிட்டன. ஒருமுறை போரின் உச்சகணத்தில் அவை கண்டன வருணனே பிரம்மன் என. சூரியனே சிவன் என்றும் இந்திரனே விண்வடிவன் என்றும் அவை அறிந்தன. உளம்நடுங்கிச் சுருண்டு அவை இருளுக்குள் சென்று பதுங்கின. அங்கே ஆழங்களுக்குள் இருந்து ஆழங்களுக்குள் அவை சென்றன. தங்கள் உடலை நீரென நீட்டி பாதாளங்களுக்குச் சென்று பந்தெனச் சுருட்டி அமைந்தன. அவற்றின் சிறகுகள் உதிர்ந்தழிந்தன.

முன்பு அவை வானளந்த காலத்தில் இடியின் ஓசையில் பேசிக்கொண்டிருந்தன. பாதாள இருளில் ஒன்றுடன் ஒன்று உடலொட்டி ஒற்றைச்சுருளென ஆகிக் கிடந்தபோது ஒன்றோடொன்று மூச்சொலியில் பேசிக்கொண்டன. அப்பேச்சே அவற்றின் குரலென்று பின்னர் மாறியது. அவற்றின் நீண்டு பறக்கும் உடல் உருமாறி பதுங்கும் வடிவை அடைந்தது. வானில் இருக்கையில் அவற்றின் செவிகள் பருந்துக்குரியவையாக இருந்தன. பாதாளத்தில் அசைவே ஒலியுமென்பதனால் அச்செவிகள் மறைந்து விழிகளையே அவை செவிகளாகக் கொண்டன.

நாம் இனி எந்நிலையிலும் வெல்லவியலாது என்று மாநாகங்கள் ஒன்றோடொன்று சொல்லிக்கொண்டன. நாம் நம்மை ஆக்கிய தெய்வங்களால் கைவிடப்பட்டுள்ளோம். அவிபெற்று வளர்ந்து வருணனும் சூரியனும் இந்திரனும் மூன்று முதற்தெய்வங்களுக்கு நிகரென்று ஆகிவிட்டிருக்கிறார்கள். இனி நாம் மேலெழுவது இயல்வதல்ல. நாம் நம் அன்னையிடம் சென்று கேட்போம். தன் மைந்தர்களுக்கு அவள் சொல்வதென்ன என்று உசாவுவோம் என்றது முதிய நாகமான கார்க்கோடகன்.

மாநாகர்கள் கிளம்பி மேலும் மேலும் ஆழத்திற்குச் சென்று ஆழமும் ஆன வானிலெழுந்தனர். அங்கே மாமலைத்தொடர்களை சிறுசெதில்கள் எனக்கொண்டு விண்மீன் மினுக்குகளால் ஆன கரிய திசைப்பெருக்கென உடல்விரித்துக் கிடந்த அன்னை கத்ருவை அணுகின. இடியோசைகளும் மலர்வெடிக்கும் ஒலியென்றாகும் கடுவெளி அது. ஆனால் அன்னைக்கு மைந்தர்குரல் எண்ணமாக இருக்கையிலேயே சென்றடையும். அவர்களின் மன்றாட்டை அன்னை கேட்டாள்.

அன்னையே, நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். இனி இப்புடவிப் பெருநெசவில் எங்களுக்கு இடமே இல்லையா என்று நாகங்கள் கேட்டன. அன்னை கண்கனிந்து எழுந்தாள். மைந்தர்களே, உங்கள் சிறகுகள் உதிர்ந்து பாதாளம் எங்கும் நிறைந்திருப்பதைக் கண்டீர்கள் அல்லவா? அச்சிறகுகளை உண்ணுங்கள். அவை உங்கள் உடலில் நஞ்சு என ஊறிச்சேரும். இனி அதுவே உங்களை ஆற்றல்கொண்டவர்களாக்கும். உலகறிய விரிப்பவை சிறகுகள் ஆகின்றன. கரப்பவை நஞ்சாகின்றன.

ஒளிந்திருக்கும் வஞ்சம், மறைத்துக்கொண்ட சினம், அடக்கிக்கொண்ட விழைவு, ஒலியாகாத சொல், திரளாத எண்ணம், திரிபடைந்த தவம் அனைத்தும் நஞ்சே. மைந்தர்களே, ஒளிக்குரியது சிறகு. நஞ்சு இருளின் விசை. இரவுகளை ஆளுங்கள். ஆழங்களில் நிறையுங்கள். இப்புவியில் இனி கரந்துறையும் அனைத்தையும் உரிமைகொள்ளுங்கள். காத்திருக்கும் அனைத்திலும் சென்று குடியேறுங்கள். அடங்காத அனைத்திலும் ஆற்றலென்றாகுங்கள். நீங்களில்லாமல் புடவியில் எந்நெசவும் முழுமையடையாமலாகுக

அன்னையின் சொற்களுடன் நாகர்கள் திரும்பி வந்தனர். அதன்பின் அவர்கள் தங்கள் பாதாளத்தில் இருந்து ஏழுலகுக்கும் கரவுப்பாதைகளை அமைத்துக்கொண்டார்கள். மண்ணுக்கு எழுந்துவந்து இங்குள்ள மலைக்குடிகளில் தூயவர்களாகிய பெண்களைக் கவர்ந்து அவர்களின் கருக்களில் நாகர்குடிகளென எழுந்தனர். நாகர்கள் காடுகளின் இருளில் கரந்துவாழ்ந்தனர். பெருநகரங்களின் அடியில் அவர்களின் ஊடுபாதைகள் அமைந்தன. அரண்மனைகளின் அடித்தளங்கள் அவர்கள்மேல் அமைந்திருந்தன. கோட்டைகளும் காவல்களும் அவர்களை தடுக்காமலாயின. அவர்களை பெரும்படைகளும் அஞ்சின. இப்பாரதவர்ஷம் நோக்குக்கு ஷத்ரியர்களாலும் உணர்வுக்கு நாகர்களாலும் ஆளப்படுவதாகத் தெரியும் என்றனர் மூத்தோர்.

கர்ணன் அவர் சொற்களை கேட்டுக்கொண்டு நின்றான். பூதநாதன் துயில்கொண்டிருந்தான். தழல் அணைந்து கங்காக மாறிவிட்டிருந்தது. “நான் உடனிருப்பேன்” என்று சாதர் சொன்னார். “நான் என்றும் உடனிருக்கிறேன்.” கர்ணன் மேலும் சிலகணங்கள் அவரை நோக்கியபின் துச்சாதனனைத் தூக்கியபடி நடந்தான். அவன் தோளில் தொங்கியபடி துச்சாதனன் சொன்னான். “அன்னையின் இனிய மது! அன்னை!”

அவர்கள் செல்வதை படைவீரர் நோக்கி அமர்ந்திருந்தனர். சாதர் தன் தலைக்கவசத்தில் விரலோட்டி தாளமிட்டார். “தோழர்களே, தொல்லரக்கர் குடியினரே, அருந்துக நம் அன்னையின் இன்னமுதை. கரியது, குளிர்ந்தது, ஆற்றல் அளிப்பது. அருந்துக இதை! இது நம்மை அழியாதவர்களாக ஆக்கும். எண்ணுக, இடும்பர் குடி எழும்! இங்கு நம் குருதி நிலைகொண்டு வாழும்!” முன்னும் பின்னும் உடலசைத்து சன்னதம் கொண்டு குரலெழுப்பினார் “நான் இடும்பன்! தொல்லிடும்பர் குடியின் குடாரன்! என் சொற்கள் இவ்விருளில் பெருகியெழுக! ஆம், எழுக!”