மாதம்: ஜனவரி 2019

நூல் இருபது – கார்கடல் – 38

ele1காந்தாரியின் அரண்மனையில் தன் ஒற்றை விழி இமைக்காது வெறித்திருக்க இரு கைகளும் வெறுங்காற்றிலிருந்து எதையோ துழாவி எடுப்பதுபோல் அலைபாய ஏற்ற இறக்கங்களோ உணர்ச்சிகளோ அற்ற சீர் குரலில் ஏகாக்ஷர் சொன்னார். அரசி, குருக்ஷேத்ரத்தில் இந்த இளங்காலையில் நான் காண்பது பத்மவியூகம் பொறியென உயிர்கொள்வதை. தாமரையில் அடித்தண்டென சகுனி தன் பதினெட்டு செய்தி முரசுகளுடனும் நூற்றெட்டு கொம்புகளுடனும் கூடிய செய்திமாடத்தை நிறுவி அதை சுற்றியும் காந்தாரப் படைகளை வட்டமாக அமைத்து நிலைகொண்டிருக்கிறார். ஆயிரம் கூண்டுகளில் செய்திபுறாக்கள் சிறகொடுக்கி கழுத்துக்களை உள்ளிழுத்து விழி மயங்கி அமர்ந்திருக்கின்றன. தொலைசெய்திக்குரிய நூறு கழுகுகள் தோலுறைகளால் தலை மூடப்பட்டு இரும்புக்கூண்டுகளுக்குள் உடல் குறுக்கி அமர்ந்துள்ளன. புரவிகளில் செல்லும் தூதர்கள், ஓலை எழுத்தர்கள் என அனைவரும் அங்கு வந்து சேர்ந்துவிட்டிருக்கின்றனர்.

கவசங்களணிந்து படைக்கலங்கள் சூடிய படைவீரர்கள் வாழ்த்தொலிகளோ அறைகூவல்களோ இல்லாமல் இரும்புக்குறடுகள் மண்ணில் சீராக விழுந்தொலிக்கும் தாளங்கள் இணைந்தெழுந்த ஒலியலைகள் மட்டும் நிறைந்திருக்க நிரைவகுத்து படையென்றாகின்றனர். ஆணையொலிகள் ஆங்காங்கே எழுகின்றன. சிறு சுடர்களால் சுழற்றி காற்றிலெழுதி கட்டளைகளை அளிக்கின்றனர் படைத்தலைவர்கள். இருளில் இரும்புக் கவசங்களும் கேடயங்களும் வாள்களும் மின்னும் ஒளியால் அங்கு நீர்நிலையொன்று அலைகொள்வதுபோல் தோன்றுகிறது. தாமரைச்சூழ்கையில் ஒவ்வொரு இதழும் தன்னை அமைத்துக்கொண்டது. அதன் குவிமுனையில் தலைமைப் பெருவீரன் நின்றிருந்தான். அவனுக்கு இருபுறமும் வில் வளைவென வேல்களை ஏந்திய புரவிப்படை வீரர்கள் நின்றனர். அவர்களின் நிரைக்குள்ளே தேர் வில்லவர்கள். அவர்களுக்கு இருபுறமும் எரிவேலேந்திய காலாட்படையினர் நின்றனர்.

அஸ்வத்தாமன், சல்யன், பூரிசிரவஸ், சுபலர், துரியோதனன், சுபாகு, துரோணர், கர்ணன் உள்ளிட்ட பதினெட்டு கௌரவப் பெருவீரர்கள் முதன்மை கொள்ள அமைந்த பதினெட்டு இதழ்கள் தாமரையின் உள்ளிதழ் வட்டமென அமைந்திருந்தன. அதைச் சூழ்ந்து மத்ர, கேகய, கோசல, வங்க, கலிங்க, அங்க, மாளவ, அவந்தி, கூர்ஜர, சிபி, சௌவீர, பால்ஹிக, திரிகர்த்த நாட்டுப் படைகளின் நூற்றெட்டு இதழ்கள் செறிந்திருந்தன. படையமைவு முன்பே தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் நீர் ஓசையின்றி சென்று நிறைவதுபோல் புலரிக்கருக்கிருள் மறைவதற்குள்ளாகவே முழுமை பெற்றது. விடிவெள்ளி துலங்கி வானில் நின்றிருக்க ஒவ்வொருவரும் அவ்வப்போது விழிதூக்கி அதை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ele1முற்புலரியில் சுருதகீர்த்தி வந்து தன் தோளைப்பற்றி எழுப்புவது வரை அபிமன்யு துயின்று கொண்டிருந்தான். அதற்கு முன், காலை முரசொலி எழுந்ததுமே ஏவலர் பலமுறை அவனை எழுப்பியிருந்தனர். எப்போதுமே புலரியில் எழுவதற்கு அவனால் இயல்வதில்லை. இரவில் எத்தனை களைத்திருந்தாலும் நெடும்பொழுது அவன் துயில்வதும் இல்லை. இரவில் படைவீரர்களிடம் சொல்லாடிக்கொண்டோ சூதாடிக்கொண்டோ களியாட்டமிடும் அவனிடம் வந்து “இளவரசே, நெடும்பொழுதாகிறது. புலரியில் தாங்கள் எழுந்தாகவேண்டும். பிந்தி துயில்வது அதற்கு ஊறு” என்று அவனை எச்சரித்து வற்புறுத்தி மன்றாடிக்கொண்டிருக்கும் ஏவலர்களே புலரியில் அவனிடம் வந்து “இளவரசே, எழுக! முரசொலி முழங்கத்தொடங்கிவிட்டது! இளவரசே, கொம்பொலிகள் எழுகின்றன. இன்னும் பொழுதில்லை” என்று உலுக்கவும் வேண்டியிருக்கும்.

இரவில் சீற்றத்துடன் “செல்க, மூடா! நான் எப்போது துயிலவேண்டுமென்று ஆணையிடும் உரிமையை உனக்கு யார் அளித்தது? நான் இளவரசன்! விரும்பியதைச் செய்வேன். விலகு! இல்லையேல் உன் சங்கை அறுப்பேன்” என்று சீறுபவன் புலரியில் முதலில் சிணுங்கலுடன் உடல் சுருட்டிக்கொள்வான். அப்போது அகவை முதிராத குழவி போலிருப்பான். கருக்குழந்தையென உடலை மடித்து நெஞ்சோடு கைசேர்த்து அவன் துயில்கையில் முலையருந்தும் குழந்தையின் உதடுகள்போல் முகம் கூர் கொண்டிருக்கும். மீண்டும் மீண்டும் அவனை எழுப்பும் ஏவலர் அவனிடமிருந்து வசைச்சொற்கள் பீறிட கைகள் நெளிந்து எழுகையில் சற்று பின்னடைந்து நின்று “புலரி எழுந்துவிட்டது, அரசே. என் கடன் இது” என்று மீண்டும் சொல்வார்கள். “செல்க! நானறிவேன்!” என்று சொல்லி அவன் மீண்டும் புரண்டுபடுப்பான்.

அன்று காலை பலமுறை எழுப்பிய பின் ஏவலரே தயங்கி குடிலுக்கு வெளியே சென்று நின்றுவிட்டனர். அபிமன்யு அரைத்துயிலில் குழறலாக ஏதோ சொன்னான். சிறுவர்களுக்குரிய நகைப்பொலி எழுந்தது. மீண்டும் மெல்லிய குறட்டையொலி கேட்கத் தொடங்கியது. சிறு குழந்தைகளுக்குரிய புறாக்குறுகல் போன்ற குறட்டையொலி அது. புரவிக்குளம்படி எழ இருளுக்குள் இருந்து பந்தவெளிச்சத்தில் தோன்றிய சுருதகீர்த்தி வந்திறங்கி “என்ன ஆயிற்று? இன்னுமா உங்கள் இளவரசர் எழவில்லை?” என்று கேட்டபடி அணுகியபோது “தாங்களே எழுப்புங்கள், இளவரசே. இதற்குமேல் எங்களுக்கு செல்கை இல்லை” என்று ஏவலன் சொன்னான்.

சுருதகீர்த்தி குடிலுக்குள் சென்று மஞ்சத்தில் மரவுரியைப் போர்த்தியபடி கருக்குழவிபோல் உடல்சுருட்டிப் படுத்திருந்த அபிமன்யுவின் தோளை அறைந்து “எழுக!” என்றான். “என்ன! என்ன!” என்றபடி புரண்ட அபிமன்யு சுருதகீர்த்தியைக் கண்டு சலிப்புடன் உடலை நெளித்து “இன்னும் சற்று பொழுது… இன்னும் சில கணங்கள், மூத்தவரே” என்றான். “இதற்கு மேல் துயின்றால் நீ களத்திற்கு எழவேண்டியதில்லை. இங்கேயே படுத்துக்கொள்” என்றபடி சுருதகீர்த்தி எழுந்தான். அவன் கையைப்பற்றி நிறுத்தி “இங்கேயே இருங்கள், மூத்தவரே. இன்னும் சில கணங்கள். என் இமைகள் எடைகொண்டிருக்கின்றன” என்றான் அபிமன்யு.

சுருதகீர்த்தி எதிர்பாராத கணத்தில் அவன் இரு கைகளையும் பற்றி விசையுடன் தூக்கி நிறுத்தினான். அவன் தோளைப்பற்றி பலமுறை உலுக்கி “விழித்துக்கொள்!” என்றான். அபிமன்யு “என்ன செய்கிறீர்கள்! என் தலை சுழல்கிறது!” என்றபடி கைகளை விரித்து சோம்பல் முறித்து “நான் நேற்றிரவு துயில நெடும்பொழுதாகியது” என்றான். “அதுதான் அனைவருக்கும் தெரியுமே. இங்கு பின்னிரவில்கூட விளக்கொளி தெரிந்தது என்று சொன்னார்கள்” என்றான். “நான் படைநிரைகளைச் சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டுவந்து அவற்றை சுவடியிலும் நோக்கினேன்” என்றபின் “தந்தை எப்படி இருக்கிறார்?” என்றான்.

“உளம் சோர்ந்திருக்கிறார். நேற்று அவர் வாழ்வின் மிகப் பெரிய இழிவொன்றை சந்தித்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்றான் சுருதகீர்த்தி. “அது இழிவேதான். அக்கீழ்மகனின் கையிலிருந்து உயிர்பெற்று மீள்வதைவிட சிறுமை பிறிதொன்றுமில்லை” என்றபின் அபிமன்யு “ஆனால் தந்தைக்கு அவ்விழிவு தேவைதான்” என்றான். “ஏன்?” என்று சுருதகீர்த்தி விழிசுருக்கி கேட்டான். “அத்தனை பெருமைகளையும் ஒருவரே அடைகையில் மறுதட்டில் சற்று இழிவு இருப்பது நன்றல்லவா?” என்று அபிமன்யு சொன்னான். பின்னர் உரக்க நகைத்து “எண்ணி நோக்குக, மூத்தவரே! பாரதவர்ஷத்தின் ஆண்மையின் அடையாளம் என்று புகழப்படுபவரின் உடலில் உள்ள பெண்மையைப்பற்றி… எத்தனை பெரிய நிகர் செய்தல் அது. தெய்வங்களும் அவ்வப்போது சிரிக்கத்தான் செய்கின்றன” என்றான்.

சுருதகீர்த்தி அவன் முகத்தையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அபிமன்யு அர்ஜுனனைப்பற்றி பெரும்பாலும் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் பேசும்பொழுதெல்லாம் அதில் பிறிதொரு பொருளிருக்கிறதோ என்ற எண்ணம் சுருதகீர்த்திக்கு வராமலிருந்ததில்லை. “நன்று! நீ உடல்தூய்மை செய்வதற்கெல்லாம் பொழுதில்லை. முகம் கழுவி உணவுண்டு கவசங்களை அணிந்து கொள். இன்னும் சிறு பொழுதே உள்ளது” என்று சுருதகீர்த்தி சொன்னான். அபிமன்யு கைதட்டி வாசலில் நின்ற ஏவலனை உள்ளே அழைத்தான். அவன் தாலத்தை கொண்டு நீட்ட அதில் முகம் கழுவி வாய் கொப்பளித்து சிறிது நீரள்ளி தலையில் தெளித்து கைகளால் கோதி பின்னால்விட்டான். “கவசங்களை கொண்டு வருக!” என்றான்.

சுருதகீர்த்தி “இன்று நீ பல்தூய்மை செய்து கொள்ளலாம். இன்று உன் பிறந்தநாள்” என்றான். “இன்றா?” என அபிமன்யு முகம் சுளித்தான். “இன்றென்றும் கொள்ளலாம். நீ பிறந்த மீன் இன்று. பிறந்த மாதம் வரவிருப்பது” என்றான் சுருதகீர்த்தி. “நன்று! இதை என் பிறந்தநாளென்று கொள்கிறேன்” என்றபின் “விழுது” என்றான். ஏவலன் கொண்டு வந்த ஆலம்விழுதால் பற்களை துலக்கியபடி “மீண்டும் அதே கனவு!” என்றான். “இளமையில் உன்னை ஈன்றபோது துணியால் சற்று அழுத்தமாக சுற்றியிருப்பார்கள். அத்தகையோருக்கு வாழ்நாள் முழுக்க எதிலோ சிக்கிக்கொண்டிருப்பது போன்ற கனவுகள் எழும் என்ற கேட்டிருக்கிறேன். மருத்துவர் சூக்தர் ஒருமுறை என்னிடம் சொன்னார்” என்றான் சுருதகீர்த்தி.

“உங்களுக்கு வரும் கனவென்ன?” என்று அபிமன்யு கேட்டான். “பற்றிஎரிவதுபோல. நான் எங்கோ படுத்திருக்கிறேன். என்னுடைய வலது காலின் நகக்கணு அனல்துளிபோல் மின்னும். நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே என்னுடல் பற்றி எரியத்தொடங்கும். மெழுகுபோல உருகி எரிந்து நாற்புறமும் வடிந்து கொண்டிருப்பேன். நூறுமுறை அந்தக் கனவு எனக்கு வந்துள்ளது” என்றான். “மூத்தவரே, இக்கனவுகள் எதையாவது சுட்டுகின்றனவா?” என்றான் அபிமன்யு.

“எதை சுட்டினாலென்ன? வாழ்வும் இறப்பும் வேறெங்கோ முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்தையும் இணைத்துப்பின்னி விரிந்திருக்கும் அந்தப் பெருந்திட்டத்தில் ஒரு துளியினும் துளி இங்கு தெறித்து நம் முன் வந்து கிடந்து என்னை பார் என்கிறது. அதை பார்த்து நாம் அம்முழுமையை ஒருபோதும் உணர முடியாது. வீண் எச்சரிக்கையையும் அச்சத்தையுமே அடைவோம். அதை ஒரு அழகிய கலைநிகழ்வென்று மட்டுமே கொண்டு முன்செல்வது நன்று” என்றான் சுருதகீர்த்தி. “தவிர்க்கமுடியாமைகளைப் பற்றி பேசுபவன் ஒருபோதும் வீரனாக இங்கு வாழ்வதில்லை.”

“இன்று தந்தை களம் நிற்கப்போவதில்லையா?” என்று அபிமன்யு கேட்டான். சுருதகீர்த்தி “அவர் மிகவும் உளம் தளர்ந்திருக்கிறார். ஆனால் அவரின்றி நமது படை எழாது” என்றான். “அவர் உளம் தளர்ந்திருக்கிறார் என்பது பிற எவரையும்விட அவர்களுக்குத் தெரியும். அவரையோ அரசரையோ சிறைபிடிப்பதற்கான சூழ்கைகளை அவர்கள் அமைப்பார்கள்” என்றான் அபிமன்யு. “ஆம், அவர்கள் மலர்சூழ்கை ஒன்றை அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது” என்றான் சுருதகீர்த்தி. “மலர்சூழ்கை எதற்குரியது?” என்று அபிமன்யு கேட்டான். “அது ஒருவனை முழுப் படையும் சூழ்ந்துகொண்டு சிறைபற்றுவதற்குரியது. மலருக்குள் வண்டென உள்ளே செல்பவன் சிக்கிக்கொள்வான்” என்று சுருதகீர்த்தி சொன்னான். அபிமன்யு “சூழ்கைகள் அனைத்துமே எவரேனும் சிக்கிக்கொள்வதற்குரிய பொறிகள்தான்” என்றபின் வாய்கழுவி மீண்டும் நீரள்ளி தலையில் விட்டு நீவினான். “மெய்தான். எல்லா சூழ்கைகளும் கண்ணிகளே” என்றான் சுருதகீர்த்தி.

“இன்று நம் படைகள் சற்று வெற்றிக்களிப்பில் உள்ளன என்று அவர்கள் அறிவார்கள். நேற்று அங்கநாட்டரசனால் உயிரளிக்கப்பட்டமையால் சிறுமை கொண்டுள்ள நம் தந்தை சீற்றம் கொண்டு மிகையான ஊக்கத்துடன் எழுவாரென்றும் அவர்கள் எண்ணியிருப்பார்கள். நாம் பொறிக்குள் சென்று சிக்குவதற்கான வாய்ப்புகளே மிகுதி” என்றான் அபிமன்யு. “ஆனால் தந்தை போருக்கெழுவதற்கே உளமில்லாதவராக, ஆற்றல் முழுக்க வடிந்து போய் அமர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். புலரியில் அவரை எழுப்பி கவசமணியச் செய்யச் சென்ற ஏவலர்கள் அவர் கவசமணிய விழையாமையை வந்து சொல்ல சிறிய தந்தை நகுலரும் சகதேவரும் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள்” என்று சுருதகீர்த்தி சொன்னான்.

“அவர் எழுவார். ஏனெனில் எழாமல் இருக்க அவரால் இயலாது. ஆனால் தளர்ந்த வில்லுடன் அவர் போருக்குச் செல்வாரென்றால் அங்கனால் கொல்லப்படுவார்” என்று அபிமன்யு சொன்னான். “கொல்லப்படுவதா? அவரா?” என்று சீற்றத்துடன் சுருதகீர்த்தி கேட்டான். “ஏன் அவர் மானுடரல்லவா? அம்புகள் அவரை துளைக்காதா என்ன?” என்றான் அபிமன்யு. சுருதகீர்த்தி “ஆம், மானுட அம்புகளால் அவர் துளைக்கப்படமாட்டார். அதை நிமித்திகர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “நிமித்திகர்கள் அவ்வாறு சொல்லிச் சொல்லி பலவற்றை ஏற்றி அவரை மானுடனல்ல என்று தானும் நம்ப வைத்திருக்கிறார்கள். அந்நிலையில்தான் இப்படி எவரேனும் சிறுமை செய்து அனுப்புகையில் உடைந்து வீணனென அமர்ந்திருக்கிறார்” என்று அபிமன்யு சொன்னான்.

கவசங்களைக் கட்டியபடி குனிந்து நின்று “இன்று தளர்ந்த வில்லுடன் சென்று அங்கன் முன் நிற்பார். அவன் அம்புகளால் கழுத்தறுந்து வீழ்த்தப்படுவார். அதை நான் அருகிலெனக் காண்கிறேன்” என்றான். சுருதகீர்த்தி சீற்றத்துடன் எழுந்து “நிறுத்து. அவர் மைந்தனென நானிருக்கிறேன். என் கண் முன் ஒருபோதும் அது நிகழாது” என்றான். “எனில் அதற்கு முன் உங்கள் தலை வெட்டுண்டு வீழ்த்தப்பட்டிருக்கும்” என்றான். “இப்போது அங்கரை தெய்வமென்றாக்குபவன் நீ” என்று சுருதகீர்த்தி சொன்னான். “மூத்தவரே, அவன் ஏறக்குறைய தெய்வமேதான். அவனிடமிருக்கும் அம்புகள் எவருடையவை? பதினெட்டு முறை பாரதவர்ஷத்தை சுற்றி வந்து ஷத்ரிய குடியை வேரறுத்து அனல்குலத்து ஷத்ரியர் என்னும் நிகர்குடியை உருவாக்கி பாரதவர்ஷத்தை புரட்டியமைத்த பரசுராமனின் அம்புகளல்லவா? அதிலிருக்கும் சீற்றத்தையல்லவா நூறு தலைமுறைகளாக இங்கு ஷத்ரியர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்? இன்று அந்த அம்புகளில் காண்டவக் காட்டின் எஞ்சிய நஞ்சும் ஏறியிருப்பதாக சூதர்கள் சொல்கிறார்கள்” என்றான் அபிமன்யு.

சுருதகீர்த்தியை நோக்கி கைசுட்டி “அங்கு ஒரு அம்பு காத்திருக்கிறது நம் தந்தைக்காக. அது நீள்தவம் செய்த நஞ்சு. தவங்கள் ஒருபோதும் வீணாவதில்லை” என அவன் சொன்னான். “அதிலிருந்து எளிதில் ஒழிய அவரால் இயலாது. ஏனெனில் அவரே தனக்கென கொளுத்திக்கொண்ட சிதைநெருப்பு அது. அது அவரைத் தேடி வரும். வஞ்சம் கொண்ட நாகத்திலிருந்து விண்வாழும் மூவிழியனே தப்ப இயலவில்லை. அதை தன் கழுத்தின் அணியென ஆக்கி இன்றும் பேணிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்” என்றான்.

சுருதகீர்த்தி “நீ சொல்ல வருவதென்ன என்று நன்கு புரிகிறது எனக்கு” என ஏளனத்துடன் சொன்னான். “தந்தைக்கு மேல் எழ விரும்புகிறாய். அவர் வீழ்ந்த இடத்திலிருந்து எழுந்து அவ்வஞ்சத்தை முடித்து புகழ்கொள்ள விரும்புகிறாய். அது நிகழாது. களத்தில் நீயும் நானும் விழுவோம். அவர் ஒருபோதும் விழமாட்டார். ஏனெனில் நம் அம்புகள் நமது எண்ணங்களிலிருந்தும் உணர்வுகளிலிருந்தும் வருகின்றன. அவரது அம்புகள் அவருள் நிறைந்திருக்கும் இன்மையிலிருந்து வருகின்றன. அவ்வின்மையை இங்கு வாழ்ந்து எவரும் ஈட்டிக்கொள்ள இயலாது. இங்குள்ள வாழ்வை ஒவ்வொரு கணமும் துறந்துதான் ஈட்டிக்கொள்ள இயலும்” என்றான்.

“அவரை இந்த அனைத்திலிருந்தும் விடுவித்து கைபற்றி அப்பால் அப்பால் என்று அழைத்துச்செல்லும் ஆசிரியர் அவருக்கு இருக்கிறார். நீயும் நானும் இங்கே விழைவால், வஞ்சத்தால் செயல்வலைப் பின்னலில் சிக்கியிருப்பவர்கள்” என்றான் சுருதகீர்த்தி. “இளைய யாதவரின் படைக்கலம் நம் தந்தை என்பதை நீ மறந்துவிட்டாய். நாம் ஊழின் படைக்கலங்கள். அவர் இறையுருவாக மண்ணில் எழுந்தவரின் படைக்கலம். ஒருபோதும் அது மானுடர் முன் தாழாது. ஐயமே வேண்டாம், அவர் எடுத்த இலக்கு தவறாது” என்றபின் சுருதகீர்த்தி வெளியே சென்றான்.

அபிமன்யு “பொறுங்கள் மூத்தவரே, நானும் வருகிறேன்” என்றபின் சிறுபீடத்தில் அமர்ந்தான். ஏவலர் அவனுக்கு காலில் கவசங்களை அணிவிக்கத் தொடங்கினர். “நீ கிளம்பி வா. நான் படைமுகப்புக்குச் செல்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி. அபிமன்யு உரக்க நகைத்து “இன்று படைமுகப்பில் தந்தை நிற்க வேண்டியதில்லை, அவர் தளர்ந்திருக்கிறார் என்று அவரிடம் சொல்லுங்கள். இன்று நான் அங்கனுடன் பொருதுகிறேன். அவனுடைய அந்த வெல்ல முடியாத அம்புகளை எப்படி வெல்வதென்று நம் படைகளுக்கு காட்டுகிறேன்” என்றான். அவனை ஒரு கணம் நோக்கிவிட்டு சுருதகீர்த்தி புரவியில் ஏறிக்கொண்டான்.

ele1அபிமன்யு படைமுகப்புக்குச் சென்றபோது அனைத்தும் முற்றொருங்கிவிட்டிருந்தன. ஒவ்வொரு கணமும் முரசின்மீது கழைக்கோல் விழும் என்று எதிர்பார்த்தவர்களாக படைவீரர்கள் நின்றிருந்தனர். அவனுடைய தேர் உருண்டு வருவதன் ஓசை படைமுகப்பில் சிறிய அலைகளை எழுப்பியது. தேர் சென்று நின்றதும் அபிமன்யு தேர்த்தட்டில் எழுந்து நின்று கைகளைக் கோத்து நெட்டிமுறித்தபின் தன் வில்லை எடுத்து தேர்த்தட்டில் ஓசையெழ ஊன்றி அதன் நாணை வலக்கையால் வருடினான். அந்த ஓசை கேட்டு அருகிலிருந்த தேரில் இருந்து சதானீகன் திரும்பி நோக்கி “ஏன் இத்தனை பிந்திவிட்டாய்? இன்று நமது படைகள் ஹஸ்தவியூகம் அமைத்துள்ளன” என்றான்.

அபிமன்யு அதை பொருட்படுத்தவில்லை. “அவர்கள் அமைத்துள்ள மலர்ச்சூழ்கையை எதிர்ப்பதற்கான வழி இது ஒன்றே” என சதானீகன் தொடர்ந்தான். “ஐந்து விரல்களாக நமது படைகள் உருப்பெற்றுள்ளன. அனைத்து விரல்களையும் சென்று தொடும் கட்டை விரலாக மூத்த தந்தை பீமசேனர் எல்லையில் நின்றுள்ளார். சுட்டுவிரலென மூத்த தந்தை அர்ஜுனரும், நீள்விரலென திருஷ்டத்யும்னரும், நாகவிரலென சாத்யகியும், சிறுவிரலென சிகண்டியும் அமைய நமது படை அணிகொண்டுள்ளது” என்றான். அபிமன்யு “நாம் எப்போதும் சூழ்கைகளை சிறப்பாகவே அமைக்கிறோமோ?” என்றான்.

அதிலிருந்த ஏளனத்தை புரிந்துகொண்ட சதானீகன் “இன்று அவர்கள் நம்மில் ஒருவரை கொன்றோ சிறைபிடித்தோ மீள்வோம் என்று வஞ்சினம் உரைத்து வந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. மறுவஞ்சமாக நாம் அவர்களில் சிலரை பற்றிக்கொண்டுவர எண்ணியிருக்கிறோம்” என்றான். “நம் இலக்கு யார்?” என்று அபிமன்யு கேட்டான். “அங்கர். அல்லது கௌரவ அரசர். அவர்களின் இலக்கு நம் அரசர் என்று தோன்றுகிறது.” அபிமன்யு “ஏன் இளையவராக இருக்கக்கூடாதா?” என்று சிரிப்புடன் கேட்டான். “என்ன சொல்கிறாய்?” என்று சதானீகன் கேட்டான். “தந்தை வில் தளர்ந்து இருப்பது படைகள் அனைவருக்கும் தெரியும். அவரை இலக்கு வைத்து அவர்கள் வந்திருக்கலாமல்லவா?” என்றான் அபிமன்யு.

“அவரை அத்தனை எளிதாக பிடிக்க இயலாது” என்று சதானீகன் சொன்னான். “ஆம், அதன் பொருட்டே இப்படை சூழ்கை அமைக்கப்பட்டிருக்கலாம். அவர் உளம் தளர்ந்திருக்கிறார். உளம் தளர்ந்திருப்பவர்கள் தங்களால் இயல்வதற்கு அப்பால் ஒரு பெருஞ்செயலை செய்யும்பொருட்டு துணிந்தெழுவது எங்கும் நிகழ்வதுதான். அச்செயலினூடாக தங்கள் சோர்வை நீக்கி ஆற்றலை திரட்டிக்கொள்ள இயலுமென்று அவர்கள் எண்ணுவார்கள். அரிதாக அது நிகழவும் செய்யும். பெரும்பாலும் அச்செயல் அவர்களை கீழே தள்ளி காலால் மிதித்து கூழாக்கிவிடும்” என்றான் அபிமன்யு.

சதானீகன் அச்சொற்களால் கசப்படைந்து “அவர் என்ன செய்யவேண்டுமென்பதை கற்பிக்கும் இடத்தில் நாம் எப்போதுமிருந்ததில்லை” என்றான். “ஆம், ஆனால் சுட்டுவிரல் நீட்டி இன்று அந்தப் பொறியை தொடப்போகிறது நம் படை. அது கவ்வி துண்டித்து எடுத்துக்கொள்ளப்போகிறது” என்று அபிமன்யு சொன்னான். “எனில் நீ சென்று அவரை மீட்பாய் போலும்” என்று ஏளனமாக சதானீகன் கேட்டான். “ஆம், அவர் சிக்கிக்கொண்டால் அங்கு சென்று அவரை மீட்டு வரும் ஆற்றல் கொண்டவன் நான் மட்டுமே. மீட்டுக்கொண்டு வருவேன். அதன் பின் அவரைப் பார்த்து ஒரு சொல்கூட உரைக்காமல் தலைவணங்கி மீள்வேன். என் கண்களை அவர் சந்திக்கமாட்டார். அங்கனின் கையிலிருந்து உயிர்பெற்று மீண்டதற்கு நிகரான துயரை அப்போது அடைவார். ஒருவேளை எங்களுக்குள் இருக்கும் கணக்கு அப்போது நிறைவேறக்கூடும்” என்றான் அபிமன்யு. சதானீகன் மறுமொழி சொல்லாமல் தன் தேரை திருப்பி அப்பால் கொண்டுசென்றான்.

போர்முரசுகள் ஒலிக்கத் தொடங்கியதும் அபிமன்யு நாணொலி எழுப்பியபடி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவிக்கொண்டு பாஞ்சாலத்தின் வில்லவர்படை தன்னை இருபுறமும் சூழ்ந்து துணைவகுக்க கௌரவப் படைகளின்மேல் பாய்ந்தான். போர் தொடங்குவதற்கு முந்தைய கணம் வரை தன் அகம் பலநூறு துண்டுகளாக சிதைந்து ஒன்றுடன் ஒன்று உரசி முட்டிக்கொண்டிருப்பதாக அவன் உணர்வதுண்டு. போர் தொடங்கிய கணமே அவன் முற்றிலும் மறைந்து அத்தேரில் அவன் வில் மட்டும் நின்று கொந்தளித்துக்கொண்டிருக்கும். அதிலிருந்து அவனை மீறியே என அம்புகள் எழுந்துகொண்டிருக்கும். கணமொழியாது அலைகளை ஏவும் பெருங்கடல் வளைவு என அவன் வில்லைப்பற்றி சூதர்கள் முன்பு பாடியிருந்தனர். ஒவ்வொரு கணமும் அவன் முற்றொழிந்து மறுகணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். போரின் திட்டமிடல்களும், திட்டத்தை மீறி எழுதல்களும், பின்னடைதல்களும், வீறுகளும், சோர்வுகளும், சூழ்ச்சிகளும், வஞ்சினங்களும் அனைத்தும் பிறிதொருவனால் நிகழ்த்தப்பட அவன் அப்பால் நின்று அதை நோக்கிக்கொண்டிருப்பான்.

தொலைவில் விரிந்திருந்த கௌரவப் படையின் பெருந்தாமரையை அவனால் அந்தத் தேரிலிருந்து பார்க்க இயலவில்லை. அதன் இதழ்கள் ஒவ்வொன்றும் முனை நீண்டு குவிந்த அலைகள் வடிவிலிருந்தன. அவனுக்கு முன்னால் இருந்த இதழில் பூரிசிரவஸும் சலனும் சோமதத்தரும் பால்ஹிகக் கூட்டமைப்பின் வில்லவரும் இருந்தனர். அவன் பூரிசிரவஸுடன் வில் கோத்து பால்ஹிகர்களின் தேர்வீரர்களை அம்பால் அறைந்து வீழ்த்திக்கொண்டிருந்தான். பூரிசிரவஸ் தன் உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் கையசைவால் ஆணையிட்டுக் கொண்டு அவ்வடிவை காத்தபடி போரிட்டான்.

போர் இருபுறமும் விசை குவியாமலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. தோள்கோத்து தழுவிப் புரண்டு போரிடப்போகும் மல்லர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி வட்டக்களத்தில் தசையிளக சுற்றிவருவது போலவே அது நிகழ்ந்தது. முதன்மை வீரர்கள் எவரும் ஒருவரோடொருவர் கோத்துக்கொள்ளவில்லை. தாமரை இதழ் அகன்று விரிந்து மெல்ல சுழல ஜயத்ரதனால் நடத்தப்பட்ட படையிதழ் அபிமன்யுவின் முன் வந்தது. ஜயத்ரதன் உரக்க நகைத்தபடி “என்ன தயங்கிவிட்டீர்களா? உங்கள் படையில் ஒவ்வொருவரும் அஞ்சி விலகுகின்றனர்! வருக! இளவரசே வருக! உங்களுக்காகவே தேன் ஒருக்கி காத்திருக்கிறது மாமலர்” என்று கூவினான். “இதழ்கள் ஒருங்கட்டும். இன்று அவ்விருந்தை சிதைத்து உள்ளே வந்து உண்டு திரும்புவதே எங்கள் இலக்கு” என்று அபிமன்யு கூவினான்.

ஐந்து விரல் விரித்து கை மலருடன் போரிட்டது. ஐந்து விரல்களும் விரிந்து மலரை அள்ளிக்குலைக்க முயன்றன. மலர் மெல்ல சுழன்று அதை ஒழிய விரல்கள் குவிந்து இதழ்களை தனித்தனியாக கவ்விக் கிழித்து கசக்கியது. சிதைந்த இதழ்களின் வீரர்களை பின்னடையச் செய்ய சகுனியின் ஆணை எழுந்தது. “பின்னடைக! மீண்டும் ஒருங்கிணைக! சிதைந்த இதழ்கள் புல்லிவட்டங்களாகி தாமரையின் அடிவளையத்தை அமைத்துக்கொள்க!” புல்லிவட்டங்களிலிருந்து புதிய இதழ்கள் எழுந்து வந்து மீண்டும் மலரை முழுமைப்படுத்தின. ஒழியாது இதழ் முளைக்கும் தாமரை சுழன்றுகொண்டே இருக்க அதை அறைந்து பற்றிச் சுழற்றி ஊடுருவி போரிட்டது கை.

அபிமன்யு ஒவ்வொரு இதழையும் தாக்கி முன்னெழுந்து வந்த வீரர்களுடன் போரிட்டான். இறுதியில் கர்ணனை நேருக்கு நேர் சந்தித்தபோது உரக்க நகைத்தபடி “பெருவீரர்கள் ஒருவனுக்கு இலக்கு குறித்திருக்கிறீர்கள்! நன்று! அந்த அச்சம் இன்று மேலும் வளரும்” என்றான். “ஈயே, வீண் சொல்லெடுக்காது திரும்பிப் போ. இது வண்டுக்கு விரித்த வலை” என்று கர்ணன் சொன்னான். சீற்றம்கொண்டு “சிறியவனிடமிருந்து பெரிய அம்புகளை பெறுவீர்கள்” என்று வஞ்சினம் உரைத்து அபிமன்யு கர்ணனை அம்புகளால் அறைந்தான்.

மீண்டும் அவர்களிடையே அந்த நிகர்குலையா நெடும்போர் தொடங்கியது. கர்ணன் தன் அகவையை ஒவ்வொரு அம்புக்கும் குறைத்து இளையோனாகி அபிமன்யுவை அணுகவேண்டியிருந்தது. அபிமன்யு தன் அகவையை அம்புக்கு மேல் அம்பென வளர்த்து முதியவனாகி கர்ணனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கர்ணன் தன்னை விருஷசேனனாக உணர்ந்தான். அபிமன்யு தன்னை அர்ஜுனனாக உணர்ந்தான். இரு அம்புமுனைகளும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்துக்கொண்டன. அவை மட்டுமே அறியும் ஒரு சொல்லை பரிமாறிக்கொண்டன. கூரோடு கூர் சந்திக்கும்போது எழும் ஒரு நுண்சொல். செவி கேட்காததாக, விழியுணராததாக, உளம் அந்த முனையளவே கூர்ந்தாலன்றி சென்றடையாததாக இருந்தது அது.

தாமரை விரிந்து கையை பற்றியபின் கூம்பலாயிற்று. அதன் அழுத்தம் மேலோங்கி வருவதை உணர முடிந்தது. அதன் இருபுறத்திலிருந்த இதழ்களும் இறுகி ஒன்றை ஒன்று அழுத்திக்கொண்டே சென்றன. பீமனும் அர்ஜுனனும் தம் படைகளை பின்னெடுத்துக்கொண்டு சென்றனர். யுதிஷ்டிரர் அவ்விசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் தன்னுடைய சிறிய மெய்க்காவல் படையுடன் மையத்தில் தடுமாறினர். துரோணரின் படைகள் இதழெனக் குவிந்து வந்து எண்ணியிராக் கணத்தில் சரடென்றாகி நீண்டு யுதிஷ்டிரரை பற்ற வந்தன. துரோணர் வெறிகொண்டு அம்புகளை தொடுத்தபடி விரைந்து வந்தார். நோக்கியிருக்கவே அவர் மிக அருகே அணைந்துவிட்டார். அவர் அம்புகளால் யுதிஷ்டிரரின் மெய்க்காவல் படைகளிலிருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் அறைபட்டு அலறி வீழ்ந்தனர்.

அஞ்சி கை பதறி “பின்னடைக! பின்னடைக! ” என்று யுதிஷ்டிரர் கூவினார். “மந்தனுக்கு செய்தி சொல்க! இளையவர்கள் வருக! என்னை சிறைபிடித்து கொண்டுசெல்லும் இலக்கு கொண்டிருக்கிறார்கள்.” சல்யரும் சோமதத்தரும் இருபுறமும் துரோணரை காத்தனர். துரோணரின் அம்பு எல்லைக்குள் யுதிஷ்டிரர் வந்தார். அவருடைய கொடியும் தேர்மகுடமும் உடைந்தன. “நான் சிக்கிக்கொண்டேன்! என்னைக் காக்கும்பொருட்டு படையெழுக!” என்று யுதிஷ்டிரர் கூவினார். அருகே அபிமன்யுவின் கொடியைக் கண்டு “அபிமன்யுவை வரச்சொல்க! இந்தப் படைசூழ்கையின் முனையை அவன் உடைக்கட்டும்” என்றார். யுதிஷ்டிரரின் அழைப்பைக் கேட்டதும் கர்ணனுடன் பொருதிக்கொண்டிருந்த அபிமன்யு அக்கணமே தேரைத் திருப்பி பக்கவாட்டில் துரோணரின் படைகளை தாக்கினான். இடைமுறியா மழைபோன்ற அம்புகளால் துரோணரின் காவல்சுற்றத்தை வீழ்த்தி அவரை அறைந்து பின்னடையச் செய்தான். தேர்த்தட்டில் சோமதத்தர் அம்புபட்டு விழுந்தார். சல்யரின் வில் முறிந்து தெறித்தது. அவர் தொடையில் அம்பு பாய்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தார்.

துரோணரின் காவலர்படையில் வில்லவர் அனைவரும் விழ அவர் நிலையை உணர்ந்து தன் தேரை பின்னடையச் செய்தார். யுதிஷ்டிரர் “விடாதே! அப்படியே முன்னகர்ந்து செல்! சென்று தாமரை வளையத்தை உடை! அதன் மையத்தை அறை!” என்றார். “உடைகிறது! இதுவே தருணம். அதை முற்றாக சிதைத்தழித்துவிடு. செல்க!” என அபிமன்யுவிடம் ஆணையிட்டார். அபிமன்யு ஒருகணம் தயங்க “அஞ்சாதே! இத்தருணம் தெய்வக்கொடை! அவர்கள் வலுகுறைந்திருக்கிறார்கள். தாமரைச்சூழ்கையில் இது பெரும்பிளவு. உள்ளே செல்! அதன் மையத்தை சிதறடி! அவர்களுக்குக் காட்டு நாம் யாரென்று !” என்றார்.

அபிமன்யு துரோணரை அம்புகளால் அறைந்தபடி துரத்திச்சென்றான். அவனுடைய ஆற்றலைக் கண்டு அவர் கை ஓய்ந்துவிட்டது தெரிந்தது. “நில்லாதே, செல்! நீ சென்றுகொண்டிருக்கையிலேயே பீமனும் அர்ஜுனனும் வந்து உன்னை பின்துணைப்பார்கள். நமது படை நீள்வேல் என தாமரையை ஊடுருவிச்செல்லும்” என யுதிஷ்டிரர் கூவினார். “ஆணை! பீமனும் அர்ஜுனனும் எழுக… இளையோனை பின்தொடர்ந்து செல்க!” அபிமன்யு துணைப்படையுடன் வேல் வடிவு கொண்டு தாமரையை ஊடுருவிச் சென்றான். யுதிஷ்டிரர் அவர் இயல்பை மீறி வெறிகொண்டிருந்தார். முன்னர் எழுந்த அச்சம் அவரை நிலைகுலையச் செய்துவிட்டிருந்தது. “மந்தன் எழுக! இளையவன் எழுக! இளவரசனை பின்தொடர்ந்து செல்க! ஊடுருவல் அறுபடாது ஒற்றைச்சரடென அமைக!” என கைதூக்கி ஆர்ப்பரித்தார்.

“இளையவர் வந்துகொண்டிருக்கிறார், அரசே!” என்று அவருடைய செய்திக்காவலன் அறிவித்தான். “எங்கே மந்தன்?” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அவர் கௌரவ அரசருடன் பொருதுகிறார்… கிளம்பிவிட்டார்.” ஆனால் தாமரையின் வலப்பக்கத்திலிருந்து ஜயத்ரதனும் இடப்பக்கத்திலிருந்து கர்ணனும் நடத்திய இரு பேரிதழ்கள் வந்து ஒன்றுடன் ஒன்று சந்தித்து, ஒன்றுடன் ஒன்று இணைந்து மூடி அபிமன்யுவை கௌரவப் படைகளுக்குள் கொண்டுசென்று முற்றாக விழியிலிருந்து மறைத்தன.

நூல் இருபது – கார்கடல் – 37

ele1அஸ்வத்தாமன் அவை நிறைந்துகொண்டிருப்பதை பார்த்தபடி அறிவிப்புமேடை அருகே நின்றான். அவையினர் கலைந்த பேச்சொலிகளுடன், தயக்கமான உடலசைவுகளுடன் இருந்தார்கள். கிருபரும் சுபலரும் பேசியபடி வந்தமர்ந்தனர். சகுனி தனியாக வந்து தன் பீடத்திலமர்ந்து அலுப்புடன் விழிகளை மூடிக்கொண்டார். அவர் அருகே வந்து குனிந்து ஏதோ கேட்ட மைந்தன் உலூகனிடம் சலிப்புடன் ஏதோ சொல்லி கையசைத்தார். அவன் வணங்கி விலகி அப்பால் அமர்ந்தான். ஜயத்ரதனும் பூரிசிரவஸும் வந்தனர். பூரிசிரவஸ் அஸ்வத்தாமனின் அருகே வந்து தலைவணங்கினான்.

அஸ்வத்தாமன் அவையை ஒருமுறை நோக்கிவிட்டு பூரிசிரவஸிடம் “அங்கர் வரவில்லையா?” என்றான். துர்மதன் “களத்திலிருந்து அவர் நேரடியாகவே தன் குடிலுக்கு சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்துசென்று பார்த்துவரச் சொல்லி துச்சகனை அனுப்பினேன். அவன் திரும்பி வந்து அவர் வரப்போவதில்லை என்று சொன்னான்” என்றான். பூரிசிரவஸ் “அவருக்கும் அரசருக்கும் இன்று களம்முடிந்து திரும்புகையில் சிறுபூசல் நிகழ்ந்தது என்றார்கள்” என்றான். அஸ்வத்தாமன் ஆர்வமில்லாமல் “ஆம், அதைப்பற்றி இங்கு அனைவருக்குமே தெரிந்திருக்கிறது” என்றான். பூரிசிரவஸ் “நான் அதை கேட்டபோது வியப்படைந்தேன்” என்றான்.

அஸ்வத்தாமன் சற்றுத் தயங்கி “அவர் செய்ததை என்னால் புரிந்துகொள்ள இயல்கிறது. இன்று களத்தில் எழுந்த அர்ஜுனன் மிகவும் களைத்திருந்தான். அவனால் காண்டீபத்தை ஏந்தவே முடியவில்லை” என்றான். “ஆனால் இன்று அவர் சம்சப்தர்களை கொன்றார். பகதத்தர் அவரால் களம்பட்டார்” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் அர்ஜுனனுக்கு எதிரீடே அல்ல. அவனுடைய மெய்யான எதிரிகள் இன்று அங்கரும் தந்தையும்தான். அவர்கள்முன் அவன் நின்றுபொருதியிருக்க இயலாது. அங்கர் மட்டுமல்ல தந்தையும்கூட அவனை விட்டுவிலகியே சென்றார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம், அதையும் சொன்னார்கள்” என்று சொன்ன பூரிசிரவஸ் “தங்கள் தந்தையும் இன்னும் அவை புகவில்லை” என்றான். “அவரிடம் பேசினேன். அவரும் உளம் சோர்ந்திருக்கிறார்” என்றான்.

வெளியே வாழ்த்தொலி கேட்டது. சல்யரும் துரோணரும் ஒருசொல்லும் பேசாமல் உள்ளே வந்தனர். அவையிலிருந்தோர் எழுந்து வாழ்த்தினர். துரோணர் தன் பீடத்திலமர்ந்ததும் சல்யர் அஸ்வத்தாமனின் அருகே வந்து “அவைபுக தனக்கு எண்ணமில்லை என்றார். அவர் வந்தாகவேண்டும் என்று கூட்டிவந்தேன்” என்றார். “நன்று, அவரும் இல்லையேல் இதை அவையென்றே சொல்ல முடியாது” என்றான் அஸ்வத்தாமன். வெளியே வாழ்த்தொலிகளும் கொம்போசையும் கேட்டன. உள்ளிருந்தவர்கள் பேச்சை நிறுத்தி எழுந்து நின்றார்கள். துச்சாதனன் உள்ளே வந்து தலைவணங்கி அரசர் வருவதை அறிவித்தான். தொடர்ந்து துச்சலனும் துச்சகனும் இருபுறமும் வர துரியோதனன் அவைநுழைந்தான். சுபாகு அவனுக்குப் பின்னால் வந்தான்.

கைதொழுதபடி தன் பீடத்தில் அமர்ந்த துரியோதனனின் அருகே சென்று குனிந்த துச்சாதனன் கர்ணன் வரவில்லை என்பதை அறிவித்தான். அவர்கள் பேசிக்கொள்வதை அவை செவிகூர்ந்து நோக்கியிருந்தது. துரியோதனன் தலையசைத்து அவை நிகழலாமென கைகாட்டினான். ஓர் அவையிலுள்ள பொதுவான உணர்வு அனைவரையும் அழுத்தி மூடுவதன் விந்தையை அஸ்வத்தாமன் எண்ணிக்கொண்டான். பூரிசிரவஸ் “தொடங்கிவிடலாமே” என்றான். அஸ்வத்தாமன் முறையாக அவையறிவிப்பு செய்து “இன்று நாம் பெருவீரர்கள் சிலரை இழந்துவிட்டு அமர்ந்திருக்கிறோம். பகதத்தரும் சம்சப்தர்களும் நம் படையை தாங்கியிருந்தவர்கள். அவர்களின் மறைவு நமக்கு இழப்பு. நாளை போருக்கெழுகையில் அதை அனைவரும் உணர்வோம்” என்றான். இடைபுகுந்த துரியோதனன் “நிகழவிருப்பதைப்பற்றி பேசுவோம்” என்றான். அஸ்வத்தாமன் “ஆம், நான் நமது படைசூழ்கைபற்றி பேசவிருக்கிறேன்” என்றான்.

அஸ்வத்தாமன் மேலும் பேசுவதற்குள் பால்ஹிகனாகிய சலன் எழுந்து “நான் முதலில் கேட்க விரும்புவது ஒன்றுண்டு, இங்குள்ள அனைவரும் அதையே கேட்க விழைகிறார்கள். அதை பேசிவிட்டு நாம் மேலும் திட்டங்களிடுவோம்” என்றான். அவன் கேட்கவிருப்பதை உணர்ந்து அவை நிமிர்ந்தமைந்தது. சலன் உரக்க “இன்று இளைய பாண்டவரை நம் ஆசிரியரும் அங்கரும் மிக எளிதாக வென்றிருக்க முடியும். அவர்கள் இருவருமே அவரை ஒழிந்து விலகியதை நாம் அனைவருமே அறிவோம்” என்றான். துரியோதனன் எரிச்சலுடன் ஊடே புகுந்து “அதை பின்னர் பேசுவோம்” என்றான். “அதை பேசியபின் பிறவற்றை பேசினால் போதும்” என்று சோமதத்தர் உரத்த குரலில் சொன்னார். அவையினர் அதை எற்று முழக்கமாக ஒலித்தனர்.

துரியோதனன் சினத்துடன் சொல்லெடுக்க முயல சகுனி கைகாட்டி அவனை தடுத்தார். சலனை நோக்கி “சொல்க!” என்றார். சலன் “நான் கேட்பது அரசகுடியினர் அனைவரும் எண்ணும் வினாவே. இங்கே அறங்களை நோக்காது பொருதவேண்டியது நாங்கள் மட்டும்தானா? இந்தப் போரில் நாங்கள் எவரும் குருதி நோக்கவில்லை. சிபிநாட்டினர் பால்ஹிகர்களின் குருதியினர். ஆனால் அவர்கள் அங்கே எங்களுக்கு எதிராக நின்றிருக்கிறார்கள். என் கைகளால் நான் சைப்யர் பலரை கொன்றேன். இதோ மத்ரர் இருக்கிறார். அவருடைய தங்கை மைந்தர்கள் பாண்டவர்கள். அவர் நீக்கில்லாத விசையுடன்தான் அவர்களை தாக்கிக்கொண்டிருக்கிறார். நாங்கள் உடன்குருதியினரை கொல்ல எழும்போது நெறி நோக்கவில்லை. நாளை குடிப்பழி சேருமென்று அஞ்சவுமில்லை. ஆனால் ஆசிரியரும் அங்கரும் தங்களுக்கு பழிசேருமென்று அஞ்சினார்கள்” என்றான். அவையின் ஏற்பொலி சொல்லில்லா ஒலியலையாக எழுந்தது.

அவையை சூழ நோக்கி மேலும் உளவிசை பெற்று சலன் சொன்னான் “அங்கர் துணைவராது போனமையால்தான் பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தர் கொல்லப்பட்டார்.” துரோணரை நோக்கியபடி “அவரை காக்க நமது படைகள் சென்றன. ஆனால் ஆசிரியரும் அங்கரும் அங்கே செல்லவில்லை. நான் கேட்பது ஒன்றே. அவர்கள் அர்ஜுனனை தாக்கவேண்டும் என அரசாணை விடப்பட்டதா? அவர்கள் அதை ஆற்றாது ஒழிந்தார்களா?” என்றான். அவன் நீட்டிய கையுடன் நிற்க, அவை சொல்லில்லாது காக்க, சிலகணங்களுக்குப் பின் துரியோதனன் “ஆம், அரசாணை விடப்பட்டது” என்றான். “அது மீறப்பட்டதா?” என்று சலன் கேட்டான். “ஆம், ஆனால் நாளை அர்ஜுனனை கொல்லவிருப்பதாக அங்கர் சொன்னார்” என்றான் துரியோதனன்.

“நாளை கொல்லவிருப்பவர் இன்று ஏன் ஒழிந்தார்?” என்றான் சலன். “நான் கேட்கவிருப்பது அது மட்டுமே. ஏன் இன்று அவர் அர்ஜுனரை செல்லவிட்டார்? நெறிநோக்கி என்றீர்கள் என்றால் நாங்கள் மட்டும் ஏன் நெறிமீறவேண்டும்?” அஸ்வத்தாமன் “இன்று அர்ஜுனனின் உடல்நலம் குன்றியிருந்ததை நாம் அறிவோம்” என்றான். “அதைத்தான் நான் கேட்கிறேன். உடல்நலம் குன்றியவரைக் கொன்ற பழியை அங்கர் அஞ்சுகிறார். பழியஞ்சாது போரிடும் கடமை எங்களுக்கு மட்டும்தானா?” என்றான் சலன். அவையினர் எழுந்து நின்று கைநீட்டி கூச்சலிடத் தொடங்கினர். துரியோதனன் சீற்றதுடன் “இந்த அவையில் நாம் பூசலிடவா அமர்ந்திருக்கிறோம்?” என்றான். “நான் பூசலிடவில்லை. என் வினாவுக்கான விடை எழட்டும்” என்றான் சலன்.

அவையிலிருந்த அரசர்கள் “ஆம்! அதை அங்கரோ ஆசிரியரோ சொல்லட்டும்” என்று கூவினர். “எங்கள் இளமைந்தர் கொல்லப்பட்டனர். எந்த நெறிகளுக்கும் அடங்காமல் இங்கே கொலை நடந்தது” என்று சலன் கூவினான். துரோணர் எழுந்து கைகூப்பியபோது அவை மெல்ல அடங்கியது. துரோணர் கைகூப்பியபடி அவையில் இறுதி அரசனும் அமரும்வரை காத்துநின்றார். “நான் ஒப்புக்கொள்கிறேன், என்னால் இயலவில்லை” என்றார் துரோணர். “நேற்று இந்த அவையில் நான் வஞ்சினம் உரைத்தேன், எல்லா அறங்களையும் கைவிட்டு நான் போரிடுவேன் என்று. ஆனால் என் முன் என் முதன்மை மாணவன் நடுங்கும் கைகளுடன் வந்து நின்றிருந்தபோது என்னால் போரிட இயலவில்லை.” அவருடைய கூப்பிய கைகள் நடுங்கின. “அதை நெறி என பெருமைகொள்ளவில்லை. எனக்கு அது சிறப்பென எண்ணவுமில்லை. என்னால் இயலவில்லை. என் உள்ளம் பின்னடைந்தது. என் கைகள் தளர்ந்தன.”

“இந்த அவையில் நான் இனி நெறிநோக்குவதில்லை என்று சொன்னபோது ஏதோ தெய்வம் என்னருகே நின்றிருக்கிறது. அது என் சொல்லை அறைகூவல் என கொண்டிருக்கிறது” என்றார் துரோணர். “அதன்முன் முற்றாகவே தோற்றேன். எச்சமின்றி திரும்பி வந்திருக்கிறேன். என்னால் என் முதன்மை மாணவனை கொல்ல முடியாது. அவன் உடல்நலிந்து நடுங்கும் வில்லுடன் எதிரே நின்றபோது என்னை தந்தையென்றும் ஆசிரியர் என்றும் மட்டுமே உணர்ந்தேன்.” அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. உதடுகளை இறுக்கியபடி நின்றபின் மெல்ல மீண்டும் பீடத்தில் அமர்ந்தார்.

அவையினர் அவ்வுணர்வால் ஆட்பட்டு அமைதியாக இருக்க சலன் எழுந்து ஏளனத்துடன் “நன்று, ஆசிரியர் தெளிவாகவே சொல்லிவிட்டார். அரசனுக்களித்த சொல், வீரனின் கடமை அனைத்தையும்விட பெரிது அவருக்கு தன் மாணவன் மேல் உள்ள பற்று என்று. இனி அவரிடம் பேசுவதில் பயனில்லை. இனி அறியவேண்டியது ஒன்றே. அங்கர் என்ன செய்யப்போகிறார்? இன்று அவருடைய கைகள் தயங்கின, நாளை எழும் என்பதற்கு என்ன உறுதிப்பாடு?” என்றான். துரியோதனன் “நான் அவ்வுறுதியை அளிக்கிறேன். நாளை போரில் அவர் அர்ஜுனனை கொல்வார்” என்றான். அவையிலிருந்து ஏளன ஒலிகள் எழுந்தன. சலன் “உங்கள் சொல் மீறப்பட்டதைப்பற்றித்தான் பேசவே தொடங்கினோம். வெற்றிக்காக உடன்குருதியினரைக் கொன்ற இழிமக்களாகிய ஷத்ரியர்களுக்கு நெறிநின்று விண்ணுலகை நாடும் சூதர்மைந்தர் நேரில் வந்து என்ன மறுமொழி சொல்லவிருக்கிறார்?” என்றான்.

சகுனி எழுந்து கையமர்த்தி “நாம் இனி இதை பேசுவதில் பொருளில்லை” என்றார். சலன் மேலும் ஏதோ சொல்ல முனைய “அமர்க!” என்றார் சகுனி. அந்த ஆணைக்கு கட்டுப்பட்டவர்களாக அவையினர் அமைந்தனர். போர்க்களத்தில் ஒலித்துக்கொண்டே இருந்த அவருடைய ஆணைகளுக்குக் கட்டுப்பட்ட அறியாப் பழக்கமே அது என அஸ்வத்தாமன் எண்ணினான். சகுனி “நாம் நாளைக்கான படைசூழ்கையை வகுக்கும்பொருட்டு இங்கே வந்துள்ளோம். அது நிகழ்க!” என்றார். துரியோதனன் “ஆம், அதை அஸ்வத்தாமர் அறிவிக்கட்டும்” என்றான். அஸ்வத்தாமன் அவை நோக்கி திரும்பியபோது துரோணர் நடுங்கும் உடலுடன் எழுந்து நிற்பதை கண்டான். அவர் நோயுற்றவர் போலிருந்தார். முகம் வெளிர்த்து உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தன. “நான் ஒன்று சொல்லவேண்டும்…” என்றார்.

“நீங்கள் நலம் குன்றியிருக்கிறீர்கள் ஆசிரியரே, அமர்க! ஓய்வெடுங்கள். நாளை பேசுவோம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இல்லை, இந்த அவைக்கு இப்போதே இதை நான் சொல்லியாகவேண்டும்” என்று துரோணர் சொன்னார். “இதை சொன்னாலொழிய என்னால் துயில்கொள்ள இயலாது.” அஸ்வத்தாமன் நிலையழிந்து சுற்றிலும் நோக்கினான். “அவையோரே, நேற்று சம்சப்தர்கள் தங்கள் குடிவழக்கப்படி குலதெய்வங்களின் முன் ஒரு வஞ்சினம் உரைத்துவிட்டு களம்புகுந்தனர், அர்ஜுனனை கொல்லாமல் உயிருடன் களம் மீள்வதில்லை என்று.” அவர் மூச்சிளைத்தார். அவர் சொல்லப்போவதென்ன என்று உணர்ந்து அஸ்வத்தாமன் “தந்தையே…” என அழைக்க அவனை கையமர்த்திவிட்டு துரோணர் சொன்னார்.

“நான் இந்த அவையில் அவ்வஞ்சினத்தை உரைக்கிறேன். நாளை நான் அர்ஜுனனை கொல்லும்பொருட்டே போர்புரிவேன். பாண்டவர் ஐவரையும் கொல்லவே முயல்வேன். பாண்டவ மைந்தரும் என் இலக்கே. என் போர் அக்கொலைகளின் பொருட்டு மட்டுமே.” அவருடைய முதிய குரல் நடுக்குடன் ஓங்கியது. “நாளை களத்திலிருந்து மீள்கையில் பாண்டவர்களோ அவர்களின் மைந்தர்களோ என்னால் கொல்லப்பட்டிருப்பார்கள். என் கையில் பாண்டவக் குருதி படியாமல் களம் மீளமாட்டேன். அவ்வாறு நிகழாவிட்டால் அந்திமுரசு ஒலிக்கும் கணம் என் அம்பால் கழுத்தறுத்து உயிர்விடுவேன். இது என் மூதாதையர் மேல் ஆணை. ஆசிரியர்கள் மேலும், குடித்தெய்வங்கள் மேலும் ஆணை!”

அவ்வஞ்சினம் அவையை திகைக்கச் செய்தது. ஒவ்வொருவரும் நடுக்கு கொண்டனர். சல்யர் கைகளைத் தூக்கி “என்ன இது, ஆசிரியரே!” என்றார். சொல்லி முடித்ததுமே அவ்வுணர்வினூடாக பிறிதொருவராக மாறிய துரோணர் கையைக் காட்டி அவர்களை அடக்கிவிட்டு எழுந்து தன் சால்வையை தோளிலிட்டு அவையை நோக்கி திரும்பி வணங்கிவிட்டு வெளியே சென்றார். அவர் சென்று மறையும் காலடி ஓசை அணையும்வரை அவை திகைத்து அமர்ந்திருந்தது. துரியோதனன் பெருமூச்செறிந்து “அதுவும் நன்றே” என்று மீண்டும் பேச்சை தொடங்கினான். “அவ்வஞ்சினம் நம் அனைவருக்கும் உரியதாகுக! நாளை பாண்டவர்களில் ஒருவர் களம்படுவாரெனில் போர்முடிகிறது. அதற்கு மேல் அவர்களால் எழ இயலாது” என்றான்.

அஸ்வத்தாமன் தளர்ந்து நின்றான். “சொல்க!” என்றான் துரியோதனன். அஸ்வத்தாமனின் குரல் மேலெழவில்லை. துரியோதனன் “ஒன்று நான் உரைக்கிறேன் உத்தரபாஞ்சாலரே, நாளை போரில் என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அங்கர் களம்நிற்பார். அர்ஜுனனுக்கு எதிராக அவருடைய எதிரில்லா அம்பு எழும். ஐயமே தேவையில்லை, நாளை பாண்டவர்களில் ஒருவரேனும் களம்படுவார். ஆசிரியருக்கு போர்க்களத்தில் எந்தச் சிறுமையும் நிகழாது. வெற்றியுடன் அவர் களத்திலிருந்து திரும்பி வருவார். இது என் சொல்” என்றான். அஸ்வத்தாமன் பெருமூச்சுவிட்டு மெல்ல மீண்டான். “எந்தை உளம்குலைந்திருக்கிறார். இப்படி அவரை பார்த்ததே இல்லை” என்றான்.

“நாம் நாளை நிகழ்த்தவிருப்பது நேர்ப்போர் அல்ல. பாண்டவர்களில் ஒருவரையேனும் கொல்வதே நமது இலக்கு. யானையின் துதிக்கையில் புண்படுவது போன்றது அது. அவர்கள் உளம்தளர்ந்தாகவேண்டும். நம்பிக்கையிழந்தாகவேண்டும்” என்று துரியோதனன் சொன்னான். ஜயத்ரதன் “நமது இலக்கு அர்ஜுனன். அவன் இருக்கும் நிலையில் அது இயல்வதே என்று தோன்றுகிறது” என்றான். அஸ்வத்தாமன் “தந்தை தன் எல்லையை தானே மீறும்பொருட்டு இந்த அறைகூவலை தனக்கென விடுத்திருக்கிறார்” என்றான். துரியோதனன் “ஒவ்வொருநாளும் போரில் நாம் நம் எல்லைகளை கடக்கிறோம்” என்றான். அஸ்வத்தாமன் “தந்தையால் அதற்கு இன்றுவரை இயன்றதில்லை” என்றான்.

“நாம் நாளை பாண்டவர்களில் ஒருவரை கொல்லவிருக்கிறோம். அதை அறுதியாக முடிவுசெய்வோம். மேலே செல்க” என்று சகுனி உரத்த குரலில் சொல்ல அஸ்வத்தாமன் “அதற்கு மிக உகந்தது நான் வகுத்துள்ள இந்தப் படைசூழ்கை” என்றான். அஸ்வத்தாமன் “இது தாமரைச்சூழ்கை. நூற்றெட்டு இதழ்கள் கொண்ட மாமலராக இதை வடித்திருக்கிறேன். ஒவ்வொரு இதழும் ஒரு படைப்பிரிவு. அவையனைத்தும் மலரின் அடியில் அமைந்த புல்லிவட்டத்தால் ஒன்றென இணைக்கப்பட்டுள்ளன. பிற எங்கும் அவற்றுக்கிடையே இணைப்பில்லை. தங்கள் தன்விழைவுப்படி இயங்குபவை அவை. அவற்றை ஒன்றென செயல்படுத்தும் ஆணைகள் அனைத்தும் அந்தப் புல்லிமையத்திலிருந்தே எழ வேண்டும். அங்கு வழக்கம்போல காந்தாரர் நிலைகொள்ளட்டும்” என்றான்.

“அனைத்து இதழ்களும் ஆற்றலால் நிகரானவை. பெருவீரர்களால் ஆன இதழ்கள் உள்ளே அமைக எண்ணிக்கையில் அவர்களின் படை சிறியது. வெளியே எண்ணிக்கை மிகுந்த காலாள்படைகள் அமையட்டும். அவை ஒன்றன்மேல் ஒன்றெனப் படிந்து பொதியக்கூடியவை” என்று அஸ்வத்தாமன் தொடர்ந்து சொன்னான். தோற்சுருளை சுபாகுவிடம் அளிக்க அவன் அதை விரித்து கையால் நீவி கூர்ந்து நோக்கினான். “அரசே, தாமரை மலர் வண்டை ஈர்த்து இதழ்களால் கவ்விப்பொதிந்து சிறைபிடிக்கும் பொறி. மலர்ப்பொறி என அதை கவிஞர் பாடுகிறார்கள். எதிரியின் முதன்மை வீரனையோ அவன் படையையோ தனித்துக் கவ்வி எடுப்பதுபோன்றது” என்றான் அஸ்வத்தாமன். சுபலர் “சகடச்சூழ்கையின் இன்னொரு வடிவமா?” என்றார். “சகடச்சூழ்கை ஒரு வாயிலும் வெளிவரமுடியாது சுழற்றி மயக்கும் ஊடுவழிப் பின்னல் கொண்டது. அது கோட்டைக்காவலுக்குரியது. இது வட்டமல்ல. இதழ்களின் அடுக்கு வட்டமாக அமையலாம். ஆனால் ஒவ்வொரு இதழும் இணைந்தும் விலகியும் நீண்டும் குவிந்தும் போரிடலாம்” என்றான் அஸ்வத்தாமன்.

“கரபுஷ்பம் என இன்னொரு படைசூழ்கை உண்டு” என அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “ஐந்து படைகளால் ஆனது. ஐந்து விரல்களைப்போல அது குவிந்துசென்று மலர்கொய்வதுபோல் எதிரியின் முதன்மைப் படைவீரனை கவ்வி கொண்டுவரும். அதையே நான் முதலில் எண்ணினேன். ஆனால் நம்மிடமிருக்கும் மாவீரர்களின் எண்ணிக்கையை நோக்கியபோது இந்த தாமரைச்சூழ்கையே உகந்தது என்று பட்டது.” சுபாகு படைசூழ்கையை பார்த்துவிட்டு துரியோதனனிடம் தோற்சுருளை அளித்தான். துரியோதனன் அதை கையில் வாங்கி முகவாயை வருடியபடி கூர்ந்து பார்த்தான். “அரசே, தேன் நாடி வண்டுகள் தாமரைக்குள் வருகின்றன. மையத்திலுள்ள மகரந்தத் தாள்களுக்கு அடியில் வந்தாலொழிய அவற்றால் தேனருந்த இயலாது. அங்கிருந்து அவை எளிதில் பறந்தெழ இயலாமல் தேனும் பூம்பொடியும் தடுக்கும். இதழ்கள் ஒன்றுடன் ஒன்றுகூடி குவிந்து வண்டை சிறைப்படுத்தும். நாம் வகுக்கும் சூழ்கையில் அர்ஜுனன் அல்லது பீமன் விழ வேண்டும்.”

அவை அஸ்வத்தாமன் சொல்வதை கூர்ந்து கேட்டிருந்தது. “நாளை ஒருவேளை அர்ஜுனன் களத்திலெழுந்தால் அவர்களுக்கிருக்கும் ஒரே இலக்கு அங்கநாட்டரசராகவே இருக்க இயலும். ஏனெனில் இன்று அர்ஜுனன் அங்கரின் அம்புகளுக்கு முன் நிலையழிந்து களம்பட்டு உயிர் மீண்டு வந்திருக்கிறான். பாண்டவப் படைகள் அர்ஜுனனை நம்பியே இதுகாறும் போரிட்டுள்ளன. பீஷ்மரை வென்ற பெருவீரனெனும் ஒளியுடன் அவன் இதுவரை களம் புகுந்திருக்கிறான். இன்று அவன் களத்தில் வீழ்ந்தமையால் பாண்டவப் படையின் நம்பிக்கை குறைந்திருக்கும். அந்நம்பிக்கையை மீட்டெடுப்பதே அவர்களுக்கு இப்போது முதன்மை அறைகூவல். ஆகவே முழு விசையையும் திரட்டி அங்கநாட்டரசரை அறைந்து ஒருமுறையேனும் பின்னடையச் செய்யாமல் நாளைய போரை அவர்கள் முடிக்க இயலாது. அர்ஜுனன் எழாவிட்டால் பீமன் அந்த அறைகூவலை ஏற்றாகவேண்டும். அங்கரே நமது பொறியின் மையம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“நமது படைசூழ்கை களத்திலெழுந்த பின் சற்று நேரத்தில் தாமரையின் இதழ்கள் விரிந்து விரிந்து அகல துணையேதுமின்றி களம் நடுவே அங்கர் நிற்பார். அவருடைய பொற்தேர் தாமரையின் மகரந்தபீடம் எனத் துலங்கும். அதை நோக்கி அக்கருவண்டு நாணொலி ரீங்கரிக்க வந்து சேரும். நாம் சூழ்ந்து கவ்வி அவனை சிறைப்படுத்துவோம். களத்தில் அவனை கொன்று வீழ்த்துவோம்” என்றான் அஸ்வத்தாமன். அவையெங்கும் பெருமூச்சுகள் எழுந்தன. “ஒருவேளை நாளை அர்ஜுனன் களமெழவில்லையென்றால் பீமனை வீழ்த்துவோம்” என்று அஸ்வத்தாமன் மேலும் உரக்கச் சொன்னான். சல்யர் “அர்ஜுனன் மருத்துவநிலையில் கிடக்க பீமனும் களத்தில் வீழ்ந்தானெனில் நாளையுடன் போர் முடிகிறது” என்றார்.

பூரிசிரவஸ் “நாளை அவர்கள் கைமலர் சூழ்கையை அமைக்கக்கூடும்” என்றான். “ஏன்?” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் “ஏனென்றால் அஸ்வத்தாமரின் உள்ளத்தில் முதலாவதாக அதுவே எழுந்தது. நம் உள்ளங்கள் அணுக்கமானவை. போரில் ஒருவரை ஒருவர் நோக்கி, ஒவ்வொரு எண்ணமும் சொல்லும் கருதி, கலந்து போரிட்டு ஒருவராகவே ஆகிவிட்டிருக்கிறோம்” என்றான். துரியோதனன் சிலகணங்களுக்குப் பின் “ஆம், அங்கே சூழ்கை அமைப்பவர் தட்சிணபாஞ்சாலர். இவரும் அவரும் ஒருவரை ஒருவர் நாளும் எண்ணி தவம்செய்பவர்கள்” என்றான். அஸ்வத்தாமன் அப்பேச்சை விழையாமல் “அவ்வாறு நிகழலாம். மலர்சூழ்கையை வெல்ல முதன்மை வடிவம் கைமலர்சூழ்கையே. மலர்கொய்ய வரும் கையை சூழ்ந்து கவ்விக்கொள்வோம். தொடும் விரலை வெட்டி எடுப்போம். மென்மலர் இதழ்களின் கூர்மையென்ன என அவர்கள் அறிக” என்றான்.

“ஆம், இதை நிகழ்த்துவோம்! இது நிகழும்!” என்று ஜயத்ரதன் சொன்னான். “உள்ளே சிக்கிக்கொண்டவர் முழு உயிர்விசையுடனும் போரிட வாய்ப்புள்ளது” என்று சுபலர் சொன்னார். “சிக்கிவிட்டோம் என உணர்ந்த கணமே படைசூழ்கையின் ஏதேனும் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு வெளிவருவதே அவர் எவராயினும் செய்யக்கூடுவது. ஆனால் தாமரைச் சூழ்கையின் இதழ்களை உடைப்பது இயல்வதே அல்ல. அதன் ஒவ்வொரு படைப்பிரிவுக்கு மேலும் பிறிதொரு படைப்பிரிவு வந்து அமைந்துள்ளது. எந்தப் பக்கத்தை தாக்கினாலும் எப்படியும் ஏழு படைப்பிரிவுகளை வென்று மறுபக்கம் செல்லவேண்டும். அதற்குள் நாம் அவரை வென்றுவிடமுடியும்” என்று அஸ்வத்தாமன் அவருக்கு விளக்கம் அளித்தான்.

“மெய்யாகவே எனக்குத் தெரியவில்லை” என தோற்சுருளை நோக்கியபடி துரியோதனன் கேட்டான் “தாமரைச்சூழ்கையை உடைப்பது எப்படி?” அஸ்வத்தாமன் “அரசே, படைசூழ்கைக் கலையை கற்றவர்கள் அறிவார்கள், தாமரைச்சூழ்கையிலிருந்து வெளிவர இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, அதன் கூம்பு முனையின் மையப்புள்ளியை மிகச் சரியாக அறிந்து அங்கே தாக்குவது. அதை முட்டித்திறந்து வெளிவர முடியும். அந்த முனையில் மட்டும் தாமரை சூழ்கை ஆற்றலற்றது. அதைவிட எளிய பிறிதொரு வழி உண்டு. அதன் புல்லிவட்டம் எப்போதும் அனைத்து இதழ்களும் ஒன்றிணைந்ததாக இருக்கும். அங்கு முதன்மை படைக்கலன்களோ அன்றி பெருவீரர்களோ இருக்க வாய்ப்பில்லை. அங்கே படைகள் ஒற்றை உருவென்று திரள்வதும் அரிது. அங்கு சென்று தாக்குவோன் அவ்வழியினூடாக பின்புறம் சென்று அனைத்துப் படைகளையும் வட்டமிட்டு வளைத்து தன் படைகளுக்கு திரும்பிவிடமுடியும். தாமரைச்சூழ்கையின் அனைத்துப் படைகளும் தங்கள் பெருவீரர்களை அப்போது உள்பக்கமாக திருப்பியிருப்பதனால் எந்தப் படையும் அதனை எளிதில் தடுத்துவிட முடியாது” என்றான் அஸ்வத்தாமன்.

“அர்ஜுனனுக்கு இப்படைசூழ்கை நன்கு தெரிந்திருக்கும்” என்றான் ஜயத்ரதன். “வாய்ப்புள்ளது. ஆனால் அவன் என்ன செய்யமுடியுமென்பதை நாம் முன்னரே அறிந்திருப்பதனால் அதையும் தடுத்துவிடமுடியும். தாமரைச்சூழ்கையின் சிறப்பியல்பே உள்ளே சிக்கிக்கொண்ட ஒரு வீரனை குவியும் இதழ்களென எழுந்து நூற்றெட்டு படைப்பிரிவுகளும் ஒன்றாகச் சேர்ந்து அழுத்துவதுதான். அரசே, ஒருவனைச் சூழ்ந்து கௌரவப் பெரும்படையும் அனைத்து மாவீரர்களும் வில்லுடன் நிலைகொள்வார்கள். அவன் எவ்வகையிலும் தப்ப இயலாது” என்றான் அஸ்வத்தாமன்.

துரியோதனன் “இப்படைசூழ்கையை அவை ஏற்கிறதா?” என்றான். கிருபர் “என் சொல் ஒன்று எஞ்சியிருக்கட்டும். நான் இதை சொல்லியாகவேண்டும். இங்கே துரோணர் இல்லாமையால் அவருடைய அகக்குரலென நான் பேசுகிறேன்” என்றார். “அரசே, அவையோரே, போர் என்பது எல்லா வழிகளிலும் நிகழ்வது. ஆனால் ஒருவனை பொறிவைத்து சூழ்கை அமைப்பது எவ்வகையிலும் உகந்தது அல்ல. அஸ்தினபுரிக்கு பெருமைசேர்ப்பதும் அல்ல.” அவையினர் எவரும் மறுமொழி சொல்லவில்லை. துரியோதனன் “இனி வெற்றி ஒன்றே எனக்கு பெருமைசேர்ப்பது, ஆசிரியரே” என்றான்.

பின்னர் அவையை நோக்கி “மறுசொல் உள்ளதா? அரசர்கள் எவரேனும் எதிர் சொல்கிறீர்களா?” என்றான். அவை அமைதியாக இருந்தது. “எனில் நாளை நம் சூழ்கை தாமரைவடிவிலேயே அமையட்டும். நாம் வெல்வோம்!” என்றான். “வெல்க கௌரவர்! வெல்க அமுதகலக்கொடி! வெல்க துரியோதனர்!” என அவை வாழ்த்தொலித்தது. எழுந்து கைகூப்பி அவையை வணங்கிய பின் துரியோதனன் அவைநீங்கினான்.

அஸ்வத்தாமன் பெருமூச்சுடன் தன் பீடத்தில் அமர்ந்தான். பூரிசிரவஸ் அவனருகே வந்து குனிந்து “நாம் இப்போதே சூழ்கைக்கான பணிகளை தொடங்கியாகவேண்டும்” என்றான். அஸ்வத்தாமன் சோர்வுடன் “ஆம்” என்றான். “ஏன்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஆசிரியர் அவ்வண்ணம் சொன்னது ஒருகணத்தில் என் ஆர்வம் அனைத்தையும் அணைத்துவிட்டது” என்றான் அஸ்வத்தாமன். “ஆனால் அவர் மிக எளிய போர்நெறியை மட்டும்தான் சொன்னார். அவர் அதை சொல்லவில்லை என ஆகக்கூடாதென்று எண்ணியதுபோல் தெரிந்தது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் என் உள்ளம் அந்தப் புள்ளியில் அனைத்து விசையையும் இழந்தது.”

பூரிசிரவஸ் “உங்களுக்குள் நீங்களே ஐயமும் தயக்கமும் கொண்டிருக்கலாம். அச்சொல்லை ஒரு நிமித்தமாக எண்ணுகிறீர்கள்” என்றான். “இருக்கலாம்” என்றான் அஸ்வத்தாமன். “இது உங்கள் தந்தையின் உயிர்காக்கப்போகும் சூழ்கை. இதை நாம் பழுதற அமைத்தாகவேண்டும். எழுக!” என்று அஸ்வத்தாமனின் கையை பற்றினான் பூரிசிரவஸ். அஸ்வத்தாமன் நீள்மூச்சுடன் எழுந்துகொண்டான்.

நூல் இருபது – கார்கடல் – 36

ele1புரவியில் பாய்ந்து வந்த துச்சகனின் உடலெங்கும் குருதி நனைந்திருந்தது. கால் சுழற்றி தாவி இறங்கி பறந்து வந்த அம்புகளுக்கு தலைகொடாமல் குனிந்து ஓடி கர்ணனின் தேருக்கு அருகே வந்து சகடத்தில் தொற்றி தேரில் ஏறி ஆவக்காவலனின் அருகே எழுந்து நின்று “மூத்தவரே, இதுவே தருணம் என்று அரசர் கருதுகிறார். களமெழுந்துள்ள அர்ஜுனன் நோயுற்றிருக்கிறான். அவனால் போர்புரிய இயலவில்லை. அம்புகள் இலக்கு பிழைக்கின்றன. இத்தருணத்தில் நீங்கள் அவனை வெல்வது எளிது” என்றான். “மாதுலர் சகுனி பலமுறை அர்ஜுனனை எதிர்கொள்ளும்படி ஆணையிட்டும்கூட தாங்கள் முன்னெழவில்லை என்று சினங்கொண்டார். அவர் என்னை தங்களிடம் ஆணையை நேரில் சொல்லும்படி கூறி அனுப்பினார்” என்றான். கர்ணன் “ஆம்” என்றபடி சுருதசேனனையும் சதானீகனையும் அம்புகளால் அறைந்து பின்செலுத்தினான். பாஞ்சாலத்தின் ஏழு வில்லவர்களை தொடர்ந்து தன் அம்புகளால் அடித்து வீழ்த்தினான்.

துச்சகன் மேலும் உரத்த குரலில் “இவர்களல்ல தங்கள் இலக்குகள். மூத்தவரே, தாங்கள் வென்றாகவேண்டியது அர்ஜுனனை. அவனை வெல்லாமல் இப்போரில் நாம் வெல்ல இயலாது. இன்றே அவனை கொல்லவேண்டும். இனி ஒரு தருணமில்லை. கிளம்புக என்று மூத்தவர் வேண்டிக்கொள்கிறார்” என்றான். “செல்க!” என்று கர்ணன் சொன்னான். கசப்பும் சீற்றமுமாக “மூத்தவரே!” என்று துச்சகன் கூவினான். “செல்க!” என்று கர்ணன் உரக்க கூவ அவன் மேலும் சொல்லுக்குத் தவித்து பின்னர் தேரிலிருந்து தாவி இறங்கி அம்பு நிரைகளுக்கு கீழே உடல் குனித்து தன் புரவியை நோக்கி ஓடினான்.

மேலும் சற்று கழித்து துரியோதனனே தன் தேரில் அங்கு வந்திறங்கினான். அப்போது அபிமன்யுவும் சுருதகீர்த்தியும் இருபுறமும் நின்று கர்ணனுடன் பொருதிக்கொண்டிருந்தனர். துரியோதனன் தன் தேரை கர்ணனின் தேருக்கு நிகராக கொண்டுவந்து தானும் அம்புகளை தொடுத்தபடி உரத்த குரலில் “அங்கரே, இதுவே உகந்த பொழுது. இப்பொழுது அவன் சம்சப்தர்களை கொன்றுவிட்டு பகதத்தரை எதிர்க்கும்பொருட்டு சென்றுகொண்டிருக்கிறான். பகதத்தருக்கும் பீமனுக்கும் கடும்போர் அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சுப்ரதீகத்தின் விரைவை எதிர்க்க இயலாமல் பீமன் தவிக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் பீமனை பகதத்தர் கொன்றுவிடக்கூடும்” என்றான்.

கர்ணன் அவனை நோக்கி திரும்பவில்லை. “நாம் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதோ மீண்டும் முரசுக்குரல் எழுகிறது. அர்ஜுனன் அங்கு செல்கிறான். அர்ஜுனனும் பீமனும் இணைந்தால் ஒருவேளை பகதத்தரை வீழ்த்திவிட முடியும். பகதத்தரின் உதவிக்கு நான் உடனே செல்லவேண்டும். அர்ஜுனனை தடுத்து நிறுத்துங்கள். அவன் அம்புகளை உடையுங்கள். இக்களத்திலேயே அவனை கொன்று வீழ்த்துங்கள். இன்று இல்லையேல் இனி என்றும் நிகழாது” என்றான் துரியோதனன் மீண்டும். கர்ணன் தன் வில் தாழ்த்தி சினத்துடன் திரும்பி “அவன் நோயுற்றிருக்கிறான்” என்றான். “ஆம், அதைத்தான் நல்வாய்ப்பென்று சொன்னேன்” என்றான் துரியோதனன். “நோயுற்றிருப்பவனை வெல்வது எனக்கு புகழ் சேர்ப்பதல்ல” என்று கர்ணன் சொன்னான்.

துரியோதனன் கண்களில் சினம் எழுந்தது. “இந்த அறங்கள் அனைத்தையும் கைவிடுவதாக எனக்கு சொல்லளித்தீர். என் வெற்றி ஒன்றே குறி என்று அவையில் என்னிடம் கூறினீர்” என்றான். கர்ணன் “ஆம், ஆனால் நோயுற்று நடுங்கிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் போர்புரிய என் உளம் ஒப்பவில்லை. அவ்வெற்றியைப் பற்றிய எண்ணமே எனக்கு குமட்டலை உருவாக்குகிறது” என்றான். “இது வஞ்சகம். அங்கரே, நீங்கள் என்னை கைவிடுகிறீர்கள். அவனிடம் போரிடுவதைவிட நூறுமடங்கு இழிவு சொன்ன சொல்லை பின்னெடுப்பது. எப்படி நீங்கள் என்னை இவ்வண்ணம் கையொழிய முடியும்? செஞ்சோற்றுக்கடன் என்ற சொல்லை மறந்துவிட்டீரா?”

கர்ணன் சினத்துடன் “அந்தக் கடன் அங்குதானிருக்கிறது. அஞ்ச வேண்டியதில்லை. அதை நிரப்பாமல் இம்மண்விட்டு நான் செல்லப்போவதுமில்லை” என்றான். “ஆனால் இன்று நான் அவனை எதிர்க்கப்போவதில்லை. இன்று அவனுக்கும் எனக்கும் இங்கு போர் நிகழவேண்டுமென்று நீங்கள் எனக்கு ஆணையிடவும் இயலாது. எந்நிலையிலும் எவரிடமிருந்தும் ஆணை பெறுபவனல்ல நான் என நீங்களும் அறிவீர்கள்.” துரியோதனன் “வேண்டியதில்லை. நானும் என் உடன்பிறந்தாரும் அவனுடன் போர்புரிகிறோம். அவனை இக்களத்திலேயே கொல்கிறோம். எங்களுக்கு இனி நெறிகளெதுவும் இல்லை” என்று கூவினான். நெஞ்சிலறைந்து கண்ணீருடன் “இறந்து தேர்த்தட்டில் விழுந்தவர்கள் என் உடன்பிறந்தார். என் கடன் அவர்களுடனே விண்ணுக்குச் செல்வது. அவர்களிடம் மட்டும்தான் நான் மறுமொழி சொல்ல வேண்டியிருக்கிறது” என்றான்.

தேரைத் திருப்பி கைவீசி “உங்கள் நெறிகள் உங்களை காக்கட்டும். நன்று!” என்று சொல்லி துரியோதனன் விரைந்து அகன்று சென்றான். கர்ணன் தன்னை எதிர்த்த பாஞ்சாலப் படைவீரர்களையும் திருஷ்டத்யும்னனையும் பின்னடையச் செய்தான். அவன் செல்லும் வழியெங்கும் இருபுறமும் ஒதுங்கி பாண்டவப்படை வழிவிட்டது. அவன் அம்புகளிலிருந்து தப்ப இயலாதென்று அறிந்து அம்பெல்லைக்கு வெளியிலேயே அவர்கள் நின்றிருந்தனர். கர்ணன் மேலும் மேலும் விசைகொண்ட அம்புகளை எடுத்து விஜயத்தில் பொருத்தி இழுத்து அவர்களை வீழ்த்தினான். அலறல்களும் கூச்சல்களும் நிறைந்து அவனிருக்கும் இடம் அப்படையினர் அனைவருக்கும் தெரிந்தது.

தொலைவில் போர்முரசின் ஒலி கேட்டது. அவனைச் சூழ்ந்திருந்த கௌரவ வீரர்கள் “பகதத்தர் வீழ்ந்தார்! சுப்ரதீகம் வீழ்ந்தது!” என்றனர். கர்ணன் அரைக்கணம் உளம் விலக்கி அச்செய்தியை கேட்டான். பகதத்தரின் முகம் அவன் முன் கடந்து செல்ல சீற்றம் கொண்டவன்போல தலையை அசைத்தான். “பகதத்தர் வாழ்க! பிரக்ஜ்யோதிஷத்தின் தலைவர் வாழ்க! கொலையானை சுப்ரதீகம் வாழ்க! விண்ணேகுக மாவீரர்!” என்று கௌரவப் படையினர் வாழ்த்தொலிக்க மறுபக்கம் பாண்டவப் படையினர் வில்களையும் வேல்களையும் தூக்கி வீசி நடனமிட்டனர்.

கர்ணன் தன் அம்புகளால் பாண்டவர்களை அறைந்து பின்தள்ளிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் உடலெங்கும் குருதியுடன் அர்ஜுனன் முன்வருவதை கண்டான். அர்ஜுனன் பகதத்தரை வீழ்த்திய சோர்வுடன், ஒழிந்த ஆவநாழியுடன், நாண் தளர்ந்த காண்டீபத்துடன் பாண்டவப் படைகளுக்கு பின்னால் சென்று சற்று ஓய்வெடுத்து புது நாண் மாற்றி மீண்டுகொண்டிருந்தான். அவன் தேர் மேலும் மேலும் பாண்டவப் படைகளுக்குள் உட்புகுந்து சென்றபோது எதிர்பாராத வகையில் ஏழு திரைகள் ஒன்றன் பின் ஒன்றாக விலகுவதுபோல் அவனைச் சூழ்ந்திருந்த பாஞ்சாலர்களின் விற்படைகளும் வேல்படைகளும் புரவிநிரைகளும் அகல எதிரில் கர்ணன் தன் தேரில் வருவதை கண்டான்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதை அறிந்ததும் இருபுறத்திலிருந்தும் வீரர்கள் அஞ்சி கூச்சலிட்டனர். கர்ணன் அர்ஜுனனை பார்த்து மறுசொல் எடுப்பதற்குள் அவன் தேரை ஓட்டிய இளையவனாகிய சத்ருஞ்சயன் புரவிகளை மாறி மாறி சவுக்கால் அறைந்து தேரை அர்ஜுனனை நோக்கி செலுத்தினான். தேர் பற்றிஎரிந்துகொண்டு வருவதுபோல் அந்தி ஒளியில் சுடர் விரிந்தபடி அணுகுவதை அர்ஜுனன் கண்டான். அவன் கை இயல்பாக ஆவநாழியைத் தொட்டு செயலிழந்தது. “பின்னெடுக்கவா?” என்று இளைய யாதவர் கேட்டார். “வேண்டியதில்லை! வேண்டியதில்லை!” என்று நடுங்கும் குரலில் அர்ஜுனன் சொன்னான்.

மீண்டும் ஒருங்கிணைந்து அர்ஜுனனை மூடிவிட பாண்டவப் படைகள் முயன்றபோது கர்ணனின் இருபுறமும் வந்துகொண்டிருந்த அவன் மைந்தர்கள் பொழிந்த அம்புகள் அவர்களைத் தடுத்து அணையிட்டு அப்பால் நிறுத்தின. கர்ணன் எங்கோ உளம் அமைந்து நோக்கிழந்த விழிகள் இமைசரிந்திருக்க அம்புகளால் படைகளை அறைந்துகொண்டிருந்த அரைக்கணத்தில் திரும்பி அர்ஜுனனை பார்த்தான். காண்டீபத்தை அறியாது மேலே தூக்கிய அர்ஜுனன் அதன் நாண் தளர்ந்திருப்பதைக் கண்டு வெற்று நோக்குடன் முகம் உறைந்தான். கர்ணன் “தேர் விலக்குக!” என்றான். “அரசே!” என்றான் சத்ருஞ்சயன். “இளையோனே, தேரை விலக்கு” என்று அழுத்தமான குரலில் கர்ணன் சொல்ல சத்ருஞ்சயன் தேரை இழுத்து விலக்கி கௌரவப் படைகளை நோக்கி கொண்டுசென்றான்.

கர்ணனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மைந்தர்களும் அவ்வாறே தேர்களைத் திருப்பி கௌரவர்களின் மையப்படையை நோக்கி செல்ல அவ்விடைவெளியை நிரப்பியபடி பாஞ்சாலர்களின் விற்படைகளும் விராடரின் வேல்படையும் கிராதர்களின் காலாட்படையும் வந்து மூடி அர்ஜுனனை அப்பால் கொண்டுசென்றன. மிகத் தொலைவில் யானைச்சங்கிலி கொடி நுடங்க பொற்தேர் அகன்று செல்வதை அர்ஜுனன் பார்த்தான். தேர்த்தட்டில் ஓங்கி காலால் உதைத்து காண்டீபத்தை அறைந்து வீசிவிட்டு பீடத்தில் அமர்ந்து கைகளால் தலையை பற்றிக்கொண்டு அவன் விம்மி அழுதான்.

கடிவாளங்களைப் பற்றியபடி பின்னால் திரும்பிப்பார்த்த இளைய யாதவர் “ஏன் துயருறுகிறாய்? உனக்கு உயிர்க்கொடை அளிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அதற்கு மேல் இந்நிகழ்வுக்குப் பொருளேதுமில்லை” என்றார். “இத்தருணத்திற்குப் பின் நான் எதை அடைந்தாலும் அதற்கு பொருளேதுமில்லை, யாதவரே. இக்கணம் வரை என் முதன்மை எதிரியாக எண்ணியிருந்தவன் இவன். இவனை கொன்றாலொழிய நான் வீரனல்ல என்றும் இவனைக் கொல்லும் கணத்திலேயே விண்ணவனின் மைந்தனென்று ஆவேன் என்றும் எண்ணியிருந்தேன். தோற்றது நான் மட்டுமல்ல, விண்ணவர்க்கு இறைவனாகிய எந்தையும்தான். பிறந்து பிறந்து என்றும் நிகழும் இப்போரில் மீண்டும் எந்தை தோற்றிருக்கிறார்” என்றான்.

“என்றும் தேவர்களே இறுதியாக வெல்வார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “அதற்கு என்ன பயன்? அவ்வெற்றி இழிவு கொண்டது. இன்று அவனிடமிருந்து உயிரை கொடை எனப் பெற்றதும் நான் இறந்தேன். இனி வில்லவனென்றும் விண்ணோன் மைந்தனென்றும் சொல்லிக்கொள்வதில் என்ன பொருள்?” என்று அர்ஜுனன் கூவினான். “போர்க்களத்தில் எதுவும் நிகழும். நன்று, தீது, மேன்மை, கீழ்மை அனைத்தும் இங்கு ஒன்றே. களத்தில் அனைத்து சொற்களும், அனைத்து உணர்வுகளும் நாம் கையாளும் படைக்கலங்கள் மட்டுமே” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் மறுமொழி கூறாது தலையை கைகளில் தாங்கி உடல் குறுக்கி அமர்ந்திருந்தான்.

அந்தி சரிவதை அறிவுறுத்தும் முரசுகள் முழங்கத் தொடங்கின. பாண்டவ வீரர்கள் உரக்க கூச்சலிட்டு விற்களையும் வேல்களையும் வானில் தூக்கியெறிந்து “வெற்றி கொள்வோம்! வில்விஜயனுக்கு வெற்றி! இந்திரன் மைந்தனுக்கு வெற்றி! காண்டீபத்துக்கு வெற்றி! மின்கொடிக்கு வெற்றி! இந்திரப்பிரஸ்தத்திற்கு வெற்றி! யுதிஷ்டிரருக்கு வெற்றி!” என்று கூச்சலிட்டனர். அப்பால் கௌரவப் படையினர் சோர்ந்து தனித்து பிரிந்து செல்வதை காணமுடிந்தது.

ele1கர்ணனின் தேர் சென்று நிற்க பாகன் பாய்ந்திறங்கி அவன் இறங்குவதற்குரிய படிப்பெட்டியை வைத்தான். கர்ணன் இறங்கி தன் வில்லை அருகே வந்த ஏவலனிடம் நீட்டி கையுறைகளை விரல்களால் கவ்வி உருவியபடி நடந்தான். தொலைவில் தனித்தேரில் துரியோதனன் செல்வதை பார்க்க முடிந்தது. கர்ணன் அவனை பார்த்தபின் அணுகிச்சென்றான். துரியோதனன் தேரிலிருந்து இறங்கி வெறுப்பும் துயரும் நிறைந்த முகத்துடன் அங்கேயே நின்றான். அருகணைந்ததும் “பகதத்தர் கொல்லப்பட்டார்!” என்றான். கர்ணன் மறுமொழி சொல்லவில்லை. “இது அவையில் அவர் உங்களை குலஇழிவு சொன்னமைக்கான மறுசெயல் என்று என்னிடம் சொன்னார்கள். நான் அதை நம்ப அஞ்சுகிறேன். அவ்வாறு ஒரு சிறுமையை உங்கள் மேல் இதுவரை நான் சுமத்தியதில்லை. ஆனால் இன்று அதை என்னால் சுமத்தாமலிருக்கவும் இயலாது” என்றான் துரியோதனன்.

“என் மேல் எப்பழியையும் எவரும் சுமத்தலாம்” என்று கர்ணன் சொன்னான். துரியோதனன் அச்சொல்லால் உளமழிந்து தன் இரு கைகளால் அவன் கைகளை பற்றிக்கொண்டு “பிறகேன் இந்த நிலை? ஏன் இப்படி செய்ய நேர்ந்தது?” என்று உடைந்த குரலில் கேட்டான். “அறமென்றும் அளியென்றும் என்னிடம் சொல்லவேண்டாம். என் மைந்தர், என் இளையோர் இந்தக் களத்தில் எப்படி தலையறைந்து வீழ்த்தப்பட்டனர் என்று உனக்கு தெரியும். இன்று நான் நின்றிருக்கும் நிலை என்னவென்றும் தெரியும். இத்தருணம் அறத்தையும் அளியையும் பேசிக்கொண்டிருப்பதற்கானதல்ல என்று பிற எவரையும்விட உனக்கே தெரியும். இருந்தும் ஏன் இதை செய்தாய்? நான் ஏதேனும் பிழை இழைத்தேனா? அன்றி என் தம்பியரோ குடியோ ஏதேனும் பிழையாற்றினோமா?”

“என் நிலையை சொற்களால் முழுமையாக உங்களிடம் சொல்லிவிட இயலாது, அரசே” என்று கர்ணன் சொன்னான். “ஒருவேளை என்றேனும் நீங்கள் அதை அறியவும் கூடும். அல்லது நாம் விண்ணில் சந்திக்கையில் அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். இன்று அதற்கு என்னிடம் விளக்கமில்லை.” சீற்றத்துடன் “ஒரு விளக்கமிருக்கிறது” என்று துரியோதனன் சொன்னான். “இதுவரை நாம் எவரும் சொற்களால் ஒருவரோடொருவர் சொல்லிக்கொள்ளாத விளக்கம் அது” என்றான். அவன் விழிகளை நேர்நோக்கி “அது உண்மை” என்று கர்ணன் சொன்னதும் துரியோதனனின் விழிகள் மாறுபட்டன. “அது முற்றிலும் உண்மை. அவன் என் இளையோன். அவர்கள் என் இளையோர்” என்று கர்ணன் சொன்னான்.

துரியோதனன் திகைப்புடன் “ஆனால்…” என்றான். “அது நாமனைவரும் அறிந்தது. நாம் எவரும் சொல்ல உகக்காதது. அவ்வாறே இருக்கட்டும்” என்றான் கர்ணன். துரியோதனன் உளம் தளர்ந்து “மெய்தான். நான் அவனை கொல்லும்படி உங்களிடம் சொல்லியிருக்கக் கூடாது. உங்களால் அது இயலாது. அப்பெரும்பழியைச்சூடி நீங்கள் நின்றிருக்க வேண்டுமென்று நான் கோரலாகாது” என்றான். அவன் தோளைத் தொட்டு உரத்த குரலில் “அப்பெரும்பழியை நான் சூடுவேன் என்று மீண்டும் சொல்லளிக்கிறேன். இன்று அவனை நான் கொல்லாது ஒழிந்தது ஒன்று கருதியே. என்முன் ஒரு முகம் நின்றிருந்தது. என் கை தளரச்செய்தது” என்றான் கர்ணன்.

“ஆனால் எந்நிலையிலும் அவன் தப்ப இயலாத பெரும்பாணம் ஒன்று என்னிடம் உள்ளது. நெடுநாள் வஞ்சம் கரந்த நஞ்சுகொண்ட நாகாஸ்திரம். அதை நாளை அவன் மேல் செலுத்துவேன். அவனை கொன்று மீள்வேன். ஐயம் வேண்டியதில்லை” என்றான். “அந்நஞ்சை இன்றிரவு என் குருதியில் செலுத்திக்கொள்கிறேன். இன்று என்னிலுள்ள அனைத்தும் அகலும். நான் அந்த நஞ்சால் மட்டுமே செலுத்தப்படுவேன்… ஆம், இவையனைத்திலும் இருந்து விடுபடுவேன்.” துரியோதனன் “ஆனால்” என்றபின் “வேண்டாம். அப்பெரும்பழிக்குப் பின் உன் உளநிலை எப்படி இருக்குமென்று என்னால் எண்ண முடிகிறது. என் பொருட்டு அதை செய்ய வேண்டியதில்லை. இது ஊழ் வழியே செல்க!” என்றான்.

“இல்லை. இது நான் மாறாது எடுத்த முடிவு. என்னை ஆளும் தெய்வத்திற்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன். பின் நான் மானுட உணர்வுகளால் ஆற்றல்குன்றியவனாக இருக்கமாட்டேன். என் நச்சம்புக்கு முன் அவனுடைய எந்த அம்பும் நில்லாது. அவனுடைய எந்த சொற்பேறும் அதை தடுக்காது. எண்ணுக! நாளை அவன் வாழ்வை முடிப்பேன்” என்றபின் கர்ணன் திரும்பிச் சென்றான். துரியோதனன் களத்தில் தனித்து நின்றான்.

ele1தன் குடிலின்முன் அர்ஜுனன் சிறு பெட்டி மேல் அமர்ந்து கைகளை மடியில் கோத்து தலைகுனிந்திருந்தான். இரு ஏவலர் மென்மரவுரிச் செண்டால் அவன் உடலிலிருந்த பொடியை வீசி அகற்றினர். மணலால் அவன் கைகளிலிருந்த குருதியை உரசி துடைத்து ஈர மரவுரியால் தூய்மை செய்தனர். தேர் வந்து நின்ற ஒலிகேட்டு அவன் விழிதூக்கி நோக்கினான். இளைய யாதவர் அதிலிருந்து இறங்கி புன்னகையுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் எழுந்து தன் குடிலுக்குள் சென்றுவிட வேண்டுமென்று அவன் எண்ணினான்.

அவன் உடலில் அவ்வசைவு எழக்கண்டதும் மேலும் அகன்ற புன்னகையுடன் அருகணைந்து அப்பாலிருந்த சிறுபெட்டியை இழுத்திட்டு அதில் அமர்ந்து தன் முழங்காலில் கைவைத்து விரல்களைக் கோத்தபடி “இன்னும் துயர் கொண்டிருக்கிறாயா?” என்று இளைய யாதவர் கேட்டார். அர்ஜுனன் விழிதூக்கி “உயிரோடிருத்தலே இழிவென்று தோன்றும் சில தருணங்கள் உண்டு வாழ்வில்” என்றான். “உயிரோடிருத்தல் வீணென்று தோன்றுவதைவிட அது மேல்” என்று இளைய யாதவர் சிரித்தார். “யாதவரே, உங்களுக்கு மெய்யாகவே மானுட குலத்தை பார்த்தால் என்ன தோன்றுகிறது? பயனற்ற இழிபிறவிகள் என்றா? கடலில் பல நூறு காதம் அகலமுள்ள மீன் கூட்டங்களை ஒரே இழுப்பில் வாய்க்குள் இழுத்து விழுங்கிச்செல்லும் மலைபோன்ற மீன் ஒன்றுண்டு என்று மாலுமிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“மானுடர் பயனுள்ளவர்கள்தான். தெய்வங்கள் தாங்கள் எண்ணுவன அனைத்தையும் அவர்களைக் கொண்டே இங்கு நிகழ்த்தவேண்டியிருக்கிறது” என்று அதே சிரிப்புடன் இளைய யாதவர் சொன்னார். “எண்ணி நோக்குக! ஒரு சதுரங்கக் காயின் மெய்யான பொருள்தான் என்ன? அந்தக் களத்தில் அது சில மாறாத அடையாளங்களை கொண்டுள்ளது. ஆனால் ஆடலில் ஒவ்வொரு கணமும் அதன் பொருள் மாறிக்கொண்டிருக்கும். ஆடல் முடிவிலாதது எனில் முடிவிலாப் பொருள் கொண்டதல்லவா அதுவும்?” உதடுகளைச் சுழித்து “வெறும் சதுரங்கக் காய்!” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், அதுதான். பிறிதொன்றுமல்ல” என்று இளைய யாதவர் சொன்னார்.

தலைகுனிந்து சற்று நேரம் இருந்த பின் நிமிர்ந்து நோக்கி அர்ஜுனன் “சில தருணங்களில் உங்கள் மேல் தோன்றும் வெறுப்புக்கு எல்லையே இல்லை” என்றான். “எல்லையற்ற அன்பு கொண்டவர்மேல்தான் அத்தகைய வெறுப்பும் உருவாகும் என்பார்கள்” என்று சொல்லி தலையை தூக்கி உரக்க நகைத்து “மானுடரைப் பற்றி அழுத்தமாக எதைச் சொன்னாலும் அது சரியானதாகவும் தோன்றுவதன் விந்தைதான் என்ன! காவிய ஆசிரியர்கள் அதில்தான் திளைக்கிறார்கள் போலும்” என்றார். “யாதவரே, இன்று நிகழ்ந்ததற்கு என்ன பொருள்? அவ்விழிமகன் கையால் உயிர்பெற்று நான் வாழ வேண்டுமா? இதன் பின் அவனை களத்தில் கொன்றால் நான் அடையும் பெயருக்கு என்ன பொருள்? எப்படி இனி அவனை கைநடுங்காது என்னால் எதிர்கொள்ள முடியும?” என்றான்.

“அதற்கென தருணம் வரும்” என்று இளைய யாதவர் சொன்னார். “இல்லை, இனி அவனை களத்தில் எதிர்கொள்ள என்னால் முடியாது. அவன் முன் கை நடுங்காது காண்டீபம் எடுக்க மாட்டேன். அவ்வாறு இனியும் ஒருமுறை அவனிடம் சென்று நின்று தோற்றால் அது சிறுமை. மீண்டும் ஒருமுறை அவனால் உயிர்க்கொடை அளிக்கப்பட்டால் என் குடிக்கும் கொடிவழிக்குமே அது கீழ்மை” என்றான். “கைநடுங்காது முழுவிசையுடன் அவனை கொல்லும் ஆற்றலை உனக்களிக்கும் நிகழ்வுகள் ஒருங்கு கூடுக என்று மட்டுமே இத்தருணத்தில் என்னால் சொல்லக்கூடும்” என்றபின் அவன் தொடையில் கைவைத்து “எண்ணி நோக்குக! எவ்வாறு இது நிகழ்ந்தது?” என்றார்.

அர்ஜுனன் நிமிர்ந்து நோக்க “பாண்டவனே, இந்த மாபெரும் துலாவில் எந்தத் தட்டில் ஒன்றை நீ வைத்தாலும் பிறிதெங்கோ ஒரு தட்டு நிகர் செய்யப்படுகிறது. நீ காண்டவப் பெருங்காட்டை எரித்ததை நினைவுறுகிறாயல்லவா?” என்றார். “ஆம், இன்று களத்தில் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். உண்மையில் களத்தில் அங்கன் எழுந்த நாள் முதல் மற்றொன்றையும் எண்ணவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ஒரு தட்சன் எஞ்சினான். அவனையும் கொன்றொழிக்கும்படி உன்னிடம் கூறினேன். உன் அறம் அதை தடுத்தது. நீ அவனுக்கு உயிர்க்கொடை அளித்தாய்” என்றார். “ஆம்” என்று அர்ஜுனன் குழப்பத்துடன் சொன்னான். “அந்த உயிர்க்கொடையையே இன்று அங்கன் உனக்கு திருப்பியளித்திருக்கிறான். அளித்தது அவனல்ல, அவன் ஆவநாழியில் அம்பின் வடிவில் உறங்கும் அந்த இளம்தட்சனே” என்றார் இளைய யாதவர்.

திகைப்புடன் சற்று நேரம் பார்த்த அர்ஜுனன் “ஆனால் அதை நான் பேரளியுடன் அளித்தேன்” என்றான். யாதவர் உரக்க நகைத்து “அந்த அளிக்கு என்ன பொருள்? அவன் குலத்தை முற்றழித்து அவன் உடலை பாதி வேகச் செய்து உயிரளித்துவிடுவது எவ்வகையில் அளிகொண்ட செயல்? அதற்கு நிகரானது இன்று உன் ஆணவத்தை முற்றழித்து பல்லாயிரம் விழிகள் முன் உன்னை சிறு உயிரென்றாக்கி அந்த தட்சன் உனக்கு அளித்த உயிர்க்கொடை. நீங்கள் இருவரும் உளம்கனிந்து அதை செய்தீர்கள். ஆனால் விளைவுகள் ஒன்றே. அளித்ததை பெற்றுவிட்டாய். இனி களத்தில் உனக்கு கடன் ஏதுமில்லை” என்றார் இளைய யாதவர்.

அர்ஜுனன் “எனக்கு புரியவில்லை” என்றான். அவன் தொடையைத் தட்டியபின் எழுந்துகொண்ட யாதவர் “பாண்டவனே, நீ அவனுக்கு அளித்த உயிர்க்கொடையை இளந்தட்சன் இப்போது திருப்பி அளித்திருக்கிறான். ஏனெனில் இனி அவன் அதன்பொருட்டு உன்னிடம் கருணை காட்ட வேண்டியதில்லை. உன்னை துரத்தி திசையெல்லை வரை கொண்டு சென்று வஞ்சம் தீர்க்கலாம். உன் குலக்கொடியின் கருபுகுந்து கொடிவழியினரை அழிக்கலாம். உன் தலைமுறைகளில் நஞ்சென்றும் பழியென்றும் குடிகொள்ளலாம். அவனுக்கு இப்போது தடைகளில்லை” என்றார்.

அர்ஜுனன் திகைத்த விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தான். “அவ்வண்ணமே உனக்கும் இனி தடையில்லை என்றாகுக! அதற்கென தருணம் அமைக!” என்றபின் இளைய யாதவர் திரும்பிச்சென்று தன் தேரிலேறிக்கொண்டார்.

நூல் இருபது – கார்கடல் – 35

ele1ஏகாக்ஷர் சொன்னார் “படைக்களத்தில் தன் பட்டத்து யானையான சுப்ரதீகத்தின் மேல் ஏறி பகதத்தர் தோன்றினார். அரசி, அவர் கொண்டிருந்த அம்புகள் அனைத்தும் அவரைவிட இருமடங்கு நீளமானவை. அவற்றின் கூர்முனைகள் கையளவுக்கே பெரியவை. அவை உறுமியபடி சுழன்றுசென்று கவசங்களை உடைத்து உடலுக்குள் பாய்ந்ததுமே சற்று சுழன்று நிலைகொள்பவை. ஆகவே அவ்வுயிரைக் கொல்லாமல் அவற்றை பிடுங்கி எடுப்பது இயலாது. அம்புகள் நீண்டவை ஆதலால் அவை தைத்து வீரன் களம்பட்டதுமே அவன்மேல் பிற வீரர்களும் தேர்ச்சகடங்களும் புரவிகளும் ஓடி அந்த அம்பை அசைத்து அவன் உள்ளுறுப்புகளை சிதைத்துவிடுவார்கள். குருக்ஷேத்ரத்தில் சினம்கொண்டெழுந்த காலதேவன் போலவே பகதத்தர் தோற்றமளித்தார்.”

முன்பொருமுறை ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் தன் பெருங்கதையினால் கடலின் அலைகளை அறைந்து சிதறடித்து விளையாடினான். அந்த அறைகள் பட்டு கடலரசனாகிய வருணன் துன்புற்றான். அவன் அழுதபடியே சென்று விண்ணளந்தோனிடம் தன்னை அவ்வசுரனின் கதையிலிருந்து காக்கவேண்டும் என்று கோரினான். சினம்கொண்டு விண்ணவன் எழுந்தான். அதை அறிந்த ஹிரண்யாக்ஷன் பேருருக் கொண்டு பூமியன்னையை தன் பற்கொம்பின்மேல் ஏற்றிக்கொண்டு கடலாழத்திற்குள் சென்று ஒளிந்தான். காப்போன் தான் ஒரு பன்றியென உருக்கொண்டு கடலின் ஆழத்திற்குள் உள்ள ஏழு இருண்ட பாதாளங்களையும் ஊடுருவிச்சென்று அங்கே எல்லையில்லாது விரிந்த மணல்வெளியில் ஒரு மணற்பருவாக சுருங்கி ஒளிந்திருந்த ஹிரண்யாக்ஷனைக் கண்டு கொன்று அன்னையை மீட்டு கொண்டுவந்தார்.

ஹிரண்யாக்ஷனின் கொம்பு வயிற்றில் புகுந்தமையால் புவியன்னை கருவுற்றாள். அவள் ஈன்ற மைந்தனே நரகாசுரன். மண்ணாழத்தில் பிறந்தமையால் அன்னை அப்பெயரை அவனுக்கு ஈந்தாள். கொடிய கருந்தோற்றம் கொண்டிருந்த நரகனை விண்ணவர் கொன்றுவிடக்கூடும் என அஞ்சிய அன்னை உலகாள்வோனிடம் சென்று அவனை காக்கவெண்டுமென இரந்தாள். அவளுக்குக் கனிந்த மூத்தோன் தன் பைந்நாகப்பாயின் வாலின் நிழலைத் தொட்டு எடுத்து ஒரு அம்பு என்று ஆக்கி அளித்தார். இது வைஷ்ணவாஸ்திரம். இதை நீ உன் கையில் ஒரு கணையாழியாக அணிந்துகொள்க! உன் மைந்தனுக்கு இதை கொடு. அவன் வளர்ந்து பேருருவன் ஆவான். அவனை எவரும் வெல்ல இயலாது. அவன் அறம்பிழைத்தானென்றால் மண்ணில் நானே அவனைக் கொல்ல எழுவேன். என் முன் மட்டுமே இந்த அம்பு செயலிழக்கும் என்று அருளினார்.

அன்னையிடமிருந்து வைஷ்ணவாஸ்திரத்தைப் பெற்ற நரகாசுரன் வெல்லற்கரியவனாக ஆனான். கிழக்குமலைகளின் அடிவாரத்தில் பிரக்ஜ்யோதிஷம் என்னும் நகரை உருவாக்கி அதை தன் தலைநகராகக்கொண்டு அசுரப்பேரரசு ஒன்றை அமைத்தான். ஹயக்ரீவன், நிசுந்தன், பஞ்சநதன், முரன் என்னும் விண்ணுருவ அரக்கர்களை பிரக்ஜ்யோதிஷ மாநகரின் எல்லைக்காவலர்களாக அமைத்தான். வேதமுனிவரான த்வஷ்டாவின் மகள் கசேருவை கவர்ந்துகொண்டுவந்து தன் துணைவியாக்கிக் கொண்டான். எதிர்க்க எவருமில்லை என ஆணவம் மிகவே விண்ணுலகுக்குச் சென்று இந்திரனின் அன்னை அதிதியின் அணிகலன்களை அறுத்துக்கொண்டுவந்து தன் துணைவிக்கு அளித்தான்.

இந்திரன் சென்று முறையிடவே பாற்கடலில் இருந்து பெருமான் எழுந்து மண்ணில் வந்து நரகாசுரனிடம் போரிட்டு அவனை கொன்றார். மண்ணின் பெருவீரர்களும் முனிவர்களும் விண்ணவரும் வெல்லமுடியாத நாராயணாஸ்திரம் பெருமானின் கையில் ஒரு சிறு கணையாழியாகச் சென்றமைந்தது. நரகாசுரனின் குடிகள் சிதறிப்பரந்து பிறிதோரிடத்தில் பிரக்ஜ்யோதிஷத்தை மீண்டும் அமைத்தனர். யாதவ நிலத்திற்குள் அமைந்த அந்நகரிலிருந்துகொண்டு அவர்கள் துவாரகையின் ஆநிரைகளை கவர்ந்தனர். சினம்கொண்ட இளைய யாதவர் தன் துணைவி சத்யபாமையுடன் போருக்கெழுந்து நரகாசுரனின் குருதியிலெழுந்த நூற்றெட்டாவது நரகாசுரனைக் கொன்று பிரக்ஜ்யோதிஷத்தை அழித்தார்.

நரகாசுரனின் குடியில் இருந்த தொன்மையான படைக்கலமாகிய நாராயணாஸ்திரம் புதிய பிரக்ஜ்யோதிஷத்தின் அரசரான பகதத்தரிடம் வந்தது. அது கருடச்சிறகுகள் கொண்டது. கருடனின் அலகுபோல் கூர்ந்த முனைகொண்டது. கருடன்போல் ஓசையிட்டு விண்ணிலெழுந்து அங்கேயே வட்டமிட்டு இலக்கை நோக்கியபின் செங்குத்தாக மண்ணுக்கு வந்து பாய்ந்து உயிர்குடிப்பது. அதனிடமிருந்து தப்ப எவராலும் இயலாது. அது விண்ணளந்த பெருமான் ஒருவனுக்கே கட்டுப்படும் என்று கதைகள் உரைக்கின்றன. அதை பகதத்தர் போர்க்களத்தில் பயன்படுத்தவில்லை. அவர் அதை பீமனுக்கோ அர்ஜுனனுக்கோ கருதி வைத்திருப்பதாக சொல்லப்பட்டது.

அன்று காலை பகதத்தர் தீக்குறி ஒன்றை கண்டார். அவருடைய யானையும் களமெழத் தயங்கியது. ஆகவே அன்றே பீமனையோ அர்ஜுனனையோ கொல்வதாக தன்னுள் வஞ்சினம் உரைத்தபின் அவர் குருக்ஷேத்ரக் களத்தை சென்றடைந்தார். அங்கே நிகழ்ந்த பெரும்போரில் அவர் துருபதனிடமும் விராடனிடமும் போரிட்டார். தன் மைந்தரைக் கொன்ற அவர்மேல் சினம்கொண்டு பொருத வந்த சிகண்டியை அம்புகளால் அறைந்து தேரிலிருந்து வீழ்த்தினார். சிகண்டி தப்பி ஓடி படைகளுக்குள் ஒளிந்துகொண்டார். திரிகர்த்தனும் சம்சப்தர்களும் கொல்லப்பட்ட செய்தியை அவர் அறிந்தார். தன் இலக்கான பீமனை நோக்கி சென்றுகொண்டிருந்தார். தொலைவில் பீமனை கண்டுகொண்டதும் அவரை நோக்கி தன் யானையை செலுத்தினார். களத்தில் இரு பெருமல்லர்களும் சந்தித்துக்கொண்டார்கள்.

அரவான் சொன்னான். யானை அளவுக்கு போரை நன்கறிந்த பிறிதொரு உயிர் இல்லை. புரவிகள் போரில் களிக்கின்றன, ஆனால் எளிதில் அஞ்சிவிடுகின்றன. யானையின் முகத்தில் எழும் கரிய மாநாகம் போரில் திளைக்கின்றது. குருதியில் குளிக்குந்தோறும் குளிர்ந்து ஆற்றல் கொள்கிறது. என் குடியினரே, அங்கே குருக்ஷேத்ர மண்ணில் சுப்ரதீகம் செய்த போரை இனி என்றென்றும் சூதர்கள் பாடுவார்கள். பெருங்கவிஞர் சொல்லில் நிறுத்துவார்கள். தலைமுறைகள் அதன் வீரத்தை எண்ணி திகைப்பார்கள். அது வானிலிருந்து தெய்வம் ஒன்று தன் கையில் தூக்கிச் சுழற்றும் சங்கிலிக் கதையின் கரிய முழைபோல போர்க்களத்தில் சுழன்றுவந்தது. அது சென்ற இடத்தை குருதித்தடமாக காணமுடிந்தது. கரிய யானையை அவர்கள் எவரும் காணவில்லை, அது செங்குருதியால் செம்மண்குன்று என தோன்றியது.

பீமன் தன் தேரில் நின்றபடி யானையிடம் போர்புரிந்தார். அவரைத் தொடர்ந்துவந்து காத்த பாஞ்சாலத்தின் வில்லவர்களை பகதத்தர் தன் அம்புகளால் வீழ்த்திக்கொண்டே இருந்தார். மெல்ல மெல்ல பீமன் தனிமைப்பட்டு களம்நடுவே நின்றார். அவரை பின்னால் சென்று மையப்படைகளுடன் சேர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தி முரசுகள் முழங்கிக்கொண்டே இருந்தன. ஆனால் அவர் அதை தவிர்த்தார். மேலும் சீற்றம்கொண்டவராக அவர் பகதத்தர் மேல் பாய்ந்தார். சுப்ரதீகத்தின் கதை வந்து அறைந்து அவருடைய தேர் உடைந்து தெறித்தது. அதிலிருந்து பாய்ந்து அவர் மண்ணில் விழுந்து புரண்டு எழுந்தார். அறைந்து அறைந்து அவரை தொடர்ந்து வந்த கதை பட்ட இடம் குழியாகியது. அந்த மண் பெருகி அவர்மேல் பொழிந்து அவரை செந்நிறமாக்கியது. வில் ஒடிந்து தெறிக்கவே பீமசேனர் தன் கதையை தூக்கியபடி யானையுடன் போர்புரிந்தார்.

யானையின் கதை அவருடைய கதையை அறைந்து அப்பால் வீசியது. அவர் பாய்ந்து பிறிதொரு கதையை எடுத்துக்கொண்டார். அவரை நோக்கி மேலிருந்து அம்புகளைத் தொடுத்த பகதத்தர் வெறிக்கூச்சலிட்டார். அவருடைய அம்புகள் அந்த செந்நிலத்தில் தைத்து இலை எரிந்தணைந்து குச்சிகள் நீண்டுநிற்கும் மூங்கில்காடென்றாயின. அதனூடாக தப்பி வளைந்து ஓடிய பீமன் அந்த மாமதயானையை எதிர்கொள்ள ஒரே வழி அதன் அருகே சென்றுவிடுவதே என உணர்ந்து அதை நோக்கி ஓடி அதன் கதை சுழன்றுவரும் வட்டத்திற்குள் சென்றார். யானை அவரை பார்க்கமுடியாமல் தன்னைத்தான் சுற்றிக்கொண்டு பெருங்குரலெழுப்பியது. அதன் கால்களுக்குக் கீழே சென்று அவர் அங்கே நின்று அதை தாக்கினார். அதன் கவசங்கள் உடைந்தன. அதன் காலுக்குக் கீழே புண்பட்டது. கால் வளைய யானை சரிந்து விழுந்தது. அதற்கு அடியில் பீமசேனர் சிக்கிக்கொண்டார் என்று எண்ணிய பாண்டவப் படையினர் கூச்சலிட்டு அலறினர்.

“இளைய பாண்டவர் பீமசேனர் வீழ்ந்தார்!” என்று முரசுகள் முழங்கின. பாண்டவப் படையினர் அலறிக்கொண்டு நிலையழியலாயினர். யுதிஷ்டிரர் அஞ்சி கூச்சலிட்டபடி நகுலனிடம் “இளையவனிடம் சென்று மந்தனை காக்கச் சொல்க… மந்தன் உடனே மீட்கப்பட்டாக வேண்டும்” என்றார். அச்செய்தி சென்றதும் சம்சப்தர்களைக் கொன்று உடலெங்கும் குருதியுடன் நின்றிருந்த அர்ஜுனன் தேரைத் திருப்பியபடி பகதத்தரை நோக்கி சென்றார். அவருடன் பாஞ்சாலத்தின் வில்லவர்கள் நூற்றுவர் நாணொலி எழுப்பியபடி சென்றனர். “பகதத்தரை வெல்வது எளிதல்ல, பார்த்தா… அவருடைய நாராயணாஸ்திரம் ஆற்றல் மிக்கது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதை அவர் மூத்தவர்மேல் ஏவவில்லை அல்லவா?” என்றார் அர்ஜுனன். “இல்லை, அவ்வாறு ஏவியிருந்தால் அதன் ஒலி வேறாக கேட்டிருக்கும்” என இளைய யாதவர் சொன்னார்.

பீமசேனர் இறந்துவிட்டார் என்று கௌரவப் படைகள் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கையிலேயே சுப்ரதீகம் புரண்டு எழுந்து நின்று துதிக்கை தூக்கி ஆர்ப்பரித்தது. அது விழுந்த எடையை தன்மேல் இருந்து ஒழிந்து அப்பால் பாய்ந்தெழுந்து கதையுடன் நின்ற பீமசேனரை நோக்கி கதையுடன் பாய்ந்தார் பகதத்தர். இருவரும் ஒருவருக்கொருவர் இணைநின்று கதைப்போரிட்டனர். இருவரின் தசைகளும் ஆற்றல் ஆற்றல் என முறுகி நெளிந்து தழைந்தன. இரு கதைகளும் விம்மி காற்றில் சுழன்று வந்து அறைந்தன. இருவரும் கால் எண்ணி வைத்து சுற்றிவந்து தாக்கினர். ஒருவர் வீச்சை ஒருவர் தடுத்தனர். அதில் ஒருவரின் ஆற்றலை ஒருவர் உணர்ந்தனர். இரு மல்லர்கள் ஒரு கோளத்தின் இரு பக்கங்கள் என இணைந்துகொள்கிறார்கள்.

பகதத்தரின் விழிநோக்கு தன் கைகளை நீட்டித் தொடும் எல்லைவரைதான் என்பதை பீமன் புரிந்துகொண்டார். தன் காலடியோசையைக் கொண்டோ கதை சுழலும் விம்மலைக் கொண்டோ காற்றசைவைக் கொண்டோதான் அவர் தன்னை அறிகிறார். ஆகவே பஞ்சடி வைத்து நடக்கும் போர்முறையை கைக்கொண்டார். கதையை சுழற்றாமல் தன் முன் அசைவிலாது பிடித்தபடி அவர் உடலை அறைய தடம் நோக்கினார். அவர் நெஞ்சு திரும்பி அண்மையிலெனத் தெரிந்த கணத்தில் ஓங்கி அறைந்தார். அக்கணமே அவருக்குப் பின்னால் நின்றிருந்த சுப்ரதீகத்திடமிருந்து எழுந்த மெல்லிய ஓசையால் அவரை நன்கு கண்டவராக பகதத்தர் பாய்ந்து அகன்றார்.

அதன் பின்னரே பீமன் உணர்ந்தார். அவருக்குப் பின்னால் நின்று அந்த யானை நூறுமுறை தீட்டிய கூர்கொண்ட தன் விழிகளால் அவருடைய ஒவ்வொரு தசையசைவையும் நோக்கிக்கொண்டிருக்கிறது என. அதன் துதிக்கை அசைவில், செவிவீச்சில் பகதத்தருக்கான மொழி இருப்பதை கண்டார். மீண்டும் மீண்டும் தாக்கி பிரிந்து பாய்ந்து தாக்கும்போது அந்த மொழிக்கும் அப்பால் அவர்கள் மட்டுமே எழுப்பி கேட்டுக்கொள்ளும் நுண்ணொலி ஒன்றில் பிறிதொரு மொழி அவர்களிடையே நிலவுவதை உணர்ந்தார். அவரது யானைவிழிகளை நோக்கி போரிட அவர் கற்றிருக்கவில்லை. அவை நோக்குவதென்ன என்பதை அவருடைய விழிகளாலும் பயின்ற உள்நோக்காலும் உணர இயலவில்லை.

பீமன் கைதளர்ந்து பின்னடையத் தொடங்கினார். அவர் விலாவில் அறைந்து வீழ்த்தியது பகதத்தரின் கதை. குருதி உமிழ்ந்தபடி அவர் புரண்டு எழுந்து விலகினார். பகதத்தர் மீண்டும் தன் யானைமேல் ஏறிக்கொண்டு பெருவில்லை இழுத்து அம்புதொடுத்து அவர் மேல் ஏவினார். முதல் அம்பை ஒழிந்த பீமசேனர் கால்தளர்ந்து விழ அடுத்த பேரம்பை பகதத்தர் எடுத்தபோது மல்லநாட்டரசன் ஆகிருதியின் மைந்தனாகிய ருசிபர்வன் கூச்சலிட்டபடி வந்து சுப்ரதீகத்தின் மேல் தன் வேலால் தாக்கினான். சினம்கொண்ட யானை திரும்பி அவனை தாக்கியது. அவன் தன் வேலால் மாறி மாறி யானையை குத்திக்கொண்டிருக்க அவனைத் தூக்கி நிலத்திலறைந்து கொன்றது சுப்ரதீகம்.

களைத்து குருதி கக்கிக்கொண்டிருந்த பீமன் எழுந்து விலகிச் சென்றுவிட அவரைத் துரத்தியபடி பாண்டவப் படைகளுக்குள் பகதத்தர் நுழைந்தார். அவரை அஞ்சி பாறை விழுந்த ஏரியின் நீர் என அலையலையாக பாண்டவப் படைகள் அகன்றன. பீமசேனரை பகதத்தர் அணுகி “இன்றுடன் ஒழியட்டும் உன் ஆணவம்!” என்று கூவியபடி தன் முதன்மை அம்பை எடுக்க கை நீட்டியபோது கூகைக்குழறல்போல் எழுந்த நாணொலியுடன் வந்து அவரை எதிர்கொண்டார் அர்ஜுனன்.

அவர்களிடையே விற்போர் தொடங்கியது. பகதத்தரின் அம்புகள் பெருங்கழுகுகளின் ஆற்றல் கொண்டிருந்தன. உதிரும் மலைப்பாறைகள்போல் அவை இறங்கின. பகதத்தரின் அம்புகளை அறைந்து முறிக்கவோ தடுத்து வீழ்த்தவோ இயலாதென்று முதல் அம்பிலேயே அர்ஜுனன் உணர்ந்துகொண்டார். அவை எடையும் விசையும் மிகுந்திருந்தன. பகதத்தரும் சுப்ரதீகமும் இணைந்து விடுப்பவை அவை. அவற்றை அறைந்து திசையழியச் செய்வதொன்றே வழி என கற்றுக்கொண்டார். அவர் பகதத்தரின் அம்புகளை அறைந்து விலக்கிய அதே கணம் இளைய யாதவர் தேரைத்திருப்பி அவரை காத்தார்.

“அவரிடமுள்ள அரிய அம்பு நாராயணாஸ்திரம் எனப்படுகிறது. முன்பு அவர்களின் மூதாதையாகிய நரகாசுரன் விண்ணளந்தபெருமானை தவம்செய்து அடைந்தது. இடியோசையுடன் மின்னலின் ஒளியுடன் எழுவது. கருடனின் கூர்மூக்கும் விரிசிறகும் கொண்டது. அந்த அம்பு ஒன்றே அவர்களின் இறுதிப் படைக்கலம். பார்த்தா, அதை வெல்பவனே அவர்களை வெல்லமுடியும்” என்றார் இளைய யாதவர். “அவரை அடி… அவர் நிலைகுலையவேண்டும். சினம்கொண்டு தன்னிலை மறக்கவேண்டும். அந்த அம்பை எத்தனை முன்னால் அவர் கையிலெடுக்கிறாரோ அத்தனை நன்று. அந்த அம்பு இருக்கிறது என்னும் நம்பிக்கையே அவரையும் அவருடைய யானையையும் ஆற்றல்மிக்கவர்களாக்குகிறது. அந்த அம்பை வென்றுவிட்டால் அவரிடமிருக்கும் எஞ்சிய அம்புகளால் பயனேதுமில்லை…”

அவர் சொல்வதை உணர்ந்த அர்ஜுனன் தன் அம்புகளால் பகதத்தரின் கவசங்களை அறைந்தார். அவருடைய நீளம்புகளால் எப்பயனும் இல்லை என்பதுபோல் இடதுகையால் அவற்றை விலக்கினார். அவருடன் போர்புரிகையிலேயே அருகிருந்த பிற வில்லவர்களிடம் வெற்றுச்சொல்லாடி நகைத்தார். அவருடைய அம்புகள் விசையின் ஓசையுடன் அவரைக் கடந்து சென்றன. அவருடைய மெல்லிய உடல் தேர்த்தட்டில் நின்று நடனமிட்டது. அந்த அம்புகளில் ஒன்றுகூட அவரையோ தேரையோ தொடவில்லை.

சீற்றம்கொண்ட பகதத்தர் “ஷத்ரியன் என்று நடிக்கும் யாதவனே, இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது!” என்று கூவியபடி நாராயணாஸ்திரத்தை ஏவினார். அதை எடுக்க அவருடைய கை வளைந்து பின்னால் சென்று அம்பை எடுத்து நாணில் ஏற்றி தொடுத்த அக்கணம் தேர்த்தட்டில் எழுந்து தன் கவசத்தின் பின்முடிச்சை சீரமைத்தார் இளைய யாதவர். அவருடைய நெஞ்சக்கவசத்தின் ஒளிமின்னல் பகதத்தரின் கண்களை வெட்டிச்சென்றது. இடியோசை எழுப்பி அனல்கொண்டு எரிந்தபடி செம்மலர்ச் செண்டுபோல் வந்த அம்பு அர்ஜுனனின் தேரைக் கடந்து அப்பால் சென்று மண்ணில் அறைந்து விழுந்தது. அங்கே இடிவிழுந்ததுபோல் நிலம் அதிர்ந்தது. மாபெரும் செந்நிறமலர் என அப்புழுதி இதழ்களை விரித்து மலர்ந்து வளைந்தடங்கியது. தேர்கள் சரிந்து உள்ளே விழுமளவுக்கு பெரிதாக இருந்தது அந்தக் குழி. அதற்குள் நீர் ஊறி சூழ்ந்திருந்த செம்மண் வளையத்தை நனைத்து மேலேறியது. மண்ணில் எழுந்த புண் என அது சேறாகியது.

புழுதித்திரையினூடாக அர்ஜுனன் அம்புகளை பகதத்தரை நோக்கி செலுத்தினார். முற்றிலும் நோக்கிழந்து அமர்ந்திருந்த அவருடைய தலைக்கவசம் உடைந்தது. நெஞ்சக்கவசம் பிளந்து உள்ளே பாய்ந்து உயிர்நரம்பை அறைந்து துண்டித்தது பார்த்தனின் வாளி. அலறியபடி அவர் யானைமேலிருந்து கீழே விழுந்தார். புழுதிப்படலம் கரைந்து காற்றில் அலைகொண்டு அப்பால் சென்றபோது திகைத்து நின்றிருந்த சுப்ரதீகத்தின் காலடியில் கைவிரித்து கால்பரப்பி முகம் வானோக்கி வெறிக்க கிடந்த பகதத்தரை கௌரவப் படையினர் கண்டார்கள். சுப்ரதீகம் அவரை தன் துதிக்கையால் தொட எண்ணி நீட்டி அஞ்சி பின்னடைந்து மீண்டும் நீட்டியது. அதன் செவிகள் பதறிப்பதறி அலைபாய்ந்தன. மீண்டும் கைநீட்டி அது அவரை தொடமுயன்றது. எதிர்க்காற்றில் விசையழிவதுபோல் காலெடுத்து வைத்து பின்னடைந்தது. அதன் வயிற்றுக்குள் இருந்து எழுந்த உறுமலை அவர்கள் கேட்டனர்.

பின்னர் அது மெல்ல முன்னால் சென்று அவரை தொட்டது. திடுக்கிட்டு செவியசைவு நிலைக்க துதிக்கை மட்டும் நெளிய அப்படியே நின்றது. அதன் கை பதற்றம் கொண்டு பகதத்தரை உடலெங்கும் தொட்டுத்தொட்டு முத்தமிடுவதுபோல் அலைந்தது. அவரை எழுப்ப விழைவதுபோல புரட்டிப்புரட்டி உலுக்கியது. எழுப்பி அமரச்செய்ய முயன்றது. துதிக்கையில் தூக்கி எடுத்து காற்றில் உலுக்கியது. அதன் கையில் துணிப்பாவைபோல் பகதத்தர் தொங்கிக்கிடந்தார். பின்னர் அவரை மிக மெல்ல நிலத்தில் கிடத்திவிட்டு பின்னெட்டு எடுத்துவைத்து நோக்கி நின்றது. துதிக்கையை தலைக்குமேல் தூக்கி வணங்கி வாழ்த்தொலி எழுப்பியது. அந்த ஓசை துயர ஓலமாக மாற அப்பகுதியில் நின்றிருந்த அத்தனை யானைகளும் துதிவளைத்து மறுகுரல் எழுப்பின. அங்கே அத்தனை யானைகள் இருப்பது அப்போதுதான் தெரிந்ததுபோல் ஒவ்வொருவரும் திரும்பி நோக்கினர். இரு படைப்பிரிவுகளையும் சேர்ந்த யானைகள் மாறி மாறி ஓசையிட்டபடியே இருந்தன.

பகதத்தரின் வேளக்காரப் படையினர் தங்கள் தலை அணிகளை எடுத்து வீசிவிட்டு ஒற்றை நிரையென்றாகி “பகதத்தர் வாழ்க! முக்கரத்தான் வாழ்க! பிரக்ஜ்யோதிஷம் வெல்க!” என்று கூவியபடி மோதி உயிர்விடும் வஞ்சினத்துடன் அர்ஜுனனை நோக்கி பாய்ந்தனர். அவர்கள் நூற்றெண்மரையும் அர்ஜுனன் தன் அம்புகளால் செறுத்து கொன்று வீழ்த்தினார். அவர்களில் இறுதிவீரன் எஞ்சியிருந்த தருணத்தில் சுப்ரதீகம் பெருஞ்சீற்றத்துடன் துதிக்கையைச் சுழற்றி கொம்பு குலுக்கி அவரை நோக்கி பாய்ந்து வந்தது. “அதை கொல்… அதை விடுதலை செய்!” என்று இளைய யாதவர் சொன்னார்.

அர்ஜுனனின் தேரை அடைந்து அதை உடைக்க சுப்ரதீகம் முயல தேரைத் திருப்பி அதை ஒழிந்தார் இளைய யாதவர். அர்ஜுனன் பிறைவாளியால் அதன் துதிக்கையை வெட்டி வீழ்த்தினார். முகக்கை அறுந்ததும் யானை திகைத்து நின்றது. அதன் முகம் மானுடத்தன்மை கொள்வதுபோல் தோன்றியது. அந்த வெட்டுண்ட கை மண்ணில் கிடந்து துள்ளிச்சுருண்டு குதிப்பதைக் கண்டு இருபக்கப் படைகளும் மருண்டு நின்றன. அந்தக் கை கரிய நாகமென நெளிந்து தவழ்ந்து யானையை நோக்கி சென்றது. படமெடுப்பதுபோல் மேலெழுந்து சுப்ரதீகத்தின் முகத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்ள முயன்றது.

உடைந்த கலத்திலிருந்து என குருதி பெருகிக் கொட்டிக்கொண்டிருந்த முகத்துடன் நின்றிருந்த சுப்ரதீகம் அந்தக் கை தன்னை நோக்கி வருவதைக் கண்டு அஞ்சியதுபோல பின்னடைந்தது. துள்ளித்துள்ளி விழுந்த கையை விட்டு விலகிச்சென்று அதை கூர்ந்து நோக்கியபின் திரும்பிக்கொண்டது. சில எட்டுகள் காலெடுத்து வைத்து பக்கவாட்டில் சரிந்து வயிறு உப்பிப் பெருத்து எழுந்து அலைகொள்ள விழுந்து வால் துவண்டு புழுதியில் அளைய, பூதச்சிரிப்பு எழுந்த நகக்கால்கள் இரண்டு காற்றில் எழுந்து உதைத்துக்கொள்ள துடித்தது. அந்தக் கை தவழ்ந்து சுப்ரதீகத்தை அடைந்து அதன்மேல் ஏற முயன்று வழுக்கி வழுக்கி விழுந்தது. எஞ்சிய வேளக்காரப் படைவீரன் தன் கழுத்தை வேலால் வெட்டி சரிந்து விழுந்தான். அந்தக் கை அவ்வோசை கேட்டு திடுக்கிட்டு அவனை நோக்கி பாய்ந்து அவனை கவ்விச்சுழற்றி இறுக்கி அதிர்ந்து மெல்ல அடங்கியது.

அரவான் சொன்னான். பகதத்தர் வீழ்ந்தார் என அறிவித்து முரசுகள் முழங்கின. கௌரவப் படையினர் அவரை வாழ்த்தி பேரொலி எழுப்பினர். பாண்டவர்கள் வெற்றிக்குரல் முழக்கினர். அன்று மாலை பகதத்தரின் உடலும் சுப்ரதீகத்தின் உடலும் இடுகாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டன. நிமித்திகரின் கூற்றுப்படி பகதத்தர் எரிந்த அதே அரசச்சிதையிலேயே சுப்ரதீகத்தின் உடலும் வைக்கப்பட்டது. ஆனால் அதன் துதிக்கை மட்டும் அருகிலிருந்த ஆழ்ந்த பிலத்திற்குள் போடப்பட்டு மண்ணிட்டு அடக்கம் செய்யப்பட்டது. பகதத்தரின் மகன் விஸ்வதத்தன் அவர் உடலுக்கு தீமூட்டினான்.

பகதத்தர் நுண்ணுருவாக விண்ணிலெழுந்தபோது சுப்ரதீகமும் உடனெழுந்தது. இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். சுப்ரதீகத்தின் துதிக்கை ஆழங்களுக்குள் புதைந்து தன் நாக உலகுக்கே மீண்டது. தன்னை ஆட்டுவித்த மாநாகத்திலிருந்து விடுபட்ட சுப்ரதீகம் பகதத்தருடன் விண்ணுலகை அடைந்தது.

நூல் இருபது – கார்கடல் – 34

ele1மூன்று மாதகாலம் பிரக்ஜ்யோதிஷம் துயரம் கொண்டாடியது. அனைத்துக் கொண்டாட்டங்களும் கைவிடப்பட்டன. ஒற்றைமுரசு மட்டுமே அரண்மனையிலும் கோட்டையிலும் ஒலித்தது. நாட்டைச் சுற்றியிருந்த சிற்றூர்களிலும் காடுகளிலும் விரிவாகத் தேடிவிட்டு ஒற்றர்கள் ஒவ்வொருநாளும் வந்துகொண்டிருந்தனர். இளவரசன் மறைந்துவிட்டான் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகியது. சிறுநம்பிக்கையைப் பேண ஒவ்வொரு எதிர்ச்செய்திக்குப் பின்னரும் உள்ளம் முயன்றது. அந்த நம்பிக்கையையே இலக்காகக் கொண்டு வந்து அறைந்தன அடுத்த செய்திகள்.

காவகர் நிமித்திகர்களை அழைத்து இளவரசன் உயிருடன் இருக்கிறானா என்று உசாவினார். “அமைச்சரே, அவர் உயிருடன் இருக்கிறார். தன் தெய்வத்தால் பேணப்படுகிறார். பேராற்றல் மிக்கவராக திரும்பி வருவார். பெரும்புகழ்பெற்ற மன்னராக, நிகரற்ற மல்லராக திகழ்வார். வரவிருக்கும் மாபெரும் போர் ஒன்றில் பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரன் ஒருவனால் கொல்லப்படுவார். அவரைக் கொன்று ஆட்கொள்ள பிரம்மத்தின் வடிவென மானுடன் ஒருவன் மண்ணிலெழுவான்” என்றனர் நிமித்திகர். அச்சொல் பகதத்தரை உயிர்வாழச்செய்யும் அமுதமாக அமைந்தது. அவர் நோய்மீண்டு எழுந்தார். அரண்மனையில் ஒவ்வொன்றும் நிலைமீண்டன.

பிரக்ஜ்யோதிஷத்தின் குடிகளும் அதை விரும்பினர். அவர்கள் இளவரசனை ஏளனம் செய்த பெரும்பிழைக்கு ஈடுசெய்ய எண்ணினர். ஆகவே மறைந்த இளவரசன் அவர்களின் இல்லங்களிலெல்லாம் தெய்வமென அமர்ந்திருந்தான். அவனை ஓவியர் ஒருவர் யானைப்பாவையுடன் விளையாடும் வடிவில் பட்டில் வரைந்திருந்தார். அதையே சிற்பமென்றாக்கி அவர்கள் நிறுவிக்கொண்டனர். களியானையுடன் அமர்ந்திருந்த சிறுவனாகிய பகதத்தன் பின்னாளில் வந்த சிலைகளில் அந்த யானைமேல் அமர்ந்திருந்தான். யானை பெரிதாகியபடியே செல்ல மாமதவேழத்தின் மேல் அமர்ந்திருக்கும் சிறுவனாக அவன் உருமாறினான். அவன் மறைந்த நாளில் இல்லங்களில் களிமண்ணில் அவன் உருவை நிறுவி பாலன்னம் படைத்து வழிபட்டனர்.

அரண்மனையிலிருந்து பகதத்தன் மறைந்தது தற்செயலாக நிகழ்ந்தது. அவையில் நிகழ்ந்த சிறுமையால் துயருற்ற அவன் எவரையும் பார்க்க விழையவில்லை. எவரும் தன்னை காணாமல் எங்கேனும் ஒளிந்துகொள்ள விழைந்தான். ஆகவே அரண்மனையில் இருந்து மெல்ல வெளியேறிச்சென்று அங்கே இடைநாழியிலிருந்த கூடை ஒன்றுக்குள் புகுந்து மறைந்துகொண்டான். அரண்மனையிலிருந்து அழுக்குத்துணிகளை சலவைக்காரர்களிடம் கொண்டுசெல்லும் கூடை அது. அதை வண்டியில் ஏற்றி அவர்கள் பிரம்மபுத்ரைக்கு கொண்டுசெல்லும்போது அவன் துயின்றுகொண்டிருந்தான்.

நதிக்கரையில் அவர்கள் வண்டியை நிறுத்தி கூடைகளை இறக்கி அடுக்கிவிட்டுச் சென்றனர். அவன் வெளியே வந்தபோது அங்கே முதிய சலவைக்காரர் சிலர் மட்டுமே இருந்தனர். அவன் அங்கே நின்றிருந்த பரிசல் ஒன்றில் ஏறி அமர்ந்தான். அதன் கயிற்றை என்னவென்று அறியாமல் பிடித்து இழுத்து அவிழ்த்தான். பரிசல் நீர்ப்பெருக்கில் செல்லத் தொடங்கியது. அதன் விசைகொண்ட சுழற்சியால் தலைசுற்றி அவன் அதிலேயே மயங்கி விழுந்தான். அவன் மீண்டும் விழித்துக்கொண்டபோது ஆற்றிடைக்குறை ஒன்றில் பரிசல் சிக்கி நின்றிருந்தது. அவன் அதில் இறங்கி சேற்றுப்பரப்பில் அமர்ந்துகொண்டான்.

அங்கே அவனுக்கு உணவு ஏதும் கிடைக்கவில்லை. பசி தாளாமல் அவன் கதறி அழுததை எவரும் கேட்கவில்லை. இருள் மூடிக்கொண்டிருந்தது. அவன் அங்கிருந்த நாணல்களைப் பிடுங்கி உண்ணமுயன்று முடியாமல் வான்நோக்கி கூவினான். இரவில் அப்பாலிருந்த நாணல்கரையிலிருந்து ஆற்றில் இறங்கி நீந்திவந்த யானைக்கூட்டம் ஒன்று ஆற்றிடைக்குறையில் ஏறி அங்கிருந்த பேய்க்கரும்புகளை பிடுங்கி உண்டது. அக்கூட்டத்தில் இருந்த பிடியானை ஒன்று அவன் அகவையே கொண்ட ஆண்குழவி ஒன்றை உடன் கொண்டு வந்திருந்தது. அந்தக் குழவிக்களிறு அவன் அழுகையைக் கண்டு அருகே வந்து கூர்ந்து நோக்கியது. பின்னர் அவனை தன் துதிக்கையால் தூக்கி கொண்டுசென்று தன் அன்னையிடம் நிறுத்தியது.

அன்னை தன் மைந்தனுடன் வந்த மானுடச்சிறுவனைக் கண்டு சினம்கொண்டு தாக்க வந்தது. ஆனால் இளங்களிறு அன்னையை தடுத்து அச்சிறுவனுக்கு காப்பளித்தது. அன்னையிடம் அவனுக்கு முலையூட்டும்படி சொன்னது. அன்னை மைந்தனுக்குப் பணிந்து பகதத்தனின் மேல் தன் காலை தூக்கி வைத்து அவன் முகத்தில் பாலை பீய்ச்சியது. பகதத்தன் அந்த அமுதை அருந்தி உயிர்மீண்டான். இளங்களிற்றின் களித்தோழனாகி இரவெல்லாம் விளையாடினான். அக்களிற்றுக்குழவி யானைகளில் அரிதான ஒன்றாக இருந்தது. பிற யானைகளைவிட நினைவிற்கொள்ளவும் எண்ணவும் திறன் அதனிடமிருந்தது. யானைகள் எவற்றிலும் இல்லாத விழைவும் கற்பனைத்திறனும் கொண்டிருந்தது. ஆகவே யானைக்குலமே அறிந்திராத வஞ்சமும் கொடுமைகளில் விருப்பும் அதனிடமிருந்தது. தான் தேடியது மானுடனை என அது அவனைக் கண்டதுமே அறிந்தது. அவனுடன் ஆடி அது மானுடன் ஆனது. அவன் யானையென்றானான்.

இளங்களிற்றின் மீதேறி ஆற்றைக் கடந்து காட்டுக்குள் சென்றான். அங்கே யானைக்கூட்டத்தில் ஒருவனாக மாறினான். யானைப்பால் உண்டு வளர்ந்தவன் மிக விரைவிலேயே பெருந்தோள்கொண்டவனாக ஆனான். மரங்களை வெறுங்கையால் அறைந்து உலுக்குபவன். காட்டெருமைகளை கொம்புகளைப் பற்றி தூக்கிச் சுழற்றி வீசுபவன். ஆனால் அவன் விழிக்கூர் மட்டும் குறைவாக இருந்தது. கைதொடும் அண்மைக்கு வருவதையே அவனால் காணமுடிந்தது. அவனுக்கில்லாத விழிக்கூரும் செவிநுண்மையும் யானைக்கு இருந்தது. எனவே எப்பொழுதும் அவன் யானைமீதே இருந்தான். அவர்கள் ஓருடல் என்றாயினர். அவன் தான் என எண்ணுகையிலேயே யானைமேல் அமர்ந்தவனாகவே அகவுரு விரிந்தது. உயரத்திலிருந்து குனிந்த நோக்குடன் மூன்று கைகளுடன் நான்கு தூண்கால்களை எடுத்துவைத்து அசைந்தாடிச் செல்பவனாகவே அவன் தன்னை கனவிலும் கண்டான்.

ஒருநாள் அவன் தன் கனவில் பிரக்ஜ்யோதிஷத்தின் மாளிகையை கண்டான். அங்கே ஓர் அரியணையில் எலும்புரு போன்ற முதியவர் ஒருவரை அமரச்செய்திருந்தனர். அவர் மணிமுடிசூடி கையில் செங்கோல் ஏந்தியிருந்தார். அவருக்கு முன் ஒரு யானை நின்றிருந்தது. அவர் அதனுடன் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். விழித்தெழுந்ததும் அவன் அக்காட்டிலிருந்து கிளம்பினான். பிரம்மபுத்ரையை நீந்திக்கடந்து மறுகரையில் ஏறி நாணற்சதுப்புகள் வழியாகவும் மூங்கில்காடுகள் வழியாகவும் நடந்து பலநாட்களுக்குப் பின்னர் பிரக்ஜ்யோதிஷத்தை வந்தடைந்தான். முதற்புலரியில் செவிவிரிந்த பெருங்களிற்றின்மேல் ஏறிவந்து நின்றவனை கண்டதுமே பிரக்ஜ்யோதிஷத்தின் படைவீரர்கள் அவன் யார் என கண்டுகொண்டனர். “இளவரசர் வருகை! இளவரசர் நகர்புகுகை!” என முரசொலிகள் முழங்கத் தொடங்கின. கோட்டைமேல் இளவரசனுக்குரிய கொடி எழுந்தது.

பிரக்ஜ்யோதிஷத்தின் மக்கள் தெருக்களில் கூடி வாழ்த்துக் குரலெழுப்பினர். சிலர் நெஞ்சிலறைந்து அழுதனர். அரிமலர் அள்ளித்தூவி ஆடைகளை வீசி படைக்கலங்களை தூக்கி ஆட்டி வெறிக்கூச்சலிட்டு நடனமாடினர். இளவரசன் வந்துகொண்டிருப்பதை பகதத்தர் அறிந்தார். படுக்கையில் பூசணம்பூத்த தோலும் வெறித்த விழிகளும் மஞ்சள்படிந்த பற்களுமாகக் கிடந்த அவரை தூக்கிக் கொண்டுவந்து உப்பரிகையில் அமர்த்தினர். அவர் தொலைவில் செம்மண் குன்று ஒன்று அசைந்தாடி வருவதை கண்டார். அதன்மேல் ஆடையேதும் அணியாமல் அமர்ந்திருந்த பேருருவனே தன் மைந்தன் என விழிதெளியாமலேயே உணர்ந்தார். அணுகிவந்த பகதத்தன் முற்றத்தை அடைந்ததுமே அந்த இடத்தை அடையாளம் கண்டான். கைதொழுது நின்றிருந்த அமைச்சரிடம் “என் தந்தையை பார்க்கவேண்டும்” என்றான்.

தந்தை அவனைக் கண்டதும் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டார். சொல்கூடாமல் தொண்டை தவிக்க அவனை அள்ளி நெஞ்சோடணைத்தார். “நீ நரகாசுரன்! நீ ஹிரண்யன்!” என்று அவர் சொன்னபோது சொற்கள் உடைய அழுகை பெருகி எழுந்தது. “நீணாள் வாழ்க! நீடுபுகழ் கொள்க!” என்று அவர் அவன் தலையை முகர்ந்தார். அன்றிரவே முதிய பகதத்தர் உயிர்துறந்தார். பதினெட்டு நாட்களுக்குப் பின் பகதத்தன் பிரக்ஜ்யோதிஷத்தின் அரசனாக முடிசூட்டிக்கொண்டான்.

பகதத்தரின் பட்டத்து யானைக்கு நிமித்திகர்கள் கூடி சுப்ரதீகம் என்று பெயரிட்டார்கள். அவர் அரசராகப் பட்டமேற்றபோது அந்த யானை பட்டத்துயானையாக ஆகியது. அதை அவர் யானைகளுக்குரிய ஒலியால்தான் அழைத்தார். வேறெவரும் அழைத்தால் அது செவிகோட்டுவதுமில்லை. ஆயினும் அதற்கு பூசைகளுக்காகவும் சடங்குகளுக்காகவும் அரச அறிவிப்புகளுக்காகவும் பெயர் தேவைப்பட்டது. ஆகவே நிமித்திகர்கள் கூடி அதற்கு பெயரிடும் சடங்கு ஒன்றை நடத்தினர். மதங்கநூல் முறைமைப்படி அரண்மனை முற்றத்தில் பெருங்களம் ஒன்று வரையப்பட்டது. அதில் எட்டு திசைகளும் அடையாளப்படுத்தப்பட்டன. கிழக்கே இந்திரனின் அமராவதியும் தென்கிழக்கே அனலவனின் தேஜோபுரியும் தெற்கே யமனின் சம்யமனியும் தென்மேற்கே நிருதியின் கிருஷ்ணாஞ்சனையும் மேற்கே வருணனின் சிரத்தாவதியும் வடமேற்கே வாயுதேவனின் கந்தவதியும் வடக்கே குபேரனின் மஹோதயமும் வடகிழக்கில் சிவனின் யசோவதியும் அடையாளப்படுத்தப்பட்டன. அங்கே திசைத்தெய்வங்கள் நிறுவப்பட்டன. இந்திரனை வைரக்கல்லாகவும் அனலவனை சுடர்விளக்காகவும் யமனை காகச்சிறகாகவும் நிருதியை நாகச்சுருளாகவும் வருணனை குடநீராகவும் வாயுதேவனை மயிலிறகாகவும் குபேரனை பொன்நாணயமாகவும் சிவனை முப்புரிவேலாகவும் நிறுத்தி பூசை செய்தமைத்தனர்.

அந்த எட்டு திசைகளுக்கும் எட்டு திசையானைகள் நிறுவப்பட்டன. கிழக்கே ஐராவதமும் அதன் பிடியாகிய அஃபுருமையும் வெள்ளிக் குட வடிவில் அமைக்கப்பட்டன. தென்கிழக்கே புண்டரீகன் அவன் துணைவி கபிலையுடன் செம்புக்குட வடிவில் நிறுவப்பட்டான். தெற்கே வாமனன் என்னும் திசையானை தன் பிடியாகிய பிங்கலையுடன் வெள்ளீயத்தால் உருளைவடிவில் வார்க்கப்பட்டு நிறுவப்பட்டான். தென்மேற்கே குமுதன் துத்தநாக உருளையாக வடிக்கப்பட்டான். அவன் துணைவி அனுபமை அருகே நின்றாள். மேற்கே காரீய உருளையாக அஞ்சனன் தன் துணைவி தாம்ரகர்ணியுடன் அமைந்தான். வடமேற்கே புஷ்பதந்தன் ஒரு இரும்புக் கிண்ண வடிவில் துணைவி சுஃப்ரதந்தியுடன் நிறுவப்பட்டான். வடக்கே சார்வபௌமன் அங்கனையுடன் பாதரச உருளை வடிவில் நின்றான். வடகிழக்கே சுப்ரதீகன் தன் பிடியாகிய அஞ்சனாவதியுடன் பொற்குடத்தின் வடிவில் அமைந்தான்.

யானையை அவிழ்த்துவிட்டு முரசுகளை முழக்கிக்கொண்டிருந்தார்கள். பெருங்களத்தில் நுழைந்த கட்டுகளற்ற களிறு ஒவ்வொன்றாக துதிக்கையால் தொட்டு நோக்கி ஆராய்ந்த பின் சென்று வடகிழக்கில் நிலைகொண்டது. “பணிக சிவம்! பணிக சிவம்!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. யானையை சென்று தளைத்து அதற்கு சுப்ரதீகம் என்று பெயரிட்டனர். கொட்டிலில் இருந்து அதற்கு இணங்கிய பிடியானை ஒன்றை அழைத்து வந்தனர். அதன் பெயரை அஞ்சனாவதி என்று மாற்றினர். சுப்ரதீகம் ஒவ்வொருநாளும் என வளர்ந்தது. யானைகள் எதற்கும் அமையாத பேருருவை அடைந்தது. அதன்மேல் அமர்ந்திருக்கையில் காலுக்குக் கீழேதான் அரண்மனையின் அடுத்த பெருங்களிற்றின் முதுகு தெரியும். அதன் காதுகள் இருபுறமும் வீசும் காற்றில் அருகிருக்கும் கொடிகள் பறக்கும். அதன் மூச்சுபட்ட இடத்தில் குழிகள் விழுந்து பலநாட்கள் நிரம்பாமலிருக்கும். அது பெருமரங்களை செடிகளைப்போல பிழுதது. நாளொன்றுக்கு ஆயிரம் கவளம் அன்னம் உண்டது. ஆணையிடப்படாமலேயே எண்ணங்களை புரிந்துகொண்டது. அணிகளை தானே எடுத்து பூட்டிக்கொண்டது.

அது யானையே அல்ல, கந்தர்வன் ஒருவன் யானையென வடிவுகொண்டிருக்கிறான் என்றனர் சூதர். பாரதவர்ஷம் முழுதிலும் இருந்து அந்த யானையைப் பார்க்க யானைமருத்துவர்களும் யானைப்பாகர்களும் தேடிவந்தனர். பூத்த வேங்கைமரம் காற்றில் நின்றுலைவதுபோல முகத்திலும் செவிகளிலும் செம்பூப் பரப்புடன் நின்றிருக்கும் சுப்ரதீகம் எவரையும் தன்னருகே வர விடுவதில்லை. அரசர் அன்றி எவரும் அதன்மேல் ஏறவும் இயல்வதில்லை. அரசர் அந்த யானையுடன் தன் பொழுதில் பெரும்பகுதியை கழித்தார். அவரால் அணுக்கமாக புரிந்துகொள்ளத்தக்க மொழி அந்த யானை பேசுவதே என்று அமைச்சர்கள் சொன்னார்கள். அரசமுடிவுகளையேகூட சுப்ரதீகத்திடம் ஒரு சொல் கேட்டுத்தான் அவர் எடுத்தார்.

யானையும் அவரும் சேர்ந்தே படைப்பயிற்சி எடுத்தனர். அவர் தேரிலோ புரவியிலோ ஏறுவதில்லை. அனைத்து நகருலாக்களும் வேட்டைகளும் யானைமேலேயே. போரிலும் அவர் யானைமேல்தான் தோன்றினார். யானைமேல் அமர்ந்திருப்பது போரில் அம்புகளுக்கு எளிதில் இலக்காவது என்றாலும் அவர் எடைமிக்க கவசங்கள் அணிந்து அதன் மத்தகத்தின்மீதே அமர்ந்திருந்தார். அவர் கையில் இருந்த வில் மிக நீளமான நிலைவில்லைவிட இருமடங்கு பெரியது. அவர் தொடுக்கும் அம்புகள் எறிவேலைவிட எடையும் நீளமும் கொண்டவை. சுப்ரதீகம் தன் துதிக்கையில் சங்கிலியில் கோத்த கதையுருளையை எடுத்துச் சுழற்றி வீசி திரும்ப இழுத்துப் போரிடும் ஆற்றல்கொண்டிருந்தது. களத்தில் அவர்கள் போரிடும் திறனைக் கண்டவர்கள் அவர்கள் இருவரும் ஒற்றை உடலே என்று உணர்ந்தனர். ஆணைகள் இல்லாமல், சொற்களே எழாமல் அவர்கள் ஒரே எண்ணத்தை பகிர்ந்தனர். சுப்ரதீகம் தன் கதையை சுழற்றி வீசி தேர்களை நிலையழியச்செய்யும் கணத்தில் பகதத்தரின் அம்புகள் வந்து தேரோட்டியை கொன்றுவீழ்த்தும்.

திரிஹஸ்தன் என்றும் கஜபாகு என்றும் பகதத்தர் அழைக்கப்பட்டார். கிழக்கே எழுந்துவந்துகொண்டிருந்த இருபது நாடுகளை வென்று பிரம்மபுத்ரையின் கரையை முழுக்க தன் ஆட்சிக்குள் அடக்கிய பகதத்தரின் காலத்தில் பிரக்ஜ்யோதிஷம் பெரும்புகழ் பெற்றது. செல்வமும் ஆற்றலும் கொண்டு கிழக்கின் யானை என்று பெயரீட்டியது. அவர் வங்கத்துடனும் கலிங்கம், பௌண்டரம், அங்கம், சுங்கம் ஆகிய இணைநாடுகளுடனும் நல்லுறவை உருவாக்கிக்கொண்டு ஒரு படைக்கூட்டை அமைத்தார். ஆகவே கிழக்கில் எந்த அயல்நாடும் படைகொண்டு செல்ல அஞ்சும் நிலை உருவாகியது. ஆற்றுவணிகத்தால் செல்வம் பெருகியமையால் ஆறு நாடுகளுக்கு நடுவில் பூசல்கள் எவையும் உருவாகவில்லை. மூன்று அஸ்வமேத வேள்விகளைச் செய்து பகதத்தர் அந்தணரின் வாழ்த்துக்களை பெற்றார். ஆனால் தன் குருதியினரான அசுரகுடியினருக்கு பொருளும் படைக்கலமும் கொடுத்து ஆற்றல்மிக்க படை ஒன்றையும் திரட்டிக்கொண்டார்.

பகதத்தரின் அன்னை சுதீரை யவன அரசன் அமூர்த்தரின் மகள். வடமேற்கே பெரும்பாலையின் விளிம்பில் வாழும் யவனர்கள் அதற்கும் மேற்கே, பாலைநிலங்களுக்கும் அப்பாலிருந்து வந்தவர்கள். வெண்ணிற உடலும் நீலவிழிகளும் செந்நிறக் குழலும் கொண்டவர்கள். பேருருவர்கள். தன் குடியின் கரிய சிற்றுடல் வடிவை களைய விரும்பிய முதிய பகதத்தர் பிற குடியினர் பெண்கொடுக்கவோ கொள்ளவோ தயங்கிய யவனர்களிடம் குருதியுறவு கொண்டார். அதன் விளைவாக யவனத்தின் படைத்துணையை அவர் அடைந்தார். பகதத்தரும் யவன இளவரசியான சுஸ்மிதையை மணந்தார். அவருக்கு பதினெட்டு மைந்தர்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனாகிய வஜ்ரதத்தன் இணையான தோள்வல்லமை கொண்டிருந்தான். அவனால் சுப்ரதீகத்தை மட்டுமே அணுக முடியவில்லை.

ele1அஸ்தினபுரியின் அரசனுடன் அணுக்கம் கொண்டிருந்த அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், பௌண்டரம் என்னும் ஐந்துநாடுகளின் கூட்டமைப்புடன் சேர்ந்து பகதத்தரும் குருக்ஷேத்ரப் போர்க்களத்திற்கு சென்றார். தன் முதல் மைந்தன் வஜ்ரதத்தனை அரசுப்பொறுப்பளித்து நிறுத்திவிட்டு ஏழு மைந்தருடன் கிளம்பினார். அவருடைய விழிநோக்கு மிகவும் குறைந்துவிட்டிருந்தது. இமைகள் எடைகொண்டு சுருங்கி கண்களுக்குமேல் விழுந்திருந்தமையால் அவற்றை மேலே தூக்கி பட்டுச்சரடு ஒன்றால் நெற்றியுடன் சேர்த்துக் கட்டியிருந்தார். களத்தில் அவருடைய விழிகளை மட்டும் எண்ணியவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர் சுப்ரதீகத்தின் விழிகளால் அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார். ஐம்புலன்களுக்கும் அப்பாலிருந்த யானையின் தனிப்புலன் ஒன்று அவரை நோக்கி குறிவைக்க எழுந்த விற்களையே அவருக்கு காட்டியது. அக்குறி தேர அம்பெடுத்தவன் அதை தொடுப்பதற்குள் நெஞ்சுடைந்து சரிந்தான். யானை அங்கிருந்த ஒவ்வொருவரின் கனவுக்குள்ளும் புகுந்தது. அதை அவர்கள் தங்கள் உள்ளத்தில் அணுக்கமாக நோக்கிக்கொண்டிருந்தனர். அங்கே அந்த யானையின் விழிகள் கொலைத்தெய்வங்களின் நோக்கு கொண்டிருந்தன.

யவனர்கள் எண்ணிக்கை குறைந்தவர்கள். ஆனால் மிக விரிந்த நீள்நிலத்தை அவர்கள் தங்கள் ஆட்சியின்கீழ் வைத்திருந்தனர். எனவே தங்களுக்குரிய விற்கலைகள் சிலவற்றை அவர்கள் உருவாக்கியிருந்தனர். அவற்றிலொன்று அவர்களால் சிலாஸ்திரம் என அழைக்கப்பட்டது. இரும்பாலான எடைமிக்க நீள்வில் அது. அதை மலைச்சரிவில் தொங்கி இறங்கும் பாறையுடன் பிணைத்த கயிற்றால் வளைத்து எடைமிக்க பெரிய அம்புகளை கீழ்நோக்கி செலுத்துவார்கள். யானை மத்தகத்தை, கரும்பாறையை, இரும்புக் கவசத்தை ஒற்றை அறையால் பிளக்கும் ஆற்றல்கொண்டிருந்தன அந்த அம்புகள்.

அவர்கள் தங்கள் அம்புகளில் மலையிடுக்குகளில் ஊறித்தேங்கியிருக்கும் கரிய கன்மதத்தை வெட்டி எடுத்து பொருத்தி பயன்படுத்தினர். முன்பு அனலவன் மண்மகள்மேல் காமம் கொண்டு அணுகியபோது அன்னை அவனை உதறி ஏளனம் செய்து விலக்கினாள். சினமும் ஆற்றாமையும் கொண்ட அனலவனின் காமம் மேலும் பெருகியது. அப்போது வெளியான உயிர்க்குருதி அப்பாறையிடுக்குகளில் படிந்து கரிய மண்ணாக மாறி இறுகியிருந்தது. கல்லால் மெல்ல உரசினாலே பற்றிக்கொள்ளும். அதில் தோன்றும் அனல் வஞ்சம் கொண்டது. கெடுமணத்துடன் வெடியோசை எழுப்பி பெருகி எழும். நீரூற்றினாலும் அணையாத சீற்றம் கொண்டது. நஞ்சுமிழ்ந்து வானில் நின்றாடும்.

அந்த அம்பையே தன் படைக்கலமாகக் கொண்டிருந்தார் பகதத்தர். அவர் கையிலிருக்கும் வில்லுடன் இணைக்கப்பட்ட சங்கிலி சுப்ரதீகத்தின் முன்னங்காலுடன் கட்டப்பட்டிருக்கும். தன் காலால் மிதித்து வில்லை அது வளைத்து அம்புபொருத்தச் செய்யும். யானைவிசை கொண்ட பேரம்பு தேர்முகடுகளை உடைத்தெறிந்தது. இரும்புக் கவசங்களை முட்டை ஓடுகள் என நொறுக்கியது. இடியோசையுடன் அது மோதியபோது அறைபட்டவர்கள் பின்னால் தெறித்துச்சென்று விழுந்தார்கள். சுவர்களை அம்புகள் ஊடுருவிச் செல்லும் என்றும் மரங்களை அறுத்து அப்பாலிடும் என்றும் நூல்களில் படித்தவர்கள் அதை நேரில் கண்டு திகைப்படைந்தனர்.

முதல்நாள் போரில் அவர் விராடருடன் தனிப்போர் புரிந்தார். சுப்ரதீகத்தின் கதையால் தேர் நொறுங்குண்ட விராடர் பாய்ந்து புரவியொன்றில் ஏறி கவசநிரைக்குள் புகுந்துகொண்டு பகதத்தரின் அம்பில் இருந்து தப்பினார். ஆனால் இடும்பர்குலத்து மாவீரன் கடோத்கஜனுடன் நிகழ்ந்த தனிப்போரில் அவர் பின்னடைந்தார். சுப்ரதீகத்தின் கதையிலிருந்து தப்ப வானில் பாய்ந்தெழுந்த கடோத்கஜன் கொக்கிக் கயிற்றை வீசி அதன் கழுத்துச்சரடில் கோத்துக்கொண்டு அது துதிசுழற்றிய விசையிலேயே தான் வானில் பறந்து அவரை தாக்கினான். சுப்ரதீகம் பின்னடி எடுத்துவைத்து அவரைக் காத்து கௌரவப் படைக்குள் கொண்டுசென்றது. அன்று அவருடைய எடைமிக்க நெஞ்சக்கவசம் உடைந்து தோளிலும் விலாவிலும் கடோத்கஜனின் கொக்கி சிக்கி கிழித்த புண்கள் உருவாயின.

களத்தில் அனைவராலும் அஞ்சப்பட்டவராக திகழ்ந்தார் பகதத்தர். பீமசேனரை அவருடைய யானை கதையால் நெஞ்சிலறைந்து வீழ்த்தியது. மயங்கி சரிந்த தந்தையை தருணத்தில் பாய்ந்துவந்த கடோத்கஜன் காத்து தூக்கி அப்பால் கொண்டுசென்றான். மீண்டு வந்த கடோத்கஜனை எண்ணியிராக் கணத்தில் தாக்கி தூக்கி வீசியது சுப்ரதீகம். தசார்ணத்தின் அரசன் ஹிரண்யவதனன் தன் மருகன் பெயர்மைந்தர்கள் சித்ரரூபனும் சித்ரசர்மனும் படைத்துணையாக பகதத்தரை எதிர்கொண்டான். அப்போரில் பகதத்தர் சித்ரரூபனையும் சித்ரசர்மனையும் கதையால் அறைந்து தேர்களை உடைத்து நிலத்தில் விழச்செய்து நீளம்புகளால் நெஞ்சுதுளைத்துக் கொன்றார். தனித்து நின்ற ஹிரண்யவதனன் கூச்சலிட அவனுக்கு பாஞ்சாலராகிய சிகண்டியில் பிறந்த பெயர்மைந்தர்களான ஷத்ரதர்மனும் ஷத்ரதேவனும் துணைசெய்ய ஓடிவந்தனர். பகதத்தர் ஷத்ரதர்மனின் இரு கைகளையும் பிறையம்பால் வெட்டி வீழ்த்தினார். அலறியபடி ஓடிவந்த ஷத்ரதேவனின் தலையை சுப்ரதீகம் அறைந்து உடைத்தது. தசார்ணனாகிய ஹிரண்யவதனன் அவர் அம்பால் கவசம்பிளந்து நெஞ்சு உடைந்து மறுபக்கம் சென்று நிலத்தில் தைத்த நீளம்பால் கொல்லப்பட்டான்.

பகதத்தர் அன்று காலை எழுகையில் தன் குடில்முன் வந்து அமர்ந்திருந்த சின்னஞ்சிறு பறவை ஒன்றை பார்த்தார். அது துயர்கொண்டிருந்தது. ஓசையின்றி அவரை நோக்கியபடி அருகிருந்த சிறு கழிமேல் அமர்ந்திருந்தது. அவர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். அது எழுந்து பறக்கவில்லை. அவர் அதன் சிறிய மணிக்கண்களை நோக்கினார். மேலும் அருகே சென்றார். அது எழுந்து பறக்குமென எதிர்பார்த்தார். பின்னர் பெருமூச்சுடன் அதை தவிர்த்துவிட்டு உள்ளே சென்று முகம் கழுவி மீண்டார். திரும்பி வந்து நோக்கியபோது அதை காணவில்லை. அவர் கவசங்கள் அணிந்து படைக்கலங்களுடன் சுப்ரதீகத்தை பார்க்கச் சென்றார். இரும்புக் கவசங்கள் அணிந்த யானை தொலைவில் இரும்புக்கூரைகொண்ட மண்டபம்போல் நின்றுகொண்டிருந்தது. அவர் அணுகுவதை உணர்ந்ததும் அதன் துதிக்கை நீண்டு வந்து அவரை தேடியது. அவர் அருகே சென்று நின்றார். அதன் துதிக்கை அவரை தழுவியும் வருடியும் முகர்ந்தும் மகிழ்ந்தது. சீறிய மூச்சொலியுடன் அது அவரை நோக்கி தலைகுலுக்கியது.

கிளம்பலாம் என அவர் பாகனுக்கு தலையசைத்த பின் கால் தூக்கும்படி அதன் விலாவில் தட்டி ஆணையிட்டார். ஆனால் யானை கால் தூக்கவில்லை. அவர் மீண்டும் மீண்டும் அதற்கு ஆணையிட்டார். என்ன ஆயிற்று அதற்கு என்று புரியாமல் காதைப் பிடித்து உலுக்கினார். அவர் சொல்லி அது செய்யும் வழக்கமில்லை. சொன்ன பின் செய்யாமலிருந்ததே இல்லை. “என்ன? என்ன?” என்று அவர் கேட்டார். “காலெடு… காலெடு” என்றார். யானை தலைகுலுக்கி உறுமியது. அவர் அதன் கண்களை நோக்கினார். மதம்கொண்டிருக்குமா என்ற ஐயம் எழுந்தது. விழியீரம் வழிந்த கரியதடத்தில் சிறிய பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. மதக்கசிவு இல்லை. நோயுற்றிருக்குமா என்று ஐயம்கொண்டு சுற்றிவந்தார். அதன் கால்கீழிலும் வாலைச்சுற்றியும் கூர்ந்து நோக்கினார். நெறிவீக்கத்தின் பைகள் ஏதுமில்லை. கால்களில் புண்கள் இல்லை.

“துதிக்கையில் புண்கள் ஏதேனும் இருந்தனவா?” என்று அவர் பாகனிடம் கேட்டார். “இல்லை, அரசே. புண்கள் என பெரிதாக ஏதுமில்லை” என்றான். “பிறகென்ன?” என்றார். “நோய்கொண்டிருக்கிறதா?” என தனக்குத்தானே கேட்டபடி அதன் வாயருகே மூக்கை கொண்டு சென்று கெடுமணம் வீசுகிறதா என்று நோக்கினார். அதன் காதுக்குப் பின்னாலும் கழுத்திலும் கைகளால் அறைந்து நோக்கினார். சலிப்புடன் அதனிடமே “என்ன?” என்றார். அது தலையசைத்து உறுமியது. அவர் புரிந்துகொள்ளமுடியாமல் பாகனிடம் திரும்பி “என்ன?” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் தன் வில்லை எடுக்கும்படி கைகாட்டினார். ஏவலன் வில்லை எடுத்தபோது யானை மீண்டும் உரக்க உறுமியது.

அவருக்கு அதன் உள்ளம் புரிந்தது. கால் ஒன்று இழுத்துக்கொள்ள சற்று தடுமாறி அதன் முன்காலில் சாய்ந்துகொண்டார். அதன் கை நீண்டு வந்து அவர் தோளில் எடையுடன் படிந்தது. “ஆம்” என்று அவர் சொன்னார். அதன் காதை பற்றி அசைத்தபடி “ஆம்” என்று மீண்டும் சொன்னார். வில்லை ஒரு கையால் வாங்கிக்கொண்டு யானையின் கால்மூட்டில் கால்வைத்து ஏறி மேலே அமர்ந்தார். அது மீண்டுமொருமுறை ஆழ்ந்த குரலில் அமறியது. அதன் மத்தகத்தை தட்டி “ஆம்” என்று அவர் மீண்டும் சொன்னார். தன் ஏவலரை நோக்கி “கிளம்பலாம்” என்றார். யானையை அவர் மெல்ல தொட்டபோது அது தளர்ந்த காலடிகளுடன் நடந்தது. அவர் அந்தச் சிறிய குருவியை நினைத்துக்கொண்டு அதன் மேல் அமர்ந்திருந்தார்.

நூல் இருபது – கார்கடல் – 33

ele1இடும்பர்களின் தொல்காட்டில் மூதாதையரின் சொல் நாவிலெழ பூசகராகிய குடாரர் சொன்னார் “குடியினரே அறிக! விந்தியனுக்குத் தெற்கே நம் குலக்கிளைகளிலொன்று வாழ்கிறது. அவர்களை நரகர்கள் என்கிறார்கள் பிறர். தொல்பழங்காலத்தில் அவர்கள் மண்ணுக்குள் இருண்ட ஆழத்தில் இருளுருவென வாழ்ந்தனர். அன்று கைகளும் கால்களும் இல்லாத புழுவுடல் கொண்டிருந்தனர். பின்னர் மானுடராகி எழுந்தபோதும் குழியெடுத்து அதற்குள் தங்கள் இல்லங்களை அமைத்துக்கொண்டனர். மண் அகழும் பன்றியை குலக்குறியெனக் கொண்டவர்கள். அவர்களின் இல்லங்களுக்கு மேல் யானைகள் நடந்து செல்லும். அவர்களுக்கு அடியில் நாகங்கள் ஊர்கின்றன. அவர்கள் தங்கள் உடலால் ஒலிகேட்கும் ஆற்றல்கொண்டவர்கள்.

முன்பு மண்மகளை பெரும்பன்றியொன்று புணர்ந்தமையால் பிறந்த குடி என நரகர்களை சொல்கிறார்கள். அவர்களில் எழுந்த மாமன்னர் தொல்நரகாசுரர். அவருடைய குடியிலெழுந்த நாற்பத்தெட்டாவது நரகாசுரர் இளைய யாதவராலும் அவர் துணைவியாலும் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். முதல் நரகாசுரரின் மகளாகிய சிம்ஹியை மணந்தவர் பாஷ்கலர். அவர் தொல்லசுரகுடியான ஹிரண்யகுலத்தைச் சேர்ந்தவர். முன்பு அசுரகுடியை வென்று முழுதாண்ட ஹிரண்யகசிபுவிலிருந்து உருவானது ஹிரண்யகுலம். விண்வாழும் முதற்தாதை காசியபரின் குருதியில் திதி என்னும் பேருருவ அன்னைக்குப் பிறந்தவர் ஹிரண்யகசிபு. ஹிரண்யகசிபுவுக்கு அனுஹ்ராதன், ஹ்ராதன், பிரஹ்லாதன், சம்ஹ்லாதன் என்னும் நான்கு மைந்தர்கள் பிறந்தனர். அவர்களில் சம்ஹ்லாதன் ஆயுஷ்மான், சிபி, பாஷ்கலர் என்னும் மூன்று மைந்தர்களை ஈன்றார். அவரே முதலாம் பாஷ்கலர்.

பாஷ்கலர் தென்னிலத்தை ஆண்ட அசுர மாமன்னராகிய மகிஷாசுரரின் அமைச்சரானார். மகிஷாசுரருக்கும் இந்திரனுக்கும் நிகழ்ந்த பெரும்போரில் படைநடத்திச் சென்று இந்திரனை வென்றவர் பாஷ்கலர். இந்திரனின் முறையீட்டை ஏற்று தேவி துர்க்கை போர்க்கோலம் கொண்டு களம் வந்தபோது பாஷ்கலரும் துர்முகரும் படைகொண்டு சென்றனர். அன்னையின் மாமங்கலத் தோற்றமே அவளை வெல்லற்கரியவளாக ஆக்குகிறது என்று உணர்ந்து பாஷ்கலர் அவள் இடமுலையை அரிந்தெடுக்க பிறை அம்பு ஒன்றை ஏவினார். அதற்கு உயிர்கொடுக்க தன் உயிரையே நுண்சொல் ஓதி அதில் ஏற்றினார். அந்த அம்பு அன்னையின் மடியில் சென்று அமைந்து சிறுகுழவிபோல் உருக்கொண்டு அன்னையின் இடமுலையில் பால் குடிக்கலாயிற்று. திகைத்து நின்ற பாஷ்கலரின் தலைமேல் தன் வலக்காலை வைத்து அழுத்தி மண்ணுக்கு அடியில் செலுத்தினாள் அன்னை.

பாஷ்கலகுடியில் பிறந்த பதினேழாம் பாஷ்கலர் பெண்கொடையாக பெருஞ்செல்வத்தை நரகாசுரரிடம் இருந்து பெற்று தன் முதற்குடியிலிருந்து பிரிந்து கிழக்காக நிலம்தேடிச் சென்று பிரம்மபுத்ரையின் கரையில் அமைந்த செஞ்சதுப்பு நாணற்படுகையில் சிற்றூர் ஒன்றை அமைத்தார். அதற்கு தன் மூதாதையான நரகாசுரர் ஆண்ட தொல்லசுர நகரான பிரக்ஜ்யோதிஷத்தின் பெயரை அளித்தார். அங்கே எருமைகள் எளிதில் பெருகின. எருமைகளால் செல்வம் வளர்ந்தது. ஊர்கள் வளர்ந்து அந்நிலம் ஒரு நாடென்றாயிற்று. அக்குருதியில் வந்தவர் சைலாலயர். அவர் அந்நாணல் நிலத்தில் அமைத்த நகரமே பிரக்ஜ்யோதிஷம். நெடுங்காலம் வங்கத்தின் நிழலில் அஞ்சி ஒடுங்கிக் கிடந்தது. அசுரநிலமான அங்கே அந்தணர் கால் வைக்கவில்லை.

சைலாலயர் குடிவிலக்குகளை உதறி வங்கநாட்டு இளவரசியை கவர்ந்துவந்து மணம் செய்தார். படைகொண்டுவந்த வங்கர்களை வென்றார். அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். தீர்க்கதமஸின் குருதி அவர் குடியை மேம்படுத்தியது. சைலாலயர் வங்கத்தில் இருந்து தீர்க்கதமஸின் கொடிவழியினரான அந்தணரை அழைத்து வந்து ஏழு பெருவேள்விகளை செய்து இந்திரனை தன் வேள்விச்சாலையில் அழைத்து வந்தார். அவன் அடிபணிந்து தன்னை காத்தருள வேண்டுமென்று கோரினார். இந்திரனின் அருளால் இடிமின்னலின் ஆற்றல் கொண்ட அம்புகளை அவர் பெற்றார். அவ்வண்ணம் அவர் ஆற்றல்மிக்கவரானார். பிரக்ஜ்யோதிஷத்தின் அரசர்குடியினர் ராஜசூயம் நிகழ்த்தி ஷத்ரியர்களானார்கள்.

சைலாலயரின் கொடிவழியில் பிறந்தவர் முதல் பகதத்தர். அவர் இந்திரனுக்கு பெருங்கொடைவேள்விகள் ஏழை இயற்றி வேள்விச்சாலையில் எழுந்தருளச் செய்தார். பகதத்தரிடம் “உன் எதிரி யார்?” என்று இந்திரன் கேட்டான். “துவாரகையை ஆளும் இந்திரனின் எதிரியே எனக்கும் எதிரி” என்று பகதத்தர் சொன்னார். “என் முன்னோரின் குலத்தவராகிய நரகாசுரனைக் கொன்றவர் அவர். என் வஞ்சம் அவர் மீதே” என்று சூளுரைத்தார். இந்திரன் மகிழ்ந்து அவ்வேள்விச்சாலையில் அனல்பெருந்தூணென எழுந்து உன் “குடியுடன் நானிருப்பேன். உனக்கு அருள்வேன். வெல்க!” என்றான்.

முதிய பகதத்தர் நூறாண்டுகள் பிரக்ஜ்யோதிஷத்தை ஆண்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பிரக்ஜ்யோதிஷத்தைச் சுற்றி ஏழு பெருங்கோட்டைகள் கட்டப்பட்டன. நடுவே பன்னிரு அடுக்குகள் கொண்ட ஆயிரம் மாளிகைகளாலான நகரம் உருவாகி வந்தது. பிரக்ஜ்யோதிஷம் வெல்ல முடியாத படையொன்றை தனக்கென திரட்டிக்கொண்டது. பிரம்மமைந்தன் பேராறென ஓடும் அந்நிலத்தில் படகுகள் பெருஞ்சிறை விரிக்க இயலுமென்பதனால் வணிகர்கள் அந்நகரில் குவிந்தனர். அங்கிருந்து வடக்குக்கும் மேற்குக்கும் செல்ல வணிகவழிகள் உருவாகி வந்தன. ஒருநாள் படைமுகத்தில் இளைய யாதவரை சந்திக்கவேண்டும் என்றும் வென்று தன் வஞ்சினத்தை முடிக்கவேண்டும் என்றும் பகதத்தர் விழைவுகொண்டிருந்தார்.

பிரக்ஜ்யோதிஷத்தின் முதல் பகதத்தர் பன்னிரண்டு ஆண்டுகள் மைந்தரின்றி இருந்தார். அமைச்சர்கள் புத்திரகாமேஷ்டி வேள்வியை இயற்றும்படி அவரிடம் சொன்னார்கள். வங்கத்திலிருந்து தீர்க்கதமஸின் குருதிவழியைச் சேர்ந்த பிரஃபவர் என்னும் வைதிகர் நூற்றெட்டு மாணவர்களுடனும் அகம்படியினருடனும் பிரக்ஜ்யோதிஷத்துக்கு வந்து சேர்ந்தார். நூற்றெட்டு நாட்கள் நீண்ட அப்பெருவேள்வியில் புவியில் கண்ட இன்பொருட்கள் அனைத்தும் தேவர்களுக்கு அவியிடப்பட்டன. எரியில் எழுந்த தொல்பிரஜாபதியான தீர்க்கதமஸ் “என் குடி பெருகுக! ஆற்றல் கொண்டவர்கள் ஆகுக என் மைந்தர்!” என்று தன் இரு கைகளில் இரு கனிகளை நீட்டினார். அவருடைய நோக்கில்லா விழிகள் அவருள் அமைந்த பிறிதொன்றை நோக்கின.

“அறிக, இதிலொன்று இனியது! இதை உண்பாய் எனில் விழியொளி கொண்ட மதி தெளிந்த ஒருவனை மைந்தனாகப் பெறுவாய். அவன் இடைக்குக்கீழ் ஆற்றலற்றவனாக இருப்பான். இது கசக்கும் கனி. இதை உன் துணைவி உண்பாள் எனில் பெருந்தோள் கொண்டவனாகிய மைந்தனை பெறுவாய். ஆனால் அவன் விழித்திறன் குறைந்தவனாக இருப்பான். விழைவதை தெரிவு செய்க!” என்றார் தீர்க்கதமஸ். பகதத்தர் இரு கனிகளையும் நோக்கி திகைத்தார். அவர் அருகே நின்றிருந்த அமைச்சர் மெல்ல “அரசே, உங்கள் குலமூதாதையான தீர்க்கதமஸ் போன்ற மைந்தனை தெரிவு செய்க!” என்றார். “ஆம்” என்று சொல்லி அக்கசப்புக் கனியை நோக்கி கைநீட்டினார் முதிய பகதத்தர். அக்கனியை அவருக்கு அளித்து தீர்க்கதமஸ் எரியில் மறைந்தார்.

அந்தக் கனியை வேள்விச்சாலையில் வைத்து வழிபட்டு தங்கத்தாலத்தில் கொண்டு சென்று தன் துணைவியிடம் அளித்தார் பகதத்தர். “இனியவளே, என் மூதாதையரைப்போல தொல்லரக்கர்களைப்போல் தோள்பெருத்த ஆற்றல்கொண்ட மைந்தன் பிறக்கும் பொருட்டு இதை நீ அருந்துக!” என்றார். அவர் துணைவியான யவன இளவரசி சுதீரை அரக்கர்குடியை உள்ளூர வெறுத்தவள். தன்னை தீர்க்கதமஸின் வேதச்சொல் விளங்கும் நாணல் என எண்ணிக்கொண்டிருந்தவள். நீராடி அமர்ந்தபின் அவள் அதை எடுத்து உண்ணத் தொடங்கினாள். அந்தக் கனி ஊன்கட்டிபோல் கெடுமணம் கொண்டிருந்தது. பச்சைக்குருதியென அதில் சாறுவழிந்தது. அதன் சுவை கடும் கசப்பென்றிருந்தது. சுதீரை முகம்சுளித்தபடி ஒரு வாய் உண்டபின் குமட்டலெழ எவருமறியாமல் அதை தன் தோட்டத்திலேயே வீசிவிட்டாள்.

அங்கே மரத்தில் இருந்த பருந்து அந்தக் கனியை ஊன் கட்டி என எண்ணி கவர்ந்துகொண்டு சென்றது. அதை அருகிலிருந்த காட்டில் ஆலமரம் ஒன்றின் உச்சியில் வைத்து கொத்தி உண்ணமுயன்ற பருந்து அதிலிருந்த ஊன்மணம் பொய்யே என்று உணர்ந்தது. சலிப்புடன் அது அக்கனியை கீழே உதிர்த்தது. அங்கிருந்த நாணல்மேட்டில் மேய்ந்து கொண்டிருந்த பிடியானையின் மீது அக்கனி விழுந்தது. திரும்பி துதிக்கையால் அக்கனியை எடுத்து நோக்கிய யானை அதன் விந்தையான மணத்தால் ஈர்ப்படைந்து அதை சுவைத்து உண்டது.

பதினாறு மாதங்கள் அரசி சுதீரை கருவுற்றிருந்தாள். மதங்க கர்ப்பம் என்று பிரக்ஜ்யோதிஷம் மகிழ்ச்சி கொண்டாடியது. ஆனால் யானைகளுக்குரிய ஆடிமாதம் எட்டாம் வளர்நிலவு நன்னாளில் பிறந்த அக்குழவி ஓர் உள்ளங்கைக்குள் வைக்கும் அளவே உருவம் கொண்டிருந்தது. பேற்றறையிலிருந்து அக்குழவியை சிறிய மரத்தாலத்தில் வெளியே கொண்டுவந்து பகதத்தரிடம் காட்டிய வயற்றாட்டி நடுங்கிக்கொண்டிருந்தாள். திகைத்து பின்னடைந்த பகதத்தர் “இது என்ன?” என்றார். “சிற்றுரு கொண்டுள்ளது… ஆனால் உயிருடன் உள்ளது” என்று வயற்றாட்டி சொன்னாள். “புழு! வெறும் புழு!” என்று அருவருப்புடன் சொல்லி பின்னடைந்த பகதத்தர் கையசைத்து “கொண்டு செல்க! இனி இது என் முன் ஒருபோதும் வரலாகாது!” என்று திரும்பிக்கொண்டார். அரசி ஒரு முறையே திரும்பி அக்குழவியை பார்த்தாள். சலிப்புடன் “இது என்னுள்ளிருந்தா வந்தது?” என்றாள். வயற்றாட்டி மறுமொழி சொல்லவில்லை. “புழு!” என்று அவளும் சொன்னாள். கைவீசி “கொண்டு செல்க! அகல்க!” என்றாள்.

உரிந்த தோலுடன் விதையிலிருந்து கிள்ளி வெளியே எடுக்கப்பட்ட சிறிய பருப்பு போன்ற அக்குழவி வயற்றாட்டியால் சேடியருக்கு அளிக்கப்பட்டது. முலைகொடுத்துக்கொண்டிருந்த இரு சேடியர் அக்குழவியை வாங்கினர். இரவும் பகலும் தங்கள் அடிவயிற்று வெம்மையில் வைத்து அதை வளர்த்தனர். குழவி வளர்ந்து எழுந்து நடக்கத் தொடங்கியது. அப்போதும் அது தேம்பிய தோள்களும் மெலிந்த கைகால்களும் ஒடுங்கிய சிறுமுகமும் கொண்டதாகவே இருந்தது. எலிபோல் அரண்மனையின் சுவர்களை ஒட்டி ஊர்ந்தது. அதன் விழிகள் வெண்ணிறமாக நரைத்திருந்தன. ஏழு முறை உறிஞ்சுவதற்கு அப்பால் அது பாலருந்தவில்லை. அதன் அழுகை சிறு சீவிடின் ஓசைபோல பட்டுநாடா அதிரும் ஒலிகொண்டிருந்தது. இரவுகளில் சிறு ஓசைக்கும் அஞ்சி நடுங்கி விழித்து அழுதுகொண்டிருந்தது.

அதன் அச்சமும் நடுக்கும் சேடிப்பெண்களையே கேலி செய்ய வைத்தது. அதை அவர்கள் “சீவிடுப்பூச்சி” என்றனர். அதை கண்டதும் நாவைச் சுழற்றி ர்ர்ர் என ஒலியெழுப்பி விளையாடினர். அதன் செவிலியன்னையர் மட்டும் அதை வேறெங்கும் காட்டாமல் அகத்தளத்திலேயே வளர்த்தனர். காலையில் இளவெயிலில் அதை மடியிலிட்டு கதிரோன் ஒளிபடச் செய்தனர். அப்போது அரண்மனையின் மடிப்பில் பெருந்தூண் மறைவில் நின்று அதை பார்த்து பகதத்தர் உதடு சுழித்து “புழு! வெறும் புழு” என்றார். அவர் தன்னுள் எழுந்த ஒன்றுக்கு மறுப்பாகவே அதை சொல்லிக்கொண்டிருந்தார். சொல்லிச்சொல்லி அதை நிறுவ முயன்றார். ஆகவே எப்போதும் ஒற்றைச் சொல்லையே உரைத்தார்.

“அதை காட்டிற்கு கொண்டுசென்று வீசிவிட ஆணையிடவேண்டுமென்று ஒவ்வொரு நாளும் எண்ணுகிறேன். ஆனால் என்னால் அதை செய்ய இயலவில்லை” என்றார். அமைச்சர் காவகர் “அம்மைந்தனை பிறக்க வைத்த ஊழுடன் ஆடவேண்டியதில்லை. அழிக்கும் ஆற்றல்கொண்ட சிவன் அல்ல நீங்கள். அரசனே ஆயினும் எளிய மானுடனே” என்றார். பகதத்தர் “இவ்வண்ணம் ஒரு மைந்தன் எனக்கு ஏன் பிறந்தான்?” என்றார். “உங்களுடன் ஊழ் விளையாடுகிறது. அனைவருடன் ஊழே விளையாடிக்கொண்டிருக்கிறது. அதற்கு உங்கள் நல்லியல்பை எதிர்வைத்து ஆடுக! நல்ல ஆட்டத்தை ஆடுபவர்களை ஊழ் வாழ்த்திச் செல்லும்” என்றார். “ஆம்” என பகதத்தர் அப்பேச்சை ஒழிந்தார். ஆனால் அதை தன் பகற்கனவாக ஆக்கிக்கொண்டார்.

அரசி மீண்டும் கருவுறவில்லை. அக்குழவியை அவள் பார்க்கவுமில்லை. ஒவ்வொரு நாளும் மெலிந்துகொண்டிருந்தாள். தன் அகத்தளத்திலிருந்து தனக்குத்தானே பேசியபடி தனிமையில் சோழிவிளையாடி பொழுதை கழித்தாள். உடலுக்குள்ளிருந்து நீர்மை முழுமையாக வடிந்து அகல்வதுபோல் அவள் தோலுருவானாள். கண்கள் குழிந்து, கன்னங்கள் ஒட்டி, அசையும் சடலமென்று மாறி ஒருநாள் அச்சோழிக்களத்தின் அருகிலேயே விழுந்து இறந்திருந்தாள். பகதத்தர் குடியிலும் பெண்டிரிலும் தன்னை மறக்க முயன்றார். தனக்கு ஒரு மைந்தனில்லை என்பதையே அவர் தன்னுள்ளத்திற்கு மீளமீள சொல்லிக்கொண்டார். மெல்ல பகல்களில் அவர் மைந்தரில்லாதவரானார். இரவுகளில் கள் மயக்கில் துயின்றார். ஆனால் எப்போதேனும் பின்புலரியில் அரை விழிப்பு கொள்கையில் ஆயிரம் மைந்தரை உடல் நிறைத்து கைவிரித்து நின்றிருக்கும் தீர்க்கதமஸாக தன்னை உணர்ந்தார்.

ஒருநாள் தன் கனவில் வந்த தீர்க்கதமஸிடம் கேட்டார் “தந்தையே, தங்களைப்போலவே ஒரு பெருந்தந்தைதான் நானும். என் உள்ளத்தில் தந்தையென்று அன்றி பிறிதெவ்வாறும் நான் உணர்ந்ததே இல்லை. கணுதோறும் முளைக்க கருகொண்டிருக்கும் முருங்கைமரம் என் உடல். என்னிலிருந்து ஏன் மைந்தர்கள் எழவில்லை?” புன்னகைத்து தீர்க்கதமஸ் சொன்னார் “ஆயிரம் மைந்தர் ஒரு மைந்தனென உன்னில் பிறந்திருக்கிறார்கள் என்று உணர்க!” விழித்துக்கொண்ட பகதத்தர் அக்கனவை எண்ணி எண்ணி வியந்து இருளில் நடந்தார். அதை தன்னுள் ஓட்டி பொருள்கொள்ள இயலாதபோது அமைச்சரிடம் கேட்டார். அந்தணரான காவகர் “அதற்கு பொருள் ஒன்றே. ஆயிரம் மைந்தருக்கு நிகரானவன் தங்கள் மைந்தன். மூதாதைசொல்லுக்கு மாற்றில்லை” என்றார்.

பகதத்தர் சற்று சீற்றத்துடன் “அவனை தாங்கள் இறுதியாக எப்போது பார்த்தீர்கள்?” என்றார். “நேற்றும் பார்த்தேன். அவர் என் இளவரசர். அவரை பேணிக் காக்கவேண்டியதும் முடிந்தவரை நற்சொல் உரைத்து வளர்க்கவேண்டியதும் என் கடன்” என்று அமைச்சர் சொன்னார். “ஆயிரம் மைந்தருக்கு அவன் எவ்வாறு இணையாவான்? விழியற்றவன். அதை நிகர் செய்யும் உடலும் அற்றவன்” என்று அவர் சொன்னார். “அதை நான் அறியேன். ஆனால் இப்புவியில் பருப்பொருளென்பது தெய்வ ஆணைக்கு இணங்க செயல்படுவது என்று மட்டும் கூறுவேன். ஒருவேளை உடல் இங்கு பிறந்திருக்கலாம். ஆற்றல் வேறெங்கோ எழுந்திருக்கலாம்” என்று அமைச்சர் சொன்னார். “வீண்பேச்சு” என்றார் பகதத்தர். “அவரை துறக்க நீங்கள் விழைகிறீர்கள் என்றால் உங்கள் ஆற்றலின்மையின் சான்றுமட்டும்தான் அது” என்றார் காவகர். திகைப்புடன் காவகரை நோக்கிக்கொண்டு சொல்லிழந்து நின்றார் பகதத்தர்.

பகதத்தர் தன் மைந்தனை அதுவரை அரசவைக்கோ விழவுக்கொலுவுக்கோ கொண்டு சென்றதில்லை. அவனது ஐந்தாவது அகவை நிறைவன்று அரசஉடையணிந்த அவனை குடிப்பேரவைக்கு கொண்டுவரச் செய்தார். தன்னருகே சிறு அரியணை ஒன்றை அமைத்து அதில் அவனை அமரவைத்தார். அரசமைந்தனை அதுவரை பார்த்திராத பிரக்ஜ்யோதிஷத்தின் குடிப்பேரவை அவனை காணும்பொருட்டு கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவர்கள் மெல்லிய அலராக அவன் உடல் பற்றியும் விழி பற்றியும் அறிந்திருந்தனர். அதை சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொண்டனர். ஆனால் முழுக்க நம்பவுமில்லை. அம்மைந்தனை அருவருத்தும் கேலி செய்தும் சூதர் பாடும் பாடல்கள் ஒன்றிரண்டையாவது செவிகொண்டிருந்தனர் அனைவரும். ஆகவே அரசர் அரியணையில் அமர்ந்து அவைமுறைமை முடிந்து அறிவிப்புகள் தொடங்கும்போது நிமித்திகன் மேடையேறி இளவரசன் அவை புகுவதை அறிவித்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன. ஆனால் அவை அனைத்திலும் ஒரு தயக்கமிருந்தது. விழிகள் இளவரசர் அவை புகும் வாயிலையே நாடி நின்றன.

வெளியே கொம்பொலியும் முழவொலியும் எழுந்தபோது அவை முற்றடங்கியது. ஆடைகள் காற்றில் அசையும் ஒலிகூட கேட்கும் அமைதி நிலவியது. இளவரசன் ஒரு சிறு தாலத்தில் வைக்கப்பட்டு ஏவலன் ஒருவனால் தூக்கிக்கொண்டு வரப்பட்டான். அவன் அவை நுழைந்தபோது திகைப்பொலியுடன் முழு குடியவையும் சற்று பின்னடைவதை பகதத்தர் கண்டார். பின்னர் எங்கிருந்தோ ஒரு கேலிச்சிரிப்பு எழுந்தது. எவரோ ஒரு குடித்தலைவர் “இளவரசரின் சிறுபகுதி மட்டுமே இங்கு வந்துள்ளது!” என்றார். அவை வெடித்துச் சிரித்து தொடர்சிரிப்பில் கொந்தளிக்கத் தொடங்கியது. பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேலிச்சொல்லை உரைத்தனர். அவை மேலும் மேலும் சிரித்தது. அரசர் அங்கிருப்பதை மறந்தது.

முகம் சிவந்து பற்களைக் கடித்தபடி இரு கைகளையும் சுருட்டி நெஞ்சோடு சேர்த்து முதிய பகதத்தர் அமர்ந்திருந்தார். இளவரசனை அரியணையில் அமரச்செய்தபோது “யானை மேல் உண்ணி ஒட்டியிருப்பது போலிருக்கிறது” என்று எவரோ கூறினர். அவை ஓஓ என ஏளனக்குரல் ஒலித்து கூச்சலிட்டது. அவர்கள் ஆழத்தில் அவ்வாறு அரசனை மீறி கொண்டாடுவதில் களிப்படைந்தனர். எனவே மெல்ல அச்சிரிப்பு அரசருக்கு எதிராகவும் எழுந்தது. “அவர் நரகாசுரரின் வடிவம். அசுரர்கள் மகிமாவும் அணிமாவும் அறிந்தவர்கள்” என்றார் ஒரு குடித்தலைவர். “அணுவென்றாகி ஒருவர் மலையென்றாகி இன்னொருவர். அண்டத்தில் உள்ளதே அணுவிலும் என்க!” பகதத்தர் தலைக்குமேல் தன் கையை கூப்பி “அமைதி கொள்க! அவை அமைதி கொள்க!” என்றார். அவை அதையும் களியாட்டாக ஆக்கிக்கொண்டது. “அமைதியாக நோக்குக… ஓசையால் இளவரசரின் உடல் அதிர்வுகொள்கிறது…” என ஒருவர் கூவ “ஓசையுடன் போரிடும் அசுரர்!” என இன்னொருவர் சொன்னார்.

இளவரசன் அத்தனை கேலிச்சொற்களை அதற்குமுன் கேட்டிருந்ததில்லை. அகத்தளத்தில் சேடியர் அவன் முகம் நோக்கி கேலி செய்வதில்லை. அவர்கள் கேலி செய்கிறார்கள் என்று அவனுக்கு தெரிந்தாலும்கூட அது எப்பொழுதும் பின்நகைப்பாகவே இருந்தது. விரிந்து பெருகியிருந்த அப்பெருஞ்சபை பல்லாயிரம் முகங்களுடன் தன்னைச் சூழ்ந்து எள்ளி நகையாடுவதைக்கண்டு உடல் நடுங்க விழிகளிலிருந்து நீர் வழிய இரு கைகளையும் கோத்து மடியில் வைத்தபடி அவன் அமர்ந்திருந்தான். அவன் பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காதில் ஒலித்துக்கொண்டிருந்தன. உடலுக்குள் நரம்புகள் இழுபட்டு இழுபட்டு நெரியும் அதிர்வை உணர்ந்தான். மயங்கி விழுந்துவிடலாகாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

முதிய பகதத்தர் தன் கைகளை மீள மீள அவைநோக்கி கூப்பி “கேளுங்கள்! நான் சொல்வதை கேளுங்கள்! இத்தருணத்தில் நான் கூறுவதொன்றே. எனக்கு செவி கொடுங்கள்!” என்றார். ஆனால் அவை கலைந்து கலைந்து ஒலியெழுப்பிக்கொண்டே இருந்தது. இறுதியில் குடித்தலைவர் ஒருவர் எழுந்து “இந்தச் சிற்றுயிரை எங்கள் அரசுக்கு அடுத்த தலைவர் என்று கூறப்போகிறீர்களா என்ன? பிரக்ஜ்யோதிஷத்தின் பதினெட்டு குடிகளுக்கு இனி இவர்தான் ஆட்சியாளரா?” என்றார். முதிய பகதத்தர் “என் கனவு என்ன உரைத்ததென்று கூறவே இந்த அவையை கூட்டினேன். கேளுங்கள், என் கனவில் தீர்க்கதமஸ் எழுந்தார். இவன் பேருருவன் ஆவான். இந்நகரை வெற்றியின் உச்சியில் நிறுத்துவான். நம்புக!” என்றார்.

“அத்தகைய கனவுகள் தந்தையருக்கு வராமலிருந்தால்தான் வியப்பு. புழு நெளிந்து நெளிந்து யானையாகும் என்கிறீர்கள் இல்லையா?” என்றார் ஒரு குடித்தலைவர். இன்னொருவர் “அரசே, அரசரென அமர்ந்திருக்கும் நீங்களும் உங்கள் குடியும் எங்கள் நூற்றெட்டு குடியில் ஒன்றுமட்டுமே. உங்கள் ஆற்றலால் உங்களை அரசராக கொண்டோம். ஆற்றலற்ற உங்கள் மைந்தனை நாங்கள் அரசனென ஏன் கொள்ளவேண்டும்?” என்றார். பிறிதொருவர் “எங்கள் குடிகளில் ஆற்றல் மிகுந்த மைந்தர்கள் பலருள்ளனர். வெறும் மூச்சுக்காற்றிலேயே இந்தச் சிற்றுயிரை ஊதிப்பறக்கவிடும் மைந்தன் எனக்குள்ளான். அவன் அரியணை அமரட்டும்” என்றார். பிறிதொருவர் “ஆம், அசுரர்குடியில் இதற்கு ஒரு முறைமை உள்ளது. எவர் மற்களத்தில் வென்று நிலைகொள்கிறாரோ அவர் ஆளட்டும் நாட்டை” என்றார்.

“அரசன் வெல்லபடாதவனாக இருக்கவேண்டும் என்கின்றன நூல்கள். அரசன் செங்கோல்போல, கொடிபோல ஓர் அடையாளம். இந்தப் புழுவை அடையாளமாகக் கொண்டு பிரக்ஜ்யோதிஷம் ஒருங்கு திரள இயலாது. இப்படி ஒரு அடையாளம் எங்கள் அரியணையில் அமர்ந்திருந்ததென்றால் அப்பால் மலைக்குடிகளாக வாழும் நிஷாதர்களும் கிராதர்களும்கூட இங்கே படைகொண்டு வருவார்கள்” என்றார் ஒரு முதிய குடித்தலைவர். “ஏற்க இயலாது! ஏற்க இயலாது!” அவர்களுக்குள் அரசன் மேல் என்றும் இருந்த கசப்புகளும் ஆழத்தில் அவர்கள் கொண்டிருந்த விழைவுகளும் எழுந்து வந்தன. அவை கூச்சலும் கொந்தளிப்புமாக அலைமோதியது. “நான் சொல்வதை சற்றே கேளுங்கள். நான் சொல்வதற்கு சற்று செவிகொடுங்கள்” என்று மீள மீள பகதத்தர் கூவினார். ஆனால் அவர்கள் எவரும் பகதத்தர் சொற்களை செவிகொள்ள சித்தமாக இருக்கவில்லை.

அன்றிரவு இளம் பகதத்தன் தன் அரண்மனையிலிருந்து காணாமலானான். அவன் தன் அரண்மனையிலிருந்து வெளியே செல்லும் வழக்கமே இல்லை என்பதனால் அவனிடம் சேடியரும் செவிலியரும் எவ்வகையிலும் விழிதொடுத்திருப்பதில்லை. அவனுடன் விளையாட எந்தக் குழந்தையையும் விடுவதில்லை. பிற குழந்தைகளால் அவன் உடலில் ஏதேனும் சிறு புண்வந்தால்கூட அதன் விளைவுகள் கடுமையானவை என அவர்கள் எண்ணினர். அவன் மெலிதாக உந்தினாலே விழுபவன். சற்று விரைந்தோடினால் கால் பின்னுபவன். விழிக்கூர் குறைந்தவன் என்பதனால் எப்போதும் எங்கேனும் முட்டிக்கொள்பவன். அவன் உடலில் எலும்புகள் சற்று அழுந்தப் பற்றினாலே உடைந்துவிடுபவை. அவன் பற்களும் எளிதில் நொறுங்குபவை.  ”அணையவிருக்கும் சுடர், காற்று அதன் எதிரி” என்றாள் செவிலியன்னை.

பகதத்தன் நாளெல்லாம் தன் பாவைகளுடன் அரண்மனையின் ஏதேனும் மூலையில் தனக்குத்தானே பேசிக்கொண்டு அமர்ந்திருப்பான். அவன் பாவைகள் அனைத்துமே யானைகள். மரத்திலும் பளிங்கிலும் தந்தங்களிலும் துணியிலும் களிமண்ணிலும் செய்யப்பட்டவை. அவற்றை நிரைவகுக்கச் செய்தும் ஒன்றுடன் ஒன்று போரிடச் செய்தும் அவன் விளையாடினான். அவனாகவே வந்து உணவோ நீரோ கேட்பதில்லை. எதன்பொருட்டும் எவரையும் அழைப்பதில்லை. ஓர் இடத்தில் அமர்ந்தால் அந்திவரை அங்குதான் இருப்பான். ஆகவே அவர்கள் எவருமே அவனை நோக்காமலானார்கள். அவன் அங்கே ஒரு பொருள் போலவே கருதப்பட்டான். ஆகவே அவனை அவர்கள் உணவூட்டும் பொழுதுகளில் ஒழிய நினைவு கொள்ளவே இல்லை. அவன் ஒருநாளில் இருமுறையே உணவருந்தினான். காலையில் உண்டபின் பொழுதணைந்த பின்னர்.

அந்தியில் அவனுக்கு பாலன்னம் ஊட்டும்பொருட்டு தேடிவந்த செவிலிதான் அவன் பாவைகள் மட்டுமே கிடப்பதைக் கண்டு அவனை தேடத்தொடங்கினாள். அரண்மனையின் சுவர்மடிப்புகளிலும் படிகளின் அடியிலும் பின்னர் சிற்றறைகளிலும் தேடித்தேடி கண்டடையமுடியாமல் அவள் திகைத்து கூச்சலிட்டாள். அவர்கள் அவனை அரண்மனை முழுக்க தேடினர். பின்னர் வெளியே சென்று எழில்காட்டிலும் களமுற்றங்களிலும் தேடினர். செவிலியர் ஆணையிட்டதும் காவலர்தலைவர்கள் ஏவலர் கூடங்களிலும் கொட்டில்களிலும் அப்பாலிருந்த அடுமனைகளிலும் தொழும்பர்மனைகளிலும் தேடினர். அவன் மறைந்துவிட்டான் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. ஆகவே அவர்கள் கிணறுகளிலும் குளங்களிலும் தேடுவதற்கே அஞ்சினர். அலறி அழுதபடி செவிலியர் மயங்கிவிழுந்தனர்.

அதன் பின்னரே படைத்தலைவனுக்கு செய்தி சென்றது. அவன் சீற்றமும் துயருமாக ஓடிவந்து செவிலியரை ஓங்கி அறைந்தான். அனைத்துச் செவிலியரையும் சேடியரையும் மாளிகைக்காவலர்களையும் சிறைப்பிடித்து கட்டிவைத்துவிட்டு நூறு ஏவலரை அனுப்பி அரண்மனை வளாகம் எங்கும் தேடும்படி ஆணையிட்டான். முந்நூறு ஒற்றர்கள் நகரில் பரவி இளவரசனை தேடத் தொடங்கினர். அத்தனை குடித்தலைவர்களின் இல்லங்களிலும் ஒற்றர்களும் காவலர்களும் சென்று இளவரசனை தேடினர். காவகருக்கு செய்தி அறிவிக்கப்பட்டதும் அவர் குடித்தலைவர்கள் அனைவரையும் சிறைப்பிடிக்க ஆணையிட்டார். கோட்டைக்காவலர்களும் காவல்மாடத்தில் இருந்தவர்களும் சிறைப்பற்றப்பட்டனர். குடித்தலைவர்களின் சிறுமைந்தர்களை சிறைப்பிடித்து கட்டிவைத்து அவர்களிடம் இளவரசன் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்றார் காவகர். அவர்கள் ஏதுமறியோம் என்று கதறினர்.

இறுதியாகவே பகதத்தருக்கு செய்தி கொண்டுசெல்லப்பட்டது. அவர் திகைத்து நடுக்குகொண்ட உடலுடன் நின்று பின்னர் வாளை உருவிக்கொண்டு பாய்ந்து சிறைப்பிடிக்கப்பட்டவர்களை கொல்லும்பொருட்டு ஓடினார். அவரை படைத்தலைவர்கள் பிடித்துக்கொண்டார்கள். நெஞ்சிலறைந்து அழுதபடி பகதத்தர் நிலத்தில் ஓசையெழ விழுந்தார். அங்கே ஓங்கி அறைந்தபடி கதறி அழுதார். நினைவழிந்து கிடந்த அவரை மஞ்சத்திற்கு கொண்டுசென்றனர். பன்னிருநாட்கள் இளவரசனை தேடினர். அவன் தொலைந்துவிட்டான் என்று உறுதியானதும் காவகர் ஆவதென்ன என்று உசாவுவதற்காக அரசரின் படுக்கையறைக்கு வந்தார். மெலிந்து ஒடுங்கி மஞ்சத்தில் கிடந்த பகதத்தர் “என் ஊழ். மற்றொன்றும் சொல்வதற்கில்லை. சிறையுண்டவர்களை விடுதலை செய்க!” என ஆணையிட்டார்.

“அல்ல அரசே, இது அரசப்பிழை. இதற்கு பொறுப்பேற்றவர்கள் தண்டனை அடைந்தே ஆகவேண்டும். தண்டிக்கப்படாத குற்றம் புல்விதை எனப் பெருகும் என்கின்றன நூல்கள்” என்றார் காவகர். குடித்தலைவர்களும் மைந்தர்களும் விடுதலைசெய்யப்பட்டார்கள். கோட்டைக்காவலரும் காவல்கோட்டத்தினரும் அவர்களின் பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு நெற்றியில் சூட்டுமுத்திரை பதிக்கப்பட்டு குடிக்கீழ்மை விதிக்கப்பட்டனர். அரண்மனைக் காவலர் அனைவரும் தலைவெட்டி கொல்லப்பட்டார்கள். சேடியருக்கும் செவிலியருக்கும் நஞ்சு அளிக்கப்பட்டு அவர்களே அதை அருந்தி உயிர்விடவேண்டுமென ஆணையிடப்பட்டது. இளவரசன் பிரக்ஜ்யோதிஷத்திலிருந்து மறைந்துபோனான்.

நூல் இருபது – கார்கடல் – 32

ele1சஞ்சயன் சொன்னான். முதலொளிக்காக காத்து நின்றிருக்கும் இரு படைப்பிரிவுகளையும் நான் காண்கிறேன். அவர்கள் அன்றைய போரை புதிய ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். கௌரவர்கள் அனைவரும் பாண்டவப் படையின் முகப்பில் அர்ஜுனனின் குரங்குக்கொடி எழுகிறதா என்பதையே நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனன் எழுந்தமைக்கான எந்தச் சான்றும் ஒலியென எழவில்லை என்பதனால் அவர்களின் ஊக்கம் கணம்தோறும் கூடிக்கொண்டிருக்கிறது.

மறுபக்கம் பாண்டவர்கள் மெல்லிய துடிப்புடன் நின்றிருந்தனர். ஏதோ ஒன்று நிகழுமென அவர்கள் எவ்வண்ணமோ அறிந்திருந்தனர். அவ்வண்ணம் முடிவதற்குரியதல்ல அது என்பதையே அவர்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். அது பிறிதொன்று. வருந்தலைமுறையினர் எண்ணி எண்ணிப் பேசும் பெரும்பொருள். அது எழுந்தாகவேண்டும். அதை இயற்றும் இளைய யாதவர் மட்டுமே அறிந்த ஒன்று நிகழ்ந்தாகவேண்டும். அவர்கள் படைமுகப்பில் நின்றிருந்த தேர்களையே நோக்கிக்கொண்டிருந்தனர்.

பாண்டவப் படையின் அரைநிலவுச்சூழ்கையின் மையத்தில் யுதிஷ்டிரரின் மெய்க்காவல்படையினர் தங்கள் மின்படைக் கொடியுடன் நின்றிருந்தனர். அவர்கள் நடுவே உள்ளிருந்து அரசத்தேர் வருவதற்கான இடைவெளி விடப்பட்டிருந்தது. அதற்கு இருபுறமும் என விரிந்த நிலவுவளைவின் வலப்பக்கம் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் துருபதரும் சிகண்டியும் விராடரும் இறுதியாக பீமனும் நின்றிருந்தனர். இடப்பக்கம் நீண்ட வளைவில் அபிமன்யுவின் மெய்க்காவலர் நின்றிருந்தனர். சுருதகீர்த்தியும் சுருதசேனனும் தேர்களில் வில்லுடன் நின்றிருக்க இறுதியாக அர்ஜுனனின் மெய்க்காவல்படையினர் நின்றனர்.

கருடச்சூழ்கையின் அலகென நின்றிருந்த துரோணரின் தேர்மகுடத்தில் கமண்டலக் கொடி பறந்துகொண்டிருந்தது. அவருக்குப் பின்னால் சுசர்மனும் சம்சப்தர்களும் நின்றிருந்தனர். பருந்தின் வலச்சிறகில் நின்றிருந்த அஸ்வத்தாமன் முரசுகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவனருகே பூரிசிரவஸ். அருகிலேயே ஜயத்ரதன் நின்றிருந்தான். இடச்சிறகில் சல்யர், அவர் அருகே கிருபர். அப்பால் பகதத்தர். பருந்தின் வலக்கூருகிர் என துரியோதனனும் தம்பியரும். இடது உகிர் என பால்ஹிகர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை மேலும் மேலும் தீட்டிக்கொண்டனர். முதற்கணத்தில் முழுமையாக எழுந்து கிளம்ப அகம்திரட்டிக்கொண்டிருந்தனர்.

எத்தனை முறை நிகழ்ந்தாயிற்று! இருப்பினும் அந்தப் புலரி முதற்கணம் முன்னறிய ஒண்ணாததாகவே உள்ளது. அதை முடிவெடுக்கும் பணியை தெய்வங்களே வைத்துக்கொண்டிருக்கின்றன. அரசே, அந்த முதல் கணத்தில் முதல் அம்பில் உயிர்விடவிருக்கும் முதல் வீரனை தெய்வங்கள் அப்போது தெரிவுசெய்து கொண்டிருக்கின்றனவா?

அந்த முகங்களை நான் மாறிமாறி நோக்குகிறேன். இப்போது இருபுறத்திலும் எழுந்து நடக்கும் நிலையிலிருக்கும் அனைவருமே போருக்கெழுந்துவிட்டனர். அடுமனையாளர்களும் மருத்துவர்களும் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர். பயிலாப் படைவீரர்கள் ஆகையால் அந்த முகங்களில் அச்சமும் தயக்கமும் எழுச்சியும் குழப்பமும் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணர்ச்சி நிறைந்துள்ளது.

அனைத்து உணர்ச்சிகளையும் மூடியிருக்கிறது களைப்பு. அங்கே நற்துயில்கொண்டு எழுந்தவர் சிலரே. போர் தொடங்கும்வரை துயிலின்மையால் தளர்ந்து விழப்போகிறவர்கள்போல் தெரிவார்கள். முரசொலித்ததும் அவர்களிடம் குடியேறுவது என்ன? இறப்பை அருகெனக் கண்ட உயிரின் பதற்றமா? உயிர்குடிக்க உள்ளிருந்து எழும் தெய்வங்களின் வெறியா? எவர் அறிய இயலும்? அங்கே கால்கள் மண்விட்டு எழத் துடிக்கின்றன. கைகள் சிறகுகளாக விழைகின்றன. வெறிகொண்ட மானுடர் ஏன் எம்பிக்குதிக்கிறார்கள்? நிலைமீறிய எதற்கும் மண்ணில் இடமில்லையென்பதனாலா? அமைவதே மண், எழுவதே வான் என்பதனாலா?

எழுகதிரின் முதலொளி தோன்றுவதற்கு சிலகணங்களுக்குமுன், முழைக்கழியில் முரசர்களின் பிடி இறுகிக்கொண்டிருக்கையில் பாண்டவப் படைமுகப்பில் அபிமன்யு தோன்றினான். அவனுடைய தேர் வந்து நின்றபோது அங்கிருந்த படைவீரர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அது அலையெனப் பரவி படைமுழுக்க சென்றது. கௌரவர்கள் அபிமன்யுவை கூர்ந்து நோக்கினர். உடலின் கட்டுகளின்மேல் கவசங்கள் அணிந்திருந்தமையால் அவன் பருத்த உடல்கொண்டவனாகத் தோன்றினான். அவன் கையிலிருந்த வில் புதியதாக இருந்தது. குழலை தலைக்குப்பின் கட்டி அள்ளியிட்டு விளையாட்டுக்களத்திற்கு எழப்போகிறவன்போல் நின்றான்.

விழிகள் அர்ஜுனனை தேடிக்கொண்டிருக்க மிக அப்பால் வாழ்த்தொலிகள் எழுந்தன. கௌரவர்களின் படைவிரிவிலேயே அந்த ஆவல் விழிக்குத் தெரியும் அலையென்றாகியது. குரங்குக்கொடி மெல்ல அணுகிவந்தது. கர்ணன் தன் வில்லை நேர்நிறுத்தி வலக்கையால் மீசையை நீவியபடி நோக்கினான். துரோணர் விழிகளுக்குமேல் கையை வைத்து கூர்ந்தார். யானைமேலிருந்த துரியோதனன் துச்சாதனனிடம் “இளையோனே, அவனா?” என்றான். சுபாகு “அவரேதான், மூத்தவரே” என்றான். “களமெழுகிறான்!” என்று துச்சாதனன் வியப்புடன் சொன்னான். “ஆனால் அதில் வியப்பதற்கொன்றுமில்லை. அவ்வாறுதான் நிகழும்” என்றான் துரியோதனன்.

படைமுகப்பை அணுகுந்தோறும் அர்ஜுனன் விலகிச்செல்வதை ஜயத்ரதன் நோக்கினான். பிறையின் விளிம்பில் அர்ஜுனனின் மெய்க்காவல்படை நின்றிருந்தது. அவன் அங்கு செல்லாமல் யுதிஷ்டிரரை நோக்கி சென்றான். அவர்களின் திட்டம் புரிந்து சகுனி ஆணைகளை பிறப்பிப்பதற்குள் விடியலை அறிவித்து முரசுகள் முழங்கின. பாண்டவர்களிடமிருந்து முதல் அம்பு எழுந்து வந்து தாக்கியது. கௌரவப் படைகள் பொங்கிச் சென்றறைய போர் மூண்டது. இரு மரவுரிகளைச் சேர்த்துத் தைத்த வடுவென அந்தப் போர்முகப்புக்கோடு. ஆயிரம்கால் அட்டைபோல அது எங்கோ சென்றுகொண்டிருக்கிறது என்று விழிமயக்கடைகிறேன்.

கௌரவர்களின் அரசே, நான் அந்த முதல் அம்பை எய்தவனை கண்டேன். அவன் பெயர் வஜ்ரன். இந்திரப்பிரஸ்தத்திற்கு அருகே காமடம் என்னும் சிற்றூரைச் சேர்ந்த யாதவன். அங்கே இனிய காட்டில் கன்றோட்டி வாழ்ந்த சிறுவன். இந்திரப்பிரஸ்தம் அமைந்தபோது படையில் சேர்ந்தான். அம்புவிடப் பயின்றான். முதல் பத்துநாட்கள் அவன் படைகளுக்குப் பின்னிரையிலேயே இருந்தான். பின்னர் அவனை படைமுகப்புக்கே அனுப்பினர். அங்கே அவனுக்கு பெரிய நிலைவில்லும் அம்புகளும் அளிக்கப்பட்டன. முதல்நாள் அவன் கூட்டத்துடன் அலைமோதினான். அன்றே ஆணைகளை செவிகொள்ளவும் பிற அனைத்தையும் உளம்விலக்கவும் அவன் பயின்றான். “தோல்வரைக்கும்தான் வலி. போர்தொடங்குவது வரை மட்டுமே அச்சம்” என்னும் தொல்மொழியின் பொருளை அறிந்துகொண்டான்.

வஜ்ரன் தன் வாழ்நாளில் எவ்வுயிரையும் அறிந்து கொன்றதில்லை. இலக்கு வைத்து அம்பெறிந்ததும் இல்லை. கௌரவப் படை இருக்கும் திசைநோக்கி அம்புகளை எய்தபடி ஆணையிடப்படும் திசைநோக்கிச் செல்வதையே அவன் இருநாட்களாக செய்துவந்தான். அவனுடன் வந்த அனைவரும் மடிந்த பின்னரும் அவன் உயிருடன் இருந்தமையால் அப்போரிலிருந்து உயிருடன் மீள்வதே தன் ஊழ் என அவன் தன்னுள் அறியா உறுதி ஒன்றை கொண்டிருந்தான். புலரிமுரசின் ஆணையெழுந்ததும் நின்ற வில்லில் நாணிழுத்து அம்புகோத்து விண்ணில் எய்தான். அடுத்த அம்பை எடுத்தபடி கூச்சலிட்டுக்கொண்டு முன்னால் ஓடினான்.

அந்த அம்புசென்று நெஞ்சிலறைய அலறி மல்லாந்து விழுந்து கைகால்களை உதறிக்கொண்டு துடித்து அணைந்தவன் ஜ்வாலன். அஸ்தினபுரிக்கு அருகே சுமந்தம் என்னும் ஊரைச் சேர்ந்த ஷத்ரியன். அங்கே அவன் தந்தை காவல்பணி செய்துவந்தார். தந்தையால் அவன் காவலனாகவே பயிற்சியளிக்கப்பட்டான். காவல்மாடத்தில் இரவும் பகலும் அமர்ந்திருந்த தந்தையை அவன் பல்லி என பழித்தான். அந்த வாழ்க்கையைக் கசந்து அங்கிருந்து எவருக்கும் தெரியாமல் வேலுடன் கிளம்பி அஸ்தினபுரிக்கு வந்து படையில் சேர்ந்தான். அனைத்துப் பயிற்சிகளிலும் அவன் பேரார்வத்துடன் பங்கெடுத்தான். தேர்ந்த வில்லவன் என்று ஆசிரியரால் பாராட்டப்பட்டான்.

ஒவ்வொருநாளுமென அவன் குருக்ஷேத்ரத்தை எதிர்பார்த்திருந்தான். அங்கே அவன் ஆற்றும் வீரச்செயலால் தன் பெயர் சூதர்நாவிலேறி தன் தந்தையை சென்றடையவேண்டும் என்று விழைந்தான். ஆனால் குருக்ஷேத்ரத்திற்கு வந்தநாள் முதல் அவனுக்கு எல்லைக்காவல் பணியே அளிக்கப்பட்டது. தேர்ந்த வில்லவரை எல்லையில் அமர்த்தினால் காவலுக்கு அவர்கள் ஓரிருவரே போதுமென்று காந்தாரர் சகுனி எண்ணினார். நாளும் போர்வீரர்கள் மடிந்துகொண்டிருக்க, எல்லைக்காவலைக் குறைத்து அனைவரையும் படைமுனைக்கு அனுப்பினர்.

அன்று காலைதான் அவன் முதல்முறையாக களத்திற்கு வந்தான். வில்லுடன் வெறிக்குரல் எழுப்பியபடி அவன் முன்னால் பாய்ந்த கணத்திலேயே அவன் நெஞ்சை துளைத்துச்சென்றது அம்பு. அவன் ஒரு மூச்சுத்திணறலை, சொல்முட்டிய ஒரு கணத்தை, உடற்தசைகளில் ஓடிய விதிர்ப்பை, வந்தறைந்த நிலத்தை, ஒளியுடன் விரிந்த வானை, மங்கலடைந்து அகன்ற ஒலிப்பெருக்கை மட்டும் இறுதியாக அறிந்தான். அவன் உடல் மேல் அவன் படைத்துணைவர்கள் மிதித்து ஏறிச்சென்றனர். தேர்களின் சகடங்கள் ஏறிக்கடந்தன. அவன் அங்கே அசைந்து அசைந்து தலையாட்டிக்கொண்டிருந்தான்.

அவன் எழுந்து தன் உடலை பார்த்தபோது அது மிகவும் சிதைந்திருந்தது. துயருடன் திரும்பியபோது அருகே இன்னொருவனும் அதை நோக்கிக்கொண்டிருப்பதை கண்டான். “யார்?” என்றான். “இந்த அம்பை எய்தவன்” என்று அவன் சொன்னான். “சற்று முன் என் மேல் யானை ஒன்று மிதித்து ஏறிச்சென்றது. என் உடல் சிதைந்து கிடக்கிறது.” அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர்.

அவர்களுக்குக் கீழே நிகழ்ந்துகொண்டிருந்த போரை குனிந்து நோக்கிய பின் ஜ்வாலன் “நாம் இங்கிருந்து செல்லவியலாதா?” என்றான். “நாம் இவர்களால் அனுப்பி வைக்கப்படவேண்டும்” என்று வஜ்ரன் சொன்னான். “என் தந்தைக்கு என் பெயர் சென்று சேராது” என்றான் ஜ்வாலன். “அதனால் எந்த வேறுபாடும் இல்லை. அவர் உன்னை மறப்பது உறுதி” என்று வஜ்ரன் சொன்னான். “ஏன்?” என்று ஜ்வாலன் கேட்டான். “இதோ பார், எத்தனை ஆயிரம்பேர். இவர்களை எவர் நினைவில்கொள்ள இயலும்?” என்றான் வஜ்ரன். பெருமூச்சுடன் “ஆம்” என்றான் ஜ்வாலன். பின்னர் “இவர்களை இங்குள்ளோர் முற்றாக மறந்தால் நன்று என்று தோன்றுகிறது” என்றான். “ஆம்” என்றான் வஜ்ரன்.

ele1சகுனியின் ஆணைக்கேற்ப தலைப்பாகையில் செம்பருந்தின் இறகு சூடிய மாளவர்களும், வல்லூறின் இறகுசூடிய மகதர்களும், தாழைமடல் சூடிய துண்டிகேரர்களும், கருங்குருவி இறகுசூடிய மாவேல்லர்களும், ஈச்சம்பூக்குலைச் சூடிய அபிசாரர்களும், தென்னம்பாளை சூடிய அம்பஷ்டர்களும், பனம்பூக்குலை சூடிய ஆபிரர்களும், நாரையிறகு சூடிய அரட்டர்களும், மலையணிலின் வால்சூடிய  லலித்தர்களும் என திரண்டிருந்த கௌரவப் படை எதிரில் நிறைந்து அலைத்த ஐந்துமணிப் பதக்கம் சூடிய பாஞ்சாலர்களுடனும், புரவிவால்குஞ்சம் சூடிய விராடர்களுடனும், கொக்கிறகு சூடிய மச்சர்களுடனும், பன்றிக்காது சூடிய நிஷாதர்களுடனும், காகச்சிறகு சூடிய கிராதர்களுடனும், வெண்ணிறப் பனிமானின் வால்முடியை சூடிய லடாகர்களுடனும் போரிட்டது.

கமுகுப்பாளையில் கழுதைக்காது சூடிய பத்ரர்களும், தென்னம்பாளையில் பசுக்காது சூடிய பிச்சகர்களும், யானைநகங்களைக் கோத்த தலையணிகள் அணிந்த வத்சர்களும், குதிரைப்பல் மணிமாலையை தலைப்பாகையில் அணிந்த சௌரவர்களும் அங்கே போருக்கெழுந்திருக்கிறார்கள். கோசலர்களின் கொம்புகள் காட்டெருமையின் ஓசைகொண்டவை. குலூதர்கள் சிறுநாணலால் தாங்கள் மட்டுமே அறியும் கூரிய வண்டுமுரலை எழுப்பி பேசிக்கொள்கிறார்கள். குக்குரர்களும் போஜர்களும் அந்தகர்களும் விருஷ்ணிகளும் வளைதடியால் எறிந்து ஒருவரை ஒருவர் தொட்டு செய்தியறிவிக்கிறார்கள். காம்போஜர்கள் எறிந்து அக்கணமே திரும்ப இழுத்துக்கொள்ளும்படி வேல்முனையில் சுருள்கொடி ஒன்றை கட்டியிருக்கிறார்கள். அரவேகர்களின் நீண்ட மூங்கில்வேலின் முனையில் சிறுத்தைச் சிறுநீர் நனைக்கப்பட்ட மரவுரிச்சுருள் உள்ளது. அது புரவிகளை நாசிவிடைத்து மிரளச்செய்கிறது.

கௌரவர்களின் தரப்பில் திரண்டிருந்த மஞ்சள்நிறமான சிற்றுடல்கொண்ட மத்ரர்களும், சுண்ணநிறத்தில் பேருடல்கொண்டிருந்த பால்ஹிகர்களும், பறக்கும் திறன்கொண்ட ஹம்ஸமார்க்கர்களும், தாள்தோயும் நீண்ட கைகளும் வளைந்த கால்களும் கொண்ட சம்ஸ்தானர்களும், பெரிய வெண்பற்கள் கொண்ட சூரர்களும், நீண்ட தலைமயிரை நிலம்தோய ஏழு சடைகளாகப் பின்னியிட்ட வேணிகர்களும், கழுத்தில் யானைத்தந்தத்தில் செதுக்கப்பட்ட வளையங்கள் அணிந்த விகுஞ்சர்களும் எதிரே எழுந்த செந்நிறமான ஹூணர்களையும், செம்மண் நிறமான அஸ்மாகர்களையும், கரும்பாறைபோல் வெண்தேமல் படிந்த உடல்கொண்ட காரூஷர்களையும், மாந்தளிர் நிறமான மருத்தர்களையும், சருகுநிறமான பிரயாகர்களையும் எதிர்கொண்டார்கள்.

பாண்டவர்களால் தலைமைதாங்கப்பட்ட குனிந்தர்களும், தித்திரர்களும், தண்டகர்களும், தசார்ணர்களும், பௌரவர்களும் கௌரவர்களால் நடத்தப்பட்ட வாடாதனர்களையும், வனாயுக்களையும், மேகலர்களையும், முண்டர்களையும் எதிர்த்து நின்றனர். அரசே, இத்தனை குலங்கள் இப்படி திரண்டு ஒன்றென்றாவது இப்புவியில் போரிலன்றி என்றேனும் நிகழ வாய்ப்புண்டா? ஒரு பெருவிழவில் இவர்கள் இப்படி தோள்தழுவி ஒற்றை உடலென்றாகும் நாள் வருமா? இப்போரை அவர்கள் விழவென்று மாற்றி நடிக்கக்கூடும். அன்று இன்றுள்ள வஞ்சங்களும் வெறிகூச்சல்களும் மறைந்துவிட்டிருக்கும். சிரிப்பும் வாழ்த்துகளும் எழுந்துகொண்டிருக்கும். அன்று அந்தப் பெருங்களத்தில் என்னை இரு விழிமணிகளாக களிமண் உருளைமேல் நிறுவி அன்னமும் நீரும் மலரும் படைத்து வழிபடுவார்கள். பளிங்கு உருளைகள் மேல் அக்காட்சி சுருண்டு துளியென்றாகி சுழன்று அசைய நான் சொல்லின்றி நோக்கிக்கொண்டிருப்பேன்.

தன்முன் வந்து நின்றிருந்த அர்ஜுனனைக் கண்டு சுசர்மன் சற்று திகைத்தாலும் “தாக்குக!” என ஆணையிட்டு வில்லெடுத்து அம்புகளை தொடுக்கத் தொடங்கினான். அவனுக்கு இருபுறமும் நின்றிருந்த திரிகர்த்தர்கள் பெருங்கூச்சலுடன் அம்புகளை ஏவியபடி அர்ஜுனனை நோக்கி சென்றனர். அர்ஜுனனின் அம்புகள் அவர்களின் தேர்களையும் கேடயங்களையும் கவசங்களையும் அறைந்து சிதறடிக்கத் தொடங்கின. சுசர்மனின் இருபுறமும் சத்யரதனும் சத்யவர்மனும் சத்யவிரதனும் சத்யேஷுவும் சத்யகர்மனும் தேர்களில் நின்று அர்ஜுனனுடன் போரிட்டனர். அவர்கள் எப்போதும் அப்போதிருந்த உச்சவிசையுடன், உள்ளமும் உடலும் ஒன்றாகும் நிலையில் இருந்ததே இல்லை.

அர்ஜுனன் தேர்த்தட்டில் களைப்புடன் நின்றிருந்தான். அவன் முகம் வீங்கியிருந்தது. கண்களுக்குக் கீழே தசைவளைங்கள் கருமைகொண்டு தொங்கின. அவன் உடலில் இருந்த மெல்லிய நடுக்கை தொலைவிலேயே காணமுடிந்தது. அவன் கையில் காண்டீபம் அன்றிருந்ததுபோல் என்றும் ஆற்றல் குறைந்ததாக இருக்கவில்லை. அப்பால் வில்லுடன் எழுந்த கர்ணன் அவனை அரைக்கணமே விழியோட்டி நோக்கினான். பின்னர் நாணொலி எழுப்பியபடி அவன் திரும்பி சாத்யகியையும் திருஷ்டத்யும்னனையும் நோக்கி சென்றான். அவன் தன்னை நோக்கி வருவான் என எதிர்பார்த்து வில்லுடன் முன்னெழுந்த அர்ஜுனன் அவன் திரும்பிச்செல்வதைக் கண்டு தேர்த்தட்டில் திகைத்து நின்றான். அவனை எதிர்கொண்ட சுபலரும் காந்தாரப் படையினரும் அம்புகளைப் பொழிய அவர்களுடன் போர்புரியலானான்.

மறுபக்கத்தில் இருந்து துரோணர் அவனை நோக்கி வந்தார். அவருடைய நாணொலியைக் கேட்டு அவன் காண்டீபத்தைத் தூக்கியபடி அவரை நோக்கி சென்றான். அவருடைய அம்புகளைத் தடுத்து அவரை அம்புகளால் அறைந்தபடி படைகளைப் பிளந்து முன்னால் சென்றான். துரோணர் அர்ஜுனனிடம் பொருதத் தொடங்கிய சற்றுநேரத்திலேயே அவன் அம்புகளை காற்றில் முறித்து தன் அம்பால் காண்டீபத்தின் நாணை அறுத்தார். ஆனால் அவன் கீழே குனிந்து புது நாணேற்றி எழுவதற்குள் அவர் மறுதிசையில் திரும்பி சிகண்டியை எதிர்கொண்டார். அவன் அவர் அகன்றுசெல்வதை கண்டான். அதற்குள் திரிகர்த்தனாகிய சுசர்மன் வந்து அவனை எதிர்க்கத் தொடங்கினான்.

அர்ஜுனன் அம்புடன் எழுந்தபோது சம்சப்தர்களின் முதல்வனான சுசர்மன் தன் தேரில் எழுந்து நின்று அர்ஜுனனை நோக்கி “பாண்டவனே, இன்று உன்னைக் கொல்லாமல் எங்கள் குடியில் ஒருவரேனும் மீளமாட்டோம் என்று வஞ்சினம் உரைத்திருக்கிறோம். இன்று நம் வஞ்சங்கள் முடிவுக்கு வரவேண்டும்” என்று கூவினான். அர்ஜுனன் சலிப்புடன் விலகிச்செல்லும் கர்ணனையும் துரோணரையும் பார்த்தபடி அவர்களுடன் போரிட வந்தான். மின்னும் அம்புகளால் சம்சப்தர்கள் அர்ஜுனனை அறைந்தனர். அவனைச் சூழ்ந்துகொண்டு ஒரே தருணத்தில் அம்புதொடுத்தனர். அர்ஜுனன் கையிலிருந்து அம்புகள் அரைவட்டமாகப் பெருகி வந்து அவர்களின் அம்புகள் கடக்கவியலாத காப்புப்புலம் ஒன்றை அமைத்தன.

அவர்கள் நடுவே மூண்ட போரில் ஒருபக்கம் கட்டற்ற வெறி இருந்தது. ஆகவே ஒவ்வொரு அம்பிலும் ஒரு வசைச்சொல் இருந்தது. ஒன்று கசந்தது, பிறிதொன்று சீறியது, மற்றொன்று பழித்தது, இன்னுமொன்று ஏளனம் செய்தது, சொல்லில்லாது ஊளையிட்டது ஒன்று. மானுடர் எந்த அளவுக்கு வெறுப்பை திரட்டிக்கொள்ள முடியும், எவ்வண்ணம் வெறுப்பிலேயே வாழமுடியும் என்பதை அந்த அம்புகள் காட்டின. அன்பில் வாழ்வோரைவிட வெறுப்பில் வாழ்பவர்களே மிகுதி. அன்பை பேரன்பாக்கி வீடுபேறடைவது அருந்தவம். வெறுப்பை பெருவெறுப்பாக்கி அதன் நிழலில் அமர்ந்திருப்பது யார்க்கும் எளிது. அரசே, நான் நான் என எழுவோர்க்கு வெறுப்பே நல்ல படைக்கலம். வெறுப்பே இப்புவியில் மிகவும் புழங்கும் பணம். வெறுப்பால் அனைத்தையும் வாங்கிவிடமுடியும். நிறைவு ஒன்றைத்தவிர.

மறுபக்கம் தேர்ந்த கைகளிடம் அனைத்தையும் விட்டுவிட்டு தன் ஓட்டுக்குள் ஒடுங்கிவிட்டிருந்த அர்ஜுனனால் அவர்களின் அம்புகள் தடுக்கப்பட்டன. அந்த அம்புகளில் அவனுடைய ஒரு சொல்கூட இருக்கவில்லை. ஆகவே அந்த அம்புகளின் தெய்வங்கள் அவற்றில் குடியேறின. அவை காற்று வெளியிலெழுந்து பரவின. எதிர்வருவனவற்றை சிதறடித்து தங்கள் இலக்கு நோக்கி சென்றன. சம்சப்தர்களின் அம்புகள் அனைத்தும் சிதறித்தெறித்தன. அர்ஜுனனின் அம்புகளை அவர்களால் தடுக்க முடியவில்லை. திரிகர்த்தர்களின் தேர்ந்த மலைவில்லவர்கள் அம்புபட்டு அலறி விழுந்துகொண்டே இருந்தனர். தங்களைச் சுற்றி வில்லவர்கள் நிலம்படிய தேர்கள் உருண்டு அகல உருவான வெற்றிடத்தில் சம்சப்தர்கள் மேலும் மேலும் சினவெறி எழுந்து நின்றுபோரிட்டனர்.

ஒவ்வொரு அம்புக்கும் ஒரு வடிவம் உள்ளது. எடையும், மிதப்பும், கூரும், கோணலும் உள்ளது. அதனூடாகவே ஓர் அம்பு பிறிதொன்றுடன் மாறுபடுகின்றது. அரசே, அம்புகளுக்கு எவரும் பெயரிடுவதில்லை. அவற்றின் தனித்தன்மையை அவற்றை வார்த்தவன்கூட அறிவதில்லை. நாணேற்றுகையில் வில்லவன் அறியக்கூடும். பறந்தெழுகையில் நோக்குபவர் அறியலாகும். தாக்குகையில் மாள்பவர் உணர்வதென்றாலும் ஆகும். ஆனால் அவை பிறந்த கணம் முதல் வெறும்பொருளென கிடக்கின்றன. கட்டுகளில், தொகைகளில் பிறவற்றுடன் சேர்ந்து புற்றுள்செறிந்த நாகக்குழவிகளென்றிருக்கின்றன. அவற்றின் வாழ்க்கை என்பது தூளியிலிருந்து எழுந்து நாணிலமர்ந்து விண்ணிலேறி பறந்து சென்று இலக்கிலமைவது வரைக்குமான சில கணங்களே. பிறந்து ஒருமுறை பறந்ததுமே மறையும் பறவைகள்.

அந்த ஒருகணத்தில் அவற்றை ஆயிரத்தில் லட்சத்தில் ஒன்றைக்கூட விழிகள் நோக்குவதில்லை. நோக்கப்பட்டவற்றில் ஆயிரத்தில் லட்சத்தில் ஒன்றைக்கூட உள்ளம் அறிவதில்லை. உள்ளம் அறிந்தவற்றில் ஆயிரத்தில் லட்சத்தில் ஒன்றைக்கூட எவரும் பிரித்தறிந்து பெயரிடுவதில்லை. ஆனால் அத்தனை அம்புகளுக்கும் தெய்வங்கள் பெயரிட்டுள்ளன. அவற்றில் குடியேறி அவை காத்திருக்கின்றன. விண்ணிலெழுந்ததும் அவை களிப்புற்று சிறகுலைத்து கூர்சீறி பாய்கின்றன. இலக்கடைந்ததும் துள்ளித்துள்ளி குருதி குடிக்கின்றன. மண்ணில் பாய்ந்து நின்று செருக்கடிக்கின்றன. ஒன்றை ஒன்று முறித்து சிதறி உதிர்கின்றன.

தன் உளச்சொல்லை ஒருவன் அம்பிலேற்றுகையில் பிறிதொரு தெய்வத்தை அதில் அமைக்கிறான். இரு தெய்வங்களும் பூசலிடுகின்றன. அப்பூசலால் அலைக்கழிந்தபடி அவை செல்கையில் இலக்கழிகின்றன. தேர்ந்த படைக்கலங்களில் அவற்றை செலுத்துபவனின் ஒரு சொல்லும் இருப்பதில்லை. அவை அப்படைக்கலங்களுக்குரிய தெய்வங்களால் முற்றாக ஆளப்படுகின்றன. ஆகவே அவை வெல்லற்கரிய கூர்மையும் விசையும் கொண்டிருக்கின்றன.

சுசர்மன் அர்ஜுனனின் நிகர் அகவை கொண்டவன். அவன் தான் பிறந்த செய்தியை முதலில் தான் கேட்டதே அர்ஜுனனிடம் அவனை ஒப்பிடுவதாகத்தான். “அஸ்தினபுரியின் அர்ஜுனனுக்கு நான்குமாதம் இளையவன் நீ” என அவன் அன்னை அவனிடம் சொன்னாள். “உன்னை ஈன்றபோது வயற்றாட்டியும் அதையே சொன்னாள்.” அர்ஜுனனாக முயல்வதே அவன் இளமையாக இருந்தது. தேர்ந்த ஆசிரியர்களிடம் வில்பயின்றான். “ஒருநாள் நீ அஸ்தினபுரியின் இளவரசனுடன் வில்கோப்பாய். அன்று அவன் நீ அவனே என உணரவேண்டும்” என ஆசிரியர் அவனிடம் சொன்னார். அவன் வில்தேர்ந்தான், அர்ஜுனனைப்போல் மலைக்காடுகளில் அலைந்தான்.

திரிகர்த்தம் வழியாக அர்ஜுனன் படைகொண்டு சென்றபோதுதான் அவன் அர்ஜுனனை முதலில் பார்த்தான். அந்த கணத்தை அவன் பதினெட்டாண்டுகளாக எண்ணி எண்ணி காத்திருந்தான். அது அணுகும்தோறும் பதற்றம் கொண்டான். இரவுகளில் துயிலாமல் புரண்டான். இருளில் நின்று ஏங்கி அழுதான். அந்தநாளில் அவன் கால்கள் தளர உடல்நடுங்க முகம் வெளிர்த்து உதடுகள் உலர்ந்து விழிகள் ஒளிக்குக் கூச படைமுகப்பில் நின்றிருந்தான். அஸ்தினபுரியின் படை வருவதை கொம்புகள் அறிவித்தபோது அவன் விழுந்துவிடுவதைப்போல் உணர்ந்தான். மூச்சு வெம்மைகொள்ள விழி இருட்டி வந்தது. தொலைவில் அமுதகலக் கொடி தெரிந்தபோது கொம்புகள் முழங்க அரசகுடியினர் எழுந்து நின்றனர். அர்ஜுனனை அவன் தொலைவில் தேர்முகப்பில் பார்த்தான். பலமுறை ஓவியங்களில் பார்த்து உள்ளத்தில் வளர்த்தெடுத்திருந்த தோற்றம்.

ஆனால் அந்நிகழ்வை அவன் பல்லாயிரம் முறை உளம்நடித்திருந்தமையால் அது மிகச் சலிப்பூட்டுவதாக இருந்தது. அது எப்போது முடியுமென அவன் கணம் கணமென காத்திருந்தான். ஒவ்வொரு முறைமையாக முடிந்து அவன் அர்ஜுனனை அணுகியபோது நாக்கில் கசப்பென ஏதோ நிறைந்திருந்தது. அர்ஜுனன் அவனைத் தழுவி இன்சொல் உரைத்தான். “இவன் உங்களை எண்ணி வில்பயில்பவன், இளவரசே” என தந்தை அர்ஜுனனிடம் சொன்னது செவியில் விழுந்தபோது நெய் பற்றிக்கொள்வதுபோல சினம் பீறிட்டெழுந்தது. அக்கணமே வாளை உருவி அவனை வெட்டி வீழ்த்திவிடவேண்டும் என்பதைப்போல. நெஞ்சிலறைந்து வெறியோலமிடவேண்டும் என்பதுபோல.

அன்றுமுதல் அவன் அர்ஜுனனை வெறுத்தான். அர்ஜுனன் திரிகர்த்தத்தில் இருந்த எட்டு நாட்களில் இரண்டாம் முறை சுசர்மன் அவனை சந்திக்கவே இல்லை. அர்ஜுனன் வந்த மறுநாளே அவனுக்கு உடல்நலம் குன்றியது. காய்ச்சலும் வலிப்பும் எழ நினைவிழந்து மருத்துவநிலையில் கிடந்தான். அர்ஜுனன் சென்ற பின்னர் எட்டு நாட்கள் கழித்தே எழுந்தான். பிறகெப்போதும் அவன் அர்ஜுனன் என்னும் சொல்லை நாவால் சொல்லவில்லை. செவிக்குக் கேட்டால் உளம்வாங்காது ஒழிந்தான். அதை அறிந்தபின் எவரும் அதை அவனிடம் சொல்லவுமில்லை. மெல்ல மெல்ல அப்பெயரை எண்ணுவதையும் அவன் கடந்துசென்றான். ஆனால் அவன் கனவுகளில் அர்ஜுனன் காண்டீபம் ஏந்திய கையுடன் விழிகளில் ஏளனத்துடன் வந்துகொண்டே இருந்தான்.

அவன் தம்பியர் அவனாலேயே உருவாக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்த வெறுப்பை சொல்லில்லாமல் அவன் அளித்தான். அவர்களுக்கு அனைத்தையும் அளிக்கும் ஆசிரியனாகவும் சொல்துணைவனாகவும் ஆளும்தெய்வமாகவும் அந்த வெறுப்பு அமைந்தது. ஒருமுறை சத்யேஷு “இவ்வாறு நாம் அவனை வெறுக்காவிட்டால் இத்தனை ஆர்வத்துடன் வில்பயின்றிருப்போமா? மலைக்குடிகளாகிய நாம் இவ்வளவு விரிவாக பாரதவர்ஷத்தின் அரசியலை அறிந்திருப்போமா?” என்றான். அவன் சொல்வதென்ன என உடன்பிறந்தாருக்குப் புரியவில்லை. அவர்கள் வெறுமனே அவனை கூர்ந்து பார்த்தனர். “இவ்வெறுப்பால் நாம் அடைந்ததே மிகுதி. நாம் இதனால் பேணிவளர்க்கப்பட்டோம்” என்றான் சத்யேஷு. அவர்கள் நால்வருக்கும் அப்போதும் அது புரியவில்லை.

குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் சுசர்மனும் தம்பியரும் தங்கள் பிறவிகளின் இறுதிநிலையை அடைந்தனர். அங்கே அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை பெருவியப்புடனும் களிப்புடனும் கண்டடைந்தனர். நான் நான் என பெருகினர். இன்மை வரை சுருங்கினர். அக்கணம் வரை வாழ்ந்தமை அதற்காகவே என்பதுபோல் திளைத்தனர்.

அர்ஜுனனின் பிறையம்பு சத்யரதனின் தலையை அறுத்து வீசியது. அதைக் கண்ட பிறர் வேறெங்கோ அது நிகழ்வதென உணர்ந்தனர். சத்யவர்மன் நெஞ்சில் பாய்ந்த நீளம்புடன் தேருடன் வைத்து தைக்கப்பட்டான். சத்யகர்மனும் சத்யவிரதனும் தலையறுபட்டு தேரிலிருந்து விழுந்தனர். சுசர்மன் “கீழ்மகனே!” என்று அலறியபடி வில்லுடன் புரவியில் பாய்ந்தேறி அம்புகளை ஏவிக்கொண்டே அர்ஜுனனை நோக்கி பாய்ந்தான். அவன் தலையை அர்ஜுனனின் அம்பு வெட்டி வீழ்த்த புரவியிலிருந்து அவன் பக்கவாட்டில் விழுந்து துடித்தான். புரவி விசையழியாது விரைந்துசென்று அர்ஜுனனின் தேர்க்காலில் மோதி விழுந்தது.

சத்யேஷு தன் உடன்பிறந்தார் கொல்லப்பட்டதை பார்த்தான். முதல்முறையாக அவன் அந்த வெறுப்பை தனக்கு அப்பால் நிறுத்தி நோக்கினான். “ஏன்?” என அவன் வியந்த அக்கணமே அவன் கழுத்தை அறைந்து தலையை வெட்டிச் சரித்தது அர்ஜுனனின் அம்பு. அந்த வினா எங்கோ எஞ்சியிருந்தது. “உச்சிப்பொழுதாகிறது, அர்ஜுனா. அங்கே பகதத்தரை உன் தமையன் எதிர்கொள்கிறான். அவரை அவனால் வெல்லமுடியாதென்று எண்ணுகிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். தன்னைச் சூழ்ந்து சிதறிக்கிடந்த சம்சப்தர்களின் உடல்களை திரும்பி ஒருகணம் பார்த்துவிட்டு அர்ஜுனன் “செல்க!” என்றான்.

நூல் இருபது – கார்கடல் – 31

ele1பாண்டவர்களின் படைவிரிவை நோக்கியபடி காவல்மாடம் ஒன்றின் உச்சியில் இளைய யாதவர் நின்றிருந்தார். பிறைசூழ்கை மிக எளியது. அனைத்துப் படையினரும் இணையாக நின்றிருப்பது அது. அவ்வாறு நின்றிருக்கையில் பிறைவடிவம் இயல்பாகவே உருவாகி வரும். இரு விளிம்புகளும் எழுந்து வருகையில் பின்பக்கமாக வளையும் பிறை. திருஷ்டத்யும்னன் பிறைசூழ்கையை அமைத்தபோது துருபதர் நிறைவுகொள்ளவில்லை. “இது மிக எளியது…” என்றார்.

“எளிய சூழ்கைகளும் ஆற்றல்மிக்கவையே. கடினமான சூழ்கையை அமைக்கையில் நாம் அடையும் நிறைவை அவை அளிப்பதில்லை என்பதனால் அவை பயனற்றவை என்றாவதில்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இயற்கையில் உள்ள வடிவுகளிலிருந்து எழும் சூழ்கைகள் எளிய அமைப்பு கொண்டிருக்கும். ஆனால் அவற்றுக்குப் பின்னால் அவ்வடிவுகளை சமைக்கும் இயற்கைவிசைகளின் ஆற்றல் அமைந்துள்ளது.”

துருபதர் “மலர்ச்சூழ்கை எளியதே” என்றார். “அவ்வாறு தோன்றுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. எளிய வடிவங்களை ஒன்றன் மேல் ஒன்றென அமைத்து சிக்கலை உருவாக்கிக் கொள்கிறது இயற்கை. மலர்களின் தொடுப்பு எளிய வட்டமே. ஒன்றன்மேல் ஒன்றென மலரடுக்கு அமைந்து புல்லிவட்டத்தில் இணைகையில் அது சிக்கலானதாக ஆகிறது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சாத்யகி “நாம் மலர்சூழ்கையை அமைக்கலாமே?” என்று கேட்டான். “தாமரைச்சூழ்கை மிகமிக ஆற்றல்கொண்ட பொறி என்பார்கள்.”

திருஷ்டத்யும்னன் “ஏன்?” என்றான். “அவர்கள் நம் அரசரை கவர முயல்வார்கள் என்று அறிவோம். அவரையே தாமரைச்சூழ்கையின் நடுவே நிறுத்துவோம். அரசரைக் கவர அங்கர் வருவார்… நம் முதன்மை எதிரி அவரே. அனைவரும் சூழ்ந்து அவரை வீழ்த்துவோம்.” திருஷ்டத்யும்னன் “அவர் அவர்களில் முதன்மையானவர். ஆனால்…” என்றான். சாத்யகி “அவரே அவர்களின் முதன்மை ஆற்றல். நேற்றைய போரில் நம்மை முழுமையாக தோற்கடித்தவர். இன்று இளைய பாண்டவர் படைக்கு எழவியலா நிலையில் இருக்கிறார். நாம் உளம்சோர்ந்திருக்கிறோம். இன்று பிற அனைவரும் சேர்ந்து அங்கரை வீழ்த்தினோம் என்றால் நாம் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்வோம். நாளை இளைய பாண்டவர் எழுந்தால் மூச்சை ஊதியே கௌரவப் படையை சரித்துவிடுவார்” என்றான்.

பீமன் “அது தேவையில்லை” என்றான். “ஒருவனை அனைவரும் சூழ்ந்து தாக்குவதென்பது நம் அனைவருக்கும் இழிவு.” சாத்யகி “அவர் ஒருவரே நம் அனைவரையும் தாக்கி அழிப்பதைவிட அது குறைவான இழிவே” என்றான். “வெல்லமுடியாவிடில் சாவது மேல். சூழ்ந்து தாக்குவதை ஒழிக! அவ்வாறு வென்று என் தமையன் அரியணை அமரவேண்டியதில்லை” என்றான் பீமன். சாத்யகி “நாம் நேற்று சிதறடிக்கப்பட்டோம். இன்று என்ன நிகழுமென்று தெரியவில்லை. நம் முதன்மைவீரர் அம்புபட்டு கிடக்கிறார்” என்றான். பீமன் “நான் களத்தில் எந்த இரக்கத்தையும் காட்டப்போவதில்லை. ஆனால் ஒருவனை சூழ்ந்துகொண்டு அனைவரும் தாக்கினோம் என்னும் இழிவை எனக்காக சூடிக்கொள்ள மாட்டேன்” என்றான்.

யுதிஷ்டிரர் “அவன் சொல்வதும் மெய்யே. அத்தகைய சூழ்கை நமக்குத் தேவையில்லை. பிறைசூழ்கையே சிறப்பாக உள்ளது” என்றார். திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் தன் எண்ணத்தை சொல்லட்டும்” என்றான். “எல்லா சூழ்கைகளும் நன்றே” என்றபின் இளைய யாதவர் எழுந்துகொண்டு “நான் செல்லவேண்டியிருக்கிறது” என்று சால்வையை சுற்றிக்கொண்டார். “பிறைசூழ்கையே போதும்” என்றார் யுதிஷ்டிரர். அவையில் இருந்து ஏற்பொலிகள் எழுந்தன. பீமன் “நாம் உளம்சோர வேண்டியதில்லை. நமக்கு அவன் யார் என இப்போது தெரிந்திருக்கிறது. இன்று நான் அவனை நேருக்குநேர் எதிர்கொள்வேன். எண்ணிக்கொள்க, அவர்கள் இன்று பெருந்தோல்வியுடனேயே திரும்பிச்செல்வார்கள்!” என்றான்.

இளைய யாதவர் குறுகிய மூங்கில் கணுப்படிகளினூடாக வண்டுபோல் தொற்றி கீழிறங்கி வந்தார். அவரது மேலாடை காற்றில் பறந்தமையால் விண்ணிலிருந்து இறகு விரித்துப் பறந்து இறங்கி மண்ணில் நிற்பவர் போலிருந்தார். அங்கு காத்து நின்றிருந்த ஏவலன் அவரை அணுகி “அரசி தன் மாளிகை மீண்டுவிட்டார்” என்றான். “சொல்” என்று இளைய யாதவர் சொல்ல ஏவலன் அரசியின் சொற்களை மெல்ல முணுமுணுத்தபடி அவருடன் வந்தான். அவர் நின்று அவன் செல்லலாம் என்று கைகாட்டினார்.

இருளில் புரவியில் ஏறிக்கொண்டு தனியாக சீர்நடையில் சென்று அர்ஜுனனின் மருத்துவநிலையை அடைந்தார். வாயிலில் அரைத்துயிலில் இருந்த மருத்துவ ஏவலர்கள் காலடியோசை கேட்டு விழித்து திரும்பி அவரைப் பார்த்து பதறி எழுந்து நின்று தலைவணங்கினர். இளைய யாதவர் அணுகி வந்து தாழ்ந்த குரலில் “எப்படியிருக்கிறார்?” என்றார். “இன்னும் அதே நிலையில்தான்” என்று இளமருத்துவன் சொன்னான். முதிய மருத்துவர் உள்ளிருந்து பேச்சொலி கேட்டு எழுந்து வெளிவந்தார். தலைவணங்கி “இளைய யாதவருக்கு வணக்கம். நான் கலிககுலத்தோனாகிய கர்வடன், இங்கே தலைமை மருத்துவன். அரசே, இளைய பாண்டவரின் நான்கு மலர்களும் இன்னமும் இதழ் குவிந்தே உள்ளன” என்றார். இளைய யாதவர் தலையசைத்து அவரை வெளியே செல்லும்படி கைகாட்டினார். மருத்துவர்கள் வெளிவர அவர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

அர்ஜுனனின் அருகணைந்து அவர் தலையருகே அமர்ந்தார். அர்ஜுனனின் முகம் வெந்ததுபோல் காய்ச்சல் கொண்டிருந்தது. உதடுகள் உலர்ந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்தன. மூடிய இமைகள் வீங்கி ஆற்றுருளைக்கல்போல் தெரிந்தன. தாடிமயிர்கள் நனைந்து திரிகளாக படிந்திருக்க வாய் சற்றே திறந்து மெல்லிய மூச்சு ஓட அதுவரை ஒருவிளிப்பாடு அகலே காத்து நின்றிருந்த முதுமை அவ்வுடலில் வந்து முழுமையாக படிந்திருப்பதுபோல் தோன்றியது. இளைய யாதவர் அர்ஜுனனின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு குனிந்து அவன் காதில் “பார்த்தா!” என்று அழைத்தார். அர்ஜுனன் அதை கேட்கவில்லை. “பார்த்தா!” என்று அவர் மீண்டும் ஒருமுறை அழைத்தபோது அவனுக்குள்ளிருந்து மெல்லிய சுடரொன்று நடுங்கியது. “பார்த்தா!” என்று அவர் மூன்றாம் முறை அழைத்தபோது இமைகள் நலுங்கின. அவன் “ம்ம்” என்று மறுவிளி கேட்டான்.

காலஇடங்களுக்கு அப்பால் ஓரிடத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அது காளிந்தியின் கரை. கரிய பாறை மேல் மலரமர்வில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார். கீழே சிறுபாறை மீது கைகளை மார்பின்மீது கட்டியபடி அவரை நோக்கி அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்களைச் சூழ்ந்து நீரோசையும் காற்றோசையும் நிறைந்திருந்தன. “இது பிறிதொரு காலம், பாண்டவனே” என்று இளைய யாதவர் சொன்னார். “அன்று சென்று நின்று நான் இதை உன்னிடம் கேட்கிறேன். நீ எழ விழைகிறாயா? இங்கு இன்னும் எஞ்சியுள்ளதா?” என்றார். “ஆம். எனக்கு ஆணையிடப்பட்டதை நான் இன்னும் முடிக்கவில்லை” என்றான் அர்ஜுனன். “அனைத்தையும் செய்து முடித்தவன் ஆவநாழி ஒழிந்தவனும்கூட” என்று இளைய யாதவர் சொன்னார். “ஒழிந்து இங்கு அனைத்திலிருந்தும் பறந்தெழவே விழைகிறேன். இப்பிறவியில் இங்கு எச்சமென எதுவும் இருக்கலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

“நோக்குக, இவ்வினிய நீர்! இவ்விளங்காலை. இக்குளிர்காற்று. இங்கு அனைத்தும் எத்தனை இனிமை கொண்டுள்ளன! அமுதென்பதென்ன, புலன்கள் தொடுகையில் ஐம்பருக்களும் கொள்ளும் கனிவுதான் அது. மானுடன் உணரும் இன்பத்தையே விண்ணில் அமுதென வாற்றி வைத்திருக்கிறார்கள். பாற்கடல் என்பது என்ன? இவ்வனைத்திலும் பிரம்மத்தை உணரும் ஒருவனின் உள்ளப்பெருக்கு அல்லவா அது? அதை கடைந்தெடுக்கும் சுவை தெய்வங்களுக்கு உகந்தது. தேவர்களை அழிவற்றவர்களாக்குவது. பாண்டவனே அறிக, அந்த அமுது இங்கு அனைத்திலும் உள்ளது! மரத்தில் வேர்முதல் இலைவரை தேன் மறைந்திருப்பதைப்போல” யாதவரின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் “ஆம்” என்றான்.

“சிறிய வாழ்வில் புழங்குந்தோறும் இன்பமும் துன்பமும் இனிமையும் கசப்புமென இவ்வுலகு நிலைமாறி அலைகொள்கிறது. இங்கு செயல்யோகியென ஒருவன் மாறுகையில் துன்பங்கள் மீதும் கசப்பின் மீதும் ஆளுகை கொள்கிறான். இன்பத்தை தனித்தறியத் தொடங்குகிறான். ஞானத்தால் தவத்தால் அவன் வீடுபேறடையுந்தோறும் இனிமை மட்டுமே எஞ்சுகிறது. அமுதொன்றே எஞ்சும் ஒரு நிலையும் உண்டு. அதில் அமர்ந்தோர் யோகிகள். அவ்வமுதனைத்தையும் உதறி இங்கிருந்து செல்பவனே வீடுபேறடைபவன்” என்றார் இளைய யாதவர். “உன் நெற்றியின் ஊற்றுக்கண் திறந்து இனிமைப் பெருக்கு எழுந்து உடலின் ஒவ்வொரு கணுவும் உவகை கொள்ளும் தருணம் ஒன்றிலிருந்து முற்றிலும் உதறி மேலெழ இயலுமா உன்னால்?”

“ஆம், இக்கணம் அதை என்னால் உறுதியாக சொல்ல இயலும். இங்கிருக்கும் பேரின்பங்கள் அனைத்தும் திரண்டு ஒரு துளியென ஆகி என் நாவிற்கு எட்டும் தொலைவில் முழுத்திருந்தாலும் ஒதுக்கிவிட்டு முன்செல்லவே விழைவேன்.” இளைய யாதவர் நகைத்து “எனில் சொல்க, மீண்டெழ விழைகிறாயா? இப்போது இறப்பின் விளிம்பிலிருக்கிறாய். உன் ஒரு சொல்லில் வாழ்வையோ இறப்பையோ நீ தெரிவுசெய்ய இயலும், சொல்க!” என்றார். தயக்கமில்லாமல் “மீண்டெழவே விரும்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “இனிய மலர். தெய்வங்கள் அமர்ந்தருளும் நறுமணப்பீடம் கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் இதழ்களால் சூழப்பட்டது. உள்ளே செல்லும் வழி விரியத் திறந்திருக்கிறது. அதனுள் உள்ளன அனைத்து அழகுகளும் இனிமைகளும். காற்றில் எழுந்து பரவி அனைத்து சித்தங்களுக்குள்ளும் நுழைந்து அருகே இழுக்கின்றது அதன் நறுமணம்.”

“உள்ளே நுழைவது எளிது. அங்கு நுழைந்துள்ளது இனிய மது. பார்த்தா, உள்நுழைவோரில் பல்லாயிரத்தில், பல லட்சங்களில், பல கோடிகளில் ஒருவரே வெளியேற இயல்கிறது. மீண்டும் உள்நுழைய விழைகிறாயா?” என்றார் இளைய யாதவர். “ஆம், இன்னும் சில அம்புகள் எஞ்சியுள்ளன. யாதவனே, உனது அருளிருந்தால் நான் வெளியேறுவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க! நான் வெளியேறும் வழி எது?” இளைய யாதவர் அவனருகே குனிந்து “அங்கு உனது ஒரு துளியை நீ எஞ்சவிட்டுச் செல்லவேண்டும். பல்லி தன் வாலை அறுத்து உதிர்த்துவிட்டுத் தப்புவதுபோல. அதுவே ஒரே வழி” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “உனது மிகச் சிறந்த பகுதியை. நீ மிக விரும்பும் ஒரு பகுதியை” என்றார் இளைய யாதவர். “அது உனக்கு பிறிதொரு இறப்பென்றே ஆகும். அப்பேரிழப்பால் நீ அதை கடந்து செல்ல இயலும்.”

அர்ஜுனன் “ஆம், நான் அதற்கு ஒருக்கமே” என்றான். “எனில் எழுக!” என்று சொல்லி இளைய யாதவர் அவன் நெற்றிப்பொட்டை தன் கைவிரலால் தொட்டார். அவன் வலக்கால் இழுத்துக்கொண்டது. முகம் கோணலாகி உதடு வளைந்து எச்சில் வழியத்தொடங்கியது. உடலெங்கும் சென்ற வலிப்பு மேலும் மிகவே அவனிடமிருந்து முனகலோசை ஒன்று எழுந்தது. இளைய யாதவர் எழுந்து தன் ஆடையை சீர் செய்து கதவைத் திறந்து வெளிவந்தார். முதிய மருத்துவர் எழுந்து வணங்கி நிற்க “விழித்துக்கொண்டார். புலரி எழுகையில் எழுந்து படைமுகப்பிற்கும் வருவார். உரிய மருந்தும் உணவும் கொடுங்கள்” என்றபின் நடந்தார்.

ele1துரோணர் முந்தைய நாளிரவு முற்றிலும் துயில்நீத்திருந்தார். பருந்துச்சூழ்கையின் இடச்சிறகில் அதன் இறகுமுனைகளில் ஒன்றாக தன் தேர்மேல் நின்றிருக்கையில் அவ்வப்போது வெண்முகில்போல அவருடைய தன்னுணர்வின் மேல் துயில் வந்து மூடி மெல்ல கடந்துசென்றது. தன்னுணர்வை தக்கவைத்துக்கொள்ள அவர் முயன்றபோது குளிரலைபோல வந்து அறைந்து தூக்கி கொண்டுசென்று பிறதெங்கோ நிறுத்தி திகைப்புற்று மீளச் செய்தது.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வாழ்வில் திகழ்ந்து மீள்வதை அவரே விழித்தெழுகையில் வியப்புடன் நோக்கினார். நூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த மலைச்சிற்றூரான பிரமதத்திற்கு அவர் கிருபியுடன் வந்திறங்கினார். மலையில் வெட்டி எடுக்கப்படும் கல்லுப்பை ஏற்றிக்கொண்டு வந்து கிராமங்கள் தோறும் விற்கும் வணிகனான கலிகன். தேன்மெழுகு பூசிய ஈச்சம்பாய்களால் பொதியப்பட்ட உப்புக்குவை மீது அமர்ந்து கங்கையின் பெருக்கை நோக்கியபடி ஒழுகி வந்தபோது கரையோரமாக விலகிச்சென்ற ஒவ்வொரு ஊரிலும் அவர் சற்றுநேரம் வாழ்ந்து வாழ்ந்து மீண்டார். “என்ன எண்ணம்?” என்றாள் கிருபி. துரோணர் “மானுடனுக்கு ஒரு வாழ்க்கை மட்டும்தானே அளிக்கப்பட்டுள்ளது?” என்றார். கிருபி நகைத்துக்கொண்டு அவர் கைகளைப்பற்றி “ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது” என்றாள்.

கிருபியை அவர் அவளுடைய சிற்றூரின் குடிலில் சந்தித்தார். அவள் முதுமையால் இறுகிவிட்டிருந்தாள். அவர் உத்தரபாஞ்சாலத்தில் அவளுடைய ஊரைத் தேடி வந்திருந்தார். தன் குடில்வாயிலில் விறகுகளை பிளந்துகொண்டிருந்த அவளைக் கண்டதும் அவர் நடைதளர்ந்தார். முறத்தில் காய்கள் உலரவைக்கப்பட்டிருந்தன. அப்பால் மூங்கில்பாயில் நெல் காய்ந்தது. காகங்களை ஓட்டும்பொருட்டு கரிய மரவுரி ஒன்றை கழுகுவடிவில் செய்து நிறுத்தியிருந்தாள். அவர் அணுகுவதன் நிழலசைவைக் கண்டு நிமிர்ந்தாள். அவரைக் கண்டதும் முகத்தில் எந்த உணர்வுமாற்றமும் உருவாகவில்லை. அவர் முற்றத்தில் ஏறியதும் “வருக!” என்றாள்.

அவர் சாணிமெழுகிய திண்ணையில் களைப்புடன் அமர்ந்தார். அவள் உள்ளே சென்று கொப்பரையில் இன்நீருடன் வந்தாள். அவர் அதை வாங்கி அருந்தியபோது அந்தச் சுவை எத்தனை பழகியதாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டார். அவள் அவரைவிட்டுப் பிரிந்து நெடுநாட்களாகிவிட்டிருந்தது. அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலத்தின் அரசனானதுமே அவள் அவனுடன் சென்றாள். அங்கிருந்து சில ஆண்டுகளிலேயே அச்சிற்றூருக்குச் சென்றுவிட்டாள். அஸ்வத்தாமன் அவளை அரண்மனையில் தங்கவைக்க விழைந்தான். “நான் அரசி அல்ல, அந்தணப்பெண். அரசியாவது என்னால் இயலாது. ஆவேன் எனில் அது வீழ்ச்சி” என கிருபி சொன்னாள்.

அஸ்வத்தாமன் அவளுக்கு அளித்த எதையுமே அவள் பெற்றுக்கொள்ளவில்லை. தன்னந்தனியாக கிளம்பி அவன் அமைத்துக்கொடுத்த அக்குடிலுக்கு சென்றாள். அங்கே தனியாகவே தங்கினாள். அச்சிற்றூரின் தலைவர் அவளுக்குத் தேவையானவற்றை கொண்டுவந்து அளித்தார். அவள் அங்கே சிற்றூரின் சிறுமியருக்கு நெறிநூல்களை கற்பித்தும் பெண்களுக்குரிய வேள்விகளை இயற்றியும் வாழ்ந்தாள். அஸ்வத்தாமன் அவ்வப்போது வந்து அவளைப் பார்த்து மீண்டான். துரோணர் அவளை பார்க்கச்செல்வது குறைந்தது. அவர் வருவதை அவள் விரும்பவில்லை என்று தோன்றும். அவள் கண்களில் கனிவு இருக்காது. வாழ்க்கையை கடந்துசென்றுவிட்ட முதுமகள்களுக்கு விழிகளில் ஒரு கடுமை தோன்றுவதுண்டு. புருவங்களில் இருந்த நரைமயிர்கள் விழிகள்மேல் விழுந்துகிடக்க அவள் அவர் அறியாத நோக்கொன்றை கொண்டிருந்தாள்.

“நான் வரும்போது எண்ணிக்கொண்டேன், முன்பு நீ சொன்னதை. ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது என்று” என்றார். கிருபி “வாழ்க்கையை ஒரு துளியைக் கொண்டே நிறைத்துவிடமுடியும்” என்றாள். “ஆம், இங்கு வரும்போதெல்லாம் நான் அதையே உணர்கிறேன். இங்கே வந்து தங்கவேண்டும் நான்” என்றார் துரோணர். “இங்கே வில்லுடன் தங்க இயலாது” என்று கிருபி சொன்னாள். “ஆம், அதை உதறிவிட்டு வரவேண்டும்” என்று துரோணர் சொன்னார். “வில் உங்கள் கைப்பழக்கம்” என்று கிருபி சொன்னாள். அவர் திடுக்கிட்டு நோக்கினார். தன்முன் விரிந்திருந்த பாண்டவப் படைகளை உணர்ந்ததும் சற்றே நிலைநழுவியிருந்த வில்லை இறுகப்பற்றிக்கொண்டார்.

இத்தருணத்தில் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்கிறோமா? ஒரு வஞ்சத்தின் பொருட்டு இவையனைத்தையும் இழந்திருக்கிறோம். வஞ்சம் கொள்பவரிடம் தெய்வங்கள் கேட்கின்றன, எத்தனை? எவ்வளவு? எதுவரை? ஒவ்வொன்றும், அனைத்தும், இறுதிவரை என்று உரைக்கில் மட்டுமே வஞ்சத்தில் வெற்றியை அளிக்கின்றன. வஞ்சநிறைவின் இனிமையை அளிக்கின்றன. வஞ்சநிறைவு என்பது மூக்குற்றிப்பூவின் தேன். துளியினும் துளி. சிறுதேனீயால் மட்டுமே அதை அறிந்து தொட்டு எடுக்கமுடியும். வஞ்சம் கொண்டவனுக்கு வஞ்சமன்றி பிறிதெதுவும் எஞ்சுவதில்லை. வஞ்சத்திற்கு பின் வஞ்சமும் எஞ்சுவதில்லை. எத்தனை நூல்கள் மீளமீளச் சொல்கின்றன இவற்றை. எவரேனும் உளம்கொள்கிறார்களா? இயலாமையால் அன்றி எதன்பொருட்டேனும் வஞ்சத்தைக் கைவிட்ட மானுடர் உண்டா?

வஞ்சமும் இல்லையேல் எதைக்கொண்டு என் வாழ்க்கையை நிறைத்துக்கொள்வேன்? அந்தணனாக வாழவியலாதா என்ன? அதை கிருபி உணர்ந்திருந்தாளா? அன்று அவள் குடிலின் திண்ணையில் அமர்ந்திருந்தபோது பெருஞ்சினம் மூண்டெழ நீ உரைத்த ஒரு சொல்லில் இருந்து எழுந்தது என் ஆறாப் பெருவஞ்சம் என்று சொல்ல எண்ணினார். ஆனால் அச்சொல்லில் இருந்த சிறுமையை அவரால் தாளமுடியவில்லை. ஒரு பசுவுக்காகவா நீ துருபதனை தேடிச்சென்றாய் என்று அவள் கேட்கக்கூடும். கேட்பவள்தான் அவள். அவரால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. நெடுந்தொலைவு கடந்து அங்கே வந்திருந்தார். ஆனால் உடனே திரும்பிவிடவேண்டும் என்று தோன்றியது. கிளம்புகிறேன் என அவர் சொன்னபோது கிருபி ஒன்றும் சொல்லவுமில்லை. அவர் திரும்பி அந்த பொய்க்கழுகை பார்த்தார். புன்னகையுடன் நடந்தார்.

வானில் முகில்கள் ஒளிகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தன. கரிய இரும்பு உரசப்பட்டு மெருகேறுவதுபோல. கீழ்வானில் சில பறவைகளின் சிறகசைவு. அவர் பெருமூச்சுடன் இத்தனை மெல்ல காலம் ஒழுகும் ஒரு தருணத்தை முன்பு உணர்ந்ததே இல்லை என எண்ணிக்கொண்டார். இது இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதியின் கரையில் பிலக்ஷவனம் என்னும் காடு. இந்த இடைவழியில் இந்தக் காலையில் பதியும் முதற்காலடி என்னுடையதா என்ன? மழை பெய்துகொண்டிருந்தது. ஆஷாட மாதத்து இளமழை. சரத்வானின் மலைக்குடிலுக்கு நேர்கீழே திருஷ்டாவதி அருவியாகப் பெய்திறங்கி மலைப்பாறைகளில் சிதறி நுரைத்து நாணல்கூட்டங்களுக்கு நடுவே வழிந்தோடியது.

கண்ணீர் வழியும் முகத்தைத் தூக்கி துரோணர் கேட்டார் “என்னுள்ளும் அத்தகைய வஞ்சம் குடியேறுமா என்ன? அனலை கருக்கொண்ட கந்தகமலையாக நானும் ஆவேனா? என் காயத்ரி எனக்குள்ளேயே கருகிப்போவதுதான் அதைவெல்லும் ஒரே வழியா?” அவர் தோளை மெல்ல தொட்டு இளைய யாதவன் சொன்னான் “வில் என்பது ஒரு புல் மட்டுமே. என்றும் தனுர்வேதமென்பது புல்லை அறிந்துகொள்ளும் ஞானம்.” அவர் திகைப்புடன் அவனை நோக்கி “என்ன சொல்கிறாய்? நீ எப்படி இங்கே வந்தாய்?” என்றார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்?” என்றான் இளைய யாதவன். துரோணர் “ஏனென்றால் இந்த பூமியென்பது புல்லால் ஆனது” என்றார்.

மீண்டுமொரு கணம் விழித்துக்கொண்டு அப்போதும் புலரிமுரசு முழங்கவில்லை என்று உணர்ந்தார். எங்கிருக்கிறேன்? இது குருக்ஷேத்ரம். ஆனால் நான் இதோ என் மைந்தனுடன் இளவெயிலில் அம்பு பயின்றுகொண்டிருக்கிறேன். பொன்வெளிச்சத்தில் காலையிலெழுந்த சிறுபூச்சிகள் சுடர்களாக சுழல்கின்றன. இலைப்பரப்புகள் பளபளத்து அசைகின்றன. மிக அப்பால் ஆலயமணியின் ஓசை எழுகிறது. அம்புபயிலும் இளையோரின் சிரிப்பொலிகள். அவ்வண்ணம் சிரிக்க அதன்பின் எப்போதுமே மாணவர்களால் இயல்வதில்லை. மாணவர்களுடன் இருப்பதே என் உவகை. மாணவர்களுக்கு அளிக்கையில் நான் ஆசிரியன். மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கையில் நான் தந்தை. ஆசிரியன் என்பவன் என்றும் இளமை மாறாத மைந்தரின் தந்தை.

மாணவருடன் சிறு சொல்லாடி நகைத்தபடி ஆலமரத்தடியில் அமர்ந்தார். “அம்பைத் தொட்டதுமே அதை உணர்பவன் அதமன். அவன் உடல் பயிற்சியை பெற்றிருக்கிறது. அம்பருகே கைசென்றதுமே அதை உணர்ந்துகொள்பவன் மத்திமன். பயிற்சியை அவன் அகமும் பெற்றிருக்கிறது. அம்பென எண்ணியதுமே அம்பை அறிபவன் உத்தமன். அவன் ஆன்மாவில் தனுர்வேதம் குடியேறியிருக்கிறது.” அவர் முன் அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் கர்ணனும் ஏகலவ்யனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களை நோக்கியபடி அவர் சொன்னார். “எந்த ஞானமும் உபாசனையால் அடையப்படுவதே. அதன் நிலைகள் மூன்று. ஞானதேவியிடம் இறைஞ்சி அவளை தோன்றச்செய்தல் உபாசனை. அவளை கனியச்செய்து தோழியாகவும் தாயாகவும் தெய்வமாகவும் தன்னுடன் இருக்கச்செய்தல் ஆவாகம். முழுமை என்பதுதான் அவளேயாதல். அதை தன்மயம் என்றனர் மூதாதையர்.”

விழித்துக்கொண்டு அது கனவென்று உணர்ந்தார். “தந்தையே!” என்று அம்புடன் வந்த மைந்தனிடம் “செல்க!” என்று படபடப்புடன் சொன்னார். “இது பெரும்போர்க்களம். நான் புலரியில்  வில்லுடன் காத்து நின்றிருப்பதாக உணர்கிறேன்.” அஸ்வத்தாமன் திகைப்புடன் ஏறிட்டுப் பார்த்தான். எவர் எவரிடம் போரிடுகிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. வலப்பக்கம் நின்றிருந்த துருபதனை திரும்பி நோக்கி “இது எந்தப் போர்?” என்றார். துருபதன் நகைத்து “போருக்கு எழுந்த பின்னரும் போரை அறியாமல் இருக்கிறீர், துரோணரே. இது தேவர்களும் அசுரர்களும் அமுதின் பொருட்டு நிகழ்த்தும் பெரும்போர்” என்றான். “அது முன்பு நிகழ்ந்ததல்லவா?” என்று அவர் கேட்டார். “அது என்றும் நிகழ்வது. முடிவற்றது” என்று துருபதன் சொன்னான்.

“பாஞ்சாலனே சொல்க, நாம் எவர் தரப்பில் நின்று போரிடுகிறோம்? நாம் யார்?” என்று துரோணர் உரக்க கேட்டார். “இதிலென்ன ஐயம்? நாம் அசுரர்களின் பொருட்டு போரிடுகிறோம். அதோ நம்முன் பெருகி நின்றிருப்பவர்கள் தேவர்கள். அமுது அங்கிருக்கிறது. இன்னமும் அது எவராலும் முழுக்க வெல்லப்படவில்லை” என்றான் துருபதன். போர்முரசுகள் முழங்கத்தொடங்கின. துரோணர் தன் வில்லை கையிலெடுத்து துருபதனிடம் “நீ என்னருகே நில். நீ உடனிருந்தால் நான் வெல்லப்பட இயலாதவன்” என்றார். “நான் உங்கள் வலது கை என என்றும் உடனிருப்பேன்” என்று துருபதன் கூறினான். முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. அவர் விழித்துக்கொண்டு காற்றில் பறந்த தன் மேலாடையை எடுத்து சுற்றிகொண்டார். ஆனால் கவசங்கள் எடையுடன் உடலை அழுத்துவதாக உணர்ந்தார். அது அவருடைய கொடியின் படபடப்பென உணர்ந்ததும் விழிப்பு முழுமையாகியது.

கையுறைகளை இழுத்து சீரமைத்தார். என்ன கனவு அது? அதை முழுக்க தொகுக்க இயலவில்லை. கனவுகளின் பொருளின்மை எப்போதுமே துணுக்குறச் செய்கிறது. பொருந்தா பெருந்தொலைவுகளை அவை பறந்து தாவிச் சென்று இணைத்துவிடுகின்றன. இனிய நாட்களை நினைவுறுகிறேனா? அல்லது அவ்வினிய நாட்களில் எய்தாது எஞ்சியிருந்த சிலவற்றையா? அவர் தன் இடக்கையருகே ஒருவர் நின்றிருப்பதை உணர்ந்தார். எப்போது அவ்வுரு தன் தேரிலேறிக்கொண்டது என்று திகைத்து “யார்?” என்றார். அது ஒரு பெண் என்று உணர்ந்ததும் “இப்போர்க்களத்தில் எப்படி வந்தாய்? விலகு!” என்றார். அவள் தன் கையிலிருந்த கரிய சிறு மொந்தையை அவரை நோக்கி நீட்டினாள். “இது என்ன?” என்று அவர் கேட்டார். “இது அமுது. என்றும் நீங்கள் விழைந்தது” என்றாள்.

“இல்லை, நான் விழைந்தது இது அல்ல!” என்று அவர் சொன்னார். “இதுதான். இதை மூத்த அமுது என்பார்கள். உங்களுக்குரியது இதுவே” என்று அவள் அதை அவரிடம் நீட்டினாள். அதை கைகளில் வாங்கிக்கொண்டார். “உன்னை பார்த்திருக்கிறேன்… நீ யார்?” என்று அவர் கேட்டார். “என்ன சொல்கிறீர், ஆசிரியரே?” என்ற திரிகர்த்த நாட்டு அரசன் சுசர்மனின் குரல் கேட்டு அவர் விழித்துக்கொண்டார். சுசர்மன் தன் கையிலும் ஒரு மொந்தையை வைத்திருந்தான். “அகிஃபீனா கலந்த இனிய மது. போரில் ஊக்கத்தை அளிக்கும்” என்றான். “தாங்கள் தேர்தட்டில் சோர்ந்திருப்பதாகத் தோன்றியது ஆகவே அமுதுடன் நானே வந்தேன்.”

துரோணர் அந்த மதுவை அருந்தினார். அதில் கந்தகமணம் இருப்பது போலிருந்தது. “எரிமணம்” என்றார். “ஆம், நம் குருதியை எரியச்செய்யும்” என்றான் சுசர்மன். “ஆசிரியரே, உங்கள் வஞ்சம் அனலாகட்டும். இன்று அறம், நெறி, முறை என எதையும் நீங்கள் கருத்தில் கொள்வதில்லை என்று சொன்னதைப்போல எங்களை ஊக்கமடையச் செய்யும் பிறிதொன்றில்லை. அதையே எங்களுக்கும் சொல்லிக்கொண்டோம். அர்ஜுனன் இன்று படைமுகம் எழப்போவதில்லை. ஒருவேளை அவன் வந்தாலும் பதறாக் காலில் நின்று அசையா வில் கொள்ளப்போவதில்லை. இன்று நாம் அவன் உயிரை கொள்வோம்.” அவன் மதுக்கலத்தைத் தூக்கி அருந்தி “இன்று பாரதவர்ஷத்தின் பெருவீரனின் கதை முடிகிறது. அவனை பயிற்றுவித்த ஆசிரியராலேயே அவன் அழிகிறான்” என்றான்.

துரோணர் “ஆம்” என்றார். மொந்தையைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு “இன்று நான் பிறிதொருவன். மூத்தவளின் அருள் என்னுடன் திகழ்க!” என்றார். சுசர்மன் களிமயக்கில் உரக்க நகைத்து கைகளைத் தூக்கி தன் தம்பியரை நோக்கி “மூத்தவள் துணையெழுக! மூத்தவள் அருள்க!” என்றான். சம்சப்தர்கள் அவனுடன் சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டு நகைத்தார்கள்.

நூல் இருபது – கார்கடல் – 30

ele1அஸ்வத்தாமன் காவல்மாடத்தின் மேல் நின்று கருடச்சூழ்கை உருப்பெறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு சூழ்கை அவன் உள்ளத்தில் எப்போதும் மிக எளிய ஓர் எண்ணமாகவே எழுவது வழக்கம். முதல்நாள் போர் முடிந்ததுமே அன்றைய நிகழ்வுகள் என்ன, அதை நிகர்செய்யவோ நீட்டிச்செல்லவோ மறுநாள் ஆற்றப்படவேண்டிய பணி என்ன என்னும் வினாக்கள் அவன் உள்ளத்தில் எழுந்து முட்டிமோதும். ஒவ்வொருநாளும் போர் முடிந்த மறுகணமே அவன் உள்ளத்தில் எழுவது அவ்வெண்ணம்தான். அவன் நேராக காவல்மாடங்களை நோக்கியே செல்வான். தன் புண்களுக்கு மருந்திட்டுக்கொள்வதுகூட அங்கே அமர்ந்துதான். அவனுடன் மருத்துவ ஏவலரும் ஏறிவர மேலே அமர்ந்து அவன் நோக்கிக்கொண்டிருப்பான்.

படைகள் திரும்பிச்செல்வதை பார்த்துக்கொண்டிருக்கையில் அவன் உள்ளம் மெல்லமெல்ல எண்ணமொழிந்து கூர்மட்டும் கொண்டதாக ஆகும். அவர்களின் சோர்வும் எழுச்சியும் குலைவும் பிறிதொரு வகை ஒருங்கிணைதலும் அவன்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும். அதிலேயே அவன் அமைக்கவேண்டிய சூழ்கை என்ன என்ற செய்தி இருக்கும். மணல்மேல் காற்று தன் வடிவை வரைந்து காட்டுவதுபோல போரை ஆளும் தெய்வம் ஒன்று தான் விழையும் சூழ்கையை அவனுக்கு எழுதிக் காட்டும். அது தன் உளமயக்கு என அவன் அறிந்திருந்தாலும் உள்ளம் அவ்வாறு பருப்பொருளில் சில தோற்றப்பாவைகளாகவே எழமுடியும் என்று எண்ணினான்.

மழைநீர் பிரிந்தும் இணைந்தும் ஓடுவதுபோன்றது படைகள் பிரிந்துசெல்வது. தோல்வியை உணர்ந்தார்கள் என்றால் அவர்கள் தனிமானுடர்களாக சிதறிச்சிதறிப் பரவுவார்கள். பின்னர் சிறுசிறு குழுக்களாக மாறுவார்கள். ஓசையும் கொந்தளிப்பும் இருக்காது. நனைந்த ஆடை நிலத்தில் படிந்தமைவதுபோல படை களத்தில் நிலைகொள்ளும். ஈரவிறகு என அவன் எண்ணிக்கொள்வான். இதை பற்றவைக்கவேண்டும். இதன் செவிகளில் முரசறையவேண்டும். இதன் வாலை ஒடித்து முறுக்கவேண்டும். அவ்வெண்ணத்துடன் நோக்கியிருக்கையில் அந்தப் படையின் உருமாற்றங்களில் ஒன்றில் அவன் தன் சூழ்கையை காண்பான்.

பீஷ்மர் களத்தில் விழுந்த நாளில் துயரும் கசப்பும் கொண்டிருந்த கௌரவப் படை களத்தில் அமைந்த பின் மதுவண்டிகள் அதன் ஊடே விரிசல்கள்போல் பரவிய பாதைகளினூடாக செல்லத்தொடங்கின. மாட்டின் முடிப்பரப்புக்குள் உண்ணிகள் செல்வதுபோல என எண்ணியபடி அவன் பார்த்துநின்றான். மெல்லமெல்ல கௌரவப் படை ஊக்கம் கொள்ளத் தொடங்குவதை அவன் கண்டான். எங்கிருந்தோ பாடல் ஒன்று எழுந்தது. அந்த ஒலி மேலே கேட்கவில்லை, ஆனால் அதை ஏற்றுப்பாடியவர்களின் உடலசைவுகள் சேர்ந்தெழுந்த அலை கண்ணுக்குத் தெரிந்தது. அலை பரவி விரிந்து படையை மூடியது. அவன் அந்த ஊக்கம் எதனால் என வியந்தான். ஏவலனிடம் கேட்க நாவெடுத்தபோது அவனுக்கே தெளிந்தது, கர்ணன் களமெழவிருக்கிறான்.

அந்தச் செய்தி ஒரு சுடர் எனத் தோன்றியது. அந்தப் படைப்பெருக்கு அச்செய்தியெனும் கனலை பேணிக்கொண்டாகவேண்டும். அவன் வெறித்து நோக்கிக்கொண்டிருக்கையில் படைகளில் சுடரை அணையாது காக்கும் பீதர்நாட்டுக் கூண்டை கண்டான். ஆம், அரணிட்டுக் காக்கவேண்டும். அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் அதை சூழ்கையாக மாற்றிக்கொண்டான். கூண்டு. கூண்டு வண்டி. வண்டிச்சூழ்கை. மறுநாளுக்குரிய சூழ்கையை அங்கிருந்தே அவன் தோல்சுருளில் வண்ண மையால் வரையத் தொடங்கினான். வரைந்து முடித்ததுமே தோல்வியின் சலிப்பும் கசப்பும் அகன்று அவன் முகம் பொலிவுற்றது. கண்மூங்கில் வழியாக தொற்றி கீழிறங்கி தன் புரவியை நோக்கி ஓடினான்.

முந்தையநாள் படைகள் கொப்பளித்துக்கொண்டிருந்தன. வெற்றியை அவை அருகென கண்டுவிட்டிருந்தன. பாறைச்செறிவுக்குள் வந்தறைந்து கொப்பளித்து நுரைபெருக்கும் கடல் அலைகள் போலிருந்தன படைகள். ஒருதிசை நோக்கி பெருகிச்சென்ற படைப்பிரிவு ஒன்று இன்னொன்றுடன் முட்டி நுரைபோலவே கொந்தளித்து மீண்டும் பிரிந்தது. அவன் அந்த அலைக்கழிவை நோக்கிக்கொண்டிருந்தபோது இரு சிறகுகள் எழுந்து அணைவதை ஒருகணம் கண்டான். கருடச்சூழ்கையை உடனே உள்ளத்தில் உருவாக்கிக்கொண்டான். “எங்கே சுவடிச்சுருள்?” என்று கேட்டான். அதற்காக ஒருங்கி நின்றிருந்த ஏவலன் சுவடியை நீட்டினான். அவன் கைவிரல்களிலிருந்து விரிந்த சிறகுடன், கூரலகுடன் பருந்து எழுந்து வந்தது.

ஓர் எண்ணம் கைகள் வழியாக காட்சிவடிவாவது இன்மையிலிருந்து பொருள் ஒன்று எழுவதுபோல. அந்தப் பொருள் விதையாகி முளைத்து காடாவதுபோல அது சூழ்கையென்றாவது. அவன் சூழ்கையை இறுதிசெய்ததுமே அதை பூரிசிரவஸிடம் அளித்துவிடுவான். அவன் அதை பல உறுப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்குரிய படைப்பிரிவுகளை அமைப்பான். அந்தப் படைப்பிரிவுகளை பலபகுதிகளாக பிரித்து அவற்றுக்கான ஆணைகளை உருவாக்குவான். அகச்சொற்களில் இருந்து திரட்டி தான் உருவாக்கிய வரைவுச்சிற்பம் மீண்டும் உருவழிந்து சொற்களாக ஆவதை அஸ்வத்தாமன் வியப்புடன் நோக்கி நிற்பான். “உங்கள் சூழ்கை இப்போது எண்பத்தெட்டு ஆணைகளாக மாறிவிட்டது, பாஞ்சாலரே” என்று பூரிசிரவஸ் சொல்வான்.

அந்த ஆணை இருளுக்குள் புரவித் தூதர்கள் வழியாக படைகளுக்குள் பரவிச்செல்லும். தன் குடிலில் துயில்கொள்ள படுத்திருக்கும்போது அந்த ஆணைத்தொகை ஓசையில்லாமல் வலைபோல படைகளுக்குள் ஊடுருவி மூடிக்கொண்டிருப்பதை உள்ளத்தால் உருக்கொடுத்து நோக்கிக்கொண்டிருப்பான். முதன்மைப் படைத்தலைவர்களுக்கு மட்டுமே பூரிசிரவஸின் ஆணைகள் செல்லும். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆணைகளை மேலும் சிறு ஆணைகளாகப் பிரித்து ஆயிரத்தவர்களுக்கு அனுப்புவார்கள். ஆயிரத்தவர் அவற்றை நூற்றுவருக்கு அளிப்பார்கள்.

நீரில் புல்விதைகள் பரவுவதுபோல ஆணைகள் படைகளில் விரிந்தன. பின்னர் நீரில் உப்பு என கரைந்து அவை மறைந்தன. சொற்கள் மீண்டும் எண்ணமென்றாயின. தன்னுள் எண்ணமென இருந்தவை. சொல்லாகி வடிவமென்றாகி மீண்டும் சொல்லாகி சிதறி எண்ணமென்றாகி அமைந்துவிட்டன. தன் உடலே விரிந்து பரவி படை என ஆகி குருக்ஷேத்ரத்தில் கிடப்பதுபோல் நினைத்துக்கொள்வான். தன் உடலின் பேருரு. அதில் படைசூழ்கை ஒரு வியனுருவ எண்ணம். அந்நினைப்பு அவனை நிறைவுகொண்டு விழிசரியச் செய்யும்.

விழித்துக்கொண்டதுமே முதல் எண்ணமென எழுவது இறுதியாக உள்ளத்தில் கரைந்தழிந்த எண்ணத்தின் எஞ்சிய பருத்துளிதான். முகம் கழுவி இன்னீர் அருந்தியதுமே புரவியில் ஏறிக்கொண்டு காவல்மாடங்கள்தோறும் செல்லத்தொடங்குவான். துயிலெழுவதற்கான முரசுகள் ஒலித்ததுமே படைப்பரப்பு தேனீக்கூட்டம் கலையும் முழக்கத்துடன் உயிர்கொள்ளும். காலைக்கடன்களுக்கு விளக்குகளை கொளுத்தலாகாது என்பது ஆணை. பந்தங்களின் பொதுவான ஒளி மட்டுமே இருக்கும். பல்லாயிரம் கூழாங்கற்களில், கூரைப்பரப்புகளில் பட்டு அது களமெங்கும் பரவியிருக்கும். அந்த ஒளியே விழிதெளிய போதுமானது. படைவீரகள் கவசங்களும் படைக்கலங்களும் கொண்டு ஒருங்குவதை இருளுக்குள் நிழலசைவுகளாக காணமுடியும்.

கொம்புகள் எழுவதற்குள் அனைவரும் ஒருங்கி முடித்தாக வேண்டும். ஆயிரத்தவர் தலைவர்களின் கொம்போசைகள் இருளுக்குள் மாபெரும் யானைக்கூட்டம் ஒன்று நின்று ஒன்றோடொன்று செய்தி பரப்புவதுபோல எழுந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு படைப்பிரிவும் தனித்தனியாகத் திரள்வது இருள் அலைகொண்டு பருவடிவுகளாக மாறுவதுபோல தெரியும். ஆயிரத்தவர் தலைவர்கள் தங்கள் படைகள் சென்று நிலைகொள்ளவேண்டிய இடங்களை களத்தில் அடையாளப்படுத்தி அங்கே சிறிய நெய்விளக்குகளை ஏற்றிவைத்திருப்பார்கள். விளக்குகளின் எண்ணிக்கை, செறிவின் வழியாக அவை எழுத்துக்களாக ஆகிவிட்டிருக்கும். அவற்றை நோக்கி படைவீரர்கள் தங்களுக்கென வகுக்கப்பட்ட இடங்களில் சென்றமைவார்கள்.

ஒவ்வொருவரும் தங்களுக்குரிய இடங்களில் அமையும்தோறும் விழிநிறைக்கும் வடிவென படைசூழ்கை எழுந்துவரும். முந்தையநாள் தோல்சுருளில் அவன் வரைந்த வடிவின் வானுருத்தோற்றம். காலையொளியில் கண்துலங்கத் துலங்க அவ்வடிவைப் பார்ப்பது தெய்வமெழுகை என அவனை நெஞ்சுநிறையச் செய்யும். அந்தச் சூழ்கை அவனால் உருவாக்கப்பட்டது என்று எண்ணத் தோன்றாது. அவனை வாயிலாக்கி எங்கிருந்தோ வந்தது. பல்லாயிரம் உள்ளங்களினூடாக பல்லாயிரம் உடல்களில் தன்னை நிகழ்த்திக்கொண்டது. மண்ணிலுள்ள பேருருக்கள் எல்லாம் எங்கோ விண்ணில் துளியென அணுவென இருந்துகொண்டிருப்பவை. ஏதோ தெய்வத்தின் கனவில் ஒரு கணம் இது.

அவன் சிறகுவிரித்து நின்றிருந்த பருந்தை பார்த்துக்கொண்டிருந்தான். அதன் தலையில் அலகு இன்னும் கூர்கொள்ளவில்லை. விழிமணிகள் ஒளிகொள்ளவில்லை. ஆனால் இறகுகளை திரட்டிக்கொண்டு அது மேலும் மேலும் பெருகிக்கொண்டிருந்தது. எழுந்து வானில் பறந்துவிடக்கூடும். அவனுக்கு மெல்லிய புன்னகை எழுப்பும் எண்ணம் ஒன்று எழுந்தது. அவ்வாறு பறந்து எழுந்து அகன்றுவிட்டால் என்ன ஆகும்? கௌரவப் படையே அகன்றுவிட்டால்? எங்கோ வானிலெழுந்து விண்முகில்களில் ஒன்றில் சென்று அமர்ந்துவிட்டால்? அவன் அருகே நின்றிருந்த ஏவலன் “அரசே” என்றான். ஒன்றுமில்லை என அவன் கையசைத்தான்.

காவல்மாடத்திலிருந்து இறங்கி அவன் புரவிநோக்கி சென்றான். ஏறி அமர்ந்து கடிவாளத்தை சுண்டியபோது எதிரே பூரிசிரவஸ் புரவியில் வருவதைக்கண்டு இழுத்து நிறுத்தினான். அருகே வந்த பூரிசிரவஸ் இருளுக்குள் வெண்பற்கள் மின்ன “படை முற்றொருங்கிவிட்டது, பாஞ்சாலரே” என்றான். “இது தன் இரையை கவ்விக் கவரும் என்பதில் ஐயமில்லை.” அஸ்வத்தாமன் படைசூழ்கை முழுமை பெறுந்தோறும் அதன் குறைகளை மட்டுமே பார்க்கும் விழி கொண்டவனாக மாறுவது வழக்கம். பூரிசிரவஸின் சொற்களால் அவன் தன் கனவிலிருந்து மீண்டான். “அங்கே வட எல்லையில் காந்தாரப் படைகளின் மூன்றாவது பிரிவு இன்னமும் ஓசை அடங்கவில்லை. அங்கு சென்று நிகழ்வதென்ன என்று பாருங்கள். ஒருங்கமையவில்லை என்றால் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்” என்றான். “ஆணை” என்று தலைவணங்கி பூரிசிரவஸ் கடந்து சென்றான்.

அஸ்வத்தாமன் புரவியில் சீர்நடையாக படைகளின் நடுவே சென்றான். பிறிதொரு காவல் மாடத்தின் மீதேறி அதன் உச்சிக்குச் சென்று அங்கிருந்து படைசூழ்கையை பார்த்தான். அது தன் இறகுகளை பாண்டவப் படை நோக்கி விரித்திருந்தது. அதன் கூரலகில் கர்ணனின் பொற்தேர் வந்து நிற்பதை அவன் கண்டான். அதன் தேர்த்தட்டில் கர்ணன் இரு கைகளையும் மார்பில் கட்டியபடி நின்றிருந்தான். அத்தனை தொலைவில் அவனை பார்த்ததுமேகூட அஸ்வத்தாமன் சிறு அமைதியின்மை ஒன்றை அடைந்தான். கர்ணனிடம் அவன் ஏதோ ஒரு மாற்றத்தை கண்டான்.

படிகளில் இறங்கும்போது தன்னுடன் வந்த ஏவலனிடம் “சந்திரகீர்த்தியை என்னை வந்து பார்க்கச் சொல்” என ஆணையிட்டான். அவன் அடுத்த காவல்மாடத்திற்கு செல்வதற்குள் சந்திரகீர்த்தி அங்கே வந்திருந்தான். அவனுடைய அஞ்சிய தயக்கம்கொண்ட உடலைக் கண்டதும் அவன் அமைதியின்மை பெருகியது. எரிச்சலாக அது மாறியது. “என்ன?” என்றான். சந்திரகீர்த்தி “ஒவ்வாச் செய்திதான். உறுதிப்படுத்திய பின் சொல்லலாம் என எண்ணினேன். மேலும் படைகளெழும் இத்தருணத்திற்குரியதா அது என்னும் ஐயமும் கொண்டேன்” என்றான். “சொல்க!” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் முழுதுளத்துடன் இருக்கிறாரா?”

அவன் கேட்பதை புரிந்துகொண்டு சந்திரகீர்த்தி சொல்காத்தான். “அவர் கைகளை மார்பில் கட்டியிருக்கிறார். நேற்று விஜயத்தை ஊன்றி நாணேற்றி அதைப் பற்றி தலைநிமிர்ந்து நின்றிருந்தார்” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி சில கணங்களுக்குப் பின் “நேற்று அவரை சந்திக்க எவரோ வந்திருக்கிறார்கள்” என்றான். அஸ்வத்தாமன் திகைத்து “அங்கரை சந்திக்கவா? எங்கிருந்து? சம்பாபுரியிலிருந்தா?” என்றான். “அல்ல. பாண்டவப் படைகளில் இருந்தும் அல்ல. வேறு எங்கிருந்தோ” என்று சந்திரகீர்த்தி சொன்னான். “மிக மந்தணமான வருகை அது. அங்கே எப்படி அவர்கள் வந்தார்கள் என்பதே புரியவில்லை.”

“இச்செய்தி அரசருக்கு அறிவிக்கப்பட்டதா?” என்றான் அஸ்வத்தாமன். “இல்லை. இது எனக்கே சற்று முன்னர்தான் தெரியவந்தது. இன்னமும் உறுதி செய்யப்படாத செய்திதான். வந்தவர் எவரென்றும் தெளிவில்லை. இருவர் பெண்கள் என்றனர்.” அஸ்வத்தாமன் “சம்பாபுரியிலிருந்தா?” என்று உரக்க கேட்டான். “எங்கிருந்தென்று தெரியவில்லை. நமது படை எல்லையை அவர்கள் கடந்ததை மட்டுமே என் ஒற்றன் பார்த்திருக்கிறான். மேலும் செய்திகளை திரட்டி அனுப்பும்படி சற்று முன்னர்தான் என் படையினருக்கு செய்தி அனுப்பியிருக்கிறேன். ஏதேனும் உறுதியான செய்தி வந்த பின்னர் அதை அரசருக்கு அறிவிக்கலாம் என்று எண்ணினேன்” என்றான் சந்திரகீர்த்தி.

அஸ்வத்தாமன் சினத்துடன் “அறிவிலிகள்! அறிவிலிகள்!” என்றான். “படைக்குள் இருவர் வந்து சென்றதைக்கூட நோக்கவில்லை என்றால் ஒற்றர்வலை எதன் பொருட்டு?” சந்திரகீர்த்தி மறுமொழி சொல்லாமல் உடன் வந்தான். “இப்போதே செல்க! இன்னும் சற்று நேரத்தில் வந்தது யார், என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரிந்தாகவேண்டும்” என்றான். “ஆணை” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் தணிந்து “என்ன நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது இப்பெரும்பிழை?” என்றான். “நேற்று நம் படைகள் அனைத்துமே கள்வெறியில் இருந்தன. அங்கரும் இரவு நெடுநேரம் படைகளுடன் அமர்ந்து மதுவருந்தி களித்திருக்கிறார். கௌரவ படைப்பிரிவில் மதுக்களியின்றி துயின்ற எவரும் நேற்று இருந்திருக்க வாய்ப்பில்லை” என்றான் சந்திரகீர்த்தி.

“அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று அஸ்வத்தாமன் உரக்க சொன்னான். “அரசே, அது அங்கரை பார்க்க வந்த இரு நாகர்கள் என்று தோன்றுகிறது” என்று சந்திரகீர்த்தி சொன்னான். “அப்பகுதியிலிருந்த நம் புரவிகள் இரவெல்லாம் அமைதியிழந்திருக்கின்றன. அவை நாகங்களை மட்டுமே அவ்வாறு அஞ்சுபவை. அவர்களால் மட்டுமே அத்தனை ஓசையின்றி நுழையமுடியும்” என்றான். அஸ்வத்தாமன் “ஆனால்…” என்றான். சந்திரகீர்த்தி பணிவுடன் இடைமறித்து “அரசே, அவருக்கும் நாகர்களுக்குமான உறவு நாம் அறிந்ததைவிட ஆழம் கொண்டது. அவரை நாகர்கள் தொடர்ந்து வந்து சந்திக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது” என்றான்.

“அங்கே சிபிரத்தின் மாளிகையில் இருந்து அவர் கிளம்பும்போதுகூட யாரோ ஒரு நாகன் வந்து அவரை சந்தித்திருக்கிறான். தன் தோளில் பெரிய மூங்கில் கூடை ஏந்திய ஓங்கிய உடல்கொண்ட முதிய நாகன். அவன் தோன்றியதை வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். மறைந்ததை பார்க்கவில்லை. எவ்வண்ணம் அரண்மனையில் எழுந்தான் என்று எவருக்கும் தெரியவில்லை. இப்போர்க்களம் நாகர்களின் நிலமும்கூட. நாம் நின்றிருக்கும் காலடிக்குக் கீழே அவர்களின் கரவுப்பாதைகள் செறிந்துள்ளன. நினைத்த இடத்தில் எழ இயல்வதனால்தான் அவர்களை இன்னமும் முற்றழிக்க இயலவில்லை என்றார்கள்.”

அஸ்வத்தாமன் “வந்தது நாகர்கள் அல்ல, ஐயமில்லை” என்றான். சந்திரகீர்த்தி விழிசுருக்கி நோக்க “அறிவிலி! நாகங்களுக்கு நிலஎல்லையோ படைஎல்லையோ இல்லை. நினைத்த இடத்தில் விதை முளைத்தெழுவதுபோல் மண் கீறி எழுபவர்கள் அவர்கள். வந்தவர்கள் நமது எதிரித் தரப்பை சார்ந்தவர்கள். நம் எல்லைக்கு அப்பால் இருப்பவர்கள். எல்லையைக் கடந்து கரந்து உள்ளே வந்திருக்கிறார்கள்” என்றான். பின்னர் “பெரும்பாலும் வந்தவர்கள் பெண்கள்” என்றான்.

சந்திரகீர்த்தி “அதை எவரும் உறுதிப்படுத்தவில்லை” என்றான். “வந்தவர்கள் இத்தனை மந்தணமாக வரமுடியுமென்றால் பெண்களாகவே இருக்க முடியும். நமது படைப்பிரிவில் எங்கு அஸ்தினபுரியின் தொன்மையான ஷத்ரிய படைப்பிரிவினர் இருந்தார்களென்று பாருங்கள். அஸ்தினபுரியின் அரசகுடியினர் எவரேனும் வந்து அறுதி ஆணையிட்டால் அதை நம் படைப்பிரிவினராயினும் அவர்களால் மீற இயலாது. அவ்வாறு அறுதி ஆணையிடும் தகைமை இப்போது இப்போர்க்களத்திற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இயலும். பெண்களே இப்போது போருக்கு வெளியில் இருக்கிறார்கள். திருதராஷ்டிரர் ஆணையிடலாம். ஆனால் அவர் உடலை எவரும் அறிவார். ஆகவே…”

சந்திரகீர்த்தி திகைத்து நின்று திரும்பி “யாதவப் பேரரசி! ஐயமில்லை! யாதவப் பேரரசியேதான்!” என்றான். அஸ்வத்தாமன் “ஆம்” என்றான். சந்திரகீர்த்தி “அவர்களைப் பார்த்த ஐவரை அழைத்து வரச்சொல்லியிருக்கிறேன்” என்றான். “அவர்களிடம் ஒன்றை மட்டும் உசாவுக! வந்தவர்கள் சிறிய உடல் கொண்டவர்களாக இருந்தார்களா? வெள்ளை ஆடையால் முகம் மறைத்திருந்தார்களா? அங்கரின் குடிலுக்குள் அவர்கள் எத்தனை பொழுது இருந்தார்கள்?” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி தலைவணங்கினான். “செல்க!” என்று கைகாட்டிவிட்டு அஸ்வத்தாமன் தன் புரவியில் முன்னால் சென்றான்.

மேலும் இரு காவல்மாடங்களின் மீதேறி படைசூழ்கையை நோக்கிவிட்டு அஸ்வத்தாமன் வளைந்து துரியோதனன் தலைமை வகித்த சிறகின் முனையை அடைந்தான். இருபுறமும் துச்சாதனனும் துச்சகனும் நின்றிருக்க துரியோதனன் கையில் இருந்த கதையை பொறுமையிழந்து மெல்ல சுழற்றியபடி தேர்த்தட்டில் நின்றிருந்தான். அருகணைந்து கர்ணனை முந்தைய நாள் குந்தி சந்தித்திருக்கக் கூடுமென்பதை கூறலாமா என்று அஸ்வத்தாமன் எண்ணினான். ஆனால் அதனால் எப்பயனுமில்லை என்று தோன்றியது. துரியோதனன் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் குறைப்பதை அன்றி வேறெதையும் அது இயற்றாது.

தன் எண்ணத்தை தானே விலக்கும் பொருட்டு கைவீசி தலையை அசைத்தபடி புரவியின் கடிவாளத்தை இழுத்து திருப்பினான். அவனுக்கு எதிரே புரவியில் வந்த சந்திரகீர்த்தி அருகே வந்து தலைவணங்கினான். கடிவாளத்தை இழுத்து புரவியை சற்றே திருப்பி நின்று “சொல்” என்றான் அஸ்வத்தாமன். “அரசே, நேற்று வந்தவர் இந்திரப்பிரஸ்தத்தின் யாதவ அரசியாகவே இருக்க வாய்ப்பு. குற்றுடல் கொண்டவர். வெள்ளையாடை அணிந்தவர். அவர்கள் ஒரு விரைவுத்தேரில் வந்து குறுங்காட்டில் இறங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து அவர்களை எவரோ ஒருவர் நம் எல்லைக்கு கொண்டுவந்திருக்கிறார். எல்லையிலிருந்த காவல்வீரர்கள் அவரை முழுதுறப் பணிந்து உள்ளே வரவிட்டிருக்கிறார்கள்.”

அஸ்வத்தாமன் பெருமூச்சுவிட்டு “எத்தனை பொழுது அவர்கள் உள்ளிருந்தார்கள்?” என்றான். “ஒருநாழிகைப் பொழுது. அதற்கு மேலில்லை.” அஸ்வத்தாமன் “எப்படி திரும்பிச்சென்றார்கள்?” என்றான். “வந்தது போலவே, மெல்லிய வெண்ணிழலாக, எந்தத் தடயமும் எஞ்சாமல்” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் “அங்கர் அவரை பின் தொடர்ந்து சென்று வழியனுப்பினாரா?” என்று கேட்டான். “ஆம், தன் குடில் வாயில் வரைக்கும் அவர் வந்தார்.” அஸ்வத்தாமன் “குடிலின் படிகளில் இறங்கினாரா?” என்றான். “இல்லை அரசே, குடில் வாயிலிலேயே நின்றார்” என்றான் சந்திரகீர்த்தி. “அரசி திரும்பிச்செல்கையில் மீண்டுமொருமுறை திரும்பி நோக்கி விடைபெற்றாரா?”

சந்திரகீர்த்தி “நிகழ்ந்த அனைத்தையும் சொல் சொல்லென உரைக்கக் கேட்டேன். அவர்கள் உவகையுடன் பிரிந்தனர்” என்றான். “அங்கர் பின்னால் சென்றிருக்கக் கூடுமா?” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் அந்த வாயிலிலேயே நின்றிருந்தார், கட்டுண்டவர்போல்” என்றான் சந்திரகீர்த்தி. “ஆம், கட்டுண்டு” என்று அஸ்வத்தாமன் சொன்னான். அவன் முகம் மலர்ந்தது. “நன்று, நாம் அஞ்சவேண்டியது எதுவுமில்லை என்று எண்ணுகிறேன்” என்றான்.

சந்திரகீர்த்தி ஆறுதல் கொண்டு “இத்தனை பெரிய உளவுப்பிழை என் தொழிலில் நிகழுமென்று எண்ணியதே இல்லை. இதன் விளைவென்ன என்று எண்ணுகையில் உளம் பதைக்கிறது. அரசே, இப்போரில் உயிர் கொடுத்தாலொழிய என் அகம் அடங்காது” என்றான். அவன் தோளைத் தட்டி “அஞ்சற்க! இது நமது எண்ணத்திற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகளால் ஆன வெளி. இங்கு ஒவ்வொருவரும் களம்படுகிறோம். அதற்கு முன் முற்றாக ஆணவம் அழிகிறோம். தெய்வங்களுக்கு முன் தோற்ற பின்னரே மானுடர் மானுடரிடம் தோற்கிறார்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றான். சந்திரகீர்த்தி பெருமூச்செறிந்தான்.

அஸ்வத்தாமன் புரவியை இழுத்து செல்கையில் “அரசே…” என்று சந்திரகீர்த்தி மீண்டும் அழைத்தான். அஸ்வத்தாமன் திரும்பிப் பார்த்தான். “இதை ஒரு வீரன் மட்டும் தயங்கியும் குழம்பியும் ஐயத்துடன் சொன்னான். அந்த அறைக்குள் பிறிதொருவர் இருந்ததாகவும் அங்கர் சிலமுறை அறியாது விழிதிருப்பி உள்ளிருந்தவரை பார்த்ததாகவும் அவன் உணர்ந்திருக்கிறான்.” அவனை சில கணங்கள் நோக்கியபின் மறுமொழி கூறாமல் அஸ்வத்தாமன் புரவியை திருப்பி கடந்து சென்றான்.

மெல்ல மெல்ல அவன் படைகளில் அமிழ்ந்துகொண்டிருந்தான். அதை மேலிருந்து பார்த்த நினைவு அவனில் எஞ்சியிருந்தது. அது குறைந்து குறைந்து அவன் படைகளில் ஒருவனாக ஆனான். படையின் முழுமை அவன் சித்தத்திலிருந்து மறைந்தது. இனி அந்திமுரசு கொட்டும்வரை அவன் அப்படைசூழ்கையின் ஒரு சிறு உறுப்பு மட்டும்தான். அவனுக்கு ஆணையிடப்படுவதை அவன் ஆற்றுவான். தான் வரைந்த தெய்வத்திற்கு பூசகனாக தானே ஆவதுபோல. அத்தெய்வம் அவன் மேல் வெறியாட்டுகொண்டு எழுவதுபோல.

அஸ்வத்தாமன் கௌரவப் படைகளின் முகப்பிற்கு சென்றான். வலச்சிறகில் அவனுடைய இடம் ஜயத்ரதனுக்கு அருகே இருந்தது. புரவியிலிருந்து இறங்கி தேர்மேல் ஏறிக்கொண்டான். எதிரே விரிந்திருந்த பாண்டவப் படையை பார்த்தான். பிறை நிலவு இருபுறமும் இழுபட்டு நீண்டு மெல்ல வளைந்துகொண்டிருந்தது. அவனுக்கு யானையின் இரு தந்தங்கள் என்று தோன்றியது அது. நடுவே யானையின் மத்தகம். இரு நீர்த்துளி விழிகள். வில்லை ஏந்தி நிலைநிறுத்திய பின் முரசொலிக்காக செவிகூர்ந்து நின்றான்.

நூல் இருபது – கார்கடல் – 29

ele1குடில் கதவின் படலில் கை வைத்த குந்தி அரவுமணம் பெற்ற புரவிபோல் உடல் சிலிர்த்து நின்றாள். “இங்கே எவரோ இருக்கிறார்கள்” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “இந்த அறைக்கு அடியில் நிலவறை ஏதேனும் உள்ளதா?” என்றாள் குந்தி. “அன்னையே, இது குருக்ஷேத்ரக் களம்… இது பாடிவீடு” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இங்கே எவரோ இருக்கிறார்கள். காலடியில். ஆழத்தில்” என்றாள் குந்தி. கர்ணன் வெறும் நோக்குடன் நின்றான். “இங்கே மறைந்திருப்பவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு உன்மேல் ஆதிக்கம் இருக்கிறது. அவர்கள் எனக்கெதிராக உன்னை சிறைகட்டி வைத்திருக்கிறார்கள்” என்று அவள் சொன்னாள்.

அவன் அதற்கும் மறுமொழி சொல்லாமல் நின்றது அவளில் சீற்றத்தை உருவாக்கியது. “நீ என்னிடமிருந்து மறைப்பது என்ன?” என்றாள். அவன் முகம் மாறவில்லை. “என்மேல் கொண்ட வஞ்சத்தை நீ மறைக்கவில்லை. அதற்கப்பால் என்ன?” என்று அவள் மீண்டும் கேட்டாள். கர்ணன் “இதற்கெல்லாம் நான் என்ன மறுமொழி சொல்ல முடியும்? நான் எதையும் மறைக்கவில்லை. ஆனால் ஆழங்களில் திகழ்பவை என்ன என்று அவை வெளிவரும்போது மட்டுமே நாமனைவரும் அறிகிறோம்” என்றான். குந்தி சீற்றம் கொண்டபோது அவள் புன்னகைப்பதுபோல தோன்றியது. “வஞ்சப்பேச்சை சகுனியிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பாய்” என்றாள்.

அவள் மெல்ல உருமாறுவதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவள் விழிகளில் அவன் அதுவரை அறிந்திராத கூர்மை எழுந்தது. களிப்பாவை கோரி அழுதுசீறும் சிறுமி போலவும் மானுடம் மேல் காழ்ப்புகொண்ட முதுமகள் போலவும் ஒரேதருணத்தில் தோன்றினாள். “நான் எதையும் பெறாமல் கிளம்பிச்செல்கிறேன் என எண்ணி நீ ஆறுதல் கொண்டாய் அல்லவா?” என்றாள். கர்ணன் “நீங்கள் துன்புற்று என்னையும் துன்புறுத்த விழைகிறீர்கள்” என்றான். “நான் உன்மேல் தீச்சொல்லிடுவேன் என்றபோது நீ அகத்தே ஏளனம் கொண்டாய் அல்லவா?” என அவள் கேட்டாள்.

கர்ணன் துயரம் நிறைந்த விழிகளால் நோக்க “நீ அவ்வாறுதான் எண்ணுவாய். ஏனென்றால் நீ பெண்களின் உள்ளத்தை அறிந்ததே இல்லை. உன் இரு துணைவியரும் உன்னை இருவகையில் துறந்தனர். உன் வளர்ப்பன்னையுடன் உனக்கு உளஒருமை இல்லை. நீ விழையும் பெண் உன்னை கடும்வெறுப்புடனன்றி எண்ணமுடியாதவள்” என்றாள். கர்ணனின் உடல் நடுங்கத் தொடங்கியது. அவன் உதடுகள் சொல்லின்றி மெல்ல அசைந்தன. “ஏனென்றால் நீ உன்னைப் பற்றி அன்றி எதையும் எண்ணியதில்லை. நீ உன் தோழனுக்காக இவ்வாறு நிலைகொள்வதாக சொல்லிக்கொள்கிறாய். அது பொய். நீ எண்ணுவதெல்லாம் உன்னைப்பற்றி மட்டுமே.”

கர்ணன் கால் தளர்ந்தவன்போல் சற்றே பின்னடைய குந்தி திரும்பி அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாள். “நீ பிறனைப் பற்றியும் எண்ணுபவன் என்றால் சொல், எத்தனை முறை உன் மைந்தரைப் பற்றி எண்ணினாய்? என் குருதியிலெழுந்த உன் மைந்தரை சூதர்களென அடிமைப்பணிக்கு அனுப்பியபோது ஒருநாளேனும் அவர்களின் உள்ளத்தைப் பற்றி எண்ணினாயா? எண்ணியிருக்கமாட்டாய்” என்று குந்தி சொன்னாள். “முலையூட்டாத அன்னையை குழந்தை வெறுப்பதுபோல் தன்னில் ஒரு பகுதியை உருக்கி தனக்கு அளிக்காத ஆண்மகனை பெண் வெறுக்கிறாள். நீ உன்னில் ஒரு துளியையும் விட்டதில்லை. இரும்பில் வார்த்த சிலை என இத்தனை காலமும் இருந்திருக்கிறாய். நீ என்னை புரிந்துகொள்ளமாட்டாய் என நானும் அறிந்திருந்தேன். ஏனென்றால் நீ எவரையுமே புரிந்துகொள்ளவில்லை.”

கர்ணன் மெல்ல முனகினான். குந்தி “அறிந்துகொள், நீ இந்த குருக்ஷேத்ரக் களம்விட்டு மீளமாட்டாய். ஏனென்றால் நீ எவரேனும் ஆகுக, நீ பொருதிக்கொண்டிருப்பது இந்த யுகத்தின் தலைமகனிடம். நாளைய யுகத்தின் படைப்பாளனிடம். நீ வெல்லவே முடியாது. எவரும் வெல்லமுடியாது. எதுவும் தடைநிற்க இயலாது. நான் பதைப்பது அவன் வெல்லவேண்டும் என்பதற்காக அல்ல. அவன் வெல்வான். என் தவிப்பு அந்த வேள்வியில் என் மைந்தர் அவிப்பொருளாகிவிடக்கூடாது என்பதற்காக. ஆனால் நீ அழிவாய். இந்த குருக்ஷேத்ர மண்ணில் நெஞ்சுடைந்து விழுவாய். அப்போது அறிவாய், நீ ஒருநாள்கூட வாழவில்லை என. அன்பையே நீ அறிந்ததில்லை. மைந்தரின்பத்தையும் அறியவில்லை. உன் வாழ்நாளெல்லாம் நீ உன்னையே சமைத்துக்கொண்டிருந்தாய்” என்றாள்.

“தருணங்களுக்கேற்ப உருமாறியும் உருப்பெற்றும் கடந்துவருவதே மானுட இயற்கை. நீ அத்தனை தருணங்களிலும் உன்னை மாறாது அமைத்துக்கொண்டாய். ஆகவே தளிர்க்காத பூக்காத கல்மரமாக நின்றாய்” என்று குந்தி சொன்னாள். “உன்னைப்போலவே துணியை ஊசி என வாழ்க்கையை கடந்துசென்றவர் பீஷ்மர். அவர் அதோ அம்புப் படுக்கையில் கிடக்கிறார். அத்தனை அம்புகளும் அவரே அவர்மேல் எய்துகொண்டவை. ஒவ்வொன்றையாக எண்ணி எண்ணி உணர்ந்து நாள்கணித்து வான்நோக்கி படுத்திருக்கிறார். எண்ணிக்கொள், உனக்கும் அதுவே இறுதி. குருக்ஷேத்ரத்தில் வந்து முடிவதற்காகவே நீ இதுவரை கடந்துவந்தாய்.”

குந்தி தன் சொற்களின் விசையால் உடல் இறுக இரு கைகளையும் விரல்கோத்து பற்களைக் கடித்தபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். பின்னர் பெருமூச்சுடன் அவள் தணிந்தாள். விழிதிருப்பி குடில்சுவர்களை நோக்கினாள். “இங்கே எவரோ இருக்கிறார்கள்” என்றாள். அவன் பெருமூச்சுடன் தானும் தணிந்தான். இருவரும் அவர்கள் சென்ற அந்த உச்சத்திலிருந்து இரண்டு வழிகளினூடாக மெல்ல இறங்கினார்கள். மீண்டும் அவன் பெருமூச்சுவிட்டபோது குந்தியும் நீள்மூச்செறிந்தாள். “நீள்பொழுதாகிறது. எனக்காக தேர் காத்திருக்கும்” என்று அவள் சொன்னாள்.

நிலைமீண்டு அவள் உள்ளம் அனைத்தையும் தொட்டுத்துழாவத் தொடங்கிவிட்டதை அவன் உணர்ந்தான். எண்ணியிராத கணத்தில் “நீ உன் தோழனுக்கு அளித்த சொல் என்ன?” என்றாள். “நான் கூறிவிட்டேன், அன்னையே” என்றான். “மிகச் சரியாக சொல். உன் தோழனுக்கு நீ அளித்த சொல் என்ன?” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “துரியோதனனுக்கு நீ என்ன சொல்லுறுதியை அளித்தாய்? இறுதியாக நீ அவனிடம் சொன்ன சொற்கள் என்ன?” என்றாள் குந்தி. கர்ணன் “அர்ஜுனனை களத்தில் வெல்வேன். களம்வென்று அவர் மும்முடிசூடி அஸ்தினபுரியின் அரியணையில் அமரும்படி செய்வேன் என்று வாளுருவி வஞ்சினம் உரைத்தேன்” என்றான்.

“நன்கு நோக்கு. அர்ஜுனனை கொல்வேன் என்று மட்டுமே நீ கூறியிருக்கிறாய்” என்று குந்தி சொன்னாள். கர்ணன் குழப்பத்துடன் “ஆம், ஆனால் அவரை அரியணை அமர்த்துவேன் என்று சொன்னபோது நான் எண்ணியது…” என தொடங்க அவள் கையமர்த்தி “நீ சொன்ன சொற்களுக்கு மட்டுமே பொறுப்பாவாய்” என்றாள். “ஏனென்றால் அத்தருணத்தில் அச்சொற்களை சொல்ல வைப்பவை தெய்வங்கள். சொற்களின் பொருளையும் அவையே வகுக்கின்றன.” கையை நீட்டி “நீ அர்ஜுனனை மட்டுமே கொல்வேன் என அவனிடம் சொல்லுறுதி அளித்தாய். ஆகவே பிற நால்வரையும் கொல்ல மாட்டேன் எனும் சொல்லை எனக்களி” என்றாள்.

“அன்னையே…” என்றான் கர்ணன். “இனி உன் தோழனின் பெயரைச் சொல்லி நான் கோருவதை நீ ஒழிய இயலாது. தோழனுக்கு நீ அர்ஜுனனை மட்டும்தான் கொல்வேன் என்று சொல்லளித்திருக்கிறாய் என நீயே சொன்னாய்” என்றாள் குந்தி. கர்ணன் திகைத்து உடலெங்கும் பரவிய பதற்றத்துடன் நிற்க நீட்டிய கையை அசைத்து “சொல்லுறுதி அளி… உன் உள்ளத்தில் சற்றேனும் என்னை கருதினாய் என்றால் உன் சொல் எழுக!” என்றாள். அவன் எண்ணமற்றவன்போல விழி வெறித்திருக்க “அன்னையே…” என்றான். அவள் அவன் கையைப்பற்றி தன் கைமேல் வைத்து “சொல்” என்றாள். அவன் கை நடுங்கியது. அது வெம்மைகொண்டிருந்தது. குந்தி “சொல்… உன் நாவால் சொல்” என்றாள். “ஆம், சொல்கிறேன்” என்றான். “அர்ஜுனனை அன்றி பிற நால்வரையும் எந்நிலையிலும் கொல்லமாட்டேன் என்று சொல்” என்றாள் குந்தி. அவன் “அர்ஜுனனை அன்றி பிற நால்வரையும் எந்நிலையிலும் கொல்லமாட்டேன்” என்றான்.

குந்தி அவன் கையை விடாது பற்றிக்கொண்டு “அர்ஜுனனை கொல்ல முயல்வாய் என்றுதான் நீ சொல்லளித்திருக்கிறாய்” என்றாள். அவன் சொல்ல வாயெடுப்பதற்குள் “அதை நீ கடைக்கொள்ளலாம்” என்றாள். அவன் கை நடுங்கிக்கொண்டிருந்தது. “நீ உன்னிடமிருக்கும் நாகபாசத்தால் அர்ஜுனனை கொல்ல முயல்வாய் அல்லவா?” என்றாள். “ஆம்” என்று கர்ணன் சொன்னான். “அதில் காண்டவக்காட்டிலிருந்து தப்பிய தட்சன் என்னும் நாகம் அவனுக்காக காத்திருக்கிறது என்றார்கள். என்றேனும் பழிதீர்க்கும் பொருட்டு உன் ஆவநாழியில் உறங்குகிறது அது” என்றாள் குந்தி. கர்ணன் “அதிலிருந்து அவன் தப்ப முடியாது… மூவுலகில் எங்கு சென்று ஒளிந்தாலும் அது அவனை தேடிவரும். எனென்றால் அது அவனே எஞ்சவிட்ட நஞ்சு” என்றான்.

“ஒவ்வொருவரும் அவ்வாறு எதையோ விதைக்கிறார்கள்” என்று குந்தி சொன்னாள். கர்ணன் “ஆம்” என்றான். அவள் சொல்லவருவதென்ன என அவன் எண்ண முயன்றான். ஆனால் அவளுடைய அண்மையும் அருகிலெழுந்த நீர்விழிகளும் அவனை உளம்குவிய முடியாமல் ஆக்கின. குந்தி “அதை நீ அவன்மீது ஏவாதொழிய இயலாது. ஆனால் உன் தோழனுக்களித்த சொல் அதை நீ அவன்மேல் ஏவுவாய் என்றுதான். அதை நீ மீள மீள ஏவுவாய் என்றல்ல” என்றாள் குந்தி. “நீ அர்ஜுனனை வெல்வாய் என்ற சொல்லின் பொருள் அந்த அம்பை ஏவுவாய் என்று மட்டுமே. ஏவுக! ஆனால் ஒருமுறை மட்டுமே ஏவுக!” என்று தொடர்ந்தாள். “இல்லை” என்று கர்ணன் சொல்ல அவள் இடைமறித்து “உன் தோழனுக்கு அளித்த சொல்லை மறுக்காமல் நீ எனக்களிக்கக் கூடியது இது ஒன்றே. ஒருமுறை மட்டும் அரவம்பை அர்ஜுனன் மீது ஏவுக! பிறிதொருமுறை அதை அவன் மீது ஏவாதொழிக!” என்றாள்.

“ஆனால் அது எவ்வாறு…” என்று கர்ணன் முனகலாகக் கேட்க “நீ அளித்த சொல்லை மீறாது எனக்களிக்கும் கொடை அது ஒன்றுதான். நீ அதை எனக்கு அளித்தாகவேண்டும். இதை ஒழிந்தாயெனில் நீ என்னை புறந்தள்ளுகிறாய் என்றே பொருள்” என்றாள் குந்தி. கர்ணன் சலிப்புடன் சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். குந்தி அவனை அணுகி “அதில் எவ்வகையிலும் சொல் மீறல் இல்லை. உன் சொல்லுக்கு நீ முழுமையாகவே இருக்கிறாய்” என்றாள். “அந்நாகபாசம் எந்நிலையிலும் எவரையும் தப்பவிடாது என்றால் அதை மறுமுறை செலுத்தவேண்டிய தேவைதான் என்ன?” கர்ணன் “அது வில்லில் இருந்து எழுந்தால் குறிபார்க்கப்பட்டவரை கொல்லாது மீளாது, ஐயமே தேவையில்லை” என்றான். “பிறகென்ன?” என்று குந்தி கேட்டாள். “நீ அதை அவன்மேல் ஏவினால் அவன் தப்ப முடியாது.”

“அவ்வாறெனில் அச்சொல்லுறுதி உங்களுக்கு எதற்காக?” என்றான் கர்ணன். “உனக்காகத்தான். முதல்முறை நீ அதை ஏவுவது உன் தோழனுக்கு நீ அளித்த சொல்லுக்காக. அப்பழி உன்னை மறுபிறவிகளில் தொடராது. ஆனால் நீ அதை மீண்டும் செலுத்தினால் உன் தனிவஞ்சம் அதில் இருக்கும். அதனூடாக அவன் இறந்தால் உனக்கு அவ்வுலகிலும் இடமிருக்காது. உன் கொடிவழியினரிலும் அப்பழி நீடிக்கும்.” கர்ணன் குழம்பிய விழிகளுடன் நோக்கினான். “நான் எண்ணுவது உன்னைப்பற்றி மட்டுமே” என்றாள் குந்தி. கர்ணன் பெருமூச்சுடன் “அவ்வாறே ஆகுக!” என்றான். “இது நீ எனக்களிக்கும் சொல்லுறுதி. அரவம்பை ஒருமுறைக்குமேல் நீ ஏவமாட்டாய்” என்றாள் குந்தி. “ஆம்” என்று கர்ணன் சொன்னான்.

குந்தி நீள்மூச்செறிந்து “நான் எண்ணிவந்தது நிகழவில்லை. ஆனால் எனக்கென இவ்வளவேனும் நீ உளம்கனிந்ததில் நிறைவுகொள்கிறேன்” என்றாள். கர்ணன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் “அன்னையே, நான் ஒன்று கேட்கலாமா?” என்றான். “சொல்” என்றாள். “நீங்கள் சொன்னீர்கள், நான் கல்மரம் என்று.” குந்தி சிலகணங்கள் அவனை நோக்கியபின் “சினத்தால் அவ்வாறு சொன்னேன், சினமில்லையேல் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் அது உண்மை” என்றாள். “என்னை நீங்கள் சந்தித்ததே இல்லை. ஆனால் மிகமிக அணுக்கமாக என்னை அறிந்திருக்கிறீர்கள்” என்று கர்ணன் சொன்னான். “அதிலென்ன வியப்பு? நான் உன்னை உளம்தொடர்ந்துகொண்டே இருந்தேன்” என்றாள் குந்தி.

“அதனால்தான் உங்கள் வெறுப்பும் அத்தனை கூர்கொண்டிருந்தது. அச்சொற்களிலிருந்து நான் இனிமேல் மீளவே முடியாதென எண்ணுகிறேன்” என்று கர்ணன் சொன்னான். “சொல்க, அன்னையே! நான் தன்மையநோக்கும் ஆணவமும் கொண்டவன் என்றீர்கள். முற்றிலும் உண்மை அது. நான் ஏன் அவ்வாறு இருக்கிறேன்?” குந்தி “உன் இயல்பு அது” என்றாள். “அன்னையே, என்னை முலையூட்டி வளர்த்த ராதையின் உள்ளம் என்னுடன் இல்லை. என்னை இன்றும் அணைத்துக்கொள்கிறார். அமுதூட்டுகிறார். ஆனால் அவர் என்னைத் தொட்டால், என் விழிகளை அண்மையில் அவர் விழிகள் சந்தித்தால் அறிகிறேன் அவர் அகன்றுவிட்டிருப்பதை” என்று கர்ணன் சொன்னான்.

“அது இயல்புதான். வைரம் எங்கும் முழுமையாக ஒட்டாது என்று சொல்வார்கள்” என்றாள் குந்தி. கர்ணன் “நான் ஏன் இப்படி ஒருதுளியும் பிறழாதவன் ஆனேன்? நீங்கள் என்னை வளர்க்காததனாலா?” என்றான். “நான் சில தருணங்களில் எண்ணிக்கொள்வதுண்டு. பாலைநிலத்து விதைகளைப்போல உடையாத ஓடு கொண்டவன் ஆகிவிட்டேன் என்று.” குந்தி “நீ எண்ணித் துயருறவேண்டும் என்றால் இவ்வழியே செல்லலாம். ஆனால் அது உண்மை அல்ல. உண்மை மிகச் சிக்கலானதாகவே இருந்தாகவேண்டும் என்பதில்லை. அது மிகமிக எளிதானதாகவே இருக்கலாம். உச்சநிலை மெய்மைகள் மிகமிக உலகியல்சார்ந்ததாக, மிக அன்றாடத்தன்மை கொண்டதாக இருக்கலாம். அது பெண்களுக்கே புரியும். ஆண்கள் அடுமனைக்குச் செல்லவே ஏழுமலை கொண்ட காட்டுப்பாதையை தெரிவுசெய்வார்கள் என நாங்கள் பெண்கள் சொல்லிக்கொள்வதுண்டு” என்றாள்.

“சொல்க, என் இயல்பு ஏன் இவ்வாறாயிற்று?” என்று கர்ணன் மீண்டும் கேட்டான். “ஏன் நீ அர்ஜுனனை உள்ளூர அருவருக்கிறாய்?” என்று குந்தி கேட்டாள். “அன்னையே…” என்றான் கர்ணன். “சொல்க” என்றாள் குந்தி. கர்ணன் “நான் அருவருக்கவில்லை” என்றான். “சரி, இவ்வண்ணம் கேட்கிறேன். நீ அவனுடன் களம்பொருதுகையில் எந்தச் சொல்லால் பழித்துரைத்தாய்?” கர்ணன் சற்று தயங்கி “பேடி என” என்றான். “ஆம், அதுவே உன் அருவருப்பு” என்றாள் குந்தி. அவன் தலைகுனிந்து “ஆம், அவனிடமிருக்கும் பெண்மையை நான் வெறுக்கிறேன்” என்றான். குந்தி “அந்த ஒவ்வாமையை இளைய யாதவனிடமும் அடைகிறாயா?” என்றாள். “ஆம், அதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை” என்றான்.

குந்தி “நீ துரியோதனனுடன் ஏன் அணுக்கமாக உணர்கிறாய்?” என்றாள். கர்ணன் “நான் இதை எவ்வண்ணம் சொல்வது?” என்றான். “அதையும் இவ்வாறே எண்ணுக! நீ துரியோதனனை எப்போது வெறுப்பாய்?” கர்ணன் “இப்படி கேட்டால்…” என்று சொல்ல “நீ வினவியமைக்கு விடை தேடுகிறேன். சொல்!” என்றாள். “மிக அரிதாகத்தான்” என்றான் கர்ணன். “ஒரு தருணத்தை நினைவுகூர்க!” என்றாள் குந்தி. “அவன் தன் மகள் கிருஷ்ணையை அருகணைத்து இன்சொல் பேசும் ஒரு தருணத்தில் அருகிருந்தேன். அப்போது அவன் முகத்திலும் மொழியிலும் கூடிவந்த மென்மையை என்னால் தாளமுடியவில்லை. என் ஒவ்வாமையை வெளிக்காட்டாது அறையிலிருந்து அகன்றேன்” என்றான் கர்ணன்.

“அதுவேதான். மைந்தா, நீ வெறுப்பது பெண்மையின் இயல்புகளை” என்று குந்தி சொன்னாள். “ஏனென்றால் நீ முழுமையான ஆண்மகன். உன் உடலே உன்னை அவ்வாறு ஆக்குகிறது. உன் தோள்களும் கைகளும் நெஞ்சும் முற்றிலும் நிகர்நிலை கொண்டவை. உன் ஒவ்வொரு உறுப்பும் பிழையிலா முழுமைகொண்டது. உன் ஆண்மைப்பேரெழில் உன் தெய்வத்தின் கொடை. உன்னை நோக்குபவர் அனைவரும் விழிமலைப்பது அதனால்தான். நீ களமெழுந்தால் படைப்பெருக்கு கொந்தளித்து எழுகிறது. ஒவ்வொரு ஆண்மகனும் ஆகவிழையும் வடிவம் நீ. பல்லாயிரம் பெண்கள் உன்னை நோக்கி நோக்கி விழிநிறைத்திருப்பார்கள். ஆனால் என்னைப்போல் எவரும் உன்னை கண்களால் வழிபட்டிருக்க மாட்டார்கள்.”

“ஆனால் அந்த முழுமை மானுடருக்குரியதல்ல” என்று குந்தி தொடர்ந்தாள். “அந்த முழுமையே ஒரு குறைதான். அது ஊசலின் ஒருதிசை ஆட்டம்போல. ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணுமென்றே மானுட உடலும் உள்ளமும் நிறைவுகொள்கின்றன. அர்ஜுனனிடம் இருக்கும் பெண்மையின் கூறுகளால்தான் அவன் பெண்களுக்கு அணுக்கமாகிறான். பெண் ஆணை அணுகுவது அவனிடமிருக்கும் பெண்மையினூடாகவே இயலும். அவனைப்போன்றவனே இளைய யாதவனும். நீ மூத்த கௌரவனால் கவரப்படுவது அவனும் உன்னைப்போல் வெறும் ஆண்மை என்பதனால்தான். உங்களுக்கு மறுதரப்புகள் தெரிவதில்லை. உள்ளத்தில் நெகிழ்வுகளும் பிசிறுகளும் இல்லை. நீங்கள் சிற்பங்களைப்போல மாறா முகமும் உணர்வும் கொண்டவர்கள்.”

“உன்னை பெண்கள் நோக்கி நோக்கி நெஞ்சழிவார்கள். அவர்கள் உன்னை வந்தடையவே இயலாது. எவ்வாறேனும் உன்னை அணுகுபவர்கள் உன்னால் எரித்தழிக்கப்படுவார்கள். கதிரவனுக்கும் மலர்களுக்குமான உறவைப்போல” என்று குந்தி சொன்னாள். கர்ணன் பெருமூச்சுவிட்டான். “நீ அவளை விரும்பியதுகூட அவளிலுள்ள ஆண்மையின் கூறைக் கண்டுதான்” என்றாள் குந்தி. “அன்னையே, நாம் அதைப்பற்றி இனிமேல் பேசவேண்டாமே” என்று கர்ணன் சொன்னான். “மெய்யாகவே இங்கு வருகையில் நான் எண்ணிவந்தது அதுதான். அவளும் நீயும் நிறைவடையக்கூடும் என. அவளை அடைந்தால் உனக்கு மூத்த கௌரவன் தேவைப்படமாட்டான் என்று” என்றாள் குந்தி. “வேண்டாம், அன்னையே” என்றான் கர்ணன். “சரி” என குந்தி சொன்னாள். கர்ணன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். ஆனால் அவன் முகம் தெளிவடைந்திருந்தது.

குந்தி எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன். இத்தனை பொழுதாகுமென நான் எண்ணவே இல்லை” என்றாள். கர்ணன் சிரித்தபடி “அன்னையே, பெண்கள் அணுகமுடியாதவனாகிய என்னை நீங்கள் எப்படி இத்தனை எளிதாக அணுகி வென்றீர்கள்?” என்றான். குந்தி நகைத்தபோது அவளுடைய வெண்பல்நிரை தெரிய அவள் இளமையின் அழகு கொண்டாள். “அது அவ்வாறுதான். ஆண்மைமுழுத்தவர்கள் பெரும்பாலும் அன்னையரின் குழவிகள்” என்றாள். கர்ணன் நகைத்து “விந்தைதான்” என்றான். “நீ என் மடியில் வளர்ந்திருந்தால் உலகையே வெல்லும் அடிமை ஒருவனை பெற்றவளாக இருந்திருப்பேன்” என்றாள். உளம்நெகிழ்ந்து அவன் தலையில் கைவைத்து “சிறப்புறுக! மேன்மை கொள்க!” என வாழ்த்தினாள்.

கர்ணன் அவள் கால்தொட்டு சென்னி சூடி “இங்கே என் வாழ்வு நிறைவடைகிறது, அன்னையே” என்றான். அவள் “ஏன் இப்படி நெடுமரம்போல் ஆனாய் என்று வியக்கிறேன்” என்று அவன் தோளை அறைந்தாள். அவன் வெடித்து நகைத்து “நானும் பல தருணங்களில் அதை எண்ணிக்கொள்வதுண்டு. பெரும்பாலான மானுடரை அவர்களின் தலைமுடியைக் கொண்டே அடையாளம் காண்கிறேன்” என்றான். குந்தி வாய்பொத்தி சிரித்து “கீழிருந்து நோக்கினால் உன் முகவாய் மிகத் தொலைவில் விந்தையாகத் தெரிகிறது” என்றாள். அவன் வெடித்துச் சிரிக்க அவளும் உடன் இணைந்து சிரித்தாள். பலமுறை முயன்றும் இருவராலும் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை. பின்னர் குந்தி கண்ணீர் வழிய ஆடைநுனியால் வாய்மூடி சிரிப்பை அடக்கி “நான் செல்லவேண்டும்” என்றாள். கர்ணன் சிரிப்பின் மூச்சிளைப்புடன் “இவ்வண்ணம் நகைத்து நெடுநாட்களாகின்றது” என்றான். “ஆம், நானும் சிரிப்பதேயில்லை” என்று அவள் சொன்னாள்.

அத்தருணத்தின் உளவிடுதலையையே சிரிப்பாகக் கொண்டோம் என கர்ணன் நினைத்துக்கொண்டான். பொருளில்லாத சிரிப்புதான் மெய்யாகவே சிரிப்பு போலும். அவள் மீண்டும் ஒருமுறை அவன் தலைமேல் கையை வைத்து வாழ்த்தியபின் “விடைகொள்கிறேன்” என்றாள். அவன் அவளுடன் நடந்தான். அவள் கை இயல்பாக நீண்டு அவன் கையை பற்றியது. அவள் கை அவனுடைய பெரிய விரல்களுக்குள் சிறுமியின் கை போலிருந்தது. கைகளைப் பற்றியபடி அவர்கள் குடிலை விட்டு வெளியே வந்தனர். “நான் விடைகொள்கிறேன்” என்று குந்தி மீண்டும் சொன்னாள். அவள் குரல் மிகத் தாழ்ந்திருந்தது. “சென்றுவருக, அன்னையே!” என்றான் கர்ணன்.

அவள் தன் கையை அவன் கைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு மெல்ல நடந்து சேடியை அடைந்தாள். சேடியிடம் ஒரு சொல் உரைத்துவிட்டு நடந்தாள். எத்தனை மெலிந்திருக்கிறாள், எவ்வளவு சோர்ந்திருக்கிறாள் என்று கர்ணன் எண்ணிக்கொண்டான். அவள் திரும்பி நோக்கியபோது அந்த இருளிலும் அவள் விழிகளை சந்திக்க முடிந்தது. மீண்டும் திரும்பி நோக்கியபோது நோக்கில்லாமலேயே விழிகளை சந்திக்க முடிந்தது. அவளுடைய வெண்ணிற உருவம் இருளில் மறைந்த பின்னரும் விழியில் சற்றுநேரம் எஞ்சியிருந்தது.